Author Topic: நல்வழி  (Read 5422 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நல்வழி
« on: September 14, 2011, 04:02:19 AM »
                                     ஒளவையார் அருளிய
 
                                    நல்வழி
 
 
                     ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை

 
 
   
கடவுள் வாழ்த்து

பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன்-கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா.


(பதவுரை) கோலம் செய் - அழகினைச் செய்கின்ற, துங்கம் - உயாவாகிய, கரிமுகத்து - யானை முகத்தையுடைய, தூமணியே-பரிசுத்தமாகிய மாணிக்கம்போலும் விநாயகக் கடவுளே, பாலுந் தெளி தேனும் பாகும் பருப்பும்- ஆவின் பாலும் தெளிந்த தேனும் வெல்லப்பாகும் பருப்பும்ஆகிய, இவை நாலும் கலந்து-இந்நான்கையும் கலந்து, நான்உனக்குத் தருவேன் - அடியேன் தேவரீருக்கு நிவேதிப்பேன்;சங்கத் தமிழ் மூன்றும் - சங்கத்தில் வளர்க்கப்பட்ட முத்தமிழையும், நீ எனக்குத் தா - தேவரீர் அடியேனுக்குத் தந்தருள்வீராக.

இதன் கருத்து :- விநாயகக் கடவுளே! தேவரீர்அடியேனது பூசையை ஏற்றுக்கொண்டு எனக்கு முத்தமிழ்ப்புலமையும் தந்தருளவேண்டும் என்பதாம். முத்தமிழ் - இயல்,
இசை, நாடகம் என்னும் பிரிவினையுடையதமிழ். தமிழ் முதல்,இடை, கடை யென்னும் முச்சங்கங்களால் வளர்க்கப் பெற்றமையால் சங்கத் தமிழ் எனப் பெயர் பெறுவதாயிற்று.

 
 ----------------------------------------------------------------------------------------------------
     
நன்மையே செய்க

1.  புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை
   மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுஙகால்
   ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந்
   தீதொழிய நன்மை செயல்.


(பதவுரை) புண்ணியம் ஆம் - அறமானது விருத்தியைச் செய்யும்; பாவம் போம் - பாவமானது அழிவினைச்செய்யும்; போனநாள் செய்த அவை - முற்பிறப்பிற் செய்த அப் புண்ணிய பாவங்களே, மண்ணில் பிறந்தார்க்கு - பூமியிலே பிறந்த மனிதர்களுக்கு, வைத்த பொருள் - (இப்பிறப்பிலே இன்பதுன்பங்களை அநுபவிக்கும்படி) வைத்த பொருளாகும்; எண்ணுங்கால் - ஆராய்ந்து பார்க்கின், எச்சமயத்தோர் சொல்லும் - எந்த மதத்தினர் சொல்லுவதும், ஈது ஒழிய வேறு இல்லை - இதுவன்றி வேறில்லை; (ஆகையால்) தீது ஒழிய நன்மை செயல் - பாவஞ் செய்யாது புண்ணியமே செய்க.

புண்ணியத்தால் இன்பமும், பாவத்தால் துன்பமும் உண்டாதலால், பாவத்தை யொழித்துப் புண்ணியத்தைச் செய்க எ-ம். ஆக்கும் போக்கும் என்பன ஆம் போம் என நின்றன. (1)
 
 ----------------------------------------------------------------------------------------------------------
     
ஈயாமையின் இழிவு

2.  சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
   நீதி வழுவா நெறிமுறையின்-மேதினியில்
   இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
   பட்டாங்கில் உள்ள படி.


(பதவுரை) சாற்றுங்கால் - சொல்லுமிடத்து, மேதினியில் - பூமியில், சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை - இரண்டு சாதியின்றி வேறில்லை, (அவ்விரண்டு சாதியாரும் யாவரெனின்) நீதி வழுவா நெறி - நீதி தவறாத நல்வழியில் நின்று, முறையின் - முறையோடு; இட்டார் - (வறியர் முதலானவர்க்கு) ஈந்தவரே, பெரியோர்-உயர்வாகிய சாதியார்; இடாதார் - ஈயாதவரே, இழிகுலத்தார் - இழிவாகிய சாதியார்; பட்டாங்கில் உள்ளபடி-உண்மை நூலில் உள்ள இயற்கை இதுவேயாம்.

கொடுத்தவர் உயர்குலத்தினர்; கொடாதவர் இழிகுலத்தினர்; இவ்வகையன்றி வேறு சாதியில்லை எ - ம். (2)
 
 ---------------------------------------------------------------------------------------------------------
     
ஈதலின் சிறப்பு

3.  இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
   இடும்பொய்யை மெய்யென் றிராதே-இடுங்கடுக
   உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
   விண்டாரைக் கொண்டாடும் வீடு.


(பதவுரை) இயல் உடம்பு இது - பொருந்திய இவ்வுடம்பானது, இடும்பைக்கு - துன்பமாகிய சரக்குகட்கு, இடும்பை அன்றே - இட்டு வைக்கும் பை யல்லவா, இடும் பொய்யை - (உணவினை) இடுகின்ற நிலையில்லாத இவ்வுடம்பை, மெய் என்று இராது-நிலையுடையதென்று கருதியிராமல், கடுக - விரையில், இடும் - வறியார்க்கு ஈயுங்கள், உண்டாயின் - (இவ்வறம் உங்களிடத்து) உண்டாயின், பெருவலிநோய் - மிக்க வலிமையுடைய பாசமாகிய பிணியினின்றும், விண்டாரை - நீங்கியவரை, கொண்டாடும் - விரும்புகின்ற, வீடு-முத்தியானது, ஊழின் - முறையாலே, உண்டாகும் - உங்கட்குக் கிடைக்கும்.

அறஞ் செய்தவர்க்கு முறையாலே வீடுபேறுண்டாகும், எ-ம். நீரிலெழுத்துப்போற் கணத்துள் அழிவதாகலின் உடம்பு பொய் எனப்பட்டது. உடம்பிற்கு மெய் என்று பெயர் வந்தது எதிர் மறை யிலக்கணை. பயன் கருதாது செய்யும் அறத்தால் மனத்தூய்மையும், மெய்யுணர்வும், வீடுபேறும் முறையானே உண்டாகும் என்க. (3)
 
 ----------------------------------------------------------------------------------------------------
     
காலம் நோக்கிச் செய்க

4.  எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது
   புண்ணியம் வந்தெய்து போதல்லாற்-கண்ணில்லான்
   மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே
   ஆங்கால மாகு மவர்க்கு.


(பதவுரை) யார்க்கும் - எத்தன்மையோர்க்கும், புண்ணியம் வந்து எய்துபோது அல்லால் - (முன்செய்த) புண்ணியம் வந்து கூடும்பொழுதல்லாமல், ஒரு கருமம்-ஒரு -காரியத்தை, எண்ணி-ஆலோசித்து, செய்யொண்ணாது - செய்து முடிக்க இயலாது; (அப்படிச் செய்யின் அது) கண் இல்லான்-குருடன், மாங்காய் விழ - மாங்காயை விழுவித்தற்கு, எறிந்த மாத்திரைக்கோல் ஒக்கும் - எறிந்த மாத்திரைக்கோலைப் போலும்; ஆம் காலம் - புண்ணியம் வந்து கூடும் பொழுது, அவர்க்கு ஆகும் - அவர்க்கு அக்காரியம் எளிதில் முடியும்.

புண்ணிய மில்லாதவன் செய்யத் தொடங்கிய காரியம் முடியப் பெறாது கைப்பொருளும் இழப்பன் எ-ம். மாத்திரை-அளவு. குருடன் மாங்காயும் பெறாது கோலும் இழப்பன் என்க. (4)
 
 -------------------------------------------------------------------------------------------------------
     
கவலையுறுதல் கூடாது

5.  வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
   பொருந்துவன போமினென்றாற் போகா-இருந்தேங்கி
   நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரந் தாம்நினைந்து
   துஞ்சுவதே மாந்தர் தொழில்.


(பதவுரை) வாராத-(ஊழால்) வரக்கூடாதவைகள், வருந்தி அழைத்தாலும் - பரிந்து அழைப்பினும், வாரா - வாராவாம்; பொருந்துவன - (ஊழால்) வரக்கூடியவை, போமின் என்றால் - போயிடுங்கள் என வெறுப்பினும், போகா-போகாவாம்; இருந்து ஏங்கி - (இவ்வுண்மை யறியாமல்) இருந்து ஏக்கமுற்று, நெஞ்சம் புண் ஆக - மனம் புண்ணாகும்படி. நெடுந்தூரம் தாம் நினைந்து - (அவற்றைத்) தாம் நெடுந்தூரம் சிந்தித்து, துஞ்சுவதே - மாண்டு போவதே, மாந்தர் தொழில் - மனிதர் தொழிலாக வுள்ளது.

இருவினைப் பயன்களாகிய இன்பதுன்பங்கள் தப்பாமல் வந்து கொண்டிருக்கும். ஆதலால் இன்பத்தை விரும்பியும் துன்பத்தை வெறுத்தும் கவலையுறுதல் தக்க
தன்று எ - ம். (5)

 
 
« Last Edit: September 14, 2011, 04:09:14 AM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நல்வழி
« Reply #1 on: September 14, 2011, 04:14:12 AM »
   
பேராசை கூடாது

6.  உள்ள தொழிய ஒருவர்க் கொருவர்சுகங்
   கொள்ளக் கிடையா குவலயத்தில்-வெள்ளக்
   கடலோடி மீண்டு கரையேறி னாலென்
   உடலோடு வாழும் உயிர்க்கு


(பதவுரை) ஒருவர்க்கு - ஒருவருக்கு, உள்ளது ஒழிய-(ஊழினால்) உள்ள அளவல்லாமல், ஒருவர் சுகம் - மற்றொருவருடைய சுகங்களை, கொள்ள,-அநுபவிக்க விரும்பினால், கிடையா - அவை கூடாவாம்; (ஆதலால்) குவலயத்தில்-பூமியில், உடலோடு வாழும் உயிர்க்கு - மக்களுடம்போடு கூடிவாழும் உயிர்களுக்கு, வெள்ளக் கடல் ஓடி-வெள்ள நீரையுடைய கடல்கடந்து சென்று (பொருள் தேடி), மீண்டு கரையேறினால் - திரும்பிவந்து கரையேறினாலும், என் - அதனாற் பயன் என்ன?

கப்பலேறிச் சென்று பெரும்பொருள் ஈட்டினாலும் ஊழினளவன்றி அநுபவித்தல் கூடாது
எ - ம். (6)

 
 -----------------------------------------------------------------------------------------------------------
     
ஞானிகள் பற்றற்றிருப்பர்

7.  எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
   பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை-நல்லார்
   அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போற்
   பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு


(பதவுரை) எல்லாப் படியாலும் - எல்லா வகையாலும், எண்ணினால் - ஆராயுமிடத்து, இவ்வுடம்பு - இந்த உடம்பானது, பொல்லாப் புழு-பொல்லாத புழுக்களுக்கும், மலி நோய்-நிறைந்த பிணிகளுக்கும், புல் குரம்பை - புல்லிய குடிசையாக இருக்கின்றது; நல்லார் - நல்லறிவுடையோர், அறிந்திருப்பார் - (இவ்வுடம்பினிழிவை) அறிந்திருப்பார்கள்; ஆதலினால்-ஆகையால் (அவர்கள்), கமல நீர் போல் - தாமரை இலையில் தண்ணீர் போல, பிறிந்து இருப்பார் - (உடம்போடு கூடியும்) கூடாதிருப்பார்கள்; பிறர்க்குப் பேசார் - (அதைக் குறித்துப்) பிறரிடத்தில் பேசமாட்டார்கள், ஆம்: அசை.

உடம்பின் இழிவை யறிந்த ஞானிகள் உடம்போடு கூடி இருப்பினும் அதிற் பற்றற்றிருப்பார்கள் எ - ம். (7)
 
 ----------------------------------------------------------------------------------------------------------
     
மரியாதையே தேடத்தக்கது

8.  ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த வாயினும் ஊழ்
   கூட்டும் படியன்றிக் கூடாவாம்-தேட்டம்
   மரியாதை காணு மகிதலத்தீர் கேண்மின்
   தரியாது காணுந் தனம


(பதவுரை) மகிதலத்தீர்-பூமியிலுள்ள மனிதர்களே, கேண்மின் - கேளுங்கள்; ஈட்டும் பொருள் - தேடுதற்குரிய பொருள்களானவை, முயற்சி எண் இறந்த ஆயினும்-முயற்சிகள் அளவில்லாதன வாயினும், ஊழ் கூட்டும்படி அன்றிக் கூடாவாம் - ஊழ் கூட்டு மளவினல்லாமல் சேராவாம்; தனம் தரியாது-ஊழினாலே (சேரினும்) அப்பொருள் நிலைபெறாது; தேட்டம் மரியாதை - (ஆதலினால் நீங்கள்) தேடத்தகுவது மரியாதையே யாம். ஆம்: அசை.

காணுமிரண்டும் முன்னிலை யசை. (8)
 
 ----------------------------------------------------------------------------------------------------------
     
குடிப்பிறந்தார் இல்லை எனமாட்டார்

9.  ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வாறு
   ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு
   நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
   இல்லையென மாட்டார் இசைந்து


(பதவுரை) ஆற்றுப் பெருக்கு அற்று - ஆற்றில் வெள்ளம் வற்றிப்போய், அடி சுடும் அந்நாளும்-(மணலானது வெயிலினாலே காய்ந்து நடப்பவருடைய) அடியைச் சுடுகின்ற அக்காலத்திலும், அவ் ஆறு - அந்த ஆறானது, ஊற்றுப் பெருக்கால் - ஊற்றுநீர்ப் பெருக்கினால், உலகு ஊட்டும் - உலகத்தாரை உண்பிக்கும்; (அது போல) நல்ல குடிப்பிறந்தார்-நற்குடியிற் பிறந்தவர், நல்கூர்ந்தார் ஆனாலும்-வறுமையுடையவரானாலும், ஏற்றவர்க்கு - இரந்தவர்க்கு, இசைந்து - மனமிசைந்து, இல்லையென மாட்டார்-இல்லையென்று சொல்லமாட்டார் (இயன்றது கொடுப்பர்).

உயர்ந்த குடியிற் பிறந்தவர் வறுமைக் காலத்திலும் இரந்தவர்க்குக் கொடாது விடார்  எ -ம். (9)
 
 ---------------------------------------------------------------------------------------------------------
     
இட்டு உண்டு இரும்

10.  ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
    மாண்டார் வருவரோ மாநிலத்தீர்-வேண்டா
    நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
    எமக்கென்னென் றிட்டுண் டிரும்.


(பதவுரை) மா நிலத்தீர்-பெரிய பூமியிலுள்ள மனிதர்களே, ஆண்டு ஆண்டு தோறும் அழுது புரண்டாலும் - வருடா வருடந் தோறும் அழுதுபுரண்டாலும், மாண்டார் வருவரோ - இறந்தவர் திரும்பி வருவரோ (வரமாட்டார்); வேண்டா - (ஆதலினால்) அழ வேண்டுவதில்லை; நமக்கும் அதுவழியே - நமக்கும் அம்மரணமே வழியாகும்; நாம் போம் அளவும்-நாம் இறந்துபோ மளவும், எமக்கு என் என்று-எமக்கு யாது சம்பந்தமென்று, இட்டு உண்டு இரும்-பிச்சையிட்டு நீங்களும் உண்டு கவலையற்று இருங்கள்.

இறந்தவர் பொருட்டு அழுதலாற் சிறிதும் பயனில்லாமையால் கவலையற்று அறஞ்செய்து 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நல்வழி
« Reply #2 on: September 14, 2011, 04:25:26 AM »
   
பசி கொடியது

11.  ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
    இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
    என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
    உன்னோடு வாழ்தல் அரிது.


(பதவுரை) இடும்பைகூர் என் வயிறே-துன்பம் மிகுக்கின்ற என்னுடைய வயிறே; ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்-(கிடையாதபோது) ஒருநாளுக் குணவை விட்டிரு என்றால் விட்டிராய்; இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - (கிடைத்தபோது) இரண்டு நாளுக்கு ஏற்றுக்கொள்ளென்றால் ஏற்றுக்கொள்ளாய்; ஒருநாளும் என் நோ அறியாய் - ஒரு நாளிலாயினும் என்னுடைய வருத்தத்தை அறியாய்; உன்னோடு வாழ்தல் அரிது - (ஆதலினால்) உன்னோடு கூடி வாழ்தல் எனக்கு அருமையாக இருக்கின்றது.

வயிற்றுக்கு உணவளிப்பதினும் வருத்தமான செயல் பிறிதில்லை எ - ம். (11)
 
 -------------------------------------------------------------------------------------------------------
     
உழவின் உயர்வு

12.  ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே-ஏற்றம்
    உமுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு


(பதவுரை) ஆற்றங்கரையின் மரமும்-ஆற்றின் கரையிலுள்ள மரமும், அரசு அறிய வீற்றிருந்த வாழ்வும் - அரசன் அறியப் பெருமையாக வாழ்கின்ற வாழ்க்கையும், விழும் அன்றே-அழிந்து விடும் அல்லவா; (ஆதலினால்) உழுது உண்டு வாழ்வு ஏற்றம் - உழுது பயிர்செய்து உண்டு வாழ்வதே உயர்வாகும்; அதற்கு ஒப்பு இல்லை - அதற்கு நிகரான வாழ்க்கை வேறில்லை; வேறு ஓர் பணிக்கு - வேறு வகையான தொழில் வாழ்க்கைக்கெல்லாம், பழுது உண்டு - தவறு உண்டு.

அம் : சாரியை. கண்டீர் : முன்னிலை அசை.

உழுது பயிர்செய்து வாழும் வாழ்க்கையே சுதந்தர முடையதும், குற்றமற்றதும், அழிவில்லாததும் ஆகிய வாழ்க்கையாகும் எ - ம். (12)
 

 -------------------------------------------------------------------------------------------------------
     
விலக்க இயலாதன

13.  ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
    சாவாரை யாரே தவிர்ப்பவர்-ஓவாமல்
    ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
    மெய்யம் புவியதன் மேல்.


(பதவுரை) அம் புவியதன்மேல் - அழகிய பூமியின்மேலே, மெய் - உண்மையாக, ஆவாரை அழிப்பார் யார் - வாழ்வதற்கு உரியாரை அழிக்கவல்லார் யாவர்? அது அன்றி - அது வல்லாமல், சாவாரை தவிர்ப்பவர் யார் - இறத்தற்கு உரியவரை இறவாமல் நிறுத்த வல்லார் யாவர்? ஓவாமல் - ஒழியாமல், ஐயம் புகுவாரை - பிச்சைக்குச் செல்வோரை, விலக்குவார் யார் - தடுக்க வல்லவர் யாவர்? ஏ மூன்றும் அசை.

ஊழினால் அடைதற்பாலனவாகிய ஆக்கக் கேடுகளைத் தவிர்க்க வல்லவர் ஒருவரும் இல்லை எ - ம். (13)
 

 
     ------------------------------------------------------------------------------------------------------

மானமே உயிரினும் சிறந்தது

14.  பிச்சைக்கு மூத்த குடி வாழ்க்கை பேசுங்கால்
    இச்சைபல சொல்லி இடித்துண்கை-சிச்சீ
    வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
    உயிர்விடுகை சால உறும


(பதவுரை) பேசுங்கால்-சொல்லுமிடத்து, பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை - பிச்சை எடுத்து உண்டலினும் (இழிவிற்) பெரிய குடிவாழ்க்கையாவது, பல இச்சை சொல்லி இடித்து உண்கை - பலவாகிய இச்சைகளைப்பேசி (ஒருவரை) நெருங்கி வாங்கி உண்ணுதலாம்; சிச்சீ-சீ சீ (இது என்ன செய்கை), வயிறு வளர்க்கைக்கு-இப்படி வயிறு வளர்ப்பதைப் பார்க்கிலும், மானம் அழியாது - மானங் கெடாமல் உயிர் விடுகை - உயிரை விடுதல், சால உறும் - மிகவும் பொருந்தும்.

பிறரிடத்திலே இச்சை பேசி வாங்கி உண்டு மானம் இழந்து உயிர் வாழ்தலினும் உயிரை விட்டு, மானத்தை நிறுத்துதல் உயர்வுடைத்து எ - ம். (14)
 
 -----------------------------------------------------------------------------------------------------
     
திருவைந்தெழுந்தின் சிறப்பு

15.  சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு
    அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம்
    இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம்
    விதியே மதியாய் விடும


(பதவுரை) சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு - சிவாயநம வென்று தியானித்துக் கொண்டிருப்பவருக்கு, ஒரு நாளும் அபாயம் இல்லை - ஒருபொழுதும் துன்பம்
உண்டாகாது; இதுவே-இஃதொன்றுமே, உபாயம்-(விதியைவெல்லுதற் கேற்ற) உபாயமும், மதி - இது வல்லாத எல்லா அறிவுகளும், விதியே ஆய்விடும் - விதியின்படியே ஆகிவிடும்.


சிவபெருமானுக்குரிய திருவைந்தெழுத்தை இடையறாது நினைந்துகொண் டிருப்போர்க்கு விதியால் வரும் துன்பமில்லை; ஏனையர்க்கு உண்டு எ - ம். (15)
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நல்வழி
« Reply #3 on: September 14, 2011, 04:30:12 AM »
   
வியத்தகு விழுப்பொருள்

16.  தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணங்கொடையால்
    கண்ணீர்மை மாறாக் கருணையால்-பெண்ணீர்மை
    கற்பழியா ஆற்றால் கடல்சூழ்ந்த வையகத்துள்
    அற்புதமாம் என்றே அறி


(பதவுரை) தண்ணீர் நில நலத்தால் - தண்ணீரானது நிலத்தினது நன்மையினாலும், தக்கோர் குணம் கொடையால் - நல்லோருடைய குணமானது ஈகையினாலும். கண் நீர்மை மாறாக் கருணையால் - கண்களுடைய குணமானது நீங்காத அருளினாலும், பெண் நீர்மை கற்பு அழியா ஆற்றால் - பெண்களுடைய குணமானது கற்புநிலை கெடாத வழியினாலும், கடல் சூழ்ந்த வையகத்துள் - கடல் சூழ்ந்த பூமியினிடத்து, அற்புதம் ஆம் - வியக்கத்தக்க மேன்மையுடையனவாகும், என்று அறி - என்று நீ அறிவாயாக.

நில நன்மையினாலே தண்ணீருக்கும், கொடையினாலே நல்லோருக்கும், அருளினாலே கண்களுக்கும், கற்பினாலே பெண்களுக்கும் பெருமை உண்டாகும் எ - ம். (16)
 
 ----------------------------------------------------------------------------------------------------------
     
தீவினையே வறுமைக்கு வித்து

17.  செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
    எய்த வருமோ இருநிதியம்-வையத்து
    அறும்பாவம் என்னவறிந்து அன்றிடார்க் கின்று
    வெறும்பானை பொங்குமோ மேல


(பதவுரை) வையத்துப் பாவம் அறும் என்ன அறிந்து - பூமியிலே (அறஞ்செய்தலினாலே) பாவம் நீங்கும் என்று உணர்ந்து, அன்று இடார்க்கு - அக்காலத்திலே ஈயாதவருக்கு, செய் தீவினை இருக்க - செய்த அப்பாவம் (வறுமைக்கு வித்தாய்) இருக்க, இன்று தெய்வத்தை நொந்தக்கால் - இப்பொழுது கடவுளை வெறுத்தால், இரு நிதியம் எய்த வருமோ - பெரிய திரவியம் பொருந்த வருமோ? (வராது.) வெறும் பானைமேல் பொங்குமோ - வெறும் பானை (அடுப்பிலே வைத்து எரித்தால்) மேலே பொங்குமோ; (பொங்காது.)

வறியவர் அவ்வறுமைக்கு வித்தாகிய தீவினையைச் செய்த தம்மை நோவாது, தெய்வத்தை நோதலிற் பயன் இல்லை எ-ம். (17)
 
 ----------------------------------------------------------------------------------------------------------
     
இடிப்பார்க்கு ஈவர்

18.  பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
    உற்றார் உகந்தார் எனவேண்டார்-மற்றோர்
    இரணங் கொடுத்தால் இடுவர் இடாரே
    சரணங் கொடுத்தாலுந் தாம.


(பதவுரை) பேர் உலகில் - பெரிய நிலவுலகத்திலே, பெற்றார் - (எம்மைப்) பெற்றவர், பிறந்தார் - (எமக்குப்) பிறந்தவர்,பெருநாட்டார் - (எம்முடைய) பெரிய தேசத்தார், உற்றார் - (எம்முடைய) சுற்றத்தார், உகந்தார் - (எம்மை). நேசித்தவர், என வேண்டார் - என்று விரும்பாதவராகிய உலோபிகள், மற்றோர் - பிறர், இரணம் கொடுத்தால் - தம்முடம்பிலே புண்செய்தால், இடுவர் - (அவருக்கு எல்லாம்) கொடுப்பர்; சரணம் கொடுத்தாலும் இடார் - (முன் சொல்லப்பட்டவர்) அடைக்கலம் புகுந்தாராயினும் அவருக்கு ஒன்றுங் கொடார். ஏ தாம் இரண்டும் அசை.

உலோபிகள் தம்மைத் துன்புறுத்தும் கொடியவர்களுக்கன்றி நலம் புரியும் தாய் தந்தையர் முதலாயினோருக்குக் கொடார் எ - ம். (18)
 
 ----------------------------------------------------------------------------------------------------------
     
பேரின்பம் நாடாப் பேதமை

19.  சேவித்துஞ் சென்றிரந்துந் தெண்ணீர்க் கடல்கடந்தும்
    பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப்பம்
    பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
    நாழி அரிசிக்கே நாம


(பதவுரை) வயிற்றின் கொடுமையால் - வயிற்றினுடைய (பசிக்) கொடுமையினாலே, சேவித்தும் - (பிறரைச்) சேவித்தும், சென்று இரந்தும் - (பலரிடத்தே) போய் யாசித்தும், தெள்நீர்க் கடல் கடந்தும் - தெளிவாகிய நீரையுடைய கடலைக் கடந்து வேறு நாடு சென்றும், பாவித்தும் - (ஒருவரைப் பெரியவராகப்) பாவித்தும், பார் ஆண்டும் - பூமியை ஆண்டும், பாட்டு இசைத்தும் - (செல்வரைப் புகழ்ந்து) பாட்டுப் பாடியும், நாம் - நாம், உடம்மை - இந்த உடம்பினை, நாழி அரிசிக்கே - நாழி யரிசிக்காகவே, பாழின் - வீணிலே, போவிப்பம் - செலுத்துகின்றேம்.

வீட்டு நெறியிற் செல்லும் பொருட்டு அரிதாகக் கிடைத்த மனிதவுடம்பினை உணவு தேடுவதிலேயே கழிப்பது அறியாமையாகும் எ - ம். (19)
 
 -----------------------------------------------------------------------------------------------------
     
பரத்தையரால் செல்வம் பாழாம்

20.  அம்மி துணையாக ஆறிழிந்த ஆறொக்குங்
    கொம்மை முலைபகர்வார்க் கொண்டாட்டம்-இம்மை
    மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
    வெறுமைக்கு வித்தாய் விடும்.


(பதவுரை) கொம்மை முலை - திரட்சி பொருந்திய தனங்களை, பகர்வார்க் கொண்டாட்டம் - விற்கின்ற பரத்தையரை (இன்பங்காரணமாகக்) கொண்டாடுதல், அம்மி துணையாக - அம்மிக்கல்லே துணையாக, ஆறு இழிந்தவாறு ஒக்கும் - ஆற்று வெள்ளத்தில் இறங்கிய தன்மையைப்போலும்; (அன்றியும்) மாநிதியம் போக்கி - (அது) பெரிய செல்வத்தை அழித்து, வெறுமைக்கு வித்து ஆய்விடும் - வறுமைக்குக் காரணமாகிவிடும்; (ஆதலால்) இம்மை மறுமைக்கு நன்று அன்று - அஃது இப்பிறப்பிற்கும் வருபிறப்பிற்கும் நல்லதாகாது.

விலைமகளிரைச் சேர்பவன் தான் கருதிய இன்பத்தை யடையாமல், வறுமையையும், பழிபாவங்களையும் அடைந்து இம்மை மறுமைகளில் துன்புறுவன் எ - ம். (20)
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நல்வழி
« Reply #4 on: September 14, 2011, 04:35:13 AM »
   
வஞ்சனையில்லார்க்கு வாய்க்கும் நலன்

21   நீரு நிழலு நிலம்பொதியும் நெற்கட்டும்
    பேரும் புகழும் பெருவாழ்வும்-ஊரும்
    வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க்கு என்றுந்
    தருஞ்சிவந்த தாமரையாள் தான


(பதவுரை) சிவந்த தாமரையாள் - செந்தாமரை மலரில் இருக்கின்ற திருமகள், வஞ்சம் இல்லார்க்கு - வஞ்சனை இல்லாதவருக்கு, நீரும் - நீர்வளத்தையும், நிழலும் - நிழல்வளத்தையும், நிலம்பொதியும் நெற்கட்டும் - நிலத்திலே நிறையும் நெற்போரையும், பேரும் - பேரையும், புகழும் - கீர்த்தியையும், பெரு வாழ்வும் - பெரிய வாழ்வையும், ஊரும் - கிராமத்தையும், வரும் திருவும் - வளர்கின்ற செல்வத்தையும், வாழ்நாளும்-நிறைந்த ஆயுளையும், என்றும் தரும் - எந்நாளும் கொடுத்தருளுவள்.

வஞ்சனை யில்லாதவருக்கு இலக்குமியினது திருவருளினாலே எல்லா நலமும் உண்டாகும்      எ - ம். (21)
 ----------------------------------------------------------------------------------------------------------
 
     
பாவிகளின் பணம்

22.  பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
    கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டிங்
    காவிதான் போயினபின்பு யாரே யநுபவிப்பார்
    பாவிகள் அந்தப் பணம்.


(பதவுரை) பணத்தைப் பாடுபட்டுத்தேடி - பணத்தினை வருந்தி யுழைத்துச் சேர்த்து, புதைத்து வைத்து - (உண்ணாமலும் அறஞ்செய்யாமலும்) பூமியிலே புதைத்து வைத்து, கேடு கெட்ட மானிடரே - நன்மை யெல்லாவற்றையும் இழந்த மனிதர்களே, கேளுங்கள் - (நான் கூறுவதைக்) கேட்பீர்களாக; கூடு விட்டு - உடம்பினை விட்டு, ஆவி போயின பின்பு - உயிர் நீங்கிய பின்பு, பாவிகாள் - பாவிகளே, அந்தப் பணம் - அந்தப் பணத்தை, இங்கு ஆர் அனுபவிப்பார் - இவ்விடத்து யாவர் அநுபவிப்பார்? தான், ஏ இரண்டும் அசை.

அறத்திற்கும் இன்பத்திற்கும் சாதனமாகிய பொருளை வீணிலே பூமியிற் புதைத்து வைப்தைப் பார்க்கிலும் அறியாமையில்லை எ - ம். (22)
 
 ---------------------------------------------------------------------------------------------------------
     
வழக்கோரஞ் சொன்னவர் மனை பாழ்

23.  வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
    பாதாள மூலி படருமே-மூதேவி
    சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
    மன்றோரஞ் சொன்னார் மனை.


(பதவுரை) மன்று ஓரஞ் சொன்னார் மனை-தருமசபையிலே ஓரஞ் சொன்னவருடைய வீட்டிலே, வேதாளம் சேரும்-பேய்கள் (வந்து) சேரும்; வெள்ளெருக்குப் பூக்கும் - வெள்ளெருக்கு (முளைத்து) மலரும்; பாதாளமூலி படரும் - பாதாளமூலி யென்னும் கொடி படரும்; மூதேவி சென்று இருந்து வாழ்வள் - மூதேவியானவள் போய் நிலைபெற்று வாழ்வாள்; சேடன் குடிபுகும் - பாம்புகள் குடியிருக்கும்.

ஏ ஐந்தும் அசை.

நீதிமன்றத்திலே வழக்கோரஞ் சொன்னவர் குடும்பத்தோடு அழிவதுமன்றி, அவர் குடியிருந்த வீடும் பாழாம் எ - ம். (23)

ஓரம் - நடுவுநிலையின்மை.

 
 ------------------------------------------------------------------------------------------------------
     
வாழ்க்கை மாண்பு ஐந்து

24.  நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
    ஆறில்லா ஊருக் கழகுபாழ்-மாறில்
    உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
    மடக்கொடி யில்லா மனை.


(பதவுரை) நீறு இல்லா நெற்றி பாழ் - விபூதியில்லாத நெற்றி பாழாகும்; நெய் இல்லா உண்டி பாழ் - நெய்யில்லாத உணவு பாழாகும்; ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ் - நதியில்லாத ஊருக்கு அழகு பாழாகும், மாறு இல் உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ் - மாறுபடாத சகோதரர் இல்லாத உடம்பு பாழாகும்; மடக்கொடி இல்லா மனை பாழே - (இல்லறத்திற்குத்தக்க) மனைவியில்லாத வீடு பாழேயாகும்.

திருநீற்றினாலே நெற்றியும், நெய்யினாலே உணவும், நதியினாலே ஊரும், துணைவராலே உடம்பும், மனைவியினாலே வீடும் சிறப்படையும் எ - ம். (24)
 

 
--------------------------------------------------------------------------------------------------------
     
வரவறிந்து செலவிட வேண்டும்

25.  ஆன முதலில் அதிகஞ் செலவானான்
    மானம் அழிந்து மதிகெட்டுப்-போனதிசை
    எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புத் தீயனாய்
    நல்லார்க்கும் பொல்லனாம் நாடு


(பதவுரை) ஆன முதலில் செலவு அதிகம் ஆனால்-தனக்குக் கிடைத்த முதற்பொருளுக்குச் செலவு மிகுதி செய்யலானவன், மானம் அழிந்து-பெருமை கெட்டு, மதி கெட்டு-அறிவு இழந்து, போனதிசை எல்லார்க்கும் கள்ளன் ஆய் - தான் ஓடிப்போன திசையினும் எல்லார்க்கும் திருடனாகி, ஏழ் பிறப்பும் தீயன் ஆய் - எழுவகைப் பிறப்புக்களினும் பாவம் உடையவனாகி, நல்லார்க்கும் பொல்லன் ஆம் - (தன்னிடத்து அன்புவைத்த) நன்மக்களுக்கும் பொல்லாதவனாவான்; நாடு (இதனை) ஆராய்ந்து அறிவாயாக.

வரவுக்கு மிகுதியாகச் செலவு செய்பவன் பழிபாவங்களை அடைவான். ஆதலின், வரவுக்குத் தக்க செலவு செய்ய வேண்டும் எ - ம். (25)
 
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நல்வழி
« Reply #5 on: September 14, 2011, 04:39:45 AM »
பசி வந்திடப் பத்தும் பறக்கும்

26.  மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
    தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை-தேனின்
    கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
    பசிவந் திடப்பறந்து போம்.


(பதவுரை) பசி வந்திட-பசிநோய் வந்தால், மானம்-மானமும், குலம் - குடிப்பிறப்பும், கல்வி - கல்வியும், வண்மை - ஈகையும், அறிவுடைமை-அறிவுடைமையும், தானம் - தானமும், தவம் - தவமும், உயர்ச்சி-உயர்வும், தாளாண்மை-தொழின் முயற்சியும், தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் - தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லையுடைய மங்கையர்மேல் ஆசை வைத்தலும் ஆகிய, பத்தும் பறந்துபோம் - இப் பத்தும் விட்டோடிப்போம்.

மான முதலிய எல்லா நலங்களையும் கெடுத்தலினாலே பசி நோயினுங் கொடியது பிறிதில்லை, எ - ம்.

தானம் தக்கார்க்கு நீருடன் அளிப்பது;பதவியும் ஆம் (26)

 
 -----------------------------------------------------------------------------------------------------------
     
எல்லாம் இறை செயல்

27.  ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்
    அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை
    நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
    எனையாளும் ஈசன் செயல்.


(பதவுரை) ஒன்றை நினைக்கின் - ஒரு பொருளைப் பெற நினைத்தால், அது ஒழிந்திட்டு ஒன்றாகும் - அப்பொருள் கிடையாமல் வேறொரு பொருள் கிடைத்தாலும கிடைக்கும்; அன்றி அதுவரினும் வந்து எய்தும் - அப்படி யல்லாமல் அப்பொருளே வந்த கிடைத்தாலும் கிடைக்கும்; ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் - (இன்னும்) ஒரு பொருளை நினையாதிருக்க முன்னே அது தானே வந்து நின்றாலும் நிற்கும்; எனை ஆளும் ஈசன் செயல் - (இவைகளெல்லாம்) என்னை ஆண்டருளும் கடவுளுடைய செய்கைகளாகும்.

இருவினைகளுக் கீடாக இன்ப துன்பங்களை ஊட்டும் கடவுளுடைய கருத்தின்படியே யன்றி, உயிர்களுடைய கருத்தின்படி ஒன்றும் நடவாது எ - ம். (27)
 
 -----------------------------------------------------------------------------------------------------------
     
மனவமைதி வேண்டும்

28.  உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
    எண்பது கோடிநினைந்து எண்ணுவன-கண்புதைந்த
    மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
    சாந்துணையுஞ் சஞ்சலமே தான்.


(பதவுரை) உண்பது, நாழி - உண்பது ஒரு நாழியரிசி யன்னமேயாகும்; உடுப்பது நான்கு முழம் - உடுப்பது நான்கு முழ உடையேயாகும்; (இப்படியாகவும்) நினைந்து எண்ணுவன எண்பது கோடி - நினைத்து எண்ணும் காரியங்களோ எண்பது கோடியாகின்றன; (ஆதலினால்) கண் புதைந்த - அகக்கண் குருடாயிருக்கிற. மாந்தர் குடி வாழ்க்கை - மக்களின் குடிவாழ்க்கையானது. மண்ணின் கலம்போல - மட்கலம்போல. சாம் துணையும் - இறக்குமளவும். சஞ்சலமே - (அவர்க்குத்) துன்பமாகவே இருக்கிறது.

உள்ளதே போதம் என மனம் அமைந்திராதவர்கள் இறக்கும் வரையில் சஞ்சலமே அடைவார்கள் எ - ம். (28)
 
 -----------------------------------------------------------------------------------------------------------
     
கொடையாளருக்கு எல்லாரும் உறவினர்

29.  மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
    இரந்தழைப்பார் யாவருமங் கில்லை-சுரந்தமுதம்
    கற்றா தரல்போற் கரவாது அளிப்பரேல்
    உற்றார் உலகத் தவர்.


(பதவுரை) மரம் பழுத்தால் - மரம் பழுத்திருந்தால். வா என்று வௌவாலைக் கூவி இரந்து அழைப்பார் - (இப் பழத்தைத் தின்னுதற்கு) வா என்று வௌவாலைக் கூவி வேண்டி அழைப்பவர், அங்கு யாவரும் இல்லை - அம் மரத்தருகில் ஒருவரும் இல்லை; கன்று ஆ அமுதம் சுரந்து தரல்போல் - கன்றையுடைய பசுவானது பாலைச் சுரந்து கொடுத்தல்போல, கரவாது அளிப்பரேல் - ஒளிக்காமற் கொடுப்பாராயின், உலகத்தவர் உற்றார் - உலகத்தார் (அவ் வௌவால் போலத் தாமே வந்து) உறவினராவார்.

கொடையாளர்க்கு எல்லாரும் தாமே உறவினராவார் எ - ம் (29)
 
 ----------------------------------------------------------------------------------------------------------
     
விதியின் தன்மை

30.  தாந்தாமுன் செய்தவினை தாமே யநுபவிப்பார்
    பூந்தா மரையோன் பொறிவழியே-வேந்தே
    ஒறுத்தாரை யென்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
    வெறுத்தாலும் போமோ விதி.


(பதவுரை) வேந்தே - அரசனே, தாம் தாம் முன் செய்த வினை - தாம் தாம் முற்பிறப்பிலே செய்த நல்வினை தீவினைகளை, பூந்தாமரையோன் பொறி வழியே - தாமரை மலரில் இருக்கின்ற பிரமன் விதித்தபடியே, தாமே அனுபவிப்பார் - தாமே அனுபவிப்பார்கள் ; ஒறுத்தாரை என் செயலாம் - (தீவினையினாலே தூண்டப்பட்டுத்) தீங்கு செய்யதவரை நான் யாது செய்யலாம்; ஊர் எல்லாம் ஒன்றா வெறுத்தாலும் விதி போமோ - ஊரிலுள்ளார் எல்லாருந் திரண்டு வெறுத்தாலும் விதி போகுமா (போகாது).

தமக்கு ஒருவன் துன்பஞ் செய்யின், அத தாம் முன் செய்த தீவினைக்கீடாகக் கடவுளாலே தமக்குக் கிடைத்ததென்று அமைவதே அறிவு எ - ம்.(30)
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நல்வழி
« Reply #6 on: September 14, 2011, 04:45:02 AM »
   
நல்லன நான்கு

31.  இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று சாதலும்
    ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று-வழுக்குடைய
    வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்
    தாரத்தின் நன்று தனி.


(பதவுரை) இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று - இலக்கண வழுக்களையுடைய செய்யுளினும் (அஃதில்லாத) வழக்கு நல்லது, உயர்குலத்தின் சாலும் ஒழுக்கம் நன்று - உயர் குலத்தினும் (அஃதில்லாத) மாட்சிமைப்பட்ட ஒழுக்கம் நல்லது; வழுக்கு உடைய வீரத்தின் விடா நோய் நன்று - தவறுதலையுடைய வீரத்தினும் தீராப்பிணி நல்லது ; பழிக்கு அஞ்சாத் தாரத்தின் தனி நன்று - பழிச் சொல்லுக்கு அஞ்சாத மனைவியோடு கூடி வாழ்தலினும் தனியே இருத்தல் நல்லது.

இலக்கணப் பிழையுடைய பாட்டும், நல்லொழுக்க மில்லாத உயர்குலமும், தவறுதலடையும் வீரமும், கற்பில்லாத மனைவியோடு கூடிய இல்வாழ்க்கையும் தீரா வசையை விளைவிக்கும் எ - ம். இசை - உலக வழக்காகிய சொற்றொடர். (31)
 
 -----------------------------------------------------------------------------------------------------
     
செல்வநிலையாமையறிந்து உதவுக

32.  ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆஞ்செல்வம்
    மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர்-சோறிடுந்
    தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
    உண்ணீர்மை வீறும் உயர்ந்து.


(பதவுரை) மா நிலத்தீர் - பெரிய பூமியுலுள்ளவர்களே, ஆறு இடும் மேடும் மடுவும் போல் - ஆற்று வெள்ளத்தினால் உண்டாக்கப்படும் மேடும் பள்ளமும்போல. செல்வம் ஏறிடும் மாறிடும்-செல்வம் வளர்வதும் தேய்வதுமாய் இருக்கும்; (ஆதலினால்) சோறு இடும் - (இரப்பவருக்கு உண்ண) அன்னத்தை இடுங்கள்; தண்ணீரும் வாரும் - (பருகுதற்கு நல்ல) தண்ணீரையும் வாருங்கள்; தருமமே சார்பு ஆக - (இப்படிச் செய்து வருவீர்களானால்) இந்தத் தருமமே துணையாக, உள்நீர்மை உயர்ந்து வீறும்-உள்ளத்திலே தூயதன்மை ஓங்கி விளங்கும். ஆம்: அசை.

நிலையில்லாத செல்வம் உள்ளபொழுதே இரப்பவர்களுக்குச் சோறும் தண்ணீரும் அளித்தால் மனம் தூய்மையுற்று விளங்கும் எ - ம். (32)
 
 ----------------------------------------------------------------------------------------------------------
     
வன்சொல்லும் இன்சொல்லும்

33.  வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
    பட்டுருவுங் கோல்பஞ்சில் பாயாது-நெட்டிருப்புப்
    பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
    வேருக்கு நெக்கு விடும்.


(பதவுரை) வேழத்தில்பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது - (வலிய) யானையின் மேலே பட்டுருவும் அம்பானது (மெல்லிய) பஞ்சின்மேலே பாயாது; நெடு இருப்புப்பாரைக்கு நெக்கு விடாப்பாறை - நெடுமையாகிய இருப்புப் பாரைக்குப் பிளவாத கருங்கற் பாறையானது, பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும் பச்சை மரத்தின் வேருக்குப் பிளந்துபோம்; (அவ்வாறே) வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் - வன்சொற்கள் இன்சொற்களை வெல்ல மாட்டாவாகும்; (இன் சொற்களே வெல்லும்)

வன் சொல் தோற்கும்; இன்சொல் செல்லும் எ - ம். (33)
 
 --------------------------------------------------------------------------------------------------------
     
பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை

34.  கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின்
    எல்லாருஞ் சென்றங்கு எதிர்கொள்வர்-இல்லானை
    இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றெடுத்த தாய்வேணடாள்
    செல்லாது அவன்வாயிற் சொல்.


(பதவுரை) கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின் - (ஒருவன்) படியாதவனேயாயினும் (அவன்) கையிலே பொருள் மாத்திரம் இருந்தால், எல்லோரும் சென்று எதிர்கொள்வர் - (அவனை) யாவரும் போய் எதிர்கொண்டு உபசரிப்பர்; இல்லானை இல்லாளும் வேண்டாள் - (படித்தவனே யாயினும் பொருளே) இல்லாதவனை (அவன்) மனைவியும் விரும்பாள்; ஈன்று எடுத்த தாய் வேண்டாள் - (அவனைப்) பெற்று வளர்த்த அன்னையும் விரும்பாள் ; அவன் வாயில் சொல் செல்லாது - அவன் வாயிற் பிறக்குஞ் சொல்லானது பயன்படாது. அங்கு, மற்று: அசை.

கல்லாதவனே யாயினும் பொருளுடையவனை. எல்லாரும் மதிப்பர்; கற்றவனே யாயினும் பொருளில்லாதவனை ஒருவரும் மதியார் எ - ம். (34)
 
 ----------------------------------------------------------------------------------------------------
     
உரைப்பினும் பேதை உணரான்

35.  பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்
    ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே-தூவா
    விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
    உரைத்தாலுந் தோன்றா துணர்வு.


(பதவுரை) பூவாதே காய்க்கும் மரமும் உள - பூவாமலே காய்க்கின்ற மரங்களும் உண்டு; (அதுபோல) மக்களுளும்ஏவாதே நின்று தாம் உணர்வார் உளர் - மனிதர்களுள்ளும், ஏவாமலே இருந்து தாமே அறிந்து செய்ய வல்லவரும் உண்டு ; தூவா விரைத்தாலும் நன்று ஆகா வித்து என - தூவி விரைத்தாலும் முளைத்துப் பயன்படாத விதைபோல, பேதைக்கு உரைத்தாலும் உணர்வு தோன்றாது-மூடனுக்கு (எடுத்து விளங்கச்) சொன்னாலும் (அதனை அறியும்) அறிவு (அவனிடத்து) உண்டாகாது.

குறிப்பறிந்து செய்வாரே அறிவுடையோர் ; அறிவிக்கவும் அறிந்து செய்யாதவர் மூடர்  எ - ம். (35)
 

 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நல்வழி
« Reply #7 on: September 14, 2011, 04:51:08 AM »
பிறர்மனை விரும்பாமை

36.  நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
    கொண்ட கருவளிக்குங் கொள்கைபோல்-ஒண்டொடீ
    போதந் தனங்கல்வி பொன்றவருங் காலம்அயல்
    மாதர்மேல் வைப்பார் மனம்.


(பதவுரை) ஒள் தொடீ - ஒள்ளிய வளையலை அணிந்தவளே, நண்டு சிப்பி வேய் கதலி-நண்டும் சிப்பியும் மூங்கிலும் வாழையும் ; நாசம் உறும் காலத்தில் - தாம் அழிவை அடையுங் காலத்திலே ; கொண்ட கரு அளிக்கும் கொள்கைபோல் - (முறையே தாம்) கொண்ட (குஞ்சும் முத்தும் அரிசியும் காய்க்குலையும் ஆகிய) கருக்களை ஈனுந்தன்மைபோல, (மனிதர்கள்) போதம் தனம் கல்வி பொன்ற வரும் காலம்-ஞானமும் செல்வமும் வித்தையும் அழிய வருங் காலத்திலே, அயல் மாதர்மேல் மனம் வைப்பார் - பிறமகளிர் மேல் மனம் வைப்பார்கள்.

ஒருவன் மனைவியையன்றிப் பிற மகளிரை இச்சிக்கின், அஃது அவனிடத்துள்ள ஞானம் செல்வம் கல்வி என்னும் மூன்றுங் கெடுதற்கு அறிகுறியாகும் எ - ம். (36)
 
 -------------------------------------------------------------------------------------------------------
     
வீடடைவார்க்கு விதியில்லை

37.  வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
    அனைத்தாய நூலகத்தும் இல்லை-நினைப்பதெனக்
    கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய்
    விண்ணுறுவார்க் கில்லை விதி.


(பதவுரை) வினைப்பயனை வெல்வதற்கு - இருவினைப் பயனை வெல்வதற்கு (உபாயம்), வேதமுதலாம் அனைத்து ஆயநூல் அகத்தும் இல்லை - வேத முதலாகிய எல்லா நூல்களையும் கற்பதன் கண்ணும் இல்லை, (எனினும்) நெஞ்சே - மனமே, கவலைப்படேல் - கவலையுறாதே, மெய் விண் உறுவார்க்கு - மெய்யாகிய வீட்டு நெறியில் நிற்பவர்க்கு, நினைப்பது எனக் கண்உறுவது அல்லால் - (அவர்) நினைப்பதுபோலத் தோன்றுவது அல்லாமல், விதி இல்லை-ஊழ் இல்லையாம்.

முத்தி நெறியாகிய தியான சமாதிகளினாலன்றி நூல்களைக் கற்றலினால் வினையைக் கடக்க வொண்ணாது எ - ம்.

விண் - பரவெளியும் ஆம் ; இப்பாட்டிற்கு வேறு வகையாகப் பொருள் கூறுவாரும் உளர். (37)

 
 ----------------------------------------------------------------------------------------------------------
     
இறைவனுடன் இரண்டற்று நில்

38  நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
    அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே-நின்றநிலை
    தானதாந் தத்துவமாஞ் சம்பறுத்தார் யாக்கைக்குப்
    போனவா தேடும் பொருள்
.

(பதவுரை) நன்று என்றும் - (இது) நல்லது என்றும், தீது என்றும் - (இது) தீயது என்றும், நான் என்றும் - (இது செய்தவன்) நான் என்றும், தான் என்றும் - (இது செய்தவன்) அவன் என்றும், அன்று என்றும்-(இது) அன்று என்றும், ஆம் என்றும்-(இது) ஆகும் என்றும், ஆகாதே நின்ற நிலை - பேதஞ் செய்யாமல் (இரண்டறக்கலந்து) நின்ற நிலையே, தான் அது ஆம் தத்துவம் ஆம் - ஆன்மாவாகிய தான் (பதியாகிய) அதுவாகுகின்ற உண்மை நிலையாகும் ; தேடும் பொருள் - தன்னின் வேறாக மெய்ப்பொருளாகிய கடவுளைத் தேடுவது, சம்பு அறுத்தார் யாக்கைக்குப் போனவா - சம்பை அறுத்தவர் (அதனைக் கட்டுதற்கு அதுவே அமையுமென்று அறியாமல்) கயிறு தேடிப் போனது போலும்.

உயிரினுள்ளே கடவுளைக் கண்டு அதனோடு பேதமின்றிக் கலந்து நிற்கும் நிலையே உண்மை நிலை எ - ம். சம்பு-ஓர் வகைப் புல். (38)
 -------------------------------------------------------------------------------------------------------
 
     
முப்பது ஆண்டிற்குள் முதல்வனை யறி

39.  முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
    தப்பாமல் தன்னுள் பெறானாயின்-செப்புங்
    கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
    முலையளவே ஆகுமாம் மூப்பு.


(பதவுரை) முப்பது ஆம் ஆண்டு அளவில் - முப்பது வயதினளவிலே, மூன்று அற்று-முக்குற்றமும் ஒழியப்பெற்று, ஒரு பொருளை - கேவலப்பொருளாகிய கடவுளை, தப்பாமல் தன்னுள் பெறான் ஆயின் - (ஒருவன்) தவறாமல் தன்னுள்ளே (அனுபவ உணர்வால்) அடையானாயின், காரிகையார் தங்கள் மூப்பு முலை அளவே ஆகுமாம் - அழகிய மாதர்கள் முதுமையில் (பதியுடன் கூடி இன்பம் நுகர்தலின்றி) முலையினை யுடையராதல் மாத்திரமே போல, செப்பும் கலை அளவே ஆகும்-(அவன் முதுமையில் பதியுடன் கூடி இன்பம் நுகரப் பெறாமல்) கற்கும் கல்வியை உடையவனாதல் மாத்திரமே ஆவன்.

மூப்பு வருவதற்குள்ளே முக்குற்றமற்று மெய்ப்பொருளையடைந்தின்புற முயலல் வேணடும் எ - ம். முக்குற்றம் காம வெகுளி மயக்கங்கள். ஆணவம் கன்மம் மாயை ஆகிய பாசம் மூன்றும் என்னலும் ஆம். இப்பாட்டிற்கு யாம் கூறிய பொருளே பொருத்தமுடைத்தாலை ஓர்ந்துணர்க. (39)
 
-------------------------------------------------------------------------------------------------------
 
     
ஒத்த கருத்தமை ஒண்தமிழ் நூல்கள்

40.  தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
    மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
    திருவா சகமும் திருமூலர் சொல்லும்
    ஒருவா சகமென் றுணர்.


(பதவுரை) தேவர் குறளும் - திருவள்ளுவ நாயனாருடைய திருக்குறளும், திரு நான்மறை முடிவும் - சிறப்புப் பொருந்தியநான்கு வேதங்களின் முடிவாகிய உபநிடதங்களும், மூவர் தமிழும்-(திருஞான சம்பந்தமூர்த்திநாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் சமயகுரவர்) மூவர்களுடைய (தேவாரமாகிய) தமிழ் வேதமும், முனிமொழியும் - வாதவூர் முனிவராகிய மாணிக்கவாசகர் மொழிந்தருளிய, கோவை திருவாசகமும் - திருக்கோவையார் திருவாசகங்களும், திருமூலர் சொல்லும் - திருமூல நாயனாருடைய திருமந்திரமும், ஒரு வாசகம் என்று உணர் - ஒரு பொருளையே குறிப்பனவென்று அறிவாயாக.

திருக்குறள் முதலிய இவையெல்லாம் பொருண் முடிவு வேறு படாத மெய்ந்நூல்கள் எ - ம். 'முனிமொழியும்' என்பதற்கு 'வியாச முனிவருடைய வேதாந்த சூத்திரம், என்றும் பொருள் கூறுவர். (40)



                ***நல்வழி மூலமும் உரையும்முற்றிற்று***
 
 
     

                    

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218351
  • Total likes: 23050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ நல்வழி - ஒளவையார் ~
« Reply #8 on: May 29, 2012, 11:16:38 AM »
Nal Vazi by Avvaiyar   


Click On The Image


« Last Edit: June 24, 2012, 07:13:14 PM by Global Angel »