Author Topic: திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயமாகின்றன..  (Read 2162 times)

Offline sasikumarkpm

  • Jr. Member
  • *
  • Posts: 61
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • அதான் personal ஆச்சே...
அவளை எனக்கு என்றிலிருந்தோ நல்ல பரிட்சயம்.. மிகச் சரியாக சொல்ல வேண்டுமென்றால் நினைவு தெரிந்த நாள் தொடங்கி..

எங்கள் இருவரது வீடும் எதிரெதிர் வீடுகள் என்ற போதிலுமே கூட, அவள் அதிகம் புழங்கியது என் வீட்டில் தான்...

அவளது அம்மாவும் அப்பாவும் தத்தம் வீட்டினை எதிர்த்து காதல் திருமணம் செய்தவர்கள், ஆகையால் இருவீட்டுப் பெரியவர்களும் விலகியே இருந்தனர்..

இப்படியாய் தனித்திருந்த அவளது பெற்றோர், அலுவலகம் செல்ல வேண்டிய காரணமாய் தினமும் அவளை என் வீட்டில் விட்டு விட்டு சென்றிடுவர்..

என் வீட்டில் என்னைக் கொண்டாடியதைவிட, பெண்ணாகப் பிறந்ததால் அவளைக் கொண்டாடியதுதான் அதிகம்..

என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அப்போது பெண் குழந்தை மேல்தான் ஆசையாம்.. தங்களுக்கு பெண் குழந்தை பிறக்க எண்ணி காத்திருந்த போது, ஆணாய் நான் பிறந்ததால், காத்துக்கிடந்த பாசமனைத்தையும் அவளுக்காய் காட்டி வளர்த்தனர் என் வீட்டில்...

நான் அம்மா, அப்பா என்றழைத்ததை விட, அவள் அத்தை மாமா என்றழைத்ததே அதிகமென நினைவெனக்கு... அவளும் தன் பெற்றோரை அம்மா அப்பா என்றழைத்ததுங்கூட குறைவுதான்...

நாங்கள் இருவரும் ஒரே நாளில் பிறப்போம் என்றெதிர் பார்க்கப்ப்
ட்ட தருணத்தில், ஒரு நாள் வித்தியாசத்தில் பிறந்ததாக அம்மா அடிக்கடி கூறுவாள்.. அவ அப்போலருந்தே கெட்டிக்காரி, எப்போ முந்திக்கிட்டு பொறந்தாலே அப்போவே அது முடிவாகிப் போச்சுனு...

எப்போது, எந்த ஒரு தவறு செய்யும் போதும் எனக்கு பழக்கப்பட்ட வசவு இது தான்.. ஏண்டா நீ அவள் போல இருக்க மாட்டாயா? அவளுக்கும் உன் வயசுதானே, அவ மட்டும் எவ்வளவு பொறுப்பா இருக்கா... படிக்குறா? உன்னால மட்டும் ஏண்டா படிக்க முடியல என..

அவளைக் காட்டிக் காட்டி என்னை திட்டுவதனாலேயோ என்னவோ, அப்போதெல்லாம் அவளை எனக்கு பிடிக்கவே பிடிக்காது..அவள் மீது பிரியமே இல்லாமல் தான், என் பெரும்பாலான பால்ய பிராயங்கள் கழிந்தன..

பொங்கல் தீபாவளி என பண்டிகைகள் வந்த போதெல்லாம், என் வீட்டில் அவளுக்கும் சேர்த்தே புத்தாடைகள் எடுக்கப்படும்.. அவளுக்கு அவள் வீட்டிலும் தனியாக புத்தாடைகள் எடுப்பார்களாதலால், அவளுக்கு அதிக உடைகள் கிடைத்துவிடும்..

பகுத்துப் பார்க்கத் தெரியாத பால்யமது, ஆதங்கத்தில் அவள் மீது வெறுப்பே கொட்டிக் கிடக்கும்.. பண்டிகைகளை எனக்கு அதனால் பிடிப்பதேயில்லை... அவளிடம் நான் சரியாக பேசாத காரணத்தினாலோ என்னவோ அவளும் என்னிடம் நெருங்கி பேசிடவே மாட்டாள்..

பள்ளிக்கு நாங்கள் இருவரும் ஒரே மிதிவண்டியில் தான் என் அப்பாவோடு பிராயாணப்படுவோம்..அவளை மட்டும் சொகுசாக பின் கேரியரில் அப்பா கிடத்திடுவார்.. முன்னிருக்கும் கம்பியில் டர்க்கி டவலினைச் சுற்றி என்னை அதன் மீது அமரவைப்பார்...

அவள் மட்டுமே சொகுசாக வருவதாய் எண்ணிப் பரிதவிக்கும் எனக்கு, வேண்டுமெனவே
இரண்டு தெரு தாண்டுவதற்க்குள் பின்னால் வலி எடுப்பதாய் அழுவேன், அப்போதாவது அவளை முன்னால் கிடத்தி, என்னைப் பின்னால் கிடத்திட மாட்டார்களா? என ஒரு குருட்டு ஆசை எனக்கு... ஆனபோதிலுமே ஒருநாள் கூட நான் பின்னால் அமர்ந்ததாய் எனக்கு நினைவே இல்லை...

இருவருக்குள்ளும் சட்டென ஒத்துப் போனதே கிடையாது.. பள்ளி முடிந்து மாலைகளில் அவளும் நானும் வீடு திரும்பிடுவோம்.. அவள் பெற்றோர் அலுவல் முடிந்து வரும் வரையில் அவள் என் வீட்டிலேதான் இருப்பாள்.. தினமும் மாலையில் கார்டூன் சேனலில் டாம் அண்ட் ஜெர்ரி பார்ப்பதை வழக்கமாக கொண்டிருப்பாள்...

நான் வேண்டுமென்றே, அவளை சீண்டிபார்க்க அவள் கைகளில் மருதாணி இட்டுக் கிடக்கும் நாட்களில் சேனலை மாற்றி ரெஸ்ட்லிங் சேனலை வைத்திடுவேன்.. அவள் கோபத்தில் என்னை மாற்றச் சொல்லி கேட்பாள், திட்டுவாள், கடைசியில் என்னுடன் சண்டையே போடுவாள், எங்கள் சண்டைக்கு இறுதியில் நான் என்னவோ முகமெல்லாம் மருதாணி பூசிக்கொண்டது போல இருக்கும்..

களோபரத்தின் கடைசியில், தமிழ் சினிமா போலிஸ் போல, அம்மா வந்து என்னிடமிருந்த ரிமோட்டை பிடுங்கி கார்டூன் சேனலுக்கு மாற்றி என்னைத் வசையிடுவாள்.. இப்படியாய் சண்டையோடு போய்க்கொண்டிருந்த நாட்கள் பல..

பருவமடைந்த பிறகும் கூட இப்போதெல்லாம் இருவரும் ஒரே மிதிவண்டியில் தான் பயணப்படுவோம்.. இப்போது கூட அவள் பின்னிருக்கையில், நான் சைக்கிள் டிரைவராக... இருவரும் பள்ளி செல்லும் வரைகூட அதிகம் பேசிக் கொள்ளவே மாட்டோம்.. திரும்பி வரும்போதுங்கூட அப்படித்தான்.. பருவமடைந்த அவளுக்கு பாதுகாப்பென என்னை அழைத்துப் போக வரச்சொல்லி இருந்தனர் எங்கள் பெற்றோர்கள்..

இப்போதெல்லாம், அவள் என் வீட்டில் அதிகம் இருப்பது இல்லை, ஆனாலுமே அவளுக்கான பாசமே, இடமோ என் வீட்டில் குறைந்ததே இல்லை.. எப்போதுமே அவள் அத்தையென வாய் நிறைய அழைத்தபடி வருவாள், என் அம்மாவும் அவளை உச்சிமுகராத குறையாக அழைத்து மகிழ்வாள்..

எனக்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும், இந்தியா ஆடும் எந்த ஒரு மேட்சாக இருந்தாலும் தவறாது பார்த்திடுவேன்.. பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் நானொரு சிறந்த கிரிகெட் வீரனாக இருந்திருந்தேன்.. விரைவாக ரன் குவிப்பது, வேகமாக பந்து வீசுவது அசாத்தியமான கேட்சுகளை பிடிப்பதென பன்முகங்கொண்ட எனக்கு பள்ளியில் மாணவ விசிறிகள் அதிகம்...

அவள் அப்படியே நேரெதிர்.. விரைவாக படிப்பது, பணிவாக இருப்பதென, ஆசிரியர்கள் மத்தியில் நல்ல பெயருடனிருப்பாள்.. எனக்கு கிரிகெட் கோச்சிங் முடியும் வரையில், கிரவுண்டில் எனக்கென காத்திருப்பாள்.. பின்னர் இருவரும் ஒன்றாக வீடு திரும்புவோம்..

ஆசிரியர் மத்தியில் அவளுக்கிருந்த நற்பெயரினை நான் பலமுறை பயன்படுத்தி இருக்கிறேன்.. கிரிக்கெட் மேட்ச் பார்க்க பலநாட்கள் விடுப்பு எடுத்து இருக்கிறேன்.. அப்போதெல்லாம் எனக்கு உடல்நிலை சரியில்லையென பள்ளியில் அவளைக் கூறச் சொல்லிடுவேன்.. அங்கே அவள் வாக்கே வேதவாக்கு.. எனக்கு பிரச்சனையே வந்ததில்லை..

உலகக்கோப்பை வந்த நேரம், எனக்கு பெரும்பாலும் கிரிக்கெட் பார்த்தே பொழுது போய்விட, ரெக்கார்ட் எழுத பிடிப்பதே இல்லை... அப்படி எழுதத் தேவைப்படும் போதெல்லாம் மட்டும் அவளைக் கெஞ்சி எனக்காக எழுதச் சொல்லிக் கேட்பேன், முறைத்தபடி அவளும் எனக்கென எழுதித் தருவாள்.. ஏனோ ஒரு முறை கூட மறுத்ததே இல்லை..

அப்படியே போய்க்கொண்டிருந்த இருவரது நாட்களையும் புரட்டிப் போட இன்னொருவனின் வரவு தேவைப்பட்டிருந்தது..

பள்ளியில் அவன் எங்களுக்கு சீனியர்.. எங்கள் பள்ளி கிரிக்கெட் அணித்தலைவனும் கூட,நானும் கூட அவனது அணியில் தான் விளையாடுகிறேன்.. அவனொருவன் இவளை தினமும் பின் தொடர்ந்தே வந்திடுவான்.. எங்கள் வீடிருக்கும் வீதிக்கு முன்னாக நிறுத்திக்கொள்வான், நாங்கள் இருவரும் கிளம்பும் வரை பக்கத்து தெருவில் காத்திருந்து பள்ளிவரை பின் தொடர்வான்..

ஆரம்பத்தில் இதை நான் பெரிதாக கவனிக்கவேயில்லை, ஆனால் அவள் மட்டும் அவனருகாமையில் சற்று பதட்டமாவதை உணர்ந்திருக்கிறேன்.. சைக்கிளில் என்னை வேகமாக போகச்சொல்லி வற்புறுத்துவாள், அந்த சில நேரம் என் தோளின் மீது அவள் கரங்கள் பயந்து நடுங்கியபடி படர்வதை கண்டிருக்கிறேன்.. என்ன? ஏதென்று கேட்ட போதெல்லாம், கூற மறுத்த அவள், விரைந்து வீடு போக சொல்லி மட்டும் கேட்பாள்..

தயங்கித் தயங்கி அவள் ஒருநாள் என்னிடம் இன்னதுதான் விவரமெனக் கூறினாள், நாளைக்குள் அவன் காதலை அவள் ஏற்காமல் போனால், நாளை மறுநாள் எல்லா வகுப்பு கரும்பலகைகளிலும் அவள், அவனைக் காதலிப்பதாய், தானே அவள் எழுதுவது போல எழுதிவிடுவதாக கூறி இருக்கிறான்...

இனங்காணத் தெரியாத பெருங்கோவம் மேலிட, மறுநாள் அந்தப் பையனுடன் வீதியில் சண்டையிட்டிருக்கிறேன்.. "டேய் அவள யார்னு நினைச்சு இந்த மாதிரி பேசி இருக்க... நான் இருக்கேண்டா அவளுக்குனு " என என்ன என்னவெல்லாமோ கத்தியபடி கட்டிப் புரண்டு சண்டையிட்டு இருக்கிறேன்... இரண்டு பல் உடைந்த அவன், பள்ளியில் என்னை பற்றி முறையிட, என்னைக் அழைத்து விசாரித்து கண்டித்தனர்..

ஏனே விசாரணையில் அவள் பெயரை மட்டும் நான் கூறவே இல்லை.. பள்ளி கிரிக்கெட் அணித்தேர்வில் கிளம்பிய பிரச்சனையென அவர்களாகவே ஒரு முடிவுக்கும் வந்துவிட்டனர்..

இரண்டு மாதம் காலையும் மாலையும் பள்ளியின் எல்லா கரும்பலகைகளையும் சுத்தம் செய்யும் தண்டனை எனக்கு.. யாரும் இல்லாத போது அவளே எனக்காக அந்த கரும்பலகைகளை சுத்தம் செய்திடுவாள், என்னைப் பார்க்கும் போது மெல்ல நன்றியுடன் வெட்கப் புன்னகையுமிடுவாள்..

போதாதா, அவளை அப்படிக் காணும்போதெல்லாம் என் மனமென்னவோ புரண்டு புயலைப் போல புது திடத்துடன் பொங்கியெழும்.. உனக்கானவள் இவளே என யாரோ எங்கிருந்தோ உரக்கச் சொன்னது போல இருக்கும்.. முகஞ்சிவக்க நாணிப் போய்விடுவேன்..

இப்போதெல்லாம் சைக்கிளில் வரும் போது உரிமையாக என் தோள்களில் கை போட்டுக் கொள்வாள், தயங்கித் தயங்கி ஒருமுறை ஏண்டா நான்'னா உனக்கு அவ்வளோ இஷ்டமா என்ன? அன்னைக்கு சண்டையில என்ன என்னவோ சொன்னனு கேட்டே விட்டாள்.. என்ன சொல்வதெனத் தெரியாமல் நான் வெட்கி விழிப்பதை அவள் தன் கண் விரிய பார்ப்பதை கண்டு இன்னமும் நாணிப் போனேன்..

பனிரெண்டாம் வகுப்புக்கு வந்துவிட்டோம், அவளுக்கு அவள் வீட்டில் தனியாக சைக்கிள் வாங்கிக் கொடுத்துவிட்டார்கள், ஆனாலும் அவள் என் வீட்டிற்கு வந்து காத்திருந்து, என்னுடன் ஒன்றாகவே சைக்கிள் மிதித்துக் கொண்டு பள்ளி வருவாள்..

இப்போதெல்லாம், அவளுக்காகவே அவளுடன் தனியாக பயணப்படும் அந்த அனுபவத்திற்காகவே தினமும் பள்ளி செல்கிறேன்.. இரண்டு மூன்று கிரிகெட் தெடர்களை பார்க்க விடுமுறை எடுக்க வேண்டுமெனக் கூடத் தோன்றவில்லை..

நான் பனிரெண்டாம் வகுப்புக்கு ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் போனது குறித்து அம்மா கூட, அப்பாவிடம் பெருமையாக பேசிக் கொண்டால், "ஏங்க இப்போலாம் பையன் கிரிகெட் பாக்க கூட லீவு போடுறதே இல்லை. அவ்வளவு கருத்தா ஸ்கூலுக்கு போகிறான்"...

அப்பா அதெல்லாம் ஏற்றுக் கொள்ளவே இல்லை.. "யாரு? உம்பைய்யனா? பொறுப்பா அவனா படிக்க போறான்?? சே..சே.. அவன் தெனமும் போறான்னா அதுக்கும் ஒரு காரணமிருக்குமடி" என்றார்..

அப்பாக்கள் புத்திசாலிகளா? இல்லை அனுபவசாலிகளா தெரியவில்லையே..

இலைமறை காய் மறையாக நானும் அவளும் காதலிப்பதை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளாமல் எங்களின் செயல்களில் உணர்த்திக் கொண்டிருந்த்தோம்.. பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் எப்படியே நான் பாஸ் செய்திருக்க, அவள் பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றாள்..

என் அப்பாவும் அம்மாவும் அவளை கொண்டாடித் தீர்த்தனர்.. இரட்டை மகிழ்ச்சி அவர்களுக்கு நானும் பாஸ் ஆகிவிட்டேனல்லவா...

என் மதிப்பெண்ணுக்கு பெரிதாக கல்லுரி கிடைக்கும் என தோன்றவில்லை, ஆனால அவளுக்கோ ஏகப்பட்ட கல்லூரியில் இருந்து சேர வாய்ப்புகள் வந்தவண்ணம் இருந்தது..

அவளை சென்னையில் ஒரு கல்லூரியில் அவளது அப்பா சேர்த்துவிட முடிவு செய்திருந்தார்.. சரியாக படிக்காமல் போனதற்க்காய் முதன்முறையாக என்னை குறைசொல்லி முழுவதுமாய் நான் அன்றுதான் வருத்தப்பட்டேன்.. சரியாக படிக்காமல் போனதால் அவளை பிரியப் போகிறோமென்ற எண்ணமே என்னை முழுக் குற்றவுணர்ச்சியில் ஆழ்த்தியது..

நாட்கள் ஓடிட அவள், சென்னையில் படித்துக் கொண்டிருந்தாள், நான் எனது ஊரில் ஒரு கல்லூரியில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் இடம் பெற்று பயிலத்துவங்கி இருந்தேன்..

பொங்கல் தீபாவளி என எப்போதாவது பண்டிகைகளுக்குத்தான் அவள் இப்போதெல்லாம் வீட்டுக்கு வருகிறாள், ஆக பண்டிகைகளுக்காக நான் காத்திருக்கத் துவங்கினேன்.. அவள் வருவாளல்லவா?

அப்படி இப்படியாய், இருவரும் கல்லூரி முடித்து இப்போது சென்னையில் வேலை செய்கிறோம்.. அவளது கம்பெனியும் என் கம்பெனியும் ஒரே வளாகத்தில் தான் இருக்கிறது.. வாரத்தில் இரண்டு மூன்று முறை தற்செயலாகவோ, அல்லது திட்டமிட்டோ சந்தித்துவிடுவோம்.. நெடுநேரம் வரை பேசிக் கொண்டிருப்போம், ஆனால் ஒரு முறைகூட காதலிப்பதாய் சொல்லிக் கொள்ள ஏனோ இருவருக்கும் தைரியம் வரவில்லை...

அவள் தோழிகளுக்கெல்லாம் என்னை நன்றாக தெரிந்து இருந்தது.. அவர்கள் கூட என்னைப் பார்த்தால் சினேகப் புன்னகைவீசச் செய்வார்கள்.. இப்படியே போய்க்கொண்டிருந்த எங்கள் வாழ்வில் அடுத்த கட்ட நிகழ்வுகள் வந்தது.

அவளும் நானும் ஒன்றாகவே பிறந்தோம், வளர்ந்தோம், இன்று வேலைக்கும் செல்கிறோம், ஆனால் எதிர்பார்ப்பில் மட்டும் அவளைவிட அவளது கணவன் இரண்டு மடங்கு அதிகம் சம்பாதிக்க வேண்டுமாம்.. என்ன எதிர்பார்ப்போ தெரியவில்லை, அவள் மீதும் குற்றமில்லை, அவளும் சூழ்நிலைக் கைதியாக தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள் என்றே தோன்றுகிறது... சொல்லாமலே இருந்த எங்கள் காதல் அறிவிக்கப்படாமலேயே இன்று முடிந்தும் போனது..

நாளை அவளுக்கு கல்யாணமாம், என் எதிர்வீடே கோலாகலத்துக் கொண்டிருந்தது, என் வீட்டில் அப்பாவும் அம்மாவும் ஆளையே காணவில்லை, காலையில் எதிர் வீட்டுக்கு சென்றவர்கள்...

ஏனோ அம்மாவைத் தேடி அவளது வீட்டுக்குள் நான் சென்றேன், அங்கே அவள் கைகளில் மருதாணி வைத்துக் கொண்டு இருந்தாள், மணி சாயங்காலம் நான்கரையை நெருங்கிக் கொண்டிருந்தது..

வீட்டில் எல்லோரும் கல்யாண வேலைகளில் படபடத்துக் கொண்டிருக்க அவள் ரிமோட்டை இயக்க மருதாணிக் கரங்களால் திணறிக் கொண்டு இருந்தாள்.. அவள் என்னைப் பார்த்தால், இருவரிடையில் ஒரு கணம் ஆழமான மெளனம், அவள் ஏதும் சொல்லாத போதும்கூட, மெல்ல நான் ரிமோட்டை எடுத்து அவளுக்கு தேவையான கார்ட்டூன் சேனலை வைக்கிறேன், அவள் கண்கள் கலங்க மெல்ல என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.

யாரோ.. எப்போதோ சொன்னது நினைவுக்கு வருகின்றது... திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயமாகின்றன..
சசிகுமார்..