Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
காலக்கண்ணாடி
»
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Read 2131 times)
Darth Vader
Jr. Member
Posts: 50
Total likes: 73
Karma: +0/-0
Gender:
''Do or Do Not There is No Try''
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
«
on:
October 15, 2020, 12:27:10 AM »
பாட்டுடைக் கவிஞன் பாரதிக்குப் பிறகு, தமிழ்க்கவிதையில் எளிமையும், இனிமையும், புதுமையும் புகுந்து நவீன கவிதை பிறந்தது. தமிழ்க் கவிதை மரபில் உடைப்பு ஏற்பட்டது. கவிதை புதிய பரிமாணத்தில், புதிய களங்களில், தளங்களில் பயணித்தது. இவர்களை தமிழ் உலகம் பாரதி பரம்பரையினர் என்று பெருமைப்படுத்துகிறது. இந்தப் பரம்பரையில் வந்த பாரதிதாசனும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் பாராட்டப்பட வேண்டியவர்கள். பாவேந்தர் பாரதிதாசனை நேரிலே பார்க்காமலே அவரை தனது மானசீக குருவாக ஏற்று, பாரதிதாசனே வியந்து பாராட்டும் கவிஞராகத் திகழ்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 -அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடுவது அவருடைய சிறப்பு . இப்போது அவரது பாடல்கள்
நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. 29 ஆண்டுகளே வாழ்ந்தாலும் தான் எழுதிய பாடல்களால் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் 'பாட்டுக்கோட்டை'யாகவே அறியப்பட்டவர் பட்டுக்கோட்டையார். திரையுலகப் பாடல்களில் பட்டிருந்த கறையை நீக்கி, மக்கள் நெஞ்சம் நிறைவுறவும்,
வியத்தகு செந்தமிழில் எளிமையாக அருமையான கருத்துக்களும், முற்போக்குக் கருத்துக்களும் கொண்ட பாடல்கள் எழுதி குறுகிய காலத்தில் புகழ் அடைந்தவர் பட்டுக்கோட்டையார். கிட்டத்தட்ட 189 படங்களில் பாட்டு எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
கவி பாடும் விவசாய குடும்பம்..!
தமிழ்நாட்டின் தஞ்சை மண்ணில், பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் குக்கிராமத்தில், அருணாச்சலனார் – விசாலாட்சியின் இளைய மகனாக 13.04.1930-ல் பிறந்தார். அது ஓர் எளிய விவசாய குடும்பம். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். 'முசுகுந்த நாட்டு வழி நடைக்கும்பி' எனும் நூலையும் அவர் தந்தை இயற்றியிருக்கிறார். தந்தை கவிஞராக இருந்ததால், மகன்களான கணபதி சுந்தரமும், கல்யாண சுந்தரமும் கவிபாடும் திறத்தை வளர்த்துக் கொண்டனர்.
அண்ணன் தந்த கல்வி..!
பட்டுக்கோட்டையார் துவக்கக்கல்வியை அண்ணன் கணபதிசுந்தரத்தோடு உள்ளூர் சுந்தரம்பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார். அத்துடன் அவரது பள்ளிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது. அவருக்குத் திண்ணைப் பள்ளிக்கூடம் செல்ல பிடிக்கவில்லை. 2-ம் வகுப்புக்குப் பிறகு பள்ளிக்கு போகவில்லை. தன் அண்ணனிடம் அடிப்படைக் கல்வியைக் கற்றுக் கொண்டார். அவருக்கு வேதாம்பாள் என்ற சகோதரி இருந்தார்.
பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள்.
மக்கள் கவிஞனின் மகத்துவம்..!
தனது 19 வது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர் பட்டுக்கோட்டையார். இவருடைய பாடல்கள் கிராமிய மணம் கம்ழுபவை. பாடல்களில் உணர்ச்சிகளைக் கொட்டிக் கவிதை புனைந்தவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைக் கனவுகளையும், ஆவேசத்தையும், அற்புதப் பாடல்களாக வடித்தார். இவர் இயற்றிய கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டது.
1955ஆம் ஆண்டு 'படித்த பெண்’ திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார். உழைப்பாளி மக்களும், அறிவால் உழைக்கும் மக்களும் கூட தங்களுக்காக திரையுலகிலே குரல் கொடுத்து வாழ்வை மேம்படுத்த முன்னின்ற பாடலாசிரியராக இவரைக் கண்டனர்.
பட்டுக்கோட்டை பாடுவதிலும் வல்லவர். நாடகம், திரைப்படம் பார்ப்பதிலும் ஆர்வம் மிகுந்தவர். கற்பனை வளமும் இயற்கை ரசனையும் நிறைந்தவர். இதுவே இவரை இயல்பாகவே கவிதை புனைய வைத்தது. 1946இல் தனது 15வயதில் ஏற்பட்ட அனுபவத்தை அவரே கூறுகிறார்.
'சங்கம் படைத்தான் காடு என்ற எங்கள் நிலவளம் நிறைந்த சிற்றூரைச் சேர்ந்த துறையான்குளம் என்ற ஏரிக்கரையில் நான் ஒரு நாள் வயல் பார்க்கச் சென்று திரும்பும் போது வேப்பமரநிழலில் அமர்ந்தேன். நல்ல நிழலோடு குளிர்ந்த தென்றலும் என்னை வந்து தழுவவே எதிரிலிருக்கும் ஏரியையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தேன். தண்ணீரலைகள் நெளிந்து நெளிந்து ஆடிவரத் தாமரை மலர்கள் "எம்மைப் பார், எம் அழகைப் பார்" என்று குலுங்க, ஓர் இளங்கெண்டை பளிச்சென்று துள்ளிக் கரையோரத்தில் கிடந்த தாமரை இலையில் நீர் முத்துக்களைச் சிந்தவிட்டுத் தலைகீழாய்க் குதித்தது. அதுவரை மெளனமாக இருந்த நான் என்னையும் மறந்தவனாய்ப் பாடினேன்” என்றார். அதுதான் இது.
ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சே - கரை ஓரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே - கரை தூண்டிக்காரன் வரும் நேரமாச்சு - ரொம்பத் துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே
இவ்வாறு ஆரம்பித்த நான் வீடு வரும்வரை பாடிக்கொண்டு வந்தேன். அப்பாடலை பலரும் பலமுறை பாடச் சொல்லி மிகவும் இரசித்தார்கள் என்றார்.
இடதுசாரி இயக்கத்தின் இடையறா ஈர்ப்பாளி..!
இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார். நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர் என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.
பட்டுக்கோட்டையின் பன்மமுக பரிமாணங்கள்..!
விவசாயி
மாடுமேய்ப்பவர்
மாட்டு வியாபாரி
மாம்பழ வியாபாரி
இட்லி வியாபாரி
முறுக்கு வியாபாரி
தேங்காய் வியாபாரி
கீற்று வியாபாரி
மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி
உப்பளத் தொழிலாளி
மிஷின் டிரைவர்
தண்ணீர் வண்டிக்காரர்
அரசியல்வாதி
பாடகர்
நடிகர்
நடனக்காரர்
கவிஞர்
தன்மானம் மிக்க பட்டுக்கோட்டையார்..!
திரை உலகில் நுழைய பட்டுக்கோட்டையார் சென்னைக்கு வந்து ராயப்பேட்டை பொன்னுசாமி நாயக்கர் தெருவில் 10-ம் நெம்பர் வீட்டில் ஒரு அறையை 10 ரூபாய்க்கு வாடகைக்குப் பிடித்தார். சிறிய அறை. அதில் அவரது நண்பர்களான ஓவியர் கே.என். ராமச்சந்திரனும், நடிகர் ஓ.ஏ.கே.தேவரும் தங்கி இருந்தனர். பட்டுக்கோட்டை துவக்க காலத்தில் பணத்துக்கு கஷ்டப்பட்டாலும் துணிச்சல்காரராகவும் தைரியசாலியாகவும் இருந்தார். சினிமா கம்பெனி ஒன்றுக்கு அவர் பாட்டெழுதிக் கொடுத்தார். பணம் வந்து சேரவில்லை. பணத்தைக் கேட்க பட அதிபரிடம் சென்றால், 'பணம் இன்னிக்கு இல்லே! நாளைக்கு வந்து பாருங்கோ' என்று பதில். ஆனால் கல்யாணசுந்தரமோ பணம் இல்லாமல் நகருவதில்லை என்ற உறுதியுடன் நின்றார். 'நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும்' என்ற பட அதிபர் வீட்டிற்குள் போய்விட்டார்.
உடனே கல்யாணசுந்தரம் சட்டைப்பையில் இருந்த ஒரு தாளையும், பேனாவையும் எடுத்து சில வரிகள் எழுதி, மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். கொஞ்ச நேரத்தில் படக்கம்பெனியைச் சேர்ந்த ஆள் பணத்துடன் அலறியடித்துக் கொண்டு கல்யாணசுந்தரத்திடம் வந்து பணத்தைக் கொடுத்தார். அப்படி என்னதான் அந்த சீட்டில் எழுதினார் பட்டுக்கோட்டை? இதோ 'தாயால் வளர்ந்தேன்; தமிழால் அறிவு பெற்றேன்; நாயே! நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன்; நீ யார் என்னை நில் என்று சொல்ல?' இதைப் படித்துப் பார்த்த பட அதிபர் அசந்து போனார். பணம் வீடு தேடி பறந்து வந்தது.
மனித நேயம் மிக்க பட்டுக்கோட்டையார்..!
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அற்புதமான கவியாற்றலில் மனதைப் பறிகொடுத்தவர் கவியரசு கண்ணதாசன். அதுபோலவே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் கண்ணதாசனிடம் மிகுந்த அன்பு கொண்டவர். புகழின் உச்சியில் இருந்து, ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் படங்களுக்கு பாடல் எழுதி வந்த பட்டுக்கோட்டையை, கண்ணதாசன் நேரில் சந்தித்து, ஒரு பாடல் எழுதித் தருமாறு கேட்டதிற்கு , அவர் மிகுந்த பற்றுதலோடு பாடல் எழுதித்தர இசைந்ததை கண்ணதாசன் ஒரு சமயம் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார். மனித நேயமும், துணிச்சலும், தன்னம்பிக்கையும் உள்ள மாமனிதர் பட்டுக்கோட்டையார். அந்த காலத்தில் சினிமா பத்திரிகை ஆசிரியர் ஒருவர் திரைப்பட கவிஞர்களை ஏளனமாகவும், கேலியாகவும் விமர்சித்தார். கவிஞர் கண்ணதாசனும் அதற்குப் பலியானார். ஒரு விழாவில் பத்திரிகை ஆசிரியரை பட்டுக்கோட்டையார் சந்தித்தபோது, க்ண்ணதாசனைக் குறிப்பிட்டு, "என்னடா கவிஞர்கள் என்றால் உனக்கு ஏளனமா? கருவாட்டு வியாபாரம் செய்கிற உனக்கு கவிதையைப் பற்றி என்னடா தெரியும்?" என்று கேட்டு உதைக்கப் போனார்.
எளிமையான பட்டுக்கோட்டை..!
"உங்க வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையில எழுதணும்" - பாட்டாளிக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணந்தரத்திடம் ஒரு நிருபர் கேட்டாராம். பட்டுக்கோட்டையார் அந்த நிருபரை ராயப்பேட்டையிலிருந்த தம் வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு தெருவில் சிறிது தூரம் நடந்திருக்கிறார். பிறகு இருவரும் ரிக்ஷாவில் ஏறி மௌண்ட் ரோட்டுக்கு வந்திருக்கிறார்கள். அப்புறம் பஸ்ஸைப் பிடித்து கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் இறங்கி இருக்கின்றனர். கேட்டைக் கடந்து ஒரு டாக்ஸி பிடித்து வடபழநியில் தம் பாடல் பதிவான ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் போய் இறங்கினார்கள். கூடவே வந்த நிருபர், "கவிஞரே, வாழ்க்கை வரலாறு" என்று நினைவூட்டி இருக்கிறார். உடனே பட்டுக்கோட்டையார், "முதலில் நடையாய் நடந்தேன், ரிக்ஷாவில் போனேன், பிறகு பஸ்ஸில் போக நேர்ந்தது. இப்போது டாக்ஸியில் போகிறேன். இதுதான் என் வாழ்க்கை. இதுல எங்கே இருக்குது வரலாறு?" என்று சிரித்துக்கொண்டே போய்விட்டாராம். இந்த எளிமைதான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
வேடிக்கையும், விவேகமும் மிக்க கவிஞர்..!
ஒரு சமயம் சென்னையில் நகரப் பேருந்தில் தான் பயணம் செய்து கொண்டிருந்தபோது, வழியில் ஒரு இடத்தில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு அங்கே பழுது பார்க்கும் வேலை நடப்பதை அறிவிக்க வாகனங்களுக்கு எச்சரிக்கையாக சிவப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே வந்த பட்டுக்கோட்டையார் தன் அருகிலே இருந்த நண்பரிடம், 'எங்கே எல்லாம் பள்ளம் விழுந்து அது மேடாக நிரப்பப்பட வேண்டுமோ, அங்கே எல்லாம் சிவப்பு கொடி பறந்துதான் அந்த பணிகள் நடக்க வேண்டும் போலும்' என்றார்.
ஒரு சமயம் பொதுவுடமை இயக்கத்திற்காக நாடகம் நடத்த சென்றிருந்த பட்டுக்கோட்டையார் நாடகத்திற்கு சரியான வசூல் இல்லாமல் தங்கள் குழுவினருடன் பசி, பட்டினியுமாக சென்னை திரும்ப பேருந்தில் ஏறினார். பேருந்தில் அமர்ந்திருந்த தங்கள் குழுவினர் அனைவரும் சோர்ந்த முகத்துடன் காணப்பட்டார்கள். அவர்கள் சோகத்தை மாற்றி அவர்களுக்கு குதூகலத்தைத் தர பட்டுக்கோட்டையார் அங்கேயே ஒரு பாடல் எழுதி, அதனை சத்தமாக பாட ஆரம்பித்தார். அந்தப் பாடலை கேட்டதும் நாடக குழுவினருக்கு பசி பறந்துவிட்டது. அனைவரும் குதூகலமாக கைகளைத் தட்டி பாட ஆரம்பித்தார்கள்.
'சின்னக்குட்டி நாத்தனா
சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போற வண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா!'
இந்த பாட்டு ஆரவல்லி படத்தில் வருகிறது..!
பட்டுக்கோட்டையார் சிறந்த தத்துவப் பாடல்கள் மட்டுமின்றி, நகைச்சுவை பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர்.
'ஆறறிவில் ஓரறிவு அவுட்டு- சிலருக்கு
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு - இருக்கும்
ஐந்தறிவும் நிலைக்குமுன்னா
அதுவுங்கூட டவுட்டு!'
'நான் வளர்த்த தங்கை' என்ற படத்திலே போலி பக்தர்களை இப்படி நையாண்டி செய்கிறார்
'பக்த ஜனங்கள் கவனமெல்லாம்
தினமும் கிடைக்கும் சுண்டலிலே... ஹா... ஹா...
பசியும், சுண்டல் ருசியும் போனால்
பக்தியில்லை பஜனையில்லை'
சமுதாயப் பாடல்களை ஏராளமாக எழுதி இருக்கிறார்.
'வசதி இருக்கிறவன் தரமாட்டான், அவனை
வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்
வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்ய மாட்டான்...
எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது ஒளச்சு சோறு போடுறான்.
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்ல நாட்டைக் கூறு போடுகிறான் இவன்
சோறு போடுறான் அவன்
கூறு போடுறான்...'
'சங்கிலித் தேவன்' என்ற திரைப்படத்தில்
'வீரத்தலைவன் நெப்போலியனும்
வீடு கட்டும் தொழிலாளி!
ரஷ்யா தேசத்தலைவன் மார்சல் ஸ்டாலின்
செருப்புத் தைக்கும் தொழிலாளி!
விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு
காரு ஓட்டும் தொழிலாளி!
விண்ணொளிக் கதிரி விவரம் கண்ட
சர்.சி.வி.ராமனும் தொழிலாளி
”பொறக்கும் போது - மனிதன்
பொறக்கும் போது பொறந்த குணம்
போகப் போக மாறுது - எல்லாம்
இருக்கும் போது பிரிந்த குணம்
இறக்கும் போது சேருது”
படம்: சக்கரவர்த்தி திருமகள் 1957
'திருடாதே' திரைப்படத்தில் குழந்தைகளுக்கு சொல்வது போல பெரியவர்களுக்கு பொதுவுடமை போதித்தல்.
'கொடுக்கிற காலம் நெருங்குவதால் - இனி
எடுக்கிற அவசியம் இருக்காது.
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது.
ஒதுக்கிற வேலையும் இருக்காது.
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம்
வளராது
கருத்தாழமும் அறிவுக்கூர்மையும் சமூகசமத்துவம் பற்றிய வேட்கையும் விடுதலை உணர்வும் ஆத்மநேயத் துடிப்பும், இயற்கை மனிதர்கள் மீதான நேசிப்பும் என விரிவு கொண்டதாகவே பட்டுக்கோட்டையாரினது கவிதை வெளி இருந்தது. அவரது திறமைக்கும் ஆற்றலுக்கும் அவரின் ஆயுள் மிகக் குறுகியது. 29 ஆண்டுகள் மட்டுமே..!ஆனால் அவர் விட்டுச் சென்றுள்ள தடம் ஆழமானது. 1959-ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கும், கௌரவாம்பாளுக்கும், குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) பட்டுக்கோட்டை அகால மரணம் அடைந்தார்.
பட்டுக்கோட்டை பற்றிய ஆவணப்படம்...!
பட்டுக்கோட்டையாரைப் பற்றி ஆவணப்படம் எடுத்திருக்கிறார், அம்பத்தூரைச் சேர்ந்த கார்த்திகேயன். இதில் பட்டுக்கோட்டையாரின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரது கவிதை உலகம், இடதுசாரி ஈடுபாடு, வறுமை, திரை அனுபவங்கள் அனைத்தும் அவருடன் நெருக்கமானவர்ளுடனான பேட்டிகளின் வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டையாரின் மனைவி கௌரவாம்பாள், அவரது பால்ய நண்பர் சுப்ரமணியம், தியாகி மாயாண்டி பாரதி, எம்.எஸ்.விஸ்வநாதன் உள்பட கவிஞருக்கு நெருக்கமானவர்கள் அனைவரின் பேட்டிகளும் இந்த ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், கவிஞரின் முக்கியமான 12 திரைப்பாடல்களின் காட்சியும், அவரது அரிய புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது ஆவணப் படத்தின் தரத்தை உயர்த்துகிறது.
பட்டுக்கோட்டையாரின் துணைவியின் பதிவு..!
“எனக்கு பட்டுக்கோட்டை பக்கத்துல ஆத்திக்கோட்டைதான் சொந்த ஊர். எங்க அண்ணன் சின்னையனும்‘அவுக’ளோட அண்ணனும் சிங்கப்பூர்ல வேலை பார்க்கும்போது சிநேகிதமானவங்க. ‘எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. அவளுக்கு கல்யாணம் பண்ணணும்னு எங்க அண்ணன்தான் சொல்லிருக்காக. அப்ப அவுக அண்ணன் ஒண்ணும் சொல்லலையாம். சிங்கப்பூர்லேர்ந்து லீவுல ஊருக்கு வரும்போது, தம்பியைக் கூட்டிட்டு என்னைப் பொண்ணு பார்க்க வந்துட்டார். அப்ப அவுக, ’அண்ணனுக்குதான் பொண்ணு பார்க்கப் போறோம்’னு நினைச்சுக்கிட்டு வந்தாகளாம். பொண்ணு பார்த்துட்டு ஊருக்குத் திரும்பும்போது, ‘பொண்ணு எப்படிடா இருக்கு’ன்னு அண்ணன் கேட்க, ’அழகாதான் இருக்கு’ன்னு இவுக சொல்லிருக்காக. ‘உனக்குத்தான்டா இந்தப் பொண்ணு’னு அண்ணன் சொன்னதும், இவுகளுக்கு ரொம்ப சந்தோஷமாப் போச்சாம். அப்போ வீட்டுல வந்து எழுதுனதுதான், ஆடை கட்டி வந்த நிலவோ, கண்ணில் மேடைகட்டி ஆடும் எழிலோ பாட்டு. இப்போ தெரிஞ்சுக்கோங்க நாந்தான் ஆடைகட்டி வந்த நிலவு” என்று மலர்ந்து சிரிக்கிறார் கௌரவம்மாள்.
“அன்னைக்கு அவுக அண்ணன் பொஞ்சாதிக்கு வளைகாப்பு. அப்போ நான் கிண்டலா, ‘அக்காளுக்கு வளைகாப்பு. அத்தான் மொகத்துல பொன் சிரிப்பு’ன்னு சொன்னேன். இதை, ‘கல்யாணப் பரிசு’ படத்துல, அவுக பல்லவியா போட்டு பாட்டா எழுதிட்டாக. ‘இது நீ எழுதுன பாட்டு. இந்தா பிடி சன்மானம்’னு அந்தப் பாட்டு எழுதுனதுக்குக் கிடைச்ச பணத்தை என் கையில கொடுத்தாக.
***
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா நான் சொல்லப் போர வார்த்தையை நல்லா
எண்ணிப்பாரடா. (படம்: அரசிளங்குமரி - 1957)
குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்கு சொந்தம். குள்ள நரி மாட்டிக்கிட்டா கொறவனுக்கு சொந்தம்.
“குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ,
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா ,
எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா ,
விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா ,
சிலர்குணமும் இதுபோல் குறுகிப்போகும் கிறுக்கு உலகமடா “.
இன்று பட்டுக்கோட்டை போல மக்களுக்கான கருத்துக்களை விதைக்கும் பாடலாசிரியரைத் தேடவேண்டியுள்ளது.
Taken From Keetru.
«
Last Edit: October 15, 2020, 12:49:17 AM by Darth Vader
»
Logged
(5 people liked this)
Jack Sparrow
Jr. Member
Posts: 66
Total likes: 157
Karma: +0/-0
hi i am Just New to this forum
Re: மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
«
Reply #1 on:
October 22, 2020, 08:13:14 PM »
Nice One Machi Ivarapathi naa schooldays la padichathu..,Thanks machi ivarapathi konjam terinjikitten
Logged
(3 people liked this)
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
காலக்கண்ணாடி
»
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்