Author Topic: மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை  (Read 40581 times)

Offline Anu

மீண்டும் தென்னாப்பிரிக்காவுக்கு ...

மணிலாலுக்கு உடம்பு குணமாகிவிட்டது. ஆனால் கீர்காமில் குடியிருந்த வீடு, வசிப்பதற்கு ஏற்றது அல்ல என்பதைக் கண்டேன். அது ஈரம் படிந்த வீடு, நல்ல வெளிச்சமும் இல்லை. எனவே, ஸ்ரீ ரேவாசங்கர் ஜகஜ் நீவனுடன் கலந்து ஆலோசித்து, பம்பாய்க்குச் சுற்றுப்புறத்தில் காற்றோட்டமான ஒரு பங்களாவை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளவது என்று தீர்மானித்தேன். பாந்தராவிலும் சாந்தா கருஸிலும் தேடி அலைந்தேன். பாந்தராவில் மிருகங்களைச் கசாப்புக்கடைக்காகக் கொல்லுமிடம் இருந்ததால் அந்த இடம் வேண்டாம் என்று முடிவு செய்தோம். கட்கோபரும் அதை அடுத்த இடங்களும் கடலுக்கு வெகு தொலைவில் இருந்தன. கடைசியாகக் சாந்தா குருஸிலி ஓர் அழகான பங்களா கிடைத்தது. சுகாதாரத்தைப் பொறுத்த வரையில் அதுவே மிகச் சிறந்தது என்று அதை வாடகைக்கு அமர்த்தினோம்.

சாந்தா கருஸிலிருந்து சர்ச்சகேட்டுக்குப் போய் வர முதல் வகுப்பு ரெயில் ஸீஸன் டிக்கெட்டு வாங்கிக்கொண்டேன். என் வண்டியில் நான் ஒருவனே முதல் வகுப்புப் பிரயாணியாக இருப்பதைக் குறித்து நான் அடிக்கடி ஒருவகையான பெருமை கொண்டதாக எனக்கு ஞாபகம் இருக்கிறது. அடிக்கடி பாந்தராவுக்குப் போகும் வேகமான ரெயிலில் செல்வதற்காகவே நான் அங்கே போய்விடுவேன். வக்கீல் தொழிலில் நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே எனக்கு வருமானம் கிடைத்து வந்தது. எனது தென்னாப்பிக்கக் கட்சிக்காரர்கள், அவ்வப்போது எனக்கு ஏதாவது வேலை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கிடைத்த வருமானம், என் வாழ்க்கையை நடத்திக் கொண்டு போவதற்குப் போதுமானதாக இருந்தது.

ஹைகோர்ட்டு வழக்கு எதுவும் எனக்கு இன்னும் கிடைத்தபாடில்லை. அக்காலத்தில் பயிற்சிக்காக நடந்துவந்த சட்ட விவாதக் கூட்டங்களில் பங்கெடுத்துக்கொள்ள நான் என்றுமே துணிந்ததில்லையெனினும் அக் கூட்டங்களுக்குப் போய் கொண்டிருந்தேன். அவைகளில் ஜமியத்ராம் நானா பாய் முக்கியமாகப் பங்கெடுத்துக் கொண்டது எனக்கு நினைவிருக்கிறது. மற்றப் புதுப் பாரிஸ்டர்களைப் போலவே நானும், ஹைக்கோர்ட்டில் நடக்கும் விசாரணைகளைக் கவனிக்கப்போவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அப்படி அங்கே போய்கொண்டிருந்ததன் நோக்கம், என் அறிவை வளர்த்துக் கொள்ளுவதைவிடக் கடலிலிருந்து நேராக அங்கே அடித்துக் கொண்டிருக்கும் நித்திரையை அளிக்கும் இன்பக் காற்றை வாங்குவதற்குத்தான். இந்தச் சுகத்தை அனுபவித்து வந்தவன் நான் ஒருவன் மாத்திரம் அல்ல என்பதையும் கவனித்தேன். அது ஒரு நாகரிகச் செயலாகவே ஆகிவிட்டதால் அதைக் குறித்து வெட்கப்படவேண்டியது எதுவும் இல்லை.

என்றாலும் ஹைக்கோர்ட்டுப் புத்தகசாலையைப் பயன்படுத்திக் கொண்டேன். பலருடன் புதிதாகப் பழக்கமும் ஏற்பட்டது. சீக்கிரத்திலேயே எனக்கு ஹைக்கோர்ட்டிலும் வேலை இருக்கும் என்று தோன்றிற்று. இவ்வாறு ஒரு புறத்தில் என் தொழில் சம்பந்தமான கவலையே நீங்கிவிட்டதாகக் கருதலானேன். மற்றொரு புறத்திலோ, என் மீது சதா கண் வைத்திருந்தவரான கோகலே, எனக்காகத் தமது சொந்தத் திட்டங்களைப் போடுவதில் சுறுசுறுப்பாக இருந்து வந்தார். ஒவ்வொரு வாரமும் இரண்டு மூன்று தடவைகள் என் அலுவலகத்திற்கு வருவார். நான் அறிந்திருக்க வேண்டும் என்று அவர் கருதும் நண்பர்களுடனேயே அவர் எப்பொழுதும் வருவார். தாம் செய்துவரும் வேலையின் தன்மையைக் குறித்து அவ்வப்போது எனக்குச் சொல்லி வருவார். என் சொந்தத் திட்டங்கள் எவையும் நிலைத்திருக்கக் கடவுள் என்றுமே அனுமதித்ததில்லை என்றே சொல்ல வேண்டும். என் திட்டங்களை அவர் வழியில் அவர் பைசல் செய்து கொண்டிருந்தார்.

நான் எண்ணிவாறு நான் பம்பாயில் நிலைத்து விட்டதாகத் தோன்றிய சமயத்தில் எதிர்பாராத விதமாகத் தென் ஆப்பரிக்காவிலிருந்து எனக்கு ஒரு தந்தி வந்தது. சேம்பர்லேன் இங்கே எதிர்பார்க்கப்படுகிறார். தயவு செய்து உடனே திரும்பி வாருங்கள் என்பதே அந்தத் தந்தி. நான் வாக்களித்திருந்தது நினைவுக்கு வந்தது. பிரயாணத்திற்கு எனக்குப் பணம் அனுப்பியதுமே நான் புறப்படத் தயாராக இருப்பதாகப் பதில் தந்தி கொடுத்தேன். அவர்களும் உடனே பணம் அனுப்பி விட்டார்கள். என் அலுவலகத்தைக் கைவிட்டுவிட்டுத் தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்டேன். அங்கிருந்த வேலை முடிய ஓர் ஆண்டாவது ஆகும் என்று எண்ணினேன். எனவே, பம்பாயில் பங்களாவை அப்படியே வைத்துக் கொண்டு என் மனைவியையும் குழந்தைகளையும் அங்கேயே விட்டுச் சென்றேன்.

நாட்டில் ஒரு வேலையும் அகப்படாமல் கஷ்டப்படும் ஊக்கமுள்ள இளைஞர்கள் மற்ற நாடுகளில் குடியேறிவிட வேண்டும் என்று அப்பொழுது நம்பினேன். ஆகையால், அப்படிப்பட்ட இளைஞர்கள் நான்கு, ஐந்து பேரை என்னுடன் அழைத்துச் சென்றேன். அதில் ஒருவர் மகன்லால் காந்தி. காந்தி குடும்பம் எப்பொழுதுமே பெரிய குடும்பம் பழைய சுவட்டிலேயே போய்க் கொண்டிருக்க விரும்பாதவர்களைக் கண்டு பிடித்து வெளிநாடுகளுக்குத் துணிந்து போகும்படி செய்ய விரும்பினேன். இவர்களில் அநேகரை என் தந்தையார் சமஸ்தான உத்தியோகங்களில் அமர்த்தி வந்தார். அத்தகைய உத்தியோக மோகத்திலிருந்து அவர்களை விடுவிக்க விரும்பினேன். அவர்களுக்கு வேறு வேலை தேடிக் கொடுக்கவும் என்னால் முடியாது. அவர்கள் சுயநம்பிக்கையில் வாழ்பவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், என் லட்சியங்கள் உயர்வானவை ஆக ஆக என் லட்சியங்களையே ஏற்றுக்கொள்ளும்படி அந்த இளைஞர்களைத் தூண்ட முயன்றேன். மகன்லால் காந்திக்கும் வழிகாட்டிய வகையில் என் முயற்சி மிகப் பெறும் வெற்றியை அடைந்தது. இதைப்பற்றிப் பிறகு கூறுகிறேன்.

மனைவி, குழந்தைகளை விட்டுப் பிரிவது, நிலையான குடித்தனத்தை நடுவில் குலைப்பது, நிச்சயமானதொரு நிலையிலிருந்து நிச்சயமற்ற நிலைக்குப் போவது ஆகிய இவையாவும் ஒரு கணம் எனக்கு வேதனை தருவனவாகவே இருந்தன. ஆனால் நிச்சயமற்றதான வாழ்வைக் கண்டு அஞ்சாத தன்மை எனக்கு இருந்தது. சத்தியமாக இருக்கும் கடவுளைத் தவிர மற்ற எல்லாமே நிச்சயமற்றதாயிருக்கும் இவ்வுலகத்தில் நிச்சயமான வாழ்வை எதிர்பார்ப்பது தவறு என்று எண்ணுகிறேன். நம்மைச் சுற்றிலும் தோன்றுபவை, நிகழ்பவை ஆகிய எல்லாமே நிச்சயமற்றவையும் அநித்தியமானவையுமே ஆகும். ஆனால் இவற்றிலெல்லாம் மறைந்திருக்கும் எல்லாவற்றிலும் மேலானதான பரம்பொருள் ஒன்றே நிச்சயமானது. அந்த நிச்சயமான பரம்பெருளை ஒரு கணமேனும் தரிசத்து, அதனுடன் தன்னை இணைத்துக் கொண்டு விடுபவனே பெரும் பாக்கியசாலி. அந்தச் சத்தியப் பொருளைத் தேடுவதே வாழ்வின் நித்தியானந்தமாகும். சரியான தருணத்தில் நான் டர்பன் போய் சேரந்தேன். அங்கே வேலை எனக்காகக் காத்துக் கொண்டிருந்தது. சேம்பர் லேனிடம் தூது செல்வதற்குத் தேதியும் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவரிடம் சமர்ப்பிப்பதற்கு மகஜரைத் தயாரிப்பதோடு நானும் தூது கோஷ்டியுனுடன் சென்று அவரைப் பார்க்கவேண்டும்.


Offline Anu

நான்காம் பாகம்

அன்பின் உழைப்பு வீணா?

தென்னாப்பிரிக்காவிடமிருந்து மூன்றரைக் கோடி பவுன் நன்கொடையைப் பெறுவதற்கும், அங்கிருக்கும் ஆங்கிலேயர், போயர்கள் இவர்களின் மனத்தைக் கவருவதற்குமே ஸ்ரீ சேம்பர் லேன் வந்திருந்தார். ஆகவே, இந்தியரின் தூது கோஷ்டிக்கு அவர் திருப்திகரமான பதில் கூறவில்லை. சுயாட்சி பெற்றுள்ள குடியேற்ற நாடுகளின் மீது பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அதிகாரம் எதுவும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் குறைகள் நியாயமானவை என்றே தோன்றுகிறது. என்னால் முடிந்ததைச் செய்கிறேன். ஆனால் ஐரோப்பினரின் மத்தியிலிருந்து வாழ நீங்கள் விரும்பினால், அவர் உங்களிடம் பிரியங் கொள்ளும்படி செய்ய நீங்கள் முயலவேண்டும் என்று அவர் கூறினார்.

இந்தப் பதில் தூது சென்ற இந்தியரின் உற்சாகத்தைக் குலைத்துவிட்டது. நானும் ஏமாற்றமடைந்தேன். எங்கள் எல்லோருக்குமே இது கண்களைத் திறந்துவிடுவதாக இருந்தது. இனித் தீவிரமாக வேலையை ஆரம்பித்துவிட வேண்டியதே என்று கண்டேன். என் சகாக்களுக்கு நிலைமையை விளக்கிக் கூறினேன். உண்மையில் ஸ்ரீ சேம்பர்லேனின் பதிலில் தவறானது ஒன்றும் இல்லை. விஷயத்தைக் குழப்பாமல் உள்ளதை உள்ளபடியே அவர் சொன்னது நல்லதேயாகும். வல்லவன் வகுத்ததே வாய்க்கால் அல்லது வாளெடுத்தவன் வகுத்ததே சட்டம் என்பதை அவர் நியாயமான முறையில் எங்களுக்குத் தெரிவித்து விட்டார். ஆனால் எங்களிடமோ வாளே இல்லை வாளினால் வெட்டப்படுவதற்கு வேண்டிய துணிச்சலும் உடல் வலுவுங்கூட எங்களுக்கு இல்லை. இந்த உபகண்டத்தில் ஸ்ரீ சேம்பர்லென் கொஞ்ச காலமே இருப்பதாக முடிவு செய்திருந்தார். ஸ்ரீ நகருக்கும் கன்னியாகுமரிக்கும் 1,9000 மைல் தூரம் என்றால், டர்பனுக்கும் கேடப் டவுனுக்கும் 1,100 மைல் தூரத்திற்குக் குறைவில்லை. ஸ்ரீ சேம்பர்லேன் இந்த தொலை தூரத்தைச் சண்டமாருத வேகத்தில் சுற்றவேண்டியிருந்தது.

நேட்டாலிலிருந்து அவசரமாக டிரான்ஸ்வாலுக்குச் சென்றார். அங்கிருக்கும் இந்தியருக்காகவும் நான் ஒரு விண்ணப்பத்தைத் தயாரித்து அவரிடம் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. ஆனால் நான் பிரிட்டோரியாவுக்குள் போய்ச் சேருவது எப்படி ? உரிய காலத்தில் என்னைத் தங்களிடம் தருவித்துக் கொள்ளுவதற்கு வேண்டிய சட்ட வசதிகளைப் பெறும் நிலையில் அங்கிருந்த நம் மக்கள் இல்லை. போயர் யுத்தம் டிரான்ஸ்வாலை வனாந்திரமாக்கி விட்டது. உணவுப் பொருள்களோ, துணிமணிகளோ அங்கே கிடைப்பதில்லை. கடைகளெல்லாம் காலியாகவோ, மூடப்பட்டோ கிடந்தன. அவை திறக்கப்பட்டு, சாமான்கள் விற்க ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதெனினும், அதற்கு நாளாகும் கடைகள் திறக்கப்பட்டு உணவுத் தானியங்கள் விற்கப்படும் வரையில், முன்னால் அங்கிருந்து ஓடிப் போய்விட்டவர்களைக் கூடத் திரும்பி வர அனுமதிக்க முடியாது. ஆகையால், டிரான்ஸ்வால் வாசி ஒவ்வொருவரும் உள்ளே நுழைய அனுமதிச் சீட்டுப் பெற வேண்டியிருந்தது. இது ஐரோப்பியருக்கு எந்தவிதமான கஷ்டமும் இல்லாமல் கிடைத்து விடும். ஆனால், இந்தியருக்கோ இது மிகக் கஷ்டமானதாயிற்று.

யுத்தத்தின்போது இந்தியாவிலிருந்தும் இலங்கையில் இருந்தும் அநேக அதிகாரிகளும் சிப்பாய்களும் தென்னாப்பிரிக்காவுக்கு வந்திருந்தனர். அவர்களில் அங்கேயே குடியேறிவிட விரும்புகிறவர்களுக்கு ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டியது பிரிட்டிஷ் அதிகாரிகளின் கடமை என்று கருதப்பட்டது. எப்படியும் அவர்கள் புதிதாக அதிகாரிகளை நியமிக்க வேண்டியிருந்தது அனுபவம் வாய்ந்த அவர்கள் இருந்தது சௌகரியமாயிற்று. அவர்களில் சிலரின் சுறுசுறுப்பான புத்திக்கூர்மையினால் ஒரு புதிய இலாகாவையே சிருஷ்டித்து விட்டார்கள். இது அவர்களுடைய சாமார்த்தியத்தைக் காட்டியது. நீக்ரோக்களுக்கென்று ஒரு தனி இலாகா இருந்தது. அப்படியானால், ஆசியாக்காரர்களுக்கென்றும் ஒரு தனி இலாகா ஏன் இருக்கக்கூடாது. ? இந்த வாதம் நியாயமானதாகவே தோன்றியது. நான் டிரான்ஸ்வாலை அடைந்ததற்கு முன்னாலேயே இந்த இலாகா ஆரம்பமாகி தன்னுடைய அதிகாரத்தை நாலா பக்கங்களிலும் பரப்பி வந்தது. அனுமதிச் சீட்டுக்களைக் கொடுக்கும் அதிகாரிகள் வெளியேறியிருந்து இப்பொழுது திரும்புகிறவர்கள் எல்லோருக்குமே அனுமதிச் சீட்டுக்களைக் கொடுக்கலாம். ஆனால் திரும்பி வரும் ஆசியாக்காரர்களுக்குப் புதிய இலாகாவின் குறுக்கீடு இல்லாமல் அவர்கள் எப்படிக் கொடுத்துவிட முடியும் ? புதிய இலாகாவின் சிபாரிசின் பேரிலேயே அனுமதிச் சீட்டுக் கொடுப்பதென்றால் அனுமதிச் சீட்டுக் கொடுக்கும் அதிகாரிகளின் சில பொறுப்புக்களும் பாரமும் குறைந்து விடும். இவ்வாறே அவர்கள் வாதித்தார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், புதிய இலாகாவுக்கு ஏதாவது வேலை வேண்டும் என்பதுதான். அதோடு அந்த ஆட்களுக்குப் பணமும் வேண்டும். அவர்களுக்கு வேலை இல்லையென்றால் அந்த இலாகா அவசியம் இல்லை என்று ஆகிவிடும், அதை எடுத்தும் விடுவார்கள். ஆகையால், இந்த வேலையை அவர்களே தங்களுக்கு தேடிக் கொண்டார்கள்.

இந்தியர், அனுமதிச் சீட்டுக்கு இந்த இலாகாவிடம் மனுச் செய்து கொள்ளவேண்டும். பல நாட்கள் கழித்தே பதில் கிடைக்கும். டிரான்ஸ்வாலுக்குத் திரும்ப விரும்பியவர்களின் தொகை ஏராளமானதாக இருந்துவிடவே, இதற்குத் தரகர் கட்டணம் மிகவும் வளர்ந்துவிட்டது. அதிகாரிகளுடன் சேர்ந்து இத் தரகர்கள் ஏழை இந்தியர்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் கொள்ளை யடித்தனர். சிபாரிசு இல்லாமல் அனுமதிச் சீட்டே கிடைக்காது என்பதை அறிந்தேன். சிபாரிசு வைத்தும் சிலர் விஷயத்தில் நூறு பவுன் வரையில் பணமும் கொடுக்க வேண்டியிருந்ததாம். இந்த நிலையில் நான் டிரான்ஸ்வாலுக்குப் போவதற்கு வழி இருப்பதாகவே தோன்றவில்லை. எனது பழைய நண்பரான டர்பன் போலீஸ் சூப்பரிண்டெண்டென்டிடம் போனேன். தயவு செய்து அனுமதிச் சீட்டுக் கிடைக்க உதவுங்கள். நான் டிரான்ஸ்வாலில் வசித்திருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று அவரிடம் கூறினேன். உடனே, அவர் தொப்பியை எடுத்து வைத்துக் கொண்டு புறப்பட்டு என்னுடன் வந்து எனக்கு அனுமதிச் சீட்டை வாங்கிக் கொடுத்தார். நான் புறப்பட வேண்டிய ரெயில் கிளம்புவதற்கு அரைமணி நேரமே இருந்தது. என் சாமான்களையெல்லாம் முன்பே தயாராக வைத்திருந்தேன். சூப்பரிண்டெண்டென்ட் அலெக்ஸாண்டருக்கு நன்றி தெரிவித்துவிட்டுப் பிரிட்டோரியாவுக்குப் புறப்பட்டேன்.

என் முன்னாலிருக்கும் கஷ்டங்கள் எவ்வளவு என்பதைக் குறித்து ஒருவாறு நான் இப்பொழுது தெரிந்துகொண்டேன். பிரிட்டோரியா போய்ச் சேர்ந்ததும் விண்ணப்பத்தைத் தயார் செய்தேன். சேம்பர்லேனைச் சந்திக்கப் போகும் பிரதிநிதிகளின் கேட்கப்பட்டதாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால், இங்கோ புது இலாகா இருந்தது. அது முன்கூட்டி அறிவிக்க வேண்டும் என்று கேட்டது. என்னைப் பிரதிநிதிகளில் ஒருவனாக இருக்கவிடாமல் செய்ய அதிகாரிகள் விரும்பினார்கள் என்பதை பிரிட்டோரியா இந்தியர் அப்பொழுதே அறிந்திருந்தனர். வேடிக்கையானதேயென்றாலும் வேதனையான இச்சம்பவத்திற்கு மற்றோர் அத்தியாயமும் அவசியம்.


Offline Anu

ஆசியாவிலிருந்து வந்த எதேச்சாதிகாரிகள்

நான் டிரான்ஸ்வாலுக்குள் பிரவேசித்துவிட்டது எப்படி என்பது புதிய இலாகாவின் தலைமை அதிகாரிகளுக்கு விளங்கவில்லை. தங்களிடம் வரும் இந்தியரிடம் இதைப்பற்றி விசாரித்தார்கள். ஆனால், அவர்களாலும் நிச்சயமாக எதுவும் சொல்ல முடியவில்லை. எனக்குள்ள பழைய தொடர்பை வைத்துக் கொண்டு அனுமதிச் சீட்டு இல்லாமலேயே நான் நுழைந்திருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டுவிடவே அதிகாரிகள் முற்பட்டனர். அப்படித்தான் என்றால், நான் கைது செய்யப்பட வேண்டிய குற்றத்தைச் செய்தவனாவேன்.

ஒரு பெரிய யுத்தம் முடிந்ததுமே, அப்போது அதிகாரத்திலிருக்கும் அரசாங்கத்திற்கு விசேட அதிகாரங்களைக் கொடுப்பது பொதுவான வழக்கம். தென்னாப்பிரிக்கா விஷயத்திலும் அதுவே நடந்தது. சமாதாப் பாதுகாப்பு அவசரச் சட்டம் ஒன்றை அரசாங்கம் நிறைவேற்றியது. அதன்படி, அனுமதி இல்லாமல் டிரான்ஸ்வாலுக்குள் வரும் யாரையும் கைது செய்து சிறைத் தண்டனை விதிக்கலாம். அச்சட்டத்தின் இந்த விதியின் கீழ் என்னைக் கைது செய்யலாமா என்று அதிகாரிகள் யோசித்தார்கள். ஆனால் அனுமதிச் சீட்டைக் காட்டும்படி என்னைக் கேட்கும் தைரியம் யாருக்கும் வரவில்லை. எனினும், அதிகாரிகள் டர்பனுக்குத் தந்தி கொடுத்து விசாரித்தார்கள். அனுமதிச் சீட்டின் பேரிலேயே நான் வந்திருக்கிறேன் என்று அறிந்ததும் ஏமாற்றமடைந்தனர். ஆனால் இத்தகைய ஏமாற்றங்களினால் தோல்வியடைந்து விடக் கூடியவர்கள் அல்ல அவர்கள். டிரான்ஸ்வாலுக்குள் வந்துவிடுவதில் நான் வெற்றி பெற்றுவிட்டாலும் ஸ்ரீ சேம்பர் லேனிடம் நான் தூதுபோக முடியாதபடி அவர்கள் என்னை வெற்றிகரமாகத் தடுத்துவிட முடியும்.

ஆகவே, தூதுசெல்லப்போகும் பிரதிநிதிகளின் பெயரைச் சமர்ப்பிக்குமாறு சமூகத்தினரைக் கேட்டார்கள். தென்னாப்பிரிக்காவில் எங்குமே நிறவெறி இருந்து வருகிறது என்பதை நான் அறிவேன். ஆனால் இந்தியாவில் நான் கண்ட இழிவான தந்திரங்களும், கீழ்த்தரமான உபாயங்களும் இங்கும் அதிகாரிகளிடம் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. தென்னாப்பிரிக்காவில் பொது இலாக்காக்கள் மக்களின் நன்மைக்கு என்றே இருந்தன. அவை பொதுஜன அபிப்பிராயத்திற்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவை. ஆகையால் அதிகாரிகள் மரியாதையுடனும், அடக்கத்தோடும் நடந்து கொள்ளுவார்கள். இதனால், வெள்ளையர் அல்லாதாருக்கும் ஓரளவுக்கு நன்மை இருந்துவந்தது. ஆசியாவிலிருந்து அதிகாரிகள் வந்து சேர்ந்ததும், அவர்களுடன் எதேச்சாதிகாரமும், அங்கே எதேச்சாதிகாரர்கள் பெற்றிருந்த பழக்கங்களும் கூடவே வந்துவிட்டன. தென்னாப்பிரிக்காவில் ஒரு வகையான பொறுப்பாட்சி அல்லது ஜன நாயகம் இருந்தது. ஆனால், ஆசியாவிலிருந்து இறக்குமதியான இந்தச் சரக்குகளோ, கலப்பற்ற எதேச்சாதிகார மயமானவை. ஏனெனில், ஆசியாக்காரர்களை அந்நிய அரசாங்கமே ஆண்டு வருவதால் அவர்களுக்குப் பொறுப்பாட்சி எதுவும் இல்லை. தென்னாப்பிரிக்காவிலிருந்த ஐரோப்பியர், அந்த நாட்டில் குடியேறி நிரந்தரக் குடிகள் ஆகிவிட்டவர்கள். அவர்கள் தென்னாபிரிக்கப் பிரடிஜகள் ஆனதால், இலாகா அதிகாரிகளின் மீது அவர்களுக்கு ஆதிக்கம் இருந்தது. ஆனால், இப்பொழுதோ ஆசியாவிலிருந்து ஏதேச்சாதிகாரிகள் வந்து விட்டார்கள். இதன் பயனாக இந்தியர் இருதலைக் கொள்ளி எறும்புபோல் ஆயினர்.

இந்த எதச்சாதிகாரத்தின் கொடுமையை நான் நன்றாக அனுபவித்திருக்கிறேன். இலாகாவின் பிரதம அதிகாரியை வந்து பார்க்குமாறு முதலில் எனக்குக் கட்டளை வந்தது. அந்த அதிகாரி இலங்கையிலிருந்து வந்தவர். பிரதம அதிகாரியின் கட்டளை வந்தது என்று நான் சொல்லுவது விஷயத்தை நான் மிகைப்படுத்திக் கூறுவதாகத் தோன்றி விடக்கூடும். எனவே இதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எழுத்து மூலமான உத்தரவு எதுவும் எனக்கு வரவில்லை. ஆசியாக்காரர்களின் அதிகாரிகளை இந்தியத் தலைவர்கள் அடிக்கடி சந்திக்க வேண்டியிருந்தது. அப்படிச் சந்தித்தவர்களில் ஒருவர் காலஞ்சென்ற சேத் தயாப் ஹாஜிகான் முகமது. அந்தக் காரியாலயத்தின் பிரதம அதிகாரி, நான் யார் ? நான் எதற்காக அங்கே வந்திருக்கிறேன் என்று அவரைக் கேட்டார். அவர் எங்கள் ஆலோசகர். நாங்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர் வந்திருக்கிறார் என்றார், தயாப் சேத்.

அப்படியானால், நாங்கள் இங்கே எதற்காக இருக்கிறோம் ? உங்களைப் பாதுகாப்பதற்கென்றே நாங்கள் நியமிக்கப் பட்டிருக்கவில்லையா ? இங்கிருக்கும் நிலைமையைப் பற்றிக் காந்திக்கு என்ன தெரியும் என்று கேட்டார் எதேச்சாதிகாரி. இக்குற்றச் சாட்டுக்குத் தயாப் சேத் தம்மால் இயன்ற வரையில் பதில் சொன்னார். அது, பின்வருமாறு, நீங்கள் இருக்கிறீர்கள் உண்மைதான். ஆனால் காந்தி எங்கள் மனிதர். அவருக்கு எங்கள் மொழி தெரியும். எங்களைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். எப்படியும் நீங்கள் அதிகாரிகள் தானே? என்னைத் தம் முன்னால் கொண்டு வருமாறு துரை, தயாப் சேத்துக்கு உத்தரவு போட்டார். தயாப் சேத் முதலியவர்களுடன் நான் துரையிடம் போனேன். எங்களை உட்காரச் சொல்லவில்லை. நாங்கள் எல்லோரும் நின்றுகொண்டே இருந்தோம். இங்கே நீர் வந்தது எதற்காக ? என்று துரை என்னைப் பார்த்துக் கேட்டார். எனது சகோதர இந்தியர், தங்களுக்கு ஆலோசனை கூறி உதவ வேண்டும் என்று கேட்டுகொண்டதன் பேரில் நான் வந்தேன் என்று பதில் கூறினேன்.

இங்கே வர உமக்கு உரிமை கிடையாது என்பது உமக்குத் தெரியாதா ? நீர் வைத்திருக்கும் அனுமதிச் சீட்டு, தவறாக உமக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. இங்கு குடியேறிய இந்தியராக உம்மைக் கருத முடியாது. நீர் திரும்பிப் போய்விட வேண்டும். ஸ்ரீ சேம்பர்லேனிடம் நீர் தூது போகக்கூடாது. முக்கியமாக, இங்கிருக்கும் இந்தியரின் பாதுகாப்புக்கென்றே ஆசியாக்காரர்களின் இலாகா ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. சரி நீர் போகலாம் என்று கூறித் துரை எங்களை அனுப்பி விட்டார். பதில் சொல்லுவதற்குச் சந்தர்ப்பமே அளிக்கவில்லை. ஆனால் என்னுடன் வந்தவர்களை மாத்திரம் அங்கே காக்க வைத்தார். அவர்களைக் கண்டபடி திட்டி, என்னை அனுப்பி விடுமாறு அவர்களுக்கு யோசனை கூறி அனுப்பினார். அதிக எரிச்சலுடன் அவர்கள் திரும்பிவந்தார்கள். இவ்விதம் நாங்கள் எதிர்பாராத புதிய நிலைமை ஒன்று எங்களைக் குறுக்கிட்டது.


Offline Anu

அவமதிப்புக்கு உட்பட்டேன்

அந்த அவமரியாதை என் மனத்தை அதிகமாக வருத்தியது. ஆனால், இதற்கு முன்னால் இத்தகைய அவமரியாதைகள் பலவற்றை சகித்திருக்கிறேனாகையால், அவைகளால் நான் பாதிக்கபடாதவன் ஆகிவிட்டேன். எனவே, இப்பொழுது கடைசியாக ஏற்பட்ட இந்த அவமதிப்பையும் மறந்து விடுவதெனத் தீர்மானித்தேன். இவ்விஷயத்தில் விருப்பு வெறுப்பின்றிக் கவனித்து, எந்த வழி சரியெனத் தோன்றுகிறதோ அதன்படி நடப்பதென்றும் முடிவு செய்தேன். ஆசியாக்காரர்கள் இலாகாவின் பிரதம அதிகாரிகளிடமிருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது. ஸ்ரீ சேம்பர்லேனை நானே டர்பனில் கண்டிருக்கிறேனாகையால், அவரைச் சந்திக்கப்போகும் தூது கோஷ்டியிலிருந்து என் பெயரை நீக்கிவிட வேண்டியது அவசியமாகிறது என்று அக்கடிதம் கூறியது. அக்கடிதத்தை என் சகாக்களினால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தூது போவது என்ற யோசனையையே அடியோடு கைவிட்டு விடுவது என்று அவர்கள் அபிப்பிராயப்பட்டார்கள். அதனால், சமூகத்திற்கு ஏற்படக்கூடிய சங்கடமான நிலைமையை அவர்களுக்கு எடுத்துக் கூறினேன்.

ஸ்ரீ சேம்பர்லேனிடம் நீங்கள் உங்கள் குறைகளை எடுத்துக் கூறாதுபோனால், உங்களுக்குக் குறைகளே இல்லை என்று கருதப்பட்டுவிடும். எப்படியும் நாம் சொல்லப் போவதை எழுத்து மூலமே சொல்லப்போகிறோம். அதையும் நாம் தயாரித்திருக்கிறோம். அதை அவர் முன்பு நான் படிக்கிறேனா, வேறு ஒருவர் படிக்கிறாரா என்பது அவ்வளவு முக்கியமான விஷயமே அல்ல. ஸ்ரீ சேம்பர்லேன் இந்த விஷயத்தைக் குறித்து நம்மிடம் விவாதிக்கப் போவதில்லை. இந்த அவ மரியாதைக்கு உட்பட்டுத் தீரவேண்டியது தான் என்று எண்ணுகிறேன் என்றேன். நான் இவ்விதம் சொல்லி முடிப்பதற்குள் தயாப் சேத் பின் வருமாறு ஆத்திரத்தோடு கூறினார். உங்களுக்கு ஏற்பட்ட அவமரியாதை சமூகத்திற்கேற்பட்ட அவமரியாதை அல்லவா? நீங்கள் எங்கள் பிரதிநிதி என்பதை நாங்கள் எப்படி மறந்து விட முடியும்?

உண்மையே சமூகத்தில் இது போன்ற அவமரியாதைக்கு நாம் உட்பட்டுவிட வேண்டியே இருக்கிறது. இதைத்தவிர நமக்கு வேறுவழி ஏதாவது உரிமை பாக்கி இருக்கிறதா? என்று கேட்டார், தயாப் சேத். அது ரோஷமான பதில்தான். ஆனால், அதனால் என்ன பிரயோசனம்? இந்திய சமூகத்தினிடமுள்ள சக்தி இன்னது தான் என்பதை நான் நன்றாக அறிந்திருந்தேன். நண்பர்களைச் சாந்தப்படுத்தினேன். அத்தூதுக் குழுவில் எனக்குப் பதிலாக இந்தியப்பாரிஸ்டரான ஸ்ரீ ஜார்ஜ் காட்பிரேயைச் சேர்த்துக் கொள்ளுமாறு யோசனை கூறினேன். ஆகவே, ஸ்ரீ காட்பிரே தூதுக் குழுவுக்குத் தலைவராகச் சென்றார். ஸ்ரீ சேம்பர்லேன் தமது பதிலில், நான் தூதுக் குழுவிலிருந்து விலக்கப்பட்டிருப்பதைப் பற்றியும் சொன்னார். திரும்பத் திரும்ப அதே பிரதிநிதி சொல்லுவதைக் கேட்டுக் கொண்டிருப்பதை விடப் புதிதாக ஒருவர் இருப்பது நல்லதல்லவா? என்று கூறி இந்தியருக்கு ஏற்பட்டிருந்த மனப்புண்ணை ஆற்ற முயன்றார்.

ஆனால் இவைகளினாலெல்லாம் காரியம் சரியாக முடிந்துவிடவில்லை. ஆனால், சமூகமும் நானும் செய்ய வேண்டிய வேலையையே இவை அதிகப்படுத்தின. நாங்கள் அடியிலிருந்து வேலையைத் தொடங்கவேண்டியிருந்தது. நீங்கள் சொன்னதன் பேரில் தானே சமூகம் யுத்தத்தில் உதவி செய்தது அதன் பலனை இப்பொழுது நீங்கள் பார்க்கிறீர்கள் என்று சிலர் என்னைக் குத்திக் காட்டினார்கள். அதனால் நான் பாதிக்கப்பட்டுவிடவில்லை. அப்பொழுது நான் கூறிய யோசனைக்காக இப்பொழுது நான் வருத்தப்படவில்லை என்றேன். யுத்தத்தில் நாம் பங்கெடுத்துக் கொண்டதில் நாம் சரியான காரியத்தையே செய்தோம் என்பதை நான் இப்பொழுதும் கூறுகிறேன். அப்படிச் செய்ததில் நம் கடமையைத்தான் நாம் நிறைவேற்றினோம். கடமையை முன்னிட்டுச் செய்த பணிக்கு நாம் வெகுமதியை எதிர்பார்க்கக் கூடாது. என்றாலும் எந்த நல்ல காரியமும் முடிவில் பலனளித்தே தீரும் என்பது என் திடமான நம்பிக்கை நடந்துபோனதை மறந்துவிட்டு நம் முன்னால் இப்பொழுது இருக்கும் வேலை என்ன என்பதைக் கவனிப்போம் என்று நான் கூறியதை மற்றவர்களும் ஒப்புக் கொண்டார்கள்.

நான் மேலும் கூறியதாவது. உண்மையைச் சொன்னால், நீங்கள் எந்த வேலைக்காக என்னை அழைத்திருந்தீர்களோ அந்த வேலை இப்பொழுது முடிந்துவிட்டது. நான் தாய் நாடு திரும்புவதற்கு என்னை நீங்கள் அனுமதிப்பது சாத்தியமே என்று இருந்தாலும் நான் டிரான்ஸ்வாலை விட்டுப் போகக் கூடாது என்று எண்ணுகிறேன். முன்போல நேட்டாலில் இருந்துகொண்டு என் வேலையைச் செய்துகொண்டிருப்பதற்குப் பதிலாக இங்கிருந்துகொண்டே நான் அதைச் செய்து வரவேண்டும். ஓர் ஆண்டுக்குள் இந்தியாவுக்குத் திரும்புவது என்று நான் இனியும் எண்ணிக் கொண்டிருப்பதற்கில்லை. டிரான்ஸ்வால் சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக நான் பதிவு செய்துகொள்ள வேண்டியதே. இப்புதிய இலாகாவைச் சமாளித்துக் கொண்டுவிட முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. இதை நாம் செய்யவில்லை என்றால், சமூகம் அடியோடு கொள்ளையடிக்கப்பட்டு விடுவதோடு இந்நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டும் விடும். ஒவ்வொரு நாளும் புதுப்புது அவமரியாதைகள் சமூகத்தின்மீது வந்து குவிந்து கொண்டும் இருக்கும். ஸ்ரீ சேம்பர்லேன் என்னைப் பார்க்க மறுத்ததையும் அந்த அதிகாரி என்னை அவமதித்ததையும், இந்தியச் சமூகம் முழுமைக்கும் இருந்து வரும் அவமதிப்போடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்றுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கேவலம் நாயின் வாழ்வை நாம் நடத்திக் கொண்டிருக்கவேண்டும் என்று நாம் எதிர் பார்க்கப் படுகிறோம். இதைச் சகித்துக் கொண்டிருக்கவே முடியாது.

எனவே, நான் வேலையைச் செய்துகொண்டு போக ஆரம்பித்தேன். பிரிட்டோரியாவிலும் ஜோகன்னஸ்பர்க்கிலும் இருக்கும் இந்தியருடன் விஷயங்களை விவாதித்தேன். முடிவாக ஜோகன்னஸ்பர்க்கில் எனது அலுவலகத்தை அமைப்பது என்று தீர்மானித்தேன். டிரான்ஸ்வால் சுப்ரீம் கோர்ட்டில் என்னை வக்கீலாகப் பதிவு செய்து கொள்ளுவார்களா என்பது சந்தேகமாகவே இருந்தது. ஆனால் வக்கீல்கள் என் மனுவை எதிர்க்கவில்லை. கோர்ட்டும் அங்கீகரித்துவிட்டது. தகுதியான இடத்தில் அலுவலகத்திற்கு அறைகளை அமர்த்திக் கொள்வது என்பது இந்தியருக்குக் கஷ்டமானதாகவே இருந்தது. ஸ்ரீ ரிச் என்பவர் அப்பொழுது அங்கே வர்த்தகராக இருந்தார். அவருடன் எனக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அவருக்குத் தெரிந்த வீட்டுத் தரகர் ஒருவருடைய முயற்சியின் பேரில் நகரில் வக்கீல்கள் இருக்கும் பகுதியில் என் அலுவலகத்திற்குத் தகுதியான அறைகள் எனக்கு கிடைத்தன. என் தொழில் சம்பந்தமான வேலையையும் தொடங்கினேன்.


Offline Anu

தியாக உணர்ச்சி மிகுந்தது

டிரான்ஸ்வாலில் குடியேறிய இந்தியரின் உரிமைக்காகவும், ஆசியாக்காரர் இலாகாவின் சம்பந்தமாகவும் நடந்த போராட்டத்தைக் குறித்து நான் கூறும் முன்பு, என் வாழ்க்கையின் வேறு சில அம்சங்களைப்பற்றியும் நான் கூறவேண்டும். இதுவரையில் எனக்குக் கலப்பானதோர் ஆர்வம் இருந்து வந்தது. தன்னலத் தியாகம் செய்ய வேண்டும் என்ற உணர்ச்சியை, வருங்காலத்திற்கு ஏதாவது ஒரு பொருள் சேர்த்துவைக்க வேண்டும் என்ற ஆர்வம் மிதப்படுத்திக்கொண்டிருந்தது. பம்பாயில் நான் என் அலுவலகத்தை அமைத்த சமயம், ஓர் அமெரிக்க இன்ஷூயூரன்ஸ் ஏஜெண்டு அங்கே வந்தார். அவர் நல்ல முகவெட்டும் இனிக்கப் பேசும் திறமையும் உள்ளவர். நாங்கள் ஏதோ வெகு காலம் பழகிய நண்பரைப் போல அவர் என்னிடம் என் வருங்கால நலனைக் குறித்து விவாதித்தார். அமெரிக்காவில் உங்கள் அந்தஸ்தில் உள்ளவர்கள் எல்லோரும் தங்கள் ஆயுளை இன்ஷூர் செய்திருக்கிறார்கள். எதிர்காலத்தை முன்னிட்டு நீங்களும் இன்ஷூர் செய்து கொள்ள வேண்டாமா? வாழ்வு நிச்சயமில்லாதது. அமெரிக்காவிலுள்ள நாங்கள், இன்ஷூர் செய்து கொண்டு விட வேண்டியதை ஒரு மதக் கடமையாகவே கருதுகிறோம். நீங்களும் ஒரு சிறு தொகைக்கு இன்ஷூர் செய்து கொள்ளுமாறு நான் உங்களைத் தூண்டக்கூடாதா? என்றார், அவர்.

இந்தச் சமயம் வரையில், தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும், நான் சந்தித்த இன்ஷூரன்ஸ் ஏஜெண்டுகள் கூறியதற்கெல்லாம் செவிக்கொடுக்காமல் இருந்திருக்கிறேன். ஆயுள் இன்ஷூர் செய்வதென்பது பயத்தையும், கடவுளியிடம் நம்பிக்கை இன்மையையும் காட்டுவதாகும் என்று நான் எண்ணினேன். ஆனால், இப்பொழுதோ அமெரிக்க ஏஜெண்டு காட்டிய ஆசைக்கு பலியாகிவிட்டேன். அவர் தமது வாதத்தைச் சொல்லிக் கொண்டிருந்த போது என் மனக்கண்ணின் முன்பு என் மனைவியும் குழந்தைகளும் நின்றனர். உன் மனைவியின் நகைகள் எல்லாவற்றயுமே நீ விற்று விட்டாய் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். உனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் அவளையும் குழந்தைகளையும் பராமரிக்கும் பாரம், உன் ஏழைச் சகோதரர் தலைமீது விழும். அவரோ, உனக்குத் தந்தைபோல் இருந்து எவ்வளவோ பெருந்தன்மையுடன் நடந்து வந்திருக்கிறார். அப்படியிருக்க மேலும் அவர்மீது பாரத்தைச் சுமத்துவது உனக்குத் தகுமா? இதுவும் இதுபோன்ற வாதங்களும் என்னுள் எழுந்தன. இவை, ரூ. 10000 -க்கு இன்ஷூர் செய்யுமாறு என்னைத் தூண்டிவிட்டன.

ஆனால், தென்னாப்பிரிக்காவில் என் வாழ்க்கை முறை மாறியதோடு என் மனப்போக்கும் மாறுதலடைந்தது, சோதனையான இக்காலத்தில் நான் செய்த ஒவ்வொரு காரியத்தையும் கடவுளின் பெயரால் அவர் பணிக்கு என்றே செய்துவந்தேன். தென்னாப்பிரிக்காவில் நான் எவ்வளவு காலம் இருக்க வேண்டியிருக்கும் என்பது தெரியாது. இந்தியாவுக்குத் திரும்ப முடியாமலே போய்விடுமோ என்ற ஒரு பயமும் எனக்கு இருந்தது. ஆகவே, என் மனைவியையும் குழந்தைகளையும் என்னுடன் வைத்துக் கொண்டு அவர்களைப் பராமரிப்பதற்கு வேண்டியதைச் சம்பாதிப்பது என்று தீர்மானித்தேன். இத்திடம் நான் ஆயுள் இன்ஷூரன்ஸ் செய்திருந்ததற்காக வருந்தும் படி செய்தது. இன்ஷூரன்ஸ் ஏஜெண்டின் வலையில் விழுந்து விட்டதற்காக வெட்கப்பட்டேன். என் சகோதரர் உண்மையாகவே என் தந்தையின் நிலையில் இருப்பதாக இருந்தால் என் மனைவி விதவையாகி விடும் நிலைமையே ஏற்பட்டாலும், அவளைப் பாதுகாப்பதை அதிகப்படியான சுமை என்று அவர் கருதமாட்டார். மற்றவர்களைவிட நான் சீக்கிரத்தில் இறந்து போவேன் என்று நான் எண்ணிக்கொள்ளுவதற்குத்தான் என்ன காரணம் இருக்கிறது? பார்க்கப் போனால், உண்மையில் காப்பாற்றுகிறவர் எல்லாம் வல்ல கடவுளேயன்றி நானோ, என் சகோதரரோ அல்ல. நான் ஆயுள் இன்ஷூரன்ஸ் செய்ததனால், என் மனைவியும் குழந்தைகளும் சுயபலத்தில் நிற்க முடியாதவாறு செய்துவிட்டேன். அவர்கள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளுவார்கள் என்று ஏன் எதிர்பார்க்கக்கூடாது? உலகத்தில் இருக்கும் எண்ணற்ற ஏழைக் குடும்பங்களுக்கு என்ன நேர்ந்திருக்கிறது? அவர்களில் நானும் ஒருவனே என்று நான் ஏன் கருதிக் கொள்ளக்கூடாது? இவ்வாறு எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

இவ்விதமான எண்ணற்ற எண்ணங்கள் என் மனத்தில் தோன்றிக் கொண்டிருந்தன. ஆனால் அவற்றின்படி நானே உடனேயே ஒன்றும் செய்துதவிடவில்லை. தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பிய பிறகு இன்ஷூரன்ஸுக்கு ஒரு தவணையாவது பணம் கட்டியதாகவே எனக்கு ஞாபகம். இவ்விதமான எண்ணப்போக்குக்கு வெளிச் சந்தர்ப் பங்களும் உதவியாக இருந்தன. நான் முதல் தடவை தென்னாப்பிரிக்காவில் தங்கியபோது கிறிஸ்தவர்களின் தொடர்பே, சமய உணர்ச்சி என்னும் குன்றாமல் இருக்கும்படி செய்து வந்தது. இப்பொழுதோ பிரம்மஞான சங்கத்தினரின் தொடர்பு, அதற்கு அதிக பலத்தை அளித்தது. ஸ்ரீ ரிச் பிரம்மஞான சங்கத்தைச் சேர்ந்தவர். ஜோகன்ன ஸ்பர்க்கிலிருக்கும் அச்சங்கத்துடன் எனக்குத் தொடர்பு ஏற்படும்படி அவர் செய்தார். அதற்கும் எனக்கும் அபிப்பிராயபேதம் இருந்ததால், அச்சங்கத்தில் நான் அங்கத்தினன் ஆகவில்லை. ஆனால், அநேகமாக அச்சங்கத்தினர் ஒவ்வொருவருடனும் நான் நெருங்கிப் பழகினேன். ஒவ்வொரு நாளும் சமய சம்பந்தமாக அவர்களுடன் விவாதிப்பேன். பிரம்மஞான நூல்களிலிருந்து சில பகுதிகளை அங்கே படிப்போம். சில சமயங்களில் அவர்கள் கூட்டங்களில் பேசும் வாய்ப்பும் எனக்கு இருந்தது. பிரம்ம ஞான சங்கத்தின் முக்கியமான விஷயம், சகோதரத்துவ எண்ணத்தை வளர்த்துப் பரப்புவதாகும். இதைக் குறித்து எவ்வளவோ விவாதித்து இருக்கிறோம். அங்கத்தினர்களின் நடத்தை அவர்களுடைய கொள்கைக்குப் பொருத்தமானதாக இல்லாத சமயங்களில் அவர்களை நான் குறை கூறுவேன். இவ்விதம் குறை கூறிவந்ததால், என்னளவில் நன்மை ஏற்படாமல் போகவில்லை. என்னையே நான் சோதனை செய்து பார்த்துக் கொள்ளுமாறு அது செய்தது.


Offline Anu

ஆன்ம சோதனையின் பலன்

1893-இல் கிறிஸ்தவ நண்பர்களுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டபோது நான் ஒன்றும் தெரியாதவனாகவே இருந்தேன். ஏசுவின் உபதேச மேன்மையை நான் உணர்ந்து அதை ஏற்றுக் கொண்டுவிடும்படி செய்தவதற்கு அவர்கள் பெரு முயற்சி எடுத்துக் கொண்டார்கள். நானே, திறந்த மனத்துடன் அவர்கள் கூறியதையெல்லாம் அடக்கத்தோடும் மரியாதையோடும் கேட்டுக் கொண்டேன். அச்சமயம் என் சக்திக்கு எட்டியவரையில் இயற்கையாகவே ஹிந்து சமயத்தைக் குறித்து நான் படித்து வந்ததோடு மற்றச் சமயங்களைப் பற்றியும் புரிந்துகொள்ள முயன்று வந்தேன்.

1903-ஆம் ஆண்டிலோ, நிலைமை ஓரளவுக்கு மாறுதல் அடைந்துவிட்டது. பிரம்மஞான சங்க நண்பர்கள், என்னை அச்சங்கத்திற்குள் இழுத்துவிட நிச்சயமாக முயன்றே வந்தனர். ஹிந்து என்ற முறையில் என்னிடமிஐந்து ஏதாவது அறிந்து கொள்ளலாம் என்ற நோக்கத்தின் பேரிலேயே அவ்வாறு முயன்றார்கள். பிரம்மஞான சங்க நூல்களில் ஹிந்து தருமத்தைப் பற்றி விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. ஆகையால், நான் அவர்களுக்கு உதவியாக இருக்கக்கூடும் என்று இந்த நண்பர்கள் கருதினார்கள். சமஸ்கிருத மொழி எனக்கு அவ்வளவாக நன்றாகத் தெரியாது என்றும், ஹிந்து சமய நூல்களை நான் மூலமொழியில் படித்ததில்லை என்றும், மொழிப்பெயர்ப்புக்களை நான் படித்ததுகூட மிகக்குறைவே என்றும் அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன். ஆனால், சமஸ்காரம் அல்லது பூர்வஜன்ம வாசனை, மறுபிறப்பு ஆகியவைகளில் அவர்கள் நம்பிக்கையுள்ளவர்களாகையால், நான் கொஞ்சமாவது தங்களுக்கு உதவியாக இருக்க முடியும் என்று அவர்கள் எண்ணினார்கள். ஆகவே ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது போலானேன். இந்த நண்பர்கள் சிலருடன் சேர்ந்து சுவாமி விவேகானந்தரின் ராஜ யோகம் என்ற நூலைப் படிக்க ஆரம்பித்தேன். எம்.என். துவிவேதி எழுதிய ராஜயோகம் என்று நூலை, வேறு சிலருடன் சேர்ந்து படித்தேன். ஒரு நண்பருடன் பதஞ்சலியின் யோக சூத்திரங்களையும், மற்றும் பலருடன் பகவத் கீதையையும் நான் படிக்க வேண்டியதாயிற்று. ஒருவகையான மெய் நாடுவோர் சங்கத்தை நாங்கள் அமைத்துக்கொண்டு ஒழுங்காக நூல்களைப் படித்து வந்தோம்.

கீதையினிடம் இதற்கு முன்பே எனக்குப் பக்தி இருந்தது. அது என் உள்ளத்தைக் கவர்ந்தும் இருந்தது. அதை ஆழ்ந்து படிக்க வேண்டியதன் அவசியத்தை இப்பொழுது உணர்ந்தேன். என்னிடம் கீதையின் இரண்டொரு மொழிபெயர்ப்புக்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சமஸ்கிருத மூலநூலைப் புரிந்து கொள்ள முயன்றேன். தினம் இரண்டொரு சுலோகத்தை மனப்பாடம் செய்துடுவிடுவது என்றும் தீர்மானித்தேன். எனது காலைக் கடன்களைச் செய்யும் நேரத்தை இதற்குப் பயன்படுத்திக் கொண்டேன். இவ்வேலைகளை முடிப்பதற்கு எனக்கு முப்பத்தைந்து நிமிடங்களாகும். பல் துலக்குவதற்கு பதினைந்து நிமிடங்கள், குளிக்க இருபது நிமிடங்கள். மேனாட்டு வழக்கத்தை அனுசரித்து, சுவரில் கீதையின் சுலோகங்களை எழுதிய காகிதத்தை ஒட்டி விடுவேன். நினைவுபடுத்திக் கொள்ள அவ்வப்போது அதைப் பார்த்துக் கொள்ளுவேன். அன்றாடம் மனப்பாடம் செய்துகொள்வதற்கும், முன்னால் மனப்பாடம் செய்திருந்த சுலோகங்களை நினைவுபடுத்திக் கொள்ளுவதற்கும் எனக்கு அந்த நேரம் போதுமானதாக இருந்தது. இவ்வாறு பதின்மூன்று அத்தியாயங்களை மனப்பாடம் செய்துவிட்டதாக எனக்கு ஞாபகம். ஆனால் வேறு வேலைகள் அதிகமாகிவிட்டபோது கீதையை மனப்பாடம் செய்வதை விட்டுவிட வேண்டியதாயிற்று. சிந்திப்பதற்கு எனக்கு இருந்த நேரத்தையெல்லாம், சத்தியாகிரகத்தின் பிறப்பும் அதன் வளர்ச்சியும் கிரகித்து கொண்டு விட்டன. இன்றுவரை நிலைமை அவ்வாறே இருந்து வருகிறது எனலாம்.

கீதையைப் படித்தது, மற்ற நண்பர்களிடையே என்ன மாறுதலை உண்டாக்கியது என்பதை அவர்களே கூற முடியும். ஆனால் என்னைப் பொறுத்தவரையில், எனக்கு வழிகாட்டும் தவறாத் தணையாகக் கீதை ஆகிவிட்டது. சந்தேகம் தோன்றும் போதெல்லாம் புரட்டிப் பார்த்துக் கொள்ளும் அகராதியைப் போல அது எனக்கு ஆயிற்று. தெரியாத ஆங்கிலச் சொற்களின் பொருளை அறிவதற்கு நான் ஆங்கில அகராதியைப் புரட்டிப் பார்ப்பதுபோல் எனக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கும் சோதனைகளுக்கும் உடனே பரிகாரங்களைக் கண்டுகொள்ள இந்த ஒழுக்க நெறி அகராதியைப் புரட்டுவேன். அபரிக்கிரம் ( உடைமை வைத்துக் கொள்ளாமை ), சமபாவம் ( சமத்துவம் ) போன்ற சொற்கள் என் உள்ளத்தைக் கவர்ந்தன. அந்தச் சமபாவத்தை எப்படி வளர்ப்பது, எப்படிப் பாதுகாப்பது என்பதே பிரச்னை. சிலர் நம்மை அவமதிப்பவர்கள், மற்றும் சிலர் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், நேற்றுச் சக ஊழியர்களாக இருந்தவர்கள் இன்று அர்த்தமில்லாத எதிர்ப்புகளை எல்லாம் கிளப்புகிறார்கள், இவர்களல்லாமல் எப்பொழுதுமே எல்லோரையுமே ஒருவர் சமபாவத்துடன் நோக்குவது எப்படி? உடைமை யெதுவுமே இல்லாதிருப்பதும் எவ்வாறு? நம் உடம்பே ஊர் உடைமை அல்லவா? மனைவியும் குழந்தைகளும் உடமைகளல்லவா? என்னிடம் அலமாரி நிறைய இருக்கும் புத்தகங்களையெல்லாம் நான் கொளுத்திவிட வேண்டுமா? எனக்கு இருப்பவற்றையெல்லாம் விட்டுவிட்டுக் கடவுளைப் பின்பற்ற வேண்டுமா? இதற்கெல்லாம் உடனே நேரான பதில் கிடைத்தது.

என்னிடம் இருப்பவைகளையெல்லாம் நான் துறந்து விட்டாலன்றிக் கடவுள் நெறியை நான் பின்பற்ற முடியாது என்பதே அந்தப் பதில். ஆங்கிலச் சட்டத்தைக் குறித்து நான் படித்திருந்ததும் எனக்கு உதவி செய்தது. சமநீதியின் தத்துவத்தைக் குறித்து ஸ்னெல் எழுதியிருந்த விளக்கம் என் நினைவுக்கு வந்தது. கீதையின் உபதேசத்தை அனுசரித்துக் கவனித்தபோது தருமகர்த்தா என்ற சொல்லின் பொருள் எனக்கு மிகத் தெளிவாக விளங்கியது. நீதி சாத்திரத்தினிடம் எனக்கு இருந்த மதிப்பு அதிகரித்தது. மத தருமத்தை நான் அதில் கண்டேன். உடைமை கூடாது என்று கீதை உபதேசிப்பதன் உண்மைக் கருத்தையும் உணர்ந்தேன். மோட்சத்தை அடைய விரும்புகிறவர்கள் தம்மிடம் இருக்கும் உடைமைகள் விஷயத்தில் மருமகர்த்தா போன்று நடந்து கொள்ள வேண்டும். தருமகர்த்தாவின் ஆதிக்கத்தில் எவ்வளவுதான் சொத்துக்களிலிருந்தாலும் அதில் ஒரு சிறிதும் தனக்குச் சொந்தமானதல்ல என்று அவர் எண்ணுவதுபோல எண்ண வேண்டும் என்பதே அதன் பொருள் எனக்கண்டேன். உடைமையின்மைக்கும் எல்லோரையும் சமமாகப் பாவிப்பதற்கும், மனமாற்றமும், நடத்தையில் மாறுபாடும் ஏற்படுவது முதல் அவசியம் என்று பட்டப் பகல் போல எனக்கு வெட்ட வெளிச்சமாகப் புலனாயிற்று. என் மனைவியையும் குழந்தைகளையும் என்னையும் படைத்த கடவுள், எங்களைக் காப்பாற்றிக் கொள்ளுவார் என்பதில் திடமான உறுதி கொண்டேன். உடனே நான் ரேவா சங்கர் பாய்க்கு எழுதி, இன்ஷூரன்ஸூக்கு மேற்கொண்டு பணம் கட்டவேண்டாம் என்று அறிவித்தேன். இதுவரை கட்டிய பணத்தில் கிடைக்கத் கூடியதைப் பெறப்பார்க்கும்படியும், இல்லாவிட்டால் அத் தொகையைப் போனதாகவே வைத்துக் கொள்ளும் படியும் எழுதினேன். எனக்குத் தந்தையைபோல் இருந்துவந்தவரான என் சகோதரருக்கும் கடிதம் எழுதினேன். அதுவரையில் நான் மிச்சமாக வைக்க முடிந்ததையெல்லாம் நான் அவருக்கே கொடுத்து விட்டதாகவும், இனி என்னிடமிருந்து அவர் வேறு எதுவும் எதிர் பார்ப்பதற்கு இல்லை என்றும் மேற்கொண்டும் என்னிடம் ஏதாவது மீதமிருக்குமானால் அதை இந்திய சமூகத்தின் நன்மைக்காகவே செலவிட வேண்டியிருக்கிறது என்றும் அவருக்கு விளக்கினேன்.

என் சகோதரர் இதை எளிதாக அறிந்துகொள்ளும்படி செய்ய என்னால் ஆகவில்லை. அவருக்கு நான் செய்யக் கடமைப்பட்டிருப்பதை விளக்கி அவர் எனக்குக் கடுமையான பாஷையில் கடிதம் எழுதினர். எங்கள் தந்தையைவிட நான் அதிகப் புத்திசாலியாகி விட்டதாக எண்ணிக்கொண்டுவிட வேண்டாம் என்றார். தாம் செய்வதைப் போன்;றே நானும் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டும் என்று எழுதினார். தந்தையார் என்ன செய்தாரோ அதையே நான் செய்து வருகிறேன் என்பதைக் குறிப்பிட்டு, அவருக்கு எழுதினேன். குடும்பம் என்பதன் பொருளைக் கொஞ்சம் விரிவுபடுத்திக் கொண்டால், நான் மேற்கொண்ட காரியத்தின் விவேகம் நன்று தெளிவாகும்.

என் சகோதரர் என்னைக் கைவிட்டுவிட்டார். கடிதம் எழுதுவதைக்கூட அடியோடு நிறுத்திவிட்டார். இதனால் அதிகமான வருத்தம் அடைந்தேன். ஆனால் என் கடமை என்று நான் கருதியதைக் கைவிடுவதென்பதோ இன்னும் அதிக மன வேதனையைத் தருவதாகிவிடும். ஆகையால், குறைவான மனக்கஷ்டத்தை அளிப்பதாக இருப்பதைச் செய்தேன். ஆனால் அது என் சகோதரரிடம் எனக்கு இருந்த பக்தியைப் பாதிக்கவில்லை. அது எப்பொழுதும் போல் தூயதாகவும் அதிகமாகவுமே இருந்து வந்தது. என் மீது அவர் வைத்திருந்த அபாரமான அன்பே அவருடைய துயரத்திற்கெல்லாம் காரணம். குடும்பத்தின் விஷயத்தில் நான் சரியாக நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினாரேயன்றி என் பணத்தைப் பற்றி அவர் அவ்வளவாகக் கவலைப்படவில்லை. அவருடைய வாழ்நாளில் அந்நிய காலத்தில் என்னுடைய கருத்தின் சிறப்பை அவர் உணர்ந்தார். மரணத் தறுவாயிலிருந்த சமயம் நான் செய்ததே சிறந்த காரியம் என்பதைத் தெரிந்துகொண்டு எனக்கு உருக்கமான கடிதம் ஒன்றும் எழுதினார். தந்தை தனயனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். தமது புதல்வர்களை என்னிடம் ஒப்படைப்பதாகவும் எனக்குச் சரி என்று தோன்றும் வழியில் அவர்களை வளர்க்குமாறும் அறிவித்தார். என்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தால் துடித்துக் கொண்டிருப்பதாகத் தந்தி கொடுத்தார். அவரை வருமாறு பதிலுக்குத் தந்தி கொடுத்தேன். ஆனால் கடவுள் சம்மதம் இல்லாமல் போயிற்று. அவருடைய புதல்வர்களைக் குறித்து அவர் விரும்பியதும் நிறைவேறவில்லை. தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்படுவதற்கு முன்பே அவர் இறந்து விட்டார். அவருடைய குமாரர்கள் பழைய சூழ்நிலையில் வளர்ந்தவர்கள். ஆகையால் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் போக்கை மாற்றிக்கொள்ள முடியவில்லை. அவர்களை என்பால் இழுத்துக் கொள்ளவும் என்னால் ஆகவில்லை. அது அவர்கள் குற்றமன்று. இயற்கையான குணத்தை மாற்றிவிட யாரால் தான் முடியும்? பிறப்போடேயே வந்துவிட்ட எண்ணங்களை யார்தான் மாற்றிக் கொண்டுவிட முடியும்? தாம் வளர்ச்சி பெற்ற வகையிலேயே தம் புதல்வர்களும். தமது பராமரிப்பில் இருப்போரும் வளர்ச்சியடைவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண் ஆசை. பெற்றோராயிருப்பது எவ்வளவு பயங்கரமான பொறுப்பு என்பதைக் காட்டுவதற்கு இந்த உதாரணம் ஓரளவுக்குப் பயனுள்ளதாகிறது.


Offline Anu

சைவ உணவுக் கொள்கைக்கு இட்ட பலி

தியாகம், எளிமை என்ற லட்சியங்கள் என் அன்றாட வாழ்க்கையில் மேலும் மேலும் அதிகமாக நிறைவேறி வந்தன. சமய உணர்ச்சியும் மேலும் மேலும் துரிதமாக எனக்கு ஏற்பட்டு வந்தது. அதே சமயம், சைவ உணவுக் கொள்கையைப் பரப்ப வேண்டுமென்ற ஆர்வமும் அதிகரித்துக் கொண்டே வந்தது. ஒரு கொள்கையைச் சரியானபடி பரப்ப வேண்டுமானால், அதற்கு எனக்குத் தெரிந்தது ஒரே ஒரு வழிதான். அந்தக் கொள்கையை நானே கடைபிடித்துக் காட்டுவதும், அறிவை வளர்த்துக் கொள்ள ஆராய்ச்சி செய்பவர்களுடன் விவாதிப்பதுமே அந்த வழி. ஜோகன்னஸ்பர்க்கில் ஒரு ஜெர்மானியர் சைவ உணவு விடுதி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். கூனேயின் நீர் சிகிச்சையிலும் அந்த ஜெர்மானியர் நம்பிக்கை உடையவர். நான் அந்த விடுதிக்குப் போவது உண்டு. ஆங்கில நண்பர்களை அங்கே அழைத்துக் கொண்டு போயும் அதற்கு உதவி செய்தேன். ஆனால், அவ்விடுதி என்றுமே பணக்கஷ்டத்தில் இருந்ததால் அது நீடித்து நடக்க முடியாது என்பதைக் கண்டேன். அதற்கு எவ்வளவு தூரம் உதவி செய்யலாமோ அவ்வளவும் செய்தேன். கொஞ்சம் பணத்தையும் அதற்காகச் செலவிட்டேன். ஆயினும் கடைசியாக அதை மூடும் படியாயிற்று.

அநேகமாக எல்லாப் பிரம்மஞான சங்கத்தினரும் சைவ உணவுக்காரர்கள். அச்சங்கத்தைச் சேர்ந்த உற்சாகமுள்ள ஒரு பெண்மணி, சைவச் சாப்பாட்டு விடுதி ஒன்றைப் பெரிய அளவில் ஆரம்பிக்க முன் வந்தார். அவர் கலைகளில் அதிகப் பிரியமுள்ளவர். ஊதாரிக் குணமுள்ளவர். கணக்கு வைப்பதைப் பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியாது. அவருக்கு நண்பர்கள் அநேகர் உண்டு. முதலில் அவ்விடுதியைச் சிறிய அளவில் ஆரம்பித்தார். பிறகு அதை விரிவுபடுத்திப் பெரிய அறைகளை வாடகைக்கு அமர்த்திக் கொள்ள விரும்பினார். உதவி செய்யுமாறு என்னைக் கேட்டார். இவ்விதம் அவர் என் உதவியை நாடியபோது அவருடைய செல்வ நிலையைப்பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால் அவருடைய திடம் அநேகமாகச் சரியாகவே இருக்கும் என்று நம்பினேன். அவருக்கு உதவி செய்யக்கூடிய நிலையில் நான் இருந்தேன். என்னுடைய கட்சிக்காரர்கள் பெருந்தொகைகளை என்னிடம் கொடுத்து வைப்பது வழக்கம். இதில் ஒரு கட்சிக்காரருடைய அனுமதியின் பேரில், என்னிடமிருந்த அவர் பணத்திலிருந்து சுமார் ஆயிரம் பவுனை அப்பெணிமணிக்குத் கொடுத்தேன். இந்தக் கட்சிக்காரர் பெருங்குணம் படைத்தவர், நம்பக்கூடியவர். ஆரம்பத்தில் இவர் ஒப்பந்தத் தொழிலாளியாகத் தென்னாப்பிரிக்காவுக்கு வந்தவர். நீங்கள் விரும்பினால் பணத்தைக் கொடுங்கள். இவ்விஷயங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு உங்களைத்தான் தெரியும் என்றார். இவர் பெயர் பத்ரி. பின்னால் இவர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தீவிரப் பங்கு எடுத்துக் கொண்டதோடு சிறைத் தண்டனையையும் அனுபவித்தார். இந்தச் சம்மதமே போதுமானது என்று கருதி அவருடைய பணத்தை அப்பெண்மணிக்குக் கொடுத்தேன்.

கொடுத்த பணம் வசூலாகாது என்று இரண்டு மூன்று மாதங்களில் எனக்குத் தெரிந்தது. இவ்வளவு பெரிய நஷ்டத்தை நான் பொறுக்க முடியாது. இத்தொகையை வேறு எத்தனையோ காரியங்களுக்கு நான் உபயோகித்திருக்கலாம். கடன் திரும்பி வரவே இல்லை. ஆனால் நம்பிய பத்ரி நஷ்டமடைய எப்படி அனுமதிக்க முடியும்? அவர் என்னை மாத்திரமே அறிவார். எனவே அவர் நஷ்டத்தை ஈடு செய்தேன். இந்தக் கொடுக்கல் வாங்கலைக் குறித்து நண்பரான ஒரு கட்சிக்காரரிடம் நான் கூறியபோது, அவர் நயமாக என் அசட்டுத்தனத்தைக் கண்டித்தார். அதிர்ஷ்டவசமாக நான் அப்போது மகாத்மா ஆகிவிடவில்லை. பாபு (தந்தை) ஆகிவிடவுமில்லை. நண்பர்கள் அன்போடு என்னை பாய் (சகோதரர்) என்றே அழைத்து வந்தார்கள். அந்த நண்பர் கூறியதாவது. நீங்கள் இப்படிச் செய்திருக்கக்கூடாது. நாங்கள் எத்தனையோ காரியங்களுக்கு உங்களை நம்பியிருக்கிறோம். இத்தொகை உங்களுக்குத் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. உங்கள் கையிலிருந்து நீங்கள் அவருக்குக் கொடுத்துவிடுவீர்கள். ஆனால் உங்கள் சீர்திருத்தத் திட்டங்களுக்கெல்லாம் உங்கள் கட்சிக்காரர்களின் பணத்தைக் கொண்டு உதவி செய்துகொண்டே போவீர்களானால், நமது பொது வேலைகளெல்லாம் நின்று போய்விடும்.

இந்த நண்பர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதைச் சந்தோஷத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன். தென்னாப்பிரிக்காவிலோ, வேறு எங்குமோ, அவரைப்போலத் தூய்மையானவரை நான் இன்னும் கண்டதில்லை. தாம் யார் மீதாவது சந்தேகம் கொள்ள நேர்ந்து, தாம் சந்தேகித்தது சரியல்ல என்று பிறகு கண்டு கொண்டால், அவர் அவர்களிடம் போய் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தம் மனத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுவார். இதை அவர் பன்முறை செய்து நான் பார்த்திருக்கிறேன். அவர் எனக்குச் சரியானபடி எச்சரிக்கை செய்திருக்கிறார் என்பதைக் கண்டேன். ஏனெனில், பத்ரிக்கு ஏற்பட்ட நஷ்டத்தை நான் ஈடு செய்துவிட்டேனாயினும், இதே போன்ற வேறு நஷ்டத்தை நான் சமாளிக்க முடியாமல் போயிருக்கும்.

அந்நிலைமையில் நான் கடன் பட நேர்ந்திருக்கும். கடன் படுவது என்பதை என் வாழ்க்கையில் நான் என்றுமே செய்ததில்லை. அத்துடன் கடன்படுவதை எப்பொழுதுமே நான் வெறுத்தும் வந்திருக்கிறேன். ஒருவருடைய சீர்திருத்த உற்சாகம்கூட, அவர் தம் எல்லையை மீறிப் போய்விடும்படி செய்துவிடக்கூடாது என்பதை நான் உணருகிறேன். பிறர் நம்பிக் கொடுத்திருந்த பணத்தை இன்னொருவருக்குக் கடன் கொடுத்ததன் மூலம் கீதையின் முக்கியமான உபதேசத்தை மீறி நடந்து விட்டேன் என்றும் கண்டேன். பயனை எதிர்பாராது உன் கடமையைச் செய் என்பதே கீதையின் உபதேசம் இத்தவறு என்னை எச்சரிக்கும் சுடரொளிபோல ஆயிற்று. சைவ உணவுக் கொள்கை என்ற பீடத்தில் இட்ட இந்த பலி மனமாரச் செய்ததும் அன்று, எதிர்பார்த்தும் அல்ல வேறுவழியில்லாமல் நடந்துவிட்டதே அது.


Offline Anu

மண், நீர் சிகிச்சை

என் வாழ்க்கை முறையை நான் எளிதாக்கிக்கொண்டு வர வர, மருந்துகளின்மீது எனக்கு நாளாவட்டத்தில் வெறுப்பும் அதிகரித்துக் கொண்டு வந்தது. டர்பனில் நான் வக்கீல் தொழில் நடத்தி வந்தபோது, பலவீனத்தினாலும் வாத சம்பந்தமான எரிச்சலினாலும் சிறிது காலம் பீடிக்கப்பட்டிருந்தேன். என்னைப் பார்க்க வந்திருந்த டாக்டர் பி.ஜே. மேத்தா எனக்குச் சிகிச்சை செய்தார். நானும் குணமடைந்தேன். அதன் பிறகு நான் இந்தியாவுக்குத் திரும்பிய காலம் வரையில் குறிப்பிடக்கூடிய வியாதி எதனாலும் நான் பீடிக்கப்பட்டிருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால், ஜோகன்னஸ்பர்க்கில் இருந்தபோது மலச்சிக்கலும், அடிக்கடி தலைவலி உபத்திரமும் இருந்து வந்தன. எப்பொழுதாவது பேதி மருந்து சாப்பிட்டும், சாப்பாட்டை ஒழுங்குபடுத்திக் கொண்டும் என் தேக நிலை கெடாமல் பார்த்து வந்தேன். ஆனால், நான் நல்ல தேக சுகத்துடன் இருந்தேன் என்று சொல்லமுடியாது. இந்த பேதி மருந்துகளின் பிடியிலிருந்து எப்பொழுதான் விடுபடுவோமோ ? என்று எப்பொழுதும் ஆச்சரியப்பட்டுக் கொண்டும் இருப்பேன்.

அந்தச் சமயத்தில் மான்செஸ்டரில் காலை ஆகார மறுப்புச் சங்கம் என ஒன்று ஆரம்பமாகியிருப்பதாகப் படித்தேன். இச்சங்கத்தை ஆரம்பித்தவர்களின் வாதம் இதுதான். ஆங்கிலேயர்கள் அடிக்கடியும் அதிகமாகவும் சாப்பிடுகிறார்கள். நடுநிசி வரையில் அவர்கள் சாப்பிடுகின்றனர். ஆகையால் வைத்தியச் செலவு அதிகமாகியது, இந்த நிலைமை சீர்பட வேண்டும் என்று அவர்கள் விரும்பினால் காலை ஆகாரத்தையாவது அவர்கள் கைவிடவேண்டும். இந்த விஷயங்களையெல்லாம் என் விஷயத்திலும் சொல்லி விட முடியாதென்றாலும், ஓரளவுக்கு இந்த வாதம் என் அளவிலும் பொருந்துவதாகிறது என்று எண்ணினேன். மாலையில் தேநீர் குடிப்பதோடு தினம் மூன்று வேளை நன்றாகச் சாப்பிட்டும் வந்தேன். நான் குறைவாகச் சாப்பிடுகிறவன் அல்ல. சைவ உணவாகவும் மசாலை சேராததாகவும் இருந்தால், எத்தனை வகைப் பதார்த்தங்கள் இருந்தாலும் நன்றாகச் சாப்பிடுவேன். காலையில் ஆறு, ஏழு மணிக்கு முன்னால் எழுந்திருப்பதில்லை. ஆகையால் நானும் காலைய ஆகாரம் சாப்பிடாமல் இருந்துவிட்டால், எனக்குத் தலைவலி ஏற்படாமல் இருக்கக்கூடும் என்று எண்ணினேன். ஆகவே, இதை அனுசரித்துப் பார்த்தேன். சில தினங்களுக்கு இது கஷ்டமாகவே இருந்தது. ஆனால் தலைவலி அடியோடு மறைந்து போய்விட்டது. இதிலிருந்து, எனக்குத் தேவையானதற்கு அதிகமாக நான் சாப்பிட்டு வந்திருக்கிறேன் என்ற முடிவுக்கு வந்தேன்.

ஆயினும் இந்த மாறுதலினால் எனக்கு இருந்த மலச் சிக்கல் உபத்திரவம் நீங்கியபாடில்லை. கூனேயின் ஆசனக் குளியல் முறையை அனுசரித்துப் பார்த்தேன். இதனால், கொஞ்சம் குணம் தெரிந்ததென்றாலும் முழுவதும் குணமாகவில்லை. இதற்கு மத்தியில் சைவ உணவுச் சாப்பாட்டு விடுதி வைத்திருந்த ஜெர்மானியரோ அல்லது வேறு ஒரு நண்பரோ - யார் என்பதை மறந்துவிட்டேன், ஜஸ்ட் என்பவர் எழுதிய இயற்கைக்குத் திரும்புக என்ற புத்தகத்தை எனக்குக் கொடுத்தார். மண் சிகிச்சையைக் குறித்து இப் புத்தகத்தில் படித்தேன். மனிதனுக்கு இயற்கையான உணவு பழங்களும் கொட்டைகளுமே என்று அதன் ஆசிரியர் கூறியிருந்தார். பழங்கள் மாத்திரமே சாப்பிடுவது என்ற பழக்கத்திற்கு நான் போய்விடவில்லை. ஆனால், மண் சிகிச்சை முறைகளை உடனே பரீட்சிக்க ஆரம்பித்தேன். அற்புதமான பலனைக் கண்டேன். சுத்தமான மண்ணைக் குளிர்ந்த நீரில் நனைத்துப் பிறகு அதை மெல்லிய துணியில் நன்றாகத் தடவி அதை எடுத்து அடி வயிற்றில் கட்டிக் கொள்ளுவது என்பது மண் சிகிச்சை முறைகளுள் ஒன்று. படுக்கப் போகும்போது இவ்வாறு அடிவயிற்றில் கட்டிக் கொள்ளுவேன். பிறகு இரவிலோ அல்லது காலையிலோ நான் விழித்துக் கொள்ளும்போது அதை நீக்கிவிடுவேன். இதனால் நல்ல குணம் ஏற்பட்டது. அது முதல் இந்தச் சிகிச்சையை என்னுடைய நண்பர்களுக்கும் செய்து வந்திருக்கிறேன். இதற்காக வருத்தப்படுவதற்கு எவ்விதக் காரணமும் ஏற்பட்டதே இல்லை. அதே நம்பிக்கையுடன் இந்தச் சிகிச்சை முறையை அனுசரித்துப் பார்க்க என்னால் முடியாது போயிற்று. இதற்கு ஒரு முக்கியமான காரணம் இந்தச் சோதனைகளைச் செய்து பார்ப்பதற்கு ஓர் இடத்தில் நான் தங்கி நிலைபெற்றிருக்க முடியாது போனதேயாகும். என்றாலும் நீர், மண் சிகிச்சையில் எனக்கு இருக்கும் நம்பிக்கை மாத்திரம் எப்போதும்போல் மாறாமல் இருந்து கொண்டிருக்கிறது. இன்றுங்கூட ஓரளவுக்கு எனக்கு மண் சிகிச்சை செய்து கொண்டுதான் வருகிறேன். சமயம் நேரும் பொழுதெல்லாம் என் சக ஊழியர்களுக்கும் இந்த சிகிச்சை முறையை சிபாரிசு செய்து கொண்டும் தான் வருகிறேன்.

என் வாழ்நாளில் இரு முறை கடுமையான நோய்க்கு நான் ஆளாகியிருக்கிறேன். என்றாலும், மருந்து சாப்பிட வேண்டிய அவசியமே மனிதனுக்கு இல்லை என்றுதான் நான் கருதுகிறேன். நோயுறுவோரில் ஆயிரத்துக்கு 999 பேரை சரியான பத்தியச் சாப்பாடு, நீர், மண் சிகிச்சை, இதே போன்ற குடும்ப வைத்தியமுறை ஆகயவற்றினாலேயே குணப்படுத்திவிடமுடியும். சிறு நோய் வந்து விட்டாலும் டாக்டர், வைத்தியர், அல்லது ஹக்கிமிடம் ஓடி எல்லா வகையான தாவர, உலோக வகை மருந்துகளையெல்லாம் விழுங்கிக் கொண்டிருப்பவர்கள் தங்கள் ஆயுளைக் குறைத்துக் கொள்ளுவது மாத்திரமல்ல உடலுக்கு எஜமானர்களாக இருப்பதற்குப் பதிலாக அதற்கு அடிமைகளும் ஆகி விடுகின்றனர். புலனடக்கத்தை இழந்து மனிதர்களாக இல்லாதும் போகிறார்கள். நோயுற்றிருக்கும் சமயத்தில் இதை நான் எழுதுவதால் நான் கூறியிருப்பவைகளை யாரும் அலட்சியமாகக் கருதிவிட வேண்டாம். என் நோய்களுக்குக் காரணம் என்ன என்பதை நான் அறிவேன். அவைகளுக்கு நானே பொறுப்பாளி என்பதையும் நன்றாக அறிந்தே இருக்கிறேன். அப்படி அறிந்திருப்பதனாலேயே நான் பொறுமையை இழந்துவிடவில்லை. உண்மையில் அவை எனக்குப் பாடங்கள் என்பதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்தினேன். ஏராளமான மருந்துகளைச் சாப்பிடும் ஆசையை எதிர்த்தும் வெற்றி பெற்றிருக்கிறேன். என் பிடிவாதம் அடிக்கடி டாக்டர்களுக்குச் சங்கடமாக இருந்திருக்கிறது என்பதை அறிவேன். அவர்களும் அன்புடன் சகித்துக் கொள்ளுகிறார்கள், என்னைக் கைவிடுவதில்லை.

என்றாலும், விஷயத்தை விட்டு நான் நெடுந்தூரம் போய்விடக் கூடாது. மேற்கொண்டும் கதையைக் கூறுவதற்கு முன்னால் வாசகருக்கு எச்சரிக்கையாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த அத்தியாயத்தைப் படித்துவிட்டு ஜஸ்ட் என்பவர் எழுதியிருக்கும் புத்தகத்தை வாங்குகிறவர்கள், அதில் கூறப்பட்டிருப்பது எல்லாமே வேத வாக்கு என்று எடுத்துக் கொண்டுவிடக்கூடாது. ஓர் ஆசிரியர் எப்பொழுதுமே ஒரு விஷயத்தில் ஓர் அம்சத்தை மாத்திரமே எடுத்துக்காட்டுவார். ஆனால் ஒரே விஷயத்தைக் குறைந்தது ஏழு வெவ்வேறு நிலைகளிலிருந்தும் காண முடியும். எல்லாமே அவையவைகளின் அளவில் சரியானவையாகவும் இருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் அதே சமயத்தில், அதே சந்தர்ப்பத்தில் சரியாக இல்லாமலும் இருக்கக் கூடும். அதோடு அநேக புத்தகங்கள் நிறைய விற்க வேண்டும் என்பதற்காகவும் பேரும் புகழும் சம்பாதித்துக் கொள்ளுவதற்காகவும் எழுதப்படுகின்றன. இத்தகைய புத்தகங்களைப் படிக்கிறவர்கள் பகுத்தறிவோடு படிப்பார்களாக. அவற்றில் கூறப்பட்டிருக்கும் ஏதாவது ஒரு முறையைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு முன்னால் கொஞ்சம் அனுபவமுள்ளவரின் ஆலோசனையையும் கேட்டுக் கொள்ள வேண்டும், அல்லது புத்தகங்களைப் பொறுமையுடன் படித்துவிட்டு, அதில் கூறியிருக்கிறபடி செய்வதற்கு முன்னால் அதில் கூறியிருப்பது இன்னது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.


Offline Anu

ஓர் எச்சரிக்கை

அடுத்த அத்தியாயத்திற்கு வரும் வரையில் நான் வேறு விஷயத்திற்குத்தான் போய்க்கொண்டிருக்க வேண்டியிருக்கும் என்று அஞ்சுகிறேன். மண், நீர் சிகிச்சை முறைகளில் நான் சோதனை நடத்தியதோடு உணவு சம்பந்தமான சோதனைகளையும் சேர்த்து கொண்டிருந்தேன். அதைப்பற்றிப் பின்னால் குறிப்பிட எனக்குச் சமயம் இருக்குமென்றாலும், உணவுச் சோதனையைக் குறித்து இஙகே சில விஷயங்களைக் கூறுவது பொருத்தமற்றதாகாது.

நான் நடத்திய உணவுச் சோதனைகளைக் குறித்து இப்பொழுதோ அல்லது இனிமேலோ நான் விவரமாகக் கூறிக்கொண்டிருக்க வேண்டியிராது. ஏனெனில் இதைக் குறித்துக் குஜராத்தியில் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அவை பல ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியன் ஒப்பீனியனில் வெளிவந்தன. பின்னர் அவை ஆரோக்கிய வழி என்ற பெயருடன் புத்தக ரூபமாகவும் வெளிவந்து இருக்கின்றன. என்னுடைய சிறிய நூல்களில் அதுவே கீழை நாடுகளிலும் மேலை நாடுகளிலும் ஏராளமானவர்களால் படிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதன் ரகசியம் என்ன என்பதை இது வரையிலும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அக்கட்டுரைகள் இந்தியன் ஒப்பீனியன் வாசகர்களுக்காக எழுதப்பட்டவை. ஆனால் இந்தியன் ஒப்பீனியனைப் பார்த்தேயிராத கிழக்கு நாடுகளிலும் மேற்கு நாடுகளிலும் உள்ள அநேகருடைய வாழ்க்கையில் அச்சிறு பிரசுரம் பிரமாதமான மாறுதலை உண்டாக்கியிருக்கிறது என்பதை அறிவேன். ஏனெனில் இவ்விஷயத்தைக் குறித்து அநேகர் என்னுடன் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆகையால் அச்சிறு புத்தகத்தைப்பற்றிச் சில விஷயங்களை இங்கே கூறவேண்டியது அவசியமாகிறது. ஏனெனில், அதில் நான் கூறியிருக்கும் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளுவதற்கு எந்தக் காரணமும் இருப்பதாக நான் காணவில்லையாயினும் என் நடைமுறைப் பழக்கத்தில் சில பெரிய மாறுதல்களைச் செய்து கொண்டிருக்கிறேன். அப்புத்தகத்தைப் படிப்பவர்கள் எல்லோருக்கும் அது தெரிந்திருக்காது. அதை அவர்களுக்குத் தெரிவித்துவிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நான் எழுதியிருக்கும் மற்றெல்லாவற்றையும் போலவே அச்சிறு புத்தகத்தையும் ஆத்மார்த்த நோக்கத்துடனேயே எழுதியிருக்கிறேன். அந்த நோக்கமே என் செயல்கள் ஒவ்வொன்றிற்கும் ஆக்கம் அளித்திருக்கிறது. ஆகையால், அப்புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் சில தத்துவங்களை இன்று நான் அனுசரிக்க முடியாமல் இருப்பது எனக்கு ஆழ்ந்த துயரத்தை அளித்துவருகிறது. குழந்தையாக இருக்கும்போது உண்ணும் தாய்பாலைத் தவிர மனிதன் பால் சாப்பிட வேண்டிய அவசியமே இல்லை என்பது என்னுடைய திடமான நம்பிக்கை. சூரிய வெப்பத்தினால் பக்குவமான பழங்களையும் கொட்டைகளையும் தவிர மனிதனுடைய உணவில் வேறு எதுவுமே இருக்கக்கூடாது. திராட்சை போன்ற பழங்களிலிருந்தும், பாதாம் பருப்புப் போன்ற கொட்டைகளிலிருந்தும் மனிதன் தசைகளுக்கும் நரம்புகளுக்கும் வேண்டிய போஷணையைப் போதுமான அளவு பெற முடியும். இத்தகைய உணவோடு இருக்கும் ஒருவருக்குச் சிற்றின்ப இச்சை போன்ற இச்சைகளை அடக்குவது எளிதாகிறது. ஒருவன் எதைச் சாப்பிடுகிறானோ அது போலவே ஆகிறான் என்ற இந்தியப் பழமொழியில் அதிக உண்மை இருக்கிறது என்பதை நானும் என் சக ஊழியர்களும் அனுபவத்தில் கண்டிருக்கிறோம். இக் கருத்தே அப் புத்தகத்தில் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், துரதிருஷ்டவசமாக இந்தியாவில் என்னுடைய கொள்கைகளில் சிவற்றை, என் நடைமுறையில் எனக்கு நானே மறுத்துக் கொள்ள வேண்டியவனாகிறேன். போருக்காகப் படைக்கு ஆள் சேர்க்கும் பிரச்சாரத்தில் கேடாவில் நான் ஈடுபட்டிருந்த சமயத்தில் உணவில் ஏற்பட்ட ஒரு தவறு, என்னைப் படுக்க வைத்துவிட்டது. இறக்கவேண்டிய நிலைமைக்கும் வந்துவிட்டேன். அதனால், சிதைந்துபோன உடலைப் பால் சாப்பிடாமலேயே தேற்றிக்கொண்டுவிட நான் வீணில் முயன்றேன். பாலுக்குப் பதிலாக வேறு ஒன்றை எனக்குக் கூறுமாறு எனக்குத் தெரிந்த டாக்டர்கள் வைத்தியர்கள், விஞ்ஞானிகள் ஆகியவர்களையெல்லாம் கேட்டேன். மூங்குநீர், மௌரா எண்ணெய், பாதாம்-பால் ஆகியவைகளைச் சாப்பிட்டுச் சோதனை செய்து என் உடல் நிலையை மேலும் கெடுத்துக் கொண்டேன். நோயிலிருந்து எழ எதுவும் எனக்கு உதவி செய்யவில்லை. ஆயுர்வேத வைத்தியர்கள், சரகர் வைத்திய சாத்திரத்திலிருந்து சில பாடல்களை எனக்குப் படித்துக் காட்டினர். நோயாளிகளுக்கு உணவு கொடுப்பதில் மதக் கோட்பாடுகளைக் கவனிக்கக் கூடாது என்று அவை கூறின. ஆகவே பால் சாப்பிடாமலேயே வாழ்வதற்கு எனக்கு உதவி செய்ய அவர்களை எதிர்பார்த்துப் பயனில்லை. மாட்டு மாமிச சூப்பையும் பிராந்தியையும் சாப்பிடுமாறு தயக்கமின்றிச் சிபாரிசு செய்கிறவர்கள், பால் இல்லாத ஆகாரத்தைக் கொண்டு நான் உயிர்வாழ உதவி செய்வார்கள் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும் ?

பசுவின் பாலையோ, எருமைப் பாலையோ நான் சாப்பிடுவதற்கில்லை. ஏனென்றால், அவற்றைச் சாப்பிடுவதில்லை என்று விரதம் கொண்டுவிட்டேன். எந்தப் பாலையுமே சாப்பிடுவதில்லை என்பது தான் விரதம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நான் இந்த விரதத்தை மேற்கொண்ட சமயத்தில் தாய்ப்பசுவும் தாய் எருமையுமே என் மனத்தில் இருந்தாலும், உயிர்வாழ நான் விரும்பியதாலும், விரதத்தின் தன்மையை வற்புறுத்துவதில் எப்படியோ என்னை நானே ஏமாற்றிக்கொண்டு ஆட்டுப் பால் சாப்பிடத் தீர்மானித்தேன். ஆட்டுப் பாலை நான் சாப்பிட ஆரம்பித்தபோது என்னுடைய விரதத்தில் அடங்கியிருந்த உணர்ச்சி நாசமாக்கப்பட்டு விட்டது என்பதை நான் முற்றும் உணர்ந்தே இருந்தேன். ரௌலட் சட்டத்திற்கு எதிரான கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்த வேண்டும் என்ற எண்ணமே அப்பொழுது என்னை ஆட்கொண்டிருந்தது. அதோடு உயிரோடு இருக்க வேண்டும் என்ற ஆசையும் வளர்ந்தது. இதன் விளைவாக என் வாழ்க்கையின் மிகப் பெரிய சோதனை ஒன்று அதோடு நின்று போயிற்று.

ஆன்மா எதையும் சாப்பிடுவதுமில்லை, குடிப்பதும் இல்லை. ஆகையால் ஒருவர் எதைச் சாப்பிடுகிறார். குடிக்கிறார் என்பதற்கும் ஆன்மாவுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்று விவாதிக்கப்படுகிறது என்பதை அறிவேன். நாம் எதை உள்ளே போடுகிறோம் என்பது முக்கியம் அல்ல, உள்ளிருந்து பேச்சினாலும் நடவடிக்கையினாலும் எதை வெளியே விடுகிறோம் என்பதுதான் முக்கியம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இந்த வாதத்தில் ஓரளவு அர்த்தம் இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த வாதத்தை ஆராய்ந்து கொண்டிருப்பதைவிட என்னுடைய உறுதியான நம்பிக்கை இன்னது என்பதை தெரிவிப்பதோடு திருப்தியடைகிறேன். கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்து அதன் மூலம் கடவுளை நாடுபவருக்கும், கடவுளை நேருக்கு நேராகக் காண விரும்புகிறவருக்கும், எண்ணத்திலும் பேச்சிலும் கட்டுத்திட்டம் இருக்கவேண்டியது எப்படி அவசியமோ அதேபோல அவருடைய சாப்பாட்டின் அளவிலும் தன்மையிலுங்கூடக் கட்டுத் திட்டம் இருக்கவேண்டியது முக்கியம் என்பதே எனது திடமான நம்பிக்கை.

என்றாலும் என்னுடைய தத்துவத்தை நானே நடத்திக் காட்டமுடியாமல் இருக்கும் ஒரு விஷயத்தில், அத் தகவலை நான் கூறி விடுவதோடு அதைக் கையாளுவதைக் குறித்துக் கடுமையான எச்சரிக்கையையும் நான் செய்ய வேண்டும். ஆகையால், நான் கூறிய தத்துவத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு சாப்பிடுவதை விட்டுவிட்டவர்கள், ஒவ்வொரு வகையிலும் அது அனுகூலமாக இருப்பதாக அவர்களே கண்டாலன்றி, அனுபவமுள்ள வைத்தியர்கள் அவர்களுக்கு ஆலோசனை கூறியிருந்தாலொழிய அந்தப் பரிசோதனையில் பிடிவாதமாக இருக்க வேண்டாம் என்று வற்புறுத்துகிறேன். இதுவரையில் என்னுடைய அனுபவத்தில் நான் கண்டது உடல் நிலை சரியில்லாதவர்களுக்கும், படுத்த படுக்கையாக இருக்கிறவர்களுக்கும், பாலுக்கு இணையான, எளிதில் ஜீரணிக்கக்கூடிய போஷாக்குள்ள ஆகாரம் வேறு எதுவுமே இல்லை என்பதுதான் அது. இந்த அத்தியாயத்தைப் படிக்க நேரும் இத்துறையில் அனுபவ முள்ளவர்கள் யாராவது, தாம் படித்ததனால் அல்லாமல் அனுபவத்தின் மூலம் பாலைப்போலப் போஷிக்கக் கூடியதும், போஷாக்குள்ளதுமான ஒரு தாவரப் பொருளைப் பாலுக்குப் பதிலாகக் கூறுவாராயின் அப்படிப்பட்டவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டவனாவேன்.


Offline Anu

அதிகாரத்துடன் சிறு போர்

இப்பொழுது ஆசியாக்காரர்கள் இலாகாவுக்குத் திரும்புவோம். ஆசியாக்காரர்கள் இலாகாவின் அதிகாரிகளுக்கு ஜோகன்னஸ்பர்கே கோட்டை இந்தியர், சீனர், மற்றவர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக இந்த அதிகாரிகள், அவர்களை நசுக்கிப் பிழிந்து கொண்டு வந்ததை நான் கவனித்துக் கொண்டு வந்தேன். ஒவ்வொரு நாளும் இதுபோன்ற புகார்கள் எனக்கு வந்து கொண்டிருந்தன. நியாயமாக வர வேண்டியவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், வருவதற்கு உரிமையே இல்லாதவர்கள் 100-பவுன் அவர்கள் திருட்டுத்தனமாக உள்ளே கொண்டுவரப்படுகிறார்கள். இந்த அக்கரமமான நிலைமைக்கு நீங்கள் பரிகாரம் தேடாவிட்டால் வேறு யார்தான் தேடப்போகிறார்கள் ? இதுவே புகார் எனக்கும் அதே உணர்ச்சி ஏற்பட்டது. இந்தத் தீமையை ஒழிப்பதில் நான் வெற்றிபெறாது போவேனாயின், டிரான்ஸ்வாலில் நான் வீணுக்கு வாழ்பவனே ஆவேன். ஆகவே, சாட்சியங்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். ஓரளவுக்குச் சாட்சியங்களைச் சேகரித்து போலீஸ் கமிஷனரிடம் போனேன். அவர் நியாயமானவராகவே தோன்றினார். என்னை அலட்சியமாகப் புறக்கணித்துவிடாமல் நான் கூறியவைகளையெல்லாம் பொறுமையுடன் கேட்டுக் கொண்டார். என் வசமிருந்த சாட்சியங்களையெல்லாம் தனக்குக் காட்டும்படியும் கேட்டார். சாட்சியங்களைத் தாமே விசாரித்துத் திருப்தியும் அடைந்தார். ஆனால் தென்னாப்பிரிக்காவில் வெள்ளைக்கார ஜூரிகள், கறுப்பு மனிதருக்குச் சாதகமாக வெள்ளைக்காரக் குற்றவாளிக்குத் தண்டனை அளிப்பது கஷ்டமானது என்பதை நான் அறிந்திருந்தது போலவே அவரும் அறிந்திருந்தார், ஆனால் எப்படியும் முயன்று பார்ப்போம். ஜூரிகள் விடுதலை செய்துவிடுவார்களே என்று பயந்து கொண்டு குற்றவாளிகளைச் சும்மா விட்டு விடுவது என்பது சரியல்ல. அவர்களை நான் கைது செய்து விடுகிறேன். என்னாலான முயற்சி எதையும் நான் செய்யாது விடமாட்டேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன் என்றார், போலீஸ் கமிஷனர்.

வாக்குறுதி எனக்குத் தேவையில்லை. பல அதிகாரிகளின் மீது எனக்குச் சந்தேகம் இருந்தது. ஆனால், அவர்கள் மீதெல்லாம் ஆட்சேபிக்க முடியாத சாட்சியங்கள் என்னிடம் சரி வர இல்லை. ஆகையால், குற்றம் செய்தவர்கள் என்பதில் யார் மீது எனக்குச் சிறிதளவேனும் சந்தேகமே கிடையாதோ அப்படிபட்ட இருவரை மாத்திரம் கைது செய்ய வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன. என்னுடைய நடமாட்டத்தை எப்பொழுதும் ரகசியமாக வைத்திருப்பதற்கில்லை. அநேகமாக ஒவ்வொரு நாளும் நான் போலீஸ் கமிஷனரிடம் போய்கொண்டிருக்கிறேன் என்பது அநேகருக்குத் தெரியும். எந்த இரு அதிகாரிகளைக் கைது செய்ய வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டனவோ அந்த இரு அதிகாரிகளுக்கும் ஓரளவுக்குத் திறமை வாய்ந்த ஒற்றர்கள் இருந்தனர். அவர்கள் என் அலுவலகத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்து என்னுடைய நடமாட்டத்தைக் குறித்து அந்த அதிகாரிகளுக்கு அடிக்கடி அறிவித்துக் கொண்டிருந்தார்கள். இன்னமொன்றையும் நான் ஒப்புக் கொள்ள வேண்டும். அந்த இரு அதிகாரிகளுக்கு மிகவும் கெட்டவர்களாகையால், அவர்களுக்குப் பல ஒற்றர்கள் இருந்திருக்க முடியாது. இந்தியரும் சீனரும் எனக்கு உதவி செய்யாமல் இருந்திருந்தால் அவர்களைக் கைது செய்திருக்கவே முடியாது.

இவர்களில் ஒருவர் எங்கோ போய் மறைந்துவிட்டார். அவரை வெளிமாகாணத்திலும் கைது செய்து கொண்டு வருவதற்கான வாரண்டைப் போலீஸ் கமிஷனர் பெற்றார். அவரைக் கைது செய்து டிரான்ஸ்வாலுக்குக் கொண்டுவந்தார். அவர்கள் மீது விசாரணை நடந்தது. அவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் பலமாக இருந்தும், எதிரிகளில் ஒருவர் ஓடி ஒளிந்திருந்தார் என்ற சாட்சியம் ஜூரிகளுக்குக் கிடைத்திருந்தும், இருவரும் குற்றவாளிகள் அல்ல என்று கூறி விடுதலை செய்து விட்டார்கள். நான் மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன். போலீஸ் கமிஷனரும் மிகவும் வருத்தப்பட்டார். வக்கீல் தொழிலிலேயே எனக்கு வெறுப்புத் தோன்றிவிட்டது. குற்றத்தை மறைத்து விடுவதற்கும் அறிவைப் பயன்படுத்தலாம் என்பதைக் கண்டேன். ஆகவே, அறிவின் பேரிலேயே எனக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது.

அவ்விரு அதிகாரிகளும் விடுதலையடைந்துவிட்டனரெனினும், அவர்கள் செய்த குற்றம் அதிக வெளிப்படையானதாக இருந்ததால், அரசாங்கம் அவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் இருவரும் உத்தியோகத்திலிருந்து நீக்கப் பட்டனர். ஆசியாக்காரர் இலாகாவும் ஓரளவுக்குத் தூய்மை பெற்றது, இந்திய சமூகத்திற்கும் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. அந்த அதிகாரிகள் மிகவும் கெட்டவர்களாக இருந்த போதிலும், அவர்களிடம் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தவித விரோதமும் இல்லை என்பதையும் நான் சொல்ல வேண்டும். இது அவர்களுக்கும் தெரியும். அவர்களுக்குக் கஷ்டம் நேர்ந்து என்னிடம் வந்த சமயங்களில் அவர்களுக்கு நான் உதவி செய்திருக்கிறேன். அவர்களுக்கு உத்தியோகம் கொடுக்கும் யோசனையை நான் எதிர்க்காமல் இருந்ததால் ஜோகன்னஸ்பர்க் முனிசிபாலிடியில் அவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது. அவர்களின் நண்பர் ஒருவர், இது சம்பந்தமாக வந்து என்னைப் பார்த்தார். அவர்களுக்கு இடையூறு செய்யாதிருக்கச் சம்மதித்தேன். அவர்களுக்கு உத்தியோகமும் கிடைத்தது.

நான் கொண்டிருந்த இவ்வித மனோபாவத்தின் காரணமாக, நான் தொடர்பு கொண்டிருந்த அதிகாரிகள் என்னோடு நன்றாகவே பழகி வந்தார்கள். அவர்களுடைய இலாகாவுடன் நான் அடிக்கடி போராட வேண்டியிருந்தபோதிலும், அதிகாரிகள் மாத்திரம் என்னுடன் நட்புடனேயே பழகிக் கொண்டிருந்தார்கள் அவ்விதம் நடந்து கொள்ளுவது என் சுபாவத்தில் சேர்ந்தது என்பதை அப்பொழுது நான் நன்றாக அறிந்து கொண்டிருக்கவில்லை. இது சத்தியாக்கிரகத்தின் அவசியமானதோர் பகுதி என்பதையும் அகிம்சையின் இயல்பே இதுதான் என்பதையும் நான் பின்னால் தெரிந்து கொண்டேன். மனிதனும் அவனுடைய செயல்களும் வெவ்வேறானவை. நுற்செயலைப் பாராட்ட வேண்டும், தீய செயலைக் கண்டிக்க வேண்டும். செயலைச் செய்யும் மனிதர், நல்லவராயிருப்பினும் தீயவராயிருந்தாலும் செயலின் தன்மைக்கு ஏற்றவாறு மரியாதைக்கும் பரிதாபத்திற்கும் உரியவராகிறார். பாவத்தை வெறுப்பாயாக. ஆனாலும், பாவம் செய்பவரை வெறுக்காதே என்பது உபதேசம் இது. புரிந்துகொள்ள எளிதானதாகவே இருந்தாலும், நடைமுறையில் இதை அனுசரிப்பதுதான் மிக அரிதாக இருக்கிறது. இதனாலேயே பகைமை என்ற நஞ்சு உலகத்தில் பரவுகிறது.

இந்த அகிம்சையே சத்தியத்தை நாடுவதற்கு அடிப்படை யானதாகும். இவ்விதம் நாடுவது அகிம்சையையே அடிப்படையாகக் கொண்டதாக இல்லாது போகுமாயின், அம் முயற்சியே வீண் என்பதை ஒவ்வொரு நாளும் நான் உணர்ந்து வருகிறேன். ஒரு முறையை எதிர்ப்பதும், அதைத் தாக்குவதும் முற்றும் சரியானதே. ஆனால், அம்முறையை உண்டாக்கிய கர்த்தாவையே எதிர்த்துக் தாக்குவது என்பது தன்னையே எதிர்த்துக் கொள்ளுவதற்கு ஒப்பாகும். ஏனெனில், நாம் எல்லோரும் ஒரே மண்ணைக் கொண்டு செய்த பண்டங்கள், ஒரே கடவுளின் புத்திரர்கள். ஆகவே நம்முள் இருக்கும் தெய்வீக சக்தியும் மகத்தானது. தனி ஒரு மனிதரை அலட்சியம் செய்வது அந்தத் தெய்விக சக்திகளை அலட்சியம் செய்வதாகும். அப்போது அம் மனிதருக்கு மட்டுமன்றி உலகம் முழுவதற்குமே தீங்கு செய்வதாக ஆகும்


Offline Anu

புனித ஞாபகமும் பிராயச்சித்தமும்

எனது வாழ்க்கையில் ஏற்பட்ட பலவிதமான சம்பவங்கள், பல மதங்களையும் பல சமூகங்களையும் சேர்ந்தவர்களுடன் நான் நெருங்கிய தொடர்பு கொள்ளும்படி செய்துவிட்டன. இவர்களுடனெல்லாம் எனக்கு ஏற்பட்ட அனுபவத்திலிருந்து நான் ஒன்று கூற முடியும். உறவினர் என்றோ, வேற்று மனிதர் என்றோ, என் நாட்டினர் என்றோ, பிற நாட்டினர் என்றோ வெள்ளையர் வெள்ளயரல்லாதார் என்றோ, ஹிந்துக்கள் மற்ற மதத்தினரான இந்தியர் என்றோ, முஸ்ஸிம்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிகள், யூதர்கள் என்றோ வேற்றுமை உணர்ச்சி எனக்கு இருந்ததே இல்லை. இவ்விதப் பாகுபாடு எதையும் கற்பித்துக் கொள்ள முடியாததாக என் உள்ளம் இருந்தது என்று சொல்லலாம். இது என் சுபாவத்தோடு ஒட்டியதாகவே இருந்ததால், இதை எனக்கு இருந்த விசேட குணம் என்று நான் கூறிக் கொள்ளுவதற்கில்லை. என்னளவில் எந்தவிதமான முயற்சியும் இல்லாமலேயே அது எனக்கு ஏற்பட்டதாகும். ஆனால், அகிம்சை, பிரம்மச்சரியம், அபரிக்கிரகம் (உடைமை வைத்துக் கொள்ளாமை), புலனடக்கம் ஆகிய நற்குணங்களை வளர்த்துக் கொள்ளுவதற்காக நான் இடைவிடாது முயன்று வந்தேன் என்பதையும் முற்றும் உணர்ந்திருக்கிறேன்.

டர்பனில் நான் வக்கீல் தொழில் நடத்தி வந்தபோது, என் அலுவலகக் குமாஸ்தாக்கள் பெரும்பாலும் என்னுடனேயே தங்குவார்கள். அவர்களில் இந்துக்களும் கிறிஸ்தவர்ளும் இருந்தனர். மாகாணவாரியாகச் சொல்லுவதாயின், அவர்கள் குஜராத்திகளும் தமிழர்களும் ஆவார்கள். அவர்களும் என்; உற்றார் உறவினர்களே என்பதைத் தவிர அவர்களை வேறுவிதமாக நான் எப்பொழுதாவது கருதியாக எனக்கு ஞாபகம் இல்லை ? என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே அவர்களைப் பாவித்து நடத்தி வந்தேன். இவ்விதம் நான் நடத்துவதற்கு என் மனைவி எப்பொழுதாவது குறுக்கே நின்றால், அப்பொழுது எங்களுக்குள் மனஸ்தாபம் ஏற்படும். குமாஸ்தாக்களில் ஒருவர் கிறிஸ்தவர், தீண்டாத வகுப்பைச் சேர்ந்த பெற்றோருக்குப் புதல்வராகப் பிறந்தவர்.

நான் குடியிருந்த வீடு மேற்கத்திய நாகரிகத்தையொட்டிக் கட்டப்பட்டிருந்தது. அறைகளிலிருந்து அழுக்கு நீர் வெறியே போவதற்கு அவற்றில் வழி வைக்கப்பட்டிருக்க வில்லை. ஆகையால், ஒவ்வோர் அறையிலும் அழுக்கு நீருக்கு எனத் தனித்தனிப் பானைகள் உண்டு. இப்பானைகளை வேலைக்காரரோ, தோட்டியோ சுத்தம் செய்வதற்குப் பதிலாக அந்த வேலையை என் மனைவியோ, நானோ செய்து வந்தோம். வீட்டில் இருந்து பழகி விட்ட குமாஸ்தாக்கள், அவரவர்கள் அறையிலிருக்கும் பானைகளை அவர்களே சுத்தம் செய்து கொள்ளுவார்கள். ஆனால், கிறிஸ்தவ குமாஸ்தாவோ புதிதாக வந்தவர். அவருடைய படுக்கை அறையைக் கவனித்துக் கொள்ள வேண்டியது, எங்கள் வேலையாயிற்று. மற்றவர்களுடைய பானைகளையெல்லாம் சுத்தம் செய்வதில் என் மனைவிக்கு ஆட்சேபமில்லை. ஆனால் பஞ்சமராக இருந்த ஒருவர் உபயோகித்த பானையைச் சுத்தம் செய்வதென்பது அவருடைய வரம்புக்கு மீறியதாக இருந்தது. ஆகவே எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்பானைகளை நான் சுத்தம் செய்வது என்பதையும் அவளால் சகிக்க முடியவில்லை. பானையும் கையுமாக அவள் ஏணியின் வழியாக இறங்கி வந்துகொண்டிருந்தாள். என்னைக் கடிந்துகொண்டாள். கோபத்தில் அவளுடைய கண்களெல்லாம் சிவந்திருந்தன. அவளுடைய கன்னங்களில் முத்துபோலக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அந்தக் காட்சியை நான் இன்றும் அப்படியே நினைவுபடுத்திக் கொள்ள முடியும். நானோ, அப்போது கொடூரம் நிறைந்த கணவன். அவளுக்கு நானே உபாத்தியாயர் என்று கருதி வந்தேன். எனவே, அவளிடம் எனக்கு இருந்த குருட்டுத்தனமான அன்பின் காரணமாக அவளை மிகவும் துன்பப்படுத்தினேன்.

அவள் பானையை எடுத்துச் சென்றதனால் மாத்திரம் நான் திருப்தியடைந்துவிடவில்லை. அவள் அவ்வேலையைச் சந்தோஷத்துடன் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். ஆகவே, உரத்த சப்தத்துடன் அம்மாதிரியான மடத்தனத்தையெல்லாம் என் வீட்டில் சகிக்க மாட்டேன் என்றேன். இச்சொற்கள் கூரிய அம்புகளாக அவள் உள்ளத்தில் தைத்து விட்டன. உங்கள் வீட்டை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். என்னைத் தொலைத்துவிடுங்கள் என்று அவள் திருப்பிக் கூச்சல் போட்டாள். நான் என்னையே மறந்துவிட்டேன். என் உள்ளத்திலிருந்த இரக்க ஊற்று வற்றிப் போய்விட்டது. அவள் கைகளைப் பிடித்து அத்திக்கற்ற மாதை ஏணிக்கு எதிரிலிருந்து வாயிற்படிக்கு இழுத்துக் கொண்டு போனேன். அவளை வெளியே பிடித்துத் தள்ளி விடுவதற்காகத் கதவைத் திறக்கப் போனேன். அவளுடைய கன்னங்களின் வழியே கண்ணீர் தாரைதாரையாக வழிந்தது. அழுது கொண்டே அவள் கூறியதாவது. உங்களுக்கு வெட்கம் என்பதே இல்லையா ? இப்படியும் உங்களுக்குச் சுய உணர்வு அற்றுப் போய்விட வேண்டுமா ? எனக்குப் போக்கிடம் எங்கே இருக்கிறது ? எனக்குப் புகலிடம் அளிப்பதற்கு இங்கே என் பெற்றோர்களாவது உறவினர்களாவது இருக்கிறார்களா ? நான் உங்கள் மனைவி என்பதனால் அடித்தாலும் உதை;தாலும் நான் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று நினைக்கிறீர்கள். உங்களுக்குப் புண்ணியமாகப் போகிறது, நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். கதவை மூடுங்கள். நம்மைப் பார்த்து யாராவது சிரிக்கப்போகிறார்கள் *

இதைக் கேட்ட நான் என் முகத்தைக் கம்பீரமாக வைத்துக் கொண்டேன். ஆனால், உண்மையில் வெட்கமடைந்தேன். கதவையும் மூடினேன். என்னை விட்டு என் மனைவி போய்விட முடியாது என்றால், அவளை விட்டு நானும் பிரிந்துவிட முடியாது. எங்களுக்குள் எத்தனையோ சச்சரவுகள் இருந்திருக்கினறன. ஆனால், அவற்றின் முடிவில் எங்களுக்குள் சமாதானமே நிலவும் சகிப்புத் தன்மையின் இணையில்லாத சக்தியினால் எப்பொழுதும் வெற்றி பெறுகிறவள், மனைவியே. இச்சம்பவம், அதிர்ஷ்டவசமாக நான் கடந்து வெளிவந்து விட்ட ஒரு காலத்தைப் பற்றியது. ஆகையால், இச்சம்பவத்தை எந்தவிதமான பற்றுமில்லாமல் சொல்லக்கூடிய நிலையில் நான் இன்று இருக்கிறேன். முரடனான, வெறிகொண்ட கணவனாக நான் இப்பொழுது இல்லை, என் மனைவியின் உபாத்தியாயராகவும் இல்லை. கஸ்தூரிபாய் விரும்பினால், நான் முன்னால் அவளுக்கு எவ்வளவு தொல்லை அளித்து வந்தேனோ அவ்வளவு தொல்லையும் அவள் எனக்கு இன்று அளிக்க முடியும். சோதனைக்கு உட்பட்டுத் தேறிய நண்பர்கள் நாங்கள். இப்பொழுது நாங்கள் ஒருவரை ஒருவர் காம இச்சையின் இலக்காகக் கருதவில்லை. நான் நோயுற்றிருந்த போதெல்லாம் அவள் எனக்குப் பக்தியுள்ள தாதியாக இருந்து எவ்விதக் கைம்மாறையும் எதிர்பாராமல் பணிவிடை செய்த வந்திருக்கிறாள்.

மேலே நான் சொன்ன சம்பவம் 1898-இல் நடந்தது. பிரம்மச்சரிய எண்ணமே எனக்கு இல்லாமல் இருந்த காலம் அது. கணவனுக்கு மனைவி உதவியாகவுள்ள சிநேகிதி, தோழி, கணவனின் இன்ப துன்பங்களில் பங்காளி என்பதற்குப் பதிலாக அவள் கணவனின் காம இச்சைக்குரிய அடிமை, கணவன் இடம் வேலையைச் செய்வதற்கென்றே பிறந்திருப்பவள் என்று நான் எண்ணிக் கொண்டிருந்த காலம், அது. 1900-ஆம் ஆண்டில்தான் இக் கருத்துக்கள் தீவிரமான மாறுதலை அடைந்தன. ஆனால், அதைப்பற்றி அதற்கேற்ற சந்தர்ப்பத்தில் சொல்லலாம் என்று இருக்கிறேன். ஒன்று மாத்திரம் இப்பொழுது சொன்னால் போதும். காமப் பசி என்னிடமிருந்து நாளாவட்டத்தில் மறைய மறைய, என்னுடைய குடும்ப வாழ்க்கை மேலும் மேலும் அமைதியாகவும் இனிமையானதாகவும், சந்தோஷகரமானதாகவும் ஆயிற்று, ஆகிக்கொண்டிருக்கிறது.

புனிதமான இந்த நினைவைப் பற்றிய வரலாற்றைக் கொண்டு நானும் என் மனைவியும் பிறர் பின்பற்றுவதற்கான லட்சியத் தம்பதிகளாக இருந்தோம் என்றோ எங்களுக்கு லட்சியத்தில் ஒரேவிதமான கருத்து இருந்தது என்றோ யாரும் எண்ணிக்கொண்டு விட வேண்டாம். எனக்கு இருந்த லட்சியங்களைத் தவிர தனக்குத் தனியாக ஏதாவது லட்சியம் இருந்ததுண்டா என்பது ஒரு வேளை கஸ்தூரிபாய்க்கே தெரியாமல் இருக்கலாம். நான் செய்யும் காரியங்கள் பல இன்று கூட அவளுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அவைகளைக் குறித்து நாங்கள் விவாதிப்பதே இல்லை. அவைகளை விவாதிப்பதில் எந்தவித நன்மை இருப்பதாகவும் நான் காணவில்லை. ஏனெனில், அவளைப் படிக்க வைத்திருக்க வேண்டிய சமயத்தில் அவளுடைய பெற்றோரும் படிக்க வைக்க வில்லை, நானும் அதைச் செய்யவில்லை. ஆனால், அவளிடம் ஒரு பெரிய அருங்குணம் மிகுந்த அளவில் இருக்கிறது. ஹிந்து மனைவிகள் பெரும்பாலாரிடம் ஓரளவுக்கு இருக்கும் குணமே அது, அதாவது விரும்பியோ விரும்பாமலேயோ, அறிந்தோ அறியாமலேயோ என் அடிச்சுவட்டைப் பின்பற்றித்தான் நடப்பதே தனக்குப் பாக்கியம் என்று அவள் கருதி வந்திருக்கிறாள். புலனடக்க வாழ்க்கையை நடத்த நான் செய்த முயற்சிக்கு அவள் எப்போழுதும் குறுக்கே நின்றதே இல்லை. ஆகையால் அறிவுத் துறையில் எங்களுக்கிடையே அதிகப் பேதம் இருந்தபோதிலும், எங்களுடைய வாழ்க்கை திருப்தியும், சந்தோஷமும், முற்போக்கும் உள்ளதாக இருந்து வருகிறது என்றே நான் எப்பொழுதும் உணர்கிறேன்.


Offline Anu

ஐரோப்பியருடன் நெருங்கிய தொடர்பு

இந்த அத்தியாயம், என்னை ஒரு கட்டத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு வாரமும் இக்கதை எவ்விதம் எழுதப்படுகிறது என்பதைக் குறித்து வாசகர்களுக்கு நான் விளக்க வேண்டியது இங்கே அவசியமாகிறது. இதை எழுத ஆரம்பித்தபோது எந்த முறையில் இதை எழுதுவது என்பதைக் குறித்து நான் எந்தத்திட்டமும் போட்டுக் கொள்ளவில்லை. என்னுடைய சோதனைகளின் கதையை எழுதுவதற்கு ஆதாரமாகக் கொள்ள என்னிடம் எந்தவிதமான நாட்குறிப்போ, வேறு ஆதாரங்களோ இல்லை. எழுதும்போது கடவுள் எவ்வழியில் என்னை நடத்திச் செல்கிறாரோ அவ்வழியில் செயல்களும் இறைவனால் தாண்டப்பட்டவையே என்று நிச்சயமாக நான் அறிவேன் என்றும் நான் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால், என் வாழ்க்கையில் நான் செய்திருக்கும் மிகப் பெரிய காரியங்களையும் பரிசீலனை செய்து பார்க்கும் போது அவைகளெல்லாம் கடவுளால் நடத்தி வைக்கப்பட்டவைதான் என்று சொல்லுவது தவறாகாது என்றே எண்ணுகிறேன்.

கடவுளை நான் கண்டதுமில்லை, அறிந்ததுமில்லை. உலகமெல்லாம் அவரமீது வைத்திருக்கும் நம்பிக்கையையே என் நம்பிக்கையாக்கிக் கொண்டிருக்கிறேன். அந்த என் நம்பிக்கை அழிக்க முடியாதது. ஆகையால் அந்த நம்பிக்கை அனுபவம் என்று விவரிப்பது உண்மைக்கு ஊறு செய்வதாகும் என்று சொல்லக் கூடுமாகையால் கடவுளிடம் எனக்குள்ள நம்பிக்கையை எடுத்துக் கூற என்னிடம் சொற்கள் இல்லை என்று சொல்லுவதே மிகவும் சரியானதாக இருக்கக்கூடும். கடவுள் தூண்டும் வழியில் இக்கதையை நான் எழுதுகிறேன் என்று நான் ஏன் நம்புகிறேன் என்பதைப் புரிந்து கொள்ளுவது ஓரளவுக்கு இப்பொழுது எளிதாக இருக்கக்கூடும். முந்திய அத்தியாயத்தை நான் எழுத ஆரம்பித்;தபோது இந்த அத்தியாயத்திற்குக் கொடுத்திருக்கும் தலைப்பையே அதற்கும் கொடுத்தேன். ஆனால், அதை நான் எழுதிக் கொண்டிருந்த போது ஐரோப்பியருடன் பழகிய அனுபவத்தைப் பற்றிக் கூறுவதற்கு முன்னால் முகவுரையாகச் சில விஷயங்களைச் சொல்லவேண்டும் என்பதை உணர்ந்தேன். அதையே செய்து தலைப்படியும் மாற்றினேன்.

திரும்பவும் இப்பொழுது இந்த அத்தியாயத்தை எழுத ஆரம்பித்தபோது ஒரு புதிய பிரச்னை என் முன்பு நிற்பதைக் காண்கிறேன். ஆங்கில நண்பர்களைக் குறித்தே நான் எழுதப் போகிறேன். அவர்களைக் குறித்து எதைக் கூறுவது, எதைக் கூறாதிருப்பது என்பதே கஷ்டமான அப்பிரச்சினை. பொருத்தமான விஷயங்களைக் கூறாது போனால் சத்தியத்தின் ஒளி மங்கிவிடும். இந்தச் சரித்திரத்தை எழுதுவதிலுள்ள பொருத்தத்தைக் குறித்தே நான் நிச்சயமாக அறியாதபோது, பொருத்தமானது எது என்பதை நேரே முடிவு செய்து விடுவதென்பது கஷ்டமானதாகும்.

எல்லாச் சுயசரிதைகளும் சரித்திரங்களாவதற்கு ஏற்றவையல்ல என்பதை வெகு காலத்திற்கு முன்பே படித்திருக்கிறேன். இதை இன்று அதிகத் தெளிவாக அறிகிறேன். எனக்கு நினைவிருப்பவை எல்லாவற்றையும் இக்கதையில் நான் கூறவில்லை. உண்மையின் முக்கியத்தை முன்னிட்டு நான் எவ்வளவு கூறலாம். எவ்வளவு கூறாமல் விடலாம் என்பதை யார் கூறமுடியும் ? என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தைக் குறித்து நான் கூறும் அரைகுறையானதும் ஒரு தலைப் பட்சமானதுமான சாட்சியங்களுக்கு ஒரு நீதிமன்றத்தின் முன்பு என்ன மதிப்பு இருக்கும் ? நான் இது வரையில் எழுதியிருக்கும் அத்தியாயங்களின் பேரில், குறும்புத்தனமானவர் யாரெனும் குறுக்கு விசாரணை செய்வதாக இருந்தால், அவைகளைக் குறித்து மற்றும் பல விவரங்கள் வெளியாகலாம். இது விரோத உணர்ச்சியுடன் குறை கூறுபவரின் குறுக்கு விசாரணையாக இருந்தால் என்னுடைய பாசாங்குகளில் பலவற்றை வெளிப்படுத்திவிட்டதாக அவர் பெருமையடித்துக் கொள்ளலாம்.

ஆகையால், இந்த அத்தியாயங்களை எழுதாமல் இருப்பது கூட நல்லதல்லவா என்ற எண்ணமும் எனக்கு ஒரு கணம் உண்டாகிறது. ஆனால், என்னுள் இருக்கும் அந்தராத்மாவின் தடை எதுவும் இல்லாதிருக்கும் வரையில் நான் தொடர்ந்து எழுதியே ஆகவேண்டும். ஒரு காரியத்தைச் செய்ய ஒரு முறை தொடங்கிவிட்டால், அது ஒழுக்கத் தவறானது என்று நிரூபிக்கப்பட்டாலன்றி அதைக் கைவிடவே கூடாது என்ற முனிவரின் உபதேசத்தை நான் பின்பற்ற வேண்டும். விமர்சகர்களைத் திருப்தி செய்வதற்காக நான் சுயரிதையை எழுதிக் கொண்டிருக்கவில்லை. இதை எழுதுவதுகூடச் சத்திய சோதனையில் ஓர் அம்சமேயாகும். இதை எழுதுவதன் நோக்கங்களில் ஒன்று, நிச்சயமாக என் சக ஊழியர்களுக்குச் சிறிது மன ஆறுதலையும், சிந்தனை செய்வதற்குரிய விஷயத்தையும் அளிப்பதுதான். அவர்களுடைய விருப்பத்திற்கு உடன்பட்டே இதை எழுது ஆரம்பித்தேன் என்பதில் சந்தேகமில்லை. ஸ்ரீ ஜெயராம்தாஸும் சுவாமி ஆனந்தும் இந்த யோசனையை வற்புறுத்தாதிருந்தால் இதை எழுதியே இருக்க மாட்டேன். ஆகையால், நான் சுயசரிதையை - இதை எழுதியது தவறு என்றால் அத்தவறில் அவர்களும் பங்கு கொள்ள வேண்டும்.

இனி, தலைப்பில் குறிப்பிட்டிருக்கும் விஷயத்திற்கு வருவோம். என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக என்னுடன் இந்தியர் வசித்துக் கொண்டிருந்ததைப் போலவே டர்பனில் ஆங்கில நண்பர்களும் என்னுடன் வசித்துக் கொண்டிருந்தார்கள். என்னுடன் வசித்தவர்கள் எல்லோருக்கும் இது பிடித்திருந்தது என்பதல்ல. ஆனால் அவர்கள் என்னுடன் இரக்க வேண்டும் என்று நான் தான் வற்புறுத்தினேன். இவ்விதம் செய்தது எல்லோருடைய விஷயத்திலும் புத்திசாலித்தனமானதாக முடியவில்லை. சிலர் விஷயத்தில் மிகவும் கசப்பான அனுபவமும் ஏற்பட்டிருக்கிறது. அவர்களில் இந்தியரும் உண்டு. ஐரோப்பியரும் உண்டு. இந்த அனுபவங்களுக்காக நான் வருத்தப்படவில்லை. இவை போன்றவை இருந்தபோதிலும், நண்பர்களுக்கு அசௌகரியங்களையும் மனக் கவலையையும் அநேக சமயங்கிளில் நான் உண்டாக்கி இருக்கிறேன் என்றாலும் என் பழக்கத்தை நான் இன்னும் மாற்றிக் கொண்டு விடவில்லை. நண்பர்களும் அன்புடன் என்னைச் சகித்துக் கொண்டுதான் வந்திருக்கிறார்கள். புதிதாக வருபவர்களுடன் எனக்கு ஏற்படும் தொடர்பு நண்பர்களுக்கு மனவேதனையை அளிப்பதாக இருக்கும் போதெல்லாம் அவர்களைக் குறைகூற நான் தயங்கியதே இல்லை. தங்களுள் காணும் கடவுளை மற்றவர்களிடமும் காணவேண்டும் என்பதை நம்புகிறவர்கள், எல்லோருடனும் விருப்பு வெறுப்பின்றி வாழ முடிந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். இத்தயை தொடர்புகளுக்குத் தேடமலேயே கிடைக்கும் வாய்புகளை ஒதுக்கித் தள்ளிவிடாமல், சேவை உணர்ச்சியுடன் அந்தச் சந்தர்ப்பங்களை வரவேற்று, அவைகளினாலெ;லாம் மன அமைதிகெடாமல் பார்த்துக் கொள்ளுவதன் மூலமே அவ்விதம் வாழ்வதற்கு வேண்டிய ஆற்றலைப் பெற முடியும்.

ஆகையால், போயர் யுத்தம் ஆரம்பமானபோது என் வீடு நிறைய அட்கள் இருந்தார்கள் என்றாலும் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து வந்த இரு ஆங்கிலேயரையும் அழைத்துக் கொண்டேன். இருவரும் பிரம்மஞான சங்கத்தினர். இவர்களில் ஒருவர் ஸ்ரீ கிட்சின். இவரைக் குறித்து அதிகமாகத் தெரிந்துகொள்ளப் பின்னால் சந்தர்ப்பம் இருக்கும் இந்த நண்பர்களினால் என் மனைவி அடிக்கடி கண்ணீர் வடிக்க வேண்டி வந்தது. துரதிர்ஷ்டவசமாக என்னால் அவளுக்கு இதுபோன்ற சோதனைகள் பல ஏற்பட்டன. ஆங்கில நண்பர்கள், குடும்பத்தினர் போல் என்னுடன் நெருக்கமாக வசிப்பது இதுவே முதல் தடவை நான் இங்கிலாந்தில் இருந்தபோது ஆங்கிலேயரின் வீடுகளில் தங்கியிருக்கிறேன். அங்கே அவர்களுடைய வாழ்க்கை முறையை நானும் அனுசரித்து வந்தேன். ஏறக்குறையச் சாப்பாட்டு விடுதியில் தங்குவதைப் போன்றதே அது. இங்கோ அது முற்றும் மாறானது. ஆங்கில நண்பரக்ள் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாயினர். பல விஷயங்களில் அவர்கள் இந்தியரின் முறைகளை மேற்கொண்டனர். நடைமுறை போன்றவைகளில் மேனாட்டு முறையே அனுசரிக்கப்பட்டாலும் உள் வாழ்க்கை முற்றும் இந்திய மயமானதாகவே இருந்தது. குடும்பத்துடன் சேர்ந்தவர்களாக அவர்களை வைத்துக் கொண்டிருப்பதால் சில கஷ்டங்கள் இருந்தன என்பது எனக்கு நினைவு இருக்கிறது. என்றாலும், என் வீட்டில் தங்கள் சொந்த வீடு போன்றே அவர்கள் இருந்து வருவதில் அவர்களுக்கு எந்தவிதமான கஷ்டமுமே இல்லை என்பதை நான் நிச்சயமாகக் கூற முடியும். டர்பனில் இருந்ததைவிட ஜோகன்னஸ்பர்க்கில் இவ்விதமான தொடர்புகள் இன்னும் அதிகமாயின.


Offline Anu

ஜோகன்னஸ்பர்க்கில் ஒரு சமயம் என்னிடம் நான்கு இந்தியக் குமாஸ்தாக்கள் இருந்தனர். குமாஸ்தாக்கள் என்பதைவிட அவர்கள் என் புத்திரர்கள் போலவே இருந்தனர் எனலாம். ஆனால் எனக்கு இருந்த வேலைக்கு இவர்கள் போதவில்லை. டைப் அடிக்காமல் எதுவும் செய்ய இயலாது எங்களில் யாருக்காவது டைப் அடிக்கத் தெரியுமென்றால் அது எனக்குத்தான். குமாஸ்தாக்களில் இருவருக்கு அதைச் சொல்லிக் கொடுத்தேன். ஆனால் அவர்களுக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியாததனால் அவர்கள் அதில் போதிய திறமை பெறவில்லை. அவர்களுள் ஒருவரை நல்ல கணக்கராகப் பயிற்சி செய்துவிடவும் விரும்பினேன். அனுமதிச் சீட்டுப் பெறாமல் டிரான்ஸ்வாலுக்குள் யாரும் வர முடியாதாகையால், நேட்டாலிலிருந்து நான் எவரையும் கொண்டு வருவதற்கும் முடியவில்லை. என்னுடைய சொந்தச் சௌகரியத்திற்காக அனுமதிச் சீட்டு அதிகாரியின் தயவை நாடுவதற்கு நான் விரும்பவுமில்லை.

என்ன செய்வதென்றே எனக்குப் புரியவில்லை. வேலை பாக்கியாகிக் குவிந்துகொண்டே போயிற்று ஆகையால், நான் என்னதான் முயன்றாலும் தொழில் சம்பந்தமான வேலைகளுடன் பொது வேலையையும் செய்த சமாளித்துக் கொண்டு விடுவது அசாத்தியம் என்று எனக்குத் தோன்றியது. ஓர் ஐரோப்பியக் குமாஸ்தாவை வைத்துக் கொள்ளநான் தயாராகவே இருந்தேன். ஆனால் என்னைப் போன்ற ஒரு கறுப்பு மனிதனிடம் வேலை செய்ய ஒரு வெள்ளைக்கார ஆணோ, பெண்ணோ வருவார்கள் என்ற நிச்சயம் எனக்கு இல்லை. என்றாலும், முயன்று பார்ப்பது என்று தீர்மானித்தேன். எனக்குத் தெரிந்த டைப்ரைட்டர் தரகர் ஒருவரிடம் சென்றேன். சுருக்கெழுத்தும் தெரிந்த டைப் அடிப்பவர் ஒருவர் எனக்குத் தேவை என்று அவரிடம் கூறினேன். பெண்கள் கிடைப்பார்கள் என்றும், ஒரு பெண்ணை ஏற்பாடு செய்வதாகவும் அவர் சொன்னார். ஸ்காட்லாந்திலிருந்து அப்பொழுதுதான் வந்தவரான குமாரி டிக் என்ற பெண்ணைப் பார்த்து அவர் விசாரித்தார். அப் பெண்ணுக்குப் பணம் தேவை. ஆகையால், யோக்கியமான பிழைப்பு எங்கே கிடைத்தாலும் வேலை பார்ப்பதில் அவளுக்கு ஆட்சேபமில்லை. எனவே, அந்தத் தரகர் அப்பெண்ணை என்னிடம் அனுப்பினார். அப் பெண்ணைப் பார்த்ததுமே எனக்குப் பிடித்துப் போய்விட்டது.

இந்தியரின் கீழ் ஊழியம் பார்ப்பதில் உமக்கு ஆட்சேபம் உண்டா ? என்று அப்பெண்ணைக் கேட்டேன். இல்லவே இல்லை என்று அவர் உறுதியாகக் கூறினார். என்ன சம்பளம் நீர் எதிர்பார்க்கிறீர்? ஏழரைப் பவுன் கேட்டால் அது உங்களுக்கு அதிகமானதாக இருக்குமா? உம்மிடமிருந்து நான் விரும்பும் வேலையை அளிப்பீரானால், அச் சம்பளம் அதிகமானதாகாது. எப்பொழுது வேலைக்கு வர முடியும்? நீங்கள் விரும்பினால் இந்த நிமிடத்திலேயே. நான் அதிகத் திருப்தி அடைந்துவிட்டேன். எழுத வேண்டிய கடிதங்கள் அவளுக்கு அப்பொழுதே சொல்ல ஆரம்பித்துவிட்டேன். அப்பெண் டைப் அடிப்பவர் என்பதற்குப் பதிலாக வெகு சீக்கிரத்திலேயே எனக்கு ஒரு மகள் அல்லது சகோதரி போல் ஆகிவிட்டார். அவர் செய்த வேலை பற்றிக் குறை கூற எந்தக் காரணமும் எனக்கு இல்லை. ஆயிரக்கணக்கான பவுன் தொகையை நிர்வகிக்கும் பொறுப்பும் அடிக்கடி அவரிடம் ஒப்படைக்கப் பட்டது உண்டு. கணக்குகள் வைத்துக் கொள்ளுவதும் அவர்தான். என் முழு நம்பிக்கையையும் அவர் பெற்றுவிட்டார். இன்னும் அதிக முக்கியமானது என்னவென்றால், அவர் தமது மனத்திற்குள்ளிருந்த எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கூட என்னிடம் கூறிவந்தார். முடிவாகத் தமக்குக் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் என் ஆலோசனையையும் நாடினார். அவரைக் கன்னிகாதானம் செய்து கொடுக்கும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. குமாரி டிக், ஸ்ரீமதி மெக்டானல்டு ஆனதும் என்னைவிட்டுப் போய்விட வேண்டியதாயிற்று. ஆனால், விவாகமான பிறகும் கூட வேலை அதிகமாக இருக்கும்போது கூப்பிட்டால் தவறாமல் வந்து செய்துவிட்டுப் போவார்.

ஆனால், அவருடைய ஸ்தானத்தில் நிரந்தரமான ஒரு டைப் குமாஸ்தா இப்பொழுது அவசியமாயிற்று, மற்றோர் பெண் எனக்குக் கிடைத்ததில் நான் அதிர்ஷ்டசாலியானேன். குமாரி ஷிலேஸின் என்பவரே இவர். இவரை ஸ்ரீ கால்லென் பாக் எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். ஸ்ரீ கால்லென்பாக் பற்றி உரிய இடத்தில் வாசகர் அறிந்து கொள்ளுவர். இப் பெண்மணி இப்பொழுது டிரான்ஸ்வாலில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் உபாத்தியாயினியாக இருக்கிறார். இவர் என்னிடம் வந்தபோது சுமார் பதினேழு வயது இருக்கும். இப் பெண்ணிடம் சில விசித்திரமான சுபாவங்கள் உண்டு. சில சமயங்களில் எனக்கும் ஸ்ரீ கால்லென்பாக்குக்கும் அதைப் பொறுக்க முடியாது போகும். டைப் அடிக்கும் குமாஸ்தாவாக வேலை செய்வதைவிட, அதற்கான அனுபவம் பெறுவதற்கு என்றே இப் பெண் முக்கியமாக வேலைக்கு வந்தார். நிறத் துவேஷம் என்பது இவருடைய சுபாவத்திற்கே விரோதமானது. வயதுக்கோ அனுபவத்திற்கோ இவர் மதிப்புக் கொடுப்பதில்லை. ஒருவரை அவமதிப்பதாகுமே என்பதைக் கூட பொருட்படுத்தமாட்டார், அவரைக் குறித்துத் தாம் நினைப்பதை நேருக்கு நேராகத் தயக்கமின்றிக் கூறிவிடுவார். இவருடைய அதி தீவிரப் போக்கு பல சமயங்களில் என்னைச் சங்கடத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். ஆனால் இவருடைய கபடமற்ற வெள்ளை மனப்போக்கோ, சங்கடம் ஏற்பட்டவுடனே அச்சங்கடதத்தை போக்கியும் விடும். இவருடைய ஆங்கில ஞானம் என்னுடையதைவிட மேலானது என்று கருதினேன். அதோடு இவருடைய விசுவாசத்தில் எனக்கு முழு நம்பிக்கையும் இருந்தது. ஆகையால், இவர் டைப் அடிக்கும் கடிதங்களைத் திரும்பப் படித்துப் பாராமலேயே கையெழுத்திட்டுவிடுவேன்.

இவர் செய்திருக்கும் தியாகம் மகத்தானது. வெகு காலம் வரையில் இவர் ஆறு பவுனுக்கு மேல் வாங்கிக் கொள்ள எப்பொழுதும் மறுத்துவிட்டார். கொஞ்சம்அதிகமாக வாங்கிக் கொள்ளுமாறு நான் வற்புறுத்தும்பேது என்னைத் திட்டிவிடுவார். உங்களிடம் சம்பளம் வாங்குவதற்காக நான் இங்கே இல்லை. உங்களுடன் வேலை செய்ய விரும்புகிறேன், உங்கள் கொள்கைகளும் எனக்கு பிடித்திருக்கின்றன என்பதனாலேயே இங்கே இருக்கிறேன் என்பார். ஒரு சமயம் என்னிடம் நாற்பது பவுன் வாங்கிக் கொண்டார். ஆனால் அதைக் கடனாகவே பாவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். சென்ற ஆண்டு முழுத்தொகையையும் திருப்பி அனுப்பிவிட்டார். அவருடைய தியாகத்திற்குச் சமமானவை அவர் தைரியமும், பளிங்கு போன்ற மாசற்ற ஒழுக்கமும். போர் வீரனும் வெட்கமடையும்படி செய்யும் தீரம் கொண்ட சில பெண்களுடன் பழகும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. அத்தகைய பெண்களில் இவரும் ஒருவர். இப்பொழுது இவர் வயது முதிர்ந்த மாது. இவர் என்னிடம் இருந்தபோது நான் அறிந்திருந்ததுபோல, இப்பொழுது இவர் மனநிலையைப் பற்றி நான் அறியேன். ஆனால் இந்த யுவதியுடன் ஏற்பட்ட பழக்கம் எனக்கு என்றென்றும் புனிதமானதொரு நினைவாகவே இருந்துவரும். ஆகையால், அவரைப் பற்றி எனக்கத் தெரிந்தவைகளைக் கூறாமல் விடுவேனாயின் நான் சத்தியத்திற்குத் துரோகம் செய்தவனாவேன்.

லட்சியத்திற்காக உழைப்பதில் இவருக்கு இரவென்றும் பகலென்றும் தெரியாது. நள்ளிரவுல் தன்னந்தனியாக வெளி இடங்களுக்குச செய்தி கொண்டுபோவார். துணைக்கு ஆள் அனுப்புவதாகச் சொன்னால், கோபத்தோடு அதை மறுத்து விடுவார். ஆயிரக்கணக்கான தீரமான இந்தியர் இவருடைய புத்திமதியை எதிர் நோக்கி நின்றனர். சத்தியாக்கிரக சமயத்தில் தலைவர்கள் எல்லோரும் சிறையில் இருந்தபோது இவர் தன்னந்தனியாக இயக்கத்தை நடத்தி வந்தார். அப்பொழுது ஆயிரக்கணக்கானவர்களை வைத்துக் கொண்டு இவர் நிர்வகிக்க வேண்டியிருந்தது. கவனிக்க வேண்டிய கடிதப் போக்குவரத்துக்களும் ஏராளமாக இருந்தன. இந்தியன் ஒப்பீனியன் பத்திரிக்கையையும இவரே நடத்த வேண்டியிருந்ததென்றாலும், அவர் சோர்வடைந்து விட்டதே இல்லை. குமாரி ஷிலேஸினைக் குறித்து முடிவில்லாமல் நான் எழுதிக் கொண்டே போக முடியும். எனினும், அவரைக் குறித்துக் கோகலே கொண்டிருந்த அபிப்பிராயத்தைக் கூறி இந்த அத்தியாயததை முடிக்கிறேன். என் சக ஊழியர்கள் ஒவ்வொருவரையும் கோகலே நன்கு அறிவார். அவர்களில் பலரை அவருக்குப் பிடித்திருந்தது. அவர்களைப் பற்றி தமது அபிப்பிராயத்தையும் கூறுவார். எல்லா இந்திய, ஐரோப்பிய சக ஊழியர்களிலும் குமாரி ஷிலேஸினுக்கு அவர் முதலிடம் கொடுத்தார். குமாரி ஷிலேஸினிடம் நான் கண்ட தியாகம் தூய்மை, அஞ்சாமை ஆகியவைகளைப் போல வேறு யாரிடமும் நான் கண்டதில்லை என்றார் அவர். உங்களுடைய சக ஊழியர்களிடையே குமாரி ஷிலேஸின் முதலிடம் வகிக்கிறார் என்பதே என் அபிப்பிராயம் என்றும் கூறினார்.


Offline Anu

இந்தியன் ஒப்பீனியன்

மற்றும் பல ஐரோப்பியருடனும் ஏற்பட்ட நெருங்கிய தொடர்பைக் குறித்துச் சொல்லுவதற்கு முன்னால் இரண்டு மூன்று முக்கியமான விஷயங்களை நான் குறிப்பிட வேண்டும் என்றாலும், ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பை; குறித்து இப்போதே சொல்லிவிட வேண்டும். என் வேலைக்குக் குமாரி டிக்கை நியமித்தது மாத்திரம் போதவில்லை. எனக்கு மேற்கொண்டும் உதவி தேவையாயிற்று. முந்திய அத்தியாயங்களில் ஸ்ரீ ரிச் என்பவரைப் பற்றிக் கூறியிருக்கிறேன். அவரை எனக்கு நன்றாகத் தெரியும். ஒரு வர்த்தக ஸ்தாபனத்தில் அவர் நிர்வாகியாக இருந்தார். அந்த வர்த்தக ஸ்தாபனத்தை விட்டு விட்டு என் கீழ் வக்கீல் வேலைக்குப் பயிற்சி பெறுமாறு யோசனை கூறினேன். அதன்படி அவர் செய்து எனக்கு இருந்த வேலைப்பளுவைப் பெரியதும் குறைத்தார்.

அந்தச் சமயம் ஸ்ரீ மதன்ஜித் இந்தியன் ஒப்பீனியனை ஆரம்பிக்கும் திட்டத்துடன் என்னிடம் வந்து என் ஆலோசனையைக் கேட்டார். அப்பொழுதே அவர் ஓர் அச்சகத்தை நடத்திக் கொண்டிருந்தார். அவருடைய திட்டத்தை அங்கீகரித்தேன். இப்பத்திரிக்கை 1904-இல் ஆரம்பமாயிற்று. ஸ்ரீ மன்சுக்லால் நாஸர் அதன் முதல் ஆசிரியரானால் எல்லாச் சமயங்களிலும் நானே அப்பத்திரிகையை நடத்தி வரவேண்டி வந்ததால் வேலை முழுவதும் என் தலையிலேயே விழுந்தது. அவ் வேலையைச் செய்து கொண்டு போக ஸ்ரீ மன்சுக்லாலினால் முடியாது என்பதல்ல. இந்தியாவில் இருந்த போது ஓரளவுக்குப் பத்திரிக்கையாளராக அவர் அனுபவம் பெற்றிருக்கிறார். ஆனால் நான் அங்கே இருக்கும் போது சிக்கலான தென்னாப்பிரிக்கப் பிரச்சினைகளைக் குறித்து அவர் எழுத முற்படுவதில்லை. என்னுடைய விருப்பு, வெறுப்பற்ற தன்மையில் அவருக்குப் பரிபூரண நம்பிக்கை உண்டு. ஆகவே, தலையங்கங்களை எழுதும் பொறுப்பை அவர் என்; மீது போட்டு விட்டார். இன்றளவும் அது குஜராத்தி, ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பிரசுரமாயிற்று. ஆனால் ஹிந்திப் பகுதியும் தமிழ்ப் பகுதியும் பெயரளவுக்குதான் இருந்தனவே ஒழிய, எந்த நோக்கத்தின் பேரில் அவை ஆரம்பிக்கப்பட்டனவோ அதை அவை நிறைவேற்றவில்லை. ஆகையால் அந்தப் பகுதிகளைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருப்பது ஓரளவுக்கு ஏமாற்றுவதாகும் என்று நான் உணர்ந்ததால் அவற்றை நிறுத்தி விட்டேன்.

இந்தப் பத்திரிகைக்கு நான் பணம் எதுவும் போட வேண்டிவரும் என்று நினைக்கவே இல்லை. ஆனால், பண உதவி இல்லாமல் அது நடந்துகொண்டு போக முடியாது என்பதைச் சீக்கிரத்திலேயே கண்டுகொண்டேன். பெயரைப் பொறுத்த வரையில் இப்பத்திரிக்கைக்கு நான் ஆசிரியன் அல்ல என்றாலும் அதை நடத்துவதற்கு முழுப் பொறுப்பாளியாக இருப்பது நான் தான் என்பதை இந்தியரும், ஐரோப்பியரும் நன்கு அறிவார்கள். இப் பத்திரிகையை ஆரம்பிக்காமலேயே இருந்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால் ஆரம்பித்துவிட்ட பிறகு அதை நிறுத்தி விடுவதென்பது நஷ்டத்தோடு வெட்கக் கேடுமாகும். ஆகவே, என் பணத்தை அதில் போட்டுக் கொண்டே போனேன். முடிவில் நான் மிச்சம் பிடித்து வைத்திருந்த பணத்தையெல்லாம் அதிலேயே போட்டு விட நேர்;ந்தது. ஒரு சமயம் மாதத்திற்கு 75 பவுன் நான் அனுப்ப வேண்டியிருந்ததும் எனக்கு நினைவிருக்கிறது.

இப் பத்திரிகை சமூகத்திற்கு நல்ல சேவை செய்திருக்கிறது என்பதை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நான் உணருகிறேன். லாபத்திற்கு நடத்தும் வர்த்தக ஸ்தாபனமாக அது இருக்க வேண்டும் என்ற நோக்கம் என்றும் இருந்ததில்லை. என்னால் நடத்தப்பட்டு வந்தவரையில் அப் பத்திரிகையில் ஏற்பட்ட மாறுதல்கள் என்னிடம் ஏற்பட்ட மாறுதல்களுக்கு அடையாளங்களாக இருந்தன. இப்பொழுது எங் இந்தியா-வும், நவஜிவனும் இருப்பதைப்போல் அந்த நாளில் இந்தியன் ஒப்பீனியன் என் வாழ்க்கையின் ஒரு பகுதியைக் காட்டும் கண்ணாடி போல் இருந்து வந்தது. அதன் பத்திகளில் பிரதி வாரமும் என் ஆன்ம உணர்ச்சிகளைக் கொட்டி வந்தேன். சத்தியாக்கிரகக் கொள்கையையும் அதன் அனுஷ்டானத்தையும நான் அறிந்திருந்த வகையில் அதில் வெளியிட்டு வந்தேன். பத்து வருட காலத்தில், அதாவது 1914-ஆம் ஆண்டு வரையில், சிறைச் சாலைக்குள் எனக்குக் கிடைத்த கட்டாய ஓய்வைத் தவிர மற்றச் சமயங்களில் என்னுடைய கட்டுரை இடம் பெறாத இந்தியன் ஒப்பீனியன் இதழே இல்லை. நான் தீர யோசிக்காமலோ, வேண்டும் என்றோ அக்கட்டுரைகளில் ஒரு வார்த்தையைக்கூட எழுதியதாக எனக்கு நினைவு இல்லை. எனக்கு அப்பத்திரிகை தன்னடக்கத்திற்கு ஒரு பயிற்சியாக இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை. நண்பர்களுக்கோ, என் கருத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு அது ஒரு சாதனமாக இருந்தது.

குற்றங் கண்டுபிடிப்பவர்களுக்கு அதில் ஆட்சேபிக்கத் தக்க விஷயங்கள் அதிகம் கிடைப்பதில்லை. உண்மையில் இந்தியன் ஒப்பீனியனின் நேர்மையான போக்கு, குற்றங் கூறுவோரும் தங்கள் பேனாவை அடக்கிக் கொள்ளும்படி செய்தது. இந்தியன் ஒப்பீனியன் இல்லாமல் சத்தியாக்கிரகம் சாத்தியமில்லாமலும் இருந்திருக்கக்கூடும். சத்தியாக்கிரகப் போராட்டத்தின் நம்பிக்கையான விவரங்களையும் தென்னாப்பிரிக்காவில் இந்தியரின் உண்மையான நிலைமையையும் அறிவதற்கு வாசகர்கள் இப்பத்திரிகையை ஆவலுடன் எதிர் நோக்கினர். ஆசிரியருக்கும் வாசகர்களுக்கும் இடையே நெருங்கிய தூய சம்பந்தத்தை உண்டாக்கி கொள்ள வேண்டுமென்று நான் எப்பொழுதும் முயன்று வந்தேன். ஆகையால், நான் மனித சுபாவத்தின் எல்லாவிதத் தோற்றங்களையும் சாயல்களையும் கற்றறிவதற்கு இப்பத்திரிகை ஒரு நல்ல சாதனமாயிற்று. இதய அந்தரங்க உணர்ச்சிகளைப் பொழிந்து எழுதிய கடிதங்கள் ஏராளமாக, பிரவாகமாக எனக்கு வந்து குவிந்து கொண்டிருந்தன. எழுதியவரின் மனப்போக்கை ஒட்டிச் சில சிநேக முறையில் இருந்தன, சில குற்றங் கூறுவனவாகவோ, கசப்பானவையாகவோ இருந்தன. இந்தக் கடிதங்களையெல்லாம் படித்து, விஷயத்தை அறிந்துகொண்டு பதில் சொல்வது எனக்கு நல்ல படியாக அமைந்தது. என்னுடன் நடத்திய இக்கடிதப் போக்குவரத்தின் மூலம் சமூகம் தன்னுடைய எண்ணத்தை எனக்கு அறிவிப்பது போலவே இருந்தது. ஒரு பத்திரிக்கையாளரின் பொறுப்பை முழுவதும் நான் அறிந்து கொள்ளுமாறும் அது செய்தது. இந்த வகையில் நான் சமூகத்தில் அடைந்த செல்வாக்கு, வருங்காலப் போராட்டத்தைக் காரிய சாத்தியமானதாகவும், கண்ணியமானதாகவும், எதிர்க்க முடியாததாகவும் ஆக்கியது.

பத்திரிக்கைத் தொழிலின் ஒரே நோக்கம் சேவையாகவே இருக்கவேண்டும் என்பதை இநதியன் ஒப்பீனியன் ஆரம்பமான முதல் மாதத்திலேயே அறிந்துகொண்டேன். பத்திரிக்கை, ஒரு பெரிய சக்தி. ஆனால், கரையில்லாத நீர்ப் பிரவாகம். எவ்விதம் கிராமப் புறங்களையெல்லாம் மூழ்கடித்துப் பயிர்களையும் நாசமாக்கி விடுமோ அதே போலக் கட்டுத்திட்டத்திற்கு உட்படாத பேனாவும் நாச வேலைக்குத்தான் பயன்படும். கட்டுத்திட்டம் வெளியிலிருந்தே வருவதாயிருந்தால், கட்டுத்திட்டமில்லாததைவிட அது அதிக விஷயமானதாகும். கட்டுத்திட்டம் உள்ளுக்குள்ளிருந்தே வருவதாக இருந்தால்தான் அதனால் லாபம் உண்டு. இந்த நியாயமே சரியானது என்றால், உலகில் இப்பொழுது இருக்கும் பத்திரிகைகளில் எத்தனை இந்தச் சோதனையில் தேறும் ? ஆனால் பயனில்லாதவைகளாக இருப்பவைகளை யார் நிறுத்துவார்கள் ? மேலும் இதில் முடிவு கூறுவது யார் ? பொதுவாக நல்லதையும் தீயதையும் போலப் பயனுள்ளவையும் பயனில்லாதவையும் கலந்து இருந்துகொண்டுதான் வரும். மனிதனே அதில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.


Offline Anu

கூலிகளின் ஒதுக்கலிடங்கள்

நமக்கு மிகப் பெரிய சேவை செய்து வரும் வகுப்பினர் உண்டு. ஆனால், ஹிந்துக்களாகிய நாம், அவர்களைத் தீண்டாதார் என்று சொல்லுகிறோம். பட்டணம் அல்லது கிராமத்தின் ஒதுக்குப்புறமான இடங்களில் அவர்களை ஒதுக்கியும் வைத்திருக்கிறோம். அப்படிப்பட்ட சேரிகள் குஜராத்தியில் டேட்வாடா என்று சொல்லப்படுகின்றன. அப் பெயருக்கு இழிவையும் கற்பித்திருக்கிறோம். கிறிஸ்தவ ஐரோப்பாவில் இப்படித்தான் யூதர்கள் ஒரு சமயம் தீண்டாதோர் ஆக இருந்தனர். அவர்கள் குடியிருக்க ஒதுக்கப்பட்டிருந்த இடத்தைக்கெட்டோக்கள் என்ற இழிவான பெயர் கொண்டும் கூறி வந்தார்கள். அதே வழியில் இன்று நாம் தென்னாப்பிரிக்காவில் தீண்டாதவர்களாக இருக்கிறோம். ஆண்டுரூஸின் தியாகமும், சாஸ்திரியாரின்மந்திரக் கோலும் நம் கஷ்டங்களைப் போக்குவதற்கு எவ்வளவு தூரம் பயன்படப் போகின்றன என்பது இனிமேல்தான் தெரிய வேண்டும்.

புராதன யூதர்கள், தாங்களே கடவுளின் அன்புக்குப் பாத்திரமான மக்கள் என்றும்,மற்றவர்களெல்லாம் அப்படியல்ல என்றும் எண்ணிக் கொண்டார்கள். இதன் காரணமாக அவர்களுடைய சந்ததியார் விசித்தரமானதும் அநீதியானதும் ஆன வினைப்பயனை அனுபவித்தாக வேண்டியவர்களாயினர். அநேகமாக அதே மாதிரியே ஹிந்துக்கள், தாங்கள் ஆரியர்கள் அல்லது நாகரிகமானவர்கள் என்று எண்ணிக் கொண்டனர்.தமது சொந்த உற்றார் உறவினரேயான ஒரு பகுதியினரை அநாரியர்கள் அல்லது தீண்டாதார் என்று ஒதுக்கித் தள்ளினர். இதன் பயனாக,அநீதியானதேயென்றாலும் விசித்திரமான கர்ம பலன், தென்னாப்பிரிக்காவில் ஹிந்துக்களின் தலைமீது மாத்திரமல்ல,தங்கள் ஹிந்து சகோதரர்களைப் போல் அதே நிறத்தினரான முஸ்லிம்கள், பார்ஸிகள் ஆகியவர்கள் தலைமீதும், அவர்கள் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதனால், இப்பொழுது விடிந்திருக்கிறது.

இந்த அத்தியாயத்தை ஒதுக்கலிடங்கள் என்ற தலைப்புடன் ஆரம்பித்தேன். அதன் பொருளை ஓரளவுக்கு வாசகர் இப்பொழுது புரிந்துகொண்டிருப்பர்.தென்னாப்பிரிக்காவில் கூலிகள் என்ற கேவலமான பெயரை நாம் பெற்றிருக்கிறோம். இந்தியாவில் கூலி என்றால், சுமை தூக்குகிறவர், கூலிக்கு வேலை செய்பவர் என்றுதான் பொருள். ஆனால் தென்னாப்பிரிக்காவிலோ அதற்கு அவமரியாதையான பொருள் இருக்கிறது. பறையன் தீண்டாதான் என்ற சொல்லுக்கு நாம் என்ன பொருள் கொள்ளுகிறோமோ அப்பொருளே தென்னாப்பிரிக்காவில் கூலி என்பதற்குக் கொடுக்கப்படுகிறது. கூலிகளுக்குக் குடியிருக்கக் கொடுக்கப்பட்டிருக்கும் இடங்கள் கூலி ஒதுக்கலிடங்கள் என்று சொல்லப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓர் ஒதுக்கலிடம் ஜோகன்னஸ்பர்க்கில் இருக்கிறது. ஆனால், ஒதுக்கலிடமுள்ள மற்றஇடங்களில் இந்தியருக்குச் சாசுவதக் குடிவார உரிமை இருப்பது போல் இங்கே இல்லை. ஜோகன்னஸ்பர்க்கில் அப்பகுதியில் இந்தியர், மனைகளை 99 வருடக் குத்தகைக்கு வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அப்பகுதியில் ஜனத்தொகை அதிகரிப்பதற்கு ஏற்றாற்போல விஸ்தீரணம் அதிகரிக்கப்படவில்லை. ஆகையால், அவ்விடத்தில் மக்கள் நெருக்கமாகவே வசிக்க நேர்ந்தது.

அரை குறையான வகையில் கக்கூசுகளைச் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்திருந்ததைத் தவிர முனிசிபாலிடி அப் பகுதியில் வேறு எந்தவிதமான சுகாதார வசதியும் செய்யவே இல்லை. அங்கே நல்லபாட்டைகளோ, விளக்குகளோ இல்லை. அங்கே குடியிருந்தவர்களின் நலனிலேயே இது சிரத்தையில்லாமல் இருந்தபோது, அப் பகுதியின் சுகாதாரத்தை அது பாதுகாக்கும் என்பதற்கு இடமே இல்லை. அங்கே குடியிருந்தவர்களோ, நகரசபையின் சுகாதார விதிகளையும் சுகாதாரத்தையும் பற்றி ஒன்றுமே அறியாதவர்களாகையால், நகரசபையின் உதவி அல்லது கண்காணிப்பு இல்லாமல் அவர்கள் எதுவும் செய்துகொள்ள முடியாது. தென்னாப்பிரிக்காவுக்குச் சென்ற இந்தியர், ராபின்ஸன் குருஸோக்கலாக இருந்திருப்பார்களாயின், அவர்கள் கதை வேறுவிதமாக இருந்திருக்கும். ஆனால், ராபின்ஸன் குருஸோக்களாகக் குடியேறிய நாடு ஒன்றேனும் உலகில் இருப்பதாக நாம் அறியோம். பொதுவாகச் செல்வத்தையும் வர்த்தகத்தையும் தேடிக்கொண்டே மக்கள் வெளிநாடுகளில் போய்க் குடியேறுகிறார்கள். ஆனால், தென்னாப்பிரிக்காவுக்குச் சென்ற இந்தியரில் பெரும்பாலானவர்கள், ஒன்றும் தெரியாத பரம ஏழை விவசாயிகள். ஆகையால், அவர்களுக்கு அளிக்க வேண்டிய எல்லாக் கவனமும் பாதுகாப்பும் அவர்களுக்குத் தேவை. அவர்களைத் தொடர்ந்து அங்கே சென்ற வியாபாரிகளும், படித்த இந்தியரும் மிகச் சிலரே.

நகரசபையின் அக்கிரமமான அசிரத்தையும், அப் பகுதியில் குடியிருந்த இந்தியரின் அறியாமையும் சேர்ந்து அவர்கள் குடியிருந்த இடத்தை முற்றும் சுகாதாரக் கேடானதாக்கி விட்டன. அப்பகுதியின் நிலைமை அபிவிருத்தியடையும்படி நகரசபை ஒன்றுமே செய்யாமல் இருந்ததோடு, தங்களுடைய சொந்த அசிரத்தையினால் ஏற்பட்ட சுகாதாரக் கேட்டை, அப்பகுதியையே அழித்து விடுவதற்கு ஒரு சாக்காகவும் உபயோகித்துக்கொண்டது. அந்த இடத்தில் குடியிருக்கும் உரிமையை இந்தியரிடமிருந்து பறித்துவிட உள்ளூர்ச் சட்டசபையின் அதிகாரத்தையும் பெற்றது. நான் ஜோகன்னஸ்பர்க்கில் குடியேறியபோது அங்கே இருந்த நிலைமை இதுவே. குடியேறியிருந்தவர்களுக்குத் தங்கள் சொந்த நிலத்தில் சொத்துரிமை இருந்ததால் இயற்கையாகவே நஷ்டஈடு பெற வேண்டியவர்களாகின்றனர். சில ஆர்ஜித வழக்குகளை விசாரிப்பதற்கு என்று ஒரு விசேட நீதிமன்றம் அமைத்தார்கள். நகரசபை கொடுக்க முன்வரும் தொகையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத இந்தியருக்கு அந்த நீதிமன்றத்திடம் அப்பீல் செய்துகொள்ள உரிமை உண்டு. அந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் தொகை, நகரசபை கொடுக்க முன்வந்த தொகையைவிட அதிகமானதாக இருந்தால் நகரசபையே செலவுத் தொகையையும் கொடுக்க வேண்டும்.

அங்கே குடியிருந்தவர்களான இந்தியரில் பெரும்பாலானவர்கள் என்னையே சட்ட ஆலோசகராக வைத்துக் கொண்டனர். இந்த வழக்குகளின் மூலம் பணம் சம்பாதிக்க எனக்கு விருப்பமில்லை. ஆகையால், அவர்களிடம் ஒன்று கூறினேன். வழக்கில் வெற்றி பெற்றால், நீதிமன்றம் என்ன செலவுத் தொகைக்குத் தீர்ப்புச் செய்கிறதோ அதுவே எனக்குப் போதும்; வழக்கின் முடிவு எதுவானாலும் ஒவ்வொரு வழக்குக்கும் எனக்குப் பத்து பவுன் கட்டணம் கொடுக்க வேண்டும் என்று கூறினேன். அவர்கள் இவ்விதம் கொடுக்கும் பணத்தில் ஒரு பாதியை ஏழைகளுக்கு வைத்திய சாலையோ அல்லது அத்தகைய வேறு ஸ்தாபனமோ ஆரம்பிக்க ஒதுக்கி வைத்துவிடப் போகிறேன் என்பதையும் அவர்களிடம் சொன்னேன். இயல்பாகவே இது அவர்கள் எல்லோருக்கும் திருப்தியளித்தது. எழுபது வழக்குகளில் ஒன்றுதான் தோற்றுப் போயிற்று. ஆகவே, பெருந்தொகையே கட்டணமாகக் கிடைத்தது. வந்ததையெல்லாம் விடாமல் விழுங்கிக்கொண்டிருக்க இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகை இருந்தது. இதுவரையில் அது 1600 பவுன் விழுங்கியிருக்கிறது என்பது எனக்கு ஞாபகம். இந்த வழக்குகளுக்காக நான் கஷ்டப்பட்டு வேலை செய்தேன். கட்சிக்காரர்கள் எப்பொழுதும் என்னைச் சூழ்ந்து கொண்டிருப்பார்கள். இவர்களில் பெரும்பான்மையோர், முன்னால் பீகாரிலிருந்தும் அதன் சுற்றுப்புறங்களிலிருந்தும், தென்னிந்தியாவிலிருந்தும் வந்தவர்கள். தங்களுடைய குறைகளுக்குப் பரிகாரம் தேடிக்கொள்ளுவதற்கென்று, சுயேச்சையான இந்திய வர்த்தகர்களின் சங்கத்தின் தொடர்பு இல்லாமல், தனியாக ஒரு சங்கத்தை அமைத்துக்கொண்டு இருந்தார்கள்.

இவர்களில் சிலர், கபடமில்லாதவர்கள்; தாராள குணம் உள்ளவர்கள்; உயர்ந்த ஒழுக்கம் உள்ளவர்கள். இவர்களுடைய தலைவர்கள் சங்கத் தலைவரான ஸ்ரீஜெயராம் சிங்கும், சங்கத் தலைவரைப் போன்றே இருந்த ஸ்ரீபத்ரியும் ஆவார். அவர்கள் இருவரும் இப்பொழுது காலமாகி விட்டனர். அவர்கள் எனக்குப் பெரும் அளவு உதவியாக இருந்தார்கள். ஸ்ரீ பத்ரி என்னுடன் நெருங்கிப் பழகியதோடு சத்தியாக்கிரகத்திலும் முக்கியமான பங்கு எடுத்துக்கொண்டார். அவர்களையும் மற்ற நண்பர்களையும் கொண்டு, வடக்கிலிருந்தும் தென்னிந்தியாவிலிருந்தும் வந்து குடியேறி இருந்த அநேக இந்தியருடன் எனக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. வெறும் சட்ட ஆலோசகர் என்பதைவிட அவர்களுக்கு நான் சகோதரனாகவே ஆகிவிட்டேன். மறைவாகவும், பகிரங்கமாகவும் அவர்கள் அனுபவித்த துக்கங்களிலும் கஷ்டங்களிலும் நானும் பங்கு கொண்டேன். அங்கே இந்தியர் என்னை எப்படி அழைத்து வந்தார்கள் என்பதை அறிவது கொஞ்சம் ருசிகரமானதாகவே இருக்கக்கூடும். காந்தி என்று என்னைக் கூட்பிட அப்துல்லா சேத் மறுத்துவிட்டார். அதிர்ஷ்டவசமாக யாரும் என்னை சாஹேப் (துரை) என்று கருதவோ, அப்படி அழைத்து என்னை அவமதிக்கவோ இல்லை. அப்துல்லா சேத் சிறந்த சொல் ஒன்றைக் கண்டுபிடித்தார். பாய், அதாவது சகோதரர் என்பது தான் அச்சொல். மற்றவர்களும் அதையே பின்பற்றி, நான் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்துவிடும் வரையில் என்னை பாய் என்றே கூப்பிட்டு வந்தார்கள். முன்னால் ஒப்பந்தத் தொழிலாளராக இருந்த இந்தியர் இப்பெயரால் என்னை அழைத்தபோது அதில் இனிமையானதொரு மணம் கமழ்ந்தது.