FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on October 04, 2021, 07:38:49 AM

Title: முகமூடி மனிதர்கள்
Post by: thamilan on October 04, 2021, 07:38:49 AM

மற்றவர்கள் மனதுக்குள் நுழைய
முயல்பவனே
உன் மனதுக்குள் நுழைய நீ
முயன்றதுண்டோ

முயன்றிருந்தால்...
உன் மனம்
அசிங்கங்களின் குப்பைக்கூடையாய்
இருப்பதனை அறிந்திருப்பாய்
உன் மனம்
உன் ரகசிய ஆசைகளை
யாருக்கும் தெரியாமல் ஒளித்துவைத்திருக்கும்
அந்தரங்க அறை என்பதனை
நீ அறிந்திருப்பாய்

உன் மனம்
ஒரு பாற்கடல்
அதை கடைந்தால் அமுதம் மட்டுமல்ல
ஆலகாலமும் வெளிப்படும் என்பதனை
நீ அறிவாயா

உன் மனம் ஒரு பருந்து
அது மேலே பறந்து கொண்டிருந்தாலும்
கீழே செத்துக்கிடக்கும்
எலிகளை தேடுகிறது அல்லவா

உன் மனம் ஒரு மகா சமுத்திரம்
பயங்கரமான அதன் ஆழம்
உனக்கே தெரியாதல்லவா
உன் முகவரி
உன் முகத்தில் இல்லை
உன் மனதில் தான் இருக்கிறது
அதை யாருக்காவது தெரிவிக்கும்
தைரியம் உனக்கு உண்டா

சமூகம் என்பது ஒரு
முகமூடி நடன அரங்கம்
நாம் அனைவரும்
முகங்கள் என்ற முகமூடி அணிந்து
ஆடிக் கொண்டிருக்கிறோம்