Author Topic: தமிழ் புத்தாண்டு வந்தது எப்படி?  (Read 1406 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook


சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுகிறோம். ஏன் சித்திரை தமிழ் வருடத்தின் முதல் மாதமாக அமைந்தது? நம் முன்னோர்கள் சூரியனை வைத்தே காலத்தைக் கணக்கிடும் முறையைச் செய்தார்கள். அதை திருக்கணிதம் என்று கூறினார்கள். அந்தத் திருக்கணிதப் பஞ்சாங்கத்தில் முந்நூறு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள காலக்கணக்குகள் கணக்கிடப்பட்டுள்ளன. அதாவது மனித இனம் தோன்றுவதற்கு 18 லட்சம் வருடங்கள் முன்னால் உள்ள காலக்கணக்குகளுக்குக்கூட விடையளிக்கிறது திருக்கணிதம். அப்போது நிகழ்ந்திருக்கக் கூடிய நிகழ்வுகளை ஓரளவு துல்லியமாக கணிக்கிறது இந்தப் பஞ்சாங்கம்.

அந்தத் திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி சித்திரை முதல்நாளில்தான் சூரியன் மேஷ ராசியில் நுழைகிறது. இந்த நிகழ்வைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் நாம் முன்னோர்களின் காலக் கணக்கு முறையைப் புரிந்துகொள்ள வேண்டும், ஒரு வருடத்திற்கான பருவங்களை அவர்கள் ஆறாகப் பிரித்தார்கள். அவை.

1. வசந்த காலம்( அ) இள வேனில் காலம்-(சித்திரை, வைகாசி)
2. முதுவேனில் ( அ) கோடைக் காலம்( ஆனி, ஆடி)
3. கார் காலம்(அ) மழைக் காலம் (ஆவணி, புரட்டாசி)
4. கூதிர் காலம்(அ) குளிர் காலம்( ஐப்பசி, கார்த்திகை)
5. முன் பனிக்காலம் (மார்கழி, தை)
6. பின் பனிக்காலம்( மாசி, பங்குனி)

கோலாகலமான கோயில் விழாக்கள் பெரும்பாலும் வசந்த காலத்திலேயே கொண்டாடப்படும் அது இயற்கை செழிக்கத் துவங்கும் காலம். அப்போதுதான் மக்களுக்கு மனதில் மகிழ்ச்சியோடு பக்தியும் பெருகும். வருடத்தின் முதலாக வசந்த காலம் வந்தால் வருடம் முழுவதும் மக்கள் வாழ்வில் வசந்த காலம் தங்கும் என்று உணர்ச்சி பூர்வமாக முடிவெடுத்து சித்திரையை தமிழ் ஆண்டின் தொடக்க மாதமாக வைத்தனர். அதற்கு அறிவு பூர்வமான காரணங்களும் இருக்கின்றன.

பூமி சூரியனைச் சுற்றி வரும் நீள் வட்டப் பாதையை 12 ஆகப் பிரித்தார்கள். நம் முன்னோர் அவற்றை ராசிகள் என்றார்கள். ராசிகள் மேஷம் தொடங்கி மீனம் வரை மொத்தம் 12 என்று நாம் அனைவரும் அறிந்ததே ஒரு நீள் வட்டப்பாதையின் மொத்தக் கோணங்கள் 360 டிகிரி ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரி உண்டு. அதில் மேஷம் 0 டிகிரியில் தொட்ங்குவதால் அதை முதல் ராசியாகக் குறித்தார்கள்.

முன்பே சொன்னபடி சூரியன், மேஷ ராசிக்குள் நுழையும் மாதம் சித்திரை, அந்த நிகழ்வையே புத்தாண்டாகக் கொண்டார்கள் நம் முன்னோர். எத்தனை அறிவுபூர்வமான சிந்தனை பாருங்கள்! சூரியனை பிரதானமாகக் கொண்ட இந்தக் கால நிர்ணயம் பல மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. ஓரிசா, மேற்கு வங்கம், மணிப்பூர், பஞ்சாப் அஸ்ஸாம் கேரளா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் மத்தியில் அனேகமாக 14 ஆம் தேதி தான் அவர்களின் புத்தாண்டும் துவங்குகிறது. கம்போடியா ஆகிய வேறு சில நாடுகளிலும்கூட ஏப்ரல் மத்தியில் புது வருடம் கொண்டாடப்படுகிறது.

உலக வரலாற்றை ஊன்றி கவனித்தால் நாம் தற்போது பின்பற்றும் ஆங்கிலக் காலண்டர் புழக்கத்திற்கு வருவதற்குப் பலப்பல ஆண்டுகள் முன் ஏப்ரல் மாதமே ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்பட்டது தெரிய வருகிறது. பின்னர்தான் ரோமானியர்களால் அது மாற்றப்பட்டு இன்று நாம் புழங்கும் கிரிகேரியன் காலண்டர் வழக்கத்துக்கு வந்தது. இதிலிருந்து உலகின் மிகப்பழமையான நாகரிகங்கள் ஏப்ரலையே ஆண்டின் தொடக்கமாகக் கொண்டிருந்தன என்பது விளங்கும்.  தமிழ் இலக்கியங்களில் தமிழ்ப் புத்தாண்டு: நக்கீரர் எழுதிய நெடுநல்வாடையில் சூரியன் மேஷத்தில் நுழையும் சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு பிறந்ததாகவும் அன்று கோயில்களில் தெய்வீக வழிபாடுகளும் பஞ்சாங்கம் படித்தலும் நடைபெற்றதாகவும் கூறுகிறார்.

தமிழில் இருப்பதிலேயே மிகவும் தொன்மையான நூலான தொல் காப்பியம் என்னும் இலக்கண நூல், ஆண்டை ஆறு பருவங்களாகப் பிரித்து இளவேனிலை அதாவது சித்திரை மாதத்தை ஆண்டின் தொடக்கமாக வர்ணிக்கிறது. மேலும் கூடலூர்க்கிழார் என்ற புலவர் எழுதிய ஒரு செய்யுளில் சித்திரை பிறப்பை புத்தாண்டாகக் கொண்டாடியதாகத் தெரிய வருகிறது. இந்தப் பாடல் புறநானூறில் இடம் பெற்றுள்ளது.  சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சூரியனை மையமாகக் கொண்ட நமது காலக் கணக்கு முறையை உறுதிப்படுத்துகின்றன.  முன்னோர் காட்டிய வழிகள் முற்றிலும் நன்மை தருவன. சித்திரை முதல் நாளில் சிறப்புற தெய்வத்தை வணங்கி சீர்பெறுவோம். சிறப்புறுவோம்.  தமிழ் புத்தாண்டு கொண்டாடும் முறை: தமிழ்ப் புத்தாண்டு அன்று அறுசுவை உணவு மிகவும் முக்கிய இடம் வகிக்கிறது. இனிப்பு, கரிப்பு, எரிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு இந்த எல்லாச் சுவைகளும் சேர்ந்தது தான் வாழ்க்கை என்பதைக் காட்டும் வகையில் அன்று வீடுகளில் விருந்து தயாரிக்கப்படுகிறது. பருப்புப் பாயசம், தயிர்ப் பச்சடி, இனிப்பும் காரமும் சேர்ந்த மாங்காய்ப் பச்சடி, வாழைக்காய்ப் பொரியல், எல்லாக் காய்களும் போட்ட கூட்டு அல்லது அவியல், கிழங்குகள் போட்டு சாம்பார் அல்லது சேப்பங்கிழங்கும் பூசணிக்காயும் போட்ட மோர்க்குழம்பு, வேப்பம் பூ ரசம், பருப்பு வடை இவை பெரும்பாலும் சமையலில் இடம் பெற்றிருக்கும்.

தலைவாழை இலையில் மேற்கூறிய உணவுப் பொருட்களை வைத்து கடவுளுக்கு நிவேதனம் செய்வார்கள். அன்று சிவ-விஷ்ணு வழிபாடு செய்வதும், விஷ்ணு சகஸ்ர நாமம், கோளறு திருப்பதிகம் படிப்பதும் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. புதிய பஞ்சாங்கத்தினை சுவாமி அறையில் வைத்து வணங்குவதும் சிலரது வழக்கம். நமது அண்டை மாநிலமான கேரளாவில் அன்று கனி காணல் என்றொரு பழக்கம் இருக்கிறது. புத்தாண்டு துவங்குவதற்கு முன் தினம் இரவு, பூஜை அறையை சுத்தம் செய்து எல்லா தெய்வப் படங்களுக்கும், பூ வைப்பார்கள். கனிவகைகள் ஒரு தட்டில், காய் வகைகள் ஒரு தட்டில், ஒரு தட்டில் அரிசி மற்றும் பருப்பு, பணம் ஒரு தட்டில், தங்க நகைகள் ஒரு தட்டு, பூக்கள் ஒரு தட்டில் என கடவுளர் முன்னால் வைப்பார்கள்.

மறுநாள் விடியலிலேயே குடும்பத்தின் பெரியவர் விழித்துக் கொண்டு தன் கைகளால் கண்களை மூடிக் கொண்டு அந்த பூஜையறையில் வைத்திருக்கும் தட்டுகளிலும், கடவுள் படங்களிலும் கண் விழிப்பார். பின்னர் குளித்து சுத்தமான பட்டுத் துணி உடுத்தி, மற்ற குடும்ப அங்கத்தினர்ளை எழுப்பு கண்களைப் பொத்தியவாறு அழைத்து வந்து தெய்வங்களையும் அந்தத் தட்டுகளையும் முதலில் காண வைப்பார்கள். இதற்கு கனி காணல் என்று பெயர். அவ்வாறு செய்தால் அந்த ஆண்டு முழுவதும் நல்ல செழிப்புடனும், செல்வ வளத்துடனும் திகழும். வீட்டில் பழங்கள் தானியங்களுக்குக் குறைவிருக்காது என்பது ஐதீகம். நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரளாவை ஒட்டிய பகுதிகளில் வாழும் தமிழர்களும் இப்பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.