தமிழ்ப் பூங்கா > நாவல்கள்

~ரங்கநாயகியின் காதல ~

<< < (2/3) > >>

MysteRy:
ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 6




தம்பன் கோட்டை
தம்பன் கோட்டை வரலாறும் சுவாரசியமானது. அறியப்பட வேண்டியது........

தூர்ந்த அகழியில் பிரம்பும் நாணலும் புதராகிப் போயுள்ளன. காடாகிப் போய்விட்ட மேட்டு நிலம் இன்றும் கோட்டை என்றே அழைக்கப்படுகின்றது.
இனி...
தொன்மைமிக்க தமிழ்பட்டணத்தில் கலிங்க விஐயபாகு கட்டிய கோட்டையில் நிறுத்தப்பட்டிருந்த படைகளுக்கு மலையாள வீரனான தம்பன் தளபதியாக இருந்து கிழக்கிலிருந்து வந்த படைகளை முறியடித்து மன்னனின் நோக்கத்தை நிறைவேற்றினார்.

அவனது வீரத்திற்கு அடையாளமாகத் தம்பன் கோட்டை என்று அழைக்கப்பட்ட கோட்டைமீது அந்த இராப்பொழுதில் குமரன் வானை அண்ணாந்து பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். நிர்மலமான வானில் விண்மீன்கள் கண்சிமிட்டி அவனுக்கு உற்சாகம் ஊட்டின. கோட்டைச்சுவரில் சொருகியிருந்த பந்தங்களின் வெளிச்சம் அவன் முகத்தில் விழுந்து அவனது கம்பீரத்தை கூட்டிக்காட்டின.

என்னால் தளபதி தம்பன்போல இந்தக் கோட்டையைக் கட்டிக்காக்க முடியுமா? புகழ்பெற்ற அவர் எங்கே... நான் எங்கே...?

அவன் தன்பார்வையை கோட்டைச் சுவர்கள் மீது ஓடவிட்டான். என்னால் முடியுமென்றபடியால்தானே மன்னர் என்னை இங்கு அனுப்பியிருக்கின்றார்?.... சந்தர்ப்பம் வரும்போது திறமையைக் காட்டவேண்டியதுதான்.....ஆனாலும் கேள்விப்படுகின்றதைப் பார்த்தால் கிழக்கிலிருந்து இந்த ஜென்மத்திற்கே மோதல் வராது போலிருக்கிறதே.... தம்பன் தளபதி கிழக்கு எதிரிகளின் முது கெலும்பை உடைத்துவிட்டார் என்றல்லவா கூறுகின்றார்கள்.

உண்மையில் அவர் பெரும் வீரர்தான்... அவரது ஆற்றலுக்கு முன் நான் ஒரு பொருட்டே அல்ல. அவனது சிந்தனை நீண்டு கொண்டே போனது. இத்தனை பெருமைக்குரிய தளபதி நோய்வாய்ப்பட்டார் என்ற செய்தி எல்லோருக்கும் பெருந்துயரத்தை கொடுக்கவே செய்தது.

தம்பன் தளபதி நோய்க்காளானபோது அரச மருத்துவர்கள் அவருக்கு ஓய்வும், சிறந்த மருத்துவ வசதிகளும் தேவை என்றபடியால், அவர் தாயகம் திரும்புவதே சாலவும் சிறந்தது என்று கடுமையான ஆலோசனைகளைக் கூறியிருந்தார்கள். மன்னனும் அப்படிச் செய்வது தனது கடமையென்று தளபதியை தாயகம் அனுப்பிவைத்தார். முதலில் கோட்டையை விட்டு வெளியேற ஒப்புக்கொள்ள மறுத்த தளபதி தம்பன், தனக்குப் பிறகு தளபதியாக நியமிக்கப்படுவது யாரென்று அறிந்தபிறகுதான் தாயகம் திரும்ப சம்மதித்தார். தனது சிபாரிசை மன்னர் ஏற்றதையிட்டு அவர் சந்தோஷப்பட்டார்.
உதயகுமரன் சக்கரவர்த்தியின் ராணியின் மூத்தசகோதரி ரத்தினாவதிதேவியின் மகன், போரில் ஆற்றல் மிக்கவன், இளைஞன், நல்லபுத்திசாலி, திறமைசாலி, அவனை விட்டால் தளபதி தம்பனின் இடத்திற்கு வேறு பொருத்தமானவன் கிடைக்கமாட்டான் என்ற உறுதி மன்னனுக்கு இருந்தது.
புதிய தளபதியாக வந்து பொறுப்புக்களைப் பாரம் எடுத்து இரண்டு மூன்று நாட்களில் ஊரை அறிந்துகொள்ள அவன் புரவிப்பயணத்தை மாலை வேளைகளில் மேற்கொள்ள தலைப்பட்டான். இப்படியான ஒரு பயணத்தில்தான் அவன் ரங்கநாயகியை ஆற்றுமணலில் ராகம் பாடிக்கொண்டிருந்த நிலையில் சந்தித்தான்.


அவளது நினைப்பு மனதில் பட்டதுமே அவனைச் சுற்றியிருந்த அனைத்தும் அந்தக் கோட்டை, அதன்பொறுப்பு காவல்நின்ற வீரர்கள், முறைக்காவல் அழைப்பொலிகள் எல்லாமே மறந்துபோயின. இதை அவன் உணர்ந்து கொள்ளாமலில்லை மெல்லச்சிரித்துவிட்டு தலையை அசைத்தவன் ரங்கநாயகியின் நினைப்பில் மூழ்கிப்போனான்.



அவளது குரலில்தான் எத்தனை இனிமை. அவள் வாயினின்று புறப்படும் இனிமையான ராக ஆலாபனை உயர்ந்ததா? இல்லை அளவெடுத்து கடைந்தெடுத்தது போன்ற அவயவங்கள் கொண்ட வனப்புமிக்க அவளது சௌந்தர்ய உடழழகு சிறந்ததா? தாமரை மொட்டு முகத்தில் வெட்டிச் செல்லும் வண்டுகள் போன்ற அந்தக் கண்கள், அவளிடம் உள்ள ஆற்றல், அழகு என்ற இரண்டு மேன்மைகளுமே அவனைப் பெரிதும் கவர்ந்தன.

அவனுக்குத் தெரியும், அவன் அவளுக்கு அடிமையாகிவிட்டான். ஆற்றல் மிக்க வீரன் ஒரு சாதாரண பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்து விட்டான்! அவள் எனக்கு மனைவியாவாளா? அப்படி அவள்கிடைத்து விட்டால் என்னைப்போல பாக்கியசாலி யாரும் இருக்க முடியாது?
தனக்குத்தானே சிரித்துக் கொண்டான்.

உயிரைத் துச்சமாக எண்ணி போர்க்களத்தில் நுழைந்து வாளைச்சுழற்றி எதிரியைப் பந்தாட அவன் தயங்கியதில்லை. அஞ்சியதில்லை. ஆனாலும் அவளை இழப்பதென்பது அவனுக்கு வாழ்வே இல்லைப்போலிருந்தது. நாளை அல்லது மறுநாளாவது அவளைச் சந்திக்கும்போது முடிவொன்றைக் கேட்டுவிடுவதுதான் என்ற தீர்மானத்துடன் ஒரு முறை கோட்டை பாதுகாப்புக்களைப் பார்த்துவிட்டு நித்திரைக்குச் சென்றான் உதயகுமரன்.

தொடரும்......

MysteRy:
ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 7




அவளைச் சந்திக்கும்போது முடிவொன்றைக் கேட்டுவிடுவதுதான் என்ற தீர்மானத்துடன் ஒரு முறை கோட்டை பாதுகாப்புக்களைப் பார்த்துவிட்டு நித்திரைக்குச் சென்றான் உதயகுமரன்.

 
இனி...

உண்மையில் ஓரிரண்டு கிழமையிலேயே இருவரும் தயக்கமின்றி பேசிக்கொள்ளத் தலைப்பட்டனர். அபின் உண்டு பழகிய மயில் போல கோட்டைவாலிபன் அவன்தான் உதயகுமரன் குடமுருட்டியாறு வெண்மணல் பரப்பிற்கு நாளும் வரலானான். ஒரு நாள் ரங்கநாயகி வெண்மணல் பரப்பில் அவனோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது,

 



உங்களால் கல்யாணி ராகத்தைப் பாடமுடியுமா? என்று கேட்டான்.




ஓ ... பேஷாக ! என்றவள் தயக்கமின்றி ஆரம்பித்தாள்.என்ன ஆச்சரியம்! கூடவே ஒரு ஆண் குரலும் அவளோடு இணைந்து கொண்டது. தன் பாடலை நிறுத்தாமலே தலையைத் திருப்பி அவனைப் பார்த்தாள். சாட்சாத் அவனேதான் பாடிக்கொண்டிருந்தான். சாதாரணமாக அல்ல, ஒரு தேர்ந்த பாடகன்போல அழகாகப் பாடினான். அவன் குரல்கூட கரகரப்பில்லாமல் மதுரமாக ஒலித்தது.



இது கண்டு போர்க்களங்களில் வாள் சுழட்டும் இவரும் நன்றாகப்பாடுகிறாரே... பாடலுக்கேற்றபடி குரலும் ஒன்றிப்போவது சிறப்பாக இருக்கிறது. என்று அதிசயித்தது மட்டுமல்ல, வாய்விட்டு பாராட்டவும் செய்தாள்.



அமர்க்களமாகப் பாடுகிறீர்கள்... இதுவரை என்னிடம் சொல்லவில்லையே.... எங்கே கற்றீர்கள் இந்த வித்தையெல்லாம்? என்று கேட்டு வைத்தாள்.



கலைவாணி போன்ற அவள், தன்பாடலைப் பாராட்டியதைப் பெரும்பேறாக எண்ணி மட்டில்லா மகிழ்ச்சியடைந்த அவன், தான் சிறிய தந்தையாருடன் தென்னிந்தியாவில் சில காலம் வாழ்ந்தபோது சிறு வயதில் சங்கீதம் கற்றுக் கொண்டதாகச் சொன்னான்.



சங்கீதத்தில் நல்ல ஆர்வம் போலிருக்கிறது...



இல்லாது போனால் இப்படியொரு அழகு தேவதையை நான் சந்தித்திருக்கமாட்டேன். சந்தித்திருந்தாலும் பழக வாய்ப்புக் கிடைத்திருக்குமோ தெரியாது



அவன் தன் உறவை எந்தளவு விரும்புகிறான் என்றறிந்த போது, மனம் அலைபாய்ந்தது. அவனே அவள் மன ஓட்டத்தை நிறுத்தினான்.



தங்களது தந்தையின் பெயர் என்ன....? தங்களின் பெயர் போன்ற விபரங்களை நான் அறிந்து கொள்ளலாமா? கேட்டு வைத்தான் குமரன்.





ஓ.... அறியலாமே! என்னுடைய பெயர் ரங்கநாயகி. எனது தகப்பனார் பிரபல நாதஸ்வர வித்துவான் வைத்திலிங்கம் பிள்ளை. எனது தாயாரின் மறைவுக்குப் பிறகு அவர் நாதஸ்வரம் வாசிப்பதே யில்லை...... என்று நிறுத்தினாள்.



நாதஸ்வர வித்துவானின் மகளா நீங்கள்?.... அதுதானே பார்த்தேன்... இராகங்கள் எப்படியடா உங்களோடு இத்தனை சரளமாக உறவாடுகிறது என்று எனக்குள் நானே யோசித்ததுண்டு....காரணம் இப்போதுதான் தெரிகிறது... அவனை இடைமறித்தாள் ரங்கநாயகி.



உங்களின் எல்லாத் திறமைகளும், பண்புகளும் எனக்கு இரட்டிப்பாய்ப் பிடிக்கிறது.... ஆனால்....



ஆனால் ஆனால் என்று ஏதோ என்னில் பிடிக்காத எதையோ ஒன்றைப்பற்றி சொல்ல வந்தீர்களே..?. அதை ஒளிவு மறைவின்றிக் கூறிவிடுங்கள் என்றான் அவன். அவனுக்குள் ஒரு கேள்விக்குறி. அவன் புத்திக் கூர்மையை உள்ளூர மெச்சிக் கொண்டவள்,



சாதாரண சிறு பெண்ணாகிய என்னை பெரிய போர்வீரராகிய தாங்கள்... நீங்கள்... நீங்கள் என்று பெரும் கௌரவம் கொடுத்து அழைப்பதுதான் எனக்குப் பிடிக்கவில்லை. கேட்கும்போது கூச்சமாக இருக்கிறது. சிணுங்கிக் கொண்டாள்.






நீங்கள் உங்களை சிறியவள் என்று எண்ணிக்கொண்டு இருக்கலாம். கலைவாணியின் அருளால் பெரிய சங்கீதப் பொக்கிஷமே உங்களிடம் இருக்கிறது...சரி...சரி முறைக்கவேண்டாம்... உன்னை... இப்போது சம்மதம்தானே... உன்னை ரங்கநாயகி என்றே அழைக்கின்றேன்... சரிதானே?




இருவரும் சிரிப்பில் கலந்தனர்.சிறிதுநேரத்தின் பின் அவன் கேட்டான்.



அதுசரி... நான் ஏதோ அரையும் குறையுமாகத்தான் இராகங்களைப் பாட கற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போதுமட்டும் வாய்ப்புக் கிடைக்குமாக இருந்தால் உன் தந்தையாரிடம் சங்கீதம் முறையாகக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அந்த பெரியாரைச் சந்திக்க நான் வீட்டுக்கு வரலாமா...? உன்னால் ஏற்பாடு செய்து தரமுடியுமா?



அவள் பதிலுக்கு மௌனம் சாதித்தாள்... மனம்தான் பேசியது



இதுக்குத்தான் நாளும் என்னைத் தேடிவந்ததும்... பாடச் சொல்லிக் கேட்டதும் போலிருக்கிறது அவள் உற்சாகத்தில் பாதி போய்விட்டது. அவள் சிந்தனையைக் கலைத்தது அவன் கேள்வி.



ஏன் மௌனம் சாதிக்கிறாய்?


அதற்கு என்னை காக்காய் பிடிக்கத்தேவையுமில்லை... அதற்குரிய அவசியமுமில்லை. நீங்களே நேரடியாக தகப்பனாரைக் கேட்பதுதானே அவள் தூக்கலாகச் சொன்னாள்.




அவள் குரல் அவளைக் காட்டிக் கொடுத்துவிட்டது. சிரித்துக் கொண்டே சொன்னான்...



அப்பா...போதுமே கோபம்...இங்கே இரகசியமாக சந்திப்பதைவிட வீட்டில் பெரியவர்களின் அனுமதியுடன் சந்திக்கலாமே என்றுதான் கேட்டேன்... இதற்குப்போய்... அவளுக்கு அசடு வழிந்தது. இருவரும் ஒருவரையொருவர் தெளிவாகத் தெரிந்து கொண்டாலும் தங்கள் உள்ளக் கிடக்கையை வெளிப்படையாகப் பேசத்தயங்கினர்.



இதற்கிடையில் அவர்களது சந்திப்பொன்றும் இரகசியமான தாக இருந்து விடவில்லை. கோட்டை வாலிபன் நெடுகிலும் அங்கு வருவதைக் கண்ட ஊரவர்கள் அந்த நேரத்தில் அந்த இடத்திற்குப் போவதை தவிர்த்துக் கொண்டார்கள். ஆனாலும் ஓரிருபேர் சிலவேளைகளில் அவர்கள் பேசிக் கொண்டு இருப்பதையும், பாடிக்கொண்டு இருப்பதையும் கேட்கவும் செய்தனர், காணவும் செய்தனர். அதுவும் ஆளையாள் மாறிமாறிப் பாடும்போதுகேட்கக் காதுகள் கோடி வேண்டும் போல இருக்கும்.





மத்தியமாவதி, அடானா, ஆரபி, பைரவி, தேசிகம், செஞ்சுருட்டி, சுருட்டி, மோகனம், காம்போதி, ஆனந்தபைரவி போன்ற மேளகர்த்தா ராகங்களையும் ஜன்னிய ராகங்களையும், பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று கீர்த்தனைகளையும் பாடி மகிழ்ந்தனர்.




இவர்களை அறியாமல் இவர்களது பாட்டுக்கு செவி கொடுத்தவர்கள் நாதஸ்வரக்காரரின் மகள் நல்ல பொருத்தமான ஜோடியைத்தான் தெரிந்திருக்கிறாள் என்றார்கள். பிடித்தாலும் புளியம்கொம்பாகத்தான் பிடித்திருக்கிறாள் என்றார்கள். இந்தப்பேச்சுக்கள் வைத்திலிங்கம் பிள்ளையின் காதிலும் விழத் தொடங்கின.





தொடரும்......

MysteRy:
ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 8




பொருத்தமான ஜோடியைத்தான் தெரிந்திருக்கிறாள் என்றார்கள். பிடித்தாலும் புளியம்கொம்பாகத்தான் பிடித்திருக்கிறாள் என்றார்கள். இந்தப்பேச்சுக்கள் வைத்திலிங்கம் பிள்ளையின் காதிலும் விழத் தொடங்கின.



இனி...
ரங்கநாயகி குடமுருட்டியாறு வெண்மணற்பரப்பில் கோட்டை வாலிபனுடன் பாடிமகிழ்ந்து விட்டு வீட்டுக்கு வந்தாள். திண்ணையில் இருந்து எங்கோ பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்த வைத்திலிங்கம் பிள்ளை மகளிடம் சற்று கடுமையாகவே கேட்டார்.


நான் கேள்விப்படுவதெல்லாம் உண்மையா?

அவளில் தயக்கமோ சுணக்கமோ இருக்கவில்லை.
ஆம் அப்பா! அவர் என் ரசிகர், சங்கீத ஞானமுள்ளவர். ராகங்களை நன்றாகப் பாடவும் செய்கிறார்.


அவர் மறித்தார்.
அவர் ராகம் பாடுவது இருக்கட்டும். அவர் யார் என்றாவது அறிந்து கொண்டாயா?

ஆம் அப்பா. அவர் பக்கத்தில் உள்ள தம்பன் கோட்டை வீரர்களில் ஒருவராம். சங்கீதம் கற்றுக் கொள்ளும் ஆசை இருக்கிறது.ராகங்களை சுமாராகப் பாடுகிறார். பெயர்கூட குமரன் என்றும் சொன்னார். உங்களைச் சந்திக்க வேண்டும் என்றும் சொன்னார். உங்களை சந்திக்க அனுமதியுண்டா அப்பா?

அவனது பெயரைச் சொல்ல அவள் காட்டிய தயக்கத்தைக் கண்டு தூரத்துப் பார்வையை வெட்டிவிட்டு அவளை உற்று நோக்கினார். அவளது பருவத்து ஞானத்திலும் குழந்தைத்தனம் விட்டுப்போகாததைக் கண்டு மனதுக்குள் சிரித்துக்கொண்டார் வைத்திலிங்கம் பிள்ளை.

வேண்டாம்... வேண்டாம்... அவரை இங்கு அழைத்து வந்து
விடாதே...
அவர் அவசரம் காட்டினார்.

ஊர் ஏதேதோ பேசுகிறது. அந்த வாலிபரைப்பற்றி நீ அறிந்து கொண்டதாகச் சொன்னதில் அரைப்பகுதிதான் உண்மை... அவர் கோட்டையில் சாதாரண வீரரல்லம்மா... அவர்தான் தம்பன் கோட்டைக்கான புதிய தளபதி... பெயரும் வெறும் குமரனல்ல, உதயகுமாரன். எல்லாவற்றையும் விட கலிங்க விஜயபாகு பேரரசரது பட்டத்து தேவியின் மூத்த சகோதரியின் மகன். அரச குலத்தவன்...

அவர் பேசப் பேச அவள் அதிர்ந்து போனாள். ஒரே குழப்பமாக இருந்தது.... அப்பா ஏதோ தவறான விடயத்தை அறிந்திருக்கிறார் என்று எண்ணியவள், அதே குழப்பத்தைக் குரலிலும் காட்டி கோட்டை தளபதியின் பெயர் தம்பன் என்றல்லவா முன்பு எனக்குச் சொல்லியிருக்கிறார்கள் என்றள்.

மகளின் குழப்பத்தைக் கண்டு பரிதாபப்பட்ட அவர் ஆறுதலாகச் சொன்னார். ஆம் அம்மா, மகா வீரரான தளபதி தம்பரை வாத நோய்தாக்கி படுக்கையில் சாய்த்துவிட்டது. நோய் குணமாக வேண்டி தளபதி தன் தாயகமான கேரளம் சென்றிருக்கிறார். சக்கரவர்த்திதான் இந்த ஏற்பாட்டைச் செய்து கொடுத்ததும். அவரே தளபதியின் இடத்திற்கு தன் ராணியின் மூத்தசகோதரியின் மகன் உதயகுமரனை அனுப்பியும் புதிய தளபதியாக பதவியேற்கவும் வைத்திருக்கின்றார்.
புதிய தளபதி கோட்டை பொறுப்பை ஏற்கும் வைபவத்தில் உன் அண்ணாதான் நாதஸ்வரம் வாசித்தான். மனம் விரும்பவில்லைதான் நானும்...... அந்த வைபவத்திற்கு கொஞ்சநேரம் போயிருந்தேன். புதிய தளபதியை நானும் கண்டேன். வெண்புரவி ஏறிவரும் அவரின் தோற்றம் பார்க்க ஆசையாக இருந்தது. அவர்தான் குடமுருட்டியாறு ஆற்றங்கரையில் உன்னைச் சந்திப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். நாதஸ்வரக்காரரே உங்கள் மகள் நல்ல புளியங்கொம்பைத்தான் பிடித்திருக்கிறாள், என்று அவர்கள் கூறுவது ஓன்றும் மகிழ்ச்சி தரக்கூடியதில்லை.அவளது கண்களை உற்றுப்பார்த்துச் சொன்னார்.


அம்மா நாம் சாதாரண குடிமக்கள். தளபதி உதயகுமரன் அரசகுலத்தவர். எட்ட நினைத்தாலும் கிட்டாத தூரம்.... அரச குலத்தவர் ஒருபோதும் வேறு இனங்களில் பெண் கொள்வதில்லை. அதற்கு இடமுமில்லை என்று நான் அறிவேன்.


அவளில் தெரியும் ஏக்கத்தின் சாயலைக் கண்டு கழிவிரக்கப்பட்ட அவர், நாடுகடத்தப்பட்டு இந்த நாட்டில் ஒரு அந்நியனாக வந்து
இறங்கிய விஜயனுக்கு இந்த நாட்டில் ஏக சக்கரவர்த்தியாகவர பேருதவி நல்கிய இயக்கர் குலக்கொடியான குவேனிக்கு விஜயன் தொடர்பாக பிள்ளைகள் இருந்தும், குவேனியையும் பிள்ளைகளையும் கைவிட்டுவிட்டு விஜயன் பாண்டிய ராஐகுமாரியை மணந்து கொண்டவரலாற்றையும் கருத்தில் எடுத்து, நீ தெளிவு பெறவேண்டும். நம்முடைய நிலமைக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்வது மகிழ்ச்சி தரக்கூடியதில்லை. சர்வஐர்க்கிரதையாக நடந்து கொள்ளவேண்டும் என்றார்.

இதைவிட மேலான அறிவுரையை அவரால் கூறமுடியாது என்றே அவருக்குப்பட்டது. கவலையின் ரேகைகள் அவர் முகத்தில் கீறல்போட்டு, அவர் வயதை கூட்டிக்காட்டின. அவர் நிலை இப்படியென்றால் அவளோ..குடமுருட்டியாற்றங்கரையில் தன்னைச் சந்தித்தவர் தாசாரண வீரர் அல்ல, அவர்தான் தம்பன் கோட்டைப் புதிய தளபதி, கலிங்க விஜயபாகு சக்கரவர்த்திக்கு நெருங்கிய உறவினர் என்று தந்தை சொல்லக் கேட்கக் கேட்க பேதைமனம் துயரம்....... பயம்... ஏமாற்றம்.... மகிழ்ச்சி... போன்ற உணர்ச்சிகளால் கதிகலங்கிப் போனது.

 அவரே கூறியது போல அவர் சாதாரண வீரராக இருந்திருக்கக் கூடாதா? அவரோடு பாடி மகிழ்ந்த இந்தக்காலததுக்குள் என்னென்ன தவறுகள் செய்து அபச்சாரம் தேடிக் கொண்டேனோ....?| இவற்றிற்கெல்லாம் எப்படி பிராயச்சித்தம் செய்வேனோ...? அவரை நெருங்கும் தகுதி எனக்கு உண்டா? என்ற கலக்கமும், பயமும் அதே சமயம் என் மனதைக் கவர்ந்தவர் ஒரு தளபதி, என்று எண்ணும் போது மகிழ்ச்சியும் மாறி மாறி தோன்றி அவளை திக்கு முக்காட வைத்தன. இந்த குழப்ப உணர்வுடன் வீட்டினுள் நுழைந்தவள் நேரே அறைக்குள் சென்று படுக்கையில் விழுந்தாள்.



அவளது ஒவ்வொரு அசைவையும் அவதானித்தபடி உட்கட்டிலில் இருந்த அவளது அத்தை மீனாட்சி கதவடியில் போய் நின்று ரங்கநாயகி ஏதாவது சாப்பிட்டுவிட்டு படு அம்மா என்று குரல் கொடுத்தாள். நாதஸ்வரக்காரரின் மனைவி இறக்கும் முன்பே கணவனை இழந்த அவரது தங்கை மீனாட்சி, அந்த குடும்பத்திற்கு பேருதவியாக இருந்து வந்தாள். அண்ணியார் காலமான பிறகு, குடும்பப் பொறுப்பெல்லாம் அவளே ஏற்றுக்கொண்டிருந்தாள். இதனால்தான் வயது வந்த பெண்ணான ரங்கநாயகி எந்தக்கவலையுமின்றி வீட்டுக்கும், ஆற்றுக்கும் இடையில் மான்குட்டி போல் துள்ளித்திரிய முடிந்தது.

எனக்குப் பசிக்கவில்லை அத்தை


என்னதான் பிரச்சினை இருந்தாலும் வெறும் வயிற்றோடு
படுக்காத பிள்ள. பால் காய்ச்சித் தரமட்டுமா?
பால் குடிச்சால்மட்டும் நித்திரை வந்துவிடுமாக்கும். என்னைச்
சும்மா விட்டுவிடுங்கள் அத்தை.


வயதானபிள்ளையை அப்படி விட்டுவிடலாமா? பொறு நான் பால் காய்ச்சி வருகின்றேன்.

அவள் அப்படி சொன்னபிறகு பாலைக்குடிக்காமல் இருக்கமுடியாது என்று ரங்கநாயகிக்கு தெரியும்.

பொறுத்திருந்து பாலைக்குடித்துவிட்டு படுக்கையில் சரிந்தாள். மனம் ஓய மறுத்தது. இனி என்ன செய்வது. அப்பா சொல்வதைப் பார்த்தால் அவரைத் துணைவராக அடைவது இந்த ஜென்மத்தில் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத காரியம். அவர் என்னிடம் தன்னைப்பற்றிய உண்மையை மறைத்திருக்கவே கூடாது என்றும் கோபப்படவும் செய்தாள். ஒன்றும் அறியாத என் மனதை குழப்பி... ஏன்? அவர் உண்மையைச் சொல்லியிருந்தால் அவருடைய உறவை அன்றே வெட்டியிருப்பேன் அப்படிச் செய்திருந்தால் அந்த உன்னத புருஷனின் அன்பு எனக்கு கிடைத்திருக்குமா?

யாரிடம் சொல்லி ஆறுதல் தேடுவது? அப்பாவோடு இனிப்பேசி பயனில்லை என்று தெரியும். அவர் சுலபத்தில் முடிவெடுப்பதில்லை. எந்த முடிவையும் மாற்றியதில்லை.


அத்தை ... இதெல்லாம் அவளுக்குச் சரிப்படாது. இனி குடமுருட்டியாற்றை மறந்துவிடவேண்டியதுதான். குடமுருட்டியாற்றுக்கு மட்டுமல்ல வெண்மணற்பரப்பு, வாழைத் தோட்டம், ஏன் வெண்புரவிக்கு கூட கும்பிடு போட்டுவிட வேண்டும். படுக்கையில் புரண்டாள். புரவி என்றதுமே குமரன் நெஞ்சை நிறைத்தான். குடமுருட்டியாற்றுக்கு போகாமல் விடும் உறுதி எனக்கு இருக்கிறதா?

எதற்கும் நாளை கடைசியாக ஒருதடவை அவரைப்பார்த்து பேசிவிட்டு வந்து விடவேண்டும். கிட்டாதாயின் வெட்டென மறக்கவேண்டியதுதான் அவளால் இரவு முழுவதும் உறங்க முடியவில்லை எப்போது விடியுமென்றிருந்தது.

தொடரும்......

MysteRy:
ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 9




கிட்டாதாயின் வெட்டென மறக்கவேண்டியதுதான் அவளால் இரவு முழுவதும் உறங்க முடியவில்லை எப்போது விடியுமென்றிருந்தது.


இனி...




கோட்டைக்குள் படுத்திருந்த உதயகுமரனுடைய நிலையும் ஏறத்தாழ இதேதான். அன்று மாலையில் குடமுருட்டியாற்று கரையினின்றும் மிக சந்தோஷமாகத்தான் திரும்பியிருந்தான். ஆனால் ஏனோ தெரியவில்லை கோட்டையை அண்மித்தபோது அதற்குள் போகவேண்டாம் என்று இருந்தது. அவன் வருகைக்காக காத்திருக்கும் வீரர்களை ஏமாற்றக் கூடாது என்று கோட்டைக்குள் நுழைந்து ஏதோ எந்திரம்போல் இரா உணவுவரை அலுவல்களை முடித்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்து, கதவை அடைத்துவிட்டு கட்டிலில் விழுந்தான். மனம் அமைதியடையாமல் இருந்தது.



இன்று ஏன் இந்தக் குழப்பம். மாலையில் ரங்கநாயகியுடன் கதைத்துவிட்டு வரும்போதுகூட நன்றாகத்தானே இருந்தேன்? அவளது நினைப்பு இன்னும் வாட்டியது. கலைவாணியே நேரில் வந்தது போன்ற தோற்றம் உள்ள அவள் எனக்கு கிடைப்பாளா?, சாதாரண வீரனல்ல நான்.... கோட்டைத்தளபதி என்று தெரிந்து கொண்டாள் என்றால், நான் உண்மையை மறைத்ததிற்காக என்மீது கோபம் கொள்ளமாட்டாளா? எப்படி இருந்தாலும் அவளின்றி நான் இல்லை என்பதே உறுதி. இருப்பினும் தடைகள் பல தாண்டவேண்டி இருக்கிறதே! என்று ஒவ்வொரு சிக்கலாகப் பட்டியல் போட்டு எடைபோட்டான்.





ஒன்று எனது குலம்... நான் ராஜகுலத்தினன்... ஒரு நட்டுவகுலப்பெண்ணை திருமணம் செய்ய அரச குடும்பம் என்றுமே சம்மதிக்கப்போவதில்லை. அடுத்தது, அன்னை இரத்தினாவதிதேவி இதற்கு ஒருபோதும் சம்மதிக்கப்போவதில்லை, மன்னர்... அவருக்கென்று சில கொள்கைகள், அரச குடும்பம் பற்றிய கனவுகள், தனது சாம்ராச்சியம் தொடர்பாக எங்கள் ஒவ்வொருவர்மீதும் நம்பிக்கை வைத்து தீட்டியிருக்கும் திட்டங்கள்... இவர்களுக்காக என் எதிர்காலத்தை இழக்க வேண்டியதுதானா? என் மனம் கவர்ந்த தேவதையை மறந்து வாழத்தான் வேண்டுமா? எண்ணவே முடியாமல் இருக்கும் இந்த உறவின் பிரிவை எப்படி நிஜமாக எண்ணால் தாங்கிக்
கொள்ளமுடியும்?





புதிய பிரதேசம் என்று இயற்கை எழிலை அள்ளிப்பருகிக் கட்டில்லாக் காளைபோல கட்டிளங்காளை நான் மகிழ்ந்து திரிந்தேனே... இச்சிறு பெண்ணைக் கண்டது முதல் மன நிம்மதியைப் பறிகொடுத்துவிட்டேனே! படுக்கை முள்ளாய் குத்தியது. கட்டிலில் இருந்து எழும்பி ஐன்னலுக்கு தாவினான். விண்மீன்கள் துயிலாது காவல் செய்தன.





தீடீரென அவன் மனதில் ஒரு மின்வெட்டு யோசனை! ஆம் அப்படித்தான் செய்யவேண்டும்.... அதைவிட்டால் வேறு வழியில்லை. யார் என்ன எதிர்த்தாலும்... அவள்மட்டும் சரி என்று ஒரு வார்த்தை சம்மதம் சொன்னால் போதும், அவளையும் அழைத்துக்கொண்டு தென்இந்தியாவுக்குச் சென்று விடலாம். அங்கு சோழ அரசப் பிரதிநிதியாக இருக்கும் சிற்றப்பா கமலசேகரரின் சிபாரிசில் சோழ சைன்னியத்தில் சேர்ந்து விட வேண்டியதுதான்.




நடக்கவேண்டியது நடந்து விட்டது என்று மன்னர் மன்னித்து விட்டாலும் விடுவார்... ஆனால் அன்னை இரத்தினாவதிதேவிதான் பெரிதாகத் துயரப்படுவார்.... இறப்புக்குச் சமனான துயர் அவளை வாட்டி எடுக்கும் என்பது மட்டும் நிச்சயம்!




ரங்கநாயகி எப்படியோ.. வயதான தந்தையை, ஆசானுக்கு ஆசானாக இருக்கின்றவரை இங்கே தனித்து விட்டுவிட்டு நம்முடன் வரச்சம்மதிப்பாளா? ... அவள் மட்டும் வர மறுத்துவிட்டால்? படுக்கைக்குத் திரும்பியவன் நீண்ட நேரம் துயிலவேயில்லை. இரண்டாம் சாமத்தில் காவல் மாறும் ஒலியைக் கேட்டபடியே மெல்லக் கண்மூடத்தொடங்கினான்.



அவள் ஆவலோடு எதிர்பார்த்த பொழுது விடிந்தது. பொழுது விடிந்ததா? இல்லை இரவு முடிந்ததா? அவளுக்கு இது தேவையில்லா ஆராய்ச்சி. பகல் முழுவதும் பதைபதைப்புடன் குட்டிபோட்ட பூனைபோல கூடத்திற்கும் அறைக்குமிடையே அலைந்தாள். கடைசியாக மாலையானதும் வீட்டில் இருக்கப் பிடிக்காமல், அலைமோதும் சிந்தனைக்கு தடைபோடும் முயற்சியாக மணல் பரப்புக்கு வந்த ரங்கநாயகி அமர்ந்திருந்தாள். அவள் சிந்தனையோ கட்டறுத்துப் பாய்ந்து கொண்டிருந்தது.




குமரன் வந்ததையோ, புரவியை மரத்தில் கட்டிவிட்டு அவளை நெருங்கியதையோ அவள் உணர்ந்து கொள்ளவில்லை. என்ன ரங்கா ஒரு மாதிரியாக இருக்கிறாய்? இராகம் பாடலாமா? என்று சிரித்தபடி கேட்டபோதுதான், திடுக்கிட்டுத் தலையைத் திருப்பினாள். அவள் கண்களில் முத்தாகிப் பளபளத்த கண்ணீர்த் துளிகள்!



ஏன்...... ஏன் இந்தக்கலக்கம்?



இத்தனை நாட்களாக அவனுடன் அருகே அமர்ந்து பாடி மகிழ்ந்தவள் இன்று அவனைக் கண்டதும் திரண்டு வந்த கண்ணீரை மறைக்க முயன்றவளாய் சரேலென எழுந்து தலை வணங்கி நின்று பிரபு! தாங்கள் கோட்டைத்தளபதி என்று தெரியாமல் இத்தனை நாட்கள் தகுந்த மரியாதை செலுத்தாமல் அபச்சாரம் செய்து விட்டேன். சிறுமி என்னை மன்னிக்க வேண்டும் என்றாள் அவள் கேலிபண்ணுகிறாளா.... அல்லது உண்மையாகத்தான் சொல்லுகிறாளா?

தொடரும்......

MysteRy:
ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 10




சிறுமி என்னை மன்னிக்க வேண்டும் என்றாள் அவள் கேலிபண்ணுகிறாளா.... அல்லது உண்மையாகத்தான் சொல்லுகிறாளா?

இனி...


ஏதேது என்னை அரசனாக்கினாலும் ஆக்குவாய் போலிருக்கிறது.... நான் கோட்டைத் தளபதியா?... இந்தத் தவறான தகவலை யார் உனக்குத் தந்தது? நான் ஏற்கனவே என்னைப் பற்றிய விபரங்களை உனக்குக் கூறியிருக்கிறேனே.... நம்பவில்லையா?


நம்பியதால்தான் இவ்வளவு துன்பம் அனுபவிக்கிறேன். நீங்கள் கூறியதுபோல் சாதாரண வீரராக இருந்தால் என் சந்தோஷத்துக்கு கரையேது? அப்பாதான் எனக்கு எடுத்துச் சொன்னது.... நீங்கள் கலிங்க விஜயவாகு சக்கரவர்த்தியின் பட்டத்து இராணியின் மூத்த சகோதரியின் புதல்வர்.. உதயகுமரன் .. கோட்டைப்புதிய தளபதி... அரச குலத்தினர்... இதையெல்லாம் நான் நம்பியவர் சொல்லவில்லை... எனது தந்தைதான் சொன்னார்...
அவள் கண்கள் கலங்கின.



 ரங்கா அழாதே ... நான் சொன்னதை நம்பாமல் அப்பாவும் மகளும் துருவித் துருவி ஆராய்ந்திருக்கிறீர்கள்... நல்லதுதான் அதை ஒருபுறம் வைத்துவிட்டு உன்னோடு சில விடயங்களைப் பேசி நான் சில முடிவுகளை எடுக்கவேண்டும். உட்கார் அவள்



உட்காராமல் நின்றுகொண்டே அடம்பிடிப்பதைக் கண்டு தனக்குள் சிரித்துக்கொண்டு, குரலில் போலியாக ஒரு கடுமையைக்காட்டி நான் தம்பன் கோட்டைத்தளபதி உத்தரவிடுகிறேன்... நீ வழமைபோல் இருக்கும் இடத்தில் போய் உட்கார்... என்றான். அவன் குரலில் கடுமை போலியானது என்று உணரும் நிலையில் அவள் இருக்கவில்லை. நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தவள், அவன் உத்தரவிற்குக் கட்டுப்பட்டாள்! ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை.

உதயகுமரன் அவ்விடத்தில் வந்தமர்ந்து சிறிது நேரம் ஆசையோடு அவளைப் பார்த்தான். அவள் தலைகுனிந்து கொண்டாள். அவன் ஒரு முறை தொண்டையைக் கனைத்து அடைப்பை அகற்றிவிட்டு கனிவு ததும்பும் குரலில்....ரங்கநாயகி நீ பாட்டுப்பாடி என்னை மகிழ்விப்பது மட்டும் தானா? உன் மனதில் எதையாவது மறைத்து வைத்திருக்கிறாயா? என்று கேட்டான். பதிலேயில்லை... மௌனமாக இருந்தாள்.

என்னோடு கோபத்தில் இருப்பதால் நீ பேசமாட்டாய் அப்படித்தானே... சரி நான் பேசுகிறேன் நீ கேள்... ரங்கநாயகி ! நான் உன்னை ஏமாற்ற எண்ணியவனுமல்ல, எண்ணுபவனுமல்ல... இதை முதலில் நீ நம்பு...

எனக்கது தெரியாதா என்ன? அவள் மனதுக்குள் சொன்னாள்.



உண்மையில் உன் இனிய கானத்தைக்கேட்டுத்தான் உன்னோடு பேசவிரும்பினேன்.... பிறகு உன் கானத்தைவிட உன்னைப் பார்க்கலாமே என்று வந்து உன்னைச் சந்திக்கத் தொடங்கினேன். என்னையறியாமலே நான் ஒவ்வொரு மாலைப் பொழுதுக்கும் ஏங்கத் தொடங்கினேன். என்னையே நான் கேட்டுப்பார்த்தேன்... எது என்னை இங்கு நாளாந்தம் இழுத்துவந்து உன்காலடியில் சேர்ப்பது என்று ஆராய்ந்து பார்த்தேன்.... பாடலை விட,  சிலைபோன்ற உடல் அதை நான் சேர வேண்டும்... அதற்குள் நடமாடும் உயிர்.... அதோடு நான் கலக்கவேண்டும் என்ற ஆசைதான் காரணம் என்று தெரிந்து கொண்டேன்... அதுமட்டுமல்ல இசை மீது எனக்கிருந்த ஆவலுக்கு நீ ஒரு வழிகாட்டி என்றும் ஆசான் என்றும் கருதினேன்.

வார்த்தைகளை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான். அவள் அப்போதும் சிறுபிள்ளைபோல் குனிந்த தலை நிமிராமல் மண்ணைச் சுட்டுவிரலால் கிளறிக்கொண்டேயிருந்தாள்.




அரச குலத்தவர்கள் வேறு குலத்தில் பெண் கொள்ள முடியாது என்று அப்பா சொன்னார். அவள் குரல் தளம்பியது. தலையை நிமிர்த்தி ஆற்றுக்காகத் திரும்பியவள் ஒரு கையால் கன்னங்களில் வடிந்த கண்ணீரை மாறி மாறி துடைத்துக்கொண்டாள்.



நியதி அப்படித்தான்... நான் மறுக்கவில்லை. ஆனால் நாம் நியதிகளை மாற்றலாமல்லவா?


அவள் தலை அவன் பக்கம் வேகமாகத் திரும்பியது. அவள் கண்களில் ஒரு எதிர்பார்ப்பு பளிச்சிட்டது.



உண்மைதான் நமக்கு வேண்டுமென்றால் நியதியை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்... மாற்றிக்கொள்வோம்.


அதெப்படி ...? அவளுக்கு ஒரு நம்பிக்கை உதயமானாலும், சந்தேகம் அதைத் திரைபோட்டு தடுக்கப்பார்த்தது.


வழிவரும்...! நான் ஒரு பயணம் செல்ல வேண்டியிருக்கிறது. ம்கூம் பயப்படாதே....... அதிக தூரமில்லை... ஒரு மூன்று நான்கு நாளாகும்... அதற்கு முன் உன்னிடம் சில வேண்டுகோள்...




என்ன? என்பதுபோல் அவனைப்பார்த்தாள்.


உனக்குத் தளபதி உதயகுமரனைப் பிடிக்குமா? சாதாரண வீரன் குமரனைப் பிடிக்குமா?




ஏன் தயக்கம் சொல்... உன்னைக் கரம்பிடிப்பவன் ஒரு சாதாரண வீரனாக இருந்தாற் போதுமா? இல்லை தளபதியாகத்தான் இருக்க வேண்டுமா? அவள் விழியில் வழிந்த நீரைத் துடைத்துவிடத் துடித்த கரங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.



இதுவரையில் எனக்குத் தளபதி யாரென்றே தெரியாது. முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படவே மாட்டான். எனக்குத் தெரிந்தவர் ஒருவர்தான்! இதோ இந்த மண்ணில் என்னோடு கூடஇருந்து பாடி மகிழ்ந்த அந்த கோட்டை வாலிபனைத்தான் என் மனதுக்குப் பிடிக்கும்


அப்படியென்றால் சில சமயம் நாம் வேறிடம் சென்று வாழ வேண்டிவரும்.. நம் சொந்த பந்தங்களை இழக்க வேண்டிவரும்... நம் சுற்றஞ் சூழலை மறக்க வேண்டிவரும் நீ ... தயாரா?


அவள் குழப்பமாகப் பார்த்தாள்.



அவசரமில்லை உனக்குச் சில நாள் அவகாசமிருக்கிறது. சிந்தித்துப்பார்.. நான் நாளை மறுநாள் குதிரைப்படையுடன் சதுர்வேதமங்கலம் போகிறேன்.. நான்மறை ஓதும் அந்தணர் வதியும் அந்த ஊரில் வேதாகம மகாநாடு ஒன்று நடக்கப்போகிறது. இந்து மத அறிஞர்களுக்கும் இந்து கலாசார நிபுணர்களுக்கும், யோகிகள் மடாதிபதிகளுக்கும், கோட்டை தளபதிகளுக்கும் இந்துமத கலாசார அறிஞர் பெருமக்கள் பலருக்கும், ஊர் முக்கிய பிரமுகர்களுக்கும் ஓலைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் மகாநாட்டிற்கு கலிங்க மன்னர் விஜயவாகு அவர்களே தலைமை தாங்குவார் எனக் கூறப்பட்டிருக்கிறது. எனவே நான் போகின்ற இந்தப் பயணத்தில் மன்னரைச் சந்திக்க நிறைய வாய்ப்புக் கிடைக்கும். நான் அவரைச் சந்தித்துப் பேசினால் நம் திருமணத்திற்கு சம்மதம் கிட்டவே
செய்யும் என்பது என் எதிர்பார்ப்பு. இதை உன்னிடம்சொல்லி விடைபெற்றுப்போகவே நான் ஓடி வந்தேன்.



ஒரே மூச்சில் உணர்ச்சியோடு பேசிமுடித்தான். அவன் பேசிக்கொண்டு போகும்போது அவன் முகத்தில் ஓடிய உணர்ச்சி மாற்றங்களையும், வார்த்தைகளில் எதிரொலித்த நம்பிக்கையையும் கண்வாங்காமல் அவள் உள்வாங்கிக் கொண்டிருந்தாள். செவிகள் அவன் வார்த்தைகளுக்குக் கூர்மையாக இருந்தன., கண்கள் அவன் முகத்தை மொய்த்துக் கொண்டிருந்தன.

என்னை மறந்து விடமாட்டீர்களே?

என்னதான் நம்பிக்கை மனதில் ஊறினாலும் அவள் ஒருபெண்தானே?
 என்னை இன்னுமா நம்பவில்லை? அவன் குரலில் தெரிந்த வேதனை அவளை உசுப்பியது.

இல்லை... உங்களை நம்பாமலில்லை... பரிபூரணமாக நம்புகிறேன்.அவசரமாக மறுத்தாள். என்ன இருந்தாலும் நான் ஒரு பெண்தானே... உயர நிற்கும் நீங்கள்...



பயப்படாதே... சங்கீதத்தில் இணைந்த எங்கள் உறவை யாராலும் பிரிக்கமுடியாது. தைரியமாக இரு... நான் நல்ல சேதியோடு திரும்பி வந்து உன்னைச் சந்திக்கிறேன்.



விரைந்து குதிரையில் ஏறியவன், அவளைப்பார்த்து புன்னகைத்துவிட்டு குதிரையை திருப்பிக்கொண்டு அதை ஓடவிட்டான்.



அவன் சென்று மறையும்வரை பார்த்துக்கொண்டே இருந்தவள் மனது மகிழ்சியால் நிறைந்திருந்தது. அவனது மனக்கருத்தை அவன் சொல்லக்கேட்டதில் ஏற்பட்ட மகிழ்ச்சி மெல்ல இரு கைகளையும் மார்பின்மேல் வைத்து அழுத்தி கண்களை மூடி அந்தமகிழ்ச்சியை ஆத்மார்த்தமாக அனுபவித்துக்கொண்டாள்.

திடீரென கண்களை விழித்து அந்த நிலையிலிருந்து விடுவித்துக்கொண்டவள் மனதில், ஐயோ அப்பாவும் அத்தையும் தேடப்போகிறார்களே, என்ற எண்ணம் தோன்றியது. எட்டிக் குதித்து நடை போட்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.


தொடரும்.....

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version