Author Topic: ஆத்திசூடி  (Read 3731 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஆத்திசூடி
« on: September 13, 2011, 02:25:24 AM »
                                   ஆத்திசூடி மூலமும் உரையும்
 
முகவுரை
 
ஆத்திசூடி என்பது நல்லிசைப் புலமை வாய்ந்த 'ஒளவையார்' என்னும் மெல்லியலார் அருளிய நூல்களுள் ஒன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும், பல தனிப்பாக்களும், ஒளவையார் இயற்றின வென்ப. கம்பர் முதலிய புலவர்கள் விளங்கிய காலத்தில் இருந்தவர் இவர். இவரைக் குறித்து எத்தனையோ பல கதைகள் வழங்குவதுண்டு. கடைச்சங்க நாளிலே புலமையிற் சிறந்து விளங்கிய மகளிரில் ஒளவையார் என்னும் பெயரினரும் ஒருவர். அவர் பாடிய பாட்டுகள் புறநானூறு முதலிய சங்க நூல்களில் சேர்க்கப்பட்டுள்ளன. அவர் அதியமான் என்னும் வள்ளல் அளித்த அமுதமயமான நெல்லிக்கனியை உண்டு நெடுங்காலம் உயிர் வாழ்ந்தனரெனச் சங்க நூல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சங்ககாலத்து ஒளவையாரும் வேறு; கம்பர் காலத்து ஒளவையாரும் வேறு என்பது இற்றைநாள் ஆராய்ச்சியாளர் கொள்கையாகும்.

தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர்களிலும், பெண்டிர்களிலும் கற்றவர்களும், கல்லாதவர்களும் ஆகிய யாவரும் ஒளவையென்னும் பெயரை அறிந்திருப்பர். அப்பெயரை அறியாதார் மிகவும் அரியர். அதற்குக் காரணம் அவரியற்றிய ஆத்திசூடி முதலிய நீதி நூல்களேயாகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பெற்ற பெருமை வாய்ந்தவை அவை. தமிழிற் சிறிது பயிற்சி யுடையாரெவரும் ஒளவையாரின் நீதிநூல்களுள் ஒன்றையாவது படித்தேயிருப்பர். பல பெரிய நூல்களின் சாரமாகவுள்ள நீதிகளும் கருத்துகளும் ஆத்திசூடியிலும், கொன்றைவேந்தனிலும் சிறு சிறு சொற்றொடர்களில் தெளிவுற அமைக்கப்பெற்று விளங்குகின்றன. இளம்பருவத்தினர் எளிதாய்ப் பாடஞ்செய்து நினைவில் வைத்துக் கொள்ளும்படி, அகரம் முதலிய எழுத்துகளை முறையே முதலில் உடையனவாக, இவற்றின் சூத்திரம் போலுஞ் சொற்றொடர்கள் அமைந்துள்ளன. ஆத்திசூடி மிகச்சிறிய சொற்றொடர்களாலும், கொன்றைவேந்தன் சற்றுப் பெரிய சொற்றொடர்களாலும், ஆக்கப்பெற்றிருப்பது பிள்ளைகளின் பருவத்திற்கேற்பக் கற்பிக்க வேண்டுமென்னும் கருத்துப்பற்றியேயாகும். மிக்க இளம்பருவத்தினராயிருக்கும்பொழுதே, பிள்ளைகளின் மனத்தில் உயர்ந்த நீதிகளைப் பதியவைக்க வேண்டுமென்னும் பெருங் கருணையுடனும், பேரறிவுடனும் 'அறஞ்செய விரும்பு' என்று தொடங்கி ஆக்கப்பெற்றுள்ள ஆத்திசூடியின் மாண்பு அளவிடற்பாலதன்று. இங்ஙனம் உலகமுள்ளவரையும் இளைஞர்கள் பயின்று பயன்பெறும் முறையினை ஏற்படுத்தி வைத்தவர் பெண்மக்களுள் ஒருவரென்னும் பெருமை தமிழ்நாட்டிற்கு உரியதாகின்றது.

ஆத்திசூடி உரைப்பதிப்புகள் வேறு பல இருப்பினும், இப்பதிப்பு மூலபாடம் தனியே சேர்க்கப்பெற்றும், பதவுரையும் பொழிப்புரையும் திருத்தமாக எழுதப்பெற்றும் சிறந்து விளங்குவது காணலாம்
.
 
   -------------------------------------------------------------------------------------------------------
  1. அறஞ்செய விரும்பு.

(பதவுரை) அறம் - தருமத்தை, செய - செய்வதற்கு, விரும்பு - நீ ஆசை கொள்ளு.

(பொழிப்புரை) நீ தருமம் செய்ய ஆசைப்படு.
 
---------------------------------------------------------------------------------------------------------     
     
  2. ஆறுவது சினம்.

(பதவுரை) ஆறுவது-தணியவேண்டுவது, சினம்-கோபமாம்.

(பொழிப்புரை) கோபம் தணியத் தகுவதாம்.
 
  -------------------------------------------------------------------------------------------------------   
     
  3. இயல்வது கரவேல்.

(பதவுரை) இயல்வது-கொடுக்கக்கூடிய பொருளை, கரவேல்- (இரப்பவர்களுக்கு) ஒளியாதே,

(பொழிப்புரை) கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு.
 
 -----------------------------------------------------------------------------------------------------------
     
  4. ஈவது விலக்கேல்.

(பதவுரை) ஈவது-(ஒருவர்க்கு மற்றொருவர்) கொடுப்பதை, விலக்கேல்-தடுக்காதே.

(பொழிப்புரை) ஒருவர் மற்றொருவர்க்குக் கொடுப்பதைக் கொடுக்க வேண்டாமென்று நீ தடுக்காதே.
 
   ---------------------------------------------------------------------------------------------------   
     
  5. உடையது விளம்பேல்.

(பதவுரை) உடையது - (உனக்கு) உள்ள பொருளை, விளம்பேல் - (பிறர் அறியும்படி) சொல்லாதே.

(பொழிப்புரை) உன்னுடைய பொருளைப் பிறர் அறியும்படி சொல்லாதே.
    உன்னுடைய பொருளை அல்லது கல்வி முதலிய சிறப்பை நீயே புகழ்ந்து பேசவேண்டா.
 
 ---------------------------------------------------------------------------------------------------------   
 
6. ஊக்கமது கைவிடேல்.

(பதவுரை) ஊக்கம் - (செய்யுந் தொழிலில்) மன எழுச்சியை, கைவிடேல் - கைவிடாதே.

(பொழிப்புரை) நீ எத்தொழில் செய்யும்பொழுதும் மனவலிமை யினைக் கைவிடாதே. (அது: பகுதிப்பொருள் விகுதி.)
 
  ---------------------------------------------------------------------------------------------------   
     
  7. எண்ணெழுத் திகழேல்.

(பதவுரை) எண் - கணித நூலையும், எழுத்து - இலக்கண நூலையும், இகழேல் - இகழ்ந்து தள்ளாதே.

(பொழிப்புரை) கணிதத்தையும், இலக்கணத்தையும் இகழாமல் நன்றாகக் கற்றுக்கொள். (கணிதம் - கணக்கு.)
 
      -------------------------------------------------------------------------------------------------
     
8. ஏற்ப திகழ்ச்சி.

(பதவுரை) ஏற்பது-(ஒருவரிடத்திலே போய்) இரப்பது, இகழ்ச்சி- பழிப்பாகும்.

(பொழிப்புரை) இரந்துண்டு வாழ்வது பழிப்பாகையால் நீ ஒருவரிடத்தும் சென்று ஒன்றை வேண்டாதே.
 
--------------------------------------------------------------------------------------------------------     
     
  9. ஐய மிட்டுண்.

(பதவுரை) ஐயம் - பிச்சையை, இட்டு - (இரப்பவர்களுக்குக்) கொடுத்து, உண் - நீ உண்ணு.

(பொழிப்புரை) இரப்பவர்க்குப் பிச்சையிட்டுப் பின்பு நீ உண்ணு.
    ஏழைகட்கும், குருடர் முடவர் முதலானவர்கட்கும் பிச்சையிட வேண்டும்.

 --------------------------------------------------------------------------------------------------------     
     
  10. ஒப்புர வொழுகு.

(பதவுரை) ஒப்புரவு-உலக நடையை அறிந்து, ஒழுகு- (அந்த வழியிலே) நட.

(பொழிப்புரை) உலகத்தோடு பொருந்த நடந்துகொள்.
 
    ----------------------------------------------------------------------------------------------------- 
     
  11. ஓதுவ தொழியேல்

(பதவுரை) ஓதுவது - எப்பொழுதும் படிப்பதை, ஒழியேல் - விடாதே.

(பொழிப்புரை) அறிவு தரும் நல்ல நூல்களை நீ எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
 
      --------------------------------------------------------------------------------------------------
     
  12. ஒளவியம் பேசேல்.

(பதவுரை) ஒளவியம் - பொறாமை வார்த்தைகளை, பேசேல் - பேசாதே.

(பொழிப்புரை) நீ ஒருவரிடத்தும் பொறாமைகொண்டு பேசாதே.
 
     ---------------------------------------------------------------------------------------------------
 
13. அஃகஞ் சுருக்கேல்.

(பதவுரை) அஃகம் - (நெல் முதலிய) தானியங்களை, சுருக்கேல் - குறைத்து விற்காதே.

(பொழிப்புரை) மிகுந்த இலாபத்துக்கு ஆசைப்பட்டுத் தானியங்களைக் குறைத்து விற்காதே.
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
  14. கண்டொன்று சொல்லேல்.

(பதவுரை) கண்டு-(ஒன்றைக்) கண்டு, ஒன்று-வேறொன்றை, சொல்லேல் - சொல்லாதே.

(பொழிப்புரை) கண்ணாற் கண்டதற்கு மாறாகச் சொல்லாதே. (பொய்ச்சாட்சி சொல்லலாகாது.)
 
   ------------------------------------------------------------------------------------------------------   
     
  15. ஙப்போல் வளை.

(பதவுரை) ஙப்போல் - ஙகரம்போல், வளை - உன் இனத்தைத் தழுவு.

(பொழிப்புரை) ஙஎன்னும் எழுத்தானது தான்பயனுடையதாயிருந்து பயனில்லாத ஙா முதலிய தன் வருக்க எழுத்துகளைத் தழுவிக் கொள்ளுதல் போல, நீ பயனுடையவனாயிருந்து உன் இனத்தார் பயனில்லாதவராயினும் அவரைத் தழுவிக்கொள்.

    [ஙா முதலிய பதினொரெழுத்தும் எந்தச் சொல்லிலும் வருவதில்லை. ஙகரத்தின் பொருட்டே அவற்றையும் சுவடியில் எழுதுகிறார்கள். இனி இதற்கு ஙகர வொற்றானது அகரவுயிர் ஒன்றையே தழுவுவது போல நீ ஒருவனையே தழுவு என மாதர்க்குக் கூறியதாகவும் பொருள் சொல்லலாம்.]

-----------------------------------------------------------------------------------------------------------     
     
  16. சனிநீ ராடு.

(பதவுரை) சனி-சனிக்கிழமைதோறும், நீர் ஆடு-(எண்ணெய் தேய்த்துக்கொண்டு) நீரிலே தலைமுழுகு

(பொழிப்புரை) சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்து முழுகு.(புதன்கிழமைகளிலும் முழுகலாம்.)
 
    ------------------------------------------------------------------------------------------------------ 
     
  17. ஞயம்பட வுரை.

(பதவுரை) ஞயம்பட - இனிமையுண்டாக, உரை - பேசு.

(பொழிப்புரை) கேட்பவர்களுக்கு இன்ப முண்டாகும்படி இனிமை யாகப் பேசு. [நயம் என்பதன் போலி.]
 
    -----------------------------------------------------------------------------------------------------

  18. இடம்பட வீடெடேல

(பதவுரை) இடம்பட - விசாலமாக, வீடு - வீட்டை, எடேல் - கட்டாதே

(பொழிப்புரை) அளவுக்குமேல் இடம் வீணாய்க் கிடககும்படி வீட்டைப்பெரிதாகக் கட்டாதே. ''சிறுகக் கட்டிப் பெருக வாழ்'' என்பது பழமொழி.
 
    ------------------------------------------------------------------------------------------------------ 
     
19. இணக்கமறிந் திணங்கு

(பதவுரை) இணக்கம் - (நட்புக்கு ஏதுவாகிய) நற்குண நற்செய்கைகளை, அறிந்து - ஆராய்ந்தறிந்து, இணங்கு - (பின் ஒருவரோடு) நண்பு கொள்.

(பொழிப்புரை) நற்குண நற்செய்கை உடையவ ரென்பது தெரிந்து கொண்டு ஒருவரோடு நட்புச் செய.
 
 -----------------------------------------------------------------------------------------------------   
 
20. தந்தைதாய்ப் பேண

(பதவுரை) தந்தை-பிதாவையும், தாய்-மாதாவையும், பேண்-காப்பாற்று

(பொழிப்புரை) உன் தாய் தந்தையரை அன்புடன் போற்றிக் காப்பாற்று.
       
« Last Edit: September 13, 2011, 02:41:52 AM by Global Angel »
                    
Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஆத்திசூடி
« Reply #1 on: September 13, 2011, 03:39:19 AM »
21. நன்றி மறவேல்.

(பதவுரை) நன்றி - (ஒருவர் உனக்குச் செய்த) உதவியை, மறவேல் - (ஒருபோதும்) மறவாதே.

(பொழிப்புரை) உனக்குப் பிறர் செய்த நன்மையை எப் பொழுதும் மறக்காமல் தீமையை மறந்துவிடு.
    உதவி செய்தவர்க்கு ஒருபொழுதும் தீமை செய்தலாகாது.

 -------------------------------------------------------------------------------------------------------     
     
22. பருவத்தே பயிர்செய்.

(பதவுரை) பருவத்தே - தக்க காலத்திலே, பயிர்செய்-பயிரிடு.

(பொழிப்புரை) விளையும் பருவமறிந்து பயிரிடு.
    எச்செயலும் அதற்குரிய காலத்திலே செய்யப்படவேண்டும்
.
 
      -----------------------------------------------------------------------------------------------------
     
23. மன்றுபறித் துண்ணேல்.

(பதவுரை) மன்று - நீதிமன்றத்திலே இருந்துகொண்டு, பறித்து- (வழக்குத் தீர்ப்புக்கு வரும் குடிகளுடைய பொருளைக்) கவர்ந்து, உண்ணேல் - உண்டு வாழாதே.

(பொழிப்புரை) நீதிமன்றத்திலே இருந்துகொண்டு இலஞ்சம் வாங்கி வாழாதே.
    'மண்பறித் துண்ணேல்' என்று பாடமிருந்தால் பிறர் நிலத்தைக் கவர்ந்து வாழாதே என்று பொருளாம்
.
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
24. இயல்பலா தனசெயேல். 

(பதவுரை) இயல்பு அலாதன - இயற்கைக்கு மாறான செயல்களை, செயேல் - செய்யாதே.

(பொழிப்புரை) நல்லொழுக்கத்திற்கு மாறான செயல்களைச் செய்யாதே.
 
     ------------------------------------------------------------------------------------------------------

25. அரவ மாட்டேல். 

(பதவுரை) அரவம் - (நஞ்சுடைய) பாம்புகளை, ஆட்டேல் - பிடித்து ஆட்டாதே.

(பொழிப்புரை) பாம்பைப் பிடித்து ஆட்டி விளையாடாதே.
 
      -------------------------------------------------------------------------------------------------------
     
26. இலவம்பஞ்சிற் றுயில்

(பதவுரை) இலவம்பஞ்சில் - இலவம்பஞ்சு மெத்தையிலே, துயில் - உறங்கு.

(பொழிப்புரை) இலவம்பஞ்சினாற் செய்த மெத்தையிலே படுத்து உறங்கு.
 
      --------------------------------------------------------------------------------------------------------
     
27. வஞ்சகம் பேசேல். 

(பதவுரை) வஞ்சகம்-கபடச் சொற்களை, பேசேல்-பேசாதே.

(பொழிப்புரை) கபடச் சொற்களைப் பேசாதே.
 
   -------------------------------------------------------------------------------------------------------   
     
28. அழகலா தனசெயேல். 

(பதவுரை) அழகு அலாதன - சிறப்பில்லாத செயல்களை, செயேல் - செய்யாதே.

(பொழிப்புரை) இழிவான செயல்களைச் செய்யாதே.
 
     -----------------------------------------------------------------------------------------------------

29. இளமையிற் கல். 

(பதவுரை) இளமையில் - இளமைப் பருவத்திலே, கல் - கல்வியைக் கற்றுக்கொள்.

(பொழிப்புரை) இளமைப் பருவத்திலேயே படிக்கத்தொடங்கிக் கல்வியைக் கற்றுக்கொள்.
 
  --------------------------------------------------------------------------------------------------------   
     
30. அறனை மறவேல். 

(பதவுரை) அறனை-தருமத்தை, மறவேல் - (ஒருபோதும்) மறவாதே.

(பொழிப்புரை) தருமத்தை எப்பொழுதும் மறவாமல் செய்.
 
    ---------------------------------------------------------------------------------------------------- 
     
31. அனந்த லாடேல். 

(பதவுரை) அனந்தல் - தூக்கத்தை, ஆடேல் - மிகுதியாகக் கொள்ளாதே.

(பொழிப்புரை) மிகுதியாகத் தூங்காதே.
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
32. கடிவது மற. 

(பதவுரை) கடிவது - (ஒருவரைச்) சினந்து பேசுவதை, மற - மறந்துவிடு.

(பொழிப்புரை) யாரையும் கோபத்தாற் கடிந்து பேசாதே.
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
33. காப்பது விரதம். 

(பதவுரை) காப்பது - (உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் அவற்றைக்) காப்பாற்றுவதே, விரதம் - நோன்பாகும்.

(பொழிப்புரை) பிற உயிர்களுக்குத் துன்பஞ் செய்யாமல் (அவற்றைக்) காப்பாற்றுவதே தவமாகும்.
    தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமற் செய்வதே விரதம் என்றும் பொருள் சொல்லலாம்.

      --------------------------------------------------------------------------------------------------
     
34. கிழமைப் படவாழ். 

(பதவுரை) கிழமைப்பட-(உன்உடலும் பொருளும் பிறருக்கு) உரிமைப்படும்படி, வாழ் - வாழு.

(பொழிப்புரை) உன் உடம்பாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழு.
 
      -----------------------------------------------------------------------------------------------------
     
35. கீழ்மை யகற்று. 

(பதவுரை) கீழ்மை - இழிவானவற்றை, அகற்று - நீக்கு.

(பொழிப்புரை) இழிவான குணஞ் செயல்களை நீக்கு.
 
      -------------------------------------------------------------------------------------------------
     
36. குணமது கைவிடேல்.

(பதவுரை) குணமது - (மேலாகிய) குணத்தை, கைவிடேல் - கைவிடாதே.

(பொழிப்புரை) நற்குணங்களைக் கைசோரவிடாதே. நன்மை தருவ தென்று கண்டறிந்ததைக் கைவிடாதே. அது: பகுதிப்பொருள் விகுதி.
 
    -----------------------------------------------------------------------------------------------------

37. கூடிப் பிரியேல்.

(பதவுரை) கூடி - (நல்லவரோடு) நட்புக்கொண்டு, பிரியேல்-பின் (அவரைவிட்டு) நீங்காதே.

(பொழிப்புரை) நல்லவரோடு நட்புச் செய்து பின்பு அவரை விட்டுப் பிரியாதே.
 
      ------------------------------------------------------------------------------------------------
     
38. கெடுப்ப தொழி.

(பதவுரை) கெடுப்பது - பிறருக்குக் கேடு செய்வதை, ஒழி - விட்டு விடு.

(பொழிப்புரை) பிறருக்குக் கெடுதி செய்வதை விட்டுவிடு (கேடு விளைக்கும் காரியத்தைச் செய்யாதே.)
 
     ---------------------------------------------------------------------------------------------------------

39. கேள்வி முயல்.

(பதவுரை) கேள்வி - கற்றவர் சொல்லும் நூற் பொருளைக் கேட்ப தற்கு; முயல் - முயற்சி செய்.

(பொழிப்புரை) கற்றறிந்தவர்கள் சொல்லும் நூற் பொருளைக்கேட்க முயற்சி செய்.
 
   -------------------------------------------------------------------------------------------------------
   
40. கைவினை கரவேல்.

(பதவுரை) கைவினை - (உனக்குத் தெரிந்த) கைத் தொழிலை, கரவேல் - ஒளியாதே.

(பொழிப்புரை) உனக்குத் தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களுக்கு ஒளியாமற் செய்.
    (ஏதேனும் கைத்தொழில் செய்துகொண்டிரு.)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஆத்திசூடி
« Reply #2 on: September 13, 2011, 03:58:53 AM »
41. கொள்ளை விரும்பேல்

(பதவுரை) கொள்ளை-(பிறருடைய பொருளைக்) கொள்ளையிடுதற்கு, விரும்பேல்-ஆசைப்படாதே.

(பொழிப்புரை) பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாதே.
 ---------------------------------------------------------------------------------------------------------
     
42. கோதாட் டொழி.

(பதவுரை) கோது-குற்றம் பொருந்திய, ஆட்டு- விளையாட்டை, ஒழி-நீக்கு.

(பொழிப்புரை) குற்றமான விளையாட்டை விட்டுவிடு.

     --------------------------------------------------------------------------------------------------
     
43. சான்றோ ரினத்திரு.

(பதவுரை) அறிவொழுக்கங்களில் நிறைந்த பெரியோர்களின் கூட்டத்தைச் சேர்ந்திரு.

(பொழிப்புரை) அறிவொழுக்கங்களில் நிறைந்த பெரியோர் களின் கூட்டத்தைச் சேர்ந்திரு.
 
     ------------------------------------------------------------------------------------------------------

44. சான்றோ ரினத்திரு.

(பதவுரை) அறிவொழுக்கங்களில் நிறைந்த பெரியோர்களின் கூட்டத்தைச் சேர்ந்திரு.

(பொழிப்புரை) அறிவொழுக்கங்களில் நிறைந்த பெரியோர் களின் கூட்டத்தைச் சேர்ந்திரு.
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
45. சித்திரம் பேசேல்.

(பதவுரை) சித்திரம்-பொய்ம்மொழிகளை, பேசேல்-பேசாதே.

(பொழிப்புரை) பொய் வார்த்தைகளை மெய்போலப் பேசாதே.
 
      -----------------------------------------------------------------------------------------------------
     
46. சீர்மை மறவேல்.

(பதவுரை) சீர்மை-புகழுக்கு ஏதுவாகிய குணத்தை, மறவேல்- மறந்துவிடாதே.

(பொழிப்புரை) புகழுக்குக் காரணமானவற்றை மறந்துவிடாதே.கோதாட்டொழி என்பதன்பின் 'கௌவை யகற்று, என்று ஒரு கட்டுரை சில புத்தகங்களில் உள்ளது. 'துன்பத்தை நீக்கு' என்பது இதன் பொருள்.
 
      -----------------------------------------------------------------------------------------------------
     
47. சுளிக்கச் சொல்லேல்.

(பதவுரை) சுளிக்க - (கேட்பவர்) கோபிக்கும்படியாக,சொல்லேல் - (ஒன்றையும்) பேசாதே.

(பொழிப்புரை) கேட்பவர்க்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதே.
 
     -----------------------------------------------------------------------------------------------------

48. சூது விரும்பேல்.

(பதவுரை) சூது-சூதாடலை, விரும்பேல்-(ஒருபோதும்) விரும்பாதே.

(பொழிப்புரை) ஒருபொழுதும் சூதாடுதலை விரும்பாதே.
 
      --------------------------------------------------------------------------------------------------------
     
49. செய்வன திருந்தச்செய்.

(பதவுரை) செய்வன-செய்யும் செயல்களை, திருந்த - செவ்வையாக, செய் - செய்.

(பொழிப்புரை) செய்யுஞ் செயல்களைத், திருத்தமாகச் செய்.
 
   --------------------------------------------------------------------------------------------------------
 
50. சேரிடமறிந்து சேர்.

(பதவுரை) சேர் இடம் - அடையத்தகும் (நன்மையாகிய) இடத்தை, அறிந்து - தெரிந்து, சேர் - அடை

(பொழிப்புரை) சேரத்தக்க நல்லிடத்தை ஆராய்ந்தறிந்து சேர
 
    ----------------------------------------------------------------------------------------------------- 
   
51. சையெனத் திரியேல்.

(பதவுரை) சை என-(பெரியோர் உன்னைச்) சீ என்று அருவருக்கும்படி, திரியேல் - திரியாதே

(பொழிப்புரை) பெரியோர் சீ என்று வெறுக்கும்படி வீணாய்த்
திரியாதே

  ------------------------------------------------------------------------------------------------------
   
52. சொற்சோர்வு படேல்.

(பதவுரை) சொல்-(நீ பிறரோடு பேசும்) சொற்களில், சோர்வு படேல் - மறதிபடப் பேசாதே

(பொழிப்புரை) நீ பிறருடன் பேசும்பொழுதும் மறந்து குற்றமுண்டாகப் பேசாதே
 
   ----------------------------------------------------------------------------------------------------- 

53. சோம்பித் திரியேல்.

(பதவுரை) சோம்பி - (நீ செய்யவேண்டும் முயற்சியைச் செய்யாமல்) சோம்பல்கொண்டு, திரியேல் - வீணாகத் திரியாதே.

(பொழிப்புரை) முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.
 
      -----------------------------------------------------------------------------------------------------
     
54. தக்கோ னெனத்திரி.

(பதவுரை) தக்கோன் என - (உன்னைப் பெரியோர்கள்) யோக்கியன் என்று புகழும்படி, திரி - நடந்துகொள

(பொழிப்புரை) பெரியோர்கள் உன்னைத் தக்கவன் என்று புகழும்படி நடந்துகொள்.
 
      -------------------------------------------------------------------------------------------------------
     
55. தானமது விரும்பு.

(பதவுரை) தானமது - (சற்பாத்திரங்களிலே) தானம் செய்தலை, விரும்பு - ஆசைப்படு.

(பொழிப்புரை) தக்கவர்களுக்குத் தானங்கொடுத்தலை விரும்பு.அது: பகுதிப்பொருள் விகுதி
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
56. திருமாலுக் கடிமை செய்.

(பதவுரை) திருமாலுக்கு - விட்டுணுவுக்கு, அடிமைசெய் - தொண்டுபண்ணு

(பொழிப்புரை) நாராயணமூர்த்திக்குத் தொண்டு செய
 
      -----------------------------------------------------------------------------------------------
     
57. தீவினை யகற்று.

(பதவுரை) தீவினை-பாவச் செயல்களை, அகற்று-(செய்யாமல்) நீக்கு
.

(பொழிப்புரை) பாவச் செயல்களைச் செய்யாமல் விலக்கு.
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
58. துன்பத்திற் கிடங்கொடேல்.

(பதவுரை) துன்பத்திற்கு - வருத்தத்திற்கு, இடங்கொடேல் - (சிறிதாயினும்) இடங்கொடாதே.

(பொழிப்புரை) துன்பத்திற்குச் சிறிதும் இடங்கொடாதே.முயற்சி செய்யும்பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டுவிடலாகாது
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
59. தூக்கி வினைசெய்.

(பதவுரை) தூக்கி - (முடிக்கும் வழியை) ஆராய்ந்து, வினை - ஒரு தொழிலை, செய் - (அதன் பின்பு) செய்.

(பொழிப்புரை) முடிக்கத் தகுந்த உபாயத்தை ஆராய்ந்தறிந்து ஒரு காரியத்தைச் செய
 
      --------------------------------------------------------------------------------------------------
     
60. தெய்வ மிகழேல்.

(பதவுரை) தெய்வம் - கடவுளை, இகழேல் - பழிக்காதே.

(பொழிப்புரை) கடவுளை இகழ்ந்து பேசாதே
 
« Last Edit: September 13, 2011, 04:00:33 AM by Global Angel »
                    
Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஆத்திசூடி
« Reply #3 on: September 13, 2011, 05:01:00 PM »
61. தேசத்தோ டொத்துவாழ்

(பதவுரை) தேசத்தோடு - நீ வசிக்கும் தேசத்திலுள்ளவர்களுடனே, ஒத்து - (பகையில்லாமல்) ஒத்து, வாழ் - வாழு.

(பொழிப்புரை) நீ வசிக்கும் தேசத்தவருடன் பகையில்லாமலபொருந்தி வாழு.
 
     ----------------------------------------------------------------------------------------------------
     
62. தையல்சொல் கேளேல்

(பதவுரை) தையல் - (உன்) மனைவியினுடைய, சொல்- சொல்லை, கேளேல் - கேட்டு நடவாதே.

(பொழிப்புரை) மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.
 
     ------------------------------------------------------------------------------------------------------
     
63. தொன்மை மறவேல்

(பதவுரை) தொன்மை - பழைமையாகிய நட்பை,மறவேல் - மறந்துவிடாதே

(பொழிப்புரை) பழைமையாகிய நட்பினை மறந்துவிடாதே
 
 -----------------------------------------------------------------------------------------------------     
     
64. தோற்பன தொடரேல்

(பதவுரை) தோற்பன-தோல்வியடையக்கூடிய வழக்குகளிலே, தொடரேல்-சம்பந்தப்படாதே

(பொழிப்புரை) தோல்வியடையக்கூடிய காரியங்களில் தலையிடாதே.
 
  ------------------------------------------------------------------------------------------------------   
     
65. நன்மை கடைப்பிடி்

(பதவுரை) நன்மை - புண்ணியத்தையே, கடைப்பிடி-உறுதியாகப் பிடி

(பொழிப்புரை) நல்வினை செய்தலை உறுதியாகப் பற்றிக்கொள
 
     -----------------------------------------------------------------------------------------------
     
66. நாடொப் பனசெய்

(பதவுரை) நாடு - உன் நாட்டில் உள்ளோர் பலரும்,ஒப்பன - ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை,செய் - செய்வாயாக.

(பொழிப்புரை) நாட்டிலுள்ளோர் ஒப்புக்கொள்ளக்கூடிய நல்ல செயல்களைச் செய
 
     --------------------------------------------------------------------------------------------------
     
67. நிலையிற் பிரியேல்.

(பதவுரை) நிலையில் - (நீ நிற்கின்ற உயர்ந்த) நிலையிலே நின்று, பிரியேல் - (ஒருபோதும்) நீங்காதே.

(பொழிப்புரை) உன்னுடைய நல்ல நிலையினின்றும் தாழ்ந்துவிடாதே
 
   -----------------------------------------------------------------------------------------------------   
     
68. நீர்விளை யாடேல்.

(பதவுரை) நீர் - (ஆழம் உள்ள) நீரிலே, விளையாடேல்- (நீந்தி) விளையாடாதே.

(பொழிப்புரை) வெள்ளத்திலே நீந்தி விளையாடாதே.
 
      -----------------------------------------------------------------------------------------------------
     
69. நுண்மை நுகரேல்.

(பதவுரை) நுண்மை - (நோயைத்தருகிற) சிற்றுண்டிகளை,நுகரேல் - உண்ணாதே.

(பொழிப்புரை) நோயைத் தரும் சிற்றுண்டிகளை உண்ணாதே
 
     ------------------------------------------------------------------------------------------------
     
70. நூல்பல கல்.

(பதவுரை) நூல் பல - (அறிவை வளர்க்கிற) நூல்கள் பலவற்றையும், கல் - கற்றுக்கொள்.

(பொழிப்புரை) அறிவை வளர்க்கும் பல நூல்களையும் கற்றுக்கொள
 
    -------------------------------------------------------------------------------------------------- 
     
71. நெற்பயிர் விளை.

(பதவுரை) (நெற்பயிர் - நெல்லுப் பயிரை, விளை- (வேண்டிய முயற்சி செய்து) விளைவி.

(பொழிப்புரை) நெற்பயிரை முயற்சியெடுத்து விளையச்செய்.உழுதுண்டு வாழ்வதே மேல
 
      ------------------------------------------------------------------------------------------------
     
72. நேர்பட வொழுகு.

(பதவுரை) நேர்பட-(உன் ஒழுக்கம் கோணாமல்) செவ்வைப் பட, ஒழுகு - நட.

(பொழிப்புரை) ஒழுக்கந் தவறாமல் செவ்வையான வழியில் நட
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
73. நைவினை நணுகேல்.

(பதவுரை) நை - (பிறர்) கெடத்தக்க, வினை - தீவினைகளை, நணுகேல் - (ஒருபோதும்) சாராதே.

(பொழிப்புரை) பிறர் வருந்தத்தகுந்த தீவினைகளைச்செய்யாதே.
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
74. நொய்ய வுரையேல்.

(பதவுரை) நொய்ய - (பயன் இல்லாத) அற்ப வார்த்தைகளை, உரையேல் - சொல்லாதே.

(பொழிப்புரை) வீணான அற்ப வார்த்தைகளைப் பேசாதே.
 
     -----------------------------------------------------------------------------------------------------

75. நோய்க்கிடங் கொடேல்.

(பதவுரை) நோய்க்கு - வியாதிகளுக்கு, இடங்கொடேல்-இடங்கொடாதே.

(பொழிப்புரை) உணவு, உறக்கம் முதலியவற்றால் பிணிக்கு இடங்கொடுக்காதே.
 
     --------------------------------------------------------------------------------------------------------

76. பழிப்பன பகரேல்.

(பதவுரை) பழிப்பன - (அறிவுடையவர்களாலே) பழிக்கப் படுவனவாகிய இழி சொற்களை, பகரேல் - பேசாதே.

(பொழிப்புரை) பெரியோர்களாற் பழிக்கப்படுஞ் சொற்களைப் பேசாதே. பழிக்கப்படும் சொற்களாவன: பொய், குறளை, கடுஞ்சொல், பயனில் சொல் என்பனவும்; இடக்கர்ச்
சொற்களுமாம்.

      -----------------------------------------------------------------------------------------------------
     
77. பாம்பொடு பழகேல்.

(பதவுரை) பாம்பொடு-(பால் கொடுத்தவருக்கும் விடத்தைக்கொடுக்கிற) பாம்பைப்போல்பவர்களுடனே, பழகேல் -சகவாசஞ் செய்யாதே.

(பொழிப்புரை) பாம்புபோலும் கொடியவர்களுடன் பழக்கஞ் செய்யாதே.
 
     ---------------------------------------------------------------------------------------------------
     
78. பிழைபடச் சொல்லேல்.

(பதவுரை) பிழைபட-வழுக்கள் உண்டாகும்படி,சொல்லேல்-ஒன்றையும் பேசாதே.

(பொழிப்புரை) குற்ற முண்டாகும்படி பேசாதே.
 
      --------------------------------------------------------------------------------------------------------
     
79. பீடு பெறநில்.

(பதவுரை) பீடு - பெருமையை, பெற - பெறும்படியாக,நில் - (நல்ல வழியிலே) நில்..

(பொழிப்புரை) பெருமை யடையும்படியாக நல்ல வழியிலே நில்லு.
 
     --------------------------------------------------------------------------------------------------------

80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ்.

(பதவுரை) புகழ்ந்தாரை-உன்னைத் துதிசெய்து அடுத்தவரை,போற்றி - (கைவிடாமற்) காப்பாற்றி, வாழ் - வாழு.

(பொழிப்புரை) அடுத்தவரை ஆதரித்து வாழு.
 
Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஆத்திசூடி
« Reply #4 on: September 13, 2011, 08:32:59 PM »
81. பூமி திருத்தியுண்.

(பதவுரை) பூமி - (உன்) விளைநிலத்தை, திருத்தி-சீர்திருத்திப்பயிர் செய்து, உண் - உண்ணு.

(பொழிப்புரை) பூமியைச் சீர்திருத்திப் பயிர்செய்து உண்ணு.
 
      -----------------------------------------------------------------------------------------------------
     
82. பெரியாரைத் துணைக்கொள்.

(பதவுரை) பெரியாரை - (அறிவிலே சிறந்த) பெரியோரை,துணைக்கொள் - உனக்குத் துணையாகப் பேணிக்கொள்.

(பொழிப்புரை) பெரியாரைத் துணையாக நாடிக்கொள்.
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
83. பேதைமை யகற்று.

(பதவுரை) பேதைமை - அஞ்ஞானத்தை, அகற்று - போக்கு.

(பொழிப்புரை) அறியாமையை நீக்கிவிடு.
 
      ------------------------------------------------------------------------------------------------------
     
84. பையலோ டிணங்கேல்.

(பதவுரை) பையலோடு - சிறு பிள்ளையோடு, இணங்கேல் - கூடாதே.

(பொழிப்புரை) அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.
 
      -----------------------------------------------------------------------------------------------------
     
85. பொருடனைப் போற்றிவாழ்.

(பதவுரை) பொருள்தனை - திரவியத்தை, போற்றி - (மேன் மேலும் உயரும்படி) காத்து, வாழ் - வாழு.

(பொழிப்புரை) பொருளை வீண்செலவு செய்யாமற் பாதுகாத்து வாழு.
 
     -----------------------------------------------------------------------------------------------------

86. போர்த்தொழில் புரியேல்.

(பதவுரை) போர் - சண்டையாகிய, தொழில் - தொழிலை,புரியேல் - செய்யாதே.

(பொழிப்புரை) யாருடனும் கலகம் விளைக்காதே.
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
87. மனந்தடு மாறேல்.

(பதவுரை) மனம் - உள்ளம், தடுமாறேல் - கலங்காதே.

(பொழிப்புரை) எதனாலும் மனக்கலக்க மடையாதே.
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
88. மாற்றானுக் கிடங்கொடேல்.

(பதவுரை) மாற்றானுக்கு - பகைவனுக்கு, இடம் கொடேல் - இடங்கொடாதே.

(பொழிப்புரை) பகைவன் உன்னைத் துன்புறுத்தும்படி இடங்கொடுக்காதே.
 
    ------------------------------------------------------------------------------------------------------ 
     
89. மிகைபடச் சொல்லேல்.

(பதவுரை) மிகைபட - சொற்கள் அதிகப்படும்படி, சொல்லேல் - பேசாதே.

(பொழிப்புரை) வார்த்தைகளை மிதமிஞ்சிப் பேசாதே.
 
      -----------------------------------------------------------------------------------------------------
     
90. மீதூண் விரும்பேல்.

(பதவுரை) மீது ஊண்-மிகுதியாக உண்ணுதலை, விரும்பேல்-இச்சியாதே.

(பொழிப்புரை) மிகுதியாக உணவுண்டலை விரும்பாதே.
 
      ------------------------------------------------------------------------------------------------------
     
91. முனைமுகத்து நில்லேல்.

(பதவுரை) முனைமுகத்து - சண்டை முகத்திலே, நில்லேல் - (போய்) நில்லாதே.

(பொழிப்புரை) போர் முனையிலே நின்றுகொண்டிருக்காதே.
 
      -------------------------------------------------------------------------------------------------------
     
92. மூர்க்கரோ டிணங்கேல்.

(பதவுரை) மூர்க்கரோடு-மூர்க்கத்தன்மையுள்ளவர்களுடனே, இணங்கேல் - சிநேகம் பண்ணாதே!

(பொழிப்புரை) மூர்க்கத்தன்மை யுள்ளவர்களுடன் சேர்ந்து பழகாதே.
 
      -------------------------------------------------------------------------------------------------------
     
93. மெல்லினல்லாள் தோள்சேர்.1

(பதவுரை) மெல் - மெல்லிய, இல் - (உன்) மனையாட்டியாகிய, நல்லாள் - பெண்ணுடைய, தோள் - தோள்களையே, சேர் - பொருந்து.

(பொழிப்புரை) பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் சேர்ந்து வாழு.

1. மெல்லியா டோன் சேர்' என்றும் பாடம

      -------------------------------------------------------------------------------------------------
     
94. மேன்மக்கள் சொற்கேள்.

(பதவுரை) மேன்மக்கள் - உயர்ந்தோருடைய, சொல் - செல்லை, கேள் - கேட்டு நட.

(பொழிப்புரை) நல்லொழுக்கமுடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.
 
      -------------------------------------------------------------------------------------------------------
     
95. மைவிழியார் மனையகல்.

(பதவுரை) மைவிழியார் - மைதீட்டிய கண்களையுடைய வேசையருடைய, மனை - வீட்டை, அகல் - (ஒருபோதும் கிட்டாமல்) அகன்றுபோ.

(பொழிப்புரை) பரத்தையர் மனையைச் சேராமல் விலகு.
 
    ---------------------------------------------------------------------------------------------------------
 
96. மொழிவ தறமொழி.

(பதவுரை) மொழிவது - சொல்லப்படும் பொருளை, அற-(சந்தேகம்) நீங்கும்படி, மொழி - சொல்லு.

(பொழிப்புரை)சொல்லுவதை ஐயமின்றித் திருத்தமுறச் சொல்லு.
 
  --------------------------------------------------------------------------------------------------------
   
97. மோகத்தை முனி.

(பதவுரை) மோகத்தை - ஆசையை, முனி - கோபித்து விலக்கு.

(பொழிப்புரை) நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்துவிடு.
 
      -----------------------------------------------------------------------------------------------------
     
98. வல்லமை பேசேல்.

(பதவுரை) வல்லமை - (உன்னுடைய) சாமர்த்தியத்தை, பேசேல் - (புகழ்ந்து) பேசாதே.

(பொழிப்புரை) உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே.
 
      ------------------------------------------------------------------------------------------------------
     
99. வாதுமுற் கூறேல்.

(பதவுரை) வாது - வாதுகளை, முன் - (பெரியோர்) முன்னே, கூறேல் - பேசாதே.

(பொழிப்புரை) பெரியோர்களிடத்தில் முற்பட்டு வாதாடாதே.
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
100. வித்தை விரும்பு.

(பதவுரை) வித்தை - கல்விப்பொருளையே, விரும்பு - இச்சி.

(பொழிப்புரை) கல்வியாகிய நற்பொருளை விரும்பு.
 
Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஆத்திசூடி
« Reply #5 on: September 13, 2011, 08:40:49 PM »
101. வீடு பெறநில்.

(பதவுரை) வீடு - மோட்சத்தை, பெற - அடையும்படி, நில் - (அதற்குரிய ஞானவழியிலே) நில்.

(பொழிப்புரை) முத்தியைப் பெறும்படி சன்மார்க்கத்திலே நில்லு.
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
102. உத்தம னாயிரு.

(பதவுரை) உத்தமனாய் - உயர்குணமுடையவனாகி, இரு-வாழ்ந்திரு.

(பொழிப்புரை) நற்குணங்களிலே மேற்பட்டவனாகி வாழு.
 
      -------------------------------------------------------------------------------------------------------
     
103. ஊருடன் கூடிவாழ்.

(பதவுரை) ஊருடன் - ஊரவர்களுடனே, கூடி - (நன்மை தீமைகளிலே) அளாவி, வாழ் - வாழு.

(பொழிப்புரை) ஊராருடன் நன்மை தீமைகளிற் கலந்து வாழு.
 
    ------------------------------------------------------------------------------------------------------
 
104. வெட்டெனப் பேசேல்.

(பதவுரை) வெட்டு என - கத்திவெட்டைப்போல, பேசேல் - (ஒருவரோடுங் கடினமாகப்) பேசாதே.

(பொழிப்புரை) யாருடனும் கத்திவெட்டுப்போலக் கடினமாகப் பேசாதே.
 
      ----------------------------------------------------------------------------------------------------

105. வேண்டி வினைசெயேல்.

(பதவுரை) வேண்டி - விரும்பி, வினை - தீவினையை,செயேல்-செய்யாதே.

(பொழிப்புரை) வேண்டுமென்றே தீவினைகளைச் செய்யாதே.
 
      ---------------------------------------------------------------------------------------------------

106. வைகறைத் துயிலெழு.

(பதவுரை) வைகறை-விடியற்காலத்திலே, துயில்-நித்திரையை விட்டு, எழு - எழுந்திரு.

(பொழிப்புரை) நாள்தோறும் சூரியன் உதிக்குமுன்பே தூக்கத்தைவிட்டு எழுந்திரு.
 
      ---------------------------------------------------------------------------------------------------

107. ஒன்னாரைத் தேறேல்.

(பதவுரை) ஒன்னாரை - பகைவர்களை, தேறேல் - நம்பாதே.

(பொழிப்புரை) பகைவரை நம்பாதே.

'ஒன்னாரைச் சேரேல்' என்றும் பாடமுண்டு.

     ---------------------------------------------------------------------------------------------------

108. ஓரஞ் சொல்லேல்.

(பதவுரை) ஓரம் - பட்சபாதத்தை, சொல்லேல் - (யாதொரு வழக்கிலும்) பேசாதே.

(பொழிப்புரை) எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாகப் பேசாமல் நடுவுநிலையுடன் சொல்லு.

   *** ஆத்திசூடி மூலமும் உரையும்முற்றிற்று.***
 
Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218363
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/

Click On The Image

« Last Edit: April 01, 2012, 07:27:55 PM by Global Angel »