தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 332

(1/2) > >>

Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....

**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.

நிழல் படம் எண் : 332

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

TiNu:
மடந்தையே!
தன்னை அழகாக..  சீவி சிங்காரித்து..
தன்.. கள்ளமில்லா வெள்ளை சிரிப்பில்..
தரணியில் அழகாக உலாவரும்.. அகவையில்... 
ஏன்! இந்த இறுகிய முகம் உனக்கு.. 
ஏன்! இந்த வெறித்த பார்வை உனக்கு..
ஏன்! இந்த உயிர் குடிக்கும் வாள் உனக்கு..
ஏன்! இந்த இரும்பு உடை உனக்கு..  மங்கையே..

மடந்தையே! பெதும்பை பருவத்தில்..
உன்னுடன் பழகிய உலகுக்கும்.. இன்று
உனை நெருங்கி வரும் சுற்றத்துக்கும்..
உன் உள்ளுணரவு ஏதேனும் சொல்கிறதோ..?
உன் கைவாளின் கூர்மையை விட  .
உன் விழிகளின் கூரிய பார்வை..
உயிர்களை காவு வாங்கிடுமோ? என (அச்சத்தில்)
உறைய வைக்கிறது.. உன் அசைவுகள்..
 
இரும்பு தேவதையே! ஒரு கணம்..
இவள் உரைப்பதை.. நின்று நிதானமாக கேட்பாயா?
மடந்தையே! இந்த பருவத்தில் இந்த உலகமே..நமக்கு
சற்று புதிதாய்.. அதிசயமாக அச்சமாக தோன்றும்..
அது! மனிதர்களின் பார்வை மாற்றத்தில் அல்ல...
அவை! மனிதர்களில் பருவ மாற்றத்தில் தான்...

கல்விசாலையில் ஆண்டுகள் கடக்க 
பல பல பருவங்கள் மாறுவது போல..
உயிர் தோற்றத்திலும், வருடங்கள் உருண்டோட.
பல பல பருவ மாற்றங்கள் வந்து மறையும்..
அந்த மாற்றங்களை.. உன் மனதில்.. உள்வாங்கி..
மங்கையே!  உன் கூரிய மதி துணை கொண்டு....
தூய நல்வழி வகுத்து.. அதை கடந்து செல்.

பயம், சந்தேகம் அற்று..  அழகு பார்வை வீசு.. 
அழகான உலகம்.. உனக்காக காத்திருக்கிறது...
அவநம்பிக்கை விட்டு.. அழகு நடை போடு..
அன்பான உள்ளங்கள் உனக்காக காத்திருக்கிறது..

மாற்றங்களை ஏற்றுக்கொள்.. மதியோட கடந்து செல்.
என் செல்ல அழகு.. சுந்தர....  இரும்பு தேவதையே...

Mr.BeaN:
பொறுமைக்கு  இங்கே உவமையாய்
குலம் காக்கும் பண்பை கடமையாய்
எந்நாளும் ஏற்கும் பதுமையும்
சில நேரம் செய்வாள் புதுமையே

எத்தனை சுமை என்றாலும்
சத்தியம் காத்து உயிர் தாங்கும்
புவி போல நமை தாங்கி
காக்கும் சுமை தாங்கி

பூ உலகில் தோன்றும் பூகம்பம் போல
இடர் என்றால் பொறுமைதனை இழந்து
தீங்கிலைப்போர் தீண்டிட
பிரளமாய் உரு மாறும் மா சக்தி

உயிரை தன்னுள் சுமந்து
உலகை அதற்கும் கொடுத்து
உயிர் காக்க உயிர் வலி தாங்கும்
அன்பின் அடையாளமும் அவள்தான்

கெடுதல் செய்வோர் கண்டால்
விடுதல் இன்றி அவரை
கடிந்தே குற்றம் தடுக்கும்
மங்கை ஒரு சிங்கம்

கைதனில் வாளோடு நின்று
கண்ணிரண்டை கூர் வாளாய் தீட்டி
பார்வையாலே பகைவர் உயிரெடுக்க
பத்தினிதான் இங்கு வந்தாலோ

எண்ணும் எழுத்தும் கண் என சொல்லும்
என் தமிழ் பெண்ணை இப்படி சொல்லும்
பொன்னும் அவளே பொருளும் அவளே
சீண்டி பார்த்தல் சீரும் புயலே

SweeTie:
பெண்மையே  உலகம் உன்னிடம்  மயங்கி நின்று
உன்னை போற்றி துதித்த காலம்   
காலங்கள்  மாறினாலும் காதலியே 
உன்னை மறவேன்   நீயே என் உயிரும் உடலும்
என நப்பாசை  காட்டியது  போதும்
அத்தனையும் மாயை என அறிந்துவிட்டாய்

வாள்போன்ற புருவம்  கொண்டவள்
கையில்  வாளேந்தும்   காலத்தில் வாழ்கிறாள் 
வீணர்கள் மத்தியில்    வீசி எறியும்   எச்சில் இலைகள்போல்
வாழ வரவில்லை  வீரக்குலத்துதித்த  பெண்ணினம் 
வேங்கையென பாய்ந்து வீணர்களை  அழிக்க
வாளேந்தி  நிற்கிறார்   இன்று   

சிவகங்கை சீமையிலே பிறந்து    ஆங்கிலேயரை
வாள்கொண்டு  வீழ்த்திய   வீரமங்கை வேலுநாச்சியார் 
வெள்ளையனின்  மார் துளைக்க  வாளேந்திய ஜான்சிராணி
நாட்டை நயவஞ்சகரிடமிருந்து  காக்க வாளேந்திய ராணி துர்காவதி
இந்திய நாட்டின் வீர மங்கையர்  வழிவந்த    பெண்ணினம்
வாளேந்துவதில் புதுமையே இல்லை   

காலத்தால் அழியாத  வீர பரம்பரை   வழித்தோன்றல்கள்
இன்னும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்
முப்படையில்  ஆண்கள் போலவே கோலோச்சுகிறார்கள்
ஆண்களோடு  பெண்களும்  சரிநிகர் சமானமாக
வாழ்வோம் இந்த நாட்டிலே   என்றான்  முண்டாசுக்கவிஞன்
அவன் வாக்கு ஒருநாள்  பலிப்பது  திண்ணம்.

அன்பின் சிகரம்  பெண்மை  என்கிறார்  ... அது உண்மை
சிகரமும்  எரிமலையாய் கொந்தளிக்கும்   என்பதும் உண்மை
வன்மம் தலை தூக்கும்போது   
உணர்வுகள்  அழிக்கப்படும்போது 
பெண்மை  ஏமாற்றப்படும்போது
ஆளுமை கொண்ட அன்பு  ஆத்திரம் கொள்கிறது

சித்திர பதுமைகளாய்  சித்தரிக்கிறது
ஆணாதிக்கத்தில்  ஊறிய  ஆணினம்
பத்தாம் பசலியாய்  பாதி வாழ்க்கையை 
வாழ்ந்தோம்  கழித்தோம்   என்றிராமல் 
வாளேந்தி   வலம்வரும்   புதுமைப்பெண்களே
என்றும் நீங்கள் நாட்டின் ராணிகளே  !

 

Vethanisha:
மாதராய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும்
என்றார் கவிமணி
பெண்க ளறிவை வளர்த்தால் வையம் பேதமை யற்றிடும் காணீர்
 என்றார் மகாகவி
நன்றிகள் பல

அன்று
பெண்களின் பெருமையை எடுத்துரைக்ககூட
தேவைப்பட்டது ஆண்களின் துணை எமக்கு 

இன்று

கேட்கட்டும் எமது உரிமை கூறல்
புவியெங்கும்  எமக்காய் 

இன்றும் உண்டு

பதவியில் பாகுபாடு
படிப்பில் பாகுபாடு
உரிமையில்  பாகுபாடு
உணர்விலும்  பாகுபாடு

தேவை அல்ல இந்த 'பெண்தானே'
என்ற வேறுபாடு
வேண்டும் எமக்கு ஆண்பெண் சமம் என்ற
மனிதத்துவ பண்பாடு

விருப்பம் அல்ல 'மகளிர் நாள்' என்ற
ஒரு நாள் ஆராதிப்பு அலங்காரம்
வேண்டும் எமக்கு வாழ்நாள் முழுப்
பாதுகாப்பு அங்கீகாரம்
 

இதோ

தீட்டி வைத்தேன்யெம் பார்வையை
கையில் ஏந்தினேன் கூறிய வாளை
உடலில் ஏந்தினேன் இரும்பு திரையை

ஏன்

மதிகெட்டு கிடைக்கும் சமுதாயத்திடம் இருந்து - இனி 
எம்மை யாமே பாதுகாக்க

மாதர் அறிவை கெடுக்கும்  மூடரை  யாமே
பதம் பாப்போம் என்று - என் 
பாரதியிடம் பறைசாற்ற

எம் கற்பு உடையில் அல்ல
எம் கருணை  நகையாட அல்ல
எம் கண்ணீர் பலவீனத்தின் அடையாளம் அல்ல
எம் குலம் யாருக்கும் அடிமையும் அல்ல
என்று உலகுக்குக் உரக்கக்  கூற

உலகமே நினைவு கொள்

அன்பென்றால் அதன் உச்சமும் யாம் தான்
அழிவென்றால் அதன் முற்றமும் யாம் தான்



VethaNisha.M


Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version