Author Topic: மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை  (Read 40960 times)

Offline Anu

புலனடக்கத்தை நோக்கி

என் உணவில் சில மாறுதல்களைச் செய்வதற்குக் கஸ்தூரிபாயின் தேக அசௌக்கியம் எவ்வாறு காரணமாக இருந்தது என்பதை முந்திய அத்தியாயத்தில் விவரித்திருக்கிறேன். பிந்திய கட்டமொன்றில், பிரம்மச்சரியத்திற்கு உதவியாக இருக்கவேண்டும் என்பதற்காக மற்றும் பல மாறுதல்கள் செய்யப்பட்டன. இவற்றில் முதலாவது பால் சாப்பிடுவதை விட்டுவிட்டது. பால் மிருக உணர்ச்சியைத் தூண்டுகிறது என்று ராய்ச்சந்திர பாயிடமிருந்தே முதன் முதலில் அறிந்தேன். சைவ உணவைப் பற்றிய புத்தகங்களும் இக்கருத்தைப் பலப்படுத்தின. ஆனால், நான் பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொள்ளாமல் இருந்த வரையில் பால் சாப்பிடுவதை விட்டுவிட நான் துணியவில்லை. உடலை வளர்ப்பதற்குப் பால் அவசியமானது அல்ல என்று நான் முன்னமே அறிந்திருந்தேன். ஆனால், அதை விட்டுவிடுவது எளிதாக இல்லை. புலனடக்கத்திற்காகப் பாலைத் தவிர்த்துவிட வேண்டும் என்ற அவசியம் எனக்கு வளர்ந்துவிட்டபோது, கல்கத்தாவிலிருந்து வந்த சில பிரசுரங்களை நான் காண நேர்ந்தது. பசுக்களையும் எருமைகளையும் அவற்றின் சொந்தக்காரர்கள் எவ்வளவு கொடுமைபடுத்துகிறார்கள் என்பது அவற்றில் விவரிக்கப்பட்டிருந்தது. இது என்னிடம் ஆச்சரியகரமான பலனை உண்டுபண்ணியது. ஸ்ரீ கால்லென்பாக்குடன் இதைக் குறித்து விவாதித்தேன்.

தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரக சரித்திரம் என்ற புத்தகத்தில் ஸ்ரீ கால்லென்பாக்கை வாசகர்களுக்கு நான் அறிமுகம் செய்து வைத்திருந்தபோதிலும், முந்திய ஒரு அத்தியாயத்தில் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும், அவரைக் குறித்து இங்கே மேலும் கொஞ்சம் சொல்ல வேண்டியது அவசியம் என்று எண்ணுகிறேன். முதன்முதலில் தற்செயலாகவே நாங்கள் சந்தித்தோம். அவர் ஸ்ரீ கானுக்கு நண்பர். அவருடைய உள்ளத்தின் ஆழத்தில் பர உலகப்பற்று இருப்பதை ஸ்ரீ கான் கண்டுபிடித்ததால், அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவரை அறிய ஆரம்பித்ததும், சுகபோக வாழ்க்கையிலும் ஆடம்பரத்திலும் அவருக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டு திடுக்கிட்டுப் போனேன். ஆனால் எங்களுடைய முதல் சந்திப்பிலேயே சமய சம்பந்தமாக மிகவும் நுணுக்கமான கேள்விகளை எல்லாம் அவர் கேட்டார். பேச்சின் நடுவில் கௌதமபுத்தரின் துறவைப் பற்றியும் பேசினோம். எங்களுடைய பழக்கம் சீக்கிரத்தில் நெருங்கிய நட்பாகக் கனிந்தது. எங்கள் இருவரின் எண்ணங்களும் ஒன்றுபோல் ஆயின. என் வாழ்க்கையில் நான் செய்து கொள்ளும் மாறுதல்களைத் தாமும் தமது வாழ்க்கையில் அனுசரிக்க வேண்டும் என்று உறுதி கொண்டார்.

அச்சமயம் அவருக்கு மணமாகவில்லை, வீட்டு வாடகையைச் சேர்க்காமல் தமக்கு மாத்திரம் மாதம் ரூ.1,200 செலவழித்து வந்தார்.  இப்பொழுதோ, மாதம் ரூ.120 மாத்திரம் செலவு செய்து கொள்ளும் அளவுக்குத் தமது வாழ்க்கையை எளிமையாக்கிக் கொண்டுவிட்டார். என் குடித்தனத்தை எடுத்துவிட்ட பிறகு,  முதல் தடவை சிறையிலிருந்து விடுதலையான பின்னர், நாங்கள் இருவரும் சேர்ந்து வசிக்கத் தொடங்கினோம். நாங்கள் நடத்தியது மிகவும் கஷ்டமான வாழ்க்கையே. இந்த சமயத்தில் தான் பாலைப்பற்றி நாங்கள் விவாதித்தோம். ஸ்ரீ கால்லென்பாக் கூறியதாவது: “பாலினால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளைக் குறித்து நாம் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறோம். அப்படியானால், நாம் ஏன் அதை விட்டு ஒழித்து விடக்கூடாது?  நிச்சயமாக அது அவசியமானதே அல்ல.” இந்த யோசனையைக் கேட்டு எனக்கு ஆச்சரியமும் திருப்தியும் ஒருங்கே ஏற்பட்டன. அதைச் சந்தோஷமாக வரவேற்றேன். அப்பொழுதிலிருந்தே பால் சாப்பிடுவதை விட்டுவிடுவதென்று இருவரும் பிரதிக்ஞை செய்து கொண்டோம்.

இது நடந்தது டால்ஸ்டாய் பண்ணையில், 1912ல். ஆனால், பாலை மறுப்பது மாத்திரம் எனக்குப் போதிய திருப்தியளித்து விடவில்லை. இதற்குப் பின் சீக்கிரத்திலேயே பழ ஆகாரத்தை மாத்திரம், அதுவும் சாத்தியமான வரையில் மலிவான பழங்களை மட்டும் சாப்பிட்டு வாழ்வது என்று தீர்மானித்தேன். மிகுந்த வறுமையிலிருக்கும் மக்களின் வாழ்க்கையையே நாங்களும் வாழவேண்டும் என்பது எங்கள் விருப்பம்.
பழ ஆகாரம் அதிகச் சௌகரியமானதாகவும்கூட இருந்தது. சமைப்பது என்ற வேலையே இல்லை. பச்சை நிலக் கடலை, வாழைப் பழங்கள், பேரீச்சம் பழங்கள், எலுமிச்சம் பழங்கள், ஆலிவ் எண்ணெய் ஆகியவையே எங்கள் வழக்கமான சாப்பாடு. பிரம்மச்சரியத்தை அடைய விரும்புவோருக்கு இங்கே ஓர் எச்சரிக்கையைச் செய்யவேண்டியிருக்கிறது. பிரம்மச்சரியத்திற்கும் உணவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று நான் எடுத்துக்காட்டியிருந்த போதிலும், இதில் மனமே மிகவும் முக்கியமானது என்பது நிச்சயம். தான் அறிய அசுத்தமானதாக இருக்கும் மனத்தைப் பட்டினியினால் சுத்தம் செய்துவிட முடியாது; உணவில் செய்கிற மாறுதல்கள் அதனிடம் பலனை உண்டாக்காது. மனத்திலிருக்கும் காம விகாரங்களைத் தீவிரமான ஆன்மசோதனையினாலும், ஆண்டவனிடம் அடைக்கலம் புகுவதனாலும், அவன் அருளினாலுமன்றிப் போக்கிக் கொண்டு விடவே முடியாது. ஆனால், உடலுக்கும் உள்ளத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

சிற்றின்ப இச்சை கொண்டுள்ள மனம், சுவையானவைகளையும் சுகபோகத்திற்கானவைகளையுமே எப்பொழுதும் நாடும். இந்தப் புத்திப் போக்கைப் போக்கிக் கொள்ளுவதற்கு உணவுக் கட்டுத் திட்டங்களும், பட்டினி இருப்பதும் அவசியமானவை என்று தோன்றலாம். சிற்றின்ப வயப்பட்டுள்ள மனம், உணர்ச்சிகளை அடக்குவதற்குப் பதிலாக அவற்றிற்கு அடிமையாகிவிடுகிறது. ஆகையால் உணர்ச்சியைத் தூண்டிவிடாத சுத்தமான உணவும், அவ்வப்போது பட்டினி இருந்து வருவதும் உடலுக்கு அவசியம். உணவுக் கட்டுத் திட்டங்களையும் பட்டினி இருப்பதையும் அலட்சியம் செய்கிறவர்களைப் போலவே, எல்லாவற்றையும் இவற்றிற்காகத் தத்தஞ் செய்கிறவர்களும் தவறையே செய்கின்றனர். புலனடக்கத்தை நோக்கிப் போகும் மனமுடையவர்களுக்கு, உணவுக் கட்டுத் திட்டங்களும் பட்டினியும் அதிகப் பயனளிப்பவை என்று என் அனுபவம் போதிக்கிறது. உண்மையில் இவற்றின் உதவியினாலன்றி உள்ளத்திலிருக்கும் காம விகாரங்களை அடியோடு போக்கிக் கொண்டு விடவே முடியாது.


Offline Anu

பட்டினி விரதம்

பால் சாப்பிடுவதையும், தானிய வகைகள் உண்பதையும் விட்டுவிட்டுப் பழ ஆகார சோதனையை ஆரம்பித்த அதே சமயத்தில், புலனடக்கத்திற்கு ஒரு சாதனமாகப் பட்டினிவிரதம் இருக்கவும் தொடங்கினேன். இதில் என்னுடன் ஸ்ரீகால்லென் பாக்கும் சேர்ந்து கொண்டார். இதற்கு முன்னால் அவ்வப் போது நான் பட்டினி விரதம் இருந்து வந்ததுண்டு. ஆனால், அந்த விரதம் முற்றும் தேக ஆரோக்கியத்திற்காகத்தான் புலனடக்கத்திற்கும் பட்டினி அவசியம் என்பதை ஒரு நண்பரின் மூலம் அறிந்தேன். நான் வைஷ்ணவக் குடும்பத்தில் பிறந்தவனாதலாலும், என் தாயாரும் கடுமையான விரதங்களை எல்லாம் அனுசரித்து வந்ததாலும், இந்தியாவில் இருந்தபோது ஏகாதசி போன்ற விரதங்கள் இருந்திருக்கிறேன். ஆனால், அப்பொழுதெல்லாம் என் தாயாரைப் போல் நடக்க வேண்டும் என்பதற்காகவும், என் பெற்றோரை மகிழ்விப்பதற்காகவுமே அந்த விரதங்கள் இருந்தேன். பட்டினி விரதத்தின் நன்மை அந்தக் காலங்களில் எனக்குத் தெரியாது. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. ஆனால், நான் மேலே குறிப்பிட்ட நண்பர், பிரம்மச்சரியத்திற்குச் சாதனமாகப் பட்டினி விரதத்தை அனுசரித்து நன்மை பெற்றிருக்கிறார் என்பதை அறிந்ததும், அந்த உதாரணத்தை நானும் பின்பற்றி ஏகாதசி விரதம் இருந்து வந்தேன். ஹிந்துக்கள் இத்தகைய விரத தினங்களில் பாலும் பழமும் மாத்திரம் சாப்பிடுவது உண்டு. ஆனால், இந்த விரதத்தை நான் தினமும் அனுசரித்து வந்ததால், நீரைத் தவிர எதுவும் சாப்பிடுவதில்லை. என்று விரதத்தைத் தொடங்கினேன்.

இந்தச் சோதனையை நான் ஆரம்பித்தபோது, ஹிந்துக்களின் சிராவண மாதமும், முஸ்லிம்களின் ரம்ஜான் மாதமும் ஒரே  சமயத்தில் வந்தன. காந்தி வம்சத்தினர், வைஷ்ணவ விரதங்களை மட்டுமின்றிச்சைவ விரதங்களையும் அனுசரிப்பது உண்டு. சிவ ஆலயங்களுக்கும் விஷ்ணு ஆலயங்களுக்கும் போவார்கள். குடும்பத்தைச் சேர்ந்த சிலர், சிராவண மாதத்தில் பிரதோஷ விரதம் (மாலை வரையில் பட்டினி இருப்பது) அனுசரிப்பதும் உண்டு. இந்த விரதத்தை நானும் அனுசரிப்பது என்று தீர்மானித்தேன். இந்த முக்கியமானசோதனைகளையெல்லாம் டால்ஸ்டாய் பண்ணையில் இருந்தபோதே மேற்கொண்டோம். அங்கே ஸ்ரீ கால்லென்பாக்கும் நானும் சில சத்தியாக்கிரகிகளின் குடும்பங்களுடன் இருந்தோம். சில இளைஞர்களும் குழந்தைகளும் கூட எங்களுடன் இருந்தார்கள். இக்குழந்தைகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் வைத்திருந்தோம். அவர்களில் நான்கு, ஐந்து பேர் முஸ்லிம்கள். தங்கள் மத சம்பந்தமான நோன்புகளையெல்லாம் அனுசரித்து வருமாறு அவர்களை நான் உற்சாகப்படுத்தி வந்தேன். நாள்தோறும்அவர்கள் நமாஸ் செய்து வருமாறும் கவனித்துக்கொண்டேன். கிறிஸ்தவ, பார்ஸிச் சிறுவர்களும்கூட அங்கே இருந்தார்கள். அவர்களும் தங்கள் தங்கள் மத சம்பந்தமானவைகளை அனுசரிக்கும்படி செய்ய வேண்டியது என் கடமை என்று கருதினேன்.

ஆகையால், அந்த மாதத்தில் ரம்ஜான் பட்டினி விரதத்தை அனுசரிக்கும்படி முஸ்லிம் சிறுவர்களைத் தூண்டினேன். என் அளவிலோ, பிரதோஷ விரதமிருப்பதென்று தீர்மானித்தேன். ஆனால், ஹிந்து, கிறிஸ்தவ, பார்ஸிச் சிறுவர்களையும்என்னுடன் சேர்ந்து விரதமிருக்கும்படி கூறினேன். விரதானுஷ்டானம் போன்றவைகளில் மற்றவர்களுடன் சேர்ந்துகொள்ளுவது நல்லது என்று அவர்களுக்கு விளக்கிக் கூறினேன். பண்ணையில் இருந்தவர்கள் பலர் என் யோசனையை வரவேற்றார்கள். ஹிந்து, பார்ஸிச் சிறுவர்கள், விரதத்தின் எல்லாச் சிறு விவரங்களிலும் முஸ்லிம்களைப் பின்பற்றவில்லை; அது அவசியமும் அல்ல. பகலெல்லாம் பட்டினி இருந்துவிட்டுச் சூரியன் மறையும்போதே முஸ்லிம் சிறுவர்கள் சாப்பிடுவார்கள்.ஆனால் மற்றவர்களோ அப்படி சூரிய அஸ்தமனத்திற்குக் காத்திருப்பதில்லை. ஆகவே, இவர்கள் தங்கள் முஸ்லிம் நண்பர்களுக்கு இனிய பண்டங்களைத் தயாரித்துப் பரிமாற முடிந்தது. அதோடு மறுநாள் காலையில் சூரியன் உதயமாவதற்கு முன்னால் முஸ்லிம் குழந்தைகள் சாப்பிடுவார்கள். அதே போல ஹிந்து, பார்ஸிக் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. முஸ்லிம்களைத் தவிர மற்றவர்கள் பகலில் தண்ணீர் குடிப்பார்கள். இந்தச் சோதனைகளின் பலனாக, பட்டினி விரதத்தின் நன்மையை எல்லோரும் உணர்ந்தார்கள். இவர்களிடையே அற்புதமான தோழமையும் வளர்ந்தது.

டால்ஸ்டாய் பண்ணையில் நாங்கள் எல்லோருமே சைவ உணவு சாப்பிடுகிறவர்கள். இதில் எல்லோரும் என் உணர்ச்சியை மதித்து நடந்துகொண்டதை நான் நன்றியறிதலுடன் ஒப்புக் கொள்ளவே வேண்டும். முஸ்லிம் சிறுவர்கள் வழக்கமாகச் சாப்பிட்டு வந்த மாமிச உணவை ரம்ஜான் காலத்தில் விட்டுவிட வேண்டிவந்தது. ஆனால், அதைக் குறித்து அவர்களில் யாரும் என்னிடம் குறை சொன்னதே இல்லை. சைவச் சாப்பாட்டை அவர்கள் சுவைத்துச் சாப்பிட்டு  இன்புற்றனர். பண்ணையின் எளிய வாழ்வை அனுசரித்து, ஹிந்து இளைஞர்கள் அவர்களுக்கு அடிக்கடி சைவப் பட்சணங்கள் செய்து கொடுப்பார்கள். இந்த இன்பகரமான நினைவுகளை நான் வேறு எந்த இடத்திலும் கூறமுடியாதாகையால், வேண்டுமென்றே பட்டினி விரதத்தைப் பற்றிய இந்த அத்தியாயத்தின் மத்தியில் கூறி இருக்கிறேன். என்னுடையஒரு குணாதிசயத்தையும் நான் மறைமுகமாகக் கூறியிருக்கிறேன். அதாவது நல்லது என்று எனக்குத் தோன்றியவைகளிலெல்லாம் என் சக ஊழியர்களும் என்னைப் பின்பற்றும் படி செய்வதில் எனக்கு எப்பொழுதுமே ஆசை. அவர்களுக்குப் பட்டினி விரதம் புதியது. ஆனால், பிரதோஷ, ரம்ஜான் விரதங்களின் காரணமாகப் புலனடக்கத்திற்கு ஓர் உபாயமாகப் பட்டினி இருப்பதில் அவர்களுக்கு சிரத்தை ஏற்படும்படி செய்வது எனக்கு எளிதாயிற்று.

இவ்வாறு புலனடக்கச்சூழ்நிலை இயற்கையாகவே பண்ணையில் தோன்றிவிட்டது. பண்ணைவாசிகள் யாவரும் எங்களுடன் சேர்ந்து அரைப் பட்டினி, முழுப் பட்டினி விரதங்களையெல்லாம் அனுசரித்தார்கள். இது முற்றும் நன்மைக்கே என்று நான் நிச்சயமாகக் கருதுகிறேன். ஆனால், இந்த விரதங்கள் எவ்வளவு தூரம் அவர்களுடைய உள்ளங்களைத் தொட்டு, உடலின்ப இச்சையை அடக்குவதில் அவர்களுக்கு உதவியாக இருந்தன என்பதை நான் திட்டமாகக் கூறிவிட முடியாதென்றாலும், என்னளவில் உடல் சம்பந்தமாகவும், ஒழுக்க சம்பந்தமாகவும் நான் அதிக நன்மையை அடைந்தேன் என்பது நிச்சயம். பட்டினியும் மற்ற கட்டுத் திட்டங்களும் எல்லோரிடத்திலும் அதே விதமான பலனை உண்டாக்க வேண்டும் என்பதில்லை.இதையும் நான் அறிவேன். புலனடக்கத்தையே நோக்கமாகக் கொண்டு பட்டினி விரதமிருந்தால்தான் மிருக இச்சையை அடக்குவதற்கு அது பயன்படும். இத்தகைய விரதங்களுக்கு பின்னால் நாவின் ருசிப் புலனும் மிருக இச்சையும் அதிகரித்து விட்டதை என் நண்பர்கள் சிலர் தங்கள் அனுபவத்தில் கண்டுமிருக்கிறார்கள். அதாவது, புலனடக்கத்தில் இடையறாத ஆர்வமும் சேர்ந்து இருந்தாலன்றிப் பட்டினி விரதத்தினால் மாத்திரம்எவ்விதப் பயனுமில்லை. இதன் சம்பந்தமாகப் பகவத்கீதை இரண்டாவது அத்தியாயத்தின் பிரபலமான சுலோகம் குறிப்பிடத்தக்கதாகும். இந்திரியங்களைத் தடுத்து வைப்பவனுக்கு விஷயானுபவங்கள் அற்றுப் போய்விடுகின்றன. ஆனால், ஆசை எஞ்சி நிற்கிறது. பரமாத்மாவைத் தரிசித்தபின் அவனுடைய ஆசையும் அழிகிறது. ஆகையால் பட்டினி விரதமிருப்பதும்அதுபோன்ற கட்டுத் திட்டங்களும் புலனடக்கத்திற்கான சாதனங்களில் ஒன்றாகும். அதுவே எல்லாமும் அல்ல. உடலோடு சேர்ந்து உள்ளமும் பட்டினி விரதத்தை அனுஷ்டிக்காவிட்டால், அது நயவஞ்சகத்திலும், அழிவிலுமே முடியும்.


Offline Anu

பள்ளி ஆசிரியனாக

தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகச் சரித்திரத்தில் சொல்லாத அல்லது சுருக்கமாக மாத்திரம் குறிப்பிட்டுச் சென்றுவிட்ட விஷயங்களை மட்டுமே நான் இந்த அத்தியாயங்களில் கூறி வருகிறேன் என்பதை வாசகர்கள்நினைவில் வைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.அப்படி நினைவில் வைத்திருந்தால், சமீபத்திய அத்தியாயங்களுக்கிடையே இருக்கும் தொடர்பை அவர்கள் எளிதில் காண முடியும். பண்ணை வளர்ந்து வரவே அதிலிருந்த சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் படிப்புக்கு ஏதாவது ஏற்பாடு செய்தாக வேண்டியது அவசியமாயிற்று. இவர்களில் ஹிந்து, முஸ்லிம், பார்ஸி, கிறிஸ்தவச் சிறுவர்களும், சில ஹிந்துப் பெண்களும் இருந்தனர். இவர்களுக்குத் தனியாக உபாத்தியாயர்களை வைப்பது சாத்தியமல்ல.அப்படிச் செய்வது அவசியம் என்று நான் எண்ணவுமில்லை. தகுதி பெற்ற இந்தியப் பள்ளி ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. ஆகையால், ஆசிரியர்களைநியமிப்பது சாத்தியமில்லை. அப்படியே ஆசிரியர்கள் கிடைத்தாலும், குறைந்த சம்பளத்தில் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து 21 மைலுக்கப்பால் போக யாரும் தயாராக இருக்க மாட்டார்கள். அவர்களுக்குக் கொடுக்க எங்களிடம் பணமும் ஏராளமாக இல்லை. மேலும் பண்ணைக்கு வெளியிலிருந்து உபாத்தியாயர்களை இறக்குமதி செய்யவேண்டியது அவசியம் என்றும் நான் கருதவில்லை.அப்பொழுது நடை முறையிலிருந்த கல்வி முறையிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. அனுபவத்தினாலும், சோதனைகளினாலும், உண்மையானதொரு கல்வி முறையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இருந்தது. ஒன்றை மாத்திரம் நான் அறிவேன். அதாவது, மிகவும் சிறப்பான ஒரு நிலையில் பெற்றோரினாலேயேஉண்மையான கல்வியை அளிக்க முடியும். இதற்கு வெளி உதவி மிகக் குறைவாகவே இருக்கவேண்டும். டால்ஸ்டாய் பண்ணையோ ஒரு குடும்பம். அதில் தந்தையின் ஸ்தானத்தை நான் வகித்தேன். ஆகையால், சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பொறுப்பைச் சாத்தியமான வரையில் நானே ஏற்றுக் கொள்ளவேண்டும்.

மேற்கண்ட யோசனையில் குறைகளும் இல்லாமல் இல்லை. எல்லா இளைஞர்களும்சிறு வயதிலிருந்தே என்னுடன் இருந்து வந்தவர்களல்ல. அவர்கள் மாறுபட்ட நிலையிலும், சூழ்நிலையிலும் வளர்ந்தவர்கள் அவர்கள் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களும் அல்ல. இத்தகைய நிலையிலிருக்கும் சிறுவர்களுக்குநான் குடும்பத்தின் தந்தை என்ற ஸ்தானத்தை வகித்தாலும், எவ்விதம் முழுப்பயிற்சியையும் நான் அளித்துவிட முடியும்?
ஆனால், உள்ளத்தின் பண்பு அல்லது சன்மார்க்கத்தை வளர்த்துக்கொள்ளுவதற்கே எப்பொழுதும் நான் முதல் இடம் கொடுத்து வந்தேன். அவர்களுடைய வயதிலும், அவர்கள் வளர்ந்த விதத்திலும் என்னதான் வித்தியாசம் இருந்தாலும், எல்லோருக்கும் ஒரே விதமான சன்மார்க்கப் பயிற்சியை அளித்து விடமுடியும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டிருந்தேன். ஒரு நாளில் இருபத்து நான்கு மணி நேரமும் அவர்களுடைய தந்தையாக அவர்களிடையே இருந்து வருவது என்றும் தீர்மானித்தேன். அவர்கள் பெறும் கல்விக்குச்சரியான அடிப்படை அவர்கள் ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ளுவதே என்று கருதினேன். அந்த அடிப்படையைப் பலமாகப் போட்டுவிட்டால், மற்ற விஷயங்களையெல்லாம் அவர்களாகவோ அல்லது நண்பர்களின் உதவியாலோ அவர்கள் கற்றுக்கொண்டு விடுவார்கள் என்பதும் என் கருத்து.

அதோடு இலக்கியப் பயிற்சி இருக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்ததால்ஸ்ரீகால்லென்பாக், ஸ்ரீபிரக்ஜி தேசாய் ஆகியவர்களின் உதவியுடன் சில வகுப்புக்களையும் ஆரம்பித்தேன். உடலை வளர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நான் குறைத்து எண்ணிவிடவில்லை. அன்றாடம் வழக்கமாக அவர்கள் செய்துவந்த காரியங்களினால் இந்த உடல் வளர்ச்சியை அவர்கள் பெற்று வந்தார்கள். ஏனெனில், பண்ணையில் வேலைக்காரர்களே இல்லை. சமையலிலிருந்து தோட்டிவேலை வரையில் எல்லாவற்றையும் பண்ணைவாசிகளே செய்துவந்தனர். பழ மரங்கள் பலவற்றைக் கவனித்துக்கொள்ளவும்வேண்டியிருந்தது. தோட்ட வேலையும் அதிகமிருந்தது. தோட்டவேலையில் ஸ்ரீகால்லென் பாக்குக்கு அதிக ஆர்வம். அரசாங்கத்தின் மாதிரித் தோட்டம் ஒன்றில் இருந்ததனால் அவருக்கு இதில் அனுபவமும் இருந்தது. சமையல் வேலையில் ஈடுபடாத மற்ற எல்லாக் குழந்தைகளும், பெரியவர்களும், கொஞ்ச நேரம் தோட்ட வேலை செய்தாக வேண்டியது அவர்களுடைய கடமையாயிற்று. இவ்வேலையில் பெரும் பகுதியைக்குழந்தைகளே செய்துவந்தனர். குழிகளைத் தோண்டுவது, மரம் வெட்டுவது, தூக்குவது போன்றவைகளை அவர்களே செய்தார்கள். இவை அவர்களுக்கு நல்ல தேகப்பயிற்சியை அளித்தன. இவ் வேலைகளை அவர்கள் சந்தோஷத்தோடு செய்துவந்தனர். ஆகையால், அவர்களுக்கு வேறு தேகப்பயிற்சியோ, விளையாட்டுக்களோ பொதுவாகத் தேவைப்படவில்லை. இக் குழந்தைகளில் சிலர் - சிற்சில சமயங்களில் எல்லாக் குழந்தைகளுமே- வேலைக்குச் சோம்பியதும் உண்டு.

சில சமயங்களில் இதைப் பார்க்காதது போல இருந்து விடுவேன். ஆனால், அநேகமாக அவர்களிடம் நான் கண்டிப்பாகவே இருப்பேன். இந்தக் கண்டிப்பை அவர்கள் விரும்புவதில்லை என்றே சொல்லுவேன். என்றாலும், என் கண்டிப்பை அவர்கள் ஒரு சமயமாவது எதிர்த்ததாக எனக்கு ஞாபகமில்லை. நான் அவர்களிடம் கண்டிப்பாக இருந்த சமயங்களில் ஒருவர் செய்ய வேண்டியவேலை விஷயத்தில் விளையாட்டாக இருந்துவிடக் கூடாது என்று எடுத்துக்காட்டி, அவர்கள் உணரும்படி செய்வேன். ஆனால், அந்த உறுதி அவர்களிடம் கொஞ்ச நேரத்திற்குத்தான் இருக்கும். அடுத்த கணம் அவர்கள் வேலையைப் போட்டுவிட்டு விளையாடப் போய்விடுவார்கள். என்றாலும், நாங்கள் சமாளித்துக் கொண்டு வந்தோம். அவர்கள் நல்ல உடற்கட்டும் அடைந்து வந்தார்கள். பண்ணையில் நோய் என்பதே இல்லை. இதற்கு நல்ல காற்றும், நீரும், உரிய வேலையில் சாப்பிடுவதும் காரணங்களாகும் என்றும் சொல்லவேண்டும். கைத்தொழில் பயிற்சியைப் பற்றியும் கூற வேண்டும். சிறுவர்களில் ஒவ்வொருவருக்கும் பயனுள்ள ஏதாவது ஒரு கைத்தொழிலைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது என் நோக்கம்.

ஸ்ரீகால்லென்பாக் செருப்புத் தைக்கும் தொழிலைக் கற்றுக்கொண்டு வந்தார். இந்த வித்தையை நானும் கற்றுக்கொண்டு, அதைக் கற்றுக்கொள்ள விரும்பியவர்களுக்கும் சொல்லிக்கொடுத்தேன். ஸ்ரீகால்லென்பாக்குக்குத் தச்சுவேலையிலும் கொஞ்சம் அனுபவம் உண்டு. அத் தொழிலறிந்த மற்றொருவரும் பண்ணையில் இருந்தார். ஆகவே, தச்சுத் தொழில் கற்றுக்கொடுக்கவும் ஒரு சிறு வகுப்பு ஆரம்பித்தோம். சமையல் வேலையோ அநேகமாக எல்லாச் சிறுவர்களுக்குமே தெரியும். இவை யாவும் அவர்களுக்குப் புதியவை. ஒரு நாளைக்கு இவைகளையெல்லாம் தாங்கள் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கும் என்று அவர்கள் கனவு கண்டதுகூட இல்லை. பொதுவாகத் தென்னாப்பிரிக்காவில் இந்தியச் சிறுவர்கள் பெற்று வந்த ஒரே பயிற்சி, படிப்பதும், எழுதுவதும், கணக்குப் போடுவதும்தான். டால்ஸ்டாய் பண்ணையில்உபாத்தியாயர்கள் எதைத் தாம் செய்யவில்லையோ, அவற்றைச் செய்யுமாறு சிறுவர்களிடம் சொல்லக்கூடாது என்பதை ஒரு விதியாக்கி விட்டோம். ஆகையால், ஒரு வேலையைச் செய்யுமாறு குழந்தைகளிடம் கூறினால், ஓர் உபாத்தியாயரும் அவர்களுடன் இருந்து அந்த வேலையைச் செய்துகொண்டிருப்பார். எனவே, சிறுவர்கள் எதைக் கற்றுக்கொண்டாலும் அதை மகிழ்ச்சியுடன் கற்றுக் கொண்டார்கள்.இலக்கியப் பயிற்சியைப் பற்றியும் ஒழுக்கத்தை வளர்ப்பது பற்றியும் பின்னால் வரும் அத்தியாயங்களில் கவனிப்போம்.


Offline Anu

இலக்கியப் பயிற்சி

டால்ஸ்டாய் பண்ணையில் தேகப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்ததோடு தற்செயலாகத் தொழிற் கல்வியும் போதித்து வந்ததைக் குறித்து முந்திய அத்தியாயத்தில் கவனித்தோம். எனக்குத் திருப்தியளிக்கக்கூடிய வகையில் இவை நடந்தன என்று சொல்ல முடியாவிட்டாலும் ஏறக்குறைய வெற்றிகரமாக நடந்தன என்றே சொல்லலாம். ஆனால், இலக்கியக் கல்வி அளிப்பது அதிகக் கஷ்டமான விஷயமாக இருந்தது. அதற்கு வேண்டிய வசதிகளோ, தேவையான இலக்கிய ஞானமோ என்னிடம் இல்லை. அதோடு, இத்துறையில் செலவிட வேண்டும் என நான் விரும்பிய அளவு அவகாசமும் எனக்குக் கிடைக்கவில்லை. உடல் உழைப்பில் நான் ஈடுபட்டு வந்ததால், மாலையில் முற்றும் களைத்துப் போய் விடுவேன். இவ்விதம் எனக்கு ஓய்வு மிகவும் அவசியம் என்றிருக்கும் நேரத்தில்தான் வகுப்புகளை நான் நடத்த வேண்டியிருந்தது. ஆகையால், வகுப்புகளை நடத்துவதற்கு எனக்கு மன உற்சாகம் இராது.தூங்கி விடாமல் விழித்துக் கொண்டிருப்பதற்கே அதிகச் சிரமப்பட வேண்டியதாயிற்று. காலை நேரமெல்லாம் பண்ணை வேலைக்கும், வீட்டு வேலைகளுக்கும் சரியாகப் போய்விடும். எனவே, மத்தியானச் சாப்பாட்டிற்குப் பிறகே பள்ளிக்கூடத்திற்குரிய நேரமாக வைத்துக் கொள்ளவேண்டியதாயிற்று. இதைத் தவிரப் பள்ளிக்கூடத்திற்குத் தகுதியான நேரம் கிடைக்கவில்லை.

இலக்கியப் பயிற்சிக்கு அதிகப் பட்சம் மூன்று பாட நேரங்களை ஒதுக்கினோம். ஹிந்தி, தமிழ், குஜராத்தி, உருது மொழிகள் போதிக்கப்பட்டன.சிறுவர்களின் மொழியிலேயே அவர்களுக்குப் பாடங்களைப் போதித்தோம். ஆங்கிலமும் கற்பித்து வந்தோம். குஜராத்தி ஹிந்துக் குழந்தைகளுக்குக் கொஞ்சமாவது சமஸ்கிருதமும் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியமாயிற்று. எல்லாக் குழந்தைகளுக்குமே சரித்திரம், பூகோளம், கணக்கு இவைகளில் ஆரம்பப் பாடங்களையாவது போதிக்க வேண்டியிருந்தது. தமிழும் உருதும் சொல்லிக் கொடுப்பதை நான் ஏற்றுக் கொண்டேன். எனக்குத் தெரிந்த சொற்பமான தமிழ், என் கப்பல் பிரயாண காலத்திலும், சிறையிலும் கற்றுக் கொண்டதாகும். போப் என்பவர் எழுதிய சிறந்த தமிழ்ப் பாடப் புத்தகத்தைத் தவிர வேறொன்றையும் நான் படித்ததில்லை. ஒரு கப்பல் பிரயாணத்தில் நான் கற்றுக்கொண்டதே, உருது எழுத்துக்களைக் குறித்து எனக்கு இருந்த ஞானம். முஸ்லிம் நண்பர்களுடன் பழகியதால், நான் தெரிந்துகொண்ட சாதாரணமான பர்ஸிய, அரபுச் சொற்களே உருதுவில் எனக்குத் தெரிந்ததெல்லாம் ஆகும். உயர்தரப் பள்ளியில் நான் படித்ததற்கு மேல் எனக்குச் சமஸ்கிருதமும் தெரியாது. பள்ளிக் கூடத்தில் படித்துக் கற்றுக் கொண்டதற்கு அதிகமானதுமல்ல, என் குஜராத்தி மொழி ஞானம். இத்தகைய மூலதனத்தைக் கொண்டே நான் சமாளித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.

இலக்கியத் தகுதியில் என் சகாக்கள் என்னைவிட அதிக வறுமையில் இருந்தனர். ஆனால், என் நாட்டு மொழிகளில் எனக்கு இருந்த ஆசை, உபாத்தியாயராக இருக்க முடியும் என்பதில் எனக்கு இருந்த நம்பிக்கை, என் மாணவர்களின் அறியாமை. அதைவிட அவர்களுடைய தாராள மனப்பான்மை ஆகியவைகளெல்லாம் சேர்ந்து என் வேலையை எளிதாக்கின. தமிழ்ச் சிறுவர்கள் எல்லோரும் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர்கள். ஆகையால், அவர்களுக்குத் தமிழ் அவ்வளவாகத் தெரியாது. தமிழ் எழுத்துக்கள் அவர்களுக்குக் கொஞ்சமும் தெரியாது. ஆகவே, அவர்களுக்கு நான் தமிழ் எழுத்துக்களையும் ஆரம்ப இலக்கண விதிகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டியிருந்தது. இதுமிகவும் எளிதானதே. தமிழில் பேசுவதில் என்னை எப்பொழுதும் தாங்கள் தோற்கடித்துவிட முடியும் என்பதை என் மாணவர்கள் அறிவார்கள். ஆங்கிலம் தெரியாததமிழர்கள் என்னைப் பார்க்க வந்தபோது அம்மாணவர்கள் என் மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தனர். எனக்கிருந்த அறியாமையை என் மாணவர்களுக்குத் தெரியாமல் மறைக்க நான் என்றுமே முயன்றதில்லையாகையால், நான் சந்தோஷமாகவே சமாளித்து வந்தேன். உண்மையாகவே எல்லா விஷயங்களிலும் நான் எவ்விதம் இருக்கிறேன் என்பதைஅவர்களுக்குக் காட்டி வந்தேன். ஆகையினால், அம்மொழியில் எனக்கு ஒன்றுமே தெரியாமல் இருந்தபோதிலும் அவர்களுடைய அன்பையும் மரியாதையையும் மாத்திரம் நான் என்றுமே இழந்ததில்லை. முஸ்லிம் சிறுவர்களுக்கு உருது சொல்லிக் கொடுப்பது இதைவிட எளிதாக இருந்தது. அம்மொழியின் எழுத்துக்கள் அவர்களுக்குத் தெரியும். படிக்கும்படியும், கையெழுத்தைவிருத்தி செய்துகொள்ளுமாறும் அவர்களை உற்சாகப்படுத்துவதேநான் செய்ய வேண்டியிருந்ததெல்லாம்.

இச்சிறுவர்களில் பெரும்பாலானவர்கள், எழுத்து வாசனையையே இதற்கு முன்னால் அறியாதவர்கள்; பள்ளிக்கூடங்களுக்குச் சென்றும் அறியாதவர்கள். ஆனால், அவர்களுக்கு இருந்த சோம்பலைப் போக்கி, அவர்கள் படிக்கும்படி மேற்பார்வை பார்ப்பதைத் தவிரஅவர்களுக்குநான் சொல்லிக் கொடுக்க வேண்டியது அதிகமில்லை என்பதை அனுபவத்தில் கண்டேன். இவ்வளவோடு நான் திருப்தியடைந்து விட்டதால், பல வயதையுடையவர்களையும், வெவ்வேறு பாடங்களைப் படிப்பவர்களையும்ஒரே வகுப்பில் வைத்துச் சமாளிப்பது சாத்தியமாயிற்று. பாடப் புத்தகங்களின் அவசியத்தைக் குறித்துப் பிரமாதமாகக் கூறப்படுகிறது. ஆனால், அவை அவசியம் என்று எனக்குத் தோன்றவே இல்லை. கிடைத்த பாடப் புத்தகங்களைக்கூட நான் அவ்வளவாகப் பயன்படுத்திக் கொண்டதாக எனக்கு நினைவு இல்லை. ஏராளமான புத்தகங்களைப் பிள்ளைகளின் மேல் சுமத்துவது அவசியம் என்பதையும் நான் காணவில்லை. மாணவருக்கு உண்மையான பாடப் புத்தகம் உபாத்தியாயரே என்பதை நான் எப்பொழுதும் உணர்ந்து வந்தேன். என் உபாத்தியாயர்கள் புத்தகங்களிலிருந்து எனக்குச் சொல்லிக் கொடுத்த எதுவும் எனக்கு நினைவில் இல்லை. ஆனால், புத்தகங்களைக் கொண்டல்லாமல் தனியாக அவர்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்ததெல்லாம் இப்பொழுதும் கூடத் தெளிவாக என் நினைவில் இருக்கின்றன.

எப்பொழுதுமே குழந்தைகள் கண்ணால் பார்த்துத் தெரிந்து கொள்ளுவதை விட அதிகமாகவும், கஷ்டமின்றியும் காதால் கேட்டுத் தெரிந்து கொள்ளுகின்றனர். என் பையன்களுடன் நான் எந்தப் புத்தகத்தையும் முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரையில் படித்து முடித்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால், பல புத்தகங்களிலும் நான் படித்துத் தெரிந்து கொண்டவைகளை எல்லாம் என்னுடைய சொந்த நடையில் அவர்களுக்குச் சொல்லி வந்தேன். அவை இன்னும் அவர்கள் ஞாபகத்தில் இருந்து வருகின்றன என்று நான் தைரியமாகச் சொல்லுவேன். புத்தகங்களிலிருந்து படிப்பவைகளை நினைவில் வைத்துக் கொள்ளுவது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. ஆனால், நான் வாய்மொழியாகச் சொன்னவைகளையெல்லாம் வெகு எளிதாகஅவர்கள் திரும்பச் சொல்லி விட முடிந்தது. புத்தகத்தைப் படிப்பதுஅவர்களுக்குக் கடினமாக இருந்தது. ஆனால், சொல்லுகிற விஷயத்தை அவர்களுக்குச் சுவையாக இருக்கும்படி மாத்திரம் நான் சொல்லி விடுவேனாயின், அவைகளைக் கேட்பதே அவர்களுக்கு இன்பமாக இருந்தது. நான் பேசியதைக் கேட்டுவிட்டு, அதன்பேரில் அவர்கள் கேட்ட கேள்விகளிலிருந்து, அவர்கள் நான் கூறியதை எவ்வளவு தூரம் புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை நான் அளந்தறிய முடிந்தது.


Offline Anu

ஆன்மப் பயிற்சி

சிறுவர்களின் உடல், அறிவுப் பயிற்சியைவிட அவர்களுடைய ஆன்மிகப் பயிற்சியே இன்னும் அதிகக் கஷ்டமானதாக இருந்தது. ஆன்மப் பயிற்சிக்கு நான் சமய நூல்களை அவ்வளவாக நம்பியிருக்கவில்லை. என்றாலும், ஒவ்வொரு மாணவனும் தன் சமயத்தைக் குறித்த மூலாதாரமான விஷயங்களை அறிந்திருப்பதோடு அச்சமய சம்பந்தமான நூல்களைப் பற்றியும் பொதுவாகத் தெரிந்திருப்பது அவசியம் என்று கருதினேன். ஆகவே, என்னால் இயன்றவரையில், அத்தகைய அறிவு அவர்களுக்கு இருக்கும்படி செய்து வந்தேன். ஆனால், அது அறிவுப் பயிற்சியின் ஒரு பகுதியே என்பது என் கருத்து. டால்ஸ்டாய் பண்ணையில் சிறுவர்களுக்குக் கல்வி போதிக்கும் பணியை நான் மேற் கொள்ளுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, ஆன்மப் பயிற்சிஅதனளவில் தனியானது என்பதை அறிந்திருந்தேன். ஆன்மாவை வளர்ப்பது என்பது ஒழுக்கத்தை வளர்த்து, கடவுளைப் பற்றிய ஞானத்தை அடைவதற்கு ஒருவரைப் பாடுபடும்படி செய்வதோடு தன்னைத் தானே அறியச் செய்வதுமாகும். இளைஞருக்கு அளிக்க வேண்டிய பயிற்சியில் இது முக்கியமானதோர் பகுதி என்று கருதினேன். ஆன்ம வளர்ச்சியோடு தொடர்பில்லாத எல்லாப் பயிற்சியும் பயனற்றது என்றும், அது தீமையாகவும் ஆகக் கூடும் என்றும் எண்ணினேன்.

வாழ்க்கையில் நான்காவது நிலையான சன்னியாச ஆசிரமத்தை அடைந்த பிறகே ஆன்ம ஞானத்தை அடைய முடியும் என்ற மூட நம்பிக்கை இருந்து வருகிறது என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால், மதிப்பதற்கரியதான இந்த அனுபவத்திற்கு வேண்டிய முயற்சியை வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தை அடையும் வரையில் தள்ளி வைத்துக்கொண்டு போனால் பிறகு அடைவது கிழப்பருவத்தையேயன்றி ஆன்ம ஞானத்தை அன்று. பரிதாபகரமான இரண்டாவது குழந்தைப் பருவத்திற்குச் சமமான அந்த முதுமைப் பருவம், பூமிக்குப் பாரமாக வாழ்வதேயாகும். நான் குழந்தைகளுக்குப் பாடம் கற்பித்தபோதே, 1911-12-ஆம் ஆண்டிலேயே இக்கருத்தைக் கொண்டிருந்தேன் என்பது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. ஆனால், என்னுடைய இக்கருத்துக்களை இதே முறையில் நான் ப்பொழுது எடுத்துச் சொல்லாமல் இருந்திருக்கக் கூடும். அப்படியானால், ஆன்மப் பயிற்சியை அளிப்பது எப்படி? குழந்தைகள், தோத்திரப் பாடல்களை மனப்பாடம் செய்து பாடும் படி  செய்தேன் நல்லொழுக்கத்தைப் போதிக்கும் நூல்களிலிருந்து அவர்களுக்குப் படித்துச் சொன்னேன். ஆனால் இவையெல்லாம் எனக்குத் திருப்தியளிக்கவில்லை. குழந்தைகளுடன் நான் நெருங்கிப் பழக ஆரம்பிக்கவே, நூல்களின் மூலம் அவர்களுக்கு ஆன்மப் பயிற்சியை அளித்துவிட முடியாது என்பதைக் கண்டேன். எவ்விதம் தேகாப்பியாசங்களின் மூலமே உடற்பயிற்சியும், அறிவு அப்பியாசங்களினாலேயே அறிவுப் பயிற்சியும் அளிக்க முடியுமோ அவ்வாறே ஆன்ம சாதனங்களினாலேயே ஆன்மப் பயிற்சியை அளிக்க முடியும். ஆன்ம சாதனப் பயிற்சியோ, முழுக்க முழுக்க உபாத்தியாயரின் வாழ்க்கையையும் ஒழுக்கத்தையும் பொறுத்தது. ஓர் உபாத்தியார் குழந்தைகளின் நடுவில் இருக்கும் போதும் சரி, தனியாக இருக்கும் போதும் சரி, தம்முடைய குணத்திலும்செயலிலும் எப்பொழுதும் அதிகக்கவனத்துடன் இருக்கவேண்டும்.

ஓர் உபாத்தியாயர், மாணவர்களுக்குப் பல மைல்கள் தொலைவில் இருக்கும்போதும் தமது வாழ்க்கை முறையைக் கொண்டு அம்மாணவர்களின் ஆன்மப் பயிற்சிக்கு உதவவோ, தீமை செய்யவோ முடியும். நான் பொய்யனாக இருந்து கொண்டு, உண்மை பேசும்படி மாணவர்களுக்குப்போதிப்பது என்பது வீண் வேலை. தாம் கோழையாக இருக்கும் ஓர் உபாத்தியாயர், தம்மிடம் படிக்கும் மாணவர்களை வீரர்களாக்கிவிடவே முடியாது. புலனடக்கம் என்பதே தெரியாத ஓர் ஆசிரியர், புலனடக்கத்தை மாணவர்களுக்குப் போதித்து விடவும் முடியாது. ஆகையால், என்னுடன் இருக்கும் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் நானே எப்பொழுதும் உதாரண பாடமாக இருக்கவேண்டும் என்பதைக் கண்டேன். இவ்விதம் அவர்கள் என் உபாத்தியாயர்களாயினர். அவர்களுக்காகவேனும் நான் நல்லவனாக இருந்து நேர்மையுடன் வாழ வேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். டால்ஸ்டாய் பண்ணையில் இருந்தபோது எனக்கு நானே அதிகமாக விதித்துக் கொண்ட கட்டுத்திட்டங்களும் புலனடக்கங்களும்,பெரும்பாலும் என் பாதுகாப்பிலிருந்த குழந்தைகளுக்காகவே என்றும் சொல்லலாம்.

அங்கே இருந்த பையன்களில் ஒருவன் முரடன்; அடங்காப்பிடாரி. அவன் பொய் சொல்லுவான்; யாருடனும் சண்டை போடுவான். ஒரு நாள் அவன் துஷ்டத்தனம் எல்லை மீறிப் போய்விட்டது. எனக்கு ஒரே கவலையாகிவிட்டது. சிறுவர்களை நான் தண்டித்ததே இல்லை. ஆனால், அச்சமயமோ எனக்கு அதிகக் கோபம் வந்துவிட்டது. அவனுக்குப் புத்திமதி கூறித் திருத்தப் பார்த்தேன். அவனோ, பிடிவாதமாக இருந்ததோடு என்னையும் எதிர்த்து மிதமிஞ்சிப் போகப் பார்த்தான். கடைசியாகப் பக்கத்திலிருந்த ரூல் தடியை எடுத்து அவன் கையில் ஓர் அடி கொடுத்தேன். அவனை அடித்தபோதே என் உடம்பெல்லாம் நடுங்கியது. இதை அவனும் பார்த்திருக்கவே வேண்டும். அவர்கள் எல்லோருக்குமே இது புதிய அனுபவம். அப்பையன் கதறி அழுதான். தன்னை மன்னிக்குமாறும் வேண்டினான். அவன் அழுதது, பட்ட அடி அவனுக்கு வேதனையாக இருந்ததனால் அல்ல. அவன் பதினேழு வயதுள்ள திடகாத்திரமானவன். விரும்பியிருந்தால், என்னை அவன் திருப்பி அடித்திருக்கவும் கூடும். ஆனால், அடிக்கவேண்டிய நிலைமை எனக்கு ஏற்பட்டதைக் குறித்துநான் அடைந்த மனவேதனையை அவன் அறிந்துகொண்டான். இச் சம்பவத்திற்குப் பிறகு அவன் எனக்குப் பணியாமல் இருந்ததே கிடையாது. என்றாலும், பலாத்காரத்தை உபயோகித்ததற்காக நான் இன்றும் வருத்தப்படுகிறேன். அன்று அவனுக்கு முன்னால் என்னுள் இருக்கும் ஆன்ம உணர்ச்சிக்குப் பதிலாக மிருக உணர்ச்சியையே காட்டி விட்டேன் என்று அஞ்சுகிறேன்.

அடிப்பது போன்ற தண்டனையே கூடாது என்று நான் எப்பொழுதும் எதிர்த்து வந்திருக்கிறேன். என் குமாரர்களில் ஒருவனை ஒரே தடவை மாத்திரம் நான் அடித்துவிட்டதாக எனக்கு ஞாபகம். ஆகையால், அன்று நான்ரூல் தடியை உபயோகித்தது சரியா, தவறா என்பதில் நான் இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியாதவனாகவே இருக்கிறேன். கோபத்தினாலும், தண்டிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினாலும் தூண்டப் பெற்று நான் அவ்விதம் செய்ததால் ஒருவேளை அது தவறானதாக இருக்கலாம். என் மன வேதனையை வெளிப்படுத்துவதாக மாத்திரமே அது இருக்குமாயின், அது நியாயமானதே என்று நான் கருதியிருப்பேன். ஆனால், இவ்விஷயத்தில் நோக்கம் கலப்பானதாகவே இருந்தது. இச்சம்பவம், என்னை ஆழ்ந்து சிந்திக்கும்படி செய்தது, மாணவர்களைத் திருத்துவதற்குச் சிறந்த முறையையும் அது எனக்குப் போதித்தது. ஆனால், அம்முறை நான் கூறிய அந்தச் சந்தர்ப்பத்தில் எவ்வளவு தூரம் பயன் பட்டிருக்கும் என்று நான் கூற முடியாது. இளைஞன் சீக்கிரத்திலேயே அச் சம்பவத்தை மறந்து விட்டான். எப்பொழுதேனும் அவனிடம் அதிக அபிவிருத்தி காணப்பட்டதாகவும் எனக்குத் தோன்றவில்லை. ஆனால், இச் சம்பவம் மாணவர்கள் விஷயத்தில் உபாத்தியாயரின் கடமை என்ன என்பதை நான் நன்றாக அறிந்து கொள்ளும்படி செய்தது. சிறுவர்கள் தவறாக நடந்துகொண்டுவிட்ட சம்பவங்கள் இதற்குப் பிறகும் நடந்தது உண்டு. ஆனால், அடி கொடுக்கும் தண்டனையில் அதன் பிறகு நான் இறங்கியதே இல்லை. இவ்விதம் என்னிடம் இருந்த சிறுவர் சிறுமியருக்கு ஆன்மிகப் பயிற்சி அளிக்க நான் செய்த முயற்சியில் ஆன்மாவின் சக்தியைமேலும் மேலும் நன்றாக நான் அறியலானேன்.


Offline Anu

தானியத்தில் பதர்

அதற்கு முன்னால் எனக்கு என்றுமே தோன்றாத ஒரு பிரச்னையை டால்ஸ்டாய் பண்ணையில் ஸ்ரீகால்லென்பாக் என் கவனத்திற்குக் கொண்டு வந்தார். பண்ணையிலிருந்த பையன்களில் சிலர் கெட்டவர்கள், கட்டுக்கடங்காதவர்கள் என்பதை முன்பே கூறியிருக்கிறேன். இவர்களில் ஒன்றுக்குமே உதவாதவர்களும் இருந்தனர். இவர்களுடன் என் குமாரர்கள் மூவரும் சேர்ந்து பழகி வந்தார்கள். என் குமாரர்களின் தரத்திலிருந்த மற்றச் சிறுவர்களும் அது போலவே பழகிவந்தார்கள். இது ஸ்ரீகால்லென்பாக்குக்குக் கவலையாகிவிட்டது. ஆனால், என் குமாரர்களை அடங்காப் பிடாரிகளான அச்சிறுவர்களுடன் சேர்த்து வைப்பது சரியல்ல என்பதிலேயே அவருடைய கவனமெல்லாம் ஈடுபட்டிருந்தது. ஒரு நாள் அவர் மனம்விட்டுச்சொல்லிவிட்டார். உங்கள் குமாரர்களைக் கெட்டவர்களுடன் பழகவிடும் உங்கள் முறை எனக்குப் பிடிக்கவே இல்லை. இதனால் ஏற்படக்கூடிய பலன் ஒன்றே ஒன்றுதான். இந்தக் கெட்ட சகவாசத்தினால் அவர்களும் கெட்டுப் போவார்கள் என்றார். இப் பிரச்னை அச்சமயம் எனக்குக் கலக்கத்தை உண்டாக்கியதா என்பது எனக்கு நினைவு இல்லை. ஆனால், அவருக்கு நான் பதில் சொன்னேன் என்பது எனக்கு ஞாபகமிருக்கிறது: என் பிள்ளைகளுக்கும், துஷ்டர்களாக இருக்கும் பிள்ளைகளுக்கும் நான் எவ்வாறு வேற்றுமை பாராட்ட முடியும்? இரு தரப்பார் விஷயத்திலும் நான் சமமான பொறுப்பை வகிப்பவன். நான் அழைத்தன் பேரிலேயே இக்குழந்தைகள் இங்கே வந்திருக்கிறார்கள். கொஞ்சம் பணம் கொடுத்து அவர்களை நான் போகச் சொல்லிவிட்டால் அவர்கள் திரும்ப ஜோகன்னஸ்பர்க்கிற்கு ஓடிப்போய்த் தங்கள் பழைய வழிகளிலேயே நடக்கத் தலைப்பட்டு விடுவார்கள்.

ஓர் உண்மையை உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்கள் இங்கே வந்திருப்பதனால் எனக்கு ஏதோ நன்மையைச் செய்திருப்பதாக அவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் நினைத்திருக்கக் கூடும். இங்கே அவர்கள் பலவிதமான அசௌகரியங்களுக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது என்பதை நீங்களும் நானும் நன்றாக அறிவோம். ஆனால், என் கடமை தெளிவானது. அவர்களை நான் இங்கே வைத்திருக்க வேண்டும். ஆகையால், என் குமாரர்களும் அவர்களுடன் சேர்ந்து அவசியம் வாழ்ந்தே ஆகவேண்டும். மற்றச் சிறுவர்களைவிடத் தாங்கள் உயர்வானவர்கள் என இன்றிலிருந்து உணரும்படி என் புத்திரர்களுக்கு நான் போதிக்கவேண்டும் என்று நிச்சயமாக நீங்கள் விரும்பமாட்டீர்கள். அந்த உயர்வு எண்ணத்தை அவர்கள் புத்தியில் புகுத்துவது அவர்களைத் தவறான வழியில் செலுத்துவதேயாகும். மற்றச் சிறுவர்களுடன் அவர்கள் பழகுவது அவர்களுக்கு நல்ல ஒழுங்கு முறையை அளிப்பதாக இருக்கும். நல்லது இன்னது, கெட்டது இன்னது என்பதை அவர்கள் தாங்களாகவே தெரிந்துகொள்வார்கள். என் புதல்வர்களிடம் உண்மையாகவே ஏதாவது நல்லது இருக்குமாயின் அவர்களுடன் பழகுகிறவர்களிடமும்அது பிரதிபலிக்கும் என்று நாம் ஏன் நம்பக்கூடாது? அது எப்படியானாலும் சரி, அவர்களை நான் இங்கேதான் வைத்திருக்கவேண்டும். அதில் சிறிது ஆபத்து இருந்தபோதிலும், அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டியதே என்றேன்.

ஸ்ரீகால்லென்பாக் தலையை அசைத்துக்கொண்டார். இதன் பலன் தீமையானதாக இருந்தது என்று நான் நினைக்கவில்லை. இந்தச் சோதனையினால் என் குமாரர்கள்எந்தக் கெடுதலையும் அடைந்துவிட்டதாகவும் நான் கருதவில்லை. ஆனால், இதற்கு மாறாக அவர்கள் சில நன்மைகளையும் அடைந்தார்கள் என்பதை நான் காண முடிகிறது. தாங்கள் உயர்வானவர்கள் என்ற எண்ணம் அவர்களிடம் சிறிதளவுஇருந்திருந்தாலும் அது அழிந்துவிட்டது. எல்லாவிதமான குழந்தைகளுடனும் தாராளமாகக் கலந்துகொள்ள அவர்கள் கற்றுக்கொண்டார்கள்; அவர்கள் சோதிக்கப்பட்டுக் கட்டுப்பாடுகளையும் பெற்றனர். கெட்ட குழந்தைகளுடன் சேர்த்து நல்ல குழந்தைகளுக்குப் போதித்தால், அவர்களுடன் சேர்ந்திருக்கும்படி செய்தால், இந்தப் பரீட்சை, பெற்றோர் அல்லது போஷகரின் ஜாக்கிரதையான கண்காணிப்பில் மாத்திரம் நடப்பதாக இருந்தால், நல்ல குழந்தைகள் எதையும் இழந்துவிடுவதில்லை. இதுவும் இதுபோன்ற மற்றச்சோதனைகளும் இதையே எனக்குக் காட்டியிருக்கின்றன. வெளிக்காற்றே படக்கூடாது என்று குழந்தைகளைப் பத்திரமாக மூடிவைத்து வளர்த்துவிடுவதால் மாத்திரம், அவர்களை ஆசாபாசங்களோ, தீமைகளோ பற்றாமல் இருந்து விடுவதில்லை. ஆனால், பலவிதமான முறைகளில் வளர்க்கப்பட்ட சிறுவர், சிறுமிகளைச் சேர்த்துவைத்து அவர்களுக்குப் போதிக்கும்போது பெற்றோரும் உபாத்தியாயர்களும் கடுமையான சோதனைக்கு ஆளாகிறார்கள் என்பதுமாத்திரம் உண்மை. அவர்கள் எப்பொழுதுமே உஷாராக இருக்க வேண்டியிருக்கிறது


Offline Anu

பிராயச்சித்தமாகப் பட்டினி

பையன்களையும், பெண்களையும் சரியான வழியில் வளர்த்து அவர்களுக்குக் கல்வி போதிப்பது எவ்வளவு கஷ்டமானது என்பது நாளுக்கு நாள், மேலும் மேலும் எனக்குத் தெளிவாகிக் கொண்டு வந்தது. அவர்களுக்கு உண்மையான உபாத்தியாயராகவும் பாதுகாப்பாளராகவும் இருக்க வேண்டுமாயின், நான் அவர்களுடைய உள்ளங்களைத்தொட வேண்டும். அவர்களுடைய இன்ப துன்பங்களில் நான் பங்கு கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதில் நான் உதவி செய்ய வேண்டும். இளமையின்காரணமாக அவர்களுக்கு எழும் அபிலாஷைகளை எல்லாம் சரியான வழிகளில்நான் கொண்டு செலுத்த வேண்டும். சிறையிலிருந்து சில சத்தியாக்கிரகிகள் விடுதலையாகவே டால்ஸ்டாய் பண்ணையில்வசிப்பவர்களின் தொகை மிக அதிகமாகிவிட்டது. அங்கேயே இருந்த சிலர் போனிக்ஸைச் சேர்ந்தவர்கள். ஆகவே, அவர்களைநான் அங்கேயே அனுப்பி விட்டேன். இங்கே அதிகக் கஷ்டமான நிலைமையைச் சமாளிக்க வேண்டியதாயிற்று. அந்த நாட்களில் நான் ஜோகன்னஸ்பர்க்கிற்கும் போனிக்ஸு க்கும் போய் வந்தவண்ணம் இருக்க வேண்டியதாயிற்று. ஒரு சமயம் நான் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்த போது, ஆசிரமவாசிகளில் இருவர்ஒழுக்கம் தவறி நடந்து விட்டார்கள் என்ற செய்தி எனக்கு எட்டியது. சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஒரு தவறுஅல்லது ஒரு தோல்வி போன்ற செய்திகூட எனக்கு அவ்வளவு அதிர்ச்சியை உண்டாக்கியிராது. ஆனால், இச்செய்தியோ, எனக்கு இடி விழுந்தது போல் ஆயிற்று. அன்றே போனிக்ஸு க்குப் போக ரெயிலில் புறப்பட்டேன். ஸ்ரீகால்லென்பாக்கும் என்னுடன் வருவதாகப் பிடிவாதமாகக் கூறினார். அப்பொழுது நான் எந்த விதமான நிலைமையில் இருந்தேன் என்பதை அவர் கவனித்தார். எனக்கு இவ்வளவு கலக்கத்தை உண்டாக்கிவிட்ட செய்தியைக் கொண்டுவந்தவர் அவரேயாகையால் நான் தனியாக அங்கே போவது என்பதை எண்ணவும் அவரால் முடியவில்லை.

என் கடமை என்ன என்பது பிரயாணத்தின்போது எனக்குத் தெளிவாகத் தோன்றியது. தமது பாதுகாப்பில் இருப்பவர்கள் அல்லது தம்மிடம் மாணவர்களாக இருப்பவர்கள் செய்துவிடும் தவறுக்குப் பாதுகாப்பாளர் அல்லது உபாத்தியாயர், ஓரளவுக்காவது பொறுப்பாளியாவார் என்பதை உணர்ந்தேன். எனவே, சம்பந்தப்பட்ட சம்பவம் சம்பந்தமாக என் பொறுப்பு இன்னதென்பது எனக்குப் பட்டப் பகல் போல் தெளிவாயிற்று. இவ்விஷயத்தில் என் மனைவி எனக்கு முன்பே எச்சரிக்கை செய்திருந்தாள். ஆனால், நான் எல்லோரையும் நம்பிவிடும் சுபாவமுள்ள - வனாகையால் அந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்து விட்டேன். குற்றம் செய்துவிட்டவர்கள்,என் மனவேதனையையும், தாங்கள் செய்துவிட்டது எவ்வளவு பெரிய குற்றம் என்பதையும் உணரும்படி செய்வதற்குள்ள ஒரே வழி, பிராயச்சித்தத் தவத்தை நான் மேற்கொள்ளுவதுதான்என்பதை அறிந்தேன். ஆகையால், ஏழு நாட்களுக்கு உண்ணாவிரதம் இருப்பது, நாலரை மாத காலத்திற்கு தினம் ஒரு வேளையே சாப்பிடுவது என்று விரதம் எடுத்துக் கொண்டேன். நான் இவ்விதம் செய்யாதிருக்கும்படி என் மனத்தை மாற்ற ஸ்ரீகால்லென்பாக் முயன்றும் பயன்படவில்லை. என்னுடைய இப்பிராயச்சித்தத் தவம் சரியானதே என்பதை அவர் முடிவில் ஒப்புக்கொண்டார். தாமும் அவ் விரதத்தை மேற்கொள்ளப்
போவதாகப் பிடிவாதம் செய்தார். அவருடைய தெள்ளத்தெளிவான அன்பை எதிர்க்க என்னால் ஆகவில்லை.

நான் செய்துகொண்ட இத்தீர்மானம் என் மனத்திலிருந்து பெரும் பாரத்தை நீக்கியதால் நான் அதிக மன ஆற்றலை அடைந்தேன். குற்றம் செய்துவிட்டவர்கள் மீது இருந்த கோபம் குறைந்தது. அதற்குப் பதிலாக அவர்கள் மீது எனக்குப் பரிசுத்தமான இரக்கமே உண்டாயிற்று. இவ்வாறு எவ்வளவோ மன ஆறுதல் அடைந்தவனாக நான் போனிக்ஸ் போய்ச் சேர்ந்தேன். அச்சம்பவத்தைக் குறித்து மேற்கொண்டும் விசாரித்தேன். நான் அறிய வேண்டிய மற்றும் பல விவரங்களையும் தெரிந்துகொண்டேன். எனது பிராயச்சித்தத் தவம் எல்லோருக்கும் மனக்கஷ்டத்தை உண்டாக்கியது. ஆனால், அதனால்நிலைமை தெளிவடைந்தது. பாவம் செய்துவிடுவது எவ்வளவு பயங்கரமான காரியம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டார்கள். பையன்கள், பெண்கள் ஆகியோருக்கும் எனக்கும் இருந்த பந்தமும் பலமானதாகவும் உண்மையானதாகவும் ஆயிற்று. இச்சம்பவத்தினால் ஏற்பட்ட ஒரு நிலைமையின் காரணமாகக் கொஞ்ச காலத்திற்குப் பிறகு பதினான்கு நாட்கள் உண்ணாவிரதத்தை நான் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. அதன் பலன்கள் நான் எதிர்பார்த்ததையும்விட அதிகமாகவே இருந்தன.

மாணவர்கள் ஏதாவது தகாத காரியத்தைச் செய்துவிட்டால் அதற்காக உண்ணாவிரதம் இருக்கவேண்டியது உபாத்தியாரின் கடமை என்பதை இச்சம்பவங்களிலிருந்து எடுத்துக் காட்டுவது அல்ல என் நோக்கம். என்றாலும், சில சமயங்களில் இவ்விதக் கடுமையான பரிகாரம் அவசியமாகிறது என்று நான் கருதுகிறேன். ஆனால், இப்பரிகாரத்தை மேற்கொள்ளுவதற்குத் தெளிவான நோக்கமும் ஆன்மிகத் தகுதியும் இருக்க வேண்டியது அவசியம். உபாத்தியாயருக்கும்மாணவருக்குமிடையே உண்மையான அன்பு இல்லாதபோது,மாணவர் செய்துவிட்ட தவறைக் குறித்து மனப்பூர்வமான துயரம் உபாத்தியாயருக்கு ஏற்படாத போது, உபவாசம் பொருந்தாது. அது தீமையானதாகவும் ஆகக்கூடும். இத்தகைய விஷயங்களில் உண்ணாவிரதம் இருப்பது என்பது சரிதானா என்பதைச் சந்தேகிக்க இடமிருந்தபோதிலும்,  மாணவர்களின் தவறுக்கு உபாத்தியாயர்கள் பொறுப்பாளிகளாவார்கள் என்பதில் மாத்திரம் சந்தேகமே இல்லை. முதல் பிராயச்சித்த விரதம் எங்களில் யாருக்கும் கஷ்டமானதாக இல்லை.என்னுடைய வழக்கமான காரியங்களில் எதையும் நான் நிறுத்தி வைக்கவோ, நிறுத்திவிடவோ நேரவில்லை. இந்தப் பிராயச்சித்தத் தவம் இருந்த காலம் முழுவதும்நான் பழ ஆகாரம் மட்டுமே சாப்பிட்டு வந்தேன்என்பதை நினைவுபடுத்த வேண்டும். இரண்டாவது உபவாச காலத்தின் பிற்பகுதியில் எனக்கு அதிகக் கஷ்டமாகவே இருந்தது.

ராம நாமத்தின் அற்புதமான சக்தியை அச்சமயம்நான் முற்றும் அறிந்திருக்கவில்லை. கஷ்டத்தைச் சகித்துக் கொள்ளுவதற்கு வேண்டிய சக்தி, அந்த அளவுக்கு என்னிடம் குறைவாகவே இருந்தது. அதோடு பட்டினி விரதத்தின் முறைகளையும் நான் அப்பொழுது நன்கு அறிந்தவனல்ல. பட்டினிக்காலத்தில் தண்ணீர் குடிப்பது, எவ்வளவுதான் குமட்டலை உண்டாக்குவதாகவும் ருசியற்றதாகவும் இருந்தாலும், நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டியது முக்கியமானது என்பதும் எனக்குத் தெரியாது. மேலும், முதல் உண்ணாவிரதம் எளிதாக இருந்தது, இரண்டாவது உண்ணாவிரத விஷயத்தில் நான் அலட்சியமாக இருக்கும்படி செய்துவிட்டது. முதல் உண்ணாவிரதத்தின்போது டாக்டர் கூனேயின் முறைப்படி நான் தினமும் குளித்து வந்தேன். ஆனால், இரண்டாவது உண்ணாவிரதத்தின்போது, இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு அவ்வாறு குளிப்பதை விட்டுவிட்டேன். தண்ணீர் குடிக்கப் பிடிக்காததனாலும், குடித்தால் குமட்டல் உண்டாவதனாலும் மிகக் குறைவாகவே தண்ணீர் குடித்தேன்.இதனால், தொண்டை வறண்டு பலவீனமாயிற்று. கடைசி நாட்களில் மிகவும் மெல்லிய  குரலிலேயே என்னால் பேச முடிந்தது. என்றாலும்,நான் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து வந்தேன். எழுத வேண்டிய அவசியம் வந்தபோது, நான் சொல்லிப் பிறரை எழுதச் செய்தேன். ராமாயணம் முதலிய சமய நூல்களைப் படிக்கச் சொல்லித் தவறாமல் கேட்டு வந்தேன். அவசரமான காரியங்களைக் குறித்து விவாதிப்பதற்கும் ஆலோசனை கூறுவதற்கும் வேண்டிய பலம் எனக்கு இருந்தது
.
 
 
 
 
 
 
 


Offline Anu

கோகலேயைச் சந்திக்க

தென்னாப்பிரிக்கா பற்றிய நினைவுகள் பலவற்றைக் கூறாமல் விட்டுவிட்டே நான்மேலே செல்ல வேண்டும். 1914-இல் சத்தியாக்கிரகப் போராட்டம் முடிவடைந்த சமயம், லண்டன் வழியாக இந்தியாவுக்குத் திரும்புமாறு கோகலே எனக்கு அறிவித்திருந்தார். ஆகவே, ஜூலையில் நானும் கஸ்தூரிபாயும் கால்லென்பாக்கும் இங்கிலாந்துக்குப் பிரயாணமானோம். சத்தியாக்கிரகத்தின்போது மூன்றாம் வகுப்பு வண்டியில் பிரயாணம் செய்ய ஆரம்பித்தேன். ஆகவே, இந்தப் பிராயணத்திற்கும் மூன்றாம் வகுப்பிலேயே ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால், இந்த வழியில் செல்லும் கப்பல்களில் மூன்றாம் வகுப்பில் இருக்கும் வசதிகளுக்கும், இந்தியாவில் கடலோரக் கப்பல்களிலும் ரெயில் வண்டிகளிலும் மூன்றாம் வகுப்பில் இருக்கும் வசதிகளுக்கும் அதிகமான வித்தியாசம் உண்டு. இந்தியாவிலிருக்கும் மூன்றாம் வகுப்பில் தூங்குவதற்கு மாத்திரமல்ல, உட்காருவதற்குக்கூடப் போதுமான இடம் இல்லை. சுத்தமும் கிடையாது. ஆனால், இதற்கு மாறாக லண்டனுக்குச் சென்றபோது, கப்பலில் மூன்றாம் வகுப்பில் போதுமான இடவசதி இருந்ததோடு சுத்தமாகவும் இருந்தது. கப்பல் கம்பெனியாரும் எங்களுக்கு விசேஷ வசதிகளைச் செய்து கொடுத்தனர். கம்பெனியார், எங்களுக்கென்று தனிக் கக்கூசு வசதியைச் செய்து கொடுத்தனர். நாங்கள் பழ உணவு மாத்திரமே சாப்பிடுகிறவர்களாகையால் பழங்களும்கொட்டைப் பருப்புகளும் மாத்திரம் எங்களுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தனர். வழக்கமாக மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளுக்குப் பழமும் கொட்டைகளும் தருவதில்லை. இந்த வசதிகளெல்லாம் இருந்ததால் எங்கள் பதினெட்டு நாள் கப்பல் யாத்திரை சௌகரியமாகவே இருந்தது.

இப்பிரயாணத்தின்போது நடந்த சில சம்பவங்கள் குறிப்பிடத்தக்கவை. தொலைவிலுள்ளதைப் பார்க்க உபயோகிக்கும் பைனாக்குலர் என்ற தூர திருஷ்டிக் கண்ணாடிகளில் ஸ்ரீ கால்லென்பாக்குக்கு விருப்பம் அதிகம். அவர் இரண்டொரு விலையுயர்ந்த தூரதிருஷ்டிக் கண்ணாடிகள் வைத்திருந்தார். இவற்றில் ஒன்றைக்குறித்து நாங்கள் தினமும் விவாதித்து வந்தோம். இவைகளை வைத்துக்கொண்டிருப்பது, நாங்கள் அடைய ஆசைப்பட்டுக் கொண்டிருந்த எளிய வாழ்க்கைக்கு உகந்தது அல்ல என்பதை அவர் உணரும்படி செய்யவேண்டும் என்று நான் முயன்று வந்தேன். ஒரு நாள் நாங்கள் எங்கள் அறையின் காற்றுத் துவாரத்திற்கு அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது இந்த வாதம் உச்ச நிலைக்குவந்து விட்டது. நமக்குள் இத்தகராறுக்கு இடம் தருவதாக இத்தூரதிருஷ்டிக் கண்ணாடிகள் இருந்து வருவதைவிட இவற்றைக் கடலில் எறிந்துவிட்டு அதோடு ஏன் விவகாரத்தை முடித்து விடக்கூடாது? என்றேன். இந்தச் சனியன்களை எறிந்தே விடுங்கள் என்றார் ஸ்ரீ கால்லென் பாக். நான் சொல்லுவதும் அதுதான் என்றேன்.  நானும் அதைத்தான் சொல்லுகிறேன் என்று உடனே பதில் சொன்னார் அவர். அதை உடனே கடலில் நான் வீசி எறிந்துவிட்டேன். அக்கண்ணாடியின் பெறுமானம் ஏழு பவுன்தான். ஆனால் ஸ்ரீ கால்லென்பாக்குக்கு அதன்மீது இருந்த மோகத்தோடுஒப்பிட்டுப் பார்த்தால் இந்த ஏழு பவுன் மிகக் குறைவான விலை மதிப்புத்தான். என்றாலும் அதை விட்டொழித்த பிறகு அதற்காக அவர் வருத்தப் படவே இல்லை. ஸ்ரீகால்லென்பாக்குக்கும் எனக்கும் இடையே ஏற்பட்ட சம்பவங்கள் பலவற்றுள் ஒன்றுதான் இது.

நாங்கள் இருவரும் சத்திய மார்க்கத்தில் செல்ல முயன்று வந்ததால் இவ்விதமாக ஒவ்வொரு நாளும் நாங்கள் ஏதாவது ஒரு புதிய உண்மையை அறிந்து வந்தோம். சத்தியத்தை நாடிச் செல்லும் போது கோபம், சுயநலம், துவேஷம்முதலியன இயற்கையாகவே நீங்கிவிடுகின்றன. ஏனெனில், அவை நீங்காவிட்டால் சத்தியத்தை அடைவது இயலாததாகும். ஒருவர் மிகவும் நல்லவராக இருக்கலாம்; உண்மையே பேசுகிறவராகவும்இருக்கக் கூடும். ஆனால், காமக் குரோத உணர்ச்சிகளுக்கு மாத்திரம் வயப்பட்டவராக அவர் இருந்தாராயின் சத்தியத்தை அவர் காணவே முடியாது. அன்பு பகை, இன்பம்-துன்பம் ஆகிய இந்த இரண்டு வகையானவைகளிலிருந்தும் முற்றும் விடுபடுவது ஒன்றே சத்தியத்தை வெற்றிகரமான வகையில் தேடுவதாகும். நாங்கள் இந்தக் கப்பல்யாத்திரை புறப்பட்டபோது, நான் உண்ணாவிரதமிருந்து அதிக காலம் ஆகிவிடவில்லை. பழைய பலத்தை நான் இன்னும் அடைந்துவிடவில்லை. எனக்கு நல்ல பசி எடுக்க வேண்டும் என்பதற்காகவும், சாப்பிட்டது ஜீரணமாக வேண்டும் என்பதற்காகவும், தேகாப்பியாசம் இருக்கட்டும் எனக் கருதிக் கப்பலின்மேல் தளத்தில் கொஞ்சம் உலாவி வருவேன். ஆனால், இந்த நடையைக்கூட என் உடல் தாங்கவில்லை. கெண்டைக் கால்களில் வலி ஏற்பட்டுவிடும். ஆகவே, நான் லண்டன் சேர்ந்தபோது என் தேக நிலை நன்றாகஇருப்பதற்குப் பதிலாக மோசமாகவே இருந்தது. அங்கே டாக்டர் ஜீவராஜமேத்தா எனக்கு அறிமுகமானார். எனது உண்ணாவிரதத்தின் சரித்திரத்தையும், அதன் பிறகு எனக்கு ஏற்பட்ட வலியைப் பற்றியும் அவரிடம் கூறினேன்.

சில தினங்களுக்கு நீங்கள் முழு ஓய்வு எடுத்துக் கொள்ளாது போனால் உங்கள் கால்கள் முற்றும் பயனற்றவைகளாகிவிடக் கூடும் என்று அவர் சொன்னார். நீண்ட உபவாசம் இருந்து விட்ட பிறகு இழந்த பலத்தைத்திரும்பப் பெற அவசரப்படக் கூடாது, பசியைக்கூடக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை அப்பொழுதுதான் நான் அறிந்துகொண்டேன். உண்ணாவிரதம் இருந்துகொண்டிருக்கும்போது இருப்பதை விட அதிக எச்சரிக்கையும், கட்டுத் திட்டங்களும் உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்கு வேண்டும். எந்த நேரத்திலும் பெரும் போர் மூண்டுவிடக் கூடும் என்று மடீராவில் நாங்கள் கேள்விப்பட்டோம். ஆங்கிலக் கால்வாயில் எங்கள் கப்பல் போய்க் கொண்டிருந்தபோது யுத்தமே மூண்டு விட்டது என்ற செய்தி கிடைத்தது. எங்கள்கப்பல் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆங்கிலக் கால்வாய் நெடுக நீர் மூழ்கிக்கப்பல்கள் கடற்கண்ணிகளைப் போட்டிருந்தன. அவற்றில் மோதி விடாமல் கப்பலை ஓட்டிச் செல்லுவது எளிதான காரியமன்று. ஆகவே, சௌதாம்டன் போய்ச் சேர இரண்டு நாட்களாயின. யுத்தம் ஆகஸ்டு நான்காம் தேதி பிரகடனமாயிற்று. நாங்கள் ஆறாம் தேதி லண்டன் சேர்ந்தோம்.


Offline Anu

போரில் என் பங்கு

பாரிஸிலிருந்து லண்டனுக்குத் திரும்பி வர முடியாமல் கோகலே சிக்கிக்கொண்டார் என்று நான் லண்டன் போய்ச் சேர்ந்ததும் அறிந்தேன். தேக சுகத்தை முன்னிட்டு அவர் பாரிஸு க்குப் போயிருந்தார். பாரிஸு க்கும் லண்டனுக்கும் இடையே எல்லாப் போக்குவரத்துமே துண்டிக்கப்பட்டு விட்டதால் அவர் எப்பொழுது திரும்புவார் என்பதைப் பற்றியும் எதுவும் தெரியவில்லை. அவரைப் பார்க்காமல் இந்தியாவுக்குத் திரும்ப நான் விரும்பவில்லை. ஆனால், அவர் எப்பொழுது வருவார் என்பதையும் யாரும் சொல்ல முடியவில்லை. இதற்கு மத்தியில் நான் என்ன செய்வது? போர் சம்பந்தமாக என் கடமை என்ன? என்னுடைய சிறைத் தோழரும் சத்தியாக்கிரகியுமான சோராப்ஜி அடாஜணியா, அப்பொழுது வக்கீல் தொழிலுக்காக லண்டனில் படித்துக்கொண்டிருந்தார். அவர் சிறந்த சத்தியாக்கிரகிகளில் ஒருவராகையால், தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பியதும் என் ஸ்தானத்தை வகிப்பதற்காக அவர் வக்கீல் தொழிலுக்குப் படித்து வர இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டிருந்தார். அவருக்கு ஆகும் செலவுக்கு டாக்டர் பிராண ஜீவன்தாஸ் மேத்தா பணம் கொடுத்து வந்தார். அவருடனும் அவர் மூலமும், இங்கிலாந்தில் அப்பொழுது படித்துக் கொண்டிருந்த டாக்டர் ஜீவராஜ மேத்தாவுடனும் மற்றவர்களுடனும் நான் கலந்து பேசினேன். அவர்களுடன் கலந்து ஆலோசித்து, இங்கிலாந்திலும், அயர்லாந்திலும் இருக்கும் இந்தியரின் கூட்டமொன்று கூட்டப்பட்டது. அக்கூட்டத்தின் முன்பு என் கருத்தைத் தெரிவித்தேன்.

இங்கிலாந்தில் வசித்துவரும் இந்தியர், யுத்தத்திற்குத் தங்களாலான உதவியைச் செய்யவேண்டும் என்று நான் கருதினேன். ஆங்கில மாணவர்கள் ராணுவத்தில் சேவை செய்யத் தொண்டர்களாக முன்வந்திருக்கிறார்கள். அவ்வளவாவது இந்தியரும் செய்ய வேண்டும். இவ்விதமான என்வாதத்திற்குப் பலவிதமான ஆட்சேபங்கள் எழுந்தன. இந்தியருக்கும் ஆங்கிலேயருக்கும் எவ்வளவோ பேதம் இருக்கிறது என்றார்கள். நாம் அடிமைகளாக இருக்கிறோம். அவர்களோ எஜமானர்கள் என்றார்கள்.எஜமானனுக்குத் தேவைப்படும் நேரம் வந்து விடும்போது மாத்திரம் ஓர் அடிமை எஜமானனுடன் எப்படி ஒத்துழைத்து விட முடியும்? எஜமானனுக்கு ஏற்பட்டிருக்கும் அவசியத்தைத் தனக்கு ஒரு வாய்ப்பாக அடிமை பயன்படுத்திக்கொண்டு சுதந்திரமடையப் பார்ப்பது அடிமையின் கடமையல்லவா? இந்த வாதம் நியாயமானதாக அப்பொழுது எனக்குத் தோன்ற வில்லை. இந்தியனுக்கும் ஆங்கிலேயனுக்கும் அந்தஸ்தில் இருக்கும் வித்தியாசத்தை நான் அறிவேன். ஆனால், அடிமை நிலைக்கு நாம் கொண்டு வரப்பட்டு விட்டோம் என்பதை நான் நம்பவில்லை.தவறுகளுக்கெல்லாம் தனிப்பட்ட பிரிட்டிஷ் அதிகாரிகள்தான் காரணமே அன்றிப் பிரிட்டிஷ் முறை அல்ல என்றும், அவர்களையும் அன்பினால் மாற்றி விடலாம் என்றும் நான் எண்ணினேன். பிரிட்டிஷாரின் ஒத்துழைப்பினாலும் உதவியினாலுமே நமது அந்தஸ்தை நாம் உயர்த்திக் கொள்ளுவதாக இருந்தால், அவர்களுக்குக் கஷ்டம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் அவர்களுக்குப் பக்கத் துணையாக இருந்து அவர்களுடைய தயவைப் பெற வேண்டியது நமது கடமை.

பிரிட்டிஷ் முறையே தவறானதாக இருந்தாலும், அது இன்று எனக்குத் தோன்றுவதுபோல், சகிக்க முடியாததாக அப்பொழுது எனக்குத் தோன்றவில்லை. ஆனால், பிரிட்டிஷ் முறையில் எனக்கு நம்பிக்கை இல்லாது போய் விட்டதால் இன்று நான் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுக்கிறேன் என்றால், பிரிட்டிஷ் ஆட்சி முறையில் மாத்திரமேஅன்றி அதன்  அதிகாரிகளிடமும் நம்பிக்கையைஇழந்துவிட்ட அந்த நண்பர்கள் எப்படி ஒத்துழைப்பார்கள்? இந்தியர் கோரிக்கைகளைக் குறித்துத் தைரியமாகக் கூறுவதற்கும், இந்தியரின் அந்தஸ்தை உயர்த்திக்கொள்ளுவதற்கும் ஏற்ற சமயம் அதுதான் என்று என் யோசனையை எதிர்த்த நண்பர்கள் கூறினார்கள். இங்கிலாந்தின் கஷ்டத்தை நமக்கு ஏற்ற வாய்ப்பாக மாற்றிக் கொண்டுவிடக்கூடாது என்று நான் எண்ணினேன். போர் நடந்துகொண்டிருக்கும் வரையில் நமது கோரிக்கைகளை வற்புறுத்தாமலிருப்பதே அதிக யோக்கியமானது, முன்யோசனையோடு கூடியது என்றும் கருதினேன். ஆகையால், நான் கூறிய யோசனையை வலியுறுத்தித் தொண்டர்களாகச் சேர முன்வருகிறவர்களை வருமாறு அழைத்தேன். அநேகர் முன் வந்தார்கள். அப்படி வந்தவர்களில் எல்லா மாகாணத்தினரும், மதத்தினரும் இருந்தனர். இந்த விவரங்களை எல்லாம்எடுத்துக் கூறி லார்டு கிரிவேக்குக் கடிதம் எழுதினேன்.

எங்கள் சேவையை ஏற்றுக்கொள்ளும் முன்பு நாங்கள் வைத்தியப் படை வேலைகளில் பயிற்சிபெறுவது அவசியம் என்றால் அப்பயிற்சியைப் பெறவும் தயாராக இருக்கிறோம் என்று அதில் அறிவித்தேன். கொஞ்சம் தயக்கத்திற்குப்பிறகு லார்டு கிரிவே எங்கள் சேவையை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தார். நெருக்கடியான அந்த நேரத்தில் சாம்ராஜ்யத்திற்கு எங்கள் சேவையை அளித்ததற்காக நன்றியும் தெரிவித்தார்.காயம்பட்டவர்களுக்கு முதல் வைத்திய உதவி செய்யும் பயிற்சியைப் பிரபலமான டாக்டர் காண்ட்லீயின் ஆதரவில் தொண்டர்கள் பெற்றனர். ஆறு வாரக்குறுகிய காலப் பயிற்சியே அது. ஆனால், முதல் உதவி சம்பந்தமான எல்லாமே அதில் கற்றுக் கொடுக்கப்பட்டது. எங்கள் வகுப்பில் நாங்கள் எண்பது பேர் இருந்தோம். ஆறுவாரங்களில் எங்களுக்குப் பரீட்சை நடந்து ஒருவர் தவிர மற்றெல்லோரும் தேறிவிட்டோம். அவர்களுக்கு ராணுவக் கவாத்து முதலிய பயிற்சிகளுக்கு அரசாங்கம் ஏற்பாடு செய்தது. இந்த வேலை கர்னல் பேக்கரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த நாட்களில் பார்ப்பதற்கு லண்டன் அற்புதக் காட்சியாக இருந்தது.

மக்களிடையே பீதியே இல்லை. ஆனால், தங்களாலியன்ற உதவியைச் செய்யவேண்டும் என்பதில் எல்லோரும் சுறுசுறுப்பாக இருந்தனர். வயது வந்த திடமான ஆண்களெல்லாம், போரில் சிப்பாய்களாகப்பயிற்சி பெறப் போய்விட்டனர். ஆனால்,வயோதிகர்களும், பலவீனர்களும், பெண்களும் என்ன செய்வது? அவர்கள் செய்ய விரும்பினால் அவர்களுக்கும் போதுமான வேலைகள் இருந்தன. துணிகளை வெட்டி ஆடைகள் தயாரிப்பது, காயமடைந்தவர்களுக்குக் கட்டுக் கட்டுவது போன்ற வேலைகளில் அவர்கள் ஈடுபட்டார்கள். லைஸியம் என்ற பெண்களின் சங்கம், தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆடைகளைச் சிப்பாய்களுக்குத் தைத்துக் கொடுப்பது என்ற வேலையை ஏற்றுக்கொண்டது. இந்தச் சங்கத்தில் ஸ்ரீமதி சரோஜினி நாயுடு ஓர் உறுப்பினர். இவர் அவ்வேலையில் முழு மனத்துடன் ஈடுபட்டிருந்தார். முதன் முதலாக அப்பொழுது தான் அவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. தைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த ஒரு துணிக் குவியலை அவர் என்னிடம் கொடுத்து அவைகளை எல்லாம் தைத்துக் கொண்டு வந்து தம்மிடம் கொடுக்கும்படி சொன்னார்.அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டேன். முதல் உதவிக்கு நான்பயிற்சி பெற்று வந்த காலத்தில் நண்பர்களின்உதவியைக் கொண்டு எவ்வளவு ஆடைகளைத் தைக்க முடியுமோ அவ்வளவையும் தைத்துக் கொண்டுபோய் அவரிடம் கொடுத்தேன்.


Offline Anu

ஓர் ஆன்மிகக் குழப்பம்

மற்ற இந்தியருடன் என் சேவையையுத்தத்திற்கு அளிக்க முன்வந்திருக்கிறேன் என்ற செய்தி தென்னாப்பிரிக்காவுக்கு எட்டியதும் எனக்குத் தந்திகள் வந்தன. அதில் ஒன்று ஸ்ரீபோலக்கிடமிருந்து வந்தது. எனது கொள்கையான அகிம்சைக்கும் நான் செய்யும் காரியத்திற்கும் எப்படிப் பொருத்தமாகும் என்று அவர் கேட்டிருந்தார். இந்த ஆட்சேபத்தை நான் ஓரளவுக்கு எதிர்பார்த்தே இருந்தேன். இப்பிரச்னையைக் குறித்துஹிந்த் சுயராஜ் (இந்திய சுயராஜ்யம்) என்ற நூலில் விவாதித்திருக்கிறேன். அதல்லாமம் தென் ஆப்பிரிக்காவில் நண்பர்களுடனும் இதைக் குறித்து அடிக்கடி விவாதித்து வந்திருக்கிறேன். யுத்தத்தில் இருக்கும் அதர்மத்தை எல்லோருமே ஒப்புக்கொண்டிருக் கிறோம். என்னைத் தாக்கியவரைக் கைதுசெய்து வழக்குத் தொடர நான் தயாராக இல்லாத போது, போரில் ஈடுபட்டு இருக்கிறவர்களின் லட்சியம் நியாயமானதா, இல்லையா என்பது பற்றி எனக்கு எதுவுமே தெரியாமல் இருக்கும்போது, யுத்தத்தில் ஈடுபடுவதற்கு நான் தயாராக இருப்பதற்கில்லை. என்றாலும் முன்பு போயர் யுத்தத்தில் நான் சேவை செய்திருக்கிறேன் என்பது நண்பர்களுக்குத் தெரியும். ஆயினும், அதன் பிறகு என் கருத்துக்கள் மாறுதலை அடைந்து இருக்கின்றன என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்கள்.

உண்மையில் போயர் யுத்தத்தில் நான் பங்கு கொள்ளும்படி எந்தவிதமான வாதங்கள் என்னைத் தூண்டினவோ அதே விதமான வாதங்களே இச்சமயமும் என்னை இம்முடிவுக்கு வரும்படி செய்தன. யுத்தத்தில் ஈடுபடுவதுஅகிம்சைக்குக் கொஞ்சமும் பொருத்தமானதல்ல என்பது எனக்குத் தெளிவாகவே தெரிந்திருந்தது. ஆனால், தன்னுடைய கடமை என்ன என்பதை யாரும் தெளிவாக அறிந்து கொண்டுவிட முடிவதில்லை. அதிலும் சத்தியத்தை நாடுகிறவர் அடிக்கடி இருட்டில் தடவிக்கொண்டிருக்க வேண்டியே வருகிறது.  அகிம்சை என்பது விரிவான பொருள்களைக் கொண்டதோர் கொள்கை. நாமெல்லோரும் இம்சையாகிய தீயில் சிக்கிக் கொண்டு உதவியற்றுத் தவிக்கும்மாந்தரேயாவோம். ஓர் உயிரைத் தின்றே மற்றோர் உயிர் வாழ்கிறது என்று சொல்லப்படுவதில் ஆழ்ந்த பொருள் உண்டு. மனிதன்,வெளிப்படையாக இம்சையை அறிந்தோ, அறியாமலோ செய்யாமல் ஒரு கணமும் வாழமுடியாது. வாழ்வது என்ற ஒன்றிலேயே, உண்பது, குடிப்பது, நடமாடுவது ஆகியவைகளில், என்ன தான் மிகச் சிறியதாயிருப்பினும் ஏதாவது இம்சை அல்லது உயிரைக் கொல்லுவது அவசியமாக இருந்துதான் தீருகிறது. ஆகையால், அகிம்சை விரதம் கொண்டவர், அந்தத் தருமப்படி உண்மையோடு நடப்பதாயின், அவருடைய ஒவ்வோர் செயலும் கருணையிலிருந்தே எழுவதாக இருக்க வேண்டும். மிக மிகச் சிறிய உயிரையும் கூடக் கொல்லாமல் தம்மால்முடிந்த வரையில் அதை அவர் காப்பாற்றவேண்டும்.

இவ்விதம் இம்சையின் மரணப் பிடியிலிருந்து விடுபடவும் இடை விடாதுமுயன்று வரவேண்டும், புலனடக்கத்திலும்கருணையிலும் அவர் இடை விடாது வளர்ந்து கொண்டும் இருப்பார். ஆனாலும்,புற இம்சையிலிருந்து மாத்திரம் அவர் என்றுமே பூரணமாக விடுபட்டு விட முடியாது.மேலும், எல்லா ஜீவராசிகளின் ஒருமைப்பாடே அகிம்சையின் அடிப்படையாகையால், ஒன்றின் தவறு மற்றெல்லாவற்றையும் பாதிக்காமல் இருக்க முடியாது. ஆகவே, மனிதன் இம்சையிலிருந்து முற்றும் விடுபட்டு விட இயலாது.ஒரு சமூகத்தைச் சேர்ந்தவராக ஒருவர் இருந்து கொண்டிருக்கும் வரையில், அச் சமூகத் தொடக்கத்திலிருந்தேஏற்படுவதான இம்சையில் அவரும் கலந்து கொண்டு விடாமல் இருப்பதற்கில்லை. இரு நாட்டினர் போராடிக் கொண்டிருக்கும்போது, யுத்தத்தை நிறுத்துவதே அகிம்சைவாதியின் பொறுப்பு. அப் பொறுப்பை நிறைவேற்ற இயலாதவர், யுத்தத்தை எதிர்ப்பதற்கான சக்தி இல்லாதவர்; யுத்தத்தை எதிர்ப்பதற்கு வேண்டிய தகுதியை அடையாதவர் இவர்களும் அப்போரில் ஈடுபடக் கூடும். அப்படிப் போரில் ஈடுபட்டாலும் தம்மையும் தம் நாட்டையும் உலகத்தையும் போரிலிருந்து மீட்க முழு மனத்துடன் முயற்சி செய்யவேண்டும்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மூலமே என் அந்தஸ்தையும், என் நாட்டு மக்களின் அந்தஸ்தையும் உயர்த்திக்கொள்ளலாம் என்று நான் நம்பியிருந்தேன். இங்கிலாந்தில் நான் இருந்த போது பிரிட்டிஷ் கடற்படையின் பாதுகாப்பை நான் அனுபவித்து வந்தேன். பிரிட்டனின் ஆயுத பலத்தின் கீழ் நான் பத்திரமாகவும் இருந்து வந்தேன். நான் இவ்விதம் இருந்ததன் மூலம் அதனுடைய பலாத்கார சக்தியில் நான் நேரடியாகப் பங்குகொண்டு வருகிறேன். ஆகையால், சாம்ராஜ்யத்துடன் எனக்கு இருக்கும் தொடர்பை வைத்துக்கொண்டு அதன் கொடியின் கீழ் வாழ நான் விரும்பினால், நான்கு காரியங்களில் ஏதாவது ஒன்றின்படியே நான் நடக்க வேண்டும்: யுத்தத்திற்கு என்னுடைய பகிரங்கமான எதிர்ப்பைத் தெரிவிக்கலாம். சத்தியாக்கிரக விதிகளின்படி சாம்ராஜ்யம் அதன் ராணுவக்கொள்கையை மாற்றிக்  கொள்ளும் வரை அதைப் பகிஷ்கரித்து விடலாம்; அல்லது மீறுவதற்கு ஏற்றவையான அதன் சட்டங்களை மீறுவதன் மூலம் சட்ட மறுப்பைச் செய்து சிறைப் பட முற்படலாம்; இல்லாவிட்டால், சாம்ராஜ்யத்தின் சார்பில் யுத்தத்தில் ஈடுபட்டு அதன் மூலம் யுத்த பலாத்காரத்தை எதிர்ப்பதற்கு வேண்டிய பலத்தையும் தகுதியையும் பெறலாம். இத்தகைய ஆற்றலும் தகுதியும் எனக்கு இல்லை. ஆகவே, அவற்றை அடைவதற்கு யுத்தத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று எண்ணினேன்.

அகிம்சை நோக்குடன் கவனித்தால், போர்ச் சேவையில் ஈடுபட்டிருக்கிறவர்களில் போர்க்களத்தில் போராடும் சிப்பாய்களுக்கும் மற்றவர்களுக்கும் வேற்றுமையை நான் காணவில்லை. கொள்ளைக்காரர்களுக்கு மூட்டை தூக்கவோ, அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும்போது காவல் இருக்கவோ, அவர்கள் காயமடையும்போது அவர்களுக்குப் பணி விடை  செய்யவோ ஒப்புக்கொள்ளுகிறவனும், கொள்ளைக்காரர்களைப் போல் கொள்ளைக்குற்றம் செய்தவனேயாவான். அதேபோலப் போரில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை செய்வதோடு மாத்திரம் இருந்து விடுகிறவர்களும் போர்க் குற்றத்திலிருந்து விடுபட்டவர்கள் ஆகமுடியாது. போலக்கிடமிருந்து தந்தி வருவதற்க முன்னாலேயே இந்த வகையில் இதையெல்லாம் குறித்து என்னுள்ளேயே நான் விவாதித்துக்கொண்டேன். அத்தந்தி வந்த பிறகும் இதைக் குறித்துப் பல நண்பர்களுடன் விவாதித்தேன்.போரில் சேவை செய்ய முன் வருவது என் கடமை என்ற முடிவுக்கே வந்தேன்.

பிரிட்டிஷ் உறவுக்குச் சாதகமாக நான் அப்பொழுது கொண்டிருந்த கருத்தைக் கொண்டு கவனிக்கும்போது, அந்த விதமான விவாதப் போக்கில் எந்தத் தவறும் இருப்பதாக இன்றும் நான் கருதவில்லை. அப்பொழுது நான் செய்ததற்காக வருத்தப்படவும் இல்லை. என் நிலைமை சரியானதே என்பதை என் நண்பர்கள் எல்லோருமே ஒப்புக்கொள்ளும்படி செய்ய என்னால் அப்பொழுதும் முடியவில்லை என்பதே அறிவேன். இப்பிரச்சனை மிகவும் நுட்பமானது. இதில் கருத்து வேற்றுமை இருந்து தான் தீரும். ஆகையால், அகிம்சையில் நம்பிக்கையுள்ளவர்களுக்கும், வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் அதை அனுசரிக்கத் தீவிரமாக முயன்று வருகிறவர்களுக்கும் என்னால் இயன்ற அளவு தெளிவாக என்னுடைய வாதங்களை எடுத்துக் கூறினேன். சத்தியத்தின் பக்தர், சம்பிரதாயம் என்பதற்காக எதையும்செய்து விட முடியாது. தாம் திருத்தப்படுவதற்கு அவர் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். தாம் செய்தது தவறானது என்பதைக் கண்டுகொள்ளும் போது, என்னநேருவதாயினும் பொருட்படுத்தாது, அதை ஒப்புக்கொண்டு அதற்குப் பரிகாரம் தேட வேண்டும்.


Offline Anu

குட்டிச் சத்தியாக்கிரகம்

இவ்விதம் கடமை என்று கருதியதனால் போரில் நான் கலந்து கொண்டேன். ஆயினும், அதில் நான் நேரடியாக ஈடுபடமுடியாது போயிற்று. அத்தோடு அந்த நெருக்கடியான நிலைமையிலும் கூட ஒரு குட்டிச் சத்தியாக்கிரகம் என்று சொல்லக் கூடியதையும் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. எங்கள் பெயர்கள் அங்கீகரிக்கப்பட்டுப் பதிவானவுடன் எங்களுக்குப் பயிற்சியளிப்பதைக் கவனிப்பதற்காக ஓர் அதிகாரியும் நியமிக்கப்பட்டார் என்றுநான் முன்பே கூறியிருக்கிறேன். இந்த அதிகாரி, பயிற்சி சம்பந்தமான விஷயங்களில் மட்டுமே எங்களுக்குத் தலைவர் என்றும், மற்ற விஷயங்களிலெல்லாம் அப்படைக்கு நானே தலைவன் என்றும் அதனுடைய உள் கட்டுத் திட்டங்களைப் பொறுத்தவரை எனக்கே நேரடியான பொறுப்பு உண்டு என்றும் நாங்கள் எல்லோரும் எண்ணியிருந்தோம். அதாவது, அந்த அதிகாரி இப்படை விஷயத்தில் என் மூலமேஎதையும் செய்ய வேண்டும் என்று கருதினோம். ஆனால், இந்தப்பிரமை இருந்து வர அந்த அதிகாரி ஆரம்பத்திலிருந்தே விட்டுவைக்கவில்லை.

ஸ்ரீசோராப்ஜி அடாஜணியா மிக்க புத்திக் கூர்மை உள்ளவர். அவர் என்னை எச்சரிக்கை செய்தார்: அந்த ஆசாமி விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருங்கள்.நம் மீது ஆதிக்கம் செலுத்த அவர் விரும்புகிறார் என்று தோன்றுகிறது. அவர் கட்டளையை ஏற்று நடக்க நாங்கள் தயாராயில்லை. நமக்குப் போதிப்பவர் என்று அவரை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார். ஆனால், நமக்குப் போதிப்பதற்கென்று அவர் நியமித்திருக்கும் இளைஞர்கள்கூட, நமக்குத் தாங்கள் எஜமானர்களாக வந்திருப்பதாக எண்ணிக் கொள்ளுகின்றனர் என்றார். அந்த இளைஞர்கள் ஆக்ஸ்போர்டு மாணவர்கள். எங்களுக்குச் சொல்லிக் கொடுக்க வந்திருந்தனர். அந்தத் தலைமை அதிகாரி, அவர்களை எங்கள் படைப்பிரிவின் தலைவர்களாக நியமித்தார். தலைமை அதிகாரியின்மிதமிஞ்சிய செய்கைகளை நானும் கவனிக்காமலில்லை. என்றாலும், அதைப் பற்றிக் கவலைப் படவேண்டாமென்று சோராப்ஜியிடம் கூறி அவரைச் சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால், அவர் எளிதில் சமாதானமடைந்து விடுகிறவர் அல்ல. நீங்கள் எல்லோரையும் நம்பிவிடுகிறீர்கள்.இவர்கள் பசப்புப் பேச்சினால் உங்களை ஏமாற்றி விடுவார்கள். ஏமாற்றி விட்டார்கள் என்பது கடைசியாக உங்களுக்குத் தெரியும்போது சத்தியாக் கிரகம் செய்யும்படி எங்களிடம் கூறுவீர்கள். இவ்விதம் நீங்கள் துன்பப்படுவதோடு உங்களோடு சேர்ந்து நாங்கள் எல்லோரும் துன்பப்பட நேரும் என்று அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்.

நீங்கள் என்னுடன் சேர்ந்துவிட்டபிறகு துன்பத்தைத் தவிர வேறுஎதை எதிர்பார்க்கிறீர்கள்?சத்தியாக்கிரகி ஏமாற்றப்படவே பிறந்திருக்கிறான். இப்பிரதம அதிகாரி நம்மை ஏமாற்றட்டும். ஏய்ப்பவனே முடிவில் ஏமாற்றப்படுகிறான் என்று உங்களுக்கு எத்தனையோ முறை நான் சொல்லவில்லையா? என்றேன். சோராப்ஜி உடனே உரக்கச் சிரித்தார். அப்படியானால் சரி, தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வாருங்கள். என்றாவது ஒரு நாள் நீங்கள் சத்தியாக்கிரகத்திலேயே மரணமடைவீர்கள். அப்பொழுது எங்களைப்போன்ற அப்பாவிகளையும் உங்களுக்குப் பின்னால் இழுத்துக்கொண்டு போவீர்கள் என்றார். இந்தச் சொற்கள்,ஒத்துழையாமையைக் குறித்துக் குமாரி எமிலி ஹாப்ஹவுஸ் எனக்கு எழுதியதை என் நினைவிற்குக் கொண்டு வருகின்றன. சத்தியத்திற்காக என்றாவது ஒரு நாள் நீங்கள் தூக்குமேடைக்குப் போக நேர்ந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். கடவுள் உங்களுக்குச் சரியான வழியைக் காட்டிப் பாதுகாப்பாராக என்று அவர் எழுதினார். தலைமை அதிகாரி நியமிக்கப்பட்டவுடனேயே எனக்கும் சோராப்ஜிக்கும் இடையே மேற்கண்ட பேச்சு நடந்தது. சில தினங்களுக்கெல்லாம் அவருடன் எங்களுக்கிருந்த சம்பந்தம் துண்டித்துப் போய்விடும் கட்டம் ஏற்பட்டது. பதினான்கு நாள் உண்ணாவிரதத்தில் இழந்த பலத்தை நான்இன்னும் பெற்றுவிட வில்லை. எனினும் கவாத்தில் நான் பங்கெடுத்துக் கொண்டதோடு நான் குடியிருந்த இடத்திலிருந்து அதற்கென குறிப்பிட்டிருந்த இடத்திற்கு இரண்டு மைல் தூரம்நடந்தே போவேன். இதனால் நுரையீரலில் புண் ஏற்பட்டு நான் நோய்வாய்ப்பட்டேன். இந்த நிலைமையில் வாரக் கடைசியில் நடக்கும் முகாம்களுக்கும் போகவேண்டியிருந்தது. மற்றவர்கள் அங்கேயே தங்கிவிடுவார்கள்; நான் மட்டும் வீடு திரும்புவேன். இங்கேதான் சத்தியாக்கிரகத்திற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது.

தலைமை அதிகாரி தம்முடைய அதிகாரத்தைக் கண்டபடி எல்லாம் பிரயோகிக்க ஆரம்பித்தார். ராணுவ சம்பந்தமானது, ராணுவ சம்பந்தமில்லாதது ஆகிய எல்லா விஷயங்களிலும் அவரே எங்களுக்குத் தலைவர் என்று நாங்கள் அறிந்து கொள்ளும்படி அவர் செய்ததோடு, தமது அதிகாரம் எப்படி இருக்கும் என்பதையும் எங்களுக்குக் காட்டத் தொடங்கிவிட்டார். உடனே சோராப்ஜி என்னிடம் வந்தார். அந்த அதிகாரியின் எதேச்சாதிகாரத்திற்கு உடன் பட்டுவிட அவர் கொஞ்சங்கூடத் தயாராயில்லை. அவர் சொன்னதாவது: எங்களுக்கு வரும் உத்தரவுகள் எல்லாம் உங்கள் மூலமே வரவேண்டும். நாங்கள் இன்னும் பயிற்சி முகாமிலேயே இருக்கிறோம். இப்பொழுதே எங்களுக்கு எல்லாவித அபத்தமான உத்தரவுகள் எல்லாம் இடப்படுகின்றன. நமக்கும், நமக்கு இடையே சொல்லிக் கொடுப்பதற்கென்று நியமிக்கப்பட்டிருக்கும் அந்த இளைஞர்களுக்கும், எரிச்சலை மூட்டும் பாரபட்சமான வேற்றுமைகளெல்லாம் காட்டப்படுகின்றன. இதைக் குறித்துத்தலைமை அதிகாரி உடன் பேசி ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். இல்லையானால் எங்களால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது. நம் படையில் சேர்ந்திருக்கும் இந்திய மாணவர்களும் மற்றவர்களும், அபத்தமான உத்தரவுகளுக்கெல்லாம் கீழ்படியப் போவதில்லை. சுயமரியாதையை முன்னிட்டு மேற்கொண்டு இருக்கும் ஒரு கடமையில் சுயமரியாதையை இழப்பது என்பதைச் சகித்துக் கொண்டிருக்கவே முடியாது.

தலைமை அதிகாரியிடம் போனேன்.எனக்கு வந்திருக்கும் புகார்களைக் குறித்து அவரிடம் கூறினேன். இப்புகார்களை எழுத்து மூலம் தமக்குத் தெரிவிக்கும்படி அவர் சொன்னார். அதோடு, இப்பொழுது நியமிக்கப்பட்டிருக்கும் படைப் பகுதித் தலைவர்கள் மூலம் புகார்களைத் தெரிவிக்க வேண்டும்.அவர்கள் அவற்றை எனக்கு அறிவிப்பார்கள். இதுதான் புகார்களை அனுப்புவதற்கான சரியான வழி என்பதைப் புகார் கூறுவோர் அறியச் செய்யுங்கள் என்றும் அவர் எனக்குக் கூறினார். இதற்கு நான், எனக்கு அதிகாரம் எதுவும் இருப்பதாக நான் உரிமை கொண்டாடவில்லை. ராணுவ ரீதியில் மற்றவர்களைப் போலவே நானும். ஆயினும், இத்தொண்டர் படையின் தலைவன் என்ற முறையில் அவர்கள் பிரதிநிதியாக நடந்துகொள்ள உத்தியோகச் சார்பற்ற முறையில் நான் அனுமதிக்கப்படுவேன் என்று நம்பி வந்தேன் என்று சொன்னேன். என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட குறைகளையும் கோரிக்கைகளையும் எடுத்துக் கூறினேன். படையைச் சேர்ந்தவர்களின்உணர்ச்சியைச் சிறிதும் மதிக்காமலேயே படைப்பகுதித் தலைவர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களைஎடுத்துவிட்டுத் தலைமை அதிகாரியின்அங்கீகாரத்திற்கு உட்பட்டுப் படையினரே படைப் பிரிவுத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளச் சொல்ல வேண்டும் என்பவையே அந்தக் குறைகளும் கோரிக்கைகளும். இது தலைமை அதிகாரிக்குப் பிடிக்கவில்லை. படையினரே படைப் பகுதித் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுவது என்பது எல்லாவித ராணுவக் கட்டுத் திட்டங்களுக்கும் விரோதமானது என்றார். நியமிக்கப்பட்டுவிட்டவர்களை நீக்கி விட வேண்டும் என்று கேட்பது எல்லாக் கட்டுத் திட்டங்களையும் கவிழ்ப்பதாகும் என்றும் சொன்னார்.

எனவே, நாங்கள் ஒரு கூட்டம் போட்டுப் படையிலிருந்து விலகிக்கொண்டு விடுவது என்று தீர்மானித்தோம். சத்தியாக் கிரகத்தினால் ஏற்படக் கூடிய மோசமான விளைவுகளைக் குறித்து எல்லோருக்கும் எடுத்துக் கூறினேன். ஆயினும் மிகப் பெரும் பகுதியினர் தீர்மானத்தை ஆதரித்தார்கள். இதுவரையில் நியமிக்கப்பட்டிருக்கும் கார்ப்பொரல்களை நீக்காவிடில், தங்கள் சொந்தக் கார்ப்பொரல்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளப் படையினருக்குச் சந்தர்ப்பம் அளிக்காது போனால், இதைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டும் கவாத்துக்களுக்கும், வாரக் கடைசி முகாம்களுக்கும் போகாமல் இருக்கவே நேரும்என்று தீர்மானம் கூறியது. பிறகு, நான் தலைமை அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதினேன். என் யோசனையை நிராகரித்து அவர் எழுதியது எவ்வளவு பெரிய ஏமாற்றத்தை உண்டாக்கிவிட்டது என்பதை அதில் கூறினேன். அதிகாரம் செலுத்த வேண்டும் என்னும் ஆசை எதுவும் எனக்கு இல்லை என்றும், சேவை செய்ய வேண்டும் என்றே நான் மிகுந்த ஆர்வத்துடன்இருப்பதாகவும் அவருக்கு உறுதி கூறினேன். என் யோசனையைப் போல் முன்னால் நடந்தது ஒன்றையும் அவருக்கு எடுத்துக் காட்டினேன். போயர் யுத்தத்தின் போது தென்னாப்பிரிக்க இந்திய வைத்தியப் படையில் உத்தியோக ஸ்தானம் எதையும் நான் வகிக்காதிருந்தாலும், கர்னல் கால்வேக்கும் படைக்கும் எந்த விதமான தகாராறுமே இருந்ததில்லை என்றும், படையினரின் கருத்தைத் தெரிந்து கொள்ளுவதற்காக என்னைக்கலந்து ஆலோசிக்காமல் அக் கர்னல் எதுவுமே செய்ததில்லை என்றும் குறிப்பிட்டேன். முந்திய நாள் மாலையில் நாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தின் பிரதி ஒன்றையும் அக்கடிதத்தோடு அனுப்பினேன்.

அந்த அதிகாரியின் விஷயத்தில் இக்கடிதம் எந்த நல்ல பலனையும் உண்டாக்கவில்லை. கூட்டம் போட்டதும், தீர்மானம் செய்ததும் கட்டுத் திட்டங்களைமீறிய பெருங் குற்றங்கள் என்று அவர் கருதினார். அதன்பேரில் இந்திய மந்திரிக்குஒரு கடிதம் எழுதினேன். எல்லா விவரங்களையும் அவருக்குத் தெரிவித்ததோடு தீர்மானத்தின் பிரதி ஒன்றையும் அனுப்பினேன். அவர் எனக்கு எழுதிய பதிலில், தென்னாப்பிரிக்காவில் நிலைமை வேறு என்றுவிளக்கியிருந்தார். விதிகளின்படி, படைப்பிரிவுத் தலைவர்கள் தலைமை அதிகாரிகளினாலேயே நியமிக்கப்படுகின்றனர் என்பதை என் கவனத்திற்குக் கொண்டு வந்தார். ஆனால், இப்பிரிவுத் தலைவர்களை இனி நியமிக்கும்போது தலைமை அதிகாரி என் சிபாரிசைக் கவனிப்பார் என்றும் எனக்கு உறுதி கூறினார். இதற்குப் பிறகு எங்களுக்கிடையே கடிதப் போக்குவரத்து ஏராளமாக நடந்தது. ஆனால், கசப்பான இக்கதையை நீட்டிக்கொண்டு போக நான் விரும்பவில்லை. இந்தியாவில் தினந்தோறும் நான் அடைந்துவரும் அனுபவத்தை ஒத்ததாகவே அங்கே எனக்கு ஏற்பட்ட அனுபவமும் இருந்தது என்று சொல்லுவதே போதும். மிரட்டல்களினாலும் சாதுர்யத்தினாலும் தலைமை அதிகாரி எங்கள் படையைச் சேர்ந்தவர்களிடையே பிளவைஉண்டாக்கி விட்டார். தீர்மானத்திற்குச் சாதகமாக வோட்டு செய்திருந்தவர்களில் சிலர், தலைமை அதிகாரியின் மிரட்டல்களுக்கு அல்லது வற்புறுத்தல்களுக்கு உடன்பட்டுப்போய்த் தங்கள் வாக்குறுதியையே மீறிவிட்டனர்.

அந்தச் சமயத்தில், எதிர்பாராதவிதமாக காயமடைந்த சிப்பாய்கள் ஏராளமாக நெட்லி வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்குப் பணிவிடை செய்ய எங்கள் படையின் சேவை கோரப்பட்டது. தலைமை அதிகாரியின் வற்புறுத்தலுக்கு உடன்பட்டவர்கள் நெட்லிக்குப் போனார்கள். மற்றவர்கள் போக மறுத்துவிட்டனர். அப்பொழுது நான் படுத்த படுக்கையாக இருந்தேன். என்றாலும், அப்படையைச் சேர்ந்தவர்களுடன்கடிதத் தொடர்பு வைத்துக்கொண்டு இருந்தேன். உதவி இந்திய மந்திரி ஸ்ரீராபர்ட்ஸ், அந்த நாட்களில் பன்முறை என்னைப் பார்க்க வந்து எனக்குக் கௌரவம் அளித்தார். மற்றவர்களையும் சேவை செய்யப் போகுமாறு நான் தூண்ட வேண்டும் என்று வற்புறுத்தினார். அவர் ஒரு யோசனையும் கூறினார். நாங்கள் ஒரு தனிப்படையாக இருக்க வேண்டும் என்றும், நெட்லிவைத்தியசாலையில் இப்படை அங்கிருக்கும் தலைமை அதிகாரிக்கு மாத்திரமே பொறுப்பு வாய்ந்ததாக இருக்கும் என்றும் சொன்னார். அப்படிச் செய்வதால் சுயமரியாதையை இழப்பதென்பதும் இல்லை. அரசாங்கத்தையும் சமாதானப்படுத்தியதாகும்; ஆஸ்பத்திரிக்கு வரும் காயமடைந்த ஏராளமானவர்களுக்கு உதவியான சேவை செய்வதாகவும் ஆகும் என்பதே அவர் கூறிய யோசனை. இந்த யோசனை எனக்கும் என் தோழர்களுக்கும் பிடித்திருந்தது. இதன் பலனாக நெட்லிக்குப் போகாமல் இருந்து விட்டவர்களும் அங்கே சென்றனர். நான் மாத்திரம் போகவில்லை. படுத்த படுக்கையாக இருந்து கொண்டு என்னால் ஆனதைச் செய்து வந்தேன்.


Offline Anu

கோகலேயின் தாராளம்

இங்கிலாந்தில் எனக்கு நுரையீரலுக்குப் பக்கத்தில் ரணமாகி நான் நோயுற்றிருந்ததைக் குறித்துமுன்பே கூறியிருக்கிறேன். சில நாட்களுக்கெல்லாம் கோகலே லண்டனுக்குத் திரும்பிவிட்டார். கால்லென்பாக்கும் நானும் தவறாமல் அவரைப் போய்ப் பார்த்துக்கொண்டிருந்தோம். பெரும்பாலும் யுத்தத்தைக் குறித்தே பேசுவோம். கால்லென்பாக், ஜெர்மனியின் நாட்டு அமைப்பு முழுவதையும் வெகு நன்றாக அறிந்திருந்தாலும் ஐரோப்பாவில் அதிகமாகச் சுற்றுப்பிரயாணம்செய்து இருந்தாலும், யுத்தம் சம்பந்தப்பட்ட பல இடங்களையும் பூகோளப் படத்தில் கோகலேக்குக் காட்டுவது வழக்கம். எனக்கு இந்த நோய் வந்தபிறகு இதைக் குறித்துத் தினந்தோறும் பேசுவோம். எனது உணவுப் பரிசோதனைகள் அப்பொழுதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருந்தன. அப்பொழுது நான் மற்றவைகளுடன் நிலக்கடலை, பழுத்த, பழுக்காத வாழைப்பழங்கள், எலுமிச்சம்பழம், ஆலிவ் எண்ணெய்,தக்காளி, திராட்சைப் பழங்கள் ஆகியவைகளையும் சாப்பிட்டு வந்தேன். பால், தானியங்கள், பருப்பு வகைகள் முதலியவைகளை அடியோடு தள்ளிவிட்டேன். டாக்டர் ஜீவராஜ மேத்தா எனக்கு வைத்தியம் செய்து வந்தார். பாலும் தானியங்களும் சாப்பிடும்படி என்னைஅவர் வற்புறுத்தி வந்தார். ஆனால், அதற்குச் சம்மதிக்கப் பிடிவாதமாக மறுத்து வந்தேன். இவ்விஷயம் கோகலேயின் காதுக்கு எட்டியது. பழ உணவுதான் சிறந்தது என்று நான் கொண்டு இருந்த கொள்கையில் அவருக்கு அவ்வளவாக மதிப்பில்லை. என் தேக நிலைக்குச் சரியானது என்று டாக்டர் என்ன சொல்லுகிறாரோ அதை நான் சாப்பிடவேண்டும் என்றார் கோகலே.

கோகலேயின் வற்புறுத்தலுக்கு நான் இணங்காமல் இருப்பதென்பது எனக்கு அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நான் மறுதலிப்பதை அவர் ஒப்புக்கொள்ளாத போது அவ் விஷயத்தைப் பற்றிச் சிந்திக்க எனக்கு இருபத்துநான்கு மணி நேர அவகாசம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். அன்று மாலை நானும்  கால்லென்பாக்கும் வீடு திரும்பிய போது என் கடமை என்ன என்பதைக் குறித்து விவாதித்தோம்.என்னுடைய சோதனைகளில் அவரும் என்னுடன் ஈடுபட்டு வந்தார்.அதில் அவருக்குப் பிரியமும் இருந்தது. ஆனால்,என் தேக நிலைமைக்கு அவசியம் என்றிருந்தால் உணவுச் சோதனையைக்கைவிடுவது அவருக்கும் சம்மதமே என்பதைக் கண்டேன். ஆகவே, என் அந்தராத்மா இடும் ஆணைக்கு ஏற்ப இதில் எனக்கு நானேமுடிவு செய்து கொள்ள வேண்டியிருந்தது. இரவெல்லாம் இந்த விஷயத்தைக் குறித்தே சிந்தித்தேன். உணவுச் சோதனையைக் கைவிடுவது என்றால் அத்துறையில் எனக்குள்ள கருத்துக்களையெல்லாம் கைவிடவேண்டி வரும். ஆனால், அந்தச் சோதனைகளில் எந்தக் குறைபாடுகளையும் நான் காணவில்லை. இப்பொழுது பிரச்னையெல்லாம், கோகலேயின் அன்பான வற்புறுத்தல்களுக்கு எந்த அளவுக்கு நான் உடன்படுவது; என் தேக நிலையின்நன்மையை முன்னிட்டு என்னுடைய சோதனைகளை எந்த அளவுக்கு மாற்றிக் கொள்ளுவது என்பதே. கடைசியாக இதில் ஒரு முடிவுக்கு வந்தேன்.

முக்கியமாக ஆன்மிகத்தையே நோக்கமாகக் கொண்டு நான் கைக்கொண்ட உணவுச் சோதனைகளை மட்டும் பின்பற்றி வருவது; வேறு நோக்கம் கொண்டதான உணவுச் சோதனைகளை வைத்தியரின் ஆலோசனையின்படி விட்டு விடுவது என்பதே நான் செய்து கொண்ட முடிவு. பால் சாப்பிடுவதை விட்டதற்கு மிக முக்கியமான நோக்கம் ஆன்மிகமானதேயாகும்.பசுக்கள், எருமைகளின் மடிகளிலிருந்து கடைசிச் சொட்டு வரையிலும் பாலைக் கறந்துவிடுவதற்குக் கல்கத்தாவில் மாட்டுக்காரர்கள் அனுசரித்த கொடிய முறைகள் என் மனக் கண்முன் காட்சியளித்தன. மாமிசம் எவ்விதம் மனிதனின் உணவல்லவோ,அதேபோல மிருகங்களின் பாலும் மனிதனின்உணவாக இருப்பதற்கில்லை என்ற ஓர் எண்ணமும் எனக்கு இருந்துவந்தது. ஆகையால், பால் சாப்பிடுவதில்லை என்ற என் தீர்மானத்தில் உறுதியுடன் இருந்துவருவது என்ற முடிவுடனேயே காலையில் படுக்கையிலிருந்து எழுந்தேன். இது என் மனத்திற்கும் அதிகஆறுதலாக இருந்தது. கோகலேயிடம் போவதற்கே எனக்குப் பயமாக இருந்தது. ஆனால், என் தீர்மானத்தை அவர் மதிப்பார் என்று நம்பினேன்.

மாலையில் கால்லென்பாக்கும் நானும் நாஷனல் லிபரல் கிளப்புக்குப் போய்க் கோகலேயைப் பார்த்தோம். அவர் கேட்ட முதல் கேள்வி, டாக்டரின்ஆலோசனையை ஏற்றுக் கொள்வது என்ற தீர்மானத்திற்கு வந்துவிட்டீர்களா? என்பதே. மரியாதையோடு, ஆனால் உறுதியோடு,நான் கூறியதாவது: ஒன்றைத் தவிர மற்றவைகளிலெல்லாம் இணங்கிவிட நான் தயாராக இருக்கிறேன். அந்த ஒன்றைப்பற்றி மாத்திரம் என்னை வற்புறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுகிறேன். பாலையும், பாலிலிருந்து தயாரானவைகளையும், மாமிசத்தையும் மாத்திரம் நான் சாப்பிடமாட்டேன். இவைகளைச் சாப்பிடாததனால் நான் சாக நேருமாயின், அதற்கும் தயாராவது நல்லதே என்று கருதுகிறேன். இதுவே உங்கள் முடிவான தீர்மானமா? என்று கோகலே கேட்டார். வேறுவிதமான முடிவுக்குநான் வருவதற்கில்லை என்றே அஞ்சுகிறேன். என்னுடைய இத்தீர்மானம் தங்களுக்கு மன வருத்தத்தை உண்டாக்கும் என்பதை அறிவேன் அதற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன் என்றேன். கொஞ்சம் மனவருத்தத்துடன், ஆனால் மிகுந்த அன்போடும் கோகலே கூறியதாவது: உங்கள் தீர்மானம் சரி என்று நான் ஒப்புக்கொள்ளுவதற்கில்லை. இதில்ஆன்மிக அவசியம் எதுவும் இருப்பதாகவும் நான் கருதவில்லை. ஆனால், மேற்கொண்டும் நான் உங்களை வற்புறுத்த மாட்டேன்.

இவ்விதம் என்னிடம் கூறிவிட்டு, டாக்டர் ஜீவராஜ மேத்தாவைப் பார்த்து அவர் சொன்னதாவது: தயவுசெய்து இனி அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள். அவர் தமக்கென வகுத்துக்கொண்டிருக்கும் வரம்புக்கு உட்பட்டு அவருக்கு உணவைப்பற்றிய ஏதாவது யோசனை கூறுங்கள். என் தீர்மானத்தைத் தாம் ஒப்புக்கொள்ளுவதற்கில்லை என்றார், டாக்டர். என்றாலும், அவர் வேறு எதுவும் செய்வதற்கில்லை. பச்சைப் பயற்றுச் சூப்பில் கொஞ்சம் பெருங்காயம் போட்டுச்சாப்பிடும்படி அவர் எனக்கு யோசனை கூறினார். இதற்குநான் சம்மதித்தேன். இரண்டொரு நாள் அதைச் சாப்பிட்டேன். ஆனால், எனக்கிருந்த வலி அதிகமாயிற்று. அது எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்பதைக் கண்டதும், திரும்பவும் பழங்களையும் கொட்டைகளையும் சாப்பிட ஆரம்பித்தேன். மேலுக்குச் செய்து வந்த சிகிச்சையை டாக்டர் தொடர்ந்து செய்துவந்தார். இதனால், வலி கொஞ்சம் குறைந்தது. ஆனால், என்னுடைய கட்டுப்பாடுகள் இடையூறாக இருந்தன என்று அவர் எண்ணினார்.இதற்கிடையில் லண்டனில் அக்டோபர் மாத மூடுபனியைச் சகிக்க முடியாததனால் கோகலே தாய்நாட்டுக்குத் திரும்பினார்.


Offline Anu

நோய்க்குச் சிகிச்சை

நுரையீரலுக்கு அருகில் இருந்த ரணத்தினால் ஏற்பட்ட என் நோய், குணமாகாமல் இருந்துவந்தது,கொஞ்சம் கவலையை அளித்தது. ஆனால், உள்ளுக்கு மருந்து சாப்பிடுவதனால் இது குணமாவதில்லை என்பதையும் உணவில் செய்து கொள்ளும் மாறுதல்களினாலும் வெளி பரிகாரங்களினாலும் குணமாகும் என்பதையும் அறிவேன். டாக்டர் அல்லின்ஸன் பிரபலமான சைவ உணவுவாதி. அவரை அழைத்து வரச் செய்தேன். அவர் உணவு மாறுதல்களின் மூலமே பல நோய்களுக்குச் சிகிச்சை செய்துவந்தார். 1890-ஆம்ஆண்டிலும் அவரைச் சந்தித்திருக்கிறேன். அவர் என்னை முற்றும் பரிசோதனை செய்து பார்த்தார். பால் சாப்பிடுவதே இல்லை என்று நான் விரதம் எடுத்துக் கொண்டிருப்பதுபற்றியும் அவரிடம் சொன்னேன். அவர் என்னை உற்சாகப்படுத்திவிட்டுச் சொன்னதாவது: நீங்கள் பால் சாப்பிடவேண்டியதே இல்லை. உண்மையில், சில நாட்களுக்கு நீங்கள் கொழுப்புச் சத்து எதையுமே சாப்பிடக் கூடாது என்றே நான் விரும்புகிறேன். சாதாரணப் பழுப்புரொட்டி, பீட்ரூட், முள்ளங்கி, வெங்காயம், மற்றும் கிழங்குகள் போன்றவற்றைப் பச்சையாகவும், கீரைகளையும், பழங்களையும் முக்கியமாக ஆரஞ்சுப் பழங்களையும் சாப்பிட்டு வருமாறு அவர் எனக்கு யோசனை கூறினார். கறிகாய்களைச் சமைக்கக் கூடாது; அப்படியே பச்சையாக மென்று தின்ன என்னால் முடியாவிட்டால் நுட்பமாகத் திருகி வைத்துக்கொண்டு சாப்பிடச் சொன்னார்.

இதன்படி மூன்று நாட்கள் சாப்பிட்டேன். ஆனால், பச்சைக் காய்கறிகள் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இந்தப் பரீட்சையை முற்றும் அனுசரித்துப் பார்க்கும் வகையில் என் உடல்நிலை இல்லை. பச்சைக் கறிகாய்களைச் சாப்பிடுவதற்கு எனக்குப் பயமாகவே இருந்தது. அதோடு, என் அறையின் சன்னல்களையெல்லாம் எப்பொழுதும் திறந்தே வைத்திருக்கும்படியும்,வெதுவெதுப்பான நீரில் குளிக்குமாறும், நோயுள்ள பகுதிகளில் எண்ணெய் தடவித்தேய்க்கும் படியும், பதினைந்து நிமிடங்களிலிருந்து முப்பது நிமிட நேரம் வரை திறந்த வெளியில் நடக்கு மாறும் டாக்டர் அல்லின்ஸன் எனக்குக் கூறினார். என் அறையின் சன்னல்கள், பிரெஞ்சு முறையிலானவை. ஆகவே, முழுவதும் திறந்து வைத்துவிட்டால்மழை நீரெல்லாம் உள்ளே வந்துவிடும். விசிறி போன்றிருந்த சன்னல் கதவைத் திறக்கவே முடியவில்லை. ஆகவே, நல்ல காற்று உள்ளே வரட்டும் என்பதற்காக அதன் கண்ணாடிகளை உடைத்துவிட்டேன். மழை நீர் உள்ளேவராத வகையில் ஒருவாறு சன்னலையும் திறந்து வைத்தேன். இந்த முறைகள் எல்லாம் ஓரளவுக்குஎன் தேக நிலையில் அபிவிருத்தியை அளித்தன. என்றாலும், பூரணமாகக் குணமாகிவிடவில்லை. அச்சமயம் லேடி செஸிலியா எப்பொழுதாவது என்னைப் பார்க்க வருவதுண்டு.

நாங்கள் நண்பர்களானோம். நான் பால் சாப்பிடும்படி செய்துவிட வேண்டும் என்று அவர் மிகவும் முயன்றார். ஆனால், நான் பிடிவாதமாக மறுத்து விடவே பாலுக்குப் பதிலாகச் சாப்பிடக்கூடிய ஒன்றைத் தேடிப் பிடிப்பதற்காக அலைந்தார். பாலும் தானியச் சத்தும் கலந்ததான மால்ட்டட் மில்க் சாப்பிடலாம் என்று யாரோ ஒரு நண்பர் அவருக்குக் கூறினார். அதில்பால் கலப்பே கிடையாது என்றும், பால் சத்து இருக்கும் வகையில் ரசாயன முறையில் அது தயாரிக்கப் பட்டது என்றும், உண்மையை அறியாமலேயே அந்த நண்பர் அவருக்கு உறுதி கூறிவிட்டார். லேடி செஸிலியா, என்னுடைய சமயக் கொள்கை சம்பந்தமான நம்பிக்கைகளை மதித்து நடப்பவர் என்பதை அறிவேன். ஆகவே, அவர் சொன்னதை அப்படியே நம்பிவிட்டேன். அந்தப் பொடியை நீரில் கலந்து சாப்பிட்டேன். அதன் சுவை பாலின் சுவை போன்றே இருக்கக் கண்டேன். பிறகு புட்டியின் மீது ஒட்டியிருந்த சீட்டில் எழுதியிருந்ததைப் படித்துப் பார்த்தேன். பாலிலிருந்து தயாரிக்கப் படுவதே அது என்பதை அறிந்தேன். சாப்பிட்ட பிறகுதான் இதெல்லாம் தெரிந்தது. ஆகவே, அதைச் சாப்பிடுவதை விட்டு விட்டேன்.

நான் கண்டுபிடித்துவிட்டதைக் குறித்து லேடி செஸிலியாவுக்கு அறிவித்து அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டேன். அவரோ, தமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்ள விரைந்தோடி வந்தார். அவருக்குச் சொன்ன நண்பர், புட்டிமீது ஒட்டியிருந்த சீட்டைப் படித்துப் பார்க்கவே இல்லை. இதைக் குறித்து கவலைப்படவே வேண்டாம் என்று அவரை மிகவும் வேண்டிக் கொண்டேன். எவ்வளவோ சிரமப் பட்டுத் தேடிக்கொண்டு வந்தவைகளை நான் பயன்படுத்திக் கொள்ள முடியாமைக்கு என் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டேன். தெரியாததனால் தவறாகப் பால் சாப்பிட்டு விட்டதற்காக, குற்றம்செய்து விட்டதாக எண்ணி நான் வருத்தப் படவில்லை என்றும் அவருக்கு உறுதி கூறினேன். லேடி செஸிலியாவுடன் ஏற்பட்ட தொடர்பைப் பற்றிய மற்றும் பல இனிய ஞாபகங்களெல்லாம் உண்டு. அவற்றையெல்லாம் கூறாமல் மேலே செல்ல வேண்டியவன் ஆகிறேன். எத்தனையோ சோதனைகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் இடையே எனக்குப் பெரும் ஆறுதல் அளிப்பவர்கள் ஆக இருந்து வந்த அநேக நண்பர்களைப் பற்றி நான்எண்ணிப் பார்க்க முடியும். இவ்விதம் கடவுள், துயரங்களையும்இன்பமானவைகளாக்கி விடுகிறார். இதில் நம்பிக்கையுள்ளவர்கள், கருணைக் கடலான கடவுளின் அந்த அருளையே அந்நண்பர்களிடமும் காண்பார்கள்.

டாக்டர் அல்லின்ஸன் அடுத்த முறை என்னைப் பார்க்க வந்த போது, ஆகாரத்தில்எனக்கு விதித்திருந்தகட்டுத் திட்டங்களைத் தளர்த்தி விட்டார். கொழுப்புச்சத்துக்காக நிலக்கடலை, வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொள்ளும் படியும், கறிகாய்களைச் சமைத்து, நான் விரும்பினால் அரிசிச் சாதத்துடன் சாப்பிடுமாறும் கூறினார். இந்த மாறுதல்கள் எனக்குப் பிடித்தன. ஆனால், இவைகளினாலும் பூரண குணம் ஏற்படவில்லை. அதிக ஜாக்கிரதையான பணிவிடை அவசியமாகவே இருந்தது. பெரும்பாலும் நான் படுக்கையிலேயே இருக்க வேண்டியிருந்தது. என்னைப் பரிசோதித்துப் பார்ப்பதற்காக டாக்டர் மேத்தா அவ்வப்போது வருவதுண்டு. தாம் சொல்லுகிறபடி கேட்பதாய் இருந்தால், என் நோயைக் குணப்படுத்திவிடுவதாக அவர் எப்பொழுதும் சொல்லி வந்தார். நிலைமை இவ்வாறு இருந்து வரும்போது ஒருநாள், ஸ்ரீராபர்ட்ஸ் என்னைப் பார்க்க வந்தார். தாய் நாட்டுக்குத் திரும்பி விடுமாறு அவர் வற்புறுத்திச் சொன்னார். இந்த நிலைமையில் நீங்கள் நெட்லிக்குப் போவதுசாத்தியமே இல்லை. இனி வரப்போவது கடுமையான குளிர்காலம். இந்தியாவில் தான் நீங்கள் பூரணமாகக் குணமடைய முடியுமாகையால் அங்கே நீங்கள் போய்விட வேண்டும் என்று உங்களுக்குக் கண்டிப்பாகக் கூறுகிறேன்.அங்கே நீங்கள் குணமடைந்த பிறகு அப்பொழுதும் யுத்தம் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தால், நீங்கள் உதவி செய்ய அங்கே அநேக வாய்ப்புகள் இருக்கின்றன. இப்பொழுதுகூட, நீங்கள் இது வரை செய்து இருப்பது எந்த விதத்திலும் அற்பமானது என்று நான் கருத வில்லை. அவருடைய யோசனையை ஏற்றுக்கொண்டேன். இந்தியாவுக்குத் திரும்புவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யலானேன்.


Offline Anu

தாய்நாடு நோக்கி

இந்தியாவுக்குப் போவதற்காக ஸ்ரீகால்லென்பாக் என்னுடன் இங்கிலாந்துக்கு வந்தார். இருவரும் ஒன்றாகவே வசித்து வந்தோம். ஒரே கப்பலிலேயே புறப்படவும் விரும்பினோம். அப்பொழுது ஜெர்மானியர் மீது கண்காணிப்புக் கடுமையாக இருந்து வந்தது. ஆகையால், ஸ்ரீகால்லென்பாக்குக்குப் பிரயாண அனுமதிச் சீட்டுக் கொடுப்பதற்கு ஸ்ரீராபர்ட்ஸ் ஆதரவாக இருந்தார். இதைக் குறித்து வைசிராய்க்கும் அவர் தந்தி கொடுத்தார். வருந்துகிறோம். அத்தகைய அபாயம் எதற்கும் உட்பட இந்திய அரசாங்கம் தயாராயில்லை என்று லார்டு ஹார்டிஞ்சிடமிருந்து நேரடியான பதில் வந்துவிட்டது. அந்தப் பதிலில் அடங்கியிருந்த நியாயத்தை நாங்கள் எல்லோரும் உணர்ந்து கொண்டோம். ஸ்ரீகால்லென்பாக்கை விட்டுப் பிரிவது எனக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. அவருக்கு இருந்த துயரம் இன்னும் அதிகம் என்பதைக் கண்டேன். அவர் இந்தியாவுக்கு வர முடிந்திருந்தால், அவர் இன்று ஒரு குடியானவனாகவும், நெசவாளியாகவும் இன்பமான எளிய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பார். இப்பொழுது அவர் தென்னாப்பிரிக்காவில் இருக்கிறார். அவர் பழைய வாழ்க்கையை நடத்திக்கொண்டு கட்டிடச் சிற்பியாக நல்ல வருமானத்துடன் தொழில் நடத்தி வருகிறார். கப்பலில் மூன்றாம் வகுப்பில்பிரயாணம் செய்யவே விரும்பினோம். ஆனால், பி. அண்டு ஓ. கம்பெனிக் கப்பல்களில் மூன்றாம் வகுப்பு இல்லாததால் இரண்டாம் வகுப்பில் சென்றோம். தென்னாப்பிரிக்காவிலிருந்து நாங்கள் கொண்டு வந்திருந்த உலர்ந்த பழங்களை உடன்கொண்டு போனோம். இவை கப்பலில் கிடைக்கமாட்டா. ஆனால், புதுப் பழங்கள் தாராளமாகக் கிடைக்கும்.

என் விலா எலும்புகளுக்கு டாக்டர் ஜீவராஜ மேத்தா,மெடேஸ் பிளாஸ்திரி போட்டுக் கட்டி விட்டதோடு செங்கடல் போகும் வரையில் அதை நீக்கக் கூடாது என்றும் சொன்னார். இதனால் உண்டான தொல்லையை இரண்டு நாள் சகித்துக் கொண்டுவிட்டேன். அதற்கு மேல் என்னால் சகிக்க முடியவில்லை. அதிகச் சிரமப்பட்டே அந்த பிளாஸ்திரியை அவிழ்க்க என்னால் முடிந்தது. அதன் பிறகு உடம்பைச் சுத்தம் செய்து கொள்ளவும் குளிக்கவும், மீண்டும் சுதந்திரம் பெற்றேன். பெரும்பாலும் பழங்களையும் கொட்டைப் பருப்புகளையுமே சாப்பிட்டு வந்தேன். நாளுக்கு நாள் குணம் அடைந்து வருவதாக உணர்ந்தேன். சூயஸ் கால்வாய்க்குள்பிரவேசித்த போது, அதிக தூரம் குணமடைந்து விட்டதாக எனக்குத் தோன்றிற்று. நான் பலவீனமாகவே இருந்தேனாயினும் ஆபத்தைக் கடந்துவிட்டதாக எண்ணினேன்.என் தேகாப்பியாசத்தையும் நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டு வந்தேன். நடுத்தரமான வெப்பமுள்ள பிரதேசத்தின் சுத்தமான காற்றே என் தேக நிலையில் ஏற்பட்ட அபிவிருத்திக்குக் காரணம் என்று கருதினேன். கப்பலிலிருந்து இந்தியப்பிரயாணிகளும் ஆங்கிலப் பிரயாணிகளும் நெருங்கிப் பழகாமல் தொலைவாகவே இருந்து வந்ததைக் கவனித்தேன். தென்னாப்பிரிக்காவிலிருந்து நான் கப்பலில் சென்ற சமயங்களில் கூட, இப்படி இருந்ததாக நான் கண்டதில்லை. எனக்கு இவ்விதம் தோன்றியது முந்திய அனுபவங்களினாலா, வேறு காரணத்தினாலா என்பது எனக்குத் தெரியாது. சில ஆங்கிலேயருடன் நான் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால், அது வெறும் சம்பிரதாயப்பேச்சே. தென்னாப்பிரிக்கக் கப்பல்களில் சென்றபோது இருந்ததைப் போன்ற அன்னியோன்யமான சம்பாஷணைகளே இந்தத் தடவை இல்லை. இதற்கு ஒன்று காரணமாக இருக்கக் கூடும் என்று நான் எண்ணுகிறேன். தாங்கள் ஆளும் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணம், அறிந்தோ அறியாமலேயோ, ஆங்கிலேயரின் உள்ளத்திற்குள் இருந்திருக்கக் கூடும். அடிமைப்பட்ட இனத்தினர் தாங்கள் என்ற எண்ணம் இந்தியரின்உள்ளத்திற்குள்ளும் இருந்து இருக்கலாம். இத்தகைய சூழ்நிலையிலிருந்து விடுபட்டு வீடு போய்ச் சேர்ந்து விடவேண்டும் என்று நான் அதிக ஆர்வத்துடனிருந்தேன்.

ஏடன் சேர்ந்ததுமே தாய்நாட்டுக்கு வந்துவிட்டதைப் போன்ற உணர்ச்சி எங்களுக்கு உண்டாயிற்று.ஸ்ரீகெகோபாத் காவாஸ்ஜி தின்ஷா, ஏடனைச் சேர்ந்தவர். அவரை டர்பனில் சந்தித்திருக்கிறோம். அவருடனும் அவர் மனைவியோடும் நெருங்கிப் பழகியும் இருக்கிறோம். ஆகையால், ஏடன்வாசிகளைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். சில தினங்களுக்கெல்லாம்பம்பாய் வந்தடைந்தோம். பத்து ஆண்டுகள் பிற நாடுகளில் இருந்துவிட்ட பின்பு தாய் நாட்டிற்குத் திரும்பியது பெரிய ஆனந்தமளித்தது. கோகலேயினுடைய யோசனையின் பேரில் பம்பாயில் எனக்கு வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தார்கள். தமது தேக நிலை சரியாக இல்லாதிருந்தும் கோகலேயும் பம்பாய்க்கு வந்திருந்தார். அவரோடு நான் ஐக்கியமாகி விடுவதன்மூலம் கவலையற்றிருக்கலாம் என்ற திடமான நம்பிக்கையுடனேயே நான் இந்தியாவுக்கு வந்தேன். ஆனால், விதியோ முற்றும் வேறுவிதமாக இருந்துவிட்டது.


Offline Anu

வக்கீல் தொழில் பற்றிய நினைவுகள்

இந்தியாவில் என் வாழ்க்கை எந்தப் போக்கில் போயிற்று  என்பதைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கும் முன்பு, இதுவரையில் வேண்டுமென்றே நான் கூறாமல் இருந்துவந்திருக்கும் தென் ஆப்பிரிக்கா பற்றிய மற்றும் சில செய்திகளை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். வக்கீல் தொழிலைப் பற்றிய என் நினைவுகளைக் கூறுமாறு சில வக்கீல் நண்பர்கள் கேட்கிறார்கள்.அத்தகைய நினைவுகள் ஏராளமானவை. அவைகளையெல்லாம் சொல்லுவதானால் அதுவே ஒரு புத்தகமாகிவிடும். அது என் நோக்கத்திற்கும் மாறானது. ஆனால், அவைகளில் உண்மையைக் கடைபிடிப்பது சம்பந்தமான சில நினைவுகளை மாத்திரம் கூறுவது தவறாக இல்லாமலும் இருக்கக்கூடும். எனக்கு நினைவிருக்கும் வரையில், எனது வக்கீல் தொழிலில் பொய்யை அனுசரித்ததே இல்லை என்று முன்பே சொல்லியிருக்கிறேன். நான் நடத்தியவழக்குகளில் பெரும் பகுதி பொதுஜன நன்மைக்காக நடத்தப்பட்டது. என் கையை விட்டுச் செலவு செய்த பணத்திற்கு அதிகமாக அந்த வழக்குகளுக்கு நான்
பணம் வாங்குவதே இல்லை. அவற்றில்கூட சில சமயங்களில் என் சொந்தப் பணத்தையும் செலவு செய்தது உண்டு.இதை முன்பே சொல்லிவிட்டதன் மூலம், என் வக்கீல் தொழிலைக் குறித்துச் சொல்லுவதற்கு அவசியமானவைகளையெல்லாம் நான் சொல்லி விட்டதாகவே எண்ணினேன். இன்னும் அதிகமாகச் சொல்ல வேண்டும் என்று நண்பர்கள் விரும்புகின்றனர். வக்கீல் தொழிலில் சத்தியத்தினின்றும் தவறிவிட மறுத்து நான் உறுதியுடனிருந்த சந்தர்ப்பங்களில் சிலவற்றைக் குறித்துச் சிறிதளவேனும் நான் விவரித்துச் சொன்னால் வக்கீல் தொழிலில் ஈடுபட்டிருப்போர் அதனால் பயனடையக் கூடும் என்று அந்த நண்பர்கள் நினைக்கிறார்கள் என்று தெரிகிறது. வக்கீல் தொழில் பொய்யர்களின் தொழில் என்று சொல்லப்பட்டதை நான் மாணவனாக இருந்தபோது கேட்டிருக்கிறேன்.

பொய்சொல்லிப் பணத்தையோ, அந்தஸ்தையோ சம்பாதித்துக் கொண்டுவிட வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லாததனால், அதெல்லாம் என் மனத்தை மாற்றி விடவே இல்லை. தென்னாப்பிரிக்காவில் என் கொள்கைகள் பன்முறைகளிலும் சோதனைக்கு உள்ளானது உண்டு. என்எதிர்க் கட்சிக்காரர்கள், சாட்சிகளுக்குச்சொல்லிக்கொடுத்துத் தயார் செய்திருக்கிறார்கள் என்பதைப் பல தடவைகளிலும் நான் அறிந்திருக்கிறேன். என் கட்சிக்காரரையோ, அவருடைய சாட்சிகளையோபொய் சொல்ல மாத்திரம் நான் உற்சாகப் படுத்தியிருந்தால், நாங்கள் சில வழக்குகளில் வெற்றி பெற்று இருப்போம். ஆனால், அத்தகைய ஆசையை நான்எப்பொழுதும் எதிர்த்தே வந்திருக்கிறேன். ஒரு வழக்கில் வெற்றி பெற்றுவிட்ட பிறகுஎன் கட்சிக்காரர் என்னை ஏமாற்றி விட்டார் என்று நான் சந்தேகித்த ஒரே ஒரு சம்பவம் எனக்கு ஞாபகம் இருக்கிறது. என் கட்சிக்காரரின் வழக்கில் நியாயமிருந்தால்தான் அதில் வெற்றிகிடைக்க வேண்டும் என்று என் உள்ளத்திற்குள் எப்பொழுதும் விரும்பி வந்தேன். வழக்குக்கு என் கட்டணத்தை நிர்ணயிப்பதில்கூட, அதில் வெற்றிபெற்றால் இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று நான் நிபந்தனை போட்டதாகவும் எனக்கு நினைவில்லை. கட்சிக்காரர் வெற்றி பெற்றாலும் தோற்றாலும், என் கட்டணத்திற்கு அதிகமாகவோ, குறைவாகவோ எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை.

பொய் வழக்கை நடத்துவோன் என்றோ, சாட்சிகளுக்குச் சொல்லிக்கொடுத்துத் தயார் செய்வோன் என்றோ என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்று புதிதாக வரும் கட்சிக்காரரிடம் ஆரம்பத்திலேயே கூறிவிடுவேன். இதன் பலனாக, எனக்கு ஒரு பெயர் ஏற்பட்டு என்னிடம்பொய் வழக்கே வருவதில்லை. என்னுடைய கட்சிக்காரர்களில் சிலர், பொய்க் கலப்பில்லாத வழக்குகளை மாத்திரம் என்னிடம் கொண்டு வந்து, சந்தேகத்திற்கு இடமுள்ளதான வழக்குகளுக்கு வேறு வக்கீல்களை அமர்த்திக் கொள்ளுவார்கள். ஒரு வழக்கு மிகவும் கடுமையான சோதனையாகிவிட்டது. என்னுடைய கட்சிக்காரர்களில் மிகச் சிறந்தவரானஒருவருடைய வழக்கு அது; அதிகச் சிக்கலான கணக்குவழக்குகளைப் பற்றிய நடவடிக்கை அது; நீண்ட காலம் நடந்து வந்தது. பல கோர்ட்டுகளும் அவ்வழக்கைக் கொஞ்சம் கொஞ்சம்விசாரித்திருந்தன. முடிவாக அவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கணக்குத் தகராறுகளைத் தகுதி வாய்ந்த கணக்கர்களின் மத்தியஸ்தத்திற்குக் கோர்ட்டு விட்டு விட்டது. இந்த மத்தியஸ்தர்களின் முடிவு என் கட்சிக்காரருக்குச் சாதகம் ஆயிற்று. ஆனால், மத்தியஸ்தர்கள் கூட்டிப் போட்டதில் அறியாமலேயே ஒரு தவறைச் செய்து விட்டார்கள். தவறு சிறியதேயாயினும், பற்று வைக்க வேண்டிய தொகை வரவாக வைக்கப்பட்டு விட்டதால் அது முக்கியமான தவறேயாயிற்று. இத்தீர்ப்பை,எதிர்த்தரப்பினர் இக்காரணத்திற்காக ஆட்சேபிக்காமல் வேறு காரணங்களைக் கூறி ஆட்சேபித்தார்கள். இவ்வழக்கில்என் கட்சிக்காரருடைய பெரிய வக்கீலின் கீழ் நான் உதவி வக்கீலாகவே இருந்தேன். நடந்து இருந்த தவறைப் பெரிய வக்கீல் அறிந்ததும், அதை ஒப்புக் கொள்ள எங்கள் கட்சிக்காரர் கடமைப் பட்டவரல்ல என்று கூறினார். தம் கட்சிக்காரருக்கு விரோதமான எதையும் ஏற்றுக்கொண்டுவிடும் கடமை எந்த வக்கீலுக்கும் இல்லை என்பது அவருடைய தெளிவான அபிப்பிராயம். நானோ, தவறை ஏற்றுக் கொண்டுவிட வேண்டும் என்றேன்.

ஆனால், பெரிய வக்கீல் பின்வருமாறு விவாதித்தார்: தவறு நடந்திருப்பதாக நாம் ஏற்றுக்கொண்டால், மத்தியஸ்தர்களின் தீர்ப்பு முழுவதையுமே கோர்ட்டு ரத்து செய்துவிடக்கூடும். சித்த சுவாதீனமுள்ள எந்த வக்கீலும் தம் கட்சிக்காரனின் வழக்குக்கு அந்த அளவுக்கு ஆபத்தை உண்டாக்கிவிட மாட்டார். எப்படியானாலும் சரி, அத்தகைய அபாயத்திற்கு நான் உடன் படவே மாட்டேன். திரும்பவும் புதிதாக விசாரிக்கும்படி வழக்கு அனுப்பப்பட்டு விட்டால் நம் கட்சிக்காரருக்கு எவ்வளவு பணம் செலவாகும், முடிவு என்னவாகும் என்று யார்தான் சொல்ல முடியும்? இவ்விதம் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது கட்சிக்காரரும் அங்கிருந்தார். நான் கூறியதாவது: இதில் ஆபத்திருந்தாலும் அதற்கு நாமும் நமது கட்சிக்காரரும் உடன்பட வேண்டியதே என்றுதான் நான் கருதுகிறேன்.நடந்திருக்கும் ஒரு தவறை நாம் ஏற்றுக்கொள்ளாததனாலேயே தவறானதோர் தீர்ப்பைக்கோர்ட்டு அங்கீகரித்து விடும் என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது? நாம் தவறை ஏற்றுக் கொள்ளுவதால் நம் கட்சிக்காரருக்குக் கஷ்டமே ஏற்படுவதாக இருந்தாலும் அதனால் என்ன தீங்கு நேர்ந்துவிடும்? ஆனால் நாமாகப் போய் ஏன் அதிலிருக்கும் தவறை ஏற்றுக் கொள்ள வேண்டும்? என்று கேட்டார், பெரிய வக்கீல். அத்தவறைக் கோர்ட்டு கண்டு பிடித்துவிடாது, எதிர்த் தரப்பினரும் கண்டுகொண்டுவிட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? என்றேன், நான்.

ஆனால், இந்த வழக்கின் மீது கோர்ட்டில் விவாதிக்க நீங்கள் தயாரா? நீங்கள் கூறுகிற வகையில் அந்த வழக்கில் விவாதிக்க நான் தயாராயில்லை என்று தீர்மானமாகப் பதில் சொன்னார் பெரிய வக்கீல். இதற்கு நான் பணிவுடன் பின்வருமாறு பதில் சொன்னேன்: நீங்கள் விவாதிக்கவில்லையானால், நம் கட்சிக்காரர் விரும்பினால், நான் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். தவறை ஏற்றுக்கொள்ளாவிட்டால் இந்த வழக்கில் நான் எந்தவித சம்பந்தமும் வைத்துக் கொள்ளப் போவதில்லை. இவ்விதம் கூறிவிட்டு என் கட்சிக்காரரைப் பார்த்தேன். அவர் நிலைமை கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது. ஆரம்பத்திலிருந்தே நான் இந்த வழக்கை நடத்திவருகிறேன். கட்சிக்காரருக்கு என் மீது பூரண நம்பிக்கை உண்டு. என்னை அவர் மிக நன்றாக அறிவார். அவர் சொன்னார்: அப்படியானால் சரி,வழக்கில் கோர்ட்டில் நீங்கள் விவாதியுங்கள். தவறையும் ஏற்றுக்கொள்ளுங்கள். அதுதான் நம் கதி என்றால் இதில் தோற்றுப் போனாலும் போகட்டும். நியாயத்தைக் கடவுள் பாதுகாப்பார். நான் ஆனந்தமடைந்தேன். இந்தப் பெருங் குணத்தைத் தவிர வேறு எதையும் என் கட்சிக்காரரிடம் நான் எதிர்பார்க்கவில்லை. பெரிய வக்கீல் என்னை மீண்டும் எச்சரிக்கை செய்தார். என் பிடிவாதத்தைக் கண்டு பரிதாபப்பட்டார். ஆனால், அதே சமயத்தில் எனக்கு வாழ்த்தும் கூறினார். கோர்ட்டில் என்ன நடந்தது என்பதை அடுத்த அத்தியாயத்தில் கவனிப்போம்
.