Author Topic: நட்சத்திரங்களா திருமண வாழ்க்கையை நிச்சயிக்கின்றன?  (Read 2783 times)

Offline kanmani

கர்ண பரம்பரையாக, அதாவது செவி வழித்தகவலாக (கர்ணம்=செவி) வரும் எந்த பழமொழிக்கும் வரலாற்று குறிப்புகளோ, சான்றுகளோ இல்லை எனலாம். அதேபோல, எதற்காக செய்கிறோம் இதனால் என்ன பயன் என்று தெரியாமலேயே சில சாஸ்திர சம்பிரதாயங்களை, யாரோ சொன்னார்கள் என்பதால் பின்பற்றி வருகிறோம். ஜோதிடம் சார்ந்த பழமொழிகளில் சிலவும் இத்தகையவைதான்.

நட்சத்திர விஷயங்கள்

ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை, பல விஷயங்களில், ஜோதிடர்களிடையே சில குழப்பங்களும் முரண்பாடுகளும் இருந்தாலும் நட்சத்திரத்தைப் பொறுத்தவரை, பொதுவாக எந்தக் கருத்து வேறுபாடும் இருப்பதில்லை. ஒன்பது கிரகங்கள், அவற்றுக்கு தலா மூன்று நட்சத்திரங்கள் வீதம் 27 நட்சத்திரங்கள் உள்ளது.

அசுவனி, மகம், மூலம்     :     கேதுவின் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரங்கள்

பரணி, பூரம், பூராடம்    :     சுக்கிரன் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரங்கள்

கிருத்திகை, உத்திரம், உத்திராடம்    :     சூரியன் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம்    :     சந்திரன் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரங்கள்

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்    :     செவ்வாய் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரங்கள்

திருவாதிரை, சுவாதி, சதயம்    :     ராகுவின் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரங்கள்

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி    :     குரு ஆதிக்கம் பெற்ற நட்சத்திரங்கள்

பூசம், அனுஷம், உத்திரட்டாதி    :     சனி ஆதிக்கம் பெற்ற நட்சத்திரங்கள்

ஆயில்யம், கேட்டை, ரேவதி     :     புதன் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரங்கள்

ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களும்  சிறப்பானவை, எந்த நட்சத்திரத்திற்கும் தனிச்சிறப்பு, யோகம், அந்தஸ்து எனக் கொடுக்கப்படவில்லை. சில
நட்சத்திரங்களில் கடவுள் அவதாரம் நிகழ்ந்ததாக சொல்லப்படுவதால் ஒருசிலர் அதை பெரிதுபடுத்தி பேசி வருகிறார்கள். தோஷ நட்சத்திரம், யோக நட்சத்திரம் என்று எதுவும் கிடையாது. இதுபற்றி எந்த ஜோதிட நூலிலும் குறிப்பிடப்படவில்லை.

நட்சத்திர அபவாதங்கள்

திருமணத்திற்கு பெண் பார்க்கின்றபோதுதான் இந்த நட்சத்திர பிரச்னைகள் தலை தூக்குகின்றன. குடும்பத்திற்கு ஆகாத நட்சத்திரங்கள் என்று ஒரு பட்டியலே போடுவார்கள். ஆனால் இதில் எள்ளளவும் உண்மையில்லை. இவையெல்லாம் யாரோ வேண்டாதவர்களால் கிளப்பிவிடப்பட்ட வதந்திகளும் அபவாதங்களும் ஆகும்.

ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது.
மூலம் மாமனாருக்கு ஆகாது.
கேட்டை மூத்த மைத்துனருக்கு ஆகாது.

இது போன்ற  சொற்றொடர்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் ஒருவர் சொல்ல, ஒருவர் கேட்டு வழக்கத்தில் வந்தவை. ஒருவர் பிறந்த நட்சத்திரம், அவருடைய சொந்த வாழ்க்கையையே தீர்மானிக்காது; அப்படி இருக்க அந்த நட்சத்திரத்தால் அடுத்தவருக்கு தீங்கு வரும் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
பரணியில் பிறந்தவர்கள் எல்லாம் தரணி ஆள வேண்டும் என்றால் இந்த நாட்டில் பரணியில் பிறந்தவர்கள் எல்லாம் அரசர்களாகவோ அல்லது தற்காலத்தில் பிரதமர்களாகவோ அல்லவா இருக்க வேண்டும்?

ஆயில்யம், மூலம், கேட்டை, விசாகம்

இந்த நட்சத்திரம் ஒன்றில் பிறந்த ஒரு பெண் திருமணமாகி கணவர் வீட்டிற்கு செல்லும்போது புகுந்த வீட்டினருக்கு கஷ்டங்கள், நஷ்டங்கள், வீட்டிற்கு ஆகாது, ஆயுள் முடிந்து விடும் என்பதெல்லாம் கட்டுக்கதைகள். உன்னுடைய ஆயுள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவை. இடையில் வருகின்ற மருமகளால் ஏதாவது நேர்ந்துவிடும் என்பது வெற்று உளறல் என்பதைத் தவிர வேறில்லை. எங்கோ காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கலாம். அதை வைத்துக்கொண்டு மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடக்கூடாது.

பிராப்தம்

பெரியோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் சாதாரணமாக பேசும்போதுகூட எல்லாவற்றிற்கும் பிராப்தம் வேண்டும் என்று சொல்வார்கள். இந்த விஷயத்தை ஜோதிட சாஸ்திரமும் அறுதியிட்டு கூறுகிறது. அதாவது ஒருவருக்கு ஏற்படக்கூடிய யோகங்கள், அவயோகங்கள், நன்மை, தீமைகள், கஷ்ட, நஷ்டங்கள் அவருக்கு கிடைக்கக்கூடிய பதவிகள் (இந்த இடத்தில் பதவி என்பது உறவுகளையும் குறிக்கும்) ஆகியவை எல்லாம் அந்த ஜாதகரின் பூர்வ புண்ணிய கர்ம வினைப்படி அமைவதாகும். நிகழ்வுகள் யாவும் நிச்சயிக்கப்பட்டவை. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது சத்தியமான உண்மை.

நாம் எங்கு பிறக்க வேண்டும்? நம் தாய்-தந்தையர் யார்? நமக்கு வாய்க்கும் மனைவி எப்படிப்பட்டவள்? நமக்கு குழந்தைகள் உண்டா? நமக்கு மண், மனை, வீடு யோகம் உண்டா ஆகிய அனைத்துமே நம் கர்ம வினைப்படி, நாம் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே தீர்மானிக்கப்பட்டவை. இது புரியாமல் ‘நான் தான் செய்தேன், நான் தான் முடித்தேன்’ என்று பலர் நினைத்து கொண்டிருக்கிறோம். நாம் வெறும் கருவிதான். கர்த்தா, அவன். பிராப்தத்தைப் பற்றி பகவான் ரமணர் பல்வேறு சமயங்களில் குறிப்பிட்டுள்ளார். ஒரு சமயம் அன்பர்கள் பகவான் முன்னிலையில் அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒருவருக்கு விக்கல் ஒலித்தது. உடனே பகவான் அவருக்கு தண்ணீர் தருமாறு சொன்னார்.

உடனே பக்கத்து அறையில் இருந்து ஒருவர் அவருக்கு அருந்த நீர் கொண்டு வந்து கொடுத்தார். தண்ணீரை அருந்திய அவர், பகவானை நோக்கி பகவானே பிராப்தத்தை பற்றி சொல்லிக் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது எனக்கு தண்ணீர் கிடைத்ததும் என் பிராப்தமோ என்று கேட்டார். அதற்கு பகவான் சிறிதும்
தாமதிக்காமல் எல்லாமே உன் பிராப்தப்படிதான் என்று அருளினார். அந்த அளவிற்கு பிராப்தம் என்பது நாம் வாங்கி வந்த வரமாகும்.

ஜாதகக் கட்ட பலம்

நம்முடைய வாழ்க்கையை ஜாதகக் கட்டத்தில் இருக்கும் கிரகங்கள்தான் வழி நடத்துகின்றன. நட்சத்திர பொருத்தம் என்ற பெயரில் சொல்லப்பட்டுள்ள பொருத்தங்கள் எல்லாம் ஜாதகக் கட்டத்திலும் உள்ளன. உதாரணமாக நமக்கு ஏதாவது பிரச்னை என்றால் ஜாதகத்தை எடுத்துக்கொண்டுதான் போய் ஜோதிடரிடம் பலன்களை தெரிந்து கொள்கிறோம். வெறும் நட்சத்திரத்தை மட்டும் சொல்லி பலன் கேட்பதில்லை. ஜாதகக் கட்டப்படி, நட்சத்திரப் பொருத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பொருந்த வேண்டும் என்ற பிராப்தம் இருந்தால், அந்தப் பாக்யம் கிடைக்கும். ஆகையால் வெறும் நட்சத்திரத்தால் எந்தப் பயனும் இல்லை; அதனால் பயமும் வேண்டாம். வரன் தேடுபவர்கள், ‘ஆஹா பிரமாதம். 7 பொருத்தம் உள்ளது, 9 பொருத்தம் உள்ளது. இந்த  நட்சத்திரம் மாதிரி வராது’ என்றெல்லாம் பேசித் தம்மை ஏமாற்றிக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஜாதகம் நன்கு பொருந்துகிறதா, குழந்தை பாக்யம் உள்ளதா? நல்ல யோக தசைகள் வருகின்றனவா, ஆயுள் பாவம் நன்றாக இருக்கிறதா என்ற, வாழ்விற்கு
அர்த்தமும் அடித்தளமும் ஆதாரமும் உள்ள பயன் தரும் கேள்விகளை ஜோதிடரிடம் கேட்டு அதன்படி அமைகின்ற வாழ்க்கையே பொருத்தமானதாகவும்
தீர்க்கமானதாகவும் அமையும்.