FTC Forum

Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: kanmani on October 15, 2013, 01:03:28 PM

Title: குரு பெயர்ச்சிக்கும் தட்சிணாமூர்த்திக்கும் என்ன சம்பந்தம்?
Post by: kanmani on October 15, 2013, 01:03:28 PM
தக்கோலம்

குரு எனும் வார்த்தைக்கு இரண்டு எழுத்துகள்தான். ஆனால், இந்தியாவை ஆன்மிக பூமியாக அடையாளப்படுத்துவது இந்த ஒரு வார்த்தைதான். ‘‘கோவிந்தன் கைவிட்டால் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால், குரு கைவிட்டால் வழியே இல்லை’’ என்று கபீர்தாசர் கூறுவார். குரு என்றால், இருட்டைப் போக்குபவர், கனமானவர் என்றும் பொருள்கள் உண்டு. குருவானவர் பெயர்ச்சி ஆவதைத்தான் ஜோதிடத்தில் குரு பெயர்ச்சி என்கிறார்கள். அது சரி. குரு பெயர்கிறாரா? குரு பெயர்ச்சிக்கும் தட்சிணாமூர்த்திக்கும் என்ன சம்பந்தம் என்பது பலரின் சந்தேகக் கேள்விகள். நவகிரகங்களில் முழுமையான சுப கிரகமான குரு, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்வதையே குரு பெயர்ச்சி என்கிறோம்.

இந்த குருவை வியாழ பகவான், பிரகஸ்பதி என்றும் அழைப்பர். இவரே தேவர்களுக்கெல்லாம் குரு. இந்த தேவகுருக்கு குருவாக, ஆதி குருவான தட்சிணாமூர்த்தி விளங்குகிறார். இதனை நன்கு தெரிந்து கொண்ட ஆன்றோர்கள் குருபெயர்ச்சியின் போது நேரடியாக தட்சிணாமூர்த்தியையே வணங்கினர். நவகிரக குருவிற்கு உண்டான மஞ்சள் நிற ஆடையையும் கொண்டைக் கடலை நிவேதனம் உள்ளிட்ட சகல பரிகாரங்களையும் தட்சிணாமூர்த்திக்கே செய்தனர். நவகிரக கிரகத்தின் குருத்வத்திற்கு அதாவது, குரு தன்மைக்கு மோன தட்சிணாமூர்த்தியின் பேரருளே காரணம். அதனால்தான் தட்சிணாமூர்த்தியை வணங்குகிறோம்.

பொதுவாக குரு பெயர்ச்சியின் போது சகல சிவாலயங்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் நடக்கின்றன. ஆனாலும் குறிப்பிட்ட சில தலங்கள் மட்டுமே குருத் தலங்களாக திகழ்கின்றன. ஆலங்குடி, தென்குடித் திட்டை, சென்னை-பாடி, திருப்புலிவனம் ஆகியவை தனிச் சிறப்பு கொண்டவை. அப்படிப்பட்ட குருத் தலங்களுள் மூன்றாவதாக தக்கோலம் ஜலநாதீஸ்வரர் ஆலயம் விளங்குகிறது. தற்போது தக்கோலத்தை குரு பரிகாரத் தலமாகவே பக்தர்கள் அறிந்துள்ளனர். காரணம், இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் அத்தனை அற்புதமானது. தேவர்களின் குருவாகிய வியாழ பகவானின் தம்பி சம்வர்த்த முனிவர் இங்கு வழிபட்டதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகிறார்.

ஆனால், தலபுராணமோ தேவலோகப் பசுவான காமதேனுவின் சாபத்துக்கு உட்பட்ட வியாழ பகவானின் தம்பியாகிய உததி முனிவர், இத்தலத்திற்கு வந்து வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார் என்கிறது. உததி முனிவரும் சம்வர்த்த முனிவர் ஒருவரே என்ற கருத்தும் நிலவுகிறது. சில கோயில்களில் மூலவரைவிட பரிவார, கோஷ்ட தெய்வங்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. உதாரணமாக திருநள்ளாறு தலத்தில் மூலவரான தர்ப்பாரண்யேஸ்வரரைவிட சனி பகவானுக்குத்தான் சிறப்பு வழிபாடுகள் அதிகம். இது ஈசனே தனக்கு இணையாக பரிவார தெய்வங்களை உயர்த்தி அழகு பார்க்கிறார் என்பதனால்தான்.
அதுபோலவே இந்த ஜலநாதீஸ்வரர் ஆலயத்திலும் மோன மூர்த்தமாக தட்சிணாமூர்த்தி முன்னிறுத்தப்படுகிறார். 

கடந்த மே மாதம் 28ம் தேதியன்று ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு குரு பெயர்ச்சி ஆனார். அதை முன்னிட்டு இக்கோயிலில் மிக விமரிசையாக பூஜைகளும் அபிஷேகங்களும் ஹோமங்களும் நடைபெற்றன. இரவு 9:14க்கு பெயர்ச்சி ஆன சமயத்தில் மகா தீபராதனை நடத்தப்பட்டது. மாலை ஐந்து மணியிலிருந்து ஹோமங்கள் செய்தனர். அதே சமயத்தில் சிறப்பு லட்சார்ச்சனையும் குருபகவானுக்கு நடந்தேறியது. விதவிதமான அலங்காரங்களில் குரு பகவான் ஜொலித்தார். பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தரிசித்தபடி இருந்தனர். அன்று வரமுடியாதவர்கள் மறுநாளும் வந்து தரிசித்தனர்.

கருவறை கோஷ்டத்தில் தனி சந்நதியில் குருபகவான் அருள்பாலிக்கிறார். உருவமைப்பை பார்த்தவுடனே பிரமிப்பு தோன்றும். அத்தனை நுணுக்கங்களோடு பகவானின் திருவுரு திகழ்கிறது. விழுதுகளோடு கூடிய ஆலமரத்தின் அடியில் குருபகவான் அமர்ந்திருக்கிறார். காற்றடித்தால் அந்த ஆல இலைகள் அசையுமோ எனும் அளவுக்கு நிஜம் போன்ற தோற்றம்! வழக்கமான தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் யோக நிலையில் இருக்கும். தமது ஒருகாலை மற்றொரு காலின் மீது மடித்து வைத்திருப்பார். ஆனால், இங்கு அமர்ந்த நிலையில் தமது வலக் காலைச் சற்று வளைத்து கீழே ஊன்றிய நிலையிலும் இடது காலை மடக்கி பீடத்தின் மீதும் வைத்துள்ளார். வலது பின் கையில் அக்க மாலை. இந்த அமைப்பை உத்கடி ஆசனம் என்கின்றனர்.

சீடர்களை ஆட்கொண்டருளும் அடக்கியாளும் கண்டிப்போடு வழிப்படுத்தும் முறை என்று பல கோணங்களில் விவரிக்கிறார்கள். அதேசமயம் தலையை சற்றே சாய்த்து பார்க்கும் லாவண்யம் அபூர்வமானது. பொங்கி வழியும் ஞானத் திருமுகம். அதில் எல்லை காணா வானம்போல சாந்தம், அமைதி! விக்ரகம் கல் என்ற உண்மை மறைந்து ஞான உணர்வு எட்டிப் பார்க்கிறது. திருமுகத்தில் மெலிதான, அகலாத புன்னகை தரிசிப்போரின் நெஞ்சில் குளுமையை பரப்புகிறது. ஜென்ம ஜென்மங்களாய்த் தொடரும் வினைகள் சிதறுண்டு போகின்றன.

கழுத்தில் சவடி என்றழைக்கப்படும் சரடும், அழகான வேலைப்பாடுகளோடு கூடிய சரப்பளி கழுத்தணியும் நெளிந்து படர்ந்து அழகூட்டுகின்றன. இடது பின் கையில் தீப்பந்தமும் அதிலிருந்து வெளிப்படும் தீ ஜுவாலையும் நமக்குள் ஞானாக்னியை கொழுந்துவிட்டெறியச் செய்கிறது. காட்டில் அமர்ந்திருப்பதால் அவரது கால்களுக்கு அருகே மான்கள், பாம்பு... இதுபோன்ற அமைப்பை வேறெங்கும் காண முடியாது. இங்கு குருபகவான் பேசாமல் பேசுகிறார். மௌனத்தினாலேயே ஞானப் பிரகடனம் செய்கிறார், என்று உபநிஷதம் கூறுகிறது. அந்த மௌனம் இங்குதான், இங்குதான் நிலவுகிறது.

வாழ்வில் பிரச்னைகள், கிரக தோஷங்கள் எல்லாம் இந்த சந்நதிக்கு முன்பு எம்மாத்திரம்! வேண்டிக்கொள்ள வந்தவர்கள் வெறும் மௌனத்தை சுமந்து செல்வார்கள். கண்டும் வணங்கியும் எதுவும் வேண்டாமலேயே திரும்பி விடுவர். ஏனெனில், அங்கு ஞானப் பேராறு பிரவாகமாக பொங்கிக் கொண்டிருக்கிறது. அதன்முன்பு நின்று குவளை நீர் கேட்க யாருக்கும் மனம் வராது.

கோயிலின் தலபுராணம் என்ன?

ஈசனை மாப்பிள்ளையாகப் பெற்றும் கூட தட்சனுக்கு அகங்காரத்தை அறுக்கத் தெரியவில்லை.  திடீரென்று பெரிய யாகம் செய்தான். அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்க அவர்கள் குழுமியிருந்தார்கள். ஆனால், பிரபஞ்சத்தின் மையச் சக்தியான ஈசனை வேண்டுமென்றே அவன் அழைக்கவில்லை. வேதங்களில் ஈசனைக் குறிக்கும் சப்தங்களை தட்சன் வேண்டுமென்றே தவிர்த்தான். மற்ற எல்லா தேவர்களையும் சப்த ரூபமாக அழைத்தான். ஹோமத் தீயில் அவர்களுக்கு உரித்தானதை ஆகுதியாகக் கொடுத்தான். வேதங்களெல்லாம் யக்ஞம் செய்வதாலேயே ஈசனின் நிலையை ஒருவன் அடைகிறான் என்று கோஷிக்கின்றன. ஆனால், அதே யக்ஞத்தை செய்யும்போது தட்சன் முட்டாள்தனமாக ஈசனை அழையாமல் தவிர்த்தான்.

தட்சன் தாட்சாயிணியையும் வெளியேறும்படி கூறினான். ஆனால், அவளோ அங்கிருந்த யாக குண்டத்தில் இறங்கி யோகாக்னி யால் தன்னை எரித்துக் கொண்டாள். ஈசனின் கோபம் பன்மடங்கு கூடியது. அவருக்குள்ளிருந்து வீரபத்திரர் வெளிப்பட்டு தட்சனின் யாகத்தையே சிதைத்தார். தட்சனின் தலையை சீவியெறிந்து ஆட்டின் தலையை பொருத்தினார். அப்போது தக்கன் ஓலமிட்டான். தக்கன் இப்படி ஓலமிட்டதால் இத்தலம் தக்கோலம் என்றழைக்கப்பட்டது. தக்கனின் அகங்காரம் சிதைந்து சத்வ குணம் பெருகியது. ஈசனின் ஆணைப்படியே சீர நதிக்கரையின் ஓரமான இத்தலத்தில் அமர்ந்து ஈசனை பூஜித்தான். ஆட்டின் தலை பொருத்தப்பட்டதால் ஆடு கத்தும் ஒலியாகிய ‘‘மே... மே...’’ என்னும் சமகத்தை சொல்லி பூஜித்தான்.

இது ருத்ரத்தோடு சேர்ந்து வரும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்கிற பிரார்த்தனை மந்திரங்கள் கொண்டது. தக்கன் வழிபாடு செய்த இத்தலத்திற்கும் பார்வதி தேவி வந்து பூஜித்தாள். அருகேயுள்ள ஆற்றில் வெள்ளம் வந்து லிங்கத்தை அடித்துச் செல்ல முயன்றபோது தேவி தமது இரு
கரங்களால் லிங்கத்தை அணைத்து வெள்ளத்திலிருந்து தடுத்தார். நீருற்றின் வடிவமாக இத்தல இறைவன் விளங்குவதால் திருவூறல் என்றே தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப்படுகிறது. ஜலநாதீஸ்வரர் என்று வடமொழி கூறுகிறது. தக்கனின் தீந்தவமோ என்னவோ, அக்கினிக் கோளமொன்று கருவறையில் சுழன்று கொண்டிருக்கிறது. ஆனால், ஜலநாதீஸ்வரர் என்றே இவருக்குப் பெயர். நீருக்குள் நெருப்பாக ஈசன் இருக்கிறார் என்பது வேத வாக்கியம்.  அது இத்தலத்தில் மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

அம்பாள் கிரிராஜகன்னிகாம்பாள் என்றழைக்கப்படுகிறாள். ‘‘என் தந்தை தவறு செய்து விட்டார். உங்களின் பேச்சைக் கேட்காமல், தங்களை ஏன் அழைக்கவில்லை என்று கேட்கத்தான் அந்த யாகத்துக்குச் சென்றேன்’’ என்கிற பரிதவிப்பை அம்பாளின் திருமுகத்தில் இன்றும் காணலாம். தனிச் சந்நதியில் பேரருளோடு கணவனைக் கண்ட திருப்தியோடு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். உததி முனிவரின் ஜீவசமாதியென்றும் அவர் பூஜித்தது என்றும் சொல்லப்படும் சிவலிங்கம் ஒன்று குருபகவானுக்கு அருகேயே சற்று உள்ளடங்கியதுபோல இருக்கிறது. தரிசிக்க தரிசிக்க தெவிட்டாத தனியமுதாக இக்கோயில் விளங்குகிறது. சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியிலிருந்து பேரம்பாக்கம் வழியாகவும் அரக்கோணத்திலிருந்தும் இத்தலத்தை அடையலாம்.