Author Topic: இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு!  (Read 33499 times)

Offline Yousuf

ஸஃபா மலை மீது...

அபூதாலிப் தனக்கு பாதுகாப்பளிப்பார் என்று நபி (ஸல்) உறுதியாக அறிந்தபின் இறை மார்க்கத்தை எடுத்துரைப்பதற்காக ஸஃபா மலை உச்சியில் ஏறி நின்று “யா ஸபாஹா! யா ஸபாஹா!!” என்று சப்தமிட்டார்கள். (பெரும் படையொன்று சூழ்ந்துகொண்டதை அல்லது ஏதேனும் பேராபத்து வந்துவிட்டதை அறிவிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்படும்.)

பிறகு குறைஷி வமிசத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் அழைத்தார்கள்: ஃபஹ்ர் குடும்பத்தாரே! அதீ குடும்பத்தாரே! அப்து முனாஃபின் குடும்பத்தாரே! அப்துல் முத்தலிபின் குடும்பத்தாரே! என்று அழைத்தார்கள்.

அவர்களது அழைப்பைச் செவியேற்று இவ்வாறு அழைப்பவர் யார்? என வினவ சிலர் “முஹம்மது” என்று கூறினர். உடனே குறைஷியர்களில், அபூலஹப் மற்றும் பலரும் அங்கு குழுமினர். வர இயலாதவர்கள் தங்கள் சார்பாக ஒருவரை அவர் சொல்வதைக் கேட்டு வருமாறு கூறியனுப்பினார்கள்.

அனைவரும் ஒன்று கூடியபோது நபி (ஸல்) “இம்மலைக்குப் பின்னாலுள்ள கணவாயில் உங்களைத் தாக்குவதற்காக குதிரை வீரர்கள் காத்திருக்கிறார்கள் என்று நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அம்மக்கள் “ஆம்! உங்களை நம்புவோம்; உங்களை உண்மையாளராகவே கண்டிருக்கிறோம்; பொய்யுரைத்துக் கண்டதில்லை” என்றனர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையான வேதனை வருமுன் நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன். எனக்கும் உங்களுக்கும் உள்ள உதாரணம், ஒருவர் எதிரிகளைப் பார்த்து அவர்கள் தன்னை முந்திச் சென்று தனது கூட்டத்தினரைத் திடீரெனத் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக மலை உச்சியில் ஏறி “யா ஸபாஹா!” என்று அழைத்தவரைப் போன்றாவேன்.

பிறகு, நபி (ஸல்) அவர்கள் அம்மக்களை சத்தியத்தின் பக்கம் அழைத்து அல்லாஹ்வின் வேதனை குறித்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்தார்கள். ஒவ்வொரு கூட்டத்தாரின் பெயர்களைத் தனித்தனியாகவும், பொதுவாகவும் குறிப்பிட்டுக் கூறினார்கள்.

“குறைஷியரே! அல்லாஹ்விடமிருந்து உங்களது ஆன்மாக்களை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக, நான் உங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு நான் எந்த பலனும் அளிக்க முடியாது.

கஅபு இப்னு லுவய்யின் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களது எந்தவொரு நன்மை தீமைக்கும் நான் பொறுப்பாக முடியாது.

முர்ரா இப்னு கஅபின் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

குஸைய்யின் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களது எந்தவொரு நன்மை தீமைக்கும் நான் பொறுப்பாக முடியாது.

அப்துல் முனாஃபின் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்கு நான் எந்த பலனும் அளிக்க முடியாது.

அப்து ஷம்ஸ் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

ஹாஷிம் கிளையாரே! உங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

அப்துல் முத்தலிபின் கிளையாரே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களது எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் நான் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்கு நான் எந்தப் பலனும் அளிக்க முடியாது.

அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்கு நான் எந்த பலனும் அளிக்க முடியாது. அல்லாஹ்வுடைய தூதரின் மாமியான அப்துல் முத்தலிபின் மகள் ஸஃபிய்யாவே! அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்கு நான் எந்த பலனும் அளிக்க முடியாது..

அல்லாஹ்வின் தூதர் முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! எனது செல்வத்திலிருந்து விரும்பியதை கேட்டு பெற்றுக்கொள். உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்! நிச்சயமாக நான் உங்களது நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வை விட்டு உங்களுக்கு நான் எந்த பலனும் அளிக்க முடியாது.

எனினும், மக்களே! உங்களுடன் இரத்த பந்தம் எனும் உறவு இருக்கிறது. உரிய முறையில் இரத்தப் பந்தத்திற்கானக் கடமைகளை நிறைவேற்றுவேன்” என்று கூறி முடித்தார்கள்.

இந்த எச்சரிக்கை முடிந்ததும் மக்கள் எதுவும் கூறாமல் கலைந்து சென்றார்கள். ஆனால், அபூ லஹப் மட்டும் குரோதத்துடன் நபி (ஸல்) அவர்களை எதிர்கொண்டான். “நாள் முழுவதும் உனக்கு நாசமுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களைக் கூட்டினாயா?” என்று கூறினான். அவனைக் கண்டித்து “அழியட்டும் அபூ லஹபின் இரு கரங்கள்; அவனும் அழியட்டும்...” என்ற 111வது அல்குர்ஆன் அத்தியாயம் இறங்கியது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாமிவுத்திர்மிதி, ஃபத்ஹுல் பாரி)

இவ்வாறாக ஏகத்துவக் குரல் ஓங்கியது. நபி (ஸல்) தங்களது நெருங்கிய உறவினர்களிடம் நீங்கள் இத்தூதுத்துவத்தை (நான் அல்லாஹ்வின் தூதர் என்பதை) ஏற்றால்தான் நம்மிடையே உறவு நீடிக்கும். இதைத்தவிர அரபுகள் கொண்டிருக்கும் குடும்ப உறவுகளெல்லாம் அல்லாஹ்வின் எச்சரிக்கையின் முன்னால் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும் என்று கூறித் தங்களது நிலையை மிகத் தெளிவாக அறிவித்துவிட்டார்கள்.

இவ்வாறே அழைப்புப் பணியின் குரல் மக்காவின் நாலாதிசைகளிலும் எதிரொலித்தது.

“ஆகவே, உங்களுக்கு ஏவப்பட்டதை(த் தயக்கமின்றி) நீங்கள் (அவர்களுக்கு) விவரித்து அறிவித்துவிடுங்கள். மேலும், இணைவைத்து வணங்குபவர்களைப் புறக்கணித்து விடுங்கள்” (அல்குர்ஆன் 15:94)

என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கி அருளினான். அதைத் தொடர்ந்து நபி (ஸல்) நிராகரிப்பவர்களின் சபைகளில் துணிந்து நின்று அல்லாஹ்வின் பக்கம் அழைக்கத் தொடங்கினார்கள். முன் சென்ற நபிமார்கள் தங்களது சமுதாயத்தினருக்குக் கூறி வந்த,

நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை. (அல்குர்ஆன் 7:59)

என்ற வசனத்தை அவர்களுக்கு ஓதிக் காண்பித்தார்கள். நிராகரிப்பவர்களின் கண் முன்னே கஅபாவின் முற்றத்தில் பட்டப்பகலில் பகிரங்கமாக அல்லாஹ்வை வணங்கத் தொடங்கினார்கள்.

நபி (ஸல்) ஏகத்துவ அழைப்புக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்தது. ஒருவர் பின் ஒருவராக அல்லாஹ்வின் மார்க்கத்தைத் தழுவினார்கள். அதனால் இஸ்லாமை ஏற்றவர்களுக்கும் அவர்களது குடும்பத்தில் இஸ்லாமை ஏற்காதவர்களுக்குமிடையே சண்டை சச்சரவுகள் தோன்றின. நாளுக்கு நாள் இஸ்லாமின் வளர்ச்சியைக் கண்ட குறைஷிகள் கடுங்கோபத்தில் மூழ்கினர்.


ஹாஜிகளைத் தடுத்தல்

இக்காலகட்டத்தில் குறைஷியருக்கு மற்றொரு கவலையும் ஏற்பட்டது. அதாவது, பகிரங்க இஸ்லாமிய அழைப்புப் பணி தொடங்கிய சில நாட்களிலேயே ஹஜ்ஜின் காலம் நெருங்கி வந்தது. ஹஜ்ஜுக்கு வரும் அரபுக் கூட்டத்தினர் முஹம்மதின் அழைப்பினால் மனம் மாறிவிடலாம். எனவே, ஹாஜிகளை சந்தித்து முஹம்மதைப் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக குறைஷியர்கள் வலீத் இப்னு முகீராவிடம் ஒன்று கூடினர். குறைஷிகளிடம் அவன் “இவ்விஷயத்தில் நீங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தைக் கூறுங்கள். இல்லையென்றால் ஒருவன் கூற்றுக்கு மற்றவன் கூற்று மறுப்பாகி ஒருவர் மற்றவரை பொய்யராக்கிக் கொள்வீர்கள்” என்று கூறினான். அம்மக்கள் “நீயே ஓர் ஆலோசனையைக் கூறிவிடு. நாங்கள் அதற்கேற்ப நடந்து கொள்கிறோம்” என்றனர். அவன் “இல்லை! நீங்கள் கூறுங்கள், அதைக் கேட்டு நான் ஒரு முடிவு செய்கிறேன்” என்றான்.

குறைஷியர்கள்: அவரை (முஹம்மதை) ஜோசியக்காரர் என்று கூறலாமா?

வலீத்: “இல்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் ஜோதிடர் அல்லர். ஏனெனில் நாம் ஜோதிடர் பலரைக் கண்டிருக்கிறோம். ஆனால் இவரது பேச்சு ஜோதிடனின் உளறல்களாகவோ பேச்சுகளாகவோ இல்லை.”

குறைஷியர்கள்: அவரைப் பைத்தியக்காரர் என்று கூறலாமா?

வலீத்: அவர் பைத்தியக்காரர் அல்லர். ஏனெனில், பைத்தியக்காரன் எப்படியிருப்பான் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவரிடம் பைத்தியத்தின் எந்த அடையாளமும் இல்லை.

குறைஷியர்கள்:
அவரைக் கவிஞர் எனக் கூறலாமா?

வலீத்: அவர் கவிஞரல்ல. ஏனெனில், நமக்கு கவியின் அனைத்து வகைகளும் தெரியும். ஆனால் அவரது பேச்சு கவியாக இல்லை.

குறைஷியர்கள்: அவரை சூனியக்காரர் என்று கூறலாமா?

வலீத்: நாம் சூனியக்காரர்களையும் அவர்களது சூனியத்தையும் நன்கறிந்திருக்கிறோம். ஆனால் அவரது பேச்சு சூனியக்காரர்களின் ஊதுதலாகவோ முடிச்சுகளாகவோ நமக்குத் தோன்றவில்லை.

குறைஷியர்கள்: பின்னர் நாம் எதைத்தான் கூறுவது?

வலீத்: அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரது பேச்சில் ஒரு தனித்துவமான இனிமையும் மிகுந்த கவர்ச்சியும் இருக்கிறது. அதன் தொடக்கம் பழக்குலையாகவும் அதன் இறுதி பறிக்கப்பட்ட கனியாகவும் இருக்கிறது. நீங்கள் முன்பு கூறியதில் எதைக் கூறினாலும் அது பொய்தான் என்று தெரிந்து விடும். உங்களது கூற்றில் மிக ஏற்றது அவரை சூனியக்காரர் என்று கூறுவதுதான். அவர் ஒரு சூனியத்தைக் கொண்டு வந்து அதன்மூலம் தந்தை-மகன், கணவன்-மனைவி, சகோதரர்கள், குடும்பங்கள் ஆகியோருக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தி விடுகிறார் என்றே கூறுங்கள் என்று வலீத் கூறினான். அதை ஏற்று மக்கள் திருப்தியுடன் கலைந்தனர். (இப்னு ஹிஷாம்)

குறைஷியர்கள் வலீதிடம் பிரச்சனையற்ற ஒரு நல்ல ஆலோசனையைத் தங்களுக்கு கூறும்படி கேட்க அதற்கு வலீத் “அது குறித்து சிந்திக்க எனக்கு அவகாசமளியுங்கள்” என்று கூறி மிக நீண்ட நேரம் யோசித்தபின் மேற்கண்ட தனது கருத்தைக் கூறினான் என சில அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வலீதின் இச்செயல் குறித்து அல்முத்தஸ்ஸிர் என்ற அத்தியாயத்தில் 11 முதல் 26 வரையிலான 16 வசனங்களை அல்லாஹ் இறக்கி வைத்து அவ்வசனங்களுக்கிடையில் அவன் யோசித்த விதங்களைப் பற்றி அல்லாஹ் மிக அழகாகக் குறிப்பிடுகிறான்.

நிச்சயமாக அவன் (இந்தக் குர்ஆனைப் பற்றி மிக மிகக்) கவனித்து (ஒரு பொய்யைக்) கற்பனை செய்தான். அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்துவிட்டான்! பின்னும் அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்துவிட்டான்! (ஒன்றுமில்லை.) பின்னும் (அதனைப் பற்றிக்) கவனித்தான். பின்னர் (தன் இயலாமையைப் பற்றி முகம்) கடுகடுத்தான்; (முகம்) சுளித்தான். பின்னர் புறங்காட்டிச் சென்றான். (எனினும், பின்னும்) கர்வம் கொண்டான். ஆகவே “இது மயக்கக்கூடிய சூனியமேயன்றி வேறில்லை” என்றும், “இது மனிதர்களுடைய சொல்லேயன்றி வேறில்லை” என்றும் கூறினான். (அல்குர்ஆன் 74:18-25)

இந்த முடிவுக்கு சபையினர் உடன்பட்டதும் அதை நிறைவேற்றத் தயாரானார்கள். மக்கள் ஹஜ்ஜுக்கு வரும் வழிகளில் அமர்ந்து கொண்டு தங்களைக் கடந்து செல்பவர்களிடம் நபி (ஸல்) அவர்களைப் பற்றி எச்சரித்து தாங்கள் முடிவு செய்திருந்ததைக் கூறினார்கள்.

ஆனால், அதை இலட்சியம் செய்யாத நபி (ஸல்) ஹாஜிகளின் தங்குமிடங்களிலும் பிரபலமான உக்காள், மஜன்னா, துல்மஜாஸ் ஆகிய சந்தைகளிலும் மக்களைத் தேடிச் சென்று அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பின் அபூலஹப் நின்றுகொண்டு “இவர் சொல்வதை ஏற்காதீர்கள். நிச்சயமாக இவர் மதம் மாறியவர்; பொய்யர்” என்று கூறினான்.

இவர்களின் இவ்வாறான செயல்கள் அரபியர்களிடம் மென்மேலும் இஸ்லாம் பரவக் காரணமாக அமைந்தன. ஹஜ்ஜை முடித்துச் சென்ற அரபியர்கள் நபி (ஸல்) அவர்களையும் அவர்கள் எடுத்துரைத்த இஸ்லாமையும் தங்களது நாடுகளில் எடுத்துரைத்தார்கள்.

Offline Yousuf

அழைப்புப் பணியில் இடையூறுகள்

ஹஜ் காலம் முடிந்தது. இறையழைப்புப் பணியை அதன் ஆரம்ப நிலையிலேயே கருவறுத்திட வேண்டுமென குறைஷியர்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டனர். அவற்றின் சுருக்கம் பின்வருமாறு:

1) பரிகசித்தல், இழிவுபடுத்துதல், பொய்ப்பித்தல், எள்ளி நகையாடுதல்:

இதுபோன்ற இழிசெயல்களால் முஸ்லிம்களை மனதளவில் பலவீனப்படுத்த எண்ணினர். அற்பமான வசைச்சொற்களால் நபி (ஸல்) அவர்களை ஏசினர். சில வேளைகளில் பைத்தியக்காரர் என்றனர்.

(நமது நபியாகிய உங்களை நோக்கி) “வேதம் அருளப்பட்டதாகக் கூறும் நீங்கள் நிச்சயமாகப் பைத்தியக்காரர்தான்” என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் 15:6)

சில வேளைகளில் நபி (ஸல்) அவர்களை “சூனியக்காரர்’ என்றும் “பொய்யர்’ என்றும் கூறினர்.

(அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய ஒரு தூதர், (ஆகிய நீங்கள்) அவர்களி(ன் இனத்தி)லிருந்தே அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சயப்பட்டு, “இவர் மிகப் பொய் சொல்லும் சூனியக்காரர்தான்” என்று (உங்களைப் பற்றி) நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 38:4)

வஞ்சகத்தனத்தையும் சுட்டெரிக்கும் பார்வைகளையும் நபி (ஸல்) அவர்கள் மீது வீசினர்.

(நபியே!) நிராகரிப்பவர்கள் நல்லுபதேசத்தைக் கேட்கும்போதெல்லாம், அவர்கள் தங்களுடைய பார்வைகளைக் கொண்டே உங்களை வீழ்த்தி விடுபவர்களைப் போல் (கோபத்துடன் விரைக்க விரைக்கப்) பார்க்கின்றனர். அன்றி, (உங்களைப் பற்றி) நிச்சயமாக, அவர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 68:51)

நபி (ஸல்) அவர்கள் தங்களது எளிய தோழர்களுடன் அமர்ந்திருக்கும்போது அவர்களைக் கேலி செய்வார்கள்.

(நபியே!) இவ்வாறே அவர்களில் சிலரை சிலரைக் கொண்டு நாம் சோதித்ததில் “எங்களை விட்டு (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்துவிட்டான்?” என்று (பணக்காரர்கள்) கூற முற்பட்டனர். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனல்லவா? (அல்குர்ஆன் 6:53)

அதற்கு அல்லாஹ் அந்த வசனத்தின் இறுதியிலேயே பதிலளித்தான். மேலும், இறை நம்பிக்கையாளர்களைப் பார்த்து எவ்வாறெல்லாம் பரிகசித்தார்கள் என்பதையும் விவரிக்கிறான்.

நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) நம்பிக்கைக் கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிக்கின்றனர். அவர்களின் சமீபமாகச் சென்றால், (பரிகாசமாகத் தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் கண் ஜாடையும் காட்டிக் கொள்கின்றனர். (அவர்களை விட்டும் விலகித்) தங்கள் குடும்பத்தாரிடம் சென்று விட்டபோதிலும், (பின்னும்) இவர்களுடைய விஷயங்களையே (பரிகாசமாகப் பேசி) மகிழ்ச்சியடைகின்றனர். (வழியில்) இவர்களைக் கண்டால் (இவர்களைச் சுட்டிக் காண்பித்து) “நிச்சயமாக இவர்கள் வழிகெட்டுப் போனார்கள்” என்றும் கூறுகின்றனர். (நம்பிக்கையாளர்களைப் பற்றி எதற்காக இவர்கள் இவ்வளவு கவலைப்படுகின்றனர்?) இவர்கள் அவர்கள் மீது பாதுகாப்பாளர்களாக அனுப்பப்படவில்லையே! (அல்குர்ஆன் 83:29-33)

இவ்வாறு ஒவ்வொரு நாளும் கேலி, கிண்டல், குத்திப்பேசுதல் போன்ற இடையூறுகளை அதிகரித்துக் கொண்டே சென்றனர். இது நபி (ஸல்) அவர்களின் மனதைப் பெரிதும் பாதித்தது. இது குறித்து அல்குர்ஆனில் இவ்வாறு அல்லாஹ் கூறுகிறான்:

(நபியே! உங்களைப் பற்றி) அவர்கள் (கேவலமாகக்) கூறுபவை, உங்கள் உள்ளத்தை நெருக்குகிறதென்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (அதை நீங்கள் ஒரு சிறிதும் பொருட்படுத்தாதீர்கள்.)

பிறகு அவர்களது மன நெருக்கடியை அகற்றும் வழியைக் கூறி அவர்களை உறுதிப்படுத்துகிறான்.

நீங்கள் உங்கள் இறைவனைத் துதி செய்து புகழ்ந்து, அவனுக்குச் சிரம் பணிந்து வணங்குங்கள். உமக்கு “யக்கீன்’ (என்னும் மரணம்) ஏற்படும் வரையில் (இவ்வாறே) உங்கள் இறைவனை வணங்கிக் கொண்டிருங்கள். (அல்குர்ஆன் 16:97)

மேலும் பரிகசிப்பவர்களின் தீங்கிலிருந்து நபி (ஸல்) அவர்களை பாதுகாப்பதாக அல்லாஹ் உறுதியளிக்கிறான்.

பரிகாசம் செய்யும் (இவர்களுடைய தீங்கைத் தடை செய்வதற்கு) நிச்சயமாக நாமே உங்களுக்குப் போதுமாயிருக்கிறோம். இவர்கள் (உங்களைப் பரிகசிப்பது மட்டுமா?) அல்லாஹ்வுக்கு மற்றொரு (பொய்த்) தெய்வத்தைக் கூட்டாக்குகிறார்கள். (இதன் பலனை) பின்னர் இவர்கள் அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 16:95, 96)

அதுமட்டுமின்றி அவர்களது தீய செயல்கள் அவர்களுக்கு எதிராகவே முடியும் என்பதையும் அல்லாஹ் முன்னறிவிப்புச் செய்தான்.

(நபியே!) உங்களுக்கு முன்னர் வந்த (நம்முடைய மற்ற) தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர். முடிவில் அவர்கள் (எந்த வேதனையைப்) பரிகசித்துக் கொண்டிருந்த(னரோ அ)து அவர்களை வந்து சூழ்ந்துகொண்டது. (அல்குர்ஆன் 6:10)

2) சந்தேகங்களை கிளறுவதும் பொய்ப்பிரச்சாரத்தை முடுக்கிவிடுவதும்


ஏகத்துவ அழைப்பை மக்கள் செவியேற்று சிந்திக்க முடியாத வகையில் பல வகையான பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டனர். குர்ஆனைப் பற்றி இவ்வாறு கூறினர்:

இவை சிதறிய சிந்தனையால் ஏற்பட்ட வாக்கியங்கள்; நபி (ஸல்) அவர்கள் தாமே இதனைப் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார். மேலும், நபி (ஸல்) அவர்கள் ஒரு கவிஞர்தான்; தன் கவிதை ஆற்றலால் அமைத்த வாக்கியங்களே இவை; இரவில் பொய்யான கனவுகளைக் கண்டு பகலில் அதை வசனமாக ஓதிக் காட்டுகிறார்; நபி (ஸல்) அவர்கள் தாமாகவே அதைப் புனைந்து கொள்கிறார்; குர்ஆனை இவருக்கு கற்றுத் தருவது ஒரு மனிதர்தான்; குர்ஆனாகிய இது பொய்யாக அவர் கற்பனை செய்துகொண்டதே தவிர வேறில்லை இதைக் கற்பனை செய்வதில் வேறு மக்களும் அவருக்கு உதவி புரிகின்றனர்; இது முன்னோர்களின் கட்டுக்கதையே; காலையிலும் மாலையிலும் இவருக்கு ஓதிக் காண்பிக்கப்படுகிறது அதனை இவர் மற்றொருவரின் உதவியைக் கொண்டு எழுதி வைக்கும்படி செய்கின்றார் இவ்வாறெல்லாம் அந்த நிராகரிப்பவர்கள் சூழ்நிலைகளுக்கேற்ப பிரச்சாரம் செய்து வந்தனர். (பார்க்க அல்குர்ஆன் வசனங்கள் 21:5, 16:103, 25:4, 5)

சில வேளைகளில் குறி சொல்பவர்களுக்கு ஜின், ஷைத்தான் இறங்கி செய்தி சொல்வது போல நபி (ஸல்) அவர்கள் மீதும் ஜின், ஷைத்தான் இறங்கி செய்தி சொல்கின்றன என்றனர். இதை மறுத்தே பின்வரும் வசனம் அருளப்பட்டது.

(நம்பிக்கையாளர்களே!) ஷைத்தான்கள் யார் மீது இறங்குகின்றனர் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கவா? பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர். தாங்கள் கேள்விப்பட்டதை எல்லாம் அவர்களுக்குக் கூறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் (பெரும்) பொய்யர்களே! (அல்குர்ஆன் 26:221-223)

அதாவது மக்களே! பாவத்தில் உழலும் பொய்யான பாவியின் மீதுதான் ஷைத்தான்கள் இறங்குகிறார்கள். நான் பொய்யுரைத்தோ பாவம் செய்தோ நீங்கள் கண்டதில்லை. அப்படியிருக்க இந்தக் குர்ஆனை ஷைத்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தான் என்று எப்படிக் கூறுகிறீர்கள்.

சில வேளைகளில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து “இவருக்கு ஒருவகையான பைத்தியம் பிடித்துள்ளது. நல்ல கருத்துகளை இவரே சிந்தித்து அதை அழகிய மொழிநடையில் கவிஞர்களைப் போன்று கூறுகிறார். எனவே இவர் கவிஞர்; இவரது வார்த்தைகள் கவிகளே” என்றனர். அல்லாஹ் இவர்களுக்கு மறுப்பு தெரிவித்து, கவிஞர்களிடமுள்ள மூன்று தன்மைகளைக் குறிப்பிட்டு அதில் ஒன்றுகூட நபி (ஸல்) அவர்களிடம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினான்.

கவிஞர்களை வழிகெட்டவர்கள்தாம் பின்பற்றுகின்றனர். நிச்சயமாக, அவர்கள் ஒவ்வொரு திடலிலும் தட்டழிந்து திரிகிறார்கள் என்பதை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக அவர்கள் செய்யாத காரியங்களை(ச் செய்ததாக)க் கூறுகிறார்கள். (அல்குர்ஆன் 26:224-226)

1) நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியவர்கள் மார்க்கத்திலும் நற்பண்புகளிலும் சிறந்து விளங்கி, இறையச்சத்துடன் நேர்வழியையும் அடைந்தவர்களாவர். வழிகேட்டிற்கான எந்த அடையாளமும் அவர்களிடமில்லை.

2) கவிஞர்கள் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு உளறுவதைப் போன்று நபி (ஸல்) முன்னுக்குப் பின் முரணாக உளறவில்லை. மாறாக, அவர்கள் ஒரே இறைவன்; ஒரே மார்க்கம் என்ற கொள்கையின் பக்கம் எப்போதும் அழைத்துக் கொண்டிருந்தார்கள்.

3) தாங்கள் செய்ததையே பிறரிடம் நபி (ஸல்) எடுத்துரைத்தார்கள். பிறரிடம் எடுத்துரைத்ததையே தங்களது வாழ்வில் நடைமுறைப்படுத்தினார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களுக்கும் கவிஞர்களுக்கும், குர்ஆனுக்கும் கவிதைக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை பிறகு எவ்வாறு ஒப்பிடுகிறீர்கள்?

இவ்வாறு நபி (ஸல்) அவர்களுக்கும் குர்ஆனுக்கும் எதிராக நிராகரிப்போர் எழுப்பிய ஒவ்வொரு சந்தேகத்துக்கும் தெளிவான, ஆணித்தரமான பதில்களை அல்லாஹ் இறக்கி அருளினான். நிராகரிப்பவர்களின் பெரும்பாலான சந்தேகங்கள் ஓரிறைக் கொள்கை, தூதுத்துவம், மரணித்தவர் மறுமையில் எழுப்பப்படுவது ஆகிய மூன்றைப் பற்றியே இருந்தது. ஏகத்துவம் தொடர்பான அவர்களது அனைத்து சந்தேகங்களுக்கும் குர்ஆன் உறுதியான பதிலளித்து அவர்களது கற்பனைக் கடவுள்கள் எவ்வளவு பலவீனமானவை என்பதையும் தெளிவுபடுத்தியது. குர்ஆனின் ஆணித்தரமான விளக்கங்கள் குறைஷியரின் கோபத்தையே அதிகரிக்கச் செய்தது.

அவர்கள் நபி (ஸல்) அவர்களை உண்மையாளர்; நம்பிக்கைக்குரியவர்; இறையச்சமிக்க ஒழுக்க சீலர் என்று உறுதி கொண்டிருந்த அதே நேரத்தில், அவர் அல்லாஹ்வின் உண்மையான தூதூர்தானா? என சந்தேகித்தனர். ஏனெனில், “நபித்துவம்’ என்பது மிக உயர்ந்த ஒன்று! அதை சாதாரண மனிதர்களால் பெற முடியாது என அவர்கள் உறுதியாக நம்பியிருந்தனர். எனவே, அல்லாஹ் தனக்களித்த நபித்துவத்தைப் பற்றி அறிவித்து அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளுங்களென நபி (ஸல்) அவர்கள் அழைப்பு விடுத்தபோது இணைவைப்பவர்கள் திகைத்துப்போய் பின்வாங்கினர். இவர்களின் இக்கூற்றுகள் பற்றியே அல்லாஹ் இந்த வசனங்களை இறக்கினான்.

(பின்னும்) அவர்கள் கூறுகின்றனர்: “இந்தத் தூதருக்கென்ன (நேர்ந்தது)? அவர் (நம்மைப் போலவே) உணவு உண்ணுகிறார்; கடைகளுக்கும் செல்கிறார். (அவர் இறைவனுடைய தூதராக இருந்தால்) அவருக்காக யாதொரு வானவர் இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? அவ்வாறாயின், அவர் அவருடன் இருந்து கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருப்பாரே! (அல்குர்ஆன் 25:7)

மேலும் “முஹம்மது மனிதராயிற்றே!

மனிதர் எவருக்கும் (வேதத்தில்) யாதொன்றையும் அல்லாஹ் அருளவேயில்லை” என்று அவர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 6:91)

அவர்களுக்கு மறுப்பு தெரிவித்து அல்லாஹ் (அதே வசனத்தில்) கூறுகிறான்:

(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கேளுங்கள்: “மனிதர்களுக்கு ஒளியையும் நேர்வழியையும் தரக்கூடிய (“தவ்றாத்’ என்னும்) வேதத்தை நபி மூஸாவுக்கு அருளியது யார்? (அல்குர்ஆன் 6:91)

மூஸா (அலை) மனிதர்தாம் என்று அவர்கள் நன்கு விளங்கியிருந்தனர். அப்படியிருக்க முஹம்மது (ஸல்) மனிதராக இருப்பதுடன் அல்லாஹ்வின் தூதராக ஏன் இருக்கக்கூடாது?

ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களின் தூதுத்துவத்தை மறுத்து இவ்வாறுதான் கூறினர்.

அதற்கவர்கள், “நீங்கள் நம்மைப் போன்ற (சாதாரண) மனிதர்களே தவிர வேறில்லை” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 14:10)

இவர்களின் இக்கூற்றுக்குப் பதிலாக இறைத்தூதர்கள் கூறினார்கள்.

நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம். எனினும், அல்லாஹ் தன் அடியார் களில் தான் விரும்பியவர்கள் மீது அருள் புரிகிறான். (அல்குர்ஆன் 14:11)

ஆகவே, இறைத்தூதர்களும் மனிதர்கள்தான். எனவே, மனிதராக இருப்பது நபித்துவத்திற்கு எந்த வகையிலும் முரண்பாடானது அல்ல என்பதை இந்த வசனங்கள் தெளிவுபடுத்தின.

Offline Yousuf

இப்றாஹீம், இஸ்மாயீல், மூஸா (அலை) ஆகிய அனைவரும் மனிதர்களாக இருந்து அல்லாஹ்வின் தூதராகவும் இருந்தார்கள் என்பதை மக்காவாசிகள் ஏற்றிருந்ததால் நபி (ஸல்) அவர்கள் மீதான இந்த வாதத்தை விரைவிலேயே கைவிட்டு விட்டு மற்றொரு சந்தேகத்தைக் கிளற ஆரம்பித்தனர். அதாவது, மிகவும் மகத்துவம் வாய்ந்த தூதுத்துவத்தைக் கொடுக்க இந்த அனாதையைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வுக்கு கிடைக்கவில்லையா? மக்கா, தாயிஃப் நகரத்திலுள்ள செல்வமும் செல்வாக்கும் மிக்க பல தலைவர்கள் இருக்க அவர்களை எல்லாம் விட்டுவிட்டு ஆதரவற்றவரான இவரை அல்லாஹ் ஒருபோதும் தூதராக்க மாட்டான் என்று வாதிக்கத் தொடங்கினர். அவர்களின் இக்கூற்றை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.

அன்றி (தாயிஃப், மக்கா ஆகிய) இவ்விரண்டு ஊர்களிலுள்ள யாதொரு பெரியமனிதன் மீது இந்தக் குர்ஆன் இறக்கிவைக்கப்பட்டிருக்க வேண்டாமா? (அவ்வாறாயின் நாங்கள் அதனை நம்பிக்கை கொண்டிருப்போம்) என்றும் கூறுகின்றனர்.(அல்குர்ஆன் 43:31)

இவர்களின் இக்கூற்றுக்கு பதிலுரைத்து இந்த வசனங்களை அல்லாஹ் இறக்கினான்.

(நபியே!) உங்கள் இறைவனின் அருளைப் பங்கிடுபவர்கள் இவர்கள்தாமா? (அல்குர்ஆன் 43:32)

அதாவது தூதுத்துவம், வஹி (இறைச்செய்தி) இரண்டும் அல்லாஹ்வின் கருணையாகும். அதை, தான் விரும்பியவர்களுக்குக் கொடுக்கும் முழு உரிமையும் அவனுக்குரியதே! அவ்வாறின்றி இவர்கள் விரும்பிய நபர்களுக்குத்தான் கிடைக்க வேண்டுமென்று இந்த நிராகரிப்பாளர்கள் எண்ணுவது எந்த வகையில் நியாயம்? என அல்லாஹ் வினா தொடுத்து, தூதுத்துவத்தை யாருக்கு கொடுப்பது என்பதை அவனே நன்கு அறிந்தவன் என அடுத்து வரும் வசனத்தில் கூறுகிறான்:

அவர்களிடம் யாதொரு வசனம் வந்தால் “அல்லாஹ்வுடைய தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்ற (நபித்துவத்)தை எங்களுக்கும் கொடுக்கப்படும் வரையில் நாங்கள் (அதனை) நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்” என்று கூறுகின்றனர். நபித்துவத்தை எங்கு (எவருக்கு) அளிப்பது என்பதை அல்லாஹ்தான் நன்கறிவான். (அல்குர்ஆன் 6:124)

இதற்கும் உரிய பதில்கள் கிடைக்கவே, மற்றொரு சந்தேகத்தைக் கிளறினர். உலகில் அரசர்கள் படை, பட்டாளம் சூழ மிகக்கம்பீரமாக, செழிப்பாக வாழ்ந்து கொண்டிருக்க தன்னை அல்லாஹ்வின் தூதரென வாதிக்கும் முஹம்மதோ சில கவள உணவுக்காக வாழ்க்கையில் இப்படியெல்லாம் சிரமப்படுகிறாரே? என்றனர்.

(பின்னும்) அவர்கள் கூறுகின்றனர்: “இந்தத் தூதருக்கென்ன (நேர்ந்தது)? அவர் (நம்மைப் போலவே) உணவு உண்ணுகிறார்; கடைகளுக்கும் செல்கிறார். (அவர் இறைவனுடைய தூதராக இருந்தால்) அவருக்காக யாதொரு வானவர் இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? அவ்வாறாயின், அவர் அவருடன் இருந்து கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருப்பாரே! அல்லது அவருக்கு யாதொரு புதையல் கொடுக்கப்பட வேண்டாமா? அல்லது அவர் புசிப்பதற்கு வேண்டிய யாதொரு சோலை அவருக்கு இருக்க வேண்டாமா? (என்று கூறுகின்றனர்.) அன்றி, இவ்வக்கிரமக்காரர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகின்றீர்கள்” என்றும் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 25:7, 8)

நிராகரிப்பவர்களின் மேற்கூறிய கூற்றுக்குரிய பதிலை அல்லாஹ் அதைத் தொடர்ந்துள்ள 9, 10, 11 வசனங்களில் இவ்வாறு குறிப்பிடுகிறான்.

ஆகவே, (நபியே!) உங்களைப் பற்றி (இந்த) அக்கிரமக்காரர்கள் என்னென்ன வர்ணிப்புகள் கூறுகின்றார்கள் என்பதை கவனித்துப் பாருங்கள். ஆகவே, இவர்கள் (முற்றிலும்) வழிகெட்டு விட்டார்கள்; நேரான வழியை அடைய இவர்களால் முடியாது.

(நபியே! உங்களது இறைவனாகிய) அவன் மிக்க பாக்கியமுடையவன். அவன் நாடினால் (இந்நிராகரிப்பவர்கள் கோரும்) அவற்றைச் சொந்தமாக்கி மிக்க மேலான சொர்க்கத்தை உங்களுக்குத் தரக்கூடியவன். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதில் உங்களுக்குப் பல மாட மாளிகைகளையும் அமைத்து விடுவான்.


உண்மையில் இவர்கள் விசாரணைக் காலத்தையே பொய்யாக்குகின்றனர். எவர்கள் விசாரணைக் காலத்தைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களுக்கு கடுமையாக பற்றி எயும் நரகத்தையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். (அல்குர்ஆன் 25:9, 10, 11)

அதாவது, சிறியவர்-பெரியவர், பலவீனர்-வலியவர், மதிப்புடையவர்-மதிப்பற்றவர், சுதந்திரமானவர்-அடிமை, ஏழை-பணக்காரர் என்ற அனைத்துத் தரப்பினருக்கும் தூதுத்துவத்தை எடுத்துரைப்பதே முஹம்மது (ஸல்) அவர்களது பணி! எனவே அரசாங்க தூதர்களைப் போல படை பட்டாளம், பாதுகாவலர், பணியாட்கள் ஆகியோர் சூழ முஹம்மது (ஸல்) இருந்தால் மக்களில் பெரும்பான்மையாக இருக்கும் சாதாரணமான மனிதர்களும் ஏழை எளியோரும் எவ்வாறு அவரைச் சந்தித்து பயன்பெற முடியும்? எனவே அரசர்களைப் போன்று ஆடம்பரமாக வாழ்ந்தால் நபித்துவத்தின் நோக்கமே அடிபட்டுவிடும் என்றும் அல்லாஹ் தெளிவுபடுத்தினான்.

அடுத்து, மரணத்துக்குப் பின் எழுப்பப்படுவதை அவர்கள் மறுத்து வந்தார்கள். அது அறிவுக்கு எட்டாததாகவும் ஆச்சரியமானதாகவும் அவர்களுக்குத் தென்பட்டது. அவர்களின் இக்கூற்றை பற்றி இதோ அல்குர்ஆன் விவரிக்கிறது:

“நாம் இறந்து (உக்கி) எலும்பாகவும் மண்ணாகவும் போன பின்னர் மெய்யாகவே நாம் எழுப்பப்படுவோமா? (என்றும்) (அவ்வாறே) நம்முடைய மூதாதைகளுமா? (எழுப்பப்படுவார்கள்” என்றும் பரிகாசமாகக் கூறுகின்றனர்.) (அல்குர்ஆன் 37:16, 17)

(அன்றி, “இத்தூதர் கூறுகின்றபடி) நாம் இறந்து உக்கி மண்ணாகப்போனதன் பின்னரா (உயிர்கொடுத்து மீளவைக்கப்படுவோம்?) இவ்வாறு மீளுவது வெகு(தூர) தூரம். (மீளப்போவதே இல்லை” என்றும் கூறுகின்றனர்.) (அல்குர்ஆன் 50:3)

எனினும், எவர்கள் நிராகரிக்கின்றவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் (மற்றவர்களை நோக்கி) “நீங்கள் (இறந்து மக்கி) அணுவணுவாகப் பிரிக்கப்பட்டதன் பின்னரும் நிச்சயமாக நீங்கள் புதிதாகப் படைக்கப்பட்டு விடுவீர்கள் என்று உங்களுக்கு (பயமுறுத்தி)க் கூறக்கூடியதொரு மனிதனை நாம் உங்களுக்கு அறிவிக்கவா” என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அன்றி, (இம்மனிதர்) “அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கொண்டாரோ அல்லது அவருக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறதோ” என்று (அவரிடம் கூறுகின்றனர்.) அவ்வாறன்று! எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்கள்தாம் பெரும் வேதனையிலும், வெகு தூரமானதொரு வழிகேட்டிலும் இருக்கின்றனர்.(அல்குர்ஆன் 34:7, 8)


மரணத்திற்கு பிறகு எழுப்படுவதை பரிகாசம் செய்து அவர்கள் கவிதையும் பாடினர்,

“மரணமா? பிறகு எழுப்புதலா? பிறகு ஒன்று சேர்த்தலா? உம்மு அம்ரே இது என்னே கற்பனை கதை?”


உலகில் நடைபெறும் நிகழ்வுகளை அல்லாஹ் அவர்களது சிந்தனைக்கு உணர்த்தி, அவர்களது கூற்றுக்கு மறுப்புரைத்தான். அதாவது, அநீதமிழைத்தவன் அதற்குரிய தண்டனையை அனுபவிக்காமலும், அநீதத்திற்குள்ளானவன் அதற்குரிய பரிகாரத்தைப் பெறாமலும் மரணித்து விடுகிறான். அவ்வாறே, நன்மை செய்தவன் அதற்குரிய நற்பலனையும், தீமை செய்தவன் அதற்குரிய தண்டனையையும் அனுபவிக்காது மரணமடைகின்றான். மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கையும் அங்கு ஒவ்வொரு செயலுக்குமான தகுந்த கூலியும் என்ற நியதி இல்லாதிருந்தால், இந்த இரு வகையினரும் சமமாகி விடுவார்கள். அதுமட்டுமின்றி பாவியும் அநீதமிழைத்தவனும் நல்லவரை விடவும் அநீதமிழைக்கப்பட்டவனை விடவும் பாக்கியத்திற்குரியவர்களாக ஆகி விடுவார்கள். ஆனால், நீதமானவனான அல்லாஹ் தனது படைப்பினங்களை இத்தகைய முரண்பாட்டில் வைத்துவிடுவான் என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒன்றாகும். இதை அல்லாஹ் பின்வரும் வசனங்களில் விவரிக்கிறான்.

(நமக்கு) முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களை (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் நாம் ஆக்கி விடுவோமா? உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இருவரும் சமமென) எவ்வாறு, தீர்ப்பளிக்கின்றீர்கள்? (அல்குர்ஆன் 68:35, 36)

நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களைப் பூமியில் விஷமம் செய்தவர்களைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது இறை அச்சமுடைய வர்களை (பயமற்று குற்றம் புரியும்) பாவிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? (அல்குர்ஆன் 38:28)

எவர்கள் பாவத்தைத் தேடிக் கொண்டார்களோ அவர்கள், நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தவர்களைப் போல் தாம் ஆகிவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? அவர்கள் உயிருடன் இருப்பதும் அவர்கள் இறந்துவிடுவதும் சமமே! அவர்கள் (இதற்கு மாறாகச்) செய்துகொண்ட முடிவு மகா கெட்டது. (அல்குர்ஆன் 45:21)


மறுமுறை எழுப்புவது அல்லாஹ்விற்கு முடியுமா? என்ற அவர்களின் சந்தேகத்திற்கு இதோ அல்லாஹ் பதில் அளிக்கின்றான்.

(மனிதர்களே!) நீங்கள் பலமான படைப்பா? அல்லது வானமா? அவன்தான் அந்த வானத்தைப் படைத்தான். (அல்குர்ஆன் 79:27)

வானங்களையும், பூமியையும் எவ்வித சிரமுமின்றி படைத்த அல்லாஹ், மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நிச்சயமாக ஆற்றலுடையவன்தான் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? நிச்சயமாக அவன் சகலவற்றிற்கும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 46:33)


முதல்முறை (உங்களைப்) படைத்ததை நிச்சயமாக நீங்கள் நன்கறிந்து இருக்கின்றீர்கள். (இதனைக் கொண்டு) நீங்கள் நல்லறிவு பெற வேண்டாமா? (இவ்வாறுதான் மறுமையிலும் நாம் உங்களை உயிர் கொடுத்து எழுப்புவோம்.) (அல்குர்ஆன் 56:62)

அவன்தான் படைப்புகளை ஆரம்பத்தில் உற்பத்தி செய்பவன். அவனே (அவை மரணித்த பின்னரும் உயிர்கொடுத்து) அவற்றை மீள வைக்கிறவன். இது அவனுக்கு மிக்க எளிது. வானங்களிலும் பூமியிலும் அவனுடைய (உதாரணமும் பரிசுத்தத்) தன்மை(யும்)தான் மிக்க மேலானதாகும். அவன் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 30:27)


எழுதப்பட்ட கடிதத்தைச் சுருட்டுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் நாளை (நபியே!) நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். முதல் தடவை நாம் அவர்களை படைத்தது போன்றே (அந்நாளில்) நாம் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) அவர்களை மீளவைப்போம். இது நம்மீது கடமையானதொரு வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதனைச் செய்தே தீருவோம். (அல்குர்ஆன் 21:104)

(படைப்புகள் அனைத்தையும்) முதல்முறை படைத்ததில் நாம் களைத்து விட்டோமர் (இவர்களை மறுமுறை படைப்பது நமக்குக் கஷ்டமெனக் கூறுவதற்கு?) எனினும் (மீண்டும் இவர்களைப்) புதிதாக படைக்கும் விஷயத்தில் இவர்கள் சந்தேகத்தில் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 50:15)


இவ்வாறு அவர்களது அனைத்து சந்தேகங்களுக்கும் அறிவார்ந்த விளக்கத்தை அல்லாஹ் அளித்தான். எனினும், அந்தக் நிராகரிப்பவர்கள் ஆணவத்தால் சிந்திக்க மறுத்து தங்களது கருத்தையே மக்களிடம் திணித்துக் கொண்டிருந்தனர்.

3) முன்னோர்களின் கட்டுக்கதைகளைக் கூறி திருமறையை செவியேற்காதவாறு மக்களைத் தடுப்பது

நிராகரிப்பவர்கள் மேற்கண்ட சந்தேகங்களுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. மக்கள் குர்ஆனை செவியேற்கவோ இஸ்லாமிய அழைப்புக்கு பதில் தரவோ இயலாதவாறு அவர்களிடையே புகுந்து தங்களால் இயன்றவரை தடைகளை ஏற்படுத்தினார்கள். இஸ்லாமிய அழைப்பைக் கேட்கும் மக்களிடையே நுழைந்து கூச்சல், குழப்பங்களையும், சலசலப்பையும் ஏற்படுத்தி அவர்கள் குழுமியுள்ள அந்த இடங்களிலிருந்து அவர்களை மிரண்டு ஓடவைப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அழைப்பு விடுப்பதற்கு அல்லது தொழுவதற்கு அல்லது குர்ஆன் ஓதுவதற்கு தயாரானால் பாட்டுப்பாடி ஆட்டம் போடுவார்கள். இது குறித்து அடுத்து வரும் வசனம் அருளப்பட்டது:

நிராகரிப்பவர்கள் (மற்றவர்களை நோக்கி) “நீங்கள் இந்த குர்ஆனை செவிமடுக்காதீர்கள். (எவர்கள் அதனை ஓதினாலும்) நீங்கள் அச்சமயம் சப்தமிட்டு அதில் கூச்சல், குழப்பம் உண்டுபண்ணுங்கள். அதனால் நீங்கள் (முஸ்லிம்களை) வென்றுவிடலாம்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 41:26)

இத்தகைய இடையூறுகளால் நபி (ஸல்) அவர்களுக்கு மக்கள் மன்றங்களிலும் பொதுச் சபைகளிலும் இஸ்லாமிய அழைப்புப் பணி செய்வதும் குர்ஆனை ஓதிக் காண்பிப்பதும் மிகச் சிரமமாக இருந்தது. எனவே, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மக்கள் முன்னிலையில் தோன்றி சொல்லவேண்டிய விஷயத்தை எடுத்துச்சொல்லி, ஓதிக்காட்ட வேண்டியதை ஓதிக்காட்டி விடுவார்கள். கடினமான இந்நிலை நபித்துவம் பெற்ற ஐந்தாம் ஆண்டு இறுதிவரை நீடித்தது.

குறைஷியர்களில் ஒருவனான “நள்ரு இப்னு ஹாரிஸ்’ ஒரு முறை “ஹீரா’ சென்றிருந்தபோது அங்கிருந்து பாரசீக அரசர்கள் மற்றும் ருஸ்தும், இஸ்ஃபுந்தியார் ஆகியோரின் கதைகளை கற்று வந்தான். நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் ஒரு சபையில் உபதேசம் செய்யவோ, அல்லாஹ்வைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவோ தொடங்கினால், அவர்களுக்குப் பின் “நழ்ரு’ நின்று கொண்டு “குறைஷியரே! முஹம்மதை விட நான் அழகாகப் பேசுவேன்” என்று கூறி, தான் கற்று வந்த கதைகளைக் கூறி முடித்தபின் “என்னை விட முஹம்மது அழகாகப் பேசிட முடியுமா?” என்று கேட்பான். (இப்னு ஹிஷாம்)

இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள்: இனிமையாக பாட்டுப் பாடும் ஓர் அடிமைப் பெண்ணை நழ்ரு விலைக்கு வாங்கியிருந்தான். இஸ்லாமை ஏற்க எவரேனும் விரும்பினால் அவரிடம் தனது பாடகியை அழைத்துச் சென்று “இவருக்கு உணவளித்து, மதுவைப் புகட்டி, இனிமையாக பாட்டுப் பாடு” என்று அவளிடம் கூறுவான். பிறகு, அம்மனிதரிடம் “முஹம்மது உன்னை அழைக்கும் காரியத்தைவிட இது மிகச் சிறந்தது” என்று கூறுவான். இது குறித்து பின்வரும் வசனம் அருளப்பட்டது. (துர்ருல் மன்ஸுர்)


(இவர்களைத் தவிர) மனிதல் பலர் இருக்கின்றனர். அவர்கள் (பொய்யான கட்டுக் கதைகள் மற்றும்) வீணான விஷயங்களை விலைக்கு வாங்கி (அவற்றை மக்களுக்கு ஓதிக் காண்பித்து) அல்லாஹ்வுடைய வழியிலிருந்து ஞானமின்றி மக்களை வழிகெடுத்து, அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இத்தகையவர்களுக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு. (அல்குர்ஆன் 31:6)

Offline Yousuf

துன்புறுத்துதல்

நபி (ஸல்) அவர்களின் பகிரங்க அழைப்பைத் தொடர்ந்து பல மாதங்கள் எதிரிகள் மேற்கொண்ட தடுப்பு முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவின. தாங்கள் கையாண்ட வழிமுறைகளால் எவ்வித பயனுமில்லை என்று அவர்களின் அறிவுக்கு மெதுவாக உரைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையாக மாற்று வழியைக் கையாண்டனர். அதாவது, ஒவ்வொரு சமூகத்தலைவரும் எஜமானரும் தன்னுடைய ஆளுமையின் கீழுள்ளவர்கள், அடிமைகள்- இவர்களில் யாராவது இஸ்லாமைத் தழுவினால் அவர்களைத் துன்புறுத்த வேண்டும். அவர்களுக்கு இன்னல்கள் விளைவிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

தலைவர்களுடன் அவர்களது எடுபிடிகளும் சேர்ந்துகொண்டு முஸ்லிம்களை வாட்டி வதைத்தனர். குறிப்பாக, சாதாரண எளிய முஸ்லிம்களுக்கு அவர்கள் தந்த நோவினைகளைக் கேட்கும்போதே உள்ளம் கசிந்துருகும். அவற்றை சொல்லி மாளாது.

செல்வமும் செல்வாக்குமுள்ள ஒருவர் இஸ்லாமைத் தழுவினால் அவரிடம் அபூஜஹ்ல் நேரே சென்று “உன் செல்வத்தையும் செல்வாக்கையும் ஒன்றுமில்லாமலாக்கி விடுவேன்” என்று மிரட்டுவான். அவர் கொஞ்சம் பலமில்லாதவராக இருந்தால் அடித்துத் துன்புறுத்துவான். (இப்னு ஹிஷாம்)

உஸ்மான் (ரழி) அவர்களது தந்தையின் சகோதரர் அப்பாவி முஸ்லிம்களை பேரீத்தங்கீற்றுப் பாயில் சுருட்டி வைத்து அதற்குக் கீழே புகை மூட்டி மூச்சு திணறடிப்பர். (ரஹ்மத்துல்லில் ஆலமீன்)

தனது மகன் முஸ்லிமாகி விட்டதை அறிந்த முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்களின் தாயார் அவருக்கு உணவு, தண்ணீர் கொடுக்காமல் வீட்டிலிருந்து விரட்டிவிட்டார். மிக ஆடம்பரமாக வாழ்ந்து வந்த அவர் பெரும் துன்பத்தை அனுபவித்தார். பசி, பட்டினி என்ற வறண்ட வாழ்க்கையினால் அவர்களது மேனியின் தோல் சுருங்க ஆரம்பித்தது. (அஸதுல் காபா)

ஸுஹைப் இப்னு ஸினான் (ரழி) நினைவிழக்கும் வரை கடுமையாக தாக்கப்படுவார். (அஸதுல் காபா)

பிலால் (ரழி) அவர்கள் உமய்யா இப்னு கலஃபுடைய அடிமையாக இருந்தார்கள். உமையா அவர்களது கழுத்தில் கயிற்றைக் கட்டி சிறுவர்களிடம் கொடுப்பான். சிறுவர்கள் அவரை மக்காவின் கரடு முரடான மலைப் பாதைகளில் இழுத்துச் செல்வார்கள். கயிற்றின் அடையாளம் அவர்களது கழுத்தில் பதிந்துவிடும். அவர்கள் “அஹத்! அஹத்!“” என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். சில வேளைகளில் உமையா பிலாலை மிக இறுக்கமாகக் கட்டி தடியால் கடுமையாகத் தாக்குவான். பிறகு சூரிய வெப்பத்திலும் போடுவான். உணவளிக்காமல் பசியால் துடிக்க வைப்பான். சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் பாலைவன மணலில் கிடத்தி அவர்களது நெஞ்சின்மீது பாறாங்கல்லைத் தூக்கி வைப்பான். அப்போது பிலாலை நோக்கி, “அல்லாஹ்வின் மீதாணையாக! நீ சாக வேண்டும். அல்லது முஹம்மதின் மார்க்கத்தை நிராகரித்து லாத், உஜ்ஜாவை வணங்க வேண்டும். அதுவரை நீ இப்படியேதான் இருப்பாய். உன்னை விடவே மாட்டேன்” என்பான். அதற்கு பிலால் (ரழி) அஹத்! அஹத்! என்று சொல்லிக் கொண்டே, “இந்த “அஹத்’ என்ற வார்த்தையைவிட உனக்கு ஆவேசத்தை உண்டு பண்ணும் வேறொரு வார்த்தை எனக்குத் தெரிந்தால் நான் அதையே கூறுவேன்” என்பார்கள்.

ஒரு நாள் பிலால் (ரழி) சித்திரவதைக்குள்ளாகி இருக்கும்போது அவர்களைக் கடந்து சென்ற அபூபக்ர் (ரழி) அவர்கள் ஒரு ஹபஷி அடிமையை கிரயமாகக் கொடுத்து பிலால் (ரழி) அவர்களை வாங்கி உரிமை விட்டார்கள். சிலர் “ஐந்து அல்லது ஏழு ஊகியா வெள்ளிக்குப் பகரமாக வாங்கி உரிமை விட்டார்கள்” என்று கூறுகின்றனர். (இப்னு ஹிஷாம்)

அம்மார் இப்னு யாஸிர் (ரழி), அவர்களது தகப்பனார் யாஸிர், தாயார் ஸுமய்யா ஆகிய மூவரும் மக்ஜூம் கிளையைச் சேர்ந்த அபூ ஹுதைஃபா இப்னு முகீரா என்பவனின் அடிமைகளாக இருந்தார்கள். மூவரும் இஸ்லாமைத் தழுவினர். இம்மூவரையும் அபூஜஹ்ல் தலைமையில் ஒரு கூட்டம் “அப்தஹ்’ என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று மதிய வேளையில் சுடு மணலில் கிடத்தி கடுமையாக சித்திரவதை செய்தனர். இதனைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் “யாஸின் குடும்பத்தாரே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு சொர்க்கம் வாக்களிக்கப்பட்டுள்ளது” என ஆறுதல் கூறினார்கள். நிராகரிப்பவர்களின் வேதனையாலேயே யாஸிர் (ரழி) இறந்துவிட்டார்கள். வயது முதிர்ந்து இயலாதவராக இருந்த அம்மான் தாயாரான சுமைய்யா பின்த் கய்யாத் (ரழி) அவர்களை அபூ ஜஹ்ல் அவர்களது பெண்ணுறுப்பில் ஈட்டியால் குத்திக் கொலை செய்தான். இவரே இஸ்லாமிற்காக உயிர் நீத்த முதல் பெண்மணியாவார்.

அவர்களது மகனாரான அம்மாரை பாலைவனச் சுடுமணலில் கிடத்தி நெஞ்சின் மீது பாறாங்கல்லை வைத்தும், நினைவிழக்கும் வரை தண்ணீல் மூழ்கடித்தும் சித்திரவதை செய்தனர். “முஹம்மதை திட்ட வேண்டும் அல்லது லாத், உஜ்ஜாவைப் புகழ வேண்டும். அப்போதுதான் உன்னை இத்தண்டனையிலிருந்து விடுவிப்போம்” என்றும் கூறினர். வேதனை தாளாத அம்மார் (ரழி) அவர்கள் நிராகரிப்பவர்களின் கட்டளைக்கு இணங்கி விட்டார். அதற்குப் பின் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அழுது மன்னிப்புக் கோரினார். அப்போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கியருளினான். (இப்னு ஹிஷாம்)

(ஆகவே,) எவரேனும் நம்பிக்கை கொண்டதன் பின்னர், அல்லாஹ்வை (நிராகரித்தால் அவனைப் பற்றிக் கவனிக்கப்படும்.) அவனுடைய உள்ளம் நம்பிக்கையை கொண்டு முற்றிலும் திருப்தியடைந்தே இருக்க, எவனுடைய நிர்ப்பந்தத்தின் மீதும் அவன் (இவ்வாறு) நிராகரித்தால் (அவன்மீது யாதொரு குற்றமுமில்லை.) எனினும், அவனுடைய உள்ளத்தில் நிராகரிப்பே நிறைந்திருந்(து இவ்வாறு செய்)தால் அவன் மீது அல்லாஹ்வுடைய கோபம்தான் ஏற்படும். அவனுக்கு கடுமையான வேதனையுமுண்டு. (அல்குர்ஆன் 16:106)

அஃப்லஹ் அபூ ஃபுகைஹா (ரழி) அவர்கள் அப்து தார் கிளையைச் சார்ந்த ஒருவருடைய அடிமையாக இருந்தார். இவரது இரு கால்களையும் சங்கிலியால் பிணைத்து, ஆடைகளைக் கழற்றிவிட்டு சுடுமணலில் குப்புறக் கிடத்தி அசையாமலிருக்க பெரும் பாறையை முதுகின் மீது வைத்து, சுய நினைவை இழக்கும்வரை அவரை அதே நிலையில் விட்டுவிடுவார்கள். இவ்வாறான கொடுமைகள் தொடர்ந்தன. ஒருமுறை அவரது கால்களைக் கயிற்றால் பிணைத்துச் சுடுமணலில் கிடத்தி கழுத்தை நெறித்தார்கள். அவர் சுயநினைவை இழந்தவுடன் இறந்துவிட்டாரென எண்ணி விட்டுவிட்டார்கள். அப்போது அவ்வழியாக வந்த அபூபக்ர் (ரழி) அஃப்லஹை விலைக்கு வாங்கி உரிமையிட்டார்கள். (அஸதுல் காபா)

கப்பாப் இப்னு அரத் (ரழி) அவர்கள் உம்மு அன்மார் என்ற பெண்ணின் அடிமையாகவும், கொல்லர் பணி செய்பவராகவும் இருந்தார்கள். அவர் இஸ்லாமைத் தழுவியதை அறிந்த எஜமானி பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பால் அவர்களது தலையிலும் முதுகிலும் சூடிட்டு “முஹம்மதின் மார்க்கத்தை விட்டுவிடு” என்று கூறுவாள். ஆனால் இவ்வாறான வேதனைகளால் அவர்களது ஈமானும்” மன உறுதியுமே அதிகரித்தது. உம்மு அன்மார் மட்டுமின்றி ஏனைய நிராகரிப்பவர்களும் அவரது முடியைப் பிடித்திழுப்பார்கள்; கழுத்தை நெறிப்பார்கள். நெருப்புக் கங்குகளின் மீது அவரைப் படுக்க வைப்பார்கள். அந்த நெருப்பு அவரது உடலைப் பொசுக்க, அப்போது இடுப்பிலிருந்து கொழுப்பு உருகி ஓடி, நெருப்பை அணைத்து விடும்.(அஸதுல் காபா)

ரோம் நாட்டைச் சேர்ந்த அடிமையான ஜின்னீரா (ரழி) என்ற பெண்மணி இஸ்லாமை ஏற்றதற்காக பலவிதமான கொடுமைக்கு ஆளானார். அப்போது கண்ணில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக பார்வையை இழந்தார். “இவரது கண்ணை லாத், உஜ்ஜா பறித்துவிட்டன” என்று நிராகரிப்பவர்கள் கூறினர். அதற்கு ஜின்னீரா, “நிச்சயமாக இல்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்பட்டது. அவன் நாடினால் எனக்கு நிவாரணமளிப்பான்” என்று கூறினார். மறுநாள் அவர்களது பார்வையை அல்லாஹ் சசெய்தான். அதைக் கண்ட குறைஷியர்கள் “இது முஹம்மதின் சூனியத்தில் ஒன்று” எனக் கூறினர். (இப்னு ஹிஷாம்)

உம்மு உபைஸ் (ரழி) என்ற பெண்மணி அஸ்வத் இப்னு அப்து யகூஸ் என்பவனின் அடிமையாக இருந்தார். இவன் நபி (ஸல்) அவர்களின் கொடும் விரோதியாகவும் நபியவர்களை பரிகசிப்பவனாகவும் இருந்தான். அவன் உம்மு உபைஸை கொயூரமாக வேதனை செய்தான். (இஸாபா)

அம்ர் இப்னு அதீ என்பவனின் அடிமைப் பெண்ணும் இஸ்லாமை ஏற்றார். அவரை (அப்போது இஸ்லாமை ஏற்காதிருந்த) உமர் (ரழி), தான் களைப்படையும் வரை சாட்டையால் அடித்துவிட்டு “நீ மரணிக்கும்வரை உன்னை நான் விடமாட்டேன்” என்று கூறுவார். அதற்கு அப்பெண்மணி “அப்படியே உமது இறைவனும் உம்மைத் தண்டிப்பான்” என்று கூறுவார். (இப்னு ஹிஷாம்)

இஸ்லாமை ஏற்றதற்காக கொடுமை செய்யப்பட்ட அடிமைப்பெண்களில் நஹ்திய்யா (ரழி) என்பவரும் அவரது மகளும் அடங்குவர். இவ்விருவரும் அப்துத்தான் கிளையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் அடிமையாக இருந்தனர். (இப்னு ஹிஷாம்)

இஸ்லாமை ஏற்றதற்காகக் கொடுமை செய்யப்பட்ட ஆண் அடிமைகளில் ஆமிர் இப்னு புஹைரா (ரழி) என்பவரும் ஒருவர். நினைவிழந்து சித்தப் பிரமை பிடிக்குமளவு அவரை கொடுமைப்படுத்தினார்கள். (இப்னு ஹிஷாம்)

இம்மூவரையும் அபூபக்ர் (ரழி) விலைக்கு வாங்கி உரிமையிட்டார்கள். இதைக் கண்ட அவர்களது தந்தையான அபூ குஹாஃபா “நீ பலவீனமான அடிமைகளை விலைக்கு வாங்கி உரிமை விடுகிறாய். திடகாத்திரமான ஆண் அடிமைகளை வாங்கி உரிமையளித்தால் அவர்கள் உனக்கு பக்கபலமாக இருப்பார்களே!” என்றார்.

அதைக் கேட்ட அபூபக்ர் (ரழி) அவர்கள் “நான் அல்லாஹ்வின் திருப்தியை நாடியே செய்கிறேன்” என்றார்கள். அல்லாஹ் அவர்களைப் புகழ்ந்தும் இஸ்லாமின் எதிரிகளை இகழ்ந்தும் அடுத்துள்ள வசனங்களை இறக்கினான்.

(மக்காவாசிகளே!) கொழுந்து விட்டெயும் நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன். மிக்க துர்பாக்கியம் உடையவனைத் தவிர, (மற்றெவனும்) அதற்குள் செல்ல மாட்டான். அவன் (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்கிப் புறக்கணித்துவிடுவான். (அல்குர்ஆன் 92:14-16)

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள துர்பாக்கியமுடையவன் உமைய்யாவும் அவனுடைய வழியில் முஸ்லிம்களை கொடுமைப்படுத்தியவர்களுமாவர்.

இறையச்சமுள்ளவர்தான் அதிலிருந்து தப்பித்துக் கொள்வார். (அவர் பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்ளும் பொருட்டுத் தன்னுடைய பொருளை(த் தானமாக)க் கொடுப்பார். அவர் பதில் செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் அவர் மீது இல்லாதிருந்தும், மிக்க மேலான தன் இறைவனின் முகத்தை விரும்பியே தானம் கொடுப்பார். (இறைவன் அவருக்கு அளிக்கும் கொடையைப் பற்றிப்) பின்னர் அவரும் திருப்தியடைவார். (அல்குர்ஆன் 92:17-21)

இவ்வசனத்தில் இறையச்சமுள்ளவர் என குறிப்பிடப்படுபவர் அபூபக்ர் (ரழி) அவர்களாவார். (இப்னு ஹிஷாம்)

அபூபக்ர் (ரழி) அவர்களும் துன்புறுத்தப்பட்டார்கள். நவ்ஃபல் இப்னு குவைலித் என்பவன் அபூபக்ர் (ரழி), தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி) இருவரையும் தொழக்கூடாது என்பதற்காக ஒரே கயிற்றில் இருவரையும் பிணைத்துவிட்டான். ஆனால், கட்டவிழ்ந்து அவ்விருவரும் தொழுவதைக் கண்ட நவ்ஃபல் அஞ்சி நடுங்கினான். இருவரும் ஒரே கயிற்றில் பிணைக்கப் பட்டதால் அவர்களை “கரீனைன் - இணைந்த இருவர்” என்று கூறப்படுகிறது. சிலர் இருவரையும் கட்டியது நவ்ஃபல் அல்ல, தல்ஹாவின் சகோதரன் உஸ்மான் இப்னு உபைதுல்லாஹ்தான் என்று கூறுகின்றனர்.

(மேற்கூறிய சம்பவங்கள் மக்கா முஸ்லிம்கள் பட்ட இன்னல்களுக்கு எடுத்துக் காட்டாகும்.) இஸ்லாமைத் தழுவிய எவரையும் அவர்கள் துன்புறுத்தாமல் விட்டதில்லை. எளிய முஸ்லிம்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்காகப் பழிவாங்கவும் எவருமில்லை என்பதால் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பது நிராகரிப்பவர்களுக்கு மிக எளிதாக இருந்தது. அடிமைகளாக இருந்தவர்களை அவர்களது எஜமானர்களும் அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் கொடுமைப் படுத்தினர். இஸ்லாமைத் தழுவியவர் செல்வமும் செல்வாக்கும் உடையவராக இருந்தால், அவர்களுக்கு அவர்களது கூட்டத்தார் பாதுகாவலாக இருந்தனர். சில வேளைகளில் குரோதத்தின் காரணமாக அவர்களது கூட்டத்தினரே அவர்களை கொடுமை செய்தனர்.

குறைஷிகளும் நபியவர்களும்...

நபி (ஸல்) அவர்கள் கம்பீரமாகவும் தனித்தன்மையுடனும் திகழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களை காண்பவர் நண்பரானாலும் விரோதியானாலும் அவரது மனதில் நபி (ஸல்) அவர்கள் பற்றிய உயர்வான எண்ணமும் மதிப்பும் மரியாதையும் தோன்றுவதைத் தவிர்க்க இயலாது. இழி மக்களே நபி (ஸல்) அவர்களிடம் அற்பமாக நடந்துகொள்ளத் துணிவர். மேலும், குறைஷியரின் மிக மதிக்கத்தக்க தலைவராக கருதப்பட்ட அபூதாலிபின் பாதுகாப்பிலிருந்த நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்துவது குறைஷியர்களுக்கு சிரமமாக இருந்தது. இந்நிலை குறைஷியர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தங்களுக்கு எவ்விதத் துன்பமும் ஏற்படாமல் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண விரும்பினர். நபி (ஸல்) அவர்களின் காப்பாளரான அபூதாலிபிடம் நுட்பமான முறையிலும் அச்சுறுத்தும் தொனியிலும் பேச்சுவார்த்தை நடத்தி அவரை தங்களது கோரிக்கை களுக்கு இணங்க வைக்க முடிவெடுத்தனர்.

Offline Yousuf

நபியவர்கள் மீது அத்துமீறல்

நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்டு அழைப்புப் பணியைத் தொடங்கும் வரை குறைஷியர்கள் அவர்களை தங்களில் மதிக்கத்தக்க நபராகவே கருதி வந்தனர். அழைப்புப் பணியைத் தொடங்கியதும் அவர்கள் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு நபி (ஸல்) அவர்கள் மீது அத்துமீறாதிருந்தனர். தற்பெருமையும் ஆணவமும் கொண்டிருந்த அவர்களால் நபி (ஸல்) அவர்களின் செயல்பாடுகளை நீண்ட நாள் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. குறைஷித் தலைவர்களில் ஒருவனான அபூ லஹப் அழைப்புப் பணியின் முதல் நாளிலிருந்தே நபி (ஸல்) அவர்களிடம் கடும் பகைமையைக் காட்டி வந்தான் என்பதை ஹாஷிம் கிளையாரின் சபையிலும் ஸஃபா மலை நிகழ்ச்சியிலும் நாம் அறிந்திருக்கிறோம்.

நபித்துவத்துக்கு முன் நபி (ஸல்) அவர்கள் தங்களின் மகள்கள் ருகையா, உம்மு குல்ஸும் (ரழி) அவர்களை அபூலஹபின் மகன்களான உத்பா, உதைபாவுக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தைத் தொடங்கியதும் அபூ லஹப் தனது மகன்களை நிர்ப்பந்தித்து விவாகரத்துச் செய்ய வைத்துவிட்டான். (இப்னு ஹிஷாம்)

நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது மகனாரான அப்துல்லாஹ் சிறு வயதில் மரணமடைந்த போது அபூலஹப் மட்டில்லா மகிழ்ச்சியுடன் தனது தோழர்களிடம் “முஹம்மது சந்ததியற்றவராகி விட்டார்” என்ற சுபச் செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறினான். (தஃப்ஸீர் இப்னு கஸீர்)

ஹஜ்ஜுடைய காலங்களிலும் கடைத்தெருக்களிலும் அபூலஹப் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் சுற்றி வந்து அவர்களைப் “பொய்யர்” என்று கூறுவான். அது மட்டுமல்லாமல் ரத்தம் கொட்டும்வரை அவர்களது பிடரியில் பொடிக்கற்களால் அடித்துக்கொண்டே இருப்பான். (கன்ஜுல் உம்மால்)

அபூ லஹபின் மனைவியும் அபூ ஸுஃப்யானின் சகோதரியுமான உம்மு ஜமீல் நபி (ஸல்) அவர்களுக்கு நோவினை கொடுப்பதில் தனது கணவனைவிட குறைந்தவளும் அல்ல! சளைத்தவளும் அல்ல! முட்களை நபி (ஸல்) செல்லும் பாதையிலும் அவர்களது வீட்டின் வாசலிலும் வைத்து விடுவாள். மிகக் கெட்டவளான இவள் எந்நேரமும் நபி (ஸல்) அவர்களை ஏசிப் பேசிக்கொண்டிருந்தாள். பல பொய்களைப் பரப்பிக் கொண்டே இருப்பாள். நபி (ஸல்) அவர்களுக்கு எதிராகக் குழப்பம் விளைவித்துக் கொண்டும், பிரச்சினையின் நெருப்பை மூட்டிவிட்டுக் கொண்டும் இருப்பாள். இதனால்தான் அல்குர்ஆன் அவளை “ஹம்மாலதல் ஹத்தப்” விறகை சுமப்பவள் என்று வர்ணிக்கிறது.

தன்னைப் பற்றியும் தனது கணவனைப் பற்றியும் குர்ஆனின் வசனம் இறங்கியதை அறிந்து அவள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தாள். அப்போது நபி (ஸல்) அவர்களும் அபூபக்ரும் (ரழி) கஅபத்துல்லாஹ்விற்கு அருகில் உட்கார்ந்திருந்தார்கள். அவளது கையில் குழவிக் கல் இருந்தது. இருவருக்கும் அருகில் அவள் வந்தவுடன் அவளது பார்வையை நபி (ஸல்) அவர்களைப் பார்க்க முடியாமல் அல்லாஹ் பறித்து விட்டான்.

அபூபக்ரைப் பார்க்க முடிந்த அவளால் நபி (ஸல்) அவர்களைப் பார்க்க முடியவில்லை. “அபூபக்ரே உமது தோழர் எங்கே? அவர் என்னை கவிதைகளில் ஏசுகிறார் என்று எனக்கு தெரிய வந்துள்ளது. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரை நான் பார்த்தால் இக்குழவிக் கல்லால் அவரது வாயிலேயே அடிப்பேன். அறிந்து கொள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்கும் நன்றாகக் கவி பாடத்தெரியும்” என்று கூறிய பின் அடுத்து வரும் கவிதையைப் படித்தாள்.

“இழிவுக்குரியவரைத்தான் நாங்கள் ஏற்க மறுத்தோம்; அவரது கட்டளையை புறக்கணித்தோம்; அவருடைய மார்க்கத்தையும் வெறுத்தோம்.”

பிறகு அவள் திரும்பிச் சென்றுவிட்டாள். அப்போது அபூபக்ர் (ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அவள் உங்களைப் பார்த்ததை நீங்கள் பார்க்கவில்லையா?” என வினவ “அவள் என்னைப் பார்க்கவில்லை. அல்லாஹ் என்னை பார்க்க முடியாமல் அவளது பார்வையை மறைத்து விட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)

இச்சம்பவம் பற்றி “முஸ்னத் பஜ்ஜார்’ எனும் நூலின் அறிவிப்பில் வருவதாவது: அவள் அபூபக்ரிடம் வந்து “அபூபக்ரே! உங்கள் தோழர் என்னை கவிதையில் திட்டுகிறார்” என்றாள். அதற்கு அபூபக்ர் (ரழி) “இந்த வீட்டின் இறைவனின் மீது சத்தியமாக! அவருக்கு கவிதை பாடத் தெரியாது” என்று கூறினார்கள். “ஆம்! நீங்கள் சரியாகத்தான் கூறினீர்கள்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரனாகவும் நபி (ஸல்) அவர்களின் அண்டை வீட்டுக்காரனாகவும் இருந்த அபூலஹபும் இவ்வாறே செய்து கொண்டிருந்தான். அவனது வீடு நபி (ஸல்) அவர்களின் வீட்டுடன் இணைந்திருந்தது. அவனும் அவனைப் போன்ற நபி (ஸல்) அவர்களின் மற்ற அண்டை வீட்டார்களும் நபி (ஸல்) அவர்கள் வீட்டினுள் இருக்கும்போது நோவினை அளித்துக் கொண்டே இருப்பார்கள்.

இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) வீட்டினுள் இருக்கும்போது நபி (ஸல்) அவர்களின் அண்டை வீட்டார்களான அபூலஹப், ஹகம் இப்னு அபுல்ஆஸ் இப்னு உமைய்யா, உக்பா இப்னு அபீமுயீத், அதீ இப்னு ஹம்ராஃ ஸகஃபீ, இப்னுல் அஸ்தா ஆகியோர் எப்போதும் நபி (ஸல்) அவர்களுக்கு மிகுந்த நோவினை அளித்து வந்தனர். இவர்களில் ஹகம் இப்னு அபுல் ஆஸைத் தவிர வேறு யாரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை. தொழுது கொண்டிருக்கும் போது ஆட்டின் குடலை நபி (ஸல்) அவர்களை நோக்கி வீசுவார்கள். நபி (ஸல்) அவர்கள் வீட்டில் சமைப்பதற்காக சட்டியை வைக்கும்போது அதில் ஆட்டுக்குடலை போடுவார்கள். இதற்காகவே இவர்களிலிருந்து தன்னை மறைத்துக் கொள்வதற்காக ஒரு சுவரை ஏற்படுத்திக் கொண்டார்கள். இவர்கள் அசுத்தங்களை தூக்கி எறியும்போது அதைக் குச்சியில் வெளியே எடுத்து வந்து தனது வீட்டு வாசலில் நின்றவண்ணம் “அப்து மனாஃபின் குடும்பத்தினரே! இதுதான் அண்டை வீட்டாருடன் மேற்கொள்ளும் ஒழுக்கமா?” என்று கேட்டு, அதை ஓர் ஓரத்தில் தூக்கி வீசுவார்கள். (இப்னு ஹிஷாம்)

உக்பா இப்னு அபூமுயீத் விஷமத்தனத்தில் எல்லை மீறி நடந்து கொண்டான். இதைப் பற்றி ஒரு சம்பவத்தை இப்னு மஸ்ஊது (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கஅபாவுக்கு அருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அபூஜஹ்லும் அவனது கூட்டாளிகளும் அங்கு குழுமியிருந்தனர். அவர்கள் தங்களுக்குள் “நம்மில் ஒருவர் இன்ன குடும்பத்தாரின் ஒட்டகங்கள் அறுக்குமிடத்திற்குச் சென்று அங்குள்ள குடலை எடுத்து வந்து முஹம்மது சுஜூதிற்கு” சென்ற பின் அவரது முதுகில் வைக்கவேண்டும். யார் அதனை செய்வது?” என்று கேட்டனர். அக்கூட்டத்திலே மிகவும் திமிர் கொண்டவனான உக்பா எழுந்து சென்று குடலை எடுத்து வந்து நபி (ஸல்) அவர்கள் சுஜூதிற்குச் சென்றவுடன் அவர்களது இரு புஜங்களுக்கு இடையில் முதுகின் மீது வைத்து விட்டான். இதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனக்கு தடுக்கும் சக்தி இருந்திருக்க வேண்டுமே! அவர்கள் தங்களுக்குள் மமதையாகவும், ஏளனமாகவும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து விழுந்து விழுந்து சிரித்தனர். நபி (ஸல்) அவர்கள் தலையை உயர்த்த முடியாமல் சுஜூதிலேயே இருந்தார்கள். அங்கு வந்த ஃபாத்திமா (ரழி) அதை அகற்றியபோதுதான் நபி (ஸல்) அவர்கள் தலையைத் தூக்கினார்கள்.

பிறகு, “அல்லாஹ்வே! நீ குறைஷிகளைத் தண்டிப்பாயாக!” என்று மூன்று முறை கூறினார்கள். இது குறைஷிகளுக்கு மிகவும் பாரமாகத் தெரிந்தது. மக்காவில் செய்யப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் என்று அவர்கள் நம்பியிருந்தார்கள். பிறகு, பெயர் கூறி குறிப்பிட்டு “அல்லாஹ்வே! அபூ ஜஹ்லை தண்டிப்பாயாக! உக்பா இப்னு ரபீஆவையும், ஷைபா இப்னு ரபீஆவையும், வலீத் இப்னு உக்பாவையும், உமைய்யா இப்னு கலஃபையும், உக்பா இப்னு அபூ முயீதையும் நீ தண்டிப்பாயாக!” ஏழாவது ஒருவன் பெயரையும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் எனக்கு அது நினைவில் இல்லை. என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் பெயர் குறிப்பிட்ட நபர்கள் அனைவரும் கொல்லப்பட்டு பத்ரு கிணற்றில் தூக்கி எறியப்பட்டதை நான் பார்த்தேன். (ஸஹீஹுல் புகாரி)

உமையா இப்னு கலஃப் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களை பார்க்கும்போதெல்லாம் பகிரங்கமாக ஏசிக்கொண்டும், மக்களிடம் அவர்களைப்பற்றி இரகசியமாகக் குறை பேசிக்கொண்டும் இருப்பான். இவன் விஷயமாக சூரத்துல் ஹுமஜாவின் முதல் வசனம் இறங்கியது.

குறை கூறிப் புறம் பேசித் திரிபவர்களுக்கெல்லாம் கேடுதான். (அல்குர்ஆன் 104:1)

இப்னு ஹிஷாம் (ரஹ்) கூறுகிறார்: “ஹுமஜா’ என்றால் பகிரங்கமாக ஒருவரை ஏசுபவன். கண் சாடையில் குத்தலாக பேசுபவன். யிலுமஜா’ என்றால் மக்களைப்பற்றி இரகசியமாக குறைகளை பேசுபவன். (இப்னு ஹிஷாம்)

உமையாவின் சகோதரன் உபை இப்னு கலஃபும் உக்பாவும் நபி (ஸல்) அவர்களுக்கு நோவினையளிப்பதில் ஒரே அணியில் இருந்தனர். ஒருமுறை உக்பா நபி (ஸல்) அவர்களுக்கருகில் அமர்ந்து அவர்கள் ஓதும் சிலவற்றைச் செவிமடுத்தான். இது உபைம்க்குத் தெரிய வந்தபோது உக்பாவைக் கடுமையாகக் கண்டித்தான். மேலும், நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களது முகத்தில் எச்சிலைத் துப்பி வருமாறு அனுப்ப அவனும் சென்று துப்பி வந்தான். உபை இப்னு கலஃப் ஒருமுறை மக்கிப்போன எலும்புகளை நொறுக்கி, பொடியாக்கி நபி (ஸல்) அவர்களை நோக்கி காற்றில் ஊதிவிட்டான்.(இப்னு ஹிஷாம்)

அக்னஸ் இப்னு ஷரீக் என்பவனும் நபி (ஸல்) அவர்களை நோவினை செய்தவர்களில் ஒருவனாவான். இவனைப் பற்றி குர்ஆனில் இவனிடமிருந்த ஒன்பது குணங்களுடன் கூறப்பட்டுள்ளது.

(நபியே! எடுத்ததற்கெல்லாம்) சத்தியம் செய்யும் அந்த அர்ப்பமானவனுக்கு நீங்கள் வழிப்படாதீர்கள். (அவன்) எப்பொழுதும் (புறம்பேசிக்) குற்றம் கூறி, கோள் சொல்வதையே தொழிலாகக் கொண்டுத் திரிபவன். (அவன்) எப்போதுமே நன்மையான காரியங்களைத் தடை செய்யும் வரம்பு மீறிய பெரும்பாவி. கடின சுபாவமுள்ளவன். இதற்கு மேலாக அவன் மக்களிலும் ஈனன். (அல்குர்ஆன் 68:10-13)

அபூஜஹ்ல் சில சமயம் நபி (ஸல்) அவர்களிடம் வந்து திருமறையின் வசனங்களை செவிமடுத்துச் செல்வான். ஆனால், நம்பிக்கை கொள்ளவோ, அடிபணியவோ மாட்டான். ஒழுக்கத்துடனோ, அச்சத்துடனோ நடந்து கொள்ளவும் மாட்டான். தனது சொல்லால் நபி (ஸல்) அவர்களுக்கு நோவினை அளிப்பதுடன் அல்லாஹ்வின் வழியிலிருந்து பிறரைத் தடுத்தும் வந்தான். தனது இச்செயலை புகழ்ந்து பேசுவதற்குரிய நற்காரியம் என்றெண்ணி அகந்தையுடனும் மமதையுடனும் நடந்து செல்வான். இவனைப் பற்றியே பின்வரும் திருமறை வசனங்கள் இறங்கின.

(அவனோ அல்லாஹ்வுடைய வசனங்களை) உண்மையாக்கவுமில்லை தொழவு மில்லை. ஆயினும் (அவன் அவற்றைப்) பொய்யாக்கி வைத்து(த் தொழாதும்) விலகிக்கொண்டான். பின்னர், கர்வம்கொண்டு தன் குடும்பத்துடன் (தன் வீட்டிற்குச்) சென்றுவிட்டான். (அல்குர்ஆன் 75:31-33)

நபி (ஸல்) அவர்களை கண்ணியமிகு பள்ளியில் தொழுதவர்களாகப் பார்த்த தினத்திலிருந்தே அங்கு தொழுவதிலிருந்து நபி (ஸல்) அவர்களைத் தடுத்து வந்தான். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் மகாம் இப்றாஹீமிற்கு” அருகில் தொழுததைப் பார்த்த அவன் “முஹம்மதே! நான் உன்னை இதிலிருந்து தடுத்திருக்க வில்லையா?” என்று கூறிக் கடுமையாக எச்சரித்தான். அதற்கு நபி (ஸல்) அவர்களும் தக்க பதில் கூறி அவனை அதட்டினார்கள். அதற்கு அவன் “முஹம்மதே! எந்த தைரியத்தில் நீ என்னை மிரட்டுகிறாய்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவ்வோடையில் வசிப்போரில் நானே பெரியசபையுடையவன் (ஆதரவாளர்களைக் கொண்டவன்) என்பது உனக்குத் தெரியாதா?” என்றான். அப்போது,

ஆகவே, அவன் (தன் உதவிக்காகத்) தன் சபையோரை அழைக்கட்டும். நாமும் (அவனை நரகத்திற்கு அனுப்ப, நரகத்தின்) காவலாளிகளை அழைப்போம்.. (அல்குர்ஆன் 96:17, 18)

ஆகிய வசனங்களை அல்லாஹ் இறக்கினான்.

மற்றுமொரு அறிவிப்பில் வந்திருப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் அவனது கழுத்தைப் பிடித்து உலுக்கி, உனக்குக் கேடுதான்; கேடுதான்! உனக்குக் கேட்டிற்கு மேல் கேடுதான்!! (அல்குர்ஆன் 75:34, 35)

என்ற வசனத்தை கூறினார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் விரோதியாகிய அவன் “முஹம்மதே! என்னையா நீ எச்சரிக்கிறாய்? நீயும் உனது இறைவனும் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது. மக்காவில் இரு மலைகளுக்குமிடையில் நடந்து செல்பவர்களில் நானே மிகப்பெரும் பலசாலி” என்று கூறினான். (தஃப்ஸீர் இப்னு கஸீர்)

இவ்வாறு கண்டித்ததற்குப் பிறகும் கூட அபூஜஹ்ல் தனது மடமையிலிருந்து சுதாரித்துக் கொள்ளாமல் தனது கெட்ட செயலை தீவிரமாக்கிக் கொண்டேயிருந்தான். இதைப் பற்றி ஒரு சம்பவத்தை அபூ ஹுரைரா (ரழி) அவர்களின் வாயிலாக இமாம் முஸ்லிம் (ரஹ்) அறிவிக்கிறார்கள்:

“முஹம்மது உங்களுக்கு முன்னிலையில் தனது முகத்தை மண்ணில் வைத்து தேய்க்கிறாராமே” என்று அபூஜஹ்ல் கேட்டான். குழுமியிருந்தவர்கள் “ஆம்!” என்றனர். அதற்கவன் “லாத், உஜ்ஜாவின் மீது சத்தியமாக! நான் அவரைப் பார்த்தால் அவரது பிடரியின் மீது கால் வைத்து அழுத்தி அவரது முகத்தை மண்ணோடு மண்ணாக ஆக்கி விடுவேன்” என்று கூறினான். சிறிது நேரத்திற்குப் பிறகு நபி (ஸல்) அவர்களிடம் வந்தான். நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அவன் நபி (ஸல்) அவர்களின் பிடரியை மிதிக்க முயன்றபோதெல்லாம் பின்னோக்கி விழுந்து தன் கைகளால் சமாளித்துத் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான். மக்கள் “அபூ ஜஹ்லே! என்ன நேர்ந்தது?” என்று கேட்டனர். அதற்கு அவன் “எனக்கும் அவருக்குமிடையில் நெருப்பாலான அகழியையும், மிகப்பெரியபயங்கரத்தையும், பல இறக்கைகளையும் பார்த்தேன்” என்று கூறினான். பிறகு நபி (ஸல்) அவர்கள் “அவன் எனக்கருகில் நெருங்கியிருந்தால் வானவர்கள் அவனுடைய ஒவ்வொரு உறுப்பையும் இறாவியிருப்பார்கள் (பிய்த்து எறிந்திருப்பார்கள்)” என்று கூறினார்கள்.

இதற்கு முன் நாம் கூறியதெல்லாம் தங்களை அல்லாஹ்வின் சொந்தக்காரர்கள், அவனது புனித பூமியில் வசிப்பவர்கள் என்று பீற்றிக்கொள்ளும் இணைவைப்பவர்களின் கரங்களால் நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட அநியாயம் மற்றும் கொடுமையின் ஒரு சிறிய தகவல்தான். இத்தகைய இக்கட்டான கால கட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சோதனையையும், வேதனையையும் முடிந்த அளவு இலகுவாக்கி அவற்றிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்க மதி நுட்பமான ஒரு திட்டத்தைத் தீட்ட வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார்கள். இதற்காக இரண்டு திட்டங்களை நபி (ஸல்) அவர்கள் வகுத்தார்கள். அவ்விரு திட்டங்களால் அழைப்புப் பணியை வழி நடத்துவதிலும், இலட்சியத்தை அடைவதிலும் பற்பல பலன்கள் கிட்டின. அவையாவன:

1) அழைப்புப் பணிக்கு மையமாகவும், ஒழுக்க போதனைக்கு உறைவிடமாகவும் “அர்கம் இப்னு அபுல் அர்கம் மக்ஜூமி’ என்பவன் வீட்டை நபி (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.

2) முஸ்லிம்களை ஹபஷாவிற்கு (எதியோபியா) குடிபெயருமாறு கட்டளையிட்டார்கள்.

Offline Yousuf

அர்கமின் இல்லத்தில் அழைப்புப் பணி

இந்த வீடு ஸஃபா மலையின் கீழே, அந்த அநியாயக்காரர்களின் கண் பார்வைக்கும் அவர்களது சபைக்கும் தூரமாக இருந்தது. முஸ்லிம்கள் இரகசியமாக ஒன்றுகூட அவ்வீட்டை நபி (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அவ்வீட்டில் முஸ்லிம்களுக்குக் குர்ஆனை ஓதிக் காண்பித்து அவர்களுக்கு அதன் பண்புகளையும் சட்ட ஞானங்களையும் கற்றுக் கொடுத்து வந்தார்கள். அங்கு முஸ்லிம்கள் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிக் கொண்டு மார்க்க கல்வியும் கற்று வந்தார்கள். புதிதாக இஸ்லாமிற்கு வர விரும்புபவர் அவ்விடத்தில் வந்து இஸ்லாமைத் தழுவுவார். இது வரம்பு மீறிய அந்த அநியாயக்காரர்களுக்குத் தெரியாததால் முஸ்லிம்கள் ஓரளவு நிம்மதியுடனும் பாதுகாப்புடனும் அங்கு இருந்து வந்தனர்.

முஸ்லிம்களையும் நபி (ஸல்) அவர்களையும் ஒருசேர ஓரிடத்தில் இணைவைப்பவர்கள் கண்டுவிட்டால், நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுக்குக் கற்றுத்தரும் ஒழுக்கப் பணிகளையும், குர்ஆனையும், மார்க்கத்தையும் நிச்சயம் தங்களது சக்திக்கு மீறிய குறுக்கு வழிகளைக் கொண்டு தடுப்பார்கள். அதனால், இரு கூட்டத்தார்களுக்கிடையில் கைகலப்பு கூட நிகழ்ந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுடன் மலைக் கணவாய்களுக்கிடையில் இரகசியமாகத் தொழுது வருவார்கள். ஒருமுறை அதனைப் பார்த்துவிட்ட குறைஷி நிராகரிப்பவர்கள் அவர்களை வாய்க்கு வந்தபடி ஏசிபேசி அவர்களுடன் சண்டையிட்டனர். அச்சண்டையில் ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) ஒருவனை வெட்டி சாய்த்து விட்டார்கள். இதுதான் இஸ்லாமுக்காக செய்யப்பட்ட முதல் கொலை.

இவ்வாறு கைகலப்பு தொடர்ந்தால் முஸ்லிம்கள் அழிக்கப்படலாம். ஆகவே, இரகசியமாக பணிகளைத் தொடர்வதுதான் சரியான முறையாகப்பட்டது. பொதுவாக நபித்தோழர்கள் தாங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தங்களது வணக்க வழிபாடுகளை மறைமுகமாகச் செய்து வந்தனர். ஆனால், நபி (ஸல்) அவர்கள் மட்டும் குறைஷிகளுக்கு முன்னிலையிலும் தங்களது வணக்க வழிபாடுகளையும் அழைப்புப் பணியையும் பகிரங்கமாக செய்து வந்தார்கள். எதற்கும் அவர்கள் அஞ்சிடவில்லை. ஆனால், இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் நன்மையைக் கருதியே முஸ்லிம்களை இரகசியமாக சந்தித்து வந்தார்கள்.


ஹபஷாவில் அடைக்கலம்

நபித்துவத்தின் நான்காம் ஆண்டு நடுவில் அல்லது இறுதியில் முஸ்லிம்கள் மீது நிராகரிப்பவர்கள் வரம்பு மீற ஆரம்பித்தனர். தொடக்கத்தில் குறைவாகத் தென்பட்ட துன்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றன. ஐந்தாம் ஆண்டின் நடுவில் சோதனைகள் மலையாக உருவெடுக்கவே அதிலிருந்து விடுதலைபெற வழி என்ன என்று சிந்திக்கத் தொடங்கினார்கள். இச்சூழ்நிலையில்தான் “அல்லாஹ்வுடைய பூமி நெருக்கடியானதல்ல. எனவே (இடம்பெயரும்) ஹிஜ்ராவின் வழியை தேர்ந்தெடுங்கள்” என்று சுட்டிக் காட்டப்பட்ட அத்தியாயம் ஜுமல் உள்ள 10வது வசனம் இறங்கியது.

இம்மையில் நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) நன்மைதான் கிடைக்கும். அல்லாஹ்வுடைய பூமி மிக விசாலமானது. நிச்சயமாக, பொறுமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றியே (அதிகமாக) கொடுக்கப்படும். (அல்குர்ஆன் 39:10)

ஹபஷாவின் மன்னராக இருந்த “அஸ்மஹா நஜ்ஜாஷி’ நீதமானவர். அவர் யாருக்கும் அநியாயம் இழைக்கமாட்டார் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். எனவே, உயிரையும் மார்க்கத்தையும் பாதுகாத்துக் கொள்ள ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செய்யுமாறு முஸ்லிம்களை நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி நபித்தோழர்களின் ஒரு குழுவினர் முதலாவதாக ஹபஷாவிற்கு நாடு துறந்து செல்ல இருந்தார்கள். இதனை குறைஷிகள் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக இரவின் நடுநிசியில் புறப்பட்டு “ஷுஅய்பா’ துறைமுகத்தை அடைந்தனர். வியாபாரக் கப்பல்கள் இரண்டு அங்கு முகாமிட்டிருந்தன. எப்படியோ மோப்பம் பிடித்த குறைஷிகள், இவர்களைத் தேடி அந்த துறைமுகத்திற்கு வந்துவிட்டார்கள். அதற்குள் முஸ்லிம்கள் வியாபாரக் கப்பல்களில் ஏறி ஹபஷாவுக்கு புறப்பட்டு விட்டார்கள். இதனால் குறைஷிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். நாடு துறந்து சென்ற குழுவில் பன்னிரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் இருந்தனர். அவர்களுக்கு தலைவராக உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) இருந்தார்கள். இப்பயணத்தில் அவர்களின் மனைவியான (நபி (ஸல்) அவர்களின் மகள்) ருகையாவும் (ரழி) உடன் இருந்தார்கள். நபி இப்றாஹீம் (அலை), நபி லூத் (அலை) ஆகிய இருவருக்குப் பின் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரா செய்த முதல் குடும்பம் இதுதான்” என்று இவ்விருவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் அருளால் முஸ்லிம்கள் ஹபஷாவில் வாழ்வை நிம்மதியாகக் கழித்தார்கள். இது நபித்துவம் பெற்ற ஐந்தாம் ஆண்டின் ரஜப் மாதத்தில் நடைபெற்றது. (ஜாதுல் மஆது)


இணைவைப்பவர்களும் சிரம் பணிந்தனர்

அந்த ஆண்டு ரமளான் மாதம் ஓர் இரவு நபி (ஸல்) அவர்கள் புனித பள்ளிக்குச் சென்றார்கள். அங்கு குறைஷியரும் அவர்களது தலைவர்களும் கொண்ட பெருங்கூட்டமொன்று குழுமியிருந்தது. திடீரென அவர்களுக்கு முன் நபி (ஸல்) அவர்கள் தோன்றி அத்தியாயம் அந்நஜ்மை ஓதினார்கள். நிராகரிப்பவர்கள் இதற்கு முன் குர்ஆன் வசனங்களைக் கேட்டதில்லை. அதற்குக் காரணம், “குர்ஆனை நீங்கள் கேட்காதீர்கள்; அது ஓதப்படும்போது வீண்செயல்களில் ஈடுபடுங்கள்’ என்று அவர்களில் ஒருவர் மற்றவருக்கு கூறி வந்ததுதான். நிராகரிப்பவர்களின் இந்தக் கூற்றைப் பற்றி,

நிராகரிப்பவர்கள் (மற்றவர்களை நோக்கி) நீங்கள் “இந்தக் குர்ஆனை (உங்கள் காதாலும்) கேட்காதீர்கள். (எவர்கள் அதனை ஓதியபோதிலும் நீங்கள் அச்சமயம் சப்தமிட்டு) அதில் குழப்பம் உண்டுபண்ணினால் நீங்கள் வென்று விடுவீர்கள்” என்றும் கூறினார்கள். (அல்குர்ஆன் 41:26)

என்ற வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.


நபி (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தை திடீரென ஓத, இனிமையான இறைவசனங்கள் அவர்களது காதுகளை வருடின. இதுவரை கேட்டவற்றில் இத்துணை மதுரமான, செவிக்கு இன்பத்தைத் தரும் சொற்றொடர்களை அவர்கள் இதற்கு முன் கேட்டதில்லை. அல்லாஹ்வின் அந்த வசனங்கள் அவர்களை மிகவும் கவர்ந்தன. அவர்களது உணர்வுகளை அவ்வசனங்கள் முழுமையாக ஆட்கொண்டன. நபி (ஸல்) ஓதுவதை அவர்கள் மெய்மறந்து கேட்டனர். நஜ்ம் அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் கேட்போரின் உள்ளத்தைக் கிடுகிடுக்கச் செய்யும் கோடை இடியாக விளங்குகிறது. இறுதியில், “அல்லாஹ்வுக்கு தலைசாயுங்கள், அவனை வணங்குங்கள்’ என்ற வசனத்தை ஓதி நபி (ஸல்) அவர்கள் சிரம் பணிந்தார்கள். ஆரம்பம் முதல் இறுதிவரை கேட்டுக் கொண்டிருந்த அனைவரும் இறை வசனங்களால் கவரப்பட்டு தங்களை கட்டுப்படுத்த முடியாமல் தாம் என்ன செய்கிறோம் என்பதையும் உணராமல் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து சுஜூதில் வீழ்ந்தனர்.

எதார்த்தத்தில் சத்தியத்தின் ஈர்ப்பு, பெருமை கொண்ட அவர்களின் உள்ளங்களில் உள்ள பிடிவாதத்தைத் தவிடு பொடியாக்கியது. எனவேதான், தங்களை கட்டுப்படுத்த இயலாமல் அவர்களும் நபி (ஸல்) அவர்களுடன் சுஜூதில் வீழ்ந்தார்கள்.

அல்லாஹ்வுடைய வசனத்தின் மகிமை அவர்களது கடிவாளத்தை திருப்பி விட்டதை உணர்ந்த அவர்கள் மிகவும் கைசேதமடைந்தனர். அவ்வுணர்வை அழிப்பதற்கு உண்டான முழு முயற்சியை செய்தனர். இச்சம்பவத்தில் கலந்துகொள்ளாத இணைவைப்பவர்கள் நாலாபுறங்களில் இருந்தும் அச்செயலைக் கண்டித்ததுடன் பழித்தும் பேசினர். இதனால் சிரம் பணிந்த இணை வைப்பவர்கள் தங்களின் இச்செயலை நியாயப்படுத்துவதற்காக நபி (ஸல்) அவர்கள் மீது ஒரு கதையைக் கட்டிவிட்டனர். அதாவது நபி (ஸல்) அவர்கள் நமது சிலைகளை கண்ணியப்படுத்தும் விதமாக நாம் எப்போதும் கூறி வரும் “தில்க்கள் கரானிக்குல் உலா, வஇன்ன ஷஃபாஅத்த ஹுன்ன லதுர்தஜா” என்பதை ஓதினார்கள். அதனால்தான் நாங்கள் சுஜூது செய்தோம் என்று கதை கட்டினார்கள். (அதன் பொருளாவது: இவைகளெல்லாம் எங்களின் உயர்ந்த சிலைகள். அவைகளின் சிபாரிசு நிச்சயமாக ஆதரவு வைக்கப்படும்.) பொய் சொல்வதை தொழிலாகவும் சூழ்ச்சி செய்வதை வழக்கமாகவும் கொண்ட அக்கூட்டம் இவ்வாறு செய்தது ஓர் ஆச்சரியமான விஷயமல்ல!


முஹாஜிர்கள் திரும்புதல்

இணைவைப்பவர்கள் சுஜூது செய்த விஷயம், ஹபஷாவில் இருந்த முஸ்லிம்களுக்குக் “குறைஷிகள் முஸ்லிமாகிவிட்டனர்’ என்று, உண்மைக்கு புறம்பான தகவலாய் சென்றடைந்தது. அதனால் அதே ஆண்டு ஷவ்வால் மாதத்தில் அந்த முஸ்லிம்கள் மக்காவிற்குத் திரும்பினர். மக்காவிற்கு சற்று முன்னதாகவே உண்மை நிலவரம் முஸ்லிம்களுக்குத் தெரிய வந்தவுடன் சிலர் ஹபஷாவிற்கே திரும்பிவிட்டனர். சிலர் எவருக்கும் தெரியாமல் மக்காவிற்குள் சென்றுவிட்டனர். மற்றும் சிலர் குறைஷிகள் சிலர் பாதுகாப்பில் மக்காவிற்குள் நுழைந்தனர்.

மெல்ல மெல்ல குறைஷிகள் இவர்களையும் மற்ற முஸ்லிம்களையும் கடுமையாக வேதனை செய்தனர். அவர்களது நெருங்கிய உறவினர்களும் கூட அவர்களுக்குக் கொடுமை செய்தனர். இந்நிலையில் மறுமுறையும் ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செல்லுங்கள் என தங்களது தோழர்களுக்கு ஆலோசனை கூற வேண்டிய கட்டாயம் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது.

Offline Yousuf

இரண்டாவது ஹிஜ்ரா

முஸ்லிம்கள் பெருமளவில் ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செல்ல ஆயத்தமானார்கள். ஆனால் இந்த இரண்டாவது ஹிஜ்ரா முந்திய ஹிஜ்ராவை விட மிக சிரமமாகவே இருந்தது. முஸ்லிம்களின் இப்பயணத்தை குறைஷிகள் அறிந்து கொண்டதால் அத்திட்டத்தை அழிக்க வேண்டுமென்பதற்காக தீவிரமான முயற்சியில் இறங்கினர். ஆனால், அல்லாஹ்வின் அருளால் பயணம் அவர்களுக்குச் சாதகமாகி, நிராகரிப்பவர்கள் தங்களது திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னதாகவே பயணத்தைத் துதப்படுத்தி ஹபஷா மன்னர் நஜ்ஜாஷியை அடைந்தனர்.

இம்முறை 83 ஆண்களும் 18 அல்லது 19 பெண்களும் ஹபஷா சென்றனர். (சிலர் அம்மார் (ரழி) இப்பயணத்தில் செல்லவில்லை. எனவே, ஆண்களில் 82 நபர்கள்தான் என்றும் கூறுகின்றனர்.) (ஜாதுல் மஆது)

குறைஷியர்களின் சூழ்ச்சி

முஸ்லிம்கள் தங்களது உயிருக்கும் மார்க்கத்திற்கும் பாதுகாப்புள்ள இடமான ஹபஷாவில் நிம்மதியாக வசிப்பது இணைவைப்பவர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவர்களில் நுண்ணறிவும், வீரமுமிக்க அம்ரு இப்னு ஆஸ், அப்துல்லாஹ் இப்னு அபூரபீஆ ஆகிய இருவரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் நஜ்ஜாஷியையும் அவரது மத குருக்களையும் சந்தித்துப் பேசி, முஸ்லிம்களை நாடு கடத்தும்படி வேண்டுகோள் வைக்கும்போது அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்கு மதிப்புமிக்க வெகுமதிகளுடன் ஹபஷா அனுப்பி வைத்தனர்.

முதலில் அவ்விருவரும் மத குருக்களிடம் சென்று அவர்களுக்குரிய அன்பளிப்புகளை கொடுத்து முஸ்லிம்களை வெளியேற்றுவதற்காக தகுந்த காரணங்களைக் கூறினர். அந்த மத குருக்களும் அதனை ஏற்று, முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு நஜ்ஜாஷியிடம் ஆலோசனை கூறுவோம் என்று ஒப்புக் கொண்டனர். பிறகு அவ்விருவரும் நஜ்ஜாஷியிடம் வந்து அவருக்குரிய அன்பளிப்புகளைச் சமர்ப்பித்து அவரிடம் இது குறித்து பேசினர்.

“அரசே! தங்கள் நாட்டுக்கு சில அறிவற்ற வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்களது இனத்தவர்களின் மார்க்கத்தைவிட்டு வெளியேறிவிட்டனர். உங்களது மார்க்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் உங்களுக்கும் நமக்கும் தெரியாத ஒரு புதிய மார்க்கத்தை பின்பற்றுகின்றனர். இவர்களது இனத்திலுள்ளவர்கள் அதாவது இவ்வாலிபர்களின் பெற்றோர்கள், பெற்றோர்களின் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள் அனைவரும் இவர்களை அழைத்து வருவதற்காக எங்களை இங்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் இவர்களை நன்கு கண்காணிப்பார்கள்; பாதுகாப்பார்கள். அவர்களைப் பற்றி இவர்கள் கூறிய குறைகளை, நிந்தனைகளை அவர்களே நன்கறிந்தவர்கள். ஆகவே, நீங்கள் அவர்களை எங்களுடன் திருப்பி அனுப்பிவிடுங்கள்!” என்று கூறினர். உடனே அங்கிருந்த மத குருக்களும் “அரசே! இவ்விருவரும் உண்மைதான் கூறுகின்றனர். அவர்களை இவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்களது இனத்தவர்களிடம் இவர்கள் அவர்களை அழைத்து செல்வார்கள்” என்றனர்.

ஆனால், பிரச்சனையைத் தீர விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து நஜ்ஜாஷி முஸ்லிம்களை அவைக்கு வரவழைத்தார். எதுவாக இருப்பினும் உண்மையே சொல்ல வேண்டும் என்ற ஒரே முடிவில் முஸ்லிம்கள் அங்கு சென்றனர். முஸ்லிம்களிடம் “உங்களது இனத்தை விட்டுப் பிரிந்து எனது மார்க்கத்தையும் மற்றவர்களின் மார்க்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் புதுமையான மார்க்கத்தை ஏற்றிருக்கிறீர்களே! அது என்ன மார்க்கம்?” என்று நஜ்ஜாஷி கேட்டார்.

முஸ்லிம்களின் பேச்சாளராக இருந்த ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரழி) பதில் கூறினார்கள்: “அரசே! நாங்கள் அறியாமைக் காலத்தில் இருந்தோம்; சிலைகளை வணங்கினோம்; இறந்த பிராணிகளைச் சாப்பிட்டோம்; மானக்கேடான காரியங்களைச் செய்தோம்; உறவுகளைத் துண்டித்து அண்டை வீட்டாருக்கு கெடுதிகள் விளைவித்து வந்தோம்; எங்களிலுள்ள எளியோரை வலியோர் விழுங்கி வந்தனர் (அழித்து வந்தனர்.) இப்படியே நாங்கள் வாழ்ந்து வரும்போதுதான் எங்களில் உள்ள ஒருவரையே அல்லாஹ் எங்களுக்குத் தூதராக அனுப்பினான். அவன் வமிசத்தையும், அவர் உண்மையாளர், நம்பகத்தன்மை மிக்கவர், மிக ஒழுக்கசீலர் என்பதையும் நாங்கள் நன்கு அறிவோம். நாங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்; நாங்களும் எங்களது மூதாதையர்களும் வணங்கி வந்த கற்சிலைகள், புனித ஸ்தலங்கள் போன்றவற்றிலிருந்து நாங்கள் விலக வேண்டும்; உண்மையே உரைக்க வேண்டும்; அமானிதத்தை நிறைவேற்ற வேண்டும்; உறவினர்களோடு சேர்ந்து வாழவேண்டும்; அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும்; அல்லாஹ் தடைசெய்தவற்றையும் கொலைக் குற்றங்களையும் விட்டு விலகிவிடவேண்டும் என அத்தூதர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.

மேலும் மானக்கேடானவைகள், பொய் பேசுதல், அனாதையின் சொத்தை அபகரித்தல், பத்தினியான பெண்கள்மீது அவதூறு போன்றவற்றிலிருந்து எங்களைத் தடுத்தார். அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்; அவனுக்கு இணைவைக்கக் கூடாது தொழ வேண்டும்; ஏழை வரி (ஜகாத்து) கொடுக்க வேண்டும்; நோன்பு நோற்க வேண்டும் என்றும் அத்தூதர் எங்களுக்கு கட்டளையிட்டார் (ஜஅஃபர் இன்னும் பல இஸ்லாமிய கடமைகளைப் பற்றிய விவரங்களை கூறினார்.) நாங்கள் அவரை உண்மையாளராக நம்பினோம்; அவரை விசுவாசித்தோம்; அவர் எங்களுக்கு அறிமுகப்படுத்திய அல்லாஹ்வின் மார்க்கத்தை பின்பற்றினோம்; அல்லாஹ் ஒருவனையே வணங்க ஆரம்பித்தோம்; அவனுக்கு இணை வைப்பதை விட்டுவிட்டோம்; அவன் எங்களுக்கு விலக்கியதிலிருந்து விலகிக் கொண்டோம்; அவன் எங்களுக்கு ஆகுமாக்கியதை அப்படியே ஏற்றுக் கொண்டோம். இதனால் எங்களது இனத்தவர் எங்கள் மீது அத்துமீறினர்; எங்களை வேதனை செய்தனர். அல்லாஹ்வை வணங்குவதை விட்டுவிட்டு சிலைகளை வணங்க வேண்டும். முன்பு போலவே கெட்டவைகளைச் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தித்து எங்களை எங்களது மார்க்கத்திலிருந்து திருப்ப முயற்சித்தனர். எங்களை அடக்கி அநியாயம் செய்து நெருக்கடியை உண்டாக்கி எங்களது மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கும் மார்க்க(மத) சுதந்திரத்துக்கும் அவர்கள் தடையானபோது உங்களது நாட்டுக்கு நாங்கள் வந்தோம். உங்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். உங்களிடம் தங்குவதற்கு விருப்பப்பட்டோம். அரசே! எங்களுக்கு இங்கு அநீதி இழைக்கப்பட மாட்டாதென்று நம்புகிறோம்” என இவ்வாறு ஜஅஃபர் (ரழி) கூறி முடித்தார்.

“அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர் கொண்டு வந்த ஏதாவது உம்மிடம் இருக்கிறதா?” என்று ஜஅஃபடம் நஜ்ஜாஷி வினவினார். அதற்கு ஜஅஃபர் “ஆம்! இருக்கின்றது” என்றார். நஜ்ஜாஷி, “எங்கே எனக்கு அதை காட்டு” என்றார். காஃப்-ஹா-யா-ஐன்-ஸாத் எனத் தொடங்கும் “மர்யம்’ எனும் அத்தியாயத்தின் முற்பகுதியை ஜஅஃபர் (ரழி) ஓதிக் காண்பித்தார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! தாடி நனையும் அளவு நஜ்ஜாஷி அழுதார். அவையில் உள்ளவர்களும் ஜஅஃபர் (ரழி) ஓதியதைக் கேட்டு தங்களின் கையிலுள்ள ஏடுகள் நனையுமளவு அழுதனர். பிறகு நஜ்ஜாஷி, இதுவும் நபி ஈஸா (அலை) கொண்டு வந்த மார்க்கமும் ஒரே மாடத்திலிருந்து வெளியானது (முஸ்லிம்களை அழைக்க வந்த இருவரையும் நோக்கி) “நீங்கள் இருவரும் சென்று விடுங்கள்; உங்களிடம் நான் இவர்களை ஒப்படைக்கமாட்டேன்” என்று கூறினார். அவையில் இருந்த எவரும் அவ்விருவரிடமும் பேசுவதற்குத் தயாராகவில்லை.

அவ்விருவரும் வெளியேறி வந்தவுடன் அம்ர் இப்னு ஆஸ் தமது நண்பர் அப்துல்லாஹ் இப்னு அபூரபீஆவிடம் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர்களை அடியோடு வேரறுப்பதற்குண்டான வேலையை நான் நாளை செய்வேன்” என்று கூறினார். “ஆனால் அப்படி செய்துவிடாதே! அவர்கள் நமக்கு மாறு செய்தாலும் நமது இரத்த பந்தங்களே ஆவார்கள்” என்று அப்துல்லாஹ் கூறினார். ஆனால், அம்ரு தனது கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

மறுநாள் அம்ரு நஜ்ஜாஷியிடம் வந்து “அரசே! இவர்கள் ஈஸாவின் விஷயத்தில் அபாண்டமான வார்த்தையை கூறுகிறார்கள்” என்று கூறினார். “அப்படியா! அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றார் நஜ்ஜாஷி. இதை அறிந்தவுடன் சற்று பயமேற்பட்டாலும் உண்மையே சொல்ல வேண்டும் என்ற முடிவுடன் முஸ்லிம்கள் அவைக்கு வந்தனர். நஜ்ஜாஷி அவர்களிடம் அது பற்றி விசாரணை செய்தார்.

“எங்களது நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கூறியதைத்தான் நாம் அவர் விஷயத்தில் கூறுகிறோம்: அவர் அல்லாஹ்வின் அடிமை அவனது தூதர்; அவனால் உயிர் ஊதப்பட்டவர்; கண்ணியமிக்க கன்னிப்பெண் மர்யமுக்கு அல்லாஹ்வின் சொல்லால் பிறந்தவர்” என்று ஜஅஃபர் (ரழி) கூறினார்.

நஜ்ஜாஷி கீழேயிருந்து ஒரு குச்சியை எடுத்து “அல்லாஹ்வின் மீது ஆணையாக! மர்யமின் மகன் ஈஸா (அலை) இக்குச்சியின் அளவுகூட நீ கூறியதைவிட அதிகமாக கூறியதில்லை” என்றார். இதைக் கேட்ட அவரது மத குருமார்கள் முகம் சுழித்தனர். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் முகம் சுழித்தாலும் இதுவே உண்மை” என்று நஜ்ஜாஷி கூறிவிட்டார்.

பிறகு நஜ்ஜாஷி முஸ்லிம்களை நோக்கி “நீங்கள் செல்லலாம்! எனது பூமியில் நீங்கள் முழு பாதுகாப்புப் பெற்றவர்கள். உங்களை ஏசியவர் தண்டனைக்குரியவர். உங்களை ஏசியவர் தண்டனைக்குரியவர். உங்களை ஏசியவர் தண்டனைக்குரியவர். தங்கத்தின் மலையை எனக்கு கொடுத்தாலும் உங்களைத் துன்புறுத்த நான் விரும்பமாட்டேன்” என்று கூறினார். தனது அவையில் உள்ளவர்களிடம் அவ்விருவர்கள் கொண்டு வந்த அன்பளிப்புகளை அவர்களிடமே திரும்ப கொடுத்து விடுங்கள். எனக்கு அதில் எவ்வித தேவையும் இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் முன்னர் பறிபோன எனது ஆட்சியை எனக்கு மீட்டுத் தந்தபோது என்னிடமிருந்து அவன் லஞ்சம் வாங்கவில்லை. எனவே, நான் அவன் விஷயத்தில் லஞ்சம் வாங்குவேனா? எனக்கு எதிராக அல்லாஹ் கிளர்ச்சியாளர்களுக்கு உதவாதபோது அவனுக்கு எதிராக நான் பிரச்சனையாளர்களுக்கு உதவுவேனா? (எனக்கு எதிராக என் எதிரிகளுக்கு அவன் உதவி செய்யாதபோது அவனுக்கு எதிராக நான் அவனது எதிரிகளுக்கு உதவி செய்வேனா?)” என்று கூறினார்.

இச்சம்பவத்தை அறிவிக்கும் உம்மு ஸலமா (ரழி) கூறுவதாவது: அவ்விருவரும் அங்கிருந்து கேவலப்பட்டு வெளியேறினர். அவர்களது அன்பளிப்புகளும் திரும்ப கொடுக்கப்பட்டன. நாங்கள் சிறந்த நாட்டில் சிறந்த தோழமையில் அவரிடம் தங்கியிருந்தோம். (இப்னு ஹிஷாம்)

Offline Yousuf

நபியவர்கள் மீது கொலை முயற்சி

ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செய்த முஸ்லிம்களைத் திரும்பக் கொண்டு வருவதில் தோல்வியுற்ற இணைவைப்பவர்கள் கடுங்கோபத்தாலும் குரோதத்தாலும் பொங்கி எழுந்தனர். மக்காவில் மீதமிருந்த முஸ்லிம்களின் மீது தங்களது அட்யூழியங்களைக் கட்டவிழ்த்து விட்டதுடன் நபி (ஸல்) அவர்களுக்கும் கெடுதிகள் பல செய்யத் துவங்கினர். அவர்களின் செயல்பாடுகளைக் கவனிக்கும்போது அவர்களின் எண்ணப்படி இக்குழப்பத்திற்கு வேராக இருந்த நபி (ஸல்) அவர்களை ஒழித்துக் கட்டவே அவர்கள் முயற்சி செய்தனர் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

ஹிஜ்ரா செய்தவர்கள் போக மக்காவில் முஸ்லிம்கள் மிகக் குறைவாகவே எஞ்சி இருந்தார்கள். அவர்களில் சிலர் சரியான பக்க பலத்துடனும் கோத்திர பாதுகாப்புடனும் இருந்தார்கள். மற்றும் சில முஸ்லிம்கள் சிலன் அடைக்கலத்திலும் பாதுகாப்பிலும் இருந்தனர். ஆனால், எவரும் தங்களது இஸ்லாமை வெளிப்படுத்த துணிவின்றி மறைத்தும், வம்பர்களின் கண்களிலிருந்து முடிந்த அளவு மறைந்தும் ஒதுங்கியும் வாழ்ந்தனர். இவர்கள் எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்த போதிலும் நிராகரிப்பவர்களின் தொந்தரவிலிருந்து முழுமையாகத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எப்போதும் அந்த அக்கிரமக்காரர்களின் கண்களுக்கு முன்பாகவே தொழுது வந்தார்கள். வெளிப்படையாகவும் இரகசியமாகவும் மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்து வந்தார்கள். இதை யாராலும் தடுக்க முடியவில்லை. எந்த ஒன்றும் நபி (ஸல்) அவர்களை இப்பணியிலிருந்து திருப்பி விடவும் முடியவில்லை. ஏனெனில், அல்லாஹ் அவர்களுக்கு,

ஆகவே, உங்களுக்கு ஏவப்பட்டதை(த் தயக்கமின்றி) நீங்கள் அவர்களுக்கு தெளிவாக அறிவித்து விடுங்கள். மேலும், இணைவைத்து வணங்குபவர்களைப் புறக்கணித்து விடுங்கள். (அல்குர்ஆன் 15:94)

என்று கட்டளையிட்டிருந்தான்.

ஆகவே, இணைவைப்பவர்கள் நாடும்போதெல்லாம் நபி (ஸல்) அவர்களுக்கு இடையூறு அளித்து வந்தனர். நபி (ஸல்) அவர்கள் மீது அவர்களுக்கு இயற்கையாக இருந்த பயமும் அபூதாலிப் நபி (ஸல்) அவர்களுக்கு கொடுத்து வந்த பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவற்றால் வெளிப்படையாக நபி (ஸல்) அவர்களை இம்சிக்க அவர்களால் முடியவில்லை. மேலும், ஹாஷிம் கிளையார்கள் தங்களுக்கு எதிராக ஒன்றுகூடி விடுவார்கள் என்பதையும் அவர்கள் பயந்தனர்.

ஆனால், நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி இணைவைப்போரின் மத தலைமைத்துவத்தையும் சிலை வணக்கக் கலாச்சாரத்தையும் தவிடுபொடியாக்கியது. இதன் காரணத்தால் அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையூறுகள் பல செய்யத் தொடங்கினர்.

இக்காலகட்டத்தில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன என்பதை ஹதீஸ் மற்றும் வரலாற்று நூல்களிலிருந்து நாம் தெரிந்து கொள்கிறோம். அவற்றிள் ஒன்று:

1) அபூலஹபின் மகன் உதைபா நபி (ஸல்) அவர்களிடம் வந்து அத்தியாயம் அந்நஜ்மை ஓதிக் காண்பித்து “இதை நான் மறுக்கிறேன்” என்று கூறி நபி (ஸல்) அவர்கள் மீது பாய்ந்து அவர்களது சட்டையைக் கிழித்து அவர்களது முகத்தில் எச்சிலை துப்பினான். ஆனால், எச்சில் நபி (ஸல்) அவர்கள் மீது விழவில்லை. அந்நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வே! உனது மிருகங்களிலிருந்து ஒரு மிருகத்தை அவன் மீது சாட்டுவாயாக!” என்று அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அவர்களின் இந்த வேண்டுதலை அல்லாஹ் அங்கீகரித்துக் கொண்டான். இச்சம்பவத்திற்கு பிறகு உதைபா குறைஷியர்கள் சிலருடன் மக்காவிலிருந்து பயணமானான். ஷாம் நாட்டின் “ஜர்க்கா’ என்ற இடத்தில் தங்கியபோது அன்றிரவு ஒரு சிங்கம் அவர்களைச் சுற்றிச்சுற்றி வந்தது. அப்போது உதைபா “எனது சகோதரனின் நாசமே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! முஹம்மது எனக்கு எதிராக வேண்டிக் கொண்டதுபோல் இந்த சிங்கம் என்னைத் தின்றே முடிக்கும். நானோ ஷாமில் இருக்கின்றேன். அவர் மக்காவில் இருந்து கொண்டே என்னைக் கொன்றுவிட்டார்” என்று கூச்சலிட்டான். பிறகு அவனை தங்களுக்கு நடுவில் ஆக்கிக்கொண்டு மற்றவர்கள் அவனைச் சுற்றி தூங்கினார்கள். ஆனால், இரவில் அந்த சிங்கம் அவர்களைத் தாண்டிச் சென்று உதைபாவின் கழுத்தை கடித்துக் குதறிக் கொன்றுவிட்டது. (தலாயிலுந்நுபுவ்வா)

2) நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாவில் இருக்கும்போது அவர்களுடைய பிடரியின் மீது உக்பா இப்னு அபூ முஈத் மிக அழுத்தமாக மிதித்தான். இதனால் நபி (ஸல்) அவர்களின் விழிகள் பிதுங்கிற்று!

நபி (ஸல்) அவர்களை அந்த வம்பர்கள் கொல்லவேண்டுமென்று எண்ணம் கொண்டிருந்தனர் என்பதற்கு அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அறிவிக்கும் சம்பவத்தை சான்றாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார். அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரழி) கூறுவதாவது:

குறைஷிகள் ஹஜருல் அஸ்வதிற்கு அருகில் குழுமியிருந்தனர். நானும் அங்கு இருந்தேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பற்றி, “இவர் விஷயத்தில் நாம் பொறுமை காத்ததுபோன்று வேறு எதற்கும் நாம் பொறுமை காத்ததில்லை. இவர் விஷயத்தில் நாம் எல்லைமீறி சகித்து விட்டோம்” என்று பேசிக் கொண்டிருந்தனர். இந்நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் அவ்விடத்திற்கு வருகை தந்து ஹஜருல் அஸ்வதைத் தொட்டுவிட்டு தவாஃபை” தொடங்கினார்கள். கஅபாவைச் சுற்றி வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் குறைஷிகளுக்கு அருகில் நடந்தபோது குறைஷிகள் நபி (ஸல்) அவர்களை குத்தலாகப் பேசினார்கள். நபி (ஸல்) அவர்கள் முகத்தில் அதன் மாற்றத்தை நான் பார்த்தேன். இரண்டாவது முறையாக அவர்களுக்கு அருகில் வந்தபோது மீண்டும் அவ்வாறே குத்தலாகப் பேசினார்கள். நபி (ஸல்) அவர்கள் நின்றுவிட்டார்கள். “குறைஷிகளே! நான் சொல்வதை நீங்கள் (கொஞ்சம்) கேட்டுக் கொள்கிறீர்களா? எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! திட்டவட்டமாக நான் உங்களிடத்தில் உங்களைப் பலியிட்டு விடும் முடிவைக் கொண்டு வந்துள்ளேன். (அதிவிரைவில் உங்களது கதை முடிந்து விடும்)” என்று கூறினார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்ட அவர்கள் திடுக்கிட்டனர். தங்களுக்கு மிகப்பெரியஆபத்தொன்று நிச்சயம் நிகழும் என்பதை உணர்ந்தனர். இதனால் நபி (ஸல்) அவர்களிடத்தில் கொடூரமாக நடந்தவர் கூட நபி (ஸல்) அவர்களை மிக அழகிய முறையில் சாந்தப்படுத்தினார். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் அறிவீனர் அல்லர்! அபுல் காசிமே நீங்கள் திரும்பிச் சென்றுவிடுங்கள்” என்று கூறி, சாமாதானப்படுத்தினர்.

மறுநாளும் அவ்வாறே ஒன்று சேர்ந்து நபி (ஸல்) அவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் அங்கு நபி (ஸல்) அவர்கள் தோன்றினார்கள். அவர்கள் அனைவரும் ஒரே பாய்ச்சலாக நபி (ஸல்) அவர்கள் மீது பாய்ந்தனர். அவர்களில் ஒருவன் நபி (ஸல்) அவர்களின் போர்வையை பிடித்து இழுத்தான். அவனிடமிருந்து நபி (ஸல்) அவர்களைக் காப்பாற்றிய அபூபக்ர் (ரழி) “தனது இறைவன் அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறியதற்காகவா ஒருவரை கொலை செய்கிறீர்கள்?” என்று கண்ணீர் மல்கக் கேட்டார்கள். பிறகு அனைவரையும் அங்கிருந்து விலக்கி விட்டார்கள். இதுதான் நான் பார்த்ததில் குறைஷிகள் நபி (ஸல்) அவர்களைத் தாக்கிய மிகக் கொடூரமான நிகழ்ச்சி என்று இந்த நிகழ்ச்சியை அறிவிக்கும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) கூறுகிறார்கள்.

ஸஹீஹுல் புகாரியில் வருவதாவது: உர்வா இப்னு ஜுபைர் (ரழி) கூறுகிறார்:

நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அவர்களிடம் இணைவைப்பவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் அரக்கத்தனமாக நடந்து கொண்டவற்றில் மிகக் கொயூரமான ஒன்றை எனக்கு சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கவர் “நபி (ஸல்) அவர்கள் கஅபாவில் ஹஜருல் அஸ்வதிற்கு அருகில் தொழுது கொண்டிருந்தபோது உக்பா இப்னு அபூமுஈத் அங்கு வந்து தனது மேலாடையை நபி (ஸல்) அவர்களின் கழுத்தில் போட்டு மிகக் கடினமாக இறுக்கினான். அபூபக்ர் (ரழி) விரைந்து வந்து அவனது புஜத்தைப் பிடித்துத் தள்ளி நபி (ஸல்) அவர்களை விட்டும் அவனை விலக்கிவிட்டு “தனது இறைவன் அல்லாஹ் என்று கூறியதற்காகவா ஒருவரை கொலை செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

இச்சம்பவத்தை அஸ்மா பின்த் அபூபக்ர் (ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களை உக்பா இவ்வாறு கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தபோது உங்கள் தோழரை காப்பாற்றுங்கள் என்று ஒருவர் அபூபக்ர் (ரழி) அவர்களிடம் வந்து கூறினார். அபூபக்ர் (ரழி) எங்களைவிட்டு வேகமாகப் புறப்பட்டார்கள். அவர்கள் தங்களது தலையில் நான்கு சடை பின்னி இருந்தார்கள். “தனது இறைவன் அல்லாஹ் என்று கூறியதற்காகவா ஒருவரை கொலை செய்கிறீர்கள்?” என்று கூறிக்கொண்டே சென்று, நபி (ஸல்) அவர்களை விடுவித்தார்கள். அம்மக்கள் நபி (ஸல்) அவர்களை விட்டுவிட்டு தங்களதுக் கோபத்தை அபூபக்ர் (ரழி) மீது திருப்பினர். நிராகரிப்பவர்களின் கடும் தாக்குதலுக்கு ஆளாகிய பிறகு அபூபக்ர் (ரழி) எங்களிடம் திரும்பி வந்தார். அவருடைய சடையில் நாங்கள் எங்கு தொட்டாலும் அதிலிருந்து முடிகள் கையுடனேயே வந்துவிட்டன. (முக்தஸருஸ்ஸீரா)

ஹம்ஜா இஸ்லாமை தழுவதல்

அநியாயங்களும் கொடுமைகளும் நிறைந்து காணப்பட்ட அக்காலச் சூழ்நிலையில் முஸ்லிம்களின் பாதையை ஒளிமயமாக்கும் ஒரு மின்னல் வெட்டியது. அதுதான் ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) இஸ்லாமைத் தழுவிய நிகழ்ச்சி. ஆம்! நபித்துவத்தின் ஆறாம் ஆண்டு இறுதியில் துல்ஹஜ் மாதத்தில் அவர்கள் இஸ்லாமைத் தழுவினார்கள்.

ஹம்ஜா (ரழி) முஸ்லிமானதற்குரிய காரணம்: ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலைக்கருகில் அமர்ந்திருந்தபோது அவ்வழியாக வந்த அபூ ஜஹ்ல் நபி (ஸல்) அவர்களை சுடும் வார்த்தைகளால் இம்சித்தான். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு எவ்வித பதிலும் கூறாமல் வாய்மூடி மௌனமாகவே இருந்தார்கள். பிறகு அபூஜஹ்ல் ஒரு கல்லால் நபி (ஸல்) அவர்களின் மண்டையில் அடித்து காயப்படுத்திவிட்டு கஅபாவிற்கு அருகில் அமர்ந்திருந்த குறைஷிகளின் சபையில் போய் அமர்ந்து கொண்டான். நபி (ஸல்) அவர்களின் தலையிலிருந்து இரத்தம் கசிந்தது. ஸஃபா மலையில் இருந்த தனது வீட்டில் இருந்துகொண்டு இக்காட்சியை அப்துல்லாஹ் இப்னு ஜுத்ஆனின் அடிமைப் பெண் பார்த்து, வேட்டையிலிருந்து வில்லுடன் வந்து கொண்டிருந்த ஹம்ஜாவிடம் இச்சம்பவத்தைக் கூறினார். (ஹம்ஜா (ரழி) குறைஷிகளில் மிகவும் வலிமைமிக்க வாலிபராக இருந்தார்.) ஹம்ஜா (ரழி) சினம்கொண்டு எழுந்தார்.

அபூஜஹ்லை தேடி பள்ளிக்குள் நுழைந்து “ஏ கோழையே! எனது சகோதரன் மகனையா திட்டிக் காயப்படுத்தினாய்! நானும் அவரது மார்க்கத்தில்தான் இருக்கிறேன்” என்று கூறி தனது வில்லால் அவனது தலையில் அடித்து பெரும் காயத்தை ஏற்படுத்தினார். அபூஜஹ்லின் குடும்பமான பனூ மக்ஜுமில் உள்ள ஆண்கள் கொதித்தெழுந்தனர். ஹம்ஜாவிற்கு ஆதரவாக ஹாஷிம் கிளையார்களும் கொதித்தெழுந்தனர். இதனைக் கண்ட அபூஜஹ்ல் “அபூ உமாரா (ஹம்ஜா)வை விட்டுவிடுங்கள். நான் அவரது சகோதரனின் மகனை மிகக் கொச்சையாக ஏசி விட்டேன்” (அதுதான் என்னை அவர் தாக்குவதற்குக் காரணம்) என்று கூறினான். (இப்னு ஹிஷாம்)

தனது குடும்பத்தைச் சேர்ந்த பாசத்திற்குரிய ஒருவர் இழிவாக்கப்படுவதைப் பொறுக்கமுடியாத ரோஷத்தில்தான் ஹம்ஜா (ரழி) முதலில் இஸ்லாமை ஏற்றார். பிறகு அல்லாஹ்வின் அருளால் இஸ்லாமைப் புரிந்து கொண்டு, வலிமை வாய்ந்த இஸ்லாம் எனும் வளையத்தை அவர் உறுதியாகப் பற்றிக் கொண்டார். ஹம்ஜா (ரழி) இஸ்லாமைத் தழுவிய பின் முஸ்லிம்களின் மதிப்பு உயர்ந்தது.

Offline Yousuf

உமர் இஸ்லாமைத் தழுவுதல்

அநியாயங்கள், அடக்குமுறைகள் எனும் மேகங்கள் சூழ்ந்திருந்த அந்த நேரத்தில் முஸ்லிம்களின் வழிக்கு ஒளிகாட்ட மற்றொரு மின்னல். ஆம்! இம்மின்னல் முந்திய மின்னலை (ஹம்ஜா (ரழி) முஸ்லிமானதை) விட பன்மடங்காக ஒளி வீசியது. அதுதான் உமர் இப்னு கத்தாப் இஸ்லாமை ஏற்றுக்கொண்டது.

நபித்துவத்தின் ஆறாம் ஆண்டு துல்ஹஜ் மாதம் ஹம்ஜா (ரழி) அவர்கள் இஸ்லாமைத் தழுவி மூன்று நாட்கள் கழித்து உமர் இஸ்லாமைத் தழுவினார். நபி (ஸல்) அவர்கள் உமர் இஸ்லாமை தழுவ வேண்டுமென இறைவனிடம் வேண்டியிருந்தார்கள்.

“அல்லாஹ்வே! உமர் இப்னு கத்தாப் அல்லது அபூஜஹ்ல் இப்னு ஹிஷாம் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அவர்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானவர் உமராக இருந்தார் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அனஸ், இப்னு உமர் (ரழி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.

உமர் இஸ்லாமைத் தழுவிய நிகழ்ச்சியை விவரிக்கும் அறிவிப்புகளை நாம் ஆய்வு செய்து பார்க்கும்போது உமரின் உள்ளத்தில் இஸ்லாம் படிப்படியாகத்தான் வேரூன்றியது என்பதை தெரிந்து கொள்ளலாம். அந்த அறிவிப்புகளைச் சுருக்கமாக நாம் பார்ப்பதற்கு முன் உமரிடம் இருந்த உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் முதலில் பார்ப்போம்.

உமர் நல்ல வலிமையும் கம்பீரமான இயல்பும் உடையவர். அவரால் முஸ்லிம்கள் பல வகையான தொந்தரவுகளை, எண்ணற்ற இன்னல்களை நீண்ட காலமாக அனுபவித்து வந்தனர். எனினும், அவரது உள்ளத்தில் பல மாறுபட்ட உணர்ச்சிகளின் போராட்டம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. ஒருபுறம் தங்களது மூதாதையர்கள் கடைபிடித்து வந்த சடங்குகளைப் பின்பற்றி அவற்றுக்காக வீறுகொண்டு எழுந்தார். மற்றொருபுறம், கொள்கையில் முஸ்லிம்களுக்கு இருந்த உறுதியையும் அதற்காக சோதனைகள் அனைத்தையும் அவர்கள் தாங்கிக் கொள்வதையும் பார்த்து ஆச்சரியமடைந்தார். மேலும், ஒரு நல்ல பகுத்தறிவுவாதிக்கு வரும் சந்தேகங்கள் அவருடைய உள்ளத்திலும் அவ்வப்போது தோன்றி மறைந்தன. ஒரு வேளை இஸ்லாமிய போதனை மற்றவைகளைவிட தூய்மையானதாக, சரியானதாக இருக்கலாமோ என யோசிப்பார். அதனால்தான் அவருக்கு இஸ்லாமின்மீது கோபம் பொங்கி எழும்போதெல்லாம் உடனடியாக அடங்கியும் விட்டது.

உமர் இஸ்லாமைத் தழுவிய நிகழ்ச்சியை விவரிக்கும் அறிவிப்புகளை முறையாக இங்கு நாம் பார்ப்போம். ஓர் இரவில் தனது வீட்டுக்கு வெளியில் தூங்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. நேராக ஹரமுக்கு வந்து கஅபாவின் திரைக்குள் நுழைந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அங்கு தொழுது கொண்டிருந்தார்கள். தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் அத்தியாயம் அல்ஹாக்கா ஓத, அதன் வசன அமைப்புகளை ரசித்து உமர் ஓதுதலைச் செவிமடுத்தார். இதைத் தொடர்ந்து உமர் கூறுகிறார்:

நபி (ஸல்) அவர்கள் ஓதுவதை கேட்டுக் கொண்டிருந்த நான் எனது எண்ணத்தில் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் கவிஞராக இருப்பாரோ! என்று என் உள்ளத்தில் கூற,

இது, நிச்சயமாக (நம்மால் அறிவிக்கப்பட்டபடி) மிக்க சங்கை பொருந்திய ஒரு தூதரால் கூறப்பட்டதாகும். இது, ஒரு கவிஞனுடைய சொல்லல்ல. எனினும், (இதனை) நீங்கள் வெகு சொற்பமாகவே நம்பிக்கை கொள்கின்றீர்கள். (அல்குர்ஆன் 69:40, 41)

என்ற வசனங்களை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள்

அடுத்து இவர் ஜோசியக்காரராக இருப்பாரோ! என்று என் உள்ளத்தில் நான் கூற,

(இது) ஒரு ஜோசியக்காரனுடைய சொல்லுமல்ல. (எனினும், இதனைக் கொண்டு) வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுபதேசம் அடைகின்றீர்கள். உலகத்தார்களின் இறைவனால் (இது) இறக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 69:42, 43)

என்ற வசனங்களை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள்.

அது சமயம் எனது உள்ளத்தில் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

இது உமர் இதயத்தில் விழுந்த இஸ்லாமின் முதல் விதையாகும். எனினும், அறியாமைக் கால எண்ணங்களும் மூட பழக்க வழக்கங்களின் பிடிவாதமும், மூதாதையர்களின் மார்க்கத்தை உயர்வாக கருதி வந்ததும், அவரது உள்ளம் ஒத்துக் கொண்டிருந்த மகத்தான உண்மையை மறைத்திருந்தது. தனது உள்ளத்தில் பொதிந்து கிடந்த உணர்வைப் பொருட்படுத்தாமல் இஸ்லாமுக்கு எதிராக செயல்படுவதிலேயே தீவிரம் காட்டி வந்தார்.

நபி (ஸல்) அவர்களின் மீது அவருக்கிருந்த, அளவுமீறிய கோபத்தினால் வாளை ஏந்தி நபி (ஸல்) அவர்களின் கதையை முடித்துவிட வெளியேறினார். அப்போது நுஅய்ம் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் வழியில் அவரை சந்தித்து “உமரே நீ எங்கு செல்கிறாய்?” என்று கேட்க “நான் முஹம்மதை கொல்லச் செல்கிறேன்.” என்றார். அதற்கு நுஅய்ம் “நீ முஹம்மதை கொலை செய்துவிட்டு ஹாஷிம், ஜுஹ்ரஹ் இவ்விரு கிளையார்களிலிருந்து பயமின்றி தப்பித்து வாழ்வது எங்ஙனம்?” என்று அச்சுறுத்தினார். அவரை நோக்கி “நீ உனது மார்க்கத்தை விட்டுவிட்டு அவரது மார்க்கத்திற்கு சென்று விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது” என்று உமர் கூறினார். அதற்கு நுஅய்ம் “உமரே! ஆச்சரியமான ஒன்றை நான் உமக்கு சொல்லட்டுமா?. உனது சகோதரியும் (அவரது கணவர்) உனது மச்சானும் உனது மார்க்கத்தை விட்டுவிட்டு முஹம்மதின் மார்க்கத்துக்குச் சென்று விட்டனர்” என்று கூறியதுதான் தாமதம். அவ்விருவரையும் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை நோக்கி உமர் விரைந்தார்.

அப்போது அங்கு கப்பாப் (ரழி) அவர்கள் உமரின் சகோதரிக்கும் அவரது கணவருக்கும் தனது ஏட்டிலுள்ள “தாஹா’ எனத் தொடங்கும் அத்தியாயம் தாஹாவின் வசனங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உமர் வருவதை அறிந்த கப்பாப் (ரழி) வீட்டினுள் மறைந்து கொண்டார். உமரின் சகோதரியும் அந்த ஏட்டை மறைத்து விட்டார்கள். எனினும், உமர் வீட்டிற்கு அருகே வந்தபோது கப்பாப் (ரழி) கற்றுக் கொடுத்த சப்தத்தை கேட்டு விட்டார். வீட்டினுள் நுழைந்த உமர் “உங்களிடம் நான் செவிமடுத்த இந்த மெல்லிய சப்தம் என்ன?” என்று கேட்டதற்கு “நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை தவிர வேறு எதுவும் இல்லை” என்று அவ்விருவரும் கூறினார்கள். அப்போது உமர் “நீங்கள் மதம் மாறிவிட்டீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவரது மச்சான் “உமரே! சத்தியம். உன்னுடைய மார்க்கத்தை தவிர வேறொன்றில் இருந்தால் உன் கருத்து என்ன?” என்று கேட்க, உமர் கடுஞ்சினம் கொண்டு தனது மச்சானின் மீது பாய்ந்து அவரை பலமாகத் தாக்கி மிதிக்கவும் செய்தார். அவரது சகோதரி தனது கணவரை விட்டும் உமரை விலக்கினார். உமர் கடுமையாக தன் சகோதரியின் கன்னத்தில் அறைந்து அவரது முகத்தை ரத்தக் காயப்படுத்தினார்.

கோபம் கொண்ட உமரின் சகோதரி உமது மார்க்கமல்லாத வேறொன்றில் உண்மை இருந்தாலுமா? (அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது.) “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்” என்று உரக்கக் கூறினார். தனது கோபம் பலனற்றுப் போனதைக் கண்டு உமர் நிராசை அடைந்தார். தனது சகோதரிக்கு ஏற்பட்ட ரத்தக் காயத்தைப் பார்த்து அவருக்கு கைசேதமும், வெட்கமும் ஏற்பட்டது. உங்களிடமுள்ள இப்புத்தகத்தை எனக்குக் கொடுங்கள். நான் அதை படிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அதற்கு அவரது சகோதரி “நீ அசுத்தமானவர். நீர் எழுந்து குளித்து வாரும்” என்று கூறி அதைத் தர மறுத்துவிட்டார். பிறகு குளித்து வந்தவுடன் திருமறையை கையிலேந்தி “பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம்” (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்) என்று ஓதியவுடன் “ஆஹா! என்ன தூய்மையான பெயர்கள்” என்று கூறி, தொடர்ந்து “தாஹா’ என்று தொடங்கி பதினான்காவது வசனம் வரை ஓதி முடித்துவிட்டு “இது எவ்வளவு அழகான சொற்கள்! எவ்வளவு இனிமையான வசனங்கள்! எனக்கு முஹம்மதைக் காட்டுங்கள்!” என்று கேட்டுக் கொண்டார். உமரின் பேச்சைக் கேட்ட கப்பாப் (ரழி) வெளியேறி வந்து “உமரே! நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். வியாழன் இரவு, “அல்லாஹ்வே! உமர் அல்லது அபூஜஹ்ல் மூலமாக இஸ்லாமுக்கு உயர்வைக் கொடு!” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனை உங்கள் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று நான் உண்மையில் நம்புகிறேன்” என்றுரைத்தார்.

நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலையில் உள்ள இல்லத்தில் இருந்தார்கள். உமர் தனது வாளை அணிந்து கொண்டு நபி (ஸல்) அவர்களின் வீட்டை நோக்கி வந்தார். உமர் கதவைத் தட்டியபோது ஒருவர் கதவின் இடுக்கின் வழியாக உமரை வாள் அணிந்த நிலையில் பார்த்து நபி (ஸல்) அவர்களுக்கு அச்செய்தியைக் கூறினார். அங்கிருந்தவர்கள் எல்லாம் ஒன்று கூடிவிட்டார்கள். மக்கள் “உமர் வந்திருக்கிறார்” என்று கூறினார்கள். “ஓ! உமரா! (வந்திருக்கிறார்?) அவருக்கு கதவை திறந்து விடுங்கள்! அவர் நன்மையை நாடி வந்திருந்தால் அந்த நன்மையை நாம் அவருக்குக் கொடுப்போம்! அவர் தீமையை நாடி வந்திருந்தால் அவரது வாளாலேயே அவரை நாம் கொலை செய்து விடுவோம்!” என்று ஹம்ஜா (ரழி) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வீட்டின் உள்பகுதியில் வஹி (இறைச்செய்தி) வந்த நிலையில் இருந்தார்கள்.

சிறிது நேரத்துக்குப் பிறகு உமரை சந்தித்த நபி (ஸல்) அவர்கள் உமரின் சட்டையையும் வாளையும் பிடித்து அவரைக் குலுக்கி “உமரே! நீ வழிகேட்டிலிருந்து விலக மாட்டாயா? வலீதுக்கு ஏற்பட்டதைப் போன்ற கேவலத்தையும், தண்டனையும் அல்லாஹ் உனக்கு இறக்க வேண்டுமா? அல்லாஹ்வே! இதோ உமர் இப்னு கத்தாப் வந்திருக்கிறார். அல்லாஹ்வே! உமரால் இஸ்லாமிற்கு உயர்வைக்கொடு!” என்று கூறினார்கள். உமர் (ரழி) “அஷ்ஹது அல்லாஇலாஹஇல்லல்லாஹ் வ அன்னக்க ரஸுலுல்லாஹ்” என்று கூறி இஸ்லாமைத் தழுவினார். (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அல்லாஹ்வின் தூதர் நீங்கள் என்றும் சாட்சி கூறுகிறேன் என்பதே இதன் பொருளாகும்.) இதனைப் பார்த்த வீட்டில் உள்ளவர்கள் தக்பீர் (அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெயரிவன் என்று) முழங்கினர். அந்த சப்தத்தைப் பள்ளியில் உள்ளவர்களும் கேட்டார்கள்.

யாராலும் எதிர்கொள்ள முடியாத அளவுக்கு உமர் (ரழி) வலிமை மிக்கவராக இருந்தார். அவர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டது இணைவைப்பவர்களுக்கிடையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதுடன், இனி தங்களுக்கு இழிவும் பலவீனமும்தான் என்பதை அவர்களுக்கு உணர வைத்தது. உமர் (ரழி) இஸ்லாமைத் தழுவியது முஸ்லிம்களுக்குக் கண்ணியத்தையும், சிறப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

உமர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: “நான் இஸ்லாமைத் தழுவியபோது மக்காவாசிகளில் நபி (ஸல்) அவர்களுக்கு மிகக் கடுமையான எதிரி யார்? என்று யோசித்தேன். அபூ ஜஹ்ல்தான் அந்த எதிரி என்று கூறிக்கொண்டு நான் அவனிடம் வந்து அவனது வீட்டுக் கதவைத் தட்டினேன். என்னைப் பார்த்த அவன் “வருக! வருக! நீங்கள் வந்ததற்குரிய காரணம் என்ன?” என்று வினவினான். “நான் அல்லாஹ்வையும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் நம்பிக்கை கொண்டேன். அவர் கொண்டு வந்த மார்க்கத்தை உண்மை என்று நம்புகிறேன்” என்று கூறினேன். அதற்கவன் “அல்லாஹ் உன்னை கேவலப்படுத்துவானாக! நீ கொண்டு வந்ததையும் கேவப்படுத்துவானாக!” என்று கூறி என் முகத்தில் கதவை அறைந்து சாத்தி விட்டான்.” (இப்னு ஹிஷாம்)

உமர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: அக்காலத்தில் ஒருவர் முஸ்லிமாகிவிட்டார் என்று தெரியவந்தால் அனைவரும் அவரைப் பிடித்து அடிப்பார்கள்; சண்டை செய்வார்கள். நானும் முஸ்லிமாகி எனது தாய்மாமா “ஆஸி இப்னு ஹாஷிமிடம்’ வந்து அதைக் கூறியவுடன் அவர் என்னை ஒன்றும் செய்யாமல் வீட்டுக்குள் நுழைந்து கொண்டார். அவ்வாறே குறைஷிப் பெரியோர்களில் ஒரு முக்கியமானவரிடம் சென்று கூறினேன். அவரும் என்னை ஒன்றும் செய்யாமல் வீட்டுக்குள் நுழைந்து கொண்டார்.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அறிவிக்கிறார்கள்: உமர் (ரழி) இஸ்லாமைத் தழுவிய செய்தி குறைஷிகள் எவருக்கும் தெரியவில்லை. இதனால், செய்திகளை மக்களிடத்தில் மிக அதிகம் பரப்புபவர் யார்? என்று உமர் (ரழி) விசாரித்தார். அதற்கு ஜமீல் இப்னு முஅம்மர் அல் ஜும என்று பதில் கூறப்பட்டவுடன் அவரிடம் சென்றார்கள். நானும் உடன் இருந்தேன். அப்போது எனக்கு பார்ப்பதையும், கேட்பதையும் நன்கு புரிந்து கொள்ளக்கூடிய வயதுதான். உமர் (ரழி) அவரிடம் சென்று “ஓ ஜமீல்! நான் முஸ்லிமாகி விட்டேன்” என்று கூறியவுடன், அவர் மறுபேச்சு பேசாமல் நேராகப் பள்ளிக்குச் சென்று உரத்த குரலில் “ஓ குறைஷிகளே! கத்தாபின் மகன் மதம் மாறிவிட்டான்” என்று கத்தினான். அவனுக்கு பின்னால் உமர் (ரழி) நின்றுகொண்டு “இவன் பொய் கூறுகிறான். நான் மதம் மாறவில்லை. மாறாக முஸ்லிமாகி விட்டேன்! அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டேன்! அவனது தூதரை உண்மை என்று மெய்ப்பித்தேன்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட மக்கள் ஒன்று கூடி உமரின் மீது பாயத் தொடங்கினார்கள். அவர்கள் உமரிடம் சண்டையிட உமரும் அவர்களிடம் சண்டையிட்டார். சூரிய வெப்பம் அதிகரித்தபோது களைத்துவிட்ட உமர் (ரழி) கீழே உட்கார்ந்து விட்டார். மக்கள் அவரைச் சுற்றி நின்று கொண்டார்கள். உங்களுக்கு என்ன விருப்பமோ! அதை செய்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் சத்தியமாக கூறுகிறேன். நாங்கள் குறைந்தது 300 நபர்களாக பெருகிவிட்டால் ஒன்று மக்கா(வின் ஆதிக்கம்) உங்களுக்கு அல்லது எங்களுக்காகி விடும்” என்று கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)

இதற்குப் பிறகு உமரை கொலை செய்யக் கருதி இணைவைப்பவர்கள் உமரின் வீட்டுக்கு படையெடுத்தனர். உமர் (ரழி) வீட்டில் பயந்த நிலையில் இருந்தபோது அபூ அம்ர் ஆஸ் இப்னு வாயில் என்பவர் வந்தார். அவர் யமன் நாட்டு போர்வையும் கை ஓரம் பட்டினால் அலங்கரிக்கப்பட்ட சட்டையும் அணிந்திருந்தார். அறியாமை காலத்தில் அவரது கிளையார்களான பனூ ஸஹம் எங்களுடைய நட்புக்குரிய கிளையார்களாக இருந்தார்கள். அவர் உமரிடம் “உனக்கு என்ன நேர்ந்தது?” என்று வினவினார். உமர் (ரழி) “நான் முஸ்லிமானதற்காக என்னை உமது கூட்டம் கொலை செய்ய முனைகிறார்கள்” என்று கூறினார். அதற்கு அவர் “அப்படி ஒருக்காலும் நடக்காது” என்று கூறினார். அவர் இந்தச் சொல்லை கூறியதற்கு பிறகு உமர் நிம்மதியடைந்தார். இதற்கு பிறகு ஆஸ் வெளியேறி வந்து பார்த்தபோது அங்கு மக்களின் பெரும் கூட்டம் ஒன்று இருந்தது. அவர்களைக் கண்ட ஆஸ் “எங்கே வந்தீர்கள்?” என்று கேட்டதற்கு “இதோ கத்தாபின் மகன் மதம் மாறிவிட்டார். அவரிடம்தான் வந்துள்ளோம்” என்று கூறினார்கள். அதற்கு ஆஸ் “அவரை ஒருக்காலும் நீங்கள் நெருங்க முடியாது” என்று கூறவே அனைவரும் திரும்பிச் சென்றுவிட்டனர். (ஸஹீஹுல் புகாரி)

இதுவரை கூறிய நிகழ்ச்சிகள் இணைவைப்பவர்களைக் கவனித்துக் கூறப்பட்டது. முஸ்லிம்களை கவனித்துப் பார்க்கும்போது உமர் (ரழி) இஸ்லாமைத் தழுவியது வித்தியாசமான ஒன்றாகவே இருந்தது. இதைப்பற்றி இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்:

உமரிடம் “உங்களுக்கு “ஃபாரூக்’ என்ற பெயர் வரக் காரணம் என்ன?” என்று கேட்டேன். அதற்கவர் “எனக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக ஹம்ஜா (ரழி) முஸ்லிமானார். பிறகு நான் முஸ்லிமானேன்” என்று தான் முஸ்லிமான சம்பவத்தைக் கூறினார்கள். அதன் இறுதியில் அவர்கள் கூறியதாவது: நான் முஸ்லிமானபோது “அல்லாஹ்வின் தூதரே! நாம் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் உண்மையில்தானே இருக்கிறோம்” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம்! எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் உண்மையில்தான் இருக்கிறீர்கள்” என்று கூறினார்கள். அதற்கு நான் “அப்போது ஏன் மறைவாக செயல்பட வேண்டும். உங்களைச் சத்திய மார்க்கத்தைக் கொண்டு அனுப்பிய இறைவனின் மீது ஆணையாக! நாம் வெளிப்படையாக சத்தியத்தைக் கூறியே ஆக வேண்டும்” என்று கூறி முஸ்லிம்களை இரண்டு அணிகளாக ஆக்கி, ஓர் அணியில் நானும் மற்றொரு அணியில் ஹம்ஜாவும் இருந்துகொண்டு நபி (ஸல்) அவர்களை இரு அணிகளுக்கு நடுவில் ஆக்கிக் கொண்டோம். திருகையிலிருந்து மாவுத் தூள்கள் பறப்பது போன்று எங்களது அணிகளில் இருந்து புழுதிகள் பறந்தன. நாங்கள் பள்ளிக்குள் நுழைந்தவுடன் என்னையும் ஹம்ஜாவையும் பார்த்த குறைஷிகளுக்கு இதுவரை ஏற்பட்டிராத கைசேதமும் துக்கமும் ஏற்பட்டது. அன்றுதான் நபி (ஸல்) அவர்கள் எனக்கு “அல் ஃபாரூக்“” எனப் பெயரிட்டார்கள். (தாரீக் உமர்)

உமர் (ரழி) முஸ்லிமாகும் வரை நாங்கள் கஅபாவுக்கு அருகில் தொழக்கூட முடியாதவர்களாகவே இருந்தோம்” என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள். (முக்தஸருஸ்ஸீரா)

“உமர் (ரழி) இஸ்லாமைத் தழுவியபோதுதான் இஸ்லாம் வெளி உலகுக்குத் தெரியவந்தது. பகிரங்கமாக இஸ்லாமிய அழைப்பு விடப்பட்டது. கஅபாவைச் சுற்றி கூட்டமாக நாங்கள் அமர்ந்தோம். மேலும், எங்களுக்கு கஅபாவை தவாஃப் செய்ய முடிந்தது. எங்களிடம் கடுமையாக நடந்து கொள்பவர்களிடம் அவர்கள் செய்யும் கொடுமைகளில் சிலவற்றுக்காவது நாங்கள் பதிலடி கொடுத்தோம்” என்று ஸுஹைப் இப்னு ஸினான் (ரழி) கூறுகிறார்கள்.(தாரீக் உமர்)

“உமர் (ரழி) முஸ்லிமானதற்கு பிறகே நாங்கள் பலமிக்கவர்களாக ஆனோம்” என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள். (ஸஹீஹுல் புகாரி)

Offline Yousuf

நபியவர்களுக்கு முன் உத்பா

ஹம்ஜா, உமர் (ரழி) ஆகிய இரு வீரர்களும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டதற்குப் பிறகு இணைவைப்பவர்கள் முஸ்லிம்களை வேதனை செய்வதிலிருந்து சற்று பின்வாங்கினர். நபி (ஸல்) அவர்களுடனும் முஸ்லிம்களுடனும் உண்டான தங்களது நடவடிக்கைகளை மாற்றத் தொடங்கினர். அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதை விரும்பி முஸ்லிம்களுக்கு ஆசாபாசங்களையும் ஆசைகளையும் காட்டினர். அல்லாஹ்வின் மார்க்கத்திற்கும், அழைப்புப் பணிக்கும் முன்னால் உலகமனைத்தையும் கொட்டிக் கொடுத்தாலும் அது முஃமின்களுக்கு கொசுவின் இறக்கை அளவிற்குக் கூட சமமாகாது என்பது இந்த அறிவீனர்களுக்கு எங்கே தெரியப்போகிறது. ஆகவே, இவர்கள் தங்களது முயற்சியில் படுதோல்வி கண்டனர்.

ஹம்ஜாவும் (ரழி) இஸ்லாமைத் தழுவி, நாளுக்குநாள் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாகிய சமயத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இப்போது நாம் பார்ப்போம்: ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் தனியாக அமர்ந்திருந்தார்கள். உத்பா இப்னு ரபீஆ குறைஷிகளிடம் “குறைஷிகளே! நான் முஹம்மதிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சிலவற்றை அவருக்குக் கூறுகிறேன். அவற்றை அவர் ஏற்றுக்கொண்டால் நாம் அவருக்கு அவற்றைக் கொடுத்து விடுவோம். அவர் நம்மைவிட்டு விலகிக் கொள்ளலாம்” என்று கூறினான். அப்போது குறைஷிகள் “அப்படியே ஆகட்டும் அபுல் வலீதே! நீ சென்று அவரிடம் பேசிவா” என்றனர்.

உத்பா, நபி (ஸல்) அவர்களிடம் சென்று “எனது சகோதரனின் மகனே! நீ எங்களில் குடும்பத்தாலும் வமிசத்தாலும் கண்ணியமிக்கவர். ஆனால், நீ உன் சமுதாயத்தவரிடம் ஆபத்தான ஒரு மார்க்கத்தை கொண்டு வந்திருக்கிறாய்! அதன் மூலம் உமது சமுதாயத்தவன் ஒற்றுமையை குலைத்து விட்டாய்! அறிஞர்களை முட்டாளாக்கி விட்டாய்! அவர்களின் சிலைகளையும், மார்க்கத்தையும் குறை கூறிவிட்டாய்! முன் சென்ற உன் முன்னோரை காஃபிர் (நிராகரித்தவர்) என்று கூறிவிட்டாய்! நான் உனக்கு முன்பு சில விஷயங்களை எடுத்து வைக்கிறேன். அதை நன்கு யோசித்து ஒரு முடிவைச் சொல். அதில் ஏதாவதொன்று உனக்கு விருப்பமானதாக இருக்கலாம்” என நயமாக பேசினான்.

இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “அபுல் வலீதே! சொல்! நான் கேட்கிறேன்” என்றார்கள். அவன் “எனது சகோதரனின் மகனே! நீ கொண்டு வந்த மார்க்கத்தின் மூலம் பொருள் சேகரிப்பதை விரும்பி, நீ எங்களில் மிகப் பெரியசெல்வந்தனாக வேண்டும் என்ற ஆசை இருப்பின், நாங்கள் எங்கள் செல்வங்களைச் சேர்த்து உன்னிடம் கொடுத்து விடுகிறோம். இல்லை உனக்கு ஆட்சி வேண்டுமென்றால் உன்னை எங்கள் அரசராக ஏற்றுக் கொள்கிறோம். அல்லது உனக்கு ஏதேனும் ஜின்களின்” தொல்லை இருந்து அதை உன்னால் தடுக்க முடியவில்லையென்றால், உன்னை நாங்கள் குணப்படுத்துவதற்காக எங்களின் செல்வங்கள் அனைத்தையும் செலவு செய்து உனக்கு நாங்கள் வைத்தியம் பார்க்கின்றோம். ஏனெனில், சில நேரங்களில் ஜின்களின் சேட்டை மிகைத்து வைத்தியம் பார்க்கும் அவசியம் ஏற்படலாம்” என்று கூறினான்.

உத்பா அவனது பேச்சை முடித்த பிறகு “அபுல் வலீதே! நீ உனது பேச்சை முடித்துக் கொண்டாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க அவன் “ஆம்!” என்றான். “இப்போது நான் சொல்வதைக் கேள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூற “அவ்வாறே செய்கிறேன்” என்று அவன் பதிலளித்தான். பிறகு நபி (ஸல்) அவர்கள் “பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம்’ என்று ஆரம்பித்து அத்தியாயம் ஃபுஸ்ஸிலத்தை ஓதிக் காட்டினார்கள். முதுகுக்குப்பின் தன்னுடைய கைகளை ஊன்றி சாய்ந்து உட்கார்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்கள் ஓதுவதை மிகக் கவனமாகக் கேட்டான். பிறகு ஸஜ்தாவுடைய ஆயத்தை ஓதி ஸஜ்தா செய்து முடித்தார்கள். பின்னர் “அபுல் வலீதே! நீ செவியேற்க வேண்டியதையெல்லாம் செவியேற்று விட்டாய். நீயே இப்பொழுது முடிவு செய்துகொள்!” என்று மொழிந்தார்கள்.

அதற்குப் பிறகு உத்பா அவனது நண்பர்களிடம் திரும்பி வந்தபோது அவர்கள் தங்களுக்குள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அபுல் வலீத் முகம் மாறியவனாக வந்திருக்கின்றான்” என்று பேசிக் கொண்டனர். உத்பா வந்தவுடன் “நீ என்ன செய்தியை கொண்டு வந்திருக்கின்றாய்” என வினவினர். “இதுவரை கேட்டிராத பேச்சையல்லவா நான் கேட்டேன்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது கவிதையும் அல்ல! சூனியமும் அல்ல! ஜோசியமும் அல்ல! குறைஷிகளே! நான் சொல்வதைக் கேளுங்கள். இவரை விட்டு ஒதுங்கி விடுங்கள். இவருக்கும் இவரது பணிக்குமிடையில் குறுக்கிடாதீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவடமிருந்து நான் கேட்டு வந்த பேச்சுக்கு மகத்தான ஆற்றல் இருக்கிறது. மற்ற அரபியர்கள் அவரை அழித்துவிட்டால் அதுவே நமக்குப் போதும். நமது நோக்கமும் அதுவே! மாறாக, மற்ற அரபுகளை இவர் வெற்றி கொண்டால் அவருக்குக் கிடைக்கும் ஆட்சி உங்களுடைய ஆட்சியே! அவருக்குக் கிடைக்கும் கண்ணியம் உங்களுடைய கண்ணியமே! அவர் மூலமாக கிடைக்கும் அனைத்து பாக்கியங்களுக்கும் நீங்களும் முழு உரிமை பெற்றவர்கள்” என்று கூறினான். இதனைக் கேட்ட அவர்கள் “அபுல் வலீதே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் தன்னுடைய நாவன்மையால் உன்னை வசியப்படுத்தி விட்டார்” என்றனர். “அவரைப் பற்றி எனது கருத்து இதுதான். இனி உங்களுக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி நீங்கள் நடந்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டான். (இப்னு ஹிஷாம்)

மற்றும் சில அறிவிப்புகளில் வருவதாவது: நபி (ஸல்) அவர்கள் 13ம் வசனத்தை ஓதியபோது “முஹம்மதே போதும்! போதும்!! என்று கூறி தனது கையை நபி (ஸல்) அவர்களின் வாயின் மீது வைத்து, இரத்த உறவின் பொருட்டால் நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினான். அதற்குக் காரணம், அல்லாஹ்வின் எச்சரிக்கை உண்மையில் நிகழ்ந்துவிடும் என்று அவன் பயந்ததுதான். பிறகு எழுந்து சென்று தனது கூட்டத்தாரிடம் இதற்கு முன் கூறப்பட்டது போன்று செய்திகளை கூறினான். (இப்னு கஸீர்)

பேரம் பேசும் தலைவர்கள்!

உத்பாவிற்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்த பதிலால் குறைஷிகள் முற்றிலும் நிராசை அடைந்து விடவில்லை. ஏனெனில், உத்பாவிற்கு நபி (ஸல்) அவர்கள் சில வசனங்களை ஓதிக் காட்டினார்கள். அது கோரிக்கையை வெளிப்படையாக ஏற்றுக்கொள்வது அல்லது மறுப்பதாக ஆகமுடியாது. எனவே, மிகுந்த ஆராய்ச்சியுடனும் சிந்தனையுடனும் பிரச்சனையின் பல கோணங்களை அலசியப் பின், ஆலோசனை செய்வதற்காக சூரியன் மறைந்ததும் கஅபாவின் பின்புறம் குறைஷித் தலைவர்கள் ஒன்று கூடி நபி (ஸல்) அவர்களை அழைத்து வரச் செய்தனர். ஏதோ நன்மையை இவர்கள் நாடிவிட்டார்கள் என்ற பேராவலில் நபி (ஸல்) அவர்கள் விரைந்து வந்து அவர்களருகில் அமர்ந்தபோது உத்பா கூறியதையே குறைஷித் தலைவர்கள் கூறினர். அதாவது உத்பா மட்டும் கூறியதால் நபி (ஸல்) அவர்கள் இதை நம்பவில்லை. நாம் அனைவரும் சேர்ந்து கூறினால் நம்மை நம்பி ஏதாவது ஒன்றை ஏற்றுக்கொள்வார் என்று அவர்கள் எண்ணினார்கள் போலும்!

நபி (ஸஸ்) அவர்கள் அந்த குறைஷிகளுக்குக் கூறிய பதிலாவது: “நீங்கள் கூறுவது எதுவும் என்னிடமில்லை. உங்களின் பொருளை அல்லது உங்களிடம் சிறப்பை அல்லது உங்கள் மீது ஆட்சி செய்வதைத் தேடி நான் இம்மார்க்கத்தை கொண்டு வரவில்லை. எனினும், அல்லாஹ் என்னை உங்களிடம் தூதராக அனுப்பி என்மீது ஒரு வேதத்தையும் இறக்கியிருக்கின்றான். உங்களுக்கு நற்செய்தி சொல்பவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் நான் இருக்க வேண்டும் என எனக்குக் கட்டளையிட்டிருக்கிறான். எனது இறைவனின் தூதுத்துவத்தை நான் உங்களுக்கு முன் வைத்துவிட்டேன். உங்களுக்கு நல்லுபதேசம் செய்துவிட்டேன்; நான் உங்களிடம் கொண்டு வந்த மார்க்கத்தை நீங்கள் என்னிடமிருந்து ஏற்றுக் கொண்டால் அது உங்களுக்கு ஈருலக பாக்கியமாகும். நீங்கள் அதை மறுத்தால் அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் இடையில் தீர்ப்பளிக்கும் வரை அல்லாஹ்வின் கட்டளைக்காக நான் பொறுத்திருப்பேன்.”

இத்திட்டம் நிறைவேறாததால் மற்றொரு திட்டத்திற்குச் சென்றனர். அதாவது “நீங்கள் உங்களது இறைவனிடம் கூறி இம்மலைகளை இடம்பெயரச் செய்ய வேண்டும்; இவ்வூர்களை செழிப்பாக்க வேண்டும்; அவற்றின் நதிகளை ஓடவைக்க வேண்டும்; இறந்துவிட்ட முன்னோர்களைக் குறிப்பாக, குஸை இப்னு கிலாஃபை உயிர்ப்பிக்க வேண்டும்; மரணித்தவர்கள் எழுந்து நீங்கள் கூறுவது உண்மை என்று கூறினால் நாங்கள் உங்கள் கூற்றை நம்பிக்கைக் கொள்வோம்” என்று கூறினார்கள். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் முன் கூறிய பதிலையே கூறினார்கள்.

மற்றொரு திட்டத்தையும் முன் வைத்தனர். “அதாவது நீங்கள் உங்களைக் காப்பதற்கு உங்களுடைய இறைவனிடம் ஒரு மலக்கை (வானவரை) அனுப்பும்படி கோருங்கள். நாங்கள் அவருடன் பேசித் தெரிந்துகொள்வோம். உங்களுக்காகப் பல தோட்டங்களையும், மாட மாளிகைகளையும் தங்கம், வெள்ளியினாலான கஜானாக்களையும் அருளும்படி கோருங்கள்” என்றனர். இதற்கும் நபி (ஸல்) முன் கூறிய பதிலையே கூறினார்கள்.

அடுத்து மற்றொரு திட்டத்திற்கு சென்றனர். “அதாவது எங்களுக்கு வேதனையை இறக்குங்கள்; வானத்தை உடைத்து எங்கள் மீது போடுங்கள்; நீங்கள் எச்சரிப்பவற்றை இப்போதே எங்களுக்குக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அது அல்லாஹ்வின் நாட்டம். அவன் நாடினால் அதைச் செய்வான்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த இணைவைப்பவர்கள் “நாங்கள் உங்களுடன் உட்கார்ந்து உங்களிடம் பல கேள்விகளைக் கேட்போம்; பல கோரிக்கைகளை விடுப்போம் என்பது உங்களது இறைவனுக்குத் தெரியாதா? நீங்கள் எங்களுக்கு பதில் சொல்வதற்குத் தேவையானதை உங்களுக்கு இறைவன் கற்றுத் தரவில்லையா? நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் அவன் எங்களிடம் எப்படி நடந்து கொள்வான் என்பதை உங்களுக்குச் சொல்லவில்லையா?” என்று கேட்டனர்.

இறுதியாக, நபி (ஸல்) அவர்களைக் கடுமையாக எச்சரித்தனர். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் உங்களை அழிக்கும் வரை அல்லது நீங்கள் எங்களை அழிக்கும்வரை நீங்கள் எங்களுக்கு இழைத்த அநீதத்திற்காக நாங்கள் உங்களை சும்மா விடமாட்டோம்” என்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து எழுந்து தனது குடும்பத்தினர்களிடம் வந்தார்கள். தான் விரும்பியபடி தமது சமூகத்தினர் இஸ்லாமை ஏற்காததால் நபி (ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள்.(இப்னு ஹிஷாம்)

அபூஜஹ்லின் கொலை முயற்சி

கூட்டத்திலிருந்து நபி (ஸல்) அவர்கள் எழுந்து சென்றவுடன் அபூஜஹ்ல் அகந்தையுடன் “குறைஷிக் கூட்டமே! நமது மார்க்கத்தை இகழ்வது நமது முன்னோர்களை ஏசுவது நம்முடைய அறிஞர்களை முட்டாளாக்குவது நம்முடைய சிலைகளைத் திட்டுவது - இவற்றைத் தவிர வேறெதனையும் செய்ய மாட்டேன் என்று முஹம்மது கூறிவிட்டார். ஆகவே, அவர் தொழுகையில் ஸஜ்தா செய்யும்போது மிகப்பெரிய ஒரு கல்லால் அவர் தலையை நசுக்குவேன் என்று அல்லாஹ்விடம் நான் உடன்படிக்கை செய்கிறேன். அவ்வாறு செய்தபின் நீங்கள் என்னை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தாலும் சரி அல்லது அவர்களிடமிருந்து என்னை காப்பாற்றினாலும் சரி. அப்து மனாஃப் குடும்பத்தினர் தாங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளட்டும்” என்றான். அதற்கு அக்கூட்டத்தினர் “ஒருக்காலும் நாம் உம்மை கைவிட்டு விட மாட்டோம்; நீ விரும்பியபடியே செய்!” என்றனர்.

அன்று காலையில் அபூஜஹ்ல் தான் கூறியதைப் போன்று ஒரு கல்லுடன் நபி (ஸல்) அவர்களின் வருகைக்காக எதிர்பார்த்து அமர்ந்திருந்தான். வழக்கம்போல் நபி (ஸல்) அவர்கள் காலையில் வந்து தொழ நின்றார்கள். குறைஷிகள் அபூஜஹ்ல் செய்வதை வேடிக்கை பார்க்க தங்களது சபைகளில் வந்து அமர்ந்து கொண்டனர். நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்தபோது அபூஜஹ்ல் கல்லை சுமந்தவனாக நபியவர்களை நோக்கிச் சென்றான். நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் வந்ததும் பயந்து நிறம்மாறி திடுக்கிட்டவனாக திரும்பினான். அவனது இரு கைகளும் கல்லின்மீது ஒட்டிக் கொண்டன. வெகு சிரமத்துடன் கல்லை கையிலிருந்து வீசினான். அதைப் பார்த்த குறைஷிகள் ஒரே குரலில் “அபுல் ஹிகமே! என்ன நேர்ந்தது?” என்று விசாரித்தனர். அதற்கு “நான் உங்களுக்கு நேற்று கூறியதை நிறைவேற்றுவதற்கு அவருக்கு அருகில் சென்றபோது மிகப்பெரிய ஆண் வாலிப ஒட்டகம் ஒன்று எனக்குத் தென்பட்டது. அதனுடைய தலையைப் போல, அதனுடைய கோரைப் பற்களைப் போல, வேறெந்த ஒட்டகத்தையும் நான் பார்க்கவில்லை. அது என்னைக் கடிக்க வந்தது” என்றான்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் தன் தோழர்களிடம், “அப்படித் தோற்றமளித்தவர் வானவர் ஜிப்ரீல் (அலை) ஆவார். அவன் நெருங்கியிருந்தால் அவர் அவனை அழித்திருப்பார்” என்று கூறினார்கள்.

Offline Yousuf

சமரச முயற்சி

குறைஷிகள் நபி (ஸல்) அவர்களுக்கு முதலில் உலக ஆசை காட்டினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மசியாததால் அடுத்து நபியவர்களை எச்சரித்தனர், அச்சுறுத்தினர். அதற்கும் நபியவர்கள் அஞ்சாததால் குறைஷிகள் மாற்று வழியைத் தேடினர். நபி (ஸல்) அவர்கள் அசத்தியத்தில் இருக்கிறார்கள் என அவர்களால் உறுதியாகக் கூறமுடியவில்லை. அதாவது, நபி (ஸல்) அவர்களுடைய மார்க்கம் உண்மையானதா? அல்லது பொய்யானதா? என்று பெரும் சந்தேகத்தில் ஆழ்ந்திருந்தனர்.

நிச்சயமாக இதில் பெரும் சந்தேகத்தில்தான் அவர்கள் ஆழ்ந்து கிடக்கின்றனர். (அல்குர்ஆன் 42:14)


என்று அல்லாஹ் அவர்களைப்பற்றி கூறியதுபோலவே அவர்கள் இருந்தனர்.

அடுத்த கட்ட முயற்சியாக, மார்க்க விஷயங்களில் கொஞ்சம் இவர்கள் விட்டுத் தருவது, கொஞ்சம் நபி (ஸல்) அவர்கள் விட்டுக் கொடுப்பது என்று நபி (ஸல்) அவர்களுடன் பேரம் பேசிப் பார்க்கலாம் என முடிவெடுத்தனர். இதன்மூலம் நபி (ஸல்) அழைப்பது உண்மையானதாக இருந்தால் தாங்களும் அந்த உண்மையை அடைந்தவர்களாகலாம் என்று கருதினர்.

நபி (ஸல்) அவர்கள் கஅபாவை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும்போது அவர்களை அஸ்வத் இப்னு அல் முத்தலிப், வலீத் இப்னு முகீரா, உமைய்யா இப்னு கலஃப், ஆஸ் இப்னு வாயில் ஆகியோர் சந்தித்தனர். இவர்கள் தங்களது கோத்திரத்தில் மிக மதிப்பு மிக்கவர்களாக விளங்கினார்கள். இவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் “முஹம்மதே! வாருங்கள்! நீங்கள் வணங்குவதை நாங்களும் வணங்குகிறோம்; நாங்கள் வணங்குவதை நீங்களும் வணங்குங்கள்; நாம் அனைவரும் இவ்விஷயத்தில் கூட்டாக இருப்போம். அதாவது, நீங்கள் வணங்குவது நாங்கள் வணங்குவதை விட நன்மையாக இருப்பின் எங்களுக்கும் அதில் ஒரு பங்கு கிடைத்துவிடும். நாங்கள் வணங்குவது நீங்கள் வணங்குவதை விட நன்மையானதாக இருப்பின் அதில் உங்களுக்கும் ஒரு பங்கு கிடைத்துவிடும்” என்று கூறினார்கள்.

இவர்களின் கூற்றுக்கு மறுப்பாக,

(நபியே! நிராகரிக்கும் மக்காவாசிகளை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: நிராகரிப்பவர்களே! நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை. (அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர். உங்களுடைய (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என்னுடைய (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்). (அல்குர்ஆன் 109:1-6)

என்ற அத்தியாயம் அல் காஃபிரூனை முழுமையாக அல்லாஹு தஆலா இறக்கி வைத்தான். (இப்னு ஹிஷாம்)

இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள்: குறைஷிகள் நபி (ஸல்) அவர்களிடம் “நீங்கள் எங்கள் கடவுள்களைத் தொட்டால் போதும், நாங்கள் உங்களது கடவுளை முழுமையாக வணங்குகிறோம்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் அத்தியாயம் அல் காஃபிரூனை இறக்கி வைத்தான். (அத்துர்ருல் மன்ஸுர்)

தஃப்ஸீர் இப்னு ஜரீல் வருவதாவது: குறைஷிகள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “எங்களது கடவுளை நீங்கள் ஓர் ஆண்டு வணங்குங்கள். உங்களது கடவுளை நாங்கள் ஓர் ஆண்டு வணங்குகிறோம்” என்று கூறினார்கள். அப்போது,

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: மூடர்களே! அல்லாஹ் அல்லாதவற்றையா வணங்கும்படி என்னை நீங்கள் ஏவுகின்றீர்கள்?

என்ற அத்தியாயம் ஜுமன் 64 வது வசனத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான்.


இவ்வாறான அற்பத்தனமிக்க பேச்சுவார்த்தைகளைத் தீர்க்கமான முடிவைக்கொண்டு அல்லாஹ் முறியடித்தும் குறைஷிகள் முழுமையாக நிராசையாகவில்லை. மாறாக, மேலும் சற்று இறங்கி நபி (ஸல்) அவர்களிடம் குர்ஆனின் போதனைகளில் சில மாற்றங்களைச் செய்யவேண்டும் என்ற அடுத்த கோரிக்கையை முன்வைத்தனர். இதோ இவர்களின் கூற்றைப்பற்றி அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:

இவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (மறுமையில்) நம்மைச் சந்திப்பதை நம்பாத இவர்கள் (உங்களை நோக்கி,) “இது அல்லாத வேறொரு குர்ஆனை நீங்கள் கொண்டுவாருங்கள். அல்லது (எங்கள் இஷ்டப்படி) இதனை மாற்றிவிடுங்கள்” என்று கூறுகின்றனர்.

அவர்களின் இக்கூற்றுக்கு என்ன பதில் சொல்லவேண்டுமோ அதை அல்லாஹ் தொடர்ந்து கூறுகிறான்:

(அதற்கு அவர்களை நோக்கி “உங்கள் விருப்பத்திற்காக) நானே (என் இஷ்டப்படி) இதனை மாற்றிவிட எனக்கு எவ்வித சக்தியுமில்லை. வஹி மூலம் எனக்கு அறிவிக்கப்படுபவற்றைத் தவிர (வேறொன்றையும்) நான் பின்பற்றுவதற்கில்லை. என்னுடைய இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான நாளுடைய வேதனைக்கு (ஆளாக வேண்டியதேற்படும் என்று) நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். (அல்குர்ஆன் 10:15)

மேலும், இவ்வாறு செய்வது எவ்வளவு ஆபத்தானது என்றும் அல்லாஹ் மிகத் தெளிவாக எச்சரிக்கை செய்தான்.

நாம் உங்களுக்கு வஹி மூலம் அறிவித்ததை நீங்கள் விட்டு (விட்டு) அது அல்லாததை நம்மீது நீங்கள் பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி உங்களை அவர்கள் திருப்பிவிடவே இருந்தார்கள். (அவ்வாறு நீங்கள் செய்திருந்தால்) உங்களை அவர்கள் தங்கள் நண்பராகவும் எடுத்துக் கொண்டிருப்பார்கள். உங்களை நாம் உறுதியாக்கி வைக்காவிடில் நீங்கள் ஒரு சிறிதேனும் அவர்கள் பக்கம் சாய்ந்துவிடக் கூடுமாயிருந்தது. (அவ்வாறு நீங்கள் சாய்ந்திருந்தால்) அந்நேரத்தில் நீங்கள் உயிராக இருக்கும்போதும் நீங்கள் மரணித்த பின்னரும் இரு மடங்கு (வேதனையைச்) சுவைக்கும்படி நாம் செய்திருப்போம். அதன் பின்னர், நமக்கு எதிராக உங்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.(அல்குர்ஆன் 17:73-75)

மறு ஆலோசனை

எல்லா பேச்சுவார்த்தைகளிலும், பேரங்களிலும், அனுசரித்தலிலும் குறைஷிகள் தோல்வியடைந்து என்னசெய்வது என்று புரியாமல் திகைத்திருந்தபோது அவர்களில் ஒரு ஷைத்தான் “நழ்ர் இப்னு அல் ஹாரிஸ்’ என்பவன் ஓர் ஆலோசனையைக் கூறினான். “குறைஷியர்களே! உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு எந்த ஒரு தீர்வையும் உங்களால் கொண்டுவர முடியவில்லை. முஹம்மது உங்களில் வாலிபராக இருந்தபோது உங்களின் அன்பிற்குரியவராகவும், பேச்சில் உங்களில் உண்மையாளராகவும், அமானிதத்தை அதிகம் பேணுபவராகவும் இருந்தார். ஆனால், அவர் முதிர்ச்சி அடைந்து இம்மார்க்கத்தை அவர் கொண்டு வந்தபோது நீங்கள் அவரை “சூனியக்காரர்” என்று கூறினீர்கள். ஆனால், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் சூனியக்காரராக இருக்க முடியாது. சூனியக்காரர்களைப் பற்றியும் அவர்களின் ஊதுதல், முடிச்சுகளைப் பற்றியும் நாம் நன்கறிவோம். பிறகு அவரை “ஜோசியர்” என்று கூறினீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் ஜோசியரும் அல்லர். ஏனெனில் ஜோசியக்காரர்களையும் அவர்களது பொய்யாகப் புனையப்பட்ட புளுகுகளையும் நாம் நன்கறிவோம். அடுத்து அவரை “கவிஞர்” என்பதாகக் கூறினீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் கவிஞரும் அல்லர். ஏனெனில், கவியையும் அதன் பல வகைகளையும் நாம் பார்த்திருக்கிறோம். நீங்கள் அவரை “பைத்தியக்காரர்” என்று கூறினீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் பைத்தியக்காரரும் அல்லர். பைத்தியத்தை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இவருக்கு பைத்தியத்தின் எந்தக் குழப்பமும், ஊசலாட்டமும் இல்லை. குறைஷிகளே! உங்களது நிலையை நன்கு யோசித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களுக்கு ஏதோ மிகப்பெரியசிக்கல் ஏற்பட்டிருக்கிறது” என்று அவன் கூறி முடித்தான்.

எல்லா எதிர்ப்புகளுக்கும், சவால்களுக்கும் அசைந்து கொடுக்காமல் நபி (ஸல்) அவர்கள் உறுதியாக இருந்தார்கள். அனைத்து ஆசாபாசங்களையும் தூக்கி எறிந்தார்கள். எந்நிலையிலும் தடுமாறவில்லை. மேலும், அவர்களிடம் உண்மை, ஒழுக்கம், பேணுதல், சிறந்த நற்பண்புகள் ஆழமாகக் குடிகொண்டிருந்தன. இதைக் கண்ட இணைவைப்பவர்களுக்கு முஹம்மது உண்மையில் தூதராக இருப்பாரோ? என்ற சந்தேகம் வலுத்தது. எனவே, யூதர்களுடன் தொடர்பு கொண்டு முஹம்மதைப் பற்றி உறுதியாக தெரிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். நழ்ர் இப்னு ஹாரிஸ் அவர்களுக்கு ஏற்கனவே மேற்கூறியவாறு உபதேசம் செய்திருந்தான். அவனையே மற்ற ஓருவருடன் சேர்த்து மதீனாவில் உள்ள யூதர்களிடம் அனுப்ப முடிவு செய்தனர்.

நழ்ர் இப்னு ஹாரிஸ் மதீனா சென்று அங்குள்ள யூத அறிஞர்களைச் சந்தித்து நபி (ஸல்) அவர்கள் குறித்து விவாதித்தான். அவர்கள், நீங்கள் அவரிடம்

“1) முன்னொரு காலத்தில் வாழ்ந்த குறிப்பிட்ட வாலிபர்களைப் பற்றி ஏதாவது செய்தி தெரியுமா? ஏனெனில் அவர்களைப் பற்றி ஓர் ஆச்சரியமான செய்தி இருக்கிறது. அவர்கள் என்னவானார்கள்?

2) பூமியின் கிழக்கு மேற்கு பகுதிகளையெல்லாம் சுற்றி வந்த ஒருத்தரைப் பற்றிய செய்தி தெரியுமா?

3) ரூஹ் (உயிர்) என்றால் என்ன?


இந்த மூன்று கேள்விகளைக் கேளுங்கள். அவர் இவற்றுக்கு சரியான பதில் கூறினால் அவர் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட (நபி) தூதராவார். அவ்வாறு கூறவில்லையெனில் அவர் தானாக கதை கட்டி பேசுபவரே என அறிந்துகொள்ளலாம்” என்றனர்.

நழ்ர் மக்காவிற்கு வந்து “குறைஷிகளே! உங்களுக்கும் முஹம்மதுக்கும் இடையிலுள்ள பிரச்சனைக்குச் சரியான தீர்வைக் கொண்டு வந்திருக்கிறோம்” என்று கூறி யூதர்கள் கூறியதை அவர்களுக்கு அறிவித்தான். குறைஷிகள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அம்மூன்று கேள்விகளையும் கேட்டனர். அவர்கள் கேட்ட சில நாட்களுக்குப் பிறகு “கஹ்ஃப்’ என்ற அத்தியாயம் அருளப்பட்டது. அதில் குகைவாசிகளாகிய அவ்வாலிபர்களின் வரலாறும், பூமியை சுற்றி வந்த துல்கர்னைன் என்பவன் சத்திரமும் தெளிவாக விவரிக்கப்பட்டது. ரூஹைப் பற்றிய பதில் குர்ஆனில் “இஸ்ரா’ என்ற அத்தியாயத்தில் இறங்கியது. இதைத் தொடர்ந்து குறைஷிகள் நபி (ஸல்) அவர்கள் “உண்மையாளரே, சத்தியத்தில் உள்ளவரே’ என்பதையும் தெளிவாக தெரிந்து கொண்டனர். ஆனாலும் அநியாயக்காரர்கள் ஏற்க மறுத்தனர். (இப்னு ஹிஷாம்)

நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணிக்கு இணைவைப்பவர்கள் செய்த எதிர்ப்பின் ஒரு சிறு பகுதியே இதுவரை நாம் கூறியது. பல வகைகளில் முயன்றனர். படிப்படியாக பல வழிகளை இதுவல்லாமல் மாற்றிக் கொண்டே இருந்தனர். வன்மையை அடுத்து மென்மை, மென்மையை அடுத்து வன்மை; சர்ச்சையை அடுத்து சமரசம்; சமரசத்தை அடுத்து சர்ச்சை; எச்சரித்தல், பிறகு ஆசையூட்டுதல்; ஆசையூட்டுதல், பிறகு எச்சரித்தல்; ஊளையிடுதல், பிறகு அடங்குதல்; தர்க்கித்தல், பிறகு நயமாக பேசுதல்; நபி (ஸல்) அவர்களை விட்டுக் கொடுக்க வேண்டுதல்; பிறகு தாங்களே விட்டுக் கொடுத்தல்; இவ்வாறு கொஞ்சம் முன்னேறுதல்; உடனே பின்வாங்குதல் என்று என்ன செய்வதென்றே புரியாமல் நிலை தடுமாறி நின்றனர். ஆனால், நபி (ஸல்) அவர்களின் வழியில் குறுக்கிடாமல் ஒதுங்கிக் கொள்வதும் அவர்களுக்குக் கசப்பாக இருந்தது. அவர்களின் நோக்கமே இஸ்லாமிய அழைப்பை அழிப்பதும் இறைநிராகரிப்பை வளர்ப்பதும்தான். பல வழிகளில் இவர்கள் முயன்றும் பல தந்திரங்களைக் கையாண்டும் அனைத்திலும் இவர்கள் தோல்வியையே கண்டனர். இறுதியாக, வாளெடுப்பதைத் தவிர அவர்களுக்கு முன் வேறுவழி தோன்றவில்லை. ஆயினும், வாளேந்துவதால் பிரிவினை அதிகமாகலாம்; உயிர்ப்பலிகள் ஏற்படலாம் என்பதால் என்ன செய்வதென்றே தெரியாமல் பெரும் குழப்பத்தில் தத்தளித்தனர்.

அபூதாலிபின் முன்னெச்சரிக்கை

குறைஷிகள் நபி (ஸல்) அவர்களைக் கொன்று விடுவதற்காக தங்களிடம் ஒப்படைக்கக் கோரிய அதே சமயத்தில் உக்பா, அபூஜஹ்ல், போன்றவர்களின் செயல்கள் மூலம் அந்த எண்ணம் அவர்களிடம் உறுதியாக இருக்கிறது என்பதை அபூதாலிப் நன்கு உணர்ந்து கொண்டார். எனவே, ஹாஷிம் மற்றும் முத்தலிப் கிளையினர்களை ஒன்று சேர்த்து அவர்களிடம் நபி (ஸல்) அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவ்விரு கிளையிலுமுள்ள முஸ்லிம்கள் மற்றும் நிராகரிப்பவர்கள் என பாகுபாடின்றி அனைவரும் அதை ஏற்றுக் கொண்டனர். இதற்காக அனைவரும் கஅபாவில் ஒன்றுகூடி ஒப்பந்தம் செய்தனர். ஆனால், அபூதாலிபின் சகோதரன் அபூலஹப் இதற்கு உடன்படாமல் அவர்களை விட்டுப் பிரிந்து மற்ற குறைஷிகளுடன் சேர்ந்து கொண்டான். (இப்னு ஹிஷாம்)

Offline Yousuf

தீய தீர்மானம்

மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போனதால் இணைவைப்பவர்களிடையே குழப்பம் மேன்மேலும் வலுத்தது. ஹாஷிம் கிளையாரும், முத்தலிப் கிளையாரும் நிலைமை எதுவாம்னும் நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்தே தீருவது என்பதில் உறுதியாக இருந்ததைக் கண்ட இணைவைப்பவர்கள் அனைவரும் “முஹஸ்ஸப்’ என்ற பள்ளத்தாக்கிலுள்ள கினானா கிளையாரின் இடத்தில் ஒன்றுகூடி ஆலோசித்து, பல தீர்மானங்களைப் போட்டனர்.

அவையாவன: ஹாஷிம் மற்றும் முத்தலிப் கிளையாரிடம் திருமண உறவு, கொடுக்கல் வாங்கல், அவர்களுடன் அமர்வது, அவர்களுடன் பழகுவது, அவர்களது வீட்டுக்குச் செல்வது, அவர்களிடம் பேசுவது, அவர்களுக்குக் கருணை காட்டுவது, ஹாஷிம் கிளையார்களின் சமரச பேச்சை ஏற்பது போன்ற எந்த செயலும் செய்யக் கூடாது. முஹம்மதை அவர்கள் நம்மிடம் ஒப்படைக்கும் வரை நாம் இதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தீர்மானம் எழுதினர். இவ்வுடன்படிக்கையை “பகீழ் இப்னு ஆமிர் இப்னு ஹாஷிம்’ என்பவன் எழுதினான். நபி (ஸல்) அவர்களின் சாபத்திற்கு ஆளான இவனது கை சூம்பிவிட்டது. (ஸஹீஹுல் புகாரி)

இந்த உடன்படிக்கை எழுதப்பட்டு கஅபாவில் தொங்க விடப்பட்டது. ஹாஷிம், முத்தலிபின் கிளையால் அபூலஹபைத் தவிர ஏனைய நிராகரிப்பவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைவரும் “அபூதாலிப் கணவாயில்’ ஒதுக்கி வைக்கப்பட்டனர். இது நபித்துவத்தின் ஏழாம் ஆண்டு முஹர்ரம் மாதம் தலைப்பிறையில் நடந்தது.

“கணவாய் அபூதாலிபில்’ மூன்று ஆண்டுகள்

இக்காலக்கட்டத்தில் அவர்களிடம் இருப்பிலிருந்த உணவுகளும், தானியங்களும் முடிந்து விட்டன. இணைவைப்பவர்கள் மக்காவுக்கு வரும் உணவுகளையெல்லாம் முந்திச் சென்று வாங்கிக் கொள்வார்கள். இவர்கள் உண்ணுவதற்கு ஏதுமின்றி இலைகளையும், தோல்களையும் சாப்பிடும் இக்கட்டுக்கு ஆளாயினர். பசியினால் பெண்களும், சிறுவர்களும் அழும் குரல்கள் கணவாய்க்கு வெளியிலும் கேட்கும். மிக இரகசியமாகவே தவிர எந்த உதவியும் அவர்களுக்குக் கிடைக்காது. மதிப்புமிக்க மாதங்களில்தான் தங்களின் தேவைகளுக்குரிய சாமான்களை வாங்கிக்கொள்ள முடிந்தது. மக்காவுக்கு வரும் வியாபாரக் கூட்டங்களிடமிருந்து மக்காவிற்கு வெளியில்தான் அவர்களால் பொருட்கள் வாங்க முடிந்தது. இருந்தும் இவர்களால் வாங்க முடியாத அளவிற்கு மக்காவாசிகள் அப்பொருட்களின் விலைகளை உயர்த்தினர்.

சில சமயம் ஹகீம் இப்னுஹிஸாம் தனது மாமி (தந்தையின் சகோதரி) கதீஜாவிற்காக கோதுமை மாவை எடுத்துச் செல்வார். ஒருமுறை அபூஜஹ்ல் வழிமறித்து, அவர் எடுத்துச் செல்வதைத் தடுத்துக் கொண்டிருந்தான், அபூபுக்த தலையிட்டு அபூஜஹ்லிடமிருந்து அவரைக் காப்பாற்றினார்.

நபி (ஸல்) அவர்களின் மீது அபூதாலிபுக்கு எப்போதும் எதிரிகளைப் பற்றிய அச்சம் இருந்தது. அதற்காக நபி (ஸல்) அவர்களைத் தனது விரிப்பில் தூங்கச் சொல்வார். அனைவரும் தூங்கியதற்குப் பின், தனது பிள்ளைகள் அல்லது சகோதரர்கள் அல்லது தனது சிறிய, பெரியதந்தையின் பிள்ளைகள் ஆகியோல் யாரையாவது ஒருவரை நபியவர்களைப் படுக்க வைத்த தனது விரிப்பில் மாற்றி உறங்க வைத்துவிட்டு, நபி (ஸல்) அவர்களை வேறு விரிப்பில் படுக்கவைத்து விடுவார்கள். மக்கள் தூங்குவதற்கு முன் கொலைகாரர் யாராவது நபி (ஸல்) அவர்களைக் கண்காணித்தால், அவர்களைத் திசை திருப்புவதற்காக இவ்வாறு செய்வார்கள்.

இந்நிலையிலும் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் ஹஜ்ஜுடைய காலங்களில் வெளியே புறப்பட்டு, மக்களைச் சந்தித்து, அவர்களை இஸ்லாமின் பக்கம் அழைப்பார்கள். இந்நேரத்தில் அபூலஹப் செய்து வந்த செயல்கள் பற்றி முன்பே நாம் கூறியிருக்கின்றோம்.

கிழிக்கப்பட்டது தீர்மானம்!

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இப்படியே உருண்டோடின. குறைஷிகள் இந்த ஒப்பந்தத்தை எழுதினாலும் அவர்களில் சிலர் இந்த ஒப்பந்தத்தை ஆரம்பத்திலிருந்து வெறுத்தே வந்தனர். இவ்வாறு வெறுத்தவர்கள்தான் இப்பத்திரத்தை கிழித்தெறிய முயற்சி எடுத்தனர். இம்முயற்சி நபித்துவத்தின் பத்தாவது ஆண்டு முஹர்ரம் மாதத்தில் நடந்தேறியது.

ஹிஷாம் இப்னு அம்ர் என்பவர்தான் இதற்குக் காரணமாக இருந்தார். அவர் இரவில் மறைமுகமாக ஹாஷிம் கிளையாருக்கு உணவு வழங்கி வந்தார். ஒரு நாள் அவர் ஸுஹைர் இப்னு அபூ உமைய்யா மக்ஜூமீ என்பவரிடம் வந்தார். இவரது தாய் அப்துல் முத்தலிபின் மகள் ஆத்திகாவாகும். ஹிஷாம், “ஜுஹைரே! நீ சாப்பிடுகிறாய், குடிக்கிறாய். உனது தாய்மாமன்கள் எவ்வாறு கஷ்டத்திலிருக்கிறார்கள் என்பது உனக்கு நன்றாகத் தெரியும். இது உனக்கு சந்தோஷமாக இருக்கிறதா?” என்று கேட்டார். அதற்கு ஜுஹைர் “நான் ஒருவன் என்ன செய்ய?” என்று கூறினார். அதற்கு ஹிஷாம் “உனக்கு உதவ ஒருவர் இருக்கிறார்” என்று கூற, “யார் அவர்?” என்று வினவினார். “அது நான்தான்” என்று கூறினார். அதற்கு ஜுஹைர் “நீ மூன்றாவது ஒருவரைத் தேடு” என்று கூறினார்.

முத்இம் இப்னு அதீ என்பவரிடம் ஹிஷாம் சென்று அப்து மனாஃபின் மக்களான ஹாஷிம், முத்தலிப் இவ்விருவரின் குடும்ப உறவுகளை (இரத்த பந்தங்களை) நினைவூட்டி “இவர்களுக்கு அநியாயம் செய்யக் குறைஷிகளுக்கு நீ உடந்தையாக இருக்கிறாயே” என பழித்துக் கூறியவுடன் “நான் ஒருவனாக இருந்து என்னால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார். அதற்கு ஹிஷாம் “உன்னுடன் இரண்டாமவரும் இருக்கிறார்” என்று கூற, அதற்கு “அவர் யார்?” என்று கேட்டார். அதற்கு ஹிஷாம் “நான்தான்” என்று கூறினார். முத்இம் “மூன்றாவது ஒருவரும் நமக்கு வேண்டும்” என்று கூற, ஹிஷாம் “ஆம்! மூன்றாமவரும் இருக்கிறார். அவர்தான் ஜுஹைர் இப்னு அபூ உமைய்யா” என்று கூறினார். உடனே முத்இம் ஷாமிடம் “நான்காம் ஒருவரையும் தேடுங்கள்” என்றார்.

ஹிஷாம், அபுல் புக்தயிடம் வந்து முத்இமிடம் பேசியது போன்றே பேசவே “இதற்கு யாராவது உதவிக்கு இருக்கிறார்களா?” என்று அவர் வினவினார். அப்போது “ஹிஷாம் ஆம்! ஜுஹைர், முத்இம், நான் ஆகியோர் உம்முடன் இருக்கிறோம்” என்றார்.

ஹிஷாம், ஸம்ஆவிடம் வந்தார். அவருக்கும் ஹாஷிம் குடும்பத்திற்கும் உள்ள உறவுகளையும், உரிமைகளையும் பற்றி அவரிடம் கூறவே “நீர் அழைக்கும் இக்காரியத்தில் வேறு யாராவது இருக்கிறார்களா?” என்று கேட்க, ஹிஷாம் “ஆம்!” என்ற கூறி அனைவரது பெயர்களையும் கூறினார்.

இவர்கள் அனைவரும் ஹஜுனுக்கு அருகில் ஒன்றுகூடினர். பிறகு, ஒப்பந்தப் பத்திரத்தை கிழிக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது “இதை நானே முதலில் செய்வேன். இதைப் பற்றி நான்தான் முதலில் பேசுவேன்” என்றார் ஜுஹைர்.

காலையில் விடிந்தவுடன் அனைவரும் தங்களது சபைக்கு வந்தனர். ஜுஹைர் ஒரு முழு ஆடையை அணிந்து வந்திருந்தார். அவர் கஅபாவை ஏழு முறை வலம் வந்துவிட்டு மக்களை நோக்கி “மக்காவாசிகளே! நாம் சாப்பிடுகிறோம். ஆடைகளை அணிந்து கொள்கிறோம். ஹாஷிமின் குடும்பமோ அழிந்து கொண்டிருக்கிறது. அவர்களிடம் யாரும் விற்பதும் கிடையாது, வாங்குவதும் கிடையாது. இது தகுமான செயலா? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உறவை துண்டிக்கும்படியான, அநியாயமான, இந்த ஒப்பந்தப் பத்திரம் கிழித்தெறியப்படும் வரை நான் உட்கார மாட்டேன்” என்று கூறினார். பள்ளியின் ஓரத்தில் அமர்ந்திருந்த அபூஜஹ்ல் “நீ பொய்யுரைக்கிறாய். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது கிழிக்கப்படாது” என்றான். ஸம்ஆ, “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீதான் மிகப்பெரியபொய்யன். நீ இதை எழுதியபோதே அதில் எங்களுக்கு விருப்பமில்லை” என்று கூறினார். அபுல் புக்த “ஆம்! ஸம்ஆ உண்மையைத்தான் கூறுகிறார். அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களும் எங்களுக்கு விருப்பமானதில்லை. அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவுமில்லை” என்று கூறினார். முத்இம், “ஆம்! நீங்கள் இருவரும் உண்மையைத் தான் கூறுகிறீர்கள். இதைத் தவிர யார் என்ன கூறினாலும் அவர் பொய்யரே! இந்த ஒப்பந்தப் பத்திரத்திலிருந்தும் அதில் எழுதப்பட்டுள்ளவற்றிலிருந்தும் அல்லாஹ்வுக்காக நாங்கள் விலகிக் கொள்கிறோம்” என்று கூறினார். ஷாமும் இதுபோன்றே கூறி முடித்தார். இவ்வாறு ஒருவர் பின் ஒருவராக கூறியதும் இதைக் கேட்டுக் கொண்டிருந்த அபூஜஹ்ல் “இது இரவிலேயே பேசி முடிவு செய்யப்பட்டது. வேறு எங்கோ இதைப் பற்றி ஓர் ஆலோசனை நடந்திருக்கிறது” என்று கூறினான். பள்ளியின் ஓரத்தில் அபூதாலிப் அமர்ந்து இக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்பத்திரத்தில் அல்லாஹ்வின் பெயரைத் தவிர அதில் எழுதப்பட்ட அனைத்தையும் கரையான் தின்று அழித்துவிட்டது. இதை அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்திருந்தான். நபி (ஸல்) அவர்களும் முன் கூட்டியே அதை அபூதாலிபிடம் கூறியிருந்தார்கள். அபூதாலிப் குறைஷிகளிடம் “எனது சகோதரனின் மகன் இப்படியெல்லாம் கூறியிருக்கிறார். அவர் பொய்யராக இருந்தால் அவருக்கும் உங்களுக்குமிடையில் நாங்கள் வழிவிட்டு விடுகிறோம். அவர் உண்மையாளராக இருந்தால் நீங்கள் எங்களுக்கு அநியாயம் செய்வதிலிருந்தும் எங்களது உறவுகளைத் துண்டிப்பதிலிருந்தும் விலகிட வேண்டும்” என்று கூறினார். அதற்கவர்கள், “நிச்சயமாக நீர் ஒரு நீதமான விஷயத்தை முன் வைத்தீர்” என்று கூறினர்.

அபூஜஹ்லுக்கும் மற்ற கூட்டத்தார்களுக்குமிடையில் பேச்சுவார்த்தை முடிந்தபோது முத்இம் கஅபாவிற்குள் அதைக் கிழிப்பதற்காகச் சென்று பார்த்தபோது “பிஸ்மிக்கல்லாஹும்ம’ என்று ஆரம்பத்தில் எழுதப்பட்டிருந்ததையும், “அல்லாஹ்’ என்று எழுதப்பட்ட இடங்களையும் தவிர மற்ற அனைத்தையும் கரையான் அத்துவிட்டிருந்தது.

பிறகு முழுவதுமாக அப்பத்திரம் கிழித்தெறியப்பட்டது. நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் இருந்தவர்களும் கணவாயிலிருந்து வெளியேறி வந்தனர். இணைவைப்பவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களின் நபித்துவத்தின் மிகப்பெரியஅத்தாட்சியைப் பார்த்தனர். ஆனால் அவர்களது இதயமோ...

அவர்கள் எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் (அதனைப்) புறக்கணித்து, “இது சகஜமான சூனியம் தான்” என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் 54:2)

என்று அல்லாஹ் கூறியதைப் போன்றே இருந்தது. அதாவது, அல்லாஹ்வின் அத்தாட்சிகளைப் புறக்கணித்து இவர்கள் நிராகரிப்பைத்தான் அதிகமாக்கிக் கொண்டனர். (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆத்)

Offline Yousuf

குறைஷிகளின் கடைசிக் குழு

தாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கணவாயிலிருந்து வெளியேறிய நபி (ஸல்) முன்னர் போலவே அழைப்புப் பணியைச் செய்து கொண்டிருந்தார்கள். குறைஷிகள் உறவுகளைத் துண்டிப்பதை விட்டுவிட்டாலும், முஸ்லிம்களுக்குத் தொந்தரவு தருவது, அல்லாஹ்வின் வழியை விட்டு மக்களைத் தடுப்பது என்ற தங்களது பழைய பாட்டையிலேயே நடந்து கொண்டிருந்தனர். அபூதாலிப் எண்பது வயதை கடந்தும் தன்னால் முடிந்த அளவு நபி (ஸல்) அவர்களை பாதுகாத்து வந்தார். கடினமான சோதனைகளால் குறிப்பாக, ஒதுக்கி வைக்கப்பட்ட காலத்தில் ஏற்பட்ட இன்னல்களால் மிகவும் வலுவிழந்து தளர்ந்திருந்தார். கணவாயிலிருந்து வெளியேறிய சில மாதங்களிலேயே கடினமான நோய்வாய்பட்டார்.

இதைக் கண்ட இணைவைப்பவர்கள், அபூதாலிபின் மரணத்திற்குப் பிறகு அவரது சகோதரன் மகனான முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஊறு விளைவிப்பது தங்களுக்கு அரபிகளின் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என்று பயந்து தங்களுக்கு விருப்ப மில்லையெனினும் நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகளில் சிலவற்றை ஒப்புக்கொண்டு அபூதாலிபின் முன்னிலையில் நபி (ஸல்) அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்பதற்காக ஒரு குழுவை தயார் செய்தனர். அபூதாலிபிடம் வந்த இறுதி குழு இதுதான்.

இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்கள்: அபூதாலிப் நோய்வாய்ப்பட்ட போது குறைஷிகள் தங்களுக்குள் இவ்வாறு பேசிக் கொண்டனர்: “ஹம்ஜா, உமர் இஸ்லாமைத் தழுவிவிட்டனர். முஹம்மதைப் பற்றி அனைத்து குறைஷி குலத்தவருக்கும் தெரிந்துவிட்டது. நாம் அபூதாலிபிடம் செல்வோம்; தனது தம்பி மகனை அவர் கட்டுப்படுத்தட்டும்; நம்மிடமும் அவருக்காக ஏதாவது ஒப்பந்தத்தை வாங்கிக் கொள்ளட்டும். இல்லையெனில், மக்கள் நமது கட்டுப்பாட்டுக்குக் கீழ் இல்லாமல் மீறி விடுவார்கள் என நாம் அஞ்சவேண்டியுள்ளது”

மற்றொரு அறிவிப்பில் வருவதாவது: இந்தக் கிழவர் இறந்த பின் அவருக்கு (முஹம்மதுக்கு) ஏதாவது ஆகிவிட்டால் அரபுகள் “முஹம்மதுடைய பெரியதந்தை இறந்தப் பின் முஹம்மதுக்குக் கெடுதிகள் செய்கின்றனர். அவர் உயிருடன் இருக்கும்போது இவரை விட்டுவிட்டார்கள்” என்று குறை கூறுவார்களோ என நாம் அஞ்சவேண்டியுள்ளது என தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

உத்பா, ஷைபா, அபூஜஹ்ல், உமைய்யா, அபூசுஃப்யான் இப்னு ஹர்ஃப் போன்ற குறைஷித் தலைவர்களில் சிலர் தங்களது கூட்டங்களில் உள்ள இருபத்தைந்து நபர்களைச் சேர்த்துக்கொண்டு அபூதாலிபிடம் பேசுவதற்காக வந்தனர். அவர்கள் “அபூதாலிபே! நீங்கள் எங்களிடம் மதிப்புமிக்கவர்; உங்களுக்கு ஏற்பட்டுள்ள (நோயின்) நிலை உங்களுக்கு நன்றாகவே தெரியும். உங்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என நாங்கள் பயப்படுகிறோம். மேலும், எங்களுக்கும், உங்களது சகோதரன் மகனுக்கும் மத்தியிலுள்ள நிலை உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆதலால், அவரை இப்போது அழைத்து அவரிடமிருந்து எங்களுக்குச் சில வாக்குறுதிகளை வாங்கிக் கொடுங்கள். எங்களிடமிருந்தும் அவருக்குச் சில வாக்குறுதிகளை வாங்கிக் கொடுங்கள். எங்களை எங்களது மார்க்கத்தில் விட்டு விடட்டும். அவரை அவரது மார்க்கத்தில் விட்டு விடுகிறோம். எங்களது மார்க்கத்தை அவர் குறை கூறாமல் இருக்கட்டும்” எனக் கூறினார்கள்.

அபூதாலிப் நபி (ஸல்) அவர்களை அழைத்து வரச்செய்து “எனது சகோதரன் மகனே! இதோ இவர்கள் உனது கூட்டத்தில் சிறப்புமிக்கவர்கள். உனக்காகவே இங்கு ஒன்றுகூடி இருக்கிறார்கள். அவர்கள் உனக்கு சில வாக்குறுதிகளைத் தருவார்கள். உன்னிடம் சில வாக்குறுதிகளைக் கேட்கிறார்கள். உங்களில் யாரும் எவருக்கும் இடையூறு தரக்கூடாது” என்று அவர்கள் கூறியதை அப்படியே கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நான் இவர்களுக்கு ஒரு சொல்லை முன்வைக்கிறேன். அதை இவர்கள் மொழிந்தால் இவர்கள் அரபியர்களை ஆட்சி செய்யலாம். அரபி அல்லாதவர்களும் இவர்களுக்குப் பணிந்து நடப்பார்கள்” என்று கூறினார்கள்.

மற்றொரு அறிவிப்பில்: அபூதாலிபை நோக்கி “நான் இவர்களை ஒரே வார்த்தையில் இணைக்க விரும்புகிறேன். அதை இவர்கள் கூறும்போது அரபிகள் இவர்களுக்குப் பணிந்து நடப்பார்கள்; அரபி அல்லாதவர்கள் இவர்களுக்கு வரி செலுத்துவார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மற்றொரு அறிவிப்பில் வருவதாவது: “எனது தந்தையின் சகோதரரே! அவர்களுக்கு ஏற்றமான ஒன்றை நோக்கி அவர்களை நான் அழைக்க வேண்டாமா?” என்று நபி (ஸல்) கேட்க, “நீ அவர்களை எதன் பக்கம் அழைக்கிறாய்?” என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவர்கள் ஒரு வாக்கியத்தைச் சொல்ல வேண்டும் என்றுதான் அழைக்கிறேன். அந்த வாக்கியத்தால் அரபியர்கள் அவர்களுக்குப் பணிவார்கள்; அரபி அல்லாதவர்களையும் அவர்கள் ஆட்சி செய்யலாம்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் வருவதாவது: “ஒரே ஒரு சொல்லை அவர்கள் சொல்லட்டும். அதனால் அவர்கள் அரபியர்களை ஆட்சி செய்யலாம்; அரபி அல்லாதவர்களும் அவர்களுக்குப் பணிந்து நடப்பார்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள். இதை கூறி முடித்தவுடன் இவ்வளவு பயன்தரும் சொல்லை எப்படி மறுப்பது? என்ன பதில் கூறுவது? என்று தெரியாமல் அனைவரும் திகைத்து அமைதி காத்தனர். பிறகு அபூஜஹ்ல் “அது என்ன சொல்? உமது தந்தையின் மீது சத்தியமாக! நாங்கள் அதையும் கூறுகிறோம். அதுபோன்று பத்து சொற்களையும் கூறுகிறோம்” என்று கூறினான். அப்போது நபி (ஸல்) அவர்கள் “லாயிலாஹஇல்லல்லாஹ் என்று கூறி அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் அனைத்தையும் விட்டு விலகிவிட வேண்டும்” என்று கூறினார்கள். உடனே அவர்கள் தங்கள் கைகளைத் தட்டிக் கொண்டு “முஹம்மதே! என்ன? கடவுள்களை எல்லாம் ஒரே கடவுளாக ஆக்கப் பார்க்கிறாயா? உனது பேச்சு மிக ஆச்சரியமாக இருக்கின்றதே!” என்றார்கள்.

பிறகு அவர்களில் சிலர் சிலரிடம் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயம் (வாக்குறுதிகளில்) நீங்கள் விரும்பும் எதையும் இவர் உங்களுக்குக் கொடுக்க மாட்டார்; நீங்கள் எழுந்து செல்லுங்கள். அல்லாஹ் உங்களுக்கும் அவருக்கும் மத்தியில் தீர்ப்பு அளிக்கும் வரை உங்களது மூதாதையரின் மார்க்கத்திலேயே நிலைத்திருங்கள்” என்று கூறினார்கள். அதற்குப் பின் அனைவரும் பிரிந்து சென்றுவிட்டனர்.

இவர்கள் விஷயத்தில்தான் இந்த வசனங்கள் அருளப்பட்டன:

“ஸாத் - நல்லுபதேசங்கள் நிறைந்த இந்தக் குர்ஆனின் மீது சத்தியமாக! (இது நம்மால்தான் அருளப்பட்டது. இதனை) நிராகரிப்பவர்கள் பெரும் குரோதத்திலும் விரோதத்திலும் (மூழ்கி) இருக்கின்றனர்.

இவர்களுக்கு முன்னர், (இவ்வாறு இருந்த) எத்தனையோ வகுப்பாரை நாம் அழித்திருக்கின்றோம். (வேதனை வந்த சமயத்தில்) அவர்கள் எல்லோரும் உதவி தேடிக் கூச்சலிட்டார்கள். அது (வேதனையிலிருந்து) தப்பித்துக் கொள்ளக்கூடிய நேரமாக இருக்கவில்லை.

(அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய ஒரு தூதர் (ஆகிய நீங்கள்) அவர்களிலிருந்தே அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சயப்பட்டு, “இவர் மிகப் பொய் சொல்லும் சூனியக்காரர்தான்” என்று (உங்களைப் பற்றி) அந்த நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்.

“என்ன! இவர் (நம்) தெய்வங்கள் அனைத்தையும் (பொய்யெனக் கூறி, வணக்கத்திற்குரியவன்) ஒரே இறைவன்தான் என்று ஆக்கிவிட்டாரா? மெய்யாகவே, இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான்” (என்று கூறி,) அவர்களிலுள்ள தலைவர்கள், (மற்றவர்களை நோக்கி, “இவரை விட்டு) நீங்கள் சென்றுவிடுங்கள். உங்கள் தெய்வங்களை ஆராதனை செய்வதில் நீங்கள் உறுதியாக இருங்கள். (உங்கள் தெய்வங்களைக் கைவிடும்படி கூறும்) இவ்விஷயத்தில் ஏதோ (சுயநலந்தான்) கருதப்படுகின்றது” என்று கூறிக் கொண்டே சென்றுவிட்டனர்.

“முன்னுள்ள வகுப்பாலும், இதனை நாம் கேள்விப்பட்டதில்லை. இது (இவரால்) புனையப்பட்டதே அன்றி வேறில்லை” என்றும், “நம்மைவிட்டு இவருக்கு மட்டும்தானா (வேத) உபதேசம் இறக்கப்பட்டு விட்டது” என்றும் (கூறினார்கள்). (அல்குர்ஆன் 38:1-8) (இப்னு ஹிஷாம், திர்மிதி, முஸ்னது அபீ யஃலா, இப்னு ஜரீர்)

Offline Yousuf

துயர ஆண்டு

அபூதாலிப் மரணம்

அபூதாலிப் நோய் அதிகமாகி நபித்துவத்தின் பத்தாவது வருடம் ரஜப் மாதத்தில் கணவாயிலிருந்து வெளியேறி சரியாக ஆறு மாதத்திற்குப் பின் மரணம் எய்தினார். (அல்முக்தஸர்)

சிலர் ரமழான் மாதத்தில் அன்னை கதீஜாவின் மரணத்திற்கு மூன்று நாள்களுக்கு முன் மரணமானார் என்றும் கூறுகின்றனர்.

அபூதாலிபுக்கு மரணம் சமீபமானபோது நபி (ஸல்) அவரிடம் சென்றார்கள். அப்போது அங்கு அபூஜஹ்லும் இருந்தான். அபூதாலிபிடம் நபி (ஸல்) அவர்கள் “எனது தந்தையின் சகோதரரே! நீங்கள் “லாஇலாஹஇல்லல்லாஹ்’ என்று கூறுங்கள். நான் அல்லாஹ்விடம் இவ்வார்த்தையின் பொருட்டால் உங்களுக்காக வாதிடுவேன்” என்று கூறினார்கள். ஆனால், அங்கிருந்த அபூஜஹ்லும், அப்துல்லாஹ் இப்னு அபூ உமய்யாவும் “அபூதாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா நீர் புறக்கணிக்கப் போகின்றீர்?” என்று தொடர்ந்து அவரிடம் இதையே கூறிக் கொண்டிருந்தனர். இறுதியில் அபூதாலிப் “நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில்தான் (இருக்கிறேன்)” என்று கூறிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “எனக்கு தடை வராமல் இருக்கும்வரை அல்லாஹ்விடம் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவேன்” என்று கூறினார்கள். ஆனால்,

“இணைவைத்து வணங்குபர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கோ நம்பிக்கையாளர்களுக்கோ தகுமானதல்ல் அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே! அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தான் என்று இவர்களுக்குத் தெளிவானதன் பின்னர் (எவ்வாறு அவர்களுக்கு மன்னிப்புக் கோரலாம்?) (அல்குர்ஆன் 9:113)

(நபியே!) நிச்சயமாக நீங்கள் இவர்களில் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்த உங்களால் முடியாது. எனினும், தான் விரும்பியவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகின்றான். நேரான வழியில் செல்லத் தகுதியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்!” (அல்குர்ஆன் 28:56) (ஸஹீஹுல் புகாரி)


என்ற இரு வசனங்களை அல்லாஹ் இறக்கி இணைவைப்பவர்களுக்காக பாவ மன்னிப்புக் கோருவதைத் தடை செய்துவிட்டான். (ஸஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்களுக்கு அபூதாலிப் கொடுத்து வந்த பாதுகாப்பு மற்றும் உதவியைப் பற்றி நாம் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. காரணம், அவர் குறைஷித் தலைவர்கள் மற்றும் மூடர்களின் தாக்குதல்களிலிருந்து இஸ்லாமிய அழைப்புப் பணியைப் பாதுகாத்து, அதற்கு ஓர் அரணாக விளங்கினார். ஆனாலும் தங்களது மூதாதையரின் மார்க்கத்திலேயே அவர் நிலைத்திருந்து விட்டதால் மறுமையின் வெற்றியை அடையவில்லை.

ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் “நீங்கள் உங்களது பெரியதந்தை அபூதாலிபிற்கு என்ன பயனளிப்பீர்கள். அவர் உங்களைப் பாதுகாத்தார். உங்களுக்காகக் கோபம் கொண்டார்” என்று அப்பாஸ் (ரழி) கேட்டபோது, “அவர் நரகத்தின் குறைந்த ஆழமுள்ள பகுதியில் இருப்பார். நான் இல்லை என்றால் நரகத்தின் அடித்தளத்தில் சென்றிருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) கூற தான் கேட்டதாக அபூ ஸஈது அல்குத் (ரழி) அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்களிடம் அவர்களது பெரியதந்தை அபூதாலிபைப் பற்றி பேசப்பட்டபோது “மறுமையில் அவருக்கு எனது சிபாரிசு பலனளிக்கலாம். அதனால் அவரது கரண்டைக்கால் வரையுள்ள நெருப்பின் ஆழத்தில் அவர் வைக்கப்படுவார்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

Offline Yousuf

துணைவி கதீஜா மரணம்

அபூதாலிபின் மரணத்திற்கு இரண்டு மாதங்களுக்குப் பின் துணைவி கதீஜா (ரழி) மரணமானார்கள். இவர்களது மரணம் நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரமழான் மாதத்தில், அவர்களின் 65வது வயதில் நிகழ்ந்தது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வயது ஐம்பது. (தல்கீஹ்)

அபூதாலிபின் மரணத்திற்கு மூன்று நாட்களுக்குப் பின் கதீஜா (ரழி) மரணமானார்கள் என்று சிலர் கூறுகின்றனர்.

நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வின் மிகப்பெரியஅருளாக கதீஜா (ரழி) விளங்கினார்கள். நபி (ஸல்) அவர்களுடன் கால் நூற்றாண்டுக் காலம் வாழ்ந்த நமது அன்னை கதீஜா (ரழி), நபியவர்களின் துக்க நேரத்தில் அவர்களுக்கு ஆறுதலாக, சிரமமான நேரத்தில் உறுதுணையாக இருந்து, அவர்களின் தூதுத்துவத்தை எடுத்துக் கூறுவதற்கு பலவகையில் தியாகம் செய்தார்கள். மேலும், அறப்போரின் கஷ்டங்களில் பங்கெடுத்து தனது உம்ராலும் பொருளாலும் உதவி ஒத்தாசை செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்: “மக்கள் என்னை நிராகரித்த போது, கதீஜா என்னை நம்பினார். மக்கள் என்னை பொய்ப்பித்த போது, அவர் என்னை உண்மைப்படுத்தினார். மக்கள் என்னை ஒதுக்கிய போது, அவர் என்னைத் தனது பொருளில் சேர்த்துக் கொண்டார். அல்லாஹ் அவர் மூலமாகத்தான் எனக்குக் குழந்தைகளைக் கொடுத்தான். அவரல்லாத மற்ற மனைவிகள் மூலம் குழந்தைகள் இல்லாமல் செய்துவிட்டான்.” (முஸ்னது அஹ்மது)

அபூஹுரைரா (ரழி) அறிவிப்பதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் வந்தார். “அல்லாஹ்வின் தூதரே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் உணவு எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் ஸலாம் கூறி சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காணமுடியாத முத்து மாளிகை ஒன்று அவருக்கு கிடைக்க இருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அடுக்கடுக்கான துயரங்கள்

சில நாட்களுக்குள் துக்கம் தரும் இவ்விரு நிகழ்ச்சிகளும் நடந்து முடிந்தன. நபி (ஸல்) அவர்களின் உள்ளம் வேதனையால் துடிதுடித்தது. தொடர்ந்து சமுதாயத்தவர்களும் துன்பங்களைத் தந்தனர். அபூதாலிபின் மரணத்திற்குப் பின் நபி (ஸல்) அவர்களுக்குத் துயரத்திற்கு மேல் துயரம் அதிகரித்தது. முற்றிலும் நிராசையாகி “தாயிஃப்’ நகர மக்களாவது அழைப்பை ஏற்றுக் கொள்வார்கள் அல்லது ஆதரவு அளிப்பார்கள் என்று தாம்ஃபை நோக்கி பயணமானார்கள். ஆனால், அங்கு அவர்களுக்கு ஆதரவளிப்பவரோ உதவி செய்பவரோ இல்லை. மாறாக, அம்மக்கள் நபி (ஸல்) அவர்களின் கூட்டத்தார் கொடுக்காத நோவினைகளை அவர்களுக்குக் கொடுத்தனர். கல் நெஞ்சம் கொண்ட அம்மக்கள் நபியவர்களை அடித்து துன்புறுத்தினர்.

மக்காவாசிகள் நபி (ஸல்) அவர்களைக் கொடுமைப்படுத்தியது போன்றே அவர்களது தோழர்களையும் கொடுமைப்படுத்தினர். நபி (ஸல்) அவர்களின் நெருக்கமான தோழரான அபூ பக்ருக்கும் இக்கொடுமைகள் நிகழ்ந்தன. இதனால் அவரும் மக்காவை விட்டு ஹபஷாவிற்கு செல்ல வேண்டுமென முடிவு செய்தார். மக்காவை விட்டு வெளியேறி “பர்குல் கிமாத்’ என்ற இடத்தை அடைந்த போது அவரை “இப்னு துகுன்னா’ என்பவர் சந்தித்து தனது பாதுகாப்பில் மீண்டும் அவரை மக்காவிற்கு அழைத்து வந்தார். (ஸஹீஹுல் புகாரி)

இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: அபூதாலிபின் மரணத்திற்குப் பிறகு அவன் வாழ்நாளில் கொடுக்க முடியாத வேதனைகளைக் குறைஷிகள் நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்து வந்தனர். ஒருமுறை குறைஷி மடையர்களில் ஒருவன் நபி (ஸல்) அவர்களின் தலை மீது மண்ணை வாரி இறைத்தான். வீட்டுக்குள் நுழைந்த நபியவர்களின் தலை மீது மண் இருப்பதைக் கண்ட அவர்களின் மகளால் ஒருவர் அழுதவராக அதனை அகற்றினார்கள். “எனது அருமை மகளே! அழாதே! நிச்சயமாக அல்லாஹ் உனது தந்தையைப் பாதுகாப்பான். அபூதாலிப் மரணிக்கும் வரை நான் அதிகம் வெறுக்கும் ஒன்றை குறைஷிகள் எனக்கு செய்ததில்லை” என்று நபி (ஸல்) கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)

இவ்வாறு இந்த ஆண்டில் துயரங்கள் தொடர்ந்து கொண்டே இருந்ததால் வரலாற்றில் “ஆமுல் ஹுஸ்ன்’ துயர ஆண்டு என்று இந்த ஆண்டைக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸவ்தா உடன் மறுமணம்

நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ஷவ்வால் மாதத்தில் நபி (ஸல்), ஸவ்தா (ரழி) அவர்களை திருமணம் செய்தார்கள். இவர் அழைப்புப் பணியின் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாமைத் தழுவியவர். முஸ்லிம்கள் இரண்டாவது முறையாக ஹபஷாவிற்கு ஹிஜ்ரா சென்றபோது இவரும் தனது கணவருடன் சென்றிருந்தார். இவர் கணவர் ஹபஷாவில் மரணித்துவிட்டார். அதற்குப் பின் இவர் மக்கா வந்தவுடன் இவருடைய இத்தா”வுடைய காலம் முடிவுறவே நபி (ஸல்) அவர்கள் இவரை பெண் பேசி திருமணம் முடித்துக் கொண்டார்கள். கதீஜா (ரழி) அவர்களின் மரணத்திற்குப் பின் இவர்களைத்தான் முதலில் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இறுதி காலத்தில் நபி (ஸல்) அவர்கள் தனக்கு ஒதுக்கியிருந்த நாட்களையும் ஆயிஷாவிற்குக் கொடுத்து விட்டார்கள்.