FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: ஸ்ருதி on December 17, 2011, 07:37:40 PM

Title: பிறவிக்குணம் மாறுமா?
Post by: ஸ்ருதி on December 17, 2011, 07:37:40 PM
ஒருமுறை எண்ணெய் வியாபாரி ஒருவர், குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சரைத் தரிசிப்பதற்காக வந்திருந்தார். அவர் நெடுநேரம் குருதேவரின் செயல்பாடுகளைப் பார்த்தபடியே பேசாமல் அமர்ந்திருந்தார். குருதேவரின் தீர்க்கமான பார்வை அவரின் மவுனத்தைக் கலைத்தது.

"குருதேவா! நான் எண்ணெய் வியாபாரம் செய்துவந்தேன். நல்லமுறையில் வியாபாரம் நடந்ததால் பெரும்பொருள் சேர்ந்தது. வயது ஏற ஏற தெய்வதரிசனம் பெற வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. சொத்துக்களை பிள்ளைகளுக்கு எழுதிவைத்துவிட்டு, வியாபாரத்தையும் அவர் களிடம் ஒப்படைத்தேன். பொருள், வியாபாரம் என்று அனைத்தையும் விட்டபிறகும் தெய்வதரிசனம் கிடைக்கவில்லையே ஏன்?'' என்று ஏக்கத்துடன் தெரிவித்தார்.

ராமகிருஷ்ணர் வியாபாரியைப் பார்த்து,"" நீர் ஒரு வியாபாரி. நேற்றுவரை வியாபாரத்தில் அக்கறை காட்டினீர்! உமக்குத் தெரியாத தொழில்நுட்பமா நான் சொல்லித் தரப்போகிறேன். நேற்று வரை கடையில் இருந்த எண்ணெய் குடத்தை எடுத்துக் கொள்வோம். அதில் இருந்த எண்ணெயை இன்று காலி செய்ததாக வைத்துக் கொள்ளுங்கள். அதில் இருந்த எண்ணெய் தான் போகுமே ஒழிய எண்ணெய் வாசனை அவ்வளவு எளிதில் போய் விடுமா?'' என்று அவர் பாணியிலேயே பதில் கேள்வி கேட்டார்.

வியாபாரி, ""குருவே! மன்னித்துவிடுங்கள்! நான் தான் அவசரப்பட்டு விட்டேன். எண்ணெய்க்குடம் போலத் தான் நானும் என்பதை மறந்துவிட் டேன்! சொத்துக்களை வேண்டுமானால் பிள்ளைகளுக்கு எழுதி வைக்கலாம். ஆனால், அதிலிருந்து பற்றை அவ்வளவு எளிதில் போக்கமுடியவில்லை. பிறவிக்குணம் ஒரே நாளில் மாறி ஞானம் வருவதில்லை என்ற உண்மையை உணர்ந்துவிட்டேன்,'' என்று சொல்லி குருதேவரை வணங்கினார்.