தமிழ்ப் பூங்கா > காலக்கண்ணாடி

கிட்டூர் ராணி சென்னம்மா

(1/1)

TiNu:





முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்த கிட்டூர் ராணி சென்னம்மா (Kittur Rani Chennamma) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கர்நாடகத்தில் பெல்காம் ராஜ்ஜியத்தின் அருகே உள்ள ககதி கிராமத்தில் (1778) பிறந்தார். ‘சென்னம்மா’ என்றால் அழகிய பெண் என்று அர்த்தம். ராஜ குடும்பத் தினர்போல சகல வசதிகளுடன் வளர்ந்தார். சமஸ்கிருதம், கன்னடம், மராட்டி, உருது மொழிகளைக் கற்றார்.

* சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில்வித்தையில் தேர்ச்சி பெற்றார். துணிச்சல்காரப் பெண் என்று பெயர் பெற்றார். 15 வயதில் கிட்டூர் அரசருடன் திருமணம் நடைபெற்றது. ஒரு மகன் பிறந்தான்.

* சென்னம்மாவின் திருமண வாழ்க்கை வெகுகாலம் நீடிக்கவில்லை. 1816-ல் கணவரும் 1824-ல் ஒரே மகனும் இறந்தனர். குழந்தை இறந்தவுடன், சிவலிங்கப்பா என்ற உறவுக்கார குழந்தையைத் தத்தெடுத்து அவனுக்கு முடிசூட்டினார்.

* மிகவும் செழிப்பாக இருந்த கிட்டூர் ராஜ்ஜியத்தைக் கைப்பற்றும் எண்ணத்தில் ஏற்கெனவே இருந்தது ஆங்கில அரசு. வாரிசு இல்லாத ராஜ்ஜியம் என்று கூறி கிட்டூரை அபகரிக்கும் எண்ணத்திலும் இருந்தது. எனவே, சென்னம்மாவின் தத்துப்பிள்ளை சிவலிங்கப்பாவை நாடு கடத்த உத்தரவிட்டது. ஆங்கிலேயர்களின் வரி வசூல் விஷயத்தில் அதிருப்தியாக இருந்த ராணி சென்னம்மா இந்த உத்தரவை மதிக்கவில்லை.

* ஆங்கிலேயர்கள் பெரும் படையுடன் வந்து கிட்டூர் ராஜ்ஜியத்தை முற்றுகையிட்டனர். பெரிய போர் மூண்டது. மிகவும் துணிச்சலுடனும் தீரத்துடனும் ராணி சென்னம்மா போரிட்டார். ஆங்கிலேயப் படையில் உயிர்ச்சேதம் அதிக அளவில் ஏற்பட்டது. 2 முக்கிய அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டனர்.

* ஆங்கிலேயப் படைத் தளபதி சாப்ளின், ராணியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டு தன் அதிகாரிகளை மீட்டுச் சென்றான். ஆனால், நயவஞ்சகத்துடன் மேலும் அதிகமான படையுடன் வந்து கிட்டூரை மீண்டும் தாக்கினான். இந்த போர் 12 நாட்கள் நீடித்தது.

* நவீன போர்க் கருவிகள், அதிக வீரர்கள் என்று அதிக வலிமையுடன் இருந்த ஆங்கிலேயப் படையை எதிர்த்து ராணியின் வீரர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆனாலும், முயற்சியை விடாமல் தொடர்ந்து போராடிய சென்னம்மா சிறைபிடிக்கப்பட்டார். பைல்ஹோங்கல் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார்.

* ராணியிடம் மிகுந்த விசுவாசம் கொண்ட தளபதி சங்கொலி ராயண்ணா, அவரை விடுவிக்க தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆங்கிலேயருக்கு எதிராக கொரில்லா முறையில் தொடர் தாக்குதல்கள் நடத்தினார். ஆனால், அவரால் வெற்றிபெற முடியவில்லை. அவர் கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.

* புனித நூல்களைப் படித்தும், பூஜைகளில் ஈடுபட்டும் ராணி தனது சிறை வாழ்வைக் கழித்தார். 51-வது வயதில் சிறையிலேயே (1829) காலமானார். விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட முன்னணி வீராங்கனையாகவும், இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் வீரச் சின்னமாகவும் இன்றளவும் சென்னம்மா கொண்டாடப்படுகிறார்.

* கர்நாடகத்தில் இன்றும் மாபெரும் வீராங்கனையாக சென்னம்மா போற்றப்படுகிறார். அவரது சிலைகள் கர்நாடகாவில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற வளாகத்திலும் இவரது சிலை வைக்கப்பட்டுள்ளது.

Thanks The Hindu.

Navigation

[0] Message Index

Go to full version