FTC Forum

தமிழ்ப் பூங்கா => வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) => Topic started by: Anu on February 22, 2012, 07:43:55 AM

Title: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 22, 2012, 07:43:55 AM
சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இது சேரன் செங்குட்டுவன் சகோதரர் இளங்கோஅடிகள் இயற்றிய காப்பியமாகும். அரச பதவியை உதறிவிட்டு துறவறம் பூண்டு வாழ்ந்தவர் இளங்கோ அடிகள். கோவலன், கண்ணகி,மாதவி இக் கதையில் முக்கிய பாத்திரங்கள்.கண்ணகி கற்பு நெறி தவறாமல் வாழும் பத்தினி .மாதவி பேரழகி. ஆடற்கலையின் ஆழமுணர்ந்தவள். கணிகையர் குலத்தோன்றலெனினும் கற்புநெறி வழுவாமல் கோவலனுக்கென்றே வாழ்ந்தவள். மணிமேகலையின் தாய். கோவலன் தனது செல்வம் அனைத்தையும் முறை இல்லாமல் செலவழித்து கடைசியில் மிஞ்சிய தனது மனைவியின் காற்சிலம்பை விற்க மதுரைக்கு வருகிறான். கடைவீதியில் அதை விற்க முயலும் போது அரண்மனைக் காவலர்களால் அரசியின் சிலம்பை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு மன்னர் முன் விசாரணை கைதியாக நிற்க வைக்கப்படுகிறான். மன்னன் கோவலன் விற்க முயன்ற சிலம்பு அரசியின் சிலம்பு என குற்றம் சாட்ட,கோவலன் அது தனது மனைவி கண்ணகி யின் காற்சிலம்பு என மறுக்கிறான். ஆனால் மன்னனின் தவறான தீர்ப்பால் கொலை செய்யப்படுகிறான்.கணவன் கொலையுண்ட செய்தி கேட்டு கண்ணகி கோபாவவேசமாக அரசனின் அரச சபைக்கு வருகிறாள்.

மன்னனின் தீர்ப்பு தவறு என நீதி கேட்கிறாள். மன்னன் தனது மனைவியின் காற்சிலம்பில் உள்ளது முத்து என கூற தனது சிலம்பில் உள்ளது மாணிக்க பரல்கள் என சிலம்பை வீசி உடைத்து நிருபிக்கிறாள். நீதி தவறிய மன்னன் அக்கணமே உயிர் விடுகிறான்.அரசியும் உடன் உயிர் விடுகிறாள்.கண்ணகி மதுரை நகரமே முதியவர், குழந்தைகள்,பெண்கள் தவிர மற்ற அனைத்தும் (மதுரை நகரமே) தீக்கிரையாக சபிக்கிறாள்.

பதிகம்

குணவாயிற் கோட்டத் தரசுதுறந் திருந்த
குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்குக்
குன்றக் குறவர் ஒருங்குடன் கூடிப்
பொலம்பூ வேங்கை நளங்கிளர் கொழுநிழல்
ஒருமுலை யிழந்தாளோர் திருமா பத்தினிக் - 5

கமரர்க் கரசன் தமர்வந் தீண்டிஅவள்
காதற் கொழுநனைக் காட்டி அவளொடெங்
கட்புலங் காண விட்புலம் போய
திறும்பூது போலுமஃ தறிந்தருள் நீயென
அவனுழை யிருந்த தண்டமிழ்ச் சாத்தன் - 10

யானறி குவனது பட்டதென் றுரைப்போன்
ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்ப்
பேராச் சிறப்பின் புகார்நக ரத்துக்
கோவல னென்பானோர் வாணிகன் அவ்வூர்
நாடக மேத்தும் நாடகக் கணிகையொ -15

டாடிய கொள்கையின் அரும்பொருள் கேடுறக்
கண்ணகி யென்பாள் மனைவி அவள்கால்
பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டிப்
பாடல்சால் சிறப்பின் பாண்டியன் பெருஞ்சீர்
மாட மதுரை புகுந்தனன் அதுகொண்டு - 20

மன்பெரும் பீடிகை மறுகிற் செல்வோன்
பொன்செய் கொலலன் றன்கைக் காட்டக்
கோப்பெருந் தேவிக் கல்லதை இச்சிலம்பு
யாப்புற வில்லைஈங் கிருக்கென் றேகிப்
பண்டுதான் கொண்ட சில்லரிச் சிலம்பினைக் - 25

கண்டனன் பிறனோர் கள்வன் கையென
வினைவிளை காலம் ஆதலின் யாவதுஞ்
சினையலர் வேம்பன் தேரா னாகிக்
கன்றிய காவலர்க் கூஉயக் கள்வுனைக்
கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக் - 30

கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
நிலைக்களங் காணாள் நெடுங்கணீர் உகுத்துப்
பத்தினி யாகலின் பாண்டியன் கேடுற
முத்தார மார்பின் முலைமுகந் திருகி
நிலைகெழு கூடல் நீளெரி ஊட்டிய - 35

பலர்புகழ் பத்தினி யாகு மிவளென
வினைவிளை கால மென்றீர் யாதவர்
வினைவிளை வென்ன விறலோய் கேட்டி
அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்
கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில் - 40

வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்
ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன் 
மதுரைமா தெய்வம் வந்து தோன்றிக்
கொதியழற் சீற்றங் கொங்கையின் விளைத்தோய்
முதிர்வினை நுங்கட்கு முடிந்த தாகலின் - 45

முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவனொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச்
சங்கம னென்னும் வாணிகன் மனைவி
இட்ட சாபங் கட்டிய தாகலின்
வாரொலி கூந்தனின் மணமகன் றன்னை - 50

ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி
வானோர் தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவிற் காண்ட லில்லெனக்
கோட்டமில் கட்டுரை கேட்டனன் யானென
அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம் - 55

உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுளென - 60

முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே யருளுகென் றாற்கவர்
மங்கல வாழ்த்துப் பாடலுங் குரவர்
மனையறம் படுத்த காதையு நடநவில்
மங்கை மாதவி அரங்கேற்று காதையும் - 65

அந்தி மாலைச் சிறப்புச்செய் காதையும்
இந்திர விழவூ ரெடுத்த காதையும்
கடலாடு காதையும்
மடலவிழ், கானல் வரியும் வேனில்வந் திறுத்தென
மாதவி இரங்கிய காதையுந் தீதுடைக் - 70

கரனாத்திற முரைத்த காதையும் வினாத்திறத்து
நாடுகாண் காதையும் காடுகாண் காதையும்
வேட்டுவ வரியும் தோட்டலர் கோதையொடு
புறஞ்சேரி யிறுத்த காதையும் கறங்கிசை
ஊர்காண் காதையும் சீர்சால் நங்கை - 75

அடைக்கலக் காதையும் கொலைக்களக் காதையும்
ஆய்ச்சியர் குரவையும் தீத்திறங் கேட்ட
துன்ப மாலையும் நண்பகல் நடுங்கிய
ஊர்சூழ் வரியும் சீர்சால் வேந்தனொடு
வழக்குரை காதையும் வஞ்சின மாலையும் - 80

அழற்படு காதையும் அருந்தெய்வந் தோன்றிக்
கட்டுரை காதையும் மட்டலர் கோதையர்
குன்றக் குரவையும் என்றிவை அனைத்துடன்
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
வாழ்த்து வரந்தரு காதையொடு - 85

இவ்வா றைந்தும்
உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்
உரைசா லடிகள் அருள மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்
இது, பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென். - 90

பதிகம்

அஃதாவது இந்நூலின்கட்போந்த பொருளை நிரலாகத் தொகுத்துக் கூறும் சிறப்புப் பாயிரம் என்றவாறு.

பதிகக் கிளவி பல்வகைப் பொருளைத்
தொகுதி யாகச் சொல்லுத றானே

என்பதுமுணர்க.

இனி, பதிகம் என்ற சொல் பாயிரம் என்னும் பொருட்டுமாகும் என்பதனை,

முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்,

எனவரும் நன்னூற் சூத்திரத்தால் உணர்க.

பாயிரம் பொதுவும் சிறப்பும் என இருவகைத்து. அவற்றுள் இப்பதிகம் இந்நூற்கேயுரிய சிறப்புப் பாயிரம் ஆகும். சிறப்புப் பாயிரம் நூலாசிரியனாற் கூறப்படாது என்பதும், நூலாசிரியனின் ஆசிரியர் முதலிய பிறராற் செய்யப்படும் என்பதும் நன்னூலால் அறியப்படும்.

ஓருந் தமிழ் ஒருமூன்று முலகின்புற வகுத்துச் சேரன் தெரித்த இச்சிலப்பதிகாரத்திற் சேர்ந்த பொருள் ஆருந் தெரியத் தொகுத்துரைத்து இப்பதிகஞ்செய்த சான்றோர் பெயர் முதலியன அறிந்திலேமாயினும், இப்பதிகம் நூலாசிரியராகிய இளங் கோவடிகளாராற் செய்யப்பட்டிலது; பிறசான்றோராற் செய்யப்பட்டது என்பதனை ஈண்டுக் குறிக்கொண்டுணர்க.

இனிப் பதிகம் நூலாசிரிய ரானும் செய்யப்படும் என்பதனைச் சீவக சிந்தாமணி யென்னும் செந்தமிழ் வனப்புநூற்பதிகம் அதனாசிரியராகிய திருத்தக்க தேவராற் செய்யப் பெற்றிருத்தலால் அறிகின்றோமெனினும், பதிகம் நூலாசிரியராற் செய்யப்படாதென்பதற்குக் காரணம் தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும் தான் தற்புகழ்தல் தகுதியன்றே என்பது கருதியேயாம். ஆகவே, நூலாசிரியன் பதிகம் செய்யுங்கால் அவையடக்கியல்பற்றித் தான் தற்புகழாது தனது நூற்பொருளைத் தொகுத்துக்கூறுதல் அமையும் என்பதும் அவ்விதியாலேயே பெறப்படுதலின் இவ்வாற்றால் திருத்தக்க முனிவர் தம் நூற்குத் தாமே (பாயிரம்) பதிகம் செய்தனர் என்றறிக. இச்சிலப்பதிகாரத்திற்குப் பதிகம் செய்தார் பிறரே; அடிகளார் செய்திலர் என்பதை இப்பதிகத்தின் உரையின்கண் இன்றியமையாத விடத்தே கூறுதும். ஆண்டுக் கண்டுகொள்க.

1-9 : குணவாயில்........அறிந்தருள்நீயென

(இதன்பொருள்) குடக்கோச் சேரல் அரசு துறந்து குணவாயில் கோட்டத்து இருந்த இளங்கோ அடிகட்கு - முத்தமிழ் நாட்டின் கண் குடக்கின்கண் அமைந்த சேர நாட்டிற்கு மன்னனாகிய சேரன் செங்குட்டுவனுக்கும், ஒருகாரணத்தால் தமக்குரிய அரசுரிமையையும் பிறவற்றையும் ஒருங்கே துறந்து திருக்குணவாயில் என்னும் கோயிலின்கண் நோற்றிருந்த சான்றாண்மை மிக்கவரும் அச் சேரலுக்குத் தம்பியாதலின் இளங்கோ என்னும் திருப்பெயருடையாருமாகிய அடிகளார்க்கும், குன்றக்குறவர் ஒருங்குடன் கூடி -அவர்தாம் அரசியற் சுற்றத்துடன் மலைவளங்காணச் சென்று பேரியாற்றடை கரை இருமணல் எக்கரிடத்தே ஒருங்கிருந்துழி ஆங்கு மலையிடத்தே வாழ்வோராகிய குறவர் எல்லாம் ஒருங்கே திரண்டு சென்று வணங்கியவர் செங்குட்டுவன் திருமுக நோக்கி, கொற்றவ! ஈதொன்று கேட்டருள்க; பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல் - எம் மூர்க்கணித்தாகிய நெடுவேள் குறத்தின்கண் பொன்னிறமுடைய பூக்கள் மலிந்தவொரு வேங்கை மரத்தினது நன்மைமிக்க கொழுவிய நீழலிலே; ஒருமுலை இழந்தாள் ஓர் திருமாபத்தினிக்கு -தன் திருமுலைகளுள் ஒன்றனை இழந்தவளாய் வந்து நின்ற திருமகள் போல்வாளும் சிறந்த பத்தினியுமாகிய ஒருத்தியைக் கண்டோம்; யாங் கண்டு நிற்கும் பொழுதே அவள் பொருட்டு; அமரர்க்கரசன் தமர் வந்து ஈண்டி அகல் விசும்புளார் கோமானாகிய இந்திரனுடைய சுற்றத்தார் வானத்தினின்று மிழிந்து வந்து அவள் முன்குழீஇ; அவள் காதல் கொழுநனைக் காட்டி - வல்வினை வந்துறுத்த காலை மதுரைக் கண் அவள் இழந்த கணவனையும் அவட்குக் காட்டி, பீடு கெழு மந்நங்கையின் புகழைப் பாராட்டித் தமது வானவூர்தியின்கண் கணவனோடு ஏற்றி; அவளொடு எம் கண்புலம் காண விண்புலம் போய அது - அத்திருமாபத்தினியோடு அவ்வமரர்கள் வலவனேவா வானவூர்தியின்கண் எளிய மாந்தராகிய எம் ஊன் கண்ணும் கண்கூடாகக் காணும்படி வானிடத்தே சென்ற அக் காட்சியையும் கண்டேம் அக்காட்சி தானும்; இறும்பூது போலும் எளியேங்கட்குப் பெரிதும் மருட்கை தருவதொன்றாயிருந்தது; நீ அறிந்து அருள் என - எம்பெருமான் இந்நிகழ்ச்சியைத் திருவுளம் பற்றியருளுக ! என்று கூறி மீண்டும் வணங்கா நிற்ப என்க.

விளக்கம் 1-3 : குணவாயில் கோட்டத்து அரசு துறந்திருந்த இளங்கோவடிகள் என இயைக்க. குடக்கோ. தமிழகத்தின் மேற்றிசைக் கண்ணதாகிய சேர நாட்டு மன்னன்; அவனாவான் சேரன் செங்குட்டுவன் என்க. சேரல். சேர மன்னன். சேரல் இளங்கோவடிகள் என்புழிச் சேரனும் இளங்கோவடிகளும் ஆகிய இருவர்க்கும் எனல் வேண்டிய எண்ணும்மையும் ஆக்கச் சொல்லும் தொகைச்சொல்லும் தொக்கன.

இனி, சேரலும் இளங்கோவடிகளும் மலைவளங்காணச் சென்று பேரியாற்றடைகரை யிடுமணல் எக்கரின்கண் ஒருங்கிருந்துழி அவ்விருவர்க்கும் குறவர் வந்து குழீஇக் கூறி பொலம்... அறிந்தருள்நீ எனச் சேரலை நோக்கிக்கூற என்பது கருத்தாகக் கொள்க.

குன்றக் குறவர், குன்றுகளில் வாழ்வோராகிய குறவர். இனி குன்றம், என்றது திருச்செங்குன்று என்னும் மலை என்பர் அடியார்க்கு நல்லார். திருச்செங்கோடு என்பாருமுளர் என்று கூறி, அது பொருந்தாது என்று மறுத்துங் கூறியுள்ளார்.

4. பொலம்பூவேங்கை - பொன்னிறமான பூவையுடைய வேங்கை. திருமாபத்தினிக்கு நிழலாகும் பேறுபெற்றமையின் நலங்கிளர் நிழல் என்று விதந்தார்.

5. தாம் கண்கூடாகக் கண்டமை தோன்ற ஒரு முலையிழந்தாள் என்று குறவர் கூறினர் என்க. மேலும் கண்ணகியாரே இக்குன்றக் குறவர்க்கு மணமதுரையோடு அரசு கேடுற வல்வினை வந்துருத்தகாலை கணவனை அங்கிழந்து போந்த கடுவினையேன் யான் என்றறிவித்தமையின் ஓர் திரு மா பத்தினி என மூன்று அடைமொழிகளால் விதந்தோதினர் என்க.

6. அமரர்க்கரசன் தமர் என்றது இந்திரனுடைய அரசியற் சுற்றத்தாரை.

7-9. காதற்கொழுநன் என்றது அப் பத்தினி இழந்த காதற் கணவனை என்பதுபட நின்றது. அமரர்கள் மாந்தர் கண்களுக்குப் புலப்படாராகவும், எங் கண்களுக்குப் புலப்படலாயினர் என்று வியப்பார் எங்கட் புலம்காண என்றார். கட்புலம் காண என்றது கட்குப் புலப்பட என்றவாறு. புலம் ஈண்டு ஒளி. அதாஃவது உருவம். இறும்பூது மருட்கை. இந்நிகழ்ச்சி யாம் கண்கூடாகக் கண்டதேயாயினும் இக் காட்சி மெய்யோ? பொய்யோ? என்று மருள்கின்றோம் என்பார் போய அது இறும்பூது போலும் என்றனர். போய+அது என்று கண்ணழித்துக் கொள்க. போனதாகக் கண்ட அக்காட்சி என்பது பொருள். போலும் . ஒப்பில் போலி.

இனி, அறிந்தருள் நீ என்றது, இங்ஙனம் இந்நாட்டின் நிகழ்ந்த இந் நிகழ்ச்சி இந்நாட்டிற்குத் தீங்கு பயக்குமோ? நன்மை பயக்குமோ? யாமேதுமறிகிலேம் அறிந்து ஆவன செய்யும் கடப்பாடுடைய நீ அறிந்தருள்க என்பதுபட நின்றது. என்னை, முலை யிழந்து வந்தமையால் தீமைபயக்கும் என்றும், வானவர்தமர் வந்து கணவனைக் காட்டி அழைத்துப் போனமையால் நன்மை பயக்கும் என்றும், இருவகைக்கும் இந்நிகழ்ச்சி பொருந்துதலால் யாங்கள் இவற்றுள் ஒன்று துணிகிலேம். இவற்றைத் துணியுந் தகுதியுடைய நீயே அறிந்தருள்க என்பதே அக் குறவர் கருத்தாகலின் என்க.

இது மருட்கை என்னும் மெய்ப்பாடு.

10-11 : அவனுழை ........ ...... உரைப்போன்

(இதன் பொருள்.) அவன் உழை இருந்த தண் தமிழ்ச் சாத்தன் அது கேட்ட செங்குட்டுவன்றானும் பெரிதும் வியப்புற்றுத் தன் பக்கலிலுள்ளாரை நோக்க அப்பொழுது அவ்வரசன் மருங்கிலிருந்த குளிர்ந்த தமிழ்மொழிப்புலமையுடையோனாகிய சாத்தன் என்பான்; யான் அது பட்டது அறிகுவன் என்று உரைப்போன் அரசனுடைய குறிப்பறிந்து வேந்தர் பெருமானே ! யான் அந்நிகழ்ச்சியினது வரலாற்றினை நன்கு அறிந்துளேன் ஆகலின் கூறுவல் கேட்டருள்க என்று தொடங்கி அதனைக் கூறுபவன் என்க.

(விளக்கம் 1) : அவன் - சேரன் செங்குட்டுவன். அவன் என்பது இளங்கோவடிகளைச் சுட்டியதாகக் கருதுவர் உயர்திரு நாட்டாரவர்கள். அது பொருந்தாது என்னை? இப்பதிகஞ் செய்த சான்றோர் தொடக்கத்தே இளங்கோவடிகள் என அடிகளாரைக்கூறிவைத்து வழக்கினாகிய உயர்சொற்கிளவியாகிய ஒருவரைக் கூறும் அப்பன்மைக் கிளவிக்குப் பொருந்தாத அவன் என்னும் ஒருமைச் சுட்டாற் சுட்டார் ஆதலின் என்க; பின்னும் இவர் அடிகளாரைப் பன்மையாலேயே அடிகள் நீரே அருளுகென்றாற்கு அவர் என்றே சுட்டுதலும் உணர்க. ஈண்டும் குன்றக்குறவர் அறிந்தருள்நீ எனச் செப்பியது சேரன் செங்குட்டுவனுக்குப் பொருந்துவதன்றி அடிகளார்க்குப் பொருந்தாமையும் அறிக. ஆகவே குன்றக்குறவர் சேரனும் அடிகளாரும் ஒருங்கிருந்துழிச் சென்று வணங்கி அவருள் சேரனுக்கே கூறினர் என்னும் எமது கருத்தே பொருத்தமாம்.

இனி, பழையவுரையாசிரியருள் வைத்து அரும்பதவுரையாசிரியர், குணவாயிற் கோட்டத்துக் கடவுளர் முன்னர்த் துறந்திருந்த இளங்கோவடிகளுக்குக் கண்ணகி வானவர் போற்றத் தன் கணவனோடு கூடியது கண்டு செங்குட்டுவனுக்கு உரைத்த குறவர் வந்து எல்லா மறிந்தோய் இதனை அறிந்தருள் என்று கூறிப் போக, பின்பு செங்குட்டுவனைக் கண்டு போந்து அடிகளுழை வந்தசாத்தன் அது பட்டவாறெல்லாம் கூற என்றோதுவர். இதுவும் பொருந்தாமைக்கு முன் கூறிய காரணம் ஒக்கும்; மேலும் செங்குட்டுவனுக்குக் குன்றக்குறவர் கூடிவந்து பேரியாற்றிடுமணல் எக்கரிடைக் கண்டு கூறியவர் மீண்டும் அரசு துறந்திருந்த அடிகளார்க்குக் கூறக் குணவாயிற் கோட்டத்திற்கு ஒருங்குடன் கூடிவந்து போதலும்; பேரியாற்றிடு மணல் எக்கரிடத்தே குறவர் சேரனைக் கண்டு கூறியபொழுது ஆங்கு அவனுழையிருந்த தண்டமிழ்ச் சாத்தனே ஈண்டும் அக்குறவர் கூறும் பொழுது வந்திருத்தலும் இன்னோரன்ன பிறவும் நிகழ்தற்கியையா நிகழ்ச்சிகள் (அசம்பாவிதம்) என்க.

இனி, ஆசிரியர் அடியார்க்குநல்லார்தாமும் அரும்பதவுரை யாசிரியர் கருத்துப் பொருந்தாதெனக் கண்டு, தாம் வேறு கூறினர் ஆயினும் அவர் தாமும் குறவர் இளங்கோவடிகளை நோக்கி அறிந்தருள் என்பதும் பொருந்தாதென வறிக.

11. அதுபட்டது - அந்நிகழ்ச்சியினது வரலாறு. அது என்றது ஓரு முலையிழந்தனை என்பார் அடியார்க்கு நல்லார்.

12-20 : ஆரங்கண்ணி.............புகுந்தனன்

(இதன் பொருள்) : ஆரங்கண்ணிச் சோழன் மூதூர் பேரா சிறப்பின் புகார் நகரத்து - வேந்தே ! போந்தை வேம்பே ஆர் எனவரும் மூவகைப்பட்ட பூக்களுள் வைத்து (ஆர் என்னும்) ஆத்திப்பூங் கண்ணியை அடையாளமாகக் கொண்டு தலையிற் சூடிய சோழ மன்னனுடைய பழைய நகரங்களுள் வைத்து எக்காலத்தும் நீங்காத சிறப்பினையுடைய பூம்புகார் என்னும் நகரத்தின்கண் வாழுகின்ற பெருங்குடிவாணிகருள் வைத்து; கோவலன் என்பான் ஓர் வாணிகன்-கோவலன் என்னும் பெயரையுடைய வாணிகன் ஒருவனிருந்தனன்; அவ்வூர் நாடகம் ஏத்தும் நாடகக் கணிகையொடு ஆடிய கொள்கையின் - அவன் அந்நகரத்திலேயே வாழ்பவளும் நாடகம் என்னும் கலையே தன்னைப் பாராட்டற்கியன்ற புகழொடு நாடகமாடுகின்ற பொதுமகளுமாகிய மாதவி என்னும் நாடகக் கணிகையோடுகூடி யின்புறும் கோட்பாடுடைமை காரணமாக; அரும்பொருள் கேடு உற - தன் தாயத்தார் வழித் தனக்குக் கிடைத்த தேடற்கரிய பொருளெல்லாம் அழிந்தொழிந்தமையாலே பெரிதும் நாணி; மனைவி கண்ணகி என்பாள் - அவ்வாணிகன் மனைக்கிழத்தி கண்ணகி என்னும் பெயருடையவள் ஆவள்; அவள் கால் பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டி - அவள்பால் எஞ்சியிருந்த அவளுடைய காலணியாகிய சித்திரச் செய்வினையமைந்த சிலம்புகளை விற்று அப்பொருளை முதலாகக் கொண்டு இழந்த பொருளை ஈட்டவிரும்பி; பாடல் சால் சிறப்பின் பாண்டியன் பெருஞ்சீர் மாடமதுரை புகுந்தனன் - புலவர் சங்கமிருந்து பாடிய பாடல் சிறந்த சிறப்பினையுடைய பாண்டியனது மிக்க புகழையுடைய மதுரைமாநகரத்தே தன் மனைவியாகிய அக்கண்ணகியுடனே சென்று புகுந்தனன் என்க.

(விளக்கம் 12) ஆரங்கண்ணி - ஆத்திமாலை. இது சோழ மன்னர்க்குரிய அடையாளப்பூ. இதனை,
...........உறுபகை
வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்ப்
போந்தை வேம்பே ஆர் என வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும்

எனவருந் தொல்காப்பித்தானும், (பொருள் - 13)

கொல்களிறு ஊர்வர் கொலைமலி வாள்மறவர்
வெல்கழல் வீக்குவர் வேலிளையர் - மல்குங்
கலங்கல் ஒலிபுனல் காவிரி நாடன்
அலங்கல் அமரழுவத்(து) ஆர்

எனவரும் புறப் - வெண்பாவானும், (பொது) அறிக.

15. நாடகம் இவளாற் சிறப்பெய்துதலின் அக்கலையே இவளை ஏத்தும் என்றவாறு. கணிகை - பதியிலாள்; பொதுமகள் (16) ஆடிய கொள்கை - நுகர்ந்த கோட்பாடு. கொள்கையினால் என்க. அரும் பொருள்-ஈட்டுதற்கரிய பொருள். எனவே முன்னை யூழான், தாயப் பொருளாய்க் கிடைத்த பொருள்  என்பதாயிற்று. (17) அவன் மனைவி கண்ணகி என்னும் பெயருடையாள் எனச் சுட்டுப்பெயர் பெய்துரைக்க. நாடகமேத்தும் கணிகை என்றவர் ஈண்டு மனைவி என்றொழியாது பெயரை விதந்து கூறியது அவளே இக்குறவராற் கூறப்பட்டவள் என்றறிவுறுத்தற்கென்க. இது முன்மொழிந்து கோடல் என்னும் உத்தி (18) பண் அமை சிலம்பு இசை பொருந்திய சிலம்புமாம். சிலம்பு பகர்தல் வேண்டி என்றது - எஞ்சிய அணிகலன் அதுவே ஆகலான் அதனைப் பகர்தல் வேண்டி என்பதுபட நின்றது.

19. ஊழ்வினை வந்துருத்தகாலை நல்லவும் தீயவாம் என்றுணர்த்தற்கு, பாடல்சால் சிறப்பின் பாண்டியன் எனவும், பெருஞ்சீர் மாட மதுரை எனவும் பாண்டியனையும் மதுரையையும் விதந்தோதினர்.

ஈண்டு அடியார்க்கு நல்லார் சிறப்பிற் பாண்டியனென்றும் பெருஞ்சீர் மாடமதுரையென்றும் அடிகள் புகழ்ந்தார் என்பர். இப்பதிகம் அடிகளாராற் செய்யப்பட்டிலது என்பது வெள்ளிடைமலையென விளங்கிக் கிடப்பவும் அவர் இவ்வாறு கூறியது வியத்தற்குரியதாம்.

20-22 : அதுகொண்டு.......காட்ட

இதன் பொருள் : அதுகொண்டு மன் பெரும் பீடிகை மறுகின் செல்வோன் - அங்ஙனம் முன்னாள் மதுரைபுக்க அக்கோவலன் மறுநாள் அச்சிலம்புகளுள் ஒரு சிலம்பை விற்கும் பொருட்டுக் கையிலெடுத்துக் கொண்டு அந்நகரத்து அங்காடி மறுகுகளில் வைத்து, மிகப்பெரிய மறுகிற் செல்பவன்; பொன்செய் கொல்லன் தன்கைக் காட்ட - ஆங்குத் தன்னெதிரே வந்த பொற்கொல்லன் ஒருவன் கையில் அச்சிலம்பைக் கொடுத்துக் காட்டா நிற்ப என்க.

விளக்கம் : 20-21 : அது கொண்டு என்றார் அவன் கொடு போனது ஒற்றைச் சிலம்பு என்பது தோன்ற. மன்-மிகுதிப் பொருட்டு, மன்னைச் சொல்லுக்கு ஆசிரியர் தொல்காப்பியனார் மிகுதிப் பொருளுண்மை கூறிற்றிலரேனும் இடையியற் புறனடையால் பவணந்தி முனிவர் அச்சொற்கு அப்பொருள் உண்மை ஓதுதலும் உணர்க.

இனி, பெரும் பீடிகைக்கு மன்னைச் சொல்லையும் அடையாக்கியதனால் மக்கள் வழக்குமிக்க அம் மாபெருந்தெருவிற் சென்றும், அவன் ஊழ்வினை அவனை விட்டிலது கண்டீர் என்றிரங்குவது இப்பதிக முடையார் குறிப்பென்று கோடலுமாம். பீடிகை மறுகு-அங்காடித் தெரு.

22. கைக்காட்ட . கையிற் கொடுத்து ஆராய்ந்து காணுமாறு செய்ய என்க. இது, அவன் அதனை நன்கு நோக்கி, இது பெருந்தேவியின் சிலம்பை ஒத்துளது என்று காண்டற்கும் அவ்வழி வஞ்சித்தற்கும் ஏதுவாதல் பற்றிக் கொல்லற்குக்காட்ட என்னாது கொல்லன் கைக் காட்ட என வேண்டா கூறி விதந்தார்.

இனி, அடியார்க்கு நல்லார் அது கொண்டென்றார்; அச்சிலம்பால் மேல்விளைவன தோன்ற; அஃது அநியாயபுரத்தே புகுகின்றவன் கூற்றத்தையும் உடன்கொண்டு புக்கான் என்றாற் போன்றிருந்தது என்பர்.

23-26 : கோப்பெருந்தேவி........கள்வன் கையென

இதன் பொருள் : இச்சிலம்பு கோப்பெருந்தேவிக்கு அல்லதை யாப்புறவு இல்லை - அங்ஙனம் காட்டியபொழுது அப்பொய்த் தொழிற் கொல்லன் அச்சிலம்பினது சித்திரச் செய்வினை யெல்லாம் புரிந்துடன் நோக்கி வஞ்சகமென்று நெஞ்சகத்தே வைத்துக் கோவலனை நோக்கி ஐய! இப் பெருவிலைச் சிலம்பு கோப்பெருந்தேவிக்கே ஆவதன்றிப் பிறர் அணியப் பொருந்துவதன்று காண் ஆதலால், ஈங்கு இருக்கஎன்று ஏகி-யான் சென்று இதுபற்றி விறல் மிகு வேந்தற்கு விளம்பி வருந்துணையும் உதோ விருக்கின்ற என் சிறுகுடிலின் அயலே இருந்திடுக ! என்று கூறிச் சென்று; பண்டு தான் கொண்ட சில் அரிச்சிலம்பினை-அரசனைக் கண்டு அடிவீழ்ந்து கிடந்து தாழ்ந்து பல வேத்தி முன்பு பணிக்களரியில் தான் வஞ்சித்துக் கொண்ட தேவியின் சிலம்பு பற்றி ஆராய்ச்சி சிறிது பிறந்து வருதலால் அவ்வஞ்சம் வெளிப்படா முன்னம் அப்பழியை இவ் வேற்று நாட்டான் மேலேற்றுவல் என்றெண்ணி; கண்டனன் பிறன் ஓர் கள்வன் கையென-வேந்தர் வேந்தே, பண்டு களவு போன தேவியாருடைய சிலவாகிய பரலிடப்பட்ட சிலம்பை இன்று அடிநாயேன் பிறர் நாட்டுக் கள்வன் ஒருவன் கையிற் கண்டேன் என்று கூற என்க.

விளக்கம் 2-3 : யாப்புறவு - பொருந்தும். ஈங்கு என்று சுட்டியது அப்பொற் கொல்லன் குடிலுக்கருகான ஒரு கோயிலை. (25) சில்லரிச் சிலம்பு என்றது, பண்டு தான் வஞ்சித்துக் கொண்டுள்ள தேவியார் சிலம்பினை.

இப்பகுதிக்கு ஆசிரியர் அடியார்க்கு நல்லார் வகுத்த விளக்கம் மிகவும் இனியன; அவையாவன :- தான் கொண்ட என்றார், தன்னெஞ்சறியத் தான் கொண்டதனை இங்ஙனம் கூறினான் என்பது தோன்ற; ஈங்கிருக்க என்றார், பிறிதோரிடத்தாயின் ஊர்காவலர் ஆராய்வர் என்று கருதினான் என்பது தோன்ற; என்று ஏகி என்றார், அவன் கருத்தும் முயற்சியுந் தோன்ற; சில்லரிச் சிலம்பினை என்றார் தொழிற்பன்மை தோன்ற; (ஈண்டுச் சில்லரி என்பதற்கு இவர் சிலவாகிய சித்திரத் தொழில்கள் எனப் பொருள் கொண்டனர் போலும்) பிறன் ஓர் கள்வன் கையிற் கண்டனன் என்றார், தன்னையும் கள்வன் என்றமை தோன்ற (இஃது ஆற்றவும் இன்பந்தரும் நுண்ணிய விளக்கமாகும்)

27-30 : வினைவிளை.........ஈங்கென

இதன்பொருள் : வினை விளைகாலம் ஆகலின் - அது கோவலன் முற்பிறப்பிற் செய்த தீவினை வந்து தன் பயனை நுகர்விக்கும் காலமாக இருந்தமையாலே; சினை அலர் வேம்பன் யாவதும் தேரான் ஆகி - அரும்புகள் மலர்கின்ற புதிய வேப்பந்தாரணிந்த அப்பாண்டியன் அப்பொய்த் தொழிற் கொல்லன் கூற்றை ஒரு சிறிதும் ஆராயாதவனாய்; கன்றிய காவலர்க் கூய்-தந்தொழிலில் பயின்றடிப்பட்ட திறமுடைய காவலர் சிலரை அழைத்து; அக்கள்வனைக் கொன்று -நீயிர் இக்கொல்லனொடு சென்று இவனாற் காட்டப்படுகின்ற அக்கள்வனைக் கொன்று; அச்சிலம்பு - அவன் கைக்கொண்டுள்ள நம்மரண்மனைச் சிலம்பினை; ஈங்குக் கொணர்க என - இப்பொழுதே இங்குக் கொண்டு வரக்கடவீர் எனக் கட்டளையிடா நிற்ப என்க.

விளக்கம் : வினைவிளை காலமாதலின் எனத் தண்டமிழ்ச் சாத்தனார் கூறியது-கோவலன் முற்பிறப்பிற் செய்த தீவினை வந்து தன் பயனை நுகர்விக்கும் காலம் அதுவாகலின் என்னும் பொருளுடையதாம். என்னை? பின்னர் வினைவிளை காலம் என்றீர் யாதவர் வினைவிளைவு எனச் சேரன் வினவுதலின் அச்சேரனும் வினை கோவலன் வினை என்றே கருதி வினவினன் என்பதும், அவ்வினாவிற்கு விடை கூறும் சாத்தனாரும், கோவலனுடைய ஊழ்வினையையே மதுரைமா தெய்வங் கூறத் தாங் கேட்டாங்குக் கூறுதலாலும் யாம் கூறுமுரையே பொருத்தமாம்.

இனி, அடியார்க்கு நல்லார் அங்ஙனம், அவன் சொல்லக்கேட்ட பாண்டியன் தான் முற்பவத்திற் செய்த தீவினை வந்து பலிக்கின்ற காலமாதலாலே ஒன்றையுந் தேரானாய் என்று கூறும் உரை பயில்வோர்க்கு மயக்கந்தருவதாயுளது. என்னை? பாண்டியன் தான் செய்த தீவினையாலே மயங்கித் தேரானாயினன் என்பது போன்று அவ்வுரை அமைந்துள்ளது. ஆயினும் அடியார்க்கு நல்லார் தான் முற்பவத்திற் செய்த தீவினை என்புழித் தான் என்னும் பொதுப் பெயர் மறுகிற் செல்வோன் என்னும் எழுவாயின் சுட்டுப் பெயர்ப்பொருள் பயந்து கோவலனையே குறித்து நின்றது எனக்கொள்க. பாண்டியனைக் குறித்திலது என்பதனை அவர் அதற்குக் கூறும் விளக்கவுரை புலப்படுத்தும். அவர் இதனானன்றே தென்னவன் தீதிலன் தேவர் கோமான் கோயில். நல்விருந்தாயினான் என்ற கருத்து மெனக் கொள்க எனவும் (38-44) விறலோய்........யானென் என்பதன் விளக்கவுரையில் வினைவிளைவு யாதென்று வினாவினாற்குப் பாண்டியன் வினைவிளைவு கூறிற்றிலர் எனவும், ஓதுதலின் அடியார்க்கு நல்லார் தான் முற்பவத்திற் செய்த தீவினை என்புழித்தான் என்னும் பொதுப் பெயரால் கோவலனையே குறித்தனர் என அமைதி காண்பாம்.

அடியார்க்கு நல்லார் இவன் சொன்ன அக்கள்வனைக் கொல்ல அச் சிலம்பையும் அவனையும் இப்பொழுதே இங்கே கொண்டு வருவீராக வெனச் சொல்லக் கருதினவன் காமபரவசனாய் இச்சிலம்பு இவள் ஊடல் தீர்க்கும் மருந்தாமென்னும் கருத்தால் வாய்சோர்ந்து கொன்று அச்சிலம்பை இப்பொழுதே கொணர்க என்று கூற என்றோதியவுரை நூலாசிரியரின் கருத்துணர்ந்து விரித்தோதிய நுண்ணிய இனியவுரையேயாகும். என்னை, ஆசிரியர் இளங்கோவடிகளாரும், அப்பாண்டியனிடம் பொற்கொல்லன் சென்று வஞ்சம் புணர்க்கும் அச் செவ்விதானும் அவன் காம பரவசனாய் இருக்கும் ஒரு செவ்வியாகவே புனைந்திருத்தலான் ஆசிரியன் நெஞ்சத்து ஆழ்ந்திருக்கும் கருத்துணர்ந் துரைத்த நுண்ணுரையேயாம் என்க.

இனி, அடிகளார் சினையலர் வேம்பன் ஈண்டுத் தான் அரசியல் பிழைத்தான் என்று கருதுகின்றார் இப்பிழையின் வழியே அவனுக்கு அறம் கூற்றாயிற்று என்பது அவர் கொள்கையாகும். அடிகளார் உலகியலில் அரசராவோர் இத்தகைய செய்திகளிலே மிக எளிதாகவே தமது அறத்தினின்றும் வழுவி விடுகின்றனர். அதுவே பின்னே அவர் தம் அரசாட்சியைக் கவிழ்த்து விடுகின்றது. ஆதலால் அரசராயினோர் மிகவும் விழிப்புடனிருந்து ஆட்சிசெய்தல் வேண்டும் என்று அரசர்க்கு அறிவுறுத்தவே அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும் வாய்மையையும் இக்காவியப் பொருள் மூன்றனுள் ஒன்றாகக் கொள்வாராயினர். இவ்வாறன்றிப் பாண்டியன் கேடுறற்கும் காரணம் ஊழ்வினையே என்று கொள்வது ஊழ்வினையின் இயல்பறியாதார் கொள்கையேயாம் என்க. என்னை? ஊழ்வினையானது நன்னெறியிற் செல்வாரைத் தீயநெறியிற் புகுத்தும் ஆற்றலுடையதன்று. ஈண்டுப் பாண்டியன் பொன்செய்கொல்லன் தன் சொற் கேட்ட மாத்திரையே ஆராயாது கோவலனைக் கொல்வித்தது அவன் பிழையேயன்றி ஊழின் பிழை என்று கொள்ளற்க. அடிகளார் கருத்தும் பாண்டியன் அரசியல் பிழைத்தான் என்பதேயாம் என நுண்ணிதின் உணர்க.

இனி, அரசராதல் அறங்கூறவையத்தாராதல் வழக்குத் தீர்க்கும் பொழுது அவர் செய்யவேண்டிய அரசியன் முறையை,

தொடைவிடை ஊழாத் தொடைவிடை துன்னித்
தொடைவிடை ஊழிவை தோலாத் - தொடைவேட்டு
அழிபடல் ஆற்றால் அறிமுறையென் றெட்டின்
வழிபடர்தல் வல்ல தவை

எனவரும் புறப்பொருள் வெண்பாமாலையான் (273) உணர்க.

அதனாலன்றோ வழக்குரைகாதையில் பாண்டியன் தன் பிழையுணர்ந்துயீர் நீப்பவன் தான் செய்த பிழையை,

பொன்செய் கொல்லன் றன்சொற் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்குந் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுகவென் னாயுளென

உலகறிய அரற்றி மயங்கி வீழ்ந்தனன்.

இனி, மதுரைமாதெய்வம் கண்ணகியார்க்கு.

தோழிநீ யீதொன்று கேட்டியெங் கோமகற்கு
ஊழ்வினை வந்தக் கடை
மாதரா யீதொன்று கேளுன் கணவற்குத்
தீதுற வந்த வினை

என இருவர் வீழ்ச்சிக்கும் ஊழ்வினையே காரணம் எனக் கூறிற்றாலோ எனின் அஃதொக்கும். இரண்டும் ஊழ்வினையே. கோவலன். முற்பிறப்பிற் செய்தது பாண்டியன் அற்றைநாள் முற்பகலிலேயே செய்தது இரண்டும் ஊழே ஆதலின், தெய்வம் அவ்வாறு கூறிற்று என்க. ஆயினும்,

பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
தாள்வினை யின்மை பழி

என்பதுபற்றி ஈண்டுக் கோவலன் பழிக்கப்பட்டிலன். அறிவறிந்தும் ஆள்வினையில் வழீஇய அரசனே பழிக்குரியவன் ஆகின்றனன் என்க.

இனி, ஈண்டும் அடியார்க்கு நல்லார் முன்னர்க் கைகுறைத்தல் முதலிய முறைசெய்தோன் இதனைத் தேர்ந்திலன் என்று அடிகள் இரங்கிக் கூறினார் என்பது பொருந்தாமை முற்கூறியது கொண்டுணர்க.

31-36 : கொலைக்கள............இதுளென

இதன்பொருள் : கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி-அவ்வேம்பன் பணித்தபடியே அக்காவலராற் கொலையிடத்தே பட்டொழிந்த வணிகனாகிய அக் கோவலனுக்கு மனைவியாகிய கண்ணகி தானும் இச்செய்தி கேட்ட பின்னர்; நிலைக்களம் காணாள் - தனக்கு நிலையிடம் காணாளாய்; பத்தினியாகலின் - அவள் தான் திருமா பத்தினியாகலான்; பாண்டியன் கேடு உற நெடுங்கண் நீர் உகுத்து-அரசியல் பிழைத்த அப்பாண்டியன் உயிர் கேடுறும் படி அவன் முன்னர்ச் சென்று தன் நெடிய கண்ணினின்றும் நீர் உகுத்து; நிலை கெழு கூடல்-அற்றை நாள்காறும் நன்னிலை பொருந்தியிருந்த நான்மாடக்கூடல் என்னும் அவன் நகரத்தை; முத்து ஆரம் மார்பின் முலைமுகந்திருகி நீள் எரி ஊட்டி - சினந்து பண்டு முத்துவடம் பூண்டிருந்த தன்திருமுலைகளுள் ஒன்றைப் பற்றித் திருகி வட்டித்து விட்டெறிந்து தீக்கிரையாகச் செய்தமையாலே; பலர் புகழ்-மதுரைமாதெய்வம் முதலாகப் பலரானும் புகழப்படுகின்ற; பத்தினி ஆகும் இவள் என - திருமாபத்தினியாகிய அக்கண்ணகி நல்லாளே இங்கு இக்குன்றக் குறவராற் கூறப்பட்டவள் என்று சாத்தனார் அறிவியா நிற்ப என்க.

விளக்கம் 30 : கொணர்க ஈங்கெனக், (31) கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி எனவே, அக்காவலர் கோவலனைக் கொன்றமையும்; கண்ணகியார் கோவலனுடன் மதுரைக்கு வந்திருந்தமையும் கூறியவாறாயிற்று. மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையிற்றனிச் சிலம்பும் கண்ணீரும், வையைக்கோன்....உண்டளவே தோற்றான் உயிர் என்று அடிகளார் கூறுதல் கருதி உரையாசிரியர் (அடியார்) அவனுயிர்கேடுறக் கண்ணீர் உகுத்து எனக் கண்ணீரை ஏதுவாக்கினார். கண்ணகி இடமுலை கையாற்றிருகி வட்டித்து மறுகின் விட்டெறிந்த அளவிலே அவர்முன் எரியங்கிவானவன் வந்து தோன்றலின் என்றமையால் தன் முலை முகத்தெழுந்த தீ என்றார் (அடியார்) வாழ்த்துக் காதையுள்ளும் அடிகளார் தொல்லை வினையாற் றுயருழந்தாள் கண்ணினீர் கொல்லவுயிர் கொடுத்த கோவேந்தன் என்றோதலுமுணர்க. ஈண்டு, அல்லற்பட்டாற்றா தழுதகண்ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை (535) என வருந் திருக்குறளையும் நினைக.

37-38 : வினைவிளை..........என்ன

இதன்பொருள் : வினைவிளை காலம் என்றீர் - அது கேட்ட சேரன் செங்குட்டுவன் அக்கண்ணகியார் பொருட்டுப்பட்ட கவற்சியுடையனாய் ஐய ; நீயிர் வினைவிளை காலம் என்றீரல்லிரோ! அவர் வினைவிளைவு யாது என்ன-அவர்க்கு இத்தகைய மாபெருந்துயரம் வருவதற்குக் காரணமாய் அவர் செய்த தீவினைதான் யாது அது நிகழ்ந்த காலம் யாது? அறிவீராயிற் கூறுதிர் என்று சாத்தனாரை வேண்டவென்க.

விளக்கம் 27 : வினைவிளை காலமாதலின் யாவதுஞ் சினையலர் வேம்பன் தேரானாகி எனச் சாத்தனார் உரைத்தமையுணர்க. வினைவிளை காலமாதலின் வேம்பன் யாவதுந் தேரானாகி என்றமையால் ஈண்டு வினையென்றது கோவலன் செய்த வினையோ? அல்லது வேம்பன் செய்த வினையோ? என ஐயுறுதற்கிடனாயிருந்தமையின் யாது அவர் வினைவிளைவு எனத் தானறிந்த உயர்திணைமருங்கிற் பன்மைச் சுட்டால் சுட்டினான் சேரன். என்னை?

பான் மயக்குற்ற ஐயக் கிளவி
தானறி பொருள்வயிற் பன்மை கூறல் (தொல்-சொல்-23) என்பது இலக்கண விதியாகலான்.

38-54 : விறலோய்...........யானென

இதன்பொருள்: விறலோய் கேட்டி வெற்றிவேந்தே ! கேட்டருள்க; அதிராச்சிறப்பின் மதுரை மூதூர் - பண்டொருகாலத்தும் துன்பத்தால் நடுங்கியறியாத சிறப்பினையுடைய மதுரை யாகிய அந்தப் பழைய நகரத்தின் கண்ணே; கொன்றை அம் சடைமுடி மன்றப் பொதியிலில் - அக்கண்ணகி முலைமுகந் திருகி அந்நகரத்தைத் தீக்கிரையாக்கிய அற்றை நாளிரவு யான் அந்நகரத்து மன்றங்களாகிய பொதியிலில்களுள் வைத்துக் கொன்றை வேய்ந்த சடை முடியினையுடைய இறைவன் எழுந்தருளியுள்ள; வெள்ளியம் பலத்துக்கிடந்தேன் -வெள்ளியம்பலம் என்னும் மன்றத்தே அத் தீயினுக்கஞ்சிப் புகுந்து ஆங்கொருசார் கிடந்தேனாக; நள்ளிருள் அவ்விரவின் இடையாமத்தே, அவ்வம்பலம றுகின்கண்; ஆர் அஞர் உற்ற வீரபத்தினிமுன் - பொறுத்தற்கரிய துன்பத்தோடே செல்லா நின்ற மறக்கற்புடைய அக்கண்ணகியார்க்கு முன் வருதற்கு அஞ்சி, மதுரைமாதெய்வம் வந்து தோன்றி - பாண்டியன் குல முதற் கிழத்தியாதலின் மதுராபதி என்னும் தெய்வமகள் அவனுக்குப்பட்ட கவற்சியளாய், அம் மாநகரைத் தீயுண்ணால் பொறாளாய் உருவத்திருமேனிகொண்டு அவரைப் பின்தொடர்ந்துவந்து; சீற்றம் கொங்கையில் அழல் விளைத்தோய்-பெரிய சினத்தாலே நினது கொங்கையினின்றும் கொதிக்கின்ற தீயைப் பிறப்பித்த தெய்வக் கற்புடையோய் ! ஈதொன்றுகேள்; முந்தைப்பிறப்பின்  முதிர்வினை நுங்கட்கு பைந்தொடி கணவனொடு முடிந்தது-முற்பிறப்பிலே செய்யப்பட்டு இதுகாறும் முதிர்ந்த பழைய தீவினை உங்களுக்குப் பசிய தொடியினையுடைய நின் கணவன் முடிவோடு தன்பயனை ஊட்டி யொழிந்தது; ஆதலின் - அங்ஙனமாகலான் இப்பொழுது; முந்தைப் பிறப்பின் சிங்கா புகழ் வண் சிங்கபுரத்துச் சங்கமன் என்னும் வாணிகன் மனைவி முற்பிறப்பிலே குன்றாத புகழையுடைய வளவிய கலிங்க நாட்டுச் சிங்கபுரமென்னும் நகரின்கண் சங்கமன் என்னும் வாணிகனுக்கு மனைவி; இட்டசாபம் கட்டியது ஆகலின் - இட்ட சாபமானது இப்பிறப்பின்கண் வந்து நினக்கு மூண்டுளதாதலான்; வார் ஒலி கூந்தல் நின்மணமகன் தன்னை நீண்டு செறிந்த கூந்தலையுடையோய் ! நீ நின் கணவனை; ஈர்ஏழ்நாள் அகத்து எல்லை நீங்கி-இற்றைநாளினின்றும் பதினாலாநாட் பகல் நீங்கிய பொழுதிற் காண்பாய்; வானோர் தங்கள் வடிவின் அல்லதை ஈனோர் வடிவில் காண்டல் இல் என-அங்ஙனம் காணுமிடத்தும் வானவர் வடிவில் (நின் கணவனைக்) காண்பதல்லது மக்கள் வடிவில் காண்டல் இல்லை என்று கூற; கோட்டம் இல் கட்டுரை யான் கேட்டனன் என - அவ்வஞ்சமற்ற கட்டுரையினை யான் எனது செவியாலேயே கேட்டேன் என்று அச்சாத்தனார் கூற என்க.

விளக்கம் : குன்றக்குறவர் அடிகட்குக் கூறினர் என்பார்க்கு ஈண்டு (37) வினைவிளைகால மென்றீர் யாதவர்...காலம் என, பன்மை விகுதியால் அடிகளார் சாத்தனாரை வினவினர் என்பதும் சாத்தனார் அடிகளாரை (38) விறலோய் என ஒருமைக்கிளவியால் விளித்தனர் என்பதும் பொருந்தாமையுணர்க. எனவே, முன்னது அரசன் வினாவும் பின்னது புலவர் விளித்ததும் ஆகும் என்பதே அமையும் என்க.

39. அதிராச் சிறப்பின் மதுரை மூதூர் என்றது அற்றை நாள் காறும் அதிராச்சிறப்புடைய மதுரை மூதூர் என அற்றை நாள் அதிர்ந்தமையைக் குறிப்பால் உணர்த்தி நின்றது (40). கொன்றையஞ்சடை முடியையுடைய இறைவன் என்க. இறைவன் எழுந்தருளிய அம்பல மாதலின் கண்ணகியார் ஏவியவாறு தீக்கதுவா தொழிந்தமையான் யான் அதனைப் புகலிடமாகக் கருதி அதனுட் புகுந்து கிடந்தேன் என்பார் (40) சடைமுடி மன்றப் பொதியிலிற் கிடந்தேன் என்றார் என்க. இஃதறியாது பழையவுரையாசிரியர் அவர் துயின்றதாகக் கூறுவது பொருந்தாது என்னை? அற்றை நாள் பிற்பகலிலே அந்நகரம் உரக்குரங் குயர்த்த வொண் சிலையுரவோன் காவெரியூட்டியநாள் போற்கலங்க, தண்டமிழ் ஆசான் சாத்தன் வெள்ளியம்பலத்தே துயின்று கிடந்தான் என்பது வியப்பேயாகும். இனி, கிடந்தேன் என்னும் அச்சொல்தானே தீயினுக் கஞ்சி வெள்ளியம்பலத்தைப் புகலிடமாகக் கொண்டு அதனுட் புகுந்து ஒருசார் திகைத்துக் கிடந்தேன் என்பதுபடக் கிடப்பதனை இலக்கிய நயமூணர்வோர் உணர்வர் என்க. இனி, பௌத்தராகிய சாத்தனார் தாமும் கொன்றைச் சடைமுடி இறைவன் பொதியிலில் கிடக்க நேர்ந்ததூஉம், அவர் தம்மைக் காத்துக் கோடற்பொருட்டு அவர்க் கணித்தாக அதுவே புகலிடமாகக் கண்டமையேயாம் என்க.

42. ஈண்டு ஊதுலைக் குருகின் உயிர்த்தனன் உயிர்த்து மறுகிடை மறுகும்.... ஆரஞர்உற்ற வீரபத்தினி முன் என அழற்படு காதைக் கண் அடிகளார் கூறிய சொற்றொடரையே இப்பாயிர முடையாரும் பொன்போற் போற்றிக் கூறுதல் உணர்க (43) சீற்றம்-மிக்கசினம்; சீற்றத்தால் என்க.

45-46 : முதிர்வினை - பயனூட்டத்தகுந்ததாக முதிர்ந்துள்ள பழைய தீவினை முந்தைப் பிறப்பின் முதிர்வினை பைந்தொடி ! நுங்கட்குக் கணவனொடு, முடிந்தது எனமாறுக. முற்பிறப்பின் கட் செய்து முதிர்ந்துள்ள தீவினை உங்கட்குத் தன்பயனை ஊட்டி உன் கணவன் சாவோடு கழிந்தது என்றவாறு. எனவே, உன் கணவன் இம்மைச் செய்த நல்வினையால் வானவன் ஆயினன் என்பது குறிப்புப் பொருள். இங்ஙனம் நுண்ணிதின் உரைகாண மாட்டாது பழையவுரையாசிரியர், முதிர்வினை முடிந்தது என்பதற்கு நுங்கட்கு முற்பட்ட நல்வினை முடிந்ததாகலான் என ஈண்டைக்குச் சிறிதும் பொருந்தாவுரை கூறி ஊழ்வினை உருத்துவந் தூட்டும் என்பதற்குச் செய்யுளிற் சொற் காணாது வறிதே போயினர்.

பைந்தொடி: அண்மைவிளி (47) சிங்காத என்னும் பெயரெச்சத்தீறு கெட்டது (5) வாரொலி கூந்தல்: விளி. கூந்தால் நின்னை வாணிகன் மனைவி இட்ட சாபம் கட்டியதாகலின் (51) ஈரேழ் நாளகத்தெல்லை நீங்கி வானோர் வடிவிற் கணவனைக் காண்பதல்லது மக்கள் வடிவிற் காண்டல் இல்லை என்றவாறு. கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி நிலைக்களங்காணாள் மன்றினும் மறுகினுஞ் சென்றனள் பூசலிட்டு எழுநாளிரட்டி எல்லை சென்றபின்....மலைத்தலை யேறி மால் விசும்பேணியில் கொலைத்தலைமகனைக் கூடுபு நின்றோன் எம்முறுதுயரம் செய்தோரியாவதும் தம்முறுதுயரம் இற்றாகுக என்றே விழுவோள் (49) இட்ட சாபம் கட்டியது ஆதலால், அவள்பட்டன வெல்லாம் நீயும் பட்டு ஈரேழ் நாளகத்து எல்லை நீங்கி நின் கணவனை வானோர் வடிவிற் காண்குவை என்றவாறு. நின் கணவன் திறத்தில் அச்சாபம் அவனோடு முடிந்தது நின்திறத்தில் நினக்குரிய கூறு இப்பொழுதே நின்னைக் கட்டியது ஆகலின் என்பது கருத்து (50) வாரொலி...(176) ஈனோர் வடிவிற் காண்ட லில்லென என வரும் நான்கடிகளும் அடிகளார் கூறியாங்கே ஈண்டும் கூறப்பட்டமை அறிக (34) கோட்டம் வளைவு ; ஈண்டு வஞ்சம் என்னும் பொருட்டு. கட்டுரை பொருள் பொதிந்த சொல்.

55-60 : அரைசியல்..............செய்யுளென

இதன்பொருள் : அரைசு இயல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்- இவ்வாறு தண்டமிழ்ச் சாத்தனார் சேரன் செங்குட்டுவனுக்குக் கோவலன் கண்ணகி இருவர்க்கும் பழவினை விளைந்த வாற்றை விளம்பி முடித்தவுடன் ஆங்குக் குன்றக்குறவர் கூறியது தொடங்கிச் சாத்தனார் கூற்று முடியுந் துணையும் தமக்கியல்பான அமைதியோடிருந்து அவர்கள் கூறியவற்றின் மெய்ப்பொருளை ஆராய்ந்துணர்ந்த இளங்கோவடிகளார் சாத்தனாரை நோக்கி ஐய ! நுமது வாய்மொழியினூடு உள்ளுறையாக யாம் மூன்று வாய்மைகளைக் கண்டோம் அவை தாம் யாவெனின்; நூனெறி நின் றொழுகுதற்குரிய அரசாட்சி ஒழுக்கின்கண்ணே அரசர் சிறிது ஒழுக்கம் பிழைப்பினும் அவரை அறக்கடவுளே கூற்றமாகிக் கொல்லும் என்பதூஉம்; உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் - புகழமைந்த கற்புடைமகளை இவ்வுலகத்து மக்களேயன்றி அமரர் முதலிய உயர்ந்தோரும் சென்று வழிபாடு செய்வர் என்பதூஉம்; ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம் முன் செய்த இருவகை வினைகளும் செய்த முறையானே செய்தவனை நாடிவந்து உருக்கொண்டு நின்று தத்தம் பயனை நுகர்விக்கும் என்பதூஉம் ஆகிய இம் மூன்றுண்மைகளும் சிலம்பு என்னும் அணிகலனைக் காரணமாகக் கொண்டு எமக்குத் தோன்றினவாதலான்; யாம் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் ஓர் பாட்டு உடைச் செய்யுள் நாட்டுதும் என-யாம் இவையிற்றை உள்ளுறுத்திச் சிலப்பதிகாரம் என்னும் பெயருடைய இயலிசை நாடகம் என்னும் முத்தமிழ்க்கும் பொதுவாகப் பாட்டுக்களையும் செய்யுளையும் உடையதொரு வனப்புநூலை இயற்றி இவ்வுலகத்து மக்கட்கு எப்பொழுதும் நலம்பயக்கும்படி நிலைநிறுத்தக் கருதுகின்றேம் என்று திருவாய்மலர்ந்தருளா நிற்ப வென்க.

விளக்கம் 35 : அரைசியல் என்புழி அகரத்திற்கு ஐகாரம் போலி. அரசியல் செங்கோன்மை. ஈண்டு, சினையலர் வேம்பன் பொய்த்தொழிற் கொல்லன் கூற்றை ஆராயாது நம்புதலும் அவனாற்கள்வன் என்றவனை அழைத்து வினவாமல் கடுந்தண்டம் விதித்தலும் பிறவும் அரசியல் பிழைத்தவாறாம். அவனை வீரபத்தினியின் கண்ணீரே உயிர் போக்கியது அறம் கூற்றான வாறாம் என்க.

இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின் (குறள் 547)

என்று ஓதுதலான், அரைசியல் பிழைத்தகாலை அச்செங்கோன் முறையே அவனைக் கொல்லும் என்பதும் பெறப்படும். இன்னும்,

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தாற் றானே கெடும்  (குறள் 548)

எனவரும் அருமைத் திருக்குறட்கு இப்பாண்டியன் சிறந்த எடுத்துக் காட்டாதலும் அறிக.

56. பத்தினிக்கு இரண்டாவதன்கண் நான்கனுருபு மயங்கிற்று. பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும் என்றது குன்றக் குறவர் ஒருங்குடன் கூடி திருமாபத்தினிக்கு அமரர்க் கரசன் தமர் வந்து ஈண்டி அவள் காதற் கொழுநனைக் காட்டி அவளோடு எங் கட்புலம் காணவிட்புலம் போயது இறும்பூது போலும் என்றதனானும், சாத்தனார் ஆரஞர் உற்ற வீரபத்தினி முன் மதுரை மாதெய்வம் வந்து தோன்றி.........கூறிய கோட்டமில் கட்டுரை கேட்டனன் யான் என்றதனானும் அடிகளார் பெற்ற வாய்மை என்க.

57. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது சாத்தனார் மதுரை மாதெய்வம் வந்து தோன்றி, கண்ணகியை நோக்கி நுங்கட்கு முந்தைப் பிறப்பின் முதிர்வினை நின் கணவனொடு முடிந்தது என்றதனானும் வாணிகன் மனைவியிட்ட சாபம் கட்டியது ஆகலின் ஈரேழ் காளகத்து எல்லைநீங்கி நீ நின் கணவனை வானோர் வடிவிற் காண்குவை என்றதனானும் எய்திய வாய்மை என்க.

58. சூழ்வினைச்சிலம்பு என்றது உருத்து வந்தூட்டுதற்குச் சூழும் ஊழ்வினைக்குக் கருவியாகிய சிலம்பு எனவும், சூழ்ந்த சித்திரச் செய்வினை யமைந்த சிலம்பு எனவும் இரு வேறு பொருளும் பயந்து நிற்றல் அறிக.

ஈண்டுச் சிலம்பு என்றது கண்ணகியார் காற்சிலம்பிற்கும் கோப்பெருந்தேவியார்க்குரிய கோயிற் சிலம்பிற்கும் பொது; என்னை? இருவர் சிலம்பும் காரணமாகலின் வாளா சூழ்வினைச் சிலம்பு காரணமாக என அடிகளார் கூறினர் என்க.

59. சிலப்பதிகாரம் - சிலம்பு காரணமாக விளைந்த கதையைக் கூறுகின்ற நூல் (60) பாட்டு-இசைக்கும் நாடகத்திற்கும் பொதுவாகிய உருக்கள். (இவற்றின் இயல்பு (3) அரங்கேற்று காதையுரையிற் காண்க) செய்யுள் இயற்றமிழ்ச் செய்யுள், எனவே, இந்நூலின்கண் இயலிசை நாடகம் என்னும் முத்தமிழும் இடம் பெற்றமையுணர்க. அவற்றை ஆண்டாண்டுக் காட்டுதும்.

61-62 : முடிகெழு...............என்றாற்கு

(இதன்பொருள்) முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது-அது கேட்டுப் பெரிதும் மகிழ்ந்து தமிழ்நாட்டு மூவேந்தர்க்கும் பொதுவுரிமையுடையதாகும் அன்றோ அடிகள் செய்யக்கருதிய அவ்வனப்பு நூல்; ஆகவே ஆர்வமும் செற்றமும் அகலநீக்கிய அடிகட்கு அச்செயல் பெரிதும் பொருந்துவதேயாகும். ஆதலால்; அடிகள் நீரே அருளுக என்றாற்கு - வினையினீங்கி விளங்கிய அடிகளாராகிய நீவிரே அந்நூலைச் செய்து இவ்வுலகிற்கருளுக என்று வழி மொழிந்து வேண்டிய அத்தண்டமிழ் ஆசான் சாத்தனார்க்கு என்க.

(விளக்கம்) இந்நிகழ்ச்சி நிரலே சோழநாட்டினும் பாண்டியனாட்டினும் சேரநாட்டினும் நிகழ்ந்தமையின் அடிகளார் இந்நிகழ்ச்சியைப் பொருளாகக் கொண்டியற்றும் நூல் மூன்று தமிழ்நாட்டிற்கும் பொதுவுரிமையுடையதாம் என்பார் முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது என்றார். எனவே, இவ்வேண்டுகோள் தம்நாடு பிறர்நாடு என்னும் வேற்றுமையின்றி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் கொள்கையோடு ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய மெய்யுணர்வுடைய அடிகளார் செய்யின் அவ்விலக்கியம் எல்லார்க்கும் பெரும்பயன் விளைக்கும். ஏனைய எம்போல்வார் செய்வது அத்துணைப் பயனுடையதாகாது. ஆதலால், அடிகளாரே செய்தருளுக என்று அப்புலவர் பெருமான் அடிகளாரை வழிமொழிந்து ஊக்கியபடியாம்.

இனி, இவ்வாறன்றி அடியார்க்கு நல்லார் (62) என்றாற்கு - தான் பாடக் கருதி வினாவின சாத்தற்கு; அங்ஙனம் கூறாது இங்ஙனம் கூறினாரென்க. என் சொல்லியவாறேவெனின், - இச்செய்கின்ற காப்பியம் மூவேந்தர்க்கும் உரியது என்பதனால், ஏனையோரை இவர் புகழ்ந்துரையாராகலின் யாம் காப்பியம் செய்யக் கடவேமென்பது கருதிநீரே? அருளுக என ஏகாரப் பொருண்மை தோன்ற இது கருதி இது சொன்னாற்கு (உள்ளொன்று வைத்து அப்பொருள் குறிப்பாகப் புலப்படப் புறமொன்று சொன்ன சாத்தற்கு) அவன்(ர்?) கருதிய பொருளிற்கு (குறிப்புப் பொருளிற்கு) உடன்படாது சொல்லிற்கு (வெளிப்படையாகத் தோன்றும் பொருளிற்கு) உடன்பட்டார் என்பதாயிற்று என வுரைத்தனர். இவ்வுரை, நனிநாகரிகத்திற் கொவ்வாமை நுண்ணுணர்வாற் கண்டு கொள்க.

ஈண்டு இனித் தாம் வகுத்துக் கொண்டதனைக் கூறுவார் எனவரும் அடியார்க்கு நல்லார் உரையில் தாம் என்னும் பொதுப் பெயர் அடிகளாரைக் கருதிக் கூறப்பட்டது. அது பொருந்தாமை முன்னும் காட்டினோம்.

62- 90 : அவர் ..............மரபென்

(இதன்பொருள்) அவர் - அக்கண்ணகி கோவலருடைய மணத்தில் மகளிர் வாழ்த்திய; மங்கல வாழ்த்துப் பாடலும்......வரந்தரு காதையொடு இவ் ஆறு ஐந்தும்-மங்கல வாழ்த்துப் பாடல்முதலாக வரந்தரு காதையீறாக ஈண்டுக் கூறப்பட்ட முப்பதுறுப்புக்களையு முடைய இப்பொருட் டொடர்நிலைச் செய்யுளிலக்கியத்தை; உரை இடையிட்ட பாட்டுடைச் செய்யுள் - உரையிடையிட்ட செய்யுளும் பாட்டிடையிட்ட செய்யுளுமாக; உரைசால் அடிகள் அருள - புகழமைந்த இளங்கோவடிகளார் திருவாய் மலர்ந்தருளா நிற்ப; மதுரைக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன் - மதுரைக் கூலவாணிகனான தண்டமிழாசான் இனிதே கேட்டு மகிழ்ந்தனன்; இது-இந்நூற்குப் புறவுறுப்பாகக் கூறப்பட்ட இது; பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபு-சிலப்பதிகாரம் என்னும் இவ்வனப்பு நூலின் உட்பகுதிகளையும் நூலும் நுவலுவோனும் உள்ளிட்ட பிறவகைகளையும் தெரிதற்குக் காரணமான பாயிரத்தின் இலக்கணம் பற்றிச் செய்து நூன்முகத்தே வைக்கப்பட்டது என்க.

(விளக்கம்) (62) அவர் என்றது கண்ணகியும் கோவலனுமாகிய இருவரையும். மங்கலம்-திருமணம். மங்கலவாழ்த்துக்காதை என்னாது பாடல் என்றது, இஃது இசையொடு புணர்த்துப் பாடுதற்கியன்ற உரு என்றறிவித்தற்கு. இக்காப்பியத்தை ஓதத் தொடங்குவோர் இசையினால் வாழ்த்துப் பாடித் தொடங்கவேண்டும் என்பது அடிகளார் கருத்தாகும். எனவே, இஃது இசைத்தமிழ் என்பது பெற்றாம். இவ் வாழ்த்துப் பாடலிலேயே இக்காப்பியக் கதை தோற்றுவாய் செய்யப்படுகின்றது. இதில் கதை நிகழ்ச்சியில்லை என்று அடியார்க்கு நல்லார் கூறுவது பொருந்தாது. இதன்கண் கதை தோற்றுவாய் செய்யப்படினும் இறைவனையும் கற்புடைத் தெய்வமாகிய கண்ணகியையும் வாழ்த்துவதே குறிக்கோளாதல்பற்றி அச்சிறப்பு நோக்கிக் காதை என்னாது பாடல் என்றே குறியீடு செய்தனர். இசைத் தமிழுக்கேற்ற வாரநடையும் கூடைநடையும் திரள் நடையுமாக இதனை அடிகளார் மிக அருமையாக அதற்கியன்ற மயங்கிசைக் கொச்சகக் கலியால் யாத்துள்ளனர். இதற்கியைந்த பண்வகுத்து இசைக் கருவிகளோடு இசைவாணர்கள் இசையரங்குகளிலே பாடினால் இப்பாடல் பேரின்பம் பயக்கும் என்பது எமது துணிபாம்.

(63-4) குரவர் - தாய் தந்தையர். மனையறம் - மனைக்கண்ணிருந்து செய்யும் விருந்தோம்பல் முதலிய அறங்கள். அவற்றை,

அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் (சிலப் - 16 : 71 - 3)

எனவரும் கண்ணகியார் கூற்றானுமுணர்க.

(64-5) நடநவின் மங்கை மாதவி - ஆடற்கலையை ஐயாண்டிற்றண்டியம் பிடித்து ஏழாண்டு அக்கலையை நன்குபயின்று ஆடலும் பாடலும் நிரம்பி எஞ்சிய அழகு நிரம்புகின்ற மங்கைப் பருவமெய்திய மாதவி என்றவாறு.

(67) ஊர் இந்திரவிழவு எடுத்த காதை என்க. ஊர் - புகார் நகரம்.

(66) மடலவிழ் கானல் என்புழி மடலவிழ் என்பது கானலுக்கு இயற்கையடை. வரி-இசைப்பாட்டில் ஒருவகை. அதனியல்பு அக்கானல் வரியில் விளக்கப்படும். இக்காதைக்கு இவ்விசைப்பாடல் சிறப்பாய் நிற்றலின் அதுவே பெயராயிற்று.

கானல்வரியில் கதை நிகழாமை யுணர்க என்னும் அடியார்க்கு நல்லார் உரை போலி.

(66-70) வேனில்....காதையும் என்பது வேனிற்காதை என்னும் பெயர்ப் பொருட்டாய் நின்றது.

(70-71) பின்னிகழும் தீங்கை யுணர்த்துதலையுடைய கனாத்திறம் என்க.

(71-2) வினாத்திறத்து நாடுகாண் காதை என்றது, அக்காதையின் கண் கண்ணகி மதுரை மூதூர் யாதென வினவுதலும் கவுந்தியடிகள் என்னோ? இங்ஙனம் கருதியது என வினவுதலும், வறுமொழியாளன் கவுந்தியடிகளாரை நொசிதவத்தீருடன் ஆற்று வழிப்பட்டோர் ஆர்? என வினவுதலும், மீண்டும் உடன்வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை கடவது முண்டோ? என்று வினவுதலும் எனப் பல்வேறு வினாக்களை யுடைமையைக் கருதி என்க.

(73) வேட்டுவ வரி - வேட்டுவ மகளாகிய சாலினி கொற்றவை கோலங்கொண்டு ஆடிய வரிக்கூத்தும் என்க. இதனைக் கோலச்சாரி என்பர் அடியார்க்குநல்லார். இது கூத்தாற் பெற்ற பெயர்.

(73-4) தோட்டலர் - தோட்டையுடைய அலர். தோடலர் தோட்டலர் என விகாரமெய்திற்றெனினுமாம். தோட்டலர் கோதை-அன்மொழித் தொகையாய்க் கண்ணகி என்னும் பெயர் மாத்திரையாய் நின்றது.

இறுத்தல் - தங்குதல்.

(73-5) கறங்கிசையூர் பல்வேறு ஒலிகளும் ஒலிக்கும் மூதூராகிய மதுரை என்க. ஊர் காண்காதைக்கண் அடிகளார்(1) புறஞ்சிறைப்பொழிலும் என்பது தொடங்கி (14) காலை முரசங்கனைகுரலியம்ப என்னுந் துணையும், அந்நகரத்தில் உண்டாகின்ற இசைகளை விதந்தோதுதலை யுட்கொண்டு ஈண்டு, கறங்கிசையூர் என்று அடைதொடுத்தபடியாம்.

(75-6) சீர் - சிறப்பு; புகழ் எனினுமாம். ஈண்டுப் பாயிரமுடையார் அடைக்கலக் காதைக்கண் என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்.. பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு எனக் கவுந்தியடிகளார் கண்ணகியின் சிறப்பெல்லாம் மாதவிக்கு எடுத்தோதியதனையும் அவரே இளங்கொடி நங்கை எனக் கண்ணகியைச் சுட்டியதனையும் கருதிச் சீர்சால் நங்கை என்றோதினர். சீர் - அழகு என்னும் பொருட்டு எனினும் ஈண்டு ஆசிரியர் கருதியது அப்பொருளன்று என்க.

(77) ஆய்ச்சியர் - ஆயர்க்குப் பெண்பாற் கிளவி. ஈண்டு மாதரி முதலிய இடைக்குல மகளிர். இக்காதையும் கதை நிகழ்ச்சிக்குறுப்பாகவே நின்றது. ஆயினும் குரவைக்கூத்தே சிறந்து நிற்றலின், ஆய்ச்சியர் குரவை என்றார். எனவே, இது கூத்தாற் பெற்ற பெயர். குரவைக் கூத்தாவது

குரவை யென்பது கூறுங் காலைச்
செய்தோர் செய்த காமமும் விறலும்
எய்த வுரைக்கு மியல்பிற் றென்ப
எனவும்

குரவை யென்ப தெழுவர் மங்கையர்
செந்நிலை மண்டலக் கடகக் கைகோத்
தந்நிலைக் கொட்பநின் றாட லாகும்  (அடியார்க் - மேற்கோள்)

எனவும் வரும் நூற்பாவானுணர்க. ஈண்டு ஆய்ச்சியரிடத்து நிகழ்தலின் ஆய்ச்சியர் குரவை எனப்பட்டது. மேலே குன்றத்தின்கண் நிகழ்ந்தது குன்றக் குரவை எனப்படுதலு முணர்க.

(77-8) தீத்திறம் - தீய தன்மையுடையசொல். கேட்டது என்றதனாற் சொல் என்பது பெற்றாம். துன்பமாலை - துன்பத்தின் இயல்பு. மாலை - இயல்பு. இது தன்மையாற் பெற் பெயர்.

(78-9) நண்பகல் நடுங்கிய வூர் சூழ்வரியும் - இக்காதையை அடிகளார் பெரும்பான்மையும் நாடக வழக்கத்தாற் செய்திருத்தலின் இதுவும் கூத்தாற்பெற்ற பெயர் என்க. நடுங்கிய வூர் எனப் பெயரெச்சம் எனினும் அமையும். என்னை? கண்ணகியின் நிலைகண்டு அந்நகரமே நடுங்கியதாகலான் என்க.

(78-80) சீர்சால் வேந்தன் என்றார், தான் செய்த தவறு கண்டுழியே உயிர்விட்டான் ஆகலின். சீர் - ஈண்டு மானம் போற்றிய சிறப்பு என்க. இதனாலன்றோ அடிகளாரும்,

அரைசர் பெருமான் அடுபோர்ச் செழியன்
வளைகோல் இழுக்கத் துயிர்ஆணி கொடுத்தாங்கு
இருநில மடந்தைக்குச் செங்கோல் காட்டப்
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலின் துஞ்சியது அறியார்

என அழற்படுகாதையில் உளமாரப் பாராட்டி யோதிய தூஉம் என்க.

(80) வஞ்சினமாலை-அஃதாவது : கண்ணகியார் பாண்டியன் முன் சென்று வழக்குரைத்த பொழுது அம்மன்னவன் வழக்கும் ஆருயிரும் ஒருங்கே தோற்ற பின்னரும் சினந்தணியப் பெறாமல் அம்மன்னவன் தேவியை நோக்கிக் கண்ணகி சூள் மொழிந்த தன்மையும் என்றவாறு. வஞ்சினமாவது இன்னது செய்யேனேல் இன்னவாறாகுவல் என்று இயம்புவது. இதுவும் தன்மையாற் பெற்ற பெயர்.

(81) அருந்தெய்வம் தோன்றி என்றது - மக்கள் காண்டற்கரிய இயல்புடைய மதுராபதி யென்னும் மாதெய்வம் கண்ணகியாரை இரந்து அழல் வீடு பெறுதற்பொருட்டு அவர் கண்காண எளிவந்து என்பதுபட நின்றது.

(82-3) மட்டு - தேன். கோதையர் ஈண்டுக் குறத்தியர். குன்றக்குரவை - குன்றத்துத் தெய்வமாகிய முருகவேளை நோக்கி ஆடிய குரவைக்கூத்து. மட்டலர் கோதை குன்றக் குரவை என்று பாட மோதிக் கோதை கண்ணகியெனக் கொண்டு கோதைக்குக் குன்றக் குறத்தியர் எடுத்த குரவை எனினுமாம். இதுவும் கூத்தாற் பெற்ற பெயர்.

(83) என்றிவை யனைத்துடன் என இவ்விருபத்து நான்கும் கண்ணகியார் வரலாறாகலின் ஒருகூறாக வகுத்தனர். மேல்வருவன சேரன் செங்குட்டுவன் செயலாகலின் அவற்றை வேறுபட வோதினர்.

(84-85) காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் வாழ்த்து வரந்தரு காதை எனவரும் ஆறு காதைகளுள் வைத்து இறுதியினின்ற வரந்தரு காதை ஒழிய ஏனைய காட்சி முதலிய ஐந்து காதைகளும் இளங்கோவடிகளார் பண்டைத் தமிழ்ச்சான்றோர் பொருணெறி மரபு பற்றி அந்நெறியிற் சிறிதும் பிறழாதவாறு செய்துள்ளனர். காட்சி முதலிய ஐந்தும் புறத்திணை ஏழனுக்கும் பொதுவாகிய துறைகளாம். இவற்றை, ஆசிரியர் தொல்காப்பியனார் புறத்திணையியலுள் (5) வெறியறி சிறப்பின் எனத் தொடங்கும் நூற்பாவின்கண்,

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென்
றிருமூன்று வகையிற் கல்லொடு புணரச்
சொல்லப் பட்ட வெழுமூன்று துறைத்தே

என்றோதுத லறிக. இதற்கு, ஆசிரியர் நச்சினார்க்கினியர் இது.... .... புறத்திணைக்கெல்லாம் பொதுவாகிய வழுவேழும் உணர்த்துதல் நுதலிற்று என்று விளக்குதலும் உணர்க.

ஆசிரியர் தொல்காப்பியனார் போர்க்களத்தே அவிப்பலி செய்தல் விழுப்புண் பட்டுவீழ்தல் முதலியவற்றால் அறங்காத்தற் பொருட்டு உயிர்நீத்த மறவர்க்குக் கூறிய இத்துறைகள் கற்பென்னும் பேரறத்தி லொழுகி அதன் தெய்வத்தன்மையால் பாண்டியன் அரசவையேறி அவனொடு சொற்போர் தொடுத்து அரசனை வென்று நகர்தீமடுத்து விண்ணகம்புக்க கண்ணகியார்க்கும் நன்கு பொருந்துமென் றுட் கொண்டு இவற்றிற்கு அத்துறைப் பெயர்களையே நிறுவினர் என்றுணர்க.

இவற்றுள் காட்சி ஈண்டுக் கண்ணகித் தெய்வத்திற்குப் படிவம் செய்தற்குத் தகுந்த கல் இஃதாம் என்று ஆராய்ந்து கண்டது என்க.

அடியார்க்கு நல்லார், கற்காட்சியும் குறவர் பாகுடக் காட்சியும் என்க என்பர். ஈண்டுப் பாகுபடம் என்பது அரசிறை என்னும் பொருட்டு; கையுறை எனினுமாம். குறவர் கொணர்ந்த கையுறை அல்லது அரசிறை இக்காப்பியத்திற்குப் பொருளன்மையானும் ஏனைய துறைப்பெயரே யாதலானும் அப்பொருள் மிகைபடக் கூறலென்றொழிக. கற்காட்சி எனல் வேண்டியது கல் என்னும் சொல் தொக்கது. ஏனையவற்றிற்கும் இஃதொக்கும்.

(84) கால் கோள் - கல்லின்கண் படிவம் சமைக்கத் தொடங்குதல். ஈண்டுக் கால் கோள் என்பதற்குத் தொடங்குதல் என்னும் பொருளே கொள்க அடியார்க்கு நல்லார், கற்கோள் கால்கோள் என விகாரம் என்பர். இளங்கோவடிகளார் கற்கால் கோள் எனப் பல விடத்தும் வழங்குதலின் அவர் கருத்து அஃதன்றென்பது விளங்கும். ஆசிரியர் நச்சினார்க்கினியரும் கால்கோள் என்பதற்கு (தொல் புறத் 5) கல்லுறுத்து இயற்றுதற்குக் கால் கோடலும் எனவும், இது நட்டுக் கால் கொண்டது எனவும் ஓதுதலின் அவர் கருத்தும் அஃதன்றென்பது புலனாம்.

நீர்ப்படை - படிவமாகவைத்த கல்லை நீரில் மூழ்குவித்தல். இஃதொரு சடங்கு, குடமுழுக்குப் போன்று.

நடுதல் என்பது நடுகல் எனவும் நடுதற்காதை என்பது நடுகற் காதை எனவும் ஏடெழுதுவோராற் பிறழ எழுதப்பட்டன என நினைத்தற்கிடனுளது. ஆசிரியர் இளங்கோவடிகளார் கருத்தும் நடுதற் காதை என்பதற்கே பொருந்தும். பழைய உரையாசிரியர் இருவரும் நடுதற்காதை என்றே பாடங் கொண்டனர் என்று கருதவும் இடனுளது. தொல்காப்பியத்தில் நடுதல் என்றும், நடுகல் என்றும் பாட வேறுபாடு காணப்படுதலும் உணர்க.

எனவே, ஏனைய நான்கினும் கல் என்னும் சொல் தொக்கு நின்றாற் போலவே இதனினும் கல்நடுதல் என்பதில் அச் சொல் தொக்கு நின்றதாகக் கோடலே முறையாம். ஆராய்ந்து கொள்க.

(85) வாழ்த்து-கற்படிவமமைத்து நன்கலம் முழுவதும் பூட்டிப் பூப்பலி செய்து காப்புக் கடைநிறுத்தி வேள்வியும் விழாவும் நாள்தோறும் வகுத்துக் கடவுண் மங்கலம் செய்யப்பட்ட கண்ணகித் தெய்வம் விண்ணிடத்தே மின்னுக் கொடிபோல் கடவுள் நல்லணி காட்டிச் செங்குட்டுவனையும் நெடுஞ்செழியனையும் ஆங்கு வந்திருந்த ஏனைய அரசரையும் வாழ்த்தியது என்க. அடியார்க்குநல்லார் பெருங் கிள்ளியையும் என்பர். இஃது ஆராய்ச்சிக்குரியது.

(85) வரந்தருகாதை - அங்ஙனம் வாழ்த்திய தெய்வம் செங்குட்டுவன் முதலியோர்க்கு வரமருளிய காதையோடே என்க.

(86) மேலே (83) இவையனைத்துடன் ஈண்டுக் கூறப்பட்ட காட்சி முதலியனவும் வரந்தருகாதையோடு கூடிய (89) இவ்வாறைந்தும்- முப்பதும் என்றபடியாம்.

(87) உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் - நாடக வழக்கத்தால் உரைச் செய்யுள்களை இடையிடையே கொண்டுள்ளதும் நாடகத்திற்கும் இசைக்கும் உரிய பாடல்களையும் இயற்றமிழ்க்கேயுரிய செய்யுள்களையுமுடைய இக்காப்பியத்தை என்க.

(88) உரைசால் அடிகள் - புகழமைந்த அவ்விளங் கோவடிகளார் என்க.

(89) மதுரைக் கூலவாணிகன் சாத்தன் - இவர் மணிமேகலையென்னும் பெருங்காப்பியம் செய்த பெரும் புகழுடைய புலவராவார்.

இவரைச் சங்க நூல்களிற் காணப்படுகின்ற சீத்தலைச்சாத்தனார் என்பாரும் அவர் வேறு இவர் வேறு என்பாரும் இருதிறத்தார் உளர்.

(90) இது என்றது இதுகாறுங் கூறிய இப்பகுதி என்றவாறு. அஃதாவது நூன்முகத்தே நின்ற இவ்வுறுப்பு என்றவாறு.

பதிகத்தின் மரபினாற்செய்யப்பட்டது என்றவாறு. இப்பதிகம் அடிகளாரை யாண்டும் படர்க்கையிலேயே கூறுவதனால் இதனைச் செய்த சான்றோர் பிறர் என்பது தேற்றம். அவர் பெயர் முதலியன தெரிந்தில. அடிகளாரே இதனையும் செய்தவர் என்னும் கருத்தால் அடியார்க்கு நல்லார் கூறும் உரை பொருந்தா என்பது முன்னுங் கூறினாம், கடைப்பிடிக்க.

இனி, இதனை, சேரற்கும் அடிகட்கும் குறவர் குழீஇ வந்து வணங்கி போயது இறும்பூது இதனை நீ அறிந்தருள் என்று அரசனுக்குக் கூற அவனுழை யிருந்த சாத்தன் உரைப்போன் இவனென; வினைவிளைவு யாது என அரசன் வினவச் சாத்தன் விறலோய் கேட்டனன் யான் என ஆங்கு இவற்றைக் கேட்டிருந்த அடிகள் சாத்தனை நோக்கி யாம் இவற்றை உள்ளுறையாக்கிச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் ஓர் பாட்டுடைச் செய்யுள் நாட்டுதும் எனச் சாத்தன் அடிகள் நீரே அருளுக என்றாற்கு மங்கல வாழ்த்து முதலாக வரந்தரு காதை யீறாகக் கிடந்த இவ்வாறைந்தும் அடிகள் அருளச் சாத்தன் கேட்டனன் இது பதிகம் என இயைத்திடுக.

இனி இதன்கண் - பதிகத்தின் மரபு வருமாறு:-

பொதுவும் சிறப்பும் எனப் பாயிரம் இருவகைப்படும் என்ப. அவற்றுள் இஃது இந்நூற்கேயுரிய சிறப்புப் பாயிரமாம். பாயிரம் பதிகம் ஒருபொருட் கிளவிகள்.

ஆக்கியோன் பெயரே வழியே எல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோ டாயெண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே

எனவும்,

காலங் களனே காரணம் என்றிம்
மூவகை யேற்றி மொழிநரும் உளரே

எனவும் வரும் நன்னூற் சூத்திரங்களால் இப்பதிகத்தின் மரபு இவை என்றுணர்க.

இனி, இதனுள் நிரலே, குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த இளங்கோவடிகட்கு என்பதனால், இந்நூலாசிரியரின் சிறப்பும், பெயரும்; குன்றக் குறவர் கூடி... இறும்பூது போலும் அறிந்தருணீயென, அரசனுக்கு அறிவிப்ப அவனுழையிருந்த தண்டமிழ் ஆசான் சாத்தன் உரைப்போன்... கட்டுரை கேட்டனன் யானென அது கேட்ட அடிகள் அருள என்றதனால் வழியும் முடிகெழு மூவேந்தர்க்கும் உரியது என்றதனால் எல்லையும் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் என்றதனால் நூற்பெயரும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றமையான் இம்முத்தமிழுக்குமுரிய இலக்கண முணர்வோர் இந்நூல் கேட்டற்குரியார் என யாப்பும் கேட்போரும் அரைசியல் பிழைத்தோர்க் கறங் கூற்றாவதூஉம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உருத்து வந்தூட்டும் என்பதூஉம் என்றதனால் நுதலிய பொருளும் இம்மூன்று வாய்மைகளையும் இந்நூலின் வாயிலாய்த் தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லோர், உள நாள் வரையாது ஒல்லுவ தொழியாது செல்லுந்தேயத்துக் குறுதுணை தேடுதல் தேற்றமாதல், யாமோர் பாட்டுடைச் செய்யுள் நாட்டுதும் என்று அடிகளார் கூறுதலாற் போதருதலின் பயனும், சேரல் இளங்கோ அடிகட்கு எனவே, அவ்வரசன் காலமே இந்நூல் தோன்றிய காலம் எனக் காலமும், நாட்டுதும் என்பதற்கு உலகிற்குப் பயன்படச் செய்து நிறுத்துவேம் என்பது பொருளாகலின் அடிகளார் மக்கள்பால் வைத்த அருளே இது செய்தற்குக் காரணம் எனக் காரணமும், அடிகள் அருளக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன் என்றதனால் அத்தண்டமிழாசான் தலைமை வகித்த சான்றோர் அவைக்களமே இந்நூல் அரங்கேறிய களம் எனக் களமும் ஆகிய பாயிரப் பொருள் பதினொன்றும் போந்தமையுணர்க.

செய்யுள்-சூட்டச் செந்தூக்கு: (அஃதாவது இடையிடையே குறளடியும் சிந்தடியும் விரவி ஈற்றயலடி மூச்சீர்த்தாய் முடிந்த ஆசிரியப்பா என்றவாறு.)

பதிகம் முற்றிற்று.

உரைபெறு கட்டுரை

1. அன்று தொட்டுப் பாண்டியனாடு மழை வறங்கூர்ந்து வறுமை யெய்தி வெப்புநோயுங் குருவுந் தொடரக் கொற்கையிலிருந்த வெற்றிவேற் நங்கைக்குப் பொற்கொல்லராயிரவரைக் கொன்று கள வேள்வியால் விழவொடு சாந்தி செய்ய நாடு மலிய மழை பெய்து நோயும் துன்பமு நீங்கியது.

2. அது கேட்டுக் கொங்கிளங் கோசர் தங்க ணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய மழை தொழிலென்றும் மாறாதாயிற்று.

3. அது கேட்டுக் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வென்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகைக் கோட்ட முந்துறுத் தாங்கு அரந்தை கெடுத்து வரந்தரு மிவளென ஆடித்திங்களகவையி னாங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை யெடுப்ப மழை வீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று.

4. அது கேட்டுச் சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும் வரந்தரு மிவளோர் பத்தினிக் கடவுளாகுமென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே.

1. அன்றுதொட்டு...........நோயுத்துன்பமு நீங்கியது

(இதன்பொருள்) அன்று தொட்டு - கல்லாக் களிமகன் ஒருவன் கையில் வெள் வாளெறியக் கோவலன் வெட்டுண்டு புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப, மண்ணகமடந்தை வான்றுயர் கூரக் காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனனாக அற்றைநாள் முதலாக; பாண்டியன் நாடு மழை வறம் கூர்ந்து - பாண்டியனுடைய நாட்டின்கண் மழையின்மையே மிகாநிற்றலாலே; வறுமை எய்தி-யாண்டும் விளைவுகுன்றி உயிர்களை வருத்தும் பசிப்பிணி முதலியவற்றிற்குக் காரணமான நல்குரவு வந்தெய்தி அது காரணமாக; வெப்பு நோயும் குருவும் தொடர - கொடிய தொழு நோயும் கோடைக் கொப்புளமும் இடைவிடாது மாந்தரை நலியா நிற்றலால்; கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன் - அப்பொழுது வடவாரியர் படைகடந்து தென்றமிழ் நாடொருங்கு காணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பின்னர் அப் பாண்டிய நாட்டிற் கரசுரிமையுடையனாய்க் கொற்கைக்கண் அரசு வீற்றிருந்த வெற்றீவேற் செழியன் என்னும் மன்னன் அந் நலிவு தீர்த்தற்பொருட்டு; நங்கைக்குப் பொற் கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய-திருமா பத்தினியாகிய கண்ணகிக்குப் பொற்கொல்லர் ஒருபதினாயிரவரைப் பலியிட்டு அப்பலிக்களத்திலே வேள்வி செய்யுமாற்றால் விழாவெடுத்து அமைதி செய்தலாலே; நாடுமலிய மழை பெய்து நோயுந் துன்பமும் நீங்கியது- அவன் நாடானது அன்றுதொட்டு மிகவும் மழை பெய்யப்பெற்று முற் கூறப்பட்ட வறுமையும் நோய்களும் நீங்கப்பெற்றது என்க.

(விளக்கம்) நாடு நீங்கியது என இயையும். அன்றுதொட்டு என்றது சினையலர் வேம்பன் யாவதும் தேரானாகி.........கள்வனைக் கொன்று சிலம்பு கொணர்க எனக் காவலருள் கல்லாக் களிமகன் வாளால் எறிந்து கோவலனைக் கொல்ல அவன் குருதி நிலத்தின் மேற் பரந்த அன்றுதொட்டு என்பதுபட நின்றது என்க. வெப்பு நோய் - தொழுநோய் என்பது அடியார்க்கு நல்லார். குரு-கோடைக் கொப்புளம். இதனை இக்காலத்தார் அம்மைநோய் என்பர். கொப்புளிப்பான் என்பதுமது. கொற்கை பாண்டியனாட்டில் ஒரு பட்டினம். இவ்வுரை பெறு கட்டுரைக் கண் நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய எனவரும் சொற்றொடர் அறிஞருலகத்தைத் துன்புறுத்தும் என்பதில் ஐயமில்லை. அறிவிலா மாக்களுலகத்திற்குக் கழிபேருவகை செய்யும். எனவே, இவ்வுரை பெறு கட்டுரை என்னும் இப்பகுதி நாடெங்கணும் கண்ணகித் தெய்வத்திற்குக் கோயிலெடுத்து வழிபாடு செய்த பிற்காலத்தே கண்ணகி கதையைப் பொது மக்கட்குக் கூறிவந்த பூசகராற் செய்யப்பட்டு நூன்முகத்தே வைக்கப்பட்டது என்று கருத இடனுளது. இங்ஙனமே நூலினுள் காண்டத் திறுதிகளினும் நூலிறுதியினும் காணப்படுகின்ற கட்டுரைகளும் பிற்காலத்தே செய்யப்பட்டு நூலினுட் செருகப்பட்டன போலும். (முன்னுரையினை நோக்குக) இதன் பயன் ஆராய்ச்சியறிவில்லாத மாக்களை அத்தெய்வத்தினிடம் ஆற்றுப்படை செய்வதாகும் என்க. இவ்வாற்றான் யாமும் சாந்தி பெறுவோமாக. இதற்கு, அரும்பதவுரை யாசிரியர், உரைத்துப் போதுகின்ற கட்டுரை என்று கூறும் விளக்கம் ஒரு சான்றாகும். என்னை? இக் கட்டுரை வழிவழியாகக் கூறப்பட்டு வருவதொன்றென்பதே அவர் கருத்தாகலான் என்க.

2. அதுகேட்டு...........மாறாதாயிற்று

(இதன்பொருள்) அதுகேட்டு - வெற்றிவேற் செழியன் நங்கைக்குச் சாந்திசெய்து அவன் நாட்டின்கண் தீங்ககற்றி நன்மையை நிறுவிய அச் செய்தியைக் கேட்டு, கொங்கு இளங்கோசர் கொங்குமண்டிலத்து இளங்கோக்களாகிய கோசரும்; தங்கள் நாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய-கண்ணகிக்குத் தம்முடைய நாடாகிய கொங்குமண்டலத்திலும் விழாவெடுத்து அமைதிசெய்யா நிற்பவே; மழை தொழில் என்றும் மாறாதாயிற்று-அந்த நாடும் மழை வளம் பெற்று உழவு முதலிய தொழிலும் மாறாமல் வளமுடையதாயிற்று என்க.

(விளக்கம்) நாடு மழையும் தொழிலும் மாறாதாயிற்று என்க. மழை தொழில் பெய்தற்றொழில் என்பாருமுளர். இளங்கோசர் என்பது சாதிப்பெயர். இவரைக் குறுநில மன்னர் என்பது குறித்து இளங்கோசர் எனப்பட்டார் எனினுமாம்.

3. அதுகேட்டு...............நாடாயிற்று

(இதன்பொருள்) அதுகேட்டு - அச்செய்தியினைக் கேள்வியுற்று; கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான் - கடலாற் சூழப்பட்ட இலங்கையை ஆட்சிசெய்யும் கயவாகு என்னும் வேந்தான்; நங்கைக்கு நாள் பலி பீடிகைக் கோட்டம் முந்துறுத்து ஆங்கு - கண்ணகிக்கு நாள்தோறும் பூப்பலி செய்தற்குரிய பலிபீடத்தை முற்படச் செய்து பின்னர்க் கோயிலுமெடுத்து அந்நாட்டினும்; இவள் - இப்பத்தினித் தெய்வம்; அரந்தை கெடுத்து வரம்தரும் என - பசியும் பிணியும் முதலிய துன்பங்களைப் போக்கி யாம் வேண்டும் வரங்களையும் அளித்தருளும் என்று கருதி; ஆங்கு ஆடித்திங்கள் அகவயின் பாடி விழாக்கோள் பல் முறை எடுப்ப - அக்கோயிலின்கண் ஆண்டுதோறும் ஆடித் திங்களிலே அவ்வரசன் தன் உரிமைச் சுற்றத்துடன் சென்று அக்கோயிலின் மருங்கே படவீடமைத்துத் தங்கியிருந்து சிறப்புகள் பன்முறையும் எடாநிற்றாலாலே; மழை வீற்றிருந்து - மழை குறைவின்றி நிலை பெறுதலானே; வளம்பல பெருகி - வளங்கள் பலவும் மல்கி; பிழையா விளையுள் நாடாயிற்று. அந்நாடும் பொய்யாது விளையும் விளைவினையுடைய நாடாயிற்று என்க.

(விளக்கம்) அது கேட்டு என்றது இவ்வாறு பலரும் நங்கைக்குச் சிறப்புச் செய்து நலமெய்தும் அச்செய்தி கேட்டு என்றவாறு. கயவாகு - அக்காலத்தே இலங்கையை ஆட்சிசெய்த அரசன் என்பதும், அவன் சேரன் செங்குட்டுவன்பால் நட்புரிமையுடையவன் என்பதும் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்து விழாச் செய்தபொழுது இவனும் அவ்விழாவிற்கு வந்திருந்தனன் என்பதும், அவ்விழாவின்கண் அத்தெய்வத்தின்பால் எம் நாட்டிற்கும் எழுந்தருள வேண்டும் என்று வரம் வேண்டி அங்ஙனமே வரமருளப் பெற்றவன் என்பதும்; அடிகளார்,

அருஞ்சிறை நீங்கிய வாரிய மன்னரும்
பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரு கயவாகு வேந்தனும்
எந்நாட் டாங்க ணிமைய வரம்பனின்
நன்னாட் செய்த நாளணி வேள்வியில்
வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத்
தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல் (157-164)

என வரந்தரு காதையி லோதுமாற்றானு முணர்க.

நாட்பலி பீடிகை - நாள்தோறும் பூப்பலி செய்தற் கியன்ற பீடம். அரந்தை - வறுமை, பிணி முதலியவற்றாலுண்டாகும் துன்பம்.

ஆடித்திங்கள் அகவயின் விழவெடுத்தான் - கண்ணகியார் அத்திங்களிலே தம் தெய்வத்தன்மை காட்டினமையைக் கருத்துட் கொண்டு என்க. என்னை?

ஆடித் திங்கட் பேரிருட் பக்கத்
தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று
வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண
உரைசால் மதுரையோ டரைசுகே டுறுமெனும்
உரையு முண்டே  (கட்டுரைகாதை - 133-7)

என மதுரைமாதெய்வம் கூறிற்றாகலின் அக்கால மதுவாதலுணர்க.

பாடி-படவீடு. பாடிவிழா என்றது அரசன் உரிமைச் சுற்றத்தோடு வந்து பாடிவீடமைத்து அதிற் றங்கியிருந்து செய்யும் விழா வென்க. இதனாற் போந்தது கயவாகு கண்ணகிக்கு விழாவெடுப்பதனை அத்துணைச் சிறப்பாகக் கருதினன் என்பதாம்.

இவ்வாறு அரசர்கள் பாடிவிழா வெடுப்பதனைப் பெருங்கதை உஞ்சைக் காண்டத்தினும் காண்க. பாடி-நகரி என்பர். (அடியார்க்)

4. அதுகேட்டு............நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே

(இதன்பொருள்) அதுகேட்டு - அச்செய்தியைக் கேள்வியுற்று; கோழியகத்து - அப்பொழுது சோழ நாட்டிற்குத் தலைநகராய்த் திகழ்ந்த உறையூரிடத்தே அரசு கட்டிலில் வீற்றிருந்த சோழன் பெருங்கிள்ளி (பெருநற்கிள்ளி) என்னும் சோழமன்னன்; இவள் எத்திறத்தானும் வரந்தரும் ஓர் பத்தினிக் கடவுள் ஆகும் என- இக் கண்ணகியாகிய நங்கை நமக்கு எவ்வாற்றானும் வரந்தருதற்கியன்றதொரு பத்தினிக் கடவுள் என மகிழ்ந்து; நங்கைக்கு - தன்னாட்டிலே தோன்றித் தெய்வமாகிய அக்கண்ணகிக் கடவுட்கு; பத்தினிக் கோட்டமும் சமைத்து - ஏனையோரினும் சிறப்பப் பத்தினிக்கோட்டமும் எடுப்பித்து; நித்தல் விழா அணி நிகழ்வித்தோனே - நாள்தோறும் வேள்வியும் விழாவும் நிகழ்வித்தனன் என்க.

(விளக்கம்) பெருங்கிள்ளி - இவன் புகார் நகரத்தைக் கடல் கொண்டமையால் ஆங்கிருந்துய்ந்துபோன நெடுங்கிள்ளியின் மகன் ஆவான். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கடவுட் படிவம் சமைத்து வேள்வியும் விழவுஞ் செய்த காலத்தில் புகார் நகரம் கடல் கொள்ளப் பட்டழிந்தது. இக்காரணத்தால் இவ்வுரைபெறு கட்டுரையில் புகாரில் கண்ணகிக்குக் கோயிலெடுத்த செய்தி காணப்பட்டிலது. மேலும், புகார்ச் சோழர் வழித் தோன்றலே ஈண்டுக் கூறப்படுகின்ற பெருங்கிள்ளி என்க. இவன் கண்ணகித் தெய்வம் தன்னாட்டிற்றோன்றிய வுரிமைபற்றி இத்தெய்வம் பொதுவாக ஏனைய நாட்டினர்க்கு வரந்தருதல் போலன்றி நமக்குப் பிறப்புரிமைபற்றிச் சிறப்பாகவும் வரந்தருதற்குரியது என்பான், எத்திறத்தானும் வரந்தருமிவள் ஓர் பத்தினிக் கடவுள் என்றான் என்க. காவிரி நாட்டின்கண் பசியும் பிணியுமின்மையின் முன் கூறப்பட்டவாறு கூறாது கோட்டம் அமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித்தோன் என்றுமட்டுமே கூறப்பட்டதென்க.

இனி உரைபெறு கட்டுரை-இவை முற்கூறிய கட்டுரைச் செய்யுள் எனவும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் உரைசால் அடிகள் அருள என்றமையால், சிறுபான்மை இவ்வுறுப்புக்களும் சிலவரும் எனவும் கொள்க என்பர் அடியார்க்கு நல்லார். இதனால் இவ்வுரைபெறு கட்டுரை என்னும் உறுப்பும் இளங்கோவடிகளாரே இயற்றியது என்பது அடியார்க்கு நல்லார் கருத்தென்பது அறியப்படும்.

இதன்கண், பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வியால் சாந்தி செய்ய எனவரும் சொற்றொடரே அடிகளார் இதனைச் செய்திலர் என்பதற்குப் போதிய சான்றாம்
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 22, 2012, 07:48:05 AM
புகார்க் காண்டம்

1. மங்கல வாழ்த்துப் பாடல்

(சிந்தியல் வெண்பாக்கள்)

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகுஅளித்த லான்.
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு  5

மேரு வலம்திரி தலான்.
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேநின்று தாஞ்சுரத்த லான். பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்  10

வீங்குநீர் வேலி உலகிற்கு அவன்குலத்தொடு
ஓங்கிப் பரந்துஒழுக லான். (மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா) ஆங்கு,
பொதியில் ஆயினும் இமயம் ஆயினும்
பதிஎழு அறியாப் பழங்குடி கெழீஇய  15

பொதுஅறு சிறப்பின் புகாரே ஆயினும்
நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே.
அதனால்,    20

நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு
போகம்நீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில்
மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
ஈகைவான் கொடியன்னாள் ஈராறுஆண்டு அகவையாள்,
அவளுந்தான்,    25

போதில்ஆர் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறம்இவள் திறம்என்றும்
மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள் பெயர்மன்னும் கண்ணகிஎன் பாள்மன்னோ,
ஆங்கு,    30

பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒருதனிக் குடிகளொடு உயர்ந்தோங்கு செல்வத்தான்
வருநிதி பிறர்க்குஆர்த்தும் மாசாத்து வான்என்பான்
இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டுஆண்டு அகவையான்,
அவனுந்தான்,    35

மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம்
பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டுஏத்தும் செவ்வேள்என்று இசைபோக்கிக் காதலால்
கொண்டுஏத்தும் கிழமையான் கோவலன்என் பான்மன்னோ.
அவரை,    40

இருபெருங் குரவரும் ஒருபெரு நாளால்
மணஅணி காண மகிழ்ந்தனர், மகிழ்ந்துழி
யானை எருத்தத்து அணிஇழையார் மேல்இரீஇ
மாநகர்க்கு ஈந்தார் மணம்.
அவ்வழி,    45

முரசுஇயம்பின, முருகுஅதிர்ந்தன, முறைஎழுந்தன பணிலம்,வெண்குடை
அரசுஎழுந்ததொர் படிஎழுந்தன,
அகலுள்மங்கல அணிஎழுந்தது.
மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
வான்ஊர் மதியம் சகடுஅணைய வானத்துச்  50

சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார்க்கண் நோன்புஎன்னை.
விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்  55

சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்துஇள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை
முளைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்
போதொடு விரிகூந்தல் பொலன்நறுங் கொடிஅன்னார் 60

காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீதுஅறுக எனஏத்திச் சின்மலர் கொடுதூவி
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்அமளி ஏற்றினார், தங்கிய
இப்பால் இமயத்து இருத்திய வாள்வேங்கை  65

உப்பாலைப் பொன்கோட்டு உழையதா எப்பாலும்
செருமிகு சினவேல் செம்பியன்
ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே.

அஃதாவது :- நூலாசிரியர் தாமியற்ற வெடுத்துக்கொண்ட சிலப்பதிகாரம் என்னும் இப்பாட்டைச் செய்யுளாலியன்ற வனப்பு நூல் இனிது நிறைவேறுதற் பொருட்டுக் கடவுளை வாழ்த்துவதும், இவ்வனப்பு நூலின் தலைவியாகிய கண்ணகியையும் தலைவனாகிய கோவலனையும் திருமண வேள்விக்கண் கட்டிலேற்றிச் சேம்முதுபெண்டிர் வாழ்த்துவதுமாகிய இருவகை வாழ்த்துக்களையும் உடைய இன்னிசைப்பாடல் என்றவாறு.

1-3 : திங்களை........அளித்தலான்

(இதன் பொருள்) திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் யாம் உலகெலாம் தண்ணொளி பரப்பும் திங்கள் மண்டிலத்தைக் கைகுவித்து வணங்குவோம்! அஃது ஏனெனின்; கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர்வெள் குடை போன்று - பூந்தாது விரிதற்கிடனான ஆத்திமாலையை யுடைய சோழமன்னனுடைய குளிர்ச்சி யுடைய வெண்கொற்றக் குடைபோன்று; இஅம கண் உலகு அளித்தலான் அஃது இந்த அழகிய இடங்களையுடைய நிலவுலகிற்குத் தண்ணொளி வழங்கிப் பாதுகாத்தலாலே; என்க.

(விளக்கம்) திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் எனவரும் அடுக்குச் சிறப்பின்கண் வந்தது; மேல் வருவனவற்றிற்கும் இஃதொக்கும்; இது பண்பும் பயனும் கூடின உவமம். கொங்கு பூந்தாது. மாலை ஆத்தி மாலை. சென்னி-சோழன். உவமத்திற்கு வந்த அடையைப் பொருளுக்கும் இயைத்துக் குளிர் வெண்திங்கள் என்க.

4-6 : ஞாயிறு...........திரிதலான்

(இதன்பொருள்) ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் யாம் ஞாயிற்று மண்டிலத்தைக் கைகுவித்து வணங்குவோம்; அஃது ஏனெனின்; காவிரி நாடன் திகிரிபோல் பொன் கோட்டு மேரு வலம் திரிதலான்-அது தான் காவிரியாறு புரக்கும் நாட்டையுடைய சோழனது ஆணைவட்டம் போன்று பொன்னாகிய கொடுமுடியையுடைய மேருமலையினை இடையறாது வலமாகச் சூழ்ந்து வருதலான் என்க.

(விளக்கம்) திகிரி ஆணைவட்டம். அரசனுடைய ஆணையை ஆழியாக உருவகித்துரைப்பது நூல் வழக்கு. இதனால் சோழமன்னனுடைய ஆணை உலகெலாம் செல்கின்ற சிறப்புடைத்தென்பது பெற்றாம். திரிதல்-இடையறாது செல்லுதன் மேற்று. இது தொழிலுவமம். ஏனைய நாட்டினும் சிறந்த நாடென்பார் அச்சிறப்பிற்குக் காரணமான காவிரியையுடைய நாடன் என்றார். என்னை?

ஏரியு மேற்றத்தி னானும் பிறர்நாட்டு
வாரி சுரக்கும் வளனெல்லாம் - தேரின்
அரிகாலின் கீழுகூஉ மந்நெல்லே சாலும்
கரிகாலன் காவிரிசூழ் நாடு

எனவரும் பழைய வெண்பாவினையும் நினைக.

7-9 : மாமழை...........சுரத்தலான்

(இதன் பொருள்) மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் - யாம் பெரிய முகிலைக் கைகுவித்து வணங்குவோம், அஃது ஏனெனின்; நாம நீர் வேலி உலகிற்கு - அச்சத்தைக் தருகின்ற கடலாற் சூழப்பட்ட இந்நிலவுலகிற்கு; அவன் அளிபோல் மேல் நின்று தான் சுரத்தலான் - அக்காவிரி நாடன தண்ணளி போன்று மேம்பட்டு நின்று பெயலாலே வளத்தைப் பெருக்குதலாலே என்க.

(விளக்கம்) மழை, ஆகுபெயர்; முகில். மா-பெருமைமேற்று. நாம நீர் வேலி என்புழி நாம் என்னும் உரிச்சொல்லீறு திரிந்தது. நாம்-அச்சம். அவன் என்னும் சுட்டு மேல் காவிரிநாடன் என்பதனைச் சுட்டியவாறு. அளி-அருள். மேனின்று என்பது அரசன் அளிக்கு மேம்பட்டு நின்று எனவும், முகிலுக்கு மேலே நின்று எனவும் பொருள் பயந்து நின்றது.

இனி, ஈண்டு அடிகளார், திங்கள் ஞாயிறு மழை எனும் மூன்று பொருள்களும் இவற்றிற்கு நிரலே உவமையாக வருகின்ற குடை திகிரி, அளி என்னும் மூன்றும் இவற்றையுடைய மன்னனும் ஆகிய இவற்றை வணங்கித் தமது காப்பியத்தைத் தொடங்குதல் அடிகளார்க்கு முன்னும் பின்னும் காணப்படாததொரு புதுமையுடைத்து. இவைதாம் இலக்கண நெறி நின்று ஆராய்வார்க்கு, ஆசிரியர் தொல்காப்பியனார் புறத்திணையியலில் பாடாண் திணையின்கண், அமரர்கண் முடியும் அறுவகை யானும் (....................-25) என்றோதினமையின் இவ்வாறு திங்கள் ஞாயிறு மழை என்னும் இவை அவ்விதி பற்றி வணங்கப்பட்டன போலும் எனவும், அன்றியும், புறத்திணைப்பாடாண் பகுதியில் தாவினல் லிசை எனத் தொடங்கும் நூற்பாவின்கண் நடைமிகுத்தேத்திய குடைநிழன் மரபு என்னும் துறைபற்றி ஈண்டுச் சென்னியின் குடை நிழன் மரபினை நடைமிகுத்து ஏத்தப்பட்டது எனவும், மரபு என்றதனால் திகிரியையும் அளியையும் மிகுந்தேத்தினார் எனவும் பண்டையுரையாசிரியர் தத்தமக்குத் தோன்றியவாறெல்லாம் கூறிப் போந்தனர்.

இன்னும் ஈண்டு அடிகளார் வணங்கிய திங்கள் முதலிய மூன்றும் ஆசிரியர் தொல்காப்பியனார் கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே என்னும் நூற்பாவின் பொருளோடு தொடர்புடையன என்று கொண்டு அக் கருத்திற்கேற்ப வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் இத் திங்கள் முதலிய மூன்றுமே என வுரை வகுத்தலுமாம். என்னை? கொடி நிலை என்றது திங்கள் மண்டிலம் எனவும், (நச்சினார்க்கினியர் ஞாயிற்று மண்டிலம் என்று கருதுவர்) கந்தழி என்பது ஞாயிறு மண்டிலம் எனவும், வள்ளி என்பது முகில் எனவும் கோடலுமாம் ஆகலின் என்க.

இவ்வாறு தொல்காப்பியமே முதலிய பழைய இலக்கண நூலானும் இதுதான் இஃதென அறுதியிட்டுக் கூற வொண்ணாக இம்மங்கல வாழ்த்தைப் பின்னும் கூர்ந்து ஆராயுங்கால், இவ்வாழ்த்து அடிகளார் கடவுளை வாழ்த்தும் வாழ்த்தே என்பது புலப்படும். அது வருமாறு: மாந்தர் கட்புலனாகக் காணப்படாத கடவுளை அவனுடைய படைப்புப் பொருளின் வாயிலாகவே காண்டல் கூடும் என்பது அடிகளார் கருத்து. இறைவனுடய பண்புகளில் அருட்பண்பே தலைசிறந்த பண்பாகலின் அப்பண்பு திங்கள் மண்டிலத்தும், அவனுடைய தெறற்பண்பும் அறிவு விளக்கப் பண்பும் ஞாயிற்று மண்டிலத்தும், அவனுடைய ஆக்கல் அளித்தல் அழித்தல் என்னும் மூன்றுவகைத் தொழிற்பாடும் முகிலிடத்தும் காணப்படுதலால் இவற்றின்கண் இக் கடவுட்பண்புகளையே அடிகளார் கடவுளாகக் கண்டு வழிபடுகின்றார் என்பதாம்.

இனி, உயிரில் பொருளாகிய இவற்றினும் உயிர்களிடத்தே கடவுட்பண்பு இறைமைத்தன்மை (அரசத்தன்மை)யாக வெளிப்படுதலின் இவற்றிற் குவமையாகக் காவிரிநாடன் குடை முதலியவற்றை எடுத்தோதி வணங்குகின்றனர் என்று கொள்க. இங்ஙனம் கூறவே அடிகளாருடைய கடவுட் கொள்கையையும் யாம் ஒருவாறு அறிந்து கொண்டவராகின்றோம் என்க. இவ்வாறு எப்பொருளினும் கடவுளைக் காணுமியல்பே சமயக்கணக்கர் மதிவழிச் செல்லாது உயரிய உணர்ச்சி வாயிலாய்க் கடவுளைக் கண்டு வழிபடுகின்றவுண்மை நெறியென்று கொள்க. இவற்றை,

நின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றுள
நின், தண்மையுஞ் சாயலும் திங்கள்உள
நின், சுரத்தலும் வண்மையு மாரியுள
நின், புரத்தலும் நோன்மையும் ஞாலத்துள

என்றற்றொடக்கத்துப் பரிபாடலானும்

தீயினுட் டெறனீ பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ

என்றற்றொடக்கத்துப் பரிபாடலானும் மணிவாசகம் முதலிய நூல்களானும் உணர்ந்து கொள்க. ஈண்டு வணங்கிய திங்கள் முதலியன பொதுப் பொருள்களாக இக்காப்பியத்தோடு தொடர்புண்மை கருதி அரசன் என்று பொதுவின் ஓதாது சென்னி என்றும் காவிரிநாடன் என்றும் செம்பியன் ஒருவனையே விதந்தெடுத்தோதுவாராயினர். இது தாம் வழிபடு கடவுளை வாழ்த்தி இக்காப்பியத்திற்கு அவ்வாழ்த்தினூடே கால்கோள் செய்தபடியாம் என நுண்ணிதின் உணர்க.

இனி, திங்களை முற்கூறியது இக் காப்பியத் தலைவியாகிய கண்ணகியாரைக் கருதிக் கூறியபடியாம். என்னை? திங்கள் மண்டிலம் பெண்மைத் தன்மையுடைத்தென்ப வாகலின் என்க. இக்கருத்தேபற்றி அடியார்க்கு நல்லார், இத் தொடர்நிலைச் செய்யுட்குச் சிறந்த முதன்மொழி அதுவே என்றோதினர் போலும். இனி இக் காப்பியத் தலைவியும் தலைவனும் தோன்றிய இடமாகிய பூம்புகாரை வாழ்த்திக் காப்பியக் கதையைத் தொடங்குகின்றனர் என்க.

10-12 : பூம்புகார்............. ஒழுகலான்

(இதன்பொருள்) பூம்புகார் போற்றும் பூம்புகார் போற்றுதும்-யாம் இனி அழகிய புகார் நகரத்தைக் கைகூப்பி மனத்தால் நினைந்து தலையாலே வணங்குவேம்; வீங்குநீர் வேலிக்கு - கடலை வேலியாகவுடைய இந்நிலவுலகின்கண்; அவன் குலத்தோடு ஓங்கிப் பரந்து ஒழுகலான் - அக் காவிரிநாடன் குலத்தாருடைய புகழோடு தானும் உயர்ந்து தன்புகழ் இவ்வுலகெங்கும் பரவுமாறு நடத்தலாலே என்க.

(விளக்கம்) பூ-அழகு; பொலிவு. பூப்புகார் எனற்பாலது விகாரத்தால் பூம்புகார் என நின்றது. இது செய்யுளின்பம் கருதி மெலிக்கும் வழி மெலித்தல். ஓங்கிப் பரந்து ஒழுகலான் என்னும் வினைக்கேற்பப் புகழ் என வருவித்தோதுக.

அடிகளார் இக்காப்பியஞ் செய்கின்ற காலத்தே புகார் நகரம் கடல் வயிறுபுக்கு மறைந்து போனமை கருதி அந்நகரந்தான் மறைந்து போயினும் அதன் புகழ் அக் காவிரிநாடன் புகழோடு இவ்வுலகுள்ள துணையும் பரந்து ஒழுகும் அத்துணைப் பெருமையுடைத்தாகலான் அதனைப் போற்றுதும் என்றவாறு. இதற்குப் பழைய வுரையாசிரிய ரெல்லாம் அடிகளார் கருத்துணராது வறிய சொற்பொருள் உரை மட்டும் கூறியுள்ளனர். இக் கருத்து, அடுத்துப் பின்னும் விளக்கமுறும்.

13-19 : ஆங்கு................ முழுதுணர்ந்தோரே

(இதன்பொருள்) ஆங்கு-அவ்வாறு வாழ்த்தி வணங்குதலன்றி, பொதியில் ஆயினும் இமயம் ஆயினும். தம்பால் தோன்றிய உயர்ந்தோர் புகழோடு ஓங்கிப் பரந்தொழுகும் புகழுடைய பொதியமலை யேயாதல் இமயமலையேயாதல்; பதிஎழுவு அறியாப் பழங்குடி கெழீஇய பொதுஅறு சிறப்பின் புகாரேயாயினும் - தன்கண் வாழ்வோர் பகையே பசியே முதலியவற்றால் வருந்திக்குடியோடிப் போதலை எஞ்ஞான்றும் அறிந்திலாத படைப்புக் காலந்தொட்டு நிலையுற்று வருகின்ற பழைய குடிமக்களையுடைய தனக்கேயுரிய சிறப்பினையுடைய இந்தப் புகார் நகரமேயாதல், இன்னோரன்ன விடங்களை; முடித்த கேள்வி முழுது உணர்ந்தோர்-கேட்கக்கடவன வெல்லாம் கேட்டுமுற்றிய கேள்வியறிவினாலே அறியற்பாலனவனைத்தையும் ஐயந்திரிபற அறிந்துணர்ந்த சான்றோர்; நடுக்கு இன்றி நிலைஇயர் என்பது அல்லதை - கேடின்றி எஞ்ஞான்றும் புகழுருவத்தே நிலைத்திடுக! என்று உவந்து வாழ்த்துவதல்லது; ஒடுக்கம் கூறார் - அவைதாம் இயற்கை நியதியுட்பட்டு மறைந்தொழிந்தவிடத்தும் அதனைப் பொருளாகக் கருதிக் கூறுவாரல்லர்; எற்றாலெனின; உயர்ந்தோர் உண்மையின்-அவ்விடங்களிலே தோன்றிய சான்றோர் தம் பூதவுடம்பு மறைந்த வழியும் புகழுடம்பிலே எஞ்ஞான்றும் இவ்வுலகிலே நிலைத்திருத்தலாலே; என்க.

(விளக்கம்) அவ்வுயர்ந்தோர் புகழோடு அவ்விடங்களின் புகழுமொன்றி ஓங்கிப் பரந்தொழுகலான் அவை ஒடுங்கியவிடத்தும் அவையிற்றின் ஒடுக்கத்தைப் பொருளாகக் கருதிக் கூறுவதிலர். அவற்றை வாழ்த்துவதே செய்வர் என்றவாறு. இங்ஙனம் கூறியதன் குறிப்பு அடிகளார் இந்நூல் செய்கின்ற காலத்தே புகார் நகரம் கடல் கொள்ளப்பட்டு மறைந்தொழிந்தமையால் அந்நிகழ்ச்சியை அடிகளார் வெளிப்படையானோதாமல் குறிப்பாக உணர்த்துவதாம் என்க. இக் குறிப்பின்றேல் புகார் நகரத்தின் சிறப்பறிவுறுத்த வந்த அடிகளார் நடுக்கின்றி நிலைஇயர் என்பதல்லதை ஒடுக்கங் கூறார் என்பது வெற்றெனத் தொடுத்தலும் மிகைபடக் கூறலுமே யாகும் என்க. வரலாற்றறிவின்கண் கருத்தில்லாத பழைய வுரையாசிரியர் இருவரும் ஈண்டு அடிகளார் ஒடுக்கம் கூறார் என வேண்டாகூறி வேண்டியது முடித்துள்ள அருமையை உணராது போயினர் இக்காலத்துரை செய்தோரும் கண்மூடி வழக்கமாக அப்பழைய வுரையாசிரியர் கூறியதே கூறியொழிந்தனர்.

இனி, தம் வாழ்நாளிலேயே கடல் கோட்பட்ட புகார் நகரம் உயர்ந்தோரை உலகிற்கு வழங்கிய வள்ளன்மைக்கு உவமையாகவே பொதியிலையும் இமயத்தையும் அதனோடு ஒருசேர எடுத்தோதினர்.

இனி, இதனால் உலகின்கண் மூதூர்கள் பல இருப்பினும் உயர்ந்தோரைத் தோற்றுவித்திலவாயின் அவை இருந்தும் இல்லாதவைகளே. மற்றுக் கடல்கோள் முதலியவற்றால் ஒடுங்கியவிடத்தும் சான்றோரை ஈன்ற திருவுடையூர்கள் என்றும் ஒடுங்காமல் நடுக்கின்றி நின்று நிலவுவனவேயாம் என்பது அடிகளார் கருத்தென்பதுணரப்படும். இக் கருத்துடனே,

மாய்ந்தவர் மாய்ந்தவ ரல்லர்கள் மாயா
தேந்திய கைகொ டிரந்தவ ரெந்தாய்
வீய்ந்தவ ரென்பவர் வீய்ந்தவ ரேனும்
ஈய்ந்த வரல்ல(து) இருந்தவர் யாரே?  (பால-வேள்விப்-30)

எனவரும் கம்பநாடர் செய்யுள் நினைந்தின்புறற் பாலதாம்.

இனி, அடிகளார் காலத்திலேயே புகார் நகரங் கடல் வயிறு புக்கது என்னும் இவ்வரலாற்றுண்மையைத் தண்டமிழாசான் சாத்தனார் ஓதிய மணிமேகலையின்கண்; (25: 175:)

மடவர னல்லாய் நின்றன் மாநகர்
கடல்வயிறு புக்கது காரணங் கேளாய்

என்பது முதலிய பலசான்றுகளானும் உணர்க. மணிமேகலையிற் கிடைக்குஞ் சான்றுகள் இந்நூற்கு அகச்சான்றுகள் என்பது மிகையன்று. மேலும் உரைபெறு கட்டுரைக்கண் கண்ணகியார்க்குப் புகாரின்கண் பத்தினிக் கோட்டம் சமைக்கப்பட்டதெனக் கூறாமைக்கும் காரணம் அந்நகர் கடல் வயிறு புக்கமையே என்றுணர்க.

இனி, பொதுவறு சிறப்பு என்பது இஃதென்றுணர்த்துவார் அதனையே பதியெழுவறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறுசிறப்பென அடை புணர்த்து விளக்கினர். நடுக்கின்றிநிலையிய என்பதும் பாடம். அல்லதை, ஐகாரம், அசை. நிலைஇயர் - வியங்கோள்; வாழ்த்துப் பொருளின்கண் வந்தது. கேள்வியினால் முழுதுணர்ந்தோர் என்க.

உயர்ந்தோர் பொதியிலுக்கு அகத்தியனையும், இமயத்திற்கு இருடிகளையும், புகாருக்கு மன்னர்களையும் கற்புடையமகளிரையும் கொள்க. அடியார்க்கு நல்லார், இமயத்திற்கு, இறைவனைக் கொள்வர். இவ்வாறுரை கூறாக்கால் அடிகளார் கூற்று அவர் காலத்தே பொய்யாயொழிதலு முணர்க.

கண்ணகி மாண்பு

20-24 : அதனால்...........அகவையாள்

(இதன்பொருள்) அதனால் - அக்காரணத்தினாலே, நாக நீள் நகரொடும் நாகநாடு அதனொடும் போக-பவணர் வாழ்கின்ற நெடிய நகரத்தினோடும் வானவர் வாழ்கின்ற வானநாட்டினோடும் நம்மனோர் காட்சிக்குப் புலனாகாமல் கேள்விக்கு மட்டும் புலப்படுகின்றதொரு நகரமாய்ப் போகாநிற்ப; நீள் புகழ் என்னும் புகார்நகர் அது தன்னில் - காலந்தோறும் நீளுகின்ற புகழான் மட்டும் என்றென்றும் நடுக்கின்றி நிலைபெறுகின்ற புகார் நகரம் என்னும் அந்த மாநகரத்தின்கண் அக்காலத்தே வாழ்ந்திருந்த உயர்ந்தோருள் வைத்து; மாகவான் நிகர்வண் கை மாநாய்கன் குலக்கொம்பர் - வானத்து நின்று மழை பொழிந்து உலகோம்புகின்ற முகிலையே ஒத்த வண்மையுடைய கையையுடைய மாநாய்கன் என்னும் பெருங்குடி வாணிகன் மடமகளாய் அவன் குலமாகிய தருவீன்ற கொழுந்துபோல்வாளும், ஈகை வான் கொடி அன்னாள் - பொற் கொடிபோல்வாளும் ஆகிய நங்கை; ஈர்ஆறு ஆண்டு அகவையாள்-பன்னீராட்டையுட்பட்ட பருவத்தை யுடையளா யிருந்தனள் என்க.

(விளக்கம்) அதனால் என்றது தன்கட்டோன்றிய உயர்ந்தோர் உண்மையால் என்றவாறு. உயர்ந்தோர் உண்மையால் எஞ்ஞான்றும் புகழால் மன்னும் புகார் நகரது தன்னில் என இயையும்.

இனி அஃது அத்தன்மையதாகலான் போகமும் புகழும் நிலைபேறுடைய என்றவாறு என்னும் அடியார்க்குநல்லார் உரை, போகத்திற்குப் புகார் நிலைபேறுடைத்தாதல் காரணம் என்றல் பொருந்தாமையின் போலியாதலறிக. புகாரின் நிலைபேறுடைமை புகழுக்குக் காரணம் என்பதும் காரணகாரிய முறைமையிற் பிறழ்ந்தவுரையாம் என்க. என்னை? புகழே நிலைபேறுடைமைக்குக் காரணம் ஆதலே நேரிதாகலின் என்க.

கடற் கோட்பட்டமையால் புகார் நாகர் நகரோடும் நாக நாட்டோடும் ஒருதன்மையுடையதாய்ப் போக இப்பொழுது புகழான் மட்டும் மன்னுகின்ற (புகார் என்னும்) அந்த நகரிலே கடற்கோளின் முன்னர் வாழ்ந்திருந்த மாநாய்கன் என்பவனுடைய மகள் ஒருத்தி இருந்தனள், அவள் ஈராறாண்டகவையுடையள் ஆயிருந்தனள் என அடிகளார் காப்பியத்தலைவியை முதற்கண் நம்மனோர்க்கு அறிவிக்கின்றனர் என்றுணர்க.

நாகர் நகரோடு நாக நாடதனோடும் ஒருதன்மையதாய்ப் போக என்றது இவ்வுலகத்திற் காணப்படாமல் அவ்விரண்டு நகரங்களையும் போன்று இலக்கியங்களிலே மட்டும் இருக்கின்றதாகிவிட என்றவாறு.

முன்னர் உயர்ந்தோருண்மைக்குப் பொதியிலையும் இமயத்தையும் உவமை கூறினர் என்றும் ஈண்டுக் கடல் கொள்ளப்பட்ட பின்னர் இலக்கியத்தில் மட்டும் காணப்படுதற்கு நாகர் நகரையும் நாக நாட்டையும் உவமையாக எடுத்தோதினர் என்றுமுணர்க.

இனி, அடியார்க்கு நல்லார், போகம் நீள்புகழ் எனக் கண்ணழித்து இவற்றை எதிர்நிரனிறை எனக் கூறினர். ஆயின் போகம் பவணர்க்குப் பொருந்துமாயினும் சுவர்க்கத்திற்குப் புகழுண்டென்றல் வம்பே, என்னை? புகழ்தானும் ஈகைமேற்றாக அது, அறஞ்செய் மாக்கள் புறங்காத்தோம்புநர், நற்றவஞ் செய்வோர், பற்றற முயல்வோர் யாவரும் இல்லாத் தேவர் நாட்டிற்கு உண்டென்பதும் அதுதானும் புகார் நகரத்திற்குப் புகழ்பற்றி உவமையாம் என்பதும் சிறிதும் பெருந்தா வென்றொழிக.

அந்நகரம் இப்பொழுதின்மையான் புகார் நகரம் என்னும் அந்த நகரத்தில் என்பார் புகார் நகரது தன்னில் என்றார். எனவே, அந்நகரம் கடல் வயிறு புகுதற்கு முன்னர் அந்நகரத்தில் மாநாய்கன் என்றொரு பெருங்குடி வாணிகன் இருந்தான். அவனுக்கு மகள் ஒருத்தி இருந்தனள், அவள் பன்னீராண்டகவையினள் ஆயினள் என்றாருமாயிற்று. அவளே இக்காப்பியத் தலைவியாதலின் அவளை மகளாகப் பெறுதற்குரிய அவள் தந்தையின் தகுதிதோன்ற அவனை மாகவான் நிகர்வண்கையன் என்றார்; அவன்றானும் அரசனாற்சிறப்புப் பெயர் பெற்ற பெருந்தகை என்பார் அவனது இயற்பெயர் கூறாது மாநாய்கன் என்னும் சிறப்புப் பெயரால் கூறினர். என்னை? கருங்கடற் பிறப்பினல்லால் வலம்புரி காணுங்காலைப் பெருங்குளத்து என்றுந்தோன்றா எனவும், அட்டு நீர் அருவிக் குன்றக் தல்லது வைரந்தோன்றா எனவும், குட்ட நீர்க்குளத்தினல்லாற் குப்பைமேற் குவளை பூவா எனவும் வருகின்ற திருத்தக்கதேவர் திருமொழியும் காண்க.

குலக்கொம்பர் என்புழி. கொம்பர் ஆகுபெயர். கொழுந்து என்றவாறு. இனி அவளது இயற்கை எழில்தோன்ற ஈகைவான் கொடியன்னாள் என்றார். ஈகை பொன் பொன்னிறமான பூங்கொடிபோல் வாள் என்க. இனி வானவல்லி எனினுமாம். இது கற்பகத்தருவின் மேலன்றிப் பிறதருவிற் படராதென்ப. எனவே அவளது கற்புப் பண்பிற்கு இது குறிப்புவமையாகும் என்க.

ஈராறாண்டகவையாள் என்றது மணப்பருவமெய்தினள் என்றவாறு.

25-29 : அவளுந்தான்.............மன்னோ

(இதன்பொருள்) அவள்தான் - அந்நங்கைதான்; மாதரார் - அந் நகரத்தே வாழுகின்ற உயர்குலத்து மகளிர்கள், இவள் (வடிவு) போதில் ஆர் திருவினாள் புகழுடை வடிவு என்றும்-இவளுடைய அழகு செந்தாமரை மலரின்கண் எழுந்தருளியிருக்கின்ற திருமகளுடைய புகழுடைய அழகையே ஒக்கும் என்றும்; இவள் திறம்-இவளுடைய கற்புடைமை, தீது இலா வடமீனின் திறம் என்றும்- குற்றமில்லாத அருந்ததியின் கற்பையே ஒக்கும் என்றும்; தொழுது ஏத்த-தன்னைத் தொழுது பாராட்டா நிற்ப; வயங்கிய பெருங்குணத்துக் காதலாள் - விளங்கிய தனது பெருங்குணங்களோடு அந்நகரத்தே வாழும் ஒருவன்பால் காதலுடையவளாகவுமிருந்தனள்; மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ - அவள் கண்ணகி என்று பெயர் கூறப்படுபவள் என்க.

(விளக்கம்) இனி, இங்ஙனமன்றி அடியார்க்கு நல்லார் திருமகளுடைய வடிவு இவள் வடிவை யொக்கு மென்றும் அருந்ததியுடைய கற்பு இவள் கற்பை ஒக்கும் என்றும் மாதரார் தொழுதேத்த என்று உரை வகுப்பர். அவ்வாறு கூறினும் அமையும். என்னை? பொருளே உவமஞ் செயதனர் மொழியினும் மருளறு சிறப்பின் அஃதுவமமாகும் என்பது விதி யாகலின் (தொல்-உவம 6) என்க. விதியேயாயினும் அங்ஙனம் கூறுவதனாற் பயன் யாதொன்றுமில்லை ஆகலின் அடிகளார் கருத்து யாம் கூறியதே என்றுணர்க.

அவளும் தான் என்புழி உம்மை இசைநிறை. போது-செந்தாமரை மலர். வடமொழியாளராற் கூறப்படும் பத்தினிமகளிருள் வைத்து அருந்ததி மட்டுமே தீதிலாப் பத்தினி ஆதலால் கண்ணகிக்கு அவள் உவமையாதற்குக் காரணம் கூறுவார் தீதிலா வடமீனின் திறம் என்றார். எஞ்சிய சீதை பாஞ்சாலி முதலிய பத்தினிகள் இழுக்குடையராதல் அவரவர் வரலாற்றான் அறிக.

இனி அக்கண்ணகி தானும் தன்னெஞ்சத்தே ஒருவனைக் காதலித்திருந்தனள் என்பது போதரப் பெருங்குணத்துக் காதலாள் என்றார். இவ்வாற்றான் கண்ணகியும் கோவலனும் முற்படத் தம்முள் ஒருவரையொருவர் காதலித்திருந்தனர் என்பது அடிகளார் இப்பாட்டிடை வைத்த குறிப்புப் பொருள். உள்ளப் புணர்ச்சியளவிலேயே அவர் காதலிருந்த தென்பது தோன்றப் பெருங்குணத்துக் காதலாள் என்றார். இனி அவளால் காதலிக்கப் பட்டான் இயல்பு மேலே கூறுகின்றார். இங்ஙனம் கொள்ளாக்கால் கண்ணகி கோவலன் மணம் ஒருவரை யொருவர் காதலியாமல் தாய் தந்தையராற் கூட்டுவிக்கப்பட்ட போலி மணமாய் முடிதலறிக. அடிகளார் முன்னர்ப் புகார் நகரின் ஒடுக்கத்தைக் கூறாமல் பிறி தொன்று கூறுவார் போன்று கூறியாங்கே ஈண்டும் கண்ணகியின் காதலையும் பிறிதொன்று கூறுவார் போன்று கூறியிருத்தல் வியந்து பாராட்டற்குரியதாம். இவ்வாறு யாம் பொருள் காணா தொழியின் ஒடுக்கம் கூறார் என்று பண்டு கூறியதும் ஈண்டுக் காதலாள் என்றோதியதும் சொற்றிறந்தேறாது வாய் தந்தன கூறியவாறாம் என்றறிக. மன், ஓ. அசைச் சொற்கள்.

கோவலன்

30-34: ஆங்கு ............அகவையான்

(இதன்பொருள்) ஆங்கு-அப்புகார் நகரின் கண்; பெருநிலம் முழுது ஆளும் பெருமகன் தலைவைத்த ஒரு தனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான் - நெடிய நிலவுலகத்தை முழுவதும் தனது ஒரு குடை நிழலின்கண் வைத்துத் தனியே அருளாட்சி செய்கின்ற மன்னன் குடியை முதற் குடியாக வைத்து நிரலாக எண்ணுதலையுடைய ஒப்பற்ற குடிகளுள் வைத்து மிக்குயர்ந்த செல்வத்தையுடைய குடியின்கண் தோன்றிய வாணிகன் ஒருவன் உளன்; வருநிதி பிறர்க்கார்த்தும் மாசாத்துவான் என்பான்-தனக்குள வொழுக்கினின்று செய்யும் அறுவகைத் தொழிலினாலே தனக்கு ஊதியமாக வருகின்ற பொருள்களை அப்பொருளில்லாத வறியோர்க்கு வழங்கி உண்பிக்கும் அவன் மாசாத்துவான் என்று பெயர் கூறப்படுவான்; இரு நிதிக்கிழவன்-மேலும் இரு நிதிக் கிழவன் என்னும் சிறப்புப் பெயருமுடையான்; மகன் ஈர் எட்டு ஆண்டு அகவையான்-அவ்வாணிகனுக்கு மகன் ஒருவன் உளனாயினன் அவன் அப்பொழுது பதினாறாட்டை யுட்பட்ட பருவத்தை யுடையவனாயிருந்தனன்; என்க.

(விளக்கம்) பெருநிலம் என்றது சோழநாட்டை ஆளும் பெருமகன் என்றதனால் அரசன் என்பது பெற்றாம். குடியென நோக்குவார்க்கு அரசன் குடியும் ஒரு குடியே ஆகலான் ஆளும் பெருமகன்றலை வைத்த ஒரு தனிக் குடிகள் என்றார். ஒருதனிக் குடிகள் என்றது மிகவும் உயர்ந்த குடிகள் என்றவாறு. குடிகளோடு என்புழி மூன்றனுருபு ஏழாவதன்கண் மயங்கிற்று. இன்னுருபு என்பர் அடியார்க்கு நல்லார்.

வருநிதி என்றது அறத்தாற்றினின்று தன் குலத்திற்குரிய தொழில் செய்து அதற்கு ஊதியமாக வருகின்ற பொருள் என்றவாறு. முன்னர்ச் செல்வத்தான் என்றமையின் அஃதில்லாத வறியோரைப் பிறர் என்றார். ஆர்த்துதல் - ஊட்டுதல். அங்ஙனம் பிறரையூட்டுதலையே குறிக்கோளாகக் கொண்டவன் என்பது தோன்ற வருநிதி பிறர்க்கு வழங்கும் என்னாது ஆர்த்தும் என்று ஓதினார். எனவே, இவன் தன்குலத்தொழிலின்கண் வாகை சூடியவன் என்றாராயிற்று. என்னை?

உழுதுபயன் கொண் டொலிநிரை ஓம்பிப்
பழுதிலாப் பண்டம் பகர்ந்து - முழுதுணர
ஓதி அழல்வழிப்பட் டோம்பாத ஈகையான்
ஆதி வணிகர்க் கரசு (புறப்-மாலை-264)

என்பது வாணிகவாகையின் வரலாறாகலின் என்க.

மாசாத்துவான் : இயற்பெயர் இருநீதிக்கிழவன் : சிறப்புப் பெயர்.

35-39 : அவனுந்தான்...........என்பான் மன்னோ

(இதன்பொருள்) அவனுந்தான்-அம்மாசாத்துவான் மகன்றானும்; மண்தேய்த்த புகழினான் - தன் வள்ளன்மையாலே இந்நிலவுலகம் இடம் சிறிதென்னும்படி பரவிய பெரிய புகழை யுடையவனும்; பண் தேய்த்த மொழியினார்-பண்ணினது இனிமை சிறிதென்னும்படி பேரின்பம் பயக்கும் மொழியினையுடைய; மதிமுக மடவார் - நிறைவெண்டிங்கள் போன்ற அழகிய முகத்தையுடைய பொதுமகளிர் தன்னைக் கண்டுழி; காதலால் - தன்பாலெழுந்த காதல் காரணமாக; கண்டு ஏத்தும் செவ்வேள் என்று கொண்டு - இவன் நம்மனோர் கண்களாலே கண்டு வணங்குதற்பொருட்டு இவ்வாறுருவம் கொண்டு நம்மெதிரே வந்த சிவந்த திருமேனியையுடைய முருகனே என்று நெஞ்சத்திலே கொண்டு; ஆயத்து-தமது தோழியர் குழுவினிடத்தே; பாராட்டி -தனது அழகினைப் பலபடியாகப் புனைந்து; இசை போக்கி-இசை யெழீஇ; ஏத்தும் கிழமையான் - தொழற்குரிய பேரழகுடையவன்; கோவலன் என்பான் மன்னோ - கோவலன் என்று பெயர் கூறப்படுபவன் என்க.

(விளக்கம்) மண்-நிலவுலகம்; அவன் புகழ் இந்நிலவுலகின்கண் அடங்காமையின் மண்ணைத் தேய்த்தபுகழ் என்றார். புகழ் ஈகையால் வருபுகழ், அவன் அன்னாதலைப் பின்னர்க் காட்டுதும். கொடுத்தான் எனப்படும் சொல்(புகழ் அடுக்கிய மூன்றுலகும் கேட்குமே என்றார் பிறரும். மடவார் ஈண்டுப் பரத்தை மகளிர், என்னை? குலமகளிர்க்கும் பிறன் ஒருவனைப் பாராட்டுதல் ஒவ்வாமையின் என்க.

மதிமுக மடவார்.....காதலாற் கொண்டேத்தும் கிழமை கோவலனுக்கு அடிப்பட்டமைந்து கிடந்தமையை இதனால் அடிகளார் குறிப்பாக ஓதினர் என்றுணர்க. இதற்கு மாறாகக் கண்ணகியின்பால் வடமீனின் திறம் (கற்பு) அடிப்பட்டுக் கிடந்தமை முன்னர் ஓதினவையும் உணர்க.

கோவலன் புகழ் பெரிதாயினும் அவனது கண்ணோட்டமில்லாத பரத்தமை யொழுக்கமாகிய பழி தேய்த்தொழித்தமை குறிப்பாகப் புலப்படுமாறு தேய்த்தபுகழ் என்று சொற்றிறம் தேர்ந்து அடை புணர்த்தார். அதுதானும் தேய்க்கப்பட்ட புகழ் என்றும் பிறிதொரு பொருளும் தோற்றுவித்தலறிக. செவ்வேள் - முருகக் கடவுள்; கண்டேத்தும் செவ்வேள்; இல்பொருளுவமை. இசை போக்கி - இசை யெழீஇப் பாடி, இசைபோக்கி என்றது புகழைக்கெடுத்து எனவும் ஒரு பொருள் தோன்ற நிற்றலுணர்க. மன், ஓ : அசைகள்.

அடியார்க்குநல்லார்-இனி மடவார் என்பதற்குப் பூமாதும் கலைமாதும் புவிமாது மென்று கூறி இவர் அழகிற்கும் அறிவிற்கும் ஆண்மைக்கும் இவனென்று உட்கொண்டு ஏத்தும் கிழமையான் எனினும் அமையும் என்பர். இவ்வுரை அமையுமாயிற் கொள்க. மொழியினால். என்பதும் பாடம்.

கண்ணகியை முற்கூறினார் பத்தினியை ஏத்துதல் உட்கோளாகலின் என்பர் அடியார்க்குநல்லார். அவளே காப்பியத் தலைவியாதலின் முற்கூறினார் எனினுமாம்.

40-44 : அவரை................மணம்

(இதன்பொருள்) அவரை-அந்தக் காதலரிருவரையும்; இரு பெருங் குரவரும் - அவர்தம் காதற் கேண்மையைக் குறிப்பாலுணர்ந்த அவர்தம் தாயரும் தந்தைமாரும்; ஒருபெரு நாளால் மண அணிகாண மகிழ்ந்தனர்-ஒரு நல்ல நாளிலே திருமணக் கோலம் செய்வித்துப் பலருமறிய வதுவைச் சடங்காற்றிக் கண்ணாற் காணவேண்டும் என்று தம் மூட்குழீஇ உறுதி செய்து மகிழ்வாராயினர்; மகிழ்ந்துழி-அவ்வாறு மகிழ்ந்த அப்பொழுதே; அணி இழையார் யானை எருத்தத்துமேல் இரீஇ மணம் மாநகர்க்கு ஈந்தார்-அழகிய அணிகலன அணிந்த மகளிர்சிலரை யானையின் பிடரிலேற்றுவித்துத் தாம் உறுதி செய்த அத்திருமண நாளைப் பெரிய அந்நகரத்தில் வாழ்வோர்க்கெல்லாம் அவர் வாயிலாய் அறிவித்தனர் என்க.

(விளக்கம்) அவரை யென்றது தம்முட் காதல்கொண்டிருந்த அக் கண்ணகியையும் கோவலனையும் என்பதுபட நின்றது. இருபெருங்குரவர் என்றது கண்ணகியின் தாய்தந்தையரையும் கோவலன் தாய் தந்தையரையும் குறித்தவாறாம். இனி, அவ்விருவருடைய தந்தையர் எனக் கோடலுமாம். பெருநாள்-நல்லநாள். மண அணி-மணக்கோலம். மக்கள் மணக்கோலங் காணவேண்டும் என அவாவுதல் முதுகுரவர்க்கியல்பு. காணவேண்டும் எனத் தம்முட்குழீஇ உறுதிசெய்து மகிழ்ந்தனர் என்பது கருத்து. யானை யெருத்தத்து அணியிழையாரை இருத்தி அவர் வாயிலாய்த் திருமணச் செய்தியை அறிவித்தல் அக்காலத்துப் பெருநிதிக்கிழவர் வழக்கம் என்பது இதனாலறியப்படும். மணம்-மணச்செய்தி. ஈதல் - ஈண்டு அறிவித்தல்.

45-47 : அவ்வழி..........எழுந்தது

(இதன்பொருள்) அவ்வழி - அவ்வாறு திருமணச் செய்தி யறிவித்தபின்; முரசு இயம்பின - குறித்த நாளிலே முரசு முதலியன முழங்கின; முருடு அதிர்ந்தன-முழவு முதலிய இன்னிசைக் கருவிகள் முழங்கின; பணிலம் முறை யெழுந்தன - சங்குகளின் ஒலி முறைப்படி எழலாயின; வெள்குடை அரசு எழுந்தது ஓர்படி என - மங்கலமரபினவாகிய வெண்குடை முதலியன அரசன் திருவுலாப் போதரும்பொழுது எழுமாறுபோல; எழுந்தன-மிகுதியாக எழலாயின; அகலுள் மங்கல அணி எழுந்தது - இவ்வாற்றால் அப்புகாரினது அக நகரெங்கணும் திருமண விழாவினது அழகு தோன்றலாயிற்று என்க.

(விளக்கம்) இஃது இசைப்பாடலாதலால் (1) திங்களைப்போற்றுதும் என்பது தொடங்கி, (12) ஓங்கிப் பரந்தொழுகலான் என்னும் துணையும், வாரநடையாகவும் (13) ஆங்கு என்பது தொடங்கி (38) ஈந்தார் மணம் என்னுந் துணையும் கூடை நடையாகவும் (39) அவ்வழி முரசியம்பின என்பது தொடங்கித் திரணடையாகவும் படிப்படியாக வுயர்ந்து ஆரோசையாக நடத்தலறிக.

இனி, (41) நீலவிதானத்து என்பது தொடங்கி அமரோசையாய்ப் படிப்படியாக இறங்கி மீண்டும் வாரநடையாகச் செல்லுதலை அவ்வாறு பாடியுணர்க.

முரசு வல்லோசைத் தோற்கருவியாதலின் அவ்வினத்துக் கருவிகளையும், முருடு இன்னிசைக் கருவியாதலின் அவ்வினத்துக் கருவிகளையும் இனம் செப்புமாற்றாற் குறித்து நின்றன. இனி, பணிலம் வதுவைச் சடங்குகளின்கண் காப்பணிதல் முதலிய சடங்குதோறும் அவ்வச் சடங்கின் தொடக்கத்தேயும் இறுதியிலேயும் ஒலிக்கப்படுமாகலின் பணிலம் முறை எழுந்தன என்றார். இதனை,

பருத்தமணி முத்தமணல் பாய்சதுர மாகத்
திருத்தியொரு வால்வனை பயின்று திடர்சூழத்
தருப்பையினு னித்தலை வடக்கொடு கிழக்காய்ப்
பரப்பின னதற்குமொரு வால்வளை பயின்றான்

எனவருஞ் சூளாமணியானும் (1069) உணர்க.

இனி, குடை, சிறப்புப்பற்றி மங்கலப் பொருள்களைக் குறித்து நின்றது, அவையிற்றை,

அயின்முனை வாளும் வயிரத் தோட்டியும்
கொற்றக் குடையும் பொற்பூங் குடமும்
வலம்புரி வட்டமும் இலங்கொளிச் சங்கும்
வெண்கண் ணாடியும் செஞ்சுடர் விளக்கும்
கவரியுங் கயலும் தவிசுந் திருவும்
முரசும் படாகையு மரசிய லாழியும்
ஓண்வினைப் பொலிந்த வோமா லிகையுமென்
றெண்ணிரண் டாகிய பண்ணமை வனப்பின்
கடிமாண் மங்கலம் கதிர்வளை மகளிர்
முடிமிசை யேந்தினர் முன்னர் நடப்ப

எனவரும் பெருங்கதையால் (2:5:24-35) உணர்க.

அகலுள் - அகன்ற உள்ளிடம்; அஃதாவது அகநகர். மணமகள் இல்லத்திருந்து முரச முதலியன முழங்க இம்மங்கலப் பொருள் சுமந்து கதிர்வளை மகளிர் மணமகளில்லத்திற்குச் செல்லுதலையே அடிகளார் அகலுள் மங்கல அணி எழுந்தது என்றார் எனக் கோடலுமாம். இனி அரும்பதவுரையாசிரியர், மங்கல அணியெழுந்தது என்பதற்கு, மாங்கலிய சூத்திரம் (நகரை) வலஞ்செய்த தென்பர். அங்ஙனம் வலஞ்செய்தல் மரபாயின் ஆராய்ந்து கொள்க.

அவ்வழி முரசியம்பின........அணியெழுந்தது என்னும் இவ்வடிகள் தம்மோசையாலேயே திருமணவாரவாரத்தைத் தோற்றுவித்து விடுதலும் உணர்க.

48-53 : மாலை...........நோன்பென்னை

(இதன்பொருள்) மாலை தாழ் சென்னி வயிரமணித் தூணகத்து-மலர்மாலைகள் தூங்கவிடப்பட்ட உச்சியினை யுடையவாய் வயிர மணிகள் பதிக்கப்பட்டனவும் ஆகிய தூண்களையுடையதொரு அழகிய மண்டபத்தின்கண்; நீல விதானத்து நிததிலப் பூம் பந்தர்க்கீழ் - நீலப்பட்டினாலியன்ற மேற்கட்டியின் கீழே முத்து மாலைகளாலே அமைக்கப்பட்ட அழகிய திருமணப்பந்தரின் கீழே; வான் ஊர் மதியம் சகடு அணைய-வானத்திலே இயங்காநின்ற திங்கள் ஆகிய கோளானது உரோகிணி என்னும் விண்மீனைச் சேராநிற்ப அந்த நன்னாளிலே; வானத்துச் சாலி ஒரு மீன் தகையாளை - அவ்வானத்தே தோன்றுகின்ற ஒப்பற்ற புகழையுடைய அருந்ததி என்னும் மீனை ஒத்த கற்பென்னும பெருந்தகைமையுடைய அக்கண்ணகியை; கோவலன்-அம்மாசாத்துவான் என்பான் மகனாகிய கோவலன்; மாமுது பார்ப்பான் - அறனறிந்து மூத்த சிறப்புடைய பார்ப்பனன்; மறை வழிகாட்ட-திருமணத்திற்கு மறைநூலிற் சொன்ன நெறியை முன்னின்று காட்டாநிற்ப; தீவலம் செய்வது - திருமணஞ் செய்துகொண்டு அவ்விருவரும் வேள்வித்தீயை வலஞ்செய்யும் இக்காட்சியை; காண்பார் கண் - அங்கிருந்து காண்கின்றவர் கண்கள்தாம்; நோன்பு என்னை முற்பிறப்பிலே செய்த தவந்தான் என் கொலோ? (என்று அடிகளார் வியந்தார்) என்க.

(விளக்கம்) சகடு - உரோகிணி நாள். திங்கள் உரோகிணியோடு சேர்ந்த நாளைத் தமிழ்மக்கள் திருமணச் சடங்கிற்குச் சிறந்த நாளாகக் கொண்டிருந்தன என்பது இதனானும், அங்க ணிருவிசும்பு விளங்கத் திங்கட் சகட மண்டிய துகடீர் கூட்டத்துக் கடிநகர் புனைந்து கடவுட் பேணிப் படுமண முழவொடு பரூஉப் பண்ணை யிமிழ வதுவை மண்ணிய, எனவரும் அகநானூறு 139 ஆம் செய்யுளானும் உணர்க.

இனி, மாமுதுபார்ப்பான் என்பதற்கு அடியார்க்குநல்லார் பிதாமகன்: (பிரமன்) புரோகிதனுமாம் என்பர் பிதாமகன் என்பது வேண்டா கூறலாம். காண்பார்கள் எனக் கண்ணழித்துக் கோடலுமாம்.

இனி, காண்பார்கண் நோன்பென்னை? என்பது நூலாசிரியர் கூற்றாகக் கோடலே சிறப்பாம். என்னை? இம்மணமகள் போன்று வாழ்க்கைத் துணைவியானவள் தன் கற் பொழுக்கத்தின் மேன்மை காரணமாக வானவர் வந்து எதிர்கொண்டழைப்ப வானவூர்தியிற்றன் கணவனொடு விண்ணகம் புக்க திருமாபத்தினி பிறளொருத்தி உலகிலின்மையால் இவள் கணவனொடு தீவலஞ் செய்யக் கண்டவர் செய்தவம் பெரிதும் உடையராதல் வேண்டும் என அடிகளார் வியந்தவாறாம் என்க.

காண்பார் கண் நோன்பென்னை என்பதற்கு அடியார்க்கு நல்லாரை யுள்ளிட்ட உரையாசிரியர், காண்கின்றவர் கண்கள் முற்பவத்திற் செய்த தவம் யாதுகாணென்பாராயும் என வோதிய வுரைக்குச் செய்யுளிடந்தாராமை யறிக.

(1) திங்களைப் போற்றுதும் என்பது தொடங்கி; (46) காண்பார் காணோன் பெண்னை? என்பதீறாக அடிகளார் தாம் தொடங்கும் இப்பேரிலக்கியத்திற்கு ஆக்கமாகத் திங்கள் முதலியவற்றின் வாயிலாய்த் தமக்குப் புலப்படுகின்ற வழிபடுகடவுளை வாழ்த்தி இதனைத் தோற்றுவாய் செய்தமையால் இத்துணையும் கடவுளை வாழ்த்திய மங்கல வாழ்த்துப் பாடல் என்க. இனி, அடிகளார் தோற்றுவாய் செய்த கண்ணகியையும் கோவலனையும் குலமகளிர் கட்டிலேற்றி அவரை வாழ்த்திய மணமங்கல வாழ்த்தினை ஓதுகின்றார் என்று கொள்க.

54-59 : விரையினர்............முகிழ்த்த முரலர்

(இதன்பொருள்) விளங்கு மேனியர்-கண்ணகியின் கைபற்றிக் கோவலன் வேள்வித்தீயை வலஞ்செய்து தொழுத பின்னர் ஆங்குத் தளிரெனத் திகழும் மேனியையுடைய மங்கைப்பருவத்து மகளிர்கள்; விரையினர் மலரினர் உரையினர் பாட்டினர்-விரையேந்தினரும் மலரேந்தினரும் புகழெடுத்தோதுவாரும் வாழ்த்துப்பாடல் பாடுவாரும் ஆகவும்; ஒசிந்த நோக்கினர்-ஒதுங்கிப் பார்க்கும் பார்வையினையுடைய மடந்தைப் பருவத்து மகளிர்கள்; சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்-சாந்தேந்தினரும் புகையேந்தினரும் விளங்குகின்ற மலர் மாலை யேந்தினருமாகவும்; ஏந்து இளமுலையினர்-மதலையின்றமையின் தீம்பால் சுரந்து அணந்த இளமுலையினையுடைய அரிவைப் பருவத்து மகளிர்கள்; இடித்த சுண்ணத்தர் விளக்கினர் கலத்தினர்-இடிக்கப்பட்ட சுண்ணமேந்தினரும் விளக்கேந்தினரும் அணிகலன் ஏந்தினரும் ஆகவும்; முகிழ்த்த மூரலர் - தோன்றிய புன்முறுவலையுடைய தெரிவைப் பருவத்து மகளிர்; விரிந்த பாலிகை முளைக் குடம் - விரிந்த முளைகளையுடைய பாலிகை ஏந்தினரும் நிறைகுடம் ஏந்தினரும் ஆகவும்; நிரையினர் - அத் திருமண மக்களை வலம்வந்து குழீ இயினர் என்க.

(விளக்கம்) விளங்கு மேனியர், விரையினராகவும் மலரினர் ஆகவும் உரையினரும் பாட்டினரும் ஆகவும், ஒசிந்த நோக்கினர் சாந்தினர் முதலியோரும் ஆகவும், ஏந்தின முலையினர் சுண்ணத்தர் முதலியோராகவும், மூரலர் பாலிகை ஏந்தினர் முதலியோராகவும் வந்து நிரையினர் என்க. நிரையினர் நிரம்பினர். இவருள் விளங்குமேனியர் என்றது மங்கைப் பருவத்து மகளிரை; ஒசிந்த நோக்கினர் என்றது மடந்தைப்பருவத்து மகளிரை; ஏந்திள முலையினர் என்றது தாய்மை எய்திய அரிவைப்பருவத்து மகளிரை; முகிழ்த்த மூரலர் என்றது தெரிவைப்பருவத்து மகளிரை. இவ்வாறு வேறுபாடு கண்டு கொள்க.

விரை முதலியன மங்கலப் பொருள்கள். மேலே போதொடு விரிகூந்தற் பொலனறுங் கொடியன்னார் என்றது பேரிளம் பெண்டிரை. இவரைச் செம்முத பெண்டிர் என்றும் கூறுப. இச்செம்முது பெண்டிரே மணமக்களை மங்கல நல்லமளியேற்றி வாழ்த்துவோர் என்பதுமறிக. இவ்வாற்றால் அடிகளார் எழுவகைப் பருவத்துமகளிருள் வைத்துப் பேதைப் பருவத்து மகளிரையும் பெதும்பைப் பருவத்து மகளிரையும் விடுத்து, ஏனைய ஐவகைப் பருவத்து மகளிரையும் கூறி அவ்வப் பருவத்துக் கேற்ற செய்கையையும் அழகாகக் கூறியுள்ளமை ஆராய்ந்துணர்ந்து கொள்க. பேதைப் பருவத்தினர் தம் பிள்ளைமைத் தன்மையானும் பெதும்பைப் பருவத்தினர் தங் கன்னிமையின் நாணமிகுதியானும் இக்குழுவினுள் கூடவொண்ணாமை யுணர்க.

இனி, விரை முதலியன மங்கலமாக வேந்தி மகளிர் வருதலை,

ஆடி யேந்தினர் கலனேந்தினர்
அவிர்ந்துவிளங்கு மணியிழையினர்
கோடியேந்தினர் பட்டேந்தினர்
கொழுந்திரையலின் செப்பேந்தினர்
வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர்
மான்மதத்தின் சாந்தேந்தினர்
கண்ணியேந்தினர் பிணையலேந்தினர்
கவரியேந்தினர் தூபமேந்தினர்

எனவரும் வழக்குரைகாதையானும் (13-16) உணர்க.

இது திருமணவிழவாகலின் விளக்கும் பாலிகையும் நிறைகுடமும் பிறவும் கூறப்பட்டன. ஏந்தினர் என்னும் சொல் யாண்டும் தந்துரைக்க.

60-64 : போதொடு.........ஏற்றினார் தங்கிய

(இதன்பொருள்) போதொடு விரி கூந்தல் பொலன் நறுங் கொடியன்னார்-இங்ஙனம் மங்கலப் பொருளேந்தி வந்த மகளிர் சூழுவொடு வந்த செம்முது பெண்டிராகிய மலரோடு விரிந்த கூந்தலையும் உடைய பொன்னிறமான நறிய வானவல்லியென்னும் பூங்கொடியையே போல்வாராகிய செம்முது பெண்டிர்; அங்கண் உலகில் அருந்ததி அன்னாளை - அழகிய இடங்களையுடைய இந்நிலவுலகத்தே தோன்றிய அருந்ததி போல்வாளாகிய கண்ணகியை நோக்கி; காதலன் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல் தீது அறுக என ஏத்தி இந்நங்கை நல்லாள் தன் காதற் கணவனைக் கண்ணினும் நெஞ்சினும் எஞ்ஞான்றும் பிரியாமற் புணர்வோளாகுக என்றும் இவள் காதலன்றானும் இவளை அகத்திட்ட கை நெகிழாமல் எஞ்ஞான்றும் இவள்பாலே உறைவானாக என்றும், இவ்விருவர்பாலும் தீங்குகள் இல்லையாகுக வென்றும்; சில் மலர் தூவி சிலவாகிய மலர்களைத் தூவித் தம் வழிபடு தெய்வத்தை வாழ்த்தி; தங்கிய மங்கல நல்லமளி ஏற்றினார் - முன்னரே கோவலன் ஏறியிருந்த அழகிய திருமணக் கட்டிலின் மேலேற்றியவர் என்க.

(விளக்கம்) செம்முது பெண்டிராகலின் ஏனைய மகளிர் போலத் தம் கூந்தலைக் கை செய்யாமல் வாளா அள்ளிச்செருகி மங்கலத்தின் பொருட்டு மலர்மட்டும் அக்கூந்தலிற் செருகியிருந்தமை தோன்ற போதொடு விரிகூந்தல் பொலனறுங் கொடியன்னார் என்றனர்.

உலகின் அருந்ததி: இல்பொருளுவமை. தங்கிய நல்லமளி என்க. தங்கிய-கோவலன் ஏறியிருந்த என்க. ஏற்றியவர் - பெயர்.

65-68 : இப்பால்.............எனவே

(இதன்பொருள்) இப்பால்-பின்னர்; செருமிகு சினவேல் செம்பியன் - போரின்கண் எஞ்ஞான்றும் மேம்பட்டு விளங்குகின்ற வெகுளியையுடைய வேற்படையை உடைய நம் மன்னனாகிய சோழன், இமயத்து இருத்திய வாள் வேங்கை - தனது வெற்றிக்கறி குறியாக இமய மலையிலே பொறித்து வைத்த வாள் போலும் வரிகளையுடைய புலியிலச்சினையானது; பொற்கேட்டு உப்பாலை உழையதா-எஞ்ஞான்றும் அம்மலையினது அழகிய பொற் கோட்டினது இப்புறத்ததாயே நிலைபெறுவதாக! என்றும்; எப்பாலும் ஒரு தனி ஆழி உருட்டுவோன என - அவன்றான் எஞ்ஞான்றும் இவ்வுலகத்தின் எப்பகுதியிலும் தனது ஒப்பற்ற சிறப்புடைய ஆணைச்சக்கரத்தைச் செலுத்துவோனாகுக என்றும் வாழ்த்தா நின்றனர் என்க.

(விளக்கம்) இப்பால் என்றது ஏற்றிய பின்னர் என்றவாறு. வாள் போலும் வரிகளையுடைய வேங்கை என்க. உப்பாலை என்றது இப்புறத்தில் (தென்பாலில்) என்றவாறு. அவன் வெற்றி இமயங்காறும் நிலை பெறுக என்பது கருத்து உருட்டுவோன் ஆகுக என்று வாழ்த்தினர் எனச் சில சொற்பெய்து முடிக்க.

மடவார் கற்பும் மாதவர் நோன்பும் பிறவுமாகிய அறமெல்லாம் செங்கோன்மையால் நிலை பெறுதலின் அரசனை வாழ்த்திய வாறாம்.

காதலாள் பெயர் மன்னும் கண்ணகி என்றமையால் உள்ளப் புணர்ச்சி யளவினமைந்த களவு மணமும் இருபெருங் குரவரும் மணவழி காணமகிழ்ந்தனர் என்றமையால் அதன் வழித்தாய கற்புமே ஈண்டுக் கூறப்பட்டன என்க. இதனை, பிரசாபத்தியம் என்பர் அடியார்க்கு நல்லார்.

பா-இது மயங்கிசைக் கொச்சகக்கலிப்பாவி னியன்ற இசைத் தமிழ்ப்பாடல்.

மங்கல வாழ்த்துப் பாடல் முற்றிற்று.
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 22, 2012, 07:51:19 AM
2. மனையறம்படுத்த காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்
பரதர் மலிந்த பயம்கெழு மாநகர்
முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும்
வழங்கத் தவாஅ வளத்தது ஆகி
அரும்பொருள் தருஉம் விருந்தின் தேஎம்  5

ஒருங்குதொக் கன்ன உடைப்பெரும் பண்டம்
கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக்
குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்
அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர்
உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய   10

கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்
மயன்விதித் தன்ன மணிக்கால் அமளிமிசை
நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழிக்
கழுநீர் ஆம்பல் முழுநெறிக் குவளை
அரும்புபொதி அவிழ்ந்த சுரும்புஇமிர் தாமரை  15

வயற்பூ வாசம் அளைஇ அயற்பூ
மேதகு தாழை விரியல்வெண் தோட்டுக்
கோதை மாதவி சண்பகப் பொதும்பர்த்
தாதுதேர்ந்து உண்டு மாதர்வாள் முகத்துப்
புரிகுழல் அளகத்துப் புகல்ஏக் கற்றுத்  20

திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து
மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த
கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து
வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்
கண்டு மகிழ்வுஎய்திக் காதலில் சிறந்து,  25

விரைமலர் வாளியொடு வேனில்வீற் றிருக்கும்
நிரைநிலை மாடத்து அரமியம் ஏறி,
சுரும்புஉணக் கிடந்த நறும்பூஞ் சேக்கைக்
கரும்பும் வல்லியும் பெருந்தோள் எழுதி
முதிர்க்கடல் ஞாலம் முழுவதும் விளக்கும்  30

கதிர்ஒருங் கிருந்த காட்சி போல,
வண்டுவாய் திறப்ப நெடுநிலா விரிந்த
வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத்
தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுத்  35

தீராக் காதலின் திருமுகம் நோக்கிக்
கோவலன் கூறும்ஓர் குறியாக் கட்டுரை
குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்
உரிதின் நின்னோடு உடன்பிறப்பு உண்மையின்  40

பெரியோன் தருக திருநுதல் ஆகஎன,
அடையார் முனையகத்து அமர்மேம் படுநர்க்குப்
படைவழங் குவதுஓர் பண்புண்டு ஆகலின்
உருவி லாளன் ஒருபெருங் கருப்புவில்
இருகரும் புருவ மாக ஈக்க,   45

மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்
தேவர் கோமான் தெய்வக் காவல்
படைநினக்கு அளிக்கஅதன் இடைநினக்கு இடையென,
அறுமுக ஒருவன்ஓர் பெறுமுறை இன்றியும்
இறுமுறை காணும் இயல்பினின் அன்றே  50

அம்சுடர் நெடுவேல் ஒன்றுநின் முகத்துச்
செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது?
மாஇரும் பீலி மணிநிற மஞ்ஞைநின்
சாயற்கு இடைந்து தண்கான் அடையவும்,
அன்னம் நல்நுதல் மெல்நடைக்கு அழிந்து  55

நல்நீர்ப் பண்ணை நனிமலர்ச் செறியவும்,
அளிய தாமே சிறுபசுங் கிளியே.
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின்
மழலைக் கிளவிக்கு வருந்தின வாகியும்
மடநடை மாதுநின் மலர்க்கையின் நீங்காது  60

உடன்உறைவு மரீஇ ஒருவா ஆயின,
நறுமலர்க் கோதை.நின் நலம்பா ராட்டுநர்
மறுஇல் மங்கல அணியே அன்றியும்
பிறிதுஅணி அணியப் பெற்றதை எவன்கொல்?
பல்இருங் கூந்தல் சின்மலர் அன்றியும்  65

எல்அவிழ் மாலையொடு என்உற் றனர்கொல்?
நானம் நல்அகில் நறும்புகை அன்றியும்
மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்?
திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்
ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்?  70

திங்கள்முத்து அரும்பவும் சிறுகுஇடை வருந்தவும்
இங்குஇவை அணிந்தனர் என்உற் றனர்க்கொல்?
மாசறு பொன்னே. வலம்புரி முத்தே.
காசறு விரையே. கரும்பே. தேனே.
அரும்பெறல் பாவாய். ஆர்உயிர் மருந்தே.  75

பெருங்குடி வாணிகன் பெருமட மகளே.
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ?
தாழ்இருங் கூந்தல் தையால் நின்னைஎன்று  80

உலவாக் கட்டுரை பலபா ராட்டித்
தயங்குஇணர்க் கோதை தன்னொடு தருக்கி
மயங்குஇணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள்,
வாரொலி கூந்தலைப் பேர்இயல் கிழத்தி
மறுப்புஅருங் கேண்மையொடு அறப்பரி சாரமும்  85

விருந்து புறந்தருஉம் பெருந்தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெறக் காண
உரிமைச் சுற்றமொடு ஒருதனி புணர்க்க
யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையின்
காண்தகு சிறப்பின் கண்ணகி தனக்குஎன்.  90

(வெண்பா)

தூமப் பணிகள்ஒன்றித் தோய்ந்தால் எனஒருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து - நாமம்
தொலையாத இன்பம்எலாம் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்ப்போல் நின்று.

உரை

அஃதாவது - கண்ணகியும் கோவலனும் பலரறிமணம் புரிந்து கொண்ட பின்னர்க் கோவலனுடைய தாய் அவ்விருவரையும் இல்லற வாழ்க்கையில் இனிது பயின்று சிறத்தற்பொருட்டுத் தனித்ததோர் இல்லத்திற் குடிபுகுவித்து அந்நல்லறத்தில் கால் கொள்வித்ததனைக் கூறும் பகுதி என்றவாறு.

1-4 : உரைசால்......வளத்ததாகி

(இதன்பொருள்) முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும் - ஆரவாரிக்கின்ற கடலாற் சூழப்பட்ட இந் நிலவுலகத்தின்கண் வாழ்கின்ற மாந்தரெல்லாம் ஒருகால் நல்குரவான் நலிந்து ஒரு சேரத் திரண்டு தன்னைப் புகலிடமாகக் கருதி வந்துற்றாலும்; வழங்கத் தவாஅ வளத்ததாகி-அவர்கள் அனைவருக்கும் உண்டி முதலியன வழங்கத் தொலையாத வளத்தையுடைய தாகலின்; உரைசால் சிறப்பின் - ஏனைய நாட்டில் வாழ்வோரெல்லாம் புகழ்தற்கியன்ற தனிச் சிறப்பினையுடைய; அரைசு விழை திருவின் பரதர் மலிந்த - வேந்தரும் விரும்புதற்குரிய செல்வத்தையுடைய பெருங்குடிவாணிகர் மிக்குள்ள; பயம் கெழு மாநகர் - பயன்மிக்க பெரிய அப் பூம்புகார் நகரின்கண் என்க.

(விளக்கம்) இது புகாரின் இயற்கை வளம் கூறிற்று. அஃதாவது, தள்ளா விளையுட்டாதல். என்னை? ஆசிரியர் திருவள்ளுவனார்தாம் நாட்டிலக்கணம் கூறுங்கால் இச்சிறப்பினையே முதன்மையாகக் கொண்டு தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு என்றோதுதலுணர்க. ஈண்டு அடிகளாரும் அவ்வாறே அச்சிறப்பையே முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும் வழங்கத் தவாஅ வளம் என்றார். பரதர் என்றது, வாணிகரை, வள்ளுவனார் தாழ்விலாச் செல்வர் என்றதும் வாணிகரையேயாம். இதனை ஆசிரியர் பரிமேலழகர் இக்குறளின் விளக்கவுரைக்கண் செல்வர் - கலத்தினும் காலினும் அரும் பொருள் தரும் வணிகர் என்று விளக்குதலாலறிக. மற்று அவர்தாமும் ஈண்டு அடிகளார் (7) கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட என்றோதிய அடியை நினைந்தே அங்ஙனம் விளக்கினர் என்பதூஉம் வெளிப்படை.

இனி, அரைசு விழை திருவின் மாநகர் என நகர்க்கே அடையாக்கில் பிற நாட்டு மன்னரெலாம் விரும்புதற்குக் காரணமான மேழிச் செல்வத்தையுடைய நகர் எனினுமாம். என்னை?

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர் (குறள் -1034)

என வள்ளுவனாரும் ஓதுதலுணர்க.

உரை - புகழ். உலக முழுவதும் வரினும் வழங்கத்தவாத வளமுடைமையால் இந்நகர்க்கே சிறந் துரிமையுடைய சிறப்பு இஃதென்பது தோன்ற ஏதுவைப் பின்னர் விதந்தோதினர். புகார் நகரம் அத்தகைய புகழமைந்த நகரமாதலை,

சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்
கம்ப மில்லாக் கழிபெருஞ் செல்வர்
ஆற்றா மாக்கட் காற்றுந் துணையாகி
நோற்றோர் உறைவதோர் நோனகர் உண்டால்

என விஞ்சையர் நகரத்துள்ளான் ஒருவன் புகழ்ந்தோதுதலானும் உணர்க. (மணிமே : 17 : 62-5.)

முழங்குகடல்.......வளத்ததாகி என்னும் இதனோடு, பொறை யொருங்கு மேல்வருங்கால் தாங்கி எனவரும் திருக்குறளையும் ஒப்புநோக்குக.

மாநகர், புகார் நகரம் என்பது அதிகாரத்தாற் பெற்றாம்.

5-7 : அரும்பொருள்.......ஈட்ட

(இதன்பொருள்) கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட - அங்கு மிக்கிருந்த வாணிகர்கள் கடலிடையிட்ட நாட்டினும் மலை காடு முதலியன இடையிட்ட நாட்டினும் சென்று முறையே மரக்கலங்களானும் சகடங்களானும் கொணர்ந்து குவித்தலானே; அரும்பொருள் தரும் விருந்தின் தேசம் ஒருங்கு தொக்கு அன்ன- ஈண்டுப் பெறுதற்கரிய பொருளைத் தருகின்ற புதுமையுடைய அவ்வேற்று நாடெல்லாம் ஒருங்கே வந்து கூடியிருந்தாற் போன்ற; உடைப் பெரும் பண்டம் - தம்முடையனவாகிய பெரிய பொருள்களையுடையாரும் ஆகி என்க.

(விளக்கம்) இஃது அப்புகார் நகரத்து வாணிகர் மாண்பு கூறுகின்றது. மேலே பரதர் மலிந்த மாநகர் என்றாராகலின் அப்பரதர் இவ்வாறு ஈட்ட என்க. புகார் நகரத்து வாணிகருடைய அங்காடித் தெரு விருந்தின் தேஎம் ஒருங்கு தொக்கிருந்தாற்போன்று தோன்றும் என்பது கருத்து. எனவே எந்த, நாட்டிற்றோன்றும் அரும்பொருளும் அவ்வணிகர் பாலுள்ளன என்றாராயிற்று. விருந்தின் தேஎம்-புதுமையுடைய வேற்று நாடு. கடலிடையிட்டுக் கிடந்த நாட்டின் பொருளைக் கலத்தினும் இந்நாவலந் தீவகத்திலே காடு மலை முதலியன இடையிட்டுக் கிடந்த வேற்று நாட்டுப் பொருளைக் காலினும் தருவனர் ஈட்ட என்க. தருவனர்: முற்றெச்சம். ஈட்ட என்னும் செய்தெனெச்சம் பின்னர்க் (அ) கொழுங்குடிச் செல்வர் என்பதற்குக் குறிப்பேதுவாய் நின்றது. கலம்-மரக்கலம். கால் : ஆகுபெயர். சகடம் - (வண்டி) ஈட்டுதலானே கொழுங்குடி ஆகிய செல்வர் என இயையும்.

இனி, அரும்பொருளாவன - நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும், வடமலைப் பிறந்த மணியும் பொன்னும், குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும், தென்கடல் முத்தும் குணகடற் றுகிரும், கங்கை வாரியும் காவிரிப் பயனும், ஈழத் துணவும் காழகத் தாக்கமும், அரியவும் பெரியவும் என்பன. (பட்டினப் பாலை 185 - 162.)

8-11 : குலத்தின்...........கொழுநனும்

(இதன்பொருள்) குலத்தின் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்-தமது குலத்திற்கென நூலோர் வகுத்த அறவொழுக்கத்தே ஒரு சிறிதும் குன்றுதலில்லாதவரும் கொழுவிய குடியிற்பிறந்தோரும் ஆகிய, மாநாய்கனும் மாசாத்துவானும் ஆகிய பெருநிதிக்கிழவர்க்கு நிரலே மகளும் மகனுமாக; அத்தகு திருவின் - அங்ஙனம் அறத்தினால் ஈட்டிய நற்பொருளினாலே; அருந்தவம் முடித்தோர் - செயற்கரிய தலைப்படு தானத்தைச் செய்த சான்றோர் சென்று பிறக்கும்; உத்தர குருவின் ஒப்ப-அவர்தம் கொழுங்குடிகள் உத்தரகுருவென்னும் போக பூமியை ஒக்கும்படி; தோன்றிய - தமது ஆகூழாலே பிறந்த; கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்-பெரிய செந்தாமரை மலர் போன்ற கண்களையுடைய கண்ணகியும் அவளால் காதலிக்கப்பட்ட கணவனாகிய கோவலனும் என்க.

(விளக்கம்) குலம் - தமது குலத்திற்கு நூலோர் வகுத்த ஒழுக்கம் என்க. அவையிற்றை, இருவகைப்பட்ட ஏனோர் பக்கமும் எனவரும் தொல்காப்பியத்தானும் (புறத் -...........20) இதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் ஓதலும் வேட்டலும் ஈதலும் உழவும் நிரையோம்பலும் வாணிகமுமாகிய அறுவகை இலக்கணத்தையுடைய வாணிகர் பக்கமும் என்றோதிய உரையானும் உணர்க. இவற்றுள்ளும் அவர்க்கு வாணிக வாழ்க்கையே தலைசிறந்ததாம் என்பார் ஆசிரியர் தொல்காப்பியனார் மரபியலில் வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை என்று வரைந்தோதுதலும் அதற்குப் பேராசிரியர் வாணிகர்க்குத் தொழிலாகிய வாணிக வாழ்க்கை உள்ளுறையாகச் செய்யுள் செய்தல் பெரும்பான்மையாம் என்று விளக்கியதும் உணர்க. ஈண்டு அடிகளாரும் ஏனைய தொழிலை விடுத்து வாணிக வாழ்க்கையையே விதந்தெடுத்தோதுதலும் உணர்க.

இனி, தங்குலத் தொழிலிற் குன்றாமையாவது நெடுநுகத்துப் பகல் போல நடுவு நின்ற நன்னெஞ்சினோர், (ஆகி) வடுவஞ்சி வாய்மொழிந்து, தமவும் பிறவும் ஒப்பநாடிக் கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்து வாழ்தல் என்க. இது (பட்டினப்பாலை 206-22). ஆசிரியர் திருவள்ளுவனாரும், வாணிகர் அவ்வாறு வாழ்தல் உலகிற்கு இன்றியமையாமை கருதி நடுவு நிலைமை என்னும் அதிகாரத்தில் அவர்க்கென, வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோற் செயின் (120) எனச் சிறப்பாக விதந்து அறங்கூறுதலும் உணர்க.

இனி, ஊழ்வினை உருத்துவந்தூட்டும் என்னும் வாய்மையை அறிவுறுத்துதல் இக்காப்பியத்தின் உள்ளுறையுள் ஒன்றாகலின் ஈண்டும் அடிகளார் கண்ணகியும் கோவலனும் முற்பிறப்பிற் செய்த நல்வினை இவ்வாறு அவரைக் கொழுங்குடிச் செல்வர் மனைக்கண் பிறப்பித்துத் தம் பயனாகிய பேரின்பத்தை இங்ஙனம் ஊட்டலாயிற்று எனக் குறிப்பாக வுணர்த்துவார் அக்குறிப்பை உவமைக்கண் வைத்து அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர், உத்தரகுருவின் ஒப்பத்தோன்றிய, கயமலர்க் கண்ணியும் காதற் கொழுநனும என நுண்ணிதின் ஓதுதல் நினைந்து மகிழற்பாலது. என்னை? இக்காதைக்கண் அக்காதலர்களின் ஆகூழாகிய பழவினை அவர்க்கு உருத்துவந்தூட்டுமாறிது வென்று கூறிக் காட்டுதலே ஆசிரியர் கருத்தென்றறிக. நன்றாங்கால் நல்லவாக் காணுமாந்தர் அப்பொழுது அதற்குக் காரணமான நல்வினையை நினைவதிலர். மற்று அவர்தாமே போகூழால் அன்றாங்காற் பெரிதும் அல்லற்பட்டு அந்தோ வினையே என்றழுது வருந்துவர். நல்லூழ் வந்துருத்தூட்டும் பொழுது அதனை நினைவோர் பின்னரும் நல்வினைக்கண் நாட்டமெய்துவர். தீயூழால் வருந்துவோரும் அதனை நினையின் தீவினை யச்சமுடையராய்ப் பின்னர் அது செய்யாதுய்வாருமாவர். ஆகலான், அடிகளார் இருவகை வினையையும் நினைந்தே ஊழ்வினை உருத்துவந் தூட்டும் எனப் பொதுவாக ஓதினர். புகார்க்காண்டத்தே கயமலர்க்கண்ணிக்கும் காதற் கொழுநனுக்கும் நல்வினையாகிய ஊழ்வினை உருத்துவந்தூட்டுவதனை இக்காதையிற் குறிப்பாக ஓதுகின்றார். மதுரைக் காண்டத்தே தீவினையாகிய ஊழ்வினை உருத்துவந்தூட்டுதலை யாவரும் உணர ஓதுவர். ஆசிரியர் திருவள்ளுவனார் தாமும் மாந்தர்க்கமைந்த இப்பேதைமையை நினைந்தன்றோ?

நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கால்
அல்லற் படுவ தெவன் (குறள்-376)

என்று வினவுவாராயினர் என்க.

இனி, உத்தரகுருவின் ஒப்ப-என்புழி உத்தரகுருவாகிய உவமைக்கு (2) மாநகர் என்பதனைப் பொருளாகக் கொண்டனர் அடியார்க்கு நல்லார். யாம் கொழுங்குடிச் செல்வர் என அடிகளார் பாட்டிடை வைத்த குறிப்பினால் அச்செல்வருடைய கொழுங்குடி உத்தரகுருவினை ஒப்ப என்று உரை கூறினாம். இவற்றுள் நல்லது ஆராய்ந்து கொள்க.

அத்தகு திருவின் தவம் என்ற குறிப்பினால் தவம் என்பது தானத்தைக் குறித்து நின்றது. என்னை? திருவினாற் செய்யும் தவம் அதுவேயாகலின் ஏனைத்தவம் திருவினைத் துறந்து செய்யப்படும். தானம் செய்யும் பொருளும் அறத்தாற்றின் ஈட்டிய பொருளாதல் வேண்டும் என்பது போதர அத்தகு திருவின் என்றார். அருந்தவம் என்றார் அத்தானந்தானும் என்பது தோன்ற; இனி அத்தானத்தின் அருமையை,

அறத்தி னாற்றிய வரும்பெரும் பொருளைப்
புறத்துறைக் குற்றமூன் றறுத்தநற் றவர்க்குக்
கொள்கெனப் பணிந்து குறையிரந் தவர்வயின்
உள்ளமுவந் தீவ துத்தம தானம்

எனவரும் திவாகரத்தா னறிக.

இனி உத்தரகுரு வென்பது ஈண்டுச் செய் நல்வினையின் பயனை நுகர்தற்குரிய மேனிலையுலகம். போகபூமி என்பதுமது. இஃது அறு வகைப்படும் என்ப. அவையிற்றை,

ஆதியரி வஞ்சம் நல்லரி வஞ்சம்
ஏம வஞ்சம் இரண வஞ்சம்
தேவ குருவம் உத்தர குருவமெனப்
போக பூமி அறுவகைப் படுமே (திவாகரம்-12)

என்பதனா னறிக. இனி, இவற்றின்கட் பிறந்து போகநுகர்தலை,

பதினா றாட்டைக் குமரனும் சிறந்த
பன்னீ ராட்டைக் குமரியு மாகி
ஒத்த மரபினு மொத்த வன்பினும்
கற்பக நன்மரம் நற்பய னுதவ
ஆகிய செய்தவத் தளவு மவ்வழிப்
போக நுகர்வது போக பூமி  (பிங்கலம் 12)

என்பதனானறிக.

ஈண்டுக் கண்ணகிக்கும் கோவலனுக்கும் முன்னைச் செய்தவத்தினளவே ஈண்டும் போகநுகர்ச்சி நின்று பின்னர் இல்லையாதலைக் கருதியே அடிகளார் அதனை உவமையெடுத்தோதினர் என்றுணர்க.

கயமலர் என்புழிக் கய வென்பது பெருமைப் பொருட்டாகிய உரிச்சொல். கோவலன் காதல் இழுக்குடைத்தாதல் கருதிப்போலும் கண்ணியும் அவளாற் காதலிக்கப்படும் கொழுநனும் என்பதுபடக் காதற்கொழுநனும் என்றார். இக்கருத்தாலன்றோ மங்கலவாழ்த்துப் பாடலின்கண் பெருங்குணத்துக் காதலாள் எனக் கண்ணகியைக் கூறிக் கோவலனைப் பிறமகளிர் காதலாற் கொண்டேத்தும் கிழமையான் என்று கூறி யொழிந்ததூஉம் என்க.

இனி, (12) மயன் என்பது தொடங்கி (37) குறியாக் கட்டுரை என்பதுமுடியக் கண்ணகியும் கோவலனும் போகம் நுகர்ந்தமை கூறும்.

(தென்றல் வரவு)

12 - 25 : மயன்...........சிறந்து

(இதன்பொருள்) நெடுநிலை மாடத்து இடை நிலத்து - எழுநிலை மாடத்து மாளிகையின்கண் இடையிலமைந்த நான்காம் மாடத்தின்கண்; மயன் விதித்தன்ன மணிக்கால் அமளிமிசை - மயன் என்னும் தெய்வத்தச்சன் தன் மனத்தாற் படைத்துவைத்தாற் போன்ற மணியாலியன்ற கால்களையுடைய சிறந்த கட்டிலின்கண் இருந்தவளவிலே; கழுநீர் ஆம்பல் முழுநெறிக் குவளை - கழுநீரும் இதழொடியாத முழுப்பூவாகிய செங்கழு நீரும்; அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை - நாளரும்புகள் கட்டவிழ்ந்து மலர்ந்தமையானே வண்டுகள் வந்து முரலாநின்ற தாமரைமலரும் ஆகிய; வயல்பூ வாசம் அளைஇ - மருதப் பரப்பிற் கழனிகளிலுள்ள நீர்ப் பூக்களின் நறுமணத்தைக் கலந்துண்டு, அயல்பூ-அவற்றின் வேறாகிய கோட்டுப்பூ முதலியவற்றுள், மேதகு தாழை விரியல் வெள் தோட்டு - மணத்தால் மேன்மை தக்கிருக்கின்ற தாழையின் மலர்ந்த வெள்ளிய மடலிடத்தும்; சண்பகப் பொதும்பர் -சண்பகப்பூம் பொழிலினூடே படர்ந்துள்ள; கோதை மாதவி தேர்ந்து தாது உண்டு - மாலைபோல மலருகின்ற குருக்கத்தி மலரினிடத்தும் ஆராய்ந்து அவற்றின் பாலுள்ள தேனைப் பருகிப் போந்து; வாள் முகத்து மாதர் புரிகுழல் அளகத்துப் புகல் ஏக்கற்று - ஒளியுடைய முகத்தையுடைய இளமகளிரினது கை செய்த குழற்சியையுடைய கூந்தலின்கணுண்டாகிய கலவை மணம் பெறவிரும்பி அவர்தம் பள்ளியறைக்கண் புகுதற்கு வழி காணாமல் ஏக்கறவு கொண்டு; செவ்வி பார்த்துத் திரிதரு சுரும்பொடு வண்டொடு - அம்மகளிர் சாளரந்திறக்கும் பொழுதினை எதிர்பார்த்துச் சுழன்று திரிகின்ற பெடை வண்டோடும்; மாலைத் தாமத்து மணி நிரைத்து வகுத்த கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து-முத்து முதலிய மணிமாலைகளை நிரல்பட நாற்றி இயற்றிய அழகையுடைய சாளரங்களை அம்மகளிர் திறத்தலாலே செவ்வி பெற்று அச்சாளரங்களின் குறிய புழையாலே நுழைந்து புகுந்த; மணவாய்த் தென்றல் - இயல்பாகத் தனக்குரிய ஊற்றின்பத்தோடே நறு நாற்றவின்பமும் உடைத்தாகிய தென்றலின் வரவினை; கண்டு-உணர்ந்து; மகிழ்வு எய்திக் காதலில் சிறந்த - அவ்வுணர்ச்சியாலே மகிழ்ந்து பின்னரும் அவ்வுணர்ச்சி காரணமாக இருவருக்கும் காமவுணர்ச்சி பெருகுதலானே இருவரும் ஒருபடித்தாக மெய்யுறு புணர்ச்சியை விரும்பி, என்க.

(விளக்கம்) ஆம்பல் எனப் பொதுப்பெயராற் கூறினும் ஈண்டுச் சேதாம்பல் என்று கொள்க வென்றும், இஃது அவற்றோடு ஒருதன் மைத்தாகிய பகற்போதன் றெனினும் அவை விரியுங்காலத்து இது குவிதலின்மையிற் கலந்துண்டு என்றார் என்பர் அடியார்க்குநல்லார். முழுநெறி-இதழொடியாத முழுப்பூ. ஈண்டுக் குவளை - செங்கழுநீர் மலர். தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக் கூம்புவிடு முழுநெறி எனப் புறப்பாட்டினும் (123) வருதலறிக. கோதைபோல மலரும் மாதவி என்க. ஈண்டுக் கண்ணகிக்கு உத்தரகுருவின் ஒப்பப் பேரின்பம் நல்கும் ஆகூழாகிய நல்வினையின் சிறுமையினையும் அவட்குப் போகூழ் அணித்தாகவே வரவிருத்தலையும் அதுதானும் கோதைமாதவியாக உருத்துவந்திருத்தலையும் நினைந்துபோலும் அடிகளார் இக்காதையிலேயே அவள் பெயரைப் பரியாய வகையில் கோதை மாதவி என்று ஓதினர் போலும். இக்கூற்றுக் கண்ணகிக்கு ஒரு தீநிமித்தம். இவ்வாறு சொல்லிலேயே தீநிமித்தத்தைத் தோற்றுவிப்பது மாபெரும் புலவர் கட் கியல்பு. என்னை? கம்பநாடர் தமது இராமகாதைக்கண் இராமனுக்குத் திருமுடி சூட்டக் கணிகமாக்கள்பால் நன்னாள் வினவும் தயரதன் மைந்தற்கு முடிபுனை கடிகை நாள் மொழிமின் என்று வினவினன் என அவன் கூற்றையே முடிபுனைதலைக் கடிதலையுடைய நாள் எனவும் தீந்பொருளமையச் செய்யுள் யாத்துள்ளமையும் காண்க.

சுரும்பொடு வண்டொடு என இயைத்து எண்ணும்மை விரித்தோதுக. சுரும்பொடும் வண்டொடும் வயற்பூவாசம் அளைஇ உண்டு அயற்பூவாகிய தோட்டினும் மாதவியினும் தேர்ந்துண்டு செவ்வி பார்த்துக் குறுங்கண் நுழைந்துபுக்க மணவாய்த் தென்றல் கண்டு சிறந்து என்க. இனி வாசம் அளைஇ, தாது தேர்ந்துண்டு திரிதரும் சுரும்பொடும் வண்டொடும் புக்க தென்றல் எனினுமாம். புக்கமணவாய்த் தென்றல் என்றது தனக்கியல்பான ஊற்றின்பத்தோடு பூ அளைஇச் செயற்கையானமைந்த மணத்தையும் உடைய தென்றல் என்பது தோன்ற நின்றது. இத்தகைய தென்றல் அவர்தம் காமவேட்கையை மிகுவித்தலின் அதனைக் கண்டமையை ஏதுவாக்ககினார். ஈண்டுக் கண்டென்றது உணர்ந்து என்றவாறு. என்னை? தென்றல் மெய்க்கும் மணமுடைமையால் மூக்கிற்கும் புலனாதலன்றிக் கட்புலனுக்குப் புலனாகாமையின் என்க. காதல் ஈண்டுக் காமத்திற்கு ஆகுபெயர். ஆகவே, காமஞ்சிறந்து என்றவாறு. மணவாய்த் தென்றல் என்புழி இரண்டாவதன் உருபும் பயனும் உடன்தொக்கன. வாய் - இடம். மணத்தைத் தன்னிடத்தேயுடைய தென்றல் என்க.

இவை சண்பகத்தோடு மலர்தலின் தேர்ந்துண்டென்றார் என வரும் அடியார்க்குநல்லார் உரை நுணுக்கமுடைத்து. என்னை? சண்பகம் வண்டுணாமலர் ஆகலின் தேர்ந்துண்ணல் வேண்டிற்று என்பது அவர் கருத்தென்க.

இன்ப நுகர்வு

26-27: விரைமலர்.............ஏறி

(இதன் பொருள்) வேனில் விரை மலர் வாளியொடு வீற்றிருக்கும் நிரை நிலை மாடத்து அரமியம் ஏறி - அவ்வாறு தென்றல் வரவினால் காமப் பண்பு பெருகப் பெற்ற அக்கண்ணகியும் கோவலனும் உள்ளமொன்றி வாய்ச்சொல்லொன்றுமின்றியே அவ்விடை நிலை மாடத்தினின்றும் மேலே நிரல்பட்ட மாடங்கள் வழியாக அம்மாளிகையின் உச்சியிலமைந்ததூஉம் அவ்விடத்தே வந்தெய்துகின்ற காதலரைக் காமுறுத்தற் பொருட்டு வேனில் வேந்தனாகிய காமவேள் எப்பொழுதும் தனது படைக்கலமாகிய கருப்பு வில்லினது, நாணிற்றொடுத்த மணமுடைய மலராகிய அம்புகளோடும் அவர் தம் வரவினை எதிர்பார்த்திருத்தற் கிடனானதுமான நிலாமுற்றத்தின்மேல் ஏறி என்க.

(விளக்கம்) (25) சிறந்து............(27) அரமியத்தேறி என்றார் அவர் தாம் ஒருவரை ஒருவர் அழையாமலே தம்முணர்ச்சி யொன்றினமை காரணமாகத் தாமிருந்தவிடத்தினின்றும் வாய்வாளாதே சென்றமை தோன்ற. என்னை? இத்தகைய செவ்வியிலே வாய்ச்சொற்கள் என்ன பயனும் இலவாகலின் என்க.

வேனில்: ஆகுபெயர்; காமவேள். இனி, போர் செய்யப்புகுவோர் காலமும் இடனும் வாலிதின் அறிந்து காலங்கருதி இருப்பராதலின் ஈண்டு வேனிலரசன் தனது போர்த்தொழிலைத் தொடங்குதற்கு ஏற்ற இடமாக அவ்வரமியத்தைத் தேர்ந்து படைக்கலன்களோடு தனது ஆணைக்கடங்காத இளைஞராகிய பகைவர் வருகையை எதிர்பார்த்திருந்தான் என்றார். இஃதென் சொல்லியவாறோவெனின் அந்நிலா முற்றத்தின்கட் செல்வோர் யாவரேயாயினும் காமமயக்க மெய்துவர். அத்தகைய சீர்த்த இடம் அந்நிலாமுற்றம் என்றவாறு. விரைமலர் வாளி-மணமுடைய மலர்க்கணை. இனி விரைந்துபாயும் மலர்க்கண் எனினுமாம்.

இனி, அடியார்க்குநல்லார், பகையின்றிக் கல்வியொடு செல்வத்திடை நஞ்சுற்ற காமம் நுகர்ந்திருத்தலின் வாளியும் காமனும் வருந்தாதிருந்தமை தோன்ற வீற்றிருக்கு மென்றார் என்னும் விளக்கம் நூலாசிரியர் கருத்திற்கு முரணாம் என்க. மேலும் வாளியும் காமனும் வருந்தாதிருப்பின் அவ்விருக்கை இக்காதலர் புணர்ச்சிக்கே இழிவாம் என்க.

தகுந்த இடத்தின்கண் படைவலியோடும் துணைவலியோடும் (தென்றல் வரவு) இளைஞரை எய்துவென்று தன் ஆணைவழி நிற்பித்தற்கு அவர் வரவை எதிர்பார்த்து வேனின்வேள் நெடிதிருக்கும் மாடம் என்பதே அடிகளார் கருத்தாம் என்க.

இதுவுமது

28-32 சுரும்புண .......... காட்சிபோல

(இதன் பொருள்) சுரும்பு உணக் கிடந்த நறும் பூஞ் சேக்கை வண்டுகள் உழன்று திரியாமல் ஓரிடத்திலேயே தாம் தாம் விரும்பும் தேனை நுகர்ந்து மகிழ்தற் பொருட்டுப் பரப்பி வைத்தாற்போன்று கிடந்த நறிய மணமலரானியன்ற படுக்கையின்கண்; முதிர்கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் கதிர் ஒருங்கு இருந்த காட்சிபோல முற்றிய கடலையும் நிலவுலகத்தையும் எஞ்சாமல் உயிரினங்கட்குத் தமது ஒளியாலே விளக்குகின்ற திங்களும் ஞாயிறுமாகிய ஒளிமண்டில மிரண்டும் ஒரு காலத்தே ஓரிடத்தே வந்து கூடியிருந்தாற் போல வீற்றிருந்துழி; பெருந்தோள் கரும்பும் வல்லியும் எழுதி - கோவலன் கண்ணகியின் பெரிய தோளின் கண்ணே சந்தனக் குழம்பு கொண்டு கரும்பினது உருவத்தையும் பூங்கொடியின் உருவத்தையும் அழகுற எழுதி முடித்த பின்னர் என்க.

(விளக்கம்) மலர்களின் செவ்வி கூறுதற்பொருட்டு அடிகளார் சுரும்புணக்கிடந்த நறும்பூஞ் சேக்கை என்றார். இங்ஙனம் கூறியதனால் மலரின் பன்மையும் மிகுதியுந் தோன்றுதலும் உணர்க. கதிர்-திங்களும் ஞாயிறும்; இஃதில் பொருளுவமம். போல வீற்றிருந்துழி எனவும் கோவலன் கண்ணகியின் தோளில் எழுதி முடித்தபின்னர் எனவும் அவாய் நிலையானும் தகுதியானும் ஆங்காங்குச் சில சொற்களைப் பெய்துரைக்க. இவ்வாறு பெய்துரைக்கப்படுவன எஞ்சு பொருட் கிளவிகளாம். அவை சொல்லெச்சமும் குறிப்பெச்சமும் இவையெச்சமும் என மூவகைப்படும். பிறாண்டும் இவ்வெச்சக் கிளவிகளாக ஆங்காங்கு உரையின்கட் பெய்துரைக்கப் படுவனவற்றிற்கும் இவ்விளக்கமே கொள்க.

இனி, கயமலர்க்கண்ணியும் காதற்கொழுநனும் தென்றல் கண்டு காதல் சிறந்து நிரை நிலைமாடத் தரமிய மேறிப் பூஞ்சேக்கைக்கண் இருந்துழியும் கண்ணகியின் காமம் நாணம் என்னும் தனது பெண்மை தட்பத் தடையுண்டு நிற்றலான் அந்நாணுத்தாள் வீழ்த்த அவளது அகக்கதவைத் திறத்தல் வேண்டி ஈண்டுக் கோவலன் அவளுடைய பெருந்தோளில் கரும்பும் வல்லியும் எழுதுதல் வேண்டிற்று. இத்தகைய புறத்தொழில்களாலே மகளிரின் காமவேட்கையை ஆடவர் தமது வேட்கையளவிற்கு உயர்த்திய பின்னரே புணர்ச்சி பேரின்பம் பயப்பதாம். இதனாலன்றோ ஆசிரியர் திருவள்ளுவனார் தாமும்,

மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார் (குறள் - 1289)

என, தலைவனைக் கூறவைத்தனர். ஈண்டுக் கோவலன் மலரினும் மெல்லிய அக்காமத்தின் செவ்வி தலைப்படுதற்கே கண்ணகியின் பெருந்தோளில் கரும்பும் வல்லியும் எழுதினான் என்க. ஈண்டு அடியார்க்கு நல்லார் கரும்பையும் வல்லியையும் தோளில் எழுதி யெனவே தொய்யி லொன்றையும் முலைமேலெழுதி என்பதாயிற்று என வகுத்த விளக்கம் பெரிதும் நுணுக்கமுடைத் தென்க. கடலையும் ஞாலத்தையும் விளக்கும் கதிர் என்க.

இதுவுமது

32-37: வண்டுவாய் ......... கட்டுரை

(இதன் பொருள்) வண்டு வாய் திறப்ப நெடுநிலா விரிந்த வெள் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு முழுநெறி கழுநீர் பிணையல் பிறழ-வண்டுகள் புரிநெகிழ்க்க வாய் அவிழ்ந்த மல்லிகையினது பெரிய மலர்ச்சியையுடைய மாலையோடே இதழொடியாது முழுப் பூவாக இவ்விரண்டாகப் பிணைத்த செங்கழுநீர் மலர்மாலையும் குலைந் தலையாநிற்ப; தாரும் மாலையும் மயங்கிக் கையற்று - கோவலன் மார்பிலணிந்த தாரும் கண்ணகி மார்பிலணிந்த மலர் மாலையும் தம்முள் மயங்கப்பட்டு இருவரும் பேரின்பத்தாலே விழுங்கப்பட்டுச் செயலற்ற புணர்ச்சியிறுதிக் கண்ணே; கோவலன் தீராக் காதலின் திருமுகம் நோக்கி - கோவலன் தனது ஆராவன்பு காரணமாகத் திருமகளைப் போல்வாளாகிய கண்ணகியின் முகத்தை நோக்கி; ஓர் குறியாக் கட்டுரை கூறும் - அந் நங்கையின் பெருந்தகைமையைக் கருதாத நலம் பாராட்டல் என்னும் பொருள் பொதிந்த உரையைக் கூறினான் என்க.

(விளக்கம்) மல்லிகைமாலை கண்ணகியணிந்த அழகுமாலை என்றும், செங்கழுநீர்ப் பிணையல் கோவலன் அணிந்திருந்த அடையாளப் பூமாலை என்றும் கொள்க. என்னை? இவற்றையே பின்னர்த் தாரும் மாலையும் என்று பெயர் கூறியதனாற் பெற்றாம். என்னை? ஆசிரியர் தொல் காப்பியனாரும் மரபியலின்கண், தார் என்னும் அடையாளப்பூ அரசர்க்குரித்தென்று கூறிப்பின்னர் வாணிகர்க்கும் கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே என்றோதுதல் உணர்க. ஈண்டுக் கழுநீர்ப்பிணையல் வாணிகர்க்குரிய அடையாளப் பூமாலை என்பது அதனைத் தார் என்றதனாற் பெற்றாம்.

இனி, காப்பியத்தின்கண் இன்பவொழுக்கமாகிய அகப்பொருள் சுட்டித் தலைமக்களின் பெயர் கூறப்படுதலான், அகப்புறம் என்று கொள்ளப்படும். அகப்புறமாயினும் அகவொழுக்கத்திற்குரிய மெய்ப்பாடுகள் ஈண்டும் ஏற்றபெற்றி கொள்ளப்படும். ஆசிரியர் தொல்காப்பியனார் சிறப்பு நோக்கிக் களவொழுக்கத்திற்கே யுரியன போலக் கூறிய கூழைவிரித்தல் முதலிய மெய்ப்பாடு கற்பொழுக்கத்தினும் கூட்டந் தோறும் மெல்லியல் மகளிர்பால் காணப்படும். அதனாலன்றோ ஒரு குலமகள் பரத்தையர்க்கு நாணின்மை கண்டு வியப்பவள் பன்னாளும் எங்கணவர் எந்தோண்மேற் படிந்தெழினும் அஞ்ஞான்று கண்டாற் போல் நாணுதும்; இவர்க்கு அத்தகைய நாணம் என்னும் பெண்மை நலம் இல்லா தொழிந்தது என்னையோ? என்று வியப்பாளாயினள் (நாலடி, காமத்துப்பால்). ஈண்டும் கண்ணகியார் தென்றல்கண்டு மகிழ்ச்சியாற் காதல் சிறந்து இடைநிலைமாடத்திருந்து தன் காதற் கொழுநனொடு வாய்வாளாது அம்மாடத்தின் உச்சியிலமைந்த நிலா முற்றத்திற்கேறி அவனோடு நறும்பூஞ் சேக்கைக்கண் வீற்றிருந்தது புகுமுகம் செய்தல் என்னும் மெய்ப்பாடாம் என்று நுண்ணிதின் உணர்ந்துகொள்க. அஃதாவது புணர்ச்சிக்கு நிமித்தமாகிய மெய்ப்பாடாம். புகுமுகம் செய்தலாவது புணர்ச்சி வேட்கையுற்ற மகளிர் தம்மைத் தங்கணவர் நோக்குமாற்றால் இயைந்தொழுகுதல். அவ்வாறு இயைந்தொழுகினும் உட்கும் நாணும் அவர்க்கியல்பாகலின் அவன் விரும்பி நோக்கியவழி அவர்க்கு நுதல் வியர்க்கும். அவ்வழி தாம் புணர்ச்சி வேட்கை யுடையராதலை மறைக்கவே முயல்வர். இதனை நகுநயமறைத்தல் என்னும் மெய்ப்பாடு என்ப. இதன் பின்னரும் வேட்கையுற்ற உள்ளம் சிதையுமாகலின் அச்சிதைவு கணவனுக்குப் புலப்படாமல் மறைத்தலும் அவர்க்கியல்பு. இதனைச் சிதைவு பிறர்க்கின்மை என்னும் மெய்ப்பாடென்ப. அங்ஙனம் மறைத்துழி அகத்திலே வேட்கை பெருகி அதனால் கூழை விரித்தல் காதொன்று களைதல் ஊழணி தைவரல் உடைபெயர்த்துடுத்தல் அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல் என்னும் மெய்ப்பாடுகள் அவ்வேட்கை பெருகுந்தோறும் ஒன்றன்பின் ஒன்றாக நிழலா நிற்கும். ஆயினும் இவை தோன்றிய பின்னரும் அவர்க்கு இயல்பாகிய நாணம் அவ்வேட்கையைத் தடைசெய்தே நிற்கும்; ஆதலால், அச் செவ்வியினும் மகளிர் புணர்ச்சியை வேண்டாதார் போல்வதொரு வன்மை படைத்துக்கொண்டு தம் வேட்கையை மறைக்கவே முயல்வர். இதனை இல்வலியுறுத்தல் என்னும் மெய்ப்பாடென்ப. இத்தகைய மெய்ப்பாட்டோடு நறும்பூஞ் சேக்கைக்கண் தன்னொடு வீற்றிருந்த கண்ணகியாரின் நாணநீக்கி அவரது காமவேட்கையைத் தனது வேட்கைக்குச் சமமாகக் கொணர்தற் பொருட்டே ஈண்டுக் கோவலன் சந்தனக் குழம்பு கொண்டு அவரது பெருந்தோளிற் கரும்பும் வல்லியும் எழுதினான் என்க.

இனி, இவ்வாற்றால் கண்ணகியாரின் காமப்பண்பு முழுச்செவ்வி பெற்றமையை அடிகளார் கண்ணகியார்பால் வைத்துக் கூறாமல் அவர் அணிந்திருந்த மல்லிகை மலர்மாலையின் மேல்வைத்துக் குறிப்பாகக் கூறும் வித்தகப்புலமை வேறெந்தக் காப்பியத்தினும் காணப்படாத அருமையுடைத்தென் றுணர்க. என்னை? இல்வலியுறுத்தல் என்னும் மெய்ப்பாடெய்தியிருந்த கண்ணகியாரின் திருமேனியைத் தீண்டிக் கோவலன் கரும்பும் வல்லியும் எழுதிய அளவிலே அதுகாறும் அவரது காமவேட்கையைத் தளைத்திருந்த நாணமாகிய தளையவிழவே அவரது காமவேட்கை தடை சிறிதும் இன்றி மலர்ச்சியுற்றுத் திகழ்ந்ததனையே அடிகளார் வண்டுவாய் திறப்ப நெடுநிலா விரிந்த வெண்டோட்டு மல்லிகை வீரியன் மாலையொடு என எட்டுச் சீர்களைக்கொண்ட இரண்டு அடிகளாலே கண்ணகியார் அணிந்திருந்த மாலையை வண்ணிப்பாராயினர். இதன்கண் வண்டுவாய்திறப்ப என்றது கோவலன் கரும்பும் வல்லியும் எழுதுமாற்றால் அவரது நாணத்தை அகற்றியது என்றும்; நெடுநிலா விரிந்த வெண்டோட்டு மல்லிகை என்றது இச்செய்முறையானே அவரது காமவேட்கை பெருக அவர்பால் இருகையும் எடுத்தல் என்னும் மெய்ப்பாடு தோன்றியதனை. அஃதாவது அங்ஙனம் படைத்துக் கொண்ட வலியானும் தடுக்கப்படாது வேட்கை மிகுதியால் நிறை யழிதலின் கைகள் தாமே முயங்கல் விருப்பத்தான் எழுவன போல்வதொரு குறிப்பு. இக்குறிப்பே அவர்தம் மலரினும் மெல்லிய காமம் செவ்வி பெற்றமைக்கு அறிகுறியாம் என்க. இம்மெய்ப்பாடு தோன்றுங் கால் மெல்லியதொரு புன்முறுவலாகவே வெளிப்படும்; இதனையே நெடுநிலா விரிந்த வெண்தோடு என்றார். காமச் செவ்வி தலைப்பட்ட தலைவன் கூற்றாக வருகின்ற,

அசையியற் குண்டாண்டோர் ஏவர் யானோக்கப்
பசையினன் பைய நகும் ( குறள் 1068)

என்னும் திருக்குறளானும் இதனை உணர்க. இனி, புணர்ச்சி நிமித்தமாக இம்மெய்ப்பாடுகள் தோன்று மென்பதனை,

ஓதியு நுதலு நீவி யான்றன்
மாதர் மென்முலை வருடலிற் கலங்கி
யுள்ளத் துகுநள் போல வல்குலின்
ஞெகிழ்நூற் கலிங்கமொடு புகுமிட னறியாது
மெலிந்தில ளாகி வலிந்துபொய்த் தொடுங்கவும்
யாமெடுத் தணைத்தொறுந் தாமியைந் தெழுதலின்
இம்மை யுலகத் தன்றியு நம்மை
நீளரி நெடுங்கட் பேதையொடு
கேளறிந் தனகொலிவள் வேய்மென் றோளே

எனவரும் பழம்பாடலான் (தொல்-மெய்ப்-15-உரைமேற்.) உணர்க.

கண்ணகியாரின் காமம் முழுதும் மலர்ச்சியுற்றமையை நெடுநிலா விரிந்த வெண்டோட்டு மல்லிகை மாலை என்னாது விரியன்மாலை என விதந்தோது மாற்றால் உணர்த்தினர். இவ்வடிகளில் இங்ஙனம் பொருள் காண்டல் பாட்டிடை வைத்த குறிப்பாற் கண்டவாறாம். இவ்வாறு காணாக்கால் பின்வரும் தாரும் மாலையும் மயங்கி என்பதே அமையும். இவற்றிற்கு இப்பொருளுண்மையால் விதந்தோதி மீண்டும் இவற்றையே அத்தாரு மாலையும் என எதிர்நிரனிறையாகக் கூறினர். முன்னர்ப் பிறழ என்றோதிப் பின்னர் மயங்க என்றோதியதூஉம் முன்னர்ப் புணர்ச்சியின் செயல் நிகழ்ச்சியும் பின்னர் இன்பத்தால், அவசமாகி இருவரும் அவை செறிய முயங்கினமையும் தோற்றுவித்தற்கு என்க.

இனி, இம்மெய்ப்பாடுகள் கண்ணகியார்க்கே சிறந்தவை. கோவலனுக்கு அக்காமச் செவ்வி இயற்கையாலேயே முழுமையுற்றுச் செவ்வியுறுதலின் அவன் அணிந்த தாரினை வாளாது கழுநீர்ப் பிணையல் முழு நெறி என்றோதியொழிந்தார் என்க. கையறுதல் இருவருள்ளமும் இன்பத்தால் விழுங்கப்பட்டுச் செயலறுதல். இவ்வாறு இடக்கரடக்கி அவர்தம் கூட்டத்தை இனிதின் ஓதிய அடிகளார் அக் கையறவிற்குப் பின்னர்த்தாகிய பாராட்டெடுத்தல் என்னும் மெய்ப்பாடு இருவர்க்கும் பொதுவாயினும் கோவலனுக்கே சிறப்புடைத்தாதல் பற்றிக் கூற்று வகையால் கோவலன்பால் வைத்துக் கோவலன் கூறுமோர் குறியாக் கட்டுரை என்றார். கண்ணகிக்கு இம்மெய்ப்பாடு உள்ளத்தே அவனைப் பாராட்டுந் துணையாய் அமைதலின் அது கூறாராயினர்.

இனி, கோவலன் கூறுமோர் கட்டுரை என்னாது குறியாக்கட்டுரை என்றார். ஈண்டுக் கோவலன் இவ்வுலகத்துக் காதலர் தங்காதலிமாரை நலம் பாராட்டுமாறே பாராட்டினன் அல்லது அத்திருமாபத்தினியின் சிறப்பெல்லாம் குறிக்கொண்டு பாராட்டினன் அல்லன் என்றுணர்த்தற்கு. இஃதென் சொல்லியவாறோவெனின், கோவலன் ஈண்டுக் கூறும் சிறப்பைவிடப் பன்னூறுமடங்கு உயர்ந்தனவாம் அப்பெருந்தகைப் பெண்ணின் சிறப்பு. அவனுரை அவற்றைக் குறியாது வறிதே நலம் பாராட்டுதல் என்னும் பொருள்பற்றி உலகத்துக் காதலர் கூறும்மரபு பற்றிய உரையேயாம், எனக் கண்ணகியாரின் பெருஞ்சிறப்பைக் கருதி அங்ஙனம் ஓதினர். இனி இக்கண்ணகியாரின் சிறப்பெல்லாங் கருதிக் கூறுங் கட்டுரையை அடிகளார், கொற்றவையின் கூற்றாக,

இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஓருமா மணியா யுலகிற் கோங்கிய
திருமாமணி (வேட்டுவவரி - 47-50)

என இனிதின் ஓதுவர். ஈண்டு அத்தெய்வம் கூறுங் கட்டுரையே கண்ணகியாரின் சிறப்பை உள்ளவாறே குறிக்கும் கட்டுரையாதல் நுண்ணிதின் உணர்க. இன்னும் அடைக்கலக் காதையின் தவமூதாட்டியாகிய கவுந்தியடிகளார் இக்கண்ணகியாரோடு ஒருசில நாள் பயின்ற துணையானே இப்பெருமகள் தான் மானுடமகளாயினும் தெய்வத்திற்கியன்ற சிறப்பெலாம் உடையள் என மதித்து மாதரி என்பாட்குக் கண்ணகியைக் காட்டி,

ஈங்கு,

என்னொடு போந்த விளங்கொடி நங்கைதன்
வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் (அன்னளாயினும்)
கடுங்கதிர் வெம்மையிற் காதலன் றனக்கு
நடுங்கு துயரெய்தி நாப்புலர வாடித்
தன்றுயர் காணாத் தகைசால் பூங்கொடி
இன்றுணை மகளிர்க் கின்றி யமையாக்
கற்புக் கடம்பூண்ட வித்தெய்வ மல்லது
பொற்புடைத் தெய்வம் யாங் கண்டிலமால்.

என வியந்து பாராட்டுதல் கண்ணகியை உள்ளவாறுணர்ந்து அவள் நலங்குறித்த கட்டுரையாகும். இங்ஙனம், தெய்வத்தானும் செய்தவத்தோரானும் வியந்து பாராட்டுதற்குரிய இத்தகைசால் பூங்கொடியின் நலமுழுதும் இவன் உணர்ந்து அவற்றைக் குறித்துப் பாராட்டினனல்லன் என்பார் கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை என்று அடிகளார் இரங்கிக் கூறினர் என்க.

கோவலன் கண்ணகியை நலம் பாராட்டுங் கட்டுரை

37-41 : குழவித் திங்கள் ............... ஆகென

(இதன்பொருள்) பெரியோன் குழவித் திங்கள் இமையவர் ஏத்த அழகொடு முடித்த அருமைத்து ஆயினும் - பிறவாயாக்கைப் பெரியோனாகிய இறைவன் தன்னை அடையாளங் கண்டு தேவர் முதலிய மெய்யடியார் ஏத்துதற்பொருட்டு மேற்கொண்ட அழகிய அருட்டிருவுருவத்திற்கு இதுவும் ஓர் அழகினைத் தரும் என்று தேர்ந்து இளம் பிறையானது அவனால் தனது திருமுடிக்கண் விரும்பி யணியப்பட்ட பெறுதற் கருமையுடைத்தாகிய பேரணிகலமேயாயினும்; நின்னோடு உடன் பிறப்பு உண்மையின் - அப்பிறைதானும் நின்னுடன் பிறந்தது என்னும் ஓர் உறவுடைத்தாதலால்; உரிதினின் - அது நினக்கே உரியது என்னும் அறத்தைக் கருதி; திருநுதல் ஆக என - அது நினக்கு அழகிய நுதலாயிருந்து அழகு செய்வதாக என்று கருதி; தருக - (நினக் கருளினன் போலும் அங்ஙனம் ஆயின்) தந்தருளுக அதனால் அவனுக்குப் புகழேயல்லாமல் பழி யொன்றுமில்லை; என்றான் என்க.

(விளக்கம்) பிறை இறைவன் விரும்பியணிந்த பேரணிகலனே ஆயினும் அவன் மன்னுயிர்க்கு அறமுரைத்த பெரியோனாகலின் அப்பிறை தன்னினுங் காட்டில் நினக்கே பெரிதும் உரிமையுடைத்தாதலால் பிறர்க்குரிய பொருளை அவர்க்கே கொடுப்பதுதான் அறமாகும் என்று அது நினக்கு நுதலாயிருந்து அழகு செய்யும்பொருட்டு நினக்குத் தந்தனன் போலும். அவன் செயல் அறத்திற்கும் ஒக்கும் என்றவாறு. இதனால் கோவலன் கண்ணகியையும் அவள் நுதலையும் நிரலே திருமகளோடும் பிறைத்திங்களோடும் அவள் பிறந்தகுடியைத் திருப்பாற் கடலோடும் ஒப்பிட்டுப் பாராட்டினானாதல் நுண்ணிதின் உணர்க. இனி, அடியார்க்குநல்லார் தருக என்றது சூடின பிறை இரண்டு கலையாகலின் அதனை எண்ணாட்டிங்களாக்கித் தருக என்பது கருத்து எனவும், என்னை? மாக்கட னடுவண் எண்ணாட் பக்கத்துப் பசு வெண்டிங்கள் தோன்றி யாங்குக் கதுப்பயல் விளக்குஞ் சிறுநுதல் (குறுந்-126) என்றாராகலின், எனவும் ஓதினர்.

மேலும், இதனால் மேற்கூறுகின்ற கரும்பையும் வச்சிரத்தையும் அவ்வவ்வுறுப்புக்கட்கு ஏற்பத் திருத்தி ஈக்க, அளிக்க, என்பதாயிற்று. என்றது கரும்பிற்கு நிறனும், வச்சிரத்துக்கு நேர்மையும் உண்டாக்கி என்றவாறு. இஃது எதிரது போற்றலென்னும் தந்திரவுத்திவகை, என்றும் விளக்குவர்.

குழவித்திங்கள் என்றது இளம்பிறையை. ஈண்டுப் பிறையின் இளமைக்குக் குழவிப் பெயர்க்கொடை பிள்ளை குழவி கன்றே போத்தெனக் கொள்ளவும் அமையும் எனவரும் மரபியற் சூத்திரத்தில் (24) கொள்ளவும் அமையும் என்பதனை எச்சவும்மையாக்கி அமைப்பர் பேராசிரியர். குழவி வேனில் (கலி - 36) குழவிஞாயிறு (பெருங்கதை - 1-33-26) எனப் பிறரும் ஓதுதலறிக.

42-45: அடையார் ........... ஈக்க

(இதன் பொருள்) உருவு இலாளன் - வடிவமில்லாத காமவேள்; ஒரு பெருங் கருப்பு வில் - தான் போர் செய்தற்கு எடுத்த தனது ஒப்பில்லாத பெரிய கரும்பு வில் ஒன்றே யாயினும் அதனையும்; இரு கரும்புருவமாக - நினக்கு இரண்டு கரிய புருவங்களாம்படி; ஈக்க-திருத்தி ஈந்தருளினன் போலும் அங்ஙனம் ஈதல் அவனுக்குரிய கடமையேயாம் ஆதலால் ஈந்தருளுக அஃதெற்றாலெனின், அடையார் முனை யகத்து அமர் மேம்படுநர்க்கு - வேந்தராயினோர் தமது பகைவரோடு போர்எதிரும் களத்தின்கண் மறத்தன்மையாலே தம்மை மேம்படுக்கும் படைஞர்க்கு; படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின் - படைக்கலம் வழங்கும் மரபொன்று உண்டாகலான்; அம்மரபுபற்றி அவன் ஈந்தது முறைமையே ஆகலான்; என்றான் என்க.

(விளக்கம்) அடையார் - பகைவர். வழங்குவது என்னும் வினைக்குத் தகுதிபற்றி வேந்தர் என எழுவாய் வருவித்தோதுக. ஒரு பெருங் கருப்புவில் இருகரும் புருவமாக என்புழி முரணணி தோன்றிச் செய்யுளின்ப மிகுதலுணர்க. கருப்புவில் ஒன்றனையும் நினக்குக்கரிய இருபுருவமாகத் திருத்தித்தரக் கடவன் என்று உரைவிரித்த அடியார்க்கு நல்லார், விளக்க வுரைக்கண் இரு கரும்புருவமாக வென்றது சேமவில்லையும் கூட்டி என்பது முறைமறந்தறைந்தபடியாம் என்க.

காமவேளாகிய மன்னனுக்கு மகளிரே படைமறவர் ஆவர் ஆகலின் அவன் செய்யும் போரில் அவனுக்கு வெற்றிதந்து அவனை மேம்படுப்பாய் நீயே ஆகலின் நினக்கு அவன் தன்னொரு பெருவில்லையே வழங்கி விட்டனன் போலும் என்கின்றான். இதனால் நின்னுடைய கண்கள் மட்டும் அல்ல நின் புருவங்களுங்கூடத் தமது அழகாலே எம்மை மயக்குகின்றன என்று அவற்றின் அழகைப் பாராட்டினன் ஆதலறிக.

இனி மன்னர் தம்மை மேம்படுக்கு மறவர்க்குப் படைவழங்கும் மரபுண்மையை, படைவழக்கு என்னும் துறைபற்றி முத்தவிர் பூண்மறவேந்தன், ஒத்தவர்க்குப் படைவழங்கின்று, எனவும், கொடுத்த பின்னர்க் கழன்மறவர், எடுத்துரைப்பினும் அத்துறையாகும், எனவும் வரும் கொளுக்களானும் இவற்றிற்கு,

ஐயங் களைந்திட் டடல்வெங்கூற் றாலிப்ப
ஐயிலை எஃக மவைபலவும் - மொய்யிடை
ஆட்கடி வெல்களிற் றண்ணல் கொடுத்தளித்தான்

எனவும்,

துன்னருந் துப்பின் தொடுகழலார் சூழ்ந்திருப்பத்
தன்னமர் ஒள்வாளென் கைத்தந்தான் - மன்னற்கு
மண்ணகமோ வைகின்று மாலை நெடுங்குடைக்கீழ்
விண்ணகமும் வேண்டுங்கொல் வேந்து

எனவும் வரும் வரலாற்று வெண்பாக்களானும் உணர்க. (புறப்-மாலை-64-5)

46-48: மூவா மருந்தின் .......... இடையென

(இதன் பொருள்) தேவர் கோமான் - தேவேந்திரன்; தெய்வக் காவல் படை - தன் கீழ்க்குடிகளாகிய தேவர்களை அசுரர் துன்புறுத்தாமல் காத்தற் பொருட்டுத் தான் அரிதிற்பெற்ற வச்சிரப்படை பெறுதற்கு அருமையுடைத்தாயினும்; மூவாமருந்தின் முன்னர்த் தோன்றலின் - தமக்கு மூவாமையையும் சாவாமையையும் அளித்த அமிழ்தத்திற்கு நீ தவ்வையாகத் திருப்பாற் கடலின்கண் அதற்கு முன்னர்ப் பிறத்தலின் அதனோடும் நினக்கு உடன்பிறப்பாகிய உறவுண்மையால் அதுவும் நினக்குரித்தாதல் கருதி; அதன் இடை நினக்கு இடை என - அவ்வச்சிரப்படையினது இடையானது நினக்கு இடையாகி அழகு செய்வதாக வென்று கருதி; நினக்கு அளிக்க - நினக்கு வழங்கினன் போலும், அங்ஙனம் வழங்கின் வழங்குக அதுவும் அமையும்; என்றான் என்க.

(விளக்கம்) திருப்பாற் கடல்கடையும் காலத்தே வச்சிரப்படையும் திருமகளும் அமிழ்தமும் நிரலே பிறந்தனவாகக் கூறும் பௌராணிகர் மதத்தை உட்கொண்டு இவளைத் திருமகளாக மதித்து வச்சிரம் அமிழ்தம் பிறக்கு முன்னர் நினக்குப் பின்னாகப் பிறத்தலின் அவ்வுடன்பிறப்புண்மையின் நினக்குரித்தென்று நினக்கு இடையாகுக என்று வழங்கினன் போலும். அவன் அரசனாகலின் உரியவர்க்கு உரிய பொருளை வழங்குதல் செங்கோன் முறையாதலின் வழங்கினன் என்றான்.

இங்ஙனம், (திருமகளோடு) வச்சிரமும் அமிழ்தமும் கடல் கடைகின்ற காலத்துப் பிறந்தனவெனப் புராணம் கூறும் என அடியார்க்கு நல்லாரும் ஓதினர்.

இனி, நீ அமுதாகலின் நினக்கு முன்னர் வச்சிரம் பிறத்தலால் எனினும் அமையும் என்பர் அடியார்க்குநல்லார். இதற்கு மூவாமருந்தாகிய நினக்கு முன்னர்ப் பிறத்தலின் எனப் பொருள் காண்க. முன்னிலைப் புறமொழியாகக் கொண்டங்ஙனம் கூறினர் என்க.

இனி, மூவாமருந்து தனக்குச் செய்த நன்றியைக் கருதி அதனுடன் பிறந்த நினக்கு அளித்தான் போலும் எனினுமாம்.

இனி, வச்சிரம் ததீசி முனிவனுடைய முதுகென்பு என்றும் அதனை அம்முனிவர் பெருமான் இந்திரனுக்கு வழங்கினன் எனவும் புராணம் கூறும். இதற்கியைய, வச்சிரம் மீண்டும் பெறுதற் கருமையுடைத்தாயினும் அவ்வருமை கருதாமல் செய்ந் நன்றியைக் கருதி நினக்கு அதனை அளித்தனன் என்றான் எனினுமாம்.

இதனால், கண்ணகியின் பிறப்பின் தூய்மையையும் அவளழகையும் அவளுடைய நுண்ணிடையையும் ஒருங்கே பாராட்டினன் ஆதல் அறிக.

49-52: அறுமுக வொருவன் ......... ஈத்தது

(இதன் பொருள்) அறுமுக ஒருவன் ஆறுமுகங்களையுடைய இறைவன்; ஓர் பெறும் முறை இன்றியும் - முற்கூறப்பட்ட பிறை முதலியவற்றைப் போன்று நினக்குப் பெறுதற்குரிய உரிமை யாதும் இல்லையாகவும்; அம்சுடர் நெடுவேல் ஒன்றுநின் முகத்துச் செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது - தன் கையிலுள்ள அழகிய ஒளியையுடைய வேல் ஒன்றையும் நின் முகத்தின்கண் சிவந்த கடைப்பகுதியையுடைய குளிர்ந்த கண்கள் இரண்டுமாம் படி வழங்கியது; இறுமுறை காணும் இயல்பினின் அன்றே தனக்கியல்பான தொழில்களுள் வைத்து உயிரினங்கள் இறந்து படுதலைச் செய்து காண்பதுவும் ஒன்றாகலால் அன்றோ; அன்றெனின் பிறிதொரு காரணமுங் கண்டிலேன் என்றான் என்க;

(விளக்கம்) பெரியோனும் உருவிலாளனும் தேவர் கோமானும் நிரலே பிறையும் கருப்பு வில்லும் காவற்படையும் வழங்குதற்குக் காரணம் தெரிகின்றது. அறுமுகவொருவன் தனது வேலை நினக்குக் கண்ணாக வென வழங்கியதற்குக் காரணங் கண்டிலேன். ஒரோவழி அவன் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று தொழிலையும் தனக்கியல்பாக உடையனாகலின், அவற்றுள் அழித்தற் றொழில் நிகழ்தற் பொருட்டு ஈந்தனன் போலும் என்றவாறு.

இனி, இறுமுறை காணும் இயல்பினினன்றே என்பதற்கு, யான் இறந்துபடு முறைமையைத் தன் கண்ணாற் காண வேண்டுதல் காரணத்தான் என்க என்று உரைவிரித்தார் அடியார்க்கு நல்லார் இதற்கு,

(கொள்ளும் பொருளிலராயினும் வம்பலர்)
துள்ளுநர்க் காண்மார் (தொடர்ந்துயிர் வெளவலின்)

எனவரும் கலியடியை (4:5) மேற்கோளாகவும் காட்டினார். அரும்பதவுரையாசிரியர் இவ்வாறு ஓர் உரிமையின்றியேயும் குமரவேள் தன்கையில் வேலொன்றையும் இரண்டாக்கித் தந்தது என்னை வருத்தும் இயல்பினானன்றே என்றோதுவர். இவர் தம் முரைகளோடு முருகவேள் இறுமுறை காணும் இயல்பினையுடையான் என்பது பொருந்துமாறில்லையாதல் உணர்க.

இதன்கண் நின்கண் இறுமுறை காணும் இயல்பிற்று என்னுமாற்றால் அது தன்னை வருத்துமியல்பு கூறி அதன் அழகை வேலோடுவமித்துப் பாராட்டினன் ஆதலறிக. ஓக்கிய முருகன் வைவேல் ஒன்றிரண்டனைய கண்ணாள் எனவருஞ் சிந்தாமணியும் (1291) ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. இவையெல்லாம் புகழுவமையணியின் பாற்படும் என்பது அடியார்க்கு நல்லார் கருத்து.

இவற்றால் கட்புலனாய் எழுதப்படும் உறுப்புக்களைப் பாராட்டி இனிக் கட்புலனாயும் ஆகாதுமாய் எழுதப்படாதன பாராட்டுவான்.

53-61: மாயிரும்பீலி ............ ஒருவாவாயின

(இதன்பொருள்) (55) நல்நுதால் - அழகிய நுதலையுடையோய்; மா இரும் பீலி மணி நிற மஞ்ஞை - கரிய பெரிய தோகையினையும் நீலமணிபோன்ற நிறத்தையும் உடைய மயில்கள்; நின் சாயற்கு இடைந்து தண் கான் அடையவும் - நின் சாயலுக்குத் தோற்று இழிந்த காட்டிடத்தே போய் ஒடுங்கா நிற்பவும்; அன்னம் மெல் நடைக்கு அழிந்து - அன்னங்கள் தாமும் நினது மெல்லிய நடையழகிற்குத் தோற்று; நல் நீர்ப்பண்ணை நளிமலர்ச் செறியவும் - தூய நீர் பொருந்தின கழனிகளிடத்தே அடர்ந்த தாமரை மலர்களினூடே புக் கொடுங்கா நிற்கவும்; மடநடைமாது - மடப்பங்கெழுமிய நடையினையுடைய மாதே!; சிறு பசுங்கிளிதாமே அளிய நின்னோடுறைகின்ற சிறிய இப்பசிய கிளிகள் மாத்திரமே நின்னால் அளிக்கற்பாலனவாயின காண்; எற்றுக்கெனின்; குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின் மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும் - வேய்ங் குழலின் இசையினிமையையும் யாழின் இசையினது இனிமையையும் அமிழ்தினது சுவைதரும் இனிமையையும் கலந்து குழைத்தா லொத்த இனிமையையுடைய நின் மழலை மொழியினைக் கேட்டு அவற்றைத் தாமும் கற்றற்குப் பெரிதும் விரும்பி, வருத்தமுடையனவாகியும்; நின் மலர்க்கையின் நீங்காது உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின-நின்னுடைய செந்தாமரைபோன்ற அழகிய கையிலிருந்து விலகாமல் நின்னோடு வதிதலைப் பொருந்திப் பிரியாவாயின ஆதலாற்காண்! என்றான் என்க.

(விளக்கம்) மாயிரு என்பது கோயில் என்பதுபோல யகரவுடம்படு மெய் பெற்றது. இதனைப் புறனடைவிதியாலமைத்துக் கொள்க. மா - கருமை. இருமை - பெருமை. மணி - நீலமணி. சாயல் - மென்மை. அஃதாவது நாயும் பன்றியும் போலாது, மயிலும் குயிலும் போல்வதொரு தன்மை என்பர் இளம்பூரணர். இதனை, நாட்டிய மரபின் நெஞ்சு கொளின் அல்லது காட்டலாகாப் பொருள் என்பர் தொல்காப்பியனார் (பொருளியல்-51.) ஐம்பொறியால் நுகரும் மென்மை என்பர் நச்சினார்க்கினியர். ஐம்பொறியானும் நுகரப்படும் ஒண்டொடியார் பால் அஃது எஞ்சாமற் காணப்படும். இதற்கு மயில் ஒருபுடையே அவர்க்கு ஒப்பாகும் என்க. ஈண்டுக் கோவலன் ஐம்பொறியானும் கண்ணகியார்பால் நுகர்ந்த இன்பத்திற்கு வேறுவமையின்மையால், மயிலும் நின் சாயற்கு இடைந்தது என்கின்றான். தண்கான் என் புழித் தண்மை - இழிவு என்னும் பொருட்டு. அஃதப்பொருட்டாதல் பிங்கலந்தை (3607) யிற் காண்க. பண்ணை - கழனி. செறிதல் - புக் கொடுங்குதல். ஒடுங்க வேண்டுதலின் நளிமலர் எனல் வேண்டிற்று. நளி-செறிவு.

இனி குழலும் யாழும் அமிழ்துங்குழைத்த மழலைக் கிளவி என நிகழும் தொடரின்கண் தமிழ் மொழிக்குச் சிறப்பெழுத்தாகிய ழகர, வொலிமிக்கு மொழி யின்பம் பெரிதும் மிகுதலுணர்க. இஃது இல்பொருள் உவமை. கரும்புந் தேனு மமுதும் பாலுங்கலந்த தீஞ்சொல் எனத் திருத்தக்க தேவரும் ஓதுதல் (2438) உணர்க. இனி, குழல் முதலியவற்றைக் குழைத்த (வருத்திய) எனினுமாம். நன்னுதல், மாது என்பன விளி. இவை நன்னுதால் எனவும் மாதே எனவும் ஈற்றயல் நீண்டும் ஏகாரம் பெற்றும் விளியேற்கும்.

இனி, மயிலும் அன்னமும் இடைந்தும் அழிந்தும் தாமுய்யுமிடம் நாடிச் சென்றன. மற்று இச்சிறு கிளிகள் நின் மழலை கேட்டு அழுக்காறு கொள்ளாமல் அவற்றைக் கற்கும் பொருட்டு நின்பால் உடனுறைவு மரீஇ ஒருவா ஆயின; ஆகவே நின்னைப் புகலாகக் கொண்ட அவற்றை அளித்தல் நின்கடன் என்றவாறு. அளியகிளி தாமே என மாறி ஈற்றினின்ற ஏகாரம் பிரிநிலை என்க. தாம் அசைச்சொல். கிளிகள் தம்மனம் போனவாறு பறந்துதிரிதலை விட்டுக் கற்றற்பொருட்டு அடங்கியிருந்தலின் வருந்தினவாகியும் என்றான் என்க. என்னை? கல்வி தொங்குங் காற்றுன்பந் தருமியல்பிற் றென்பது முணர்க. இங்ஙனம் கூறாமல் மழலைக் கிளவிக்குத் தோன்றனவாயும் என்னும் அடியார்க்கு நல்லார் உரை அவை உடனுறைவுமரீஇ ஒருவா வாதற்குச் சிறவாமை நுண்ணுணர்வாற் கண்டுகொள்க. கண்ணகியார் வளர்க்குங் கிளி பலவாகலின் பன்மை கூறினான்.

62 - 64: நறுமலர் .......... எவன்கொல்

(இதன் பொருள்) நறுமலர்க் கோதை - நறுமணமுடைய மலர் மாலையையுடையோய்; நின் நலம் பாராட்டுநர் - நினது அழகுக்கு ஒப்பனையால் அழகு செய்கின்ற நின் வண்ணமகளிர்; மறு இல் மங்கல அணியே அன்றியும் - குற்றமற்ற நின்னுடைய இயற்கை யழகே அமைவதாகவும் அதனை யல்லாமலும்; பிறிது அணி அணியப் பெற்றதை எவன் கொல் - அவ்வழகை மறைக்கின்ற வேறு சில அணிகலன்களை நினக்கு அணிவதனாலே பெற்ற பயன்தான் யாதோ? என்றான் என்க.

(விளக்கம்) எனவே, அவர் பயனில செய்யும் பேதையரே ஆதல் வேண்டும் என்றான் என்க. இதனோடு,

அமிழிமைத் துணைகள் கண்ணுக் கணியென வமைக்குமா போல்
உமிழ்சுடர்க் கலன்க ணங்கை யுருவினை மறைப்ப தோரார்
அமிழ்தினைச் சுவைசெய் தென்ன வழகினுக் கழகு செய்தார்
இமிழ்திரைப் பரவை ஞாலம் ஏழைமை யுடைத்து மாதோ!

எனவரும் கம்பநாடர் செய்யுள் நினையற்பாலதாம். (கோலங் -3)

கோதை-விளி. மங்கலவணி-இயற்கையழகு. மாங்கலிய மென்பாருமுளர் என்பர் அடியார்க்கு நல்லார். எவன்-யாது.கொல்: அசை.

65 - 66 : பல்லிருங்கூந்தல் ................ என்னுற்றனர் கொல்

(இதன் பொருள்) பல் இருங்கூந்தல் சில் மலர் அன்றியும் - ஐம்பாலாகக் கை செய்யப்படும் நினது கரிய கூந்தலில் மங்கலங்கருதி அதற்குரிய மலர் சிலவற்றைப் பெய்தமையே அமைவதாக அவற்றை யல்லாமலும்; எல் அவிழ் மாலையொடு என் உற்றனர் கொல்-ஒளியோடு மலருகின்ற இந்த மலர்மாலைகள் அக் கூந்தலின்கண் நின்னிடைக்குப் பொறையாக அணிதற்கு அவற்றோடு அவர்கள் எத்தகைய உறவுடையரோ, அறிகின்றிலேன் என்றான் என்க.

(விளக்கம்) இம்மாலைகள் நினது கூந்தலின் இயற்கையழகை மறைப்பதோடல்லாமல் நின் சிற்றிடைக்குப் பெரும் பொறையுமாம் என்பது நினையாமல் நின்றலையின்மேல் அவற்றை ஏற்றுதலால் அவற்றோடு அவர்க்கு உறவுண்டு போலும் என்றவாறு. என்னை? உறவினரை மேலேற்றி வைத்தல் உலகியல்பாகலின் அங்ஙனம் வினவினன் என்க.

சில்மலர் என்றது மங்கலமாக மகளிர் அணியும் கற்புமுல்லை முதலியவை. சீவக சிந்தாமணியில் தேந்தாமம் என்று தொடங்குஞ் செய்யுளில் (680) முல்லைப் பூந்தாமக் கொம்பு என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் முல்லை கற்பிற்குச் சூட்டிற்று எனவும் சீவக செய்யுள் 624-ல் முல்லைச் சூட்டுவேய்ந்தார் என்பதற்கு முல்லைச் சூட்டைக் கற்பிற்குத் தலையிலே சூட்டி என்றும் உரை கூறுதலுமுணர்க. சின்மலர் - அருச்சனை மலருமாம் என்பர் அடியார்க்கு நல்லார்.

67-68: நான ............. எவன்கொல்

(இதன் பொருள்) நானம் நல் அகில் நறும்புகை அன்றியும் - அவ்வண்ணமகளிர் நினது பல்லிருங்கூந்தலுக்கு நெய்யையுடைய சிறந்த அகிற்புகையை ஊட்டுதலே அமைவதாகவும் அதனை யல்லாமலும்; மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல் - கத்தூரியையும் அணிதற்கு அதன்பால் அவர்க்கு உண்டான கண்ணோட்டத்திற்குக் காரணம் யாதோ? என்றான் என்க.

(விளக்கம்) நானம் - நாற்றமுமாம்; திருந்து தகரச் செந்நெருப்பில் தேன் தோய்த்து அமிர்தம் கொளவுயிர்க்கும் கருங்காழ் அகிலின் நறும்புகை என்பான் (சிந்தா - 346) நல்லகில் நறும்புகை என்றான். அதற்குப் பொறையின்மையின் அஃது அமையும் என்பது கருத்து. மான்மதம்-கத்தூரி. வந்ததை என்புழி ஐகாரம் சாரியை. மான்மதத்தைச் சிறந்த இடத்தில் வைத்தலால் வந்தது என்னும் வினையாலணையும் பெயர் கண்ணோட்டம் என்பது தகுதியாற் கொள்ளப்பட்டது.

69-70 : திருமுலை ............ எவன்கொல்

(இதன்பொருள்) திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும் - அவர்தாம், நினது அழகிய முலைப்பரப்பின் மேல் தொய்யில் எழுதுதலே மிகையாகவும் அதனை யல்லாமலும்; முத்தம் ஒரு காழொடு உற்றதை எவன்கொல் - முத்தாலியன்ற தனி வடத்தையும் பூட்டிவிட்டமைக்கு அதனோடு அவர்க்குண்டான உரிமைதான் யாதோ? என்றான் என்க.

(விளக்கம்) திரு என்பதற்கு அடியார்க்கு நல்லார் முலைமேல் தோன்றும் வீற்றுத் தெய்வம், எனப் பொருள் கொண்டனர். சிந்தாமணியில் (171) ஆமணங்கு குடியிருந்தஞ்சுணங்கு பரந்தனவே எனத் திருத்தக்க தேவர் ஓதுதலும், அதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் தம் மேலுறையும் வீற்றுத் தெய்வம் இருப்பிடமாக விருக்கப்பட்டுச் சுணங்கு பரந்தன என உரை விரித்தலும் காண்க. அஃதாவது வேறொன்றற் கில்லாத கவர்ச்சியையுடைய அழகைத் தருவதொரு தெய்வம் என்றுணர்க. காழ்-வடம்.

71-72: திங்கள் ......... என்னுற்றனர் கொல்

(இதன் பொருள்) திங்கள் முத்து அரும்பவும் சிறுகு இடை வருந்தவும்- அந்தோ நின்னுடைய பிறைபோன்ற நுதலின்கண் வியர்வைத் துளிமுத்துக்கள் போன்று அரும்பா நிற்பவும் நுண்ணிடை வருந்தா நிற்பவும் இங்கு இவை அணிந்தனர் - இங்குக் கூறப்பட்ட பிறிதணி முதலிய இவற்றைப் பொறையின் மேல் பொறையாக அணிந்துவிட்ட அவ்வண்ணமகளிர்; என் உற்றனர் கொல் - என்ன பேய் கொண்டனரோ? என்றான் என்க.

(விளக்கம்) திங்கள், முத்து என்பன சொல்லுவான் குறிப்பினால் முகம் என்றும் வியர்வென்றும் பொருள்படுதலால் இவற்றைக் குறிப்புவமை என்ப; இவற்றைப் பிற்காலத்தார் உருவகம் என்று வழங்குப.

மங்கல வணியும் சின்மலரும் அகிற்புகையும் தொய்யிலும் ஆகிய, இவையே பொறையாக இவற்றைச் சுமக்கலாற்றாது திங்கள் முத்தரும்பவும் இங்கு இவைகண்டு வைத்தும் மேலும் பொறையாகப் பிறிதணியும் மாலையும் சாந்தும் முத்தும் அணிந்தாராகலின் அவர் பேயேறப் பெற்றவரேயாதல் வேண்டும் என்பது கருத்து.

என்னுற்றனரோ என்பதற்கு என்ன பித்தேறினார் எனினுமாம்.

73-81 : மாசறுபொன்னே ............ பாராட்டி

(இதன் பொருள்) மாசு அறு பொன்னே - குற்றமற்ற பொன்னை ஒப்போய்! என்றும்; வலம்புரி முத்தே - வலம்புரிச் சங்கீன்ற முத்தை ஒப்போய்! என்றும்; காசு அறு விரையே - குற்றமற்ற நறுமணம் போல்வோய்! என்றும்; கரும்பே - கரும்பை ஒப்போய்! என்றும்; தேனே - தேன்போல்வோய்! என்றும்; அரும்பெறல் பாவாய்-பெறுதற்கரிய பாவை போல்வோய்! என்றும்; ஆர் உயிர் மருந்தே - மீட்டற்கரிய உயிரை மீட்டுத் தருகின்ற மருந்து போல்வோய்! என்றும்; பெருங்குடி வாணிகன் பெருமடமகளே - உயர்ந்த குடிப்பிறப்பாளனாய வாணிகர் பெருமகன் செய்தவத்தாற் பிறந்த மாண்புமிக்க இளமையுடைய நங்காய்! என்றும் (ஒருவாறு உவமை தேர்ந்து பாராட்டியவன்; பின்னர் அவள் நலத்திற்குவமை காணமாட்டாமல்) தாழ் இருங்கூந்தல் தையால் நின்னை-நீண்ட கரிய கூந்தலையுடைய தையலே நின்னை யான்; மலையிடைப் பிறவா மணியே என்கோ! மலையின் கட் பிறவாத மணி என்று புகழ்வேனோ? அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ - அல்லது, திருப்பாற்கடலிலே பிறந்திலாத அமிழ்தமே என்று புகழ்வேனோ? யாழ் இடைப் பிறவா இசையே என்கோ - அல்லது, யாழின்கட் பிறந்திலாத இசையே என்று புகழ்வேனோ? என்று உலவாக் கட்டுரை பல பாராட்டி - எனச் சொல்லித் தொலையாத அக்கண்ணகியின் நலங்களைப் பொருள் பொதிந்த மொழிகள் பலவற்றாலே புகழ்ந்து என்க.

(விளக்கம்) (46) தீராக்காதலாலே முகம் நோக்கி, குறியாக் கட்டுரை கூறும் கோவலன் பெரியோன் தருக என்றும், உருவிலாளன் ஈக்க என்றும், அறுமுக வொருவன் ஈத்தது இறுமுறை காணும் இயல்பினின் அன்றே என்றும் மஞ்ஞை கான் அடையவும் அன்னம் மலர்ச் செறியவும் கிளி ஒருவா ஆயின ஆதலால் அளிய என்றும் கோதாய்! நின் நலம் பாராட்டுநர் பிறிதணியை அணியப் பெற்றதை எவன்? என்றும், மாலையொடு என்னுற்றனர் என்றும், சாந்தொடு வந்ததை எவன்? என்றும், முத்தொடுற்றதை எவன் என்றும், இவை அணிந்தனர் என்னுற்றனர் என்றும், பொன் முதலியன போல்வோய் என்றும், மகளே என்றும், மணியே என்கோ? அமிழ்தே என்கோ? இசையே என்கோ? எனவும், உலவாக் கட்டுரை பலவற்றானும் கண்ணகியின் நலத்தைப் பாராட்டி என்றியையும்.

இனி, (74) கண்ணுக்கு இனிமை பயத்தல் கருதி மாசறு பொன் என்றும், ஊற்றின்பம் கருதியும் மரபின் தூய்மை கருதியும் வலம்புரி முத்து என்றும், உயிர்ப்பின் இனிமை கருதி விரையென்றும், சுவையின்பங் கருதிக் கரும்பென்றும், மொழியின்பம் கருதித் தேன் என்றும் பாராட்டினன் எனவும், இவற்றாற் சொல்லியது ஒளியும் ஊறும் நாற்றமும் சுவையும் ஓசையுமாகலின் கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள (குறள்-1101) என நலம் பாராட்டப்பட்டன என்பது அடியார்க்கு நல்லார் கருத்தாகும்.

இனி, கண்ணகியின் பால் தானுகர்ந்த ஐம்புல வின்பங்களையும் கருதி அவற்றிற்குத் தனித்தனியே உவமை தேர்ந்து கூறியவன் அவற்றிற்கு அவ்வுவமைகள் உயர்ந்தன வாகாமல் தான் கூறும் பொருள்களே சிறந்தன என்னுங் கருத்தினால், பிறிதோராற்றால் அந்நலங்களைப் பாராட்டத் தொடங்கி அரும்பெறல் பாவாய் என்றும், ஆருயிர் மருந்து என்றும், பெருங்குடி வாணிகன் பெருமட மகளே என்றும், பாராட்டினன். இவற்றுள், கட்கினிமை பயத்தலின் முன்பு மாசறு பொன் என்றவன், காணுமளவிலே தன்னுள்ளம் மயக்குற்றமை கருதி அத்தன்மை பொன்னுக்கின்மையால் அங்ஙனம் மயக்குறுத்தும் கொல்லிப்பாவையே என்றான் என்க. அவ்வாறு மயங்கி அழியுமுயிரைத் தன்கண் களவு கொள்ளும் சிறு நோக்கினால் பெரிதும் தழைப்பித்தலின் ஆர் உயிர் மருந்தே என்றான், என்க. மருந்து மிருதசஞ்சீவினி என்பர், அடியார்க்கு நல்லார். கட்பொறிக்கேயன்றி ஏனைப்பொறிகட்கும் இன்பம் பயத்தலின் மலையிடைப் பிறவாமணி என்பேனோ என்றான் என்க. மணி குழையாமையின் அங்ஙனம் கூறினன் என்பர் அடியார்க்கு நல்லார். இனி, உண்டார்கண் அல்லது அலையிடைப் பிறக்கும் அமிழ்து கண்டார்க்கும் தீண்டினார்க்கும், கழிபேரின்பம் நல்குதலின்மையின் அதிற்பிறவா அமிழ்தே என்பேனோ என்றான் என்க. ஈண்டு உறுதோ றுயிர் தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு, அமிழ்தி னியன்றன தோள் எனவரும் திருக்குறளையும் (1106) அதற்கு ஆசிரியர் பரிமேலழகர் தோள்கள் தீண்டப்படுவதோர் அமிழ்தினாற் செய்யப்பட்டன என உரைகூறுதலும் காண்க. அமிழ்திற்கு வடிவின்மையின் இங்ஙனம் கூறினன் என்பாருமுளர்.

82-84 : தயங்கிணர் ......... நாள்

(இதன்பொருள்) வயங்கு இணர்த் தாரோன் - விளங்குகின்ற பூங்கொத்துக்களாற் புனைந்த மலர்மாலையை அணிந்த கோவலன்; தயங்கு இணர்க்கோதை தன்னொடு - விளங்குகின்ற பூங்கொத்துக்களாலியன்ற மலர்மாலையணிந்த கண்ணகியோடு; மகிழ்ந்து தருக்கிச் செல்வுழி நாள் - இவ்வாறு பேரின்ப நுகர்ந்து செருக்குற்று ஏறுபோல் பீடுற நடந்து வாழ்கின்ற நாள்களுள் வைத்து ஒருநாள்; என்க.

(விளக்கம்) வயங்கிணர், தயங்கிணர் என்பன ஒரு பொருளுடையன ஆதலால் இத்தொடையைத் தலையாய எதுகைத் தொடையின்பமுடைத்தென்றும், பரியாய வணி என்றும், கூறுவர் அடியார்க்கு நல்லார். இதனைப் பொருட்பின் வருநிலையணி என்பாருமுளர்.

84 - 90 : வாரொலி ........... தனக்கென்

(இதன்பொருள்) வார் ஒலி கூந்தல் பேரியல் கிழத்தி - நீண்டு அடர்ந்த கூந்தலையுடைய பெருமைமிக்க மனைமாண்புடைய மாசாத்துவான் மனைவியாகிய மூதாட்டி; மறப்பருங் கேண்மையோடு - இல்வாழ்வோர் எஞ்ஞான்றும் மறத்தலில்லாத சுற்றந்தழாலோடே; அறப்பரிசாரமும் - அறவோர்க்களித்தலும்; விருந்துபுறந்தரூஉம் பெருந் தண் வாழ்க்கை - விருந்தோம்பலும் இன்னோரன்ன பிற அறங்களையும் உடைய பெரிய குளிர்ந்த இல்வாழ்க்கையை; வீறுபெறக் காண -தாமே நடத்தி அவ் வாழ்க்கையின்கட் சிறப்புறுதலைத் தன் கண்ணாற் கண்டு களிக்க வேண்டி; வேறுபடு திருவின் - தாமீட்டிய பொருளினின்றும் பகுத்துக் கொடுத்த செல்வத்தோடும்; உரிமைச் சுற்றமொடு ஒரு தனி புணர்க்க - அவ்வாழ்க்கைக் கின்றியமையாத அடிமைத் திரளோடும், கோவலனும் கண்ணகியுமாகிய தன் மகனையும் மருகியையும் தம்மினின்றும் பிரிந்து வேறாக விருந்து வாழுமாறு பணித்தலாலே; இல்பெருங் கிழமையில் - இல்லறத்தை நடத்துகின்ற பெரிய தலைமைத் தன்மையோடே; காண்தகு சிறப்பின் பிறரெல்லாம் கண்டு பாராட்டத் தகுந்த புகழோடே; கண்ணகி தனக்கு-அக்கண்ணகி நல்லாட்கு; சில யாண்டு கழிந்தன-ஒருசில யாண்டுகள் இனிதே கழிந்தன; என்க.

(விளக்கம்) வார் - நெடுமை. ஒலித்தல் ஈண்டு அடர்தன் மேற்று. பேரியல் - மனைவிக்குரிய பெருங்குணங்கள். அவையாவன:

கற்புங் காமமும் நற்பா லொழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்.

என்க; (தொல்-கற்பியல். 11) ஈண்டுப் பேரியற் கிழத்தி என்றது, மாசாத்துவானின் இற்கிழத்தியை (கோவலன் தாய்).

இனி, வாரொலி கூந்தல் பேரியற்கிழத்தி என்பதுவே அடியார்க்கு நல்லார் கொண்ட பாடமாம் ஆயினும் வாரொலி கூந்தல் என்பதனை அன்மொழித் தொகையாகக் கொண்டு (கண்ணகியை) வீரபத்தினியை என்பர் அடியார்க்குநல்லார். பேரியற் கிழத்தி எனினுமமையும் என்றலின் அவர் கொண்ட பாடம் வாரொலி கூந்தல் பேரியற் கிழத்தி என்பது பெறப்படும். வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி என்று காணப்படும் பாடம் பிழைபடக் கொண்டதாம். பேரிற்கிழத்தி என்பது அரும்பதவுரையாசிரியர் கொண்டபாடமாம். இன்னும் அவர் அறப்பரிகாரம் என்று பாடங்கொண்டமை அவர் உரையால் விளங்கும்.

வாரொலி கூந்தற் பேரியற் கிழத்தி என்று பாடங்கொண்ட அடியார்க்கு நல்லார், கூந்தலையுடைய வீரபத்தினி எனப் பொருள் கூறுதல் மிகை. பேரியற் கிழத்திக்குக் கூந்தலை அடையாக்குதலே அமையும். இவர் உரையால் மயங்கிப் பின்னர் ஏடெழுதினோர் வாரொலி கூந்தலை என்றே எழுதி விட்டனர் போலும்.

கேண்மை-எல்லோரிடத்தும் கேளிராந்தன்மையுடையராதல், அன்புடையராந் தன்மை. இஃது இல்லறத்தார்க்கு இன்றியமையாப் பண்பாகலின் அதனை மறப்பருங்கேண்மை என்றார். அறப்பரிசாரம்-அறங்கூறுமாற்றால் ஒழுகுதல். ஈண்டு, (கொலைக்-71-2.) அறவோர்க்களித்தலும் துறவோர்க் கெதிர்தலும் எனக் கண்ணகியார் கூறியவை இதன்கண் அடங்கும். பரிசாரம் என்பது ஏவற்றொழில் செய்தல் என்னும் பொருட்டாகலின் அறவோர் முதலிய இம் மூவரும் ஏவிய செய்வதே இல்லறத்தார் கடனாகலின் இவற்றை அடக்கி வேறு ஓதினர். எஞ்சிய விருந்தோம்பல் முதலியவெல்லாம் விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கை என்பதன்கண் அடங்கும். இல்லற வாழ்க்கை ஏனையோர்க் கெல்லாம் தண்ணியநிழல் போறலின் அதனைப் பெருந்தண் வாழ்க்கை என்று விதந்தனர். இவையெல்லாம் (கொலைகளக் காதையில்) தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் என்பதன்கண் அடங்கும். வேறுபடுதிரு - பிரிக்கப்பட்ட செல்வம். கோவலனும் கண்ணகியும் இல்லறம் நடத்தற் பொருட்டுத் தமது பழம் பொருள்களினின்றும் கூறுபடுத்துக் கொடுத்த செல்வம் எனக் கோடலே ஈண்டுப் பெரிதும் பொருந்துவதாம். என்னை? கோவலன் பொருளிழந்த பின்னரும், அவனுடைய இருமுது குரவரும் தமக்கெனப் பொருளுடையராயிருந்தமை, நீர்ப்படைக் காதையில் கோவலன் இறந்தமை கேட்ட மாசாத்துவான் தன்பாலிருந்த மிக்க பொருளையெல்லாம் தானமாக வீந்துபோய்த் துறவியாயினன் என்பதை மாடல மறையோன் கூற்றாக வருகின்ற கோவலன்றாதை கொடுந்துயர் எய்தி மாபெருந் தானமாவான் பொருளீத்தாங்கு.... துறவியெய்தவும் என்பதனால் அறியப்படும். ஆதலானும் கனாத்திறம் உரைத்த காதையில் குலந்தருவான்பொருட்குன்றம் தொலைத்த இலம்பாடு நாணுத்தரும் எனக் கோவலன் குறிப்பது ஈண்டுத் தமக்கென வேறுபடுத்துக் கொடுத்த பொருளையே ஆதலானும் என்க. இந்நுணுக்க முணரார் நானாவிதமான செல்வம் என்றும், பலபடைப்பாகிய செல்வத்தோடே என்றும் தத்தம் வாய் தந்தன கூறலாயினர். வீறு - மற்றோரிடத்தே காணப்படாத சிறப்பு.

ஒருதனி புணர்க்க என்றது அவள் நடத்தும் இல்லற வாழ்க்கையினூடே தான் சென்று புகாமல் முழுவதும் அவள் தலைமைக்கே விட்டு விட்டதை உணர்த்தும். இற்பெருங் கிழமையில் ஏனையோர் கண்டு பாராட்டத் தகுந்த சிறப்புடைய கண்ணகி என்க. இதற்கு அடியார்க்கு நல்லாரை யுள்ளிட்டார் கூறும் உரைகள் போலியாதலறிக.

இனி இக்காதையினை, செல்வர்க்குத் தோன்றிய கண்ணியும் கொழுநனும் தென்றலைக் கண்டு மகிழ்சிறந்து ஏறிக் காட்சிபோல இருந்து எழுதப் பின்னர் இருவரும் மயங்கிக் கையற்றுழிக் குறியாக் கட்டுரை கூறுகின்றவன் உலவாக் கட்டுரை பல பாராட்டிச் செல்வுழி ஒருநாள் பேரியற்கிழத்தி புணர்க்க, கண்ணகிக்கு இற்பெருங் கிழமையில் யாண்டு சில கழிந்தன என வினையியைபு காண்க.

(இஃது எல்லாவடியும் நேரடியாய் வந்து முடிதலின்)

நிலைமண்டில ஆசிரியப்பா
வெண்பா

தூம ........ நின்று

(இதன்பொருள்) காமர் மனைவி எனக் கை கலந்து - முற்கூறிய கோவலனும் கண்ணகியும் காமவேளும் இரதியும் போன்று தம்முள் உள்ளப்புணர்ச்சியால் ஒருவருள் ஒருவர் கலந்து; தூம் அம்டணிகள் ஒன்றித் தோய்ந்தால் என - மற்று மெய்யுறு புணர்ச்சிக்கண் காமநுகரும் அழகுடைய பாம்புகள் உடலாற் பிணைந்து புணருமாறு போன்று புணர்ச்சி எய்தி; ஒருவார் - தம்மை ஊழ் கூட்டுவித்த அவ்வொரு சில யாண்டுகளினும் ஒருவரை ஒருவர் பிரியாதவராய்; மண்மேல் நிலையாமை கண்டவர் போன்று- இவ்வுலகின்கண் யாக்கையும் இளமையும் செல்வமும் ஆகியவற்றின் நிலையாமையை உணர்ந்து அவை உளவாயிருக்கும் பொழுதே அவற்றாலாகும் இன்பத்தை நுகர்தற்கு விரைவார் போன்று; நின்று நாமம் தொலையாத இன்பம் எலாம் துன்னினார் - அழகிய அவ்வின்பவொழுக்கத்திலே நிலைபெற்று நுகர்ந்து நுகர்ந்தமையாத காதலின்பம் எல்லாவற்றையும் நுகர்ந்தனர்.

(விளக்கம்) தூம் - தூவும்; நுகரும்; துவ்வுதல் என்னும் வினைச்சொல் அடியாகப் பிறந்த எச்சம். இதன் ஈற்றுயிர் மெய்கெட்டது. இஃது எதிர்மறைக்கண் தூவா என வரும். தூவாக்குழவி எனவருதல், அறிக. ஈண்டுக் காமம் துய்க்கும் பணிகள் என்றவாறு. அப்பணி என்பதன் விகாரம்; அம் - அழகு. பணி-பாம்பு. இவை மெய்யுறுபுணர்ச்சிக்கு உவமம். நாமம்-அழகு. உளபோதே இன்பத்தை நுகர்தற்கு விரைவராதலின் உவமமாயினர்.

இவ்வெண்பா பல பிரதிகளில் காணப்பட்டிலது என்பர்.

மனையறம்படுத்த காதை முற்றிற்று.
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 22, 2012, 07:56:09 AM
3. அரங்கேற்று காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அஃதாவது - கண்ணகியும் கோவலனும் இல்லறம் நிகழ்த்தி வருங்காலத்தே புகார் நகரத்தே புகழ்மிக்க நாடகக் கணிகையாகிய மாதவி ஆடற்கலை பயின்று அரசன் முன்னிலையில் அரங்கேறிக் காட்டிய செய்தியையும் அவள் ஆடலினும் பாடலினும் அழகினு மயங்கிய கோவலன் அவளுடைய கேண்மையைப் பெற்ற செய்தியையும் கூறும் பகுதி என்றவாறு.

தெய்வ மால்வரைத் திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய
மலைப்புஅருஞ் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய  5

பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை
தாதுஅவிழ் புரிகுழல் மாதவி தன்னை
ஆடலும் பாடலும் அழகும் என்றுஇக்
கூறிய மூன்றின் ஒன்றுகுறை படாமல்
ஏழாண்டு இயற்றிஓர் ஈராறு ஆண்டில்  10

சூழ்கடல் மன்னற்குக் காட்டல் வேண்டி,
இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்துஆங்கு  15

ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்
கூடிய நெறியின கொளுத்துங் காலைப்
பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும்
கொண்ட வகைஅறிந்து கூத்துவரு காலைக்
கூடை செய்தகை வாரத்துக் களைதலும்  20

வாரம் செய்தகை கூடையிற் களைதலும்
பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும்
ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்
குரவையும் வரியும் விரவல செலுத்தி
ஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும்,  25

யாழும் குழலும் சீரும் மிடறும்
தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கித்
தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்துத்  30

தேசிகத் திருவின் ஓசை எல்லாம்
ஆசுஇன்று உணர்ந்த அறிவினன் ஆகிக்
கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும்
பகுதிப் பாடலும் கொளுத்துங் காலை
வசைஅறு கேள்வி வகுத்தனன் விரிக்கும்  35

அசையா மரபின் இசையோன் தானும்,
இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத்
தமிழ்முழுது அறிந்த தன்மையன் ஆகி
வேத்தியல் பொதுவியல் என்றுஇரு திறத்தின்
நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து  40

இசையோன் வக்கிரித் திட்டத்தை உணர்ந்துஆங்கு
அசையா மரபின் அதுபட வைத்து
மாற்றார் செய்த வசைமொழி அறிந்து
நாத்தொலைவு இல்லா நன்னூல் புலவனும்,
ஆடல் பாடல் இசையே தமிழே  45

பண்ணே பாணி தூக்கே முடமே
தேசிகம் என்றுஇவை ஆசின் உணர்ந்து
கூடை நிலத்தைக் குறைவுஇன்று மிகுத்துஆங்கு
வார நிலத்தை வாங்குபு வாங்கி
வாங்கிய வாரத்து யாழும் குழலும்  50

ஏங்கிய மிடறும் இசைவன கேட்பக்
கூர்உகிர்க் கரணம் குறிஅறிந்து சேர்த்தி
ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமைச்
சித்திரக் கரணம் சிதைவுஇன்றி செலுத்தும்
அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல்வனும்,  55

சொல்லிய இயல்பினிற் சித்திர வஞ்சனை
புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்
வர்த்தனை நான்கும் மயல்அறப் பெய்துஆங்கு
ஏற்றிய குரல்இளி என்றுஇரு நரம்பின்
ஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகிப்  60

பண்அமை முழவின் கண்ணெறி அறிந்து
தண்ணுமை முதல்வன் தன்னொடு பொருந்தி
வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்துஆங்கு
இசையோன் பாடிய இசையின் இயற்கை
வந்தது வளர்த்து வருவது ஒற்றி  65

இன்புற இயக்கி இசைபட வைத்து
வார நிலத்தைக் கேடுஇன்று வளர்த்துஆங்கு
ஈர நிலத்தின் எழுத்துஎழுத்து ஆக
வழுவின்று இசைக்கும் குழலோன் தானும்,
ஈர்ஏழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின்  70

ஓர்ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி
வன்மையிற் கிடந்த தார பாகமும்
மென்மையிற் கிடந்த குரலின் பாகமும்
மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ளக்
கைக்கிளை ஒழித்த பாகமும் பொற்புடைத்  75

தளராத் தாரம் விளரிக்கு ஈத்துக்
கிளைவழிப் பட்டனள், ஆங்கே கிளையும்
தன்கிளை அழிவுகண்டு அவள்வயிற் சேர
ஏனை மகளிரும் கிளைவழிச் சேர
மேலது உழையிளி கீழது கைக்கிளை  80

வம்புஉறு மரபின் செம்பாலை ஆயது
இறுதி ஆதி ஆக ஆங்குஅவை
பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது
படுமலை செவ்வழி பகர்அரும் பாலைஎனக்
குரல்குரல் ஆகத் தற்கிழமை திரிந்தபின்  85

முன்னதன் வகையே முறைமையின் திரிந்துஆங்கு
இளிமுத லாகிய ஏர்படு கிழமையும்
கோடி விளரி மேற்செம் பாலைஎன
நீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையின்
இணைநரம்பு உடையன அணைவுறக் கொண்டுஆங்கு  90

யாழ்மேற் பாலை இடமுறை மெலியக்
குழல்மேற் கோடி வலமுறை மெலிய
வலிவும் மெலிவும் சமனும் எல்லாம்
பொலியக் கோத்த புலமை யோனுடன்,
எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது  95

மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்
கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு
நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோல்அளவு இருபத்து நால்விரல் ஆக  100

எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி
உத்தரப் பலகையொடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோல் ஆக
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்  105

தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்தப்
பூதரை எழுதி மேல்நிலை வைத்துத்
தூண்நிழல் புறப்பட மாண்விளக்கு எடுத்துஆங்கு
ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்
கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்துஆங்கு  110

ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
மாலைத் தாமம் வளையுடன் நாற்றி
விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்துப்
பேர்இசை மன்னர் பெயர்ப்புறத்து எடுத்த
சீர்இயல் வெண்குடைக் காம்புநனி கொண்டு  115

கண்இடை நவமணி ஒழுக்கி மண்ணிய
நாவல்அம் பொலம்தகட்டு இடைநிலம் போக்கிக்
காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர சிறுவன் சயந்தன் ஆகென
வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்  120

புண்ணிய நன்னீர் பொற்குடத்து ஏந்தி
மண்ணிய பின்னர் மாலை அணிந்து
நலம்தரு நாளால் பொலம்பூண் ஓடை
அரசுஉவாத் தடக்கையில் பரசினர் கொண்டு
முரசுஎழுந்து இயம்பப் பல்இயம் ஆர்ப்ப  125

அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவும்
தேர்வலம் செய்து கவிகைக் கொடுப்ப
ஊர்வலம் செய்து புகுந்துமுன் வைத்துஆங்கு,
இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப,  130

வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
வலத்தூண் சேர்தல் வழக்குஎனப் பொருந்தி
இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த
தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்
சீர்இயல் பொலிய நீர்அல நீங்க  135

வாரம் இரண்டும் வரிசையில் பாடப்
பாடிய வாரத்து ஈற்றில்நின்று இசைக்கும்
கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்
குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப்  140

பின்வழி நின்றது முழவே, முழவொடு
கூடிநின்று இசைத்தது ஆமந் திரிகை
ஆமந் திரிகையொடு அந்தரம் இன்றிக்
கொட்டுஇரண்டு உடையதுஓர் மண்டிலம் ஆகக்
கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி  145

வந்த முறையின் வழிமுறை வழாமல்
அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர்,
மீத்திறம் படாமை வக்காணம் வகுத்துப்
பாற்பட நின்ற பாலைப் பண்மேல்
நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து  150

மூன்றுஅளந்து ஒன்று கொட்டி அதனை
ஐந்துமண் டிலத்தால் கூடை போக்கி
வந்தவா ரம்வழி மயங்கிய பின்றை,
ஆறும் நாலும் அம்முறை போக்கிக்
கூறிய ஐந்தின் கொள்கை போலப்  155

பின்னையும் அம்முறை பேரிய பின்றை,
பொன்இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென
நாட்டிய நன்னூல் நன்குகடைப் பிடித்துக்
காட்டினள் ஆதலின், காவல் வேந்தன்
இலைப்பூங் கோதை இயல்பினில் வழாமைத்  160

தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி
விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண்கழஞ்சு
ஒருமுறை யாகப் பெற்றனள் அதுவே
நூறுபத்து அடுக்கி எட்டுக்கடை நிறுத்த
வீறுஉயர் பசும்பொன் பெறுவதுஇம் மாலை,  165

மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎன
மான்அமர் நோக்கிஓர் கூனிகைக் கொடுத்து
நகர நம்பியர் திரிதரு மறுகில்
பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த,
மாமலர் நெடுங்கண் மாதவி மாலை  170

கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு
மணமனை புக்கு மாதவி தன்னொடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்.
வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்துஎன்.  175

(வெண்பா)

எண்ணும் எழுத்தும் இயல்ஐந்தும் பண்நான்கும்
பண்ணின்ற கூத்துப் பதினொன்றும் - மண்ணின்மேல்
போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன்
வாக்கினால் ஆடரங்கில் வந்து.

உரை

1-7 : தெய்வமால் ........... மாதவிதன்னை

(இதன்பொருள்) தெய்வமால்வரைத் திருமுனி - கடவுட்டன்மையுடைய பெரிய மலையாகிய பொதியிலின்கண் எஞ்ஞான்றும் வதிகின்ற தலைசிறந்த முனிவனாகிய அகத்தியனாலே முன்பொரு காலத்தே சபிக்கப்பட்டு; எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு - தன்னோடு ஒருங்கே எய்திய சாபத்தையுடைய இந்திரன் மகனாகிய சயந்தன் என்பவனோடு மண்ணுலகத்தே பிறப்பெய்தி; அருள - அம்முனிவனே அற்றைநாள் அவர்க்கிரங்கிச் சாபவிடை செய்தருளியபடியே; தலைக்கோல் தானத்து (இந்திர சிறுவனொடு) சாபம் நீங்கிய - இம்மண்ணுலகத்தே நாடக அரங்கின்கண்ணே (அச்சயந்தனோடு ஒருங்கே) சாபம் நீங்கிப்போன (உருப்பசியாகிய மங்கை மாதவியின் வழிமுதற்றோன்றிய) மலைப்பு அருஞ் சிறப்பின் - ஒப்பில்லாத சிறப்புண்மை காரணமாக; வானவர் மகளிர் சிறப்பின் குன்றாச் செய்கையொடு பொருந்திய - வானவருலகத்து உருப்பசி முதலிய அந்நாடக மகளிர்க்குரிய சிறப்பின் கண் சிறிதும் குறையாத நாடகத் தொழிற்றிறத்தோடு கூடிய; பிறப்பின் குன்றா - அவ்வுருப்பசி மரபிற் பிறந்த பிறப்பு நலங்களானும் ஒரு சிறிதும் குறையாத; பெருந்தோள் மடந்தை-தோள் முதலிய மூன்றுறுப்புக்களும் பெருகிய மடந்தை ஆகிய; தாது அவிழ் புரிகுழல் மாதவி தன்னை - தாதுவிரிகின்ற மலர்களையுடைய கடை குழன்று சுருண்ட கூந்தலையுடைய மாதவி என்னும் நாடகக் கணிகையை என்க.

(விளக்கம்) தெய்வவரை, மால்வரை எனத் தனித்தனி யியையும். திருமுனி-அகத்தியன். கம்பநாடரும் ஈண்டு அடிகளோதியவாறே தென்றமிழ் நாட்டகன் பொதியில் திருமுனிவன் (நாடவிட்ட - 31) என வோதுதல் உணர்க. திரு, ஈண்டுச் சிறப்பின் மேற்று.

இனி இக்காதையில் இவ்வேழடிகளும் பொருட் பொருத்தமின்றி நிற்றலுணர்க. இவற்றுள் சாபம் நீங்கிய என்புழி நீங்கிய என்னும் பெயரெச்சம் (4) வானவர் மகளிர் எனவரும் பெயரையாதல் (7) மாதவி என்னும் பெயரையாதல் கொண்டு முடிதல் வேண்டும். அங்ஙன முடிப்பின் வரலாற்றோடு பொருந்தாது. இங்ஙனம் பொருந்தாமை கண்ட பழைய வுரையாசிரியரிருவரும் பெரிதும் இடர்ப்படுவர். அவருள் அரும்பதவுரையாசிரியர், இந்திரகுமரனோடு என்றதனால் சயந்தகுமாரனோடே உருப்பசியும் சாபம் நீங்கிப்போனாள், என்க, எனவும். வானவர் மகளிர் - தளியிலார் எனவும், உருப்பசி வந்து சாபத்தாற் பிறக்கையால் அவள் வழியுள்ளாரையும் வானவர் மகளிர் என்றார், எனவும் ஓதுவர். இனி அடியார்க்கு நல்லார் வானவர் மகளிர் என்பதற்கு அரம்பையர் எனப் பொருள்கொண்டு, பின்னரும் உருப்பசியாகிய அம்மாதவி மரபில்வந்த... மாதவி என்பர். இவ்வாறு இடப்பாடுறும்படி அடிகளார் செய்யுள் செய்தனர் என்று நினைத்தற்கும் இடமில்லை. ஆகவே, இப்பழைய வுரையாசிரியர் காலத்திற்கு முன்பே நீங்கிய என்னும் பெயரெச்சத்தைக் கொண்ட பெயரும் பிறவும் அடங்கிய ஒன்று அல்லது இரண்டடிகள் விழ வெழுதினர் பண்டு ஏடெழுதியவர் என்று கருதுதல் மிகையன்று.

இனி, மலைப்பருஞ் சிறப்பின் வானவர் மகளிர் என்புழி வானவர் மகளிர் என்பதற்குப் பழைய உரையாசிரியரிருவரும் ஒருவருக்கொருவர் மாறுபட்டு உரை கூறுதல்தானும் அச்சொல் அவ்விடத்தே நிற்றல் பொருந்தாமை கண்டு இருவரும் இடர்ப்பட்டே ஒருவாறு ஒல்லுமாற்றாற் கூறிய வுரைகளே என்பது தேற்றம். ஆகவே, அச்சொல் வானவர் மகளின் என்னும் ஒருமைச் சொல்லே எழுதுவோர் பிழையால் வானவர் மகளிர் எனப் பன்மைச் சொல்லாய்த் திரிந்தது எனக் கொள்வோமாயின் வானவர் மகள் என்பது உருப்பசியைக் குறிப்பதாய் மேலே சாபநீங்கிய என்புழிக்கிடந்த பெயரெச்சத்திற்கும் பொருத்தமான முடிக்குஞ் சொல்லாவதைக் காணலாம். இங்ஙனம் கொள்ளவே இந்த ஏழடிகளின் பொருளும் இடர்ப்பாடு சிறிதுமின்றி ஆற்றொழுக்காக நடத்தலையும் காண்டல் கூடும். இத்திரிவுதானும் பழைய உரையாசிரியர் காலத்திற்கு முன்னரே நிகழ்ந்ததென்றே கொள்ளவேண்டும். இஃது எங்கருத்து மட்டுமேயாகலின் யாமும் பழைய உரையாசிரியர் போன்றே வானவர் மகளிர் என்ற பாடமே கொண்டு அதற்கு அவரினும் சிறப்ப வருவித்தும் வலிந்தும் பொருள் கூறுவோமாயினேம்.

இனி வானவர் மகளின் என்றே பாடங்கொள்ளின், சாபநீங்கிய மலைப்பருஞ் சிறப்பினையுடைய உருப்பசியாகிய வானவர் மகளினுக்குரிய சிறப்பிற்குன்றாச் செய்கையொடு பொருந்திய மரபிற் பிறந்த நலத்திற் சிறிதும் குன்றாத மடந்தையாகிய மாதவி தன்னை, எனப் பொருள் சிறிதும் முட்டுப்பாடின்றி நடத்தலுமுணர்க.

இனி, அகத்திய முனிவன் சாபத்திற்கிலக்காகி உருப்பசி மண்ணகத்தே பிறந்து மாதவியென்னும் பெயருடையளாய்ச் சயந்தனொடு சாபநீங்கிய வரலாற்றினை அடிகளாரே கடலாடு காதைக்கண் ஓதுவர். ஆங்கு அதுபற்றி விளக்கமாகக் கூறப்படும்.

தலைக்கோல் தானம் - நாடக வரங்கு. சிறப்பிற்குன்றாச் செய்கை யென்றது தனக்குரிய இலக்கணத்திற் சிறிதும் குறையாத கூத்துத் தொழிலை. இதனால் அடிகளார் இய மண்ணுலகத்துக் கணிகையரினும் காட்டில், மாதவிக்கே ஆடற்கலை சிறந்துரிமையுடைய மாண்பினை விதங்தார் ஆயிற்று. நாடக மகளிர்க்கியன்ற ஆடல் பாடல் அழகு என்னும் மூன்று பண்புகளுள் ஆடலும் பாடலும் பயிற்சியால் நிரம்புவனவாக அழகு பருவத்தால் நிரம்புவதாகலின் அதுதானும் நிரம்பினமை தோன்ற பெருந்தோள் மடந்தை தாதவிழ் புரிகுழல் மாதவி என விதந்தார். என்னை? தோளின் பருமை கூறவே அகலல்குல் கண்ணென மூவழிப் பெருகினமையும் இனஞ்செப்பு மாற்றால் கொள்ளக் கூறியவாறாயிற்று. பின்னும் மகளிர்க்குப் பேதைப்பருவத்துக்கூழை, கூந்தலாய் வளர்ந்து கடை குழன்று அழகானிரம்புவதும் பெதும்பைப் பருவத்தே ஆகலின் அப் பருவம் வந்தெய்தியமை தோன்றத் தாதவிழ் புரிகுழல் மாதவி என்றார்.

8-9 : ஆடலும் பாடலும் ............ குறைபடாமல்

(இதன்பொருள்) ஆடலும் பாடலும் அழகும் என்று கூறிய இம்மூன்றின் - நாடக மகளிர்க்கு இன்றியமையாதன, கூத்தும் பாட்டும் அழகும் ஆகிய இம்மூன்றுமாம் என்று கூத்தநூலாராற் கூறப்பட்ட இந்த மூன்று நலங்களுள் வைத்து; ஒன்று குறைபடாமல் - ஒன்றேனும் குறைபடாமைப் பொருட்டு என்க.

(விளக்கம்) நாடக மகளிர்க்கு வேண்டுவன வேறு பல நலங்களும் உளவாயினும் அவற்றுள்ளும் இம்மூன்றும் தலைசிறந்த நலங்களாதலின் இவற்றைமட்டும் விதந்தோதினர். இம்மூன்றும் அவர்க்கின்றியமையாவென்பதை,

நாடவர் காண நல்லரங் கேறி
ஆடலும் பாடலும் அழகுங் காட்டிச்
சுருப்புநாண் கருப்புவில் அருப்புக்கணை தூவச்
செருக்கயல் நெடுங்கட் சுருக்குவலைப் படுத்துக்
கண்டோர் நெஞ்சம் கொண்டகம் புக்கு

எனவரும் மணிமேகலையானும் (18 : 103-107) உணர்க.

இஃது, ஏழாண்டியற்றியோரீராண்டிற்....... காட்டல் வேண்டி என்பதற்குக் குறிப்பேதுவாய் நின்றது. இவை குறைவுபடாமைக்குக் காரணம் உடையளாகலின் என்பர் அடியார்க்குநல்லார். அவர் இவள் உருப்பசி மரபில் பிறந்தமை கருதி அக்காரணத்தின் காரியம் இவை என்கின்றார்.

10-11: ஏழாண்டியற்றி.......வேண்டி

(இதன்பொருள்) ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈர் ஆறு ஆண்டில்-ஐயாட்டைப் பருவமாகிய பேதைப் பருவத்திலேயே தண்டியம் பிடிப்பித்து ஏழாண்டுகள் இடையறாது பயிற்றுவித்து மேற்கூறிய ஆடலும் பாடலும் பயிற்சியால் நிரம்பா நிற்க இயற்கையான் அழகும் நிரம்பிய பன்னீராட்டைப் பருவமாகிய மங்கைப்பருவத்தே; சூழ்கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி - வீரக்கழல் சூழ்ந்த சோழமன்னனுடைய நல்லவைக்கண் அரங்கேறிக் காட்டுதலை விரும்பி என்க.

(விளக்கம்) இளமையிற் கல் என்பதுபற்றி ஐயாண்டிற்றண்டியம் பிடித்தல் வேண்டிற்று. இதனை,

பண்ணியம்வைத் தானேமுகன் பாதம் பணிந்துநாட்
புண்ணிய வோரை புகன்றனகொண்-டெண்ணியே
வண்டிருக்குங் கூந்தன் மடவரலை யையாண்டில்
தண்டியஞ்சேர் விப்பதே சால்பு (அடியார்க்-மேற்கோள்)

எனவரும் வெண்பாவானுணர்க.

இனி, ஏழாண்டியற்றி என்றதனால் அக்கூத்துக்கலையின் அருமை பெருமைகளும் விளங்கும். இயற்றுதல்-பயிற்றுவித்தல், தண்டியம் பிடித்தல் ஆடற்கலைக்குக் கால்கோள் செய்யும் ஒரு சடங்கு, கல்விக்குக் கால்கோடலை மையோலை பிடித்தல் என்பதுபோல வென்க. தண்டியம் - தண்டு கோல்.

இனி, பரத சேனாபதியார்,

வட்டணையும் தூசியும் மண்டலமும் பண்ணமைய
எட்டுட னீரிரண்டாண் டெய்தியபின் - கட்டளைய
கீதக் குறிப்பு மலங்கார முங்கிளரச்
சோதித் தரங்கேறச் சூழ்

எனவும்,
நன்னர் விருப்புடையோள் நற்குணமு மிக்குயர்ந்தோள்
சொன்னகுலத் தாலமைந்த தொன்மையளாய்ப் - பன்னிரண்டாண்
டேய்ந்ததற்பின் ஆடலுடன் பாடலழ கிம்மூன்றும்
வாய்ந்தவரங் கேற்றல் வழக்கு

எனவும் ஓதிய வெண்பாக்கள் ஆடற்கலை பயிற்றுமாறும் அக்கலைக்குரிய தலையாய மாணவி மாண்பும் அரங்கேறும் பருவமும் அறிவித்தல் உணர்க.

ஆடலாசிரியன் அமைதி

12-25 : இருவகைக்கூத்தின் ........... ஆசான்றன்னொடும்

(இதன்பொருள்) இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து வேத்தியல் என்றும் பொதுவியல் என்றும் இரு வேறு வகையாகக் கூறப்பட்ட கூத்துக்களின் இலக்கணங்களையும் ஐயந்திரிபற அறிந்து; பலவகைக்கூத்தும் விலக்கினிற் புணர்த்து - இவ்விரு வகைக் கூத்துக்களினின்றும் விரிவகையால் பல்வேறுவகைப்பட்டு நிகழுகின்ற கூத்துக்களை யெல்லாம் விலக்குறுப்புக்களோடு பொருந்தப் புணர்க்கவும் வல்லனாகி, பதினோராடலும் பாட்டுங் கொட்டும் விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து ஆங்கு-முற்கூறிய இருவகைக் கூத்துக்களையன்றியும், அல்லிய முதற்கொடு கொட்டி யீறாகக்கிடந்த பதினொருவகை ஆரியக்கூத்துக்களையும் அக்கூத்துக்களுக்குரிய பாட்டுக்களையும் அவற்றிற்குரிய இசைக் கருவிகளையும் அவற்றிற்குரிய இலக்கண விதியினால் மாட்சிமையுடைய நூல்களின் வாயிலாய் ஐந்திரிபற நன்றாக அறிந்தவனாய்த் தான் அறிந்தவாறே; ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும் கூடிய நெறியின கொளுத்துங் காலை - கூத்தும் பாட்டும் தாளங்களும் அவற்றின் வழிவந்த தூக்குக்களும் தம்மிற்கூடிய நெறியையுடையனவாகிய முற்கூறப்பட்ட பல்வேறு வகைப்பட்ட கூத்துக்களையும் மாணவர்க்குப் பயிற்றுவிக்கும்பொழுது பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும் கொண்ட வகை அறிந்து-பிண்டிக்கை பிணையற்கை எழிற்கை தொழிற்கை என்று சொல்லப்பட்ட நான்கனையும் நூலினகத்துக்கொண்ட கூறுபாட்டை யறிந்து; கூத்துவருகாலை - கூத்துக்கள் நிகழுமிடத்தே; கூடை செய்த கை வாரத்துக் களைதலும் - கூடைக்கதியாகச் செய்த கை வராக்கதியுட் புகாமலும்; வாரஞ் செய்த கை கூடையில் களைதலும்- வாரக்கதியாகச் செய்த கை கூடைக்கதியுட் புகாமலும்; பிண்டி செய்தகை ஆடலில் களைதலும் - அவி நயம் செய்த கை ஆடல் நிகழுமிடத்தே நிகழாமலும்; ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும் - அவிநயம் நிகழுமிடத்தே ஆடல் நிகழாமலும் பேணி; குரவையும் வரியும் விரவல செலுத்தி-குரவைக் கூத்தும் வரிக்கூத்தும் தம்மில் கலவாதபடி நிகழ்த்தி; ஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும் - பயிற்றுந் திறமுடைய ஆடற்கலைக்குச் சிறந்த ஆசிரியனோடும் என்க.

(விளக்கம்) (12) இருவகைக் கூத்தாவன-வேத்தியற் கூத்தும் பொதுவியற் கூத்துமாம். என்னை? வேத்தியல் பொதுவியல் என்று, இருதிறத்தின் (34) என அடிகளாரே பின்னர் விளக்கமாக வோதுதலான் ஈண்டு அடிகளார் கூறிய இருவகைக் கூத்திற்கு இப்பொருளே பொருந்துவதாம். இவரோ டொருகாலத்தவராகிய மணி மேகலையாசிரியர் தாமும் வேத்தியல் பொதுவியல் என்றிருதிறத்துக் கூத்தும், (2.18-16) என இங்ஙனமே ஓதுதலுமுணர்க. இதற்குப் பழைய வுரையாசிரியரிருவரும் கூறும் உரைகள் தம்முள் மாறுபடுவனவாயினும் அவையும் நம்மனோரால் அறியற்பாலனவேயாம் ஆதலால் அவற்றையும் கீழே தருவாம். அரும்பதவுரையாசிரியர் தேசி; மார்க்கம் என இவை என்பர். அடியார்க்கு நல்லார்-இருவகைக் கூத்தாவன-வசைக்கூத்து, புகழ்க்கூத்து; வேத்தியல் பொதுவியல்; வரிக்கூத்து, வரிச்சாந்திக்கூத்து; சாந்திக்கூத்து, விநோதக்கூத்து; ஆரியம்; தமிழ்; இயல்புக்கூத்து, தேசிக்கூத்து என, (இவ்விரண்டாகக் கூறப்படுகின்ற) பலவகைய, இவை விரிந்த நூல்களிற் காண்க. எனவும்,

ஈண்டு இருவகையாவன சாந்தியும் விநோதமும்; என்னை? அவை தாம், சாந்திக் கூத்தும் விநோதக் கூத்துமென் றாய்ந்துற வகுத்தனன் அகத்தியன்றானே என்றாராகலின், எனவும்,

இவற்றுள், சாந்திக் கூத்தே தலைவன் இன்பம் ஏத்தி நின்றாடிய வீரிரு நடமவை சொக்க மெய்யே அவிநயம் நாடகம், என்றிப்பாற்படூஉம் என்மனார் புலவர், என்பதனால் நாயகன் சாந்தமாக ஆடிய கூத்துச் சாந்திக் கூத்தெனப்படும். எனவும் இவற்றுள், சொக்கமென்றது சுத்த நிருத்தம். அது நூற்றெட்டுக்கரணமுடைத்து-மெய்க்கூத்தாவது-தேசி வடுகு சிங்களம் என மூவகைப்படும். இவை மெய்த்தொழிற் கூத்தாகலின் மெய்க்கூத்தாயின. இவை அகச்சுவைபற்றி யெடுத்தலின், அகமார்க்கம் என நிகழ்த்தப்படும் எனவும்,

அகச்சுவையாவன - இராசதம், தாமதம், சாத்துவிகம் என்பன. குணத்தின் வழிய(து) அகக்கூத் தெனப்படுமே என்றார் குண நூலுடையார்; அகத்தெழு சுவையான் அகமெனப் படுமே என்றார் சயந்த நூலுடையாருமெனக் கொள்க எனவும்,

அவிநயக் கூத்தாவது: -கதை தழுவாது பாட்டினது பொருளுக்குக் கைகாட்டி வல்லபஞ் செய்யும் பலவகைக்கூத்து, எனவும்.

நாடகம் - கதை தழுவிவருங்கூத்து. எனவும்,

விநோதக் கூத்தாவது-குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை என்பர் எனவும் இவற்றுள்,

குரவையென்பது - காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைந்தாடுவது; குரவை என்பது கூறுங்காலைச் செய்தோர் செய்த காமமும் விறலும் எய்த வுரைக்கும் இயல்பிற் றென்ப என்றாராகலின் எனவும், குரவை - வரிக்கூத்தின் ஓருறுப்பு. கலிநடம் என்றது கழாய்க் கூத்து. குடக்கூத்து - மேற்பதினொராடலுட் காட்டப்படும் எனவும், கரணமாவது - படிந்த ஆடல். நோக்கென்பது பாரமும் நுண்மையும் மாயமு முதலானவற்றையுடையது. தோற்பாவை என்றது தோலாற் பாவை செய்து ஆட்டுவிப்பது: இன்னும் நகைத்திறச்சுவை யென்பதனோடு கூட்டி ஏழென்பாருமுளர்; அஃதாவது விதூடகக்கூத்து. இதனை வசைக்கூத்தென்பாருமுளர் எனவும்,

வசை. வேத்தியல் பொதுவியலென இரண்டு வகைப்படும். அவை முந்து நூல்களிற் கண்டு கொள்க எனவும், வெறியாட்டு முதலாகத் தெய்வமேறி யாடுகின்ற அத்திறக்கூத்துக்களுங் கூட்டி ஏழென்பாரு முளர். என்னை? எழுவகைக்கூத்து மிழிகுலத்தோரை ஆடவகுத்தனனகத்தியன் றானே என்றாராகலின் எனவும், இவற்றின் இலக்கணங்களாவன - அறுகை நிலையும் ஐவகைக் பாதமும் ஈரெண்வகைய வங்கக்கிரியையும் வருத்தனை நான்கும் நிருத்தக்கை முப்பதும் அத்தகு தொழில வாகும் என்ப, இவை விரிப்பிற் பெருகும், எனவும் ஓதுவர்.

13 - பல்வகைக்கூத்து. வேத்தியல் பொதுவியல் என்னும் இருவகைக் கூத்துக்களினும் விரிவகையாற் பல வேறு வகைப்பட்டு நிகழும் கூத்துக்களையும் என்க.

(அடியார்க் - உரை) பல்வகைக் கூத்தாவன - வென்றிக்கூத்து, வசைக்கூத்து, விநோதக்கூத்து முதலியன. என்னை? பல்வகை யென்பது பகருங்காலை வென்றி வசையே விநோத மாகும் என்றாராகலின்.

அவற்றுள் மாற்றா னொடுக்கமும் மன்ன னுயர்ச்சியும் மேற்படக் கூறும் வென்றிக் கூத்தே.

பல்வகை யுருவமும் பழித்துக் காட்ட வல்லவனாதல் வசையெனப்படுமே. என இவை (என்று கூறப்பட்ட வென்றிக்கூத்தும் வசைக் கூத்தும்) தாளத்தினியல்பினவாகும் (தாளத்தோடு நிகழும் இயல்) புடையன என்றவாறு).

விநோதக் கூத்து வேறுபா டுடைத்து, வென்றி விநோதக் கூத்தென விளம்புவர். இதன் கருத்து: கொடித்தேர் வேந்தரும் குறுநில மன்னரு முதலாகவுடையோர் பகை வென்றிருந்தவிடத்து விநோதங்காணுங் கூத்தென்பதாம்.

ஈண்டு அடியார்க்கு நல்லார் பல்வகைக்கூத்தும் என்பதற்கு. முற் கூறப்பட்ட இருவகைக் கூத்தினும் வேறாகிய பல வேறு வகைக்கூத்துக்களும் என்பதுபட வுரைத்தாரேனும் இவையெல்லாம் வேத்தியல் பொதுவியல் என்னும் இருவகைக்கூத்தின் விகற்பங்களாகவே கொள்க.

விலக்கு - விலக்கென்னும் உறுப்புக்கள், விலக்கினின் என்புழி இன் சாரியை, இதனைச் சாரியை என்ற பின் மூன்றனுருபு ஐந்தனோடு மயங்கிற்று எனல் மாறுகொளக் கூறலாதலறிக. சாரியை நிற்ப உருபு தொக்க தெனலே நேரிதாம்.

பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்தலாவது - நகைக்கூத்து முதலாகப் பலவகைப்பட்ட புறநடங்களையும், வேந்து விலக்கும், படை விலக்கும் ஊர்விலக்கு மென்று சொல்லாநின்ற விலக்குக்களாகிய பாட்டுக்களுக்குறுப்பாய் வருவனவற்றுடனே பொருந்தப்புணர்த்தல். அஃதாவது அவற்றைப் பாட்டுக்களில் வருமாறு செய்தல்.

விலக்குறுப்புக்கள் பதினான்கு வகைப்படும்: அவையிற்றை,

விலக்குறுப் பென்பது விரிக்குங் காலை
பொருளும் யோனியும் விருத்தியும் சந்தியும்
சுவையுஞ் சாதியுங் குறிப்பும் சத்துவமும்
அபிநயம் சொல்லே சொல்வகை வண்ணமும்

வரியுஞ் சேதமும் உளப்படத் தொகைஇ
இசைய வெண்ணின் ஈரே ழுறுப்பே

எனவரும் நூற்பாவான் அறிக. இவ்வுறுப்புக்கள் இசைத்தமிழ் ஆகுங் காலத்தே விலக்குண்டு அப்பாடலே நாடகத் தமிழாகுங் காலத்தே பாட்டொடு புணர்க்கப்படுமாகலின் இப்பெயர் பெற்றன போலும்.

இவற்றுள், (1) பொருள் அறம் பொருள் இன்பம் வீடு என நான்கு வகைப்படும். இந்நாற் பொருளும் நாடகத்தின்கண் பிரிந்தும் கூடியும் வருமாற்றால் அந்நாடகந்தாமும் நான்கு வகைப்படும். அவையாவன- அறமுதலிய நான்கும் அமைந்தது நாடகம் எனவும், அறம்பொருள் இன்பம் ஆகிய மூன்றமைந்தது பிரகரணப் பிரகரணம் எனவும், அறமும் பொருளுமே அமைந்தது பிரகரணம் எனவும், அறம் ஒன்றுமே அமைந்தது அங்கம் எனவும் கொள்ளப்படும். மேலும் இவற்றை நிரலே அந்தணச் சாதி முதலிய நால்வகைச்சாதி நாடகங்களாகவும் ஓதுப. இவை நான்கும் நாடகம் என்னும் பெயர்க்குரியனவாகும்.

(2) யோனி என்பதும், நான்கு வகைப்படும். அவையாவன-உள்ளோன் தலைவனாக உள்ளதொரு பொருண்மேற்செய்தலும், இல்லோன் தலைவனாக உள்ளதொரு பொருண்மேற் செய்தலும், உள்ளோன் தலைவனாக இல்லதொரு பொருண்மேற் செய்தலும், இல்லோன் தலைவனாக இல்லதொரு பொருண்மேற் செய்தலும் எனவிவை. என்னை?

உள்ளோற் குள்ளதும் இல்லோற் குள்ளதும்
உள்ளோற் கில்லதும் இல்லோற் கில்லதும்
எள்ளா துரைத்தல் யோனி யாகும்

எனவரும் நூற்பாவும் காண்க.

விருத்தியும் நான்கு வகைப்படும். அவை: சாத்துவதி, ஆரபடி, கைசிகி, பாரதி என்பனவாம். இவற்றுள் - சாத்துவதி, அறம்பொருளாகத் தெய்வமானிடர் தலைவராக வருவதாம். ஆரபடி, பொருள் பொருளாக வீரராகிய மானிடர் தலைவராக வருவது. கைசிகி, காமம் பொருளாகக் காமுகராகிய மக்கள் தலைவராக வருவது. பாரதி. கூத்தன் தலைவனாகக் கூத்தனும் கூத்தியும் பொருளாகக் காட்டியும் உரைத்தும் வருவதாம்.

இவற்றுள் பாரதி விருத்தி மூன்றும் போலப் பிறிதின் தலைவர் பிறிது பொருள்பற்றி விருத்தி கூறாது பொருளாலே விருத்தி கூறும் என்பர்.

சந்தி ஐந்துவகைப்படும். அவையாவன: முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என்பனமாம். இவற்றுள் முகம் எனப்படுவது பண்படுத்தப்பட்ட நிலத்திலிட்ட வித்துப் பருவஞ்செய்து முளைத்து முடிவது போல்வதாம். பிரதிமுகம் - அங்ஙனம் முளைத்தலை முதலாகக் கொண்டு தோடு தோன்றி நாற்றாய் முடிவது போல்வது. கருப்பம்-அந்நாற்று முதலாய்க் கருவிருந்து பெருகித் தன்னுட் பொருள் பொதிந்து கருப்ப முற்றி நிற்பது போல்வது. விளைவு-கருப்ப முதலாய் விரிந்து கதிர் திரண்டிட்டுக் காய்த்துத் தாழ்ந்து முற்றி விளைந்து முடிவது போல்வது. துய்த்தல் - விளைந்த பொருளை அறுத்துப் போரிட்டுக் கடாவிட்டுத் தூற்றிப் பொலி செய்து கொண்டுபோய் உண்டு மகிழ்வது போல்வது. இவை ஐந்து சந்தியும் நாட்டியக் கட்டுரை.

சுவை ஒன்பது வகைப்படும்; அவையாவன: நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, நடுவுநிலை என்பன.

சாதி நான்கு வகைப்படும், அவையாவன : நாடகம், அந்தணர்சாதி பிரகரணப் பிரகரணம், அரசர்சாதி; பிரகரணம், வணிகர்சாதி; அங்கம் சூத்திரச்சாதி. குறிப்பு, நகை முதலிய சுவையுணர்வு பிறந்தவழி அவற்றால் தோன்றும் உள்ள நிகழ்ச்சி. எனவே, இஃது ஒன்பது வகைப்படும் என்பது பெற்றாம்.

சத்துவம், உள்ளத்தின்கண் சுவையுணர்வு பிறந்தவழி கண்ணீரரும் பல் மெய்ம்மயிர் சிலிர்த்தல் முதலாக வுடம்பின்கண் நிகழும் வேறுபாடுகள். சத்துவம் எனினும் விறல் எனினும் ஒக்கும். விறல் தானும் பத்துவகைப்படும்; அவையாவன: மெய்ம்மயிர் சிலிர்த்தல், கண்ணீர் வார்தல், நடுக்கமெடுத்தல், வியர்த்தல், தேற்றம், களித்தல், விழித்தல், வெதும்பல், சாக்காடு, குரற்சிதைவு என்னுமிவை.

இவ்விறல்களும் சுவையவிநயம் எனவும்படும். அவை வருமாறு:

(1) நகை: நகையி னவிநயம் நாட்டுங் காலை, முகைபடு நகையது பிறர் நகை யுடையது, கோட்டிய முகத்தது.....விட்டுமுரி புருவமொடு விலாவிறுப் புடையது, செய்வது பிறிதாய் வேறுசே திப்பதென்றையமில் புலவர் ஆய்ந்தனரென்ப.

(2) அழுகை அவலத் தவிநயம் அறிவரக் கிளப்பின். கவலையொடு புணர்ந்த கண்ணீர் மாரியும், வாடிய நீர்மையும் வருந்திய செலவும். பீடழி யிடும்பையும் பிதற்றிய சொல்லும், நிறைகை யழிதலும் நீர்மையில் கிளவியும் பொறையின் றாகலும் புணர்த்தினர் புலவர்.

(3) இனிவரல்: இழிப்பி னவிநய மியம்புங் காலை, இடுக்கிய கண்ணும் எயிறுபுறம் போதலும், ஒடுங்கிய முகமு முஞற்றாக் காலும், சோர்ந்த யாக்கையுஞ் சொன்னிரம் பாமையும், நேர்ந்தன வென்ப நெறியறிந் தோரே.

(4) மருட்கை : அற்புத வவிநய மறிவரக் கிளப்பிற், சொற்சோர்வுடையது சோர்ந்த கையது, மெய்ம்மயிர் குளிர்ப்பது வியத்தக வுடைய தெய்திய திமைத்தலு மிகவாதென்றையமில் புலவரறைந்தன ரென்ப.

(5) அச்சம்: அச்ச வவிநயம் ஆயுங்காலை ஒடுங்கிய வுடம்பு நடுங்கிய நிலையு மலங்கிய கண்ணும் கலங்கிய வுளனும், கரந்துவர லுடைமையுங் கையெதிர் மறுத்தலும், பரந்த நோக்கமு மிசைபன் பினவே.

(6) பெருமிதம்: வீரச்சுவை யவிநயம் விளம்புங் காலை, முரிந்த புருவமுஞ் சிவந்த கண்ணும், பிடித்த வாளும் கடித்த வெயிறும் மடித்த வுதடுஞ் சுருட்டிய நுதலும், திண்ணென வுற்றசொல்லும் பகைவரை, எண்ணல் செல்லா விகழ்ச்சியும் பிறவும், நண்ணு மென்ப நன்குணர்ந்தோரே.

(7) வெகுளி: இதற்குரிய நூற்பா மறைந்தொழிந்தது ஆதலான், அதற்குரிய மெய்ப்பாடுகட்கு, கைபிசையா வாய்மடியாக் கண்சிவவா வெய்துயிரா மெய்குலையா, வேரா வெகுண்டெழுந்தான் எனவரும் தண்டியலங்காரத்து மேற்கோள் (70) அதற்குப் பொருந்துமாதலின் அதனைக் கொள்க.

( 8) உவகை: காம வவிநயங் கருதுங் காலைத் தூவுள்ளுறுத்த வடிவுந் தொழிலும், காரிகை கலந்த கடைக்கணுங் கவின்பெறு மூரன் முறுவல் சிறுநிலா வரும்பலு, மலர்ந்த முகனு மிரந்தமென் கிளவியும் கலந்தன பிறவுங் கடைப்பிடித் தனரே.

(9) நடுவுநிலை: (சமனிலை) நாட்டுங்காலை நடுவுநிலை யவிநயம், கோட்பா டறியாக் கொள்கையு மாட்சியு, மறந்தரு நெஞ்சமு மாறிய விழியும், பிறழ்ந்த காட்சியு நீங்கிய நிலையும், குறிப்பின் றாகலுந் துணுக்க மில்லாத் தகைமிக வுடைமையுந் தண்ணென வுடைமையும், அளத்தற் கருமையு மன்பொடு புணர்தலும், கலக்கமொடு புணர்ந்த நோக்குங் கதிர்ப்பும் விலக்கா ரென்ப வேண்டுமொழிப் புலவர்.

இனி, இம்மெய்ப்பாடுகள் தாம் அவ்வச் சுவைகளில் எண்ணம் வந்தால் உடம்பிற் றோன்றும் உடம்பினும் காட்டில் முகத்தின்கண் மிகத்தோன்றும்; முகத்தினும் காட்டின் கண்ணில் மிகத்தோன்றும், கண்ணிடத்தும் கடையகத்தே மிகத்தோன்றும் என்பர்.

இனி, அவிநயம் என்றது பாவகத்தை; அஃது இருபத்து நான்கு வகைப்படும் என்ப; அவை வருமாறு:-

(1) வெகுண்டோ னவிநயம் விளம்புங்காலை, கடித்த வாயும் மலர்ந்த மார்பும், துடித்த புருவமுஞ் சுட்டிய விரலும், கன்றின வுள்ள மொடு கைபுடைத் திடுதலும், அன்ன நோக்கமோ டாய்ந்தனர் கொளலே.

(2) பொய்யில் காட்சிப் புலவோ ராய்ந்த (2) ஐயமுற்றோ னவிநய முரைப்பின் வாடிய வுறுப்பு மயங்கிய நோக்கமும், பீடழி புலனும் பேசா திருத்தலும், பிறழ்ந்த செய்கையும் வான்றிசை நோக்கலும், அறைந்தனர் பிறவு மறிந்திசி னோரே.

(3) மடியி னவிநயம் வகுக்குங் காலை, நொடியொடு பலகொட்டாவி மிகவுடைமையு, மூரி நிமிர்த்த முனிவொடு புணர்தலும், காரணமின்றி யாழ்ந்துமடிந் திருத்தலும், பிணியு மின்றிச் சோர்ந்த செலவோ டணிதரு புலவ ராய்ந்தன ரென்ப.

(4) களித்தோ னவிநயம் கழறுங் காலை, ஒளித்தவை யொளியா னுரைத்த லின்மையும் கவிழ்ந்துஞ் சோர்ந்துந் தாழ்ந்துந் தளர்ந்தும் வீழ்ந்தசொல்லொடு மிழற்றிச் செய்தலும், களிகைக் கவர்ந்த கடைக்கணோக் குடைமையும், பேரிசை யாளர் பேணினர் கொளலே.

(5) உவந்தோ னவிநய முரைக்குங் காலை, நிவந்தினி தாகிய கண்மலருடைமையும், இனிதி னியன்ற வுள்ள முடைமையும், முனிவி னகன்ற முறுவனகை யுடைமையும், இருக்கையுஞ் சேறலுங் கானமும் பிறவும் ஒருங்குட னமைந்த குறிப்பிற் றன்றே.

(6) அழுக்கா றுடையோ னவிநய முரைப்பின் இழுக்கொடு புணர்ந்த விசைப்பொருளுடைமையும் கூம்பிய வாயுங் கோடிய வுரையும். ஓம்பாது விதிர்க்குங் கைவகை யுடைமையும் ஆரணங்காகிய வெகுளி யுடைமையும், காரணமின்றி மெலிந்தமுக முடைமையு, மெலிவொடு புணர்ந்த விடும்பையு மேவரப், பொலியு மென்ப பொருந்து மொழிப் புலவர்.

(7) இன்பமொடு புணர்ந்தோ னவிநய மியம்பில், துன்ப நீங்கித் துவர்த்த யாக்கையும், தயங்கித் தாழ்ந்த பெருமகிழ் வுடைமையு, மயங்கி வந்த செலவுநனி யுடைமையும், அழகுள்ளுறுத்த சொற்பொலி வுடைமையும், எழிலொடு புணர்ந்த நறுமல ருடைமையுங், கலங்கள் சேர்ந் தகன்ற தோண்மார் புடைமையு, நலங்கெழு புலவர் நாடினர் என்ப.

(8) தெய்வ முற்றோ னவிநயஞ் செப்பிற் கைவிட் டெறிந்த கலக்க முடைமையு, மடித்தெயிறு கௌவிய வாய்த்தொழி லுடைமையும், துடித்த புருவமுந் துளங்கிய நிலையுஞ், செய்ய முகமுஞ் சேர்ந்த செருக்கும், எய்து மென்ப வியல்புணர்ந் தோரே.

(9) ஞஞ்ஞை யுற்றோ னவிநய நாடிற் பன்மென் றிறுகிய நாவழிவுடைமையு, நுரை சேர்ந்து கூம்பும் வாயு நோக்கினர்க் குரைப்போன் போல வுணர்விலாமையும், விழிப்போன் போல விழியா திருத்தலும், விழுத்தக வுடைமையு மொழுக்கி லாமையும், வயங்கிய திருமுக மழுங்கலும் பிறவும், மேவிய தென்ப விளங்குமொழிப் புலவர். இஃது ஏமுறு மாக்கள விநயம்; அஃதாவது, மயக்கமுற்றோ னவிநயம் என்க.

(10) சிந்தையுடம் பட்டோ னவிநயத் தெரியின் முந்தை யாயினும், பீடித்தகைமே லடைத்த கவினும், முடித்த லுறாத கரும நிலைமையும் சொல்லுவது யாது முணரா நிலைமையும், புல்லு மென்ப பொருந்து மொழிப் புலவர்.

(11) துஞ்சா நின்றோ னவிநயத் துணியின் எஞ்சுத லின்றி யிருபுடை மருங்கு, மலர்ந்துங் கவிழ்ந்தும் வருபடை யியற்றியும், அலர்ந் துயிர்ப்புடைய வாற்றலும் ஆகும்.

(12) இன்றுயி லுணர்ந்தோ னவிநய மியம்பின், ஒன்றிய குறுங் கொட் டாவியு முயிர்ப்பும், தூங்கிய முகமுந் துளங்கிய வுடம்பும், ஓங்கிய திரிபு  மொழிந்தவுங் கொளலே.

(13) செத்தோ னவிநயஞ் செப்புங்காலை, அத்தக வச்சமும், அழிப்பு மாக்கலும், கடித்த நிரைப்பலின் வெடித்துப் பொடித்துப் போந்த துணி வுடைமையும் வலிந்த வுறுப்பு, மெலிந்த வகடு மென்மை மிக வுடைமையும் வெண்மணி தோன்றக் கருமணி கரத்தலும் உண்மையிற் புலவ ருணர்ந்த வாறே.

(14) மழை பெய்யப் பட்டோ னவிநயம் வகுக்கின், இழிதக வுடைய வியல்புநனி வுடைமையும், மெய்கூர் நடுக்கமும் பிணித்தலும் படாத்தை மெய்பூண் டொடுக்கிய முகத்தோடு புணர்த்தலும், ஒளிப்படு மன்னி லுலறிய கண்ணும், விளியினுந் துளியினு மடிந்த செவி யுடைமையும், கொடுகிவிட்டெறிந்த குளிர்மிக வுடைமையும், நடுங்கு பல்லொலி யுடைமையு முடியக் கனவுகண் டாற்றா னெழுதலு முண்டே. 

(15) பனித்தலைப் பட்டோ னவிநயம் பகரின், நடுக்க முடைமையு நகைபடு நிலைமையுஞ், சொற்றளர்ந் திசைத்தலு மற்றமி லவதியும், போர்வை விழைதலும் புந்திநோ வுடைமையும், நீறாம் விழியுஞ் சேறு முனிதலும், இன்னவை பிறவு மிசைந்தனர் கொளலே.

(16)உச்சிப் பொழுதின் வந்தோ னவிநயம், எச்ச மின்றி யியம்புங் காலை, சொரியா நின்ற பெருந்துய ருழந்து, தெரியா நின்றவுடம் பெரியென்னச் சிவந்த கண்ணு மயர்ந்த நோக்கமும் பயந்த தென்ப பண்புணர்ந் தோரே.

(17) நாண முற்றோ னவிநய நாடின், இறைஞ்சிய தலையு மறைந்த செய்கையும், வாடிய முகமுங் கோடிய வுடம்பும், கெட்ட வொளியுங் கீழ்க்க ணோக்கமும் ஒட்டின ரென்ப வுணர்ந்திசி னோரே.

(18) வருத்த முற்றோ னவிநயம் வகுப்பிற், பொருத்த மில்லாப் புன்க ணுடைமையும், சோர்ந்த யாக்கையுஞ் சோர்ந்த முடியும், கூர்ந்த வியர்வுங் குறும்பல் லுயர்வும், வற்றிய வாயும் வணங்கிய வுறுப்பும் உற்ற லென்ப வுணர்ந்திசி னோரே.

(19) கண்ணோ வுற்றோ னவிநயங் காட்டி, னண்ணிய கண்ணீர்த் துளிவிரற் றெறித்தலும், வளைந்தபுரு வத்தொடு வாடிய முகமும், வெள்ளிடை நோக்கின் விழிதரு மச்சமும், தெள்ளிதிற் புலவர் தெளிந்தனர் கொளலே.

(20) தலைநோ வுற்றோ னவிநயஞ் சாற்றி, னிலைமை யின்றித் தலையாட் டுடைமையுங், கோடிய விருக்கையுந் தளர்ந்த வேரொடு, பெருவிர லிடுக்கிய நுதலும் வருந்தி, ஒடுங்கிய கண்ணொடு பிறவும், திருந்து மென்ப செந்நெறிப் புலவர்.

(21) அழற்றிறம் பட்டோ னவிநய முரைப்பின், நிழற்றிறம் வேண்டு நெறிமையின் விருப்பும், அழலும் வெயிலுஞ் சுடரு மஞ்சலும், நிழலு நீருஞ் சேறு முவத்தலும், பனிநீ ருவப்பும் பாதிரித் தொடையலும், நுனிவிர லீர மருநெறி யாக்கலும், புக்க துன்பமொடு புலர்ந்த யாக்கையும், தொக்க தென்ப துணிவறிந் தோரே.

(22) சீத முற்றோ னவிநயஞ் செப்பி, னோதிய பருவரலுள்ளமோ டுழத்தலும், ஈர மாகிய போர்வை யுறுத்தலும், ஆர வெயிலுழந் தழலும் வேண்டலும், உரசியு முரன்று முயிர்த்து முரைத்தலும், தக்கன பிறவுஞ் சாற்றினர் புலவர்.

(23) வெப்பி னவிநயம் விரிக்குங் காலைத், தப்பில் கடைப்பீடித் தன்மையுந் தாகமும், எரியி னன்ன வெம்மையோ டியைவும், வெருவரு மியக்கமும் வெம்பிய விழியும், நீருண் வேட்கையு நிரம்பா வலியும், ஒருங் காலை யுணர்ந்தனர் கொளலே.

(24) கொஞ்சிய மொழியிற் கூரெயிறு மடித்தலும், பஞ்சியின் வாயிற் பனிநுரை கூம்பலும். தஞ்ச மாந்தர் தம்முக நோக்கியோர், இன்சொ லியம்புவான் போலியம் பாமையும், நஞ்சுண் டோன்ற னவிநய மென்ப. சொல்லிய வன்றியும் வருவன வுளவெனிற், புல்லுவழிச் சேர்த்திப் பொருந்துவழிப் புணர்ப்ப, எனவரும்.

இனி, சொல் லென்னும் விலக்குறுப்புத் தானும் மூன்றுவகைப்படும். அவையாவன: உட்சொல், புறச்சொல், தானே கூறல் என்பன. இவற்றை நெஞ்சொடு கூறல் கேட்போர்க் குரைத்தல் தஞ்சம்வர அறிவு தானே கூறலென் றம்மூன் றென்ப செம்மைச் சொல்லே என வரும் நூற்பாவான் அறிக. இவற்றுள் தானே கூறல் என்பதனை ஆகாயச் சொல் என்பர் (அடியார்க்.)

சொல்வகை நான்கு வகைப்படும். அவையாவன: சுண்ணம் (நான் கடியான் வருவது) சுரிதகம் (எட்டடியான் வருவது) வண்ணம் (பதினாறடியான் வருவது) வரிதகம் (முப்பத்திரண்டடியான் வருவது) என்பன.

இவற்றுள் வண்ணம் என்பது (முப்பத்திரண்டடிகளாலியன்ற பாடல்) ஆறாய் வரின், பெருவண்ணம் எனவும் இருபத்தொன்றாய் வரின் இடை வண்ணம் எனவும், நாற்பத்தொன்றாய் வரின் வனப்பு வண்ணம் எனவும்படும். இவ்வாற்றால் வண்ணம் என்பது சொல்வகையினுள் ஒன்றாதலோடன்றி விலக்குறுப்புக்களுள் பாடல் வகையால் ஓருறுப் பாதலுமறிக.

இனி, வரி எட்டு வகைப்படும். அவையாவன : கண் கூடுவரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக் கோள் வரி என்பன. இவற்றை, கண்கூடுவரி காண்வரி உள்வரி, புறவரி, கிளர்வரியைந்தோ டொன்ற வுரைப்பிற், காட்சி தேர்ச்சி யெடுத்துக் கோளென மாட்சியின் வரூஉ மெண்வகை நெறித்தே எனவரும் நூற்பாவானு முணர்க. இவற்றினியல் பெல்லாம் கானல் வரியினும் வேனிற் காதையினும் கூறப்படும், அவற்றை ஆண்டுக் காண்க.

இனி, இவ்வரி யென்பதனைப் பல்வரிக் கூத்து என்பாரு முளர். அவை வருமாறு :-

சிந்துப் பிழுக்கை யுடன்சக்தி யோர்முலை
கொந்தி கவுசி குடப்பிழுக்கை - கந்தன்பாட்
டாலங்காட் டாண்டி பருமண னெல்லிச்சி
சூலந் தருநட்டந் தூண்டிலுடன் - சீலமிகும்
ஆண்டி யமண்புனவே டாளத்தி கோப்பாளி
பாண்டிப் பிழுக்கையுடன் பாம்பாட்டி - மீண்ட
கடவுட் சடைவீர மாகேசங் காமன்
மகிழ்சிந்து வாமன ரூபம் - விகடநெடும்
பத்திரங் கொற்றி பலகைவாள் பப்பரப்பெண்
தத்தசம் பாரம் தகுணிச்சங் - கத்து
முறையீண் டிருஞ்சித்து முண்டித மன்னப்
பறைபண் டிதன்புட்ப பாணம் - இறைபரவு
பத்தன் குரவையே பப்பறை காவதன்
பித்தனொடு மாணி பெரும்பிழுக்கை - எத்துறையும்
ஏத்திவருந் கட்களி யாண்டு விளையாட்டுக்
கோத்த பறைக்குடும்பு கோற்கூத்து - மூத்த
கிழவன் கிழவியே கிள்ளுப் பிறாண்டி
அழகுடைய பண்ணிவிக டாங்கந் - திகழ்செம்பொன்
அம்மனை பத்து கழங்காட லாலிக்கும்
விண்ணகக் காளி விறற் கொந்தி - அல்லாத
வாய்ந்த தனிவண்டு வாரிச்சி பிச்சியுடன்
சாந்த முடைய சடாதாரி - ஏய்ந்தவிடை
தக்கபிடார் நீர்த்தந் தளிப்பாட்டுச் சாதுரங்கந்
தொக்க தொழில்புனைந்த சோணாண்டு - மிக்க
மலையாளி வேதாளி வாணி குதிரை
சிலையாடு வேடு சிவப்பத் - தலையில்
திருவிளக்குப் பிச்சி திருக்குன் றயிற்பெண்
டிருண்முகத்துப் பேதை யிருளன் - பொருமுகத்துப்
பல்லாங் குழியே பகடி பகவதியாள்
நல்லார்தந் தோள்வீச்சு நற்சாழல் - அல்லாத
உந்தி யவலிடி யூராளி போகினிச்சி
குந்திவரும் பாரன் குணலைக்கூத் - தந்தியம்போ
தாடுங் களிகொய்யு முள்ளிப்பூ வையனுக்குப்
பாடும்பாட் டாடும் படுபள்ளி - நாடறியுங்
கும்பீடு நாட்டங் குணாட்டங் குணாலையே
துஞ்சாத கும்பைப்பூச சோனக - மஞ்சரி
ஏற்ற வுழைமை பறைமைமுத லென்றெண்ணிக்
கோத்தவரிக் கூத்தின் குலம்.

என அடியார்க்கு நல்லார் அரிதின் எடுத்துக்காட்டிய இச்செய்யுளால் சிலப்பதிகாரகாலந் தொடங்கி அவ்வுரையாசிரியர் காலமீறாக இச் செந்தமிழ் நாட்டு மக்கள் மகிழ்ந்தாடிக்களித்த வரிக்கூத்துக்களை அறியலாம். இவையிற்றுட் சில வரிக் கூத்திற்கியன்ற பாடல்கள் இந்நூலகத்துக்கும் வருதலை ஆங்காங்குக் காட்டுதும்.

இனி, சேதம் என்னும் விலக்குறுப்பு ஆரியம் தமிழ் என இருவகைப்படும். வடமொழிக் கதையை யாதல் தமிழ் மொழியிலியன்ற கதையை யாதல் நாடக மாடுதற்கியைய விடவேண்டிய பகுதியை விட்டுக் கொள்ளவேண்டியவற்றைக் கொள்ளுதலால் இதுவும் நாடகத்திற்குறுப்பாயிற்று. பெயர்க் காரணமும் இதனால் விளங்கும் இதனை,

ஆரியந் தமிழெனுஞ் சீர்நட மிரண்டினும்
ஆதிக் கதையை யவற்றிற் கொப்பச்
சேதித் திடுவது சேதமென் றாகும்.

எனவரும் நூற்பாவான் உணர்க. இவையெல்லாம் விலக்குறுப்புகளின் விளக்கமாகும்.

இனி, விலக்குறுப்பு என்ற சொற்குத் தலைவன் செலுத்துகின்ற கதையை (நாடகத்திற்கியைய விலக்க வேண்டுவனவற்றை) விலக்கியும் (கொள்ள வேண்டியவற்றைக் கொண்டு) அக்கதையையே நடாத்தியும் (இயற்புலவனால்) முன்பு செய்த இயற்றமிழ் அல்லது ஆரியக் கதைகட்கே நாடகத் தமிழாங்கால் உறுப்பாகுவது என்பதாம்.

(14-15) பதினோராடலும்.......அறிந்தாங்கு என்புழிக் கூறப்பட்ட பதினோராடலாவன:

கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன்
குடைகுடிமால் அல்லியமற் கும்பம் - சுடர்விழியாற்
பட்டமதன் பேடுதிருப் பாவையரன் பாண்டரங்கம்
கொட்டியிவை காண்பதினோர் கூத்து

எனவரும் வெண்பாவானறிக. இவற்றைத் தெய்வவிருத்தி என்பர். இவை நின்றாடல், படிந்தாடல் என இருவகைப்படும், அவற்றை,

அல்லியங் கொட்டி குடைகுடம் பாண்டரங்கம்
மல்லுட னின்றாடல் ஆறு

எனவும்,

துடி கடையம் பேடு மரக்காலே பாவை
வடிவுடன் வீழ்ந்தாடல் ஐந்து

எனவும் வரும் செய்யுள்களானறிக.

இனி இப்பதினோராடலும் அசுரரைக் கொல்ல அமரர் ஆடின என்ப. எனவே, இவை ஆரியக் கூத்துக்கள் என்பது பெற்றாம். அகப் பொருளும் புறப்பொருளும் தழுவிவரும் கூத்துக்களே தமிழ்க் கூத்துக்களாம் என்றுணர்க.

இனி இவற்றிற்குரிய உறுப்புகளையும், இவற்றை அமரர் ஆடியதற் கியன்ற காரணங்களையும்,

அல்லிய மாயவ னாடிற் றதற்குறுப்புச்
சொல்லுப ஆறாமெனல்

எனவும்,

கொட்டி கொடுவிடையோ னாடிற் றிதற்குறுப்
பொட்டிய நான்கா மெனல்

எனவும்,

அறுமுகத்தோ னாடல் குடைமற் றதற்குப்
பெறுமுறுப்பு நான்கா மெனல்

எனவும்,

குடத்தாடல் குன்றெடுத்தோ னாடலதனுக்
கடைக்குப வைந்துறுப் பாய்ந்து

எனவும்,

பாண்டரங்க முக்கணா னாடிற் றதற்குறுப்
பாய்ந்தன வாறா மெனல்

எனவும்,

நெடியவ னாடிற்று மல்லாடன் மல்லிற்
கொடியா வுறுப்போரைந் தாம்

எனவும்,

துடியாடல் வேன்முருக னாட லதனுக்
கொடியா வுறுப்போரைந் தாம்

எனவும்,

கடைய மயிராணி யாடிற் றதனுக்
கடைய வுறுப்புக்க ளாறு

எனவும்,

காமன தாடல்பே டாட லதற்குறுப்பு
வாய்மையி னாராயி னான்கு

எனவும்,

மாயவ ளாடன் மரக்கா லதற்குறுப்பு
நாமவகை யிற்சொலுங்கா னான்கு

எனவும்,

பாவை திருமக ளாடிற் றதற்குறுப்
போவாம லொன்றுடனே யொன்று

எனவும், வரும் நூற்பாக்கள் ஆடியோர் பெயரும் உறுப்பும் உணர்த்தின.

இனி, அமரர் இவற்றை நிகழ்த்தியதற்கியன்ற காரணங்களை அடிகளார் கடலாடு காதைக்கண் விரித்தோதுவர். அன்றியும்,

புரமெரித்தல் சூர்மாத் துளைபடுத்தல் கஞ்ச
னுரனெரித்தல் வாணனைவா னுய்த்தல் - பெரிய

அரன்முத லாகவே லன்முதன் மாயோன்
அமர்முத லாடிய வாறு

எனவரும் வெண்பாவானு முணர்க.

(14) பாட்டும் என்றது அகநாடகங்கட்கும் புறநாடகங்கட்குமுரிய உருக்களும் என்றவாறு. இவற்றை உருக்கள் என்று வழங்குவது இசை நூலோர் வழக்கும், கூத்த நூலோர் வழக்கும் என்றுணர்க இற்றைநாளும் அவர் உருப்படி என்று வழங்குதல் காணலாம்.

அகநாடக வுருக்கள், கந்தமுதலாகப் பிரபந்த மீறாகவுள்ள இருபத்தெட்டும் என்பர்; இவற்றுள் கந்தம் என்பது அடிவரையறை யுடைத் தாய் ஓருதாளத்தாற் புணர்ப்பது. பிரபந்தம் அடிவரையறையின்றிப் பல தாளத்தாற் புணர்ப்பது; புறநாடகங்களுக்குரிய உருக்கள், தேவபாணி முதலாக அரங்கொழி செய்யுளீறாகவுள்ள செந்துறை விகற்பங்கள் எல்லாம் என்க.

(14) கொட்டும் என்றது கூத்துக்களுக்குரிய இடைக்கருவிகளை; அவை தாமும் கீதாங்கம் நிருத்தாங்கம் உபயாங்கம் என்பன; இவற்றுள் கீதாங்கம் இசைப்பாவிற்குக் குயிலுவன; நிருத்தாங்கம் கூத்திற்குக் குயிலுவன; உபயாங்கம் இரண்டிற்கும் குயிலப்படுவன.

(15) விதிமாண் கொள்கை - இலக்கண விதியால் மாட்சிமையுடைய நூல் விளங்க அறிதலாவது ஐயந்திரிபற விளங்கும்படி பயின்றறிதல். ஆங்கு - அசையெனினுமாம்.

ஆடல் - கூத்துக்கள். அவை அகக்கூத்தும் புறக்கூத்தும் என முற் கூறப்பட்டன. அவற்றுள் அகக்கூத்திற்குத் தேசிக்குரிய கீற்று கடிசரி முதலிய கால்களும்; சுற்றுதல் எறிதல் உடைத்தல் முதலிய வடுகிற்குரிய கால்களும் உடற்றூக்கு முதலிய உடல வர்த்தனைகளும் உரியனவாம்.

இனி, சிங்களம் என்று ஒரு கூத்துளது என்றும் அதற்கு அகக்கூத்திற்குரிய கால்களே உரியனவாதலால் அடிகளார் அதனைக் கூறிற்றிலர் என்பர் அடியார்க்கு நல்லார். எனவே, தேசி வடுகு சிங்களம் என மூவகைக் கூத்துக்கள் தமிழகத்தே ஆடப்பட்டன என்பது பெற்றாம். தேசி - தமிழ்க்கூத்து.

(15) புறக்கூத்திற்குரிய ஆடல்கள் - பெருநடை, சாரியை பிரமரி முதலாயினவும் முற்கூறப்பட்ட அல்லிய முதலிய பதினோராடலிற் கூத்துக்களுமாம் என்பர். இவ்வகையால் அகக்கூத்துக்களுக்கும் புறக் கூத்துக்களுக்குமுரிய ஆடலை யெல்லாம் விளங்க அறிந்தவனாய் என்றவாறு.

(16) பாடலும் என்றது, பண்ணல் முதலிய எட்டுவகைப்பட்ட குறிக்கோளும், இன்பம் தெளிவு நிறை ஒளி வன்சொல் இறுதி மந்தம் உச்சம் என்னும் எண்வகைப் பயனும் உடைய பாடலின் இயல்பும் என்றவாறு.

பாணி - தாளம், இது மாத்திரை வகையால் கொட்டு, அசை, தூக்கு, அளவு என நால்வகைப்படும். இதனை,

கொட்டு மசையும் தூக்கு மளவும்
ஒட்டப் புணர்ப்பது பாணி யாகும்

எனவரும் நூற்பாவானுணர்க. இவை மாத்திரப் பெயர்கள். இவற்றுள் கொட்டு - அரைமாத்திரை; இதனை க என்னும் குறியீட்டினால் குறிப்பர். அசை - ஒரு மாத்திரை, இதற்கு எ குறியீடு. தூக்கு - இரண்டு மாத்திரை; இதற்கு உ குறியீடு. அளவு - மூன்று மாத்திரை; இதற்கு ஃ குறியீடு. இதனை,

ககரங் கொட்டே எகர மசையே
உகரந் தூக்கே யளவே யாய்தம்

எனவரும் நூற்பாவாலறிக. இவற்றின் தொழில் வருமாறு: கொட்டாவது - அமுக்குதல். அசை-தாக்கி யெழுதல்: தூக்கு - தாக்கித் தூக்குதல். அளவு-தாக்கின வோசை மூன்று மாத்திரை ஒலிக்குமாறு செய்தல்.

இனி, தாளங்களுள் வைத்து, அரை மாத்திரையுடைய ஏகதாள முதலாகப் பதினாறு மாத்திரையுடைய பார்வதி லோசனம் ஈறாகப் கூறப்பட்ட நாற்பத்தொரு தாளமும் புறக்கூத்திற்குரியன என்ப. ஆறன்மட்ட மென்பனவும், எட்டன் மட்டமென்பனவும் தாள வொரியல் என்பனவும், தனி நிலை யொரியலென்பனவும், ஒன்றன் பாணி முதலாக எண் கூத்துப்பாணி யீறாகக்கிடந்த பதினொரு பாணி விகற்பங்களும் முதனடை வாரமுதலாயினவும் அகக்கூத்திற்குரியன எனவும் கூறுப.

(16) தூக்கும் என்றது, இத்தாளங்களின் வழிவரும் செந்தூக்கு, மதலைத்தூக்கு, துணிபுத்தூக்கு, கோயிற்றூக்கு, நிவப்புத்தூக்கு, கழாற்றூக்கு, நெடுந்தூக்கெனப்பட்ட ஏழு தூக்குக்களும் என்ப. இவற்றினியல்பினை,

ஒருசீர் செந்தூக் கிருசீர் மதலை
முச்சீர் துணிபு நாற்சீர் கோயில்
ஐஞ்சீர் நிவப்பா மறுசீர் கழாஅலே
எழுசீர் நெடுந்தூக் கென்மனார் புலவர்

எனவரும் நூற்பாவான் அறிக.

(17) கூடிய நெறியின - கூத்தும் பாட்டும் தாளமும் தம்மிற் கூடிய நெறியினையுடைய இருவகைக் கூத்துக்கள் என்க.

கொளுத்துதல் - கொள்வித்தல்; பயிற்றுதல்.

(18) பிண்டி - ஒற்றைக்கை. முற்கூறப்பட்ட உட்சொல், புறச்சொல் ஆகாயச்சொல் என்னும் மூன்றனையும் அவிநயத்தோடு நாட்டிச் செய்யுங்கால் அதற்குக் கருவியாவன, கையும் கருத்தும் மிடறும் உடம்பும் என்னும் இந் நான்குமே. இவற்றை,

அவைதாம், கையே கருத்தே மிடறே சரீரமென்
றெய்தமுன் பமைத்த விவையென மொழிப

எனவரும் நூற்பாவினாலறிக. இனி, கையென்பது ஒற்றைக்கை. இரட்டைக்கை என்றும், இரண்டு வகைப்படும். இவற்றை, இணையா வினைக்கை எனவும் இணைக்கை எனவும் வழங்குதலுண்டு. இன்னும், இவற்றோடு, ஆண்கை, பெண்கை, அலிக்கை, பொதுக்கை என்னும் நான்கினையும் கூட்டி ஆறுவகைப்படும் என்பாருமுளர்.

இனி, இவற்றுள் இணையா வினைக்கை (ஒற்றைக்கை) முப்பத்து மூன்று வகைப்படும். அவற்றை,

இணையா வினைக்கை யியம்புங் காலை
அணைவுறு பதாகை திரிபதா கையே
கத்தரிகை தூபம் அராளம் இளம்பிறை
சுகதுண் டம்மே முட்டி கடகம்
சூசி பதும கோசிகந் துணிந்த
மாசில்காங் கூலம் வழுவறு கபித்தம்
விற்பிடி குடங்கை அலாபத் திரமே
பிரமரந் தன்னொடு தாம்பிர சூடம்
பிரகாசம் முகுளம் பிண்டி தெரிநிலை
பேசிய மெய்ந்நிலை உன்னம் மண்டலம்
சதுரம் மான்றலை சங்கே வண்டே
அதிர்வில் இலதை கபோதம் மகரமுகம்
வலம்புரி தன்னொடு முப்பத்து மூன்றென்
றிலங்குமொழிப் புலவ ரிசைத்தனர் என்ப

எனவரும் நூற்பாவிற் காண்க.

இவற்றுள் பிண்டி யென்றது ஒற்றைக்கைக்கு ஆகுபெயர். பிணையல் - இணைதல் ஆதலால் இணைக்கையாயிற்று.

இனி, பிண்டிக்குரிய முப்பத்து மூன்று வகைக் கைகட்கும் செய்முறைகளை வருகின்ற நூற்பாக்களில் காண்க.

1-பதாகை

பதாகை யென்பது பகருங் காலை
பெருவிரல் குஞ்சித் தலாவிர னான்கு
மருவி நிமிரு மரபிற் றென்ப

2-திரிபதாகை

திரிப தாகை தெரியுங் காலை
யறைப தாகையி னணிவிரன் முடக்கினஃ
தாமென மொழிப வறிந்திசி னோரே

3-கத்தரிகை

கத்தரி கையே காண்டக விரிப்பின்
அத்திரி பதாகையின் அணியின் புறத்தைச்
சுட்டக மொட்ட விட்டுநிமிர்ப் பதுவே

4-தூபம்

தூப மென்பது துணியுங் காலை
விளங்குகத் தரிகை விரலகம் வளைந்து
துளங்கு மென்ப துணிபறிந் தோரே

5-அராளம்

அராள மாவ தறிவரக் கிளப்பிற்
பெருவிரல் குஞ்சித்துச் சுட்டுவிரன் முடக்கி
விரல்கண் மூன்று நிமிர்த்தகம் வளைத்தற்
குரிய தென்ப வுணர்ந்திசி னோரே

6-இளம்பிறை

சுட்டும் பேடு மநாமிகை சிறுவிரல்
ஒட்டியகம் வளைய வொசித்த பெருவிரல்
விட்டு நீங்கும் விதியிற் றென்ப

7-சுகதுண்டம்

சுகதுண்ட மென்பது தொழில்பெறக் கிளப்பிற்
சுட்டு விரலும் பெருவிர றானும்
ஒட்டி யுகிர்நுனை கௌவி முன்வளைந்
தநாமிகை முடங்கப் பேட்டொடு சிறுவிர
றான்மிக நிமிர்ந்த தகுதித் தென்ப

8-முட்டி

முட்டி யென்பது மொழியுங் காலைச்
சுட்டு நடுவிர லநாமிகை சிறுவிர
லிறுக முடக்கி யிவற்றின்மிசைப் பெருவிரன்
முறுகப் பிடித்த முறைமைத் தென்ப

9-கடகம்

கடக முகமே கருதுங் காலைப்
பெருவிர னுனியுஞ் சுட்டுவிர னுனியு
மருவ வளைந்தவ் வுகிர்நுனி கௌவி
யொழிந்த மூன்றும் வழிவழி நிமிர
மொழிந்தன ரென்ப முடிபறிந் தோரே

10-சூசி

சூசி யென்பது துணியுங் காலை
நடுவிரல் பெருவிர லென்றிவை தம்மி
லடைவுட னொற்றிச் சுட்டுவிர னிமிர
வொழிந்த மூன்றும் வழிவழி நிமிர
மொழிந்தன ரென்ப முடிபறிந் தோரே

11-பதுமகோசிகம்

பதும கோசிகம் பகருங் காலை
யொப்பக் கைவளைத் தைந்து விரலு
மெய்ப்பட வகன்ற விதியிற் றாகும்

12-காங்கூலம்

காங்கூ லம்மே கருதுங் காலைச்
சுட்டும் பேடும் பெருவிரல் மூன்று
மொட்டிமுன் குவிய வநாமிகை முடங்கிச்
சிறுவிர னிமிர்ந்த செய்கைத் தாகும்

இது, குவிகாங்கூலம், முகிழ்காங்கூலம், மலர்காங்கூலம் என மூவகைப்படும். அவற்றுள், இது குவிகாங்கூலமாம். முகிழ்காங்கூலம்-

முகிழ் காங்கூலம் முந்துற மொழிந்த
குவிகாங்கூலம் குவிவிழந் ததுவே

மலர்காங்கூலம்-

மலர்காங்கூல மதுமலர்ந் ததுவே

13-கபித்தம்

கபித்த மென்பது காணுங் காலைச்
சுட்டுப் பெருவிர லொட்டிநுனி கௌவி
யல்ல மூன்று மெல்லப் பிடிப்பதுவே.

14-விற்பிடி

விற்பிடி யென்பது விரிக்குங் காலைச்
சுட்டொடு பேடி யநாமிகை சிறுவிர
லொட்டி யகப்பால் வளையப் பெருவிரல்
விட்டு நிமிரும் விதியிற் றாகும்.

15-குடங்கை

குடங்கை யென்பது கூறுங் காலை
யுடங்குவிரற் கூட்டி யுட்குழிப் பதுவே

16-அலாபத்திரம்

அலாபத் திரமே யாயுங் காலைப்
புரைமையின் மிகுந்த சிறுவிரன் முதலா
வருமுறை யைந்தும் வளைந்துமறி வதுவே.

17-பிரமரம்

பிரமர மென்பது பேணுங் காலை
யநாமிகை நடுவிர லறவுறப் பொருந்தித்
தாம்வலஞ் சாயத் தகைசால் பெருவிர
லொட்டிய நடுவுட் சேரச் சிறுவிரல்
சுட்டு வளைந்துபின் றோன்றிய நிலையே.

18-தாம்பிர சூடம்

தாம்பிர சூடமே சாற்றுங் காலைப்
பேடே சுட்டுப் பெருவிர னுனியொத்துக்
கூடி வளைந்து சிறுவிர லணிவிர
லுடனதின் முடங்கி நிமிரநிற் பதுவே.

19-பசாசம்

பசாசம் என்பது மூன்று வகைப்படும். அவையாவன: அகநிலைப் பசாசம், முகநிலைப் பசாசம், உகிர்நிலைப் பசாசம் என்பன. அவை வருமாறு:-

பசாசம் என்பது பாற்படக் கிளப்பின்
அகநிலை முகநிலை யுகிர்நிலை யென்னத்
தொகநிலை பெற்ற மூன்றுமென மொழிப

அவைதாம்,

சுட்டுவிர னுனியிற் பெருவிர லகப்பட
வொட்டி வளைத்த தகநிலை முகநிலை
யவ்விர னுனிகள் கௌவிப் பிடித்தல்
செவ்வி தாகுஞ் சிறந்த வுகிர்நிலை
யுகிர்நுனை கௌவிய தொழிந்த மூன்றுந்
தகைமையி னிமிர்த்தலம் மூன்றற்குந் தகுமே.

20-முகுளம்

முகுள மென்பது மொழியுங் காலை
ஐந்து விரலுந் தலைகுவிந் தேற்ப
வந்து நிகழு மாட்சித் தாகும்.

21-பிண்டி

பிண்டி யென்பது பேசுங் காலைச்
சுட்டுப் பேடி யநாமிகை சிறுவிரல்
ஒட்டி நெகிழ முடங்கவவற் றின்மிசை
விலங்குறப் பெருவிரல் விட்டுங் கட்டியு
மிலங்குவிரல் வழிமுறை யொற்றலு மியல்பே.

22-தெரிநிலை

தெரிநிலை யென்பது செப்புங் காலை
யைந்து விரலு மலர்ந்துகுஞ் சித்த
கைவகை யென்ப கற்றறிந் தோரே.

23-மெய்ந்நிலை

மெய்ந்நிலை யென்பது விளம்புங் காலைச்
சிறுவிர லநாமிகை பேடொடு சுட்டிவை
யுறுத லின்றி நிமிரச் சுட்டின்மிசைப்
பெருவிரல் சேரும் பெற்றித் தென்ப.

24-உன்னம்

உன்ன நிலையே யுணருங் காலைப்
பெருவிரல் சிறுவிர லென்றிவை யிணைய
வருமுறை மூன்று மலர்ந்துநிமிர் வதுவே.

25-மண்டலம்

மண்டல மென்பது மாசறக் கிளப்பிற்
பேடு நுனியும் பெருவிர னுனியுங்
கூடி வளைந்துதம் முகிர்நுனை கௌவி
யொழிந்த மூன்று மொக்க வளைவதென
மொழிந்தன ரென்ப முழுதுணர்ந் தோரே.

26-சதுரம்

சதுர மென்பது சாற்றுங் காலை
மருவிய மூன்று நிமிர்ந்தகம் வளையப்
பெருவிர லகமுறப் பொற்பச் சேர்த்திச்
சிறுவிரல் பின்பே நிமிர்ந்த செவ்வியின்
இறுமுறைத் தென்ப வியல்புணர்ந் தோரே.

27-மான்றலை

மான்றலை யென்பது வகுக்குங் காலை
மூன்றிடை விரலு நிமிர்ந்தக மிறைஞ்சிப்
பெருவிரல் சிறுவிர லென்றிவை நிமிர்ந்து
வருவ தென்ப வழக்கறிந் தோரே.

28-சங்கு

சங்கெனப் படுவது சாற்றுங் காலைச்
சிறுவிரன் முதலாச் செறிவிர னான்கும்
பெறுமுறை வளையப் பெருவிர னிமிர்ந்தாங்
கிறுமுறைத் தென்ப வியல்புணர்ந் தோரே.

29-வண்டு

வண்டென் பதுவே வகுக்குங் காலை
யநாமிகை பெருவிர னனிமிக வளைந்து
தாநுனி யொன்றித் தகைசால் சிறுவிரல்
வாலிதி னிமிர மற்றைய வளைந்த
பாலின தென்ப பயன்றெரிந் தோரே.

30-இலதை

இலதை யென்ப தியம்புங் காலைப்
பேடியுஞ் சுட்டும் பிணைந்துட னிமிர்ந்து
கூடிய பெருவிரல் கீழ்வரை குறுகக்
கடையிரு விரலும் பின்னர் நிமிர்ந்த
நடையின தென்ப நன்னெறிப் புலவர்.

31- கபோதம்

காணுங் காலைக் கபோத மென்பது
பேணிய பதாகையிற் பெருவிர னிமிரும்.

32-மகரமுகம்

மகரமுக மென்பது வகுக்குங் காலைச்
சுட்டொடு பெருவிரல் கூட வொழிந்தவை
யொட்டி நிமிர்ந்தாங் கொன்றா வாகும்.

33-வலம்புரி

வலம்புரிக் கையே வாய்ந்த கனிட்ட
னலந்திகழ் பெருவிர னயமுற நிமிர்ந்து
சுட்டுவிரன் முடங்கிச் சிறுவிர னடுவிரல்
விட்டுநிமிர்ந் திறைஞ்சும் விதியிற் றென்று
கூறுவர் தொன்னூற் குறிப்புணர்ந் தோரே.

இவை யெல்லாம் பிண்டிக்கை வகை. பிண்டிக்கை எனினும் ஒற்றைக் கை யெனினும் இணையா வினைக்கை யெனினும் ஒக்கும்.

(18) பிணையல் என்னும் இரட்டைக்கை பதினைந்து வகைப்படும். இணைக்கை யென்பதுமது. இவை வருமாறு:

எஞ்சுத லில்லா இணைக்கை யியம்பில்
அஞ்சலி தன்னொடு புட்பாஞ் சலியே
பதுமாஞ் சலியே கபோதங் கற்கடகம்
நலமாஞ் சுவத்திகங் கடகா வருத்தம்
நிடதந் தோர முற்சங்க மேம்பட
வுறுபுட் பபுட மகரஞ் சயந்த
மந்தமில் காட்சி யபய வத்தம்
எண்ணிய வருத்த மானந் தன்னொடு
பண்ணுங் காலை பதினைந் தென்ப

எனவரும் நூற்பாவானுணர்க.

இனி இவ்விணைக்கையின் தொழின் முறைகளை வருகின்ற நூற்பாக்களானறிக. அவையாவன:

1-அஞ்சலி

அஞ்சலி யென்ப தறிவுறக் கிளப்பி
னெஞ்ச லின்றி யிருகையும் பதாகையாய்
வந்தகம் பொருந்து மாட்சித் தென்றனர்
அந்தமில் காட்சி யறிந்திசி னோரே

2-புட்பாஞ்சலி

புட்பாஞ் சலியே பொருந்தவிரு குடங்கையுங்
கட்டி நிற்குங் காட்சிய தென்ப

3-பதுமாஞ்சலி

பதுமாஞ் சலியே பதும கோசிக
மெனவிரு கையு மியைந்துநிற் பதுவே

4-கபோதம்

கருதுங் காலை கபோத வினைக்கை
யிருகையுங் கபோத மிசைந்துநிற் பதுவே

5-கற்கடகம்

கருதுங் காலைக் கற்கட கம்மே
தெரிநிலை யங்குலி இருகையும் பிணையும்

6-சுவத்திகம்

சுவத்திக மென்பது சொல்லுங் காலை
மணிக்கட் டமைந்த பதாகை யிரண்டையு
மணிக்கட் டேற்றி வைப்ப தாகும்

7-கடகாவருத்தம்

கருதிய கடகா வருத்தக் கையே
யிருகையுங் கடக மணிக்கட் டியைவது

8-நிடதம்

நிடத மென்பது நெறிப்படக் கிளப்பின்
முட்டி யிரண்டுகை யுஞ்சம மாகக்
கட்டி நிற்குங் காட்சித் தென்ப

9-தோரம்

தோர மென்பது துணியுங் காலை
யிருகையும் பதாகை யகம்புற மொன்ற
மருவி முன்றாழும் வழக்கிற் றென்ப

10- உற்சங்கம்

உற்சங்க மென்ப துணருங் காலை
யொருகை பிறைக்கை யொருகை யராளந்
தெரிய மணிக்கட்டி லேற்றிவைப் பதுவே

11-புட்பபுடம்

புட்பபுட மென்பது புகலுங் காலை
யொத்த விரண்டு குடங்கையு மியைந்து
பக்கங் காட்டும் பான்மைத் தென்ப

12-மகரம்

மகர மென்பது வாய்மையி னுரைப்பிற்
கபோத மிரண்டு கையு மகம்புற
மொன்ற வைப்பதென் றுரைத்தனர் புலவர்

உச்சித்தம் என்பதும் இதனது பெயரேயாம்.

13-சயந்தம்

சயந்த மென்றது .... ..... ....

14-அபயவத்தம்

அபயவத் தம்மே யறிவுறக் கிளப்பின்
வஞ்சமில் சுகதுண்ட மிருகையு மாட்சியின்
நெஞ்சற நோக்கி நெகிழ்ந்துநிற் பதுவே

15-வருத்தமானம்

வருத்த மானம் வகுக்குங் காலை
முகுளக் கையிற் கபோதக் கையை
நிகழச் சேர்த்து நெறியிற் றென்ப

எனவரும். இவை பதினைந்தும் பிணையற்கை யெனக் கொள்க.

இணைக்கை, இரட்டைக்கை, பிணையல் என்பன ஒரு பொருளன.

18 -எழிற்கை - அழகு பெறக் காட்டுங் கை; தொழிற்கை - தொழில் பெறக் காட்டும் கை. உம்மையால், பொருட்கை என்பதுங் கொள்ளற்பாற்று; என்னை?

எழிற்கை யழகே தொழிற்கை தொழிலே
பொருட்கை கவியிற் பொருளா கும்மே

என்னும் நூற்பாவுங் காண்க.

19-கொண்ட வகை யறிதலாவது பிண்டியும் பிணையலும் புறக் கூத்திற்குக் கொள்ளப்பட்டவை என்றும், எழிற்கையும் தொழிற்கையும் அகக் கூத்திற்குக் கொள்ளப்பட்டவை என்று மறிதல்.

20-21: கூடை வாரம் என்பன பலபொருள் ஒரு சொற்கள். ஈண்டு அவற்றுள், கூடை என்பதற்கு, ஒற்றைக்கை என்றும், வாரம் என்பது இரட்டைக்கை எனவும் பழைய வுரையாசிரியர் பொருள் கொள்கின்றனர். இனி, கூடை செய்தகை வாரத்திற் களைதலும் வாரஞ்செய்தகை கூடையிற் களைதலும் என்பதற்குப் பாட்டிற்கியைய ஆடவேண்டுதலின் பாட்டுக் கூடை கதியினதாகக் கையும் அக்கதிக்கியையக் கூடை கதியின தாகச் செய்தல் அன்றி வாரகதியினதாகாமற் பார்த்தும் அங்ஙனமே வாரப்பாடல் நிகழுங்கால் அப்பாட்டிற்கு அபிநயம் கூடைகதி யாகாமல் அவ்வக்கூத்திற் கியையச் செய்தலும் என்பதே அடிகளார் கருத்தாதலும் கூடும் என்று கருதலாம். பாட்டிற்கியன்ற கூடை முதலிய இயக்கங்கள் பின்னர்க் கூறப்படும்.

இதற்கு அகக்கூத்து நிகழுமிடத்து ஒற்றையிற் செய்த கைத் தொழில் இரட்டையிற் புகாமலும், இரட்டையிற் செய்த கைத்தொழில் ஒற்றையிற் புகாமலும் களைதல். இன்னும் தேசியிற் கைத்தொழில் மார்க்கத்துப் புகாமலும் மார்க்கத்துக் கைத்தொழில் தேசியிற் புகாமலும் களைதல் என்றுமாம். ஒற்றையும் இரட்டையும் தேசியிற் கூறாகலானும் இரட்டையும் இரட்டைக் கிரட்டையும் வடுகிற் கூறாகலானு மென்க என்பது பழைய வுரை.

22-3. பிண்டி செய்த கை பாட்டின் பொருள் தோன்ற அவி நயங்காட்டிய கை; ஆடல் கூத்தின்பொருட்டுக் காட்டப்படும் ஒற்றைக் கை இரட்டைக் கைகட்கு ஆகுபெயர். இதனாற் கூறியது, ஆடற்குரிய கை காட்டும்பொழுது அவை, அவிநயக் கையாகாமலும் அவிநயங் காட்டும் கைகள் ஆடற் கைகள் ஆகாமற் பேணியும் என்பதாம்.

24. குரவை - குரவைக்கூத்திற்குரிய கால்கள் என்க. அது, காமமும் வென்றியும் பொருளாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைந்தாடுவது என்ப. இதனை,

குரவை யென்பது கூறுங் காலைச்
செய்தோர் செய்த காமமும் விறலு
மெய்த வுரைக்கு மியற்பிற் றென்ப.

எனவும்,

குரவை யென்ப தெழுவர் மங்கையர்
செந்நிலை மண்டலக் கடகக் கைகோத்
தந்நிலைக் கொட்பநின் றாட லாகும்

எனவும் வரும் நூற்பாக்களா னறிக.

வரி - வரிக்கூத்திற்குரிய கால்கள், ஆகுபெயர். வரிக்கூத்து னியல்பினை,

வரியெனப் படுவது வகுக்குங் காலைப்
பிறந்த நிலனும் சிறந்த தொழிலும்
அறியக் கூறி ஆற்றுழி வழங்கல்

என வரும் நூற்பாவான் உணர்க.

25. ஆடற்கு அமைந்த ஆசான்றன்னோடும் என்றது, இவ்வாற்றான் கூத்திலக்கணத்தை விளங்க அறிந்தமையாலே அவற்றுடனே பொருந்த ஆடவும் மாணவரை ஆட்டுவிக்கவும் தகுதியுடைய ஆடலாசிரியனோடும் என்றவாறு. அறிந்து புணர்த்து விளங்க அறிந்து செலுத்தி ஆடற்கு அமைந்த அசான் என இறைக்க.

இசையாசிரியரின் அமைதி
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 22, 2012, 08:02:31 AM
26-36 : யாழுங் குழலுஞ் ......... இசையோன்றானும்

(இதன்பொருள்) யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு யாழ்ப்பாடலும் குழற்பாடலுந் தாளவகைகளும் மிடற்றப் பாடலும் தாழ்ந்த இசையினையுடைய தண்ணுமையும் கூத்தாடுதலும் பயின்று வல்லவனாய், இவற்றின் இசைந்த பாடல் இசையுடன் படுத்து இவற்றோடு பொருந்திய தாகச் செய்யப்பட்ட உருக்களை (இசைப்பாடல்களை) இசை கொள்ளும்படியும் சுவைபொருந்தும்படியும் புணர்க்கவும் வல்லவனாய்; வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி - இசைப்பாட்டிற்கும் கூத்திற்கும் உரிய திணைப் பொருள் தோன்ற மூவகை யியக்கத்தானும் இயக்கவும் வல்லனாய்; தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்து-நந்தாய் மொழியாகிய செந்தமிழின் செல்வங்களாகின்ற இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்னும் நான்கு வகைப்பட்ட சொற்களினும் செந்தமிழோசையே திகழ்வதைக் கடைப்பிடியாகக் கொண்டு; தேசிகத் திருவின் ஓசையெல்லாம் ஆசின்று உணர்ந்த அறிவினன் ஆகி - நந்தாய் மொழிக்கியல்பான செப்பலோசை முதலிய இசையிலக்கணங்களையும் குற்றந்தீரப் பயின்றுணர்ந்த அறிவினையும் உடையனாய்; கவியது குறிப்பும் பகுதிப் பாடலும் கொளுத்துங்காலை - இயற் புலவன் நினைவும், நாடகப் புலவன் ஈடு வரவுகளும் இவற்றுக்கு அமைந்த பாடல்களும் தம்மிற் புணர்ப்பிக்குமிடத்தே; வசையறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் - குற்றந்தீர்ந்த நூல்வழக்காலே வகுக்கவும் விரிக்கவும் வல்லனுமாயுள்ள; அசையாமரபின் இசை யோன்தானும் - தளராத ஊக்கத்தையுடைய இசைப்புலவனும் என்க.

(விளக்கம்) யாழ் குழல் என்பன ஆகுபெயர். அவை கருவியாகப் பாடுகின்ற பாடல்களைக் குறித்து நின்றன. யாழ் குழல் என்னும் இவையும் தண்ணுமை முதலியனவும் நந்தமிழகத்திலேயே மிகப் பழைய காலத்திலே தோன்றிய இன்னிசைக் கருவிகளாகும். சங்க நூல்களிலே பேரியாழ் என்றும் சீறியாழ் என்றும் இருவகை யாழ்களும் குழலும் கூறப்பட்டுள்ளன. பெரும்பாணாற்றுப்படையும் சிறு பாணாற்றுப்படையும் பேரியாழும் சீறியாளும் உடைய பாணர்களைப் பற்றிய ஆற்றுப் படைகளேயாகும். பத்துப்பாட்டின்கண் யாழ் குழல் முதலிய இசைக் கருவிகளின் அமைப்பும் அவற்றின் உறுப்புகளும் பல் வேறிடங்களிலே விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. இவற்றை யன்றி முல்லை நிலத்தில் வாழும் ஆயர் குழலும் வில்வடிவமான யாழும் செய்து அவற்றைக் குயின்று இசைபாடி மகிழ்ந்திருந்த செய்தியும் பத்துப்பாட்டிற் காணப்படுகின்றது. இதனை,

தொடுதோல் மரீஇய வடுவாழ் நோனடி
விழுத்தண் டூன்றிய மழுத்தின் வன்கை
உறிக்கா வூர்ந்த மறுப்படு மயிர்ச்சுவல்
மேம்பா லுரைத்த வோரி யோங்குமிசைக்
கோட்டவும் கொடியவும் விரைஇக் காட்ட
பல்பூ மிடைந்த படலைக் கண்ணி
ஓன்றம ரூடுக்கைக் கூழா ரிடையன்
கன்றமர் நிரையொடு கானத் தல்கி
அந்நு ணவிர்புகை கமழக் கைமுயன்று
ஞெலிகோற் கொண்ட பெருவிறல் ஞெகிழிச்
செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலின்
இன்றீம் பாலை முனையின் குமிழின்
புழற்கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின்
வில்யா ழிசைக்கும் விரலெறி குறிஞ்சிப்
பல்காற் பறவை கிளைசெத் தோர்க்கும்
புல்லார் வியன்புலம் போகி

எனவரும் பெரும்பாணாற்றுப் படைப் பகுதியால் அறியலாம் (176-84)

கன்றமர் நிரையொடு கானத்தே வதியும். ஒன்றமர் உடுக்கையோடு கூழ் ஆரும் இவ் வெளிய இடையன் தான் தீக்கடைகின்ற (கொள்ளிக்கட்டை) ஞெலி கோலாலே மூங்கிலிலே பல துளைகளை இட்டுக்கொண்டு பாலைப்பண் என்னும் இசையைப் பாடினன் எனவும் அங்ஙனமே உட்டுளையுடைய குமிழங் கொம்பினை வில்லாக வளைத்து மரற்புரி நரம்பினை நாணாகக் கட்டி அந்த நாணைத் தனது விரலாலே தெறித்துப் பல்வேறிசைகளையும் எழுப்பிக் குறிஞ்சி என்னும் பண்ணை இசைத்தான் எனவும் இச்செய்யுள் கூறுகின்றது. இதனையே வில்யாழ் என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது.

ஒப்பற்ற இசைக் கருவிகளாக வரலாறறியாத காலந்தொட்டுத் தமிழகத்திலே வழங்கி வருகின்ற குழலையும் யாழையும் முதன் முதலாகக் கண்டுபிடித்த பெருமை நிரலே முல்லைநில மக்களாகிய ஆயர்க்கும் குறிஞ்சி நிலமக்களாகிய வேட்டுவர்க்குமே உரியதாம் என்னும் ஓருண்மையை மேலே காட்டிய பெரும்பாணாற்றுப்படையீனின்றும் யாம் தெரிந்து கொள்கின்றோம்.

காட்டின்கண் உலர்ந்த மூங்கிலிலே வண்டுகள் துளைத்த துளையின் வழியே காற்றுப் புகும்போது இன்னிசை பிறப்பதனை அறிந்த ஆயர்கள் அம் மூங்கிலைத் துணித்துத் தாமே தீக்கடை கோலாலே பல துளைகளையிட்டு ஊதிப் பல்வேறு வகையான இசைகளை எழுப்பி மகிழ்வாராயினர். அங்ஙனமே விலங்குகளை வேட்டை யாடுவோர் வில்லினது நாணினின்று அதனை விரலாற்றெறிக்கும் போது இன்னிசை பிறத்தலை அறிந்து அவ்வொலி தானும் உட்டுளையுடைய குமிழங் கொம்பை வில்லாக வளைத்துக்கட்டிய வழி, பின்னும் இனிமையுடையதாதலை யுணர்ந்த பின்னரே அதனையும் ஓரிசைக் கருவியாக ஆயர்கள் பயன்படுத்தலாயினர்.

இனி, குழலிலே பல துளை யிடுவதன் வாயிலாகப் பல்வேறிசைகளை உண்டாக்குதல் கூடுமாகலான் இக் கூழாரிடையன் தானே இயற்றிக் கொண்ட கருந்துளைக் குழலின் குரல் துத்தம் முதலிய பல்வேறு இசைகளை எழுப்பிப் பாலைப்பண்ணை வாசித்தல் பொருந்துமன். குமிழங் கொம்பிற் கட்டிய ஒற்றை நாணில் (நரம்பில்) பல்வேறு இசை வேண்டுகின்ற குறிஞ்சிப்பண்ணை எழுவி இசைத்தான் என்றல் பொருந்தா தென்னின்; அறியாது கூறினை, அவ்வொற்றை நரம்பில் ஏழிசையும் எஞ்சாது பிறப்பித்தல் கூடும். எங்ஙனம் எனின், நாண்குரலைக் குரலிசையாகச் சுதிசெய்து கட்டிய பின்னர் :

வில்யாழினது ஒரு நுனியை மார்பிலே ஊன்றவைத்து மற்றொரு நுனியை இடக்கையாற் றழுவிக்கொண்டு தெறிக்குங்கால் அவ்விடக்கை விரலாலே கீழ்நோக்கி நரம்பை வில்லில் அழுத்த ஒலி வேறுபடுமன்றே? இங்ஙனமே கீழ்க் கீழ் இறங்கி ஆறிடங்களிலே நரம்பை அழுத்தி வலக்கை விரலாற் றெறிக்க எஞ்சிய ஆறிசைகளும் பிறக்குமாகலின் இவ்வாற்றானே அவ்விடையன் குறிஞ்சிப்பண் இசைத்தனன் என்க. இந் நுணுக்கமறியாது ஆசிரியர் விபுலானந்த வடிகளார் இவ்வில்யாழைப்பற்றிப் பயனிலாது தம் மனம் போனவாறு பொருந்தாத கற்பனை பலவும் செய்து போந்துளார். அதனை அவர் தம் யாழ் நூலிலே காண்க.

இனி, முல்லை நிலத்தும் குறிஞ்சியினும் எளிய ஆயரிடத்தும் வேடரித்தும் பிறந்து பின்னர்ப் பல்வேறு சீர்திருத்தங்களும் பெற்ற யாழ்கள் பேரியாழும் சீறியாழும் என இருவகைப்படும். இவற்றுள் பேரியாழ் வலிவும் மெலிவும் சமனுமாகிய மூவகை யியக்கத்திற்கும் இயக்கொன்றிற்கு ஏழ் நரம்பாக மூவேழ் - அஃதாவது இருபத்தொரு நரம்புகளையுடையதாம். சீறியாழ் ஏழ் நரம்புகளை யுடையதாம். ஈண்டு நரம்பென்பது கோல்களை. அவையாவன: நரம்புகளை அழுத்துங் கருவிகளை. அவற்றை இக்காலத்தார் மெட்டுக்கள் என்பர். பேரியாழ் இருபத்தொரு மெட்டுக்களையும் சீறியாழ் ஏழு மெட்டுக்களையும் உடையன என்க. இவை சங்ககாலத்து யாழ்கள்.

இனி, சிலப்பதிகாரத்துக் காலத்தே சீறியாழ் பின்னும் சீர் திருத்தம் செய்யப் பெற்றுப் பதினான்கு கேள்விகளை (மெட்டுக்களை) உடையதாயிற்று. அடிகளார் இங்ஙனம் திருத்தம் பெற்ற யாழினைச் செம்முறைக் கேள்வி என்று குறிப்பிடுவர். இது பதினான்கு கேள்விகளையுடையது. ஆதலால் இதனை ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வி என்பர். இனி, பழைய வுரையாசிரியர் தங்கள் காலத்து வழக்கிலிருந்த யாழ்களைப்பற்றியே உரை விரிக்கின்றனர். அவை அனைத்தும் சிலப்பதிகாரத்திற்குப் பொருந்துவனவாகக் கோடற்கிடமில்லை. பொருந்துவனவற்றைக் கொள்க, பொருந்தாதனவற்றை விடுக. அப்பழைய வுரை வருமாறு:

26. யாழ் நால்வகைப்படும் : அவை பேரியாழ், மகர யாழ், சகோட யாழ், செங்கோட்டி யாழ் என்பன. இவை நாலும் பெரும்பான்மைய. சிறுபான்மையான் வருவன பிறவுமுள. என்னை?

பேரியாழ் பின்னு மகரஞ சகோடமுடன்
சீர்பொலியுஞ் செங்கோடு செப்பினார் - தார்பொலிந்து
மன்னுந் திருமார்ப வண்கூடற் கோமானே
பின்னு முளவே பிற

என்றாராகலின்

இந்நால்வகை யாழிற்கும் நரம்பு கொள்ளுமிடத்துப் பேரியாழுக்கு இருபத்தொன்றும் மகர யாழிற்குப் பத்தொன்பதும் சகோட யாழிற்குப் பதினாலும் செங்கோட்டியாழிற்கு ஏழுங் கொள்ளப்படும். என்னை?

ஒன்று மிருபது மொன்பதும் பத்துடனே
நின்றபதி னான்கும் பின்னேழும் - குன்றாத
நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொன்முறையே
மேல்வகை நூலோர் விதி

என்றாராகலின்

இனி, இவ்வியா ழென்னும் ஒன்றிற்கு அமைந்த பலவுறுப்பாகிய

கோட்டின தமைதியுங் கொளுவிய வாணியும்
ஆட்டிய பத்தரின் வகையும் மாடகமும்
தந்திரி யமைதியும் சாற்றிய பிறவும்
முந்திய நூலின் முடிந்த வகையே

என்றொரு நூற்பாவை எடுத்துக்காட்டி அடியார்க்கு நல்லார் வகுக்கப் பட்டனவெல்லாம் கானல் வரியில் குற்றம் நீங்கிய யாழ் என்பதன்கண் விரியக் கூறுதும் என்றனர். அவ்வுரை கிடைத்திலது.

26. குழல் என்றது குழல் கருவியாகப் பாடும் பாடலை. ஆகு பெயர்.

(யாழின் பெயரை வீணை என்ற வடமொழியாக மாற்றி அதனையே இக்காலத்துப் பயில வழங்குதல் போன்று பழைய உரையாசிரியர் காலத்தே குழல் என்னும் இனிய தமிழ்ப்பெயரை விடுத்து அதனை வங்கியம் என்று இசைவாணர்கள் பயில வழங்கியமையால் அடியார்க்கு நல்லார் குழல் என்ற தமிழ்ச் சொல்லிற்கு வங்கியம் எனப் பொருள் எழுதுதல் வேண்டிற்று. இச்சொல் நூலின்கண் யாண்டும் காணப்பட்டிலது.)

(அடியார்க்) குழல் வங்கியம்; அதற்கு மூங்கில் சந்தனம் வெண்கலம் செங்காலி கருங்காலி யென ஐந்துமாம், என்னை?

ஓங்கிய மூங்கி லுயர்சந்து வெண்கலமே
பாங்குறுசெங் காலி கருங்காலி - பூங்குழலாய்
கண்ண னுவந்த கழைக்கிவைக ளாமென்றார்
பண்ணமைந்த நூல்வல்லோர் பார்த்து

என்றாராகலின்

இவற்றுள் மூங்கிலாற் செய்வது உத்தமம். வெண்கலம் மத்திமம் ஏனைய அதமமாம். மூங்கில் பொழுது செய்யும்; வெண்கலம் வலிது; மரம் எப்பொழுதும் ஒத்து நிற்கும்.

இதன்கண் மூங்கில்பொழுது செய்யும் என்றது வெப்பதட்பங்களால் மாறுபடுகின்ற வேனில் முதலிய பெரும் பொழுதுகளையும் வைகறை முதலிய சிறு பொழுதுகளையும், வேய்ங்குழலின் இசை தனது மாற்றத்தாலே காட்டும் என்றவாறு. இதனால் இதுவே தலையாயது என்றவாறு. என்னை? பொழுதுகட்கும் இசைக்கும் இயைபுண்மையால் அவ்வியை பினை வேய்ங்குழலிற் காண்டல் கூடும் என்பது கருத்து என்க.

(அடியார்க்) இக் காலத்துக் கருங்காலி செங்காலி சந்தனம் இவற்றாற் கொள்ளப்படும்; கருங்காலி வேண்டும் என்பது பெரு வழக்கு. இவை (இம் மூன்று வகை மரங்களையும்) கொள்ளுங்கால் உயர்ந்த ஒத்த நிலத்திற் பெருக வளர்ந்து நாலு காற்று மயங்கின் நாதமில்லை. யாமாதலான், மயங்கா நிலத்தின்கண், இளமையும் நெடும் பிராயமும் (முதுமையும்) ஒரு புருடாயுப்புக்க (நூறாண்டு) பெரிய மரத்தை வெட்டி ஒரு புருடாகாரமாக ஓராட்பருமனும் நீளமும் உடையதாகச் செய்து, அதனை நிழலிலே ஆற இட்டுவைத்துத் திருகுதல் பிளத்தல் போழ்ந்துபடுதலின்மையை யறிந்து ஓர் யாண்டு சென்ற பின் இலக்கண வகையான் வங்கியம் செய்யப்படும். என்னை?

உயர்ந்த சமதலத் தோங்கிக்கா னான்கின்
மயங்காமை நின்ற மரத்தின் - மயங்காமே
முற்றிய மாமரந் தன்னை முதறடிந்து
குற்றமிலோ ராண்டிற் கொளல்

என்றாராகலின்.

இதன் பிண்டி யிலக்கணம் (பிண்டி-துண்டு) நீளம் இருபது விரல், சுற்றளவு நாலரை விரல். இது துளையிடுமிடத்து நெல்லரிசியில் ஒரு பாதி மரனிறுத்திக் கடைந்து வெண்கலத்தாலே அணைசுபண்ணி (அணைசு-மூடி) இடமுகத்தை யடைத்து வலமுகம் வெளியாக விடப்படும். என்னை?

சொல்லு மிதற்களவு நாலைந்தாஞ் சுற்றளவு
நல்விரல்க ணாலரையா நன்னுதலாய் - மெல்லத்
துளையளவு நெல்லரிசி தூம்பிட மாய
வளைவலமேல் வங்கிய மென்

என்றாராகலின்

இனித் துளையளவிலக்கணம்: - அளவு (நீளம்) இருபது விரல்; இதிலே தூம்பு முகத்தின் இரண்டு நீக்கி முதல்வாய் விட்டு, இம்முதல் வாய்க்கு ஏழங்குலம் விட்டு, வளைவாயினும் இரண்டு நீக்கி நடுவில் நின்ற ஒன்பது விரலினும் எட்டுத் துளையிடப்படும். இவற்றுள் ஒன்று முத்திரை யென்று கழித்து நீக்கி நின்ற ஏழினும் ஏழுவிரல் வைத்து ஊதப்படும். துளைகளின் இடைப்பரப்பு ஒரு விரலகலம் கொள்ளப்படும்; என்னை?

இருவிரல்க ணீக்கி முதல்வாயேழ் நீக்கி
மருவு துளையெட்டு மன்னும் - பெருவிரல்கள்
நாலஞ்சு கொள்க பரப்பென்ப நன்னுதலாய்
கோலஞ்செய் வங்கியத்தின் கூறு

என்றாராகலின்

இவ் வங்கியம் ஊதுமிடத்து வளைவாய் சேர்ந்த துளையை முத்திரையென்று நீக்கி முன்னின்ற ஏழினையும் ஏழு விரல்பற்றி வாசிக்க.

ஏழு விரலாவன - இடக்கையிற் பெருவிரலும் சிறு விரலும் நீக்கி மற்றை மூன்று விரலும், வலக்கையிற் பெருவிரலொழிந்த நான்கு விரலும் ஆக ஏழு விரலுமென்க. என்னை?

வளைவா யருகொன்று முத்திரையாய் நீக்கித்
துளையேழி னின்ற விரல்கள் - விளையாட்
டிடமூன்று நான்குவல மென்றார்கா ணேகா
வடமாரு மென்முலையாய் வைத்து

ஏழிசையாவன: சட்டம் ரிடபம் காந்தாரம் மத்திமம் பஞ்சமம் தைவதம் நிடாதமென்பன. இவை பிறந்து இவற்றுள்ளே பண்கள் பிறக்கும். என்னை?

சரிக மபதநியென் றேழெழுத்தாற் றானம்
வரிபரந்த கண்ணினாய் வைத்துத் - தெரிவரிய
ஏழிசையுந் தோன்று மிவற்றுள்ளே பண்பிறக்கும்
சூழ்முதலாஞ் சுத்தத் துளை

என்றாராகலின். இத்தன்மைத் தாகிய குழலுமென்க.

ஈண்டுக் குழல்பற்றி இதுகாறும் கூறப்பட்டவை அடியார்க்கு நல்லார் உரை விளக்கமாம்.

இனி, இளங்கோவடிகளார் தம் காப்பியத்தின்கண், ஈண்டுச் சட்சம் முதலாகக் கூறப்படுகின்ற இசையின் பெயர்களை யாண்டும் கூறிற்றிலர்.

இவற்றை நிரலே குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் பெயர்களாற் குறிப்பிடுதலே பண்டைத் தமிழ் நூலோர் வழக்கமாம்.

இனி, அடிகளார் இந்நூலிலேயே கூறியுள்ள முல்லைக்குழல், ஆம்பற்குழல் கொன்றைக்குழல் என்னும் இக் குழல்களைப்பற்றிப் பழைய உரையாசிரியர் யாதும் அறிந்திலாமை ஆய்ச்சியர் குரவைக் கண் இவற்றிற்கு இவர்கள் கூறுகின்ற உரைகளே உணர்த்துகின்றன. அவற்றை ஆண்டுக் காண்பாம்.

26. சீர் - தாளத்தின் அறுதி. இது முத்தமிழ்க்கும் பொதுவாகும். அதனானன்றே ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுளியலின்கண் ஈரசை கொண்டு மூவசை புணர்ந்துஞ் சீர் இயைந்து இற்றது சீரெனப் படுமே என்றோதுவாராயினர். அசையும் சீரும் இசையொடு சேர்த்தி வகுத்தனர் உணர்த்தலும் வல்லோ ராறே என்றோதியதும் சீர் முத்தமிழ்க்கும் பொதுவாம் என்பதை வலியுறுத்தும். மற்றுத் தாளம் என்பது பாணி தூக்கு சீர் என மூவகை உறுப்புடையதென்ப. பாணி-தாளந் தொடங்குங் காலம். தூக்கு-தாளம் நிகழுங்காலம். சீர்-தாளம் முடியுங்காலம் என்று நுண்ணிதின் இவற்றிற்கு வேறுபாடு கூறுவர்.

இனி, இடைத்தமிழில் சீர் என்பது செம்முறை உறழ்பே மெய்ந் நிலை கொட்டல், நீட்டல், நிமிர்த்தல் என்று கூறப்படுகின்ற வண்ணக் கூறுபாட்டையும் நாடகத் தமிழில் அகக் கூத்திற்கும் புறக்கூத்திற்கும் உரிய இருவகைத் தாளக் கூறுபாட்டையும் குறிக்கும் என்க. இச் சீர் தானே பாலைகளையும் பண்களையும் நிலைப்படுத்துத் தூய்தாகக் காட்டுங் கருவி என்ப. ஈண்டுப் பாலை என்றது குரல் முதலிய கேள்விகளை என்றுணர்க.

26. மிடறு - மிடற்றுப்பாடல். மாந்தர் உடம்பும் இசைக்குத் தலைசிறந்த கருவியாதலின், மிடற்றினைச் சாரீர வீணை என்பர். சரீர வீணை (எனப் பாட வேற்றுமையும் உண்டு) வடமொழியாளர் பிரம வீணை என்பதும் இக்கருத்துடையதே என்க. அஃதாவது இறைவனாற் படைக்கப்பட்ட இசைக்கருவி என்றவாறு. இறைவனாற் படைக்கப்பட்ட மாந்தருடம்பாகிய கருவியில் இசை பிறக்குங்கால்,

உந்தி முதலா முந்துவளி தோன்றித் தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ பின்னர் மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும் எனவும், இவ்வாறு அகத்தெழு வளியிசை அரில்தப நாடி அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே, எனவும், இசை அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர் என்பர் ஆசிரியர் தொல்காப்பியனார்.

ஈண்டு நரம்பின்மறையென்றது இசைத்தமிழிலக்கண நூலை என்க.

இயற்கையிலமைந்த இசைக்கருவியாகிய மக்கள் மிடற்றில் இசையைப் பிறப்பிக்குங்கால் மூலாதாரந் தொடங்கிய மூச்சைக் காலாற் கிளப்பிக் கருத்தால் இயக்கி ஒன்றெனத் தாக்கி இரண்டெனப் பகுத்துப் பண்ணீர்மைகளைப் பிறப்பித்தல் வேண்டும் என்பது அரும்பதவுரையாசிரியர் கூற்றால் அறியப்படும்.

இனி, இங்ஙனம் மூலாதாரந் தொடங்கிய எழுத்தின் நாதம், ஆளத்தியாய்ப்பின் இசையென்றும் பண்ணென்றும் பெயராம் எனவும்,

பாவோ டணைத லிசையென்றார் பண்ணென்றார்
மேவார் பெருந்தானம் எட்டானும் - பாவாய்
எடுத்தன் முதலா விருநான்கும் பண்ணிப்
படுத்தமையாற் பண்ணென்று பார்

எனவும், பல இயற்பாக்களுடனே நிறத்தை இசைத்தலால் இசை யென்று பெயராம் எனவும் அடியார்க்கு நல்லார் ஓதுவர்.

இதனால் பண் இசை என்பன காரணப் பெயர்கள் என்பது பெற்றாம். பண் எனினும் இராகம் எனினும் ஒக்கும். ஆளத்தி என்பதனை இக்காலத்தார் ஆலாபனம் என்று வழங்குவர்.

இனி, இசையை ஆளத்தி செய்யும்பொழுது மரகவொற்றால் அஃதாவது ம்ம் எனத் தொடங்கிப் பின்னர்க் குற்றெழுத்தாலும் நெட்டெழுத்தாலும் பாரித்துப் பாடவேண்டும் என்பர். இதனை,

மகரத்தின் ஒற்றாற் சுருதி விரவும்
பகருங் குறினெடில்பா ரித்து - நிகரிலாத்
தென்னா தெனாவென்று பாடுவரேல் ஆளத் நி
மன்னாவிச் சொல்லின் வகை

எனவரும் வெண்பாவான் உணர்க.

இதன்கண், தென்னா தெனா என்று பாடுவர் என்றதற்கு, தென்னா என்றும் தெனா வென்றும் இரண்டசைகளையும் தனித் தனியும் தென்னாதெனா என்று இரண்டனையும் கூட்டியும் பாடுவர் என்பது கருத்து.

இனி ஆளத்தி செய்தற்குரிய குற்றெழுத்துக்கள், அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம் எனவும், நெட்டெழுத்துக்கள் ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்னும் ஐந்துமாம் எனவும், மெய்யெழுத்துக்களுள் மகரமும் னகரமும் தகரமும் ஆகிய மூன்றுமே ஆளத்திக்குப் பொருந்தும் ஏனைய பதினைந்து மெய்களும் பொருந்தாதனவாம் என்றும் வரையறுத்தோதுவர். இக்காலத்தே தரன்னா, லலா ரார என்றெல்லாம் புகழ்படைத்த இசைவாணரும் பாடக் கேட்கின்றோம். ஆதலால், இவ்வரையறை கைவிடப்பட்டமை அறியலாம், இனி இவ்வரையறை யுண்மையை,

குன்றாக் குறிலைந்துங் கோடா நெடிலைந்தும்
நின்றார்ந்த மன்னகரந் தவ்வொடு - நன்றாக
நீளத்தா லேழு நிதானத்தா னின்றியங்க
ஆளத்தி யாமென் றறி

எனவரும் வெண்பாவானுணர்க.

ஈண்டு மந்நகரந் தவ்வொடு எனக் காணப்படுகின்ற (உ-வே-சா. ஐயரவர்கள் பதிப்பு) பாடம் பிழை என்பதும், அது மன்னகரம் எனத் திருத்திக் கோடற்பாலதென்பதும் ஆளத்தி தென்னா தெனா வென்று பாடுவர் என்பதனாலே உணரப்படும். இன்னும், இதனால் இக்காலத்தார் இராக ஆலாபனஞ் செய்யுமிடத்து அதனோடு விரவி வருகின்ற ச, ரி, க, ப, நி என்னும் ஐந்தெழுத்தும் பண்டைத் தமிழிசைக்கு விலக்குண்டமையும் நுண்ணுணர்வாற் கண்டு கொள்க.

இனி பெருந்தானம் எட்டானும்... எடுத்தன் முதலா இருநான்கும் பண்ணிப் படுத்தலாற் பண் என்று பார் என்றது, நெஞ்சும் மிடறும் நாக்கும் மூக்கும் அண்ணாக்கும் உதடும் பல்லும் தலையும் ஆகிய இசை பிறத்தற்குரிய எட்டானும், எடுத்தல் படுத்தல் நலிதல் கம்பிதம் குடிலம் ஒலி உருட்டு தாக்கு என்னும் எண்வகைத் தொழிலானும் பண்ணுதலாலே பண் என்று பெயராயிற்று என்று அறிக என்றவாறாம். பண் பிறக்குமிடம் பலவாயினும் சிறப்புப்பற்றி ஆகுபெயரால் மிடறு என்றோதப்பட்டது.

27. தாழ்குரல் தண்ணுமை-தாழ்ந்த இசையினையுடைய மத்தளம் என்னுந் தோற்கருவி. ஈண்டுத் தண்ணுமை என்றது அதனை யுள்ளிட்ட தோற்கருவிகள் அனைத்தையும் குறித்தபடியாம். அவற்றை,

பேரிகை படகம் இடக்கை உடுக்கை
சீர்மிகு மத்தளம் சல்லிகை கரடிகை
திமிலை குடமுழாத் தக்கை கணப்பறை
தமருகம் தண்ணுமை தாவில் தடாரி
அந்தரி முழவொடு சந்திர வளையம்
மொந்தை முரசே கண்விடு தூம்பு
நிசானம் துடுமை சிறுபறை அடக்கம்
மாசில் தகுணிச்சம் விரலேறு பாகம்
தொக்க உபாங்கம் துடிபெரும் பறையென
மிக்க றநூலோர் விரித்துரைத் தனரே

எனவரும் நூற்பாவானுணர்க.

இவை, அகமுழவு அகப்புறமுழவு, புறமுழவு, புறப்புறமுழவு, பண்ணமை முழவு, நாண்முழவு, காலை முழவு என ஏழுவகைப்படும் என்பர்.

அவற்றுள் அகமுழவாவன-முன் சொன்ன மத்தளம் சல்லிகை இடக்கை கரடிகை பேரிகை படகம் குடமுழா என்பனவாம்.

அகப்புற முழவு-முன்சொன்ன மத்திமமான தண்ணுமை தக்கை தகுணிச்சம் முதலாயின.

புறமுழவு-அதமக் கருவியான கணப்பறை முதலாயின.

ஈண்டுக் கூறப்படாத நெய்தற்பறை முதலியன புறப்புறமுழவு எனப்படும்.

பண்ணமை முழவு என்பன-முரசு நிசாளம் துடுமை திமிலை என்னும் நான்குமாம். இவற்றை வீரமுழவு என்றும் விளம்புவர்.

நாண்முழவு - நாட்பறை. அஃதாவது நாழிகைப்பறை.

காலைமுழவு - துடி.

இனி, ஈண்டு அடிகளார் தண்ணுமை என்றது மத்தளத்தை. மத்து-ஓசை; தளம்-இடம். ஆகவே இசையிடனாகிய கருவிகட்கெல்லாம் தள மாதலான் மத்தளமென்று பெயராயிற்று என்பர் அடியார்க்குநல்லார். இக்காலத்தார் மிருதங்கம் என்பதும் இதுவேயாம். மத்தளம் முதலிய தோற்கருவிகள் மிடற்றுப் பாடல் கேட்போர்க்கு இனிது விளங்குதற் பொருட்டு அப்பாடலிசைக்கு அடங்கி ஒலித்தல் வேண்டுமாதலின் அவற்றைத் தாழ்ந்த இசையுடையனவாகச் சுதி கூட்டிக் குயிலுவர். ஆதலின், தாழ்குரற்றண்ணுமை என்றார். தண்ணுமை முதலிய தோற்கருவிகளைச் சுதிகூட்டுங்கால் அவற்றின் இடக்கண் இளியாய் (ப) வலக் கண் குரலாக (ச)க் கூட்டவேண்டும் என்பர். இதனை,

இடக்க ணிளியாய் வலக்கண் குரலாய்
நடப்பது தோலியற் கருவி யாகும்

எனவருஞ் செய்யுளானும் (சிந்தா-செய் 675-நச்சி உரை) அறியலாம்.

27- வரி- உருக்கள் (இசைப் பாடல்கள்) ஆடல் என்றது முற்கூறப்பட்ட அகக்கூத்தும் புறக்கூத்தும் பிறவுமாகியவற்றை. உரிப்பொருள் என்றது அகத்திற்குரிய புணர்தல் முதலியனவுமாம், புறத்திற்குரிய வஞ்சி முதலியனவுமாம். இசையாசிரியனாகலின் தன திசைக்குயிராகிய இவ்வுரிப்பொருளையும் நன்கு புலப்படுத்த வேண்டுமாகலின் உரிப்பொருளியக்கி என்றார். பழைய வுரையாசிரியர்கள் உரிமைப் பொருளாயமைந்த இயக்கம் நான்குமே ஈண்டு உரிப்பொருள் எனப்பட்டதாகக் கருதுவர்.

30. தேசிகத்திரு-நாட்டு மொழியாகிய செல்வம். அதன் ஓசை கடைப்பிடித்தலாவது, வடமொழி முதலிய வேற்றுமொழி வந்து விரவுங்கால் அவற்றைத் தமிழோசைப்படுத்து இசைத்தலை உறுதியாகக் கடைப்பிடித்தொழுகுதல். இயற்சொல் திரிசொல் திசைச் சொல் வடசொல் என்று சொல்லப்பட்ட சொற்கள் இசை பூணும் படியைக் கடைப்பிடித் தென்பர் பழையவுரையாசிரியரிருவரும்.

33. கவி-இயற்புலவன். இதனால் இசைவாணர்க்கும் கூத்தர்க்கும் பாடல் யாத்துக்கொடுப்போர் இயற்புலவரே யென்பது பெற்றாம். இயற்புலவன் அப்பாடலாலே வெளிப்படுத்த நினைத்த கருத்தின்னதென அறிந்து கோடல் இசைப்புலவனுக்கு இன்றியமையாமையின் கவியது குறிப்பும்...கொளுத்துங்காலை என்றார்.

34. கொளுத்துதல் - தனதிசை கொள்ளும்படி செய்தல்.

35. கேள்வி : ஆகுபெயர்; நூல் என்க. கேள்விக்கியைய வகுக்கவும் விரிக்கவும் வல்ல இசையோனும் என்க.

கவிஞன் அமைதி

(அஃதாவது மாதவி கூத்திற்குப் பாடலியற்றிய இயற்புலவனுடைய தன்மை என்றவாறு.)

37-38: இமிழ்கடல் ......... தன்மையனாகி

(இதன்பொருள்) இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறிய - முழங் குதலையுடைய கடல்சூழ்ந்த நிலவுலகத்தின்கண் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு மிந்த நாட்டின்கண் வாழ்கின்ற சான்றோரனைவரானும் அறியப்படுதற்குக் காரணமான; தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி - இயல் இசை நாடகம் என்னும் முத்திறத்துத் தமிழ்மொழியையும் எஞ்சாது கற்றுத் துறைபோய அறிவினையுடைய தன்மையையுடையவனாகி என்க.

(விளக்கம்) இமிழ்கடல் - வினைத்தொகை எனினுமாம். கடல் வரைப்பு - நிலவுலகம். நிலவுலகத்துள்ள நாடுகள் பலவற்றுள்ளும் தமிழகம் சிறந்ததொரு நாடு என்பது தோன்ற, இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் என வேண்டா கூறி வேண்டியது முடித்தார். தமிழகம் அந்நாட்டின்கண் வாழும் சான்றோர்க்கு ஆகுபெயர். என்னை? அறிவார் அவரேயாதலின்.

இனி, வடவேங்கடம் தென்குமரி யாயிடைக் கிடந்த தமிழ் கூறு நல்லுலகம் என்பது தோன்ற கடல்வரைப்பில் தமிழகம் என்றார். கடல் வரைப்பையுடைய நிலவுலகத்துள் வேங்கட முதலிய வரைப்பினையுடைய தமிழகம் என்பது கருத்தென்க.

இனித் தமிழ்தானும் இயல் இசை நாடகம் என முத்திறத்ததாய் முழுதும் அறிதற்கருமைத்தாகலின் அவ்வருமை தோன்றத் தமிழ் முழுதும் அறிந்த தன்மையன் என்றார். இப்பொருட்கு முழுதும் என்ற சொல்லை விதந்தெடுத்தோதி யுணர்க.

36-44: வேத்தியல் ......... நன்னூற்புலவனும்

(இதன்பொருள்) வேத்தியல் பொதுவியல் என்று இருதிறத்தின் நாட்டிய நன்னூல் கடைப்பிடித்து - வேத்தியல் என்றும் பொதுவியல் என்றும் இரு கூறுபடுத்துக் கூறப்பட்ட நாடக நூலிலக் கண விதிகளை நன்றாகக் கடைப்பிடித்து; இசையோன் வக்கிரித்து இட்டத்தை உணர்ந்து - இசைப்புலவன் ஆளத்தி செய்து அதன்கண் அவன் எய்தவைத்த பண்ணினது இயல்பினை நன்குணர்ந்து; ஆங்கு அசையாமரபின் அதுபட வைத்து - அவ்விசைப்புலவன் வைத்தபடியே தளராத இலக்கணமுறைப்படி அப்பண்ணினது நிறம் தனது கவியினிடத்தும் நன்கு விளங்கித் தோன்றவைக்க வல்லனாய்; மாற்றோர் செய்த வசைமொழி அறிந்து - பகைவர்களாற் செய்யப்பட்ட வசையின் அளவுகளையும் அறிந்து; நாத் தொலைவு இல்லாத நல்நூல் புலவனும் - அவை தன் கவியிடத்தே புகுதாவண்ணம் நாடகக்கவி செய்யவல்லவனும் அக் காரணத்தாற் பகைவர்க்குத் தோலாதவனும் இவற்றிற்கெல்லாம் காரணமாகிய நல்ல நூல்களையுணர்ந்த இயற்புலவனு மென்க.

(விளக்கம்) எழுத்துச் சொல் பொருள் முதலிய இயற்றமிழ்க்கியன்ற இலக்கணமெல்லாம் ஏனைய இசைத்தமிழ் நாடகத்தமிழாகிய இரண்டற்கும் வேண்டிய உருக்கள் என்னும் இசைப்பாடல்கட்கும் இன்றியமையாமையின் ஈண்டுக் கூறப்படும் புலவன் முத்தமிழும் கற்றுத்துறை போயவன் என்றார்.

இனி, வேத்தியல், பொதுவியல் என்பன நிரலே அகம்புறம் என்னும் இருவகைப் பொருணெறிப்பட்டவை என்பது அடியார்க்கு நல்லார் குறிப்பானும் உணரலாம்.

40. நாட்டிய நன்னூல் என்பதற்கு வேத்தியல் பொதுவியல் என்றிருவகைப்படுத்து நிறுவிய நல்ல நாடக நூல் எனக் கோடலுமாம். இசையோன் - இசைப்புலவன். வக்கிரித்து அதன்கண் இட்டத்தை என்க. வக்கிரித்தல், ஆளத்தி செய்தல். இட்டதை எனற்பாலது இட்டத்தை என விகாரமுற்றது. இட்டது - வைத்த பண்ணீர்மை என்க. அதனை உணர்தலாவது பண்ணுக்குரிய முதலும் முறைமையும் முடிவும் நிறைவும் குறைவும் கிழமையும் வலிவும் மெலிவும் சமனும் வரையறையும் நீர்மையும் என்னும் பதினொரு பாகுபாட்டினானும் அறிதல்.

இவற்றுள் முதல் என்பது, குரல் முதலிய ஏழிசைகளுள் வைத்து இன்ன பண்ணுக்கு இன்ன இசை முதலாகும் என்றறிவது. முறை-பண்கள் தோறும் அவ்விசைகள் நிற்கவேண்டிய முறை என்க. முடிவு-ஒவ்வொரு பண்ணையும் முடித்தற்குரிய இசைகள் என்க. நிறை முழுமையுடைய பண்கள். குறை - பண்ணியல் திறம் திறத்திற முதலியன என்க. கிழமை இன்ன பண்ணிற்கு இன்ன இசை பயிலப் பயின்றுவரும் உரிமையுடைத் தென்றறிதலென்க. வலிவு முதலிய மூன்றும் இயக்கவகைகள். வரையறை - இந்தப் பண் இந்தப் பொழுதிற் பாடப்படுவது என்னும் காலவரையறையும் இன்ன திணைக்கு இன்ன பண் உரித்தென்னும் வரையறையும் இன்னோரன்ன பிறவுமாம் என்க. நீர்மை என்றது இலக்கண வகையானன்றி ஒவ்வொரு பண்ணிற்கும் தனித்தனியே அமைந்ததோரின் பப்பண்பு, என்க. பாடலியற்றும் நன்னூற்புலவன் ஈண்டுக் கூறப்பட்ட பண்ணீர்மையறியானாயின் பண்ணுக்கியையப் பாடலியற்றலாகாமையின் இசையோன் வக்கிரித் திட்டத்தை யுணர்ந்து ஆங்கு அசையா மரபின் அதுபடவைத்து என்றார். அது என்றது பண்ணீர்மையை. பழைய வுரையாசிரியர் இருவரும் இதனையே தாள நிலையில் எய்த வைத்த நிறம் என்றார். நிறம் போறலின் நிறம் என ஆகுபெயராற் பெயர் மாத்திரையாலோதி யொழிந்தார் என்க. அதுபடவைத்தலாவது, இப்பாட்டிற்கு இந்தப் பண்ணே சிறந்துரிமையுடைய தென்று யாவரும் அறியும்படி பாட்டினை இயற்றுதல் என்க. பண்ணினமைந்த இப்பண்ணீர்மையையே திருவள்ளுவனார் கண்ணோடியைந்த கண்ணோட்டம் போல்வதெனக் கருதி இந்த நீர்மை பாட்டினது நீர்மையோடு இயைதல் வேண்டும் என்னும் கருத்துடையர் என்பதனை பண்ணென்னாம் பாடற்கியைபின்றேல் கண்ணென்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் எனவரும் திருக்குறளால் உணர்தல் கூடும்.

வசை - பாட்டுடைத் தலைவனுக்குச் சாவு முதலிய தீமைபயக்கும் தீச்சொற்கள். பாட்டினாலே தீமை செய்பவர் பகைவராதலின் மாற்றோர் செய்த வசைமொழி என்றார். அதனை அறிந்தென்றது அறிந்து அத்தகைய தீச்சொல் விரவாமல் பாட்டியற்ற வல்ல நன்னூற் புலவன் என்பதுபடக் கூறியபடியாம். நாத்தொலைதல் - பாட்டின்கண் இழுக்குக் கூறுவார்க்குத் தோற்றல். நாத்தொலைவில்லாமைக்கு நன்னூல் குறிப்பேதுவாய் நின்றது. குற்றமில்லாத வழியும் குற்றங்கூறும் புன்புலவர்க்கு நன்னூல் விதிகாட்டி வெல்லும் ஆற்றலுடைய புலவன் என்பது கருத்தென்க.

இன்னன் அல்லோன் செய்குவ னாயின்
தேற்றா மாந்தர் ஆரியம் போலக்
கேட்டார்க் கெல்லாம் பெருநகை தருமே

எனப் பழையவுரையாசிரியர் எடுத்துக்காட்டிய நூற்பாவும் ஈண்டுணரற்பாற்று.

தண்ணுமையோன் அமைதி

45-55: ஆடல் பாடல் ...... முதல்வனும்

(இதன்பொருள்)ஆடல் பாடல் இசையே தமிழே - முற்கூறப்பட்ட பல்வேறு வகைப்பட்ட கூத்துக்களும் பாட்டுக்களும் பல்வேறு வகைப்பட்ட இசைகளும் இயலிசை நாடகம் என்னும் மூன்று வகைப்பட்ட தமிழ்களும்; பண்ணே பாணி தூக்கே முடமே-எல்லாப் பண்களும் இருவகைத் தாளங்களும் எழுவகைத் தூக்குக்களும் இவற்றின் குற்றங்களும்; தேசிகம் - இயற்சொல் முதலிய நால்வகைச் சொற்கூறுபாடு; என்று இவை ஆசின் உணர்ந்து - என்று கூறப்பட்ட இவையிற்றி னியல்பெலாம் நுண்ணிதின் அறிந்து; கூடை நிலத்தைக் குறைவு இன்றி மிகுத்து - இசையாசிரியன் யாதானும் தான் பாடுகின்ற பாட்டினை இரட்டிக் கிரட்டியாகச் சேர்த்துப் பாடிய விடத்தே; அப்பாட்டு நெகிழாதபடி நிரம்ப நிறுத்தவும்; ஆங்கு வார நிலத்தை வாங்குபு வாங்கி - அவ்விடத்தே பெறுகின்ற இரட்டியை இசையாசிரியன் பகுத்துப் பாடிய வழி, அவன் பகுத்தவாறே நிற்குமளவு நிறுத்திக் கழிக்க வேண்டுமளவு கழிக்கவும் வல்லனாய்; வாங்கிய வாரத்து யாழுங் குழலும் ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப- இங்ஙனம் பாடப்படுகின்ற பாட்டின்கண் யாழிசையும் குழலிசையும் மிடற்றிசையும் இயைந்து நடக்கின்ற படியைக் கேட்போர் செவிக் கொள்ளும்படி; கூர் உகிர்க்கரணம் குறியறிந்து சேர்த்தி - தனது தண்ணுமையைத் தன் விரற்றொழிலாலே செவ்வியறிந்து முற்கூறப்பட்ட இசைகளோடு சேரும்படி குயின்று; ஆக்கலும் அடக்கலும் - அங்ஙனங் குயிலுங் கால் ஏனைய கருவிகளிற் குறையை நிரப்புதலும் மிகுதியை அடக்குதலும்; மீத்திறப்படாமை செய்து - குயில்வதோடன்றித் தனது தண்ணுமையிசை ஏனைய கருவிகளின் இசைகட்கு மிகாமற் குயிலுதலும் செய்து; சித்திரக்கரணம் சிதைவின்று செலுத்தும் - அங்ஙனம் செய்யுமிடத்துத் தனது கைத்தொழிலும் அழகுபெறச் செய்து காட்டலும் வல்லனாய்; அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல்வனும் - அழகு தக்கிருக்கின்ற தண்ணுமைக் கருவியினையும் பிறராற் செயற்கரிய தொழிற்றிறமும் அமைந்த ஆசிரியனு மென்க.

(விளக்கம்) ஆடல் பாடல் இசை தமிழ் பண் பாணி தூக்கு என்பன அவையிற்றின் இலக்கணங்களுக்கு ஆகுபெயராய் நின்றன. முடம் - குற்றம்.

48. கூடை நிலம் - இசையை இரட்டித்துப் பாடுமிடம் என்க. கூடை - ஐகார விகுதிபெற்ற தொழிற்பெயர். இரட்டிக்கிரட்டி - முன்னர் இரட்டித்ததனையே மீண்டும் இரட்டித்தல்.

49. வாரநிலம் - இரட்டிக்கும் வழி முழுவதும் இரட்டியாமல் ஒரு பகுதியை மட்டும் இரட்டிக்குமிடம் என்க. வாங்குபு வாங்கலாவது அங்ஙனம் பகுத்து இரட்டிக்கும்பொழுது இசையின்பம் கெடாமல் விடுமளவிற்கு விட்டுக்கொள்ளுமளவே கொண்டு இசைத்தல்.

50-52. யாழ் முதலியவற்றின் இசையைத் தனது தண்ணுமையிசை விழுங்கிவிடாமல் அவையோர் அவற்றை நன்கு கேட்கும்படி அடக்கி இசைக்க வல்லனாய் என்பார் வார நிலத்தை ......... சேர்த்தி, என்றார்.

இனி, இங்ஙனம் பிற குயிலுவக் கருவிகளின் இசையைக் கேட்போர் நன்கு கேட்கும்படி தண்ணுமையோன் தனது விரலானும் உகிரானுமே குயில்வதியல்பாகலின் கேட்பக் கூருகிர்க்கரணம் குறியறிந்து சேர்த்தி என்றார்.

53. மீத்திறம்படுதலாவது - தண்ணுமையிசை ஏனைய இசைகளை விழுங்கி விடுமளவிற்கு மிகுதல்.

54. தண்ணுமையோன் தொழில் செய்யும்பொழுது காட்சிக் கினிதாகச் செய்தல் இன்றியமையாமையின் சித்திரக்கரணம் என்றார்.

55. அத்தகு தண்ணுமை என்பதனை அங்ஙனம் குயிலுதற்குத் தகுந்த தண்ணுமை எனவும், அழகு தக்கிருக்கின்ற தண்ணுமை எனவும் இரட்டுற மொழிந்து இருபொருளுங் கொள்க.

குழலோன் அமைதி

56-69: சொல்லிய ............... குழலோன்றானும்

(இதன்பொருள்) சொல்லிய இயல்பினில் - இசை நூல்களிற் சொன்ன முறைமையாலே; சித்திர வஞ்சனை புல்லிய அறிந்து - சித்திரப் புணர்ப்பும் வஞ்சனைப் புணர்ப்பும் என்று சொல்லப்பட்ட இரண்டு கூற்றினையும் அறிந்து; புணர்ப்போன் பண்பின் - இசைக் கேள்விகளைப் புணர்க்கும் இசையாசிரியனை ஒத்த இசை யறிவுடையனாகி; வர்த்தனை நான்கும் மயல் அறப் பெய்து - ஏற்றம் இறக்கம் என்னும் இருவகையானும் இயல்கின்ற நான்கு வகைப்பட்ட வர்த்தனைகளானும் நூற்றுமூன்று பண்ணீர்மைகளையும் தந்நிலை குலையாமல் குயின்று காட்டவல்லனாய்; (ஆங்கு) ஏற்றிய குரல் இளி என்று இரு நரம்பின் ஒப்பக்கேட்கும் உணர்வினனாகி - இசை கூட்டப்பட்ட குரலும் இளியும் தம்முளியையத் தன் எஃகுச் செவியாலே கேட்டுணரும் ஆராய்ச்சி என்னும் தொழில்வன்மையுடையவனும்; பண் அமை முழவின் கண் நெறியறிந்து தண்ணுமை முதல்வன் தன்னொடும் பொருந்தி - பண்ணுதல் அமைந்த முழவின் இடக்கண் வலக்கண் இசைநெறியினையும் அறிந்து மேலும் தண்ணுமையாசிரியனோடும் தாளநிலையிலே பொருந்தி; வண்ணப்பட்டடை யாழ்மேல் வைத்து - பண்ணீர்மை மிக்க இளிக்கிரமமாக இசையை யாழிடத்தே நரம்பணிந்து; ஆங்கு இசையோன் பாடிய இசையின் இயற்கை - அவ்வழியே இசையாசிரியன் பாடிய பாட்டின் இயல்பை; வந்தது வளர்த்து வருவது ஒற்றி இன்புற இயக்கி-பாடுகின்ற பண்ணுக்குரியதாக வந்த கேள்வியைக் குறைவுபடாமல் நிறைவுசெய்தும் அப்பண்ணிற்குரியவல்லாத அயற்கேள்விகளின் வரவு நிகழாமற் பார்த்தும் அப்பண்ணிற்குரிய இன்பம் மிகும்படி செய்து; இசைபட வைத்து - இசைக்குரிய இலக்கணம் பதினொன்றனையும் நிரம்பக் காட்டி; வாரநிலத்தைக் கேடின்று வளர்த்து-நால்வகை இயக்கங்களுள் கேள்விக்கினிய வாரநடையினை மிகவும் வளர்வித்து; ஆங்கு ஈர நிலத்தின் எழுத்து எழுத்தாக வழு இன்று இசைக்கும் குழலோன் தானும் - அவ்வாறு வளர்த்துக் குயிலுங்கால் சொல்லொழுக்கமும் இசை யொழுக்கமும் பொருள்புலப்பாடு முடைமையால் பண்ணீர்மை மிக்க அவ்வார நடையிடத்தே மிடற்றுப் பாடலிற்போல இசையெழுத்துக்களை எழுத்துருவந் தோன்றுமாறு வழுவின்றிக் குயிற்றவல்லவனும் ஆகிய குழலாசிரியனும் என்க.

(விளக்கம்) (56-7) சித்திரமாகவும் வஞ்சனையாகவும் பொருந்திய புணர்ப்புக்கள் என்க. இவற்றுள் சித்திரப்புணர்ப்பாவது - இசை கொள்ளும் எழுத்துக்களின் மேலே வல்லொற்று வந்தவழி மெல்லொற்றுப்போல நெகிழ்த்துப் பண்ணீர்மையுண்டாக நிறுத்துவது. வஞ்சனைப் புணர்ப்பாவது-இசைகொள்ளா எழுத்துக்களின்மேலே வல்லொற்று வந்தவழி (இசைகொள்ளா எழுத்துக் கரப்ப ஒற்றினை) மெல்லொற்றுப் போல நெகிழ்த்துப் புணர்த்தல். புணர்ப்போன் - பாடலாசிரியன்.

58. வர்த்தனை - குரல் முதலிய ஏழிசைகளையும் படிப்படியாக ஏற்றி இசைத்தலும் அங்ஙனமே படிப்படியாக இறக்கி இசைத்தலுமாம். இவை வலமுறையாக ஏறுதலும் மீண்டும் இறங்குதலும் இடமுறையாக இறங்குதலும் மீண்டும் ஏறுதலும் என நான்காயின என்க. இவற்றை ஆரோகணம் அவரோகணம் என்னும் பெயர்களானும் வழங்குவர்.

ஏற்றிய குரல் இளி என்றிரு நரம்பின் ஒப்பக்கேட்கும் உணர்வினன் ஆகி என்றது, இசை கூட்டப்பட்ட குரலிசையானது இளியிசையோடு பொருந்துவதனைத் தனது எஃகுச் செவியால் ஆராய்ந்து கேட்டறிகின்ற சிறந்த இசையுணர்வுடையவனும் ஆகி என்றவாறு. இதனால் ஆராய்தல் என்னும் இசைக்கரணத்திறம் கூறப்பட்டது. இதனைக் கானல் வரியின்கண் விளக்கிக் கூறுவாம்.

62. பண் - பண்ணுதல். அஃதாவது - இடக்கண் இளியாய் வலக்கண் குரலாய் இசை கூட்டப்படுதல். இனி, பல்வேறு வகை முழவுகளுள் வைத்துப் பண்பாடுதற்குக் குயில்தற்கமைந்த முழவு எனினுமாம். கண்நெறி அதன் இரண்டு கண்களினின் றெழுகின்ற இசைமுறைமை என்க.

தண்ணுமை, இதனை அடியார்க்கு நல்லார் மத்திமமான தண்ணுமை தக்கை தகுணிச்சம் முதலாயின என மத்திமமான கருவி என்பர். நூலாசிரியர் தண்ணுமையையே முதன்மையாகக் கொள்கின்றனர் என்பது அவர் செய்யுளால் அறியப்படும். இதுவே உத்தமமான மத்தளம் என்று கொள்க.

தண்ணுமை முதல்வன் றன்னொடும் என்ற உம்மையால் பொருந்து இடமும் பொருந்தி என்க.

வண்ணப்பட்டடை யாழ்மேல் வைத்து என்றது இசைகளை இளிக்கிரமமாக யாழின்கண் நிரல்பட அமைத்து என்றவாறு. அஃதாவது- குரல் முதல் தாரம் ஈறாகவுள்ள ஏழு கேள்விகட்குமுரிய நரம்புகள் இளிக்கிரமமாய் ஒலிக்குமானால் அவை பட்டடை எனப்படும் என்க. யாழின் தகைப்பில் ஒலிக்கும் நாண்குரலுக்கு இணைந்து இளியில் ஒலிக்கும் ஒலிக்கியைய ஒரு நரம்பழுத்துங்கோலை (மெட்டினை) வைத்துக் கட்டினால் அஃதொரு பட்டடை ஆகும். இங்ஙனம் வைத்த பட்டடையைக் குரலாகக் கொண்டு அதற்கு இளியாக இணைகின்ற ஒலியை ஆராய்ந்து மற்றுமொரு கோலை அமைத்துக் கட்ட அஃதொரு பட்டடையாகும். இக்கோலில் ஒலி துத்தமாக வமையும். இங்ஙனமே முறைப்படுத்து யாழின்கண் ஏழிசைகளையும் அமைப்பதே பட்டடையை யாழ்மேல் வைப்பதென்றறிக. இவ்வமைப்பினால் ஏழிசைகளும் தத்தம் நிறந்தோன்ற இசைக்குமாதலின் இதனை வண்ணப் பட்டடை என அடிகளார் ஓதினர். பட்டடை - அடிமணை. கோல் என்பதும் திவவு என்பதும் இப்பட்டடைகளையேயாம். இவை பண்டைக்காலத்தே வார்க்கட்டுகளாலே அமைக்கப்பட்டன. இத்திவவுகளில் இசை நரம்பினை அழுத்தி இசையை மாறுபடச் செய்வர் ஆதலின் திவவு நரம்பு துவக்கப்படுவது எனவும்; இத்திவவின்கண் அழுத்துவதனால் நரம்பினது இசை வலிவுபெறுவதலாலே திவ வென்பது - நரம்புகளை வலிபெறக் கட்டும் வார்க்கட்டு எனவும், (ஈண்டு நரம்பு இசைக்கு ஆகுபெயர்) பழையவுரையாசிரியர் உரைவரைந்தனர். இன்னும் இதுபற்றிய விளக்கங்களை இந்நூலில் எமது ஆராய்ச்சி முன்னுரையில் கண்டுதெளிக. ஈண்டுரைப்பிற் பெருகும். வண்ணப்பட்டடை யாழ்மேல் வைத்து ஆங்கு இசையோன் பாடிய இசை என இயைக்க.

65. வந்தது - இசையோன் பாடிய இசைக்கு நூன்முறைமையாலே வந்த கேள்வி. (சுரம்) வந்தது - சாதியொருமை. வருவது என்பதுமது.

66. இசை - இசைக்குரிய முதலும் முறையுமுதலாய பதினொரு வகைப்பட்ட இலக்கணம்: ஆகுபெயர்.

67. வாரநிலம் - நால்வகை இயக்கங்களுள் ஒன்று. முதனடை வாரம், கூடை, திரள் என்னும் நான்கும் இசையியக்கங்களாகும். இவற்றுள் முதனடை என்பது மிகவும் தாழ்ந்த செலவினை உடையதாம். அஃதாவது மிகுந்த காலச் செலவினையுடையதாம். இதனை விளம்ப காலம் என்றும் முதற்காலம் என்றும் இக்காலத்தார் கூறுவர். வாரம் என்பது அம்முதனடையினும் சிறிது முடுகி நடப்பது; இதனை, மத்திம காலம் என்றும் இரண்டாங்காலம் என்றும் கூறுவர். திரள் அதனினும் முடுகி நடப்பது. இதனைத் துரிதகாலம் அல்லது மூன்றாங் காலம் என்று வழங்குவர். திரள் மிகவும் முடுகிய நடையுடையது. இதனை, அதிதுரிதகாலம் அல்லது நான்காம்காலம் என்று இக்காலத்தார் கூறுவர். இவற்றுள், முதனடை மிகுந்த காலச் செலவுடையதாய் மெல்ல நடத்தலாலே கேட்போர்க்கு இன்பம் பயவாதொழிவதாம். நான்காவதாகிய திரள் நடை தனது மிகையான முடுகியல் நடை காரணமாகப் பாட்டின் பொருள் புலப்பாடும் இன்பஅமைதியும் இலதாம். ஆகவே இசைவாணரும் கேட்போரும் இடையிலுள்ள வார நடையினையும் கூடை நடையினையுமே பெரிதும் விரும்பிப் பாடுதலும் கேட்டலும் இயல்பாம். இவற்றுள்ளும் வாரப்பாடலை சொல்லொழுக்கமும் பொருள் புலப்பாடும் பெரிதும் இசையமைதியும் உடைத்தாம். இக்காரணத்தால் இவ்வார நடையையே பெரிதும்  பாரித்துப் பாடுவர். கூடைநடை, சொற்செறிவும் இசைச்செறிவும் உடைத்தாயினும் பொருள்புலப்பாடிலதாம். இந்நடையை இடையிடையே இசைவாணர் சிறிது சிறிது மேற்கொள்ளுவர். ஈண்டு வாரநிலத்தைக் கேடின்று வளர்த்து எனவே, கூடை நிலத்தை இன்றியமையாத விடத்தே சுருக்கிப் பாடவேண்டும் என்பதும் கூறினாராயிற்றென்க. ஆங்கு ஈரநிலம் என்றது அவ்வாரநிலமாகிய பண்ணீர்மை கெழுமிய நடையிலே என்றவாறு. இசைமாத்திரையா யொழியாது இசைகட்குரிய எழுத்துருவமும் தோன்றக் குயிலும் ஆற்றலுடைய குழலோன் என்பார், எழுத்தெழுத்தாக வழுவின்றிசைக்கும் குழலோன் என்றார். இதனால் குழல் யாழ் முதலிய குயிலுவக் கருவியாளர் மிடற்றுப்பாடல் போன்று எழுத்துருவம் தோன்றத் தங் கருவிகளைக் குயிலுதல் வேண்டும் என்பது அடிகளார் கருத்தாத லுணரப்படும். ஆசிரியர் திருத்தக்கதேவர் தாமும் சிந்தாமணியின்கண் (காந்தருவதத்தை)

கருங்கொடிப் புருவ மேறா கயனெடுங் கண்ணு மாடா
அருங்கடி மிடறும் விம்மா தணிமணி யெயிறுந் தோன்றா
இருங்கடற் பவளச் செவ்வாய் திறந்திவள் பாடி னாளோ
நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ என்று ரைத்தார்

என்புழி இக்கருத்துடையார் என்பது நுண்ணிதின் உணர்க.

யாழாசிரியன் அமைதி செம்முறைக் கேள்வி

70-71: ஈரேழ் ......... வேண்டி

(இதன்பொருள்) ஈர் ஏழ் தொடுத்த - குரல் முதலிய ஏழிசைகளையும் இரண்டு தொடையலாக அமைத்து யாழ்களில் சிறந்த யாழாகச் செய்யப்பட்டமையாலே; செம்முறைக் கேள்வியின் - செம்முறைக் கேள்வியென்னும் சிறப்புப்பெயர் பெற்று விளங்கும் யாழ்க் கருவியினிடத்தே; ஓர் ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி - ஒப்பற்ற இனிமையுடைய செம்பாலை முதலிய ஏழு பாலைப் பண்களையும் அவற்றினிடையே பிறக்கும் ஐந்து அந்தரப்பாலை என்னும் பண்களையும் அவற்றிற்குரிய இணைநரம்புகளையும் அணைவுறக் கொண்டு இயைத்து இசைத்தமிழுக்குரிய இலக்கணங்களிற் குறைபாடு சிறிதுமின்றி வட்டப்பாலையாக இசைத்து அந்நல்லவையின் கண் அரங்கேற்றிக் காட்டுதலைப் பெரிதும் விரும்பி என்க.

(விளக்கம்) ஈர் ஏழ் - பதினான்கிசைகள். ஏழிசைகளை இருநிரலாகத் தொடுக்கப்படுதல் தோன்றப் பதினான்கு தொடுத்த என்னாது ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வி என்றார். அடிகளார் காலத்திற்கு முற்பட்ட சங்ககாலத்தே சீறியாழ், பேரியாழ் என இருவகை யாழ்களே இருந்தன. சீறியாழ் ஏழிசைகளையே உடையது. பேரியாழோ இருபத்தோரிசைகளை உடையதாயிருந்தது. மெலிவும் சமனும் வலிவும் ஆகிய மூவகை இயக்கங்களுக்கும் ஏழு நரம்புடைய யாழில் மென்மையாக வருடியும் சமனாக வருடியும் வலிந்து வருடியும் இசைவாணர்கள் பண் இசைத்து வந்தனர். இம்முறை முழுமையான இன்பந்தாராமை கண்டு ஓர் இயக்கத்திற்கு ஏழிசையாக மூன்றியக்கிற்கும் இருபத்தோரிசைகளைத் தொடையல் செய்து அமைத்துக்கொண்ட யாழே பேரியாழ் எனப்பட்டது. மற்று இந்த இருபத்தோரிசைகளையும் மிகவும் பயிற்சியுடைய ஆடவர்கள் மட்டுமே ஆரோசையாக மிடற்றும் பாடலிலே இசைக்க முடியும்; மகளிர் பாடுதற்கு இப்பேரியாழ் தகுதியுடையதாக இருக்கவில்லை. இக்காரணத்தாலே பெண்டிரும் எளிதிற் பாடுதற்கேற்றதாக யாழ்க் கருவியைப் பின்னரும் சீர்திருத்தம் செய்தல் இன்றியமையதாயிற்று. அங்ஙனம் சீர்திருத்தம் செய்யப்பட்ட யாழே ஈண்டு அடிகளார் கூறுகின்ற செம்முறைக் கேள்வி என்னும் செவ்விய யாழ் ஆகும். இதனை அடிகளார் ஈரேழ் கோவை என்றும் ஓரோரிடங்களில் செங்கோட்டியாழ் என்றும் வழங்குவர். அடிகளார் காலத்தே சகோடயாழ் என்னும் வழக்கிருந்திலது. இந்நூலில் ஓரிடத்திலேனும் அடிகளார் இப்பெயரை வழங்காமையே இதற்குச் சான்றாம்.

பேரியாழில் மூன்று கோவையாக மெலிவும் சமனும் வலிவுமாக நின்ற மூவகையியக்கமும் இச்செம்முறைக்கேள்வியில் மெலிவு நான்கும் சமன் ஏழும் வலிவு மூன்றுமாய்ப் பதினான் கிசைகளுள் அடங்கி நின்றன. இக்காரணத்தால் மெல்லியலாராகிய பெண்டிர்க்கும் இந்த யாழை யிசைத்துத் தம்மிடற்றானும் இனிதே பாடுதற்குத் தகுதியுடையதாயிருந்தது. மகளிர் பாடுதற் கேற்றதாக்க வேண்டும் என்னும் கருத்தாலேயே யாழ் இங்ஙனம் சீர்திருத்தப்பட்டமையின் பழைய உரையாசிரியரிருவரும் இந்த யாழினை, பெண்டிர்க்குரிய தானமுடைய பரடலியல் பொத்து அமைந்த சிறப்புடைத்து என்றுரை வகுப்பாராயினர் விபுலானந்தரை யுள்ளிட்ட பிற்காலத்து ஆராய்ச்சியாளரும் உரையாசிரியரும் இக் கருத்துணராது இதனைச் சகோட யாழ் எனவும், இது வடவர்நாட்டு இசைக் கருவி எனவும், பிறவும் தத்தம் வாய் தந்தன கூறுவாராயினர்.

இனி ஈர் ஏழ் என்றது இசைகளையே யன்றி நரம்புகளை அன்று. இக்காலத்தே இவை மெட்டுகள் என்று வழங்கப்படுகின்றன. ஆகவே, குரல் முதலிய ஏழிசைகளும் நரம்பு என்று வழங்கப்படும்போது அவ்வவற்றிற்குரிய மெட்டுகள் ஆகுபெயரால் அங்ஙனம் கூறப்படுகின்றன என்று குறிக்கொண்டுணர்ந்து கோடல் வேண்டும். மெட்டுகள் நிரலாகத் தொடுக்கப்படுதலின் அவை கோவை என்றும் தொடை என்றும் வழங்கப்படுதலும் உண்டு. இதுகாறும் கூறியவாற்றால் அடிகளார் கூறும் செம்முறைக் கேள்வி என்பது பதினான்கு மெட்டுக்களமைந்த ஒருவகை யாழ் என்பதுணரப்படும்.

பாலை - பெரும்பாலைகள். பாலை என்பது இசைத்தமிழில் குரல் முதலிய இசைகளையும் இவற்றாலியன்ற பண்களையும் குறிக்கும் என்றுணர்க. என்னை? இந்நரம்பில் பாலை பிறக்குமிடத்துக் குரல் நான்கு மாத்திரை பெறும் என்புழி இசையைக் குறித்தல் காண்க. (ஆய்ச்சியர் குரவை. 14. அடியார்க்குநல்லார் விளக்கவுரை) தாரத்துழை தோன்றப் பாலையாழ் என்புழிப் பண்ணைக் குறித்தலறிக. பாலையைக் கேள்வி என்றும் வழங்குவர். இக்காலத்தார் சுரம் என்பர். ஏழு பாலைகளையும் இக்காலத்தார் இராகம் என்பர். யாழை, வீணை என்னும் வழக்கு அடிகளார் காலந்தொட்டே யுளது. இஃதுணராதார் சிலர் யாழ் வேறு என்றும் வீணை வேறு என்றும் இப்பொழுது இங்குக் காணப்படும் வீணை வடநாட்டவர் கருவி. நமது யாழ் இறந்துபட்டது எனவும் கூறுவர். அவர் அளியரோ! அளியர்! அவர் கூற்று நமது பழைய காலத்து நீர் இறந்துபோயிற்று, இப்பொழுது நமது காவிரியில் ஓடுவது வடவாரியர் கொணர்ந்த சலமே என்றாற்போல்வதொரு பிதற்றுரையேயன்றிப் பிறிதில்லை யென்றொழிக.

இனி, பெரும்பாலைகள் ஏழாம், அவையாவன : செம்பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை விளரிப்பாலை மேற் செம்பாலை என்பன. இவ்வேழும் ஏழிசைகளானும் இயல்வன ஆதலின் இவற்றைப் பெரும்பாலைகள் என்பர். இக்காலத்தே சம்பூரண இராகங்கள் என்பர்.

இப்பாலைப்பண்கள் ஆயப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை, வட்டப்பாலை என நால்வகைப்படும். பழைய வுரையாசிரியர் ஈண்டு ஆயப்பாலையாய் நின்ற பதினாற் கோவை என்றது, குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் எனக் குரல் முதலாகத் தாரமீறாக நிரல்பட்டு நின்ற இரண்டு நிரல்களை என்க. ஆயப்பாலை எனினும் நேரிசைப்பாலை எனினும் ஒக்கும் ஆயப்பாலைக்கு இசைகள் குரல் முதற் றாரமீறாக நிற்கும் என்பதனை, குரல் முதல் தாரம் இறுவாய்க் கிடந்த நிரல் ஏழும் செம்பாலை நேர் எனவரும் (அடியார்க்கு நல்லார் உரை ஆய்ச்சியர் குரவை - 14) என்பதனால் அறிக.

இனி, ஆயப்பாலையாய் நின்ற இவ்வீரேழ் கோவையை வட்டப் பாலையாக இயக்குங்கால் இவ் வேழுபாலைகளும் பன்னிருபாலைகளாக இயக்கப்படும். ஈண்டு அடிகளார் யாழாசிரியனின் புலமைத் திறத்தை இவ்வட்டப்பாலையை இயக்குமாற்றால் அறிவுறுத்துகின்றார். வட்டப்பாலைகள் பன்னிரண்டாம். அவை பன்னிரண்டிராசிகளிடத்தும் பிறப்பனவாகக் கொள்ளப்படும். அங்ஙனம் கொள்ளுங்கால் இராசி மண்டிலங்கீறி அம்மண்டிலத்துள் ஏழு வீடுகளில் குரல் முதலிய ஏழிசைகளும் நிற்பனவாகவும் எஞ்சிய ஐந்து வீடுகளில் அந்தரக் கோல்கள் நிற்பனவாகவும் கருதிக் கொள்ளப்படும். அங்ஙனம் கொள்ளுங்கால் அவை இவ்வாறு நிற்கும்.

இனி இவையிற்றை யாழிற் கொள்ளுமிடத்து யாழினது (மேருவில்) தகைப்பில் இளியும் ஏனைய அதனைத் தொடர்ந்து நிற்பனவாகவும் தகைப்பினின்று இடபவிராசி முதலியன தொடர்ந்து நிற்பனவாகவும் கொள்ளப்படும்.

...
இடபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு  மகரம்  கும்பம்  மீனம்  மேடம்
-------  -------  -----   ------- ------  ------ ----------  ------  -----   -------  ------   -------
இளி      ---       விளரி   தாரம்   ----      குரல்     ---         துத்தம்  ---   கைக்கிளை உழை  ---
...

என, இங்ஙனம் கொள்க. கோடிட்ட இடங்கள் அந்தரக்கோல்களாகும்.

தாரத் தாக்கம்

72-81 : வன்மையில் ........... செம்பாலையாயது

(இதன்பொருள்) வன்மையில் கிடந்த தார பாகமும் - வட்டப் பாலையின் முடிவிடமாகிய வலிவியக்கில் நின்ற தாரம் என்னும் இசையணங்கிற்குரிய இரண்டலகில் ஓரலகினையும்; மென்மையில் கிடந்த குரலின் பாகமும் - அப்பாலை தொடங்குமிடமாகிய குரல் என்னும் இசைமகளுக்குரிய நாலலகில் இரண்டலகையும் கூட்டி இரண்டற்கும் இடைநின்ற; மெய்க்கிளை நரம்பில் - அந்தரக் கோலிலே மூன்றலகுடைய இசையை உண்டாக்கிய வழி அவ்விடத்தில்; கைக்கிளை கொள்ள-கைக்கிளை என்னும் இசையணங்கு தோன்றா நிற்பள்; பொற்புடைத் தளராத் தாரம் - பொலிவும் வலிவுமுடைய அத்தாரம் என்னும் இசையன்னை; கைக்கிளை ஒழிந்த பாகமும் விளரிக்கீத்து - அக்கைக்கிளை கொண்டு தன்பால் எஞ்சி நின்ற ஓரலகையும் தன்மருங்கே நின்ற விளரி என்பாளுக்கு வழங்கிவிட்டு; கிளைவழிப்பட்டனள் - தன் மகள் இல்லத்தை எய்தினள்; அங்கே கிளையும் - அவ்வில்லத்து வாழ்ந்த உழை என்பாளும்; தன் கிளை அழிவுகண்டு அவள் வயின் சேர-தன் மகளாகிய குரல் என்பாள் தன தலகில் இரண்டலகை யிழந்து அழிந்தமையாலே அவளிருந்த வீட்டை எய்தினள்; ஏனை மகளிரும் கிளைவழிச் சேர - இங்ஙனமே எஞ்சிய இசைமகளிர் தாமும் தத்தம் கிளைஞர் இல்லத்தை எய்தா நிற்றலாலே; மேலது உழையுளி கீழது கைக்கிளை - பண்டு குரல் முதலாகநின்ற இசை நிரலிரண்டும் இம்மாற்றத்தாலே உழைமுதலாகக் கைக்கிளை இறுதியாக அமைந்து நிரலே மெலிவு நான்கும் சமன் ஏழும் வலிவு மூன்றுமாய் உழைமுதலாக; வம்புறுமரபில் செம்பாலை யாயது-புதியதொரு முறைமையாலே செம்பாலை முதலிய பண்கள் தோன்றுவன வாயின என்க.

(விளக்கம்) 72-81; வன்மையிற் கிடந்த என்பது தொடங்கி அடிகளார் தாரத்தாக்கம் கூறுகின்றார். தாரத் தாக்கமாவது - தார விசையிலிருந்து இசை நிரல்களை மாறுபடுத்திக் கொள்ளுமாறு இசைக்கரணம் என்க. (80) மேலது உழையிளி என்பது, மேலது என்னும் ஒருமையோடு பொருந்தாமையின் இப்பாடம் பிழைபட்ட பாடம் என்று தோன்றுகின்றது. ஆய்ச்சியர் குரவை-14 அரும்பதவுரையில் உழையிளி என்பது உழைக்குப் பெயர், என ஒரு குறிப்புக் காணப்படுதலின் அதுவே, உழையிளி என ஈண்டுத் திரித்து எழுதப்பட்டதாகக் கருத இடனுளது. அதற்குக் காரணம் எமது முன்னுரையிற் காண்க. இனி இஃது என் சொல்லியவாறோ எனின்:

பண்டு குரல் முதலாக நின்ற இசை நிரலின்கண் இறுதியில் நின்ற தாரத்தில் ஓரலகையும் தொடக்கத்தில் நின்ற குரலில் இரண்டலகையும் கூட்டி இரண்டற்கு மிடையே மூன்றலகுடைய கைக்கிளை யிசையைத் தோற்றுவித்தக்கால் தார இசை அழிவுறும். மேனின்ற விளரி தாரத்தில் எஞ்சிய ஓரலகைப்பெற்றுத் துத்தமாகும்; இளி குரலாகும், உழை தாரமாகும், பண்டைக் கைக்கிளை விளரியாகும், துத்தம் இளியாகும், உழைகுரலாகும். இங்ஙனமாதற்கு இவற்றின் அலகுகளும் பொருந்துதலுணர்க. இதன் பயன் ஒவ்வோரிசையையும் ஐந்திடம் மேலேற்றி நிறுத்துதல் என்க. இதனை இக்காலத்தார் ச-ப, முறை என்பர். பண்டைக் காலத்தே வண்ணப்பட்டடை வைத்தல் என்ப. ஈண்டு அடிகளார் இசைகளை மகளிராக உருவகித்து அழகுற ஓதியுள்ளமை உணரற்பாலதாம்.

இசை திரிந்தவழிப் பாலைகள் திரிதல்

82-89 : இறுதியாதி ......... கிடக்கையின்

(இதன்பொருள்) இறுதி ஆதியாக ஆங்கு அவை பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது-ஈற்றில் நின்ற (தாரத்தாக்கத்தாலே) கைக்கிளை முதலாக இடமுறைப்பாலைகளுக்கு நூல் கூறிய முறைக் கிணங்க அவ்வவ்விசைகள் தாம்தாம் பெறுவதற் கியன்ற முறைமையாலே வந்த தன்மையில் நீங்காமல்; படுமலை செவ்வழி பகர் அரும்பாலை என - கைக்கிளை துத்தம் குரல் என்னும் மூன்றிசைகளும் நிரலே படுமலைப் பாலையாகவும் செவ்வழிப் பாலையாகவும் அடுத்துக் கூறப்படுகின்ற அரும்பாலையாகவும்; குரல் குரலாகத் தற்கிழமை திரிந்தபின் - ஒவ்வொன்றும் குரலாகத் தனக்குத் தனக்குரிய பாலைகளாகத் திரிவு பெற்ற பின்னர் (ஆங்கு); முன்னதன் வகையே - அவ்விடத்தே முன் போலவே; இளி முதலாகிய எதிர்படு கிழமையும் - எஞ்சிய இளி முதலிய மூன்றிசைகளும் இடமுறைப் பாலைகளுக்குத் தமக்குரிய முறையாலே; கோடி விளரி மேற்செம்பாலை என - இளிகுரலாக மேற் செம்பாலையும் விளரி குரலாக விளரிப்பாலையும் தாரம் குரலாகக் கோடிப்பாலையும் ஆகத் திரிந்தன; நீடிக்கிடந்த கேள்விக் கிடக்கையின் - இவ்வாறு படுமலைப்பாலை முதலாக மேற் செம்பாலை ஈறாகத் தொடர்ந்து கிடந்த இசைத் தொடரையுடைய யாழினிடத்தே என்க.

(விளக்கம்) இறுதி (பண்டு தாரம்) இப்பொழுது கைக்கிளை - ஈறு முதலாக எனவே, இவை இடமுறைப்பாலைகள் என்பது பெற்றாம். செம்பாலை முதலியன இடமுறையினும் வலமுறையினும் ஒரேவகையாகத் தொடர்ந்து வருதலை இதனாலறியலாம். இங்ஙனம் வருதலையே அடிகளார் வம்புறுமரபு என்றார் இஃதுணராது அடிகளார் ஈண்டுக் கூறியது வலமுறைப்பாலை என்பார் உரை போலியாம். இனி இவ்வாறு தாரத் தாக்கம் பெற்றபின்னர் இராசி மண்டலத்தில் இசைகள் மாறி நிற்பதனைக் கீழே காட்டிய இவ்விராசி மண்டிலத்தே காண்க.

...
  --        இணை  ---        ---    இணை  ---     இணை     ---      இணை  ---      ---       இணை
-------  -------  -----   ------- ------  ------ ----------  ------  -----   -------  ------   -------
குரல்     துத்தம்  துத்தம்  கைக்கி கைக்கி உழை  உழை       இளி   விளரி   விளரி   தாரம்   தாரம்
-------  -------  ------  ------- ------  ------ ----------  ------  -----   -------  ------   -------
இடபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு  மகரம்  கும்பம்  மீனம்  மேடம்
...

இன்னும் இப்பாலைகளினியல்பை ஆய்ச்சியர் குரவையில் விளக்குதும். ஆண்டுக் காண்க.

இணை நரம்பும் இயக்கும் மரபும்

90-94 : இணை நரம்புடையன ........ புலமையோனுடன்

(இதன்பொருள்) இணைநரம்பு உடையன அணைவுறக்கொண்டு - இந்த ஈரேழ் கோவையில் இணையிசையுடைய இசைகட்கு அவ்வவற்றிற்குரிய இணையிசையையும் இயைத்துக் கொண்டு; ஆங்கு - அவ்வழி, யாழ் மேற் பாலை இடமுறை மெலிய - யாழாசிரியன் தனது யாழின்கண் இயக்கும் அரும்பாலை முதலிய பாலைகளை இடமுறைப் பாலைகளாக இசைத்துச் செல்லாநிற்ப, குழல்மேல் கோடி வலமுறை வலிய-குழலோன் கோடிப்பாலை முதலிய பாலைகளைத் தனது குழலின்கண் வலமுறையாக இசைத்துச் செல்ல; வலிவும் சமனும் மெலிவும் எல்லாம் - வலிவியக்கும் சமனியக்கும் மெலிவியக்கும் என்று கூறப்படுகின்ற மூவகை யியக்கங்களை யுடைய இசைக் கூறுபாடுகளுக்கு எல்லாம்; பொலியக் கோத்த புலமையோனுடன் - நரப்படைவு கெடாமலும் பண்ணீர்மை முதலாயின கெடாமலும் அழகுறப் புணர்க்கவல்லனாய் இசை செய்யவல்ல யாழாசிரியனும் என்க.

(விளக்கம்) 90. இணை நரம்பு - இணைந்து நிற்கும் இரண்டிசைகள். முதலும் முடிவுமாய் நிற்கும் இசையுமாம். இணைநரம்பு எனினும் இணையிசை எனினும் இரட்டை யிசை எனினும் ஒக்கும். இணைகரம் புடையன அணைவுறக் கொண்டெனவே செம்பாலை முதலிய பெரும் பாலைகட்கு ஈற்றினும் தொடங்கிய இசை புணர்க்கப்படும் என்பது பெற்றாம்; மேலும் இணைநரம்பில்ல தனவும் சிலவுள என்பது பெற்றாம். அவை குரலும் இளியுமாம் என்பது பழையவுரையாசிரியர் உரையினாற் பெற்றாம். அது வருமாறு : இணைநரம்புடையன அணைவுறக் கொண்டாங்கென்றது. இப் பதினாற்கோவைப்பாலை நிலையினும் பண்ணுநிலையினும் இரட்டித்த குரல் குரலாகிய அரும்பாலையும், இளிகுரலாகிய மேற் செம்பாலையும்போல அல்லாத ஐந்துபாலையும் உழைகுரலாகச் செம்பாலைக்கு உழை பெய்தும் கைக்கிளை குரலாகப் படுமலைப் பாலைக்குக் கைக்கிளை பெய்தும் துத்தம் குரலாகச் செவ்வழிப் பாலைக்குத் துத்தம் பெய்தும் தாரம் குரலாகக் கோடிப்பாலைக்குத் தாரம் பெய்தும் பாடப்படும் என்றவாறு எனவரும்.

எனவே, குரலும் இளியும் இரட்டிக்கும் என்பது பெற்றாம். பெறவே யாழோன் தாரத்தாக்கத்தால் குரல் குரலாகிய அரும்பாலையிற் றொடங்கி நிரலே கோடிப்பாலை முதலியவற்றைத் தொடர்ந்து இடமுறையாக இசைத்து முடிக்கும்பொழுது அரும்பாலையிலே முடிப்பான் என்பதும் இங்ஙனமே குழலோன் தாரத்தாக்கஞ் செய்யப்படாது நின்ற இளிகுரலாகிய கோடிப்பாலையிற் றொடங்கி விளரிப்பாலை முதலியவற்றை நிரலே வலமுறைப்பாலைகளாக இடையிடையே இசைத்து இறுதியிலே தான் தொடங்கிய கோடிப்பாலையிலே முடிப்பான் என்பதும் பெற்றாம். பாலைநிலையில் இரட்டித்தலாவது - குரல் குரலாகவும் அக்குரலே தாரமாகவும் (ஈறாகவும்) கோடலாம். பண்ணுநிலையிலே இரட்டித்தலாவது அரும்பாலையிலே தொடங்கி முடிக்கும்பொழுதும் அரும்பாலையிலே முடித்தலாம். குழலோன் திறத்திலும் இளியும் கோடிப்பாலையும் இங்ஙனமே இரட்டும் என்க. இக்கருத்தறியாமல் விபுலானந்தர் தமது யாழ் நூலின்கண் இப்பகுதியில் பழையவுரையாசிரியர் மயங்கினார் எனத் தமது மயக்கத்தை அவ்வாசிரியர்பால் ஏற்றினர். இனி யாழோனும் குழலோனும் மாறி மாறி இடமுறையானும் (அவரோகணத்தானும்) வலமுறையானும் (ஆரோகணத்தானும்) மாறி மாறி இயக்குங்காலத்தே பாலைகள் கீழ் வருமாறு பிறப்பனவாம்.

யாழோன், இடமுறை குழலோன், வலமுறை

குரல்-அரும்பாலை .................
தாரம்-கோடிப்பாலை இளி-கோடிப்பாலை
விளரி-விளரிப்பாலை விளரி- விளரிப்பாலை
இளி-மேற்செம்பாலை தாரம்-மேற்செம்பாலை
உழை-செம்பாலை குரல்-செம்பாலை
கைக்கிளை-படுமலைப்பாலை துத்தம்-செவ்வழிப்பாலை
துத்தம்-செவ்வழிப்பாலை கைக்கிளை-படுமலைப்பாலை
குரல்-அரும்பாலை உழை-அரும்பாலை
...........  இளி-கோடிப்பாலை

இப்பாலைகள் வலமுறையானும் இடமுறையானும் ஒன்றிவந்து முதலும் முடிவும் இணைந்து வட்டமாய் முடிவதனைக் கூர்ந்துணர்க. அந்தரக்கோல்களை இயக்கியவழி அவையைந்தும் பிறக்கும் என்க.

இனி அடிகளார் கூறியாங்குத் தாரத்தாக்கம் செய்து இணை நரம்பு அணைவுறக் கொள்ளுங்கால் அவை இராசி மண்டிலத்தே-இவ்வாறமையும்.

...
இடபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு  மகரம்  கும்பம்  மீனம்  மேடம்
-------  -------  -----   ------- ------  ------ ----------  ------  -----   -------  ------   -------
குரல்    துத்தம்  துத்தம்  கைக்கி கைக்கி உழை  உழை       இளி    விளரி   விளரி   தாரம்   தாரம்
-------  -------  -----   ------- ------  ------ ----------  ------  -----   -------  ------   -------
  --      அந்தரம்  ---        ---   அந்தரம்  ---    அந்தரம்     ---     அந்தரம்  ---      ---      அந்தரம்
...

பண்டைக் காலத்தே குரல் முதலியனவாகக் கூறப்பட்ட இக்கேள்விகள் இக்காலத்தே சட்சம் முதலிய பெயர்பெற்று நிற்றலைக் காணலாம். பெயர் மாற்றமேயன்றிப் பிற மாறுபாடில்லை. அவை:

குரல்          சட்சம்

துத்தத்தினந்தரம்          சுத்த இடபம்
துத்தம்          சதுசுருதி இடபம்
கைக்கிளை          சாதாரண காந்தாரம்
கைக்கிளையினந்தரம்   அந்தர காந்தாரம்
உழை           சுத்தமத்திமம்
உழையினந்தரம்           பிரதிமத்திமம்
இளி           பஞ்சமம்
விளரியந்தரம்           சுத்ததைவதம்
விளரி           சதுசுருதி தைவதம்
தாரம்           கைசிகி நிடாதம்
தாரத்தினந்தரம்           காகலி நிடாதம்
குரல்            சட்சம்

எனநிற்கும்.

இவற்றை நோக்கின் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே நந் தமிழிசை இற்றைநாள் இருந்தவாறே இருந்தவுண்மை தெரியவரும்.

இனி மேலே காட்டிய இசைகளில் அந்தரங்களை நீக்கிப் பன்னிருகால் தாரத்தாக்கம் செய்துழி 12*7: 84-ம் இறுதியில் இணைக்கும் பாலைகள் பன்னிரண்டும் இயல்பினமைந்த பாலை ஏழுமாய்ப் பண்கள் நூற்றுமூன்றாதலறிக. இவ்வாறன்றிப் பிறவாற்றானும் கூட்டித் தொகை செய்வாருமுளர்.

அரங்கின் அமைதி

95-113 : எண்ணிய நூலோர் ......... அரங்கத்து

(இதன் பொருள்) எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு - ஆராய்ந்து வரையப்பட்ட சிற்ப நூலாசிரியர் இலக்கணங்களிற் சிறிதும் வழுவாதபடி நாடகவரங்கம் அமைத்தற்கு முதற்கண் நிலத்தை ஓரிடத்தே வரையறை செய்துகொண்டு; புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழை கண்இடை ஒருசாண் வளர்ந்ததுகொண்டு-பொதியின் மலை முதலாய புண்ணியமுடைய மலைப்பக்கங்களிலே நெடிதாகி உயர வளர்ந்த மூங்கிலிடத்தே ஒரு கணுவிற்கும் மற்றொரு கணுவிற்கும் ஒருசாணீளமுடைத்தாக வளர்ந்த பகுதியைக் கைக்கொண்டு; நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும் கோல் இருபத்து நால் விரல் ஆக-சிற்ப நூல்களில் விதித்தமுறைப் படி அரங்கம் அமைத்தற்கு நிலம் அளக்கின்ற கோல் தலையாய வளர்ச்சியை யுடையவன் கைப்பெருவிரல் இருபத்துநாலு கொண்டது ஒருகோலாக நறுக்கி; எழுகோல் அகலத்து எண் கோள் நீளத்து ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி-இக் கோலால் எழுகோல் அகலமும் எண்கோல் நீளமும் ஒருகோல் குறட்டுயரமும் உடையதாய்; உத்தரப் பலகையொடு அரங்கின் பலகை வைத்த இடைநிலம் நால்கோல் ஆக-தூணின்மிசை வைத்த உத்தரப் பலகைக்கும் அரங்கினது அகலத்திற்கிட்ட பலகைக்கும் இடைநின்ற நிலம் நான்கு கோலாக உயரங் கொண்டு; ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய - இத்தன்மையவாகிய அளவிற்குப் பொருந்தவமைத்த இரண்டு வாயில்களுடனே விளங்கும்படி; தோற்றிய அரங்கில் செய்யப்பட்ட அவ்வரங்கினிடத்தே; தொழுதனர் ஏத்தப் பூதரை எழுதி மேல் நிலை வைத்து-கண்டோரெல்லாம் கைகுவித்து வணங்கிப் புகழுமாறு நால்வகை - வருணப்பூதரையும் ஓவியமாக வரைந்து மேலிடத்தே வைத்து, தூண் நிழல் புறப்பட மாண் விளக்கு எடுத்து - தூண்களின் நிழல நாயகப் பத்தியின்கண்ணும் அவையின்கண்ணும் விழாமற் புறத்தே விழுமாறு மாண்புடைய நிலைவிளக்கினை நிறுத்தி; ஆங்கு ஒருமுக எழினியும் பொருமுக எழினியும் கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்து ஆங்கு - இடத்தூணிலையிடத்தே உருவு திரையாக ஒருமுக எழினியும் இரண்டு வலத்தூணிடத்தும் உருவுதிரையாகப் பொருமுக வெழினியும் மேற்கட்டுத் திரையாகக்  கரந்துவரல் எழினியும் செயற்றிறத்தோடே வகுத்து; ஓவிய விதானத்து - ஓவியம் பொறிக்கப்பட்ட விதானத்தையும் உடைத்தாக; உரைபெறு நித்திலத்து மாலைத் தாமம் வளைவுடன் நாற்றி - புகழ்பெற்ற முத்துக்களாலியன்ற சரியும் தூக்கும் தாமமு மாகிய மாலைகளைத் தூங்கவிட்டு; விருந்து படக் கிடந்த அருந்தொழில் அரங்கத்து - புதுமை யுடைத்தாக அமைக்கப்பட்ட செயற்கரிய தொழில் மாண்புடைய அவ்வரங்கத்தின்கண்ணே, என்க.

(விளக்கம்) (95) நூலோர் என்றது சிற்ப நூல்வல்லோரை, அவர் தாமும் அரங்கு செய்தற்கு நிலங்கொள்ளுங்கால் தெய்வத்தானமும் பள்ளியும் அந்தணரிருக்கையும் கூபமும் குளனும் காவுமுதலாகவுடையன நீக்கி, அழியாத இயல்பினையுடைத்தாய் நிறுக்கப்பட்ட குழிப்பூழி குழிக்கொத்துக் கல்லப்பட்ட மண், நாற்றமும் மதுரநாறி இரதமும் மதுரமாகித் தானும் திண்ணிதாய் என்பும் உமியும் பரலும் சேர்ந்த நிலம் களித்தரை உவர்த்தரை ஈளைத்தரை பொல்லாச் சாம்பல்தரை, பொடித்தரை என்று சொல்லப்பட்டன ஒழிந்து ஊரின் நடுவணதாகித் தேரோடும் வீதிகள் எதிர்முகமாக்கிக் கொள்ளல்வேண்டும் என்க.

இவற்றை:-

தந்திரத் தரங்கிங் கியற்றுங் காலை
அறனழித் தியற்றா வழகுடைத் தாகி
நிறைகுழிப் பூழி குழிநிறை வாற்றி
நாற்றமும் சுவையு மதுரமு மாய்க்கனம்
தோற்றிய திண்மை சுவட துடைத்தாய்
என்புமி கூர்ங்கல் களியுவ ரீளை
துன்ப நீறு துகளிவை யின்றி
ஊரகத் தாகி யுளைமான் பூண்ட
தேரகத் தோடுந் தெருவுமுக நோக்கிக்
கோடல் வேண்டு மாடரங் கதுவே

எனவரும் நூற்பாவான் உணர்க.

இனி நிலந்தான் வன்பால் மென்பால் இடைப்பாலென்று மூன்று வகைப்படும். வன்பாலாவது - குழியின் மண் மிகுவது; மென்பாலாவது - குறைவது; இடைப்பாலாவது - ஒப்பு. இவை பெரும்பான்மையாற் கொள்ளப்படும்.

இனி, இதன்கண் நாற்றம் - மண்ணினது நாற்றம்; சுவையும் மண்ணினது சுவையே என்றறிக. மதுரம் - இனிப்பு. மண் இனிப்புச் சுவையுடைத்தாதல் வேண்டும்; வேறு சுவைகள் தீமை பயப்பன என்ப; இதனை,

உவர்ப்பிற் கலக்கமாம் கைப்பின்வருங் கேடு
துவர்ப்பிற் பயமாஞ் சுவைகள் - அவற்றிற்
புளிநோய் பசிகாழ்ப்புப் பூங்கொடியே தித்திப்
பனிபெருகு மாவ தரங்கு

எனவரும் வெண்பாவா னறிக.

இனி, நாற்றம் என்பன கொள்ளிலை, செந்நெல், சண்பகம், சுரபுன்னை என்னும் இவற்றைப்போல் நாற்றமுடைய நிலம் சிறப்பாகும் என்ப. மற்றவை தீமைப்பால என்ப.

97. புண்ணிய நெடுவரை என்றது - பொதியின் மலைபோன்ற கடவுட் டன்மையுடைய மலைகளை.

100. விரல் - ஈண்டுக் கழிய நெடுமையும் கழியக் குறுமையு மில்லாத ஆடவர் கைப்பெருவிரல் என்க. இதனை,

ஒத்த வணுமுத லுயர்ந்துவரு கணக்கின்
உத்தமன் பெருவிரல் இருபத்து நாலுன
கோலே கோடல் குறியறிந் தோரே  - பரதசேனாபதியார்.

எனும் நூற்பாவான் உணர்க.

இனி, அரங்கின் அகலம் நீளம் உயரம் இவற்றின் அளவுகளை,

அக்கோல் ஏழகன் றெட்டு நீண்டும்
ஒப்பால் உயர்வு மொருகோ லாகும்  - செயிற்றியனார்.

என்பதனாலும், இத்தகைய அரங்கிற்கேற்ற வாயில்களின் உயரத்தை,

நற்கோல் வேந்தன் நயக்குறு வாயில்
முக்கோல் தானு முயரவு முரித்தே  - செயிற்றியனார்.

என்பதனானும் அறிக.

105. அரங்கிற்குட் புகவும் புறப்படவும் இரண்டு வாயில் வேண்டுதலின் வாயில் இரண்டுடன் என்றார். ஏற்ற என்பதனை ஆண்டைக்குப் பொருந்திய இடங்கள் பிறவற்றையும் என்று பொருள்கொண்டு அடியார்க்குநல்லார் கரந்து போக்கிடனும் கண்ணுளர் (கூத்தர்) குடிஞைப் பள்ளியும் அரங்கமும் அதனெதிர் மன்னர் மாந்தரோடிருக்கும் அவையரங்கமும் இவற்றினைச் சூழ்ந்த புவிநிறை மாந்தர் பொருந்திய கோட்டியும் முதலாயினவும் கொள்க என்பர்.

106. தோற்றிய - செய்யப்பட்ட. தொழுதனர்; முற்றெச்சம். காண்போர் யாவரும் தொழுது ஏத்த என்றவாறு.

107. பூதர் - வருணப்பூதர், அவர் வச்சிரதேகன், வச்சிர தந்தன், வருணன், இரத்தகேசுரன் எனப்படுவார். இப்பூதர் நால்வரும் நிரலே நால்வகை வருணத்திற்கும் உரியர் என்ப. இப்பூதர்களின் உண்டியும் அணியும் ஆடையும் மாலையும் பிறவும் அழற்படு காதைக் கண் விளக்கமாகக் கூறப்படும். இங்ஙனம் பூதமெழுதி வைத்தலை,

கூறிய வுறுப்பிற் குறியொடு புணர்ந்தாங்கு
ஆடுநர்க் கியற்றும் அரங்கின் நெற்றிமிசை
வழுவில் பூத நான்கு முறைப்பட
எழுதின ரியற்ற லியல்புணர்ந் தோரே

எனவரும் நூற்பாவான் உணர்க.

108. புறத்தேயுள்ள விளக்குக் காரணமாக அரங்கின்கண் தூணிழல் வீழ்தலியல்பாகலின் அந்நிழலை அகற்றுதற் பொருட்டு அகத்தே நிலைவிளக்கு வைக்கப்படுமாதலின் தூணிழல் புறப்பட மாண் விளக்கு எடுத்து என்றார்.

109. ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி என்பன திரைச்சீலைகளின் வகை. இவற்றுள் ஒருமுக எழினி என்பது இடத்தூணிடத்தே தூங்கவிடப்பட்டுக் கயிற்றை உருவியவழி வலத் தூண் காறுஞ் சென்று மறைப்பது என்றும், பொருமுக எழினி என்பது வலத்தூண்கள் இரண்டின் மருங்கும் தூங்கவிடப்பட்ட இரண்டு திரைகள் என்றும், இவை உருவிய வழி இரண்டு பக்கலினுமிருந்து வந்து நடுவண் ஒன்றனோடொன்று இணையும் என்பதும் கரந்துவரல் எழினி என்பது கூத்தர் அவையோர்க்குப் புலப்படாமல் மறைந்து நின்று அமரர்கள் பேசுமாறு பேசுதற்கமைந்த திரைச்சீலை என்றும் பழையவுரையாசிரியர் உரைகளால் ஊகிக்கலாம்.

விதானம்-பந்தல். இப்பந்தலின்கண் ஓவியமெழுதி அழகுசெய்யப்படுதலின் சித்திரவிதானம் எனப்பட்டது.

111. உரைபெறு நித்திலத்து என்புழி உரை - புகழ்.

112. மாலை, தாமம், வளை என்பன முத்துமாலை வகைகள். இவற்றை நிரலே சரி, தூக்கு, தாமம் என்பர் அடியார்க்குநல்லார்.

113. விருந்து - புதுமை.

தலைக்கோல் அமைதி

114-128 : பேரிசை மன்னர் .......... வைத்தாங்கு

(இதன்பொருள்) பேரிமை மன்னர் பெயர் புறத்து எடுத்த சீர் இயல் வெள்குடை காம்பு நனி கொண்டு - பெரிய புகழையுடைய அரசர் எதிர்ந்து வந்து போர் செய்து ஆற்றாமையால் புறமிட்டு ஓடிய விடத்தே அவர் விட்டுப்போன அழகிய இயல்பினையுடைய அவருடைய வெண்கொற்றக் குடையினது காம்பினை நன்கு தலைக்கோலாக நறுக்கி எடுத்து; கண் இடை நவமணி ஒழுக்கி - கணுக்கள் தோறும் ஒன்பான்வகை மணிகளை ஒழுங்குறப் பதித்து; மண்ணிய நாவலம் பொலம் தகட்டு இடைநிலம் போக்கி - தூய்மை செய்த சாம்பூநதம் என்னும் பொன் தகட்டினாலே கணுக்கட்கு இடையிலுள்ள பகுதியை எதிர் எதிராக (வலம் புரியும் இடம் புரியுமாகச்) சுற்றிக்கட்டி; காவல் வெண்குடை மன்னவன் கோயில் இந்திர சிறுவன் ஆக என-சோழ மன்னனுடைய அரண்மனைக்கண் காப்பமைத்து வைத்து இக்கோல் இந்திரன் மகன் சயந்தன் ஆகுக என்று நினைத்து; வந்தனை செய்து வழிபடு தலைக்கோல் - மறை மொழியாலே வாழ்த்தி வழிபடப் பெற்ற அந்தத் தலைக்கோலை; பொற் குடத்துப் புண்ணிய நல்நீர் ஏந்தி மண்ணிய பின்னர் - பொன்னாலியன்ற குடத்தின்கண் புண்ணியம் பயக்கும் காவிரியாற்றின் நீரை முகந்து கொணர்ந்து நீராட்டிப் பின்பு; மாலை அணிந்து - மலர் மாலை சூட்டி; நலம் தரும் நாளால் - இச்சடங்கிற்குப் பொருந்திய நல்ல நாளில்; பொலம் பூண் ஓடை அரசு உவா தடக்கையில் பரசினர் கொண்டு-பொன்னாற் செய்த பூண்களையும் பட்டத்தையுமுடைய பட்டவருத்தனமென்னும் அரச யானையினது கையில் வாழ்த்துடனே கொடுத்து; முரசு எழுந்து இயம்பப் பல்லியம் ஆர்ப்ப அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவும்-வீர முரசு முதலியன மூன்று முரசுகளும் ஒரு சேர எழுந்து முழங்கவும், இன்னிசைக் கருவிகள் பலவும் ஒரு சேர முழங்கவும் அரசனும் அவனோடு தொடர்புடைய அமைச்சர் முதலிய ஐம்பெருங் குழவினோடும்; அப் பட்டத்தி யானையோடும் தேர்வலம் செய்து - அணி செய்து மறுகிலே நிறுத்தப்பட்டுள்ள தேரினை வலம்வந்து; கவி கைக்கொடுப்ப - அத் தேர் மிசை நின்ற கவிஞனின் கையிலே அத்தலைக்கோலை அளிப்ப; ஊர்வலம் செய்து புகுந்து முன் வைத்து ஆங்கு - அக்கவிஞன்றானும் மன்னர் முதலியவரோடே ஊர்வலமாக வந்து அரங்கின்கட் புகுந்து அத்தலைக்கோலை எதிர்முகமாக வைத்தபின்னர், என்க.

(விளக்கம்) 114-5. பேரிசை மன்னர் என்றது பண்டு பற்பல போர்களினும் பகைவென்று வாகை சூடிப் பெரும்புகழ்படைத்திருந்த மன்னரை என்பதுபட நின்றது.

115. சீரியல் வெண்குடை என்றது - குடை மங்கலம் என்பது தோன்ற நின்றது, அஃதாவது:

தன்னிழலோர் எல்லோர்க்கும் தண்கதிராம் தற்சேரா வெந் நிழலோர் எல்லோர்க்கும் வெங்கதிராம், இன்னிழல்வேல் மூவா விழுப்புகழ்.... கோவாய் உயர்த்த குடை எனவரும், (புறப் - வெண்பா 222) பேரிசை மன்னர் என்றதற்கேற்பக் குடைக்கும் மங்கலம் கூறுவார் சீரியல் வெண்குடை என்றார்.

இனி, பேரிசை மன்னராகிய பகைவர் எயிற்புறத்து மிளைக்கண் கொண்ட மூங்கில் எனினுமாம் என்பார் அடியார்க்குநல்லார்.

இங்ஙனம் கூறியது ஆடுதற்குரிய கூத்து வேத்தியல் ஆதலின் பொதுவியலுக்கு மலையிற் கொண்ட மூங்கிலே அமையும் என்பர்.

116. நாவலம் பொலம்தகடு என்றது சாம்பூநதம் என்னும் பொன்னாலியன்ற தகட்டினை. பொற்றகட்டால் மலக்கமாகக் கட்டி என்பர் (அடியார்க்) மலக்கம் - மாறுபாடு; அஃதாவது வலமாகவும் இடமாகவும் சுற்றுதல் என்க.

119. இந்திரன் மகன் சயந்தன் என்பான் திருமுனி சாபத்தால் மண்ணிடை வந்து மூங்கிலாகித் தலைக்கோலுமாகிச் சாபநீங்கினன் என்பது வரலாறாகலின் தலைக்கோலை இந்திரன் மகனாக நினைத்து வழிபாடு செய்வது மரபாயிற்று.

120. இத்தலைக்கோலின் அளவினை,

புண்ணியமால் வெற்பிற் பொருந்துங் கழைகொண்டு
கண்ணிடைக் கண்சாண் கனஞ்சாரும் - எண்ணிய
நீளமெழு சாண்கொண்டு நீராட்டி நன்மைபுனை
நாளிற் றலைக்கோலை நாட்டு  - பரதசேனாபதியார்.

எனவரும் வெண்பாவா னுணர்க.

121. புண்ணிய நன்னீர் என்றது காவிரி முதலிய கடவுட்டன்மை யுடைய யாற்றுநீரை.

122. முற்கூறிப் போந்த ஆடலாசிரியன் முதலாயினோர் அரங்கத்தின்கண்ணே இத்தலைக் கோலை வைத்துப் பொற்குடத்தால் நீராட்டிய பின் மாலைசூட்டி என்றியையு காண்க.

123. நலந்தரு நாள் என்றது ஆடற்கலைக்கு ஆக்கமான நலந்தரும் நன்னாள் என்றவாறு. அவை, பூராடம் கார்த்திகை பூரம் பரணி இரேவதி திருவாதிரை அவிட்டம் சித்திரை விசாகம் மகம் என்னும் இவை என்ப. நலந்தரு நாள் என்ற இலேசினால், இடபம் சிங்கம் துலாம் கற்கடகம் விருச்சிகம் மிதுனம் ஆகிய ஓரைகளும் கொள்க என்ப. என்னை?

பூராடங் கார்த்திகை பூரம் பரணிகலம்
சீராதி ரைஅவிட்டஞ் சித்திரையோ - டாருமுற
மாசி யிடப மரிதுலை வான்கடகம்
பேசிய தேள்மிதுனம் பேசு  - மதிவாணர்.

என்பவாகலான் என்க.

123. பொலம்பூணும் ஓடையும் என உம்மை விரித்தோதுக. ஓடை - முகபடாம்; பட்டம் என்பதுமது.

124. அரசுவா - பட்டத்தியானை. பரசினர் - முற்றெச்சம்.

125. முரசு எழுந்து இயம்ப பல்லியம் எழுந்து ஆர்ப்ப என ஒட்டுக. எழுந்து இயம்பல் - மிக்கு ஒருசேர முழங்குதல். பல் இயம் என்றது இன்னிசைக் கருவிகளை,

126. அரைசு: போலி. ஐம்பெருங்குழு - அமைச்சர் முதலிய ஐந்துவகையான அரசியற் சுற்றம்.

127. தேரை வலம் செய்து அதன்கணின்ற கவிஞன் கையிற் கொடுப்ப என்க.

128. அரங்கினுட் புகுந்து என்க. இதற்கு,

பிணியுங் கோளு நீங்கிய நாளால்
அணியுங் கவினு மாசற வியற்றித்
தீதுதீர் மரபிற் றீர்த்த நீரான்
மாசது தீர மண்ணுநீ ராட்டித்
தொடலையு மாலையும் படலையுஞ் சூட்டிப்
பிண்ட முண்ணும் பெருங்களிற்றுத் தடக்கைமிசைக்
கொண்டு சென்றுறீஇக் கொடியெடுத் தார்த்து
முரசு முருடு முன்முன் முழங்க
அரசுமுத லான வைம்பெருங் குழுவும்
தேர்வலஞ் செய்து கவிகைக் கொடுப்ப
ஊர்வலஞ் செய்து புகுந்த பின்றைத்
தலைக்கோல் கோட றக்க தென்ப

என்றார் செயிற்றியனார் என, அடியார்க்குநல்லார் நூற்பா வொன்றனை எடுத்துக் காட்டியுள்ளார்.

அரங்கிற் புகுந்து ஆடுகின்ற இயல்பு

129-142: இயல்பினின் .............. ஆமந்திரிகை

(இதன்பொருள்) இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்-அரசன் முதலியோர் யாவரும் தத்தம் தகுதிக்கேற்ற இருக்கைகளில் முறைமைப்படி அமர்ந்த பின்னர்; குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப-குயிலுவக் கருவியாளர் தாம் நிற்கக்கடவ முறைமை தோன்ற அவரவர்க் கியன்றவிடத்தே நிற்ப; வலக்கால் முன் மிதித் தேறி அரங்கத்து வலத்தூண் சேர்தல் வழக்கு எனப் பொருந்தி - நாடகக் கணிகையாகிய அரங்கேறுகின்ற மாதவி (அரங்கத்திலே கூத்தியர் வலக்கால் முற்பட இட்டேறிப் பொருமுக வெழினிக்கு நிலையிடனான வலப்பக்கத்துத் தூணிடத்தே சேர்தல் மரபு என்பதுபற்றி) அவ்விடத்தே சேர்ந்து; இ நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த தொல் நெறி இயற்கைத் தோரிய மகளிரும் - மாதவி நூன் மரபிற் கிணங்க ஏறியவாறே இடத்தூண் நிலையிடமாகிய ஒருமுக வெழினியிடம் பற்றிய பழைய நெறியியற்கையையுடைய தோரிய மடந்தையரும்; சீர் இயல் பொலிய நீர் அல நீங்க வாரம் இரண்டும் வரிசையில் பாட - நன்மையுண்டாகவும் தீமை நீங்கவும் வேண்டித் தெய்வப்பாடல் இரண்டினையும் மரபுப்படி பாடாநிற்ப; பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும் கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம் - அத் தெய்வப்பாடலின் இறுதியிலே இசைத்தற்குரிய இன்னிசைக் கருவிகள் எல்லாம் கூடிநின்று இசையா நிற்கும்; (அவை, எவ்வாறிசைத்தனவோ வெனின்) குழல்வழி நின்றது யாழ்-வேய்ங் குழலிசை வழியே யாழ் இசை நின்றது; யாழ்வழி தண்ணுமை தக நின்றது - அந்த யாழிசைக்குத் தக தண்ணுமையாகிய மத்தளவிசை நின்றது; தண்ணுமைப் பின்வழி நின்றது முழவு - மத்தளவிசையின் பின்வழியே குடமுழா என்னும் கருவியின் இசை நின்றது; முழவொடு கூடிநின்று இசைத்தது ஆமந்திரிகை-அம் முழவிசையோடு கூடிநின்று அவ்விசைக் கருவிகளின் இசைக் கூறுகளை ஆமந்திரிகை என்னும் கருவி அமைப்பதாயிற்று; என்க.

(விளக்கம்) 129. இயல்பினின் வழாஅ இருக்கை முறைமை என்றது அரசன் முதலியோர் அரங்கின் முன்னர் அவைக்கண் அவரவர் தகுதிக்கேற்ப வீற்றிருக்கும் முறைமையை என்க.

130. குயிலுவ மாக்கள் என்றது இடக்கை முதலிய தோற்கருவியாளரை. முறைமையிலே நிற்றலாவது. ஆடிடம் முக்கோல் ஆட்டுவார்க்கு ஒருகோல் பாடுநர்க் கொருகோல் குயிலுவர் நிலையிடம் ஒருகோல், என நாடக நூலிற் கூறிய முறைப்படி நிற்றல் என்க.

121-2. நாடகக் கணிகையர் அரங்கேறுங்கால் வலக்காலை முற்பட வைத்தேறி வலத்தூணிடத்தே நிற்றல் வேண்டும் என்பது நூல் வழக்கு ஆதலால் அவ்வழக்கிற் கிணங்க மாதவியும் ஏறினள் என்பது கருத்து.

133-4. மாதவி ஏறியவாறே தோரிய மகளிரும் தமக்கு நூல் கூறிய மரபிற்கேற்ப ஏறி இடத்தூணிடம் பற்றி நின்றனர் என்றவாறு.

தோரிய மகளிர் ஆவார் ஆடிமுதிர்ந்தவர் இதனை,

இந்நெறி வகையால் இடத்தூண் சேர்வோன்
தொன்னெறி மரபிற் றோரிய மகளே

எனவும்;

தலைக்கோல் அரிவை குணத்தொடு பொருந்தி
நலத்தகு பாடலு மாடலு மிக்கோள்
சொலப்படு கோதைத் தோரிய மகளே

எனவும், வரும் நூற்பாக்களானறிக.

135. சீரியல் பொலிய நிரல நீங்க என்பதற்குத் தாளவியல்பு பொலிவு பெறவும் அவதாளம் நீங்க எனவும் பொருள் கோடலுமாம்.

136. வாரம் இரண்டாவன - ஓரொற்றுவாரமும் ஈரொற்று வாரமுமாகிய செய்யுள் இரண்டுமாம். அவை தாளத்து ஒருமாத்திரையும் இரண்டுமாத்திரையும் பெற்றுவரும் என்பர். ஈண்டு வாரம் என்பது தெய்வப் பாடலை. அப்பாடலின் இறுதியிலே கூடிநின்றிசைக் கற்பாலனவாகிய கருவிகள் எல்லாம் இசைத்தன என்பது கருத்து.

தோரிய மகளிர் பாட என்றதனால் மிடற்றுப் பாடலும் கூறியவாறாயிற்று.

142. ஆமந்திரிகை - இடக்கை. இஃது இவ்விசைத் தொடரை முற்றுவிக்கும் ஒரு கருவிபோலும்.

இதுவுமது

Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 23, 2012, 11:44:37 AM
143-159 : ஆமந்திரிகை ........... காட்டினர் ஆதலின்

(இதன்பொருள்) ஆமந்திரிகையோடு அந்தரமின்றி - இந்த ஆமந்திரிகை இசையினோடே முன்சொன்ன குயிலுவக் கருவிகளின் இசையெல்லாம் பருந்தும் நிழலும்போல ஒன்றாய்நிற்ப; கொட்டு இரண்டு உடையது ஓர் மண்டில ஆகம்-ஒரு தாளத்திற்கு இரண்டு பற்றாக; கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி - பஞ்சதாளப் பிரபந்தமாகக் கட்டப்பட்ட தேசியொத்தை ஒரு தாளத்திற்கு இரண்டு பற்றாகப் பத்தும் தீர்வு ஒன்றுமாகப் பதினொரு பற்றாலே தேசிக்கூத்தை ஆடிமுடித்து; வந்த முறையின் வழிமுறை வழாமல் - இப்படிச் செய்தல் நாடக நூல்களின் அமைந்த முறைமையாகலான் அம்முறைமை வழுவாமல்; அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர் - அந்தரக்கொட்டென்னும் இவ்வொத்து ஆடிமுடித்த பின்னர்; மீத்திறம் படாமை வக்காணம் வகுத்துப் பால்பட நின்ற பாலைப் பண்மேல் - மங்கலப்பண்ணாய் நரப்படைவு முடைத்தாயிருக்கிற பாலைப்பண்ணை அளவு கெடாதபடி ஆளத்தியிலே வைத்து அதன்மேல்; நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து - மங்கலச் சொல்லையுடைத்தாய் நாலுறுப்பும் குறைபாடிலாத உருவுக்குச் சொற்படுத்தியும் இசைப்படுத்தியும் நன்கு அறிந்து பாட்டும் கொட்டும் கூத்தும் நிகழ்த்தி; மூன்று அளந்து ஒன்று கொட்டி - மூன்றொத்துடைய மட்டத்திலே எடுத்து ஏகதாளத்திலே முடித்து; ஐது மண்டிலத்தால் - அழகிய மண்டிலநிலையால்; கூடை போக்கி - தேசிக்கு ஒற்றித்து ஒத்தலும இரட்டித்து ஒத்தலுமேயாகலின் தேசிக் கூறெல்லாம் ஆடிமுடித்து; ஆறும் நாலும் அம்முறை போக்கி - பஞ்சதாளப் பிரபந்தமாகக் கட்டப்பட்ட வடுகில் ஒத்தையும் தேசியில் ஒத்தைக் காட்டினாற்போல இரட்டிக் கிரட்டியாக ஆடி; கூறிய ஐந்தின் கொள்கைபோலப் பின்னையும் அம்முறை பேரிய பின்றை - சொல்லிப் போந்த தேசிபோல வடுகும் மட்டதாள முதலாக ஏகதாளம் அந்தமாக வைசாகநிலையிலே ஆடிமுடித்த பின்னர்; பொன் இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்து என- பொலிவினை யுடையதொரு பொற்கொடியானது கூத்தாடினாற் போல; நாட்டிய நல்நூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள் ஆதலின் - தாண்டவம் நிருத்தம் நாட்டியம் என்னும் மூன்று கூறுபாட்டிலும் நாட்டியம் என்னும் புறநடத்தை நூல்களில் சொன்ன முறைமை வழுவாமல் அவிநயங்காட்டிப் பாவகந் தோன்ற விலக்குறுப்புப் பதினாலினும் வழுவாமல் ஆடிக்காட்டினளாதலின் என்க.

(விளக்கம்) 143. அந்தரம் - இடையீடு; வேறுபாடு.

144. கொட்டு - பற்று. தேசிக்கூத்து பதினொரு பற்றுடையது என்பது இதனாற் பெற்றாம்.

146. போக்குதல் - செய்து முடித்தல்.

144. அந்தரக் கொட்டு, முகம், ஒத்து என்பன ஒருபொருள் குறித்தன. எனவே, கூத்தாடுவோர் தோற்றுவாய் செய்வது இவ்வந்தரக் கொட்டென்பது பெற்றாம். இக்கூத்தாடிய பின்னரே உருக் காட்டப்படும். ஈண்டு இசற்கு அடியார்க்குநல்லார் முகம் ஆடுதல் திரிலோகப் பொருட்டே என்றொரு நூற்பாவடியை எடுத்துக் காட்டினர்.

145. மீத்திறம்படுதல் - அளவு மிகுதல். வக்காணம்-ஆளத்தி, இதனை ஆலாபனை என இக்காலத்தார் வழங்குவர். இராகவாலாபனம் செய்வோர் அஃது அளவின் மிகுத்துழிக் கேட்போர் உணர்வு சலிக்குமாகலின், மீத்திறம்படாமை வக்காணம் வகுத்து என்றார்.

149. பாலைப்பண் - பெரும்பண் நான்கனுள் ஒன்று. என்னை?
பாலை குறிஞ்சி மருதம் செவ்வழி
நால்வகை யாழா நாற்பெரும் பண்ணே

எனவரும் பிங்கல நிகண்டும் நோக்குக.

பாலைப்பண் - மங்கலப்பண்ணுமாம், குரல் முதல் தாரம் இறுவாய் நரப்படைவு முடைத்தாதல் பற்றிப் பாற்பட நின்ற பாலைப் பண் என்றார். பண்களுள் வைத்துச் சிறந்த பகுதிப்பண் என்பது கருத்து என்க.

150. நான்கு - ஈண்டு உக்கிரம், துருவை, ஆபோகம். பிங்கலை என்னும் உறுப்புக்கள் என்க. நான்குறுப்பிற் குறைந்தவை மங்கலத்துக்குப் பொருந்தாமையின் நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து என விதந்தோதினர். நான்கின் ஒரீஇயவை என்க. அவை மூன்றுறுப்புடையன முதலியன மங்கலச் சொல்லையுடைத்தாய் உறுப்புக் குறைவிலதாய், உருவுக்குச் சொற்படுத்தியும் இசைப்படுத்தியும் அறிந்து என்பது பட நன்கனம் அறிந்து என்றார்.

151. மூன்று - மூன்றொத்துடைய மட்டதாளம் - ஒன்று - ஓரொத்துடைய ஏகதாளம்.

152. ஐது - அழகிய. கொண்ட தேசிப் பகுதியெல்லாம் மண்டில நிலையின் வருதகவுடைத்தே என்பதுபற்றி ஐது.....போக்கி என்றார். கூடை - தேசிக்கூத்து ஒற்றித்தொத்தலும் இரட்டித் தொத்தலுமே உடைத்தாகலின் அவற்றையுடைய கூடை, (தேசி) என்க.

155. ஐந்து, ஆகுபெயர். தேசிக்கூத்து.

158. நாட்டிய நன்னூல்...... ஆதலின் என்பதற்கு இக்கதையிற் கூறிய முத்தமிழ் வகையையும் காட்டினாளாதலின் என்றுமாம் என்பர் பழைய உரையாசிரியரிருவரும்:

மாதவி சிறப்புப் பெறுதல்

149-163 : காவல் ......... பெற்றனள்

(இதன்பொருள்) காவல் வேந்தன் - மன்பதை காக்கும் அச்சோழ மன்னன்பால்; இலைப்பூங்கோதை - அவனது பசும் பொன்னாலியன்ற பச்சைமாலையுடனே, இயல்பினின் வழாமை - மாதவி தன் கூத்துக்கும் பாட்டுக்கும் அழகுக்கும் ஏற்ற முறையில் வழுவாமல்; தலைக்கோல் எய்தி - தலைக்கோலி என்னும் சிறப்புப் பெயரும் சூட்டப்பெற்று; தலையரங்கு ஏறி - முன்னரங்கு ஏறப்பெற்று; விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு ஒருமுறை ஆகப் பெற்றனள் - நூலின்கண் விதித்துள்ள கோட்பாட்டிற்கிணங்க ஆயிரத்தெண் கழஞ்சு ஒருநாட் பரியமாகப் பெற்றனள்; என்க.

(விளக்கம்) 160. இலைத்தொழிலமைந்த பொன்னாலியன்ற மாலை என்க, இது மன்னனுடைய மாலை; இலைப் பூங்கோதை - மாதவி எனினுமாம். அரசனுடைய இலைப்பூங்கோதையின் மதிப்பு ஆயிரத்தெண் கழஞ்சு ஆதலால் அதனைப் பெறுமாற்றால் ஆயிரத்தெண் கழஞ்சு பொன் பெற்றாள் என்பது கருத்தாகக் கொள்க. அதுவே நாடக மகளிர்க்கு ஒருநாட்பரியப் பொருளும் ஆகும் என்க. தலைக்கோல்- தலைக்கோல் என்னும் ஒரு சிறப்புப் பெயர். அது பெற்றவர் தலைக்கோலி என்று அழைக்கப்படுவர் என்பது கல்வெட்டுக்கள் வாயிலாய் அறியப்பட்டுளது.

முட்டில் பாணரும் ஆடியன் மகளிரும்
எட்டொடு புணர்ந்த ஆயிரம் பொன்பெறுப

என்பது நாடக நூல் விதிமுறைக் கொள்கை என்க. ஆயிரம் பரிசத்திற்கும் எண்கழஞ்சு மெய்ப் போகத்தும் ஆக நிச்சயித்து என்க என்பர் அடியார்க்குநல்லார். எண்கழஞ்சு அழிவுக்குமாக என்பர் அரும்பத உரையாசிரியர்.

கோவலன் மாதவியை எய்துதல்

163-175 : அதுவே ......... மறந்தென்

(இதன்பொருள்) அதுவே - அவ்வளவு பொன்னே என்மகட்கு ஒருநாட் பரியம் என்று கருதி மாதவியின் தாய்; வீறுயர் நூறு பத்து அடுக்கி எட்டுக் கடை நிறுத்த பசும்பொன் பெறுவது இந்த மாலையாம் - மாற்றற்ற ஆயிரத்தெண் கழஞ்சு பொன்னை விலையாகப் பெறுவது இந்த மாலையாகும். ஆகவே; மாலை வாங்குநர் நங்கொடிக்குச் சாலும் என - இம்மாலையை அவ்விலைக்கு வாங்கிச் சூட்டுவோர் மாதவியாகிய நங்கள் பூங்கொடிக்கு மணவாளப்பிள்ளையாதற்கு அமையும் என்றுகூறிக் கொடுத்தற் பொருட்டு; நகர நம்பியர் திரிதரு மறுகில் - அந்நகரத்துக் கொழுங்குடி மக்கள் வழங்குதற் கியன்றதொரு பெருந்தெருவிலே; மான் அமர் நோக்கி ஓர் கூனி கைக்கொடுத்து - மான்விழி போன்ற அழகிய நோக்குடையாள் ஒரு கூனியின் கையில் அந்த மாலையைக் கொடுத்து; பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த-விலைக்கு விற்பாரைப் போல்வதொரு பண்பினாலே அக்கூனியை நிறுத்தாநிற்ப; மாமலர் நெடுங்கண் மாதவி மாலை கோவலன் வாங்கி-பெரிய தாமரை மலர்போன்ற அழகிய நெடிய கண்ணையுடைய மாதவியின் மாலையாகிய அந்த மாலையைக் கோவலன் அக்கூனி கூறிய அத்துணைப் பொன்னையும் கொடுத்து வாங்கி; கூனி தன்னொடு மணமனை புக்கு-அக்கூனியோடு சென்று அம்மாதவியை மணத்தற்கியன்ற அவள் மனையினுட் புகுந்து; மாதவி தன்னொடு அணையுறு வைகலின் - தான் விரும்பியவாறே அம் மாதவியை மணந்த அப்பொழுதே ஊழ்வினை காரணமாக அயர்ந்து மயங்கி; விடுதல் அறியா விருப்பினன் ஆயினன் - அம் மாதவியை விட்டுப்பிரிய வொண்ணாத விருப்பத்தை யுடையவனாயினன் ஆதலாலே; வடுநீங்கு சிறப்பின் தன் மனை அகம் மறந்து-குற்றமற்ற சிறப்பினையுடைய தன் மனைவியாகிய கண்ணகியையும் தான் மேற்கொண்டிருந்த இல்லற வாழ்க்கையையும் துவர மறந்து அம் மாதவியின் மனையிலேயே வதிவானாயினன் என்க.

(விளக்கம்) 163. அதுவே என்றது அவ்வளவு பொன்னே அவட்குப் பரியமாகக் கருதி என்பதுபட நின்றது.

164-5. அப்பரியப் பொருளின் மிகுதி ஓதுபவர் உள்ளத்தே நன்கு புலப்படுதற் பொருட்டு அடிகளார் நூற்றுப்பத்து அடுக்கி எட்டுக் கடைநிறுத்த வீறுயர் பசும் பொன் என விதந்தெடுத்தோதும் நயம் உணர்க. வீறுயர் - மற்றொன்றற் கில்லாத சிறப்பினால் உயர்ந்த மாற்றற்ற பசும்பொன் என்க. இம்மாலையின் விலை இது இதனை வாங்கிச் சூடுவோர் எங்கள் மாதவிக் கொடிபடர்தற்குக் கொள்கொம் பாகுவர் என்பது தோன்ற மாலை வாங்குநர் சாலும் நங்கொடிக்கு என்றார். என-என்று கூறிக்கொடுத்தற் பொருட்டு என்க. பாட்டிடை வைத்த குறிப்பினால் நிறுத்துதற்குச் சித்திராபதி என்னும் எழுவாய் பெய்து கூறுக. சாலும் என்ற பயனிலைக்கேற்ப மணமகனாதல் அமையும் என்று விரித்தோதுக.

167. மறுகிற் போவார் மயங்கி ஈதென்கொலோ என்று ஆராய்தற் பொருட்டுச் சித்திராபதி மானவர் நோக்குடையாளொரு கூனியைத் தேர்ந்து நிறுத்தினள் என்பது கருத்து.

168. வேறிடங்களில் அவ்வளவு பொன் கொடுப்பார் அரியர் என்பது தோன்ற நகர நம்பியர் திரிதரு மறுகில் என விதந்தோதினர்.

169. பகர்வனர் - விற்போர். பான்மை - பண்பு.

170. மாதவி ஆடிய கூத்தின்கண் அவள் கண்கள் கோவலன் நெஞ்ச முழுவதும் கவர்ந்துகொண்டன எனக் காரணம் தோன்ற மாமலர் நெடுங்கண் மாதவி மாலை என அடிகளார் விதந்தோதுகின்ற நயமுணர்க. அவனையன்றி மற்றொருவனை விரும்பிநோக்காத சிறப்புடைய கண் என்பது நினைந்து அடிகளார் மாமலர் நெடுங்கண் மாதவி என்று விதந்தனர் எனினுமாம்.

171. நல்லோர் நெறிபற்றி அவரொடு படர்தற்குரிய கோவலன் இங்ஙனம் மெய்யும் கோடிய ஒரு கூனியைப் பின்பற்றிக் கொடுநெறிக்கட் செல்வானாயினன் என்பது தோன்றக் கோவலன் வயந்தமாலையொடு புக்கு என்னாது, கூனி தன்னொடு புக்கு என்றார்.

172. மாதவியோடு அணைவுறுமப்பொழுதே தனது குடிப்பெருமையை அயர்ந்தனன் என்க. அவள்பால் மயங்கி என்றது வடுநீங்கு சிறப்பின் தன் மனையையும் அகத்தையும் மறந்து என்பதற்கு ஏதுவாய் நின்றது. அவள் மனையில் அவளோடு வதிவானாயினன் என்பது குறிப்புப் பொருள்.

வெண்பாவுரை

எண்ணும் எழுத்தும் ........ வந்து

(இதன்பொருள்) பூம்புகார்ப் பொற்றொடி - அழகிய புகார் நகரத்தே உருப்பசியாகிய மாதவி மரபின் வந்த பொன்வளையலணிந்த நாடகக் கணிகையாகிய மாதவி என்பாள்; ஆடு அரங்கின் வந்து - கூத்தாடுதற்கியன்ற அரங்கின்கண் புகுந்து; எண்ணும் எழுத்தும் - கணிதத்தின் சிறப்பினையும் எழுத்துக்களின் சிறப்பினையும் அவற்றாலாய; இயல் ஐந்தும் - இயற்றமிழின் ஐந்து கூறுபாட்டையும்; பண் நான்கும் - இசைத்தமிழுக்கியன்ற நால்வகைப் பண்களின் பெருமையினையும்; பண்ணின்ற - அப்பண்களோடுகூடிய; கூத்து பதினொன்றும் - பதினொருவகைக் கூத்துக்களையும் ஆடி; தன் வாக்கினால் - தனது மொழியாலே; மண்ணின் மேற் போக்கினாள் - பாடி இம்மண்ணுலக முழுதும் புகழும்படி செய்தனள்; என்க.

பா - நிலை மண்டிலம்

அரங்கேற்றுகாதை முற்றிற்று.
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 23, 2012, 11:53:10 AM
4. அந்திமாலைச் சிறப்புசெய் காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அஃதாவது - கோவலன் மாமலர் நெடுங்கண் மாதவிக்கு அவள் பரிசிலாகப் பெற்ற மாலைக்கு நூறுபத்தடுக்கி யெட்டுக் கடை நிறுத்த வீறுயர் பசும்பொன் விலையாகக் கொடுத்து வாங்கிக் கூனிதன்னொடு சென்று அம்மாதவி மனைபுகுந்து அணைவுறுதற்கியன்ற அந்த நாளினது அந்திமாலைப் பொழுது முதலிய கங்குற் பொழுதுகளை (நூலாசிரியர்) கிளந்தெடுத்துப் புனைந்தோதிய பகுதி என்றவாறு.

(விளக்கம்) கோவலனை ஆகூழ்காரணமாகப் பெற்ற மாதவிக்கும், போகூழ் காரணமாகப் பிரியலுற்ற கண்ணகிக்கும் அற்றை நாள் தொடங்கிப் பொழுது கழியுமாற்றை ஆசிரியர் இளங்கோவடிகளார் நம்மனோர்க்கு அறிவுறுத்தக் கருதித் தொடக்க நாளாகிய அந்த ஒரு நாளின் அந்திமாலை தொடங்கி இரவு கழிந்த தன்மையை மட்டும் விதந்தெடுத்துக் கூறுகின்றார். என்னை? ஒருபானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்னும் நியாயம் பற்றி இக்காவியம் ஓதுவோர் அவர்கள் வாழ்க்கைப் போக்கினை உணர்ந்து கோடல் எளிதாகலான் என்க. காமமானது மலரும்பொழுது அந்திமாலைப் பொழுதேயாகலின் அச்சிறப்புப்பற்றி அப்பெயர் பெற்றது இக்காதை; இது, சுருங்கக் கூறி விளங்கவைக்கும் ஓர் அழகாம் என்றுணர்க.

விரிகதிர் பரப்பி உலகம்முழுது ஆண்ட
ஒருதனித் திகிரி உரவோன் காணேன்
அங்கண் வானத்து அணிநிலா விரிக்கும்
திங்கள்அம் செல்வன் யாண்டுஉளன் கொல்எனத்
திசைமுகம் பசந்து செம்மலர்க் கண்கள்  5

முழுநீர் வார முழுமெயும் பனித்துத்
திரைநீர் ஆடை இருநில மடந்தை
அரைசுகெடுத்து அலம்வரும் அல்லற் காலை,
கறைகெழு குடிகள் கைதலை வைப்ப
அறைபோகு குடிகளொடு ஒருதிறம் பற்றி  10

வலம்படு தானை மன்னர் இல்வழிப்
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்
தாழ்துணை துறந்தோர் தனித்துயர் எய்தக்
காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ்வு எய்தக்
குழல்வளர் முல்லையில் கோவலர் தம்மொடு  15

மழலைத் தும்பி வாய்வைத்து ஊத
அறுகால் குறும்புஎறிந்து அரும்புபொதி வாசம்
சிறுகால் செல்வன் மறுகில் தூற்ற
எல்வளை மகளிர் மணிவிளக்கு எடுப்ப
மல்லல் மூதூர் மாலைவந்து இருத்தென  20

இளையர் ஆயினும் பகைஅரசு கடியும்
செருமாண் தென்னர் குலமுதல் ஆகலின்
அந்திவா னத்து வெண்பிறை தோன்றிப்
புன்கண் மாலைக் குறும்புஎறிந்து ஓட்டிப்
பான்மையில் திரியாது பால்கதிர் பரப்பி  25

மீன்அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து,
இல்வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த
பல்பூஞ் சேக்கைப் பள்ளியுள் பொலிந்து
செந்துகிர்க் கோவை சென்றுஏந்து அல்குல்
அம்துகில் மேகலை அசைந்தன வருந்த  30

நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
கலவியும் புலவியும் காதலற்கு அளித்துஆங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக்
கோலம் கொண்ட மாதவி அன்றியும்,
குடதிசை மருங்கின் வெள்அயிர் தன்னொடு  35

குணதிசை மருங்கின் கார்அகில் துறந்து
வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத்
தென்மலைப் பிறந்த சந்தனம் மறுகத்
தாமரைக் கொழுமுறித் தாதுபடு செழுமலர்க்
காமரு குவளைக் கழுநீர் மாமலர்ப்  40

பைந்தளிர்ப் படலை பருஉக்காழ் ஆரம்
சுந்தரச் சுண்ணத் துகளொடு அளைஇச்
சிந்துபு பரிந்த செழும்பூஞ் சேக்கை
மந்தமா ருதத்து மயங்கினர் மலிந்துஆங்கு
ஆவியங் கொழுநர் அகலத்து ஒடுங்கிக்  45

காவிஅம் கண்ணார் களித்துயில் எய்த
அம்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிதுஅணி மகிழாள்  50

கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்
திங்கள் வாள்முகம் சிறுவியர்ப்பு இரியச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள்நுதல் திலகம் இழப்பத்
தவள வாள்நகை கோவலன் இழப்ப  55

மைஇருங் கூந்தல் நெய்அணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும்,
காதலர்ப் பிரிந்த மாதர் நோதக
ஊதுஉலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி
வேனில் பள்ளி மேவாது கழிந்து  60

கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து
மலயத்து ஆரமும் மணிமுத்து ஆரமும்
அலர்முலை ஆகத்து அடையாது வருந்தத்
தாழிக் குவளையொடு தண்செங் கழுநீர்
வீழ்பூஞ் சேக்கை மேவாது கழியத்  65

துணைபுணர் அன்னத் தூவியிற் செறித்த
இணைஅணை மேம்படத் திருந்துதுயில் பெறாஅது
உடைப்பெருங் கொழுநரோடு ஊடல் காலத்து
இடைக்குமிழ் எறிந்து கடைக்குழை ஓட்டிக்
கலங்கா உள்ளம் கலங்கக் கடைசிவந்து  70

விலங்கிநிமிர் நெடுங்கண் புலம்புமுத்து உறைப்ப,
அன்னம் மெல்நடை நன்னீர்ப் பொய்கை
ஆம்பல் நாறும் தேம்பொதி நறுவிரைத்
தாமரைச் செவ்வாய்த் தண்அறல் கூந்தல்
பாண்வாய் வண்டு நோதிறம் பாடக்  75

காண்வரு குவளைக் கண்மலர் விழிப்பப்
புள்வாய் முரசமொடு பொறிமயிர் வாரணத்து
முள்வாய்ச் சங்கம் முறைமுறை ஆர்ப்ப
உரவுநீர்ப் பரப்பின் ஊர்த்துயில் எடுப்பி
இரவுத் தலைப்பெயரும் வைகறை காறும்  80

அரைஇருள் யாமத்தும் பகலும் துஞ்சான்
விரைமலர் வாளியொடு கருப்புவில் ஏந்தி
மகர வெல்கொடி மைந்தன் திரிதர
நகரம் காவல் நனிசிறந் ததுஎன்.

(வெண்பா)

கூடினார் பால்நிழலாய்க் கூடார்ப்பால் வெய்தாய்க்
காவலன் வெண்குடைபோல் காட்டிற்றே - கூடிய
மாதவிக்கும் கண்ணகிக்கும் வான்ஊர் மதிவிரிந்து
போதுஅவிழ்க்கும் கங்குல் பொழுது.

உரை

1-8: விரிகதிர் ............ அல்லற் காலை

(இதன்பொருள்) திரை நீர் ஆடை இருநில மடந்தை - அலையெறிகின்ற நீர்ப்பரப்பாகிய கடலை ஆடையாக உடுத்துள்ள பெரிய நிலமாகிய தெய்வ நங்கையானவள்; அரைசு கெடுத்து - தன் கொழுநனாகிய ஞாயிற்றுத் தேவனைக் காணப்பெறாமையாலே; திசைமுகம் பசந்து - திசைகளாகிய தனது நான்கு முகமும் பச்சை வெயிலாகிய பசப்பூரப்பெற்று; செம் மலர்க்கண்கள் முழு நீர் வார முழுமெயும் பனித்து - சிவந்த மலர்களாகிய தனது எண்ணிறந்த கண்களினெல்லாம் உள்ள நீர் முழுதும் சோரா நிற்பவும் தனது மெய்முழுதும் பனிப்பவும்; விரிகதிர் பரப்பி உலகம் முழுது ஆண்ட ஒருதனித்திகிரி உரவோன் காணேன்-ஐயகோ! விரிகின்ற ஒளியாகிய தனது புகழை யாண்டும் பரப்பி உலக மனத்தையும் எஞ்சாது ஆட்சிசெய்தற்குக் காரணமான ஒற்றையாழியையுடைய ஆற்றல்மிக்க என் தலைவனைக் காண்கிலேனே; அங்கண் வானத்து அணிநிலா விரிக்கும் திங்கள் அம்செல்வன் யாண்டு உளன் கொல் - அதுவேயுமன்றி, அழகிய வான வெளியிலே அழகிய நிலவொளியை விரித்து விளையாட்டயருமியல்புடையவனும் இளவரசனும் ஆகிய திங்கள் என்னும் என் திருமகன்றானும் யாண்டிருக்கின்றனன் என்றும் அறிகின்றிலேனே என்று புலம்பி; அலம் வரும் அல்லல்காலை - மனஞ்சுழலா நின்ற இடுக்கட் பொழுதிலே, என்க.

(விளக்கம்) இருநிலமடந்தையானவள் கெடுத்துப் பசந்து வாரப் பனிப்பக் காணேன் யாண்டுளன் கொல்லோ என அலம் வரும் அல்லற் காலை என்று இயைத்திடுக.

இனி, (1-8:) ஈண்டு அடிகளார், நிலத்தை, மடந்தை யாகவும் ஞாயிற்றை அவள் கணவனாகவும், திங்களை அவள் மகனாகவும், உருவகித்துக் கூறுகின்றார் என்றுணர்க.

இக்காதையில் கண்ணகியார் கணவனைக் காணப்பெறாது அலம் வந்து அல்லலுறுகின்ற நிலையினை ஓதுதற்குப்புகுந்த அடிகளார் கருப் பொருளாகிய நிலம் ஞாயிறு முதலியவற்றினும் அப்பிரிவினையும் ஆற்றாமையையும் அவலச்சுவை கெழுமப் பாடுகின்ற நுணுக்கம் பெரிதும் உணர்ந்து மகிழற் பாலதாம்.

1. அரசன் என்பதற்கேற்ப - கதிர் என்பதனை - (ஒளி;) புகழ் எனவும் கூறிக்கொள்க. உலகம்; குறிஞ்சி முதலிய உலகங்கள் என்க. என்னை? அவற்றைக் காடுறையுலகமும் மைவரையுலகமும் எனத் தனித்தனி உலகம் என்றே வழங்குதல் உண்மையின் ஏழுலங்களையும் என்பர் பழைய உரையாசிரியர். இனி உலகம் முழுதும் ஆண்ட என்புழி முழுதும் என்பது எஞ்சாமைப் பொருட்டெனினுமாம். மேலே மெய்ம் முழுதும் பனிப்ப என்றாற்போல, முழுதும் என்பதன்கண் முற்றும்மை தொக்கது.

2. ஒரு தனித்திகிரி-ஒப்பற்ற ஒற்றைத்தேராழி, எனவும் ஆணைச் சக்கரம் எனவும் இருபொருளும் பயந்து நின்றது. உரவோன் - ஆற்றலோன், ஞாயிறும் மன்னனும் என இரு பொருளுங் கொள்க. விரிகதிர் என்பது தொடங்கி யாண்டுளன் என்னுந் துணையும் நிலமடந்தை கூற்று, 3-4; திங்களாகிய என்மகன் என்க. செல்வன்-மகன். அவன் இளைஞனாதலின் வானத்து அணி நிலா விரித்து விளையாடும் திங்கட் செல்வன் என விரித்தோதுக. 5-6. திசைமுகம் என்றமையான் நான்கு முகம் என்க. பசத்தல் - மகட்குப் பசலைபூத்தலும் நிலத்திற்கு பச்சை வெயிலால் பசுமையுறுதலும் ஆகும். செம்மலர் - செந்தாமரை முதலிய மலர்கள் - அல்லலுறுதல் பற்றி செம்மலர் என அடைபெய்தனர். மலர் என்பதற் கியைய, கள்+நீர்வார எனவும் மடந்தை என்பதற்கியைய, கண்கள்+நீர்வார எனவும் கண்ணழித்து இருபொருளும் கொள்க முழு நீர் வார நீர் முழுதும் சொரிந்து வறள என்க. இது கடைகுறைந்து நின்றது. பனித்தல் என்பதற்கும், பனிபெய்யப் பெறுதல்; நடுங்குதல் என இருபொருளும் காண்க. 7. திரைநீர்; அன்மொழித் தொகை; கடல். 8. அரைசு போலி. இதுவும் கொழுநன் எனவும் ஞாயிறு எனவும் இருபொருள் பயக்கும். இப்பகுதியில் வருகின்ற உருவகஅணி சிலேடையணி முதலியன உணர்ந்து மகிழ்க.

9-12 : கறைகெழுகுடி மன்னரின்

(இதன்பொருள்) வலம்படு தானே மன்னர் இல் வழி - வெற்றி விளைக்கும் படைகளையுடைய முடிவேந்தர் இல்லாத அற்றம் பார்த்து; கறை கெழுகுடிகள் கைதலை வைப்ப - அந்நிலத்திலே தமக்குரிய கடமைப் பொருளை இறுத்தற்குப் பெரிதும் மனம் பொருந்தி வாழ்ந்த நற்குடிமக்கள் தமது கொடுங்கோன்மைக்கு ஆற்றாமல் கண்கலங்கி அழுது தலைமேலே கைவைத்து வருந்தும் படி; அறைபோகு குடிகளொடு ஒரு திறம்பற்றி - தம்மாற் கீழறுக்கப்பட்டுத் தமக்குத் துணையாகிய புன்குடிமக்களோடு ஒரு பகுதியைக் கைப்பற்றி அதுவழியாகப் புகுந்து; புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின் - அந்நாட்டு விளைநிலனெல்லாம் அழிந்து படும்படி தங்கிய புதுவோராகிய குறுநில மன்னர்களைப்போன்று என்க.

(விளக்கம்) 9. கறை கெழுகுடிகள் இறை செலுத்துதற்குப் பொருந்திய நற்குடி மக்கள், கைதலைவைப்ப - வருந்த - காரணத்தைக் காரியமாக உபசரித்தார். என்னை? வருத்தமுறுவோர் தலையிலடித்துக் கோடல் இயல்பாகலின் என்க. இதற்குத் துயர் உறுதல் என்னும் பொருள் நிகழ்ச்சியைத் தலைமேல் கைவைக்க வென்னும் தொழில் நிகழ்ச்சியாற் கூறினார் என்பர் (பழையவுரை) யாசிரியர், 10-அறைபோகு குடிகள் பகை மன்னரால் கீழறுக்கப்பட்டு அவர் வயப்பட்ட புன்குடிகள், ஒரு திறம் - ஒரு திசை. மாலைப்பொழுது மேற்றிசையினின்று உலகிற்புகுதலும் குறுநில மன்னர் யாதானுமோர் உபாயம்பற்றிப் புகுதலும் பற்றிப் பொதுவாக ஒருதிறம்பற்றி என்றார். புலம்-ஈண்டு விளைநிலம்: இறுத்தல்-வந்து கால் கொள்ளுதல். வலம்படுதானை மன்னர் இல்வழி என்றமையால் ஈண்டு விருந்தின் மன்னர் என்றது அந்நாட்டிற்குப் புதியவராகிய குறுநில மன்னர் என்பது பெற்றாம். மன்னரின் - என்புழி ஐந்தனுருபு உறழ்பொருட்டு.

13-20: தாழ்துணை துறந்தோர் .............. இறுத்தென

(இதன்பொருள்) தாழ்துணை துறந்தோர் தனித்துயர் எய்த - தம் மனத்தே தங்கியிருக்கின்ற கொழுநரைப் பிரிந்திருக்கின்ற மகளிர் கறைகெழு குடிகள் போன்று ஒடுங்கித் தனிமையினால் வருந் துயரத்தை எய்தா நிற்பவும்; காதலர்ப் புணர்ந்தோர் களி மகிழ்வு எய்த - தங்காதலரைப் புணர்ந்திருக்கின்ற மகளிர் அறை போகுகுடிகள் போன்று தருக்கி மகிழ்ந்து இன்பமெய்தா நிற்பவும்; குழல்வளர் முல்லையில் கோவலர் தம்மொடு மழலைத் தும்பி வாய்வைத்து ஊத-வேய்ங்குழலிலே வளர்கின்ற முல்லை என்னும் பண்ணிலே ஆயரும், மகளிர் கூந்தலிலே வளர்கின்ற முல்லை மலரிலே இனிதாக முரலுகின்ற தும்பியும் வாய்வைத்து ஊதா நிற்பவும்; சிறுகால் செல்வன் அரும்பு பொதிவாசம் அறுகால் குறும்பு எறிந்து மறுகில்தூற்ற - இளைய தென்றலாகிய செல்வன் முல்லை மல்லிகை இவற்றின் நாளரும்புகள் தம்மகத்தே பொதிந்து வைத்துள்ள நறுமணத்தை அவை முகமலர்ந்து ஈதற்கு முன்னே தாமே கால்களாற் கிண்டிக் கவராநின்ற வண்டுகளாகிய பகையைக் கடிந்தோட்டி அளந்து கொடுபோய் நகர மறுகுகள் எங்கும் பரப்பா நிற்பவும்; எல்வளை மகளிர் மணிவிளக்கு எடுப்ப-ஒளியுடைய வளையலணிந்த மகளிர்கள் இல்லங்கள்தோறும் அழகிய விளக்குகளை ஏற்றித் தொழா நிற்பவும்; மல்லல்மூதூர் மாலை வந்து இறுத்தென - வளமிக்க பழைமையான அப் புகார் நகரத்தே அந்திமாலைப் பொழுது என்னும் குறும்பு வந்துவிட்டதாக என்க.

(விளக்கம்) 13 - தாழ்துணை: வினைத்தொகை. தாழ்தல் - தங்கியிருத்தல். துணை-கொழுநர். களி மகிழ்வு - வினைத்தொகை. களித்து மகிழ. அஃதாவது தருக்கி மகிழவென்க. 15-16 குழல்-வேய்ங்குழல்; கூந்தல். இரட்டுற மொழிதல் என்னும் உத்திபற்றிக் கோவலர்க்கு வேய்ங்குழல் என்றும் தும்பிக்கு மகளிர் கூந்தல் என்றும், நிரலே வளர் முல்லை என்பதற்கு ஆரோசையாக வளர்கின்ற முல்லைப்பண் என்றும் வளர்கின்ற முல்லையினது மலர் என்றும் ஏற்ற பெற்றி பொருள் கூறிக் கொள்க. மழலைத் துபி இன்னிசை முரல்கின்ற தும்பி என்க. தும்பி-வண்டுவகையினுள் ஒன்று.

இனி, வேய்ங்குழலினும் முல்லையினும் கோவலரொடு தும்பி வாய் வைத்தூத என நிரனிறையாகக் கோடலுமாம் 16. அறுகால் : அன் மொழித் தொகை; வண்டு. வண்டைக் குறும்பென்றார் தென்றலால் தளிர்ப்பித்தும் பூப்பித்தும் செய்யப்பட்ட அரும்பு பொதிவாசத்தைக் கொள்ளை கொள்ளுதலால்; அரும்பு - ஈண்டு அப்பொழுது மலர்தற்கியன்ற நாளரும்பு. 18. சிறுகால் - இளந்தென்றல், இஃதஃறிணைச் சொல்லாயினும் உயர்திணைமேற்று, ஆகலின் செல்வன் என்றார். எல்-ஒளி. மகளிர் விளக்கெடுப்ப என்றமையால் இனஞ்செப்புமாற்றால் நெல்லும் மலருந் தூவித் தொழுதென்க. என்னை? அங்ஙனம் தொழுதல் மரபாகலின்; மணி - மாணிக்க மணியுமாம்.

அல்லற்காலை விருந்தின் மன்னரின் தனித்துயர் எய்தவும் களி மகிழ் வெய்தவும் ஊதவும் தூற்றவும் விளக்கெடுப்பவும் மாலை வந்திறுத்தது என வியையும்.

பிறை தோன்றுதல்

21-26: இளையராயினும் ......... விளக்கத்து

(இதன்பொருள்) இளையர் ஆயினும் பகையரசு கடியும் செருமாண் தென்னர் குலமுதல் ஆதலின் - தாம் ஆண்டினால் இளைமையுடையோராய விடத்தும் தம்மோடெதிரும் பகைவராகிய பேரரசரையும் எதிர்ந்து புறமிடச்செய்தற் கியன்ற போர் ஆற்றலால் மாட்சிமையுடைய பாண்டிய மன்னருடைய குலத்திற்கு முதலிற்றோன்றுதலாலே; அந்திவானத்து வெண்பிறை தோன்றி-அந்திமாலைக் கண்ணதாகிய செக்கர் வானத்தின்கண் வெள்ளிய இளம்பிறையானது தோன்றி; புன்கண் மாலைக் குறும்பு எறிந்து ஓட்டி - உயிர்கட்குத் துன்பத்தைச் செய்கின்ற அம்மாலையாகிய குறும்பைப் பொருது புறமிட்டோடச் செய்து; பான்மையில் திரியாது - தனக்குரிய பண்பாகிய செங்கோன்மையிற் பிறழாமல்; பாற்கதிர் பரப்பி-பால்போலும் தனது ஒளியாகிய அளியை உலகெலாம் பரப்பி; மீன் அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து - அவ்விண்மீன் வேந்தனாகிய திங்கள் ஆட்சிசெய்த வெண்மையான விளக்கத்திலே, என்க.

(விளக்கம்) 21-22. தென்னர் ஆண்டிளைமையுடையராயினும் வலிய பகையரசரையும் கடியும் பேராற்றல் வாய்ந்தவர் அல்லரோ! அப்பண்பு அவர் குலத்திற்கு முதல்வனாகக் கூறப்படுகின்ற திங்களிடத்தும் இருப்பது இயல்பு. ஆதலால் திங்கள் இளம்பிறையாயவிடத்தும் அந்திப் பொழுதில் வந்து உலகைக் கௌவிய இருளாகிய பகையைக் கடிந் தோட்டலாயிற்று என்பது கருத்து. இளையராயினும் என்றதனால் பகையரசு என்றது போர்ப் பயிற்சி மிக்க வல்லரசர் என்பது குறிப்பாற் பெற்றாம். பாண்டியர் இளையராயினும் பகையரசு கடியும் செருமாண் புடையர் என்புழி அடிகளார் இடைக்குன்றூர்க் கிழாஅர் என்னும் புலவர் பெருமான் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடிய அரசவாகைத்துறைச் செய்யுளையும் அப்பாண்டியன் சூண்மொழிந்த செய்யுளையும் நினைவு கூர்ந்திருத்தல் கூடும் அவை புறநானூற்றில் 71,72 -ஆம் செய்யுள்களாம். அவற்றை நோக்கியுணர்க.

33. அந்திவானம் - செக்கர்வானம், புன்கண் - துன்பம். குறும்பு - செவ்வி நேர்ந்துழி வேந்தலைக்கும் குறும்பர்; இவர் குறுநில மன்னர் ஆசிரியர் வள்ளுவனார் இவரை வேந்தலைக்கும் கொல் குறும்பு என வழங்குவர். 25. பான்மை - செங்கோன்மை கதிர் ஈண்டு அரசர்க்குரிய அளி என்க. மீனரசு திங்கள். விண்மீன்களுக்குத் தலைவன் என்பது பற்றி அங்ஙனம் ஒரு பெயர் கூறினர். 26. வெள்ளி விளக்கம் என்றது நிலவொளியினை.

27-34 : இல்வளர் ...... மாதவியன்றியும்

(இதன்பொருள்) ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி - தனது மாலையை ஆயிரத் தெண்கழஞ்சு பொன் கொடுத்து வாங்கிக் கூனியொடு தன் மனைபுக்க கோவலனைப் பேரார்வத்தோடு எதிர் கொண்டு மணவாளனாக ஏற்றுக் கொண்டு; இல்வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த பல் பூஞ்சேக்கைப் பள்ளியுள் பொலிந்து - இல்லத்திலே நட்டு நீர்கால் யாத்து எருப்பெய்து வளர்க்கப் பட்டமையாலே செழித்து வளர்கின்ற முல்லையோடு மல்லிகையும் ஏனைய தாழிக்குவளை முதலிய பல்வேறு மலர்களும் மலர்ந்து மணம் பரப்பாநின்ற மலர்ப்பாயலையுடைய பள்ளியிடத்தே தங்கிக் காதலனை எய்தினமையாலே புதுப்பொலிவு பெற்று; சென்று ஏந்து அல்குல் - உயர்ந்து பூரித்துள்ள தனது அல்குலிடத்தே அணியப்பெற்ற; செந்துகிர்க் கோவை -செவ்விய பவளத்தாலியன்ற கோவையும்; அந்துகில் மேகலை- அழகிய புடைவை மேற் சூழ்ந்த மேகலையும் ஆகிய பேரணிகலன்கள்; அசைந்தன வருந்த - தந்நிலைகுலைந்து வருந்தாநிற்ப; நிலவுப் பயன்கொள்ளும் நெடுநிலா முற்றத்து - நிலவினது பயனை நுகர்தற்கியன்ற நெடிய நிலாமுற்றத்தின்கண்; கலவியும் புலவியும் காதலற்கு அளித்து-ஒருகாற் கலவியையும் மறுகால் புலவியையும் தன் காதலனாகிய கோவலனுக்கு வழங்கி; ஆங்கு - அவ்விடத்தே; கோலங்கொண்ட மாதவியன்றியும்-கலவியாலும் புலவியாலும் குலைந்த ஒப்பனைகளை மீண்டும் வேட்கை விளைக்கும் கோலமாகத் திருத்திய அம்மாதவியே யன்றியும்; என்க.

(விளக்கம்) 3-4 : மலரின் செழுமைக்கும் மணமிகுதிக்கும் இல்வளர் முல்லையும் மல்லிகையும் கூறப்பட்டன. என்னை? அவை பொழுதறிந்து நீர்கால்யாத்து எருப்பெய்து வளர்க்கப்படுமாதலின் அவற்றின் மலரும் மணமும் சிறப்புடையனவாதலியல்பாகலின். தாழியில் நட்டுக் குவளைமலர்களும் உண்டாக்குவர் ஆதலின் பழைய உரையாசிரியர் ஒழிந்த தாழிக்குவளை முதலிய பல பூவும் என்றார். இம்மலர்கள் மாலைப் பொழுதில் மலரும் இயல்பின ஆதலின் அவிழ்ந்த பூஞ்சேக்கைப் பள்ளி என்றார். சேக்கைப்பள்ளி-கருத்தொத்து ஆதரவுபட்ட காதலர் சேர்ந்து துயிலும் படுக்கை. சேர்க்கப்பள்ளி எனவும் பாடம் பொலிவு. புதியபொலிவு. காதலர் இருவரும் கூடியிருத்தலால் உண்டாய பொலிவென்றபடி. கோவை மேகலை என்பன அணிகலன்கள். அவற்றை எண் கோவை மேகலை காஞ்சி யெழுகோவை என்பதனாலறிக துகிர் - பவளம் - கோவை மேகலை என்னும் அணிகள் அசைந்தன வருந்த நிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலாமுற்றம் என்றது இடக்கரடக்கிக் கூறியவாறாம். ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் என்பது பற்றிக்கலவியும் புலவியும் காதலற்கு அளித்துஎன்றார்.

35-46 : குடதிசை ......... களித்துயிலெய்த

(இதன்பொருள்) காவியம் கண்ணார் - அப் பூம்புகார் நகரத்தே காதலரைப் புணர்ந்திருக்கும் வாய்ப்புடைய நீல மலர்போன்ற அழகிய கண்களையுடைய ஏனைய மகளிர்களுட் சிலர் தத்தம் பள்ளிகளிடத்தே; குடதிசை மருங்கின் வெள்ளயிர் தன்னொடு குணதிசை மருங்கின் கார் அகில் துறந்து - மேற்றிசையிடத் துண்டான வெள்ளிய கண்டு சருக்கரையோடு கீழ்த்திசையிடத்தே தோன்றிய அகில் முதலியவற்றால் புகைக்கும் புகையைத் துறந்து தங் கணவரோடு கூடுதற்கு விரும்பி; வடமலைப் பிறந்த வான் கேழ் வட்டத்து - வடதிசைக் கண்ணதாகிய இமயமலைக்கட் பிறந்த ஒளிமிக்க வட்டக்கல்லிலே; தென்மலைப் பிறந்த சந்தனம் மறுக-பொதிய மலையிலே பிறந்த சந்தனக் குறட்டைச் சுழற்றித் தேய்ப்பவும்; வேறுசிலர் தங் கணவரோடு கலவிப்போர் செய்தமையாலே, தாமரைக் கொழுமுறி தாதுபடு செழுமலர் காமரு குவளை கழுநீர் மாமலர் பைந்தளிர் படலை-தாமரையினது கொழுவிய இளந்தளிரையும் அதன் பூந்தாதுமிக்க வளமான மலரினையும் கண்டார்க்கு விருப்பம் வருதற்குக் காரணமான நீல மலரினையும் கழுநீர் மலரினையும் பச்சிலையுடனே கலந்து தொடுத்த படலை மாலையுடனே; பரூஉக்காழ் ஆரம் - பருத்து கோவையுற்ற முத்துக்களும்; சுந்தர சுண்ணத்துகளொடும் - நிறந்திகழுகின்ற சுண்ணத்தோடு; சிந்துபு அளைஇப் பரிந்த - சிந்திக் கலந்து கிடந்த; செழும்பூஞ்சேக்கை - வளவிய மலர்ப்பாயலிலே; மயங்கினர் - கூட்டத்தால் அவசமுற்றுப் பின்னர்; மந்தமாருதத்து மலிந்து - இளந்தென்றலாலே தெளிவுற்று; ஆவியங் கொழுநர் அகலத் தொடுங்கி - தம் காதன்மிகுதியால் தமது ஆவிபோலும் தங்கணவருடைய மார்பினிடத்தே பொருந்தி; காவி அம் கண் ஆர் - தங்கள் நீல மலர்போன்ற கண்ணிமைகள் பொருந்துதற்குக் காரணமான; களித் துயில் எய்த - இன்றுயில் கொள்ளா நிற்பவும்; என்க.

(விளக்கம்) 35-6 : குடதிசை அயிர் என்பதற்கு யவனதேசத்து அயிர் என்றார் அடியார்க்கு நல்லார். அயிர் - கண்டு சருக்கரை. அகிலோடு கண்டு சருக்கரையை விரவிப்புகைப்பது மரபு. இதனை, இருங்கா ழகிலொடு வெள்ளயிர் புகைப்ப எனவரும் நெடுநல்வாடையானும் (56) உணர்க.

35-8. குடைதிசை. குணதிசை, வெள்ளயிர், காரகில், வடமலை தென்மலை, என்னும் சொற்களில் முரணணி தோன்றிச் செய்யுளின்பம் மிகுவித்தலுணர்க. 37 வடமலை - இமயமலை; 38 - தென்மலை - பொதியமலை. மறுகுதல் - சுழலுதல். சந்தனக் குறட்டைத் தேய்த்துச் சாந்து செய்தலின் சந்தனம் மறுக என்றார். வேனிற் பருவமாகலின் சந்தனம் அரைத்துத் திமிர்ந்துகொள்ளல் வேண்டிற்று. படலைமாலையும் குளிர் வேண்டிப் புனைந்தபடியாம். படலைமாலையும் பரூஉக் காழ் ஆரமும் சுந்தரச் சுண்ணத்துகளொடும் அளைஇப் பரிந்த பூஞ்சேக்கை என்றது அம்மகளிர் தத்தம் கணவரொடு கலவி நிகழ்த்தியமை குறிப்பாற் றோன்றுமாறு இடக்கரடக்கிக் கூறியபடியாம். இவ்வாறு இடக்கரடக்கிக்கூறுதல் அடிகளார் இயல்பென்பது முன்னும்கண்டாம். இப்பகுதிக்குப் பழைய வுரையாசிரியர் உரைகள் பொருந்தாமையை அவர் உரை நோக்கி யுணர்க.

45-6. ஆவியங்கொழுநர் ....... களித்துயிலெய்த எனவரும் அடிகள் பன்முறை ஓதி இன்புறத்தகுந்த தமிழ்ச்சுவை கெழுமிய வாதலை நுண்ணுணர்வாலுணர்ந்து மகிழ்க.

34. மாதவியன்றியும் அந்நகரத்துப் பல்வேறிடங்களிலே காவியங்கண்ணார் பலரும் சந்தனந்திமிர்ந்து தங்கொழுநரொடு கூடிக்களித்தலாலே படலையும் ஆரமும் தாம் திமிர்ந்த சுண்ணத்தோடு அளைஇ அறுந்துகிடந்த சேக்கைக்கண் மந்தமாருதத்தால் மயக்கந் தீர்ந்து பின்னும் காதன் மிகுதியாலே கொழுநர் அகலத்து ஒடுங்கித் துயிலெய்தா நிற்ப என இயைபு காண்க.

கண்ணகியின் நிலைமை

47-57 : அஞ்செஞ்சீறடி ......... கண்ணகியன்றியும்

(இதன்பொருள்) அம் செஞ்சீறடி அணி சிலம்பு ஒழிய - ஊழ்வினை காரணமாக அப்புகார் நகரத்தே தாழ்துணை துறந்த தையலருள் வைத்துக் கண்ணகியினுடைய அழகிய சிறிய அடிகள் தமக்கு அழகு செய்யும் சிறப்பைச் சிலம்புகள் பெறாதொழியவும்; மெல்துகில் அல்குல் மேகலை நீங்க - மெல்லிய துகிலையுடைய அல்குல் தன்னை அழகு செய்யும் சிறப்பை மேகலை பெறாதொழியவும்; திங்கள் வாள் முகம் சிறு வியர் பிரிய - நிறைமதி போலும் ஒளியுடைய முகம் தன்னையணியும் சிறப்பைச் சிறுவியர்வை நீர் பெறாது பிரியவும்; செங் கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப - சிவந்து நெடிதான கயல்மீன் போலும் கண் தன்னை அணிசெய்யுஞ் சிறப்பை அஞ்சனம் பெறாது மறந்தொழியவும்; பவள வாள்நுதல் திலகம் இழப்ப - பவளம் போன்று சிவந்த ஒளியுடைய நுதல் தன்னை அணியுஞ் சிறப்பைத் திலகம் பெறாதொழியவும்; தவள வாள் நகை கோவலன் இழப்ப-தன்னைக் கூடினாற் பெறுகின்ற வெள்ளிய ஒளி தவழும் புன்முறுவலைக் கோவலன் பெறாதொழியவும்; மை இருங் கூந்தல் நெய் அணி மறப்ப-தன்னையணிந்தால் தான்பெறும் கூந்தலின் மணத்தைப் புழுகு நெய் பெறாதொழியவும் இவை இங்ஙனம் ஆகும்படி; கொங்கை முன்றிலில் குங்குமம் எழுதாள் - அவள்தானும் தன்முலை முற்றத்தே குங்குமக் குழம்பு கொண்டு எழுதாளாய்; மங்கல அணியிற் பிறிது அணி மகிழாள் - மங்கல அணியை அன்றிப் பிறிதோர் அணிகலனையும் அணிந்து மகிழாளாய்; கொடுங் குழை துறந்து வடிந்து வீழ்காதினள்-வளைந்த குழையை அணியாது துறந்தமையாலே ஒடுங்கித் தாழ்ந்த செவியினையுடையளாகிய; கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும் - கையற்ற நெஞ்சத்தையுடைய அக்கண்ணகியை யல்லாமலும் என்க.

(விளக்கம்) ஊழ்காரணமாகக் கோவலனைப் பிரிந்த கண்ணகி சிலம்பு முதலிய அணிகலன்களை அணிதலின்றிக் குங்குமம் எழுதாமலும் கூந்தலில் புழுகு முதலியன அணியாமலும் அஞ்சனம் எழுதாமலும் ஆற்றாமையால் செயலற்றுத் திகைத்திருந்தாள் என்றவாறு.

கண்ணகியின் சீறடி முதலிய உறுப்புகளில் அணியப்பெறும் சிலம்பு முதலிய அணிகலன் தாமே அழகுபெற்றுத் திகழ்வனவாம். அந்தச் சிறப்பினை இப்பொழுது அவை பெறாதொழிந்தன எனப் பொருள் கூறுக. என்னை? அவள்தான் எல்லையற்ற பேரழகு படைத்தவள் ஆதலான் இவ்வணிகலன் அவட்குப் பொறையாகி அவள் இயற்கையழகை மறைத்துச் சிறுமைசெய்யுமாகலான் இவ்வாறு பொருள் விரிக்கப்பட்டது. அவை அவ்வாறாதலை மனையறம் படுத்த காதையில் கோவலன் கண்ணகியை நலம் பாராட்டுபவன்.

62. நறுமலர்க் கோதை நின்நலம் பாராட்டுநர் மங்கல அணியே அன்றியும் பிறிதணியணியப் பெற்றதை எவன் கொல்..... 72 இங்கிவை அணிந்தனர் என்னுற்றனர் கொல் எனப் பாராட்டு மாற்றானும் உணர்க.

இனி, சீறடி முதலியன சிலம்பு முதலிய அணிகளை அணியாதொழியவும் எனப் பொருள் கூறலுமாம்.

48. துகிலல்குல் என்புழித் துகில் அல்குலுக்கு வாளாது அடைமொழி மாத்திரையாய் நின்றது. மேகலை - எண்கோவை. கொங்கை முற்றம் என்றது அவற்றின் மருங்கமைந்த மார்பிடத்தை. பிறிதணி - வேறு அணிகலன். 51. கொடுங்குழை என்புழி கொடுமை - வளைவு என்னும் பொருட்டு. வடிந்து வீழ்காதினள் என்பது அணியாமையினும் பிறந்த அழகு கூறிற்று. 52. வியர் - வியர்வை; ஈறுகெட்டது. இனி வியர்ப்பு+இரிய, எனக் கண்ணழித்தலுமாம். கூட்டமின்மையால் வியர்வை இலதாயிற்றென்க.

53. அழுதழுது கண் சிவந்திருத்தலின் கருங்கயல் என்னாது செங்கயல் நெடுங்கண் என்றார். மற்று இவரே விலங்கு நிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண் எனக் (13: 166) கருங்கயலை உவமை கூறுதலும் உணர்க. இவ்வாறு பொருட்கேற்ற உவமை தேர்ந்தோதுவது அடிகளார்க் கியல்பு என்க. 55 தவள வாணகை கோவல னிழப்ப என்னுமிடத்து அடிகளார் கருத்து விளக்கமுறுதலால் சிலம்பு முதலியனவும் தாம் பெறும் அழகை இழப்ப என்பதே அடிகளார் கருத்தாதல் பெற்றாம்.

56. நெய்-புழுகு. கையறுதல் - செய்வதின்னது என்று தெரியாமற்றிகைத்தல். இஃதொரு மெய்ப்பாடு. இஃது அகத்திற்கும் புறத்திற்கும் பொது. (தொல் - மெய்ப் - 12.)

58-72 : காதலர் ......... புலம்புமுத்துறைப்ப

(இதன்பொருள்) காதலர்ப் பிரிந்த மாதர் - கண்ணகியைப்போல அந்நகரத்தே காதலரைப் பிரிந்து தனித்துறைய நேர்ந்த மகளிர் தாமும் பிரிவாற்றாமையாலே; நோதக ஊது உலைக்குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி - தம்மைக் கண்டோர் வருந்துமாறு கொல்லுலைக் களத்தின்கண் ஊதுகின்ற துருத்தியின் உலைமூக்குப் போல அழலெழ உயிர்த்தனராய்ச் செருக்கடங்கி; வேனில் பள்ளி மேவாது கழிந்து - இவ்விளவேனிற் காலத்திற்கென அமைந்த நிலாமுற்றத்திற் செல்லாதொழிந்து; கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து - கூதிர்க் காலத்திற்கென வமைந்த இடைநிலை மாடத்தே ஒடுங்கி அவ்விடத்தும் தென்றலும் நிலாவொளியும் புகுதாவண்ணம் சாளரங்களின் குறிய கண்களைச் சிக்கென வடைத்து; மலயத்து ஆரமும் மணிமுத்து ஆரமும் அலர் முலை ஆகத்து அடையாது வருந்த பொதியின் மலைப்பிறந்த சந்தனமும் கொற்கையிற் பிறந்த மணியாகிய முத்துமாலையும் தம் பரந்த மார்பிடத்தே முலையில் மேவப் பெறாமல் வருந்தவும்; வீழ் பூஞ் சேக்கை தாழிக் குவளையொடு தண்செங்கழுநீர் மேவாது கழிய - தாம் பெரிதும் விரும்புதற்குக் காரணமான சேக்கைப் பள்ளியிடத்தே தாழிக்குவளையும் தண்ணிய செங்கழுநீரும் இன்னோரன்ன பிறவுமாகிய குளிர்ந்த மலர்கள் பள்ளித்தாமமாய் மேவப் பெறாமையாலே வருந்தி யொழியவும்; துணைபுணர் அன்னத் தூவியில் செறித்த இணையணை மேம்பட - தன் சேவலொடு புணர்ந்த பெடையன்னம் அப்புணர்ச்சி யின்பத்தால் உருகி யுதிர்த்த வயிற்றின் மயிரை எஃகிப் பெய்த பல்வகை அணைகள்மீதே மேன்மையுண்டாக; உடைப்பெருங் கொழுநரோடு திருந்து துயில் பெறாஅது - தம்மையுடைய கொழுநரோடு நெஞ்சம் திருந்துதற்குக் காரணமான களித்துயில் எய்தப்பெறாமல்; ஊடற்காலத்து இடைக் குமிழ் எறிந்து கடைக்குழை யோட்டி - அவரோடு முன்பு ஊட்டியபொழுது இடைநின்ற குமிழை வீசிக் கடைநின்ற குழையை ஓடச்செய்து; கலங்கா உள்ளமும் கலங்கக் கடை சிவந்து விலங்கி நிமிர் நெடுங்கண்கள் - போர்க்களத்தினும் கலங்காத திண்மையுடைய அவர்தம் நெஞ்சம் கலங்குமாறு கடைசிவந்து குறுக்கிட்டுப் பிறழ்ந்து வாகைசூடி உவகைக் கண்ணீர் உகுத்த தம்முடைய நெடிய கண்கள் தாமும் அற்றைநாள்; புலம்பு முத்து உறைப்ப - அக்கண்ணகி கண்கள் போன்றே கையறவு கொண்டு துன்பக் கண்ணீரைச் சொரியா நிற்பவும் என்க.

(விளக்கம்) கண்ணகியன்றியும் அந்நகரத்தே தாழ்துணைதுறந்த மாதர் பலரும் அக்கண்ணகியைப்போலவே ஒடுங்கிக் கழிந்து அடைத்து வருந்தக் கழியப் பெறாது - தம்கண் முத்துறைப்ப என இயையும்.

59. ஊதுலைக்குருகு - துருத்தி; வெளிப்படை. அலர் ஆகம் முலையாகம் எனத் தனித்தனி இயையும். ஆகம் - மார்பு. 64. தாழிக் குவளை. இல்லத்தே தாழியில் நட்டு வளர்த்த குவளை மலர்; குவளை செங்கழுநீர் மலர்கட்கு ஆகுபெயர். 65. வீழ்தல் - விரும்புதல். கழிய என்றது வருந்தஎன்னும் பொருட்டாய் நின்றது. 66. மென்மை மிகுதிக்குத் துணைபுணர் அன்னத் தூவியிற் செறித்த இணையணை கூறப்பட்டது. தூவி -மயிர். இணையணை - இரட்டைப் படுக்கையுமாம். இணைதற்கியன்ற அணையுமாம். இணைதல் - கூடுதல். மேம்பாடு - ஈண்டு அன்பு பெருக்கமடைதல். திருந்துதுயில் - அழகிய துயிலுமாம். உடைப்பெருங் கொழுநர் - தம்மையுடைய கணவர். கொழுநரிற் சிறந்த கேளிர் இன்மையால் பெருங்கொழுநர் என்றார்.

69. இடைக்குமிழ் என்றது இரண்டு கண்களுக்கும் நடுவில்நின்ற குமிழமலர் போன்ற மூக்கினை. குழை - காதணி ஊடற்காலத்தே கண்கள் அங்குமிங்கும் பாயும்பொழுது ஒருகால் நாசியைக் குத்தியும் ஒருகால் காதினைக் குத்தியும் பாயும் என்பது கருத்து. அங்ஙனம் பாய்ந்து சினத்தின் அறிகுறியாகச் சிறிது கடைக்கண் சிவக்குமானால் அவருடைய கணவர் நெஞ்சு கலங்குவர் என்றவாறு.

70. கலங்காவுள்ளம் என்றது போர்க்களத்தே பகைவர் முன்னனரும் கலங்காத உள்ளம் என்பதுபடநின்றது. என்னை? ஒண்ணுதற் கோஓ வுடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரு முட்குமென் பீடு எனவரும் திருக்குறளும் நோக்குக. 71. புலம்புமுத்து - துன்பத்தால் உகுகின்ற முத்துப் போன்ற கண்ணீர்த்துளி. புலம்பு முத்து என்றதனால் அடியார்க்கு நல்லார் இன்பக் கண்ணீரை உவகைமுத்து என இனிதின் ஓதுவர். உறைத்தல் - துளித்தல்.

72-76 : அன்னமென் .......... மலர்விழிப்ப

(இதன்பொருள்) (இனி, இருவகை வினைவயத்தராய் இன்பமும் துன்பமும் எய்திய மாதவியும் கண்ணகியும் பிறமகளிரும் போலாது) அன்ன மெல் நடை - தன்னகத்தே வதியும் அன்னங்களின் நடையாகிய நடையினையும்; தேம் பொதி நறுவிரை நாறும் தாமரை - தேன் பொதிந்துள்ள நறிய மணங்கமழும் தாமரையாகிய; ஆம்பல் நாறும் செவ்வாய் - ஆம்பல் மணநாறும் சிவந்த வாயினையும்; தண் அறல் கூந்தல் - குளிர்ந்த கருமணலாகிய கூந்தலையும் உடைய; நன்னீர்ப் பொய்கை - நல்ல நீராகிய பண்பினையும் உடைய பொய்கையாகிய நங்கை; அவ்விரவெல்லாம் இனிதே துயின்று; பாண் வாய் வண்டு - பாண்தொழில் வாய்க்கப்பெற்ற வண்டுகளாகிய பள்ளியுணர்த்துவார்; நோதிறம் பாட-புறநீர்மை என்னும் திறத்தாலே வைகறைப் பொழுதிலே பள்ளி எழுச்சி பாட; காண்வரு குவளை கண்மலர் விழிப்ப - துயிலுணர்ந்து அழகு வருகின்ற குவளையாகிய தன்னுடைய கண்மலர்களை விழித்து நோக்காநிற்ப வென்க.

(விளக்கம்) தனக்கென வாழாப் பிறர்க்கென முயலும் பெருந்தகைப் பெண்ணாதலின் பொய்கை நங்கை இன்பமும் துன்பமும் இன்றி அமைதியான துயிலில் ஆழ்ந்திருந்தவள் வண்டு பள்ளி எழுச்சி பாடத் தனது குவளைக்கண் மலர்ந்து துயில் நீத்தனள் என்க. இஃது உருவக அணி.

ஆம்பல் - வாளா வாய்க்கு அடைமொழி மாத்திரையாய் நின்றது; துப்புறழ் தொண்டைச் செவ்வாய் என்புழிப் போல. ஆம்பற்பண் எனினுமாம். 75. பாண்-பாண் தொழில். வாய் வண்டு: வினைத் தொகை. வண்டாகிய பள்ளி எழுச்சி பாடுவார் என்க. நோதிறம் பாலைப்பண்ணின் திறங்கள் ஐந்தனுள் ஒன்று. அதனை,

தக்கராக நோதிறங் காந்தார பஞ்சமமே
துக்கங் கழிசோம ராகமே - மிக்க திறற்
காந்தார மென்றைந்தும் பாலைத்திறம் என்றார்
பூந்தா ரகத்தியனார் போந்து

எனவரும் வெண்பாவான் உணர்க.

76. குவளைக் கள்மலர் - குவளையாகிய கள்ளையுடைய மலர்; குவளைக்கண் மலருமாயிற்று. விழித்தல் - மலர்தல்; கண்விழித்தலுமாயிற்று.

77-84 : புள்வாய் ...... தனிசிறந்ததுவென்

(இதன்பொருள்) புள் வாய் முரசமொடு பொறிமயிர் வாரணத்து முள் வாய்ச் சங்கம் முறை முறை ஆர்ப்ப - பறவைகளின் ஆரவாரமாகிய முரசுடனே புள்ளிகளையுடைய தூவியையுடைய கோழிச் சேவலாகிய முள்வாய்த்தலையுடைய சங்கும் முறைமுறையாக முழங்கவும்; உரவு நீர்ப்பரப்பின் ஊர் துயில் எடுப்பி - கடல் போலும் பரப்பையும் ஒலியையும் உடைய அம்மூதூரின் வாழ்வோரைத் துயிலுணர்த்தி; இரவுத்தலைப் பெயரும் வைகறை காறும் - முன்னர் நிலமடந்தை அலம்வரும் அல்லற் காலை வந்து புக்க இருள் இவ்விடத்தினின்று நீங்கும் வைகறை யாமமளவும்; மகர வெல் கொடி மைந்தன் - மகரமீன் வரைந்த வெல்லும் கொடியினையுடைய காமன்; விரைமலர் வாளியொடு கருப்பு வில் ஏந்தி - மணமுடைய மலரம்புகளோடே கரும்பாகிய வில்லையும் ஏந்தியவனாய்; அரை இருள் யாமத்தும் பகலும் துஞ்சான் - முன் சென்ற நள்ளியாமத்தும் ஒருநொடிப் பொழுதும் துயிலாதவனாய்; திரிதர - திரிதலானே; நகரம் - அந்தப் பூம்புகார் நகரமானது; நனி காவல் சிறந்தது - நன்கு காவலாலே சிறப்பெய்துவதாயிற்று என்பதாம்.

(விளக்கம்) புள்வாயாகிய முரசுடனே என்க. புள்ளொலியாகிய முரசுடன் என்பது பொருந்தாது; பொறிமயிர் வாரணமாகிய முள் வாய்க்கப்பெற்ற சங்கம் என்க. என்னை? கோழிச் சேவலுக்குக் காலில் முள்ளுண்மையின் என்க. 79. ஈண்டு அடிகளார் இரவினது இயற்கை நிகழ்ச்சிகளை மட்டுமே கூறுதலின் புள்வாயாகிய முரசமும் வாரணமாகிய சங்கமும் ஆர்ப்ப என்பதே நேரிய பொருளாம். வாரணத்துச் சங்கம் முள்வாய்ச் சங்கம் எனத் தனித்தனி இயையும். இக்கருவிகள் ஆர்ப்பக் காமன் வைகறை காறும் ஊர்துயிலெடுப்பிப் படைக்கலம் ஏந்தி நனிகாத்தனன் என்பதே அடிகளார் கருத்து: உரவுநீர் - அன் மொழித்தொகை. கடல் - கடல்போன்ற பரப்பையுடைய ஊர் என்க. பிரிந்தார்க்கும் புணர்ந்தார்க்கும் துயிலின்மை காமனால் வருதலின், ஊர் துயில் எடுப்பி என்றார். இரவுத்தலை-என்புழி தகரவொற்று விரித்தல் விகாரம். அரும்பதவுரையாசிரியர் துஞ்சான் எனப் பாடங்கொண்டனர். அடியார்க்கு நல்லார் துஞ்சார் எனப் பாடங் கொண்டனர். பகல் - நள்ளீரவு. பகுக்கப்படுதலின் பகல். இனி, நொடிப்பொழுதும் எனலே சிறப்பு. நொடி காலத்தைப் பகுக்குமொரு கருவி ஆகலின் அதற்கும் அது பெயராம்.

ஆர்ப்ப எடுப்பித் தலைப்பெயரும் வைகறைகாறும் துஞ்சானாய்த் திரிதருதலால் நகரங்காவல் நனி சிறந்தது; என்க.

இனி, இக்காதையை மாதவியன்றியும் காவியங்கண்ணார் களித் துயிலெய்தவும், கண்ணகியன்றியும் பிரிந்த மாதர் உயிர்த்து ஒடுங்கிக் கழிந்து குறுங்கண் அடைத்து ஆரம் முலைக்கண் அடையாது வருந்த, கழுநீர் சேக்கையிலே மேவாது கழிய கண்டுயில் பெறாமல் முத்துறைப்ப வண்டு பாடக் குவளை விழிப்ப ஆர்ப்ப இரவுபோம் வைகறை யளவும் யாமத்தும் பகலுந் துஞ்சானாகி மகரக்கொடி மைந்தன் வாளியொடு வில்லை யேந்தித் திரிதலான் நகரங் காவல் சிறந்தது என முடிக்க.

பா: நிலைமண்டிலம்

வெண்பா வுரை

கூடினார் .......... பொழுது

(இதன்பொருள்) விரிந்து போது அவிழ்க்கும் கங்குல் பொழுது - யாண்டும் பரவி முல்லை மல்லிகை முதலிய மலர்களை மலர்விக்கின்ற இரவுப்பொழுதிலே; வானூர் மதி-விண்ணிலே இயங்குகின்ற திங்கள்; கூடினார்பால் நிழலாய் - தன்னிழலில் எய்தி அடங்குபவர்க் கெல்லாம் குளிர்ந்த நிழலாகியும்; கூடார்பால் - அடங்காது விலகியவர்க் கெல்லாம்; வெய்யதாய் - வெம்மை செய்வதாகியும் தன்னைக் காட்டுகின்ற; காவலன் வெள் குடைபோல் - சோழமன்னனுடைய வெண்கொற்றக் குடைபோன்று: கூடிய மாதவிக்கும் கண்ணகிக்கும் - கோவலனோடு கூடிய மாதவிக்கும் அவனைக் கூடாது தனித் துறைந்த கண்ணகிக்கும் நிரலே நிழலாகவும் வெய்யதாகவும்; காட்டிற்று - தன்னைக் காட்டிற்று என்க.

(விளக்கம்) காட்டும் வெண்குடைபோல் எனவும், கூடாது பிரிந்துறையும் கண்ணகிக்கும் எனவும் வருவித்துக் கூறுக.

அந்திமாலைச் சிறப்புச் செய்காதை முற்றிற்று
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 23, 2012, 11:56:24 AM
5. இந்திரவிழவூரெடுத்த காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அஃதாவது புகார் நகரத்தே இந்திரனுக்கு விழா நிகழ்த்திய செய்தியும் பிறவும் கூறும் பகுதி என்றவாறு.

அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்து
ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல்
கண்அகன் பரப்பின் மண்ணக மடந்தை
புதைஇருள் படாஅம் போக நீக்கி
உடைய மால்வரை உச்சித் தோன்றி  5

உலகுவிளங்கு அவிர்ஒளி மலர்கதிர் பரப்பி,
வேயா மாடமும், வியன்கல இருக்கையும்,
மான்கண் காதலர் மாளிகை இடங்களும்,
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறிவு அறியா யவனர் இருக்கையும்,  10

கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,
வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்,  15

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும்,
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா  20

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்,
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்,
காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்உப்புப் பகருநர்  25

பாசவர் வாசவர் பல்நிண விலைஞரொடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்,
கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்
மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்
கண்ணுள் வினைஞரும் மண்ஈட் டாளரும்  30

பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்
பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்
குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்  35

வழுஇன்றி இசைத்து வழித்திறம் காட்டும்
அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்,
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு
மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்,
கோவியன் வீதியும், கொடித்தேர் வீதியும்,  40

பீடிகைத் தெருவும், பெருங்குடி வாணிகர்
மாட மறுகும், மறையோர் இருக்கையும்,
வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை
ஆயுள் வேதரும் காலக் கணிதரும்
பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்,  45

திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையோடு
அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்,
சூதர் மாகதர் வேதா ளிகரொடு
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
காவல் கணிகையர் ஆடல் கூத்தியர்  50

பூவிலை மடந்தையர் ஏவல் சிலதியர்
பயில்தொழில் குயிலுவர் பன்முறைக் கருவியர்
நகைவே ழம்பரொடு வகைதெரி இருக்கையும்,
கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்
நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர்  55

இருந்துபுறம் சுற்றிய பெரும்பாய் இருக்கையும்,
பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
பாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும்,
இருபெரு வேந்தர் முனையிடம் போல
இருபால் பகுதியின் இடைநிலம் ஆகிய  60

கடைகால் யாத்த மிடைமரச் சோலைக்
கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்
நடுக்குஇன்றி நிலைஇய நாள்அங் காடியில்
சித்திரைச் சித்திரத் திங்கள் சேர்ந்தென
வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க எனத்  65

தேவர் கோமான் ஏவலின் போந்த
காவல் பூதத்துக் கடைகெழு பீடிகைப்
புழுக்கலும் நோலையும் விழுக்குஉடை மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து
துணங்கையர் குரவையர் அணங்குஎழுந்து ஆடிப்  70

பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி
மாதர்க் கோலத்து வலவையின் உரைக்கும்
மூதிற் பெண்டிர் ஓதையின் பெயர,  75

மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும்
பட்டின மருங்கின் படைகெழு மாக்களும்
முந்தச் சென்று முழுப்பலி பீடிகை
வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்கவெனப்
பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம்பு ஆகவெனக்  80

கல்உமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோல்
பல்வேல் பரப்பினர் மெய்உறத் தீண்டி
ஆர்த்துக் களம்கொண்டோர் ஆர்அமர் அழுவத்துச்
சூர்த்துக் கடைசிவந்த சுடுனோக்குக் கருந்தலை
வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கவென  85

நற்பலி பீடிகை நலம்கொள வைத்துஆங்கு
உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து
மயிர்க்கண் முரசொடு வான்பலி ஊட்டி,
இருநில மருங்கின் பொருநரைப் பெறாஅச்
செருவெங் காதலின் திருமா வளவன்  90

வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகஇம்
மண்ணக மருங்கின்என் வலிகெழு தோள்எனப்
புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள்
அசைவுஇல் ஊக்கத்து நசைபிறக்கு ஒழியப்  95

பகைவிலக் கியதுஇப் பயம்கெழு மலைஎன
இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையின் பெயர்வோற்கு,
மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும்  100

மகதநன் நாட்டு வாள்வாய் வேந்தன்
பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும்,
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்துஓங்கு மரபின் தோரண வாயிலும்
பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும்  105

நுண்வினைக் கம்மியர் காணா மரபின,
துயர்நீங்கு சிறப்பின்அவர் தொல்லோர் உதவிக்கு
மயன்விதித்துக் கொடுத்த மரபின, இவைதாம்
ஒருங்குடன் புணர்ந்துஆங்கு உயர்ந்தோர் ஏத்தும்
அரும்பெறல் மரபின் மண்டபம் அன்றியும்,  110

வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக்
கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும்
உடையோர் காவலும் ஒரீஇய ஆகிக்
கட்போர் உளர்எனின் கடுப்பத் தலைஏற்றிக்  115

கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது
உள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும்,
கூனும் குறளும் ஊமும் செவிடும்
அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடிப்
பழுதுஇல் காட்சி நன்னிறம் பெற்று  120

வலம்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்,
வஞ்சம் உண்டு மயல்பகை உற்றோர்
நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர்
அழல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர்
கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோ ர்  125

சுழல வந்து தொழத்துயர் நீங்கும்
நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்,
தவம்மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம்மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்
அறைபோகு அமைச்சர் பிறர்மனை நயப்போர்  130

பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்என்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோர்எனக்
காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்
பூதம் புடைத்துஉணும் பூத சதுக்கமும்,
அரைசுகோல் கோடினும் அறம்கூறு அவையத்து  135

உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்
நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப்
பாவைநின்று அழுஉம் பாவை மன்றமும்,
மெய்வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும்
ஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ,  140

வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி,
வால்வெண் களிற்றுஅரசு வயங்கிய கோட்டத்துக்
கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித்
தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து  145

மங்கல நெடுங்கொடி வான்உற எடுத்து,
மரகத மணியொடு வயிரம் குயிற்றிப்
பவளத் திரள்கால் பைம்பொன் வேதிகை
நெடுநிலை மாளிகைக் கடைமுகத்து யாங்கணும்
கிம்புரிப் பகுவாய்க் கிளர்முத்து ஒழுக்கத்து  150

மங்கலம் பொறித்த மகர வாசிகைத்
தோரணம் நிலைஇய தோம்அறு பசும்பொன்
பூரண கும்பத்துப் பொலிந்த பாலிகை
பாவை விளக்குப் பசும்பொன் படாகை
தூமயிர்க் கவரி சுந்தரச் சுண்ணத்து  155

மேவிய கொள்கை வீதியில் செறிந்துஆங்கு,
ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்
அரச குமரரும் பரத குமரரும்
கவர்ப்பரிப் புரவியர் களிற்றின் தொகுதியர்
இவர்ப்பரித் தேரினர் இயைந்துஒருங்கு ஈண்டி  160

அரைசுமேம் படீஇய அகனிலை மருங்கில்
உரைசால் மன்னன் கொற்றம் கொள்கென
மாஇரு ஞாலத்து மன்உயிர் காக்கும்
ஆயிரத்து ஓர்எட்டு அரசுதலைக் கொண்ட
தண்நறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப்  165

புண்ணிய நல்நீர் பொன்குடத்து ஏந்தி
மண்ணகம் மருள வானகம் வியப்ப
விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி,
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்  170

வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ
நான்மறை மரபின் தீமுறை ஒருபால்,  175

நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும்
பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து
வேறுவேறு கடவுளர் சாறுசிறந்து ஒருபால்,
அறவோர் பள்ளியும் அறன்ஓம் படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்  180

திறவோர் உரைக்கும் செயல்சிறந்து ஒருபால்,
கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர்
அடித்தளை நீக்க அருள்சிறந்து ஒருபால்,
கண்ணு ளாளர் கருவிக் குயிலுவர்
பண்யாழ்ப் புலவர் பாடல் பாணரொடு  185

எண்அருஞ் சிறப்பின் இசைசிறந்து ஒருபால்,
முழவுக்கண் துயிலாது முடுக்கரும் வீதியும்
விழவுக்களி சிறந்த வியலுள் ஆங்கண்
காதல் கொழுநனைப் பிரிந்துஅலர் எய்தா
மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னொடு  190

இல்வளர் முல்லை மல்லிகை மயிலை
தாழிக் குவளை சூழ்செங் கழுநீர்
பயில்பூங் கோதைப் பிணையலிற் பொலிந்து
காமக் களிமகிழ்வு எய்திக் காமர்
பூம்பொதி நறுவிரைப் பொழில்ஆட்டு அமர்ந்து  195

நாள்மகிழ் இருக்கை நாள்அங் காடியில்
பூமலி கானத்துப் புதுமணம் புக்குப்
புகையும் சாந்தும் புலராது சிறந்து
நகையாடு ஆயத்து நன்மொழி திளைத்துக்
குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு  200

திரிதரு மரபின் கோவலன் போல
இளிவாய் வண்டினொடு இன்இள வேனிலொடு
மலய மாருதம் திரிதரு மறுகில்,
கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்துஆங்கு
இருகருங் கயலொடு இடைக்குமிழ் எழுதி  205

அங்கண் வானத்து அரவுப்பகை அஞ்சித்
திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்.
நீர்வாய் திங்கள் நீள்நிலத்து அமுதின்
சீர்வாய் துவலைத் திருநீர் மாந்தி
மீன்ஏற்றுக் கொடியோன் மெய்பெற வளர்த்த  210

வான வல்லி வருதலும் உண்டுகொல்.
இருநில மன்னற்குப் பெருவளம் காட்டத்
திருமகள் புகுந்ததுஇச் செழும்பதி ஆம்என
எரிநிறத்து இலவமும் முல்லையும் அன்றியும்
கருநெடுங் குவளையும் குமிழும் பூத்துஆங்கு  215

உள்வரி கோலத்து உறுதுணை தேடிக்
கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல்.
மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப்
பல்உயிர் பருகும் பகுவாய்க் கூற்றம்
ஆண்மையில் திரிந்துதன் அருந்தொழில் திரியாது  220

நாண்உடைக் கோலத்து நகைமுகம் கோட்டிப்
பண்மொழி நரம்பின் திவவுயாழ் மிழற்றிப்
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டுஎன,
உருவி லாளன் ஒருபெருஞ் சேனை
இகல்அமர் ஆட்டி எதிர்நின்று விலக்கிஅவர்  225

எழுதுவரி கோலம் முழுமெயும் உறீஇ
விருந்தொடு புக்க பெருந்தோள் கணவரொடு
உடன்உறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த
வடமீன் கற்பின் மனையுறை மகளிர்
மாதர்வாள் முகத்து மணித்தோட்டுக் குவளைப்  230

போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை
விருந்தின் தீர்ந்திலது ஆயின் யாவதும்
மருந்தும் தரும்கொல்இம் மாநில வரைப்புஎனக்
கையற்று நடுங்கும் நல்வினை நடுநாள்:
உள்அகம் நறுந்தாது உறைப்பமீது அழிந்து  235

கள்உக நடுங்கும் கழுநீர் போலக்
கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
உள்நிறை கரந்துஅகத்து ஒளித்துநீர் உகுத்தன
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன
விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்துஎன்.  240

ஞாயிறு தோன்றுதல்

உரை

1-6 : அலைநீராடை ....... பரப்பி

(இதன்பொருள்) அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்து - கடலாகிய ஆடையினையும் மலையாகிய முலையினையும் அந்த முலையினையுடைய மார்பின் மிசை; பேரியாற்று ஆரம் - காவிரி முதலிய பெரிய ஆறுகளாகிய முத்துமாலைகளையும்; மாரிக் கூந்தல் - முகிலாகிய கூந்தலையும்; அகல் கண் பரப்பின் - அகன்ற இடமாகிய அல்குற் பரப்பினையுமுடைய; மண்ணக மடந்தை -நிலவுலகமாகிய நங்கை; புதை இருள் படாஅம் போக நீக்கி - போர்த்துள்ள இருளாகிய போர்வையை எஞ்சாது அகலும்படி விலக்கி; உதய மால்வரை உச்சித் தோன்றி - உதயமால் வரையின் உச்சியிலே தோன்றி; உலகு விளக்கு அவிர் ஒளி பரப்பி - உலகத்துப் பொருள்களெல்லாம் உயிரினங்கட்கு நன்கு விளங்கித் தோன்றுதற்குக் காரணமாய் விளங்குகின்ற தனது ஒளியைப் பரப்பாநிற்ப என்க.

(விளக்கம்) 1. அலைநீர்: அன்மொழித்தொகை; கடல். முலையாகம் - முலையையுடைய மார்பகம். 2. பேரியாற்று ஆரம் என மாறுக. மாரி-முகில். 3. அகல்கண் பரப்பு என மாறி அகன்ற இடம் ஆகிய அல்குற் பரப்பினையும் எனப் பொருள் கூறுக. மடந்தையைப் புதைத்த இருட்படாம் என்க. படாஅம்-போர்வை. 4.5. ஞாயிறு தோன்று முன்னரே இருள் விலகிவிடுவதால் இருட்படாஅம் நீக்கி மால்வரை யுச்சித் தோன்றி என இருணீக்கத்தை முன்னும் ஞாயிற்றின் தோற்றத்தைப் பின்னுமாக ஓதினர். பரப்பி என்பதனைச் செயவெனெச்சமாக்கிப் பரப்ப என்க.

இனி அடியார்க்கு நல்லார் அந்திமாலைச் சிறப்புச் செய்காதையில் 5-8. திசை முகம் பசந்து செம்மலர்க் கண்கள் முழுநீர்வார....... அரைசு கெடுத்து அலம்வரும் காலை எனவரும் அடிகளைநினைவுகூர்ந்து அந்நிகழ்ச்சியை இக்காதையோடு மாட்டெறிந்து உரை வகுத்தல் பொருந்தாது. என்னை? ஈண்டு அடிகளார் கூறுகின்ற நாள் அந்த நாளின் மறுநாள் அன்றாகலின் என்க.

மணிமலைப் பணைத்தோள் மாநிலமடந்தை அணிமுலைத் துயல் வரூஉம் ஆரம்போலச் செல்புனலுழந்த சேய்வரற் கான்யாற்று என வரும் சிறுபாண் (1-3.) அடிகள் ஈண்டு நினைவு கூரற்பாலன.

அடியார்க்குநல்லார் மலை பொதியிலும் இமயமும் இவற்றைச் சாதியொருமையாற் கூறினார் பொதியிலும் இமயமும் புணர் முலையாக என்றார் கதையினும் என்பர். மேலும் ஈண்டு ஞாயிற்றை விதந்தோதியது செம்பியன் மரபுயர்ச்சி கூறியவாறாயிற்று எனவும் விளக்குவர்.

புகார் நகரத்து மருவூர்ப்பாக்கம்

7-12 : வேயா மாடமும் ....... இலங்குநீர் வரைப்பும்

(இதன்பொருள்) வேயா மாடமும் - நிலா முற்றமும்; வியன்கல இருக்கையும் -மிக்க பேரணிகலன்கள் பெய்துவைத்த பண்ட சாலையும்; மான்கண் கால் அதர் மாளிகை இடங்களும் - மானின் கண்போலக் கோணம் செய்த சாளரங்களையுடைய மாளிகையையுடைய விடங்களும்; கயவாய் மருங்கின் காண்போர்த் தடுக்கும் பயன் அறவு அறியா யவனர் இருக்கையும் - துறைமுகப் பக்கங்களிலே தம்மைக் காண்போர் கண்களை மேற்போகவிடாமல் தடுக்கின்ற ஊதியங் கெடுதலறியாத மிலேச்சர் இருக்குமிடங்களும்; கலம் தரு திருவின் புலம் பெயர் மாக்கள் கலந்து இருந்து உறையும் இலங்கு நீர் வரைப்பும் - மரக்கலத்தால் ஈட்டும் செல்வப் பொருட்டால் தம் நாட்டை விட்டு வந்துள்ள வேற்றுநாட்டு வணிகர் பலரும் ஒருங்கே கூடி நெருங்கியிருக்கின்ற விளங்குகின்ற அலைவாய்க் கரையிடத்துக் குடியிருப்புக்களும்; என்க.

(விளக்கம்) 7. வேயாமாடம் - தட்டோடிட்டுச் சாந்துவாரப்பட்டன என்பர் அரும்பதவுரையாசிரியர். அவையாவன : தென்னையின் கீற்று பனைமடல் முதலியவற்றால் கூரை வேயப்படாத. சாந்து வாரப்பட்ட மேல்மாடங்களையுடையன என்றவாறு. (மாடிவீடுகள்) கலவிருக்கை - பண்டசாலை. 9. கயவாய்-துறைமுகம், புகார் என்பது மது. 10. பயன் - ஊதியம். யவனர் - யவனநாட்டினர்; மேலைநாட்டினர். இவரைச் சோனகர் என்பர் அரும்பதவுரையாசிரியர். 11. கலம்-மரக்கலம். புலம் - தாம் பிறந்த நாடு. புலம் பெயர்மாக்கள் என்றது, வேற்று நாட்டினின்றும் ஈண்டுவந்து பொருளீட்டற் கிருக்கின்ற வணிகரை. அவர் சாதி மதம் மொழி முதலியவற்றால் வேற்றுமை யுடையோராகவிருந்தும் ஒரு நாட்டுப் பிறந்தோர் போன்று ஒற்றுமையுடனிருத்தலின் 12. கலந்திருந்துறையும் என விதந்தார். 12. இலங்கும் நீர்வரைப்பு என்றது, கடற்கரையை.

இதுவுமது

13-15 : வண்ணமும் ........... நகரவீதியும்

(இதன்பொருள்) வண்ணமும் சுண்ணமும் தண் நறுஞ் சாந்தமும்-தொய்யிற் குழம்பு முதலியவும், பூசுகின்ற சுண்ணமும் குளிர்ந்த நறுமணங் கமழுகின்ற சந்தனக் கலவையும்; பூவும் - பல்வேறு வகைப்பட்ட மலர்களும்; புகையும் - அகில் முதலிய நறுமணப் புகைக்கியன்ற பொருள்களும்; மேவிய விரையும் - தம்முட்பொருந்திய நறுமணப் பொருள்களும்; பகர்வனர் திரிதரு நகர வீதியும்-ஆகிய இன்னோரன்னவற்றைச் சுமந்துசென்று விற்கின்ற சிறுவணிகர் விலைகூறித் திரிகின்ற நகரத் தெருவும் என்க.

(விளக்கம்) 14: பூ-விடுபூவும், தொடைப்பூவும், கட்டுப் பூவும் என மூவகைப்படும். புகை - கூந்தற்குப் புகைக்கும் அகில் முதலியன; அவை அஞ்சனக்கட்டி யரியாசம் பச்சிலை ஆரம் அகில் உறுப்போரைந்து என்பனவாம். விரை - நறுமணப் பொருள்கள். அவை: கொட்டம் துருக்கம் தகரம் அகில் ஆரம் ஒட்டிய ஐந்தும் எனப் பிங்கலந்தை கூறும். 15. பகர்வனர்-பகர்வோர், விலைகூறி விற்பவர். திரிதரும் என்றதனால் இவர்கள் இப்பொருள்களைச் சுமந்து கொடு திரிந்து விற்கும் சிறுவணிகர் என்பது பெற்றாம். நகரவீதி - இல்லறத்தோர் குடியிருக்கும் வீதி என்க.

(இதுவுமது)

16-21: பட்டினும் ......... நனந்தலை மறுகும்

(இதன்பொருள்) பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டும் நுண் வினைக் காருகர் இருக்கையும் - பட்டு நூலானும் பல்வேறு மயிராலும் பருத்தி நூலானும் ஊசியால் பிணிக்கின்ற நுண்ணிய தொழில்களையுடைய பட்டுச் சாலியர் இருக்குமிடங்களும்; தூசும் துகிரும் ஆரமும் அகிலும் மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கையொடு - பட்டும் பவளமும் சந்தனமும் அகிலும் குற்றமற்ற முத்தும் ஏனைய மணிகளும் பொன்னுமாகிய இவற்றைக்கொடு சமைக்கப்பட்ட அருங்கலமாகிய செல்வத்தோடே; அளந்து கடை அறியா-இவற்றையெல்லாம் அளந்து காணப்புகுவோர் ஓரெண்ணினும் எண்ணிக் கரைகாண வொண்ணாத; வளம் தலைமயங்கிய நனந்தலை மறுகும் -வளம் இடந்தோறும் இடந்தோறும் குவிந்து கிடக்கின்ற இடமகன்ற மறுகுகளும்; என்க.

(விளக்கம்) 16. மயிர் - எலிமயிர் என்பர் அடியார்க்குநல்லார். 17. காருகர் - நெய்வோர்; அச்சுக்கட்டிகள் முதலாயினோருமாம். காருகர் இருவகைப்படுவர். ஆடை நெய்வோரும் அவற்றைச் சுமந்து விற்போரும் என, பருத்திநூல் அமைத்து, ஆடையாக்கலும் சுமத்தலும் பிறவும் காருக வினைத்தொழில் (என்பது திவாகரம் 12 ஆவது) 18. தூசு-பட்டு. துகிர் பவளம். ஆரம் - சந்தனம். 19. மணி ஈண்டுக் கூறப்பட்ட பவளமும் முத்துமல்லாத ஏனைய மணிகள் ஏழுமாம். 20. அருங்கலம்-பெறற்கரிய பேரணிகலம். வெறுக்கை-செல்வம். அளந்து கடையறியா - அளந்து இவ்வளவென்று அறுதியிட்டுரைக்க வியலாத. ஈண்டுக் கூறப்படும் பொருள்கள் மறுகிற் குவித்து வைத்து விற்கப்படும், ஆதலால், நனந்தலை மறுகு எனல் வேண்டிற்று.

இதுவுமது

22-27: பால்வகை ............ இருக்கையும்

(இதன்பொருள்) பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு-பகுதி நன்கு வேறுபட்டுத் தோன்றுகின்ற முதிரை முதலிய பல்வேறு உணவுப் பொருள்களுடனே; கூலம் குவித்த கூலவீதியும்-எண்வகைக் கூலங்களையும் தனித்தனியே குவித்து வைத்துள்ள கூலக் கடைத்தெருவும்; காழியர் - பிட்டுவாணிகரும்; கூவியர் - அப்பவாணிகரும்; கள் நொடை யாட்டியர் - கள்ளை விற்கும் வலைச்சியரும்; மீன்வலைப் பரதவர் - மீன் வலையையுடைய பட்டினவரும்; வெள் உப்புப் பகருநர் - வெள்ளிய உப்பினை விற்கும் உமணரும் உமட்டியரும்; பாசவர் - இலையமுதிடுவாரும்; வாசவர் - ஐவகை மணப்பொருள் விற்போரும்; மைந்நிண விலைஞரொடு ஓசுநர் செறிந்த - ஆட்டு வாணிகருடனே பரவரும் செறிந்த; ஊன்மலி இருக்கையும் - ஊன்மிக்க இருப்பிடங்களும் என்க.

(விளக்கம்) 22. பால்-பகுதி. முதிரை - பருப்பு. 23. கூலம் எண்வகைப்படும். அவை நெல்லுப்புல்லு வரகுதினை சாமை இறுங்கு தோரையொடு கழைவளை நெல்லே யெனுமிவை. கூத்தநூலார் கூலம் பதினெண் வகைத்து என்பர்; கூலம் - பலசரக்கு என்பாரும், கருஞ்சரக்கு என்பாருமுளர்.

24. காழியர்-வண்ணாருமாம்; என்னை? காழியர் கௌவைப் பரப்பின் வெவ்வுவர்ப்பு ஒழிய எனவரும் அகநானூற்றுச் செய்யுளை நோக்குக; (செய்-89) காரகல் கூவியர் பாகொடு பிடித்த இழைசூழ் வட்டம் என்பது. பெரும்பாணாற்றுப் படை (377-8) நொடைவிலை மீனொடுத்து நெற்குவைஇ என்பது புறம் (343.25.) பட்டினவர்-பட்டினத்துவாழ்வோர். உப்புப் பகருநர் - அளவருமாம். (அளத்தில் உப்புவிளைப்போர்). 26. பாசவர் - கயிறு திரித்து விற்பாருமாம்; பச்சிறைச்சி சூட்டிறைச்சி விற்போருமாம் என்பர். வாசம் ஐந்து வகைப்படும் அவை: தக்கோலம் தீம்பூத் தகை சாலிலவங்கம் கப்பூரம் சாதியோடைந்து என்பன. முற்கூறப்பட்ட விரை என்பனவும் இவையும் வெவ்வேறாதல் உணர்க. 26 மை ஆடு. ஆட்டினை இறைச்சியின் பொருட்டு விற்போராகலின் மைந்நிணவிலைஞர் என்றார். 27. ஓசுநர்-எண்ணெய் வாணிகருமாம்.

இதுவுமது

28-34: கஞ்சகாரரும் ........ மாக்களும்

(இதன்பொருள்) கஞ்ச காரரும் - வெண்கலக் கன்னாரும்; செம்பு செய்குநரும்-செம்பு கொட்டிகளும்; மரங்கொல் தச்சரும்-மரம் வெட்டும் தச்சரும்; கருங்கைக் கொல்லரும்-வலிய கையை யுடைய கொல்லரும்; கண்ணுள் வினைஞரும் - ஓவியக் கலைஞரும்; பொன்செய் கொல்லரும் - உருக்குத் தட்டாரும்; நன்கலம் தருநரும் - மணியணிகலமியற்றும் தட்டாரும்; துன்னகாரரும்-சிப்பியரும்; தோலின் துன்னரும் - தோலினால் உறை முதலியன துன்னுவோரும்; கிழியினும் கிடையினும் தொழில் பல பெருக்கிப் பழுது இல் செய்வினைப் பால் கெழு மாக்களும் - கிழிகிடை என்பவற்றால் மலர் வாடாமாலை பொய்க்கொண்டை பாவை முதலிய உருப்பிறக்கும் தொழில்கள் பலவற்றையும் பெருக்கிக் குற்றமற்ற கைத்தொழில் காரணமாக வேறுபட்ட இயல்புடையோரும்; என்க.

(விளக்கம்) 28. கஞ்சம்-வெண்கலம். செம்பு செய்வோர்க்குச் செம்பு கொட்டிகள் என்பது பெயர். 29. கொல்லுதல்-ஈண்டு வெட்டுதல். கருங்கை - வன்மையுடைய கை; கொடுந்தொழில் செய்யும் கையும் அப்பெயர் பெறும். என்னை? கொன்றுவாழ் தொழிலினும் வன்பணித்தொழினும் கன்றிய தொழிற்கை கருங்கை யெனப்படும் என்பவாகலின் (திவாகரம்). ஈண்டு வன்பணியாளராகலின் கொல்லர்க்காயிற்று. 30. நோக்கினார் கண்ணிடத்தே தந்தொழிலை நிறுத்துவோராகலின், ஓவியத்தொழிலாளர் கண்ணுள் வினைஞர் எனப்பட்டார். சித்திரகாரி என்றும் கூறுப. எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி நுண்ணிதின் உணர்ந்த நுழைந்தநோக்கிற் கண்ணுள் வினைஞரும் என மதுரைக்காஞ்சி இவரைப் பெரிதும் விதந்தோ துதலறிக (516-518) மண்ணீடு - சிற்பம். 32. துன்னம்-தைத்தல் தோலினால் படைக்கலங்களுக்கு உறை துன்னுவோராகலின் தோலின் துன்னர் எனப்பட்டார். பறம்பர் முதலியோருமாம் 33. கிழி-துணி கிடை-கிடேச்சு; நெட்டி. கிழியால் படிமை (பதுமை) படம் முதலியவும் நெட்டியால் விலங்கு பறவை பூ பூங்கொத்து முதலியவும் அமைப்போர் கிழித்தொழிலாளரும் கிடைத்தொழிலாளரும் என்க. இதனால் பழைய காலத்தே நனிநாகரிகமிக்க இக் கைத்தொழில்கள் சிறந்திருந்தமை உணரப்படும். இந் நுண்டொழில்கள் பண்பால் ஒன்றாகித் தொழில் வகையால் பலவேறு வகைப்படுதலின் பால் கெழு மாக்கள் என்றார்.

இதுவுமது

35-39: குழிலினும்........மருவூர்ப்பாக்கமும்

(இதன்பொருள்) குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும் வழு இன்று இசைத்து வழித்திறம் காட்டும் - குழல் முதலிய துளைக் கருவிகளானும் யாழ் முதலிய நரப்புக் கருவிகளானும் குரல் முதலாயுள்ள ஏழிசையினையும் நால்வேறு பண்களையும் அவற்றின் வழிப்பட்ட இருபத்தொரு திறங்களையும் குற்றமின்றி இசைத்துக் காட்டும்; பெறல் அரு மரபின் பெரும்பாண் இருக்கையும் - பெறுதற்கரிய இசைமரபை யறிந்த குழலோரும் பாணரும் முதலாகிய பெரிய இசைவாணர் இருக்குமிடங்களும்; சிறு குறுங் கைவினைப் பிறர் வினையாளரொடு - ஒழுக்கத்தில் சிறியராய்ப் பிறர்க்குக் குற்றவேல் செய்துண்ணும் எளிய தொழிலாளரோடே; மறு இன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும் - குற்றமின்றித் திகழா நின்ற மருவூர்ப்பாக்கம் என்னும் பெயரையுடைய பகுதியும் என்க.

(விளக்கம்) 35. குழல் யாழ் என்பன இனஞ் செப்பி ஏனைய துளைக்கருவிகளையும் நரப்புக் கருவிகளையும் கொள்ளுமாறு நின்றன. குரல் முதலேழாவன - குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன. ஈண்டு அடிகளாரே குரன் முதலேழும் என் றோதுதலாலே அக்காலத்தே இளியே முதலிசையாக நின்ற தென்பார் கூற்றும் உழையே முதலாக நின்ற தென்பார் கூற்றும் போலியாதல் அறிக. 36. வழுவின்று என்புழி இன்றி என்னும் வினையெஞ்சிகரம் உகரமாயிற்று. வழித்திறம் - பண் வழிப்பட்டதிறம். இசையுணர்ச்சி பெறுதற்கரியதாகலின் அரும் பெறன் மரபு என்றார். பெரும்பாண்-பெரிய இசைவாணர். இனி ஈண்டு அடிகளார் யாழ் மட்டுமே கூறுதலின் யாழ் வேறு வீணை வேறு என்றும் யாழ் இறந்தது, வடவர் தந்த வீணையே இப்பொழுதிருப்பது என்று கூறுவோர் கூற்று மயக்கவுரையாதலறிக. 38. குற்றேவல் செய்துண்போரைச் சிறு குறுங் கைவினைப் பிறர்வினையாளர் என்று இகழ்ச்சி தோன்ற விதந்தார் 49. காவிரிப்பூம்பட்டினம் கீழ்ப்பகுதியும் மேற்குப் பகுதியுமாக இருபெரும் பகுதியை யுடையதாயிருந்தது. அவற்றுள் கீழ்பாலமைந்த பகுதி மருவூர்ப்பாக்கம் என்றும் மற்றொன்று பட்டினப்பாக்கம் என்றும் கூறப்படும். இதுகாறும் கூறியது மருவூர்ப்பாக்க வண்ணனை. இனி பட்டினப்பாக்கத்தினியல்பு கூறுகின்றார் என்றுணர்க.

பாடல் சால் சிறப்பின் பட்டினப்பாக்கம்

40-58: கோவியன் வீதியும்.......பட்டினப்பாக்கமும்

(இதன்பொருள்) கோ இயல் வீதியும் - அரசர்கள் வழங்குதற் கியன்ற அரசமறுகும்; கொடித் தேர் வீதியும் - கொடியுயர்த்த தேரோடுதற் கியன்ற மறுகும்; பீடிகைத் தெருவும் - கடைத் தெருவும்; பெருங்குடி வாணிகர் மாடமறுகும்-கொழுங்குடிச் செல்வராகிய வாணிகர் வாழ்கின்ற மாடமாளிகைகளையுடைய தெருவும்; மறையோர் இருக்கையும்-பார்ப்பனத் தெருவும்; வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை ஆயுள் வேதரும் காலக் கணிதரும் பால்வகை தெரிந்த பல்முறை இருக்கையும் - ஏனைய குடிகள் எல்லாம் விரும்புதற்குக் காரணமான உழவர் வாழ்கின்ற தெருவும் மருத்துவ நூலோர் வாழும் தெருவும் சோதிட நூலோர் வாழுந்தெருவும் என வேறுபாடு தெரிந்த பல்வேறு தொழின் முறையோரும் தனித்தனி வாழுகின்ற தெருக்களும்; திருமணி குயிற்றுநர் - முத்துக்கோப்பாரும்; சிறந்த கொள்கையோடு அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும் - தமக்குச் சிறந்த கோட்பாட்டோடு அழகிய சங்கறுப்போர் வாழும் அகன்ற பெரிய தெருவும்; சூதர் - நின்றேத்துவாரும்; மாகதர் - இருந்தேத்து வாரும்; வேதாளிகரொடு - வைதாளி யாடுவார் என்று சொல்லப்பட்ட இவர்களோடே; நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர் காவல் கணிகையர் ஆடல் கூத்தியர் பூவிலை மடந்தையர் - அரசனுக்கு நாழிகைக்குக் கவி சொல்லுவாரும்; தாம்கொண்ட கோலத்தானும் கூத்தானும் நலம் பெறுகின்ற சாந்திக் கூத்தரும், களத்திலாடும் கூத்திகளும் அகக் கூத்தாடும் பதியிலாரும் அற்றைப் பரிசங் கொள்ளும் பரத்தையரும்; ஏவற்சிலதியர்-மடைப்பள்ளியாரடியாரும்; பயில் தொழில் குயிலுவர்-இடையறாது பயிலுகின்ற தொழிலையுடைய தோற்கருவி இசைப்பாரும்; பல்முறைக் கருவியர் - படைக்கும் விழாவிற்கும் பிறவும் பல்வேறு நிகழ்ச்சிகட்கும் பறை முதலியன கொட்டுவோரும்; நகை வேழம்பரொடு - நகைச்சுவைபடப் பேசும் நகைக் கூத்தரும் என்னும் இவர்கள் வாழுகின்ற; வகை தெரி இருக்கையும் - அவரவர் இனத்தின் வகை தெரிந்த இருப்பிடங்களும்; கடும்பரி கடவுநர் - கடிய குதிரைகளைச் செலுத்தும் அச்சுவவாரியரும்; களிற்றின் பாகரும் - யானைப் பாகரும்; நெடுந்தேர் ஊருநர்-நெடிய தேர்களை ஊருகின்ற தேர்ப்பாகரும்; கடுங்கண் மறவர் - சினக்கண்ணையுடைய காலாட்படைத் தலைவரும்; இருந்து புறஞ் சுற்றிய பெரும்பாய் இருக்கையும் - என்று கூறப்பட்ட நால்வேறு படை மறவரும்; அரண்மனையைச் குழவிருக்கும் பெரிய பரந்த இருப்பிடங்களும்; பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய - ஆகிய இவ்விடங்களிலெல்லாம் பெருமை பொருந்திய சிறப்பினையுடைய பெரியோர்கள் நிரம்பியுள்ள; பாடல்சால் சிறப்பின் பட்டினப்பாக்கமும் - புலவர் பெருமக்களால் பாடுதற்கமைந்த சிறப்பினையுடைய பட்டினப்பாக்கம் என்னும் பகுதியும் என்க.

(விளக்கம்) 40. கோவியன் வீதி - அகன்ற அரச வீதியும் எனினுமாம். இதனைச் செண்டுவெளிப்புறத் தெரு என்பர் அரும்பதவுரையாசிரியர். 41. பெருங்குடி வாணிகர் மாடமறுகு என்றது, மாநாய்கனும் மாசாத்துவானும் முதலியோர் வாழும் தெருவினை. இத் தெரு அரசமறுகுக்கு அடுத்துக் கூறப்படுதலு மறிக. மறையோர்-அந்தணர். வீழ் குடி-விரும்பப்படும் குடி. அஃதாவது வேளாண்குடி என்க. வீழ் குடி - காணியாளர் என்பர் அடியார்க்குநல்லார். இவரியல்பினை, கொலை கடிந்தும் களவு நீக்கியும் அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும், நல்லானொடு பகடோம்பியும் நான்மறையோர் புகழ் பரப்பியம் பண்ணியம் அட்டியும் பசும் பதங் கொடுத்தும் புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக் கொடுமேழி நசை யுழவர் எனப் பட்டினப்பாலை (199-205) விதந்தோதும். இனி வீழ்குடி என்பது கொடு மேழி நசையுழவர் என்றவாறுமாம்.

46. திருமணி - முத்து. சங்கறுப்போர் வேள்வித்தொழில் மட்டும் ஒழிந்த பார்ப்பனர் என்பவாகலின் அந்தணர்க்குரிய ஏனைய சிறந்த கொள்கையெல்லாம் உடைய என்பார், சிறந்த கொள்கையொடு அணிவளை போழுநர் என்றார். வேளாப் பார்ப்பான் வாளரம் துமித்த எனப் பிறரும் ஓதுதல் உணர்க. 48. வேதாளிக் கூத்தாடுவோர்.

49. நாழிகைக்கணக்கர் - இவரைக் கடிகையார் என்றும் கூறுப.

அவர் அவ்வாறு நாழிகை சொல்லுதலை,

பூமென் கணையும் பொருசிலையும் கைக்கொண்டு
காமன் திரிதரும் கருவூரா - யாமங்கள்
ஒன்றுபோ யொன்றுபோய் ஒன்றுபோய் நாழிகையும்
ஒன்றுபோய் ஒன்றுபோ யொன்று

எனவரும் பழைய வெண்பாவானுமுணர்க.

இவரை, நாழிகை வட்டி லீடுவாரும் என்பாருமுளர். சாந்திக் கூத்தாடுவோர் கண்ணுளர் எனப்படுவார். அவர் கொள்ளும் கோலத்தை,

வாசிகை வைத்து மணித்தோடணி யணிந்து
மூசிய சுண்ண முகத்தெழுதித் தேசுடனே
ஏந்துசுடர் வாள்பிடித்திட் டீசனுக்குங் காளிக்கும்
சாந்திக்கூத் தாடத் தகும்  (மதங்கும்)

எனவரும் வெண்பாவாலறிக.

50. காவற்கணிகையர் இராக்கடைப் பெண்டுகள் என்பாரும் உளர். 51. பூவிலை, இடக்கரடக்கு. அல்குல் விற்போர் என்றவாறு. அன்றன்று பரிசம் பெறுங்கணிகையர் என்பார் அற்றைப் பரிசங் கொள்வார் என்றார் (அடியார்க்) 51. ஏவற்சிலதியர் - பொதுவாகப் பணிமகளிர் எனினுமாம். 52. பன்முறைக்கருவியர்-குயிலுவராகிய தோற்கருவியாளரல்லாத நரப்புக் கருவி முதலிய பல்வேறு முறைமை யுடைய ஏனைய இசைக்கருவியாளர் எனினுமாம்.

53. நகைவேழம்பரை விதூடகர் என்ப. 56. பாயிருக்கை - பரந்த இடப்பிடம். 57-8: பீடுகெழுசிறப்பிற் பெரியோர் என்றது, அரசன் முதலிய நால்வேறு வகைப்பட்டவருள்ளும் இசைவாணர் முதலியோரினும் தொழிலாளருள்ளும் மிகவும் பெருமையுடையோராய் அரசனால் சிறப்புப் பெற்ற பெரியோர் என்றவாறு. இப்பெரியோர் மல்கியதனால் பாடல் சால் சிறப்பினையுடைய பட்டினம் என்க.

நாளங்காடி

59-67 : இருபெருவேந்தர் ........ பீடிகை

(இதன்பொருள்) இரு பெரு வேந்தர் முனை இடம்போல இருபால் பகுதியின் இடைநிலம் ஆகிய சோலைமிடைமரம் - முடிமன்னர் இருவர் போர்மேல் வந்து தங்கிய பாசறையிருப்பிற்கு இடையிலமைந்த நிலம் போர்க்களம் ஆவது போன்று முற்கூறிய மருவூர்ப்பாக்கமும் பட்டினப்பாக்கமும் என இறுகூறுபட்ட ஊர்களுக்கு இடையிலமைந்த நிலம் (அம்மாநகர்க்கு நாளங்காடியாயமைந்தது அவ்வங்காடி எத்தன்மைத் தெனின்) நிரல்படச் செறிந்த சோலையின் மரங்களையே தூண்களாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்; கொள்வோர் ஓதையும் கொடுப்போர் ஓதையும் நடுக்கின்றி நிலைஇய நாளங்காடியில் - பொருள்களை விலைக்கு வாங்குவோர் தம் ஆரவாரமும் விற்போருடைய ஆரவாரமும் இடையறாது நிலைபெற்ற அந்நாளங்காடியின்; கடைகெழு - வாயிலின் மருங்கமைந்த; சித்திரை சித்திரைத்திங்கள் சேர்ந்தென-பண்டொரு காலத்தே சித்திரை நாளிலே சித்திரைத் திங்களிலே நிறைமதி சேர்ந்ததாக அப்பொழுது; தேவர் கோமான் வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என - தேவர்கட்கு அரசனான இந்திரன் தன் நண்பனாகிய வெற்றி வேலேந்திய முசுகுந்தன் என்னும் சோழ மன்னனுக்கு வருகின்ற இடையூற்றை ஒழிக்கும் பொருட்டு; ஏவலின் - ஏவியதனாலே; போந்த - புகார் நகரத்திற்கு வந்த; காவல் பூதத்துப் பீடிகை - காவற்றொழிலையுடைய பூதத்தின் பலிபீடத்தின் மருங்கே; என்க.

(விளக்கம்) 59-63. அடிகளார் இருபெரு வேந்தர் ........ நாளங்காடி எனக் கூறுகின்ற இவ்விடம் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பட்டினப்பாலையில் முரண்களரி என்று கூறப்பட்ட இடமாதல் வேண்டும். அவர் காலத்தே ஈண்டு அங்காடி இருந்திலது. அவர் இவ்விடத்தை, அந்நகரத்து இரு கூற்றினும் வாழும் மறவர்கள் கூடித் தம்முள் எதிர்த்து போராடி மகிழும் விளையாட்டரங்கமாக வண்ணித்துள்ளார்: இதனைப் பட்டினப்பாலை 59. தொடங்கி 74. போந்தை என்பதீறாகவுள்ள பகுதியையும் இதற்கு யாம் எழுதிய உரைகளையும் விளக்கங்களையும் ஓதியுணர்க. நாளடைவில் இவ்விடம் நாளங்காடியாகவும் போர் மறவர் பலிக்கொடைபுரியும் இடமாகவும் மாறியது என்று ஊகித்தல் மிகையன்று. நாள் அங்காடி - பகற்பொழுதில் வாணிகஞ் செய்யும் கடை. அல்லங்காடி என்பது முண்டாகலின் இங்ஙனம் கூறினர்.

இருபெரு வேந்தர் முனையிடம் போல ஓதையும் ஓதையும் நடுக்கின்றி நிலைஇய நாளங்காடி என இயையும். இடைநிலமாகிய நாளங்காடி எனவும் கடைகால் யாத்த நாளங்காடி எனவும் நிலைஇய நாளங்காடி எனவும் தனித்தனி கூட்டுக. 62. சோலைக்கடை மிடைமரம் கால்யாத்த அங்காடி என மாறிக் கூட்டுக. சோலைக்கடை என்புழிக் கடை ஏழாவதன் சொல்லுருபு.

64. சித்திரைமீனைச் சித்திரைத் திங்களில் நிறைமதி சேர்ந்ததாக என்றவாறு. எனவே, சித்திரை மாதத்துப் பூரணைநாள் என்பதாயிற்று. இந்நாளிலே இப்பூதத்தை இந்திரன் முசுகுந்தற்குத் துணையாக விடுத்தான் எனவும், அந்நாள் தொட்டு அப்பூதம் இந்நாளங்காடி வாயிலின் மருங்குள்ள பலிபீடத்திருந்து பலிகொள்வதாயிற்று எனவுமுணர்க. 65. வெற்றிவேல் மன்னன் முசுகுந்தன் என்பது பழைய வுரையிற் கண்டது. முசுகுந்தன் சோழ மன்னன் என்பர். உற்றதை-வந்துற்ற இடுக்கணை. ஐகாரம் சாரியை எனலுமாம். 17. பீடிகை-பீடம்; பலிபீடம் என்க.

மறக்குடி மகளிர் பூதத்தை வழிபடுதல்

68-75 : புழுக்கலுந்..........ஓதையிற்பெயர

(இதன்பொருள்) மூதில் பெண்டிர் - மறக்குடிமகளிர்; புழுக்கலும்-புழுக்கலையும்; பொங்கலும் பூவும் - கள்ளையும் பூவையும்; நோலையும் விழுக்கு உடை மடையும் - எட்கசிவினையும் நிணச் சோற்றையும்; சொரிந்து - பலியாக உகுத்து; புகையும் -நறுமணப் புகையையும் காட்டி; மாதர்க்கோலத்துத் துணங்கையர் குரவையர் - அழகிய கோலம் பூண்டு துணங்கைக் கூத்தாடுவாராயும் குரவைக் கூத்தாடுவாராயும்; பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும் - பெரிய நிலத்தை ஆளுகின்ற எம் மன்னனாகிய கரிகால் வளவனுடைய பெரிய நிலத்தில் வாழ்கின்ற மன்னுயிர் முழுதிற்கும்; பசியும் பிணியும் பகையும் நீங்கி-பசியும் நோயும் பகைமையும் ஒருங்கே நீங்குமாறு; வசியும் வளனும் சுரக்க என - மழையும் வளங்களும் சுரந்தருள்க என்று கூறி; வாழ்த்தி - வாழத்தெடுத்து; அணங்கு எழுந்து ஆடி - தெய்வமேறப்பட்டு ஆடுதலாலே; வலவையின் உரைக்கும் ஓதையில் பெயர - நாணிலிகள்போன்று வாய் சோர்ந்துரைக்கின்ற கொக்கரிப்போடே செல்லா நிற்ப என்க.

(விளக்கம்) 68-75. பீடிகையிடத்தே. 75. மூதிற் பெண்டிர் புழுக்கல் முதலியவற்றைச் சொரிந்து புகைத்துக் கோலத்தோடே துணங்கையும் குரவையும் ஆடியவராய் மன்னன் நிலமடங்கலும் சுரக்கென வாழ்த்தித் தம்மேல், (70) அணங்கெழுந்தாடலாலே வலவையின் உரைக்கும் ஓதையில் பெயர என ஏற்ற பெற்றி கொண்டுகூட்டிப் பொருள் கூறுக.

இங்ஙனமன்றி மூதிற் பெண்டிர் வலவைபோல உரைத்தற்குக் காரணமின்மையான் பிறர்கூறும் உரைகள் போலியாதல் உணர்க. அணங்கெழுந்து ஆட வலவையினுரைக்கும் ஓதை என அணங்கெழுந்தாடலை வலவையினுரைத்தற்குக் காரணமாக்குக.

68. புழுக்கல் - அவித்த அவரை துவரை முதலிய பருப்பு வகைகள். நோலை - எட்கசிவு (எள்ளுருண்டை). விழுக்கு-நிணம். 69. பொங்கல் - பொங்கல் சோறுமாம். புகை என்பதற்கேற்பப் புகையும் காட்டி என்க. துணங்கை குரவை முதலிய கூத்துக்களினியல்பு அரங்கேற்று காதையிற் காண்க. 70. மாதர் - காதல், அணங்கு எழுந்து ஆட என ஏதுப் பொருட்டாக்குக. 71. பெருநில மன்னன் என்பது முடிமன்னன் என்பதுபட நின்றது. இருநிலம் - பெரிய நிலத்து வாழும் உயிர்கள். ஆகுபெயர். 72. நீங்கி என்பதனை நீங்க என்க. 73. வசி-மழை. 74. வலவை - நாணிலி. வல்லபம் என்பாருமுளர். 75. மூதிற் பெண்டிர் -மறக்குடி மகளிர். மூதிற் பெண்டிர் என அடிகளாரே கூறியிருப்பவும், அடியார்க்கு நல்லார் இவர் அகப்பரிசாரமகளிர் என்பது பொருந்தாமையுணர்க.

அவிப் பலியும் பெருமிதச் சுவையும்

76-88 : மருவூர் ......... வான்பலியூட்டி

(இதன்பொருள்) மருவூர் மருங்கின் மறங்கொள் வீரரும் - மருவூர்ப் பாக்கம் என்னும் பகுதியிலுள்ள மறப்பண்பினை மேற்கொண்ட வீரர்களும்; பட்டின மருங்கில் படைகெழு மாக்களும் - பட்டினப்பாக்கம் என்னும் பகுதியிலுள்ள படைக்கலன் ஏந்திய வீரர்களும்; முந்தச் சென்று - ஒரு சாரார்க்கு ஒரு சாரார் முற்பட ஊக்கத்தோடே சென்று; பீடிகை - நம் காவற்பூதத்துப் பலிபீடத் திடத்தே; வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என-வெவ்விய போர்த்திறம் பெற்ற நம் மன்னனாகிய கரிகால் வளவனுக்கு வரும் இடுக்கணைத் தீர்த்தருளுதற் பொருட்டு; முழுப் பலிக்கொடை புரிந்தோர் - பலிக்கொடைகளுள் வைத்து முழுக் கொடையாகிய அவிப்பலி புரிந்தவர்; வலிக்கு வரம்பு ஆக என-மறத்திற்கு மேல்எல்லையாகுவர் என்னும் கோட்பாட்டோடே; கல் உமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோல் பல்வேல் பரப்பினர் - பண்டு போர் மேற்கொண்டு கல்லை உமிழ்கின்ற கவண் உடை யோரும் கரிய பரிசை ஏந்தியோரும், பலவாகிய வேற்படை ஏந்திய பரப்பினையுடையோருமாக; மெய் உறத்தீண்டி அமர்க்களப் பரப்பிலே உடற்கரித்து; ஆர்த்துக்களங் கொண்டோர் ஆரவாரித்துக் களத்தின்கண் வெற்றி கொண்ட காலத்தே; ஆர் அமர் அழுவத்துச் சூர்த்துக் கடை சிவந்த சுடுநோக்குக் கருந்தலை-அப்போர்க்களப்பரப்பிலே தம்மை நோக்கினாரை அச்சுறுத்துக் கடைசிவந்த சுடுகின்ற கொள்ளித் தீப்போலும் பார்வையுடைத்தாகிய தமது பசுந்தலையை; வெற்றிவேந்தன் கொற்றம் கொள்கென - வெற்றியையுடைய எம் வேந்தன் கொற்றம் கொள்க என்று வாழ்த்தும்படி அரிந்து; நல்பலி பீடிகை நலம் கொள வைத்து ஆங்கு - நன்மையுடைய அப் பலிபீடம் பேரழகு எய்தும்படி வைத்த அப்பொழுதே; உயிர்ப்பலி உண்ணும் உருமுக் குரல் முழக்கத்து மயிர்க்கண் முரசொடு வான்பலியூட்டி - அக் குறையுடல்கள் தமக்கு வாயின்மையின் தந்தந்தோளிற் பூண்ட மயிர்க்கண் முரசின் வாயால் உயிர்க்கடன் தந்தோய் கொண்மின் என்று கூறி நின்று பலியூட்டா நிற்ப என்க.

(விளக்கம்) இப்பகுதிக்கு அடியார்க்குநல்லார் வகுத்த உரை உயர்வு நவிற்சியாய் மிகைபடத் தோன்றுகின்றது. என்னை? ஆர்த்துக்களங் கொண்ட வீரர் தங் கருந்தலையை அரிந்து பலிபீடத்தே வைப்ப அப்பொழுதே ஏனையோர் முரசமுழக்கி அவ்வான் பலியைப் பூதத்திற்கு ஊட்ட என்பதே அமைவதாகவும் தலைபேசும்படி அரிந்து ஒப்பித்துப் பலி பீடிகையிலே வைத்த அப்பொழுதே அக்குறை யுடல்கள் தமக்கு வாயின் மையின் ......... முரசின் உயிர்க்கடன் தந்தோம் கொண்மினென்று நின்று பலியூட்ட வென்பர் அடியார்க்குநல்லார். இஃது அவர் கருத்தன்றென்பது தேற்றம். ஆயினும், தலையாய பெருமிதச் சுவைக்கு எடுத்துக்காட்டாக அமைந்த இக்கருத்துக் கவிச்சக்கரவர்த்தியாகிய செயங்கொண்டார் கருத்தாகும் என்பதனைக் கற்றோர் யாவரும் நன்குணர்வர். மற்று அவ்வுரையாசிரியரே கலிங்கத்துப் பரணியிலமைந்த இக்கருத்தமைந்த செய்யுட்பகுதிகளை ஈண்டு எடுத்துக் காட்டியுமுள்ளார். ஆசிரியர் அடியார்க்குநல்லார் உரையும் விளக்கங்களும் மிகையேயாயினும் கற்போர்க்குக் கழிபேரின்பம் நல்குதலின் அவர் உரையைத் தழுவியே யாமும் வரைந்தாம். இனி வருவன அப் புலவர்பெருமான் தந்த விளக்கமும் எடுத்துக்காட்டுமாம். அவை வருமாறு :-

கழி - ஊன். பிணி - பிணித்தல். கறை - கறுப்பு. தோல் - பரிசை. மழையென மருளும் பஃறோல் (புறநா, 17-34) என்றாராகலின் கருங்கடகு என்பாருமுளர். மெய்யுறத் தீண்டி-உடற்கரித்து. அழுவம் - பரப்பு. சூர்த்து - அச்சமுறுத்து; என்றது:

நீண்டபழி பீடத்தி லறுத்து வைத்த
நெறிக்குஞ்சித் தலையைத்தன் னினமென் றெண்ணி
ஆண்டலைப்புள் அருகணைந்து பார்க்கு மாலோ
அணைதலுமச் சிரமச்ச முறுத்து மாலோ

(கலிங்க - கோயில்: 16) என்றார்போல் வரும்.

சுழன்றென்பாருமுளர். சுடுநோக்கு - சுடுவதுபோலும் நோக்கு. என்றது, கொள்ளிக்கண் கண்ணுட் டீயாற் சுட்டு நீறாக்கி என்றார் (சீவக-807) பிறரும். கருந்தலை - பசுந்தலை. நலங்கௌ வைத்தென்றது - தமது அரிந்த தலையிற் குலைந்த மயிரையும் கோதி முடித்துக் குருதித் திலதத்தையும் நுதலிலே அணிந்து வைத்தென்றவாறு. என்னை?

மோடி முன்றலையை வைப்பரே
முடிகுலைந்த குஞ்சியை முடிப்பரே
ஆடிநின்றுகுரு திப்புதுத்திலத
மம்மு கத்தினி லமைப்பரே

என்பது.

உருமு - இடி. மயிர்க்கண்முரசு - புலியைப் பொருது கொன்று நின்று சிலைத்துக் கோட்டுமண் கொண்ட ஏறு இறந்துழி அதன் உரிவையை மயிர்சீவாமற் போர்த்த முரசு. என்னை ?

புனைமருப் பழுந்தக் குத்திப் புலியொடு பொருது வென்ற
கனைகுர லுருமுச் சீற்றக் கதழ்விடை யுரிவை போர்த்த
துனைகுரன் முரசத்தானைத் தோன்றலைத் தம்மினென்றாள்
நனைமலர் அலங்கற் கண்ணி நந்தனுந் தொழுது சேர்ந்தான்

எனவும்,

கொல்லேற்றுப் பசுந்தோல் சீவாது போர்த்த
மயிர்க்கண் முரச மோவில கறங்க (மதுரைக், 742-3)

எனவும் சொன்னார் பிறரும். முரசொடு வான்பலியூட்டி - முரசத்தால் உயிர்ப்பலியூட்டி; என்றது,

அடிக்கழுத்தி னுடன்சிரத்தை யரிவ ராலோ
அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்ப ராலோ
கொடுத்தசிரங் கொற்றவையைத் துதிக்கு மாலோ
குறையுடலங் கும்பிட்டு நிற்கு மாலோ  (கலிங்க-கோயில்)

எனவும்,

மண்ணி னுளற வறுத்த தங்கடலை
வைத்த பீடிகை வலங்கொள
விண்ணி னாயகிதன் யாக சாலைதொறு
மீளவுஞ் சிலர் மிறைப்பரே

எனவும் வரும் (கலிங் - கோயில்). இவற்றாற் சொல்லியவை அவிப்பலியென்னும் புறப்பொருட் பகுதியும் (புறப் - வெண்- வாகை. 30). காப்பியத்துக்கு அங்கமான நவச்சுவையுள் வீரச்சுவை யவிநயமுமென்க எனவரும்.

கரிகாலன் வடதிசைச் செலவு

89-94 : இருநில மருங்கில் ............. அந்நாள்

(இதன்பொருள்) இருநில மருங்கில் - வடவேங்கடந் தென்குமரி ஆயிடைக் கிடந்த பெரிய தமிழ்நாட்டின்கண்; பொருநரைப் பெறாஅ - எஞ்சிய பாண்டிய மன்னனும் சேரமன்னனும் தனக்குக் கேளிராய் ஒருமொழிக் குரிமையுடையராதல் பற்றித் தன்னோடு பொருவாரல்லராகலின் வேறு பகைவரைப் பெறமாட்டாமையாலே; திருமாவளவன் - திருமாவளவன் என்று சிறப்பித்துக் கூறப்படுகின்ற கரிகான் மன்னன்; செரு வெம் காதலின் இம்மண்ணக மருங்கின் என் வலிகெழு தோள் நண்ணார்ப் பெறுக என - தான் போரைப் பெரிதும் விரும்பும் விருப்பம் காரணமாகக் குணக்குங் குடக்கும் தெற்கும் கடலாக எஞ்சிய வடதிசையிடத்தே இந்நில வுலகத்தே; வலிமை பொருந்திய என்தோள் தகுந்த பகைவரைப் பெறுவதாக வேண்டும் எனக் கொற்றவையை மனத்தால் வணங்கி; புண்ணியத் திசைமுகம் - புண்ணியத் திசையென்று சான்றோர் புகழ்கின்ற அவ்வட திசையில் போர்மேற் செலவு குறித்து; வாளும் குடையும் மயிர்க்கண் முரசும் நாளொடு பெயர்த்து - தன் வாட் படையினையும் கொற்ற வெண்குடையையும் சீவாது போர்த்த போர் முரசத்தையும் நல்லதொரு நாளால் புறவீடு செய்து; போகிய அந்நாள் - சென்ற அந்த நாளிலே என்க.

(விளக்கம்) இருநிலம் என்றது வடவேங்கடந் தென்குமரி ஆயிடைக் கிடந்த தமிழ்கூறும் நல்லுலகத்தை. இத்தமிழ் நிலத்து எஞ்சிய முடிவேந்தர் இருவரும் மொழியால் ஒரு குடியினராய்ப் பெண்கோடற்கும் கொடுத்தற்குமுரிய உறவினரும் ஆதலான் இவரொடு பொருதுகொள்ளும் வெற்றி தனக்குச் சிறந்ததொரு வெற்றியாகாமையின் பொரு நரைப்பெறா அன் ஆயினன் என்க. இருநில மருங்கின் என்பதற்கு, தமிழ் அகத்தே எஞ்சிய இரண்டு நிலத்தினும் எனினுமாம். இதற்கு முற்றும்மை பெய்துரைக்க. வாளும் நாளும் பெயர்த்தல் - வாள்நாட் கோள் குடைநாட் கோள் முரசுநாட் கோள் என்னும் போர்த்துறைகள். இவை வஞ்சித்திணையின் பாற்படும். இவற்றுள் வாள் நாட் கோடல், செற்றார்மேற் செலவமர்ந்து கொற்றவாணாட் கொண்டன்று (கொளு) எனவும், அறிந்தவ ராய்ந்த நாள் ஆழித்தேர் மன்னன் - எறிந்திலங் கொள்வாளியக்கம் - அறிந்திகலிப் பின்பகலே யன்றியும் பேணா ரகநாட்டு, நண்பகலும் கூகை நகும் எனவும் வரும் புறப்பொருள் வெண்பாமாலைக் கொளுவானும் வரலாற்றானும் உணர்க. குடைநாள்கோள் பெய்தாமம் சுரும்பிமிரப் பெரும்புலவர் புகழ்பாடக் கொய்தார் மன்னவன் குடைநாட் கொண்டன்று எனவும் (கொளு). முன்னர், முரசிரங்க மூரிக் கடற்றாணை, துன்னரும் துப்பிற் றொழு தெழா - மன்னர், உடைநா ளுலந்தனவா லோதநீர் வேலிக் குடை நாள் இறைவன் கொள, எனவும் (வரலாறு) முரசுநாட் கோள் : இதற்கு மாசற விசித்த....... ஈங்கிது செயலே எனவரும் புறநானூற்றுச் செய்யுளைக் காட்டுவர் அடியார்க்குநல்லார்.

94. வடதிசையைப் ... புண்ணியத்திசை என்பது பௌராணிகர் மதம்.

கரிகாலன் இமயப் பொருப்பில் புலியிலச்சினை பொறித்தது

95-98 : அசைவில்.........பெயர்வோற்கு

(இதன்பொருள்) அசைவு இல் ஊக்கத்து நசை பிறக்கு ஒழிய- ஒரு சிறிதும் மடிந்திராமைக்குக் காரணமான மனவெழுச்சியோடே மேலும் செல்லுதற்கியன்ற எனது வேணவா பின்னிட் டொழியும்படி; இப்பயம்கெழு மலை - பயன்மிக்க இம்மலை; பகை விலக்கியது என - எனக்குப் பகையாகிக் குறுக்கே நின்று விலக்கிற்று என்று சினந்து; இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலை-தேவர்கள் வதிகின்ற அவ்விமய மலையினது பிடரின் கண் தன் வெற்றிக் கறிகுறியாக; கொடுவரி யொற்றி - தன திலச்சினையாகிய புலியுருவத்தைப் பொறித்து; கொள்கையில் பெயர்வோற்கு - தனது மேற்கோளாகிய மேற்செலவினின்றும் மீள்கின்ற அக்கரிகாற் பெருவளத்தானுக்கு என்க.

(விளக்கம்) 95. அரசற்கு இன்றியமையாப் பண்புகளுள் ஊக்கமுடைமை தலைசிறந்ததாகலின் கரிகாலனுடைய ஊக்கத்தை அசைவில் ஊக்கம் என விதந்தனர். நசை - வென்றியின்கண் நின்ற வேணவா. பிறக்கொழிதல் - பின்னிடுதல். பிறகு - பின்பு. இதனை பிருதக்கென்னும் வடமொழிச் சிதைவு என்பர். (அடியார்க்) தமிழ்ச் சொல்லென்று கொள்ளுதலே நேரிதாம். 96. பயம் - பயன். அஃதாவது பேரியாறுகளுக்குத் தாயாகி வளம் பெருக்குதல். 97. சிமையம்-குவடு; சிகரம். இமயமலைக் குவடுகளில் இமையவர் உறைகின்றனர் என்பது பௌராணிக மதம். இமயமலையின்கண்ணும் ஏறி அதன் சிமையங் கண்டு மீண்டான் என்பது தோன்ற சிமையப் பீடர்த்தலைஒற்றி என்றார். 98. கொடுவரி-புலி (இலச்சினை). கொள்கையில் பெயர்தல் - கொள்கையைக் கைவிட்டு மீள்தல்: ஈண்டுக் கொள்கை - மேற்செலவென்க. கரிகாலன் இமயத்தே புலிபொறித்த செய்தியை,

செண்டு கொண்டு கரிகாலனொரு காலிமையச் சிமைய மால்வரை திரித்தருளி மீள வதனை, பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற் பாய்புலிப்பொறி குறித்தது மறித்த பொழுதே, எனவும், கச்சி வளைக்கைச்சி காமக்கோட் டங்காவல், மெச்சி யினிதிருக்கு மெய்ச் சாத்தன் - கைச்செண்டு, கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான் எனவும் வருவனவற்றாலும் (கலிங்க - இராச) உணர்க. ஆசிரியர் சேக்கிழார் தாமும்,

இலங்குவேற்கரி காற்பெரு வளத்தான் வன்றிறல்புலி இமயமால் வரைமேல் வைக்க வேகுவோன் எனக் குறித்தருளினர். (பெரியபு-திருக்குறிப்பு. 85.)

கரிகாலனுக்கு வடவேந்தர் திறையிட்ட பொருள் மாண்பு

99-110: மாநீர்.........மண்டபம்

(இதன்பொருள்) மாநீர் வேலி வச்சிர நல் நாட்டுக் கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும் - கடலை அரணாகவுடைய நல்ல வச்சிர நாட்டு வேந்தன் தான் இறுக்கக்கடவ முறையிலே இறைப் பொருளாகக் கொடுத்த அவனது கொற்றத்தால் வந்த முத்தினாலியன்ற பந்தரும்; மகத நல் நாட்டு வாள் வாய் வேந்தன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும் - மகதம் என்னும் வளமிக்க நாட்டை யாள்கின்ற வாள்வென்றி வாய்த்த மறப்புகழுடைய மன்னவன் பகைத்து வந்தெதிர்ந்து தோல்விமெய்தி அடங்கிய விடத்தே இறையாகத் தந்த பட்டிமண்டபமும்; அவந்தி மன்னன் உவந்தனன் கொடுத்த நிவந்து ஓங்கு மரபின் வாயில் தோரணமும் - பின்னர் அவந்தி நாட்டு வேந்தன் கேண்மையுடைனாய் மகிழ்ந்து கொடுத்த மிகவுமுயர்ந்த தொழிற்றிறமமைந்த முறைமையினையுடைய வாயிற்றோரணமும்; பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும் நுண்வினைக் கம்மியர் காணா மரபின-அவைதாம் பொன்னானும் மணியானும் இயற்றப்பட்டனவே யாயினும், இந்நிலவுலகத்தே பிறந்த நுண்ணிய தொழில்வல்ல கம்மியராலே இயற்றப்பட்டன அல்ல என்று கூறப்படும் வரலாற்றுச் சிறப்பையுடையன - (மற்றிப்பொருள்கள் தாம் பெற்றுள்ள வரலாற்றுச் சிறப்புத்தான் யாதோ வெனின்;), அவர் தொல்லோர் துயர்நீங்கு சிறப்பின் உதவிக்கு மயன் விதித்துக் கொடுத்த மரபின-அவற்றைக் கொடுத்த வச்சிரநாட்டு மன்னன் முதலிய மூவேந்தருடைய முன்னோர்கள் ஓரோர் காலத்து ஓரோரிடத்துச் செய்த உதவிக்குக் கைம்மாறாக மயனால் படைத்துக் கொடுக்கப்பட்டவை (என்ப). இவைதாம் ஒருங்குடன் புணர்ந்து ஆங்கு உயர்ந்தோ ரேத்தும் அரும் பெறல் மரபின் மண்டபமன்றியும் - இத்தகைய சிறப்புடைய இம்மூன்று பொருள்களும் அக்கரிகாற் பெருவளத்தானாற் கொணரப்பட்டு ஓரிடத்தே சேர்த்து வைக்கப்பட்டிருத்தலால் சான்றோர்களால் புகழ்தற்குக் காரணமாய்க் காண்போர்க்கு அரியதொரு பேறாகவமைந்த இம் மண்டபமும் என்க.

(விளக்கம்) கரிகாலன் இமயத்தே புலிபொறித்து மீள்பவனுக்கு வச்சிரநாட்டு மன்னன் முதலியோர் கொடுத்த முத்தின் பந்தரும் பட்டி மண்டபமும் வாயில் தோரணமும் ஆகிய இம்மூன்று பொருள்களும் அவனது வெற்றிச் சின்னங்களாக மக்கள் காட்சிக்காக ஒரு மண்டபத்தே ஒருசேர வைக்கப்பட்டிருக்கின்றன; ஆதலால், அப்பொருட்காட்சி மன்றமாக அமைந்த மண்டபத்தை உயர்ந்தோ ரேத்தும் அரும் பெறல் மரபின் மண்டபம் என அடிகள்பாராட்டிக் கூறுகின்றனர் என்றுணர்க. இம்மண்டபத்தின் வரலாறு இக்காலத்து நாகரிகத்தைப் பெரிதும் ஒத்திருத்தலுணர்க.

99. மாநீர் - கடல். 100. இறை-திறைப்பொருள். 101. வாள் வாய் - வாள்வென்றி வாய்த்த என்க. 102. பகைப்புறத்துக் கொடுத்த என்றது பகைத்துவந்து போர்செய்து ஆற்றாமையால் அடங்கி அடி வணங்கிக் கொடுத்த என்றவாறு. பகைப்புறம் - அடங்குதல். 103. உவந்தனன் - உவந்து. உவந்தனன் எனவே இவன் நண்பன் என்பது பெற்றாம். 104. தோரணவாயிலும் என மாறுக. 107. அவர்-என்றது வச்சிரநாட்டு வேந்தன் முதலிய மூவேந்தரையும்.

வெள்ளிடை மண்டபம்

110 - 117: அன்றியும்.........வெள்ளிடைமன்றமும்

(இதன்பொருள்) அன்றியும் - இவ் வரும்பெறல் மண்டபமல்லாமலும்; தம் பெயர் பொறித்த - தாம் பொதிந்துள்ள சரக்கின் பெயர் பொறிக்கப்பட்டனவும்; கண் எழுத்துப் படுத்த எண்ணுப் பல் பொதிக் கடை முகவாயிலும் - முகவரியாகிய எழுத்துக்களை எழுதிப் போகட்டனவும் இலக்கமிட்டுப் போகட்டனவுமாகிய பல்வேறு மூடைகள் கிடக்கும் பண்டகசாலையின் முகப்பாகிய வாயில் காக்கும் காவலையும்; கருந்தாழ்க் காவலும்-கதவுகளில் இருப்புத் தாழிட்டுக் காக்கும் காவலையும்; உடையோர் காவலும்-தம்மையுடையோர் காக்கும் காவலையும்; ஒரீஇய வாகி - விடப்பட்டனவாய்க் கிடப்பவற்றை; வம்பமாக்கள் கட்போர் உளர் எனின்-யாரேனும் புதியவர் களவு செய்வோர் வருமிடத்து; தலையேற்றி-அவர் களவு செய்யக் கருதிய மூடையை அவராலேயே அவர் தலையில் ஏற்றுவித்துப் பின்னர்; கடுப்பக் கொட்பின் அல்லது - கழுத்துக் கடுப்ப அதைச் சுமந்துகொண்டு அவ்வூர் மறுகிற் சுழற்றுவதல்லது; கொடுத்த லீயாது - அவர் நினைந்தாங்கு அதனைக் கொண்டுபோக விடாதாகலின்; உள்ளுநர்ப் பனிக்கும் - களவென்பதனை மனத்தால் நினைப்பினும் நினைப்போரை நடுங்குவிக்குமியல்புடைய; வெள் இடை மன்றமும் - வெளியான இடத்தையுடைய மன்றமும் என்க.

(விளக்கம்) 111. வம்பமாக்கள். 115. கட்போருளர் எனின் என்று கொண்டுகூட்டுக. வம்பமாக்கள்-அவ்வூர்க்குப் புதியராய் வந்தவர்கள். அவ்வூரில் வாழுகின்ற பதியெழுவறியாப்பழங்குடிமாக்கள் எல்லாம் அம்மன்றினியல்பறிவார், மேலும் அவரெல்லாம் செல்வர். ஆதலின் களவு செய்ய நினையார் எனவும், பிறநாட்டிலிருந்து வந்தோருட் சிலர் இம்மன்றின் தன்மையை அறியாது களவு செய்ய நினைப்பின் என்பார் வம்பமாக்கள் கட்போர் உளரெனின் என்றார். 113. கடை முகவாயிலும் - பண்டகசாலைக் கட்டிடமமைத்து அதன் வாயிலில் நின்று காக்கும் காவலையும் என்க. கருந்தாழ் - இரும்பாலியன்ற தாழக்கோல்; கருங்காலி முதலிய வன்மரத்தாழுமாம்; வலியதாழுமாம். தாழ்க்காவல், கதவமைத்து அதன் தாழைச் செறித்துக் காக்குங்காவல் என்க. பற்றாயத்துக் கருந்தாழ் என்பர் பழையவுரையாசிரியர் உடையோர் - அப்பொதிகளை யுடையோர். எனவே, வாயிலென்னப் பூட்டென்ன மதில் என்ன வழங்கும் எவ்வகைக் காவலும் இன்றி வெட்டவெளியிலே கிடக்கும் பொதிகள் என்றாராயிற்று. இது கள்வோரிலாமைப் பொருள் காவலுமில்லை என நிகழும் கம்பநாடர் செய்யுளை நினைவூட்டுகின்றது. 114. ஒரீஇய - விட்டன. 115. கட்போர் - களவு செய்வோர் உளராதல் அருமையாதலின், உளரெனின் என்றார். கடுப்ப-மிகுதியாக எனலுமாம். கட்போரைக்கொண்டே அவர் தலைமேல் கடுப்ப ஏற்றிப் புறம்போக விடாமல் அந்தச் சுமையோடே சுழல்விக்கும். இஃது அவ்வெள்ளிடை மன்றத்தின் தன்மை என்றவாறு. 116. கொட்பின்-சுற்றின்; இது பிறவினைப் பொருட்டாய் சுழல் விக்கும் என்னும் பொருள்பட நின்றது. கொடுத்தலீயாது - கொடாது என்னும் பொருட்டாய திரிசொல். 117. ஆதலால், உள்ளுநர் பனிக்கும் வெள்ளிடைமன்றம் என்க. பனிக்குமன்றம் - இடத்து நிகழும் பொருளின் தொழில் இடத்தின் மேனின்றது. வம்பமாக்களாகிய உடையோர் எனினுமாம்.

இலஞ்சி மன்றம்

118-121: கூனும்...........மன்றமும்

(இதன்பொருள்) கூனும் குறளும் ஊமும் செவிடும் அழுகு மெய்யாளரும் - கூனுடையோரும் குறளுருவுடையோரும் ஊமரும் செவிடரும் ஆகிய உறுப்புக் குறையுடையாளரும் தொழு நோயாளரும் ஆகிய பயனில் பிறப்புடைய மாந்தர்; முழுகினர் ஆடி-தன்பால் வந்து முழுகி நீராடியபோதே; பழுது இல் காட்சி நல்நிறம் பெற்று - கூன் முதலிய குறைபாடில்லாத தோற்றத்தையும் நல்ல நிறத்தையும் பெற்று; வலம் செயாக் கழியும் இலஞ்சி மன்றமும் - மகிழ்ந்து தன்னை வலஞ்செய்து தொழுது போதற்குக் காரணமான கடவுட்பண்புடைய பொய்கையை யுடைமையால் இலஞ்சி மன்றம் என்று கூறப்படும் மன்றமும் என்க.

(விளக்கம்) 118. கூன் முதலிய உறுப்புக் குறைபாடும் தொழு நோய் முதலிய பிணியுடையோரும் என இருவகைக் குறைபாடும் கூறினர். இத்தகைய பிறப்புடையோரை ஊதியமில்லா எச்சப் பிறப்பு என்று கூறும் புறநானூறு. அது வருமாறு:

சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவு மருளு முளப்பட வாழ்நர்க்கு
எண்பே ரெச்சம் என்றிவை யெல்லாம்
பேதைமை யல்ல தூதியம் இல்  (28)

எனவரும். 119. அழுகு மெய்யாளர் - தொழுநோயாளர். முழுகினர் - முழுகி. காட்சி - தோற்றம். 121. இலஞ்சி - பொய்கை.

நிழல் கால் நெடுங்கல் நின்ற மன்றம்

122-127: வஞ்சமுண்டு.........மன்றமும்

(இதன்பொருள்) வஞ்சம் உண்டு பகை மயல் உற்றோர் - வஞ்சனையாலே சிலர் தீயமருந்தூட்ட அதனை யறியாதுண்டமையால் தமதறிவிற்குப் பகையாகிய பித்தேறினாரும்; நஞ்சம் உண்டு நடுங்கு துயர் உற்றோர் - நச்சுத்தன்மையுடைய உணவை யுட்கொண்டு தாம் நடுங்குதற்குக் காரணமான துன்பத்தை எய்தினோரும்; நாகத்து அழல்வாய ஆர் எயிறு அழுந்தினர் - அரவினது நஞ்சுடைய வாயிற் பொருந்தின பற்கள் அழுந்தும்படி கடியுண்ட வரும்; கழல் கண் கூளிக் கடுநவைப் பட்டோர் - பிதுங்கின கண்ணையுடைய பேயாற் பிடிக்கப்பட்டுப் பெருந்துன்ப மெய்திய வரும் என்னும் இவர்கள்; சுழல வந்து தொழத் துயர்நீங்கும் - ஒருகாற் றன்னை வலம்வந்து தொழுந்துணையானே அத்துன்பங்கள் துவர நீங்குதற்குக் காரணமான கடவுட்பண்புடைய; நிழல் கால்-ஒளிவீசுகின்ற; நெடுங் கல் நின்ற மன்றமும் - நெடிய கற்றூண் நிற்றலால் நெடுங்கல்மன்றம் என்னும் மன்றமும் என்க.

(விளக்கம்) 122. வஞ்சம் - ஆகுபெயர்; வஞ்சித் தூட்டிய தீயவுணவு. பகை மயல் என மாறுக. அறிவிற்குப் பகையாகிய மயக்கம்; அது பித்து. அறியாமையாலோ வாழ்க்கையை முனிந்தோ. 123. நஞ்சமுண்டு துயர் உற்றோர் என்க. 124. நாகத்து அழல்வாய் ஆர் எயிறு என்க. அழல்-நஞ்சு; ஆகுபெயர். அழுந்தினர்-அழுந்துமாறு கடியுண்டோர். கழல்-கழற்சிக்காய் எனினுமாம். 127. நிழல்-ஒளி.

பூத சதுக்கம்

128-134: தவமறைந்து ........... சதுக்கமும்

(இதன்பொருள்) தவம் மறைந்து ஒழுகும் தன்மை இலாளரும் - தம்மைப் பிறர் நம்புதற் பொருட்டுத் தவவேடத்தில் மறைந்து நின்று அத் தவநிலைக்குப் பொருந்தாத தீநெறிக்கண் ஒழுகுகின்ற பண்பற்ற பொய் வேடத்தாரும்; மறைந்து அவம் ஒழுகும் அலவல் பெண்டிரும் - தங்கணவர் காணாமல் மறைவாகத் தீய நெறிக்கண் ஒழுகும் அலவலைப் பெண்டிரும்; அறைபோகு அமைச்சர் - கீழறுக்கும் அமைச்சர்; பிறர்மனை நயப்போர் - பிறர் மனைவியரை விரும்பினோர்; பொய்க்கரியாளர் - பொய்ச்சான்று கூறுவோர்; புறங்கூற்றாளர் - புறங்கூறுவோர்; என்னும் இத் தீவினையாளர்களே; என் கைக் கொள் பாசத்துக் கைப்படுவோர் என - யான் என் கையிடத்தே கொண்டுள்ள இக் கயிற்றகத்தேபடுதற் குரியாராவார் என்று; காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பி - அவ்வூர் நாற்காத வெல்லையும் கேட்கும்படி தனது கடிய குரலாலுணர்த்தி; பூதம் புடைத்து உணும் பூத சதுக்கமும் - அத்தகைய தீவினையாளரைத் தன் பாசம் கட்டிக் கொணருங்கால் அவரை நிலத்திற் புடைத்துக் கொன்று தின்னும் பூதம் நிற்றலாலே; பூத சதுக்கம் எனப்படும் சதுக்கமும் என்க.

(விளக்கம்) 128. தவம் - தவவேடம். இவ்வேடம் சமயந்தோறும் வேறுபடும். தவமாவது -மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கலும் மாரியினும் பனியினும் நீர்நிலை நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு அவற்றாற் றம்முயிர்க்கு வருந்துன்பங்களைப் பொறுத்துப் பிறவுயிர்களை யோம்புதல். இதனை,

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு  (குறள் - 261)

என்றற் றொடக்கத்துத் திருக்குறளான் அறிக. வேடம் - தலைமயிரைப் பறித்தலும் நீட்டலும் மழித்தலும் துவராடை யுடுத்தலும் பிறவுமாம். இனி, மறைந்தொழுகலாவது: உரனின்மையால் அத்தவத்தோடு பொருந்தாத தீயவொழுக்கத்தை மேற்கோடல். 131. அவம் - பிற ஆடவரை விரும்புதல் முதலிய தீயவொழுக்கம். அலவலைப் பெண்டிர், அலவற் பெண்டிர் என விகாரமெய்தியது. 130. அறைபோதல். கீழறுத்தல். 121. பொய்க்கரி - பொய்ச்சான்று. 132. பாசத்துக்கை - பாசத்திடம். 133. குரலால் உணர்த்தி. 134. சதுக்கம் - நாற்சந்தி.

பாவை மன்றம்

135-138: அரைசு .......... மன்றமும்

(இதன்பொருள்) அரைசு கோல் கோடினும் - அரசன் செங்கோன்மையிற் சிறிது பிறழினும்; அறங்கூறு அவையத்து உரை நூல் கோடி ஒருதிறம் பற்றினும் - அறநூல் நெறிநின்று அறங்கூறும் அறவோர் அவ்வயைத்திலிருந்து தமக்கென்று அறமுரைக்கும் நூனெறி பிறழ்ந்து ஒருமருங்குபற்றிக் கூறினும்; நாவொடு நவிலாது - இத்தீமைகளைத் தன்னாவினாற் கூறாமல்; நவை நீர் உகுத்து - அத்தீமைக்கு அறிகுறியாகக் கண்ணீர் சொரிந்து; பாவை - தெய்வத்தன்மையுடைய படிவம்; நின்று அழூஉம் - தன்பால் நின்று அழுதலாலே; பாவை மன்றமும் - பாவை மன்றம் எனப்படுகின்ற மன்றமும் என்க.

(விளக்கம்) 135. அரைசு - போலி. கோல் - செங்கோன்மை. அறங்கூறவையம்: பொருள் முதலிய காரணம்பற்றித் தம்முட் கலாஅய்த்து வருவார்க்கு நூனெறி நின்று அறங்கூறி வழக்குத் தீர்க்குமிடம். 136. ஒருதிறம்-அறம் நோக்காது உறவு முதலியவை நோக்கி ஒருவர் சார்பில் நின்று தீர்ப்புக் கூறுதல். 137. நாவொடு - நாவால். நவையை அறிவிக்கும் கண்ணீர் என்க. நவை-தீமை. பாவை நின்றழூஉம் மன்றம் என்றது அழும்பாவை நிற்றலால் அப்பெயர் பெற்ற மன்றமும் என்றவாறு.

139-140 : மெய்வகை .......... பலியுறீஇ

(இதன்பொருள்) மெய்வகை தெரிந்த மேலோர் ஏத்தும் - உண்மையின் திறத்தை யுணர்ந்த சான்றோரால் புகழ்ந்து பாராட்டப்படுகின்ற; ஐவகை மன்றத்தும் - முற்கூறப்பட்ட ஐந்துவகைப்பட்ட கடவுட் பண்புடைய வெள்ளிடை மன்றம் முதலிய ஐந்து மன்றத்தும்; அரும் பலி உறீஇ - அரிய பலிகளைக் கொடுத்து என்க.

(விளக்கம்) 110. அரும்பெறன் மண்டபமன்றியும், 117. வெள்ளிடை மன்றம், 121. இலஞ்சி மன்றம், 127. நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றம், 134. பூதசதுக்கம், 138. பாவை மன்றம் என்னும் இவ்வைந்து மன்றங் கட்கும் பலிகொடுத்து என்க. அரும்பலி என்றமையால் அவிப்பலி என்பது போதரும்.

இந்திரவிழாவின் முதலும் முடிவும்

ஐராவதத்திற் கறிவுறுத்தல்

141-144 : வச்சிரக் ........ சாற்றி

(இதன்பொருள்) வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம் - வச்சிரக் கோட்டத்திலிருக்கும் நறுமணம் கெழுமிய வீர முரசத்தை; கச்சையானைப் பிடர்த்தலை யேற்றி - கச்சை முதலியவற்றால் அணி செய்யப்பட்ட களிற்றியானையின் பிடரிடத்தே ஏற்றி; வால் வெள் களிற்று அரசு வயங்கிய கோட்டத்து - தூய வெள்ளை நிறமுடைய களிற்றுயானைகட் கெல்லாம் அரசனாகிய ஐராவதம் என்னும் யானை என்றும் நின்று விளங்கிய கோட்டத்தின் முன்றிலிலிருந்து; விழவின் கால்கோள் கடைநிலை சாற்றி - இந்திரவிழாவின் தொடக்க நாளையும் இறுதி நாளையும் நகரமெங்கணும் முரசறைந்து அறிவித்து என்க.

(விளக்கம்) 141. வச்சிரக் கோட்டத்து மணம் கெழுமுரசம் என்றதனால், எப்பொழுதும் அந்த முரசம் அக்கோட்டத்தில் இருப்பதாம் என்பதும் பெற்றாம். வீரமுரசம் நாடோறும் மலர் அணிந்து நறும் புகை எடுத்து வழிபாடு செய்யப்படும். ஆதலால் - மணம் கெழுமுரசம் என்றார். மணம் - நறுமணம் (அடியார்க்) மணமுரசு - விழாமுரசு என்றல் பொருந்தாது. பண்கெழு முரசம் என்னும் பாடவேற்றுமையு முண்டென்பது பழையவுரையாலறியலாம். கச்சை - யானைக்குக் கீழ் வயிற்றிற்கட்டும் கச்சை. கச்சை கூறவே அணிசெய்யப்பட்ட களிறு என்றாராயிற்று. விழாவறையத் தொடங்கும் வள்ளுவர் முதன்முதல் ஐராவதக் கோட்டத்தின் முன்றிலினின்றும் தொடங்குதல் மரபு என்பது வால்வெண்......சாற்றி என்பதனாற் பெற்றாம். இந்திரவிழவிற்கு முரசறையுங்கால் ஐராவதக் கோட்டத்தினின்றும் தொடங்கி நகர் முழுதும் அறையப்படும் என்பது மணிமேகலையானும் அறியப்படும். அவ்வாறு செய்வது, ஐராவதம் இந்திரனைக் கொணர்தற்கு என்பர் (அடியார்க்) இஃது இனிய விளக்கம்.

இந்திரவிழவிற்குக் கொடி யேற்றுதல்

145-146 : தங்கிய ........... எடுத்து

(இதன்பொருள்) தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து - தேவேந்திரன் வந்து தங்கிய இடமென்னுமொரு கோட்பாட்டை யுடைய தருக் கோட்டத்தின் முன்னர்; வான் உற மங்கல நெடுங்கொடி எடுத்து - வானத்தைத் தீண்டுமளவு எண்வகை மங்கலங்களோடும் அவ்விழவின் கால்கோட்கு அறிகுறியான ஐராவதம் எழுதப்பட்ட கொடியினை உயர்த்து; என்க.

(விளக்கம்) இந்திரன் வானவர் உலகில் கற்பகக் காவினூடே வதிவானாகலின், அதற்கீடாக இங்கும் அவன் வந்து தங்கியதாக வொரு கோட்பாட்டோடே மலர்ப்பொழிலினூடே அமைக்கப்பட்ட கோட்டம் தருநிலைக் கோட்டம் எனப்பட்டது என்றுணர்க. மங்கலம் - எண்வகை மங்கலப் பொருள்கள். அவையிற்றை சாமரை தீபம் தமனியம் பொற்குடம், காமர் கயலி னிணை முதலாத்-தேமரு, கண்ணாடி தோட்டி கதலிகை வெண்முரசம், எண்ணிய மங்கலங்கள் எட்டு, என்பதனாலறிக.

தருநிலைக் கோட்டத்தை அணிசெய்தல்

147-156: மரகத ........ வீதியில்

(இதன்பொருள்) மரகத மணியொடு வயிரம் குயிற்றி - மரகதம் வயிரம் என்னும் மணிகளை விளிம்புண்டாக அழுத்தித் தளமாகப் படுத்து; பவளத் திரள்கால் பைம்பொன் வேதிகை நெடுநிலை மாளிகைக் கடைமுகத்து யாங்கணும் - அவ் விளிம்பின்மீதே பவளத்தாலியன்ற திரண்ட தூண்களை நிரைத்த பசிய பொன்னாலியன்ற திண்ணைகளையும் நெடிய நிலைகளையும் உடைய மாளிகை வாயிலிடந்தோறும்; கிம்புரிப் பகுவாய்க் கிளர்முத்து ஒழுக்கத்து மங்கலம் பொறித்த மகரவாசிகை தோரணம் நிலைஇய - கிம்புரி செறித்த கொம்பினையுடைய யானையினது அங்காந்த வாயினின்றும் தூங்குகின்ற ஒளிகிளரும் முத்துக் குஞ்சங்களின் வரிசையினையும் சாமரை முதலிய எண்வகை மங்கலப் பொருள்களையும் பொறிக்கப்பட்ட ஓவியங்களையும் உடைய வாசிகை வடிவாக வளையச் செய்த மகரதோரணங்கள் நிலைபெற்ற; தோம் அறு பசும் பொன் பூரண கும்பத்து - குற்றமற்ற பசிய பொன்னாலியன்ற நிறை குடங்களும்; பொலிந்த பாலிகை - முளையாற் பொலிவு பெற்ற பாலிகைகளும்; பாவை விளக்கும் - பாவை விளக்கும்; பசும் பொன் படாகை-பசும் பொன்னாலியன்ற கொடிகளும்; தூ மயிர் கவரி - வெள்ளிய கவரி மயிராலியன்ற சாமரையும்; சுந்தரச் சுண்ணமும் - அழகிய சுண்ணமும்; மேவிய கொள்கை வீதியில் - பிறவும் பொருந்திய அணிகளையெல்லாம் தன்பால் கொள்ளுதலுடைய வீதியில் என்க.

(விளக்கம்) 146. மரகதமணியோடு வயிரமணிகளையும் அழுத்தித் தளமிட்டு என்க. 148. வேதிகை-திண்ணை; மேடை. 150. கிம்புரிப் பகுவாய்க் கிளர்முத்தொழுக்கம் என்றதனால் யானையினது வாயினின்றும் தூங்கும் முத்துக்குஞ்சம் என்பது பெற்றாம். கிம்புரிப் பகுவாய்-மகரவாய் என்பர் அரும்பதவுரையாசிரியர். அது பொருந்துமேற் கொள்க. 151-2. மங்கலம் - மங்கலப் பொருள்களின் ஓவியம். மகர வாசிகைத் தோரணம் - மகரவாயினின்றும் புறப்பட்டதாக வளைத்த தோரணம். 154. பாவை கையிலேந்திய விளக்கு. படாகை - கொடி. தூமயிர் - வெண் மயிர். 156. கொள்கை - கொள்ளல். கும்பம் முதலியவாகப் பொருந்தியவற்றைக் கொள்ளுதலுடைய வீதியில் என்க.

156-160: செறிந்து ........ ஈண்டி

(இதன்பொருள்) ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் - அரசியற் சுற்றத்தாராகிய ஐம்பெருங் குழுவினரும் எண்வகைப்பட்ட ஆயத்தாரும்; அரச குமரரும் - மன்னர் மக்களும்; பரத குமரரும் - பெருங்குடி வாணிகர் மக்களும்; கவர் பரிப் புரவியர் களிற்றின் தொகுதியர் இவர்பரித் தேரினர் - காண்போர் உளங் கவரும் அழகிய பரிப்பினையுடைய குதிரையினை யுடையோரும் களிற்றியானை யூர்ந்துவருந் தொகுதியினரும் விரைந்து செல்லும் குதிரையையுடைய தேரினையுடையோருமாய்; இயைந்து ஒருங்கு (156)ஈண்டி செறிந்து - ஒன்றுபடத் திரண்டு நெருங்கி; ஆங்கு-அப்பொழுதே என்க.

(விளக்கம்) 156. செறிந்து ஆங்கு என்பதனை, 60. ஈண்டி என்பதன் பின்னர்க் கூட்டுக. 157. ஐம்பெருங் குழு - அமைச்சர் புரோகிதர் சேனாபதியர் தவாஅத் தொழிற்றூதுவர் சாரண ரென்றிவர் பார்த்திபர்க் கைம்பெருங்குழு வெனப்படுமே, என்னுமிவர்.

எண்பேராயம் - காரணத்தியலவர் கருமகாரர், கனகச் சுற்றம் கடைகாப்பாளர், நகரமாந்தர் நளிபடைத்தலைவர், யானைவீரர் இவுளி மறவர், இனையர் எண்பேராயம் என்ப என்னுமிவர். இனி அரும்பதவுரையாசிரியர் சாந்துபூக் கச்சாடை பாக்கிலை கஞ்சுக நெய், ஆய்ந்த விவர் எண்மர் ஆயத்தோர் - வேந்தர்க்கு, மாசனம் பார்ப்பார் மருத்தர் வாழ் நிமித்தரோ டமைச்சர், ஆசில் அவைக்களத்தார் ஐந்து எனக் காட்டுவர். 58. பரதர்-வணிகர். கவர்பரி - ஊர்வோர் வாரைக் கவர்ந்திழுத்தற்குக் காரணமான பரிப்பினையுடைய புரவி யெனினுமாம். பகுத்து விரையும் செலவு என்பாருமுளர். இவர்தல் - இழுத்தல்.

விண்ணவர் தலைவனை விழுநீராட்டல்

161-168 : அரைசு ...... விழுநீராட்டி

(இதன்பொருள்) மா இரு ஞாலத்து - மிகப்பெரிய இந்நிலவுலகத்தின் கண்ணே; அரைசு மேம்படீஇய - தம்முடைய அரசியலானது மேம்படுதற் பொருட்டு; மன்னுயிர் காக்கும் - நிலைபெற்ற உயிர்களைப் புரக்கின்ற குறுநில மன்னருள்; ஆயிரத்து ஓர் எட்டு அரசு - ஓராயிரத்தெண்மர் மன்னர்கள்; தண் காவிரி நறுந் தாது மலிபெருந்துறை - தண்ணிய காவிரிப் பேரியாற்றினது நறிய பூந்தாது மிக்க பெரிய துறைக்கட் சென்று; பொற்குடத்து ஏந்தி - பொன்னாலியன்ற குடங்களிலே முகந்து; தலைக்கொண்ட - தந் தலையாலே சுமந்து கொணரப்பட்ட; புண்ணிய நல்நீர் - புண்ணியம் பயக்கும் நல்ல நீரினாலே; அகநிலை மருங்கில் - பூம்புகார் நகரத்தகத்தே; உரைசால் மன்னவன் கொற்றம் கொள்க என-செங்கோலோச்சிப் புகழமைந்த நம்மன்னன் வெற்றி பெறுவானாக என்றுகூறி; மண்ணகம் மருள வானகம் வியப்ப - இம் மண்ணுலகத்தார் இது மண்ணுலகோ அல்லது விண்ணுலகு தானோ என்று மருட்கை எய்தா நிற்பவும் வானுலகத்தார் நம்முலகினும் மண்ணுலகே சிறந்ததுபோலும் என்று வியவா நிற்பவும்; விண்ணவர் தலைவனை - அவ்விண்ணவர்க்கும் வேந்தனாகிய இந்திரனை; விழுநீர் ஆட்டி - மஞ்சனமாட்டவென்க.

(விளக்கம்) மாயிரு ஞாலத்து அரைசு மேம்படீஇய உயிர்காக்கும் ஆயிரத்தெட்டரசு குடத்தேந்தித் தலைக்கொண்ட புண்ணிய நன்னீரை, அகனிலை மருங்கில் உரைசால் மன்னன் கொற்றங் கொள்கென வாழ்த்தி மருள வியப்ப விழுநீராட்டி எனக்கொண்டு கூட்டிப் பொருள் கூறுக.

166. வீதியில் குழுவும் ஆயமும் குமரரும் ஈண்டிச் செறிந்து ஆங்கு அரசு தலைக்கொண்ட நீரை வியப்ப வியப்பத் தலைவனை நீராட்டி என இயையும் ஆட்டி - ஆட்ட.

161. படீஇய - படுதற்பொருட்டு. அகனிலை-ஊர். 162. உரை - புகழ். 162. மன்னன் - ஈண்டுச் சோழமன்னன். ஆயிரத் தோரெட்டரசு என்றது குறுநிலமன்னரை-ஆயிரத்தெட்டரசர் தலைக்கொண்ட நீர் எனவே ஆயிரத்தெட்டுக் குடம் நீர்கொண்டு மஞ்சனமாட்டுதல் மரபு என்பதும் பெற்றாம். 167. மண்ணவர் இது மண்ணகமோ விண்ணகமோ என்று மருளவும் வானகத்தார், நம்முலகிலும் மண்ணுலகமே சிறந்தது என்று வியப்பவும் என்க.

168. விண்ணவர் தலைவன் - ஈண்டு அவன் வச்சிரம் என்பர் அடியார்க்குநல்லார். எனவே, இந்நீராட்டு வச்சிரக் கோட்டத்தில் நிகழ்வதென்பது அவர் கருத்தாதல் பெற்றாம். இந்நிகழ்ச்சி தருநிலைக் கோட்டத்தின்கண் நிகழ்வதென்பதே எமது துணிபு. ஆகவே, விண்ணவர் தலைவனுக்குப் படிவமமைத்து விழுநீராட்டினர் என்க.

இந்திர விழவின்போது புகார்நகரத்தே

நிகழும் பிற விழாக்கள்

169-178: பிறவாயாக்கை ......... சிறந்தொருபால்

(இதன்பொருள்) பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் - என்றும் பிறவாத யாக்கையையுடைய இறைவனுடைய திருக்கோயிலும்; அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் - ஆறு முகத்தையும் சிவந்த நிறத்தையுமுடைய முருகவேள் கோயிலும்; வால்வளை மேனி வாலியோன் கோயிலும்-வெள்ளிய சங்கு போன்ற நிறமுடைய பலதேவன் கோயிலும்; நீலமேனி நெடியோன் கோயிலும் - நீலமணிபோலும் நிறத்தையுடைய நெடியமால் கோயிலும்; மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்-முத்துமாலை யணிந்த வெள்ளிய குடையையுடைய இந்திரன் கோயிலும்; ஆகிய இக்கோயில்களிடத்தெல்லாம்; மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ நான்மறை மரபின் தீமுறை யொருபால்-மிகவும் முதுமையையுடைய முதல்வனாகிய பிரம தேவனுடைய வாய்மையிற் பிறழ்தலில்லாத நான்குவகைப்பட்ட மறைகள் கூறுகின்ற முறைப்படி வேள்விச் சடங்குகள் நிகழ்ந்தன ஒருபக்கம்; நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும் பால் வகை தெரிந்த பகுதித் தோற்றத்து வேறு வேறு கடவுளர் சாறு சிறந்து ஒருபால் - நால்வகைப்பட்ட தேவரும் பதினெண்வகைப்பட்ட கணங்களும் என வேற்றுமைப்படத் தெரிந்து வகுக்கப்பட்ட தோற்றத்தையுடைய கடவுளரது விழாக்கள் சிறவாநிற்ப ஒரு பக்கம் என்க.

(விளக்கம்) 169. பிறவா யாக்கை - ஒருதாய் வயிற்றில் கருவாகி உருவாகி ஏனை உயிரினங்கள் பிறக்குமாறு போலப் பிறவாத உடம்பு. அஃதாவது யாதானுமொரு காரணம்பற்றி நினைப்பளவிலே தானே தனக்குத் தோற்றுவித்துக் கொள்ளும் உடம்பு. இத்தகைய உடம்பினைச் சைவசமயத்தவர் உருவத்திருமேனி என்பர். இதனை,

குறித்ததொன் றாக மாட்டாக் குறைவிலன் ஆக லானும்
நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமை யானும்
வெறுப்பொடு விருப்புத் தன்பால் மேவுதல் இலாமை யாலும்
நிறுத்திடும் நினைந்த மேனி நின்மலன் அருளி னாலே

எனவரும் சிவஞானசித்தியார் (பக்கம்-65)ச் செய்யுளால் உணர்க. மற்றும் திருமால் முதலிய கடவுளர் தாயர் வயிற்றில் கருவிருந்து யாக்கை கோடலான் திருவருளாலே நினைந்தவுடன் திருமேனி கொள்பவன் ஆதலிற் பிறவா யாக்கைப் பெரியோன் என்றார். மேலும், இவனே முழுமுதல்வன் என்பதுபற்றிப் பெரியோன் என்றும் விதந்தார். மகாதேவன் என அரும்பதவுரையாசிரியர் கூறியதும், அடியார்க்கு நல்லார் இறைவன் என்றதூஉம் இக்கருத்துடையனவே யாம்.

170. அறுமுகச் செவ்வேள்கோயில் - தமிழ்நாட்டுக் குறிஞ்சித் திணைத்தெய்வமாகிய முருகன் கோயில். இத்தெய்வம் கடவுள் என்னும் பொருளுடையதாய் முருகு என வழங்கப்பட்டு, பின்னர் ஆண்பால் விகுதி பெற்று முருகன் என்றாகி வடவர் புராணத்திற் கூறப்படும் கந்தனும் இதுவும் ஒரு தெய்வம் என்று கொள்ளப்பட்டு வடவர் புராணங் கூறும் ஆறுமுகம் முதலிய உருவத்தைப் பெற்றுளது என்று தோன்றுகின்றது. இத் தெய்வமே தமிழகத்தார் தனிப்பெருங் கடவுள் ஆகும்.

171. வாலியோன் - வெண்ணிறமுடையோன் என்னும் காரணத்தால் வந்த பெயர். 172. நீலமேனி நெடியோன் - திருமால். இத்தெய்வம் முல்லைத்திணைத் தெய்வமாகக் கொள்ளப்பட்ட வடவர் தெய்வம். 173. மாலை வெண்குடை மன்னன் என்றது இந்திரனை. இத்தெய்வம் மருதத்திணைத் தெய்வம். ஆசிரியர் தொல்காப்பியனாரும் இந்திரனை வேந்தன் என்று குறியீடு செய்தலறிக.

174. மாமுது முதல்வன் என்றது, பிரமதேவனை. சிவபெருமான் என்பாருமுளர். 175. நான்மறை-இருக்கு எசுர் சாமம் அதர்வணம் என்பன. தீமுறை - வேள்வி. 176. நால்வகைத் தேவர் - முப்பத்து மூவர்; அவராவார்: (1) வசுக்கள் எண்மர், (2) திவாகரர் பன்னிருவர். (3) உருத்திரர் பதினொருவர், மருத்துவர் இருவருமெனவிவர்.

மூவறு கணங்களாவார் - கின்னர்கிம் புருடர் விச்சா தரர் கருடர் - பொன்னமர் பூதர் புகழியக்கர் - மன்னும், உரகர் சுரர்சா ரணர்முனிவர் மேலாம், பரகதியோர் சித்தர் பலர், காந்தருவர் தாரகைகள் காணாப்பசாச கணம், ஏந்துபுகழ் மேய விராக்கதரோ - டாய்ந்ததிறற், போகா வியல்புடைய போகபூமி யோருடனே, ஆகாச வாசிகளா வார் எனவிவர். ஆகாசர் நாகர் சித்தர் காந்தருவர் விஞ்சையர் பசாசர் தாரகை போகபூமியோர் கிம்புருடர் சுரர் அசுரர் பூதம் முனிதேவர் கருடர் இராக்கதர் இயக்கர் சாரணர் எனவும் கொள்க.

விழவுக்களின் நிகழ்ச்சிகள்

179-188 : அறவோர் ........... வியலுளாங்கண்

(இதன்பொருள்) அறவோர் பள்ளியும் அறன் ஓம்படையும் - துறவோர் தம் பள்ளிகளிடத்தும் அறத்தைக் காக்கும் அறக் கோட்டங்களிடத்தும்; ஒருசார் புறநிலைக் கோட்டத்து - ஒரு பக்கத்தே புறநகரத்தே யமைந்த அறநிலையங்களினும்; திறவோர் உரைக்கும் - அறனறிந்து நாத்திறமும் படைத்த சான்றோர் மக்கட்கு அறஞ்செவி யறிவுறுத்தும்; செயல் சிறந்து - செயலாற் சிறப்புறா நிற்ப; ஒருபால் - மற்றொரு பக்கத்தே; கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர் அடித்தளை நீக்க அருள்சிறந்து - புலிக் கொடியுயர்த்த சோழமன்னனோடு கூடாத பகைமன்னர்க்கிட்ட கால்தளையை நீக்கி விடுகையாலே அம்மன்னனுடைய அருட் பண்பு சிறவாநிற்ப; ஒருபால்-மற்றொருபக்கத்தே; கண்ணுளாளர் கருவிக்குயிலுவர் பண் யாழ்ப்புலவர் பாடல் பாணரொடு எண்அருஞ் சிறப்பின் இசை சிறந்து - மதங்களும் துளைக்கருவி யிசைக்கும் பெரும்பாணரும் தோற்கருவி இசைக்கும் குயிலுவரும் நரப்புக் கருவியிசைக்கும் யாழ்ப்புலவரும்; மிடற்றுக் கருவியாலிசைபாடும் பாடலையுடைய பாணரும் ஆகிய இவர்களால் இசைக்கவல்ல அளந்தறிதலரிய சிறப்பையுடைய இன்னிசை நிகழ்ச்சிகளாலே சிறவா நிற்பவும்; முழவுக்கண் துயிலாது முடுக்கரும் வீதியும் விழவுக்களி சிறந்த வியலுள் ஆங்கண் - கங்குலும் பகலும் இங்ஙனம் நிகழ்தலாலே மத்தளத்தின் கண்கள் சிறிதும் அடங்குதலின்றிக் குறுந்தெருக்களினும் நெடிய தெருக்களினும் இந்திர விழவினால் உண்டான மகிழ்ச்சி மிக்க அகன்ற அப்புகார் நகரத்தின்கண் என்க.

(விளக்கம்) 179. அறவோர் என்றதனால், பள்ளி என்பது அருகர் தவப்பள்ளியும் புத்தர் தவப்பள்ளியும் என்பது பெற்றாம். அறவோர் துறவறம் பூண்டோர். அறன் ஓம்படை - அறக்கோட்டம். 180. புற நிலைப் புண்ணியத்தானம் என்றது புறநகரத்தே அமைந்த அறநிலையங்களை. 181. திறவோர் - மெய்யுணர்வொடு நாத்திறமும் ஒருங்கு கைவரப்பெற்ற மேலோர். செயல் - அறிவுரை வழங்குதல். 182. கொடி-ஈண்டுப் புலிக் கொடி. கூடாமன்னர் - பகைமன்னர். 183. அடித்தளை-கால்விலங்கு. நீக்குதலாலே அருள்சிறக்க என்க. 184. கண்ணுளாளர்-மதங்கர்; பெரும்பாணருமாம். இவர் குழலிசையாளர் துளைக்கருவியாளர் எனப் பொதுவிற் கோடலுமாம். கண்-துளை, துளை வழியாக இவர் இசையையாளுதலால் அப்பெயர் பெற்றார் என்க. கருவிக்குயிலுவர்-தோற்கருவியாளர். யாழ்ப்புலவர் என்றது நரப்புக் கருவியாளர் என்றவாறு. பாடல்-மிடற்றுப் பாடல். சாறு சிறந்தொருபால்........இசைசிறந் தொருபால், இவற்றில் வருகின்ற சிறந்து என்னும் எச்சத்தைச் சிறக்க எனத் திரித்துக் கொள்க. 187. முழவுக்கண் என்பதற் கேற்பத் துயிலாது என்றினிதின் இயம்பினர். முடுக்கர்-குறுந்தெரு; சந்திகளுமாம். விழவுக்களி-விழவுகாரணமாக வுண்டான மகிழ்ச்சி.

கோவலன் போல மலய மாருதம் திரிதருமறுகு

189-203 : காதற் .......... மறுகில்

(இதன்பொருள்) காதல் கொழுநனைப் பிரிந்து அலர் எய்தா மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னொடு - தான் காதலிக்கும் கொழுநனைப் பிரிந்து வேறுபட்டு அதனால் அலர் கூறப்படாத அழகிய மகரக் குழையையுடைய மாதவி என்னும் கணிகையோடும்; இல்வளர் முல்லை மல்லிகை மயிலை தாழிக்குவளை சூழ் செங்கழுநீர் பயில் பூங்கோதைப் பிணையலில் பொலிந்து - இல்லத்தே நட்டுவளர்க்கப்பட்ட முல்லை மல்லிகை மயிலை என்னும் இவற்றின் மலர்களோடே தாழியிலிட்டு வளர்க்கப்படும் குவளையும் வண்டுகள் சூழ்தருகின்ற செங்கழுநீர் என்னும் மலர்களும் விரவிப் புனைந்த மாலையை யணிந்து பொலிவு பெற்று; காமக்களி மகிழ்வு எய்தி - காமவின்பத்தாலே செருக்கெய்தி; காமர் நறுவிரை பொதிபூம் பொழிலாட்டு அமர்ந்து - அழகிய நறிய மணத்தைத் தம் மகத்தே பொதிந்துள்ள மலர்களையுடைய பொழிலில் ஆடுதலைப் பெரிதும் விரும்பி; நாள் மகிழ்இருக்கை நாள் அங்காடியில்-நாள்தோறும் மகிழ்ந்திருக்கும் இருப்பிடங்களையுடைய நாளங்காடியில்; பூ மலி கானத்துப் புதுமணம் புக்கு - மலர்கள் மிக்குள்ள விடங்களில் அம்மலர்களின் புதிய மணத்தினூடே புகுந்து; புகையும் சாந்தும் புலராது சிறந்து - அகிற்புகை சந்தனம் என்னும் இவற்றின் செவ்வி யழியாமல் சிறப்புறா நிற்ப; நகை ஆடு ஆயத்து நல்மொழி திளைத்து - நகைத்து விளையாடும் கூட்டத்தோடு இன்பந்தரும் காமக் குறிப்புடைய நல்ல மொழிகள் பேசி இடையறாது மகிழ்ந்து; குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு திரிதரு மரபில் கோவலன் போல - குரல் என்னும் இசையைப் பாடுகின்ற வாயையுடைய பாணரோடும் அந்நகரத்துக் கழிகாமுகரோடும் திரிகின்ற ஒழுக்கத்தையுடைய கோவலனைப் போன்று; இளிவாய் வண்டினொடும் இன் இளவேனிலொடும் மலய மாருதம் திரிதரு மறுகில் - இளி யென்னும் இசையை முரலுகின்ற வாயை யுடைய வண்டுகளோடும் இனிய இளவேனிற் பருவத்தோடும் பொதியின் மலையிற்றோன்றிய இளந் தென்றலானது உலாவு தலைச் செய்யும் மறுகினிடத்தே என்க.

(விளக்கம்) 189. காதற் கொழுநனை என்பது முதலாக 203-மறுகில் என்பதீறாகச் சிலேடை வகையால் அடிகளார் கோவலனைத் தென்றலுக்குத் திறம்பட வுவமை கூறுமாற்
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 23, 2012, 12:00:49 PM
189-203 : காதற் .......... மறுகில்

(இதன்பொருள்) காதல் கொழுநனைப் பிரிந்து அலர் எய்தா மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னொடு - தான் காதலிக்கும் கொழுநனைப் பிரிந்து வேறுபட்டு அதனால் அலர் கூறப்படாத அழகிய மகரக் குழையையுடைய மாதவி என்னும் கணிகையோடும்; இல்வளர் முல்லை மல்லிகை மயிலை தாழிக்குவளை சூழ் செங்கழுநீர் பயில் பூங்கோதைப் பிணையலில் பொலிந்து - இல்லத்தே நட்டுவளர்க்கப்பட்ட முல்லை மல்லிகை மயிலை என்னும் இவற்றின் மலர்களோடே தாழியிலிட்டு வளர்க்கப்படும் குவளையும் வண்டுகள் சூழ்தருகின்ற செங்கழுநீர் என்னும் மலர்களும் விரவிப் புனைந்த மாலையை யணிந்து பொலிவு பெற்று; காமக்களி மகிழ்வு எய்தி - காமவின்பத்தாலே செருக்கெய்தி; காமர் நறுவிரை பொதிபூம் பொழிலாட்டு அமர்ந்து - அழகிய நறிய மணத்தைத் தம் மகத்தே பொதிந்துள்ள மலர்களையுடைய பொழிலில் ஆடுதலைப் பெரிதும் விரும்பி; நாள் மகிழ்இருக்கை நாள் அங்காடியில்-நாள்தோறும் மகிழ்ந்திருக்கும் இருப்பிடங்களையுடைய நாளங்காடியில்; பூ மலி கானத்துப் புதுமணம் புக்கு - மலர்கள் மிக்குள்ள விடங்களில் அம்மலர்களின் புதிய மணத்தினூடே புகுந்து; புகையும் சாந்தும் புலராது சிறந்து - அகிற்புகை சந்தனம் என்னும் இவற்றின் செவ்வி யழியாமல் சிறப்புறா நிற்ப; நகை ஆடு ஆயத்து நல்மொழி திளைத்து - நகைத்து விளையாடும் கூட்டத்தோடு இன்பந்தரும் காமக் குறிப்புடைய நல்ல மொழிகள் பேசி இடையறாது மகிழ்ந்து; குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு திரிதரு மரபில் கோவலன் போல - குரல் என்னும் இசையைப் பாடுகின்ற வாயையுடைய பாணரோடும் அந்நகரத்துக் கழிகாமுகரோடும் திரிகின்ற ஒழுக்கத்தையுடைய கோவலனைப் போன்று; இளிவாய் வண்டினொடும் இன் இளவேனிலொடும் மலய மாருதம் திரிதரு மறுகில் - இளி யென்னும் இசையை முரலுகின்ற வாயை யுடைய வண்டுகளோடும் இனிய இளவேனிற் பருவத்தோடும் பொதியின் மலையிற்றோன்றிய இளந் தென்றலானது உலாவு தலைச் செய்யும் மறுகினிடத்தே என்க.

(விளக்கம்) 189. காதற் கொழுநனை என்பது முதலாக 203-மறுகில் என்பதீறாகச் சிலேடை வகையால் அடிகளார் கோவலனைத் தென்றலுக்குத் திறம்பட வுவமை கூறுமாற்றால் கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியை மருவிய அற்றை நாள் முதல் பலவாண்டுகளின் பின்னர் நிகழ்கின்ற இற்றைநாள் காறும் அவனுடைய வாழ்க்கை கழிகின்ற தன்மையை நம்மனோர்க்குக் குறிப்பாகப் புலப்படுத்தும் திறம் பெரிதும் போற்றற் பாலதாம்.

இனி, இவற்றைத் தென்றற் கேற்றிக் கூறுமாறு: காதல் கொழுநனை பிரிந்து அலர் எய்தா மாதர்க்கொடுங்குழை மாதவி தன்னொடு-எல்லாரும் காதலிக்கும் கொழுவிய நனையாந்தன்மையை விட்டு முதிர்ந்து அலராகாத வளைந்த அழகிய தளிரை யுடைய குருக்கத்தி மலரோடும்; இல்வளர் முல்லை மல்லிகை பயிலை தாழிக் குவளை சூழ் செங்கழுநீர் பயில் பூங்கோதைப் பிணையலில் பொலிந்து-முல்லை முதல் கழுநீர் ஈறாகக் கூறப்பட்ட பூக்களினாலியன்ற கோதைகளினும் பிணையல்களினும் பயின்று மணமேறப் பெற்ற பொலிவுடனே; நாண்மகிழிருக்கை... ...புக்கு-நாள் தோறும்........புதுமணத்தினூடு புகுந்து; புகையும்.....திளைத்து-அகிற்புகை... இடைவிடாது பயின்று; எனக் கூறிக்கொள்க.

200. பாணர்க்கு வண்டும், பரத்தர்க்கு வேனிலும் கோவலற்கு மாருதமும் உவமம் எனவரும் அடியார்க்கு நல்லார் விளக்கம் வண்டுக்குப் பாணரும் வேனிலுக்குப் பரத்தரும் மாருதத்திற்குக் கோவலனும் உவமம் எனக் கூறுதல் நேரிதாம். ஆயினும், அடிகளார் ஈண்டுக் கோவலன் போல எனக் கோவலனை உவமங் கூறுவார் போலக் கூறினும் அவர் கருத்துக் குறிப்பாகக் கோவலன் ஒழுக்கத்திற்கு மாருதத்தை உவமங்காட்டிக் கூறுதலே ஆதலின், அது கருதி அடியார்க்கு நல்லார் அவ்வாறு கூறினர் எனின் பெரிதும் பொருந்தும் என்க.

189. நனை-அரும்பு. அலர் - பழிச் சொல் -மலர். குருக்கத்தி அலரெய்தாமையாவது - செவ்வி யழியாமை என்க. 190. கொடுங்குழை - வளைந்த குழை என்னும் காதணிகலம்: வளைந்த தளிர். இல்வளர்தல் முல்லை முதலிய எல்லா மலர்க்கும் பொது. மயிலை-இரு வாட்சி. 194 காமர் - அழகு. 195. நறுவிரை பொதி பூம்பொழில் என மாறிக் கூட்டுக. அமர்தல் - விரும்புதல். 197. மிகுதிபற்றிப் பூமலி கானம் என்றார். 200. குரல் - ஓரிசை. பரத்தர் - கழிகாமுகர். குரலுக்குக் கிளையாதல் கருதி வண்டினை இளிவாய் வண்டென்றார்.

201. கோவலன் போல மாருதம் திரிதரும் என்றாரேனும் கோவலன் வம்பப் பரத்த ரொடும் வறுமொழியாள ரொடும் காமக் களியாட்டத்தே தனது வாழ் நாளை வறிதே கெடுத்துத் திரிந்தான் என நம்மனோர்க்கு அடிகளார் கூறாமற் கூறும் வித்தகப் புலமை வியத்தற்குரியதாம்.

வீதிச் சிறப்பு

204-217: கருமுகில்.......உண்டுகொல்

(இதன்பொருள்) அம் கண் வானத்து அரவுப் பகை அஞ்சி - அழகிய இடமமைந்த வானவெளியிலே திரியின் தனக்குப் பகையாகிய பாம்பு எளிதாகத் தன்னைக் கண்டுவந்து விழுங்கும் என்று அஞ்சி ஆங்குத் திரியாமல்; கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்து ஆங்கு இரு கருங்கயலோடு இடை குமிழ்எழுதி - ஒரு பெரிய முகிலைத் தன்னுச்சியிலே சுமந்து சிறிய முயலை யொழித்து அவ்விடத்தே இருமருங்கினும் இரண்டு கயல் மீனையும் அவற்றிடையே ஒரு குமிழ மலரையும் எழுதி இவ்வாறு தன்னைப் பிறர் அறியா வண்ணம் உள்வரிக் கோலம் கொண்டு; ஈண்டுத் திங்களும் திரிதலும் உண்டு கொல் - இந் நகரமறுகிலே திங்கள் தானும் வந்து திரிகின்றதோ எனவும்; மீன் ஏற்றுக்கொடியோன் நீர்வாய்திங்கள் நீள் நிலத்து அமுதின் சீர்வாய் துவலைத் திருநீர் மாந்தி மெய்பெற வளர்த்த வானவல்லி வருதலும் உண்டுகொல் - மகர மீனாகிய கொடியையுடைய காமவேள் ஈரம் வாய்ப்புப் பெற்ற திங்களாகிய பெரிய நிலத்தின்கண் வித்திட்டு அது தானும் அத்திங்களினது அமிழ் தகலையினது சிறப்பு வாய்ந்த துளிகளாகிய அழகிய நீரைப் பருகி வடிவம் பெறுமாறு வளர்த்த வானவல்லி தானும் இம் மறுகிடத்தே வருதலும் உண்டாயிற்றோ எனவும், இருநில மன்னற்குப் பெருவளம் காட்ட-பெரிய நிலத்தையுடைய ஊக்க மிக்க இச்சோழ மன்னனுக்குப் பெரிய வள முண்டாக்கிக் காட்டற் பொருட்டு; திருமகள் புகுந்தது இச் செழும்பதி ஆம் என - தன்னிடத்தே எழுந்தருளியிருக்கும் திருமகள் தன்னைத் துறந்து அதர்வினாய் வந்து புகுந்தது வளங்கெழுமிய இப்புகார் நகரமே ஆதல் வேண்டும் என்று கருதிப் பிரிவாற்றாமையாலே வருந்தி; எரிநிறத்து இலவமும் முல்லையும் அன்றியும் கருநெடுங்குவளையும் குமிழும் பூத்து ஆங்கு-நெருப்புப் போன்ற நிறத்தை யுடையதோர் இலவ மலரையும் முல்லை முகையையும் தன்னகத்தே பூத்ததோடன்றியும் இரண்டு கரிய பெரிய குவளை மலரையும்  ஒரு குமிழ மலரையும் பூத்து இங்ஙனம் கொண்ட; உள்வரிக் கோலத்து - உள்வரிக் கோலத்தோடே; உறுதுணை தேடி - தன்பால் வீற்றிருக்குந் துணையாகிய அத்திருமகளைத் தேடி; கள்ளக் கமலம் - வஞ்சமுடைய அச்செந்தாமரைத் தெய்வமலர்; திரிதலும் உண்டுகொல் - இம் மறுகிடத்தே திரிதலும் உண்டாயிற்றோ எனவும் என்க.

(விளக்கம்) 204. கருமுகில் - கூந்தற்குவமை. குறுமுயல் - குறிய களங்கம். 205. கருங்கயல் - கண்கட்குவமை. குமிழ்: ஆகுபெயர். குமிழமலர் - இது மூக்குக்குவமை. 206. அரவு - இராகுவும் கேதுவுமாகிய பாம்புகள். அரவுப் பகையஞ்சி என்றதனால், 207. திங்கள்-முழுத்திங்கள் என்பது பெற்றாம். அற்றைநாள் நிறைமதி நாளாதலும் நினைக. திங்கள்-முகத்திற்குவமை. 208. வாய்திங்கள்: வினைத் தொகை. 210. மீனேற்றுக் கொடியோன் - காமவேள். மீன் - மகர மீன். கடல்வாழ் சுறவும் ஏறெனப் படுமே (தொல். உரி-46) என்பதனால் மீன் மகரம் என்பது பெற்றாம். மகரம் - சுறாமீன். 210. மெய்பெற என்பதற்கு அடியார்க்குநல்லார், முன்பு நுதல்விழியான் இழந்த மெய் பெறுவதற்காக என்பர் வானவல்லியால் தன் மெய்யைப் படைத்துக் கோடற்கு என்பது அவர் கருத்துப்போலும். இல்லையேல் வானவல்லி காமவேள் மெய்பெறுதற்குக் காரணமாகாமை யுணர்க: 211. வானவல்லி - மின்னுக்கொடி. 212. திருமகள் தானே வளங்காட்டப் புகுதலின் ஊக்கமிக்க மன்னற்கு எனவும் திருமகன் அதர்வினாய் வந்து புகுந்தது இச்செழும்பதி எனவும் கூறிக்கொள்க. என்னை? ஆக்கம் அதர்வினாய்ச் செல்லு மசைவிலா ஊக்கமுடையா னுழை என்பதூஉமுணர்க்க. இனி, கமலம் திருமகள் ஈண்டுளாள் என்று கருதுதற்குச் செழும்பதி என்றது குறிப்பேதுவாயிற்று. 214. இலவம் வாய்க்கும், முல்லை-எயிற்றிற்கும் உவமை. 216. உள்வரிக் கோலம். தன்னைக் கரத்தற்பொருட்டுக் கொள்ளும் வேடம். மன்னன்பால் உள்ளதிருமகளைக் கொடுபோக வருதலின் கமலம் ஒற்றர் காணாமைக்கு உள்வரிக் கோலத்தோடு வருதல் வேண்டிற்று. உறுதுணை - தன்பா லுறுகின்ற துணை.

இதுவுமது

218-224 : மன்னவன் ......... பெற்றியும் உண்டென

(இதன்பொருள்) பல் உயிர் பருகும் பகுவாய்க் கூற்றம் - உலகிற்றோன்றிய பல்வேறுயிர்களையும் தனதொரு பிளந்த வாயினாலேயே உண்டொழிக்கும் கொடுந்தொழிலையுடைய கூற்றுவன்; மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சி - சோழமன்னனுடைய செங்கோன்மையை மறுத்துத் தனக்கியல்பான ஆணுருவோடு இந் நகரத்துட் புகுதற்கு அஞ்சி; ஆண்மையில் திரிந்து - தனது ஆண் தன்மையில் பிறழ்ந்து; அருந் தொழில் திரியாது - பிறர் செய்தற்கரிய தனது உயிர் பருகுந் தொழிலிலே மாறுபடாமல்; நாண் உடைக் கோலத்து நகை முகம் கோட்டி - நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்னும் நான்கு பண்புகளும் பொருந்தியதோர் உள்வரிக் கோலத்தோடே புன்முறுவல் தவழும் முகமும் கொண்டு; திவவு யாழ் நரம்பின் பண்மொழி மிழற்றிபெண்மையில் - வார்க் கட்டமைந்த யாழினது நரம்பிற்கண் பிறக்கும் இன்னிசைபோலும் இனிய மழலைமொழிகளைப் பேசிக்கொண்டு பெண்மை யுருவத்தோடும்; திரியும் பெற்றியும் உண்டுகொல் - இந்நகர மறுகில் திரிகின்ற தன்மையும் உண்டாயிற்றோதான் எனவும் கூறி என்க.

(விளக்கம்) 218. செங்கோல் அரசர் ஆட்சி நிகழும் நாட்டில் தீவினை நிகழாமையின் மாந்தர் தமக்கென வரைந்த நூறாண்டு வாழ்ந்து முடிதலின்றி, குறையாண்டில் கூற்றுவன் கைப்படா-அர் ஆகலின் அந்நாட்டில் கூற்றம்புக அஞ்சும் என்பதொரு கோட்பாடு. இதனை, கூற்றம் இல்லை ஓர் குற்றம் இலாமையால் எனவும், (கம்பரா. நாட்டுப்- 39) கூற்றுயிர் கோடலும் ஆற்றாதாக உட்குறு செங்கோல் ஊறின்று - நடப்ப எனவும், (பெருங்கதை 4-2: 55-6) மாறழிந்து ஓடி மறலி ஒளிப்ப முது மக்கட் சாடிவகுத்த தராபதியும் எனவும் (விக்கிர. உலா: 7-8) பிற சான்றோர் கூறுமாற்றானும் உணர்க. இங்ஙனமாதலின் கூற்றம் மன்னவன் செங்கோலை மறுத்தற்கு அஞ்சி என்பது கருத்து. எனவே, கூற்றமும் இந்நகரத்தில் உள்வரிக் கோலம் பூண்டுவந்து தனக்கியன்ற உயிர் பருகும் கொடுந்தொழில் செய்வதாயிற்றோ என்றவாறாம்.

219. ஆண்மை-அதற்குரிய ஆணுருவம். நாண முதலிய பெண்மைப் பண்புகள் நான்குமுடைய என்க. கோலம்-உள்வரிக் கோலம். 221. புன்முறுவல் தவழும் முகத்தைக் கவிழ்த்து எனலுமாம். 222. திவவு யாழ் நரம்பின் பண் (போன்ற)மொழி என மாறிக் கூட்டுக. பெண்மை-பெண்ணுருவம். 223. உண்டுகொல் என ஈண்டும் அசைச்சொல் பெய்து கொள்க.

இனி, (202) மாருதந் திரிதரு மறுகில், (207) திங்களும், (211) வானவல்லியும், (217) கள்ளக்கமலமும், (219) கூற்றமும், திரிதலும் உண்டுகொல்? வருதலும் உண்டுகொல்? திரிதலும் உண்டுகொல்? பெற்றியும் உண்டுகொல் எனக் கூறி என்க.

இவை, மலயமாருதம் திரிதரு மறுகின்கண் கோவலனொடு திரிகின்ற நகரப்பரத்தர் நகையாடாயத்து மகளிரை நோக்கி நன்மொழி கூறித் திளைத்தவாறாம். இவற்றுள் அற்புத அணி, வஞ்சப்புகழ்ச்சி அணி முதலியன வந்து இன்புறுத்துதலறிக.

விருந்தும் மருந்தும்

224-234: உருவிலாளன் ....... நடுநாள்

(இதன்பொருள்) உரு இல் ஆளன் ஒருபெருஞ் சேனை - உருவமில்லாத காமவேளினுடைய ஒப்பில்லாத பெரிய சேனையாகிய பொதுமகளிர்; இகல் அமர் ஆட்டி - ஆடல் காரணமாகத் தம்மோடு மாறுபட்டுத் தொடுத்த போரினை, முன்கூறியவாறு புகழ்ந்து சொல்லுதலாகிய அம்புகளாலே வென்று; எதிர்நின்று விலக்கி - அவர் போகாவண்ணம் எதிர்நின்று தடுத்து முயங்குதலாலே; அவர் எழுது வரிக் கோலம் - அப்பொது மகளிருடைய முலை முதலியவற்றில் எழுதிய தொய்யில் முதலிய பத்திக் கீற்று; முழு மெயும் உறீஇ - தமது மார்ப முழுவதும் பதியா நிற்பவும்; விருந்தொடு புக்க பெருந்தோள் கணவரொடு உடன் உறைவு மரீஇ - அவர்தாம் விருந்தினரோடு வந்து புகுந்தமையானே ஊடுதற்கிடனின்மை கண்டு யாது மறியார் போன்று முகமலர்ந்து வரவேற்று விருந்தோம்பிய பின்னர்ப் பெரிய தோளையுடைய தங்கணவரோடு உறைதலையும் பொருந்தி இவ்வாறு, ஒழுக்கொடு புணர்ந்த - இல்லற வொழுக்கத்தோடு கூடிய; வடமீன் கற்பின் மனையுறை மகளிர் - அருந்ததி போலும் கற்பையுடைய அக்குல மகளிரின் சால்புடைமை கண்ட அக்கணவன்மார் தாமே அவரை நன்கு மதித்தவராய்த் தமது நெஞ்சத்தை நோக்கி; மாதர் வாள் முகத்து மணித் தோட்டுக் குவளைப் போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை - இம்மாதருடைய ஒளி பொருந்திய முகத்து நீலமணி போலும் இதழையுடைய நீலமலர்கள் புறங்கொடுத்துப் போதற்குக் காரணமான கரிய கண்களின் கடையில் நமபால் ஊடல் காரணமாக உண்டான சிவப்புத்தான்; விருந்தின் தீர்ந்திலது ஆயின் - நம்மோடு வந்துற்ற அவ்விருந்தினாலே தீர்ந்த தில்லை யாயின்; மாநில வரைப்பு - இறப்பையும் தவிர்க்கும் மருந்துகள் பலவற்றைத் தருகின்ற பெருமையுடைய இந்நிலவுலகந்தானும், மாவதும் மருந்து தருங்கொல்-இதற்கு மாதேனும் ஒரு மருந்தைத் தரவல்லதாமோ? ஆகாதுகாண்! என்று கூறி; கையற்று நடுங்கும் நல்வினை நடுநாள் - செயலற்று நடுங்காநின்ற அவ்விந்திர விழவின் இடைநாளிலே என்க.

(விளக்கம்) 224. உருவிலாளன் - காமவேள். அவனுடைய பெருஞ் சேனை யென்றது, முன்னர் (198-9) புகையுஞ் சாந்தும் புலராது சிறந்து, மறுகிற்றிரியும் நகையாடாயத்துப் பொது மகளிரை இவர் தாம் அனைவருடைய நெஞ்சத்தையும் சுழல்வித்துப் பணிய வைக்க வல்லராதல் பற்றி இச்சேனை மன்னர்தம் மறவர் சேனையினும் சிறந்த சேனை என்பார் ஒருபெருஞ் சேனை என்று விதந்தார். 225. இகலமர் - மாறுபட்டொழுகும் ஊடற் போர். ஆட்டி-வென்று. (ஆடு-வென்றி.) அமர் என்றமையால் இச்சேனையை வெல்லுதற்கு மாயப்பணி மொழிகளாகிய அம்புகளைத் தொடுத்து வென்று என்க. அவையாவன : (204) கருமுகில் சுமந்து என்பது தொடங்கி (223) பெற்றியும் உண்டென நிகழும் இங்கித மொழிகள். 225. ஊடலால் முகங்கொடாது போக முயல்வாரை எதிர்நின்று இங்கிதம் பேசிவிலக்கி என்றவாறு. எதிர்நின்று விலக்கியவழி அவர் ஊடல் தீர்ந்தமை அவர் தம் முறுவற் குறிப்பாலுணர்ந்து மார்போடு மார்புறத் தழுவுதலான் அவர்தம் 226. எழுதுவரிக் கோலம் முழுமெயும் உறப்பெற்று என்றவாறு. 227. மனைவியர் ஊடியிருப்பர் என்றஞ்சி அவ்வூடல் தீர்க்கும் மருந்தாகும் விருந்தினரையும் உடன்கொடு புகுவாரைப் பெருந்தோள் கணவர் என்றது இகழ்ச்சி. 228. பகற் பொழுதெல்லாம் பரத்தையரோடு ஆடிவருதலறிவாரேனும் விருந்தொடு வந்தமையின் ஊடற்கிடமின்றி அவ்விருந்தோம்பும் நல்லறத்தை முகம் மலர்ந்து செய்கின்றமை கருதி அம்மகளிரை மனமாரப் பாராட்டுவார் அடிகளார் அவரை உடனுறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த வடமீன் கற்பின் மனையுறை மகளிர் என்று வானளவு உயர்த்துப் புகழ்ந்தார் என்க.

230. விருந்து கண்டமையால் முகமலர்ந்து வரவேற்றமை தோன்ற மாதர் வாண்முகம் என்றார். மணி - நீலமணி. போது - மலர். 231. இவற்றினழகிற்கு யாமொவ்வோம் என்று குவளைப் போது புறங்கொடுத்துப் போகிய கண்கடை என்க. செங்கடை தீர்ந்திலது என்றாரேனும் கடைக் கண்ணின் சிவப்புத் தீராதாயின் என்பது கருத்தாகக் கொள்க.

இனி, பகற் பொழுதெல்லாம் பரத்தையராகிய நகையாடு ஆயத்து நன்மொழி திளைத்து அவர்தம் எழுதுவரிக் கோலம் தம் மெய்ம் முழுதும் ஏற்றுவந்த இக்காளையர் தாஞ்செய்த தவற்றையும், அவ்வட மீன்கற்பின் மனையுறை மகளிர் அவற்றை ஒரு சிறிதும் பொருட் படுத்தாது விருந்தோம்பித் தம்மோடு உடனுறைவு மருவிய பெருந்தன்மையையும் கருதியவழித் தம் நெஞ்சு தம்மையே சுடுதலாற்றாராய் அம்மவோ இவ்விருந்தினர் இலராயின் நம்நிலை என்னாம் என்று கழிந்தது கருதி இரங்குவாராயினர். கோவலனும் தான் செய்த தவற்றினைக் கண்ணகியார் முன்னிலையிலேயே வறுமொழியாள ரொடு வம்பப் பரத்தரொடு குறுமொழிக்கோட்டி நெடுநகை புக்குப் பொச்சாப்புண்டு பொருளுரையாளர் நச்சுக் கொன்றேற்கு நன்னெறி யுண்டோ என்றிரங்கிக் கூறிக் கையற்று நடுங்கும் காலம் அண்மையிலேயே வருவதனையும் அடிகளார் ஈண்டு நினைவு கூர்ந்திருப்பர். ஆயினும், அவன் ஊழ்வினை கண்ணகியை நினைய இடந்தந்திலது. மாதவி மனைக்கே சென்றனன். ஊழிற் பெருவலியாவுள.

கண்ணகி நிலைமையும் மாதவி நிலைமையும்

235 - 240: உள்ளக ........... விழவுநாளகத் தென்

(இதன்பொருள்) விண்ணவர் கோமான் விழவு நாள் அகத்து - மேலே நல்வினை நடுநாள் என்று கூறப்பட்ட அவ்விந்திரவிழவின் அற்றை நாள் நள்ளிரவிலே; உள்ளகம் நறுந்தாது உறைப்ப மீது அழிந்து கள் உக நடுங்கும் கழுநீர் போல - உள்ளேயுள்ள நறிய தாதுகள் தேனை யூறிப் பிலிற்றுதலாலே அகமெலாம் நிறைந்து மேலே பொங்கி வழிந்து அத்தேன் சொரியா நிற்பக் காற்றாலே நடுங்குகின்ற கழுநீர் மலர் போன்ற; கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும் - கண்ணகியுடைய கரிய கண்ணும் மாதவி யுடைய சிவந்த கண்ணும்; உள் நிறை கரந்து அகத்து ஒளித்து நீர் உகுத்தன - தம்முள்ளத்தே நிறைந்த குறிப்பினை உள்ளத்தினூடேயே மறைத்துக் கொண்டு அவற்றின் விறலாகிய கண்ணீரை மட்டும் சொரியலாயின; எண்ணுமுறை - முன்னிறுத்த முறையானே அவ்விருவர் கண்களும்; இடத்தினும் வலத்தினும் துடித்தன - நிரலே இடப்பக்கத்தும் வலப்பக்கத்தும் துடித்தன என்க.

(விளக்கம்) (234.) நல்வினை நடுநாள் என்று கூறப்பட்ட (240) விண்ணவர் கோமான் விழவு நாளிடைப்பட்ட அந்நாளின் நள்ளிரவிலே என இயைக்க. 225-6. கழுநீர் - குவளை. இது கருங்குவளை எனவும் செங்குவளை எனவும் இருவகைப்படும். கண்ணகி கருங்கண்ணிற்கும் மாதவி செங்கண்ணிற்கும் உவமையாதற் பொருட்டு அடைபுணர்த்தாது வாளா கழுநீர் என்றோதினர். இனி, குவளை மலரின் உள்ளகத்துள்ள தாது உறைப்ப என்றார் இருவர் உள்ளத்தும் உள்ள குறிப்புக்கள் வெளிப்படுப்ப அவற்றின் மெய்ப்பாடாகக் கண்ணீர் உகுத்தலின் என்க. மீதழிதல்-மேலே பொங்கி வழிந்து வீழ்தல். கண்ணகிகண் கணவனது பிரிவாற்றாது புற்கென்றிருத்தலின் கருங்கண் என்றார். மாதவி கண்கள் கூட்ட மெய்திச் சிவந்திருத்தலின் செங்கண் என்றார். இருவர் உள்ளத்தும் இக்கண்ணீர்க்குக் காரணமாக நிறைந்துள்ள உணர்ச்சிகளை இருவர்க்கும் பொருந்துமாற்றால் ஆகுபெயரால் நிறை - என்றார். நிறை - நிறைந்த பண்பு. அவையாவன நிரலே துன்பமும் இன்பமும் ஆம் இரண்டின் மெய்ப்பாடுகளும் கண்ணீருகுத்தலேயாம். ஆயினும், ஒன்று துன்பக் கண்ணீர், மற்றொன்று இன்பக் கண்ணீர். இருவகைப்பட்ட உணர்ச்சிகளையும் மறைத்துக்கோடல் மகளிர்க்கியல்பாதல்பற்றி இருவர்க்கும் பொதுவாக உள்நிறை அகத்துக் கரந்து நீருகுத்தன என்றார். இருவர் கண்களும் துடித்தன; ஒருத்திக்கு இடக்கண் துடித்தது. மற்றொருத்திக்கு வலக்கண் துடித்தது. நிரலே இவை நன்னிமித்தமும் தீநிமித்தமுமாகும். கண்ணகி பிரிந்த கணவனை என்றென்றும் பிரிவின்றி எய்த நிற்பவள் ஆதலின் அவட்கு நன்னிமித்தம் ஆயிற்று. மாதவி கோவலனை இனித் துவரப்பிரிபவள் ஆதலின் அவட்குத் தீநிமித்தம் ஆயிற்று.

இனி இக்காதையை (3) மடந்தை (4) போர்த்த படாஅத்தைப் போக நீக்கிப் (6) ஒளி உச்சித் தோன்றி, (6) பரப்ப, (65) சொரிந்து (70) ஆடி (75) பெயர (86) நலங்கொளவைத்து (88) ஊட்ட, (110) மண்டபமன்றியும் (140) மன்றத்தும் பலியுறீஇ (142) ஏற்றிச் (144) சாற்றி (146) எடுத்து (160) ஈண்டிக் (162) கொள்கென (168) ஆட்டக் (188) களிசிறந்த வியலுளாங்கண், (203) திரிதரு மறுகில் (223)  உண்டு கொலென்று (224) சேனை (225) ஆட்டி விலக்கி (226) விலக்கி (226) உறீஇப் (227) புக்க கணவர் (234) நடுங்கு நாளாகிய (240) விழவு நாளகத்துக் (237) கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும் (238) கரந்து நீருகுத்தன அவை நிரலே (239) இடத்தினும் வலத்தினும் துடித்தன என வினைமுடிவு செய்க.

இந்திரவிழவூரெடுத்த காதை முற்றிற்று
.
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 23, 2012, 01:11:31 PM
6. கடலாடு காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

(விளக்கம்) அஃதாவது - வெள்ளி மால்வரை வியன் பெருஞ் சேடி விச்சாதரனை யுள்ளிட்ட தேவர்களும் கரந்துரு வெய்தி வந்து காண்குறூஉம் இந்திரவிழா நிறைவேறாநின்ற உவா நாளிலே புகார்நகரத்து அரசிளங் குமரரும் உரிமைச் சுற்றமும் ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும் கடற்கரை யிடத்தே வந்து கூடிக் கடலாடுதலும் மாதவியும் கோவலனும் அக் கடல் விளையாட்டைக் கண்டு மகிழ்வான் போந்து ஆங்குக் கடற்கரையிலே புன்னை நீழற் புதுமணற் பரப்பில் படவீடமைத்துத் தங்குதலும் பிறவும் கூறும் பகுதி யென்றவாறு.

வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடிக்
கள்அவிழ் பூம்பொழில் காமக் கடவுட்குக்
கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடு
விருந்தாட்டு அயரும்ஓர் விஞ்சை வீரன்
தென்திசை மருங்கின்ஓர் செழும்பதி தன்னுள்  5

இந்திர விழவுகொண்டு எடுக்கும்நாள் இதுஎனக்
கடுவிசை அவுணர் கணம்கொண்டு ஈண்டிக்
கொடுவரி ஊக்கத்துக் கோநகர் காத்த
தொடுகழல் மன்னற்குத் தொலைந்தனர் ஆகி
நெஞ்சுஇருள் கூர நிகர்த்துமேல் விட்ட  10

வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம்
திருந்துவேல் அண்ணற்குத் தேவர்கோன் ஏவ
இருந்துபலி உண்ணும் இடனும் காண்குதும்,
அமரா பதிகாத்து அமரனிற் பெற்றுத்
தமரில் தந்து தகைசால் சிறப்பின்  15

பொய்வகை இன்றிப் பூமியில் புணர்த்த
ஐவகை மன்றத்து அமைதியும் காண்குதும்,
நாரதன் வீணை நயம்தெரி பாடலும்
தோரிய மடந்தை வாரம் பாடலும்
ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய  20

நாடகம் உருப்பசி நல்காள் ஆகி
மங்கலம் இழப்ப வீணை மண்மிசைத்
தங்குக இவள்எனச் சாபம் பெற்ற
மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய
அங்குஅரவு அல்குல் ஆடலும் காண்குதும்,  25

துவர்இதழ்ச் செவ்வாய்த் துடிஇடை யோயே.
அமரர் தலைவனை வணங்குதும் யாம்எனச்
சிமையத்து இமையமும் செழுநீர்க் கங்கையும்
உஞ்சையம் பதியும் விஞ்சத்து அடவியும்
வேங்கட மலையும் தாங்கா விளையுள்  30

காவிரி நாடும் காட்டிப் பின்னர்ப்
பூவிரி படப்பைப் புகார்மருங்கு எய்திச்
சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி
மல்லல் மூதூர் மகிழ்விழாக் காண்போன்
மாயோன் பாணியும் வருணப் பூதர்  35

நால்வகைப் பாணியும் நலம்பெறு கொள்கை
வான்ஊர் மதியமும் பாடிப் பின்னர்ச்
சீர்இயல் பொலிய நீர்அல நீங்கப்
பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத்
திரிபுரம் எரியத் தேவர் வேண்ட  40

எரிமுகப் பேர்அம்பு ஏவல் கேட்ப
உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்,
தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி ஆடிய வியன்பாண்ட ரங்கமும்,  45

கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லியத் தொகுதியும், அவுணன் கடந்த
மல்லின் ஆடலும், மாக்கடல் நடுவண்
நீர்த்திரை அரங்கத்து நிகர்த்துமுன் நின்ற  50

சூர்த்திறம் கடந்தோன் ஆடிய துடியும்,
படைவீழ்த்து அவுணர் பையுள் எய்தக்
குடைவீழ்த்து அவர்முன் ஆடிய குடையும்,
வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீள்நிலம் அளந்தோன் ஆடிய குடமும்,  55

ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
காமன் ஆடிய பேடி ஆடலும்,
காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்,
செருவெம் கோலம் அவுணர் நீங்கத்  60

திருவின் செய்யோள் ஆடிய பாவையும்,
வயல்உழை நின்று வடக்கு வாயிலுள்
அயிராணி மடந்தை ஆடிய கடையமும்,
அவரவர் அணியுடன் அவரவர் கொள்கையின்
நிலையும் படிதமும் நீங்கா மரபின்  65

பதினோர் ஆடலும் பாட்டின் பகுதியும்
விதிமாண் கொள்கையின் விளங்கக் காணாய்.
தாதுஅவிழ் பூம்பொழில் இருந்துயான் கூறிய
மாதவி மரபின் மாதவி இவள்எனக்
காதலிக்கு உரைத்துக் கண்டுமகிழ்வு எய்திய  70

மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும்,
அந்தரத்து உள்ளோர் அறியா மரபின்
வந்துகாண் குறு஡உம் வானவன் விழவும்
ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள
ஊடல் கோலமோடு இருந்தோன் உவப்பப்  75

பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
முப்பத்து இருவகை ஓமா லிகையினும்
ஊறின நல்நீர் உரைத்தநெய் வாசம்
நாறுஇருங் கூந்தல் நலம்பெற ஆட்டி,
புகையில் புலர்த்திய பூமென் கூந்தலை  80

வகைதொறும் மான்மதக் கொழுஞ்சேறு ஊட்டி,
அலத்தகம் ஊட்டிய அம்செஞ் சீறடி
நலத்தகு மெல்விரல் நல்அணி செறீஇப்,
பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை
அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து,  85

குறங்கு செறிதிரள் குறங்கினில் செறித்து,
பிறங்கிய முத்தரை முப்பத்து இருகாழ்
நிறம்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ,
காமர் கண்டிகை தன்னொடு பின்னிய
தூமணித் தோள்வளை தோளுக்கு அணிந்து,  90

மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம் செம்பொன் கைவளை
பரியகம் வால்வளை பவழப் பல்வளை
அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து,
வாளைப் பகுவாய் வணக்குஉறு மோதிரம்  95

கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம்
வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி
காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து,
சங்கிலி நுண்தொடர் பூண்ஞான் புனைவினை
அம்கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து,  100

கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி
செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்துஆங்கு
இந்திர நீலத்து இடைஇடை திரண்ட
சந்திர பாணி தகைபெறு கடிப்பிணை
அங்காது அகவயின் அழகுற அணிந்து,  105

தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி
தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்குஅணி
மைஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து,
கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்துப்
பாடுஅமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்,  110

உருகெழு மூது஡ர் உவவுத்தலை வந்தெனப்
பெருநீர் போகும் இரியல் மாக்களொடு
மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டுக்
காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி,
பொய்கைத் தாமரைப் புள்வாய் புலம்ப  115

வைகறை யாமம் வாரணம் காட்ட
வெள்ளி விளக்கம் நள்இருள் கடியத்
தார்அணி மார்பனொடு பேர்அணி அணிந்து
வான வண்கையன் அத்திரி ஏற
மான்அமர் நோக்கியும் வையம் ஏறிக்  120

கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை
மாடமலி மறுகின் பீடிகைத் தெருவின்
மலர்அணி விளக்கத்து மணிவிளக்கு எடுத்துஆங்கு
அலர்க்கொடி அறுகும் நெல்லும் வீசி
மங்கலத் தாசியர் தம்கலன் ஒலிப்ப  125

இருபுடை மருங்கினும் திரிவனர் பெயரும்
திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து
மகர வாரி வளம்தந்து ஓங்கிய
நகர வீதி நடுவண் போகிக்
கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்  130

வேலை வாலுகத்து விரிதிரைப் பரப்பில்
கூல மறுகில் கொடிஎடுத்து நுவலும்
மாலைச் சேரி மருங்குசென்று எய்தி,
வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும்
பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும்,  135

செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்,
காழியர் மோதகத்து ஊழ்உறு விளக்கமும்,
கூவியர் கார்அகல் குடக்கால் விளக்கமும்,
நொடைநவில் மகடூஉக் கடைகெழு விளக்கமும்,
இடைஇடை மீன்விலை பகர்வோர் விளக்கமும்,  140

இலங்குநீர் வரைப்பின் கலங்கரை விளக்கமும்,
விலங்குவலைப் பரதவர் மீன்திமில் விளக்கமும்,
பொழிபெயர் தேஎத்தர் ஒழியா விளக்கமும்,
கழிபெரும் பண்டம் காவலர் விளக்கமும்
எண்ணுவரம்பு அறியா இயைந்துஒருங்கு ஈண்டி  145

இடிக்கலப்பு அன்ன ஈர்அயில் மருங்கில்
கடிப்பகை காணும் காட்சியது ஆகிய
விரைமலர்த் தாமரை வீங்குநீர்ப் பரப்பின்
மருத வேலியின் மாண்புறத் தோன்றும்
கைதை வேலி நெய்தல்அம் கானல்  150

பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி
நிரைநிரை எடுத்த புரைதீர் காட்சிய
மலைப்பல் தாரமும் கடல்பல் தாரமும்
வளம்தலை மயங்கிய துளங்குகல இருக்கை
அரசுஇளங் குமரரும் உரிமைச் சுற்றமும்  155

பரத குமரரும் பல்வேறு ஆயமும்
ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும்
தோடுகொள் மருங்கின் சூழ்தரல் எழினியும்
விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன்
தண்பதம் கொள்ளும் தலைநாள் போல  160

வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை
சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றிக்
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
இடம்கெட ஈண்டிய நால்வகை வருணத்து
அடங்காக் கம்பலை உடங்குஇயைந்து ஒலிப்ப,  165

கடல்புலவு கடிந்த மடல்பூந் தாழைச்
சிறைசெய் வேலி அகவயின் ஆங்குஓர்
புன்னை நீழல் புதுமணல் பரப்பில்
ஓவிய எழினி சூழஉடன் போக்கி
விதானித்துப் படுத்த வெண்கால் அமளிமிசை  170

வருந்துபு நின்ற வசந்த மாலைகைத்
திருந்துகோல் நல்லியாழ் செவ்வனம் வாங்கிக்
கோவலன் தன்னொடும் கொள்கையின் இருந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தான்என.

(வெண்பா)

வேலை மடல்தாழை உட்பொதிந்த வெண்தோட்டு
மாலைத் துயின்ற மணிவண்டு - காலைக்
களிநறவம் தாதுஊதத் தோன்றிற்றே காமர்
தெளிநிற வெங்கதிரோன் தேர்.

உரை

1-4 : வெள்ளி.........வீரன்

(இதன்பொருள்) வெள்ளி மால்வரை வியன் பெருஞ்சேடி - வெள்ளிப் பெருமலையின்கண் அகன்றுயர்ந்த வட சேடியின்கண்ணே; கள் அவிழ் பூம்பொழில் - தேன் துளிக்கின்ற மலர்கள் நிறைந்த தொரு பூம்பொழிலிடத்தே; கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடு - கரிய கயல் மீன்போன்ற நெடிய கண்களையுடைய தன் காதலியுடனே யிருந்து; காமக் கடவுட்கு விருந்து ஆட்டு அயரும் ஓர் விஞ்சை மறவன் - காமவேளாகிய கடவுளுக்குச் சிறப்புவிழா நிகழ்த்தும் ஒரு விச்சாதர மறவன் என்க.

(விளக்கம்) 1. வெள்ளிப் பெருமலையுச்சியில் விச்சாதரருலகுள தென்றும் அது வடசேடி தென்சேடி என இரு கூறுடைத்து என்றும், ஆங்கு நகரங்கள் பலவுள என்றும், அவற்றை ஆளும் விச்சாதர மன்னரும் பலருளர் என்றும் கொள்வது அமண்சமயத்தினர் கோட்பாடு; ஈண்டு அடிகளார் அவர்தம் மதமே பற்றிக் காப்பியஞ் செய்கின்றனர் ஆதலின் வெள்ளிமால்வரை வியன் பெருஞ் சேடி என்றார். இரண்டு சேடிகளுள் வடசேடியே சிறந்ததாகலின் வியன்பெருஞ்சேடி என விதந்தார்.

விச்சாதரர் காம நுகர்ச்சியையே குறிக்கோளாக வுடையர். அவர்க்குக் காமக்கடவுளே முழுமுதற் கடவுளாவான். ஆதலின் ஈண்டு விச்சாதரவீரன் தன்னாருயிர்க் காதலியோடிருந்து காமக்கடவுட்குச் சிறப்புவிழாச் செய்வானாயினான் என்க. 4. விருந்தாட்டு - நித்தல் விழாவன்றி யாண்டுதோறும் நிகழ்த்துஞ் சிறப்புவிழா. ஆட்டயர்தல் - கொண்டாடுதல்.

விச்சாதரன் காதலிக்கு விளம்புதல்

(26) 5-6: தென்றிசை..........நாளிதுவென

(இதன்பொருள்) (26) துவர் இதழ்ச் செவ்வாய்த் துடியிடை யோயே - பவளம் போன்ற இதழையுடைய சிவந்த வாயினையும் உடுக்கை  போன்ற இடையினையும் உடைய என்னாருயிர்க் காதலியே கேள்; இது - வடசேடிக்கண் யாமெடுத்த காமவேள் விழா நிறைவுற்ற இந்த நன்னாள்; தென்திசை மருங்கின் ஓர் செழும்பதி தன்னுள் - இந்நாவலம் பொழிலின்கண் தென்றிசை யிடத்தே தமிழ் கூறும் நல்லுலகத்தே அமைந்த நகரங்களுள் வைத்து ஒரு வளமிக்க நகரத்தின்கண்ணே; இந்திரவிழவு கொண்டு எடுக்கும் நாள் என - இந்திரவிழாவிற்குக் கால்கொண்டு கொடியெடுக்கும் நாளுமாகும் என்று கூறி என்க.

(விளக்கம்) (5-6) இவ்விரண்டடிகட்கும் அடியார்க்குநல்லார் கூறும் உரை நூலாசிரியர் கருத்தென்று நினைத்தற்கிடனில்லை. ஆயினும் அவர் கூறும் உரையும் அறிந்து கோடற்பாலதேயாம். அது வருமாறு:

வீரன் பங்குனித் திங்கள் இருபத்தொன்பதில் சித்திரை நாளிலே அவ்விழா முடிதலின் தென்றிசைப் பக்கத்து ஒரு வளவிய நகரிடத்து இந்திரவிழாவிற்குக் கால்கொண்டு கொடியெடுக்கும் நாள் மேலைமாதத்து இந்தச் சித்திரை காண் எனச் சொல்லி யென்க.

இதுவெனச் சுட்டினான், அன்றுஞ் சித்திரையாகலின், ஈண்டுத் திங்களும் திதியும் கூறியது என்னையெனின், கோவலனும் மனைவியும் ஊரினின்றும் போந்த திங்களும் திதியும் வாரமும் நாளும் வழிச் செலவும் ஒழிவும், மதுரையிற் சென்று புக்கு இவன் இறந்துபட்ட திங்கள் முதலாயுள்ளவற்றோடு மாறுகொள்ளாது முடிதற்கெனக் கொள்க. அது யாண்டுமோ எனின் வேனிற் காதையினும் நாடுகாண் காதையினும் காடுகாண் காதை கட்டுரை காதை யென்னும் இவற்றுள்ளும் எனக்கொள்க. எனவரும்.

அவ்வுரையாசிரியர் இவ்வாறு தாமே ஒரு கொள்கையுடையராய் அதனை நிலைநிறுத்தற் பொருட்டு, ஈண்டு முன்மொழிந்து கோடல் என்னும் உத்திபற்றி இங்ஙனம் கூறிவைத்துப் பிறாண்டும் இதனை வலியுறுத்துவர். அவற்றை ஆங்காங்குக் காண்க. நூலாசிரியர் இத்தகைய கொள்கையுடையர் என்று நினைதல் மிகையேயாம் என்க.

இனி இளங்கோவடிகளார் இந்திரவிழவின் சிறப்பினைப் பின்னும் கூறுதற்கு இவ்விஞ்சை வீரனை ஒரு கருவியாக்கிக் கொள்கின்றனர் என்பது தேற்றம். என்னை? தென்றிசை மருங்கினுள்ள புகார் நகரத்து இந்திரவிழவினை வெள்ளிமலை யுச்சியில் வாழும் விச்சாதரர் முதலியவரும் வந்து கண்டுகளித்தனர் என்பது இவன் வரவினால் அறிவுறுத்தலும் மேலும் இவன் கூற்றாக அவ்விழாவையும் நகரச் சிறப்பையும் ஆடல் முதலிய கலைச்சிறப்பையும் வெளிப்படுத்துரைப்பதுவுமே அடிகளார் கருத்தென்க.

7-13: கடுவிசை .........காண்கும்

(இதன்பொருள்) கடுவிசை அவுணர் கணம் கொண்டு ஈண்டி - மிக்க விரைவினையுடைய அசுரர் கூட்டமாக நெருங்கிவந்து பொரூது; கொடுவரி ஊக்கத்துக் கோ நகர் காத்த தொடுகழல் மன்னற்குத் தோற்றனர் ஆகி - புலியினது மனவெழுச்சிபோலும் மனவெழுச்சியுடனே இந்திரனது தலைநகரைக் காத்துநின்ற வீரக்கழல் கட்டிய முசுகுந்தன் என்னும் சோழமன்னனுக்கு ஆற்றாது புறங்கொடுத்தோடுவோராகிய பின்னரும்; நிகர்த்து நெஞ்சு இருள்கூர மேல்விட்ட வஞ்சம் பெயர்த்த மாபெரும்பூதம்-தம்முள் ஒத்துக்கூடி அம்மன்னனது நெஞ்சம் மம்மர் கொள்ளும் படி ஏவிய இருட்கணையைப் போக்கிய மிகப்பெரிய பூதத்தை; தேவன் - தேவேந்திரன்; திருந்து வேல் அண்ணற்கு ஏவ-அறத்தாற்றிருந்திய போரையுடைய வேற்படையையுடைய தலைவனாகிய அம்முசுகுந்தனுக்குக் கைம்மாறாக ஏவுதலாலே; இருந்து பலி உண்ணும் இடனும் காண்கும் - அப்பூதம் வானுலகினின்றும் வந்து அப்புகார் நகரத்திலே தங்கியிருந்து அவிப்பலி முதலிய அரும்பலி கொள்கின்ற இடமாகிய நாளங்காடியிடத்தையும் கண்டு மகிழ்வேம் என்றான் என்க.

(விளக்கம்) இதன்கட் கூறப்படுகின்ற வரலாறு அடியார்க்கு நல்லார் உரையாலும் அவர் காட்டும் மேற்கோட் செய்யுளானும் அறியப்பட்டது. அது வருமாறு:

முன்னா ளிந்திரன்............
காவ லழித்துச் சேவல்கொண் டெழுந்த
வேட்கை யமுத மீட்க வெழுவோன்
இந்நகர் காப்போர் யாரென நினைதலும்
நேரிய னெழுந்து நீவரு காறும்
தார்கெழு மார்ப தாங்கலென் கடனென
உவந்தனன் கேட்டுப் புகழ்ந்தவிப் பூதம்
நின்வழி யாகென நிறீஇப் பெயர்வுழிக்
கடுவிசை யவுணர் கணங்கொண் டீண்டிப்
பொருதுபோர் தொலைந்தன ராகிப் பெரிதழிந்
தாழ்ந்தநெஞ்சிற் சூழ்ந்தனர் நினைத்து
வஞ்ச மற்றிது வஞ்சத் தல்லது
வேற லரிதெனத் தேறினர் தேறி
வளைத்துத் தொடுத்த வல்வா யம்பின்
அயின்முகங் கான்ற வாரிருள் வெயிலோன்
இருகணும் புதையப் பாய்தலி னொருகணும்
நெஞ்சங் காணா நிற்ப நின்ற
வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம் எனவும்,

என் சொல்லிய வாறோ வெனின், அங்ஙனம் விட்ட அம்பு முசுகுந்தன் கண்ணையும் மனத்தையும் புதைத்தலாற் போர்த் தொழிலொழிந்து நின்ற முசுகுந்தற்கு அவ்விருளுடைதற்குக் காரணமாயதொரு மந்திரத்தையருள அதனான் வஞ்சம் கடிந்து அவுணரைக் கொன்று குவித்து நின்றானைக் கண்ட இந்திரன் அவரை எங்ஙனம் கொன்று குவித்தா யென்றாற்கு அவன், இப்பூதத்தின் செயலெனக் கேட்ட இந்திரன் அப்பூதத்தை அவன் பொருட்டு மெய்காவலாக ஏவுதலின் ஆங்குநின்றும் போந்து, ஈங்குப் புகாரினுள்ளிருந்து பலியுண்ணும் நாளங்காடியிடமும் காண்பே மென்பதாம் எனவும் வரும்.

8. கொடுவரி - புலி. ஊக்கம் - மனவெழுச்சி. ஊக்கமுடைமையில் புலி தலைசிறந்ததாகலின் அதனை உவமையாக்கினார் திருவள்ளுவனாரும். பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை, வெரூஉம் புலிதாக் குறின் என ஊக்கமுடைமைக்கு அதனை உவமையாக்குத லுணர்க. நகர் - ஈண்டு அமராவதி. மன்னன் - சோழமன்னனாகிய முசுகுந்தன். நிகர்த்தல்-ஒத்தல். வஞ்சம் - இருட்கணை. அஃதாவது உயிர்களின் கண்ணையும் மனத்தையும் மறைப்பதொரு சத்திபடைத்த அம்பு. (இதனைத் தாமசாத்திரம் என்பர் வடநூலோர்) 12. தேவரேவ என்றும் பாடம்.

இதுவுமது

14-17: அமராவதி ............. காண்குதும்

(இதன்பொருள்) அமராபதி காத்து அமரனின் பெற்று - பண்டு அமரர் கோநகராகிய அமராபதியினை அசுரர் முற்றுகையிட்ட காலத்தே அமரர்க்கு வந்த இடர்நீங்க அவர்க்குத் துணையாய்ச் சென்று அசுரரை நூழிலாட்டிக் காத்தலானே அவ்வ மரர் கோமானால் கைம்மாறாகப் பெறப்பட்டு; தமரில் பெற்று - பின்பு இவன் மரபிலுள்ளாராலே கொண்டுவரப்பட்டு; தகைசால் சிறப்பின் - பெருந்தகைமையுடைய ஒவ்வொரு கடவுட்பண்புடைய சிறப்பினையுடையவாய்; பொய்வகையின்றி - அப் பண்புகள் பொய்க்கும் வகையில்லாமலே; பூமியிற் புணர்த்த - அப்பூம்புகார் நிலத்திலே நிலைபெற வைக்கப்பட்டுள்ள; ஐவகை மன்றத்து அமைதியும் காண்குதும் - ஐந்து வகையான தன்மைகளையுடைய மன்றங்களின் சிறப்புக்களையும் கண்டு மகிழ்வேம்; என்றான் என்க.

(விளக்கம்) 14. அமரனின் - அமரர்கோமானாலே. தமர் - சோழன் முன்னோர். தகைசால் சிறப்பு - பெருந்தகைமையுடைய கடவுட் பண்பு. அவையாவன: கட்போருளரெனின் கடுப்பத் தலையேற்றிக் கொட்பின் அல்லது கொடுத்த லீயா மை முதலியனவாக முன்னைக் காதை அரங்கேற்று.....115-138யிற் கூறப்பட்டவை. பொய்வகையின்றிப் புணர்த்தலாவது - அக்கடவுட் பண்புகள் பொய்த்துப் போகாவண்ணம் அவற்றிற்குப் பலி கொடுத்தல் முதலிய வழிபாடு செய்வித்து வைத்தல் என்க. ஐவகை மன்றம் - முன்னைக் காதையிற் கூறிய பூதசதுக்க முதலாகப் பாவை மன்றம் ஈறாகவுள்ள மன்றங்கள். அவை வெவ்வேறு வகை ஆற்றலுடையனவாதல் பற்றி ஐந்து மன்றமும் என்னாது ஐவகை மன்றமும் என்றார். அமைதி - சால்புடைமை; இயல்புமாம்.

இதுவுமது

விச்சாதரன் மாதவியின் வரலாறு விளம்புதல்

18-25: நாரதன்.............காண்குதும்

(இதன்பொருள்) உருப்பசி - (காதலியே ஈதொன்று கேள்!) ஒரு காலத்தே வானவர் நாட்டிலே இந்திரன் அவைக்களத்தே நாடகமாடும் அரம்பையருள் வைத்து ஊர்வசி யென்பவள் அவ்விந்திரன் அவைக்களத்தே ஆடுபவள், இந்திரன் மைந்தனாகிய சயந்தனுடைய நோக்கெதிர் நோக்கி நெஞ்சு சுழல்பவளாய்; நாரதன் வீணை நயந்தெரி பாடலும் தோரிய மடந்தை வாரம் பாடலும் - யாழாசிரியனாகிய நாரதமுனிவன் யாழின் ஏழிசையின்பமுந் தெரியப் பாடும் பாடலையும் தோரிய மடந்தை வாரம் பாடலையும் உடைய; நாடகம் - தனது நாடகத்தினை; ஆயிரங் கண்ணோன் செவியகம் (கண்ணகம்) நிறைய நல்காள் ஆகி - ஆயிரங்கண்களையுடைய அவ்விந்திரனுடைய செவிகளாரவும் கண்களாரவும் வழங்கமாட்டாளாய்த் தடுமாறா நிற்ப; வீணை மங்கலம் இழப்ப - (அத்தடுமாற்றம் நன்கு தோன்றும்படி கலகத்தை விரும்புவோனாகிய நாரதன்றானும் தனது யாழிசையைப் பகைநரம்புபட இசைத்தலின்; இவ்விருவர் நிலைமையும் உணர்ந்த) திருமுனிவன் இவ்வியாழ் மங்கலமிழப்பதாக எனவும்; இவள் மண்மிசைத் தங்குக - இவ்வூர்வசி நிலவுலகிலே பிறந்து தங்குவாளாக எனவும் சபித்தலானே; சாபம் பெற்ற மங்கை மாதவி - இங்ஙனம் சாபம் பெற்றமையாலே நிலவுலகத்திலே கணிகையர் மரபிற் பிறந்து மாதவி என்னும் பெயருடையவளான அத்தெய்வ மங்கையின்; வழிமுதல் தோன்றிய அரவு அல்குல் ஆடலும் அங்குக் காண்குதும் - மரபிலே பிறந்த அரவின் பணம்போன்ற அல்குலையுடைய மாதவி யென்னும் நாடகம் ஏத்தும் நாடகக்கணிகையின் காண்டற்கரிய நாடகத்தையும் அவ்விடத்தே கண்டுகளிப்பேம் காண் என்றான் என்க.

(விளக்கம்) 22. வீணை - வடசொல். யாழ் என்னும் பொருட்டு. இஃதறியார் வீணை வேறு யாழ் வேறு என்பர். இவர் கூற்று - சலம் வேறு நீர் வேறு என்பதுபோலும் போலி என்க. ஈண்டு அடியார்க்குநல்லார் வீணை என்பதற்கு யாழ் என்றே பொருள் கூறுதலுமறிக. பாடலொடு ஆடல் இயைபுறாமையால் அவையும் இன்பந் தாரா தொழிதலின் அவை நிறையாமைக்கு உருப்பசி நாடகம் நல்காமையை ஏதுவாக்கினர். நாடகம் கண்ணாற்றுய்க்குங் கலையாகலின், அதனை நுகரும் இந்திரனை ஆயிரங்கண்ணான் என்று விதந்தனர். மேலும் நாடகம் நல்காளாகி எனவே கண்ணகம் நிறையாமை அமைதலின் செவியகம் நிறையாமை மட்டுமே கூறினர். இனி, இதன்கண் வானவர் நாட்டு அரம்பையருள் ஒருத்தியாகிய உருப்பசி மண்ணுலகிலே வந்து பிறந்து மாதவியென்னும் பெயருடையவளா யிருந்தாள் என்பதும் ஈண்டுக் கோவலனாற் காமுறப்பட்ட மாதவி என்பவள் அந்த மாதவியின் வழியிற் றோன்றியவள் என்பதுமாகிய வரலாறு கூறப்படுகின்றது. உருப்பசி அகத்தியமுனிவனாற் சபிக்கப்பெற்றமை அரங்கேற்று காதைக்கண் தெய்வ மால்வரைத் திருமுனி யருள..... சாபம் நீங்கிய என்புழிக் கூறினராதலின் ஈண்டு வாளாது சாபம் பெற்ற என்றொழிந்தார்.

இனி, அடியார்க்குநல்லார் உருப்பசியின் சாப வரலாறு என எடுத்துக் காட்டுகின்ற செய்யுள் வருமாறு:

வயந்த மாமலை நயந்த முனிவரன், எய்திய அவையின் இமையவர் வணங்க, இருந்த இந்திரன் திருந்திழை உருப்பசி, ஆடல் நிகழ்க பாடலோ டீங்கென, ஓவியச் சேனன் மேவின னெழுந்து, கோலமும் கோப்பு நூலொடு புணர்ந்த, இசையு நடமு மிசையத் திருத்திக், கரந்துவரல் எழினியொடு புகுந்தவன் பாடலின், பொருமுக வெழினியிற் புறந்திகழ் தோற்றம், யாவரும் விழையும் பாவனை யாகலின். நயந்த காதற் சயந்தன் முகத்தில், நோக்கெதிர் நோக்கிய பூக்கமழ் கோதை, நாடிய வேட்கையின் ஆடல் நெகிழப், பாடன் முதலிய பல் வகைக் கருவிகள், எல்லா நெகிழ்தலின் ஒல்லா முனிவரன், ஒருதலையின்றி இருவர் நெஞ்சினும், காமக் குறிப்புக் கண்டனன் வெகுண்டு, சுந்தர மணிமுடி யிந்திரன் மகனை, மாணா விறலோய் வேணு வாகென, விட்ட சாபம் பட்ட சயந்தன், சாப விடையருள் தவத்தோய் நீயென, மேவினன், காலை கழையு நீயே யாகி, மலையமால் வரையின் வந்துகண்ணுற்றுத், தலையரங்கேறிச் சார்தி யென்றவன், கலக நாரதன் கைக்கொள் வீணை, அலகி லம்பண மாகெனச் சபித்துத் தந்திரி யுவப்புத் தந்திரி நாரிற், பண்ணிய வீணை மண்மிசைப் பாடி, ஈண்டு வருகெனப் பூண்ட சாபம், இட்டவக் குறுமுனி யாங்கே, விட்டன னென்ப வேத்தவை யகத்தென் எனவரும்.

இனி, இந்திரன் செவியகங் கண்ணகம் நிறைய நாடகம் நல்காளாகிய உருப்பசியையும் அதற்குக் காரணமாகிய சயந்தனையும் சபித்தமை ஒக்கும்; வீணை மண்மிசைத் தங்குக எனச் சபித்தல் ஒவ்வாதென்பார்க்கு அடியார்க்குநல்லார் கூறும் அமைதி வருமாறு:

நாரதன் கலகப்பிரியன் ஆதலால் தனது யாழைப் பகைநரம்புபட இசைத்தலின், தான் இங்ஙனம் இசைத்தற்குக் காரணமின்றாகவும் இவள் கலங்கினமை தான் நமக்கறிவித்து நம்மால் இவளை முனிவிப்பான் வேண்டி நம்மை மதியானாயினானென அவளொடுஞ் சாபமிடுகின்றவன் வீணை மங்கல மிழக்க மண்மிசைத் தங்குக வெனவே இவனை நீங்காவரத்தின் வந்ததாகலான் இவனும் மண்மிசைத் தங்குக வென்ப தாயிற்று; எனவே இவன் மண்ணிற் பிறவானாதல் உணர்க என்பதாம்.

இனி, அவ்வுரையாசிரியர் பின்னும் வீணையைச் சாரீர வீணையாக்கி மங்கல மிழப்ப என்பதற்கு இவள் இக்கடவுள் யாக்கை யொழிந்து மக்கள் யாக்கையில் தங்குகவெனச் சபித்தான் என்பதும் கொள்க, என்பர். இவ்விளக்கம் நூலாசிரியர் கருத்தொடு மாறுபடுதலின் பொருந்தாதாம். என்னை? நூலாசிரியரே நாரதன் வீணையெனத் தெரித்தோதுதலின் என்க.

25. ஆடலும் அங்குக் காண்குதும் எனக் கூட்டுக. அரவல்குல், அன்மொழித்தொகை. மாதவி என்னும் பொருட்டு.

26. துவரிதழ் துடியிடையோயே இவ்வடி முன்னரே எடுக்துக் கூட்டி உரை கூறப்பட்டது.

(26) துடியிடையோயே! தென்றிசை மருங்கில் ஓர் செழும்பதி தன்னுள் இந்திரவிழவு கொண்டு எடுக்கும் நாள் இதுவெனக் கூறியாம் ஆங்குச் சென்று இடனுங் காண்குதும்; அமைதியுங் காண்குதும்; ஆடலும் காண்குதும்; தலைவனை வணங்குதும் என்றுகூறி என இயையும்.

விச்சாதரன் காதலியுடன் புகார்நகர்க்கு வருதல்

28-34 : சிமையத்து..........காண்போன்

(இதன்பொருள்) சிமையத்து இமயமும் - தன்காதலியோடு விசும்பின்வழியாகப் புகார்நகர் நோக்கி வருகின்ற அவ்விச்சாதரன் வழியின் கண்ணுள்ள குவடுகளோடு கூடிய இமயமலையையும்; செழு நீர்க் கங்கையும் - அவ்விமயத்தே பிறந்து உலகுபுரந் தூட்டுகின்ற வளவிய நீரையுடைய கங்கைப் பேரியாற்றினையும்; உஞ்சையம் பதியும் - உஞ்சைமாநகரத்தையும்; விஞ்சத்து அடவியும் - விந்த மலையினையும் அதனைச் சூழ்ந்த காட்டினையும்; வேங்கடமலையும் - வடவேங்கடமாமலையினையும்; தாங்கா விளையுள் காவிரிநாடும் காட்டி - நிலம் பொறாத விளை பொருள்களையுடைய காவிரிப் பேரியாறு புரந்தூட்டும் சோழவளநாட்டையும் தன் காதலிக்கு இஃது இன்னது! இஃது இன்னது என்று சுட்டிக்காட்டிப்; பின்னர் பூவிரி படப்பை புகார் மருங்கு எய்தி - சோழநாட்டுட் புகுந்த பின்னர் மலர்ந்த மலர்களையுடைய தோட்டங்களையுடைய புகார்நகரிடத்தே வந்து; சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி - தான் முன்பு அவட்குக் கூறிய முறைமையினாலே பூதசதுக்கம் முதலியவற்றைத் தான் தொழுமாற்றால் அவளையும் தொழுவித்துக் காட்டி; மல்லல் மூதூர் மகிழ்விழாக் காண்போன் - முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும் வழங்கத் தவாஅ வளமுடைய பழைய நகரமாகிய அப்பூம்புகாரின்கண் நடக்கின்ற மகிழ்ச்சிதருகின்ற இந்திரவிழாக் காட்சியைக் காதலிக்குக் காட்டித் தானுங் காண்கின்ற அவ்விச்சாதரன் என்க.

(விளக்கம்) 28 - சிமையம் -சிகரம்; குவடு. 29-உஞ்சையம்பதி - உச்சயினி நகரம். விந்தம், விஞ்சம் என மருவிற்று. அடவி - காடு. வேலி ஆயிரம் விளையுட்டு என்பதுபற்றித் தாங்கா விளையுள் காவிரிநாடு என்றார். நிலந்தரங்க மாட்டாதபடி மிகுதியாக விளையும் நாடு என்றவாறு. 32. படப்பை - வாழைத்தோட்டம் மாந்தோட்டம் முதலிய தோட்டக் கூறுகள். தொழுதனன் - தொழுது. 34. மகிழ்விழா - மகிழ்தற்குக் காரணமான விழா.

(மாதவியின் ஆடல்கள்)

35-37 : மாயோன்.........பின்னர்

(இதன்பொருள்) மாயோன் பாணியும் - திருமாலை வாழ்த்துகின்ற தேவபாணியும்; வருணப்பூதர் நால் வகைப் பாணியும் - வருணப் பூதர் நால்வரையும் வாழ்த்துகின்ற நால்வகைச் சிறுதேவபாணியும்; நலம் தரும் கொள்கை வான் ஊர் மதியமும் பாடி - மன்னுயிர் பலவற்றிற்கும் தன் ஒளியாலே நன்மைதருவதாம் என்கின்ற கோட்பாடு காரணமாக வானின்கண் இயங்குகின்ற திங்கட் கடவுளை வாழ்த்துகின்ற சிறுதேவபாணியும் ஆகிய இசைப்பாடல்களைப் பாடி என்க.

(விளக்கம்) 35. மயோன் பாணி - திருமாலாகிய பெருங்கடவுளைப் பாடுகின்ற தேவபாணி என்னும் பாட்டு. பாணி - பாட்டு. இது முத்தமிழ்க்கும் பொதுவாம். இஃது இசைத்தமிழில் வருங்கால் கொச்சக வொருபோகாய் வரும். ஆசிரியர் தொல்காப்பியனாரும் ஏனை யொன்றே, தேவர்ப்பராய முன்னிலைக் கண்ணே எனச் செய்யுளியலுள் (138) இலக்கணம் ஓதுதலறிக.

தேவபாணி - பெருந் தேவபாணி சிறு தேவபாணியென இரு வகைப்படும் என்ப.

இனி, இசைத்தமிழில் வருங்கால் தரவு முதலியவற்றை முகநிலை கொச்சகம் முரி என இசை நூலாரும் வழங்குவர். இசைப் பாவானது இசைப்பா எனவும் இசையளவுபா எனவும் இருவகைப்படும். இவற்றுள் தேவபாணி இசைப்பா என்பதன் பாற்படும். அவ்விசைப்பா பத்து வகைப்படும் என்பர். அவையாவன: 1 செந்துறை, 2 வெண்டுறை, 3. பெருந்தேவபாணி, 4. சிறு தேவபாணி, 5. முத்தகம், 6. பெருவண்ணம், 7. ஆற்றுவரி, 8. கானல்வரி, 9. விரிமுரண், 10. தலைபோகுமண்டிலம் என்பனவாம். இதனை,

செந்துறை வெண்டுறை தேவபா ணிய்யிரண்டும்
வந்தன முத்தகமே வண்ணமே - கந்தருவத்
தாற்றுவரி கானல் விரிமுரண் மண்டிலமாத்
தோற்று மிசையிசைப்பாச் சுட்டு  (இசை நுணுக்கம்)

எனவரும் (சிகண்டியார்) வெண்பாவா னுணர்க.

இனி, சுத்தம் சாளகம் தமிழ் என்னும் சாதியோசைகள் மூன்றனோடும் தாளக்கிரியைகளோடும் பொருந்தும் இசைப்பாக்கள் ஒன்பது வகைப்படும் எனப் பஞ்சமரபு என்னும் நூல் செய்த அறிவனார் கூறுவர். அவை சிந்து திரிபதை சவலை சமபாதவிருத்தம் செந்துறை வெண்டுறை பெருந்தேவபாணி சிறுதேவபாணி வண்ணம் என்னும் ஒன்பதுமாம்.

இனி, நாடகத் தமிழில் தேவபாணி வருங்கால், பெருந்தேவபாணி பலதேவரையும் சிறுதேவபாணி வருணப்பூதரையும் மூவடிமுக்கால் என்னும் வெண்பாவால் பாடப்படும் எனவும் அங்ஙனம் பாடுங்கால் அவர் அணியும் தாரும் ஆடையும் அவர்தம் நிறனும் கொடியும் வாழ்த்தி அவர்பால் வேண்டுவனவும் கூறிப் பாடப்படும் எனவும் கூறுவர். இதனை,

திருவளர் அரங்கிற் சென்றினி தேறிப்
பரவுந் தேவரைப் பரவுங் காலை
மணிதிகழ் நெடுமுடி மாணிபத் திரனை
அணிதிகழ் பளிங்கின் ஒளியினை யென்றும்
கருந்தா துடுத்த கடவுளை யென்றும்
இரும்பனைத் தனிக்கொடி யேந்தினை யென்றும்
கொடுவாய் நாஞ்சிற் படையோ யென்றும்
கடிமலர் பிணைந்த கண்ணியை யென்றும்
சேவடி போற்றிச் சிலபல வாயினும்
மூவடி முக்கால் வெள்ளையின் மொழிப  (மதிவாணனார்)

எனவரும் நூற்பாவா னறிக.

இனி, கொடு கொட்டி முதலிய பதினோராடற்கும் முகநிலையாகிய தேவபாணி மாயோன் பாணியாம். அது வருமாறு:

மலர்மிசைத் திருவினை வலத்தினி லமைத்தவன் மறிதிரைக் கடலினை மதித்திட அடைத்தவன் - இலகொளித் தடவரை கரத்தினில் எடுத்தவன் இனநிரைத் தொகை கழை இசைத்தலில் அழைத்தவன் - முலையுணத் தருமவள் நலத்தினை முடித்தவன் முடிகள்பத் துடையவ னுரத்தினை யறுத்தவன் - உலகனைத் தையுமொரு பதத்தினில் ஒடுக்கினன் ஒளிமலர்க் கழல்தரு வதற்கினி யழைத்துமே. இஃது எண்சீரான் வந்து கொச்சக வொருபோகு. பண் - கௌசிகம். தாளம் இரண் டொத்துடைத் தடாரம்.

இனி ஆசிரியர் இளங்கோவடிகளார் சிறுதேவபாணி ஈண்டுக் கூறிற்றில ரெனினும் இனஞ்செப்புமாற்றால் அது வருமாறு கூறப்படும். அஃதாவது

வண்ணமலர்ச் சரங்கோத்து மதனவேள் மிகவெய்யக்
கண்ணளவோர் புலனல்லாக் கனல்விழியா லெரித்தனையால்
எண்ணிறந்த தேவர்களு மிருடிகளு மெழுந்தோட
ஓண்ணுதலான் பாகங்கொண் டொருதனியே யிருந்தனையே

எனவரும் என்க.

மாயோன் காவற் கடவுளாதல்பற்றி முதற்கண் வாழ்த்தப்பட்டனன். இனி, வருணப்பூதர் நால்வகைத் தேவபாணி வருமாறு:

அந்தணர் வேள்வியோ டருமறை முற்றுக - வேந்தன் வேள்வியோ டியாண்டுபல வாழ்க - வாணிக ரிருநெறி நீணிதி தழைக்க - பதினெண் கூலமும் உழவர்க்கு மிகுக - அரங்கியற் கூத்து நிரம்பிவினை முடிக - வாழ்க நெடுமுடி கூர்கவென் வாய்ச் சொலென் - றிப்படிப் பலிகொடுத் திறைவனிற் றொக்குச் - செப்பட வமைத்துச் செழும்புகை காட்டிச் - சேவடி தேவரை யேத்திப் பூதரை - மூவடி முக்கால் வெண்பா மொழிந்து - செவியிழுக் குறாமை வேந்தனை யேத்திக் - கவியொழுக்கத்து நின்றுழி வேந்தன், கொடுப்பன கொடுப்ப வடுக்கு மென்ப எனவரும் (மதிவாணனார்) நூற்பாவாலறிக.

36. மதியமும் பாடி எனவே திங்கட்கடவுளைப் பாடுந்தேவபாணி என்பதாயிற்று. திங்கள் தண்ணிய மண்டில மாதல்பற்றி முற்கூறப்பட்ட தென்பர். இதற்குச் செய்யுள் வருமாறு: குரைகடன் மதிக்கு மதலையை குறுமுயல் ஒளிக்கும் அரணினை - இரவிரு ளகற்று நிலவினை யிறையவன் முடித்த அணியினை - கரியவன் மனத்தின் உதிதனை கயிரவ மலர்த்து மகிணனை - பரவுநர் தமக்கு நினதிரு பதமலர் தபுக்க வினையையே எனவரும். இதற்குப் பண்ணும் தாளமும் முற்கூறப் பட்டனவேயாம்.

திங்கள் மண்டிலம் தனது தண்ணொளியாலே பைங்கூழ் முதலியவற்றை வளர்த்து மன்னுயிர்க்கு நலம் செய்வதாம் என்பதுபற்றி நலம்பெறு கொள்கை (யால்) வானூர் மதியம் பாடி என்றார்.

(37) பாடி.........ஆடும் (69) மாதவி இவள் என ஒருசொற் பெய்து மாதவிக்கு இதனையும் பின்வருவனவற்றையும் அடையாக்குக.

(1) கொடு கொட்டி

37-43: பின்னர் ............. ஆடலும்

(இதன்பொருள்) பின்னர் - இவற்றைப் பாடி முடித்த பின்னர்; நீரல நீங்க சீர் இயல் பொலிய - ஒவ்வாத தாளங்கள் நீங்கவும் பொருத்தமான தாளவியல்பு பொலிவு பெறுமாறும் பதினொரு வகைக் கூத்துக்களையும் (கோவலனுக்கு ஆடிக்காட்டி அவனை மகிழ்விக்கும் மாதவியை விச்சாதரன் அவர்கள் காணாமரபின் நின்று தன்மனைவிக்குச் சுட்டிக்காட்டுகின்றான்) என்க. தேவர் திரிபுரம் எரிய வேண்ட - தேவர்கள் தமக்கின்னல் செய்கின்ற அசுரருடைய முப்புரமும் எரியும்படி வேண்டுதலாலே; எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப-அவ்வேண்டுகோட் கிணங்கிய இறைவனுடைய வடவைத் தீயை நுனியிலுடைய பெரிய அம்பானது அவ்விறைவன் ஏவிய பணியைச் செய்து முடித்தமையாலே; (அசுரர் வெந்து விழுந்த) பாரதி ஆடிய பாரதி அரங்கத்து - பைரவி ஆடியதனால் பாரதியரங்கம் என்னும் பெயர் பெற்ற சுடுகாட்டின் கண்; உமையவள் ஒருதிறன் ஆக- தனது ஒரு கூற்றிலே நின்று உமையன்னை பாணிதூக்குச் சீர் என்னும் தாளங்களைச் செலுத்த; ஓங்கிய இமயவன் - தேவர்கள் யாரினும் உயர்ந்த தேவனாகிய இறைவன்; ஆடிய கொடுகொட்டி ஆடலும் - வெற்றிக் களிப்பாலே ஆடியருளிய கொடுகொட்டி என்னும் ஆடலும் என்க.

(விளக்கம்) 39-பாரதி-பைரவி. அவளாடிய அரங்கு, பாரதியரங்கம். சொற்பொருட் பின்வருநிலை யென்னும் செய்யுளின்பம் கருதி பாரதி யாடிய பாரதி யரங்கத்து என்று விதந்தோதினர். 40. தேவர் வேண்ட அம்பு ஏவல் கேட்ப அதனால் திரிபுரம் எரிய ஆங்குண்டான பாரதி யரங்கம் என்க. பாரதியரங்கம் என்பது வாளாது சுடுகாடு என்னும் பொருட்டாய் நின்றது என்க. 41. எரி - ஈண்டு வடவைத்தீ. முகம் - நுனி. உமையவள் ஒரு திறனாக நின்றாட இமையவன் ஒரு திறனாக நின்று ஆடிய கொடுகொட்டி என்க.

43. திரிபுரம் தீமடுத்தெரியக் கண்டு இரங்காது கைகொட்டி நின்று ஆடிய கொடுமையுடைத்தாகலின் கொடுங்கொட்டி என்பது பெயராயிற்று. கொடுங்கொட்டி கொடுகொட்டி என விகாரமெய்தி நின்றது.

பாணியும் தூக்கும் சீரும் என்றிவை மாணிழை அரிவை கரப்ப எனக் கலியிற் கடவுள் வாழ்த்தில் வருதலை நினைந்து அடியார்க்குநல்லார் பாணி தூக்குச் சீர் என்னும் தாளங்களைச் செலுத்த என வுரை விரித்தார்.

(2) பாண்டரங்கம்

44-45: தேர்முன் .............. பாண்டரங்கமும்

(இதன்பொருள்) தேர்முன் நின்ற திசை முகன் காண - வையகமாகிய தேரின்முன் நின்ற நான்முகன் காணுமாறு; பாரதி ஆடிய வியன் பாண்டரங்கமும் - பாரதி வடிவமாகிய இறைவன் வெண்ணீற்றை அணிந்தாடிய பெரிய பாண்டரங்கக் கூத்தும் என்க.

(விளக்கம்) தேர் என்றதற்கு வானோராகிய தேர் என்பாருமுளர். வையத் தேர் என்பது பரிபாடல் (5-24.) நான்மறைக் கடும்பரி பூட்டி நெடும்புற மறைத்து வார்துகின் முடித்து கூர் முட் பிடித்துத் தேர் முன்னின்ற திசைமுகன் காணும்படி என்பது பழையவுரை.

(3) அல்லியம்

46 - 48: கஞ்சன் ........... தொகுதியும்

(இதன்பொருள்) அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள் - கரிய திருமேனியுடைய கண்ணன் ஆடிய பத்துவகை ஆடலுள் வைத்து; கஞ்சன் வஞ்சம் கடத்தற்கு ஆக-கஞ்சன் செய்த வஞ்சனையினின்றும் நீங்குதற் பொருட்டாக; ஆடிய அல்லியத் தொகுதியும்-ஆடப்பட்ட அல்லியத் தொகுதி என்னும் கூத்தும் என்க.

(விளக்கம்) 45. வஞ்சம் - வஞ்சனையாக ஏவப்பட்ட யானை. கஞ்சனால் ஏவப்பட்ட வஞ்ச யானையின் கொம்பை ஒடித்தற்கு நின்று ஆடிய கூத்து அல்லியக்கூத்து எனப்படும். 46. அஞ்சனவண்ணன் - மாயோன்; கண்ணன். கண்ணன் ஆடிய கூத்துப் பத்துவகைப்படும் என்ப. ஏனைய வந்தவழிக் கண்டுகொள்க. அல்லியக் கூத்து பலதிறப்பட ஆடுதலின் தொகுதி என்றார். முகம் மார்பு கை கால்களின் வட்டணை அவிநயம் முதலியன இருந்தும் தொழில் செய்யாது நிற்றலின் தொகுதி எனப்பட்டது என்பது பழையவுரை. ஆடலின்றி நிற்பவை யெல்லாம் மாயோனாடும் வைணவநிலை எனும் நூற்பாவின்கண் ஆடலின்றி நிற்கும் கூத்துக்கள் பலவுள வென்பது பெறுதுமாகலின் தொகுதி என்றது அல்லியக் கூத்துக்களின் தொகுதி யென்றே கோடல் நேரிது. அடியார்க்குநல்லார் விளக்கம் பொருத்தமாகத் தோன்றாமை யுணர்க. அல்லியம் எனினும் அலிப்பேடு எனினும் ஒன்று.

(4) மல்

48-49: அவுணர் ................ ஆடலும்

(இதன்பொருள்) (அஞ்சனவண்ணன் ஆடலுள் வைத்து;) அவுணன் கடந்த மல்லின் ஆடலும்-வாணன் என்னும் அசுரனை வெல்லுதற்பொருட்டு அவன் மல்லனாகி ஆடிய மற்கூத்தும் என்க.

(விளக்கம்) அஞ்சனவண்ணன் என்பது அதிகாரத்தாற் பெற்றாம்.

(5) துடி

49-51: மாக்கடல் .......... துடியும்

(இதன் பொருள்) மாக்கடல் நடுவண் - கரிய கடலின் நடுவிடத்தே; நீர்த்திரை அரங்கத்து - அக்கடல் நீரின் அலையே அரங்கமாக நின்று; நிகர்த்து முன் நின்ற - நேரொத்து எதிர்நின்ற; சூர்த்திறம் கடந்தோன் - சூரனது வஞ்சகமாகிய சூழ்ச்சித் திறத்தை அறிந்து அவன் போரைக்கடந்த முருகன், ஆடிய துடியும் - அவ்வெற்றிக் களிப்பால் துடிகொட்டியாடிய துடிக்கூத்தும் என்க.

(விளக்கம்) 49. மா - கருமை; பெரிய கடலுமாம். 50. கடல் அலை மேலே நின்றாடுதலின் நீர்த்திரை யரங்கத்து என அதனை அரங்கம் என்றார். நிகர்த்து - நேரொத்து. 51. திறம் - சூழ்ச்சித்திறம். துடிகொட்டி ஆடுதலின் அப்பெயர் பெற்றது.

(6) குடை

52 - 53: படை..............குடையும்

(இதன் பொருள்) அவுணர் படை வீழ்த்துப் பையுள் எய்த - அசுரர்கள் போர் செய்தற்கு ஆற்றாதவராய்த் தம் படைக்கலங்களைக் களத்திலே போகட்டு வருந்தாநிற்ப அம்முருகனே; குடை வீழ்த்து - தனது கொற்ற வெண்குடையைச் சாய்த்துச் சாய்தது; அவர்முன் ஆடிய குடையும் - அவ்வசுரர் முன்னர் ஆடிய குடைக்கூத்தும், என்க.

(விளக்கம்) 52. அவுணர் ஆற்றாமை கண்டு அவரை எள்ளிக் குடையைப் பக்கங்களிலே சாய்த்துச் சாய்த்து ஆடுதலின் அவர் நாணிப் படை வீழ்த்துப் பையுள் எய்தினர் என்பது கருத்து. 53. குவைகொண்டாடலின் அப்பெயர்த்தாயிற்று.

(7) குடம்

54-55 : வாணன் ........... குடம்

(இதன் பொருள்) நீள்நிலம் அளந்தோன் - நெடிய நிலத்தை ஓரடியாலே அளந்த மாயோன்; வாணன் பேரூர் மறுகிடை நடந்து - வாணாகரனுடைய சோ என்னும் பெரிய நகர மறுகிலே சென்று அநிருத்தனைச் சிறைவீடு செய்தற் பொருட்டு; ஆடிய குடமும் - குடங்கொண்டு ஆடிய குடக் கூத்தும் என்க.

(விளக்கம்) காமன் மகன் அநிருத்தன் என்பானை வாணாசுரன் மகள் உழை என்பாள் காமுற்று அவனை உறக்கத்தே எடுத்துப்போய்த் தன் உவளகத்தே சிறைவைத்து அவனோடு கூடியிருந்தனள். இச்செய்தி யறிந்த மாயோன் வாணன் நகரத்தே சென்று போராடி வென்று அவனைச் சிறை மீட்டான் என்பர். அவ்வெற்றி காரணமாக மாயோன் அந்நகர மறுகில் குடங்களைக் கொண்டாடினன் என்க. இக்குடங்கள் உலோகங்களானும் மண்ணாலும் இயற்றப்பட்டன என்ப.

இது விநோதககூத்து ஆறனுள் ஒன்று என்பர். இதனை,

பரவிய சாந்தி யன்றியும் பரதம்
விரவிய விநோதம் விரிக்குங் காலைக்
குரவை கலிநடங் குடக்கூத் தொன்றிய
கரண நோக்குத் தோற்பா வைக்கூத்
தென்றிவை யாறும் நகைத்திறச் சுவையும்
வென்றியும் விநோதக் கூத்தென விசைப்ப

எனவரும் நூற்பாவானுணர்க.

( 8) பேடி

56-57 : ஆண்மை..............ஆடலும்

(இதன் பொருள்) ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்து - ஆண்மைத்தன்மை திரிந்து பெண்மைத்தன்மை மிக்க கோலத்தோடே; காமன் ஆடிய பேடி ஆடலும்-காமவேள் ஆடிய பேடு என்னும் கூத்தும் என்க.

(விளக்கம்) இதுவும் அநிருத்தனைச் சிறை மீட்டற்கு வாணாசுரன் நகரமறுகில் மாயோன் ஆடிய குடக்கூத்தோடு அம்மாயோனொடு சென்ற காமன் பேட்டுருக்கொண்டு ஆடிய கூத்தென வுணர்க. இதனை சுரியற்றாடி மருள்படு பூங்குழல் பவளச் செவ்வாய்த் தவளவொண்ணகை - ஒள்ளரி நெடுங்கண் வெள்ளி வெண் டோட்டுக் - கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதற் - காந்தளஞ் செங்கை யேந்திள வனமுலை - அகன்ற வல்குல் அந்நுண் மருங்குல் - இகந்த வட்டுடை யெழுதுவரிக் கோலத்து - வாணன் பேரூர் மறுகிடை நடந்து - நீணில மளந்தோன் மகன்முன் னாடிய - பேடிக் கோலத்துப் பேடுகாண்குநரும், எனவரும் மணிமேகலையானு முணர்க. (மணி.3:116-25)

தண்டமிழ் ஆசான் சாத்தனார் அடிகளார் மொழிகளைப் பொன்னே போற் போற்றி வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீணிலம் அளந்தோன் என இனிதின் ஓதுதலுணர்க.

(9) மரக்கால்

58-59: காய்சின...........ஆடலும்

(இதன் பொருள்) மாயவள் - கொற்றவை; காய்சின அவுணர் கடுந் தொழில் பொறாஅள் - சுடுகின்ற வெகுளியையுடைய அசுரர் வஞ்சத்தாலே செய்கின்ற கொடிய தொழில் கண்டு பொறாதவளாய்; மரக்கால் ஆடிய ஆடலும் - மரத்தாலியன்ற கால்களின் மேனின்று ஆடிய மரக்கால் என்னும் கூத்தும் என்க.

(விளக்கம்) 58. காய்சினம் - வினைத்தொகை. கடுந்தொழில் - தேவர்கட்கு இன்னல் செய்தற்குச் செய்த போர் முதலியன. தன்பாலன்புடைய நல்லோர்க்குச் செய்த இன்னல் கண்டு பொறாதவளாய் என்பது கருத்து. 59. மாயவள் - மாமைநிற முடையவள். அவள் கொற்றவை என்க.

ஆங்குக் கொன்றையும்......... அசுரர்வாட அமரர்க்காடிய குமரிக் கோலத்து ....... ஆய்பொன் னரிச்சிலம்பு சூடகமும் மேகலையும் ஆர்ப்ப ஆர்ப்ப மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை ஆடும் போலும் என அடிகளாரே வேட்டுவவரிக்கண் ஓதுவர்.

அவுணர் போரிற் காற்றாமல் வஞ்சத்தால் வெல்லக் கருதிப் பாம்பும் தேளும் பிறவுமாய்ப் போர்க்களத்தே புகுந்து மொய்த்தலின் கொற்றவை அவற்றை உழக்கிக் கொல்லுதற் பொருட்டு மரக்கால் கொண்டு ஆடலின் இஃது அப்பெயர்த்தாயிற்று.

(10) பாவை

60-61 : செரு..........பாவையும்

(இதன் பொருள்) செய்யோள் திருவின் சிவந்த திருமேனியையுடைய திருமகளாலே; அவுணர் செருவெம் கோலம் நீங்க - அசுரர்கள் போராற்றுதற்கு மேற்கொண்ட வெவ்விய கோலம் நீங்கி மோகித்து விழும்படி; ஆடிய பாவையும் - கொல்லிப்பாவை வடிவத்தோடே நின்று ஆடப்பட்ட பாவை என்னும் கூத்தும் என்க.

(விளக்கம்) 60. செருக்கோலம் - போர்க்கோலம், அது நீங்கலாவது சினமவிந்து மோகித்து மயங்கி வீழ்தல். பாவை - கொல்லிப் பாவை. பாவை வடிவாயாடுதலின் அப்பெயர்த்தாயிற்று.

(11) கடையம்

62-64 : வயலுழை..........கடையமும்

(இதன் பொருள்) வடக்குவாயிலுள் வயல் உழை நின்று - வாணன் என்னும் அசுரனது சோ என்னும் நகரத்தே அரண்மனையினது வடக்கு வாயிலின்கண்அமைந்த கழனியினிடத்தே நின்று, அயிராணி மடந்தை ஆடிய கடையமும் - அயிராணி என்னும் தெய்வமடந்தை கடைசி வடிவு கொண்டு ஆடிய கடையம் என்னும் கூத்தும் என்க.

(விளக்கம்) வடக்குவாயில்-சோவரணினது வடக்குவாயில் என்க. அயிராணி - இந்திராணி. கடையம் - கடைசியர் ஆடுங்கூத்து. உழத்தி வடிவங்கொண்டு ஆடலின் அப்பெயர்த்தாயிற்று. கடைசி - உழத்தி.

விச்சாதரன் மனைவியோடு காணாமரபினின்று மாதவியின் பதினொருவகைக் கூத்தையும் கண்டு பின்னர் இவள்தான் மாதவி என மனைவிக்குக் காட்டுதல்.

64-71:  அவரவர் .......... அன்றியும்

(இதன் பொருள்) அவரவர் அணியுடன் அவரவர் கொள்கையின் - இங்ஙனம் கூறப்பட்ட பதினொருவகைக் கூத்துக்களையும் அவற்றை ஆடிய இறைவன் முதலிய அத்தெய்வக் கூத்தர்கட்கியன்ற அணிகளுடனேயும் அவரவர்தம் கோட்பாட்டிற் கியன்ற மெய்ப்பாடுகளுடனேயும்; நிலையும் படிதமும் நீங்கா மரபின் - நின்றாடலும் வீழ்ந்தாடலுமாகிய அவரவரை நீங்காத மரபினொடும் பொருந்தி; பதினோராடலும் - இம்மடந்தை யாடா நின்ற இப்பதினொரு வகைக் கூத்துக்களையும்; பாட்டின் பகுதியும் - அக்கூத்துக்களுக்கியன்ற பண்களின் கூறுபாடுகளையும்; விதி மாண் கொள்கையின் விளங்கக் காணாய் - அக்கூத்துக்களுக்குக் கூத்தநூலிற் கூறப்பட்டுள்ள விதிகள் மாட்சிமைப்படுகின்ற கோட்பாட்டோடு விளங்கா நிற்றலையும் அன்புடையோய் நீ காணுதி மற்று இவள் தான் யார்? எனின்; இவள் யான் தாது அவிழ் பூம்பொழில் இருந்து கூறிய - இவள்தான் யான் நந்தம் வடசேடிக்கண் கள்ளவிழ் பூம்பொழிற் கண்ணேயிருந்து நினக்குக் கூறிய; மாதவி மரபின் மாதவி என - உருப்பசியாகிய மாதவியின் வழியிற் றோன்றிய மாதவி என்பாள் என்று; காதலிக்கு உரைத்து - அக்கூத்துக்களைக் கண்ணுற்றுக் கழிபேருவகையோடிருக்கும் தன் காதலிக்குக் கூறி; கண்டு மகிழ்வு எய்திய மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும் - தானும் கண்டு மகிழ்ச்சியுற்ற மேம்பாடு தக்க சிறப்பினையுடைய அந்த விச்சாதரனும் அவனன்றியும் என்க.

(விளக்கம்) 64. அவரவர் என்றது, இறைவன் முதலியோரை. அவரவர் அணியுடன் என்றது, இறைவன் முதலியோர் கொடுகொட்டி முதலிய கூத்தை நிகழ்த்துங்கால் கொண்டிருந்த கோலத்தைக்கொண்டு என்றவாறு. இவற்றுள் இறைவன் கொடுகொட்டி யாடுங்காற் கொண்ட கோலத்தை உமையவள் ஒருபாலாக ஒருபால் இமையா நாட்டத்து இறைவன் ஆகி எனவரும் நச்சினார்க்கினியர் மேற்கோளானும் (கலி.கடவுள்.உரை) அப்பொழுது அணியும் கோலத்தை அடிகளாரே (கட்டுரை காதைக்கண். 1-10)

சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக்
குவளை யுண்கட் டவளவாண் முகத்தி
கடையெயி றரும்பிய பவளச்செவ் வாய்த்தி
இடைநிலா விரிந்த நித்தில நகைத்தி
இடமருங் கிருண்ட நீல மாயினும்
வலமருங்கு பொன்னிறம் புரையு மேனியள்
இடக்கை பொலம்பூந் தாமரை யேந்தினும்
வலக்கை அஞ்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்
வலக்கால் புனைகழல் கட்டினு மிடக்கால்
தனிச்சிலம் பரற்றுந் தகைமையள்

என உமையவள் மேல்வைத்து அழகுற ஓதுமாற்றானும் அறிக. இங்ஙனமே ஏனையோர் கோலங்களையும் வந்துழிக் கண்டுகொள்க.

அணி-ஆடுங் காலத்துத் தோன்றும் சுவையுடைய அழகு எனினுமாம். கொள்கை - திரிபுரமெரிதல் வேண்டும் என்பது முதலியன.

65. நிலை - நின்றாடல். படிதம் - வீழ்ந்தாடல்; படிந்தாடல். இவற்றுள் ஒன்றாதல் நீங்காத மரபின் என்றவாறு. 17. விதி - கூத்த நூலிலக்கண முறை. இவளது ஆட்டத்தின்கண் விளங்குதலைக் காண்க என்றவாறு. 70. கண்டு மகிழ்வெய்தி என்றது, காதலிக்குக் காட்டித் தானும் கண்டு மகிழ்வெய்தி என்பது பட நின்றது.

72 - 75 : அந்தரத்து...........இருந்தோனுவப்ப

(இதன் பொருள்) அந்தரத்து உள்ளோர் அறியா மரபின் - வானவர்தாமும் மாந்தர் தம்மைக் காண மாட்டாத முறைமையினாலே; வந்து காண்குறூஉம் - மண்ணுலகிலிழிந்துவந்து காண்டற்குரிய சிறப்பமைந்த; வானவன் விழவும் - இந்திரவிழவும்; ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள - மாதவியாடிய பதினொரு வகைக் கூத்தும் அவ்வாடல்களுக்கமைந்த பல்வேறு வகைக் கோலங்களும்; அணியும் - அவற்றிற்பிறந்த அழகும் முடிதலாலே; ஊடலோடு இருந்த கோவலன் உவப்ப - அவற்றை மேலும் தொடராமல் முடித்து விட்டாள் என்பதனால் சிறிது ஊடினான் போல வாய்வாளாதிருந்த கோவலன் உவக்கும்படி என்க.

(விளக்கம்) 72. அந்தரத்துள்ளோர் - ஏனைய விச்சாதரர் எனினுமாம். வானவர் உருவம் மாந்தர்க்குப் புலப்படாமையினால், அறியா மரபின் வந்து என்றார். இனி, தமதுருவம் ஒளிப்பிழம்பாகலின் அதனை மறைத்து அவர் காணாத அருவுடம்போடு வந்து எனினுமாம்.

ஊடற் கோல மோடிருந்தான் என்றதற்குப் பழையவுரையிற் கூறும் விளக்கங்கள், மாதவி கோவலன் இருவருடைய காதலுக்கும் இழுக்குத் தருவனவாகும். என்னை? திருநாள் முடிதலான் வந்த வெறுப்பு மாதவியோடு ஊடியிருத்தற்கு ஏதுவாகாமை யுணர்க. மேலும் ஆடலிற் காலநீட்டித்தலால் ஊடியிருந்தான் எனின் கலையின் அழகுணராப் பேதையாவான் ஆதலானும், இவளைப் பிறர் பார்த்தலின் வந்த வெறுப்பெனின் அவள் அன்புடைமையில் குறைகண்டவனாவான் இதுவும் ஊடற்கு நிமித்தம் அன்று. பிறர்க்கு இவ்வாறாமென்றூடினனாயின் ஆண்மையிற் குறையுடையன் ஆவன் எனவே அவையெல்லாம் போலி.

அவன் ஊடற்குக் காரணம் தான்இனிது சுவைத்திருந்த ஆடல் முதலியவற்றை அவள் முடித்தமையேயாம். வாய்மையில் இஃதூடலன்று; அவளது கலைச்சிறப்பைப் பாராட்டுமோர் உபாயமே ஆகும் இவ்வூடல். என்னை? இத்துணைப் பேரின்பத்தை இடையறுத்தலால் ஊடவே இவன் தன்னாடலைப் பெரிதும் சுவைக்கின்றனன் என மாதவி மகிழ்வள் ஆதலின் என்க. இஃதுண்மையான ஊடலன்றென் றறிவுறுத்தற்கே அடிகளார் ஊடலோடிருந்தானென் றொழியாது ஊடற் கோலமோடிருந்த என்று நுண்ணிதின் ஓதினர் என்றுணர்க. இனி, இவ்வூடல் தீர்த்தற்கு மாதவி தன்னைக்கூடி முயங்குதலே செய்யற்பாலது. ஆகவே கூட்டத்தை விரும்பும் தனது கருத்துக் குறிப்பாகப் புலப்பட இவ்வூடற் கோலத்தைக் கோவலன் மேற்கொண்டான் எனவும் அறிக.

மாதவியின் கூடற்கோலம்

76-79: பத்துத் துவரினும் ............. ஆட்டி

(இதன் பொருள்) பத்துத் துவரினும் - பத்துவகைப்பட்ட துவரினானும்; ஐந்து விரையினும் - ஐந்துவகைப்பட்ட விரையினானும்; முப்பத்திருவகை ஓமாலிகையினும் - முப்பத்திரண்டுவகைப்பட்ட ஓமாலிகையானும்; ஊறின நன்னீர் - ஊறிக் காயவைத்த நல்ல நீராலே; வாசநெய் உரைத்த நாறு இருங்கூந்தல் - மணநெய் நீவிய மணங் கமழுகின்ற கரிய கூந்தலை; நலம் பெற ஆட்டி - நிறந்திகழும்படி ஆட்டி; என்க.

(விளக்கம்) 76. துவர் பத்தாவன: பூவந்தி திரிபலை புணர் கருங்காலி நாவலொடு நாற்பால் மரமே, எனப்படுவன.

77. முப்பத்திருவகை ஓமாலிகையாவன : இலவங்கம் பச்சிலை கச்சோல மேலம், குலவிய நாகணங் கோட்டம் - நிலவிய நாகமதா வரிசிதக்கோல நன்னாரி வேகமில் வெண்கொட்ட மேவுசீர் - போகாத, கத்தூரி வேரி யிலாமிச்சங் கண்டில்வெண்ணெய், ஒத்தகடு நெல்லி உயர்தான்றி - துத்தமொடு, வண்ணக்கச் சோல மரேணுக மாஞ்சியுடன், எண்ணுஞ் சயிலேக மின்புழுகு - கண்ணுநறும், புன்னை நறுந்தாது புலியுகிர் பூஞ்சரளம், பின்னு தமாலம் பெருவகுளம் - பன்னும், பதுமுக நுண்ணேலம் பைங்கொடுவேரி கதிர்நகையா யோமா லிகை என்னும் இவை.

இதுவுமது

80-90: புகையில் ............. அணிந்து

(இதன் பொருள்) புகையின் புலர்த்திய பூ மெல் கூந்தலை - பின்னர் அகிற்புகையூட்டுதலாலே ஈரம் புலர்த்தப்பட்ட பொலிவினை யுடைய மெல்லிய அக் கூந்தலை; வகை தொறும் மான்மதச் சேறு ஊட்டி - ஐந்துவகையாக வகுத்து ஒவ்வொரு வகுப்பினும் மான்மதமாகிய கொழுவிய குழம்பையும் ஊட்டி; அலத்தகம் ஊட்டிய அம்செஞ்சீறடி நலத்தகு மெல்விரல் நல்அணி செறீஇ - செம்பஞ் செழுதிய அழகிய சிவந்த சீறடிகளின் அழகிற்குத் தகுந்த மெல்லிய விரலிடத்தே அழகிய அணிகலன்களைச் செறித்து; காலுக்கு பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை அரியகம் அமைவுற அணிந்து - கால்களுக்குப் பாதசாலமும் சிலம்பும் பாடகமும் சதங்கையும் காற்சரியும் என்னும் இவ்வணிகலன்களைப் பொருத்த முறும்படி அணிந்து; குறங்குசெறி திரள்குறங்கினில் செறித்து - குறங்கு செறி என்னும் அணிகலனைத் திரண்ட தொடைகளிற் செறித்து; பிறங்கிய முத்து முப்பத்திருகாழ் - பரிய முத்துக் கோவைகள் முப்பத்திரண்டாற் செய்த விரிசிகையென்னும் மேகலையணியை; நிறம் கிளர் பூந்துகில் நீர்மையின் அரை உடீஇ - அவற்றின் நிறம் விளங்குதற்குக் காரணமான அழகிய நீலச் சாதருடையின் மேல் இடையின்கண் பண்புற உடுத்து; காமர் கண்டிகை தன்னொடு பின்னிய தூமணித் தோள்வளை தோளுக்கு அணிந்து - கண்டாரைக் காமுறுத்தும் மாணிக்க வளையுடன் நீங்காமல் பொற்சங்கிலியாலே பிணிக்கப்பட்ட முத்தவளையலைத் தோளுக்கு அணிந்து; என்க.

(விளக்கம்) 80. புகை - அகிற்புகை. பூ - பொலிவு. 81. வகை - வகுப்பு. அஃதாவது ஐம்பாலாக வகுக்கப்படுதல். அவையாவன: முடி, கொண்டை, சுருள், குழல், பனிச்சை என்பன. மான்மதச் சேறு. கத்தூரிக்குழம்பு; சவாதுமாம். 82. அலத்தகம் - செம்பஞ்சிக் குழம்பு. 83. விரல்நல்லணி - மகரவாய் மோதிரம், பீலி, கான் மோதிரம் முதலியன. 84. பரியகம் என்பது பொன்னிதழ் பொதிந்த பன்னிற மணிவடம், பின்னிய தொடரிற் பெருவிரள் மோதிரம் தன்னொடு தொடக்கித் தமனியச் சிலம்பின் புறவாய் சூழ்ந்துபுணர வைப்பதுவே எனவும், என்னை? அவ்வாய் மகரத் தணிகிளர் மோதிரம் பைவாய்ப் பசும்பொற் பரியக நூபுரம் மொய்ம்மணி நாவின் முல்லையங் கிண்கிணி கௌவிய வேனவும் காலுக்கணிந்தாள் எனவும், வரும் மேற்கோள்களானும் உணர்க. 86. குறங்கு - தொடை. அதன் பாற் செறிக்கப்படும் அணிகலன் குறங்குசெறி எனப்படும். இதனை, குறங்கு செறியொடு கொய்யலங்காரம் நிறங்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇப் பிறங்கிய முத்தரை முப்பத்திருகாழ் அணிந்த தமைவர வல்குற் கணிந்தாள் எனவரும் மேற்கோளானும் உணர்க. 87 -8. பிறங்கிய முத்து முப்பத் திருகாழ் ......... அரை உடீஇ என மாறுக. 89. காமம் - காமர் என ஈறுதிரிந்து நின்றது. தூமணி - வெண்முத்து. கண்டிகை - முத்தவளை. இதனை, ஆய்மணி கட்டியமைந்த இலைச் செய்கைக் காமர் கண்டிகை வேய்மருள் மென்றோள் விளங்கவணிந்தாள் என்னும் மேற்கோளானும் உணர்க.

இதுவுமது

91-100 : மத்தக ................. அணிந்து

(இதன் பொருள்) மத்தக மணியொடு வயிரங் கட்டிய சித்திரச் சூடகம் - முகப்பிற் கட்டிய மாணிக்கத்தோடே பத்திகளில் வயிரங்கள் அழுத்தப்பட்ட சித்திரத் தொழிலையுடைய சூடகமும்; செம்பொன் கைவளை - சிவந்த பொன்னாலியன்ற கைவளையலும்; பரியகம் வால்வளை பவழப் பல்வளை அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து - ஒன்பான்மணிகளும் பதிக்கப்பட்ட பரியகம் என்னும் மணிவளையலும் சங்கவளையலும் பல்வேறுவகைப்பட்ட பவழ வளையல்களும் அழகிய மயிரையுடைய முன்கைக்குப் பொருத்தமுற அணிந்து; வாளைப்பகுவாய் வணக்குறு மோதிரம் - வாளைமீனினது அங்காந்த வாயைப் போன்று நெளித்தல் செய்த நெளி என்னும் மோதிரமும்; கேள்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம் - ஒளி மிகுந்த கதிர்களை வீசுகின்ற சிவந்த மாணிக்கப் பீடம் என்னும் மோதிரமும்; வாங்குவில் வயிரத்துத் தாள்செறி காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து - பக்கத்தே வளைந்து சுருள்கின்ற ஒளியையுடைய வயிரஞ்சூழ்ந்த மரகதக்கடை செறி எனப்படும் தாள் செறியும் ஆகிய இவற்றையெல்லாம் காந்தண் மலர் போன்ற கையினது மெல்லிய விரல்கள் மறையும்படி அணிந்து; அம் கழுத்து - அழகிய கழுத்தின் கண்; சங்கிலி நுண்தொடர் பூண் ஞாண் - வீரசங்கிலியும் நேர்ஞ்சங்கிலியும் பூட்டப்படும் பொன்ஞாணும் என்னும் இவற்றோடு; புனைவினை - கையாற் புனையப்பட்ட தொழில்களையுடைய; சவடி சரப்பளி முதலாயுள்ள; அங்கழுத்து ஆரமொடு அணிந்து - உட்கழுத்து முத்தாரங்களோடு ஒருசேர வணிந்து என்க.

(விளக்கம்) 91. மத்தகம் - தலை. ஈண்டு முகப்பு என்க. மணி - மாணிக்கம். 92-93. பரியகம் - சரியுமாம். வால்வளை என்றதனாற் சங்குவளையல் என்பதாயிற்று. வெள்ளிவளை என்பாருமுளர். பவழத்தாற் பல்வேறு சித்திரத் தொழிலமையச் செய்யப்பட்ட பல வளையல்கள் என்க. இனி, இவற்றிற்கு புரைதபு சித்திரப் பொன்வளை போக்கில் எரியவிர் பொன்மணி யெல்லென் கடகம் பரியகம் வால்வளை பாத்தில் பவழம் அரிமயிர் முன்கைக் கமைய அணிந்தாள் என்னும் மேற்கோள் காட்டப்பட்டது. அரியகை முன்கை என்பதும் பாடம். அரிமயிர் - அழகிய மயிர். 95. வாளை மீனினது பிளந்த வாய்போல் நெளித்த நெளி என்னும் மோதிரம் என்க. இஃது இக்காலத்தும் உளது. வணக்குறுதல் - நெளிக்கப்படுதல். வணங்குதலுறும் என்னும் அடியார்க்கு நல்லார் இதனை உவம உருபின் பொருட்டாய்க் கொண்ட படியாம்.

96. கேழ்கிளர் என்ற பின்னும் அக்கேழ் செங்கேழ் எனற்கு மீண்டு மோதியவாறு. 97. வாங்குவில் - வளைத்துக்கொள்ளும் ஒளி. தாள் செறி - பெயர். 99. நுண்தொடர் - நுண்ணிய சங்கிலி. நேர்ஞ் சங்கிலி என்புழியும் நேர்மை - நுண்மையாம். அங்கழுத்தினும் அகவயினும் என்க. கழுத்து அகவயின் என்றது உட்கழுத்து என்றிக்காலத்தார் வழங்குமிடத்தை.

இதுவுமது

101-108 : கயிற்கடை ............ அணிந்து

(இதன் பொருள்) கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி செயத்தகு கோவையில் சிறுபுறம் மறைத்து அங்கு - கோக்குவாயின்கண் தொடக்கித் தொங்கவிடப்பட்ட முத்தினால் இயற்றத்தகுந்த கோவையாகிய பின்றாலியாலே பிடரை மறைத்து; இந்திர நீலத்து இடை இடை திரண்ட சந்திரபாணி தகை பெறு கடிப்பிணை - முகப்பிற் கட்டின இந்திர நீலத் திடையிடையே பயிலக்கட்டின சந்திரபாணி என்னும் வயிரங்களாலே அழகு பெற்ற நீலக்குதம்பையை; அங்காது அகவயின் அழகுற அணிந்து - வடிந்த காதனிடத்தே அழகுமிகும்படி அணிந்து; தெய்வவுத்தியொடு செழுநீர் வலம்புரி தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கணி - சீதேவியார் என்னும் அணிகலத்தோடு வலம்புரிச் சங்கும் பூரப்பாளையும் வடபல்லி தென்பல்லி என்னும் இவையும் தம்மில் தொடர்ந்து ஒன்றான தலைக்கோலத்தை; மையீர் ஓதிக்கு மாண்புற அணிந்து - கரிய பெரிய கூந்தலுக்கு அழகுற அணிந்து என்க.

(விளக்கம்) 101. கயிற்கடை - கோக்குவாய்; கொக்கி என இக் காலத்தே வழங்குவதுமது. கொக்கிவாய் என்றும் பழையவுரையிற் பாடவேற்றுமை யுளது. ஒரோவழி அவ்வுரையாசிரியர் காலத்து அங்ஙனம் வழங்கிற்றுப் போலும். ஒழுகுதல் - தொங்குதல். தூக்கமாகச் செய்யப்பட்ட பின்றாலி என்பர் அடியார்க்குநல்லார். அஃதாவது தொங்கலாகச் செய்யப்பட்ட பிடரணியாகிய தாலி என்றவாறு. ஒழுகிய கோவை என இயையும். சிறுபுறம் - பிடர். சங்கிலி நுண்டொடர் பூண்ஞாண் புனைவினைத் தொங்கல் அருத்தித் திருந்துங்கயிலணி, தண்கடன் முத்தின் றகையொரு காழ் எனக்கண்ட பிறவுங் கழுத்துக் கணிந்தாள் எனவரும் மேற்கோளில் தொங்கல் எனவே கூறுதலும் காண்க. 103-104. திரண்ட சந்திரபாணி என்புழிச் சந்திரபாணி என்பது வயிரத்தில் ஒருவகை என்க. 104. கடிப்பு இணை-குதம்பை இணை. நூலவ ராய்ந்து நுவலருங் கைவினைக் கோலங்குயின்ற குணஞ்செய் கடிப்பிணை, மேல ராயினும் மெச்சும் விறலொடு காலமை காதிற் கவின்பெற வணிந்தாள் என்பது மேற்கோள். 106. தெய்வவுத்தி - சீதேவியார் என்னும் ஒருவகைத் தலைக்கோலம். இங்ஙனமே வலம்புரி பூரப்பாளை (தொய்யகம்) தென்பல்லி வடபல்லி (புல்லகம்) என்பனவும் தலைக்கோல அணிகள். கேழ்கிளர் தொய்யகம் வாண்முகப் புல்லகம் சூளாமணியொடு பொன்னரிமாலையும் தாழ்தரு கோதையும் தாங்கி முடிமிசை யாழின் கிளவி அரம்பைய ரொத்தாள் என்பது மேற்கோள்.

இனி அடிகளார் 76 ஆம் அடிமுதலாக 108 ஆம் அடிகாறும் அவர்தம் காலத்து மகளிர் நீராடிக் கோலங் கொள்ளுதற்குரிய அணிகளைத் தமது ஒப்பற்ற சொற்கோவையிலுருவாக்கித் தருதல் அக்காலத்து நந்தமிழகமிருந்த நாகரிகத் தன்மைக்கு நல்லதோர் எடுத்துக் காட்டாகத் திகழ்வதாம். ஈண்டு அடிகளார் கூறிய சொல்லையும் பொருளையும் பொன்னேபோற் போற்றி அவற்றைச் செய்யுள் வடிவில் தந்த புலவர் பெயரும் நூற்பெயரும் தெரிந்திலவாயினும் அடியார்க்கு நல்லார் மேற்கோளாகத் தந்திருக்கின்ற அச்செய்யுளும் புதை பொருள் ஆராய்ச்சி நிகழும் இக்காலத்தே போற்றி வைத்துக் கோடற்பாலனவே என்பது பற்றி அவற்றையும் எழுதலாயிற்று.

இனி, இவற்றை ஊடற் கோலமோ டிருந்தோன் உவப்ப ஆட்டி ஊட்டிச் செறீஇ அணிந்து செறித்து உடீஇத் தோளுக்கணிந்து அமை உற அணிந்து கரப்ப அணிந்து ஆரமோடணிந்து சிறுபுற மறைத்து அழகுற அணிந்து மாண்புற அணிந்து என இயைக்க.

மாதவியும் கோவலனும் கூடியும் ஊடியும் உவந்திருத்தல்

109-110 : கூடலும் ................ இருந்தோள்

(இதன் பொருள்) கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து - இவ்வாறு இனிதின் கோலங்கொண்டு கூடலையும் பின்னர்ச் செவ்வியறிந்து ஊடலையும் ஊடற் கோலத்தோடிருந்த அக்கோவலனுக்கு அளித்து; பாடு அமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள் - படுக்கை அமைந்த கூடும்பள்ளியின் கண்ணே மகிழ்ந்திருந்தவள் என்க.

(விளக்கம்) (75) ஊடற் கோலத்து இருந்தோன் உவப்பக் (106) கூடலையும் பின்னர் ஊடலையும் அவற்களித்து என்பதுபடக் கோவலன் என்பது சுட்டுமாத்திரையாய் நின்றது. கோவலன் ஊடியிருத்தலின் கூடலை முற்கூறல் வேண்டிற்று. துனியும் புலவியும் இல்லாயின் காமம், கனியும் கருக்காயு மற்று என்பதுபற்றி ஊடலும் அளித்தல் வேண்டிற்று. கூடியபின்னர் ஊடுதற்கு அவன்மாட்டுக் காரணம் இல்லையாகவும், காதல் கைம்மிகுதலால் நுண்ணியதொரு காரணமுளதாக வுட்கொண்டு அதனை அவன்மேலேற்றி அவள் ஊடுதல். இவ்வாறு ஊடுதலைத் திருக்குறளிற் புலவி நுணுக்கம் (132) என்னும் அதிகாரத்தான் உணர்க. மற்று அடியார்க்குநல்லார் எண்ணில் காமம் எரிப்பினும் மேற்செலாப் பெண்மையும் நாணும் அழிந்துவந்து குறையுற்றுக் கூடுந்துணையும் நீயிர் பிரிவாற்றியிருந்தீர்; அன்பிலீர் என ஊடுவது என ஈண்டைக் கேற்ப நுண்ணிதின் விளக்கினர். எண்ணில் காமம் எரிப்பினும் மேற்செலாப், பெண்ணின் மிக்கது பெண்ணலதில்லையே, எனவரும் சீவகசிந்தாமணிச் செய்யுள் (998) ஈண்டு நினையற்பாலது.

காதலி ஊடுவதே காதலனுக்குப் பேரின்பமாயிருத்தலால் அதனையும் அளித்தல் என்ற சொல்லால் குறித்தனர். என்னை? ஊடலுவகை எனத் திருவள்ளுவனார் குறியீடு செய்தலும் புலத்தலிற் புத்தேணாடுண்டோ என்பதும் காண்க.

இனி அடிகளார் மாதவி கூடற் கோலம் கோடலைப் பரக்கக்கூறினரேனும் மனையறம்படுத்த காதையிற் கூறியதினும் காட்டிற் சுருக்கமாக அவள் (ஈண்டு மாதவி) கூடிய கூட்டத்தை (ப்பற்றி விரித்துக் கற்பார்க்கும் காமவெறி யெழப் பாரித்துரையாமல்) கூடலும் ஊடலும் கோவலற்களித்து என ஒரே அடியிற் கூறியொழிந்த சான்றாண்மையை எத்துணைப் பாராட்டினும் தகும். கண்ணகியின் காதலனை மாதவி கைப்பற்றிக்கொண்டு செய்யுள் களியாட்டம் எல்லாம் கற்போர் நெஞ்சத்து அவள்பால் வெறுப்பையே உண்டாக்கும் என்பது கருதியே அடிகளார் இங்ஙனம் கூறியொழிந்தனர். என்னை! மற்று மாதவியோ ஏனைய பொதுமகளிரைப் போல்வாளல்லளே! ஒருதிறத்தால் அவள் கண்ணகியை ஒக்கும் கற்புடைத் தெய்வமே ஆவள் ஆகவே அவளைப் பொருட் பெண்டிர்க்குரிய கீழ்மை தோன்ற யாதும் கூறுதல் கூடாது. கூறின் ஓதுவார்க்கெல்லாம் அவள்பால் வெறுப்புணர்வே தோன்றுதல் ஒருதலையாம் என்று கருதியே அடிகளார் இவ்வாறு சுருக்கமாகக் கூறுவாராயினர். மற்று அங்ஙனமே கண்ணகியாரைப் பள்ளியறைக்கண் வானளாவப் புகழ்ந்து நலம் பாராட்டிய கோவலன் இந்த மாதவியைப் பற்றி யாண்டும் ஒரு புகழுரையேனும் கூறாதவண்ணம் அவன் பெருந்தகையையும் நுணுக்கமாகப் போற்றிச் செல்வதனையும் காண்கின்றோம். கோவலன் மாதவியை நலம் பாராட்டத் தொடங்கினால் அவன் கயமையே நம்மனோர்க்குப் புலப்படும் என்பதனை நுண்ணிதின் உணர்க.

மாதவி கடல்விளையாட்டைக் காண விரும்பிக் கோவலனுடன் போதல்

111 - 120 : உருகெழு ........... வையமேறி

(இதன் பொருள்) உவவுத் தலைவந்தென - இந்திரவிழாவிற்குக் கொடி எடுத்த நாள் முதலாக இருபத்தெட்டு நாளும் அவ்விழா நடந்த பின்னர்க் கொடியிறக்கி விழாவாற்றுப் படுத்த மறுநாள் உவாவந்தெய்தியதனாலே; உரு கெழு மூதூர் - பகைவர்க்கு அச்சத்தைப் பொருந்துவிக்கும் பழைய ஊராகிய அப்பூம்புகார் நகரத்தினின்றும்; பெருநீர் போகும் இரியல் மாக்களொடு - கடற்கரைக்கண் இடம் பிடித்தற்கு ஒருவரின் ஒருவர் முந்துற்று விரைந்து செல்கின்ற மாக்களோடு; மடல் அவிழ் கானல் கடல் விளையாட்டு காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி - இதழ் விரிகின்ற தாழை புன்னை முதலியவற்றையுடைய கழிக்கானல் பொருந்திய கடல் விளையாட்டைக் காண வேண்டும் என்னும் விருப்பத் தோடே கோவலன் உடன்பாட்டையும் வேண்டினளாக அவனும் அதற்குடம்பட்டமையாலே; பொய்கைத்தாமரைப் புள்வாய் புலம்ப-நீர்நிலைகளிலே தாமரைப் பூஞ்சேக்கையில் துயில்கின்ற பறவைகள் அச்சேக்கை நீங்குதலாற்றாமையான் வாய்விட்டுப் புலம்பவும்; வைகறை யாமம் வாரணம் காட்ட - இப்பொழுது வைகறைப் பொழுது என்பதனைக் கோழிச் சேவல்கள் தங்கூக்குரலாலே அறிவியா நிற்பவும்; வெள்ளி விளக்கம் நள் இருள் கடிய - அவ் வைகறையிற் செறிந்த இருளை வானத்தே தோன்றிய வெள்ளியாகிய விண்மீனொளி விலக்கவும் அக்காலத்தே; பேர் அணி அணிந்து வான வண்கையன் - மதாணி முதலிய பேரணிகலன்களை அணிந்துகொண்டு முகில் போலும் வண்மையுடைய கைகளையுடைய கோவலன்றானும்; அத்திரி ஏற - கோவேறு கழுதையின் மீதே ஏறாநிற்ப; தாரணி மார்பனொடு - மாலையணிந்த மார்பினையுடைய அக்காதலனோடு போதற்கு; மான் அமர் நோக்கியும் - மானினது நோக்கம் போன்ற நோக்கமுடைய அம்மாதவியும்; வையம் ஏறி - கொல்லாப்பண்டியில் ஏறி என்க.

(விளக்கம்) 111. 25 - அச்சம். நகரத்தின்கண் பன்னாள் நிகழ்ந்த (73) வானவன் விழவும் ஆடலும் அணியும் இழந்திருத்தலாலே அவ்வூர் உருகெழுமூதூர் ஆயிற்றெனினுமாம். உவவு - உவாநாள்; அஃதாவது நிறைமதிநாள். நிறைமதிநாள் கடலாடுதற் குரிய நாள் ஆதலின், 112. பெருநீர் போகும் இரியன் மாக்கள் என்றவாறு. இரியல் - விரைதல். 113. கானலையுடைய கடல் என்க. கானலிலிருந்து காண்டல் விருப்பொடு வேண்டி எனினுமாம். கடலில் மாக்கள் ஆடும் விளையாட்டுக் காண்டல் வேண்டி என்றவாறு. 144. வேண்டினளாக என்க. அதற்கிணங்க (119) வானவண்கையன் அத்திரி ஏற என ஒருசொல் வருவித்தோதுக.

இனி, ஈண்டு அடிகளார் மாதவியும் கோவலனும் கடல்விளையாட்டுக் காணப்புறப்படும் இக்காலம் அவர்கட்குப் போகூழ் உருத்து வந்தூட்டுங் காலமென்பதைக் குறிப்பாக அறிவுறுத்துவார் தமது சொல்லிலேயே தீயவாய்ப்புள் (தீநிமித்தம்) தோன்றச் செய்யுள் செய்வதனை நுண்ணிதின் உணர்க. என்னை? அவர்கள் 115. புள்வாய் புலம்பவும் 116. காட்டவும், 117. கடியவும் ஏறினர் என்பது காண்க. இவ்வாறு செய்யுள் செய்வது நல்லிசைப் புலவர் மரபு என்பது முன்னும் கூறினாம். 119. அத்திரி - கோவேறு கழுதை. இது குதிரை வகையினுள் ஒன்றென்பர். இதனை மன்னரும் ஊர்தியாகக் கொள்வர் என்பது கோவேறு கழுதை என்னும் அடையடுத்த அதன் பெயரே அறிவுறுத்தலுமறிக. வையம் - கூடாரப்பண்டி என்பாருமுளர்.

இதுவுமது

121-127 : கோடி ............... கழித்து

(இதன் பொருள்) கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை மாடம் மலி மறுகில் - கோடி என்னும் இலக்கத்தைப் பலப்பலவாக அடுக்கிக் கூறுதற்கியன்ற வளவிய நிதிக்குவியலையுடைய மாடங்கள் மிகுந்த தெருக்களையும் அங்காடித் தெருக்களையும் உடைய; மங்கலத்தாசியர் - மங்கலநாணையுடைய பணிமகளிர் சிலர்; மலர் அணி விளக்கத்து மணிவிளக்கு எடுத்த ஆங்கு - முன்னர் அந்தி மாலைப்பொழுதிலே மலர் அணிந்து ஏற்றி வைத்த நெய்விளக்குகளுடனே மாணிக்க விளக்குகளையும் கையிலெடுத்துப் போக வேறுசிலர் அவ்விடத்தே; அலர் கொடியறுகும் நெல்லும் வீசி - மலரையும் கொடிப்புல்லாகிய அறுகையும் நெல்லையும் சிந்திப்போக; தங்கலன் ஒலிப்ப இருபுடை மருங்கினும் திரிவனர் பெயரும் - இவ்வாறு அம்மகளிர் தமது சிலம்பு முதலிய அணிகலன்கள் ஒலி செய்யும்படி அத்தெருக்களின் இருபக்கங்களினும் திரிந்து போதற்கிடனான; திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து - திருமகள் வீற்றிருத்தற்கு இடனான பட்டினப் பாக்கத்தை நேராகச் சென்று கடந்து என்க.

(விளக்கம்) (இந்திர - 50) பட்டினப்பாக்கத்தில் அமைந்த ஆடற் கூத்தியர் இருக்கையினின்றும் மாதவியும் கோவலனும் கடற்கரை நோக்கிப் போகின்றார் ஆகலின் அப்பாக்கத்திலேயே அமைந்த பெருங்குடி வாணிகர் மாடமறுகினும் அவர்தம் பீடிகைத் தெருவினும் புக்குப் போக வேண்டுதலின் அவற்றை முற்படக்கூறுவாராயினர். இவ்விரண்டு தெருக்களும் வளைவின்றி மருவூர்ப்பாக்கங்காறும் திசைமுகந்து நேரே கிடத்தல் தோன்றச் செவ்வனம் கழித்து என்றார். 127. செவ்வனம் நேராக. இதற்குப் பிறரெல்லாம் பொருந்தாவுரை கூறினர்.

121-2. இந்திர......காதைக்கண் கூறியதற்கு இஃது எதிர்நிரல் நிறையாகக் கூறப்படுதலறிக. அங்குப் பீடிகைத்தெருவும் மாடமறுகும் கூறிப் பின்னர் ஆடற்கூத்தியர் இருக்கை கூறப்பட்டது. ஆதலின் அவ்விடத்தினின்றுஞ் செல்வோர் மாடமறுகினும் பீடிகைத் தெருவினும் செல்லுவது இன்றியமையாமை காண்க. பெருங்குடி வாணிகர் மாடமாதலின் அம்மாடங்களை, 121. கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை மாடம் என்றார். கோடி, எண்ணுவரம்பறியாக் கொழுநிதி என்றற்கு ஓரெண் குறித்தபடியாம். குப்பை-குவியல். இங்ஙனம் கொழுநிதி குவிந்து கிடத்தலின் இத்தெருக்களிரண்டனையும் ஒருசேரத் (127) திருமகளிருக்கை என்றார். இனி அங்குச் செல்லுங்கால் அவ்விரவின் முற்கூற்றில் மலர் அணிந்து ஏற்றிய நெய்விளக்கங்களையும் மணிவிளக்கங்களையும் சுமங்கலியராகிய பணிமகளிர் அகற்றி அவ்விடத்தே மலரும் பூவும் நெல்லும் தூவிச் செல்வோருடைய கலன்கள் ஒலிப்பனவாயின. ஏவற்சிலதியராகலின் மாடங்களினும் கடைகளினும் அங்குமிங்குச் சென்று மலர் முதலியன இடுவாராயினர் என்க. இதனால் இல்லறம் நிகழாத பண்டசாலைகளினும் அங்காடிகளினும் விளக்கேற்றி வைத்து வைகறைப் பொழுதில் அவ்விளக்கை அகற்றி மலரும் அறுகும் நெல்லும் இடும் வழக்கமுண்மையும் அங்ஙனம் செய்யும் மகளிர் (விதவைகள் அல்லாத) மங்கலமகளிராதல் வேண்டும் என்பதும் அறியற்பாலன.

இதுவுமது

128-133: மகரவாரி .............. மருங்குசென்றெய்தி

(இதன் பொருள்) மகர வாரி வளம் தந்து ஓங்கிய நகரவீதி நடுவண் போகி - கடலினது வளத்தைக் கொணர்தலாலே உயர்ச்சிபெற்ற தாழ்விலாச் செல்வர் வாழ்கின்ற நகரவீதியினூடே சென்று; கலம் தருதிருவின் புலம்பெயர் மாக்கள் வேலை வாலுகத்து - மரக்கலங்கள் தந்த செல்வங்களையுடைய தமது நாட்டைவிட்டு வந்துள்ள வேற்றுநாட்டு வணிகமாக்கள் கடற்கரையிடத்து மணன்மேடுகளிடத்தும்; விரிதிரைப் பரப்பின் - அலைவாய் மருங்கினும்; கூலம் மறுகில் - பல்வகைக் கூலங்களையும் குவித்துள்ள மறுகின் கண்ணும்; கொடி யெடுத்து நுவலும்-இன்ன சரக்கு ஈண்டுளதென்று அவற்றிற்கு அறிகுறியாகிய கொடிகளை உயர்த்துமாற்றால் அறிவித்தலையுடைய; மாலைச் சேரிமருங்கு சென்று எய்தி - ஒழுங்குபட்ட சேரிகளையும் கடந்துபோய் என்க.

(விளக்கம்) 128. மகரவாரி - கடல். அதன் வளம் - முத்தும் பவளமும் சங்கும் பிறவுமாம். கலந்தரு திரு - நீரின்வந்த நிமிர்பரி முதலியனவாகப் பலப்பலவாம். புலம் - நாடு. 131. வாலுகம் - மணன்மேடு. 132. கூலமறுகு - பல்வேறு கூலங்களையும் குவித்த மறுகு. இவையெல்லாம் மருவூர்ப்பாக்கத்துள்ளன என்பதை முன்னைக் காதையாலுணர்க. கொடியெடுத்து நுவலுதல், இன்ன இடத்து இன்ன சரக்குளது என்பதற்கு அறிகுறியாகிய கொடிகளை யுயர்த்துமாற்றால் அறிவித்தல். 133. மாலை - ஒழுங்கு.

இதுவுமது

134 - 150 : வண்ணமும் .......... கானல்

(இதன் பொருள்) வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும் பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும் - தொய்யில் முதலியன எழுதுதற்கியன்ற வண்ணக் குழம்புகளும் சந்தனமும் மலர்களும் பொற்சுண்ணமும் பண்ணிகார வகைகளும் என்னும் இவற்றை விற்போர் வைத்த விளக்குக்களும்; செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும் - சித்திரச் செய்தொழில் வல்ல பணித்தட்டார் பணி பண்ணுமிடங்களில் வைத்த விளக்குக்களும்; மோதகத்துக் காழியர் ஊழுறு விளக்கமும் - பிட்டு வாணிகர் நிரல்பட வைத்த விளக்குக்களும்; கார் அகல் கூவியர் குடக்கால் விளக்கமும் - கரிய அகலையுடைய அப்பவாணிகர் குடம்போற் கடைந்த தண்டில் வைத்த விளக்குக்களும்; நொடை நவில் மகடூஉக் கடைகெழு விளக்கமும் - பல பண்டங்களையும் விலைகூறி விற்கின்ற மிலேச்சமகளிர் தம் கடைகளில் வைத்த விளக்குக்களும்; இடைஇடை மீன்விலை பகர்வோர் விளக்கமும் - இடையிடையே மீன்விற்போர் வைத்த விளக்குக்களும்; இலங்குநீர் வரைப்பில் கலங்கரை விளக்கமும் - மொழிமாறுபட்ட வேற்று நாட்டிலிருந்து வருகின்ற மரக்கலங்கள் துறையறியாது ஓடுகின்றவற்றை இது துறையென்று அறிவித்து அழைத்தற்கிட்ட விளக்கும்; விலங்குவலைப் பரதவர் மீன் திமில் விளக்கமும் - மீன்களைக் குறுக்கிட்டு மறித்துப் படுக்கும் வலையையுடைய நெய்தனிலமாக்கள் தம் திமிலில் வைத்த விளக்குக்களும்; மொழி பெயர் தேத்தோர் ஒழியா விளக்கமும் - மொழி வேறுபட்ட நாட்டினின்றும் வந்துள்ள மாக்கள் வைத்த அவியா விளக்குக்களும்; கழிபெரும் பண்டங் காவலர் விளக்கமும் - மிகப்பெரிய பண்டங்களையுடைய பண்டசாலைகளைக் காக்கும் காவலர் இட்ட விளக்குக்களும்; எண்ணுவரம்பு அறியா இயைந்து ஒருங்கு ஈண்டி - ஆகிய எண்ணி இத்துணை என்று அறிதற்கியலாத இவ் விளக்குக்களெல்லாம் ஒருங்கே சேர்ந்து ஒளிபரப்புதலாலே; இடிக்கலப்பு அன்ன ஈர் அயிர் மருங்கில் கடிப்பகை காணும் காட்சியது ஆகிய - இடிக்கப்பட்ட மாவைக் கலந்து போகட்டாற் போன்ற மிகவும் நுண்ணிய மணற்பரப்பின்மீதே விழுந்ததொரு வெண்சிறு கடுகையும் காணத்தகுந்த காட்சியை யுடையதாகிய; வீங்கு நீர்ப்பரப்பின் விரை மலர்த் தாமரை மருதவேலியின் மாண்புறத் தோன்றும் - பெருகும் நீர்ப்பரப்பின்கண்ணே மணமுடைய மலராகிய தாமரை பூத்துத் திகழ்கின்ற மருதநிலப் பரப்பினும் அழகுறத் தோன்றா நின்ற; கைதை வேலி நெய்தலங் கானல் - தாழையை வேலியாகவுடைய நெய்தல் நிலத்துக் கழிக்கானலிடத்தே என்க.

(விளக்கம்) 134. சுண்ணம் - பொற்சுண்ணம் முதலியன. 135. பண்ணியம். பண்ணிகாரம் (தின்பண்டம்). பகர்தல் - விற்றல். 138. குடக்கால் - குடம்போன்று கடைந்த தண்டு. நொடை நவிலுதல் - விலை கூறுதல். கேட்போர் இல்வழியும் இப்பண்டம் இன்னவிலை கொண்மின்! என்று கூறுபவர் என்பதுதோன்ற நொடைநவில் மகடூஉ என்றார். மகடூஉ - மகளிர். 141. இலங்கு நீர்ப்பரப்பு - கடல். 142. விலங்குதல் - குறுக்கிடுதல். திமில் - தோணி வகையினுள் ஒன்று. 143. தேத்தோர் - தேயத்தோர். 146. இடி - நென் முதலியவற்றை இடித்த மா. மணலுக்குவமை. மணற்குவமையாதலின் (அடியார்க்) தெள்ளாத மா என்றார். ஈரயிர் மணலுமாம். ஈரயிர் என்புழி இருமை பெருமைப்பண்பும் குறிப்பதனால் அடியார்க்குநல்லார் பெரிதும் நுண்ணிய மணல் என்பார், மிகவும் நுண்ணிய மணல் என்றார்.

148-149. ஈண்டுக் கூறப்பட்ட விளக்குகள் தாமரை மலர்கள் போற்றோன்றுதலின் அந் நெய்தற்பரப்பு மருதப்பரப்புப் போன்றது என உவமையும் பொருளும் காண்க.

கடற்கரைக் கம்பலை

151-165: பொய்தல் ....... ஒலிப்ப

(இதன் பொருள்) பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி - தன் விளையாட்டுமகளிர் கூட்டத்தோடு கூடி மாதவியானவள் இக் காட்சிகளைக் கண்டு; நிரை நிரை எடுத்த புரைதீர் காட்சிய - வரிசை வரிசையாகக் குவிக்கப்பட்ட குற்றமற்ற காட்சியையுடைய; மலை பல் தாரமும் கடல் பல் தாரமும் வளம் தலைமயங்கிய துளங்கு கல இருக்கை - மலை தருகின்ற பல்வேறு பண்டங்களும் கடல் தருகின்ற பல்வேறு பண்டங்களும் ஆகிய வளங்கள் இடந்தோறும் கூடிக் கிடக்கின்ற அசைகின்ற மரக்கலங்களின் இருப்பிடமாகிய கடற் துறைமுகங்களிடமெங்கும்; அரசு இளங்குமரரும் உரிமைச் சுற்றமும் பரதகுமரரும் பல்வேறு ஆயமும் - மன்னர்மக்களாகிய இளங்காளையரும் அவருடைய உரிமைச் சுற்றமாகிய மகளிர் குழுவும் வணிகர் மக்களாகிய இளங்காளையரும் அவருடைய பரத்தை மகளிரும் பணித் தோழியருமாகிய பல்வேறு மகளிர் குழுக்களும்; ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும் தோடுகொள் மருங்கில் - ஆடல் மகளிரும் பாடன் மகளிரும் குழூஉக் கொண்டிருக்கின்ற இடங்கள்தோறும்; சூழ்தரல் எழினியும் - சூழவளைத்துக்கட்டிய திரைச்சீலைக் கூடாரங்களும் ஆகிய இவையெல்லாம்; விண்பொரு பெரும் புகழ்க் கரிகால் வளவன்-விசும்பென விரிந்த பெரும்புகழையுடைய கரிகாலன்; தண்பதம் கொள் தலைநாள் போல-காவிரியின்கண் புதுப்புனல் வந்துழி நீராட்டுவிழ வயர்கின்ற முதனாட்போல; வேறு வேறு கோலத்து வேறு வேறு கம்பலை - வேறுவேறு வகைப்பட்ட கோலங்களையுடைய வெவ்வேறு வகைப்பட்ட ஆரவாரங்களும்; சாறு அயர்களத்து - இத்திருவிழா விறுதிபெறும் இவ்விடத்தே; வீறுபெறத் தோன்றி - பெரிதும் சிறப்புற்றுத் தோன்றாநிற்ப; கடல்கரை மெலிக்கும் காவிரிப் பேர்யாற்று இடம்கெட ஈண்டிய - அவையே அன்றிக் கடலினது கரையைக் கரைத்து மெலியச்செய்கின்ற காவிரி என்னும் பேரியாறு கடலொடு கலக்கும் புகார் முகமெங்கும் வறிது இடமின்றாக ஒருசேர வந்து நெருங்கிய; நால்வகை வருணத்து - பால்வேறு தெரிந்த அந்தணர் முதலிய நால்வேறு வகைப்பட்ட வகுப்பினருடைய; அடங்காக் கம்பலை - அடக்க வொண்ணாத ஆரவாரங்கள் எல்லாம்; உடங்கு இயைந்து ஒலிப்ப - ஒருங்கே கூடிப் பேராரவாரமாய் ஒலியா நிற்ப என்க.

(விளக்கம்) 151. பொய்தலாயம் - விளையாட்டு மகளிர் குழு. பூங்கொடி - மாதவி. 152. புரை - குற்றம். 153. பல்தாரம், என்னுந்தொடர்நிலைமொழியீறு ஆய்தமாய்த் திரிந்து பஃறாரம் என்றாயிற்று; புணர்ச்சி விகாரம். இதனை, தகரம் வரும்வழி ஆய்தம் நிலையலும், புகரின் றென்மனார் புலமை யோரே எனவரும் தொல்காப்பியத்தான் (எழுத்து - புள்ளிமயங் - 74) அறிக. தாரம் - பல்வேறு பண்டம். பல்தாரம் என்புழி பல் என்னும் அடைமொழி மிகப்பல என்பதுகுறித்து நின்றது. 134. துளங்குதல் - அசைதல். கலவிருக்கை - மரக்கலம் நிற்குமிடம். அஃதாவது துறைமுகம். ஆகுபெயரால் துறைமுகத்துச் சோலையிடத்தைக் குறித்து நின்றது. 156. அரசகுமரர்க்கு உரிமைச் சுற்றம் கூறியாங்குப் பரதர் உரிமைச்சுற்றம் நீராடல் மரபன்மையிற் கூறாராயினர் என்பர் (அடியார்க்) ஆகவே, பரதகுமரர் ஆயமகளிருடன் சென்றனர் என்பது தோன்ற ஆயமகளிரும் என்றார். அவராவார் பரத்தை மகளிரும் அவர் தம் தோழிமாரும் பணிமகளிரும் என்க. இப்பரதகுமரரையே முன்னைக் காதையில் அடிகளார் நகையாடாயத்து நன்மொழி திளைத்து நகரப் பரத்தரொடு கோவலன் மறுகிற் றிரிந்தான் என்றோதினர். ஈண்டும் கோவலன் ஆயமகளிரோடே வருதலுமுணர்க. ஆயமும் பரத்தையரும் தோழியரும் குற்றேவன் மகளிரும் எனப் பலவகைப்படுதலின் பல்வேறாயமும் என்றார். 157. ஆடுகளமகளிர் - களத்தில் ஆடும் விறலிபர். பாடுகளமகளிர் - களத்தால் பாடும் பாடினமார். களம் - மிடறு. 158. தோடு -தொகுதி. 155-58 அரசிளங்குமரரும் உரிமைச் சுற்றமும் குமரரும் ஆயமும் ஆடுகள மகளிரும் தனித்தனியே தோடுகொண்டுள்ள இடங்களில் சூழ்தரு எழினி என்க. எழினி - திரைச்சீலையால் மறைக்கப்பட்ட கூடாரங்கள். அரசிளங்குமரர் முதலியோர் வேறு வேறு கோலமுடையராக - இவர்தம் குழுவினின்றும் எழும் கம்பலையும் வேறு வேறாக வீறுபெறத் தோன்றா நிற்ப. இத் தோற்றத்திற்குக் கரிகாலன் காவிரிப் புதுப்புனலாடும் நீராட்டுவிழவின் தோற்றம் உவமை என்க.

159. விண்பொரு பெரும்புகழ் - விசும்பை ஒத்த பெரும்புகழ்; (விரிந்த விசும்பு போல விரிந்த பெரும்புகழ்) இதற்கு இங்ஙனம் பொருள் காணமாட்டாது பிறரெல்லாம் பொருந்தா வுரை கூறினர். சாறயர் களம் - கடலாட்டுவிழா நிகழ்த்தும் இந்நெய்தற் பரப்பு. 160. தலை நாட்போல வீறுபெறத் தோன்றி என இயையும். சாறு அயர் களத்து என்பதனை உவமை யென்பாருமுளர். தண்பதம் கொள்ளும் - புதுப் புனலாடும்; வேறு வேறு கோலத்தோடு செய்யும் வேறு வேறு கம்பலை வீறுபெறத் தோன்றாநிற்ப அவை நால்வகை வருணத்து அடங்காக் கம்பலை யுடங்கியைந்து ஒலிப்ப என இயையும்.

மாதவி கோவலனொடு கடற்கரையில் வீற்றிருத்தல்

Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 23, 2012, 01:13:53 PM
166-174 : கடற் புலவு ............. மாதவிதானென்

(இதன் பொருள்) கடல் புலவு கடிந்த மடல் பூ தாழை - கடலினது புலால் நாற்றத்தையும் மாற்றி நறுமணம் பரப்புகின்ற மடல்கள் விரிகின்ற மலரையுடைய தாழைகளாலே; சிறை செய் வேலி அகவயின் - சிறையாகச் சூழப்பட்ட வேலியை யுடையதொரு தனியிடத்தினடுவே; ஆங்கு ஓர் புன்னை நீழல் புதுமணல் பரப்பில் - அவ்விடத்தே நிற்குமொரு புன்னையின் நீழலில் புதுமை செய்யப்பட்ட மணற் பரப்பிலே; ஓவிய எழினி சூழ உடன் போக்கி - சித்திரம் வரையப்பட்ட திரையைச் சுற்றி வளைத்து; விதானித்துப் படுத்த வெள்கால் அமளிமிசை - மேற்கட்டுங் கட்டியிடப்பட்ட யானைக் கோட்டாலியன்ற வெள்ளிய கால்களையுடைய கட்டிலின் மேலே; வருந்துபு நின்ற வசந்த மாலை கை-மெல்லிடை வருந்தப் பக்கலிலே நின்ற வசந்த மாலை என்னும் தோழி தன் கையிலேந்திய; திருந்து கோல் நல்யாழ் செவ்வனம் வாங்கி - திருத்தமுற்ற நரம்புகளையுடைய ஈரேழ் கோவை என்னும் இசை நலமுடைய யாழினை வாங்கு முறைமையோடு வாங்கி; கோவலன் தன்னொடு - ஆங்கு முன்னரே அமர்ந்திருந்த கோவலனோடு; கொள்கையின் இருந்தனள் - தானும் ஒரு கோட்பாட்டுடனே இனிதின் வீற்றிருந்தனள்; மாமலர் நெடுங்கண் மாதவி - அவள் யாரெனின் பெரிய மலர் போலும் கண்ணையுடையாள் என்று முன் கூறப்பட்ட அம் மாதவி என்னும் நாடகக் கணிகை என்றவாறு.

(விளக்கம்) 966. கடற்புலவு கடிந்த பூந்தாழை எனவே புலால் நாற்றத்தையும் மாற்றும் மாண்புடைய நறுமணம் பரப்பும் மலரை யுடைய தாழை என்பதாயிற்று. புலவும் எனல் வேண்டிய இழிவு சிறப்பும்மை தொக்கது. 167. சிறைசெய்தல் - தனிமைப் படுத்துதல். புதுமணற் பரப்பு என்றது முன்னரே பணிமாக்கள் பழமணன் மாற்றிப் புதுமணலாம்படி திருத்திய இடம் என்பது தோன்ற நின்றது. 169. கொள்கை - குறிக்கோள். அஃதாவது அந்த அழகிய சூழ்நிலையினூடே தனது செல்வமாகிய இசைக்கலையின் இன்பத்தைத் தன் காதலனோடு கூட்டுண்ணவேண்டும் என்னும் குறிக்கோள். அதற்குக் குறிப்பாகக் கால்கோள் செய்தற்கே வசந்தமாலையின் கையிலிருந்த திருந்துகோல் நல்லியாழைச் செவ்வனம் வாங்கினள் என்க. செவ்வனம் வாங்கியென்றது யாழை வாங்குமுன் அதனைக் கைகுவித்து வணங்கி வாங்கி என்றவாறு. என்னை? கலைவாணர் தங்கள் கருவியைக் கைக்கொள்ளுங்கால் அதனைக் கடவுட்டன்மை யுடையதாகக் கருதித் தொழுது கைக்கொள்ளுதல் மரபு. அம்மரபு இற்றை நாளினும் அருகிக் காணப்படும்.

இனி, அரங்கேற்று காதையில் பூம்புகார்ப் பொற்றொடி மாதவி தன் வாக்கினால் ஆடரங்கின்மிசை வந்து பாடி ஆடியபொழுது அவள் தன் கண்வலைப்பட்டு கோவலன் மாலை வாங்கி அவள் மனைபுகுந்தான் என்பார் அடிகளார், அங்கும் அவளை மாமலர் நெடுங்கண் மாதவி என்றே அழைத்தனர். அக் கண்வலையறுத்துப் புறப்படும் இற்றை நாளினும் அவள் மாமலர்க்கண் மாதவியாகவே இருந்தாள் என்பார். மாமலர்க்கண் மாதவி என்றேகுறித்தார். இருந்தும் என்செய, இன்று அவள் ஊழ்வினை வந்துருத்து ஊட்டும் என்றறிவுறுத்தல் இதனாற் போந்த பயன். முன்னர்க்கூடிய நாளின் அந்திமாலையைச் சிறப்பித்து இறுதியில் வெண்பாப் பாடியவர் இற்றை நாள் பிரிவு நாளாகலின் வெங்கதிரோன் வருகையை விதந்து ஈண்டும் ஒரு வெண்பா ஓதியருள்கின்றார் என்றுணர்க.

இனி இக்காதையை,

வெள்ளிமால்வரைக்கண் சேடிக்கண் விருந்தாட்டயரும் விஞ்சை வீரன், இடனுங் காண்குதும்; அமைதியுங் காண்குதும்; ஆடலுங் காண்குதும்; வணங்குதும் யாம் எனக் காட்டிக் காண்போன் காணாய்! மாதவி யிவளென வுரைத்து மகிழ்வெய்திய அவ் விஞ்சையனன்றியும் அந்தரத்துள்ளோர் வந்து காண்குறூஉம் விழவும் ஆடலும் கோலமும் கடைக்கொள இருந்தோன் உவப்ப ஆட்டி ஊட்டிச் செறீஇ அணிந்து செறித்து உடீஇத் தோளுக்கணிந்து அமைவுற அணிந்து கரப்ப அணிந்து ஆரமோடணிந்து சிறுபுறம் மறைத்து அழகுற அணிந்து மாண்புற அணிந்து அளித்து இருந்தோள்; உவவு வந்தென வேண்டினளாகிப் புலம்பக் காட்டக் கடிய அணிந்து ஏற ஏறிச் செவ்வனங்கழிந்து நடுவட்போகி மருங்கு சென்றெய்திப் பொருந்தி வாங்கிக் கோவலன் றன்னொடும் மாதவி வெண்கால் அமளிமிசை யிருந்தனள் என வினை யியைபு செய்க.

வெண்பாவுரை

வேலை மடற்றாழை ............. வெங்கதிரோன் தேர்

(இதன் பொருள்) காமர் தெளிநிற வெம் கதிரோன் தேர் - அழகிய தெளிந்த நிறமுடைய வெவ்விய சுடர்களையுடைய ஞாயிற்றுத் தேவனுடைய ஒற்றை ஆழித் தேரானது; வேலைத் தாழை மடலுள் பொதிந்த வெள் தோட்டு மாலைத் துயின்ற மணி வண்டு - கடற்கரையிலுள்ள தாழையினது புறவிதழ்களாகிய மடல்கள் தம்முள்ளே பொதிந்துள்ள அகவிதழ்களாகிய வெள்ளிய மடல்களினூடே முதல் நாள் அந்தி மாலையில் இன்றுயில் கொண்டிருந்த நீலமணி போலும் நிறமுடைய வண்டானது, காலை களிநறவம் தாதூத அற்றை நாள் விடியற் காலத்தே அவ்விடத்தை நீங்கிக் காலைப்பொழுதில் முகமலர்ந்து தன்னை வரவேற்கும் செந்தாமரை மலர் பிலிற்றும் மகிழ்ச்சி தருகின்ற தேனையும் தாதையும் நுகரும்படி; தோன்றிற்று - கீழ்த்திசையிலே தோன்றா நின்றது.

(விளக்கம்) அடிகளார் இவ்வெண்பாவினாலே, முன்னர் ஊழ்வினையான் மயங்கி மாமலர்க்கண் மாதவி மாலை வாங்கி அவள் மனைக்கட் சென்று இற்றைநாள் காறும் தன் தவறு காணாதவனாய்க் கிடந்தவன் இற்றைநாள் தன் தவறுணர்ந்து மாதவியைக் கைவிட்டுக் கண்ணகியின்பாற் சென்று அவள்தன் புன்முறுவல் பெற்று மகிழ்வதனைக் குறிப்பாக வோதியவாறாகக் கொள்க. காலைக் களிநறவம் தாதூத என்றதனால் செந்தாமரை மலரின்கண் சென்றென்பது பெற்றாம்.

கடலாடு காதை முற்றிற்று.
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 23, 2012, 01:24:05 PM
7. கானல் வரி

அஃதாவது - நெய்தலங்கானலின்கண் வெண்காலமளி மிசையிருந்து கானல்வரி என்னும் இசைப்பாவினைப் பாட அப்பாட்டின் வழியாக அவ்விருவர்க்கும் ஊழ்வினை உருத்துவந்தூட்டத் தொடங்கியதனைக் கூறும் பகுதி என்றவாறு. வரிப்பாடல் பிறவும் உளவாயினும் சிறப்புக்கருதி, கானல்வரி எனக் குறியீடு செய்தருளினர் என்றுணர்க.

(கட்டுரை)

அஃதாவது - பொருள் பொதிந்த உரைநடையா லியன்ற செய்யுள் என்றவாறு.

சித்திரப் படத்துள்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து
மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்புஎய்திப்
பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும்என்று
இத்திறத்துக் குற்றம்நீங்கிய யாழ்கையில் தொழுதுவாங்கி
பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல்
கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ்
நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய
எண்வகையால் இசைஎழீஇப்
பண்வகையால் பரிவுதீர்ந்து
மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள்
பயிர்வண்டின் கிளைபோலப் பல்நரம்பின் மிசைப்படர
வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல்
ஏர்உடைப் பட்டடைஎன இசையோர் வகுத்த
எட்டு வகையின் இசைக்கர ணத்துப்
பட்டவகைதன் செவியின்ஓர்த்(து)
ஏவலன், பின் பாணி யாதுஎனக்
கோவலன் கையாழ் நீட்ட, அவனும்
காவிரியை நோக்கினவும் கடல்கானல் வரிப்பாணியும்
மாதவிதன் மனம்மகிழ வாசித்தல் தொடங்குமன்.  1

வேறு (ஆற்று வரி)

திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அதுஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி.
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மங்கை மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி.   2

மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அதுஓச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி.
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மன்னும் மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி.   3

உழவர் ஓதை மதகுஓதை
உடைநீர் ஓதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி.
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன்தன்
வளனே வாழி காவேரி.   4

வேறு (சார்த்து வரி - முகச்சார்த்து)

கரியமலர் நெடுங்கண் காரிகைமுன்
கடல்தெய்வம் காட்டிக் காட்டி
அரியசூள் பொய்த்தார் அறன்இலர்என்று
ஏழையம்யாங்கு அறிகோம் ஐய
விரிகதிர் வெண்மதியும் மீன்கணமும்
ஆம்என்றே விளங்கும் வெள்ளைப்
புரிவளையும் முத்தும்கண்டு ஆம்பல்
பொதிஅவிழ்க்கும் புகாரே எம்மூர்.  5

காதலர் ஆகிக் கழிக்கானல்
கையுறைகொண்டு எம்பின் வந்தார்
ஏதிலர் தாமாகி யாம்இரப்ப
நிற்பதையாங்கு அறிகோம் ஐய
மாதரார் கண்ணும் மதிநிழல்நீர்
இணைகொண்டு மலர்ந்த நீலப்
போதும் அறியாது வண்டுஊச
லாடும் புகாரே எம்மூர்.   6

மோது முதுதிரையால் மொத்துண்டு
போந்துஅசைந்த முரல்வாய்ச் சங்கம்
மாதர் வரிமணல்மேல் வண்டல்
உழுதுஅழிப்ப மாழ்கி ஐய
கோதை பரிந்துஅசைய மெல்விரலால்
கொண்டுஓச்சும் குவளை மாலைப்
போது சிறங்கணிப்பப் போவார்கண்
போகாப் புகாரே எம்மூர்.   7

வேறு (முகம் இல் வரி)

துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல்உழுத
தோற்றம் மாய்வான்
பொறைமலி பூம்புன்னைப் பூஉதிர்ந்து நுண்தாது
போர்க்கும் கானல்
நிறைமதி வாள்முகத்து நேர்க்கயல்கண் செய்த
உறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மென்முலையே
தீர்க்கும் போலும்.   8

(கானல் வரி)

நிணம்கொள் புலால்உணங்கல் நின்றுபுள் ஓப்புதல்
தலைக்கீடு ஆகக்
கணம்கொள் வண்டுஆர்த்து உலாம்கன்னி நறுஞாழல்
கையில் ஏந்தி
மணம்கமழ் பூங்கானல் மன்னிமற்று ஆண்டுஓர்
அணங்குஉறையும் என்பது அறியேன் அறிவேனேல்
அடையேன் மன்னோ.   9

வலைவாழ்நர் சேரி வலைஉணங்கும் முன்றில்
மலர்கை ஏந்தி
விலைமீன் உணங்கல் பொருட்டாக வேண்டுஉருவம்
கொண்டு வேறுஓர்
கொலைவேல் நெடுங்கண் கொடுங்கூற்றம் வாழ்வது
அலைநீர்த்தண் கானல் அறியேன் அறிவேனேல்
அடையேன் மன்னோ.   10

வேறு (நிலைவரி)

கயல்எழுதி வில்எழுதிக் கார்எழுதிக் காமன்
செயல்எழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர்.
திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே
அம்கண்ஏர் வானத்து அரவுஅஞ்சி வாழ்வதுவே. 11

எறிவளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஓடும்
கறைகெழுவேல் கண்ணோ கடுங்கூற்றம் காணீர்.
கடுங்கூற்றம் காணீர் கடல்வாழ்நர் சீறூர்க்கே
மடம்கெழுமென் சாயல் மகளா யதுவே.  12

புலவுமீன் வெள்உணங்கல் புள்ஓப்பிக் கண்டார்க்கு
அலவநோய் செய்யும் அணங்குஇதுவோ காணீர்.
அணங்குஇதுவோ காணீர் அடும்புஅமர்த்தண் கானல்
பிணங்குநேர் ஐம்பால்ஓர் பெண்கொண் டதுவே.  13

வேறு (முரிவரி)

பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே
பழுதுஅறு திருமொழியே பணைஇள வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்இணையே
எழுதுஅரு மின்இடையே எனைஇடர் செய்தவையே. 14

திரைவிரி தருதுறையே திருமணல் விரிஇடமே
விரைவிரி நறுமலரே மிடைதரு பொழில்இடமே
மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
இருகயல் இணைவிழியே எனைஇடர் செய்தவையே. 15

வளைவளர் தருதுறையே மணம்விரி தருபொழிலே
தளைஅவிழ் நறுமலரே தனிஅவள் திரிஇடமே
முளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமே
இளையவள் இணைமுலையே எனைஇடர் செய்தவையே. 16

வேறு (திணை நிலைவரி)

கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர்
உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும்
மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்
இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய்.  17

கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை
நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும்
வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல
நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய்.  18

ஓடும் திமில்கொண்டு உயிர்க்கொள்வர் நின்ஐயர்
கோடும் புருவத்து உயிர்க்கொல்வை மன்நீயும்
பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து
வாடும் சிறுமென் மருங்குஇழவல் கண்டாய்.  19

வேறு

பவள உலக்கை கையால் பற்றித்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
குவளை அல்ல கொடிய கொடிய   20

புன்னை நீழல் புலவுத் திரைவாய்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
கொன்னே வெய்ய. கூற்றம் கூற்றம்.  21

கள்வாய் நீலம் கையின் ஏந்திப்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
வெள்வேல் அல்ல. வெய்ய வெய்ய.  22

வேறு

சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்
ஊர்திரை நீர்வேலி உழக்கித் திரிவாள்பின்
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்.  23

(கட்டுரை)

ஆங்கு, கானல்வரிப் பாடல்கேட்ட மான்நெடுங்கண் மாதவியும்
மன்னும்ஓர் குறிப்புஉண்டுஇவன் தன்நிலை மயங்கினான்எனக்
கலவியால் மகிழ்ந்தாள்போல் புலவியால் யாழ்வாங்கித்
தானும்ஓர் குறிப்பினள்போல் கானல்வரிப் பாடல்பாணி
நிலத்தெய்வம் வியப்புஎய்த நீள்நிலத்தோர் மனம்மகிழக்
கலத்தொடு புணர்ந்துஅமைந்த கண்டத்தால் பாடத்தொடங்கும்மன். 24

வேறு (ஆற்று வரி)

மருங்கு வண்டு சிறந்துஆர்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்தாய் வாழி காவேரி.
கருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி. 25

பூவர் சோலை மயில்ஆலப் புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகுஅசைய நடந்தாய் வாழி காவேரி.
காமர் மாலை அருகுஅசைய நடந்த எல்லாம் நின்கணவன்
நாம வேலின் திறம்கண்டே அறிந்தேன் வாழி காவேரி. 26

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாய்ஆகி
ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாய் வாழி காவேரி.
ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாது ஒழுகல் உயிர்ஓம்பும்
ஆழி ஆள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி. 27

வேறு (சார்த்து வரி)

தீங்கதிர் வாள்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வா வேனும்
வாங்கும்நீர் முத்துஎன்று வைகலும் மால்மகன்போல் வருதிர் ஐய
வீங்குஓதம் தந்து விளங்குஒளிய வெண்முத்தம் விரைசூழ் கானல்
பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும் புகாரே எம்மூர்.  28

மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார் செங்கை
இறைவளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம்யாங்கு அறிகோம் ஐய
நிறைமதியும் மீனும் எனஅன்னம் நீள்புன்னை அரும்பிப் பூத்த
பொறைமலிபூங் கொம்புஏற வண்டுஆம்பல் ஊதும் புகாரே எம்மூர்.  29

உண்டாரை வெல்நறா ஊண்ஓழியாப் பாக்கத்துள் உறைஒன்று இன்றித்
தண்டாநோய் மாதர் தலைத்தருதி என்பதுயாங்கு அறிகோம் ஐய
வண்டல் திரைஅழிப்பக் கையால் மணல்முகந்து மதிமேல் நீண்ட
புண்தோய்வேல் நீர்மல்க பரதர் கடல்தூர்க்கும் புகாரே எம்மூர்.  30

வேறு (திணை நிலைவரி)

புணர்த்துணையோடு ஆடும் பொறிஅலவன் நோக்கி
இணர்த்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி
உணர்வுஒழியப் போன ஒலிதிரைநீர்ச் சேர்ப்பன்
வணர்சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால்.  31

தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்.  32

புன்கண்கூர் மாலைப் புலம்பும்என் கண்ணேபோல்
துன்பம் உழவாய் துயிலப் பெறுதியால்
இன்கள்வாய் நெய்தால்நீ எய்தும் கனவினுள்
வன்கணார் கானல் வரக்கண்டு அறிதியோ?  33

புள்இயல்மான் தேர்ஆழி போன வழிஎல்லாம்
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எஞ்செய்கோ?
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எம்மோடுஈங்கு
உள்ளாரோடு உள்ளாய் உணராய்மற்று எஞ்செய்கோ? 34

நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்க்கின்ற ஓதமே
பூந்தண் பொழிலே புணர்ந்துஆடும் அன்னமே
ஈர்ந்தண் துறையே இதுதகாது என்னீரே.  35

நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்வாழி கடல்ஓதம்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்மற்(று) எம்மொடு
தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் வாழி கடல்ஓதம்.  36

வேறு (மயங்கு திணை நிலைவரி)

நன்நித் திலத்தின் பூண்அணிந்து நலம்சார் பவளக் கலைஉடுத்துச்
செந்நெல் பழனக் கழனிதொறும் திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
புன்னைப் பொதும்பர் மகரத்திண் கொடியோன் எய்த புதுப்புண்கள்
என்னைக் காணா வகைமறத்தால் அன்னை காணின் என்செய்கோ? 37

வாரித் தரள நகைசெய்து வண்செம் பவள வாய்மலர்ந்து
சேரிப் பரதர் வலைமுன்றில் திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
மாரிப் பீரத்து அலர்வண்ணம் மடவாள் கொள்ளக் கடவுள்வரைந்து
ஆர்இக் கொடுமை செய்தார்என்று அன்னை அறியின் என்செய்கோ?  38

புலவுற்று இரங்கி அதுநீங்கப் பொழில்தண் டலையில் புகுந்துஉதிர்ந்த
கலவைச் செம்மல் மணம்கமழத் திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
பலஉற்று ஒருநோய் திணியாத படர்நோய் மடவாள் தனிஉழப்ப
அலவுற்று இரங்கி அறியாநோய் அன்னை அறியின் என்செய்கோ? 39

வேறு

இளைஇருள் பரந்ததுவே எல்செய்வான் மறைந்தனனே
களைவுஅரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவே
தளைஅவிழ் மலர்க்குழலாய் தணந்தார்நாட்டு உளதாம்கொல்
வளைநெகிழ எரிசிந்தி வந்தஇம் மருள்மாலை?  40

கதிரவன் மறைந்தனனே கார்இருள் பரந்ததுவே
எதிர்மலர் புரைஉண்கண் எவ்வநீர் உகுத்தனவே
புதுமதி புரைமுகத்தாய் போனார்நாட்டு உளதாம்கொல்
மதிஉமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம் மருள்மாலை? 41

பறவைபாட்டு அடங்கினவே பகல்செய்வான் மறைந்தனனே
நிறைநிலா நோய்கூர நெடுங்கண்நீர் உகுத்தனவே
துறுமலர் அவிழ்குழலாய் துறந்தார்நாட்டு உளதாம்கொல்
மறவையாய் என்உயிர்மேல் வந்தஇம் மருள்மாலை? 42

வேறு (சாயல் வரி)

கைதை வேலிக் கழிவாய் வந்துஎம்
பொய்தல் அழித்துப் போனார் ஒருவர்
பொய்தல் அழித்துப் போனார் அவர்நம்
மையல் மனம்விட்டு அகல்வார் அல்லர்.  43

கானல் வேலிக் கழிவாய் வந்து
நீநல்கு என்றே நின்றார் ஒருவர்
நீநல்கு என்றே நின்றார் அவர்நம்
மான்நேர் நோக்கம் மறப்பார் அல்லர்.  44

அன்னம் துணையோடு ஆடக் கண்டு
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்
நென்னல் நோக்கி நின்றார் அவர்நம்
பொன்நேர் சுணங்கிற் போவார் அல்லர்.  45

வேறு (முகம் இல் வரி)

அடையல் குருகே அடையல்எம் கானல்
அடையல் குருகே அடையல்எம் கானல்
உடைதிரைநீர்ச் சேர்ப்பற்கு உறுநோய் உரையாய்
அடையல் குருகே அடையல்எம் கானல்.  46

வேறு (காடுரை)

ஆங்கனம் பாடிய ஆயிழை பின்னரும்
காந்தள் மெல்விரல் கைக்கிளை சேர்குரல்
தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசைஎழீஇப்
பாங்கினில் பாடிஓர் பண்ணும் பெயர்த்தாள்.  47

வேறு (முகம் இல் வரி)

நுளையர் விளரி நொடிதரும்தீம் பாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாய்மன் நீயேல்
கொளைவல்லாய் என்ஆவி கொள்வாழி மாலை.  48

பிரிந்தார் பரிந்துஉரைத்த பேர்அருளின் நீழல்
இருந்துஏங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மாலை
உயிர்ப்புறத்தாய் நீஆகில் உள்ஆற்றா வேந்தன்
எயில்புறத்து வேந்தனோடு என்ஆதி மாலை.  49

பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ
வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை
மாலைநீ ஆயின் மணந்தார் அவர்ஆயின்
ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை.  50

வேறு

தீத்துழை வந்தஇச் செல்லல் மருள்மாலை
தூக்காது துணிந்தஇத் துயர்எஞ்சு கிளவியால்
பூக்கமழ் கனலில் பொய்ச்சூள் பொறுக்க என்று
மாக்கடல் தெய்வம்நின் மலர்அடி வணங்குதும்.  51

வேறு (கட்டுரை)

எனக்கேட்டு,
கானல்வரி யான்பாடத் தான்ஒன்றின்மேல் மனம்வைத்து
மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்என
யாழ்இசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவந்து உருத்ததுஆகலின்
உவவுஉற்ற திங்கள்முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்ப்
பொழுதுஈங்குக் கழிந்ததுஆகலின் எழுதும்என்று உடன்எழாது
ஏவலாளர் உடஞ்சூழக் கோவலன்தான் போனபின்னர்,
தாதுஅவிழ் மலர்ச்சோலை ஓதைஆயத்து ஒலிஅவித்துக்
கையற்ற நெஞ்சினளாய் வையத்தி னுள்புக்குக்
காதலனுடன் அன்றியே மாதவிதன் மனைபுக்காள்
ஆங்கு,
மாயிரு ஞாலத்து அரசு தலைவணக்கும்
சூழி யானைச் சுடர்வாள் செம்பியன்
மாலை வெண்குடை கவிப்ப
ஆழி மால்வரை அகவையா எனவே.  52

உரை

மாதவியின் யாழ் மாண்பு - நூலாசிரியர் கூற்று

1-4 : சித்திரப்படத்துள் .............. வாங்கி

(இதன்பொருள்:) சித்திரம் படத்துள் புக்கு - ஓவியம் பொறிக்கப்பட்ட பல்வேறு வண்ணத்தாற் றிகழும் துகிலாலியன்ற உறையினுட் புகுந்து; செழுங் கோட்டின் மலர் புனைந்து - அழகினால் வளமுடைத்தாகிய தனது கோட்டின் உச்சியிலே நறுமண மலர் மாலை சூட்டப் பெற்று விளங்குவதாலே; மைத் தடங்கண் மணமகளிர் கோலம் போல் வனப்பு எய்தி - மை எழுதிய பெருவிழிகளையுடைய புதுமணம் புகுதும் மகளிருடைய திருமணக் கோலம் போன்று காண்போர் கண்கவரும் பேரழகு பெற்று; பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும் என்று இத் திறத்துக் குற்றம் நீங்கிய - பத்தரும் தண்டும் முறுக்காணிகளும் நரம்புகளும் பிறவுமாகிய தன் உறுப்புக்களின் திறத்திலே குற்றம் சிறிதுமில்லாத; யாழ் - வசந்தமாலை கையிலிருந்த தனது யாழினை; தொழுது வாங்கி - கைகுவித்துத் தொழுது தனதிருகைகளாலும் வாங்கிக்கொண்டு, வெண்கால் அமளிமிசை கோவலன் றன்னோடு இன்னிசையின்பம் கூட்டுணவேண்டும் என்னும் கொள்கையோடிருந்த அம் மாமலர் நெடுங்கண் மாதவி என்பாள் பின்னர் என்க.

(விளக்கம்) முன்னைக் காதையில் (கடலாடு. 171-2) வசந்த மாலைகளைத் திருந்துகோல் நல்லியாழ் செவ்வனம் வாங்கி என்றோதிய அடிகளார் மீண்டும் அந்நிகழ்ச்சியையே கானல்வரி என்னும் இக் காதைக்குத் தோற்றுவாயாக்கித் தொடங்குகின்றார், அஃதெற்றுக் கெனின் அந்த யாழினது சிறப்பினையும் மாதவி அதனை இசை கூட்டுந் தன்மையினையும் விதந்தோதற் பொருட்டென்க.

ஈண்டு அடிகளார் யாழின் தோற்றத்திற்குப் புதுமணக் கோலம் பூண்ட மகளிரை உவமையாக்குதலின் அவர் கூறும் யாழ் இக்காலத்தே யாழ்ப்புலவர் கைக்கொண்டுள்ள யாழ்போலவே இருந்திருத்தல் வேண்டும் என்பது தேற்றம். தவத்திரு விபுலானந்த அடிகளார் வளைந்த காம்பையுடைய அகப்பை வடிவில் சித்திரித்துக் காட்டுகின்ற யாழ் உறையிற் புகுத்திப் பார்க்குமிடத்து யாதானுமொரு மூடையின் வடிவமாகத் தோன்றுவதல்லது மணமகளிரின் கோலம்போல் வனப்புடைத்தாகக் காணப்படா தென்பதனை அவர் யாழ் நூலிற் காட்டியுள்ள யாழ் வடிவங்களை நோக்கியுணர்க. பேரறிஞர் ஒருவர் பெரிதும் முயன்று ஆராய்ந்து எழுதிய பாணர் கைவழி என்னும் யாழ் நூலில் சிலப்பதிகாரக் காலத்து யாழ் இற்றை நாளிற் காணப்படும் யாழ் போலவே இருந்தது என முடிவு செய்துள்ளார். அவர்க்குத் தமிழுலகம் பெரிதும் நன்றி செலுத்தற் பாலதாம். அறிய விரும்புவோர் அந்நூலையோதி அறிக. ஈண்டுரைப்பின் உரை விரியுமென்றஞ்சி விடுத்தோம்.

இனி, அடிகளார் கூறியாங்கே முடத்தாமக் கண்ணியார் என்னும் நல்லிசைப்புலவர் தாமும் மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன அஃதாவது புதுமணக் கோலம் பொலிவுபெற்ற மாதரை ஒப்பனை செய்து கண்டாலொத்த வனப்புடைய யாழ் என ஓதியுள்ளார் (பொருநராற்றுப் படை-19)

1. சித்திரப்படம் - ஓவியம் பொறித்த வண்ணத் துகிலாலியன்ற உறை. இதற்கு மணமகளிர் உடுத்திய பூந்துகில் உவமை. கோடு யாழ்த்தண்டு. கோட்டின் உச்சியில் மலர்புனைந்து என்றவாறு. 3. பத்தர் முதலிய நான்கும்யாழின்கட் சிறந்த உறுப்புக்களாதலான் அவற்றையே கூறி யொழிந்தார். யாழ் உறுப்புக்கள் பத்தர் முதலாகப் பதினெட்டுள என்ப. பத்தர் - பத்தல்; இக்காலத்தார் குடம் என்பர். நரம்பினது ஒலியைப் பெருக்கிப் பெரிதும் இனிமையுடையதாய்ச் செய்யும் உறுப்பாகலின் இது சிறந்த உறுப்பாயிற்று கோடு - தண்டு. இஃது அழகினாற் சிறந்திருத்தலைச் செழுங்கோடு என்பதனாற் குறித்தார். என்னை? நுணங்கா நுவரிய நுண்ணீர் மாமைக் களங்கனி யன்ன கதழ்ந்து கிளர்உருவின் வணர்ந்தேந்து கோடு என்பவாகலின் (மலைபடு 35-37) என்க.

ஆணி யாழில் துரப்பமை ஆணி யென்றும் சுள்ளாணி என்றும் இருவகை ஆணிகள் உள, ஈண்டுக் கூறியது நரம்புகளை முடுக்கும் துரப்பாணியை. அளைவாழ் அலவன் கண்கண்டன்ன துளைவாய்தூர்ந்த துரப்பமை ஆணி எனப் பொருநராற்றுப் படையிற் கூறப்படும் ஆணியும் இது. நரம்பு - இசையைப் பிறப்பிக்கும் யாழ் நரம்புகள். இவ்வுறுப்புக்கள் குற்றமுடையனவாயின் இன்னிசை பிறவாது. இவற்றின் குற்றம் குண முதலியன அரங்கேற்று காதைக்கண் கூறப்பட்டன. யாழின்கண் மாதங்கி என்னும் கலைத்தெய்வம் வீற்றிருக்கும் கலைவாணர் கொள்கை ஆதலின் 4. தொழுது வாங்கினள் என்க.

மாதவி எண்வகையால் இசைநலன் ஆராய்தல்

5-9 : பண்ணல் ............. பரிவுதீர்ந்து

(இதன்பொருள்:) பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் கண்ணியசெலவு விளையாட்டுக் கையூழ் நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய - இசை நூலோரால் பண்ணல்முதலாகக் குறும் போக்கு ஈறாக நூலிற் கூறி நிறுவிய; எண்வகையால் இசை எழீஇ - எண்வகைச் செயலால் அந்த யாழ் நரம்பினை ஆராய்ந்து பண்ணுறுத்தி நரம்புகளிலே இசைகளைப் பிறப்பித்து; பண்வகையால் பரிவுதீர்ந்து - நால்வகைப் பண் வகைகளானும் குற்றமின்மை தெளிந்து; என்க.

(விளக்கம்) 5-8. பண்ணல் முதலிய தொழில்கள் எட்டும் யாழ் நரம்புகளில் இசை பிறப்பிக்குந் தொழில்களாம். அவற்றுள்,

(1) பண்ணலாவது - பாடநினைத்த பண்ணுக்கு இணைகிளை பகை நட்பான நரம்புகள் பெயரும் தன்மை மாத்திரை அறிந்து வீக்குதல்.

(2) பரிவட்டணையாவது - அங்ஙனம் வீங்கின நரம்பை அகவிரலாலும் புறவிரலாலும் கரணஞ்செய்து (வருடி) தடவிப் பார்த்தல்.

(3) ஆராய்தலாவது - ஆரோகண அவரோகண வகையால் இசையைத் தெரிவது.

(4) தைவரலாவது - அநுசுருதி யேற்றுதல் (வழியிசை சேர்த்தல்).

(5) செலவாவது - ஆளத்தியிலே (இராக ஆலாபனத்தில்) நிரப்பப் பாடுதல்.

(6) விளையாட்டாவது - பாட நினைத்த வண்ணத்தில் சந்தத்தை விடுதல்.

(7) கையூழாவது - வண்ணத்திற் செய்த பாடலெல்லாம் இன்பமாகப் பாடுதல்.

( 8) குறும்போக்காவது - குடகச் செலவும் துள்ளற் செலவும் பாடுதல். இவை சிந்தாமணியில் 657 ஆம் செய்யுள் உரையில் ஆசிரியர் நச்சினார்க்கினியர் தந்த விளக்கங்களாம். இனி, நிரலே இவற்றிற்குச் சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் தரும் நூற்பாக்கள் வருமாறு :

வலக்கைப் பெருவிரல் கால் கொளச் சிறுவிரல். விலக்கின்றிளி வழி கேட்டும் ..... இணைவழி யாராய்ந்து, இணை கொள முடிப்பது பண்ணலாகும் எனவும், பரிவட்டணையி னிலக்கணந் தானே. மூவகை நடையின் முடிவிற்றாகி. வலக்கை யிருவிரல் வனப்புறத் தழீஇ, இடக்கை விரலி னியைவதாகத் தொடையொடு தோன்றியும் தோன்றாதாகியும் நடையொடு தோன்றும் நயத்த தாகும் எனவும், ஆராய்தலென்ப தமைவரக் கிளப்பிற் - குரன்முத லாக இணைவழி கேட்டும் - இணையிலாவழிப் பயனொடு கேட்டும் - தாரமும் உழையுந் தம்முட்கேட்டும் - குரலும் இளியும் தம்முட் கேட்டும் துத்தமும் விளரியும் துன்னறக் கேட்டும் விளரி கைக்கிளை விதியுளிக் கேட்டும் தளராதாகிய தன்மைத்தாகும் எனவும், தைரைலென்பது சாற்றுங் காலை மையறு சிறப்பின் மனமகிழ் வெய்தித் தொடையொடு பட்டும் படாஅ தாகியும் நடையொடு தோன்றி யாப்புநடை யின்றி ஓவச் செய்தியின் வட்டணை யொழுகிச் சீரேற் றியன்றும் இயலா தாகியும் நீரவாகும் நிறைய வென்க எனவும், செலவெனப் படுவதன் செய்கை தானே - பாலை பண்ணே திறமே கூடமென - நால்வகை யிடத்து நயத்த தாகி - இயக்கமும் நடையும் எய்திய வகைத்தாய்ப் - பதினோராடலும் பாணியுமியல்பும் - விதிநான்கு தொடர்ந்து விளங்கிச்செல் வதுவே எனவும், கையூழென்பது கருதுங் காலை - எவ்விடத் தானு மின்பமுஞ் சுவையும் - செவ்விதிற் றோன்றிச் சிலைத்துவர லின்றி - நடை நிலை திரியாது நண்ணித் தோன்றி - நாற்பத் தொன்பது வனப்பும் வண்ணமும் பாற் படத் தோன்றும் பகுதித் தாகும். எனவும், துள்ளற் கண்ணும் குடக்குத் துள்ளும் தள்ளா தாகிய வுடனிலைப் புணர்ச்சி - கொள்வன வெல்லாம் குறும்போக் காகும். எனவும் வரும். 9. கண்ணிய - கருதிய (செலவு) ; 7. நண்ணிய - அணுகிய. (குறும் போக்கு)

9. பண்வகை - ஈரிரு பண்ணும் எழுமூன்று திறனும் பிறவுமாம். பரிவு - குற்றம். தீர்ந்து - தீர்ந்துள்ளமை தெரிந்து என்றவாறு.

இசையோர் வகுத்த எண்வகை இசைக்கரணங்கள்

10-16 : மரகதமணி ............. செவியினோர்த்து

(இதன்பொருள்:) மரகதமணித் தாள் செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள் - மரகதமணி அழுத்திய கடைசெறி என்னும் மோதிரஞ் செறிக்கப்பட்ட அழகிய காந்தட் பூப்போலும் மெல்லிய விரல்கள்; பயிர் வண்டின் கிளைபோல - இசை முரலாநின்ற வண்டினம் போன்று ; பல் நரம்பின் மிசைப்படர - பலவாகிய இசை நரம்புகளின் மேலே அங்குமிங்குமாய்த் திரியாநிற்ப; வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல் சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல் ஏருடைப்பட்டடை என - வார்தலும் வடித்தலும் உந்தலும் உறழ்தலும் தாளத்தோடே உருட்டலும் தெருட்டலும் அள்ளலும் எழுச்சியுடைய பட்டடையும் என்று ; இசையோர் வகுத்த எட்டுவகையின் இசைக்கரணத்து - இசைநூலோர் வகுத்துக் கூறிய எட்டுவகையினையுடைய இசைத் தொழில்களாலே; பட்டவகை தன் செவியின் ஓர்த்து - பிறந்த இசைவகையினைத் தன் எஃகுச் செவியாலே கேட்டுணர்ந்து ; என்க.

(விளக்கம்) 10. மரகதமணித்தாள் என்பது ஒருவகை மணிமோதிரம். இதனியல்பினை முன்னைக் காதையில் 97 வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி என அடிகளார் கூறியதனையும் அதன் உரையையும் நோக்கி யறிக. 11. பயிர் வண்டின் : வினைத்தொகை. பயிர்தல்-ஈண்டு இசைமுரலுக லென்க. கிளை - இனம். பதினான்கு நரம்புகளாகலின் பன்னரம்பு என்றார் (நரம்பு - ஈண்டு மெட்டு.)

12. 14. வார்தல் - சுட்டுவிரற் செய்தொழில்; வடித்தல் - சுட்டுவிரலும்பெருவிரலும் கூட்டிநரம்பை அகமும் புறமும் ஆராய்தல்; உந்தல் நரம்புகளைத் (தெறித்து) உந்தி வலிவிற்பட்டதும், மெலிவிற்பட்டதும், நிரல்பட்டதும், நிரலிழிபட்டதும் என்றறிதல். உறழ்தல் - ஒன்றிடையிட்டும் இரண்டிடையிட்டும் ஆராய்தல். உருட்டல் - இடக்கைச் சுட்டுவிரல் தானே யுருட்டலும், வலக்கைச் சுட்டுவிரல் தானே யுருட்டலும், சுட்டொடு பெருவிரற் கூட்டி யுருட்டலும், இருவிரலும் இயைந்துடன் உருட்டலும் ஆம். தெருட்டல் - உருட்டி வருவதொன்றேயாம். இங்ஙனம் கூறுவர் அரும்பதவுரையாசிரியர். அள்ளல் பட்டடை என்பனவற்றிற்கு விளக்கம் கிடைத்தில. ஆயினும், பட்டடை என்பது இளிக்கிரமத்தில் இசையை வைப்பது எனலாம். என்னை? வண்ணப்பட்டடை யாழ் மேல் வைத்து (63) எனவரும் அரங்கேற்றுகாதைக்கண் இளிக்கிரமத்தினாலே பண்களை யாழ் மேல் வைத்து எனப் பழைய உரையாசிரிய ரிருவரும் கூறுவராதலின் என்க.

மாதவி வேண்டுகோட் கிணங்கிக் கோவலன் யாழ் வாசித்தல்

17-20: ஏவலன்..............தொடங்குமன்

(இதன்பொருள்:) அன்பின் பணி யாது ஏவல் என - பின்னர்க் கோவலனை நோக்கி இனி அன்புடையீர்! யான் செய்யக்கடவ பணி யாதோ? ஏவி யருள்க என்று கூறுவாளாய் மாதவி; யாழ் கோவலன் கை நீட்ட - அத்திருந்துகோல் நல்யாழினைக் கோவலன் கையிற் கொடாநிற்ப; அவனும் - அக்கோவலன்றானும் ஆர்வத்துடன் யாழை வாங்கியவன்; மாதவி மனமகிழக் காவிரியை நோக்கினவும் கடற்கானல்வரிப் பாணியும் வாசித்தல் தொடங்கும் மன் - அம் மாமலர் நெடுங்கண் மாதவியினது நெஞ்சம் பெரிதும் மகிழ்தல் வேண்டிக் காவிரியைக் கருதிய வரிப்பாடல்களையும் கடற்கானலைக் கருதிய வரிப்பாடல்களையும் யாழ்மேல் வைத்து இசைக்கத் தொடங்கினான்; என்க.

(விளக்கம்) 17. அன்பின் பணியாது ஏவல் என மாறுக. அன்பே! நின் பணி யாது என்றவாறு. முன்னிலைக்கண் படர்க்கை வந்தது. ஏவல் - ஏவுக: அல்லீற்று வியங்கோள் உடம்பாட்டின்கண் வந்தது; மக்கட் பதடி எனல் என்புழிப் போல, ஏவலன் பின்பணி யாதென கண்ணழித்துக் கொண்டு அரும்பதவுரையாசிரியர் இப்பொழுது இதனை வாசியென்று விதிக்கின்றேனல்லேன்; வாசிக்குந்தாள மியாதென்று யான் அறியலுறுகின்றேன் என்பாள் போலக்கொடுத்தாள் என்க, எனவும் ஏவலன் : தன்மை ஒருமை என்றும் விளக்கினர். மேலும், கோவலன் கை யாழ் நீட்ட என்பதற்கு யாழைத் திருத்தித் தான் முற்பட வாசியாதே அவன் தலைமை தோன்றக் கொடுத்தாள் எனவும் நுண்ணிதின் விளக்கினர்.

கோவலன் பாடிய வரிப்பாடல் (காவிரியைக் கருதியவை)

ஆற்றுவரி

(2) திங்கள்மாலை ........ காவேரி

(இதன்பொருள்:) காவேரி - காவிரி நங்காய்! நீதானும் ; திங்கள் மாலை வெண்குடையான் - முழு வெண்டிங்கள் போன்ற (தும்) வாகைமாலை சூட்டப்பட்டதுமாகிய கொற்ற வெண்குடையை யுடைய நின்கணவனாகிய; சென்னி - சோழமன்னன்; செங்கோல் அது ஓச்சி-செங்கோன்மை பிறழாது அரசியல் நடாத்தி; கங்கை தன்னைப் புணர்ந்தாலும் - கங்கை என்னும் மற்றொரு நங்கையைப் புணர்தல் அறிந்திருந்தும்; புலவாய் - அவனொடு ஊடுகின்றிலை; கங்கை ......... புலவாதொழிதல் - அவன் அவ்வாறு மற்றொருத்தியைப் புணர்ந்தமை அறிந்துழியும் நீ அவனோடு ஊடாதிருத்தலாலே; மங்கை மாதர் பெருங்கற்பு என்று அறிந்தேன் - இது நங்கையரின் உயரிய கற்பிற்கியற்கையான பெருந்தன்மையாகும் என்று அடியேன் அறிந்துகொண்டேன் காண்!; காவேரி வாழி - இத்தகைய பெருந்தகைக் கற்புடைய எங்கள் காவிரி நங்காய் ! நீ நீடூழி வாழ்வாயாக! என்க.

(3) மன்னுமாலை ................ காவேரி

(இதன்பொருள்:) கயற் கண்ணாய் - கயலாகிய கண்ணை யுடைய காவிரி நங்காய்! நீதானும்; மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அதுவோச்சி - எஞ்ஞான்றும் நிலைபேறுடைய வாகைமாலையையுடைய கொற்ற வெண்குடை நிழற்றும் நின் கணவனாகிய சோழமன்னன் ஒருபொழுதும் முறை பிறழாத செங்கோல் செலுத்துபவன்; கன்னி தன்னைப் புணர்ந்தாலும் - நின்னைப் பிரிந்துபோய்க் கன்னி என்னும் மற்றொரு நங்கையைப் புணர்தலை நீ அறிந்திருந்தேயும் ; புலவாய் வாழி - நீ அவனோடு ஊடுகின்றிலை நீ வாழ்வாயாக! கன்னிதன்னை ........... புலவாதொழிதல் - அங்ஙனம் அவன் மற்றொருத்தியை மருவுதல் கண்டும் நீ ஊடாமையாலே; மாதர் மன்னும் பெருங்கற்பு என்று அறிந்தேன் - இது காதல் நிலைபெற்ற கற்பிற் கியற்கையான பெருந்தன்மை என்று அடியேன் அறிந்துகொண்டேன் காண்!; காவேரி வாழி - இத்தகைய பெருந்தகைக் கற்புடைய காவிரி நங்காய் நீ நீடூழி வாழ்வாயாக ! என்க.

(4) உழவரோதை ...........காவேரி

(இதன்பொருள்:) காவேரி உழவர் ஓதை மதகு உடைநீரோதை தண்பதம் கொள் விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப நடந்தாய் - காவிரி நங்காய் நின் கணவனோடு நீ காரண முள்வழியும் ஊடாதொழிதலேயன்றியும் உழவர் ஏர்மங்கலம் பாடும் ஆரவாரமும் மதகுகள் முழங்கும் ஆரவாரமும் கரையை உடைத்துப் பாயும் நீரினது ஆரவாரமும் விழாவெடுப்போர் நீராடுதலால் எழும் ஆரவாரமும், மேன்மேலும் சிறந்து ஆரவாரிக்கும்படி; நடந்தாய் - நின் கடமையாகிய நல்லொழுக்கத்தின்கண் சிறிதும் மாற்றமின்றி ஒழுகாநின்றனை; இத்தகைய பெருங்கற்புடைய நீ; வாழி - நீடூழி வாழ்வாயாக; விழவர் ........ நடந்த வெல்லாம் - நீ நின் கணவன்பாற் புலவாமல் நின் கடமையிற் கருத்தூன்றி ஒழுகும் இந்நல்லொழுக்கத்தால் உண்டாகும் பயனெல்லாம்; வாய் காவா மழவர் ஓதை வளவன்றன் வளனே - தங்கள் வாயை அடக்குதலில்லாத மறவர் ஆரவாரித்தற்குக் காரணமான சோழ மன்னனுடைய வளமல்லவோ? அவ்வாறு அவனை வளஞ்செய்தலுமுடையை காண்; காவேரி - ஆதலால் அத்தகைய பெருங்கற்புடைய நீ; வாழி நீடூழி வாழ்க! என்க.

(விளக்கம் ) திங்கள் மாலை என்னும் இப்பாடல் முதலாகக் கோவலன் பாடுகின்ற பாடல்களும் பின்னர் மாதவி பாடும் பாடல்களும் இசைத்தமிழ்ப் பாடல்கள். இவற்றிற்குப் பண் தாளம் முதலியனவும் உள. அவற்றை ஆராய்ந்து கண்டு இசை அரங்குகளிலே பாடிக்காட்டி இவற்றின் இனிமையை மக்கட்குணர்த்தித் தமிழ்மொழியை வளம் படுத்துதல் இசையறி புலவர் கடமையாம். ஈண்டு இவற்றை இயற்றமிழ்ச் செய்யுண் மாத்திரையாகவே கொண்டு பொருள் கூறுகின்றாம் என்றுணர்க.

இனி, இசைத்தமிழின் பாற்பட்ட இவற்றை இசை நூலோர் உருக்கள் என்றும் கூறுவர். திங்கள்மாலை என்னும் செய்யுள் முதலிய இம்மூன்றும் ஒரு பொருண்மேல் அடுக்கி, கந்தருவ மார்க்கத்தால் இடை மடக்கி வந்தன. இம்மூன்று வரிப்பாடலும் காவிரியாற்றைக் கருதிப் பாடப்பட்டமையின் ஆற்றுவரி எனப்பட்டன. அரும்பதவுரையாசிரியர் வரிப் பாடல்பற்றித் தரும் விளக்கம் வருமாறு :

இனி, வரிப்பாடலாவது - பண்ணும் திறமும் செயலும் பாணியும் ஒரு நெறியின்றி மயங்கச் சொல்லப்பட்ட எட்டனியல்பும் ஆறனியல்பும் பெற்றுத் தன் முதலும் இறுதியுங் கெட்டு இயல்பும் முடமுமாக முடிந்து கருதப்பட்ட சந்தியும் சார்த்தும் பெற்றும் பெறாதும் வரும். அதுதான் தெய்வஞ் சுட்டியும் மக்களைப் பழிச்சியும் வரும்.

அவற்றுள் தெய்வஞ் சுட்டிய வரிப்பாட்டு வருமாறு:

அழலணங்கு தாமரை யருளாழி யுடையகோ னடிக்கீழ்ச் சேர்ந்து
நிழலணங்கு முருகுயிர்த்து நிரந்தலர்ந்து தோடேந்தி நிழற்றும் போலும்
நிழலணங்கு முருகுயிர்த்துநிரந்தலர்ந்து தோடேந்திநிழற்றுமாயின்
தொழிலணங்கு மன்புடையார் சூழொளியும் வீழ்கரியுஞ் சொல்லாவன்றே

இது கூடைச் செய்யுள் கூடையென்பது கூறுங் காலை நான்கடி யாகி இடையடிமடக்கிநான்கடி அஃகி நடத்தற்கு முரித்தே வாரமென்பது வகுக்குங் காலை நடையினு மொலியினு மெழுத்தினு நோக்கித் தொடையமைந் தொழுகுந் தொன்மைத் தென்ப இவை அடிவரை யிட்டன.

இனி, மக்களைச் சுட்டிய வரிப்பாட்டு வருமாறு : திங்கள்மாலை.. காவேரி என்பது போல வருவது எனவரும்.

இனி, ஈண்டுக் கோவலன் மாதவி மனமகிழ யாழ் மேலிட்டுத் திங்கள்மாலை வெண்குடையான் என்று தொடங்கி ஒருபொருள்மேல் அடுக்கி வரும் மூன்று ஆற்றுவரிப் பாடலும் இங்ஙனமே மாதவி பின்னர் (25) மருங்குவண்டு என்பது தொடங்கிப் பாடுகின்ற ஆற்று வரிப்பாடலும் தெய்வஞ் சுட்டிய வரிப்பாடல்களேயாம். என்னை? இந் நூலாசிரியர் இறைவனை அவன்றன் படைப்புப் பொருள்களுள் வைத்துக் கடவுட் பண்புமிக்கு விளங்குகின்ற பொருள்களிலேகண் கூடாகக்கண்டு வணங்குங் கோட்பாடுடையார் என்பதனை நூற்றொடக்கத்தே மங்கல வாழ்த்துப் பாடலின்கண் திங்கள் ஞாயிறு மழை முதலிய பொருள்களை வாழ்த்துமாற்றால் பெற்றாம். ஈண்டும் கோவலனும் மாதவியும் கடவுட் பண்புமிக்கு விளங்கும் காவிரியையும் அப்பேரியாறூட்டும் நாட்டின்கண் வளையாச் செங்கோல் அதுவோச்சும் மன்னனை வஞ்சப் புகழ்ச்சியாகவும் வைத்துப் பாடுகின்ற இப்பாடல்களும் அந்த யாற்றையும் அரசனையும் இறைவனாகக் கருதி வாழ்த்தியபடியேயாம் என நுண்ணிதின் உணர்க. அங்ஙனம் பாடுங்கால் தான் பாடக் கருதிய அகப்பொருள் மரபிற்கேற்ப அரசனையும் ஆற்றினையும் கடவுட் காதலராக வைத்து வியத்தகு முறையில் பாடி வாழ்த்தினன் என்க. இங்ஙனம் கூறாக்கால் யாழ் வாசிக்கத் தொடங்குவோர் கடவுள் வாழ்த்துப்பாடும் மரபினைக் கைவிட்டதாகி இழுக்காம் என்று முணர்க.

இனி, இவை அகப்பொருள் பொதிந்த பாடலாயினும் சென்னி என்றும் காவேரி என்றும் தலைவன் தலைவியர் பெயர் சுட்டிக் கூறப்படுதலான் அகப்புறப் பாடலாயின. அவற்றுள்ளும் காமப்பகுதி கடவுளும் வரையார் என்னும் புறப்பொருட் பாடாண் திணையில் புரைதீர் காமம் புல்லிய வகையில் பாடப்பட்ட அமரர்கண் முடியும் அறுவகையுள் இவை வாழ்த்தியல் என்பதன்கண் அடங்கும் என்க.

இனி, இவற்றிற்கு அகப்பொருண் மருங்கில் திணையுந் துறையும் கூறுமிடத்து, உறலருங் குரைமையின் ஊடல் மிகுத்தோளைப் பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும் (தொல். கற். 5) எனவரும் துறை கொள்க. என்னை? தலைவனும் தலைவியும் நீராடச் சென்றிருந்தாராக ஆற்றங்கரையில் தலைவிக்குப் பாங்காயினார் நின் கணவன் நெருநல் பரத்தையரொடு நீராடினன் என்று கூறக்கேட்டுத் தலைவி அவனோடு ஊடி முகங் கொடாளாயினள். ஆகவே, அவன் தலைவியின் ஊடல் தீர்த்தற்கு அவள் முன்பு தன் பிழையை ஒப்புக்கொண்டு கணவன்மார் தவறு செய்துழியும் பெருங்கற்புடைய மகளிர் அது பொறுத்து அக் கணவனுக்கு இயைந் தொழுகுவர்காண் என அறிவுறுத்துப் பணிமொழி கூறுபவன் இக்கருத்தைக் காவிரியின் மேலிட்டுத் தலைவி கேட்பக் கூறியது என நுண்ணிதின் உணர்க.

இக்கருத்து இப்பாடலின்கண் அமைதலானன்றோ மற்று இக் கோவலனும் மற்றொருத்திமேன் மனம் வைத்து ஒழுகுகின்றான்போலும் அவ்வொழுக்கம் யாமறிய வெளிப்பட்டக்கால் யாம் ஊடாதிருத்தற் பொருட்டு வருமுன் காக்கும் உத்தியால் இங்ஙனம் பாடினன் என்று ஊழின் சூழ்ச்சியால் பிறழவுணர்ந்து மாதவி ஊடியதூஉம் என்க.

(2) திங்கள் மாலை என்று தொடங்கியது மங்கலச் சொல்லால் தொடங்கும் மரபு கருதித் தொடங்கியவாறாம். மாலை - வாகைமாலை. மாலை - இயல்புமாம். சென்னி - சோழமன்னன். செங்கோலதுவோச்சி என்றது முறைசெய்து காப்பாற்றுபவனே முறைபிறழ்ந்தான் எனச் சோழனுடைய பிழையைமிகுத்துக் காட்டும் குறிப்பேதுவாம் பொருட்டு. அடுத்த பாடலில் வளையாச் செங்கோலது வோச்சி என்பதுமது. ஆற்றை நங்கையாக உருவகிப்பவன் அதன்கண்ணுள்ள கயலையே கண்ணாகவும் உருவகித்தான். ஆறென்னின் கயலாகிய கண் எனவும் நங்கையெனின் கயல் போன்ற கண்ணெனவும் பொருள் தருதலுணர்க. கயற்கண்ணாய் என்றது அவளது அருள்பண்பை விதந்தவாறுமாம். மாதர் மங்கை என மாறுக. மாதர் - காதல். இது பெருங்கற்புடைமைக்குக் குறிப்பேதுவாம்.

(3) வளையாச் செங்கோல் என்றது ஒருகாலத்தும் கோடாத செங்கோல் என்றவாறு. 4. தண்பதம் கொள் விழவர். புதுப்புனலாடும் விழாக்கொண்டாடுவோர். வாய்காவா மழவர் என்பது வாயடங்கி நிற்றற்குரிய விடத்தும் அவ்வாறு அடங்காது மறவுரை பேசும் போர்மறவர் என்றவாறு. இதனை மறமுல்லை என்ப. அஃதாவது வெள்வாள் வேந்தன் வேண்டிய தீயவும் - கொள்ளா மறவன் கொதிப்புரைத் தன்று. இது கொளு. வரலாறு:

வின்னவில் தோளானும் வேண்டியகொள் கென்னும்
கன்னவில் திண்டோட் கழலானும் - மன்னன்முன்
ஒன்றான் அழல்விழியா ஒள்வாள் வலனேந்தி
நின்றான் நெடிய மொழிந்து  (புறப்பொரு. வெண். 181)

எனவரும்.

கங்கை - கங்கையாறு. (கங்கை என்னும் நங்கை) அவளைப் புணர்தலாவது: வடநாட்டை வென்றடிப்படுத்துக் கங்கையைத் தனதாக்கி அதன்கண் ணீராட்டயர்தல். கன்னி - குமரி. இதற்கும் அவ்வாறு கூறிக்கொள்க. இவை வஞ்சப்புகழ்ச்சி என்னும் அணி. நடந்ததனால் விளைவன எல்லாம் வளவன்றன் வளனே யன்றோ என்றவாறு. நின் கணவன் நீ பிணங்குதற்கியன்ற தீயவொழுக்கமுடையவனாகவும் நீ அச்சிறுமை கருதாது நினக்கியன்ற நல்லொழுக்கந் தலைநின்று அவனுக்கு வளம் பெருக்குகின்றனை. இத்தகைய பெருந்தகைக் கற்புடைய நீ நீடூழி வாழ்க என்று வாழ்த்தியபடியாம்.

சார்த்துவரி



(5) கரியமலர் ....... எம்மூர்

(இதன்பொருள்:) கரியமலர் நெடுங்கண் காரிகைமுன் கடல் தெய்வம் காட்டிக் காட்டி - கருங்குவளை மலர்போலும் அழகுடைய நெடிய கண்ணையுடைய எம்பெருமாட்டியின் முன்னிலையில் கடலாகிய இத்தெய்வத்தைச் சுட்டிப் பன்முறையும் காட்டிச் சொன்ன; அரிய சூள் பொய்த்தார் - பொய்த்தற்கரிய கடிய சூண்மொழியைப் பொய்த்தொழுகினர், இவர்தாம்; அறன் இலர் என்று ஏழையம் யாங்கு அறிகோம் - அறநெறி நில்லாதவர் ஆவர் என்று பேதையேம் ஆகிய யாங்கள் முன்னரே எவ்வாறு அறியவல்லுநமாவேம்; அறிந்திலேங்காண்! ஐய - பெருமானே!; எம்மூர் - எம்முடைய ஊர்தான்; விளங்கும் வெள்ளைப் புரிவளையும் முத்தும் கண்டு விரிகதிர் வெண்மதியும் மீன்கணமும் ஆம் என்றே - விளங்குகின்ற வெண்ணிறமுடைய முறுக்குடைய சங்கையும் முத்துக்களையும் கண்டு, இவை விரிகின்ற நிலாவினையுடைய வெள்ளிய திங்களும் விண்மீன்களும் ஆகுமென்று மயங்கி; ஆம்பல் பொதி அவிழ்க்கும் புகாரே - ஆம்பலின் அரும்புகள் இதழ்விரித்து மலர்தற்கிடனான பூம்புகாரன்றோ? என்க.

(6) காதலராகிக் ............ எம்மூர்

(இதன்பொருள்:) காதலர் ஆகி - எம்மிடத்தே பெரிதும் காதலுடையவராய்; கையுறை கொண்டு - எமக்குக் கொடுக்கக் காணிக்கையையும் கையிற் கொண்டு; எம்பின் வந்தார் - முன்பு மகளிரேமாகிய எம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்தாமே; ஏதிலர்தாம் ஆகி - இப்பொழுது எமக்கு நொதுமலாளராகி; யாம் இரப்ப நிற்பதை - யாங்களே இரந்து வேண்டாநிற்பவும் இரக்கமின்றி நிற்றலை; ஐய யாங்கு அறிகோம் - ஐயனே ஏழையுமாகிய யாங்கள் எங்ஙனம் முன்னரே அறியவல்லுநமாவேம், அறிந்திலேங்காண்! எம் ஊர் - யாங்கள் வாழுகின்ற எம்முடைய ஊர்தான்; மாதரார் கண்ணும் நீர் மதிநிழல் இணைகொண்டு மலர்ந்த நீலப்போதும் அறியாது - மகளிருடைய கண்ணையும் நீரினூடே தோன்றும் திங்களின் நிழலைக் கண்டு இணைந்து நின்று மலர்ந்த நீலமலரும் இன்னதிதுவென்று அறிந்துகொள்ள மாட்டாமல்; வண்டு ஊசலாடும் புகார் - வண்டுகள் அங்குமிங்குமாய்த் திரிதற்கிடனான பூம்புகாரன்றோ காண்! என்க.

(7) மோதுமுது ............ எம்மூர்

(இதன்பொருள்:) ஐய - ஐயனே; எம்மூர் - எம்மூரானது; மோது முதுதிரையால் மொத்துண்டு போந்து அசைந்த முரல் வாய்ச் சங்கம் - மோதா நின்ற பெரிய அலைகளாலே தாக்கப்பட்டு வந்து நகர்கின்ற ஒலிக்கும் வாயையுடைய சங்கானது; மாதர் வரிமணல் மேல் வண்டல் உழுது அழிப்ப மாழ்கி - மகளிர் வரிவரியாய்க் கிடக்கின்ற அலைவாய்மணற்பரப்பிலே தாம் கோலிய மணல்வீட்டினை அழித்தலாலே வருந்தி; கோதை பரிந்து - தமது மலர்மாலையை அறுத்து; அசைய - அச்சங்கு அப்பால் நகர்ந்து போம்படி; ஓச்சுங் குவளைமாலைப் போது - எறியும் கருங்குவளை மலராற் புனைந்த இணைமாலையின் கண்ணதாகிய மலர்கள்; சிறங்கணிப்ப - சிறங்கணித்துப் பார்த்தாற்போல் கிடப்ப; போவார்கண் போகாப் புகார் - அங்குச் செல்வோர் அவற்றைத் தம்மை நோக்கும் பிறர் கண்கள் என்று கருதி அப்பாற் போகாமைக்கிடனான பூம்புகாரன்றோ? என்க.

(விளக்கம்) 5. கரிய மலர் - கருங்குவளை மலர்; காரிகை என்றது தலைவியை. கடல் தெய்வம் - கடலாகிய தெய்வம், வருணன் எனினுமாம். அரிய சூள் - சொல்லுதலரிய சூள் எனினுமாம். தப்பிய வழி கேடு பயத்தலின் யாவரும் சொல்லவஞ்சுதலின் சொல்லற்கரிய சூள் என்க. தெய்வஞ் சுட்டிச் செய்த சூள் பொய்ப்பின் அத்தெய்வம் தீங்கியற்றும் என்பதொரு நம்பிக்கை. காட்டிக் காட்டி என்னும் அடுக்குப் பன்மைமேற்று. இதனைத் தீராத் தேற்றம் என்பர். தலைவன் தலைவியின் ஆற்றாமை தீர்தற்கு, இயற்கைப் புணர்ச்சியின் பின்னர்த் தெய்வத்தொடு சார்த்திச் சூள் மொழிவன். அங்ஙனம் சூள் செய்தவர் பொய்த்தார்; அப்பொழுது இவர் அறவோர் என்றிருந்தேம். பேதையமாகலின் அறனிலர் என்றறியேமாயினேம். இங்ஙனம் மடம் படுதல் எமக்கேயன்றி எம்மூர்க்கும் இயல்பாயிற்று என்று நொந்து கூறுவாள் விரிகதிர்...... எம்மூர் என்றாள். இது பின்வருவனவற்றிற்கும் கொள்க.

6. முன்னர்க் காதலராகி எம்பின் வந்தார் அவரே இப்பொழுது ஏதிலராகி யாமிரப்பவும் இரங்காராய் நின்றார். இவர் இங்ஙனம் நிற்பார் என்பதனை ஏழையேம் எங்ஙனம் அறியவல்லேம் அறியாதொழிந்தோம் என்று நொந்து கூறியபடியாம். நீருட்டோற்றும் மதியொளி கண்டு மலர்ந்து இணைந்திருந்த நீலத்தை மாதர் கண்ணென்றும் மாதர் கண்ணை நீலமென்றும் அங்குமிங்கும் அலைகின்ற வண்டு என்க. ஈண்டு நீலமும் மடம்பட்டு மலர்ந்தமையும் வண்டுகள் மடம்பட்டமையு முணர்க.

7. முதுதிரை - பெரிய அலைகள். வல்லுடம்பு பெற்ற சங்கினை மலரை எறிந்து ஓச்சுதலும் மடமையாத லுணர்க. முரல்வாய் : வினைத்தொகை. மாதர் - ஈண்டுப் பேதைப் பருவத்து மகளிர். வண்டல் - மணலாற்கோலிய விளையாட்டுவீடு. உழுதல் - ஊர்ந்து நிலத்தைக் கீறிப்போதல். சிறங்கணித்தல் - இமையைச் சுருக்கிப் பார்த்தல். போவார் - ஆண்டுத் தங்காரியத்தின்மேற் போகும் மாந்தர். போவார் கண் அவற்றை நோக்குதலன்றி விட்டுப் போகாமைக்குக் காரணமான மடமையுடைய புகார் என்றவாறு.

இவை மூன்றும் ஒரு பொருண்மேல் மூன்றடுக்கிவந்த வரிப்பாடல். இனி, அரும்பதவுரையாசிரியர் சார்த்துவரி என்பதற்குக் கூறும் விளக்கம் வருமாறு - பாட்டுடைத் தலைவன் பதியொடும் பேரோடும் சார்த்திப் பாடிற் சார்த்தெனப் படுமே அதுதான் முகச் சார்த்து, முரிச் சார்த்து, கொச்சகச்சார்த்து என மூவகைப்படும். அவற்றுள் முகச்சார்த்து : மூன்றடிமுதல் ஆறடி யீறாக முரிந்த வற..... குற்றெழுத்தியலாற் குறுகிய நடையால் பெற்றவடித் தொகை மூன்று மிரண்டும் குற்றமில்லெனக் கூறினர் புலவர். கொச்சகச் சார்த்து : கொச்சகம் போன்றுமுடியும். இவற்றுள் இவை மூன்றும் முகச்சார்ந்து எனவரும். இவை, (1) தோழி தலைமகன் முன்னின்று வரைவு கடாயவை. (2) கையுறை மறையெனினும் அமையும் என்ப.

இவற்றிற்கு வரைவுடன் பட்டோர் கடாவல் வேண்டினும் எனவரும் (தொல் - களவியல். 23.) விதி கொள்க.

முகமில்வரி

( 8) துறைமேய் ............. தீர்க்கும்போலும்

(இதன்பொருள்:) துறை மணல் தோய்ந்துமேய் வலம்புரி உழுத தோற்றம் மாய்வான் - கடற்றுறையிடத்தே மணலின்கண் அழுந்தி இரைதேருகின்ற வலம்புரிச் சங்கு உழுது சென்றமையால் உண்டான சுவடுமறைந்து போகும்படி; பொறை மலி பூம்புன்னைப் பூவுதிர்ந்து நுண் தாது போர்க்குங்கானல் - மிக்க சுமையாக மலர்ந்த மலர்களையுடைய புன்னையினது அம்மலர்களினின்றும் உதிர்ந்து நுண்ணிய தாதுக்கள் மூடுதற்குக் காரணமான இக் கடற்கானலிடத்தே நிற்கின்ற இத்தலைவியினது; நிறைமதிவாள் முகத்து கயல் நேர்கண் செய்த - கலைகள் நிறைந்த திங்கள் போன்ற ஒளிதவழும் முகத்தின்கண்மைந்த கயல்மீன் போன்ற கண்களாலே எம்பெருமானுக்குச் செய்யப்பட்ட; மலி உறை உய்யா நோய் - மிக்க மருந்துகளாலும் போக்க முடியாத நோயை ; சுணங்கு ஊர் மெல்முலையே தீர்க்கும் போலும் - தேமல் படர்ந்த இவளுடைய மெல்லிய முலையே தீர்க்கவல்லனவாம்; என்க.

(விளக்கம்) 8. துறை - கடற்றுறை. மேய்தல் - இரை தேர்தல். மாய்வான் - மறையும்படி. பொறை - சுமை சுமையாமளவு மிக்கபூ என்க. பூவினின்றும் உதிர்ந்து போர்த்தல் - மூடுதல். இத்தலைவியினுடைய என வருவித்தோதுக. கயல் நேர் கண் என்க. இனி, ஒன்றனோடு ஒன்று எதிர்கின்ற கயல்கள் போலும் கண்கள் எனினுமாம். உறை - மருந்திற்கு ஆகுபெயர். மலி உறை என மாறுக. உய்த்தல் - போக்குதலாகலின் உய்யா என்பது அதன் எதிர்மறையாய்ப் போக்க முடியாத எனப் பொருள் தந்தது. சுணங்கு - தேமல். போலும் : ஒப்பில்போலி.

மணலின்மேல் சங்கு செய்த சுவட்டினைப் பூந்தாது மறைப்பது போல இவள் கண் செய்த நோயை முலையே தீர்க்கும் என்றிதன்கண் உள்ளுறை காண்க.

இது குறியிடத்துச் சென்ற பாங்கன் தலைவியின் காதன் மிகுதி குறிப்பினான் அறிந்து கூறியது என்ப. இதனை, பேராச்சிறப்பின் என்னும் மிகையால் (தொல் - களவு. 11) அமைத்துக் கொள்க.

கானல்வரி

(9) நிணங்கொள் .......... மன்னோ

(இதன்பொருள்:) நிணம் கொள் புலால் உணங்கல் நின்று புள் ஓப்புதல் தலைக்கீடு ஆக - புலர்கின்ற நிணத்தையுடைய மீன் வற்றலின் மருங்கே நின்று அவற்றைத் தின்னவருகின்ற பறவைகளை ஓட்டும் செயலை ஒரு காரணமாகக்கொண்டு; கணங்கொள் வண்டு ஆர்த்து உலாம் கன்னி நறுஞாழல் கையில் ஏந்தி - கூட்டமான வண்டுகள் தம்மிசையாலே ஆரவாரித்துத் திரிதற்குக் காரணமான இளமையுடைய நறிய ஞாழலினது பூங்கொம்பைத் தன் கையிலே பிடித்து; மணம் கமழ் பூங் கானல் மன்னி - மணங் கமழாநின்ற மலர்களையுடைய இக் கடற்கரைச் சோலையிடத்தே நிலைபெற்று; ஆண்டு ஓர் அணங்கு உறையும் என்பது அறியேன் - அவ்விடத்தே ஒரு தெய்வம் இருக்கும் என்னுமிச் செய்தியை யான் முன்பு அறிந்திலேன்காண்; அறிவேனேல் அடையேன் மன்னோ - முன்னரே அறிந்துளேனாயின் அங்குச் செல்லேன்மன் என்க.

(10) வலைவாழ்நர் ............ மன்னோ

(இதன்பொருள்:) அலைநீர்த் தண் கானல் - அலைநீர் புரளுகின்ற குளிர்ந்த இக் கடற்கரைச் சோலைக்கண்ணமைந்த; வலைவாழ்நர் சேரி வலை உணங்கு முன்றில் - வலை கருவியாக வாழ்க்கை நடத்துகின்ற இப்பரதவர் சேரியின்கண் வலைகள் புலர்த்தப்பட்ட ஓரில்லினது முற்றத்திலே; விலைமீன் உணங்கல் பொருட்டாக - விற்கும் மீன்வற்றலின்கண் வீழும் பறவைகளை ஓட்டுதலை ஒரு காரணமாகக் காட்டி ; மலர் கை யேந்தி - தனக்குரிய கயிறும் கணிச்சியுமாகிய வலிய படைக்கல மேந்தாமல் மெல்லிய மலர்க் கொம்பை ஏந்திக் கொடு; வேறு ஓர் கொலை வேல் நெடுங்கண் கூற்றம் வேண்டுருவம் கொண்டு வாழ்வது - தன் செயலாகிய கொலைத் தொழிலைச் செய்யவல்ல வேல்போலும் நீண்ட கண்களை யுடைய தாய்த் தன்றொழில் நடத்தற்கு வேண்டிய மகளாய் உள்வரிக் கோலம்பூண்டு மற்றொரு கூற்றுவன் வந்து வாழ்வதனை; அறியேன் - யான் முன்னரே அறிந்திலேன்காண்! அறிவேனேல் அடையேன் மன் - முன்னரே அறிந்துளேன் ஆயின் யான் அங்குச் செல்லேன்மன்; என்க.

(விளக்கம்) ஈண்டுக் கோவலனும் மாதவியும் பாடும் பாடல் அனைத்தும் கானல் வரிப்பாடல்களே ஆயினும் ஆற்றுவரி முதலிய வெவ்வேறடை மொழி பெற்று வருவது ஆறு முதலிய பொருட் சிறப்புப்பற்றிப் போலும். அனைத்தும் கானல்வரிப் பாடல்களே என்பதனை அடிகளார் இப்பகுதிக்குக் கானல்வரி எனக் குறியீடு செய்தமையாற் பெற்றாம்.

9. புலால் - மீன்: ஆகுபெயர். உணங்கல் - வற்றல். தலைக்கீடு - போலிக் காரணம். கன்னி - ஈண்டு இளமை. ஞாழல் - புலிநகக் கொன்றை. ஈண்டு ஞாழலின் பூங்கொம்பு. மற்று : வினைமாற்று. மன்: ஒழியிசை. அறியாமையால் கேடெய்தினேன் என்பதுபட நிற்றலின் என்க. ஓ : அசைச் சொல்.

10. வலைவாழ்நர் - வலை கருவியாக வாழ்பவர். அவராவார் - பரதவர். மலர்கை யேந்தி என்றது தனக்குரிய கயிறு கணிச்சிக் கூர்ம்படை முதலியன துரந்து மெல்லிய மலர்க்கொம்பேந்தி என்பது பட நின்றது. வேண்டுருவம், தன் தொழில் தடையின்றி நிகழ்தற்கியன்ற உருவம். அஃதாவது - பெண்ணுருவம். இதனோடு கன்னி நீர் ஞாழல் கமழ்பூங் கானல் யான்கண்ட பொன்னங் கொடியை யீன்றார் இல்லை போலுமால் - மன்னன் காக்கும் மண்மேற் கூற்றம் வரவஞ்சி இன்னதொன்று படைத்த தாயின் எவன் செய்கோ? எனவரும் பழம்பாடலை ஒப்பு நோக்குக. இந்திரவிழவூ ரெடுத்தகாதைக் கண், மன்னவன் செங்கோலஞ்சி ....... பெண்மையிற் றிரியும் பெற்றியு முண்டென எனவரும் அடிகள் ஈண்டு நினைவிற் கொள்ளற் பாலனவாம். இவ்வாறும் ஒரு கூற்றம் உளது போலும் அதுவுமறியேன் என்பான் மற்றோர் கூற்றம் என்றான்.

இவையிரண்டும் கழற்றெதிர்மறை என்னும் ஒரு பொருண்மேல் அடுக்கி வந்தன. அஃதாவது - தலைவன் இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர்த் தலைவியை நினைந்து ஆற்றானாய் மெய்வேறுபாட்டான் பாங்கன்பால் உற்றதுரைப்ப அவன் நின் பெருந்தகைமைக்கு இஃதிழுக்காம் என்றிடித்துரைப்ப அதற்குத் தலைவன் பாங்கனை நோக்கி நீ அவளைக் கண்டாயேல் இங்ஙனம் கூறாய் என எதிர்மறுத்துக் கூறியது என்றவாறு. அத்துணைப் பெருந்துன்பம் செய்வன அவள் உறுப்புகள் என்பான் அணங்கு என்றும் கூற்றம் என்றும் உருவகித்தான். அணங்கு - தீண்டி வருத்தும் தெய்வம் ; கூற்றம் - காலன்.

நிலைவரி

(11) கயலெழுதி ......... வாழ்வதுவே

(இதன்பொருள்:) கயல் எழுதி வில் எழுதிக் கார் எழுதிக் காமன் செயல் எழுதித் தீர்ந்த முகம் - கண்கள் என்று சொல்லி இரண்டு கயல் மீன்களையும் எழுதிப் பின் புருவம் என்று சொல்லி இரண்டு குனித்த விற்களையும் எழுதிப் பின்னர் இவற்றிற்கு மேலே கூந்தல் என்று சொல்லி முகிலையும் எழுதி அதன் பின்னர் எழுதொணாத காமவேளின் செயலையும் எழுதிச் சிறிதும் பணிக்குறையின்றி முடித்த அவள் முகத்தை முகம் என்று கூறுதலும் பேதைமை காண்! ஓ - திங்களே காணீர் - அவ்வோவியங்களைத் தன்மேல் வரைந்து கொண்ட திங்கள் மண்டிலமே, ஐயமின்று நீயிரே சென்று காண்பீராக! ஓ திங்களே காணீர் - தேற்றமாக அது திங்கள் மண்டிலமே சென்று காண்மின்! திங்களாயின் எற்றிற்கிங் குற்றது எனின்; அங்கண் வானத்து நேர் அரவு அஞ்சி - அழகிய இடத்தையுடைய வானத்தே தன்னை எதிர்ப்படும் பாம்பை அஞ்சி; திமில் வாழ்நர் சீறூர்க்கே வாழ்வதுவே - திமில் கொண்டு வாழ்கின்ற இப்பரதவருடைய சிறிய ஊரின்கண் வந்து அவ்வாறுள்வரிக் கோலங்கொண்டு வாழ்வதாயிற்றுப் போலும் என்க.

(12) எறிவளை ............. மகளாயதுவே

(இதன்பொருள்:) எறிவளைகள் ஆர்ப்ப - இவ்வுருவம் அறுத்தியற்றிய தன் கை வளையல்கள் ஒலித்தற்கே மருண்டு ; இருமருங்கும் ஓடும் - வலமும் இடமுமாகிய இரண்டு பக்கங்களினும் பிறழ்ந்து ஓடாநின்ற ; கறை கெழுவேல் - குருதிக் கறைபடிந்த வேல் போன்ற; கண்ணோ கண்ணையுடைய காரிகையோ? இல்லை! இல்லை! கடுங்கூற்றம் காணீர் - கடிய கூற்றுவனே ஐயமில்லை நீயிரே சென்று காண்மின்; கடுங் கூற்றம் - கடுந்தொழிலையுடைய மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சி; கடல் வாழ்நர் சீறூர்க்கு - கடலில் மீன்படுத்து வாழ்கின்ற பரதவருடைய இச்சிறிய ஊரிடத்தே வாழுமொரு; மடங்கெழு மெல் சாயல் மகள் ஆயது காணீர் - தனது மறங்கெழுவு வல்லுருவம் மறைத்து மடம் பொருந்திய மெல்லியல்புடைய ஒரு நுளைச்சியாயுள் வரிக்கோலம் பூண்டுளது நீயிரே சென்று காண்மின்; என்க.

(13) புலவுமீன் ............. பெண்கொண்டதுவே

(இதன்பொருள்:) புலவுமீன் வெள் உணங்கல் புள் ஓப்பி - புலானாறும் மீனினது வெள்ளிய வற்றலில் வீழ்கின்ற பறவைகளை ஓட்டி; கண்டார்க்கு அலவ நோய் செய்யும் இது - தன்னைக் கண்டவர் அலந்தலைப்படுதற்குக் காரணமான நோயைச் செய்கின்ற இந்த வுருவம் பெண் அன்று; ஓ அணங்கு காணீர் - தேற்றமாகத் தீண்டி வருத்தும் ஒரு தெய்வமேயாம். இவ்வுண்மையை நீயிரும் ஆராய்ந்து காண்மின்; இஃது அணங்கு காணீர்; தேற்றமாக இஃது அணங்கே காண்மின்; (அணங்கு எற்றிற்கு இங்குற்ற தென்பீரேல்; தானுறையும் காட்டிற்கு வருவார் யாருமின்மையின்) அடும்பு அமர் தண் கானல் பிணங்கு நேர் ஐம்பால் ஓர் பெண் கொண்டது-அடும்பு தங்குதற்குக் காரணமான குளிர்ச்சியையுடைய இக் கடற்கரைச் சோலையிடத்தே பெரிதும் (மக்கள் வழக்குண்மை கருதி) செறிந்த நுண்ணிய கூந்தலையுடைய ஒரு பெண்ணாக உள்வரிக் கோலங் கொண்டுளது இதுவே உண்மை என்க.

(விளக்கம்) நிலைவரியாவது:

முகமும்முரியுந் தன்னொடு முடியும்
நிலையை யுடையது நிலையெனப் படுமே

எனவரும் நூற்பாவான் உணர்க.

11. காமனாகிய ஓவியப் புலவன் கயல் முதலியவற்றையும் தன் செயலையும் எழுதி முடித்த முகம் எனினுமாம். தெய்வப் புலவனாகலின் எழுதொணாத தன் செயலையும் எழுதினான் என்க. முகம் முகமன்று திங்களே காணீர் என்றவாறு. ஓகாரங்கள் வியப்பு. திங்களாயின் அது வானத்தை விட்டு இங்கு வருவதேன்? என்னும் கடாவிற்கு விடையாக அங்கண் வானத்து நேர் அரவஞ்சி ஈண்டுவந்து வாழ்வது என்றவாறு. அங்கண் வானத்து நேர் அரவு அஞ்சி என மாறுக.

12. வளைகள் என்றது தலைவியின் கையிற் சங்குவளையலை. எறிவளை யென்றது பொருட்கேற்ற அடை புணர்த்தவாறு. தன் கை வளையல் ஆர்த்தற்கே மருண்டு இருமருங்கும் ஓடும் கண் என்க. கறை கெழுவேற்கண்: பன்மொழித் தொகை. தலைவிக்குப் பெயராய் நின்றது. கடல் வாழ்நர் கடலில் மீன்படுத்து அதனால் வாழ்கின்ற பரதவர். சீறூர்க்கு: உருபுமயக்கம். கடுங்கூற்றம் தன் கடுங்குணங்களை மாற்றி மடங்கெழு மென்சாயல் மகள் ஆயது என்க.

13. புலவு - புலானாற்றம், அலவநோய் - அலைந்தலைப்படுதற்குக் காரணமான காமநோய். அணங்கு - தீண்டி வருத்தும் தெய்வம். அடும்பு - நெய்தனிலத்துள்ள ஒருவகை மரம். இது குளிர்ந்த நிலத்தினும் நீர்மருங்கும் வளர்ந்து தழைக்கும் ஆதலின் அடும்பு நிற்றற்குக் காரணமான தண்மையையுடைய கானல் எனத் தண்மையை ஏதுவாக்குக. பிணங்குதல்-செறிதல். நேர் - நுண்மை. பெண் - பெண்ணுருவம். கொண்டது - உள்வரிக் கோலங்கொண்டது ஏகாரம் : தேற்றம். இவை மூன்றும் ஒரு பொருண்மே லடுக்கி வந்தன.

இவை மூன்றும் தமியளாக இடத்தெதிர்ப்பட்ட தலைவியை நோக்கித் தலைமகன் கூறியவை, என்பர் அரும்பதவுரையாசிரியர்.

இயலிடம் கூறல் என்னுந் துறையாகக் கோடலே பெரிதும் பொருந்துவதாம். அஃதாவது-கழற்றெதிர் மறுத்த தலைவனுக் கிரங்கி எவ்விடத்து எத்தன்மைத்து நின்னாற் காணப்பட்ட உரு என வினவிய பாங்கனுக்கு இன்னவிடத்து இத்தன்மைத்து என்னாற் காணப்பட்ட உருவம் எனத் தலைவன் கூறுவதாம்.

முரிவரி

(14) பொழில்தரு ........... செய்தவையே

(இதன்பொருள்:) பொழில்தரு நறுமலரே - தோழனே! எனக்கு இடர் செய்தது யாதென்கின்றனை கூறுவல் கேள். பொழில் வழங்க அவள் குடியிருந்த நறிய மலரென்கோ? புதுமணம் விரி மணலே - அவள் நின்ற நாண் மலரின் புதிய மணம் பரவுகின்ற மணற் பரப்பென்கோ?; பழுது அறு திருமொழியே - அவள் மிழற்றிய குற்றமற்ற அழகிய மொழி யென்கோ? பணை இளமுலையே - கணந்தொறும் பருக்கின்ற அவளது இளமையுடைய அழகிய முலை என்கோ?; முழுமதி புரை முகமே - நிறை வெண்டிங்களே போன்ற அவளுடைய முகம் என்கோ? முரி புரு வில் இணையே - வளைகின்ற அவளுடைய புருவம் என்கின்ற இரட்டை விற்கள் என்கோ? எழுதஅரு மின் இடையே-ஓவியர்க்கெழுத வொண்ணாத நுண்மையுடைய மின்னல் போன்ற அவளது இடை என்கோ?; இவை எனை இடர் செய்த - இவை அனைத்துமே என்னை வருத்தினகாண்; என்க.

(15) திரைவிரி...........செய்தவையே

(இதன்பொருள்:) திரைவிரி தருதுறையே - அவள் விளையாட்டயர்ந்த அலைகள் பரவுகின்ற கடற்றுறை யென்கோ? திருமணல் விரியிடமே - அழகிய மணல் பரப்ப இடம் என்கோ? விரை விரி நறுமலரே-அவள் சூடியிருந்த நறுமணம் பரப்பும் மலர் மாலையென்கோ? மிடைதரு பொழில் இடமே - அவள் புக்குநின்ற மரங்கள் செறிந்த பூம்பொழிலிடம் என்கோ? மரு விரி புரிகுழலே - மணங்கமழும் கை செய்யப்பட்ட குழன்ற அவள் கூந்தல் என்கோ? மதிபுரை திருமுகமே - திங்களை யொத்த அழகிய அவள் முகம் என்கோ? இரு கயல் இணைவிழியே - இரண்டு கயல் மீன்களையொத்த அவளுடைய இரண்டு கண்களும் என்கோ? எனை இடர் செய்தவையே - இவையனைத்தும் என்னை வருத்தினகாண் ! என்க
.
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 23, 2012, 01:35:33 PM
(16) வளைவளர் ........... செய்தவையே

(இதன்பொருள்:) வளை வளர்தரு துறையே - அவளாடிய சங்குகள் வளர்தற்கிடனான கடற்றுறை யென்கோ? மணம் விரிதரு பொழிலே நறுமணம் பரப்புகின்ற பூம்பொழில் என்கோ? தளை அவிழ் நறுமலரே - கட்டவிழ்ந்து மலர்கின்ற அவள் சூடிய மலர்மாலை யென்கோ? அவள் தனி திரி இடமே அந்நங்கை தமியளாகத் திரிந்த இடம் என்கோ? முளைவளர் இளநகையே - முளைபோன்று வளர்கின்ற அவளுடைய எயிறென்கோ? முழு மதி புரை முகமே - நிறைத் திங்கள்போலும் அவளது திருமுகம் என்கோ? இளையவள் இணைமுலையே - இளமையுடைய அவளுடைய இணைந்த முலை என்கோ? எனை இடர் செய்தவை - இவையனைத்துமே என்னை வருத்தினகாண்! என்பதாம்.

(விளக்கம்) இம்மூன்றும் ஒரு பொருண்மேலடுக்கி வந்த வரிப்பாடல்கள். முரிவரியாவது: எடுத்த வியலும் இசையும் தம்மில் முரித்துப் பாடுதன் முரியெனப் படுமே என்ப. 14. ஏகாரங்களுள் ஈற்றில் வருவது  அசை; ஏனைய வினா. உன்னை இடர் செய்தது யாது? என வினாய பாங்கனுக்கு எனையிடர் செய்தது ஒன்றல்ல, பொழில் முதலிய அனைத்துமே இடர் செய்தனகாண் என இறுத்தவாறாம். புரு - புருவம்: விகாரம். நுண்மையால் எழுத வொண்ணாத மின்னிடை என்க.

15. மரு - மணம் இரண்டு கயல்கள் போன்று இணைந்த விழிகள் எனினுமாம். 16. வளை -சங்கு. தளை-கட்டு. முளை - விதையினின்றும் முளைத்த முளை. நகை - எயிறு.

இவை மூன்றும் தலைமகன் பாங்கன் கேட்ப உற்றதுரைத்தவை என்ப. அஃதாவது, தலைவனுடைய பிரிவாற்றாத் துயர்கண்டு நினக்குற்றதென்னை என்று வினவிய பாங்கனுக்குத் தலைவன் நெருநல் இத்தகையா ளொருத்தியை இன்னவிடத்தே கண்டே னுக்கு இங்ஙனம் இடர் எய்தியதுகாண் என்று அறிவுறுத்தது என்றவாறு.

திணை நிலைவரி

(17) கடல்புக் .............. கண்டாய்

(இதன்பொருள்:) நின் ஐயர் கடல்புக்கு உயிர் கொன்று வாழ்வர் - நங்காய்! நின் தமையன்மார் கடலில் புகுந்து அங்குள்ள உயிரினங்களைக் கொன்று அதனால் வரும் ஊதியத்தைக்கொண்டு தமது வாழ்க்கையை நடத்து மியல்புடையராவர்; நீயும் - நீதானும்; உடல்புக்கு உயிர் கொன்று வாழ்வைமன் - நீயோ அவரினும் காட்டிற் கொடுந் தொழில் செய்கின்றாய்! அஃதென்னெனின் நீ என் கண்வழியே என்னுடம்பினுட் புகுந்து அங்கு வாழும் என்னுயிரைக் கொன்று களித்து வாழ்கின்றாய் அல்லையோ? மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம் - மறத்தன்மையிலே புகுந்து கட்டுக் கடங்காது நிமிர்கின்ற நின்னுடைய வெவ்விய முலைகள் மிகவும் பெருஞ்சுமையா யமைந்தன காண்; அச்சுமை பொறாது; இடை இடர்புக்கு இடுகும் - நின்னிடை யானது இப்பொழுதே மெலிகின்றது; இழவல் கண்டாய் - நீ இயங்கின் அது முரிந்தொழிதல் தேற்றம் ஆதலின், இனி இயங்கி அவ்விடையை இழந்துவிடாதே கொள்! என்க.

(18) கொடுங்கண்..........கண்டாய்

(இதன்பொருள்:) உந்தை கொடுங்கண் வலையால் உயிர்கொல் வான்-உன் தந்தையோ வளைந்த கண்களையுடைய வலையினாலே உயிர்களைக் கொல்லும் கொடுந்தொழிலுடையான்; நீ - நீதானும் அவனினும் காட்டில் கொடுந்தொழிலையுடைய அஃதென்னெனின்; நீயும் நெடுங்கண் வலையால் உயிர் கொல்வைமன்-நீதானும் நின்னுடைய நெடிய கண் வலையாலே உயிர் கொல்கின்றனை யல்லையோ? வடங்கொள் முலையால் மழை மின்னுப் போல நுடங்கி உகும் மென் நுசுப்பு - நீ இனி இயங்காதே கொள், இயங்கின், தாமே பெருஞ்சுமையாகவும் அச்சுமையின் மேற் சுமையாய் முத்துவடத்தையும் ஏற்றியிருக்கின்ற நின்னினும் கொடிய நின்முலையாலே நின்னிடை முகிலிற் றோன்றும் மின்னல் போன்று வளைந்து முரிந்தொழிதல் தேற்றம் ஆதலின்; இழவல் - அவ்விடையை நீ இழந்துவிடாதே கொள்! என்க.

(19) ஓடுந்திமில்.................கண்டாய்

(இதன்பொருள்:) நின்ஐயர் ஓடும் திமில்கொண்டு உயிர் கொல்வர் - நங்காய்! நின்தமையன்மார் நீரில் இயங்குகின்ற படகினைக் கருவியாகக் கொண்டு கடலிற் சென்று அங்கு வாழும் உயிர்களைக் கொல்லா நிற்பர்; நீ அத்தொழிலில் அவர்களினுங் காட்டில் திறன் மிகவுடையை காண்! எற்றாலெனின்; பிறர் பீடும் எவ்வம் பாராய்-பிறருடைய பெருமையையும் துன்பத்தையும் பாராமல்; நீயும் கோடும் புருவத்து உயிர் கொல்வாய் அல்லையோ! ஆதலினாலே; முலைசுமந்து சிறு மென்மருங்கு வாடும்- இப்பொழுதே நினது பரிய முலைகளைச் சுமத்தலாலே நின்னுடைய சிறிய மெல்லிய இடை வருந்தி வாட்டமுடையதாகின்றது; இழவல் கண்டாய் - அதனையும் இழந்துவிடாதே கொள் என்க.

(விளக்கம்) இம்மூன்றும் ஒருபொருண்மே லடுக்கி வந்தன.

17. ஐயர் - தமையன்மார். வாழ்வைமன் என்புழி, மன்: ஒழியிசை. என்னை? இவ்வாறு பிறர்க்குக் கேடு சூழ்வார்க்குத் தங்கேடு தாமே வரும் என ஒழிந்த இசையெச்சப் பொருள் குறித்து நிற்றலின் என்க. அடுத்த பாட்டிற்கும் இஃதொக்கும். மிடல் - வலி. வன்செயலை மேற்கொண்டு என்பான் மிடல்புக்கு என்றான். அடங்காத என்றது கச்சின்கண் ணடங்காத என்றும் அடக்கம் என்னும் அறத்தினை மேற்கொள்ளாத என்றும் இருபொருளும் பயந்தது. வெம்முலை - வெவ்விய (கொடிய) முலை; விருப்பந்தரு முலை; என இருபொருளுங் காண்க. முலை பாரம் அதனைச் சுமக்கலாற்றாது இடர்புக்கு இடுகும் என்க. இடுகுதல் - மெலிதல். இழவல் என்பது நினக்கு இடை ஒன்றேயுளது. ஆதலால், அதனையும் இழந்துவிடாதே கொள் என்பட நின்றது. கண்டாய்: அசைச் சொல்.

18. கொடுங்கண் - வளைந்த கண்கள் (துளை) நெடிய கண்ணாகிய வலை. பாரமான முலை அச்சுமையின்மேற் சுமையாக வடமும் கொண்டது என்றவாறு.

19. திமில் கொண்டு செல்லும் நின்ஐயரினும் நீ சதுரப்பாடு மிகவு முடையை. நீ கோடும் புருவத்தாலேயே கொல்குவை அல்லையோ? என் றசதியாடியபடியாம். எவ்வமும் எனல் வேண்டிய எண்ணும்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது. சிறுமென் மருங்கு என்றான் பெரிய மிடல்புக்கு அடங்காத வெம்முலை எனக் குறிப்பானுணர்த்தற்கு.

இவை மூன்றும் புணர்ச்சி நீட இடந்தலைப்பாட்டிற் புணர்தலுறுவான் ஆற்றாமை கூறியவை: பொய் பாராட்டல் என்பாருமுளர்.

இனி, இவற்றிற்கு அரும்பதவுரையாசிரியர் நின்தமரும் நீயுஞ் செய்கின்ற கொடுமையாலே இடைமுரியவுங் கூடும்; அதற்குட் பகையாய்த் துணைக்காரணமாகிய முலைகளு முளவாதலால் இடையைப் பரிகரி என்பதாம் எனவும்,

பீடு பிறர் எவ்வம் பார்த்தல் - உனக்குப் பெருமையாவது பிறர் எவ்வம் பார்த்தல் எனவும் குறிப்பர். பாரா என்பதும் பாடம். இதற்குப் பாராத முலை என்க. தான் பெருக்கமுறுமதனாற் பிறர் எவ்வம் பாராத முலை என்பது கருத்தாகக் கொள்க.

வேறு

20 : பவள ............... கொடிய

(இதன்பொருள்:) பவள உலக்கை கையால் பற்றித் தளைமுத்தம் குறுவாள் செங்கண் - பவளத்தாலியன்ற உலக்கையைக் கையினால் பற்றி வெள்ளிய முத்துக்களை அரிசியாகக்கொண்டு குற்றுமிவளுடைய சிவந்த கண்களைக் காண்மின்! தவள முத்தம் குறுவாள் செங்கண் குவளை அல்ல-செங்கழுநீர் மலர் என்பீராயின் பிழையாம்; எற்றாலெனின்; கொடிய - இவை மிகவும் கொடுந் தொழிலுடையன ஆதலால் என்க.

21 : புன்னை ............... கூற்றம்

(இதன்பொருள்:) புன்னை நீழல் புலவுத் திரைவாய் - புன்னை மரங்களின் நீழலையும் புலானாற்றத்தையும் உடைய அலைவாய்ப் பரப்பின் மேல் - அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண் - அன்னங்கள் தன்னடையைப் பார்த்து நடத்தற் பொருட்டு நடக்கின்ற இந்நங்கையின் சிவந்த கண், வாய்மையின் கண்ணன்று; அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண் - வேறென்னையோவெனின்; கொன் வெய்ய கூற்றம் கூற்றம் - தன்றொழிற்றிறத்தே மிகுந்த கொடிய கூற்றங்காண்! தேற்றமாக அவை கூற்றமேயாம்! என்க.

22 : கள்வாய் ............ வெய்ய

(இதன்பொருள்:) கள்வாய் நீலம் கையின் ஏந்தி உணங்கல் வாய்புள் கடிவாள் செங்கண் - தேன் பொருந்திய நீல மலரைக் கோலாகக் கையிற் பற்றி; மீன் வற்றலிடத்தே வீழும் பறவைகளை ஓட்டுமிவளுடைய சிவந்த கண்கள் - வாய்மையிற் கண்களல்ல; உணங்கல்வாய் புள் கடிவாள் செங்கண்(கள்); வெள்வேல் அல்ல-வெள்ளிய வேற்படைகள் என்பீரேல் அவைகளும் அல்ல எற்றாலெனின் ; வெய்ய வெய்ய - அவ்வெள்வேலினுங் காட்டில் இவை மிகவும் வெப்பமுடையன ஆதலால் என்க.

(விளக்கம்) இவை மூன்றும் ஒருபொருள் மேலடுக்கி வந்தன.

20. குறுவாள் - குற்றுவாள். குவளை என்றல் பொருந்தாது. எற்றாலெனின் இவை கொடுந் தொழிலையுடையனவாதலால் என்றவாறு.

21. திரைவாய் - அலைவாய்ப் பரப்பு. அன்னம் நடப்ப - அன்னம் இந்நடையொவ்வேமென அவ்விடத்தினின்றும் அகன்று போக எனினுமாம். கொன் - மிகுதி; கூர்மையுமாம். அவை கண்ணல்ல; கூற்றமே என்றவாறு. அடுக்கு - தெளிவுபற்றி வந்தது.

22. உணங்கல் வாய்ப்புள் கடிவாள் என மாறுக, வெள்வேலினும் இவை வெய்யவாதலின் வேலல்ல என்க.

வேறு

23 : சேரல் .............. ஒவ்வாய்

(இதன்பொருள்:) ஊர்திரை நீர் வேலி உழக்கித் திரிவாள் பின் - ஊருகின்ற அலைகளையுடைய கடலை வேலியாகவுடைய இவ்வுலகத்திலுள்ள மைந்தருடைய மனத்தைக் கலக்கித் திரிகின்ற அக்கன்னியின் பின் சென்று சேரல் மட அன்னம் - அவளைச் சேராதே கொள் (சேர்ந்தாயானால்); நடை ஒவ்வாய் - நடையினாலே நீ அவளை ஒவ்வாதொழிவாய்; சேரல் ...... ஒவ்வாய் - சேராதே கொள்! சேர்ந்தாயானால் நடை யொவ்வாமையால் வருந்துவாய் ஆதலாலே, தேற்றமாக அவளைச் சேராதேகொள் என்க.

(விளக்கம்) நடையால் ஒவ்வாய் அதனால் வருந்துவாய்! தேற்றமாக நடையொவ்வாய் அதனால் சேராதே கொள், என்க. சேரல்: வியங்கோள்.

மடவன்னம் - இளமையுடைய அன்னம். அறியாமையுடைய அன்னம் எனவும் ஒருபொருள் தோன்றிற்று.

இனி, அரும்பதவுரையாசிரியர் - விளையாட்டு விருப்பினால் ஓடுவாளைக் கண்டு நின்னடையுட னொக்குமென்று சொல்லுவர் புலவர்; ஆயினும், இவள் விளையாட்டொழிந்து தன்னியல் (பால்நடப்பாளாயின்) நீ ஒவ்வாய் அதனாலே சேராதே கொள் என விரிப்பர்.

இது காமஞ்சாலா இளமையோள் வயின் ஏமஞ்சாலா இடும்பை யெய்தியோன் சொல்லியது. அஃதாவது - காமக் குறிப்பிற்குத் தகுதியில்லாத பேதைப் பருவத்தாளொருத்தியின்பால் ஒரு தலைவன் இவள் எனக்கு மனைக் கிழத்தியாக யான் கோடல் வேண்டுமெனக்கருதி மருந்து பிறிதில்லாப் பெருந்துயரெய்தியவன் கூறியது என்றவாறு; எனவே இது கைக்கிளைக் காமம் என்பது பெற்றாம்.

நூலாசிரியர் கூற்று

கட்டுரை

24 : ஆங்குக் .............. தொடங்குமன்

(இதன்பொருள்:) ஆங்குக் கானல்வரிப் பாடல் கேட்ட - அவ்விடத்தே கோவலன் யாழிலிட்டுப் பாடிய கானல்வரிப் பாடல்களைப் பொருளுணர்ச்சியோடு கேட்டிருந்த; மான் நெடுங்கண் மாதவியும் - மானினது கண்போல நீண்ட கண்ணையுடைய மாதவி தானும்; மன்னும் ஓர் குறிப்புண்டு இவன் தன் நிலை மயங்கினான் என்று - இவன் பாடிய வரிப்பாடல்கள் அனைத்தினும் நிலைபெற்ற ஒரு குறிப்புப் பொருளும் உளது அஃதாவது, இவன் மயங்கித் தனது நிலையினின்றும் மாறுபட்டான் என்பதே அது, என்று கருதியவளாய், கலவியால் மகிழ்ந்தாள்போல்-அவனொடு கூடும் பொழுது மகிழும் அளவு அவன் பாடல் கேட்டு மகிழ்ந்தவள் போன்று புறத்தே காட்டி; புலவியால் யாழ் வாங்கி - அகத்தில் ஊடலோடு கோவலனிடமிருந்து யாழைத் தன் கையில் வாங்கி; தானும் ஓர் குறிப்பினள்போல் - தன்பால் பிறிதொரு மாறுபாடும் இல்லாதிருக்கவேயும் தானும் வேறு குறிப்புடையாள் போன்று கோவலனுக்குத் தோன்றுமாறு; கானல் வரிப் பாடல் பாணி - கானல்வரிப் பாடல் என்னும் இசைப்பாக்களை; நிலத் தெய்வம் வியப்பு எய்த - அந்நெய்தனிலத் தெய்வமாகிய வருணன் மிகவும் வியப்பெய்தவும்; நீள் நிலத்தோர் மனம் மகிழ-நெடிய நிலவுலகத்தே வாழ்கின்ற மாந்தர் மனம் மிகவும் மகிழவும்; கலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாடத் தொடங்கும் மன் - தான் கைக்கொண்ட யாழிசையோடு இரண்டறக் கலந்து பொருந்திய இசை நலனுடைய தனது மிடற்றினாலே பாடத்தொடங்கினள் என்க.

(விளக்கம்) கோவலன் பாடிய காவிரியை நோக்கினவும் கானல்வரிப் பாணியும் களவொழுக்கத்தே நின்ற தலைவன் கூற்றாக அமைதலின் இவன் தன்மேலன்பிலன்; மனமாறுபட்டு மற்றொருத்தியைக் காதலித்தமையால் அவ்வுணர்ச்சி காரணமாக இங்ஙனம் பாடினன் என்று மாதவி கருதினள். வாய்மையில் ஊழின் வலிமைக்கு இஃதொரு சிறந்த எடுத்துக்காட்டு. ஊழ்வினை உருத்து வந்தூட்டுங்காலத்தே ஊட்டப்படுபவர் மனத்தையே தன்வசமாக்கிக் கொள்ளும் என்பதனைப் பேதைப் படுக்கும் இழவூழ் எனவரும் திருவள்ளுவனார் செம்மொழியானும் உணரலாம்.

ஊழ்வயத்தானே நல்லவை யெல்லாம் தீயவாம் என்னும் அத்தெய்வப்புலவர் திருவள்ளுவனார் அறிவுரைக்கும் ஆற்றவும் இனியனவாகிய கோவலன் பாடிய உருக்களே அவ்விருவர்க்கும் ஆற்றொணா அல்லல் விளைக்கும் கருவியாகவும் மாறி விடுகின்ற இந்நிகழ்ச்சி சிறந்ததோர் எடுத்துக் காட்டாகவும் அமைவதறிக!

அளியளோ! அளியள்! மாமலர் நெடுங்கண் மாதவி. மாசு சிறிதேனும் இல்லாத பேரன்புடையள் கற்புடைத் தெய்வம்; இம்மாதவி, இத்தகைய தூய நெஞ்சுடையாள் தன்னைத் தானே தீயநெஞ்சுடையாளாகக் காட்டத் துணிந்துவிட்டாள்! இவ்வாறு துணிவித்தது அவளுடைய போகூழ், ஈண்டு,

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்

எனவரும் அருமைத் திருக்குறள் நம்மனோராற் பன்முறை நினைந்து நினைந்து தெளியற் பாலது.

மாதவி ஊழ்வழி நின்று யாழோடு பாடுதல்

ஆற்றவரி

25 : மருங்கு .......... காவேரி

(இதன்பொருள்:) காவேரி - தெய்வக் காவிரி நங்காய் நீ! மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூ ஆடையது போர்த்து - இரு பக்கங்களினும் வண்டுகள் மிக்குத் தம்மிசையால் ஆரவாரிப்ப அழகிய மலர்களாலியன்ற ஆடையைப் போர்த்துக்கொண்டு; கருங்கயல் கண் விழித்து ஒல்கி - கரிய கயல்மீனாகிய கண்களை விழித்துக் கொண்டு ஒதுங்கி நடவாநின்றனை; வாழி - நீ நீடுவாழ் வாயாக! இவ்வாறு நீ கருங்கயற் கண்விழித்து ஒல்கி; நடந்த எல்லாம் - பலகாலும் நடந்த நினது நன்னடைகட்கு எல்லாம் காரணமாவது; நின் கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் - நின் கணவனாகிய சோழமன்னன் ஏந்திய மாந்தர் திருந்துதற்குக் காரணமான செங்கோலானது கோடாமையாகும் என்பதனை யான் அறிந்துளேன் காண்! காவேரி வாழி - காவிரி நங்காய் நீ நீடூழி வாழ்வாயாக! என்க.

26 : பூவர்சோலை ........... காவேரி

(இதன்பொருள்:) காவேரி - காவிரிநங்காய்! பூவர் சோலை மயில் ஆல குயில்கள் புரிந்து இசைபாட - மலர்கள் நிறைந்த சோலையாகிய கூத்தாட் டரங்குகளிலே மயில்களாகிய கூத்தியர் மகிழ்ந்து கூத்தாடாநிற்பவும்; அக்கூத்திற்கியன்ற தாள முதலியவற்றை உணர்ந்து அக்கூத்திற்கியையக் குயில்களாகிய பாண்மகளிர் இனிய இசையைப் பாடாநிற்பவும்; காமர் மாலை அருகு அசைய நடந்தாய் வாழி - நின்பா லன்புடையோர் விரும்பியிட்ட மலர் மாலைகள் நின்னிருமருங்கும் அசையாநிற்பவும் நீ பீடுபெற நடக்கின்றனை நீ நீடுவாழ்வாயாக ! காமர் ........ எல்லாம் - இவ்வாறு நீ காமர்மாலை அருகசையப் பல்லாண்டுகளாக நடந்த நடையெல்லாம்; நின் கணவன் நாமவேலின் திறங்கண்டே - நின் கணவனாகிய வளவன் ஏந்திய பகைவர்க்கு அச்சந்தரும் வேற்படையின் வெற்றித் திறத்தைக் கண்டதனால் அல்லவா? அறிந்தேன் காவேரி வாழி இவ்வுண்மையை யான் அறிந்துகொண்டேன் காண் நீ நீடூழி வாழ்வாயாக! என்க.

27 :  வாழியவன்றன் ............ காவேரி

(இதன்பொருள்:) காவேரி வாழி - காவிரிநங்காய் ! நீ நீடுவாழ்வாயாக; அவன்றன் வளநாடு மகவாய் வளர்க்குந் தாயாகி ஊழி உய்க்கும் பேருதவி யொழியாய் - நீதானும் வளையாச் செங்கோலும் வெற்றிவேலும் ஏந்திய நின் கணவனாகிய வளவன் காக்கும் வளமிக்க சோழனாடு நும்மிருவர்க்கும் மகவாக நீதான் அம்மகவினைப் பேணி வளர்க்கு நற்றாயே ஆகி ஊழிதோறும் நடத்தி வருகின்ற பேருதவியை ஒரு காலத்தும் தவிர்ந்திலை யல்லையோ? வாழி - நீ நீடூழி வாழ்வாயாக; நீ இவ்வாறு - ஊழி யுய்க்கும் பேருதவி ஒழியாது; ஒழுகல் அறிந்தேன் - நடத்தற்குரிய காரணத்தை யானும் அறிந்துளேன்காண்! அஃதியாதெனின்; உயிர் ஓம்பும் ஆழி ஆள்வான் பகல் வெய்யோன் அருளே - உயிர்களைப் புறங்காத்தோம்புகின்ற ஆணைச் சக்கரத்தை யுடையவனும் நடுவுநிலை யுடையவனும் யாவரானும் விரும்பப்படுபவனும் நின் கணவனுமாகிய சோழமன்னனது அருளுடைமையே யாம்; காவேரி வாழி - காவேரி யன்னாய் நீ ஊழ்தோறூழி வாழ்வாயாக; என்க.

(விளக்கம்) இவ்வுருக்கள் முன்னர்க் கோவலன் பாடிய ஆற்றுவரிக் கிணையாகப் பாடப்பட்டவை; ஆதலால் அவற்றோடு இவற்றை ஒப்புநோக்கி உணர்க. இதற்குப் பாடாண்டிணைக் கடவுள் வாழ்த்து என்னும் துறைகொள்க. இனி, இதற்கும் களவொழுக்கத்தினிற்கும் தலைவன் தான் குறிப்பிட்டவாறு வந்து ஒழுகுதலாலே ஏமஞ் சான்றவுவகை (தொல் - கள -20) யால் தலைவி அவனை நல்லன் அருளுடையன் என நயந்து தன்னயப்பினைக் காவிரியின் மேலிட்டுத் தலைவன் சிறைப்புறத்தானாக அவன் கேட்பக் கூறியது என்று நுண்ணிதின் உணர்க.

25 - மருங்கு - ஆற்றின் இரு பக்கங்கள். நங்கை என்புழி மருங்கு வண்டு - இரு பக்கங்களினும் அமைந்த கையின்கண் வளையல் என்க பூ ஆடை - ஆற்றிற்கு நீர் மேல் உதிர்ந்து ஆடை போன்று நீரை மறைத்துள்ள மலர்கள் நங்கைக்குப் பூத்தொழிலையுடைய மேலாடை என்க. கயற்கண் - ஆற்றிற்குக் கயலாகிய கண். நங்கைக்குக் கயல் போன்ற கண் என்க. இவை சிலேடை. கணவன் : சோழமன்னன். திருந்துதற்குக் காரணமான செங்கோல் என்க. அக்காரணத்தை யான் அறிந்தேன் என்க. இஃது அரசனுடைய அளிச்சிறப்பு.

26 - பூவர் சோலை என்புழி ஆர் - அர் எனக் குறுகியது செய்யுள் விகாரம் . மாலை - யாற்று நீரில் மலர்மாலையிட்டு வணங்குதல் மரபாகலின் அங்ஙனம் அன்புடையோர் இட்ட மாலைகள் என்க. இருமருங்கினும் மாலையிடப்படுதலால் மாலைஅருகு அசைய என்றாள். இவ்வாறு மலர் மாலையிட்டு யாற்றை வழிபடும் வழக்கம் உண்மையை,

மாலையுஞ் சாந்தும் மதமும் இழைகளும்
கோலங் கொளநீர்க்குக் கூட்டுவா ரப்புனல்
உண்ணா நறவினை ஊட்டுவார் ஓண்டொடியார்

எனவரும் பரிபாடலினும் (10-வையை: 92-4) காண்க. நாமவேல் நாம் என்னும் உரிச்சொல்லீறு திரிந்தது. நாம் - அச்சம். வேலின் திறம் - வெற்றி. இஃது அரசனுடைய தெறற் சிறப்பு.

27: அவன் : சோழமன்னன். வளநாடு நினக்கும் நின் கணவற்கும் மகவாக நீ நற்றாயாகி என்க. ஊழிதோறும் அவ்வறத்தை நடத்துதலால் ஊழியுய்க்கும் பேருதவி என்றாள். உயிரோம்பும் வெய்யோன் ஆழி ஆள்வானாகிய வெய்யோன் பகல் வெய்யோன் எனத் தனித் தனியீயையும். ஆழி - ஆணைச்சக்கரம். ஆழியாள்வான் என்பது சக்கரவர்த்தி என்னும் பெயர்போலப் பெயர்த்தன்மை பெற்றது நின்றது அதற்கு நேரிய தமிழ்மொழிபெயர்ப்பு எனலுமாம். சோழன் கதிரவன் மரபினன் என்பதுபற்றி அவனைக் கதிரவனாக உபசரித்த கருத்துத் தோன்றப் பகல் வெய்யோன் என்றார் என்க.

சார்த்துவரி

28 : தீங்கதிர் ............ எம்மூர்

(இதன்பொருள்:) ஐய - எம்பெருமானே! தீம் கதிர் வாள் முகத்தாள் செவ்வாய் மணி முறுவல் ஓவ்வாவேனும் - நீயிர் கொணருகின்ற இம் முத்துக்கள் காண்டற்கினிய நிலாவினையுடைய திங்கள் போன்ற ஒளியையுடைய திருமுகத்தையுடைய எம்பெருமாட்டியின் சிவந்த வாயகத்தே யமைந்த அழகிய எயிறுகளை ஒவ்வாதனவாகவும் நீயிர் அவற்றைப் பொருளாக மதித்து; மால் மகன் போல வைகலும் நீர் முத்து வாங்கும் என்று வருதிர் - பித்தேறி மயங்கிய ஒருவனைப்போல நாள்தோறும் நீங்கள் இம்முத்துக்களை வாங்கிக் கொண்மின்! என்று கூறிக்கொண்டு சில முத்துக்களைக் கொண்டு வருகின்றீர். யாம் அவற்றை ஏலோம். எற்றால் எனின்; வருதிரைய வீங்கு ஓதம் விளங்கு ஒளிய வெண்முத்தம் தந்து - ஒன்றன்பின் ஒன்றாய்! வருகின்ற அலைகளையுடைய பெருகுகின்ற இக்கடல் தானும் நாள்தோறும் தன்றிரைக்கையால் இவற்றினும் சிறப்ப ஒளியுடையவாகிய வெண்முத்துக்களை எமக்குக் கொணர்ந்து தந்து அவற்றிற்கு மாறாக; விரைசூழ் கானல் பூங்கோதை கொண்டு - நறுமணங் கமழ்கின்ற இக்கடற்கரைச் சோலையிடத்தே யாங்கள் கொய்து புனைந்த மலர்மாலையைப் பெற்றுக்கொண்டு; விலைஞர்போல் மீளும் புகாரே எம்மூர் - வணிகர்போல மீண்டு போதற்கிடனான இப் பூம்புகார் நகரம் எங்கள் ஊர் ஆதலாலே ; என்க.

29 : மறையின் ............. எம்மூர்

(இதன்பொருள்:) ஐய - எம்பெருமானே! வன்பரதர் பாக்கத்து மடவார் செங்கை இறைவளைகள் - வன்மையுடைய பரதவர் சேரியிலே பிறந்த மடப்பமுடைய மகளிரின் சிவந்த கையினது இறையின்கட் செறித்த வளையல்களே; மறையின் மணந்தாரைத் தூற்றுவதை - களவினாலே தமக்கியன்ற தலைவரைக் கூடிய காலத்தே அம்மகளிர் ஒழுக்கத்தைப் பலருமறியப் பழிதூற்றும் என்பதனை; ஏழையம் எங்ஙனம் யாங்கு அறிகோம் - முன்னரே பேதை மகளிரேமாகிய யாங்கள் எவ்வாறு எவ்விடத்தே அறிய வல்லுநமாவேம்; அறிந்திலேங்காண், அறிய மாட்டாமைக்குக் காரணமும் உளது, அஃதென்னெனின்; எம்மூர் - யாங்கள் பிறந்து வளர்ந்த ஊர்தான்; நீள் புன்னை அரும்பிப்பூத்த பொறைமலி பூங்கொம்பு அன்னம் ஏற - நீண்ட புன்னைமரமானது அரும்பெடுத்து மலர்தலாலே சுமைமிகுந்த அதன் மலர்க்கொம்பின் மேல் அன்னப் பறவை ஏறாநிற்ப; நிறைமதியும் மீனும் என அவ்வன்னத்தை முழுத்திங்கள் என்றும் மலர்களை விண்மீன்கள் என்றும் இஃது அந்திமாலைப் பொழுது போலும் என்றும் கருதி; ஆம்பல் வண்டு ஊதும் புகார் - மலர்ந்துள்ள ஆம்பல் மலரிற் சென்று வண்டுகள் தேனூதுதற்குக் காரணமான இப்புகார் நகரமே யாதலால்; என்க.

30 : உண்டாரை ............... எம்மூர்

(இதன்பொருள்:) வெல்நறா உண்டாரை ஊண் ஒளியாப் பாக்கத்து - கள்ளானது தன்னை உண்டுவைத்தும் உண்டமை புறத்தார்க்குப்புலப்படாமல் மறைப்பேம் என்னும் கோட்பாடுடையார் மனத்திட்பத்தைக் கெடுத்து வென்று தன்வயப்படுத்து அவரைக் கொண்டே தன்னையுண்டமையைப் புறத்தார்க்கு ஒளியாமல் தூற்றுவிக்கு மிடமான இப்பாக்கத்தின் கண்ணே; உறை ஒன்று இன்றித் தண்டாநோய் மாதர்தலைத் தருதி என்பது - மருந்து பிறிதொன்று மில்லாத் தீராத தொருநோயை நீ பேதை மகளிர்க்குத் தருகுவை என்பதனை; ஐய யாங்கு அறிகோம் - ஐயனே! ஏழையம்யாம் முன்னரே எங்ஙனம் அறியவல்லுநம் ஆவேம்; அறியா தொழிந்தேம் காண்! மேலும்; எம்மூர் - எமதூர்தானும்; வண்டால் திரை அழிப்ப - தாங்கள் கோலிய மணல் வீட்டைக் கடலினது அலைவந்து அழித்துப் போகாநிற்ப; மாதர் - எம்மினத்துப் பேதை மகளிர்; மதிமேல் நீண்ட புண்தோய் வேல் நீர்மல்க-திங்களின் மேலே நீண்டு கிடந்த பகைவர் குருதி தோய்ந்த வேல் போன்ற தங்கண்களினின்றும் நீர் பெருகாநிற்ப; கையால் மணல் முகந்து கடல் தூர்க்கும் புகாரே - தமது சிறிய கைகளாலே மணலை அள்ளிப் பெரிய கடலைத் தூர்த்தற்கு முயலுமிடமான இப்புகார் நகரமே யன்றோ? என்க.

(விளக்கம்) இவற்றோடு கோவலன் பாடிய கரியமலர் முதலிய மூன்று வரிப்பாடலையும் ஒப்பு நோக்குக. இவை அவற்றிற்கு இணையாகப் பாடப்பட்டவை.

28 : இது கையுறைமறை. அஃதாவது: களவொழுக்கத்தில் நிற்கும் தலைவன் தோழியை இரந்து பின்னிற்பவன் தலைவிக்குக் கொடுத்துக் குறைநயப்பித்தற்பொருட்டுக் கொணர்ந்த கையுறையைத் தோழி ஏற்றுக்கொள்ள மறுத்தது என்க. தீங்கதிர் - திங்கள்: அன்மொழித் தொகை. திங்கள் போலும் ஒளியுடைய முகத்தாள் என்க. அவளாவாள் தலைவி. கையுறையின் தகுதியின்மை தோன்றச் செவ்வாய் மணி முறுவல் இவை ஒவ்வா என்றாள். மான்மகன் - மால்+மகன் - பித்தேறி மயங்கியவன்; காமவேள் போல எனவும் ஒரு பொருள் தோன்றுதல் உணர்க. முறுவல் - எயிறு. வரைதற்கு முயல்கின்றிலீர் என்பாள் வைகலும் வருதிர் என்றாள். வீங்கு ஓதம் வெண்முத்தம் தந்து கோதை கொண்டு மீளும் என்றாள் இம்முத்து எமக்கு ஆற்றவும் எளிய என உணர்த்தற்கு. அரிய முத்தைத் தந்து எளிய கோதையை எம் முரிக் கடல் பெறுமாறு போல எளிய இம்முத்தைத் தந்து எம் பெருமாட்டியை நீயிர் நுகரக் கருதுதிர் என உள்ளுறை தோன்றிற்று. யாம் அதற்குடம்படேம் வரைந்து கொள்ளுதி என வற்புறுத்தற்கு இங்ஙனம் உள்ளுறுத்துக் கூறினள்.

29 : மறை - களவு. வன்பரதர் பாக்கத்து மடவார் மறையின் மணந்தாரை அவர்தம் வளையே தூற்றும் என்பதனை யாங்கள் முன்பு அறிந்திலேம் என்றவாறு. செங்கை இறை - செங்கையாகிய இறை; இறை - முன்கை. வளைகள் தாம் கழன்றுகுவதனாலே தலைவியின் பிரிவாற்றாமைப் பிறர் அறியும்படி செய்தலை, வளைகள் தூற்றும் என்றாள். இஃது அலர் அறிவுறுத்து வரைவு கடாவியவாறாம். எம்மூரே பேதைமையுடைத்து ஆதலின், யாங்களும் பேதையரேம் ஆயினேம் என்பாள் எம்மூரில் புன்னைப் பூங்கொம்பில் அன்னத்தையும் பூவையும் கண்டு அவற்றைத் திங்களும் விண்மீனும் என்று எண்ணி ஆம்பல் மலரும் என்றாள்.

30: நறா-கள். அஃதுண்டாரை வெல்லுதலாவது - இதனை உண்டு பிறர் அறியாமல் மனத்திட்பத்தோ டிருப்பேமென் றுறுதிகொண்டு உண்டாருடைய அத்திட்பத்தை அழித்துத் தன்வயப்படுத்தி அவரைக் கொண்டே கள்ளுண்டமையைப் பிறர் அறியுமாறு வெளிப்படுத்தி விடுதல். இதனை,

ஒளித்தவர் உண்டு மீண்டிவ் வுலகெலாம் உணர வோடிக்
களித்தவர் (கிட்கிந்தை - 93)

எனவரும் கம்பர் வாக்கானு முணர்க. இதற்கு, களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத் தொளித்ததூஉம் ஆங்கே மிகும் என வரும் (928)-திருக்குறளைக் காட்டுவாருமுளர். இதற்குப் பரிமேலழகருரை இவர் கருத்தை வலியுறுத்துமேனும் ஆசிரியர் திருவள்ளுவனார் கருத்தஃதன்று. மற்று அவர் கருத்து வருமாறு: யான் இப்பொழுது பெருந்துன்பத்திற்கு ஆளாகியுளேன் இத்துன்பத்தை மாற்றும் பொருட்டுக் கள்ளுண்டு அவற்றை அறியேனாகுவன் என்று சிலர் கருதிக் கள்ளுண்ணத் தலைப்படுதலுமுண்டு; அங்ஙனம் கருதியுண்பார்க்கும் அக்கள் உதவி செய்வதில்லை. மேலும் அவர் தம்மியற்கை யறிவாலே அமைதி கண்டுள்ள துன்பங்களையும் கள்வெறி கிளர்ந்தெழச் செய்து முன்னையினுங்காட்டில் மிகுவிக்கும். ஆதலால், அவ்வாற்றானும் கள்ளுண்டல் கூடாது என்பதேயாம். இங்ஙன மாகலின் அவ்வெடுத்துக் காட்டுப் போலி என்றொழிக.

இனிக் கடலைக் கையான் மணன் முகந்து தூர்க்கக் கருதுமளவு பெரும் பேதைமைத்து எம்மூர் அதன்கட் பிறந்து வளர்ந்த யாம் நின் போல்வார் மாதரைத் துன்புறுத்துவர் என்று எவ்வாறு அறிய மாட்டுவேம்: அறியேமாயினேம்: அறியின் இவ்வொழுக்கத்திற் கிசைந்திரேம் என்றவாறு.

இவையிரண்டும் தோழியிற் கூட்டங் கூடிப் பின்பு வாராவரைவல் என்றாற்குத் தோழி தலைவியின் ஆற்றாமை கூறி வரைவு கடாஅயவை என்க.

திணைநிலைவரி

31 : புணர்துணை...........உணரேனால்

(இதன்பொருள்:) வணர்சுரி ஐம்பாலோய் - வளைந்து சுருண்ட கூந்தலையுடைய எம்பெருமாட்டியே, ஈதொன்று கேள்; புணர்துணையோடு ஆடும் பொறி அலவன் நோக்கி - தான் புணர்ந்தின் புறுதற்குக் காரணமான தனது காதற்றுணைவியாகிய பெடை நண்டோடு விளையாடுகின்ற புள்ளிகளையுடைய ஆண்நண்டினைக் கூர்ந்து நோக்கிப் பின்னர், இணர்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி - பூங்கொத்துக்கள் செறிந்த அழகிய சோலையிடத்தே நின்ற என்னையும் கூர்ந்து நோக்கி; உணர்வு ஒழியப் போன - தன்னுணர்ச்சி தன்னைக் கைவிட்டமையாலே ஏதோ கூறக் கருதி யவன் யாதொன்றும் கூறாமல் வாய்வாளாது போன; ஒலி திரை நீர்ச் சேர்ப்பன் - முழங்குகின்ற கடலையுடைய இந் நெய்தனிலத் தலைவன்; வண்ணம் உணரேனால் - நிலைமை யாதென்று யான் உணர்கின்றிலேன்; என்க.

இது - அறியேன் என்று வலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தது. வலிதாகச் சொல்லுதலாவது - உணர்வொழியப் போன சேர்ப்பன் வண்ணம் உணரேன் எனவே; ஒரோவழி அவன் இறந்து படுதலும் கூடும் என்பதுபடக் கூறுதல். ஆகவே, தலைவிக்கு ஆற்றாமை மிக்குக் குறை நேர்வாளாம் என்க.

மேல்வரும் ஐந்து வரிப்பாடலும் இரங்கலும் அதன் நிமித்தமுமாய் நெய்தற்றிணை பற்றியே நின்றன. ஐந்தும் காமமிக்க கழிபடர் கிளவி என்னும் ஒரு துறை பற்றி அடுக்கி வந்தனவாம்.

32 : தம்முடைய ............. மாட்டேமால்

(இதன்பொருள்:) தம்முடைய தண் அளியும் தாமும் தம் மான் தேரும் - எம்பெருமான் தம்முடைய தண்ணிய அருளும் தாமும் தம்முடைய குதிரைகளையுடைய தேரும்; எம்மை நினையாது விட்டாரோ விட்டு அகல்க - அளியேமாகிய எம்மைச் சிறிதும் நினையாமல் கைவிட்டுப் போயினரோ? அங்ஙனம் போனாற் போயொழிக: அம்மெல் இணர அடும்புகாள் அன்னங்காள் - அழகிய மென்மையுடைய பூங்கொத்துக்களையுடைய அடும்புகளே! அன்னப் பறவைகளே! நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டோம் ஆல் - (தம்மை மறவாதேமைத் தாம் மறந்து போயினும்) அவரை யாம் மறந்தமைகிலேம் காண்; என்க.

(விளக்கம்) தம்முடைய தண்ணளியும் தாமும் தம் தேரும் விட்டனர் என்பது தலைமைப் பொருளையும் தலைமையில் பொருளையும் எண்ணித் தலைமைப் பொருட்கு வினை கொடுப்பவே தலைமையில் பொருளும் முடிந்தனவாவ தொரு முறைமை பற்றி வந்தது என்பர் சேனாவரையர். (தொல். சொல். 52. உரை.)

அடும்புகளும் அன்னங்களுமே இப்பொழுது தனக்குத் துணையாயினமைபற்றி அவற்றை விளித்து அவை கேட்பனபோலக் கூறினள். இவ்வாறு செய்யுள் செய்வது புலனெறி வழக்கம். இதனை, நோயும் இன்பமும் எனவரும் (தொல் - பொருள் - பொருளியல் - 2) சூத்திரத்தானும் ஞாயிறு திங்கள் எனவரும் (þ செய்யுளியல் 192) சூத்திரத்தானும் அறிக. மறக்க மாட்டேம் - மறவேம்; (ஒருசொல்)

33 : புன்கண் ............... கண்டறிதியோ

(இதன்பொருள்:) இன்கள்வாய் நெய்தால் - இனிய தேனூறும் வாயினையுடைய நெய்தற்பூவே! புன்கண் கூர் மாலை - துன்பமே மிகாநின்ற இந்த அந்திமாலைப் பொழுதிலேயே; புலம்பும் என் கண்ணே போல் துன்பம் உழவாய் - தனிமையால் வருந்துகின்ற என் கண் போன்று துன்பமடையாமல்; துயிலப் பெறுதி - இனிதே துயிலும் பேற்றையும் பெற்றுள்ளனை; நீ எய்தும் கனவினுள் - இப்பொழுது நீ கனவுகாண்குவை யன்றோ அங்ஙனம் நீ காணுகின்ற அந்தக் கனவிடத்திலேனும்; வன்கணார் - கண்ணோட்டமில்லாத எம்பெருமான்; கானல் வரக்கண்டு அறிதியோ - இந்தக் கடற்கரைச் சோலையிலே வர அவரை நீ கண்டறிகின்றாயோ? அறிந்தால் கூறுதி என்க.

(விளக்கம்) நெய்தால்: விளி. நீ என் கண் போலுதி ஆயினும் என் கண் போல் துன்பமுனக்கிலை; என் கண் துயில்கில; நீ துயிலுதி; அது நீ பெற்ற பேறு என்பாள் துயிலப் பெறுதி என்றாள். யான் அரிதில் எப்போதேனும் துயில் பெற்றால் அப்பொழுதே அவரை என்தோள் மேலராகக் கனவு காண்பேன். நீ துயில்கின்றா யாதலால் கனவு காண்டல் தேற்றம்; நீ எய்தும் அக் கனவினுள் அவர் வரக் காண்கின்றனையோ? என்று வினாயவாறு. அவர் கண்ணோட்டமில்லாதவர் ஆயினும், அவரைக் கண்டால் என்னிலை கூறுதி என்பது குறிப்பு.

இது குறிபிழைத்துழித் தன்வயின் உரிமையும் தலைவன்வழிப் பரத்தமையும் படக்கூறியது என்பர் நச்சினார்க்கினியர் ( தொல் களவு 16).

34 : புள்ளியன்மான் ............ என்செய்கோ

(இதன்பொருள்:) தெள்ளும் நீர் ஓதம் - தெளிந்த நீரையுடைய கடலே! நீதான்; புள் இயல் மான் தேர் ஆழிபோன வழி எல்லாம் சிதைத்தாய் - எம்பெருமான் ஊர்ந்த பறவை போன்று விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டிய தேரின் ஆழிகள் பதிந்த சுவடுகளையுடைய வழிமுழுதும் நினது அலைக்கைகளாலே அழித்தொழித்தாய்! என் செய்கோ - அவற்றைக் கண்டு ஆறுதல் பெறுகின்ற அளியேன் இனி என்செய்தாற்றுகேன்? தெள் - அவ்வாறு வழி சிதைத்த தெள்ளுநீர் ஓதமாகியகடலே நீதான்; எம்மோடு ஈங்குள்ளாரோடு உள்ளாய் - எம்மோடு இவ்விடத்தே இருந்தும் அலர்தூற்றி எமக்கின்னல் சூழ்வாரோடு நீயும் உறவு கொண்டுள்ளனை ஆதலால்; உணராய் சிதைத்தாய் - எமது வருத்தத்தைக் கருதாயாய் எமக்கின்னலாக அவ்வழியைச் சிதைத்தனை போலும்; என்செய்கோ - இனி யான் என்செய்தாற்றுகேன், என்க.

(விளக்கம்) புள்ளியற் கலிமா வுடைமை யான என்பது தொல்காப்பியம். (கற்பு 53) ஈங்குள்ளார் என்றது - அலர் தூற்றும் கொடிதறிமகளிரை. எம்மோடீங்குள்ளார் எம்நோயுணராராய் அலர்தூற்றி இன்னல் செய்தல்போன்று நீயும் உணராயாய் வழிசிதைத்து இன்னல் செய்குதி என்பது கருத்து. தெள்ளுநீர் ஓதம் - கடல் : அண்மைவிளி. என் செய்கு - என்செய்வேன். ஓகாரம் ஈற்றசை.

35 : நேர்ந்த ........... என்னீரே

(இதன்பொருள்:) நம் நேர்ந்த காதலர் - நம்மோடு பொருந்திய நங் காதலர்; நேமி நெடுந்திண்தேர் ஊர்ந்த வழி சிதைய ஊர்கின்ற ஓதமே - உருளையுடைய நெடிய நமது தேரினைச் செலுத்திய சுவடுகள் சிதைந்தொழியும்படி அவற்றின் மேலே செல்லா நின்ற கடலே; பூந்தண் பொழிலே புணர்ந்து ஆடும் அன்னமே - மலர்களையுடைய குளிர்ந்த புண்பொழிலே! பெடையுஞ் சேவலுமாய்ப் புணர்ந்து இன்புற்று விளையாடாநின்ற அன்னப் பறவைகளே; ஈர்ந்தண் துறையே - மிகவும் குளிர்ந்த கடற்றுறையே! இது தகாது என்னீரே - நீயிரெல்லாம் எம்மோ டீங்குள்ளீ ரல்லீரோ? அவர் ஈண்டு நின்றும் போம்பொழுது நீயிர் இவ்வாறு பிரிந்து போதல் நுமது பெருந்தகைமைக்குத் தகுதியாகாது என்று எம்பொருட்டு ஒரு மொழியேனும் கூறுகின்றிலீர் இது நுமக்கறமாமோ? என்க.

(விளக்கம்) நேர்ந்த - பாலதாணையால் நம்மைத் தலைப்பட்ட எனினுமாம். நேமி - உருளை. ஓதம் - கடல். கடலும் பொழிலும் அன்னமும் துறையும் தலைவனாற் காதலிக்கப்படுவன ஆதலின், அவற்றையும் உளப்படுத்தி நங்காதலர் என்றாள். தண் பொழிலாயிருந்தும் கூறுகின்றிலை. புணர்ந்தாடுவீராகவும் பிரிவுத்துயர் அறிகுதிர் அறிந்தும் அன்னங்காள் கூறுகின்றிலீர் என்பாள் புணர்ந்தாடும் அன்னமே! என்றாள். ஈர்ந்தண்துறை என்றாள் - ஈரிய அருளுடையையா யிருந்தும் தகாதென்றிலை எனற்கு.

36 : நேர்ந்து .......... கடலோதம்

(இதன்பொருள்:) கடல் ஓதம் - கடற்பெருக்கே! நேர்ந்த நம் காதலர் நேமி நெடுந் திண்தேர் ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் வாழி - நம்மோடு பொருந்தின நங் காதலர் ஆழியையுடைய நெடிய திண்ணிய தேரூர்ந்த சுவடும் சிதையும்படி ஊர்ந்தனை நீயே வாழ்ந்து போகுதி; கடல் ஓதம் மற்று எம்மோடு தீர்ந்தாய் போல் - கடற் பெருக்கே! நீதானும் எம்மோடு உறவொழிந்தாய்போல; ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் - அவர் தேரூர்ந்த சுவடு சிதையும்படி ஊர்ந்தனை; வாழி - நீ வாழ்ந்து போதி; தீர்ந்திலையால் - உறவொழிந்த நீ துவர ஒழிந்து போனாயுமல்லை. மீண்டும் நின் ஆரவாரத்தால் இன்னல் செய்கின்றனை, இஃதுனக்குத் தகுவதோ? என்க.

(விளக்கம்) தீர்ந்தாய் போல் தீர்ந்திலை என்பதற்கு உறவு போலிருந்து உறவாயிற்றிலை, காரியத்தால் வேறுபட்டாய் என்பர் அரும்பதவுரையாசிரியர். வாழி என்றது, குறிப்புமொழி. பரந்து கெடுவாய் என்னும் பொருட்டு.

மயங்கு திணைநிலை வரி

37 : நன்னித்திலத்தின் ........... என்செய்கோ

(இதன்பொருள்:) நல் நித்திலத்தின் பூண் அணிந்து நலஞ்சார் பவளக் கலை உடுத்துச் செந்நெல் பழனக் கழனிதொறும் திரை உலாவு கடல் சேர்ப்ப - அழகிய முத்தாகிய அணிகலனை அணிந்து அழகு பொருந்திய பவளமாகிய மேகலையையும் அணிந்து செந்நெற்பயிரையுடைய மருதப்பரப்பிலுள்ள வயல்கள் தோறும் தன் அலைகளோடே உலாவி வருகின்ற கடல் சார்ந்த நெய்தனிலத் தலைவனே! புன்னைப் பொதும்பர் மகரத்திண் கொடியோன் எய்த புதுப்புண்கள் - புன்னை மரச் சோலையினூடே மகர மீன் வரைந்த கொடியையுடைய காமவேள் தன் மலர்க்கணையாலே எய்யப்பட்ட புதிய புண்கள்தாம்; என்னைக் காணாவகை மறைத்தால் என்னை அடையாளம் காணமாட்டாதபடி மறைத்தால்; அன்னை காணின் என்செய்கு - இவ்வேறுபாட்டினை எம்முடையதாய் காண்பாளாயின்; யான் என் செய்துய்குவேன்? உய்யேன்காண்! என்க.

38 : வாரித் .................. என்செய்கோ

(இதன்பொருள்:) வண்பவளவாய் மலர்ந்து வாரித் தரள நகை செய்து பரதர்சேரி வலைமுன்றில் திரை உலாவு கடல் சேர்ப்ப - வளவிய சிவந்த பவளமாகிய வாயைத் திறந்து முத்தாகிய புன்முறுவல் காட்டிப் பரதவர் சேரிக்கண் வலை உணங்கும் முற்றத்தே சென்று அலைகள் உலாவுதற்குக் காரணமான கடலையுடைய நெய்தற் பரப்பின் தலைவனே; மடவாள் மாரிப் பீரத்து அலர்வண்ணம் கொள்ள எம்பெருமாட்டி நின் பிரிவாற்றாது கார்காலத்தே மலரும் பீர்க்கம்பூப் போன்ற நிறம் உடையாளாக; அன்னை கடவுள் வரைந்து ஆர் இக் கொடுமை செய்தார் என்று அறியின் என்செய்கு - அதுகண்டு எம்முடைய தாயானவள் முருகனுக்கு வெறியாட்டயர்ந்து என் மகட்கு இந்நோய் செய்தார் யார் என்று வேலனை வினாவி அறிவாளாயின் அப்பொழுது யான் என்செய்வேன்; என்க.

39: புலவுற்று ............... என்செய்கோ

(இதன்பொருள்:) புலவு உற்று இரங்கி அது நீங்க பொழில் தண் தலையில் புகுந்து உதிர்ந்த செம்மல் கலவை மணம் கமழத் திரை உலாவு கடல் சேர்ப்ப - தன்மீது புலானாற்றம் பொருந்த அதற்கு வருந்தி அந்நாற்றம் தீர்தற்பொருட்டுப் பூம்பொழிலின்கீழ்க் குளிர்ந்த இடத்தே புகுந்து ஆண்டுதிர்ந்து கிடக்கும் பல்வேறு வகையான பழம்பூக்களின் கலப்புற்ற நறுமணம் தன்மேற் கமழ்தல் கண்டு அலையானது மகிழ்ந்துலாவா நிற்றற்குக் காரணமான கடலையுடைய நெய்தற் றலைமகனே! மடவாள் பலவுற்று ஒருநோய் துணியாத படர்நோய் தனி உழப்ப - எம்பெருமாட்டி ஆராய்வார்க்குப் பற்பல நோயாகக் காணப்பட்டு இஃதின்ன நோய் என்று தெளியவொண்ணாத மனநோயாகிய இக்காம நோயைத் தமியளாக நுகராநிற்ப; அறியா நோய் அலவுற்று இரங்கி அன்னை அறியின் என் செய்கோ - இன்ன நோய் என்று அறியப்படாத இந்நோயை அலந்தலைப்பட்டு வருந்தி எம் அன்னை தான் அறிவாளாயின் யான் அவட்கு என் சொல்லுகேன் என்க.

(விளக்கம்) 37 - நல் நித்திலம் - அழகிய முத்து. கலை - மேகலை. உலாப் போவார் அணிகலன் அணிந்து போதல் உண்டாகலின் இங்ஙனம் கூறினள். பழனம் - ஈண்டு மருத நிலம் என்னும் பொருட்டு. ஈண்டு மருதமும் நெய்தலும் மயங்குதலறிக. புன்னைப் பொதும்பர் இயற்கைப் புணர்ச்சி யெய்தியவிடமாகலின் காமவேள் கணை எய்த இடமாகக் குறித்தாள். மகரத் திண்கொடியோன் - காமவேள். அவன் மேலும் மேலும் வருத்துவதனைப் புதுப் புண்கள் என்றாள். காணாவகை மறைத்தலாவது அடையாளந் தெரியாதபடி உடம்பு மாறுபடுதல். இவ்வாறு மெலிவதனை அன்னை காணின் என் செய்வேன் என்றவாறு. என் செய்வேன் என்றது கையறுநிலை. என்னைக் காணாவகை என்றது தலைவியைக் காணாதபடி என்றவாறு. ஈண்டுத் தலைவியைத் தோழி தானாகக் கொண்டு கூறுகின்றாள். இவ்வாறு கூறும் புலனெறி வழக்கம் உண்மையை, தாயத்தின் அடையா என வரும் தொல்காப்பியச் சூத்திரத்தால் (பொருளியல் - 27) அறிக. என் தோள் எழுதிய தொய்யில் என்று தோழி தலைவியின் தோளைத் தன்றோள் என்பது (கலி - 18) இதற்கு எடுத்துக்காட்டு.

38 : வாரித்தரளம் என்புழி வாரி வாளா அடைமாத்திரையாய் நின்றது. கடல் முத்து, பவளவாய் மலர்ந்து தரள நகை செய்து என மாறுக. நகை செய்தலாவது - எயிறு தோன்றப் புன்முறுவல் பூத்தல். உலாப்போவார் பிறர் முன்றிலில் செல்லுங்கால் அங்குள்ளாரைக் கண்டு மகிழ்ந்து வாய் மலர்ந்து முறுவலிப்பதுண்மையின் இங்ஙனம் கூறினள். பீரம் - பீர்க்கு. அலர் - மலர், இதனிறம் பசலைக்குவமை. நின்னை அறியாது தெளிந்தவள் என்பாள் தலைவியை மடவாள் என்றாள். கடவுள் வரைதல் - முருகக் கடவுட்கு வழிபாடு செய்து வினாதல். செய்தார் யார் என்று வினவி அறியின் என்க.

இனி, இம் மூன்றும் வரைவுகடாஅதல் என்னும் ஒரு பொருண்மேல் அடுக்கி வந்த வரிப்பாடல்கள் (உருக்கள்). இவற்றினுள், 37- நெய்தனிலத்து அலை மருத நிலத்து வந்துலாவும் என்னும் கருப்பொருளில் நீதானும் வரைந்து கொள்ளாமல் இன்னும் ஏதிலனாகவே வந்து மீள்கின்றனை என உள்ளுறை காண்க.

38 - திரை தனக்குரிய கடலை விட்டுப் பரதர் முன்றிலில் வந்து வாளா வாய் மலர்ந்து முறுவலித்து மீண்டும் தன் கடலுக்கே போதல் போன்று நீயும் தலைவியைக் கூடி மகிழ்தற் பொருட்டன்றி அவளை வரைந்து கொண்டு நின் மனைக்கு அழைத்துப் போக நினைக்கின்றிலை என்று உள்ளுறை காண்க.

39. இதன்கண் - அலைதனக்கெய்தியபுலால் நாற்றம்தீரப்பொழிற்றண்டலை புகுந்து கலவை மணங்கமழ உலாவினாற்போல நீயும் இக்களவொழுக்கத்தால் எய்திய பழி தீர வரைவொடு வந்து இவள் வளமனை புகுந்து வதுவை செய்து புகழ் பரவ இல்லறம் நிகழ்த்தல் வேண்டும் என்பது உள்ளுறை என்க.

40 : இளையிருள் ........... மருண்மாலை

(இதன்பொருள்:) எல் செய்வான் மறைந்தனனே இளை இருள் பரந்ததுவே - கதிரவன்றானும் மேலைக்கடலிலே மூழ்கி மறைந்தனனே! அந்தோ அந்திமாலைக்குரிய இளமையுடைய இருள் உலகெங்கும் வந்து பரவிவிட்டதே; கண் களைவு அரும் புலம்பு நீர் பொழீஇ உகுத்தன - என் கண்கள் தாமும் பிறிதோ ருபாயத்தானும் நீக்குதற்கரிய எனது தனிமைத் துயர் காரணமாகப் பெருகிய துன்பக் கண்ணீரை மிகுதியாகச் சொரியலாயினனே! தளை அவிழ் மலர்க்குழலாய் - கட்டவிழ்ந்து மலர்ந்த மலரணிந்த கூந்தலையுடைய என் தோழியே! வளை நெகிழ எரிசிந்தி வந்த இம் மருள் மாலை - என்னுடைய வளையல்கள் நெகிழும்படி காமத்தீயைத் சிதறிக்கொண்டு இங்குவந்த இந்த மயக்கந் தருகின்ற அந்திமாலைப் பொழுது; தணந்தார் நாட்டு உளதாங் கொல் -நம்மைப் பிரிந்துறைகின்ற அவ்வன்கண்ணர் வதிகின்ற அந்நாட்டினும் உளதாமோ உரைத்தி! என்க.

41 : கதிரவன் ............. மருண்மாலை

(இதன்பொருள்:) கதிரவன் மறைந்தனனே - அந்தோ கதிரவன் குடதிசைக் கடலில் மூழ்கி மறைந்தொழிந்தானே! கார் இருள் பரந்ததுவே - உலகெங்கும் கரிய இருள் வந்து பரவிவிட்டதே; எதிர் மலர் புரை உண்கண் - இவ்வந்திமாலையை எதிர்கொள்கின்ற கருங்குவளை மலர்கள் போன்ற என் மையுண்ட கண்கள் தாமும்; எவ்வநீர் உகுத்தனவே - துன்பக் கண்ணீரைச் சொரியலாயினவே; புதுமதி புரை முகத்தாய் - புதிய திங்கள் ஒத்த முகத்தையுடைய தோழியே! மதி உமிழ்ந்து கதிர் விழுங்கி வந்த இம் மருள் மாலை - நெருநல் விழுங்கிய திங்களை உமிழ்ந்துவிட்டு அதற்கீடாக இற்றைநாட் கதிர்மண்டிலத்தை விழுங்கி இங்கு வந்த இம்மருட்சி தருகின்ற அந்திமாலைப் பொழுதுதான்; போனார்நாட்டு உளதாங்கொல் - நம்மைப் பிரிந்துபோன அவ்வன்கண்ணர் வதிகின்ற நாட்டினும் உளதாமோ? உரையாய்! என்க.

42 : பறவை ........ மருண்மாலை

(இதன்பொருள்:) பகல் செய்வான் மறைந்தனனே எனக்கு ஆற்றுந் துணையாகிய பகற்பொழுதைச் செய்கின்ற ஞாயிற்றுத் தேவனும் இப்பொழுது அது செய்யாது மறைந்து போயினன்; பறவை பாட்டு அடங்கின - ஓரோவழி எனக்கு ஆறுதலாகப் பாடிய பறவைகளும் குடம்பை புகுந்து பாட்டடங்கிப் போயினவே; நிறைநிலா நோய்கூர - தன்உறுப்புகள் முழுதும் நிறைந்த திங்கள்தானும் என் நோயை மிகுவியா நிற்றலாலே; நெடுங்கண் - என் நெடிய கண்கள் அந் நோயாற்றாமல்; நீர் உகுத்தனவே -துன்பநீரைச் சொரிகின்றனகாண்; துறுமலர் அவிழ் குழலாய் - செறித்த மலர்கள் மலராநின்ற கூந்தலையுடைய தோழியே! மறவையாய் என் உயிர் மேல்வந்த - மறத்தன்மை யுடையதாய் எனதுயிரைப் பருகுதற்குக் குறிக்கொண்டுவந்த; இம்மருள்மாலை - இந்த மருள் தருகின்ற அந்திமாலைப் பொழுது; துறந்தார் நாட்டு உளது ஆங்கொல் - நம்மைத் துறந்துபோனவன்கண்ணர் வதிகின்ற அந்நாட்டினும் உளது ஆகுமோ? உரைத்தி என்க.

(விளக்கம்) 40. இளைய விருள் - இளையிருள் என விகார மெய்தியது. எல்+செய்வான்-பகல் செய்வான்; ஞாயிறு. களைவு களைதல். புலம்பு - தனிமைத் துன்பம். பொழீஇ - பொழிந்து கண் உகுத்தன என்க தணந்தார்: வினையாலணையும் பெயர் தணந்தார் நாட்டினும் உளதாயின் அவர் நம்மை மறந்துறையார். அங்கில்லை போலும் என்றவாறு. பின்வருவனவற்றிற்கும் இஃதொக்கும். எரி - காமத் தீ. மருள் தருகின்ற மாலை.

42. எதிர் மலர் - மலரும் பொழுதை எதிர்கொண்ட மலர் - எதிராகப் பிணைத்த மலருமாம். புரை உவமவுருபு. எவ்வநீர் - துன்பக் கண்ணீர் ஒளி மிகுதி பற்றிப் புதுமதி புரை - முகம் என்றாள். போனார் - பெயர். மதியுமிழ்ந்து கதிர் விழுங்கி வந்த விம்மருண்மாலை எனவரும் அடியினது அழகும் அணியும் நினைந்தின்புறுக. மாலையின் கொடுமை மிக்க ஆற்றல் கூறியவாறு. நிறை நிலா - நிறுத்த நில்லா வாய் என்பது அரும்பதவுரை. துறுமலர் - செறித்த மலர் - செருகிய மலர். மறவையாய் - மறத்தன்மையுடையதாய் உயிர் மேல் வருதல் - உயிரைப் பருக வேண்டும் என்று வருதல். மாலையோ வல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது என வரும் திருக்குறளும் (1211) ஈண்டு நினைக.

(37) நன்னித்திலத்தின் என்பது முதல் (42) பறவை பாட்டடங்கினவே என்பதீறாக வரும் ஆறு வரிப்பாடலும் மயங்குதிணை நிலைவரி. செந்நெற் பழனத்துக் கழனிதொறும் திரையுலாவும் என வருவது திணைமயக்கமாம்.

சாயல்வரி

43 : கைதை .............. அல்லர்

(இதன்பொருள்:) ஒருவர் கைதை வேலிக் கழிவாய் வந்து எம்பொய்தல் அழித்துப் போனார் - யாரோ ஒருவர் யாம் விளையாட்டயர்ந்த தாழை வேலியையுடைய கடற்கழி மருங்கே தாமே வந்து யாம் மணலாற் கோலிய எமது சிற்றிலைச் சிதைத்துப் போயினர்காண்; பொய்தல் அழித்துப் போனார் - அவர் எமது சிற்றிலை அழித்துப் போனாரேனும்; அவர் நம் மையல் மனம் விட்டு அகல்வார் அல்லர் - அவர்தாம் இன்னும் எம்முடைய மயக்கமுடைய நெஞ்சத்தைவிட்டுப் போனாரல்லர்காண் !  இந் நெஞ்சம் அவரையே இடையறாது நினைகின்றது, என் செய்கோ என்க.

44 : கானல் ........... அல்லர்

(இதன்பொருள்:) ஒருவர் கானல் வேலிக் கழிவாய் வந்து - யாரோ ஒரு ஆடவர் யாம் விளையாடிய கடற்கரைச் சோலையை வேலியாக வுடைய கழியிடத்தே தாமாகவே வந்து; நீ நல்கு என்றே நின்றார் - நங்கையே நீ எனக்கு அருள் தருதி என்று எம்மையிரந்து நின்றார்; நீ நல்கு என்றே நின்றார் அவர் நம் மான் நோக்கம் மறப்பார் அல்லர் - அங்ஙனம் கூறிநின்ற அவர்தாம் நம்முடைய மானநோக்கம் போன்ற நோக்கத்தை மறந்தொழியார் போலும்; அவர் மீண்டும் மீண்டும் வருகுவர்காண்! என்க.

45 : அன்னம் ........... அல்லர்

(இதன்பொருள்:) நென்னல் ஒருவர் (கழிவாய் வந்து ஆங்கு) அன்னம் துணையோடு ஆடக் கண்டு - (யாம் விளையாடும் கழியிடத்தே வந்து) நேற்று ஓராடவர் அன்னச்சேவல் தன்பெடையோடு கூடி விளையாடுதலைக் கண்டு; நோக்கி நின்றார் - அக்காட்சியைக் கூர்ந்து நோக்கி நின்றனர். நென்னல் நோக்கி நின்றார் அவர் நேற்று அங்ஙனம் நோக்கிநின்ற அவ்வாடவர். நம் பொன் ஏர் சுணங்கின் போவாரல்லர் - நம்முடைய பொன்போன்ற நிறமுடைய சுணங்கு நம்மைவிட்டுப் போகாதது போன்று நம்மை விட்டுப் போகார் போல்கின்றார். மீண்டும் மீண்டும் வருவர்காண்; என்க.

(விளக்கம்) இவை மூன்றும் மெலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தல்: அஃதாவது - தலைவியைத் தன்னொடு கூட்டுமாறு தோழியைத் தலைவன் இரந்துபின்னிற்க அவனுக்கிரங்கிய தோழி அவன் குறையைத் தலைவிக்கு மென்மொழியாற் கூறி அவளை உடம்படுத்தல் என்றவாறு. மென்மொழியாற் கூறலாவது - தலைவி குறிப்பாலுணர்ந்து கொள்ளுமாறு பிறிதொன்று கூறுவாள் போற் கூறுதல்.

இனி இவை மூன்றும் தோழியும் தலைவியும் தம்முள் உறழ்ந்து கூறியவை எனக் கொண்டு முன்னிரண்டடியில் தோழி தலைவனை இயற்பழிக்கப் பின்னிரண்டடிகளில் அது பொறாத தலைவி இயற்பட மொழிந்தது எனவும் கொள்ளக்கூடும் என்ப. 43 - பொய்தல் அழித்து என்பதற்கு விளையாட்டை மறப்பித்து எனினுமாம். தம்முள் வேற்றுமையின்மையால் தலைவியை உளப்படுத்தி நம் மனம் நம் நோக்கம் நம் சுணங்கு என்றாள்.

43-44-45 - இம்மூன்றுஞ் சாயல் வரி என்ப.

முகமில்வரி

46: அடையல் ......... கானல்

(இதன்பொருள்:) குருகே எங்கானல் அடையல் குருகே எங்கானல் அடையல் - அன்னமே நீ எம்முடைய கடற்கரைச் சோலைக்கு வாராதே கொள்! அன்னமே! ......... வாராதே கொள்! எற்றுக்கெனின்; உடைதிரை நீர்ச் சேர்ப்பற்கு உறுநோய் உரையாய் - நீதான் கரையைக் குத்தி உடைக்கின்ற அலையையுடைய நெய்தற் றலைவனாகிய எம்பெருமான் பாற் சென்று யான் பிரிவாற்றாமையாலெய்துகின்ற மிக்க நோய் நிலையைக் கூறுகின்றிலை; குருகே எங்கானல் அடையல் அடையல் - ஆதலால் இனி எம்முடைய கானலுக்கு வாராதே கொள்! வாராதே கொள்!

(விளக்கம்) இது காமமிக்க கழிபடர் கிளவி. குருகு - நாரையுமாம். அடுக்கு வெறுப்பின்கண் வந்தது.

கட்டுரை

நூலாசிரியர் கூற்று

47 : ஆங்கனம் .................. பெயர்த்தாள்

(இதன்பொருள்:) ஆங்கனம் பாடிய ஆயிழை - அக்கோவலன் பாடினாற் போலக் காவிரியை நோக்கினவும் கடற்கானல் வரிப்பாணியும் பாடிய ஆராய்ந்தணிந்த அணிகலன்களையுடைய அம் மாதவி மடந்தை ; காந்தள் மெல் விரல் கைக்கிளை சேர்குரல் தீம் தொடைச் செவ்வழிப்பாலை இசை எழீஇ - காந்தட்பூப் போன்ற மெல்லிய விரல்களாலே; கைக்கிளை என்னும் இசை குரலாகிய இனிய இசைநிரலையுடைய செவ்வழிப்பாலை என்னும் இசையைப் பிறப்பித்துப் பாங்கினில் பாடி அம்முறைமையினாலே மிடற்றுப் பாடலையும் பாடி; ஓர் பண்ணுப் பெயர்த்தாள் - பின்னரும் மற்றொரு பண்ணைப் பாடினாள் என்க.

(விளக்கம்) ஆங்கனம் பாடிய - அவன் பாடினாற் போன்று ஆற்றுவரி முதலிய வரிப்பாடல்களைப் பாடிய. கைக்கிளைசேர் குரல் தீந்தொடை என்றது - கைக்கிளைக் குரலாகிய அஃதாவது கைக்கிளையை ஆதார சுருதியாகக் கொண்ட இசைநிரல் என்றவாறு. எனவே செவ்வழிப்பாலை கைக்கிளையைக் குரலாகக் கொண்டு பாடப்படும் என்பது பெற்றாம். இக்காலத்தார் இதனைச் சுத்ததோடி என்பர். அந்தர காந்தாரத்தை ஆதார சுருதியாகக் கொள்ளுமிடத்துச் சுத்ததோடி என வழங்கும் செவ்வழிப்பாலை தோற்றும் என்பர் விபுலானந்த அடிகளார். (யாழ் நூல் பண்ணியல் - பக்கம் 159) இசை எழீஇ அப்பாங்கினில் மிடற்றுப் பாடலும் பாடி என்றவாறு. ஓர் பண்ணுப் பெயர்த்தான் - பின்னரும் வேறொரு பண்பாடினான் என்றவாறு.

முகமில்வரி

48 : நுளையர் ........... பாலை

(இதன்பொருள்:) மாலை - மாலைப் பொழுதே நீ; நுளையர் நொடிதரும் விளரித் தீம்பாலை - நுளையர்க்குரித்தாகிய விளரி என்னும் இனிய பாலைப்பண்ணை யாழிலிட்டுப் பாடுங்கால்; இளி கிளையில்- கொள்ள - இளியென்னும் நரம்பினைத் தடவுதற்கு மாறாக மயங்கி அதன் பகை நரம்பாகிய கைக்கிளை என்னும் நரம்பினைத் தடவுமாறு; இறுத்தாயால் - நீ வந்து உலகின்கண் உறைவாயாயினை; நீ இளி கிளையில் கொள்ள இறுத்தாய் மன் - நீ தான் மயங்கி என்கை சென்று இளிக்கு மாறாகக் கைக்கிளையைத் தடவும் படி ஈண்டு வந்து தங்கினையல்லையோ? அஃதெற்றிற்கு என் உயிர் பருகுதற் கன்றோ? கொளை வல்லாய் மாலை - பிரிந்துறைவார் உயிரைக் கொள்ளை கொள்வதில் வல்லமையுடைய மாலையே நீ இனி; என் ஆவி கொள் - என் உயிரைக் கைக்கொள் பின்னர்; வாழி - நீ நீடூழி வாழ்ந்து போதி; என்க.

49 : பிரிந்தார் ........... மாலை

(இதன்பொருள்:) மாலை - மாலையே நீ; பிரிந்தார் பரிந்து உரைத்த பேரருள் நீழல் - தம்மைப் பிரிந்து சென்ற தலைவர் தமக்கிரங்கி வருந்தற்க! இன்ன காலத்தே மீண்டும் நும்பால் வருகுவேம் என்று கூறிப்போந்த பெரிய அருளாகிய நீழலிலே ஒதுங்கி; ஏங்கி இருந்து வாழ்வார் உயிர்ப் புறத்தாய் - அக்காலத்தை நோக்கிய வண்ணம் ஒருவாறு ஏங்கி இருந்து உயிர்வாழ்கின்ற எளிய மகளிருடைய உயிரைப் புறஞ் சூழ்ந்தனை; நீ உயிர்ப்புறத்தாய் ஆகில் - ஈண்டு நீ மகளிருடைய உயிரைப் புறஞ் சூழ்ந்தனையானால்; ஆற்றா உள்வேந்தன் - தன் பகைவனுக்கு ஆற்றாமல் அரணுள்ளே பதுங்கியிருக்கின்ற நொச்சி வேந்தனுடைய, எயிற் புறத்து வேந்தனோடு - மதிலைப் புறஞ்சூழ்ந்து முற்றியிருக்கின்ற வேந்தனாகிய எம்பெருமானுக்கு நீ; என ஆதி - எத்தன்மை யுடையையா யிருக்கின்றாய்? அதனைக் கூறுதி! என்க.

50 : பையுணோய் .............. மாலை

(இதன்பொருள்:) மருள் மாலை - மயக்கந் தருகின்ற மாலைக் காலமே நீதான்; பகல் செய்வான் போய் வீழ பையுள் நோய் கூர - பகற் பொழுதைச் செய்கின்ற ஞாயிற்றுத் தேவன் மேற்றிசையிலே போய்க் கடலில் வீழ்ந்து மறைதலாலே உலகின் கண் தனித்துறைவோருடைய துன்பமிக்க காமநோய் மிகா நிற்பவும்; வையம் கண்புதைப்ப - நீ செய்யும் கொடுமையைக் காணப் பொறாமல் நிலமகள் தன் கண்களைப் புதைத்துக் கொள்ளவும்; வந்தாய் - ஈண்டு வந்தனை; மாலை நீ ஆயின் - மாலையை நீதான் இத்தன்மையுடையையாயின்; அவர் மணந்தார் ஆயின் - அவ்வன்கண்ணர் எம்மை மணந்த காதலராயினக்கால்; ஓ மாலை ஓ மாலையே! ஞாலம் நல்கூர்ந்தது வாழி - இந்த வுலகமானது பெரிதும் நல்குரவுடைத்துக் காண்! என்க.

(விளக்கம்) 48 - நுளையர் பாலை நொடிதரும் விளரிப்பாலை எனத் தனித்தனி இயையும். விளரி - நெய்தற்பண் ஆகலின் நுளையர் பாலை என்றார். நொடிதருதல் - சொல்லல் - ஈண்டுப் பாடுதல். தனித்துறையும் மகளிர் அத்தனியை தீரயாழிசைப்பர். அவ்விசையின்கண்மனம் பற்றாது மயங்குதலின் அவர்கை இளிக்கு மாறாக அதன் பகையாகிய கைக்கிளையைத் தடவும் என்றவாறு. அங்ஙனம் மயங்குமாறு வந்திறுத்தாய் என்க. நின்ற நரம்பிற்கு ஆறாநரம்பு பகை. இளிக்குக் கைக்கிளை ஆறாம் நரம்பாகும். நீ இவ்வாறு இறுத்தற்குக் காரணம் என் உயிரைக் கொள்ளை கொள்வதேயன்றோ. அக்காரியத்தை இப்போதே செய்! என வேண்டிக் கொண்டபடியாம். என்னை? இறந்துழித் துன்பமும் ஒழியுமாதலின் இங்ஙனம் வேண்டினள். கொளை - கொள்ளை.

49 - பிரிந்தார்: தலைவன். உரைத்தது - இன்ன காலத்தே வருகுவம் என்று கூறிய தேற்றுரை. உயிரை முற்றுகையிட்டுள்ளாய் என்பாள் உயிர்ப் புறத்தாய் என்றாள். பிரிந்துறையும் மகளிர் என உலகின் மேல் வைத்துரைத்தாள் பிரிந்துறையும் மகளிர்க்கெல்லாம் இத் துன்பம் உண்மையின். நீயாகில் என்றது தனித்துறையும் மகளிர் உயிரைச் சூழ்கின்ற வன்கண்மையுடைய நீ என்பது படநின்றது. நின்னைப் போலவே வன்கண்மையுடையவன் என் கணவன் என்பான் உள்ளாற்றா வேந்தன் எயிற்புறத்து வேந்தன் என்றாள். கணவன் என்னாது அவனது ஏதின்மை தோன்ற வேந்தன் என்றாள். என்னாதி என்றது. என்ன உறவுடையை என்றவாறு. இருவர் தன்மையும் ஒன்றாயிருத்தலின் நீயிரிருவீரும் உடன் பிறந்தீரோ என்று வினவிய படியாம்.

ஆற்றா உள்வேந்தன் - நொச்சியான். எயிற்புறத்து வேந்தன் உழிஞையான்.

50. வையம் நின் கொடுமைகண் டாற்றாது கண்புதைத்தது என்றவாறு. ஞாலம் தன்கண் வாழும் இத்தகைய மகளிரை ஓம்புதற்குப் பிறிதொன்றும் இல்லாதிருத்தலின் நல்கூர்ந்தது என்றாள்.

அரும்பதவுரையாசிரியர் ஞாலம் நல்கூர்ந்ததென்றாள் தன்னோய் எல்லார்க்கும் ஒக்குமாகத் தனக்குத் தோற்றுதலால் தான்சாக உலகு கவிழும் என்னும் பழமொழிபோல என்பர்.

இவை மூன்றும் மாலைப் பொழுதுகண்டு தலைவி கூறியவை

51 : தீத்துழைஇ................வணங்குதும்

(இதன்பொருள்:) தீ துழைஇ வந்த - நெருப்பினுட் புகுந்து துழாவி அதன் வெம்மையைத் தானேற்றுக்கொண்டு உலகின்கண் வந்த; இச் செல்லல் மருள்மாலை தூக்காது - இத்தகைய துன்பத்தையும் மயக்கத்தையும் செய்கின்ற கொடிய மாலைப் பொழுதும் ஒன்றுண்டென்று ஆராயாமல்; துணிந்த இத்துயர் எஞ்சு கிளவியால் - எம்பெருமானால் துணிந்து கூறப்பட்ட நின்னில் பிரியேன் என்னும் இந்தத் துன்பம் நீங்குதற்குக் காரணமான தேற்றுரையோடு; பூக்கமழ் கானலில் - மலர்மணங் கமழா நின்ற கடற்கரைச் சோலையிடத்தே நின்னைச் சுட்டிக்காட்டிச் செய்த; பொய்ச் சூள பொறுக்க என்று - பொய்சூளின் பொருட்டு (அவரை ஒறுக்காமல்) பொறுத்தருளக என்று வேண்டி; மா கடல் தெய்வம் - பெரிய கடலுக்குத் தெய்வமாகிய வருணனே! நின் மலர் அடி வணங்குதும் - நின்னுடைய மலர் போன்ற திருவடிகளை அடியேம் வணங்குகின்றேங்காண்; என்க.

(விளக்கம்) தீயினுட்புகுந்து குடைந்தாடி அதன் வெம்மை முழுதும் ஏற்றுக் கொண்டு வந்த இம் மருள்மாலை என்க. செல்லல் - துன்பம். இத்தகைய மாலைக்காலம் என்பது ஒன்றுண்டு அதுதான் பிரிந்துறையும் மகளிர் உயிருண்ணும் என்று ஆராயாமல்; தலைவன் கானலில் கூறிய பொய்ச் சூள் என்க. பொய்ச்சூள் பொறுக்க என்றாளேனும் சூள் பொய்த்தமை பொறுக்க என்பது கருத்தாகக் கொள்க.

இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர்ப் பிரிவஞ்சும் தலைவியைத் தேற்றுதற்குத் தலைவன் கடற்றெய்வங் காட்டிக் காட்டி அரிய சூள் செய்தனன், அதனை இப்பொழுது பொய்த்தான், அங்ஙனம் பொய்த் தானேனும் அதன் பொருட்டுத் தெய்வமே அவனை ஒறுத்திடேல்! பொறுத்தருள்க! என்று தலைவி கடற் றெய்வத்தை வேண்டுகின்றனள் என்க.

கடற்றெய்வம் - வருணன். வருணன் மேய பெருமண லுலகம் என்பது தொல்காப்பியம். (அகத்திணையியல் - 5.)

இனி கோவலன் பாடிய திங்கள் மாலை வெண்குடையான் என்பது தொடங்கி தீத்துழைஇ என்னும் மாதவி பாடிய இப்பாட்டீறாக அனைத்தும் முகநிலைவரி முரிவரி முதலிய பல்வேறு உறுப்புக்களையுடைய கொச்சகக்கலி என்னும் இசைத்தமிழாலியன்ற கானல் வரிப் பாடலாகும். கொச்சகக் கலி வெண்பாவானாதல் ஆசிரியத்தானாதல் முடிதல் வேண்டும் என்பது விதி ஆகலின், இக்கோவலன் தொடங்கிய கானல்வரியை மாதவி ஈண்டுக் கடவுள் வாழ்த்தோடு முடித்தனள். இனிக்கட்டுரை இடையிட்டுவந்த பாட்டுடைச் செய்யுளாகிய இக் கொச்சகத்தை அடிகளார் இயற்றமிழின் பாற்படுத்து ஆசிரியத்தான் முடிப்பர்.

இனி யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல். பூமிதனில் யாங்கணுமே பிறந்த திலை எனவும், நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு என்றும் கவிஞர் பெருமான் சுப்பிரமணிய பாரதியார் நெஞ்சாரப் புகழ்ந்து போற்றுதல் ஒரு சிறிதும் மிகையன் றென்பதற்கு அடிகளார் ஈண்டுப் பாடிய கானல் வரிப் பாடல்கள் சிறந்த சான்றாக நின்று திகழ்வதனை உணர்வுடையோர் உணர்தல் கூடும்.

கட்டுரை

நூலாசிரியர் கூற்று

52 : எனக்கேட்டு ................ அகவையா னெனவே

(இதன்பொருள் :) எனக்கேட்டு என்று மாமலர் நெடுங்கண் மாதவி பாடி முடித்ததனைக் கேட்டு; யான் கானல் வரி பாட - யான் அவள் மனம் மகிழவேண்டும் என்று கருதி அவள் குறிப்பின் படிக் கானல்வரி என்னும் உருக்களைப் பாடாநிற்ப; மாயத்தாள் தான் ஒன்றின்மேல் மனம் வைத்து - பொய்ம்மையுடைய கணிகை யாதலின் தான் யான் மகிழ்தலைக் குறிக்கொள்ளாளாய்; பிறிதொரு பொருள்மேல் தன் மனத்தை வைத்துத் தான் விரும்பியபடி பாடாநின்றனள்; என - என்று கருதி; தன் ஊழ்வினை யாழ் இசைமேல் வைத்து - தான் முற்பிறப்பிலே செய்த பழவினையாகிய ஊழ்வினை மாதவி பாடிய யாழினது இனிய இசையைத் தலைக்கீடாகக் கொண்டு; உருத்தது ஆதலின் - அவ்விசை யுருவமாக வந்து தன் பயனை நுகர்விக்கத் தொடங்கியதாதலானே; கோவலன் தான் - அதன் வயப்பட்ட அக்கோவலன்றானும்; உவவு உற்ற திங்கள் முகத்தாளை - உவவுநாள் பொருந்திய முழுத்திங்கள் போன்ற முகமுடைய அம்மாதவி நங்கையை; கவவுக்கை ஞெகிழந்தனனாய் - தனது நெஞ்சத்தினூடே கொண்டொழுகும் தனது ஒழுக்கத்தை நெகிழவிட்டவனாகி; ஈங்குப் பொழுது கழிந்தது ஆதலின் எழுதும் என்று உடன் எழாது - இற்றைப் பொழுது போயிற்றாதலால் இனியாம் மனைக்கு எழுந்து - செல்வேம் என்று அளியள அம்மாதவிக்குக் கூறி அவளும் எழத்தான் அவளோடெழாமல் தானமட்டுமே எழுந்து; ஏவலாளர் உடன் சூழ்தர - தனது ஏவலர் தன்னைச் சூழ்ந்துவர அவருடனே; போன பின்னர் - அக் கடற்கானலிடத்தினின்றும் வாய் வாளாது போன பின்னர்; மாதவி கையற்ற நெஞ்சினளாய் தாது அவிழ் மலர்ச்சோலை ஆயத்து ஒலியவித்து - மாதவியானவள் யாதொன்றுஞ் செய்யத் தோன்றாத மம்மர் கொள் நெஞ்சத்தவளாய் ஆங்குப் பூந்துகள் சொரியும் மலர்கள் நிரம்பிய அக்கடற்கரைச் சோலையினிடத்தே ஆரவாரஞ் செய்துநின்ற தன் தோழியர் ஏவன்மகளிர் முதலியோரைக் கை கவித்து அவர்தம் ஆரவாரத்தை அடக்கியவளாய்த் தானும் வாய் வாளாது; வையத்தின் உள்புக்கு - தான் ஊர்ந்துவந்த பண்டியின் அகத்தே புகுந்து; காதலன் உடன் அன்றியே - தனதாருயிர்க் காதலன் தன்னுடன் வரப்பெறாது நல்கூர்ந்து; தன் மனை - தனதில்லத்திற்குச் சென்று; மா இரு ஞாலத்து அரசு தலைவணக்கும் - மிகப் பெரிய இவ்வுலகத்திலுள்ள மன்னரை யெல்லாம் தனக்குத் தலை வணங்கும்படி செய்யும் பேராற்றல் வாய்ந்த; சூழி யானைச் சுடர்வாள் செம்பியன் - முகபடாமணிந்த யானையையும் ஒளி வீசும் கொற்றவாட் படையையும் உடைய தங்கள் மன்னனாகிய சோழன்; ஆழி மால்வரை அகவையா - சக்கரவாளம் என்னும் மலையும் தன்னகத்ததாகும்படி மாலை வெள் குடை கவிப்ப - வாகை மாலையினையுடைய தனது கொற்ற வெண்குடையைக் கவித்து நீடூழி வாழ்வானாக! என - என்று வாழ்த்தி; புக்காள்-புகுந்தனள் என்பதாம்.

அடிகளார் இக் கொச்சகக்கலியை ஆசிரியத்தான் முடித்தனர்.

(விளக்கம்) மாயத்தாளாகலின் தான் ஒன்றின் மேல் வைத்துப் பாடினாள் என்று அவள் மனம் மாறுபட்டாளாகக் கருதிய கோவலன், அவள் கணிகையாதலை நினைவு கூர்ந்து அவட்கிஃதியல்பு என வெறுத்துக் கூறினன். அடிகளார் இஃது அவன் பிழையன்று ஊழின்பிழையே என்றிரங்குவார் ஊழ்வினை வந்துருத்தது ஆகலின் என்று ஏதுவை விதந்தோதினர். மற்று மாதவிதான் அளியள் தான் ஒன்றின் மேல் மனம் வைத்தாள் போலத் தனதிசையாலே காட்டினள் அன்றி அவள் நெஞ்சம் சிறிதும் மாறுபட்டாளில்லை என அறிவுறுத்துவார் அவளை உவவு உற்ற திங்கள் முகத்தாள் என்று விதந்தெடுத்தோதுமாற்றால் காதலின் நிறைவைக் காட்டினர். மற்று அடிகளார் ஊழ்வினை உருத்துவந்தூட்டும் என்பதைக் கோவலன் மேல் வைத்துக் காட்டும் கருத்தினால் மாதவி குற்றமற்ற கோவலன் வரிப் பாடலில் அவனுக்கேலாத மறுவொன்று கண்டமைக்குக் காரணம் அவளுக்கும் ஊழ்வினை வந்துருத்ததே ஆகும் என யாம் ஊகித்துக் கோடல் அடிகளார் திருவுளத்திற்கும் ஒக்கும் என்க.

இனி இக்கானல் வரியை :

மாதவி குற்ற நீங்கிய யாழ் கையில் வாங்கி, எண்வகையால் இசை எழீஇத் தீர்ந்து, ஓர்த்துக் கோவலன் கைநீட்ட அவனும் நோக்கினவும் பாணியும் வாசித்தல் தொடங்கும், ஆங்குப் பாடல் கேட்ட மாதவியும் இவன் தன்னிலை மயங்கினான் என வாங்கி, கானல்வரிப் பாடற்பாணி வியப்பெய்த மகிழப் பாடத் தொடங்கும். (தொடங்கியவள்) வணங்குதும் எனக் கேட்டு மாயத்தாள் ஒன்றின் மேல் மனம் வைத்துப் பாடினாள் என உருத்ததாகலின் உடனெழாது கோவலன் போன பின்னர் ஆயத்து ஒலியவித்துப் புக்கு மாதவி தன்மனை வணக்கும் செம்பியன் கவிப்ப என வாழ்த்திப் புக்காள் என்று வினை முடிவு செய்க.

கானல் வரி முற்றிற்று.
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 23, 2012, 01:39:54 PM
8. வேனிற்காதை

 அஃதாவது - கோவலனுக்கு முற்பிறப்பிற் செய்த பழவினை மாதவி பாடிய யாழிசைமேல் வைத்து வந்துருத்ததாகலின் அவ்வுவ வுற்ற திங்கண் முகத்தாளை வெறுத்துத் தன் ஏவலருடன் போயபின்னர் அப்பருவம் தானும் வேனிற் பருவமாகலின் காதலனுடனன்றித் தமியளாய் ஆயத்தோடு தன் மனைபுகுந்த மாதவி அவனது பிரிவாற்றாமையாலே பட்ட துன்பத்தையும் அதனை ஆற்றியிருத்தற்கு அவள் செய்த செயல்களையும் கூறுகின்ற பகுதி என்றவாறு.

(நிலைமண்டில ஆசிரியப்பா)

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு
மாட மதுரையும் பீடுஆர் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும்
அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின்  5

மன்னன் மாரன் மகிழ்துணை ஆகிய
இன்இள வேனில் வந்தனன் இவண்என
வளம்கெழு பொதியில் மாமுனி பயந்த
இளங்கால் தூதன் இசைத்தனன் ஆதலின்
மகர வெல்கொடி மைந்தன் சேனை   10

புகர்அறு கோலம் கொள்ளும்என் பதுபோல்
கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும்
படையுள் படுவோன் பணிமொழி கூற,
மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டினுள்
கோவலன் ஊடக் கூடாது ஏகிய   15

மாமலர் நெடுங்கண் மாதவி விரும்பி
வான்உற நிவந்த மேல்நிலை மருங்கின்
வேனில் பள்ளி ஏறி மாண்இழை
தென்கடல் முத்தும் தென்மலைச் சாந்தும்
தன்கடன் இறுக்கும் தன்மைய ஆதலின்  20

கொங்கை முன்றில் குங்கும வளாகத்து
மைஅறு சிறப்பின் கையுறை ஏந்தி
அதிரா மரபின் யாழ்கை வாங்கி
மதுர கீதம் பாடினள் மயங்கி,
ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி  25

நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி,
வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி
இடக்கை நால்விரல் மாடகம் தழீஇச்
செம்பகை ஆர்ப்பே கூடம் அதிர்வே
வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து,  30

பிழையா மரபின் ஈர்ஏழ் கோவையை
உழைமுதல் கைக்கிளை இறுவாய் கட்டி,
இணைகிளை பகைநட்பு என்றுஇந் நான்கின்
இசைபுணர் குறிநிலை எய்த நோக்கிக்
குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் அன்றியும்  35

வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும்
உழைமுதல் ஆகவும் உழைஈறு ஆகவும்
குரல்முதல் ஆகவும் குரல்ஈறு ஆகவும்
அகநிலை மருதமும் புறநிலை மருதமும்
அருகியல் மருதமும் பெருகியல் மருதமும்  40

நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி,
மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பித்
திறத்து வழிப்படூஉம் தெள்ளிசைக் கரணத்துப்
புறத்துஒரு பாணியில் பூங்கொடி மயங்கி,
சண்பகம் மாதவி தமாலம் கருமுகை  45

வெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த
அம்செங் கழுநீர் ஆய்இதழ்க் கத்திகை
எதிர்ப்பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த
முதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டு
விரைமலர் வாளியின் வியன்நிலம் ஆண்ட  50

ஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின்
ஒருமுகம் அன்றி உலகுதொழுது இறைஞ்சும்
திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி,
அலத்தகக் கொழுஞ்சேறு அளைஇ அயலது
பித்திகைக் கொழுமுகை ஆணி கைக்கொண்டு,  55

மன்உயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும்
இன்இள வேனில் இளவர சாளன்
அந்திப் போதகத்து அரும்பிடர்த் தோன்றிய
திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன்
புணர்ந்த மாக்கள் பொழுதுஇடைப் படுப்பினும்  60

தணந்த மாக்கள் தம்துணை மறப்பினும்
நறும்பூ வாளியின் நல்உயிர் கோடல்
இறும்பூது அன்றுஅஃது அறிந்தீ மின்என
எண்எண் கலையும் இசைந்துஉடன் போக
பண்ணும் திறனும் புறங்கூறு நாவின்  65

தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து
விளையா மழலையின் விரித்துஉரை எழுதி,
பசந்த மேனியள் படர்உறு மாலையின்
வசந்த மாலையை வருகெனக் கூஉய்த்
தூமலர் மாலையின் துணிபொருள் எல்லாம்  70

கோவலற்கு அளித்துக் கொணர்க ஈங்குஎன
மாலை வாங்கிய வேல்அரி நெடுங்கண்
கூல மறுகிற் கோவலற்கு அளிப்ப,
திலகமும் அளகமும் சிறுகருஞ் சிலையும்
குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட  75

மாதர் வாள்முகத்து மதைஇய நோக்கமொடு
காதலின் தோன்றிய கண்கூடு வரியும்,
புயல்சுமந்து வருந்திப் பொழிகதிர் மதியத்துக்
கயல்உலாய்த் திரிதரும் காமர் செவ்வியின்
பாகுபொதி பவளம் திறந்துநிலா உதவிய  80

நாகுஇள முத்தின் நகைநிலம் காட்டி
வருகென வந்து போகெனப் போகிய
கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும்,
அந்தி மாலை வந்ததற்கு இரங்கிச்
சிந்தை நோய் கூரும்என் சிறுமை நோக்கிக் 85

கிளிபுரை கிளவியும் மடஅன நடையும்
களிமயில் சாயலும் கரந்தனள் ஆகிச்
செருவேல் நெடுங்கண் சிலதியர் கோலத்து
ஒருதனி வந்த உள்வரி ஆடலும்,
சிலம்புவாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும்  90

கலம்பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு
திறத்துவேறு ஆயஎன் சிறுமை நோக்கியும்
புறத்துநின்று ஆடிய புன்புற வரியும்,
கோதையும் குழலும் தாதுசேர் அளகமும்
ஒருகாழ் முத்தமும் திருமுலைத் தடமும்  95

மின்இடை வருத்த நன்னுதல் தோன்றிச்
சிறுகுறுந் தொழிலியர் மறுமொழி உய்ப்பப்
புணர்ச்சிஉட் பொதிந்த கலாம்தரு கிளவியின்
இருபுற மொழிப்பொருள் கேட்டனள் ஆகித்
தளர்ந்த சாயல் தகைமென் கூந்தல்   100

கிளர்ந்துவேறு ஆகிய கிளர்வரிக் கோலமும்,
பிரிந்துஉறை காலத்துப் பரிந்தனள் ஆகி
என்உறு கிளைகட்குத் தன்உறு துயரம்
தேர்ந்துதேர்ந்து உரைத்த தேர்ச்சிவரி அன்றியும்,
வண்டுஅலர் கோதை மாலையுள் மயங்கிக்  105

கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும்,
அடுத்துஅடுத்து அவர்முன் மயங்கிய மயக்கமும்
எடுத்துஅவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும்,
ஆடல் மகளே ஆதலின் ஆயிழை.
பாடுபெற் றனஅப் பைந்தொடி தனக்குஎன,  110

அணித்தோட்டுத் திருமுகத்து ஆயிழை எழுதிய,
மணித்தோட்டுத் திருமுகம் மறுத்ததற்கு இரங்கி
வாடிய உள்ளத்து வசந்த மாலை
தோடுஅலர் கோதைக்குத் துனைந்துசென்று உரைப்ப
மாலை வாரார் ஆயினும் மாண்இழை.  115

காலைகாண் குவம்எனக் கையறு நெஞ்சமொடு
பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தான்என்.

(வெண்பா)

செந்தா மரைவிரியத் தேமாங் கொழுந்துஒழுக
மைந்தார் அசோகம் மடல்அவிழக் - கொந்தார்
இளவேனில் வந்ததால் என்ஆம்கொல் இன்று
வளவேல்நற் கண்ணி மனம்.

ஊடினீர் எல்லாம் உருஇலான் தன்ஆணை
கூடுமின் என்று குயில்சாற்ற - நீடிய
வேனற்பா ணிக்கலந்தாள் மென்பூந் திருமுகத்தைக்
கானற்பா ணிக்குஅலந்தாய் காண்.

உரை

வேனில் வரவு

1-7 : நெடியோன் ............ வந்தனனிவனென

(இதன்பொருள்:) நெடியோன் குன்றமும் தொடியோள் பவுவமும் தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு - வடக்கின் கண் திருமால் எழுந்தருளிய வேங்கடமலையும் தெற்கின்கண் குமரிக்கடலும் (கிழக்கின்கண்ணும் மேற்கின்கண்ணும் ஒழிந்த கடல்களுமே) தமிழ்மொழி வழங்குகின்ற நாட்டிற்கு எல்லையாம் என்று சான்றோரால் அறுதியிடப்பட்ட மூவேந்தருடைய குளிர்ந்த புனலையுடைய நல்ல நாட்டிடத்தே; மாட மதுரையும் பீடு ஆர் உறந்தையும் கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும் - மாடங்களாற் சிறந்த மதுரையும் பெருமை பொருந்திய உறந்தையும் மறவரின் ஆரவாரமுடைய வஞ்சியும் முழங்குகின்ற காவிரி நீரையும் கடல் நீரையுமுடைய பூம்புகாரும் என்னும் நான்கு தலைநகரங்களினும்; அரைசு வீற்றிருந்த - தனது ஆணையைச் செலுத்தி அரசனாக வீற்றிருந்த; உரைசால் சிறப்பின் மன்னன் மாரன் மகிழ்துணை ஆகிய - புகழமைந்த சிறப்பினையுடைய மன்னனாகிய காமவேள் மகிழ்தற்குக் காரணமான துணைவனாகிய; இன் இளவேனில் இவண் வந்தனன் என - இன்பந்தரும் இளவேனில் என்னும் இளவரசன் இப்பொழுது இவ்விடத்தே வந்து விட்டான் என்று; என்க.

(விளக்கம்) நெடியோன் என்றது நெடுமையால் உலகளந்த பெருமானாகிய திருமாலை. அவன் எழுந்தருளியிருக்கும் குன்றுமாவது திரு வேங்கடம். கிழக்கினும் மேற்கினும் கடல்களே எல்லையாகலின் அவற்றைக் கூறிற்றிலர். பனம்பாரனாரும் வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் எனவே ஓதுதலும் உணர்க. இவ்விரண்டினையும் கூறியதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம் ஈண்டுணரற்பாற்று. அது வருமாறு : - நிலங்கடந்த நெடு முடியண்ணலை நோக்கி உலகந்தவஞ் செய்து வீடுபெற்ற மலையாதலானும் எல்லாரானும் அறியப்படுதலானும் வேங்கடத்தை எல்லையாகக் கூறினர். குமரியுந் தீர்த்தமாகலின் எல்லையாகக் கூறினர். இவ்விரண்டினையும் காலையே ஓதுவார்க்கு நல்வினை யுண்டாமென்று கருதி இவற்றையே கூறினார். இவையிரண்டும் அகப்பாட்டெல்லையாயின. குமரியாற்றின் தெற்கு நாற்பத்தொன்பது நாடு கடல் கொண்டதாகலின் கிழக்கும் மேற்கும் கடல் எல்லையாக முடிதலின் வேறெல்லை கூறாராயினர் எனவரும்.

இனி குமரியாற்றின் தெற்கு நாற்பத்தொன்பது நாடு கடல் கொண்டது என்னும் வரலாற்றைக் குறிப்பை ஈண்டு அடியார்க்குநல்லார் கூறும் விளக்கத்தால் அறிதல் இன்றியமையாதாம் அது வருமாறு.

தொடியோள் - பெண்பாற் பெயராற் குமரி என்பதாயிற்று : ஆகவே தென்பாற்கண்ணதோர் ஆற்றிற்குப் பெயராம். ஆனால், நெடியோன் குன்றமும் தொடியோள் நதியும் என்னாது பவுவமும் என்றது என்னை? யெனின், முதலூழியிறுதிக்கண் தென்மதுரை யகத்துத் தலைச் சங்கத்து அகத்தியனாரும் இறையனாரும் குமரவேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையும் உள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றி யாண்டு இரீயினார் காய்சின வழுதி முதற் கடுங் கோனீறாகவுள்ளார் எண்பத்தொன்பதின்மர்; அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியருள் ஒருவன் சயமாகீர்த்தியனாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப்படுத்து இரீயினான். அக்காலத்து அவர்நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்று மாற்றிற்கும் குமரி யென்று மாற்றிற்குமிடையே எழுநூற்றுக் காவதவாறும் இவற்றின் நீர்மலி வானென மலிந்த ஏழ் தெங்க நாடும், ஏழ் மதுரை நாடும் ஏழ் முன்பாலைநாடும் ஏழ் பின்பாலைநாடும் ஏழ் குன்றநாடும் ஏழ் குணகரைநாடும் ஏழ் குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியுந் தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின்காறும். கடல்கொண்டொழிதலாற் குமரியாகிய பவுவமும் என்றார் என்றுணர்க. இஃதென்னை பெறுமாறெனின் வடிவே லெறிந்த வான்பகை பொறாது -பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள (11 : 18 -20) என்பதனானும் கணக்காயனார் மகனார் நக்கீரனாருரைத்த இறையனார் பொருளுரையானும், உரையாசிரியராகிய இளம்பூரணவடிகள் முகவுரை யானும் பிறவாற்றானும் பெறுதும் எனவரும்.

3. மதுரையை நான்மாடக் கூடல் என்பதுபற்றி மாடமதுரை என்றார். பீடு -பெருமை. 4. கலி-ஆரவாரம். புனல் - காவிரிப் புனலும் கடலும் என்க. 5. உரை - புகழ். 6. மன்னனாகிய மாரன். வேனில், தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியாகலின் பால்பிரிந்து வந்தனன் என உயர்திணை முடிபேற்றது. வந்தது என்பதும் பாடம்.

வந்தனன் என்பது வருவான் என்னும் எதிர்காலச் சொல்லை விரைவு பற்றி இறந்த காலத்தாற் கூறியபடியாம். இதனை,

வாராக் காலத்து நிகழுங் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
விரைந்த பொருள வென்மனார் புலவர்  (வினை 44)

எனவரும் தொல்காப்பியத்தான் உணர்க.

அடியார்க்குநல்லார் - காமனுக்குத் தேர் தென்றலும் புரவி கிள்ளையும் யானை அந்தியும் சேனை மகளிருமாதலால் தேர் தென்னர் காவலும் புரவி கிள்ளி காவலும் யானை சேரமான் காவலுமாக்கித் தானும் தன்சேனையும் புகாரில் வீற்றிருந்தான் என்பது கருத்து என்று கூறி இதற்கு :

திண்பரித் தென்றலந் தேரும் தார்புனை
வண்பரிக் கிள்ளையு மாலை யானையும்
கண்கடைப் படுகொலைக் காமர் சேனையும்
எண்படப் புகுந்தன னிரதி காந்தனே

என, ஒரு பழம்பாடலையும் எடுத்துக் காட்டினர்.

இதுவுமது

8-13 : வளங்கெழு ........... கூற

(இதன்பொருள்:) வளம் கெழு பொதியில் மாமுனி பயந்த இளங்கால் தூதன் இசைத்தனன் ஆதலின் - செந்தமிழ் வளமும் சந்தன வளமும் பொருந்திய பொதிய மலைக்கண் எஞ்ஞான்றும் வீற்றிருந்த குறுமுனிவன் ஈன்ற இளமையுடைய தென்றல் என்னும் தூதுவன் வந்து கூறினன். ஆதலாலே; கொடி மிடை சோலைக் குயிலோன் என்னும் படையுள் படுவோன் - பூங் கொடிகள் செறிந்த தேமாஞ்சோலையாகிய பாசறைக் கண்ணிருந்த குயிலோன் என்கின்ற படைத்தலைவன் சிறுக்கன் அத்தென்றற் றூதன் அருளிச்செய்த ஆணைக்கிணங்க; மகர வெல் கொடி மைந்தன் சேனை புகார் அறுங்கோலம் கொள்ளும் என்பது போல் - நம் மன்னனாகிய மகரமீன் கொடியுயர்த்த வலிமைமிக்க காமவேளின் படையிலுள்ளீரெல்லாம் குற்றந்தீரப் போர்க் கோலங் கொள்ளுங்கோள் என்றறிவிப்பான் போல; பணிமொழி கூற-யாண்டுங் கூவியறிவியா நிற்ப; என்க.

(விளக்கம்) 8. வளம் - மொழிவளமும்சந்தன முதலிய பொருள் வளமும் என்க. மாமுனி - அகத்தியன். 9. இளங்காலாகிய தூதன் - மெல்லிய தென்றலாகிய தூதன். காற்றூதன் - காலினால் விரைந்து செல்லும் தூதன் எனவும் ஒருபொருள் தோன்றிற்று. இத்தகைய தூதனை ஓட்டன் என்பர். மரக வெல்கொடி மைந்தன் - காமவேள் - அவன் வலிமை மிக்கவன் ஆதலின் அப்பொருள் தோன்ற மைந்தன் என்றார். மைந்து - வலிமை. மைந்தன் சேனை என்றது மகளிரை. அவர் கோலங் கோடலாவது - பட்டுநீக்கித் துகிலுடுத்துப் பேரணிகலன் அகற்றி மெல்லணி யணிந்து கூந்தற்குக் கமழ்புகை யூட்டுதல் முதலியன செய்து தங் காதலரோடு நிகழ்த்தும் கலவிப்போர்க்கு அமைதல். இரவிற்கோர் கோலங் கொடியிடையார் கொள்ள என்றவாறு. அக்காலத்திற்கு ஏற்பனவுடுத்து முடித்துப் பூசிப் பூணுதல் என்பார் அடியார்க்குநல்லார். சேனை என்றமையால் கோலம் என்பது போர்க்கோலம் என்பதுபட நின்றது. சோலை - மாஞ்சோலை; அஃதீண்டுப் பாசறை என்பதுபட நின்றது. படையுள்படுவோன் என்றது படைத்தலைவன் கட்டளையை மறவர்க்கு அறிவிக்கும் தொழிலையுடையோன்; அவனைப் படைக்கிழவன் சிறுக்கன் என்பர். இவன் அறிவிக்குங்கால் சின்னம் என்னும் ஒருதுளைக் கருவியை ஊதுமாற்றால் அறிவிப்பன் ஆதலின் இவனுக்குச் சின்னமூதி, காளமூதி என்னும்பெயர்களும் வழங்கும். பணித்தல் - கட்டளையிடுதல்.

மாதவியின் செயல்

14 - 26 : மடலவிழ் ........... இருக்கையளாகி

(இதன்பொருள்) மடல் அவிழ்கானல் கடல் விளையாட்டினுள் - இதழ் விரிகின்ற மலர்கணிரம்பிய கடற்கரைச் சோலையையுடைய கடல் விளையாட்டு நிகழுமிடத்தே; கோவலன் ஊட - மாயத்தாள் பிறிதொன்றன்மேல் மனம் வைத்துப் பாடினள் என்று கருதிக் கோவலன் தன்னோடு ஊடிப்பிரிந்து போனமையின்; கூடாது ஏகிய - அவனைக் கூடும் செவ்வி பெறாது தமியளாய்த் தன் மனைபுகுந்த; மாமலர் நெடுங்கண் மாதவி - கரியமலர் போலும் நெடிய கண்ணையுடைய மாதவி; விரும்பி - குயிலோன் கூறிய பணிமொழியை விரும்பி; வான் உற நிவந்த மேல்நிலை மருங்கின் வேனில் பள்ளி ஏறி - வானிடத்தே மிகவும் உயர்ந்துள்ள மேனிலை மாடத்தின் கண்ணமைந்த ஒரு பக்கத்தமைந்த நிலாமுற்றத்தின் கண் ஏறி; மாண் இழை தென்கடல் முத்தும் தென்மலைச் சந்தும் தன்கடன் இறுக்கும் தன்மைய ஆதலின் - மாண்புடைய அணிகலன்களும் கொற்கை முத்தும் பொதியிற் சந்தனமும் அவ்வேனில் வேந்தனுக்குத் தான் இறுக்கும் கடமைப் பொருள்களாகலின்; கொங்கை குங்கும வளாகத்து முன்றில் மை அறு சிறப்பின் கை உறை ஏந்தி - அவ்வேனில் வேந்தன் வீற்றிருக்கும் தனது முலைமுற்றத்தே குங்குமக் கோலமிடப்பட்ட பரப்பிலே அவையிற்றை அவ் வேந்தனுக்குக் காணிக்கையாக ஏந்தி அவையிற்றைச் செலுத்திப் பின்னர்த் தொழுது தன் கையில் வாங்கி; ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விரத்தி நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி - ஒன்பது வகைப்பட்ட இருப்பினுள் முதற் கண்ணதாகிய தாமரை யிருக்கையென்னும் நல்ல கூறுபாடமைந்த இருக்கையை உடையளாகி; அதிரா மரபின் யாழ் கை வாங்கி - கோவை குலையாத முறைமையினையுடைய தனது யாழினைக் கைக்கொண்டு; மதுரகீதம் பாடினள் மயங்கி - முந்துற மிடற்றினாலே இனிய பண்ணைப் பாடினளாக அதுதான் மயங்குதலாலே என்க.

(விளக்கம்) 16. விளையாட்டே வினையாயிற்று என்னும் பழமொழி பற்றி கடல் விளையாட்டினுள் கோவலன் ஊட என்றார். ஊழ்வினை விளையாட்டையே வினையாக்கி விடுவதனை இராமன் உண்டைவில் விளையாட்டே வினையானமையானும் உணர்க. 15. கூடாதேசிய என்றது கூடுதற்குச் செவ்வி பெறாது சென்ற என்றவாறு. 16. மாதவி குயிலோன் கோலங்கொள்ளும் என்பதுபோற் கூற அங்ஙனம் அவ்வேனிலரசனைக் கோலங்கொண்டு வரவேற்க விரும்பி என்க. 17-18. வேனில்வேந்தனை எதிர்கொள்ளுமிடம் மேனிலை மருங்கில் வேனிற் பள்ளி யாதலின் அதன்கண் ஏறினள் என்க. மாணிழை என்பதனை அன்மொழித் தொகையாக் கொண்டு மாதவி என்றனர் பிறரெல்லாம். மாட்சிமையுடைய அணிகலன்களும் இன்றியமையாமையின் எம் கருத்தே சிறப்புடைத்தாம். மாணிழையும் எனல் வேண்டிய எண்ணும்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது. 19. சந்து - சந்தனம். 20. தன்கடன் - தான்வேனில் வேந்தனுக்கிறுக்கக் கடவதாகிய கடமைப்பொருள்.

வேனில் வேந்தன் வீற்றிருக்கும் அரண்மனை கொங்கை யாகலின் அதன் முன்றிலிலே இவற்றை ஏந்தினள் என்றவாறு. ஏந்தினள் என்றது இவற்றை முலைக்கண் அணிந்து பூசி என்பதுபட நின்றது. அங்ஙனம் செய்தலே அவனுக்குத் தன்கடன் இறுத்தவாறாம் என்க.

22. கையுறை - காணிக்கை. காணிக்கை செலுத்துவோர் பெறுவோர் முன்றிலிற் கொணர்ந்து செலுத்துவராதலின் கொங்கை முன்றிலில் ஏந்தி என்றார். முலை - வேனிலரசன் வீற்றிருக்கும் அரண்மனை. மார்பு - அதன் முற்றம்.

24. அதிரா மரபின் .... மயங்கி என்னுந் தொடரை, 26. இருக்கையளாகி என்பதன் பின்னாகக் கூட்டுக. 25. விருத்தி - இருக்கை. இருக்கை பல வகைப்படும். அவை திரிதரவுடையனவும் திரிதரவில்லனவும் என இருவகைப்படும். அவற்றுள் திரிதரவுடையன : யானை தேர் புரவி பூனை முதலியனவாம். ஈண்டுக் கூறப்பட்ட ஒன்பது வகை இருக்கையும் திரிதரவில்லனவாம். அவையாவன: பதுமுகம், உற்கட்டிதம், ஒப்படியிருக்கை, சம்புடம், அயமுகம், சுவத்திகம், தனிப்புடம், மண்டிலம், ஏகபாதம் என்பன. பதுமுகம் எனினும் பதுமாசனம் எனினும் தாமரையிருக்கை எனினும் ஒக்கும்.

தலைக்கண் விருத்தி என்றது பதுமுகத்தை. இவ்விருக்கை யாழ்வாசிப்போர்க்கு நன்மையுடைய பகுதியை யுடையதாதலின் நன்பாலமைந்த இருக்கையள் என்றார். 23. அதிராமரபு - கோவை குலையாத முறைமை. பிரிவாற்றாமையால் மிடற்றாற் பாடிய இசை மயங்கியது. அதுகண்டு பின்னர் யாழ் இசைக்கத் தொடங்கினள் என்க.

இனி ஈண்டு அடியார்க்குநல்லார் பதுமாசனமாக விருந்தவள் தனக்கு நாயகன் இன்மையில் தியாந நாயகனாக மானதத்தால் நோக்கி எதிர்முகமாக விருந்து வாசித்தலைக் கருதினாள் என்னும் விளக்கம் போலி என்றொழிக. கோவலனிருக்கவே மாதவிக்கு நாயகனில்லை என்றிவர் கூறுவது வியப்பேயாம்.

மாதவி யாழிசைத்தல்

27 - 35 : வலக்கை .......... கேட்டனள்

(இதன்பொருள்) வலக்கை பதாகை கோட்டொடு சேர்த்தி - தனது வலக்கையைப் பெருவிரல் குஞ்சித்து ஒழிந்த விரல் நான்கையும் நிமிர்த்துப் பதாகைக் கையாக்கி யாழினது கோட்டின் மிசைவைத்து அக் கையால் கோடு அசையாதபடி பிடித்து; இடக்கை நால்விரல் மாடகம் தழுவி - இடக்கையினது நான்கு விரலானும் மாடகத்தை உறப்பிடித்து; செம்பகை ஆர்ப்புகூடம் அதிர்வு வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து - செம்பகையும் ஆர்ப்பும் கூடமும் அதிர்வும் ஆகிய வெவ்விய பகைகள் நீங்குதற்குரிய விரகைக் கடைப்பிடித்து அறிந்து; பிழையாமரபின் ஈரேழ் கோவையை - அணியு முறைமையிற் பிழைபடாத நரம்பினாலே பதினான்கு நரம்புகளையும்; உழைமுதல் கைக்கிளை இறுவாய்க் கட்டி - உழை நரம்பு முதலாகவும் கைக்கிளை நரம்பு இறுதியாகவும் கட்டி: இணை கிளை பகை நட்பு என்று இந்நான்கின் - இணை நரம்பும் கிளை நரம்பும் பகை நரம்பும் நட்பு நரம்பும் என்று கூறப்படும் இந்த நான்கின் வழிகளிலே; இசை புணர் குறிநிலை எய்த நோக்கி - இசைபுணரும் குறிநிலையைப் பொருந்த நோக்கி; குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் - குரல் நரம்பினையும் யாழிற்கு அகப்பட்ட நரம்பாகிய இளிநரம்பையும் ஆராய்ந்து செவியால் ஓர்ந்து தீதின்மை அறிந்தாள் என்க.

(விளக்கம்) 27. பதாகைக்கையாவது - எல்லா விரலும் நிமிர்த்து இடை இன்றிப் பெருவிரல் குஞ்சித்தல் பதாகையாகும் என்பதனான் அறிக. இதனியல்பு அரங்கேற்று காதையுள் (18) பிண்டிக்கை விளக்கத்துங் கூறப்பட்டது கோடு - யாழின் தண்டு. 28 மாடகம் - நரம்பை வீக்கும் கருவி. (ஆணி). 29 - 30. செம்பகை - தாழ்ந்த இசை. ஆர்ப்பு - தனக்கியன்ற மாத்திரை யிறந்த இசை. அஃதாவது மிக்கிசைத்தல். கூடம் - பகைநரம்பின் இசையினுள் மறைந்து தனதிசை புலப்படாமை. அஃதாவது ஓசை மழுங்குதல். அதிர்வு - இசை சிதறுதல். இவற்றை,

இன்னிசை வழியதன்றி யிசைத்தல் செம்பகையதாகும்
சொன்னமாத் திரையி னோங்க விசைந்திடுஞ் சுருதியார்ப்பே
மன்னிய இசைவ ராது மழுங்குதல் கூட மாகும்
நன்னுதால் சிதறவுந்தல் அதிர்வென நாட்டி னாரே

எனவரும் செய்யுளானுணர்க. இந்நான்கு குற்றங்களும் மரக்குற்றத்தாற் பிறக்கும். மரக்குற்றமாவன: நீரிலே நிற்றல் அழுகுதல் வேதல் நிலமயக்குப் பாரிலே நிற்றல் இடிவீழ்தல் நோய்மரப்பாற்படல் கோண் நேரிலே செம்பகை ஆர்ப்பொடு கூடம் அதிர்வு நிற்றல் சேரினேர் பண்கள் நிறமயக்குப்படும் சிற்றிடையே என்பதனான் அறிக.

31. ஈரேழ் கோவை - பதினான்கு நரம்பு தொடுக்கப்பட்ட யாழ். இதனைச் சகோடயாழ் என்பர் அடியார்க்குநல்லார். சகோடயாழ் என்னும் வழக்கு இளங்கோவடிகளார் காலத்தில்லை என்பதனை முன்னுரையிற் காண்க. அரும்பதவுரையாசிரியர் ஈரேழ் கோவை என்பதற்குப் பதினாலு நரம்பு என்றே குறிப்பிட்டனர்.

மெலிவிற் கெல்லை மந்த வுழையே (குரலே ?) என்பதனால் உழைகுரலான மந்தமும், வலிவிற் கெல்லை வன்கைக் கிளையே øக்கிளை யிறுவாயான வலிவும் ........... பார்த்து கட்டப்பட்ட தென்பர் அரும்பதவுரையாசிரியர். இனி அடியார்க்குநல்லார், இக்குரல் முதல் ஏழினும் முன்தோன்றியது தாரம்;

தாரத்துட் டோன்றும் உழையுழையுட் டோன்றும்
ஒருங்குரல் குரலினுட் டோன்றிச் - சேருமிளி
யுட்டோன்றுந் துத்தத்துட் டோன்றும் விளரியுட்
கைக்கிளை தோன்றும் பிறப்பு

என்பதனால் தாரத்தின் முதற்பிறப்பதாகிய உழை குரலாய்க் கைக்கிளை தாரமாகிய கோடிப்பாலை முதற்பிறக்கக் கட்டி யென்க என்பர்.

35. குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் என்பதற்குப் பழைய வுரையாசிரியர் இருவரும் குரல்முதலாக எடுத்து இளிகுரலாக வாசித்தாள் எனவே கூறினர். கூறவே மாதவி, உழை முதலாகக் கைக்கிளை இறுவாயாகக் கட்டிய இவ்வீரேழ் கோவையில் முதன் முதலாகக் குரல் குரலாகிய செம்பாலை என்னும் பண்ணை யிசைக்கத் தொடங்கிப் பின்னர்த் தாரத்தாக்கஞ் செய்து இடமுறை திரியும் பண்களை இசைத்தாள் எனக் கருதி அடியார்க்குநல்லார் ஈண்டுக் கூறும் விளக்கம் கூர்ந்துணரற்பாலதாம். அது வருமாறு: இனி வட்டப் பாலை இடமுறைத்திரிபு கூறுகின்றார். குன்றாக் குரற்பாதி தாரத்தில் ஒன்று - நடுவண் இணை கிளையாக்கிக் - கொடியிடையாய் தாரத்தில் ஒன்று விளரிமேல் ஏறடவந் நேரத்தில் அதுகுரலாம் நின்று (இஃது) என்னுதலிற்றோ வெனின், உழை குரலாகிய கோடிப்பாலை நிற்க - இடமுறை திரியுமிடத்துக் குரல் குரலாயது செம்பாலை; இதனிலே குரலிற் பாதியும் தாரத்தில் ஒன்றும் இரண்டின் அந்தரத்திலே கிளையாக்கித் தாரத்திலே நின்ற ஓரலகை விளரியின் மேலேறட விளரி குரலாய்ப் படுமலைப்பாலையாம்; இம்முறையே துத்தம் குரலாயது செவ்வழிப்பாலையாம். இளி குரலாயது அரும்பாலையாம்; கைக்கிளை குரலாயது மேற் செம்பாலையாம். தாரம் குரலாயது விளரிப்பாலையாம்; என அந்தரம் ஐந்தும் நீக்கி உறழ்ந்து கண்டுகொள்க. இவ்விடத்தில் தார நரம்பின் அந்தரக்கோலைத் தாரமென்றது தன்னமுந் தாரமுந் தன்வழிப் படர என்னுஞ் சூத்திரவிதியா னென்க. இவ்வேழு பெரும்பாலையினையும் முதலடுத்து நூற்றுமூன்று பண்ணும் பிறக்கும். அவற்றுட் செம்பாலையுட் பிறக்கும் பண்கள்: பாலையாழ், நாகராகம், ஆகரி, தோடி, கௌடி, காந்தாரம், செந்துருத்தி, உதயகிரி யெனவிவை. பிறவும் விரிப்பின் உரை பெருகுமாதலின் அவற்றை வந்தவழிக் கண்டுகொள்க. நாற்பெரும் பண்ணுஞ் சாதி நான்கும், பாற்படு திறனும் பண்ணெனப் படுமே என்றார்? எனவரும்.

ஈண்டு அடியார்க்குநல்லார் இனி, வட்டப்பாலை இடமுறைத் திரிபு கூறுகின்றார் என்று தொடங்கிக் கூறும் விளக்கம் இடமுறைப்பாலைக்குப் பெரிதும் பொருந்திய வுரையேயாம். மற்று ஈண்டுக் கூறப்படும் பாலைகள் அரங்கேற்று காதைக்கண் கூறப்படும் அவர் உரைக்கே மாறுபடுகின்றது என்பாரும் பாடந்திருத்துவோரும் இவ்வுரையைக் கூர்ந்து நோக்கியதாகத் தோன்றவில்லை. மற்று ஈண்டுக் உழைமுதலாகக் கோடிப் பாலை முதலிற் பிறக்கக் கட்டப்பட்டமையேயாம். அரங்கேற்றுபாதையில் இளிமுதலாகக் கோடிப்பாலை பிறக்கக் கட்டிய யாழிற்குக் கூறியபடியால் மாறுபட்டுத் தோன்றுகின்றன. இஃது அறியாமல் மயங்கினவர் கூற்றே அஃதென்க.

இனி, அரும்பதவுரையாசிரியர் குறிப்பில் இக் கருத்துளதாகத் தோன்றவில்லை. அவர் (31) பிழையா மரபின் ஈரேழ் கோவையை (32) உழைமுதற் கைக்கிளை யிறுவாய் கட்டி என்றது. உழை முதலாகக் கைக்கிளை யீறாகப்பண்ணி என்றவாறு. இளி விளரி தாரம் குரல் துத்தம் கைக்கிளை உழையே ஏழு நரம்பியன்ற பின்னர் கண்ணிய கீழ்மூன்றாகி மேலும் நண்ணல் வேண்டும் ஈரிரண்டு நரம்பே குரலே துத்தம் இளியிவை நான்கும், விளரி கைக்கிளை மும்மூன்றாகித் தளராத் தாரம் உழையிவை யீரிரண் டெனவெழு மென்ப வறிந்திசி னோரே என்பர்.

மேலும் அரும்பதவுரையாசிரியர், குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் என்பதற்கு, விளக்கம் கூறுமிடத்து, குரல்நரம்பினையும் யாழிற்கு அகப்பட்ட நரம்பாகிய இளிநரம்பையும் முற்பட ஆராய்ந்து இசையோர்த்து அதன் முறையே அல்லாத நரம்புகளையும் ஆராய்ந்து இசையோர்த்துத் தீதின்மையைச் செவியாலே ஓர்ந்தாள் என்பர். இங்ஙனம் செய்வதனையே வண்ணப்பட்டடை, யாழ்மேல் வைத்தல் என அரங்கேற்றுகாதைக்கண் கூறப்பட்டதென் றுணர்க.

35 - 42 : அன்றியும் ........ கழிப்பி

(இதன்பொருள்) அன்றியும் - அங்ஙனம் அறிந்ததோடல்லாமல்; வரன்முறை மருங்கின் - இசைநூல் வரலாற்று முறைமைப்படி ஐந்தின் (உம்) ஏழினும் - ஐந்தாம் நரம்பாம் முறைமையினாலே இளி குரலாக ஏழு நரம்புகளினும் வாசித்தாள்; எங்ஙனம் வாசித்தனளோவெனின்; உழைமுதலாகவும் உழையீறு ஆகவும் குரல் முதல் ஆகவும் குரல் ஈறு ஆகவும் - உழை குரலாகவும் உழை தாரமாகவும், குரலே குரலாகவும் குரலே தாரமாகவும், நிரலே; அகநிலை மருதமும் புறநிலை மருதமும் அருகியல் மருதமும் பெருகியல் மருதமும் நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி- அகநிலை மருதம் புறநிலை மருதம் அருகியல் மருதம் பெருகியல் மருதம் என்று கூறப்படுகின்ற நால்வகைச் சாதிப்பண்களையும் அழகும் இனிமையுமாகிய நன்மையுண்டாக இசைத்துப் பார்த்து; மூவகை இயக்கமும் முறையுளி கழிப்பி - வலிவும் மெலிவும் சமனும் என்னும் மூவகைப்பட்ட இசையியக்கங்களையும் வரலாற்று முறையானே இசைத்து அத்தொழிலைக் கழித்தென்க.

(விளக்கம்) 36. வரன்முறை - இசைத்தமிழின் வரலாற்று முறைமை. ஐந்தினும் ஏழினும் என்புழி, ஈரிடத்தும் உம்மை இசை நிறை.

37 - 40. உழைகுரலாகிய அகநிலை மருதமும்; உழைதாரமாகிய (அஃதாவது கைக்கிளை குரலாகிய) புறநிலை மருதமும். குரல் குரலாகிய அருகியன் மருதமும் குரல்தாரமாகிய (அஃதாவது தாரம் குரல் ஆகிய) பெருகியன் மருதமும் என நிரனிறையாகக் கொள்க. இவற்றை அடியார்க்குநல்லார் நிரலே கோடிப்பாலை, மேற்செம்பாலை, செம்பாலை, விளரிப்பாலை எனக் கூறி இவற்றை சாதிப் பெரும் பண்கள் என்றும் ஓதுவர்.

இனி, அரும்பதவுரையாசிரியர் இவற்றிற்குக் கூறும் விளக்கம் வருமாறு:

அகநிலை மருதமாவது: ஒத்த கிழமை யுயர்குரல் மருதம், துத்தமும் விளரியும் குறைவுபெறல் நிறையே - இதன் பாட்டு,

ஊர்க திண்டே ரூர்தற் கின்னே
நேர்க பாக நீயா வண்ணம்

நரம்புக்கு மாத்திரை பதினாறு.

புறநிலை மருதம்: குரல் உழை கிழமை துத்தம் கைக்கிளை குரலாமேனைத் தாரம் விளரி யிளி நிறைவாகும். இதன் பாட்டு,

அங்கட் பொய்கை யூரன் கேண்மை
திங்க ளோர்நா ளாகுந் தோழி.

நரம்பு (க்கு மாத்திரை) பதினாறு.

அருகியன் மருதம்: குரல் கிழமை கைக்கிளை விளரி யிளிகுரல் நிறையா மேனைத் துத்தந் தாரம் இளியிவை, நிறையே. இதன் பாட்டு,

வந்தா னூரன் மென்றோள் வளைய
கன்றாய் போது காணாய் தோழி.

நரம்பு ............ பதினாறு.

பெருகியன் மருதம் பேணுங் காலை அகநிலைக்குரிய நரம்பின திரட்டி, (முப்பத்திரண்டு) நிறை குறை கிழமை பெறுமென மொழிப, இதன் பாட்டு,

மல்லூர் ......... நோவ வெம்முன்
சொல்லற் பாண செல்லுங் காலை
எல்லி வந்த நங்கைக் கெல்லாம்
சொல்லுங் காலைச் சொல்லு நீயே

நரம்பு முப்பத்திரண்டு.

அகநிலை மருதத்துக்கு நரம்பணியும்படி - உழை இளி விளரி உழை கைக்கிளை குரல் உழை குரல் தாரம் இளி தாரம் துத்தம் இளி உழை இவை உரைப்பிற் பெருகும் எனவரும்.

42. மூவகை யியக்கம் : வலிவு மெலிவு சமம் என்பன.

இனி, ஈரிருபண்ணும் எழுமூன்று திறனும் (பிங்கலந்தை) என்பவாகலின், ஈண்டுச் சாதிப் பெரும்பண்கள் நான்கற்கும் இருபத்தொரு திறங்கள் அமைந்துள்ளன. இவற்றினுள் பாலை யாழ்த்திறன் ஐந்து குறிஞ்சி யாழ்த்திறன் எட்டு மருத யாழ்த்திறன் நான்கு, செவ்வழியாழ்த்திறன் நான்கு ஆக இருபத்தொன்றாகும்.

இனி, இவைதாம் அகநிலை புறநிலை அருகியல் பெருகியல் என வகைக்கு நான்காகி எண்பத்து நான்காம், பெரும்பண் நான்கும் அகநிலை புறநிலை அருகியல் பெருகியல் என்னும் இவற்றாற் பெருக்கப் பதினாறாம். அவையாவன,

ஈரிரு பண்ணும் எழுமூன்று திறனும்
ஆகின் றனவிவை யிவற்றுட் பாலையாழ்
தேவதாளி நிருப துங்க ராகம்
நாகராகம் இவற்றுட் குறிஞ்சியாழ்
செந்து மண்டலி யாழரி மருதயாழ்
ஆகரி சாய வேளர் கொல்லி
கின்னரம் செவ்வழி வேளாவளி சீராகம்
சந்தி இவை பதினாறும் பெரும்பண்

எனவரும் (பிங்கலந்தை - 1380).

பெரும்பண் பதினாறும் முற்கூறப்பட்ட எண்பத்துநான்கு திறனும் தாரப்பண்டிறம் (1) பையுள்காஞ்சி (1) படுமலை (1) ஆகப் பண்கள் நூற்றுமூன்றும் எனவும் பிறவாறும் கூறுவாரும் உளர். இவையெல்லாம் இன்னும் ஆராய்ந்து காண்டற்குரியனவேயாம். இசைத் தமிழ் பற்றிய இலக்கண நூல்கள் பல இறந்தொழிந்தமையால் இவற்றை ஆராய்ந்து துணிதலும் செயற்கரிய செயலென்றே தோன்றுகின்றது.

43 - 44 : திறந்து .......... மயங்கி

(இதன்பொருள்) திறத்து வழிப்படுஉம் தெள் இசைக் கரணத்து - திறம் என்னும் பண்கள் பாடுதற்குரிய நெறியிலிசைத்தற்குக் காரணமான தெளிந்த இசையை எழுப்புகின்ற செய்கையின்கண்; ஒரு புறப்பாணியில் - பிறிதொரு பாட்டுவந்து விரவப்பட்டு; பூங்கொடி - பூங்கொடி போல்வாளாகிய மாதவி; மயங்கி - மனமயங்கி; என்க.

(விளக்கம்) முற்கூறிய நால்வகைப் பெரும்பண்களைப் பாடி முடித்துப் பின்னர், திறப்பண்களைப் பாடத் தொடங்கியவள் தான் கருதிய திறத்திற்குப் புறம்பான இசைவந்து விரவுதலாலே மாதவி மயங்கினள் என்க. இம்மயக்கத்திற்குக் காரணம் கோவலன் பிரிவாற்றாமை என்பது கூறாமலே அமையும். ஆற்றாமை மிகுதியாலே அவள் அவ்விசைத் தொழிலைக் கோவலனுக்கு மேலே முடங்கல் வரையத் தொடங்குகின்றாள்.

இனி, புறத்தொரு பாணியில் மயங்கி என்பதற்குப் புறநிலையாகிய மருதப்பண்ணை வாசித்தலிலே மயங்கி என்றும், புறநீர்மை என்னும் திறத்தில் மயங்கி என்றும் உரைப்பாருமுளர்.

மாதவி கோவலனுக்குத் திருமுகம் வரைதல்

45-53 : சண்பகம் ........... செவ்வியளாகி

(இதன்பொருள்) விரை மலர் வாளியின் வியல் நிலம் ஆண்ட ஒரு தனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின் - மணங்கமழுகின்ற மலர்க்கணைகளாலேயே பெரிய நிலவுலகத்தில் வாழ்கின்ற எல்லா வுயிரினங்களையும் அடக்கித் தன்னடிப்படுத்து ஆட்சி செய்த ஒப்பில்லாத தனிச் செங்கோலையுடைய ஒப்பற்ற வேந்தனாகிய காமவேளினது கட்டளையாலே; ஒருமுகம் அன்றி உலகு தொழுது இறைஞ்சும் திருமுகம் - ஒரு திசையன்றி நாற்றிசையினுமுள்ள நாட்டில் வாழ்வோரெல்லாம் கைகுவித்து வணங்கி ஏற்றுக் கொள்ளுதற்குரிய அவனது அழைப்பிதழாகிய முடங்கலை; போக்கும் செவ்வியள் ஆகி - வரைந்து தானே போக்குதற்குரியதொரு நிலையினை எய்தியவளாகி; சண்பகம் மாதவி தமாலம் கருமுகை மல்லிகை வெண்பூ வேரொடு மிடைந்த அம் செங்கழு நீர் ஆய்இதழ் எதிர் கத்திகை - சண்பகப்பூவும் குருக்கத்திப்பூவும் பச்சிலையும் பிச்சிப்பூ மல்லிகையினது வெள்ளிய பூ வெட்டிவேர் என்னும் இவற்றோடு செறித்த அழகிய செங்கழுநீர் மலரில் ஆராய்ந்தெடுத்த இதழ்களையும் உடைத்தாய்த் தான் அணிந்திருந்த கத்திகை என்னும் மலர் மாலையினது; இடைநிலத்து யாத்த - நடுவிடத்தே வைத்துக் கட்டப்பட்ட; எதிர் பூஞ் செவ்வி முதிர்பூ தாழை வெள்தோட்டு முடங்கல் - மேலே கூறப்பட்ட மலர்மணங்களோடு மாறுபட்ட மணத்தையுடைய பருவம் முதிர்ந்ததொரு தாழையினது பூவினது வெள்ளிய இதழாகிய ஏட்டின்கண்; என்க.

(விளக்கம்) 45-6. சண்பக முதலியன ஆகுபெயர். (அவற்றின் மலர்கள்) வேர் - வெட்டிவேர். மிடைந்த - செறிந்த. இங்ஙனம் பல்வேறுவகை மலர்கள் விரவித் தொடுத்த மலர்மாலைக்குக் கத்திகை என்பது பெயர் என்பதும் இதனாற் பெற்றாம். ஆயிதழ் - ஆராய்ந்தெடுத்த இதழ். பூஞ்செவ்வி எதிர் தாழைப்பூ எனினுமாம். முடங்கல் - ஏடு என்னும்பொருட்டு. ஓலையில் எழுதிச் சுருட்டப்படுதலின் திருமுகத்திற்கு முடங்கல் என்பது பெயராயிற்று. முடங்குதல் - சுருளுதல்.

இசை பாடியவள் ஆற்றாமையால் மயங்கிப் பின்னர்த் திருமுகம் போக்கும் செவ்வியளாகி எழுதுவதற்குரிய ஏடு ஆராய்பவள், தான் அணிந்த மாலையின் நடுவிடத்தே கட்டப்பட்டிருந்த தாழை மலரின் வெண் தோட்டை முடங்கலாகக் கொண்டனள் என்க. காமக் குணத்தின் தூண்டுதலாலே எழுதப்படுதலின் இதனைக் காமனுடைய திருமுகம் என்றே ஓதினர். அரசர் கட்டளை வரையும் ஏட்டிற்கே திருமுகம் என்பது பெயராம். இதுவும் காமவேந்தன் கட்டளையாதலின் திருமுகம் எனப்பட்டது. ஏனையோர் எழுதின் வாளா முடங்கல் என்றே பெயர் பெறும் என்க.

53 - செவ்வியளாகி - 45 - சண்பக ............ வெண்தோட்டு என மாறிக் கூட்டுக.

இதுவுமது

54-67 : அலத்தக ............ எழுதி

(இதன்பொருள்) அயலது பித்திகைக் கொழுமுகை ஆணி கைக்கொண்டு - அதற்கு அயலதாகியதொரு பிச்சியினது வளவிய நாளரும்பை எழுத்தாணியாகக் கையிற் கொண்டு; அலத்தகக் கொழுஞ் சேறு அளைஇ - அதனைச் செம்பஞ்சின் வளமான குழம்பின்கண் தோய்த்து உதறி எழுதுகின்றவள்; மன் உயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும் இன் இளவேனில் (அரசன்) இளவரசன் - உலகின்கண் உடம்பொடு தோன்றி நிலைபெற்ற உயிரினங்களை எல்லாம் தாந்தாம் புணர்ந்து மகிழ்தற்குக் காரணமான காதற்றுணையோடு புணர்விக்குந் தொழிலையுடைய இளவேனிற் பருவத்து அரசன்றானும் (அறனறிந்த மூத்த அறிவுடை யரசனல்லன் விளைவறியாத) இளவரசனாவான். ஆதலால், அவன் நெறியறிந்து செய்யான்; அந்திப் போதகத்து அரும்பிடர்த் தோன்றிய திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன் - அவ்விளவரசனுக்குத் துணையாக அந்திமாலை என்னும் கரிய யானையினது ஏறுதற்கரிய பிடரின்கண் ஏறியூர்ந்துவந் துலகில் தோன்றிய திங்களாகிய செல்வன்றானும் நடுநிலையுடையன் அல்லன்; ஒருதலையா யுட்கோட்ட முடையன் கண்டீர் ஆதலால்; புணர்ந்த மாக்கள் பொழுது இடைப் படுப்பினும் தணந்த மாக்கள் தம்துணை மறப்பினும் - தம்முட் காதலாலே கூடியிருக்கின்ற காதலர்தாமும் தம்முள் ஊடி அது காரணமாகச் சிறிது பொழுது இடையிலே பயனின்றிக் கழிப்பினும் அன்றி ஓதன் முதலிய காரணம் பற்றிப் பிரிந்த காதலர் தாமும் தாம் மேற்கொண்ட காரியத்தின் மேற் கருத்தூன்றித் தம்தம் துணையை மறந்தொழியினும்; நறும்பூ வாளியின் நல் உயிர் கோடல் இறும்பூது அன்று இஃது அறிந்தீமின் என - அவ்விளவேனிலரசன் தன் படைக்கலமாகிய நறிய மரலம்புகளாலே தனித்துறைவாருடைய இன்பம் நுகர்தற்குரிய உயிரைக் கைக்கொண்டு விடுதல் அவனுக்குப் புதிய செயலன்று இதனைப் பெருமானே! அறிந்தருள்க! என்று; எண் எண்கலையும் இசைந்து உடன் போக - அறுபத்து நால்வகைக் கலைகளும் மேண்மையுடைய வாய்த் தனக்குப் பொருந்தித் தன்னோடு நடவா நிற்பவும்; அவற்றுள், பண்ணும் திறனும் புறங்கூறும் நாவின் - பண்களும் அவற்றோடியைபுடைய திறங்களுமே உட்பகையாகிப் புறங்கூறுதற்குக் காரணமான தனது நாவினாலே; தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து - நிறை என்னும் கட்டுத் தன்னிடத்தினின்றும் நெகிழ்ந் தொழிந்தமையாலே தன் வரைத்தன்றித் தனிமையுற்று நெஞ்சைச் சுட்டுருக்குங் காமங் காரணமாக விளையா மழலையின் விரித்து உரை எழுதி - முதிராத தனது மழலைச் சொற்களாலே அவ் வேண்டுகோட் பாடலைப் பேசிப் பேசி எழுதி என்க.

(விளக்கம்) 56. மன்னுயிர் - உடம்பொடு தோன்றித் தத்தமக்கு வரைந்த வாழ்நாள் காறும் உலகத்திலே நிலைபெறுகின்ற உயிர்கள். உயிர் ஈண்டு இயங்கியல் உயிரினத்தின் மேற்று. என்னை? துணையோடு புணர்வன அவையேயாகலின். உயிரெல்லாம் என்றாள் அவனது ஆட்சிப் பரப்பின் பெருமை தோன்ற. துணையொடு புணர்ந்து மகிழ வேண்டும் என்பதே அவன் கட்டளை. இதனைப் பிழைப்பின் அவன் வாளியாலே அவர் தம்முயிரைக் கொள்வன் என்றவாறு. இத்தொழில் அவனுக்கு எஞ்ஞான்றும் உரித்தாகலின் அஃது இறும்பூதன்று என்றாள். எனவே, நீயிர் வந்து துணையாகாதொழியின் யான் உயிர் வாழ்தல் சாலாது என்பது குறிப்புப் பொருளாயிற்று.

57. இன்னிளவேனிலரசன் இளவரசன் என்றொரு சொல் வருவித்து அவ்வரசன் இளவரசன் ஆதலின் அவன் நல்லுயிர் கோடல் இறும்பூதன்றென உயிர் கோடற்கு அவன் இளமையை ஏதுவாக்குக.

58. அந்தியில் திங்கள் தோன்றுதலின் வேனிலரசனுக்குத் துணையாக வருதல் பற்றித் திங்களைப் போர் மறவனாக உருவகித்த அடிகளார் அந்தி மாலையை யானையாக உருவகித்தார். அந்திப் போதகத்து அரும்பிடர்த்தோன்றிய திங்களஞ் செல்வன் என்பதற்கு அடியார்க்கு நல்லார் அந்திப் போதகம் என்பதனை யானையாக்கி அதன் புறக் கழுத்திலே திங்களெனிற் பிறையாம் ஆகவே, நாடுகாண் காதையுள் வைகறை யாமத்து, மீன்றிகழ் விசும்பின் வெண்மதி நீங்கக், காரிருள் நின்ற கடை நாட்கங்குல், ஊழ்வினை கடைஇ உள்ளந் துரப்ப... நெடுங்கடை கழிந்து என்பதனோடு மாறு கொள்ளும் என்பர். தானாட்டித் தனாது நிறுத்தல் பற்றி அவர் இவ்வாறு கூறல் வேண்டிற்று. இவ்வுரை வேண்டாகூறலாம். என்னை? அடிகளார் ஈண்டு, அந்தியைச் சிலேடை வகையால் யானை என்னும் பொருட்டாகவன்றே பிறசொல்லானன்றி அந்திப் போதகத்து என்றார். அச் சொல் பொழுதின் கண் எனவும் யானையினது எனவும் பொருள் தருதலும் உணர்க. யானை என்புழி யானையில் வருவோர் அதன் பிடரில் ஏறி வருதல் இயற்கையாதலின் அரும்பிடர்த் தோன்றி என்றார். இதுதானும் அடியார்க்கு நல்லார் கூறியாங்கு அந்திப்பொழுதகத்து அரும்பும் இடர்த்தலை என்னும் பொருள்படுதலாயிற்று. பிறையாக அன்றி நிறைமதியாக இரண்டும் அந்திப் போதகத்துத்தோன்றுவனவே ஆகலின், அந்திப்பொழுதகத்தே தோன்றுவது பிறையே ஆதல் வேண்டும் என்று அவர் கூறியது போலியே என்க. அஃதொக்கும் அடியார்க்கு நல்லார் ஆடித்திங்கட் பேரிருட் பக்கத்து அழல்சேர் குட்டத்து அட்டமிஞான்று...... உரையுமுண்டு என்பதனோடும் மாறுகொள்ளும் என்பதோ எனின் அக்கருத்து நூலாசிரியர் கருத்தென்று கொள்ளல் மிகை என்பார்க்கும் நிறைமதியென்றே கொள்வார்க்கும் அஃது கடாவன்றென விடுக்க.

59. செவ்வியனல்லன் என்பது கோட்டமுடையான் எனப் பொருள் பயந்து அது தானும் கொடியவன் எனச் சிலேடை வகையாலும் பிறிதொரு பொருள் பயந்து நின்றமை யுணர்க.

63. அறிந்தீமின் - அறிமின்; வினைத்திரிசொல். நாடக மகளிர் அறுபத்து நான்கு கலையும் கற்றுத் துறைபோதல் வேண்டும் ஆதலின் இவளும் அங்ஙனம் கற்றுத் துறைபோயவள் என்று அடிகளார் அவட்கு இரங்குவார் எண்ணென் கலையும் ...... நாவின் என்றார். நாடக மகளிர்க்கு அறுபத்து நான்கு கலைகளும் உரியன என்பதனை அடிகளாரே பண்ணுங் கிளியும் பழித்த தீஞ்சொல் எண்ணெண் கலையோர் இருபெரு வீதியும் எனவும் (14 : 166-7) எண்ணான் கிரட்டி யிருங்கலை பயின்ற பண்ணியன் மடந்தையர், எனவும், (22: 138 -9) ஓதுதலானும் உணர்க.

65 : பண்ணுந் திறனும் இவள் நாவின் மழலைச் சொற்கு ஒவ்வா ஆதலின் அவை அதனைப் புறங்கூறும் என்றவாறு. இனி, பண்ணையும் திறத்தையும் பழிக்கும் நாவின் மழலை எனினுமாம். 66 தளைவாய் அவிழ்ந்த காமம்; தனிப்படு காமம் எனத் தனித்தனி இயையும் தளை ஈண்டு நிறை. வாயவிழ்தல் - பூட்டுவிட்டுப் போதல். தனிப்படுகாமம் - சிறந்தார்க்கும் உரைக்கலாவதன்றாய் அரிதாய் அகத்தே சுட்டுருக்கும் காமம் (அடியார்க்) தனிமையுற்ற காமம் எனினுமாம். மழலையின் விரித்து என்றதனால் பேசிப் பேசி எழுதி என்பது பெற்றாம்.

மாதவி கோவலனுக்குத் திருமுகமுய்த்தல்

68 - 74: பசந்த ............ அளிப்ப

(இதன்பொருள்) பசந்த மேனியள் - பிரிவாற்றாது பசலை பாய்ந்து ஒளி மழுங்கிய நிறத்தையுடையளாகிய அம்மாதவி தனிமைத் துயர் மிகுகின்ற அவ்வந்திமாலைப் பொழுதிலேயே; வசந்த மாலையை வருக எனக் கூஉய் - தன்னுசாத்துணைத் தோழியாகிய வசந்த மாலையை இங்கு வருக! என்று அழைத்து, தூமலர் மாலையில் துணிபொருள் எல்லாம் கோவலற்கு அளித்து - இந்தத் தூய மலர் மாலையில் யான் வரைந்துள்ள சொற்களாலே தெளியப்படும் பொருளை யெல்லாம் கோவலன் உளங்கொள்ளுமாறு எடுத்துச்சொல்லி; ஈங்குக் கொணர்க என - இங்கு அழைத்துக் கொணர்க! என்று ஏவுதலாலே; மாலை வாங்கிய வேல் அரிநெடுங்கண் - அம்மாலையைத் தன் கையிலேற்றுக் கொண்ட குருதி தோய்ந்த வேல் போலும் செவ்வரியோடிய நெடிய கண்ணையுடைய அவ்வசந்த மாலைதானும்; கூல மறுகில் கோவலற்கு அளிப்ப - விரைந்து போய்க் கூலக் கடைவீதியிடத்தே அவனைக் கண்டு அம்மாலை முடங்கலையும் அதன்கட் பொறித்த செய்திகளையும் அக்கோவலன் மனங்கொள்ளுமாறு கூறிக் கொடா நிற்ப என்க.

(விளக்கம்) 68- பசந்த மேனியள் என்றது - அப்பொழுதே அவள் ஆற்றாமை மிக்கமையை உணர்த்தற் பொருட்டு. மேலும் அவளது தனிப்படர் மிகுதி கூறுவார் மாலை என்னாது படர் உறு மாலை என்றார். படர் - நினைவின் பின்னினைவாகத் தொடர்ந்து வரும் துன்ப நினைவுகள் - அவையாவன அவன் மீண்டு வருவானோ? வாரானோ? வாரானாயின் யாம் என் செய்வேம் என்றார் போல்வன. உறு - மிகுதி : உரிச்சொல். படர் மிகுதலாலே அப்பொழுது அம் முடங்கலை உய்த்தல் வேண்டிற்று என்பது தோன்ற, படர் உறுமாலை என்று அதனை விதந்தார். கூல மறுகிற் கோவலற்கு என்றது - கூலமறுகிடத்தே காணப்பட்ட கோவலனுக்கு என்றவாறு. இங்ஙனமன்றிக் கூலமறுகினையுடைய கோவலன் எனல் இச் செவ்விக் கேலாமையுணர்க கோவலனை அழைக்கத் தூது செல்வாளும் அத் தொழிற்றகுதி யுடையளே என்றுணர்த்தற்கு, வேலரி நெடுங்கண் என அவளது உருவச் சிறப்பையே விதந்து கூறினார். கோவலன் மீளாமைக்குத் தூதின் பிழையில்லை அவன் ஊழே அங்ஙனம் செய்தது என்பது இதனாற் போந்த குறிப்புப் பொருள். தூதர்க்குரிய சிறந்த பண்புகளுள் உருவச் சிறப்பும் ஒன்றாம். இதனை - அறிவுஉருவு ஆராய்ந்த கல்வியிம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு எனவருந் திருக்குறளானும் உணர்க. இவளுடைய அறிவுடைமையும் கல்வியும் துணிபொருளெல்லாம் அளித்துக் கொணர்க என்று மாதவியால் ஏவப்பட்டமையாற் பெற்றாம்.

கோவலன் அத்திருமுகத்தை ஏலாது மறுத்து மாதவியைப் பழித்தல். 74 - திலகமும் என்பது தொடங்கி 110 - பைந்தொடி தனக்கு என்னுந் துணையும் கோவலன் கூற்றாய் ஒரு தொடராம்.

இதன்கண் - வயந்த மாலாய்! கேள்! அவள்தான் பிரிவாற்றாமையால் பெரும் பேதுறுகின்றனள் ஆதலால் யான் - இன்னே வந்து அளி செய்தல் வேண்டுமென்று என்னை அழைக்கின்றாய்! இன்று மட்டும் அன்று பண்டுதொட்டும் அவள் என்பால் நடந்த நடையெல்லாம் வாய்மையல்ல, வெறும் நடிப்புக்களே என்று யான் இப்பொழுது தான் உணர்கின்றேன். அங்ஙனம் அவள் நடித்த நாடகத்திற் சில கூறுவல் கேட்பாயாக! என்பது வயந்த மாலைக்குப் புலப்படும்படி கோவலன் கூறுகின்றான் என்றுணர்க.

இனி, இளங்கோவடிகளார் இக்கதை நிகழ்ச்சியை ஏதுவாகப் படைத்துக் கொண்டு ஈண்டுக் கோவலன் கூற்றாக வரிக்கூத்துக்களின் இயல்பினை நன்கு விளக்கும் திறம் வியந்து பாராட்டற்குரியதாம். அது வருமாறு :

(1) கண்கூடுவரி

74 - 7 : திலகமும் .............. கண்கூடுவரியும்

(இதன்பொருள்) திலகமும் அளகமும் சிறு கருஞ்சிலையும் குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட மாதர் வாள் முகத்து - ஏடி! வயந்த மாலாய்! கேள்! அவள் தான் திலகத்தையும் கூந்தலையும் சிறிய கரிய இரண்டு விற்களையும் இரண்டு குவளை மலர்களையும் ஒரு குமிழமலரையும் இரண்டு கொவ்வைக் கனிகளையும் தன்பாற் கொண்ட அழகிய ஒளியுடைய முகத்தோடும்; மதைஇய நோக்க மொடு - மதர்த்த நோக்கத்தோடும்; காதலின் தோன்றிய கண் கூடு வரியும் - யான் அவள் மனைபுகுந்த பொழுது யான் அழையாமலே முதன்முதலாக என்மேற் காதலையுடையாள் போலே என்முன் வந்து தோன்றி நின்று நடித்த கண்கூடுவரி என்னும் நடிப்பும்; என்க.

(விளக்கம்) வரிக்கூத்து என்பது - அவரவர் பிறந்த நிலத் தன்மையும் பிறப்பிற்கேற்ற தொழிற்றன்மையுந் தோன்ற நடித்தல் என்பர். அவ்வரிக்கூத்து எட்டு வகைப்படும். அவையாவன - கண்கூடு வரி, காண் வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சி வரி, காட்சி வரி, எடுத்துக்கோள் வரி எனுமிவைகளாம்.

இவற்றுட் கண்கூடு வரி என்பது - காதலுடையாள் ஒருத்தி தன்னாற் காதலிக்கப்பட்டவன் முன்னர்ப் பிறராற் கூட்டப்படாது தனது காதன் மிகுதி காரணமாகத் தானே வந்து நிற்கும் நிலைமை என்ப; இதனை -

கண்கூ டென்பது கருதுங் காலை
இசைப்ப வாராது தானே வந்து
தலைப்பெய்து நிற்குந் தன்மைத் தென்ப

எனவரும் நூற்பாவானறிக.

ஈண்டுக் கோவலன் மாதவியின் மாலையை ஆயிரத்தெண் கழஞ்சு பொன் கொடுத்து வாங்கிக் கூலியைப் பின் தொடர்ந்து சென்று மாமலர் நெடுங்கண் மாதவி மணமனை புகுந்தபொழுது அம்மாதவி தானும் கோவலன்பாற் கழிபெருங் காதலுடையவளாகவே அவனை ஆர்வத்தோடு வரவேற்றற் பொருட்டு அவனெதிர் சென்று நின்றனள். அந்நிகழ்ச்சியையே ஈண்டு ஊழ்வினை வலைப்பட்டு நிற்கும் கோவலன் நடிப்பு என்கின்றான்மன். இங்ஙனமே பின்வருவனவற்றையும் கருதுக.

74. திலகம் - பொட்டு. கருஞ்சிலை - கரிய புருவங்கள். 75. குவளை - கண். குமிழ் - மூக்கு. கொவ்வை - உதடுகள்; 76. மாதர் - அழகு. மதைஇய - மதர்த்த.

(2) காண்வரி

78 - 83 : புயல் ............... காண்வரிக் கோலமும்

(இதன்பொருள்) கருநெடுங்கண்ணி புயல் சுமந்து வருந்திப் பொழிகதிர் மதியத்துக் கயல் உலாய்த் திரிதரும் காமர் செவ்வியில் - பின்னும் கரிய நெடிய கண்ணையுடைய அம் மாதவிதான் தனது கூந்தலாகிய முகிலைச் சுமந்து அப்பொறை யாற்றாது வருந்தி நிலாக்கதிர்களைப் பொழிகின்ற தனது முகமாகிய முழுத் திங்களிடத்தே தன் கண்களாகிய கயல்மீன்கள் மதர்த்துத் திரிகின்ற அழகிய செவ்வியுடையளாய்; பாகு பொதி பவளம் திறந்து - தனது வாலெயிற்றூறுகின்ற நீராகிய தேன் பாகினைப் பொதிந்து கொண்டுள்ள தனது வாயிதழாகிய பவளப் பேழையைச் சிறிதுச் திறந்து; நிலா உதவிய நாகு இள முத்தின் நகை நலம் காட்டி - ஒளியைத் தருகின்ற பெரிதும் இளமையுமுடையனவாகிய எயிறுகளாகிய முத்துக்களின் பாற்றவழும் புன்முறுவலினது பேரழகைச் சிறிது காட்டி; வருக என வந்து - யான் வருக! என்றழைத்த பொழுதெலாம் காலந்தாழ்த்தலின்றி வந்தும்; போக எனப் போகிய - சூழ்நிலை காரணமாக யான் செல்க என்று கூறியவுடனே தடையேதுமின்றிச் சென்றும் அவள் நடித்த; காண்வரிக் கோலமும் - காண்வரி என்னும் கோலம் பூண்ட நடிப்பும் என்க.

(விளக்கம்) 79 - புயல் - முகில் - இது கூந்தலை உருவகித்தது - இங்ஙனமே நிரலே மதியம் முகத்தையும், கயல், கண்களையும் 80 - பாகு - வாயூறலையும், பவளம் - உதடுகளையும், முத்து, பற்களையும் உருவகித்தபடியாம். 79 -காமர் செவ்வி - காமம் வருவதற்குக் காரணமான செவ்வியுமாம். இதற்குக் காமம் வரும் என்பது காமர் என மரீஇயவாறாம். 80-பாகு-தேன்பாகு. நாகிள முத்து: மீமிசைச் சொல், பெரிதும் இளமையுடைய முத்து. ஈண்டு இளமை - புதுமை மேற்று. நகை - புன்முறுவல். நலம் - அழகு, இன்பமுமாம். வருக என வருகெனவும், போக என - போகெனவும், நிலைமொழி ஈறு கெட்டன. போகென என்பது சில செவ்வியில் போக என என்பதுபட நின்றது அத்தகைய செவ்வியாவது நண்பர் ஏதிலார் வரவு முதலியன. மாதவி கோவலன் வருகென அழைத்த பொழுதெல்லாம் புன்முறுவல் தவழ வந்ததும் போகெனப் போனதுமெல்லாம் அன்புச் செயல்களேயாகவும் ஊழ்மயக்குற்ற கோவலன் அவற்றைக் காண்வரி என்னும் நடிப்பு என்கின்றான்.

காண்வரியாவது - காண்வரி என்பது காணுங்காலை - வந்த பின்னர் மனமகிழ் வுறுவன தந்து நீங்குந் தன்மைத் தென்ப என்னும் நூற்பாவான் உணர்க. கோவலன் கூறிய மாதவி செயல் இவ்வரிக் கூத்திற் கியன்றன போலுதலறிக. பிறவும் இங்ஙனமே ஊகித்துணர்க.

(3) உள்வரி

84 - 89 : அந்தி .......... உள்வரியாடலும்

(இதன்பொருள்) அந்திமாலை வந்ததற்கு சிந்தை இரங்கி நோய் கூரும் என் சிறுமை நோக்கி - யான் ஊடிப்பிரிந்து பின்னர் அந்தி மாலைப்பொழுது வந்துறும்போது என் நெஞ்சம் பிரிவாற்றாது வருந்துமாறு காமநோய் மிகா நிற்றலாலே எனது ஆற்றாமையே வாயிலாக மீண்டும் அவள் மனைபுக்கு ஏக்கற்றிருக்கின்ற எனது சிறுமையை அவள் அறிந்துகொண்டு; என்னை அசதியாடி நகைத்தற் பொருட்டு; கிளிபுரை கிளவியும் மட அனநடையும் களிமயில் சாயலும் கரந்தனளாகி - தனக்குரிய கிளிமொழி போன்ற மழலைச் சொல்லையும்; இளவன்னத்தின் நடைபோன்ற அழகிய நடையையும், முகிலைக் கண்டுழிக் களித்தாடுகின்ற மயில்போன்ற தனது சாயலையும் துவர மறைத்தவளாய்; செரு வேல் நெடுங்கண் சிலதியர் கோலத்து - போர்வேல் போன்ற நெடிய கண்னையுடைய ஏவன் மகளிர் கோலத்தைக் கொண்டு; ஒரு தனிவந்த - தான் தமியளாய் என்முன் வந்து நின்று நடித்த; உள்வரி யாடலும் - உள்வரி என்னும் நடிப்பும்; என்க.

(விளக்கம்) கோவலன் மாலைப்பொழுதில் தனது பிரிவாற்றாது பெரிதும் வருந்தித் தனது வரவு நோக்கி ஏக்கறவு கொண்டிருந்ததனை அறிந்த மாதவி அவனை அசதியாடி நகைத்தலைக் கருதி ஏவன்மகள் போலக் கோலம்பூண்டு அவனெதிர்வந்து ஏதிலாள்போல நின்றாள் என்றும் அவளை ஏவற் பெண்ணாகவே கருதிக் கோவலன் பின்னரும் மாதவி வருகைக்கு ஏக்கறவு கொள்வது கண்டு தன்னுள் மகிழ்ந்து தன்னுருவம் காட்டி அசதியாடி அவனைத் தழுவிக்கொண்டதொரு நிகழ்ச்சியை ஈண்டு அவன் கூற்றாலேயே அறிகின்றாம். இந்நிகழ்ச்சி அவன் இன்பத்தைப் பன்மடங்கு மிகச் செய்திருக்கும் என்பது தேற்றம். ஆயினும் அதனையும் நடிப்பென்றே அவன் இப்பொழுது நினைத்துக் கூறுகின்றான் என்க.

உள்வரியாவது - வேற்றுருக்கொண்டு நடித்தல். இதனை உள்வரி யன்ப துணர்த்துங் காலை மண்டல மாக்கள் பிறிதோருருவம், கொண்டுங் கொள்ளாதும் ஆடுதற் குரித்தே எனவரும் நூற்பாவானுணர்க.

(4) புறவரி

90 - 93 : சிலம்புவாய் ......... புன்புறவரியும்

(இதன்பொருள்) கலம் பெறா நுசுப்பினள் சிலம்பு வாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும் - தனக்கியன்ற அணிகலன்களையும் புனைய இடம்பெறாத நுண்ணிடையை யுடையாளாகிய அம்மாதவி தன் சிலம்புகள் வாய்விட்டரற்றவும் மேகலை அணி ஆரவாரிப்பவும்; காதல் நோக்கமொடு - வாய்மையான காதலுடையாள் போல நோக்கும் நோக்கத்தோடு என் பக்கலிலே வந்து; திறத்து வேறு ஆய என் சிறுமை நோக்கியும் - யான் தனது பிரிவாற்றாமையாலே தன்மை திரிந்து மெய்வேறுபட்டுள்ள எனது துன்பத்தைக் கண்கூடாகக் கண்டு வைத்தும்; புறத்து நின்று ஆடிய புன்புற வரியும் - என்னை முயங்குதலின்றி ஏதிலாள் போன்று புறத்தே நின்று நடித்த புன்மையுடைய புறவரி என்னும் நடிப்பும் என்க.

(விளக்கம்) கலம் பெறா நுசுப்பு என்றது, அணிகலத்தை ஏற்றுக் கோடற்கு வேண்டிய இடம் தன்பால் இன்மையால் அவற்றை ஏலாத நுசுப்பு என்றவாறு. புலம்பவும் ஆர்ப்பவும் வந்து என ஒருசொல் வருவித்துக் கொள்க. ஆற்றவும் நுண்ணிதாகலின் நின்னிடை முரியும் ஆதலாலே இயங்காதே கொள்! என்பன போலச் சிலம்பு புலம்பவும்மேகலை ஆர்ப்பவும் நடந்து வந்து என்பது கருத்து.

மாதவி, ஊடியவன் ஊடல் தீர்ந்ததோ இல்லையோ என்றையுற்றுத் தன்பாற் காதல் நோக்கத்தோடு வந்து ஆராய்ந்து நின்றனளாக அதனை புறவரி என்கின்றான் கோவலன். புறவரியாவது - புறவரி என்பது புணர்க்குங் காலை இசைப்ப வந்து தலைவன் முற்படாது புறத்து நின்றாடி விடை பெறுவதுவே என்பதனாலறிக.

(5) கிளர்வரி

94 - 101 : கோதை .............. கிளர்வரிக் கோலமும்

(இதன்பொருள்) நல்நுதல் - அழகிய நுதலையுடையாள்; கோதையும் குழலும் தாதுசேர் அளகமும் ஒருகாழ் முத்தமும் திருமுலைத் தடமும் மின்இடை வருத்தத் தோன்றி - யான் ஊடியிருந்தேனாக அப்பொழுது தனது மலர்மாலையும் குழலாகவும் பூந்துகள்படிந்த அளகமாகவும் கை செய்யப்பட்ட கூந்தற் பகுதிகளும் ஒற்றையாகிய முத்துவடமும் அழகிய தன் முலைகளுமே மின்னல் போன்ற தனது நுண்ணிடைக்குப் பொறையாகி வருத்தாநிற்பவும் புறவாயிலிலே வந்து என்னெதிர்தோன்றி; சிறுகுறுந்தொழிலியர்-சிறிய குறியவாகிய குற்றேவற் றொழில்களைச் செய்யும் ஏவன் மகளிரே மறுமொழி உய்ப்ப - அவள் கூறும் மொழிகளை எனக்குக் கூற யான் அவற்றிற்கு முன்னிலைப் புறமொழியாகக் கூறுகின்ற மறுமொழிகளை அவட்குக் கூற; புணர்ச்சி உள் பொதிந்த கலாம் தரு கிளவியின் - எனது புணர்ச்சி வேட்கையைக் குறிப்புப் பொருளாகத் தம்முட் கொண்டுள்ள என்னூடல் காரணமாக யான் கூறிய அம் மறுமொழியின்கண்; இருபுறம் மொழிப் பொருள் கேட்டனள் ஆகி - இரண்டுபாலோர்க்கும் ஏற்பக் கூறும் பொருளையுடைய மொழியாக வைத்து அதன்கண் தன் கருத்திற்கேற்ற பொருளைக் கேட்டனள் போலக் காட்டி; கிளர்ந்து வேறு ஆகிய அப்பொருள் காரணமாக என்னோடு புலந்து கூடாது மாறுபட்டுப்போன; தளர்ந்த சாயல் தகை மெல்கூந்தல் - தளர்ந்த சாயலையும் அழகிய கூந்தலையும் உடையாளாய் நடித்த; கிளர்வரிக் கோலமும் - கிளர்வரி என்னும் நடிப்பும் என்க.

(விளக்கம்) 94-96. கோதை முதலியனவே பெருஞ்சுமையாகி இடையை வருத்தும்படி நடந்து வந்த நன்னுதல் என்க. நன்னுதல்: அன்மொழித்தொகை. குழல் அளகம் என்பன கூந்தலைக் கை செய்யப்பட்ட இருபகுதிகள். அங்ஙனம் வந்தவள் தனக்கு முகங்கொடாது தோழிக்குக் கூறுவாளாய் வினவ, அவ்வினாவிற்கு யானும் அவட்கு முகங்கொடாது, சிலதியர் வாயிலாய் மறுமொழி கொடுப்ப அம்மொழிக்கு அவள் வேறு பொருள் கொண்டாள் போன்று காட்டி என்னோடு பின்னும் ஊடிப்போனாள் என்றவாறு.

97 - சிறுகுறுந்தொழிலர் - குற்றேவன்மகளிர். 99 - இருபுற மொழிப் பொருள் - வினவுவோர் கருத்திற் கேற்பவும் இறுப்போர் கருத்திற் கேற்பவும் இரு வேறு பொருள் பயக்கும் சொல். எனது மறுமொழிக்கு யான் வேண்டிய பொருள் கொள்ளாமல் தான் ஊடிப்போதற் கேற்ற பொருளைக் கொண்டு ஊடிப்போயினள் என்றவாறு.

கிளர்வரியாவது நடுநின்றார் இருவருக்கும் சந்து சொல்லக் கேட்டு நிற்பது என்பர். இதனை - கிளர்வரி என்பது கிளக்குங் காலை ஒருவருய்ப்பத் தோன்றி யவர்வாய் இருபுற மொழிப்பொருள் கேட்டுநிற் பதுவே என்பதனாலறிக.

(6) தேர்ச்சிவரி

102 - 104 : பிரிந்துறை .......... அன்றியும்

(இதன்பொருள்) பிரிந்து உறை காலத்து - யான் அவனைப் பிரிந்து பொய்ப் பிறிதோரிடத்தில் வதிய நேர்ந்த காலத்திலே; பரிந்தனள் ஆகி - தான் அப்பிரிவாற்றாது பெரிதும் வருந்துவாள் போன்று காட்டி ; என் உறு கிளைகட்கு - என் நெருங்கிய சுற்றத்தார்க்கு; தன் உறுதுயரம் - தான் படுகின்ற மிக்க துன்பத்தை; தேர்ந்து தேர்ந்து உரைத்த தேர்ச்சிவரியும் - தன் மயக்கத்தாலே ஆராய்ந்து ஆராய்ந்து சொல்வாள் போன்று நடித்த தேர்ச்சிவரி என்னும் நடிப்பும் என்க.

(விளக்கம்) கோவலன் யாதானுமொரு காரணம்பற்றி அணுக்கனாகவே பிரிந்துறைய நேர்ந்த பொழுதெல்லாம் மாதவி வாய்மையாகவே அச்சிறுபிரிவினையும் ஆற்றாளாகி அவ்வாற்றாமையைக் கோவலனுக் கணுக்கராகிய கிளையினர் பாற் சொல்லிச் சொல்லி வருந்தும் இயல்பினளாக இருந்தனள் என்பதும் அவ்வருத்தம் கேட்ட கிளையினர் அவள் நிலையை அவனுக்குக் கூறுவர் என்பதும் ஈண்டுக் கோவலன் கூற்றாற் பெற்றாம். அந்நிகழ்ச்சி அன்பின் செயலேயாகவும் ஈண்டுக் கோவலன் அம்மாசில் மனத்து மாதவிக்கு மாசுபட அதுவும் ஒரு நடிப்பேகாண் என்று கூறுகின்றான் என்றறிக.

இனி, தேர்ச்சிவரி என்னும் வரிக் கூத்தின திலக்கணத்தை,

(தேர்ச்சி யென்பது தெரியுங்காலை)
கெட்ட மாக்கள் கிளைகண் டவர்முன்
பட்டது முற்றது நினைஇ யிருந்து
தேர்ச்சியோ டுரைப்பது தேர்ச்சிவரி யாகும்

எனவரும் நூற்பாவானுணர்க.

(7) காட்சிவரி

105 - 106 : வண்டலர் ........... வரியும்

(இதன்பொருள்) வண்டு அலர் கோதை - வண்டுகள் கிண்டியலர்த்துதற்கியன்ற முல்லையினது நாளரும்புகளாற் புனைந்த மாலையினையுடைய அம்மாதவி; மாலையுள் மயங்கி - காமநோய் மலருகின்ற அந்திமாலைப் பொழுதினூடே அந்நோயாற் பெரிதும் மயங்கினாள் போல; கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும் - என் கிளைஞராய்த் தான் கண்டோரெவர்க்கும் அத்துயரத்தைக் கூறி நடித்த காட்சிவரி என்னும் நடிப்பும் என்க.

(விளக்கம்) வண்டால் அலர்த்தப்படும் அரும்புமாலை என்க. மாலை என்றமையாலும் அவள் தானும் கற்புடையாள் ஆதலானும், அதுமுல்லையரும்பு என்பதும் பெற்றாம். மாலை என்பது காமநோய் மலரவரும் மாலை என்பதுபட நின்றது.

காட்சிவரியின் இலக்கணத்தை , காட்சிவரி என்பது கருதும் காலை கெட்ட மாக்கள் கிளைகண் டவர்முனர்ப் - பட்ட கூறிப் பரிந்துநிற் பதுவே எனவரும் நூற்பாவானறிக.

( 8) எடுத்துக் கோள்வரி

107 - 108 : அடுத்தடுத்தவர் ............. வரியும்

(இதன்பொருள்) அவர் முன் - எனக்கு அணுக்கராகிய என் கிளைஞர் முன்பு; அடுத்து அடுத்து - மேன்மேலும்; மயங்கிய மயக்கம் - என் பிரிவாற்றாது காமநோய் மிக்கு மயங்கி வீழ்வாள் போன்று வீழ்ந்து நடித்த பொய்யாய மயக்கத்தை; அவர் எடுத்துத் தீர்த்த - அக்கிளைஞர் மெய்யாகக் கருதி அவட்குப் பரிந்து எடுத்துத் தீர்த்த; எடுத்துக் கோள் வரியும் - எடுத்துக் கோள் வரி என்னும் நடிப்பும்; என்க.

(விளக்கம்) எடுத்து மயக்கம் தீர்த்தலால் அப்பெயர்த் தாயிற்று. அஃதாவது, கூத்தி தான் பிரிவாற்றாது மயங்கி வீழ்வாளாக நடித்து வீழ அவளைப் பிறர் (கூத்தர்) கையாற்றழுவி எடுத்துக் குளிர்ந்த சந்தனம்நீர் சிவிறி முதலியவற்றால் அம்மயக்கத்தைத் தெளிவிப்பார் போன்று நடிப்பது எடுத்துக் கோள்வரி என்னும் கூத்தியல்பு என்றவாறு. இதனை,

எடுத்துக் கோளை யிசைக்குங் காலை
அடுத்தடுத் தழிந்து மாழ்கி யயலவர்
எடுத்துக் கோள்புரிந்த தெடுத்துக் கோளே

எனவரும் நூற்பாவானுணர்க.

ஈண்டுத் திருமுகம் கொண்டு சென்ற வயந்தமாலை என்பாள் கோவலனை அழைத்துக் கொடு போதற்கு மாதவி நின் பிரிவாற்றாது நோய் கூர்ந்து அடுத்தடுத்து மயங்கி வீழ்கின்றாள் நின் பிரிவு நீடினால் அவள் இறந்து படுவாள் என்று மாதவியின் நிலையைப் பட்டாங்குக் கூற அது கேட்ட கோவலன் இவ்வாறு அவள் செய்யும் செயலெல்லாம் அவள் பயின்றுள்ள நாடகமாகிய நடிப்புகளே அன்றி வாய்மையல்ல என்று மறுப்பவன் இனம் பற்றி ஏனையவற்றையும் எடுத்தோதியவாறாம்.

கோவலன் திருமுகம் ஏற்க மறுத்துக் கூறல்

109 - 110 : ஆடல்மகளே .......... தனக்கென

(இதன்பொருள்) ஆயிழை - ஆயிழாய்! அப் பைந்தொடி ஆடல் மகளே யாதலின் தனக்குப் பாடு பெற்றன - பசிய பொன்வளையலணிந்த அம் மாதவிதான் பிறப்பினாலும் சிறப்பினாலும் நாடகமேத்துமொரு கூத்தியே ஆதலின் அவள்பால் இந் நடிப்பெல்லாம் வாய்மைபோலவே பெருமை பெற்றனகாண்! என்று இகழ்ந்துகூறி மாலையாகிய அத்திருமுகத்தை ஏலாது மறுப்ப; என்க.

(விளக்கம்) 109 - ஆடல் மகள் - கூத்தி. அப்பைந் தொடி என்றது கோவலன் நெஞ்சம் அம்மாதவியை ஏதிலாளாகக் கொண்டமை குறிப்பாற்றோற்றுவித்தல் நுண்ணுணர்வாலுணர்க. வயந்த மாலை கொடுத்த திருமுகத்தை ஏலாமை குறிப்பெச்சப் பொருள். அதனை மேலே 112 திருமுகம் மறுத்ததற்கிரங்கி என்பதனால் வெளிப்படையானும் பெறுதும்.

வயந்தமாலை மாதவிக்குக் கூறுதலும் மாதவி ஏக்கறவும்

111 - 118 : அணித்தோட்டு ....... மாதவிதானென்

(இதன்பொருள்) அணித்தோட்டுத் திருமுகத்து ஆயிழை எழுதிய மணித் தோட்டுத் திருமுகம் மறுத்ததற்கு - அழகிய பொற்றோடணிந்த திருமுகத்தையும் ஆராய்ந்தணிந்த அணிகலன்களையும் உடைய மாதவி அன்பு ததும்பத் தன் கையினாலேயே எழுதிய அழகிய தாழந் தோட்டு முடங்கலை இவ்வாறு கோவலன் மறுத்ததனாலே; தோடு அலர் கோதைக்கு இரங்கி - இதழ் விரிகின்ற முல்லை நாண் மலர் மாலையணிந்த தன் தலைவியாகிய மாதவிதான் என் செய்தாற்றுவளோ? என்று இரங்கி; வாடிய உள்ளத்து வயந்த மாலை - வாட்டமெய்திய நெஞ்சத்தையுடைய அவ்வயந்த மாலை தானும்; துனைந்து சென்று உரைப்ப - அச்செய்தியை விரைந்து போய் மாதவிக்குக் கூறா நிற்ப; மாமலர் நெடுங்கண் மாதவிதான் - அதுகேட்ட கரிய குவளை மலர் போன்ற நெடிய கண்ணையுடைய அம் மாதவிதான்; கையறு நெஞ்சமொடு - செய்வதொன்றும் தோற்றாது திகைக்கின்ற நெஞ்சத்தையுடையளாய் வயந்த மாலையை நோக்கி; மாண்இழை - ஏடி வயந்த மாலாய்! மாலை வாரார் ஆயினும் - அவர் அங்ஙனம் கூறினும் இம்மாலைப் பொழுதிலேயே இங்கு வருகுவர் காண்! ஒரோவழி இம்மாலைப் பொழுதில் வாரா தொழியினும்; காலை காண்குவம் என - அவரை நாளைக் காலைப் பொழுதிலேயே ஒருதலையாக ஈண்டுக் காண்பேம் காண்! என்று கூறி; பூமலர் அமளி மிசைப் பொருந்தாது வதிந்தனள் - தானிருந்த நாளரும்புகள் கட்டவிழ்ந்து மலர்கின்ற அம்மலர்ப் படுக்கையிலேயே தன் கண்ணிமைகள் பொருந்தாமல் தமியளாய்க் கிடந்தனள் என்பதாம்.

(விளக்கம்)111-112 : அணித்தோட்டுத் திருமுகம்.......மணித் தோட்டுத் திருமுகம் - என்புழி அழகிய எதுகைநலந்தோன்றிச் செய்யுளின்பம் மிகுவதுணர்க. மறுத்ததற்கு மாதவியின் பொருட்டு இரங்கி வாடிய உள்ளம் என்க. 114 - துனைந்து - விரைந்து.

115. மாலை வாராராயினும் காலை காண்குவம் என்னும் மாதவியின் நம்பிக்கையே அவள் உயிர் துறவாது இருத்தற்குப் பற்றுக் கோடாயிற்று. இத்தொடர் அவள் காதலன்பிற்குச் சிறந்த அறிகுறியாகவும் அவளது ஏக்கறவு முழுவதையும் நம்மனோர்க் குணர்த்துவதாகவும் அமைந்து அடிகளாருடைய புலமைக்கும் ஓர் எடுத்துக் காட்டாகவும் திகழ்தல் உணர்க.

இனி, இதனை - இன்னிளவேனில் வந்தனன் இவண் எனத் தூதன் இசைத்தனன் ஆதலின் படையுள் படுவோன் கூற மாதவி விரும்பி ஏந்தி வாங்கிப் பாடினள் மயங்கிச் சேர்த்தித் தழீஇ அறிந்து கட்டி, கேட்டனள், அன்றியும் ஐந்தினும் ஏழினும் நோக்கிக் கழிப்பி மயங்கிச் செவ்வியளாகி அறிந்தீமின் என எழுதிக் கூஉய்க் கொணர்க என வேலரி நெடுங்கண் அளிப்ப ஆடன்மகளே ஆதலின் பாடு பெற்றன என மறுத்ததற்கிரங்கிச் சென்றுரைப்பக் காண்குவம் என மாதவி வதிந்தனள் என வினையியைபு காண்க.

இது, நிலைமண்டில ஆசிரியப்பா:

வெண்பாவுரை

1. செந்தாமரை ............. மனம்

(இதன்பொருள்) கொந்து ஆர் இளவேனில் - பொழில்களிடத்தே பூங்கொத்துக்கள் நிறைதற்குக் காரணமான இளவேனில் என்னும் பெரும் பொழுது; செந்தாமரை விரியத் தேமாங் கொழுந்து ஒழுக - நீர்நிலைகளிலே செந்தாமரை மலர்கள் இதழ் விரிந்து மலரவும் இனிய மாமரங்களிலே அழகிய தளிர்கள் தூங்கவும்; மைந்து ஆர் அசோகு மடல் அவிழ - அழகு பொருந்திய அசோக மலர்கள் இதழ் விரிந்து மலரவும்; வந்தது - உலகின்கண் வந்துற்றது; இன்று வளவேல் நல் கண்ணி மனம் என் ஆம்கொல் - இற்றைநாள், வளவிய வேல் போலும் அழகுடைய கண்களையுடைய மாதவியின் நெஞ்சம் எந்நிலையினது ஆகுமோ யான் அறிகிலேன்; என்பதாம்.

(விளக்கம்) இஃது வயந்தமாலை மாதவியின் முடங்கல் கொண்டு செல்லும்பொழுது தன்னுள்ளே சொல்லியது; என்ப. கோவலனுக்குச் சொல்லிய தெனினுமாம்.

பெரும் பொழுதுகள் தோன்றும்பொழுது காலை என்னும் சிறுபொழுதே யாகலின் அப்பொழுது மலரும் செந்தாமரையை முற்படக் கூறினள். கொந்து - கொத்து; விகாரம். மைந்து - அழகு. வேனல் - வேனில். கண்ணி - மாதவி.

2. ஊடினீர் ........... காண்

(இதன்பொருள்) ஊடினீர் எல்லாம் - இவ்வுலகின்கண் காதல் வாழ்வு தலைப்பட்டு ஒருவர்க்கொருவர் துணையாவார் தம்முள் இப்பொழுது ஊடியிருப்பீர்கள் எல்லீரும்; கூடுமின் - ஊடலை விடுத்துக் கூடக்கடவீராக; உருவிலான் தன் ஆணை என்று இஃது உருவமில்லாத காமவேள் என்னும் அரசன் கட்டளையாகும் என்று; குயில் கூவ - அவன் படைச் சிறுக்கனாகிய குயிலோன் கூவி அறிவியா நிற்ப; நீடிய வேனல் பாணி - உலகில் வந்துற்ற நெடிய இவ்விளவேனிற் பொழுதின்கண்; கலந்தாள் - நின்னொடு கூடி மகிழ்ந்திருந்த மாதவியினது; மெல்பூந் திருமுகத்தை - மெல்லிய தாழம்பூத் தோட்டில் எழுதப்பட்ட முடங்கலை; கானல் பாணிக்கு அலந்தாய் காண் - அவள் பாடிய கானல்வரிப் பாட்டின் பொருட்டு ஊடிப் பிரிந்து வந்தோங் கண்ணுற்றருள்க ! என்பதாம்.

(விளக்கம்) இது வயந்தமாலை கோவலன்பால் ஓலை கொடுக்கும் பொழுது கூறியதாம். பாணி - பொழுது; பாட்டு. அலந்தாள் திருமுகம் எனக் கோடலுமாம். மென்பூந் திருமுகத்தை என்பது மாதவியின் முகத்தையும் முடங்கலையும் உணர்த்துதலுணர்க.

வேனிற் காதை முற்றிற்று.
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 23, 2012, 01:42:57 PM
9. கனாத்திறம் உரைத்த காதை

அஃதாவது - கண்ணகி நல்லாள் தன் தோழியாகிய தேவந்தி என்னும் பார்ப்பன மகளின்பால் தான் முன்னாளிரவு கண்ட கனவினது தன்மையைக் கூறிய செய்தியைக் கூறும் பகுதி என்றவாறு.

இதன்கண் தேவந்தியின் வரலாறும் கோவலன் கண்ணகியை எய்தியதும் பிறவும் கூறப்படும்.

(கலி வெண்பா)

அகநகர் எல்லாம் அரும்புஅவிழ் முல்லை
நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த
மாலை மணிவிளக்கம் காட்டி இரவிற்குஓர்
கோலம் கொடிஇடையார் தாம்கொள்ள, மேல்ஓர்நாள்:
மாலதி மாற்றாள் மகவுக்குப் பால்அளிக்கப்  5

பால்விக்கிப் பாலகன் தான்சோர மாலதியும்
பார்ப்பா னொடுமனையாள் என்மேல் படாதனவிட்டு
ஏற்பன கூறார்என்று ஏங்கி மகக்கொண்டு
அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்
புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில்  10

உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேல்கோட்டம்
வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்
நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்குஎங்கும்
தேவிர்காள் எம்உறுநோய் தீர்ம்அன்று மேவிஓர்
பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்கு,  15

ஏசும் படிஓர் இளங்கொடியாய் ஆசுஇலாய்
செய்தவம் இல்லோர்க்குத் தேவர் வரம்கொடார்
பொய்உரையே அன்று பொருள்உரையே கையிற்
படுபிணம்தா என்று பறித்துஅவள்கைக் கொண்டு
சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்குஇருளில் சென்றுஆங்கு 20

இடுபிணம் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி
மடியகத்து இட்டாள் மகவை, இடியுண்ட
மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாளுக்கு அச்சாத்தன்
அஞ்ஞைநீ ஏங்கி அழல்என்று முன்னை
உயிர்க்குழவி காணாய்என்று அக்குழவி யாய்ஓர்  25

குயில்பொதும்பர் நீழல் குறுக அயிர்ப்புஇன்றி
மாயக் குழவி எடுத்து மடித்திரைத்துத்
தாய்கைக் கொடுத்தாள்அத் தையலாள், து஡ய
மறையோன்பின் மாணியாய் வான்பொருள் கேள்வித்
துறைபோய் அவர்முடிந்த பின்னர் இறையோனும்  30

தாயத்தா ரோடும் வழக்குஉரைத்துத் தந்தைக்கும்
தாயர்க்கும் வேண்டும் கடன்கழித்து மேயநாள்
தேவந்தி என்பாள் மனைவி அவளுக்குப்
பூவந்த உண்கண் பொறுக்கென்று மேவித்தன்
மூவா இளநலம் காட்டிஎம் கோட்டத்து  35

நீவா எனஉரைத்து நீங்குதலும், தூமொழி
ஆர்த்த கணவன் அகன்றனன் போய்எங்கும்
தீர்த்தத் துறைபடிவேன் என்றுஅவனைப் பேர்த்துஇங்ஙன்
மீட்டுத் தருவாய் எனஒன்றன் மேல்இட்டுக்
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் வாட்டருஞ்சீர்க் 40

கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறைஉண்டுஎன்று
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி
அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச் சென்று
பெறுக கணவனோடு என்றாள், பெறுகேன்
கடுக்கும்என் நெஞ்சம் கனவினால் என்கை  45

பிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுள் பட்டேம்
பட்ட பதியில் படாதது ஒருவார்த்தை
இட்டனர் ஊரார் இடுதேள்இட்டு என்தன்மேல்
கோவலற்கு உற்றதுஓர் தீங்குஎன்று அதுகேட்டுக்
காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோடு 50

ஊர்க்குஉற்ற தீங்கும்ஒன்று உண்டால் உரையாடேன்
தீக்குற்றம் போலும் செறிதொடீஇ தீக்குற்றம்
உற்றேனோடு உற்ற உறுவனொடு யான்உற்ற
நல்திறம் கேட்கின் நகைஆகும், பொற்றொடிஇ
கைத்தாயும் அல்லை கணவற்கு ஒருநோன்பு  55

பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க்கெடுக உய்த்துக்
கடலொடு காவிரி சென்றுஅலைக்கும் முன்றில்
மடல்அவிழ் நெய்தல்அம் கானல் தடம்உள
சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு  60

தாம்இன் புறுவர் உலகத்துத் தையலார்
போகம்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாம்ஒருநாள்
ஆடுதும் என்ற அணிஇழைக்குஅவ் ஆய்இழையாள்
பீடுஅன்று எனஇருந்த பின்னரே, நீடிய
காவலன் போலும் கடைத்தலையான் வந்துநம்  65

கோவலன் என்றாள்ஓர் குற்றிளையாள், கோவலனும்
பாடுஅமை சேக்கையுள் புக்குத்தன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தம்கண்டு, யாவும்
சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடிக்
குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைந்த  70

இலம்பாடு நாணுத் தரும்எனக்கு என்ன,
நலம்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச்
சிலம்புஉள கொண்மின் எனச்சேயிழை கேள்இச்
சிலம்பு முதலாகச் சென்ற கலனொடு
உலந்தபொருள் ஈட்டுதல் உற்றேன் மலர்ந்தசீர்  75

மாட மதுரை யகத்துச்சென்று என்னோடுஇங்கு
ஏடுஅலர் கோதாய். எழுகென்று நீடி
வினைகடைக் கூட்ட வியம்கொண்டான் கங்குல்
கனைசுடர் கால்சீயா முன்.

(வெண்பா)

காதலி கண்ட கனவு கருநெடுங்கண்
மாதவிதன் சொல்லை வறிதாக்க - மூதை
வினைகடைக் கூட்ட வியம்கொண்டான் கங்குல்
கனைசுடர் கால்சீயா முன்.

உரை

1-4 : அகனகர் ........... தாங்கொள்ள

(இதன்பொருள் :) பகல் மாய்ந்த மாலை கொடி இடையார்தாம் - அற்றை நாள் ஞாயிறு மேற்றிசையிற் சென்று மறைந்த அந்தி மாலைப் பொழுதிலே பூங்கொடி போலும் துவள்கின்ற நுண்ணிடையையுடைய மகளிர்கள்; அகல் நகர் எல்லாம் அரும்பு அவிழ் முல்லை நிகர் மலர் நெல்லொடு தூஉய் - தத்தம் அகன்ற மனையிடங்களின் எல்லாம் நாளரும்புகளாகி இதழ் விரிகின்ற செவ்வியையுடைய முல்லையினது ஒளியுடைய மலர்களை நெல்லோடே விரவித் தூவி; மணி விளக்கங் காட்டி - அழகிய விளக்குகளை ஏற்றி வைத்து இல்லுறை தெய்வத்தை வணங்கிய பின்னர்; இரவிற்கு ஓர் கோலம் கொள்ள - அற்றை யிரவின்கண் தத்தம் காதற் கொழுநரோடு கூடி மகிழ்தற் பொருட்டு அச் செயலுக்கேற்ற கோலங்களைக் கொள்ளா நிற்ப; என்க.

(விளக்கம்) முன்னைக் காதையில், புகர் அறு கோலம் கொள்ளுமென்பது போல் கொடிமிடை சோலைக்குயிலோன் என்னும் படையுள் படுவோன் பணிமொழி கூற, அந்நகரத்தே வாழும் கொடியிடையார் அகல் நகர் எல்லாம் தூஉய் விளக்கங் காட்டி அக்குயிலோன் பணிமொழிக் கிணங்கி இரவிற்குக் கோலங் கொள்ளா நிற்ப என முன்னைக் காதையொடு இயைபு காண்க.

1. அகல் நகர் - அகன்ற மனை. மலரின் செவ்வி கூறுவார், அரும்பவிழ் நிகர் மலர் என்றார். முல்லை மாலைப்பொழுதில் மலர்தல் இயல்பு. 2 - நிகர் மலர் - ஒளியையுடைய மலர். நீர்வார் நிகர் மலர் எனப் பெருங்கதையினும், நிகர்மலர் எனக் குறுந்தொகை (311: 6) யினும், மணிமேகலை (3: 15)யினும், அகநானூற் (11: 12)றினும் வருதல் காண்க. மாலைப் பொழுதில் மகளிர் மலர்தூவி விளக்கேற்றி வைத்து இல்லுறை தெய்வத்தை வணங்குதல் தமிழ் நாட்டு வழக்கம் - இதனை: நெல்லும் மலரும் தூஉய்கை தொழுது மல்லல் ஆவண மாலையயர எனவரும் நெடுநல்வாடை (33-4) யானு முணர்க. பகல் - ஆகுபெயர்; ஞாயிறென்க. 3. மணியும் விளக்கமும் காட்டி என்பர் அடியார்க்கு நல்லார். மணி - அழகெனவே அமையும். மணிகள் பதித்த அகல்களாகிய விளக்கங்கள் எனினுமாம். விளக்கங்காட்டி என்றது விளக்கேற்றி என்றவாறு. முல்லைமலர் தூவி என்றமையால் தெய்வம் தொழுது என்பது குறிப்பாயிற்று. இரவிற்கோர் கோலம் என்றது இடக்கரடக்கு. இரவிற்கோர் கோலங்கோடலாவது - மகரக்குழை முதலிய பேரணிகலன்களைக் களைந்து ஒற்றைவடம் முதலிய நொய்யன அணிதலும் பட்டு நீங்கித் துகிலுடுத்தலும் தத்தம் கொழுநர் விரும்பும் மணம் மலர் முதலியனவே அணிதலும் பிறவுமாம் என்க.

இனி, (4) மேலோர் நாள் என்பது தொடங்கி (40) கோட்டம் வழிபாடு கொண்டிப்பான் என்பது காறும், தேவந்தியின் வரலாறு கூறப்படுகின்றது.

4 - 8 : மேலோர்நாள் ............ கூறாரென்றேங்கி

(இதன்பொருள் :) மேல் ஓர் நாள் - முன்னர்க் கழிந்தொழிந்த நாள்களுள் வைத்து ஒரு நாளிலே; மாலதி மாற்றாள் மகவுக்குப் பால் அளிக்க - மாலதி என்னும் பெயருடைய பார்ப்பனி தனது மாற்றாளீன்ற குழவிக்குப் பாலடையினாலே பாலூட்டிய பொழுதில்; பால் விக்கிப் பாலகன்றான் சோர - ஊழ்வினை அங்ஙனம் இருந்தவாற்றால் அப்பாலானது மிடற்றின்கண்ணின்று விக்குதலாலே அக்குழவி அவள் கையிலே இறந்து படாநிற்ப; மாலதியும் பார்ப்பானொடு மனையாள் என்மேல் படாதன இட்டு ஏற்பன கூறார் என்று ஏங்கி - அது கண்ட அம் மாலதி தானும் ஐயகோ! இதற்கு யான் என்செய்கோ! இஃதறிந்தால் என் கணவனாகிய அப்பார்ப்பனனும் அவன்றன் மனைவியும் வஞ்சகமற்ற என்மேல் அடாப்பழி யேற்றி என்னைத் தூற்றுத லொழித்து; உலகம் ஏற்றற்குரியனவாகிய வாய்மைகளைக் கூறுவாரல்லரே அங்ஙனமாயின் அப்பழியை யான் எங்ஙனம் போக்குவேன் என்று தன்னுள் வருந்தி ஏங்கி; என்க.

(விளக்கம்) 5. மாற்றாள் - கணவனுடைய மற்றொரு மனைவி. மாற்றாள் மகவிற்குப் பாலளிக்க என்றமையால் மாலதி மகப் பேறற்றவள் என்பதும் அக்காரணத்தால் அவள் கணவன் மற்றொருத்தியை மணந்திருந்தான் என்பதும் பெற்றாம்.

தன் கணவன் தன்பாலன்பின்றி ஒழுகுபவன் மாற்றாளும் அத்தகையள் என்பது தோன்ற அவர்களை ஏதிலார் போன்று பார்ப்பானொடு மனையாள் என்றாள். அவர்கள் பால்விக்கிப் பாலகன் சோர்ந்தமையைக் கூறார்; பொறாமையால் இவள் கொலை செய்தனள் என்றே என்மேற் படாத பழியையே கூறுவார் என்பாள் என் மேல்படாதன இட்டு என்றாள். படாதன விட்டு எனக் கண்ணழிப்பர் அடியார்க்கு நல்லார். ஏற்பன - வாய்மை நிகழ்ச்சிகள். வாய்மைக் கேற்பன எனினுமாம். செயலறவினால் ஏங்கி என்க.

மாலதியின் பேதைமைச் செயல்கள்

8 - 15 : மகக் கொண்டு .......... கிடந்தாளுக்கு

(இதன்பொருள் :) மகக் கொண்டு-அக் குழவியினுடம்பைப் பிறர் அறியா வண்ணம் தன் கையி லேந்திக்கொண்டு; அமரர் தருக் கோட்டம்-தேவர் தருவாகிய கற்பகம் நிற்குங் கோயிலும்; வெள்யானைக் கோட்டம் - இந்திரன் ஊர்தியாகிய ஐராவதம் என்னும் வெள்யானை நிற்கும் கோயிலும்; புகர் வெள்ளை நாகர் தம் கோட்டம் - அழகினையுடைய வெண்மையான திருமேனியை யுடைய பலதேவர் எழுந்தருளிய கோயிலும்; பகல் வாயில் உச்சிக் கிழான் கோட்டம் - கீழ்த்திசையிலே தோன்றுகின்ற ஞாயிற்றுத் தேவனுக்கியன்ற கோயிலும்; ஊர்க் கோட்டம் - அம் மூதூரின் காவற்றெய்வமாகிய சம்பாபதி எழுந்தருளிய கோயிலும்; வேல் கோட்டம் - வேற்படை ஏந்தும் முருகன் கோயிலும்; வச்சிரக்கோட்டம் - இந்திரன் படைக்கலமாகிய வச்சிரம் நிற்கும் கோயிலும்; புறம்பணையான் வாழ் கோட்டம் - நகர்ப்புறப் பகுதியிடத்தே வாழும் இயல்புடைய மாசாத்தன் கோயிலும் - நிக்கந்தக் கோட்டம் - அருகன் கோயிலும்; நிலாக் கோட்டம் - திங்கட் கடவுளுக்கியன்ற கோயிலும்; புக்கு எங்கும் - என்று கூறப்பட்ட இக் கோயில்தோறும் சென்று புகுந்து; தேவிர்காள் எம் உறு நோய் தீர்ம் என்று - தெய்வங்களே எமது மிக்க இத்துன்பத்தைத் தீர்ந்தருளுங்கோள் என்று கூறி இரப்பவும்; அவருள் ஒருவரேனும் அவட்கிரங்கி அதனைத் தீரா தொழிதலாலே; மேவி ஓர் பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு - பாசண்டச் சாத்தன் என்கின்ற ஐயனார் கோயிலுக்குச் சென்று ஆங்கும் தன் துயர் கூறி வரங்கிடந்தாளாக; அம்மாலதி முன்னர்; என்க.

(விளக்கம்) 9 - அமரர் தரு - கற்பகத்தரு. வெள்யானை - ஐராவதம். 10. புகர் - அழகு. வெள்ளை நாகர் - பலதேவர். 10 - 11 - பகல் வாயில் உச்சிக்கிழான் - பகல்தோற்றுகிறவாயிலாகிய கீழ்த்திசை கீழ்த்திசையிற் றோன்றுகின்ற உச்சிக்கிழான் என்க. உச்சிக்கிழான் என்பது ஞாயிற்றிற்கொரு பெயர் என்க. ஊர்க்கோட்டம் என்றது அவ்வூர்க் காவற் றெய்வம் ஆகிய சம்பாபதியின் கோயில் என்றவாறு. இது மணிமேகலையிற் கண்டது. இனி, இதனை ஊர் என்பதற்கு இறைவன் எழுந்தருளியிருக்கும் கைலாயம் எனப் பொருள் கொண்டு கைலாயம் நிற்கும் கோயில் என்பர் பழைய வுரையாசிரியரிருவரும் வேல் நிறுத்தப்பட்டிருக்கும் கோயில் எனினுமாம். இதனை ஆகுபெயராக்கி முருகன்கோயில் எனினுமாம். 12 - வச்சிரக்கோட்டம் வச்சிரப்படை நிறுத்தப்பட்ட கோயில். ஈண்டுக் கூறப்பட்ட தருக்கோட்டம், வெள் யானைக்கோட்டம், வெள்ளை நாகர் கோட்டம், வேற்கோட்டம், வச்சிரக்கோட்டம் என்பன இந்திரவிழாவூரெடுத்த காதையினும் ஓதப்பட்டமை யுணர்க. புறம்பணையான் என்பது, மாசாத்தன் என்னுந் தெய்வத்திற் கொருபெயர். இத்தெய்வத்திற்கு ஊரின் புறப்பகுதியிலேயே கோயில் எடுத்தலின் அப்பெயர் வழங்கிற்றுப் போலும். இத்தெய்வத்தைச் சாதவாகனன் என்பர். அடியார்க்கு நல்லார் அரும்பதவுரையாசிரியர் மாசாத்தன் என்பர். இவையும் மேலே பாசண்டச் சாத்தன் என்பதும் ஐயனார் என்னும் ஒரே தெய்வத்தின் பெயர்களாகும். ஆகவே - மாலதி மேற்கூறிய கோயில்களிலெல்லாம் புக்கு தேவிர்காள் எம்முறுநோய் தீர்மின் என வேண்டினளாக அவற்றுள் ஒன்றேனும் அத்துயர் தீர்க்க முன் வராமையால் மீண்டும் புறம்பணையான் வாழ் கோட்டம் மேவி அக்கோட்டத்தே வாழும் அத்தெய்வத்திற்குப் பாடு கிடந்தாள் என்பதாயிற்று என்க.

இனி, எம்முறுதுயரம் தீர்ம் என்புழி தீர்ம் என்று ஈற்றுமிசை யுகரம் கெட்டது என்பர் அடியார்க்கு நல்லார். எனவே அது செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்றென்பது அவர் கருத்தாதல் பெற்றாம். அங்ஙனமாயின் இது பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையிற், செல்லாதாகும் செய்யும் என் முற்றே எனவரும்விதிக்கு முரணாகும். ஆகவே தீர்மின் என்னும் முன்னிலைப் பன்மை ஏவன் முற்றின் மின் என்னும் விகுதி மெய்நிற்கக் கெட்டதென்று கோடலே பொருந்தும். அல்லது தீர்மினென மேவி என இதற்குப் பாட வேற்றுமையுண்டெனக் காட்டப்படுதலின் அப்பாடமே கொள்ளலும் பொருந்துவதாம்.

15 - பாசண்டம் தொண்ணூற் றறுவகைச் சமயசாத்திரத் தருக்கக் கோவை என்ப. இவற்றிற்கு முதலாயுள்ள சாத்திரங்களைப் பயின்றானாகலின் மகாசாத்திரன் என்பது அவற்குப் பெயராயிற்று என்பர் அடியார்க்கு நல்லார். எனவே, சாத்திரன் என்பதே சாத்தன் என மருவி வழங்குவ தென்பது அவர் கருத்தாதல் பெற்றாம். இப்பெயர்க்கு வேறு காரணங் கூறுவாறு முளர். இனி, சாத்தன் என்னும் இத்தெய்வ வழிபாடு இச் செந்தமிழ் நாட்டில் ஊர்தோறும் நிகழ்ந்து வருவதும் கருதற் பாலதாம். இத்தெய்வத்திற்குப் பெரும் பாலும் ஊர்க்குப் புறம்பாகவே கோயிலெடுத்தலும் மரபாகும். கிடந்தாளுக்கு - கிடந்தாளிடத்து, கிடந்தாளுக்குத் தோன்றி என ஒரு சொல் வருவித்து முடித்தலுமாம்.

இடாகினிப் பேயின் செயல்

16 - 22 : ஏசும்படியோர் ..... மகவை

(இதன்பொருள் :) சுடுகாட்டுக் கோட்டத்து இடுபிணம் தின்னும் இடாகினிப் பேய் - அப்புகாரிலுள்ள சுடுகாட்டுக் கோட்டம் என்னும் நன்காட்டிலே மாந்தர் வாளாது போகட்டுப் போகின்ற பிணங்களைத் தின்று ஆங்குறைகின்ற இடாகினி என்னும் ஒரு பேயானது; தூங்கு இருளில் ஆங்கு ஏசும்படி ஓர் இளங்கொடி யாய்ச் சென்று - செறிந்த இருளினூடே அம்மாலதி பாடு கிடக்கு மிடத்தே அவள் செயலைப் பழித்து அறிவுறுத்துவாள் போன்ற ஓர் இளநங்கை யுருக்கொண்டு சென்று அவளை நோக்கி; ஆசுஇலாய் செய் தவம் இல்லோர்க்குத் தேவர் வரம் கொடார் - குற்றமற்றவளே ! கேள்! செய்தவ மில்லோர்க்குத் தேவர் வரங்கொடார் என்னும் மூதுரைதானும்; பொய் உரை அன்று பொருள் உரையே - பொய்யான மொழியன்று அஃதுண்மையான மொழியே காண்! ஆதலால், நீ இவ்வாறு பாடுகிடத்தல் பயனில் செயலே யாம்; கையில் படு பிணம் தா என்று - அப்பிணத்தைப் பார்க்க விரும்புவாள் போன்று நங்காய்! நின் கையிலேயே இறந்துபட்ட அக்குழவிப் பிணத்தை என்கையிற் றருவாயாக! என்று கூறி; பறித்தவள் கைக்கொண்டு - அம்மாலதி கொடாளாகவும் வலிந்து பறித்துத் தன் கையாற் பற்றி; வாங்கி மகவை மடியகத்து இட்டாள் - அக்குழவிப் பிணத்தை இழுத்து விழுங்கினள்; என்க.

(விளக்கம்) ஏசுதல் - இகழ்தல் - இகழ்ந்து அறிவுறுத்துவாள்போன்று ஓர் இளநங்கையுருவம் கொண்டு சென்று என்க. படி - உருவம். உலகத்து அழகுடைய மகளிரை யெல்லாம் பழிக்கும் உருவமைந்த ஓர் இளங் கொடியாய் எனினுமாம். ஆசிலாய் என்றது நீ குற்றமற்றவளாயினும் தவமுடையை அல்லையாதலின் வரங்கொடார் என்றற்கு. பொய்யுரையன் றென்றதனை வற்புறுத்தற்கு மீண்டும் பொருளுரையே என்று விதந்தாள். தா என்றது யானும் காண்குவன் தா என்பது பட நின்றது. பறித்தவள் : முற்றெச்சம். வினையாலணையும் பெயரனினுமாம்.

20. சுடுகாட்டுக் கோட்டம் - இது சக்கரவாளக் கோட்டம் எனவும் கூறப்படும். இதன் வரலாற்றை மணிமேகலையில் சக்கரவாளக் கோட்டமுரைத்த காதைக்கண் விளக்கமாக வுணர்க. இடுபிணம் - சுடுதலும் தொடுகுழிப் படுத்தலும் தாழ்வயின் அடைத்தலும் தாழியிற் கவித்தலும் ஆகிய சிறப்புத் தொழில் யாதொன்றுமின்றிப் பிணத்திற்குரியவர் வாளாது எயிற் புறத்தே கிடத்திப் போகும் பிணம் என்க. பிணமும் நரி முதலிய உயிரினங்கட்கிரையாகும் என்பது பற்றி இவ்வாறு வாளாது இட்டுப் போதலும் அக்காலத்து ஒருவகைச் சமயவொழுக்கமாம் என்றுணர்க. இவ்வாறிட்ட பிணத்தையே ஆசிரியர் சாத்தனார், வழுவொடு கிடந்த புழுவூண் பிண்டம் என்று கூறி அவற்றை நரி முதலியன தின்பதனைத் தமது நூலில் அழகுறக் கூறுகின்றனர். அவற்றை ஆண்டுக் காண்க.

தூங்கிருள் - செறிந்த இருள். மன்னுயிர் யாவும் தூங்குதற்கியன்ற நள்ளிருள் எனினுமாம். மடி - வயிறு. படியை மடியகத்திட்டான் (நான்மணி - கடவு -2) - என்புழியும் அஃதப் பொருட்டாதலறிக. பாலகன் என்பது காலவழக்கு என்ப.

22 - 28 : இடியுண்ட .......... தையலாள்

(இதன்பொருள் :) இடியுண்ட மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாளுக்கு அதுகண்டு பெருந்துயர் கொண்டு ஆற்றாதவளாகி இடியோசை கேட்ட மயில் அஞ்சி அகவுமாறுபோலே அழாநின்ற அம்மாலதிக்குப் பரிந்து; அச்சாத்தன் அஞ்ஞை நீ ஏங்கி அழல் - அத்தெய்வம் தாயே நீ ஏக்கறவு கொண்டு அழாதே கொள்! நின்னுறு துயர் யாம் துடைக்குதும்; முன்னை உயிர்க்குழவி காணாய் - நீ செல்லும் வழியிடத்தே அக்குழவியை உயிருடன் காண்பாய்காண்! என்று - என்றுகூறி ஆற்றுவித்துப்பின்னர்; அக் குழவியாய் ஓர் குயில் பொதும்பர் நீழல் குறுக - அச் சாத்தன்றானே இறந்துபட்ட அக்குழவி யுருக்கொண்டு சென்று அவள் செல்லும் வழிமுன்னர்க் குயில்கள் கூவுதற் கியன்றதொரு மாஞ்சோலையிடத்தே சென்று கிடந்தழா நிற்ப; அத் தையலாள் மாயக்குழவி அயிர்ப்பின்றி எடுத்து - அச்சாத்தன் அருளியவாறே அம்மாலதிதானும் வழியிற் கிடந்தழும் அவ்வஞ்சக் குழவியைக் கண்டு அஃது அத் தெய்வத்தாலுயிருடன் மீட்டுக் கொடுத்த தன் குழவியே என்பதில் சிறிதும் ஐயமின்றி அன்புடன் எடுத்து ; மடி திரைத்துத் தாய் கைக்கொடுத்தாள் - தான் புடைவையினது மடியாகிய முன்றானையாலே மறைத்துக் கொடுபோய் யாதொன்றும் நிகழாததுபோன்று அக்குழவியை யீன்ற தாயாகிய தன் மாற்றாள் கையிலே கொடுத்தனள்; என்க.

(விளக்கம்) 22 - இடி. -இடியோசை. உண்டற்குரிய அல்லாப் பொருளை உண்டன போலக் கூறலு மரபே (தொல் பொருளியல் 19) என்னும் மரபு பற்றி இடியோசை கேட்பதனை, இடியுண்ட என்றார். நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள் பசியினாலே சுருக்குண்டேன் என வருதலும் காண்க.

23. மஞ்ஞை - மயில். 24. அஞ்ஞை - அன்னை. அழல் - அழாதே. காணாய் - காண்பாய். 26. - குயிற் பொதும்பர் - குயில் கூவும் சோலை. சிறப்புப் பற்றி மாஞ்சோலை என்க. அயிர்ப்பு - ஐயம். தன் குழவியே என்பதில் ஐயமின்றி என்றவாறு. 27. மாயம் - வஞ்சம். மடியின் கட்டிரைத்து என்க. வயிற்றிலே அணைத்து என்பாருமுளர்.

அம்மாயக் குழவியின் செயல்

28 - 32 : தூய ............ மேயநாள்

(இதன்பொருள் :) தூய மறையோன் பின் (ஆய்) - இவ்வாற்றால் அச்சாத்தன்றானும் மாலதி கணவனாகிய புலன் அழுக்கற்ற அந்தணனுக்கு வழித்தோன்றலாகி; மாணியாய் - பின்னர் மறைபயிலும் பிரமசரிய நிலை எய்தியவனாகி; வான் பொருள் கேள்வித் துறைபோய் - மெய்ப்பொருளை யுணர்தற்குக் காரணமான கல்வி கேள்விகளில் மிக்கவனாகிக் கற்றாங்கு அறநெறிக்கண் பிறழாதொழுகி; அவர் முடிந்த பின்னர் - அம்மறையோன் முதலிய முதுகுரவர்கள் இறந்த பின்னர்; இறையோனும் - கடவுளாகிய அச்சாத்தன்றானும்; தந்தைக்குந் தாயார்க்கும் வேண்டும் கடன் கழித்து - அத்தந்தைக்கும் தாயர் இருவருக்கும் மகன் செய்யக்கடவ இறுதிக் கடன்களைச் செய்துமுடித்து; தாயத்தாரோடும் வழக்கு உரைத்து - பொருள்பற்றித் தன் தாயத்தாரோடு உண்டான வழக்கின்கண் அறங்கூறவையைத் தேறித் தன்பக்கல் வெற்றியுண்டாக வேண்டுவன கூறி வென்று; மேய நாள் - இல்லறத் தினிதமர்ந்து வாழும் நாளிலே என்க.

(விளக்கம்) 29 - மாணியாய் என்பதன்கண் அமைந்த ஆக்கச் சொல்லை மறையோன் பின்னாய் என முன்னும் கூட்டுக. மறையோன் பின்னாய் - மறையோனுக்கு வழித்தோன்றலாகி என்க. பின் -வழி. வான்பொருள் - மெய்ப்பொருள். வான்பொருள் நல்லாசிரியர்பாற் கேட்டுணர்தற்பாலதாகலின் கேள்வி மட்டுமே கூறினரேனும் கல்வி கேள்வி எனக் கல்வியையும் கூறிக் கொள்க. மாணி - பிரமசாரி. மாணி எனவே அந்நிலைக்குரிய வான்பொருட்கேள்வியையும் விதந்தார். 30- துறை போதல் - அறநெறியிலொழுகுதல் - தந்தையும் தாயரும் முடிந்த பின்னர் அவ்வப் பொழுதில் வேண்டும் கடன் கழித்து என்றவாறு. செய்யுளாதலின் அவர் முடிந்த பின்னர் எனச் சுட்டுச் சொல் முன்னர் வந்தது. தந்தை தாயர் முடிந்த பின்னர் அவர்க்குக் கடன் கழித்து என்க. இருவர் ஆதலின் தாயர் என்றார்.

இனி அடியார்க்கு நல்லார், வரந்தரு காதைக்கண்,

தேவந்திகையைத் தீவலஞ் செய்து
நாலீராண்டு நடந்ததற் பின்னர்
மூவா விளநலங் காட்டியென் கோட்டத்து
நீவா வென்றே நீங்கிய சாத்தன்  (84-7)

எனவருஞ் சாத்தன் வரலாற்றைக் கருத்துட் கொண்டு, ஈண்டு, மேயநாள் என்பதற்கு எட்டுயாண்டு தன் மனைவியோடே கூடிநடந்தபின் ஒரு நாளிலே எனவுரை வகுத்தனர்.

33 - 40 : தேவந்தி ....... கொண்டிருப்பாள்

(இதன்பொருள்) மனைவி தேவந்தி என்பாள் - அச்சாத்தன் இல்லறம் மேற்கொண்ட காலத்தே அவனுக்கு மனைவியாயமைந்தவள் தேவந்தி என்னும் பார்ப்பனியாவள்; அவளுக்கு - (வாய்மை கூறி மீண்டும் தன் தெய்வத்தன்மையை எய்த நினைத்த அச் சாத்தன்றானும்) மக்களினத்தாளாகிய அத் தேவந்தியினுடைய; பூ வந்த உண்கண் பொறுக்க என்று மேவி - மலர்போன்ற மையுண்ட கண்கள் பொறுத்துக் கொடற்பொருட்டு அவ்வளவிற்றாகத் தன்னொளியைப் படைத்துக் கொண்டு அவள்பாற் சென்று; தன் மூவா இளநலம் காட்டி - தெய்வமான தனக்கியல்பான மூவாமையுடைய இளமையினது அழகினை வெளிப்படுத்துக் காட்டியருளி; நீ எம் கோட்டத்து வா என வுரைத்து - அவள் குறிப்புணர்ந்து இனி நீ எமது கோயிலுக்கு வந்து எம்மைக் காண்பாயாக! என்று தேற்றி; நீங்குதலும் - அம்மாய வுருவினின்றும் நீங்கித் தெய்வமாய் மறைந்தொழியவும்; தூமொழி - தூயமொழியையுடைய அத் தேவந்திதானும்; ஆர்த்த கணவன் எங்கும் தீர்த்தத் துறைபோய்ப் படிவேன் என்று அகன்றனன் - அத்தெய்வத்தின் செயலைப் பிறர் அறியாமைப் பொருட்டும் அவன் கோயிலுக்குத் தான் எப்பொழுதும் போதற்கும் ஊரவர்க்கு ஒரு காரணம் காட்டுவாள்; தெய்வமே ! அளியேனைக் கட்டிய கணவன்றான் இந்நாவலந் தீவிடத்தே எவ்விடத்துஞ் சென்று ஆங்காங்குள்ள புண்ணியத் தீர்த்தங்களிலெல்லாம் ஆடி வருகுவேன் என்று சொல்லி என்னைத் துறந்துபோயினன்; அவனைப் பேர்த்து மீட்டு இங்ஙன் தருவாய் என - அவன் நெஞ்சத்தை மாற்றி மீளவும் இவ்விடத்தே கொணர்ந்து தந்தருள்வாயாக என்று பலருமறிய வாய்விட்டு வேண்டுதலாகிய; ஒன்றன் மேலிட்டு - ஒரு போலிக் காரணத்தைக் காட்டி; கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் - நாள்தோறும் அச்சாத்தன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யுந் தொழிலைக் கடனாக மேற்கொண்டிருப்பவள்; என்க.

(விளக்கம்) 33 - அச்சாத்தனுக்கு மனைவியாக வாய்த்தவள் தேவந்தி என்னும் பெயருடையாள் ஆவள், என அறிவுறுத்தவாறாம். 34- பூ வந்த உண்கண் என்புழி வந்த என்பது உவமவுருபின்பொருட்டு மக்கள் கண் தெய்வயாக்கையினது பேரொளியைப் பொறாதாகலின் அவள் கண் பொறுக்குமளவிற்றாய்ச் சாத்தன் தன்மேனி யொளியைச் சுருக்கி அவளெதிர்மேவி தனக்குரிய மூவா இளநலம் காட்டி என்றவாறு. அந்தரத் துள்ளோர் அறியா மரபின் வந்து என அடிகளார் ஆறாங் காதையிற் கூறியதும் இக்கருத்துடையதேயாம். ஆசிரியர் சாத்தனார் தாமும் கரந்துரு வெய்திய கடவுளாளரும் (மணிமேகலை: 1- 66) என்றோதுதலு மறிக. ஈண்டுத் தேவந்தி பலருமறியக் கூறும் இம்மொழிகள் பொய்மையேயாயினும் இவற்றால் இவை யாதொன்றும் தீமை பயவாமையின் வாய்மை யிடத்தவேயாம் எனத் தேவந்தியின் தூய்மையை வலியுறுத்துவார் அடிகளார் அவளை (36) தூமொழி என்றே சுட்டும் நயமுணர்க. 37-ஆர்த்த கணவன் - என்னெஞ்சத்தைப் பிணித்த கணவன் எனினுமாம்.

39. ஒன்றன் மேலிட்டு ஒரு காரியத்தைத் தலைக்கீடாகக் காட்டி. வழிபாடு கொண்டிருப்பாள் - பெயர்.

தேவந்தி கண்ணகியின்பாற் சென்று கூறுதல்

40 - 44 : வாட்டருஞ்சீர் ........ என்றாள்

(இதன்பொருள் :) வாடு அருஞ்சீர் கண்ணகி நல்லாளுக்கு உற்றகுறை உண்டு என்று எண்ணிய நெஞ்சத்து இனையள் ஆய் - எக்காலத்தும் யாவரானும் குறைக்க வொண்ணாத பெரும்புகழையுடைய கண்ணகியாகிய நல்ல தன் தோழிக்குக் கணவன் பிரிதலாலே எய்தியதொரு துன்பமுண்டென்று நினைத்த தன்னுடைய நெஞ்சத்தினூடே எப்பொழுதும் துன்பமுடையவளாய் அவள் தன் துன்பந் தீர் தற்பொருட்டு; நண்ணி அறுகு சிறுபூளை நெல்லொடு தூய் - அச்சாத்தன் கோயிலை நண்ணி அறுகம்புல்லையும் சிறுபூளைப் பூவையும் நெல்லோடு விரவி அச்சாத்தன் றிருவடிக்கண் தூவித் தெய்வமே என் றோழியின் துயர்துடைத்தருளுதி என வேண்டிக் கைதொழுது பின்னர்; சென்று - கண்ணகிபாற் சென்று வாழ்த்துபவள்; கணவனோடு பெறுக என்றாள் - அன்புடையோய் நீ நின்னைப் பிரிந்த கணவனோடு கூடி வாழ்வு பெறுவாயாக! என்று வாழ்த்தினள் என்க.

(விளக்கம்) 40 - வள்ளல் மறவர் முதலியோர் பெற்ற புகழெல்லாம் தம்மின் மிக்கார் தோன்றியவழி, குறைவனவாம். கற்புடைமையில் கண்ணகியின் மிக்கார் தோன்றவியலாமையான் அவள் புகழ் என்றும் குறையாத புகழ் என்பார், வாட்டருஞ் சீர் என்றார். அஃதாவது - பிறராற் குறைக்க வொண்ணாத திண்ணிய புகழ். வாடு - வாட்டென விகார மெய்திற்றெனினுமாம். 41 - கண்ணகி நல்லாளுக் குற்ற குறையை எண்ணிய பொழுதெல்லாம் அவள் நெஞ்சம் துன்புறும் என்பது தோன்ற கண்ணகி....இளையவாய் என்றார். இனைதல் - ஈறுகெட்டு இனை என நின்றது. இனைதல் - துன்புறுதல். கண்ணகி இம்மைச் செய்தது யானறி நல்வினை என்பாள் கண்ணகி என்றொழியாது கண்ணகி நல்லாள் என்றாள். எனவே, அக் குறை உம்மைச் செய்த தீவினையின் பயனாதல் வேண்டும். உம்மை வினைப்பயன் தெய்வத்தாற் றீரற்பாலது என எண்ணி அவள் பொருட்டுத் தானும் தெய்வத்தை வேண்டுவாள் அறுகு முதலிய தூவி வேண்டினள் என்க. பின்னரும் இக் கருத்துண்மையால் கண்ணகியைப் புண்ணியத் துறை மூழ்கவும் காமவேள் கோட்டந் தொழவும் இத் தேவந்தி அழைப்பதூஉம் காண்க.

கண்ணகி தான்கண்ட கனவினைத் தேவந்திக்குக் கூறுதல்

44 - 54 : பெறுகேன் ........... நகையாகும்

(இதன்பொருள் :) (52) செறிதொடீஇ - அதுகேட்ட கண்ணகி தேவந்தியை நோக்கி, செறித்த வளையலையுடையோய்; பெறுகேன் - தூயையாகிய நின் வாழ்த்துரை பொய்யாதாகலின் நீ வாழ்த்தியாங்கு யான் என் கணவனோடு ஏனைய நலங்களும் பெறுவேண்காண்; அதுநிற்க! ஈதொன்று கேள்! என் நெஞ்சம் கனவினால் கடுக்கும் என் நெஞ்சமானது நேற்றிரவு வைகறைப் பொழுதிலே யான் கண்டதொரு கனவு காரணமாக அத்தகைய நலத்தை யான் எய்துவேனோ? எய்தேனோ? என்று பெரிதும் ஐயுறாநின்றது; அக்கனவுதான் யாதோவெனின், என் கைப்பீடித்தனன் போய் ஓர் பெரும்பதியுள் பட்டேம் - என் கணவன் என்னை விரும்பிவந்து அன்புடன் என் கையைப் பற்றினன், பின்னர் யாங்கள் இருவேரும் சென்று யாதோவொரு பெரிய நகரத்தின்கட் புகுந்தேம்; பட்ட பதியில் ஊரார் படாதது ஒரு வார்த்தை என்றன்மேல் இடுதேள் இட்டுக் கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்றது கேட்டு - புகுந்த அவ்விடத்தே அவ்வூர் வாழும் மாந்தர் எமக்குப் பொருந்தாததொரு படிற்றுரையை இடுதேள் இடுமாறுபோல என்மேலிட்டுப் பின்னரும் அவரிடப்பட்ட அப்படிறு காரணமாகக் கோவலனுக்கும் ஒரு தீங்குற்றது என்று சிலர் கூறக்கேட்டு; யான் காவலன் முன் கட்டுரைத்தேன் - அது பொறாமல் பிற ஆடவர்முன் செல்லாத யான் அந்நகரத்து அரசன் முன்னர்ச் சென்று பிறர்முன் யாதொன்றும் உரைத்தறியாதேன் வழக்குரைத்தேன்; காவலனோடு ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டு ஆல் - அதனால் தீங்குற்ற அவ்வரசனோடன்றி அவ்வூருக்கு உற்ற தீங்கும் ஒன்றுண்டு; தீக்குற்றம் போலும் - அவ்வூர்க்குற்ற தீங்கு யான் செய்த கொடிய குற்றத்தின் பயன்போல் தோன்றுகின்றது ஆதலால்; உரையாடேன் - அதனை யான் நினக்குக் கூறுவேனல்லேன்; தீக்குற்றம் உற்றேனொடு உற்ற உறுவனோடு யான் உற்ற நல்திறம் கேட்கின் நகையாகும் - இவ்வாறு கொடிய குற்றம் எய்திய என்னோடு பொருந்திய பெருந்தகையானோடு யான் பெற்ற நன்மைகளின் இயல்பை நீ கேட்பாயானால் அது நினக்கு நகைப்பையே உண்டாக்கும் ஆதலால் அவற்றையும் கூறேன்காண்! என்று கூறாநிற்ப; என்க.

(விளக்கம்) 44. கணவனோடு நீ வாழ்வு பெறுக ! என்று தேவந்தி வாழ்த்தினளாகலின் - நீதான் தூயையாகலின் நின் வாழ்த்துப் பொய்யாது ஆகலின் யான் அங்ஙனம் பெறுகேன் என்று கூறி அவ்வாழ்த்தினைக் கண்ணகி நல்லாள் ஆர்வத்துடன் ஏற்றுக் கொண்டபடியாம். இதனால் கண்ணகி தேவந்தியின் பால் வைத்துள்ள நன்மதிப்பு விளங்குவதாயிற்று. நின்வாழ்த்தும் என் கனவும் முரணுதலின் யான் ஐயுறுகின்றேன் என்பாள், கனவினால் என்னெஞ்சம் கடுக்கும் என்றாள். 45. கடுக்கும் - ஐயுறும். கடியென்னும் உரிச் சொல்லடியாகப் பிறந்த முற்றுச் சொல்.

கடியென்கிளவி ............ ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே என்பது தொல்காப்பியம் (உரி - 85 - 6).

தேவந்தி கணவனோடு பெறுக என்றமையால், அவன் வந்து என் கைப்பிடித்தனன். ஆனால், அது கனவு எனச் சிறிது நகையாடியவாறுமாம். அதனைத் தொடர்ந்து கண்ணகி தன் கனாத்திறம் கூறுகின்றாள் என்க. அவன் வந்து கைப்பிடித்தனன் எனவும் 44 - யாம் போய் ஓர் பெரும்பதியுட்பட்டேம் என்றும் வருவித்துரைக்க. முன்னர் அறிந்திலாத பதி என்பாள் ஓர் பெரும்பதி என்றாள். 47. படாதது - எமக்குப் பொருந்தாதது. உரையார் இழிதக்க காணிற் கனா என்பது பற்றிப் பொதுவாகப் படாத தொரு வார்த்தை என்றொழிந்தாள். இடு தேளிட்டென எனல் வேண்டிய உவமவுருபு செய்யுள் விகாரத்தாற் றொக்கது. இடுதேளிடுதலாவது, தேள் இடப் படுவார் காணாமே தேளல்லாத தொன்றை மறையக் கொணர்ந்து அவர் மேலே போகட்டுத் தேள் என்று சொல்லி அவரைக் கலங்கச் செய்தல். நகைப் பொருட்டாக இங்ஙனம் இடுதேளிடும் வழக்கம் இற்றை நாளினும் இருக்கின்றது. கணவன் எனத் தான் என வேறாகக் கருதாது அவன் மேலிட்ட பழியையே என் மேலிட்டனர் என்கின்றாள். என்றன் மேலென்புழி தன் அசைச்சொல்.

கோவலற் குற்றதோர் தீங்கென்றது கேட்டு யான் காவலன் முன்னர்க் கட்டுரைத்தேன். அதனால் காவலனும் தீங்குற்றான் எனக் கூறவந்தவள் அதனைக் கூறாது விடுத்து அப்பொருள் தோன்ற, காவலனோடு ஊர்க்குற்ற தீங்கும் ஒன்றுண்டு என உடனிகழ்ச்சிக்குரிய ஒடுவுருபானும் இறந்தது தழீஇய எச்சவும்மையானும் குறிப்பாக அறிவுறுத்தாள். அவற்றைக் கூறாமைக்குக் காரணம் கூறுவாள் அவை - யான் செய்த தீக் குற்றம் போலும் என்றிரங்கினாள். அவையாவன அரசன் உயிர் நீத்தமையும் மதுரை தீயுண்டமையுமாம். கண்ணகியார் இச் செயல்களைத் தாம் செய்த தீவினைகளாகவே கருதினர் என்பதனை, கட்டுரைக் காதைக்கண்,

அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல்
நெடுவேள் குன்றம் அடிவைத் தேறிப்
பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழோர்
தீத்தொழி லாட்டியேன் யானென் றிரங்கி

என அடிகளார் அறிவுறுத்துதலானும், மணிமேகலையில் சாத்தனார் கண்ணகி கூற்றாக,

உம்மை வினைவந் துருத்தல் ஒழியாதெனும்
மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும்
சீற்றங் கொண்டு செழுநகர் சிதைத்தேன்
.......... .............. ............ ............
அவ்வினை யிறுதியி னடுசினப் பாவம்
எவ்வகை யானும் எய்துதல் ஒழியாது  (26 : 32-7)

என்றோதுதலானும் உணர்க. எனவே, ஈண்டுக் கண்ணகியார் கனவிற் கண் தாமே தீவினை செய்ததாகக் காண்டலின் இவ்விழிதகவினை நினக்குரையாடேன் என்கின்றனர். மீண்டுந் தீக்குற்றம் உற்றேனொடு உற்ற உறுவன் என்றோதுதலும் அவர் அதற்குப் பரிந்தமையை வலியுறுத்துதலு முணர்க. பிறரெல்லாம் இதற்கு இப் பொருள் காணாது தத்தம் வாய் வந்தன கூறினர். 53. உறுவன் - மிக்கோன் - தாம் வலவனே வா வானவூர்தியில் வானவர் எதிர்கொண்டழைப்பச் சென்றமைக்குக் காரணம் தன் கணவன் செய்த நல்வினையே என்பாள் அவனை உறுவன் என்றோதினள். நற்றிறம் என்றது இறந்த கணவனை உயிரொடு கொணர்ந்து காட்டுதலும் அவனும் தானும் வானவூர்தியில் விண்ணகம் புக்கதும் பிறவுமாம். இவை, நிகழவொண்ணா நிகழ்ச்சிகளாகலின் நகைதரும் என்றாள். இவை இழிதக்கவல்லன வாயினும் நகைதருவன ஆகலின் இவற்றையும் உரையாடேன் காண் என்பது குறிப்பெச்சம்.

கனாத் திறங்கேட்ட தேவந்தி கண்ணகிக்குக் கூறுதல்

54 - 64 : பொற்றொடீஇ .............. பின்னரே

(இதன்பொருள் :) பொற்றொடீஇ - பொன் வளையலையுடைய தோழீ! நீ கண்ட இக்கனவினால் நெஞ்சம் கலங்காதே கொள்! கணவற்குக் கைத்தாயும் அல்லை - நீ தானும் நின் கணவனால் வெறுத்துக் கைவிடப்பட்டாயும் அல்லை; பழம் பிறப்பில் ஒரு நோன்பு பொய்த்தாய் - நீ நின்னுடைய முற்பிறப்பிலே மகளிர் கணவர் பொருட்டு மேற்கொள்ளுதற்குரிய ஒரு நோன்பின்கண் தவறு செய்துள்ளனை போலும்; அத்தவறு காரணமாகவே நீ இப்பிறப்பில் இங்ஙனம் கணவனைப் பிரிந்துறையலாயினை போலும்; போய்க் கெடுக - அத் தவறுதானும் இவ்வளவோடு தொலைந் தொழிவதாக! காவிரி உய்த்துச் சென்று கடலோடு அலைக்கும் முன்றில் - காவிரிப் பேரியாறு தன்னீரைக் கொண்டுசென்று கடலோடு எதிர்த்து அலைத்தற்கிடனான கூடலிடத்தின் அயலே; மடல் அவிழ் நெய்தல் அம் கானல் தடமுள - தாழைமலர் மடல் விரிந்து மணம் பரப்பும் நெய்தனிலத்துச் சோலையினூடே இரண்டு நீர்நிலைகள் உள; சோமகுண்டம் சூரியகுண்டம் துறை மூழ்கி - சோமகுண்டம் என்றும் சூரியகுண்டம் என்றும் கூறப்படுகின்ற அப்புண்ணிய தீர்த்தங்களின் துறைகளில் முழுகி; காமவேள் கோட்டந் தொழுதார் தையலார்தாம் - அங்குள்ள காமவேள் கோயிலிற் சென்று அதன்கண்ணுறையும் காமக் கடவுளைக் கைகூப்பி வணங்கும் மகளிர்தாம்; உலகத்து கணவரொடு இன்புறுவர் - இந்நிலவுலகத்தே இப்பிறப்பிலுள்ள நாளெல்லாம் தங் கணவரொடும் பிரிவின்றியிருந்து பேரின்ப மெய்தாநிற்பர்; போகம் செய்பூமியினும் போய்ப் பிறப்பர் - பின்னரும் ஆதியரிவஞ்சம் முதலிய போகபூமியினும் தங் கணவரொடு போய்த் தேவராய்ப் பிறந்து நீடூழிப் பேரின்ப நுகரா நிற்பர் என்பது உலகுரையாம்; யாம் ஒருநாள் ஆங்குச் சென்று அத்தீர்த்தங்களிலே ஆடுவேம் காண்! என்று வேண்டிய அத்தேவந்திக்கு; அவ் ஆயிழையாள் பீடு அன்று என இருந்த பின்னரே - அக் கண்ணகிதானும் அங்ஙனம் துறைமூழ்கித் தெய்வந் தொழுதல் எம்மனோர்க்கு இயல்பாகாது காண்! என்று கூறி மறுத்திருந்த பின் அப்பொழுதே; என்க.

(விளக்கம்) 55 - கணவற்குக் கைத்தாயும் அல்லை என மாறுக. கைத்தல் - அறுவகைச் சுவையினுள் ஒன்று. அஃது ஈண்டு அச்சுவையினாற் பிறக்கும் உள்ள நிகழ்ச்சியாகிய வெறுப்பின் மேனின்றது. ஆகவே, நீ நின் கணவனால் வெறுக்கப்பட்டு அவனால் கைவிடப்பட்டாயு மல்லை என்றாளாயிற்று. வெறுத்துக் கைவிடப் பட்டிருந்தால் அவனைப் பெறுதல் கூடாது. நீ மீண்டும் பெறுதல் கூடும் என்பது கருத்து இனி நின் கணவன் பிரிதற்குரிய பிழை இம்மையில் நின்பால் யான்கண்டிலேன். ஆகலின் அவன் பிரிதற்குக் காரணம் நின் பழவினையே ஆதல் தேற்றம். புண்ணிய தீர்த்தங்களில் முழுகித் தெய்வந் தொழுவதுவே அதற்குக் கழுவாயாகும் என்பாள், அத்துறைகளின் சிறப் பெடுத்தோதி யாமும் ஒரு நாள் ஆடுதும் என்கின்றாள். தேவந்தியும் கணவற் பிரிந்தவளே யாதலின் யானும் அத்தகைய பழவினையுடையே னல்லனோ யாமிருவேமும் ஆடுதும் எனத் தன்னையும் உளப்படுத் தோதினள்.

கற்புடை மகளிர்க்குக் கணவரே தெய்வமாதலின் அவர் பிறதெய்வம் தொழுதல் இழுக்காம். இதனை,

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

எனவரும் திருக்குறளானும் (55) உணர்க.

54. பொற்றொடீஇ : அன்மொழித்தொகை. விளியேற்று நின்றது. காவிரி உய்த்துச் சென்று கடலொடு அலைக்கும் முன்றில் எனமாறுக. முன்றில் - ஈண்டுக் கூடல் முகம். அது முன்றில் போறலின் அங்ஙனம் கூறினர். சோமகுண்டத்துறை மூழ்குவார் இவ்வுலகத்தின் புறுவர் என்றும் சூரிய குண்டத்துறை மூழ்கினர் போக பூமியிற்பிறந்து இன்புறுவர் என்றும் நிரனிறையாகக் கொள்வாருமுளர். அங்ஙனம் கோடலிற் சிறப்பியாது மின்மையுணர்க. பட்டினப்பாலையில் இரு காமத்து இணையேரி, (39) எனக் கடியலூர் உருத்திரங் கண்ணனாரால் கூறப்பட்டவை இங்குக் கூறப்படும் இருவகைக் குண்டங்களே என்ப.

கோவலன் வருகை

64 - 66 : நீடிய ............. குற்றிளையாள்

(இதன்பொருள் :) ஓர் குற்றிளையாள் கோவலன் வந்து நீடிய நம் நடைத்தலையான் காவலன் போலும் என்றாள்-ஒரு குற்றேவற் சிலதி விரைந்துவந்து கண்ணகியை நோக்கி அன்னாய் நம்பெருமானாகிய கோவலன் உதோ வந்து நெடிய நம் வாயிலிடத்தே வாயில் காப்பான் போலே நிற்கின்றனன் என்று அறிவித்தனள்; என்க.

(விளக்கம் ) ஈண்டுத் தூமொழித் தேவந்தி நீ நின் கணவனொடு வாழ்வு பெறுக! என்ற வாழ்த்தும் கண்ணகி வைகறையிற் கண்ட கனவும் ஒருங்கே பலித்தமை யுணர்க. நீடிய கடைத்தலையான் என ஒட்டுக, கோவலன் இல்லத்துத் தலைவன் போன்று உட்புகுதத் துணிவின்றி வாயிலிலேயே தயங்கி நிற்றலாலே கோவலன் வந்து காவலன் போலக் கடைத்தலையான் என்று அவனை இயற்பழித்துரைகின்றாள். குறும்புடைய அக்குற்றேவற் சிறுமி. அரசர் போல நிற்கின்றார் எனவும் ஒரு பொருள் தோன்றலும் உணர்க.

இனி, பழையவுரையாசிரியர்கள், தூரத்தே பார்த்து ஐயுற்று நம் காவலன் போலும் என்று அணுகினவிடத்து ஐயந்தீர்ந்து கோவலன் என்றாள் எனினும் அமையும் என்பர். தமியனாய்ப் புலம்பு கொண்டு வருகின்றவனை அவள் காவலன் என்று ஐயுற்று நோக்குதல் பொருந்தாமை யுணர்க. நம் கோவலன் நெடுங்காலம் காப்பான் போலே இரா நின்றான் என அவர் கூறும் உரையும் அவள் குற்றேவற் சிலதி யாதலின் பொருந்தாவுரை யேயாம்.

கோவலன் கண்ணகிக்குக் கூறுதல்

66 - 71 : கோவலனும் .............. தருமெனக்கென்ன

(இதன்பொருள் :) கோவலனும் - தன்னெஞ்சமே தன்னைச் சுடுதலானே வாயிலிலே அங்ஙனம் தயங்கிநின்ற அக் கோவலன்றானும் அக் குற்றிளையாளே தன் வரவுணர்த்திருப்பள் என்னும் தனதுய்த்துணர்வே வாயிலாக; பாடு அமை சேக்கையுள் புக்கு - இல்லினுட் சென்று ஆங்குப் புற்கென்று கிடக்கும் அணைகள் பலவற்றை அடுக்கிய தனது சேக்கைப் பள்ளியுட் புகுந்து; தன் பைந்தொடி வாடிய மேனி வருத்தம் கண்டு - தன்னை முகமலர்ந்து வரவேற்பாளாய் அவனைத் தொடர்ந்துவந்து முன்னின்ற காதலியாகிய கண்ணகியினது திருமேனியினது வாட்டத்தையும் நெஞ்சினது வருத்தத்தையும் கண்கூடாகப் பார்த்து; யாவும் சலம்புணர் கொள்கைச் சலதியோடு ஆடி - எல்லாச் செயல்களிடத்தும் பொய்யை மெய்போலப் பொருந்துவித் தொழுகும் கோட்பாட்டையுடைய மாயத்தாளோடுங் கூடி ஆடிய எனது தீயொழுக்கங் காரணமாக; குலம் தரும் குன்றம் வான் பொருள் தொலைந்த இலம்பாடு எனக்கு நாணுத்தரும் என்ன - நங் குலத்து முன்னோர் தேடித்தந்த மலையளவிற்றாகிய சிறந்த பொருட்குவை யெல்லாம் தொலைந் தொழிந்தன அதனால் உண்டான நல்குரவு இப்பொழுது எனக்குப் பெரிதும் நாணைத் தருகின்றது காண் என்று கூறி இரங்க; என்க.

(விளக்கம்) 66 - கோவலனும் என்புழி உம்மை இழிவு சிறப்பு. பாடு அமை சேக்கை - அணைகளை அடுக்கிப் படுத்த சேக்கைக் கியன்ற பள்ளியறை 97 - தன் காதலியாகிய பசிய தொடியினையுடைய கண்ணகியின் வாடிய மேனி என்க. மேனியும் நெஞ்சத்து வருத்தமும் என உம்மை விரித்தோதுக. சலம் - பொய் - வஞ்சமுமாம் யாவும் எல்லாச் செயல்களிடத்தும், எல்லா வொழுக்கத்தினும் வஞ்சகத்தைப் புணர்த்தல் வேண்டும் என்பது அவள் மரபிற்கே ஒரு கோட்பாடு ஆகலின், சலம்புணர் கொள்கைச் சலதி என்றான். குலந்தரும் பொருள்வான் பொருள் எனத் தனித்தனி யியையும். தொன்று தொட்டுக் குல முன்னோர் அறத்தாற்றீட்டிய சிறந்த பொருள் என்பது கருத்து. பொருளின் மிகுதிக்குக் குன்றம் உவமை. சலதியோடு ஆடப் பொருட் குன்றம் தொலைந்த அதனால் உண்டான நல்குரவு நாணுத்தரும் என்றான் என்க. இலம்பாடு - நல்குரவு. நாணுத்தரும் என்றது கெட்டால் மதி தோன்றும் என்னும் வழக்கு.

கண்ணகி கோவலனுக்குக் கூறுதல்

72 - 73 : நலங்கேழ் ............. கொண்மென

(இதன்பொருள் :) நலம் கேழ் நகைமுகம் முறுவல் காட்டி - கணவனுடைய கழிவிரக்க மொழிகளைக் கேட்ட அத்திருமாபத்தினி தானும் கணவன் கருத்தை யாவதும் மாற்றாத கொள்கையை யுடையாளாகலின் கோவலன் மாதவிக்குக் கொடுக்கும் பொருள் முட்டுப்பாட்டினாலே இங்ஙனம் கூறினானாகக் கருதி; அவனுடைய அத்துயர்துடைக்க வழி யாது எனத் தன்னெஞ்சத்துளாராய்ந்து ஒருவழி காணப்பெற்றமையாலே; மெய்யன்பென்னும் நலம் பொருந்துதலாலே புத்தொளி படைத்த தனது திருமுகத்திலே தோன்றிய புன்முறுவலைக் காட்டி; சிலம்பு உள கொண்ம் என - அன்புடையீர் இன்னும் என்பால் சிலம்பு ஓர் இணை உள அவையிற்றைக் கொண்மின் என்று கூறாநிற்ப; என்க.

(விளக்கம்) நலம் - அன்பாகிய நன்மை. அந்நலத்தின் மெய்ப் பாட்டினை நகை என்றார். நகை - ஒளி. இலம்பாடு நாணுத்தரும் என்பது அவன் குறையாகலின் அது தீர்த்தற்குத் தன்னுட் சிறிது சூழ்ந்து தான் அணியாதிருக்கும் பெருவிலைச் சிலம்புகள் இக்குறையை இப் பொழுதைக்குத் தீர்க்கப் போதியன வாகும் என்று அப்பெருந் தகையாள் அவற்றைக் கொண்மின் எனக் கூறும் இச்சிறப்பு அவளது ஒப்பற்ற கற்பினது மாண்பினை நன்கு விளக்கி நிற்றல் உணர்ந்துணர்ந்து மகிழற் பாலதாகும். இது கூறுங்கால் அவன் துயர்க்குத் தான் வாய்மையாகவே வருந்தி அன்பு மேலீட்டால் கூறுதலின் முகம் மலர்ந்து கூறுகின்றாள் என்றுணர்க. அவன் குறை தீர்க்கலாவது அப்பொழுது தன்பாலொன்றுளதாவதனை நினைவு கூர்ந்தவுடன் மகிழ்ச்சியால் அவள் முகமலர்ந்து புன்முறுவலும் தவழ்வதாயிற்று. இஃதியற்கையாம். சிலம்புள கொண்மின் எனவே இவை யொழிந்த அணிகலனெல்லாம் முன்னமே தொலைந்தமை பெற்றாம்.

கோவலன் கண்ணகியோடு மதுரைக்குப் போகத் துணிதல்

73-79 : சேயிழைகேள் ....... கால்சீயாமுன்

(இதன்பொருள்:) சேயிழை கேள் - அதுகேட்ட கோவலன் பின்னரும் அவட்குப் பரிந்து சேயிழையே இப்பொழுது யான் கருதுவதனைக் கூறுவல் கேட்பாயாக! சிலம்பு முதல் ஆக - நீ சொன்ன அச்சிலம்பை யான் வாணிகத் தொழிலுக்கு முதற் பொருளாகக் கொண்டு; மலர்ந்த சீர் மாட மதுரை யகத்துச் சென்று - நாற்றிசையினும் விரிந்த புகழையுடைய மாடங்களாற் சிறந்த மதுரையென்னும் நகரிடத்தே சென்று அத்தொழிலைச் சிறப்பச் செய்து; சென்ற கலனோடு உலந்த பொருள் - யான் முன்பு நின்பால் வாங்கி அழித்த அணிகலன்களையும் என்னாற் றொலைக்கப்பட்ட பொருள்களையும்; ஈட்டுதல் உற்றேன் - தேடித் தொகுக்கத் துணிந்தேன்; ஏடு அலா கோதாய் - இதழ் விரிகின்ற மலர்மாலையையுடையோய்; ஈங்கு என்னோடு எழு என்று - அதற்கு நீ இப்பொழுதே இவ்விடத்தினின்றும் என்னோடு எழுந்து வருவாயாக! என்று சொல்லி; கனைசுடர் கங்குல் கால்சீயா முன் - கதிரவன் தனது மிக்க ஒளியால் உலகின் கண் செறிந்த இருளைப் போக்குதற்கு முற்பட்ட வைகறைப் பொழுதிலே; வினை நீடி கடைக்கூட்ட முற்பிறப்பில் தான் செய்த தீவினையானது பயன்றரும் செவ்வியுறுந்துணையும் தன் னெஞ்சத்துள் நெடிதிருந்து தன் நெஞ்சை ஒருப்படுத்துதலானே; வியம் கொண்டான் - செவ்வி வந்தெய்தினமையால் அவ்வினை தன்னெஞ்சத்துள் ஏவிய ஏவலை மேற்கொண்டாள் என்க.

(விளக்கம்) சீத்தல் - விலக்குதல்; அகற்றுதல். கனை சுடர் - ஞாயிறு. கால் சீத்தல் : ஒரு சொல் எனினுமாம். சுடர் கால் சீயா முன் எனவே வைகறையாமத்தே என்பதாயிற்று. ஒருவன் செய்த வினை, தனது பயனை விளைத்தற்குத் தகுந்த செவ்வி பெறுமளவும் அவனுடைய நெஞ்சத்தைப் பற்றுக் கோடாகக் கொண்டு கிடக்கும் என்பது தத்துவ நூல் வழக்கு. ஆதலின் வினை நீடிக் கடைக் கூட்ட என்றார். வியம் - ஏவல் - வினையினது ஏவல்.

பா-கலிவெண்பா

வெண்பாவுரை

காதலிகண்ட .......... சீயாமுன்

(இதன்பொருள்:) காதலி கண்ட கனவு - கண்ணகி கண்ட கனவானது; கரு நெடுங்கண் மாதவி தன் சொல்லை வறிது ஆக்க- கரிய நெடிய கண்களையுடைய மாதவி வயந்தமாலைக்கு காலை காண்குவம் என்று கூறிய சொல்லைப் பயனிலாச் சொல்லாகக் செய்துவிட; மூதை வினை கடைக்கூட்ட - கோவலனுடைய பழவினை அவன் நெஞ்சை ஒருப்படுத்துதலானே; கனைசுடர் கங்குல் கால் சீயாமுன் - ஞாயிறு இருளைப் போக்குதற்குமுன்பே; வியங்கொண்டான் - அவன் அவ்வினையினது ஏவலை மேற்கொண்டனன்; என்க.

(விளக்கம்) அடிகளார் இதுகாறும் மாதவியை மாமலர் நெடுங்கண் மாதவி என்றே பலவிடங்களிலும் கூறிவந்து ஈண்டுக் கருநெடுங்கண் மாதவி எனக் கூறுவது கூர்ந்துணரற்பாலதாம். மாதவிக்கு இனி எஞ்ஞான்றும் கூட்டமின்மையால் இங்ஙனம் கூறினர். சொல்லை வறிதாக்குதலாவது பயன்படாமற் செய்தல்.

கனாத்திற முரைத்த காதை முற்றிற்று.
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 23, 2012, 01:47:10 PM
10. நாடுகாண் காதை

 அஃதாவது - கோவலனும் கண்ணகியும் கனைசுடர் கங்குல் கால் சீயாமுன்னர் ஊழ்வினை உண்ணின்று செலுத்துதலாலே மாடமதுரை நகர்க்குச் செல்லும்பொருட்டுக் காவிரியின் வளங்கெழுமிய வடகரை வழியாகக் குடதிசை நோக்கிப் போகும் பொழுது காவிரி நாட்டின் கவினும் வளமும் கண்டு கண்டுவந்து தலமூதாட்டியாகிய கவுந்தியடிகளாரையும் வழித்துணையாய்ப் பெற்றுச் செல்வதனைக் கூறும் பகுதி என்றவாறு.

வான்கண் விழியா வைகறை யாமத்து
மீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக்
கார்இருள் நின்ற கடைநாள் கங்குல்
ஊழ்வினைக் கடைஇ உள்ளம் துரப்ப
ஏழகத் தகரும் எகினக் கவரியும்   5

தூமயிர் அன்னமும் துணைஎனத் திரியும்
தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின்
நீள்நெடு வாயில் நெடுங்கடை கழிந்துஆங்கு,
அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து,  10

பணைஐந்து ஓங்கிய பாசிலைப் போதி
அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி
அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர விகாரம் ஏழுடன் போகி,
புலவுஊண் துறந்து பொய்யா விரதத்து  15

அவலம் நீத்துஅறிந்து அடங்கிய கொள்கை
மெய்வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய
ஐவகை நின்ற அருகத் தானத்துச்
சந்தி ஐந்தும் தம்முடன் கூடி
வந்துதலை மயங்கிய வான்பெரு மன்றத்துப்  20

பொலம்பூம் பிண்டி நலம்கிளர் கொழுநிழல்
நீர்அணி விழவினும் நெடுந்தேர் விழவினும்
சாரணர் வருஉம் தகுதிஉண் டாம்என
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகுஒளிச் சிலாதலம் தொழுதுவலம் கொண்டு,  25

மலைதலைக் கொண்ட பேர்யாறு போலும்
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி,
கலையி லாளன் காமர் வேனிலொடு
மலைய மாருதம் மன்னவற்கு இறுக்கும்
பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர்   30

இலவந் திகையின் எயில்புறம் போகி,
தாழ்பொழில் உடுத்த தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
குடதிசைக் கொண்டு கொழும்புனல் காவிரி
வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து,  35

காவதம் கடந்து கவுந்திப் பள்ளிப்
பூமரப் பொதும்பர்ப் பொருந்தி ஆங்கண்
இறும்கொடி நுசுப்போடு இனைந்துஅடி வருந்தி
நறும்பல் கூந்தல் குறும்பல் உயிர்த்து
முதிராக் கிளவியின் முள்எயிறு இலங்க  40

மதுரை மூதூர் யாதுஎன வினவ,
ஆறுஐங் காதம்நம் அகல்நாட்டு உம்பர்
நாறுஐங் கூந்தல் நணித்துஎன நக்குத்,
தேமொழி தன்னொடும் சிறையகத்து இருந்த
காவுந்தி ஐயையைக் கண்டுஅடி தொழலும்,  45

உருவும் குலனும் உயர்ப்பேர் ஒழுக்கமும்
பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்
உடையீர் என்னோ உறுக ணாளரின்
கடைகழிந்து இங்ஙனம் கருதிய வாறுஎன,
உரையாட்டு இல்லை உறுதவத் தீர்யான்  50

மதுரை மூதூர் வரைபொருள் வேட்கையேன்.
பாடகச் சீறடி பரல்பகை உழவா
காடுஇடை யிட்ட நாடுநீர் கழிதற்கு
அரிதுஇவள் செவ்வி அறிகுநர் யாரோ
உரியது அன்றுஈங்கு ஒழிகஎன ஒழியீர்  55

மறஉரை நீத்த மாசுஅறு கேள்வியர்
அறஉரை கேட்டுஆங்கு அறிவனை ஏத்தத்
தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்
போதுவல் யானும் போதுமின் என்ற  60

காவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி
அடிகள் நீரே அருளிதிர் ஆயின்இத்
தொடிவளைத் தோளி துயர்த்தீர்த் தேன்என,
கோவலன் காணாய் கொண்ட இந்நெறிக்கு
ஏதம் தருவன யாங்கும்பல கேண்மோ:  65

வெயில்நிறம் பொறாஅ மெல்இயல் கொண்டு
பயில்பூந் தண்டலைப் படர்குவம் எனினே,
மண்பக வீழ்ந்த கிழங்குஅகழ் குழியைச்
சண்பகம் நிறைத்த தாதுசோர் பொங்கர்
பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக்  70

கையறு துன்பம் காட்டினும் காட்டும்,
உதிர்ப்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர்
முதிர்த்தேம் பழம்பகை முட்டினும் முட்டும்,
மஞ்சளும் இஞ்சியும் மயங்குஅரில் வலயத்துச்
செஞ்சுளைப் பலவின் பரல்பகை உறுக்கும்.  75

கயல்நெடுங் கண்ணி காதல் கேள்வ.
வயல்உழைப் படர்க்குவம் எனினே ஆங்குப்
பூநாறு இலஞ்சிப் பொருகயல் ஓட்டி
நீர்நாய் கௌவிய நெடும்புற வாளை
மலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயின்  80

கலங்கலும் உண்டுஇக் காரிகை, ஆங்கண்
கரும்பில் தொடுத்த பெருந்தேன் சிதைந்து
சுரும்புசூழ் பொய்கைத் தூநீர் கலக்கும்
அடங்கா வேட்கையின் அறிவுஅஞர் எய்திக்
குடங்கையின் கொண்டு கொள்ளவும் கூடும்,  85

குறுநர் இட்ட குவளைஅம் போதொடு
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
நெறிசெல் வருத்தத்து நீர்அஞர் எய்தி
அறியாது அடிஆங்கு இடுதலும் கூடும்,
எறிநீர் அடைகரை இயக்கம் தன்னில்  90

பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது
ஊழ்அடி ஒதுக்கத்து உறுநோய் காணின்
தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா,
வயலும் சோலையும் அல்லது யாங்கணும்
அயல்படக் கிடந்த நெறிஆங்கு இல்லை  95

நெறிஇருங் குஞ்சி நீவெய் யோளொடு
குறிஅறிந்து அவைஅவை குறுகாது ஓம்புஎன,
தோம்அறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும்
காவுந்தி ஐயைகைப் பீலியும் கொண்டு
மொழிப்பொருள் தெய்வம் வழித்துணை ஆகெனப்  100

பழிப்புஅருஞ் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர்,
கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றொடும்
சூல்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்பக்  105

குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓஇறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது
ஆம்பியும் கிழாரும் வீங்குஇசை ஏத்தமும்  110

ஓங்குநீர்ப் பிழாவும் ஒலித்தல் செல்லாக்
கழனிச் செந்நெல் கரும்புசூழ் மருங்கில்
பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக்
கம்புட் கோழியும் கனைகுரல் நாரையும்
செங்கால் அன்னமும் பைங்கால் கொக்கும்  115

கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழூஉக்குரல் பரந்த ஓதையும்,
உழாஅ நுண்தொளி உள்புக்கு அழுந்திய  120

கழாஅமயிர் யாக்கைச் செங்கண் காரான்
சொரிபுறம் உரிஞ்சப் புரிஞெகிழ்பு உற்ற
குமரிக் கூட்டில் கொழும்பல் உணவு
கவரிச் செந்நெல் காய்த்தலைச் சொரியக்
கருங்கை வினைஞரும் களமருங் கூடி  125

ஒருங்குநின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும்,
கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தித்
தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து
சேறுஆடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச்
செங்கயல் நெடுங்கண் சின்மொழிக் கடைசியர்  130

வெங்கள் தொலைச்சிய விருந்திற் பாணியும்,
கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து
விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பார்உடைப் பனர்ப்போல் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்,  135

அரிந்துகால் குவித்தோர் அரிகடா வுறுத்த
பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்,
தெண்கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த
மண்கனை முழவின் மகிழ்இசை ஓதையும்,
பேர்யாற்று அடைகரை நீரிற் கேட்டுஆங்கு  140

ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார்,
உழைப்புலிக் கொடித்தேர் உரவோன் கொற்றமொடு
மழைக்கரு உயிர்க்கும் அழல்திகழ் அட்டில்
மறையோர் ஆக்கிய ஆவூதி நறும்புகை
இறைஉயர் மாடம் எங்கணும் போர்த்து  145

மஞ்சுசூழ் மலையின் மாணத் தோன்றும்
மங்கல மறையோர் இருக்கை அன்றியும்,
பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர் பழவிறல் ஊர்களும்,  150

பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து
மங்குல் வானத்து மலையின் தோன்றும்
ஊர்இடை யிட்ட நாடுஉடன் கண்டு
காவதம் அல்லது கடவார் ஆகிப்
பன்னாள் தங்கிச் செல்நாள் ஒருநாள்:  155

ஆற்றுவீ அரங்கத்து வீற்றுவீற்று ஆகிக்
குரங்குஅமை உடுத்த மரம்பயில் அடுக்கத்து,
வானவர் உறையும் பூநாறு ஒருசிறைப்
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்காப்
பெரும்பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட  160

இலங்குஒளிச் சிலாதலம் மேல்இருந் தருளிப்
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத்
தருமம் சாற்றும் சாரணர் தோன்றப்,
பண்டைத் தொல்வினை பாறுக என்றே
கண்டுஅறி கவுந்தியொடு கால்உற வீழ்ந்தோர்  165

வந்த காரணம் வயங்கிய கொள்கைச்
சிந்தை விளக்கில் தெரிந்தோன் ஆயினும்
ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய
வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான்,
கழிப்பெருஞ் சிறப்பின் கவுந்தி காணாய்:  170

ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை
இட்ட வித்தின் எதிர்வந்து எய்தி
ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா
கடுங்கால் நெடுவெளி இடும்சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்  175

அறிவன் அறவோன் அறிவுவரம்பு இகந்தோன்
செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்
தரும முதல்வன் தலைவன் தருமன்
பொருளன் புனிதன் புராணன் புலவன்
சினவரன் தேவன் சிவகதி நாயகன்  180

பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன்
தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்
சித்தன் பெரியவன் செம்மல் திகழ்ஒளி
இறைவன் குரவன் இயல்குணன் எம்கோன்
குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான்  185

சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்
அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி
பண்ணவன் எண்குணன் பாத்தில் பழம்பொருள்
விண்ணவன் வேத முதல்வன் விளங்குஓளி
ஓதிய வேதத்து ஒளிஉறின் அல்லது  190

போதார் பிறவிப் பொதிஅறை யோர்எனச்
சாரணர் வாய்மொழி கேட்டுத் தவமுதல்
காவுந்தி யும்தன் கைதலை மேற்கொண்டு
ஒருமூன்று அவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக்கு அல்லதுஎன் செவியகம் திறவா,  195

காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு
நாமம் அல்லது நவிலாது என்நா,
ஐவரை வென்றோன் அடியிணை அல்லது
கைவரைக் காணினும் காணா என்கண்,
அருள்அறம் பூண்டோ ன் திருமெய்க்கு அல்லதுஎன்  200

பொருள்இல் யாக்கை பூமியில் பொருந்தாது,
அருகர் அறவன் அறிவோற்கு அல்லதுஎன்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா,
மலர்மிசை நடந்தோன் மலர்அடி அல்லதுஎன்
தலைமிசை உச்சி தான்அணிப் பொறாஅது  205

இறுதிஇல் இன்பத்து இறைமொழிக்கு அல்லது
மறுதிர ஓதிஎன் மனம்புடை பெயராது
என்றவன் இசைமொழி ஏத்தக் கேட்டுஅதற்கு
ஒன்றிய மாதவர் உயர்மிசை ஓங்கி
நிவந்துஆங்கு ஒருமுழம் நீள்நிலம் நீங்கிப்  210

பவம்தரு பாசம் கவுந்தி கெடுகென்று
அந்தரம் ஆறாப் படர்வோர்த் தொழுது
பந்தம் அறுகெனப் பணிந்தனர் போந்து,
கார்அணி பூம்பொழில் காவிரிப் பேர்யாற்று
நீர்அணி மாடத்து நெடுந்துறை போகி  215

மாதரும் கணவனும் மாதவத் தாட்டியும்
தீதுதீர் நியமத் தென்கரை எய்திப்
போதுசூழ் கிடக்கைஓர் பூம்பொழில் இருந்துழி
வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு
கொங்குஅலர் பூம்பொழில் குறுகினர் சென்றோர்  220

காமனும் தேவியும் போலும் ஈங்குஇவர்
ஆர்எனக் கேட்டுஈங்கு அறிகுவம் என்றே,
நோற்றுஉணல் யாக்கை நொசிதவத் தீர்உடன்
ஆற்றுவழிப் பட்டோ ர் ஆர்என வினவ,என்
மக்கள் காணீர் மானிட யாக்கையர்   225

பக்கம் நீங்குமின் பரிபுலம் பினர்என,
உடன்வயிற் றோர்க்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவதும் உண்டோ ? கற்றறிந் தீர்எனத்,
தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க,  230

எள்ளுநர் போலும்இவர் என்பூங் கோதையை
முள்உடைக் காட்டின் முதுநரி ஆகெனக்
கவுந்தி இட்ட தவம்தரு சாபம்
கட்டியது ஆதலின், பட்டதை அறியார்
குறுநரி நெடுங்குரல் கூவிளி கேட்டு  235

நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி,
நெறியின் நீங்கியோர் நீர்அல கூறினும்
அறியா மைஎன்று அறியல் வேண்டும்
செய்தவத் தீர்நும் திருமுன் பிழைத்தோர்க்கு
உய்திக் காலம் உரையீ ரோஎன,   240
 
அறியா மையின்இன்று இழிபிறப்பு உற்றோர்
உறையூர் நொச்சி ஒருபுடை ஒதுங்கிப்
பன்னிரு மதியம் படர்நோய் உழந்தபின்
முன்னை உருவம் பெறுகஈங்கு இவர்எனச்
சாபவிடை செய்து, தவப்பெருஞ் சிறப்பின்  245

காவுந்தி ஐயையும் தேவியும் கணவனும்
முறம்செவி வாரணம் முஞ்சமம் முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்துஎன்.

(கட்டுரை)

முடிஉடை வேந்தர் மூவ ருள்ளும்
தொடிவிளங்கு தடக்கைச் சோழர்க்குலத்து உதித்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்
பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும்
விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்  5

ஒடியா இன்பத்து அவர்உறை நாட்டுக்
குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம்
தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும்
பொய்யா வானம் புதுப்புனல் பொழிதலும்
அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும்  10

பரந்துஇசை எய்திய பாரதி விருத்தியும்
திணைநிலை வரியும் இணைநிலை வரியும்
அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும்
ஈர்ஏழ் சகோடமும் இடநிலைப் பாலையும்
தாரத்து ஆக்கமும் தான்தெரி பண்ணும்  15

ஊரகத் தேரும் ஒளியுடைப் பாணியும்
என்றுஇவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு
ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்
ஒரு பரிசா நோக்கிக் கிடந்த
புகார்க் காண்டம் முற்றிற்று.   20

(வெண்பா)

காலை அரும்பி மலரும் கதிரவனும்
மாலை மதியமும்போல் வாழியரோ - வேலை
அகழால் அமைந்த அவனிக்கு மாலைப்
புகழால் அமைந்த புகார்.

உரை

1 - 10 : வான்கண் ......... கழிந்து

(இதன்பொருள்:) வான்கண் விழியா வைகறை யாமத்து - உலகிற்குச் சிறந்த கண்ணாகத் திகழும் கதிரவன் தோன்றி விளங்குதலில்லாத வைகறை என்னும் யாமத்திலே; மீன் திகழ் வெள்மதி விசும்பின் நீங்க - விண் மீன்களோடு அழகுபெற்று இயங்காநின்ற வெள்ளிய திங்களானது வானத்தினின்று மேற்றிசையிற் சென்று மறைந்து விட்டமையாலே; கார் இருள் நின்ற கடைநாள் கங்குல் - அந்த நாளின் இறுதிப் பகுதியிலே கரிய இருள் நிற்றற்குக் காரணமான இரவின்கண்; வினை ஊழ் கடைஇ உள்ளம் துரப்ப - இவன் முற்பிறப்பிலே செய்த தீவினையானது முறையானே வந்து உள்ளத்தூடிருந்து செலுத்தி ஓட்டுதலானே; ஏழகத்தகரும் எகினக் கவரியும் தூமயிர் அன்னமும் துணை எனத் திரியும் - ஆட்டுக்கிடாயும் எகினம் என்னும் கவரிமானும் தூய மயிரையுடைய அன்னமுமாகிய இவை தம்முள் இனமல்லவாயினும் பழக்கங் காரணமான ஓரினம் போன்று தம்முட் கேண்மை கொண்டு திரிதற்கிடனான; தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின் நீள் நெடுவாயில் நெடுங்கடை கழிந்து - செய்யும்பொழுதே தாளோடுகூடச் செய்யப்பட்ட அழகு பொருந்திய சிறப்பினையுடைய மிகவும் பெரிய கதவினையுடைய நெடிய இடைகழியைக் கடந்து சென்று; ஆங்கு அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து - அவ்விடத்தே அழகு மிகுகின்ற பாப்பணையின்மீதே கிடந்து அறிதுயில் கொண்டுள்ள நீலமணி நிறத்தையுடைய திருமாலினது கோயிலை வலஞ் செய்து அவ்விடத்தினின்றும் போய்; என்க.

(விளக்கம்) 1 - வான்கண் - சிறந்த கண்; அஃதாவது உயிர்களின் கண்ணுக்குக் கண்ணாகும் சிறப்புடைய கண் என்றவாறு. எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் கண்ணாவான் இவனேயன்றோ? எனவரும் வில்லிபுத்தூரார் வாக்கும் நோக்குக. (பாரதம் - அருச்சுனன் தவஞ்செய்) விழித்தல் ஈண்டுத் தோன்றுதல். இது முன்னைக் காதையில் கனைசுடர் கங்குல் கால் சீயாமுன் என்றதனையே காதையியைபு தோன்ற வழிமொழிவார் செய்யுளின்பந் தோன்ற மற்றொரு வாய்பாட்டாலோதிய படியாம். 2- மீன் -அசுவினி முதலிய நாண் மீன்கள் - மதி நீங்குதலாலே இருள் நின்ற கங்குல் என்றவாறு. கடைநாள் - நாள்கடை எனற்பாலன முன்பின் மாறி நின்றன. கடைக்கண் என்பது போல. அற்றை நாளின் இறுதியாகிய கங்குற் பொழுது என்றவாறு. 4. வினை ஊழ் கடைஇ என மாறுக. ஊழ்-முறை. கடைஇ-செலுத்தி - கடவி. துரப்ப - ஓட்ட. 5. ஏழகத்தகர் - ஆட்டுக் கிடாய். தகர் - ஆட்டின் ஆண்பாற் பெயர், மோத்தையும் தகரும் உதளும் அப்பரும் யாத்த என்ப யாட்டின் கண்ணே என்பது தொல்காப்பியம் (மரபியல் -48) எகினம் - கவரிமான். ஏழகம் பெண்யாட்டின் பாலும் எகினம். நாய் முதலியவற்றிலும் செல்லாமைக்கு ஏழகத்தகர் என்றும் எகினக் கவரி என்றும் தெரித் தோதியவாறாம். 6 - துணையெனத் திரியும் என்றமையால் துணையல்லாமை போதரும். தாள் - கதவு நிற்றற் கியன்றவுறுப்பு. இதனைக் குருத்து என்றும் வழங்குப. வலிதாதற் பொருட்டுக் குயிற்றுங்கால் தாளோடு குயிற்றப்பட்டது என்றவாறாம். வாயில்: ஆகுபெயர் - கதவு. தகை - அழகு. பெருமையுமாம். வேற்றூர் செல்பவர் கோயில் முதலியன எதிர்ப்படும் பொழுது அவற்றை வலஞ் செய்து போதல் மரபு.

6. அறிதுயில் - யோக நித்திரை. தூங்காமற் தூங்குதல் என்பது மது. 10 - மணிவண்ணன் - திருமால்.

இனி வான்கண்...... கங்குல் என்பதற்கு அடியார்க்கு நல்லார் கூறும் விளக்கம்கணித நூலுக்குப் பொருந்தாது என்ப. ஆயினும், பின்னும் அவற்றை ஆராய்வார் பொருட்டு அவர்கூறியாங்கே ஈண்டுத் தருவாம் அது வருமாறு:

என்பது அந்தச் சித்திரைத் திங்கட் புகுதி நாள் - சோதி. திதி மூன்றாம் பக்கம். வாரம் - ஞாயிறு. இத்திங்களிருபத் தெட்டில்சித்திரையும் பூரணையும் கூடிய சனிவாரத்திற்கொடியேற்றி நாலேழ் நாளினும் என்பதனான் இருபத்தெட்டு நாளும் விழா நடந்து கொடியிறக்கி வைகாசி யிருபத்தெட்டினிற் பூருவபக்கத்தின்பதின் மூன்றாம் பக்கமும் சோமவாரமும் பெற்ற அனுடத்தில் நாட்கடலாடி ஊடுதலின் வைகாசி இருபத்தொன்பதில் செவ்வாய்க் கிழமையும் கேட்டையும் பெற்ற நாசயோகத்து நிறைமதிப் பதினாலாம் பக்கத்து வைகறைப் பொழுதினிடத்து நிலவுபட்ட அந்தரத்திருளிலே என்றவாறு எனவரும்.

இந்திர விகாரம் ஏழனையுங் கடத்தல்

11-14 : பணை ...........போகி

(இதன்பொருள்:) ஓங்கிய ஐந்துபணை பாசிலைப் போதி அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி - உயர்ந்த ஐந்து கிளைகளையும் பசிய இலையினையும் உடைய அரைமரத்தினது அழகிய நீழலின்கண்ணிருந்து அறங்களை யுணர்ந்தவனாகிய புத்தபெருமான் திருவாய் மலர்ந்தருளிய பிடகநூற் பொருள்களை; அந்தரசாரிகள் அறைந்தனர் சாற்றும் - சாரணர் கேட்போர் உளத்தே பதியுமாறு உலகமாக்கள் பலருக்கும் செவியறிவுறுத்து மிடங்களான; இந்திர விகாரம் ஏழு உடன் போகி - புத்தாலயத்தின் மருங்கே இந்திரனாலியற்றப்பட்ட அரங்குகள் ஏழனையும் ஒருங்கே வலத்தே வைத்து அவ்விடத்தினின்றும் சென்றென்க.

(விளக்கம்) 11 - பணை - கிளை. புத்த பெருமான் பலகாலம் தவஞ் செய்தும் பெறமாட்டாத மெய்யுணர்வை ஓர் அரைமர நீழலிலிருந்த பொழுது பெற்றனர் என்ப. அவ்வரை மரத்திற்கு ஐந்து கிளைகளிருந்தன என்பது வரலாறு. ஈண்டு அடிகளார் கூறுவதும் அவ்வரை மரத்தையேயாம். பணையைந் தோங்கிய பாசிலைப் போதி என்னும் துணையும் அநவோன் என்பதற்கு அடைமொழியாம். இவ்வடை மொழிகளால் அறவோன் என்பது - புத்த பெருமானை என்றுணர்ந்தாம். இவ்வரை மரத்தைப் பவுத்தர்கள் மஹாபோதி என்று சிறப்பித்துக் கூறி அத்திசை நோக்கி வணங்கா நிற்பர். புத்த பெருமானை அறவோன் என்றும் அவன் திருவாய் மலர்ந்தருளிய பிடக நூலைத் திருமொழி என்றும் உளமாரப் பாராட்டிக் கூறுவது அடிகளாருடைய சான்றாண்மைக்கும் நடுவுநிலைக்கும் சிறந்த சான்றுகளாம்.

இனி, 13 - புத்தர் அறங்களை உலகெங்கணும் சென்று மக்கட்குச் செவியறிவுறுத்தும் தொண்டர்களை அந்தரசாரிகள் என்பது மரபு. இவர்கள் பவுத்தரில் (இருத்தி) சித்தி பெற்றவர் என்பர். இவர்தாம் இருத்தியின் ஆற்றலால் விசும்பின்கண் ஏறி வேண்டுமிடங்கட்குச் செல்லுவர்; ஆங்காங்கு நிலத்திலிறங்கி அறங் கூறுவர் எனவும் இன்னோரன்ன வியத்தகு செயல்கள் பிறவுமுடையர் எனவும் கூறுவர். இதனை, சாதுசக்கரன்மீவிசும்பு திரிவோன் ....... தரும சக்கர முருட்டினன் வருவோன் எனவும் (மணிமே - 10 - 24 -6) நிலத்திற் குளித்து நெடுவிசும் பேறிச் சலத்திற் றிரியுமோர் சாரணன் தோன்ற எனவும் (மணி -24: 46-7) வருவனவற்றா லுணர்க. அறைந்தனர்: முற்றெச்சம். அறைந்து சாற்றும் என்க. அறைந்து சாற்றுதல் - கேட்போர் உளத்திற் பதியுமாறு கூறுதல். பிடக நூலோதி அறிவுறுத்தும் எனினுமாம். விகாரம் - அறங்கூறும் இடம். விகாரம் - கையாற் கருவியாற் பண்ணாது மனத்தால் நிருமித்தல் என்பாரு முளர். புகார் நகரத்தே புத்தசைத்திய மருங்கே ஏழு விகாரங்கள் இருந்தமையை,

பைந்தொடி தந்தை யுடனே பகவன்
இந்திர விகாரம் ஏழுமேத் துதலின்

எனவரும் மணிமேகலையானு முணர்க. (26-54-5)

ஐவகை நின்ற அருகத் தானம்

15 - 25 : புலவூண் ............... வலங்கொண்டு

(இதன்பொருள்:) புலவு ஊண் துறந்து பொய்யா விரதத்து அவலம் நீத்து அறிந்து அடங்கிய கொள்கை மெய் வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய - புலால் உணவைத் துவரக் கடிந்து பொய் கூறாமையாகிய நோன்போடு பொருந்தி அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் முதலிய இழுக்குகளை அறவொழித்துப் பொருள்களினியல்பை உள்ளவாறு ஆராய்ந்தறிந்து; பொறிகள் புலன்களின்பாற் செல்லாது அடங்குதற்குக் காரணமான கோட்பாட்டை யுடையராகி மெய்ப்பொருளினது வகையை யுணர்ந்த சீரியோர் குழுமியுறைதற் கிடனான; அருகத் தானத்து - அருகன் கோயின் மருங்கில்; ஐவகை நின்ற ஐந்து சந்தியும் தம்முடன் கூடிவந்து தலைமயங்கி - ஐந்து வகைப்பட்ட பரமேட்டிகளும் உறைதலாலே; ஐந்தாகிய சந்திகளும் ஒன்றுகூடி வந்து பொருந்தியிருக்கின்ற; வான் பெரு மன்றத்து - மிகவும் பெரியதாகிய மன்றத்திடத்தே; பொலம்பூம் பிண்டி நலம் கிளர் கொழுநிழல் - அருகன் ஆணையாலே பூக்கும் பொற்பூவையுடைய அசோகினது அழகு மிகுகின்ற வளமான நீழலின்கண்ணே; நீர் அணி விழவினும் நெடுந்தேர் விழவினும் - அருகக் கடவுளை நீரினால் திருமுழுக்காட்டி அழகு செய்கின்ற விழாக்காலத்தும் நெடிய தேரோடுதற் கியன்ற திருவிழாக் காலத்தும்; சாரணர் வருந்தகுதி உண்டு ஆம் என - அறமறிவுறுத்தும் சாரணர்கள் வரத்தகும் என்று கருதி; உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட - இல்லறத்தே நின்றே தமக்குக் கூறிய நோன்புகளைக் கடைப்பிடித் தொழுகுகின்ற சாவகர் எல்லாம் ஒருங்குகூடி அவர் வந்தக்கால் அமர்ந்திருந்து அறமுரைத்தற் பொருட்டு அமைத்திட்ட; ஒளி இலகு சிலாதலம் தொழுது வலங் கொண்டு - ஒளிமிக்குத் திகழா நின்ற சந்திரகாந்தக் கல்லாலியன்ற மேடையினை வலஞ்செய்து தொழுது சென்று என்க.

(விளக்கம்) 15 - சமண் சமயத்தார்க்குத் தலையாய அறம் கொல்லாமையே ஆகும் ஆதலின் கொலைக்குரிய காரணங்களிற்றலையாய புலவூண் துறத்தலை விதந்து முற்பட வோதினர். பவுத்தர்க்கும் கொல்லாமையே தலைசிறந்த அறமாயினும் அவர் விலையூன் உண்ணும் வழக்கமுடையவர் ஆதலின் அவர் திறத்தே கூறுதல் ஒழிந்து அடிகளார் ஈண்டு அவ்வறத்தினை விதந்தோதுவாராயினர் என்க.

16 - அவலம் - துன்பம்; துன்பத்திற்குக் காரணமான அழுக்காறு முதலியவற்றைக் குறித்து நின்றது. ஆகு பெயர். 17 - மெய்வகை யுணர்தலாவது - பொருள் தோறும் உலகத்தார் கற்பித்துக் கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து நின்ற உண்மையை யுணர்தல். இதனைக் காட்சி என்ப. இதனை,

மானொத்த நோக்கி மருந்தென்றவை மூன்றினுள்ளும்
ஞானத்தின் நன்மை கேட்குவை யாயினக்கால்
ஊனத்தை யின்றி யுயிராதிய உள்பொருள்கள்
தானற் குணர்தல் இதுவாம் அதன்தத்துவமே

எனவரும் நீலகேசியால் (117) அறிக. இவை காண்டல் முதலிய பல்வேறு அளவைகளால் அறியப்படுவன ஆதலின் மெய்யுணர்ந்த என்னாது மெய்வகை உணர்ந்த விழுமியோர் என்றார்.

விழுமியோர் - சீரியோர். அமண் சமயத்து ஐவகைச் சான்றோரும் தனித்தனி வாழும் ஐந்து தெருக்களும் வந்து கூடுமிடமாகலின் சந்தி ஐந்தும் தம்முடன் கூடிவந்து தலைமயங்கிய மன்றம் என்றார். ஐவகைச் சான்றோர் ஆவார், அருகர் சித்தர் ஆசாரியர் உபாத்தியாயர் சாதுக்கள் என்போர் என்க. வேதத்தின் பொருள் உணரப்படும் மன்றமாகலின் வான்பெருமன்றம் என்றார். பொலம்பூ - பொற்பூ; பொன் போன்றபூ அன்று. பொன்னேயாகிய பூ என்க. 22 - நீரணி விழவு - திருமுழுக்கு விழவு. அயனம்சங்கிரமம் புதுப்புனலாட்டு முதலியனவுமாம். சாரணர் - அறங்கூறிச் சமயம் பரப்பும் தொண்டு பூண்ட சான்றோர். உலக நோன்பிகள் - உலக வழக்கொடு பொருந்தி இல்லற மேற்கொண்டு சமயநெறிபற்றிய நோன்புகளையும் மேற்கொள்பவர். இவரைச் சாவக நோன்பிகள் என்பர். இலகு ஒளிச் சிலாதலம் என்றமையால் சந்திர காந்தக் கல்லாலியன்ற மேடை என்பது பெற்றாம்.

இடைகழி, இலவந்திகை காவிரி வாயில் கடைமுகம் முதலியவற்றைக் கடந்து போதல்

26 - 33 : மலைதலைக்கொண்ட ........... கடைமுகங் கழிந்து

(இதன்பொருள்:) மலைதலைக் கொண்ட பேர் யாறுபோலும் உலக இடை கழி ஒருங்கு உடன் நீங்கி - மலையிடத்தே தொடங்குமிடமாகிய தலையையுடையதொரு பேரியாறு போலும் உலகத்து மாந்தர் எல்லாரும் போக்குவரவு செய்தற்கமைந்த ஊர்ப்பொது வாயிலை அக்காலத்தே போவாரொடு கலந்து போய் அதனையும் விட்டு நீங்கி; கலையிலாளன் மன்னவற்கு காமர் வேனிலொடு மலய மாருதம் இறுக்கும் - உருவமிலியாகிய காமவேள் என்னும் குறுநிலமன்னன் முடிமன்னனாகிய சோழ மன்னனுக்கு யாண்டு தோறும் செலுத்தக்கடவ இறைப் பொருளாகிய வேனிற் பருவத்தையும் தனது பொதியிலிடத்துப் பிறக்கின்ற இளந்தென்றலையும் கொணர்ந்து செலுத்துமிடமாகிய; பல்மலர் அடுக்கிய நல்மரப்பந்தர் இலவந்திகையின் எழில்புறம் போகி - பல்வேறு மலர்களையும் நாள்தோறும் அடுக்கித் தளம் படுக்கப்பட்ட அழகிய மரநிழலையுடைய இலவந்திகை எனப்படும் அரசனும் உரிமையும் ஆடுதற்கியன்ற இளவேனில் மலர்ப்பூம் பொழிலினது மதிற்புறத்திலே போய்; காவிரித் தண்பதத் தாழ் பொழில் உடுத்த பெருவழி வாயில் கடைமுகம் கழிந்து - காவிரிப் பேரியாற்றின்கண் மாந்தர் நீராட்டுவிழவிற்குச் செல்லுதற்கியன்ற இருமருங்கும் தழைத்துத் தாழ்ந்துள்ள பூ மரச்சோலை சூழ்ந்த பெரிய வழிமேற் சென்று நீராட்டு வாயிலாகிய திருமுகத்துறை யிடத்தையும் கடந்து போய்; என்க.

(விளக்கம்) கங்கையும் காவிரியும் போன்ற பேரியாறுகள் மலையிடத்தே தோன்றுவனவாம். உலகவிடை கழியாகிய பெருவழிக்கு அத்தகைய ஆறு உவமை. உலக இடைகழி உலகத்து மாந்தர்க்குப் பொதுவாகிய ஊர்வாயில் நகர்க்கு இடையே கழிந்து ஊர்ப்புறத்தே விடுதலின் அப் பெயர்த்தாயிற்று. இல்வாயில் அரண்மனையினது கோபுர வாயிலினின்றும் புறப்பட்டு இருமருங்கும் நிரல்பட்ட மாட மாளிகையினிடையே சென்று நகர்க்குப் புறத்தே வெளியிற் கலத்தலின் மலையிடைத் தோன்றி அலைகடலிலே கலக்கும் பேரியாற்றை உவமை கொள்வதாயிற்று.

28. கலை - உடம்பு - அஃதிலாதான் ; (அநங்கன்) காமவேள் என்க. சோழமன்னன் எல்லாப் பருவங்களையும் ஆள்பவனாதலின் அவற்றுள் ஒன்றாகிய வேனிலை யாளுமரசனாகிய காமவேள் அவனுக்குத் திறை செலுத்தும் குறுநில மன்னனாயினன் என்க. காமவேள்  அப்பருவத்தையும் அதன்கண் விளையும் தென்றலையும் கொணர்ந்து திறையாக இறுக்கும் இடமாகிய இலவந்திகை என்க இலவந்திகை நீர் நிலையாற் சூழப்பட்ட பூம் பொழில். இது சோழமன்னன் உரிமையோடு இளவேனிலின்பத்தையும் தென்றல் இன்பத்தையும் நுகர்ந்து விளையாடுமிடமாகலின் அடிகளார் இத்துணை அழகாக இயம்புகின்றனர். அரசனும் உரிமையு மாடு மிடமாகலின் மதில் சூழ்ந்த இடமாயிற்று. இலவந்திகையின் எயிற்புறம் போகின் உலக மன்னவன் உழையோர் ஆங்குளர் என மணிமேகலையினும் (3 : 45 - 6) கூறப்படுதலுணர்க.

32 - தழைத்துத் தாழ்ந்த பொழில் என்க. தண்பதப் பெருவழி காவிரியில் நீராடற்குச் செல்லும் பொருட்டு அமைக்கப்பட்ட பெருவழி என்க. அமைக்கப்பட்டதாகலின் இருமருங்கும் அழகிய பூம்பொழிலும் உடைத்தாயிற்று. 33 - காவிரி வாயில் - காவிரியில் இறங்கு துறை. முகக்கடை என்பது கடைமுகம் என முன்பின் மாறி நின்றது.

இனி கடைமுகம் கழிந்தென்றார்; காலையில் நாள் நீராடுவோர் பிறர் முகநோக்காது போதற்கு மறைந்து கழிவர்; இவரும் அவ்வாறு கழிந்தாரென்றற்கு; என்பர் அடியார்க்கு நல்லார். எனவே, கோவலன் கண்ணகியோடு உறுகணாளர் போன்று போதற்கு நாணிப் பிறர் காணாமைப்பொருட்டுக் காரிருள் நின்ற கடைநாட் கங்குலில் ஆண்டுச் செல்வோர் தம்முகம் நோக்கலில்லாத தண்பதப் பெருவழியே சென்று காவிரியின் நீராடுதுறையிடத்தையும் நடந்தான் என்பது கருத்தாயிற்றென்க

காவதங் கடக்கு முன்னரே கண்ணகி மதுரைமூதூர் யாதென வினவுதல்

34 - 43 : குடதிசைக் கொண்டு ........... நக்கு

(இதன்பொருள்:) குடதிசைக் கொண்டு கொழும்புனல் காவிரி வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து - அப்பால் மேற்றிசையை நோக்கிச் செல்லுதலை மேற்கொண்டு வளவிய நீரையுடைய காவிரியானது பெரிய வடகரைக் கண்ணதாகிய மலர்ந்த பெரிய பொழிலினூடே நுழைந்துபோய்; காவதம் கடந்து - ஒரு காவதத் தொலைவழியை நடந்துபோய்; பூமரப் பொதும்பர் கவுந்திப்பள்ளி பொருந்தி ஆங்கண் - மலர் நிறைந்த சோலையினூடே யமைந்த கவுந்தியடிகளார் உறைகின்ற தவப்பள்ளியை எய்திய பொழுது அவ்விடத்தே; நறும்பல் கூந்தல் இறும்கொடி நுசுப்போடு அடி இனைந்து வருந்தி குறும்பல வுயிர்த்து - நறிய ஐவகைக் கூந்தலையுடைய கண்ணகிதானும் இனி இது முரியும் எனத் தகுந்த கொடிபோலும் நுண்ணிடையும் மெல்லடிகளும் வழிநடை வருத்தத்தால் மிகவும் வருந்தாநிற்றலாலே இளைப்புற்றுக் குறிதாகப் பன்முறை உயிர்த்து; முள் எயிறு இலங்க முதிராக் கிளவியின் மதுரை மூதூர் யாது என வினவ - கோவலனை நோக்கித் தன் முட்கள் போன்று கூர்த்த எயிறுகள் விளங்கும்படி தனது பவளவாய் திறந்து பெரும! உதோ எதிர் தோன்றுகின்ற ஊர்களுள் வைத்து மதுரை என்னும் அப்பழைய ஊர்தான் யாதோ? என்று தனது பெண்மைப் பண்புதோன்ற வினவாநிற்ப; நாறு ஐங்கூந்தல் நம் அகல் நாட்டு உம்பர் ஆறு ஐங் நாதம் நணித்து என நக்கு - அதுகேட்ட கோவலன் அவட்குப் பெரிதும் இரங்கி நாறைங் கூந்தலையுடையோய் நந்தம் அகன்ற சோழநாட்டிற்கு அப்பால் ஆறைங் காவதமேகாண்! அம்மதுரை இனி அணித்தேயாம் என்று கூறிநகைத்து; என்க.

(விளக்கம்) 34 - குடதிசை நோக்கிப் போதலை மேற்கொண்டு போந்து என்க. வான் பொய்ப்பினும் தான் பொய்யாது புனல் பரந்து பொன்கொழிக்கும் ஆதலின் கொழும்புனற் காவிரி என்றார். மலர்ப்பொழில் உளவாதற்கேற்ற கோடுஆதல் தோன்றப் பெருங்கோடு என்றார். மலர்ப் பொழிலின் வளந்தோன்ற நுழைந்து காவதங் கடந்து என்றார். காவதமளவும் மலர்ப்பொழில் நுழைந்தே கடந்தனர் என்க. காவதம் - ஒரு நீட்டலளவை. இறும் நுசுப்பு கொடி நுசுப்பு எனத் தனித்தனி கூட்டுக. காண்போர் இஃது இப்பொழுதே இறும் என்றிரங்குதற்குக் காரணமான நுண்ணுசுப்பு என்றவாறு. நுசுப்பும் அடியும் இணைந்து வருந்தி என்க. வருத்தத்தின் மிகுதி தோன்ற இணைந்து வருந்தி என மீமிசைச் சொல்லாலோதினர். நுசுப்புத் துவண்டியை அடி கொப்புளங்கொண்டு வருந்த எனினுமாம். இனைய வருந்த எனத் திரித்துக் கொள்க. நறும்பல் கூந்தல்: அன்மொழித் தொகை. இளைபுற்றுக் குறும்பல வுயிர்த்து என்க. பல உயிர்த்து - பலவாகிய உயிர்ப்புக்களை உயிர்த்து. தனது வருந்தந் தோன்றாமைப் பொருட்டு வினவுங்கால் சிறிது புன்முறுவலுடன் இனிதாக வினவினள் என்பது தோன்ற முள்ளெயிறு இலங்க எனவும் தனக்கியல்பான முதிராக் கிளவியின் எனவும் விதந்தோதினர்.

கண்ணகி தனது பேதைமைகாரணமாக எதிரே தோன்றும் ஊர்களுள் வைத்து மதுரை மூதூர் ஒன்றாதல் கூடும் என்று வினவிய படியாம். இவ்வினாவைக் கேட்ட கோவலன் துயரம் கடலளவு பெருகியிருக்கும் என்பது கூறவேண்டா; அப் பெருந்துன்பத்தை அவளறியாமல் மறைப்பான் நகைத்தனன் என்க. என்னை? அதனை அடுத்தூர்தற்கும் அந்நகையே யன்றிப் பிறி தொன்றுமில்லையாகலின் என்க. ஈண்டு,

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்  (குறள் - 621)

எனவரும் அருமைத் திருக்குறளையும் நினைக. ஆறைங்காதம் என்றது அவட்கு ஐந்தாறு காதம் என்றாற்போல அண்ணிதெனத் தோன்றற் பொருட்டு என்க.

கவுந்தியடிகளாரைக் கண்டடி தொழுதல்

44 - 49 : தேமொழி ............... கருதியவாறென

(இதன்பொருள்:) தேமொழி தன்னொடும் - அங்ஙனம் வினவிய இனிய மொழியையுடைய அக் கண்ணகியோடும் கோவலன் அப் பூமரச் சோலையினூடே புகுந்து; சிறை அகத்து இருந்த காவுந்தி அடியையைக் கண்டு அடி தொழலும் - தவவொழுக்கமாகிய சிறைக் கோட்டத்தினுள் அடங்கி ஆங்கண் பள்ளிக்கண்ணிருந்த கவுந்தியடிகளாரைக் கண்டு அவருடைய திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி நிற்ப; உருவும் குலனும் உயிர்பேரொழுக்கமும் பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையீர் - அழகும் உயர்குடிப் பிறப்பும் நல்லொழுக்கமும் அருகக் கடவுள் திருவாய்மலர்ந்தருளிய மெய்ந்நூலிற் கூறப்பட்ட நோன்புகளிற் பிறழாமையும் ஆகிய இவற்றையெல்லாம் ஒருதலையாக உடைய மேன்மக்களாகிய நீவிர்; உறுகணாளரின் கடை கழிந்து இங்ஙனம் கருதிய ஆறு என்னோ - தீவினையாளர் போன்று நுங்கள் இல்லந்துறந்து இவ்வாறு வருதற்குக் காரணந்தான் யாதோ? என்று அவர் நிலைக்குப் பரிந்து வினவாநிற்ப; என்க.

(விளக்கம்) 44. சிறை - தவவேலி என்னும் அடியார்க்கு நல்லார் உரை ஆற்றவும் இனிதாம். இனித் தவப்பள்ளியிடத்தே யிருந்த எனினுமாம். 45 - காவுந்தி; நீட்டல் விகாரம். ஐயை - ஐயன் என்பதன் பெண்பாற் சொல் - தலைவி என்னும் பொருட்டு.

இனி, கவுந்தியடிகளார் இவரை முன்னர் அறிந்தவரல்லர். அங்ஙனமாகவும், இவர் கோலனையும் கண்ணகியையும் நோக்கிய அளவானே அவர் உருவும் குலனும் உயர் பேரொழுக்கமும் திருமொழி பிறழா நோன்பும் உடைய கொழுங்குடிச் செல்வர் மக்களாவார் என்னும் உண்மைகளை அவ்விருவருடைய மெய்ப்பாடுகளைக் கண்டே ஊகத்தாலறிந்து கூறியவாறாம். இங்ஙனமன்றி இக்கவுந்தியடிகளார் தமது தவ முதிர்ச்சியினாலே முக்காலமும் அறிந்து கூறினார் அல்லர். அடியார்க்கு நல்லார்க்கும் இதுவே கருத்தாதல் பின்னர்க் காட்டுவாம்.

உடைமை குலம் ஒழுக்கம் என்னும் இவற்றிற்கும் இன்னோரன்ன பிறபண்புகட்கும் மெய்ப்பாடுண்டு என்பதனை ஆசிரியர் தொல்காப்பியனார் மெய்ப்பாட்டியலின்கண் (12) ஆங்கவை ஒருபாலாக ...... அவையலங் கடையே என அறிவுறுத்த நூற்பாவானும் உணர்க.

48. உறுகணாளர் - பிறவுயிர்க்குத் துன்பஞ் செய்யும் தீவினையாளர். இனி, இதற்கு மிடியாளர் என்பது பொருளாயினும் அப்பொருள் ஈண்டுச் சிறவாமை நுண்ணுணர்வாற் கண்டு கொள்க. கடை கழிந்து இவ்வாறு வரக் கருதியவாறு என்க.

கோவலன் விடை

50 - 51 : உரையாட்டில்லை ......... வேட்கையேன்

(இதன்பொருள்:) உறுதவத்தீர் உரையாட்டு இல்லை - மிக்க தவத்தையுடைய பெரியீர்! தங்கள் வினாவிற்கு மறுமொழி கூறும் நிலையில் யான் இப்பொழுது இல்லை. ஆயினும்; அவ் வினாத் திறத்திலே யான் கூறற்பாலதும் ஒன்றுண்டு, அஃதியாதெனின், யான் மதுரைமூதூர் வரை பொருள் வேட்கையேன் - யான் மதுரையாகிய பழைய நகரத்தே சென்று எங் குலத்தார்க்கு நூல்களில் விதிக்கப்பட்ட வாணிகத் தொழிலைச் செய்து பொருளீட்ட வேண்டும் என்னும் வேட்கையை உடையேன் ஆதலின், இங்ஙனம் வர நேர்ந்தது என்பதேயாம் என்று கூறாநிற்ப; என்க.

(விளக்கம்) உருவு முதலிய சிறப்பினையுடையீர் உறுகணாளர் போன்று கடைகழிந்து வரக் கருதியதற்குக் காரணம் என்னையோ? என்று வினவிய அடிகளார்க்குக் கோவலன் நேரிய விடை கூறவேண்டின், சலம்புணர் கொள்கைச் சலதியோடாடிக் குலந்தரு வான்பொருட் குன்றம் தொல்லைத்தேன் அவ்விலம்பாடு நாணுத்தரும் ஆதலின், மதுரை மூதூர் சென்று உலந்த பொருளீட்டும் வேட்கையேன், ஆதலின், இவ்வாறு வந்தேன் என்றே கூறவேண்டும். ஆயினும், அவற்றை அவர்க்குக் கூறுவது மிகையும் நாணுத் தருவதும் பயனில கூறலும் ஆதல் பற்றி உரையாட்டில்லை என்னும் ஒரு சொல்லினுள் அவற்றை யெல்லாம் திறம்பட அடக்கிச் சொல்லற் பாலதாகிய காரணத்தை மட்டும் கூறுகின்ற தன்மை அவன் நுண்ணறிவைப் புலப்படுத்துதல் காண்க.

கவுந்தியடிகளின் பரிவுரைகள்

52 - 61 : பாடகச்சீறடி ............... கைதொழுதேத்தி

(இதன்பொருள்:) இவள் பாடகச் சீறடி பரல்பகை உழவா - அது கேட்ட அடிகளார் கண்ணகியைக் கூர்ந்து நோக்கியவராய் இவளுடைய மெல்லிய சிறிய அடிகள் தம்மை உறுத்துகின்ற பருக்கைக் கற்களாகிய பகை செய்யும் துன்பத்தைப் பொறுக்கமாட்டாவே! காடு இடை இட்ட நாடு - நீயிர் செல்லக் கருதிய மதுரைக்குச் செல்லும் வழியோ எனின் செல்லுதற்கரிய காடும் நாடும் இடையிட்ட நெடுவழியாகும்; இவள் செவ்வி நீர் கடத்தற்கு அரிது - இவளுடைய தன்மையை நோக்கின் அவற்றைக் கடத்தற்கு அஃது ஏற்றதன்று ஆதலால் நீங்கள் கடத்தல் அரிதேயாம்; உரியது அன்று ஈங்கு ஒழிக என ஒழியீர் - அதுவேயுமன்றி நுங்கள் குடிப்பிறப்பிற்கும் இச்செலவு உரியதாகாது இவ்வளவோடு இச்செலவினை ஒழிமின் என்று யாம் ஒழிப்பவும் ஒழிகின்றிலீர் ஆகவே; அறிகுநர் யார் - இனி நுங்கட்கியன்ற ஊழ்வினை என் செய்யுமோ? அதனை யாரே அறியவல்லுநர்; அது நிற்க; மறவுரை நீத்த மாசு அறு கேள்வியர் அறவுரை கேட்டு ஆங்கு அறிவனை ஏத்த - அழுக்காறு அவா வெகுளியாகிய இவற்றோடு இவற்றின் காரியமாகிய இன்னாச் சொல்லையும் துவர நீத்த சிறப்போடு மனத்தின் மாசு அறுதற்குக் காரணமான அருகன் அருளிச்செய்த மெய்ந்நூற் கேள்வியையுமுடைய சான்றோரை அடுத்து அவர்பால் அறவுரைகளைக் கேட்டுணர்ந்து அவ்வுணர்ச்சிக்குத் தகநின்று வாலறிவனாகிய இறைவனை வழிபாடு செய்தற் பொருட்டு; யானும் தென் தமிழ்நாட்டுத் தீதுதீர் மதுரைக்கு ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின் யானும் தெற்கின் கண்ணதாகிய தமிழ்நாட்டின் தலைநகரமாய்த் தன்கண் வருவார் தம் வினையைத் தீர்க்குந் தெய்வத் தன்மையுடைய அம் மதுரைமாநகர்க்குப் போதல் வேண்டும் என முன்னரே ஒருப்பட்ட உள்ளம் உடையேனாதலாலே; போதுவல் என்ற -யானும் வருகின்றேன் நீயிரும் வம்மின் என்றருளிச் செய்த; காவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி - கவுந்தி யடிகளைக் கைகூப்பித் தொழுது நாவால் வாழ்த்தி; என்க.

(விளக்கம்) 52. மதுரைக்குச் செல்வதெங் கருத்தென்ற கோவலன் சொற்கேட்டு அடிகளார் வழியினதருமையும் கண்ணகியின் மென்மையும் கருதிக் கூறுகின்றார். பாடகம் - ஒருவகைக் காலணி. சீறடி பெரிதும் மெல்லியன ஆதலின் பரற்பகை உழவா என்றவாறு. பரல் துன்புறுத்துவன வாகலின் பரற்பகை உழவா என்றவாறு. பரல் துன்புறுத்துவன வாகலின் பகை என்றார். காடு செல்லுதற்கரிய காடு என்பதுபட நின்றது. இவள் செவ்வி கழிதற்கு ஏற்றதன்றாகலின் கழிதல் அரிது என்க. 54-5. உரியதன்றீங் கொழிகென வொழியீர் ஆதலின், இஃது ஊழினது செயலாதல் வேண்டும் அது யாது செய்யுமோ யார் அறியவல்லுநர் என்றிரங்கியபடியாம்.

56. மறவுரை - இன்னாச் சொல். அதனை நீத்த எனவே அதற்கு முதலாகிய அழுக்காறு அவா வெகுளி யாகியவற்றையும் நீத்தமை கூற வேண்டாவாயிற்று. மாசு - மனமாசு. அல்லது ஐயமும் திரிபுமாகிய குற்றங்கள் தீர்ந்த மெய்க் கேள்வியர் எனினுமாம். 57. அறிவன்-அருகன். 58. தெற்கின் கண்ணதாகிய தமிழ் வழங்கும் நல்ல நாட்டுத் தலைநகரமாகிய மதுரை, தீது தீர் மதுரை எனத் தனித்தனி கூட்டுக. கோவலன் கண்ணகியாகிய இருவருடைய பழவினைகள் தீர்தற்கு இடனான மதுரை எனவும் ஒரு பொருள் தோன்றி, தீதுதீர் மதுரை என்பது வாய்ப்புள்ளாகவும் அமைந்தமை யுணர்க.

கோவலன் மகிழ்ச்சி

62-63 : அடிகள் .................. என

(இதன்பொருள்:) அடிகள் நீரே அருளுதிர் ஆயின் - அடிகளே நீரே இவ்வாறு எமக்கு வழித்துணையாதற் கமைந்து அருளிச் செய்வீராயின்; இத் தொடி வளைத் தோளி துயர் தீர்த்தேன் என - இவ் வளையலணிந்த தோளையுடையாளுடைய துயரெல்லாம் இப்பொழுதே தீர்த்தேனாயினேனன்றோ! என்று மகிழ்ந்து கூறாநிற்ப என்க.

(விளக்கம்) இங்ஙனம் சிறந்ததொரு வழித்துணை பெறாதவழித்தன் பொருட்டு அவளும் அவள் பொருட்டுத் தானுமாக வழி நெடுக வருந்துவதன்றி மகிழ்தற்கிட னின்மையால் அதுபற்றிப் பெரிதும் தன்னுட் கவன்றிருந்த கோவலன் அடிகளார் வழித்துணையாக யானும் போதுவல் போதுமின் என்றருளக் கேட்டவுடன் அத்துன்பச் சுமையெலாம் ஒருங்கே வீழ்த்தி அயாவுயிர்த்துக் கூறும் இம்மொழிகள் பெரிதும் இயற்கை நவிற்சியாய் இன்புறுத்துதல் உணர்க. அடிகள் வழித் துணையாகும் பேறு தாம் வருந்தியும் பெறற்கரிய தொரு பேறாகலின் அத்தகைய பேற்றினை அவரே எளிவந்தருளிய அருமையைப் பாராட்டுவான் அடிகள் நீரே அருளுதிராயின் என்பது யாம் வேண்டியும் பெறற்கரிய தொன்றனை எமக்கு எளி வந்து அருளுதிராயின் என்பதுபட நின்றது. வழித்துணையினும் மிகச் சிறந்த துணை பெற்றேம் என்பது தோன்ற அடிகள் என்றான். தீர்த்தேன் : தெளிவு பற்றி எதிர்காலம் இறந்த காலமாயிற்று.

நீயிரே இது செய்வீராயின் என்றது ஒரு வழக்கு என்றார் அடியார்க்கு நல்லார்.

கவுந்தியடிகள் வழியினது ஏதங் கூறுதல்

64 - 75 : கோவலன் ............ பகை யுறுக்கும்

(இதன்பொருள்:) கோவலன் கொண்ட இந் நெறிக்கு யாங்கும் ஏதம் தருவன பல காணாய் கேண்மோ - அதுகேட்ட அடிகளார் கோவலனைப் பரிந்து நோக்கிக் கோவலனே யாம் போவதாக வுட்கொண்ட இக் காவிரியின் வடகரையாகிய இவ்வழியின்கண் செல்வார்க்கு வருத்தம் தருவன எவ்விடத்தும் பலவுள்ளன அவற்றை நீயறியாய் ஆதலின் யான் கூறுவல் கேட்பாயாக; வெயில் நிறம் பொறா மெல்லியல் கொண்டு பூ பயில் தண்தலை படர்குவம் எனின் - வெயிலினது வெப்பத்தைப் பொறுக்கமாட்டாத தளிர் நிறத்தையுடைய மெல்லியல்பு வாய்ந்த இவளை அழைத்துக்கொண்டு அவ் வெயில் நுழையாத மலர்கள் மிக்க இவ் வடகரைப் பொழிலினூடே புகுந்கு செல்குவேம் என்பாயாயின்; மண்பக வீழ்ந்த கிழங்கு அகழ் குழியைச் சண்பகம் நிறைத்த தாது சோர் பொங்கர் - அவ்விடத்தே நிலம் பிளக்கும்படி இடங் கொண்டு வீழ்ந்த வள்ளிக்கிழங்கை அகழ்ந்து கொண்ட குழிகளைச் சண்பக மரங்களினின்றும் உதிர்ந்து நிரப்பிய பூந்துகள் உகுகின்ற பழம் பூக்கள்; பொய் அறைப் படுத்து - பொய்க் குழிப்படுத்து; போற்றா மாக்கட்கு - அவற்றை அறிந்து தம்மைக் காவாது இயங்குகின்ற மாக்களுக்கு; கையறு துன்பம் காட்டினும் காட்டும் பின்பு செயலறுதற்குக் காரணமான பெருந்துன்பத்தைத் தோற்றுவித்தல் செய்யினும் செய்யும்காண்! உதிர்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர் முதிர் தேம் பழம் பகை முட்டினும் முட்டும் - அவ்வாறு துன்பந்தரும் உதிர்ந்த பழம்பூவினாலியன்ற பொய்க்குழியை மிதியாமைப் பொருட்டு நிலனோக்கி விழிப்புடன் செல்வோரை முதிர்ந்து தேனொழுகும் பலாப்பழங்கள் அவரெதிர் கோட்டின்கண் தூங்குவன பகைபோலத் தலையின்கண் மோதினும் மோதும்; மஞ்சளும் இஞ்சியும் மயங்கு அரில் வலயத்து பலவின் செஞ்சுளை பரல் பகை உறுக்கும் - இனி அவற்றிற்கஞ்சி வெள்ளிடைப் போவோமாயின் ஆங்கு மஞ்சள் இஞ்சி முதலியவை தம்முட் டறைலமயங்கிய தோட்டங்களிற் பாத்திதோறும் சருகின் மறைந்துள்ள அவற்றின் வன்முளைகளும் அத்தோட்டத் தொழிலாளர் தின்று கழித்த பலாவினது சிவந்த சுளையின்கண்ணவாகிய காழாகிய பருக்கைகளும் இவள் மெல்லடிக்குப் பகையாய் உறுத்தினும் உறுத்தும் என்றார் என்க.

(விளக்கம்) 64 - கோவலன்; விளி. காணாய் என்றது நீ முன்னர் இவ்வழியிற் சென்றிராய் ஆதலின் கண்டிராய் என்பதுபட நின்றது. இந் நெறி என்றது முன்னர் (35) வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து காவதம் கடந்து, என்றமையால் வடகரை வழிஎன்பது பெற்றாம்.

66-7. வெயிலைத் தனது நிறம் பொறாமைக்குக் காரணமான இம்மெல்லியல் என்க. நிறம் - திருமேனி. வெயில் நிறம் பொறாமெல்லியல் என்றது பயில் பூந்தண்டலைப் படர்தற்குக் குறிப்பேதுவாய் நின்றது. 89 - பொங்கர் - பழம்பூ. அஃதப் பொருட்டென்பது (72) உதிர்பூஞ் செம்மலின் என்பதனாலும் பெறுதும். குழியின் பெருமை தோன்ற (68) மண்பக வீழ்ந்த கிழங்கு அகழ்குழி என்றார். குழியை நிறைத்த பொங்கர், தாதுசோர் பொங்கர், சண்பகப் பொங்கர் எனத் தனித்தனி கூட்டுக. பொய்யறைப்படுத்து - மேலே மறைக்கப்பட்டு உட்பொய்யாகிய குழி. கையறுதுன்பம் - செயலறுதற்குக் காரணமான பெருந்துன்பம் - அவையாவன கான் முரிதல் முதலியன. காட்டுதல் - காணச்செய்தல். (72) செம்மல் - பழம்பூ (வாடியுதிர்ந்த பூ.) 73. முதிர் தேம்பழம் - முற்றிய இனிய தெங்கம் பழம் எனினுமாம். முட்டினும் முட்டுவர் என்னும் பாடத்திற்கு, கழிவோரை வினை முதலாகக் கொள்க. மஞ்சள் இஞ்சி முதலிவற்றின் வன்முளைகளும் பலவின் பரலும் உறுத்தும் என்றவாறு. அரில் - பிணக்கம். வலயம் - பாத்திகள். பாத்திகளில் தொழில் செய்வோர் பலவின் செஞ்சுளையைத் தின்று கழித்துப் போகட்ட பரல் என்க. பரல் - ஈண்டுக் காழ். உறுத்தும் என்றமையால் அடிகளை உறுத்தும் எனவும் அடியினது மென்மைக்கு இவற்றின் வன்மை முரணாகலின் அவற்றைப் பகை என்றும் ஓதினர். 

இதுவுமது

76 - 81 : கயனெடுங் ............. காரிகை

(இதன்பொருள்:) கயல் நெடுங் கண்ணி கேள்வ - கயல்போலும் நெடிய கண்களையுடைய இப் பெருந்தகைப் பெண்ணாற் காதலிக்கப்பட்ட கேள்வனே இன்னும் கேட்பாயாக! வயலுழைப் படர்குவம் எனின் - இத் துன்பங்கட்கு அஞ்சி இவ்வழியை விடுத்து வயல் வழியே போகக்கடவேம் என்பேமாயின்; ஆங்குப் பூநாறு இலஞ்சி நீர்நாய் பொருகயல் ஓட்டிக் கௌவிய நெடும் புற வாளை மலங்கு மிளிர் செறுவின் விலங்கப் பாயின் - அவ்வழியிடத்தும் மருங்கிலுள்ள தாமரை முதலிய மலர்மணங் கமழா நின்ற குளங்களிலே மீன் வேட்டமாடுகின்ற நீர்நாயானது தம்முள்ளே போரிடுகின்ற கயல்மீன்கள் அஞ்சியோடும்படி ஓட்டித் தன் வாயாற் கௌவிய நெடிய முதுகையுடைய வாளைமீன் அதன் வாயினடங்காமற் றுள்ளி அயலிலுள்ள மலங்குகள் பிறழ்ந்து மிளிருகின்ற கழனியின்கண் நாம் செல்லும் வழிக்குக் குறுக்காகப் பாயுமாயின்; இக்காரிகை கலங்கலும் உண்டு - இவள் நெஞ்சம் துணுக்குற்றுக் கலங்குதலும் உளதாம் என்றார் என்க.

(விளக்கம்) 76. கண்ணகியின் பெருந்தகைப் பண்பெல்லாம் அவள் அழகிய கண்களிடத்தே மெய்ப்பாடாகத் தோன்றுதலாலே இத்தகைய சிறப்புடைய குலமகளாலே காதலிக்கப்பட்டமையே கோவலனுக்குப் பெரும் பேறாம் என்பது கருதி அடிகளார் வாளா கோவலன் என விளியாது கயல் நெடுங்கண்ணி காதற் கேள்வ! என்று விதந்து விளித்தனர். 78. தம்முட் போரிடுங் கயல் மீன்கள் வெருவி ஓட ஒட்டி என்க. 79. நீர் நாய்-நீரினும் நிலத்தினும் வாழும் ஒருவகை விலங்கு. இது நீரின் கண் வாழும் உயிரினங்களை வேட்டமாடி உயிரோம்புதல் பற்றி நீர் நாய் எனப்பட்டது போலும். இஃதுருவத்தாற் கீரியைப் போல்வதாம். இது மீன்களுள் வைத்து வாளை மீனையே பெரிதும் விரும்பி வேட்டமாடும் போலும், ஆதலால் சங்க நூல்களுள், வாளை மேய்ந்த வல்ளெயிற்று நீர் நாய் எனவும் (அகம்-9) நாளிரை தரீஇய எழுந்த நீர் நாய் வாளையோ டுழப்ப எனவும், (அகம் - 336) பொய்கை நீர்நாய் புலவுநா றிரும்போத்து வாளை நாளிரை தேரும் எனவும் (அகம் - 389) ஒண் செங்குரலித் தண்கயங் கலங்கி வாளைநீர்நாய் பெறூஉம் எனவும் (புறம் - 264) வரிப்புற நீர்நாய் வாளை நாளிரை பெறூஉ மூரன் எனவும், (குறுந்தொகை - 364) பிற சான்றோரும் ஓதுதலறிக. 80. மலங்கு - ஒருவகை மீன்; பாம்பு போன்ற வுருவமுடையது. இக்காரிகை என்றது கண்ணகியை. (77 - 81) இதனாற் கூறியது அச்சம் என்னும் பெண்மைப் பண்பு மிக்க இக்காரிகை மீனிரை தேரும் நீர்நாய் காணினும் தம்முட் பொருங்கயல்கள் உகளக் காணினும் வாளை பாயக்காணினும் மலங்கு மிளிரக் காணினும் பெரிதும் அஞ்சி நெஞ்சங் கலங்குவள் என்பதாம்.

இதுவுமது

81 - 85 : ஆங்கண் ............ கொள்ளவுங் கூடும்

(இதன்பொருள்:) ஆங்கண் கரும்பின் தொடுத்த பெருந்தேன் சிதைந்து சுரும்பு சூழ் பொய்கைத் தூநீர் கலக்கும் - அஃதன்றியும் அவ்விடத்தே வளர்ந்துள்ள கரும்பின்கண் வண்டுகள் இழைத்துள்ள பெரிய தேனடைகள் காற்றினாலே சிதைவுற்றுழி அவற்றின் கண்ணுள்ள தேன் ஒழுகி வண்டுகள் சூழ்தற்குக் காரணமான தாமரை முதலியவற்றையுடைய நீர்நிலையினது தூய நீரோடு சென்று கலந்துவிடும்; அடங்கா வேட்கையின் அறிவு அஞர் எய்தி குடங்கையின் நொண்டு கொள்ளவும் கூடும் - ஆதலான் அதனை அறியாமல் தணியாத நீர் வேட்கையால் நீயிர் நுமது குடங்கையான் முகந்துகொண்டு பருகவும் கூடும்; என்றார் என்க.

(விளக்கம்) கரும்பலாற் காடொன்றில்லாக் கழனி சூழ் வழியாகலின் 82 - கரும்பிற் றொடுத்த பெருந்தேன் என்றார். தேன் : ஆகு பெயர்; தேனடை. தேனடை சிதைந்துழி அதன்கண்ணுள்ள தேன் ஒழுகித் தூநீர்க்கலக்கும் என்றவாறு. குடங்கையின் நொண்டு கொள்ளல் இருவர்க்கும் ஒக்குமாகலின், பழையவுரையில், இவள்.... பருகவும் கூடும் எனக் கூறியது பொருந்தாது. சமண் சமயத் துறவியாகிய அடிகளார் அச்சமய நூலுள் தேன் உண்ணல் கடியப்பட்டமையின். அறியாமையால் நும்மால் நீரென்று அதனொடு கலந்ததேன் உண்ணப்படும் ஆதலால் அஃதோர் ஏதம் என்று அறிவித்த படியாம். அச்சமயத்தார் தேன் உண்டல் கூடாதென்பதனை,

பெருகிய கொலையும் பொய்யுங் களவொடு பிறன்மனைக்கண்
தெரிவிலாச் செலவுஞ் சிந்தை பொருள்வயிற் றிருகும் பற்றும்
மருவிய மனத்து மீட்சி வதமிவை யைந்தோ டொன்றி
ஒருவின புலைசு தேன்கள் ஒழிகுத லொழுக்க மென்றான்

எனவரும் யசோதரகாவியத்தானும், (236)

தேனைக் கொலைக் கொப்ப தென்றாய் நமஸ்தே

எனவரும் தோத்திரத்திரட்டு முதலியவற்றாலு முணர்க. மேல்வருவனவற்றிற்கும் இஃதொக்கும்.

அறிவஞர் எய்தி - அறிவு மயங்கி. 86. குடங்கை - ஐந்து விரலுங் கூட்டி உட்குழிக்கப்பட்ட கை. நொள் என்னும் முதனிலையிற் பிறந்த நொண்டு என்னும் எச்சம் முகந்து என்னும் பொருட்டு. இது மொள்; மொண்டு எனவும் வழங்கும்.

இதுவுமது

86 - 93 : குறுநரிட்ட ......... ஒண்ணா

(இதன்பொருள்:) குறுநர் இட்ட குவளைஅம் போதொடு பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை - கழனிகளிற் களைபறிப்பார் பறித்து வரம்பிலிட்ட குவளைப்பூவுடனே புள்ளிகளையும் வரிகளையும் உடைய வண்டினம் மதுவுண்ட மயக்கத்தாலே போகவறியாமல் அப்பூவுள் ளொடுங்கிக் கிடக்கின்ற கிடக்கையை; நீர் நெறி செல் வருத்தத்து அஞர் எய்தி அறியாது ஆங்கு அடியிடுதலும் கூடும் - நீவிர் வழிநடந்ததனாலுண்டான துன்பம் காரணமாக உணர்வு மயங்கி அறியாமல் அவற்றின்மேல் அடியிடவும் கூடும்; அன்றியும்; எறிநீர் அடைகரை இயக்கந் தன்னின் -யாம் அலை எறிகின்ற நீரையுடைய பெருவாய்க்காலினது நீரடைகரையின் மேற் செல்லும்பொழுது; பொறி மாண் அலவனும் நந்தும் போற்றாது ஊழ் அடி ஒதுக்கத்து உறுநோய் காணின் - அக்கரையிடத்தே புள்ளிகளாலே அழகுற்றுத் திகழும் நண்டும் நத்தையும் ஆகிய சிற்றுயிர்கள் இருக்குமிடங்களை நோக்கி ஒதுங்கி நடத்தலின்றி யாம் நமக்கியல்பாயாமைந்த முறையானே நடக்குமிடத்தே அவற்றின் மேலடியிட்டு நடத்தலும் கூடும், அவ்வழி அச்சிற்றுயிர்கள் நம்மாலுறுகின்ற துன்பத்தை நாம் காணின்; தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா - நமக்குச் சிறுமையைத் தருகின்ற அக் கொலைத் துன்பம் நம்மால் பொறுக்கவும் கூடாதாம் என்றார்; என்க.

(விளக்கம்) 86 - குறுநர் - பறிப்போர். குறுநரிட்ட கூம்பு விடுபன் மலர் (பெரும்பாண் - 295.) என்புழியும் அஃதப் பொருட்டாதல் அறிக. 87 பொறியையும் வரியையும் உடைய வண்டினம் என்க. நீர்-நீவிர். தமக்கு நெறி செல்வருத்தமும் அறிவஞர் எய்துதலும் இன்மை தோன்ற நீர் அஞர் எய்தி அறியாதபடி யிருத்தலுங் கூடும் என்றார். என்னை? அவர் தாமும் சிறந்த தவவொழுக்க முடையாராகலின் வில்லின தெல்லைக் கண்ணால் நோக்கி மெல்லடிகள் பரவி நல்லருள் புரிந்துயிர்க் கண் (யசோதர காவியம் - 4) நடப்பவர் ஆகலின் என்க.

90. எறிநீர் அடைகரை என்றமையின் பெருவாய்க்காலினது கரை என்பது பெற்றாம். அக்கரையின்மேல் நண்டு நந்து முதலியன மறைந் துறைதலுண்மையின் நுமக்கு இயல்பாகிய நடை என்பார் ஊழடி ஒதுக்கம் என்றார். எனவே தமக்கு அவ்வகை இயக்க மின்மையும் கூறினாராயிற்று.

கோவலன் கண்ணகி ஒதுக்கத்தால் சிற்றுயிர் உறுநோய் காணுதல் தமக்கு முண்மையின்; உறுநோய் காணில் தாழ்தருதுன்பம் தாங்கவும் ஒண்ணாது எனப் பொதுவினோதினார். தாழ்ச்சியைத் தருகின்ற தீவினையால் வருந்துன்பம் என்க. இதனால் அந்நெறிக்கண் நீயிர் அறியாமல் கொலைத் தீவினையாகிய ஏதம் எய்துதலும் கூடும் என்றறிவுறுத்தவாறு. இவற்றின் கருத்து - இத்தகைய தீவினைகள் நிகழாவண்ணம் குறிக்கொண்டு நடமின் என்று அறங் கூறுதலாம். ஈண்டு,

அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய்
தந்நோய்போற் போற்றாக் கடை ( குறள் - 315)

எனவரும் திருக்குறள் நினையற்பாலதாம்.

இயக்கம் என்பதனை ஆகுபெயராக்கி வழி என்பர் அடியார்க்கு நல்லார். 91 - அலவன் - நண்டு நந்து - நத்தை, இனஞ்செப்பித் தவளை முதலிய சிற்றுயிரும் கொள்க. உறுநோய் : வினைத்தொகை; மிக்க நோய் எனினுமாம். காணில் அவற்றின் பால் இரக்கங் காரணமாகவும் நம் அறியாமை காரணமாகவும் நமக்குண்டாகும் துன்பம் என்றவாறு. தீவினை காரணமாக வருந்துன்பமாகலின் தாழ்தரு துன்பம் என்றார். தாழ்தலைத் தருகின்ற துன்பம் என்க.

இக்கொலைப் பாவம் ஒன்றானும் கழுவப்படாது; அதுவேயுமின்றி மறுமைக்கண் நரகத்திலுறும் துன்பமும் நம்மால் தாங்கலா மளவிற்றன்று என்பதனான் (தாங்கவும் என்பதன்கண்) உம்மை எச்சவும்மை யாயிற்று என்பர் அடியார்க்கு நல்லார்.

இதுவுமது

94 - 97 : வயலும் ............. குறுகாதோம் பென

(இதன்பொருள்:) வயலும் சோலையும் அல்லது யாங்கணும் அயல்படக் கிடந்த நெறி ஆங்கு இல்லை - இத்தகைய துன்பங்கட்குக் காரணமான வயல்வழியும் முற்கூறப்பட்ட துன்பங்கட்குக் காரணமான சோலைவழியும் அல்லது இவற்றிற்கு வேறாகக் கிடக்கும் வழி இனி யாம் செல்லக்கடவ அவ்விடத்தே இல்லை; நெறியிருங்குஞ்சி நீ குறி அறிந்து வெய்யோளொடு அவை அவை குறுகாது ஓம்பு என - ஆதலால் யாம் செல்லும்பொழுது நெறித்த குஞ்சியையுடையோய்! நீ அத்தகைய துன்பந்தருமிடங்களைக் குறிப்பான் அறிந்து அவ்வத்துன்பம் வாராதபடி நின்னை விரும்பிய நின் மனைவியோடே விழிப்புடன் நடப்பாயாக! என அறிவுறுத்த பின்னர் என்க.

(விளக்கம்) 95 - இனிச் செல்லக் கடவ வழியாகலின் ஆங்கு எனச் சேய்மைச் சுட்டாற் கூறினார். இத்துணையும் அடிகளார் தம் பள்ளியிடத் திருந்தே கூறியபடியாம். 96 - நெறியிருங்குஞ்சி; அன்மொழித் தொகை; விளி. நீ வெய்யோளொடு செல்லுங்கால் நுமக்கு அவை அவை குறுகாது ஓம்பு என்றவாறு. வெய்யோள் - நின்னை விரும்பியவள்; நின்னால் விரும்பப் படுபவள் என இரு பொருளும் பயந்து நின்றது. குறி-யாங் கூறிய குறிப்பு. அவையவை எனும் அடுக்குப் பன்மைபற்றி வந்தது. அறிவு அஞர் எய்துதலாலே அறியாமல் பொய்யறையில் அடியிட்டு வீழுதல் முதலிய துன்பமும், வண்டினம் நண்டு முதலியவற்றின் மேல் அடியிடுதலாலே வருந் தீவினைத் துன்பமும் என இருவேறுவகைத் துன்பமும் வாராதபடி செல்லுக என்றறிவுறுத்த படியாம்.

பள்ளியினின்றும் கவுந்தியடிகள் புறப்படுதல்

98 - 101 : தோமறு ............ புரிந்தோர்

(இதன்பொருள்:) காவுந்திஐயை - இவ்வாறு கோவலனுக்கு அறிவுறுத்த கவுந்தியடிகளார்; தோம்அறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும் கைப்பீலியும் கொண்டு - அவர்களோடு மதுரைக்குச் செல்லும் பொருட்டுக் குற்றமற்ற கடிஞையும் தோளிலிடும் உறியும் கையின்கட்கொள்ளும் மயிற்பீலியும் முதலியவற்றைக் கொண்டு; மொழிப் பொருள் தெய்வம் வழித்துணை ஆக என - ஐந்தெழுத்தாலியன்ற மறைமொழிக்குப் பொருளாகிய தெய்வமே நமக்கு வழித்துணையாகுக! என்று இறைவனை நினைந்து போற்றிப் புறப்பட; பழிப்பு அருஞ்சிறப்பின் வழிப்படர் புரிந்தோர் - அங்ஙனம் புறப்பட்ட அடிகளாரோடு பிறராற் பழித்தல் அரிய ஒழுக்கத்தோடு வழிச்செலவினை மேற்கொண்ட கோவலனும் கண்ணகியும்; என்க.

(விளக்கம்) தோம் - குற்றம். அஃதாவது துறந்தோர் கைக்கொள்ளலாகா எனக் கடியப் பட்டவை. கடிஞை - இரத்தற் கலம். அறுவை - உறி - ஆடை யன்மை தோன்ற, அறுவை என்றொழியாது சுவன் மேலறுவை என்றார். மொழி - மறைமொழி - அஃதாவது ஐந்தெழுத்து மந்திரம். அவையாவன - அ, சி, ஆ, உ, சா என்பன.

இனிக் கொண்டென்பதனைக் கொள்ளவெனத் திரித்து அடிகளார் கடிஞை முதலியவற்றைக் கைக்கொள்ள அதுகண்டு இவர், நமக்கு வழித்துணை ஆக எனக் கருதி மகிழ்ந்து அவரோடு வழிப்படர் புரிந்த கோவலனும் கண்ணகியும் எனினுமாம்.

காவிரி நாட்டின் சிறப்பு

102 - 111 : கரியவன் ............ ஒலித்தல் செல்லா

(இதன்பொருள்:) கரியவன் புகையினும் புகைக் கொடி தோன்றினும் விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும் - உலகின்கண் மழைவறங் கூர்தற் பொருட்டுக் கோள்களில் வைத்துச் சனிக்கோள் இடபம் சிங்கம் மீனம் என்னும் இவற்றினோடு மாறுபடினும் விசும்பின்கண் தூமக்கோள் தோன்றினும் விரிந்த ஒளியையுடைய வெள்ளிக்கோள் தென்றிசைக்கண்ணே பெய நினும்; கால் பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றொடுஞ் சூன்முதிர் கொண்மூ பெயல் வளம் - சுரப்ப - பருவக்காற்றுத் தாக்குதற்கியன்ற உயர்ச்சியையுடைய குடகமலையினது உச்சியிடத்தே கடிய முழக்கத்தையுடைய இடியேற்றோடு சூன்முதிர்ந்த பருவ முகில் தனது பெயலாகிய வளத்தை நிரம்ப வழங்குதலானே; குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு - அக் குடகமலையிற் பிறந்த கொழுவிய பல்வேறு பண்டத்தோடு; கடுவரல் காவிரிப் புதுநீர் - விரைந்து வருதலையுடைய காவிரிப் பேரியாற்றினது புதுப்புனல் வெள்ளமானது; கயவாய் நெரிக்கும் கடல் வளன் எதிர - பெரிய புகுமுகத்தைக் குத்தியிடிக்கும் கடல் தன்கட் பிறந்த கொழுவிய பல பண்டத்தோடு வந்து எதிர்கொள்ளுதலாலே தேங்கி; வாய்த்தலை ஓவிறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது - வாய்த்தலைக்கிட்ட கதவின்மீதெழுந்து குதித்தலானே எழுகின்ற அப் புதுப்புனல் ஒலியல்லது; ஆம்பியும் கிழாரும் வீங்கு இசை ஏத்தமும் நீர் ஓங்கு பிழாவும் ஒலித்தல் செல்லா - ஆம்பியும் கிழாரும் மிக்க வொலியையுடைய ஏத்தமும் நீரை முகந்து கொண்டு உயர்கின்ற பிழாவும் என்று கூறப்படுகின்ற நீரிறைக்கும் கருவிகள் ஒருநாளும் ஒலித்தல் இல்லாத என்க.

(விளக்கம்) 102. கரியவன் என்பது சனிக்கோளின் பெயர்களுள் ஒன்று. மைம்மீன் என்பதும் அப்பொருட்டு. புகைதல், ஈண்டு உலகத்தைச் சினந்து ஒழுகுதல் மேற்று. அஃதாவது, உலகில் மழை வறங் கூர்தற்கியன்ற நெறியிலியங்குதல். அடியார்க்கு நல்லார் சனிக்கோள் இடபம் சிங்கம் மீனம் என்னும் இராசிகளில் இயைந்தொழுகின் உலகின்கண் மழைவளம் மிகும் எனவும், இவற்றோடு அக்கோள் மாறுபட்டியங்கின் மழைவறங்கூரும் எனவும் கருதுபவர் என்பது அவருரையால் விளங்கும். இன்னும், கோள்களின் இயக்கம் மழைவளமுண்டாதற்கும் அது வறந்து வற்கடம் உண்டாதற்கும் காரணமாம் என முன்னோர் கருதினர் என்பதனை, இதனானும், இங்ஙனமே,

மைம்மீன் புகையினும் தூமந் தோன்றினும்
தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும்
.............. ................. ................. ................
பெயல் பிழைப்பறியாது  (புறநா - 117)

எனவும்,
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
அந்தண் காவிரி வந்துகவர் பூட்ட (புறம் - 35)

எனவும்,
வசையில் புகழ் வெண்மீன்
திரை திரிந்து தெற்கேகினும்
.............. .......... ..........
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்யினுந் தான்பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி  (பட்டினப்பாலை - 1-6)

எனவும், வரும் சான்றோர் செய்யுள்களாலுமுணர்க.

இனி, மழை வறங்கூர்தற்கு ஏற்பக் கோள்க ளியங்குமிடத்தும் செங்கோல் மன்னர் தம் நாட்டில் மழைவறங் கூர்தலில்லை எனவும், மழை வளம் மிகுதற்கியன்ற நெறியில் கோள்களியங்கினும் கொடுங்கோன் மன்னர் நாட்டில் மாரி வறங்கூரும் எனவும் நம்முன்னோர் கருதுவர். இக் கருத்தினை யாம் பட்டினப்பாலைக்கு எழுதிய உரையின்கண் 1-7. விளக்கங்களால் உணர்க. ஈண்டுரைப்பின் உரை விரிதலஞ்சி விடுத்தாம்.

கரியவன் புகையினும்....காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை ஓவிறந் தொலிக்கும் என்று ஈண்டு அடிகளார் இயம்பியது சோழ மன்னனின் செங்கோன்மையைக் குறிப்பாகச் சிறப்பித்த படியாம். என்னை? ஆசிரியர் கபிலர் தாமும், மைம்மீன் புகையினும்....கோஒல் செம்மையிற் சான்றோர் பல்கிப் பெயல் பிழைப்பறியாது எனவும், திருவள்ளுவனார்,

இயல்புளிக் கோலோச்சும் மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு  (குறள் - 545)

எனவும், இந்நூலாசிரியர் தாமும், காவேரி! கருங்கயற் கண் விழித்தொல்கி நடந்த வெல்லா நின்கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி! எனவும் ஓதுமாற்றானும் அறிக.

புகைக்கொடி - தூமக்கோள், கோள்கள் வட்டம் சிலை நுட்பம் தூமம் (புகை) என்னும் நான்கினும் (தூமக்கோள்) எனவரும் பழையவுரையினால் பழந்தமிழறிஞர் வானநூலறிவு புலப்படும். நிவப்பு: ஆகுபெயர். உயர்ந்த (உச்சி) குவடு. மலைப்பிறந்த தாரம் - தக்கோலந்.......சாதியோடைந்து (5-26) என்பன. கடல் வளம் ஓர்க்கோலை சங்கம் ஒளிர் பவளம் வெண்முத்தம் நீர்ப்படும் உப்பினோடைந்து என்ப.

108-கடுவரல் - விரைந்து வரும் வருகை. ஓ -மதகு நீர் தாங்கும் பலகை. இனி ஓவுதல் இறந்து ஒலிக்கும் எனலுமாம். ஒழிவின்றி ஒலிக்கும் என்றவாறு. ஆம்பி - பன்றிப் பத்தர். கிழார் - பூட்டைப் பொறி. ஏத்தம் ........ பிழா - இடா. நீரிறைக்கும் கூடை. இவை பிறநாட்டில் நீரிறைக்கும் கருவிகள். சோணாட்டில் இக்கருவிகள் வேண்டப்படாமையின் இவற்றின் ஒலி இல்லையாயிற்று. இதனால் சோணாட்டின் நீர்வளம் கூறியபடியாம்.

நீர்ப்பறவைகளின் ஆரவாரம்

112 - 119 : கழனிச் செந்நெல் .............. ஓதையும்

(இதன்பொருள்:) கழனிச் செந்நெல் கரும்பு சூழ் மருங்கில் பழனப் பைம்பூந் தாமரைக் கானத்து - அங்ஙனம் காவிரிப் புதுப்புனல் ஒலியல்லது நீரிறைக்குங் கருவிகளின் ஒலி ஒருபொழுதும் ஒலித்தலில்லாச் சிறப்புடைய கழனிகளிடத்தே செந்நெற்பயிரும் கரும்புகளும் சூழ்ந்த மருதத்து நீர்நிலைப் பரப்பின்கண் செழித்தோங்கிய பூவையுடைய பசிய தாமரைக் காட்டின்கண்; கம்புள் கோழியும் கனைகுரல் நாரையும் செங்கால் அன்னமும் பைங்கால் கொக்கும் கானக்கோழியும் நீர்நிறக் காக்கையும் உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும் - சம்பங்கோழியும் மிக்கொலிக்கும் குரலையுடைய நாரையும் சிவந்த காலினையுடைய அன்னமும் பசிய காலினையுடைய கொக்கும் கானாங்கோழியும் நீரில் நீந்துமியல்புடைய நிறமிக்க நீர்க் காக்கையும் உள்ளானும் குளுவையும் கணந்துட் புள்ளும் பெருநாரையும் பிறவுமாகிய நீர்ப்பறவைகள் பலவும் செய்கின்ற; வெல் போர் வேந்தர் முனை இடம் போல - வெல்லும் போர்த் தொழிலையுடைய பகையரசர் இருவர் தம்முட் போரிடுதற்கமைந்த போர்க்களத்திலெழும் ஒலிபோல; பல்வேறு குழூஉக் குரல் பரந்த வோதையும் - பலவேறு வகைப்பட்ட கூறுபட்ட ஒலிகள் ஒன்றுகூடிப் பரவிய ஒலியும் என்க.

(விளக்கம்) 13. பழனம் - ஊர்ப் பொது நிலம். 114 - கம்புட் கோழி - சம்பங் கோழி. கனைகுரல் - மிக்கொலிக்கும் குரல்; ஒலிக்கும் குரலெனினுமாம். செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும் என்புழி இயற்கை நவிற்சியும் முரணும் ஆகிய அணிகள் தோன்றி இன்பஞ் செய்தலறிக. கானக் கோழி - இக்காலத்தார் கானாங்கோழி என்பதுமிது. காட்டுக் கோழி எனல் ஈண்டைக்குப் பொருந்தாது. நீர்க் காக்கை நிறக்காக்கை எனத் தனித்தனி யியைக்க. நிறம் - இயல் பென்பாருமுளர். ஊரல் - நீர் மேலூர்தலினால் குளுவைக்கு ஆகுபெயர். புள்ளு - கணந்துட்புள். புதா - பெருநாரை. மரக்கானாரை என்பதுமிது. புதா என்றே பெருங்கதையினும் காணப்படுகின்றது. இதனைப் போதா என்பதன் விகாரம் என்பர் அடியார்க்கு நல்லார். பல்வேறு பறவைகளின் பலவேறு வகைப்பட்ட ஒலிகளும் கூடி ஒலித்தலின் குழூஉக்குரல் என்றார். போர்க்களத்தினும் பல்வேறு மொழி பேசுவோர் ஒலி கூடியொழுத்தலின் முனையிடத்தொலி உவமையாயிற்றென்க. கம்பநாடரும் பல்வேறு மொழிபேசு மாக்கள் கூடியவிடத்தில் பிறக்கும் ஒலிக்கு இங்ஙனமே,

ஆரிய முதலிய பதினெண் பாடையிற்
பூரிய ரொருவழி புகுந்த போன்றன
ஓர்கில கிளவிக னொன்றொ டொப்பில
சோர்வில விளம்புபுட் டுவன்று கின்றது  (பம்பா - 14)

உவமை எடுத்தோதுதலும் நோக்குக.

காவிரி நாட்டின் உணவு வளம்

120 - 126 : உழாஅ ........... ஒலியேயன்றியும்

(இதன்பொருள்:) உழாநுண் தொளி உள்புக்கு அழுந்திய - உழவரால் உழப்படாமல் வழியிடத்தே எருதுகளும் உழவரும் பிறரும் இயங்குதலானே பட்ட நுண்ணிய சேற்றினுட் சென்று அழுந்திச் சேறு படிந்ததும்; கழாஅ மயிர் யாக்கைச் செங்கண் காரான் - உடையவராற் குளியாட்டப்படாத மயிரையுடைய உடம்பையும் சிவந்த கண்களையும் உடையதுமாகிய எருமை; சொரிபுறம் உரிஞ்ச - தனது அச் சேற்றினது உலர்ந்த பொருக்கினையுடைய முதுகினை உராய்தலானே; புரி நெகிழ்பு உற்ற குமரிக் கூட்டின் - வைக்கோற்புரி தேய்ந்து அற்றுப் போன அழியாத நெற்கூட்டினின்றும் சரியாநின்ற; கொழும்பல் உணவு - வளவிய பலவேறு வகைப்பட்ட உணவுகளாகச் சமைக்கப்படுகின்ற பழைய; கவரிச் செந்நெல் காய்த்தலைச் சொரிய - கவரித் தொங்கல் போன்று விளைந்து கிடக்கின்ற புதிய செந்நெற்கதிரின் மேலே சொரியாநிற்ப; கருங்கை வினைஞரும் களமரும் கூடிநின்று ஒருங்கு ஆர்க்கும் ஒலியே அன்றியும் - அவ்வழியே செல்லும் வழிய கையினையுடைய உழு தொழிலாளரும் வேளாளரும் அந்நிகழ்ச்சியைக் கண்டு மேற்செல்லாமல் அவ்விடத்திலேயே கூடிநின்று ஒருங்கே ஆரவாரிக்கும் பேராரவாரமும் அஃதல்லாமலும் என்க.

(விளக்கம்) உழாஅநுண் தொளி - மாவும் மாக்களும் இயங்கும் வழியிடத்தேயுள்ள குழியில் உண்டான சேறு என்றவாறு. இத்தகைய சேறு மிகவும் நுண்ணிதாயிருத்தல் இயல்பாகலின் நுண்தொளி என்றார். இத்தகைய சேற்றைக் காணின் எருமை பெரிதும் மகிழ்ந்து அதன்கட் படுத்துப் புரளுதல் இயல்பு. அஃது ஆர்வத்துடன் தானே புகுந்து அழுந்திற் றென்பது தோன்ற, தொளியுட்புக்கு அழுந்திய காரான் என்றார். காரான் - எருமை. அதன் வளம் தோன்றச் செங்கட்காரான் என்றார். எனவே அது சேற்றினுட் புக்கழுந்தியது மாட்டாமையாலன்று மகிழ்ச்சியாலோம் என்பது பெற்றாம்.

இனி, அவ்வெருமை எழுந்தபின்னர் அவன் முதுகிற் படிந்த சேறு உலர்ந்து பொருக்கானமையின் சொரிபுறம் என்றார். சொரிபுறம் - பொருக்குடைய முதுகு இதற்குத் தினவையுடைய முதுகு என்பர் பழையவுரையாசிரியரிருவரும், எருமை உராய்தற்குக் காரணம் தினவு அன்று அப்பொருக்கினை உதிர்ப்பதேயாம் என்க. சேற்றில் வீழ்ந்த எருமையை உடையவர் கழுவிவிடுவர். அவை மிகுதியாக விருத்தலின் இது கழுவப்படாது விடப்பட்டது என்பது கருத்து.

காவிரி நாட்டினர் நெல்லை வைக்கோலின் மேலிட்டுப் புரிச் சுற்றிக் கூடு செய்து பாதுகாப்பது வழக்கம். அவ்வழக்கம் இக்காலத்தேயும் உளது.

இத்தகைய நெற்கூட்டினை இக்காலத்தார் நெற்சேர் என்று வழங்குப. 123. குமரிக் கூடு - நுகராது விடப்பட்ட நெற்கூடு. இக்கூடு கழிந்தயாண்டில் விளைந்த நெற்கூடாம். இது குமரிக் கூடாகவே அந்நாடானது உண்டுதண்டா மிகுவளத்தது என்பது பெற்றாம். மற்று அந்த யாண்டின் விளைந்த நெற்கதிர்தானும் பெரிதும் வளமுடைத் தென்பது தோன்ற, கவரிச் செந்நெல் என்றார்.

125. கருங்கை - வலிய கை. கருங்கை வினைஞர் கருங்கைக் களமர் என இருவருக்கும் இயைக்க. தொழில் செய்து வலிமிக்க கை எனவும், இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைக்கும் வலிமையுடைய கைகள் எனினுமாம். வினைஞர் என்றது கூலியாட்களை. களமர் - நெற்களத்திற் குரிமையுடைய வேளாண் மாந்தர். வினைஞர் - பறையர் பள்ளர் முதலாயினார் எனவும், களமர் உழவர் கீழ்க்குடி மக்கள் எனவும் அடியார்க்கு நல்லார் கூறுவர். களமர் - உழுகுடி வேளாளர் என்பது அரும்பதவுரை.

கடைசியர் விருந்திற் பாணி

127 - 131 : கடிமலர் .......... விருந்திற் பாணியும்

(இதன்பொருள்:) செங்கயல் நெடுங்கண் சில் மொழிக் கடைசியர் - சிவந்த கயல்மீன் போன்ற நெடிய கண்களையும் சிறுமையுடைய மொழிகளையும் உடைய உழத்தியர்; கடிமலர் களைந்து - இரவிற் சூடிய நறுமணமலர்களை அகற்றி; முடிநாறு அழுத்தி - உழவர் முடிந்து போகட்ட நாற்று முடியின்கண் நாற்றை நறுக்கித் தமது கோண்டையிலே செருகிக் கொண்டு; தொடிவளைத் தோளும் ஆகமும் சேறு தோய்ந்து ஆடும் கோலமொடு வீறுபெறத் தோன்றி - வளைந்த வளையலையுடைய தோளினும் முலையிடத்தும் சேறு தோயப்பெற்ற கோலத்தோடு அழகுறத் தோன்றி; வெங்கள் தொலைச்சிய - வெவ்விய கள்ளைப் பருகித் தொலைத்ததனால் அறிவு மயங்கப்பெற்று; பாடுகின்ற பண்ணொடு பொருந்தாத விருந்தின் பாணியும் - புதுமையுடைய பாட்டொலியும்; என்க.

(விளக்கம்) கடிமலர் - மண முடைய மலர். அம்மலர் கழிந்த இரவிற்றங் கணவரொடு கூடற் பொருட்டுச் சூடப்பட்டதாகலின் அவற்றைக் களைதல் வேண்டிற்று. முடி - நாற்றுமுடி. நாற்று முடியை நறுக்கிக் கொண்டையிலே சூட்டிக் கோடல் உழத்தியர் வழக்கம்.

இனி, தாம் நாற்று நடும் வயலிற் களையாகும் கடிதற்குரிய குவளை தாமரை முதலிய மலர்களைக் களைந்தகற்றி அவ்விடத்தே முடியின்கண் நாற்றை அலகாக்கி அழுத்தி (நட்டு) எனலுமாம். நாற்று நடுங்கால் அவற்றின் தோகை சேற்றை வாரி வீசுதலின் தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து சேறாடு கோலமொடு வீறுபெறத் தோன்றி என்றவாறு. தளிர்மேனியில் கரிய சேறு புள்ளிகளாக அமைதலின் அவைதாமும் அழகு செய்தலின் அவ்வழகோடு தோன்றி என்க.

இனி, அடியார்க்கு நல்லார் தோளும் ஆகமும் தோய்ந்து சேறாடுதல் - களித்து ஒருவர் மேல் ஒருவர் சேற்றை இறைத்துக் கோடல். வீறு பெறத் தோன்றலாவது - முலைமேற் றெறித்த சேறு கோட்டு மண் கொண்டாற் போன்றிருத்தல். வாரிய பெண்ணை வருகுரும்பை வாய்த்தனபோல்-ஏரிய வாயினு மென்செய்யும் - கூரிய, கோட்டானைத் தென்னன் குளிர்சாந் தணியகலம், கோட்டுமண் கொள்ளா முலை (முத்தொள்ளாயிரம்) என்றாற் போல என விளக்குவர். சின்மொழி என்புழிச் சின்மை சிறுமையின் மேற்று. இழிந்த மொழி என்றவாறு. சிலமொழி எனலுமாம். இங்ஙனம் உழத்தியர் பாடும் பாட்டினைப் பெருமுளை என்பாருமுளர். பண்ணொடு படாதேயும் தமது குரலினிமையினால் புதுமையுண்டாகப் பாடுதலின் விருந்திற் பாணி என்றார் எனலுமாம்.

ஏர்மங்கலப் பாடல்

132 - 135 : கொழுங்கொடி ........... ஏர்மங்கலமும்

(இதன்பொருள்:) விளங்கு கதிர் கொழுங் கொடி அறுகையும் குவளையும் கலந்து தொடுத்த விரியல் சூட்டி - பொன்னிறம் பெற்றுத் திகழ்கின்ற செந்நெற் கதிரோடே அறுகம்புல்லையும் குவளை மலரையும் விரவித் தொடுத்த மாலையை மேழியிலே சூட்டி; பார் உடைப்பனர்போல் - நிலத்தை இரண்டாகப் பிளப்பவர் போன்று; பழிச்சினர் கைதொழ - கடவுளை வாழ்த்துவோர் வாழ்த்துக்கூறிக் கைகூப்பித் தொழாநிற்ப; ஏரொடு நின்றோர் ஏர்மங்கலமும் - பொன்னேர் பூட்டிநின்ற உழவர் எருதுகளைத் தூண்டி யோட்டுங்கால் பாடும் ஏர்மங்கலப்பாட்டின் ஆரவாரமும் என்க.

(விளக்கம்) ஈண்டுக் கூறப்படும் உழவர் பொன்னேர் பூட்டி உழுபவர், அவர்தாம் கழனிகளை வறலில் (நீர்பாய்ச்சாத கழனி) உழுவது தோன்ற, பார் உடைப்பனர் போல் என்றார். நீர்கால் யாத்த கழனியாயின் பார் கிழிப்பனர் போல் என்பர். உடைப்பனர் போல் என்பது வறலுழுவார்க் கன்றிச் சேற்றில் உழுவார்க்குப் பொருந்தாமையுணர்க. கழனிகளை நீர்பாயாமுன் பலசால் உழுது மண்ணைக் கிளரி வெயிலில் நன்கு உலர்த்துதல் மரபு. அங்ஙனம் உலர்த்திய நிலம் நன்கு பணைத்து விளையும். இதனை,

தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும் (குறள் - 1038)

எனவரும் திருக்குறளானும் உணர்க.

பொன்னேர் - ஒருயாண்டின் தொடக்கத்தே உழுதொழிலுக்குக் கால் கொள்வோர் முதன் முதலாக நன்னாளிற் பூட்டும் ஏர் என்க. பொன்னாராகலின் விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டி, கடவுளை வாழ்த்துவோர்; வாழ்ந்த உழுவோர் ஏர்பிடித்து நின்றார் என்க. பழிச்சினர் - வாழ்த்துவோர். அவர் உழுவோரின் முதியவர் என்க. ஏர் மங்கலம் - ஏருழுவோர் கடவுளை வாழ்த்திப் பாடும் பாட்டு.

முகவைப் பாட்டு

136 - 137 : அரிந்துகால் ............. முகவைப் பாட்டும்

(இதன்பொருள்:) அரிந்து கால் குவித்தோர் - நெல்லையரிந்து போர்வு செய்தோர்; அரி கடா உறுத்த பெருஞ் செய்ந் நெல்லின் - சூட்டைக் கடாவிடுதல் செய்த பின்னர் அந்நெல்லை முகந்து தூற்றுபவர் பாடுகின்ற; முகவைப்பாட்டும் - முகவைப்பாட்டொலியும் என்க.

(விளக்கம்) கால் - இடம். அரி - அரிந்து போட்ட சூடு; (கூறு). முகவைப்பாட்டு - பொலிபாடுதல். நெல்லின் மிகுதி தோன்றப் பெருஞ் செய்ந்நெல் என்றார். பொலியை முகந்து தூற்றுவார் பாடுதலின் முகவைப் பாட்டு எனப் பெயர் பெற்றது.

கிணைப் பொருநர் பாட்டு

138-139 : தென்கிணை.................இசையும்

(இதன்பொருள்:) தெண்கிணைப் பொருநர் - தெளிந்த ஓசையையுடைய தடாரியினையுடைய கிணைவர்; செருக்குடன் எடுத்த - கள்ளுண்ட செருக்கோடு தோற்றுவித்த; மண் கணை முழவின் மகிழ் இசை ஓசையும் - மார்ச்சனையையுடைய திரண்ட முழவினது கேட்டோர் மகிழ்தற்குக் காரணமான இசையினது ஒலியும் என்க.

(விளக்கம்) இது கனவழி வாழ்த்து என்னும் ஒரு புறப்பொருட்டுறை; இதனை, தண்பணை வயலுழவனைத் தெண்கிணைவன் திருந்து புகழ் கிளர்ந்தன்று எனவரும் புறப்பொருள் வெண்பாமாலைக் கொளுவானும் (186)

பகடுவாழ் கென்று பணிவயலு ளாமை
அகடுபோ லங்கட் டடாரித் - துகடுடைத்துக்
குன்றுபோற் போர்விற் குருசில் வளம்பாட
இன்றுபோ மெங்கட் கிடர்

எனவரும் அதன் வரலாற்று வெண்பாவானும் உணர்க.

கிணை - தடாரி - ஒருவகைத் தோற்கருவி.

கோவலன் கண்ணகியிருவரும் கவுந்தியடிகளாரோடு காவிரி நாட்டின்கண் உண்டாகும் பல்வேறு ஒலிகளையும் கேட்டும் பல வேறிடங்களையும் கண்டும் வழிநடை வருத்தந்தோன்றாமல் இனிதே செல்லுதல்.

140 - 141 : பேர்யாற்றுக் ............ கொள்ளார்

(இதன்பொருள்:) பேர் யாற்று அடைகரை நீரின் கேட்டு - பெரிய அக்காவிரி யாற்றினது நீரடைகரையிலே ஈண்டுக் கூறப்பட்ட இனிய ஒலிகளை முறையே கேட்டு அவற்றின் புதுமையாலே மகிழ்ந்து; ஆர்வ நெஞ்சமொடு அவலம் கொள்ளார் - மேலும் சேன்று அத்தகைய புதுமைகளைக் கேட்க ஆர்வமுறுகின்ற நெஞ்சத்தோடே வழி நடத்தலால் உண்டாகும் துன்பத்தைக் காணாதவராய் என்க.

(விளக்கம்) காவிரிப் பேரியாற்றின் கரைவழியே செல்லும் பொழுது தமக்குப் புதுமையான நீர்ப்பறவைகளின் ஆரவாரமும் பிறவுமாகிய இசைகளைக் கேட்பதனால் நெஞ்சம் பெரிதும் மகிழ்ந்து செல்லுதலின் அவர்க்கு வழிநடை வருத்தம் புலப்படாதாயிற்று. அங்ஙன மாதல் மனத்திற்கு இயல்பு. இதனை, ஒன்றொழித்து ஒன்றையுன்ன மற்றொரு மனமுமுண்டோ எனவரும் கம்பர் மணிமொழியானும் உணர்க.

(119) பரந்த வோதையும், (124) ஆர்க்கும் ஒலியும், (131.) விருந்திற் பாணியும், (135) ஏர்மங்கலமும், (137) முகவைப் பாட்டும் (139) முழவின் மகிழிசை யோதையும், என்னுமிவற்றைப் பேர்யாற்றடைகரை மருங்கே வழிநெடுக நீர்மையுறக் கேட்டலாலே மேலும் வழிச் செலவின் மேல் ஆர்வ நெஞ்சமுடையராய் அவலங் கொள்ளாராய் (155) பன்னாட்டங்கிச் செல்நாள் என மேலே சென்றியையும்.

காவிரி நாட்டின் மங்கல மறையோர் இருக்கை

142 - 147 : உழைப்புலி ............ இருக்கையன்றியும்

(இதன்பொருள்:) புலி உழைக் கொடித் தேர் உரவோன் கொற்றமொடு - புலியைத் தன்னிடத்தே வரையப்பட்ட கொடியை யுடைய தேரையுடைய ஆற்றல்மிக்க சோழமன்னனுக்கு வெற்றியையும்; மழைக் கரு உயிர்க்கும் அழல் திகழ் அட்டில் - அவன் நாட்டு வளத்திற்குத் தலைசிறந்த காரணமாகிய மழைக்குச் சூலையும் தோற்றுவிக்கின்ற வேள்வித் தீ விளங்காநின்ற அமரர்க்கு உணவு சமைக்கும் மடைப்பள்ளியாகிய வேள்விக்களத்திலே; மறையோர் ஆக்கிய ஆவுதி நறும்புகை - பார்ப்பனரால் உண்டாக்கப்பட்ட அவியினது நறுமணங்கமழும் புகை; இறை உயர் மாடம் எங்கணும் போர்த்து - இறை உயர்ந்த மாடமாளிகையிடமெங்கும் போர்த்தலானே; மஞ்சு சூழ் மலையின் மாணத்தோன்றும் - முகிலாற் சூழப்பட்ட மலைகள் போன்று மாட்சிமையுடன் தோன்றாநின்ற; மங்கல மறையோர் இருக்கை அன்றியும் - உலகிற்கு மங்கலமுண்டாக்கும் அப் பார்ப்பனருடைய இருப்பிடங்களாகிய ஊர்களும் அவைகளே யன்றியும்; என்க.

(விளக்கம்) புலி உழைக்கொடி எனமாறுக. உழை - இடம். புலிக் கொடித்தேர் உரவோன் என்றமையால் சோழமன்னன் என்பது பெற்றாம். சோழமன்னனின் வெற்றிக்கு அவன் செய்யும் அறமே காரணம் என்பார் அறங்களுட் சிறந்த வேள்வியை அவன் கொற்றத்திற்கு ஏதுவாக்கினார். மற்று, மழைக்குக் கருவைத் தோற்றுவிப்பது ஆவுதி நறும்புகை என்றது அப்புகை தானும் நீராவியாகி முகிலாதல் பற்றிக் கூறியவாறு, இனி, வேள்வியறம் மழையை உண்டாக்கும் ஆதலின் மழைக் கருவுயிர்க்கும் ஆவுதி நறும்புகை என மற்றொரு பொருளும் தோற்றி நிற்றல் நுண்ணிதின் உணர்க. இதனால் நீராவியே முகிலாகின்ற தென்னும் பண்டைத் தமிழர் பூதநூலறிவும் புலப்படுதல் உணர்க.

இனி, மறையோர் அமரர்க்கு அவியுணவு சமைக்குமிட மாகலின் வேள்விக்களத்தை அட்டில் என்றார். அட்டில் - மடைப்பள்ளி. இறை - இல்லின துறுப்பினுள் ஒன்று. இக்காலத்தார் இறப்பு என்பர். மறையோரது செல்வச்சிறப்புத் தோன்ற அவர் இருக்கையை இறையுயர் மாடம் என்று விதந்தார். மஞ்சு - முகில். ஆவுதி நறும்புகைக்கு முகில் உவமை. மாடத்திற்கு மலையுவமை. மங்கலம் - ஆக்கம்.

காவிரிப்பாவையின் புதல்வர் பழவிறல் ஊர்கள்

148 - 155 : பரப்புநீர் ............. ஒருநாள்

(இதன்பொருள்:) நீர் பரப்பு காவிரிப்பாவை தன் புதல்வர் - சோழ நாட்டின்கண் புனல்பரப்பும் காவிரி யென்னும் நங்கையின் மக்களும்; இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழ விடை விளைப்போர் - இரவலருடைய சுற்றத்தையும் உலகுபுரக்கும் வேந்தருடைய வெற்றியையும் தாம் செய்கின்ற உழவுத் தொழிலாலே தோற்றுவிப்போருமாகிய வேளாண்மாந்தர் வாழ்கின்ற; பொங்கழி - தூற்றாத பொலியாகிய நெற்குவியல்கள்; ஆலைப் புகையொடும் பரந்து - கருப்பாலையின்கண் பாகு காய்ச்சுவதனால் எழுகின்ற புகையாலே பரக்கப்பட்டு; மங்குல் வானத்து மலையில் தோன்றும் - இருட்சியையுடைய முகில் தவழ்ந்த மலைகளைப்போலத் தோன்றுதற் கிடனான; பழ விறல் ஊர்களும் - பழைய வெற்றியையுடைய ஊர்களும் ஆகிய; ஊர் இடையிட்ட நாடு உடன் கண்டு இவ்விருவகை யூர்களையும் இடையிட்ட காவிரி நாட்டினது கவினெல்லாம் கண்களிக்க ஒருசேரக் கண்டு இனிதே செல்பவர்; காவதம் அல்லது கடவாராகி - ஒருநாளில் ஒருகாவதத் தொலையைக் கடந்து செல்வதன்றி மிகுதியாகச் செல்லாதவராகி; தங்கி - இடையிடையே தங்குதற்கேற்ற ஊர்களிலே தங்கித் தங்கி இளைப்பாறி; பல்நாள் செல்நாள் ஒரு நாள் - இவ்வாறு பலநாள் செல்லாநின்ற நாளிலே ஒருநாள்; என்க.

(விளக்கம்) குடக மலையிற் பெய்தநீரைக் கொணர்ந்து சோழநாட்டிற் பரப்பும் காவிரி என்க. காவிரிநீரி கங்கை நீராதலின் கங்கையின் புதல்வரைக் காவிரியின் புதல்வர் என்றார் எனவரும் பழையவுரை வேண்டா கூறலாம். வாழி அவன்றன் வளநாடு வளர்க்குந் தாயாகி ஊழியுய்க்கும் பேருதவியொழியாப் வாழி காவேரி என்றாங்கு ஈண்டும் அவ்வளநாட்டுழவரைக் காவிரிப் பாவைதன் புதல்வர் என்றார் என்க. இரவார் இரப்பார்க் கொன்றீவர் கரவாது - கைசெய் தூண்மாலையவர் (குறள் - 1035) என்பது பற்றி இரப்போர் சுற்றம் விளைப்போர் என்றார். ஈண்டு விளைத்தல் உணவு முதலியவற்றால் போற்றி வளர்த்தல்; இனி, பலகுடைநீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர். அலகுடை நீழலவர் (குறள் - 1034) என்பதுபற்றிப் புரப்போர் கொற்றம் விளைப்போர் என்றார் எனினுமாம். இத்திருக்குறளுக்கு ஆசிரியர் பரிமேலழகர் இரப்போர்.... விளைப்போர் என்னும் இவ்வடிகளையே எடுத்துக் காட்டுதலும் அறிக. படைப்புக் காலந்தொட்டுச் சோழநாடு வெற்றியாற் சிறப்புற்று வருதலான் அதற்குக் காரணமான ஊர்களைப் பழவிறலூர்களும் என்றார். அந்நாடுதானும் கண்டு தண்டாக் கட்கின் பத்ததாகலின் அதன் கவினெல்லாங் காண்டல் அரிதென்பது தோன்ற ஊரிடையிட்ட நாடுடன் கண்டு என்றார்.

Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 23, 2012, 01:49:21 PM
151 - பொங்கழி - தூற்றாப் பொலி என்பது பழையவுரை. இனி அழி வைக்கோல் என்னும் பொருட்டாகலின் பரிய வைக்கோற் போர்வுகள் ஆலைப்புகை தவழப் பட்டு மங்குல் வானத்து மலையிற் றோன்றும் எனக் கோடலே நேரியவுரையாம். ஆலை - கரும்பு பிழியும் பொறி. அதன்கட் கருப்பம்பாகு காய்ச்சுதலாலெழும் புகையை ஆலைப்புகை என்றார். அப்புகை முகில்போற் றிரளும் என்பதனால் அதன் மிகுதி கூறினாராயிற்று. இவர்தாமும் இதுகாறும் நடை மெலிந்தோரூர் நண்ணி யறியாராகலின் அரிதின் நடந்து காவதமே கடப்பாராயினர். பன்னாட்டங்கி என்றது வழிநடையா லிளைப்புற்ற விடத்திலெல்லாம் தங்கி என்பதுபட நின்றது.

சாரணர் வருகை

156 - 163 : ஆற்றுவீ ............ சாரணர் தோன்ற

(இதன்பொருள்:) ஆற்றுவீ அரங்கத்து வீற்று வீற்றாகிக் குரங்கு அமை உடுத்த மரம்பயில் அடுக்கத்து - அக்காவிரிப் பேரியாற்றை நடுவிருந்து மறைக்கின்ற திருவரங்கத்தின் பக்கலிலே தனித்தனியாக வளைந்த மூங்கில் வேலியாற் சூழப்பட்ட மரம்பயில் அடுக்கத்து மாவும் பலாவு முதலிய பயன்மிகு மரங்கள் மிகுந்த செறிவினூடே; வானவர் உறையும் பூநாறு ஒருசிறை - தேவர்களும் தங்கியிருத்தற் கவாவும் மலர்மணம் கமழாநின்ற ஓரிடத்தே; பட்டினப்பாக்கம் பெரும் பெயர் ஐயர் ஒருங்கு உடன் இட்ட இலங்கு ஒளிச் சிலாதல மேலிருந்தருளி - வான் பெரு மன்றத்துப் பிண்டி நீழற்கண்ணே உலக நோன்பிகளுள் வைத்துப் பெரிய புகழையுடைய சமயத் தலைவர்கள் பலரும் ஒருங்குகூடிச் சாரணர் வரூஉந் தகுதியுண்டாநெனக் கருதி இட்டு வைத்த ஒளிதிகழ்கின்ற சந்திரகாந்தக் கல்லாலியன்ற மேடையின்மீ தமர்ந்தருளி; பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத் தருமஞ் சாற்றும் சாரணர் - அருகக் கடவுளாற் செய்யப்பட்ட மூன்றுவகை அதிசயங்களும் தப்பாத மெய்ந்நூலின்கண் அமைந்த அறிவொழுக்கங்களை யாவரும் கேட்டுணரும்படி திருவாய்மலர்ந்தருளுகின்ற சாரணர்; பட்டினப்பாக்கம் விட்டனர் நீங்கா தோன்ற - அப்பட்டினப்பாக்கத்தை விட்டு நீங்கி வந்து கவுந்தியடிகள் முதலிய இவர்கள்முன் தோன்ற என்க.

(விளக்கம்) இதன்கண் கூறியது - கவுந்தியடிகள் கோவலன் கண்ணகி மூவரும் மதுரை நோக்கிக் காவிரியின் வடகரை வழியே செல்பவர் திருவரங்கத்தின் மருங்கே சென்றனராக. அப்பொழுது அவ்வடகரையிலுள்ள அழகிய ஒரு பூம்பொழிலிடத்தே அவர் முன் சாரணர் வந்து தோன்றினர். அச்சாரணர் தாம் யாவரெனின் பட்டினப்பாக்கத்தே வான்பெரு மன்றத்தே பொலம்பூப் பிண்டி நலங்கிளர் கொழுநிழல் நீரணி விழவினும் நெடுந்தேர் விழவினும் சாரணர் வரூஉந் தகுதியுண்டாமென உலக நோன்பிகள் ஒருங்குடனிட்ட இலகொளிச் சிலாதல த்தின் மேலிருந்து அறங்கூறுஞ் சாரணரே யாவர் என்றவாறு. அச்சாரணர் அப்பட்டினப் பாக்கத்தை விட்டு வேறிடங்களுக்கு அறங்கூறச் செல்பவர் கவுந்தியடிகள் முதலியோர் முன் தோன்றினர் என்றவாறு.

154 - ஆற்றுவீ யரங்கம் - காவிரியாற்றினிடைக் கிடந்த மலர்மிக்க திருவரங்கம் எனினுமாம். அரங்கம் என்பது ஆற்றிடைக் குறையே யாயினும் அவ்வரங்கத்தின் இருபுறமும் அமைந்த கரைகளும் ஆகுபெயரான் அரங்கம் என்றே கூறப்படும், ஆகவே, இவர்கள் காவிரியின் வட கரையிலே அரங்கத்தின் மருங்கே செல்லும்பொழுது வடகரையிடத்தே பூநாறுமொரு சிறை சாரணர் தோன்றக் கண்டனர் என்பது கருத்தாகக் கொள்க. அரங்கம் என்றது திருவரங்கத்தை.

156 - வீற்று வீற்றாக என்பது வேறுவேறாக என்னும் பொருட்டு. இதற்கு இப்பொருள் கொள்ளாமல் வீறு என்பதற்கு மற்றொன்றற்கில்லாத சிறப்பு என்னும் பொருளுமுண்மையின் அடியார்க்குநல்லார் வேறிடத்தில்லாத தன்மைத்தாய் எனப் பொருந்தாவுரை கூறினர். என்னை, வீற்று வீற்றாம் என்னும் அடுக்கிற்கு அப்பொருள் பொருந்தாமை யுணர்க. இனி, காவிரி முதலிய யாற்றின் படுகரிலே தனித் தனியாக வேலிகோலப்பட்ட சோலைகள் உளவாதலை இக்காலத்தும் காணலாம். இங்ஙனம் தனித்தனியே அமைந்த சோலையையே ஈண்டு ஆற்று வீயரங்கத்து (மருங்கில்) வீற்று வீற்றாகி (தனித்தனியே) குரங்கமை உடுத்த அடுக்கத்து (ஒன்றன்கண்) பூநாறொரு சிறை.... சாரணர் என்புழி அடிகளார் கூறினர் என்றுணர்க.

157 - குரங்கமை உடுத்த அடுக்கம் மரப்பயிலடுக்கம் எனத் தனித் தனி கூட்டுக. குரங்கமை - வளைந்த மூங்கில். இங்ஙனம் கூறுதலே அமையும். வளைந்த மூங்கின் முள்ளால் வளைக்கப்பட்ட வேலி என்னல் மிகை; மூங்கில் வேலி எனவே அமையும் என்க. 158 - வானவர் உறையுந்தகுதியையுடைய சிறை; பூநாறு சிறை எனத் தனித்தனி யியையும். 160 -பெரும் ஐயர் என்றது உலக நோன்பிகளுள் வைத்துப் பெரிய புகழையுடைய தலைவர்களை. இவர்கள் நன் முயற்சியாலே இடப்பட்ட சிலாதலம் என்க.

162 - அதிசயம் - சகசாதிசயம் , கர்ம சயாதிசயம், தெய்விகாதிசயம் என மூன்று வகைப்படும் என்ப. வாய்மை - மெய்ந்நூல். அஃதாவது ஈண்டு ஆருகத சமயவாகமம். 163. தருமம் - நல்லொழுக்கம்.

சாரணர் பட்டினப்பாக்கத்தை விட்டு நீங்கி ஈண்டு வந்து இவர் முன்தோன்ற என்க. சாரணர் - சமணத்துறவிகளுள் யாண்டுஞ் சென்று தமது சமயத்தைப் பரப்பும் நற்றொண்டினை மேற்கொண்டவர். அவர், தல சாரணர், சல சாரணர், பல சாரணர், புட்ப சாரணர், தந்து சாரணர், சதுரங்குல சாரணர், சங்க சாரணர், ஆகாச சாரணர் என எண்வகைப் படுவர் என்ப.

கவுந்தியடிகள் முதலிய மூவரும் சாரணத் தலைவனை வணங்குதல்

164 - 169 : பண்டைத் தொல்வினை ............. கொள்ளான்

(இதன்பொருள்:) கண்டு அறி கவுந்தியொடு - அறங்கூறும் அச்சாரணர் வருகையைக் கண்கூடாகக் கண்டறிந்த கவுந்தி அடிகளாரோடு கோவலனும் கண்ணகியும்; பண்டைத் தொல்வினை பாறுக என்று - யாம் முன்செய்த பழவினை யெல்லாம் கெட்டொழிக என்னும் கருத்துடையராய்; காலுற வீழ்ந்தோர் அச்சாரணர் திருவடியிலே தம் முடிதோய வீழ்ந்து வணங்கினாராக அங்ஙனம் வணங்கியவர்; வந்த காரணம் வயங்கிய கொள்கைச் சிந்தை விளக்கில் தெரிந்தோனாயினும் - அங்கு வருதற்குரிய அவர்தம் பழவினையையும் அவ்வினை மேலும் அவர்க்கு ஊட்டும் துன்பங்களையும், அச்சாரணருள் வைத்துத் தலைவன் விளங்கிய கோட்பாட்யுடைடைய தனது அவதி ஞானத்தாலே நன்கு தெரிந்தவனாயினும்; ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய வீரனாகலின் - விருப்பும் வெறுப்பும் தன்னை விட்டுப் போகும்படி துவர நீக்கிய ஆண்மையாளனாகலின்; விழுமம் கொள்ளான் - அவர்க்குத் தான் வருந்தானாகி என்க.

(விளக்கம்) கவுந்தியொடு கோவலனும் கண்ணகியும் சாரணர் காலுற வீழ்ந்து வணங்கினர் என்க. காலுற வீழ்ந்தோர், பெயர். வீழ்ந்தோராகிய கோவலனும் கண்ணகியும் என்க. காரணம் - அவர் முற்பவத்தே செய்த வினையும் அதன் செயலும். எல்லாம் ஊழின்படியே நிகழ்தலின் அங்ஙனம் நிகழ்தலியற்கை என்று கண்டு அவர் இப்பொழுது எய்தும் துயர்க்கும் இனி எய்த விருக்கும் துயர்க்கும் தம் அருள்காரணமாக வருந்துதலே இயல்பாகவும் தமது மெய்யுணர்வு காரணமாக அவலங் கொள்ளாராயினர் என்பது கருத்து. ஆர்வமும் செற்றமும் நீக்கிய வீரனாகலின் அவற்றின் காரியமாகிய வேண்டுதலும் வேண்டாமையும் இலனாய் விழுமம் கொள்ளானாயினன் என்பது கருத்து. சாரணருள் வைத்துத் தலைவன் காலுற வீழ்தலின் முன்னர்ச் சாரணர் தோன்ற என்றவர், ஈண்டுச் சிந்தை விளக்கிற் றெரிந்தோன் என்றும் விழுமம் கொள்ளான் என்றும் ஒருமைப் பாலாற் கூறினர். சிந்தை விளக்கு என்றது - அவதிஞானத்தை. அஃதாவது முக்கால நிகழ்ச்சியையும் அறியும் அறிவு.

சாரணத் தலைவர் கவுந்தியடிகட்குக் கூறுதல்

170 - 175 : கழிபெரு ......... உயிர்கள்

(இதன்பொருள்:) கழிபெருஞ் சிறப்பின் கவுந்தி - (கோவலனும் கண்ணகியும் அறியாவண்ணம் அச்சாரணத் தலைவன் கவுந்தி அடிகளாரை நோக்கி அவர் குறிப்பாக வுணருமாறு) மிகவும் பெரிய தவச்சிறப்பினையுடைய கவுந்தியே! வல்வினை ஒழிக என ஒழியாது ஊட்டும் - முற்செய்த வலிய பழவினையானது எத் தகையோரானும் ஒழிக்க ஒழியாததாய்த் தன் பயனை நுகர்விக்கும் என்னும் வாய்மையினையும்; இட்டவித்தின் எதிர்ந்து வந்து எய்தி - மேலும் அப்பழவினை தானும் விளைநிலத்திட்ட வித்துப் போலத் தான் செவ்விபெற்றுழி உருத்துவந்து தனது பயனை; ஒட்டுங்காலை - ஊட்டுதற்கு முந்துறும் பொழுது; ஒழிக்கவும் ஒண்ணா - அதனை எத்தகைய சூழ்ச்சியானும் தவிர்க்கவும் முடியாது என்னும் வாய்மையினையும்; காணாய் - இவர்கள் வாயிலாய்க் காட்சி யளவையான் கண்டு கொள்ளக்கடவாய்; கடுங்கால் நெடுவெளி இடும் சுடர் என்ன உடம்பிடை நில்லா உயிர்கள் - கடிய காற்றையுடைய நெடிய வெளியிடத்தே ஏற்றி வைத்த விளக்குப் போன்று ஞெரேலென அப்பழவினை வந்து மோதியபொழுது அவிந்தொழிவதன்றித் தாம் எடுத்த உடம்போடு கூடி நிற்க மாட்டாவாம்; என்றான் என்க.

(விளக்கம்) ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை என்றது முன்னர்க் கவுந்தியடிகளார் கோவலனை நோக்கி உரியதன்று ஈங்கு ஒழிக என்று அறிவுறுத்ததனையும் அதுகேட்டும் அவர் ஒழியாராயினமையும் சிந்தை விளக்கிற் றெரிந்து உலகியன் மேலிட்டோதிய படியாம். வல்வினை என்றது ஒழிகென என்றமையால் கொடிய தீவினை என்னும் பொருட்டாய் நின்றது. என்னை? நல்வினை வந்தூட்டுங் காலை ஒழிகென்பார் யாருமிலர் ஆகலின் என்க.

கழிபெருஞ் சிறப்புடைய தவத்தோர் ஒழிக எனினும் ஊழ்வினை ஒழியாதென்பது தோன்றுதற் பொருட்டு முன்னர் ஒழிக என்ற கவுந்தியைக் கழிபெருஞ் சிறப்பிற் கவுந்தி! என்று விளித்த படியாம். இனி, இட்ட வித்தின் எதிர்ந்து வந்து ஒட்டுங்காலை அவ்வினையைச் செய்தவர் பிறிதொரு சூழ்ச்சியான் ஒழிக்கவும் ஒண்ணா என்பது கருத்தாகக் கொள்க, ஈண்டு.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்  (380)

எனவரும் திருக்குறளும்,

உறற்பால நீக்கல் உறுவர்க்கு மாகா  (பழவினை -4)

எனவரும் நாலடியும் நினைவுகூர்தற் குரியனவாம்.

இனி, கோவலன் கொலையுண்ணலும் கவுந்தியடிகள் உண்ணா நோன்பின் உயிர்பதிப் பெயர்த்தலும் சிந்தை விளக்கிற் றெரிந்தமையால் அவற்றை வெளிப்பட வுரையாது குறிப்பாக கடுங்கால் நெடு வெளியிடும் சுடர் என்ன ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள் எனப் பன்மையாலுலகின் மேலிட்டோதினன் என்க.

இனி, வல்வினை என்பது நல்வினை தீவினை என்னும் இரண்டற்கும் பொதுவாகக் கொள்வாருமுளர்.

விளக்கு உவமித்தார் : நினைவற அழிவதற்கும், புக்குழிப் புலப் படாமைக்கும்; என்பர் அடியார்க்கு நல்லார்.

அருகக் கடவுளின் மாண்பும் ஆகமத்தின் சிறப்பும்

176 - 191 : அறிவன் ............ பொதியரை யோரென

(இதன்பொருள்:) அறிவன் - இயல்பாகவே எல்லாப் பொருளையும் அறியும் வாலறிவினையுடையோனும்; அறவோன் - அறஞ் செய்தலையே தொழிலாக வுடையோனும்; அறிவு வரம்பு இகந்தோன் - யாவர் அறிவிற்கும் அப்பாற்பட்டவனும்; செறிவன் - எல்லா வுயிர்கட்கும் இன்பமாயிருப்பவனும்; சினேந்திரன் - எண்வகை வினைகளை வென்றவனும்; சித்தன் - செய்யக்கடவ வெல்லாம் செய்து முடித்தவனும்; பகவன் - முக்கால நிகழ்ச்சிகளையும் உணர்பவனும்; தரும முதல்வன் - அறங்கட்கெல்லாம் காரணமானவனும்; தலைவன் - எல்லாத் தேவர்க்கும் தலைவனானவனும்; தருமன் - அறவாழி அந்தணனும்; பொருளன் - மெய்ப்பொருளானவனும்; புனிதன் - தூயவனும்; புராணன் - பழையவனும்; புலவன் - யாவர்க்கும் அறிவாகவுள்ளவனும்; சினவரன் - வெகுளியைக் கீழ்ப்படுத்தியவனும்; தேவன் - தேவர்க்கெல்லாம் முதல்வனும்; சிவகதி நாயகன் - வீட்டுலகிற்குத் தலைவனும்; பரமன் - மேலானவனும்; குணவதன் - குணவிர தங்களையுடையவனும்; பரத்தில் ஒளியோன் - மேனிலையுலகில் ஒளிப்பிழம்பானவனும்; தத்துவன் - மெய்யுணர்வானவனும்; சாதுவன் - அடக்கமுடையோனும்; சாரணன் - வானத்தே வதிபவனும்; காரணன் - உயிர்கள் வீடுபேற்றிற்குக் காரணமானவனும்; சித்தன் - எண்வகைச் சித்திகள் கைவரப் பெற்றவனும்; பெரியவன் - எல்லாவற்றானும் பெரியவனும்; செம்மல் - பெருந்தகை யுடையோனும்; திகழ் ஒளி - விளங்குகின்ற அறிவு ஒளியாயிருப்பவனும்; இறைவன்- எப்பொருளினும் தங்குகின்றவனும்; குரவன் - நல்லாசிரியனும்; இயல்குணன் - இயல்பாகவமைந்த நற்குணமுடையோனும்; எங்கோன் - எம்முடைய தலைவனும்; குறைவு இல் புகழோன் - எஞ்ஞான்றும் குறையாத புகழையுடையோனும்; குணப்பொருட் கோமான் - நற்குணங்களாகிய செல்வத்தையுடையவனும்; சங்கரன் - இன்பஞ் செய்பவனும்; ஈசன் - செல்வனும்; சுயம்பு - தானே தோன்றியவனும்; சதுமுகன் - எத்திசையையும் ஒருங்கே காண்பவனும்; அங்கம் பயந்தோன் - அங்காகமத்தை அருளிச் செய்தவனும்; அருகன் - யாவரானும் வழிபடப்படுபவனும்; அருள் முனி - யாவர்க்கும் வீடு நல்கும் முனைவனும்; பண்ணவன் - கடவுளும்; எண்குணன் - எட்டுக் குணங்களையுடையவனும்; பாத்து இல் பழம்பொருள் - பகுத்தற்கரிய முழுமுதலானவனும்; விண்ணவன் - அறிவு வெளியிலிருப்பவனும்; வேதமுதல்வன் - மூன்றாகமங்கட்கும் ஆசிரியனும்; விளங்கு ஒளி - மெய் விளங்குதற்குக் காரணமான ஒளியாயிருப்பவனும், ஆகிய அருகப்பெருமான்; ஓதிய வேதத்து ஒளி உறின் அல்லது - அருளிச்செய்த ஆகமமாகிய விளக்கொளியைப் பெற்றாலல்லது; பிறவிப் பொதியறையோர் - பிறவியாகிய சிறையிடைப்பட்ட மாந்தர்; போதார் - அதனினின்றும் வீடுபெறுதல் இலர் என - என்று செவியறிவுறுத்தா நிற்ப என்க.

(விளக்கம்) 176 - அறவோன் - எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுபவன். 177 - செறிவான் - அலைவில்லாதவன் எனினுமாம். எண்வகை வினைகளாவன - ஞானாவரணீயம், தரிசனாவரணீயம், வேதநீயம், மோகநீயம், ஆயுஷ்யம், நாமம், கோத்திரம், அந்தராயம் எனுமிவை. சித்தன் - கன்மங்களைக் கழுவினவன் என்றுமாம்.

178 - முதல்வன் - காரணன், 179 - ஆகமத்தின் பொருளாயுள்ளவன் எனினுமாம். 180-சிவகதி-வீடுபேறு. 181-குணவதன் என்புழி வதம் - விரதம். அவை அநுவிரதம், குணவிரதம், சிக்கை விரதம் என மூவகைப்படும். அவற்றுள்: குணவிரதம் - திக்குவிரதம், தேசவிரதம், அநர்த்த தண்ட விரதம் என மூன்று வகைப்படும் என்ப. 181 - பரத்தில் - மேனிலை உலகின்கண். 183- சித்தன் - எண்வகைச் சித்திகளையும் உண்டாக்கினவன் என்பாருமுளர். 186 - சயம்பு - ஓதாதுணர்ந்தவன் என்றவாறு.

188 - எண்குணமாவன: அநந்த ஞானம், அநந்த வீரியம், அநந்த தரிசனம், அநந்த சுகம், நிர்ந்நாமம், நிராயுஷ்யம், அழியா வியல்பு என்னுமிவை. பாத்து - பகுப்பு, பாத்தில் பழம் பொருள் - ஓட்டமற்ற பொன்னை யொப்பான் என்றுமாம். 189. அங்காகமம், பூர்வாகமம், பகுசுருதியாகமம் என ஆகமம் மூன்று வகைப்படும்.

191 - பிறவியாகிய பொதியறை என்க. பொதியறை - புறப்படற்குரிய வாயிலுமில்லாத அறை. இதனைப் புழுக்கறை என்றும் கூறுப.

சாரணர் அறவுரை கேட்ட கவுந்தியடிகளார் மகிழ்ந்து கூறுதல்

192 - 208 : சாரணர் ........... இசைமொழி யேத்த

(இதன்பொருள்:) சாரணர் வாய்மொழி கேட்டு - இங்ஙனம் அருளிச்செய்த சாரணப் பெரியார் மெய்ம்மொழியைக் கேட்ட; தவமுதல் கவுந்திகை - தவவொழுக்கத்திற்குத் தலைசிறந்த முதல்வியாகிய கவுந்தியடிகளார் அன்பினாலே நெஞ்சம் நெகிழ்ந்து; தன் கை தலைமேற் கொண்டு - தம் கைகளைக் குவித்துத் தலைக்கு மேலேறக் கொண்டு நின்று கூறுபவர்; ஒரு மூன்று அவித்தோன் ஓதிய திருமொழிக்கு அல்லது என் செவியகம் திறவா - பெரியீர்! காமவெகுளி மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் துவரக் கெடுத்தவனாகிய இறைவனால் அருளிச் செய்யப்பட்ட மெய்யறிவாகிய திருமொழியைக் கேட்பதற்கல்லது, பிறரால் ஓதப்பட்ட மயக்குரைகளைக் கேட்டற்கு அடிச்சியேனுடைய செவிகள் திறக்கமாட்டாவாம்; என் நா காமனை வென்றோன் ஆயிரத் தெட்டு நாமமல்லது நவிலாது - அடிச்சியேனுடைய நாவானது காமனுடைய செயலை வென்றவனாகிய அக்கடவுளுக்கியன்ற ஓராயிரத்தெட்டுத் திருப்பெயர்களைத் தழும்ப வோதிமகிழ்வதல்லது பிறிதொரு கடவுளின் பெயரை ஒருபொழுதும் ஓதமாட்டாது; என் கண் ஐவரை வென்றோன் அடியிணை யல்லது கைவரைக் காணினும் காணா - அடிச்சியேனுடைய கண்கள் தாமும் ஐம்பொறிகளையும் அடர்த்து வென்றவனாகிய நங்கள் அருகக்கடவுளுடைய திருவடிகளைக் கண்டு களிப்பதல்லது; பிறிதொரு கடவுளின் அடியிணை என் கையகத்தே வந்திரு பினும் காணமாட்டாவாம்; என் பொருள் இல் யாக்கை அருள் அறம் பூண்டோன் திருமெய்க்கு அல்லது பூமியில் பொருந்தாது - அடிச்சியேனுடைய பயனற்ற யாக்கையானது அருள் என்னும் தலையாய அறத்தையே குறிக்கோளாகக் கொண்ட அக்கடவுளுடைய உருவத் திருமேனியை வணங்கற் பொருட்டன்றிப் பிறிதொரு கடவுளை வணங்கற்கு நிலத்தின்கண் பொருந்தாது; அருகர் அறவோன் அறிவோற்கு அல்லது என் இருகையும் கூடி ஒருவழிக் குவியா - ஆருகதத் துறவோர்க்கு அறத்தைக் கூறுவோனாகிய அவ்வாலறிவனைத் தொழுதற் பொருட்டன்றி அடிச்சியேனுடைய இருகைகளும் தம்முட் கூடித் தலைமேலே ஒருங்கே குவியமாட்டாவாம்; என் தலைமிசை உச்சிதான் மலர்மிசை நடந்தோன் மலர் அடி அல்லது அணிப் பொறாஅது - அடிச்சியேனுடைய தலையினுச்சி தானும் தாமரைப் பூவின்மீதே நடந்தவனாகிய அக்கடவுளுடைய மலர்போன்ற அழகிய திருவடிகளை அணிகலனாக அணியப் பொறுப்பதல்லது பிறிதோரணிகலனையும் அணியப் பொறுக்கமாட்டாது; என்மனம் இறுதியில் இன்பத்து இறைமொழிக்கு அல்லது மறுதர ஓதி புடை பெயராது - அடிச்சியேனுடைய நெஞ்சமானது கடையிலா வின்பத்தையுடைய நம் மிறைவன் திருவாய் மலர்ந்தருளிய ஆகமங்களைப் பன்முறையும் ஓதி ஓதி இன்பத்தாலே நெகிழ்வதல்லது; எஞ்ஞான்றும் பிற சமயநூல்களை ஓதி நெகிழமாட்டாது; என்று அவன் இசை மொழி ஏத்த - என இவ்வாறு கூறி அவ்வருகக் கடவுளுடைய புகழையுடைய மொழிகளாலே அக்கடவுளை வாழ்த்தா நிற்ப; என்க.

(விளக்கம்) 193 - காவுந்திகை - கவுந்தியடிகள். காவுந்தியும் எனப் பாடந் திருத்துவாருமுளர். 194 - ஒரு மூன்று - காம வெகுளி மயக்கம்: ஈண்டு,

காம வெகுளி மயக்க மிவைமூன்ற
னாமங் கெடக்கெடு நோய்  (குறள் - 310)

எனவரும் திருக்குறள் நினைக்கப்படும்.

196. காமத்தின் குறும்பு தன்பா னிகழாமற் செய்தலையுட் கொண்டு காமனை வென்றோன் என்றோதியபடியாம்.

198 - ஐவர் - மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்பொறிகள்-இகழ்ச்சியால் அஃறிணை உயர்திணையாயிற்று. ஐந்தவித்தான் என வரும் திருக்குறளை ஒப்பு நோக்குக.

199. கடவுட் டொழுது வரமிரப்போர் கண்முகிழ்த்து இருகையும் விரித்துநின்று இரப்பரன்றே? அங்ஙனம் விரிந்த கையகத்து வேறு கடவுள் தன் திருவடியை வலிய வந்து வைப்பினும் அவற்றையும் என்கண் காணா என்றவாறு.

200. அருளறம் பூண்டோன் - அருகன். திருமெய் என்றது ஈண்டுத் திருக்கோயிலிலுள்ள இறைவனது உருவத் திருமேனியை,

201. பொருள் இல் யாக்கை - பொய்ப் பொருளானியன்ற - யாக்கை எனினுமாம். வணங்கற் பொருட்டுப் பூமியிற் பொருந்தாது என்க.

202 - அருகர், ஈண்டு ஆருகதத் துறவோர், அறிவோன் - அறிவுடையவன்.

207. மறுதர வோதுதல் - மீண்டு மீண்டு ஓதுதல். 208 - அவன் - அவ்விறைவன்.

சாரணர் கவுந்தியை வாழ்த்தி வான்வழிப் போதலும்
கவுந்தி முதலியோர் அவணின்றும் போதலும்

208 - 213 : கேட்டதற்கு .......... போந்து

(இதன்பொருள்:) கேட்டு அதற்கு ஒன்றிய மாதவர் - கவுந்தி கூறிய இசைமொழியைக் கேட்டு அக் கேள்வியாலே ஒருமையுற்ற மனத்தையுடைய பெரிய தவத்தையுடைய அச்சாரணர்; உயர்மிசை ஓங்கி ஒருமுழம் நிவந்து ஆங்கு - அவர்கள் இருந்தறங்கூறிய உயரிய அம்மேடையினின்றும் தமது தவவாற்றலாலே ஒரு முழம்வானத்தே உயர்ந்து அவ்விடத்தேயே நின்று; கவுந்தி பவந்தரும் பாசம் கெடுக என்று - கவுந்தியே! நினக்குப் பிறப்பைத் தருகின்ற பற்றறுவதாக! என்றுகூறி வாழ்த்திப் பின்னர்; நீள்நிலம் நீங்கி அந்தரம் ஆறாப் படர்வோர் - நெடிய நிலத்தின் மேலதாகிய வழிமேற் செல்லுதலைத் தவிர்த்து வான்வழியே செல்லாநிற்ப அங்ஙனம் செல்கின்ற சாரணர் போந்திசை நோக்கி; தொழுது பந்தம் அறுக எனப் பணிந்தனர் போந்து - கை குவித்துத் தொழுது நுந் திருவருளாலே எளியேங்கள் பற்றற்றொழிவதாக! என வேண்டிப் பின்னர் நிலத்தின்மிசை அத்திசை நோக்கி வீழ்ந்து வணங்கியவராய்க் கவுந்தி முதலிய மூவரும் அவ்விடத்தினின்றும் போந்து என்க.

(விளக்கம்) 208 - இசை மொழி ஏத்தக் கேட்டு அம் மொழிக்கு ஒன்றிய மாதவர் என்க. மொழிக்கு ஒன்றுதலாவது - இசை மொழிக்குப் பொருளாகிய இறைவனோடு கலத்தல். என்றது, கவுந்தியடிகள் இறைவன் இசைமொழி கூறுங்கால் அப்பொருளோடொன்றிச் சாரணர் மெய்ம் மறந்து தியான நிலையை எய்தி விட்டனர் என்றவாறு. அவ்வாறு நிகழ்தல் இறையன்பு மிக்கார்க்கியல்பு. 209 - உயர் மிசை சிலாவட்டம் - கல்லாலியன்ற உயர்ந்த மேடை உயிர்மிசையினின்றும் ஒரு முழம் ஓங்கி நிவந்து நின்று என்க. ஓங்கிப் பின் நிவந்து அந்தரம் ஆறாப்படர்வோர் எனினுமாம். படர்வோர் - பெயர். 213 - பந்தம் பற்று. மேற் பவந்தரு பாசம் என்றதை வழிமொழிந்தபடியாம். பந்தம் அறுகென - என்றது அதுவே யாம் வேண்டும் வரமுமாம் என்பது பட நின்றது. என்னை?

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்  (குறள் - 362)

என்பது தமிழ் மறையாகலின்.

கோவலன் முதலியோர் ஓடமேறிக் காவிரியின் தென்கரை சேர்தல்

214 - 218 : காரணி ............. இருந்துழி

(இதன்பொருள்:) கார் அணி பூம்பொழில் காவிரியாற்று நெடுந்துறை நீரணி மாடத்து - முகிலை அணிந்த அழகிய பொழிலை யுடைய அக்காவிரி மாற்றினது நீண்டதொரு ஓடத்துறையின்கண் பள்ளி யோடத்திலேறி; மாதரும் கணவனும் மாதவத்தாட்டியும் - காதன்மிக்க கண்ணகியும் அவள் கணவனாகிய கோவலனும் பெரிய தவத்தையுடைய கவுந்தியடிகளும் ஆகிய மூவரும் அக் காவிரியாற்றைக் கடந்துபோய்; தீதுதீர் நியமத் தென்கரை எய்தி - தன்னை வலம்வந்து கைதொழுவார் தம் தீவினையைக் கெடுக்கும் சிறப்புடைய திருக்கோயிலையுடைய தென்கரையைச் சென்றெய்தி; ஓர் போதுசூழ் கிடக்கைப் பூம்பொழில் இருந்துழி - ஆங்குள்ளதொரு மலர்கள் சூழ்ந்து கிடக்கின்ற பூம் பொழிலிடத்தே சென்று இளைப்பாற விருக்கின்ற பொழுது என்க.

(விளக்கம்) 214. பொழிலினது வளம் தெரிப்பார் காரணி பூம்பொழில் என்றார். 215 - பேர்யாற்று நெடுந்துறையில் நீரணி மாடத்திலேறி யாற்றைக் கடந்து போய்த் தென்கரை எய்தி என்க. 217 - தீது - வலம் வந்து தொழுவார்தம் தீவினை. நியமம் - கோயில். நியமம் கூறினார் அதுதானும் நாட்டு மக்கள் வந்து நீராடும் பெருந்துறை என்றற்கு.

216. மாதர் காதல் என்னும் பொருட்டாகலின் அப்பண்பிற் றலைசிறந்தவள் என்பது நினைவூட்டற் பொருட்டு வாளா கண்ணகி என்னாது மாதரும் என்றார். அவளது பெருந்தகைமைக்கேற்ப ஊழாற் கூட்டுவிக்கப்பட்ட வழித்துணையின் மாண்பையும் ஈண்டும் நம்மனோர்க்கு நினைவூட்டுவார் வாளா கவுந்தியும் என்னாது மாதவத் தாட்டியும் என்றார். என்னை? அவரது துணைச் சிறப்பு அடுத்துத் தானே விளங்குமாகலின் என்க. மற்றுக் கோவலனுக்குக் கண்ணகிக்குக் கணவனாம் சிறப்பொன்றுமே உண்மையின் அவனையும் அச்சிறப்புத் தோன்றக் கணவனும் என்றோதினர்.

வம்பப்பரத்தையும் வறுமொழியாளனும்

219 - 224 : வம்பப்பரத்தை ...... வினவ

(இதன்பொருள்:) வம்பப்பரத்தை வறுமொழியாளனொடு கொங்கு அலர் பூம்பொழில் குறுகினர் சென்றோர் - புதுவதாகப் பரத்தமைத் தொழிலில் புகுமொரு பரத்தைமகளும் அவளைக் காமுற்றழைத்தேகும் வறுமொழியாளனாகிய கல்லாக் கயமகன் ஒருவனும் கண்ணகி முதலியோர் இளைப்பாற விருந்த நறுமணம் பரப்புமப் பூம்பொழிலிற் புகுந்து அவர்க்கு அணுக்கராய்ச் சென்றவர்; ஈங்குக் காமனும் தேவியும் போலும் இவர் ஆர் எனக் கேட்டு அறிகுவம் என்றே - இவ்விடத்தே வந்திருக்கின்ற காமவேளையும் அவன் மனைவியாகிய இரதிதேவியையுமே ஒக்கின்ற பேரழகு வாய்ந்த இவர்தாம் யார் என்று கேட்டு அறியக்கடவேம் என்று தம்முட் கூறிக்கொண்டு, அடிகளாரை நோக்கி; நோற்று உணல் யாக்கை நொசி தவத்தீர் உடன் ஆற்றுவழிப்பட்டோர் ஆர் என வினவ - விரதங்களை மேற்கொண்டு பட்டினிவிட் டுண்ணுதலாலே உடம்பு மெலிந்த துறவியீரே! நும்மோடு கூடி வழிவந்த இவர்தாம் யாரோ என்று வினவா நிற்ப என்க.

(விளக்கம்) வம்பப் பரத்தை - புதுவதாகப் பரத்தமைத் தொழிலிற் புகுந்த பரத்தை என்க. எனவே இளம்பரத்தை என்பதுமாயிற்று. வறுமொழி - பயனில்லாத மொழி. வறுமொழியாளன் - எனவே கல்லாக் கயமகன் என்றாராயிற்று.

220. குறுகினர் - குறுகி - ஏதிலார்பால் குறுகிச் செல்லுதலும் ஒரு கயமைத் தன்மை. அவர் கடிந்து ஒதுக்குமளவில் கண்ணகி முதலியோர்க்கு அணுக்கராய்ச் சென்றனர் என்பார், குறுகினர் சென்றோர் என்றார்.

223. நோற்றுண்டலால் பயன் யாக்கை நொசிதலேயன்றிப் பிறிதொன்றுமில்லை என்னும் கருத்துத் தோன்றுமாறு, நோற்றுணல் யாக்கை நொசி தவத்தீர் என்றான். யார் - ஆர் என மருவிற்று.

கவுந்தியடிகள் வறுமொழியாளனையும் வம்பப்பரத்தையையும் சபித்தல்

224 -234: என்மக்கள் ............. பட்டதை யறியார்

(இதன்பொருள்:) கண்ணகியையும் கோவலனையும் மிகைப்பட அணுகிநின்று இவ்வாறு தம்மை வினவிய அவ்விருவரையும் நோக்கி அடிகளார்; இவர் எம்மக்கள் காண்மின்! மானிட யாக்கையர் - நீவிர் கூறிய காமனும் இரதிதேவியும் அல்லர். இவர்தாமும், மக்கள் யாக்கை உடையர் ஆதல் கண்டிலிரோ? அதுநிற்க அவர்; பரிபுலம்பினர் - வழிவந்த வருத்தத்தால் பெரிதும் இளைப்புற்றிருக்கின்றனர்; பக்கம் நீங்குமின் - ஆதலால் அவரை அணுகி வருத்தாதே கொண்மின்; அவர் பக்கலினின்றும் விலகிப் போமின் என்று கூறாநிற்ப; அதுகேட்ட அவ்விருவரும், கற்று அறிந்தீர் உடன்வயிற்றோர்கள் ஒருங்கு உடன்வாழ்க்கை கடவதும் உண்டோ என - நூல்களையுங் கற்று அவற்றின் பயனையும் அறிந்த பெரியீரே! ஒரு தாய் வயிற்றில் உடன்பிறந்தவர்தாம் கொழுநனும் மனைவியுமாய் ஒருங்குகூடி வாழக்கடவது என்று நீர் கற்ற நூல்களிற் சொல்லிக் கிடப்பதும் உண்டோ? உண்டாயின் சொல்லுக! என்று கூறி அடிகளை இகழாநிற்ப; கண்ணகி தீ மொழி கேட்டுச் செவி அகம் புதைத்துக் காதலன் முன்னர் நடுங்க - கண்ணகி நல்லாள் இவ்விகழ்ச்சி மொழியைக் கேட்டலாலே தன் செவிகளைக் கையாற் பொத்தித் தன் காதலன் முன்னர் நடுங்காநிற்ப; கவுந்தி - அதுகண்ட கவுந்தியடிகளார்; இவர் என் பூங்கோதையை எள்ளுநர் போலும் முள் உடைக்காட்டில் முதுநரி ஆக என - இக் கயமாக்கள் என் பூங்கோதை போல்வாளை இகழ்கின்றனர். இத்தீவினை காரணமாக இவர்தாம் துடக்கு முட்களையுடைய காட்டில் நுழைந்து திரியும் ஓரிகளாகி உழலக்கடவர் எனத் தம் நெஞ்சினுள்ளே; இட்டது - இட்ட சாபமானது; தவந்தரு சாபம் ஆதலின் கட்டியது - தவத்தின் விளைவாகிய சாபமாதலாலே அவரைத் தன் வயப்படுத்தி அவர்பால் தன் பயனை விளைவிப்பதாயிற்று. ஆகவே, அவர்தாம் ஞெரேலென அவ்விடத்தே காணப்படாராயினர்; பட்டதை அறியார் - இவ்வாறு நிகழ்ந்த நிகழ்ச்சியை அறியாதவராயினும் என்க.

(விளக்கம்) 221 - அழகினால் காமனும் தேவியும் போல்கின்றார் இவர் யார் எனத் தம்முட் கூறியதனை அடிகளார் கேட்டமையின், இவர் என் மக்கள் காணீர் என்நவர் மீண்டும் நீயிர் கருதுகின்ற அமரர்கள் அல்லர் என்பார் மானிட யாக்கையர் என்றனர். அப்பரத்தையும் வறுமொழியாளனும் மிகையாகக் கண்ணகிக்கும் கோவலனுக்கும் அணுக்கராய் வந்து நிற்றலால் அவர் பரிபுலம்பினர் பக்கம் நீங்குமின் என்றார். நீயிர் அத்துணை அணுக்கராய் நிற்றல் அவர்க்குப் பின்னும் வருத்தம் விளைவிக்கும் என்பது குறிப்பு.

227. அவன்றான் வறுமொழியாளன் ஆதலின் உடன் வயிற்றோர் ......... கற்றறிந்தீர் என வறுமொழி கூறி வறிதே வினவுதலும் அறிக. கற்றறிந்தீர் என்றநிகழ்ச்சி. தவத்தாற் கழிபெருஞ் சிறப்புடைய கவுந்தியடிகளாரை இவ்வாறு இகழும் மொழியைக் கேட்கப் பொறாளாய்க் கண்ணகி தன் செவியகம் புதைத்துக் கணவன் பக்கலிலே நோக்கி நடுங்குகின்றாள் என்க.

231. எள்ளுநர் போலும் என்புழி போலும்; ஒப்பில்போலி. என் பூங்கோதை என்றது யான் அணியத் தகுந்த பூங்கோதை போலும் சிறப்புடைய இக்குலமகளை என்பதுபட நின்றது. அடிகள் மனத்தால் நினைத்திட்ட சாபம் ஆதலால், அக்கயவர்கட்கு நிகழ்ந்தது இன்னதென்றறியாராயினர். பட்டதை - நிகழ்ந்ததனை.

கண்ணகியும் கோவலனும் அக்கயவர்க்கிரங்கிச் சாபவிடை செய்தருள வேண்டுதல்

235 - 240 : குறுநரி ............. உரையீரோவென

(இதன்பொருள்:) நறுமலர்க் கோதையும் நம்பியும் குறுநரி நெடுங்குரல் கூவிளி கேட்டு நடுங்கி - நறிய மலர் மாலையையுடைய கண்ணகியும் ஆடவருட் சிறந்த கோவலனும் குறிய இரண்டு நரிகள் நீளிதாகியகுரலாலே ஊளையிடுகின்ற ஒலியைக் கேட்டமையாலே இஃது அடிகளாரின் சாபத்தின் விளைவு என்றறிந்து அவர்க்கெய்திய அக்கேட்டிற்குத் தாம் அஞ்சி நடுங்கி; நெறியின் நீங்கியோர் நீர் அலகூறின் அறியாமை என்று அறிதல் வேண்டும் - நல்லொழுக்கத்தினின்றும் நீங்கிய மக்கள் தாம் நீர்மையல்லாத தீ மொழிகளைக் கூறினும் அதற்குக் காரணம் அவர்க்கியல்பான அறியாமையே ஆகும் என்று மெய்யறிவுடையோர் அறிதல் வேண்டுமன்றோ! அங்ஙனம் அன்றி அடிகளார் சபித்தமை இரங்கத்தக்கதாம் என்றுட் கொண்டு பின்னர் அடிகளாரை நோக்கி; செய் தவத்தீர் திருமுன் பிழைத்தோர்க்கு - செய்து முற்றிய தவத்தையுடையீர் தம் மேலான முன்னிலையிலே பிழை செய்த இவ்வறிவிலிகட்கு; உய்திக்காலம் உரையீர் ஓ என - இக் கடிய சாபம் நீங்கி உய்தற்கும் ஒரு காலத்தைத் திருவாய் மலர்ந்தருள வேண்டும் என்று கூறி இரவா நிற்ப என்க.

(விளக்கம்) அடிகளார் நினைவு மாத்திரத் தானிட்ட சாபம் தவந்தரு சாபமாகலின் உடனே பலித்தலாலே அப்பரத்தையும் வறுமொழியாளனும் மாயமாகத் தம்முருவ மாறி நரிகளாய் ஊளையிட, அதுகண்ட கண்ணகியும் கோவலனும் தமது ஆராய்ச்சி யறிவுகாரணமாகக் கருதலளவையால் இவ்வரிய நிகழ்ச்சிக்குக் காரணம் அடிகளார் இட்ட சாபமேயாம் பிறிதன்றென்று துணிந்தனர் என்க. அவர் இழி பிறப்புற்றமைக்குத் தாமும் காரணமாகி விட்டமை கருதியும் அறியாமையால் அவர்க்குற்ற துயர்க் கிரங்கியும் அம்மேன்மக்கள், அஞ்சியும் இரங்கியும் நடுங்கினர் என்க. கூவிளி - நரியின் குரல். இக்காலத்தே இதனை ஊளையிடுதல் என்பர்.

இனி, அரும்பதவுரையாசிரியர், பின்பு அறிந்தபடி அவர் கண் முன்னே நரியான படியாலும் (முன்பு அவர்) பொல்லாங்கு கூறினமையானும், அவ்விடத்து இவரல்லது வேறு சாபமிடவல்லார் இல்லை யாகலானும் இச்சாபம் இவராலே வந்த தென்று இவர் அறிந்தார். அறிந்து உய்திக்காலம் உரையீரோ என்றார் என விளக்குவர்.

நெறியினீங்கியோர் நீரல கூறினும் அறியாமை யென்றறிதல் வேண்டும் என்னுந் துணையும் அவருட்கோள். பின்னதை அடிகட்குக் கூறினர் என்பர் அடியார்க்கு நல்லார்.

இனி, இந்நிகழ்ச்சியால் ஊழ்வினை என்பது முற்பிறப்பிலே செய்வது மட்டும் அன்று, நொடிப் பொழுதைக்கு முன் செய்ததூஉம் ஊழ்வினையேயாம் என்பதும், மற்று ஊழ்வினை தான் ஒரு பிறப்பிற் செய்ததும் அவர் தம் மறுப்பிறப்பிற்றான் உருத்து வந்தூட்டும் என்று நினையற்க! ஒரு நொடிப் பொழுதைக்கு முன் செய்தது மறுநொடிப் பொழுதிலே உருத்து வந்தூட்டுதலும் உண்டு என ஊழினது இயல் பொன்றனை இளங்கோ அடிகளார் மிகவும் நுண்ணிதாக வுணர்த்தினாராதலு முணர்க.

கவுந்தியடிகள் சாபவிடை செய்தருளுதல்

241 - 245 : அறியாமையின் ............. விடைசெய்து

(இதன்பொருள்:) அறியாமையின் இன்று இழிபிறப்பு உற்றோர் -இவ்வேண்டுகோள் கேட்ட அடிகளாரும் அதற்கு இணங்கியவராய்த் தமது மனம் மொழி மெய் என்னும் முப்பொறிகளானும் துன்பம் வரும் என்பதனை அறியாமையாலே தம் வாய் தந்தன கூறி இற்றைநாள் இழிந்த பிறப்பாகிய நரிகளான; இவர் இங்கு உறையூர் நொச்சி ஒருபுடை ஒதுங்கிப் பன்னிருமதியம் படர்நோய் உழந்தபின் - இவ்விருவரும் ஈண்டு உறையூரினது மதிற்புறத்தே அமைந்த காவற் காட்டின் ஒருபக்கத்தே நரிகளாகவே திரிந்து பன்னிரண்டு திங்கள் முடியும் துணையும் தமக்கெய்திய நிலையினை நினைத்தலாலே வரும் துன்பத்தையும் நுகர்ந்த பின்னர்; முன்னை உருவம் பெறுக எனச் சாபவிடை செய்து - பழைய மாக்கள் உருவத்தைப் பெறுவாராக வென்று அச்சாபத்தினின்றும் விடுதலைக் காலமும் கூறியருளி என்க.

(விளக்கம்) கண்ணகியும் கோவலனும் திருமுன் பிழைத்தோர்க்கு உய்திக் காலம் உரையீர் ! என்று அடிகளாரை வேண்டிய காலத்தே அடிகளார் எற்றே இவர்தம் பெருந்தகைமை? எனத் தம்முள் வியந்திருப்பர் என்பதும் அம்மேன்மக்களைப் பற்றிய நன்மதிப்பு அடிகளார் உளத்தே பன்மடங்கு மிகுந்திருக்கும் என்பதும் மிகையாகா. ஆதலானன்றே அடிகளாரும் ஒரு சிறிதும் தயக்கமின்றியே சாபவிடை செய்யத் தொடங்குபவர் தாமும் அவர்க்கிரங்குவாராய் அறியாமையின் இன்று இழிபுறப்புற்றோர் எனக் கண்ணகியும் கோவலனும் தம்முட் கருதியவாறே அவர் நீரல கூறியது அவர் தம் அறியாமை யென்றே தாமும் அறிந்தவாறோதினர். ஆயினும், அக்கயவர் தாம் அடிகளார் திறத்தன்றித் தம்மால் பாதுகாக்கப்பட்ட கண்ணகி திறத்தே பிழை செய்தலின் அடிகளார் அதனைப் பொறுத்தல் கூடாதாயிற்று. என்னை தீயவர் பிறர்க்கின்னா செயக்கண்டும் பொறுத்தல் பொறையன்று கோழைமையே ஆம் ஆதலின் என்க.

அடிகளார் அக்கயவர் செய்த பிழைக்கு அவர் பன்னிரண்டு திங்கள் துன்புறுதல் சாலும் எனக் கருதியது அடிகளார் அருளுடைமைக்கு அறிகுறியாதலுணர்க. இங்கு கடிதோச்சி மெல்ல எறிக என்னும் வள்ளுவர் அருள்மொழி நம் நினைவில் முகிழ்க்கின்றது.

இனி, பன்னிரு மதியம் படர் நோயுழந்தபின் என்றது, அவர் தாம் சாபத்தால் நரிகளாயினும் ஏனைய நரிகள் போலாது யாம் இன்னம் இன்னபிழை செய்து இவ்விழி பிறப்புற்றேம் என்னும் நினைவுடையராய் அந்நினைவு காரணமாகத் துன்புற்றபின் என்றவாறு. இங்ஙனம் இளங்கோவடிகளார் உளத்தில் ஆழ்ந்திருக்கும் பொருளை அவர் படர் நோய் என்பதனாற் கண்டாம். படர்நோய் - நினைவினால் எய்தும் துன்பம். முன்னையோர் இந்நுண்பொருள் காணாதொழிந்தார். அவ்வாறு படர் நோயுழக்க வேண்டும் எனக் கவுந்தியடிகளார் கருதியதற்குக் காரணம் அப்பட்டறிவு காரணமாக அவர் பின்னும் அத்தகைய பிழை செய்யாதிருத்தற் பொருட்டாம். என்னை; ஒறுத்தலின் பயனும் அதுவே யாகலின். இதனை,

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங் கொறுப்பது வேந்து  (குறள் - 561)

எனவரும் வள்ளுவர் வாய்மொழியினும் காணலாம்.

ஈண்டு அடியார்க்கு நல்லார் இன்று இழிபிறப்புற்றோரென்றது நெடுங்காலந் தவஞ் செய்து பெற்ற மக்கட் பிறப்பை ஒரு வார்த்தையினிழந்து இழிபிறப்புற்றா ரென்றவாறு என்று வரைந்த விளக்கம் பொருந்தாது. என்னை? முற்பிறப்பில் நெடுங்காலம் தவம் செய்தோரும் இத்தகைய கயமாக்களாகவும் பிறப்பர் என்பது அறிவொடு பொருந்தாதாகலின் என்க.

இனி, அவர் யாகாவாராயினும் நாகாக்கப்படல் வேண்டும் என்பதாயிற்று என்றலும்,

ஆக்கப் படுக்கும் அருந்தளைவாய்ப் பெய்விக்கும்
போக்கப் படுக்கும் புலைநகரத் துய்ப்பிக்கும்
காக்கப் படுவன விந்திய மைந்தினும்
நாக்கல்ல தில்லை நனிவெல்லு மாறே  (வளையாபதி).

என எடுத்துக்காட்டலும் இனியனவாம்.

கவுந்தியடிகள் கோவலன் கண்ணகி மூவரும் உறையூரை எய்துதல்

245 - 248 : தவப்பெருஞ் சிறப்பின் ........... புரித்தென்

(இதன்பொருள்:) தவப்பெருஞ் சிறப்பின் காவுந்தி ஐயையும் - தவத்தாலே மிக்க சிறப்பையுடைய கவுந்தியடிகளாரும்; தேவியும் கணவனும் - கண்ணகியும் கோவலனுமாகிய மூவரும்; முன்முறம் செவி வாரணம் சமம் முருக்கிய புறஞ்சிறை வாரணம் புரிந்து புக்கனர் - முன்னொரு காலத்தே முறம் போன்ற செவியையுடைய யானையைப் போரிலே கெடுத்த பக்கத்தே சிறகுகளையுடைய கோழியின் பெயரமைந்த நகரத்தின்கண்ணே விருப்பத்தோடு புகுந்தனர் என்க.

(விளக்கம்) இங்ஙனம் சாபமிடவும் அதனினின்று வீடு செய்யவும் இயன்ற இத்தகைய தவப் பெருஞ் சிறப்பிற் கவுந்தி என்றவாறு.

247 - முறம் செவி - முறம் போன்ற செவி. வாரணம் - யானை புறஞ்சிறை வாரணம் என்றது கோழியை. கோழி என்பது உறையூருக்கு ஒரு பெயர் இப்பெயர்க்குரிய வரலாறும் தெரித்துதோதுவார், வாளா கோழி என்னாது முறஞ் செவிவாரணம் முன் சமமுருக்கிய புறஞ்சிறை வாரணம் என விரித்தார். இதன் கட்கூறிய வரலாறு வருமாறு :

முற்காலத்தே ஒரு கோழி யானையை எதிர்ந்து போரிற் புறங்கொடுத்தோடச் செய்தது. இந்நிகழ்ச்சியைக் கண்ட சோழமன்னன் இந் நிலத்திற்கு ஒரு சிறப்புண்டென்று கருதி அவ்விடத்தே தன் தலைநகரை அமைத்துக் கொள்பவன் அந்நகர்க்குக் கோழி என்றே பெயர் சூட்டினன் என்பதாம். அந்நகர் தம் நாட்டின் தலைநகருள் ஒன்றாதலான் அதனைக் காணவேண்டும் என்னும் அவாவோடு புகுந்தனர் என்பார் புரிந்து புக்கார் என்றார்.

வாரணம் என்னும் பலபொருளொரு சொல் முறஞ்செவி வாரணம் என்றமையால் யானை என்றும், புறஞ்சிறை வாரணம் என்றதனால் கோழி என்றும் ஆயிற்று.

இனி, அந்நகரம் அமைக்கும் பொழுது கழுத்தும் புறத்தே சிறகுகளுமுடைய கோழியுருவம் பெற அமைத்தலின் புறம்பே சிறையையுடைய கோழி என்றார் என்பாருமுளர். இதற்கு - புறஞ்சிறை என்றது புறஞ்சேரிகளை என்க. இருபுறத்தும் சேரிகள் அமைந்த கோழி என்னும் நகர் என்க.

இனி, இக்காதையை, வைகறை யாமத்து, நீங்கக் கடைஇத் துரப்பக் கழிந்து, கழிந்து போகித் தொழுது வலங்கொண்டு, நீங்கிப் போகிக் கழிந்து, நுழைந்து, கடந்து பொருந்தி (பொருந்த) ஆங்கு, வருந்தி உயிர்த்து வினவ, நணித்தென நக்கு, கண்டு தொழலும், என்னோ? கருதியவாறு என, வரை பொருள் வேட்கையேன், (என) கழிதற்கு அரிது, ஒழிகென ஒழியீர், யானும் போதுவல் போதுமின் என்ற காவுந்தி ஐயையை ஏத்தி, தீர்த்தேன் என, காணாய்! படர்குவம் எனினே காட்டும், முட்டும், உறுக்கும், படர்குவம் எனினே, கலங்கலுமுண்டு. கொள்ளவும் கூடும்; இடுதலும் கூடும்; தாங்கவும் ஒண்ணா. ஓம்பு என அறுவையும் பீலியும் கொண்டு துணை ஆகெனப் படர் புரிந்தோர், ஓதையும் ஒலியே யன்றியும் விருந்திற் பாணியும், ஏர்மங்கலமும் முகவைப்பாட்டும் இசையோதையும் கேட்டு, மறையோர் இருக்கை யன்றியும் ஊர்களும் கண்டு கடவாராகி, ஒருநாள் சாரணர் தோன்ற, வாய்மொழி கேட்டுத்திறவா! நவிலாது. காணா; பொருந்தாது குவியா பொறாஅபுடை பெயராது என்று ஏத்த - கெடுகென்று படர்வோர்த் தொழுது போந்து. போகி எய்தி இருந்துழிச் சென்றோர் வினவ நீங்குமின் புலம்பினர் என வாழ்க்கை கடவது முண்டோ எனக் கேட்டுப் புதைத்து நடுங்க முதுநரி ஆக என, அறியார் கேட்டு நடுங்கி உரையீரோ என ஒதுங்கி உழந்தபின் பெறுக என, விடைசெய்து, புரிந்து புறஞ்செவி வாரணம் புக்கனர் என வினையியைபு காண்க.

இது நிலைமண்டில ஆசிரியப்பா.

நாடுகாண் காதை முற்றிற்று.

கட்டுரை

1-20 : முடியுடை ................. முற்றிற்று

(இதன்பொருள்:) முடியுடை வேந்தர் மூவருள்ளும் - முத்தமிழ் நாட்டை ஆளும் முடியையுடைய சோழர் பாண்டியர் சேரர் என்னும் மூவேந்தருள் வைத்து; தொடி விளங்கு தடக்கைச் சோழர் குலத்து உதித்தோர் - வீரவளை விளங்காநின்ற பெரிய கையினையுடைய சோழர் தம் குலத்திற் பிறந்த வேந்தருடைய; அறனும் - அறங்காக்கின்ற சிறப்பும், மறமும் - மறச் சிறப்பும்; ஆற்றலும் - வன்மைச் சிறப்பும்; அவர்தம் பழவிறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும் - அவ்வேந்தருடைய பழைய நகரமாகிய பூம்புகார் அருட்பண்பினாலே ஏனைய நகரங்களினுங் காட்டில் மேம்பட்டுத் திகழும் சிறப்பும்; விழவு மலி சிறப்பும் - அந்நகரின் கண் பல்வேறு கடவுளர்க்கும் திருவிழா மிக்கு நிகழும் சிறப்பும்; விண்ணவர் வரவும் - ஆங்கு வருகின்ற தேவர்களின் வரவும்; அவர் உறை நாட்டு ஒடியா இன்பத்துக் குடியும் - அவ்வேந்தர் செங்கோலேந்தி வதிகின்ற அச்சோழ நாட்டின்கண் வாழுகின்ற கெடாத இன்பத்தையுடைய குடிமக்களின் மாண்பும்; கூழின் பெருக்கமும் - உணவுப் பொருளின் வளமும்; அவர்தம் தெய்வக் காவிரித் தீது தீர் சிறப்பும் - அவ்வேந்தருடைய கடவுட்டன்மை யுடைய காவிரிப் பேரியாற்றினது தீமையைத் தீர்க்கின்ற சிறப்பும்; பொய்யாவானம் புதுப்புனல் பொழிதலும் - அவர் திறத்தே எஞ்ஞான்றும் பொய்தலில்லாத முகில் புதிய நீரைப் பெய்கின்ற சிறப்பும்; அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும் - ஆடலரங்கினது இயல்பும் கூத்தாட்டின் இயல்பும் தூக்கினது இயல்பும் கண்கூடு முதலிய வரிக்கூத்தினியல்பும்; பரந்து இசை மெய்திய பாரதி விருத்தியும் - ஆடற் கலைகளுள் வைத்து உலகெலாம் விரிந்து புகழ் படைத்துள்ள பாரதி விருத்தியாகிய பதினோராடல்களின் இயல்பும்; திணைநிலை வரியும் இணைநிலை வரியும் - திணைநிலை என்னும் வரிப்பாடலியல்பும் சார்த்துவரி என்னும்பாடலினியல்பும்; அணைவு உறக்கிடந்த , யாழின் பகுதியும் - இவையெல்லாம் தம்மொடு பொருந்தக் கிடந்த பல்வேறு யாழ்களினியல்பும்; ஈரேழ் சகோடமும் - அவற்றுள்ளும் தலைசிறந்த பதினான்கிசைக் கோவையாகிய யாழினது சிறப்பும்; இடநிலைப்பாலையும் - இடமுறைப் பாலைப்பண்ணின் இயல்பும்; தாரத்தாக்கமும் தான் தெரிபண்ணும் - தாரம் என்னும் இசையினால் ஆக்கிக் கொள்ளும் பாலைப் பண்களின் இயல்பும் அவற்றின் வழியே தோற்றுவிக்கின்ற நால்வகைப் பெரும்பண் திறப்பண்களின் இயல்பும், ஊரகத்து ஏரும் - புகார் மூதூரின் அழகும்; ஒளியுடைப் பாணியும் - உழத்தியர் பாடும் நிறமிக்க பாடல்களும்; என்று இவை அனைத்தும் - என்று கூறப்பட்ட இப்பொருள்கள் எல்லாவற்றோடும்; பிற பொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும் - ஈண்டு சொல்லாதொழிந்த ஏனைய பொருள்கள் பலவும் கூறிவைத்த வைப்போடு கூடித் தோன்றாநின்ற தனிக்கோள் நிலைமையும் - அடிகளாருடைய ஒப்பற்ற உட்கோளின் தன்மையும்; ஒரு பரிசா நோக்கிக் கிடந்த புகார்க் காண்டம் முற்றிற்று. ஒருபடியாக நோக்கிக் கிடந்த முதலாவதாகிய புகார்க் காண்டம் முற்றியது என்க.

(விளக்கம்) இந்நூலின் பதிகத்தை அடுத்துள்ள உரைபெறு கட்டுரையும் ஈண்டு இக்காண்டத் திறுதியிலுள்ள இக்கட்டுரையும் இங்ஙனமே எஞ்சிய இரண்டு காண்டங்களின் இறுதியிலுள்ள கட்டுரையிரண்டும் நூலிறுதியிலமைந்த நூற்கட்டுரை என்பதும் இளங்கோவடிகளாரால் செய்யப்படாதன. பிற்காலத்தே பிறராற் பாடிச் சேர்க்கப்பட்டன என்று கருதுதற் கிடனுளது. உரைபெறு கட்டுரை அடிகளாராற் செய்யப்பட்ட தன்றென்பதற்கு ஆங்குக் காரணம் கூறினாம். இக்கட்டுரையகத்தே அடிகளார் இந்நூலில் ஓரிடத்தேனும் கூறப்படாத சகோடம் என்னும் சொல் புணர்க்கப் பட்டிருத்தலும் இதுவும் அடிகளாராற் செய்யப்பட்டதில்லை என்பதற்கு ஓரகச் சான்றாகும். இன்னும் இவற்றைப் பற்றிய எமதாராய்ச்சி முடிவை இந்நூலினது ஆராய்ச்சி முன்னுரையிற் கண்டுணர்க.

இக்கட்டுரைக்கண் (14) ஈரேழ் தொடுத்த சகோடமும் - என்பதற்குப் பதினான்கு இசைகளை இணை நரம்பாகத் தொடுத்த ஒலியோடு கூடிய யாழ் எனப் பொருள் கோடலே பொருந்தும். சகோடம் என்ற சொற்குப் பொருள் ஒலியோடு கூடியது என்பதேயாம். எனவே, ஈரேழ் சகோடமும் என்பதற்கு பதினான்கிசையோடு கூடிய ஒரு யாழ் என்பதே பொருளாகும். இத்தொடர் பன்மொழித் தொகையாய்ச் செம்முறைக் கேள்வி என இளங்கோவடிகளாராற் கூறப்படுகின்ற யாழைக் குறிப்பதாயிற்று. பிற்காலத்தே சகோடம் என்பதே பெயர் போல வழங்கப் பட்டதாதல் வேண்டும். அடிகளார் காலத்தே இதனைச் செங்கோட்டியாழ் என்றே வழங்கினர் என்று தெரிகிறது.

1 - முடியுடைவேந்தர் மூவர் - சோழர் பாண்டியர் சேரர்.

3. அறன் - அறங்காவற் சிறப்பு -அது, அறவோர் பள்ளியும் அறனோம்படையும் (5: 179) என்பன முதலியவற்றாற் கூறப்பட்டது.

4. மறன் - மறச்சிறப்பு. அதனை இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலை கொடுவரி யொற்றி (5 : 97 - 8) என்பது முதலியவற்றாலறிக. ஆற்றல் - போராற்றலுடைமை. அதனை, அமராபதி காத்து அமரனிற் பெற்றுத் தமரிற்றந்து தகைசால் பிறப்பிற் பூமியிற் புணர்த்த ஐவகை மன்றத் தமைதியும் என்பது (6: 14-17) முதலியவற்றாலறிக. பழவிறன் மூதூர்ப் பண்பு. பதியெழுவறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறு சிறப்பிற் புகார் என்பது (மங்கல வாழ்த்து - 15 - 16) முதலியவற்றாலறிக. 5. விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும் இந்திரவிழ வூரெடுத்த காதையிற் காண்க. குடியும் கூழின் பெருக்கமும் மனையறம் படுத்த காதை, நாடுகாண் காதை முதலியவற்றிற் காண்க. காவிரியின் சிறப்பைக் கானல் வரியினும் நாடுகாண் காதையினும் பிறாண்டும் காண்க பொய்யாவானம் புதுப்புனல் பொழிதலும் என்பதனை உழைப்புலிக் கொடித்தேர் உரவோன் கொற்றமொடு மழைக் கருவுயிர்க்கும் ..... ஆவுதி நறும்புகை என்பதன்கண் (10 : 142-44) காண்க. 16-அரங்கும் ஆடலும் அரங்கேற்று காதைக்கட் காண்க. 11. பாரதி விருத்தி, பதினோராடல் இவற்றை, (6) கடலாடு காதைக்கட் காண்க. 12-13. திணைநிலை வரி, இணைநிலை வரி, யாழின் றொகுதி, கானல் வரியிற் காணப்படும். 14. ஈரேழ் சகோடமும் - அரங்கேற்று காதையினும் பிறாண்டும். இடநிலைப் பாலை, தாரத்தாக்கம் தான்தெரிபண், அரங்கேற்றுகாதை, வேனிற் காதைகளிற் காண்க. 16. ஊரகத்தேர், காவிரிப்பூப்பட்டினத்தின் அழகு, இந்திரவிழவூர் எடுத்த காதையினும் பிறாண்டுங் காண்க. ஒளியுடைப் பாணி உழத்தியர் பாடும் விருந்திற் பாணி ஏர் மங்கல முதலிய இவற்றை நாடுகாண் காதையிற் காண்க. பிறபொருள் வைப்பு - யாண்டும் காணலாம். ஒரு பரிசு - ஒரு தன்மை.

வெண்பாவுரை

காலையரும்பி .............. புகார்

(இதன்பொருள்:) வேலை அகழால் அமைந்த அவனிக்கு - கடலாகிய அகழோடு அமைந்துள்ள இந்நிலவுலகாகிய தெய்வ மகளின்; மாலை - இலகு பூண்முலைமேலணிந்த முத்துமாலை என்னும்படி; புகழால் அமைந்த புகார் - உலகுள்ள துணையும் அழியாத புகழாலே அமைந்துள்ள பூம்புகார் நகரமானது; காலை அரும்பி மலரும் கதிரவனும் - விடியற் காலத்தே தோன்றி ஒளியால் விரிகின்ற ஞாயிறு போன்றும்; மாலை மதியமும் போல் - அந்தி மாலைப் பொழுதிலே தோன்றுகின்ற திங்கள் போன்றும்; வாழி அரோ - வாழ்வதாக என்பதாம்.

(விளக்கம்) புகார் நகரம் புகழுருவத்தோடு உலகுள்ள துணையும் வாழ்க என்றவாறு. புகழால் அமைந்த புகார் என்பதற்கு மங்கல வாழ்த்துக் காதையில் நாக நீணகரொடு நாக நாடதனொடு போக நீள் புகழ்மன்னும் புகார் நகர் என்பதற்கு யாம் கூறிய விளக்கத்தை ஈண்டும் கூறிக் கொள்க.

புகார்க் காண்டம் முற்றிற்று.
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 23, 2012, 01:55:19 PM
மதுரைக் காண்டம் (11. காடுகாண் காதை)

அஃதாவது - பூம்புகார் நகரத்திருந்து முந்தை ஊழ்வினை கடைக்கூட்டுதலாலே கோவலன் கதிரவன் தோன்று முன்னமே கண்ணகியோடு இழந்த பொருளீட்டவெண்ணிப் புறப்பட்டவன் வழியிலே காவுந்தியடியைக் கண்டடிதொழுது, அவர் தம்மை வழித்துணையாகவும் பெற்று வருபவன், அந்நெறியில் ஏதந்தருவன இவை இவை என அறிவுறுத்திய கவுந்தியடிகளாரின் மொழி போற்றி, அவரோடும், தன் காதலியோடும் கழனிச் செந்நெற்கரும்பு சூழ் பழனத்தாமரைப் பைம்பூங் கானத்தே பறவைகள் பாடும் பாட்டும், கருங்கைவினைஞரும் களமரும் கூடி ஆரவாரிக்கும், ஆரவாரமும், சின்மொழிக் கடைசியர் கள்ளுண்டு களித்துப்பாடும் விருந்துறு பாடலும், ஏர்மங்கலப் பாட்டும், முகவைப் பாட்டும், கிணைஞர் செய்யும் இன்னிசைமுழ வொலியும், பிறவும் ஆங்காங்குக் கேட்டும் வழியில் அந்நாட்டின் கவினுறு வளம்பலவும் கண்டுமகிழ்ந்தும் மங்கலமறையோர் இருக்கையும், பிறவுமுடைய ஊரிடையிட்ட நாடுடன் கண்டு, நாட்கொரு காவதமன்றி நடவாமல் பன்னாட்டங்கிச் செல்பவன், உறையூர் புக்கு மறுநாள் அங்கிருந்து மதுரை நோக்கிச் செல்லும் காலத்தே அவ்வழியிற் கண்டனவும், அம் மதுரைமா நகரத்துப் புறஞ்சேரி புக்கதும், ஆங்கு இடைக்குல மடந்தை மாதரியின்பால் கவுந்தியடிகளார் கண்ணகியை அடைக்கல மீந்ததும், கோவலன் பின்பு மதுரைமூதூர் கண்டு மீண்டமையும், மறுநாள் கோவலன் சிலம்பு விற்கச்சென்று ஊழ்வினை உருத்து வந்தூட்டலாலே ஆங்குக் கள்வனெனப்பட்டுக் கொலையுண்டதும், அச் செய்தி கேட்டுக் கண்ணகி கொதித்தெழுந்து ஊர் சூழ்வந்து, அரசவை யேறி வழக்குரைத்ததும், அவ் வழக்கில் பாண்டியன் உயிர்நீத்ததும், அவன்றேவி உயிர்நீத்ததும், பின்னரும் கண்ணகி சினந்தணியாளாய், வஞ்சினம்கூறி மதுரை நகரந் தீயுண்ணச் செய்ததுவும், மதுரைமா தெய்வம் வந்து தோன்றி, கண்ணகிக்குக் கட்டுரை கூறித் தீவீடு செய்ததுவும், கண்ணகி மேற்றிசைவாயிலிற்புகுந்து வையையின் ஒருகரை வழியாக அத்திசை நோக்கிச் செல்வாள் நெடுவேள் குன்றத்தடிவைத்தேறி நின்ற பதினாலாம்நாளெல்லையில் அமரர் கோமான் தமர் அவளெதிர் வந்து, புகழ்ந்தேத்தி அவள் கணவனையும் காட்டி வரவேற்க வானவூர்தியில் ஏறிக் கோவலனோடு கண்ணகி விண்ணகம்புக்கதும் பிறவுமாகிய செய்தியைக் கூறும் பகுதியென்றவாறு. இவையெல்லாம் மதுரையில் நிகழ்ந்தமையால் இது மதுரைக்காண்டம் என்னும் பெயர் பெற்றதென் றுணர்க.

11. காடுகாண் காதை

அஃதாவது - கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளாரும் உறையூரினின்றும் புறப்பட்டு மதுரை நோக்கிச் செல்பவர் பாண்டியனாட்டகத்தே புக்கு ஆங்கு ஊரிடையிட்ட காடு பல கண்டு சென்றதும் ஆங்குக் கண்டனவும் கேட்டனவும் பிறவும் கூறும் பகுதி யென்றவாறு.

திங்கள்மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழ லிருந்த
ஆதியில் தோற்றத் தறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம்  5

அந்தி லரங்கத் தகன்பொழி லகவயிற்
சாரணர் கூறிய தகைசால் நன்மொழி
மாதவத் தாட்டியும் மாண்புற மொழிந்தாங்கு
அன்றவ ருறைவிடத் தல்கின ரடங்கித்
தென்றிசை மருங்கிற் செலவு விருப்புற்று  10

வைகறை யாமத்து வாரணங் கழிந்து
வெய்யவன் குணதிசை விளங்கித் தோன்ற
வளநீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்ததோர்
இளமரக் கானத் திருக்கை புக்குழி
வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை  15

ஊழிதொ றூழிதொ றுலகங் காக்க
அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள  20

வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி
திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச்
செங்கணா யிரத்தோன் திறல்விளங் காரம்
பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி  25

முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னியென்று
இடியுடைப் பெருமழை யெய்தா தேகப்
பிழையா விளையுட் பெருவளஞ் சுரப்ப
மழைபிணித் தாண்ட மன்னவன் வாழ்கெனத்
தீதுதீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி  30

மாமுது மறையோன் வந்திருந் தோனை
யாது நும்மூர் ஈங்கென் வரவெனக்
கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின்
மாமறை யாளன் வருபொருள் உரைப்போன்
நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்  35

பால்விரிந் தகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த
விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்  40

வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு  45

நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையி னேந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய  50

செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
என்கண் காட்டென் றென்னுளங் கவற்ற
வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன்
தென்னவன் நாட்டுச் சிறப்புஞ் செய்கையும்
கண்மணி குளிர்ப்பக் கண்டே னாதலின்  55

வாழ்த்திவந் திருந்தேன் இதுவென் வரவெனத்
தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு
மாமறை முதல்வ மதுரைச் செந்நெறி
கூறு நீயெனக் கோவலற் குரைக்கும்
கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி  60

வேத்தியல் இழந்த வியனிலம் போல
வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலந் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்  65

பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்
காலை எய்தினிர் காரிகை தன்னுடன்
அறையும் பொறையும் ஆரிடை மயக்கமும்
நிறைநீர் வேலியும் முறைபடக் கிடந்தஇந்
நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று  70

கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால்
பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய
அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும்
வலம்படக் கிடந்த வழிநீர் துணியின்
அலறுதலை மராமும் உலறுதலை ஓமையும்  75

பொரியரை உழிஞ்சிலும் புன்முளி மூங்கிலும்
வரிமரல் திரங்கிய கரிபுறக் கிடக்கையும்
நீர்நசைஇ வேட்கையின் மானின்று விளிக்கும்
கானமும் எயினர் கடமுங் கடந்தால்
ஐவன வெண்ணெலும் அறைக்கட் கரும்பும்  80

கொய்பூந் தினையும் கொழும்புன வரகும்
காயமும் மஞ்சளும் ஆய்கொடிக் கவலையும்
வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும்
மாவும் பலாவும் சூழடுத் தோங்கிய
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்  85

அம்மலை வலங்கொண் டகன்பதிச் செல்லுமின்
அவ்வழிப் படரீ ராயி னிடத்துச்
செவ்வழிப் பண்ணிற் சிறைவண் டரற்றும்
தடந்தாழ் வயலொடு தண்பூங் காவொடு
கடம்பல கிடந்த காடுடன் கழிந்து   90

திருமால் குன்றத்துச் செல்குவி ராயின்
பெருமால் கெடுக்கும் பிலமுண் டாங்கு
விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபிற்
புண்ணிய சரவணம் பவகா ரணியோடு
இட்ட சித்தி யெனும்பெயர் போகி   95

விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
முட்டாச் சிறப்பின் மூன்றுள வாங்குப்
புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்
விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர்
பவகா ரணி படிந் தாடுவி ராயிற்   100

பவகா ரணத்திற் பழம்பிறப் பெய்துவிர்
இட்ட சித்தி எய்துவி ராயின்
இட்ட சித்தி எய்துவிர் நீரே
ஆங்குப் பிலம்புக வேண்டுதி ராயின்
ஓங்குயர் மலையத் துயர்ந்தோற் றொழுது  105

சிந்தையில் அவன்றன் சேவடி வைத்து
வந்தனை மும்முறை மலைவலம் செய்தால்
நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலைப்
பொலங்கொடி மின்னிற் புயலைங் கூந்தற்
கடிமல ரவிழ்ந்த கன்னிகா ரத்துத்   110

தொடிவளைத் தோளி ஒருத்தி தோன்றி
இம்மைக் கின்பமும் மறுமைக் கின்பமும்
இம்மையு மறுமையும் இரண்டும் இன்றியோர்
செம்மையில் நிற்பதுஞ் செப்புமின் நீயிர்இவ்
வரைத்தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன்  115

உரைத்தார்க் குரியேன் உரைத்தீ ராயின்
திருத்தக் கீர்க்குத் திறந்தேன் கதவெனும்
கதவந் திறந்தவள் காட்டிய நன்னெறிப்
புதவம் பலவுள போகிடை கழியன
ஒட்டுப் புதவமொன் றுண்டதன் உம்பர்  120

வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி
இறுதியில் இன்பம் எனக்கீங் குரைத்தாற்
பெறுதிர் போலும்நீர் பேணிய பொருளெனும்
உரையீ ராயினும் உறுகண் செய்யேன்
நெடுவழிப் புறத்து நீக்குவல் நும்மெனும்  125

உரைத்தார் உளரெனின் உரைத்த மூன்றின்
கரைப்படுத் தாங்குக் காட்டினள் பெயரும்
அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்
வருமுறை எழுத்தின் மந்திர மிரண்டும்
ஒருமுறை யாக உளங்கொண் டோதி  130

வேண்டிய தொன்றின் விரும்பினி ராடிற்
காண்டகு மரபின வல்ல மற்றவை
மற்றவை நினையாது மலைமிசை நின்றோன்
பொற்றா மரைத்தாள் உள்ளம் பொருந்துமின்
உள்ளம் பொருந்துவி ராயின் மற்றவன்  135

புள்ளணி நீள்கொடி புணர்நிலை தோன்றும்
தோன்றிய பின்னவன் துணைமலர்த் தாளிணை
ஏன்றுதுயர் கெடுக்கும் இன்பம் எய்தி
மாண்புடை மரபின் மதுரைக் கேகுமின்
காண்டகு பிலத்தின் காட்சி யீதாங்கு  140

அந்நெறிப் படரீ ராயின் இடையது
செந்நெறி யாகும் தேம்பொழி லுடுத்த
ஊரிடை யிட்ட காடுபல கடந்தால்
ஆரிடை யுண்டோர் ஆரஞர்த் தெய்வம்
நடுக்கஞ் சாலா நயத்தின் தோன்றி   145

இடுக்கண் செய்யா தியங்குநர்த் தாங்கும்
மடுத்துடன் கிடக்கும் மதுரைப் பெருவழி
நீள்நிலங் கடந்த நெடுமுடி அண்ணல்
தாள்தொழு தகையேன் போகுவல் யானென
மாமறை யோன்வாய் வழித்திறம் கேட்ட  150

காவுந்தி யையையோர் கட்டுரை சொல்லும்
நலம்புரி கொள்கை நான்மறை யாள
பிலம்புக வேண்டும் பெற்றி ஈங்கில்லை
கப்பத் திந்திரன் காட்டிய நூலின்
மெய்ப்பாட் டியற்கையின் விளங்கக் காணாய்  155

இறந்த பிறப்பின் எய்திய வெல்லாம்
பிறந்த பிறப்பிற் காணா யோநீ
வாய்மையின் வழாது மன்னுயி ரோம்புநர்க்கு
யாவது முண்டோ எய்தா அரும்பொருள்
காமுறு தெய்வங் கண்டடி பணிய   160

நீபோ யாங்களும் நீள்நெறிப் படர்குதும்
என்றம் மறையோற் கிசைமொழி யுணர்த்திக்
குன்றாக் கொள்கைக் கோவலன் றன்னுடன்
அன்றைப் பகலோர் அரும்பதித் தங்கிப்
பின்றையும் அவ்வழிப் பெயர்ந்துசெல் வழிநாட்  165

கருந்தடங் கண்ணியும் கவுந்தி யடிகளும்
வகுந்துசெல் வருத்தத்து வழிமருங் கிருப்ப
இடைநெறிக் கிடந்த இயவுகொள் மருங்கின்
புடைநெறிப் போயோர் பொய்கையிற் சென்று
நீர்நசைஇ வேட்கையின் நெடுந்துறை நிற்பக்  170

கானுறை தெய்வம் காதலிற் சென்று
நயந்த காதலின் நல்குவன் இவனென
வயந்த மாலை வடிவில் தோன்றிக்
கொடிநடுக் குற்றது போல ஆங்கவன்
அடிமுதல் வீழ்ந்தாங் கருங்கணீர் உகுத்து  175

வாச மாலையின் எழுதிய மாற்றம்
தீதிலேன் பிழைமொழி செப்பினை யாதலின்
கோவலன் செய்தான் கொடுமையென் றென்முன்
மாதவி மயங்கி வான்துய ருற்று
மேலோ ராயினும் நூலோ ராயினும்  180

பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும்
பிணியெனக் கொண்டு பிறக்கிட் டொழியும்
கணிகையர் வாழ்க்கை கடையே போன்மெனச்
செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண்
வெண்முத் துதிர்த்து வெண்ணிலாத் திகழும்  185

தண்முத் தொருகாழ் தன்கையாற் பரிந்து
துனியுற் றென்னையுந் துறந்தன ளாதலின்
மதுரை மூதூர் மாநகர்ப் போந்தது
எதிர்வழிப் பட்டோர் எனக்காங் குரைப்பச்
சாத்தொடு போந்து தனித்துயர் உழந்தேன்  190

பாத்தரும் பண்பநின் பணிமொழி யாதென
மயக்குந் தெய்வமிவ் வன்காட் டுண்டென
வியத்தகு மறையோன் விளம்பின னாதலின்
வஞ்சம் பெயர்க்கும் மந்திரத் தால்இவ்
ஐஞ்சி லோதியை அறிகுவன் யானெனக்  195

கோவலன் நாவிற் கூறிய மந்திரம்
பாய்கலைப் பாவை மந்திர மாதலின்
வனசா ரிணியான் மயக்கஞ் செய்தேன்
புனமயிற் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும்
என்திறம் உரையா தேகென் றேகத்   200

தாமரைப் பாசடைத் தண்ணீர் கொணர்ந் தாங்கு
அயாவுறு மடந்தை அருந்துயர் தீர்த்து
மீதுசெல் வெங்கதிர் வெம்மையின் தொடங்கத்
தீதியல் கானஞ் செலவரி தென்று
கோவலன் றன்னொடும் கொடுங்குழை மாதொடும்  205

மாதவத் தாட்டியும் மயங்கதர் அழுவத்துக்
குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும்
விரவிய பூம்பொழில் விளங்கிய இருக்கை
ஆரிடை யத்தத் தியங்குந ரல்லது
மாரி வளம்பெறா வில்லேர் உழவர்  210

கூற்றுறழ் முன்பொடு கொடுவில் ஏந்தி
வேற்றுப்புலம் போகிநல் வெற்றங் கொடுத்துக்
கழிபே ராண்மைக் கடன்பார்த் திருக்கும்
விழிநுதற் குமரி விண்ணோர் பாவை
மையறு சிறப்பின் வான நாடி   215
ஐயைதன் கோட்டம் அடைந்தனர் ஆங்கென்.

உரை

உறையூரின்கண் எழுந்தருளிய அருகன் சிறப்பு

1-9 : திங்கள் ............ அடங்கி

(இதன் பொருள்) அடுக்கிய மூன்று திங்கள் திருமுக்குடைக் கீழ் - மூன்று முழுத்திங்கள் மண்டிலங்களை ஒன்றன் மேல் ஒன்றாக உயர்த்து அடுக்கிவைத்தாற் போலும் அழகு திகழாநின்ற சந்திராதித்தம், நித்தியவினோதம், சகலபாசனம் என்னும் மூன்று குடைகளின்கீழ்; செங்கதிர் ஞாயிற்றுத் திகழ் ஒளி சிறந்து - சிவந்த கதிர்களைப் பரப்பும் இளஞாயிற்றினது ஒளியினுங்காட்டில் சிறந்து விளங்கும் ஒளியோடே; கோதை தாழ் பிண்டிக் கொழு நிழலிருந்த - பிற அசோகுபோலாது மாலையாகவே மலர்ந்து தூங்காநின்ற கடவுட்பண்புடைய அசோக மரத்தினது நீழலின்கண் வீற்றிருந்த; ஆதி இல் தோற்றத்து அறிவனை வணங்கி - (உறையூரிற் புகுந்த காவுந்தியடிகளாரும் கண்ணகியும் கோவலனும் ஆகிய மூவரும்) தனக்கு முன்னர்ப் பிறிதுயாதும் தோன்றுதல் இல்லாமையைத் தனக்குத் தோற்றமாகவுடைய மெய்யறிவனாகிய அருகக் கடவுளை அன்புடன் மனமொழி மெய்களாலே வழிபாடு செய்த பின்னர்; மாதவத்தாட்டியும் அந்தில் கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம் - கவுந்தி அடிகளார் அவ்விடத்தே அவ்வருகன் கோயிலைச் சார்ந்த தவப்பள்ளியில் உறைகின்ற துறவோர்க்கெல்லாம்; அரங்கத்து அகன் பொழில்வயின் - திருவரங்கத்தே அகன்ற பூம் பொழிலிடத்தே தமக்குச் சாரணர் அறிவுறுத்தருளிய; தகைசால் நன்மொழி - அழகுமிக்க மெய்ம் மொழியை; மாண்பு உற மொழிந்து - அவர்கள் மாட்சிமை எய்தும் பொருட்டுச் செவியறிவுறுத்தருளி; ஆங்கு - அவ்விடத்தேயே; அவர் உறைவிடத்து அன்று அல்கினர் அடங்கி - அம் மூவரும் தங்குதற்குரியதோரிடத்தே அற்றைநாளிரவி லினிதே தங்கியிருந்து என்க.

(விளக்கம்) 1. அருகக் கடவுள் முக்குடைக்கீழ் எழுந்தருளியிருப்பின் என்பது சைன நூற்றுணிபு. அக்கடவுளின் குடைக்கு மூன்று முழுத்திங்கள் ஒன்றன்மேல் ஒன்று அடுக்கப்பட்டவை உவமை. இஃதில் பொருளுவமை - அடுக்கிய மூன்று திங்களின்-என மாறி இன்னுருபு பெய்துரைக்க. உறழ்பொருட்டாகிய அவ்வுருபு தொக்கது என்பது அடியார்க்கு நல்லார் கருத்து. கோதை தாழ் பிண்டி என்றது - அருகனுக்கு நிழல் தரும் அசோக மரம் ஏனைய அசோக மரங்கள் போலாது மலருங் காலத்தே மாலையாகவே மலரும் என்னும் கருத்துடையதாம். ஆதியில் தோற்றம் என்றது தனக்கு முன்றோன்றியது யாது மில்லாத தோற்றம் என்றவாறு. இனி, தனது தோற்றத்திற்கு முதல் இல்லாத தோற்றமுடையான் என்றுமாம்; அஃதாவது நித்தியன் என்றவாறு. அறிவன் - வாலறிவன். இயல்பாகவே பாசங்களில்லாத மெய்யறிவினை யுடையான் என்ற படியாம். கந்தன் - நிக்கந்தன்: விகாரம். 6. அந்தில் - அவ்விடத்தே. அசைச் சொல்லுமாம்.

அரங்கத்துச் சாரணர் கூறிய தகைசால் மொழி என்றது - நாடு காண் காதையில்,

கழிபெருஞ் சிறப்பிற் கவுந்தி காணாய்
ஒழிகென வொழியா தூட்டும் வல்வினை
இட்ட வித்தின் எதிர்ந்துவந் தெய்தி
ஒட்டுங் காலை யொழிக்கவு மொண்ணா
கடுங்கால் நெடுவெளி விடுஞ்சுட ரென்ன
ஒருங்குட னில்லா உடம்பிடை உயிர்கள்

எனச் சாரணர் கவுந்திக்குச் செவியறிவுறுத்த மொழிகளை. இவை சொல்லானும் பொருளானும் இனியவாகிப் பெரும் பயன்றருவன வாதலின் அவற்றைத் தகைசா னன்மொழி என அடிகளார் வியந்தார். என்னை? இப் பெருங்காப்பியத்தின் கருப்பொருள் மூன்றனுள் இச் செவி யறிவுறூஉம் ஒன்றாதலுமறிக. மாதவத்தாட்டியும் என்புழி உம்மை சிறப்பும்மை. என்னை? அங்ஙனம் செவியறிவுறுத்தலே அவர்க்கு அறமாகலின் என்க. அவர்க்கு அறமாதல் தோன்றும் பொருட்டே அடிகளார் கவுந்தியும் என்னாது மாதவத்தாட்டியும் என விதந்தார். மாண்புற என்றது - அத் துறவோர் மாண்புறுதற் பொருட்டு எனவும் தன் மொழி மாண்புற எனவும் இருபொருளும் பயந்து நின்றது.

9. இல்லறத்தார் துறவோர் பள்ளியில் இரவிற்றங்குதல் மரபன்று என்பது அடியார்க்கு நல்லார் அவரெனக் கடவுளரைச் சுட்டின், அவருறைவிடம் கந்தன் பள்ளியா மாதலானும் ஆண்டு அடங்காமை சொல்ல வேண்டாவாகலானும் அவரென்றது சாவகரை என்னும் விளக்கத்தாற் பெற்றாம். ஆயினும் அவர் என்னும் சுட்டு, சாவகரைச் சுட்டிற்று என்றதும் பொருந்தாது. முன்னர் இயற்பெயர் கூறாதவிடத்தே சுட்டுப் பெயர் மட்டும் வருதலும் அது தானும் அப்பெயரைச் சுட்டும் என்பதும் பொருந்தாது. இனி, அவர் உறைவிடம் என்பதற்கு அக் கவுந்தி முதலிய மூவரும் தாம் உறைதற்குரியதோரிடத்தே தங்கினர் என்பதே அடிகளார் கருத்தாமென்க.

அல்கினர்: முற்றெச்சம். வழிவரு வருத்தம் தீர அவர் இனிது உறங்கினமை தோன்ற அல்கினர் அடங்கி என்றார்.

அடிகளாரும் கண்ணகியும் கோவலனும்
உறையூரினின்றும் மதுரைக்குச் செல்லுதல்

10 - 14 : தென்திசை ........ புக்குழி

(இதன் பொருள்) தென்திசை மருங்கில் செலவு விருப்புற்று - வைகறையாமத்தே துயிலெழுந்து மேலும் தாம் செல்ல வேண்டிய தென்றிசையிலே சென்று அப்பாலுள்ள காட்சிகளைக் கண்டு மகிழ்தலில் விருப்பமுடையராகி; வைகறையாமத்து வாரணம் கழிந்து - அவ் வைகறைப் பொழுதிலேயே உறையூரைக் கடந்து அப்பால் தென்றிசை நோக்கிச் செல்பவர், வெய்யவன் விளங்கித் தோன்ற - தாம் புறப்பட்ட வைகறையாமமும் கழிந்து கீழ்த் திசையிலே தோன்றிய கதிரவன்றானும் வானினுயர்ந்து தனது வெயில் முறுகுதலாலே வெப்பமுடையனாய் விளங்குதலாலே; வளநீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்ததோர் இளமரக்கானத்து இருக்கை புக்குழி - அத்துணைப் பொழுதும் வருந்தாது நடந்தவர் தாம் வளமுடைய நீரையுடைய அம் மருத நிலப்பரப்பினிடையே ஒரு பெரிய பொய்கைக் கரையிடத்தே அழகுற்றுத் திகழாநின்ற ஓர் இளமரச் சோலையினூடே வழிப்போக்கர் தங்குதற்கென அமைக்கப்பட்டிருந்த இருப்பிடத்தைக் கண்டு இளைப்பாறுதற் பொருட்டு அதன்கட் சென்று புகுந்த பொழுது என்க.

(விளக்கம்) 10. கண்ணகி முதலிய மூவரும் தமதியல்பிற் கேற்ப மெல்லென நடந்து தமக்குப் புதியனவாகிப் பேரின்பம் பயக்கும் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து ஒரு நாளைக் கொருகாவதமே நடந்து இடையிடையே தங்கித்தங்கி இளைப்பாறி வருகின்றார் ஆதலின் பின்னரும் வழிநடந் தின்புறுதற்கண் வேட்கை பெரிதும் உடையராயிருந்தமை தோன்ற அடிகளார் தென்றிசை மருங்கிற் செலவு விருப்புற்று என இனிதின் ஓதுவாராயினர். வைகறையாமத்து வாரணம் கழிந்து என்றது அவர் நாடோறும் செலவு மேற்கொள்ளும் பொழுதும் அதுவே என்பது குறிப்பாக நம்மனோர்க் கறிவுறுத்துவதுமுணர்க. வைகறையாமத்திலேயே வழிச் செலவை மேற்கொண்டு விடியற்காலமாதற்கு முன்னரே அப் பேரூரை விட்டுச் சென்றனர் என்பது கருத்து. 11. வாரணம் என்றது உறையூரை. 12. குணதிசை வெய்யவன் விளங்கித் தோன்ற என்றது அவர் தாம் புறப்பட்ட அவ் வைகறைப் பொழுதும் அடுத்து வந்த விடியற் பொழுதினும் பெரும் பகுதி கழியுந்துணையும் நடந்து வெயில் முறுகி வெப்ப முறுதலாலே இளைப்பாறி இருத்தற் பொருட்டு அவர் இளமரக் கானத்து இருக்கை புக்கமைக்கு ஏதுவாய் நின்றது. இதுவே இளங்கோவடிகளாரின் கருத்தாகும். இக் கருத்தினை, கதிரவன் முதலிய பிறபெயராற் குறியாமல் அவனை வெய்யவன் என்னும் பெயராற் குறித்து விளக்கினர் என்க. வெய்யவன் விளங்கித் தோன்ற என்றது அவ்வெய்யவன்றானும் தனது வெப்பத்தால் சிறிது முறுகித் தோன்றிய அளவிலே என்றவாறு. முன்னை யுரையாசிரியர் யாரும் அடிகளார் நெஞ்சத்து ஆழ்ந்திருக்கும் இக் கருத்துணராது போயினர். இக் கருத்துணராது விடின் வைகறைப் பொழுதிலே வழிச் செலவை மேற் கொண்டவர் கதிரவன் தோன்று மளவிலே இளமரக் கானத்திருக்கை புகுதற்கேதுவின்மை யுணர்க. 13. உறையூரை அடுத்துள்ள அத் தென்றிசையினும் சோழ நாடுண்மையின், அவ் வழியினும் வளநீர்ப் பண்ணையும் வாவியும் உளவாயின. மேலும், அவ்வாவிக் கரையில் வழிப்போக்கர் நீருண்டு இளைப்பாறி இருத்தற் பொருட்டே அறவோரா லியற்றப் பட்டது அச் சோலை என்பதும் புலப்பட வளநீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்த இளமரக் கானத்து இருக்கை என்றார். அவ்விருக்கை, வழிப்போக்கர் தங்கி இளைப்பாறுதற்கியன்ற இடமாதலானன்றே தென்றிசையினின்றும் வடதிசை நோக்கிச் செல்லும் வழிப்போக்கனாகிய மாமறை முதல்வனும் அப்பொழுது அங்கு வந்து புகுகின்றான் என்க.

மாங்காட்டு மறையோன் வரவு

(15 -முதல் 31 -முடிய ஒரு தொடர்)

15 - 22 : வாழ்க ...... வாழி

(இதன் பொருள்) வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை - கோவலன் முதலிய மூவரும் அந்த இளமரச்சோலை புகுந்துழி அவ்விடத்தே (31) மாமுது மறையோன் வந்து - சிறந்த பழைய மறைகளை நன்கு ஓதியுணர்ந்தவனாகிய அந்தணன் ஒருவன் தென்றிசையினின்றும் வடதிசைச் செலவை மேற் கொண்டவன் அவ்விளமரக் கானத்திருக்கையுட் புகுந்து வாழ்க எங்கள் அரசனாகிய அரசருள்வைத்துத் தலைசிறந்த பெருந்தகைமையுடையவன்; உலகம் ஊழிதோ றூழிகாக்க - இவ்வுலகத்தை ஊழிகள் பலவும் அவனே காத்தருள்வானாக; அடியில் தன் அளவு அரசர்க்கு உணர்த்தி வடிவேல் எறிந்த வான் பகை பொறாது - பண்டொருகாலத்தே தனது பெருமையினது அளவினை ஏனைய மன்னர்க்குக் காட்டுபவன் காலால் தன்னை மிதித்துக்காட்டியதூஉ மன்றித் தான் பொங்கி எழுந்த காலத்தே தனது வடித்த வேலைத் தன்மீதெறிந்து அடங்கச் செய்ததூஉமாகிய பழைய பகைமையைப் பொறுக்கமாட்டாமல்; கொடுங்கடல் - வளைந்த கடலானது சினந்தெழுந்து; பஃறுளி ஆற்றுடன் பல்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொள்ள - பஃறுளியாறென்னும் பேரியாற்றோடு பலவாகிய பக்கமலைகளையும் உடையதாகிய குமரி மலையையும் விழுங்கித் தன் வயிற்றுட் கொண்டமையாலே; வட திசைக் கங்கையும் இமயமும் கொண்டு - வடதிசைக்கண்ணவாகிய கங்கைப் பேரியாற்றையும் இமயமலையையும் கைப்பற்றிக் கொண்டு அவ் வடவாரியமன்னர் தன் ஏவல் கேட்ப; தென்திசை ஆண்ட தென்னவன் வாழி -செந்தமிழ் நாட்டின் தென்றிசையை ஆட்சி செய்த பாண்டியமன்னன் நீடூழி வாழ்வானாக எனவும் என்க.

(விளக்கம்) 17. தன் பகையரசர்க்குத் தன் பெருமை கூறுபவன் இத் தென்கடல் எத்துணைப் பெரிது அத்துணைப் பெரிது கண்டீர் என்பவன் கடலைக் கையாற் சுட்டிக் காட்டாமல் கடலினது கடவுட்டன்மையை நினையாமல் அக் கடல் வடிம்பினைத் தன் காலால் மிதித்துக் காட்டினன் எனவும், அது பொறாதாயிற்று எனவும் கருதுக. அதனைப் பொறாமல் அக் கடல் பொங்கி வந்த பொழுதும் அதனை வணங்காமல் தனது வேலை எறிந்து அது சுவறிப் போம்படியும் செய்தான்; ஆகவே இவ்வாறு நெடுங்காலமாக வளர்ந்த பெரும்பகை என்பார் (18) வான்பகை என்றார். கடலை மிதித்து நின்ற பாண்டியனை வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்பர். கடல் சுவற வேலெறிந்தவனை உக்கிரகுமார பாண்டியன் எனத் திருவிளையாடற் புராணங்கூறும். மேலே வருவன சிலவும் இவன் செயலாகவே அப் புராணங்கூறா நிற்கும்.

19. கடல் கொண்ட பஃறுளியாற்றிற்கு ஈடாக வடதிசைக் கங்கை யாற்றினையும், குமரிமலைக் கீடாக இமயமலையையும் கைக்கொண்டனன் எனக் கூறியபடியாம். கங்கையும் இமயமும் கொண்டு என்றவர் மீண்டும் தென்றிசை யாண்ட தென்னவன் என்றது, கங்கை நாட்டையும் இமய மலையையும் ஆட்சி செய்த வடவாரியரை வென்று அடிப்படுத்து அவர் தாம் தன்னேவல் வழி நிற்பத் தனக்குரிய தென்னாட்டை ஆட்சி செய்தவன் என்றவாறு.

இனி அடியார்க்கு நல்லார் (கடல் கோட்பட்ட) நிலக்குறைக்குச் சோழ நாட்டெல்லையிலே முத்தூர்க் கூற்றமும் சேரமாநாட்டுக் குண்டூர்க் கூற்றமும் என்னுமிவற்றை இழந்த நாட்டிற்காக ஆண்ட தென்னன் என்பர்.

23 - 31 : திங்கட்செல்வன் .............. வந்திருந்தோனை

(இதன் பொருள்) திங்கள் செல்வன் திருக்குலம் விளங்க - இருள் கழிந்து ஒளிப்புகழ் பரப்புகின்ற திங்களாகிய செல்வனுடைய சிறந்த குலமாகிய அப் பாண்டியர் குலத்தின் புகழ் பெரிதும் விளக்கமுறும்படி; செங்கண் ஆயிரத்தோன் திறல் விளங்கு ஆரள் ஒளி பொங்கு மார்பில் பூண்டோன் வாழி - சிவந்த கண்கள் ஓராயிரமுடைய தேவர் கோமான் பூட்டிய தனது பேராற்றல் பிறர்க்கு விளங்குதற்குக் காரணமான ஆரத்தை ஒளி மிக்க தனது மார்பிலே எளிதாகப் பூண்டவனாகிய பாண்டியன் நீடூழி வாழ்வானாக; இடியுடைப்பெருமழை முதல்வன் சென்னி முடிவளை உடைத்தோன் என்று எய்தாது ஏக - இடியையுடையபெரிய முகில்கள் தாமும் தந்தலைவனாகிய இந்திரன் தலையிலணிந்த முடியணியை ஆழிப்படையால் உடைத்தவன் இவன் என்று கருதி அவன் நாட்டின்கண் மழை பெய்யாமல் வறிதே செல்லக் கண்டு; மழை பிணித்து - அம் முகில்கள் விலங்கிட்டுத் தடுத்துத் தன்னாட்டின்கண்; பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப - தப்பாத விளைவும் ஏனைய வளங்களும் உண்டாகும்படி மழை பெய்வித்து; ஆண்ட மன்னவன் வாழ்க என - அருளாட்சி செய்தருளிய மன்னவன் நீடூழி வாழ்க! எனவும்; தீது தீர் சிறப்பின் தென்னனை - குற்றந் தீர்ந்த சிறப்பினையுடைய அப் பாண்டிய மன்னனை வாயார வாழ்த்திக் கொண்டிருந்தவனைக் கண்டு என்க.

(விளக்கம்) 23. பாண்டிய மன்னர் திங்கட்புத்தேளின் மரபினர் என்பது நூல் வழக்கு. திருக்குலம் என்புழித் திரு சிறப்புப் பொருள் குறித்து நின்றது. தேவராரம் பூண்டமைதானும் பாண்டிய மன்னர் மரபிற்கு ஒரு புகழாய் முடிந்தமையின் குலம் விளங்க ..... ஆரம் பூண்டோன் என்றான். 24 செங்கண் ஆயிரத்தோன் என்றது ஆயிரஞ் செங்கண்ணுடையோன் என்றவாறு. அவன் இந்திரன் என்க. இந்திரன் தானிட்ட ஆரத்தின் பொறையாற்றாது பாண்டியன் அழிந்தொழிக என்னும் கருத்தினாலே பாண்டியனுக்குப் பொறை மிக்கதோர் ஆரத்தைப் பூட்டினனாக, அதனைப் பாண்டியன் மிகவும் எளிதாகவே பூண்டு விளங்கினன், ஆதலின் அஃது அவனுக்குப் புகழாயமைவதாயிற்றென்க. 25. ஒளி பொங்கு மார்பில் என மாறுக. 26. வளை - ஆழிப்படை: (சக்கராயுதம்). 27. பெருமழை - பெரிய முகில். பிணித்தலருமை தோன்ற இடியுடைப் பெருமழை என்று விதந்தான். 28. விளையுள் - விளைச்சல்.

இனி, இப் பெருங் காப்பியத்தில் சோழ மன்னனை மங்கல வாழ்த்துப் பாடலில் வாழ்த்தித் தொடங்கிய இளங்கோவடிகளார் ஈண்டு மதுரைக் காண்டத்தைத் தொடங்குபவர் மாமறை முதல்வன் ஒருவன் வாயிலாகப் பாண்டியனை மனமார வாழ்த்தித் தொடங்கும் நுணுக்கமும், மேலும், இக் காண்டத்துள் கோவலன் கொலையுண்டமைக்குக் காரணம் அவனது பழவினையே அன்றிப் பாண்டிய மன்னனின் கொடுங்கோன்மை யன்று என்று குறிப்பாக வுணர்த்துவார் அம் மன்னனைத் தந்திருவாயானும் (30) தீதுதீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி என்று முன் மொழிந்து கோடல் என்னும் உத்தி வகையாலே அருளிச் செய்திருப்பதூஉம் கருத்தூன்றி யுணர்ந்து மகிழற்பாலனவாம். அவமதிப்பும் ஆன்றமதிப்பும் இரண்டு மிகைமக்களான் மதிக்கற்பால என்பதற்கேற்ப ஈண்டுத் தீதுதீர் சிறப்பின் தென்னனைப் புகழ்ந்து வாழ்த்துவான் மாமுதுமறையோன் ஆயினவாறு முணர்க. 31. வந்திருந்தோன் : பெயர்.

(32. முதலாக 56. முடியக் கோவலன் வினாவிற்கு அவ்வந்தணன் கூறும் விடை.)

32 - 34 : யாது நும்மூர்.......உரைப்போன்

(இதன் பொருள்) கோவலன் - கோவலன் அணுகி; நும் ஊர் யாது ஈங்கு வரவு என் எனக் கேட்ப - பெரியீர்! நும்முடைய ஊர் யாது? இங்கு நீயிர் வருதற்குரிய காரணம் என்னையோ? என்று இனிதின் வினவ; குன்றாச்சிறப்பின் மாமறையாளன் - எக்காலத்தும் குறைதலில்லாத சிறப்பினையுடைய பெரிய மறைகளையுணர்ந்த அவ் வந்தணன்றானும் அவன்வினாக்கனிற் பின்னதற்கு விடையாக வருபொருள் உரைப்போன் - தான் அங்கு வருதற்கியன்ற காரணமாகிய பொருளை முதற்கண் கூறுபவன் என்க.

(விளக்கம்) 32. ஈங்கு வரவு என் என மாறுக. வருதற்குரிய காரணம் என் கொலோ? என்று வினவியபடியாம். கோவலன் வினாக்களிரண்டனுள் பின்னதே சிறப்புடைத்தாகலின் அதனை அவ் வந்தணன் முற்படக் கூறுகின்றான் என்க. 34. வருபொருள் - தான் வருதற்குக் காரணமாகிய பொருள்.

திருவமர் மார்பன் கிடந்தவண்ணம்

35 - 40 : நீலமேகம் ............... வண்ணமும்

(இதன் பொருள்) நெடும் பொன் குன்றத்து - உயர்ந்த பொன் மலையின் மீது; நீல மேகம் பால் விரிந்து அகலாது படிந்தது போல - நீலநிறமுடைய முகில் ஒன்று பக்கங்களிலே விரிந்து பரவாமல் படிந்து கிடந்தாற்போன்று; விரித்து எழுதலை ஆயிரம் அருந்திறல் உடை - படம் விரித்து எழுந்த தலைகள் ஓராயிரமும் கிட்டுதற்கரிய ஆற்றலும் உடைய; பாயல் பள்ளி - பாப்பணையாகிய படுக்கைமீது; பலர் தொழுது ஏத்த - அமரரையுள்ளிட்ட பலரும் தன்னைக் கண்டு வணங்கிப் பராவியுய்தற் பொருட்டு; விரிதிரைக் காவிரி வியன் பெரு துருத்தி - விரிகின்ற அலைகளையுடைய காவிரிப் பேரியாற்றிடைக் குறையாகிய திருவரங்கத்திலே; திருஅமர் மார்பன் கிடந்த வண்ணமும் - திருமகள் விரும்பியுறைகின்ற திருமார்பினையுடைய திருமால் கிடந்தருளிய திருக்கோலத்தையும்; என்க.

(விளக்கம்) நீலமேகம் நெடிய பொன்மலையின் மிசை அங்ஙனம் கிடத்தல் அரிதாகலின் இவ்வாறு அடைபுணர்த் தோதினன். நீலமேகம் - திருமாலுக்குவமை. ஆயிரம் குவடுகளையுடைய பொற் குன்றம் எனப் பொருளுக்குப் புணர்த்த ஆயிரந்தலையை உவமைக்குங் கொள்க. அருந்திறல் என்பதனை அன்மொழித் தொகையாகக் கொண்டு அருந்திறலையுடைய பாம்பு என்க; அஃதாவது ஆதிசேடன். பலர் என்றது அமரர் முதலிய பலரும் என்பதுபட நின்றது. ஆற்றிடைக்குறைகளுள் வைத்துத் திருவரங்கம் பெரிதாதல் கருதி வியன்பெருந் துருத்தி என்றார். துருத்தி - ஆற்றிடைக்குறை (அரங்கம்). திரு - திருமகள். திருவமர்மார்பன் - திருமால். கிடந்தவண்ணம் - அறிதுயில் கொண்டு கிடக்கின்ற அழகென்க.

செங்கண் நெடியோன் நின்றவண்ணம்

41 - 51 : வீங்குநீ ரருவி ...... வண்ணமும்

(இதன் பொருள்) வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை - மிகவும் பெருகி வீழாநின்ற கொடிவழித் தீர்த்தம் முதலிய பேரருவிகளையுடைய திருவேங்கடம் என்னும் பெயரையுடைய மலையினது குவடுகளுள் வைத்து மிகவும் உயர்ந்த குவட்டின் மேலே; இருமருங்கு ஞாயிறும் திங்களும் விரிகதிர் விளங்கி - இரண்டு பக்கங்களினும் ஞாயிற்றினின்றும் திங்களினின்றும் விரிகின்ற ஒளிகளாலே விளக்கமெய்தப் பெற்ற; ஓங்கிய இடை நிலைத்தானத்து - உயர்ந்துள்ள அவ்விரண்டு ஒளிமண்டிலங்கட்கும் நடுவண் உளதாகிய ஓரிடத்தே; நல்நிற மேகம் - நல்ல நீலநிறமமைந்த ஒருமுகிலானது; மின்னுக் கோடி உடுத்து - தனது மின்னலாகிய புதிய ஆடையை உடுத்து, விளங்கு வில் பூண்டு - ஒளிதிகழும் தனது இந்திரவில்லையும் அணிகலனாக வணிந்து கொண்டு நின்றாற்போல; பகை அணங்கு ஆழியும் பால் வெள் சங்கமும் நகை பெறு தாமரைக் கையில் ஏந்தி - தனதிருமருங்கினும் பகைவரை வருத்துகின்ற ஆழிப்படையையும் பானிறச் சங்கினையும் அழகு பெறுகின்ற செந்தாமரை மலர்களை யொத்த தன் திருக்கைகளிலே ஏந்திக்கொண்டு; நலம்கிளர் ஆரம் மார்பில் பூண்டு - அழகுதிகழ்கின்ற கவுத்துவமணி மாலையைத் தனது திருமார்பிலே அணிந்துகொண்டு; பொலம் பூவாடையில் போலிந்து தோன்றிய - பொற்பூவாடையை யுடுத்துப் பொலிவுற்றுத் தேவர் முதலிய பலரும் தொழுதுய்தற் பொருட்டு வெளிப்பட்டுத் தோன்றியருளிய; செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் - சிவந்த திருக்கண்களையுடைய அந்தத் திருநெடுமாலினது; நின்றருளிய திருக்கோலத்தையும் என்க.

(விளக்கம்) நன்னிற மேகம் இடைநிலைத்தானத்து உடுத்துப் பூண்டு நின்றது போல நெடியோன் உச்சிமீமிசை ஏந்திப் பூண்டு பொலிந்து தோன்றிய நின்றவண்ணமும் என இயையும். இது மயக்க நிரனிறை. உச்சிமீமிசை: ஒருபொருட் பன்மொழி; சிறப்பின்கண் வந்தன.

இனி இதன்கண் மேகம் நெடியோனுக்கும் மின்னுக்கொடி பொன்னாடைக்கும் இந்திரவில் ஆரத்திற்கும் ஞாயிறு ஆழிக்கும் திங்கள் சங்கிற்கும் இடைநிலைத்தானம் மலையினுச்சிக்கும் உவமை என்க. முன்னர்த் திருவரங்கத்திற்குக் கூறிய 38. பலர் தொழுதேத்த என்னும் ஏதுவை ஈண்டும் கூறிக்கொள்க. முன்னர்க் கிடந்த வண்ணத்திற்குத் தகத் திருவமர் மார்பன் எனவும் ஈண்டுநின்ற வண்ணத்திற்குத்தக, செங்கண் நெடியோன் எனவும் அடிகளார் சொற்றிறம் தேர்ந்தோதுதலறிக.

45. கோடி - புத்தாடை. வில் - இந்திரவில். ஞாயிற்றுக்கும் திங்களுக்குமிடை நின்ற மேகம் நிறங்கெடுதல் இயல்பாகலின் அங்ஙனம் கெடாத நிறமுடைய மேகம் ஒன்றுண்டாயின் அந்த மேகம் என்பார் நன்னிறமேகம் என்றார்.

இனி, குன்றாச் சிறப்பின் மாமறையாளன் என அடிகளாராற் சிறப்பித்தோதப் பெற்ற இந்த அந்தணன்றானும் ஈண்டுத் திருவரங்கத்துத் திருமால் கிடந்தவண்ணத்தையும் திருவேங்கடத்துச்சிமீமிசை அந்தச் செங்கண் நெடுமால் நின்ற வண்ணத்தையும் இறையன்பு காரணமாகத் தன் அகக்கண்களிற் கண்டவாறு கூறியபடியாம் என்று நுண்ணிதிற் கண்டு கொள்க பண்டும் இன்றும் இறையன்புமிக்கோர் இத்துணைச் சிறப்பாகவே இறைவன் திருக்கோலங்களைக் கண்டுமிக்க வல்லுவநராவார். அக் காட்சிகளை இலங்கியங்களிலே அவர் கண்ட வண்ணமே கண்டு மகிழும் பேறு அத்தகைய இலக்கியங்களை ஆர்வத்தோடு ஓதுகின்ற திருவுடையார்க்கும் என்றென்றும் உண்டாதல் தேற்றமாம். மற்றுத் திருவரங்கத்திற்கும் திருவேங்கடத்திற்கும் சென்று புறக்கண்களால் மட்டும் காண்பவர் காட்சி இவற்றின் வேறாம் என்பது வெளிப்படை.

இனி இம் மாமறை முதல்வன் நம்மனோர் செவியுஞ் சிந்தையும் குளிர இறைவனுடைய திருக்கோலங்களை ஓதுமாற்றானே அவனது இறைபன்பின் பெருக்கந்தானும் நம்மனோர்க்கும் புலப்படுதலுமுணர்க.

அந்தணனின் இறையன்பின் றிறம்

52 - 53 : எங்கண் ....... வந்தேன்

(இதன் பொருள்) என்கண் காட்டு என - அடியேனுடைய இந்தக் கண்கள் தாம் எமக்குக் காட்டுதி ! எமக்குக் காட்டுதி ! என்று; என் உளம் கவற்ற - என்னெஞ்சத்தை இடையறாது வருத்துதலாலே; வந்தேன் (56) இது என் வரவு - அக் கண்களின் விருப்பத்தை நிறைவேற்றுதலின்றியமைகலேனாய் ஈண்டு வந்தேன்காண்! இதுவே என் வரவிற்குரிய காரணம் கண்டாய்; என்றான் என்க.

(விளக்கம்) 52 - என் கண் காட்டு என்று என்னுளம் கவற்ற என்னும் இம் மாமறையோன் மொழி இறையன்பு மிக்க சான்றோர் தம் மனநிலையை மிகவும் திறம்பக் காட்டுதலுணர்க அவைதாம் அம் மறையோனை ஐய! அவ்வண்ணங்களைக் காணாத கண் என்ன கண்ணோ? காட்டுதி காட்டுதி என்று பன்முறையும் அவனை வருந்தின என்பது தோன்ற என் கண் உளம் கவற்ற என்றான். ஈண்டு அவனுளம் இடையறாது இவ்வண்ணங்களைச் சென்று காண்டலாலே அக் கண்கள் எம்மையும் கொண்டு போதி என வருத்தின என்றவாறு. ஈண்டுத் தன் கொழுநன்பால் தன்னெஞ்சு சென்று விடுதலாலே அவனைக் காணாதமைகிலாக் கண்ணுடைய தலைவி அந்நெஞ்சை நோக்கி,

கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத்
தின்னும் அவர்க்காண லுற்று  (குறள் - 1244)

என்று கூறியது நமது நினைவிற்கு வருகின்றது.

53 - 57 : குடமலை ....... கேட்டு

(இதன் பொருள்) குடமலை மாங்காட்டு உள்ளேன் - ஐய! என் ஊர் யாதென வினவினையல்லையோ கூறுவல் யான் குடகமலைச் சாரலகத்தமைந்த மாங்காடு என்னும் ஊரின்கண் உறைகின்றேன் காண்: தென்னவன் நாட்டுச் சிறப்பும் செய்கையும் -யான் வருகின்ற வழியிலமைந்த பாண்டியனாட்டிலமைந்த சிறப்புகள் பலவற்றையும் அம் மன்னனுடைய கொடை அளி முதலிய செயல்களையும் கேட்டலோடன்றி; கண்மணி குளிர்படக் கண்டேன் ஆதலின் - என் கண்ணற் பாவைகள் குளிரும்படி கண்டு வந்தேனாதலாலே; வாழ்த்தி வந்திருந்தேன் என - அம் மன்னனை நெஞ்சார வாழ்த்தி வந்து ஈங்கிருந்தேன் என்று; தீததிறம் புரிந்தோன் - தன்குலத் தொழிலாகிய வேள்விபலவும் செய்துயர்ந்த அவ்வந்தணன்; செப்பக் கேட்டு - தனவினாக்களுக்கு விடையிறுப்ப அவற்றை இனிதாகக் கேட்டு என்க.

(விளக்கம்) 57 - தீத்திறம் - வேள்வி. வேளாப் பார்ப்பனரும் உளராதலின் அவரின் வேறுபடுத்தற்குத் தீத்திறம் புரிந்தோன் என விதந்தார். முத்தீயின் திறத்து மணம் புரிந்தோன் என்னும் அடியார்க்கு நல்லார் உரை சிறவாமையுணர்க. இவை கோவலன் வினவிற்கு விடையாதலின் அப்பொருள் தோன்றச் செப்ப என்றார். செப்பு - விடை. செப்பும் வினாவும் வழ அல் ஓம்பல் என்புழி (தொல். சொல். 13.) அஃதப் பொருட்டாதலறிக. 

கோவலன் அம் மாங்காட்டு மறையோனை
வழித்திறம் வினாதல்

(58 - முதலாக 149 - முடிய வழித்திறங் கேட்ட கோவலனுக்கு மாமறையோன் வழித்திறங் கூறுவதாய் ஒருதொடர்)

58 - 59 : மாமறை ............. உரைக்கும்

(இதன் பொருள்) மாமறை முதல்வ - கோவலன் மீண்டும் அவ்வந்தணனை நோக்கிச் சிறந்த மறைகட்கு எல்லாம் தலைமையுடையோய்! நின் ஊரும் வரவின் காரணமும் அறிந்து மகிழ்ந்தேன் அது நிற்க, இனி; நீ மதுரைக்குச் செந்நெறி கூறு என அத்தென்னவன் தலைநகரமாகிய மதுரைக்குச் செல்லும் வழிகளுள் வைத்துச் செவ்விய வழியை எமக்குக் கூறுதி என்று வேண்ட; கோவலற்கு உரைக்கும் - அம் மறையோன் அவனுக்குக் கூறாநிற்பன்; அது வருமாறு :- என்க.

(விளக்கம்) கேட்டு மதுரைச் செந்நெறி கூறு என்றது - கேட்டு மகிழ்ந்து இனி, நீ கண்மணி குளிப்பக்கண்டு வந்த அத்தென்னவன் தலைநகரமாகிய மதுரைக்கியாங்களும் செல்லுதல் வேண்டும் ஆதலின் அதற்குச் செல்லும் நெறிகளுள் நல்லதொரு நெறியை எங்கட்குக் கூறு என்பது தோன்ற நின்றது. செந்நெறி - செவ்விய நெறி.

மறையோன், வழியின் கொடுமை குறித்து இரங்குதல்

60 - 97 : கோத்தொழிலாளரொடு ............ தன்னுடன்

(இதன் பொருள்) கோத்தொழிலாளரொடு - நடுவு நிலையிற் பிறழ்ந்து உள்ளங் கோடிய அமைச்சர் முதலிய அரசியற் றொழிலாளரோடே கூடி; கொற்றவன் கோடி - அரசன்றானும் நாள்தோறும் நாடி முறை செய்யாது கோல் கோடநிற்றலாலே; வேந்து இயல் இழந்த வியன் நிலம் போல - அரசியலை இழந்து கேடெய்திய அகன்ற நிலத்தைப்போல; வேனலம் கிழவனோடு வெங்கதிர் வேந்தன் - தனக்குரிய அறுவகை அமைச்சர்களுள் வைத்து வெப்பமிக்க முதுவேனில் என்னும் கொடிய அமைச்சனோடு கூடிக்கொண்டு வெவ்விய ஒளியையுடைய ஞாயிறு என்னும் வேந்தனானவன்; தான் நலம் திருக - பண்டுதான் செய்த நலங்களைத் தானே அழித்தலாலே; முல்லையும் குறிஞ்சியும் தன்மையில் குன்றி - முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் தமக்குரிய பண்புகள் குறையப்பெற்று; முறைமையில் திரிந்து - தங்கண் வாழும் உயிர்கட்குக் தாம் வழங்கும் முறைமையையுடைய நலங்களை வழங்காமல் மாறுபட்டு; நல்லியல்பிழந்து - நல்லியற்கை வளங்கெட்டு; நடுங்கு துயர்உறுத்து - அவை அஞ்சிநடுங்குதற்குக் காரணமான துன்பத்தையே மிகுவித்து; பாலை என்பதோர் படிவம் கொள்ளும் காலை - அவ்விரண்டும் பாலை நிலம் என்று கூறப்படும் ஒரே நிலமாகின்ற வடிவை மேற்கொள்ளா நின்ற இம் முதுவேனிற் காலத்திலே; காரிகை தன்னுடன் எய்தினிர் - இம் மெல்லியனல்லாளோடு நீயிர் மதுரைக்குப்போக ஒருப்பட்டு ஈண்டு வந்துளீர் அல்லிரோ ! என்றான் என்க.

(விளக்கம்) 60 - கோத்தொழிலாளரொடு என்புழி ஒடுவுருபு கோடுதற் றொழிலில் உடனிகழ்ச்சிப் பொருட்டாய் நின்றது. கொற்றவனும் கோடி எனல் வேண்டிய இழிவு சிறப்பும்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது. கோடி - கோட எனச் செயவெ னெச்சமாக்குக. கோத்தொழிலாளர் - அமைச்சர் முதலியோர். வேத்தியல் -மென்றொடர் வேற்றுமைக்கண் வன்றொடராயிற்று: அரசினது இயல்; அஃதாவது - செங்கோன் முறைமை என்க.

இனி வேத்தியலிழந்த வியனிலம் போல என்றது - அரசியலிழக் தமையாலே அந்நாடு கேடுற்றாற் போல என்றவாறு. இதனை -

கோணிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கண் மிஞ்சி
நீணில மாரி யின்றி விளைவஃகிப் பசியு நீடிப்
பூண்முலை மகளிர் பொற்பிற் கற்பழிந் தறங்கண் மாறி
ஆணையில் வுலகு கேடா மரசுகோல் கோடி னென்றான்

எனவரும் சிந்தாமணியானும் (255)

முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி
யொல்லாது வானம் பெயல்  (குறள் - 559)

என்றற் றொடக்கத்துத் திருக்குறள்களானும் உணர்க.

62. வேனலங் கிழவன் - என்றது ஈண்டு முதுவேனிலை. வேந்தன்றான் என்புழி: தான் அசைச்சொல் லெனினுமாம். வெங்கதிர் வேந்தன் கார்ப்பருவ முதலிய அமைச்சரோடு கூடித் தான் செய்த நலங்களைத் தானே திருக என இசையெச்சத்தால் விரித்தோதுக. வெங்கதிர் வேந்தன் நலந்திருகக் காரணம் தீய அமைச்சனாகிய முதுவேனிலோடு கூடினமையேயாம் திருகுதல் - அழித்தல். தன்மை முல்லைக்கும் குறிஞ்சிக்கும் இயல்பாயமைந்த பண்புகள். அவையிற்றை முல்லைப் பாட்டினும் குறிஞ்சிப் பாட்டினும் காண்க. நல்லியல்பு என்பது மது. இரண்டு திணைகளும் திரிந்து பாலை என்னும் ஒரே திணையாகி விடும் காலம் என்பான் பாலையென்பதோர் படிவம் கொள்ளும் என்றான். இத்தகைய காலத்தே வந்தனிர் என்றது, நீங்கள் இங்ஙனமொரு பாலை நிலவழியைக் கடந்தே மதுரைக்குப் போதல் வேண்டும் என்பது தோன்றக் கூறியவாறாம். பின்னரும் கண்ணகியை நோக்கியவன் இத் தவ மூதாட்டியும் நீயும் ஒரோவழி அவ்வழியைக் கடந்து போதல் கூடும், இக் காரிகை அவ்வழியைக் கடத்தல் அரிது என்பது தோன்ற, காலை எய்தினிர் எனப் பொதுவனோதாது காரிகை தன்னுடன் எய்தினிர் என விதந்து கூறினான். இது கண்ணகியின் மென்மையையும் அவ்வழியின் கொடுமையையுந் தூக்கிக் கூறியவாறென்க. காலை - காலம்.

இனி. அடிகளார் 60. கோத்தொழிலாளரொடு என்பது தொடங்கி .... 66 - பாலையென்பதோர் படிவம் கொள்ளும் என்னும் துணையும் கூறிய சொல்லும் பொருளும் - மதுரைக்கும் இவர்க்கு நிகழவிருக்கும் போகூழினது செயலுக்கும் ஒரு வாய்ப்புள்ளாகவும் அமையும்படி ஓதியுள்ளமை கூர்ந்துணரற்பாலதாம். என்னை ? அங்கு வளையாத செங்கோல் வளையும்படி மன்னன் தன்னரண்மனைப் பணியாளன் சொற் கேட்டலும் காவலருள் கல்லாக்களிமகன் தம்முள் முதியோர் சொற்கேளாது வாளாலெறிதலும் அவ்வழி மாமதுரை வேறொரு படிவம் கொள்ளலும் நினைக.

மறையோன் கூறும் வழித்திறம்

67 - 73 : அறையும் ........... கவர்க்கும்

(இதன் பொருள்) அறையும் பொறையும் ஆரிடை மயக்கமும் நிறைநீர் வேலியும் முறைபடக் கிடந்த - பாறையும் துறுகலும் அரிய வழிமயக்கமும் பேய்ததேருமாகிய இவை யான் கூறிய முறையாலே கிடக்கின்ற; இந் நெடும்பேர் அத்தம் நீங்திச் சென்று - இந்த நீண்ட பெரிய பாலைப் பரப்பிற் செல்லும் தொலையாத வழியை நடந்து தொலைத்து அப்பாற் சென்று; கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால் - ஆங்கெதிர்ப் படுகின்ற கொடும்பாளூர் நெடுங்குளம் என்னும் இரண்டூர்களுக்கும் இடைக்கிடந்த கோட்டகத்துட் புகுந்து சென்றக்கால்; பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய அறைவாய்ச் சூலத்து அரு நெறி கவர்க்கும் - இளம்பிறையைத் தலைமிசைக் கண்ணகியாகச் சூடிய பிறவாயாக்கைப் பெரியோனாகிய சிவபெருமான் தன் றிருக்கையிலேந்திய முக்கூறாக அறுக்கப்பட்ட சூலப்படையினது தலைகளைப் போன்று கடத்தற்கரிய அவ்வழி மூன்று கிளைகளாகப் பிரிந்து போகும்; என்றான் என்க.

(விளக்கம்) அறை - பாறைக்கல். பொறை - சிறிய மண்மலை. துறுகல கொணர்ந்து இட்டது போன்ற கற்பாறை. வழியோ அன்றோ என்று மயங்குதற்குக் காரணமான இடைவழியை ஆரிடைமயக்கம் என்றார். ஆரிடை - அறிதற்குரிய நடுவிடம். இனி ஆரிடை - அரிய வழி; ஆவது ஆறலைப்போரும் ஊறு செய் விலங்கு முடைத்தாய் ஏற்றிழிவும் கவலைச் சின்னெறியுமாயிருப்பது, என்பர் அடியார்க்கு நல்லார் இவ்வுரை பரஞ்சேரி இறுத்தகாதைக்கண் கோள்வல்..... எங்கணும் போகிய இசையோ பெரிதே (5 - 10) என்பதனோடும் மாறுபடும் என்க.

69. நிறைநீர் வேலி என்றது பேய்த்தேரை என்னும் பழையவுரை சிறந்த வுரையாகும். என்னை? பாலையென்பதோர் படிவங்கொண்ட நிலத்து நெறியாகலின் இகழ்ச்சி தோன்ற அடிகளார் பேய்த்தேரையே அங்ஙனம் கூறினர் என்பதே நுண்ணியவுரையாம். இங்ஙனமன்றி இதற்கு நிறை த நீர்க்கு வேலியாகிய ஏரிக்கரை என்பார் உரை போலியென்க. பேய்த்தேரானது மயங்கியவர்க்கு மிகப்பெரிய நீர்நிறைந்த பொய்கை போன்று அலைகளுடனே தோன்றுதலியல்பாதல் கண்டுணர்க. 71. கொடும்பை - கொடும்பாளூர், நெடுங்களம் என்பதும் ஊர்ப்பெயர். இவையிரண்டும் இணைப்பெயர் பெற்ற ஊர்கள் என்பர். இவ்வாறு இணைப்பெயர் பெற்ற ஊர்கள் இக்காலத்தும் இணைத்தே பெயர் கூறப்படுதல் காணலாம். கோட்டகம் என்பது ஊர்களின் நிலப்பரப்பிற்குப் பெயர். அஃது இக்காலத்தும் கோட்டகம் என்றே வழங்கப்படுகின்றது. 70. நீந்திச்சென்று .......... புக்கால் என்றது கடந்து செல்லல் அரிது என்பது பட நின்றது. 72. பிறை முடிக்கண்ணிப் பெரியோன் - சிவபெருமான்; பிறவாயாக்கைப் பெரியோன் என முன்னர்க் கூறியதும் நினைக. 72. அறைவாய் - அறுக்கப்பட்டவாய். சூலத்து - சூலத்தைப்போல. எனவே அவ்வழி மூன்றாகக் கவர்க்கும் என்றாராயிற்று.

மானின்று விளிக்கும் கானமும் எயினர் கடமும்

74 - 79 : வலம்படக்கிடந்த ......... கடந்தால்

(இதன் பொருள்) வலம்படக் கிடந்த வழி நீர் துணியின் - ஐய! அம் மூன்று வழிகளுள் வைத்து நீங்கள் வலப்பக்கத்தே கிடந்த வழிமேற் செல்லநினைந்து செல்வீராயின்; அலறுதலை மராமும் உலறுதலை ஓமையும் பொரி அரை உழிஞ்சிலும் புன்முளி மூங்கிலும் திரங்கிய வரிபுறம் மரல் கரிகிடக்கையும் - விரிந்த தலையினை யுடைய வெண்கடம்பும் உலர்ந்த தலையினையுடைய ஓமையும் தண்டுலர்ந்து வற்றிய மூங்கிலும் நீரின்றி வற்றிற்திரங்கிய வரிகளையுடைய புறத்தையுடைய மரல் கரிந்து கிடக்கின்ற இடங்களும்; மரன் நீர் நசைஇ வேட்கையின் நின்று விளிக்கும் - உழைமான் கரிந்த அம் மரற் புல்லைத்தின்று பின்னர் நீர்பருக விரும்பி யாண்டும் திரிந்து பார்ததும் நீர் பெறமாட்டாமையால் அந்நீர் வேட்கை மிக்கு இளைப்புற்று நின்று உளைதற்கிடனான; கானமும் - காட்டையும்; எயினர் கடமும் கடந்தால் - இடையிடையே பாலைநிலமாக்கள் குடியிருக்கும் ஊர்களையும் கடந்துசென்றால் அவற்றிற்கும் அப்பால்; என்க.

(விளக்கம்) வலம்படக்கிடந்த நெறி செவ்விய நெறியன்று என்பது தோன்ற நீர்துணியீன் என்றான். மராம் - வெண்கடம்பு. ஓமை உழிஞ்சில் - பாலைநிலத்து மரங்கள். அலறுதல் உலறுதல் இரண்டும் ஒருபொருட் பன்மொழி. பொரியரை - பொருக்குடைய அடிமரம். புல்முளி மூங்கில் தண்டிற்கு ஆகுபெயர். மான் செய்யும் ஒலியை உளைத்தல் என்பது மரபுபோலும். எயினர் - பாலைநிலமாக்கள். கடந்தால் என்பது கடத்தலரிது என்பதுபட நின்றது. இப்பகுதியில் அடிகளார் முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற்றரிந்த பாலையினது தன்மையை இயற்கை நவிற்சியணியாக வோதயிருக்கும் அழகு நினைந்து மகிழற்பாலதாம்.

தென்னவன் சிறுமலை

80 - 85 : ஐவனவெண்ணெல் ............. தோன்றும்

(இதன் பொருள்) ஐவன வெள் நெலும் அறைக்கண் கரும்பும் - மலைச்சாரலிற் பயிராகும் ஐவன நெல் எனப்படும் வெண்மை நிறமுடைய நெல்லினது பயிரும்; அறுத்துத் துணிக்கும் கணுக்களையுடைய முதிர்ந்த கருப்பஞ்சோலையும்; கொய்பூந் தினையும் -கொய்யும் பருவத்தையுடைய அழகிய தினைகளையுடைய புனங்களும்; கொழும்புன வரகும் - கொழுவிய கொல்லைகளிலே பயிர் செய்யப்பட்ட வரகுப் பயிர்களும்; காயமும் - வெள்ளங்காயமும்; மஞ்சளும் - மஞ்சட் கிழங்கும்; ஆய்கொடிக் கவலையும் - அழகிய கொடியையுடைய கவலையும்; வாழையும் கமுகும் தாழ் குலைத் தெங்கும் - வாழையும் கமுகும் தாழ்ந்த குலைகளையுடைய தெங்கந் தோட்டமும்; மாவும் பலாவும் சூழ் அடுத்து - மாமரங்களும் பலா மரங்களும் தன்னை அடுத்துச் சூழ்தலையுடைய; தென்னவன் ஓங்கிய சிறுமலை திகழ்ந்து தோன்றும் - பாண்டியனுக்குரிய உயர்ந்த சிறுமலை என்னும் பெயரையுடைய மலை நன்கு விளங்கித் தோன்றுங்காண் என்றான் என்க.   

(விளக்கம்) எயினர் கடத்தைக் கடந்த பொழுதே தென்னவன் சிறுமலை தோன்றும், அம் மலைதான் இத்துணை வளமுடைத்தென்று அறிவுறுத்தபடியாம்: ஐவனம் - மலைச்சாரலில் பயிராகும் ஒருவகை நெல். அதன் நிறம் வெண்மையாதலின் வெண்ணெல் எனத் தெரித்தோதினார். அறைகண் - வரையறையையுடைய கணுக்களையுடைய கரும்பு எனினுமாம். கண் - கணு. தினைக்கதிர் காண்டகு வனப்புடைத்தாகலின் பூந்தினை என்றார். புனம் - கொல்லை. காயம் - வெண்காயமுமாம். வாழை கமுகு தெங்கு மூன்றும் புல் ஆகலின் ஒருசேர வோதினர். மாவும் பலாவும் மரங்கள் தன்னை அடுத்துச் சூழ இடையிலே ஓங்கிய சிறுமலை எனவும் தென்னவன் சிறுமலை எனவும் தனித்தனி யியைக்க. சிறுமலை என்பது அதன் பெயர். (சிறிய மலை என்னும் பொருளில்லை) என்க.

இச் சிறுமலையை அடிகளார் இயற்கை நவிற்சியாக வோதிய அழகும் நினைந்தின்புறற் பாலதாம்.

திருமால் குன்றம்

86 - 91 : அம்மலை .............. செல்விராயின்

(இதன் பொருள்) அம்மலை வலம் கொண்டு அகன் பதிச் செல்லுமின் - அச் சிறுமலையை நுமக்கு வலப்பக்கத்தே வைத்து இடம் பக்கத்து வழியிற்சென்று நீயிர் செல்லக் கருதிய அகன்ற மதுரைமா நகரினை அடையக்கடவீர்; அவ்வழிப் படரீராயின் - ஈண்டுக் கூறப்பட்ட அவ் வலப்பக்கத்து வழியாகச் செல்லா தொழியின், இடத்து - சூலம்போலக் கவர்த்த வழிகளிலே இடப்பக்கத்து வழிமேல் செல்லுதிராயின்; சிறைவண்டு செவ்வழிப் பண்ணின் அரற்றும் தடம் தாழ் வயலொடு - சிறகுகளையுடைய வண்டுகள் தேன் தேர்பவை செவ்வழிப் பண் போன்று இசை முரலுதற் கிடமான ஏரிகளும் அவற்றின் நீர் பாயுமளவிற்குத் தாழ்ந்து கிடக்கின்ற வயல்களும் இடையிடையே; தண் பூ காவொடு - குளிர்ந்த பூம்பொழில்களும்; கடம்பல கிடந்த காடுடன் கழிந்து - அருநெறிகள் பலவும் தம்முட்கிடந்த காட்டு வழியையும் கடந்து சென்று; திருமால் குன்றத்துச் செல்குவீராயின் - அப்பால் எதிர்ப்படுகின்ற திருமால் குன்றத்தின்கட் செல்வீராயின்; என்க.

(விளக்கம்) இதுகாறும் கூறியது சூலம் போல மூன்றாகக் கவர்க்கும் என்ற வழிகளுள் வைத்து வலப் பக்கத்து வழியினியல்பு இனி ஈண்டு 87. இடத்து என்றது அவற்றுள் இடப்பக்கத்தே கிடந்த வழியை என்க. இடத்து வழி மேல் 91. செல்குராயின் என்றியையும். இவ் வழி முன்னையினும் சிறந்த வழி என்பது தோன்றச் செவ்வழிப் பண்ணின் சிறை வண்டரற்றுதற் கிடனான நீர்ப்பூக்களும் கோட்டுப் பூ கொடிப்பூ முதலியனவும் நிரம்ப மலர்ந்துள்ள தடமும் தாழ் வயலும் தண் பூங்காவு முடைத்திது என்றான். சிறைவண்டரற்றுதல் தடமுதலிய மூன்றற்கும் பொது. இங்ஙனம் கூறவே இவ்வழி நீரும் நிழலுமுடைய இனிய நெறி என்றுணர்த்தினானாம். செவ்வழிப்பண்-நாற்பெரும் பண்களுள் ஒன்று. தடங்களில் மலரும் தாமரை மலரிற்றாதூதும் வண்டுகள் அக் காலைப் பொழுதிற்குரிய பண்ணாகிய செவ்வழிப்பண் பாடும் என்றான். என்னை? அப்பண் அப்பொழுதிற்குரிய பண் என்பதனை,

மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி
வரவெமர் மறந்தனர்  (புறம்)

என்பதனானுமுணர்க.

தடம் - ஈண்டு ஏரி, அதன் நீர்பாய்தல் வேண்டுமாகலின் தாழ் வயல் எனல் வேண்டிற்று. கடம் - காட்டகத்துநெறி. அம் மாமறையோன் வைணவ சமயத்தினன் என்பது முன்னரும் கண்டாம். ஈண்டும் திருமால் குன்றத்தைக் கூறியவன் இங்குள்ள வியத்தகு செய்திகள் பலவும் விரித்தோதுகின்றனன். வழித்திறங் கூறுபவன் இறையன்பு மேலீட்டாலே ஈண்டு மிகையாகக் கேட்போர்திறம் நோக்காது விரித்தோதுகின்றனன். இங்ஙனம் கூறுவது இறையன்புடையார்க்கியல்பு என்பதுணர்த்தவே அடிகளாரும் அவன் பேசுமளவும் பேச விடுகின்றனர். ஆசிரியர் கம்பநாடரும் பித்தரோடு கடவுட்பத்தரையும் ஒரு தன்மையராக்கி பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும். பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ என்பர். ஈண்டு இவ்வந்தணன் கூற்றுக் கேட்டற்கினியன ஆயினும் பன்னப் பெறுபவை அல்ல. இவன் கூற்றைப் பொறுமையோடு கேட்டிருந்த கவுந்தியடிகளாரும் இவன் பேதுறவு பொழிந்தனன் ஆதலின் அவை பன்னப் பெறுபவை அல்ல என்னும் கருத்துடையார் ஆதலை அவர் கூற்றான் உணரலாம்.

61. திருமால் குன்றம் - அழகர் மலை. மேலே இம் மறையோன் கூறுவன மருட்கையணிக்கு எடுத்துக் காட்டாகுந் தன்மையனவாம்.

பெருமால் கெடுக்கும் பிலமும் புண்ணிய சரவணம் முதலிய பொய்கைகளும்

92 - 103 : பெருமால் ............ எய்துவீர் நீரே

(இதன் பொருள்) ஆங்கு பெரும் மால் கெடுக்கும் பிலம் உண்டு - அவ்விடத்தே மாந்தர்க்கியல்பாயுள்ள பெரிய மயக்கத்தைத் தீர்த்து நன்கு தெளிவிக்கின்ற முழைஞ்சும் ஒன்றுளது கண்டீர்! ஆங்கு விண்ணோர் ஏத்தும் வியத்தகுமரபின் - கடவுட்டன்மையுடைய அம் முழைஞ்சே யன்றியும் அம் முழைஞ்சினூடே அமரரும் தொழுதேத்துஞ் சிறப்புடைய வியக்கத்தகுந்த கடவுட்டன்மையுடைய; புண்ணிய சரவணம் பவகாரணியொடு இட்ட சித்தி யெனும் பெயர் போகி - அவைதாம் நிரலே புண்ணிய சரவணம் பவகாரணி இட்டசித்தி என்னும் தம் பெயர்கள் திசையெங்கும் பரவப்பெற்று; தமது முட்டாச் சிறப்பின் விட்டு நீங்கா விளங்கிய பொய்கை மூன்றுஉன - முட்டுப்பாடில்லாத கடவுட்டன்மையி னின்றும் ஒருபொழுதும் விட்டு நீங்காமல் விளங்கிய மூன்று நீர்நிலைகள் (தீர்த்தங்கள்) இருக்கின்றன; ஆங்கு - அப் பொய்கைகளுள் வைத்து; புண்ணிய சரவணம் பொருந்துவிராயின் - நீவிர் புண்ணிய சரவணத்தின் கண் நீராடுவிராயின; விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவிர் - தேவேந்திரன் அருளிச் செய்த ஐந்திரவியாகரணம் என்னும் சிறந்த இலக்கணநூல் அறிவினை உடையீர் ஆவீர்; பவ காரணியில் படித்து ஆடுவீராயின்; அஃதன்றிப் பவகாரணி என்னும் பொய்கை நீரின் முழுகி ஆடுவீராயின் பவகாரணத்தின் பழம் பிறப்பு எய்துவிர் - இப் பிறப்பிற்குக் காரணமாகிய நுங்கள் பழம்பிறப்புகளை உணர்வீர்; இட்டசித்தி எய்துவிர் ஆயின - அஃதேயன்றி இட்டசித்தி யென்னும் பொய்கைக்கண் நீராடுவீராயின்; நீர் இட்டசித்தி எய்துவிர் - நீவிர் நினைந்தன வெல்லாம் கைவரப்பெறுகுவீர்; என்றான் என்க.

(விளக்கம்) 92. பெருமால் - மிக்கமயக்கம். காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்று குற்றங்களுள் ஏனைய இரண்டிற்கும் காரணம் ஆதல்பற்றி பெருமால் என்றான். மால் கெடுக்கும் எனவே காமவெகுளி மயாகம் எனும் மூன்றன் நாமமும் கெடுத்து வீடுபேறு பயக்கும் என்றானாயிற்று. என்னை?

காமம் வெகுளி மயக்க மிவைமூன்ற
னாமங் கெடக்கெடு நோய்

எனவரும் திருக்குறளும் (360) நோக்குக. பிலம் - (மலைக்குகை) முழைஞ்சு.

97. ஆங்கு - அவற்றுள். 98. பொருந்துதல் - நீராடுதல். 99. விழுநூல் - ஐந்திரவியாகரணம் என்னும் வடமொழியிலக்கண நூல். ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என வருதலும் காண்க. (தொல் - பாயிரம்) விழுநூல் எய்துவிர் என்புழி எய்துதல் உணர்தன் மேற்று. மேலே பழம் பிறப்பெய்துவிர் என்பதுமது. நீராடுமாற்றால் இலக்கண முணர்தலும். பழம் பிறப்புணர்தலும்; பவுராணிகமதம். இவை நினைவின்றிப் பெறும்பே றென்பர் அடியார்க்குநல்லார்.

இனி ஈண்டு இம் மறையோனாற் கூறப்படும் இவையெல்லாம் வைதிக நெறிபற்றிய பவுராணிகர் கொள்கைகளே என்றும் அவற்றின் பேதைமையை விளக்கவே அடிகளார் இம் மறையோனை ஒரு கருவியாகக் கொள்கின்றனர் என்றும் கோடலே பொருந்தும் என்க. இவையெல்லாம் பேதைமையே என்பதனைப் பின்னர்க் கவுந்தியடிகளார் மறுப்புரைக்கண் அடிகளார் அறிவுறுத்தலு மறிக.

101. பவம் - பிறப்பு; பாவம் எனக்கொண்டு பாவத்தால் வரும் பிறப்புகளை எனலுமாம் எனவரும் அடியார்க்குநல்லார் (இரண்டாவதாகக்) கூறும் உரை பொருந்தாது. என்னை? வரும்பிறப்பு என்பது பழம்பிறப் பென்பதனோடு இயையாமையினானும், மேலும் புண்ணியமும் பிறப்பிற்குக் காரணமாகலானும் என்க. 103. இட்டம் - விருப்பம் - ஆகுபெயராய் விரும்பிய பொருள் மேனின்றது. சித்தி - பேறு. அணிமா முதலிய எட்டுவகைச் சித்திகளை எனினுமாம்.

பிலம் புகுவார்க்கு எய்தும் நலங்கள்

104 - 111: ஆங்கு ........... தோன்றி

(இதன் பொருள்) ஆங்குப் பிலம் புக வேண்டுதிராயின் - அத்தகைய பிலத்தினூடே புகுந்து மேற்கூறப்பட்ட பேறுகளை எய்தக் கருதி நீவிரும் அந்தப் பிலத்தினூடே புகுவதனை விரும்புவீராயின்; ஓங்கு உயர் மலையத்து உயர்ந்தோன் தொழுது - மிகவும் உயர்ந்த அத் திருமலைக்கண் எழுந்தருளியுள்ள முதல்வனாகிய திருமாலைக் கைகுவித்துத் தொழுது; அவன்றன் சேவடி சிந்தையில் வைத்து - அவ்விறைவனுடைய சிவந்த திருவடிகளை நெஞ்சத்திலே இடையறாது நினைந்து; வந்தனை மும்முறை மலை வலம் செய்தால் - வணக்கத்தோடே மூன்றுமுறை அத்திருமலையை வலம் (வருதர்; அங்ஙனம்) செய்தால்; நிலம் பக வீழ்ந்த சிலம்பாற்று அகன் தலை - நிலம் கூறுபடும்படி அறுத்துத் தாழ்ந்த சிலம்பென்னும் ஆற்றினது அகன்ற கரைக் கண் நிற்கின்ற கடிமலர் அவிழ்ந்த கன்னிகாரத்து - புதிய நாளரும்புகள் மலர்ந்து மணம்பரப்புகின்ற தோங்கமரத்தின் நீழலிலே; புயல் ஐங்கூந்தல தொடிவளைத் தோள் ஒருத்தி - முகில் போன்ற ஐம்பாலாகிய கூந்தலையும் தொடியையும் வளையலையும் உடைய தோளையுடைய வரையரமடந்தை ஒருத்தி; பொலம் கொடி மின்னின் தோன்றி - பொற்கொடி போல மின்னல் தோன்றுமாறு ஞெரேலென நூல்கள் முன்னர்த்தோன்றி நின்று; என்க.

(விளக்கம்) சிலம்பாறு - அந்த யாற்றின் பெயர். கன்னிகாரம் - கோங்கு. தொடி - ஒருவகை வளையல்: தொடியும் வளையலும் என்க. ஒருத்தி - ஒரு வரையர மடந்தை; இயக்கி என்பாருமுளர்.

வரையரமடந்தையின் வினாக்கள்

112 - 117: இம்மைக்கு.............கதவெனும்

(இதன் பொருள்) இவ்வரைத்தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன் - நும்மை நோக்கி யான் இத் திருமலையின் அடிக்கண் உறைகுவேன் வரோத்தமை என்பது என் பெயராகும்; நீயிர் இம்மைக் கின்பமும் மறுமைக் கின்பமும் - நீவிர் இம்மையில் இன்பமாவதும் இம்மைமாறிய மறுமையில் இன்பமாவதும்; இரண்டும் இன்றி ஓர் செம்மையில் நிற்பதும் - இவையிரண்டிடத்துமன்றி எக்காலத்தும் ஒரே தன்மையுடைய தொரு நடுவு நிலையுடைத்தாகிய அழிவின்றி நிற்பதும் ஆகிய பொருள்கள் யாவை? செட்புமின் - இவற்றிற்கு விடை கூறுமின்; உரைத்தார்க்கு உரியேன்-இவற்றிற்கு நுங்களில் விடைகூறியவர் யாவர் அவர்க்கு யான் ஏவிய தொழில் செய்தற்குரியவள் ஆகுவன் கண்டீர்! உரைத்தீராயின் - இவற்றிற்கு விடைகூறுவீராயின்; திருத்தக்கீர்க்கு -அத்தகைய பாக்கியமுடைய நுமக்கு; கதவு திறந்தேன் எனும் - இப்பொழுதே இப் பிலத்தினது கதவைத் திறப்பேன் என்று அறிவிப்பாள்; என்றான் என்க.

(விளக்கம்) இம்மைக்கின்பமாவது - ஈதல்; பொருளுமாம். மறுமைக்கு இன்பமாவது - அறம்; செம்மையில் நிற்பது - வீடுபேறு. இனி இம்மைக்கின்பம் புகழ் என்பாருமுளர். திறந்தேன்: காலமயக்கம்; விரைபொருட்கண் வந்தது; என்னை?

வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
விரைந்த பொருள என்மனார் புலவர்

என்பது இலக்கணமாகலான் என்க.

118-123: கதவந்திறந்து..............பொருளெனும்

(இதன் பொருள்) அவள் கதவம் திறந்து காட்டிய நல் நெறி - நீவிர் விடைகூறின், அவ்வரோத்தமை அப் பிலத்தினது கதவைத் திறந்து அவள் காட்டிய நல்லவழியாகிய; போகு இடைகழியன புதவம் பலவுள - நெடிய இடைகழியின் கண்ணவாகிய கதவுகள் இருமருங்கும் பல உளவாம்; ஒட்டுப்புதவம் ஒன்றுண்டு - அக்கதவுகளைக் கடந்து சென்றால் ஓரிடத்தே இரட்டைக்கதவையுடைய வாயில் ஒன்றுளதாம்; அதன் உம்பர் வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி - அவ்வாயிலின் உச்சியில் ஓவியத்தே வரையப்பட்டதொரு பூங்கொடி போல்வாளாகிய வரையரமடந்தை. உருவங்கொண்டு நுங்கள் முன்தோன்றி; எனக்கு ஈங்கு இறுதி இல் இன்பம் உரைத்தால் - நீவிர் இவ்விடத்தே முடிவில்லாத இன்பமாவது யாது என்பதற்கு விடைகூறின; நீர் பேணிய பொருள் பெறுதிர் போலும் எனும் -நீங்கள் விரும்பிய பொருளை ஒருதலையாகப் பெறுகுவிர் என்று அறிவிப்பாள் என்றான் என்க.

(விளக்கம்) 119. போகு இடைகழியன புதவம் பலவுள என்றமையால் -அப் பிலத்தினூடே செல்லும் நெறியின் இருமருங்கும் நீண்ட இடைகழிகள் பல உள என்பதும் அவை கதவுகளை யுடையனவாயிருக்கும் என்பதும் பெற்றாம். இடைகழி - இடையிலே பிரிந்து செல்லும் வழி. ஒட்டுப்புதவம் - இரட்டைக் கதவுடைய ஒரு வாயில்; ஆகுபெயர் இதனால் எஞ்சிய வாயில்கள் ஒற்றைக் கதவுடையன என்பதும் பெற்றாம். அதன் உம்பர் வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி என்றது. அவ் வாயிலின் மேலே ஓவியத்தில் எழுதப்பட்ட பூங்கொடி போல்வாளாகிய ஒருத்தி உருவங்கொண்டு வந்து தோன்றி என்றவாறு. இனி உவமை மாத்திரமாகவே கொண்டு கூறினும் அமையும். இறுதியில் இன்பம் வீட்டின்பம். போலும்; ஒப்பில் போலி. பேணிய பொருள் - விரும்பிய பொருள்.

இதுவுமது

123-127: உரையீராயினும்............... பெயரும்

(இதன் பொருள்) உரையீராயினும் உறுகண் செய்யேன் - அங்ஙனம் கூறியவள் பின்னரும் நும்மை நோக்கி, இதற்கு விடை தெரியாமையாலே நீயிர் விடை கூறீராயினும் யான் நுமக்குச் சிறிதும்துன்பம் செய்கிலேன்; நும் நெடுவழிப்புறத்து நீக்குவல் எனும் நும்மை நீயிர் செல்ல வேண்டிய வழியின் கண்ணே தடையின்றிச் செல்ல விடுவேன் போமின் என்பாள்; உரைத்தார் உளர் எனின் - அவள் வினாவிற்கு விடை கூறியவர் உளராயவிடத்து; உரைத்தமூன்றின்-முற்கூறப்பட்ட புண்ணிய சரவணம் முதலிய மூன்று பொய்கை கட்கியன்ற; கரைப்படுத்து ஆங்குக் காட்டினள் பெயரும் - கரையின் கண் நும்மைக் கொடுபோய் விடுத்து அவற்றை இஃதின்னதெனக் கூறிக்காட்டி மீள்வாள் என்றான் என்க.

(விளக்கம்) 124-127. இஃது, அம் மறையோன் அங்குத் தோன்றும் வரையர மடந்தை நுமக்கு இன்னல் செய்யாள், பின்னும் உதவியே செய்குவள், அவட்கு நீவிர் அஞ்சவேண்டா என்றறிவுறுத்தவாறாம்.

126. மூன்றின் - புண்ணிய சரவண முதலிய மூன்று பொய்கைகளின். 127. கரைப்படுத்தலாவது - கரையிற் கொடுபோய் விடுதல். காட்டினன்: முற்றெச்சம்.

இதுவுமது

128 -132 : அருமறை...........மற்றவை

(இதன் பொருள்) அருமறை மருங்கின் எழுத்தின் ஐந்தினும் எட்டினும் வருமுறை மந்திரம் இரண்டும் - ஓதவும் உணரவும் அரிய வேதவழிப்பட்ட சமய நெறிபற்றி எழுத்தினுள் வைத்து ஐந்தெழுத்தானும் எட்டெழுத்தானும் வருகின்ற முறைமையினையுடைய இரண்டு மந்திரங்களையும்; ஒருமுறையாக உளங்கொண்டு ஓதி - ஒரே தன்மையனவாக நுமது நெஞ்சத்தே நினைந்து அன்புடன் ஓதி; வேண்டியது ஒன்றின் விரும்பினர் ஆடின - நீவிர் விரும்பியதொரு பொய்கைக்கண் ஆர்வமுடையீராய் ஆடுவீராயின்; மற்றவை காண்தகு மரபின அல்ல - அவற்றால் நீயிர் எய்தும் பயன் தவஞ் செய்வோரும் காணத்தகும் முறையினையுடையவல்லவாம் சான்றான் என்க.

(விளக்கம்) ஈண்டு இம் மாமறை முதல்வன் எழுத்து ஐந்தினும் எட்டினும் இயன்ற மந்திரம் என்றவை சைவசமயத்துத் தருவைந் தெழுத்தும், வைணவ சமயத்துத் திருவெட்டெழுத்து மந்திரமும் ஆதல் வேண்டும்; இவ்விரண்டும் வைதிக சமயமேயாதலால் அருமறை மருங்கின்; ஐந்தினும் எட்டினும் இரண்டையும் வேற்றுமை பாராட்டாமற் கூறினன் எனல் வேண்டும்; அல்லது வைணவ சமயத்தார்க்கே ஐந்திலியன்ற மந்திரமுளதாயின் ஆராய்ந்து கொள்க. இனிக் கேட்குநர் சமண்சமயத்தினராதலால் நுங்கள் மந்திரத்தை ஓதி நீராடினும் அமையும் என்னும் கருத்தால் அங்ஙனம் கூறினன் எனக் கோடலுமாம். இங்ஙனம் கொள்வார்க்கு அக்காலத்தே சமயம் பற்றிப் பகைமை இன்மைக்கு இஃதொரு சான்றாதலு முணர்க.

133 - 139: மற்றவை............கேகுமின்

(இதன் பொருள்) மற்று அவை நினையாது - இனி அப் பொய்கைகளில் ஆடுவதனால எய்தும் பேறுகளை நீவிர் கருதாது விடினும்; மலைமிசை நின்றோன் பொன் தாமரைத்தாள் உள்ளம் பொருந்துமின் - அத்திருமலை மீது நின்ற திருக்கோலங் காட்டி நின்ற செங்கணெடியோன் பொற்றாமரைமலரனைய அழகிய திருவடிகளை நுமது நெஞ்சத்தே நினைமின்; உள்ளம் பொருந்துவிராயின் -அங்ஙனம் நினைப்பீராயின் அப்பொழுதே; மற்றவன் புள் அணை நீளகொடி புணர்நிலை தோன்றும் - அவ் விறைவனது கலுழப்புள் எய்திய நெடிய கொடித்தண்டு பொருந்தி நிற்கும் நிலையிடத்தையும் நீவிர் காணப்பெறுகுவிர்; தோன்றிய பின் அவன் துணைமலர்த்தாள் இணை என்று துயர் கெடுக்கும் - அக்கொடி நிற்கும் நிலை நுமக்குக் தோன்றிய பின்னர் அவ்விறைவனுடைய இரண்டு பொற்றாமரைகளை ஒரு சேரக் கண்டாற் போன்ற திருவடிகள்தாம் நும்மை வலிந்தெடுத்துப் போய் நுமது துன்பத்தைப் போக்கிப் பேரின்பம் வழங்கும்; இன்பம் எய்தி - அத்தகைய பேரின்பத்தையும் நுகர்ந்து மகிழ்ந்து பின்னர்; மாண்பு உடை மரபின் மதுரைக் கேகுமின் - அங்கிருந்து எவ்வாற்றானும் மாட்சிமை பொருந்திய மதுரை அணிததே யாகலின் இனிதே செல்லுமின் என்றான் என்க.

(விளக்கம்) 133. மற்றவை என்றது அப் பொய்கைகளில் ஆடுவதனாற் பெறக்கிடந்த நலங்களை. மற்றவை நினையாது என்றது மற்று அவற்றைப் பொருட்டாக நினையாதொழியின் என்பதுபட நின்றது. இனி, அப் பேறுகள்தாமும் உறுதிப் பொருள்கள் அல்லவாதலின் அவற்றை விடுத்தொழியினும் ஒழிகுதிர் இனி யான் கூறுவதனை ஒருதலையாகச் செய்ம்மின் என்பான் அங்ஙனம் கூறினன் எனக் கோடலுமாம்.

133 -135. மலைமிசை நின்றோன் தாள் நினைத்தற்கும் இனியன என்பான் பொற்றாமரைத்தாள் என்றான். நெஞ்சத்தே நன்கு நினைமின் என்பான் உள்ளம் பொருந்துமின் என்றான்.

135 - 138. அவன் அடி உள்ளம் பொருந்துமின் பொருந்துவிராயின் கொடிபுணர்நிலை தோன்றும் என்றது அவன் திருவடிகளை நினைந்தேத்தியவாறே மலைமிசை ஏறுதிராயின் முற்பட அவன் கொடி புணர்நிலை தோன்றும் என்றவாறு. கொடிநிலை தோன்றிய பின்னர் நீயிர் அவன் துணைமலர்த்காளினை வணங்கா தொழிவீரல்லீர் அத்துணைக் கடவுட்பண்புடையது அக் காட்சி என்பதும் பின்னர் அவன் தாளிணையே நும்மை வலிந்தெடுத்துப் போய்த் துன்பம் கெடுக்கும் என்றான். அவ்வழி நீங்கள் மெய்யின்பம் தலைப்படுவீர் இது தேற்றம் என்பதும் தோன்றத் தாளிணைகளை எழுவாயாக்கினன். அவன் தாளிணையை நினைவதே அமையும். அத் துணைக்கே அந் நெடியோன் மகிழ்ந்து நும்மை வலிந்தெடுத்துப் போய்ப் பேரின்பம் வழங்குவன், இஃது அப்பெருமான்றிருவருட் கியல்பு என்பது இங்ஙனம் கூறியதனாற் போந்த பயன் என்க. இப்பேறே பிறவிப் பயன் ஆதலால் இதனைச் செய்யாது செல்லற்க! என்றானுமாயிற்று.

மாண்புடை மரபின் மதுரைக் கேகுமின் என்றது, அத் திருமலையினின்றும் மதுரைக் கேகும் நெறி செவ்விய நெறியாகலின் அப்பால் மாண்புறு மரபில் ஏகுதல் கூடும் என்பதுபட நின்றது. என்னை? மதுரைக்கும் திருமால் குன்றத்திற்கும் இடைக்கிடந்த நெறி பெரு நெறிபாகலான் வழிப்போக்குக்கர்க்கு இன்றியமையாத நீரும் நிழலும் இருக்கைகளும் அவ் வழிக்கண் நிரம்ப உண்டென்பதுபட அங்ஙனம் கூறினன் என்று கொள்க. மேலும் அப்பால் மதுரைதானும் அணித்தேயாம் என்பது குறிப்பாகத் தோன்றுமாறு வழித்திறம் சிறிதும் கூறாதொழிந்தனன் என்க.

நடுவட் கிடந்த வழியினியல்பு

140-149: காண்டகு.................போகுவல்யானென

(இதன் பொருள்) காண் தகு பிலத்தின் காட்சி ஈது - மதுரைக்குச் செல்வோர் எல்லாம் காணத்தகுந்ததாகிய பிலக்காட்சி இத்தகைய சிறப்பிற்று ஆகலின் அதனை நுங்கட்குக் கூறினேன்; அவ்வழி ஆங்குப் படரீராயின் -அந்த வலப்பக்கத்து வழிமேல் நீயிர் போக நினைந்திலீராயின்; இடையது செந்நெறி ஆகும்-இனி அம் மூன்றனுள் நடுவட் கிடந்த வழியியல்பு கேண்மின் அதுதான் இயல்பாகவே செவ்விய வழியாகும் கண்டீர்; தேம்பொழில் உடுத்த ஊர் இடையிட்ட இனிய சோலைகளாற் சூழப்பட்ட ஊர்கள் பல இவ் வழியிடையே உள; காடுபல கடந்தால் அவ்வூர்கட்கு இடையிடையே கிடந்த காடுகள் பலவும் இனியனவே இவற்றையெல்லாம் நீயிர் இனிதே கடந்து சென்றக்கால்; ஆர் இடை ஓர் ஆர் அஞர்த் தெய்வம் உண்டு அப்பால் கிடக்கும் அரிய வழியிடத்தே வழிப்போக்கரைத் துன்புறுத்தும் தெய்வம் ஒன்றுண்டு; இடுக்கண் செய்யாது - அத்தெய்வம் வழிப்போவாரைத் துன்புறுத்துங்கால் அச்சுறுத்துதல் முதலியன செய்து துன்புறுத்தாது; (பின்னர் எங்ஙனம் துன்புறுத்துமோவெனின்) இயங்குநர் நடுக்கம் சாலா நயத்தின் தோன்றி தாங்கும் - வழிப்போவார்க்கு அச்சம் தோன்றாதபடி அவர் ஆர்வமுறும்படி அவர்முன் உருக்கொண்டு தோன்றி மயக்கி அவர் போககைத் தடுக்கும் அத்துணையே; மதுரைப் பெருவழி மடுத்து உடன் கிடக்கும் அதற்கு மயங்காமல் அப்பாற் செல்லின் அவ்விடத்தே பலவழிகளையும் மதுரைக்குச் செல்லும் பெருவழி தன்பாலேற்றுக்கொண்டு ஒன்றுபட்டுக் கிடக்கும்; நீளநிலம் கடந்த நெடுமுடி அண்ணல் தாள் தொழுத கையேன் யான் போகுவல் என - நெடிய இந்நிலவுலகத்தைத் தன்தொரு திருவடியினாலே அளந்தருளிய நெடிய முடியையுடைய முழுமுதல்வனாகிய இறைவனைத் தொழுத கையையுடைய யான் இன்னும் அவன் சேவடியைத் தொழுதுய்யச் செலகுவேன் என்றான் என்க.

(விளக்கம்) 140. காண் தகு பிலம் - எல்லோரானும் விரும்பிக் காணத்தகுந்த சிறப்புகளையுடைய பிலம் என்க. 141. இடையது - நடுவணவாகிய வழி. 142. செந்நெறி - செவ்விய வழி. ஆரிடை-கடத்தற்கரிய இடைவழி; அஃதாவது காட்டினூடு செல்லும் வழி. 144. அஞர்-துன்பம். 145. நடுக்கம்-அச்சம். 146. இயக்குநர்- வழிப்போக்கர். தாங்கும் - தடுக்கும். 147. மடுத்துடன் கிடத்தலாவது - தன்னுளேற்றுக்கொண்டு அவற்றுடன் ஒன்றாகிக் கிடக்கும் என்க. இதனால் இது பெருவழி எனப்பட்டது. தொழுத+கையேன் என்க கண்ணழித்திடுக. தொழு தகையேன் எனக் கோடலுமாம்; இதற்குத் தொழுகின்ற தன்மையுடையேன் என்க. நீவிரும் போமின் யானும் போகுவல் என்பதுபடக் கூறுதலின் யானும் எனல்வேண்டிய எச்சவும்மை தொக்கதென்க.

அந்தணனுக்குக் கவுந்தியடிகளார் கூறும் கட்டுரை

150 - 162: மாமறை ................. உணர்த்தி

(இதன் பொருள்) மாமறையோன் வாய் வழித்திறம் கேட்ட - இவ்வாறு அந்த முதுமறை யந்தணனுடைய வாய்மொழியாலே மதுரைக்குச் செல்கின்ற வழிகளினியல்பெலாம் கடைபோகக் கேட்டறிந்த; காவுந்தியையை ஓர் கட்டுரை சொல்லும் - கவுந்தியடிகளார் அவன் மிகைபடக் கூறியவற்றிற்கு மறு மொழியாக ஒரு பொருள் பொதிந்த மொழியைக் கூறுவார்; அது வருமாறு: நலம் புரி கொள்கை நான்மறையாள மன்னுயிர்க்கு நன்மை செய்தலையே தமக்குக் கோட்பாடாகவுடைய நான்கு மறைகட்கும் உரிமையுடைய அந்தணனே! பிலம்புக வேண்டும் பெற்றி ஈங்கு இல்லை -நீதான் பாரித்துக் கூறிய பிலத்தினுட் புகவேண்டும் என்னும் குறிக்கோள் எங்கட்கு இல்லைகாண்! எற்றாலெனின்; கப்பத்து இந்திரன் காட்டிய நூலின் மெய்ப்பாட்டியற்கையின் விளங்கக்காணாய் நீடூழி வாழ்தலையுடைய இந்திரன் இயற்றிய அவ்வியாகரணத்தை எம்முடைய இறைவனாகிய அருகன் அருளிய பரமாகமங்களில் விளக்கமாக நீ காண்கிலையோ! அவ்வாகமத்தை யோதுமாற்றால் யாம் அதனைப் பெறுவேமாதலின் நீ கூறிய புண்ணிய சரவணத்தில் யாங்கள் பொருந்துதல்வேண்டா; இறந்த பிறப்பின் எய்திய எல்லாம் - முற்பிறப்பின்கண் நீ செய்த வினைகளையெல்லாம்; பிறந்த பிறப்பின் நீ காணாயோ பிறந்த இப்பிறப்பிலே நினக்கு வந்துறுகின்ற நுகர்ச்சிகளின் வாயிலாய் நீ அறியமாட்டாயோ? அறியக்கூடுமாகலான் நின் பவகாரணியிற் படிதலும் வேண்டேம்; வாய்மையின் வழாது மன்னுயிர் ஓம்புநாக்கு எய்தா அரும் பொருள் யாவதும் உண்டோ வாய்மை என்னும் அறந்தலை நின்று இவ்வுலகத்தே மன்னிய உயிர்களை ஓம்புகின்ற சான்றாண்மையுடையோர்க்குக் கைவராத அரிய பொருள் யாதொன்றேனும் உண்டோ? இல்லையாகலின் நின் இட்ட சித்தியை எய்துதலும் வேண்டேம்; நீ காமுறு தெய்வம் கண்டு அடிபணியப்போ - இனி நீ பெரிதும் விரும்பிய கடவுளைக் கண்டு அவற்றின் அடிகளிற் பணிதற்குச் செல்வாயாக! யாங்களும் நீள் நெறிப் படர்குதும் இனி யாங்களும் செல்லக்கடவ வழியிலே செல்வேம்காண்! என்று அம் மறையோற்கு இசை மொழி உணர்த்தி என்றிங்ஙனம் அந்த அந்தணனுக்குப் பொருந்து மொழிகளை அருளிச்செய்து; என்க.

(விளக்கம்) 152. நலம்புரி கொள்கை நான்மறையாள, என்றது நின்கொள்கை நன்றே ஆயினும் நீ கூறும் வழிகள்தாம் பேதைமையுடையன என்பதுபட நின்றது. 154. கப்பம் - கறபம் என்னும் வடமொழிச் சிதைவு: ஊழி என்னும் பொருட்டு. கப்பத்திந்திரன் காட்டிய நூலினை எனல் வேண்டியது: ஈற்றின்கண் இரண்டாவது தொக்கது. நீடூழி வாழ்தலையுடைய இந்திரன் என்றவாறு. 155. மெய்ப்பாட்டியறகை - பரமாகமம் (156)

இறந்த பிறப்பிற்றாஞ் செய்த வினையைப்
பிறந்த பிறப்பா லறிக - பிறந்திருந்து
செய்யும் வினையா லறிக இனிப்பிறந்
தெய்தும் வினையின் பயன்  (அறநெறிச்சாரம் -59)

என்னும் கோட்பாடுபற்றி இறந்த பிறப்பின் ........ 156) பிறந்த ...... (158) காணாயோ என்றார். 159. வாய்மை - யாதொன்றும் தீமையிலாத செல்லும் கடைப்பிடி. உயிர் ஓம்புதல் கொல்லாமை என்னும் அறத்தின்மேற்று. இவ்விரண்டையும் கடைப்பிடித் தொழுகுவார் தவஞ் செய்வாரினும் தலை சிறந்தவர் ஆதலின் அவர்க்கு எய்தா அரும் பொருள் இல்லையாயிற்று. இவ்வறங்களின் சிறப்பைத் திருக்குறளிற் காண்க.

வியாகரணம் உணர்தலும் பிறவும், பெறுதற்குரிய நெறிகளும் முயற்சியும் வேறு பிறவாக, இவற்றை நீரின் மூழ்கிப் பெறலாம் என்னும் நின் அறிவுரை அறிவொடு பொருந்தா வுரைகாண்; ஆதலால் நீ நின் வழியே போ! யாங்களும் எம் வழியே போகுவம் என்பது இதன் குறிப்புப் பொருள் என்றுணர்க.

160. காமுறு தெய்வம் என்றது காம வெகுளி மயக்கங்களையுடைய நினது தெய்வத்தை என்னும் பொருளும் தோற்றுவித்து நின் கடவுட் கொள்கைதானும் பெரும் பேதைமைத்தே காண்! என அவன் சமயத்தையும் பழித்தவாறுமாத லுணர்க.

கவுந்தியடிகள் கோவலன் கண்ணகி மூவரும் மதுரைக்கு வழிக்கொண்டு செல்லுங்கால் இடையில் கோவலன் நீர்நாடிச் சென்று ஒரு பொய்கையை அடைதல்

164 - 170 : குன்றா...........நிற்ப

(இதன் பொருள்) குன்றாக் கொள்கைக் கோவலன் தன்னுடன் தனது பொருளீட்டல் வேண்டும் என்னும் கொள்கைக்கண் சிறிது ஊக்கம் குறைதலில்லாத கோவலனோடும் (கண்ணகியோடும்) அன்றைய பகல் ஓர் அரும்பதித் தங்கி அற்றை நாள் தாம் தங்குதற்கரியதோர் ஊரின்கண் தங்கியிருந்து; பின்றையும் பெயர்ந்து அவ்வழிச் செல் வழிநாள் - பின்னரும் அவ்வூரினின்றும் புறப்பட்டு அந்த வழியே செல்லாநின்ற மற்றை நாளிலே; (170) நீர்நசை வேட்கையின் - நீரைப் பெரிதும் விரும்பும் வேட்கை காரணமாக; கருந்தடங் கண்ணியும் கவுந்தியடிகளும் வகுந்துசெல்வருத்தத்து வழிமருங்கு இருப்ப-கரிய பெரிய கண்ணையுடைய கண்ணகியும் கவுந்தியடிகளாரும் அவ்வழியின் பக்கத்தே ஒரு நீழலின்கண் வழி நடந்தமையாலே யுண்டான வருத்தஞ் சிறிது தணிதற்பொருட்டு அமர்ந்திருப்பாராகக் கோவலன் தமியனாய்; இடைநெறிக் கிடந்த இயவுகொள் புடை நெறிப் போய் -தாம் வந்த வழியிடையே கிளைத்துக் கிடந்த செலவை மேற்கோடற்குரியதொரு பக்கநெறி மேலே நீர்நிலை நாடிச் சென்றவன்; பொய்கையிற் சென்று மருங்கின்-ஆங்கொரு நீர்நிலையைக் கண்டு அதன் மருங்கு போய்; நெடுந்துறை நிற்ப-அதன் நெடிய துறையிலே நிற்கும் பொழுது; என்க.

(விளக்கம்) 163. குன்றாக் கொள்கை என்றது - மதுரையிற் சென்று வரை பொருளீட்டல் வேண்டும் என்னும் தனது குறிக்கோளை மண்மகளறிந்திலா வண்ணச் சேவடியுடைய மனைவியொடு இத்துணை தூரம் நடந்தும் அவன்றனது கோட்பாட்டிற் குறைந்திலன் என்றார். அங்ஙனம் அவனைச் செலுத்துவது அவன்றன் பழவினை என்பதுணர்த்தற்கு. இங்ஙனம் அன்றிக் குன்றாத வொழுக்கத்தினையுடைய கோவலன் என்ற முன்னையோர் உரை சிறவாமையுணர்க. 164. அரும்பதி என்றது தாம் தங்குதற்கேற்றதாக அரிதிற் கண்டதோர் ஊர் எனினுமாம். 166. வழிநாள் - மறுநாள். 170. நீர்நசை வேட்கையின் எனவரும் ஏதுவை மூவர்க்கும் ஏற்பக் (166) கருந்தடங்கண்ணி என்பதன் முன்னாகக் கூட்டுக. வகுந்து - வழி. இயவு - மாந்தர் இயங்கிய சுவடு. 169. ஒரு பொய்கையைக் கண்டு அதன் நெடுந்துறையிற் சென்று நிற்ப என்க.

வனசாரிணி ஆரிடை,
வயந்தமாலையின் வடிவில் தோன்றுதல்

171-175 : கானுறை .......... உகுத்து

(இதன் பொருள்) கான் உறை தெய்வம்-முன்பு மறையோன் கூறிய அக் காட்டின்கண் வதியும் தெய்வம்; காதலின் சென்று - அவன் பால் எய்திய காமங்காரணமாகச் சென்று; நயந்த காதலின் இவன் நல்குவன் என - இவன்றான் மாதவியைப் பெரிதும் விரும்பிய காதலுடையான் ஆதலின் அவளுடைய தோழியுருவத்தில் இவன்பாற் சென்று மயக்கினால் அத் தொடர்பு பற்றி என்னையும் விரும்பி அளி செய்குவன் என்று கருதி; வயந்தமாலை வடிவில் தோன்றி அவள் தோழியாகிய வயந்தமாலையினது வடிவத்தை மேற்கொண்டு வந்து அவன் முன்தோன்றி; கொடி நடுக்குற்றது போல ஆங்கு அவன் அடிமுதல் வீழ்ந்து பூங்கொடி யொன்று காற்றினாலே நடுங்குதல் போன்று உடல் நடுங்கியவளாய்க் கோவலன் அடிகளிலே வீழ்ந்து, ஆங்கு அருங்கணீர் உகுத்து அங்ஙனமே பொய்க்கண்ணீரைச் சொரிந்து அழுது; என்க.

(விளக்கம்) 171. காதல் - ஈண்டுக் காமம். 172. இவன் பண்டும் பரத்தைமை யொழுக்கமுடையானாகலான் இவன் காதற் பரத்தையின் தோழியாகும் உரிமைபற்றி வயந்தமாலையாய்ச் சென்றால் நம்மையும் நயந்த காதலின் நல்குவன் என்பது அத்தெய்வத்தின் உட்கோள் என்க.

174. வயந்தமாலையே இவள் என்று கோவலன் நம்புதற்பொருட்டு அத்தெய்வம் இனிப் பொய்யாக நடிக்கின்றது என்க. பொய்க்கண்ணீர் என்பது தோன்ற, 175. அருங்கணீர் என்றார்.

கானுறைதெய்வம் மாதவியின் கூற்றாகக் கூறுதலும் பிறவும்

Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 23, 2012, 02:00:20 PM
176-187: வாசமாலையின் ........... துறந்தனன்

(இதன் பொருள்) மாதவி என்முன் மயங்கி வான் துயர் உற்று-எம்பெருமானே அடிச்சியேன் நீயிர் எம்பெருமாட்டியினது அணித்தோட்டுத் திருமுகத்தை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்தீர். பின்னர் நிகழ்ந்தவை கேட்டருளுதிர்! அடிச்சி வறிதே சென்று அச் செய்தியை அம் மாதவிக்குக் கூறினேனாக அது கேட்டலும் அவள்தான் என்கண்முன்பே அளவிலாத் துன்பத்துளழுந்தி; என்னைச் சினந்து நோக்கி ஏடி வயந்தமாலாய்! வாசமாலையின் எழுதிய மாற்றம் தீதிலேன் - யான் எம் பெருமானுக்கு மணமிக்க மாலையிலே வரைந்து நின் கையிற் கொடுத்த திருமுகத்தின்கண் வரைந்த சொற்களாலே சிறிதும் தவறு செய்திலேன்; பிழை மொழி செப்பினை - நீதான் அவர் முன்னர்த் தவறான மொழி சில கூறினை போலும்; ஆதலின் கோவலன் கொடுமை செய்தனன் - ஆதலாற்றான் அவர் இத்தகைய கொடுமையைச் செய்தொழிந்தார், என்று என்னைக் கடிந்துகூறிப் பின்னரும்; மேலோராயினும் நூலோராயினும் பால்வகை தெரிந்த பகுதியோராயினும் - துறவோரும் கற்றோரும் கல்லாது வைத்தும் இயல்பாகவே நல்லதன் நலனும் தீயதன் தீமையும் பகுத்துணரும் நல்லறிவுபடைத்த சான்றோரும்; பிணி எனக்கொண்டு - இஃது அறியாமையாலே வரும் ஒரு நோயாகும் என்று கருத்தினுட் கொண்டு; பிறக்கிட்டு ஒழியும் - கண்ணெடுத்தும் பாராமற் புறங்கொடுத்துப் போதற்குக் காரணமான; கணிகையர் வாழ்க்கை கடையே போனம் என - யான் வாழுமிந்தக் கணிகையருடைய இல்வாழ்க்கையானது அவர்கள் கருதுமாறு ஒரு கடையாய வாழ்க்கையே போலும் எனத் தனக்குத் தானே கூறிக்கொண்டு; செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண் வெள் முத்து உதிர்த்து - தனது செவ்வரிபடர்ந்த வளவிய கடைப்பகுதியையுடைய குளிர்ந்த கண்களினின்றும் வெள்ளிய முத்துக்களை யொத்த கண்ணீர்த்துளிகளை உதிர்த்து; வெள் நிலாத்திகழும் தண்முத்து ஒருகாழ் - வெள்ளிய நிலாவொளியைப் போன்று ஒளி பரப்பித் தன் கழுத்திலே கிடந்து விளங்கா நின்ற குளிர்ந்த முத்துக்களாலியன்ற ஒற்றை வடத்தை; தன்கையால் பரிந்து தன்கையாலேயே அறுத்து வீசியவளாய்; துனியுற்று என்னையும் துறந்தனள் - என்னோடு பிணங்கி ஒருபொழுதும் துறந்தறியாத என்னையும் நீயும் தொலைந்துபோ! என்று கூறி அகற்றி விட்டனள்; என்க.

(விளக்கம்) 176. வாசமாலையின்கண் எழுதிய மாற்றத்தால் யான் தவறிலேன் என்றவாறு. வாசமாலையில் கோவலனுக்குத் திருமுகம் வரைந்தமையை வேனிற் காதையில் (45-67) காண்க. தெய்வமாகலின் அந்நிகழ்ச்சியைத் தெரிந்து கூறுவதாயிற் றென்க. 177. நீ பிழைமொழி செப்பினை என ஒருசொற் பெய்க. மேலோர் என்றது ஈண்டுத் துறவோரை. என்னை? இருமை வகைதெரிந்தீண்டறம் பூண்டார், பெருமை பிறங்கிற் றுலகு (23) எனவரும் திருக்குறளானும் இதற்குப் பரிமேலழகர் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே உலகின்கண் உயர்ந்தது என உரை வகுத்தலானும் உணர்க. 180. பால்-நல்லதன் நலனும் தீயதன் தீமையும் ஆகிய கூறுபாடுகள். 181. பிறக்கிட்டொழிதலாவது - முகங் கொடாது விரைந்து நீங்குதல். 183. வாழ்க்கை என்றது இகழ்ச்சி. போன்ம்-போலும்: ஈண்டு ஒப்பில் போலி. 187. துனி - பிணக்கு. என்னையும் என்றவும்மை நின்னைத் துறந்ததோடன்றி என்னையும் துறந்தனள் என இறந்தது தழீஇய எச்சவும்மை எனக் கோடலுமாம். துறவா என்னையும் துறந்தனள் என்புழிச் சிறப்பும்மையாம்.

இனி நின்னால் எனக்குக் கேடு வந்துற்றது என்பதுபட இத்தெய்வம் கூறுகின்ற நுணுக்கமும் ஈண்டு நினைக்கற்பாலது. என்னை? அவள்பாற் சீற்றங்கொண்ட கோவலன் அங்ஙனம் அவள் நின்னைத் துறந்தாளாயின் ஆகுக! யானே நின்னைப் புரந்திடுவேன் அஞ்சற்க! என அவனை ஏற்றுக்கோடற்கு இவ்வுபாயம் ஏதுவாகலான் என்க.

இதுவுமது

188 - 191: மதுரை..........யாதென

(இதன் பொருள்) ஆதலின் - என்னிலைமை இங்ஙனமாகிவிட்டமையால்; மதுரை மூதூர் மாநகர்ப் போந்தது - பின்னர்க் களை கணாவாரைப் பெறாத அடித்தொழிலாட்டியேன் பெருமானீர் மதுரை மாநகர் நோக்கிப் போந்ததனை; ஆங்கு எனக்கு எதிர் வழிப்பட்டோர் உரைப்ப அப் பூம்புகார் நகரத்தேயே நும்மைத் தேடி வருகின்ற எனக்கு எதிரே வழியில் வந்தவர் கூறக்கேட்டு; சாத்தொடு போந்து வாணிகச் சாத்தோடு கூடி வந்து; தனித்துயர் உழந்தேன்- தனிமையால் யான் பெரிதும் துயர் எய்தி இவ்விடத்தே நும்மைக் கண்டேன்; பாத்து அரும்பண்ப-பகுத்தலரிய பேரருளுடையீர் இஃதென்வரலாறாம்; நின் பணிமொழி யாது என - இனி அடிச்சிக்குப் பெருமான் பணிக்கும் மொழி யாதோ அதன்படியே ஒழுகுவல் என்றுகூற; என்க.

(விளக்கம்) 190. சாத்து - வாணிகக்கூட்டம். அக் கூட்டத்தில் என்னையறிவார் யாருமின்மையாலே தனிமையுற்றுத் துயர் உழந்தேன் எனவும், காதற்றுணையின்றித் தனிமையாலே காமப்பிணி யுழந்தேன் எனவும், இருபொருளுந் தோன்றுதற்குத் தனித்துயர் உழந்தேன் என்னும் நயந்தெரிக. பாத்து - பகுத்தல். 191. பாத்தரும் பண்ப என்றது உயர்ந்தவள் தாழ்ந்தவள் என்று பகுத்தலில்லாத பேரருளாள என்றும் பிறர்க்கில்லாத நற்பண்பாள என்றும் இருபொருள் தோற்றுவித்தலும் இவற்றுள் முன்னது தன்னை அவன்தோழி என இகழ்ந்து கைவிடாமைக்குக் குறிப்பேதுவாதலும் நுண்ணிதின் உணர்க.

கோவலன் மந்திரங் கூறி வஞ்சம் பெயர்த்தல்

192-200: மயக்குந்தெய்வம்............ஏக

(இதன் பொருள்) இவ் வன்காட்டு மயக்குந் தெய்வம் உண்டு என வியத்தகும் மறையோன் விளம்பினன் ஆதலின் அத் தெய்வம் இவ்வாறு நடிக்கக் கண்ட கோவலன், இந்த வலிய காட்டின்கண் நடுக்கஞ்சாலா நயத்திற் றோன்றி நெஞ்சத்தை மயக்குந் தெய்வம் ஒன்று உண்டு என்று முன்னரே வியக்கத்தகுந்த அந்தணன் அறிவுறுத்தனனாதலால்; வஞ்சம் பெயர்க்கும் மந்திரத்தால் - அத்தகைய தெய்வங்கள் செய்யும் வஞ்சத்தைத் தீர்த்துத் தெளிவிக்கும் மந்திரத்தாலே; யான் இவ் ஐஞ்சில் ஓதியை அறிகுவன் என - யான் ஐம்பாலாகப் பகுக்கப்படும் சிலவாகிய கூந்தலையுடைய இவளை அவன் கூறிய தெய்வமகளோ? அன்றி வயந்தமாலைதானோ? யார் என்று அறிந்துகொள்ளக் கடவேன் என்று துணிந்து; கோவலன் நாவிற் கூறிய மந்திரம் பாய்கலைப் பாவை மந்திரம் ஆகலின் - அவன் தனது நாவிலே கூறிய அம் மந்திரத்தானும் பாய்ந்து செல்லும் கலையூர்தியாகிய கொற்றவை மந்திரம் ஆதலானே; யான் வனசாரிணி மயக்கம் செய்தேன் - அத் தெய்வம் அச்சமெய்தி ஐய யான் வயந்தமாலையல்லேன்! இக் காட்டிலே திரிகின்ற ஓரியக்கிகாண்; நின்னைக் காமுற்று அறியாமையாலே நின்னை இவ்வாறு நடித்து மயக்கி யொழிந்தேன், இப் பிழையைப் பொறுத்தருளுதி; புனமயில் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும் என்திறம் உரையாது ஏகு என்று ஏக - காட்டகத்து மயில் போலும் சாயலையுடைய கண்ணகிக்கும் அறத்தலைவியாகிய அக் கவுந்தியடிகளார்க்கும் என்னுடைய இவ்விழிந்த செயலை அறிவியா தொழிக! என்றியம்பி மறைந்தொழியா நிற்ப; என்க.

(விளக்கம்) 194 மறையோனது பரந்துபட்ட அறிவுடைமையைப் பாராட்டுவான் வியத்தகு மறையோன் என்றான். 194. தெய்வ முதலியவற்றால் செய்யப்படும் வஞ்சத்தைப் போக்கி உண்மையுணர்த்தும் மந்திரம் என்பது கருத்து. 195 ஓதியாகிய இவள் மானிட மகளோ அல்லது தெய்வமகளோ என்றெழுகின்ற ஐயங்களைந்து உண்மையை உணர்குவேன் என்றுட்கொண்டவாறு. 197. பாயும் கலையை ஊர்தியாகக் கொண்ட கொற்றவை என்க. கலை-மான். வனசாரிணி - காட்டில் திரிபவள். இவளை இயக்கி என்பர் அடியார்க்கு நல்லார். 199. புனமயிற் சாயல்: அன்மொழித்தொகை கண்ணகிக்கும் என்க. புண்ணிய முதல்வி: கவுந்தி. தவத்தினும் கற்புச் சிறந்ததாகலின் கண்ணகியை முற்கூறினர் என்பர் அடியார்க்குநல்லார். இவ்விருவரும் குணமென்னும் குன்றேறி நின்றவர் ஆகலின் தவறு கண்டுழிச் சபிப்பர் என்றஞ்சி அவர்க்கு என்திறம் உரையாதொழிக என்று வேண்டுகின்றாள் என்க.

கவுந்தியின் கருத்து

201 - 206: தாமரை ............. அழுவத்து

(இதன் பொருள்) ஆங்குத் தாமரைப் பாசடைத் தண்ணீர் கொணர்ந்து அயாவுறு மடந்தை அருந்துயர் தீர்த்து - அங்ஙனம் அத் தெய்வம் அகன்றபின்னர் அவ்விடத்தே பொய்கைக்கண்ணுள்ள குளிர்ந்த நீரைத் தாமரையினது பசிய இலையைக் குடையாகக் கோலி முகந்து கொண்டுவந்து நீர்வேட்கையான் வருத்த முற்ற கண்ணகியினது வருத்தத்தைத் தீர்த்தபின்னர்; மீது செல்வெங்கதிர் வெம்மையின் தொடங்க- உச்சிவானத்தே இயங்குகின்ற ஞாயிறு மிகவும் வெப்பஞ் செய்தலைத் தொடங்குதலாலே; தீது இயல் கானம் செலவு அரிது - பாலை என்பதோர் படிவம் கொண்டு தன்னையடைந்தோர் நடுங்குதுயர் உறுத்தும் தீமை நிகழாநின்ற இக் காட்டுவழியில் இனிச் செல்லுதல் அரிதாம் என்றுட் கொண்டு; கோவலன் தன்னொடும் கொடுங்குழை மாதொடும் மாதவத் தாட்டியும் மயங்கு அதர் அழுவத்து அக் கோவலனோடும் வளைந்த மகரக்குழையையுடைய கண்ணகியோடும் பெரிய தவத்தையுடைய கவுந்தியடிகளாரும் மயங்குதற்குக் காரணமான வழிகளையுடைய அந்தப் பாலைப் பரப்பிடத்தே என்க.

(விளக்கம்) 201. பாசடை - பசிய இலை. தாமரையிலையைக் குடையாகக் கோலி அதன்கண் நீர் கொணர்ந்து என்க. நீர் வேட்கையாகலின் அருந்துயர் என்றார். அடிகளார் உற்றநோய் நோற்கும் ஆற்றல் உடையார் ஆகலின் அவர்க்கு நீர் ஊட்டல் வேண்டாவாயிற்று என்க. தீது முற்கூறப்பட்ட துன்பம்; அஃதாவது, (65) நடுங்குதுயருறுத்தல். அழுவம் - பாலைப்பரப்பு.

மூவரும் கொற்றவை கோயில் எய்துதல்

207 - 216 : குரவமும் ....... ஆங்கென்

(இதன் பொருள்) குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் விரவிய பூம்பொழில் - குராவும் வெண்கடம்பும் கோங்கும் வேங்கையும் ஆகிய மரங்கள் விரவிநிற்கின்ற அழகியதொரு சோலையாலே சூழப்பெற்று; விளங்கிய இருக்கை - விளக்கமுடையதோர் இருப்பிடத்தின்கண்ணே; ஆர் இடை அத்தத்து இயக்குநர் வளம் அல்லது மாரி வளம் பெறா வில் ஏர் உழவர். கடத்தற்கரிய இடத்தையுடைய அப்பாலைப் பரப்பிடைக் கிடக்கும் வழிகளின்கட் செல்லும் வழிப்போக்கர் கொணர்கின்ற பொருளைக் கவர்ந்து கொள்ளும் வளத்தையன்றி மழையினால் உண்டாகும் வளத்தைப் பெறாதவரும்; வில் ஏர் உழவர் - தமது விற்றொழிலையே தமது வாழ்க்கைக்கியன்ற உழவுத் தொழிலாகவுடையவரும் ஆகிய மறவர்; கூற்று உறழ் முன்பொடு கொடு வில் ஏந்தி வேற்றுப் புலம் போகி - மறலியை யொத்த ஆற்றலோடே வளைந்த விற்படையைக் கையில் ஏந்தித் தம் பகைவர் முனையிடத்தே புகாநிற்ப; நல் வெற்றங் கொடுத்து - அம் மறவர்க்குச் சிறந்த வெற்றியைக் கொடுத்தருளி; கழிபேராண்மைக் கடன் பார்த்திருக்கும் அதற்குக் கைம்மாறாக அம் மறவர் தனக்குச் செலுத்துதற்குரிய மிகப்பெரிய ஆண்மைத் தன்மைக்கு அடையாளமாகிய அவிப்பலியாகிய கடனை எதிர்பார்த்திருக்கின்ற நுதல் விழி குமரி விண்ணோர் பாவை மையறு சிறப்பின் வான நாடி நெற்றியின்கண் நெருப்புக் கண்ணையுடைய கன்னிகையும் குற்றமற்ற சிறப்பினையுடையவளும் அமரர்கள் கைதொழுதேத்தும் பாவை போல்வாளும் வானவர் நாட்டையுடையவளும் ஆகிய; ஐயைதன் கோட்டம் கொற்றவையினுடைய திருக்கோயிலை; ஆங்கு அடைந்தனர் அப்பொழுதே சென்றடைந்தனர்; என்பதாம்.

(விளக்கம்) பூம்பொழில் இருக்கைக்கண் அமைந்த ஐயைதன் கோட்டம் எனவும், கடன்பார்த்திருக்கும் ஐயைதன் கோட்டம் எனவும், குமரியும் பாவையும் நாடியும் ஆகிய ஐயைதன் கோட்டம் எனவும் தனித்தனி யியையும். 209. இயக்குநர் வளம் அல்லது என வளம் என்பதனை முன்னும் கூட்டுக. அஃதாவது ஆறு செல்வோர் கொணரும் பொருளைக் கவர்ந்துகொள்வதாகிய வளம் என்றவாறு. கழி பேராண்மைக் கடன் என்பது தன்னைத்தான் இடும்பலி. இதனை இந்திரவிழவு....80 அடியினும் அதனுரையினும் காண்க. நுதல்விழி என மாறுக.

பா - நிலைமண்டில ஆசிரியப்பா.

காடுகாண் காதை முற்றிற்று
.
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 23, 2012, 02:12:10 PM
12. வேட்டுவ வரி

அஃதாவது - வேட்டுவர்கள் கொற்றவையை வழிபாடு செய்து வாழ்த்திய வரிப்பாடல் என்னும் இசைத்தமிழ்ப் பாடல்களையுடைய பகுதி என்றவாறு. இதன்கண் கொற்றவையின் புகழ்பாடும் மறவர்கள் கூத்துமாடிப் பாடுதலாலே இது வரிக்கூத்து என்னும் நாடகத் தமிழுமாம் என்க.

இனி, இதன்கண் கோவலன் கண்ணகி கவுந்தியடிகள் ஆகிய மூவரும் இளைப்பாறி யிருத்தற் பொருட்டு அப் பாலைப் பரப்பில் குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் விரவிய பூம்பொழில் நடுவணமைந்த கொற்றவை கோட்டம் புகுந்து ஆங்கொரு சார் இருந்தபொழுது அப்பாலைப் பரப்பில் வாழும் எயினர் சாலினியைக் கொற்றவைக்குரிய கோலங் கொள்வித்து அக் கோட்டம் புகுவாராக; தேவராட்டியாகிய சாலினிமேல் தெய்வம் ஏறி அடிபெயர்த்தாடிக் கண்ணகிமுற் சென்று அவனைப் பாராட்டுதலும் எயினர்கள் அத் தெய்வத்தைப் பரவிப்பாடும் இசைப்பாடல்களும் கற்போர்க்குக் கழிபேரின்பஞ் செய்வனவாம்.

கடுங்கதிர் திருகலின் நடுங்கஞர் எய்தி
ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்ப
நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த் தாங்கு
ஐயை கோட்டத் தெய்யா வொருசிறை
வருந்துநோய் தணிய இருந்தனர் உப்பால்  5

வழங்குவில் தடக்கை மறக்குடித் தாயத்துப்
பழங்கட னுற்ற முழங்குவாய்ச் சாலினி
தெய்வ முற்று மெய்ம்மயிர் நிறுத்துக்
கையெடுத் தோச்சிக் கானவர் வியப்ப
இடுமுள் வேலி எயினர்கூட் டுண்ணும்  10

நடுவூர் மன்றத் தடிபெயர்த் தாடிக்
கல்லென் பேரூர்க் கணநிரை சிறந்தன
வல்வில் எயினர் மன்றுபாழ் பட்டன
மறக்குடித் தாயத்து வழிவளஞ் சுரவாது
அறக்குடி போலவிந் தடங்கினர் எயினரும்  15

கலையமர் செல்வி கடனுணின் அல்லது
சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள்
மட்டுண் வாழ்க்கை வேண்டுதி ராயின்
கட்டுண் மாக்கள் கடந்தரும் எனவாங்கு
இட்டுத் தலையெண்ணும் எயின ரல்லது  20

சுட்டுத் தலைபோகாத் தொல்குடிக் குமரியைச்
சிறுவெள் ளரவின் குருளைநாண் சுற்றிக்
குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி
இளைசூழ் படப்பை இழுக்கிய வேனத்து
வளைவெண் கோடு பறித்து மற்றது  25

முளைவெண் திங்க ளென்னச் சாத்தி
மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற
மாலை வெண்பல் தாலிநிரை பூட்டி
வரியும் புள்ளியு மயங்கு வான்புறத்து
உரிவை மேகலை உடீஇப் பரிவொடு  30

கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத்
திரிதரு கோட்டுக் கலைமே லேற்றிப்
பாவையுங் கிளியுந் தூவி அஞ்சிறைக்
கானக் கோழியும் நீனிற மஞ்ஞையும்
பந்துங் கழங்குந் தந்தனர் பரசி  35

வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும்
புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் மேவிய விரையும்
ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வர
ஆறெறி பறையுஞ் சூறைச் சின்னமும்  40

கோடும் குழலும் பீடுகெழு மணியும்
கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் னிறீஇ
விலைப்பலி உண்ணும் மலர்பலி பீடிகைக்
கலைப்பரி ஊர்தியைக் கைதொழு தேத்தி
இணைமலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக்  45

கணவனோ டிருந்த மணமலி கூந்தலை
இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய
திருமா மணியெனத் தெய்வமுற் றுரைப்பப்  50

பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டியென்று
அரும்பெறற் கணவன் பெரும்புறத் தொடுங்கி
விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப
மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி
நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்  55

பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி
நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து
அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்
துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி
வளையுடைக் கையிற் சூல மேந்தி  60

கரியின் உரிவை போர்த் தணங் காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி
வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை
இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன்  65

தலைமிசை நின்ற தையல் பலர்தொழும்
அமரி குமரி கவுரி சமரி
சூலி நீலி மாலவற் கிளங்கிளை
ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப்
பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை  70

ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை
தமர்தொழ வந்த குமரிக் கோலத்து
அமரிளங் குமரியும் அருளினள்
வரியுறு செய்கை வாய்ந்ததா லெனவே;
 - உரைப்பாட்டுமடை.

வேறு

நாகம் நாறு நரந்தம் நிரந்தன   1
ஆவும் ஆரமும் ஓங்கின எங்கணும்
சேவும் மாவும் செறிந்தன கண்ணுதல்
பாகம் ஆளுடை யாள்பலி முன்றிலே;

செம்பொன் வேங்கை சொரிந்தன சேயிதழ்  2
கொம்பர் நல்லில வங்கள் குவிந்தன
பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கிளந்
திங்கள் வாழ்சடை யாள்திரு முன்றிலே;

மரவம் பாதிரி புன்னை மணங்கமழ்  3
குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர்மேல்
அரவ வண்டினம் ஆர்த்துடன் யாழ்செய்யும்
திருவ மாற்கிளை யாள்திரு முன்றிலே;

வேறு

கொற்றவை கொண்ட அணிகொண்டு நின்றவிப்  4
பொற்றொடி மாதர் தவமென்னை கொல்லோ
பொற்றொடி மாதர் பிறந்த குடிப்பிறந்த
விற்றொழில் வேடர் குலனே குலனும்;

ஐயை திருவின் அணிகொண்டு நின்றவிப்  5
பையர வல்குல் தவமென்னை கொல்லோ
பையர வல்குல் பிறந்த குடிப்பிறந்த
எய்வில் எயினர் குலனே குலனும்;

பாய்கலைப் பாவை அணிகொண்டு நின்றவிவ்  6
ஆய்தொடி நல்லாள் தவமென்னை கொல்லோ
ஆய்தொடி நல்லாள் பிறந்த குடிப்பிறந்த
வேய்வில் எயினர் குலனே குலனும்;

வேறு

ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக்  7
கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால்
வானோர் வணங்க மறைமேல் மறையாகி
ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய்;

வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக்  8
கரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்
அரியரன்பூ மேலோன் அகமலர்மேல் மன்னும்
விரிகதிரஞ் சோதி விளக்காகி யேநிற்பாய்;

சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச்  9
செங்கண் அரிமால் சினவிடைமேல் நின்றாயால்
கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து
மங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய்;

வேறு

ஆங்குக்,    10
கொன்றையுந் துளவமும் குழுமத் தொடுத்த
துன்று மலர்ப்பிணையல் தோள்மே லிட்டாங்கு
அசுரர் வாட அமரர்க் காடிய
குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே;

வேறு

ஆய்பொன் னரிச்சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப வார்ப்ப  11
மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை யாடும் போலும்
மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை யாடுமாயின்
காயாமலர்மேனி யேத்திவானோர் கைபெய் மலர்மாரி காட்டும் போலும்;

உட்குடைச் சீறூ ரொருமகன்ஆ னிரைகொள்ள உற்ற காலை  12
வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டும் போலும்
வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டின் வேற்றூர்க்
கட்சியுட் காரி கடிய குரலிசைத்துக் காட்டும் போலும்;

கள்விலை யாட்டி மறுப்பப் பொறாமறவன் கைவில் ஏந்திப்  13
புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகும் போலும்
புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப் போகுங் காலைக்
கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையும் கொடுமரமுன் செல்லும் போலும்

வேறு

இளமா எயிற்றி இவைகாண் நின் னையர்  14
தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள்
கொல்லன் துடியன் கொளைபுணர் சீர்வல்ல
நல்லியாழ்ப் பாணர்தம் முன்றில் நிறைந்தன;

முருந்தேர் இளநகை காணாய்நின் னையர்  15
கரந்தை யலறக் கவர்ந்த இனநிரைகள்
கள்விலை யாட்டிநல் வேய்தெரி கானவன்
புள்வாய்ப்புச் சொன்னகணி முன்றில் நிறைந்தன;

கயமல ருண்கண்ணாய் காணாய்நின் னையர்  16
அயலூர் அலற எறிந்தநல் ஆனிரைகள்
நயனில் மொழியின் நரைமுது தாடி
எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன;
- துறைப்பாட்டுமடை.

வேறு

சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்  17
இடர்கெட அருளும்நின் இணையடி தொழுதேம்
அடல்வலி எயினர்நின் அடிதொடு கடனிது
மிடறுகு குருதிகொள் விறல்தரு விலையே;

அணிமுடி அமரர்தம் அரசொடு பணிதரு  18
மணியுரு வினைநின மலரடி தொழுதேம்
கணநிறை பெறுவிறல் எயினிடு கடனிது
நிணனுகு குருதிகொள் நிகரடு விலையே;

துடியொடு சிறுபறை வயிரொடு துவைசெய  19
வெடிபட வருபவர் எயினர்கள் அரையிருள்
அடுபுலி யனையவர் குமரிநின் அடிதொடு
படுகடன் இதுவுகு பலிமுக மடையே;

வேறு

வம்பலர் பல்கி வழியும் வளம்பட  20
அம்புடை வல்வில் எயின்கடன் உண்குவாய்
சங்கரி அந்தரி நீலி சடாமுடிச்
செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்;

துண்ணென் துடியொடு துஞ்சூர் எறிதரு  21
கண்ணில் எயினர் இடுகடன் உண்குவாய்
விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்;

பொருள்கொண்டு புண்செயி னல்லதை யார்க்கும்  22
அருளில் எயினர் இடுகடன் உண்குவாய்
மருதின் நடந்துநின் மாமன்செய் வஞ்ச
உருளுஞ் சகடம் உதைத்தருள் செய்குவாய்;

வேறு

மறைமுது முதல்வன் பின்னர் மேய  23
பொறையுயர் பொதியிற் பொருப்பன் பிறர்நாட்டுக்
கட்சியும் கரந்தையும் பாழ்பட
வெட்சி சூடுக விறல்வெய் யோனே.

உரை

1-5: கடுங்கதிர் .............. இருந்தனர்

(இதன்பொருள்.) கடுங்கதிர் திருகலின் - கடிய வெப்பமுடைய கதிரவன் வான்மிசை ஏறுதலாலே கதிர்கள் முறுகிப் பெரிதும் வருத்துதலாலே; நறும்பல் கூந்தல் ஆறு செல் வருத்தத்துச் சீறடி சிவப்ப நறிய பலவகைப்பட்ட கூந்தலையுடைய கண்ணகி அதுகாறும் வழிநடந்த துன்பத்தோடே தன் சீறடிகளும் கொப்புளங் கொண்டு சிவத்தலாலே; குறும்பல் வுயிர்த்து குறியனவாகப் பலகாலும் உயிர்த்து வல்லாநடை யுடையளாதல் கண்டு; வருந்து நோய் தணிய - அவள் வருந்துதற்குக் காரணமான அத்துன்பந் தணிதற்பொருட்டு; ஐயை கோட்டத்து எய்யா ஒரு சிறை இருந்தனர் - முற்கூறப்பட்ட கொற்றவை கோயிலினுட் புகுந்து ஆங்குப் பலரும் தம்மைக் காணவியலாது தனித்ததொரு பக்கத்தே அமர்ந் திளைப்பாறி யிருந்தனராக என்க.

(விளக்கம்) முன்னைக் காதையில் வெங்கதிர் வெம்மையிற் றொடங்கத் தீதியல் கானம் செலவரி தென்றுட்கொண்டு ஐயைதன் கோட்டம் புக்கனர் என்றறிவுறுத்த அடிகளார் ஈண்டு அக் கடுங்கதிர் திருகலோடன்றி அதுகாறும் வழி நடந்தமையால் கண்ணகியின் வருத்தம் இங்ஙனமிருந்ததென ஆங்குச் சென்றிருத்தல் இன்றியமையாமையையும் விதந்தோதுவாராயினர். 3. உயிர்த்து - உயிர்ப்ப, அதுகண்டு.... இருந்தனர் என்க.

4. எய்யாத என்னும் பெயரெச்சத்து ஈறு கெட்டது. பலரும் தம்மைக் காணவொண்ணாத ஒரு மறைவிடத்தே என்க; பலரும் புகுந்தறியாத வோரிடம் என்பது பொருந்தாது. என்னை? அத்தகைய விடமாயின் இவரும் புகுத நினையாராகலின் என்க. இருந்தனர் என்னும் பயனிலைக்கு எழுவாய் அதிகாரத்தாற் பெற்றாம்.

நடுவூர் மன்றத்தே சாலினி தெய்வ மேறப்பெற்று ஆடுதல்

5 - 11: உப்பால் ................ அடிபெயர்த்தாடி

(இதன்பொருள்.) உப்பால் இனி உங்கே எயினர் ஊரிடத்தே; வில் வழங்கு தடக்கை மறக்குடித் தாயத்து - வில்லிடத்தே அம்புகளைத் தொடுத்து மாற்றார்க்கும் வழங்கும் வள்ளன்மை சான்ற பெரிய கையினையுடைய மறவர் தம்குடியிற் பிறந்த உரிமை யுடைமையாலே; பழங்கடன் உற்ற முழங்குவாய்ச் சாலினி - கொற்றவைக்குத் தான் முன்பு நேர்ந்த கடனைச் செலுத்திவந்த முழங்குகின்ற வாயையுடைய சாலினி என்பவள்; தெய்வம் உற்று - ஞெரேலெனத் தெய்வத்தன்மையுற்று; மெய்ம்மயிர் நிறுத்துக் கையெடுத்து ஓச்சி மெய்ம்மயிர் சிலிர்த்து மூரிநிமிர்த்த கைகளை ஒற்றையும் இரட்டையும் ஆக்கி விட்டெறிந்து; கானவர் வியப்ப எயினர்கள் வியப்புறும்படி; முள் இடு வேலி ஊர் எயினர் கூட்டு உண்ணும் முள்ளிட்டுக் கட்டிய வேலியையுடைய அவ்வூரின்கண்ணுள்ள எயினர்கள் தாம் ஆறலைத்துக்கொண்ட பொருளை யெல்லாம் ஒருங்கேகூடிப் பகிர்ந்துண்டற்கிடனான; ஊர் நடு மன்றத்து ஊரினது நடுவணமைந்த மன்றத்தின் கண்ணே; அடி பெயர்த்து ஆடி - தாளத்திற் கொப்பத் தன் அடிகளைப் பெயர்த்திட்டு ஆடி என்க.

(விளக்கம்) ஐயை கோட்டத்தே இங்ஙனம் இருப்ப இனி அவ்வூரின் மற்றோரிடத்தே என்பார் உப்பால் (- உங்கே) என்றவாறு. மறக்குடிப் பிறந்த இவர் ஆறலைத்துப் பிறர்பொருள் கவர்தலன்றி அவர் வழங்குவதும் உண்டு. அஃதென்னையோ எனின் தமது வில்லில் வேண்டுமளவு அம்பு தொடுத்துத் தம் மாற்றார்க்கும் வழங்குவர் என்பார், வழங்குவில் தடக்கை என அவர் கைக்கும் வள்ளன்மையை ஏற்றிக் கூறினர். கொற்றவை ஏறுதற்கியன்ற தகுதி கூறுவார், மறக்குடித் தாயத்துச் சாலினி என்றார். சாலினி - தேவராட்டி. மெய்ம்மயிர் நிறுத்தல் கையெடுத் தோச்சுதல் அடி பெயர்த்தாடுதல் வாய் முழங்குதல் இவை தெய்வமுற்றோர் மெய்ப்பாடுகள்.

தெய்வ மேறப்பெற்ற சாலினி கூற்று

12-19: கல்லென்............கடந்தரும் எனவாங்கு

(இதன்பொருள்.) கல் என் பேரூர்க் கண நிரை சிறந்தன - எயினர்காள்! நுங்கள் மாற்றாருடைய கல்லென முழங்குகின்ற பெரிய ஊர்களிடத்தே அவர்தம் செல்வமாகிய திரண்ட ஆனிரைகள் பெரிதும் சிறப்புறுவனவாயின; வல்வில் எயினர் மன்று பாழ்பட்டன - வலிய விற்படைகளை யுடையீரா யிருந்தும் எயினர்களாகிய நுங்கள் மன்றங்கள் எல்லாம் பாழ்பட்டுக் கிடவா நின்றன; எயினரும் -நந்தம் மெயினர் தாமும்; மறக்குடித் தாயத்து வழி வளம் சுரவாது-தாம் பிறந்த மறக்குடிக்குரிய ஆறெறி சூறையும் ஆகோளுமாகிய வழிகளிலே தமக்கியன்ற வளங்குன்றி; அறக்குடிபோல் அவிந்து அடங்கினர் - அறக்குடிப் பிறந்த மக்கள் போன்று செருக்கழிந்து மறப்பண்பின்றி ஒடுங்கினர்; இவ்வாறு கேடுற்றமைக்குக் காரணமும் உண்டு கண்டீர்; கலையமர் செல்வி - நங் குல தெய்வமாகிய கலைமான் மிசை அமரும் செல்வ மிக்கவளாகிய கொற்றவைதானும்; கடன் உணின் அல்லது - அவள் கொடுத்த வெற்றிக்கு விலையாகிய உயிர்ப்பலியை நீயிர் அவட்குக் கொடுப்ப உண்டாக்காலல்லது; சிலை அமர் வென்றி கொடுப்போள் அல்லள் - நீங்கள் நுமது வில்லினாற் செய்யும் கொடுப்போள் அல்லள் - நீங்கள் நுமது வில்லினாற் செய்யும் போரின்கண் நுமக்கு வெற்றியைக் கொடுப்பாளொருத்தி அல்லள்காண்! மட்டு உண் வாழ்க்கை வேண்டுதிராயின் நீங்கள் நாள் முழுதும் கள்ளுண்டு களித்தற்கியன்ற வளமான வாழ்க்கையை விரும்புவீராயின்; கட்டுஉண்மாக்கள் கடம் தரும் என - களவுசெய்து அதன்பயனை உண்ணுகின்ற பாலைநில மாக்களே! நீயிர் அத் தெய்வத்திற்குச் செலுத்தக் கடவ பலியைச் செலுத்துமின்! என்று கூறாநிற்ப என்க.

(விளக்கம்) 12. கல்லென் : ஒலிக்குறிப்பு. ஊர் - கரந்தையார் ஊர். இவர் ஆக் கொள்ளுமிடத்தே அவ்வூரார் கல்லென்னும் ஆரவாரம்பட எழுவர் ஆகலின் அவரூரைக் கல்லென்பேரூர் என்றார். இதனைக் கரந்தை யரவம் எனவே புறப்பொருள் வெண்பாமாலை (22) கூறுவது முணர்க. சிறந்தன என்றது எயினர் அடங்கியதனால் அவை வளமுற்றுப் பெருகிவிட்டன என்பதுபட நின்றது. வல்வில் எயினர் என்றது இகழ்ச்சி. 14. மறக்குடித் தாயத்துவழி வளம் என்றது, ஆறெறி சூறையும் ஆ கோளுமாகிய பொருட்பேறுகளை. 16. கடன்-பராவுக் கடனுமாம். 17. சிலையமர் - விற்போர். 18. மட்டு - கள். கட்டு -களவு செய்து. தரும் - தாரும் என்பதன் விகாரம். இவை முன்னிலைப் புறமொழிகள். ஆங்கு : அசை.

சாலினிக்குக் கொற்றவை கோலம் புனைதல்

20 - 30: இட்டுத்தலை .......... உடீஇ

(இதன்பொருள்.) இட்டுத் தலை எண்ணும் எயினர் அல்லது சுட்டுத்தலை போகாத் தொல்குடிக் குமரியை - தாம் சுட்டிய பகைவர் தலையைத் தாமே அறுத்து வைத்து எண்ணுவதல்லது தம்மாற் சுட்டப்பட்ட தலை தப்பிப் போகாமைக்குக் காரணமான மறப் பண்புமிக்க எயினர்களது பழைய மறக்குடியிலே பிறந்த இளைமையுடைய சாலினிக்கு; குறுநெறிக் கூந்தல் சிறுவெள் அரவின் குருளை நாண் சுற்றி நெடுமுடி கட்டி - அவளது குறிய நெறிப்புடைய கூந்தலைச் சிறிய வெள்ளியாலியன்ற பாம்பின் குருளையாகிய கயிற்றினாலே சுற்றி நெடிய முடியாகக் கைசெய்து கட்டி; இளை சூழ் படப்பை இழுக்கிய ஏனத்து வளை வெள் கோடு பறித்து மற்றது - காவற்காடு சூழ்ந்த தமது தோட்டப்பயிரை அழித்த பன்றியினது வளைந்த வெள்ளிய மருப்பைப் பறித்து அதனை; முளை வெள் திங்கள் எனச் சாத்தி - செக்கர் வானத்தே தோன்றுகின்ற வெள்ளிய இளம்பிறை என்னும்படி அணிந்து; மறம் கொள் வயப்புலி வாய் பிளந்து பெற்ற வெண்பல்மாலை நிரை தாலி பூட்டி - தறுகண்மையுடைய வலிய புலியினது வாயைப் பிளந்து அதன் பற்களை உதிர்த்துக் கைக்கொண்ட வெள்ளிய பல் லொழுங்கை நிரைத் தாலியாகக் கட்டி; வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து உரிவை மேகலை உடீஇ - அப் புலியினது வரிகளும் புள்ளிகளும் விரவிய பெரிய புறந்தோலை அவட்கு மேகலையாக வுடுத்தி என்க.

(விளக்கம்) 20-21. தாம் சுட்டிய பகைவர் தலையை என்க. சுட்டுதலாவது இன்னவன் தலையை யான் அறுப்பேன் எனச் சுட்டிச் சூள் கூறுதல். சுட்டியவாறே செய்து முடிப்பதல்லது அத் தலை தப்பிப் போக விடாதவர் என அவர்தம் மறமிகுதி கூறியபடியாம். இனி, தந்தலையைப் போர்க்களத்தே பகைவர் அரிந்து வைக்க வைக்க எண்ணுவதல்லது வாளா இறந்து தந்தலை ஈமத்தே சுட்டழிக்கப்படாமைக்குக் காரணமான மறப்பண்பு மிக்கவர் எனலுமாம். 22. சிறு வெள்ளரவின் குருளை நாண் என்றது பாம்பின் குருளை வடிவாகச் செய்த சிறிய பொன் ஞாண் என்றவாறு. வெள்ளரவின் குருளை என்றமையால் வெண் பொன்னாலியன்ற நாண் எனலுமாம். 24. இளை - காவற்காடு; முள் வேலியுமாம். இழுக்குதல் - அழித்தல். 26. கொற்றவைக்கு முடியில் பிறையும் அரவும் உண்மையின் பன்றிக் கொம்பினைப் பறித்துப் பிறையாக அணிந்தார் என்க. முளை வெண் திங்கள் என்றது இளம்பிறையை. 28. நிரைத்தாலி - ஓர் அணிகலம். 29-30. வான் புறத்து உரிவை பெரிய புறந்தோல். 30. மேகலை - மேலாடை.

இதுவுமது

30 - 35: பரிவொடு ................ பரசி

(இதன்பொருள்.) கரு வில் பரிவொடு வாங்கிக் கையகத்துக் கொடுத்து - புறக்காழ் முதிர்ந்த வலிய வில்லை வருத்தத்தோடு வளைத்து நாண் கொளீ இ அவள் கையிற் கொடுத்து; திரிதரு கோட்டுக் கலைமேல் ஏற்றி - முறுக்கேறிய கொம்புகளையுடைய கலைமான் ஊர்தியிலே எழுந்தருளச்செய்து; பாவையும் கிளியும் தூவி அம் சிறைக் கானக்கோழியும் நீல்நிற மஞ்ஞையும் பந்தும் கழங்கும் தந்தனர் பாசி - விளையாட்டுப் பாவையும் கிளியும் தூவியையும் அழகிய சிறகுகளையுமுடைய காட்டுக்கோழியும் நீல நிறமுடைய மயிலும் பந்தும் கழங்குமாகிய இவற்றைக் கையுறையாகக் கொணர்ந்து திருமுன் வைத்துநின்று வழிபாடுசெய்து, பின்னர்; என்க.

(விளக்கம்) கருவில் - வயிரம் பாய்ந்த மூங்கிலாலியன்ற வில். அதன் வலிமை மிகுதியாலே வருந்தி வளைத்து என்றவாறு. பரிவு - வருத்தம். வளைத்து நாண் கொளீஇக் கொடுத்தென்க. திரிதரு கோட்டுக்கலை என்றது ஈண்டுச் சிற்பத்தாலியன்ற கலைமான் வாகனத்தை என்க. பாவை - மதனப்பாவை முதலியன (பொம்மைகள்.) தந்தனர்-தந்து.

வழிபாட்டுப் பொருள்கள்

36 - 44: வண்ணமும் ............ கைதொழு தேத்தி

(இதன்பொருள்.) வண்ணமும் சுண்ணமும் தண்ணறுஞ் சாந்தமும் - குங்குமக் குழம்பு முதலிய வண்ணங்களையும் பொற் சுண்ணத்தையும் குளிர்ந்த நறிய சந்தனத்தையும்; புழுக்கலும் நோலையும் விழுக்கு உடை மடையும் பூவும் புகையும் மேவிய விரையும் - அவரை துவரை முதலியவற்றின் அவியலும் எட்கசியும் நிணங்கலந்து துழந்தட்ட சோறும் மலர்களும் அகிற்புகையும் இவற்றோடு கூடிய பிற மணப் பொருள்களும் ஆகியவற்றையும்; ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வர - ஏவல் செய்யும் எயினமகளிர் ஏந்திக்கொண்டு பின்னர்ச் செல்லாநிற்ப; ஆறு எறி பறையும் சூறைச்சின்னமும் கோடும் குழலும் பீடுகெழு மணியும் கணங்கொண்டு துவைப்ப - வழிப்போக்கரை அலைத்து அவர் பொருளைக் கவரும்பொழுது கொட்டும் பறையும் களவுகொள்ளும்பொழுது ஊதுகின்ற சின்னமும் துத்தரிக் கொம்பும் குழிக்குழலும் பெருமை பொருந்திய ஒலியையுடைய மணியும் ஆகிய இசைக்கருவிகள் தம்முட் கூடி முழங்காநிற்ப; அணங்கு முன் நிறீஇ - இவ்வனைத்தையும் சாலினியாகிய அக் கொற்றவை திருமுன்னர் நிறுத்த; விலைப்பலி உண்ணும் மலர்பலி பீடிகை பரிக்கலை ஊர்தியை - அச் சாலினிதானும், எயின்மறவர் தாமெய்திய வெற்றிக்குக் கைம்மாறாகக் கொடுக்கும் உயிர்ப்பலியை உண்ணுமிடமாகிய அகன்ற பலிபீடத்தை முற்படத் தொழுது பின்னர்க் கோட்டத்துள் எழுந்தருளியிருக்கும் விரைந்த செலவினையுடைய கலைமானை ஊர்தியாகக்கொண்ட கொற்றவையையும் கைகுவித்துக் கும்பிட்டு வாழ்த்திப் பின்னர்; என்க.

(விளக்கம்) புழுக்கல் - அவரை துவரை முதலியவற்றின் அவியல். நோலை - எட்கசி; ஆவது எள்ளினாற் சமைத்ததொரு தின்பண்டம். விழுக்கு - ஊன். மடை சோறு. புகை - அகிற்புகை. சாந்தம் - சந்தனம். நிறீஇ - நிறுத்த எனத் திரித்துக்கொள்க. அணங்கு - சாலினி; அணங்கேறிய சாலினி எனினுமாம். விலையாகிய பலி என்க. சின்னம் - காளம் என்னும் ஒருவகைத் துளைக்கருவி. நாகசின்னம் என்னும் வழக்குண்மையும் உணர்க. மணி - ஒலிக்கும்; மணி, வழிபாட்டுக் கருவிகளில் இது தெய்வத்திற்குச் சிறப்புடையதாதலின் பீடுகெழு மணி என்றார். பீடு - பெருமை. துவைத்தல் - முழங்குதல். பரி - விரைந்த செலவு. பரிக்கலை என மாறுக. சாலினி கலையூர்தியை ஏத்த என்க.

சாலினியின் மேலுற்ற கொற்றவை கண்ணகியைப் பாராட்டல்

45-50: இணைமலர்............உரைப்ப

(இதன்பொருள்.) தெய்வம் உற்று இணைமலர்ச் சீறடி இணைந்தனள் வருந்திக் கணவனோடு இருந்த மணமலி கூந்தலை - அச் சாலினியின் மேல் கொற்றவையாகிய அத் தெய்வம் ஏறி இணைந்த தாமரை மலர்கள்போன்ற தன் சீறடிகள் வழிநடை வருத்தத்தால் சிவந்து கொப்புளங் கொண்டமையாலே பெரிதும் வருந்தித் தன்னரும் பெறற் கணவனோடு அக் கோயிலில் ஒருபாலிருந்த கண்ணகியை அணுகச் சென்று தன் கையால் அவளை எயினர்க்குச் சுட்டிக்காட்டிக் கூறுபவள்; இவள் கொங்கச் செல்வி குடமலையாட்டி தென் தமிழ்ப்பாவை செய்த தவக்கொழுந்து - நமரங்காள்! உங்கிருக்கும் இவளைக் காண்மின்! இவள் கொங்க நாட்டினை ஆளும் அரசிகாண்! அத்துணையோ? நந் தென்னகத்துச் செந்தமிழ்த் தெய்வஞ் செய்த தவத்தின் பயனாகத் தோன்றியவளும் இவளொருத்தியே காண்! உலகிற்கு ஒருமாமணியாய் ஓங்கிய திருமாமணி என உரைப்ப - தமிழ் செய்த தவப்பயன் இவளென்றலும் சாலாது கண்டீர்! இவள்தான் பல்வேறு மொழிகளையுடைய இப் பேருலகத்தே எந்த நாட்டினும் பெண்பிறந்தோர் எல்லோரும் எந்தக் காலத்தும் தத்தமக்கு அணியாகக் கொள்ளத் தகுந்ததோர் உயரிய அழகிய முழுமாணிக்கம் என்பேன்! என்று நெஞ்சாரப் புகழ்ந்து பாராட்டா நிற்ப; என்க.

(விளக்கம்) இதன்கண் கொற்றவை கண்ணகியின் சிறப்பெல்லாம் கருத்திற்கொண்டு அவள் நலம்பாராட்டினமை நுண்ணிதின் உணர்க. மனையறம்படுத்த காதையில் கண்ணகியை நலம்பாராட்டிய கோவலன் இத்தகைய நலமெல்லாம் பாராட்டினன் அல்லன் ஆகலின் அடிகளார் அவனது உரையைக் குறியாக் கட்டுரை என்றோதினார் என்றாம். ஈண்டு இத் தெய்வம் கூறும் நலம்பாராட்டே குறிக்கொண்ட கட்டுரை ஆவதுமறிக.

இனி, கண்ணகி மக்களுட் டோன்றித் தன் கற்பொழுக்கத்தாலே தெய்வமும் தொழத்தகும் தெய்வமாயுயர்ந்து தன்னை வழிபடுவார்க்கெல்லாம் மழைவளந்தந்து பாதுகாப்பவள் ஆகுவள் எனக் கண்ணகியின் எதிர்கால நிகழ்ச்சியைக் கொற்றவை இவ்வாறு வியந்து கூறினள் என்க.

இனி, இத்தகைய கற்புடையாளைப் பிறநாட்டுக் காப்பியங்களினும் காண்டல் அரிதாகவே இவளைத் தலைவியாகக் கொண்டு காப்பியஞ் செய்த தமிழ்த் தெய்வம் செய்த தவப்பயனே இவள் என்பாள் தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து என்றாள். மற்று இச் சிறப்புஞ் சாலாதென்னும் கருத்தாலே உலகிற்கே ஒருமணியாய் ஓங்கிய திருமணி என்றாள். இஃதென் சொல்லியவாறோ வெனின் இப் பேருலகத்தே மாதராய்ப் பிறந்தவர் எல்லாம் தம்மனத்தே பூண்டு கொள்ளற் கியன்ற ஒரு முழுமாணிக்கமே இவள் என்றவாறு.

கண்ணகி நாணிநிற்றல்

51-53: பேதுறவு ............... நிற்ப

(இதன்பொருள்.) மூதறிவாட்டி பேதுறவு மொழிந்தனள் என்று இங்ஙனம் அச் சாலினி தன்னைச் சுட்டிக் கூறுதல் கேட்ட கண்ணகி அதனைப் பொறாமல் பேரறிவுடைய இத் தேவராட்டி தெய்வ மயக்கத்தாலே ஏதேதோ கூறினள் என்றுட்கொண்டு; அரும் பெறல் கணவன் பெரும்புறத்து ஒடுங்கி - பெறுதற்கரியவனாகிய தன் கணவன் முன்னரே எழுந்து நின்றவனுடைய பெரியபுறத்தே ஒடுங்கி அவளது பேதைமையை எண்ணிப் புதியதொரு புன்னகையோடு நிற்ப என்க.

(விளக்கம்) 51. மூதறிவாட்டி - இகழ்ச்சி. இல்லது புகழ்வாளாக வுட்கொள்ளலின் இஃதிகழ்ச்சிக்குறிப்பாயிற்றென்க. பலரறியத் தன்னைச் சுட்டிப் புகழ்தலின் நாணினள். அவள் பேதைமை கண்டு எள்ளுங்கருத்தால் அவள் நகையை விருந்தின் மூரல் என்றார். கணவன் புறத்தே ஒடுங்கிநிற்ப என்றமையாலே தெய்வம் தன்னைச் சுட்டிக் கூறத் தொடங்கியவுடன் இருவரும் எழுந்து நின்றமையும் பெற்றாம்.

கொற்றவையின் சிறப்பு

54 - 64:  மதியின் .......... கொற்றவை

(இதன்பொருள்.) மதியின் வெள் தோடு சூடும் சென்னி - திங்களாகிய வெண்டாமரை மலரின் வெள்ளிய இதழாகிய பிறையை அணிந்த முடியையும்; நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து நெற்றியைக் கிழித்துக் காமவேளின்மேல் சினந்து விழித்த இமைத்தலில்லாத நெருப்புக் கண்ணையும் உடையவளும்; பவள வாய்ச்சி - பவளம் போன்று சிவந்த திருவாயினையும்; தவளவாள் நகைச்சி வெள்ளி ஒளியுடைய பற்களையும் உடையவளும்; நஞ்சு உண்டு கறுத்த கண்டி திருப்பாற் கடலிலே வாசுகி யுமிழ்ந்த நஞ்சை உண்டமையாலே கரிய நிறமுடையதாகிய மிடற்றினை யுடையவளும் வெஞ்சினத்து அரவு நாண் பூட்டி நெடுமலை வளைத்தோள் - வெவ்விய சினத்தையுடைய வாசுகியாகிய பாம்பை நாணாகப் பூட்டி நெடிய மேருமலையை வில்லாக வளைத்தவளும், துளை எயிற்று உரகக் கச்சு உடை முலைச்சி - நஞ்சு பிலிற்றுந் துளைகளமைந்த பற்களையுடைய பாம்பாகிய கச்சணிந்த முலையினையுடையவளும்; வளையுடைக் கையில் சூலம் ஏந்தி வளையலணிந்த கையினால் சூலத்தை ஏந்தியவளும்; கரியின் உரிவை போர்த்து அணங்கு ஆகிய அரியின் உரிவை மேகலையாட்டி யானையின் தோலைப் போர்த்துப் பிறவுயிர்கட்கு வருத்தந் தருவதாகிய அரிமானின் தோலை மேகலையாக வுடுத்தவளும்; சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி இடப்பக்கத்தே சிலம்பும் வலப்பக்கத்தே வீரக்கழலும் ஒலிக்குச் சிறிய அடிகளையும் உடையவளும்; வலம்படு கொற்றத்து வாய்வாள் கொற்றவை மேலான வெற்றியையுடைய வாள்வென்றி வாய்ப்புப் பெற்றவளுமாகிய கொற்றவை என்னும் திருப்பெயரை யுடையவளும் என்க.

(விளக்கம்) 54. இளம்பிறை என்பது தோன்ற மதிசூடும் சென்னி என்னாது மதியின் வேண்டோடு சூடும் சென்னி என்றார். நாள்தோறும் ஒவ்வொன்றாக விரிதலின் மதியாகிய மலர்க்குப் பிறை தோடாயிற்று. தோடு - இதழ். நுதலைத் திறந்து என்னாது நுதல் கிழித்து விழித்த என்றார், அதுதானும் அவள் சினந்துழித் தோன்றியதாகலின் -57. கண்டி - கண்டத்தை யுடையவள். நுதல் விழி- அவள் தீயோரை அழித்தற்றொழிற்கும் கறுத்த கண்டம் அடியாரைப் புரக்குந்தொழிலுக்கும் அறிகுறிகள் ஆகலின் அவற்றை விதந்தெடுத்தோதினர், அவள் இறைவனுக்கு இச்சாசத்தியாகலின் நெடுமலை வளைத்தமை அவள் செயல் என்பதுபட. 58. அரவு....வளைத்தோள் என்றார். 61. அணங்கு ஆகிய - பிறவுயிர்க்குத் துன்பமாகிய. இடப்புறத்துத் திருவடி இறைவியுடையதும் வலப்புறத்துத் திருவடி இறைவனுடையதும் ஆகலின், 63. சிலம்பும் கழலும் புலம்புஞ் சீறடி என்றார். இங்ஙனமே பின்னும் வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால் தனிச்சிலம் பரற்றும் தகைமையள் என்பர் (கட்டுரை காதை 9-10)

ஈண்டுப் பெண்மைதானும் இக் கொற்றவையின் கூறாகலின் பெண்மையே உயிர்களைப் புரப்பதாயினும் உயிர்கள் முறைபிறழ்ந்துழி அவற்றைச் சினந்து கோறற்கு இங்ஙனம் அஞ்சத்தகுந்த உருவமும் கொள்ளும் என அடிகளார் இவ் வேட்டுவ வரியின்கண் பின்னர்க் கண்ணகியார் மதுரை எரியூட்டுதல் முதலிய கொடுஞ்செயற்கு அமைதி காட்டற்கு முன்மொழிந்து கோடல் என்னும் உத்திவகையாலே இறைவியை இங்ஙனம் இக் கொற்றவை யுருவிற் காட்டுகின்றனர் போலும்.

இதுவுமது

65 - 74: இரண்டு ................ வாய்ந்ததாலெனவே

(இதன்பொருள்.) இரண்டு வேறு உருவில் திரண்ட தோள் அவுணன் தலைமிசை நின்ற தையல் - தலை அஃறிணைக்குரியதாகவும் உடம்பு உயர்திணைக்குரியதாகவும் ஒன்றற்கொன்று பொருந்தாத வடிவத்தையும் திரண்ட தோள்களையும் உடைய மகிடாசுரனுடைய தலையின்மேல் நின்றவளும்; பலர் தொழும் அமரரும் முனிவரும் பிறருமாகிய பலரானும் வணங்கப் பெறுகின்ற, அமரி குமரி கவுரி சமரி சூலி நீலி தேவியும் கன்னிகையும் கவுரநிற முடையாளும் போர்க்களத்திற்குரியவளும் சூலப்படை யுடையாளும் நீல நிறத்தை யுடையவளும்; மாலவற்கு இளங்கிளை ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப் பாய்கலைப்பாவை - திருமாலின் தங்கையும் தெய்வங்கட்கெல்லாம் தலைவியானவளும், திருமகளும் வெவ்விய வாளையுடைய பெரிய கையினையும் பாய்கின்ற கலைமானூர்தியையும் உடையவளும்; ஆய் கலைப்பாவை - ஆராய்தற்குரிய கலைத் தெய்வமும்; அருங்கலப்பாவை ஏனைத் தெய்வங்கட்கெல்லாம் அருங்கலமாகியவளும்; தமர் தொழ வந்த குமரிக் கோலத்து அமர் - அவ்விடத்தே எயினராகிய தஞ்சுற்றத்தார் கைகுவித்துத் தொழத் தனது கொற்றவையாகிய தனது அணியை மேற்கொண்டு வந்த கன்னிகையாகிய அந்தச் சாலினியின் கோலத்திற்கேற்ப அவள் மேலமர்ந்த; குமரியும் அக் கொற்றவை தானும்; வரி உறு செய்கை வாய்ந்தது என இச் சாலினி கொண்ட கோலம் வாய்ப்புடைத்தென்று மகிழ்ந்து; அருளினள் அவ் வெயினர்க்கெல்லாம் திருவருள் சுரந்தனள்; என்க.

(விளக்கம்) இரண்டு வேறு உருவின் அவுணன் - தலை எருமைக் கடாவின் தலையாகவும் உடம்பு அசுரன் உடம்புமாய் அமைந்த வடிவினையுடையவன்; அவன், மகிடாசுரன் என்க.

65 - 6. அவுணன் தலையைத் துணித்து அதன்மிசை நின்ற தையல் என்றவாறு. 68. மாலுக்கு இளங்கிளை என்றது அவன் தங்கை என்றவாறு.

72. தமர் தொழவந்த குமரி என்றது சாலினியை. அவள் கோலத்து அமர் இளங்குமரி என்றது கொற்றவையை. இவள் எற்றைக்கும் குமரியாதலின் இளங்குமரி என்றார். வரி - வரிக்கூத்திற்கியன்ற கோலம். இதுகாறும் கூறியவை உரைப்பாட்டு மடை - அஃதாவது உரை நடைபோன்ற பாட்டு, அதனை இடையிலே மடுத்தலாவது இடையிடையே வைத்தல். இங்ஙனம் உரைப்பாட்டினை வைத்தல் நாடகத் தமிழ்க்குரியதொரு செய்கை என்க.

முன்றிற் சிறப்பு

அஃதாவது கொற்றவை கோயிலின் முன்றிலிலே வரிக்கூத்தாடத் தொடங்கும் எயினர்கள் முற்பட அக் கோயிலினது முற்றத்தின் சிறப்பைப் பாடுதல் என்க.

1 : நாகம் ........... முன்றிலே

(இதன்பொருள்.) கண்ணுதல் பாகம் ஆளுடையாள் பலி முன்றிலே -நெற்றிக் கண்ணனாகிய இறைவனுடைய திருவுடம்பிலே ஒரு பாதியை ஆளுகின்ற சிறப்பினையுடைய எங்கள் கொற்றவை பலி கொள்ளுதற்குரிய இத் திருக்கோயிலினது முற்றத்திலே; எங்கணும் - யாண்டும்; நாறும் மணம் பரப்புகின்ற; நாகம் நரந்தம் நிரந்தன - சுரபுன்னையும் நரந்தையும் நிரல்பட மலர்ந்தன; ஆவும் ஆரமும் ஓங்கின; ஆச்சா மரமும் சந்தன மரமும் வானுற வளர்ந்து நின்றன; சேவும் மாவும் செறிந்தன -சேமரமும் மாமரமும் செறிந்து நின்று மலர்ந்தன.

(விளக்கம்) இவ் வன்பாலையிலே இவை இங்ஙனம் வளம்பெற்று மலர்வதற்குக் காரணம் அவளது அருளன்றிப் பிறிதில்லை என்பது குறிப்பெச்சம். இவை பின்வருவனவற்றிற்கும் ஓக்கும்.

2 : செம்பொன் ........... முன்றிலே

(இதன்பொருள்.) இளந் திங்கள் வாழ்சடையாள் திரு மூன்றிலே இளம்பிறை என்றென்றும் இளம்பிறையாகவே நிலைபெற்று வாழுதற்கிடமான அழகிய சடையினையுடைய நங்கள் கொற்றவையினது அழகிய முற்றத்தே; வேங்கை செம்பொன் சொரிந்தன-வேங்கைமரங்கள் தாமும் அவட்குக் காணிக்கையாகச் செவ்விய பொன்களையே பூத்துச் சொரிந்தன; நல் இலவங்கள் கொம்பர் சேயிதழ் குவிந்தன- அழகிய இலவமரங்கள் தாமும் தம் கொம்புகளாகிய கைகளாலே சொரிந்த காணிக்கைகளாகிய சிவந்த மலர்கள் யாண்டும் குவிந்து கிடந்தன; புன்கு - புன்குகள்; பொங்கர் தம் கொம்புகளாகிய கைகளாலே எங்கள் கொற்றவைக்கு; பொரி சிந்தின - தம் மலர்களாகிய வெள்ளிய பொரிகளைச் சொரியாநின்றன; என்க.

(விளக்கம்) செம்பொன்: குறிப்புவமை, பொரியும் அது. வேங்கை முதலியன கொற்றவைக்குக் கையுறையாகச் செம்பொன் முதலியவற்றைச் சொரிந்து குவித்துச் சிந்தின என்க. குவித்தன, குவிந்தன என மெலிந்தது. பொங்கர்: கொம்பு. பொங்கர் வெண்பொரி - பொதுளிய (பருத்த) வெண்பொரி எனினுமாம்.

3 : மரவம்...........முன்றிலே

(இதன்பொருள்.) திருவ மாற்கு இளையாள் திருமுன்றிலே - திருமாலின் தங்கையாகிய நங்கள் கொற்றவையினது அழகிய முற்றத்திலே; மலர்ந்தன மரவம் பாதிரி புன்னை குரவம் கோங்கம் மணம்கமழ் கொம்பர் மேல் - மலர்ந்து நிற்பனவாகிய வெண்கடம்பும் பாதிரியும் சுரபுன்னையும் குராவும் கோங்குமாகிய இவையிற்றின் நறுமணங்கமழுகின்ற கொம்புகளிடத்தே; வண்டினம் உடன் ஆர்த்து யாழ் அரவம் செய்யும் - வண்டுகள் தம் பெடையோடு ஒருசேர முரன்று யாழினது இசைபோலப் பாடா நிற்கும்; என்க.

(விளக்கம்) திருவமால் என்புழி அகரம் இடைச்சொல். மலர்ந்தனவாகிய மரவ முதலியவற்றின் மணங்கமழ் கொம்பர் மேல் ஆர்த்து யாழரவஞ் செய்யும் எனக் கூட்டுக.

இம்மூன்றும் முன்றிற் சிறப்பு என்னும் ஒருபொருண்மேலடுக்கி வந்த வரிப்பாடல்கள்.

மறங்கடை கூட்டிய குடிநிலை

அஃதாவது வெற்றித் திருவாகிய கொற்றவையின் கோலங்கோடற்கு உரிமையுடைத்தாகிய மறக்குடியின் சிறப்புரைத்தல் என்க.

4 : கொற்றவை .......... குலனே குலனும்

(இதன்பொருள்.) கொற்றவை கொண்ட அணி கொண்டு நின்ற இப் பொன்தொடி மாதர் தவம் என்னை கொல்லோ எம் குல தெய்வமாகிய கொற்றவை அணியாகக் கொண்டவற்றை யெல்லாம் அணிந்துகொண்டு அக் கொற்றவைபோலவே ஈண்டு நிற்கின்ற இச் சாலினிதான் இப்பேறு பெறுதற்கு அவள் முற்பிறப்பிலே செய்த நோன்புதான் எத்தகைய சிறப்புடைத்தோ? பொற்றொடி மாதர் பிறந்த குடிப்பிறந்த வில் தொழில் வேடர் குலனே குலனும் - பொன் வளையலையுடைய இச் சாலினி பிறந்த மறக்குடியிற் பிறந்த வில்லேருழவராகிய இம் மறவர்தங்குலமே இவ்வுலகிற் றலைசிறந்த குலமாகும்; என்றார் என்க.

5 : ஐயை .............. குலனும்

(இதன்பொருள்.) ஐயை திருவின் அணிகொண்டு நின்ற இப் பை அரவு அல்குல் தவம் என்னை கொல்லோ? எங்குல முதல்வியாகிய இந்தக் கொற்றவையினது அழகிய அணிகலன்களை அணிந்துகொண்டு நின்ற அரவினது படம்போன்ற அல்குலையுடைய இச் சாலினி இப்பேறு பெறுதற்கு அவள் முற்பிறப்பிலே செய்த நோன்புதான் எத்தகைய சிறப்புடையதோ? பையரவு அல்குல் பிறந்த குடிப்பிறந்த எய் வில் எயினர் குலனே குலனும் - இவள் பிறந்த குடியிலே பிறந்த எய்யும் வில்லையுடைய எயினர் குலமே உலகின்கட் சிறந்த குலமாம் என்றார்; என்க.

6 : பாய்கலை ............. குலனும்

(இதன்பொருள்.) பாய்கலைப் பாவை அணிகொண்டு நின்ற இவ் ஆய்தொடி நல்லாள் தவம் என்னை கொல்லோ விரைந்து செல்லும் கலைமானை ஊர்தியாகவுடைய எங்கள் கொற்றவை அணியும் சிறப்புடைய அணிகலன்களை யணிந்துகொண்டு அவள்போல நிற்கின்ற அழகிய வளையலை யணிந்த இச் சாலினிதானும் இப்பேறுபெறுதற்கு முற்பிறப்பிலே எத்தகைய கடிய நோன்பு செய்தனளோ? ஆய் தொடி நல்லாள் பிறந்த குடிப்பிறந்த வேய் வில் எயினர் குலனே குலனும் - அவள் பிறந்த குடியிலே பிறந்த மூங்கிலாலியன்ற வில்லையுடைய இவ் வெயினர் குலமே இம் மாயிரு ஞாலத்திற் றலையாய குலமாம், இதில் ஐயமில்லை! என்றார்; என்க.

(விளக்கம்) இவை மூன்றும் ஒருபொருண்மேலடுக்கி வந்தன. இவை, கூத்தாடுகின்ற மறவர்கள் தங்குடிச் சிறப்புக் கூறுமாற்றால் குறிப்பாகக் கொற்றவையையே புகழ்ந்தவாறாம். இவற்றை வள்ளிக் கூத்தென்பாருமுளர். அவர், இதற்கு,

மண்டமர் அட்ட மறவர் குழாத்திடைக்
கண்ட முருகனுங் கண்களித்தான் - பண்டே
குறமகள் வள்ளிதன் கோலங்கொண் டாடப்
பிறமகள் நோற்றாள் பெரிது

என்னும் வெண்பாவை எடுத்துக் காட்டுவர்.

இனி இவற்றை வெட்சித்திணையின்கண்,

மறங்கடை கூட்டிய குடிநிலை சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே

எனவரும் நூற்பாவினால் இரண்டு துறைகளையும் இணைத்து அடிகளார் இங்ஙனம் ஓதினர் எனக் கோடலே சிறப்புடைத்தாம். இதன்கண் மறக்குடிச்சிறப்பும் அக் குடியின் தெய்வமாகிய கொற்றவையின் சிறப்பும் இணைந்துவருதலு முணர்க. இதனை வள்ளிக்கூத் தென்னல் ஈண்டைக்கு யாதுமியைபின்மையின் பொருந்தாதென்க குடிநிலை என்றதனால் இஃது ஆடவர்க்கும் மகளிர்க்கும் பொதுவாதலும் உணர்க. தொல்- இளம்பூரணம். புறத்திணையியல் 62 ஆம் நூற்பாவுரையினையும் நோக்குக.

1 - பொற்றொடி மாதர் - ஈண்டுச் சாலினி.
2 - ஐயை - முதல்வி. பையரவல்குல்: அன்மொழித்தொகை.
3 - பாய்கலைப்பாவை - கொற்றவை. வேய் - மூங்கில்.

கொற்றவை நிலை

7 : ஆனைத்தோல் ............ நிற்பாய்

(இதன்பொருள்.) வானோர் வணங்க மறைமேல் மறையாகி ஞானக் கொழுந்தாய் நடுக்கு இன்றியே நிற்பாய் - அமரர்கள் வணங்கா நிற்ப; நான்கு மறைகட்கும் அறிய வொண்ணாது மறைந்த பொருளாகி மெய்யுணர்வில் தோன்றும் பொருளாகி அசைதலின்றி நிலைத்து நிற்கும் சிறப்புடைய நீ; புலியின் உரி உடுத்து ஆனைத்தோல் போர்த்து கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால் புலியினது தோலை அரைக்கண் உடுத்துக் காட்டகத்தே எருமைக்கடாவினது கரிய தலையின்மேல் நின்றனை. இஃதென்ன மாயமோ? அறிகின்றிலேம் என்றார் என்க.

8 : வரிவளை ............... நிற்பாய்

(இதன்பொருள்.) அரி அரன் பூமேலோன் அகமலர் மேல் என்னும் விரிகதிர் அம் சோதி விளக்கு ஆகி நிற்பாய் - நீதானும் திருமாலும் சிவபெருமானும் தாமரை மலர் மேலுறையும் பிரமனும் ஆகிய முப்பெருங் கடவுளர் தம் நெஞ்சத்தாமரையின் மேலே எஞ்ஞான்றும் நிலைபெறுகின்ற விரிந்த கதிர்களையுடைய அழகிய ஒளியையுடைய அறிவு விளக்காக நிற்குமியல்பினை யுடையை யல்லையோ அத்தகையோய்; வரிவளைக்கை வாள் ஏந்தி மாமயிடன் செற்றுக் கரிய திரிகோட்டுக் கலைமிசை மேல் நின்றாயால் - வரிகளையுடைய வளையலணிந்த பெண்ணுருவமுடையையாகி அக் கையின்கண் வாட் படையையும் ஏந்தி நின்று பொருது பெரிய மகிடாசுரனையும் கொன்றொழித்துக் கரிய முறுக்கேறிய கொம்பையுடைய கலைமான்மீது வீற்றிருந்தருள்கின்றனை இஃதென்ன மாயமோ? என்றார் என்க.

9 : சங்கமும் ........... நிற்பாய்

(இதன்பொருள்.) முடிக்குக் கங்கை அணிந்த கண் நுதலோன் பாகத்து மங்கை உருவாய் விடைமேல் மறை ஏத்தவே நிற்பாய் - தனது சடை முடியின்மிசைக் கங்கையை அணிந்துள்ள நெருப்புக் கண்ணையுடைய நெற்றியை உடையவனாகிய இறைவனுடைய ஒரு பாதித் திருமேனியில் பெண்ணுருவமாகி மறைகள் வழிபாடு செய்தற்பொருட்டு அவை புகழ்ந்து தொழுமாறு அருட்டிருமேனி கொண்டு எருதின்மேல் நிற்கும் நீ; சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்தி செங்கண் சின அரிமான்மேல் நின்றாயால் - இப்பொழுது சங்கு சக்கரம் என்னுமிவற்றை நினது செந்தாமரை மலர் போன்ற அழகிய கைகளிலே ஏந்திக்கொண்டு சினத்தாலே சிவந்த கண்களையுடைய சிங்கத்தின் மேலே நின்றனை இஃதென்ன மாயமோ? என்றார் என்க.

(விளக்கம்) இம்மூன்றும் மருட்கை என்னும் ஒருபொருண்மேல் அடுக்கி வந்தன. 7. இதன்கண் அவள் அருவநிலையையும் உருவநிலையையும் பற்றி மருட்கை பிறந்தபடியாம். மறைகட்கும் அறியப்படாமையால் மறைமேன் மறையாகி நின்றாய் என்றும், மெய்யுணர்விற்குப் புலப்படுதல் பற்றி ஞானக் கொழுந்தாய் நின்றாய் என்றும், யாண்டும் வியாபகமாய் நிற்றல்பற்றி நடுக்கின்றியே நிற்பாய் என்றும் கூறியவாறாம். இஃது அருவத்திருமேனி - இத்தகையவள் (ஏகதேசமாய்) ஓரிடம்பற்றி ஆனைத்தோல் போர்த்துப் புலித்தோல் உடுத்து எருமைத் தலைமேல் நிற்றல் வியத்தற் குரித்தாயிற்று என்க. ஏனையவற்றிற்கும் இங்ஙனமே கூறிக்கொள்க.

8. வரிவளைக்கை ஏந்தத்தகாத வானை ஏந்தி என்பது கருத்து. மயிடன் - மகிடாசுரன். மா - கருமையுமாம்.

அன்பராயினார் நினைந்த வடிவத்தே அவர்தம் நெஞ்சத்தே தோன்றும் அருவுருவத் திருமேனியை, அரி யான் பூமேலோன் அகமலர் மேன் மன்னும் விரிகதிர் அஞ்சோதி விளக்கு என்று விதந்தார். இதன்கண் அவர் செய்யும் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழிலும் நின்னருள் கொண்டே அவரால் நிகழ்த்தப்படுகின்றன என்பது குறிப்புப் பொருள் என்க.

9. சினச் செங்கண் எனவும் கண்ணுதலோன் பாகத்து விடைமேல் நின்றாயால் எனவும் பிரித்துக் கூட்டிக் கொள்க. இனி அரிமான் விடை எனக் கோடலுமாம்; இதற்கு விடை என்றது ஊர்தி என்னும் பொருட்டு. அன்றியும், குரங்கின் ஏற்றினை... கடியலாகா கடனறிந்தோர்க்கே (தொல்.மரபியல் -68) என்புழி கடியலாகா என்றதனால் அரிமானின் ஆண் என்பதுணர்த்தற்கு விடை என்றவாறுமாம். என்னை? வெருக்கு விடையன்ன வெருணோக்குக் கயந்தலை (புறம். 324) என்றாற்போல என்க. கண்ணுதலோன் பாகத்துமங்கை யுருவாய் மறையேத்த வேநிற்பாய் என்றது உருவத்திருமேனியை. இவை மூன்றும் முன்னிலைப் பரவல்.

வென்றிக் கூத்து

10 : ஆங்கு ................ கூத்துன்படுமே

(இதன்பொருள்.) ஆங்கு - அன்பராயினாரைத் காத்தற் பொருட்டு உருவத் திருமேனி கொண்டு சங்கமும் சக்கரமும் தனது தாமரைக் கையின் ஏந்தியவிடத்தே; கொன்றையும் துளவமும் குழுமத் தொடுத்தமலர் துன்று பிணையல் தோள்மேல் இட்டு - கொன்றை மலரையும் துளபத்தையும் கலந்து தொடுக்கப்பட்ட மலர் செறிந்த மாலையைத் தனது திருத்தோளிலே அணிந்து கொண்டு; ஆங்கு - அசுரர் தம் போர்முனைக் கண்ணே; அசுரர் வாட - தீவினையே நயந்து செய்யும் அசுரர்கள் வாடும்படி; அமரர்க்கு ஆடிய குமரிக்கோலத்து - அமரரைப் பாதுகாத்தற் பொருட்டுத் தான் மேற்கொண்ட அக் குமரிக் கோலத்தோடே; கூத்துள்படும் - வாளமலை முதலிய வென்றிக் கூத்தினை ஆடத் தொடங்குவாள் என்றார் என்க.

(விளக்கம்) ஆங்கு என்றது - முன்னர் (9) சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திய பொழுது என்றவாறு. இக் கோலம் அசுரரை அழித்தற்கும் அமரரைக் காத்தற்கும் ஆகக்கொண்ட கோலமாதலின் அழித்தற்குரிய கடவுளாகிய அரனுக்குரிய கொன்றையையும் காத்தற் கடவுளாகிய திருமாலுக்குரிய துளபத்தையும் குழுமத் தொடுத்த பிணையல் தோள் மேலிடல் வேண்டிற்று என்க. அமரர்க்கு ஆடிய குமரிக்கோலத்து - அமரர் பொருட்டு மேற்கொண்ட குமரிக்கோலத்தோடே. கோலமாடுதல் - கோலம் கோடல். இக் கருத்துணராதார் ஈண்டுக் கூறும் உரை போலி.

கொற்றவை ஆடிய கூத்தின் சிறப்பு

11 : ஆய்பொன் ................... காட்டும் போலும்

(இதன்பொருள்.) நங்கை - நந்தம் கொற்றவை நங்கைதான் கூத்தியற்றுங் காலத்தே; ஆய் பொன் அரிச்சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப ஆர்ப்ப அழகிய பொன்னாலியன்ற பரல்கள் பெய்யப்பட்ட சிலம்பும் சூடகமும் தாளத்திற்கியையப் பலகாலும் முரலா நிற்பவும்; மாயம் செய் வாள் அவுணர் வீழ - வஞ்சனையாலே போர்க்களத்தே எதிர்த்தலாற்றாமையாலே அசுரர்கள் வஞ்சனையாலே வெல்லக் கருதித் தன்மேல் பாம்பும் தேளும் இன்னோரன்ன பிறவுமாய் உருக்கொண்டு வந்துழி அவரெல்லாம் நசுங்கி மாயும்படி; மரக்கால் மேல் வாள் அமலை ஆடும் போலும் - மரத்தாலியன்ற காலின் மேலே நின்று வாளேந்தி நின்று ஆடா நிற்கும்; மாயம் செய் வாள் அவுணர் வீழ் நங்கை மரக்கால் மேல் வாளமலை ஆடுமாயின்; நங்கை இவ்வண்ணம் வாட்கூத்தை ஆடுமிடத்தே; காயா மலர் மேனியேத்தி வானோர் கைபெய் மலர் மாரிகாட்டும் போலும் காயாம் பூப்போன்ற அவளுடைய அவ்வருட்டிரு மேனியைப் புகழ்ந்து அமரர்கள் தம் கையாலே அத் திருமேனிமிசைச் சொரியும் கற்பக மலர்கள் காண்போர்க்கு மலர் மழை பெய்தல்போன்று தோன்றும் என்றார் என்க.

(விளக்கம்) ஆய் - ஆராய்ந்தெடுத்த பொன் எனினுமாம். அரிபரல். சூடகம் -வளை. ஆர்ப்ப ஆர்ப்ப என்பது மிகுதிபற்றிய அடுக்கு. வாளவுணர் என்றது இகழ்ச்சி. வீழ என்றது மரக்காலின் மிதியுண்டு அழிய என்றவாறு. வாள் - அமலை - வாள்மறவர் வெற்றியாற் செருக்கி வாளைச் சுழற்றி ஆடும் கூத்து; இது. அமலை - அமலுதல் (நெருங்குதலாகலின்) பகைவரை நெருங்கி நின்றாடுங் கூத்திற்கும் பெயராயிற்று. ஆசிரியர் தொல்காப்பியனாரும் பட்டவேந்தனை அட்டவேந்தன் வாளோர் ஆடும் அமலையும் (தொல் . புறத்திணையியல் -17) என்றோதுதலுமுணர்க. பகைவர் அழிவுகண்டு மகிழ்ந்த அமரர் அவள் காயாம்பூ மேனியை ஏத்தி மலர் சொரிவர் என்க. அம் மலரின் மிகுதி கூறுவார் மாரி காட்டும் என்றார். ஈரிடத்தும் போலும் - ஒப்பில்போலி. மேல் வருவனவற்றிற்கும் இஃதொக்கும்.

12 : உட்குடை .................... போலும்

(இதன்பொருள்.) உட்கு உடைச் சீறூர் ஒரு மகன் ஆன்நிரை கொள்ள உற்ற காலை - பகைவர்க்கு அச்சந் தருதலையுடைய கரந்தையாருடைய சீறூரினிடத்தே சென்று, ஒப்பற்ற மறவன் ஒருவன் அவர்தம் ஆத்திரளைக் கைப்பற்றத் தலைப்பட்ட விடத்தே; வெட்சிமலர் புனைய வெள்வாள் உழத்தியும் வேண்டும் போலும் - அவனுக்கு அப் போர்க்குரிய வெட்சி மலரைச் சூட்டுதற்கு வெள்ளிய வாளோர் உழத்தியாகிய எம்மிறைவியினது திருவருள் தானும் இன்றியமையாது வேண்டப்படும்; வெட்சி மலர் புனைய வெள்வாள் உழத்தியும் வேண்டின் - அங்ஙனம் இன்றியமையாத அவளருள் வேண்டப்பட்டபொழுது; வேற்றூர்க் கட்சியில் காரி கடிய குரல் இசைத்துக் காட்டும் போலும் - பகைவர் ஊரைச் சூழ்ந்துள்ள காட்டிடத்தே கருங்குருவி என்னும் பறவை தனது கடிய குரலாலே கலுழ்ந்து அவர்க்குப் பின்வரும் கேட்டினை அறிவிக்கும்; இது தேற்றம் என்றார் என்க.

(விளக்கம்) உட்கு - அச்சம். சீறூர் - ஈண்டுக் கரந்தையார் ஊர். இது - வெட்சி.

(வெட்சிதானே) வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந் தோம்பல் மேவற் றாகும்

என வரும் தொல்காப்பியத்தானும் (புறத்திணை 1-2;) உணர்க. ஒருமகன் - ஒப்பற்ற போர்மறவன். வாள் ஏருழத்தி எனற்பாலது வாளுழத்தி என நின்றது விகாரம். உழத்தியும் வேண்டும் என்றது அனளருளும் இன்றியமையாது வேண்டப்படும் என்பதுபட நின்றது. வேண்டின் என்றது வேண்டி அவளருள் பெற்றபொழுது என்பதுபட நின்றது. காரி - கருங்குருவி. கடிய குரல் - தீநிமித்தம் தோன்ற இசைக்கும் குரல். வெட்சி மறவர் தன்னை வணங்கி ஆகோள் கருதிய வழி கொற்றவை அம் மறவர்க்கு முன்சென்று வெற்றியும் தருவாள் ஆதலின் கரந்தையார் ஊரில் அவர்க்குத் தீநிமித்தமாகக் காரி கடிய குரலிசைத்துக் காட்டும் என்றவாறு. இதனை,

நெடிபடு கானத்து நீள்வேன் மறவர்
அடிபடுத் தாரதர் செல்வான் - துடிபடுத்து
வெட்சி மலைய விரவார் மணிநிரைக்
கட்சியுட் காரி கலுழ்ம்  (வெட்சி 2)

எனவும்,

ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலைக்
கூளி மலிபடைக் கொற்றவை - மீளி
அரண்முருங்க ஆகோள் கருதின் அடையார்
முரண்முருங்கத் தான்முந் துறும்  (வெட்சி 9)

எனவும், வரும் புறப்பொருள் வெண்பாமாலையானும் உணர்க.

13 : கள்விலையாட்டி ............ போலும்

(இதன்பொருள்.) கள்விலையாட்டி மறுப்பப் பொறாமறவன் - கள் விற்குமவள் இவன் பழங்கடன் கொடாமையாலே கள் கொடுக்க மறுத்தாளாக, அதனைப் பொறாத அம் மறவன்றான்; புள்ளும் வழிப்படரக் கைவில் ஏந்திப் புல்லார் நிரை கருதிப் போகும் போலும் - கழுகும் பருந்தும் ஆகிய பறவைகள் தன்னைப் பின்பற்றிப் பறந்து வாரா நிற்பத் தனது கைக்கியைந்த வலிய வில்லை ஏந்திப் பகைவருடைய ஆனிரைகோடலைக் கருதிச் செல்லா நிற்பன்; புள்ளும் வழிப்படரப் போகுங்காலை - அங்ஙனம் அவன்றான் ஆகோள் கருதிப் போகும்பொழுது; கொற்றவை கொள்ளும் கொடியெடுத்துக் கொடுமரம் முன் செல்லும் போலும் - நங்கள் கொற்றவைதானும் தான் கைக்கொள்ளும் ஆளிமணிக் கொடியை யுயர்த்து அம் மறவன் வில்லின் முன்னே சென்று அவனுக்கு வெற்றி தருவாள் அன்றோ! என்றார்; என்க.

(விளக்கம்) இதனோடு அறாஅ நிலைச்சாடி ஆடுறு தேறல் மறாஅன் மழைத்தடங் கண்ணி - பொறாஅன், கடுங்கண் மறவன் கழல்புனைந்தான் காலை, நெடுங்கடைய நேரார் நிரை எனவரும் புறப்பொருள் வெண்பாமாலையையும் (2) நோக்குக. இதனை - மன்னுறு தொழில் தன்னுறு தொழில் என்னும் இருவகையினுள் தன்னுறு தொழில் என்பர்.

புள்ளும் வழிப்படர என்பதற்குப் புள்நிமித்தமும் தன் கருத்திற் கேற்பச் சேரலின் என்பர் அடியார்க்கு நல்லார். தன்னுறு தொழிற்கு அவ்வுரை பொருந்தாது. இனி, யாம் கூறியாங்கே கொடுவி லிட னேந்திப் பாற்றினம் பின்படர.... ஏகினார் எனவரும் புறப்பொருள் வெண்பா மாலையினும் கூறியதுணர்க. (4) புல்லார் - பகைவர்; கரந்தையார்; கொடுமரம் - வில்.

கொடை

14 : இளமா ......... நிறைந்தன

(இதன்பொருள்.) இளமா எயிற்றி - மாமை நிறத்தையுடைய எயினர் மகளே! நின் ஐயர் தலைநாளை வேட்டத்துத் தந்த ஆனிரைகள் நின் தமையன்மார் நெருநற் சென்று கவர்ந்து கொணர்ந்த ஆத்திரள்கள்; கொல்லன் துடியன் கொளை புணர்சீர்வல்ல நல் யாழ்ப்பாணர்தம் முன்றில் நிறைந்தன - வேல் வடித்துக் கொடுத்த கொல்லனும் துடி கொட்டும் புலையனும் பாடவும் புணர்க்கவும் அடைக்கவும் வல்ல யாழ்ப்பாணரும் என்னும் இவரது முற்றங்களிலே நிறைந்து நின்றன; இவை காண் - இவற்றையெல்லாம் நீ காண்பாயாக! என்க.

15 : முருந்தேர் ....... நிறைந்தன

(இதன்பொருள்.) முருந்து ஏர் இளநகை - முருந்து போலும் முற்றாத பற்களையுடையோய்; நின் ஐயர் கரந்தை அலறக் கவர்ந்த இன நிரைகள் - நின் தமையன்மார் நெருநல் கரந்தையார் அலறும்படி கவர்ந்து கொணர்ந்த ஆனினங்கள்தாம்; கள்விலையாட்டி நல்வேய் தெரிகானவன் புள்வாய்ப்புச் சொன்ன கணி முன்றில் நிறைந்தன - கள் விற்குமவளும் நல்ல ஒற்றுத் தொழில் தெரிந்த மறவனும் புள் நிமித்தம் தெரிந்து கூறும் கணிவனும்; என்று கூறப்பட்ட இவர்களுடைய முற்றங்களிலே நிறைந்துள்ளன காணாய் - நீ இவற்றைக் காண்பாயாக ! என்க.

16 : கயமலர் ............ நிறைந்தன

(இதன்பொருள்.) கயமலர் உண் கண்ணாய் - பெரிய நீல மலர் போலும் அழகிய மையுண்ட கண்ணையுடையோய் ; நின் ஐயர் - நின் தமையன்மார்; அயலூர் அலற எறிந்த நல் ஆன் நிரைகள் - தமது பகைவரூரின்கண் வாழ்வோர் அஞ்சி அலறும்படி நெருநல் கவர்ந்து கொணர்ந்த ஆத்திரள்கள் தாம்; நயன் இல் மொழியின் - நரை முதுதாடி எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன- நயமில்லாத மொழியையும் நரைத்து முதிர்ந்த தாடியையுமுடைய முதிய எயினரும் எயிற்றியரும் ஆகிய இவர்களுடைய முற்றங்களிலே நிறைந்து நின்றன; காணாய் - அவற்றை நீ காண்பாயாக! என்க.

(விளக்கம்) 14. இளமா - மாந்தளிர். மாந்தளிர் போன்ற நிறமுடைய எயிற்றி என்றவாறு. ஐயர் - தமையன்மார். தலைநாள் முதனாள். கொளை - பண். 15. முருந்து - மயிலிறகின் அடிப்பகுதி. ஏர்: உவமவுருபு. கரந்தை - கரந்தை சூடிய மறவர். வேய் ஒற்று. புள் வாய்ப்பு - நன்னிமித்தம், கணி - கணிவன்: (சோதிடன்). 16. கய - பெருமை; உரிச்சொல்; உண்கண் - கண்டோர் மனமுண்ணும் கண்ணுமாம்.

இவை மூன்றும் வஞ்சித்திணையின் துறைபற்றி வந்தன. ஆதலால் இவற்றைத் துறைப்பாட்டுமடை என்பர். அஃதாவது துறைப் பாட்டுகளை இடையே மடுத்தல் என்க. இம் மூன்றும் வெட்சித்திணைக் கண் கொடை என்னும் ஒருதுறைப் பொண்மேல் அடுக்கி வந்தன.

பலிக்கொடை

17 : சுடரொடு ............... அமரரும்

(இதன்பொருள்.) சுடரொடு திரிதரும் முனிவரும் அமரரும் இடர் கெட அருளும் நின் இணை அடி தொழுதேம் - கதிரவன் வெப்பம் உலகத் துயிர்களை - வருத்தாவண்ணம் அதனைத் தாமேற்று அக்கதிரவனோடு சுழன்று திரிகின்ற முனிவரும் தேவர்களும் எய்தும் இடர்கள் தீரும்படி திருவருள் வழங்குகின்ற நின்னுடைய திருவடிகளை ஆற்றவும் எளியேமாகிய யாங்களும் கைகுவித்துத் தொழுகின்றேம்; அடல் வலி எயினர் நின் அடிதொடு - கொலையையும் வலிமையையும் உடைய எயினரேமாகிய அடியேங்கள் நின்னுடைய திருவடியை நெஞ்சத்தாலே நினைந்து செய்த; கடன் நிணன் உகு குருதி கொள் - பராவுக் கடனாகிய பலிப் பொருள் ஆகிய எமது மிடற்றினின்றும் சொரிகின்ற குருதியாகிய இப் பலியினை ஏற்றருள்வாயாக; இது விறல் தரு விலை - மற்றிது தானும் நீ எமக்கருளிய வெற்றிக்கு யாங்கள் கொடுக்கின்ற விலையேகாண்; என்க.

18 : அணிமுடி ..................... விலையே

(இதன்பொருள்.) அமரர் தம் அணிமுடி அரசொடு பணிதரும் மணி உருவினை நின் அமரர்கள் தாம் அழகிய முடியையுடைய தங்கள் கோமானோடு வந்து வணங்கும் சிறப்புடைய நீலமணி போலும் நிறத்தினையுடையோய் நின்னுடைய; மலர் அடி தொழுதேம் -உலகமெலாம் மலர்ந்தருள்கின்ற திருவடிகளை ஆற்றவும் எளியேமாகிய எயினரேமாகிய அடியேம் கைகுவித்துத் தெழுதேம்; கணநிரை பெறுவிறல் எயின் இடு கடன் பகைவரது ஆனிரையைக் கைப்பற்றிக் கோடற்குக் காரணமான வெற்றிக்கு விலையாகச் செலுத்துகின்ற பராவுக்கடனாகிய நிணன் உகு குருதி கொள் - எமது மிடற்றினின்றும் சொரிகின்ற இக் குருதிப்பலியை ஏற்றுக்கொண்டருள்க; இது அடு நிகர் விலையே - இப் பலிதானும் யாங்கள் எம் பகைவரைக் கொல்லுதற்குக் காரணமான நினதருட்குச் சமமான விலையாகும்; என்க.

19 : துடி ............. மடையே

(இதன்பொருள்.) குமரி - மூவாநலமுடைய எங்களிறைவியே! துடியொடு சிறுபறை வயிரொடு வெடிபடத் துவை செய வருபவர் - துடியும் சிறுபறையும் கொம்பும் செவிகள் பிளந்து செவிபடுமாறு முழங்கும்படி வருபவரும்; அரை இருள் அடுபுலி அனையவர் - நள்ளிரவிலே வேட்டம்புகுந்து களிறு முதலியவற்றைக் கொன்றுண்ணும் புலியே போலும் ஊக்கமும் தறுகண்மையுமுடையவரும் ஆகிய; எயினர்கள் பாலை நில மாக்களாகிய அடியேங்கள்; நின் அடி தொடு கடன் நின் றிருவடிகளைத் தொட்டுச் செய்த வஞ்சினம் பொய்யாமல் பகை வென்று கொண்ட எமது வெற்றிக்கு விலையாகச் செலுத்தும் கடனாகும்; பலிமுக மடை இது பலி - எம்மிடற்றினின்றும் சொரிகின்ற குருதி விரவிய நிணச்சோறு ஆகிய இப்பலி, இதனை ஏற்றருள்வாயாக! என்பதாம்.

(விளக்கம்) 17. சுடரொடு திரிதரும் முனிவரும் என்பதனோடு நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத் தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக் காலுணவாகச் 9- ரொடு கொட்கும் அவிர்சடை முனிவரும் எனவரும் புறநானூறும் (45) விண்செலன் மரபின் ஐயர்க் கேந்திய தொருகை எனவரும் திருமுருகாற்றுப்படையும் (107) ஒப்பு நோக்கற்பாலன. 

18. நின இணையடி என்புழி (நின் - 8) அகரம் ஆறாவதன் பன்மையுருபு. எயின் - எயினர். அடியைத் தொட்டுச்செய்த வஞ்சினத்திற் றப்பாது பகை வென்றுபெற்ற வெற்றிக்கு விலையாகிய கடன் என்பது கருத்து. மிடறுகு குருதி - என்றமையால் இதனை அவிப்பலி என்பாருமுளர். அஃதாவது தந்தலையைத் தாமே அரிந்து வைக்கும் பலி. இதனியல்பினை இந்திரவிழாவெடுத்த காதையினும் விளக்கினாம். ஆண்டுக் காண்க. (88) நிணன் - நிணம்; போலி.

19. துவைசெய: ஒருசொல். குமரி - மூவாமையுடையவள். மடை - பலிச்சோறு.

பலிக்கொடை யீந்து பராவுதல்

20 : வம்பலர் ........... சேர்த்துவாய்

(இதன்பொருள்.) சங்கரி அந்தரி நீலி சடாமுடிச் செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய் - சங்கரீ ! அந்தரீ! நீலீ! சடைமுடியிடத்தே சிவந்த கண்ணையுடைய பாம்பினைப் பிறைத்திங்களுடனே ஒருசேரச் சேர்த்து அணிகின்ற இறைவீ! இது அம்பு உடை வல்வில் எயின் கடன் இக் குருதிப் பலிதானும் அம்பினையுடைய வலிய வில்லினையுடைய நின்னடியேமாகிய எயினரேம் நினக்குச் செலுத்தும் எளிய பலியேயாகும்; உண்குவாய் - ஏற்றுக் கொள்ளுதி; வம்பலர் பல்கி வழியும் வளம்பட எற்றுக்கெனின் எமது பாலைநெறியிடத்தே ஆறு செலவோர் மிகுமாற்றால் அங்நெறிகள் வளுமுடையன ஆதற் பொருட்டேகாண்! என்றார்; என்க.

21 : துண்ணென் .............. செய்குவாய்

(இதன்பொருள்.) விண்ணோர் அமுது உண்டும் சாவ - அமரர்கள் திருப்பாற்கடலிலே எழுந்த அமிழ்தத்தை உண்டுவைத்தும் தத்தமக்கியன்ற கால முடிவிலே இறந்தொழியா நிற்பவும்; ஒருவரும் உண்ணாத நஞ்சு உண்டு இருந்து அருள் செய்குவாய் - நீதான் அங்குத் தோன்றிய யாரும் உண்ணாத நஞ்சினை உண்ட பின்னரும் ஒருசிறிதும் ஏதமின்றி அழிவின்றியிருந்து மன்னுயிர்க்குத் திருவருள் வழங்கும் ஒருத்தியல்லையோ? துண் என் துடியொடு துஞ்சு ஊர் எறிதரும் கண் இல் எயினர் இடு கடன் உண்குவாய் - கேட்டோர் நெஞ்சம் துண்ணென அஞ்சுதற்குக் காரணமான ஒலியையுடைய துடிமுழக்கத்தோடே சென்று எல்லோரும் உறங்குகின்ற நள்ளிரவிலே பகைவர் தம்மூருட் புகுந்து அங்குள்ளாரைக் கொன்று கொள்ளைகொள்ளும் கண்ணோட்டமில்லாத எயினரேமாகிய அடியேம் செலுத்துகின்ற இப் பலியையும் ஏற்றுக்கொள்வாயாக! என்றார்; என்க.

22 : பொருள்கொண்டு ............... செய்குவாய்

(இதன்பொருள்.) நின் மாமன்செய் வஞ்சம் மருதின் நடந்து - நின்னுடைய மாமனாகிய கஞ்சன் வஞ்சத்தாலே தோன்றிய இரட்டை மருதமரத்தினூடே நின்னிடையிற் கட்டப்பட்ட உரலோடே நடந்து சாய்த்தும்; உருளும் சகடம் உதைத்து - உருண்டு நின்மேலே ஏறவந்த சகடத்தை உதைத்து நுறுக்கியும் அவ் வஞ்சத்தைத் தப்பி என்றென்றும் நிலைத்திருந்து; அருள் செய்குவாய் - உயிர்கட்கு வேண்டுவன வேண்டியாங்கு திருவருள் வழங்கும் எம்மன்னையே! பொருள்கொண்டு புண்செயின் அல்லதை அடியேங்கள் ஆறலைத்துப் பொருள்பறிப்பதூஉமன்றி அவ்வம்பலர் உடம்பில் புண்செய்யும் செயலையன்றி; யார்க்கும் அருள் இல் எயினர் எவரிடத்தும் சிறிதும் அன்புசெய்தலறியாத எயினரேம்; இடு கடன் உண்குவாய் - ஆயினும் யாங்கள் செலுத்துகின்ற இப் பலிக் கடனையும் ஏற்றுக்கொள்வாயாக! என்றார் என்க.

(விளக்கம்) சாலினியின் மேலுற்ற தெய்வம் கலையமர் செல்வி கடன் உணின் அல்லது சிலையமர் வென்றி கொடுப்போனல்லள், மட்டுண் வாழ்க்கை வேண்டுதிராயின் கட்டுண்மாக்கள் கடந்தரும் எனப் பணித்தமைக்கிணங்கி மேற்கூறியாங்குத் தம் கடனாகிய குருதிப் பலியீந்த எயினர் அக்கொற்றவை முன்னர் மட்டுண் வாழ்க்கைக்கு வேண்டிய வளந்தரும்படி கொற்றவையை இரக்கின்றனர் என்றுணர்க.

19. வம்பலர் - வழிப்போக்கராகிய புதியவர், அவர் மிக்கவழி ஆறலைத்துக்கொள்ளும் பொருள்களும் மிகுமாதலின் வம்பலர் மல்க வேண்டும் என்றிரந்தபடியாம்.

20. தீயவர்க்கும் நல்லோர்க்கும் ஒருசேர அருள் வழங்குதல் இறைவியினியல்பென்பது தோன்ற செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய் என்றார். விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய் என்பது மருட்கை யணி. இது தரும் இன்பம் எல்லையற்றதாத லறிக.

29. இறைவனுடைய காத்தற் சத்தியையே திருமால் எனக் கொள்வர் ஒரு சமயத்தினர். அங்ஙனம் கூறினும் அதுவும் இறைவனுடைய சத்தியேயாம். திருமால் என்பது ஒரு தனி முதல் இல்லை என்பது தத்துவ நூலோர் கருத்தாம். இக் கருத்தை முதலாகக் கொண்டு இறைவியைத் திருமாகலின் தங்கை என்பர் பவுராணிகர். இவ்விருவர் மதங்களையும் மேற்கொண்டு ஈண்டு அடிகளார் திருமாலின் செயலை இறைவியின் செயலாகவே ஓதும் நலமுணர்க. அது மருதின் .......... செய்குவாய் என்பதாம்.

23 : மறை ............... வெய்யோனே

(இதன்பொருள்.) மறை முது முதல்வன் பின்னர் மேய - மறைகளைத் திருவாய்மலர்ந்தருளிய பழம்பொருட் கெல்லாம் பழம் பொருளாகிய இறைவனுக்குத் தம்பி எனத் தகுந்த தமிழ் முதல்வன் அகத்தியன் அவ்விறைவன் ஏவலாலே எழுந்தருளி இருத்தலாலே; பொறை உயர் பொதியில் - பொறையானும் ஏனைய சிறப்புகளானும் பெரிதும் உயர்ந்த பொதியில் என்னும் பெயரையுடைய; பொருப்பன் சிறந்த மலையையுடையவனும்; விறல் வெய்யோன் - வெற்றியையே விரும்பு மியல்புடையவனுமாகிய பாண்டிய மன்னன்; கட்சியும் கரந்தையும் பாழ்பட - பகைவருடைய முனையிடமாகிய காடும் அவர்தம் ஆனிரைகாக்கும் கரந்தை மறவரிருப்பிடங்களும் பாழிடமாகும்படி; வெட்சி சூடுக - எஞ்ஞான்றும் எயினரேம் ஆகிய யாங்கள் ஆக்கமெய்து மாறு வெட்சிமாலையைச் சூடுவானாக! என்றார்; என்க.

(விளக்கம்) 23. மறைமுது முதல்வன் என்றது சிவபெருமானை. அவன்பின்னர் என்றது அவனுக்கு அடுத்து முதல்வன் எனத் தகுந்த சிறப்புடையவன் என்றவாறு. அவனாவான் அகத்திய முனிவன். அவன் மேய பொதியில் என்க. அவன் மேயதனால் பொறையான் உயர்ந்த பொதியில் எனினும் பொருந்தும். பொறையானுயர்தலாவது - இறைவனிருந்த இமயத்தோடு சமவெடையுடையதாய் உயர்தல். இறைவனை மறைமுது முதல்வன் என்றமையால் அவன் பின்னராகிய அகத்தியனைச் செந்தமிழ் முதுமுதல்வன் எனவும் கூறிக்கொள்க.

பொதியிற் பொருப்பன் என்றது பாண்டியனை. அவன் வெட்சி சூடினால் தமக்கு ஆகோள் வளம் கைவருதல் ஒருதலை என்னுங் கருத்தால் எங்கள் மன்னனாகிய பொதியிற் பொருப்பனும் வெட்சி சூடுக! எனக் கொற்றவையை எயினர் பரவியவாறாம். என்னை?

வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந் தோம்பன் மேவற்றா கும்  (தொல் . புறத்திணை - 2)

என்பவாகலின். பாண்டியன் பகைவரைப் பொருதக் கருதியவழி அப் பகைவர் தம் நாட்டு ஆக்களைக் களவிற் கொணரத் தம்மையே உய்ப்பன், அங்ஙனம் உய்த்தவிடத்தே தமக்கு வளமும் அரசற்கு விறலும் சேர்வது தேற்றம் என்பதுபற்றிப் பாண்டியனை விறல் வெய்யோன் என்றே கூறினர். மற்றிதுவே அரச வாழ்த்துமாயிற்று.

பா - பஃறாழிசைக் கொச்சகக்கலி

வேட்டுவரி முற்றிற்று.
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 23, 2012, 02:16:08 PM
13. புறஞ்சேரியிறுத்த காதை

அஃதாவது - உறந்தையினின்றும் மாமதுரைக்குச் செல்லும் கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளாரும் வெங்கதிர் வெயின் முறுகுதலாலே வழிநடை வருத்தந் தீர ஐயை கோட்டம் புக்கவர் ஆண்டுநிகழ்ந்த வேட்டுவவரிக் கூத்தைக் கண்ணுற்றுப் பாண்டியர் அருளாட்சி நிகழும் அந்த நாட்டிலே இரவினும் வழிப்போக்கர்க்கு ஏதம் சிறிதும் உண்டாகா தென்றறிந்த வாற்றால் படுகதிரமையம் பார்த்திருந்து இரவின்கண் திங்கள் தோன்றிப் பானிலா விரித்த பின்னர் அவ்விரவிலேயே மேலும் மதுரை நோக்கி நடந்து மதுரையின் மதிற் புறத்ததாகிய புறஞ் சேரியை எய்தி ஆண்டுத் தங்கிய செய்தியையும் அங்ஙனம் செல்லும்பொழுதில் இடையே நிகழ்ந்தவற்றையும் இயம்பும் பகுதி என்றவாறு.

பெண்ணணி கோலம் பெயர்ந்தபிற் பாடு
புண்ணிய முதல்வி திருந்தடி பொருந்திக்
கடுங்கதிர் வேனிலிக் காரிகை பொறாஅள்
படிந்தில சீறடி பரல்வெங் கானத்துக்
கோள்வல் உளியமுங் கொடும்புற் றகழா  5

வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா
அரவுஞ் சூரும் இரைதேர் முதலையும்
உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா
செங்கோல் தென்னவர் காக்கும் நாடென
எங்கணும் போகிய இசையோ பெரிதே  10

பகலொளி தன்னினும் பல்லுயி ரோம்பும்
நிலவொளி விளக்கின் நீளிடை மருங்கின்
இரவிடைக் கழிதற் கேத மில்லெனக்
குரவரும் நேர்ந்த கொள்கையி னமர்ந்து
கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப்  15

படுங்கதி ரமையம் பார்த்திருந் தோர்க்குப்
பன்மீன் தானையொடு பாற்கதிர் பரப்பித்
தென்னவன் குலமுதற் செல்வன் தோன்றித்
தாரகைக் கோவையும் சந்தின் குழம்பும்
சீரிள வனமுலை சேரா தொழியவும்  20

தாதுசேர் கழுநீர்த் தண்பூம் பிணையல்
போதுசேர் பூங்குழற் பொருந்தா தொழியவும்
பைந்தளிர் ஆரமொடு பல்பூங் குறுமுறி
செந்தளிர் மேனி சேரா தொழியவும்
மலயத் தோங்கி மதுரையின் வளர்ந்து  25

புலவர் நாவிற் பொருந்திய தென்றலொடு
பானிலா வெண்கதிர் பாவைமேற் சொரிய
வேனில் திங்களும் வேண்டுதி யென்றே
பார்மகள் அயாவுயிர்த் தடங்கிய பின்னர்
ஆரிடை உழந்த மாதரை நோக்கிக்  30

கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும்
இடிதரும் உளியமும் இனையா தேகெனத்
தொடிவளைச் செங்கை தோளிற் காட்டி
மறவுரை நீத்த மாசறு கேள்வி
அறவுரை கேட்டாங் காரிடைகழிந்து  35

வேனல் வீற்றிருந்த வேய்கரி கானத்துக்
கான வாரணங் கதிர்வர வியம்ப
வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப்
புரிநூல் மார்பர் உறைபதிச் சேர்ந்து
மாதவத் தாட்டியொடு காதலி தன்னையோர்  40

தீதுதீர் சிறப்பின் சிறையகத் திருத்தி
இடுமுள் வேலி நீங்கி ஆங்கோர்
நெடுநெறி மருங்கின் நீர்தலைப் படுவோன்
காதலி தன்னொடு கானகம் போந்ததற்
கூதுலைக் குருகின் உயிர்த்தனன் கலங்கி  45

உட்புலம் புறுதலின் உருவந் திரியக்
கட்புல மயக்கத்துக் கௌசிகன் தெரியான்
கோவலன் பிரியக் கொடுந்துய ரெய்திய
மாமலர் நெடுங்கண் மாதவி போன்றிவ்
அருந்திறல் வேனிற் கலர்களைந் துடனே  50

வருந்தினை போலுநீ மாதவி யென்றோர்
பாசிலைக் குருகின் பந்தரிற் பொருந்தி
கோசிக மாணி கூறக் கேட்டே
யாதுநீ கூறிய உரையீ திங்கெனத்
தீதிலன் கண்டேன் எனச்சென் றெய்திக்  55

கோசிக மாணி கொள்கையின் உரைப்போன்
இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும்
அருமணி இழந்த நாகம் போன்றதும்
இன்னுயிர் இழந்த யாக்கை யென்னத்
துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும்  60

ஏவ லாளர் யாங்கணுஞ் சென்று
கோவலன் தேடிக் கொணர்கெனப் பெயர்ந்ததும்
பெருமகன் ஏவ லல்ல தியாங்கணும்
அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்  65

பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும்
வசந்த மாலைவாய் மாதவி கேட்டுப்
பசந்த மேனியள் படர்நோ யுற்று
நெடுநிலை மாடத் திடைநிலத் தாங்கோர்
படையமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்ததும்  70

வீழ்துய ருற்றோள் விழுமங் கேட்டுத்
தாழ்துயர் எய்தித் தான்சென் றிருந்ததும்
இருந்துயர் உற்றோள் இணையடி தொழுதேன்
வருந்துயர் நீக்கென மலர்க்கையின் எழுதிக்
கண்மணி யனையாற்குக் காட்டுக வென்றே  75

மண்ணுடை முடங்கல் மாதவி யீத்ததும்
ஈத்த வோலைகொண் டிடைநெறித் திரிந்து
தீத்திறம் புரிந்தோன் சென்ற தேயமும்
வழிமருங் கிருந்து மாசற உரைத்தாங்கு
அழிவுடை உள்ளத் தாரஞ ராட்டி   80

போதவிழ் புரிகுழற் பூங்கொடி நங்கை
மாதவி யோலை மலர்க்கையின் நீட்ட
உடனுறை காலத் துரைத்தநெய் வாசம்
குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணர்த்திக்
காட்டிய தாதலிற் கைவிட லீயான்   85

ஏட்டகம் விரித் தாங் கெய்திய துணர்வோன்
அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்
குரவர்பணி அன்றியுங் குலப்பிறப் பாட்டியோ
டிரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது  90

கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி
என்றவள் எழுதிய இசைமொழி யுணர்ந்து
தன்றீ திலளெனத் தளர்ச்சி நீங்கி
என்தீ தென்றே எய்திய துணர்ந்தாங்  95

கெற்பயந் தோற்கிம் மண்ணுடை முடங்கல்
பொற்புடைத் தாகப் பொருளுரை பொருந்தியது
மாசில் குரவர் மலரடி தொழுதேன்
கோசிக மாணி காட்டெனக் கொடுத்து
நடுக்கங் களைந்தவர் நல்லகம் பொருந்திய  100

இடுக்கண் களைதற் கீண்டெனப் போக்கி
மாசில் கற்பின் மனைவியோ டிருந்த
ஆசில் கொள்கை அறவிபால் அணைந்தாங்கு
ஆடியல் கொள்கை அந்தரி கோலம்
பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து   105

செந்திறம் புரிந்த செங்கோட் டியாழில்
தந்திரி கரத்தொடு திவவுறுத் தியாஅத்து
ஒற்றுறுப் புடைமையிற் பற்றுவழிச் சேர்த்தி
உழைமுதல் கைக்கிளை யிறுவாய்க் கட்டி
வரன்முறை வந்த மூவகைத் தானத்து  110

பாய்கலைப் பாவை பாடற் பாணி
ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டுப்
பாடற் பாணி அளைஇ அவரொடு
கூடற் காவதம் கூறுமின் நீரெனக்
காழகிற் சாந்தம் கமழ்பூங் குங்குமம்  115

நாவிக் குழம்பு நலங்கொள் தேய்வை
மான்மதச் சாந்தம் மணங்கமழ் தெய்வத்
தேமென் கொழுஞ்சே றாடி யாங்குத்
தாதுசேர் கழுநீர் சண்பகக் கோதையொடு
மாதவி மல்லிகை மனைவளர் முல்லைப்  120

போதுவிரி தொடையல் பூவணை பொருந்தி
அட்டிற் புகையும் அகலங் காடி
முட்டாக் கூவியர் மோதகப் புகையும்
மைந்தரும் மகளிரும் மாடத் தெடுத்த
அந்தீம் புகையும் ஆகுதிப் புகையும்  125

பல்வேறு பூம்புகை அளைஇ வெல்போர்
விளங்குபூண் மார்பிற் பாண்டியன் கோயிலின்
அளந்துணர் வறியா ஆருயிர் பிணிக்கும்
கலவைக் கூட்டம் காண்வரத் தோன்றிப்
புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பின்  130

பொதியில் தென்றல் போலா தீங்கு
மதுரைத் தென்றல் வந்தது காணீர்
நனிசேய்த் தன்றவன் திருமலி மூதூர்
தனிநீர் கழியினுந் தகைக்குநர் இல்லென
முன்னாள் முறைமையின் இருந்தவ முதல்வியொடு  135

பின்னையும் அல்லிடைப் பெயர்ந்தனர் பெயர்ந்தாங்கு
அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும்
பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும்
பால்கெழு சிறப்பிற் பல்லியஞ் சிறந்த
காலை முரசக் கனைகுரல் ஓதையும்  140

நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்
மாதவ ரோதி மலிந்த ஓதையும்
மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு
வாளோர் எடுத்த நாளணி முழவமும்
போரிற் கொண்ட பொருகரி முழக்கமும்  145

வாரிக் கொண்ட வயக்கரி முழக்கமும்
பணைநிலைப் புரவி ஆலும் ஓதையும்
கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும்
கார்க்கடல் ஒலியிற் கலிகெழு கூடல்
ஆர்ப்பொலி எதிர்கொள ஆரஞர் நீங்கிக்  150

குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும்
மரவமும் நாகமும் திலகமும் மருதமும்
சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும்
பாடலம் தன்னொடு பன்மலர் விரிந்து
குருகும் தளவமும் கொழுங்கொடி முசுண்டையும்  155

விரிமலர் அதிரலும் வெண்கூ தாளமும்
குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும்
பிடவமும் மயிலையும் பிணங்கரில் மணந்த
கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும்
மிடைந்துசூழ் போகிய அகன்றேந் தல்குல்  160

வாலுகங் குவைஇய மலர்ப்பூந் துருத்தி
பால்புடைக் கொண்டு பன்மல ரோங்கி
எதிரெதிர் விளங்கிய கதிரிள வனமுலை
கரைநின் றுதிர்த்த கவிரிதழ்ச் செவ்வாய்
அருவி முல்லை அணிநகை யாட்டி  165

விலங்குநிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண்
விரைமலர் நீங்கா அவிரறற் கூந்தல்
உலகுபுரந் தூட்டும் உயர்பே ரொழுக்கத்துப்
புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி  170

தையற் குறுவது தானறிந் தனள்போல்
புண்ணிய நறுமல ராடை போர்த்துக்
கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப்
புனல்யா றன்றிது பூம்புனல் யாறென
அனநடை மாதரும் ஐயனுந் தொழுது  175

பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும்
அரிமுக அம்பியும் அருந்துறை யியக்கும்
பெருந்துறை மருங்கிற் பெயரா தாங்கண்
மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித்
தேமலர் நறும்பொழில் தென்கரை யெய்தி  180

வானவர் உறையும் மதுரை வலங்கொளத்
தான்நனி பெரிதுந் தகவுடைத் தென்றாங்கு
அருமிளை யுடுத்த அகழிசூழ் போகிக்
கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும்
தையலும் கணவனும் தனித்துறு துயரம்  185

ஐய மின்றி அறிந்தன போலப்
பண்ணீர் வண்டு பரிந் தினைந் தேங்கிக்
கண்ணீர் கொண்டு காலுற நடுங்கப்
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரலென் பனபோல் மறித்துக்கை காட்டப்  190

புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி
வெள்ளநீர்ப் பண்ணையும் விரிநீர் ஏரியும்
காய்க்குலைத் தெங்கும் வாழையும் கமுகும்
வேய்த்திரள் பந்தரும் விளங்கிய இருக்கை
அறம்புரி மாந்தர் அன்றிச் சேராப்   195
புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்தென்.

உரை

1 -4 : பெண்ணணி .......... படிந்தில

(இதன்பொருள்.) பெண் அணி கோலம் பெயர்ந்த பிற்பாடு புண்ணிய முதல்வி திருந்து அடி பொருந்தி முற்கூறிய சாலினிமேற் கொண்ட கொற்றவைக் கோலமும் எயினர்கள் கொற்றவைக்குப் பலி கொடுத்துப் பராவி நிகழ்த்திய வரிக்கூத்துகளும் முடிந்த பின்னர்க் கோவலன் துறவறத் தலைவியாகிய கவுந்தி யடிகளாரின் திருத்தமுடைய திருவடிகளைத் தொழுது நோக்கிக் கூறுபவன்; இக் காரிகை வேனில் கடுங்கதிர் பொறாஅள் - பெரியீர்! இவள்தான் இனி இம்முதுவேனிற் பருவத்தே கடியவாகிய ஞாயிற்றின் ஒளியினது வெம்மையைப் பொறுத்துப் பகற் பொழுதிலே நம்மோடு நடக்க வல்லுநள் அல்லள்; சீறடி பரல் வெங்கானத்துப் படிந்தில - அன்றியும் அவள்தன் சிறிய மெல்லடிகள் தாமும் இது காறும் நடந்தமையாலே கொப்புளங் கொண்டிருத்தலாலே பருக்கைக் கற்களையும் வெப்பத்தையுமுடைய இந்தக் கொடு நெறிக் கண் படிந்தில கண்டீர் என்றான் என்க.

(விளக்கம்) 1. பெண் - சாலினி. அவள் கொண்டகோலம் பெயர்ந்த பிற்பாடு எனவே ஐயை திருமுன் எயினர் பலிக்கொடை செய்தலும் வரிக் கூத்தாடுதலும் வரம்வேண்டலும் ஆகிய நிகழ்ச்சிகள் ஓய்ந்தமையும் அவர் அகன்றமையும் பெற்றாம். புண்ணியம் ஈண்டு எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அருளறமுடைமை. அவ்வறத்தே அடிகளார் தலைசிறந்தமை தோன்றப் புண்ணிய முதல்வி என்றார். திருந்தடி என்றார் நன்னெறியிற் பிறழாதொழுகும் அடிகள் என்பது தோற்றுவித்தற்கு. அவர் அத்தகையராதலை நாடுகாண் காதையில் (86) குறுநரிட்ட .... துன்பந் தாங்கவும் ஒண்ணா என அவர் அறிவுறுத்த மொழிகளானும் அறிந்தாம். அடி பொருந்தி என்றது அவரையணுகித் திருவடியைத் தொழுகு என்பதுபட நின்றது. மேலே நிகழும் கூற்றுகட்கு எழுவாய் கோவலன் என்பது தகுதியாற் பெற்றாம்.

3. இக் காரிகை என்றது இவள் என்னும் சுட்டுமாத்திரையாய் நின்றது. சீறடி படிந்திலாமைக்குக் காரணம் அவை கொப்புளங் கொண்டுள்ளன என்பது குறிப்புப் பொருள். இனி இவ்வடிகள் பகற்பொழுதிலே நடக்கவல்லுந அல்லது என்பது தோன்றப் பரற் கானம் என்றொழியாது பரல் வெங்கானம் என்றாள். எனவே பரற் கானமாயினும் தண்ணெனும் இரவில் ஒருவாறு அவை நடத்தல் கூடும் என்றானாம்.

பாண்டிய மன்னன் செங்கோன்மைச் சிறப்பு

5 - 10 : கோள்வல் ........... பெரிதே

(இதன்பொருள்.) செங்கோல் தென்னவர் காக்கும் நாடு - செங்கோன்மை பிறழாத பாண்டிய மன்னராற் காக்கப்படுகின்ற இந்த நாட்டின்கண்; கோள்வல் உளியமும் மேலும் எதிர்வாரைக் கைப்பற்றிக் கொள்ளுதலில் பெரிதும் வன்மையுடையவாகிய கரடிகள் தாமும்; கொடும்புற்று அகழா - தாம் அகழக்கடவ கொடிய புற்றினை அகழமாட்டா என்றும்; வாள் வரிவேங்கையும் மான்கணம் மறலா ஒளியுடைய வரிகளையுடைய புலிகள் தாமும் தாம் மாறுபடக் கடவ மானினத்தோடு மாறுபடமாட்டா என்றும்; அரவும் இரைதேர் முதலையும் சூரும் உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா என அவையேயன்றிப் பாம்பும் தமக்குரிய இரையை ஆராய்கின்ற முதலையும் தீண்டி வருத்தும் தெய்வமும் இடிகளுங்கூடத் தம்மை யணுகியவர்க்கு வருத்தம் செய்யுமியல் புடையவாயிருந்தும் சிறிதும் வருத்தம் செய்யமாட்டா என்றும்; எங்கணும் போகிய இசையோ பெரிது - உலகெங்கணும் பரந்த அவர்தம் அருளாட்சித் புகழ்தான் சாலவும் பெரியதன்றோ? என்றான் என்க.

(விளக்கம்) 5. கோள் - கைப்பற்றிக் கொள்ளுதல். உளியம் - கரடி. பாம்புறைவதுண்மையிற் கொடும்புற்றென்றார். 6. வாள்வரி - வாள்போன்ற வரி எனினுமாம். மறலுதல் - மாறுபடுதல், பகைத்தல். சூர் - தீண்டிவருத்துந் தெய்வம். உரும் - இடி. இவற்றிற்குக் காரணம் பாண்டியருடைய செங்கோன்மையே ஆம் என்றவாறு. இங்ஙனம் கூறவே மேலே இரவிடைக் கழிதற்கு ஏதம் இன்று என்றற்கு ஏதுக் கூறினானாயிற்று.

இனி அடிகளார் பின்னர்ப் பாண்டியன் அரசியல் பிழைத்தமைக்கும் கோவலன் கொலையுண்டமைக்கும் காரணம், பிழையும் ஊழுமே அல்லது பிறிதில்லை என்றற்குக் கோவலன் வாய்மொழியையே குறிப்பேதுவாக முன்மொழிந்து கோடல் என்னும் உத்திபற்றிக் காமத்தான் மயங்கிய பாண்டியன்பால் நம்மனோர்க்கு இரக்கமே தோன்றச் செய்யுமொரு சூழ்ச்சியே ஆதலறிக.

இனி, அடியார்க்குநல்லார் இப் பகுதிக்குக் கூறும் விளக்கமும் அறியத்தகும். அது - இவற்றான் இவன் ஆணையும் ஐவகை நிலத்திற்கு உரிமையும் கூறினார். ஐவகை நிலனென்பது எவற்றாற் பெறுதுமெனின்: கானம் என்பதனால் முல்லையும், சூர் கரடி யென்பவற்றால் குறிஞ்சியும், வேங்கை என்பதனாற் பாலையும், உருமு என்பதனால் மருதமும் முதலை என்பதனால் நெய்தலும், பெறுதும்; இவ்வகையான் இவனாட்டு இக்காலத்து வருத்துவது இவ் வெயிலொன்றுமே என்பதாயிற்று எனவரும்.

ஞாயிறு மறைதலும் திங்கள் தோன்றுதலும்

11 - 18 : பகலொளி .......... தோன்றி

(இதன்பொருள்.) பகல் ஒளி தன்னினும் - அடிகளே இவளால் பொறுக்கவொண்ணாத இவ் வேனிற்பருவத்துப் பகற்பொழுதிலே வெயிலிற் செல்லுதலினும் காட்டில்; பல்உயிர் ஓம்பும் நிலவொளி விளக்கின் - தனது தண்ணளியாலே பல்வேறுயிர்களையும் இனிதிற் காத்தருள்கின்ற நிலா வொளியாகிய விளக்கினையுடைய நீளஇடை மருங்கின் இரவிடைக் கழிதற்கு ஏதம் இல் என - நெடிய வழிமேல் இரவின்கண் செல்லுதற்கு வரும் இடுக்கண் யாதும் இல்லையாமே! என்று கூற; குரவரும் நேர்ந்த கொள்கையின் அமர்ந்து - அதுகேட்ட கவுந்தியடிகளாரும் அஃதொக்கும் என உடன்பட்ட கொள்கையோடே பொருந்தி; கொடுங்கோல் வேந்தன குடிகள் போலக் கதிர்படும் அமையம் பார்த்து இருந்தோர்க்கு - கொடுங்கோல் மன்னவனுடைய வீழ்ச்சியை எதிர்பார்த்திருக்கும் அவன் குடிமக்கள் போன்று ஞாயிறு மறைகின்ற அந்தி மாலைப் பொழுதினை எதிர்பார்த்திருந்த இவர்களுக்கு தென்னவன் குல முதல்செல்வன் பல் மீன் தானையொடு பால் கதிர் பரப்பித் தோன்றி - அப் பாண்டிய மன்னவனுடைய குலத்திற்கு முதல்வனாகிய தண்கதிர்த் திங்கட் செல்வன்றானும் இவர்கள் எதிர்பார்த்தற் கிணங்க ஞாயிறு மறைந்து நாழிகை சில சென்ற பின்னர்ப் பலவகைப்பட்ட விண்மீன் கூட்டங்களாகிய படைகளோடே பால் போன்ற தனது நிலா வொளியாகிய தண்ணளியை உலகெங்கணும் பரப்பித் தோன்றி என்க.

(விளக்கம்) 11 பகலொளி - வெயில்; நிலவொளியாகிய விளக்கினையுடைய நீளிடை மருங்கென்க. ஏதம் - இடுக்கண். குரவர் - கவுந்தியடிகள். கொடுங்கோல் வேந்தனுடைய வீழ்ச்சியையும் செங்கோன் மன்னன் வரவினையும் எதிர்பார்த்திருக்கும் குடிகள்போல என விரித்தோதுக. ஈண்டுக் கொடுங்கோல் மன்னர் கடுங்கதிர் ஞாயிற்றுக்கும் செங்கோன் மன்னன் திங்களுக்கும் குடிகள் கோவலன் முதலியோர்க்கும் உவமைகள். தன் மரபினர் காக்கும் நாட்டில் ஆறு செல்லுமிவர்கனைக் காத்தல் தன் கடனெனக் கருதினான் போன்று அக் குல முதல்வன் வந்து தோன்றினான் என்னும் தற்குறிப்புப் புலப்பட ஆசிரியர் அமையம் பார்த்திருந்தோர்க்கு என அப் பொருள்தரும் நான்கனுருபு பெய்துரைத்தார். அவன்றானும் காத்தற்கு வருதலின் தானையொடும் வந்தான் என்பது கருத்து. தோன்றி - தோன்ற. மீன்றானை என்பது தென்னவன் என்பதற் கிணங்கக் கயற்கொடி யுயர்த்திய தானை எனவும் ஒரு பொருள் தோற்றுவித்தது. மதுரை எரியுண்டமை அட்டமி எனப்படுதலின் ஞாயிறு மறைந்த பின்னரும் திங்கள் சில நாழிகை கழிப்பித் தோன்றலின் எதிர்பார்த்திருத்தல் வேண்டிற்றென்க.

நிலமகள் அயாவுயிர்த் தடங்குதல்

19 - 29 : தாரகை ................ அடங்கியபின்னர்

(இதன்பொருள்.) (29) பார்மகள் - திங்களின் வருகை கண்டு மகிழ்ந்த கண்ணகிக்கு நிலமகள் தானும் இரங்கி, (27) பாவை - பாவை போல்வாளே! நின்கணவன் நின்னைப்பிரிந்த காலந்தொட்டு இற்றைநாள் காறும்; தாரகைக் கோவையும் சந்தின் குழம்பும் சீர் இளமுலை சேரா தொழியவும் - விண்மீனைக் கோத்தாற் போன்ற ஒளிமிக்க முத்துவடமும் சந்தனக் குழம்பும் பேரழகும் இளமையுமுடைய நின்முலைகளைச் சேராவாய் ஒழியவும்; தாதுசேர் கழு நீர்த் தண்பூம் பிணையல் போதுசேர் பூங்குழல் பொருந்தா தொழியவும் - பல்வகைப் பூந்தாதும் கழுநீர்ப்பிணையலும் நினது முல்லை மலர் மட்டும் பற்றறாத அழகிய கூந்தலின் கண் பொருந்தாவா யொழியவும்; பைந்தளிர் ஆரமொடு பல்பூங் குறு முறி செந்தளிர் மேனி சேரா தொழியவும் - அழகிய பசிய சந்தனத் தளிரோடே பல்வேறு பூக்களின் குறிய இதழ்களும் நினது சிவந்த மாந்தளிர் போலும் திருமேனியைச் சேரப் பெறாவாயொழியவும்; மல்பத்து ஓங்கி மதுரையின் வளர்ந்து புலவர் நாவில் பொருந்திய தென்றலோடு - பொதியத்துத் தோன்றி மதுரை நகரின்கண் வளர்ந்து நல்லிசைப் புலவர்தம் நாவின்கட் பொருந்திய தென்றற் காற்றுடன்; (பால் நிலா வெண் கதிர்சொரிய - இத்தகைய பால்போலும் வெள்ளிய நிலாவொளி நின்மேற் சொரிதலை நீ வெறுத்திருந்தனையல்லையோ?) இப்பொழுது அந்நிலைமை மாறி; வேனில் திங்களும் வேண்டுதி என்றே - இவ்வேனிற் காலத்து இந்தத் திங்கள் ஒளியை நீ விரும்புகின்றனை அல்லையோ! ஆயின் விரும்பி மகிழக்கடவை என்று மனமார வாழ்த்தியவளாய்; அயாவுயிர்த்து அடங்கிய பின்னர் - அவள் பொருட்டு வருந்தி நெட்டுயிர்ப்புக் கொண்டு அந்நிலமகள் தானும் துயின்றபின்னர் என்க.

(விளக்கம்) ஈண்டுத் திங்கள் தோன்றிய பின்னர் மன்னுயிர் எல்லாம் உறங்கியதனை நிலமகள் உறங்கியதாகக் கூறுகின்றனர். அங்ஙனம் கூறுபவர் புகாரினின்றும் புறப்பட்ட பின்னரும் கோவலனுக்கும் கண்ணகிக்கும் புணர்ச்சியின்மையை ஈண்டு நிலமகளின் கூற்றாக நம்மனோர்க் குணர்த்துகின்ற நயம் நினைந்து நினைந்து மகிழற் பாலதாம். இதனாற் போந்தய பயன் கண்ணகியின் குறிக்கோள் இன்ப நுகர்வன்று; அறம் ஒன்றே என்றுணர்த்துவதாம். இவ் வழிச்செலவினூடே கண்ணகி கோவலர்க்குப் புணர்ச்சி நிகழாமைக்கு அதுபற்றி யாண்டும் ஒரு சிறு குறிப்பேனும் காணப்படாமையே சான்றாம் என்க.

கோவலன் முதலிய மூவரும் இரவிடை மதுரை நோக்கிச் செல்லுதல்

30 - 35 : ஆரிடை ......... கழிந்து

(இதன்பொருள்.) ஆர் இடை உழந்த மாதரை நோக்கி - எதிர் பார்த்த வண்ணம் திங்களஞ் செல்வன் தோன்றிப் பால்நிலா விரிக்கக் கண்ட கோவலன், அதுகாறும் கடத்தற்கரிய வழியைப் பெரிதும் வருந்திக் கடந்த தன் காதலியாகிய கண்ணகியை நோக்கி, நங்காய்! இப்பொழுது யாம் செல்லும் வழியிடையே இஃதிரவுப் பொழுதாகலான்; கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும் உளியமும் இடிதரும் - புலி உறுமும் கூகை குழறும் கரடியும் இடிக்கும்; இனையாது ஏகு என - இவற்றைக் கேட்புழித்துண்ணென அஞ்சி நடுங்காதே என் பின்னரே வருதி என்றறிவுறுத்து; தொடிவளைச் செங்கை தோளிற் காட்டி அவன் துயின் மயக்கமும் தளர்நடையும் தவிர்த்தற் பொருட்டு வளைந்த வளையலையுடைய அவள் தன் சிவந்த கைக்குப் பற்றுக் கோடாகத் தன் தோளைக் கொடுத்துப் பரிவுடன் அழைத்துப் போம்பொழுது; மறவுரை நீத்த மாசு அறு கேள்வி அறவுரை கேட்டு ஆங்கு ஆரிடை கழிந்து - இவர்க்கு வழிநடை வருத்தந் தோன்றாமைக்கும் அறந்தலைப்படுதற் பொருட்டும் இன்னாச் சொல்லைத் துவர நீத்த மனமாசு அறுதற்குக் காரணமான நூற்கேள்வியையுடைய கவுந்தியடிகளார் திருவாய் மலர்ந்தருளுகின்ற அறவுரைகளை வழிநெடுகக் கேட்டவண்ணமே சிறிதும் வருத்தமின்றித் கடத்தற்கரிய வழியை எளிதாகவே கடந்துபோய்; என்க.

(விளக்கம்) கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும் உளியம் இடிக்கும் என்பன மரபு என்பது இதனாற் பெற்றாம். கொடுவரி - புலி. குடிஞை - கூகை: பேராந்தை. உளியம் - கரடி. இனையாது - வருந்தாமல். செங்கைக்குப் பற்றுக்கோடாகத் தோளைக் கொடுத்து என்க. மறவுரை - இன்னாச்சொல். மறவுரை நீத்தெனவே அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் என்னும் நான்கனையும் நீத்து என்றவாறாயிற்று. என்னை?

அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொன் னான்கு
மிழுக்கா வியன்ற தறம்  - குறள் - 35.

என்பவாகலின் என்க மாசற்ற கேள்வி எனவும் மாசு அறுதற்குக் காரணமான கேள்வி எனவும் இருபொருளும் கொள்க. கேட்டாங்கு - கேட்டவாறே. மாசறு கேள்வி: அன்மொழித்தொகை. கேள்வியை யுடைய கவுந்தி என்க.

இதுவுமது

36 - 41 : வேனல் ......... சிறையகத்திருத்தி

(இதன்பொருள்.) வேனல் வீற்றிருந்த வேய்கரி கானத்துக் கான வாரணம் கதிர் வரவு இயம்ப - முதுவேனிற் பருவம் நெடிது நிலை பெற்றிருந்தமையாலே வெந்துகரிந்து கிடக்கின்ற மூங்கிற் காட்டிலே உறையும் காட்டுக் கோழிச் சேவல்கள் கூவிக் கதிரவன் வருகையை அறிவிக்குந்துணையும் நடந்து சென்று; மறைநூல் வழுக்கத்து வரி நவில கொள்கைப் புரிநூல் மரர்பர் உறைபதிச் சேர்ந்து - அவ்விடத் தெதிர்ப்பட்டதொரு மறையோதாது இழுக்கினமையாலே தமக்குரிய அறுதொழிற்குமுரியராகாமல் வரிப்பாடல் முதலிய இசைத்தொழிலைப் பயின்று அதனால் வாழ்க்கை பேணுபவராகிய விரிநூல் கிடந்த மார்பினையுடைய பார்ப்பனர் உறைகின்ற ஊரையடைந்து; மாதவத்தாட்டியொடு காதலி தன்னை ஓர் தீது தீர் சிறப்பின் சிறை அகத்து இருத்தி - அந்த வைகறைப் பொழுதிலே கவுந்தியடிகளுடனே கண்ணகியையும் அவ்வூரினகத்தே குற்றமற்ற சிறப்பினையுடைய அடைப்பகத்தே அமர்ந்திருக்கச் செய்து என்க.

(விளக்கம்) 26. முதுவேனிலாதலின் வேனல் வீற்றிருந்த கானம் என்றார். வேயும் கரியுமளவு வேனல் வீற்றிருந்த கானம் என்பது கருத்து ஈண்டு வேயும் எனல் வேண்டிய சிறப்பும்மை தொக்கது. கானவாரணம் - காட்டுக் கோழியிற் சேவல். கதிர் வரவியம்ப எனவே அற்றை இரவெல்லாம் வழி நடந்தமை பெற்றாம். கோழி கூவுந்துணையும் நடந்து ஆங்கு வழியிடையே ஓர் ஊரினைக் கண்டு அவ்வூரில் நாற்புறமும் சிக்கென அடைக்கப்பட்டிருந்த இருத்தற் கியன்ற ஓரிடத்தே இருத்தி என்றவாறு.

இனி அவ்வூர்தானும் பார்ப்பனர் உறையும் ஊர் என்றது இனி மதுரையும் அணித்தேயாம் என்பது தோற்றுவித்தது. இனி அப் பார்ப்பனர் தாமும் வேளாப்பார்ப்பனர் என்பார் மறைநூல் வழுக்கத்துப் புரிநூல் மார்பர் என்றார். வரி - இசைப்பாட்டு. வரிநவில் கொள்கைப் புரிநூல் மார்பர் என்றது மறையோதுதலில் இழுக்கியவிடத்தும் இசைத்தமிழ் பயின்று அதனாலே வாழும் கோட்பாடுடையர் என்றவாறு. இனி, இத்தகைய பார்ப்பனரை வேளாப்பார்ப்பனர் என்றும் கூறுப. இவர் சங்கரியும் தொழில் செய்வர் என்பது வேளாப்பார்ப்பான் வாளரம் துமித்த எனவரும் சான்றாற் பெறப்படுதலின் அரிநவில் புரிநூன் மார்பர் எனக்கொண்டு சங்கரிதற்றொழில் செய்யும் கோட்பாடுடைய பார்ப்பனர் எனினுமாம்.

அடியார்க்கு நல்லார் ஈண்டு புக்கென்னாது சேர்ந்தென்றதனால் அந்தப் பார்ப்பார் இழுக்கிய ஒழுக்கமுடைமை தமது சாவக நோன்பிற் கேலாமையின் ஊர்க்கு அயலதொரு நகரிற் கோயிற் பக்கத்தில் சேர்ந்தார் என்க என்றோதுவர்.

கோவலன் கோசிகமாணியைக் காண்டல்

42 - 47 : இடுமுள் ......... தெரியான்

(இதன்பொருள்.) இடுமுள் வேலி நீங்கி ஆங்கு ஓர் நெடுநெறி மருங்கின் நீர் தலைப்படுவோன் - பின்னர்க் கோவலன் இட்டுக் கட்டிய முள்வேலியைக் கடந்துபோய் அவ் விடத்தயலே கிடந்த நெடியதொரு வழிமேற் சென்று அவ் வழியின் பக்கலிலே நீர்நிலை ஒன்றனைக் கண்டு காலைக்கடன் கழித்தற் பொருட்டு அந் நீர் நிலையை அணுகுபவன்; காதலி தன்னொடும் கானகம் போந்ததற்கு - தனதருமைக் காதலியோடு இவ்வாறு காட்டகத்தே புகுந்ததனை நினைந்து வருந்தி; ஊது உலைக்குருகின் உயிர்த்தனன் கலங்கி உள் புலம்பு உறுதலின் உருவந் திரிய - கொல்லுலையில் ஊதும் துருத்திபோல நெட்டுயிர்ப் பெறிந்து உள்ளங் கலங்கித் தனிமையுற்று உருவமும் மாறுபட்டிருத்தலாலே; கவுசிகன் கட்புல மயக்கத்து - அவனைத் தேடியலைந்து அவ்விடத்தே கண்ட கவுசிகன் என்பான் தனது கட்புலம் மயக்கத்தான் இவன் கோவலனோ அல்லனோ என்றையமுற்று என்க.

(விளக்கம்) 42. இடுமுள் வேலி என்றது - கண்ணகியையும் அடிகளாரையும் இருத்திய சிறையகத்து வேலி; இடுமுள் வேலி என்பதற்கு அடியார்க்கு நல்லார் அவ் வேலியில் இடுமுள் ஒன்றைப் பிரித்து என்பது மிகை; அதனைப் பிரித்துப் போவானேன் புக்கவழியே புறப்படலாம் ஆகலின் அவ்வுரை பொருந்தாது. இடுமுள்ளையுடைய அவ் வேலியகத்தினின்றும் நீங்கி எனலே அமையும் என்க. கோவலன் உருவந்திரிந்திருத்தலான் கவுசிகன் கட்புலம் மயங்கிற்று என்க. தெரியான் என்றது நன்கு அறியாமல் ஐயுற்றவனாய் என்பதுபட நின்றது.

ஐயந்தெளிதற்குக் கவுசிகன் செய்த உபாயம்

48 - 53 : கோவலன் .......... கூறக்கேட்டே

(இதன்பொருள்.) ஓர் பாசிலைக் குருகின் பந்தரிற் பொருந்தி - கோவலன் உருவந்திரிந் திருத்தலானும் தான் சிறிது சேய்மைக் கண் நின்று காண்டலானும் கட்புல மயங்கி ஐயுற்ற அக் கவுசிகன் அவ்வையந் தீர்ந்து தெளிதற்பொருட்டு அயலிருந்த பசிய இலைகளையுடைய குருக்கத்தி படர்ந்த ஒரு பந்தரின்கீழ்ச் சென்று அக் குறுக்கத்தியை நோக்கி ஓ! குருக்கத்தியே நீ தானும்; கோவலன் பிரியக் கொடுந்துயர் எய்திய மாமலர் நெடுங்கண் மாதவி போன்று - தன் காதலனாகிய கோவலன் றன்னோடு பிணங்கிக் கைவிட்டுப் பிரிந்துபோனமையாலே ஆற்றாமையால் கொடிய துன்பத்திற்காளாகிய கரிய நெய்தல் மலர்போன்ற நெடிய கண்ணையுடைய மாதவி போலவே; இவ் அருந்திறல் வேனிற்கு அலர்களைந்து உடனே வருந்தினை போலும் - பொறுத்தற்கரிய வெம்மையையுடைய இம் முதுவேனிற் பருவத்து வெயிற் காற்றாது வாடி நின்னை மலர்களாலே அழகு செய்தலையும் விடுத்து அவளோடு ஒருசேர வருத்தமுற்றனை போலும்; நீ மாதவி - அஃதொக்கும் நீ தானும் மாதவிஎன்னும் பெயருடையை அல்லையோ! என்று கூறக் கேட்டே என்று கூற அக் கூற்றைக் கேட்ட கோவலன் என்க.

(விளக்கம்) அருந்திறல் வேனில் என்பதனை மாதவிக்குங் கூட்டி அரிய திறலையுடைய வேனில் வேந்தனுக்குடைந்து எனவும் அலர்களைந்து என்பதனையும் கூட்டி அதற்கு, பிறர் கூறும் அலர்மொழியைப் பொருட்டாகக் கொள்ளாமல் விடுத்து எனவும் பொருள் கூறிக் கொள்க. நீ மாதவி என்றது நீதானும் மாதவியல்லையோ? என்பது பட நின்றது. உடனே அம் மாதவியுடனே. கோசிகமாணி கவுசிகன் என்னும் பிரமசாரி. கூற அதனைக் கோவலன் கேட்டு என்க.

கோவலன் கோசிகனை வினவுதலும் அவன் விடை கூறலும்

54 - 62 : யாதுநீ ................ பெயர்ந்ததும்

(இதன்பொருள்.) நீ இங்கு கூறிய உரை யீது யாது என - அக் கோசிகனை நோக்கி நீ இவ்விடத்தே கூறிய கூற்றிதன் பொருள்தான் என்னையோ? என்று வினவ; கோசிகமாணி - அதுகேட்ட அக் கோசிகன்றானும்; கண்டேன தீது இலன் எனச் சென்றெய்தி - அங்ஙனம் வினவிய குரலாலே இவன் கோவலனே என்று தெளிந்து கண்டேன் ! கண்டேன் ! இனி யான் குறையேதுமிலேன் என்று மகிழ்ந்து விரைந்து சென்று கோவலனை அணுகி; கொள்கையின் உரைப்போன் தான் வந்த காரியத்தினைக் குறிக்கொண்டு அதற்கேற்பக் கூறுபவன்; இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும் அருமணி இழந்த நாகம் போன்றதும் -கோவலன் தந்தையாகிய மாசாத்துவானும் பெரிய மனைக்கிழத்தியாகிய தாயும் அவன் பிரிவாற்றாது இழத்தற்கரிய தனது மணியை இழந்த நாகப்பாம்பு போல அழகும் ஒளியும் இழந்து ஒடுங்கியதும்; துன்னிய சுற்றம் இன் உயிர் இழந்த யாக்கை என்னத் துயர்க்கடல் வீழ்ந்ததும் - நெருங்கிய சுற்றத்தாரெல்லாம் இனிய உயிரை இழந்துவிட்ட யாக்கைபோலச் செயலறவு கொண்டு துன்பமாகிய கடலிலே வீழ்ந்து கிடப்பதும்; ஏவலாளர் யாங்கணும் சென்று கோவலன் கொணர்க எனப் பெயர்ந்ததும் - மாசாத்துவான் தன் பணியாளர் எல்லாம் நாற்றிசையினும் சென்று தேடிக் கோவலனைக் கண்டு அழைத்து வருவாராக என்று கூற அவ் வேவலாளர் அங்ஙனமே தேடிச் சென்றதும்; என்க.

(விளக்கம்) 54. உரை யிதன் பொருள் யாது என இயைக்க. இது: பகுதிப் பொருளது; ஈதென நீண்டு நின்றது. தீது - குறை. இனி யான் தேடிய கோவலன் தீதிலாதிருக்கின்றான் என்று மகிழ்ந்து எனலுமாம். தீது - என்றது. ஐயம் என்பாருமுளர். 56. கொள்கை - கோவலனை மீட்டுக் கொடு போகவேண்டும் என்னும் கோட்பாடு. அதற்கேற்ப உரைப்பவன் என்றவாறு. இருநிதிக் கிழவன் - மாசாத்துவான். பெருமனைக் கிழத்தி என்றது கோவலன் தாயை 58. அருமணியிழந்த நாகம் பெரிதும் அலமரலெய்தும் என்பதனை .......... கருமணிப் பாவை யன்னான் கரந்துழிக் காண்டல் செல்லாள்...... அருமணி யிழந்தோர் நாக மலமருகின்ற தொத்தாள் எனவும், (சீவகசிந் - 1508) நன்மணி இழந்த நாகம் போன்றவள் தன்மகள் வாராத் தனித்துயர் உழப்ப எனவும் (மணிமே 7: 131-2) பிறசான்றோர் ஓதுமாற்றானும் உணர்க. 59 - 60 இன்னுயிர் இழந்த யாக்கை என்னச் செயலறவு கொண்டு துயர்க்கடல் வீழ்ந்தனர் என்க 61 - 2: மாசாத்துவான் தேடிக் கொணர்கென என எழுவாய் பெய்துரைக்க.

இதுவுமது

63 - 66 : பெருமகன் .............. பேதுற்றதும்

(இதன்பொருள்.) பெருமகன் ஏவலல்லது யாங்கணும் அரசே தஞ்சம் என்று அருங்கான் அடைந்த - இருமுது குரவருள்ளும் பெருங் குரவனாகிய தந்தை ஏவிய பணிவிடையைச் செய்தலே உறுதிப் பொருளாம் அவன் ஏவப் பெறாதவழி யாண்டும் அரசாட்சி செய்தலும் சிறுமைத்து என்று துணிந்துமனைக்கிழத்தியோடும் இளையவனோடும் செல்லுதற்கரிய காட்டகத்தே சென்ற; அருந்திறல் பிரிந்த அயோத்திபோல - இராமனைப் பிரியலுற்ற அயோத்தி நகரத்து மாந்தர் போன்று; பெரும் பெயர் மூதூர் பெரும்பேது உற்றதும் பெரிய புகழையுடைய பழைய ஊராகிய பூம்புகாரில் வாழும் மாந்தரெல்லாம் பெரிதும் அறிவு மயங்கிய செய்தியும்; என்க.

(விளக்கம்) பெருமகன் - தயரதன். யாங்கணும் என்றது காலத்தின்மேற்று. பெருமகன் ஏவலல்லது அரசாட்சியும் எளிது. எனவே பெருமகன் ஏவியது எத்துணைச் சிறு தொழிலாயினும் உறுதிப்பொருள் என்பது கருத்தாயிற்று. தஞ்சம் - எண்மை; ஈண்டுச் சிறுமை மேற்று. அயோத்தி, மூதூர் இரண்டும் அவற்றுள் வாழும் மாந்தர்க்கு ஆகுபெயர். அருந்திறல்: அன்மொழித் தொகை; இராமன் என்க. பேதுறவு - அறிவு திரிதல்; மயக்கம்.

இதுவுமது

67 - 76 : வசந்தமாலை ............. ஈத்ததும்

(இதன்பொருள்.) வசந்தமாலை வாய் கேட்டு - மணித்தோட்டுத் திருமுகத்தை ஏலாது கோவலன் மறுத்துக் கூறிய மாற்றங்களை வசந்தமாலையிடத்தே கேட்டு; மாதவி பசந்த மேனியள் படர் நோய் உற்று நெடுநிலை மாடத்து இடைநிலத்து - மாதவியானவள் பசலைபாய்ந்த மேனியையுடையளாய்ப் பலப்பல நினைந்து ஆற்றாமையாற் பெரிதும் துன்பமெய்தி உயர்ந்த தனது எழுநிலை மாடத்தின் இடைநிலை மாடத்தின்கண்ணே; ஆங்குஓர் படை அமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்ததும் - கிடந்ததொரு படுக்கை அமைந்த கட்டிலிலே கையறவுகொண்டு வீழ்ந்த செய்தியும்; வீழ் துயர் உற்றோர் விழுமம் கேட்டு தாழ்துயர் எய்தித் தான் சென்றிருந்ததும் - அவ்வாறு காமநோய் உற்ற அம்மாதவியின் துன்பநிலையைக் கேள்வியுற்று ஆழ்ந்த துயரமெய்திய அவளைத் தேற்றக் கருதித் தான் (கோசிகன்) அம் மாதவி மனைக்கட் சென்று அவள் மருங்கிருந்த செய்தியும்; இருந்துயர் உற்றோள் மாதவி - மாபெருந் துன்பமுற்றவளாகிய அம் மாதவி தன்னை நோக்கி அந்தணீர் அடியேன்; இணை அடி தொழுதேன் - நும்முடைய இரண்டு அடிகளையும் தொழுகின்றேன்; வருந்துயர் நீக்கு என அடிச்சிக்கு வந்த இத்துன்பத்தை நீக்கியருள்க என்று வேண்டி; மலர்க்கையின் எழுதி - தனது செந்தாமரை மலர் போன்ற கையாலேயே ஒரு திருமுகம் எழுதி; கண்மணி அனையாற்குக் காட்டுக என்றே இத் திருமுகத்தை என் கண்ணிற் கருமணி போல்வானாகிய அக் கோவலனுக்குக் காட்டுக! என்று கூறி; மண் உடை முடங்கல் மாதவி ஈத்ததும் - மண்ணிலச்சினை யுடைய அந்தத் திருமுகத்தைத் தன் கையிலே தந்த செய்தியும் என்க.

(விளக்கம்) 67. வசந்தமாலை வாய்க் கேட்டு என்றது பண்டு கோவலன் ஊடிச் சென்ற அற்றை நாளிலே மாதவி தாழந்தோட்டில் எழுதிக் கோவலனுக்கு விடுத்த திருமுகத்தை அவன் மறுத்துக் கூறிய செய்திகளை அது கொடு சென்ற வசந்தமாலை வறிதே மீண்டுவந்து கூறிய செய்தியை அவளிடம் கேட்டு என்றவாறு. 68. படர் நோய் - பல்வேறு நினைவுகளால் மிகுகின்ற காமநோய். 70. படை - படுக்கை. பள்ளி இடம். 72. வீழ்துயர் - விருப்பங் காரணமாக வந்த துன்பம். காமநோய். விழுமம் - இடும்பை. 73. தாழ்துயர் - ஆழ்ந்த துன்பம். இணையடி தொழுதேன் வருந்துயர் நீக்கு என்றது கோசிகன் மாதவி கூறியதனை அங்ஙனமே கூறியபடியாம். 75. கண்மணியனையான் என மாதவி கோவலனைக் குறித்தபடியாம். 76. மண் - மண்ணிலச்சினை. முடங்கல் - ஓலை. திருமுகம் என்பதுமது.

77 - 82 : ஈத்த வோலை ................ நீட்ட

(இதன்பொருள்.) தீத்திறம் புரிந்தோன் - வேள்வித் தொழிலை விரும்பிய அக் கோசிகன் மாதவி கொடுத்த அம் முடங்கலைக் கைக்கொண்டு கோவலனைத் தேடி இடைநெறிகள் பலவற்றினும் திரிந்து காணப்பெறாமல்; சென்ற தேயமும் - தான் பின்னுந் தேடிச் சென்ற இடங்களும்; வழிமருங்கிருந்து மாசு அற உரைத்து ஆங்கு - தான் அக் கோவலனைக் கண்ட அவ் வழியின் பக்கலிலே அவனோடிருந்து குற்றந்தீரக் கூறிய பின்னர்; அழிவுடை உள்ளத்து ஆரஞராட்டி போது அவிழ் புரிகுழல் பூங்கொடி நங்கை மாதவி ஓலை மலர்க்கையின் நீட்ட - பிரிவாற்றாமையால் அழிதலைத் தருகின்ற நெஞ்சத்தையும் அந் நெஞ்சகம் நிறைந்த காம நோயையும் உடையாளாகிய நாளரும்புகள் இதழ்விரிகின்ற கை செய்த கூந்தலையுமுடைய அந்த மாதவி தந்த முடங்கலைக் கோவலனுடைய மலர்போன்ற கையிலே கொடாநிற்ப; என்க.

(விளக்கம்) 78. தீத்திறம் புரிந்தோன் என்பது. தன்மையிற் படர்க்கை வந்த வழுவமைதி என்பாருமுளர். இவர் இஃது ஆசிரியர் கூற்றாய் வழாஅநிலையே ஆதலறிந்திலர் என்க. தேயம் - இடம். வழி என்றது ஆங்கோர் நெடுநெறு மருங்கின் நீர்தலைப்படுவோன் (42-3) என்ற நெடுநெறியை கோவலன் மாதவியின்பாற் கற்பனையாலே ஏற்றியிருந்த மாசு இம் மறையோன் கூற்றாலே தீர்ந்ததனைக் கருதி ஆசிரியர் மாசற வுரைத்து என்றனர். ஈதுணராது மாசு அற என்பதற்கு ஒழிவற என்பாருமுளர். கோவலனை மீட்டுக் கொடுபோதல் அவன் குறிக்கோளாகலின் அதற்கியைய மாசற வுரைத்தனன் என்பதே கருத்தென்க.

மாதவி முடங்கல் மாண்பு

83 - 93 : உடனுறை .............. உணர்ந்து

(இதன்பொருள்.) உடன் உறை காலத்து உரைத்த நெய்வாசம் - தான் அம் மாதவியோடு கூடியிருந்த பொழுது அவள் தன் கூந்தலிலே நீவியிருந்த நெய்யினது நறுமணத்தின் தன்மையை; குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணர்த்திக் காட்டியது ஆதலின் - அவ்வோலைச் சுருளினது முகப்பின்மேல் அம் மாதவி தனது குறிய நெறிப்பினையுடைய கூந்தலால் ஒற்றப்பட்டிருந்த மண்ணிலச்சினை தனக்கு நன்குணர்த்திக் காட்டியதாதலின்; கைவிடலீயான் - அவ்விலச்சினையைத் தன் கையாலகற்றிவிட மனம் வாராதவனாய்ச் சிறிது பொழுது அதனை நுகர்ந்திருந்து பின்னர்; ஏட்டு அகம் விரித்து ஆங்கு எய்தியது உணர்வோன் - அவ் வோலையினுள பொதிந்த அவள் கருத்தைக் காணும் வேணவா மீக்கூர்தலாலே அவ்வோலையினது இலச்சினையகற்றி அதன் சுருணிமிர்த்தி அதன் அகந்தோன்ற விரித்து ஆங்கு அமைந்த அவள் கருத்தை ஓதி அறிபவன்; அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன் - அடிகளார் திருமுன்னர்த் தங்கள் அடிச்சியாகிய யான் வீழ்ந்து வணங்கிக் கூறுகின்ற வடியாக் கிள விமனக் கொளல் வேண்டும் - தேர்ந்து தெளிந்து எழுதப்படாத அடிச்சியின் புன்மொழிகளைத் திருவுளம் பற்றியருளல் வேண்டும்! குரவர் பணி அன்றியும் குலப்பிறப்பாட்டியோடு இரவு இடைக் கழிதற்கு பிழைப்பு என் - தமக்குத் தலைசிறந்த கடமையாகிய தம்முடைய இருமுது குரவர் ஏவிய பணி செய்தலைக் கைவிட்டதல்லாமலும் ஏசாச் சிறப்பின் இசை விளங்கும் உயர்குடிப் பண்புகளை ஆளுமியல்புடைய மனைவியாரோடு பதி யெழுவறியாப் பெருமையுடைய நம் பூம்புகாரினின்றும் அடிகளார் யாருமறியாவண்ணம் இரவிலே புறப்பட்டுப் போதற்கு நிகழ்ந்த தவறு யாதோ? அறியாது நெஞ்சம் கையறும் - அஃதறியாமையாலே அடிச்சியின் நெஞ்சம் அத்தவறு நம்முடையதாகவு மிருக்குமோ? பிறருடையதோ என்றையுற்று ஒன்றிற் றுணிவு பிறவாமையாலே செயலற்றுக் கிடக்கின்றது; ஒரோவழி அடிச்சியின் பிழையாயிருப்பினும் மகளிர் சொல் குற்றமற்றாத சொல்லென்றுட் கொண்டு அதனைப் பொருளாகக் கொள்ளாமல்; கடியல் வேண்டும் - விட வேண்டும்; பொய் தீர் காட்சிப் புரையோய் - மயக்கந் தீர்ந்த நற்காட்சியையுடைய மேன்மையுடையீர், போற்றி - நும் புகழ்க்குக் குறைவாராமற் போற்றுக; என்று அவள் எழுதிய இசைமொழி உணர்ந்து - என்று அம் மாதவி அம் முடங்கலின்கண் வரைந்துள்ள பாசுரத்தின் பொருளை நன்குணர்ந்து; என்க.

(விளக்கம்) உரைத்த - நீவிய. நெய் - புழுகு நெய். குறுநெறி - அணுக்கமான நெறிப்பு, கூந்தலாலே மண்மேலொற்றிய இலச்சினை என்க கூந்தலாலே ஒற்றப்பட்டமையின் கூந்தலில் நீவிய புழுகு நெய்மணம் அவ் விலச்சினையிற் கமழ அதனை நுகர்ந்தவன் கையால் அவ் விலச்சினை அகற்றிவிடானாய் என்க. கைவிடலீயான்: ஒருசொல். கை விடான் என்னும் பொருட்டு. இச் செயல் கோவலன் அவள்பாற் கொண்டிருந்த அன்பிற்கோர் அறிகுறியாம் இங்ஙனம் கூறவே கோவலன் அவளைக் கைவிட்டமைக்குக் காரணம் ஊழேயன்றிப் பிறிதில்லை என்றுணர்த்தியவாறாயிற்று. கையால் இலச்சினை அகற்றிவிடானாய்ப் பின்னர் ஏட்டகம் விரித்து எனவே சிறிது பொழுது அங்ஙனம் ஏக்கற்றிருந்து பின்னர் அவ்வோலைதரும் செய்தியை உணர விரும்பி அதனை விரித்தான் என்பது பெற்றாம்.

86. ஆல்கு எய்தியது - அம்முடங்கலிலமைந்த செய்தி.

88 - 89. அடிகள் .......... மனக்கொளல் வேண்டும் என்னும் இரண்டடியும் அவ்வோலையின் முகப்பாசுரம் எனவும் ஏனைய அதன் உள்ளுறைப் பாசுரமுமாம் எனவும் கொள்க. அக்காரிகைப் பாசுரம் என்பர் அடியார்க்குநல்லார். மேலும் இருவர் இருமுது குரவரும் ஏவலாளர் மேவல கூறின் இறந்துபடுவர் என்பதூஉம் தேசுடைக் குலத்திற்கு மாசுவரும் என்பதூஉம்; தானிறந்துபடிற் சிறிது புகழே குறைபடுமென்பதூஉம் உணர்த்தியவா றாயிற்று என்றும் விளக்குவர்.

இங்ஙனம் இரவிடைக்கழிதற்கு அடிச்சியேன் பிழை செய்திருப்பினும் அடிச்சியை ஒறுப்பதன்றி அதன் பொருட்டு நீயிர் நுமது குரவரைப் பேணாது ஒழிதலும் குலப்பிறப்பாட்டியொடு போதலும் இரவிடைக் கழிதலும் நுங்குலத்திற்கு மாசு சேர்ப்பதாகாவோ? அங்ஙனம் மாசுபடாது போற்றுக என்று வேண்டினாளுமாயிற்று; இவ் வேண்டுகோள் மாதவியின் மாண்பைப் பலபடியானும் உயர்த்துதலறிக.

கோவலன் கோசிகனுக்குக் கூறுதல்

94 - 101 : தண்றீதிலள் ........... போக்கி

(இதன்பொருள்.) தன் தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கி - அதுகாறும் வல்வினை மயக்கத்தாலே மனமயக்குற்று அவளை வெறுத்திருந்த கோவலன் அவள் திருமுகப் பாசுரத்தாலே அவளது தூய்மையுணர்ந்து அவள் தன் தவறு சிறிதும் இலள் எனத் தெளிந்து அவள் தன்னை வஞ்சித்தனள் என்று கருதி அதுகாறும் தான் எய்திய மனத்தளர்ச்சி நீங்கப் பெற்றவனாய்; எய்தியது - இங்ஙனம் நிகழ்ந்ததற்கெல்லாம் காரணம்; என் தீது என்றே உணர்ந்து - யான் செய்த தீவினையே என்று தெளிந்து மீண்டும் அதனைக் கூர்ந்து ஓதியவன்; ஆங்கு எற்பயந்தோற்கு இம்மண் உடை முடங்கல் பொற்பு உடைத்தாகப் பொருந்தியது - மண் இலச்சினை தகர்க்கப்பட்ட இம்முடங்கல் தானே! புகார் நகரத்தே என்பொருட்டு வருந்தியிருக்கின்ற என் தந்தைக்கு யான் எழுதிய முடங்கலாதற்குப் பெரிதும் பொலிவுடையதாகப் பொருந்தி யுளது என்பதும் கண்டு; கோசிகமாணி - கோசிக்! ஈதொன்று கேள்; நீ கொடுத்த இம்மாதவி யோலைதானே யான் என் தந்தைக்கு எழுதும் ஓலையாதற்கு மிகவும் பொருந்தியிருந்தலாலே, நீ இதனைக் கொடுபோய்; மாசில் குரவர் மலரடி தொழுதேன் - குற்றமற்ற என் இருமுது குரவர்களின் மலரடி களை யான் தொழுதேன் என்று கூறி; காட்டு எனக் கொடுத்து - என் தந்தைக்கு காட்டுவாயாக என்றுகூறி அவ் வோலையை அவன் கையிற் கொடுத்து; அவர் நடுக்கம் களைந்து நல் அகம் பொருந்திய இடுக்கண் களைதற்கு - எம்மிரு குரவர் எய்திய நடுக்கத்தைத் தீர்த்துப் பின்னரும் அவர்தம் நன்னர் நெஞ்சத்தே பொருந்திய துன்பத்தை நினது ஆறுதன் மொழிகளாலே தீர்த்தற்பொருட்டு; ஈண்டு எனப் போக்கி - நீ இப்பொழுதே பூம்புகார்க்கு விரைந்து போதி என்று கூறி அவனைக் போக்கிய பின்னர்; என்க.

(விளக்கம்) 14. தன் தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கி என்றமையால் மாசிலா மனத்தினளாகிய மாதவிக்கும் இவள் பிறிதொன்றன் மேல் மனம் வைத்தனள் மாயப் பொய்பல கூட்டும் மாயத்தாள் என அடாப்பழி யேற்றிப் பிரிந்தநாள் தொட்டு இற்றைநாள் காறும் அவள் புன்மையை நினைந்து நினைந்து மனந்தளர்ந்திருந்தனன் என்பதும் பெற்றாம். அவள் மாசுடையாள் அல்லள் என்பது அவள் மலர்க்கையாலெழுதிய இவ் வோலைப் பாசுரம் நன்குணர்த்தி விட்டமையாலே அவன் மனத்தை அழுத்திய அத் துன்பப் பொறை அந்நொடியிலேயே அகன்றொழிதலாலே அவன் அயாவுயிர்த்தனன் என்றுணர்ந்தாம். நல்லோர் என நம்பி உயிருறக்கேண்மை கொண்டவர்பால் வஞ்சம் காணின் அக்காட்சியே நெடுங்காலம் உண்ணின்றுழப்பதாம். இம் மன வியல்பு பற்றி அடிகளார் ஈண்டு மிகவும் நுண்ணிதாகக் கோவலன் நெஞ்சத்துத் தளர்ச்சி நீங்கிற்றென்றோதியது பெரிதும் இன்பம் நல்குவதாம். பொய் தீர்காட்சி உடைமையின் இஃது என் தீவினை என்றுணர்ந்தனன் என்க.

இனி, மாதவி ஓலைப்பாசுரமே கோவலன் தந்தைக்கு எழுதும் பாசுரமாகச் சொல்லனும் பொருளானும் மிகவும் பொருந்தியிருத்தல் ஆராய்ந்துணர்ந்து மகிழ்க.

கோவலன் கண்ணகியும் கவுந்தியுமிருந்த இடத்தை யடைதல்

102 - 103 : மாசில் ................ அணைந்து

(இதன்பொருள்.) மாசு இல் கற்பின் மனைவியோடு இருந்த - குற்றமற்ற கற்பொழுக்கத்தையுடைய தன் மனைவியாகிய கண்ணகியோடு அமர்ந்திருந்த; ஆசு இல் கொள்கை அறவிபால் அணைந்து - குற்றமற்ற கோட்பாட்டையுடைய துறவற முதல்வியாகிய கவுந்தியடிகளார்பாற் சென்றெய்தி; என்க.

(விளக்கம்) மாசு இல் கற்பு என்புழி மாசு - பிறர் நெஞ்சுபுகுதல். ஆசு - குற்றம். அறவி - அறத்தை மேற்கொண்டவள்; கவுந்தி.

கோவலன் பாணரொடுகூடி இசைநலங் கூட்டுண்ணல்

103 - 113 : ஆங்கு ............ அவரொடு

(இதன்பொருள்.) ஆங்கு - கண்ணகியும் அடிகளாரும் அமர்ந்திருந்த இடத்தயலே; ஆடு இயல் கொள்கை அந்தரி கோலம் பாடும் பாணரில் - வெற்றியே தனக்கிலக்கணமாகக் கொண்ட கோட்பாட்டையுடைய கொற்றவையின் போர்க்கோலத்தை வண்ணித்துத் தமிழிசை பாடுகின்ற பாணர்களோடே; பாங்கு உறச் சேர்ந்து தானுமொருவனாகக் கேண்மையோடே கலந்து; செந்திறம் புரிந்த செங்கோட்டு யாழின் ஈரேழ் கோவையாகச் செவ்விதமாக நரம்பணியப்பட்ட சிவந்த கோட்டினையுடைய அவர் தம் யாழ்க்கருவியிடத்தே; தந்திரி கரத்தொடு திவை உறுத்து யாத்து - தந்திரிகரம் என்னும் உறுப்பினோடே திவவுகளையும் நிலையினெகிழாமல் உறுதியுறக் கட்டி; ஒற்று உறுப்ப உடைமையின் - அவ்வியாழ்தானும் ஒற்றுறுப்புடைத்தாதலாலே; பற்று வழி சேர்த்தி அதனைப் பற்றிற்கு இசை கூட்டி; உழை முதல் கைக்கிளை இறுவாய் - உழை என்னும் இசை குரலாகவும் கைக்கிளை என்னும் இசை தாரமாகவும் பண்ணி; வரல் முறை வந்த மூவகைத் தானத்து - நூல்களின் வரலாற்று முறையாலே வலிவும் மெலிவும் சமனும் ஆகிய மூன்று வகைப்பட்ட தானத்தாலும்; பாய்கலைப் பாவைப் பரணி - பாய்ந்து செல்லும் கலைமானூர்தியையுடைய கொற்றவையைப் பாடுதற்கியன்ற தேவபாணியாகிய இசையை; ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டு பாலையாழ் என்னும் பெரும்பண்ணின் திறப்பண்களுள் ஒன்றாகிய ஆசான் திறம் என்னும் பண்ணோடு இயைத்துப் பொருந்துதலுண்டாகச் செவியால் அளந்துணர்ந்து பின்னர்; பாடல் பாணி அளைஇ - அப் பண்ணோடு அத் தேவபாணியை யாழிலிட்டுப் பாடி மகிழ்ந்த பின்னர்; என்க.

(விளக்கம்) 104. ஆடு -வெற்றி. இறைவியின் உருவத் திருமேனிகளுள் கொற்றவையுருவம் வெற்றியின் அறிகுறியாதலின் அவ் வெற்றியே அவட்கிலக்கணம் என்பார் ஆடு இயல் கொள்கை அந்தரி என்றார். கொற்றவை கோலம் எனவே போர்க்கோலம் என்பது பெற்றாம். 105. பாங்குறச் சேர்ந்து என்றது அவர்களுடன் வேற்றுமை யின்றிக் கலந்து என்றவாறு. எனவே கோவலனுடைய எளிமை என்னும் உயர் பண்பு புலனாயிற்று. 106. செந்திறம் புரிதலாவது - ஈரேழ் கோவையாகச் செப்பஞ் செய்தல். அஃது அரங்கேற்றுக் காதையில் விளக்கினாம். தந்திரிகரம் என்பது - நரம்பு துவக்குவதற்குத் தகைப்பொழிய இருசாண் நால்விரல் நீளமாகக் குறுக்கிடத்துச் சேர்த்தமைப்போர் உறுப்பு. அஃதாவது - திவவு அமைத்திற்கு உட்குடைந்த யாழ்த் தண்டினைப் போர்த்தமைக்குமொரு பலகை என்க. திவவு - நரம்புகளை அழுத்தி இசையை வலிதாக்கும் கோல் (மெட்டு), திவவு என்பது நரம்புகளை வலிபெறக் கட்டும் என்பது அடியார்க்குநல்லார் உரை. ஈண்டு நரம்புகள் வலிபெறக் கட்டும் என்பது பிறழவுணர்ந்து நரம்புகளை என இரண்டாவதன் உருபுடையதாக எழுதப்பட்டிருத்தல் வேண்டும். ஈண்டு நரம்பு - இசை: ஆகுபெயர். இசை வன்மை யுடையதாதற்கு நரம்புகள் திவவுகளில் அழுத்தப்படுமாதலின் நரம்புகள் (இசைகள்) வலிபெறற் பொருட்டுக் கட்டும் வார்க்கட்டு என்பதே உரையாசிரியரின் கருத்தாகும். திவவுகள் பண்டைக் காலத்தே வார்களாலேயே அமைக்கப்பட்டன. இக்காலத்தே வெண்கலக் கோல்களால் அமைக்கப்படுகின்றன. மெட்டுக்கள் என்று கூறப்படுகின்றன. திவவுகள் மெட்டுக்களே என்பதனை,

அங்கோட்டுச் செறிந்த அவீழ்ந்துவீங்கு திவவின் எனவும் (சிறுபாணா 222) நெடும்பணைத் திரள்தோள் மடந்தைமுன் கைக்குறுந்தொடி யேய்க்கு மெலிந்துவீங்கு திவவு (பெரும்பாண் 12 -13) எனவும் வரும் சங்கச் செய்யுட் பகுதிகளும் அவற்றின் பழைய வுரைகளும் (திவவு என்பன - மெட்டுக்களே என்பதனையே) வலியுறுத்தும் இஃதுணராதார் திவவு என்னும் இவ்வுறுப்பினியல்புணரால் தத்தமக்குத் தோன்றியவாறே கூறுவாராயினர். அவருரை யெல்லாம் போலி யென்றொழிக. 108. ஒற்றுறுப்பு - தாளத்திற்கென அமைத்த வோருறுப்பு: நரம்பு. பற்று - சுதி. செங்கோட்டியாழ் அறுவகை உறுப்புடைத் தென்ப. இதனை,

செங்கோட் டியாழே செவ்விதிற் றெரியின்
அறுவகை யுறுப்பிற் றாகு மென்ப

எனவும்,

அவைதாம் - கோடே திவவே யொற்றே.....
தந்திரி கரமே நரம்போ டாறே

எனவும் வருவனவற்றாலறிக.

இவ் வியாழின்கண் ஒற்றைத் தோற்றுவித்தற்கென மூன்று நரம்புகள் பண்மொழி நரம்புகளினும் வேறாக அமைந்திருப்பன. ஆதலின் இவற்றை விரலாற் றெரிந்து ஒற்றைப் பிறப்பிக்குங் காலத்தே இவற்றில் எழுமொழி பண்மொழி நரம்பிற் கூட்டியுள்ள பற்றிசையோடு இயையுமாறு இவற்றையும் இசை கூட்டுவதனையே ஒற்றுறுப்புடைமையின் பற்றுவழிச் சேர்த்தி என்றார். இந்நரம்புகள் இக்காலத்தே பக்கசாரணி என்று வழங்கப்படுகின்றன. இவையிற்றை பத்தரினின்றும் தாங்கும் ஓருறுப்பே எனப்படுகிறது. இதனை இக்காலத்தே வளைவு ரேக்கு என்பர்.

உழை முதல் கைக்கிளை யிறுவாய் கட்டி எனவே, இதன்கட் பிறப்பது செம்பாலைப் பண் என்பது உழைமுதல் வம்புறு மரபில் செம்பாலையாயது எனவரும் அரங்கேற்று காதையாற் பெற்றாம். மேலும் பாலை யாழ் (பண்) செம்பாலையுட் பிறக்கும் என்பதையும் வேனிற் காதையுள் அடியார்க்குநல்லார் உரையிற் கண்டாம். இஃதுணராது அரும்பாலை என்னும் இசையைப் பிறப்பித் தென்பார் உரை போலி என்க. உழை குரலாக அரும்பாலை பிறப்பது இளிமுதலாக உழையீறாகக் கட்டிய வழியேயாம் என்பதனையும் அவர் கருதாராயினர். 111. பாய்கலைப் பாவைப் பாடற்பாணி என்றது பாலைநிலத் தெய்வமாகிய கொற்றவையைப் புகழ்ந்து பாடும் தேவபாணியைப் பாடி என்றவாறாம். மற்று அதுதானும் பெரும்பண்ணாகிய பாலைப்பண்ணாற் பாடாது, அதன் திறம் ஐந்தனுள் ஒன்றாகிய, ஆசான் திறத்தாற் பாடி அதனை அமைவரக் கேட்டு என்க. பாலைப்பண்ணின் திறங்கள் ஐந்தாம்; அவையாவன: அராகம் நோதிறம், உறுப்பு, குறுங்கலி, ஆசான் என்பன. இவற்றை-

அராகம் நோதிறம் உறுப்புக் குறுங்கலி
ஆசான் ஐந்தும் பாலையாழ்த் திறனே

எனவரும் பிங்கலந்தையா லறிக. இவ்வைந்தும் தனித்தனியே அகநிலை புறநிலை அருகியல் பெருகியல் என நந்நான்காக விரியும். எனவே ஈண்டு ஆசான் திறத்தினது வழிபட்ட நான்கு பண்களையும் (இராகங்களையும்) யாழில் இயக்கிக் கேட்டனன் என்பார் ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டு என்றார். இப் பண்களை இயக்கி இவற்றில் பாய்கலைப்பாவைப் பாணியை மிடற்றாற் பாடி அப் பண்களோடு விரவி மகிழ்ந்து என்பாற் பாற் பாணி பாடி என்னாது அளைஇ என்றார். அளை இப் பாடிப் பின்னர் என்க. சிலசொற் பெய்து கொள்க. ஆசான் திறத்தின் சாதிப் பண்கள் அகச்சாதி காந்தாரம் புறச்சாதி சிகண்டி அருகு சாதி தசாக்கரி பெருகுசாதி சுத்தகாந்தாரம் என்பர் அடியார்க்கு நல்லார்.

கோவலன் பாணரை வினவுதலும் அவர் விடையும்

114 - 121 : கூடற்காவதம் .............. பொருந்தி

(இதன்பொருள்.) நீர் கூடல் காவதம் கூறுமின் என - இங்ஙனம் இனிதின் யாழிற் பாடி மகிழ்ந்த கோவலன் அப் பாணர்களை நோக்கி, பாண்மக்களே நீங்கள் இவ்விடத்தினின்றும் கூடல் நகரத்திற்கு எத்துணைக் காவதம்? அதனைக் கூறுமின என்று வினவ; ஆங்குக் காழ் அகில் சாந்தம் கமழ் பூங்குங்குமம் நாவிக் குழம்பு நலங்கொள் தேய்வை - அதுகேட்ட பாணர் ஐய! அம் மதுரையின்கண்ணுள்ள வயிரமேறிய அகிற்சாந்தும் நறுமணங்கமழும் குங்குமப் பூங்குழம்பும் புழுகுக் குழம்பும் மணத்தால் நலங்கொண்ட சந்தனச் சாந்தும்; மான்மதச் சாந்தும் தெய்வத் தேம் மெல் கொழுஞ் சேறு ஆடி - கத்தூரிச் சாந்துமாகிய இவையிற்றின் தெய்வமணம் கமழுகின்ற மெல்லிய வளவிய இனிய சேற்றில் அளைந்து; தாது சேர் கழுநீர் சண்பகக் கோதையொடு மாதவி மல்லிகை மனைவளர் முல்லைப் போதுவிரி தொடையல் பூ அணை பொருந்தி - பூந்துகள் கெழுமிய கழுநீர் மலரும் சண்பக மலரும் என்னும் இவற்றாலியன்ற மாலைகளோடு குருக்கத்தி மலரும் மல்லிகை மலரும் மனைக்கண் வளர்க்கப்பட்ட வளவிய முல்லையினது நாளரும்புகள் விரியாநின்ற மலர்களாற் றொடுக்கப்பட்ட செவ்வி மாலைகளும் உடைய மலர் அணைகளிலே தவழ்ந்து என்க.

(விளக்கம்) 117. கூடல் - மதுரை. 115. காழ்-வயிரம். குங்குமக் குழம்பும் என்க. 116. நாவி-புழுகு. தேய்வை - சந்தனம். 117. மான்மதம் - கத்தூரி 118. தேம் இனிமை. சேறாடி - சேற்றில் அளைந்து.

இதுவுமது

122 - 126 : அட்டில் புகையும் .......... அளைஇ

(இதன்பொருள்.) அட்டில் புகையும் - அடுக்களையி லெழுகின்ற தாளிப்பு மணங்கமழ்கின்ற புகையும்; அகல் அங்காடி முட்டாக் கூவியர் மோதகப் புகையும் - அகன்ற அங்காடித் தெருவின்கண் ஒருபொழுதும் முட்டுப்பாடின்றி அப்பவாணிகர் சுடுகின்ற அப்ப வகைகளின் மணங்கமழ்கின்ற புகையும்; மாடத்து மைந்தரும் மகளிரும் எடுத்த அம் தீம் புகையும் - மேனிலை மாடத்தே கொழுங்குடிச் செல்வர் மக்களாகிய ஆடவரும் மகளிரும் தத்தம் ஆடைகட்கும் கூந்தற்கும் ஊட்டுகின்ற அழகிய இனிய மணப்புகையும்; ஆகுதிப் புகையும் - அந்தணர் வேள்விக் களத்தில் அவிசொரிந்து வளர்க்கின்ற தீயினின்றெழுகின்ற நறுமணப் புகையும்; பல்வேறு பூம்புகை அளைஇ - ஆகிய இன்னோரன்ன பலவேறு வகைப்பட்ட பொலிவினையுடைய புகைகளையும் அளாவிக் கொண்டு; என்க.

(விளக்கம்) 122. அட்டில் - மடைப்பள்ளி. அட்டிலிலெழும் பல்வேறு தாளிப்பு மணங்கமழும் புகை என்க. முட்டா - முட்டுப்பாட்டில்லாத; இடையறவில்லாத உணவுப் பண்டமாகலின் முட்டுப்பாடின்மை கூறினார். 124. மாடத் தெடுத்த அந்தீம் புகை எனலால் - கொழுங்குடிச் செல்வர் மைந்தரும் என்பது பெற்றாம். அம்மைந்தரும் மகளிரும் தத்தம் ஆடைக்கும் கூந்தற்கும் ஊட்டும் அழகிய நறுமணப்புகை என்க. ஆகுதிப் புகை - வேள்வியி லெழும் புகை.

இதுவுமது

126 - 134 : வெல்போர் ....... இல்லென

(இதன்பொருள்.) வெல் போர் விளங்குபூண் மார்பின் - வெல்லும் போராற்றலையும் இந்திரனாற் பூட்டப்பெற்றுப் புகழானும் ஒளியானும் விளங்குகின்ற ஆரத்தையும் உடைய; பாண்டியன் கோயிலின் - பாண்டிய மன்னனுடைய அரண்மனையின்கண்; அளந்து உணர்வு அறியா எத்தகைய வித்தகரானும் அளவிடப்பட்டு உணர்ந்தறியப் படாதனவாய்; ஆர் உயிர்ப்பிணிக்கும் கலவைக் கூட்டம் - நுகர்ந்தார் தம் பிணித்தற்கரிய வுயிரையும் பிணிக்கும் சிறப்புடைய கலவைக் கூட்டத்தின் நறு மணமனைத்தையும் தன் மெய்யெலாம் பூசிக்கொண்டு; காண் வர - சேய்மையிடத்தேமாகிய யாமும் நுகர்ந்தறியும்படி; தோன்றி - புலப்பட்டு; புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பின் பொதியில் தென்றல் போலாது - சங்கப்புலவாது செவ்விய நாவாற் புகழ்தற் கமைந்த சிறப்புடைமையாலே பொதியிலினின்றும் வருகின்ற தென்றலைப் போலன்றி; ஈங்கு மதுரைத் தென்றல் வந்தது காணீர் - இங்கே அதனினும் சிறந்த மதுரைத் தென்றல் வந்து தவழ்தலை அறிந்திலிரோ? அவன் திருமலி முதூர் - அப்பாண்டியனுடைய செல்வமிக்க பழைய மதுரைமா நகரம்; நனி சேய்த்து அன்று - மிகவும் தொலைவின்கண்ணதன்று; அணித்தே தனிநீர் செல்லினும் தகைக்குநர் இல்என - தனித்த நீர்மையினராய்ச் சென்றாலும் அச் செலவினைத் தடை செய்வார் யாருமிலர் என்றுகூற; என்க.

(விளக்கம்) 126 - 7. வெல்போர்ப் பாண்டியன், விளங்கு பூண் பாண்டியன் எனத் தனித்தனி இயையும். விளங்குபூண் என்ற இந்திரன் பூட்டிய ஆரத்தை. 128. ஒருகால் நுகருமாயின் பின்னை வீட்டுலகம் கருதித் துறவிற் செல்லவொட்டாது மனத்தைப் பிணித்துக் கொள்ளும் கோயிற் கலவை என்க என்பர் அடியார்க்குநல்லார். கலவை - கலவை மணம். 129. காண்வர என்றது மெய்ப்பொறியானும் மூக்குப் பொறியானும் காண்டலுண்டாக என்றவாறு. காண்டல் - அறிதன்மேற்று. 120. புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பு என்புழி, நிவப்பு சிறப்பின் மேனின்றது. இவற்றைப் பொதியிலுக்கே அடையாக்கலுமாம். பொதியிற் றென்றற்கு இங்ஙனம் பல்வேறு கலவை மணமின்மையின் மதுரைத்தென்றல் அதனினும் சிறப்புடைத்தாயிற்று என்பார் பொதியிற் றென்றல் போலாது மதுரைத் தென்றல் வந்தது என்றார். காணீர் என்பது வினா ஓகாரந் தொக்கது. தென்றலின்கண் மதுரை மணங்கமழ்தலால் இது கேட்கவேண்டா! அந்த மணமே அம் மூதூர் அணித்தென்பதறிந்திலீரோ என்பது கருத்து. இனி ஆறின்னாமை யாதும் இல்லை என்பார். தனிநீர் செல்லினும் தகைக்குநர் இல் என்றார். தனிநீர் - தனித்த நீர்மை.

கோவலன் முதலிய மூவரும் அவ்விடத்தினின்றும் மதுரைக்குப் போதல்

125 - 150 : முன்னாள் ............ எதிர்கொள

(இதன்பொருள்.) முன் நாள் முறைமையின் - அற்றைப் பகற்பொழுதெல்லாம் அப்புரிநூன் மார்பர் உறைபதியிலேயே இருந்து இளைப்பாறி முதல்நாளில் புறப்பட்டாற் போன்றே ஞாயிறு மறைந்து திங்களஞ் செல்வன் பால் நிலாப் பரப்பிய பின்னர்; பின்னையும் - மீண்டும்; இருந்தவ முதல்வியொடு - பெரிய தவத்தலைவியாகிய கவுந்தியடிகளாரோடும் கோவலனும் கண்ணகியும்; அல் இடைப் பெயர்ந்தனர் - குளிர்ந்த இரவுப் பொழுதிலே அவ்வூரினின்றும் புறப்பட்டனராக; பெயர்ந்த ஆங்கு - அங்ஙனம் புறப்பட்டுப் போம்பொழுது அவ்வழி யிடத்தேயே; அருந் தெறல் கடவுள் அகல் பெருங்கோயிலும் பெரும் பெயர் மன்னவன் பேர் இசைக் கோயிலும் அரிய அழித்தற்றொழிலையுடைய இறைவன் எழுந்தருளிய அகன்ற பெரிய திருக் கோயிலினும் பெரிய புகழையுடைய பாண்டிய மன்னனுடைய பெரிய புகழையுடைய அரண்மனையினும்; பால் கெழு சிறப்பின் பல் இயல் சிறந்த காலை முரசக் கனைகுரல் ஓதையும் -பல்வேறு பகுதிப்பட்ட சிறப்பினையுடைய இன்னிசைக் கருவிகளின் இசையோடு கூடிச் சிறப்புற்ற காலை முரசினது மிக்க ஒலியாகிய முழக்கமும்; நால் மறை அந்தணர் நவின்ற ஓதையும் - நான்கு மறைகளையும் அந்தணர்கள் ஓதுவதனாலே எழுந்த ஒலியும்; மாலவர் ஓதி மலிந்த ஓதையும் - பெரிய தவத்தினையுடையோர் கடவுள் வாழ்த்துப் பாடுவதனாலே எழுந்த மிக்க ஒலியும்; வாளோர் மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு எடுத்த நாள் அணி முழவமும் - வாட்படை மறவர் பாண்டியனுடைய பிறக்கிடாத வெற்றிச் சிறப்பையுடைய வாழ்த்துப் பாடலோடு தொடங்கிய நாளணிமங்கல முழவினது இன்னிசையும்; போரில் கொண்ட பொரு கரி முழக்கமும் - அம்மறவர் பகைவரைப் போரில் வென்று கைப்பற்றிக் கொணர்ந்த போர் யானைகளின் பிளிற்றொலியும்; வாரிக் கொண்ட வயக்கரி முழக்கமும் - அம் மறவர் தாமே காட்டிற் பிடித்துக் கொணர்ந்த போர் யானைகளின் பிளிற்றொலியும்; பணைநிலைப் புரவி ஆலும் ஓதையும் பந்திகள் தோறும் கட்டப்பட்ட போர்ப் புரவிகள் செருக்கினாலே கனைக்கின்ற பேரொலியும்; கிணை நிலைப் பொருநர் வைகறைப் பாணியும் - அரண்மனை வாயிலிடத்தே தடாரிப்பறை கொட்டுகின்ற கிணைவன் வைகறைப் பொழுதிலே அரசனை வாழ்த்திப் பாடுகின்ற பாட்டினது ஒலியும் ஆகிய; கார்க்கடல் ஒலியில் இப்பல்வேறு ஒலியும் விரவிக் கரிய கடலினது ஒலிபோல ஒலித்தலாலே; கலி கெழு கூடல் ஆர்ப்பு ஒலி ஆரவாரம் பொருந்திய மதுரைமா நகரத்து அவ்வாரவாரத்து ஒலியெலாம்; எதிர் கொள - தம்மை எதிர்கொண்டழைத்தலாலே; என்க.

(விளக்கம்) 137 - 40. இறைவன் கோயிலிலும் அரண்மனையினும் வைகறைப் பொழுதிலே குழலும் யாழு முழவு முதலிய இன்னிசைக் கருவிகளும் முழங்குதலுண்மையின் அவற்றோடுகூடிச் சிறப்புற்ற காலை முரசத்தின் கனைகுரல் ஓதல் யென்க. 141. அந்தணர் நவின்ற ஓதை என்றது வேத முழக்கத்தை. 142. மாதவர் ஓதிமலிந்த வோதை என்க. 144. வாளோர் எடுத்த நாள் அணிமுழவம் என்றது வீரமுரசத்தை. குடைநாட்கோள் முதலியனவுமாம். வாரி - யானை பிடிக்கும் காடு. 147. பணை - குதிரைப்பந்தி. 148. கிணை - தடாரிப்பறை. கிணைவன் வைகறை யாமத்தே அரண்மனை முன்றிலில் கிணைப்பறை கொட்டி அரசனை வாழ்த்துதல் மரபு. இதனை,

வெள்ளி முளைத்த விடியல் வயல்யாமை
அள்ள கட்டன்ன அரிக்கிணை - வள்ளியோன்
முன்கடை தட்டிப் பகடுவாழ் கென்னாமுன்
என்கடை நீங்கிற் றிடர்

எனவரும் புறப்பொருள் வெண்பாமாலை (பாடாண் - 18) யான் உணர்க. மற்று வாகைத்திணைக்கண் கிணைவன் உழவனைப் புகழ்தலுண்டு. அதனையே பழையவுரையாசிரியர் ஈண்டுக் கூறினர். அத்துறை ஈண்டைக்குப் பொருந்தாமை யறிக. 150. எதிர்கொள என்றது - கோவலன் முதலியோர் நகரிற்குத் தொலைவிலே வரும் பொழுதே இவ்வொலிகளைக் கேட்டனர் என்றபடியாம்.

வையை என்ற பொய்யாக் குலக்கொடி

(151 முதலாக 170 - முடிய வையை வண்ணனை)

150 - 161 : ஆரஞர் ........... அல்குல்

(இதன்பொருள்.) ஆர் அஞர் நீங்கி - மதுரை நகரத்து ஆரவாரங்கேட்டபொழுதே அதுகாறும் வழிநடையால் எய்திய துன்பம் எல்லாம் நெஞ்சத்தினின்றும் நீங்கப் பெற்று அப்பால் வையை என்னும் பேரியாற்றின் கரையை எய்தினராக; குரவமும் வகுளமும் கோங்கமும் மரவமும் நாகமும் திலகமும் மருதமும் சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும் பாடலம் தன்னொடு பன்மலர் விரிந்து - அந்த யாற்றினது கரையின் புறப்பகுதி யெங்கும் குராமரமும் மகிழமரமும் கோங்கமரமும் வேங்கை மரமும் வெண்கடப்பமரமும் சுரபுன்னைமரமும் மஞ்சாடி மரமும் மருதமரமும் உச்சிச் செலுந்தின்மரமும் செருந்திமரமும் சண்பக மரமும் ஆகிய இவை பாதிரிமரத்தோடே மலர்ந்து திகழ்பவையே அவ் வையை என்னும் நங்கை தன்மீதுடுத்த பூந்துகில் ஆகவும்; குருகும் தளவமும் கொழுங்கோடி முசுண்டையும் விரிமலர் அதிரலும் வெள் கூதாளமும் குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும் - அகப்பகுதி யெங்கும் குருக்கத்தியும் செம்முல்லையும் வளவிய கொடியையுடைய முசுட்டையும் மலர்ந்த மலர் நிறைந்த மோசி மல்லிகையும் வெள்ளை நறுந்தாளியும் வெட்பாலையும் மூங்கிலும் இவற்றிற் படர்ந்த பெருங்கையாலும்; பிடவமும் மயிலையும் பிணங்கு அரில் மணந்த கொடுங்கரை கோவை மேகலை - குட்டிப்பிடவமும் இருவாட்சியுமாகிய பல மலரும் விரிந்து பூங்கொடிகள் பின்னிப்படர்ந்த கிடப்பவற்றைத் தன்னை மிடைந்து சூழ்ந்த கோவையாகிய மேகலையாகவும் உடைய; கொடுங்கரை அகன்று ஏந்து அல்குல் - வளைந்த கரையாகிய அல்குலையும்; என்க.

(விளக்கம்) 150. தாம் குறிக்கொண்டுள்ள மதுரையை எய்திவிட்டோம் என்னும் மகிழ்ச்சி காரணமாக அதுகாறும் எய்திய துன்பமெல்லாம் மறைந்தன என்பது கருத்து. கரையின் வெளிப்புற மெல்லாம் குரவ முதலிய மரங்கள் வளமுடையனவாய் மலர்ந்து நிற்றலாலே பல்வேறு நிறமுடைய அம்மலர் ஒழுங்கு வையைமகளுடுத்த பல்வேறு நிறமுடைய பூந்துகில் போலத் திகழ்ந்தது என்றவாறு. 153. செண்பக வோங்கல் என்புழி ஓங்கல் - மரம்; ஆகுபெயர் - பகன்றை - பெருங்கையால்; சீந்திலுமாம்.

கரையின் புறவா யெங்கும் மலர்ந்து நிற்கும் பூம்பொழில் வையை மகட்குப் பூந்துகிலாகவும் கரையின் அகவாயெங்கும் பிடவ முதலியனவும் பிற பூங்கொடிகளும் பின்னிப் படர்ந்து மலர்ந்து திகழும் கொடிப்பிணக்கம் அவட்கு மேகலை என்னும் அணிகலனாகவும் வளைந்துயர்ந்தேந்திய கரை அல்குலாகவும் என ஏற்றி பெற்றி சில சொற்கள் பெய்துரைக்க. இவை குறிப்புவமம். உருவகம் என்பதுமது.

இதுவுமது

161 - 170 : வாலுகம் .......... குலக்கொடி

(இதன்பொருள்.) மலர்ப் பூந்துருத்தி - அகற்சியையும் போலிவையுமுடைய இடைக்குறையிலே; பால் புடைக்கொண்டு பல் மலர் ஓங்கிய - பக்கங்களிலே பருத்தலைக் கொண்டு தம்மீது பல்வேறு மலர்கள் உதிர் தலைப்பெற்று உயர்ந்த; குவைஇய - குவிந்துள்ள; எதிர் எதிர் விளங்கிய ஒன்றற்கொன்று எதிர் எதிராக நின்று திகழ்ந்த; வாலுகம் - மணற் குன்றுகளாகிய; கதிர் இள வனமுலை ஒளியுடைய இளமையுடைய அழகிய முலையினையும்; கவிர் கரை நின்று உதிர்த்த இதழ்ச் செவ்வாய் - முருக்க மரங்கள் கரையினின்றுதிர்த்த இதழ் ஆகிய சிவந்த வாயினையும்; அருவி முல்லை அணி நகையாட்டி - அருவி நீரோடும் இடையறாது வருகின்ற முல்லை யரும்பாகிய எயிற்றினையும் உடையவளும்; விலங்கு நிமிர்ந்து ஒழுகிய கருங்கயல் நெடுங்கண் - குறுக்கே மறிந்தும் நெடுக ஓடியும் திரிகின்ற கயல்களாகிய நெடிய கண்களையும்; விரைமலர் நீங்கா அவிர் அறல் கூந்தல் - மணமலர் ஒருபொழுதும் நீங்குதலில்லாத விளங்குகின்ற அறலாகிய கூந்தலையும்; உலகு புரந்து ஊட்டும் உயர் பேர் ஒழுக்கத்து - உலகத்தே வாழுகின்ற பல வுயிரினங்களையும் பேணி ஊட்டி வளர்க்கின்ற மிகவும் பெரிய அறிவொழுக்கத்தினையும்; புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி - அவ்வொழுக்கங் காரணமாகப் புலவர் பலரும் புகழுமாற்றால் அவருடைய செந்நாவிலே பொருந்தியுள்ள பூங்கொடி போல்பவளும்; வையை என்ற - வையை! வையை ! என்று உலகத்தாராற் சிறப்பித்துக் கூறப்படுகின்ற பெயரையுடையவளும் ஆகிய; பொய்யாக் குலக் கொடி - தன தொழுக்கம் ஒருகாலத்தும் பொய்யாதவளும் பாண்டியர் குலத்துப் பெண்ணா யிருப்பவளும் ஆகிய அந்த நங்கையானவள்; என்க.

(விளக்கம்) 161. மலர்களையுடைய துருத்தி எனினுமாம். பால் - இருபக்கங்களினும் எனினுமாம். குவைஇய வாலுகமாகிய முலை என்க. 164. கவிர் - முண்முருக்கு. 165. அருவி கொணர்ந்த முல்லைமலர் என்க. நகை - பல். 165. விலங்கு - குறுக்காக. குறுக்கே மறிந்தும் நெடுக ஓடியும் திரியும் கருங்கயல் என்க. 167. அவிர் கூந்தல், அறல் கூந்தல் எனத் தனித்தனி யியையும். அவிரும் அறல் எனினுமாம். அவிர்தல் - விளங்குதல். 168. உயர் பேரொழுக்கங் காரணமாகப் புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி. யாறுகளில் வைத்து வையையாறு புலவர் நாவாற் புகழப்பட்டிருத்தலைப் பரிறபாடலிலே காண்க.

வையை மகள் வருந்துதல்

171 - 173 : தையல் ............... அடக்கி

(இதன்பொருள்.) தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல் - மதுரை நகர்க்குக் கணவனோடு வருகின்ற அக் கண்ணகிநல்லாளுக்கு மேல் வருவதற்கிருக்கின்ற துன்பத்தை அவ் வையையென்னும் பொய்யாக் குலக்கொடிதான் முன்னரே அறிந்தவள்போல; புண்ணிய நறுமலர் ஆடை போர்த்து - தன்னைக் கொண்டு வழிபாடு செய்வார்க்குப் புண்ணியம் பயக்குமியல்புடைய நறிய மலராடையாலே தன் மெய்ம்முழுதும் போர்த்துக்கொண்டு; கண் நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி - அவட்கு இரங்குதலாலே தன் கண் மல்கிநின்ற நீரைப் புறத்திடின் கண்ணகி முதலியோர் வருந்துவாரென்று உள்ளடக்கிக் கொள்ளாநிற்ப; என்க.

(விளக்கம்) கண்ணகி முதலிய மூவரும் தன்பால் மகிழ்ச்சியுடன் வந்தெய்திய பொழுது தெய்வத் தன்மையுடைய அவ் வையை என்னும் மடந்தை ஊழ் காரணமாக மதுரை நகரத்தே அவட்கு இனி வரவிருக்கின்ற துன்பத்தை அறிந்தவள் போலத் தன் திருமேனி முழுவதும் பூவாடையாலே போர்த்துக்கொண்டு அவள் பொருட்டுத் தன் கண்களில் மல்கிய துன்பக் கண்ணீரையும் அவள் காணாவண்ணம் மறைத்துக் கொண்டனள் என்று அடிகளார் கூறுகின்றார். இது தற்குறிப்பேற்றம் என்னும் அணி. இஃதென் சொல்லியவாறோ எனின், வையையாற்றின் இருகரைகளினும் அமைந்த பல வேறுவகைப்பட்ட மரங்களும் செடிகொடிகளும் பூத்துச் சொரிதலாலே அந்த யாற்றின் நீர் தோன்றாதபடி அம் மலர்கள் மறைத்து விட்டன. இந் நிகழ்ச்சியையே அடிகளார் வையை மகள் கண்ணகிக்கு வருவதறிந்து அவள் பொருட்டுத் தானும் வருத்தமுடையவளாய்ப் பூவாடையாலே முக்காடிட்டுக் கொண்டு தன் கண்ணீரையும் அவளறியாமல் மறைத்துக்கொண்டனள் என்கின்றனர் என்க. இதன்கண் கண்நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி என்புழி, தன்னிடத்தே நிறைந்தொழுகுந் தண்ணீரைப் பூவாலே மறைத்தனள் எனவும் தன் கண்களிலே மல்கிய துன்பக் கண்ணீரை அவளறியாம லடக்கினள் எனவும் சிலேடை வகையாற் பொருள் கொள்க. 173. அடக்கி என்பதனை அடக்க எனத் திரித்துக் கொள்க.

கோவலன் முதலிய மூவரும் வையையைப் புணையேறிக் கடத்தல்

174 - 180 : புனல் ............... எய்தி

(இதன்பொருள்.) அனநடை மாதரும் ஐயனும் - அழகிய அவ்வையை யாற்றின் கரைக்கட் சென்று அதன் நீரோட்டத்தின் அழகினைக் கண்ணுற்ற அன்னம் போன்ற நடை யழகினையுடைய கண்ணகி நல்லாளும் அவள் தலைவனாகிய கோவலனும் வியந்து; இது புனல்யாறு அன்று பூம்புனல் யாறு என தொழுது - இத் தெய்வப் பேரியாறு தான் புனல் ஒழுகும் யாறு அன்று பூவொழுகும் யாறு என்று புகழ்ந்து கைகூப்பித் தொழுது; பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும் அரிமுக அம்பியும்  அருந்துறை இயக்கும் பெருந்துறை மருங்கில் பெயராது - அவ்வியாற்றினைக் கடப்பவர் பொருட்டு ஆங்குக் குதிரைமுக வோடமும் யானைமுக வோடமும் சிங்கமுக வோடமும் என்னும் சிறந்த ஓடங்களிலே பலரையும் ஏற்றி இயக்குதலையுடைய ஓடக்கோலுக்கும் நிலைத்தலரிய ஆழமான துறையாகிய பெருந்துறைப் பக்கத்தே செல்லாமல்; ஆங்கண் மாதவத்தாட்டியொடு மரப்புணை போகி - அதற்கு அயலதாகியதொரு துறையிலே கவுந்தியடிகளோடு தாமூவருமே மரப்புணையிலேறி யாற்றைக் கடந்துபோய்; தேம் மலர் நறும் பொழில் தென்கரை எய்தி - தேன் பொதுளிப மலர் நிரம்பிய நறிய பூம் பொழிலையுடைய தென்கரையில் பலர் செல்லாத வோரிடத்தே சென்றெய்தி யென்க.

(விளக்கம்) 175. அனநடை - அன்னம்போல் நடக்கும் நடை. மாதர் - கண்ணகி. ஐயன் -அவள் தலைவனாகிய கோவலன். 176. அம்பி - ஓடம். பரிமுக அம்பி முதலியன அக் காலத்தின் நாகரிகச் சிறப்பைப் புலப்படுத்தும். 177. அரி - சிங்கம். அருந்துறை - ஓடக்கோலுக்கும் நிலைத்தலில்லாத கடத்தலரிய துறை என்க. ஓடமியக்குவோரால் இயக்கப்படும் பெருந்துறை. 179. இவர்தாம் உயர்குடி மக்களும் துறவியுமாதலின் பலர் செல்லுந்துறையிற் செல்லாது மற்றொரு சிறுதுறையில் மரப்புணை போகினர் என்றவாறு. இனி அடியார்க்கு நல்லார் இவர் பெருந்துறையிற் செல்லாது மற்றொரு துறையிற் சென்றது, முன்னர் வம்பப்பரத்தை வறுமொழியாளனொடு சாபமுறுதலின் என்பர். என்னை? நாடுகாண் காதையில் நீரணி மாடத்துக் காவிரியின் நெடுந்துறை போகி என்றாராகலின் அவர் அங்ஙனம் கூறினர். ஆயினும் ஆங்கு அவர் சாபமுற்றமைக்கு நெடுந்துறை போகியது காரணம் அன்றாகலின் அவ் விளக்கம் போலி என்க.

கோவலன் முதலிய மூவரும் மதுரையை வலங்கொண்டு செல்லுதல்

181 - 183 : வானவர் ............ போகி

(இதன்பொருள்.) வானவர் உறையும் மதுரை வலம் கொளத் தான் நனிபெரிதும் தகவுடைத்து என்று - தேவர்களும் வந்து தங்கும் சிறப்புடைய அம் மதுரையை வலம் சுற்றிச் சென்றக்கால் அச் செயல்தானும் மிகப்பெரிய அறச் செயலாம் தகுதியுடையதாம் என்று கருதி; ஆங்கு அரு மிளை உடுத்த அகழி சூழ் போகி - அவ்விடத்தே அழித்தற்கரிய காவற்காடு சூழ்ந்த அந் நகரத்து அகழியையும் ஒருசேர வலங்கொண்டு சென்று; என்க.

(விளக்கம்) மற்று அவர் எண்ணித் துணிந்தவாறே மதுரையை வலங்கொண்டு சென்ற அறப்பயனே அங்கு அவர் தம் பழவினை தீரப் பெற்று வானவர் எதிர்கொள வலவனேவா வானவூர்தியில் விண்ணகம் புக்கு விண்ணவர் ஆயினர் என்று கோடலும் தகும் என்க. இது கருதிப் போலும் அடிகளார் மதுரை வலங்கொளத் தான் நனிபெரிதும் தகவுடைத்து என ஒருபொருட் பன்மொழி அடை புணர்த்து ஓதினர் போலும். இன்னும் கண்ணகியார் மண்ணகத்தே பலர்புகழ் பத்தினித் தெய்வமாகத் திகழ்வதும் ஈண்டு நினைக்கத்தகும்.

184 - 190 : கருநெடு ............. காட்ட

(இதன்பொருள்.) கரு நெருங்குவளையும் ஆம்பலும் கமலமும் - அங்ஙனம் அகழியையும் வலங்கொண்டு செல்லும் பொழுது அவ்வகழியின் கண்ணவாகிய கரிய நெடிய குவளைமலரும் ஆம்பன் மலரும் தாமரை மலரும்; தையலும் கணவனும் தனித்து உறு துயரம் - தையலாருட் சிறந்த அக் கண்ணகியும் அவள் கணவனாகிய கோவலனும் தம்முள் ஒருவரை ஒருவர் பிரிந்து தனித்தனியே அந் நகரத்தே இனி எய்தும் துன்பத்தை; ஐயம் இன்றி அறிந்தன போல - சிறிதும் ஐயமின்றி நன்கு அறிந்து கொண்டவைபோல; பரிந்து பண் நீர் வண்டு இணைந்து ஏங்கி - அவர்கட் கிரங்கிப் பண்களின் தன்மையோடு தம்பால் முரலுகின்ற வண்டுகளாகிய தம் வாயினாலே அழுது ஏங்கி; கண்ணீர் கொண்டு - கண்ணீர் மல்கப்பெற்று; கால் உற நடுங்க - தத்தம் கால்களின் நிலைபெற மாட்டாவாய்ப் பெரிதும் நடுங்காநிற்பவும்; போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடுங் கொடி - பகைவர் அழியும் போர்செய்து வாகைசூடி அதற்கு அறிகுறியாகக் கிட்டுதற்கரிய புறமதிலுச்சியிலே உயர்த்திய கொடிச் சிலைகள்; வாரல் என்பன போல் - இந் நகரத்தினுள் வாராதே புறம் போமின் என்று கூறுவன போன்று; கை மறித்துக் காட்ட - துகிலாகிய தமது கைகளாலே மறித்துக் குறிப்பாற் காட்டாநிற்ப என்க.

(விளக்கம்) குவளை முதலிய மலர்கள் பரிந்து தம்பாற் சூழும் வண்டுகளாகிய வாயாலே இனைந்து ஏங்கி என்க. வண்டுகளின் முரற்சியொலி அம் மலர்களின் வாயினின்றும் எழுவதனாலே இங்ஙனம் கூறிய படியாம். கண் நீர் கொண்டு எனவும்; கள் நீர் கொண்டெனவும் கண்ணழித்து இருபொருளும் கொள்க. கால் உற நடுங்க என்பதற்கும் - காற்று உறுதலாலே நடுங்க எனவும் கால் உறுதற்கு (நிலைத்தற் கியலாமல்) நடுங்க எனவும் இருபொருளும் காண்க.

தென்றல் வீசுதலாலே கொடித்துகில் வடதிசை நோக்கி அசைகின்றன. அங்ஙனம் அசைவது தென்றிசை நோக்கி வருவாரை ஈண்டு வாராதொழிமின் எனக் கையை அசைத்துப் போக்குதல் போலுதலுணர்க. இவை தற்குறிப்பேற்றம்.

இனி, ஈண்டு எயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட என்னுமித் தற்குறிப்பேற்ற அணியை -

ஈண்டுநீ வரினு மெங்க ளெழிலுடை யெழிலி வண்ணன்
பாண்டவர் தங்கட் கல்லாற் படைத்துணை யாக மாட்டான்
மீண்டுபோ கென்றென் றந்த வியன்மதிற் குடுமி தோறும்
காண்டகு பதாகை யாடை கைகளாற் றடுப்ப போன்ற

எனவரும் பாரதச் செய்யுளினும் (வி. பாரதம்: வாசுதேவனை) காண்க.

அவர்கள் புறஞ்சேரி புகுதல்

191 - 196 : புள்ளணி ............... புக்கனர் புரிந்தென்

(இதன்பொருள்.) புள் அணி - பறவைகளாலே அழகு செய்யப்பட்ட; கழனியும் பொழிலும் - வயல்களும் பூம்பொழில்களும்; வெள்ள நீர்ப்பண்ணையும் மிக்க நீரையுடைய ஓடைகளும் தோட்டங்களும்; விரி நீர் ஏரியும் - விரிந்த நீரையுடைய ஏரியும்; காய்க்குலைத் தெங்கும் - நிரம்பிய காய்களையுடைய குலைகளையுடைய தென்னையும்; வாழையும் கமுகும் - வாழைத் தோட்டங்களும் கமுகந் தோட்டங்களும்; வேய்த்திரள் பந்தரும் - மூங்கிற்றிரளாலே அமைக்கப்பட்ட தண்ணீர்ப் பந்தரும்; பொருந்தி யாண்டும் அமையப் பெற்று; விளங்கிய இருக்கை - விளங்கிய குடியிருப்புகளை யுடைத்தாய்; அறம்புரி மாந்தர் அன்றிச் சேரா - துறவற மேற்கொண்டொழுகும் சான்றோரனறிக் கயவர்கள் ஒருபொழுதும் புதுதலில்லாத; மூதூர் புறஞ்சிறை புரிந்து புக்கனர் - அம் மதுரை மூதூரின் புறஞ்சேரிக் கண்ணே தாம் மேற்கொண்டுள்ள கோட்பாட்டிலே மனம் விரும்பி அம் மூவரும் புகுந்தனர் என்க.

(விளக்கம்) இது கீழ்த்திசை வாயிற்கு அயலதொரு முனிவர் இருப்பிடம் என்பர் அடியார்க்கு நல்லார். புரிந்து புக்கனர் என்று பொதுவாகக் கூறினமையான் கோவலன் கண்ணகியும் தமது குறிக்கோளின்கண் மனம் வைத்தவராய்ப் புக்கனர் என்றும் கவுந்தியடிகளார் தங்குறிக்கோளாகிய அறங்கேட்டலில் விரும்பிப் புக்கனர் என்றும் கொள்க.

இனி இதனை, பெண்ணணிகோலம் பெயர்ந்த பிற்பாடு கோவலன் முதல்வி அடிபொருந்தி இவள் வேனிற் கடுங்கதிர் பொறாஅள் உளியம் அகழா வேங்கை மறலா அரவு முதலியனவும் உறுகண் செய்யாதென்னவர் காக்கும் நாடு எனப் போதிய இசை பெரிது (ஆதலால்) இரவிடைக் கழிதற்கு ஏதம் இல் என நேர்ந்த கொள்கையின் அமையம் பார்த்திருந்தோர்க்குச் செல்வன் தோன்றிச் சொரிய, பார்மகள் வேண்டுதி என்றே உயிர்த்து அடங்க, கோவலன் மாதரை நோக்கி மறுகும் கப்பிடும் இடிதரும் இனையாதேகெனக் காட்டிக் கேட்டுக் கழிந்து கோழி இயம்ப உறைபதிச் சேர்ந்து இருத்தி நீர்தலைப் படுவோன் புலம்புறுதலின் திரியக் கவுசிகன் தெரியான் கூறக்கேட்டு நீ கூறிய உரையீது எனக் கண்டேன் என எய்திக் கோசிகமாணி உரைப்போன் ஓலைநீட்ட, கைவிடலீயான் விரித்து உணர்வோன் உணர்ந்து நீங்கிக் கொடுத்துப் போக்கிப் பாணரிற் சேர்ந்து, கேட்டு. கூறுமின் என, தென்றல் வந்தது தகைக்குநர் இல்லெனப் பெயர்ந்தனர் எதிர்கொளத் தொழுது மரப்புணை போகி எய்திச் சூழ் போகி நடுங்கக் காட்ட, புறஞ்சிறை மூதூர் புரிந்து புக்கனர் என இயைத்திடுக.

பா - நிலைமண்டில ஆசிரியப்பா.

புறஞ்சேரியிறுத்த காதை முற்றிற்று.
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 23, 2012, 02:19:45 PM
14. ஊர்காண் காதை

அஃதாவது - முற்காதையிற் கூறியவாறு கோவலன் முதலிய மூவரும் மதுரையின்கண் அறம்புரி மாந்தர் அன்றி மற்றோர் சேராத புறஞ்சேரி புகுந்த பின்னர்க் குணதிசையில் ஞாயிறு தோன்றிய பின்னர் அரண்மனைக்கண் காலைமுரச முழங்கிற்றாக, அதுகேட்ட கோவலன் தான் கருதிவந்த தொழில் தொடங்கற் பொருட்டு அந்நகரத்தினூடு புகுந்து அதற்கு ஆவனதேர்ந்து வருதற்குக் கண்ணகியைக் கவுந்தியடிகளார் காப்பினுள் வைத்துத் தான் தமியனாக அந்த நகரத்தினூடு புகுந்து ஆங்குள்ள வீதிகள் பலவற்றையும் சுற்றிப் பார்த்து அந்நகரத்தின் பேரழகைக் கண்டுமகிழ்ந்து மீண்டும் புறஞ்சேரிக்கு வந்த செய்தியைக் கூறும் பகுதி என்றவாறு.

புறஞ்சிறைப் பொழிலும் பிறங்குநீர்ப் பண்ணையும்
இறங்குகதிர்க் கழனியும் புள்ளெழுந் தார்ப்பப்
புலரி வைகறைப் பொய்கைத் தாமரை
மலர்பொதி அவிழ்த்த உலகுதொழு மண்டிலம்
வேந்துதலை பனிப்ப ஏந்துவாட் செழியன்  5

ஒங்குயர் கூடல் ஊர்துயி லெடுப்ப
நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும்
உவணச் சேவ லுயர்த்தோன் நியமமும்
மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும்
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்  10

அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்
மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்
வால்வெண் சங்கொடு வகைபெற் றோங்கிய
காலை முரசங் கனைகுரல் இயம்பக்
கோவலன் சென்று கொள்கையி னிருந்த  15

காவுந்தி ஐயையைக் கைதொழு தேத்தி
நெறியின் நீங்கியோர் நீர்மையே னாகி
நறுமலர் மேனி நடுங்குதுய ரெய்த
அறியாத் தேயத் தாரிடை யுழந்து
சிறுமை யுற்றேன் செய்தவத் தீர்யான்  20

தொன்னகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு
என்னிலை யுணர்த்தி யான்வருங் காறும்
பாதக் காப்பினள் பைந்தொடி யாகலின்
ஏத முண்டோ அடிக ளீங் கென்றலும்
கவுந்தி கூறுங் காதலி தன்னொடு  25

தவந்தீர் மருங்கின் தனித்துயர் உழந்தோய்
மறத்துறை நீங்குமின் வல்வினை யூட்டுமென்
றறந்துறை மாக்கள் திறத்திற் சாற்றி
நாக்கடிப் பாக வாய்ப்பறை யறையினும்
யாப்பறை மாக்கள் இயல்பிற் கொள்ளார்  30

தீதுடை வெவ்வினை யுருத்த காலைப்
பேதைமை கந்தாப் பெரும்பே துறுவர்
ஒய்யா வினைப்பயன் உண்ணுங் காலைக்
கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்
பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும்  35

உருவி லாளன் ஒறுக்குந் துன்பமும்
புரிகுழல் மாதர்ப் புணந்தோர்க் கல்லது
ஒருதனி வாழ்க்கை உரவோர்க் கில்லை
பெண்டிரும் உண்டியும் இன்ப மென்றுலகிற்
கொண்டோ ருறூஉங் கொள்ளாத் துன்பம்  40

கண்டன ராகிக் கடவுளர் வரைந்த
காமஞ் சார்பாக் காதலின் உழந்தாங்கு
ஏமஞ் சாரா இடும்பை எய்தினர்
இன்றே யல்லால் இறந்தோர் பலரால்
தொன்று படவரூஉந் தொன்மைத் தாதலின்  45

தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன்
வேத முதல்வற் பயந்தோ னென்பது
நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ
வல்லா டாயத்து மண்ணர சிழந்து   50

மெல்லியல் தன்னுடன் வெங்கா னடைந்தோன்
காதலிற் பிரிந்தோ னல்லன் காதலி
தீதொடு படூஉஞ் சிறுமைய ளல்லள்
அடவிக் கானகத் தாயிழை தன்னை
இடையிருள் யாமத் திட்டு நீக்கியது  55

வல்வினை யன்றோ மடந்தைதன் பிழையெனச்
சொல்லலும் உண்டேற் சொல்லா யோநீ
அனையையும் அல்லை ஆயிழை தன்னொடு
பிரியா வாழ்க்கை பெற்றனை யன்றே
வருந்தா தேகி மன்னவன் கூடல்   60

பொருந்துழி யறிந்து போதீங் கென்றலும்
இளைசூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த
இலங்குநீர்ப் பரப்பின் வலம்புண ரகழியில்
பெருங்கை யானை இனநிரை பெயரும்
சுருங்கை வீதி மருங்கிற் போகிக்   65

கடிமதில் வாயில் காவலிற் சிறந்த
அடல்வாள் யவனர்க் கயிராது புக்காங்கு
ஆயிரங் கண்ணோன் அருங்கலச் செப்பு
வாய்திறந் தன்ன மதிலக வரைப்பில்
குடகாற் றெறிந்து கொடுநுடங்கு மறுகின்  70

கடைகழி மகளிர் காதலஞ் செல்வரொடு
வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை
விரிபூந் துருத்தி வெண்மண லடைகரை
ஓங்குநீர் மாடமொடு நாவா யியக்கிப்
பூம்புணை தழீஇப் புனலாட் டமர்ந்து  75

தண்ணறு முல்லையுந் தாழ்நீர்க் குவளையும்
கண்ணவிழ் நெய்தலுங் கதுப்புற அடைச்சி
வெண்பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த
தண்செங் கழுநீர்த் தாதுவிரி பிணையல்
கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு  80

தெக்கண மலயச் செழுஞ்சே றாடிப்
பொற்கொடி மூதூர்ப் பொழிலாட் டமர்ந்தாங்கு
எற்படு பொழுதின் இளநிலா முன்றில்
தாழ்தரு கோலந் தகை பாராட்ட
வீழ்பூஞ் சேக்கை மேலினி திருந்தாங்கு  85

அரத்தப் பூம்பட் டரைமிசை யுடீஇக்
குரற்றலைக் கூந்தற் குடசம் பொருந்திச்
சிறுமலைச் சிலம்பின் செங்கூ தாளமொடு
நறுமலர்க் குறிஞ்சி நாண்மலர் வேய்ந்து
குங்கும வருணங் கொங்கையி னிழைத்துச்  90

செங்கொடு வேரிச் செழும்பூம் பிணையல்
சிந்துரச் சுண்ணஞ் சேர்ந்த மேனியில்
அந்துகிர்க் கோவை அணியொடு பூண்டு
மலைச்சிற கரிந்த வச்சிர வேந்தற்குக்
கலிகெழு கூடற் செவ்வணி காட்டக்  95

காரர சாளன் வாடையொடு வரூஉம்
கால மன்றியும் நூலோர் சிறப்பின்
முகில்தோய் மாடத் தகில்தரு விறகின்
மடவரல் மகளிர் தடவுநெருப் பமர்ந்து
நறுஞ்சாந் தகலத்து நம்பியர் தம்மொடு  100

குறுங்கண் அடைக்கும் கூதிர்க் காலையும்
வளமனை மகளிரும் மைந்தரும் விரும்பி
இளநிலா முன்றிலின் இளவெயில் நுகர
விரிகதிர் மண்டிலந் தெற்கேர்பு வெண்மழை
அரிதில் தோன்றும் அச்சிரக் காலையும்  105

ஆங்க தன்றியும் ஓங்கிரும் பரப்பின்
வங்க ஈட்டத்துத் தொண்டியோ ரிட்ட
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்
தொகுகருப் பூரமுஞ் சுமந்துடன் வந்த
கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்  110

வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்துப் பனியர சியாண்டுளன்
கோதை மாதவி கொழுங்கொடி யெடுப்பக்
காவும் கானமும் கடிமல ரேந்தத்
தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து  115

மன்னவன் கூடல் மகிழ்துணை தழூஉம்
இன்னிள வேனில் யாண்டுளன் கொல்லென்று
உருவக் கொடியோ ருடைப்பெருங் கொழுநரொடு
பருவ மெண்ணும் படர்தீர் காலைக்
கன்றம ராயமொடு களிற்றினம் நடுங்க  120

என்றூழ் நின்ற குன்றுகெழு நன்னாட்டுக்
காடுதீப் பிறப்பக் கனையெரி பொத்திக்
கோடையொடு புகுந்து கூட லாண்ட
வேனில் வேந்தன் வேற்றுப்புலம் படர
ஓசனிக் கின்ற உறுவெயிற் கடைநாள்  125

வையமுஞ் சிவிகையும் மணிக்கால் அமளியும்
உய்யா னத்தின் உறுதுணை மகிழ்ச்சியும்
சாமரைக் கவரியுந் தமனிய அடைப்பையும்
கூர்நுனை வாளுங் கோமகன் கொடுப்பப்
பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப்  130

பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து
செம்பொன் வள்ளத்துச் சிலதிய ரேந்திய
அந்தீந் தேறல் மாந்தினர் மயங்கிப்
பொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும்
நறுமலர் மாலையின் வறிதிடங் கடிந்தாங்கு  135

இலவிதழ்ச் செவ்வாய் இளமுத் தரும்பப்
புலவிக் காலத்துப் போற்றா துரைத்த
காவியங் கண்ணார் கட்டுரை எட்டுக்கும்
நாவொடு நவிலா நகைபடு கிளவியும்
அஞ்செங் கழுநீர் அரும்பவிழ்த் தன்ன  140

செங்கயல் நெடுங்கட் செழுங்கடைப் பூசலும்
கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை சுருளத்
திலகச் சிறுநுதல் அரும்பிய வியரும்
செவ்வி பார்க்குஞ் செழுங்குடிச் செல்வரொடு
வையங் காவலர் மகிழ்தரும் வீதியும்  145

சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின்
முடியர சொடுங்குங் கடிமனை வாழ்க்கை
வேத்தியல் பொதுவியல் எனவிரு திறத்து
மாத்திரை யறிந்து மயங்கா மரபின்
ஆடலும் வரியும் பாணியுந் தூக்கும்  150

கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து
நால்வகை மரபின் அவினயக் களத்தினும்
ஏழ்வகை நிலத்தினும் எய்திய விரிக்கும்
மலைப்பருஞ் சிறப்பின் தலைக்கோ லரிவையும்
வாரம் பாடுந் தோரிய மடந்தையும்   155

தலைப்பாட்டுக் கூத்தியும் இடைப்பட்டுக் கூத்தியும்
நால்வேறு வகையின் நயத்தகு மரபின்
எட்டுக் கடைநிறுத்த ஆயிரத் தெண்கழஞ்சு
முட்டா வைகல் முறைமையின் வழாஅத்
தாக்கணங் கனையார் நோக்குவலைப் பட்டாங்கு  160

அரும்பெறல் அறிவும் பெரும்பிறி தாகத்
தவத்தோ ராயினுந் தகைமலர் வண்டின்
நகைப்பதம் பார்க்கும் இளையோ ராயினும்
காம விருந்தின் மடவோ ராயினும்
ஏம வைகல் இன்றுயில் வதியும்   165

பண்ணுங் கிளையும் பழித்த தீஞ்சொல்
எண்ணெண் கலையோர் இருபெரு வீதியும்
வையமும் பாண்டிலும் மணித்தேர்க் கொடுஞ்சியும்
மெய்புகு கவசமும் வீழ்மணித் தோட்டியும்
அதள்புனை அரணமும் அரியா யோகமும்  170

வளைதரு குழியமும் வால்வெண் கவரியும்
ஏனப் படமும் கிடுகின் படமும்
கானப் படமும் காழூன்று கடிகையும்
செம்பிற் செய்நவும் கஞ்சத் தொழிலவும்
வம்பின் முடிநவும் மாலையிற் புனைநவும்  175

வேதினத் துப்பவும் கோடுகடை தொழிலவும்
புகையவும் சாந்தவும் பூவிற் புனைநவும்
வகைதெரி வறியா வளந்தலை மயங்கிய
அரசுவிழை திருவின் அங்காடி வீதியும்
காக பாதமும் களங்கமும் விந்துவும்  180

ஏகையும் நீங்கி இயல்பிற் குன்றா
நூலவர் நொடிந்த நுழைநுண் கோடி
நால்வகை வருணத்து நலங்கேழ் ஒளியவும்
ஏகையும் மாலையும் இருளொடு துறந்த
பாசார் மேனிப் பசுங்கதிர் ஒளியவும்  185

பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும்
விதிமுறை பிழையா விளங்கிய சாதியும்
பூச உருவின் பொலந்தெளித் தனையவும்
தீதறு கதிரொளித் தெண்மட் டுருவவும்
இருள்தெளித் தனையவும் இருவே றுருவவும்  190

ஒருமைத் தோற்றத் தைவேறு வனப்பின்
இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்
காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும்
தோற்றிய குற்றந் துகளறத் துணிந்தவும்
சந்திர குருவே அங்காரக னென   195

வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்
கருப்பத் துளையவும் கல்லிடை முடங்கலும்
திருக்கு நீங்கிய செங்கொடி வல்லியும்
வகைதெரி மாக்கள் தொகைபெற் றோங்கிப்
பகைதெறல் அறியாப் பயங்கெழு வீதியும்  200

சாத ரூபம் கிளிச்சிறை ஆடகம்
சாம்பூ நதமென ஓங்கிய கொள்கையின்
பொலந்தெரி மாக்கள் கலங்கஞ ரொழித்தாங்கு
இலங்குகொடி யெடுக்கும் நலங்கிளர் வீதியும்
நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும்  205

பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்
நிறைக்கோல் துலாத்தர் பறைக்கட் பராரையர்
அம்பண வளவையர் எங்கணுந் திரிதரக்
கால மன்றியும் கருங்கறி மூடையொடு  210

கூலங் குவித்த கூல வீதியும்
பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும்
அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும்
மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து
விசும்பகடு திருகிய வெங்கதிர் நுழையாப்  215

பசுங்கொடிப் படாகைப் பந்தர் நீழல்
காவலன் பேரூர் கண்டுமகிழ் வெய்திக்
கோவலன் பெயர்ந்தனன் கொடிமதிற் புறத்தென்.

உரை

ஞாயிறு தோன்றுதல்

1-6 : புறஞ்சிறை ............ துயிலெடுப்ப

(இதன்பொருள்.) புறஞ் சிறைப் பொழிலும் பிறங்கும் நீர்ப் பண்ணையும் இறங்கு கதிர்க் கழனியும் - கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளாரோடு விரும்பிப் புகுந்த அம் மூதூர்ப் புறஞ்சேரி யிடத்திலமைந்த பூம்பொழில்களினும் விளங்குகின்ற நீர்மிக்க ஓடையையுடைய பண்ணைகளினும் வளைந்து முற்றிய நெற்கதிர் நிறைந்த வயல்களினும்; புள் எழுந்து ஆர்ப்ப - இரவுப் பொழுதெல்லாம் இனிதினுறைந்த காக்கை முதலிய பல்வேறு வகைப் பறவைகளும் தமதியற்கை யறிவினாலே தனது வருகையை யுணர்ந்து துயில் எழுந்து ஆரவாரியா நிற்ப; வைகறைப் புலரி பொய்கைத் தாமரை மலர் பொதி அவிழ்த்த - வைகறையாமத்தின் இறுதியாகிய இருள் புலர்கின்ற பொழுதே பொய்கைகளிடத்தேயுள்ள தாமரையினது நாளரும்புகளின் புரி நெகிழ்த்து மலர்வித்த; உலகு தொழு மண்டிலம் - உலகத்துச் சான்றோரெல்லாம் தொழுகின்ற சிறப்புடைய ஞாயிற்று மண்டிலமானது தனது வெளிப்பாட்டினாலே; வேந்து தலைபனிப்ப ஏந்துவாட் செழியன் ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப - பகை வேந்தர் தம் தலைகள் அச்சத்தாலே நடுங்கும்படி உறை கழித்து விதிர்த்து ஏந்துகின்ற வாளையுடைய பாண்டியனது புகழான் ஓங்கி வண்மையானுமுயர்ந்த அம் மதுரையின் வாழ்வோரை எல்லாம் துயிலுணர்த்தா நிற்ப வென்க.

(விளக்கம்) பறவைகள் வைகறைப் பொழுதிலேயே கதிரவன் வரவுணர்ந்து துயிலெழுந்து ஆரவாரிக்கும் இயல்புடையன ஆதலின் அவற்றை முற்கூறினர். தாமரைமலர்களில் செவ்வியரும்புகள் கதிரவன் தோன்றுகின்ற பொழுதே இளவெயில் கண்டு மலர்தலின் அவற்றை இரண்டாவதாகவும் மாக்கள் கதிரவன் தோன்றிய பின்னரே எழுதலின் இறுதியில் ஊர்துயில் எடுப்ப எனவும் முறைப்படுத்தோதினர். இனி மாக்கள் தாம் கதிரவனாற் றுயிலெழுப்புந் துணையும் துயில்வார். அவர் தம்முட் சான்றோர் பறவைகளோடொப்ப வைகறையாமத்தே துயில் எழுந்து காலைக்கடன் கழித்து நீராடி அவன் தோன்றும்பொழுது அவன் ஒளியிலே இறைவனுடைய அருள் ஒளியினைக் கண்டு அகங்குழைந்து கைகூப்பி வணங்குவர் என்பதும் இஃது எல்லாச் சமயத்தார்க்கும் உடன்பாடாம் என்பதும் தோன்ற உலகு தொழுமண்டிலம் என அடிகளார் விதந்தோததுலுணர்க.

மதுரையில் காலைமுரசம் கனைகுரலியம்பு மிடங்கள்

7 - 14 : நுதல்விழி ............... இயம்ப

(இதன்பொருள்.) நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும் - அவ் விடியற் பொழுதிலேயும் இறைவி திருக்கண் புதைத்த பொழுது தனது நெற்றியின்கண் தோற்றுவித்து விழித்த கண்ணையுடைய இறைவனது திருக்கோயிலினும்; உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும் - செம்பருந்துச் சேவலைக் கொடியாகவுயர்த்த திருமால் திருக்கோயிலினும்; மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும் - மேழியாகிய படைக்கலத்தை வலக்கையின் ஏந்திய பலதேவர் திருக்கோயிலினும்; கோழிச் சேவல் கொடியோன் கோட்டமும் - கோழிச் சேவலாகிய கொடியையுடைய முருகவேள் திருக்கோயிலினும்; அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் - தத்தம் சமயத்திற் கியன்ற அறங்கள்தாம் தம்மிடத்தேயே விளக்க மெய்தியிருக்கின்ற துறவோர் உறைகின்ற தவப்பள்ளிகளினும்; மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் - மறப்பண்புடைய வஞ்சி முதலிய திணைகளும் அவற்றிற்குரிய துறைகளும் விளங்குதற்கிடனான மன்னவனுடைய அரண்மனையினும்; வால் வெண் சங்கோடு - தூய வெள்ளிய சங்கு முழக்கத்தோடே கூடிய; வகைபெற்று ஓங்கிய காலைமுரசம் கனைகுரல் இயம்ப - பலவகைப் பட்டுச் சிறந்த காலைமுரசங்களினது செறிந்த முழக்கங்கள் முழங்காநிற்ப என்க.

(விளக்கம்) 7. இறைவன் - சிவபெருமான். இறைவன் நுதலின் கண் நெருப்புவிழி புறப்பட விட்டமைக்கு வேறு காரணம் கூறுவாருமுளர். நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலை ஈண்டு அடிகளார் முற்கூறி யிருத்தலும் இங்ஙனமே இந்திரவிழாவெடுத்த காதையில் பூம்புகார் நகரத்தும் பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் என்று முற்படக் கூறியிருத்தலானும் அடிகளார் காலத்தே தமிழகத்தே சமயங்கள் பற்பல இருப்பினும் சைவசமயமே அவற்றுள்ளும் தலைசிறந்ததாகத் திகழ்ந்த தென்பது தேற்றமாம். 8. உவணம் - செம்பருந்து (கருடன்). 9. மேழி - கலப்பை. வெள்ளை: ஆகுபெயர் - வெண்ணிறமுடைய பலதேவர். 10. பிற பறவையினத்துச் சேவலை ஒழித்தற்கும் கோழியிற் பெடையை யொழித்தற்கும் கோழிச் சேவல் எனல் வேண்டிற்று. 11. அறத்துறை விளங்கிய அறவோர் என்றது பல்வேறு சமயங்கள் பற்றித் துறவறம் மேற்கொண்டுள்ள துறவிகளை இவர்தம் ஒழுக்கத்தானே அவ்வவர் சமயங்கூறும் அறங்களும் அவ்வவர்பால் விளங்கித் தோன்றுதலாலே அறத்துறை விளங்கிய அறவோர் என்றார். இதனால் அறவோர் தமது கூற்றிற்குத் தாமே சான்றாக நிற்றல் வேண்டும். அங்ஙனமன்றிச் சொல்லால் மட்டும் அறங்கூறுதல் பயனில் செயலாம் என்பது அடிகளார் கருத்தாதல் பெற்றாம். இங்ஙனமே மறத்துறைக்குத் தலைவனாகிய மன்னவன்றானே அம்மறப்பண்பிற்குச் சான்றாகத் திகழ்தல்வேண்டும் என்பதும் அவர், 12. மறத்துறை விளங்கிய மன்னவன் என்றதனாற் போந்தமையும் உணர்க.

13. கோயில்களினும் அரண்மனையினும் அகத்தே முழங்கும் மங்கலச் சங்கொலியோடு விரவிய காலைமுரசங் கனை குரலியம்ப என்க. உலகு தொழுமண்டிலம் ஊர் துயிலெடுப்பக் காலைமுரசம் முழங்க என்றாரேனும் வைகறை யாமத்தே முழங்கத் தொடங்கிய காலைமுரசங்களின் முழக்கம் ஊர் துயிலெழுந்துணையும் இடையறாது முழங்கின என்பதே கருத்தாகக் கொள்க. என்னை? அடிகளார் உலகு தொழுமண்டிலம் தோன்று முன்னரே இம்முரசம் முழங்குதலானன்றோ வைகறைப் பொழுதிலே மதுரைக்கு அணித்தாக வந்த கண்ணகி முதலியோரை அருந்தெறற் கடவுள் அகன் பெருங்கோயில் முதலியவற்றில் முழங்கிய காலைமுரசக் கனைகுரல் ஓதை முதலியவற்றின் ஆர்ப்பொலி எதிர்கொள ஆரஞர் நீங்கினர் என்று புறஞ்சேரி இறுத்த காதையினும் ஓதுவாராயினர் என்க - (புறஞ்சேரி - 137 - 50.)

இனி அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் என்னும் அடிக்கு அடியார்க்கு நல்லார் அறமும் அதன் துறையும் விளங்குதற்குக் காரணமான அறவோர்களுடைய இருப்பிடங்களும் என உரைப் பொருள் கூறக் கருதி அதற்கேற்ப விளக்கங் கூறினர். இவ்வுரையும் விளக்கங்களும் பொருந்தாமை பள்ளி என்ற ஒரு சொல்லே காட்டும். இச் சொல் தமது கருத்திற்குப் பொருந்தாதது கண்டு ஈண்டுப் பள்ளி என்றது அவ்விடங்களை எனவும் கூறினர். அவர் கருத்தின்படி இல்லறத்தார் முன்றிலிலுங் காலைமுரசம் இயம்புதல் வேண்டும். அது மரபன்மையின் அவ்வுரை போலியே என்றொழிக.

இனி, 11 - 12. அறத்துறை மறத்துறை என்பவற்றிற்கு அவர்கூறும் விளக்கம் வருமாறு: அறத்துறை - அறமும் அறத்தின் துறையுமென உம்மைத் தொகை. அறமாவது இருவகைத்து: இல்லறமும் துறவறமும் என. அவற்றுள், இல்லறமென்பது கற்புடை மனைவியோடு இல்லின்கண் இருந்து செய்யும் அறம்.

அதன் துறையாவன - தன்னை யொழிந்த மூவர்க்கும் துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் தேவர்க்கும் முனிவர்க்கும் விருந்தினர்க்கும் சுற்றத்தார்க்கும் பிறர்க்கும் துணையாதலும் வேள்வி செய்தலும் சீலங்காத்தல் முதலியனவும் அருளும் அன்பு முடையனாதலும் பிறவும்.

இனித் துறவறமாவது நாகந் தோலுரித்தால் போல அகப்பற்றும் புறப்பற்றுமற்று இந்திரீய வசமறுத்து முற்றத்துறத்தல்.

அதன் துறையாவன - சரியை கிரியை யோகம் ஞான மென்பன. அவற்றுள் சரியை அலகிடல் முதலியன. கிரியை பூசை முதலியன.

யோகம் எண்வகைய : அவை - இயமம், நியமம், ஆசனம், வளி நிலை, தொகை நிலை, பொறைநிலை, நினைவு, சமாதி என்பன.

அவற்றுள் - பொய் கொலை களவே காமம் பொருணசை இவ்வகை யைந்தும் அடக்கிய தியமம்; எனவும், பெற்றதற் குவத்தல் பிழம்பு நனி வெறுத்தல் கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை பூசனைப் பெரும்பய மாசாற் களித்தலொடு பயனுடை மரபி னியம மைந்தே; எனவும், நிற்றல் இருத்தல் கிடத்த னடத்தலென் றொத்த நான்கினொல்கா நிலைமையொ டின்பம்பயக்குஞ் சமய முதலிய அந்தமில் சிறப்பினாசனமாகும்; எனவும்; உந்தியொடு புணர்ந்த விருவகை வளியும் தந்த மியக்கந் தடுப்பது வளிநிலை எனவும்; பொறியுணர்வெல்லாம் புலத்தின் வழாமை ஒருவழிப் படுப்பது தொகைநிலை யாமே; எனவும், மனத்தினை யொருவழி புணர்ப்பது பொறைநிலை; எனவும், நிறுத்திய வம்மன நிலைதிரி யாமல் குறித்த பொருளொடு கொளுத்துவது நினைவே; எனவும், ஆங்ஙனம் குறித்த வம்முதற் பொருளொடு தான்பிற னாகாத் தகையது சமாதி, எனவும் வருவனவற்றால் அறிக.

12. மறத்துறை - மறமும் அதன் துறைகளும். இதுவும் உம்மைத்தொகை.

அதன் துறை எழுவகைய. அவை: வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பையென வினவ எனவரும்.

இனி இப்பகுதியில் கோயில் நியமம் நகரம் கோட்டம் பள்ளி என ஒருபொருட்குப் பன்மொழி கூறப்பட்டிருத்தல் பரியாய வணி என்பர்.

கோவலன் கவுந்தியடிகளாரை வணங்கிக் கூறுதல்

15 - 24 : கோவலன் ............... ஈங்கென்றலும்

(இதன்பொருள்.) கோவலன் சென்று கொள்கையின் இருந்த காவுந்தியையையைக் கைதொழுது ஏத்தி - அப்பொழுது கோவலன் ஆங்கொரு சூழலிலே தமது கோட்பாட்டிற் கிணங்க அந்த விடியற்காலையிலே தருமத்தியானம் என்னும் யோகத்தில் அழுந்தி யிருந்த கவுந்தியடிகளார்பாற் சென்று கைகுவித்து வணங்கி; செய் தவத்தீர் - இடையறாது செய்த தவத்தினையுடைய அடிகளே! நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி - அடியேன் அறநெறியினின்றும் நீங்கிய கயவர்தம் நீர்மையுடையேன் ஆகி; நறுமலர் மேனி நடுங்கு துயர் எய்த - நறிய மலர்போலும் மென்மையுடைய திருமேனியையுடைய இவள் துன்பத்தாலே நடுங்கிப் பெரிதும் துன்பமுறும்படி; அறியாத் தேயத்து ஆர் இடை உழந்து - முன்னம் கனவினும் கண்டறியாத நாட்டிலே யுற்றேன் - இளிவர வெய்தினேன்; தொல் நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு என்னிலை உணர்த்தி யான் வருங்காறும் - இந்தப் பழைய நகரத்தின்கண் வாழ்கின்ற எம்மினத்தவராகிய பெருங்குடி வாணிகரைக் கண்டு அடியேனது நிலைமை அறிவித்து மீண்டும் யான் இங்கு வருமளவும்; பைந்தொடி பாதக்காப்பினள் ஆகலின் - இவள்தான் பண்டுபோன்றே அடிகளாரின் திருவடிகளாகிய காவலையுடையள், ஆதலாலே; ஈங்கு ஏதம் உண்டோ - இவ்விடத்தே இவட்கு வரும் துன்பம் யாதும் இல்லையன்றோ! என்றலும் - என்று பணிவுடன் கூறாநிற்ப என்க.

(விளக்கம்) 15. கொள்கை - அறநினைவினூடு அழுந்துதல். இங்ஙனம் அறக்கோட்பாட்டுகள் மூழ்கியிருத்தலை தர்மத்தியானம் - அல்லது சுபோபயோகம் என்பர் ஆருகதர். இத் தியானம் தீய எண்ணங்கள் தன்கண் நிகழாதவாறு தடுத்துத் தூய எண்ணங்களிலேயே தன் நெஞ்சத்தைப் பயிற்றுவிக்கு மொரு பயிற்சியாம். வியவகார ரத்தினத்திரயபாவனை என்பது மிது. கோவலன் சென்று தொழுதனன் என்றதனால் அடிகளார் தனித்திருந்தமையும் கொள்கையினிருந்த என்றதனால் தியானத்தோடிருந்தமையும் பெற்றாம்.

இனி, முதல்நாள் வழியிடைப் புரிநூன்மார்பர் உறைபதியின்கண் கோசிகமாணி கொடுத்த மாதவி யோலையை ஓதியவழி அவள்தான் நீயிர் குரவர்பாணி அன்றியும் குலப்பிறப்பாட்டியோடு இரவிடைக் கழிதற்கு என்பிழைப்பு? அறியாது கையறு நெஞ்சம் கடியல் வேண்டும் என்றவள் மலர்க்கையான் எழுதிய வரிகளை யோதியதுமே கோவலன் மாதவி தீதிலள், எனவும் இங்ஙனம் குலப்பிறப்பாட்டியோடு இரவிடைக் கழிதற்குக் காரணம் தன் தீதே என்று அதுகாறும் மாதவி வஞ்சஞ் செய்தாள் என்னும் எண்ணம் நெஞ்சினின் றுழக்கிய தளர்ச்சி நீங்கினன் என அடிகளாரே கூறுதலின் ஈண்டுக் கோவலன் 17 - நெறியின் நீங்கியோர் நீர்மையேனாகி என்றதற்கு இல்லற நெறியினீங்கிக் கணிகையர் வாழ்க்கையோடு பொருந்தினமையானும் ........ அங்ஙனம் கூறினன் என்பார் உரை போலியாம். என்னை? அந்தக் காலத்தே விழுக்குடிப் பிறந்த மைந்தர் தாமும் பரத்தையர் கேண்மையை ஓர் இழுக்கெனக் கொள்ளாமையை இவர்கள் கருதிற்றிலர். மற்று அம் மாதவியே நீயிர் குலப் பிறப்பாட்டியோடு இரவிடைக் கழிதல் நும்குடிக்கு மாசாகாதே என்று வினவிய மாதவியின் வினாவிற்கிணங்க அதனையே ஈண்டு நெறியினீங்கியோர் நீர்மையென்று குறித்தனன் என்றுணர்க. இனி, கனாத்திறம் உரைத்த காதைக்கண் சலம்புணர்கொள்கைச் சலதியோடாடி என மாதவியை வெறுத்துரைத்ததும் அவள் சலம்புணர் கொள்கையினள் என்று அவன் அவளைத் தவறுடையளாகக் கருதினமையாலேதான் என்க. மேலும் கொலைக்களக்காதையினும் தான் அவர் மாதவியோடாடியது தவறு என்று கொள்ளாமையையும் கற்பின் செல்வியாகிய கண்ணகியும் மாதவியைக் குறை கூறாப் பெருந்தகைமை யுடையளாதலையும் அக் காதையிற் கூறுதும்.

இனி, தொன்னகர் மருங்கின் வணிகர்க்கு என்தன்மையுணர்த்திவருந்துணையும் வெட்கு ஏதுமின்றாகக் காத்தருளவேண்டும் எனக் கருதியவன் தெளிந்து போதுவல் யானும் போதுமின் என்ற வன்றே இவள் நும்பாதமாகிய காவலையுடையள் ஆதலின் இவட்கு இனி ஓரேத முண்டோ! இல்லை, என்று கையெடுத்துக் கூறினானாக வென்க என வகுத்த அடியார்க்கு நல்லார் உரை சாலவும் இனியவுரையாதல் நுண்ணிதின் உணர்க.

இனி, தொன்னகர் மருங்கின் வணிகர்க்கு என்னிலை கூறி யான் வருங்காறும் என்னாது மன்னர் பின்னோர்க்கு என வணிகரைக் குறித்தது தானும் இந்நகரத்துவணிகர் தம்முள்ளும் மாசாத்துவானும் மாநாய்கனும் போலப் பெருநில முழுதாளும் பெருமகன்றலை வைத்த ஒரு தனிக் குடிகளாய் உயர்ந்தோங்கு செல்வத்து வணிகர்க்கு என்றுணர்த்துதற் பொருட்டென்க. ஏதம் உண்டோ என்னும் வினா அதன் எதிர்மறைப் பொருளை வற்புறுத்து நின்றது.

25 - கவுந்தி என்பது தொடங்கி 61 - போதீங்கென்றலும் என்னுந் துணையும் கவுந்தி அடிகளார் மனங்கனிந்து கோவலனுக்குக் கூறும் அமிழ்தனைய ஆறுதன் மொழியாய ஒரு தொடர்.

கவுந்தியடிகளார் கனிவுரைகள்

25 - 32 : கவுந்தி ........... பேதுறுவர்

(இதன்பொருள்.) கவுந்தி கூறும் - இவ்வாறு தன் செயலுக்குத் தானே கழிவிரக்கங் கொண்டு கூறிய கோவலன் மொழியைக் கேட்ட கவுந்தியடிகளார் கூறுவார்; தவம் தீர் மருங்கின் தனித்துயர் உழந்தோய் - முற்பிறப்பில் செய்த நல்வினைப் பயன் தீர்ந்தவிடத்தே முற்செய்த தீவினைகளின் பயனாகத் தந்தை முதலிய சுற்றத்தாரையும் பொருளையும் பிரிந்து நின் காதலியோடும் இங்ஙனம் வந்து தனிமையுற்றுப் பெரிதும் வருந்திய ஐயனே! ஈதொன்று கேள்! அறத்துறை மாக்கள் - உலகினர்க்கு அறங்களை அறிவுறுத்தும் சான்றோர்தாம்; வல்வினை ஊட்டும் - மக்களே! ஒருவன் செய்த தீவினையானது அதன் பயனாகிய துன்பத்தை அவனை ஒருதலையாக நுகர்வியா தொழியாது கண்டீர்! ஆதலால்; மறத்துறை நீங்குமின் - நீவிரும் நுமக்குத் துன்பம் வாராதொழிதல் வேண்டும் என்னும் கருத்துடையீராயின் பிற உயிர்க்குத் துன்பஞ் செய்யும் தீவினைச் செயலினின்றும் நீங்கி யுய்யுங்கோள்; எனத் திறத்தில் - என்று கேட்போர் அறியு முறையிலே; நா கடிப்பு ஆக வாய்ப்பறை சாற்றி அறையினும் - தமது செந்நாவாகிய குணில்கொண்டு வாயாகிய பறையை முழக்கி அறிவுறுத்திய வழியும்; யாப்பு அறை மாக்கள் இயல்பின் கொள்ளார் - மனத்திண்மையற்ற மாக்கள் தமக்கியன்ற இயல்பு காரணமாக அவற்றைக் கொள்ளாதவராய்ப் பின்னும் தீவினையை நயந்து செய்பவரே ஆகின்றனர்; தீது உடை வெவ்வினை - துன்பத்தையே உடைய வெவ்விய அத் தீவினைகள் தாமே; உருத்த காலை - பயனாகத் தோன்றித் துன்புறுத்தும் பொழுதும்; பேதைமை கந்தாப் பெரும் பேது உறுவர் - இவை யாம் செய்ய வந்தன எனும் அறிவுமிலராகித் தமது அறியாமையையே பற்றாகக்கொண்டு பெரிதும் நெஞ்சு கலங்கி அத் துன்பத்துள் மூழ்கிக் கையற வெய்துபவராகின்றனர்; என்றார் என்க.

(விளக்கம்) தீதும் நன்றும் பிறர்தர வாரா ஆகலின் நீ பண்டு நுகர்ந்த இன்பத்திற் தெல்லாம் காரணம் முற்பிறப்பிலே நீ செய்த நல்வினையே ஆதல் வேண்டும். அங்ஙனமே நீ இப்பொழுது நுகரும் துன்பத்திற்கும் பண்டு நீ செய்த தீவினையே காரணம் என்று குறிப்பாலுணர்த்துவார், தவந்தீர் மருங்கின் தனித்துயர் உழந்தோய்! என்று அடிகளார் விளிப்பாராயினர். இதனாற் போந்த பயன்,

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்  (குறள் - 379)

இடுக்கண் வருங்கால் நகுக! எனத் தேற்றுதல் என்க.

26 - தவம் என்றது ஈண்டு நல்வினையை. அது தீர்ந்தவழி நுகர்ச்சிக்கு வருவது தீவினைப்பயனே ஆகலின் அதனைத் தவந்தீர் மருங்கு என்றார். 27 - மறத்துறை - தீவினை செய்தற்கியன்ற நெறி. அறத்துறை மாக்கள் என்புழி மக்கள் முதனீண்டது; செய்யுள் விகாரம். அறவோர் தமதருள் காரணமாகக் கைம்மாறு சிறிதும் வேண்டாதவராய் மாந்தர்கட்கு அறிவு கொளுத்தி அவரை உய்விக்கப் பெரிதும் வருந்தியும் முயல்கின்றமை தோன்ற நாக்கடிப்பாக வாய்ப்பறை திறத்திற் சாற்றி அறையினும் என்றார். இனி, சிறியார் உணர்ச்சியுள் பெரியார் அறிவுரை பேணிக் கொள்ளவே மென்னும் நோக்குச் சிறிதும் இல்லை என்றிரங்குவார், யாப்பறை மாக்கள் கொள்ளார் என்றொழியாது இயல்பிற் கொள்ளார் என விதந்தார். 31- செய்வார்க்கும் செய்யப்பட்டார்க்கும் துன்பமே தருமியல்புடையது என்பார் தீவினையை வெவ்வினை யென்றொழியாது தீதுடை வெவ்வினை என வேண்டா கூறி வேண்டியது முடித்தார். வெவ்வினை உருத்தகாலை இது யாம் செய்ய வந்ததே என்று அமையும் அறவுமிலார் என்பது தோன்றப் பேதைமை கந்தாப் பெரும் பேதுறுவர் என்றார்.

ஒரு தனிவாழ்க்கை யுரவோர் மாண்பு

33 - 38 : கற்றறி .................. இல்லை

(இதன்பொருள்.) கற்று அறி மாக்கள் - இனி மெய்ந்நூல்களைக் கற்று உறுதிப்பொருளை ஐயந்திரிபற அறிந்துள்ள மேலோர் தாம்; ஒய்யா வினைப்பயன் உண்ணும் காலை - எவ்வாற்றானும் போக்கப் படாத தீவினைப் பயனாகிய துன்பத்தை நுகரும்பொழுது; கையாறு கொள்ளார் - அதற்கிரங்கிச் செயலறவைத் தம் முள்ளத்தே கொள்ளாமல் நுகர்ந்தமைவர்; பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும் - இனி, பெண்டிரே உண்டியே பிறவே ஆகிய நுகர்ச்சிப் பொருள்களைப் பிரிதலாலே வரும் துன்பங்களும் அவற்றை எய்துதற் பொருட்டால் வருகின்ற துன்பங்களும்; உருவிலாளன் ஒறுக்கும் துன்பமும் - அவற்றைப் பிரிந்த காலத்தே காமனும் நல்குரவென்னும் ஒரு பாவியுமாகிய உருவிலிகள் நெஞ்சத்தே நின்று வருத்துதலாலே வரும் துன்பமும் பிறவுமாகிய துன்பமனைத்தும்; புரிகுழல் மாதர்ப் புணர்ந்தோர்க்கு அல்லது -கைசெய்த கூந்தலையுடைய மகளிரைப் புணர்ந்து மயங்கினார்க் குளவரவனவன்றி; ஒரு தனி வாழ்க்கை உரவோர்க்கு இல்லை- அம்மயக்க மின்மையால் ஒப்பற்ற துறவு வாழ்க்கையை மேற்கொண்ட பேரறிவுடையோர்க்கு இல்லையாம் என்றார்; என்க.

(விளக்கம்) 33. ஒய்யா - போக்கப்படாத. ஊழ்வினையைப் போக்குதற்கு யாதோருபாயமுமில்லை என்பார் ஒய்யா வினைப்பயன் என்றார். முன்னர் நாடுகாண் காதையில் சாரணர் ஒழிகென வொழியா தூட்டும் வல்வினை ஒழிக்கவும் ஒண்ணா என்று அறிவுறுத்ததனை நினைந்து கவுந்தி அடிகளார் ஈண்டு இங்ஙனம் அடையுணர்த்துக் கூறுகின்றனர் என்க. 36. கற்றறி மாக்கள் என்புழி மாக்கள் விகாரம். 35-36. பிரிதல் புணர்தல் துன்பங்களை மேலே பெண்டிரும் உண்டியும் என்பதற் கிணங்கப் பொருள் கூறுக. உருவிலாளன் என்பதற்கும் இஃதொக்கும். பெண்டிர்க்குக் காமவேள் என்றும் பொருளுக்கு நல்குரவு என்னும் ஒருபாவி என்றும் கூறிக் கொள்க. 38. ஒரு தனி வாழ்க்கைக்கு ஏதுவினை உடம்படுத்துக் கூறுவார் உரவோர்க்கு என்றார். உரவு ஈண்டு அறிவின் மேலும் ஆற்றல் மேலும் நின்றது.

இடும்பையின் பிறப்பிடம்

39 - 45: பெண்டிரும் .............. ஆதலின்

(இதன்பொருள்.) உலகில் பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று கொண்டோர் இங்ஙனமாகவும் இவ்வுலகத்தின்கண் பெண்டிரும் உணவுமே இன்பந்தரும் பொருள்களாம் என்று மயங்கி அவற்றை நெஞ்சத்தாற் பற்றிக் கொண்ட மாந்தர்; உறூஉம் கொள்ளாத் துன்பம் கண்டனர் ஆகி - அவற்றால் எய்தாநின்ற நெஞ்சகம் கொள்ளாத, மாபெருந் துன்பங்களைக் காட்சியளவையானே நன்குணர்ந்து கொண்டவராதலாலே; கடவுளர் வரைந்த காமம் சார்பாக - அவ்வொரு தனி வாழ்க்கையுரவோராகிய துறவோர் துவரக்கடிந்து ஒதுக்கிய அப் பெருந் துன்பங்கட்கெல்லாம் காரணமாய காமத்தையே தமது வாழ்க்கைக்குச் சார்பாகக் கொண்டு; காதலின் உழந்து - அவற்றின்பாலெழும் வேணவாவினாலே தாம் எதிர்பார்ப்பதற்கு மாறாக வந்தெய்தும் அம் மாபெருந் துன்பத்திலே கிடந்துழன்று; ஆங்கு ஏமம் சாரா இடும்பை எய்தினர் - அவ்வழி அவற்றிற்குத் தீர்வு காணப்படாத இடும்பையையும் எய்தியொழிந்தோர்; இன்றே யல்லால் - இற்றைநாள் அறியாத் தேயத்து ஆரிடையுழந்து சிறுமை யுறுகின்றேன் என்கின்ற நீயே அன்றியும்; இறந்தோர் பலரால் இறந்த காலத்தோரும் எண்ணிறந்தோர் ஆயினர் காண்; ஆதலில் தொன்றுபட வரும் தொன்மைத்து ஆதலாலே இந்நிகழ்ச்சி தொன்றுதொட்டு நிகழ்ந்து வருமொரு பழைமையுடைத்துக் காண் என்றார்; என்க.

(விளக்கம்) உலகின்கண் அன்பானும் அறத்தானும் அறிவானும் வருவனவே மெய்யாய இன்பங்களாகவும் அஃதுணராமல் அவாவென்னும் மயக்கத்தாலே பெண்டிரும் உண்டியுமே இன்பம் என்று கொண்டோர் என்பது கருத்து. வாய்மையில் அவை இன்பங்களல்ல என்பார் இன்பம் என்று கொண்டோர் என்றார். 40. கொள்ளாத் துன்பம் - நெஞ்சகம் கொள்ள மாட்டாத பெருந்துன்பம். இனி, தாம் எதிர்கொள்ளாத துன்பம் எனினுமாம். என்னை? அவற்றை இன்பம் என்றே கொண்டனர். எனவே அவையிற்றுள் துன்பம் உண்மையை அறிந்து அதுவும் வருக வென்று கொண்டவரல்ல ராகலான் என்க. 41. கடவுளர் - துறவோர். இவர் தாமும் உலகியலைக் கடந்தவர் ஆகலின் அஃது அவர்க்கும் பெயராயிற்று. கண்டனர் ஆகி என்றது கருதல் முதலிய அளவைகளாலன்றிக் காட்சியளவையானே நன்கு கண்டனராகி என்பதுபட நின்றது. கண்டனர் என்றது வரைதற்கு ஏதுவாய் நின்றது. வரைந்த காமம் - தம்பால் நிகழாது கடியப்பட்ட காமம் என்றவாறு. சார்பு - தமது வாழ்க்கைக்குச் சார்பு. 42. காதலின் என்றது அவற்றின் பாலெழும் வேணவாவினால் என்றவாறாம். என்னை? காமம் சார்பாக வருதலின் காதல் ஈண்டு அதன் நேரிய பொருள் குறியாமல் அவாவைக் குறிப்பதாயிற்று. உழந்து என்னும் சொல்லே துன்பமுழந்து என்பதாயிற்று. ஆங்கு - ஏமம் சாரா இடும்பை என்றது, அத்துன்பத்தினின்றும் உய்தி பெறமாட்டாமையாலெய்தும் கையறு நிலையை. இன்றே யல்லால் என்றது இன்று கையாறு கொள்ளும் நின்னையல்லாமலும் என்றவாறு. இறந்தோர் இறந்த காலத்தினர் பலர் ஆதலின் இந்நிகழ்ச்சி தொன்றுபட வரும் தொன்மைத்து என மாறுக.

எடுத்துக்காட்டு (1)

46 - 49 : தாதை ................ அன்றோ

(இதன்பொருள்.) தாதை ஏவலின் மாதுடன் போகி - தன் தந்தையாகிய தயரத மன்னன் ஏவுதலானே அப் பணி தலைமேற் கொண்டு தன் வாழ்க்கைத் துணைவியோடும் அரசாட்சியைத் துறந்து காட்டகத்தே சென்று; காதலி நீங்க - ஆங்கு அரக்கனொருவன் கவர்ந்து கொள்ளுதலாலே தன்பால் காதன்மிக்க அவ் வாழ்க்கைத்துணைவி நீங்க அவளையும் துறந்து; கடுந்துயர் உழந்தோன் - பொறுக்க வொண்ணாத கடிய துன்பத்திலுழந்தோன் தானும்; வேதமுதல்வன் பயந்தோன் என்பது வேதங்களுக்கெல்லாம் தலைவனாகிய நான்முகனை யீன்றவனாகிய திருமால் என்று இவ்வுலகத்துச் சான்றோர் கூறுவது; நீ அறிந்திலையோ - நீ அறிந்திலையோ! நெடுமொழி அன்றோ - அதுதானும் நெடுங்காலம் இவ்வுலகிலே நடக்கின்றதொரு காப்பியக் கதையன்றோ! என்றார்; என்க.

(விளக்கம்) முன்னர்க் காமம் சார்பாக் காதலின் உழந்து ஏமஞ்சாலா இடும்பை எய்தினர் இறந்த காலத்தும் பலர் என்றவர் எடுத்துக்காட்டாக, தேவருள் சிறந்தான் ஒருவனையும் மக்களுள் சிறந்தானொருவனையும் காட்டுபவர் முதற்கண் தேவருட்சிறந்தானைக் காட்டியபடியாம்.

இனி ஈண்டு எடுத்துக் காட்டிய இராமன் வரலாற்றில் அவன் சீதையைப் புணர்தற்கு வில்லேற்றல் முதலிய துன்பமும் பின்னர் அவளைப் பிரிந்தகாலத்தே அவன் நெஞ்சகங் கொள்ளாவா றெய்திய துன்பமும், அங்ஙனமே தயரதன் இராமனுக்குப் பொருள் புணர்த்தலாகிய முடிசூட்டைக் காரணமாகக் கொண்டு எய்திய மாபெருந் துன்பமும் வந்தமை யுணர்க.

49. அறிந்திலையோ? என்னும் வினாவும் அது நெடு மொழியன்றோ என்னும் வினாவும் அதன் எதிர்மறைப் பொருளாகிய நன்குணர்ந்திருப்பாய் என்பது தேற்றம் என்னும் பொருளை வற்புறுத்தி நின்றன. உணர்ந்தவாற்றால் இவையெல்லாம் வினைப்பயன் என்று கருதி அமைதி; யாப்பறை மாக்கள் போன்று பெரும் பேதுறற்க என்பது இதனாற் போந்த பயனாம். மேல் வருவதற்கும் இஃதொக்கும். நெடுமொழி: ஆகுபெயர். தான் பொதிந்துள்ள வாய்மை காரணமாக உலகின்கண் நெடிது நிலைத்து நிற்கும் பெருங்காப்பியம் என்றவாறு.

எடுத்துக்காட்டு (2)

50 - 57 : வல்லாடாயத்து ........... சொல்லாயோ நீ

(இதன்பொருள்.) வல் ஆடு ஆயத்து மண் அரசு இழந்து மெல்லியல் தன்னுடன் வெங்கான் அடைந்தோன் - ஐய இன்னும் நிடதத்தார் மன்னவனாகிய நளன் என்பான்றானும் முன் புட்கரனோடு சூதாடுகளத்தே தன் நாட்டைப் பணயம் வைத்து ஆடித் தன் நாடும் அரசும் இழந்து மெல்லியல்புடைய தமயந்தியோடு வெவ்விய காட்டகம் புக்கவன்; காதலிற் பிரிந்தோன் அல்லன் - அத் தமயந்திபாற் றான்கொண்டுள்ள காதலன்பினின்று நீங்கும் சிறுமையுடையவனும் அல்லன்; காதலி தீதொடுபடூஉம் சிறுமையள் அல்லள் - அங்ஙனமே அவன் காதலி தானும் தீயபண்புடன் சார்கின்ற சிறுமையுடையவளும் அல்லள்; ஆயிழை தன்னை - அத்தகைய அக் கற்பின் செல்வியை; அடவிக் கானகத்து இடை இருள் யாமத்து இட்டு நீக்கியது - இங்ஙனமாகவும் அவன் அவளை அடவியாகிய காட்டகத்தே அரை இருள் யாமத்திலே உறக்கத்திலே போகட்டுப் பிரிந்துபோம்படி செய்தது யாது? வல்வினை அன்றோ - முன் செய்த தீவினையன்றோ? மடந்தை தன் பிழை எனச் சொல்லலும் உண்டேல் சொல்லாய் - அதனையன்றி அம் மடந்தைதன் பிழை என்று சொல்லுதற்கு வேறு காரணம் உண்டெனின் சொல்லுக என்றார்; என்க.

(விளக்கம்) 50. வல் - சூதாடு கருவி. ஆயம் -தாயம்; சூதுப்போரில் மண்ணை வைத்து ஆடித் தோற்று மண்ணையும் அரசுரிமையும் இழந்து என்க. 51. கானடையும் வன்மையில்லாமை தோன்ற மெல்லியல் என்று பெயர் கூறினர். காட்டை வெங்கானம் என்றதும் அவளொடு செல்லத்தகாத காடு என்றற்கு. 52. பிறிதொரு பொருண்மேற் சென்ற காதலால் அவளைப் பிரிந்தான் அல்லன் என்பாருமுளர். 53. தீது - கூடாவொழுக்கம், சிறுமை - இழிதகைமை. முல்லைக்கானம் அன்றென்றற்கு அடவிக் கானம் என்றார். அஃதாவது மலைசார்ந்த காடு. 54. கைவிட்டு நீங்கவொண்ணாத இடமும் காலமும் விளங்கித் தோன்ற அடவிக்க னகத்து ...... இடையிருள் யாமத்து என்றார். உறக்கத்தே நீத்தமை தோன்ற இட்டு நீக்கியது என்றார். ஆயிழை தன்னை உறக்கத்தினுள் இட்டு நீக்கியது எனினுமாம். நீங்கியது அவன் செயலன்மையின் நீக்கியது என வல்வினையின் செயலா யோதினர்.

ஈண்டும் நளனுக்குப் பெண்டிர் பொருள் இரண்டும் புணர்தற் றுன்பமும் பிரிதற் றுன்பமும் உண்மையுணர்க. உண்டெனிற் சொல்லாய் என்றது இல்லை என்பதனை வற்புறுத்தற்கு. ஈண்டு நளனும் தீதிலன் தமயந்தியுந் தீதிலள் என்றது இம்மையில் நீவிர் நெறியினீங்கா நீர்மையராய விடத்தும் இத் துயர் நுங்கட்கு எய்தியதற்குக் காரணம் நீவிர் உம்மைச்செய்த தீவினைப் பயனேயன்றிப் பிறிதில்லை என்றுணர்த்தற்பொருட்டாம். இது மக்களுள் சிறந்தான் ஒருவனைக் காட்டியவாறு.

இனி, கோவலனுக்கு இராமனும் நளனும் மனைவியரோடு அறியாத் தேயத்து ஆரிடையுழந்தமை ஒத்தலின் உவமங்காட்டிப் பின்னர்க் கோவலன் அவர்க்கெய்தா நலனொன்றுடையனாதலை அறிவுறுத்து அடிகளார் அவனை அமைதி செய்ய முயல்கின்றார்.

அடிகளாரின் தேற்றுரை

57 - 61 : நீ அனையையும் ............. என்றலும்

(இதன்பொருள்.) நீ ஆயிழை தன்னொடு பிரியா வாழ்க்கை பெற்றனை யன்றே - இனி நீதானும் அவர்போலப் பொருளிற் பிரிந்து நறுமலர் மேனி நங்கைநல்லாள் நடுங்கு துயர் எய்த அறியாத்தேயத்து ஆரிடையுழத்தலின் ஒப்பாயேனும் அவர்க்கெய்தா நலனொன்றும் உடையை காண், அஃதியாதெனின் அவ்விருவரும் தத்தம் ஆருயிர்க் காதலியரையும் பிரிந்து கொள்ளாத் துன்பமுழந்தனராக, நீ நின் காதலியோடு பிரியாது வாழ்கின்ற இனிய வாழ்க்கையைப் பெற்றனை யல்லையோ! அவ்வாற்றால்; அனையையும் அல்லை - அவர்கள் போல்கின்றிலை, இந்த நலனை நினைக்கின் நீ நன்கு அமைதிபெறுதல் கூடும். அவ்வழி இனி அமைதி யுடையையாய்; வருந்தாது ஏகி - வருத்தம் சிறிதுமின்றிச் சென்று; மன்னவன் கூடல் பொருந்துழி அறிந்து - இம் மன்னவன் மாநகரினூடே நின்குலத்து வாணிகர் வாழுமிடத்தும் நீ மனைவியோடிருந்து சாவக நோன்புடன் இல்லறத்தினிதிருந்து வாழ்தற்கும் நின் குறிக்கோட்கும் குலத்திற்கும் இணங்கப் பொருளீட்டுதற்கும் இடையூறின்றிப் பொருந்துகின்ற இடம் ஒன்றனையும் ஆராய்ந்து அறிந்துகொண்டு; ஈங்குப் போது என்றலும் - மீண்டும் இங்கு வருவாயாக என்று அருளிச் செய்தலும் என்க.

(விளக்கம்) 67ஆம் அடியினீற்றிலுள்ள நீ என்பதனை 68 ஆம் அடிக்கட் கூட்டி; நீ அனையையும் அல்லை என இயைத்திடுக. நீ ஓராற்றால் அவர் போல்கின்றிலை, அஃதென்னையோ வெனின் அவ்விருவரும் மனைவியரைப் பிரிந்து வருந்தினராக; நீ நின் மனைவியைப் பிரியா வாழ்க்கை பெற்றனையல்லையோ அதனான் என்றவாறு. 58-9 ஆயிழை தன்னொடு பிரியா வாழ்க்கை பெற்றனை யன்றோ என்றது வருந்தாமைக் கேதுவாகியும் நின்றது. இனி மன்னவன் கூடலில் நினக்குப் பொருந்துழியறிந்து மீண்டும் ஈண்டு வருதி என்பதே கவுந்தியடிகளாரின் கருத்தென்பது தேற்றம். அங்ஙனமாயினும் அவர் கூற்று அவனது ஊழ்வினைத் திறத்தினும் பொருந்திய பொருளுடையதாய் அமைந்துவிட்டமை ஈண்டுணரற்பாற்று. என்னை? பொருந்துழி அறிந்துபோ தீங்கு என்னும் அச் சொற்றொடர் கண்ணழித்துப் பொருள் காண்புழி (நீ மன்னவன் கூடலில்) தீங்கு பொருந்துழி அறிந்து போ எனவும் பொருள் பயந்து நிற்றலான். இஃது அவனுக்குத் தீநிமித்தமாய் ஊழின் திறத்தில் அமைந்ததொரு விழுக்காடாகும்.

இனி, கவுந்தியடிகளார் கோவலன் கண்ணகியாரொடு வழித்துணையாய்ப் புறப்படும்பொழுது யானும், மறவுரை நீத்த மாசறு கேள்வியர் அறவுரை கேட்டு ஆங்கு அறிவனை ஏத்த....... மதுரைக்கு ஒன்றியவுள்ளமுடையேனாகலின் போதுவல் போதுமின் என்றுகூறி உடன் வந்தவராதலின், அவர் அப்பொழுதே அவர் கருதியாங்கு அறவுரை கேட்டற்பொருட்டுத் தம்மைப் பிரிந்து போதலும் கூடும். அங்ஙனம் அவரும் பிரிந்தக்கால் ஈண்டுக் கண்ணகிக்குத் துணையாவாரிலரே என்று கவன்று அடிகளாரிடம் சென்று யான் மதுரையுட் புகுந்து மீண்டு வருந்துணையும் அடிகளே இவட்குத் துணையாதல் வேண்டும் என்று கூறுவதே அவன் உட்கிடையாகவும் அங்ஙனம் கூறுதல் அடிகளார் பெருந்தகைமைக்குப் பொருந்தாதென்றுணர்ந்து தன் கருத்துக் குறிப்பாகப் புலப்படுமாறு நனி நாகரிகமாக, தொன்னகர் மருங்கின் மன்னர்பின்னோர்க்கு என்னிலை யுணர்த்தி யான் வருங்காறும் பைந்தொடி பாதக்காப்பினள் ஆகலின் ஈங்கு ஏதமுண்டோ? என்று கூறியதும்; அதற்கு அடிகளாரும் நீ வருந்துணையும் இவட்கு யானே துணையாகுவல் என்னும் தமது கருத்தும் வெளிப்படையானன்றிக் குறிப்பாகவே புலப்படுமாறு நீ வருந்தாதே சென்று வருதி என்னும் தேற்றுரையோடு அமையுமாறு கூறியதும் எண்ணி எண்ணி இன்புறற் பாலனவாம்.

கோவலன் புறஞ்சேரியினின்றும் அகநகரத்துட் புகுதல்

62 - 67 : இளைசூழ் ........... புக்கு

(இதன்பொருள்.) இளை சூழ் மிளையொடு -கட்டு வேலியாலே சூழப்பட்ட காவற்காட்டினோடு ஒருசேர; வளைவுடன் கிடந்த - தானும் வளைந்துகிடந்த; இலங்கு நீர்ப்பரப்பின் வலம் புணர் அகழியில் - விளங்குகின்ற நீர்ப்பரப்பினையுடைய வெற்றி பொருந்துதற்குக் காரணமான அகழியின்கண்; பெருங்கை யானை நிரை இனம் பெயரும் - பெரிய கையினையுடைய யானையின் நிரல்பட்ட இனங்களாகிய படைகள் அகத்தே புகுதற்பொருட்டு அமைக்கப்பட்ட; சுருங்கை வீதி மருங்கில் போகி - சுருங்கையையுடைய வீதியைக் கடந்து சென்று; கடிமதில் வாயில் காவலின் சிறந்த - அப்பால் உயர்ந்த மதிலினது வாயிலைக் காக்குந் தொழிலிலே பெரிதும் சிறப்புடைய; அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு - கொல்லும் வாட்படையேந்திய யவனரால் இவன் புதியவன் என்று ஐயப்படாதவண்ணம் சென்று அம் மதில் வாயிலையும் கடந்து அகத்தே புகுந்து என்க.

(விளக்கம்) 62. இளை - கட்டுவேலி. மிளை - காவற்காடு. 63. வலம் - வெற்றி; வெற்றியை மன்னர்க்குப் புணர்க்கும் அகழி என்றவாறு. சுருங்கை - கரந்துபடை. 67. யவனர் - மேலைநாட்டினர், துருக்கர் என்பர் அடியார்க்குநல்லார். அயிராது - ஐயமுறாது; ஐயமுறாதவண்ணம் புக்கு என்க. அஃதாவது நெஞ்சில் வஞ்சமின்மையின் அத்தகு மெய்ப்பாடுகள் சிறிதுமின்றிப் புகுந்தானாதலின் வாயிலோர் அயிராது புக விடுத்தனர் என்பது கருத்து.

கோவலன் மதுரையிற் கண்ட காட்சிகள்

67 - 75: ஆங்கு ................. புனலாட்டமர்ந்து

(இதன்பொருள்.) ஆங்கு - அவ்விடத்தே அமைந்த; ஆயிரம் கண்ணோன் அருங்கலச் செப்பு வாய் திறந்தன்ன - ஆயிரம் கண்ணையுடைய அமரர் கோமானுடைய பெறுதற்கரிய மணியணிகலங்களைப் பெய்துவைத்த பணிப் பெட்டகத்தின் மூடியைத் திறந்து வைத்தாற்போன்ற வியத்தகு காட்சியமைந்த; மதில் அக வரைப்பில்-மதிலரண் சூழ்ந்த அகநகர்ப் பரப்பின்கண்; குடகாற்று எறிந்து கொடி நுடங்கு மறுகின் மிகவும் விரைந்தியங்குகின்ற கோடைக்காற்று மோதுதலானே கொடியின்கண் துகில் மிக்கு நுடங்குகின்ற மறுகின்கண் வாழ்வோராகிய; கடைகழி மகளிர் - மகளிர்க்கியன்ற அறத்தின் வரம்பு கடந்து ஒழுகுகின்ற பொதுமகளிர்; காதல் அம் செல்வரொடு - தாம் விரும்புகின்ற செல்வத்தோடே அழகும் மிக்கவராகிய காமுகரோடு கூடி; வருபுனல் வையை மருது ஓங்கு துறைமுன் - இடையறாது வந்து பெருகும் நீரையுடைய வையைப் பேரியாற்றின்கண்; மருது ஓங்கு துறைமுன் - மருதமரங்கள் மிக்குயர்ந்து நிற்றலானே திருமருத முன்றுறை என்று சிறப்பித்துக் கூறப்படுகின்ற நீராடு பெருந்துறையினின்றும்; விரிபூந்துருத்தி வெள்மணல் அடைகரை - மலர்கின்ற பூக்களையுடைய இடைக்குறையினது வெளிய மணலாலியன்ற அடைகரைக்கு; ஓங்கு நீர் மாடமொடு நாவாயியக்கி - உயர்ந்த பள்ளியோடத்தையும் தோணிகளையும் ஏறிச் செலுத்தியும் அவ்விடைக் குறைமருங்கில்; பூம்புணை தழீஇப் புனல் ஆட்டு அமர்ந்து - பொலிவுடைய தெப்பங்களைத் தழுவிக் கொண்டு நீந்தியும் இவ்வாறு நீர்விளையாட்டை விரும்பியும் என்க.

(விளக்கம்) அகநகரத்தே அணியுடன் றிகழும் மாடமாளிகைகளின் செறிவும் அளந்து கடையறியா வளங்கெழு தாரமொடு புத்தேன் உலகம் கவினிக் காண்வர மிக்குப்புகழ் எய்திய மதுரை என்பர் மாங்குடி மருதனார். மற்று ஈண்டு அடிகளார் அந்த மதுரையின் அகநகரை அவரினும் பன்மடங்கு விஞ்சி ஆயிரங்கண்ணோன் அருங்கலச் செப்பு வாய்திறந்தன்ன மதிலக வரைப்பு என வியத்தகுமோருவமை தேர்ந்தோதுதலுணர்ந்து மகிழ்க. 70. ஆடித்திங்கள் என்பது தோன்ற, கோடைக் காற்றுக் கூறினர். 71. கடைகழி மகளிர் என்றது மகளிர்க்கியன்ற அறத்தின் வரம்பைக் கடந்தொழுகும் மகளிர் என்றவாறு. எனவே வரைவில் மகளிர் என்றாராயிற்று. காதல் அம் செல்வர் என்பதற்கு அடியார்க்குநல்லார் கூறும் உரை ஆற்றவும் இனிதாம். அதனையே யாமும் கூறினாம். 72. மருதோங்கு முன்றுறை என்றது திருமருத முன்றுறை. இத் துறை பண்டைக்காலத்துச் சிறந்திருந்தமை பிற நூல்களானும் உணரலாம். முன்றுறை - முன்பின்னாக மாறிநின்ற தொகைச்சொல். முன்றுறையினின்றும் நீர்மாடத்தும் நாவாயினும் சென்று துருத்தியின் மணலடைகரை எய்தி அவ்விடத்தே புணையான் நீந்தி ஆடினர் என்று கொள்க.

இது - மதுரை மாந்தர் பரத்தையரோடுகூடிச் சிறுபொழுதாறனுள் முதலாவதாகிய காலைப் பொழுதினைப் போக்கும்முறை கூறியவாறாம்.

நண்பகல்

76-82 : தண்ணறு ................ அமர்ந்தாங்கு

(இதன்பொருள்.) தண் நறுமுல்லையும் தாழ்நீர்க் குவளையும் கண் அவிழ் நெய்தலும் கதுப்பு உற அடைச்சி - இனி, குளிர்ந்த நறு மணங்கமழும் முல்லை மலரையும் ஆழ்ந்த நீர்நிலையிலே மலர்ந்த வளவிய குவளைமலரையும் தமது கண்போல மலர்ந்த நெய்தன் மலர்களையும் தமது கொண்டையிலே மிகுதியாகச் செருகி; வெள்பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த தண் செங்கழுநீர்த் தாதுவிரி பிணையல் - வெண்மை நிறத்தாற் றிகழ்கின்ற மல்லிகையின் மலர்ந்த மலர்களோடே குளிர்ந்த செங்கழு நீர்மலரைக் கால் நெருங்கத் தொடுத்தமையாலே தலைமலர்ந்த மாலையை; கொற்கை அம் பெருந்துறை முத்தொடு பூண்டு - தமது கொற்கைத் துறையிற் பிறந்த பெருமுத்தாற் செய்த வடத்தோடே மார்பகத்தே பூண்டு; தெக்கண மலயச் செழுஞ்சேறு ஆடி - தமது நாட்டின் தென்றிசைக் கண்ணதாகிய பொதியமலையிற் பிறந்த வளவிய சந்தனக் குழம்பைத் தமது மேனிமுழுதும் மட்டித்து; பொன்கொடி மூதூர்ப் பொழிலாட்டு அமர்ந்து - பொன்னாற் செய்த கொடிகளையுடைய பழையதாகிய தமது நகர்க்கு அயலவாகிய பூம்பொழில்களிலே புகுந்து ஆடுகின்ற விளையாட்டைப் பெரிதும் விரும்பி; என்க.

(விளக்கம்) 76. தாழ்தல் - ஆழ்தல். 77. கண்ணவிழ் - கண் போன்று மலர்ந்த: உவமவுருபு தொக்கது. கதுப்பு - கொண்டை. விரியல் - மலர்ந்த பூ. 80. கொற்கை - பாண்டியனாட்டில் ஒரு பட்டினம். ஈண்டுக் கிடைக்கும் முத்துச் சிறப்புடையது. முத்து - வடம்; ஆகுபெயர். 81. தெக்கணம் - வடமொழித் திரிபு. மலயத்திற் பிறந்த கொழுவிய சந்தனச் சேறு என்றவாறு. ஆங்கு : அசை. இஃது அவர் நண்பகற்பொழுது கழிக்குமாறு.

*எற்படு பொழுது

83 - 97 : எற்படு ............ காலமன்றியும்

(இதன்பொருள்.) எல் படு பொழுதின் - அந்திமாலைப் பொழுதின் கண் அப் பூம்பொழிலினின்றும் வந்து; இளநிலா முன்றில் தாழ்தரு கோலந் தகை பாராட்ட - இளநிலாத் தவழும் மேனிலை மாடத்து நிலாமுற்றத்திலேறி அவ்விடத்தே முன்னர்த் தாம் நீரினும் பூம்பொழிலினும் விளையாடியதனால் இளைத்த தன்மையைத் தங் கொழுநர் நலம் பாராட்டுமாற்றால் தீர்க்க; வீழ்பூஞ் சேக்கை மேல் இனிது இருந்து - ஒருவரையொருவர் பெரிதும் விரும்புதற்கிடனான மலர்ப்பாயலிலே கூடிமுயங்கி இன்பத்துள் அழுந்தியிருந்து; ஆங்கு - அப்பால்; அரத்தப் பூம்பட்டு அரைமிசை உடீஇ - துகில் களைந்து சிவந்த பூத்தொழிலமைந்த பட்டாடையைத் தம்மிடையிலுடுத்து; குரல் தலைக்கூந்தல் - பூம் பொழில் விளையாட்டிற் கொய்து சூடிப் பின்னர்க் கூட்டத்தாற் குலைந்த பூங்கொத்துக்களையுடைய இடத்தையுடைய கூந்தலின் கண் அவற்றைக் களைந்து; குடசம் பொருந்தி - செங்குடசப் பூவைப் பொருந்த வைத்து முடிந்து; சிறுமலைச் சிலம்பின் செங்கூதாளமொடு நறுமலர்க் குறிஞ்சி நாள்மலர் வேய்ந்து - சிறுமலை என்னும் மலையின்கண் அரிதின்மலரும் நறிய மலரையுடைய குறிஞ்சியினது புதுப்பூவைச் சூடி கொங்கையின் குங்கும வருணம் இழைத்து - கொங்கையின் மேலே குங்கும நிறமுடைய வருணத்தாலே கோலம் எழுதி; சிந்துரச் சுண்ணம் சேர்ந்த மேனியில் - சிவந்த நறுமணச்சுண்ணம் அப்பிய மார்பகத்தே; செங்கோடு வேரிச் செழும்பூம் பிணையல் அம் துகிர்க் கோவை அணியொடு பூண்டு - சிவந்த கொடுவேரியின் செழிப்புமிக்க பூவாற்றொடுத்த மாலையினை அழகிய பவளக் கோவையோடு பூண்டு; மலைச் சிறகு அரிந்த வச்சிர வேந்தற்கு - பறந்து திரியும் மலைகளின் சிறகினை அரிந்த வச்சிரப் படையையுடைய இந்திரனுக்கு; கலி கெழுகூடல் செவ்வணி காட்ட - ஆரவாரம் பொருந்திய அம் மதுரை மாநகரத்தில் தாம் இங்ஙனம் செவ்வணி அணிந்து காட்டற் பொருட்டு; கார் அரசாளன் வாடையொடு வரூஉம் காலம் அன்றியும் - முகிலை ஆளுகின்ற காலமாகிய அரசன் தன் பணி யாளனாகிய வாடை என்பானோடு வருகின்ற அக்காலமும்; அக் காலம் அன்றியும்; என்க.

(விளக்கம்) 71. கடைகழி மகளிர் காதலம் செல்வரொடு காலைப் பொழுதில், 72. வையைத் துறையில், 75. புனலாட்டமர்ந்து நண்பகலில், 82. பொழிலாட்டமர்ந்து பின்னர், 83. எற்படு பொழுதில் இளநிலா முன்றிலே அச் செல்வர் பாராட்டச் சேக்கைமேலிருந்து பின்னர், அம் முதுவேனிற் பருவம் தீர்ந்தபின் கார்ப்பருவம் முதலியவற்றின்கண் அக் காதலஞ் செல்வரொடு தாம் இன்பநுகருமாற்றை (76 ஆம் அடி முதலாக) தம் அகக்கண்ணால் கண்டு மகிழ்வாராக. அடிகளார் அம் மதுரையில் ஏனைய பருவங்களினும் எய்தும் இன்பத்தை விதந்தோதுகின்றனர் என்றுணர்க. இஃதோர் அழகிய புலமை வித்தகமாம். 86. அரை என்பதற்கு ஆகுபெயரான் மேகலை என்று கூறிச் செம்பட்டை மேகலைமீதே உடுத்து என்பர். 87. குடசம் - வெட்பாலை - சிறுமலை: பெயர். தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் என முன்னும் (நாடுகாண்-85) வந்தமை நினைக. நறுமலர் குறிஞ்சி மலர்களினும் செவ்வி மலர் தேர்ந்தணிந்தென்பார் நாண்மலர் அணிந்து என்று விதந்தார். இது பன்னீராட்டைக் கொருமுறை மலரும் என்ப 71. கடைகழி மகளிர் இங்ஙனம் தாம் செவ்வணி அணிந்து கூடலின் கண் வச்சிர வேந்தற்குக் காட்டுதற்குரிய காலமாகிய காரரசாளன் வாடையொடு வருங்காலம் என்க. எனவே ஈண்டுக் கூறப்பட்ட குடசம் முதலிய செம்மலர்கள் கார்ப்பருவத்தே மலர்வன என்பதும் அவற்றை மலர்விக்கும் கார்ப்பருவத்து முகில்கட்கு அரசனாகலின் அச் செய்ந்நன்றி கருதி வச்சிர வேந்தனுக்குக் காட்ட எண்ணினர் என்பதும் பெற்றாம். கார் அரசாளன் என்றது அப் பருவம் நிகழும் காலத்தை.

இது, கார்ப்பருவத்துக் கடைகழி மகளிர் கோலங் கொள்ளுமாற்றைக் கூறியபடியாம்.

கூதிர்ப்பருவ நினைவு

97 - 101 : நூலோர் ............ கூதிர்க்காலையும்

(இதன்பொருள்.) நூலோர் சிறப்பின் முகில் தோய் மாடத்து - இனி, சிற்பநூலோர் தம் நூன்முறைப்படி சிறப்பித்துச் செய்யப்பட்ட முகில்களைத் தடவுமாறுயர்ந்த மேனிலைமாடத்துப் பள்ளியறைக்கண் அக்காலத்துக் கொடுங்குளிரை மாற்றித் தம்முடம்பையும் தம்மைத் தழுவும் நம்பியருடம்பையும் வெப்பமேற்றுதற் பொருட்டு; நறுஞ்சாந்து அகலத்து நம்பியர் தம்மொடு - நறிய சந்தனம் நீவிய மார்பையுடைய அந்நகர நம்பியரோடு ஒருங்கிருந்து; மடவரல் மகளிர்தரு அகில் விறகின் தடவு நெருப்பு அமர்ந்து - மடப்பம் வருதலையுடைய அப் பரத்தை மகளிர் மரக்கலங்கள் கொணர்ந்து தந்த அகிலாகிய நறுமணங் கமழும் விறகிட்டு மூட்டிய தடாக்களிலே கனலாநின்ற தீக்காய்தலை விரும்பி; குறுங்கண் அடைக்கும் - அம் மாடத்தின்கண் குறிய கண்களையுடைய சாளரங்களை வாடைகாற்றுப் புகாவண்ணம் சிக்கென அடைத்தற்குக் காரணமான; கூதிர்காலையும் கூதிராகிய காலமும் என்க;

(விளக்கம்) இது கூதிர்ப்பருவத்தே (பரத்தை மகளிர் தம்மை விரும்பிவரும் நகர நம்பியரோடு) தடவு நெருப்பினால் உடம்பினை வெப்பமேற்றிக்கொண்டு இன்ப நுகருதலை எண்ணியவாறாம். கூதிர் முதலிய குளிர்ப் பருவங்களிலே வெப்பம் காமப் பண்பிற்கு ஆக்கஞ் செய்யும்; மற்று இளவேனில் முதலிய வெப்பமுடைய பருவங்களிலே குளிர் அப் பண்பிற்கு ஆக்கமாம். ஈண்டு மனையறம்படுத்த காதைக் கண் குளிர்தரு தென்றலை விரும்பி மகளிர் சாளரம் திறக்கின்ற செவ்வி பார்த்து, கோலச் சாளரங் ருறுங்கண் நுழைத்து வண்டொடுபுக்க மணவாய்த் தென்றல் கண்டுளஞ் சிறந்து என வருகின்ற அடிகள் நினைவிற் கொள்ளற்பாலன. மற்றுக் கூதிர்ப்பருவத்தே தடவு நெருப்பமர்ந்து என்னுமிதனோடு

கூந்தல் மகளிர் கோதை புனையார்
பல்லிருங் கூந்தல் சின்மலர் பெய்ம்மார்
தண்ணறுந் தகர முளரி நெருப்பமைத்து
இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்ப (53-7)

எனவும்,

....... .......... .......... ........ ....... .........
பகுவாய்த் தடவில் செந்நெருப் பார  (61)

எனவும் வரும் நெடுநல்வாடை அடிகள் நினைவுகூரற்பாலன.

முன்பனிப் பருவ நினைவு

102 - 105 : வளமனை .............. அச்சிரக்காலையும்

(இதன்பொருள்.) வளமனை மகளிரும் மைந்தரும் - வளப்பம் பொருந்திய மனையின்கண் வாழும் மகளிரும் ஆடவரும்; இளநிலா முன்றிலின் இளவெயில் நுகர விரும்பி - இளைதாகிய நிலாவொளியை நுகர்தற்கியன்ற நிலாமுற்றத்திலே ஏறி அந்நிலவொளியை விரும்பாராய் மேலைத்திசையில் வீழ்கின்ற ஞாயிற்றினது பச்சை வெயிலை நுகர்தற்கு அவாவுமாறு; விரிகதிர் மண்டிலம் தெற்கு ஏர்பு - ஒளிவிரிக்கின்ற அஞ்ஞாயிற்று மண்டிலம் ஆற்றவும் தென்கிழக்கிலே தோன்றி மறைதற்குக் காரணமாய்; அரிதில் வெண்மழை தோன்றும் - ஒவ்வொரு பொழுதில் வெண்முகில் தோன்றுதற்கிடனான; அச்சிரக்காலையும் - முன்பனிக் காலமும் எவ்விடத்துள்ளன? என்க.

(விளக்கம்) இள நிலா என்றது மாலைப்பொழுதில் தோன்றும் வளர்பிறைப் பக்கத்து நிலவுகளை. நுகர்தல் கண்ணாற் பார்த்து அதன் அழகால் உள்ளுள்ளே மகிழ்தல். வெண்மழை - வெள்ளை முகில்; பனிமாசுமாம் எவ்விடத்துள்ளன என ஒரு சொல் வருவிக்க.

பின்பனிக் காலம்

106 - 112 : ஆங்கதன்றியும் ........... யாண்டுளன்

(இதன்பொருள்.) ஆங்கு அது அன்றியும் - அந்த முன்பனிக்காலம் அல்லாமலும்; தொண்டியோர் ஓங்கு இரும்பரப்பின் வங்க சட்டத்து இட்ட - தொண்டிப்பட்டினத்தில் உள்ள வணிகர் கீழ்த்திசையில் உள்ள நாடுகளிற் சென்று தொகுத்து உயர்ந்த அலைகளையுடைய பெரிய நீர்ப்பரப்பையுடைய கடலின்கண் தமது மரக்கலங்களின் தொகுதியுள் இட்டுக்கொணரும்; அகிலும் துகிலும் ஆரமும் வாசமும் தொகு கருப்பூரமும் சுமந்து உடன் வந்த - அகிலும் பட்டும் சந்தனமும் நறுமணப் பொருளும் கருப்பூரமும் என்னும் இவற்றை அவ்வங்கத்திரளோடு சுமந்து வந்த; கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல் வெங்கண் நெடுவேள் வில் விழாக்காணும் - தன் நண்பனாகிய கொண்டற் காற்றோடு பாண்டியனுடைய மதுரையிலே புகுந்து வெவ்விய கண்ணையுடைய காமவேளுடைய வில் வெற்றி நிகழாநின்ற திருவிழாவைக் கண்டு களிக்கும்; பங்குனி முயக்கத்துப் பனி அரசு யாண்டு உளன் - பங்குனித் திங்கள் ஈறாகப் பொருந்திய பின்பனிக் காலமாகிய அரசன் எவ்விடத்துளன்? என்க.

(விளக்கம்) இதற்குக் குணதிசைக்கண் தொண்டி என்னும் பதியிலுள்ள அரசரால் வங்கத்திரளோடு திறையிடப்பட்ட அகில் முதலிய பொருள்கள் என அடியார்க்குநல்லார் கூறும் உரை பொருந்தாமை யுணர்க. தொண்டியில் உள்ள வணிகர் கீழ்த்திசையிலுள்ள கடலிடையிட்ட நாடுகளிற் கலத்தொடு சென்று ஈட்டிக்கொணரும் அகில் முதலியன என்பதே சிறந்த உரையாம். கொண்டல் - கீழ்த்திசைக் காற்று - இக்காற்று மரக்கலங்களையும் அவற்றில் கொணரும் அகில் முதலியவற்றின் மணங்களையும் சுமந்து வந்தது என்க. கொண்டற் காற்று பங்குனித் திங்களில் வருவது இயல்பு. ஆதலின் அதனை அக்காலத்திற்கு நண்பன் என்றார், அடியார்க்குநல்லார்.

இனி, அவர் தொரு என்பதனை அகில் துகில் ஆரம் வாசம் கருப்பூரம் முதலியவற்றோடும் தனித்தனி கூட்டி உரைக்கின்ற பொருள் வருமாறு:

அகில் : அருமணவன் தக்கோலி கிடாரவன் காரகில் என்று சொல்லப்பட்ட பலவகைத்தாய தொகுதியும், துகில் : கோசிகம் பீதகம் பச்சிலை அரத்தம் நுண்டுகில் சுண்ணம் வடகம் பஞ்சு இரட்டு பாடகம் கோங்கலர் கோபம் சித்திரக்கம்மி குருதி கரியல் பாடகம் பரியட்டக் காசு வேதங்கம் புங்கர்க் காழகம் சில்லிகை தூரியம் பங்கம் தத்தியம் வண்ணடை கவற்றுமடி நூல்யாப்பு திருக்கு தேவாங்கு பொன்னெழுத்து குச்சரி தேவகிரி காத்தூலம் இறைஞ்சி வெண்பொத்தி செம்பொத்தி பணிப்பொத்தியென்று சொல்லப்பட்ட பலவகைத்தாகிய தொகுதியும், ஆரம் : மலையாரம் தீமுரன்பச்சை கிழான்பச்சை பச்சை வெட்டை அரிசந்தனம் வேரச்சுக் கொடியென்று சொல்லப்பட்ட பலவகைத்தாகிய தொகுதியும், வாசம் : அம்பர் எச்சம் கத்தூரி சவாது சாந்து குங்குமம் பனிநீர் புழுகு தக்கோலம் நாகப்பூ இலவங்கம் சாதிக்காய் வசுவாகி நிரியாசம் தைலம் என்று சொல்லப்பட்ட பலவகைத்தாகிய தொகுதியும், கருப்பூரம் : மலைச்சரக்கு கலை அடைவு சரக்கு மார்பு இளமார்பு ஆரூர்க்கால் கையொட்டுக்கால் மாரப்பற்று வராசான்கும டெறிவான் உருக்குருக்கு வாறோசு சூடன் சீனச்சூடன் என்று பெயர் கூறப்பட்ட பலவகைத்தாகிய தொகுதியும் எனத் தொகுத்தும் விரித்தும் பொருளுரைக்க எனவரும்.

இளவேனில்

113 - 117 : கோதை ........... கொல்லென்று

(இதன்பொருள்.) கோதை மாதவி கொழுங்கொடி எடுப்ப - மாலை போல மலருகின்ற குருக்கத்தி வளவிய கொடியை உயர்த்தவும்; காவும் கானமும் கடிமலர் ஏந்த - இளமரக்காவும் நந்தவனமும் மணமுடைய மலர்களை ஏந்தா நிற்பவும்; தென்னவன் பொதியில் தென்றலோடு புகுந்து - பாண்டியனுடைய பொதியமலைக்குரிய தென்றற் காற்றோடு வந்து புகுந்து; மன்னவன் கூடல் மகிழ்துணை தழுவும் - அப்பாண்டியனுடைய மதுரை நகரின்கண் காதலாலே தம்முள் மகிழ்கின்ற காதலர்களைத் தழுவிக்கொள்ளச் செய்கின்ற இன் இளவேனில் யாண்டு உளன் கொல் என்று - இனிய இளவேனில் என்னும் அரசன் எவ்விடத்துளனோ என்று; என்க.

(விளக்கம்) மாதவி - குருக்கத்தி. கானம் - பூம்பொழிலுமாம். தழூஉம் - தழுவுவிக்கும் எனப் பிறவினைப் பொருள் குறித்து நின்றது கொல் : அசை.

118 - 119 : உருவ .................. காலை

(இதன்பொருள்.) உருவக் கொடியோர் உடைப்பெரும் கொழுநரொடு பருவம் எண்ணும் - அழகிய பூங்கொடி போல்பவராகிய மகளிர் தம்மையுடைய பெரிய காதலரோடு இங்ஙனமாகிய இன்பங்களை நுகர்தற்குரிய அவ்வப் பருவ வரவை நினைகின்ற; படர்தீர் காலை - துன்பம் நீங்கிய காலத்தில்; என்க.

(விளக்கம்) உருவம் - அழகு. கொடி - பூங்கொடி. இதுநாறுங் கூறப்பட்ட இவரைப் புறவீதி மகளிராய் முற்கூறிய கடைகழி மகளிர் என்பர் அடியார்க்கு நல்லார்.

முதுவேனிற் காலம்

120 - 125: கன்றமர் .......... நாள்

(இதன்பொருள்.) கன்று அமர் ஆயமொடு களிற்று இனம் நடுங்க - கன்றுகளை விரும்புகின்ற பிடிக்கூட்டங்களோடே அவற்றைக் காக்கும் களிற்றியானைக் கூட்டமும் கண்டு அச்சத்தால் நடுங்கும் படி; என்றூழ் நின்ற குன்று கெழு நல் நாட்டுக் காடு தீப்பிறப்பகனை எரி பொத்தி - வெயில் நிலைபெற்ற மலைசார்ந்த நல்ல நாடாகிய குறிஞ்சி நிலத்திலேயுள்ள காடுகளில் நெருப்புத் தோன்றச் செய்து அவற்றை முழங்குகின்ற அழலை மூட்டி; கோடையொடு புகுந்து கூடல் ஆண்ட வேனில் வேந்தன் - கோடைக் காற்றோடு வந்து புகுந்து மதுரையை ஆட்சி செய்த முதுவேனில் என்னும் அரசன்; வேற்றுப்புலம் படர ஓசனிக்கின்ற உறு வெயில் கடை நாள் - தனதாட்சியைக் கைவிட்டு வேறிடங்களுக்குப் போவதற்கு நினைக்கின்ற மிக்க வெயிலையுடைய இறுதி நாளிலே; என்க.

(விளக்கம்) ஆயம் - கூட்டம். கன்றவர் என்றதனால் பிடிக் கூட்டம் என்க. காட்டின்கண் தீமூள அதுகண்டு யானைகள் நடுங்க என்றவாறு. என்றூழ் - வெயில். கோடையில் காட்டுத்தீ தோன்றுதலியல்பு. ஓசனித்தல் - போதற்கு ஒருப்பட்டு முயலுதல்; உடை திரை முத்தஞ் சிந்தவோ சனிக்கின்ற வன்னம் எனவரும் சிந்தாமணியினும் (2652) அஃது அப் பொருட்டாதல் உணர்க. வேற்றுப் புலம்படர என்றதற்கு ஓரோர் தேயத்திற்கு ஓரொரு காலம் மாறி நிகழ்தலின் வேற்றுப் புலம்படர வென்பர் அடியார்க்குநல்லார்.

இதுவுமது

126 - 133 : வையமும் ............... மயங்கி

(இதன்பொருள்.) வையமும் சிவிகையும் மணிக்கால் அமளியும் உய்யானத்தின் உறுதுணை மகிழ்ச்சியும் - கூடாரப் பண்டியும் கடகத்தண்டும் பல்லக்குமாகிய சிவிகைகளும் வரிசையாகப் பெற்றதேயன்றி நீராவிச் சோலைக்கண்ணே தனக்குப் பொருந்திய துணையாய் வந்து விளையாடும் மகிழ்ச்சிக்குக் காரணமான சிறப்பும்; சாமரைக் கவரியும் தமனிய அடைப்பையும் கூர் நுனை வாளும் - கவரிமயிராலியன்ற சாமரை இரட்டுதலும் பொன்னாலியன்ற அடைப்பை ஏந்துதலும் கூரிய நுனியையுடைய உடைவாள் எடுத்தலும் ஆகிய சிறப்புகளும்; கோமகன் கொடுப்ப - தம் அரசன் தமக்கு வழங்குதலாலே; பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப் பொன்தொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து - அச் சிறப்புகள் வழிவழியாக மாறாமல் வருகின்ற வாழ்க்கையை யுடைய பொன்னாலியன்ற வளையலணிந்த அம் மகளிர் நாள்தோறும் புதியவரோடு மணம் புணர்ந்து; செம்பொன் வள்ளத்துச் சிலதியர் ஏந்திய அம் தீந் தேறல் மாந்தினர் மயங்கி - செம்பொன்னாலியன்ற வள்ளத்தில் ஏவல் மகளிர் ஏந்திக்கொடுக்கும் அழகிய இனிய கள்ளாகிய தேறலைப் பருகினராய்ப் பின்னும் மயங்கி; என்க.

(விளக்கம்) வையம் - ஒருவகை வண்டி. சிவிகை - கடகத்தண்டும் பல்லக்கும் என இருவகைப்படும். உய்யானம் - விளையாட்டுப் பொழில். அங்கு நீர்நிலையும் இருத்தலால் நீராவிச்சோலை என்றார் (அடியார்க்கு நல்லார்.) இம்மகளிர் அரசனோடு விளையாடும்பொழுது மெய்தொட்டும் புணைதழுவியும் விளையாடுகின்ற உரிமை பெற்றவர் ஆவர். மேலும் கவரி இரட்டுதலும் அடைப்பை ஏந்தலும் உடை வாள் எடுத்தலும் ஆகிய சிறப்புரிமை பெற்றவரும் ஆவார். இச் சிறப்புகள் வழி வழியாக அவர் மரபுக்கு உரியன என்பது தோன்ற, பிறழா வாழ்க்கை என்றார். செல்வம் என்றது இச் சிறப்புகளை என்க. சாமரை - கவரிமான் மயிராலியன்றது என்பது தோன்ற, சாமரைக் கவரி என்றார். புதுமணம் புணர்ந்தமையால் உண்டான இளைப்புத் தீர்தற்குத் தேறல் பருகுவர் என்றவாறு.

இதுவுமது

134 - 145 : பொறிவரி ............. வீதியும்

(இதன்பொருள்.) காவி அம் கண்ணார் - நீலமலர் போலும் கண்ணையுடைய அம் மகளிர்; பொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும் நறுமலர் மாலையின் வறிது இடம் கடிந்து ஆங்கு - கள் மயக்கத்தால் இமையில் மறைகின்ற தமது விழிகளைப் பூவின் இதழில் மறைகின்ற தமது இனம் என்று கருதிச் சேர்ந்த பொறியையும் பாட்டையும் உடைய வண்டுகளை அகற்றக் கருதியவர் கை சோர்ந்து நறிய மலர் மாலையாலே அவ் வண்டுகள் மொய்த்த இடத்தில் அல்லாமல் வறிய இடங்களிலே புடைத்து முன்னர்; இலவு இதழ்ச் செவ்வாய் இளமுத்து அரும்பப் புலவிக் காலத்து போற்றாது உரைத்த கட்டுரை எட்டுக்கு நாவொடு நவிலா நகைபடு கிளவியும் - இலவ மலர் போலும் தமது சிவந்த வாயின்கண் இளமுத்துப் போன்ற தமது எயிறுகள் அரும்பும்படி தம்முடைய காதலரோடு ஊடிய பொழுது கூறக்கருதியவற்றைக் கூறாமலே விடுத்து மயக்கம் காரணமாகச் செவ்வி தேறாமல் கூறிய புலவிப் பொருள் பொதிந்த சொல்லாகிய எட்டு வகை இடத்தோடும் பொருந்த நாவினாலே எழுத்துருவம்படக் கூறப்பெறாமல் குழறுதலாலே கேட்டோர்க்கு நகைச்சுவை தோற்றுவிக்கும் மொழியும்; அம் செங்கழுநீர் அரும்பு அவிழ்த்து அன்ன செங்கயல் நெடுங்கண் செழுங்கடைப் பூசலும் - அழகிய செங்கழுநீர் அரும்பை நெகிழ்த்துப் பார்த்தாலொத்த சிவந்த கயல்போலும் நெடிய கண்ணினது கடையால் செய்த பூசலும்; கொலை வில் புருவத்துக் கொழுங்கடை சுருளத் திலகச் சிறு நுதல் அரும்பிய வியரும் - கொலை செய்தற்குக் குனித்த வில்லைப்போன்று புருவத்தின் கோடிகள் வளையாநிற்பத் திலகம் பொருந்திய சிறிய நுதலின்கண் அரும்பிய வியர்வையுமாகிய இவை தீரும்; செவ்வி பார்க்கும் செழுங்குடிச் செல்வரொடு வையம் காவலர் மகிழ்தரு வீதியும் - செவ்வி பார்த்து வருந்துகின்ற செழிப்புடைய குடியிற் பிறந்த செல்வரோடே உலகத்தைக் காவல் செய்கின்ற மன்னர்களும் விரும்புதற்குக் காரணமான வீதியும்; என்க.

(விளக்கம்) பொறி - புள்ளி. வரி - வரிப்பாட்டு; கோடு எனினுமாம். புல்லுதல் - தம் இனமென்று கருதித் தழுவுதல். கள்ளுண்டு மயங்கிய மகளிருடைய கண்கள் இமையுள் மூழ்குவது கண்டு அவற்றை வண்டுகள் பூவிதழுள் மறைகின்ற வண்டுகள் என்று கருதிப் புல்லும் எனவும் அவற்றை ஒட்டக் கருதி அம் மகளிர் மாலையாலே புடைப்பவர் அவை இல்லாத இடங்களிலே கைசோர்ந்து புடைப்பர் எனவும் கொள்க. இதனோடு :

ஒருத்தி, கணங்கொண்டவை மூசக் கையாற்றாள் பூண்ட, மணங்கமழ் கோதை பரிவுகொண்டோச்சி (கலி. 92 : 45 - 50) எனவும், ஒருத்தி, இறந்தகளியா ணிதழ்மறைந்த கண்ணள், பறந்தவைமூசக் கடிவாள் கடியும், இடந்தேற்றாள் சோர்ந்தனள்கை (கலி. 92:48-50) எனவும் வருவனவற்றை ஒப்புநோக்குக.

கட்டுரை - புலவிப் பொருள் பொதிந்த வுரை. எட்டு - எண்வகை இடம்; அவையாவன: தலை, மிடறு, நெஞ்சு, பல், இதழ், நா, மூக்கு, அண்ணம் என்பன. இதற்கு எடுக்குநர்; எடுக்கும் எனவும் பாடம்.

கிளவியும் பூசலும் வியரும் தீரும் செவ்விபார்க்கும் செல்வர்; என்க. இம்மகளிர் அரசன் காவன் மகளிர்; என்க.

இதுவுமது

146 - 147: சுடுமண் ............... வாழ்க்கை

(இதன்பொருள்.) வடுநீங்கு சிறப்பின் முடி அரசு ஒடுங்கும் கடிமனை சுடுமண் ஏறா வாழ்க்கை - கொடுங்கோன்மையாகிய குற்றம் நீங்கும் செங்கோற் சிறப்பினையுடைய முடி சூடிய அரசரும் தங்கி இருத்தற்குரிய காவலையுடைய குற்றப்படாத தூய வாழ்க்கையையுடைய; என்க.

(விளக்கம்) இனி, சுடுமண் ஏறா என்பதனை மனைக்கு அடையாக்கி ஓடு வேயாத மனை என்பாரும் உளர். அவ்வுரை சிறப்பின்று. இனி, கூத்தியர் சாதியில் குற்றப்பட்டால் தலையிலே செங்கல் ஏற்றி ஊர் சூழ்வித்துக் கழித்து விடுதல் மரபு; இதனை, மற்றவன் றன்னால் மணிமேகலைதனைப் பொற்றேர்க்கொண்டு போதேனாகிற் சுடுமணேற்றி யாங்குஞ் சூழ் போகி, வடுவொடு வாழுமடந்தையர் தம் மோரனையேனாகி யரங்கக் கூத்தியர், மனையகம் புகாஅ மரபினன் என, மணிமேகலையிற் (18:31-6) சித்திராபதி வஞ்சினங் கூறுதலானு மறிக.

இதுவுமது

148 - 151 : வேத்தியல் ............ உணர்ந்து

(இதன்பொருள்.) வேத்தியல் பொதுவியல் என இரு திறத்து மாத்திரை அறிந்து மயங்கா மரபின் ஆடலும் வரியும் - வேத்தியல் பொதுவியல் என்று சொல்லப்பட்ட இருவகைக் கூத்துகளின் தாள அறுதிகளை யறிந்து அவை மயங்காத முறைமையினாலே ஆடுகின்ற ஆடலும் எண் வகையாகிய வரிக்கூத்துகளும்; பாணியும் தூக்கும் கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து - தாளங்களும் இத் தாளங்களின் வழிவரும் எழுவகைத் தூக்குகளும் இவற்றோடுகூடி யிசைக்கும் நால்வகைத் தோற்கருவிகளின் கூறுபாடுகளும் உணர்ந்து; என்க.

(விளக்கம்) கூத்து - ஆடல், வரி, பாணி, தூக்கு, குயிலுவக் கருவி எனவரும் இவற்றின் விளக்கங்களை அரங்கேற்றுகாதையின்கண் விளக்கமாகக் காண்க.

இதுவுமது

152 - 156 : நால்வகை ............ கூத்தியும்

(இதன்பொருள்.) நால்வகை மரபின் அவினயக் களத்தினும் - நால்வகைப்பட்ட மரபினையுடைய அவினய நிலத்தானும்; ஏழ்வகை நிலத்தினும் எய்திய விரிக்கும் மலைப்பு அருஞ்சிறப்பின் தலைக்கோல் அரிவையும் - எழுவகைப்பட்ட நிலத்தினும் சென்றெய்தும்படி கோப்புகளை விரித்துப் பாடும் மலைத்தல் அரிய சிறப்பினையுடைய தலைக்கோலி என்னும் பட்டமெய்திய கூத்தியும்; வாரம் பாடும் தோரிய மடந்தையும் - பற்றுப்பாடும் தோரிய மடந்தையும்; தலைப்பாட்டுக் கூத்தியும் இடைப்பாட்டுக் கூத்தியும் - தலைப்பாட்டைப் பாடும் கூத்தியும் இடைப்பாட்டைப் பாடும் கூத்தியும்; என்க.

(விளக்கம்) அவினய நிலம் நான்காவன: நிற்றல், இயங்கல், இருத்தல், கிடத்தல் என்பன. எழுவகை நிலமாவன: ச,ரி,க,ம,ப,த,நி என்னும் எழுவகைப்பட்ட எழுத்தடியாகப் பிறக்கும் குரல் முதலாகிய ஏழும்.

வாரம் பாடுதல் - பற்றுப் பாடுதல் பின்பாட்டுப் பாடுதல். தோரிய மடந்தை - ஆடி முதிர்ந்த கூத்தி. தலைப்பாட்டு - இதனை உகம் எனவும், இடைப்பாட்டு - இதனை ஒளகம் எனவும் கூறுவர். இவையிற்றிற்கெல்லாம் முன்னம் அரங்கேற்று காதைக்கண் விளக்கங் கூறப்பட்டன.

இதுவுமது

157 - 167 : நால்வேறு ............. வீதிகளும்

(இதன்பொருள்.) நால்வேறு வகையின் நயத்தகு மரபின் - நால்வகையோடுங் கூடி யாவரும் விரும்பத்தக்க முறைமையினால்; எட்டுக்கடை நிறுத்த ஆயிரத்து எண் கழஞ்சு - ஆயிரத்தெட்டு என்னும் எண்ணினையுடைய கழஞ்சினை: முட்டா வைகல் முறைமையின் வழா - நாடோறும் முட்டாது பெறும் முறைமையினின்றும் வழுவாத; தாக்கு அணங்கு அனையார் நோக்கு வலைப்பட்டு ஆங்கு - தீண்டி வருத்தும் அணங்குபோல்வாருடைய கண்ணாகிய வலையிலகப்பட்டு; அரும்பெறல் அறிவும் பெரும் பிறிதாக - தமது பெறுதற்கரிய அறிவும் கெட்டொழிய; தவத்தோர் ஆயினும் - தவநெறியில் ஒழுகும் பெரியோராயினும் அல்லது; தகைமலர் வண்டின் நகைப் பதம் பார்க்கும் இளையோர் ஆயினும் - அழகிய மலர்தோறும் தாவித் தாவிச்சென்று அவற்றின் தேனைப் பருகிப் பின் பாராது செல்லும் வண்டுபோல ஒருத்தியிடத்தே தங்காமல் நாள்தோறும் புதிய புதிய பரத்தை மகளிரைப் புணர்ந்து செல்லுகின்ற காமுகராயினும் அல்லது; காம விருந்தின் மடவோர் ஆயினும் - காமவின்பத்திற்குப் புதியோராய் முன்பு நுகர்ந்தறியாத பேதையோர் ஆயினும்; ஏம வைகல் இன்துயில் வதியும் - நாள்தோறும் புணர்ச்சிமயக்கத்தோடு கூடிய இனிய துயிலோடே தங்குதற்குக் காரணமான; பண்ணும் கிளையும் பழித்த தீஞ்சொல் எண் எண் கலையோர் இருபெரு வீதியும் பண்களையும் அவற்றின் திறங்களையும் பழித்த இனிய சொல்லையுடைய அறுபத்து நான்கு கலைகளையும் கற்றுத்துறை போகிய கணிகை மகளிர் உறைகின்ற இருவகைப்பட்ட பெரிய வீதிகளும்; என்க.

(விளக்கம்) நால்வேறு வகை என்றது தலைக்கோலரிவை, தோரிய மடந்தை, தலைப்பாட்டுக் கூத்தி, இடைப்பாட்டுக் கூத்தி என்னும் நால்வகையினரையும் என்க. அவருள் அணங்கு அனையார்க்கு ஆயிரத்தெண்கழஞ்சு பொன் ஒருநாளைப் பரியப் பொருள் என்க. எனவே ஏனைய மகளிர்க்கு அவரவர் தகுதிக்கேற்ற பொருள் பரியமாம் என்பது பெற்றாம். இனி இதனை விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு ஒருமுறையாகப் பெற்றனள் எனவரும் அரங்கேற்று காதையானும் (162-3) உணர்க. பெரும் பிறிதாதல் - இறத்தல்; ஈண்டுக் கெடுதல் மேற்று. ஏமம் - மயக்கம். கிளை, கிள்ளை எனினுமாம். இருபெரு வீதி என்றது சிறுபொருள் பெறுவார் வீதியும், பெரும்பொருள் பெறுவார் வீதியும் ஆகிய இருபெரு வீதியும் என்றவாறு.

அங்காடித் தெரு

168 - 179: வையமும் .................. அங்காடி வீதியும்

(இதன்பொருள்.) வையமும் - கொல்லாப் பண்டியும்; பாண்டிலும் - இரண்டுருளையுடைய சகடமும்; மணித்தேர்க் கொடிஞ்சியும் - அழகிய தேர் மொட்டும்; மெய்புகு கவசமும் - மெய் புகுதற்கிடமாகிய கவசமும்; வீழ்மணித் தோட்டியும் - விரும்பப்படும் மணிகள் பதித்த அங்குசமும்; அதள்புனை அரணமும் - தோலாற் செய்யப்பட்ட கைத்தளமும்; அரியாயோகமும் - அரைப்பட்டிகையும்; வளைதரு குழியமும் - வளை தடியும்; வால் வெண்கவரியும் -மிக வெள்ளிய சாமரையும்; ஏனப் படமும் - பன்றி முகக் கடகும்; கிடுகின் படமும் - சிறு கடகும்; கானப்படமும் -காடெழுதின கடகும்; காழ் ஊன்று கடிகையும் - குத்துக் கோல்களும்; செம்பிற் செய்நவும் - செம்பாற் செய்தனவும்; கஞ்சத் தொழிலவும் - வெண்கலத்தாற் செய்தனவும்; வம்பின் முடிநவும் - கயிற்றால் முடிவனவும்; மாலையின் புனைநவும் - கிடையால் மாலையாகப் புனைவனவும்; வேதினத் துப்பவும் - ஈர்வாள் முதலிய கருவிகளும்; கோடுகடை தொழிலவும் - தந்தத்தைக் கடைந்து செய்த தொழிலையுடையவையும்; புகையவும் வாசப் புகைக்கு உறுப்பாயுள்ளனவும்; சாந்தவும் - மயிர்ச்சாந்துக்கு உறுப்பாயுள்ளனவும்; பூவிற் புனைநவும் - பூவாற் புனையப்படும் மாலைகளும் ஆகிய; வகை தெரிவு அறியா - வேறுபாடு தெரிதற்கரிய; வளம் தலை மயங்கிய - இன்னோரன்ன வளங்கள் கலந்து கிடக்கின்ற; அரசு விழை திருவின் அங்காடி வீதியும் - அரசரும் காணவிரும்பும் செல்வத்தையுடைய அங்காடித் தெருவும்; என்க.

(விளக்கம்) 198 - முதலாக, 179 - ஈறாக கம்மியர் முதலாயினாரால் பண்ணப்பட்ட பொருள்கள் விற்கும் அங்காடி கூறுகின்றார். 171. வளைதரு குழியமும் என்பதற்கு வாசவுண்டை என்பாரும் கட்டுக்குழியம் என்பாரும் உளர். கானப்படம் - யானை, சிங்கம் முதலிய ஓவியம் எழுதப்பட்ட கடகு எனினுமாம். 175. வம்பின் முடிந என்றது, அல்லிக்கயிறு, குசைக்கயிறு முதலியன; வம்பு - கயிறுமாம். 176. துப்ப - வலிமையுடைய கருவிகள். இவ்வங்காடியைப் பெரிய கடைத்தெரு என்பாரும் உளர்.

மணிக்கடை

180 - 183 : காக ............... ஒளியவும்

(இதன்பொருள்.) காகபாதமும் களங்கமும் விந்துவும் ஏகையும் நீங்கி - காகபாதம் களங்கம் விந்து இரேகை என்று கூறப்படுகின்ற பெருங்குற்றங்கள் நான்கும் நீங்கப்பெற்று; நூலவர் நொடிந்த இயல்பிற் குன்றா - நூலோரால் வரைந்து சொல்லப்பட்ட குணங்களிற் குன்றுதல் இல்லாத; நுழை நுண் கோடி - மிகவும் கூர்த்த விளிம்புகளையும் உடைய; நால்வகை வருணத்து நலம்கேழ் ஒளியவும் - நான்கு சாதிகளையுடைய நல்ல நிறம் உடையனவும் ஆகிய வயிரங்களும்; என்க.

(விளக்கம்) காகபாதம் முதலிய நான்கும் பெருங்குற்றம் ஆதலின் அவற்றை விதந்தார்.

இனி இவ் வயிரத்தைப் பற்றி அடியார்க்கு நல்லார் கூறிய விளக்கம் வருமாறு:

இவற்றுட் குற்றம் பன்னிரண்டாவன: சரைமலம் கீற்றுசப்படி பிளத்தல் துளை கரி விந்து காகபாதம் இருத்து கோடியில்லன கோடி முரிந்தன தாரை மழுங்கலென விவை; சரைமலங் கீற்று சப்படி பிளத்தல், துளைகரி விந்து காகபாதம், இருத்துக்கோடிக ளிலாதன முரிதல் தாரை மழுங்க றன்னோ டீராறும் வயிரத் திழிபென மொழிப என்றாராகலின். இனிக் குணங்கள் ஐந்தாவன: எட்டுப் பலகையும், ஆறு கோடியும், தாரையும், சுத்தியும், தராசமுமென விவை; பலகையெட்டுங் கோண மாறும், இலகிய தாரையுஞ் சுத்தியுந் தராசமும், ஐந்துங் குணமென் றறைந்தனர் புலவர், இந்திர சாபத் திகலொளி பெறினே என்றார். நால்வகை வருணத் தொளியாவன: அந்தணன் வெள்ளை யரசன்சிவப்பு, வந்த வசியன் பச்சை சூத்திரன், அந்தமில் கருமையென் றறைந்தனர் புலவர் இனி, மிக்க குற்றங்கள் நான்கின் பயனாவன: காக பாத நாகங் கொல்லும், மலம்பிரி யாதது நிலந்தரு கிளைகெடும், விந்து சிந்தையிற் சந்தா பந்தரும், கீற்றுவரவினை யேற்றவர் மாய்வர் எனவரும். இனி, வருண நான்கின் பயனாவன: மறையோ ரணியின் மறையோ ராகிப், பிறவியேழும் பிறந்து வாழ்குவரே, மன்னவ ரணியின் மன்னவர் சூழ, இந்நில வேந்த ராவரெழு பிறப்பும் வணிக ரணியின் மணிபொன் மலிந்து, தணிவற வடைந்து தரணியில் வாழ்வார், சூத்திர ரணியிற் றோகையர் கனகநெல், வாய்ப்ப மன்னி மகிழ்ந்து வாழ்குவரே எனவரும். ஏகை - இரேகை. இயல்பெனவே பலகை எட்டென்பதூஉம், கோடி ஆறென்பதூஉம் பெறுதும். குன்றா வென்பதனை அருத்தா பத்தியாக்கிக் குன்றுதலை யுடையவெனக் குற்றம் நான்கிற்கும் ஏற்றுக. நுழை நுண்கோடி - இருபெயரொட்டாய் மிகவும் கூர்த்த கோடி யென்பதாயிற்று. ஒளியவெனவே குறிப்பெச்சமாய் வலனென்பதாயிற்று.

வயிரம் வலன் என்னும் அவுணனைக் கொன்றுழி அவனுடைய எலும்பினின்றும் உண்டாயின என்பர். இனி, அவன் வயிற்றில் பித்தத்தைக் கொத்தி விழுங்கிய கருடன் நகைத்துழி, உமிழப்பட்ட அப்பித்தம் இமயமலை முதலிய பல மலைகளினும் வீழ்ந்து ஊறியதனால் மரகதம் எனும் மணி தோன்றிற்று எனவும், அதனால் அது கருடோற்காரம் என்று பெயர் பெற்றது எனவும் கூறுப.

மரகதமணி

184 - 185: ஏகையும் .................. ஒளியவும்

(இதன்பொருள்.) ஏகையும் மாலையும் இருளொடு துறந்த - ஏகை, மாலை, இருள் என்னும் பெருங்குற்றங்களை நீங்கின; பாசு ஆர் மேனி பசுங் கதிர் ஒளியவும் - பசுமை நிறைந்த உருவத்தையுடைய பச்சையொளி பரவிய மரகதமணி வகைகளும்; என்க.

(விளக்கம்) ஏகை - இரேகை (கீறல்). கீறல் முதலிய இம் மூன்று குற்றங்களும் பெருங் குற்றங்களாம். எனவே அவற்றை விதந்தா; என்க. இனி, இம் மரகதமணிக்குக் குற்றங்களும் குணங்களும் அடியார்க்கு நல்லார் பின்வருமாறு கூறிவர்.

இதற்குக் குற்றமெட்டு உள; அவை : கருகல் கல்மணல் கீற்று பொரிவு தராசம் இறுகுதலென விவை; என்னை? கருகுதல் வெள்ளை கன்மணல் கீற்றுப், பொரிவு தராச மிறுகுகள் மரகதத் தெண்ணிய குற்ற மிவையென மொழிப என்றாராகலின்; இவற்றுள், மிக்க குற்றமுடையன இம்மூன்று மென்றாரென்க. மாலை - தார்; இருள் - கருகுதல். பாசார் மேனிப் பசுங்கதிரொளி யென்ற மிகையானே குணங்களும் எட்டென்பதே பெறுதும்; நெய்தல் கிளிமயிற் கழுத்தொத்தல் பைம் பயிரிற், பசுத்தல் பொன்மை தன்னுடன் பசுத்தல், பத்தி பாய்தல் பொன்வண் டின்வயி, றொத்துத் தெளிதலோ டெட்டுங் குணமே என்றாராகலினெனக் கொள்க எனவரும்.

மாணிக்கமணி

186 - 187: பதும ............. சாதியும்

(இதன்பொருள்.) விதி முறை பிழையா விளங்கிய - நூல்களில் விதித்த முறையில் பிழைபடாதனவாய் விளங்கிய; பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும் சாதியும் - பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும் என்று கூறப்படுகின்ற நால்வகைச் சாதிமாணிக்க வகையும்; என்க.

(விளக்கம்) விதிமுறை பிழையாவெனவே பிறப்பிடமும், வருணமும், பெயரும், குணமும், குற்றமும், நிறமும், விலையும் பத்தியு மென்னுமிவையும் பிறவும் அடங்கின; என்னை? மாணிக்கத் தியல் வகுக்குங் காலைச், சமனொளி சூழ்ந்த வொருநான் கிடமும், நால்வகை வருணமும் நவின்றவிப் பெயரும், பன்னிரு குணமும் பதினறு குற்றமும், இருபத்தெண்வகை யிலங்கிய நிறமும், மருவிய விலையும் பத்தி பாய்தலும், இவையென மொழிப வியல்புணர்ந் தோரே என்றாகலின். இவற்றுள், பதுமம் - பதுமராகம்; சாதுரங்க மென்பதும் அது. நீலம் - நீலகந்தி; சவுகந்தி என்பதும் அது. விந்தம் - குருவிந்தம்; இரத்தவிந்து வென்பதுமது. படிதம் - கோவாங்கு; என்னை? வன்னியிற் கிடக்கும் வருணநாற் பெயரும், உன்னிய சாது ரங்க மொளிர் குருவிந்தம், சவுகந்தி கோவாங்கு தானா கும்மே எனவும், தாமரை கழுநீர் சாதகப் புட்கண் கோப மின்மினி கொடுங்கதிர் விளக்குமாதுளைப் பூவிதை வன்னியீ ரைந்தும், ஓதுசா துரங்க வொளியாகும்மே எனவும், திலக முலோத்திரஞ் செம்பருத் திப்பூக் கவிர்மலர் குன்றிமுயலுதி ரம்மே, சிந்துரங்குக்கிற் கண்ணென வெட்டும், எண்ணிய குருவிந்த மன்னிற நிறமே எனவும் கோகிலக்கண் செம் பஞ்சு கொய்ம்மலர்ப் பலாசம், அசோக பல்லவ மணிமலர்க் குவளை, இலவத் தலர்க ளென்றாறு குணமும், சவுகந் திக்குச் சாற்றிய நிறனே எனவும், கோவைநற் செங்கல் குராமலர் மஞ்சளெனக், கூறிய நான்குங் கோவாங்கு நிறனே எனவும் சொன்னார். ஒழிந்தனவும் விரிப்பின் உரை பெருகும், வந்தவழிக் கண்டுகொள்க என அடியார்க்கு நல்லார் விளக்கினர்.

புருடராகமணி

Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 23, 2012, 02:26:20 PM
188 : பூச ................... அனையவும்

(இதன்பொருள்.) பூச உருவின் - பூசம் என்னும் விண்மீனினது உருவத்தையுடைய; பொலம் தெளித்து அனையவும் - பொன்னை மாசு நீங்கத் தெளியவைத்தாற்போன்ற புருடராக மணி வகைகளும்; என்க.

(விளக்கம்) பூசம் நாண்மீன்களில் ஒன்று. இனி, பூசையுருவிற் பொலந்தேய்ந்தனையவும் என்று பாடங்கொண்டு, பூனைக்கண் போன்ற பொன்னைத் தேய்த்தாற் போன்றவை புருடராகம் என்பர் அரும்பதவுரையாசிரியர். பொலம் - பொன்.

வைடூரியமணி

189 : தீது ........... உருவவும்

(இதன்பொருள்.) தீது அறு கதிர் ஒளி - குற்றமற்ற ஞாயிற்றின் ஒளி எனவும்; தெள் மட்டு உருவவும் - தெளிந்த தேன்துளி எனவும் சொல்லுதற்கு ஒத்த உருவமுடைய வைடூரியம் என்னும் மணி வகையும்; என்க.

(விளக்கம்) இதனை அரும்பதவுரையாசிரியர் கோமேதகம் என்பர்.

நீல மணியும் கோமேதக மணியும்

190 : இருள் ................ உருவவும்

(இதன்பொருள்.) இருள் தெளித்து அனையவும் - இருளைத் தெளிய வைத்தாற்போன்ற நிறமுடைய நீல மணி வகையும்; இருவேறு உருவவும் - மஞ்சளும் சிவப்பும் ஆகிய இருவேறு நிறங்களையும் கலந்தாற்போன்ற நிறமுடைய கோமேதகமணி வகையும்; என்க.

(விளக்கம்) இனி, இவற்றுள் நீலமணிக்குக் குற்றமும் குணமும் அடியார்க்கு நல்லார் கூறுமாறு:

இதற்குச் சாதி நான்கும், குணம் பதினொன்றும், குற்றம் எட்டுமெனக் கொள்க; என்னை? நீலத் தியல்பு நிறுக்குங்காலை நால்வகை வருணமு நண்ணுமா கரமும், குணம்பதி னொன்றுங் குறையிரு நான்கும், அணிவோர் செயலு மறிந்திசி னோரே என்றாராகலின்; வெள்ளை சிவப்பு பச்சை கருமையென், றெண்ணிய நாற்குலத் திலங்கிய நிறமே, கோகுலக் கழுத்துக் குவளை சுரும்பர், ஆகுலக் கண்கள் விரிச்சாறு .... காயா நெய்தல் கனத்தல் பத்தி, பாய்த லெனக்குணம் பதினொன் றாமே என்பன. இனிக் குற்றம் வந்தவழிக் கண்டு கொள்க என்பர்.

ஒரு முதலில் தோன்றிய ஐவகை மணிகள்

191 - 192 : ஒருமை .......... மணிகளும்

(இதன்பொருள்.) ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் - ஒரு முதலில் தோன்றித் தம்முள் வேறுபட்ட ஐந்துவகை அழகை உடையனவாகிய ஈண்டுக் கூறப்பட்ட மாணிக்கம் புருட ராகம் நீலம் கோமேதகம் வைடூரியம் என்னும்; இலங்கு கதிர் விடூஉம் நலம்கெழு மணிகளும் - விளங்குகின்ற ஒளி வீசுகின்ற நன்மை பொருந்திய மணிகளும்; என்க.

(விளக்கம்) இவ் வைந்திற்கும் முதலாவது பளிங்கு என்க.

முத்தும் பவளமும்

193 - 198 : காற்றினும் ................ வல்லியும்

(இதன்பொருள்.) காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும் தோற்றிய குற்றம் துகள் அறத் துணிந்தவும் - காற்றேறு மணலேறு கல்லேறு நீர்நிலை என்னும் இந்த நான்கு பெருங் குற்றங்களும் ஒரு துகளளவும் இல்லையாய்த் தெளிந்த ஒளியை உடையனவும்; சந்திரகுருவே அங்காரகன் என வந்த நீர்மைய வட்டத்தொகுதியும் - வெள்ளியும் செவ்வாயும் போல நிரலே வெண்ணிறமும் செந்நிறமும் உடையவாய் உருண்டனவுமான முத்து வகைகளும்; கருப்பத்துளையவும் கல்லிடை முடங்கலும் திருக்கும் நீங்கிய - கருப்பத்திலேயே துளைபட்டனவும் கல்லிடுக்கில் புகுந்து முடங்கு பட்டனவும் திருகல் முறுகல் உடையனவாய் எழுந்தனவும் என்னும் இக் குற்றங்கள் நீங்கிய; செங்கொடி வல்லியும் - செம்மை மிகுந்து வளம்பெற வளர்ந்த கொடிப்பவள வகையும்; என்க.

(விளக்கம்) முத்திற்குக் காற்று மண் கல் நீர் என்னும் இந்த நான்கானும் உண்டாகும் குற்றங்களே பெருங் குற்றங்கள் என்பது தோன்ற இவற்றையே ஓதி ஒழிந்தார். பிறவும் குற்றங்கள் உள என்க. சந்திரகுரு - வெள்ளி; அஃதாவது கோள். அங்காரகன் - செவ்வாய்க் கோள். வெள்ளி தூய வெண்மை யாதலும், செவ்வாய் சிறிது செம்மை கலந்த வெண்மை யாதலும் உணர்க. இவ்விரண்டும் சிறந்த முத்தின் குணங்கள். வட்டம் என்றது உருண்டை வடிவமுடைய முத்தினை. இதனை ஆணிமுத்து என்றும் கூறுவர்.

இனி, பவளத்திற்கு ஈண்டுக் கூறிய குற்றங்கள் பெருங்குற்றங்களாம். நல்ல பவளங்கள் நிறமும் உருட்சியும் இவற்றால் சிந்துரமும் ஈச்சங்காயும் முசுமுசுக்கைக் கனியும் தூதுவழுதுணம் பழமும் போல்வன என்பர்.

199 - 200: வகை ............. வீதியும்

(இதன்பொருள்.) வகை தெரி மாக்கள் தொகை பெற்று ஓங்கி - மேற்கூறப்பட்ட இவ்வொன்பது வகைப்பட்ட மணிகளின் பிறப்பு முதல் சிறப்பீறாகிய வகைகளை ஆராய்ந்து தெரிகின்ற வணிகர் தொகுதியைப் பெற்றுச் சிறப்புற்றுள்ள; பகை தெறல் அறியாப் பயம் கெழு வீதியும் - பகைவராலே அழிக்கின்ற தொழிலை எக்காலத்தும் கண்டறியாத பயன் கெழுமிய மணியங்காடி வீதியும்; என்க.

(விளக்கம்) வகை - மணிகளின் வகையும், அவற்றின் குற்றங் குண முதலிய வகைகளும் என்க. மாக்கள் என்றது வணிகரை.

பொன்னங்காடி

201 - 204 : சாதரூபம் ............... வீதியும்

(இதன்பொருள்.) சாதரூபம் கிளிச்சிறை ஆடகம் சாம்பூநதம் என ஓங்கிய கொள்கையின் - சாதரூபமும் கிளிச்சிறையும் ஆடகமும் சாம்பூநதமும் என்று கூறப்படுகின்ற நான்கு வகையாய்ப் பெயர்பெற்றோங்கிய கோட்பாட்டையுடைய; பொலந்தெரிமாக்கள் - பொன்னினது கூறுபாட்டை ஆராய்ந்தறிந்த பொன் வாணிகர்; கலங்கு அஞர் ஒழித்து ஆங்கு - பொன் கொள வருவோர் எவ்விடத்து எப்பொன் உளதென்று ஐயுற்றுக் கலங்கும் கலக்கத்தை ஒழித்தற்கு இவ்விவ்விடங்களிலே இந்த இந்தப் பொன் உளதென்றுணர்த்தும்; இலங்கு கொடி எடுக்கும் நலம் கிளர் வீதியும் - விளக்கக் கொடிகள் இடந்தோறும் உயர்த்துதலையுடைய நன்மை பொருந்திய பொன்னங்காடிகளும்; என்க.

(விளக்கம்) பொலம் - பொன். மாக்கள் - பொன் வாணிகர். ஒழித்து - ஒழிப்ப. ஆங்கு - ஆங்காங்கு என்க. இலங்குகொடி - விளங்குதற்கு அறிகுறியான கொடி என்க. நலங்கிளர் - அழகுமிக்க எனினுமாம்.

அறுவையங்காடி

205 - 207: நூலினும் ............... வீதியும்

(இதன்பொருள்.) நுழை நூலினும் மயிரினும் பட்டு நூலினும் - நுண்ணிய பருத்தி நூலினானும் எலி மயிரினானும் பட்டு நூலினானும் நெய்யப்பட்டு; பால் வகை தெரியா - அவற்றின் பகுதியும் வகையும் தெரிந்து அடுக்கிய; பல் நூறு அடுக்கத்து - பலவாகிய நூறுநூறு கொண்ட அடுக்குகளாவன; நறுமடி செறிந்த அறுவை வீதியும் - நறிய மடிப் புடைவைகள் நெருங்கவைத்த புடைவை யங்காடியும்; என்க.

(விளக்கம்) நுழை நூலினும் என மாறுக. நூற்பட்டினும் என்றது. பட்டு நூலினும் என்றவாறு. பால் வகை தெரிந்து அடுக்கிய அடுக்கத்து எனவும் பன்னூறடுக்கத்து எனவும் தனித்தனி இயையும். மடி - புடைவை. புடைவைகளுக்கும் நறுமணப் புகை ஊட்டுதலின் நறுமடி என்றார். அறுவை - துணி. (அறுக்கப்படுவது - அறுவை; துணிக்கப்படுவது - துணி)

கூலக் கடைத்தெரு

208 - 211 : நிறைக்கோல் ................. வீதியும்

(இதன்பொருள்.) நிறைக்கோல் துலாத்தர் பறைக்கண் பராரையர் அம்பண அளவையர் - நிறுக்கும் துலாக்கோலையுடையவராகவும் மறிக்கும் பறையை யுடையராகவும் அளக்கும் மரக்காலை யுடையராகவும்; எங்கணும் திரிதர - தரகு செய்வார் அங்குமிங்குமாய் எங்கும் திரிந்துகொண்டிருப்ப; காலம் அன்றியும் கருங்கறி மூடையொடு கூலங்குவித்த கூல வீதியும் - இன்ன கூலம் இன்ன காலத்தில் கிடைக்கும் என்பதின்றி எக்காலமும் கரிய மிளகுப் பொதிகளோடு பல்வேறு வகைக் கூலங்களையும் குவித்து வைத்துள்ள கூலக் கடைத்தெருவும்; என்க.

(விளக்கம்) நிறைத் துலாக் கோலர், பராரைக்கண் பறையர், அளவை அம்பணர், எனற்பாலன இங்ஙனம் கூறப்பட்டன. துலாக்கோல், பறை, அம்பணம் என்பன அளவு கருவிகள். இவற்றுள் பராரைக்கட் பறை என்றது பரிய அறையையும் இரும்பால் வாய்மட்டாகப் பூண்கட்டின கண்ணையுமுடைய பறை என்றபடி; பறை வடிவிற்றாகலின் அப்பெயர் பெற்றதென்க. அம்பணம் - மரக்கால். கருங்கறி - மிளகு; வெளிப்படை. கூலம் - இரண்டு வகைப்பட்டனவாய்ப் பதினாறுவகை என்ப. அவையாவன: நெல் புல் வரகு தினை சாமை இறுங்கு தோரை இராகி என்பன ஓரினத்துக் கூலமாம். மற்றும் (பருப்பு) முதிரை வகைப்பட்ட எள்ளுக் கொள்ளுப் பயறு உழுந்து அவரை கடலை துவரை மொச்சை என்னும் இவை ஒருவகைக் கூலமாம் என்றுணர்க. இவற்றை இந்திரவிழவூரெடுத்த காதையினும் கூலங் குவித்த கூல வீதியும் என இவ்வாறே ஓதினர்.

கோவலன் நகர்கண்டு மீளுதல்

212 - 218 : பால்வேறு ......... புறத்தென்

(இதன்பொருள்.) பால் வேறு தெரிந்த நால்வேறு தெருவும் - அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என நூல்களாற் பகுத்துக் கூறியதற்கேற்ப நான்கு வெவ்வேறு வகுப்பினரும் தனித்தனியே உறைகின்ற தெருக்களும்; அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும் மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து முச்சந்தியும் நாற்சந்தியும் கோயிலங்காடியும் மன்றங்களும் கவர்க்கும் வழிகளும் தேர் வீதிகளும் ஆகிய இவ்விடங்களினும் இன்னோரன்ன பிறவிடங்களினும் சுற்றத் திரிந்து; விசும்பு அகடு திருகிய வெங்கதிர் நுழையா பசுங்கொடிப் படாகைப் பந்தர் நீழல் - ஞாயிறு விசும்பின் நடுவாக நின்று முறுகி ஓடுதலின் அதனுடைய வெப்பமுடைய கதிர்களும் நுழையமாட்டாத புதிய கொடியும் படாகை என்னும் பெருங்கொடியும் ஆகிய இவற்றாலியன்ற பந்தர் நீழல் போன்ற நிழலிடத்தே; காவலன் பேரூர் - மன்னுயிர் காக்கும் காவலனாகிய பாண்டியனது பெரிய தலைநகரத்தை; கோவலன் கண்டு மகிழ்வு எய்தி - கோவலன் பார்த்துப் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து; கொடி மதில் புறத்துப் பெயர்ந்தனன் - கொடி உயர்த்தப்பட்ட மதிலின் புறத்ததாகிய புறஞ்சேரிக்கு மீண்டு சென்றனன்.

(விளக்கம்) கவலை - முடுக்கு வழிகள். கதிர் மேடவீதியின் நீங்குதலின் விசும்பகடு திருகிய வென்றார். அகடு - நடு. திருகுதல் - முறுகுதல்; தெறுகதிர் ஞாயிறு நடுநின்று காய்தலின் (அகநா. 89:1) என்றார் பிறரும். கொடி - சிறுகொடி. படாகை - பெருங்கொடி.

ஆர்ப்ப அவிழ்த்த மண்டிலம் துயிலெடுப்ப, இயம்பச் சென்று ஏத்திச் சிறுமையுற்றேனென்றலும், கவுந்தியடிகள்; அனையையுமல்லை; பெற்றனையன்றே; வருந்தாதே போதீங் கென்றலும் மருங்கிற்போகி அயிராது புக்கு மகிழ்தரு வீதியும் இருபெரு வீதியும் அங்காடி வீதியும் பயங்கெழு வீதியும் நலங்கிளர் வீதியும் அறுவை வீதியும் கூலவீதியும் நால்வேறு தெருவும் அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும் மன்றமும் கவலையும் மறுகுமாகிய இவ்விடங்களில் பந்தர் நிழலில் திரிந்து காவலனூரைக் கோவலன் கண்டு மகிழ்வெய்திப் பெயர்ந்தானென முடித்திடுக.

பா - நிலைமண்டிலம்

ஊர்காண் காதை முற்றிற்று.
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 23, 2012, 02:31:43 PM
15. அடைக்கலக் காதை

அஃதாவது - கோவலன் கண்ணகியைக் கவுந்தியடிகளார் பால் ஓம்படை செய்து மதுரைமூதூர் புகுந்து ஆங்குப் பரத்தையர் வீதியும் அங்காடி வீதியும் பிற வீதிகளும் சந்தியும் சதுக்கமும் மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து அப் பேரூரைக் கண்டு மகிழ்ந்து மீண்டும் கண்ணகியும் அடிகளாரும் இருந்த புறஞ்சேரிக்கு வந்துற்றனனாக; அப்பொழுது, மாடலன் என்னும் மறையவன் குமரியாடி மீண்டு வருபவன் கோவலன் இருக்குமிடத்தை அடைந்தான்; கோவலன் அவனை வணங்க அம் மறையவன் கோவலனை முன்பே நன்கறிந்தவனாதலின் அவன் நிலைமை கண்டு கழிபேரிரக்கங் கொண்டு அவனது பண்டைய நிலையைப் பாரித்துரைத்து வருந்தியிருப்பப் பின்னர், அம் மறையவனும் கவுந்தியும் கோவலனை நோக்கி இவ்விடம் துறந்தோர்க்கே உரியதாகலின், நீ மதுரையில் புகுதுக என்று கூறும்பொழுது ஆயர் முதுமகளாகிய மாதரி என்பாள் அங்கு வந்து கவுந்தியடிகளைக் கண்டு வணங்கினள். அதுகண்ட கவுந்தியடிகள் சிறந்த குணம் உடையவளாகிய இம் மாதரியின்பால் கண்ணகியை இருத்துதல் குற்றமின்று என நினைத்து அம் மாதரிக்குக் கண்ணகியின் உயர்வையும் தவத்தோர் தரும் அடைக்கலப் பொருளைப் பாதுகாத்தலால் உண்டாகும் பயனையும் எடுத்துக்கூறி அவள்பால் கண்ணகியை அடைக்கலமாக ஒப்புவித்த செய்தியைக் கூறும் பகுதி என்றவாறு.

நிலந்தரு திருவின் நிழல்வாய் நேமி
கடம்பூண் டுருட்டும் கௌரியர் பெருஞ்சீர்க்
கோலின் செம்மையும் குடையின் தண்மையும்
வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப்
பதியெழு வறியாப் பண்புமேம் பட்ட  5

மதுரை மூதூர் மாநகர் கண்டாங்கு
அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து
தீதுதீர் மதுரையும் தென்னவன் கொற்றமும்
மாதவத் தாட்டிக்குக் கோவலன் கூறுழித்  10

தாழ்நீர் வேலித் தலைச் செங்கானத்து
நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை
மாமறை முதல்வன் மாடலன் என்போன்
மாதவ முனிவன் மலைவலங் கொண்டு
குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து  15

தமர்முதற் பெயர்வோன் தாழ்பொழி லாங்கண்
வகுந்துசெல் வருத்தத்து வான்றுயர் நீங்கக்
கவுந்தி இடவயிற் புகுந்தோன் தன்னைக்
கோவலன் சென்று சேவடி வணங்க
நாவ லந்தணன் தானவின் றுரைப்போன்  20

வேந்துறு சிறப்பின் விழுச்சீ ரெய்திய
மாந்தளிர் மேனி மாதவி மடந்தை
பால்வாய்க் குழவி பயந்தன ளெடுத்து
வாலா மைந்நாள் நீங்கிய பின்னர்
மாமுது கணிகையர் மாதவி மகட்கு  25

நாம நல்லுரை நாட்டுது மென்று
தாமின் புறூஉந் தகைமொழி கேட் டாங்கு
இடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல்
உடைகலப் பட்ட எங்கோன் முன்னாள்
புண்ணிய தானம் புரிந்தோ னாகலின்  30

நண்ணுவழி இன்றி நாள்சில நீந்த
இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன்
வந்தேன் அஞ்சல் மணிமே கலையான்
உன்பெருந் தானத் துறுதி யொழியாது
துன்ப நீங்கித் துயர்க்கட லொழிகென  35

விஞ்சையிற் பெயர்த்து விழுமந் தீர்த்த
எங்குல தெய்வப் பெயரீங் கிடுகென
அணிமே கலையார் ஆயிரங் கணிகையர்
மணிமே கலையென வாழ்த்திய ஞான்று
மங்கல மடந்தை மாதவி தன்னொடு  40

செம்பொன் மாரி செங்கையிற் பொழிய
ஞான நன்னெறி நல்வரம் பாயோன்
தானங் கொள்ளுந் தகைமையின் வருவோன்
தளர்ந்த நடையில் தண்டுகா லூன்றி
வளைந்த யாக்கை மறையோன் றன்னைப்  45

பாகுகழிந் தியாங்கணும் பறைபட வரூஉம்
வேக யானை வெம்மையிற் கைக்கொள
ஓய்யெனத் தெழித்தாங் குயர்பிறப் பாளனைக்
கையகத் தொழித்ததன் கையகம் புக்குப்
பொய்பொரு முடங்குகை வெண்கோட் டடங்கி  50

மையிருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப்
பிடர்த்தலை இருந்து பெருஞ்சினம் பிறழாக்
கடக்களி றடக்கிய கருணை மறவ
பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக
எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல  55

வடதிசைப் பெயரும் மாமறை யாளன்
கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை
வடமொழி வாசகஞ் செய்த நல்லேடு
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக் கெனப்
பீடிகைத் தெருவிற் பெருங்குடி வாணிகர்  60

மாட மறுகின் மனைதொறு மறுகிக்
கருமக் கழிபலங் கொண்மி னோவெனும்
அருமறை யாட்டியை அணுகக் கூஉய்
யாதுநீ யுற்ற இடர்ஈ தென்னென
மாதர்தா னுற்ற வான்துயர் செப்பி   65

இப்பொரு ளெழுதிய இதழிது வாங்கிக்
கைப்பொருள் தந்தென் கடுந்துயர் களைகென
அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன்
நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு
ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில்  70

தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்
தானஞ் செய் தவள் தன்றுயர் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி
ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து
நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ   75

பத்தினி யொருத்தி படிற்றுரை எய்த
மற்றவள் கணவற்கு வறியோன் ஒருவன்
அறியாக் கரிபொய்த் தறைந்துணும் பூதத்துக்
கறைகெழு பாசத்துக் கையகப் படலும்
பட்டோன் றவ்வை படுதுயர் கண்டு  80

கட்டிய பாசத்துக் கடிதுசென் றெய்தி
என்னுயிர் கொண்டீங் கிவனுயிர் தாவென
நன்னெடும் பூதம் நல்கா தாகி
நரக னுயிர்க்கு நல்லுயிர் கொண்டு
பரகதி யிழக்கும் பண்பீங் கில்லை   85

ஒழிக நின் கருத்தென உயிர்முன் புடைப்ப
அழிதரு முள்ளத் தவளொடும் போந்தவன்
சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும்
பற்றிய கிளைஞரின் பசிப்பிணி யறுத்துப்
பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்  90

இம்மைச் செய்தன யானறி நல்வினை
உம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது
விருத்தகோ பால நீயென வினவக்
கோவலன் கூறுமோர் குறுமகன் தன்னால்  95

காவல் வேந்தன் கடிநகர் தன்னில்
நாறைங் கூந்தல் நடுங்குதுய ரெய்தக்
கூறைகோட் பட்டுக் கோட்டுமா ஊரவும்
அணித்தகு புரிகுழ லாயிழை தன்னொடும்
பிணிப்பறுத் தோர்தம் பெற்றி யெய்தவும்  100

மாமலர் வாளி வறுநிலத் தெறிந்து
காமக் கடவுள் கையற் றேங்க
அணிதிகழ் போதி அறவோன் றன்முன்
மணிமேகலையை மாதவி யளிப்பவும்
நனவுபோல நள்ளிருள் யாமத்துக்   105

கனவு கண்டேன் கடிதீங் குறுமென
அறத்துறை மாக்கட் கல்ல திந்தப்
புறச்சிறை யிருக்கை பொருந்தா தாகலின்
அரைசர் பின்னோர் அகநகர் மருங்கினின்
உரையிற் கொள்வரிங் கொழிகநின் இருப்புக்  110

காதலி தன்னொடு கதிர்செல் வதன்முன்
மாட மதுரை மாநகர் புகுகென
மாதவத் தாட்டியும் மாமறை முதல்வனும்
கோவலன் றனக்குக் கூறுங் காலை
அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய  115

புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்
பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்
காவுந்தி ஐயையைக் கண்டடி தொழலும்
ஆகாத் தோம்பி ஆப்பயன் அளிக்கும்  120

கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை
தீதிலள் முதுமகள் செவ்வியள் அளியள்
மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு
ஏதம் இன்றென எண்ணின ளாகி
மாதரி கேளிம் மடந்தைதன் கணவன்  125

தாதையைக் கேட்கில் தன்குல வாணர்
அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு
கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர்
உடைப்பெருஞ் செல்வர் மனைப்புகு மளவும்
இடைக்குல மடந்தைக் கடைக்கலந் தந்தேன்  130

மங்கல மடந்தையை நன்னீ ராட்டிச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனந் தீட்டித்
தேமென் கூந்தற் சின்மலர் பெய்து
தூமடி உடீஇத் தொல்லோர் சிறப்பின்
ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத்  135

தாயும் நீயே யாகித் தாங்கிங்கு
என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்
வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்
கடுங்கதிர் வெம்மையிற் காதலன் றனக்கு
நடுங்குதுய ரெய்தி நாப்புலர வாடித்  140

தன்துயர்காணாத் தகைசால் பூங்கொடி
இன்துணை மகளிர்க் கின்றியமையாக்
கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது
பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்
வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது  145

நீணில வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்தநா டென்னும்
அத்தகு நல்லுரை அறியா யோநீ
தவத்தோர் அடக்கலம் தான்சிறி தாயினும்
மிகப்பே ரின்பம் தருமது கேளாய்   150

காவிரிப் படப்பைப் பட்டினந் தன்னுள்
பூவிரி பிண்டிப் பொதுநீங்கு திருநிழல்
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகொளிச் சிலாதல மேலிருந் தருளித்
தருமஞ் சாற்றுஞ் சாரணர் தம்முன்   155

திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன்
தாரன் மாலையன் தமனியப் பூணினன்
பாரோர் காணாப் பலர்தொழு படிமையன்
கருவிரற் குரங்கின் கையொரு பாகத்துப்
பெருவிறல் வானவன் வந்துநின் றோனைச்  160

சாவக ரெல்லாம் சாரணர்த் தொழுதீங்கு
யாதிவன் வரவென இறையோன் கூறும்
எட்டி சாயலன் இருந்தோன் றனது
பட்டினி நோன்பிகள் பலர்புகு மனையிலோர்
மாதவ முதல்வனை மனைப்பெருங் கிழத்தி  165

ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து
ஊர்ச்சிறு குரங்கொன் றொதுங்கிஉள் புக்குப்
பாற்படு மாதவன் பாதம் பொருந்தி
உண்டொழி மிச்சிலும் உகுத்த நீரும்
தண்டா வேட்கையில் தான்சிறி தருந்தி  170

எதிர்முகம் நோக்கிய இன்பச் செவ்வியை
அதிராக் கொள்கை அறிவனும் நயந்துநின்
மக்களின் ஓம்பு மனைக்கிழத் தீயென
மிக்கோன் கூறிய மெய்மொழி ஓம்பிக்
காதற் குரங்கு கடைநா ளெய்தவும்   175

தானஞ் செய்வுழி அதற்கொரு கூறு
தீதறு கென்றே செய்தன ளாதலின்
மத்திம நன்னாட்டு வாரணந் தன்னுள்
உத்தர கௌத்தற் கொருமக னாகி
உருவினும் திருவினும் உணர்வினுந் தோன்றிப்  180

பெருவிறல் தானம் பலவுஞ் செய்தாங்கு
எண்ணால் ஆண்டின் இறந்தபிற் பாடு
விண்ணோர் வடிவம் பெற்றன னாதலின்
பெற்ற செல்வப் பெரும்பய னெல்லாம்
தற்காத் தளித்தோள் தானச் சிறப்பெனப்  185

பண்டைப் பிறப்பிற் குரங்கின் சிறுகை
கொண்டொரு பாகத்துக் கொள்கையிற் புணர்ந்த
சாயலன் மனைவி தானந் தன்னால்
ஆயினன் இவ்வடிவு அறிமி னோவெனச்
சாவகர்க் கெல்லாம் சாற்றினன் காட்டத்  190

தேவ குமரன் தோன்றினன் என்றலும்
சாரணர் கூறிய தகைசால் நன்மொழி
ஆரணங் காக அறந்தலைப் பட்டோர்
அன்றப் பதியுள் அருந்தவ மாக்களும்
தன்தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும்  195

இட்ட தானத் தெட்டியும் மனைவியும்
முட்டா இன்பத்து முடிவுல கெய்தினர்
கேட்டனை யாயினித் தோட்டார் குழலியொடு
நீட்டித் திராது நீபோ கென்றே
கவுந்தி கூற உவந்தன ளேத்தி   200

வளரிள வனமுலை வாங்கமைப் பணைத்தோள்
முளையிள வெண்பல் முதுக்குறை நங்கையொடு
சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமயத்துக்
கன்றுதேர் ஆவின் கனைகுரல் இயம்ப
மறித்தோள் நவியத்து உறிக்கா வாளரொடு  205

செறிவளை ஆய்ச்சியர் சிலர் புறஞ் சூழ
மிளையும் கிடங்கும் வளைவிற் பொறியும்
கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும்
பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்
காய்பொன் உலையும் கல்லிடு கூடையும்  210

தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும்
கவையும் கழுவும் புதையும் புழையும்
ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும்
சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்
எழுவுஞ் சீப்பும் முழுவிறற் கணையமும்  215

கோலும் குந்தமும் வேலும் பிறவும்
ஞாயிலும் சிறந்து நாட்கொடி நுடங்கும்
வாயில் கழிந்துதன் மனைபுக் கனளால்
கோவலர் மடந்தை கொள்கையிற் புணர்ந்தென்.

உரை

1-8 : நிலந்தரு .............. புகுந்து

(இதன்பொருள்) நிலம் தரு திருவின் நிழல் வாய் நேமி கடம் பூண்டு உருட்டும் கவுரியர் - நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கு உணவு முதலிய பல்வேறு செல்வங்களையும் தருதற்குக் காரணமான அருளாகிய நிழலிடத்தே நின்று ஆணையாகிய சக்கரத்தைச் செலுத்துகின்ற தமக்குரிய கடமையைச் செவ்விதமாக மேற்கொண்டு செலுத்துகின்ற பண்புடைய பாண்டியருடைய; பெருஞ்சீர்க் கோலின் செம்மையும் குடையின் தண்மையும் வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கை - பெரிய புகழோடு பொருந்திய செங்கோலினது நடுவுநிலைமையும், குடையினது அளியாகிய குளிர்ச்சியும் வேலினது திறலாகிய வெப்பமும் விளங்குதற்கிடமாகிய கொள்கை காரணமாக; பதி எழுவு அறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் மாநகர் கண்டு ஆங்கு - தன்னிடத்தே வாழும் மக்கள் குடியோடிப்போதலை ஒருபொழுதும் அறியாமைக்குக் காரணமான பண்புடைமையின் மேம்பட்டுத் திகழும் மதுரை மூதூராகிய பெரிய நகரத்தைக் கோவலன் கண்டு மகிழ்ந்து அந்நகரில்; அறம்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து - தமது சொல்லாலும் செயலாலும் மக்களுக்கு அறத்தை வழங்குகின்ற நன்னர் நெஞ்சினையுடைய துறவோர் மிகுந்துள்ள மதிலின் புறத்தேயுள்ள பழைய ஊரின்கண் கவுந்தியடிகளும் கண்ணகியும் உறைகின்ற பொழிலின்கண் புகுந்து; என்க.

(விளக்கம்) நிலந்தரு திரு என்றது, உணவு முதலிய பல்வேறு பொருள்களையும்; நிழல் என்றது அருளை, திருவருளின் வழிநின்று நேமி செலுத்தும் அரசனுடைய நாட்டின்கண் உணவு முதலிய பொருள்களெல்லாம் பெருகும் என்பதுபற்றித் திருவிற்கு அருளை ஏதுவாக்கினார்; என்னை? இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட, பெயலும் விளையுளுந் தொக்கு (குறள், 545) எனவரும் வள்ளுவர் பொன்மொழியும் நினைக. நேமி - ஆணை. கடம் - கடமை. கவுரியர் - பாண்டியர். அவர் செங்கோன்மைப் புகழ் உலகெலாம் பரத்தலின் பெருஞ்சீர்க்கோல் என்றான். செம்மை - செங்கோன்மைக்கு இன்றியமையாத நடுவு நிலைமை. குடை - மன்னனின் அளியுடைமைக்கு அறிகுறி ஆதலின், குடையின் தண்மை என்றார். வேல் - தெறலுக்கு அறிகுறி ஆதலின் வேலின் கொற்றம் என்றார். பதி எழுதல் - வாழ்க்கைக்கு வேண்டியன கிடைக்கப் பெறாமல் குடிகள் பிறநாட்டிற்கு ஓடிப்போதல். பண்பு நாடாவளத்ததாதன் முதலியன. பதியெழு வறியாப் பழங்குடி கெழுமிய .... புகார் என முன்னரும் இச் சிறப்புடைமையைப் புகாருக்கும் கூறியது நினைக.

9 - 10: தீதுதீர் ................ கூறுழி

(இதன்பொருள்) தீதுதீர் மதுரையும் தென்னவன் கொற்றமும் - தீங்குகளெல்லாம் நீங்கி நலத்தொடு திகழும் அம் மதுரையின் சிறப்பையும் அதனை ஆளுகின்ற பாண்டியனுடைய வெற்றிச் சிறப்பினையும்; மாதவத்தாட்டிக்குக் கோவலன் கூறுழி - பெரிய தவத்தையுடைய கவுந்தியடிகளாருக்குக் கோவலன் தான் கண்டாங்கு எடுத்துச் சொல்லும்பொழுது; என்க.

(விளக்கம்) தீது - பழவினை. மதுரை கடவுட் டன்மையுடைய தாய்த் தன்கண் வரும் மக்களுடைய பழவினையெல்லாம் பாறச் செய்வது என்னுங் கருத்தால், தீதுதீர் மதுரை என்றார். இன்னும் கோவலனுடைய பழவினையையும் தீர்த்தருளி அவனைத் தேவனாக்குதலும் குறிப்பால் இது தோற்றுவித்து நிற்றலும் உணர்க. இதற்கு அடியார்க்கு நல்லார் கூறுகின்ற விளக்கம் முன்னரே அமைந்து கிடத்தலின் வேண்டா விளக்கமாதல் அறிக.

மாடலன் வரவு

11 - 19 : தாழ்நீர் .............. வணங்க

(இதன்பொருள்) தாழ் நீர் வேலித் தலைச்செங்கானத்து நால்மறை முற்றிய நலம் புரி கொள்கை மாமறை முதல்வன் மாடலன் என்போன் - தாழ்ந்த நீரையுடைய அகழியமைந்த தலைச் செங்காடு என்னும் ஊரில் பிறந்தவனும், நான்கு மறைகளையும் ஓதி முடித்தவனும் தான் ஓதியாங்குப் பிறர் நலமே பேணுதலையே குறிக்கோளாகவுடையவனும் அந்தணருள்ளும் முதல்வனும் ஆகிய மாடலன் என்பவன்; மாதவ முனிவன் மலைவலங்கொண்டு குமரி அம் பெருந்துறை கொள்கையின் படிந்து தமர் முதல் பெயர்வோன் -பெரிய தவத்தையுடைய அகத்தியன் உறைகின்ற பொதியின் மலையை வலங்கொண்டு வணங்கிக் குமரித் தீர்த்தத்தின்கண் தனது குறிக்கோளுக்கிணங்க நீராடித் தன்னுடைய சுற்றத்தார் இருக்கும் இடத்திற்கு மீண்டு வருகின்றவன்; தாழ்பொழில் ஆங்கண்-தாழ்ந்த பொழிலையுடைய அப் புறஞ்சேரியிடத்தே; வகுந்து செல் வருத்தத்து வான் துயர் நீங்கக் கவுந்தி இடவயின் புகுந்தோன் தன்னை கோவலன் சென்று சேவடி வணங்க - வழிவந்த வருத்தத்தால் உண்டாய இளைப்புத் தீர்தற் பொருட்டுக் கவுந்தியடிகள் இருந்த பள்ளியிடத்தே வந்து புகுந்தவனை ஆங்கிருந்த கோவலன் கண்டு அவன் எதிர் சென்று சிவந்த அடிகளில் வீழ்ந்து வணங்கா நிற்ப; என்க.

(விளக்கம்) தாழ்ந்த நீர் வேலி - தாழ்ந்த நீர்நிலைகளையுடைய மருத நிலம் சூழ்ந்த எனினுமாம். நலம்புரிதல் - பிறர்க்கு நன்மையே செய்தல். இவன், சோழநாட்டுத் தலைச்செங்காட்டில் பிறந்தவன் ஆதலின் கோவலனுடைய குடும்பத்தாரோடு பெரிதும் கேண்மை யுடையவனாக இருந்தமை பின்னர் இவன் கூற்றால் விளங்கும். இவ்வந்தணர் முதல்வனைக் கோவலன் பண்டே நன்நறிந்தவன் ஆதலின், இவன் வரவு கண்டு மகிழ்ந்து எதிர்சென்று வணங்கினன் என்க. தமர் முதல் - தன் சுற்றத்தார் இருக்குமிடம். வகுந்து - வழி. வரை சேர் வகுந்திற் கானத்துப் படினே (மலைபடுகடாஅம் - 242) என்புழியும் அஃது அப்பொருட்டாதல் அறிக. கோவலன் சென்று சேவடி வணங்க என்றது அவனுக்கு அம் மறையவன்பால் உள்ள அன்பு மிகுதியும் நன்மதிப்பும் ஒருங்கே உணர்த்தி நிற்றல் உணர்க.

மாடலன் கோவலன் நிலைமை கண்டு இரங்கிக் கூறுதல்

(20 - நாவலந்தணன் தான் நவின்றுரைப்போன் என்பது தொடங்கி 94. நீ என வினவ என்பது வரையில் மாடலன் கூற்றாக ஒரு தொடர்.)

20 : நாவல் ................ உரைப்போன்

(இதன்பொருள்) நாவல் அந்தணன் - நாவன்மையுடைய அம் மாடலன் கோவலன் நிலைமை கண்டு; தான் நவின்று - முற்படக் கோவலன் அங்கு வந்துள்ள வரலாற்றை வினவி அறிந்துகொண்டு பின்னர் அவன் நிலைமைக்கு இரங்கி; உரைப்போன் - கூறுகின்றனன்; என்க.

(விளக்கம்) தான் நவின்று அறிந்து இரங்கி எனச் சில சொல் பெய்துரைக்க. நவின்றுரைப்போன் என்பதற்குக் கோவலனது பண்டைய நிலையைப் பாரித்துரைப்பவன் எனலுமாம்.

21 - 27 : வேந்துறு ................... கேட்டாங்கு

(இதன்பொருள்) (94) கோபால - கோவலனே; வேந்து உறு சிறப்பின் விழுச்சீர் எய்திய மாந்தளிர்மேனி மாதவி மடந்தை - சோழ மன்னன் வழங்கிய மிக்க தலைவரிசையால் சிறந்த புகழைப் பெற்ற மாந்தளிர் போன்ற மேனியையுடைய மாதவியாகிய மடந்தை; பால் வாய்க் குழவி பயந்தனள் எடுத்து வாலாமை நாள் நீங்கிய பின்னர் - நினக்கு மகளாகப் பிறத்தற்குரிய ஊழ்வினை வாய்த்ததொரு பெண் மகவினை ஈன்றெடுத்து வாலாமையுடைய நாள்கள் கழிந்தபின்னர்; மாமுது கணிகையர் மாதவி மகட்கு நாம நல்லுரை நாட்டுதும் என்று தாம் இன்புறூஉம் தகை மொழி கேட்ட ஆங்கு - மிகவும் முதுமையுடைய கணிகை மகளிர் ஒருங்கு கூடி மாதவி ஈன்ற பெண் மகவிற்குப் பெயராகத் தகுந்த அழகிய சொல்லொன்றனை யாம் இப்பொழுது கண்டு நிலைநாட்டுவேமாக என்று தம்முள் துணிந்து பின்னர் அம் மகளிர் தாம் இன்பம் எய்துதற்குரிய அழகிய மொழி ஒன்றனைக் கூறுக என்று நின்னை அணுகிக் கேட்ட பொழுதே அவரை நோக்கி; என்க.

(விளக்கம்) வேந்து : சோழமன்னன். உறு சிறப்பு என்றது மாதவி ஆடற்கலை அரங்கேறிக் காட்டியபொழுது அம் மன்னன் மகிழ்ந்து அவட்கு வழங்கிய பெரும்பரிசிலை. பால் - ஊழ்வினை; பால் வாய்த்த குழவி என்க. பயந்தனள்; முற்றெச்சம். ஈன்று என்க. வாலாமை நாள் - தீண்டப்படாத நாள் (அழுக்குடைய நாள்). மாமுது கணிகையர் என்றது சித்திராபதியை யுள்ளிட்ட வயது முதிர்ந்த கணிகையரை. அவர்தாம் கோவலனையும் உளப்படுத்தியாம் நாமநல்லுரை நாட்டுதும் என்றாராகக் கொள்க. தகைமொழி என்றது அழகிய பெயர்ச்சொல் என்றவாறு. கேட்ட என்றது அத்தகைய மொழி யொன்றனைத் தேர்ந்து தருக என்று கேட்ட என்பதுபட நின்றது.

28 - 37 : இடைஇருள் ............... இடுகென

(இதன்பொருள்) இடை இருள் யாமத்து எறிதிரைப் பெருங்கடல் உடை கலப்பட்ட எங்கோன் நள்ளிருள் யாமத்தே சூறைக்காற்று எறியப்பெற்ற அலைகளையுடைய பெரிய கடலின்கண் தன்னுடைய உடைந்த மரக்கலத்தில் அகப்பட்டுக்கொண்ட எமது குலமுதல்வன் ஒருவன்; முன்னாள் புண்ணியதானம் புரிந்தோன் ஆதலின் - அவன்றானும் முற்பிறப்பிலே புண்ணியத்தையும் அப்பிறப்பிலே உத்தம தானத்தையும் செய்த சீரியோனாதலின்; நண்ணு வழியின்றி நாள் சில நீந்த - தன்னுயிர்க்கு இறுதி யுண்டாகும் ஊழ் வந்துறாமயாலே ஒரு சில நாள் அந் நல்வினை கைதருதலாலே அக் கடலின்கண், நீந்துவானாக ஒருநாள் அவன் முன் தோன்றிய ஐய; யான் இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன் வந்தேன் அஞ்சல் மணிமேகலை - யான் தேவேந்திரனுடைய ஏவலாலே அண்மையிலுள்ள தீவில் வாழ்பவரை அசுரர் துன்புறுத்தாதபடி காத்தற்கு இங்கே வாழ்கின்றேன்காண்! உன்னையும் காத்தற்பொருட்டே வந்துள்ளேன் ஆதலால் அஞ்சாதே கொள்! யான் மணிமேகலை என்னும் தெய்வம்காண்; உன் பெருந்தானத்து உறுதி ஒழியாது - நீ பண்டு செய்த பெரிய தானத்தின் பயனும் உன்னைக் காவாதொழியாது காண்; துன்பம் நீங்கித் துயர்க்கடல் ஒழிகென - நீ இப்பொழுது எய்துகின்ற இத் துன்பத்தினின்றும் நீங்கித் துயரந்தரும் இக் கடலினின்றும் கரை ஏறுவாயாக என்று இனிது தேற்றுரை கூறி; விஞ்சையில் பெயர்த்து - தனது வித்தையினாலே அக் கடலினின்றும் கரை ஏற்றி; விழுமம் தீர்த்த எம் குலதெய்வப் பெயர் ஈங்கு இடுக என - அவன் துன்பம் தீர்த்து உய்யக்கொண்ட எங்கள் குலதெய்வமாகிய அத் தெய்வப் பெயரையே இங்கு இம் மகவிற்கு இடுமின் என்று கூறா நிற்ப; என்க.

(விளக்கம்) எறி திரை - காற்றால் எறியப்படும் திரை என்க. உடை கலம் - பார்தாக்கி உடைந்துபோன மரக்கலம். எங்கோன் என்றது கோவலனுடைய மரபில் உள்ளான் ஒருவனை. நண்ணுவழி - கரையைக் கிட்டுதற்கு இடனின்றி எனலுமாம். புண்ணியமும் தானமும் புரிந்தமை கடலினிடையே சிலநாள் நீந்தி உயிரோடிருத்தற்கு ஏதுவாய் நின்றது புண்ணியமும் தானமும் என்க. உறுதி - பயன். விஞ்சை - வித்தை. விஞ்சைபோல எனினுமாம். ஈங்கு - இப்பொழுது எனினுமாம். குல முதல்வனை உய்யக்கொண்டு தன் குலத்தை நிலைபெறச் செய்த நன்றி நினைந்து எங் குலதெய்வம் என்றான். அதன் பெயர் அத்தெய்வத்தின் கூற்றாகவே மணிமேகலை என்று அறிவிக்கப்பட்டமையால் வாளாது தெய்வப் பெயர் என்றொழிந்தான்.

கோவலன் யானை கோட்பட்ட மறையோனைப் பாதுகாத்தமை

38 - 47 : அணிமேகலையார் .......... கைக்கொள

(இதன்பொருள்) அணிமேகலையார் ஆயிரங் கணிகையர் மணிமேகலை என வாழ்த்திய ஞான்று - நீ விரும்பியவாறே அணிந்த மேகலையையுடைய கணிகை மகளிர் எண்ணிறந்தோர் ஒருங்கு கூடிப் பெயர் சூட்டுதற்குரிய விழா வெடுத்து அம் மகவிற்கு மணிமேகலை என்று பெயர் சூட்டி அம் மகவினையும் அரசனையும் நகரையும் வாழ்த்திய அந்த நாளிலே; மங்கல மடந்தை மாதவி தன்னொடு செம்பொன் மாரி செங்கையின் பொழிய - நிறைந்த அழகையுடைய மடந்தையாகிய அம் மாதவியினோடு நீ அம் மகவின் ஆக்கங்கருதிச் செம்பொன் முதலியவற்றை வாரி மழைபோலச் சிவந்த கைகளாலே பொழியா நிற்ப; ஞான நல்நெறி நல்வரம்பு ஆயோன் மறையோன் தானம் கொள்ளும் தகைமையின் வீட்டுலகம் சேர்தற்கு நல்ல நெறியாகிய மெய்யுணர்வுக்குத் தானே எல்லையாகிய மறையவன் ஒருவன் நின்பால் தானம் கொள்ளுகின்ற கருத்தோடு; வளைந்த யாக்கை தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி வருவோன் தன்னை - மூப்பினால் வளைந்த யாக்கையையும் தளர்ந்த நடையையுமுடையவனாய்த் தண்டினையே காலாக ஊன்றி வருகின்றவனை; பாகு கழிந்து யாங்கணும் பறைபட வரூஉம் வேக யானை வெம்மையின் கைக்கொள - பாகர் அடக்குமுறைச் செயலுக்கு அடங்காமல் அவரினின்றும் நீங்கித் தான் செல்லுமிடமெல்லாம் பறை முழக்கம் உண்டாகும்படி தன்மனம் போனவாறு வருகின்ற மதச் செருக்கினையுடைய யானையொன்று சினத்தோடே தன் கையாற் பற்றிக்கொள்ள; என்க.

(விளக்கம்) ஞானநன்னெறி என்றது சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நால்வகை நெறிகளுள் வைத்து ஞானநெறியை. அதுவே வீட்டுலகிற்கு நேரிய வழியாதல்பற்றி நன்னெறி என விதந்தோதியவாறு. ஞானம் - மெய்யறிவு. ஐயந்திரிபற்ற மெய்யுணர்வு கைவரப்பெற்றோன் என்பது தோன்ற நல்வரம்பாயோன் என்றார். மறையவன் ஆதலின் தானம் கொள்ளும் தகைமையினால் வருவோன் என்றார். தகைமை - தானம் கொள்ளுதற்குரிய தகுதிப்பாடு. பாகர்க்கு அடங்காமல் கழிந்து என்க. யாங்கணும் பறைபடுதல் யானை இவ்வாறு மதவெறியால் திரியும்போது அதன் வருகையை அறிவித்தற் பொருட்டு. இங்ஙனம் பறை முழக்கி அறிவித்தல் பண்டைக்காலத்து வழக்கமாம். இதனை -

நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப்
பறைஅறைந் தல்லது செல்லற்க வென்னா
இறையே தவறுடை யான்

எனவரும் குறிஞ்சிக்கலியானு முணர்க. 20. வேகம் - மதச்செருக்கு. வெம்மை - சினம்.

கோவலனுடைய தறுகண்மை

48 - 53: ஒய்என ............... மறவ

(இதன்பொருள்) ஒய் எனத் தெழித்து ஆங்கு உயர்பிறப்பாளனைக் கை அகத்து ஒழித்து - அவ்வாறு அம் மறையோனை அவ்வியானை கைக்கொண்ட வளவிலே அதுகண்ட நீ (கோவலன்) ஞெரேலென அந்த யானையை உரப்பியவனாய் அப்பொழுதே அங்குச் சென்று நின் கையாலே அம் மறையோனை நீக்கி; அதன் கை அகம் புக்குப் பொய் பொரு முடங்கு கை வெள்கோட்டு அடங்கி - அதன் கையில் நீயே புகுந்து அந்த யானையானது நின்னை வளைத்த பொழுதில் உட்டுளையமைந்த அக் கையினின்றும் நீங்கி அதன் வெள்ளிய கோட்டின்கண் அடங்கி அது பற்றுக்கோடாக ஏறி; மை இருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப் பிடர்த்தலை இருந்து - கரிய பெரிய ஒரு குன்றின்மேல் இருந்த விச்சாதரனைப்போல் அதன் பிடரின்மேலிருந்து; பெருஞ்சினம் பிறழாக் கடக்களிறு அடக்கிய கருணைமறவ -பெரிய வெகுளி நீங்காத மதவெறி கொண்ட அக் களிற்றியானையை அடக்கிக் கட்டுவித்து அப் பார்ப்பனனை யுள்ளிட்ட மாந்தரை உய்யக்கொண்ட பேரருளுடைய வீரனே; என்றான் என்க.

(விளக்கம்) ஒய் என என்பது விரைவுக் குறிப்பு. இனி, ஒய் என்பது யானைப்பாகர் வையும் ஆரிய மொழி எனினும் அமையும் என்பர் அடியார்க்குநல்லார். தெழித்தல் - உரப்புதல். அஃதாவது - அதட்டுதல். பொய் - உட்டுனை. பொருந்தின என்பது ஈறுகெட்டு, பொரு என நின்றது. இச் செயலால் கோவலனுடைய அருளுடைமையும் மறப்பண்பும் ஒருங்கே வெளிப்படுதலின் கருணைமறவ என்று விளித்தான்.

கைக்கொளத் தெழித்து ஒழித்துப் புக்கு அடங்கி அடக்கிய மறவ என இயையும். அடக்கிய என்றது அடக்கிக் கட்டுவித்த என்பதுபட நின்றது.

கோவலனுடைய பிறர்க்கென வாழும் பெருந்தகைமை

54 - 75 : பிள்ளை ............... செல்லாச் செல்வ

(இதன்பொருள்) பிள்ளை நகுலம் பெரும் பிறிதாக எள்ளிய மனையோள் இணைந்து பின் செல்ல வடதிசைப் பெயரும் மாமறையாளன் - ஒரு பார்ப்பனி தான் வளர்த்த கீரிப்பிள்ளை தன் குழவியைக் காத்திருந்த பொழுது ஒரு பாம்பு அணுக அதனைக் கடித்துத் துணித்தமையால் குருதிதோய்ந்த வாயோடு அப்பார்ப்பனியின் வரவு பார்த்து எதிர்கொண்டதாக அதன் வாயில் குருதி கண்டு அது தன் பிள்ளையைக் கடித்ததென்று கருதித் தன் கையின் மணையால் புடைக்க அக்கீரி இறந்தமையாலே அத் தீவினை பொறாத அவள் கணவனாகிய பார்ப்பனன் அதற்குக் கழுவாயாகக் கங்கையாடுதற் பொருட்டு வடதிசை நோக்கிச் செல்பவன் தன்னால் இகழப்பட்ட மனைவி வருந்தித் தன்னைத் தொடர்தல் கண்டு அவளை நோக்கி, நின் கைத்தூண் வாழ்க்கை கடவது அன்று - ஏடி! தீவினையாட்டியாகிய நின்னுடைய கையதாகிய உணவை உண்டு வாழ்கின்ற வாழ்க்கை இனி எனக்குப் பொருந்துவதன்று எனக் கூறிப் பின்னர்; வடமொழி வாசகம் செய்த நல் ஏடு கடன் அறி மாந்தர் கை நீ கொடுக்க என - வடமொழியாலே செய்யுள் எழுதப்பட்ட நன்மையுடைய ஓரேட்டினை அவள் கையிற் கொடுத்து இதனை நீ தம் கடமையை அறிகின்ற மாந்தருடைய கையில் கொடுப்பாயாக என்று கூறிப்போயினனாக; பீடிகைத் தெருவில் பெருங்குடி வாணிகர் மாட மறுகின் மனைதொறும் மறுகி - அப் பார்ப்பனிதானும் அவ்வேட்டினைக் கைக்கொண்டு பூம்புகார் நகரத்து அங்காடித் தெருவினும் பெருங்குடி வாணிகர் உறையும் மாடமாளிகையையுடைய தெருவினும் வீடுதோறும் சென்று; கருமக் கழிபலம் கொண்மினோ எனும் அருமறையாட்டியை அணுகக் கூஉய் - கருமக் கழிபலம் கொள்ளும் கோள் என்று இரக்கின்ற அப் பார்ப்பனியைக் கண்டுழி நீ தானும் அவளை நின் அருகில்வரக் கூப்பிட்டழைத்து; நீ உற்ற இடர் யாது ஈது என் என - அன்னாய் நீ எய்திய துன்பந்தான் என்னையோ? நீ கைக்கொண்டுள்ள இவ்வேடு என்னையோ? கூறிக் காண்! என வினவினையாக; மாதர் தான் உற்ற வான் துயர் செப்பி இப்பொருள் எழுதிய இதழ் இது கைப்பொருள் தந்து வாங்கி என் கடுந்துயர் களைக என -அதுகேட்ட அப் பார்ப்பனி தான் எய்திய பெரிய துயருக்குரிய காரணத்தை நின்னிடத்தே கூறி இச் செய்தியை எழுதிய ஏடு இஃதாம் இதனை நின் கைப்பொருளைத் தந்து வாங்குமாற்றால் என்னுடைய கடிய துன்பத்தைப் போக்கியருள்வாயாக என்று சொல்லி இரவாநிற்ப; அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன் நெஞ்சு உறு துயரம் நீங்குக என்று - அது கேட்ட நீ அன்னாய்! நீ அஞ்சாதே கொள்! உனது பொறுத்தற்கரிய துன்பத்தை யானே போக்குவல் ஆதலால் நினது நெஞ்சின்கண் மிக்குள்ள துன்பத்தை விடுக என்று தேற்றுரை கூறி; ஆங்கு ஓத்து உடை அந்தணர் உரைநூல் கிடக்கையின் தீத்திறம் புரிந்தோள் செய் துயர் நீங்கத் தானம் செய்து அவள் தன் துயர் நீக்கி-அப்பொழுதே மறையையுடைய பார்ப்பனருடைய அறநூல் அத் தீவினைக்குக் கழுவாய் கூறியபடியே கொலைத் தீவினை செய்த அப் பார்ப்பனி அச் செய்கையால் உற்ற துன்பம் துவர நீங்கும்படி தானம் செய்து அவளுடைய நெஞ்சுறு துயரத்தையும் போக்கிப் பின்னர்; கானம் போன கணவனைக் கூட்டி ஒல்காச் செல்வத்து உறு பொருள் கொடுத்து - அவளை இகழ்ந்து காட்டகம் புக்க அவள் கணவனையும் வரவழைத்து அவளொடு சேர்த்து எஞ்சிய காலத்திலும் அவர் தளராமைக்குக் காரணமான பல படைப்பாகிய செல்வத்தோடே மிக்க கைப்பொருளையும் வழங்கி; நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ - அவர்களை நல்லாற்றுப்படுத்த எஞ்ஞான்றும் தொலையாத திருவருட் செல்வனே; என்றான் என்க.

(விளக்கம்) பிள்ளை நகுலம் - கீரிக்குட்டி. பெரும் பிறிது - சாவு. எள்ளிய - எள்ளப்பட்ட. வடதிசைப் பெயரும் என்பதற்கு வடதிசையை நோக்கிக் கங்கையாடப் போகின்றவன் என்பர் அடியார்க்கு நல்லார். பின்னர், அடிகளார் கானம் போன கணவனை என்றோதுதலின் தவம் செய்தற்குக் காட்டகம் புக்கான் என்பதே அவர் கருத்துப் போலும். கைத்தூண் - கையதாகிய உணவு. வடமொழி வாசகம் - வடமொழிச் செய்யுள். அஃதாவது, அபரீக்ஷ்ய நகர்த்தவ்யங் கர்த்தவ்யம் ஸுபரீக்ஷிதம், பச்சாத்பவதி ஸந்தாபம் ப்ராஹமணீநகுலம்யதா என்பதாகும்.

கடன் அறி மாந்தர் - பிறர்க்குப் பணிசெய்து கிடப்பதே தங்கடன் என்றுணர்ந்த சான்றோர் என்க. கருமக் கழிபலம் - பிறருடைய தீவினையைத் தீர்த்து விடுவதனால் ஒருவனுக்குண்டாகும் புண்ணியம். கூஉய் -கூவி, ஈதென்னென என்புழி ஈது என்றது அவள் கையிற்கொண்டுள்ள ஏட்டினைச் சுட்டியபடியாம். மாதர் என்பது அவள் என்னும் சுட்டு மாத்திரையாக நின்றது. ஒத்து - மறை. உரைநூற் கிடக்கை-அறநூலில் விதித்த விதி. தீத்திறம் -கொலைத் தீவினை. நல்வழிப் படுத்தலாவது -மீண்டும் அந்தணர்க்குரிய நல்வாழ்க்கையில் ஆற்றுப்படை செய்தல். செல்லாச் செல்வம் என்றது அருளுடைமையை.

இதுவுமது

76-90: பத்தினி ........ செம்மல்

(இதன்பொருள்) பத்தினி ஒருத்தி படிற்று உரை எய்த- கற்புடையாள் ஒருத்தியின் மேல் பொய்யாகிய பழியை யுண்டாக்குதற்கு; வறியோன் ஒருவன் மற்று அவள் கணவற்கு அறியாக்கரி பொய்த்து அறைந்து உணும் பூதத்துக் கறைகெழு பாசத்துக் கை அகப்படலும் - நல்கூர்ந்தான் ஒருவன் அப் பத்தினியினுடைய கணவனுக்குச் சார்பாகத் தன் நெஞ்சறியாத தொன்றனைப் பொய்யாக்கரியாகக் கூறியதனால் அத்தகையோரை நிலத்தில் அறைந்து தின்னும் பூதத்தினுடைய கரிய கயிற்றிடத்தே அகப்பட்டுக் கொண்டானாக; பட்டோன் தவ்வை படுதுயர் கண்டு கட்டிய பாசத்துக் கடிது சென்று எய்தி என் உயிர் கொண்டு ஈங்கு இவன் உயிர் தா என - அங்ஙனம் அகப்பட்டோனுடைய தாய் மகவன்பினாலே படுகின்ற துன்பத்தைக் கண்டு, நீதானும் பொறாமல் அவனைக் கட்டிய கயிற்றினுள்ளே விரைந்து சென்று புகுந்து அப் பூதத்தை நோக்கிப் பூதமே! நீ எனது உயிரைக் கைக்கொண்டு இவ்வேழையின் உயிரைத் தந்தருள்வாயாக! என்று வேண்டா நிற்ப; நல்நெடும் பூதம் நல்காது ஆகிநரகன் உயிர்க்கு நல் உயிர் கொண்டு பரகதி இழக்கும் பண்பு ஈங்கு இல்லை ஒழிக நின் கருத்து என முன் உயிர்புடைப்ப - அதுகேட்ட நன்மையுடைய நெடிய அப்பூதம் நின் வேண்டுகோட் கிணங்கி அவனை வழங்காதாகி மேலும் உன்னை நோக்கி இக்கீழ் மகனுடைய உயிருக்கு ஈடாக மேன்மகனாகிய உன்னுயிரைக் கைக்கொண்டு அத் தீவினை காரணமாக மேலான கதியை இழந்து விடுகின்ற அறியாமை என்னிடம் இல்லை, ஆதலால் நினது இக் கருத்தைக் கைவிடுக! என்று சொல்லி, நின் கண்முன்னே அவனை நிலத்தறைந்து உயிருண்டு கழிந்ததாக; அழிதரும் உள்ளத்து அவளொடும் போந்து அவன் சுற்றத்தோர்க்கும் தொடர்பு உறும் கிளைகட்கும் -அதுகண்டு அத் தாயின் பொருட்டுத் துன்புறுகின்ற நெஞ்சத்தோடே நீயும் அவளோடு சென்று அவட்கே யன்றியும் இறந்தொழிந்தவனுடைய சுற்றத்தார்க்கும் அவரோடு தொடர்புபட்ட கிளைஞர்களுக்கும்; பற்றிய கிளைஞரின் பசிப்பிணி அறுத்து நெஞ்சத்தால் நின்னைப்பற்றிய கிளைஞரைப் புரக்குமாறு போல அவர்தம் பசியாகிய நோயைத் தீர்த்து; பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல் -பல ஆண்டுகள் காப்பாற்றி யருளிய வறியோர் தம் புரவலனே! என்றான்; என்க.

(விளக்கம்) வறியோன் -நல்குரவாளன். இது கரிபொய்த்தமைக்குக் குறிப்பேதுவாய் நின்றது. இதற்கு அறிவில்லான் என்பர் பழையவுரையாசிரியர். அறியாக்கரி - அறியாத தொன்றனை அறிந்ததாகக் கூறும் பொய்க்கரி. கரி - சான்று. பொய்க்கரி கூறுவோரையும் இன்னோரன்ன கயவர் பிறரையும் பாசத்தாற் கட்டி அறைந்துண்ணும் பூதம் பூம்புகாரின்கண் சதுக்கத்துண்மையை இந்திரவிழவூரெடுத்த காதையில் (128 -134) காண்க. கறை - கருமை. தவ்வை - தாய். நன்மையான கோட்பாடுடைய பூதம் என்பார் நல்நெடும் பூதம் என்றார். நரகன் - நரகம் புகுதற்குரிய தீவினையாளன். நல்லுயிர் -அறவோன் உயிர். பரகதி - மேலான கதி. இல்லோர் செம்மல்-வறியோரைப் புரக்கும் தலைவன்.

மாடலனின் பரிவுரை

91-94: இம்மைச்செய்தன .......... வினவ

(இதன்பொருள்) விருத்த நீ இம்மைச் செய்தன யான் அறி நல்வினை இத்திருத்தகு மாமணிக்கொழுந்துடன் - மூதறிவுடையோய்! நீ இப் பிறப்பில் செய்தன எல்லாம் இத்தகைய நல்வினைகளே யாகவும் இந்தத் திருத்தக்க சிறந்த மாணிக்கக் கொழுந்து போல்வாளாகிய கண்ணகியோடு; ஒருதனி உழந்து போந்தது -ஒரு தனியே நடைமெலிந்து இங்ஙனம் வந்தது; உம்மைப் பயன்கொல் என வினவ -முற்பிறப்பிலே செய்த தீவினையின் பயனாகுமோ என்று வினவிய பொழுது; என்க.

(விளக்கம்) இம்மை-இப்பிறப்பு. உம்மை-முற்பிறப்பு. ஏவலரும் ஊர்தியும் இன்றி நடைமெலிந்து போந்தனை என்பான் ஒருதனி உழந்து போந்து என்றான். திருத்தகு-உனக்குச் செல்வம் எனத்தகுந்த எனினுமாம். திருத்தகுமாமணி என்பதற்கு முழு மாணிக்கம் என்பாருமுளர். விருத்த என்றது-விளி. மூதறிவுடையோய் என்றவாறு. கோபாலன் என்பதே கோவலன் என மருவிற்றாகலின் மாடலன் அதன் இயல்புச் சொல்லால் விளித்தான். இதனால் கோவலன் என்பது கோபாலன் என்பதன் மரூஉச் சொல்லே என்பதும் பெற்றாம்.

கோவலன் தான்கண்ட கனவை மாடலனுக்குக் கூறுதல்

95-106 : கோவலன் .............. கடிதீங்குறுமென

(இதன்பொருள்) கோவலன் கூறும் -அதுகேட்ட கோவலன் கூறுவான்: ஓர் குறுமகன் தன்னால்-ஐயனே! ஒரு கீழ்மகனாலே; காவல் வேந்தன் கடிநகர் தன்னில் நாறு ஐங்கூந்தல் நடுங்குதுயர் எய்த -மன்னுயிர் காவலிற் சிறந்த இப் பாண்டிய மன்னனது தலைநகரமாகிய காவலமைந்த இம் மதுரை நகரத்தில் மணம் பொருந்திய ஐவகைக் கூந்தலையுடைய என்மனைவி நடுங்குதற்குக் காரணமான துன்பத்தை எய்தும்படி; கூறை கோள்பட்டுக் கோட்டு மா ஊரவும் -யான் உடுத்த ஆடை பிறராற் கொள்ளப்பட்டுக் கொம்பினையுடைய எருமைக் கிடாவின் மேலே ஏறா நிற்பவும்; அணித்தகு புரிகுழல் ஆயிழை தன்னொடும் பிணிப்பறுத்தோர் தம் பெற்றி எய்தவும்-அழகு பெற வகுக்கத்தக்க புரிந்த கூந்தலையுடைய அழகிய அணிகலன்களையுடைய இவளோடும் பற்றறுத்தோர் பெறும் பேற்றை யாங்கள் பெறவும்; காமக் கடவுள் மாமலர் வாளி வறுநிலத்து எறிந்து கையற்று ஏங்க -காமவேளாகிய தெய்வம் வெறுப்பினாலே தனது சிறந்த மலர்க்கணைகளை வறிய நிலத்திலே எறிந்துவிட்டுச் செயலற்று ஏங்கி நிற்கும்படி; மாதவி அணிதிகழ் போதி அறவோன் தன் முன் மணிமேகலையை அளிப்பவும்-மாதவி யானவள் அழகு விளங்குகின்ற போதியினையுடைய அறவோனாகிய புத்தபெருமான் திருமுன்னர்க் கொடுபோய் மணிமேகலையை வழங்கா நிற்பவும்; நள்இருள் யாமத்து நனவு போலக் கனவு கண்டேன் ஈங்கு கடிது உறும் என கழிந்த இரவின் செறிந்த இருளையுடைய வைகறை யாமத்தில் மெய் போலக் கனவு கண்டேன் ஆதலான், அது நன்றன்று! அதன் பயன் இப்பொழுதே வந்துறுதல் வேண்டும் என்று சொல்ல; என்க.

(விளக்கம்) இத்தகைய நிகழ்ச்சி இயலாத இடம் என்பான் காவல் வேந்தன் கடிநகர் என்று விதந்தான். நாறைங் கூந்தல்: அன்மொழித்தொகை; ஆயிழை என்பதுமது. கூறை -ஆடை. கோட்டுமா என்றது எருமைக்கிடா என்றவாறு. பிணிப்பறுத்தோர்- துறவோர்: அவர்தம் பெற்றியாவது - மேனிலை உலகம் எய்துதல். காமக் கடவுள் தன் வெற்றிக்குத் தலைசிறந்த கருவியாகிய மணிமேகலையை இழந்ததனால் வெறுப்புற்று மலர் வாளியை வறுநிலத்து எறிந்து கையற்று ஏங்க என்பது கருத்து. போதி அறவோன் -புத்த பெருமான். வைகறை யாமத்துக் கண்ட கனவாதலின் அதன் பயன் இப்பொழுதே வந்துறும் என்றான். இனி, கோட்டுமா -பன்றி என்பாரும் உளர். இனி இவை தீக்கனா என்பதனை-

களிறுமேல் கொள்ளவும்
கனவி னரியன காணா

எனவும்,

சொல்லத் தகுமுகட் டொட்டகம் வெட்டுந் துணைமருப்பார்
இல்லத் தெருமை கழுதைக ளென்றவை யேறிநின்றே
மெல்லத் தரையி லிழிவதன் முன்னம் விழித்திடுமேல்
கொல்லத் தலைவரு மாற்றருஞ் சீற்றத்துக் கூற்றுவனே

எனவும்,

படைத்தமுற் சாமமோ ராண்டிற் பலிக்கும் பகரிரண்டே
கிடைத்தபிற் சாம மிகுதிங்க ளெட்டிற் கிடைக்குமென்றும்
இடைப்பட்ட சாமமோர் மூன்றினிற் றிங்களொர் மூன்றென்ப
கடைப்பட்ட சாமமு நாள்பத்து ளேபலங் கைபெறுமே  (வால்)

எனவும் வருவனவற்றால் அறிக.

கவுந்தியும் மாடலனும் கோவலனைக் கண்ணகியோடு அந்நகரின்கண் புகுமாறு அறிவுறுத்தல்

107-114: அறத்துறை ............. கூறுங்காலை

(இதன்பொருள்) அறத்து உறை மாக்கட்கு அல்லது இந்தப் புறச்சிறை இருக்கை பொருந்தாது ஆகலின் - துறவறத்தோடு தங்குவோர்க் கல்லது இந்தப் புறஞ்சேரியின்கண் தங்குதல் பொருந்தாது ஆதலால்; அகநகர் மருங்கின் அரைசர் பின்னோர் நின் உரையின் கொள்வர் இங்கு நின் இருப்பு ஒழிக -இந்த அகநகரிடத்தே வாழுகின்ற வாணிகர் நீ மாசாத்துவான் மகன் என்னும் நின் புகழை அறிந்துழியே நின்னை ஆர்வத்துடன் எதிர் கொண்டு ஏற்றுக்கொள்வர் என்பது தேற்றம்; இனி இவ்விடத்தே நினது இருப்பை ஒழிக; காதலி தன்னொடு கதிர் செல்வதன்முன் மாடமதுரை மாநகர் புகுக என-இப்பொழுதே நீ நின் காதலியோடு ஞாயிறு படுவதன் முன்னர் மாடங்களையுடைய இம் மதுரை மாநகரத்தினுள் புகுதலே நன்றென்று; மாதவத்தாட்டியும் மாமறை முதல்வனும் கோவலன் தனக்குக் கூறுங்காலை - கவுந்தியடிகளும் மாடலனும் கோவலனுக்குக் கூறுகின்ற காலத்தே; என்க.

(விளக்கம்) கோவலன் தீக்கனாக் கண்டு அதன் பயன் இப்பொழுதே வந்துறும் என்று கூறக்கேட்டமையால் தீங்குறுதற்குக் காரணமான இப் புறஞ்சேரியில் இவர் சிறிது பொழுதேனும் இருத்தல் வேண்டா என்னுங் கருத்தால் அடிகளாரும் மாடலனும் நீ இனி இங்கிருத்தல் வேண்டா, இற்றைப் பகலிலேயே இவளோடும் அகநகர் புகுதுக என்று அறிவுறுத்தவாறாம். என்னை? தீங்கு நிகழினும் பாதுகாவலான இடத்தில் இருப்பின் அத்தீங்கின் பயனும் சிறிதாய் இருத்தல்கூடும் ஆதலின் என்க. இரவும் தீங்கு நிகழ்தற்கு ஏதுவாம் என்னுங் கருத்தால் கதிர் செல்வதன்முன் புகுக என்றுரைத்தனர், என்க.

மாதரி வரவு

115-119: அறம்புரி .................. தொழலும்

(இதன்பொருள்) ஆயர் முதுமகள் மாதரி என்போள்-ஆயர் குலத்துப் பிறந்த மாதரி என்று பெயர் கூறப்படுகின்ற ஒருமுதுமகள்; அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர் -துறவறத்தைப் பெரிதும் விரும்புகின்ற நெஞ்சினையுடைய துறவிகள் மிகுதியாக உறைகின்ற அப் புறஞ்சேரியாகிய பழைய வூரிடத்தே கோயில் கொண்டருளிய; பூங்கண் இயக்கிக்குப் பால்மடை கொடுத்துப் பண்பின் பெயர்வோள்-மலர் போலும் கண்ணையுடைய இயக்கியாகிய தெய்வத்திற்குப் பாற்சோறு படைத்து வழிபட்ட அன்புள்ளத்தோடு மீண்டு வருபவள்; காவுந்தி ஐயையைக் கண்டு அடிதொழலும்-தான் வரும் வழியில் இருந்த கவுந்தியடிகளாரைக் கண்டு அன்புற்று அவர் திருவடிகளிலே விழுந்து வணங்கி எழுந்து கை கூப்பித் தொழுது நிற்ப; என்க.

(விளக்கம்) இயக்கி - ஒரு பெண் தெய்வம். பால்மடை - பாற்சோறு. பண்பு -ஈண்டு அன்புடைமை. இயக்கி -ஆரியாங்கனை என்பாரும் உளர்.

அடிகளார் தம்முள்ளத்துள் நினைதல்

120-124: ஆகாத்தோம்பி .............. எண்ணினளாகி

(இதன்பொருள்) ஆகாத்து ஓம்பி ஆப்பயன் அளிக்கும் கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடு இல்லை- அன்புடன் கை தொழுது நின்ற மாதரியை நோக்கிய கவுந்தியடிகளார் தமது நெஞ்சத்துள் நினைபவர் ஆக்களைப் காத்துப் பேணி அவ்வாக்கள் தரும் பயனாகிய பாலைப் பிறருக்கு வழங்கும் தொழிலையுடைய ஆயர்களின் வாழ்க்கையின்கண் யாதொரு தீங்கும் இல்லை; தீது இலன் முதுமகள் செவ்வியள் அளியள் -தீங்கற்ற அவ் ஆயர் குடிப்பிறந்த இம் மாதரியும் தன்னியல்பில் தீதற்றவளும் முதுமையுடையவளும் நடுவு நிலைமையுடையவளும் பிறரை ஓம்பும் தன்மை உடையவளும் ஆதலால்; மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு ஏதம் இன்று என எண்ணினள் ஆகி -இம் மாதரியின்பால் கண்ணகியை அடைக்கலமாக இற்றைக்கு வைப்பதனால் வருந் தீங்கு யாதும் இல்லையாம் என நினைத்தவராய்; என்க.

(விளக்கம்) ஆக்களைக் காத்து ஓம்பி என்றது அவை வெருவும் பிணியும் உற்றுழிக் காத்துப் புல்லுள்ள நிலத்தில் வயிறார மேய்த்து, நீர் நிலைகளில் நீரூட்டி நன்கு பேணி என்றவாறு, ஆப்பயன்-பால், தயிர் முதலியன. அளித்தல் - கன்றருத்தி மிக்கதனை யாவருக்கும் வழங்குதல். அளியள் - அளியுடையள்; யாவரானும் அளிக்கத்தக்காள் என்னும் பழையவுரை ஈண்டுப் பொருந்தாது.

கவுந்தி அடிகளார் மாதரியின்பால் கண்ணகியை அடைக்கலமாகக் கொடுத்தல்

125-130: மாதரி ............. தந்தேன்

(இதன்பொருள்) மாதரி கேள் இம் மடந்தை தன் கணவன் தாதையைக் கேட்கின் -இங்ஙனம் நினைந்த அடிகளார் மாதரியை நோக்கி மாதரியே! ஈதொன்று கேள்! இம் மடந்தையின் கணவனுடைய தந்தை பெயரைக் கேட்பாராயின்; தன் குலவாணர் அரும்பொருள் பெறுநரின் விருந்து எதிர்கொண்டு கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர் அவன் குலத்தினராய் இம் மதுரையில் வாழ்பவர் பெறுதற்கரிய பொருளைப் பெற்றாரைப்போல நல்விருந்தாக எதிர்கொண்டு அழைத்துப் போய்க் கரிய பெரிய கண்ணினையுடைய இவளோடு இவள் கணவனையும் தமது காவலையுடைய மனையகத்தே கொண்டு சென்று பேணி வைத்துக்கொள்வார்கள்; உடைப் பெருஞ் செல்வர் மனைப்புகும் அளவும்- அவ்வாறு இவர்பால் ஆர்வம் உடைய பெரிய செல்வருடைய மனையகத்தே இவர் சென்று புகுமளவும்; இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன்- கொடும்பாடில்லாத இடைக்குலத்தே பிறந்த உனக்கு யான் இவளை அடைக்கலமாகத் தந்தேன் என்று சொல்லி; என்க.

(விளக்கம்) மடந்தை என்றது கண்ணகியை. தாதை - கோவலன் தந்தையாகிய மாசாத்துவான். அவன் தானும் பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த ஒருதனிக் குடிகளோடு உயர்ந்தோங்கு செல்வத்தான் ஆதலோடு வருநிதி பிறர்க்கார்த்தும் வள்ளலும் ஆதலின் அவன் புகழ் உலகெலாம் பரவி நிற்றல் ஒருதலை என்று உட்கொண்டு அடிகளார் ஈண்டு இவன் தாதையைக் கேட்கின் இவன் குலவாணர் எதிர்கொண்டு மனைப்படுத்துவர் என்றார். நீ தானும் சிறந்த குலத்து மடந்தையாதலின் நின்பால் அடைக்கலம் செய்யத்தகும் என்று கருதியே தந்தேன் என்பார், நினக்கு என்னாது இடைக்குல மடந்தைக்கு என விதந்தார்.

அடிகளார் மாதரிக்குக் கண்ணகியின் சிறப்புரைத்தல்

(131-ஆம் அடிமுதல் 200 -ஆம் அடி ஈறாக, அடிகளார் கூற்றாக ஒரு தொடர்.)

131 -136: மங்கல ......... தாங்கு

(இதன்பொருள்) மங்கல மடந்தையை நல் நீராட்டி செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் தீட்டி தேம் மெல் கூந்தல் சில் மலர் பெய்து-இயற்கை யழகுடைய இம் மடந்தையை நீ தூய நீரினால் ஆட்டிச் சிவந்த கயல்மீன் போன்ற இவளது நெடிய கண்ணுக்கு மை தீட்டிக் காண்டற்கினிய கூந்தலிலே சில மலர்களைச் சூட்டி; தூமடி உடீஇ -தூய புதுப்புடைவையை உடுத்து; ஆயிழை தனக்கு -இந் நங்கைக்கு; தொல்லோர் சிறப்பின் ஆயமும் காவலும் தாயும் நீயே ஆகி தாங்கு- இவளுக்கு இவளோடு பழகிய பழைய சிறப்பினையுடையவராகிய தோழிமாரும் செவிலித் தாயரும் நற்றாயும் நீயேயாகித் தாங்குவாயாக என்றார்; என்க.

(விளக்கம்) மங்கலம்-இயற்கை யழகு. தேம்-தேன் மணமுமாம்; பன்மலர் பெய்யின் இடைபொறாது என்பார் சின்மலர் பெய்து என்றார். தொல்லோர் - இவளுடைய பழைய தோழிமார். காவல்: ஆகுபெயர்; செவிலித்தாய்.

136-138: ஈங்கு ............ அறிந்திலள்

(இதன்பொருள்) ஈங்கு என்னொடு போந்த இளங்கோடி நங்கை தன் -இவ்விடத்தே துறவியாகிய என்னோடு நடையான் மெலிந்து வந்த இளைய பூங்கொடிபோலும் இந்த நங்கையினது; வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் - அழகிய சிறிய அடியை முன்பு நிலமகளும் கண்டறியாள் காண் என்றார்; என்க.

(விளக்கம்) இவள் இல்லத்தை விட்டுப் புறம் போந்து நடந்தறியாள் ஆதலின் மண்மகள் அறிந்திலள் என்றவாறு.

இனி, இவளுடைய அடியினது மென்மையை நிலமகள் அறிந்திலாமையால் அவற்றைக் கொப்புளங் கொள்ளுமாறு செய்தனள் என்றிரங்கியவாறுமாம்.

139-148: கடுங்கதிர் .......... அறியாயோநீ

(இதன்பொருள்) கடுங்கதிர் வெம்மையின் நாப்புலர வாடி - ஞாயிற்றின் வெப்பத்தாலே தனது நாவும் புலரும்படி தன் திருமேனி வாடாநிற்பவும்; காதலன் தனக்கு நடுங்கு துயர் எய்தி - தன் கணவன் மெய் வருந்தியதே என்று அது பொறாளாய் நடுங்குதற்குக் காரணமான பெருந்துயரத்தை எய்தி; தன் துயர் காணாத் தகைசால் பூங்கொடி - தன் துயர் என்று வேறு காணாத பெருந்தகைமை பொருந்திய பூங்கொடி போல்வாளாகிய; இன் துணை மகளிர்க்கு இன்றி அமையாக் கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்பு உடைத் தெய்வம் யாம் கண்டிலம் ஆல் - தம் காதலர்க்கு இனிய வாழ்க்கைத் துணை ஆகிய மகளிருக்கு ஒருதலையாக வேண்டப்படுகின்ற கற்பினைக் கடமையாகப் பூண்டுகொண்ட இத்தெய்வமே வாய்மையான தெய்வமாவதல்லது வேறு இவளினுங்காட்டில் பொலிவினையுடைய தெய்வத்தின் யாம் கண்டிலேம்; வானம் பொய்யாது வளம் பிழைப்பு அறியாது நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு என்னும் - அதுவேயுமன்றிக் காலமழை பொய்த்தறியாது வளம் பிழைத்தலையு மறியாது அரசருடைய வெற்றியும் சிதைந்தறியாது அஃது எந்த நாடெனில்; பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு என்று நல்லோர் சொல்லும்; அத்தகு நல்உரை நீ அறியாயோ அத்தகைய நன்மையுடைய அறநூலுரையை நீயும் அறிந்திருப்பாய் அல்லையோ என்றார்; என்க.

(விளக்கம்) தன் நெஞ்சம் முழுவதும் காதலன்பாலே பொருந்தி அவன் எய்தும் துயர்க்கு வருந்துதலாலே தனது துயர் காணாள் ஆயினள் என்க. ஈண்டு ஒன்றொழித் தொன்றை உள்ள மற்றொரு மனமுண்டோ? எனவரும் கம்பநாடர் மொழியும் நினைக. (மாரீசன் -84.) கடம் - கடமை.

தவத்தோர் அடைக்கலத்தின் மாண்பு

149-160: தவத்தோர் ............. நின்றோனை

(இதன்பொருள்) தவத்தோர் அடைக்கலம் தான் சிறிது ஆயினும்-தவஞ்செய்யும் சான்றோர் கொடுத்த அடைக்கலம் அப்பொழுது சிறியதாகத் தோன்றினும்; மிகப் பேரின்பம் தரும்- அது பின்னர் மிகவும் பேரின்பத்தைத் தருவதொன்றாம்; அது கேளாய் - மாதரியே அதற்கு எடுத்துக்காட்டாக யாம் கூறுமிதனைக் கேட்பாயாக; படப்பைக் காவிரிப் பட்டினம் தன்னுள் பூவிரி பிண்டிப் பொது நீங்கு திருநிழல் - தோட்டங்களையுடைய காவிரிப்பூம்பட்டினத்தில் மலர்விரிந்த அசோகினது பொதுத்தன்மை நீங்கிய அழகிய நிழலின்கண்; உலக நோன்பிகள் ஒருங்கு உடன் இட்ட இலகு ஒளிச் சிலாதலம் மேல் இருந்தருளி தருமம் சாற்றும் சாரணர் தம் முன் சாவகர் ஒருங்குகூடி அமைத்த விளங்குகின்ற ஒளியையுடைய சந்திரகாந்தக் கல்லாலியன்ற மேடையின் மேல் அமர்ந்தருளி அறங்கூறும் சாரணர் முன்னிலையிலே ஒருநாள்; திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன் மாலையன் தமனியப் பூணினன் பாரோர் காணாப் பலர்தொழு படிமையன் - வானவில்லைப் போல ஒளிவீசித் திகழ்கின்ற திருமேனியையும் தார் மாலை முதலியவற்றையும் பொன்னாலியன்ற அணிகலன்களையும் நில உலகத்தார் கண்ணிற்குப் புலப்படாத தேவர் பலரானும் தொழப்படுகின்ற வடிவத்தையும் உடையவனும்; ஒரு பாகத்துக் கருவிரல் குரங்கின் கை பெருவிறல் வானவன் தனதிரு கைகளுள் வைத்து ஒருபக்கத்துக் கை கரிய விரலையுடைய குரங்கின் கையாக உடையவனாகிய பேராற்றலுடைய தேவனொருவன்; வந்து நின்றோனை - வந்து நின்றானாக அவனைக் கண்டபொழுது; என்க.

(விளக்கம்) கேளாய் என்றது அதற்கு ஒன்று கூறுவேன் அதனைக் கேளாய் என்பதுபட நின்றது. படப்பைக் காவிரி என மாறுக. படப்பை - தோட்டம். பட்டினம் - காவிரிப்பூம்பட்டினம். பிண்டியின் நிழல் ஏனைய நிழல்போலச் சாயாதே நிற்கும் தெய்வத் தன்மையுடைய நிழல் என்பார் பொது நீங்கு திருநிழல் என்றார். உலக நோன்பிகள் - சாவகர்; அமராவார் சமண சமயத்தைச் சார்ந்து தமக்கு விதித்த நோன்புகளை மேற்கொண்ட இல்லறத்தோர் என்க. இவர் புகார் நகரத்தே இட்ட சிலாதலம் உண்மையை:

பொலம்பூம் பிண்டி நலங்கிளர் கொழுநிழல்
நீரணி விழவினு நெடுந்தேர் விழவினுஞ்
சாரணர் வரூஉந் தகுதியுண் டாமென
உலக நோன்பிக ளொருங்குட னிட்ட
இலகொளிச் சிலாதலந் தொழுது வலங்கொண்டு - நாடுகாண். 21-25.

என்று ஓதியதனானு மறிக. திருவில் - வானவில்; ஒளியிட்டு என்க. தார் - பூமாலை. மாலை - மணிமாலை எனவும் தார மாலையன் எனப் பாடமோதி மந்தார மாலையை யுடையன் எனினும் அமையும். கண்டபொழுது என ஒருசொல் பெய்க.

இதுவுமது

161-162: சாவகர் ............... கூறும்

(இதன்பொருள்) சாவகர் எல்லாம் சாரணர்த் தொழுது - அவ்விடத்தே அச் சாரணர் கூறிய அறவுரை கேட்டிருந்த சாவகர் எல்லாம் அச் சாரணரைக் கை தொழுது அடிகளே; ஈங்கு இவன் வரவு யாது என-இவ் விடத்தே இவன் இவ்வாறு வருதற்குக் காரணம் யாது? என வினவ அதுகேட்டு; இறையோன் கூறும் -அச் சாரணருள் தலைவன் கூறுவான்; என்க.

(விளக்கம்) இவ்வாறு என ஒருசொல் பெய்க (அஃதாவது குரங்கின் கையோடு இவன் வருதற்குக் காரணம் என்னையோ என்றவாறு.) இறையோன் - தலைவன்.

இதுவுமது

163-191: எட்டி சாயலன் ......... என்றலும்

(இதன்பொருள்) எட்டி சாயலன் இருந்தோன் தனது பட்டினி நோன்பிகள் பலர்புகு மனையில் -எட்டி என்னும் பட்டம் பெற்ற சாயலன் என்னும் வாணிகனொருவன் துறந்தோர்க்குத் துப்புரவு வேண்டிக் காமம் சான்ற கடைக்கோள் காலையும் இல்லறத்தின் கண் இருந்தானாக அவனுடைய, உண்ணாவிரதத்தை யுடையோர் பலரும் (அவ் விரதம் முடிந்துழி உண்ணுதற்கு வந்து) புகுதும் மனையின்கண் ஒருநாள்; ஓர் மாதவ முதல்வனை மனைப்பெருங்கிழத்தி ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து -பெரிய தவத்தையுடைய முதல்வன் வரக்கண்டு அவனை அம்மனைத் தலைவியாகிய மூதாட்டி தனது தீவினை நீங்கும் பொருட்டு அன்புடன் எதிர்கொள்ளும் பொழுது; ஊர் சிறு குரங்கு ஒன்று ஒதுங்கி உள்புக்கு பால்படு மாதவன் பாதம் பொருந்தி - அவ்வூர் மாக்களாலே அலைக்கப்பட்ட சிறிய குரங்கு ஒன்று அச்சத்தால் ஒதுங்கிவந்து அம் மனையினுள் புகுந்து அங்கிருந்து அருளறத்தின் பாற்பட்ட அம் முனிவனுடைய திருவடிகளிலே விழுந்து; உண்டு ஒழி மிச்சிலும் உகுத்த நீரும் தண்டா வேட்கையின் தான் சிறிது அருந்தி எதிர் முகம் நோக்கிய இன்பச் செவ்வியை அம் முனிவன் உண்டு கழித்த சோற்றினையும் கைகழுவிய நீரையும் தணியாத விருப்பத்தாலே சிறிது அருந்தியதனால் உண்டான மகிழ்ச்சியோடு முனிவன் எதிரே சென்று தனது நன்றியறிவு புலப்பட அம் முனிவனுடைய முகத்தை நோக்கிய இன்பத்திற்குக் காரணமான அதன் முகச்செவ்வியை; அதிராக் கொள்கை அறிவனும் நயந்து மனைக்கிழத்தி நின் மக்களின் ஓம்பு என நடுங்காத கோட்பாட்டினையுடைய மெய்யறிவுடைய அம் முனிவனும் விரும்பி அவ்வில்லத் தலைவியை அழைத்து அன்னாய் இக் குரங்கினை நின்னுடைய மக்களைப் பேணுமாறு பேணிக்கொள்க என்று கூறி ஓம்படை செய்துபோக; மிக்கோன் கூறிய மெய்ம் மொழி ஓம்பி காதல் குரங்கு கடை நாள் எய்தவும் - அதுகேட்ட அம் மனைக்கிழத்தி தானும் அம்முனிவன் கூறிய வாய்மொழியை ஒருபொழுதும் தப்பாமல் நினைவிற்கொண்டு அக் குரங்கினைப் பேணி வரும் பொழுது தன் அன்பிற்குரிய அக் குரங்கு தானும் முதுமை எய்தி இறந்ததாக; தானம் செய்வுழி அதற்குத் தீது அறுக என்றே ஒரு கூறு செய்தனள் ஆதலின் இறந்த அக் குரங்கிற்கு இறுதிச் சடங்கு செய்து அச் சடங்கில் தானஞ் செய்யுங்கால் தனது பொருளில் அதற்கும் ஒருகூறு செய்து அவற்றை எல்லாம் அதற்குத் தீவினை கெடுக என்று உட்கொண்டு தானஞ் செய்தனள் ஆதலால்; மத்திம நல் நாட்டு வாரணம் தன்னுள் உத்தர கவுத்தற்கு ஒரு மகன் ஆகி உருவினும் திருவினும் உணர்வினும் தோன்றி - அக் குரங்கு நடு நாட்டகத்தில் வாரணவாசி என்னும் நகரத்தின்கண் உத்தரகவுத்தன் என்னும் அரசனுக்கு ஒரே மகனாக அழகினோடும் திருவோடும் உணர்வினோடும் பிறந்து; பெருவிறல் தானம் பலவும் செய்து ஆங்கு எண் நால் ஆண்டின் இறந்த பிற்பாடு விண்ணோர் வடிவம் பெற்றனன் ஆதலின் வள்ளன்மையில் பெரிய வெற்றியுடையவனாய்த் தானங்கள் பற்பலவுஞ் செய்து அவ் வரசுரிமையில் முப்பத்திரண்டாண்டு கழிந்த பின்னர்த் தெய்வ வடிவம் பெற்றனன் ஆதலாலே; பெற்ற செல்வப் பெரும்பயன் எல்லாம் தன்காத்து அளித்தோள் தானச் சிறப்பு என பண்டைப் பிறப்பின் குரங்கின் சிறு கை ஒருபாகத்து கொண்டு அவ்வாறு தான்பெற்ற செல்வமும் அச் செல்வத்தால் தான் எய்திய பெரிய பயன்களும் எல்லாம் முன்னர்த் தன்னைப் பாதுகாத்தருளியவள் செய்த தானத்தின் சிறப்புகள் என்று கருதி முற்பிறப்பிலே கருங்குரங்கான வடிவத்திற்கியன்ற சிறிய கையைத் தனது ஒரு பாகத்திற்கொண்டு; கொள்கையின் புணர்ந்த சாயலன் மனைவி தானம் தன்னால் இவ்வடிவு ஆயினன் அறிமினோ என - முனிவர் சொல்லைப் பேணவேண்டும் என்னும் கொள்கையினோடு பொருந்திய சாயலன் என்னும் வணிகன் மனைவி என்பொருட்டுப் பண்டு செய்த தானத்தின் விளைவால் இந்தத் தெய்வ வடிவத்தை யான் பெறுவேனாயினேன் எல்லீரும் அறிந்துகொள்ளுங்கோள் என்று; சாவகர்க்கு எல்லாம் சாற்றினன் காட்டத் தேவகுமரன் தோன்றினன் என்றலும் - உலக நோன்பிகளாகிய உங்களுக்கு எல்லாம் விளக்கிக் காட்டுதற்கே இத் தேவகுமரன் இவ்வாறு இவ்விடத்தே தோன்றினன் என்று கூறவும்; என்க.

(விளக்கம்) எட்டி - பட்டப்பெயர். சாயலன் ஒரு வணிகன் இருந்தான் என்றது துறந்தோர்க்குத் துப்புரவு வேண்டித் தான் துறவாமல் இல்லத்திருந்தோன் என்பதுபட நின்றது. இக் கருத்து பட்டினி நோன்பிகள் பலர்புகும் மனை என அவன் மனையை அடிகளார் விதந்தமையால் பெற்றாம். ஏதம் - தீவினை. ஒதுங்கி என்றமையால் அலைக்கப்பட்டு ஆற்றாது என்பது பெற்றாம். பாற்படு மாதவன் - துறவறத்தின் பாற்படும் மாதவன் என்க. முகச் செவ்வி - முகம் மலர்ந்த தன்மை. மனைக்கிழத்தீ: விளி. விகாரமெனினும் அமையும். ஒரு கூறு: தன் மக்களுக்குக் கூறு செய்து கொடுக்குமாறு போலே அக்குரங்கிற்கும் கொடுத்த ஒரு கூறு என்க.

இனி, உத்தரன் கவிப்பதற்கு ஒரு மகனாகி எனப் பாடமோதி இக்குரங்கு உத்தரனென்னும் பெயரோடு கவிப்பனென்னும் வாணிகனுக்கு ஒரு மகனாகப் பிறந்ததென்பாருமுளர் என்பது பழைய உரை. உணர்வு - பழம் பிறப்புணர்ச்சி. எண்ணாலாண்டு என்றது அவன் அரசாட்சி செய்த காலத்தை. சாற்றினன் -சாற்றி.

இதுவுமது

192-197: சாரணர் .............. எய்தினர்

(இதன்பொருள்) சாரணர் கூறிய தகைசால் நல்மொழி ஆர் அணங்குஆக என்று அப்பதியுள் அறந்தலைப்பட்டோர் அருந்தவமாக்களும் - சாரணர் மொழிந்த தகுதியமைந்த நல்ல அறவுரையை அந்நாளில் தெய்வ மொழியாகக் கொண்டு அறத்து வழி நின்றோராகிய அந்நகரத்துக்கண் அரிய தவமுடையோரும்; தன்தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும் தனக்கெனவாழாது பிறர்க்கென வாழும் வாழ்க்கையினையுடைய உலக நோன்பிகளும்; இட்ட தானத்து எட்டியும் மனைவியும் - தானம் செய்த சாயலனும் அவன் மனைவியும்; முட்டா இன்பத்து முடிவுலகு எய்தினர்-குறைவில்லாத இன்பத்தினையுடைய வீட்டுலகத்தினை அடைந்தனர்; என்க.

(விளக்கம்) தகை - ஈண்டு வாய்மை. அணங்காக - தெய்வமொழியாக. அறந்தலைப் பட்டோர்: அச் சாரணர் கூறிய அடைக்கலம் பேணும் அறத்தை மேற்கொண்டவர் என்க. தன்தெறல் வாழ்க்கை -தன்னலம் பேணாது பிறர்க்கென வாழும் வாழ்க்கை. இனி உண்ணா நோன்பு முதலியவற்றால் தன்னையே ஒறுக்கும் வாழ்க்கை எனினுமாம். முட்டா இன்பம்: குறைபாடில்லாத வின்பம். முடிவுலகு-வீட்டுலகம்.

தவத்தோர் அடைக்கலம் தான் சிறிதாயினும் மிகப்பேரின்பம் தரும் என்று கூறியதற்கு எடுத்துக்காட்டாக இவ் வரலாற்றினை அடிகளார் ஓதினர் என்க.

இதுவுமது

198-200: கேட்டனை ........... ஏத்தி

(இதன்பொருள்) கேட்டனை ஆயின் நீ தோட்டு ஆர் குழலியொடு நீட்டித்து இராது-இவ்வாற்றால் அடைக்கலத்தின் பயனை நீ கூர்ந்து கேட்டனை எனின் இந்த மலர் பொருந்திய கூந்தலை யுடைய கண்ணகி நல்லாளோடு இனி இவ்விடத்தே காலம் தாழ்த்திராது; நீ போக என்று கவுந்தி கூற உவந்தனள் ஏத்தி - நீ விரைந்து போவாயாக! என்று கவுந்தியடிகளார் ஏவா நிற்ப, அதுகேட்ட மாதரி தான் பெற்ற சிறந்த அடைக்கலப் பொருள் பற்றிப் பெரிதும் மகிழ்ந்து அடிகளாரைத் தொழுது அவ்விடத்தினின்றும்; என்க.

(விளக்கம்) தோடு - தோட்டு என விகாரமெய்தியது, அடைக்கலம் பெற்றமை கருதி உவந்தனள் என்க.

மாதரி செயல்

201-206: வளரிள .......... புறஞ்சூழ

(இதன்பொருள்) வளர் இள வனமுலை வாங்கு அமைப்பணைத் தோள் முளை இள வெள்பல் முதுக்குறை நங்கையொடு -வளர்கின்ற இளைய அழகிய முலையினையும் வளைந்த மூங்கில் போன்ற பருத்த தோள்களையும் முளைபோன்ற வெள்ளிய எயிறுகளையும் சிறு பருவத்திலேயே வாய்க்கப்பெற்ற பேரறிவினையும் உடைய மாதர்களுள் தலை சிறந்த கண்ணகி நல்லாளோடு; சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமையத்து மேற்றிசையின்கண் சென்று வீழ்கின்ற ஞாயிற்றினது அடங்கிய சுடரையுடைய மாலைப் பொழுதிலே; கன்று தேர்ஆவின் கனைகுரல் இயம்ப - மடிபால் சுரந்து தம் கன்றைத் தேடி வருகின்ற ஆக்களின் மிக்க குரல்கள் ஒலிப்பவும்; மறி நவியத்துத் தோள் உறிக் கா வாளரொடு செறிவளை ஆய்ச்சியர் சிலர் புறம்சூழ - ஆட்டுக்குட்டியையும் கோடரியையும் சுமந்த தோளிலே உறிகட்டின காவையுமுடைய இடையருடனே கூடச் செறிந்த வளையலணிந்த இடைச்சியரிற் சிலர் இவள் அழகு கண்டு வியப்போடு புறஞ்சூழ்ந்து வாராநிற்பவும்; என்க.

(விளக்கம்) வனம் - அழகு. அமைவாங்கு பணைத்தோள் என மாறி மூங்கிலின் அழகை வாங்கிக்கொண்டு பூரித்த தோள் என்பாருமுளர். முதுக்குறை -பேரறிவு. நங்கை-மகளிருள் தலை சிறந்தவள். செல்சுடர்-உலகினின்றும் தமது மண்டிலத்திற்குச் சென்றடங்கிய சுடர் எனினுமாம். கனை குரல் - பெருங்குரல். நவியம் - கோடரி. கா-காவுதடி. அதன் இரு நுனியிலும் உறி கட்டப்படுதலின் உறிக்கா என்றார். காவுதடி என்பது இக்காலத்தே காவடி என வழங்கப்படும். ஆய்ச்சியர் நங்கைக்குப் பாது காவலாகப் புறஞ்சூழ என்றுமாம்.

இதுவுமது

207-219: மிளையும் ............ புணர்ந்தென்

(இதன்பொருள்) மிளையும் - காவற்காடும்; கிடங்கும் - அகழியும்; வளைவில் பொறியும் - தானே வளைந்து அம்பெய்யும் விற்பொறியும்; கருவிரல் ஊகமும் - கரிய விரலையுடைய குரங்கு போலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் பொறியும்; கல்உமிழ் கவணும் -கல்லை எறிகின்ற கவணும்; பரிவுஉறு வெந்நெய்யும் - காய்ந்து சேர்ந்தார் மேல் இறைத்தால் வருந்துகின்ற நெய்யையுடைய மிடாவும்; பாகுஅடு குழிசியும் - செம்புருக்கிப் பகைவர்மேல் இறைக்கும் மிடாவும்; பொன்காய் உலையும் -இரும்பை உருகக் காய்ச்சிவீசும் உலைப் பொறியும்; கல் இடு கூடையும் - கல்லிட்டு வைக்கப்பட்ட கூடைகளும்; தூண்டிலும் - தூண்டில் வடிவாகப் பண்ணிப் போகட்டு வைத்து அகழியை நீந்திவந்து மதில் பற்றுவாரைக் கோத்திழுக்கும் கருவியும்; தொடக்கும் - கழுக்கோல்போலக் கழுத்திற் பூட்டி முறுக்குஞ் சங்கிலியும்; ஆண்டலை அடுப்பும்- ஆண்டலைப்புள் வடிவாகப் பண்ணிப் பறக்கவிடப் பகைவர் உச்சியிற் கொத்தி மூளையைக் குடிக்கும் பொறிநிரலும்; கவையும் - அகழியினின்றும் ஏறின் தள்ளிவிடும் இரும்பாலியன்ற கவைக்கோலும்; கழுவும் - கழுக்கோலும்; புதையும் - அம்புக் கட்டும்; புழையும் -அம்பேவும் அறைகளும்; ஐயவித்துலாமும் - பற்றாக்கை தூக்கிப் போகட்ட விட்டமும், கையெபர் ஊசியும் - மதிற்றலையைப் பற்றுவார் கையைத் துளைக்கும் ஊசிப்பொறிகளும்; சென்று எறி சிரலும் - பகைவர்மேல் பாய்ந்து கண்ணைக் கொத்தும் சிச்சிலிப் பொறியும்; பன்றியும் - மதில் உச்சியில் ஏறினார் உடலைக் கொம்பால் கிழிக்க இரும்பாற் செய்துவைத்த பன்றிப் பொறியும்; பணையும் - பகைவரை அடித்தற்கு மூங்கில் வடிவாகப் பண்ணிவைத்த பொறியும்; எழுவும் சீப்பும் - கதவுக்கு வலியாக உள்வாயிற் படியிலே நிலத்திலே விழும்படி விடும் மரங்களும்; முழு விறல் கணையமும் - கணைய மரமும்; கோலும் - விட்டேறும்; குந்தமும் - சிறுசவளமும்; வேலும் -வல்லையமும்; ஞாயிலும் - குருவித்தலைகளும்; பிறவும் - சதக்கினி தள்ளி வெட்டி களிற்றுப்பொறி விழுங்கும் பாம்பு கழுகுப்பொறி புலிப்பொறி குடப்பாம்பு சகடப்பொறி தகர்ப்பொறி அரிநூற் பொறி என்பனவும்; சிறந்து - ஆகிய இப் பொறிகளால் சிறப்புற்று; நாள் கொடி நுடங்கும் - நல்ல நாளிலே உயர்த்திய கொடி அசைகின்ற; வாயில் கழிந்து-மதில் வாயிலைக் கடந்து; கோவலர் மடந்தை - கோவலர் குலத்து முதுமகளாகிய அம் மாதரி; கொள்கையில் புணர்ந்து - தனது கொள்கையினோடு உள்ளம் ஒன்றி; தன் மனைபுக்கனளால் - தன்னுடைய மனையின்கண் புகுந்தனள்; என்பதாம்.

(விளக்கம்) வளைவிற்பொறி முதலாகப் பிறவும் என்னும் வரையில் மதில் அரண்மேல் அமைத்துள்ள பொறிகள் என்றுணர்க. 208. கருவிறல் எனவும் பாடம்: ஊகம்-குரங்கு. 209. பாகு - செப்புக் குழம்பு; குழிசி - மிடா; சாணகம் கரைத்துக் காய்கிற மிடாக்களுமாம் என்பாருமுளர். 210: பொன் - இருப்பு வட்டுக்கள். கல்லிடு கூடை - இடங்கணிக்கல் வீசும் கூடை என்றும் கூறுவர். தொடக்கு - கயிற்றுத் தொடக்குமாம். ஆண்டலை - ஆண்மகனது தலைபோல வடிவமுள்ள ஒருவகைப் பறவை. அடுப்பு - அடுக்கு. 212. கழுகும் எனவும் பாடம். புதை மண்ணிற்புதைத்த இருப்பாணியும் என்பர். 213. ஐயவித்துலாம் - கதவை அணுகாதபடி கற்கவி தொடங்கி நாற்றும் துலாம்; சிற்றம்புகளை வைத்து எய்யும் இயந்திரமுமாம். பொய்யூசி என்றும் பாடம். சிரல் - சிச்சிலி (மீன் கொத்திப் பறவை). பணை - முரசுமாம். குதிரைப்பந்தியுமாம். எழுவுஞ்சீப்பு - எழுப்பும் சீப்பு என்க. 217: நாள்தோறும் செய்த வெற்றிக்குக் கட்டின கொடியுமாம். 219: கோவலர் மடந்தை என்றது மாதரியை. கோவலர் மடந்தை தவத்தோராகிய கவுந்தியடிகள் தந்த அடைக்கலத்தைப் பேணவேண்டும் என்னும் கொள்கையொடு உள்ளம் பொருந்தி வாயில் கடந்து தன் மனை புக்காள் என்க.

இனி, இதனை மாநகர் கண்டு பொழிலிடம் புகுந்து கோவலன் கூறுழி, மாடலன் என்போன் புகுந்தோன் றன்னைக் கோவலன் வணங்க, அந்தணன் உரைப்போன் கருணை மறவ, செல்லாச்செல்வ, இல்லோர் செம்மல், உம்மைப் பயன் கொல்? போந்தது நீயென வினவ, கோவலன் கனவு கண்டேன் கடிதீங்குறும் என, இங்கு ஒழிக நின் இருப்பு, மதுரை மாநகர் புகுக என, மாதவத்தாட்டியும் மாமறை முதல்வனும் கூறுங்காலை மாதரி என்போள் ஐயையைக் கண்டு அடி தொழலும், எண்ணினளாகி, அடைக்கலம் தந்தேன் மடந்தையைத் தாயும் நீயே ஆகித்தாங்கு, அடைக்கலம் சிறிதாயினும் பேரின்பம் தரும், அது கேளாய், பட்டினந் தன்னுள் சாரணர் முன் குரங்கின் கை யொரு பாகத்து வானவன் வந்து நின்றோன் யாதுஇவன் வரவு என, இறையோன் தேவகுமரன் தோன்றினன் என்றலும், அறந்தலைப்பட்டோர் முடிவுலகெய்தினர்; கேட்டனை யாயின் நீ போகென்று கவுந்தி கூற, நங்கையொடு கோவலர் மடந்தை கொள்கையிற் புணர்ந்து, மனைபுக்கனள் என முடிக்க.

பா-நிலை மண்டில ஆசிரியப்பா.

அடைக்கலக் காதை முற்றிற்று.
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 27, 2012, 10:26:22 AM
16. கொலைக்களக் காதை

அஃதாவது - மாதரி என்னும் இடைக்குல மடந்தை கவுந்தியடிகளார் அறிவுறுத்தியபடி கண்ணகியையும் கோவலனையும் தன் மனைக்கு அழைத்துச் சென்று ஆர்வத்துடன் அவர்க்கு வேண்டுவனவெல்லாம் வழங்கக் கண்ணகியும் தனது கைவன்மையால் இனிதுற உணவு சமைத்துக் கணவனுக்கு ஊட்டி அற்றைநாள் இரவின்கண் அங்கிருப்ப; மற்றை நாள் கோவலன் கண்ணகியின் சீறடிச் சிலம்பில் ஒன்றனை விற்றற் பொருட்டுக் கண்ணகியைத் தேற்றுரை பல கூறி வருந்தாதிருவென்று கூறிச் செல்பவன், மதுரை நகரத்துப் பீடிகைத் தெருவிலே பொற் கொல்லர் நூற்றுவர் பின் வரத் தன்னெதிர் வந்த பொற்கொல்லனைக் கண்டு தன் சிலம்பினை அவன்பால் காட்ட, அவன் பண்டு அரண்மனைச் சிலம்பைக் கவர்ந்து வைத்துக் கொண்டு இருந்தானாதலால் அச் சிலம்பே இச் சிலம்பென்றும் அதனைக் களவுகொண்ட கள்வனும் இவனே என்றும் அரசனுக்குக் காட்டி அப் பழியைக் கோவலன்மேல் சுமத்தத் துணிந்து கோவலனை நோக்கி இச் சிலம்பு அரசி அணிதற்குத் தகுந்த சிலம்பாதலின் யான் சென்று அரசனுக்கு அறிவுறுத்தி வருமளவும் இவ்விடத்திருப்பீர் என்று கூறிச் சென்றவன், பாண்டியன் நெடுஞ்செழியன் கோப்பெருந் தேவியின் ஊடல் தீர்க்கச் செல்வான் முன்சென்று வணங்கி, அரண்மனைச் சிலம்பைத் திருடிய கள்வன் அடியேன் குடிலில் அச் சிலம்புடன் வந்துளான் என்று சொல்ல, அதுகேட்ட பாண்டியன் ஒரு சிறிதும் ஆராய்தலின்றிக் காவலரைக் கூவி நீவிர் இப் பொற் கொல்லனுடன் சென்று அக் கள்வனைக் கொன்று அச் சிலம்பினை ஈண்டுக் கொணர்க என்று பணிப்ப, அவ்வாறே அக் காவலர் பொற்கொல்லனுடன் சென்று அவனால் காட்டப்பட்ட கோவலனைக் கண்டுழி இத்தகையோன் களவுஞ் செய்வனோ! என்று ஆராயும்பொழுது அக் காவலருள் கல்லாக் களிமகன் ஒருவன் தன் கை வாளால் கோவலனை எறிந்துழி, கோவலன் கொலையுண்ட செய்தியைக் கூறும் பகுதி என்றவாறு.

அரும்பெறற் பாவையை அடைக்கலம் பெற்ற
இரும்பே ருவகையின் இடைக்குல மடந்தை
அளைவிலை யுணவின் ஆய்ச்சியர் தம்மொடு
மிளைசூழ் கோவலர் இருக்கை யன்றிப்
பூவ லூட்டிய புனைமாண் பந்தர்க்  5

காவற் சிற்றிற் கடிமனைப் படுத்துச்
செறிவளை யாய்ச்சியர் சிலருடன் கூடி
நறுமலர்க் கோதையை நாணீ ராட்டிக்
கூடல் மகளிர் கோலங் கொள்ளும்
ஆடகப் பைம்பூ ணருவிலை யழிப்பச்  10

செய்யாக் கோலமொடு வந்தீர்க் கென்மகள்
ஐயை காணீ ரடித்தொழி லாட்டி
பொன்னிற் பொதிந்தேன் புனைபூங் கோதை
என்னுடன் நங்கையீங் கிருக்கெனத் தொழுது
மாதவத் தாட்டி வழித்துயர் நீக்கி  15

ஏத மில்லா இடந்தலைப் படுத்தினள்
நோதக வுண்டோ நும்மக னார்க்கினிச்
சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்  20

நெடியா தளிமின் நீரெனக் கூற
இடைக்குல மடந்தையர் இயல்பிற் குன்றா
மடைக்கலந் தன்னொடு மாண்புடை மரபிற்
கோளிப் பாகற் கொழுங்கனித் திரள்காய்
வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய்  25

மாவின் கனியொடு வாழைத் தீங்கனி
சாலி யரிசி தம்பாற் பயனொடு
கோல்வளை மாதே கொள்கெனக் கொடுப்ப
மெல்விரல் சிவப்பப் பல்வேறு பசுங்காய்
கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்யத்  30

திருமுகம் வியர்த்தது செங்கண் சேந்தன
கரிபுற அட்டில் கண்டனள் பெயர
வையெரி மூட்டிய ஐயை தன்னொடு
கையறி மடைமையிற் காதலற் காக்கித்
தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக்  35

கைவன் மகடூஉக் கவின்பெறப் புனைந்த
செய்வினைத் தவிசிற் செல்வன் இருந்தபின்
கடிமல ரங்கையிற் காதல னடிநீர்
சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி
மண்ணக மடந்தையை மயக்கொழிப் பனள்போல்  40

தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு
அமுத முண்க அடிக ளீங்கென
அரசர் பின்னோர்க் கருமறை மருங்கின்
உரிய வெல்லாம் ஒருமுறை கழித்தாங்கு  45

ஆயர் பாடியின் அசோதைபெற் றெடுத்த
பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ
நல்லமு துண்ணும் நம்பி யீங்குப்
பல்வளைத் தோளியும் பண்டுநங் குலத்துத்
தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை  50

விழுமந் தீர்த்த விளக்குக் கொல்லென
ஐயையுந் தவ்வையும் விம்மிதம் எய்திக்
கண்கொளா நமக் கிவர் காட்சி யீங்கென
உண்டினி திருந்த உயர்பே ராளற்கு
அம்மென் திரையலோ டடைக்கா யீத்த  55

மையீ ரோதியை வருகெனப் பொருந்திக்
கல்லதர் அத்தம் கடக்க யாவதும்
வல்லுந கொல்லோ மடந்தைமெல் லடியென
வெம்முனை யருஞ்சுரம் போந்ததற் கிரங்கி
எம்முது குரவர் என்னுற் றனர்கொல்  60

மாயங் கொல்லோ வல்வினை கொல்லோ
யானுளங் கலங்கி யாவதும் அறியேன்
வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழி கோட்டி நெடுநகை புக்குப்
பொச்சாப் புண்டு பொருளுரை யாளர்  65

நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி யுண்டோ
இருமுது குரவ ரேவலும் பிழைத்தேன்
சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்
வழுவெனும் பாரேன் மாநகர் மருங்கீண்டு
எழுகென எழுந்தாய் என்செய் தனையென  70

அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும்
பெருமக டன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள்
மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன்  75

முந்தை நில்லா முனிவிகந் தனனா
அற்புளஞ் சிறந்தாங் கருண்மொழி அளைஇ
எற்பா ராட்ட யானகத் தொளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலுமென்
வாயல் முறுவற்கவர் உள்ளகம் வருந்தப்  80

போற்றா வொழுக்கம் புரிந்தீர் யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையே னாதலின்
ஏற்றெழுந் தனன்யான் என்றவள் கூறக்
குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும்
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி  85

நாணமும் மடனும் நல்லோ ரேத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்னொடு போந்தீங் கென்றுயர் களைந்த
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்
நாணின் பாவாய் நீணில விளக்கே   90

கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி
சீறடிச் சிலம்பி னொன்றுகொண் டியான்போய்
மாறி வருவன் மயங்கா தொழிகெனக்
கருங்கயல் நெடுங்கட் காதலி தன்னை
ஒருங்குடன் தழீஇ உழையோ ரில்லா  95

ஒருதனி கண்டுதன் உள்ளகம் வெதும்பி
வருபனி கரந்த கண்ண னாகிப்
பல்லான் கோவல ரில்லம் நீங்கி
வல்லா நடையின் மறுகிற் செல்வோன்
இமிலே றெதிர்ந்த திழுக்கென அறியான்  100

தன்குலம் அறியுந் தகுதியன் றாதலின்
தாதெரு மன்றந் தானுடன் கழிந்து
மாதர் வீதி மறுகிடை நடந்து
பீடிகைத் தெருவிற் பெயர்வோன் ஆங்கண்
கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய  105

நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர
மெய்ப்பை புக்கு விலங்குநடைச் செலவின்
கைக்கோற் கொல்லனைக் கண்டன னாகித்
தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற
பொன்வினைக் கொல்லன் இவனெனப் பொருந்திக்  110

காவலன் றேவிக் காவதோர் காற்கணி
நீவிலை யிடுதற் காதி யோவென
அடியேன் அறியே னாயினும் வேந்தர்
முடிமுதற் கலன்கள் சமைப்பேன் யானெனக்
கூற்றத் தூதன் கைதொழு தேத்தப்   115

போற்றருஞ் சிலம்பின் பொதிவா யவிழ்த்தனன்
மத்தக மணியோடு வயிரம் கட்டிய
பத்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூற்
சித்திரச் சிலம்பின் செய்வினை யெல்லாம்
பொய்த்தொழிற் கொல்லன் புரிந்துடன் நோக்கிக்  120

கோப்பெருந் தேவிக் கல்லதை இச்சிலம்பு
யாப்புற வில்லை யெனமுன் போந்து
விறல்மிகு வேந்தற்கு விளம்பியான் வரவென்
சிறுகுடி லங்கண் இருமின் நீரெனக்
கோவலன் சென்றக் குறுமக னிருக்கையோர்  125

தேவ கோட்டச் சிறையகம் புக்கபின்
கரந்தியான் கொண்ட காலணி ஈங்குப்
பரந்து வெளிப்படா முன்னம் மன்னற்குப்
புலம்பெயர் புதுவனிற் போக்குவன் யானெனக்
கலங்கா வுள்ளம் கரந்தனன் செல்வோன்  130

கூடன் மகளிர் ஆடல் தோற்றமும்
பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும்
காவல னுள்ளம் கவர்ந்தன என்றுதன்
ஊட லுள்ளம் உள்கரந் தொளித்துத்
தலைநோய் வருத்தந் தன்மே லிட்டுக்  135

குலமுதல் தேவி கூடா தேக
மந்திரச் சுற்றம் நீங்கி மன்னவன்
சிந்தரி நெடுங்கட் சிலதியர் தம்மொடு
கோப்பெருந் தேவி கோயில் நோக்கிக்
காப்புடை வாயிற் கடைகாண் அகவையின்  140

வீழ்ந்தனன் கிடந்து தாழ்ந்துபல ஏத்திக்
கன்னக மின்றியும் கவைக்கோ லின்றியும்
துன்னிய மந்திரந் துணையெனக் கொண்டு
வாயி லாளரை மயக்குதுயி லுறுத்துக்
கோயிற் சிலம்பு கொண்ட கள்வன்   145

கல்லென் பேரூர்க் காவலர்க் கரந்தென்
சில்லைச் சிறுகுடி லகத்திருந் தோனென
வினைவிளை கால மாதலின் யாவதும்
சினையலர் வேம்பன் தேரான் ஆகி
ஊர்காப் பாளரைக் கூவி ஈங்கென்   150

தாழ்பூங் கோதை தன்காற் சிலம்பு
கன்றிய கள்வன் கைய தாகில்
கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக்
காவலன் ஏவக் கருந்தொழிற் கொல்லனும்
ஏவ லுள்ளத் தெண்ணியது முடித்தெனத்  155

தீவினை முதிர்வலைச் சென்றுபட் டிருந்த
கோவலன் றன்னைக் குறுகின னாகி
வலம்படு தானை மன்னவன் ஏவச்
சிலம்பு காணிய வந்தோர் இவரெனச்
செய்வினைச் சிலம்பின் செய்தி யெல்லாம்  160

பொய்வினைக் கொல்லன் புரிந்துடன் காட்ட
இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கிவன்
கொலைப்படு மகனலன் என்றுகூறும்
அருந்திறல் மாக்களை அகநகைத் துரைத்துக்
கருந்தொழிற் கொல்லன் காட்டின னுரைப்போன்  165

மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம்
தந்திரம் இடனே காலம் கருவியென்று
எட்டுட னன்றே இழுக்குடை மரபிற்
கட்டுண் மாக்கள் துணையெனத் திரிவது
மருந்திற் பட்டீ ராயின் யாவரும்   170

பெரும்பெயர் மன்னனிற் பெருநவைப் பட்டீர்
மந்திர நாவிடை வழுத்துவ ராயின்
இந்திர குமரரின் யாங்காண் குவமோ
தெய்வத் தோற்றம் தெளிகுவ ராயின்
கையகத் துறுபொருள் காட்டியும் பெயர்குவர்  175

மருந்தின் நங்கண் மயக்குவ ராயின்
இருந்தோம் பெயரும் இடனுமா ருண்டோ
நிமித்தம் வாய்த்திடி னல்ல தியாவதும்
புகற்கிலா அரும்பொருள் வந்துகைப் புகுதினும்
தந்திர கரணம் எண்ணுவ ராயின்   180

இந்திரன் மார்பத் தாரமும் எய்துவர்
இவ்விடம் இப்பொருள் கோடற் கிடமெனின்
அவ்விடத் தவரை யார்காண் கிற்பார்
காலங் கருதி அவர்பொருள் கையுறின்
மேலோ ராயினும் விலக்கலு முண்டோ  185

கருவி கொண்டவர் அரும்பொருள் கையுறின்
இருநில மருங்கின் யார்காண் கிற்பார்
இரவே பகலே என்றிரண் டில்லை
கரவிடங் கேட்பினோர் புகலிட மில்லை
தூதர் கோலத்து வாயிலின் இருந்து  190

மாதர் கோலத்து வல்லிருட் புக்கு
விளக்கு நிழலில் துளக்கிலன் சென்றாங்கு
இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம்
வெயிலிடு வயிரத்து மின்னின் வாங்கத்
துயில்கண் விழித்தோன் தோளிற் காணான்  195

உடைவாள் உருவ உறைகை வாங்கி
எறிதொறுஞ் செறித்த இயல்பிற் காற்றான்
மல்லிற் காண மணித்தூண் காட்டிக்
கல்வியிற் பெயர்ந்த கள்வன் றன்னைக்
கண்டோர் உளரெனிற் காட்டும் ஈங்கிவர்க்  200

குண்டோ வுலகத் தொப்போ ரென்றக்
கருந்தொழிற் கொல்லன் சொல்ல ஆங்கோர்
திருந்துவேற் றடக்கை இளையோன் கூறும்
நிலனகழ் உளியன் நீலத் தானையன்
கலன்நசை வேட்கையிற் கடும்புலி போன்று  205

மாரி நடுநாள் வல்லிருள் மயக்கத்து
ஊர்மடி கங்குல் ஒருவன் தோன்றக்
கைவாள் உருவஎன் கைவாள் வாங்க
எவ்வாய் மருங்கினும் யானவற் கண்டிலேன்
அரிதிவர் செய்தி அலைக்கும் வேந்தனும்  210

உரிய தொன் றுரைமின் உறுபடை யீரெனக்
கல்லாக் களிமக னொருவன் கையில்
வெள்வாள் எறிந்தனன் விலங்கூ டறுத்தது
புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப
மண்ணக மடந்தை வான்றுயர் கூரக்  215
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென்.

நேரிசை வெண்பா

நண்ணும் இருவினையும் நண்ணுமின்கள் நல்லறமே
கண்ணகி தன் கேள்வன் காரணத்தான்-மண்ணில்
வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை
விளைவாகி வந்த வினை.

உரை

மாதரி கண்ணகிக்குச் செய்யும் அன்புச் செயல்

1-6: அரும்பெறல் ............ மனைப்படுத்து

(இதன்பொருள்) அரும் பெறல் பாவையை அடைக்கலம் பெற்ற இரும்பேர் உவகையின் - தனக்கு விருந்தாகப் பெறுதற்கரிய பாவைபோல்வாளாகிய கண்ணகி நல்லாளை மாதவமுடைய கவுந்தியடிகளாலே அடைக்கலம் கொடுக்கப் பெற்றமையால் மிகப் பெரியதாகிய மகிழ்ச்சியை எய்திய; இடைக்குல மடந்தை - கொடும்பாடில்லாத கோவலர் குடியிற் பிறந்த அம் மாதரி தானும்; அளை விலை உணவின் ஆய்ச்சியர் தம்மொடு கோவலர் இருக்கை அன்றி - மோர் விற்ற கூலங்களை உணவாக உடைய ஆய்ச்சியரும் ஆயரும் குடி இருக்கும் பழைய இல்லின்கண் கண்ணகியை வைத்தலின்றி; மிளைசூழ் காவல் புனைமாண் பந்தாப் பூவல் ஊட்டிய சிற்றில் கடி மனைப்படுத்து-கட்டுவேலி சூழ்ந்த காவலையும் அழகு செய்யப்பட்டு மாட்சிமை உடைத்தாகிய பந்தலையும் உடைய செம்மண் பூசப்பட்ட சிறிய இல்லமாகிய புதியதொரு மனையிலே வைத்து; என்க.

(விளக்கம்) அளை - மோர். விலை - விலையாகப் பெற்ற நென் முதலியன. மிளை சூழ் காவல் சிற்றில் எனவும். பூவலூட்டிய சிற்றில் எனவும். பந்தர்ச் சிற்றில் எனவும் தனித்தனி கூட்டுக. மிளை - கட்டு வேலி. பூவல் - செம்மண். பூவற் படுவில் கூவற்றோண்டிய (புறம்: 319-1) என்புழியும் அஃதப் பொருட்டாதல் அறிக. கடி - புதுமை.

7-14: செறி வளை .............. தொழுது

(இதன்பொருள்) செறி வளை ஆய்ச்சியர் சிலருடன் கூடி நறு மலர்க்கோதையை நாள் நீராட்டி - மாதரி தன் சுற்றத்தினராகிய செறிந்த வளையலணிந்த ஆய்ச்சியர் சிலரோடே தானும் முன்னின்று நறுமணங்கமழும் மலர் மாலையினையுடைய கண்ணகியைப் புதிய நீராலே குளிப்பாட்டிப் பின்னர் அவள் திருமுகம் நோக்கி; புனை பூங்கோதை நங்கை - தொடுத்த மலர் மாலையை யுடைய நங்கையீரே! இனி ஒன்றற்கும் கவலாது! என்னுடன் ஈங்கு இருக்க - அடிச்சியாகிய என்னுடன் இங்கு இருந்தருளுக; கூடல் மகளிர் கோலம் கொள்ளும் ஆடகப் பைம்பூண் அரு விலை அழிப்பச் செய்யாக் கோலமொடு வந்தீர்க்கு - இம் மதுரை நகரத்தே வாழுகின்ற பெருங்குடி மகளிர் அணிந்து கொள்ளுகின்ற ஆடகம் என்னும் பொன்னாற் செய்த அணிகலன்களால் ஆகிய அழகை அழித்தற்கு இங்கு இயற்கை அழகோடு எழுந்தருளிய நுமக்குக் குற்றேவற் சிலதியர் இலரே என்று கருத வேண்டா; என் மகள் ஐயை காணீர் அடித்தொழிலாட்டி - உதோ நிற்பவள் என்னுடைய மகளாவள். ஐயை என்னும் இவளை நோக்குமின் இவள் இனி நும்முடைய குற்றேவல் சிலதியாய் நும்முடனே இருப்பள்; பொன்னீற் பொதிந்தேன் - அடிச்சியும் நும்மை பொன்னைப் பொதிந்து வைத்துப் பேணுமாறு போல எனது உள்ளத்தே பொதிந்து வைத்துப் பேணிக்கொள்வேன்; எனத்தொழுது என்று சொல்லிக் கண்ணகியை மகிழ்ச்சியோடு கை கூப்பித் தொழுது என்க.

(விளக்கம்) கூடல் மகளிர் என்றது - கூடலின் வாழும் பெருங்குடி மகளிர் என்பதுபட நின்றது. அவரணியும் அணிகலனின் சிறப்புக் கூறுவாள் அரு விலை ஆடகப் பைம்பூண் என்று விதந்தாள். இம் மதுரை நகரத்துத் தான்கண்ட அழகிய மகளிர் அணிகலன்களால் அணிசெய்து கொள்ளும் கோலந்தானும் இவருடைய இயற்கை அழகின் முன் புற்கென்று போம் என்னுங் கருத்தால் கண்ணகியின் அழகினைத் தன்னுள்ளே உவந்து, உவந்து இம் மாதரி வியந்து கூறிய இச் சொற்கள் பெரிதும் இன்பமுடையன ஆதல் உணர்க. செய்யாக் கோலம் - இயற்கை அழகு. நங்கை - நங்கையீர். நங்கை என்பதனை மாமி மருகியை அழைக்கும் முறைப்பெயர் என்பர் அடியார்க்கு நல்லார். (மேலும்) பாதரி கோவலனைத் தனக்கு மகனாகக் கருதி இங்ஙனம் கூறினாள் எனவும் இஃது அக்கால வழக்கு எனவும் விளக்கினர்.

வந்தாய்க்கு எனவும் காணின் எனவும் பாடம் உண்டு.

15 - 21: மாதவத் தாட்டி ......... நீரெனக் கூற

(இதன்பொருள்) மாதவத்தாட்டி வழித்துயர் நீக்கி ஏதம் இல்லா இடம் தலைப்படுத்தினள் நும் மகனார்க்கு இனி நோதகவு உண்டோ - பெரிய தவத்தையுடைய கவுந்தியடிகளார் வழியின் கண் நும் பொருட்டுச் சிறிதும் நும் கணவனார்க்குத் துயர் உண்டாகாமல் நீக்கியதோடன்றி இங்கும் துன்பம் இல்லாத இடத்திலே நும்மைச் சேர்த்து வைத்தமையாலே நும்முடைய கணவனார்க்கு இனியும் நும் பொருட்டுத் துன்பம் உளதாமோ? ஆகாது காண்! என்று கூறிக் கண்ணகியை நன்கு தேற்றிப் பின்னர் அங்கு நின்ற ஆய்ச்சியரை நோக்கி; அடிகள் சாவக நோன்பிகள் ஆதலின் நாத்தூண் நங்கையொடு நீர் நாள் வழிப்படூஉம் அடிசில் ஆக்குதற்கு - அடிகள் சாவக நோன்பிகள் ஆதலாலே இந் நங்கையாருடைய நாத்தூணாருடனே நீங்களும் சென்று பகற் பொழுதிலே உண்ணும் அடிசில் சமைத்தற்கு; அமைந்த நல் கலங்கள் நெடியாது அளிமின் எனக் கூற - பொருந்திய நல்ல புதுக் கலங்களைக் காலந்தாழ்க்காமல் கொணர்ந்து கொடுப்பீராக என்று ஏவா நிற்ப; என்க.

(விளக்கம்) நும் மகனார் - நும்முடைய கணவனார்; மகன் மகள் என்னும் சொற்கள் கணவன் மனைவி என்னும் பொருளுடையவையாகப் பூண்டு வழங்கப்பட்டன. இதனை நினக்கிவன் மகனாத் தோன்றியதூஉம், மனக்கினியாற்கு நீ மகளாயதூஉம். பண்டும் பண்டும் பலபிறப்புளவாற், கண்ட பிறவியே அல்ல காரிகை (21: 29-32) எனவரும் மணிமேகலையினும் காண்க. வழி வருங்கால் நும் பொருட்டு நும் கணவனார்க்கு வரும் துன்பத்தை அடிகளார் தாமே நீக்கினர்; இங்கும் எம்மிடத்தே அடைக்கலந் தந்தமையால் நும் பொருட்டு ஈண்டும் நும் கணவனார்க்கு வரும் வருத்தத்தை நீக்கினர் என்பது கருத்து. நோதகவு - துன்பம். உண்டோ - என்புழி ஓகாரம் எதிர்மறை. இல்லை என்றவாறு. அடிகள் என்றது கோவலனை. சாவக நோன்பு - இல்லறத்திலிருந்தே விரதம் காத்தல். நங்கை நாத்தூண் என்க - நாத்தூண் என்றது ஐயையை. கணவனுடன் பிறந்தாளை நாத்துணா என்று இக்காலத்திலும் வழங்குவர்.

இனி, நாத்தூண் நங்கையொடு அடிசில் ஆக்குதற்கு எனச் சொற் கிடந்தவாறே பொருள் கோடலுமாம். கண்ணகி தனக்கு மருகி ஆகிய விடத்தே தன்மகள் அவட்கு நாத்தூண் முறையினள் ஆதல் பற்றி அவ்வாறு கூறினள் என்க. நற்கலம் என்றது நல்லனவும் புதியனவும் ஆகிய கலங்கள் என்பதுபட நின்றது. சாவக நோன்பிகள் பகற் பொழுதிலேயே உண்ணும் விரதமுடையர் ஆதலின் நான் வழிப்படூஉம் அடிசில் எனவும். ஞாயிறு படுவதன் முன்னர் உண்ணல் வேண்டுதலின் நெடியாதளிமின் எனவும் ஓதினாள். தனக்கு அற்றை நாள் அரண்மனைக்கு நெய்யளக்கும் நாளாதலின் நீர் அளிமின் என்றாள். இங்குக் கூறியன இவர்கள் சென்ற பிற்பகலினும் அன்றிரவு செய்தனவுமாம். இனி, மற்றைநாளைச் செய்தி கூறுகின்றார்.

இடைக்குல மகளிர் அடிசிற்கு வேண்டுவன கொடுத்தல்

22-28: இடைக்குல ........... கொடுப்ப

(இதன்பொருள்) இடைக்குல மடந்தையர் இயல்பின் குன்றாமடைக்கலம் தன்னோடு - அது கேட்ட அவ் விடைக்குல மகளிர் மாதரி கூறிய தன்மையில் குறைபாடில்லாத அடிசில் சமைத்தற்குரிய கலங்களோடே; மாண்பு உடை மரபின் கோளிப்பாகல் கொழுங்கனித் திரள்காய் வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய் மாவின் கனியொடு வாழைத்தீங்கனி - மாட்சிமையுடையோர் கொடுக்கும் தன்மை போலப் பூவாது காய்க்கும் பலாவினுடைய கொழுவிய திரண்ட முதிர்ந்த காயும் வளைந்த வரிகளையுடைய வெள்ளரிக்காயும் கொம்மட்டி மாதுளையின் இளங்காயும் மாம்பழமும் இனிய வாழைப்பழமும்; சாலி அரிசி - செந்நெல் அரிசியும் ஆகிய இவற்றை; தம் பால் பயனொடு - தம் குலத்திற்குரிய பாலுடனும் தயிருடனும் நெய்யுடனும்; கோல்வளை மாதே கொள்கெனக் கொடுப்ப திரண்ட வளையலை யணிந்த மாதே கொள்வாயாக வென்று சொல்லிக்கொடுக்க; என்க.

(விளக்கம்) மாண்புடை மரபின் என்பதற்கு உணவிற்கு மாட்சிமை யுடைய முறைமையுடைய எனலே அமையுமாயினும் அதனைக் கோளிப் பாகல் என்பதற்கு அடையாக்கி அடியார்க்கு நல்லார் மாட்சிமையுடையோர் கொடுக்கும் மரபு போலப் பூவாது காய்க்கும் பாகல் என்றது கீழ்வரும் செய்யுளைக் கருதிக் கூறியபடியாம் அச் செய்யுள்:

சொல்லாம லேபெரியர் சொல்லிச் செய்வார் சிறியர்
சொல்லியுஞ் செய்யார் கயவரே - நல்ல
குலாமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடிற்
பலாமாவைப் பாதிரியைப் பார் 

எனவரும். கோளிப் பாகல் - பலா; வெளிப்படை. கனிந்தாய் - கனிக்கு ஆன காய், முதிர்ந்த காய்; இதனை இக் காலத்துச் செங்காய் என்ப. வால்வரிக் கொடுங்காய் எனப் பாடங் கொண்டு; வெள்ளரிக்காய் என்பர் அரும்பதவுரையாசிரியர். கொம்மட்டி மாதுளங்காய் புளிங்கறி ஆக்குதற்குச் சிறந்தது என்பர். பாற்பயன் - பாலாகிய பயன் எனலுமமையும்.

29-34: மெல் விரல் ............. ஆக்கி

(இதன்பொருள்) பல்வேறு பசுங்காய் கொடுவாய் குயத்து மெல்விரல் சிவப்ப விடுவாய் செய்ய - அவ்வாறு அம்மகளிர் கொடுத்த பல்வேறு வகைப்பட்ட பசிய காய்களை வளைந்த அரிவாளால் கண்ணகி தனது மெல்லிய விரல்கள் சிவக்கும்படி அரியா நிற்ப; திருமுகம் வியர்த்தது செங்கண் சேந்தன - பின்னர் அவற்றைச் சமைக்கும் பொழுது அவளுடைய அழகிய முகம் வியர்த்தது; இயல்பாகவே சிவந்த அவளுடைய கண்கள் பெரிதும் சிவந்தன; வை எரி மூட்டிய ஐயை தன்னொடு - சமைக்கும் பொழுது தனக்கு உதவியாக வைக்கோலால் அடுப்பின்கண் தீ மூட்டித் தந்த ஐயையினோடு; கை அறி மடைமையின் காதலற்கு ஆக்கி - தனது கை பயின்றறிந்த சமையல் தொழில் வன்மையால் தன் காதலனுக்குத் தான் வல்லவாறு உணவு சமைத்து; கரிபுற அட்டில் கண்டனள் பெயர் - புகையால் கரிந்த இடத்தையுடைய அவ் வடுக்களைத் தொழிலை முடித்து வந்த பின்னர்; என்க.

(விளக்கம்) கொடுவாய் குயம் - வளைந்த அரிவாள். விடுவாய் செய்தல் - அரிந்து துணித்தல். அத் தொழிலில் பலயாண்டுகள் கோவலன் தன்னைக் கைவிட்டுப் போனமையால் பயிற்சி இல்லாமையால் அவளது திருமுகம் வியர்த்தது, செங்கண் சேர்ந்தன என்பதே ஈண்டு அடிகளார் கருத்தென்றுணர்க. அட்டில் சமை குமிடம் ஐயை தீ மூட்டிக் கொடுக்குமளவே கண்ணகிக்கு உதவி செய்தனள் என்பது தோன்றவை எரி மூட்டிய ஐயை தன்னொடு என்றார். மடைமைசமையற் றொழில் திறமை. அது தானும் பண்டு அவள் கை நன்கு பயின்றறிந்த திறமை என்பது போதரக் கையறி மடமையின் ஆக்கி என்றார். ஆக்கி அட்டில் கண்டனள் பெயர என இயைத்திடுக.

கண்ணகி கோவலனை ஊட்டுதல்

35-43: தாலப் புல்லின் ........... அடிகளீங்கென

(இதன்பொருள்) தாலப் புல்லின் வால் வெள் தோட்டுக் கைவல் மகடூஉக் கவின் பெறப் புனைந்த செய் வினைத்தவிசின் செல்வன் இருந்தபின் பனையினது தூய வெள்ளிய குருத் தோலையாலே கைத்தொழில் திறம் படைத்த மகளாலே மிகவும் அழகாகப் புனைந்து செய்த தொழில் சிறப்பமைந்த (தடுக்கு) இருக்கையின் கண் தன் காதலன் இருந்த பின்னர்; கடி மலர் அங்கையிற் காதலன் சுடு மண் மண்டையில் அடி நீர் தொழுதனள் மாற்றி மணமுடைய செந்தாமரை மலர் போன்ற தன் கைகளைக் குவித்துத் தன் காதலன் சுட்ட மட் பாண்டத்தின் கண்ணுள்ள நன்னீரால் அடிகளைக் கழுவிய நீரைத் தொழுதனளாய் மாற்றி; மண்ணகமடந்தையை மயக்கு ஒழிப்பனள் போல் தண்ணீர் தெளித்துத் தன் கையால் தடவி நில மகள் எய்திய மயக்கத்தைத் தீர்ப்பவள் போல் நிலத்தில் தண்ணீரைத் தெளித்துத் தன் கையால் வட்டமாக மெழுகி; குமரி வாழையின் குருத்து அகம் விரித்து அடிகள் ஈங்கு அமுதம் உண்க என - குலை ஈனாத இளைய வாழையினது குருத்தை அதன் உள்ளிடம் தோன்ற விரித்திட்டு அதன் அகத்தே அமுதைப் பெய்து அடிகளே அமுது செய்தருளுக என்று வேண்டா நிற்ப; என்க.

(விளக்கம்) தாலப்புல் - பனை; புறக்காழ் உடையதாதலின் புல் என்றார். வால் வெள்தோடு என்றது - பனையின் மிகவும் இளமையான குருத்தோலையை அது சிறந்த வெண்மையுடையதாதலன்றியும் தூய்மையும் உடைத்தாதலின் வால் வெண்டோடு என்றார். மகடூஉ - பெண்பாற் பொதுச் சொல். தவிசு - தடுக்கு. செல்வன் - ஈண்டுக் கணவன் என்னும் பொருட்டு. அடிகழுவிய நீர், அமுதைப் பெய்து என்பன இசை எச்சம். சுடுமண் மண்டை என்றார் புதுக்கலம் என்பது தோன்ற; மண்டை என்றார், பண்டு பொற்கலம் முதலியவற்றால் அடி கழுவும் அவன் இப்பொழுது இழிந்த மண்டையாலும் அது செய்ய நேர்ந்தது என்று புலப்படுத்தற்கு. மண்ணகம்: ஒரு சொல். மாலைப் பொழுதாகலின் நிலமடந்தை மயக்கு ஒழிப்பனள் போல் என்றார். எதிர்வது உணர்ந்து மயங்கினாளை மயக்கொழிப்பாள் போல என்னும் பழையவுரை சிறப்புடைத்தன்று. குமரி வாழை என்பது பெயரின் வந்த சமாதி என்னும் அணி என்பர் (அடியார்க்கு - விரித்தீங்கு என்புழி ஈங்கு அசைச்சொல். ஆக்கி இருந்தபின் மாற்றித் தெளித்துத் தடவி விரித்து அமுதம் உண்க என இயையும்.

44-53: அரசர் ......... ஈங்கென

(இதன்பொருள்) அரசர் பின்னோர்க்கு அரு மறை மருங்கின் உரிய வெல்லாம் ஒரு முறை கழித்து - வணிகருக்கு ஓதவும் உணரவும் அரிய மறை நூலின்கண் உண்ணுங்கால் செய்தற்குரியனவாக விதிக்கப்பட்ட வாய்ப்பூச்சுப் பலியிடுதல் முதலிய செய்கை எல்லாம் செய்து ஒருவாறு முடித்தபின் கோவலன் அமுதுண்பானாக; ஆங்கு ஐயையும் தவ்வையும் - அவ்விடத்தே புறத்து நின்று நோக்கிய ஐயையும் அவள் அன்னையாகிய மாதரியும் அக் காதலர்களுடைய அழகு கண்டு தம்முள்; ஈங்கு நல் அமுது உண்ணும் நம்பி ஆயர்பாடியின் அசோதை பெற்று எடுத்த பூவை புது மலர் வண்ணன் கொல்லோ - இவ்வாயர்பாடியில் நல்ல அமுதுண்கின்ற இந்நம்பி பண்டு வட மதுரைக்கண் ஆயர்பாடியினிடத்தே யசோதை என்னும் ஆய்ச்சி அருந்தவத்தால் ஈன்று வளர்த்த சாயாவினது புதிய மலர் போன்ற நிறத்தையுடைய கண்ணனோ எனவும்; பல் வளைத்தோளியும் பண்டு நம் குலத்துத் தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை விழுமம் தீர்த்த விளக்குக்கொல் என - இங்கு இவனுக்கு நல்லமூதாட்டித் துயர் தீர்க்கின்ற பலவாகிய வளையலணிந்த இந்நங்கைதானும் பழைய காலத்து நமது குலத்தில் தோன்றி ஆங்குக் காளிநதி யாற்றின்கண் தூயநீல மணி போலும் நிறமுடைய அக் கண்ணனுடைய துயரத்தைத் தீர்த்த குலவிளக்குப் போல்வாளாகிய நப்பின்னை தானோ எனவும் வியந்து; விம்மிதம் எய்தி நமக்கு ஈங்கு இவர் காட்சி கண் கொளா என உவகை பொங்கியவராய் இவ்விடத்தே நாம் காணுகின்ற இவருடைய காட்சி நம்முடைய கண்களின்கண் அடங்கமாட்டா என்று புகழ்ந்து கூறாநிற்ப என்க.   
                                       
(விளக்கம்) கண்ணன் வட மதுரையில் ஆயர்பாடியில் பிறந்து நப் பின்னையை மணந்து அவள் அன்பால் துயர் தீர்ந்தனன். இப்பொழுது இம் மதுரையில் இவ்வாயர்பாடியில் அமுதுண்ணும் இந்நம்பியும் அவனுடைய துயர்தீர்க்கும் இந்நங்கையும் அக் கண்ணனையும் நப்பின்னையையும் போலவே நமக்குக் காட்சி தருகின்றனர் என அவர் அழகினை அன்புடைய இவ்வன்னையும் மகளும் தம்முட் கூறி வியக்கின்றனர் என்க. ஆங்கு ஆயர்பாடியில் என்றது அவ்வட மதுரையில் அவ்வாயர்பாடியில் என்றவாறு. ஈங்கு நல்லமுதுண்ணும் நம்பி என்றது இம் மதுரையின் இவ்வாயர்பாடியில் நல்லமுதுண்ணும் நம்பீ என்றவாறு. பூவைப் புதுமலர் வண்ணன் என்பதும், தூமணி வண்ணன் என்பதும் கண்ணனையும் விளக்கு என்பது நப்பின்னையையும் குறித்து நின்றன. நம்பி: கோவலன். தோளி: கண்ணகி நங்குலத்துத் தூமணி வண்ணன் என்க. விம்மிதம் - வியப்பு; உவகை. இவ்விரு பொருளும் ஈண்டுக் கொள்க.

கோவலன் கண்ணகிக்கு இரங்கிக் கூறும் அன்பு மொழிகள்

54-62: உண்டி .............. அறியேன்

(இதன்பொருள்) உண்டு இனிது இருந்த உயர் பேராளற்கு அம் மெல்திரையலோடு அடைக்காய் ஈத்த மை ஈர் ஓதியை வருக எனப் பொருந்தி - ஐயையும் மாதரியும் இவர் தம்முள் கண்ணனும் நப்பின்னையுமாகிய தம்முடைய வழிபடு தெய்வங்களையே கண்கூடாகக்கண்டு அப்பாற் சென்ற பின்னர் உணவருந்தி இனிதாக இருந்த பெரும் புகழை யுடைய கோவலனுக்கு அழகிய மெல்லிய வெற்றிலைச்சுருளோடே பிளவையும் (பாக்கினையும்) கொடுத்து நின்ற கரிய பெரிய கூந்தலையுடைய கண்ணகியைக் கோவலன் இங்கு வருக என்று அருகில் அழைத்து அணைத்துக் கொண்டவனாய் அன்புடையோய்; எம்முது குரவர் வெம்முனை அடுஞ்சுரம் போந்ததற்கு எம்முடைய தாயுந் தந்தையுமாகிய முதியோரிருவரும் நீ ஆறலைக்கும் கள்வருடைய வெவ்விய முனைகளை யுடைய பாலைநிலத்து அருவழியில் என்னோடு வந்ததனை நினைத்து; மடந்தை மெல்லடி கல் அதர் அத்தம் கடக்க யாவதும் வல்லுந கொல்லோ என இரங்கி -நம் மருகியினது மெல்லிய அடிகள் பருக்கைக் கற்கள் நிறைந்த அருநெறியைக் கடந்துபோதற்குச் சிறிதும் வன்மையுடையன அல்லவே என்று பெரிதும் இரங்கி; என் உற்றனர் கொல் - எத்தகைய துயரத்தை அடைந்தனரோ; யான் உளங்கலங்கி மாயம் கொல்லோ வல் வினை கொல்லோ யாவதும் அறியேன் யான் இப்பொழுது பெரிதும் நெஞ்சம் கலங்கியிருக்கின்றேன் ஆதலால் நாம் இப்பொழுது எய்தியிருக்கும் இந்நிலைமை கனவோ? அன்றெனின் முன் செய்த தீவினையின் விளைவோ? இவற்றின் ஒன்றையும் அறிகின்றிலேன் என்றான்; என்க.

(விளக்கம்) ஐயையும் தவ்வையும் அவ்விடத்தினின்றும் சென்றமை முன்னத்தாற் பெற்றாம். எம்முடைய முதுகுரவர் என்றது தன்னுடைய தாய் தந்தையரை. ஈண்டு உயர்பின் ஆகிய எம் என்னும் பன்மைச் சொல்லால் தொடங்கியவன் தன் கண் இழிவு தோன்றுதலால் யானறிகிலேன் என ஒருமைச் சொல்லால் முடித்தான்.

இனி, உளங்கலங்கி அங்ஙனம் மயங்கக் கூறினான் எனலுமாம். முதுகுரவர் மடந்தை அடி அத்தம் கடக்கவல்லுந கொல்லோ என இரங்கி என்னுற்றனர் கொல் எனக் கூட்டுக. மாயம் - கனவு. அஃதன்றாயின் வல்வினை கொல்லோ என்றவாறு. என்னுற்றனரோ என்றான் கண்ணகி முன்னர் இறந்துபட்டனரோ என்றதற்குத் துணிவின்மையால். யாவதும் - யாதும்.

கோவலன் தனது தீ யொழுக்கத்திற்குத் தானே வருந்திக் கூறுதல்

63-70: வறுமொழி .......... செய்தனை என

(இதன்பொருள்) வறு மொழியாளரொடு வம்பப் பரத்தரொடு குறுமொழிக் கோட்டி நெடு நகைப் புக்கு - யான் பயனில்லாத சொற்களைப் பேசித்திரிகின்ற வீணரோடும் காமுகரோடும் கூடிப் பிறர் பழி கூறும் கயவர் கூட்டத்தின்கண் அவருடைய வெடிச் சிரிப்புக்குள்ளாக்கி; பொச்சாப்பு உண்டு - உவகை மகிழ்ச்சியால் சோர்வுற்று; பொருள் உரையாளர் நச்சுக் கொன்றேற்கு நல்நெறி உண்டோ - உறுதிப்பொருளை அறிவுறுத்தும் சான்றோரால் விரும்பப்படும் நல்லொழுக்கத்தைக் கெடுத்த எனக்கு இனி அத்தீநெறியே அன்றி நன்னெறியும் உளதாமோ? இரு முது குரவர் ஏவலும் பிழைத்தேன் - இவையேயும் அன்றி என்னுடைய தாய்தந்தையர்க்குச் செய்யும் ஏவல் தொழிலையும் செய்யா தொழிந்தேன்; சிறு முதுக குறைவிக்குச் சிறுமையும் செய்தேன் - இன்னும் இளமையிலேயே மூதறிவு படைத்த நினக்கும் சிறுமை பலவும் செய்தொழிந்தேன்; வழு எனும் பாரேன் - யான் இங்ஙனம் ஒழுகியும் என்பால் உண்டான குற்றங்களை ஒரு சிறிதும் ஆராய்ந்தறிந்திலேன்; மாநகர் மருங்கின் ஈண்டு எழுக என எழுந்தாய் - யான் நமது புகார் நகரத்தினின்றும் இம் மதுரைக்கு வர நினைத்து எழுக என்று சொல்லிய அளவிலேயே நீ மறுப்பொன்றும் கூறாமலே என்னோடு ஒருப்பட்டு எழுந்தாயே; என் செய்தனை என - நீ என்ன காரியம் செய்து விட்டாய் என்று பெரிதும் இரங்கிக்கூறா நிற்ப; என்க.

(விளக்கம்) வறுமொழியாளர் - பயனில்லாத சொற்களைப் பேசித் திரிகின்ற வீணர். வம் பரத்தர் - புதிய புதிய பரத்தை மகளிரைத் தேடி நுகருகின்ற காமுகர். பரத்தர் என்பதற்கு இப்பொருள் உண்மையை பெண்ணியலார் எல்லாருங் கண்ணிற் பொதுவண்பர். நண்ணேன் பரத்த நின் மார்பு (குறள் 1311) என்புழியும் காண்க. குறு மொழிக் கோட்டி - பிறர் பழிதூற்றிச் சிரிப்பதையே இன்பமாகக் கருதும் கயவர் கூட்டம் நெடு நகை வெடிச்சிரிப்பு. அஃதாவது விலா விற (விழுந்து விழுந்து) சிரித்தல். பொச்சாப்பு - உவகை மகிழ்ச்சியால் செய்யத்தகும் அறங்களை மறந்தொழில். நச்சு - விரும்பப்படும் பொருள், அஃதாவது நல்லொழுக்கம் என்க. ஏவலும் பிழைத்தேன். உம்மைசிறப்பு. வழு - குற்றம். எனும் - சிறிதும். நகர் - இல்லமுமாம். நான் எழுக என்றபோது நீ அது முறைமை அலறென மறுத்து இல்லத் திராது என்னோடு எழுந்து ஒரு குற்றம் செய்தனை எனக் கழறியபடியாம்.

முன்னர்ப் புகார் நகரத்தே மாதவியோடு பிணங்கிக் கண்ணகியின்பால்வந்த கோவலன் கண்ணகி வாடிய மேனி வருத்தங் கண்டு யாவும் சலம்புணர் கொள்கைச் சலதியோ டாடி என மாதவியை வைதவன் இங்கே மாதவி தூயள் என்றுணர்ந்துவிட்டபடியால் அவளோடாடிக் கெட்டொழிந்தேன் என்னாமையும், வறுமொழியாளரொடும் வம்பப் பரத்தரொடும் திரிந்தமையும் கண்ணகிக்குச் சிறுமை செய்தமையுமே போற்றா வொழுக்கமாகக் குறிப்பிடுதல் குறிக்கொண்டுணர்தற்பாலதாம். கண்ணகி தானும் மாதவியின் கேண்மையைக் கருதிப் போற்றா வொழுக்கம் என்று கூறிற்றிலள் எனக் கருதலாம்.

கண்ணகி மறுமொழி

71-83: அறவோர்க் களித்தலும் .......... அவள் கூற

(இதன்பொருள்) அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும் துறவோர்க்கு எதிர்தலும் - சாவக நோன்பிகளை எதிர் கொண்டழைத்து அவர்க்கு வேண்டுவன வழங்குதலும் அந்தணர்களைப் பேணுதலும் துறவறத்தோரை எதிர்கொண்டழைத்து உண்டி முதலியன கொடுத்து வழிபாடு செய்தலும்; தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை - தொன்று தொட்டு இல்லறத்தோர் மேற்கொண்டுள்ள சிறப்பினையுடைய அறமாகிய விருந்தினரை எதிர் கொள்ளுதலும் ஆகிய இவ்வறங்களை எல்லாம் நுமது பிரிவு காரணமாக இழந்திருந்த அடிச்சியை; நும் பெருமகள் தன்னொடு பெரும் பெயர்த் தலைத்தாள் மன் பெருஞ் சிறப்பின் மாநிதிக்கிழவன் - நுமது பெருமைக் குணமிக்க தாயோடும் பெரிய புகழையும் தலையாய முயற்சியினையும் மன்னனால் வழங்கப்பட்ட சிறப்பினையும் உடைய நும் தந்தையும் என்னை ஆற்றுவிக்க வருவாரைக் கண்டு; முந்தை நில்லா முனிவு இகந்தனன் ஆ - யான் நீர் என் முன்பு நில்லாமையாற் றோன்றும் வெறுப்பினை நீங்கினேனாக; அற்பு உளம் சிறந்த அருள் மொழி அளைஇ என் பாராட்ட - அதனை உணர்ந்த அவர்கள்தாம் உள்ளத்து மிக்குத் தோன்றும் அன்போடு அருள் நிறைந்தமொழிகளைக் கலந்து என்னைப் பாராட்ட - யான் அகத்து ஒளித்த நோயும் துன்பமும் நொடிவது போலும் - நான் என்னுள்ளத்து மறைத்த மனக் கவலையையும் மெய்வருத்தத்தினையும் கூறுவது போன்ற; என்வாய் அல் முறுவற்கு அவர் உள்ளகம் வருந்த - என் வாய்மையல்லாத புன்முறுவலுக்கு அவர் தம் உள்ளத்தினூடே பெரிதும் வருந்தும்படி; போற்றா ஒழுக்கம் புரிந்தீர் - நீர் பெரியோர் வெறுக்கும் தீய வொழுக்கத்தினை விரும்பி ஒழுகினீர் ஆகவும்; யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின் உம்முடைய சொல்லை ஒரு சிறிதும் மாற்ற நினையாத குறிக்கோளுடைய நெஞ்சத்தோடு வாழும் வாழ்க்கையை உடையேனாகலான்; யான் ஏற்று எழுந்தனன் என்று அவள் கூற - நான் நீர் கூறியதனை உடன்பட்டு எழுந்தேன் என்று கண்ணகி கூற; என்க.

(விளக்கம்) அறவோர் - சாவக நோன்பிகள்; அவர்கள் உண்ணா நோன்பு முதலியவற்றை மோகொண்டொழுகும்பொழுதும் அந்நோன்பினை முடிக்கும்பொழுதும் உறையுளும் ஆடையும் பின்னர் வழங்குதலை அறவோர்க்களித்தலும் என்றார். இவர் இல்லறத்திருந்து முதுமையுற்றோர். இவர்கள் குல்லகர் எனப்படுவர். இவர் ஓராடை மட்டும் உடுத்தி, அணிகலன் முதலியவற்றை நீக்கித் தூய எண்ணத்துடன் தவவேடம் கொண்டவர். ஆயினும் அப்பிறப்பிலேயே முத்திபெறார் ஆதலின் இவரை இல்லறத்தாராகவே கொள்வது சமண சமயத்துக்கொள்கை. இவரைப் பதினான்கு குணத்தானங்களில் பதினொன்றாம் கானத்தவர் என்பர். ஆகலின், இவரை அறவோர் என்றும் முற்றும் துறந்தோரைத் துறவோர் என்றும் பிரித்தோதினர். அறவோர் தாமும் முற்றத் துறந்தோரைப் போலச் சரிகை சென்று முறைப்படி உணவு ஏற்றுண்பர். இனி, முற்றத் துறந்தோர் தம்மை எதிர்கொண்டு அழைப்பவர் இல்லத்திலேயே உணவு கொள்வர். ஆதலின் துறவோர்க்கு எதிர்தலும் என்று கூறினார். அந்தணர் ஈண்டு அருகன் ஓதிய மறைகளைப் பயின்று ஏனையோர்க்கு அறங்கூறும் தொழிலையுடையோர். இவர் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுபவர் ஆதலின் அந்தணர் என ஓதப்பட்டார். இவரை உபாத்தியாயர் என்பர். இவரை ஓம்புதலும் இல்லறத்தார் கடன் ஆகலின் அந்தணர் ஓம்பலும் என்று சொற்றிறம் தேர்ந்து கூறப்பட்டது என்றுணர்க.

இனி, எந்தச் சமயத்தினும் இல்லறத்தார்க்குப் பொதுவாய அறம் ஆதலின் விருந்தெதிர் கோடலைத் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் என்று விதந்தார். இவ்விழந்தினர் நல்கூர்ந்தவராய் வரும் புதியவர் என்றறிக. பெருமகள் - கோவலன் தாய்; மாநிதிக் கிழவன் - கோவலன் தந்தை. நொடித்தல் - சொல்லுதல். வாயன் முறுவல் - பொய்ந்நகை. ஆற்றா உள்ள வாழ்க்கையீராகலின் என்பதும் பாடம்.

ஈண்டு இசையெச்சமாக ஏற்ற பெற்றி சில சொற்கள் வருவித்துரை கூறப்பட்டது.

கோவலன் கூற்று

84-93: குடி முதல் ........... ஒழிகென

(இதன்பொருள்) குடி முதல் சுற்றமும் குற்றிளையோரும் அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி - குடி முதல்வராகிய இருமுது குரவரை யுள்ளிட்ட சுற்றத்தார்களையும் குற்றேவற் சிலதியரையும் அடியார் கூட்டத்தையும் தோழியர் கூட்டத்தையும் துறந்து; நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும் பேணிய கற்பும் பெருந்துணை ஆக என்னொடு போந்து ஈங்கு என துயர் களைந்த - நாணமும் மடப்பமும் மகளிரால் ஏத்தப்படுகின்ற அழகும் உன்னால் காக்கப்படுகின்ற நினது கற்பும் ஆகிய இந்த நான்குமே துணையாகும்படி யான் எழுக என்னலும் என்னுடன் எழுந்து வந்து இம்மதுரையின்கண் எனது தனிமைத் துன்பத்தைத் தீர்த்த; பொன்னே கொடியே புனை பூங்கோதாய் நாணின் பாவாய் நீள் நில விளக்கே கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி - பொன் போல்வாய் பூங்கொடி போல்வாய் அணிந்து கொள்ளும் பூமாலை போல்வாய் நாணம் என்னும் பண்பால் இயன்ற பாவை போல்வாய்! நெடிய நிலத்திற்றோன்றிய மகளிர் குலத்திற்கெல்லாம் மணி விளக்கம் போல்வாய்! கற்பின் கொழுந்து போல்வாய்! அழகிற்குச் செல்வம் போல்வாய்; சீறடிச் சிலம்பின் ஒன்று யான் கொண்டுபோய் மாறி வருவன் மயங்காது ஒழிக என - நின் சீறடிக்கு அணியாகிய சிலம்பினுள் யான் ஒன்றனைக் கைக்கொண்டு இந்நகரத்தினுள் சென்று விற்று வருவேன் யான் வருமளவும் நீ தனிமையால் வருந்தாதே கொள்! என்று சொல்லி; என்க.

(விளக்கம்) குடிமுதற் சுற்றம் - தாய் தந்தை முதலியோர். குற்றிளையோர் - குற்றேவல் செய்யும் மகளிர்; இவரை எடுத்துக்கை நீட்டுவார் என்பர். அஃதாவது எப்பொழுதும் தனக்கு அணுக்கராய் இருந்து தான் கூறும் பணிகளை அவ்வப்பொழுது செய்துமுடிக்கும் சிறுபணி மகளிர் என்றவாறு. அடியோர்பாங்கு அடிமைத் தொழில் செய்வோர் கூட்டம். அவர் செவிலித்தாய் முதலிய ஐவர் என்பர். அவராவார் - ஆட்டுவாள் ஊட்டுவாள் ஒலுறுத்துவாள் நொடி பயிற்றுவாள் கைத்தாய் என்னும் ஐவருமாம். பொன் முதலியவற்றிற்கு உவமம் விரித்துரைக்கப்பட்டன.

கோவலன் கண்ணகியைப் பிரிந்து சிலம்பு விற்கச் செல்லுதல்

94-99: கருங் கயல் ............... செல்வோன்

(இதன்பொருள்) கருங் கயல் நெடுங்கண் காதலி தன்னை ஒருங்கு உடன் தழீஇ - கரிய கயல் மீன் போன்று நீண்ட கண்களையுடைய தன் காதலியை அன்புடன் மெய் முழுதும் தழுவிக்கொண்டு; உழையோர் இல்லா ஒரு தனி கண்டு தன் உள் அகம் வெதும்பி வரு பனி காந்த கண்ணன் ஆகி - அவள் பக்கத்திலே துணை யாவார் யாருமின்றித் தனியளாய் இருக்கின்ற நிலைமையைக் கண்டு தனது நெஞ்சின்னுள்ளே துன்புற்று வெதும்புதலாலே பெருகி வருகின்ற கண்ணீரை அவளறியாமல் மறைத்த கண்ணையுடையவனாய் ஒருவாறு பிரிந்து; பல் ஆன் கோவலர் இல்லம் நீங்கி வல்லா நடையின் மறுகின் செல்வோன் - பலவாகிய பசுக்களையும் எருமைகளையும் உடைய அவ்விடையர் இல்லத்தினின்றும் புறப்பட்டுத் தன் நெஞ்சத்தோடு ஒத்தியங்காத நடையினை யுடையனாய் அத்தெருவிற் செல்கின்றவன்; என்க.

(விளக்கம்) அற்றை நாள் இரவும் கூட்டமின்மை தோன்றக் கருங்கயல் நெடுங்கட் காதலி என்றார். இக்கருத்து ஆசிரியர் உள்ளத்தின் ஆழ்ந்திருக்கும் கருத்தென்பதனைப் பிறாண்டும் இவர் கூட்டமின் மையையும் உண்மையையும் கருங்கயல். நெடுங்கண், செங்கயல், நெடுங்கண், கருங்கண், செங்கண் எனக் குறிக்கொண்டோதுதலான் உணரலாம். ஒருங்குடன் என்றது எஞ்சாமைப் பொருட்டு, உழையோர் - தோழி முதலியோர். இல்லாத என்னும் பெயரெச்சத்தின் ஈறு கெட்டது. தன் கண்ணீரை அவள் காணின் பெரிதும் வருந்துவள் என்று கரந்தனன் என்க. ஆன் - பசு எருமைகளுக்குப் பொதுச் சொல் வல்லா நடை - மாட்டாத நடை. அஃதாவது மனமின்றிப் பிரிதலின் தன் கருத்திற்கு இணங்கமாட்டாத நடை என்றவாறு. தெரு - இடையர் தெரு. ஆய்ச்சியரெல்லாம் குரவை ஆடப் போனமையின் கண்ணகி தனித்திருத்தல் வேண்டிற்று.

கோவலனுக்கு எதிர்ப்பட்ட தீ நிமித்தம்

100-104: இமிலேறு .......... ஆங்கண்

(இதன்பொருள்) இமில் ஏறு எதிர்ந்தது இழுக்கு என அறியான் தன் குலம் அறியும் தகுதி அன்று ஆதலின் - முரிப்பினையுடைய ஆனேறு தன்னை எதிர்ந்து பாய வந்ததனைத் தீய நிமித்தமென்று அறிந்திலன் அது தனதுகுலம் உணரும் தகுதியினை உடைத்தன்று ஆகலான்; தாது எரு மன்றம் தான் உடன் கழிந்து மாதர் வீதி மறுகு இடை நடந்து - பூந்துகளாகிய எருவினையுடைய மன்றமெல்லாங் கழிந்து தளிப்பெண்டுகள் தெருவினூடே நடந்து போய்; பீடிகைத் தெருவின் பெயர்வோன் ஆங்கண் - கடைத் தெருவில் செல்கின்றவன் அவ்விடத்தே; என்க.

(விளக்கம்) இமில் - எருதின் பிடருக்கும் முதுகிற்கும் இடையே பருத்துயர்ந்து திரண்ட ஓர் உறுப்பு: முரிப்பு என்பதுமது. இதனைக் குட்டேறு எனவும் திமில் எனவும் வழங்குப. இக்காலத்தார் கொண்டை என்பர். ஏறு - வழியில் எதிர்ந்து பாய வருதல் தீநிமித்தம் என்பது ஆயர்குலத்தினரே நன்கறிந்ததொன்றாம். வணிகர் அறிதற்கு இடனின்மையின் தன்குலம் அறியும் தகுதி அன்றாதலின் என்றார். மன்றம் - ஊரன்பலம். தாது எரு மன்றம் - பூந்தாதுகள் நாள்தோறும் உதிர்ந்து எருவாகிக் கிடக்கும் மன்றம் என்றவாறு. பீடிகைத் தெரு - கடைத் தெரு.

பொன் வினைக் கொல்லன் வரவு

105-112: கண்ணுள் ............... ஆதியோவென

(இதன்பொருள்) கண்ணுள் வினைஞர் கை வினை முற்றிய நுண் வினைக் கொல்லர் நூற்றுவர் பின் வர - உருக்குத்தட்டாரும் சிற்பத் தொழிலெல்லாம் கற்றுத்துறைபோகிய பணித்தட்டாரும் ஆகிய நூறு பொற்கொல்லர் தன் பின்னே வாரா நிற்ப - மெய்ப்பை புக்கு விலங்கு நடை செலவின் கைக்கோல் கொல்லனைக் கண்டனன் ஆகி - அரசன் வரிசையாகிய சட்டையை அணிந்து ஒதுங்கி நடக்கும் நடையை உடையவனாய்க் கையின் கண் பிடித்த கொடிற்றையு முடையவனாய்த் தன் எதிர் போந்த ஒரு கொல்லனைக் கண்டனனாகி; இவன் தென்னவன் பெயரொடு சிறப்புப்பெற்ற பொன்வினைக்கொல்லன் எனப் பொருந்தி - இவன் பாண்டியன் பெயரோடு வரிசை பெற்ற பொற் கொல்லன் ஆதல் வேண்டும் என்று கருதி அவன்பால் அணுக; நீ காவலன் தேவிக்கு ஆவது ஓர் காற்கு அணி விலை இடுதற்கு ஆதியோ என - நீ அரசனுடைய தேவி அணியும் தகுதியுடையதொரு காற் சிலம்பை விலை மதித்தற்கு வல்லையோ? என்று வினவ; என்க.

(விளக்கம்) கண்ணுள் வினை - சிற்பத் தொழில்; தமது தொழில் நலத்தைக் காண்போர் கண்ணினுள் நிறுத்துபவர் ஆதலின் இவர் அப்பெயர் பெற்றார் இதரை உருக்குத் தட்டாரும் பணித் தட்டாரும் என இருவகைப்படுத்துவர் அடியார்க்கு நல்லார். இவருள் முன்னையோர் யொன்னை உருக்கி வார்ப்பவர் எனவும் பின்னையோர் அணிகலன் செய்பவர் எனவும் உணர்க. நூற்றுவர் என்றது மிகுதிக்கு ஓரெண் கூறிய படியாம். நூற்றுவர் பின்வர வருதலால் அவர்க்கெல்லாம் இவன் தலைவன் என்பது தோன்றிற்று. மெய்ப்பை - சட்டை. இது அரசன் இவன் சிறப்பிற்கு அறிகுறியாக வழங்கியது. கைக்கோல் - பற்றுக்கொடிறு. இக்காலத்தார் இதனை, கொறடு என்பர். இதுவும் அரசன் வழங்கிய வரிசைப்பொருள் ஆதலின் அதனைக் கைப்பற்றி வருகின்றான் என்க. இவ்வடையாளங்களால் கோவலன் இவன் அரசனால் சிறப்புப் பெற்ற கொல்லன் என்று கருதினன் என்பது கருத்து காவலன் தேவி அணியத் தகுந்த சிறந்த சிலம்பென்பான் தேவிக் காவதோர் காற்கணி என்றான். காலுக்கு அணியும் அணி என்க. ஆதியோ என்றது அத்தொழில் வன்மையும் உடையையோ என்றவாறு. எனவே என்பால் அத்தகைய சிலம்பொன்றுளது வல்லையாயின் அதற்கு விலை மதித்திடுக என்றானுமாயிற்று.

பொற்கொல்லனின் பணிமொழி

113-116: அடியேன் .......... அவிழ்த்தனன்

(இதன்பொருள்) அடியேன் அறியேன் ஆயினும் யான் வேந்தர் முடி முதல் கலன்கள் சமைப்பேன் என - அடியேன் மகளிருடைய காலணி கலன்களை விலை மதித்தற்கு அறியேனாயினும் யான் அரசர்க்கு முடி முதலிய பேரருங் கலன்களைச் செய்கின்ற தொழில் உடையேன் கண்டீர் என்று பணிவுடன் சொல்லி; கூற்றத்தூதன் கை தொழுது ஏத்த - கூற்றனால் விடுக்கப்பட்ட தூதனைப்போல வந்த அப்பொற்கொல்லன் கை குவித்துத் தொழுது புகழ்தலாலே; போற்று அருஞ் சிலம்பின் பொதி வாய் அவிழத்தனன் - யாரானும் புகழ்தற்கரிய சிலம்பினைப் பொதிந்த பொதியினது வாயை அவிழ்த்து அதனை அவனுக்குக் காட்டினன்; என்க.

(விளக்கம்) அடியேன் அறியேன் என்றது தனது பணிவுடைமையைக் காட்டுதற் பொருட்டு, பின்னரும் யான் அத்தொழிலில் மிகவும் வல்லுநன் என்பது தோன்ற, வேந்தர் முடிமுதற் கலன்கள் சமைப்பேன் என்றான். கூற்றத் தூதன் போல வந்த அப்பொற்கொல்லன் என்க. கைதொழு தேத்தியது தனது அன்பைப் புலப்படுத்த என்க. போற்று - புகழ். பொதி - கட்டு. அவிழ்த்து அதனை அவனுக்குக் காட்டினன் என்க.

பொற்கொல்லன் புன்செயல்

117-120: மத்தகமணி ......... நோக்கி

(இதன்பொருள்) மத்தக மணியோடு வயிரம் கட்டிய பத்திக் கேவணப் பசும் பொன் குடைச்சூல சித்திரச் சிலம்பின் செய்வினை எல்லாம் - தலையான மாணிக்கத்தோடு வயிரத்தையும் நிரல்பட அழுத்திய குழிகளையும் பசிய பொன்னால் செய்யப்பட்டு, புடைபட்டு உட்கருவிகளையும் சித்திரத் தொழிலையும் உடைய அச் சிலம்பினது தொழில் நுணுக்கமெல்லாம்; பொய்த்தொழில் கொல்லன் புரிந்து உடன் நோக்கி - பொய் விரவிய தொழிலையுடைய அப்பொற்கொல்லன் அச்சிலம்பு தான் மறைத்து வைத்துள்ள அரண்மனைச் சிலம்போடு ஒத்திருத்தலைக் கண்டு விரும்பி நெஞ்சத்தால் அச்சிலம்போடு இதனை ஒத்துப்பார்த்து; என்க.

(விளக்கம்) மத்தகமணி -சிலம்பின் முகப்பில் பதித்த சிறப்பான மாணிக்கமுமாம். பத்திக் கேவணம்-நிரல்பட்ட குழிகள். (மணி யழுத்துங் குழி) பசும்பொன் என்றது கிளிச்சிறை என்னும் ஒரு வகைப் பொன்னை. உள்ளே பரல் உடைமையின் சூல் சிலம்பு என்றார். குடை -குடைபோன்று புறம் புடைத்திருத்தல். சித்திரம் - பூங்கொடி, பறவை, விலங்கு, முதலிய சித்திரங்கள். கேவணச் சிலம்பு, சூற்சிலம்பு, சித்திரச் சிலம்பு எனத் தனித்தனி கூட்டுக; புரிந்து என்பதற்கு இடுவந்தி கூறுதலைப் புரிந்து என்பர். (அடியார்க்) இடுவந்தி - பழி இல்லாதவன்மேல் பழி ஏற்றுதல். இச்சொல் இக்காலத்தும் தமிழ்நாட்டின் வட பகுதியில் வழங்குகின்றது என்ப. பொய்த்தொழில் - பொய் சொல்லுதலையே தொழிலாக உடைய எனினுமாம்.

121-126: கோப்பெருந் ................ புக்கபின்

(இதன்பொருள்) இச்சிலம்பு கோப்பெருந்தேவிக்கு அல்லதை யாப்புறவு இல்லையென - ஐய! பெருவிலையுடைய இந்தச் சிலம்பானது அரசனுடைய பெருந்தேவியார் அணிதற்குப் பொருந்துவதல்லது ஏனை மகளிர்க்குப் பொருத்தமில்லை என்று சொல்லி; யான் முன் போந்து விறல் மிகு வேந்தற்கு விளம்பிவர -ஆதலால் யான் முற்படச் சென்று வெற்றி மிகுந்த நம்மரசனுக்கு இச்சிலம்பின் சிறப்பினைக் கூறி வருமளவும்; நீர் என் சிறுகுடில் அங்கண் இருமின் என - நீவிர் இதோ இருக்கின்ற அடியேனுடைய புன் குடிலின் பக்கத்தே இருப்பீராக என்று கூற; கோவலன் சென்று அக்குறுமகன் இருக்கை ஓர் தேவகோட்டச் சிறை அகம் புக்கபின - அதுகேட்ட கோவலன் அவ்விடத்தினின்றும் போய் அக்கீழ்மகனுடைய குடிலின் பக்கத்தே யமைந்த ஒரு கோயிலின் மதிலினுள்ளே புகுந்த பின்னர், என்க.

(விளக்கம்) அல்லதை, ஐ - சாரியை. யாப்புறவு - வினா; என்பர் (அடியார்க்) முன்போந்து என்றது - உம்மை உடனழைத்துப் போகாமல் யான் மட்டும் முற்படச் சென்று என்றவாறு. அரசனாதலின் செவ்வி அறிதற் பொருட்டு இங்ஙனம் சொல்கின்றான் எனக் கோவலன் உணர்தற்கு இங்ஙனம் கூறினான், என்க. இனி அவன் முன்போந்து என்றதற்குக் காரணம் கூறுகின்றார்.

127-130: கரந்து .............. செல்வோன்

(இதன்பொருள்) யான் கரந்து கொண்ட காலணி ஈங்குப் பரந்து மன்னற்கு வெளிப்படா முன்னம் - யான் முன்பு வஞ்சித்துக் கைக்கொண்டுள்ள கோப்பெருந்தேவியின் சிலம்பு என்னிடத்துள்ள செய்தி இவ்விடத்துள்ளார்பால் பரவி அரசன் அறியுமளவும் வெளிப்படுவதற்கு முன்னமே; புலம் பெயர் புதுவனின் யான் போக்குவன் எனக் கலங்கா உள்ளம் கரந்தனன் செல்வோன்-வேறொரு நாட்டினின்றும் இங்கு வந்துள்ள இந்தப் புதியவனிடத்தே அப்பழியை ஏற்றி என்பழியை இல்லையாக்குவேன் என்று தன்னுள்ளே நினைக்கின்றவன் மாபெருந் தீவினையாகிய இதனை நினைப்பதனால் ஒருசிறிதும் கலக்கமெய்தாத கொடிய தனது நெஞ்சத்தை மெய்ப்பாடு முதலியவற்றால் பிறர் அறியாத படி சிக்கென மறைத்துக் கொண்டு செல்கின்றவன் என்க.

(விளக்கம்) மன்னற்கு வெளிப்படா முன்னம் என மாறுக. புலம் - வேற்றுநாடு என்பது, பெயர் புதுவன் என்பதனால் பெற்றாம். இப்புதுவனைக் கருவியாகக் கொண்டு என் பழியைப் போக்குவன் என்றவாறு. இங்ஙனம் நினைதலும் சான்றோர்க்குச் சாலாதாகலின் இவன் இதனை நினைக்கும்பொழுது இவனுள்ளம் ஒருசிறிதும் கலங்கிற்றில்லை; அத்துணைக் கயமகன் இவன் என வியப்பார், அடிகளார் கலங்கா உள்ளம் கரந்தனன் என்றார். கரத்தல் - இவ்வஞ்சம் மெய்ப்பாடு முதலியவற்றால் முகமுதலியவற்றில் வெளிப்படாதபடி திறம்பட மறைத்தல் என்க.

பொற்கொல்லன் அரசனைக் காணுதல்

131-141: கூடல் மகளிர் ........... ஏத்தி

(இதன்பொருள்) கூடல் மகளிர் ஆடல் தோற்றமும் பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும் - பாண்டியன் கோப்பெருந் தேவியோடு ஒருங்கிருந்து நாடகம் காணுங்கால் அம்மதுரை நகரத்து நாடகக்கணிகை மகளிருடைய ஆடலின்கண் தோன்றிய அவரது முகத்தின் அழகும் ஆடலின் அழகும் அவ்வாட்டங்களுக்குப் பொருந்திய பாடல்களின் பொருள் அழகும் அப்பாட்டொடு பொருந்திய பண்களினது அழகுமாகிய இன்பங்கள்; காவலன் உள்ளம் கவர்ந்தன என்று - மன்னனுடைய நெஞ்ச முழுவதையும் கவர்ந்து கொண்டன ஆதலான் அவன் தன்னை நோக்கிற்றிலன் என்று தன்னுள் கருதிக் கொண்டமையாலே; குலமுதல் தேவி தன் ஊடல் உள்ளம் உள கரந்து ஒளித்துத் தலை நோய் வருத்தம் தன்மேல் இட்டுக் கூடாது ஏக - குலப்பிறப் பாட்டியாகிய கோப்பெருந்தேவி ஊடிய தன் நெஞ்சத்தை அவ்வூடல் தோன்றாதபடி தன்னுள்ளே திறம்பட மறைத்து ஊடிச் செல்பவள் தன்செலவிற்குத் தலைக்கீடாகத் தனக்குத் தலை நோகின்றது என்று சொல்லி அரசனொடு பொருந்தி இராமல் உவளகத்தே சென்று புகுந்து விட்டமையால்; மன்னவன் மந்திரச் சுற்றம் நீங்கி - அதுகண்ட அரசன் அமைச்சர் முதலிய தனது அரசியல் சுற்றத்தாரினின்றும் நீங்கித் தேவியின்பால் பெரிதும் காமம் உடையவனாய்; சிந்துஅரி நெடுங்கண் சிலதியர் தம்மொடு கோப்பெருந்தேவி கோயில் நோக்கி - செவ்வரி பரந்த நெடிய கண்களையுடைய பணிமகளிர் கூட்டத்தோடே ஊடிப் போன அக் கோப்பெருந்தேவியினது உவளக மாளிகையை நோக்கிச் செல்கின்றவனை; காப்பு உடைவாயில் கடைகாண் அகவையின் - காவலையுடைய அம்மாளிகையின் முன்றிலிலே கண்ட பொழுதே; வீழ்ந்தனன் தாழ்ந்து கிடந்து பல ஏத்தி - அம்மன்னனுடைய திருவடிகளிலே வீழ்ந்து வணங்கியவன் விழுந்தபடியே கிடந்து மன்னனைப் பற்பல புகழ்ந்து ஏத்திக் கூறுபவன், என்க.

(விளக்கம்) கூடல் மகளிர் என்றது, கூடலிடத்து நாடகக்கணிகை மகளிரை. மகளிர் தோற்றமும், அவர் ஆடல் தோற்றமும் எனத் தோற்றத்தை முன்னுங் கூட்டுக. பாடல் என்றது இசைப்பாட்டுக்களை. பகுதி என்றது அவற்றின் பொருட்பகுதிகளை என்க பண் என்றது - செம்பாலை முதலியனவும் திறம் முதலியனவும் ஆளத்தியும் பிறவும் என்க. பயம் - பயன்; அஃதாவது, இன்பம், இவையெல்லாம் அரசனுடைய உள்ளத்தைக் கவர்ந்து கொண்டமையால் அவன் பக்கத்திலிருந்த தேவியை நோக்காதொழந்தானாக. இவ்வாற்றால் தேவிக்கு ஊடல் பிறந்தது என்க. ஈண்டும், பாண்டியன் நெடுஞ்செழியன் அரசர் காதல் காதல் அறியாமை துய்த்தல் வேண்டும் என்னும் அரசியல் பிழைத்தமை தன்குலமுதற்றேவியும் அறியுமளவில் நுகர்ச்சியுற்றமையால் நுண்ணிதின் உணர்க - இடையே எழுந்துபோகும் தேவி எனக்குத் தலைநோகின்றது என அதனைத் தலைகீடாகச் சொல்லிச் சென்றாள் என்பது கருத்து ஈண்டு அரசன் தவற்றினைக் குறிப்பாக அறிவுறுத்தற்கு அத்தேவியின் சிறப்புக்கூறுவார் அடிகளார் குலமுதற்றேவி என விதந்தனர் என்னை? தேவி தவறிலள் என்பதற்கே, இங்ஙனம் விதந்தனர் என்க. மந்திரச் சுற்றம் நீங்கி என்றது பின்னர் அம் மன்னவன் தவறிழைத்தற்கு ஏதுவாய் நின்றது. இங்கு நிகழ்ந்த கூத்தும் தேவி ஊடிச்சென்றதும் மன்னவன் தேவிபால் காமமுடையவனாய்ச் சிலதியரோடு மந்திரச் சுற்றம் நீங்கி ஊடல் தீர்க்கும் உள்ளத்தோடே சென்றதும், அந்தச் செவ்வியில் பொய்த்தொழில் கொல்லன் அவன் அடிவீழ்ந்து வணங்கியதும் எல்லாம் பின்னர் நிகழும் நிகழ்ச்சிகளுக்கு ஏதுவாக ஊழ்வினை முந்துற்றச் செய்த செயல்களேயாம் என்பது உணர்வுடையோர் உணரற்பாலது என்க.

தன்மேல் தவறு சிறிதும் இல்லை என்று மன்னன் அறிந்துகொள்ளவேண்டும் என்று பொற்கொல்லன் அடியில் வீழ்ந்தவன் எழாமல் கிடந்தவாறே பல கூறி ஏத்தினன் என்க. ஊழ்வினை வந்துருத்துங் காலை இவ்வாறே தன் பயனைத் தப்பாமல் நுகர்வித்தற்குரிய சூழ்நிலையைத் தோற்றுவித்துக் கோடல் அதற்கியல்பென்பதும் ஈண்டுணரற்பாற்று.

பொற்கொல்லன் கூற்று

142-147: கன்னகம் ......... இருந்தோன் என

(இதன்பொருள்) கன்னகம் இன்றியும் கவைக்கோல் இன்றியும் துன்னிய மந்திரம் துணையெனக்கொண்டு - மன்னர் மன்ன! அடியேன் விண்ணப்பத்தைத் திருச்செவிக் கொண்டருளுக! கன்னக்கோல் இல்லாமலும்; கவைக்கோல் இல்லாமலும் தனது நெஞ்சின்கண் நிலைபெற்ற மந்திரம் ஒன்றனையே தான் செய்யும் களவுக்குத் துணைகருவியாகக் கொண்டு; வாயிலாளரை மயக்கு துயில் உறுத்து - நமது அரண்மனை வாயில் காவலர்களை யாதொன்றும் அறியா வண்ணம் மயக்குகின்ற உறக்கத்தே வீழ்த்திப் பின்னர்; கோயில் சிலம்பு கொண்ட கள்வன் - அரண்மனைக்குட் புகுந்து அங்கிருந்த தேவியாருடைய சிலம்பைக் களவாடிய கள்வன்; கல் என் பேரூர்க் காவலர்க் கரந்து - எப்பொழுதும் கல்லென்னும் ஆரவாரத்தையுடைய இம் மதுரை மாநகரத்துக் காவலருடைய கண்ணிற்படாமல் மறைந்து இற்றை நாள்; என் சில்லைச் சிறுகுடில் அகத்து இருந்தோன் என- அடியேனுடைய புன்குடிலினிடத்தே வந்து பெரிதும் துணிவுடன் இருக்கின்றான் என்று சொல்லா நிற்ப, என்க;

(விளக்கம்) கன்னகம் - சுவர் அகழும் கருவி; கன்னக்கோல். கவைக்கோல் - கொடிற்றுக்கோல் (கொறடு). இது சுவரின் செங்கல், படைக்கல், முதலியவற்றைக் பறிக்குங்கருவி. குத்துக்கோலென்பாருமுளர். உம்மைகள் சிறப்பு. துணை - துணைக்கருவி. நகருக்குள் கரந்து வருதலின் அருமைதோன்றக் கல்லென் பேரூர் என்றான். கல்லென்: ஒலிக்குறிப்பு. தன்பால் அரசனுக்கு இரக்கம் பிறத்தற்கு என் சில்லைச் சிறுகுடில் என்றான். இருந்தோன் என்புழி ஆ, ஓ வாயிற்றுச் செய்யுளாகலின்.

சினையலர் வேம்பன் செயல்

148-153: வினைவிளை .............. கொணர்கவீங்கென

(இதன்பொருள்) சினை அலர்வேம்பன் - கொம்பின்கண் மலருகின்ற வேப்பமலரால் இயன்ற மாலையினையுடைய அப் பாண்டிய மன்னன்தானும், வினைவிளை காலம் ஆதலின் - கோவலன் முற்பிறப்பிற் செய்த தீவினையானது முதிர்ந்து தன்பயனை நுகர்விக்கும் காலம் அதுவாக இருத்தலாலேயும்; தேரான் ஆகி - தான் காமக்காழ் கொண்ட மனததனாய் இருத்தலாலும் அப் பொற்கொல்லன் பொய்ம்மொழியைத் தெளிந்தவனாய், ஊர்காப்பாளரைக் கூவி-அப்பொழுதே அவ்வூரைக் காக்கும் காவலாளர் ஒரு சிலரை அழைத்துக் கூறுபவன், ஈங்கு என் தாழ்பூங் கோதை தன் காற்சிலம்பு கன்றிய கள்வன் கையது ஆகின் - இப்பொழுதே நீவிர் இக்கொல்லன் பின் சென்று என்னுடைய தாழ்ந்த மலர் மாலையணிந்த பெருந்தேவியின் காற் சிலம்பு இக் கொல்லனால் காட்டப்படுகின்ற களவின்கண் காழ்த்த அக் கள்வனின் கையின்கண் உளதானால்; கொன்று அச்சிலம்பு ஈங்கு கொணர்க என - அக் கள்வனைக் கொன்று அந்தச் சிலம்பினை இங்குக் கொணர்வீர் ஆக என்று சொல்லி, என்க.

(விளக்கம்) வினை விளை காலம் என்றது கோவலனுடைய பழவினை விளை காலம் எனக் கோவலன் வினையைக் குறித்தபடியை யாம் பதிகத்தும் விளக்கினாம்.

இனி, வேம்பன் காமத்தால் கதுவப்பட்ட நெஞ்சத்தனாய்த் தனக்குரிய செங்கோன்மை முறைமையினின்று வழுவி இங்ஙனம் காவலர்க்குப் பணித்தான் என்பதே அடிகளார் கருத்து என்க. இங்ஙனம் வேம்பன் தேராமைக்கும் அவ் வேம்பன் வினை விளை காலத்தை ஏதுவாகக் கூறுமிடத்து அடிகளார் இக் காப்பியத்திற்குக் கொண்ட அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாம் என்னும் கொள்கை பொருளின்றி நின்று வற்றும் என்பதையும் ஊழ்வினை உருத்து வந்தூட்டுதற்கும் இது கூறியது கூறலாய் மிகையாதலும் நுண்ணிதின் உணர்க. வேம்பன் அப்பொழுதே தன் அரசியல் பிழைத்தான் அதுவே அவனுக்குக் கூற்றாய் முடிந்தது என்பதே அடிகளார் கருத்தென்று துணிக. மேலும், பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்து, ஆள்வினை இன்மை பழி (குறள் 618) என்பதற்கிணங்க ஈண்டுப் பாண்டியன் பழிக்கப்படுதலும் கோவலன் பழிக்கப்படாமையும் நோக்குக. கன்றிய - காழ்கொண்ட; செய்து முதிர்ந்த என்றவாறு. ஈங்குக் கொணர்க என்றது தான் தேவியின் ஊடல் தீர்த்தற்கு அச் சிலம்பும் ஒரு கருவியாம் என்று தன் கையில் கொண்டு போதற் பொருட்டு, என்க.

154-161: காவலன் ............ காட்ட

(இதன்பொருள்) காவலன் ஏவக் கருந்தொழில் கொல்லனும் ஏவல் உள்ளத்து எண்ணியது முடித்துஎன - அப் பாண்டிய மன்னன் அக் காவலர்களை ஏவாநிற்பக் கொடிய தொழிலையுடைய அக் கொல்லன்றானும் அரசனால் ஏவப்பட்ட உள்ளத்தை யுடையனாய் யான் நினைத்த காரியத்தைச் செய்து முடித்தேன்; எனத் தன்னுள் கருதியவனாய், அக் காவலர் பின் தொடர; தீவினை முதிர்வலைச் சென்று பட்டு இருந்த கோவலன் தன்னைக் குறுகினன் ஆகி- தான் முற்பிறப்பிலே செய்த தீவினையானது தன்பயனை ஊட்டுமளவு முதிர்ந்திருந்த ஊழாகிய வலையின் அகத்தே புகுந்து அதன்வயப்பட்டிருந்த அக் கோவலனை அணுகி அவனுக்கு அக் காவலரைக் காட்டிக் கூறுபவன்; இவன் வலம்படு தானே மன்னவன் ஏவச் சிலம்பு காணிய வந்தோர் என -ஐய! இவர்கள் வெற்றி பொருந்திய படைகளையுடைய மன்னவனுடைய பணியை மேற்கொண்டு அவன் கட்டளையிட்டபடி நும்பாலுள்ள சிலம்பினைக் காண்பதற்கு ஈண்டு வந்தவர் என அறிவித்துப் பின்னர்; செய்வினைச் சிலம்பின் செய்தி எல்லாம் பொய்வினைக்கொல்லன் புரிந்து உடன் காட்ட-அதுகேட்ட கோவலன் தன் சிலம்பினைக் காட்டினனாகப் பின்னர் அக் காவலர்க்குத் தொழிலின் சிறப்பாலே திகழுகின்ற அந்தச் சிலம்பினது அருமை பெருமை முதலியவற்றைக் கூறுபவன் போலே அவரைத் தனியிடத்தே யழைத்துப் போய் அப் பொய்த் தொழிற் கொல்லன் அச் சிலம்பு அரண்மனைச் சிலம்பு என அவர் நம்புதற்கு வேண்டுவன வெல்லாம் ஆராய்ந்து ஒரு சேரக் கூறி இஃது அரண்மனைச் சிலம்பே என்று சொல்லிக் காட்டா நிற்ப என்க.

(விளக்கம்) அரசன் காவலரை இவன் பின்னே போமின் என ஏவிய துணையானே தானும் ஏவப்பட்ட உள்ளத்தையுடையவனாய் என்க. எண்ணியது (127) யான் கொண்ட ....... (139) போக்குவன் என்பது . தீவினை முதிர்ந்த (ஊழாகிய) வலை என்க. இவர் சிலம்பு காணிய வந்தோரெனக் கோவலனுக்கு அறிவித்து அவன் அச் சிலம்பினைக் காட்ட அக் காவலர் அதனைக் கண்ட பின்னர் எனவும் அவரைத் தனியிடத்தே யழைத்துப்போய் எனவும் இன்னோரன்ன பிறவும் இசை எச்சமாக வருவித்துக் கூறப்பட்டன.

162-165: இலக்கண .......... உரைப்போன்

(இதன்பொருள்) இலக்கண முறைமையின் ஈங்கு இருந்தோன் - அப் பொய்த் தொழிற் கொல்லன் அக் காவலர்க்கு ஆவனவெல்லாம் கூறி இவன் தான் கள்வன் என்று காட்டிய பொழுது அவர் தாமும் உளம் துணுக்குற்றவராய் ஏடா! இங்கிருக்கும் இவன் மேன்மக்களுக்கு உரிய இலக்கணம் எல்லாம் உடையனாய் அவர் இருக்குமாறு போலே இருக்கின்றான்; இவன் கொலைப்படும் மகன் அலன - இவன்றான் எம்மால் கொலை செய்தற்குரிய கள்வன் ஆகான், நீ பொய் கூறுதி; என்று கூறும் அருந்திறல் மாக்களை என்று மறுத்துக் கூறுகின்ற வெல்லுதற்கரிய ஆற்றலுடைய அக் காவலரை; கருந் தொழிற் கொல்லன் அகம் நகைத்து உரைத்து அக் கொடுந் தொழிற் கொல்லன் தன்னுள்ளே அவரை இகழ்ந்து நகைத்துக் கூறுவான்போலே பொய் நகை நாட்டிக் கூறுபவன் நீவிர் கள்வர் தன்மை அறிந்திலீர் என்று கடிந்துரைத்து மேலும்; காட்டினன் உரைப்போன் - கள்வர் தம் இயல்பினைக் களவு நூலில் கூறியவற்றை அவர்க்கு எடுத்துக் காட்டிச் சொல்லுபவன், என்க.

(விளக்கம்) இலக்கணம் - மேன்மக்களுக்குரிய (இலக்கணம்) முறைமை. என்றது அவர் இருத்தலும் மொழிதலும் முதலிய முறைமை என்க. இது கோவலன் அவரை அன்புடன் முகமலர்ந்து வரவேற்றதனையும் சிறிதும் ஐயுறாவகை, சிலம்பினை அவர்க்குக் காட்டியதனையும் முருகவேள் போன்ற அவனது தோற்றப் பொலிவினையும் கண்டு அக் காவலர் கூறியவாறாம். இவ்வாற்றால் அடிகளார் அவருடைய நுண்மாண் நுழைபுலனை வியந்து பாராட்டுவார் அருந்திறல் மாக்கள் என்றார். மாக்கள் என்புழித் தன்பொருள் குறியாது மக்கள் என்னும் பொருட்டாய் நின்றது. அகம் நகைத்து என்றது அகத்தே எள்ளல் காரணமாக நகைப்பார் போலே நகைத்து என்பதும் உரைத்து என்றது நீவிர் கள்வர் தன்மை அறிகிலீர் எனக் கடிந்துரைத்து என்பதும் தோன்ற நின்றன. கருந்தொழில் - பொய்யும் களவும் கொலையும் பிறவுமாகிய கொடுந்தொழில், என்க. காட்டினன்: முற்றெச்சம்.

(164) அகநக எனவும் அகநெக எனவும் (அடியார்க்கு) பாடங்கள் உண்டு. அகநகை - இகழ்ச்சிநகை என்பாருமுளர்.

பொற்கொல்லன் கூறிய கள்வர் இலக்கணம்

166-169: மந்திரம் ............ திரிவது

(இதன்பொருள்) இழுக்குடை மரபின் கட்டு உண்மாக்கள் - குற்றமுடைய ஒழுக்கமாகிய களவை மேற்கொண்டு பிறர் பொருளைக் களவு செய்து உண்டு வாழும் கள்வர்கள்; மந்திரம் தெய்வம் மருந்து நிமித்தம் தந்திரம் இடன் காலம் கருவி என்று எட்டு உடன் அன்றே - மந்திரமும், தெய்வமும், மருந்தும், நிமித்தமும், தந்திரமும், இடனும், காலமும், கருவியும் ஆகிய இந்த எட்டினையும் அன்றோ; துணையெனத் திரிவது - எப்பொழுதும் தமக்குத் துணையாகக் கொண்டு திரிவது என்றான், என்க.

(விளக்கம்) மருந்தே இடனேயென்ற ஏகாரமிரண்டும் எண். அன்றேயென்பது தேற்றம். கட்டுண்மாக்கள் எட்டுடனன்றே துணையெனத் திரிவதென்க.

மருந்து

170-171: மருந்தின் .............. நவைப்பட்டீர்

(இதன்பொருள்) மருந்தின் பட்டீராயின் - நீவிர் காலம் தாழ்த்தலின்றி இவனைக் கொல்விராயின், தப்புவதன்றி, இவனுடைய மருந்தில் அகப்படுவிராயின்; யாவரும் பெரும் பெயர் மன்னனின் பெரு நவைப்பட்டீர் - நீவிரெல்லாம் பெரிய புகழையுடைய நம் மன்னவனுடைய ஒறுத்தல் ஆகிய பெரிய துன்பத்தின்கண் இப்பொழுதே அகப்பட்டீர் காண், என்றான் என்க.

(விளக்கம்) தெளிவு பற்றிப் படுவீர் என்னாது பட்டீர் என இறந்த காலத்தில் கூறினான்.

என்னை?

வாராக் காலத்து வினைச்சொற் கிளவி
இறப்பினும் நிகழ்வினுஞ் சிறப்பத் தோன்றும்
இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை

(தொல்-சொல். வினை -48.) என்பது விதியாகலின். பெரும் பெயர்-பெரிய புகழ் பெருநவை-ஒருத்தலாகிய பெருந்துன்பம் என்க.

மந்திரம்

172-173: மந்திரம் ......... காண்குவமோ

(இதன்பொருள்) மந்திரம் நா இடை வழுத்துவர் ஆயின் - தாம் பயின்றுள்ள மந்திரத்தைத் தமது நாவினால் உருவேற்றுவாராயின்; இந்திர குமரரின் - தேவகுமாரரைப் போல; யாம் காண்குவமோ - நாம் நம் கண்ணால் காணவல்லேம் அல்லேம் என்றான் என்க.

(விளக்கம்) வழுத்துதல் - உருவேற்றுதல். இந்திரகுமாரரை நாம் காணமாட்டாமை போல இவரையும் காணமாட்டேம் என்றவாறு.

தெய்வம்

174-175: தெய்வம் .......... பெயர்குவர்

(இதன்பொருள்) தெய்வத் தோற்றம் தெளிகுவர் ஆயின் - தாங்கள் வழிபடுகின்ற தெய்வத்தை எப்பொழுதும் தமக்கு முன் நிற்கும்படி நெஞ்சத்தால் தெளிந்து நினைப்பாராயின், கை அகத்து உறுபொருள் காட்டியும் பெயர்குவர் -தாம் களவு செய்து தம் கையின்கண் வைத்துள்ள மிக்க பொருளை நமக்குக் காட்டிய பின்னரும் அப்பொருளோடு தப்புவர் என்றான், என்க.

(விளக்கம்) தெய்வம் - வழிபடு தெய்வம். தோற்றம்-அத் தெய்வத்திற்குத் தாம் தம்நெஞ்சத்தே கற்பித்துக் கொண்ட உருவம். கைப்பொருளை நமக்குக் காட்டிய பின்பும் அத் தெய்வம் அவரைத் தப்புவிக்கும் என்பது கருத்து.

மருந்து

176-177: மருந்தின் ........... உண்டோ

(இதன்பொருள்) நம் கண் மருந்தின் மயக்குவராயின் - இத்தகைய கள்வர் தாம் நம்மிடத்தே தமது மருந்தினாலே மயக்கத்தைச் செய்வாராயின்; இருந்தோம் பெயரும் இடனும் மார் உண்டோ-அவரைக் கண் கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கின்ற யாம் இருந்த விடத்தின் இருப்பதல்லது ஒரு சிறிதும் புடைபெயர்ந்து செல்லுதற்கும் வழி இல்லையாம் என்றான்; என்க.

(விளக்கம்) அவர் கருவிகள் எட்டனுள் மருந்து நும்மை இப்பொழுது மயக்கிற்றுப் போலும் அதனாற்றான் அவனைப் புகழ்கின்றீர் போலும் என்பான் இவ்வெட்டனுள் மருந்தினை முன்னுங் கூறினன். இப்பொழுது அவன் போவானாயின் அவனை நீயிர் தொடர்ந்து பற்றவும் வல்லீர் அல்லீர் என அச்சுறுத்துவான் மீண்டும் அதனை விதந்தெடுத்தோதினன். இதன்பயன் அவர்தம் காரியத்தைச் செய்தற்கு விரைதலாம் என்க. உண்டோ என்னும் வினா. அதன் எதிர் மறைப்பொருளை வற்புறுத்து நின்றது. மார் : இடைச் சொல்.

நிமித்தம்

178-179: நிமித்தம் ................ புகுதினும்

(இதன்பொருள்) நிமித்தம் வாய்த்திடின் அல்லது - நன்னிமித்தம் வாய்க்கப் பெற்றாலன்றி; அரும் பொருள் வந்து கைப்புகுதினும் யாவதும் புகற்கிலர் - பெறுதற்கரிய பொருள் தானே வந்து தம் கையிற் புகுந்தாலும் சிறிதும் தம் தொழிலிடத்தே புகுதமாட்டார்; என்க.

(விளக்கம்) நிமித்தம் - நன்நிமித்தம். யாவதும் - ஒரு சிறிதும். புகற்கிலர் - புகுதார்.

தந்திரகரணம்

180-181: தந்திர .......... எய்துவர்

(இதன்பொருள்) தந்திர கரணம் எண்ணுவர் ஆயின் - தமக்குரிய களவு நூலில் கூறப்பட்டிருக்கின்ற செயல்களை எண்ணி அவ்வாற்றால் களவு கொள்ளப் புகுந்தால்; இந்திரன் மார்பத்து ஆரமும் எய்துவர் - தேவேந்திரனுடைய மார்பிலணிந்த முத்து மாலையையும் அவனறியாமல் களவு செய்வர் என்றான், என்க.

(விளக்கம்) தந்திரகரணம் - நூலில் சொல்லும் செயன் முறை. இந்திரன் தனது சுற்றம்சூழ எப்பொழுதும் கண்ணிமையாது விழித்திருப்பவன் ஆதலால் அத்தகையோனுடைய ஆரத்தையும் அவனறியா வண்ணம் களவு செய்யும் திறமுடையார் என்பது கருத்து. தந்திரம் - ஈண்டுக் களவு நூல்.

இடம்

182-183: இவ்விடம் ............ காண்கிற்பார்

(இதன்பொருள்) இப் பொருள் கோடற்கு இவ்விடம் இடம் எனின்-இந்தப் பொருளைக் களவு கொள்ளுதற்கு இந்த இடமே சிறந்த இடம் எனத் துணிந்து அப் பொருளை அவர் களவு கொண்ட பின்னர்; அவ்விடத்து அவரை யார் காண்கிற்பார் - அவ்விடத்தே அவரை யார் தாம் கண்ணாற் காண வல்லார் என்றான்; என்க.

(விளக்கம்) இடம் எனின் -சிறந்த இடம் என்று துணிந்தால் என்க. காண்கிற்பார்: ஒருசொல். கிற்பார்-செய்வார் என்பாருமுளர்.

காலம்

184-185: காலம் ........... உண்டோ

(இதன்பொருள்) அவர் காலம் கருதி பொருள் கையுறின் - அவர் தாம் களவு செய்தற்குச் சீர்த்த காலம் இஃது என்று துணிந்து அக்காலத்தில் களவு கொள்ள எண்ணிப் பொருளைக் கைப்பற்றிவிடின்; மேலோர் ஆயினும் விலக்கலும் உண்டோ - விண்ணவராயினும் அக் களவினை விலக்குதல் கூடுமோ? களவுகொண்டே விடுவர் என்றான்; என்க.

(விளக்கம்) காலம் - சீர்த்த காலம். மேலோர் - விண்ணவர்.

கருவி

186-187: கருவி ........... காண்கிற்பார்

(இதன்பொருள்) அவர் கருவிகொண்டு அரும்பொருள் கையுறின் - அவர் தாம்; கன்னகம் முதலிய கருவிகளைக் கொண்டு களவு கொள்ளுதற்கும் அரிய பொருள்களைக் கைப்பற்றிக் கொள்வாராயின்; இரு நிலம் மருங்கின் யார் காண்கிற்பார் - பின்னர் பெரிய இந் நிலவுலகத்தின்கண் அவரை யாரே காண்பார், என்றான் என்க.

(விளக்கம்) கருவி - கன்னகமும் கவைக்கோலும் பிறவும் என்க.

188-189: இரவே ...............இல்லை

(இதன்பொருள்) இரவே பகலே என்று இரண்டு இல்லை -இவருக்கு இரவென்றும் பகல் என்றும் கூறப்படுகின்ற கால வேறுபாடு இரண்டும் இல்லையாம்; கரவு இடம் கேட்கின் ஓர் புகல் இடம் இல்லை - அவர் களவு செய்யும் இடத்தைக் கேட்கின் நாம் ஓடி ஒளிக்கலாம் இடம் வேறு இல்லையாம்; என்றான் என்க.

(விளக்கம்) இரவு பகல் என்று இரண்டில்லை எனவே இவர் எப்பொழுதும் களவு செய்ய வல்லுநர் என்றவாறாம். கரவிடம் கேட்பின் இவர் களவு செய்யும் இடம் யாது என்று வினவின் அதற்கு விடை கூறுதற்கு ஓரிடமும் இல்லை என்றான் எனினுமாம். எனனே இவர் எவ்விடத்தும் களவு கொள்ள வல்லுநர் ஆவார் என்றான் ஆயிற்று.

பொற்கொல்லன் கள்வர் ஆற்றலுக்குச் சான்றாக ஒரு வரலாறு புனைந்து கூறுதல்

190-202: தூதர் ................. கொல்லல்

(இதன்பொருள்) தூதர் கோலத்து வாயிலின் இருந்து - காவலர்களே! பண்டு ஒருநாள் ஒரு கள்வன் வேற்று நாட்டரசர் தூதர் போலக் கோலங்கொண்டு வந்து நம் மன்னனுடைய அரண்மனை வாயிலின்கண் பகற்பொழுதின்கண் தங்கியிருந்து; வல் இருள் மாதர் கோலத்துப் புக்கு - அப் பகற்பொழுது கழிந்து வலிய இருளையுடைய இரவு வந்துற்றவுடன் யாரும் அறியாமல் அரண்மனைக்குட் புகுந்து; விளக்கு நிழலில் துளக்கு இலன் சென்று - விளக்கு நீழலிலே பள்ளியறையினுள் சிறிதும் அஞ்சாமல் புகுந்து; ஆங்கு இளங்கோ வேந்தன் வெயிலிடு வயிரத்து துளங்கு ஒளி ஆரம் - அவ்விடத்தே இந்நெடுஞ்செழியன் தம்பியாகிய வேந்தன் துயில் கொள்ளும் பொழுது அவன் மார்பில் அணிந்திருந்த வெயிலிடு வயிரத்தையுடைய ஒளிதிகழும் முத்து மாலையை; மின்னின் வாங்க - மின்னல் போன்று விரைந்து கைக்கொண்டானாக; துயில்கண் விழித்தோன் தோளில் காணான் அப்பொழுது துயில் கலைந்து கண் விழித்துப் பார்த்த அவ்விளங்கோ வேந்தன் ஆரத்தைத் தன் தோளில் காணப்பெறானாய்; உடை வாள் உருக - தனது உடை வாளை உருவினானாக, உறை கை வாங்கி எறிதொறும் செறித்த இயல்பிற்கு ஆற்றான் - அதன் உறையைத் தன் கையிற் பற்றித் தான் குத்துந்தோறும் வாளில் உறையைச் செறித்த அத் தன்மைக்குப் பொறானாய்; மல்லிற்காண மணித்தூண்காட்டிக் கல்வியில் பெயர்ந்த கள்வன் தன்னை மற்போரான் அவன் வலியைக் காண விரும்பிய அளவிலே அவ்விடத்து நின்றதொரு மணித்தூணைத் தானாகக் காட்டித் தன் களவு நூற் பயிற்சியினால் மறைந்த கள்வனை; கண்டோர் உளர் எனில் காட்டும்-கண்டோர் உளராயின் அவர்களைக் காட்டுமின்; ஈங்கு இவர்க்கு உண்டோ உலகத்து ஒப்போர் என்று அக் கருந்தொழிற் கொல்லன் சொல்ல - காட்டுவாரிலர் ஆகலான் இக் கள்வர்க்கு ஒப்பாவார் இவ்வுலகத்துப் பிறர் ஒருவரேனும் உண்டோ என்று அக்கொலைத் தொழிலினையுடைய பொற்கொல்லன் கூற; என்க.

(விளக்கம்) தூதர் - வேற்று நாட்டு அரசரால் விடப்பட்ட தூதர். வாயிலினிருந்து என்பதற்கு மேலே வல்லிருட்புக்கு என்றமையால் வாயிலின்கண் பகல் முடியுந்துணையும் இருந்தான் என்பது பெற்றாம். இளங்கோ நெடுஞ்செழியனுக்குத் தம்பியாகிய அரசன் என்க. வெயிலிடு - வெயில் போல ஒளிவிடுகின்ற; வயிரத்தின் ஒளியால் ஆரத்தைக் கண்டு வாங்க எனினுமாம். பண்டு துயின்றவன் என்பது தோன்ற துயில் கண் என்றார். அரசன் உடைவாளை உருவியவுடன் கள்வன் அவ்வுறையைக் கைப்பற்றி என்றவாறு. அரசன் வாளால் குத்துந்தோறும் கள்வன் தன் கையிலிருந்த உறையின்கண் அவ்வாளை ஏற்றான் என்னும் இஃது அக் கள்வனின் வியத்தகு செயலை உணர்த்துதலுணர்க. மல்லிற்காண என்றது அரசன்தன் வாள் பயன்படாமை கண்டு அதனை ஒழித்து மற்போரினாலே அக் கள்வன் வலியைக் காண்டற்கெழ என்றவாறு. எழுந்த உடன் கள்வன் எதிர்நின்ற தூணின் மறைந்து தப்பினன்; அவ்வழி மன்னன் அக்கள்வன் மறைந்த தூணையன்றிப் பின்னர்க் கள்வனைக் கண்டிலன் என்பது கருத்து. இது, முன்னர் மந்திரம் நாவிடை வழுத்துவராயின் இந்திரகுமரரின் யாங் காண்குவமோ என்பதற்கு எடுத்துக் காட்டாயிற்று.

202-203: ஆங்கோர் .......... கூறும்

(இதன்பொருள்) ஆங்கு ஓர் திருந்து வேல் தடக்கை இளையோன் - அவ்விடத்தே அக்காவலர் தம்முள் வைத்துத் திருந்திய வேலையுடைய பெரிய கையையுடைய ஆண்டால் இளையவனாகிய ஒரு காவலன், கூறும் - தனது பட்டறிவு கொண்டு சொல்லுவான் அஃது யாதெனின் என்க.

(விளக்கம்) ஆங்கு, என்றது அங்ஙனம் அக்கொல்லன் கூறி முடித்த பொழுது எனக் காலத்தின் மேற்று. அக் கள்வன் கூற்றெல்லாம் உண்மை என்றே அக் காவலன் கொண்டனன் என அவன் பேதைமை தோன்ற இளையோன் என்றார்.

இளங்காவலன் எடுத்துக்காட்டு

204-211: நிலனகழ் .................. படையிரென

(இதன்பொருள்) நிலன் அகழ் உளியன் நீலத் தானையன் கலன் நசை வேட்கையின் - நிலத்தை அகழுகின்ற உளிளை யுடையவனாய் நீல நிறமுடைய ஆடையை உடுத்தியவனாய் அணிகலன்களை விரும்பிய விருப்பத்தாலே; கடும் புலி போன்று - இரைதேடி இருளிலே திரிகின்ற கடிய புலியைப்போல; மாரி நடு நாள் வல்இருள் மயக்கத்து ஊர் மடி கங்குல் ஒருவன் தோன்ற - மழையையுடைய கார்காலத்தில் அரையாமத்தில் வலிய இருளால் கண்களை மயக்குவதும் ஊரிலுள்ள மாந்தரெல்லாம் துயில்வதற்கு இடனானதும் ஆகிய ஓர் இரவிலே ஊர் காவல் மேற்கொண்டு செல்லும் என்னெதிரே ஒரு கள்வன் தோன்றினான் அப்பொழுது, கைவாள் உருவ என் கைவாள் வாங்க - யான் அவனை எறிதற் பொருட்டு என் உடை வாளை உருவினேனாக உருவியவுடன் அக்கள்வன் அவ்வாளைத் தன் கையில் பற்றினன்; யான் அவன் எவ்வாய் மருங்கினும் கண்டிலேன் - வாளைப்பற்றிய கள்வன் அப்பொழுதே அவ்வாளோடு மறைந்தொழிந்தானைப் பின்னர் யான் எல்லா இடங்களினும் தேடிப்பார்த்தும் கண்டிலேன்; இவர் செய்தி அரிது - ஆதலால் இவருடைய செய்கையை நம்மனோர் அறிதலும் அரிதேயாம்; வேந்தனும் அலைக்கும் - யாம் செய்யக்கடவ செயலைச் செய்யாது தப்பின் நம்மரசனும் நம்மை ஒறுப்பன் எனவே இங்ஙனம் காலந் தாழ்த்தல் நன்றன்று; உறுபடையீர் - மிக்க படைக்கலத்தை யுடையீர்; உரியது ஒன்று உரைமின் - யாம் இப்பொழுது செய்தற்குரிய செயலொன்றனைத் துணிந்து விரைந்து சொல்லுமின்; என - என்று கூறா நிற்ப என்க.

(விளக்கம்) இதனோடு நிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர், மென்னூலேணிப் பன்மாண் சுற்றினர், நிலனகழுளியர் கலனசைஇக்கொட்கும், கண்மாறாடவ ரொடுக்க மொற்றி எனவரும் மதுரைக் காஞ்சியையும் ஒப்பு நோக்குக. கோவலனையும் கள்வனாகக் கொண்டு இவர் செய்கை என்றான்.

உளியனாய்த் தானையனாய்ப் புலி போன்ற ஒருவன் தோன்ற என்க.

கல்லாக் களிமகன் செயல்

212-217: கல்லாக் களிமகன் ............. உருத்தென்

(இதன்பொருள்) கல்லாக் களிமகன் ஒருவன் - திருந்து வேல் தடக்கை இளையோன் வேந்தனும் அலைக்கும் என்று கூறக்கேட்டபொழுது அக் காவலருள் வைத்துக் கல்லாமையை யுடைய களிமகன் ஒருவன் பிறிதொன்றும் நினையானாய் அரசன் அலைக்கும் என்றஞ்சி; கையில் வெள்வாள் எறிந்தனன் - ஞெரேலெனத் தன்கையிற் பற்றி யிருந்த வெள்ளிய வாளால் கோவலனை வெட்டினன்; விலங்கு ஊடு அறுத்தது - அவ்வெட்டுக் குறுக்காகத் துணித்தது; புண் உமிழ் குருதி பொழிந்து உடன் பரப்ப -துணிபட்ட அவ் உடற்குறைப் புண்ணினின்றும் கொப்புளிக்கின்ற குருதி குதித்து எங்கும் பரவா நிற்ப; மண் அக மடந்தை வான் துயர் கூரக் காவலன் செங்கோல் வளைஇய - நிலமகள் தானும் பொறுமை இழந்து பெரிதும் துன்புறா நிற்பவும், அரசனுடைய செங்கோல் வளையவும்; கோவலன் பண்டை ஊழ் வினை உருத்து வீழ்ந்தனன் - கோவலன் இங்ஙனம் தனது முற்பிறப்பிலே செய்த தீவினையானது முதிர்ந்து வந்து ஊட்டுதலாலே வெட்டுண்டு விழுந்தான் என்பதாம்.

(விளக்கம்) ஏனைக் காவலர் கோவலனைக் கண்டபொழுது இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கு இவன் கொலைப்படு மகன் அலன் என்று தம் கருத்தினைக் கூறியவர் அக்கருந்தொழிற் கொல்லன் கூறியவற்றைக் கேட்டும் கோவலனைக் கொலை செய்யத் துணியாமை கண்டு அவருள் இளையோன் கள்வரைப்பற்றித் தானும் ஒன்று கூறி இப்பொழுது செய்தற்குரியது யாது - அஃதாவது - இவனைக் கொல்வதோ விட்டுச்செல்வதோ என வினவவும் முன்னர் இவன் கொலைப்படுமகனலன் என்றவர் அவ்விளைஞன் வினாவிற்கு விடை கூறுமுன்பே அவருள் ஒருவன் வெட்டினன் என்ற அடிகளார் அங்ஙனம் அவன் வெட்டுதற்கு ஏதுக் கூறுவார் -அவனைக் கல்லாக் களிமகன் என விதந்தெடுத்து ஓதுவாராயினர். அக்கல்லாக் களிமகன் தானும் அங்ஙனம் விரைந்து வெட்டியதற்கும் ஓர் ஏதுவினை முற்கூறிய திருந்து வேல் இளையோன் கூற்றில் காட்டினர். அஃதாவது வேந்தனும் அலைக்கும் என்றது அதற்குக் குறிப்பேதுவாம் என்க. அதுகேட்டு அஞ்சிய இக் கல்லாக்களிமகன் இங்ஙனம் செய்தனன் என்பது அடிகளார் கருத்து. என்னை? அச்சமே கீழ்களது ஆசார மாகலின்.

இன்னும் கோவலனது தீய பழவினையானது உருத்துவந்து ஊட்டுங் காலை இக்கருந்தொழிற் கொல்லனும் இக்கல்லாக் களிமகனும் காம மயக்கங் காரணமாக யாவதும் தேறா மன்னனாகிய நெடுஞ்செழியனும் போல்வாரைத் தனக்குக் கருவியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டமையும் நினைக. தீவினையாளரை ஊழ் ஊட்டுங்கால் இங்ஙனமே ஊட்டும் இயல்புடையது என்பதும் இங்கு உணர்தற்குரியது; இவ்விடத்தே,

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்

எனவரும் தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் பொன்மொழியும் நெஞ்சத்தே பதித்துக் கொள்ளற் பாலதாம்.

இனி நிலமகள் பொறுமைக்கு எடுத்துக் காட்டு ஆவாள் எனினும் இத்தகைய தீவினை நிகழுங்கால் அவள் தானும் பொறுமையிழந்து அவலமுறுவள் என்பார் மண்ணக மடந்தை வான்றுயர் கூர என்றோதினர். உருத்து என்னும் எச்சத்தை உருப்ப எனத்திரித்துக் கொள்க.

பா - நிலைமண்டில ஆசிரியப்பா.

நூலாசிரியர் செவியறிவுறூஉ நேரிசை வெண்பா

நண்ணு ............. வினை

(இதன்பொருள்) பண்டை விளைவு ஆகி வந்த வினை - மக்களே! முற்பிறப்பிலே செய்த தீவினையின் பயனாகி அப்பயனை நுகர்விக்க வந்த ஊழ்வினையால்; மண்ணில் வளையாத செங்கோல் - இந்நிலவுலகத்தே ஒரு காலத்தும் வளைந்தறியாத செங்கோலும்; கண்ணகி தன் கேள்வன் காரணத்தான் வளைந்தது - கண்ணகியின் கணவனாகிய கோவலன் கருவியாக வளையுங்கால் வளைவதாயிற்று ஆதலால்; இருவினையும் நண்ணும் - தீவினையும் நல்வினையுமாகிய இரண்டு வினைகளின் பயனும் அவற்றைச் செய்தவர்பால் வந்து எய்துதல் ஒருதலை; நல்லறமே நண்ணுமின்கள் - இங்ஙனமிருந்தலால் எல்லோரும் நல்வினையையே செய்யுங்கள்! தீவினையைச் செய்யாதொழியுங்கள்! என்றவாறு.

(விளக்கம்) பாண்டியன் முற்பகலில் தன் அரசியலிற் பிழைத்துச் செய்த தீவினை பிற்பகலே வந்தெய்தி அவன் செங்கோலை வளைத்தது; கண்ணகிகேள்வன் முன்பிறப்பில் செய்த தீவினை இப் பிறப்பில் வந்து அவனைக் கொலைக் களத்தே வீழ்த்தியது. வீழ்த்தும் பொழுது அதற்குக் கருவியாக அப்பொழுது பிழைத்த பாண்டியனைக் கருவியாக்கிக் கொண்டது. பாண்டியன் கோலை வளைக்கக் கோவலனைக் கருவியாக்கிக் கொண்டது. இங்ஙனம் கோடல் ஊழினியல்பு என்றவாறு. இவ்வுண்மையை உணர்ந்து கொள்மின்! தீவினையை விட்டொழிமின் ! இங்ஙனமே நல்வினையின் பயன் நன்மையாகவே வந்தெய்தும் ஆதலால் நல்லறமே நண்ணுமின் என்றவாறு.

கொலைக்களக்காதை முற்றிற்று
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 28, 2012, 07:17:37 AM
17. ஆய்ச்சியர் குரவை

அஃதாவது - கண்ணகியை அடைக்கலம் பெற்ற மாதரி மனைக்கண் அம் மாதரியால் நன்கு பேணப்பட்டுக் கண்ணகியும் கோவலனும் அவ்விடைக்குல மடந்தையின் பூவலூட்டிய புனைமாண் பந்தர்க் காவற் சிற்றில் ஆகிய கடிமனையின்கண் இனிதிருந்து, மற்றை நாள் விடியற் காலத்தே கோவலன் கண்ணகியின் சீறடிச் சிலம்பில் ஒன்று கொண்டு அதனை விற்றற்கு மதுரைமா நகரின்கண் புகுவானாக; அற்றை நாள் விடியற் காலத்தே துயிலெழுந்த மாதரி தனது சேரியின்கண் தீ நிமித்தங்கள் பல நிகழ்ந்தமை கண்டு இச்சேரியின்கண் ஏதோ பெருந் தீங்கு நிகழ்தற்கு இவை அறிகுறியாம் என்றுட்கொண்டு, அத்தீங்கு நிகழாமைப் பொருட்டுத் தம் குலதெய்வமாகிய மாயோனை வாழ்த்தி ஏனைய ஆய்ச்சியருடன் குரவைக் கூத்தாடிய செய்தியைக் கூறும்பகுதி என்றவாறு; இது கூத்தாற் பெற்ற பெயர்.

கயலெழுதிய இமயநெற்றியின்
அயலெழுதிய புலியும்வில்லும்
நாவலந்தண் பொழின்மன்னர்
ஏவல்கேட்பப் பாரரசாண்ட
மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலில்  5

காலை முரசங் கனைகுர லியம்புமாகலின்
நெய்ம்முறை நமக்கின் றாமென்று
ஐயைதன் மகளைக் கூஉய்க்
கடைகயிறு மத்துங் கொண்டு
இடைமுதுமகள் வந்துதோன்றுமன்;  10

உரைப்பாட்டு மடை

குடப்பால் உறையா குவியிமில் ஏற்றின்  1
மடக்கணீர் சோரும் வருவதொன் றுண்டு;

உறிநறு வெண்ணெய் உருகா உருகும்  2
மறிதெறித் தாடா வருவதொன் றுண்டு;

நான்முலை யாயம் நடுங்குபு நின்றிரங்கும்  3
மான்மணி வீழும் வருவதொன் றுண்டு;

கருப்பம்

குடத்துப்பா லுறையாமையும் குவியிமி லேற்றின் மடக்கண்ணீர் சோர்தலும் உறியில் வெண்ணெ யுருகாமையும் மறி முடங்கியாடாமையும் மான்மணி நிலத்தற்று வீழ்தலும் வருவதோர் துன்பமுண்டென மகளை நோக்கி மனமங்காதே மண்ணின் மாதர்க்கணியாகிய கண்ணகியுந் தான் காண ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன் தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில் வேல் நெடுங்கண் பிஞ்ஞையோ டாடிய குரவை யாடுதும் யாமென்றாள் கறவை கன்று துயர் நீங்குகவெனவே;

கொளு

காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுமிவ்  1
வேரி மலர்க் கோதையாள்;

கட்டு

நெற்றிச் செகிலை யடர்த்தாற் குரியவிப்  2
பொற்றொடி மாதராள் தோள்;

மல்லல் மழவிடை யூர்ந்தாற் குரியளிம்  3
முல்லையம் பூங்குழல் தான்;

நுண்பொறி வெள்ளை யடர்த்தாற்கே யாகுமிப்  4
பெண்கொடி மாதர்தன் தோள்;

பொற்பொறி வெள்ளை யடர்த்தார்க்கே யாகுமிந்  5
நற்கொடி மென்முலை தான்;

வென்றி மழவிடை யூர்ந்தாற் குரியளிக்  6
கொன்றையம் பூங்குழ லாள்;

தூநிற வெள்ளை அடர்த்தாற் குரியளிப்  7
பூவைப் புதுமல ராள்;

எடுத்துக் காட்டு

ஆங்கு,
தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார்
எழுவரிளங் கோதை யார்
என்றுதன் மகளை நோக்கித்
தொன்றுபடு முறையால் நிறுத்தி
இடைமுது மகளிவர்க்குப்
படைத்துக்கோட் பெயரிடுவாள்
குடமுதல் இடமுறை யாக்குரல் துத்தம்
கைக்கிளை உழைஇளி விளரி தாரமென
விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே;

மாயவன் என்றாள் குரலை விறல்வெள்ளை
ஆயவன் என்றாள் இளிதன்னை- ஆய்மகள்
பின்னையாம் என்றாளோர் துத்தத்தை மற்றையார்
முன்னையாம் என்றாள் முறை;

மாயவன் சீருளார் பிஞ்ஞையுந் தாரமும்
வால்வெள்ளை சீரார் உழையும் விளரியும்
கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்துளாள்
முத்தைக்கு நல்விளரி தான்;

அவருள்,
வண்டுழாய் மாலையை மாயவன் மேலிட்டுத்
தண்டாக் குரவைதான் உள்படுவாள்-கொண்டசீர்
வையம் அளந்தான்றன் மார்பின் திருநோக்காப்
பெய்வளைக் கையாள்நம் பின்னைதா னாமென்றே
ஐயென்றா ளாயர் மகள்;

கூத்துள் படுதல்

அவர் தாம்,
செந்நிலை மண்டிலத்தாற் கற்கடகக் கைகோஒத்து
அந்நிலையே யாடற்சீ ராய்ந்துளார்- முன்னைக்
குரற்கொடி தன்கிளையை நோக்கிப் பரப்புற்ற
கொல்லைப் புனத்துக் குருந்தொசித்தாற் பாடுதும்
முல்லைத்தீம் பாணி யென்றாள்;
எனாக்,
குரன்மந்த மாக இளிசம னாக
வரன்முறையே துத்தம் வலியா உரனிலா
மந்தம் விளரி பிடிப்பாள் அவள்நட்பின்
பின்றையைப் பாட்டெடுப் பாள்;

பாட்டு

கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்  1
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ;

பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்  2
ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ;

கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன்  3
எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ;
தொழுனைத் துறைவனோ டாடிய பின்னை
அணிநிறம் பாடுகேம் யாம்;

இறுமென் சாயல் நுடங்க நுடங்கி  1
அறுவை யொளித்தான் வடிவென் கோயாம்
அறுவை யொளித்தான் அயர அயரும்
நறுமென் சாயல் முகமென் கோயாம்;

வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள்  2
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும்
வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம்;

தையல் கலையும் வளையும் இழந்தே  3
கையி லொளித்தாள் முகமென் கோயாம்
கையி லொளித்தாள் முகங்கண் டழுங்கி
மைய லுழந்தான் வடிவென் கோயாம்;

ஒன்றன் பகுதி

கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாள் 1
மதிபுரையு நறுமேனித் தம்முனோன் வலத்துளாள்
பொதியவிழ் மலர்க்கூந்தற் பிஞ்ஞைசீர் புறங்காப்பார்
முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார்;

மயிலெருத் துறழ்மேனி மாயவன் வலத்துளாள்  2
பயிலிதழ் மலர்மேனித் தம்முனோன் இடத்துளாள்
கயிலெருத்தம் கோட்டியநம் பின்னைசீர் புறங்காப்பார்
குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார்;

ஆடுநர்ப் புகழ்தல்

மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும்
கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர
ஆய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசொதையார் தொழுதேத்தத்
தாதெருமன் றத்தாடுங் குரவையோ தகவுடைத்தே;

எல்லாநாம்,
புள்ளூர் கடவுளைப் போற்றுதும் போற்றுதும்
உள்வரிப் பாணியொன் றுற்று;

உள்வரி வாழ்த்து

கோவா மலையாரம் கோத்த கடலாரம்  1
தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே
தேவர்கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரைக்
கோகுல மேய்த்துக் குருந்தொசித்தா னென்பரால்;

பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான் 2
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்
பொன்னன் திகிரிப் பொருபடையா னென்பரால்;

முந்நீரி னுள்புக்கு மூவாக் கடம்பெறிந்தான்  3
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
கன்னவில் தோளோச்சிக் கடல்கடைந்தா னென்பரால்;

முன்னிலைப் பரவல்

வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்  1
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே;

அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த 2
உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே;

திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல  3
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே;

படர்க்கைப் பரவல்

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்  1
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே;

பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்  2
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே;

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்  3
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே;

என்றியாம்,
கோத்த குரவையுள் ஏத்திய தெய்வநம்
ஆத்தலைப் பட்ட துயர்தீர்க்க வேத்தர்
மருள வைகல் வைகல் மாறட்டு
வெற்றி விளைப்பது மன்னோ கொற்றத்து
இடிப்படை வானவன் முடித்தலை யுடைத்த
தொடித்தோட் டென்னவன் கடிப்பிகு முரசே.

உரை

தோற்றுவாய்

1-10: கயலெழுதிய .............. தோன்றுமன்

(இதன்பொருள்.) இமய நெற்றியின் எழுதிய கயல் அயல் புலியும் வில்லும் எழுதிய - இமயமலையின் நெற்றியின்கண் தான் தன் வெற்றிக்கு அறிகுறியாகப் பொறித்த கயலுக்குப் பக்கத்தில் தம் வெற்றிக்கு அறிகுறியாகப் பொறிக்கப்பட்ட புலிப்பொறியையும் விற்பொறியையும் உடைய சோழனும் சேரனும் ஆகிய அரசர்களும்; நாவலந் தண் பொழில் மன்னர் ஏவல் கேட்ப - இந்த நாவலந் தீவின்கண் செங்கோல் செலுத்துகின்ற பிற பெருநில மன்னரும் குறுநில மன்னரும் ஆகிய எல்லா மன்னரும் தனது ஏவலைக் கேட்டு ஒழுகும்படி; பார் அரசு ஆண்ட மாலை ஏவல் வெண்குடைப் பாண்டியன் கோயிலின் - நில முழுவதும் அரசாட்சி செய்த முத்துமாலை பொருந்திய வெண்கொற்றக் குடையையுடைய பாண்டியனுடைய அரண்மனையின்கண்ணே; காலை முரசம் கனைகுரல் இயம்பும் ஆகலின் - பள்ளி எழுச்சி முரசு முழங்குகின்றது ஆதலாலே; நமக்கு இன்று நெய்ம்முறை ஆல் என்று - நமக்கு இற்றை நாள் அரண்மனைக்கு நெய்யளக்கும் முறை ஆகும் என நினைந்து; ஐயை தன் மகளைக் கூஉய் - ஐயை என்னும் பெயருடைய தன் மகளை அழைத்தவளாய்; இடை முதுமகள் கடை கயிறும் மத்துங்கொண்டு வந்து தோன்றுமன் -இடையர்குலத்துப் பிறந்த முதுமகளாகிய மாதரி தயிர்கடை தற்குக் கருவியாகிய கயிற்றையும் மத்தையும் கையில் எடுத்துக் கொண்டு தயிர்த்தாழி இருக்குமிடத்தே வந்து தோன்றுவாளாயினள் என்க.

(விளக்கம்) கயல், புலி, வில் என்னும் மூன்றும் நிரலே பாண்டியன், சோழன், சேரன் என்னும் மூன்று தமிழ்நாட்டு மன்னர்களின் பொறிகள்; பொறி எனினும் இலச்சினை எனினும் ஒக்கும். முத்திரை என்பதுமது. இது மதுரைக்காண்டமாதலின் பாண்டியனுடைய தலைமைத்தன்மை தோன்ற, கயலின் அயலெழுதிய புலியும் வில்லும் என்றார். புலி, சோழனுக்கும்; வில், சேரனுக்கும் ஆகுபெயர்கள். நாவலந்தண்பொழில் என்றது, இமய முதல் குமரி ஈறாகக் கிடந்த பெரு நிலப்பரப்பினை என்க. இந் நிலப்பரப்பின்கண் தமிழகத்தை ஆளுகின்ற பெருநில மன்னர்களாகிய சோழனும், சேரனும் பிற நாட்டை ஆளுகின்ற பெருநில மன்னர்களும் இவர்தம் ஆட்சியின் கீழ்ப்பட்ட எல்லாக் குறுமன்னர்களும் தன் ஏவல் கேட்கும்படி ஆண்ட பாண்டியன் என்க.

கோயில் - அரண்மனை. காலைமுரசம் - பள்ளி எழுச்சி முரசம். இயம்பும் - இயம்ப அதுகேட்டனள் ஆகலின் இடைமுதுமகள் வந்து தோன்றும் என்றவாறு. நமக்கு இன்று நெய்ம்முறை ஆம் என்றது இடைமுதுமகளின் உட்கோளை: மாதரி. அவள் ஐயை! ஐயை ! எனத் தன்மகளைக் கூவியவண்ணம் வந்து தோன்றும் என்க. வருபவள் கயிறும் மத்துங்கொண்டு வந்து தோன்றினள் என்றவாறு.

இது கூத்தாகலின் கூத்தின்கண் கூத்தர் தலைவன் முன்னுரை கூறுமாறு போலே அடிகளார் இங்ஙனம் கூறுகின்றனர் என்க.

உரைப்பாட்டு மடை

அஃதாவது - உரை போன்ற நடையமைந்த பாட்டினை இடையிலே மடுத்தது என்க.

1: குடப்பால் ........... உண்டு

(இதன்பொருள்.) குடப்பால் உறையா - நாம் பிரையிட்ட தாழிகளில் பாலும் தோயாதொழிந்தன; குவி இமில் ஏற்றின் மடக்கண் நீர் சேரரும் -அதுவேயுமன்றி நமது நிரையினிடத்தே திரண்ட முரிப்பையுடைய காளையின் அழகிய கண்களினின்றும் நீர் ஒழுகா நின்றது. ஆதலாலே; வருவது ஒன்று உண்டு - நமக்கு வரும் தீங்கு ஒன்று உளது போலும் என்றாள்; என்க.

(விளக்கம்) குடம் ஈண்டுத் தயிர்த்தாழி. உறைதல் - பால் தயிராதல். பிரை - பால் தயிராதற்பொருட்டு இடும் மோர்.

2: உறி ............ உண்டு

(இதன்பொருள்.) உறி நறு வெண்ணெய் உருகா - உறியின்கண் தாழியிலிட்ட வெண்ணெய்த் திரளைகள் அரண்மனைக்கு அளத்தற்கு உருக்குங்கால் நன்கு உருகா தொழிந்தன; மறிதெறித்து ஆடா உருகும் - அதுவேயுமன்றி ஆட்டுக்குட்டிகளும் துள்ளி விளையாடாமல் சோர்ந்து கிடக்கும்; வருவது ஒன்று உண்டு -ஆதலால் நமக்கு வரும் கேடொன்று உளது போலும்; என்றாள் என்க.

(விளக்கம்) அற்றைநாள் நெய்யளக்கும் முறை ஆதலின் அதற்கு உருக்கிய வெண்ணெய்த் திரளைகள் நன்கு உருகுகின்றில என்றவாறு. மறி - ஆட்டுக்குட்டி, ஆடா: முற்றெச்சம். உருகுதல் - (மறிக்கு) சோர்தல்.

3: நான்முலை ............ உண்டு

(இதன்பொருள்.) நால்முலை ஆயம் நடுங்குபு நின்று இரங்கும் -நான்கு முலைக்காம்புகளையுடைய ஆனினம் காரணமின்றியே உடல் நடுங்கி நின்று கதறும்; மால்மணி வீழும் - அதுவேயுமன்றி ஆக்களின் கழுத்திற் கட்டிய பெரிய மணிகள் தாமும் கட்டற்று வீழா நின்றன; வருவது ஒன்று உண்டு - ஆதலால் நமக்கு வந்துறும் கேடொன்று உளது போலும் என்க.

(விளக்கம்) முலை - ஈண்டுச் சுரை, (காம்புகள்). நடுங்குபு - நடுங்கி. இரங்கும் என்றது கதறும் என்பதுபட நின்றது, மால் - பெரிய.

கருப்பம்

அஃதாவது -இத் தீநிமித்தமெல்லாம் இனி வருங் கேட்டிற்கு கருக்கள் ஆம் என்றவாறு.

(விளக்கம்) கருவாவது - பின்விளைவிற்கு முதலாய் நிற்பது என்க.

1: குடத்துப்பால் ................ எனவே

(இதன்பொருள்.) குடத்துப்பால் உறையாமையும் - தயிர்த்தாழியின் கண் பிரையிட்ட பால் தயிராகத் தோயாமையானும்; குவி இமில் ஏற்றின் மடக்கண் நீர் சோர்தலும் - திரண்ட முரிப்பையுடைய ஆனேற்றின் அழகிய கண்ணினின்றும் நீர் சோர்தலானும்; உறியில் வெண்ணெய் உருகாமையும் - உறியில் தாழியிலிட்ட வெண்ணெய் நன்கு உருகாமையானும்; மறி முடங்கி ஆடாமையும் - ஆட்டுக்குட்டிகள் துள்ளியாடாமல் சோர்ந்து கிடத்தலானும்; மால்மணி அற்று நிலத்து வீழ்தலும் -ஆவின் கழுத்திற் கட்டிய மணி கயிறற்று நிலத்தின்கண் வீழ்தலானும்; வருவதோர் துன்பமுண்டென -இவை தீநிமித்த மாதலின் நமக்கு வரும் ஒரு துன்பமுண்டு போலும் என்று கூறிய மாதரி; மகளை நோக்கி மனம் மயங்காதே - தன்மகளாகிய ஐயை இது கேட்டு மயங்கி நின்றவளைப் பார்த்து என் அன்பே! இவற்றிற்கு நீ மனம் மயங்குதல் வேண்டா! இவற்றிற்குத் தீர்வும் உளது காண் அஃதியாதெனின்; மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய கண்ணகியும் தான் காண - இந்நிலவுலகத்தின்கண் பெண் பிறந்தோர்க்கெல்லாம் பேரணிகலனாக விளங்குகின்ற நங் கண்ணகிதானும் கண்டு மகிழும்படி; யாம் - இடைக்குல மகளிரேம் ஆகிய யாமெல்லாம் குழுமி நங்குல தெய்வமாகிய; மாயவன் ஆயர் பாடியில் எருமன்றத்துத் தம்முன் உடன் ஆடிய - கண்ணபெருமான் பண்டு ஆயர்பாடியில் தாதெருமன்றத்தில் தமையனாகிய பலதேவனோடு ஆடிய; வாலசரிதை நாடகங்களில் - இளம்பருவத்து வரலாற்று நாடகங்கள் பல உள அவற்றுள்; வேல் நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய குரவை ஆடுதும் - வேல்போலும் நெடிய கண்ணையுடைய நப்பின்னையோடு ஆடிய குரவை நாடகத்தை ஆடுவோமாக! அஃது எற்றுக்கெனின்; கறனை கன்று துயர் நீங்குக என என்றாள் - இத் தீநிமித்தம் காரணமாக நம்முடைய கறவைகளும் கன்றுகளும் எய்தும் துன்பம் எய்தாதொழிக என்று அத் தெய்வத்தை வேண்டுதற் பொருட்டேயாம் என்று சொன்னாள்; என்க.

(விளக்கம்) குரவை நாடகமாவது - எழுவரேனும் ஒன்பதின்மரேனும் கைகோத்தாடுங் கூத்து.

கொளு

அஃதாவது - குரவைக் கூத்தின் இயல்பினைத் தன்னுட்கொண்ட பகுதி என்றவாறு.

1. காரி .............. கோதையாள்

(இதன்பொருள்.) காரி கதன் அஞ்சான் பாய்ந்தானை - இந்தக் கரிய நிறமமைந்த ஆனேற்றின் சினத்திற்கு அஞ்சாமல் அதன்மேற் பாய்ந்து அடக்கிய ஆயனை; இவ்வேரி மலர்க்கோதை யாள் காமுறும் -இந்தத் தேனிறைந்த மலர்மாலையை யுடையாள் விரும்புவாள்; என்க.

(விளக்கம்) காரி - கரிய நிறமுடையது. கதன் - போலி, சினம். அஞ்சான்; முற்றெச்சம். வேரி - வெட்டிவேருமாம்.

சுட்டு

அஃதாவது - இதுவும் கீழ்வருவனவும் மாதரி குரவை ஆடுதற்குரிய ஆயர்மகளிரைத் தனித்தனி சுட்டிக்காட்டிக் கூறுவன என்றவாறு.

2: நெற்றி ............ தோள்

(இதன்பொருள்.) நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு - இந்த நெற்றியின்கண் சிவந்த சுட்டியையுடைய ஆனேற்றை அடக்கிய ஆயனுக்கு; இப் பொன் தொடி மாதராள்தோள் உரிய - இந்தப் பொன் வளையலணிந்த ஆயமகளின் தோள்கள் உரியனவாம் என்க.

(விளக்கம்) நெற்றிச் செகில் - நெற்றியொழிந்த உறுப்பெல்லாம் சிவந்த ஏறு எனினுமாம்.

3: மல்லல் .............. பூங்குழல்தான்

(இதன்பொருள்.) மல்லல் மழ விடை ஊர்ந்தாற்கு - இந்த வளனும் இளமையும் உடைய ஏற்றினை அடக்கி அதன் முதுகில் ஏறிச் செலுத்திய ஆயனுக்கு; இம் முல்லை அம் பூங்குழல் தான் உரியள் - இந்த முல்லைப் பூவாகிய அழகிய மலர்மாலை வேய்ந்த கூந்தலையுடைய ஆய்ச்சி வாழ்க்கைத் துணைவி ஆதற்குரியவள் ஆவள்; என்க.

(விளக்கம்) மல்லல் - வளம். மழ -இளமை. பூங்குழல்: அன்மொழித்தொகை. தான் : அசைச்சொல்.

4: நுண்பொறி ......... தோள்

(இதன்பொருள்.) நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே - நுண்ணிய புள்ளிகளையுடைய வெள்ளை ஏற்றினைத் தழுவி அடக்கிய ஆயனுக்கே; இப் பெண்கொடி மாதர் தன் தோள் ஆகும் - இந்தப் பெண்ணாகிய பூங்கொடிபோலும் ஆய்ச்சியின் காதல்கெழுமிய தோள்கள் தழுவுதற்குரியன ஆகும்; என்க.

(விளக்கம்) வெள்ளை: ஆகுபெயர். ஏகாரம் பிரிநிலை. மாதர் - காதல்; அழகுமாம்.

5: பொற்பொறி ............. முலைதான்

(இதன்பொருள்.) பொன் பொறி வெள்ளை அடர்த்தாற்கே - அழகிய புள்ளிகளையுடைய இந்த வெள்ளேற்றினைத் தழுவி அடக்கிய ஆயனுக்கே; இந் நற்கொடி மென்முலை தான் ஆகும்-இந்த அழகிய பூங்கொடிபோலும் ஆயமகளின் மெல்லிய முலை தழுவுதற்குரியதாம்; என்க.

(விளக்கம்) பொன் - அழகு. நற்கொடி: அன்மொழித்தொகை. தான்: அசை.

6: வென்றி .......... பூங்குழலாள்

(இதன்பொருள்.) வென்றி மழவிடை ஊர்ந்தாற்கு - எப்பொழுதும் வெற்றியையேயுடைய இந்த இளைய ஏற்றினை வென்று அதன் முதுகிலமர்ந்து செலுத்திய ஆயனுக்கே; இக் கொன்றையம் பூங்குழலாள் உரியள் - இந்தக் கொன்றைப்பழம் போன்ற நிறத்தால் அழகுடைய மலரணிந்த கூந்தலையுடைய ஆயமகள் வாழ்க்கைத் துணைவி ஆதற்குரியவள் ஆவள்; என்க.

(விளக்கம்) முன்னும் பலர் தழுவ முயன்று தோற்றமை தோன்ற வென்றி மழவிடை என்றாள். கொன்றைப்பழம் கூந்தலுக்கு நிறத்தால் உவமை. கொன்றைப் பழக் குழற் கோதையர் என்பது வளையாபதி.

7: தூநிற ....... மலராள்

(இதன்பொருள்.) தூநிற வெள்ளை அடர்த்தாற்கு - இந்தத் தூய வெள்ளையேற்றினைத் தழுவி வென்ற ஆயனுக்கே; இப்புது பூவை மலராள் உரியள் - இந்தப் புதிய காயாம்பூ மலர் அணிந்த ஆயமகள் வாழ்க்கைத் துணைவியாக உரியவள் ஆவள்; என்க.

(விளக்கம்) தூநிற வெள்ளை என்றது பிறிது நிறம் சிறிதும் விரவாத வெள்ளை நிறத்தையுடைய காளை என்றவாறு. பூவை - காயா.

எடுத்துக்காட்டு

அஃதாவது இவ்வாறு ஒவ்வொரு மகளுக்கும் ஒவ்வொரு காளையைக் குறித்துக்காட்டி வளர்க்கப்பட்டவர் என்க. ஆங்கு - அப்படியே.

தொழுவிடை பெயரிடுவாள்

(இதன்பொருள்.) தொழு இடை ஏறு குறித்து வளர்த்தார் எழுவர் இளங்கோதையார் என்று - இங்ஙனம் தத்தம் தொழுவின் கண்ணே ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் ஆனேற்றினைக் குறிப்பிட்டு வளர்க்கப்பட்டவராகிய ஏழு இளமகளிராகிய கோதையணிந்த ஆயமகளிரைச் சுட்டிக் காட்டி; தன்மகளை நோக்கி - தன் மகளாகிய ஐயையை நோக்கி; தொன்றுபடு முறையான் நிறுத்தி இடைமுது மகள் இவர்க்குப் படைத்துக்கோள் பெயர் இடுவாள் - இம் மகளிரைப் பழைய இசை நரம்புகள் நிற்கும் முறைமைகளிலே நிறுத்தி இடையர் குலத்துப் பிறந்த முதியவளாகிய அம் மாதரி இவர்க்குப் படைத்துக்கோட் பெயரிடுவாளாயினாள்; என்க.

(விளக்கம்) தொன்று படுமுறை - தொன்றுதொட்டுக் கூத்த நூலில் கூறும் முறை. இடை முதுமகள்-மாதரி. இவர் என்றது ஏறு குறித்து வளர்க்கப்பட்ட ஆயமகளிர் எழுவர்க்கும் என்றவாறு. படைத்துக் கோட் -பெயர் புனைபெயர். அஃதாவது ஒருவர்க்குரிய இயற்பெயர் நிற்க, அவர்க்கு ஒரு காரணம்பற்றி அப்பொழுதைக்கு யாதானும் அக்காரணத்திற்குத் தொடர்புடையதாக ஒரு பெயர் வைத்துக் கொள்ளுதல்.

மாதரி ஆயமகளிர்க்குப் படைத்துக்கோள் பெயரிடுதல்

குடமுதல் ........ பெயரே

(இதன்பொருள்.) குடமுதல் இடமுறையா குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என மேற்றிசையில் குரல் நரம்பு முதலாக நிரலே குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என இடமுறையால் இவ்வேழு மகளிர்க்கும்; விரிதரு பூங்குழல் வேண்டிய பெயர் - மலர்ந்த மலரையுடைய கூந்தலையுடைய மாதரி என்பாள். இட்ட பெயர்களாம்; என்க.

(விளக்கம்) இவை கூத்தாடுங்கால் அவர்களை அழைத்தற்கு அவர்களுக்கிட்ட புனைபெயர்.

இனி, குரல் முதலிய ஏழிசைகளையும் கருவியாகக்கொண்டு பாடுகின்ற பாலைப்பண்கள், ஆயப்பாலை, சதுரப்பாலை, திரிகோணப்பாலை, வட்டப்பாலை என நான்கு வகைப்படும் எனவும், அவற்றுள் இங்கு ஏழு இசைகளையும் பெயராகக் கொண்டு எழுவரும் கைகோத்து வட்டமாக நின்று அவ்விசை நரம்புகள் நிற்கு முறைப்படி ஆடுங்கால் பாடும் பண்கள் அந்நான்கனுள் வைத்து வட்டப்பாலை யாமெனவுமுணர்க.

இவ் வட்டப்பாலை பற்றிய அடியார்க்குநல்லார் இவ்விடத்தே கூறும் விளக்கம் வருமாறு: வட்டமென்பது வகுக்குங்காலை, ஓரேழ் தொடுத்த மண்டல மாகும் சாணளவு கொண்ட தொருவட்டந் தன்மீது, பேணி யிருநாலு பெருந்திசைக் கோணத் திருகயிறு மேலோட்டி யொன்பாலை மூன்றும் வருமுறையே மண்டலத்தை வை என்பது சூத்திரம். என்னுதலிற்றோவெனின், வட்டப்பாலை, மண்டலம் வருமிடத்துச் சாணுக்குச் சாணாக ஒரு வட்டம் கீறிப் பெருந்திசைகளின் மேலே இரண்டு வரம்பு கீறி மண்டலம் செய்து பன்னிரண்டு கோணமாக வகுப்பது நுதலிற்று.

எதிரு மிராசி வலமிடமாக, எதிரா விடமீன மாக - முதிராத, ஈராறி ராசிகளை யிட்டடைவே நோக்கவே ஏரார்ந்த மண்டலமென்றெண் என்பது சூத்திரம். என்னுதலிற்றோ வெனின் - இட்ட பன்னிரண்டு கோணத்திற் பன்னிரண்டு ராசிகளை நிறுத்தினால் இவற்றுள் நரம்புடன் இயல்வன ஏழென்பது உணர்த்துதல் நுதலிற்று.

ஏத்து மிடப, மலவ னுடன்சீயம், கோற்றனுக் கும்பமொடு, மீளமிவை பார்த்துக், குரன்முதற் றார, மிறுவாய்க் கிடந்த, நிரலேழுஞ் செம்பாலை நேர் இவ்வேழும் இடபம் கற்கடகம் சிங்கம் துலாம் தனுகும்பம் மீனமென இவற்றுள் நிற்கும்.

துலைநிலைக் குரலுந் தனுநிலை துத்தமும் நிலைபெறு கும்பத்து நேர்கைக் கிளையும் மீனத் துழையும் விடை நிலத்திளியும், மானக் கடகத்து மன்னிய விளரியும், அரியிடைத் தாரமு மணைவுறக் கொளலே.

இனி, இந் நரம்புகளின் மாத்திரைகள் வருமாறு: குரல் துத்த நான்கு கிளைமூன் றிரண்டாம். குரையா வுழையிளி நான்கு - விரையா, விளரியெனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார், களரிசேர் கண்ணுற் றவர் எனக் கொள்க.

இவற்றுள், தாரத்துள் உழை பிறக்கும்; உழையில் குரல் பிறக்கும்; குரலுள் இளிபிறக்கும்; இளியுள் துத்தம் பிறக்கும்; துத்தத்துள் விளரிபிறக்கும்; விளரியுட் கைக்கிளை பிறக்குமெனக் கொள்க. இவற்றுள் முதலில் தோன்றிய நரம்பு தாரம்; இவை விரிப்பிற் பெருகும்; வந்தவழிக் கண்டுகொள்க.

இனி, வட்டப்பாலையிலே நாலுபண்ணும் பிறக்கும்; தாரத்துழை தோன்றப் பாலையாழ் தண்குரல், ஒருமுழை தோன்றக் குறிஞ்சியாழ் நேரே இளிகுரலிற் றோன்ற மருதயாழ் துத்தம், இளியிற் பிறக்க நெய்தலியாழ் இவற்றுள் பாலையாழுள்ளே ஏழு பாலையிசை பிறக்கும். குரலிளியிற் பாகத்தை வாங்கியோ ரொன்று, வரையாது தாரத்துழைக்கும் - விரைவின்றி, ஏத்தும் விளரி கிளைக்கீக்க வேந்திழையாய், துத்தங் குரலாகுஞ் சொல்.

இந் நரம்பிற் பாலை பிறக்குமிடத்துக் குரலும் துத்தமும் இளியும் நான்கு மாத்திரை பெறும்; கைக்கிளையும் விளரியும் மூன்று மாத்திரை பெறும்; உழையும் தாரமும் இரண்டு மாத்திரை பெறும்; இவற்றுள் குரல் குரலாய் ஒத்து நின்றது செம்பாலை; இதனிலே குரலிற் பாகத்தையும் இளியிற் பாகத்தையும் வாங்கிக் கைக்கிளை உழை விளரி தாரத்திற்கு ஒரோ வொன்றைக் கொண்டு சேர்க்கத் துத்தம் குரலாய்ப் படுமலைப் பாலையாம்; இவ்வாறே திரிக்க இவ்வேழு பெரும்பாலைகளும் பிறக்கும்; பிறக்குங்கால் திரிந்த குரல் முதலாக ஏழும் பிறக்கும்.

அவை பிறக்குமாறு: குரல் குரலாயது, செம்பாலை; துத்தம் குரலாயது படுமலைப்பாலை, கைக்கிளை குரலாயது செவ்வழிப்பாலை; உழை குரலாயது அரும் பாலை; இளி குரலாயது கோடிப்பாலை; விளரி குரலாயது விளரிப்பாலை; தாரம் குரலாயது மேற்செம்பாலையென வலமுறையே ஏழுபாலையும் கண்டுகொள்க. இதனை வலமுறையென்றாம்; மேற்கே முகமாக இருந்து திரிதலான். கிழக்கே நோக்கியிருக்கின் இடமுறையாமெனக் கொள்க. இந்த விளக்கத்தால் வட்டப்பாலையின்கண் இராசிமண்டிலத்தின் இரண்டு முறையாக இசை நரம்புகள் நிறுத்தப்படும் என்று அறியப்படும், மேலும் இட முறைப்பாலைகள் இடப இராசியினின்றும் தொடங்கி, இடமுறையாக மீனம், கும்பம் என நிரலாகப் பாடப்படும் என்பதும் நேரிசைப் பாலைகள் மீனம் தொடங்கி வலமுறையாகப் பாடப்படும் என்பதும் உணரலாம். எதிருமிராசி வலமிடமாக என்பதன் கண் வலஇடபமாக எனத் திருத்திக் கொள்ளுதல் வேண்டும் என்று தெரிகிறது.

இனி, இளங்கோவடிகளார் குடமுதல் இடமுறை எனத் தெரிந்து ஓதியிருப்பவும், அடியார்க்குநல்லார் இங்குக் கூறும் விளக்கங்கள் வலமுறைப் பாலைகளுக்கே யாம் என்பது வலமுறையே ஏழுபாலையும் கண்டுகொள்க. இதனை வலமுறை என்றாம் மேற்கேமுகமாக இருந்து திரிதலான். கிழக்கே நோக்கியிருக்கின் இடமுறையாம் எனக் கொள்க எனவரும் அவர் விளக்கத்தால் உணரலாம். குடதிசை இடமுறை என அடிகளார் கூறியதனால், இங்குக் கிழக்கே முகமாக இருந்து திரியும் இடமுறைப் பாலைகளே கொள்ளவேண்டும். இவற்றின் இயல்புகளை யாம் அரங்கேற்று காதைக்கண்ணும், வேனிற் காதையினும் விளக்கமாகக் கூறியுள்ளாம். அவற்றை ஆண்டுக் காண்க. இங்கே எடுத்துக்காட்டப்பட்ட அடியார்க்குநல்லார் விளக்கத்தால் வலமுறைப் பாலைகளின் இயல்பு நன்குணரப்படும்.

மாயவன் என்றாள் .............. முறை

(இதன்பொருள்.) குரலை மாயவன் என்றாள் - குரல் நரம்பினை மாயவன் என்று கூறினாள்; இளி தன்னை விறல்வெள்ளை ஆயவன் என்றாள் -இளி நரம்பினை வென்றிமிக்க பலதேவன் என்றாள்; ஆய்மகள் பின்னையாம் என்றாள் ஓர்துத்தத்தை - மாதரி துத்த நரம்பினை நப்பின்னை என்று கூறினாள்; மற்றையார் முன்னையாம் என்றாள் முறை - ஏனை நரம்புகள் முன்னை முறைப்படியே ஏனை ஆயமகளிர் ஆவர் என்றாள்; என்க.

(விளக்கம்) முன்னை முறை ஆம் என மாறுக: முன்னை முறையாவது குரலுக்கு ஐந்தாவது இளியும், இளிக்கு ஐந்தாவது, துத்தமும் போல் ஐந்தாவதான முறை, ஆய்மகள் என்னும் எழுவாயை ஏனையவற்றோடும் கூட்டுக.

மாயவன்சீர் ......... விளரிதான்

(இதன்பொருள்.) மாயவன் சீருளார் பிஞ்ஞையும் தாரமும் - மாயவன் என்று கூறப்பட்ட குரல் என்பாளைச் சேரப் பின்னை என்று கூறப்பட்ட துத்தம் என்பாளும் தாரம் என்பாளும் நிரலே இடப்பக்கத்தும் வலப்பக்கத்தும் நின்றனர்; வால் வெள்ளை சீரார் உறையும் விளரியும் - பலதேவன் என்று கூறப்பட்ட இளி என்பாளைச் சேர உழை என்பாளும் விளரி என்பாளும் முறையே வலப்பக்கத்தும் இடப்பக்கத்தும் நின்றனர். கைக்கிளை பிஞ்ஞை யிடத்தாள் - கைக்கிளை என்பாள் பின்னை என்று கூறப்பட்ட துத்தம் என்பாளுக்கு இடப்பக்கத்தே நின்றாள்; நல் விளரிதான் முத்தைக்கு வலத்துளாள் - அழகிய விளரி என்பாள் தாரம் என்பவளுக்கு வலப்பக்கத்தே நின்றாள் என்க.

(விளக்கம்) இவ்வாற்றால் எழுவரும் வட்டமாக நின்றமை அறிக. பிஞ்ஞை என்றது துத்தத்தை. முத்தை முந்தை என்பதன் விகாரம். முந்தை - தாரம். தாரம் ஏழிசைகளுள் முதல் இசை ஆதலின் முந்தை என்றார்; அது முதல்வி என்பதுபட நின்றது.

அவருள் ......... ஆயர் மகள்

(இதன்பொருள்.) அவருள் இவ்வாறு வட்டமாக நிறுத்தப்பட்ட மகளிருள் வைத்து, மாயவன்மேல் வண்துழாய் மாலையை இட்டு - மாயவன் தோளின்மேல் துளபமாலையை அணிந்து; தண்டாக் குரவைதான் உள்படுவாள் - பண்டு வடமதுரைக்கண் கூத்து நூலிற்கு மாறுபடாத குரவைக் கூத்திற்கு உடம்பட்டு அம் மாயவனோடு ஆடுவாள்; கொண்ட சீர் வையம் அளந்தான் - புகழ் கொண்ட உலகளந்த திருமால்; தன் மார்பின் திருநோக்கா - தன்னுடைய திருமார்பின்கண் வீற்றிருக்கின்ற திருமகளை நோக்காமைக்குக் காரணமான பேரழகுடைய; பெய்  வளைக் கையாள் நம்பின்னைதான் ஆம் என்றே - பெய்த வளையலையுடைய கையை யுடையாளாகிய நப்பின்னைப் பிராட்டி ஒருத்தியேயல்லளோ என்று சொல்லி; ஆயர் மகள் ஐ என்றாள் - இடைக்குல முது மகளாகிய மாதரி இறையன்பு மேலீட்டால் பெரிதும் வியந்து நின்றாள்; என்க.

(விளக்கம்) நம்பின்னை - நம்தெய்வமாகிய பின்னைப்பிராட்டி என்க. இனி நப்பின்னை என்பதன் விகாரம் எனினுமாம். ஐ வியப்பாகும் என்பதனால் ஐ என்றாள் என்பது வியந்தாள் என்பதுபட நின்றது. இறைவன்பால் அன்பு மேலீட்டால் மாதரி அங்ஙனம் வியந்தாள் என்க.

கூத்துள் படுதல்

அஃதாவது - குரவைக் கூத்தாடத் தொடங்குதல்

அவர்தாம் .......... பாணி என்றாள்

(இதன்பொருள்.) அவர் தாம் - அங்ஙனம் புனைபெயர் கொண்ட ஆயர் மகளிர்தாம் அப்பொழுதே; செந்நிலை மண்டிலத்தால் கற்கடகக் கைகோஒத்து - சமநிலை வட்டமாக நின்று நண்டுக் கையை ஒருவரோடொருவர் கோத்து நின்று கூத்தாடுதற்கு; அந்நிலையே ஆடல் சீர் ஆய்ந்து உளார் - அங்ஙனம் நின்ற நிலையிலேயே ஆடுதற்கியன்ற தாள உறுப்பை ஆராய்ந்து கொண்டவராக; முன்னைக்குரல் கொடி அவ்வெழுவருள் முன்னின்ற குரல் என்னும் பெயருடைய பூங்கொடிபோல்பவள்; தன் கிளையை நோக்கி - தனது கிளையாகிய துத்தம் என்னும் பின்னைப் பிராட்டியைப் பார்த்து; பரப்பு உற்ற கொல்லைப் புனத்துக் குருந்தொசித்தான் - பரந்துகிடந்த கொல்லையின்கண் வஞ்சத்தாலே வந்துநின்ற குருந்த மரத்தை முறித்த மாயவனை; முல்லைத் தீம்பாணி பாடுதும் என்றாள் - முல்லை என்னும் இனிய பண்ணாலே இனி யாம் பாடிப் பரவுவோம் என்று கூறினள், என்க.

(விளக்கம்) செந்நிலை - செவ்விய நிலை; அதாவது சமநிலை. மண்டிலம் - வட்டம். கற்கடகக் கை - நண்டுருவம்பட விரல்களை மடக்கிய கை; அஃதாவது - நடுவிரலும் அணிவிரலும் முன்னே மடக்கி மற்றை இரண்டு விரலுங் கோத்தல். குருந்து - வஞ்சத்தால் கண்ணனைக் கொல்லக் கொல்லையில் வந்து குருந்தமரமாய் நின்றான் ஓர் அசுரன். முல்லைத்தீம் பாணி; என்றது முல்லைப்பண்ணை.

எனா ........... பாட்டெடுப்பாள்

(இதன்பொருள்.) எனா - என்று கூறிய பின்னர்; பாட்டெடுப்பாள் - முல்லைப்பண்ணைப் பாடத் தொடங்குபவள்; குரல் மந்தமாக இளி சமனாக - குரல் என்னும் நரம்பு மெலிவாகவும், இளி என்னும் நரம்பு சமமாகவும்; வரல் முறையே துத்தம் வலியா - வருகின்ற முறைப்படி துத்தநரம்பு வலிவாகவும்; விளரி உரனிலா மந்தம் பிடிப்பாள் அதற்கைந்தாவதாகிய விளரி நரம்பினை வலியை இல்லாத மெலிவாகப் பிடிக்கின்றவள்; அவள் நட்பின் பின்றையைப் பாட்டெடுப்பாள் - தன் நட்பு நரம்பாகிய துத்தம் என்பவளுக்குப் பற்றுப் பாடுகின்றாள்; என்க.

(விளக்கம்) இதன்கண் முல்லைப்பண்ணுக்கு நரம்பு அணியும் முறை கூறப்பட்டது. அஃதாவது - குரல் மெலிவினும் அதற்கு ஐந்தாவதாகிய இளி சமனிலும் அதற்கு ஐந்தாவதாகிய துத்தம் வலிவினும் நிற்ப, அதற்கு ஐந்தாவதாகிய விளரி மீண்டும் மெலிவில் நிற்பது முல்லைப் பண்ணின் நரப்படைவு என்க. நட்பு விளரிக்கு நட்பு அதற்கு நான்காவதாகிய துத்தம் என்க. பற்று - சுதி.

பாட்டு

அஃதாவது - அவர் பாடுகின்ற பாட்டுகள் வருமாறு என்றவாறு.

1: கன்று ............. தோழீ

(இதன்பொருள்.) தோழீ - தோழியே இனியாம்; கன்று குணிலா கனி உதிர்த்த மாயவன் இன்று நம் ஆனுள் வருமேல் - ஆன் கன்றினைக் குறுந்தடியாகக் கொண்டு விளவினது கனிகளை உதிர்த்தவனாகிய மாயவன் இற்றைநாள் நமக்கு இரங்கி நமது ஆனிரைக்குள் வருவான், அங்ஙனம் வந்தால்; அவன் வாயில்; கொன்றை அம் தீம் குழல் கேளாமோ - அம் மாயவனுடைய திருவாயின்கண் வைத்திசைக்கின்ற கொன்றையங் குழலோசையை யாம் கேட்போமல்லமோ! என்க.

(விளக்கம்) கன்று, மாயவனைக் காலால் எறிந்து கொல்லுதற்கு ஆனிரைக்குள் ஒரு கன்றின் வடிவாக வந்து நின்றான் ஓர் அசுரன். கனி - விளங்கனி. இவ் விளாமரமும் அங்ஙனமே வஞ்சத்தால் வந்து நின்ற அசுரன் என்ப. கேளாமோ என்னும் வினா கேட்போம் என அதன் உடன்பாட்டுப் பொருளை வற்புறுத்து நின்றது. மேல்வருவனவற்றிற்கும் இஃதொக்கும்.

2: பாம்பு ........ தோழீ

(இதன்பொருள்.) தோழீ; பாம்பு கயிறா கடல் கடைந்த மாயவன் - வாசுகி என்னும் பாம்பினையே கடை கயிறாகக் கொண்டு திருப்பாற் கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமிழ்தம் ஈந்த திருமால் ஈங்கு நம் ஆனுள் வருமேல் - இவ்விடத்தே நமக்கிரங்கி நம்முடைய ஆனிரைக்குள் வருகுவன், அங்ஙனம் வந்தால்; அவன் வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ - அவனுடைய திருவாயின்கண் வைத்திசைக்கின்ற ஆம்பற் குழலின் இன்னிசையை யாமும் ஒரு தலையாகக் கேட்பேங்காண்; என்க.

(விளக்கம்) பாம்பு -வாசுகி. கயிறு -கடைகயிறு. கயிறாக என்பதன் ஈறுகெட்டது. கடல் - திருப்பாற்கடல்.

3: கொல்லை ........... தோழீ

(இதன்பொருள்.) தோழீ; கொல்லை அம் சாரல் குருந்தொசித்த மாயவன் - புனமாகிய கொல்லையைச் சார்ந்த இடத்தின்கண் வஞ்சனையால் வந்துநின்ற குருந்த மரத்தினை முறித்தொழித்த கண்ணபெருமான் நம் வழிபாட்டிற்கிரங்கி; எல்லை நம் ஆனுள் வருமேல் - இப் பகற்பொழுதிலே இங்குள்ள நம் ஆனிரையுள் வருகுவன், அங்ஙனம் வந்தால்; அவன் வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ - அவனது திருவாயில் வைத்து ஊதுகின்ற முல்லைக் குழலினது இனிய இசையைக் கேட்பேம் அல்லமோ? என்க.

(விளக்கம்) இம் மூன்று தாழிசையினும் நிரலே கொன்றையந் தீங்குழல், ஆம்பலந் தீங்குழல், முல்லையந் தீங்குழல் எனவரும் குழல்களைப் பற்றி அடியார்க்குநல்லார் வகுத்துள்ள விளக்கவுரையின்கண் கீழ்க்காட்டப்படுவன அறியற்பாலனவாம். அவை வருமாறு:

கொன்றை ஆம்பல் முல்லையென்பன சில கருவி; இனி அவற்றைப் பண்ணென்று கூறுபவெனின், அங்ஙனம் கூறுவாரும் ஆம்பலும் முல்லையுமே பண்ணாதற்குப் பொருந்தக் கூறினல்லது கொன்றையென ஒரு பண் இல்லை ஆதலானும், கலியுள் முல்லைத்திணையின்கண் ஆறாம் பாட்டினுள், கழுவொடு சுடுபடை சுருக்கிய தோற்கண், இமிழிசை மண்டை யுறியொடு தூக்கி, ஒழுகிய கொன்றைத் தீங்குழன் முரற்சியர், வழூஉச் சொற்கோவலர் தந்த மினநிரை, பொழுதொடு தோன்றிய கார்நனை வியன்புலத்தார் (கலி. 106: 1-5) எனக் கருவி கூறினமையானும், அன்றைய பகற்கழிந் தாளின் றிராப்பகற் கன்றின் குரலுங் கறவை மணி கறங்கக், கொன்றைப் பழக்குழற் கோவல ராம்பலும், ஒன்றல் சுரும்பு நரம்பென வார்ப்பவும் என வளையாபதியுள்ளும் கருவி கூறிப் பண் கூறுதலானும், இவை ஒரு பொருண்மேல் முன்றடுக்கி வந்த ஒத்தாழிசை யாதலானும் இரண்டு பண்ணும் ஒன்று கருவியுமாகக் கூறின், செய்யுட்கும் பொருட்கும் வழூஉச் சேறலானும் அங்ஙனம் கூறுதல் அமையாதென்க.

கஞ்சத்தாற் குமுதவடிவாக அணைசுப்பண்ணிச் செறித்தலின் ஆம்பற்குழலாயிற் றெனவும் கொன்றைப் பழத்தைத் துருவித் துளைத்து ஊதலிற் கொன்றைக் குழலாயிற்று எனவும், முல்லைக்கொடியால் முப்புரியாகத் தெற்றிய வளையை வளைவாய்க்கட் செறித்து ஊதலின் முல்லை குழலாயிற் றெனவும் கொள்க என்பர் (அடியார்க்கு நல்லார்.)

இவற்றை ஆம்பன் முதலானவை சில கருவி; ஆம்பல் - பண்ணுமாம். மொழியாம்பல் வாயாம்பல் முத்தாம்பல் என்று சொல்லுவர் பண்ணுக்கு; என்பது அரும்பதவுரை.

நுதலிப் புகுதல்

தொழுனை ....... யாம்

(இதன்பொருள்.) தொழுனைத் துறைவனோடு ஆடிய பின்னை - யமுனைத்துறையையுடைய கண்ணபெருமானுடையவும் அவனோடு விளையாடிய நப்பின்னையினுடையவும் ஆகிய; அணி நிறம் யாம் பாடுகேம் - அழகையும் நிறத்தையும் இனி யாம் பாடுவேமாக, என்க.

(விளக்கம்) தொழுனை - யமுனை. அணியையும் நிறத்தையும் என்க. இக் குறள் வெண்பா இடைச்செருகல் என்பது அரும்பதஉரையாசிரியர் கருத்து. அவர் தொழுனைக் கணவனோடாடிய எனப்பாடங்கொண்டனர்.

1: இறுமென் ........ யாம்

(இதன்பொருள்.) இறும்என் சாயல் நுடங்க நுடங்கி - கண்டோர் இப்பொழுதே முறிந்தொழியும் என்று கூறுதற்குக் காரணமான மெல்லிய இடையானது நுடங்கும்படி அசைகின்றவளுடைய; அறுவை ஒளித்தான் வடிவு என்கோ யாம் - துகிலை மறைத்தவனாகிய கண்ணபெருமானுடைய அழகு என்று சொல்லுவோமா? யாம், அல்லது; அறுவை ஒளித்தான் அயர அயரும் - அங்ஙனம் துகிலை ஒளித்த அக் கண்ணபெருமான் மயங்கும்படி துகிலைக் காணாமல் மயங்குகின்ற; நறு மெல் சாயல் முகம் என்கோ யாம் - நறிய மெல்லிய சாயலையுடையாளது முகத்தின் அழகென்று சொல்லுவோமா? இவற்றுள் எது மிக்கதென யாம் அறிகின்றிலேம், என்க.

(விளக்கம்) மென்சாயல் - மெல்லிய சாயலையுடைய இடை நுடங்க என்க. நுடங்கி: பெயர். அறுவை - துகில். ஒளித்தான் - கண்ணன். என்கோ யாம்: ஒருமைப்பன்மை மயக்கம். மேல்வருவனவற்றிற்கும் இஃதொக்கும். நறுமென் சாயலையுடையாள் என்க.

2: வஞ்சம் .......யாம்

(இதன்பொருள்.) தொழுனை புனலுள் வஞ்சம் செய்தான் - யமுனை யாற்றில் நீராடுங்கால் வஞ்சித்துத் துகிலைக் கவர்ந்த கண்ண பெருமானுடைய; நெஞ்சம் கவர்ந்தாள் நிறை யென்கோ யாம் - உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட நப்பின்னைப் பிராட்டியாரது அழகென்று சொல்லுவோமா? அல்லது; நெஞ்சம் கவர்ந்தாள் நிறையும் வளையும் வஞ்சம் செய்தான் வடிவு என்கோ யாம்-தனது நெஞ்சங் கவர்ந்த அந் நப்பின்னையினது நெஞ்சத்துநிறையையும் கைவளையலையும் ஒருசேரக் கவர்ந்துகொண்ட கண்ண பெருமானுடைய அழகு என்று சொல்லுவோமா? இவற்றுள் எது மிக்கது என்று அறிகின்றிலேம்! யாம் என்க.

(விளக்கம்) வஞ்சஞ் செய்தான் - கண்ணன். நெஞ்சங் கவர்ந்தாள் நப்பின்னை. நிறையும் வளையும் வஞ்சஞ் செய்தான் என்க. நிறையுள் முன்னது, அழகு; பின்னது திண்மை.

3: தையல் .......... என்கோயாம்

(இதன்பொருள்.) கலையும் விளையும் இழந்தே - தனது துகிலையும் வளையலையும் இழந்தமையால்; கையில் ஒளித்தாள் தையல் முகம் என்கோ யாம் - நாணத்தால் தனது கையால் பொத்திக் கொள்ளப்பட்ட நப்பின்னையினது முகம் என்று சொல்லுவோமா? யாம் அல்லது; கையில் ஒளித்தாள் முகம் கண்டு - நாணத்தால் தனது கையால் முகத்தைப் பொத்திக் கொண்டவளுடைய அந்த முகத்தைக் கண்டு; அழுங்கி - இரங்கி; மையல் உழந்தான் -காமத்தால் மயங்கி அல்லலுற்ற அக்கண்ணபெருமானுடைய; வடிவு என்கோ யாம் - உருவம் என்று சொல்வோமா? யாம், இவற்றுள் அழகான் மிக்கது யாதென்றறிகிலேம், என்க.

(விளக்கம்) கையில் ஒளித்தாளாகிய தையல் என்க. கலை -துகில். கவர்ந்தமையால், கலையையும், காமமிகுதியால் வளையலையும் இழந்து நாணத்தால் முகத்தைக் கையால் ஒளித்தாள்என்க. முகம் மறைத்தமை பொறாது அழுங்கி மையல் உழந்தான் எனினுமாம்.

ஒன்றன் பகுதி

அஃதாவது - ஒற்றைத் தாளத்தின் கூறு என்றவாறு.

1: கதிர்திகிரி .......... நரம்புளர்வார்

(இதன்பொருள்.) கதிர் திகிரியால் மறைத்த கடல் வண்ணன் இடத்து உளாள் - ஞாயிற்று மண்டிலத்தைத் தனது ஆழியினாலே மறைத்த கடல் போலும் நீலநிறத்தையுடைய கண்ணபெருமானுடைய இடப்பக்கத்தே உள்ளவளும்; மதிபுரையும் நறுமேனித் தம்முனோன் வலத்துஉளாள் -திங்கள் மண்டிலத்தை ஒத்த நறிய வெள்ளை நிறத்தையுடைய அவன் தமையனாகிய பலதேவனுக்கு வலப்பக்கத்தே உள்ளவளும்; பொதி அவிழ் மலர்க்கூந்தல் - கட்டவிழ்ந்து மலர்கின்ற மாலையை அணிந்த கூந்தலையுடையவளும் ஆகிய; பிஞ்ஞை சீர்புறங்காப்பார் -நப்பின்னையினது தாள ஒற்றறுப்பைப் புறங்காக்கின்றவர்; முது மறைதேர் முந்தைமுறை உளர்வார் நாரதனார் - பழைய மறையினது பொருளை ஆராய்ந்துணர்ந்தவரும் குரல் நரம்பை முறையாக உருவி வாசிப்பவருமாகிய நாரதனார் ஆவர் என்பர் என்க.

(விளக்கம்) கண்ணன் கதிரைத் திகிரியால் மறைத்த செய்தியை மகாபாரதத்தில் காண்க. தம்முனோன் -தமையனாகிய பலதேவன். பிஞ்ஞை - நப்பின்னை. சீர் -தாள ஒற்றறுப்பு: முதுமறை - மறையின் உறுப்பாகிய சிக்கை என்பர் (அடியார்க்குநல்லார்). முதல் நரம்பு தார நரம்புமாம்.

2: மயிலெருத்து ................. நரம்புளர்வார்

(இதன்பொருள்.) மயில் எருத்து உறழ் மேனி மாயவன் வலத்துளாள் - மயிலினது புறக்கழுத்துப்போன்ற திருமேனியையுடைய கண்ணபெருமானின் வலப்பக்கத்தே உள்ளவளும்; பயில் இதழ் மலர் மேனித் தம்முனோன் இடத்துளாள் - மிகுந்த இதழ்களையுடைய மல்லிகை மலர் போன்ற வெண்ணிறத்தையுடைய அவன் தமையனாகிய பலதேவனுடைய இடப்பக்கத்தேயுள்ளவளும்; கயில் எருத்தம் கோட்டிய நம்பின்னை சீர்புறங்காப்பார் - புறக்கழுத்தாகிய பிடரை வளைத்துநின்ற நப்பின்னைப் பிராட்டியாரது தாளவறுதியைப் புறங்காக்கின்றவர்; குயிலுவருள் கொளைபுணர்சீர் நரம்பு உளர்வார் நாரதனார் - குயிலுவருள் வைத்துச் சிறந்தவராகியவரும், பண்ணோடு கூடிய தாளத்திற்கேற்பத் தமது யாழ்நரம்பினை உருவி வாசிப்பவருமாகிய நாரதனார் என்க.

(விளக்கம்) முன்னர்க் கடல்வண்ணன் இடத்துளான் தம்முனோன் வலத்துளாள் என ஓதி, இதன்கண் மாயவன் வலத்துளாள் தம்முனோன் இடத்துளாள் என மாறுபட ஓதுதல் உணர்க. இஃது என் சொல்லியவாறோவெனின் முன்பு கற்கடகக்கை கோத்து நிற்கும் மகளிரெல்லாம் உட்புறம் நோக்கி நின்று வட்டமாக ஆடினர். அங்ஙனம் ஆடுங்கால் குரல் என்னும் பெயருடையாளுக்கு இடப்பக்கத்தே பின்னையாகிய துத்தம் நிற்றலும் இளியாகிய பலதேவனுக்கு அவள்தான் வலப்பக்கத்தே நிற்றலும் உணர்க. மீண்டும் அம்மகளிர் எழுவரும் கோத்த கைவிடாமல் மாறி வெளிப்புறமாக நோக்கி நின்றாடினர். அங்ஙனம் ஆடுங்கால் துத்தம் குரலுக்கு வலப்பக்கத்திலும், இளிக்கு இடத்திலுமாக மாறி நிற்பாராதல் கூர்ந்துணர்க. இங்ஙனம் மாறி ஆடுதலைக் கூறாமலே கூறியவாறாம் என்க. இவ்வாற்றால் அடிகளார் வட்டப்பாலையின் வலமுறை இடமுறை இரண்டனையும் இக் குரவையுட் காட்டினர் என்க. பயில் இதழ் - மிக்க இதழ். மலர் - மல்லிகைமலர்; முல்லை எனினுமாம். கயில் -பிடர். குயிலுவர் - இசைக்கருவி வாசிப்பவர். குயிலுவருள் சிறந்த நாரதனர் என்க. கொளை ஒற்றறுப்பு என்பர் (அடியார்க்குநல்லார்.)

ஆடுநர்ப் புகழ்தல்

அஃதாவது - குரவைக் கூத்தைக் கண்டு இறையன்பு மீக்கூரப் பெற்ற இடைக்குல மடந்தை மாதரி கூத்தாடிய மகளிரைப் புகழ்ந்து பாராட்டியது என்றவாறு.

மாயவன்றம் ...... தகவுடைத்தே

(இதன்பொருள்.) மாயவன் தம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும் - கண்ணபெருமான் தமையனாகிய பலதேவனோடும் ஓவியம் பொறித்த வளையலை அணிந்த கையினையுடைய நப்பின்னைப் பிராட்டியோடும்; கோவலர் தம் சிறுமியர்கள் குழல் கோதை புறம் சோர -ஆயர் குலத்திற்பிறந்த இளமகளிர்கள் கூந்தலும் மலர் மாலையும் கட்டவிழ்ந்து புறத்தே வீழும்படி; ஆய்வளைச் சீர்க்கு ஆராய்ந்தணிந்த வளையல்களின் ஒலியாகிய தாளத்திற்கு ஒக்க; அடிபெயர்த்திட்டு - தம் திருவடிகளைப் பெயர்த்து மிதித்து; அசோதையார் தொழுது ஏத்த - அசோதைப் பிராட்டியார் அக்காட்சியைக் கடவுட் காட்சியாகக் கண்டு தம்மை மறந்து கைகளைத் தலைமேற் கூப்பித் தொழுது புகழும்படி; தாது எருமன்றத்து ஆடும் - பண்டு துவாரகையில் பூந்தாதுகளாகிய எருவையுடைய மன்றத்தின்கண் ஆடியருளிய; குரவை - குரவைக் கூத்தேயாம் இப்பொழுது நீங்கள் ஆடுகின்ற இக்கூத்து; ஓ தகவு உடைத்து - ஓ! ஓ!! ஓ!!! பெரிதும் இது பெருமை உடையது காண்மின்! என்றாள்; என்க.

(விளக்கம்) மாயவன் தம்முன்னினோடும் வரிவளைக்கைப் பின்னையொடும் குரவைக் கூத்தாடிய இச்செய்தியை,

மாமணி வண்ணனுந் தம்முனும் பிஞ்ஞையும்
ஆடிய குரவையிஃ தாமென நோக்கியும்  - மணி, 19 : 65-6.

எனவரும் மணிமேகலையினும் காண்க.

எல்லாநாம் ............ உற்று

(இதன்பொருள்.) நாம் எல்லாம் - தோழியே! இனி நாமெல்லாம்; உள்வரிப் பாணி ஒன்று உற்று - இக் குரவைக் கூத்தினுள் உள்வரியாகிய ஒரு பாட்டினால்; புள்ளூர் கடவுளைப் போற்றுதும் போற்றுதும் - கருடப் பறவையை ஊர்ந்து வருகின்ற செங்கண் நெடுமாலாகிய நமது கடவுளைப் பாடிப் பரவுவோம்! பாடிப் பரவுவோம்! என்றாள்; என்க.

(விளக்கம்) நாம் எல்லாம் என மாறுக; இனி, சொற்கிடந்தவாறே தோழி நாம் எனினுமாம். (எல்லா -தோழி) புள் - கருடப் பறவை. கடவுள் - திருமால். உள்வரிப்பாணி - பிறராகக் கோலம் புனைந்தாடுபவனாக இறைவனைப் பாடுகின்ற ஒருவகைப் பண்.

உள்வரி வாழ்த்து

அஃதாவது - கண்ணபெருமானே பாண்டியனும் சோழனும் சேரனுமாக உள்வரிக் கோலம்பூண்டு வந்து தமிழகத்தைச் செங்கோன்மை செலுத்தி மன்னுயிரை வாழ்வித்தான் என்பதுபட வாழ்த்தியது என்றவாறு. ஈண்டுத் திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே என்னும் எனவரும் ஆழ்வார் திருவாய் மொழியும் (34 ஆம் திருப்பதிகம் 8.) நினையத்தகும்.

1: கோவா ........... என்பரால்

(இதன்பொருள்.) கோவா மலையாரம் கோத்த கடலாரம் தேவர் கோன்பூணாரம் தென்னர்கோன மார்பினவே - கோக்கப்படாத பொதியின்மலை ஆரமாகிய சந்தனமும், கோக்கப்பட்ட கடல் ஆரமாகிய முத்துமாலையும் தேவேந்திரன் பகைத்து இட்ட பேரணிகலனாகிய மணிஆரமும் செந்தமிழ் நாட்டினுள் தென்னாட்டை ஆளுகின்ற பாண்டிய மன்னனுடைய மார்பிடத்தே கிடந்து திகழ்வனவாம்; தேவர்கோன் பூணாரம் பூண்டான் - தேவேந்திரனுடைய பூணார முதலிய முவ்வகை ஆரங்களையும் பூண்டு திகழும் அப் பாண்டிய மன்னன்றான் யாவனோ எனின்; செழுந்துவரை கோகுலம் மேய்த்து குருந்து ஒசித்தான் என்பரால் - வளமுடைய துவாரகையின்கண் ஆனிரைகளை மேய்த்துக் குருந்த மரத்தை முறித்தொழித்த கண்ணபெருமானே என்று முழுதுணர்ந்தோர் கூறுவர்; என்க.

(விளக்கம்) கோவா ஆரம் கோத்த கடலாரம் இரண்டும் வெளிப்படை. முன்னது சந்தனம்; பின்னது முத்து.

ஈண்டுத் தன் கடற்பிறந்த முத்தினாரமு, முனைதிறை கொடுக்குந் துப்பிற் றன்மலைத், தெறலரு மரபிற் கடவுட் பேணிக், குறவர் தந்த சந்தினாரமும் இருபே ராரமு மெழில்பெற வணியும், திருவீழ் மார்பிற் றென்னவன் எனவும் (அகநா. 13: 1-6) திண்கா ழார நீவிக் கதிர்விடும், ஒண்கா ழாரங் கவைஇய மார்பு எனவும் (மதுரைக். 715-6) பிறசான்றோர் ஓதுதலும் உணர்க. முத்து - கொற்கை முத்து. தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் பூண்டமையைத் திருவிளையாடற் புராணத்தே காண்க.

2: பொன்னிமய ............... என்பரால்

(இதன்பொருள்.) பொன் இமயக் கோட்டுப் புலிபொறித்து மண் ஆண்டான் - பொன்னாகிய இமய மலையின் கொடுமுடியிலே தனது புலிப்பொறியைத் தனது வெற்றிக்கு அறிகுறியாகப் பொறித்து இந்நிலவுலகத்தை ஆட்சிசெய்தான்; மதில் புகார் வாழ்வேந்தன் மன்னன் வளவன் - மதில் சூழ்ந்த பூம்புகார் நகரின்கண் செங்கோன்மை செலுத்தி வாழ்கின்ற வேந்தனாகிய மன்னர் மன்னன் ஆகிய சோழன்; மதிற்புகார் வாழ்வேந்தன் மன்னன் வளவன் - அத்தகைய வெற்றியுடைய அச்சோழ மன்னன் யாவனோ வெனின்; பொன் அம் திகிரிப் பொருபடையான் என்பரால் - பொன்னாலியன்ற ஆழியாகிய போர்ப்படையையுடைய கண்ணபெருமானே என்று கூறுவர்; என்க.

(விளக்கம்) வளவன் - சோழன். புகார் காவிரிப்பூம்பட்டினம். திகிரிப்படையான் - கண்ணன்.

3: முந்நீரினுள் ............... என்பரால்

(இதன்பொருள்.) முந்நீரினுள் புக்கு மூவாக் கடம்பு எறிந்தான் கடலினுட் சென்று அங்கு மூவாமையையுடைய கடம்பினை வெட்டியவன்; வளவஞ்சி வாழ்வேந்தன் மன்னர் கோச்சேரன் - வளங்கெழுமிய வஞ்சிநகரத்திருந்து செங்கோண்மை செலுத்தி வாழ்கின்ற வேந்தனாகிய மன்னர்மன்னன் சேரன் என்பர்; வளவஞ்சி வாழ்வேந்தன் மன்னர் கோச்சேரன் -அச் சேரன்றான் யாவனோ? வெனின்; கல்நவில தோள் ஓச்சிக் கடல் கடைந்தான் என்பரால் - மலையை யொத்த தன் தோள்களைச் செலுத்தித் திருப்பாற்கடலைக் கடைந்த செங்கண் நெடுமால் என்றே சிறந்தோர் கூறுவர் என்க.

(விளக்கம்) முந்நீர் - மூன்று தன்மையையுடைய கடல். நீர் - நீர்மை. அத்தன்மையாவன உலகத்தைப் படைத்தலும், காத்தலும், அழித்தலும் ஆகிய மூன்றுமாம். வஞ்சி - சேரன் தலைநகரம். கடல் கடைந்தான்: திருமால் இவை மூன்றும் பூவைநிலை என்னும் ஒரு புறத்திணைத்துறை. இங்கு அடிகளார் இந்நிகழ்ச்சி பாண்டியனாட்டின் கண்ணதாதலால் பாண்டியனை முற்படக் கூறினர்.

முன்னிலைப் பரவல்

அஃதாவது - இறைவனை முன்னிலையாக வைத்து வாழ்த்துவது.

1: வடவரையை ........... மருட்கைத்தே

(இதன்பொருள்.) கடல்வண்ணன் - கடல்போன்ற நீலநிறமுடைய எம்மிறைவனே நீ; வடவரையை மத்து ஆக்கி வாசுகியை நாண் ஆக்கி பண்டு ஒருநாள் கடல்வயிறு கலக்கினையே - வடக்கின் கண்ணதாகிய மந்தரம் என்னும் ஒருமலையை மத்தாகக் கொண்டு வாசுகி என்னும் பெரும் பாம்பினை அம் மத்தினைச் சுற்றி வலிக்கும் கயிறாகக்கொண்டு முன் ஒருகாலத்தில் திருப்பாற் கடலைக் கடைந்தருளினை என்கின்றனர்; மலர்க் கமல உந்தியாய்-நான்முகனை ஈன்ற தாமரை மலரையுடைய திருக்கொப்பூழினை உடைய எம்பெருமானே நீ அவ்வாறு; கலக்கிய கை -கடல் வயிறு கலக்குதற்குக் காரணமான அத்தகைய நினது பெரிய கைகள் தாமே; யசோதையார் கடைகயிற்றால் கட்டுஉண் கை - யசோதையார் என்னும் இடைக்குல மடந்தையின் தயிர் கடையும் சிறிய கயிற்றினாலே கட்டுண்டிருந்த கை என்றும் கூறுப; மாயமோ - இஃது என்ன மாயமோ? மருட்கைத்து - இச்செய்தி எமக்குப் பெரிதும் வியப்புடைத்தாய் உளது; என்க.

(விளக்கம்) வடவரை ஈண்டு மந்தரம் என்னும் மலை. மத்து - தயிர் கடை கருவி. வாசுகி - நிலந்தாங்கும் நீள் அரவின் தம்பியாகிய ஓர் அரவு. நாண் - கடைகயிறு. கடல்வண்ணன்: அண்மைவிளி. கட்டுண்கை - கட்டுப்படுதல் எனினுமாம். மருட்கை - வியப்பு.

2: அறுபொருள் ............... மருட்கைத்தே

(இதன்பொருள்.) வண் துழாய் மாலையாய் - வளவிய துளப மாலையை அணிந்த திருமாலே நின்னை; அறுபொருள் இவன் என்றே அமரர் கணந் தொழுது ஏத்த - பொருளாகக் கண்ட பொருள் அனைத்திற்கும் முதற்பொருள் இத்திருமாலே யாவான் என ஐயமறத் தெளிந்து அமரர்கள் கூட்டமெல்லாம் கைகூப்பித் தொழா நிற்ப; உறுபசி ஒன்று இன்றியே - மிக்க பசிப்பிணி ஒரு சிறிதும் இல்லாமலேயே; உலகு அடைய உண்டனையே - உலகம் முழுவதும் உண்டாய் அல்லையோ; உண்ட வாய் களவினால் உறிவெண்ணெய் உண்ட வாய் - அங்ஙனம் உலகடைய உண்ட அம் மாபெருந் திருவாய்தானோ! எளிய ஆய்ச்சியர் மனையின்கண் களவுசெய்து அவர்தம் உறியின்கண் வைத்த வெண்ணெயையும் உண்ட வாய் என்று அறிஞர் கூறுவது; மாயமோ - என்ன மாயமோ அறிகிலேம்; மருட்கைத்து- இச்செயல் எமக்குப் பெரிதும் வியப்புடைத்தாய் இருந்தது; என்க.

(விளக்கம்) அறுபொருள் - முடிந்த பொருள் எனினுமாம். உண்ணற்கு இன்றியமையாத உறுபசி சிறிதும் இல்லாமலே உண்ணவியலாத பேருலகத்தை முழுவதுமே உண்டாய் என்கின்றனர். அத்தகைய பெருவாயனாகிய நீ ஆற்றவும் சிறிய வெண்ணெயையும் உண்டதெங்ஙனம் என்றவாறு.

3: திரண்டமரர் ......... மருட்கைத்தே

(இதன்பொருள்.) அமரர் திரண்டு தொழுது ஏத்தும் திருமால் - இறவாமையுடைய தேவரெல்லாம் ஒருங்கு குழுமிக் கைகுவித்து வணங்கி வாழ்த்துகின்ற திருமாலே; நின் செங்கமல இரண்டு அடியால் மூவுலகும் இருள்தீர நடந்தனையே - நின்னுடைய செந்தாமரை மலர்போன்ற இரண்டு திருவடிகளாலே மூன்று உலகங்களும் மயக்கந் தீரும்படி எஞ்சாமல் அளந்தனை யல்லையோ; நடந்த அடி - அவ்வாறு அளந்த அம் மாபெருந் திருவடிகள் தாமே; பஞ்சவர்க்குத் தூதாக நடந்த அடி - பின்பொரு காலத்தே பாண்டவருக்குத் தூது செல்லும்பொருட்டு எண்ணிறந்த முறை பெயர்த்திட்டு நடந்து வருந்திய அடிகள் என்பர்; மடங்கலாய் மாறு அட்டாய் - நரசிங்கமாகித் தூணினின்றும் புறப்பட்டுப் பகைவனாகிய இரணியனைக் கொன்றொழித்த இறைவனே! மாயமோ - என்ன மாயமோ; மருட்கைத்து - இச் செய்திதானும் எமக்குப் பெரிதும் வியப்புடையதாய் இருக்கின்றது; என்க.

(விளக்கம்) திருமால்: அண்மைவிளி. செங்கமல அடி, இரண்டடி, எனத் தனித்தனி கூட்டுக. இரண்டடியால் மூவுலகும் நடந்தனை என்பதன்கண் முரணணி தோன்றிச் செய்யுளின்பம் மிகுதலுணர்க. இருள் - மயக்கம். அஃதாவது  -நீயே முழுமுதல் என்பதனை அறியாத மயக்கம் என்றவாறு. நடந்தனை என்பது அளந்தனை என்பதுபட நின்றது. மூவுலகு - மேலும் கீழும் நடுவுமாகிய உலகங்கள். முன்றுலகையும் எஞ்சாது இரண்டே அடியால் அளந்த நீ மிகவும் சிறிய ஓரூரின்கண் பல்லாயிரம் முறை அவ்வடிகளைப் பெயர்த்திட்டு நடப்பது எங்ஙனம்! என்று வியந்தவாறு. மடங்கல் - சிங்கம்; ஈண்டு நரசிங்கம். மாறு - பகை; இரணியன் என்க.

படர்க்கைப் பரவல்

அஃதாவது இறைவனைப் படர்க்கையிடத்து வைத்து வாழ்த்துதல்.

1: மூவுலகு ............. செவியே

(இதன்பொருள்.) ஈரடியால் மூவுலகும் முறை நிரம்பாவகை முடியத் தாவிய சேவடி சேப்ப - மாவலி கூறியபடி நீ நிலத்தை அளக்குங்கால், நின்னுடைய இரண்டு அடிக்கும் முறையாக நிரம்பாதவண்ணம் மூன்றுலகங்களும் முடிந்து போம்படி பண்டு அளந்தருளிய நினது இயற்கையிலேயே சிவந்த திருவடிகள் பரல் உறுத்துதலாலே கொப்புளங் கொண்டு குருதியால் சிவக்கும்படி; தம்பியொடும் கான்போந்து - நின் தம்பியாகிய இலக்குவனோடும் ஈரேழாண்டுகள் காட்டகத்தினூடே திரிந்து; சோ அரணும் போர்மடிய - சோ என்னும் மதிலரணும் அதன் கண் உள்ள அரக்கரினமும் போர்க்களத்திலே அழிந்தொழியும்படி; தொல் இலங்கை கட்டு அழித்த சேவகன் - பழையதாகிய இலங்கையினது காவலை அழித்தொழித்தமையால், தம் அன்பருக்குத் தொண்டு செய்தவனாகிய இராமனுடைய; சீர் கேளாத செவி - புகழினைக் கேட்டிலாத செவிதானும்; என்ன செவியே- ஒரு செவியாகுமோ; திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே - அந்தத் திருமாலாகிய இறைவனுடைய திருப்புகழையும் கேட்டிலாத செவியும் ஒரு செவியாகுமோ; என்க.

(விளக்கம்) முறை - மாவலி வழங்கிய மூன்றடி நிலத்தையும் முழுமையாகக் கொள்கையாம். அந்த முறை நிரம்பாமல் இறைவன், அளக்குங்கால் இரண்டடிகளுக்கும் உலக முழுதுமே போதாதபடி அளந்த அடிகள் என்பார், முறை நிரம்பாவகை தாவிய சேவடி என்றார். சேவடி - இயல்பாகவே செந்தாமரை மலர்போலச் சிவந்த திருவடி என்க. சேப்ப - சிவப்ப. அஃதாவது நடந்து திரிதலால் கற்கள் உறுத்தப்பட்டுக் கொப்புளங்கொண்டு சிவக்கும்படி என்றவாறு. சோ - அம் மதிலின் பெயர். மடிய என்றது அரணும் அதனகத்தாரும் ஒருசேர அழிந்தொழிய என்றவாறு. சேவகன் - தொண்டன். இறைவன் இராமனாக நிலவுலகத்தே தோன்றிக் கான் போந்ததும் இலங்கை கட்டழித்ததும் எல்லாம் தன் அன்பராயினார்க்குச் செய்த தொண்டுகளே என்பது தோன்றச் சேவகன் என்றார். மீண்டும் அச்சேவகனுக்கு முதலாயுள்ள இறைவன் புகழும் ஒருதலையாகக் கேட்கப்படவேண்டும் என்பது தோன்ற, திருமால்சீர் கேளாச்செவி என்றார். என்ன செவி என்னும் வினா அத்தகைய செவி பயன்படாச் செவியே ஆகும் என்னும் கருத்தை வற்புறுத்தி நின்றது.

2: பெரியவனை ................ கண்ணே

(இதன்பொருள்.) பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம் விரி கமல உந்தி உடை விண்ணவனை - கடவுளருள் வைத்து முழுமுதலாகிய பெரிய கடவுளாயவனை, நம்மனோர் சிறிதும் அறியவொண்ணாத மாயங்கள் பலவும் செய்யவல்லவனை, ஐம்பெரும் பூதங்களின் கூட்டங்களும் உயிரினங்களும் ஆகிய பெரிய உலகங்கள் எல்லாம் தோன்றி விரிதற்குக் காரணமான பொற்றாமரை பூத்த திருவுந்தித் தடத்தையுடைய விண்ணவனை; கண்ணும் திருவடியும் கையும் திருவாயும் செய்ய -தனது திருஉருவத்தின்கண் திருக்கண்களும் திருவடிகளும் திருக்கைத்தலங்களும் திருவாயும் சிவந்தனவாக ஏனைய உறுப்பெல்லாம்; கரியவனை - கரிய நிறமுடையவனாகிய நம் இறைவனுடைய திருஉருவத்தை; காணாத கண் என்ன கண்ணே - காணப்பெறாத கண்கள் என்ன கண்களோ; கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ன கண்ணே - அவ்வாறு காணுமிடத்தும் ஆர்வமிகுதியால் கண்ணிமையால் காண்டலின்றிக் கண்களை இடை இடையே இமைத்துக் காண்பார் தம் கண்கள் தாம் என்ன கண்களோ; என்க.

(விளக்கம்) இப் பாட்டிலும் அடியும் கையும் செய்ய கரியவன் எனவரும் செய்யுளின்பமுணர்க. கண் பெற்றதனால் பெறும்பயன் அவன் திருவுருவம் காண்டல் மட்டுமே ஆதலான், அதுகாணப்பெறாத கண் கண்ணாக மாட்டா என்பது கருத்து.

3: மடந்தாழும் ............ நாவே

(இதன்பொருள்.) மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை - அறியாமை தங்கியிருத்தற்கு உறையுளாகிய நெஞ்சத்தையுடைய கஞ்சன் தன்னைக் கொல்லுதற்குச் செய்த பல்வேறு வஞ்சச் செயல்களுக்கும் தப்பி அவனைக் கொன்று வென்றவனும்; நாலதிசையும் போற்ற ஆரணம் படர்ந்து முழங்க - நான்கு திசைகளினும் முனிவர்களும் தேவர்களும் கண்டெய்துதற்கு வழிபாடு செய்யா நிற்பவும் மறைகள் தொடர்ந்து காண்டற்கு முயன்று மாட்டாமையால் முழங்கவும் காண்டற்கரியனாயிருந்தும்; பஞ்சவர்க்கு - தன்பால் அன்பு பூண்டொழுகிய பாண்டவர்க்கு எளியனாகி, அவர் பொருட்டு; நூற்றுவர்பால் - துரியோதனனை உள்ளிட்ட கவுரவரிடத்து; தூது நடந்தானை - தூதுவனாக நிலம்வேண்டி நடந்தருளியவனும் ஆகிய அக் கண்ணபெருமானை; ஏத்தாத நா என்ன நாவே - புகழாத நாக்குத்தான் நாக்கென்னப்படுமோ; நாராயணா என்னா நா என்ன நாவே - அவனுக்குரிய மறை மொழியாகிய நாராயணாயநம வென்னும் திருப்பெயரை இடையறாது கூறாத நாக்குத்தான் என்ன நாக்கோ; என்க.

(விளக்கம்) ஈண்டு, கோளில் பொறியிற் குணமிலவே யெண் குணத்தான், றாளை வணங்காத் தலை எனவரும் திருக்குறளை (9) யும் நோக்குக. மடம் - அறியாமை. கஞ்சன் என்பது செறலின்கண் பால் மயங்கிற்று. என்ன நா என்பது தனக்குரிய பயனைப்பெறாத வறிய நாவே ஆகும். சிறந்த நா ஆக மாட்டா என்பதுபட நின்றது.

குரவைக் கூத்தை முடித்தல்

என்றியாம் ........... முரசே

(இதன்பொருள்.) என்று யாம் கோத்த குரவையின் - என்று கூறி யாம் கைகோத்து ஆடிய இக் குரவைக் கூத்தின் வாயிலாக; ஏத்திய தெய்வம் - நம்மால் வாழ்த்தப்பட்ட நங் குலதெய்வமாகிய கண்ணபெருமான்; நம் ஆழ்த்தலைப்பட்ட துயர்தீர்க்க - நம்முடைய ஆனினங்களிடத்தே காணப்பட்ட இத்தீநிமித்தங்களால் எய்தும் துன்பத்தைத் தீர்த் தருளுக; கொற்றத்து இடிப்படை வானவன் முடித்தலை உடைத்த தொடித்தோள் தென்னவன் - இந்நிலவுலகத்துப் பகைவரை வென்று பெற்ற கொற்றத்தினோடே இடியாகிய படைக்கலத்தையுடைய வானவர் தலைவனாகிய இந்திரனுடைய தலையிலணிந்த முடியையும் உடைத்தமையால் உண்டான கொற்றத்தையும், தொடியையும் உடைய தோளையுடைய நம்மன்னனாகிய பாண்டியனது, கடிப்பு இகு முரசு - குணிலால் அறையப்படுகின்ற வெற்றி முரசமானது; வேத்தர் மருள - இந்நிலவுலகத்து மனன்ரெல்லாம் வியக்கும்படி; வைகல் வைகல் மாறு அட்டு வெற்றி விளைப்பது மன்னோ - நாள்தோறும் நாள்தோறும் பகைவரை வென்று வெற்றியை விளைப்பதாக என்று வாழ்த்தினார் என்க.

(விளக்கம்) கைகோத்த குரவை என்க. இதனை மாதரி கூற்றாகக் கொள்க. ஆத்தலைப்பட்ட தீநிமித்தத்தால் வரும் துயர் என்க. வேத்தர்: தொடையின்பங் கருதி வலிந்தது. மாறு -பகை. மன், ஓ: அசைகள். கொற்றத்தை வானவனுக் கேற்றினுமாம். முடித்தலை என்றாரேனும் தலைமுடி என மாறுக. பாண்டியன் வானவன் முடித்தலை உடைத்த செய்தியைத் திருவிளையாடற் புராணத்தே காண்க. வானவன் - இந்திரன். தொடி - வாகுவலையம். கடிப்பு -குணில். முரசு - வெற்றிமுரசு. முரசம் வெற்றியைச் சாற்றுவதனால் அதன் தொழிலாக முரசு வெற்றி விளைப்பது என்றார். விளைப்பது - ஈண்டு விளைப்பதாக என வியங்கோள் பொருட்டாக நின்றது. கோவலன் கொலையுண்ட அற்றைநாளிலே தான் இக்குரவைக் கூத்தும் நிகழ்ந்தது என்று கொள்க. அரும்பதவுரையாசிரியரும், காலைவாய்த் தழுவினாள் மாலைவாய்க் கண்டாள் என்கையால் குரவையாடியது கோவலனார் கொலையுண்ட அன்றே யென்க என்பர்.

பா - இது கூத்தநூல் இலக்கணம் பற்றி உரைப்பாட்டும் குரவைச் செய்யுளும் விரவி வந்த கொச்சக ஒருபோகு.

ஆய்ச்சியர் குரவை முற்றிற்று.
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 28, 2012, 07:20:39 AM
18. துன்ப மாலை

அஃதாவது - கோவலன் கொலையுண்ட செய்தியைக் கேட்ட திருமாபத்தினியாகிய கண்ணகியாரின் துன்பத்தின் இயல்பினைக் கூறும் பகுதி என்றவாறு. இதன்கண் மாலை என்பது இயல்பு என்னும் பொருட்டு ஆதலால் இது தன்மையால் வந்த பெயர் என்க.

ஆங்கு,
ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவும் புகையும் புனைசாந்துங் கண்ணியும்
நீடுநீர் வையை நெடுமா லடியேத்தத்
தூவித் துறைபடியப் போயினாள் மேவிக்  5
குரவை முடிவிலோர் ஊரரவங் கேட்டு
விரைவொடு வந்தாள் உளள்;
அவள்தான்,
சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள்அந் நங்கைக்குச்
சொல்லாடும் சொல்லாடுந் தான்;   10

எல்லாவோ,
காதலற் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும்
ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சன்றே
ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சாயின்
ஏதிலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ;  15

நண்பகற் போதே நடுக்குநோய் கைம்மிகும்
அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சன்றே
அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சாயின்
மன்பதை சொன்ன தெவன்வாழி யோதோழீ;

தஞ்சமோ தோழீ தலைவன் வரக்காணேன்  20
வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சன்றே
வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சாயின்
எஞ்சலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ;

சொன்னது:-
அரைசுறை கோயில் அணியார் ஞெகிழம்  25
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
குரைகழல் மாக்கள் கொலைகுறித் தனரே

எனக் கேட்டு,
பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த்  30
திங்கள் முகிலொடுஞ் சேண்நிலம் கொண்டெனச்
செங்கண் சிவப்ப அழுதாள்தன் கேள்வனை
எங்கணா என்னா இனைந்தேங்கி மாழ்குவாள்;

இன்புறு தங்கணவர் இடரெரி யகமூழ்கத்
துன்புறு வனநோற்றுத் துயருறு மகளிரைப்போல்  35
மன்பதை அலர்தூற்ற மன்னவன் தவறிழைப்ப
அன்பனை இழந்தேன்யான் அவலங்கொண் டழிவலோ;

நறைமலி வியன்மார்பின் நண்பனை இழந்தேங்கித்
துறைபல திறமூழ்கித் துயருறு மகளிரைப்போல்
மறனொடு திரியுங்கோல் மன்னவன் தவறிழைப்ப  40
அறனென்னும் மடவோய்யான் அவலங் கொண்டழிவலோ;

தம்முறு பெருங்கணவன் தழலெரி யகமூழ்கக்
கைம்மைகூர் துறைமூழ்குங் கவலைய மகளிரைப்போல்
செம்மையின் இகந்தகோல் தென்னவன் தவறிழைப்ப
இம்மையும் இசையொரீஇ இனைந்தேங்கி அழிவலோ; 45

காணிகா,
வாய்வதின் வந்த குரவையின் வந்தீண்டும்
ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டீமின்
ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டைக்க
பாய்திரை வேலிப் படுபொருள் நீயறிதி  50
காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன்
கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய்
ஒள்ளெரி உண்ணுமிவ் வூரென்ற தொருகுரல்.

உரை

1-7 : ஆங்கு ............. வந்தான் உளன்

(இதன்பொருள்.) ஆங்கு - அக் குரவைக்கூத்து முடிவுற்றபொழுது; ஆயர் முதுமகள் - இடைக்குல மூதாட்டியாகிய மாதரி; ஆடிய சாயலாள் - இறையன்பினால் அசைந்த மென்மைத் தன்மைமிக்கவளாய், பூவும் புகையும் புனை சாந்தும் கண்ணியும் - மலரும் நறுமணப்புகையும் பூசும் சாந்தும் தலையில் சாத்துதற்குரிய கண்ணியும் ஆகிய இவற்றோடு; நீடுநீர் வையை நெடுமால் அடிதூவி ஏத்த - இடையறாத ஒழுக்கினையுடைய நீரையுடைய வையைப் பேரியாற்றின் கரையின்மேல் திருக்கோயில் கொண்டருளிய நெடிய திருமாலை வணங்கி அவன் திருவடியிலே மலர் தூவி வழிபாடு செய்தற்பொருட்டு; துறையடியப் போயினாள் - வையைத் துறையின்கண் நீராடச் சென்றாளாக; குரவைமுடிவில் மேவி - குரவைக்கூத்து முடிந்தபொழுது நகரத்திற்சென்று; ஊர் அரவங்கேட்டு - அவ்வகநகரினுள் பிறந்ததொரு செய்தியைக் கேள்வியுற்று; விரைவொடு வந்தாள் - மிகவும் விரைவாக வந்த ஆயமகளுள் ஒருத்தி; உளள் - அக் குரவைக் கூத்தாடிய விடத்தே உளள் ஆயினள்; என்க.

(விளக்கம்) ஆடிய சாயல் - அசைந்த மென்மை, அஃதாவது இறையன்பு காரணமாக நெகிழ்ந்த நெஞ்சத்தின் மென்மை, என்க. அம்மென்மை மெய்ப்பாடாகத் தோன்றப் பெற்ற மாதரி என்பது கருத்து. ஆடிய சாயலாள் - ஐயை என்பாருமுளர். பூ, புகை, சாந்து, கண்ணி முதலியன. நீராடுவாள் வையையை வழிபடுதற்குக் கொடுபோன பொருள் எனலுமாம். என்னை?

மாலையுஞ் சாந்தும் மதமும் இழைகளும்
கோலங் கொளநீர்க்குக் கூட்டுவார் அப்புனல்
உண்ணா நறவினை ஊட்டுவார் ஒண்டொடியார்

எனவரும் பரிபாடலும் (10) காண்க.

வையை நெடுமால் என்றது இருந்த வளமுடையார் என்னும் திருப்பெயருடைய திருமாலை என்பர். குரவை ஆடிய மகளிருள் ஒருத்தி தன் காரியத்தை மேலிட்டு நகருள் மேவி ஆங்கு ஊரரவங்கேட்டு விரைவொடு வந்தாள்; வந்தவள் அச் செய்தியைச் சொல்லுந் துணிவின்றி வாளாது நின்றமை தோன்ற வந்தாள் உளள் என்றார். அரவம் என்றது கோவலன் கொலையுண்ட செய்தியை. நகரத்துள் பலரும் அதனைப் பேசுவதனால் உண்டாகும் அரவம் என்றார் என்க. அச் செய்தியைக் கண்ணகிக்குச் சொல்லக் கருதி விரைவொடு வந்தவள், சொல்லாது நிற்பாளாயினள் என்பது கருத்து.

8-10: அவள்தான் ............... சொல்லாடுந்தான்

(இதன்பொருள்.) அவள்தான் - அவ்வாறு ஊரரவங் கேட்டுக் கண்ணகிக்குச் சொல்லக் கருதி விரைவொடு வந்த அந்த ஆயமகள் தானும்; சொல்லாடாள் அவளுக்குச் சொல்லுந் துணிவின்றி யாதொன்றும் சொல்லாளாய் வாய்வாளாது நின்றாள்; அந்நங்கைக்கு - அக்கண்ணகிக்கு; சொல்லாடா நின்றாள் - யாதொன்றும் சொல்லாடாமல் நின்ற அவள்தான்; சொல்லாடும் - பின்னர்க் கண்ணகி கேளா வண்ணம் தன்தோழிமார்க்கு மெல்லச் சொல்வாளாயினள்; தான் சொல்லாடும் - அதுகண்ட அக் கண்ணகியே அவளை நோக்கிங் சொல்வாளாயினள்; என்க.

(விளக்கம்) அவள்தான் என்றது சொல்லவந்த அவள்தானும் என்பதுபட நின்றது. சொல்லாடா நின்றாள் - சொல் ஆடாமல் நின்றாள் என்க. ஈறு தொக்கது. அந்நங்கைக்குச் சொல்லாடாள் சொல்லாடும் எனவே தன் தோழிமார்க்குச் சொல்லாடும் என்பது பெற்றாம். சொல்லாடாள் சொல்லாடாள் என்பன சொல்லாள் என்னும் ஒருசொல் நீர்மையன. சொல்லாடும் சொல்லாடும் என்பன சொல்லும் என்னும் ஒருசொல் நீர்மையன. தான் சொல்லாடும் என மாறுக. தான் என்றது கண்ணகியை. பின்வருவன கண்ணகியின் கூற்று.

11-15: எல்லாவோ ............ வாழியோதோழி

(இதன்பொருள்.) எல்லா ஓ - தோழீ! அந்தோ; காதலன் காண்கிலேன் - யான் என் ஆருயிர்க்காதலன் இன்னும் வரக் கண்டிலேன் ஆதலின்; கலங்கி நோய் கைம்மிகும் - என்நெஞ்சம் பெரிதும் கலங்கி, துன்பமும் என்னால் பொறுக்கல்லாது மிகுகின்றது காண்! என் நெஞ்சு ஊதுஉலை தோற்க உயிர்க்கும் அன்றே - அங்ஙனம் ஆதலின் அன்றே என்நெஞ்சுதானும் என் வரைத்தன்றி ஊதப்படுகின்ற கொல்லன் உலைத்தீயும் தோற்கும்படி வெய்தாய் உயிர்க்கின்றது; என்நெஞ்சு ஊதுஉலை தோற்க உயிர்க்கும் ஆயின் - எனது நெஞ்சம் இங்ஙனம் தீயினும் வெய்யதாய் உயிர்க்குமானால் இனி யான் சிறிதும் பொறுக்ககில்லேன் கண்டாய்; வாழி ஓ தோழி ஏதிலார் சொன்னது எவன் - நீ வாழ்வாயாக அந்தோ தோழி உனக்கு அயலார் சொன்ன செய்தி தான் யாது? அதனை இப்பொழுதே கூறிவிடுதி என்றாள்; என்க.

(விளக்கம்) காதலன் வரவு காணாது நெஞ்சு கலங்கி அவன் வரும் வழிமேல் விழிவைத்து எதிர்பார்த்திருந்தவன் அங்கிருந்து விரைவாக வந்தவன் தனக்கு ஏதோ சொல்லக் கருதிப் பின் யாதொன்றும் சொல்லாளாய்க் கவலைதோய்ந்த முகத்தினளாய்த் தன் தோழியர் குழுவினுட் புகுந்து இச் செய்தியை மெல்ல அவர்க்குக் கூற, அது கேட்ட அம் மகளிரெல்லாம் திகைத்துத் தன்னைத் துன்பத்தோடு நோக்குதல் கண்டு கண்ணகி கூறிய சொற்கள் இவை. ஈண்டுக் கூறிய நிகழ்ச்சியை எல்லாம் அடிகளார் இப் பாட்டினூடே நம்மனோர் குறிப்பாக உணர்ந்து கொள்ளும்படி செய்யுள் செய்திருக்கின்ற வித்தகத்தை உணர்வுடையோர் உணர்வாராக.

16-19: நண்பகல் ............ தோழீ

(இதன்பொருள்.) தோழீ ஓ - தோழியே! அந்தோ! நண்பகல் போதே அன்பனைக் காணாது என் நெஞ்சு அலவும் அன்றே - நடுப்பகலிலேயே என் காதலன் மீண்டுவரக் காணாமையாலே என் நெஞ்சம் சுழலா நின்றது கண்டாய் அன்றே! நடுக்கும் என் மெய்யும் நடுங்கா நின்றது; நோய் கைம்மிகும் - துன்பந்தானும் என் வரைத்தன்றி மிகுகின்றது; என்நெஞ்சு அன்பனைக் காணாது அலவும் ஆயின் - இங்ஙனம் என்நெஞ்சு சுழலுதலாலே; மன்பதை சொன்னது எவன் - நீ நகரத்துப் புக்கபொழுது ஆண்டுள்ள மக்கள் நினக்குக் கூறிய செய்திதான் என்னையோ கூறுதி என்றாள்; என்க.

(விளக்கம்) அந்தப் பொழுது, கதிரவன் உச்சியினின்றும் மேற்றிசையில் சாயும் பொழுதாயிருந்தமையின், உச்சிப்பொழுதிலிருந்தே என் நெஞ்சம் சுழலுகின்றது! உடலும் நடுங்குகின்றது! நோயும் மிகுகின்றது! இவையெல்லாம் என்பால் தாமே தோன்றுகின்ற தீநிமித்தம் போலே யிருந்தன. நீதானும் யாதோ சொல்ல வந்து சொல்லாதொழிந்தனை! நீ நகரம்புக்கு மீண்டனை ஆதலின் நகரத்துள் மன்பதை என் காதலனைப்பற்றிச் சொன்ன செய்தி ஒன்றுண்டு என்று நின் முகமே எனக்குக் கூறுகின்றது! இனி யான் துயர் பொறுக்ககில்லேன் காண். அதனை இப்பொழுதே சொல்லிவிடு! எனக் கண்ணகி விதுப்புற்றுக் கூறியவாறு.

மெய்நடுக்கும் என்க. அலவுதல் - சுழலுதல் மன்பதை - பொதுமக்கள் எவன் என்னும் வினா, அதை இப்பொழுதே சொல்லிவிடு! என்பதுபட நின்றது.

20-23: தஞ்சமோ ............. தோழீ

(இதன்பொருள்.) தோழீ ஓ - தோழீ; அந்தோ ! தலைவன் வரக்காணேன் - யான் என் ஆருயிர்த் தலைவன் வரக்கண்டிலேன்; ஓ வஞ்சம் உண்டு - நீவிரெல்லாம் எனக்கு மறைத்து நும்முள் சொல்லாடுகின்றீர் ஆதலால். அந்தோ நுமக்குள் ஏதோ ஒரு வஞ்சச் செய்தி உளதென்று கருதி; என்நெஞ்சு மயங்கும் அன்றே - என்நெஞ்சம் பெரிதும் மயங்குதல் கண்டீர் அன்றே; வஞ்சமோ உண்டு மயங்கும் என்நெஞ்சாயின் - இங்ஙனம் கருதி என்நெஞ்சம் மயங்குமாயின் அதன் விளைவு; தஞ்சமோ - எளியதொன்றா யிருக்குமோ? இராதன்றே; எஞ்சலார் - உனக்கு அவ்வயலார்; சொன்னது எவன் - சொன்ன செய்திதான் என்னையோ சொல்லிவிடு! சொல்லிவிடு! என்றாள்; என்க.

(விளக்கம்) தஞ்சம் - எளிமை. என்நெஞ்சு இங்ஙனம் மயங்குமாயின் அதன் விளைவு எளிதாயிருக்குமோ என்றது யான் இறந்துபடுவேன் என்பதுபட நின்றது. எஞ்சலார் - அயலார்.

24: சொன்னது.............

(இதன்பொருள்.) சொன்னது - நங்காய் அவர்கள் சொன்னதாவது ...........

(விளக்கம்) இது கண்ணகியாரின் பெருந்துன்பங் கண்ட அவ்வாயமகள், இனி இச் செய்தியை இவட்குக் கூறாதொழியின் இவள் இறந்து படுதலுங்கூடும் என்று சொல்லத் துணிந்து சொல்வதற்குத் தோற்றுவாய் செய்பவள் நங்காய்! அவர்கள் சொன்னதாவது: ............ என்று தொடங்கி மேலே சொல்ல நாவெழாமல் திகைத்து நின்றதனை நம்மனோர்க்கு அறிவுறுத்துதல் உணர்க. இதனை அடிகளார் தனிச் சொல்லாக நிறுத்தினமையே அங்ஙனம் உணர்த்துதற்குக் காரணமாதல் நுண்ணிதின் உணர்க. இனி, அவ் வாயமகள் குரவை முடிவில் ஊரரவங்கேட்டு வந்தவளே என்பதும் உணர்க. மேலே அவள் சொல்லுந் துணிவின்றித் தயங்கித் தயங்கிக் கூறுவதுபோல அவள் கூற்று அமைந்திருத்தலும் குறிக்கொண்டுணரற்பாலதாம்.

25-28: அரைசுறை .............. குறித்தனரே

(இதன்பொருள்.) அரைசு உறை கோயில் அணி ஆர் ஞெகிழம் கரையாமல் வாங்கிய கள்வன் ஆம் என்று - மன்னவன் விரும்பி உறைதற்குக் காரணமான உவளக மாளிகையின்கண் இருந்த அழகு பொருந்திய சிலம்பினை ஓசைபடா வண்ணம் கவர்ந்த கள்வள் இவனாம் என்று நினைத்து; கரையாமல் வாங்கிய கள்வன் ஆம் என்று ஒலிபடாமல் கவர்ந்த கள்வன் இவனே என்று துணிந்து; குரைகழல் மாக்கள் கொலை குறித்தனர் - ஒலிக்கும் வீரக்கழலையுடைய காவல் மறவர் கொலை செய்யத் துணிந்தனர்; என்றாள் என்க.

(விளக்கம்) அரசன் கோயில் என்னாது உறைகோயில் என்றது விரும்பித் தங்குகின்ற உவளகம் (கோப்பெருந் தேவியார் மாளிகை) என்பது தோன்ற நின்றது. விரைந்து சொல்லத் துணியாமையால், அணியார் ஞெகிழம் என்றும், கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றும், குரைகழல் மாக்கள் என்றும், வேண்டாதன இடைப்பிற வரலாகச் சொற்கள் பல வளர்த்தனள். கொன்றனர் என்பதற்குத் துணிவு பிறவாமையால் கொல்ல நினைத்தனர் என்பாள்போலக் கொலை குறித்தனர் என ஒருவாறு கூறாமல் கூறிய நுணுக்கம் உணர்க. ஞெகிழம் - சிலம்பு.

கோவலன் கொலையுண்டமை கேட்டபொழுது கண்ணகியார் எய்திய நிலைமை

29: எனக்கேட்டு...........

(இதன்பொருள்.) எனக்கேட்டு - ஊரரவங்கேட்டு விரைவொடு வந்து சொல்லாடாளாய்ப் பொழுது கழிப்பிநின்ற அவ்வாய்ச்சி இங்ஙனம் கூற அக்கூற்றைக் கேட்டலும் என்க.

30-33: பொங்கி .......... மாழ்குவாள்

(இதன்பொருள்.) பொங்கி எழுந்தாள் - துன்ப உணர்ச்சி கரை கடந்து பொங்குதலாலே கண்ணகி அவ்வுணர்ச்சி வயப்பட்டு எழுந்தாள், எழுந்தவள் ஆற்றாமையால்; கதிர்த்திங்கள் பொழிமுகிலோடும் சேண் நிலம் கொண்டு என விழுந்தாள் -ஒளியுடைய திங்கள் மண்டிலமானது மழை பொழிகின்ற முகிலோடும் வானத்தினின்றும் நிலத்தின்மேல் வீழ்ந்தாற்போல நிலத்தில் விழுந்தாள், மீண்டும் எழுந்தாள்; செங்கண் சிவப்ப அழுதாள் - இயல்பாகவே சிவந்த கண்கள் பெரிதும் சிவக்கும் படி அழுதாள் பின்னர்; தன் கேள்வனை எங்கணா என்னா இனைந்து ஏங்கி மாழ்குவாள் - தன் காதலனை நினைத்தவளாய் எம்பெருமானே! நீ இப்பொழுது என்னைத் துறந்துபோய் எவ்விடத்தே இருக்கின்றனை காண்? என்று புலம்பி வருந்தி ஏங்கிச் செயலறவு கொண்டு மயங்கினாள்; என்க.

(விளக்கம்) துன்ப உணர்ச்சி பொங்கி என்க. எழுந்தாள் என்றது அவ்வுணர்ச்சி வயப்பட்டெழுந்தாள் என்பதுபட நின்றது. பொழி முகிலோடும் கதிர்த்திங்கள் சேணினின்றும் நிலங்கொண்டென விழுந்தாள் என மாறுக. திங்கள் முகத்திற்குவமை. அவிழ்ந்து சரிகின்ற கூந்தல் முகில் கால்கொண்டு பெய்தல் போலுதலின், பொழிமுகிலோடும் என்று உவமைக்கு அடைபுணர்த்தவாறு. செங்கண் - இயல்பாகவே சிவந்த கண். எங்கணா: ஈறுகெட்டது. மாழ்குதல் - மயங்குதல்.

34-37: இன்புறு ........... கொண்டழிவலோ

(இதன்பொருள்.) இன்புறு தம் கணவர் இடர் எரி அகம் மூழ்க - இங்ஙனம் துன்பத்தால் அழுது மயங்கிய கண்ணகி தமக்குற்ற பொய்ப்பழியைப் பொறாது எழுந்த வெகுளியாகிய உணர்ச்சியால் தூண்டப்பெற்றுக் கூறுபவள் தாங்கள் இன்பம் எய்துதற்குக் காரணமான தம்முடைய கணவர் துன்புறுத்தும் நெருப்பின்கண் மூழ்கா நிற்பக் கண்டுவைத்தும்; துன்புறுவன தோற்றுத் துயர் உறும் மகளிரைப்போல் - தாமும் நெருப்பின் கண் மூழ்கி உயிர் நீக்கும் துணிவின்றி உயிர் தாங்கியிருந்து துன்புறுவதற்குக் காரணமான கைம்மை நோன்பு பல மேற்கொண்டு சாந்துணையும் வருந்துகின்ற உயவற் பெண்டிரைப் போல; மன்பதை அலர் தூற்ற மன்னவன் தவறு இழைப்ப - உலகத்துள் வாழ்கின்ற மக்கட் கூட்டம் தன்னைப் பழி தூற்றும்படி இந்நாட்டு மன்னவன் தனது செங்கோன்மையின் தவறு செய்தமையாலே; அன்பனை இழந்தேன் யான் - காதலனை இழந்தேனாகிய யானும்; அவலங் கொண்டு அழிவலோ - அழுது கொண்டு உயிரோடு இருந்து அழிவாள் ஒருத்தியோ என்றாள்; என்க.

(விளக்கம்) இது, முன்னர்க் கொலையுண்டமை கேட்டு மயங்கி யழுதவள் மீண்டும் கள்வனாம் என்று கொலை குறித்தனர் என்றமை நினைந்து சீற்றங்கொண்டு கூறியவாறு. பின் வருவனவற்றிற்கும் இஃதொக்கும். இன்புறுதல் - இம்மையினும் மறுமையினும் இன்புறுதல் என்க. எரி - நெருப்பு. துன்புறுவனவாகிய கைம்மை நோன்புகளை நோற்று என்க. மன்னவன் தவறிழைப்ப அஃதுணராது மன்பதை எம்மை அலர் தூற்ற அவலங்கொண்டழிவலோ எனக் கூட்டினுமாம். ஓகாரம் எதிர்மறை. யானும் எனல்வேண்டிய எச்சவும்மை தொக்கது.

38-41: நறைமலி ................. அழிவலோ

(இதன்பொருள்.) அறன் எனும் மடவோய் - அறக் கடவுள் என்று கூறப்படுகின்ற அறிவிலியே கேள்; நறைமலி வியன்மார்பின் நண்பனை இழந்து - மணமிக்க அகன்ற மார்பினை யுடைய தம் காதலனை இழந்தபின்னரும் அவனோடு தம் உயிரை இழக்கத் துணிவின்றிப் பின்னர்ச் சாந்துணையும் ஏக்கமுற்று; பலதிறம் துறை மூழ்கித் துயர் உறும் மகளிரைப்போல் - பல திறப்பட்ட நீர்த்துறைகள் தோறும் சென்று சென்று தம்முடல் குளிரும்படி மூழ்கி மேலும் மேலும் துன்பம் மிகுவிததுக் கொள்கின்ற பேதை மகளிரைப் போல; மறனொடும் திரியும் கோல் மன்னவன் தவறு இழைப்ப - தீவினையோடு கூடித் தன் தன்மை திரிந்த கொடுங்கோலையுடைய இப் பாண்டிய மன்னன் தவறு செய்தமையாலே; யான் -தவறு சிறிதுமில்லாத யானும்; அவலங்கொண்டு அழிவலோ -துன்பத்தை மேற்கொண்டு நெஞ்சழிபவள் ஒருத்தியோ என்றாள் என்க.

(விளக்கம்) நறை - நறுமணம். நண்பன் - கணவன். பலதிறத்துறை என்க. மறன் - தீவினை; தீவினையோடு கூடித் தன் தன்மை திரிந்த கோல் என்க. அஃதாவது கொடுங்கோல். ஒருவன் தீவினை செய்ய, அதன் பயனை ஏதிலான்ஒருவன் நுகரும்படி செய்தனை என அறத்தைச் சீறுவாள் அறனெனும் மடவோய் என்று விளித்தாள். அறக்கடவுள் உளனாயின் இத்தகைய கொடுமையும் உலகில் நிகழுங்கொல் என ஐயுற்றுவாறு.

42-45: தம்முறு ......... அழிவலோ

(இதன்பொருள்.) தம்முறு பெருங்கணவன் - தம்மோடு பொருந்திய தமக்கு இறைவனினுங் காட்டில் பெரியவனாகிய கணவன்; தழல் எரி அகம் மூழ்க - அழலுகின்ற நெருப்பின்கண் மூழ்கக் கண்டு வைத்தும் அவனோடு ஒருசேர நெருப்பில் மூழ்குந் துணிவின்றி; கைம்மை கூர்துறை மூழ்கும் கவலைய மகளிரைப் போல் - கைம்மை நோன்பின்கண் மிக்குத் துறைகள் பலவற்றினும் சென்று சென்று தம்மெய் குளிர நீராடுகின்ற இடையறாத கவலையை யுடைய உயவற் பெண்டிரைப் போல யானும்; செம்மையின் இகந்த கோல் தென்னவன் தவறு இழைப்ப - நடுவு நிலைமையினின்றும் நீங்கிய கொடுங்கோலையுடைய இப் பாண்டிய மன்னன் தவறு செய்யா நிற்ப அதுகாரணமாக; இனைந்து ஏங்கி - பெரிதும் வருந்தி ஏக்கமுற்றிருந்து; இம்மையும் இசை ஒரீஇ - மறுமை கிடக்க இப்பிறப்பின் பயனாகிய புகழையும் விடுத்து; அழிவலோ - நெஞ்சழிவாள் ஒருத்தியோ என்றாள் என்க.

(விளக்கம்) பெருங் கணவன்: மகளிர்க்குக் கணவன் கடவுளினும் பெரியன் என்றவாறு. தழலெரி: வினைத்தொகை. துறை - புண்ணியத் துறை. செம்மை -நடுவுநிலைமை; இம்மையும் என்றது மறுமையினும் நரகம் புகுதல் என்பதுபட நிற்றலின். உம்மை - எச்சவும்மை. ஓகாரம்: எதிர்மறை.

கண்ணகியின் மறவுரை

46-53: காணிகா ........... ஒருகுரல்

(இதன்பொருள்.) காய்கதிர்ச் செல்வனே -சுடுகின்ற கதிரையுடைய செல்வனாகிய ஞாயிற்றுக் கடவுளே! பாய்திரை வேலிப் படுபொருள் நீ அறிதி - பாய்கின்ற அலைகளையுடைய கடல் சூழ்ந்த இந்நிலவுலகத்தின்கண் தோன்றுகின்ற பொருள்கள் அனைத்தையும் நீ கண்கூடாகக் கண்டறிவாய் அல்லையோ; காணிகா -நீயே இதனையும் காண்பாயாக; வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும் ஆய மடமகளிர் எல்லீரும் கேட்டீமின் - தானே வாய்த்த தீநிமித்தங் காரணமாக வந்த குரவைக் கூத்தின்கண் வந்து குழுமிய இடைக்குலத்து இளமகளிரே நீவிர் எல்லீரும் கேளுங்கோள்; ஆய மடமகளிர் எல்லீருங் கேட்டைக்க - அங்ஙனம் வந்து குழுமிய ஆய மகளிர் எல்லீரும் கேட்பீராக; என் கணவன் கள்வனோ - என்னுடைய கணவன் இப் பாண்டிய மன்னன் அரண்மனைச் சிலம்பைக் கவர்ந்த கள்வனோ? என வானத்தை நோக்கிக் கண்ணகி வினவினளாக, அப்பொழுது; கருங்கயல் கண் மாதராய் -கரிய கயல் போலும் கண்ணையுடைய நங்காய்! கள்வன் அல்லன் - நின் கணவன் கள்வன் அல்லன் காண்; இவ்வூர் ஒள்எரி உண்ணும் - நின் கணவனைக் கள்வன் என்று கூறிய இந்த மதுரையை ஒளியுடைய நெருப்பு உண்ணாநிற்கும்; என்றது ஒரு குரல் - என்று வானத்தினின்றும் ஒரு தெய்வக்குரல் எழா நின்றது; என்க.

(விளக்கம்) காணிகா: இகவென்னும் முன்னிலையசை இகாவென ஈறு திரிந்து காண்பாயாக என்பதாயிற்று. இச்சொல் கண்ணகி கதிரவனை நோக்கிக் கூறியது என்று கொள்க. வாய்வது என்றது, தானே வாய்த்த தீநிமித்தத்தை. அது காரணமாக வந்த குரவை என்றவாறு. கேட்டீமின் என்றது கேளுங்கள்! என ஏவியபடியாம். மீண்டும் கேட்டைக்க என்றது ஒருதலையாகக் கேட்கக் கடவீர் என வேண்டுகோள் பொருண்மைத்தாய் வந்த வினைத்திரிசொல். இவ்வூர் என்றது நின் கணவனுக்குப் பழிகூறிய இவ்வூர் என்றவாறு. ஒருகுரல் என்றது வானத்திற் பிறந்த ஒரு தெய்வக்குரல் என்பதுபட நின்றது. அஃதாவது காய்கதிர்ச் செல்வன் குரல் என்பது அடுத்த காதைத் தொடக்கத்தே விளங்கும்.

பா- மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

துன்பமாலை முற்றிற்று.
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 28, 2012, 07:23:01 AM
19. ஊர்சூழ் வரி

அஃதாவது - நின் கணவன் கள்வனல்லன்; அவனைக் கள்வன் என்ற இவ்வூரைத் தீயுண்ணுங்காண் என்று வானத்தெழுந்த தெய்வக் குரல் கேட்டவுடன் கண்ணகி சினம் மீக்கூர்ந்து தன்பால் எஞ்சியிருந்த ஒற்றைச் சிலம்பினையும் கையிலேந்திக் கொண்டு மதுரை மாநகரத்து வீதி வழியே சென்று இருமருங்கும் தன்னை நோக்கி இரங்கி நிற்கும் பத்தினிப் பெண்டிரை விளித்துப் பல்வேறு வஞ்சினம் மொழிந்து, கோவலன் கொலைப்பட்ட இடத்தை எய்துதலும், ஊர் மாந்தர் அவளைச் சூழ்ந்து இரங்கி ஆரவாரித்தலும், கண்ணகி கணவன் உடம்பினைக் கண்டு அழுதலும், பின்னர் அவன் மார்பின் மீது வீழ்ந்து தழுவிக் கொள்ளுதலும், கொலைப்பட்ட கோவலன் உயிர்பெற்று எழுந்து கண்ணகிக்கிரங்கி, அவள் கண்ணீரைத் தன் கையால் மாற்றுதலும், கண்ணகி அவன் அடிகளைக் கையாற் பற்றி அழுங்கால் நீ இருந்திடுக! என்று மறைந்துபோதலும், இதனால் மருட்சியுற்ற கண்ணகி என் சினந்தணிந்தன்றிக் கணவனோடு கூடுகிலேன். இத்தீவேந்தன் தனைக் கண்டு இங்ஙனம் செய்ததற்குக் காரணம் கேட்பல்! என்று எழுந்து தன் கண்ணீரைத் தானே துடைத்துக் கொண்டு அரசன் அரண்மனை முன்றிலை எய்துதலும், பிறவும் கூறும் பகுதி என்றவாறு. இது கூத்துப் போறலின் கூத்தாற் பெயர் பெற்றது என்க. வரி - கூத்து.

ஊர்சூழ் வரி என்னுந் தொடரை மதுரை மூதூரைக் கண்ணகி சூழ்ந்து சென்றது எனவும், மதுரை மாநகரத்து மாந்தர் கண்ணகியைச் சூழ்ந்தது எனவும் இருவகையானும் விரித்துப் பொருள் கூறுக.

என்றனன் வெய்யோன் இலங்கீர் வளைத்தோளி
நின்றிலள் நின்ற சிலம்பொன்று கையேந்தி
முறையில் அரசன்றன் ஊரிருந்து வாழும்
நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள் ஈதொன்று
பட்டேன் படாத துயரம் படுகாலை   5

உற்றேன் உறாதது உறுவனே ஈதொன்று
கள்வனோ அல்லன் கணவன்என் காற்சிலம்பு
கொள்ளும் விலைப்பொருட்டாற் கொன்றாரே ஈதொன்று
மாதர்த் தகைய மடவார்கண் முன்னரே
காதற் கணவனைக் காண்பனே ஈதொன்று  10

காதற் கணவனைக் கண்டா லவன்வாயில்
தீதறு நல்லுரை கேட்பனே ஈதொன்று
தீதறு நல்லுரை கேளா தொழிவேனேல்
நோதக்க செய்தாளென் றெள்ளல் இதுவொன்றென்று
அல்லலுற் றாற்றா தழுவாளைக் கண்டேங்கி  15

மல்லல் மதுரையா ரெல்லாருந் தாமயங்கிக்
களையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி
வளையாத செங்கோல் வளைந்த திதுவென்கொல்
மன்னவர் மன்னன் மதிக்குடை வாள்வேந்தன்
தென்னவன் கொற்றம் சிதைந்த திதுவென்கொல்  20

மண்குளிரச் செய்யும் மறவேல் நெடுந்தகை
தண்குடை வெம்மை விளைத்த திதுவென்கொல்
செம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம்பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம் வந்த திதுவென்கொல்
ஐயரி யுண்கண் அழுதேங்கி யரற்றுவாள்  25

தெய்வமுற்றாள் போலுந் தகைய ளிதுவென்கொல்
என்பன சொல்லி இனைந்தேங்கி யாற்றவும்
மன்பழி தூற்றுங் குடியதே மாமதுரைக்
கம்பலை மாக்கள் கணவனைத் தாங்காட்டச்
செம்பொற் கொடியனையாள் கண்டாளைத் தான்காணான் 30

மல்லன்மா ஞாலம் இருளூட்டி மாமலைமேற்
செவ்வென் கதிர்சுருங்கிச் செங்கதிரோன் சென்றொளிப்பப்
புல்லென் மருள்மாலைப் பூங்கொடியாள் பூசலிட
ஒல்லென் ஒலிபடைத்த தூர்;
வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழன்மேற்  35

கொண்டாள் தழீஇக் கொழுநன்பாற் காலைவாய்ப்
புண்தாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க்
கண்டாள் அவன்றன்னைக் காணாக் கடுந்துயரம்
என்னுறு துயர்கண்டும் இடருறும் இவள்என்னீர்
பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ  40

மன்னுறு துயர்செய்த மறவினை யறியாதேற்கு
என்னுறு வினைகாணா இதுவென உரையாரோ
யாருமில் மருள்மாலை இடருறு தமியேன்முன்
தார்மலி மணிமார்பம் தரைமூழ்கிக் கிடப்பதோ
பார்மிகு பழிதூற்றப் பாண்டியன் தவறிழைப்ப  45

ஈர்வதோர் வினைகாணா இதுவென உரையாரோ
கண்பொழி புனல்சோரும் கடுவினை யுடையேன்முன்
புண்பொழி குருதியிராய்ப் பொடியாடிக் கிடப்பதோ
மன்பதை பழிதூற்ற மன்னவன் தவறிழைப்ப
உண்பதோர் வினைகாணா இதுவென உரையாரோ  50

பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்
கொண்ட கொழுந ருறுகுறை தாங்குறூஉம்
பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்
சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்
ஈன்ற குழுவி எடுத்து வளர்க்குறூஉம்  55

சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்
வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்
என்றிவை சொல்லி அழுவாள் கணவன்றன்  60

பொன்துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக்கொள்ள
நின்றான் எழுந்து நிறைமதி வாள்முகம்
கன்றிய தென்றவள் கண்ணீர்கை யான்மாற்ற
அழுதேங்கி நிலத்தின்வீழ்ந் தாயிழையாள் தன்கணவன்
தொழுதகைய திருந்தடியைத் துணைவளைக்கை யாற்பற்றப் 65
 
பழுதொழிந் தெழுந்திருந்தான் பல்லமரர் குழாத்துளான்
எழுதெழில் மலருண்கண் இருந்தைக்க எனப்போனான்
மாயங்கொல் மற்றென்கொல் மருட்டியதோர் தெய்வங்கொல்
போயெங்கு நாடுகேன் பொருளுரையோ இதுவன்று
காய்சினந் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்  70

தீவேந்தன் தனைக்கண்டித் திறங்கேட்பல் யானென்றாள்
என்றாள் எழுந்தாள் இடருற்ற தீக்கனா
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்சோர
நின்றால் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்துடையாச்
சென்றால் அரசன் செழுங்கோயில் வாயில்முன்.  75

உரை

1-4: என்றனன் ....... ஈதொன்று

(இதன்பொருள்.) என்றனன் வெய்யோன் -கண்ணகி கதிரவனை நோக்கிக் காய்கதிர்ச் செல்வனே! என் கணவன் கள்வனோ என வினவியவளுக்கு மாதராய்! நின் கணவன் கள்வன் அல்லன் இவ்வூரை எரியுண்ணும் என்று அக் கதிரவன் விடை இறுத்தானாக; இலங்கு ஈர்வளைத்தோளி நின்றிலள் - அது கேட்டவுடன் விளங்குகின்ற அரியப்பட்ட சங்கு வளையணிந்த கைகளையுடைய அக் கண்ணகி ஒரு நொடிப்பொழுதும் அவ்விடத்தே நின்றாளில்லை; நின்ற சிலம்பு ஒன்று கையேந்தி-தன்பால் எஞ்சியிருந்த ஒற்றைச் சிலம்பினையும் தன் கையகத்தே ஏந்தியவளாய் அவ்விடைச்சேரியினின்றும் மதுரை நகரினுள்ளே விரைந்து போகின்றவள் ஆண்டு இருமருங்கினும் தன்னை நோக்கிக் கண்ணீர் உகுத்து நிற்கும் கற்புடை மகளிரை நோக்கி; முறையில் அரசன் தன் ஊர் இருந்து வாழும் நிறை உடைப் பத்தினிப் பெண்டிர்காள் - செங்கோன் முறைமை இல்லாத அரசனுடைய ஊரின்கண் இருந்து வாழுகின்ற கற்பையுடைய மகளிர்களே; ஈது ஒன்று - இதோ யான் கைப்பற்றியுள்ள இச்சிலம்பு அச்சிலம்பிற்கு இணையாய மற்றைச் சிலம்பு காண்! இதனைக் காணுங்கோள்! என்றாள்! என்க.

(விளக்கம்) சென்றாள் என்னாது நின்றிலள் என்றது அவ்விடத்தே அக்குரல் கேட்டபின் ஒரு நொடிப்பொழுதும் நின்றிலள் என்றுணர்த்துதற்கு என்க. நின்ற சிலம்பு என்றது கணவன்பால் கொடுத்ததொழியத் தன்பால் எஞ்சியிருந்த மற்றைச் சிலம்பினை. முறையில் அரசன் றன் ஊரிலிருந்து வாழும் பத்தினிப் பெண்டிர்காள் என்றது கொடுங்கோன் மன்னன் ஊரின்கண் வாழும் மகளிர் கற்புடையராய் இரார் என இகழ்ந்தவாறு. பின்னும் நீவிர் கற்புடை மகளிராயின் நும் மன்னன் இங்ஙனம் செங்கோல் பிழையான் என்று இகழ்ந்தவாறுமாம். இதனைப் பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு நீணிலவேந்தர் கொற்றம் சிதையாது எனவரும் கவுந்தியடிகளார் மொழியானும் காண்க. அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது எனப் (நடுகற் காதை, 207-8.) பின்வருதலும் நினைக.

இனி, ஈதொன்று என்பதற்கு - இஃதொரு தீவினை நிகழ்ந்தது காண்மின்! எனக் கோடலுமாம்.

5-8: பட்டேன் ............... ஈதொன்று

(இதன்பொருள்.) பட்டேன் படாத துயரம் யான் இவ்வுலகின் கண் பிறந்தாரொருவரும் படாத பெரும் துயரத்தைப் படுகின்றேன்; படுகாலை உற்றேன் உறாதது உறுவனே - இம் மாலைக் காலத்து இங்ஙனம் பிறர் யாரும் படாத துன்பத்தை யான் உற்றேன் இத்தகைய துன்பத்தினை யான் உறக்கடவேனோ; ஈது ஒன்று - இங்ஙனம் யான் துன்புறச் செய்தது நும்மரசன் கொடுங்கோல், இதுவும் நீயிர் அறியற்பாலதொன்று கண்டீர்! கள்வனோ அல்லன் கணவன் என் காற்சிலம்பு கொள்ளும் விலைப் பொருட்டாற் கொன்றாரே ஈது ஒன்று - என் கணவன் கள்வனல்லன்! எனது காற்சிலம்பின் விலையைக் கொடாது தாம் கைக்கொண்டு விடுதற்பொருட்டுக் கள்வனென்று ஒரு பெயரிட்டு அவனைக் கொன்றார்களே! இதும் நீவிர் அறியற்பாலதொன்று கண்டீர்! என்றாள்; என்க.

(விளக்கம்) உலகிற் பிறந்தார் படாத துயரம் என்க. படுகாலை - இறக்குங்காலத்தில் படும் துயர் எனினுமாம். உறாதது - படத்தகாத துன்பம். உறுவனே என்னும் ஏகாரம் எதிர்மறை. ஈதொன்று - இஃதொரு கொடுமை. யான் ஒரு வணிகன் மனைவி; தான் மன்னனாயிருந்தும் என் காற்சிலம்பு பெற்ற விலையைத் தாராமைப்பொருட்டு கள்வன் அல்லாத என் கணவனைக் கள்வனென்று ஒரு பெயரிட்டுக் கொன்றார்களே, இஃதொரு தீவினை இருந்தபடியை எல்லோரும் அறிமின் என்பாள் கள்வனோ .......... ஈதொன்று என்றாள்.

9-14: மாதர் ............... இதுவொன்றென்று

(இதன்பொருள்.) மாதர்த் தகைய மடவார் கண் முன்னரே - தத்தம் கணவன்மார் காதலிக்கும் தகுதியுடைய கற்புடைப் பெண்டிர்கண் முன்பே; காதல் கணவனை காண்பனே - என்னுடைய காதலை யுடைய கணவனே யான் பண்டுபோல உயிருடையவனாய்க் காண்பேன் காண், ஈதொன்று - இது நுமக்கு ஒரு புதுமையாய் இருக்குமன்றோ அதனையும் காணுங்கோள்; காதல் கணவனைக் கண்டால் - யான் என்காதற் கணவனை அங்ஙனம் கண்டபொழுது; அவன் வாயில் தீது அறு நல்லுரை கேட்பனே ஈது ஒன்று -அவன் என்னை நோக்கித் திருவாய் மலர்ந்தருளுகின்ற குற்றமில்லாத இனிய மொழியையும் நீயிர் காணும்படி ஒருதலையாகக் கேட்பேன் இதுவும் ஒரு புதுமையன்றோ இதனையும் காணுங்கோள்; தீது அறு நல்லுரை கேளாது ஒழிவேனல்  நோதக்க செய்தாள் என்று எள்ளல் இது வொன்று என்று - அங்ஙனம் தீதில்லாத நன்மொழியை அவன் திருவாயால் யான் நும் கண் முன்னே கேளா தொழிவேனாயின் இவள் இங்ஙனம் நிகழ்தற்குக் காரணமான தீவினைகளைச் செய்தவளே போலும் என்று என்னை எல்லீரும் இகழுங்கோள்! இதுவும் நுங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும் அன்றோ என்று இவ்வாறு கூறி, என்க.

(விளக்கம்) மாதர் - காதல்; காதலிக்கும் கற்புடை மடவார் என்றவாறு. அவர் கண் முன்னர் இது செய்தால் அவர்க்கும் சிறப்பாம் என்பது தோன்ற இங்ஙனம் கூறினள் என்க. காண்பனே என்றது உயிருடன் காண்பேன் என்று வீரம் பேசியவாறு. என்னை? இவன் தானும் வீரபத்தினியாதலின் என்க. இது வீரமறவர்க்குரிய நெடுமொழி வஞ்சி போல்வதொரு மறத்துறை என்க. அஃதாவது:

ஒன்னாதார் படைகெழுமித்
தன்னாண்மை எடுத்துரைத் தன்று

எனவரும். (புறப்பொருள் வெண் வஞ்சி -12.) நோதக்க - கணவன் கொலையுண்ணற்குக் காரணமான தீவினைகள் என்க. எள்ளல் - எள்ளுக; அல்லீற்று வியங்கோள், உடன்பாட்டின்கண் வந்தது. இற்றெனக் கிளத்தல் (தொல்.கிளவி-19) என்புழிப்போல. எள்ளல் இது ஒன்று என்றது, இப்பொழுது நுங்களையும் நும்மன்னனையும் இகழுகின்ற என்னை நீவிர் இகழுதற்கு இஃதொரு வாய்ப்பு என்றவாறு.

மதுரை மக்கள் கூற்று

15-22: அல்லலுற்று ........... இதுவென்கொல்

(இதன்பொருள்.) அல்லல் உற்று ஆற்றாது அழுவாளைக் கண்டு - இங்ஙனமாகப் பெருந்துயரமுற்று ஆற்றாது அழுகின்றவளைக் கண்டு அவள் துயரம் தம்மால் ஆற்றுதற்கு அரிய தொன்றாதலின் செயலறவால்; ஏங்கி - ஏக்கமுற்று; மல்லல் மதுரையார் எல்லாரும் தாம் மயங்கி - வளமுடைய அம் மதுரை நகரத்தே வாழ்கின்ற மாந்தரெல்லாம் தாமும் இரங்கி அழுது மயங்கிக் கூறுகின்றவர்; இக் காரிகைக்கு களையாத துன்பம் காட்டி-அந்தோ அழகிய இந்நங்கைக்கு எஞ்ஞான்றும் எவ்வாற்றானும் தீர்க்கப்படாத துன்பத்தை உண்டாக்குமாற்றால்; வளையாத செங்கோல் வளைந்தது இது என்கொல்-பண்டு ஒருபொழுதும் வளைந்தறியாத நம் மன்னனுடைய செங்கோலானது வளைந்தொழிந்ததே! இஃது என்னையோ? அறிகின்றிலேம் என்பாரும்; மன்னவர் மன்னன் மதிக்குடை வாள் வேந்தன் தென்னவன் கொற்றம் சிதைந்தது இது என்கொல் - மன்னவர்க்கெல்லாம் மன்னனும் திங்கள் போன்று மன்னுயிரையெல்லாம் மகிழ்விக்கும் கொற்ற வெண்குடையையும் வெற்றிவாளையும் உடைய வேந்தனும் செந்தமிழ் நாடாகிய இத்தென்னாட்டு மன்னவனும் ஆகிய நம்மன்னனுடைய கொற்றமும் சிதைந்தொழிந்ததே ஈதென்னையோ என்று மருள்வாரும்; மண் குளிரச் செய்யும் மறவேல் நெடுந்தகை தண்குடை வெம்மை விளைத்தது இது என்கொல் - நிலத்தில் வாழும் உயிர்களின் உளங்களெல்லாம் குளிரச்செய்கின்ற தண்ணளியையும் பகைவர் உளமெல்லாம் நடுங்கச்செய்யும் மறப்பண்புமிக்க வேலாலியன்ற நெடிய தெறலையும் உடைய நம் பெருந்தகை மன்னன் கவித்த குளிர்ந்த வெண்குடை இற்றை நாள் ஆற்றொணாத வெப்பத்தை விளைத்தது இஃதென்னையோ என்பாரும்; என்க.

(விளக்கம்) அல்லல் - துன்பம். அழுவாளை : கண்ணகியை. அவனை ஆற்றுவிக்க மாட்டாமையால் ஏங்கி என்க. களையாத துன்பம் என்றது கணவனை இழத்தலால் வந்த துன்பம் என்றவாறு. அவளது அழகையும் இளமையையும் நோக்கி இக்காரிகை என்றார். பண்டொரு காலத்தும் வளையாத செங்கோல் என்க. கொற்றத்திற்கு அறமே முதலாகலின் அறம் சிதையவே கொற்றமும் சிதைந்தது என்க. இது என்கொல் என்னும் வினாக்கள் யாதொன்றும் அறிகின்றிலேம் என்பது தோன்ற அவர்தம் மருட்கையை உணர்த்தி நின்றன. பின்வருவனவற்றிற்கும் இஃதொக்கும்.

இதனானே மேல் யாது வினையும் கொல்லோ என்றார் என இதுவென் கொல் என்பனவற்றிற்குப் பழைய ஆசிரியர் கூறும் உரை சிறப்பின்று. என்னை? அவர்கள் கண்ணகிக்கு இரங்காமல் இதனால் பின்னர்த் தமக்கு யாது விளையும் கொல்லோ என்று அஞ்சினர் என்பதுபட அவ்வுரை நிற்றலால் என்க.

23-28: செம்பொற் சிலம்பு .......... மாமதுரை

(இதன்பொருள்.) வம்பப் பெருந்தெய்வம் நம் பொருட்டால் செம்பொன் சிலம்பு ஒன்று கையேந்தி வந்தது இது என்கொல் - புதுமையையுடைய பெரிய தெய்வம் ஒன்று செம்பொன்னால் ஆகிய சிலம்பு ஒன்றனைத் தன் கையில் ஏந்திக்கொண்டு நம்மை ஆராய்தற்கு இவ்வாறு வந்ததுபோலும் இஃது என்ன மாயமோ என்பாரும்; ஐ அரி உண்கண் அழுது ஏங்கி அரற்றுவாள் தெய்வம் உற்றாள் போலும் தகையள் இது என்கொல் - வியத்தகு செவ்வரி பரந்த மையுண்ட கண்ணையுடையாள் இவள் தெய்வம் அல்லள் இவள்தானும் அழுதலையும் ஏங்கி அரற்றுதலையும் நோக்கின் தெய்வம் ஏறப்பெற்றாள் போலும் தன்மை உடையளாகக் காணப்படுகின்றாள். இஃதென்ன மாயமோ அறிகின்றிலேம் என்பாருமாய்; என்பன சொல்லி - என்று இன்னோரன்ன தத்தம் வாய் தந்தனவெல்லாங் கூறி; இனைந்து ஏங்கி ஆற்றவும் வன்பழி தூற்றும் குடியது மாமதுரை - வருந்தி ஏங்கி மிகவும் அரசனுடைய பெரும் பழியைத் துணிந்து தூற்றா நிற்கும் குடிமக்களை உடையதாயிற்று அற்றை நாள் அம்மதுரை மாநகரம் என்க.

(விளக்கம்) கண்ணகி தானும் இறந்துபோன கணவனை உயிருடன் காண்பேன் என்றும், அவன் வாயில் நல்லுரை கேட்பேன் என்றும், கூறக் கேட்டவருள் ஒருசிலர் இவள் மானுட மகளல்லள் தெய்வமே போலும்! தெய்வம் இங்ஙனம் வந்தது நம்மன்னன் செங்கோன்மையை ஆராய்தற்பொருட்டுப் போலும் என்பார், செம்பொற் சிலம்பு ........... ...... வம்பப் பெருந்தெய்வம் வந்ததிது வென்கொல் என்றார் என்க.

மற்று, அதுகேட்ட வேறு சிலர் கண்ணகியின் கண் முதலிய உறுப்புகளையும் செயல்களையும் நோக்குமின்! அவள் இங்ஙனம் பொருந்தாமை கூறக் காரணம் அவள்மேல் தெய்வம் ஏறினமையே என்பார், தெய்வம் அல்லள் தெய்வம் உற்றாள் போலும் என்றனர் என்க. இவரெல்லாம் பெரிதும் மருட்கை கொண்டவர் என்க. இவ்வாறாக அம் மதுரை நகரத்து மாந்தர் இவள் மானுட மகளாக, தெய்வமேயாக, அல்லது தெய்வம் உற்றாளேயாக, ஆற்றொணாத் துயரந்தரும் இந்நிகழ்ச்சிக்கெல்லாம் மன்னன்கோல் வளைந்ததே காரணம் என்றுட்கொண்டு இதனால் வந்த பழியும் எளியதொன்றன்று மிகவும் பெரிய தொரு பழியே என்று கருதி அற்றைநாள் அம்மதுரைமா நகரத்துக் குடிமக்கள் அனைவரும் அரசனுடைய பழியைத் தூற்றுபவரே ஆயினர் என்பார் அடிகளார் வன்புழி தூற்றும் குடியதே மதுரை என்றார். ஏகாரம் தேற்றப்பொருட்டு. மாமதுரை என்றது அதன் பழம்பெருமை கருதியவாறாம்.

கண்ணகி காதலனைக் கொலைக்களத்தே காண்டல்

29-34: கம்பலை ............. படைத்த தூர்

(இதன்பொருள்.) கம்பலை மாக்கள் தாம் கணவனைக் காட்ட - இவ்வாறு வன்பழி தூற்றி ஆரவாரம் செய்து நின்ற மக்களுள் ஒரு சிலர், தாமே முன்வந்து கண்ணகியை அழைத்துக் கொடு போய்க் கொலையுண்டு கிடந்த கோவலனைக் காட்டா நிற்ப; செம்பொன் கொடி அனையாள் கண்டாளை - செம்பொன்னால் இயன்றதொரு பூங்கொடி போல்வாளாகிய கண்ணகி தன்னைக் கண்டவளை; தான் காணான் - அக்கோவலன் கண்டானிலன் அப்பொழுது; மல்லல் மாஞாலம் இருள் ஊட்டிச் செங்கதிரோன் - வளம் பொருந்திய இப்பேருலகத்தை இருள் விழுங்கும்படி செய்து சிவந்த கதிரையுடைய ஞாயிற்றுக் கடவுள்; கதிர் சுருங்கி - இக்காட்சியைக் காணப்பொறான் போலே சிவந்த தன்ஒளி சுருங்கப்பெற்று; மாமலை மேல் சென்று ஒளிப்ப - பெரிய மேலை மலையின்பால் சென்று மறையா நிற்ப; புல் என் மருள்மாலை பூங்கொடியாள் பூசலிட - பொலிவிழந்த மருட்சியைத் தருகின்ற அந்த மாலைப் பொழுதிலே பூங்கொடிபோல் வாளாகிய கண்ணகி தன் கணவனிடத்திருந்து அழுது புலம்புதலாலே; அவ்வூர் ஒல்லென ஒலி படைத்தது - அவ்வூரார் தாமும் அவட்கிரங்கிப் பற்பல சொல்லிப் புலம்புதலாலே அம்மதுரையில் யாண்டும் ஒல்லென்னும் ஒலியெழுந்தது என்க.

(விளக்கம்) கம்பலை - ஆரவாரம். கம்பலைமாக்கள் என்பதற்கு வேறு சிலர். எனவும் வேறுசில காட்சிகண்டு திரியுமவர் எனவும் வருகின்ற பழையவுரை மிகை. கம்பலை மாக்களுள் சிலர் எனவே அமையும். வன்பழி தூற்றும் குடியதே மாமதுரை என்றமையால் எல்லோரும் கம்பலை மாக்களே என்க. தாம் என்றது தாமே துணிந்து முன்வந்து என்பதுபட நின்றது. என்னை? அங்ஙனம் வருவோர் அரியர் ஆகலான் என்க. தான் காணான் என்றது கொலையுண்டு கிடந்தமையை வேறு வாய்பாட்டாற் கூறியவாறு. மல்லன் மாஞாலம் என்றது இகழ்ச்சி. இங்ஙனம் காணப்பொறாத நிகழ்ச்சியுடைத்து என்னும் வெறுப்பினாலே இவ்வுலகத்தை இருளூட்டி யாம் எத்துணை ஒளி செய்யினும் இம்மாந்தரின் அறியாமை இருள் போக்குதல் அரிது என்னும் எண்ணத்தால் செங்கதிர்ச் செல்வன் தன் கதிர்கள் சுருங்கா நிற்ப இப்பொல்லாக் காட்சியைக் காண்டல் இனி நமக்கொல்லாதாம் என்பான் போலச் சென்றொளிப்ப என்பதுபட இவ்விரண்டடிகளும் நிற்றலுணர்க.

35-38: வண்டார் ........... கடுந்துயரம்

(இதன்பொருள்.) காலை வாய் தழீஅ கொழுநன்பால் வண்டுஆர் அருங்குஞ்சி மாலை தன்வார் குழல் மேல் கொண்டாள் -அற்றைநாள் விடியற் காலத்தே இடைச்சேரியின்கண் பூவலூட்டிய புது மனைக்கண் தன் கணவனைத் தழுவிக்கொண்டு அவன் அதற்குக் கைம்மாறாகக் கொடுத்த அவனுடைய வண்டு ஒலிக்கும் கரிய தலைமயிரில் சூட்டிய மாலையை வாங்கித் தனது நீண்ட கூந்தலின் மேல் அணிந்துகொண்ட கண்ணகி; மாலை வாய் - அற்றை நாள் அந்திமாலைப் பொழுதிலேயே; புண்தாழ் குருதி புறஞ்சோர அவன் தன்னைக் காணாக் கடுந்துயரம் கண்டாள் - மெய்யின்கட் புண்ணினின்றும் புறத்தே குதிக்கின்ற குருதியின்கண் கிடக்கும் அவன், தன்னைக் காணாமையாகிய பெரும் துயரத்தைத் தான் கண்டாள் என்க.

(விளக்கம்) ஆர் - ஒலித்தல், குஞ்சி - ஆண் மயிர். கணவன் தன்னைக் காணாததனைத் தான் கண்டாள் என்றது அமங்கலத்தை மங்கலமாகக் கூறியவாறு.

கண்ணகியின் கையறுநிலை

39-42: என்னுறு ............ உரையாரோ

(இதன்பொருள்.) என் உறு துயர் கண்டும் இவள் இடர் உறும் என்னீர் - பெரும! என்னுடைய தனிமை மிக்க துயரத்தைக் கண்டு வைத்தும் யாம் வாய் வாளாது கிடப்பின் இவள் துன்புறுவாள் என்று இரங்குகின்றிலீர்; பொன்உறு நறுமேனி பொடி ஆடிக்கிடப்பதோ - பொற்சுண்ணம் ஆடுதற்கியன்ற நும்முடைய நறிய திருமேனிதான் இவ்வாறு புழுதி படிந்து கிடக்கத் தகுமோ? மன்உறு துயர் செய்த மறவினை அறியாதேற்கு - மன்னன் செய்த மிக்க துன்பத்தைச் செய்த தீவினை இத்தகையது என அறியமாட்டாத எனக்கு; என்உறு வினைகாணா இது என உரையாரோ - என் தீவினையே எனக்கு இங்ஙனம் நிகழ்ந்தது காண் என்று இவ்வூரார் சொல்லாரோ, என்றாள் என்க.

(விளக்கம்) பொன் போன்ற மேனி எனினுமாம். பொடி - புழுதி. மன்னனுடைய மறவினை; எனக்குத் துயர் செய்த வினை என இயைக்க. இனி நிலைபெற்ற துயர் செய்த இம்மறவினையை இப்பெற்றியால் முடிந்ததென அறியாதேற்கு எனினுமாம். காணா என்புழி ஆகாரம், அசைச்சொல்.

43-46: யாருமில் ........... உரையாயோ

(இதன்பொருள்.) யாரும் இல் மருள் மாலை - துணையாவார் யாரும் இல்லாத மருட்சியையுடைய இம் மாலைப் பொழுதிலே; இடர் உறு தமியேன் முன் - துன்பமிக்க தமியேனாகிய என் கண் முன்னர்; தார்மலி மணிமார்பம் தரைமூழ்கிக் கிடப்பதோ - மலர் மாலையுள் மூழ்குகின்ற அழகிய நும்முடைய மார்பம் வறிய நிலத்தின்கண் புழுதியில் அழுந்திக் கிடக்கத் தகுவதொன்றோ; பார்மிகு பழிதூற்றப் பாண்டியன் தவறு இழைப்ப - உலகத்திலுள்ளோரெல்லாம் மிகப்பெரிதும் தனது பழியைத் தூற்றும்படி இப்பாண்டிய மன்னன் தவறு செய்தானாகவும்; ஈர்வது ஓர் வினைகாண் ஆ இது என உரையாரோ - இந்நாட்டிலுள்ளார் நின் கணவனை இங்ஙனம் வெட்டுதற்குக் காரணமாக முற்பிறப்பில் நீ செய்த தீவினை காண் இஃது என்று கூறமாட்டாரோ, என்றாள் என்க.

(விளக்கம்) துணையாவார் யாரும் எனவும் கண்முன் எனவும் கூறிக்கொள்க. ஈர்வதோர் வினை வெட்டுவிப்பதற்குக் காரணமான பெரிய தீவினை, என்க.

47-50: கண்பொழி ........... உரையாரோ

(இதன்பொருள்.) கண்பொழி புனல்சோரும் கடுவினை உடையேன் முன் - என் கண்கள் பொழியும் கண்ணீர் இங்ஙனம் இடையறாது சொரிதற்குக் காரணமான கொடிய தீவினையை உடையேனாகிய என் முன்னர் நீவிர்; புண்பொழி குருதியிராய்ப் பொடி ஆடிக் கிடப்பதோ - வெட்டுண்ட புண்ணினின்றும் குதித்துப் பெருகும் குருதியை உடையீராய் இவ்வாறு புழுதியில் படிந்து கிடப்பது நுமக்குத் தகுவதேயோ; மன்பதை பழிதூற்ற மன்னவன் தவறு இழைப்ப - இவ் வுலகத்திலுள்ள மாந்தரெல்லாம் தன் பழியை எவ்விடத்தும் தூற்றாநிற்ப இந்நகரத்து மன்னன் இத் தவற்றினைச் செய்யாநிற்பவும்; இது உண்பது ஓர் வினைகாண் ஆ என உரையாரோ - இதற்குக் காரணம் நீ இங்ஙனம் துன்பம் நுகர்தற்கு உரிய உனது ஊழ்வினையே காண் என்று இந்நாட்டிலுள்ளோர் என்னையும் பழிதூற்றார்களோ என்றாள்; என்க.

(விளக்கம்) கடுவினை - கொடிய தீவினை. கண்முன் என்க. குருதியிர் -குருதியை யுடையீர். மன்பதை - மக்கள் தொகுதி. உண்பது - நுகர்தற்குரிய. வினை என்றது அதன் பயனை. இவையெல்லாம் அழுகையைச் சார்ந்த வெகுளியால் கூறப்பட்டன, மேல் வருவனவும் அன்ன. உண்பதோர் வினை - நின் கணவன் உயிர் உண்பதாகிய பெரிய தீவினை எனினுமாம்.

இவை மூன்றும் முதுபாலை என்னும் காஞ்சித் திணைத்துறை; என்னை? நனிமிகு சுரத்திடைக் கணவனை யிழந்து, தனிமகன் புலம்பிய முதுபாலையும் என்பது விதியாகலான் என்க. (தொல், புறத்திணை: 24)

51-61: பெண்டிரும் ........... தழீஇக்கொள்ள

(இதன்பொருள்.) பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டு கொல் - கற்புடை மகளிரும் உளரேயோ! கற்புடை மகளிரும் உளரேயோ! கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறூஉம் - தம்மை மணந்துகொண்ட கணவன்மார் செய்த பெருங்குற்றங்களையும் பொறுத்துக்கொள்ளும் சால்புடைய; பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் - கற்புடை மகளிரும் உளரேயோ! கற்புடை மகளிரும் உளரேயோ! சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் - சான்றோரும் உளரேயோ! சான்றோரும் உளரேயோ! ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம் - பிறர் ஈன்ற மகவினையும் தம் மகப்போலக் கைக்கொண்டு தாய்போல வளர்க்கின்ற அன்பு முதலிய குணங்களால் நிறைந்த; சான்றோரும் உண்டு கொல்! சான்றோரும் உண்டுகொல் - சான்றோரும் உளரேயோ! சான்றோரும் உளரேயோ! தெய்வமும் உண்டுகொல்! தெய்வமும் உண்டுகொல்! - தெய்வமும் உளதேயோ! தெய்வமும் உளதேயோ!! வை வாளில் தப்பிய மன்னவன் கூடலில் - கூரிய வாள் உடைய செருக்கினாலே செங்கோன்மையினின்று இழுக்கிய இப் பாண்டியனது இக் கூடலிடத்தே; தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் - தெய்வமும் உளதேயோ! தெய்வமும் உளதேயோ!; என்று இவை சொல்லி அழுவாள் - என்று இன்னோரன்ன பல சொல்லி அழுகின்ற கண்ணகி; கணவன் தன் பொன்துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக்கொள்ள - தன் கணவனுடைய திருமகள் வீற்றிருக்கும் சிறப்பான மார்பம் தன் மார்போடு பொருந்தும்படி தழுவிக் கொண்டாளாக அவ்வளவில்; என்க.

(விளக்கம்) கற்புடைப் பெண்டிரும் சான்றோரும் தெய்வமும் இக்கூடலில் உண்டாயின் இத்தகைய பெருந்தீவினை நிகழ்ந்திராது ஆதலால் இவர்கள் இங்கு இல்லைபோலும் என்றவாறு. பெண்டிர்- கற்புடைப் பெண்டிர் என்பதுபட நின்றது. கொழுநன் எத்தகைய குற்றம் செய்தாலும் பொறுத்துக்கோடலே கற்புடைப் பெண்டிரின் கடமை என்பது இத்திருமா பத்தினியின் குறிக்கோளாதலின் அக் குறிக்கோளையே கற்புடை மகளிர்க்குச் சிறந்த அடைமொழியாக்கிக் கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறூஉம் பெண்டிரும் உண்டுகொல் என்றாள். இதுவே கண்ணகியின் உட்கோள் ஆகும் என்பதனை:

போற்றா வொழுக்கம் புரிந்தீர் யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையே னாதலின்
ஏற்றெழுந் தனன்யான் என்றவள் கூற

எனவரும் அவள் கூற்றாலேயே (கொலைக்களக், 81-83.) அறிக. எடுத்து வளர்க்குறூஉம் என்றமையால் ஏதிலார் ஈன்ற குழவி என்க. தாமீன்ற குழவியை வளர்ப்பது சால்புடைமைக்கு அறிகுறி என்னல் ஆகாமையும் அறிக. வைவாளில் தப்பிய என்றது கல்லாக் களிமகன் வாளை மன்னன் வாளாகக் கொண்டு கூறியபடியாம். படை வலிமையுண்மையால் பொச்சாப் பெய்திச் செங்கோன்மையிற் றப்பிய எனினுமாம். பொன் - திருமகள். மார்பம் தன்மார்பம் பொருந்தா என்க.

62-67: நின்றான் ......... போனான்

(இதன்பொருள்.) எழுந்து நின்றான் - கோவலன் உயிர்பெற்று எழுந்து நின்றவன்; நிறைமதி வாள்முகம் கன்றியது என்று - நிறைவெண் திங்கள் போன்ற ஒளி பொருந்திய நின் முகம் கன்றியதே என்று வாய் திறந்து பரிந்து சொல்லி; அவள் கண்ணீர் கையால் மாற்ற - அவள் கண்ணீரைத் தன் கையால் துடைத்து மாற்றா நிற்ப; ஆயிழையாள் ஏங்கி அழுது நிலத்தின் வீழ்ந்து தன் கணவன் தொழுதகைய திருந்து அடியை வளைக்கைத் துணையால் பற்ற - அவ்வளவில் அக் கண்ணகி ஏங்கியழுது நிலத்தின் கண்ணே வீழ்ந்து தன் கணவனுடைய பலரும் தொழத் தகுந்த திருந்திய திருவடிகளை வளையலணிந்த தன் கைகளிரண்டானும் ஆர்வத்தோடு பற்றிக்கொள்ள அவ்வளவில்; பழுது ஒளிந்து எழுந்திருந்தான் - வெட்டுண்டமையினாலுண்டான உடம்பின் பழுது தீர்ந்து உயிரோடு எழுந்திருந்தவனாகிய அக்கோவலன்; எழுது எழில் மலர் உண்கண் இருந்தைக்க எனப்போனான் - ஓவியத்தில் எழுதிய அழகிய மலர் போன்ற மையுண்ட கண்ணையுடையோய்! நீ இருந்திடுக! என்று கூறி மறைந்துபோனவன்; பல் அமரர் குழாத்துளான் - தன்னை எதிர்கொள்ள வந்து வானத்தில் குழுமிய பல தேவர்களுடைய குழுவின்கண் உளன் ஆயினான் என்க.

(விளக்கம்) எழுந்து நின்றான் என மாறுக, அஃது உயிருடன் எழுந்து நின்றான் என்பதுபட நின்றது. கன்றியது என்று என்பது, கன்றியது என்று பரிந்து சொல்லி என்பதுபட நின்றது. ஏங்கியழுது, என மாறுக. தொழுதகைய என்றது பலரும் தொழும் தகுதியையுடைய என்பதுபட நின்றது. கணவன் திருவடியை அவட்குத் தொழுதகைய திருந்தடி என்னல் வேண்டாமை யுணர்க. கைத்துணையால் பற்ற என மாறுக. இஃது ஆர்வத்துடன் பற்ற என்பதுபட நின்றது. பழுது வாளேறுண்டைமையும் குருதி வழிந்தமையும் முதலிய பழுதுகள் என்க. கோவலன் அங்ஙனம் உயிர்பெற்றெழுந்த அவ்வுடம்போடு அமரர் குழுவிற் சேர்ந்தான் என்பதே இளங்கோவடிகளாரின் கருத்தாகும். இக்கருத்தினை முன்னைய உரையாசிரியர்கள் யாரும் அறிந்ததாகத் தோன்றவில்லை கண்ணகியும் கானவர் கட்புலங் காணத் தனதுடம்போடே விட்புலம் புகக் கண்டதாக அக் கானவர் கூறியதனால், இங்கும் அவன் இவ்வுடம்போடு துறக்கம் புக்கான் என்பதே நூலாசிரியர் கருத்தாதல் தேற்றம். அங்ஙனம் கூறலே முறைமையுமாம் என்க. இக் கருத்துணரும் மதுகையின்மையால் இதற்கு முன்னையோர் கூறிய உரைகள் போலி உரை என்றொழிக. செய்யுளும் அவர் கருத்திற் கிணங்காமையால் தத்தம் வாய்தந்தன பிதற்றி யொழிந்தனர்.

அணிசெய் காவியம் ஆயிரம்கற்கினும் கவியுனம் காண்கிலார் என்னும் பாரதியார் செய்யுட்கு இவ்விடத்தே பழைய புதிய உரையாசிரியரனைவரும் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்வாராயினர் மன்!

68-71: மாயங்கொல் ............... யானென்றான்

(இதன்பொருள்.) மாயங்கொல் மற்றென்கொல் மருட்டியது ஓர் தெய்வங்கொல் - கண்ணகி தன் கையாற் பற்றப்பெற்ற அடிகளையுடைய கோவலன் அவட்கு வறுங்கை காட்டி அவள் கண்காணாமல் அவ்வுடம்போடு துறக்கம் புகுவான் மறைந்து போனமையால் மருண்டவளாய் ஈதொரு மாயமோ! இல்லை யெனில் பின் என்னையோ? இவ்வாறு என்னை மருளச்செய்ததொரு தெய்வமும் இங்கு உண்டுகொல்லோ; எங்குப் போய் நாடுகேன் - என் கண் காணாமல் மறைந்துபோன என் காதலனை இனி யான் எங்கே போய்த் தேடிக்காண்பேனோ; பொருளுரையோ இது அன்று - என் காதலன் நீ இங்கு இருந்திடுக என்று பணித்தது பொருளுடையதொரு சொல்லாகுமோ? இல்லை இல்லை அது பொருளுரையன்று! நன்று நன்று; காய் சினந்தணிந்து அன்றிக் கணவனைக் கைகூடேன் - என் உள்ளத்தைச் சுடுகின்ற இச் சினத்தீத் தணிந்தபின் என் கணவனை நாடிப் போய்க் கூடுவதல்லது தணியாமல் அவனைத் தேடிக் கூடுகிலேன்; தீவேந்தன்தனைக் கண்டு - எம்மை இப் பெரும் பழிக்காளாக்கிய கொடுங்கோல் மன்னனாகிய பாண்டியனை நேரில் கண்டு; யான் திறன் கேட்பல் - யான் இதற்குக் காரணங்கேட்டு அறிகுவன்; என்றாள் - என்று வெகுண்டாள், என்க.

(விளக்கம்) மறைந்தவன் எவ்விடத்தான் என்று அறியாமையின் எங்குப்போய் நாடுவேன் என்றாள். தான் மறைந்த பின்னரும் யான் உயிர்தாங்கி இருக்கலாகாமையின் அவன் இருந்தைக்க என்று சொன்ன சொல் வறுஞ்சொல் என்பாள் இதுபொருள் உரை அன்று என்றாள். மன்னவன் தம்மீது அடாப்பழி சுமத்திக் கொன்றான் என்பது கருதி அவன்பால் எழுந்த சினம் மிகுந்துவருதலால் இதற்குத் தீர்வு கண்டன்றி யான் கணவனை நாடிச் சென்றடையேன் என்று தன்னுள் உறுதி கொண்டபடியாம். என்னை?

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்  - குறள். 46.

என்பது, கற்புடை மகளிர்க்கிலக்கணம் ஆகலின் என்க. தீவேந்தன் - கொடுங்கோல் அரசன். இத்திறம் இங்ஙனம் செய்தற்குரிய காரணம். என்றாள் என்பது என்று சினந்தாள் என்பதுபட நின்றது.

கண்ணகி அரண்மனை வாயிலை அடைதல்

72-75: என்றாள் ........... வாயில்முன்

(இதன்பொருள்.) என்றாள் எழுந்தாள் - என்று சினந்தெழுந்த கண்ணகி; இடருற்ற தீக்கனா நின்றாள் நினைந்தாள் - எழுந்தவளுக்குத் தான் ஊரிற்கண்ட தீய கனா தன் நினைவில் வந்துற்றமையால் எழுந்தாங்கு அக்கனவையும் அதனைத் தான் தேவந்திக்குச் சொன்னமையையும் சிறிதுபொழுது நின்று நினைத்துப் பார்த்தாள்; நெடுங்கயல் கண் நீர் சோர நின்றாள் நினைந்தாள் - தனது நெடிய கயல்போலும் கண்களினின்றும் நீர் சொரியும்படி அங்ஙனம் நின்று நினைத்தவளுக்கு அக் கனவிற் கண்டனவெல்லாம் கண்டவாறே நிகழ்ந்து வருதலும் அவற்றிற்கேற்பக் கோவலன் தீங்குற்ற பின்னர்த் தான் காவலன் முன்னர்சென்று கட்டுரைத்தமையும் நினைவில் வந்தமையின் அங்ஙனமே நிகழ்வதாக என்று துணிந்து; நெடுங்கயற்கண் நீர்துடையா - தனது கயல்போலும் கண்ணிற்பெருகி - மறைக்கின்ற நீரைத் துடைத்துக் கொண்டு; அரசன் செழுங்கோயில் வாயில்முன் சென்றாள் - விரைந்து அப்பாண்டிய மன்னனுடைய வளவிய அரண்மனை முன்றிலின் கண் சென்றனள், என்க.

(விளக்கம்) மறைந்தவுடன் வேந்தனைக் கண்டு இத்திறம் கேட்பல் என்று எண்ணி எழுந்த கண்ணகி இவ்வாறே தான் பண்டு கனவு கண்டமையையும், அக்கனாக் காட்சியே இதுகாறும் பலித்து வருவதனையும் நினைத்தாள். அக்கனவில் மன்னன்முன் தான்சென்று வழக்குரைத்தமையும் கண்டிருந்தாளாதலின் அதற்கேற்பவே தனக்கு எண்ணமும் தோன்றுதலால் இனி அதுவே நிகழும் போலும், நிகழவும் வேண்டும், யான் இப்பொழுதே அத் தீவேந்தன்பால் செல்கின்றேன் என்று துணிவு கொண்டு அக்கருத்திற்கேற்ப விரைந்து கோயில் வாயின்முன் சென்றாள் என்க. கண்ணீர் துடைத்தது வழிதெரிதற் பொருட்டு.

பா - மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

ஊர்சூழ் வரி முற்றிற்று
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 28, 2012, 07:25:23 AM
20. வழக்குரை காதை

அஃதாவது - கண்ணகியார் சீற்றத்துடன் சென்று தம் வருகையை வாயில் காவலருக்கு அறிவிப்ப அவரது சீற்றங் கண்டு வாயில் காவலர் அஞ்சி விரைந்தோடி அரசனுக்கு அறிவித்து அவன் பணித்தபடியே கண்ணகியை அரசன்முன் அழைத்துப் போதலும், கண்ணகியார் அம்மன்னன் அவைக்களத்தேறிச் சீறி நின்று வழக்குரைத்தலும் அதன் விளைவுகளும் கூறும் பகுதி என்றவாறு.

ஆங்குக்
குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும்
கடைமணி இன்குரல் காண்பென்காண் எல்லா
திசையிரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக்
கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா  5
விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும்
கடுங்கதிர் மீனிவை காண்பென்காண் எல்லா
கருப்பம்
செங்கோலும் வெண்குடையும்
செறிநிலத்து மறிந்துவீழ்தரும்

நங்கோன்றன் கொற்றவாயில்   10
மணிநடுங்க நடுங்குமுள்ளம்
இரவுவில்லிடும் பகல்மீன்விழும்
இருநான்கு திசையும் அதிர்ந்திடும்
வருவதோர் துன்பமுண்டு
மன்னவற் கியாம் உரைத்துமென
ஆடியேந்தினர் கலனேந்தினர்
அவிர்ந்துவிளங்கும் அணியிழையினர்
கோடியேந்தினர் பட்டேந்தினர்
கொழுந்திரையலின் செப்பேந்தினர்

வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர்  15
மான்மதத்தின் சாந்தேந்தினர்
கண்ணியேந்தினர் பிணையலேந்தினர்
கவரியேந்தினர் தூபமேந்தினர்
கூனுங்குறளும் ஊமுங்கூடிய
குறுந்தொழிலிளைஞர் செறிந்துசூழ்தர
நரைவிரைஇய நறுங்கூந்தலர்
உரைவிரைஇய பலர்வாழ்த்திட
ஈண்டுநீர் வையங்காக்கும்
பாண்டியன்பெருந் தேவிவாழ்கென

ஆயமுங் காவலுஞ்சென் றடியீடு பரசியேத்தக்  20
கோப்பெருந் தேவிசென்றுதன் தீக்கனாத் திறமுரைப்ப
அரிமா னேந்திய அமளிமிசை இருந்தனன்
திருவீழ் மார்பின் தென்னவர் கோவே; இப்பால்,
வாயி லோயே வாயி லோயே

அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து  25
இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே
இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாளென்று
அறிவிப் பாயே அறிவிப் பாயே; என

வாயிலோன், வாழியெங் கொற்கை வேந்தே வாழி  30
தென்னம் பொருப்பின் தலைவ வாழி
செழிய வாழி தென்னவ வாழி
பழியொடு படராப் பஞ்வ வாழி
அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப்

பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி  35
வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை அல்லள்
அறுவர்க் கிளைய நங்கை இறைவனை
ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்
கானகம் உகந்த காளி தாருகன்

பேருரங் கிழித்த பெண்ணு மல்லள்   40
செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்
பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாளே
கணவனை இழந்தாள் கடையகத் தாளே; என

வருக மற்றவள் தருக ஈங்கென   45
வாயில் வந்து கோயில் காட்டக்
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி
நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்
யாரை யோநீ மடக்கொடி யோய்எனத்

தேரா மன்னா செப்புவ துடையேன்  50
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்

அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்  55
பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை யாகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்

சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு  60
என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி யென்பதென் பெயரேயெனப்; பெண்ணணங்கே
கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று

வெள்வேற் கொற்றங் காண்என ஒள்ளிழை  65
நற்றிறம் படராக் கொற்கை வேந்தே
என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே, எனத்
தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி
யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே

தருகெனத் தந்து தான்முன் வைப்பக்  70
கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப
மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே, மணி கண்டு
தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட

யானோ அரசன் யானே கள்வன்   75
மன்பதை காக்குந் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுளென
மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்
கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக்

கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று  80
இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி.

வெண்பா

அல்லவை செய்தார்க் கறங்கூற்ற மாமென்னும்  1
பல்லவையோர் சொல்லும் பழுதன்றே--பொல்லா
வடுவினையே செய்த வயவேந்தன் றேவி
கடுவினையேன் செய்வதூஉங் காண்.

காவி யுகுநீருங் கையில் தனிச்சிலம்பும்  2
ஆவி குடிபோன அவ்வடிவும்--பாவியேன்
காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக்
கூடலான் கூடாயி னான்.

மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்  3
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்--வையைக்கோன்
கண்டளவே தோற்றான்அக் காரிகைதன் சொற்செவியில்
உண்டளவே தோற்றான் உயிர்.

உரை

கோப்பெருந்தேவி தான் கண்ட தீக்கனாவினைத் தன் உசாத்துணைத்தோழிக் குரைத்தல்

1-7: ஆங்கு ........... காண்பென் காண்

(இதன்பொருள்.) ஆங்கு - அவ்வாறு கண்ணகி சீற்றம் சிறந்து அம் மன்னவன் செழுங்கோயில் வாயிலை எய்து முன்னர் அவ்வரண்மனையின்கண் கோப்பெருந்தேவி தான் முதல் நாளின் வைகறை யாமத்தே கண்ட தீக்கனாவினால் கலக்கமெய்தித் தன் தோழிக்குக் கூறுபவள்; எல்லா - தோழீ கேள்! குடையொடு கோல் வீழ - நம்மன்னனுடைய கொற்றவெண் குடையோடு செங்கோலும் ஒருசேர வீழாநிற்ப; கடைமணியின் குரல் நின்று நடுங்கும் காண்பென் காண் - அரண்மனை வாயிலின்கண் கட்டப்பட்ட ஆராய்ச்சிமணியின் ஒலி இடையறாது நடுங்கி ஒலிக்கவும், கனவு கண்டேன் காண்; அன்றி - இவையே அன்றி; இரு நான்கு திசையும் அதிர்ந்திடும் - எட்டுத் திசையும் நிலம் அதிரா நிற்கும்; கதிரை இருள் விழுங்க காண்பென்காண் -ஞாயிற்றை இருள் மறைக்கவும் கனவு கண்டேன் காண்! எல்லா - தோழீ! இர கொடிவில் இடும் - இரவின்கண் ஒழுங்குபட்ட இந்திரவில் தோன்றவும்; வெம்பகல் கடுங்கதிர் மீன் வீழும் - வெவ்விய பகற்பொழுதிலே மிக்க ஒளியோடு விண்மீன்கள் விழவும் இவை; காண்பென் காண் - இக்கனவுகளையும் கண்டேன் காண்; என்றாள்; என்க.

(விளக்கம்) கடைமணி - முறைவேண்டி வருவோர் ஒலிப்பித்தற் பொருட்டு அரண்மனை முன்றிலில் கட்டப்படுவதொரு பெரிய மணி. குரல் - ஒலி. ஒலி நடுங்குதலாவது இனிதாக ஒலியாமல் கேட்டற் கின்னாவாக ஒலித்தல். நின்று நடுங்கும் என்றது இடையறாது நெடும் பொழுது ஒலிக்கும் என்றவாறு. கதிர் - ஞாயிறு. இர-இரா; குறிய தன் கீழ் ஆகாரம் குறுகி நின்றது. விண்மீன் வீழுங்கால் மிக்க ஒளியோடு வீழக்கண்டேன் என்பாள், கடுங்கதிர் மீன் என்றாள்.

7-12: எல்லா ................ உரைத்துமென

(இதன்பொருள்.) எல்லா -தோழீ! கருப்பம் -இவை எல்லாம் பின்வரும் கேட்டிற்கு முதலாம்; செங்கோலும் வெண்குடையும் செறிநிலத்து வீழ்தரும் - மன்னவன் செங்கோலும் வெண்கொற்றக் குடையும் மண்திணிந்த நிலத்தின்கண் சாய்ந்து வீழாநிற்கும்; நம்கோன் தன் கொற்ற வாயில் மணி நடுங்க உள்ளம் நடுங்கும் -நம்மரசனுடைய வெற்றியையுடைய வாயிலின் கண் ஆராய்ச்சி மணி நெடும்பொழுது நடுங்கி ஒலித்தல் கேட்டு என் நெஞ்சமும் அஞ்சி நடுங்கா நின்றது, அன்றியும்; இரவு வில்லிடும் பகல்மீன் விழும் இருநான்கு திசையும் அதிர்ந்திடும்- இரவின்கண் வானத்தே வில் தோன்றும், பகலிலே விண்மீன் வீழும், எட்டுத் திசையும் அதிரா நிற்கும்; இவையெல்லாம் மிகவும் தீய கனாக்களே ஆதலால்; வருவதோர் துன்பமுண்டு - நமக்கு வரவிருக்கின்ற ஒப்பற்ற துன்பம் ஒன்று உளதாதல் தேற்றமாம்; யாம் மன்னவற்கு உரைத்தும் என - யாம் இத் தீக்கனாவீற்குக் கழுவாய் செய்தற்பொருட்டு இப்பொழுது சென்று நம் மன்னவனுக்கு இவற்றை அறிவிப்பாம் என்று கூறா நிற்ப; என்க.

(விளக்கம்) கோப்பெருந்தேவி இவற்றைக் கண்டு தான் அஞ்சுவது தோன்றவும் இதனை அரசனுக்குக் கூறுதல் இன்றியமையாமை தோன்றவும் முற்கூறியதனையே மீண்டும் கூறியவாறாம். கருப்பம் - முதல். முளை எனினுமாம், அறிகுறி என்பது கருத்து. தீக்கனாவிற்குக் கழுவாய் செய்தற்பொருட்டு இவற்றை மன்னவனுக்கு யாம் இப்பொழுதே கூறவேண்டும் என்றவாறு. யாம் உரைத்தும் என்றது ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி. யாமென்றாள் தம்பிராட்டியாதலால் தன்பெருமிதந்தோன்ற என்பது அரும்பதவுரை. அரசரைத் தம்பிரான் என்றும் அரசர் தேவியைத் தம்பிராட்டி என்றும் வழங்குதல் மலைநாட்டில் இப்பொழுதும் உள்ளது என்பர்.

கோப்பெருந்தேவி தீக்கனாத்திறமுரைப்பத் தன் பரிசனத்துடன் அரசன்பாற் செல்லுதல்

13-17: ஆடியேந்தினர் ..........சூழ்தர

(இதன்பொருள்.) அவிர்ந்து விளங்கும் அணியிழையினர் ஆடியேந்தினர் கலன் ஏந்தினர் - ஒளி வீசித் திகழுகின்ற மணி அணிகலன்களை அணிந்த தோழியர் ஆடி ஏந்தியவரும் அணிகலன்களை ஏந்தியவரும்; கோடி ஏந்தினர் பட்டேந்தினர் கொழுந்திரையலின் செப்பேந்தினர் - புத்தாடை ஏந்தியவரும் பட்டாடை ஏந்தியவரும்; கொழுவிய வெற்றிலைச் சுருள் பெய்த செப்பை ஏந்தியவரும்; வண்ணம் ஏந்தினர் சுண்ணம் ஏந்தினர் மான் மதத்தின் சாந்து ஏந்தினர் - பல்வேறு வண்ணமுடைய நறுமணச் சாந்தேந்தியவரும் பொற்சுண்ணம் ஏந்தியவரும் கத்தூரிக் குழம்பேந்தியவரும்; கண்ணி ஏந்தினர் பிணையல் ஏந்தினர் கவரி ஏந்தினர் தூபம் ஏந்தினர் - கண்ணி ஏந்தியவரும் பிணையல் ஏந்தியவரும் சாமரை ஏந்தியவரும் நறுமணப் புகை ஏந்தியவரும்; கூனும் குறளும் ஊமும் கூடிய குறுந்தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர - கூனுடையோரும் குறளரும் மூங்கையரும் ஆகிய இவரோடுங் கூடிய குற்றேவல் புரியும் இளமையுடைய பணிமகளிர் பலர் தன்னை நெருங்கிச் சூழ்ந்து வருமாறு, என்க.

(விளக்கம்) ஆடி - கண்ணாடி. கலன்-அணிகலன். மணியிழையினர் ஆகிய குறுந்தொழில் இளைஞர் எனவும், கூனும் குறளும் ஊமும் கூடிய குறுந்தொழில் இளைஞர் எனவும் தனித்தனி கூட்டுக. இளைஞர் ஆடி முதலியவற்றை ஏந்தினராய்ச் செறிந்து சூழ்தர என இயைத்துக் கொள்க. கோடி-புத்தாடை. திரையல் - வெற்றிலைச் சுருள். சுண்ணம் - பொற்சுண்ணம். மான்மதம்-கத்தூரி விரவிய சாந்தென்க. கண்ணி பிணையல் என்பன மலர் மாலையின் வகை. கூன்குறள் மூங்கை முதலிய உறுப்புக் குறைபாடுடையோர் உவளகத்தே பணிபுரிவோராக இருத்தல் மரபு. இதனை:-

கூனுங் குறளும் மாணிழை மகளிரும்
திருநுத லாயத்துத் தேவிய ரேறிய
பெருங்கோட் டூர்திப் பின்பின் பிணங்கிச்
செலவு கண்ணுற்ற பொழுதின்

எனவரும் பெருங்கதையினும் (1-38. 178-81.) காண்க.

18-23: நரைவிரைஇய ............. கோவே

(இதன்பொருள்.) நரை விரைஇய நறுங்கூந்தலர் பலர் - நரை மயிர் கலந்த நறிய கூந்தலையுடைய செம்முது மகளிர் பலர், உரை விரைஇய வாழ்த்திட - புகழ் விரவிய மங்கல மொழிகளாலே வாழ்த்தா நிற்ப; ஆயமும் காவலும் சென்று - தன்னோடு வருகின்ற மகளிர் கூட்டமும் காவல் மகளிரும் தான் செல்லுந் தோறும் தன் எதிர் சென்று தான் அடிபெயர்த்திடுந்தோறும்; ஈண்டு நீர் வையங் காக்கும் பாண்டியன் பெருந்தேவி வாழ்க எனப் பரசி ஏத்த - கடல் சூழ்ந்த நிலவுலகத்தைக் காக்கின்ற நாங்கள் பாண்டி மன்னனுடைய பெருந்தேவியார் நீடூழி வாழ்க என்று வாழ்த்துக் கூறி, வணங்கிப் புகழா நிற்ப; கோப்பெருந்தேவி சென்று - கோப்பெருந்தேவியானவள் மன்னவன்பாற் சென்று அவன் மருங்கிருந்து; தன் தீக்கனா திறமுரைப்ப - தான் கண்ட தீய கனவுகளின் தன்மையை எடுத்துக் கூற அவற்றைச் செவிமடுத்து; திருவீழ் மார்பின் தென்னவர்கோ- திருமகள் விரும்புதற்குக் காரணமான மார்பினையுடைய தென்னாட்டவர் மன்னனாகிய நெடுஞ்செழியன்; அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன் - சிங்கம் சுமந்த அரசு கட்டிலின் மேல் வீற்றிருந்தனன் என்க.

(விளக்கம்) ஈண்டு நீர் -கடல். ஆற்று நீரும் ஊற்று நீரும் மழை நீரும் வந்து செறிந்த நீர் நிலையாகிய கடல் என்றவாறு. ஆயம் - மகளிர் குழாம். காவல் - காவல் மகளிர், கஞ்சுகிமாக்களுமாம். தென்னவன் செவிமடுத்து அமளி மிசை இருந்தனன் என்க. திருவீழ் மார்பின் தென்னவர்கோ என்பது திருமகள் கழிகின்ற மார்பையுடைய தென்னவர்கோ எனவும் ஒரு பொருள்தந்து அடிகளார் திருவாயில் தோன்றிய தீய வாய்ப்புள்ளாகவும் நிற்றல் உணர்க.

கண்ணகி தன் வரவினை வாயில் காவலர்க்குக் கூறுதல்

23-29: இப்பால் ............... என

(இதன்பொருள்.) இப்பால் - அரசன் நிலை இங்ஙனமாக முற்கூறிய திருமாபத்தினி அரண்மனை வாயிலை அணுகி ஆங்கு நின்ற வாயில் காவலனை நோக்கி; வாயிலோயே வாயிலோயே -வாயில் காவலனே! வாயில் காவலனே; அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே - தனது நல்லறிவு கீழற்றுப்போன புலங்கெட்ட தீய நெஞ்சத்தாலே செங்கோன்முறைமையின் இழுக்கிய கொடுங்கோன் மன்னனுடைய புல்லிய வாயிலைக் காக்குங் காவலனே! ஈதொன்று கேள்; இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்-இணையாகிய பரலையுடைய சிலம்புகளுள் வைத்து ஒரு சிலம்பினை ஏந்திய கையையுடையளாய்; கணவனை யிழந்தாள் -தன் கணவனை இழந்தவளொருத்தி; கடை அகத்தாள் என்று -அரண்மனை முன்றிலிடத்தே முறைவேண்டி வந்து நிற்கின்றாள் என்று; அறிவிப்பாயே அறிவிப்பாயே என -அக் கொடுங்கோல் மன்னனுக்குச் சென்று சொல்லுதி! அக் கொடுங்கோல் மன்னனுக்குச் சென்று சொல்லுதி! என்று கூறா நிற்ப! என்க.

(விளக்கம்) அறைபோதல் - கீழறுத்துப் போதல். அஃதாவது உற்றுழி உதவாமல் கரந்தொழிதல். பொறி - கட்பொறி. அதன் தன்மையாகிய கண்ணோட்டத்தைக் குறித்து அப் பண்பற்ற நெஞ்சத்தின் மேற்றாய் நின்றது. இனி, பொறி - ஆகூழுமாம். இறைமுறை - செங்கோன்மை. இணையரிச் சிலம்பு ஒன்று என்றது, நீ கவர்ந்து கொண்ட அச் சிலம்பிற்கு இணையாகிய மற்றொரு சிலம்பு என்பதுபட நின்றது. கடை - முன்றில். அடுக்கு - சீற்றம்பற்றி நின்றது.

வாயிலோன் மன்னனுக்கு அறிவித்தல்

30-44: வாயிலோன் .............. கடையகத்தாளே

(இதன்பொருள்.) வாயிலோன் - அவ் வாயில் காவலன்றானும் சீற்றம் சிறந்த கண்ணகியின் தோற்றங் கண்டு அஞ்சியவனாய் விரைந்து மன்னன்பாற் சென்று திருவடிகளில் வீழ்ந்து வணங்கிக் கூறுபவன்; வாழி - வாழ்க எம்பெருமான்; எம் கொற்கை வேந்தே வாழி - எம்முடைய கோற்கைத் துறையையுடைய வேந்தனே வாழ்க! தென்னம் பொருப்பின் தலைவ வாழி - தென்றிசைக் கண்ணதாகிய அழகிய பொதியின மலையையுடைய தலைவனே வாழ்க! செழிய வாழி - செழியனே வாழ்க; தென்னவ வாழி - தென்னாட்டை உடைய வேந்தே வாழ்க! பழியொடு படராப் பஞ்சவ வாழி - பழி வருதற்குக் காரணமான நெறியின்கண் செல்லாத பஞ்சவனே வாழ்வாயாக! செற்றனள் போலும் - நம்பால் கறுவுகொண்டவள் போலவும் அதனால் பெரிதும்; செயிர்த்தனள்போலும் - சினங்கொண்டவள் போலவும்; பொன்தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள் - பொன்னாலியன்ற சித்திரச் செய்வினை அமைந்த ஒற்றைச் சிலம்பினைப் பற்றிய கையினளாய்; கணவனையிழந்தாள் - தன் கணவனை இழந்தவள் ஒருத்தி, கடையகத்தாளே- நம் அரண்மனை வாயிலிடத்தே வந்து நிற்கின்றனள், அவள்தான் தோற்றத்தால் மானுட மகள் போல்கின்றாளேனும்; அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந்துணிப பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள் - செறிந்து குதிக்கின்ற குருதி அடங்காமையையுடைய பசிய புண்ணையுடைய மயிடாசூரன் என்பானுடைய பிடரோடு கூடிய தலையாகிய பீடத்தின்மேல் ஏறியருளிய இளம் பூங்கொடிபோல்வாளாகிய வெற்றிவேலைப் பற்றிய பெரிய கையினையுடைய கொற்றவை போல்கின்றாள்! ஆயினும் அவளல்லள்; அறுவர்க்கிளைய நங்கை - ஏழு கன்னிகைகளுள் வைத்து ஆறு கன்னிகைகட்கும் இளையவளாகிய பிடாரியோ எனின் அவளும் அல்லள்; இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு - முழு முதல்வனாகிய கடவுளைக் கூத்தாடச் செய்தருளிய பத்திரகாளி எனலாமாயினும், அவளும் அல்லள்; சூருடைக் கானகம் உகந்த காளி தாருகன் பேர் உரம் கிழித்த பெண்ணும் அல்லள் - காட்டினை விரும்பி ஏறிய காளியும் தாருகன் என்னும் அசரனுடைய பெரிய மார்பினைப் பிளந்தருளிய கொற்றவையும் ஆகிய இருவருள் ஒருத்தி என்னலாம் ஆயினும் அவர்களும் ஒருத்தியும் அல்லள்; கணவனை இழந்தாள்- கணவனை இழந்ததாகக் கூறிக்கொள்ளும் ஒருத்தி; கடை யகத்தாளே - நம் அரண்மனை வாயிலின்கண் வந்து நிற்கின்றாள்; கடையகத்தாளே -; நம்மரண்மனை வாயிலின்கண் வந்து நிற்கின்றாள் என்று வாழ்த்துந்தோறும் வாழ்த்துந்தோறும் வணங்கி விதுப்புற்று அறிவியா நிற்ப என்க.

(விளக்கம்) கொற்கை - உலகத்திலேயே சிறந்த முத்துப்படும் கடலின் துறைக்கண்ணதாகிய ஒரு பட்டினம். அதன் முத்தினால் அதன் புகழ் அதனையுடைய பாண்டியனுக்காயிற்று. அங்ஙனமே பொதியின் மலையின் சிறப்பும் அவனுக்காயிற்று. ஆதலால் அவற்றை யெடுத்தோதி வாழ்த்தினான், என்க. செழியன் தென்னவன் பஞ்சவன் என்பன அம் மன்னனின் பெயர்கள்.

கண்ணகி உருவத்தாலும் சீற்றத்தாலும் மக்கள் தன்மையில் மிக்கவளாய்க் கொற்றவை முதலிய தெய்வமகளிரே போல்கின்றாள். ஆயினும் பிடர்த்தலைப்பீடம் முதலிய அடையாளங்களின்மையின் அவர்களுள் ஒருத்தி அல்லள் எனத் தெரித்தோதியபடியாம். பசுந்துணி - புதிய புண். பிடர்த்தலை என்றது மயிடாசுரன் தலையை. அறுவர்க்கிளைய நங்கை என்றது பிடாரியை. இறைவன் - அம்பலக் கூத்தன். அணங்கு - பத்திரகாளி. கானக முகந்த காளி - காடுகிழாள். செற்றம் - உட்பகை. செயிர்த்தல் - சினத்தல். கணவனை இழந்தாளாகக் கூறிக்கொள்ளும் ஒருத்தி என்க.

கண்ணகி அரசன் திருமுன் செல்லுதல்

45-47: வருக ........ சென்றுழி

(இதன்பொருள்.) வருக - அங்ஙனமாயின் அவள் இங்கு வருவாளாக! மற்று அவள் தருக ஈங்கு என-அவளை இங்கு அழைத்து வருவாயாக! என்று அரசன் பணித்தமையாலே; வாயில் வந்து கோயில் காட்ட - அவ்வாயிலோன் விரைந்து வந்து கண்ணகியை அழைத்துக் கொண்டுபோய் மன்னவனுடைய அத்தாணி மண்டபத்தைக் காட்டுதலாலே அக்கண்ணகி; கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி - அம் மண்டபத்தின்கண் அரிமானேந்திய அமளிமிசை இருந்த அரசனை அணுகிச் சென்று நின்றபொழுது என்க.

(விளக்கம்) வருக மற்றவன் தருக ஈங்கு என்னுந்தொடர் தனது உடன்பாடும் கட்டளையும் அமைந்த பாண்டியன் மொழி. இவை அம் மன்னன் காட்சிக்கு எளியனும் கடுஞ்சொல்லன் அல்லனும் ஆதலை நன்குணர்த்துதல் உணர்க. கோயில் என்றது அத்தாணி மண்டபத்தை.

அரசன் வினாவும் கண்ணகியின் விடையும்

48-63: நீர்வார் ............ பெயரே என

(இதன்பொருள்.) நீர்வார் கண்ணே எம்முன் வந்தோய் மடக் கொடியோய் நீ யாரையோ - அரசன் கண்ணகியை நோக்கி நீர் ஒழுகுகின்ற கண்ணை உடையையாய் எம்முன்னர் வந்த இளமகளே நீ யார்; என - என்று வினவா நிற்ப அதற்கு விடை கூறும் கண்ணகி; தேரா மன்னா - ஆராய்ச்சியில்லாத அரசனே; சேப்புவது உடையேன் - நின்பால் கூறவேண்டிய குறை ஒன்றுடையேன் காண் யான்; எள் அறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள் உறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் - சிறிதும் இகழ்தற்கிடனில்லாத சிறப்பினோடே விண்ணவர் தாமும் வியந்து புகழும்படி ஒரு புறாவினது மிக்க துன்பத்தினைத் தீர்த்தருளிய சிபி என்னும் செங்கோல் வேந்தனும் அவனல்லாமலும்; வாயில் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத் தான்தன் பெறல் அரும்புதல்வனை ஆழியின் மடித்தோன் - அரண்மனை வாயிலிற் கட்டிய ஆராய்ச்சி மணியினது நடுவில் அமைந்த நாக்கு அசையும்படி ஓர் ஆவானது அசைத்து ஒலித்த அளவிலே விரைந்து அங்குச் சென்று அம்மணியை அசைத்த ஆவினது கடைக்கண்ணினின்றும் ஒழுகுகின்ற துன்பக் கண்ணீர் தனது நெஞ்சினைச் சுடுதல் பொறாது அதற்குற்ற குறையை அறிந்தோர்பால் ஆராயந்துணர்ந்து அதற்கிழைத்த குற்றத்திற்கு முறை செய்வான் பெறற்கரும் செல்வமாகிய தன் ஒரே மகனைத் தன் தேராழியின் அடியிற் கிடத்திக் கொன்ற செங்கோல் வேந்தனாகிய மனு நீதிச் சோழன் என்பானும் அருளாட்சி செய்த; பெரும்பெயர் புகார் - பெரிய புகழ் படைத்த பூம்புகார் என்னும் நகரங்காண்; என் பதி -யான் பிறந்து வளர்ந்த இடமாகும்; யான் அவ்வூர் ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருந்குடி மாசாத்து வாணிகன் மகனை ஆகி- அம்மூதூரின்கண் பிறரால் எட்டியும் சுட்டியும் பழி கூறப்படாத பழஞ்சிறப்பினோடு திகழும் வாணிகர் குடிகளுள் வைத்து வண்மை காரணமாக எழுந்த தனிப்பெரும் புகழ் திசையெலாம் சென்று திகழ்தலையுடைய கொழுங்குடிச் செல்வனாகிய பெருங் குடியிற் பிறந்தவனும் மாசாத்துவான் என்னும் இயற்பெயரோடு மன்னனால் வழங்கப்பட்ட இருதிதிக் கிழவன் என்னும் சிறப்புப் பெயரையு முடையவனும் ஆகிய வணிகனுடைய ஒரே மகனாகப் பிறந்துவைத்தும்; ஊழ்வினை துரப்ப வாழ்தல் வேண்டி - எமது பழவினை செலுத்துதலாலே எங்குலத் தொழில் செய்து நன்கு வாழ்தலை விரும்பி; சூழ்கழல் மன்னா - சுற்றிக் கட்டிய வீரக் கழலையுடைய மன்னனே; நின் நகர்ப் புகுந்து - உனது கோநகரமாகிய இம் மதுரையின்கண் புகுந்து; இங்கு என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி - இவ்விடத்தே அத் தொழிலுக்கு முதலாக என்னுடைய காற் சிலம்புகளுள் ஒன்றனை விற்றற்கு வந்து; நின்பால் கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி - உன்னாலே கொலைக்களத்தின்கண் வெட்டுண்டு ஒழிந்த கோவலன் என்பவனுடைய மனைவியாவேன் காண்; என் பெயர் கண்ணகி என்பது என - என்னுடைய பெயர் கண்ணகி என்பதுகாண் என்று கூறா நிற்ப, என்க.

(விளக்கம்) கண்ணை - கண்ணையுடையாய். யாரையோ என்புழி ஐ -சாரியை. ஓகாரம்: வினா. மடக்கொடியோய் என்றது - இளமகளே என்னுந்துணை. பாண்டியனின் பிழைக்கு அடிப்படையாக அமைந்த ஆராய்ச்சி யின்மையையே அடையாகப் புணர்த்துத் தேரா மன்னா என்ற சொற்றிறம் உணர்க. தேராத எனல் வேண்டிய எச்சம் ஈறுகெட்டது. மன்னா என்றது இகழ்ச்சி. செப்புவது என்றது அறிவிக்கற்பாலது என்பதுபட நின்றது. எள் - எள்ளல்; இகழ்ச்சி. எள்ளறு சிறப்பில் தீர்த்தோன், வியப்பத் தீர்த்தோன், புன்கண் தீர்த்தோன் என அனைத்தையும் தீர்த்தோனுக்கே இணைக்க. புள்ளுறு புன்கண் தீர்த்தோன் - சிபி என்னும் சோழவேந்தன். இதனை:

புள்ளுறு புன்கண் டீர்த்த வெள்வேற், சினங்கெழு தானைச் செம்பியன் மருக எனவும், புறவி னல்லல் சொல்லிய கறையடி. யானைவான் மருப்பெறிந்த வெண்கடைக், கோனிறை துலாஅம் புக்கோன் மருக எனவும், கொடுஞ்சிறைக் கூருகிர்ப் பருந்தினேறு குறித்தொரீஇத், தன்னகம் புக்க குறுநடைப் புறவின், தபுதி யஞ்சிச் சீரை புக்க, வரையா வீகை யுரவோன் மருக எனவும், நீயே புறவி னல்ல லன்றியும், பிறவும் பலவும் விடுத்தோன் மருகனை எனவும், (புறநா. 34,39,43,46) உடல் கலக்கற வரிந்து தசையிட்டு மொருவன், ஒருதுலைப் புறவொடொக்க நிறைபுக்க புகழும் எனவும்; (கலிங்க, இராச-93) புக்கான் மறா னிறையென்று சரணடைந்த வஞ்சப்புறா நிறைபுக்க புகழோன் எனவும், பிற சான்றோர் கூறுமாற்றானுமுணர்க. ஆவின் கண்ணீர் நெஞ்சு சுடத்தன் புதல்வனை ஆழியின் மடித்து முறைசெய்தோன் மனுநீதிச் சோழன் என்க. இவ் வரலாற்றினைத் திருத்தொண்டர் புராணத்தின்கண் விளக்கமாகக் காணலாம். அன்றியும் சால மறைந்தோம்பிச் சான்றவர் கைகரப்பக், காலை கழிந்ததன் பின்றையு-மேலைக் கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையு மூர்ந்தான், முறைமைக்கு மூப்பிளமை யில் (பழமொழி, 3.) எனவரும் வெண்பாவானும் உணர்க. பெரும்பெயர் - பெரிய புகழ். அவ்வூர் என்றது அத்தகைய செங்கோ லரசர் இருந்தினிதாண்ட மூதூர் என்பதுபட நின்றது. ஏசாச் சிறப்பு - பழி கூறப்படாத தொல் சிறப்பு. இசை - கொடையால் வரும் புகழ். மாசாத்து வாணிகன் என்றாள், அவன் புகழ் இம்மன்னன் செவிக்கும் எட்டி இருக்கும் என்னும் கருத்தால், என்னை? அவனுந்தான் மாக வானிகர் வண்கைய னாகலின் என்க. மகனை -ஐ: சாரியை. கோவலன் செல்வம் இல்லாமையால் ஈண்டு வந்தானல்லன்; தன் குல முறைப்படி தானே தொழில் செய்து இனிது வாழ்தல்வேண்டி ஈண்டு வந்தான் என்பது பட, மாசாத்து வாணிகன் மகனையாகியும் வாழ்தல் வேண்டி நின்நகர் புகுந்தான் என்றாள். ஆகியும் எனல் வேண்டிய உயர்வு சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. சூழ்ச்சி நின்கழலுக்கே உளது போலும். செங்கோன்மையில் அது சிறிதும் உடையை அல்லை என்பாள், சூழ்கழல் மன்னா என்றாள். அவன் விற்றற்குக் கொணர்ந்து அவன் மனைவியாகிய என்னுடைய காற்சிலம்பில் ஒன்றே என்று தேற்றுவாள், என் கால்சிலம்பு என்று விதந்தாள். நின்பால் என்றது செங்கோற் சிறப்புச் சிறிதுமில்லாத நின்னிடத்தே என்பதுபட நின்றது. நீ என்னை யார் என்று வினவினாற்போல என் கணவனை வினவச் சிறிதும் முயன்றிலை என்றிகழ்வாள், தேரா மன்னா! யான் அவன் மனைவி என்றாள். அவன் பெயரும் நீ அறியாய் ஆதலின் அவன் பெயர் இது என்பாள் கோவலன் மனைவி என்றாள். ஈண்டு இக்கண்ணகி வழக்குரைக்கின்ற இச்சொற்றிறம் எண்ணியெண்ணி வியக்கற்பாலது ஆதல் உணர்க. அரசன் மீண்டும் தன்னை வினவுதற் கிடனின்றிக் கூற வேண்டியவனைத்தும் எஞ்சாது கூறிவிட்டமை எண்ணுக.

மன்னன் கூற்று

64-65: பெண்ணணங்கே ........... கொற்றங்காணென

(இதன்பொருள்.) பெண்ணணங்கே கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று - அதுகேட்ட அரசன், நங்காய்! கள்வனைக் கொல்லுதல் செங்கோல் முறைமைக்கு ஒத்ததே அன்றோ? ஆதலால் என்னால் கள்வன் எனத் துணியப்பட்டவனை யான் கொன்றது கொடுங்கோல் அன்று; வெள்வேல் கொற்றம் காண் என - வெள்ளிய வேலாலியன்ற அரசியல் முறைமையே காண் என்று ஒருவாறு கூறா நிற்ப; என்க.

(விளக்கம்) இங்குப் பாண்டியன் கூறிய இச் சொற்கள் கண்ணகி கூற்றை ஆராய்ந்து அதற்கு இயையக் கூறாமல் வேறு வழியின்றி அப்பொழுதைக்குத் தன் வாய் தந்தவற்றைக் கூறியதாதல் உணர்க. கடுங்கோல் - வெம்மை விளைக்கும் கொடுங்கோன்மை. கொற்றம் - அரசு உரிமை.

கண்ணகி கோவலன் கள்வன் அல்லன் எனக் காட்டுதற்குக் கூறும் சான்று

65-67: ஒள்ளிழை ............ அரியேஎன

(இதன்பொருள்.) ஒள்ளிழை - அதுகேட்ட கண்ணகி; நல்திறம் படராக் கொற்கை வேந்தே - நல்ல நெறியிலே ஒழுகாத கொற்கையர் கோமானே! ஈதொன்று கேள்; என்கால் பொன் சிலம்பு மணியுடை அரி என - என்னுடைய காலில் அணியப் பெற்றதும் உன்னால் கைப்பற்றப்பட்டதுமாகிய பொன்னாலியன்ற அந்தச் சிலம்பு தன்னுட் பெய்யப்பட்ட மாணிக்கக் கற்களை உடையது காண் என்று கூறாநிற்ப; என்க.

(விளக்கம்) நின்னுடைய கொற்கையில் வாழ்வோர் உயிருடைய சிப்பிகளைக் கைப்பற்றிக் கொன்று அவற்றின் வயிற்றிலுள்ள முத்துக்களைக் கைக்கொள்ளுவர் அல்லரோ! அவர் வேந்தனாகிய நீயும் அங்ஙனமே செய்தனை என்பாள் மதுரை வேந்தே என்னாது நற்றிறம் படராக் கொற்கை வேந்தே என்றாள். சிலம்பினுள் மாணிக்கப் பரலிடுதல் அரியதொரு நிகழ்ச்சி ஆகலின் அதனையே சான்றாக எடுத்தோதினள்; பாண்டியன் அரண்மனைச் சிலம்பும் அங்ஙனமிராது என்னும் துணிவு பற்றி என்க.

பாண்டியன் கண்ணகி கூறிய சான்றினைப் பாராட்டுதல்

68-70: தேமொழி .......... முன்வைப்ப

(இதன்பொருள்.) தேம்மொழி உரைத்தது செவ்வை நன்மொழி - அதுகேட்ட பாண்டிய மன்னன் நன்று! நன்று! இனிய மொழியையுடைய இந்நங்கை கூறியது செவ்விய நன்மையையுடைய ஒரு மொழியே ஆகும்; யாம் உடைச்சிலம்பு முத்துடைஅரி - எம்முடைய சிலம்பு முத்துக்களைப் பரலாக இடப்பட்டதன்றோ எனத் தன்னுள் கருதிக் கண்ணகியை நன்குமதித்தவனாய் இச் சான்றின் வாயிலாய் உண்மையை உணர விதுப்புற்று; தருக என தந்து தான் முன்வைப்ப - தன் ஏவலரை நோக்கி அச் சிலம்பினை விரைந்து கொணருக என்று பணித்தமையால் அவர் கொணர்ந்து தந்த அச் சிலம்பினை வாங்கித் தானே அதனைக் கண்ணகி முன்னர் வைப்ப; என்க.

(விளக்கம்) இதன்கண் - உண்மை உணர்தற்குத் தகுதியான சான்று கூறிய கண்ணகியை இம்மன்னவன் தன்னுள் பெரிதும் பாராட்டி அச் சான்று கொண்டு உண்மை யுணர்தற்கு விதுப்புறுதல் அவனுடைய நடுவு நிலைமையை நன்கு விளக்குதல் உணர்க. உரைத்தது தேமொழி செவ்வை நன்மொழி என மாறி இவள் இப்பொழுது கூறியது இனியமொழி! செவ்விய அழகிய மொழி! எனப் பாராட்டினன் எனலுமாம். உண்மையை உணர்தற்கு அவன் ஆர்வம் உடையதனாலே தான் முன் வைப்ப என்ற இச் சிறு சொற்றொடரே விளக்குதல் உணர்க. அவனுடைய நெஞ்சின் விரைவு நம்மனோர்க்குத் தோன்ற அடிகளார் தருகென தந்து எனச் சொற்சுருங்கச் செய்யுள் செய்தமையுமுணர்க. இன்னும் இவ்வேந்தர் பெருமான் கண்ணகியின் சுடுசொற்களால் சிறிதேனும் சினவாது அமைதியுடையனாய் இருத்தல்தானும் இவன் செவி கைப்பச் சொற்பொறுக்கும் சிறப்புப் பண்புடைய வேந்தன் ஆதலையும் உணர்த்துகின்றது.

கண்ணகி சிலம்பை உடைத்தல்

71-72: கண்ணகி ............ மணியே

(இதன்பொருள்.) கண்ணகி அணிமணி கால் சிலம்பு உடைப்ப - அச் சிலம்பினைத் தன் முன்னர் வைக்கக் கண்டகண்ணகி தானும் விரைந்து தனது அணிகலனாகிய மணிப்பரலைத் தன்னகத்தே யுடைய அச்சிலம்பினைக் கையிலெடுத்து அரசன் முன்னிலையிலேயே பீடத்தில் புடைத்தலாலே; மணி மன்னவன் வாய்முதல் தெறித்தது - அச் சிலம்பினுள் பெய்யப்பட்டிருந்த மணி சிதறுண்டு அரசனுடைய முகத்தினும் பட்டு வீழ்ந்தது என்க.

(விளக்கம்) மணி காற்சிலம்பு-கால் ஈண்டு இடம். மணியைத் தன்னிடத்தே கொண்ட சிலம்பு என்க. இனி மணி பெய்யப் பெற்ற கால் சிலம்பு எனினுமாம். மணி: சாதி ஒருமை.

உண்மையுணர்ந்த பாண்டியன் நிலைமை

72-78: மணிகண்டு .............. வீழ்ந்தனனே

(இதன்பொருள்.) மன்னவன் மணி கண்டு - அப் பாண்டிய மன்னன் அவ்வாறு சிதறிய அம் மாணிக்கப் பரல்களைக் கண்ணுற்ற பொழுதே; தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன் - தனது வெண்கொற்றக் குடை ஒருபால் தாழ்ந்து வீழா நிற்பவும், பிடி தளர்ந்து தனது செங்கோல் ஒருபால் சாயா நிற்பவும்; பொன்செய் கொல்லன் தன் சொல் கேட்ட யானோ அரசன் யானே கள்வன் - பொற்றொழில் செய்யும் அவ் வஞ்சகப் பொய்க்கொல்லனுடைய சொல்லைக் கேட்டு அதனை உண்மையென்று துணிந்த அறிவிலியாகிய யானும் ஓர் அரசன் ஆவேனோ? வாய்மையே நோக்கின் இப்பொழுது யானே கோவலனுடைய சிலம்பினைக் கவர்ந்த கள்வன் ஆகின்றேன்; மன்பதை காக்குந் தென்புலம் காவல் என்முதல் பிழைத்தது - அந்தோ! மக்கள் தொகுதியைப் பாதுகாக்கின்ற இத் தென்றமிழ் நாட்டுச் செங்கோன்முறைமையின் சிறப்பு அறிவிலியாகிய என்னாலே பிழைபட்டொழிந்ததே; என் ஆயுள் கெடுக என - என் வாழ்நாள் இன்னே முடிவதாக! என்று கூறி, மயங்கி வீழ்ந்தனன் - அறிவு மயக்கமுற்று அரசு கட்டிலினின்றும் வீழ்ந்தனன்; என்க.

(விளக்கம்) தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன் என்றது குடை தாழவும் கோல் தளரவும் என்பதுபட நின்றது. கோவலனுக்குரிய சிலம்பைக் கவர்ந்து கொண்டமையின் யானே கள்வன் என்றான். தென்புலம் காவல் என்புழிக் காவல் செங்கோன்மை மேற்று. என்முதல் - என்னோடு. (என்னால்)

கோப்பெருந்தேவியின் செயல்

78-81: தென்னவன் .......... மடமொழி

(இதன்பொருள்.) தென்னவன் கோப்பெருந்தேவி - பாண்டியன் மருங்கிருந்த கோப்பெருந்தேவி தானும் அவன் மயங்கி வீழ்ந்தமை கண்டு உள்ளங்குலைந்து மெய் நடுங்கியவளாய்; மடமொழி - அவள் தானும் அந்தோ; கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்று - தந்தை தாய் முதலாயினோரை இழந்தார்க்கு அம்முறை சொல்லிப் பிறரைக் காட்டுதல் கூடும்; கணவனை இழந்த கற்புடை மகளிர்க்கு அவ்வாறு சொல்லிக் காட்டுதலும் இயலாமையின் அவ்விழப்பிற்கு ஈடாகக் காட்டுவதற்கு இவ்வுலகின்கண் யாதொரு பொருளும் இல்லையே! என் செய்தும்! என்று இரங்கியவளாய்; இணையடி தொழுது வீழ்ந்தனள் - தன் கணவனுடைய இரண்டாகிய திருவடிகளைக் கை கூப்பித் தொழுது வீழ்ந்து வணங்குவாளாயினள் என்க.

(விளக்கம்) தென்னவன் என்பது அவன் என்னும் சுட்டுப்பொருட்டாய் நின்றது. மருங்கிருந்த கோப்பெருந்தேவி என ஒருசொல் பெய்து கொள்க. கோப்பெருந்தேவி: பெயர். குலைந்தனள்: முற்றெச்சம். குலைந்து நடுங்கிக் காட்டுவது இல் என்று சொல்லிக் கணவன் அடிதொழுது அம் மடமொழி வீழ்ந்தனள் என மடமொழியையும் சுட்டுப்பெயராக்குக.

வெண்பா

1: அல்லவை .......... காண்

(இதன்பொருள்.) பொல்லா வடுவினையே செய்த வயவேந்தன் தேவி - பொல்லாங்குடைய பழியையே தருகின்ற தீவினையைச் செய்த வலிமை மிக்க பாண்டிய மன்னனின் பெருந்தேவியே கேள்; பல் அவையோர் - பல்வேறு அவைகளிடத்தும் சான்றோர்; அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம் என்னும் - தீவினைகளைச் செய்தவர்களுக்கு அறக்கடவுளே கூற்றமாய் நின்று ஒறுக்கும் என்று விதந்தெடுத்துக் கூறுகின்ற; சொல்லும் பழுது அன்று-செவி அறிவுறூஉவாகிய சொல்லும் பொய்யன்றுகாண்; வாய்மையே! கடுவினையேன் செய்வதூஉம் காண் - இனித் தீவினையாட்டியாகிய யான் செய்கின்ற செயலையும் காண்பாயாக; என்க.

(விளக்கம்) அல்லவை செய்தார்க்கு அறங்கூற்றம் என்பது (நான்மணிக்கடிகை. 83) அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம் என்பது மூதுரை. (27) அல்லவை - தீயவை. அவையோர் - அவையிடத்துச் சான்றோர். பழுது - பொய்ம்மை. வடு - பழி. வயவேந்தன் என்றது, வலிமை மட்டும் உடையன் அறமிலாதவன் என்பதுபட நின்றது. கடுவினையேன் என்றது, தான் எய்திய துயரங்களைக் கருதிக் கூறியவாறு. இது கண்ணகியின் கூற்று. பின்வருவன இரண்டும் கண்டோர் கூற்றென்க.

2: காவி .................. கூடாயினான்

(இதன்பொருள்.) காவி உகுநீரும் கையில் தனிச் சிலம்பும் ஆவி குடிபோன அவ்வடிவும் - கண்ணகியின் கருங்குவளை மலர் போன்ற கண்களினின்றும் சொரிகின்ற துன்பக் கண்ணீரையும், அவள் கையிலேந்தி வந்த ஒற்றைச் சிலம்பினையும் உயிர்நீத்த உடம்பு போன்ற அவள் தன் உருவத்தையும்; காடு எல்லாம் சூழ்ந்த கருங்குழலும் - காடு போன்று அடர்ந்து அவிழ்ந்து சரிநது அவள் உடம்பெல்லாம் சூழ்ந்த அவளது கரிய கூந்தலையும்; கண்டு அஞ்சி - கண்டு அச்சமுற்று; கூடலான் கூடாயினான் - அக் கூடல் நகரத்துக் கோமகன் வறுங்கூடாய்க் கிடந்தான்; பாவியேன் - தீவினையுடையேன் இந்நிகழ்ச்சியைக் கண்கூடாய்க் கண்டேன்; என்க.

(விளக்கம்) இவ்வெண்பா இந்நிகழ்ச்சியை நேரிற் கண்டாரொருவர் கூற்றாக்குக. இந்நிகழ்ச்சியைக் கண்கூடாகக் கண்டேன் என அவாய் நிலைபற்றி இசை எச்சமாகச் சில சொல் வருவித்து முடித்துக்கொள்க. காவி - கருங்குவளை மலர். கண்ணுக்கு உவமவாகு பெயர். உடம்பெல்லாம் சூழ்ந்த கருங்குழல். காடுபோலச் சூழ்ந்த கருங்குழல் எனத் தனித்தனி கூட்டுக. கூடாயினான் என்றது அமங்கலத்தை வேறு வாய்பாட்டால் கூறியவாறு.

3: மெய்யில் ............. உயிர்

(இதன்பொருள்.) காரிகை தன் மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் - கண்ணகியினுடைய உடம்பிற் படிந்த புழுதியையும் அவளது விரிந்து கிடந்த கரிய கூந்தலையும்; கையில் தனிச் சிலம்பும் கண்ணீரும் - அவளது கையிலேந்தி வந்த ஒற்றைச் சிலம்பையும் அவள் கண்கள் உகுத்த நீரையும்; கண்டளவே - கண்டபொழுதே; வையைக்கோன் - வையையாறு புரக்கும் பாண்டி நாட்டு மன்னன்; தோற்றான் - வழக்கின்கண் தோல்வியுற்றான்; சொல் செவியில் உண்டளவே - அக்கண்ணகி வழக்குரைத்த சொற்கள் தன் செவியிற் புகுந்தபொழுதே; உயிர் தோற்றான் - உயிரையும் நீத்தான்; என்க.

(விளக்கம்) இதனால், கண்ணகி தன்முன்னர் வந்துற்றபோதே பாண்டியன் நெஞ்சழிந்து போனமையின் அவள் வழக்குரைத்த பின்னரும், கள்வனைக் கோறல் கடுங் கோலன்று வெள்வேல் கொற்றங்காண்! என விளம்பியது வேறு வழியில்லாமையால் ஏதோ ஒன்றனைக் கூறியவாறாதலுணர்க. என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே என்ற பொழுதே அவன் உயிர் நிலைபெயர்ந்தது. உடைத்துழி மணிகண்டு உயிர் போகும் நிலையில் அவன் தன் தவற்றினைத் தானே அரற்றிக்கொண்டு விழுந்து உயிர் நீத்தான் என்றுணர்க. காட்சிக் காதையின்கண்,

செஞ்சிலம்பு எறிந்து தேவி முன்னர்
வஞ்சினஞ் சாற்றிய மாபெரும் பத்தினி

என (73-4) வருதலை யுட்கொண்டு போலும். அரசன் விழ்ந்த பின்னர்க் கண்ணகி தான் ஏந்திச்சென்ற ஒற்றைச் சிலம்பைத் தேவி முன்னே எறிந்தாள் என அரும்பத வுரையாசிரியர் ஈண்டுக் கூறினர்.

வழக்குரை காதை முற்றிற்று.
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 28, 2012, 07:27:47 AM
21. வஞ்சின மாலை

அஃதாவது பாண்டியன் அரசு கட்டிலில் மயங்கி வீழ்ந்த பின்னர்க் கோப்பெருந்தேவியை நோக்கிக் கண்ணகி, யானும் ஓர் பத்தினியே யாமாகில் ஓட்டேன் அரசோடு மதுரையையும் ஒழிப்பேன் என் பட்டிமையும் நீ காண்பாய் என்று வஞ்சினால் கூறிய தன்மையினைக் கூறும் பகுதி என்றவாறு.

கோவேந்தன் தேவி கொடுவினை யாட்டியேன்
யாவுந் தெரியா இயல்பினே னாயினும்
முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகற் காண்குறூஉம் பெற்றியகாண் நற்பகலே
வன்னி மரமும் மடைப்பளியுஞ் சான்றாக  5

முன்னிறுத்திக் காட்டிய மொய்குழ லாள் பொன்னிக்
கரையின் மணற்பாவை நின்கணவ னாமென்று
உரைசெய்த மாதரொடும் போகாள் திரைவந்து
அழியாது சூழ்போக வாங்குந்தி நின்ற
வரியா ரகலல்குல் மாதர் உரைசான்ற  10

மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன்
தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று
கல்நவில் தோளாயோ வென்னக் கடல்வந்து
முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக் கொண்டு
பொன்னங் கொடிபோலப் போதந்தாள் மன்னி  15

மணல்மலி பூங்கானல் வருகலன்கள் நோக்கிக்
கணவன்வரக் கல்லுருவம் நீத்தாள் இணையாய
மாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று
வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள் வேற்றொருவன்
நீள்நோக்கங் கண்டு நிறைமதி வாள்முகத்தைத்  20

தானோர் குரக்குமுக மாகென்று போன
கொழுநன் வரவே குரக்குமுக நீத்த
பழுமணி அல்குற்பூம் பாவை விழுமிய
பெண்ணறி வென்பது பேதைமைத்தே என்றுரைத்த
நுண்ணறிவி னோர்நோக்கம் நோக்காதே எண்ணிலேன் 25

வண்டல் அயர்விடத் தியானோர் மகள்பெற்றால்
ஒண்டொடி நீயோர் மகற்பெறில் கொண்ட
கொழுநன் அவளுக்கென் றியானுரைத்த மாற்றம்
கெழுமி அவளுரைப்பக் கேட்ட விழுமத்தால்
சிந்தைநோய் கூருந் திருவிலேற் கென்றெடுத்துத்  30

தந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய் முந்தியோர்
கோடிக் கலிங்கம் உடுத்துக் குழல்கட்டி
நீடித் தலையை வணங்கித் தலைசுமந்த
ஆடகப்பூம் பாவை அவள்போல்வார் நீடிய
மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்  35

பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில்
ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென்
பட்டிமையுங் காண்குறுவாய் நீயென்னா விட்டகலா
நான்மாடக் கூடல் மகளிரு மைந்தரும்
வானக் கடவளரும் மாதவருங் கேட்டீமின்  40

யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த
கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று
இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து  45

விட்டா ளெறிந்தாள் விளங்கிழையாள் வட்டித்த
நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப்
பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலத்து
மாலை எரியங்கி வானவன் தான்தோன்றி
மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள்  50

பாயெரி இந்தப் பதியூட்டப் பண்டேயோர்
ஏவ லுடையேனா லியார்பிழைப்பா ரீங்கென்னப்
பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய  55

பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே
நற்றேரான் கூடல் நகர்.

வெண்பா

பொற்பு வழுதியுந்தன் பூவையரும் மாளிகையும்
விற்பொலியுஞ் சேனையுமா வேழமுங்--கற்புண்ணத்
தீத்தரு வெங்கூடற் றெய்வக் கடவுளரும்
மாத்துவத் தான்மறைந்தார் மற்று.

உரை

வஞ்சினங் கூறும் கண்ணகி கோப்பெருந்தேவியை நோக்கிக் கூறுதல்

1-4: கோவேந்தன் ........... பெற்றியகாண்

(இதன்பொருள்.) கோவேந்தன் தேவி -கோப்பெருந்தேவியே கேள்; கொடுவினையாட்டியேன் - கொடிய தீவினையையுடையேனாகிய யான்; யாவும் தெரியா இயல்பினே னாயினும் - இப்பொழுது எவற்றையும் தெரிந்து கொள்ளமாட்டாத தன்மை உடையேனா யிருப்பினும்; பிறன் கேடு முன்பகல் செய்தான் - பிறன் ஒருவனுக்கு முன்பகலிலே தீங்கு செய்தான் ஒருவன்; தன் கேடு - அத் தீமையின் பயனாகத் தனக்கு வரும் தீமைகள் பலவும்; பின்பகல் காண்குறூஉம் பெற்றிய காண் - அச் செய்தவனால் அற்றைநாள் பின்பகலிலேயே, காணலுறுகின்ற தன்மையை உடையன காண் என்றாள்; என்க.

(விளக்கம்) தான் கணவனை இழந்து இங்ஙனம் துன்புறுதற்குக் காரணம் தான் முற்பிறப்பிலே செய்த தீவினையே ஆதல்வேண்டும் என்னுங் கருத்தால் கொடுவினையாட்டியேன் எனத் தனக்குப் பெயர் கூறிக்கொண்டனள். என்னை? நோயெல்லா நோய் செய்தார் மேலவாம் (குறள் - 320) என்பதுபற்றி அவ்வாறு கண்ணகி கூறிக்கொள்கின்றனள் என்க. தான் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு ஆளாகி அறிவு மயங்கி இருத்தலால் யான் இப்பொழுது யாவும் தெரியா இயல்பினேன் என்றாள். அங்ஙனமாயினும் நின் கணவனாகிய வேந்தன் செய்தது தீவினையே என்பதில் ஐயமில்லை ஆதலால் அத் தீவினை தானும் இப்பொழுதே தன் பயனை நுகர்விக்கும், பெருந்தீவினை ஆதலால் அவை இப்பொழுது வந்துறும், அதனை நீ அறிந்துகொள் என்று அறிவுறுத்தியவாறு. ஈண்டு - பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா, பிற்பகற் றாமே வரும் (குறள், 319); முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும் (கொன்றை வேந்தன்); முற்பகல் செய்வினை பிற்பக லுறுநரின் (பெருங்: 1. 56; 259) என்பன ஒப்பு நோக்கற்பாலன.

கண்ணகி எடுத்துக் காட்டிய புகார்நகரத்துப் பத்தினி மகளிர் எழுவர்

(1) 4-6: நற்பகலே ........... மொய்குழலாள்

(இதன்பொருள்.) நற்பகலே வன்னிமரமும் மடைப்பளியும் சான்று ஆக-பிறரெல்லாம் அறிந்து கொள்ளுதற்குக் காரணமான நல்ல பகற்பொழுதிலேயே சான்று ஆகாத அஃறிணைப் பொருள்களாகிய வன்னிமரமும் மடைப்பள்ளியும் தனக்குச் சான்று கூறும் பொருள்களாகும்படி; முன் நிறுத்திக் காட்டிய மொய்குழலாள் - மக்கள் முன்னர்க் கொணர்ந்து நிறுத்திக் காட்டிய அடர்ந்த கூந்தலை யுடையவளும்; என்க.

(விளக்கம்) மக்களெல்லாம் காண்பதற்குரிய பொழுது என்பாள் நற்பகல் என்றாள். சோழநாட்டிலிருந்த ஒரு கற்புடைய மங்கைக்கு வன்னிமரமும் மடைப்பள்ளியும் சான்று கூறிய வரலாற்றினைத் திருப்புறம்பயத்தும் திருமருகலிலும் இற்றைநாளினும் கூறப்படுகின்றது எனவும், அந்நிகழ்ச்சிக்குரிய அடையாளங்களும் அவ்விடங்களில் இருக்கின்றன எனவும், திருப்புறம்பயத்தில் கோயில் கொண்டருளிய இறைவனுக்குச் சாட்சிநாதர் என்று திருப்பெயருளது எனவும் சான்றோர் கூறுவர். இவ்வரலாறு திருவிளையாடற்புராணத்தும் கூறப்பட்டுள்ளது. திருத்தொண்டர் புராணத்தில் இந்நிகழ்ச்சி திருமருகலில் நிகழ்ந்ததாகச் சிறிது மாறுபாட்டுடன் கூறப்பட்டிருக்கின்றது.

(2) 6-10: பொன்னி .............. மாதர்

(இதன்பொருள்.) கரைப் பொன்னியின் - கரையையுடைய காவிரிப் பேரியாற்றின் நடுவண் சிலமகளிர் விளையாடும்பொழுது; மணற்பாவை நின் கணவன் ஆம் என்று உரைசெய்த - மணற்பாவை செய்து இந்தப் பாவை உன்னுடைய கணவன் ஆகும் என்று ஒருத்திக்கு ஏனைமகளிர் சுட்டிக்கூறி விளையாடா நிற்ப; மாதரொடும் போகான் - அப்பொழுது யாற்றின்கண் புனல் பெருகி வருதல் கண்டு அவ்விடத்தினின்றும் சென்ற அம் மகளிரொடு போகாதவளாய்த் தன் கணவனாகிய அம் மணற்பாவையோடு அவளொருத்தியும் தமியளாய் நின்றாளாக; திரைவந்து அழியாது சூழ்போக - அவளுடைய கற்பிற்கஞ்சி அவ்வியாற்றுநீர் அலையோடு வந்து அம் மணற்பாவையை அழியாமல் அவ்விடத்தை ஒதுக்கிப் பக்கங்களிலே அம் மணற் பாவையைச் சுற்றிப்போகா நிற்றலால்; ஆங்கு - அவ்விடத்தில் உண்டாகிய; உந்தி நின்ற - ஆற்றிடைக் குறையின்மேல் தன் கணவனாகிய அம் மணற் பாவைக்கும் தனக்கும் தீங்கு சிறிதும் இல்லாதபடி நின்ற; வரிஆர் அகல் அல்குல் மாதர் - வரி பொருந்திய அகன்ற அல்குலையுடைய மடந்தையும்; என்க.

(விளக்கம்) இஃதென் சொல்லிய வாறோவெனின்: கன்னி மகளிர் சிலர் காவிரியாற்றின் ஓர் இடத்தே மணற்பரப்பில் சிற்றிலிழைத்தும் சிறு வீடு கட்டியும் மணலால் பாவை செய்தும் விளையாடும்பொழுது ஒருத்தி மற்றொருத்தியை நோக்கி இம் மணற் பாவை உன் கணவன் ஆம் என்றாளாக, அவள் அதற்குடன்பட்டு விளையாடியபொழுது, ஆற்று நீர் பெருகி அவ்விடத்தே ஏறுதல்கண்ட மகளிரெல்லாம் விரைந்தோடிக் கரையில் ஏறினராக மணற்பாவையைக் கணவனாகக் கருதிய ஒருத்திமட்டும் அதனைக் கைவிட்டுப் போகத்துணியாளாய் அவ்விடத்தே நிற்பாளாயினள். அவளுடைய கற்புடைமைக்கு அஞ்சிய நீர் அவ்விடத்தை ஒதுக்கிப் பக்கங்களிலே சூழ்ந்து ஓடலாயிற்று. அதனால் அவ்வாற்றிடைக்குறையில் நின்று மணற்பாவையாகிய தன் கணவனைக் காப்பாற்றிய கற்புத்திண்மை யுடையவளும் என்றவாறு. உந்தி - ஆற்றிடைக்குறை. ஆங்கு உண்டான உந்தி என்க. கரைப்பொன்னி என மாறுக.

(3) 10-15: உரைசான்ற ........... போதந்தாள்

(இதன்பொருள்.) உரைசான்ற மன்னன் கரிகால் வளவன் மகள் - புகழ்மிக்க சோழமன்னனாகிய கரிகாலன் என்னும் திருமாவளவனுடைய மகள்; வஞ்சிக்கோன் தன்னைப் புனல்கொள்ள - தன் கணவனாகிய சேரமன்னனை நீராடும்பொழுது காவிரிப்பேரியாற்று நீர் கவர்ந்து கொள்ளாநிற்ப; தான் புனலின் பின்சென்று - தன் கணவனைக் காணாது அலமந்து அக் காவிரி நீரின் பின்னே போய்-கல்நவில் தோளாயோ என்ன - கடற்கரையின்கண் நின்று மலையையொத்த தோளையுடைய எம்பெருமானே! என்று பன்முறையும் கூவி அரற்றா நிற்ப; கடல்வந்து முன் நிறுத்திக் காட்ட - அவளது கற்புடைமைக்கு அஞ்சிய கடலானது அவனைக் கொணர்ந்துவந்து அவள் முன்னர் நிறுத்திக் காட்டுதலாலே; அவனைத் தழீஇக் கொண்டு பொன் அம் கொடிபோலப் போதந்தாள் - அக் கணவனைத் தழுவிக்கொண்டு பொன்னாலியன்ற பூங்கொடிபோல மீண்டு வந்தவளாகிய ஆதிமந்தியும்; என்க.

(விளக்கம்) உரை - புகழ், கரிகாலன் வெற்றிப் புகழை இந்திர விழவூர் எடுத்த காதையில் காண்க. கரிகாலன் மகள் ஆதிமந்தி என்னும் பெயருடையவள். வஞ்சிக்கோன் என்றது, இவள் கணவனாகிய சேரமன்னனை. இவன் பெயர் ஆட்டனத்தி என்பதாம். ஆதிமந்தியார் கழார் என்னும் ஊர் மருங்கே காவிரித்துறையில் தன் கணவனாகிய ஆட்டத்தியுடன் நீராடும் பொழுது அவனைக் காவிரி வெள்ளம் கவர்ந்துகொண்டது. ஆதிமந்தி அவனைக் காணாமல் கரை வழியாகத் தேடிச்சென்று கடற்கரையில் நின்று கல்நவில் தோளாயோ என்று கூவி அழைத்து அரற்றும்பொழுது கடல் ஆட்டனத்தியை அவள்முன் கொணர்ந்து நிறுத்தியது என்பர். ஆதிமந்தியின் வரலாற்றினை மள்ளர் குழீஇய விழவி னானும், மகளிர் தழீஇய துணங்கை யானும், யாண்டுங் காணேன் மாண்டக் கோனை யானுமோராடுகள மகளே யென்கைக், கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த, பீடுகெழு குருசிலு மோராடுகள மகனே (குறுந் -31) என்பதனானும் அகநானூற்றின்கண் (45, 76, 222, 336, 276, 396) செய்யுள்களினும் பரக்கக் காணலாம்.

(4) 15-17: மன்னி ......... நீத்தான்

(இதன்பொருள்.) மணல் பூங்கானல் மன்னி - மணல் மிகுந்த அழகிய கடற்கரைச் சோலையிடத்தே பொருளீட்டுதற்கு மரக்கலத்தில் தன் கணவன் சென்றானாக அப்பொழுதே அக் கானலின் கண் கல்லுருவமாகச் சமைந்திருந்து; வரு கலன்கள் நோக்கி - கரைநோக்கி வந்தெய்துகின்ற மரக்கலன்கள் தோறும் தன் கணவன் வரவினை நோக்கியிருந்து; கணவன்வரக் கல்உருவம் நீத்தாள் - பின்னொரு காலத்துத் தன் கணவன் மரக்கலத்தில் வந்திறங்கியபொழுது அக் கல்லுருவத்தை நீத்துப் பண்டை உருவம் பெற்றவளும்; என்க.

(விளக்கம்) கணவன் மரக்கலமேறிப் பொருளீட்டச் செல்ல அத்துறைமுகத்திலேயே தனது கற்பின் சிறப்பினால் தன்னைக் கல்லுருவமாகச் செய்து அவ்விடத்தேயிருந்து கணவன் மீண்டு வந்தெய்தியவுடன் அக் கல்லுருவத்தைக் கைவிட்டுப் பண்டைய உருவம் பெற்றாள் ஒரு பத்தினி என்க.

(5) 17-19: இணையாய ......... வேற்கண்ணாள்

(இதன்பொருள்.) இணையாய மாற்றாள் குழவி கிணற்றுவீழ - தன் குழந்தைக்கு ஒப்பான தன் மாற்றாளுடைய குழந்தை கிணற்றின்கண்விழுந்துவிட்டதாக அப்பொழுது மாற்றாள் வீட்டிலின்மையால் அப்பழி தன் மேலதாகும் என்று அஞ்சி; தன் குழவியும் கிணற்று வீழ்த்து - தனது குழந்தையையும் அக் கிணற்றினுள்ளே போகட்டாளாக அவள் கற்பின் சிறப்பினாலே இறந்தொழிந்த அக் குழந்தைகள் இரண்டும் உயிர்பெற்றுக் கிணற்றினின்றும் எழுந்து மேலே வருதல் கண்டு; ஏற்றுக்கொண்டு எடுத்த வேல் கண்ணாள் - அக் குழவிகளைத் தன் இரு கையிலும் வாங்கிக் கொண்டு வெளியிலெடுத்துக் கொணர்ந்த வேல்போலும் கண்ணையுடையவளும்; என்க.

(விளக்கம்) மாற்றாள் - தன் கணவனின் மற்றொரு மனைவி. இணையாய குழவி என்க. ஆண்டு முதலியவற்றால் ஒத்த குழவிகள் என்றவாறு. இணையாய மாற்றாள் என்பது மிகை. மாற்றாள் இல்லாத பொழுது அவள் குழவி கிணற்றில் வீழ அப் பழி தன்மேலதாம் என்று அஞ்சித் தன் குழவியையும் கிணற்றில் வீழ்த்த அவள் கற்பின் சிறப்பால் இரண்டு குழவியும் உயிர் பெற்று மேலெழுந்து வர அவற்றைக் கையால் ஏற்றுக் கொண்டு எடுத்தாள் என்க.

(6) 19-23: வேற்றொருவன் ...... பூம்பாவை

(இதன்பொருள்.) வேற்று ஒருவன் - தன் கணவன் வேற்று நாட்டிற்குச் சென்றிருந்தபொழுது ஏதிலான் ஒரு காமுகன்; தன் முகத்தின் அழகை; நீள்நோக்கம் கண்டு - நெடிது காமுற்று நோக்குகின்ற நோக்கத்தைப் பார்த்த வளவிலே; நிறைமதி வாள் முகத்தை - முழுத்திங்கள் போன்ற ஒளியுடைய அழகிய தன் முகத்தை; தான் ஓர் குரக்கு முகம் ஆக என்று - தானே தன் கற்பின் ஆற்றலால் ஒரு குரங்கின் முகம் ஆவதாக என்று தன்னுட் கருதி அங்ஙனமே யாக்கிக்கொண்டு; போன கொழுநன் வரவே - வேற்று நாட்டிற்குச் சென்ற தன் கணவன் வருமளவும் அக்குரங்கு முகத்தோடே இருந்து அவன் வந்தவுடன்; குரக்குமுகம் நீத்த - அக் குரங்குமுகம் ஒழித்துத் தனக்குரிய பழைய திங்கள்முகத்தைப் பெற்ற; பழுமணி அல்குல் பூம் பாவை - சிவந்த மாணிக்கத்தாலியன்ற மேகலையையுடைய திருமகள் போல்பவளும்; என்க.

(விளக்கம்) வேறொருவன் - அயலான் ஒருவன். நீள்போக்கம் - விடாமல் பார்க்கும் பார்வை. கொழுநன் வருமளவும் இருந்து எனவும், பண்டைய நிறைமதி வாள்முகத்தைப் பெற்ற எனவும் விரித்துக் கூறுக. பூம்பாவை - பூம்பாவை போல்பவள்.

(7) 23-34: விழுமிய ........... பாவை அவள்

(இதன்பொருள்.) விழுமிய தாய் - சிறந்த தன் தாயானவள்; தந்தைக்கு - தன் தந்தையை நோக்கி அன்புடையீர்; திருவிலேற்கு - முன்னை நல்வினை இல்லாத எனக்கு எனது பேதைப் பருவத்தே; யான் வண்டல் அயர்விடத்து - யான் என் தோழியருடன் விளையாடும் பொழுது என்தோழி ஒருத்திக்கு; பெண்ணறிவென்பது பேதைமைத்தே என்று உரைத்த நுண்ணறிவினோர் நோக்கம் நோக்காதே - பெண்ணறி வென்பது பேதையையுடையதேயாம் என்று தேற்றமாகக் கூறிவைத்த நுண்ணறிவுடைய சான்றோர் கருத்தினையும் கருதிப் பாராமல்; எண்ணிலேன் - பின்விளைவினையும் எண்ணிப் பார்த்திலேனாய்; ஒள் தொடியான் ஓர் மகள் பெற்றால் - ஏடீ தோழீ! யான் பிற்காலத்தே ஒரு மகளைப் பெற்றால்; நீ ஓர் மகன் பெறின் - அங்ஙனமே நீயும் ஒரு மகனைப் பெறுவாயானால் அவன்; அவளுக்குக் கொண்ட கொழுநன் - என்னுடைய மகளுக்கு நெஞ்சம்கொண்ட கணவன் ஆகுவன்காண்! இஃது என் உறுதிமொழி ஆகும்; என்று யான் உரைத்த மாற்றம் - என்று யான் அவளுக்குச் சொன்ன மொழியைத் தலைக்கீடாகக் கொண்டு அங்ஙனமே மகனைப் பெற்ற; அவள் கெழுமி உரைப்ப - அத் தோழி என்னை அணுகி அம்மொழியை எடுத்துக் கூறாநிற்ப; கேட்ட விழுமத்தால் - அச்செய்தியை யான் கேட்டமையால் உண்டான இடும்பை காரணமாக; சிந்தை நோய் கூரும் - என் நெஞ்சத்தில் துயரம் மிகுகின்றது கண்டீர்; என்று எடுத்து உரைப்பக் கேட்டாளாய் - என்று இங்ஙனம் தனது அறியாமையால் விளைந்த தவற்றினை எடுத்துக்கூற அச் செய்தியைக் கேட்டவளாய்; முந்தி - தன் தாயின் உறுதிமொழியை நிறைவேற்றுதற்குத் தானே முற்பட்டு; ஓர் கோடிக் கலிங்கம் உடுத்து - திருமணக் கூறையாக ஒரு புத்தாடையைத் தானே உடுத்துக்கொண்டு; குழல் கட்டி - கூந்தலையும் மணமகள் போலக் குழலாகக் கட்டி; நீடித் தலையை வணங்கி - மணப்பெண்போலே நெடிது தன் தலையைக் குனிந்துகொண்டு; தலை சுமந்த - தன் தாயினாலே குறிக்கப்பட்ட அவ்வயலாள் ஈன்ற ஆண் குழந்தையைக் கணவனாகக் கைப்பற்றி அவனைத் தன் தலையிலே சுமந்து கொணர்ந்த; ஆடகப் பூம்பாவை அவள் - பொன்னாலியன்ற திருமகள் போல்வாள் ஆகிய அவளும்; என்க.

(விளக்கம்) இஃது என்சொல்லிய வாறோவெனின்: ஒருத்தி தன் தாயானவள் தன் தந்தையை நோக்கி யான் பேதைப் பருவத்தே விளையாடும்பொழுது விளையாட்டாக என் தோழி ஒருத்திக்கு யான் பிற்காலத்தே மகளைப் பெற்றால் நீ பெறுகின்ற மகனுக்கு அவள் மனைவியாவாள்; இஃது உறுதியென்று கூறியிருந்தேன். நம் மகள் மணப்பருவம் எய்திய பின்னர், அத் தோழி இப்பொழுதுதான் ஒரு மகனைப் பெற்றாள். அவள் என்பால் வந்து அவ் வுறுதிமொழியையும் எனக்கு எடுத்துக்கூறி நினைவூட்டி விட்டாள். அது கருதி யான் வருந்துகின்றேன் என்று கூறினாளாக, அதனைக் கேட்ட அக்கற்புடைய மகள் யான் அச் சிறுவனையே கணவனாகக் கொள்வன் என்று துணிந்து அக் குழந்தையைக் கைப்பற்றித் தான் மணக்கோலம் பூண்டு அக் குழந்தையைத் தன் தலையிலே சுமந்துகொண்டு வந்து புகுந்தனள் என்பதாம்.

ஈண்டுக் கண்ணகியால் எடுத்துக்காட்டிய கற்புடை மகளிரின் வரலாற்றினைக் கீழ்வரும் செய்யுள்களினும் காணலாம். அவை வருமாறு :

கரிகாலன் பெருவளவன் மகள்கேள்வன் கடல் புக்கான்
திருவேயோ எனவழைத்துத் திரைக்கரத்தால் தரக்கொண்டாள்
வரைகேள்வன் கலநோக்கி வருமளவுங் கல்லானாள்
புரைதீரப் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே.
வன்னிமடைப் பளியோடு சான்றாக வரவழைத்தாள்
பன்னியகா விரிமணல்வாய்ப் பாவையை நுன்கேள்வனெனும்
கன்னியர்க ளொடும் போகாள் திரைகரையா வகைகாத்தாள்
பொன்னனையாள் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே.
கூவலிற்போய் மாற்றாள் குழவிவிழத் தன்குழவி
ஆவலின்வீழ்த் தேற்றெடுத்தாள் அயனோக்கம் வேறென்று
மேவினாள் குரக்குமுகம் வீடுடையோன் வரவிடுத்தாள்
பூவின்மேற் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே.
முற்றாத முலையிருவர் முத்துவண்ட லயர்விடத்துப்
பெற்றாற்றா மாண்பெண் பிறர்மணஞ்செய் யாவண்ணம்
சொற்றார்கள் பிறந்தபெண் ணாயகனைத் தலைசுமந்தாள்
பொற்றாவி பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே.

(இவை - பட்டினத்துப் பிள்ளையார் புராணம் - பூம்புகார்ச் சருக்கத்திற் கண்டவை.)

கண்ணகியின் சூள்மொழி

34-38: போல்வார் நீடிய .......... விட்டகலா

(இதன்பொருள்.) போல்வார் மட்டு ஆர் குழலார் பிறந்த நீடிய பதிப் பிறந்தேன் -ஆகிய இப் பத்தினி மகளிரும் இவர் போல்வாரும் தேன்பொருந்திய கூந்தலையுடைய பத்தினிமகளிர் பலர் பிறந்த நெடிய பூம்புகார் நகரத்தே பிறந்த; யானும் ஓர் பத்தினியே பட்டாங்கு ஆம் ஆகில் -யானும் அவர்போன்று ஒரு பத்தினியே என்பது உண்மையாக இருக்குமானால்; ஒட்டேன் - இனிதிருக்க விடேன்; அரசோடு மதுரையும் ஒழிப்பேன் - இக்கொடுங்கோல் மன்னனோடு அவனிருந்த இம் மதுரை நகரத்தையும் அழிப்பேன்; என் பட்டிமையும் நீ காண்குறுவாய் - என்னுடைய பட்டிமைச் செயலையும் இனி நீ காண்பாய் காண்; என்னா - என்றுகூறி; விட்டு அகலா - அவ்விடத்தினின்றும் நீங்கி அரண்மனை வாயிலில் வந்துநின்று; என்க.

(விளக்கம்) ஈண்டுக் கூறப்பட்டவரும் இவர் போல்வார் பலரும் பிறந்தபதி என்க. பிறந்தேன்: முற்றெச்சம். பிறந்த யானும் எனவும் பட்டாங்கு ஆமாகில் எனவும் இயைத்துக்கொள்க. இனிதிருக்க என ஒருசொல் வருவித்துக்கொள்க. மதுரையும் என்புழி உம்மை அரசனை ஒழித்ததன்றி மதுரையையும் ஒழிப்பேன் என எச்சப் பொருளுடையது. பட்டிமை - பட்டித்தன்மை. அஃதாவது - அடங்காச் செயல்.

கண்ணகியின் பட்டிமை

39-46: நான்மாட ........... விட்டாளெறிந்தாள்

(இதன்பொருள்.) நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும் கேட்டீ மின் - நான்மாடக் கூடல் என்னும் இம் மதுரைமா நகரத்தில் வாழ்கின்ற மகளிரும் ஆடவரும் கேளுங்கள்; இங்குள்ள மாதவரும் பெரிய தவத்தோராகிய அறவோரும்! கேளுங்கள்! வானக் கடவுளரும் கேட்டீமின் - வானத்தே சுடரொடு திரிதரும் முனிவரும் கேளுங்கள்; யான் அமர் காதலன் தன்னை தவறு இழைத்த கோநகர் சீறினேன் - யான் என்னால் விரும்பப்பட்ட என்னுடைய கணவனுக்குத் தவறு செய்த கொடுங்கோன் மன்னனையும் அவன் ஆட்சிசெய்த இந்நகரத்தையும் சினந்து ஒறுக்கின்றேன் ஆதலால்; யான் குற்றமிலேன் என்று - யான் தவறுடையேன் அல்லேன் அறிந்து கொள்மின் என்று கூறி; கையால் இடமுலை திருகி மதுரை வலமுறை மும்முறை வாரா - தனது கையாலே இடப்பக்கத்துக் கொங்கையைப் பற்றித் திருகிப் பிய்த்துக் கையில் எடுத்துக்கொண்டு அம் மதுரை நகரத்தை மூன்றுமுறை வலஞ்சுற்றி விரைந்து வந்து; அலமந்து மட்டு ஆர் மறுகில் மணிமுலையை வட்டித்து விட்டாள் எறிந்தாள் - மனஞ்சுழன்று வண்டினம் தேன் பருகுதற்குக் காரணமான அவ் வாசமறுகினிடத்தே நின்று கையிற் கொண்டுள்ள அழகிய அக்கொங்கையைச் சீற்றத்துடன் சுழற்றி விட்டெறிந்தாள்; என்க.

(விளக்கம்) நான்மாடங்கள் என்பன: திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் என்பர்; கண்ணி, கரியமால், காளி, ஆலவாய் என்பனவுமாம். வானக் கடவுளர் என்றது தேவமுனிவர்களை. வானவர் எனினுமாம். மாதவர் என்றது அம் மதுரைக்கண் இருந்த துறவோரை. தவறிழைத்த கோவையும் நகரையும் சீறினேன். ஆதலால் யான் குற்றமிலேன் என்றவாறு. மட்டு - தேன். மணி - அழகு. வட்டித்தல் - சுழற்றுதல். விட்டாள் எறிந்தாள்: ஒருசொல்.

கண்ணகி முன்னர்த் தீக்கடவுள் தோன்றிப் பணி வினாதல்

46-52: விளங்கிழையாள் ......... ஈங்கென்ன

(இதன்பொருள்.) விளங்கிழையாள் - கண்ணகி; வட்டித்த - சீற்றத்தோடு வட்டித் தெறிந்தமையால்; எரி மாலை அங்கி வானவன் - தான் பற்றிய பொருளை எரிக்கின்ற தன்மையை யுடைய நெருப்புக் கடவுள்; நீலநிறத்து செக்கர் வார் திரிசடை பால் புரைவெள் எயிற்று பார்ப்பனக் கோலத்து - நீலநிறத்தினையும் சிவந்த நீண்ட முறுக்குண்ட சடையினையும் பால்போன்ற வெள்ளிய பற்களையும் உடைய ஒரு பார்ப்பன வடிவத்தோடு; தான் தோன்றி - தானே எதிர்வந்து; மாபத்தினி - சிறந்த பத்தினிக் கடவுளே! மாண நின்னைப் பிழைத்த நாள் - பெரிதும் நினக்குத் தவறிழைத்த நாளிலே; இந்தப் பதி - இந்த மாமதுரையை; பாய் எரி ஊட்ட; பரவுகின்ற தீயை ஊட்டும் படி; பண்டே ஓர் ஏவல் உடையேனால் - முன்னரே யான் ஓர் ஏவலைப் பெற்றிருக்கின்றேன் ஆதலால் அங்ஙனம் தீயூட்டுங்கால்; ஈங்குப் பிழைப்பார் யார் என்ன - இந்நகரத்தின்கண் அத் தீயில் படாமல் உய்வதற்குரியார் யார்யார் அவரை அறிவித்தருளுக என்று இரப்ப; என்க.

(விளக்கம்) வட்டித்ததனால் அவள் சீற்றத்திற்கஞ்சி அங்கியங் கடவுள் தானே எதிர்வந்து தோன்றி என்க. எரிமாலை அங்கி என மாறுக. மாலை - தன்மை. அங்கி - நெருப்பு. மாண - பெரிதாக என்றவாறு. திண்ணிதாக என்பாருமுளர். யார் என்னும் வினா, யார் யார் என அறிவித்தருளுக என்பதுபட நின்றது. பண்டு - அப் பதி எரியூட்ட ஏவல் பெற்றமை கட்டுரை காதைக்கண் காணப்படும்.

கண்ணகியின் விடை

53-57: பார்ப்பார் ........... கூடல்நகர்

(இதன்பொருள்.) பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப் பெண்டிர் மூத்தோர் குழவி எனும் இவரைக் கைவிட்டு - தீக்கடவுளே! இந்த நகரத்தே வாழுகின்ற பார்ப்பனரும் அறவோரும் ஆக்களும் கற்புடை மகளிரும் முதுமையுடையோரும் குழந்தைகளும் ஆகிய இவரிருப்பிடங்களை அழியாமல் விட்டு; தீத்திறத்தார் பக்கமே சேர்க என்று - தீவினையாளர் பகுதிகளில் மட்டுமே எய்துவாயாக என்று; காய்த்திய - அந்நகரினைச் சுடுதற்கு; பொற்றொடி ஏவ - அக்கண்ணகி அந்நெருப்புக் கடவுளை ஏவிய அப்பொழுதே; நல்தேரான் கூடல் நகர் - அழகிய தேரையுடைய பாண்டிய மன்னனுடைய கூடல் என்னும் அம் மதுரை நகரத்தை; அழல் மண்டிற்று - தீப்பிழம்பு பற்றி அழித்தது; என்க.

(விளக்கம்) பார்ப்பார் அறவோர் பசு எனத் திணைவிரவி எண்ணி இவரை என உயர்திணையான் முடிந்தது. தீத்திறத்தார் - தீவினையாளர். காய்த்திய - செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். சுடுதற்கு என்றவாறு. பொற்றொடி : கண்ணகி; (அன்மொழித் தொகை.)

வெண்பா

பொற்பு வழுதியும் ............ மற்று

(இதன்பொருள்.) பொற்பு வழுதியும் பூவையரும் மாளிகையும் வில்பொலிவும் சேனையும் மாவேழமும் கற்பு உண்ண - பொலிவுடைய பாண்டியனும் அவனுடைய பெண்டிரும் மாளிகைகளும் வில்லினாலே பொலிவுறு காலாட்படையும் குதிரைப் படையும் யானைப்படையும் ஆகிய இவற்றை யெல்லாம் கண்ணகித் தெய்வத்தின் கற்புத்தீ உண்ணா நிற்ப; தீத்தரு வெம் கூடல் - அக்கினிக் கடவுள் தருகின்ற வெப்பத்தையுடைய அக் கூடல் நகரத்தினின்றும்; தெய்வக் கடவுளரும் - தெய்வங்களும் முனிவர்களும்; மாத்துவத்தால் மறைந்தார் - தம்முடைய சிறப்புத் தன்மையால் அந்நகரத்தினின்றும் மறைந்து போயினார்.

(விளக்கம்) இவ்வெண்பா பொருட் சிறப்பும் சொல்லழகும் பிறவும் இல்லாத வெண்பாவாகக் காணப்படுதலானும், இது பழைய ஏட்டுப் படிவங்கள் சிலவற்றில் காணப்படவில்லை என்பதனானும் இதனை யாரோ எழுதி இறுதியின்கண் சேர்த்துள்ளார் என்று அறிஞர் கூறுகின்றனர்.

வஞ்சினமாலை முற்றிற்று.
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 28, 2012, 07:31:04 AM
22. அழற்படு காதை

அஃதாவது - மதுரை நகரத்தைக் கண்ணகி பணித்தவாறே பார்ப்பார் முதலிய நல்லோரைக் கைவிட்டுத் தீயோர் மருங்கிலே தீப்பற்றி எரிதலும் அப்பொழுது அந்நகரத்தின்கண் நிகழ்ந்த நிகழ்ச்சிகளும் கூறுகின்ற பகுதி என்றவாறு.

ஏவல் தெய்வத் தெரிமுகம் திறந்தது
காவல் தெய்வங் கடைமுகம் அடைத்தன
அரைசர் பெருமான் அடுபோர்ச் செழியன்
வளைகோல் இழுக்கத் துயிராணி கொடுத்தாங்கு
இருநில மடந்தைக்குச் செங்கோல் காட்டப்  5

புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சியது அறியாது
ஆசான் பெருங்கணி அறக்களத்து அந்தணர்
காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு
கோயில் மாக்களும் குறுந்தொடி மகளிரும்  10

ஓவியச் சுற்றத் துரையவிந் திருப்பக்
காழோர் வாதுவர் கடுந்தே ரூருநர்
வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து
கோமகன் கோயிற் கொற்ற வாயில்
தீமுகங் கண்டு தாமிடை கொள்ள   15

நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிரொளித்
(தண்கதிர் மதியத் தன்ன மேனியன்
ஒண்கதிர் நித்திலம் பூணொடு புனைந்து
வெண்ணிறத் தாமரை அறுகை நந்தியென்று
இன்னவை முடித்த நன்னிறச் சென்னியன்  20

நுரையென விரிந்த நுண்பூங் கலிங்கம்
புலரா துடுத்த உடையினன் மலரா
வட்டிகை இளம்பொரி வன்னிகைச் சந்தனம்
கொட்டமோ டரைத்துக் கொண்ட மார்பினன்
தேனும் பாலும் கட்டியும் பெட்பச்   25

சேர்வன பெறூஉந் தீம்புகை மடையினன்
தீர்த்தக் கரையும் தேவர் கோட்டமும்
ஓத்தின் சாலையும் ஒருங்குடன் நின்று
பிற்பகற் பொழுதிற் பேணினன் ஊர்வோன்
நன்பகல் வரவடி யூன்றிய காலினன்  30

விரிகுடை தண்டே குண்டிகை காட்டம்
பிரியாத் தருப்பை பிடித்த கையினன்
நாவினும் மார்பினும் நவின்ற நூலினன்)
முத்தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ
வேத முதல்வன் வேள்விக் கருவியோடு  35

ஆதிப் பூதத்து அதிபதிக் கடவுளும்
(வென்றி வெங்கதிர் புரையும் மேனியன்
குன்றா மணிபுனை பூணினன் பூணொடு
முடிமுதற் கலன்கள் பூண்டனன் முடியொடு
சண்பகம் கருவிளை செங்கூ தாளம்  40

தண்கமழ் பூநீர்ச் சாதியோடு இனையவை
கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும்
ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன்
அங்குலி கையறிந்து அஞ்சுமகன் விரித்த
குங்கும வருணங் கொண்ட மார்பினன்  45

பொங்கொளி யரத்தப் பூம்பட் டுடையினன்
முகிழ்த்தகைச்
சாலி அயினி பொற்கலத் தேந்தி
ஏலு நற்சுவை இயல்புளிக் கொணர்ந்து
வெம்மையிற் கொள்ளும் மடையினன் செம்மையில்) 50

பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன்
ஆழ்கடல் ஞால மாள்வோன் தன்னின்
முரைசொடு வெண்குடை கவரி நெடுங்கொடி
உரைசா லங்குசம் வடிவேல் வடிகயிறு
எனவிவை பிடித்த கையின னாகி   55

எண்ணருஞ் சிறப்பின் மன்னரை யோட்டி
மன்ணகம் கொண்டு செங்கோல் ஓச்சிக்
கொடுந்தொழில் கடிந்து கொற்றங் கொண்டு
நடும்புகழ் வளர்த்து நானிலம் புரக்கும்
(உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன  60

அரைச பூதத்து அருந்திறற் கடவுளும்
செந்நிறப் பசும்பொன் புரையும் மேனியன்
மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர்
அரைசுமுடி யொழிய அமைத்த பூணினன்
வாணிக மரபின் நீள்நிலம் ஓம்பி   65

நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன்
உரைசால் பொன்னிறங் கொண்ட உடையினன்
வெட்சி தாழை கட்கமழ் ஆம்பல்
சேட னெய்தல் பூளை மருதம்
கூட முடித்த சென்னியன் நீடொளிப்  70

பொன்னென விரிந்த நன்னிறச் சாந்தம்
தன்னொடு புனைந்த மின்னிற மார்பினன்
கொள்ளும் பயறும் துவரையும் உழுந்தும்
நன்னியம் பலவும் நயந்துடன் அளைஇக்
கொள்ளெனக் கொள்ளும் மடையினன் புடைதரு  75

நெல்லுடைக் களனே புள்ளுடைக் கழனி
வாணிகப் பீடிகை நீள்நிழற் காஞ்சிப்
பாணிகைக் கொண்டு முற்பகற் பொழுதில்
உள்மகிழ்ந் துண்ணு வோனே அவனே
நாஞ்சிலம் படையும் வாய்ந்துறை துலாமுஞ்  80

சூழொளித் தாலு மியாழும் ஏந்தி
விலைந்துபத மிகுந்து விருந்துபதம் தந்து
மலையவும் கடலவு மரும்பலம் கொணர்ந்து
விலைய வாக வேண்டுநர்க் களித்தாங்கு)
உழவுதொழி லுதவும் பழுதில் வாழ்க்கைக்  85

கிழவன் என்போன் கிளரொளிச் சென்னியின்
இளம்பிறை சூடிய இறையவன் வடிவினோர்
விளங்கொளிப் பூத வியன்பெருங் கடவுளும்
(கருவிளை புரையு மேனிய னரியொடு
வெள்ளி புனைந்த பூணினன் தெள்ளொளிக்  90

காழகம் செறிந்த உடையினன் காழகில்
சாந்து புலர்ந்தகன்ற மார்பினன் ஏந்திய
கோட்டினும் கொடியினும் நீரினும் நிலத்தினும்
காட்டிய பூவிற் கலந்த பித்தையன்
கம்மியர் செய்வினைக் கலப்பை ஏந்திச்  95

செம்மையின் வரூஉஞ் சிறப்புப் பொருந்தி)
மண்ணுறு திருமணி புரையு மேனியன்
ஒண்ணிறக் காழகஞ் சேர்ந்த உடையினன்
ஆடற் கமைந்த அவற்றொடு பொருந்திப்
பாடற் கமைந்த பலதுறை போகிக்   100

கலிகெழு கூடற் பலிபெறு பூதத்
தலைவ னென்போன் தானுந் தோன்றிக்
கோமுறை பிழைத்த நாளி லிந்நகர்
தீமுறை உண்பதோர் திறனுண் டென்ப
தாமுறை யாக அறிந்தன மாதலின்   105

யாமுறை போவ தியல்பன் றோவெனக்
கொங்கை குறித்த கொற்ற நங்கைமுன்
நாற்பாற் பூதமும் பாற்பாற் பெயரக்
கூல மறுகும் கொடித்தேர் வீதியும்
பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும்  110

(உரக்குரங்கு உயர்த்த ஒண்சிலை உரவோன்
காவெரி யூட்டிய நாள்போற் கலங்க
அறவோர் மருங்கின் அழற்கொடி விடாது
மறவோர் சேரி மயங்கெரி மண்டக்
கறவையும் கன்றும் கனலெரி சேரா   115

அறவை யாயர் அகன்றெரு அடைந்தன
மறவெங் களிறும் மடப்பிடி நிரைகளும்
விரைபரிக் குதிரையும் புறமதிற் பெயர்ந்தன
சாந்தந் தோய்ந்த ஏந்திள வனமுலை
மைத்தடங் கண்ணார் மைந்தர் தம்முடன்  120

செப்புவா யவிழ்ந்த தேம்பொதி நறுவிரை
நறுமல ரவிழ்ந்த நாறிரு முச்சித்
துறுமலர்ப் பிணையல் சொரிந்த பூந்துகள்
குங்குமம் எழுதிய கொங்கை முன்றில்
பைங்கா ழாரம் பரிந்தன பரந்த   125

தூமென் சேக்கைத் துனிப்பதம் பாராக்
காமக் கள்ளாட் டடங்கினர் மயங்கத்
திதலை அல்குல் தேங்கமழ் குழலியர்
குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வரொடு
பஞ்சியா ரமளியில் துஞ்சுதுயில் எடுப்பி  130

வால்நரைக் கூந்தல் மகளிரொடு போத
வருவிருந் தோம்பி மனையற முட்டாப்
பெருமனைக் கிழத்தியர் பெருமகிழ் வெய்தி
இலங்குபூண் மார்பிற் கணவனை இழந்து
சிலம்பின் வென்ற சேயிழை நங்கை  135

கொங்கைப் பூசல் கொடிதோ வன்றெனப்
பொங்கெரி வானவன் தொழுதனர் ஏத்தினர்
எண்ணான் கிரட்டி இருங்கலை பயின்ற
பண்ணியல் மடந்தையர் பயங்கெழு வீதித்
தண்ணுமை முழவம் தாழ்தரு தீங்குழல்  140

பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்ப் பாணியொடு
நாடக மடந்தைய ராடரங் கிழந்தாங்கு
எந்நாட் டாள்கொல் யார்மகள் கொல்லோ
இந்நாட் டிவ்வூர் இறைவனை யிழந்து
தேரா மன்னனைச் சிலம்பின் வென்றிவ்  145

ஊர்தீ யூட்டிய ஒருமக ளென்ன
அந்தி விழவும் ஆரண ஓதையும்
செந்தீ வேட்டலுந் தெய்வம் பரவலும்
மனைவிளக் குறுத்தலும் மாலை அயர்தலும்
வழங்குகுரன் முரசமு மடிந்த மாநகர்க்  150

காதலற் கெடுத்த நோயொ டுளங்கனன்று
ஊதுலைக் குருகின் உயிர்த்தன ளுயிர்த்து
மறுகிடை மறுகுங் கவலையிற் கவலும்
இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும்
ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன்   155
கொந்தழல் வெம்மைக் கூரெரி பொறாஅள்
வந்து தோன்றினள் மதுராபதியென்.

வெண்பா

மாமகளும் நாமகளும் மாமயிடற் செற்றுகந்த
கோமகளும் தாம்படைத்த கொற்றத்தாள்- நாம
முதிரா முலைகுறைத்தாள் முன்னரே வந்தாள்  160
மதுரா பதியென்னு மாது.

உரை

கோப்பெருந்தேவியின் செயல்

1-7: ஏவல் ................ அறியாது

(இதன்பொருள்.) ஏவல் தெய்வத்து எரிமுகம் திறந்தது - மதுரையை எரியூட்டுக! எனப் பண்டும் அற்றைநாளும் ஏவல் பெற்றுள்ள அத் தீக் கடவுளின் எரிக்கும்கூறு வெளிப்பட்டு ஆங்காங்குத் தீப்பிழம்பு தோன்றிற்று; காவல் தெய்வம் கடை முகம் அடைத்தன - தொன்றுதொட்டு அந்த நகரத்தைக் காவல் செய்துவந்த தெய்வங்கள் அத் தொழிலைச் செய்யாது தம்முடைய திருக்கோயிற் கதவங்களை அடைத்துக் கொண்டன; அரைசர் பெருமான் அடுபோர்ச் செழியன் - மன்னர் மன்னனும் பகைவரை வெல்லும் போர்த்திறம் உடையவனும் ஆகிய பாண்டியன் நெடுஞ்செழியன்; கோல்வளை இழுக்கத்து உயிர் ஆணி கொடுத்து ஆங்கு இருநில மடந்தைக்கு செங்கோல் காட்ட - வளையாத தனது செங்கோல் கோவலன் திறத்திலே வளைந்து கோணிய இடத்தை நிமிர்த்துதற் பொருட்டுத் தனது உயிராகிய ஆணியை வழங்கி அப்பொழுதே அதனை நிமிர்த்துப் பெரிய நிலமகளுக்குப் பண்டுபோலச் செங்கோலாக்கிக் காட்டுதற்கு; புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சியது அறியாது - குற்றந்தீர்ந்த கற்பினையுடைய பெருந்தேவியோடு தான் வீற்றிருந்த அரியணையின்மீதே உயிர் துறந்தமை அறியமாட்டாமல்; என்க.

(விளக்கம்) ஏவல் தெய்வம்-தீக்கடவுள். எரிமுகம் திறத்தலாவது - தீப்பற்றிக் கொழுந்துவிட்டு ஒளிர்வது. காவல் தெய்வம் - அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் பால்வேறு தெரிந்த வகுப்பினர்க்கும் உரிய நால்வேறு வகைப் பூதங்கள். இனி, இந்திரன், இயமன், வருணன், சோமன் என்பாருமுளர். கடைமுகம் அடைத்தன என்றது, காவாதொழிந்தன என்றவாறு. அரைசர் : போலி. செழியன் தன் செங்கோல் வளைந்த இழுக்கத்திற்குத் தனது உயிராகிய ஆதாரத்தைக் கொடுத்து நிமிர்த்து நிலமகளுக்கு அதனைச் செங்கோலாக்கிக் காட்ட என்க. அவள் புலவாமைப் பொருட்டுக் காட்டியவாறு. மன்னவன் மயங்கி வீழ்தலும் அவன் இணையடி தொழுது வீழ்ந்து வணங்கிய கோப்பெருந்தேவி அவன் அடிவருடி உயிர்நீத்தமை ஈண்டுப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் செழியன் துஞ்சினன் என்பதனால் குறிப்பாகவும் பின்னர்க் காட்சிக்காதையில் (80) தயங்கிணர் ........ (84) மாய்ந்தனள் என வெளிப்படையாகவும் உணர்த்தப்பட்டது. அரைசு கட்டில் - அரியணை. துஞ்சியது - இறந்தது.

அரசியல்சுற்றத்தார் செயல்

8-11: ஆசான் ........... இருப்ப

(இதன்பொருள்.) ஆசான் பெருங்கணி அறக்களத்து அந்தணர் காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு - ஆசிரியனும் பெரிய காலக் கணிவரும் அறக்களத் தலைவர்களும் திருமந்திர ஓலை எழுதுவோரும் ஆகிய இவரோடு; கோயில் மாக்களும் - அரண்மனை அகப்பரிசாரகரும்; குறுந்தொடி மகளிரும் - கோப்பெருந்தேவியைச் சார்ந்த குறிய தொடி யணிந்த மகளிரும் ஆகிய எல்லாரும்; ஓவியச் சுற்றத்து உரை அவிந்து இருப்ப - திகைப்புற்று ஓவியமாக வரையப் பெற்ற அரசியல் சுற்றத்தாரைப் போல வாய்வாளாது செயலறவு கொண்டிராநிற்ப; என்க.

(விளக்கம்) ஆசான் - மன்னனின் நல்லாசிரியன். பெருங்கணி - கணிவர்தலைவன். (கணிவர் -வானநூல் வல்லுநராய்க் காலத்தைக் கணித்தறிவோர்). காவிதி - காவிதிப் பட்டம் பெற்றவர். இவர் தாழ்விலாச் செல்வர் என்க. வரிஇலார் என்பது அரும்பதவுரை. அறக்களம் - அறங்கூறவையம். ஓவியச் சுற்றம் - அரசன் நாளோ லக்கத்தை ஓவியமாக வரைந்தவிடத்து அதன்கண் ஓவியமாக அமைந்த சுற்றம் போல என்க. இவரெல்லாம் கண்ணகியின் சீற்றத்தையும் மன்னனும் பெருந்தேவியும் மயங்கி வீழ்ந்தமையையும் கண்கூடாகக் கண்டமையால் திகைப்புற்று இங்ஙனமிருந்தனர் என்க.

இதுவுமது

12-15 : காழோர் ............. கொள்ள

(இதன்பொருள்.) காழோர் வாதுவர் கடுந்தேர் ஊருநர் வாய் வாள் மறவர் மயங்கினர் மலிந்து - பரிக்கோலையுடைய யானைப் பாகரும் குதிரைப் பாகரும் கடிதாகத் தேரினைச் செலுத்தவல்ல தேர்ப்பாகரும் வெற்றி வாய்த்தலையுடைய வாட்படை மறவரும் விரவி மிகுந்து; கோமகன் கோயில் கொற்றவாயில் தீமுகம் கண்டு - அரசனுடைய அரண்மனையினது வெற்றியையுடைய வாயிலின்கண் பற்றி எரியும் தீப்பிழம்பினைக் கண்டு; தாம் மிடை கொள்ள - நிகழ்ச்சி இன்னதென்று அறியாமையால் வேறு காரணத்தால் தீப்பற்றிய தென்று கருதி அதனை அவித்தற்குத் தாமே முற்பட்டு அரண்மனை முன்றிலின்கண் வந்து நெருங்கா நிற்பவும்; என்க.

(விளக்கம்) காழ் - குத்துக்கோல். பரிக்கோல் என்பதுமது. வாதுவர் - குதிரைப்பாகர். வாய்த்த வாள் மறவர் என்க. மனம் மயங்கினர் எனினுமாம். தீமுகம் - தீப்பிழம்பு.

வருண பூதங்கள்

(1) பார்ப்பனப் பூதம்

16-36: நித்தில ............ கடவுளும்

(இதன்பொருள்.) நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிர் ஒளி - முத்தாலியன்ற பசிய பூணினது நிலாப்போன்று திகழ்ந்து விளங்கும் ஒளியினையுடைய; (34) முத்தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ வேத முதல்வன் - வேள்விக் கருவியோடு மூன்றுவகை வேள்வித் தீயையும் ஓம்புகின்ற தமக்குரிய வாழ்க்கையினது முறைமையினின்றும் தப்பாத மறைமுதல்வனாகிய நான்முகன் வேள்விக்கென வகுத்துக்கூறிய உறுப்புகளோடு கூடிய; ஆதிப்பூதத்து அதிபதிக்கடவுளும் - முதல் வகுப்புப் பூதங்களாகிய பார்ப்பனப் பூதங்களுக்குத் தலைமையையுடைய பார்ப்பனப் பூதக்கடவுளும் என்க.

(விளக்கம்) ஆதிப் பூதம் - பார்ப்பனப்பூதம். அப் பூதத்தின் நிறம் முத்துப்போன்ற வெண்ணிறம் என்க. வேள்விக் கருவியாவன - சமிதை முதலாயின. வேத முதலோன் - நான்முகன்.

குறிப்பு - இக் காதையுள் (............) இங்ஙனம் பகர வளைவுக்குள் அமைக்கப்பட்ட செய்யுட் பகுதிகள் பல ஏட்டுப்படிகளில் காணப்படவில்லை என்பதனாலும், அரும்பதவுரையாசிரியர் இவற்றிலுள்ள அரும்பதங்களில் ஒன்றற்கேனும் உரை வரையாமையானும், இவையெல்லாம் பொருட்சிறப்பு உடையனவாகக் காணப்படாமையானும் இவை பிற்காலத்தே பிறரால் எழுதி இடையிலே சேர்க்கப்பட்டவை என்று அறிஞர் கருதுவதனால் இவற்றிற்கு யாமும் உரை வரையாது விட்டேம். எஞ்சிய பகுதிக்கே உரை ஈண்டு வரையப்பட்டன.

அரச பூதம்

(37-50: ......... )

53-61: பவள .......... கடவுளும்

(இதன்பொருள்.) பவளச் செஞ்சுடர் திகழ் ஒளி மேனியன் - பவளம்போன்ற சிறந்த கதிர் திகழுகின்ற ஒளியையுடைய திருமேனியை உடையவனும்; ஆழ்கடல் ஞாலம் ஆள்வோன் தன்னின் - ஆழ்ந்த கடலாற் சூழப்பட்ட நிலவுலகத்தை ஆளுகின்ற முடிமன்னனைப் போல; முரைசொடு வெள்குடை கவரி நெடுங்கொடி உரைசால் அங்குசம் வடிவேல் வடிகயிறு என இவை பிடித்த கையினனாகி - வெற்றிமுரசும் வெண்கொற்றக் குடையும் வெண்சாமரையும் நெடிய கொடியும் புகழ்மைந்த தோட்டியும் வடித்தவேலும் வடிகயிறும் என்னும் இவற்றை உடைய கையினையுடையவனும்; எண் அருஞ் சிறப்பின் மன்னவர ஓட்டி - எண்ணுதற்கரிய சிறப்புடைய அரசர்களைப் போர்களத்திலே புறங்காட்டி ஓடும்படி செய்து; மண் அகங் கொண்டு - நிலவுலகம் முழுவதையும் தன் ஒரு குடை நீழலின்கண் கொண்டு; செங்கோலோச்சி - செங்கோன்மை செலுத்தி, கொடுந்தொழில் கடிந்து - தீவினை நிகழாமல் விலக்கி; கொற்றங் கொண்டு - வெற்றி கொண்டு; நடும்புகழ் வளர்த்து - என்றும் நிலைபெறுமாறு நாட்டப்பெற்ற தனது புகழை மேலும் மேலும் வளர்த்து; நால் நிலம் புரக்கும் - குறிஞ்சி முதலிய நான்கு வகைப்பட்ட நிலங்களையும் காப்பாற்றியதனால்; உரைசால் சிறப்பின் - பெரும் புகழ் அமைந்த சிறப்பினை உடைமையால்; நெடியோன் அன்ன - நெடியோன் என்று பெயர்பூண்ட பாண்டியனை யொத்த; அரைச பூதத்து அருந்திறல் கடவுளும் - அரசர் வகுப்புப் பூதங்களின் தலைவனாகிய வெல்லுதற்கரிய ஆற்றலுடைய அரச பூதமாகிய கடவுளும்; என்க.

(விளக்கம்) இப் பகுதிக்கு (52) ஞாலமாள்வோன் என உவமையாகக் கூறப்பட்டவன் அருச்சுனன் என்பர் அரும்பதவுரையாசிரியர். அங்ஙனங் கூறுதற்கு ஈண்டுக் காரணம் காணப்படவில்லை. வாளாது அரசன் எனலே அமையும். முரசம் முதலிய அரசருக்குரிய பொருளெல்லாம் அரச பூதத்திற்கும் உரிய என்று கொள்க. நெடியோன் என்பதற்கு நெடியோனென்னும் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்று கூறிப் பொலந்தார் மார்பின் நெடியோன் முன்னீர்விழவின் நெடியோன் எனவரும் அவன் பெயர்களை எடுத்துக்காட்டுவர் உயர்திரு நாட்டார் அவர்கள். இவ்வுரையே ஈண்டைக்குப் பொருத்தமாகத் தோன்றுகின்றது. அரும்பதவுரையாசிரியர் நெடியோன் என்பதனை உலகளந்தோன் எனக் கருதுவர்.

வணிக பூதம்

62-88 : செந்நிற ...... கடவுளும்

(இதன்பொருள்.) செந்நிறப் பசும்பொன் புரையும் மேனியன் - சிவந்த நிறமுடைய புதிய பொன்போன்ற திருமேனியையுடையவனும்; மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர் அரைசுமுடி ஒழிய அமைத்த பூணினன் - நிலைபெற்ற சிறப்பினையுடைய மறப்பண்புடைய வேலேந்திய அரசர்களுக்குரிய கோமுடியாகிய அணிகலன் ஒழிய ஏனைய அணிகலம் முழுவதையும் அணிந்தவனும்; வாணிக மரபின் நீள்நிலம் ஓம்பி- வாணிகர்க்குரிய வணிகத் தொழிலாலே நெடிய இந்நிலவுலகத்தைப் பாதுகாத்து; நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன் - கலப்பையினையும் துலாக் கோலையும் ஏந்திய கையினையுடையவனும்; (உரைசால் (67) ......... அளித்தாங்கு (84) .............. ) உழவு தொழில் உதவும் பழுது இல் வாழ்க்கைக் கிழவோன் என்போன் - உழவுத்தொழிலாலே நெல் முதலிய கூலங்களை விளைவித்து உலகில் உள்ள மக்களுக்கு உதவுகின்ற குற்றமற்ற வாழ்க்கைக்கு உரியோன் என்று கூறப்படுபவனும்; கிளர் ஒளிச் சென்னியின் இளம்பிறை சூடிய இறைவன் வடிவின் - மிகுகின்ற ஒளியினையுடைய தலையின் கண் இளைய பிறைத்திங்களைச் சூடியருளிய இறைவனுடைய வடிவுபோன்ற வடிவத்தையுடையவனும் ஆகிய; ஓர் விளங்கு ஒளிப்பூத வியன்பெருங் கடவுளும் - விளங்குகின்ற ஒளியையுடைய வணிக பூதங்களுக்கு மாபெருந் தலைவனாகிய வணிகபூதமாகிய கடவுளும்; என்க.

(விளக்கம்) அரசர்க்குரிய முடிக்கலன் ஒழிந்த அணிகலன்களும் படைக்கலன்களும் வணிகருக்கும் உள என்பதனை வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் மாலையும் தேரும் வாளும் மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய எனவரும் தொல்காப்பியத்தானும் (பொருளதி - 638) உணர்க.

இனி, வணிகருக்கு உழவும் உரியது என்பதனை, மெய்தெரி வகையின் எண்வகை உணவின் செய்தியும் வரையார் அப்பா லான எனவரும் தொல்காப்பியத் தானும் (பொருளதி - 633) உணர்க.

செந்நிறப் பசும்பொன் முதலாக வியன்பெருங் கடவுள் ஈறாக வணிக பூதத்தைக் கூறிற்று என்பர் அரும்பத வுரையாசிரியர்.

வேளாண் பூதம்

(89-96: ............... )

97-102: மண்ணுறு .......... தானுந் தோன்றி

(இதன்பொருள்.) மண்ணுறு திருமணி புரையு மேனியன் - கழுவிய நீலமணி போலும் திருமேனியை யுடையவனும்; ஒள் காழக நிறம் சேர்ந்த உடையினன் - ஒளியுடைய கரிய நிறம் பொருந்திய உடையை யுடையவனும்; ஆடற்கு அமைந்த அவற்றொடுபொருந்தி - வேளாண் வாகை சூடுதற்கு வேண்டிய அக்கருவிகளோடு பொருந்தி; பாடற்கு அமைந்த பலதுறை போகி - களம்பாடுவோர் புகழ்ந்து பாடுதற்குரிய பல்வேறு அறத்துறைகளிலும் கடைபோகச் சென்றவனும் ஆகிய; கலிகெழு கூடற் பலிபெறு பூதத்தலைவன் என்போன் தானும் - ஆரவாரமுடைய அம் மதுரை நகரத்திருந்து வேளாண்மாந்தர் இடுகின்ற பலிப்பொருளைப் பெறுகின்ற வேளாண் பூதங்களுக்குத் தலைவன் என்று கூறப்படுகின்றவன் ஆகிய வேளாண்பூதமும் ஆகிய இப்பால் வேறுபட்ட நால்வேறு பூதங்களும்; தோன்றி - வெளிப்பட்டு என்க.

(விளக்கம்) ஆடல் - வெல்லுதல். எனவே வேளாண் வாகை என்பதாயிற்று. அஃதாவது:

மூவரும் நெஞ்சமர முற்றி அவரவர்
ஏவல் எதிர்கொண்டு மீண்டுரையான் - ஏவல்
வழுவான் வழிநின்று வண்டார் வயலுள்
உழுவான் உலகுக் குயிர்

என்று வருகின்ற புறப்பொருள் வெண்பா வாலறிக.

அதற்கு அமைந்த பொருள் வித்தும் ஏரும் நிலமும் பிறவும் எனக்கொள்க. பாடல் என்றது, அவர்தம் ஈதல் முதலிய பல அறத்துறைகளையும் பற்றிப் பாடுதல். பாடுதற்கு அமையும்படி அத்துறையில் சிறத்தல் என்க.

இனி, ஆடற்கமைந்தவை வாச்சியங்கள் எனவும் பாடற்கமைந்தவை அவற்றின் பலதுறைகள் எனவும் கூறுவாருமுளர். அங்ஙனங் கூறுவார்க்கு வேளாண்பூதம் என்றல் சாலாது என்க.

மண்ணுறு திருமணி முதலாகப் பலி பெறுபூதத் தலைவன் ஈறாக வேளாண்பூதத்தைக் கூறிற்று. எனவே அவருங் கூறுவர்.

பூதங்க ளந்நகரத்தினின்றும் புறப்படல்

103 - 108: கோமுறை .......... பெயர

(இதன்பொருள்.) கோமுறை பிழைத்த நாளில் இந்நகர் - நம் மன்னன் செங்கோன்மையில் இழுக்கிய நாளிலே இக் கூடல்மா நகரத்தை; தீமுறை உண்பது ஓர் திறன் உண்டு என்பது - தீயானது உண்ணும் முறையால் உண்பதற்குரிய தன்மையும் உளதென்பது; ஆம் முறையாக அறிந்தனம் ஆதலின் - யாம் அறிந்து கொள்ளலாகும் முறைமையாலே அறிந்துள்ளேம் ஆதலால்; யாம் போவது முறை இயல்பன்றோ - அதற்கேற்ப யாம் நம் காவல் கைவிட்டுப் போவது இயற்கையே யன்றோ; என - என்று தம்முள் உடன்பட்டு; கொங்கை குறித்த கொற்ற நங்கைமுன் - தனது கொங்கையாலே நகரத்தை எரியூட்டக் கருதிய வெற்றியையுடைய கண்ணகி கண்முன்னரே; நால்பால் பூதமும் பால்பால் பெயர-முற்கூறப்பட்ட பார்ப்பனர் வகுப்பு முதலிய நான்கு வகுப்பிற்குமுரிய நால்வேறு பூதங்களும் நகர்காவல் கைவிட்டுத் தத்தமக்கேற்ற இடங்களுக்குச் செல்லாநிற்ப; என்க.

(விளக்கம்) கோ - அரசன். தீயானது அறவோரிடத்தைக் கை விட்டு அல்லாதாரிடங்களை உண்ணுமுறை பற்றி உண்ண என்றவாறு. தெய்வங்களாகிய யாம் எதிர்கால நிகழ்ச்சியையும் அறியக்கூடும் என்பது கருதி ஆமுறையாக அறிந்தனம் என்றவாறு. ஊழ் வினைக்கேற்ப ஒழுகுவது தெய்வங்களுக் கியல்பாதலின் நாம் போவது இயல்பே அன்றோ என்று அப்பூதங்கள் துணிந்தன என்க.

மதுரையின் கலக்கம்

109-112: கூலமறுகு ....... கலங்க

(இதன்பொருள்.) கூலமறுகும் கொடித்தேர் வீதியும் - கூலக் கடைத் தெருவும் கொடியையுடைய தேர் ஓடுகின்ற தெருவும்; பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் - கூறுகூறாக வேற்றுமைப்பட்டுத் தெரிந்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நான்கு வேறுபட்ட மக்கள் வாழுகின்ற தெருவும்; (உரக்குரங்கு உயர்த்த ஒண் சிலை உரவோன் - வலிய குரங்காகிய அநுமக்கொடியை உயர்த்த ஒள்ளிய காண்டிபம் என்னும் வில்லினையுடைய வலியோனாகிய அருச்சுனன்:) கா எரியூட்டிய நாள்போல் கலங்க - காண்டாவனத்தைத் தீ யுண்ணச்செய்த நாளிலே அவ் வனத்தில் வாழ்ந்த உயிரினங்கள் கலங்கினாற்போலக் கலங்காநிற்ப; என்க.

(விளக்கம்) கூலம் - நெல் முதலிய எண்வகைக் கூலங்கள். தேர் வீதி என்றது, அரண்மனை வீதியை. உரக்குரங்கு என்னும் (111) அடி இடைச் செருகல் என்பாருமுளர். எனினும் கா என்றது காண்டாவனத்தையே ஆதலின் அவ்வடி பொருத்தமாகவே தோன்றுகின்றது. மேற்கூறிய தெருவில் வாழும் அறவோரல்லாத தீயோர் மட்டுமே தீயினால் கலங்கினர் என்பது கருத்தாகக் கொள்க.

இதுவுமது

113-118: அறவோர் .............. பெயர்ந்தன

(இதன்பொருள்.) அறவோர் மருங்கின் அழல் கொடி விடாது - மேற்கூறிய தெருவிடத்தும் பிறவிடங்களினும் அறவோர் வாழும் இடங்களில் அத் தீயானது தன் கொழுந்தினைப் போக்காமல்; மறவோர் சேரி மயங்கு எரி மண்ட - தீவினையாளர் சேர்ந்த இடங்களிலெல்லாம் அறிவு மயங்குதற்குக் காரணமான தீ மிக்கெரியா நிற்ப; கறவையும் கன்றும் கனல் எரி சேரா அறவை ஆயர் அகன் தெரு அடைந்தன - ஆக்களும் அவற்றின் கன்றுகளும் கனலுகின்ற எரியினால் துன்பப்படாமல் அறப்பண்புமிக்க இடையர்கள் வாழுகின்ற அகன்ற தெருக்களை எய்தின; மறவெம் களிறும் மடப்பிடி நிரைகளும் விரைபரிக் குதிரையும் மதிற்புறம் பெயர்ந்தன- தறுகண்மையுடைய வெவ்விய களிற்றியானைகளும் இளைய பிடியானைக் கூட்டங்களும் விரைந்து பாயும் குதிரைகளும் தீயினால் ஊறுபடாவண்ணம் மதில் அரணுக்குப் புறத்தேபோய் உய்ந்தன; என்க.

(விளக்கம்) கண்ணகியார் பார்ப்பார் அறவோர் பசுப்பத்தினிப் பெண்டிர் எனும் இவரைக் கைவிட்டு என்றொழியாது மீண்டும் தீத்திறத்தார் பக்கமே சேர்க என்று பணித்தமையால் தீமையற்ற களிறும் பிடியும் குதிரையும் இன்னோரன்ன பிறவும் உய்ந்தன எனக் கொள்க. கறவை - ஆ. அறவை - அறப்பண்பு.

இளமகளிர் செயல்

119 - 127 : சாந்தம் ......... மயங்க

(இதன்பொருள்.) சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை - சந்தனம் திமிர்ந்த அணந்த இளைய அழகிய கொங்கையினையும்; மைத்தடங் கண்ணார் - மை எழுதப்பட்ட பெரிய விழிகளையுமுடைய இளமகளிர்; மைந்தர் தம்முடன் - தத்தம் காதலரோடே; செப்புவாய் அவிழ்ந்த தேம்பொதி நறுமலர் அவிழ்ந்த நாறு இருமுச்சி - செப்பின்கண் இடப்பட்ட நாளரும்புகள் விரிந்த தேன் பொதுளிய நறிய மணம் பொருந்திய புதிய மலர்களினின்றும் பரவிய மணம் கமழுகின்ற கரிய தமது கூந்தலின்கண்; துறுமலர்ப் பிணையல் சொரிந்த பூந்துகள் - செறியக்கட்டிய மலர்மாலைகள் உகுத்த பூந்தாதும்; குங்குமம் எழுதிய கொங்கை முன்றில் - குங்குமத்தால் கோலமெழுதப் பட்ட தமது முலைமுற்றத்தின்கண்; பைங்காழ் ஆரம் பரிந்தன  பரந்த பசிய வடத்தின் முத்துக்களும் ஊடலால் அறுக்கப்பட்டு உதிர்ந்து பரவிக் கிடக்கின்ற; தூமெல் சேக்கை - தூய மெல்லிய மலர்ப்பாயலின்கண்; துனிப்பதம் பாரா காமக் கள்ளாட்டு அடங்கினர் மயங்க - தம்முடைய ஊடல் தீர்தற்குச் செவ்வி நோக்கி அச் செவ்வி பெற்றுக் காமமாகிய களியாட்டம் ஆடுதற்கு இடம் பெறாது அடங்கித் தீயினால் மயங்கா நிற்பவும்; என்க.

(விளக்கம்) இளமகளிர் - தம் கணவருடன் கலவிசெய்து ஊடிப் பின்னர் அவர் ஊடல் தீர்க்குங்கால் அது தீர்தற்குச் செவ்வி தேர்ந்து இருந்தவர், தம் பள்ளியிலே தீப்பரவியதனாலே அச்செவ்வி பெறாமல் காமக் களியாட்டத்தைக் கைவிட்டுத் தீ முகங்கண்டு அஞ்சி அடங்கி மயங்கினர் என்றவாறு.

தாய்மைப் பருவத்து மகளிர்செயல்

128-131: திதலை ...... போத

(இதன்பொருள்.) திதலை அல்குல் தேம் கமழ் குழலியர் - தேமல் படர்ந்த அல்குலினையும் இனிய மணங்கமழும் கூந்தலினையுமுடைய தாய்மைப் பருவத்து மகளிர்கள்; குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வரொடு - மழலைமொழி பேசுகின்ற சிவந்த வாயினையும் குறுகுறு நடக்கும் நடையினையுமுடைய தத்தம் மகார்களை; பஞ்சி ஆர் அமளியில் துஞ்சு துயில் எடுப்பி - பஞ்சு நிரைத்த அணையாகிய படுக்கையில் துயிலுகின்ற துயிலினின்றும் எழுப்பி; வால் நரைக் கூந்தல் மகளிரொடு போத - வெள்ளிய நரையினையுடைய கூந்தலையுடைய முதிய மகளிரோடு தீயினால் ஊறு சிறிதுமின்றிப் புறம்போகா நிற்பவும்; என்க.

(விளக்கம்) குழலியர் என்றது மகப்பெற்று வளர்க்கும் அரிவை தெரிவைப் பருவத்து மகளிர்களை. குதலை - மழலைச்சொல். வால்நரைக் கூந்தல் மகளிர் என்றது தம் மாமியும் செவிலித் தாயரும் பிறரும் ஆகிய முதுமகளிரை - இவரெல்லாம் தீயால் கைவிடப்பட்ட அறவோரல்லாத மகளிர். இல்லம் தீப்பற்றி எரிதலாலே இங்ஙனம் போயினர் என்க.

அறவோராகிய பெருமனைக் கிழத்தியர் செயல்

132 - 137 : வருவிருந்து ........ ஏத்தினர்

(இதன்பொருள்.) வருவிருந்து ஓம்பி மனைஅறம் முட்டாப் பெருமனைக் கிழத்தியர் பெருமகிழ் வெய்தி - தம் மனைக்கு வருகின்ற விருந்தினரை முகமலர்ந்து வரவேற்று இன்சொற் கூறிஉண்டி உடை முதலியன வழங்கிப் பாதுகாக்கின்ற அறம் முதலிய இல்லின்கண் இருந்து செய்யும் அறங்களில் வழுவாத பெரிய இல்லத்துத் தலைவிமாராகிய கற்புடை மகளிர் கண்ணகியின் வெற்றி கண்டு பெரிதும் மகிழ்ச்சியை அடைந்து; இலங்கு பூண் மார்பின் கணவனை யிழந்து சிலம்பின் வென்ற சேயிழை நங்கை - விளங்குகின்ற அணிகலனணிந்த மார்பினையுடைய கணவனை இழந்த அவ்விழப்பிற்குக் காரணமான பாண்டிய மன்னனைத் தமது சிலம்பினால் வென்ற சிறந்த அணிகலன்களையுடைய மகளிர்களுள் தலைசிறந்த கண்ணகியார்; கொங்கைப் பூசல் கொடிதோ அன்று என - தமது கொங்கையால் செய்த இக்கலாம் கொடியதொன்றன்று! இதுதானும் தம்மினத்து மகளிர்க் கெல்லாம் ஏற்றம் தருமொரு நற்செயலே என்று கூறி; பொங்கு எரி வானவன் தொழுதனர் ஏத்தினர் - சினந்து எரிகின்ற தீக் கடவுளைக் கைகுவித்துத் தொழுது வாழ்த்துவாராயினர்; என்க.

(விளக்கம்) மனையின்கண் இருந்து செய்யும் அறங்களுள் தலைசிறந்தது விருந்தோம்பும் அறம் ஆதல்பற்றி அதனை விதந்து ஏனையவற்றை மனையறம் என்பதனால் அடக்கினர். அவ்வறங்கள் அறவோர்க்களித்தலும் அந்தணரோம்பலும் துறவோர்க்கு எதிர்தலும் வருந்தி வந்தோர்க் கீதலும் இன்னோரன்ன பிறவுமாம், என்க. இவ்வறமெலாம் மூட்டாது செய்தற்கியன்ற திருவுடைமை தோன்றப் பெருமனைக்கிழத்தியர் என்றார். கண்ணகியாரின் வெற்றியும் அவர்தம் கொங்கைப் பூசலும் உலகுள்ள துணையும் கற்புடை மகளிரின் சிறப்பிற்குத் தீராத பெருஞ்சான்றாக நின்று நிலவும் என்பது குறித்துப் பெருமகிழ் வெய்தினர் என்பது கருத்து. கற்புடை மகளிர்க்கு உதவியாக அவர் ஏவியபடி ஒழுகுதல் குறித்துத் தீக்கடவுளையும் தொழுதனர் என்க.

நாடக மகளிர் செயல்

138-146: எண்ணான்கு ............. என்ன

(இதன்பொருள்.) எண்ணாண்கு இரட்டி இருங்கலை பயின்ற பண்இயல் மடந்தையர் பயம் கெழு வீதி - அறுபத்து நான்கு பெரிய கலைகளையும் கற்றுத் துறைபோகியவரும் பண்ணுக்கேற்ப விறல் பட நடிப்பவருமாகிய கணிகை மகளிர் வாழுகின்ற கலையினது பயன் பொருந்திய தெருவின்கண்; தண்ணுமை முழவம் தாழ்தரு தீங்குழல் பண்ணுக்கிளை பயிரும் பண் யாழ்ப் பாணியொடு நாடக மடந்தையர் ஆடு அரங்கு இழந்து - தண்ணுமையும் முழவமும் இசை தாழ்ந்து முரலுகின்ற இனிய வேய்ந் குழலும் பண்ணும் அவற்றின் திறங்களும் இசைக்கின்ற பண்ணுறுத்தப்பட்ட யாழ்ப் பாடலோடு நடிக்கின்ற அந்நாடக மடந்தையர் தாம் கூத்தாடுகின்ற அரங்குகளையும் தீப்பற்றி எரித்தலாலே அவற்றை இழந்தவராய்ப் புறம்போந்து வீதியிடத்தே வந்து, கண்ணகியாரைக் கண்டு அந்தோ! எந்நாட்டாள் கொல் யார் மகள் கொல்லோ - இவள் எந்த நாட்டில் பிறந்தவளோ யாருடைய மகளோ; இந்நாட்டு இவ்வூர் இறைவனை இழந்து - இந்தப் பாண்டிய நாட்டின்கண் வந்து இம்மதுரை மூதூரின்கண் தன் கணவனையும் இழந்து; தோர மன்னனைச் சிலம்பின் வென்று - ஆராய்ச்சி இல்லாமல் செங்கோன் முறைமை பிழைத்த பாண்டிய மன்னனைத் தனது சிலம்பினாலேயே வென்று; இவ்வூர் தீ ஊட்டிய ஒரு மகள் என்ன - இப் பேரூரை இவ்வாறு தீக்கிரையாக்கிய ஒப்பற்ற இக் கற்புடைமகள்! என்று கண்ணகியார்க்கு இரங்கா நிற்ப என்க.

(விளக்கம்) கலைபயின்ற மடந்தையருடைய வீதியின்கண் தண்ணுமை முதலிய கருவிகளோடு ஆடு அரங்கையும் அந்நாடக மடந்தையர் இழந்து புறம்போந்து ஆங்குக் கண்ணகியைக் கண்ணுற்று இவ்வொரு மகள் எந்நாட்டாள் கொல் யார்மகள் கொல் என்று இரங்காநிற்ப என்று இயைத்துக் கொள்க.

கண்ணகியின் நிலைமையும், அவள் முன் மதுராபதி என்னும் தெய்வம் வந்து தோன்றுதலும்

147-157: அந்திவிழவும் ........ மதுராபதியென்

(இதன்பொருள்.) அந்திவிழவும் ஆரண ஓதையும் செந்தீ வேட்டலும் தெய்வம் பரவலும் - நாள்தோறும் நிகழ்கின்ற மாலைக் காலத்துத் திருவிழாக்களும் வேதம் ஓதும் முழக்கமும் செந்தீயின்கண் அவிசொரிந்து பெய்யும் வேள்வியும் திருக்கோயில் தோறும் மக்கள் சென்று தெய்வத்திற்குச் செய்யும் வழிபாடுகளும்; மனை விளக்கு உறுத்தலும் மாலை அயர்தலும் - மனைகள் தோறும் மகளிர் நெல்லும் மலரும் தூவித் திருவிளக் கேற்றுதலும் மாலைப் பொழுதில் விளையாட்டயர்தலும்; வழங்கு குரல் முரசமும்; வழக்கமாக மாலைக் காலத்தே முழங்குகின்ற முரச முழக்கமும்; மடிந்த மாநகர் - இல்லையான அந்தப் பெரிய நகரத்தின்கண்; காதலன் கெடுத்த நோயொடு - தன் கணவனை இழந்தமையால் உண்டான பெருந் துன்பமாகிய தீயினால்; உளம் கனன்று ஊதுஉலை குருகின் உயிர்த்தனள் உயிர்த்து - நெஞ்சம் வெதும்பி ஊதுகின்ற கொல்லனது உலையினிடத்துத் துருத்தியைப் போல வெய்தாக நெடுமூச் செறிந்து; மறுகிடை மறுகும் கவலையில் கவலும் நெடுந் தெருக்களிடத்தே சுழன்று திரிவாள் குறுந்தெருக்களிடத்தே கவலையுற்றுத் திகைத்து நிற்பாள்; இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும் - பின்னர்ச் செல்லுதலும் செய்வாள், சென்றவிடத்தே யாதொன்றும் தோன்றாமல் நின்று மயங்குதலும் செய்வாள்; இவ்வாறாக; ஆர் அஞர் உற்ற வீரபத்தினி முன் - பொறுத்தற்கரிய துன்பமெய்திய சீறிய பத்தினியாகிய அக் கண்ணகியின் முன்; கொந்து அழல் வெம்மைக் கூர்எரி பொறாஅள் - அம் மாநகரத்தின்கண் கொத்துக் கொத்தாய்ப் பற்றி எரிகின்ற தழலினது வெப்பத்தையுடைய மிக்க நெருப்பினைக் கண்டு நெஞ்சம் பொறுக்க கில்லாளாய்; மதுராபதி வந்து தோற்றினள் - மதுராபதி என்னும் அந்நகரத்துக் காவல் தெய்வம் உருவங் கொண்டு வந்து தோன்றுவாளாயினள்; என்க.

(விளக்கம்) அந்திவீழவும் ஆரண ஓதையும் செந்தீ வேட்டலும் தெய்வம் பரவலும் மனைவிளக் குறுத்தலும் மாலை அயர்தலும் முரசம் முழங்குதலும் அந்நகரத்தே நாள்தோறும் நிகழும் நிகழ்ச்சிகள். அவையெல்லாம் அற்றை நாள் நிகழா தொழிந்தன என்றவாறு. ஆரணம் - வேதம். வேட்டல் - வேள்வி செய்தல். விளக்குறுத்தல் - திருவிளக்கேற்றுதல். மாலை அயர்தல் - மாலைப்பொழுதில் விளையாடுதல். முரசம் வழங்கு குரலும் என மாறுக. குருகு - துருத்தி. உயிர்த்தனள் உயிர்த்து - உயிர்த்தனளாய் உயிர்த்து என்க. கவலை - சந்திகளுமாம். கவலுதல் - துன்பத்தால் திகைத்தல். இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும் என்பன அவற்றின் மிகுதி தோற்றுவித்தன. சுழலலும் சுழலும் ஓடலும் ஓடும் என்பது மணிமேகலை; (மணி -3; 111-2.) கொந்து - கொத்து. வெம்மையையுடைய எரியைப் பொறாதவளாய் என்க. காவல் தெய்வம் ஆதலின் அந்நகரம் தீப்பற்றி எரிதலைப் பொறுக்கமாட்டாளாய் அதற்குத் தீர்வு காணவேண்டி வீரபத்தினி முன் வந்து தோன்றினள் என்பது கருத்து. 

வெண்பா

மாமகளும் ......... மாது

(இதன்பொருள்.) நாம் முதிராமுலை குறைத்தாள் முன்னர் - அச்சத்தைச் செய்கின்ற இளமையையுடைய தனது கொங்கையில் ஒன்றனைத் திருகி எறிந்த அவ் வீரபத்தினி முன்னர்; மாமகளும் நாமகளும் மாமயிடன் செற்று உகந்த கோமகளும் - திருமகளும் நாமகளும் கரிய மயிடன் என்னும் அசுரனைக் கொன்று மறத்தாலே உயர்ந்த தலைமை சான்ற கொற்றவையும் ஆகிய இந்த மூன்று இறைவிமாரும்; படைத்த கொற்றத்தாள் - எய்தியுள்ள வெற்றி முழுவதும் தானே படைத்துள்ள; மதுராபதி என்னும் மாது வந்தாள் - மதுராபதி என்னும் தெய்வ மடந்தை துணிவோடு வந்தனள் என்க.

(விளக்கம்) மாமகள் - திருமகள். மாமயிடன் என்புழி, மா - கருமை. மகிஷன் என்பது மயிடன் என வந்தது. எருமை உருவம் உடையன் ஆதலின் இவன் மகிடா சுரன் எனப்பட்டான். வீரபத்தினி முன் வருவதற்கு வேண்டும் துணிவுடையாள் இம்மதுராபதி என்றுணர்த்தற்குத் திருமகள் முதலிய மூவருடைய வெற்றியையும் ஒரு சேர உடையாள் இவள் என்றார். எனவே, இவள் இறைவனுடைய ஒரு பாகத்தே யமைந்த இறைவியே ஆதல் பெற்றாம். அடுத்துவரும் காதையின் தொடக்கத்தே அடிகளார் இம் மதுராபதியை வண்ணிக்கு மாற்றாலும் அது விளங்கும்.

அழற்படு காதை முற்றிற்று
.
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 28, 2012, 07:36:11 AM
23. கட்டுரை காதை

அஃதாவது - ஆரஞர் உற்ற வீரபத்தினிமுன் அஞ்சாது வந்து தோன்றிய மதுராபதி என்னும் அம் மாபெருந்தெய்வம் கண்ணகிக்குக் கோவலன் கொலையுண்டமைக்குக் காரணமும் பாண்டியன் நெடுஞ்செழியனுடைய செங்கோன் முறைமையும் மதுரை தீக்கிரை ஆதற்குக் காரணமும் இனிக் கண்ணகி எய்தும் நிலைமையும் ஆகிய அறிதற்கரிய பொருள் பொதிந்த மொழிகளை அறிவித்து அவட்கு விதிமுறை சொல்லிச் சினந்தணிவித்து மதுரையை அழல் வீடு கொண்ட செய்தியும் பிறவும் கூறும் பகுதி என்றவாறு.

கட்டுரை - பொருள் பொதிந்த உரை. அழல் வீடு கொள்ளல் நகரை மேலும் நெருப்புண்ணாமல் பாதுகாத்தல் (கண்ணகியின் சினத்தீ தணிவித்தலும் கொள்க.)

சடையும் பிறையுந் தாழ்ந்த சென்னிக்
குவளை உண்கண் தவளவாள் முகத்தி
கடையெயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி
இடைநிலா விரிந்த நித்தில நகைத்தி
இடமருங் கிருண்ட நீல மாயினும்   5

வலமருங்கு பொன்னிறம் புரையு மேனியள்
இடக்கை பொலம்பூந் தாமரை யேந்தினும்
வலக்கை அம்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்
வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால்
தனிச்சிலம்பு அரற்றும் தகைமையள் பனித்துறைக்  10

கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன்
பொற்கோட்டு வரம்பன் பொதியிற் பொருப்பன்
குலமுதற் கிழத்தி ஆதலின் அலமந்து
ஒருமுலை குறைத்த திருமா பத்தினி
அலமரு திருமுகத் தாயிழை நங்கைதன்  15

முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றிக்
கேட்டிசின் வாழி நங்கையென் குறையென
வாட்டிய திருமுகம் வலவயிற் கோட்டி
யாரைநீ யென்பின் வருவோய் என்னுடை
ஆரஞ ரெவ்வ மறிதியோவென   20

ஆரஞ ரெவ்வ மறிந்தேன் அணிஇழாஅய்
மாபெருங் கூடல் மதுரா பதியென்பேன்
கட்டுரை யாட்டியேன் யானின் கணவற்குப்
பட்ட கவற்சியேன் பைந்தொடி கேட்டி
பெருந்தகைப் பெண்ணொன்று கேளாயென் நெஞ்சம் 25

வருந்திப் புலம்புறு நோய்
தோழீநீ ஈதொன்று கேட்டியென் கோமகற்கு
ஊழ்வினை வந்தக் கடை
மாதராய் ஈதொன்று கேளுன் கணவற்குத்
தீதுற வந்த வினை; காதின்   30

மறைநா வோசை யல்ல தியாவதும்
மணிநா வோசை கேட்டது மிலனே
அடிதொழு திறைஞ்சா மன்ன ரல்லது
குடிபழி தூற்றுங் கோலனு மல்லன்
இன்னுங் கேட்டி நன்னுதல் மடந்தையர்  35

மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு
இடங்கழி நெஞ்சத்து இளமை யானை
கல்விப் பாகன் கையகப் படாஅது
ஒல்கா உள்ளத் தோடு மாயினும்
ஒழுக்கொடு புணர்ந்தவிவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு 40

இழுக்கந் தாராது இதுவுங் கேட்டி
உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி
புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள்
அரைச வேலி யல்ல தியாவதும்
புரைதீர் வேலி இல்லென மொழிந்து  45

மன்றத் திருத்திச் சென்றீ ரவ்வழி
இன்றவ் வேலி காவா தோவெனச்
செவிச்சூட் டாணியிற் புகையழல் பொத்தி
நெஞ்சஞ் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று
வச்சிரத் தடக்கை அமரர் கோமான்   50

உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்தகை
குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து
இறைக்குடிப் பிறந்தோர்க்கு இழுக்க மின்மை
இன்னுங் கேட்டி நன்வா யாகுதல்
பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை  55

திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை
அறனறி செங்கோல் மறநெறி நெடுவாள்
புறவுநிறை புக்கோன் கறவைமுறை செய்தோன்
பூம்புனற் பழனப் புகார்நகர் வேந்தன்
தாங்கா விளையுள் நன்னா டதனுள்  60

வலவைப் பார்ப்பான் பராசர னென்போன்
குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்
காடும் நாடும் ஊரும் போகி   65

நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு
ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும்
அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க  70

நாவலங் கொண்டு நண்ணா ரோட்டிப்
பார்ப்பன வாகை சூடி ஏற்புற
நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன்
செங்கோல் தென்னன் திருந்துதொழில் மறையவர்
தங்கா லென்ப தூரே அவ்வூர்ப்   75

பாசிலை பொதுளிய போதி மன்றத்துத்
தண்டே குண்டிகை வெண்குடை காட்டம்
பண்டச் சிறுபொதி பாதக் காப்பொடு
களைந்தனன் இருப்போன் காவல் வெண்குடை
விளைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி  80

கடற்கடம் பெறிந்த காவலன் வாழி
விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி
பூந்தண் பொருநைப் பொறையன் வாழி
மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கெனக்
குழலும் குடுமியும் மழலைச் செவ்வாய்த்  85

தளர்நடை யாயத்துத் தமர்முதல் நீங்கி
விளையாடு சிறாஅ ரெல்லாஞ் சூழ்தரக்
குண்டப் பார்ப்பீ ரென்னோ டோதியென்
பண்டச் சிறுபொதி கொண்டுபோ மின்னெனச்
சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன்  90

ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன்
பால்நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர்த்
தளர்நா வாயினும் மறைவிளி வழாஅது
உளமலி உவகையோ டொப்ப வோதத்
தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து  95

முத்தப் பூணூல் அத்தகு புனைகலம்
கடகம் தோட்டொடு கையுறை ஈத்துத்
தன்பதிப் பெயர்ந்தன னாக நன்கலன்
புனைபவும் பூண்பவும் பொறாஅ ராகி
வார்த்திகன் தன்னைக் காத்தன ரோம்பிப்  100

கோத்தொழி லிளையவர் கோமுறை அன்றிப்
படுபொருள் வௌவிய பார்ப்பா னிவனென
இடுசிறைக் கோட்டத் திட்டன ராக
வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள்
அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்தில்  105

புலந்தனள் புரண்டனள் பொங்கினள் அதுகண்டு
மையறு சிறப்பின் ஐயை கோயில்
செய்வினைக் கதவந் திறவா தாகலின்
திறவா தடைத்த திண்ணிலைக் கதவம்
மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கிக்  110

கொடுங்கோ லுண்டுகொல் கொற்றவைக் குற்ற
இடும்பை யாவதும் அறிந்தீ மின்னென
ஏவ லிளையவர் காவலற் றொழுது
வார்த்திகற் கொணர்ந்த வாய்மொழி யுரைப்ப
நீர்த்தன் றிதுவென நெடுமொழி கூறி  115

அறியா மாக்களின் முறைநிலை திரிந்தவென்
இறைமுறை பிழைத்தது பொறுத்தல்நுங் கடனெனத்
தடம்புனற் கழனித் தங்கால் தன்னுடன்
மடங்கா விளையுள் வயலூர் நல்கிக்
கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர்  120

இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கியவள்
தணியா வேட்கையுஞ் சிறிதுதணித் தனனே
நிலைகெழு கூடல் நீள்நெடு மறுகின்
மலைபுரை மாடம் எங்கணும் கேட்பக்
கலையமர் செல்வி கதவந் திறந்தது   125

சிறைப்படு கோட்டஞ் சீமின் யாவதுங்
கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின்
இடுபொரு ளாயினும் படுபொரு ளாயினும்
உற்றவர்க் குறுதி பெற்றவர்க் காமென
யானை யெருத்தத்து அணிமுரசு இரீஇக்  130

கோன்முறை யறைந்த கொற்ற வேந்தன்
தான்முறை பிழைத்த தகுதியுங் கேள்நீ
ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து
அழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண  135

உரைசால் மதுரையோடு அரைசுகே டுறுமெனும்
உரையு முண்டே நிரைதொடி யோயே
கடிபொழி லுடுத்த கலிங்கநன் னாட்டு
வடிவேல் தடக்கை வசுவுங் குமரனும்
தீம்புனற் பழனச் சிங்க புரத்தினும்   140

காம்பெழு கானக் கபில புரத்தினும்
அரைசாள் செல்வத்து நிரைதார் வேந்தர்
வீயாத் திருவின் விழுக்குடிப் பிறந்த
தாய வேந்தர் தம்முள் பகையுற
இருமுக் காவதத் திடைநிலத் தியாங்கணுஞ்  145

செருவல் வென்றியிற் செல்வோ ரின்மையின்
அரும்பொருள் வேட்கையிற் பெருங்கலன் சுமந்து
கரந்துறை மாக்களிற் காதலி தன்னொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்தினோர்
அங்கா டிப்பட் டருங்கலன் பகரும்   150

சங்கமன் என்னும் வாணிகன் தன்னை
முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவன்
வெந்திறல் வேந்தற்குக் கோத்தொழில் செய்வோன்
பரத னென்னும் பெயரனக் கோவலன்
விரத நீங்கிய வெறுப்பின னாதலின்  155

ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு
வெற்றிவேல் மன்னற்குக் காட்டிக் கொல்வுழிக்
கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி
நிலைக்களங் காணாள் நீலி என்போள்
அரசர் முறையோ பரதர் முறையோ  160

ஊரீர் முறையோ சேரியீர் முறையோவென
மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு
எழுநா ளிரட்டி எல்லை சென்றபின்
தொழுநா ளிதுவெனத் தோன்ற வாழ்த்தி
மலைத்தலை யேறியோர் மால்விசும் பேணியில்  165

கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள்
எம்முறு துயரம் செய்தோ ரியாவதும்
தம்முறு துயரமிற் றாகுக வென்றே
விழுவோ ளிட்ட வழுவில் சாபம்
பட்டனி ராதலிற் கட்டுரை கேள்நீ   170

உம்மை வினைவந் துருத்த காலைச்
செம்மையி லோர்க்குச் செய்தவ முதவாது
வாரொலி கூந்தல்நின் மணமகன் தன்னை
ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி
வானோர் தங்கள் வடிவின் அல்லதை  175

ஈனோர் வடிவிற் காண்டல் இல்லென
மதுரைமா தெய்வம் மாபத் தினிக்கு
விதிமுறை சொல்லி அழல்வீடு கொண்டபின்
கருத்துறு கணவற் கண்டபின் அல்லது
இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலனெனக்  180

கொற்றவை வாயிற் பொற்றொடி தகர்த்துக்
கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன்
மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கென
இரவும் பகலும் மயங்கினள் கையற்று
உரவுநீர் வையை ஒருகரைக் கொண்டாங்கு  185

அவல என்னாள் அவலித்து இழிதலின்
மிசைய என்னாள் மிசைவைத் தேறலிற்
கடல்வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங்கு
அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல்
நெடுவேள் குன்றம் அடிவைத் தேறிப்  190

பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழோர்
தீத்தொழி லாட்டியேன் யானென் றேங்கி
எழுநா ளிரட்டி எல்லை சென்றபின்
தொழுநா ளிதுவெனத் தோன்ற வாழ்த்திப்
பீடுகெழு நங்கை பெரும்பெய ரேத்தி  195

வாடா மாமலர் மாரி பெய்தாங்கு
அமரர்க் கரசன் தமர்வந் தேத்தக்
கோநகர் பிழைத்த கோவலன் றன்னொடு
வான வூர்தி ஏறினள் மாதோ
கானமர் புரிகுழற் கண்ணகி தானென்.  200

வெண்பா

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத்
தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால்- தெய்வமாய்
மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி
விண்ணக மாதர்க்கு விருந்து.

கட்டுரை

முடிகெழு வேந்தர் மூவ ருள்ளும்
படைவிளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்
பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும்
விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்  5

ஒடியா இன்பத் தவருடை நாட்டுக்
குடியுங் கூழின் பெருக்கமும் அவர்தம்
வையைப் பேரியாறு வளஞ்சுரந் தூட்டலும்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும்
ஆரபடி சாத்துவதி யென்றிரு விருத்தியும்  10

நேரத் தோன்றும் வரியுங் குரவையும்
என்றிவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு
ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்
வடஆரியர் படைகடந்து
தென்றமிழ்நா டொருங்குகாணப்   15

புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியனோ டொருபரிசா
நோக்கிக் கிடந்த   20

உரை

மதுராபதியின் மாண்பு

1-10: சடையும் ........... தகைமையள்

(இதன்பொருள்.) சடையும் தாழ்ந்த பிறையும் சென்னி குவளை உண்கண் தவள வாள்முகத்தி - சடையையும் அதனிடத்தே தங்கிய பிறையையும் உடைய தலையினையும் கருங்குவளை மலர் போன்ற மையுண்ட கண்ணையுடைய வெண்ணிறமான ஒளி பொருந்திய திருமுகத்தையு முடையவளும்; கடை எயிறு அரும்பிய பவளச் செவ் வாய்த்தி - கடைவாயின்கண் வெளிப்பட்டுத் தோன்றுகின்ற எயிற்றினையுடைய பவளம் போன்று சிவந்த வாயையுடையவளும்; இடைநிலா விரிந்த நிலத்தில நகைத்தி - அவ் வாயினிடத்தே நிலா ஒளி விரிந்து திகழுகின்ற முத்துக்கோவை போன்ற பல் வரிசையினை யுடையவளும்; இடமருங்கு இருண்ட நீலம் ஆயினும் வலமருங்கு பொன்நிறம் புரையும் மேனியள் - தனது இடப்பாகம் இருண்ட நீலமணிபோன்ற நிறமுடையதாயிருப்பினும் வலப்பாகம் பொன்னினது நிறத்தை ஒக்கும் நிறமுடைய திருமேனியையுடையவளும்; இடக்கை பொலம் தாமரைப்பூ ஏந்தினும் வலக்கை அம்சுடர் கொடுவாள் பிடித்தோள் - தனது இடக்கையின்கண் பொற்றாமரை மலரை ஏந்தியிருப்பினும் வலக்கையின்கண் அழகிய ஒளியையுடைய மழுவை ஏந்தியவளும்; வலக்கால் புனைகழல் கட்டினும் - தனது வலக்காலிடத்தே அழகிய வீரக்கழலை அணிந்திருந்தாளேனும்; இடக்கால் தனிச்சிலம்பு அரற்றும் தகைமையள் - இடக்காலிடத்தே ஒப்பற்ற சிலம்பு கிடந்து ஒலிக்கின்ற தன்மையுடையவளும்; ஆகிய இம் மதுராபதிதானும்; என்க.

(விளக்கம்) தகைமையள் ஆகிய - (13) கிழத்தி என இயையும். முகத்தி, வாய்த்தி, நகைத்தி, மேனியள், பிடித்தோள், தகைமையள் என்பன கிழத்தி என்னும் ஒருபொருள்மேல் பல பெயர்கள் அடுக்கி வந்தன. இவையிற்றை நோக்கின் மதுராபதி என்னும் இத் தெய்வத்தின் உருவம் அம்மையப்பனாம் இறைவனுடைய திருஉருவம் என்பது புலப்படும். இத் தெய்வமே பிற்றைக் காலத்தில் அங்கயற்கண்ணியும் சோமசுந்தரக் கடவுளுமாகக் கொள்ளப்பட்டது போலும். அக்காலத்தே மதுராபதி என்னும் பெயரோடு இத்தெய்வம் பாண்டிய மன்னர் குலதெய்வமாகவும் மதுரை நகரத்தின் காவல் தெய்வமாகவும் கொள்ளப்பட்டது, என்க.

இடக்கால் தனிச்சிலம்பரற்றினும் வலக்கால் புனைகழல் கட்டும் தகைமையள் என்றும் பாடம். கடை எயிறு என்பதற்கு, பன்றிக் கொம்பு போலப் புறப்பட்ட எயிறு என்பது அரும்பதவுரை. கொடுவாள் - மழு.

10-17: பனித்துறை .............. குறையென

(இதன்பொருள்.) பனித்துறைக் கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன் பொற்கோட்டுவரம்பன் பொதியிற் பொருப்பன் - சிறந்த முத்தினையுடைய துறையினையுடைய கொற்கைப்பட்டினத்தின் தலைவனும் தென்குமரி என்னும் செந்தமிழ் நாட்டுத் தெற்கெல்லையாகிய கடல் துறையையுடையவனும், பொன்னாகிய குவட்டை யுடைய இமயமலையினைத் தனதாட்சிக்கு வடவெல்லையாக உடையவனும் கன்னித்தமிழ் தோன்றிய பொதியின் மலையினை யுடையவனும் ஆகிய பாண்டிய மன்னனுடைய குலமாகிய; குலமுதல் கிழத்தி ஆதலின் - இறைக் குலத்தை அது தோன்றிய காலந் தொடங்கிக் காத்துவருகின்ற உரிமை உடையாளாதலின்; அலமந்து ஒருமுலை குறைத்த திருமாபத்தினி - தன் கணவனை இழந்தமையாலே பெரிதும் வருந்தித் தனது ஒரு கொங்கையினைத் திருகி வீசி மதுரையை எரியுண்ணச் செய்த திருமாபத்தினியாகிய; அலமருதிரு முகத்து ஆயிழை நங்கைதன் - தனது மனச்சுழற்சி வெளிப்பட்டுத் தோன்றுதற்கிடனான திருமுகத்தையுடைய மாதருள் தலைசிறந்த மங்கையாகிய கண்ணகியின்; முன்னிலை ஈயாள் - முன்னே தோன்றுதற்குத் துணியாதவளாய், பின்னிலைத் தோன்றி - அம் மாபத்தினிக்குப் பின்னர்த் திருவுருக்கொண்டு அவளைத் தொடர்ந்து சென்று; நங்கை - மாதர் மணிவிளக்கே; வாழி - நீ நீடூழி வாழ்வாயாக! என் குறைகேட்டிசின் என - யான் நின்பால் கூறுதற்குரிய என் காரியம் ஒன்றுண்டு அதனைக் கூறுவேன் கேட்பாயாக! என்று கூறி இரவா நிற்ப, என்க.

(விளக்கம்) மதுராபதி என்பது அதிகாரத்தாற் பெற்றாம். ஈண்டும் கொண்கன் துறைவன் வரம்பன் பொருப்பன் என்னும் பல பெயர்கள் பாண்டியன் என்னும் ஒரு பொருள்மேல் அடுக்கி வந்தன. அத் தெய்வம் திருமாபத்தினிமுன் வருதற்குக் காரணம் தெரித்தோதுவார் குலமுதற் கிழத்தியாதலின் என்றார். நங்கையின் சீற்றத்திற்குத் தானும் அஞ்சி முன்னில்லாது பின்னிலைத் தோன்றினள் என்பது கருத்து. குறை - காரியம். இசின்: முன்னிலையசை. தெய்வம் அலமந்து அலமரும் நங்கை பின்தோன்றி எனினுமாம். இதற்குத் தெய்வம் தன் காவலிற்பட்ட மன்னனும் அவன் நகரமும் அழிதற்கு அலமந்தது என்பது கருத்தாகக் கொள்க. அலமருதல் - துன்பத்தால் சுழலுதல்.

கண்ணகி கூற்று

18-20: வாட்டிய .............. என

(இதன்பொருள்.) வாட்டிய திருமுகம் வலவயின் சோட்டி - அம் மதுராபதியின் வேண்டுகோளாகிய மொழியைக் கேட்டலும் அக்கண்ணகித் தெய்வந்தானும் துயரத்தால் வாடிய தனது திருமுகத்தை வலப்பக்கமாகத் திருப்பி அம் மதுராபதியை நோக்கி; என்பின் வருவோய் நீ யாரை - என்பின் வருகின்ற நீதான் யார்; என்னுடை ஆர்அஞர் எவ்வம் அறிதியோ என - நீதான் என்னுடைய பொறுத்தற்கரிய பெருந்துன்பத்தின் தன்மையை உணர்ந்துள்ளாயோ? எற்றிற்குப் பின்வருதி? என்று வினவா நிற்ப என்க.

(விளக்கம்) வாட்டிய - வாடிய; விகாரம். கோட்டுதல் - ஈண்டுத் திருப்புதல். யாரை என்புழி ஐகாரம்: சாரியை. அஞர் எவ்வம்: ஒரு பொருட் பன்மொழி.

மதுராபதியின் விடை

21-30: ஆரஞர் ................ வந்தவினை

(இதன்பொருள்.) அணியிழாய் - நங்காய்! ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன் - யான் நினது பொறுத்தற்கரிய மாபெருந்துன்பத்தின் தன்மையை நன்கு அறிந்துள்ளேன் காண்: மாபெருந் கூடல் மதுராபதியென்பேன் - யான் மிகப்பெரிய இக் கூடன்மா நகரத்தின் காவல் தெய்வமாகிய மதுராபதி என்னும் தெய்வங் காண்! கட்டுரை யாட்டினேன் - யான் நின்பால் கூறுதற்குரிய பொருள் பொதிந்த மொழி ஒன்றுடையேன்; நின் கணவற்குப் பட்ட கவற்சியேன் - யானும் நின்னுடைய கணவனின் பொருட்டுப் பெரிதும் துன்பமுடையேன் காண்! பைந்தொடி கேட்டி - பசிய தொடியினையுடைய நங்கையே! எனது கட்டுரையைக் கேட்பாயாக! பெருந்தகைப் பெண் - பெண்டிர்க்குரிய பெருங்குணங்கள் எல்லாம் உடைய பெண்மணியே; என் நெஞ்சம் வருந்திப் புலம்புறும் நோய் ஒன்று கேளாய் -என் நெஞ்சமானது பெரிதும் வருந்தித் தனிமையுறுதற்குக் காரணமான துன்பம் ஒன்றனைக் கேட்பாயாக; தோழி நீ எம் கோமகற்கு ஊழ்வினை வந்தக்கடை ஈதொன்று கேட்டி - என் தோழியே! எம்மரசனுக்கு ஊழ்வினை வந்த வகையாகிய ஈதொரு செய்தியையும் கேட்பாயாக! மாதராய் உன் கணவற்குத் தீதுஉற வந்தவினை ஈதொன்று கேள் - பெண்ணே! உன்னுடைய கணவனுக்குத் தீமை உறுதற்குக் காரணமாக வந்துற்ற பழவினையின் செய்தியாகிய பிறிதொன்றனையும் கூறுவல் கேட்பாயாக; என்றாள் என்க.

(விளக்கம்) எவ்வம் அறிதியோ என்னும் வினாவிற்கு எவ்வம் அறிந்தேன் எனவும், யாரை நீ என்னும் வினாவிற்கு யான் மதுராபதி எனவும், பேணி இத் தெய்வம் விடை கூறுதலும், பின்னர் நின்பால் கட்டுரை கூற வந்துளேன் எனவும் அவைதாம் யாவை எனின் என் நோய் ஒன்றும், எம்மரசனுக்கு ஊழ்வினை வந்தபடி ஒன்றும், மேலும் உன் கணவனுக்கு வந்த ஈதொன்றுமாம் என அக் கண்ணகி தன்னை விரும்பித் தான் கூறுவனவற்றைக் கேட்குமாறு தொகுத்தும் வகுத்தும் கூறுகின்ற சொற்றிறம் உணர்ந்து மகிழற்பாலதாம். இனி அத்தெய்வம் இவ்வாறு தோற்றுவாய் செய்த தன்னுடைய கட்டுரையைத் தொகை வகையாற் கூறி மேலே விரிவகையாற் கூறத் தொடங்குகின்றது; என்க.

பாண்டியனின் செங்கோன் மாண்பு

30-34: காதில் ........... அல்லன்

(இதன்பொருள்.) காதில் மறை நா ஓசை அல்லது யாவதும் மணி நாவோசை கேட்டதும் இலன் - எங்கள் அரசர் பெருமான் பாண்டியன் இதுகாறும் தனது செவியால் அந்தணர் தம் நாவால் ஓதுகின்ற அவர்தம் வேதமுழக்கத்தைக் கேட்பதல்லாமல் ஒருசிறிதுந் தன்பால்குறை கூற வருவோர் இயக்குகின்ற தனது கடைமணி நாவினது ஓசையை ஒருபொழுதும் கேட்டிருப்பானு மல்லன்! அடிதொழுது இறைஞ்சா மன்னர் அல்லது - ஒரோ வழி, தன் அடிகளைத் தொழுது வணங்காத பகைமன்னர்கள் அழுக்காறு காரணமாகத் தம்முள் தன்னைப் பழிதூற்றுதல் அல்லது; குடிபழி தூற்றும் கோலனும் அல்லன் - தனது குடை நிழலில் அமைந்த குடிமக்களே பழிதூற்றுதற்குக் காரணமான கொடுங்கோல் உடையனும் அல்லன் காண்! குடி தழுவிச் செங்கோல் ஓச்சும் மன்னனே எங்கள் கோமகன் கண்டாய் என்றாள், என்க.

(விளக்கம்) மறைநா - மறையோதும் அந்தணர்நா. யாவதும் - சிறிதும். மணிநா - ஆராய்ச்சிமணியின் நாக்கு.

இதுவுமது

35-41: இன்னுங் கேட்டி ............. தாராது

(இதன்பொருள்.) இன்னுங் கேட்டி - நங்காய்! இன்னும் எம்மரசன் பிறந்த குடியினது மாண்பினையும் கேட்பாயாக! ஒழுக்கொடு புணர்ந்த இவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு - நங்காய்! படைப்புக் காலந்தொட்டு நல்லொழுக்கத்தோடு இடையறாது கூடி வருகின்ற இந்தப் பாண்டிய மன்னருடைய சிறப்பான குடியின்கண் பிறந்தவர்களுக்கு; இளமை யானை கல்விப்பாகன் கை அகப்படாது - இளமைப் பருவம் என்கின்ற களிற்றியானையானது கல்வியாகிய பாகனுடைய அடக்குமுறைச் செயலின்கண் அகப்படாமல்; நல்நுதல் மடந்தையர் மடம் கெழு நோக்கின்- நல்ல நெற்றியையுடைய மகளிரினது மடப்பம் பொருந்திய காமநோக்கங் காரணமாக; மதமுகம் திறப்புண்டு - மதமாகிய வழி நன்கு திறக்கப்பட்டு; இடங்கழி நெஞ்சத்து - எல்லை கடந்த காமம் பெருகிய நெஞ்சத்தோடே; ஒல்கா உள்ளத்து ஓடுமாயினும் குறையாத ஊக்கத்தோடே நெறியல்லாத நெறியின்கண் இயங்குதல் பிறர்க்கெல்லாம் இயல்பேயாயினும்; இழுக்கந் தாராது - அத்தகைய இளம்பருவமும் ஒருசிறிதும் பழியைத் தரமாட்டாது காண் என்றாள், என்க.

(விளக்கம்) இப் பாண்டியருடைய விழுக்குடியிற் பிறந்தோர்க்குப் பிறர்க்கெல்லாம் இழுக்கமுண்டாக்கும் இளமைப் பருவந்தானும் இழுக்க முண்டாக்க மாட்டாது என்று அறிவித்தபடியாம்: என்னை?

இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச்
செப்பமு நாணு மொருங்கு  (951)

எனவும்,

ஒழுக்கமும் வாய்மையு நாணுமிம் மூன்று
மிழுக்கார் குடிப்பிறந் தார்  (952)

எனவும் வரும் சான்றோர் மொழிபற்றிப் பாண்டியனுடைய குடியை ஒழுக்கொடு புணர்ந்த விழுக்குடி என்றும், அத்தகைய குடிப்பிறப் புண்மையால் ஏனையோர் இழுக்குப்படும் இளம்பருவத்தினும் இக் குடிப்பிறந்தோர் இழுக்கம் எய்தார் என்றும் தெரித்தோதியவாறு. இங்ஙனங் கூறியது -கண்ணகியார் முறையில் அரசன் தன் ஊர் எனவும், மறனொடு திரியுங்கோல் மன்னவன் எனவும், என் காற் சிலம்பு கொள்ளும் விலைப்பொருட்டால் கொன்றாரே எனவும், பழி கூறியதற்கு, எங்கோமகன் அவ்வாறு இழுக்குவானல்லன் என்று உணர்த்தியவாறு என்க. இடங்கழி நெஞ்சம் -நன்னெறியின் எல்லையாகிய இடத்தைக் கடந்து போன நெஞ்சம். கல்வியாகிய பாகன் என்க. உள்ளம் - ஊக்கம். விழுக்குடி - ஒழுக்கத்தாற் சிறந்த குடி.

பாண்டிய மன்னரின் செங்கோற் சிறப்பு

41-47: இதுவுங்கேட்டி ............... காவாதோவென

(இதன்பொருள்.) இதுவுங் கேட்டி - நங்காய்! இறைக்குடியாகிய இப்பாண்டியர் விழுக்குடிப் பிறந்தோர் செங்கோன்மைக்கு எடுத்துக்காட்டாக இன்னும் ஒன்று கூறுவேன் அதனையும் கேட்பாயாக; உதவாவாழ்க்கைக் கீரந்தை மனைவி - பிறருக்கு ஏதும் உதவிசெய்ய வியலாத வறுமையையுடைய தனது வாழ்க்கையை நல்வாழ்க்கையாக்கும் பொருட்டுக் கீரந்தை என்னும் அந்தணன் ஒருவன் பொருள் தேடுதற்கு வேற்று நாட்டிற்குச் செல்பவன் தனக்குத் துணையில்லையே என வருந்திய மனைவிக்கு; அன்புடையோய்! அரைச வேலி அல்லது யாவதும் புரைதீர் வேலி இல்லென - குடிமக்களுக்குச் செங்கோலரசனாகிய வேலியே பாதுகாக்கும் வேலியாவதல்லது அதனினும் காட்டில் சிறந்த வேலி வேறொன்றும் இல்லை. அஞ்சற்க! எனக் கூறிப் போயினனாக; ஒருநாள் புதவக் கதவம் புடைத்தனன் - ஒருநாள் இக் குடிப்பிறந்த மன்னனொருவன் மாறுவேடங் கொண்டு நகரி காவற்பொருட்டு இரவில் வந்தவன் அப் பார்ப்பனி இருந்த வீட்டின் வாயிற் கதவினை இதன்கண் உறைவார் யார் என அறிதற்பொருட்டுக் கையால் தட்டினனாக அவ்வொலிகேட்டு அஞ்சிய பார்ப்பனி அந்தோ நீவிர் (அரைசவேலி அல்லது யாவதும் புரைதீர் வேலி இல்லென மொழிந்து) மன்றத்திருத்திச் சென்றீர் நன்கு பாதுகாவலில்லாத இம்மன்றத்தின் கண் என்னை வைத்துச் சென்றீரே இன்று; அவ்வழி அவ்வேலி காவாதோ என - இற்றைநாள் அவ்வாறு அந்த அரசவேலி என்னைப் பாதுகாவாது ஒழியுமோ! என்று சொல்லி அச்சத்தால் தன் கணவனை நினைந்து அரற்றாநிற்க, என்க.

(விளக்கம்) உதவா வாழ்க்கை - பிறர்க்கு உதவிசெய்ய வியலாத வறுமை நிலை. அவ்வாழ்க்கையைப் பொறாமல் பொருள் தேடுதற்கு வேற்றுநாடு சென்ற கீரந்தை என்க. அவன் செல்லுங்கால் தனக்குத் துணையின்மை நோக்கி வருந்திய மனைவிக்கு அரசவேலி நின்னைப் பாதுகாக்கும் அஞ்சாதே என்று சொல்லிப் போயினன் என்க. நகரி காவற்பொருட்டு இரவில் மாறுவேடங்கொண்டு தெருவில் வந்த மன்னன் அவ்வீட்டினைக் கண்டு நன்கு காவலில்லாத இவ்வீட்டில் உறைவார் உளரோ இலரோ என்று அறிந்துகோடற்கு அவ் வீட்டின் கதவைத் தட்டினான் என்க. உள்ளிருந்த மனைவி தன் கணவன் சொல்லியதைச் சொல்லி அவ்வரசவேலி இன்று காவாதோ என்று அஞ்சி அரற்றினள் என்றவாறு. இவ் வரலாற்றினை வேறுவேறு வகையாகவும் கூறுவாரும் உளர். மன்றம் என்றது பாதுகாவலின்மை நோக்கி இகழ்ந்து கூறியவாறு. அரும்பதவுரையாசிரியரும் அரணில்லாத வீடு என்பதுமுணர்க.

48-54: செவிச்சூட்டாணி ................... ஆகுதல்

(இதன்பொருள்.) செவிச்சூட்டாணியில் புகை அழல் பொத்தி நெஞ்சம் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று - அப் பார்ப்பனியின் அரற்றுரை கேட்டுத் தனது தவற்றினை உணர்ந்த அப் பாண்டிய மன்னன் அவள் கூறிய அம்மொழி தானும் தனது செவியின்கண் உலையில் காய்ச்சிய புகையும் தீயால் பொதியப்பட்ட இருப்பாணியைப் போல நுழைந்து தனது நெஞ்சினைச் சுடுதலாலே அந்தோ இவளுக்கு நமதுசெயல் பழியைப் பிறப்பிக்குமே என்று அஞ்சி மெய்நடுக்கமெய்தி அத் தவற்றினைச் செய்தமைக்காக; வச்சிரத்தடக்கை அமரர்கோமான் உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்த கை குறைத்த - வச்சிரப் படையை யுடைய பெரிய கையையுடைய தேவேந்திரனுடைய தலையிற் சூட்டியிருந்த பொன்னாலியன்ற முடியணியை ஒளியுடைய தனது சக்கரப் படையால் உடைத்த பெருமையுடைய தனது கையை அப்பொழுதே தனது வாளால் துணித்த; செங்கோல் - செங்கோன்மைச் சிறப்பினையும்; குறையாக் கொற்றத்து - ஒரு பொழுதும் குன்றாத வெற்றியினையுமுடைய; இறைக்குடிப் பிறந்தோர்க்கு - இப்பாண்டிய மன்னர் குடியில் பிறந்தவர்க்கு; இழுக்கமின்மை ஒருபொழுதும் பழிபிறவாமை; நல்வாய் ஆகுதல் - பேருண்மையே ஆதலை அறிந்துகோடற்கு; இன்னும் கேட்டி - இன்னும் யான் கூறுவதனைக் கேட்பாயாக என்றாள் என்க.

(விளக்கம்) நள்ளிரவில் யாரோ ஒருவன் அப் பார்ப்பனி வீட்டின் கதவைத் தட்டினான் எனப் பிறர் அறிந்தவிடத்து ஏனையோர்க்கு அவன் கற்புடைமையின்கண் ஐயம் பிறத்தல் தேற்றம் என்பதுபற்றி அரசன் அஞ்சி நடுங்கினன் என்பது கருத்து. ஈண்டு,

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ
தஞ்ச லறிவார் தொழில்  (428)

எனவும்,

பிறர்பழியுந் தம்பழியு நாணுவார் நாணுக்
குறைபதி யென்னு முலகு  (1015)

எனவும் வரும் திருக்குறள்கள் நினைவிற் கொள்ளற்பாலனவாம். அப்பார்ப்பனியின் அரற்றுரைக்குப் புகையும் அழலும் பொத்திய சூட்டாணி உவமை என்க. செவியின்கண் சூட்டாணிபோல அழல் பொத்தி நெஞ்சம் சுடுதலின் என்க. அவன் குறைத்த கையின் சிறப்புக் கூறுவாள் அமரர் கோமான் முடி உடைத்த கை என்றாள். இவ்வாற்றால் பாண்டியன் தான்செய்த தவற்றினை உலகறியச் செய்து, பார்ப்பனிக்குப் பழிபிறவாமற் செய்தருளினமை உணர்க. குறைத்தமைக்குக் காரணமான செங்கோல் என்றவாறு. அவ் இறைக் குடியிற் பிறந்த பாண்டியனொருவன் அமரர் கோமான் முடியுடைத்ததனையும் மற்றொருவன் கை குறைத்ததனையும் ஒருங்கே ஈண்டு நெடுஞ் செழியனுக்கு ஏற்றிக் கூறியவாறாம்.

பாண்டியன் கை குறைத்தமையை எனக்குத் தகவன்றா லென்பதே நோக்கித், தனக்குக் கரியாவான் றானாய்த் தவற்றை, நினைத்துத் தன் கைகுறைத்தான் றென்னவன் காணா, ரெனச் செய்யார் மாணாவினை, எனவும், நாடுவிளங் கொண்புகழ் நடுதல் வேண்டித் தன், ஆடு மழைத்தடக்கை யறுத்துமுறை செய்த, பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன் எனவும் வருவனவற்றானும் அறிக.

நெடுஞ்செழியன் ஒற்றாடற் சிறப்பும், முறை செய்தற் சிறப்பும்

(55- பெருஞ்சோறு என்பது தொடங்கி 131 - கொற்ற வேந்தன் என்பது ஈறாக ஒரு தொடர்.)

55-64: பெருஞ்சோறு ...... காண்கென

(இதன்பொருள்.) அறன் அறி செங்கோல் மறநெறி நெடுவாள் - அறத்தின் இயல்பினை நூல்வாயிலாக அறிந்தாங்குச் செலுத்துகின்ற செங்கோல் முறைமையினையும் போர்நெறியினை அறிந்து அதற்கேற்பப் போராற்றுகின்ற நெடிய வாளினையும் உடைய; புறவு நிறைபுக்கோன் - தன்பால் தஞ்சம் புகுந்த புறாவின் பொருட்டு அதன் நிறைக்கு ஈடாகத் தன் தசையெலாம் அரிந்து வைத்தும் பின்னர்த் தானும் துலாத்தின்கண் புகுந்தவனாகிய சிபி மன்னனும்; கறவை முறைசெய்தோன் - ஒரு பசுவிற்குத் தன் அரும்பெறல் மகனைத் தேராழியிலிட்டு முறைசெய்த மனுநீதிச்சோழனும் ஆகிய; பூம்புனல் பழனப் புகார் நகர் வேந்தன் - நீர்ப்பூக்கள் மிகுந்த கழனிகளையுடைய பூம்புகார் நகரத்தையுடைய சோழனுடைய; தாங்கா விளையுள் நல்நாடு அதனுள் - நிலம் பொறாத மிக்க விளைவினையுடைய நல்ல சோழ நாட்டின்கண்; வலவைப் பார்ப்பான் பராசரன் என்போன் - மறைநூல் அறிவின்கண் வல்லவனாகிய பார்ப்பானாகிய பராசரன் என்பவன்; பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை திருநிலை பெற்ற பெருநாள் இருக்கை - பாரதப்போரின்கண் பாண்டவர் கவுரவர் ஆகிய பகைவேந்தர் இருவர் படைகளுக்கும் ஒருசேர மிகுதியாகச் சோறு வழங்கிய வள்ளன்மையையும் திருந்திய வேலேந்திய பெரிய கையினையும், திருமகள் நிலைபெற்ற பெரிய நாளோலக்கத்தினையும் உடைய; குலவுவேல் சேரன் கொடைத் திறம் கேட்டு - தன்னோடு குலவி வருகின்ற வேல்படையினையுடைய உதியன் சேரலாதன் என்னும் சேர மன்னனுடைய வள்ளன்மைச் சிறப்பினைக் கேள்வியுற்று; வண்தமிழ் மறையோர்க்கு வான்உறை கொடுத்த திண்திறல் நெடுவேல் சேரலன் காண்கு என - வளவிய தமிழ்ப்புலவனாகிய பாலைக்கவுதமன் என்னும் அந்தணனுக்கு மேனிலை உலகத்தின்கண் உறையுளை உண்டாக்கிக் கொடுத்த அந்தத் திண்ணிய ஆற்றலுடைய நெடிய வேற்படையையுடைய சேர மன்னனை யான் சென்று காண்பேன் என்று துணிந்து; என்க.

(விளக்கம்) பாரதப் போர் நிகழ்த்த எண்ணிப் பாண்டவரும் கவுரவரும் தனித்தனியே தன்பால் துணைவேண்டி வந்தாராகச் சேர மன்னன் அவ்விருவர்க்கும் நடுவுநிலை யுடையனாய்ப் பாரதப்போர் நிகழ்ந்து முடியுந்துணையும் இருவர் படைகளுக்கும் தான் ஒருவனே உணவு வழங்குவதாக ஒப்புக்கொண்டு அங்ஙனமே வழங்கினான் எனக் கூறுவர். இக்காரணத்தால் இவன் சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் என வழங்கப்பட்டான். இவ் வரலாற்றினை :

ஓரைவ ரீரைம் பதின்ம ருடன்றெழுந்த, போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் எனவும், (29. ஊசல்வரி); உதியஞ் சேரல், பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை எனவும், (அகநா. 233: 9-10.) அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ, நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை, ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப், பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் எனவும், (புறநா.2: 13-6) வருவனவற்றாலுணர்க. நாளிருக்கை - நாளோ லக்கத்து இருக்கை: என்றது கொலுமண்டபத்தை. புறவுநிறை புகுதலும் கறவைமுறை செய்தலுமாகிய புகழ்களை ஒரு சோழன்மேல் ஏற்றிக் கூறுவார், புகார்நகர் வேந்தன் என்றார். வலவை - வல்லமை. வண்டமிழ் மறையோன் என்றது பாலைக் கவுதமனார் என்னும் பார்ப்பனப் புலவரை. இவரை வானின்கண் உறையும்படி செய்த என்றவாறு, இவ் வரலாற்றினை:

நான்மறையாளன் செய்யுட் கொண்டு, மேனிலை யுலகம் விடுத்தோன் எனவும், (சிலப். 28. 137-8); பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக்கவுதமனார் பாடினார் பத்துப் பாட்டு ......... பாடிப்பெற்ற பரிசில். நீர் வேண்டியது கொண்மினென யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டுமெனப் பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெருவேள்வி வேட்பித்துப் பத்தாம் பெருவேள்விற் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினர். எனவும், (பதிற். 3 ஆம் பத்து, இறுதி வாக்கியம்;) துறக்கமெய்திய தொய்யா நல்லிசை, முதியர்ப் பேணிய வுதியஞ் சேரல் எனவும் (அகநா - 233: 7:8.) வருவனவற்றால் அறிக.

65-73: காடு நாடும் ............ பெயர்வோன்

(இதன்பொருள்.) காடும் நாடும் ஊரும் போகி - இடையே கிடந்த காடுகளையும் நாடுகளையும் ஊர்களையும் கடந்து சென்று அப்பாலுள்ள; நீடு நிலை மலையம் பிற்படச்சென்று - நெடிய நிலையினை யுடைய பொதியமலையும் பின்னே கிடக்கும்படி அப்பாற்சென்று; ஆங்கு ஒன்றுபுரி கொள்கை இருபிறப்பாளர் முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி - வீடுபேறு ஒன்றனையே விரும்பும் கோட்பாட்டினையும் இரண்டு பிறப்பினையும் உடைய அந்தணர்க்குரிய மூன்று வகை வேள்வித் தீயையும் ஓம்புதலாகிய செல்வத்தினையும் நான்கு மறைகளையும் கடைபோக ஓதி உணர்தலும்; ஐம்பெரு வேள்வியும் செய்தொழில் ஓம்பும் - ஐந்து வகைப்பட்ட வேள்விகளையும் செய்தலாகிய தொழிலினையும்; அறுதொழில் அந்தணர் பெறுமுறை வகுக்க - தமக்கியன்ற ஆறுதொழிலினையுமுடைய பார்ப்பனர்கள் தாம்பெற்ற முறைமையினை அப் பராசரனுக்குத் தாமறிந்தபடி வகைப்படுத்திக் கூறா நிற்ப; நாவலங்கொண்டு - அப் பராசரன் தனது நாவன்மையைக் கொண்டு;  அவர்களோடு சொற்போர் புரிந்து வெற்றி கொண்டு; நண்ணார் ஓட்டி - பகைவர்களை அஞ்சி ஓடச்செய்து; பார்ப்பன வாகை சூடி - பார்ப்பன வாகை என்னும் சிறப்பினை எய்தி; ஏற்புற நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன் - தன்னுடைய வெற்றிக்குப் பொருத்தமாகச் சேர மன்னன் பால் நல்ல அணிகலன்களைப் பரிசிலாகப் பெற்றுக்கொண்டு தன் ஊர் நோக்கி மீண்டுவருபவன்; என்க.

(விளக்கம்) சோழ நாட்டிற்கும் சேரன் அரண்மனைக்கும் இடையே கிடந்த காடு நாடு ஊர் இவற்றைக் கடந்து மலையம் முதலியவற்றைக் கடந்து சேரன் அரண்மனைக்கண் சென்று அங்குள்ள ஒன்றுபுரி கொள்கை முதலியவற்றையுடைய பார்ப்பனரோடு ஒன்றுபுரி கொள்கை முதலிய பொருள்பற்றி வாதிட்டு வென்று பார்ப்பன வாகைசூடி அவ் வெற்றிக்கேற்ற பரிசிலாக, சேரமன்னன் வழங்கியவற்றைக் கைக்கொண்டு மீண்டு வருபவன் என்றவாறு. ஒன்று என்றது வீடுபேற்றினை. இருபிறப்பாவது - பூணூல் பூணற்கு (உபநயனத்துக்கு) முன் ஒரு பிறப்பும் அதன்பின் ஒரு பிறப்பும் ஆகிய இருவகைப் பிறப்பு என்க. இதனால் பார்ப்பனரை இருபிறப்பாளர் என்றும் கூறுவர். முத்தீ - ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி என்பன. அறுதொழில் - ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. ஆங்கு உள்ள அந்தணர் பெறுமுறை வகுக்க அவரோடு வாதுசெய்து நாவலம்கொண்டு என்றவாறு. நாவலம் - நாவினால் பெறும்வெற்றி. அஃதாவது சொற்போர் புரிந்து வெல்லுதல். பார்ப்பன வாகையின் இயல்பினை:

கேள்வியாற் சிறப்பெய்தி யானை, வேள்வியான் விறன் மிகுத்தன்று எனவும் ஓதங் கரைதவழ் நீர்வேலி யுலகினுள் வேதங் கரைகண்டான் வீற்றிருக்கும் - ஏதம் சுடுசுடர்தானாகிச் சொல்லவே வீழ்ந்த விடுசுடர் வேள்வி யகத்து எனவும் வரும் புறப்பொருள் வெண்பாமாலைக் கொளுவானும் வரலாற்று வெண்பாவானு முணர்க. (பு.வெ.163.) இதன்கண் நண்ணார் என்றது சொற்போரின்கண் தன்னோடு மாறுபட்டவரை, என்க.

74-79: செங்கோல் ............ இருப்போன்

(இதன்பொருள்.) செங்கோல் தென்னன் திருந்து தொழில் மறையவர் தங்கால் என்றது ஊர் - செங்கோன்மை பிறழாத பாண்டிய நாட்டின்கண் திருந்திய தொழிலையுடைய பார்ப்பனர் வாழுகின்ற திருத்தங்கால் என்னும் பெயரையுடைய ஊரின்கண் வந்து; அவ்வூர்ப் பாசிலை பொதுளிய போதி மன்றத்து - அவ்வூரின்கண்ணுள்ள பசிய இலை நிறைந்த அரசமரத்தையுடையதொரு மன்றத்தின்கண் இளைப்பாறுதற் பொருட்டு; தண்டே குண்டிகை வெள்குடை காட்டம் பண்டச் சிறுபொதி பாதக்காப்பொடு களைந்தனன் இருப்போன் - தனது ஊன்றுகோலையும் குண்டிகையையும் வெள்ளைக் குடையையும் சமித்துக்களையும் பரிசிலாகப் பெற்ற பண்டங்களையுடைய சிறிய மூடையையும் மிதியடியையும் நிலத்தின்கண் ஒருசேர வைத்து இளைப்பாறி இருந்தனனாக; என்க.

(விளக்கம்) மறையவர் - பஞ்சக்கிராமிகள். தங்கால் - திருத்தங்கால் என்னும் ஊர். மன்றம் - அவ்வூரிலுள்ள போதிமன்றம். அம் மன்றத்தில் இளைப்பாறுதற் பொருட்டுத் தண்டு முதலியவற்றை ஓரிடத்தே வைத்து இளைப்பாறி இருந்தான் என்க. பாதக்காப்பு - மிதியடி. களைந்தனன் : முற்றெச்சம்.

79-87: காவல் வெண்குடை ................ சூழ்தர

(இதன்பொருள்.) காவல் வெண்குடை விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி - அங்ஙனம் இருந்த பராசரன் தன் தகுதிக் கேற்ற பரிசில் நல்கிப் போற்றிய சேர மன்னனை நினைந்து வாழ்த்துபவன் செங்கோன்மை பிறழாது மன்னுயிரைக் காக்கின்ற கொற்ற வெண்குடையினையும் பல்வேறு இடத்தும் விளைந்து முதிர்ந்த பெரிய வெற்றியினையும் உடைய மன்னர் பெருந்தகை வாழ்வானாக; கடல் கடம்பு எறிந்த காவலன் வாழி - கடலிடையே கிடக்கும் தீவகத்தில் வாழும் பகைவருடைய கடம்பாகிய காவன் மரத்தைத் தடிந்து அவரைவென்ற வெற்றி வேந்தன் நீடூழி வாழ்வானாக; விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி - இமயமலையின் மிசைத் தனதிலச்சினை யாகிய வில்லினைத் தனது வெற்றிக் கறிகுறியாகப் பொறித்த வேந்தர் வேந்தன் வாழ்வானாக; பூந்தண் பொருநைப் பொறையன் வாழி - மலர்களையுடைய தண்ணிய புனலையுடைய பொருநை யாற்றையுடைய பொறையன் வாழ்வானாக; மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கென - மாந்தரஞ் சேரலிரும் பொறை என்னும் திருப்பெயரையுடைய மன்னவன் வாழ்வானாக என்று வாய்விட்டுக் கூறி வாழ்த்தாநிற்ப அவ் வாழ்த்தொலியைக் கேட்டலும்; குழலும் குடுமியும் மழலைச் செவ்வாய்த் தளர்நடை ஆயத்து - குழலையும் குடுமியையும் மழலை பேசுகின்ற சிவந்த வாயினையும் தளர்ந்த நடையினையும் உடையவராய்க் கூட்டங்கூடி; தமர் முதல் நீங்கி - தம் தாய் தந்தையர் முதலிய சுற்றத்தாரைப் பிரிந்து வந்து; விளையாடு சிறாஅர் எல்லாம் சூழ்தர - அம் மன்றத்தின்கண் விளையாடுகின்ற பார்ப்பனச் சிறுவர்கள் எல்லாம் அப் பராசரனைச் சூழ்ந்து கொள்ள; என்க.

(விளக்கம்) பராசரன் சேரன் தனக்குச் செய்த உதவியை நினைந்து அச் சேர மன்னனைப் பலவாறு வாழ்த்தினன் என்க. அவ் வாழ்த்தொலி கேட்டு அம் மன்றத்தில் விளையாடுகின்ற பார்ப்பனச் சிறுவர் எல்லாம் வந்து பராசரனைச் சூழ்ந்து கொண்டார் என்க.

பராசரன் அச் சிறுவரை நோக்கிக் கூறுதல்

88-94: குண்டப் பார்ப்பீர் ................ ஓத

(இதன்பொருள்.) குண்டப் பார்ப்பீர் - பார்ப்பனச் சிறுவர்களே! நுங்களில் யாரேனும்; என்னோடு ஓதி என் பண்டச் சிறுபொதி கொண்டு போமின் என - என்னோடு சேர்ந்து மறையினை ஓதவல்லீர் உளீராயின் வம்மின்! வந்து ஓதுமின்! அங்ஙனம் ஓதுவீர் யான் பரிசிலாகப்பெற்ற பொருளையுடைய இச் சிறிய முடையைப் பரிசிலாகப் பெற்றுக் கொண்டுபோவீராக ! என்று கூறாநிற்ப; சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன் ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன் - அதுகேட்டு அச் சிறுவர்களுள் வைத்துப் புகழினால் தகுந்த சிறப்பினையுடைய வார்த்திகன் என்னும் பார்ப்பனனுடைய மகனும் தக்கிணாமூர்த்தி என்னும் பெயர்பெற்று வளர்ந்தவனும் ஆகிய சிறுவன் ஒருவன் அங்ஙனம் ஓதுவதற்குத் துணிந்து முன்வந்து; பால் நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர் - பால்மணங் கமழுகின்ற சிவந்த வாயையுடைய தன்னையொத்த ஏனைச் சிறுவர்களின் முன்னர்; தளர்நா ஆயினும் மறைவிளி வழாஅது - தன்னுடைய நாக்குத்தானும் மழலை மாறாத தளர்ச்சியையுடைய நாக்காக விருப்பினும் மறையின் ஒலி சிறிதும் வழுவாதபடி; உளமலி உவகையோடு - தனது உள்ளத்தின்கண் மிகுந்த மகிழ்ச்சியோடே; ஒப்ப ஓத - அப்பராசரனோடு நன்கு பொருந்த ஓதா நிற்றலால்; என்க.

(விளக்கம்) குண்டன்: குட்டன் என்பதன் விகாரம். சிறுவன் என்னும் பொருட்டு. எனவே குண்டப்பார்ப்பீர் என்றது பார்ப்பனச் சிறுவர்களே! என்றவாறாயிற்று. இனி இதற்குப் பிழுக்கைமாணி காள்; சிறுமாணிகாள் - சிறுபிள்ளைகாள் எனினுமாம் என்பர் அரும்பதவுரையாசிரியர். ஆலமர் செல்வன் பெயர் என்றது தக்கிணாமூர்த்தி என்னும் பெயர் என்றவாறு. படியோர் - ஒத்தவர். மறைவிளி மறையின் ஓசை. பராசரனோடு ஒப்ப ஓத என்க.

தக்கிணாமூர்த்தி பரிசில்பெறுதலும் அதன்விளைவும்

95-103 : தக்கிணன் .............. இட்டனனாக

(இதன்பொருள்.) தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து - அங்ஙனம் தன்னோடு ஓதிய தக்கிணாமூர்த்தி என்னும் அப் பார்ப்பனச் சிறுவனைப் பார்ப்பன வாகைபெற்று உயர்ந்தவனாகிய அப் பராசரன் பெரிதும் வியந்து பாராட்டி; முத்தப் பூண் நூல் அத்தகு புனைகலம் கடகம் தோட்டோடு கையுறை ஈத்து முத்துக்கோவையாகிய பூணூலும் அதற்கேற்ற அணிகலன்கள் பிறவும் கைக்குக் கடகமும் காதிற்குத் தோடும் ஆகிய இவற்றோடு தான்கொணர்ந்த கைப்பொருளாகிய அப் பண்டச் சிறுபொதியையும் அத் தக்கிணாமூர்த்திக்கு வழங்கிவிட்டு; தன்பதிப் பெயர்ந்தனனாக - தன் ஊர்க்குச் சென்றனனாக; கோத்தொழில் இளையவர் - அவ்வூரின்கண்ணுள்ள அரசியற் பணியாளராகிய இளமையுடையோர் சிலர்; நன்கலன் புனைபவும் பூண்பவும் பொறாஅர் ஆகி - இவ்வாற்றால் தக்கிணாமூர்த்தியின் குடும்பத்தினர் அழகிய அணிகலன்கள் புனைவனவற்றையும் பூண்பனவற்றையும் கண்டுபொறாமை கொண்டு; வார்த்திகன் தன்னைக் காத்தனர் ஓம்பி - வார்த்திகன் என்னும் பார்ப்பனனைப் பிடித்துத் தம் காவலில் வைத்து; கோமுறை அன்றிப் படுபொருள் வெளவிய பார்ப்பான் இவன் என - அரசியல் முறைக்கு மாறாகப் புதையல் பொருளைக் கவர்ந்துகொண்ட பார்ப்பனன் இவன் என்று அவன்பால் குற்றங்காட்டி; இடுசிறைக் கோட்டத்து இட்டனராக - அரசனுக்குரிய பொருளைக் கைப்பற்றிக் கொண்ட வரை இடுதற்குரிய சிறைக்கோட்டத்தின்கண் இடுவாராயினர்; என்க.

(விளக்கம்) தக்கிணன் - தக்கிணாமூர்த்தி. பராசரன் பார்ப்பன வாகைபெற்றுச் சிறந்தோன் ஆதலோடு வள்ளன்மையாலும் சிறந்தோன் ஆதல்பற்றி மிக்கோன் என்றார். முத்தப்பூணூல் - முத்துகள் கோத்த முப்புரிநூல் ஆகிய பூணூல் என்பாருமுளர். அத்தகு - அழகினால் தகுதியுற்ற எனினுமாம். கடகம் ஒருவகைக் கையணி. தோடு - காதணி. கையுறை என்றது தன் கையகத்ததாகிய பண்டச் சிறுபொதியை. பராசரன் சிறுவனுக்குக் கொடுத்தவை காணிக்கை என்னல் பொருந்தாமை யுணர்க. புனைப - புனைவன. பூண்ப-பூண்பன. இவை அணிகலவகை. கோத்தொழில் இளையவர் பொறார் ஆகி என இயைக்க. படுபொருள் - புதையல். களவுப்பொருள் எனினுமாம். புதையற் பொருள் அரசனுக்குரிய பொருள் ஆதலின் கோமுறையன்றி வெளவினான் என்பது கருத்து. இடுசிறைக்கோட்டம் - கள்வரை இடுகின்ற சிறைக்கோட்டம்.

வார்த்திகன் மனைவி செயல்

104-106: வார்த்திகன் ............ பொங்கினள்

(இதன்பொருள்.) வார்த்திகன் மனைவி கார்த்திகை யென்போள்- சிறையிலிடப்பட்ட வார்த்திகன் என்னும் பார்ப்பனனுடைய மனைவியாகிய கார்த்திகை என்பவள் அச்செயல் கண்டு; அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்தில் புரண்டனள் - பெரிதும் வருந்தினள் ஏங்கு அழுதாள் நிலத்தில் வீழ்ந்து புரண்டாள்; பொங்கினள் புலந்தனள் - சினத்தால் பொங்கி எழுந்தாள் செங்கோலை வெறுத்துப் பேசினள்; என்க.

(விளக்கம்) அலந்தனள் வருந்தினள் சினத்தால் பொங்கி எழுந்தாள் என்க. புலந்தனள் என்றது செங்கோலை வெறுத்துப் பேசினாள் என்றவாறு.

106-112: அதுகண்டு .............. அறிந்தீமின்னென

(இதன்பொருள்.) அதுகண்டு மை அறு சிறப்பின் ஐயை கோயில் செய்வினைக் கதவம் திறவாது ஆகலின் - அக் கார்த்திகை என்னும் பத்தினிக்குற்ற நிலைமைகண்டு குற்றமற்ற சிறப்பினையுடைய கொற்றவை என்னும் தெய்வத்தின் கோயிலினது சிற்பச் செய்வினை அமைந்த கதவு திறக்கப்படாததாக ஆனமையின்; திறவாது அடைத்த கதவம் திண்நிலை மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கி - திறக்கவியலாபடி அடைக்கப்பட்ட திருக்கோயிற் கதவினது திண்ணிய நிலைமையினை மறப்பண்பு மிக்க வேலேந்திய எங்கள் மன்னவனாகிய பாண்டியன் நெடுஞ்செழியன் கேள்வியுற்றபொழுது நெஞ்சம் மயங்கித் தன் ஏவலரை நோக்கி; கொற்றவைக்கு உற்ற இடும்பை - நம் தெய்வமாகிய கொற்றவையின் திருவுள்ளத்தில் இப்பொழுது எய்திய குறையை; அறிந்தீமின் -ஆராய்ந்தறிமின்! யாவதுங் கொடுங்கோல் உண்டுகொல் - மேலும் நமது ஆட்சியின்கண் ஏதேனும் செங்கோன்மைக்கு மாறாக நிகழ்ந்தது உண்டோ? அதனையும் ஆராய்ந்து வந்து கூறுமின்; என - என்று ஏவலருக்குக் கட்டளையிடா நிற்ப; என்க.

(விளக்கம்) கார்த்திகைக்குக் கோத் தொழில் இளையவர் செய்த கொடுமை பொறாது கொற்றவை தன் கோயிற் கதவைத் திறக்க வியலாதபடி செய்தருளினள் என்பது கருத்து. மை - குற்றம். ஐயை-கொற்றவை (துர்க்கை). மன்னவன் என்றது நெடுஞ்செழியனை. தான் அறியாவண்ணம் ஏதேனும் கோமுறை பிழைத்துளதோ என்று மயங்கினான்; என்க.

113-117: ஏவலிளையவர் ............ கடனென

(இதன்பொருள்.) ஏவல் இளையவர் காவலன் தொழுது - அக் கட்டளைபெற்ற இளமையுடைய அப் பணியாளர் மன்னனைப் பணிந்து சென்று, ஒற்றினால் ஒற்றிச் செய்தி தெரிந்து அக் கோத்தொழில் இளையவரால் சிறையிடப்பட்ட; வார்த்திகன் கொணர்ந்து அவ் வாய்மொழி உரைப்ப - வார்த்திகன் என்னும் பார்ப்பனனைச் சிறைவீடு செய்து அழைத்து வந்து அரசன் முன்னிறுத்தி உண்மையைக் கூறாநிற்ப அதுகேட்ட அரசன் மனம் வருந்தி; இது நீர்த்து அன்று என நெடுமொழி கூறி -இச் செயல் செங்கோன்மைக்குப் பொருந்திய நீர்மையுடைய தனறு எனச் சொல்லி அப் பார்ப்பனனுக்குப் புகழுரை பலசொல்லி; முறை நிலை திரிந்த அறியா மாக்களின் - தமக்குரிய கடமையினின்றும் பிறழ்ந்த அறிவில்லாத மாக்களாகிய என் பணியாளராலே; என் இறைமுறை பிழைத்தது பொறுத்தல் நும்கடன் என என்னுடைய அரசியல் முறைமை பிழையுடையதாயிற்று, இப் பிழையைப் பொறுத்துக் கொள்ளுதல் பெரியீராகிய நுமது கடமை என்று சொல்லி; என்க.

(விளக்கம்) காவலனைத்தொழுது போய் ஒற்றினால் ஒற்றி உணர்ந்து வார்த்திகனைச் சிறைவீடு செய்து கொணர்ந்து என்க. வாய்மொழி என்றது நிகழ்ந்ததனை உண்மையாக அறிவித்ததனை. நீர்த்து - நீர்மை உடையது. நெடுமொழி - புகழ். முறைநிலை அறியா மாக்களின் என மாறுக. சிறியோர் செய்த பிழையைப் பெரியீராகிய நீயிர் பொறுத்தல் நுங்கடன் என்று வேண்டியவாறு. இறைமுறை - செங்கோன் முறைமை.

118-122: தடம்புனல் .............. தணித்தனனே

(இதன்பொருள்.) தடம்புனல் கழனித் தங்கால் தன்னுடன் மடங்கா விளையுள் வயலூர் நல்கி - பெரிய மருதநிலத்து நீர் வளமுடைய கழனிகள் சூழ்ந்த அவன் பிறந்த ஊராகிய திருத்தங்காலோடே குறையாத விளைவினையுடைய வயலூர் என்னும் ஊரினையும் ஒருசேர அப் பார்ப்பனனுக்கு முற்றூட்டாக வழங்கி; கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் - கற்புடையவளாகிய கார்த்திகை என்பவளுக்கும் அவள் கணவனாகிய அவ்வார்த்திகன் என்பவனுக்கும் முன்னிலையிலேயே; இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கி - பெரிய நிலமடந்தையாகிய தன் தேவிக்குத் தனது அழகிய மார்பினை வழங்கி; அவள் தணியாவேட்கையும் சிறிது தணித்தனன் - அத்தேவியின் குறையாத காமவேட்கையினையும் ஒருசிறிது தணித்தனன் காண் என்றாள்; என்க.

(விளக்கம்) திருத்தங்கால் - அவன் பிறந்தவூராதல் முன்பே பெற்றாம். அவ்வூரோடு வயலூரென்னும் ஊரையும் பரிசிலாக வழங்கினன் என்பது கருத்து. கார்த்திகை ..... திருமார்பு நல்கி என்றது - கற்புடையவளாகிய கார்த்திகையையும் அவள் கணவனையும் அவர்கள் திருவடிகளில் தன் திருமார்பு நிலத்திற்பட வீழ்ந்து வணங்கி என்றவாறு. திருவுடை மன்னனாகிய நெடுஞ்செழியனைத் திருமாலாகக் கொண்டு கூறுகின்றாள் ஆதலின், நிலமடந்தையை அவன் தேவியாகவும் கூறினாள். அவன் மார்பில் எப்பொழுதும் திருமகள் வீற்றிருத்தலால் மற்றொரு தேவியாகிய நிலமகளின் தணியாத வேட்கையை இவ்வாற்றால் ஒரு சிறிது தணித்தனன் என்றாள் என்க. இவ்வரலாற்றின் வாயிலாக நெடுஞ்செழியனைத் தேராமன்னன் என்னும் கோட்பாடுடைய கண்ணகித் தெய்வத்திற்கு அச் செழியனுடைய ஒற்றரால் ஒற்றி உண்மை தேரும் ஆராய்ச்சி வன்மையையும் ஆராய்ந்து கண்டு குறை நேர்ந்துழி, அவன் அதற்குச் செய்யும் செங்கோன் முறைமையையும், இத் தெய்வம் நன்கு திறம்பட விளக்கினமை உணர்க. மன்னன், காலில் வீழ்ந்து வணங்கிய செயலை ஈண்டு அடிகளார் வேறு வாய்பாட்டாற் கூறுகின்ற புலமை நுணுக்கம் நினைந்து நினைந்து மகிழற்பாலது.

இதுவுமது

122-132: நிலைகெழு ............. தகுதியுங்கேள் நீ

(இதன்பொருள்.) நிலைகெழு கூடல் நீள் நெடு மறுகின் மலைபுரை மாடம் எங்கணுங் கேட்பக் கலை அமர்செல்வி கதவம் திறந்தது - கலக்கமின்றி அமைதியோடு நிற்கும் நிலைமை பொருந்திய இம் மதுரை மாநகரத்துள்ள மிகவும் நெடிய தெருவுகளில் அமைந்த மலையொத்த மேனிலை மாடங்களையுள்ளிட்ட எல்லா இடங்களினும் உறைகின்ற மாந்தர் அனைவரும் கேட்கும்படி மான் ஊர்தியின்மீது அமர்ந்த கொற்றவையின் திருக்கோயிற் கதவம் பேரொலியோடு தானே திறந்து கொள்வதாயிற்று; யானை எருத்தத்து அணி முரசு இரீஇ - இச் செய்தி அறிந்தவுடன் மகிழ்ச்சியால் வள்ளுவரை வருவித்து நீவிர் இப்பொழுதே யானையின் பிடரின்கண் அழகிய அற முரசினை வைத்து; சிறைப்படு கோட்டம் சீமின் - சிறைக்கோட்டத் தலைவர்கள் சிறையிடப்பட்டுள்ள மாக்களைச் சிறைவீடு செய்யுங்கள் எனவும்; கறைப்படு மாக்கள் யாவதும் கறைவீடு செய்மின் - இறைப்பொருள் வாங்கும் பணியாளர்கள் எத்துணையும் இறைப்பொருள் கொள்ளாது இறைவீடு செய்யுங்கள்; இடுபொருளாயினும் படுபொருளாயினும் பெற்றவர்க்கு உற்றவர்க்கு உறுதி ஆம் என - பிறர் வழங்கிய பொருளாயினும் புதையல் எடுத்த பொருளாயினும் நிரலே ஏற்றுக்கொண்டவர்க்கும், கண்ணுற்றெடுத்துக்கொண்டவர்க்கும் உறுதிப் பொருள் ஆகும் எனவும் கூறி முரசு அறைமின் என்று பணித்து; கோல்முறை அறைந்த கொற்றவேந்தன் - தனது செங்கோன் முறைமையை மாந்தர்க் கறிவித்த வெற்றியையுடைய வேந்தனாகிய பாண்டியன் நெடுஞ்செழியன்; தான் முறைபிழைத்த தகுதியும் நீ கேள் - தானே செங்கோன் முறைமையில் பிழை செய்தற்குரிய காரணத்தையும் கூறுவன் நங்காய் இதனையும் கேட்கக் கடவாய் என்றாள் என்க.

(விளக்கம்) சிறைப்பணியாளர் சீமின் என வருவித்துக்கொள்க. கறைப்படுமாக்கள் என்றது இறைப்பொருள் கொள்ளும் பணியாளரை என்க. இறை கொடுக்கக்கடவ மாக்களுடைய எனினுமாம். கறை - கடமை. அஃதாவது-இறைப்பொருள். இடுபொருள் - வழங்கும்பொருள். படுபொருள் - புதையற் பொருள். இடுபொருள் பெற்றவர்க்கும், படுபொருள் உற்றவர்க்கும் ஆம் என எதிர் நிரல் நிறை ஆக்குக.

மதுரையும் மன்னனும் கேடுற்றமைக்குக் காரணம்

133-137: ஆடி ................ உண்டே

(இதன்பொருள்.) ஆடித் திங்கள் பேர் இருள் பக்கத்து அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று -இந்த ஆடித் திங்களின்கண் பெரிய இருளையுடைய பகுதியின்கண் அழல்சேர் குட்டத்துக் கார்த்திகை விண்மீனின் குறையினையுடைய எட்டாம் நாளில்; வெள்ளி வாரத்து - வெள்ளிக்கிழமையன்று; ஒள்எரி உண்ண உரைசால் மதுரையோடு அரைசு கேடுஉறும் எனும் உரையும் உண்டு -ஒள்ளிய நெருப்புண்ணுதலாலே புகழமைந்த இம் மதுரை நகரத்தோடே அதனை ஆளும் மன்னனும் கேடெய்துவான் என்னும் ஒரு கணிவன் மொழியும் பண்டே கூறப்பட்டுளதுகாண், இக்காரணத்தினாலேதான் இவை நிகழ்ந்தன என்றாள், என்க.

(விளக்கம்) பேரிருள் பக்கம் என்றது தேய்பிறைப் பகுதியை. அழல் - கார்த்திகை நாள் (விண்மீன்); குட்டம் - குறை. கார்த்திகை நாளில் குறையுடைய எட்டாம் நாள் என்க. பேதைப் படுக்கும் இழவூழ் என்பவாகலின் எம் கொற்ற வேந்தன் இவ்வூழ் காரணமாகக் கோன்முறை பிழைத்தான் அல்லது அவனுக்கு அஃது இயல்பன்று எனவும், நிலமகள் போன்ற பொறையுடைய கற்புடைத் தெய்வமாகிய நீ இங்ஙனம் சீற்றம் எய்தி இந்நகரத்தை எரியூட்டியதற்கும் அதுவே காரணமாதல் வேண்டும் எனவும், அறிவுறுத்திக் கண்ணகியின் சினம் தணிவித்தபடியாம்.

கோவலன் கொலையுண்டமைக்குக் காரணம் கூறுதல்

(137) நிரைதொடி என்பது தொடங்கி (178) வீடுகொண்ட பின் என்னுமளவும், மதுராபதி -கோவலன் கண்ணகி ஆகிய இருவருக்கும் எய்திய துயரங்களுக்குக் காரணமான அவர்தம் முற்பிறப்பில் செய்த பழவினையின் பரிசு கூறுதலாய் ஒரு தொடர்.

137-144: நிரைதொடி ................... பகையுற

(இதன்பொருள்.) நிரைதொடி யோயே - நிரல்பட்ட வளையலையுடைய பெண்ணணங்கே ஈதொன்று கேள்; கடிபொழில் உடுத்த கலிங்க நல்நாட்டு வடிவேல் தடக்கை வசுவுங் குமரனும் - நறுமணங்கமழும் பூம்பொழில் சூழ்ந்த கலிங்கம் என்னும் நல்ல நாட்டின்கண் உள்ள வடித்த வேலையுடைய பெரிய கையினை யுடைய வசுவென்பவனும் குமரன் என்பவனும் நிரலே; தீம்புனல் பழனத்துச் சிங்கபுரத்தினும் காம்பு எழுகானக் கபில புரத்தினும் - இனிய நீர்வளமுடைய கழனிகளையுடைய மருதப் பரப்பின்கண் உள்ள சிங்கபுரம் என்னும் நகரத்தினும் மூங்கில் வளருகின்ற காட்டினையுடைய முல்லை நிலத்தில் அமைந்த கபில புரம் என்னும் நகரத்தினும்; அரைசு ஆள் செல்வத்து நிரைதார் வேந்தர் - இருந்து அரசாளுகின்ற செல்வத்தையுடைய நிரல்பட்ட மலர்மாலை யணிந்த அரசர்களாயிருந்தனர்; வியாத்திருவின் விழுக்குடிப் பிறந்த தாயவேந்தர் தம்முள் பகையுற - கெடாத செல்வத்தையுடைய சிறந்த ஒரே குடியிற்பிறந்த தாயத்தார் ஆகிய அவ்வேந்தர் இருவரும் தம்முள் ஒருவரோடொருவர் பகை கொண்டிருத்தலாலே; என்க.

145-157 : இருமுக்காவத் .......... கொல்வுழி

(இதன்பொருள்.) இருமுக்காவதத்து இடைநிலத்து யாங்கணும் - இவ்விரண்டு கோநகரங்களுக்கும் இடைப்பட்ட ஆறுகாவதத் தொலைவுடைய நிலத்தின்கண் எவ்விடத்தும்; செரு வில் வென்றியின் - அம் மன்னரிருவரும் தம்முட் போர்செய்து வலிய வெற்றி பெறுதல் காரணமாக இடையறாது போர் செய்துவந்தமையாலே; செல்வோர் இன்மையின் - வழிப்போவார் யாரும் இல்லாமையால் வறிதே கிடந்த அவ்விடை நிலத்தில்; சிங்கா வண்புகழ் சிங்கபுரத்தின் - குறையாத வளவிய புகழையுடைய சிங்கபுரத்தின்கண்; அரும்பொருள் வேட்கையின் பெறற்கரிய பொருளை ஈட்டும் விருப்பங் காரணமாக; பெருங்கலன் சுமந்து - பெருவிலை அணிகலன்களைச் சுமந்துகொண்டு; கரந்துறை மாக்களின் - ஒற்றர்களைப்போல மாறுவேடம் புனைந்து காதலி தன்னொடு -தான் வாழுகின்ற கபிலபுரத்தினின்றும் புறப்பட்டுத் தன் மனைவியோடு வந்து; அங்காடிப்பட்டு - கடைத்தெருவில் புகுந்து; அருங்கலன் பகரும் -பெறற்கரிய அணிகலன்களை விற்கின்ற; சங்கமன் என்னும் ஓர் வாணிகன் தன்னை -சங்கமன் என்னும் பெயரையுடைய வாணிகன் ஒருவனை; முந்தைப் பிறப்பில் பைந்தொடி கணவன் - முற்பிறப்பிலே பசிய வளையலை யுடையோய் உன்னுடைய கணவனும்; வெந்திறல் வேந்தற்கு கோத்தொழில் செய்வோன் - வெவ்விய ஆற்றலுடைய வசு என்னும் அரசனிடத்தே அரசியற்பணி செய்பவனும்; பரதன் என்னும் பெயரன் - பரதன் என்னும் பெயரை யுடையவனும் ஆகியிருந்த; அக் கோவலன் - இப்பிறப்பில் நின் கணவனாய் ஈண்டுக் கொலைக்களப்பட்ட அக்கோவலன்; விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின் - அச் சங்கமன் கொல்லா விரதத்தினின்றும் விலகினமை காரணமாகத் தன்னால் வெறுக்கப்பட்டவனாயிருத்தலாலே; இவன் ஒற்றன் எனப் பற்றினன் -இவன் பகை நாட்டிலிருந்து வந்த ஒற்றன் ஆவான் என்று சொல்லி அச் சங்கமனைப் பற்றி; கொண்டு வெற்றிவேல் மன்னற்குக் காட்டிக் கொல்வுழி - கொணர்ந்து வெற்றி வேலையுடைய வசுமன்னனுக்குக் காட்டி அச் சங்கமனைக் கொல்லும் பொழுது; என்க.

(விளக்கம்) இஃதென் சொல்லி வாறோ வெனின்: நின் கணவன் முற்பிறப்பிலே கலிங்க நாட்டுச் சிங்கபுரத்தில் பரதன் என்னும் பெயருடையவனாய் இருந்தான். நீதானும் அவனுக்கு மனைவியாய் இருந்தாய். பரதனுக்குப் பகைவனாய் இருந்த சங்கமன் என்னும் வாணிகன் பகைவர் ஊரிலிருந்து மாறு வேடங்கொண்டு தன்மனைவியோடு சிங்கபுரத்திற் புகுந்து அணிகலன் விற்றுப் பொருளீட்டுவானாயினான். பரதன் என்பவன் அச் சங்கமனைத் தன் பகை காரணமாகப் பிடித்துக் கொண்டு போய் இவன் கபிலபுரத்தினின்றும் வந்த ஒற்றன் என அரசனுக்குக் கூறினன். அரசன் அச் சங்கமனைக் கொல்வித்தான் என்றவாறு. பைந்தொடியென்றது : விளி. கரந்துறை மாக்கள் ..... ஒற்றர். சிங்கா - குறையாத. விரதம் நீங்கிய வெறுப்பு - கொல்லா விரதத்தையுடைய தன் சமயத்தினின்றும் நீங்கினமையால் உண்டான பகை. எனவே பகை காரணமாக ஒற்றன் எனப் பொய் சொல்லிக் கொல்வித்தான் என்றவாறாயிற்று.

158-166: கொலைக்கள ............ நின்றோள்

(இதன்பொருள்.) கொலைக்களப்பட்ட சங்கமன் மனைவி நீலி என்போள் நிலைக்களங்காணாள் - இவ்வாறு கொலைக்களத்தே இறந்தொழிந்த சங்கமன் என்னும் வணிகனுடைய மனைவியாகிய நீலி என்பாள் தான் உயிரோடு நிலைத்து வாழ்தற்கு இடங் காணமாட்டாளாய்; அரசர் முறையோ பரதர் முறையோ ஊரீர் முறையோ சேரியீர் முறையோ என - அரசர்களே என் கணவனைக் கொன்றது அறமோ? வணிகர்களே இஃது அறமோ? ஊரில் வாழும் மாந்தர்களே! நும் மன்னன் செய்தது அறமோ? தெருவில் உள்ளவர்களே! நும்மன்னன் செய்தது அறமோ? என்று சொல்லி; மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு - அந்நகரத்து மன்றங்களினும் தெருக்களினும் சென்றுசென்று அரற்றி இங்ஙனமே; எழுநாள் இரட்டி எல்லை சென்ற பின் - பதினான்குநாள் கழிந்த பின்னர்; தொழு நாள் இது எனத் தோன்ற வாழ்த்தி - என் கணவனை யான் கண்டு வணங்குகின்ற நாள் இஃது என்று சொல்லி எல்லோரும் அறிய வாயால் தன் கணவனை வாழ்த்தி; ஓர் மால் விசும்பு ஏணியில் மலைத்தலை ஏறி - ஒரு பெரிய வானத்தின்கண் ஏறுதற்குரிய ஏணியைப் போன்ற நெடிய மலையின் உச்சியில் ஏறிப்போய் நின்று; கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள் - கொலையின்கண் பட்ட தன் கணவனைக் கூடுதற்கு அமைந்து நின்றவள்; என்க.

(விளக்கம்) நீலி மன்றினும் மறுகினுஞ் சென்று விசும்பிற்கிட்ட ஏணி போன்ற ஒரு நெடிய மலையுச்சியில் ஏறி நின்றவள் என்க. மகன் - கணவன், கூடுபு நின்றோள் - கூடுதற்கு அமைந்து நின்றவள் என்க.

167-176: எம்முறு ............. இல்லென

(இதன்பொருள்.) எம்உறு துயரம் செய்தோர் யாவதும் தம்முறு துயரம் இற்று ஆகுக என்றே - எமக்கு இங்ஙனம் மிகவும் துன்பத்தினைச் செய்தவர் இதன் பயனாக, தாம் எய்தும் துன்பமும் இத்தகைய துன்பமே ஆகுக! என்று சொல்லி; விழுவோன் இட்ட வழுவில் சாபம் பட்டனிர் - அம் மலைத் தலையினின்றும் விழுகின்றவள் இட்ட தப்புதலில்லாத சாபத்தினைப் பெற்றீர்கள் ஆதலால்; கட்டுரை நீ கேள் - ஆதலாலே யான் கூறுகின்ற உனக்கு உறுதி பயக்கும் என்னுடைய மொழியை இன்னும் நீ கேட்பாயாக; உம்மை வினை வந்து உருத்தகாலைச் செம்மை இலோர்க்குச் செய்தவம் உதவாது - முற்பிறப்பிலே செய்த தீவினையின் பயன் வந்து நேர்ந்தபொழுது செவ்விய உள்ளம் இல்லாதவர்களுக்குத் தாம் செய்த தவமானது அத்துன்பத்தைப் போக்குதற்குச் சிறிதும் உதவமாட்டாது ஆதலால்; வார் ஒலி கூந்தல் நின் மணமகன் தன்னை - நீண்டு அடர்ந்த கூந்தலை யுடையோய் நீதானும் உன்னுடைய கணவனை அச் சங்கமன் மனைவியைப் போலவே; ஈர் ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி - இற்றைநாள் தொடங்கிப் பதினான்கு நாள் முழுவதும் நீங்கிய பின்னர்; வானோர் தங்கள் வடிவின் அல்லதை - தேவர்களுடைய வடிவத்தோடே காண்பதல்லாமல்; ஈனோர் வடிவில் காண்டல் இல் என - இந்நிலவுலகத்தில் வாழ்கின்ற மக்கள் வடிவத்தில் காணுதல் இல்லையாம் என்று அறிவுறுத்தா நிற்ப என்க.

(விளக்கம்) உம்மை வினை - முற்பிறப்பிற் செய்த தீவினை. செம்மை - நடுவு நிலைமை. நல்லொழுõக்கமுமாம்: உம்மை இம்மை இரண்டிடத்தும் செய்த தவம் உதவமாட்டாது என்பார் செய்தவம் என இருமைக்கும் பொருந்தக் கூறினார். அஃதாவது பழவினை வந்து பயன் நுகர்விக்குங் காலத்தே பழைய நல்வினையும் இப்பொழுது செய்யும் நல்வினையும் சிறிதும் அந்நுகர்ச்சியைத் தீர்க்கமாட்டா என்றவாறு. அச் சங்கமன் மனைவி போன்றே நீயும் நின் கணவனை ஈரேழ் நாள் கழிந்தே காணல் கூடும் என்றவாறு. ஈனோர் - இந்நில வுலகத்தார். ஈண்டு மதுராபதி கண்ணகிக்குக் கூறுகின்ற கோவலனுடைய பழவினை வரலாறு மணிமேகலையின்கண், கண்ணகி மணிமேகலைக்குக் கூறுவாளாக இங்குக் கூறியபடியே கூறப்பட்டுள்ளது. (மணிமே 10-33.)

கண்ணகியின் செயல்

177-185: மதுரை .............. கொண்டாங்கு

(இதன்பொருள்.) மதுரைமா தெய்வம் மாபத்தினிக்கு விதிமுறை சொல்லி அழல் வீடு கொண்டபின் - மதுரை நகரத்துச் சிறந்த காவற் றெய்வமாகிய மதுராபதி ஊழ்வினையின் விளைவினைத் திருமாபத்தினியாகிய கண்ணகிக்குக் கூறுமுறையானே உளங் கொள்ளுமாறு கூறி அந் நகரத்தைத் தீயினாலெய்துங் கேட்டினின்றும் விடுதலை செய்த பின்னர் கருத்து உறு கணவன் கண்ட பின் அல்லது - என் நெஞ்சத்தே நிலைபெற்றுள்ள என் கணவனைக் கண்கூடாகக்கண்ட பின்னர் இருத்தலன்றிக் காணுமளவும்; இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலன் என - எவ்விடத்தும் அமர்ந்திருப்பேனும் அல்லேன் நிற்றல்தானும் செய்கிலேன் என்று துணிந்து; கொற்றவை வாயில் பொன் தொடி தகர்த்து - அம் மதுரையிற் கொற்றவை எழுந்தருளியிருக்கின்ற திருக்கோயிலின் முன்றிலிடத்தே சென்று தன் கையிலணிந்திருந்த அழகிய வளையல்களை யெல்லாம் உடைத்துப் போகட்டு அத் தெய்வத்தை நோக்கிக் கூறுபவள்; கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன் மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கு என - அன்னையே! அளியேன் இந்நகரத்துத் தலைக்கடைப் பெருவாயிலின்கண் என் ஆருயிர்க்காதலனோடு இனிது வாழக் கருதிப் புகுந்த யான் இப்பொழுது காதலனையும் இம்மை வாழ்வினையும் இழந்து சிறுமையுற்றேனாகி இந்நகரத்துப் புழைக்கடைவாயில் வழியே செல்வேன் காண்! இங்ஙனமிருந்தது என் பழவினைப் பயன் என்று தன்னையே நொந்துகூறி அவ்வாயில் வழியாகப் புறப்பட்டுச் செல்கின்றவள்; இரவும் பகலும் கையற்று மயங்கினள் - இரவும் பகலுமாகிய இரண்டு பொழுதுகளிலும் யாதொன்றுமறியாமல் செயலற்று மயங்கி; உறவு நீர்வையை ஒருகரைக் கொண்டு ஆங்கு - விரைந்தொழுகாநின்ற நீரையுடைய வையைப் பேரியாற்றினது ஒரு கரையினை வழியாகக் கொண்டு நிற்றலும் இருத்தலுமின்றிச் செல்லுங் காலத்தே; என்க.

(விளக்கம்) விதிமுறை - ஊழ்வினை வந்துருத்திய முறையை எனினுமாம். அழல்வீடு - தீப்பற்றி எரியாதபடி விடுதலை செய்தல். அழல்வீடு கொண்டபின் என்றமையால் கண்ணகியின் சினந்தணிந்தமையும் நகரத்தே தீ அவிந்தமையும் பெற்றாம். இவ்வுலகிலில்லாமையால் கருத்துறு கணவன் என்றாள். இருத்தல் - இளைப்பாறியிருத்தல். நிற்றல் - ஓய்ந்துநிற்றல். பெயர்கு - பெயருவேன். பெயர்கெனக் கொற்றவைக்குக் கூறி என்க. இரவென்றும் பகலென்றுமறியாமல் எனினுமாம். உரவு - விரைவு.

186-190: அவலவென்னாள் ....... ஏறி

(இதன்பொருள்.) அவலித்து இழிதலின் மிசைவைத்து ஏறலின் துன்பத்தாலே பதறி இறங்குதலானும் நினைவின்றி அடியினை உயர்த்திவைத்து ஏறுதலானும்; அவல என்னாள் மிசைய என்னாள் -செல்லும் வழியில் குழிகள் உள என்று பாராமலும் மேடுகள் உளவென்று பாராமலும் இறங்கியும் ஏரியும் செல்லா நிற்றலாலே; கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு அவுணரைக் கடந்த நெடுவேல் நெடுவேள் குன்றம் அடிவைத்து ஏறி - கடலினது வயிற்றைக் கிழித்துக் குருகுப் பெயர்கொள் குன்றத்தினது நெஞ்சத்தைப் பிளந்து அப்பொழுதே அவுணர்களைக் கொன்று நூழிலாட்டிய ஒளிமிக்க இலையையுடைய நெடிய வேற்படையினை ஏந்திய புகழாலே நீண்ட செவ்வேள் எழுந்தருளிய குன்றத்தின் கண்ணே திருவடியை வைத்து ஏறிப்போய் என்க.

(விளக்கம்) அவலித்திழிதலின் அவல என்னாள் என மாறுக. ஈண்டுக் கண்ணகியார் தாம் நெடுவேள் குன்றத்து ஏறுதல் வேண்டும் என்று நினைந்தேறினார் அல்லர், அவர் செல்லும் வழியிடத்தே எதிர்ப்பட்டது நெடுவேள் குன்றம் ஆதலால் பள்ளம் என்றும் மேடு என்றும் பாராது செல்லுமவர் தானே எதிர்ப்பட்ட நெடுவேள் குன்றத்து அடிவைத் தேறினர் என்பதும், இதுதானும் அவர்தம் சிறப்பிற்கேற்றதொரு வாய்ப்பே ஆயிற்று என்பதும் தோன்ற அவல என்னாள் மிசைய என்னாள் மிசைவைத் தேறலின் நெடுவேள் குன்றத்து அடிவைத்தேறி எனப் பாராமல் அடியிட்டேறுதலை ஏதுவாக்கினார்.

இனி, அக் குன்றந்தானும் அத் திருமாபத்தினி அடிவைத்தேறி அமரர்க் கரசன் தமர் வந்தேத்தி அவரை வரவேற்றற்குத் தகுந்ததோர் இடமேயாம் என்பது குறிப்பாகத் தோன்றுமாறு கடல்வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு அவுணரைக் கடந்த நெடுவேல் நெடுவேள் குன்றம் எனப் பெரிதும் விதந்தோதுவாராயினர். என்னை? பண்டு கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து அவுணரைக் கடந்த நெடுவோலோடு முருகவேளும் அக் குன்றத்தே அமரர்க்கரசன் தமர்வந் தீண்ட அடிவைத்தேறி யமர்ந்தனன். இன்னும் இக்கண்ணகித் தெய்வம் தன் வேல் போலும் கண் உகுக்கும் நீராலே பாண்டியன் நெடுஞ்செழியனுடைய நெஞ்சு பிளந்து அவனது மதுரையாகிய கடல்வயிறு கலக்கி வந்து அடிவைத் தேறுதற்கும் அமரர்க்கரசன் தமர் வந்தீண்டுதற்கும் அக் குன்றஞ் சாலச்சிறந்த தொன்றாதலுணர்க.

அவல மிசைய - பள்ளங்களையுடையனவும் மேடுகளையுடையனவுமாகிய நெறிகள்.

191-200: பூத்த ........ கண்ணகிதான்என்

(இதன்பொருள்.) பூத்த பொங்கர் வேங்கைக் கீழ் யான் ஓர் தீத்தொழிலாட்டியேன் என்று ஏங்கி - மலர்ந்த கொம்புகளை யுடைய வேங்கை மரத்தின் கீழே நின்று (அவ்விடத்தே தன்னைக் கண்டு நீவிர் யாவிரோ என்று வினவிய குறமகளிர்க்கு) யான் ஒப்பற்ற தீவினையுடையேன் என்று கூறி ஏங்கி நிற்ப; அமரர்க்கு அரசன் தமர் - அப்பொழுது தேவேந்திரனுடைய அமைச்சர் முதலிய சுற்றத்தார்தாம்; இது எழுநாள் இரட்டி சென்றபின் தொழுநாள் என - இந்த நாள்தான் கண்ணகி கணவனை இழந்தவள் பதினான்கு நாள் கழிந்த எல்லையிலே தன் கணவனைக் கண்டு தொழுதற்குரிய நாள் ஆகும் என்றுணர்ந்து; தோன்ற வாழ்த்தி - அக் குறிப்புக் கோவலனுக்குப் புலப்படுமாறு அவனையும் வாழ்த்தித் தம்முடன் அழைத்துக்கொண்டு; ஆங்கு வந்து பீடு கெழு நங்கை பெரும்பெயர் ஏத்தி - வானுலகத்தினின்றும் இழிந்து கண்ணகி நிற்கும் அவ்விடத்தே வந்து பெருமை பொருந்திய கண்ணகியினது பெரிய புகழை எடுத்தோதி; வாடா மாமலர் மாரி பெய்து - வாடாத சிறப்பினையுடைய கற்பக மலர்களை மழைபோன்று மிகுதியாகக் கண்ணகியின் மேற்பொழிந்து; ஏத்த - கைகுவித்துத் தொழாநிற்ப; கோநகர்ப் பிழைத்த கோவலன் தோன்ற வாழ்த்தி - பாண்டியன் தலை நகரத்தே மறைந்த கோவலன்றானும் அவ்வமரரோடு தன்முன் வந்து தோன்றா நிற்ப அவனை வணங்கி வாழ்த்தி; கோவலன் தன்னொடு - அக் கோலனோடே ஒருசேர; கான் அமர் பூங்குழல் கண்ணகிதான் - நறுமணங் கமழுகின்ற அக் கண்ணகி நல்லாள் தானும்; வான ஊர்தி ஏறினள் மாதோ - வானவூர்தியின்கண் ஏறி விண்ணவரோடு வானுலகம் புகுந்தனள்; என்க.

(விளக்கம்) ஓர் தீத்தொழிலாட்டியேன் என்று குறமகளிர்க்குக் கூறி என்க. என்னை? கண்ணகியார் அவ்வாறு குறமகளிர்க்குக் கூறுதலை வஞ்சிக் காண்டத்துக் குன்றக் குரவையில் விரித்தோதுதலை ஆண்டுக் காண்க. அமரர்க்கரசன் தமர் ........... இது எனக் கோவலனுக்குந் தோன்ற அவனை வாழ்த்தி அவனையும் அழைத்துக் கொண்டு வந்து ஏத்த என இசையெச்சத்தாலே சில சொற்கள் விரித்துக் கூறுக.

வாடா மலர் - கற்பகமலர், கோநகரின் கண் (பிழைத்த) தன்கண் காணாவகை மறைந்த கோவலன் என்க. மாது, ஓ: அசைச் சொற்கள்.

வெண்பாவுரை

தெய்வம் ................. விருந்து

(இதன்பொருள்.) மண்அகத்து மாதர்க்கு அணி ஆய கண்ணகி - இந்நிலவுலகத்தே மகளிராய்ப் பிறந்தோரெல்லாருக்கும் பேரணிகலனாகத் திகழா நின்ற கண்ணகி நல்லாள் தானும்; தெய்வம் ஆய் விண் அக மாதர்க்கு விருந்து - மக்கட் பிறப்பினோடே தெய்வத்தன்மையுடையளாய் வானுலகத்து மகளிர்க்கெல்லாம் எஞ்ஞான்றும் எதிர்கொண்டு பேணுதற்குரிய நல்விருந்தாயினள்; தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுவாளை - பிறிதொரு தெய்வத்தைத் தெய்வமாகக் கருதித் தொழாமல் தன் கணவனையே தெய்வமாகக் கருதித் தொழாமல் தன் கணவனையே தெய்வமாகக் கருதித் தொழுதெழுமியல்புடைய கற்புடைய மகளை; தெய்வம் தொழுந்தகைமை திண்ணிது - தெய்வமும் வணங்கும் தன்மை இக்கண்ணகி வரலாற்றினால் உறுதியாயிற்று என்க.

(விளக்கம்) 
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

என்றோதிய தெய்வப் புலவர் திருவாக்கு இக்கண்ணகியால் திண்ணிய வாக்காயிற்று எனினுமாம்.

வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

என்பதும் இக்கண்ணகியால் திண்ணிதாயிற்று எனவும் கொள்க.

கட்டுரை

முடிகெழு ........ முற்றிற்று

(இதன்பொருள்.) முடி உடை வேந்தர் மூவருள்ளும் - முத்தமிழ் நாட்டை ஆளும் முடியையுடைய பாண்டியர் சேரர் சோழர் என்னும் மூவேந்தருள் வைத்து; படை விளங்கும் தடக்கைப் பாண்டியர் குலத்தோர் - படைக்கலந் திகழாநின்ற பெரிய கையையுடைய பாண்டியர் தம் குலத்திற்பிறந்த வேந்தருடைய; அறனும் - அறங்காக்கின்ற சிறப்பும்; மறனும் - மறச்சிறப்பும்; ஆற்றலும் -வன்மைச் சிறப்பும்; அவர் தம் பழவிறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும் - அவர்தம் பழைய வெற்றியையுடைய முதிய மதுரை என்னும் ஊரினது அறப்பண்பு மேம்பட்டுத் திகழும் சிறப்பும்; விழவுமலி சிறப்பும் - அவ்வூரின்கண்ணே திருவிழாக்கள் மிக்கு நிகழுகின்ற சிறப்பும்; விண்ணவர் வரவும் - வானவர் அங்கு வருகின்றதனாலுண்டாகின்ற சிறப்பும்; ஒடியா இன்பத்து அவருடை நாட்டுக் குடியும் கூழின் பெருக்கமும் - கெடாத இன்பத்தையுடைய அவருடைய நாட்டில் வாழுகின்ற குடிகளின் சிறப்பும் உணவுப் பொருளின் மிகுதிப்பாடும்; அவர் தம் வையைப் பேரியாறு வளம் சுரந்து ஊட்டலும் - அவருடைய வையை என்னும் பெரிய யாறு தனது நீராலே பல்வேறு வளங்களையும் உண்டாக்கி மன்னுயிரை ஊட்டி ஓம்புமியல்பும்; பொய்யா வானம் புதுப் பெயல் பொழிதலும் - அவர் தம் செங்கோன்மை காரணமாக எஞ்ஞான்றும் பொய்த்தலின்றி முகில்கள் புதிய மழைநீரைப் பொழிகின்ற வியல்பும்; ஆரபடி சாத்துவதி என்று இருவிருத்தியும் நேரத் தோன்றும் வரியும் குரவையும் என்று- ஆரபடியும் சாத்துவதியும் என்னும் இருவகை விருத்திகளும் தம்பால் நிகழும்படி தோன்றுகின்ற; வரிக்கூத்தும் குரவைக் கூத்தும் என்று ஈண்டுக் கூறப்பட்ட இவை அனைத்தும்; பிற பொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும் - இப் பொருள்களோடே அடிகளாருடைய ஒப்பற்ற உட்கோளின் தன்மையும்; வடவாரியர் படை கடந்து தென் தமிழ் நாடு ஒருங்கு காணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் - வடநாட்டு ஆரிய மன்னர்களுடைய படையை வென்று வாகை சூடி நாவலந் தண்பொழிலின் தெற்குப் பகுதியிலமைந்த மூன்று தமிழ்நாட்டினும் வாழ்வோரெல்லாம் தன் செங்கோன்மைச் சிறப்பினை ஒருங்கே கண்டு மகிழுமாறு குற்றந்தீர்ந்த கற்பினையுடைய தன் பெருந்தேவியாருடனே; அரைசு கட்டிலின் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனோடு - தான் எழுந்தருளிய அரசு கட்டிலிடத்தேயே வல்வினை வளைத்த கோலைச் செங்கோலாக்கி நிலமடந்தைக்குக் காட்டற் பொருட்டு உயிர்நீத்தருளிய அரசர் பெருமான் பாண்டியன் நெடுஞ்செழியன் சிறப்பினோடே; ஒரு பரிசா நோக்கிக் கிடந்த ஒரு தன்மையாகத் தனதுட்கோளாக நோக்கியியன்ற ...... மதுரைக் காண்டம் முற்றிற்று என்க.

(விளக்கம்) பாண்டியர் அறச்சிறப்பு - புறஞ்சேரி இறுத்த காதைக்கண் (5) கோள்வல் உளியமும் .......... செங்கோல் தென்னவன் காக்கும் நாடு என்னும் பகுதியானும் கட்டுரை காதைக்கண் மதுராபதித் தெய்வத்தின் கூற்றானும் பிறாண்டும் உணர்க. மறச்சிறப்பு, காடு காண் காதைக்கண் மாங்காட்டு மாமுது முறையோன் (15) வாழ்க எங்கோ என்பது தொடங்கி (39) மன்னவன் வாழ்கென என்பதீறாகக் கூறுமாற்றாலுணர்க. மூதூர் பண்புமேம்படுதலை ஊர்காண் காதையினும் பிறாண்டும் அறிக. குடியும் கூழின் பெருக்கமும் ஊர்காண் காதை முதலியவற்றாலுணரலாம். வையைப் பேரியாறு வளஞ் சுரந்தூட்டுதலைப் புறஞ்சேரி இறுத்த காதைக்கண் 151 முதல் - 170 வரையில் குரவமும் ............ வையை என்ற பொய்யாக் குலக் கொடி எனவரும் பகுதியாலுணர்க. ஆரபடி சாத்துவதி என்பன கூத்தினுள் விலக்குறுப்பாகிய விருத்தியின் விகற்பம். இவற்றை அரங்கேற்று காதைக்கண் (13) பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்தும் என்புழி விலக்கு என்பதன் விளக்கவுரை நோக்கியுணர்க.

தனிக்கோள் என்றது அடிகளார் இக் காப்பியத்திற்குக் கருப் பொருளாகத் தம்முட் கொண்ட, அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற் றாதலும் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்து வந்தூட்டும் என்பதுமாகிய மூன்றுமாம். இம்மூன்றும் இக்காண்டத்திலேயே சிறப்பாக அறிவுறுத்தப்பட்டமையும் உணர்க.

பிறபொருள் என்றது இவற்றைச் சார்ந்து வருகின்ற பல்வேறு வகைப்பட்ட பொருள்களையும் என்க.

கட்டுரைக் காதை முற்றிற்று.

மதுரைக் காண்டம் முற்றிற்று.
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 28, 2012, 07:43:47 AM
வஞ்சிக் காண்டம்(24. குன்றக் குரவை)

அஃதாவது மதுரையினின்றும் வையை யாற்றினது கரைவழியே, இருத்தலும் இலளாய் நிற்றலும் இலளாய்ச் சென்ற கண்ணகி சேர நாட்டின்கண், நெடுவேள் குன்றத்தின்கண் அடிவைத் தேறி, அங்குப் பூத்துநின்ற வேங்கைமரத்தினது நறுநிழலின் கண் ஏங்கி நின்றாளாக, அப்பொழுது மதுரையில் கோவலன் கொலையுண்ட பதினான்காம் நாளாதலின் தேவர்கள் கற்பகமலர் பொழிந்து கோவலன்றன்னொடு வானுலகத்தினின்றும் இழிந்துவந்து கண்ணகிக்குக் கணவனைக் காட்டி அவள் தன் பெரும்புகழைப் பலபடப் பாராட்டி அந் நெடுவேள் குன்றத்து வாழும் குறவர்களும் கண்டுநிற்பவே அவ் வீரபத்தினியைக் கணவனோடு கூட்டி வான்ஊர்தியில் ஏற்றித் தம்முலகுக்குக் கொண்டு போயினார்.

இந்த வியத்தகு நிகழ்ச்சியைக் கண்கூடாகக் கண்டுநின்ற குன்றவாணர் அக் கண்ணகியைத் தங்கள் குலதெய்வமாகக் கொண்டு குரவைக் கூத்தாடி மகிழ்ந்தனர். பின்னர், வஞ்சி நகரத்திருந்து மலைவளம் காணுதற்பொருட்டு அக் காட்டகத்தில் வந்திருந்த சேரன்செங்குட்டுவனைக் கண்டு தொழுதற்குக் கையுறையாக அரும்பொருள் பலவற்றைச் சுமந்துசென்று அம் மன்னவன் மலரடி வணங்கியபின்னர்த் தாம் கண்கூடாகக் கண்ட கண்ணகி வர்னஊர்தியேறி விண்ணுலகம் புக்க செய்தியையும் கொல்லோ? யார் மகள் கொல்லோ? யாங்கள் அறிந்திலேம்; மன்னர் மன்னவ! பன்னூறாயிரத்தாண்டு வாழ்க! என்று வாழ்த்தி நின்றனர்.

குன்றவாணர் கூறிய செய்திகேட்டு வியப்புற்ற சேரன் செங்குட்டுவன் தன் அயலிருந்த சான்றோரை நோக்க அங்கிருந்த தண்டமிழ்ப் புலவர் சாத்தனார் அக் கண்ணகியின் வரலாறு முழுவதையும் அம் மன்னனுக்குக் கூறினர். அம் மன்னவன் கோப்பெருந்தேவியை நோக்கினன். அவன் குறிப்பறிந்த தேவியார், அத் திருமாபத்தினிக்கு யாம் திருக்கோயிலெடுத்து வழிபாடு செய்தல் வேண்டும் எனத் தமது கருத்தை அரசனுக்குக் கூறினர். அதுகேட்ட மன்னர் அப் பத்தினிக்குக் கடவுட்படிவம் அமைத்தற்குக் கல் கொள்ள ஆராய்தலும் அமைச்சர் கூறியபடி இமயமலையில் கல் கொள்ளுதற்கு நாற்பெரும் படையொடு வடதிசை நோக்கிப் புறப்படுதலும் வடவாரிய மன்னரொடு போர்புரிந்து வாகைசூடிப் பத்தினித் தெய்வத்திற்குரிய கல்லை இமயத்தினின்று மெடுத்துக் கனகவிசயர் என்னும் மன்னர்தம் முடித்தலைமே லேற்றிக் கொணர்ந்து கங்கைப் பேரியாற்றில் நீர்ப்படை செய்தலும் அங்கிருந்து வஞ்சி நகரத்திற்குக் கொணர்தலும் கடவுட்படிவம் சமைத்தலும் திருக்கோயிலெடுத்து அப் படிவத்தை நிறுத்துதலும் விழாவெடுத்தலும் கண்ணகி விண்மிசை மின்னல்போன்று தெய்வவுருவில் தோன்றிச் செங்குட்டுவன் முதலியோருக்கு வரம்தருதலும் ஆகிய செய்திகளைக் கூறும் பகுதி என்றவாறு. சேர நாட்டின் தலைநகரமாகிய வஞ்சியின்கண் இருந்து செங்கோன்மை செலுத்திய அரசன் கண்ணகிக்குச் செய்த சிறப்புகளாதலின் இது வஞ்சிக் காண்டம் என்னும் பெயர் பெற்றது.

வஞ்சி- சேரர் தலைநகரம்

24. குன்றக் குரவை (கொச்சகக் கலி)

அஃதாவது-கண்ணகி மதுரையினின்றும் வையையின் ஒரு கரை வழியாகச் சேரநாடு புகுந்து ஆங்கெதிர்ப்பட்ட நெடுவேள் குன்றத்தின்கண் ஏறி ஆங்குப் பூத்துப் பொலிந்து நின்ற ஒரு வேங்கை மரத்தின் நிழலின்கண் நின்றபொழுது, அங்கு வந்த குறமாக்கள் கண்ணகியைக் கண்டு நீவிர் யாவிரோ? என வினவி அவளொடு சொல்லாடி நின்றனராக; அப்பொழுது வானவர் அங்கு வந்து கண்ணகியின் மேல் மலர்மாரி பொழிந்து அவள் கணவனையும் காட்டி வான ஊர்தியில் ஏற்றி அக் குறமாக்கள் கண்டு நிற்பவை விண்மிசைப் போயினர்; அது கண்டு வியப்பெய்திய அக் குன்றவாணர் கண்ணகியைத் தம் குலதெய்வமாகக் கொண்டு வழிபாடு செய்தலும் அம் மகிழ்ச்சி காரணமாகக் குறமகளிர் குரவைக் கூத்தாடுதலும் பிறவும் கூறும் பகுதி என்றவாறு.

குருவி ஓப்பியும் கிளி கடிந்தும் குன்றத்துச் சென்று வைகி,
அருவி ஆடியும் சுனை குடைந்தும் அலவுற்று வருவேம் முன்,
மலை வேங்கை நறு நிழலின், வள்ளி போல்வீர்! மனம் நடுங்க,
முலை இழந்து வந்து நின்றீர்; யாவிரோ? என-முனியாதே,
மண மதுரையோடு அரசு கேடுற வல் வினை வந்து உருத்தகாலை,  5

கணவனை அங்கு இழந்து போந்த கடு வினையேன் யான் என்றாள்.
என்றலும், இறைஞ்சி, அஞ்சி, இணை வளைக் கை எதிர் கூப்பி,
நின்ற எல்லையுள், வானவரும் நெடு மாரி மலர் பொழிந்து,
குன்றவரும் கண்டு நிற்ப, கொழுநனொடு கொண்டு போயினார்;
இவள் போலும் நம் குலக்கு ஓர் இருந் தெய்வம் இல்லை; ஆதலின்,  10

சிறுகுடியீரே! சிறுகுடியீரே!
தெய்வம் கொள்ளுமின், சிறுகுடியீரே!
நிறம் கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை
நறுஞ் சினை வேங்கை நல் நிழல்கீழ், ஓர்
தெய்வம் கொள்ளுமின், சிறுகுடியீரே!  15

தொண்டகம் தொடுமின்; சிறுபறை தொடுமின்;
கோடு வாய் வைம்மின்; கொடு மணி இயக்குமின்;
குறிஞ்சி பாடுமின்; நறும் புகை எடுமின்;
பூப் பலி செய்ம்மின்; காப்புக்கடை நிறுமின்;
பரவலும் பரவுமின்; விரவு மலர் தூவுமின்- 20

ஒரு முலை இழந்த நங்கைக்கு,
பெரு மலை துஞ்சாது வளம் சுரக்க எனவே.  1

கொளுச் சொல்
ஆங்கு ஒன்று காணாய், அணி இழாய்! ஈங்கு இது காண்:
அஞ்சனப் பூழி, அரி தாரத்து இன் இடியல்,
சிந்துரச் சுண்ணம் செறியத் தூய், தேம் கமழ்ந்து,
இந்திரவில்லின் எழில் கொண்டு,இழும் என்று
வந்து, ஈங்கு, இழியும் மலை அருவி ஆடுதுமே.
ஆடுதுமே, தோழி! ஆடுதுமே, தோழி!
அஞ்சல் ஓம்பு என்று, நலன் உண்டு நல்காதான்
மஞ்சு சூழ் சோலை மலை அருவி ஆடுதுமே.  2

எற்று ஒன்றும் காணேம் புலத்தல், அவர் மலைக்
கல் தீண்டி வந்த புதுப் புனல்;
கல் தீண்டி வந்த புதுப் புனல் மற்றையார்
உற்று ஆடின் நோம், தோழி! நெஞ்சு-அன்றே.  3

என் ஒன்றும் காணேம் புலத்தல், அவர் மலைப்
பொன் ஆடி வந்த புதுப் புனல்;
பொன் ஆடி வந்த புதுப் புனல் மற்றையார்
முன் ஆடின் நோம், தோழி! நெஞ்சு-அன்றே.  4

யாது ஒன்றும் காணேம் புலத்தல், அவர் மலைப்
போது ஆடி வந்த புதுப் புனல்;
போது ஆடி வந்த புதுப் புனல் மற்றையார்
மீது ஆடின் நோம், தோழி! நெஞ்சு-அன்றே. 5

பாட்டு மடை

உரை இனி, மாதராய்! உண் கண் சிவப்ப,
புரை தீர் புனல் குடைந்து ஆடின், நோம் ஆயின்,
உரவுநீர் மா கொன்ற வேல்-ஏந்தி ஏத்திக்
குரவை தொடுத்து, ஒன்று பாடுகம் வா தோழி!  6

சீர் கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்,
ஏரகமும், நீங்கா இறைவன் கை வேல்-அன்றே-
பார் இரும் பௌவத்தினுள் புக்கு, பண்டு ஒரு நாள்,
சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே.  7

அணி முகங்கள் ஓர் ஆறும், ஈர்-ஆறு கையும்,
இணை இன்றித் தான் உடையான் ஏந்திய வேல்-அன்றே-
பிணிமுகம் மேற்கொண்டு, அவுணர் பீடு அழியும்வண்ணம்
மணி விசும்பின் கோன் ஏத்த, மாறு அட்ட வெள் வேலே. 8

சரவணப் பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர்
திரு முலைப் பால் உண்டான் திருக் கை வேல்-அன்றே-
வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து,
குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடு வேலே.  9

பாட்டு மடை

இறை வளை நல்லாய்! இது நகை ஆகின்றே-
கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய் தீர்க்க
அறியாள் மற்று அன்னை, அலர் கடம்பன் என்றே,
வெறியாடல் தான் விரும்பி, வேலன், வருக என்றாள்! 10

ஆய் வளை நல்லாய்! இது நகை ஆகின்றே-
மா மலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்!
வரும் ஆயின் வேலன் மடவன்; அவனின்
குருகு பெயர்க் குன்றம் கொன்றான் மடவன். 11

செறி வளைக் கை நல்லாய்! இது நகை ஆகின்றே-
வெறி கமழ் வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்!
வேலன் மடவன்; அவனினும் தான் மடவன்;
ஆல் அமர் செல்வன் புதல்வன் வரும் ஆயின்.  12

நேர் இழை நல்லாய்! நகை ஆம்-மலை நாடன்
மார்பு தரு வெந் நோய் தீர்க்க வரும் வேலன்!
தீர்க்க வரும் வேலன்-தன்னினும் தான் மடவன்,
கார்க் கடப்பந் தார் எம் கடவுள் வரும் ஆயின்.  13

பாட்டு மடை

வேலனார் வந்து வெறியாடும் வெங் களத்து,
நீலப் பறவைமேல் நேர்-இழை-தன்னோடும்
ஆல் அமர் செல்வன் புதல்வன் வரும் வந்தால்,
மால் வரை வெற்பன் மண அணி வேண்டுதுமே!  14

கயிலை நல் மலை இறை மகனை! நின் மதி நுதல்
மயில் இயல் மடவரல் மலையர்-தம் மகளார்,
செயலைய மலர் புரை திருவடி தொழுதேம்-
அயல்-மணம் ஒழி; அருள், அவர் மணம் எனவே. 15

மலைமகள் மகனை! நின் மதி நுதல் மடவரல்
குல மலை உறைதரு குறவர்-தம் மகளார்,
நிலை உயர் கடவுள்! நின் இணை அடி தொழுதேம்-
பலர் அறி மணம் அவர் படுகுவர் எனவே.  16

குறமகள் அவள் எம் குலமகள் அவளொடும்,
அறுமுக ஒருவ! நின் அடி இணை தொழுதேம்-
துறைமிசை நினது இரு திருவடி தொடுநர்
பெறுக நல் மணம்; விடு பிழை மணம் எனவே.  17

பாட்டு மடை

என்று யாம் பாட, மறை நின்று கேட்டருளி,
மன்றல் அம் கண்ணி மலைநாடன் போவான் முன்
சென்றேன்; அவன்-தன் திருவடி கைதொழுது
நின்றேன் உரைத்தது கேள்; வாழி, தோழி! 18

கடம்பு சூடி, உடம்பிடி ஏந்தி,
மடந்தை பொருட்டால் வருவது இவ் ஊர்:
அறுமுகம் இல்லை; அணி மயில் இல்லை;
குறமகள் இல்லை; செறி தோள் இல்லை;
கடம் பூண் தெய்வமாக நேரார்
மடவர் மன்ற, இச் சிறுகுடியோரே.  19

பாட்டு மடை

என்று, ஈங்கு,
அலர் பாடு பெற்றமை யான் உரைப்பக் கேட்டு,
புலர் வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன
மலர் தலை வெற்பன் வரைவானும் போலும்;
முலையினால் மா மதுரை கோள் இழைத்தாள் காதல்
தலைவனை வானோர் தமராரும் கூடி,
பலர் தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த
நிலை ஒன்று பாடுதும் யாம்.   20

பாடுகம் வா, வாழி! தோழி! யாம் பாடுகம்;
பாடுகம் வா, வாழி! தோழி! யாம் பாடுகம்;
கோமுறை நீங்கக் கொடி மாடக் கூடலைத்
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம்;
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுங்கால்,
மா மலை வெற்பன் மண அணி வேண்டுதுமே.  21

பாடு உற்று,
பத்தினிப் பெண்டிர் பரவித் தொழுவாள் ஓர்
பைத்தரவு அல்குல் நம் பைம் புனத்து உள்ளாளே;
பைத்தரவு அல்குல் கணவனை வானோர்கள்
உய்த்துக் கொடுத்தும் உரையோ ஒழியாரே.  22

வானக வாழ்க்கை அமரர் தொழுது ஏத்த,
கான நறு வேங்கைக் கீழாள் ஓர் காரிகையே
கான நறு வேங்கைக் கீழாள் கணவனொடும்
வானக வாழ்க்கை மறுதரவோ இல்லாளே.  23

மறுதரவு இல்லாளை ஏத்தி, நாம் பாட,
பெறுகதில் அம்ம இவ் ஊரும் ஓர் பெற்றி!
பெற்றி உடையதே, பெற்றி உடையதே,
பொற்றொடி மாதர் கணவன் மணம் காணப்
பெற்றி உடையது, இவ் ஊர்.   24

வாழ்த்து

என்று, யாம்
கொண்டுநிலை பாடி, ஆடும் குரவையைக்
கண்டு, நம் காதலர் கைவந்தார்; ஆனாது
உண்டு மகிழ்ந்து, ஆனா வைகலும் வாழியர்-
வில் எழுதிய இமயத்தொடு
கொல்லி ஆண்ட குடவர் கோவே!   25

உரை

உரைப்பாட்டு மடை

அஃதாவது-உரையாகிய பாட்டை இடையிலே மடுப்பது(மடுப்பது-வைப்பது)

குன்றவாணர் கண்ணகியைக் கண்டு வினவுதலும் கண்ணகியின் விடையும்

1-6: குருவி-யானென்றான்

(இதன் பொருள்) குன்றத்துச் சென்று வைகி குருவி ஓப்பியும் கிளி கடிந்தும் அருவி ஆடியும் சுனை குடைந்தும் அலவற்று வருவேம்-முன்-நெடுவேள் குன்றத்தின்கண் பூத்த வேங்கை நிழலின்கண் நின்ற கண்ணகியை அப்பொழுது அங்கு வந்துற்ற ஆடவரும் பெண்டிருமாகிய குன்றவாணர் வியந்து நோக்கிக் கூறுபவர் யாங்கள் எமது மலையின்கண் உள்ள எம்முடைய தினைப்புனத்தின்கண் சென்றிருந்து ஆங்குத் தினைக்கதிரில் வீழும் குருவிகளை ஆயோவெனக் கூவி ஓட்டியும் கிளிகளைத் தழலும் தட்டையும் குளிரும் பிறவும் ஆகிய கிளி கடி கருடிகளைப் புடைத்து வலிந்தகற்றியும் அருவியின்கண் விளையாடியும் சுழன்று வருகின்ற எமக்கு முன்னர்; மலை வேங்கை நறுநிழலின் முலை இழந்து மனம் நடுங்க வந்து நின்றீர் வள்ளி போல்வீர் யாவிரோ என-இம் மலையில் இந்த வேங்கை மரத்தினது நறிய நிழலின்கண் நுமது கொங்கைகளுள் ஒன்றனை இழந்து வந்தமையால் எம்முடைய உள்ளம் நடுங்கும்படி நிற்கின்றீர். நீயிர் எம்முடைய குலத்திற்றோன்றிய வள்ளியம்மையையும் போல்கின்றீர் நீவிர்தாம் யாரோ? என்று வினவினராக; மண மதுரையோடு அரசு கேடுற வல்வினை வந்து உருத்தகாலை கணவனை அங்கு இழந்து போந்த கடுவினையேன் யான் என்றாள்-அதுகேட்ட கண்ணகிதானும் சிறிதும் அவர் பால் சினங்கொள்ளாமல் மணமிக்க மதுரைமா நகரத்தோடு அதனை யாளுகின்ற அரசனும் அழிவுறும்படி பழைய தீவினை வந்தெய்தி அதன் பயனை ஊட்டியபொழுது என் கணவனையும் அம் மதுரையிலேயே இழந்து இங்கு வருவதற்குக் காரணமான கொடிய தீவினையையுடைய யான் என்று கூறினளாக; என்க.

(விளக்கம்) தினைக்கதிர்களை அழிப்பதில் கிளிகள் முதன்மையுடையன ஏனைய பறவைகள் சிறப்புடையனவல்ல ஆதலின் குருவி ஓப்பியும் கிளி கடிந்தும் எனப் பிரித்தோதினர். ஓப்புதல்-கூவி ஓட்டுதல். கடிதல்-வலிந்தோட்டுதல். அலவுற்று வருதல்-சுற்றித் திரிந்து வருதல். எம்மனம் நடுங்க வந்து நின்றீர் என்றவாறு. கண்ணகியின் சினம் தணிந்துவிட்டமை அறிவித்தற்கு அடிகளார் ஈண்டு முனியாதே என்று விதந்தெடுத்தோதினார், மதுரை இனி அணித்தாக உளது என்பதனைக் கண்ணகி முதன் முதலாக அம் மதுரையின் மணங்களை அவாவி வருகின்ற மதுரைத் தென்றலால் அறிந்தனளாதலின் அத்தகைய மணமதுரைக்கும் வல்வினை கேடு சூழ்ந்ததே என்னும் தன் இரக்கம் தோன்ற மணமதுரை என விதந்தோதினள்; இத்தகைய கேட்டிற்கெல்லாம் தானே காரணமென்பது கருதித் தன்னையே நொந்துகொள்வாள் கடுவினையேன் யான் என்றாள்.

கண்ணகியை விண்ணவர் வானவூர்தியில் அழைத்துப் போதல்

7-9: என்றலும்............போயினார்

(இதன் பொருள்) என்றலும்-என்று இவ்வாறு விடை கூறக்கேட்டு அக் குன்றவாணர்கள்; அஞ்சி இணை விளைக்கை எதிர் கூப்பி இறைஞ்சி நின்ற எல்லையுள்-பெரிதும் அச்சமெய்தித் தம்முடைய இரண்டு வளையல் அணிந்த கைகளையும் கூப்பி அவர் எதிரே வணங்க நின்றபொழுது; வானவரும் நெடுமாரி மலர் பொழிந்து குன்றவரும் கண்டு நிற்பக் கொழுநனொடு கொண்டு போயினார்-யாம் முற்கூறியபடி அமரர் கோமான் தமராகிய தேவர்களும் அப் பீடுகெழு நங்கையின் பெரும் புகழையேத்தி அவள் மிசை வாடா மாமலர் மழை பெய்து கணவனையும் காட்டி வானவூர்தியில் அக் கணவனோடு வைத்து அக்குறவர்களும் கண்டு நிற்கும்பொழுதே தம்முலகத்திற்குக் கொண்டு போயினார் என்றார் என்க.

(விளக்கம்) கண்ணகியின் வரலாற்றில் பெரும்பான்மை மதுரையில் நிகழ்ந்தமையால் அவள் விண்ணகம் புக்க செய்தி சேர நாட்டில் நிகழ்ந்ததாயினும் அக் காண்டத்திலேயே கூறி அவ் வரலாற்றினை முடித்தார். கண்ணகி விண்ணகம் புகுதற்கு இக் குன்றவாணர் அவளைக் கண்டமை காரணம் அன்மையின் அடிகளார் இந் நிகழ்ச்சியை அங்குக் கூறாதொழிந்தார். இனி விண்ணகம் புக்க அக் கண்ணகியின் பொருட்டுச் சேர நாட்டின்கண்ணும் பிறவிடங்களினும் நிகழும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் இக் குன்றவாணர் கண்ணகியைக் கண்டமையே காரணமாக அமைதலின் அடிகளார் இக் காண்டத்திற்கு அந் நிகழ்ச்சியையே தோற்றுவாயக அமைத்துக்கொள்கின்றார் என்று அறிக.

குன்றவாணர் செயல்

10-15: இவள் போலும்............கொள்ளுமின்

(இதன் பொருள்) சிறுகுடியீரோ சிறுகுடியீரே-குறிஞ்சி நிலத்து ஊராகிய இச் சிறுகுடியின்கண் வாழ்கின்ற குன்றவர்களே குன்றவர்களே; நம் குலக்கு இவள் போலும் இருந்தெய்வம் இல்லை ஆதலின்-தலைசிறந்த குலமாகிய ஒப்பற்ற நமது குறக்குலத்திற்கு இத் திருமா பத்தினி போன்ற மா பெருந் தெய்வம் பிறிதொன்று இல்லை யாதலின் இப் பத்தினித் தெய்வத்தையே; சிறுகுடியீரே தெய்வம் கொள்ளுமின்-குன்றவாணரே! தெய்வமாகக் கொள்ளுங்கோள்; நிறம் கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை நறுஞ்சினை வேங்கை நல் நிழல் கீழ் ஓர் தெய்வங் கொள்ளுமின்- நிறமிக்க அருவியை யுடைய நெடுமின் குன்றமாகிய இம் மலையினது தாழ்வரையினிடத்தே மலர்ந்து நறுமணம் கமழுகின்ற இவ் வேங்கை மரத்தினது நல்ல நிழலின்கீழே அப் பத்தினித் தெய்வம் நின்ற இடத்திலேயே அவளைத் தெய்வமாக நிலை நிறுத்திக் கொள்ளுங்கோள் என்றார் என்க.

(விளக்கம்) இவள் என்றது பத்தினித் தெய்வமாகிய இவள் என்பது பட நின்றது. இத் தெய்வம்போன்று இதுகாறும் நம் குலத்திற்கு ஒரு தெய்வம் வாய்த்ததில்லை ஆதலின் இத் தெய்வத்தை நம்குலதெய்வமாகக் கொள்ளுமின் என்று அறிவித்தபடியாம். இக்குற மகளிர் கருத்தோடு

கற்புக் கடம் பூண்ட வித்தெய்வமல்லது
பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்

எனவரும் கவுந்தியடிகளார் பொன் மொழியையும் நினைக (15: 143-4) சிறுகுடி-குறிஞ்சி நிலத்தூர் எனவே குன்றவாணராகிய நமரங்காள் என விளித்த படியாம். இனி, அக் கண்ணகியை அவள் நின்ற அந்த வேங்கையின் நிழலிலே அவ்விடத்திலேயே தெய்வமாக நிறுத்திக் கொள்ளுங்கள் என்று இடமும் வரைந் தோதுவார் நிறங்கிளர்............கொள்ளுமின் என்றார். பறம்பு-மலை, அஃதாவது நெடுவேள் குன்றம் என்க.

இதுவுமது

15-22: சிறுகுடியீரே..............கரக்கெனவே

(இதன் பொருள்) சிறுகுடியீரே-குன்றவாணராகிய நமரங்கான்! ஒருமுலை இழந்த நங்கைக்கு-தனது ஒரு முலையினை இழந்து நம் குன்றத்திற்கு எழுந்தருளிய இப் பத்தினித் தெய்வத்திற்கு; காப்புக் கடை நிறுமின்-மதிலாகிய அரண் எடுத்துத் திருவாயிலும் செய்து வையுங்கள்; தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின் கோடு வாய் வைம்மின் கொடுமணி இயக்குமின்-தொண்டகப் பறையை முழக்குமின் சிறுபறையை அறைமின் கடமாக் கொம்புகளை வாயில் வைத்தூதுமின் கொடிய பணியை அசைத்து ஒலித்திடுமின்; குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின் பூப்பலி செய்ம்மின் பரவலும் பாவுமின் விரவு மலர் தூவுமின்-குறிஞ்சிப் பண்ணைப் பாடுங்கள் நறுமணப் புகையை யேந்துங்கள் மலர்களைப் பலிப்பொருளாகக் குவித்திடுமின்; இத் தெய்வத்தின் விகழ்பாடி ஏத்துதலும் செய்யுங்கள். பல்வேறு மலர்களையும் கலந்து தூவுங்கள். அஃது எற்றுக்கெனின்; பெரும் மலை துஞ்சாது வளம் சுரக்க எனவே-நமது பெரிய மலைநிலம் ஒழிவின்றித் தன் வளங்களையெல்லாம் சுரந்து தருவதாக என்று வேண்டிக் கொள்ளுதற் பொருட்டேயாம் என்றார் என்க.

(விளக்கம்) அத் தெய்வத்தின் பெயர் அறியாமையின் தாமே ஒரு முலையிழந்த நங்கை என ஒரு பெயர் வைத்துக்கொண்டார். இப் பெயர் தாமே ஒற்றை முலைச்சி எனப் பிற்காலத்தில் இத் தெய்வத்திற்குப் பல்வேறு இடங்களில் வழங்கி வந்ததாகத் தெரிகின்றது. இப் பெயருடைய தெய்வம் கண்ணகித் தெய்வம் என்றறியப்படாமல் வேறு தெய்வமாகக் கருதி மக்கள் வழிபட்டு வந்தனர். இத் தெய்வம் மழைவளம்! வேண்டி வழிபாடு செய்யப்பட்டமையின் மாரியம்மன் என்னும் பெயரானும் வழங்கப்பட்டு வருவதாயிற்று என எண்ணாதற்கும் இடமுளது.

கொளுச் சொல்

அஃதாவது-அகப்பொருள் கருத்தைத் தன்னுட் கொண்ட சொற்கள் என்றவாறு.

(2) ஆங்கொன்று.........ஆடுதுமே

(இதன் பொருள்) அணி இழாய் ஆங்கு ஒன்று காணாய்-அழகிய அணிகலன்களையுடையோய்! அதோ சேய்மையில் வீழுகின்ற ஒரு அருவியைப் பார்; ஈங்கு இதுகாண்-(அணித்தாகச் சென்று அவ்வருவியைச் சுட்டிக் காட்டி) தோழி! இந்த அருவியின் அழகினைக் காண்பாயாக; அஞ்சனப் பூழி அரிதாரத்து இன்இடியல் சிந்துரச் சுண்ணம் செறியத்தூய்-கரிய நிறமுடைய புழுதியும் அரிதாரத்தினது காட்சிக்கினிய துகளும் சிந்தூரப் பொடியும் செறியும் படி தூவப் பெற்று; தேம் கமழ்ந்து இந்திரவில்வின் எழில் கொண்டு-தேன் மணம் கமழப் பெற்று வானவில்லினது அழகைத் தன்னிடத்தே கொண்டு, இழுமென்று ஈங்கு இழியும் மலை அருவி ஆடுதுமே-கேள்விக்கினிதாக இழுமென்னும் ஓசையுடனே ஓடி வந்து இவ்விடத்திலே வீழ்கின்ற இந்த மலை அருவியின்கண் யாம் இனிது ஆடி மகிழ்வேம் என்றாள் என்க.

(விளக்கம்) இஃது அருவி ஆடுதற்கு விரும்பிய தலைவி தோழிக்குக் கூறியது. சேய்மையில் நின்று ஆங்கொன்று காணாய் என்றவள் அணித்தாகச் சென்றபின் ஈங்கு இதுகாண் என அண்மைச் சுட்டால் சுட்டினாள். அஞ்சனம் அரிதாரம் சிந்துரம் என்பன மலைபடு பொருள்கள், பல்வேறு நிறமுடைய இப் பொருள்களின் துகள்களை வாரிக்கொண்டு வருதலின் அருவி இந்திரவில் போல்கின்றது என்றுவாறு. இந்திரவில்-வானவில். இழுமென்று: ஒலிக்குறிப்பு.

ஆடுதுமே..........ஆடுதுமே

(இதன் பொருள்) ஆடுதுமே தோழி ஆடுதுமே தோழி அஞ்சல் ஓம்பு என்று நலன் உண்டு நல்காதான்(அது கேட்ட தோழி தலைவியை நோக்கிக் கூறுபவள்) தோழி! நீ விரும்பியவாறே யாம் இம்மலை அருவியின்கண் ஆடி மகிழ்வேமாக! ஒரு தலையாக ஆடி மகிழ்வேமாக! யான் பிரிவேன் என்று அஞ்சாதேகொள் எனத் தேற்றுரை கூறி நமது பெண்மை நலத்தை நுகர்ந்து போய் மீண்டும் வந்து நமக்குத் தண்ணளி செய்திலாத வன்கண்ணனுடைய; மஞ்சு சூழ் சோலை மலையருவி ஆடுதுமே-முகில் சூழ்கின்ற சோலையுடைய மலையினின்றும் வருகின்ற இவ்வருவியின்கண் யாம் நீராடி மகிழ்வேம்(என்றாள்) என்க.

(விளக்கம்) இது தோழி தலைவனை இயற்பழித்தபடியாம். நலன்-பெண்மை நலம். வன்கண்ணனுடைய மலையாயிருந்தும் மஞ்சு சூழ்தல் வியத்தற்குரியதாம் எனவும் அவனுடைய மலையருவியில் ஆட நேர்ந்ததே எனவும் இயற்பழித்தபடியாம்.

சிறைப்புறம்

அஃதாவது- தலைவன் வந்து சிறைப்புறத்தே நிற்பானாகவும் அவன் வரவறியாதாள் போலத் தலைவி தோழி கேட்பக் கூறியது என்றவாறு.

3. எற்றொன்றும்.........நெஞ்சன்றே

(இதன் பொருள்) அவர் மலை கல் தீண்டி வந்த புதுப்புனல் எற்று ஒன்றும் காணேம் புலத்தே-தோழி! அவர் நலன் உண்டு நல்காதார் ஆயிடினும் ஆகுக. அவருடைய மலையாகிய கல்லைத் தொட்டு வருகின்ற புதிய இந்த அருவி நீரோடு யாம் ஊடுதற்கு யாதொரு காரணமும் காண்கின்றிலேம் ஆயினும்; தோழி கல் தீண்டி வந்த புதுப்புனல் மற்றையார் உற்று ஆடின் நெஞ்சு நோம் அன்றே தோழி! அவருடைய மலையைத் தொட்டு வந்த இப் புதிய நீரின் கண் ஏனைய மகளிர் பொருந்தி ஆடுவாராயின் நமது நெஞ்சம் அது பெறாமல் வருந்தும் அன்றோ? அங்ஙனம் வருந்தாமல் யாமே இதன்கண் ஆடுவோமாக என்றாள் என்க. இங்ஙனமே ஏனைத் தாழிசைகளுக்கும் கூறிக் கொள்க.

4. என்னொன்றும்.........நெஞ்சன்றே

(இதன் பொருள்) அவர் மலைப் பொன் ஆடி வந்த புதுப்புனல் புலத்தல் என ஒன்றும் காணேம்-அவ் வன்கண்ணருடைய மலையின்கண் பொன் துகளை அளைந்து வந்த புதிய இவ்வருவி நீரோடு யாம் ஊடுதற்குக் காரணம் யாதொன்றும் காண்கிலேம் தோழி பொன் ஆடி வந்த புதுப்புனல் மற்றையோர் முன் ஆடின் நெஞ்சு நோம் அன்றே-அவர் மலையின்கண் பொன் துகள் அளைந்து வந்த புதிய இந்நீரிலே ஏனை மகளிர் முற்பட ஆடினால் நமது நெஞ்சம் நோகும் அல்லவோ என்றாள் என்க.

(விளக்கம்) என்னொன்றும்-யாதொன்றும். பொன்-பொன்துகள்.

5. யாதொன்றுங்.........நெஞ்சன்றே

(இதன் பொருள்) அவர் மலைப்போது ஆடி வந்த புதுப்புனல் புலத்தல் யாது ஒன்றுங் காணேம்-அவருடைய மலையின்கண் மலர்ந்த மலர்களை அளைந்து வந்த இந்தப் புதிய நீரினோடு ஊடுதற்கு யாம் காரணம் யாதொன்றும் காண்கிலேம் ஆயினும் தோழி போது ஆடி வந்த புதுப்புனல் மற்றையார்மீது ஆடின் நெஞ்சு நோம் அன்றே-தோழி! அவர் மலையின் மலர் அளைந்து வந்த இப்புதிய நீரின்கண் ஏனை மகளிர் மிகைபட ஆடின் நமது நெஞ்சம் நோகும் அன்றோ என்றாள் என்க

(விளக்கம்) இத்தாழிசை மூன்றும் ஒரு பொருள்மேல் அடுக்கிக் கந்தருவ மார்க்கத்தால் இடை மடக்கி வந்தன

பாட்டு மடை

அஃதாவது-பாட்டினை இடையில் வைத்தல்

6. உரையினி.....தோழி

(இதன் பொருள்) மாதராய் இனி உரை உண்கண் சிவப்புப்புரை தீர் புனல் குடைந்து ஆடினோம் ஆயின்-நங்காய் இனி நீ உன் கருத்தினைக் கூறுவாயாக யாம் நமது மையுண்ட கண்கள் சிவக்கும்படி குற்றமில்லாத இந் நீரின்கண் துழந்து துழந்து ஆடினோம் அல்லமோ இவ்வாட்டம் முடிந்தாதலால் (என்று தோழி வினவ தலைவி கூறுகின்றாள்) தோழி குரவை தொடுத்து உரவு நீர் மா கொறை வேலேந்தி ஏத்திப் பாடுகம் வா-தோழி! இனி யாம் குரவைக் கூத்திற்குக் கைபிணைந்து கடலின்கண் நின்ற மாமரமாகிய சூரபதுமனைக் கொன்றொழித்த வேலேந்தியாகிய முருகனைப் புகழ்ந்து பாடுவோம் என்னுடன் வருவாயாக என்றான் என்க.

(விளக்கம்) மாதராய் என்றது தலைவியை. தலைவனே குற்றமுடையான் என்பது குறிப்புப் பொருளாமாறு அவன் மலை அருவிநீர் குற்றமுடைத்தன்று என்பாள் புரை தீர் புனல் என்றான். உரவு நீர் கடல். மா-சூரபதுமன். வேலேந்தி-முருகன்; பெயர். குரவைக் கூத்திற்குரிய கற்கடகக் கைதொடுத்து என்றவாறு.

தெய்வம் பராஅயது

அஃதாவது-குறிஞ்சித் திணைத் தெய்வமாகிய முருகனை வாழ்த்தியது என்றவாறு.

7. சீர்கெழு..........வேலே

(இதன் பொருள்)  பார் இரும் பவுவத்தின் உள் புக்குப் பண்டு ஒரு நாள் சூர்மா தடிந்த சுடர் இலைய வெள்வேல்-பாறைக் கற்களையுடைய பெரிய கடலின்னுள்ளே புகுந்து பண்டொரு காலத்தே சூரனாகிய மாமரத்தை அழித்த ஒளிபடைத்த இலையையுடைய வெள்ளிய வேல்தான் யாருடைய வேல் என்னின். சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன் கைவேல் அன்றே-சிறப்புப் பொருந்தி திருச்செந்தூரும் திருச்செங்கோடும் திருவெண்குன்றும் திருவேரகமும் ஆகிய இத் திருப்பதிகளினின்றும் ஒருபொழுதும் நீங்காமல் எழுந்தருளியிருக்கின்ற முருகக் கடவுளினுடைய கையில் அமைந்த வேலே யாகும் என்பர்.

(விளக்கம்) பார்-பாதை. பவுவம்-கடல். சூர்மா-சூரனாகிய மாமரம். சீர்-அழகுமாம். ஏரகம்-சுவாமிமலை என்பாரும் உளர் நச்சினார்க்கினியர் ஏரகம் மலை, நாட்டகத்ததொரு திருப்பதி என்றார் அரும்பதவுரையாசிரியர் வெண்குன்றம் என்பதனைச் சுவாமிமலை என்பர்.

8. அணி.........வேலே

(இதன் பொருள்) பிணிமுக மேல்கொண்டு அவுணர் பீடு அழியும் வண்ணம்-மயிலூர்தியின் மேல் ஏறிச் சென்று அசுரர் கூட்டம் பெருமை அழிந்தொழியும்படி; மணி விசும்பின் கோன் ஏத்த மாறு அட்ட வெள் வேல்-அழகிய விண்ணுலகத்து அரசனாகிய இந்திரன் கைதொழுது ஏத்துதலாலே அவன் பகையைக் கொன்ற வெள்ளிய வேல் யாருடைய வேலோ எனின்; அணி முகங்கள் ஓர் ஆறும் ஈர் ஆறு கையும் இணையின்றித் தான் உடையான் ஏந்திய வேல் அன்றே-அழகிய ஆறுமுகங்களும் பன்னிரண்டு கைகளும் தனக்குவமை பிறர் இல்லாதபடி தானே உடையவனாகிய முருகப் பெருமான் திருக்கையில் ஏந்திய வேலேயாகும் என்ப; என்க.

(விளக்கம்) ஆறுமுகங்களும் என மாறுக. இணை. உவமை. பிணி முகம்-மயில்; யானை என்பாரும் உளர். மணி-அழகு. மாறு-பகை

9. சரவண...............வேலே

(இதன் பொருள்) வருதிகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து-வளர்ந்து வருகின்ற மலையைச் சுற்றி வருகின்ற அரசனுடைய மார்பைப் பிளத்தற் பொருட்டு; குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடுவேல் -கிரவுஞ்சம் என்னும் பெயரையுடைய மலையைப் பிளந்து வீழ்த்திய நீண்ட வேல் யாருடைய வேலோ எனின்; சரவணப் பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர் திருமுலைப்பால் உண்டான் திருக்கை வேல் அன்றே-சரவணப் பொய்கையின்கண் மலர்ந்துள்ள தாமரைப் பூக்களாகிய பள்ளி அறையினிடத்துத் தன்னைக் கருவுற்று ஈன்ற தாய்மார்களாகிய கார்த்திகை மகளிர் அறுவருடைய அழகிய முலைப்பாலை யுண்டருளிய முருகப்பெருமானுடைய அழகிய கையில் ஏந்திய வேல் என்று கூறுவர்; என்க

(விளக்கம்) சரவணப் பூம் பள்ளி-இமயமலையின்கண் உள்ள ஒரு நீர் நிலை. அந் நீர் நிலையின்கண் கார்த்திகை மகளிர் அறுவரும் தாமரைப்பூக்களிலே முருகனை ஆறு குழந்தைகளாக ஈன்றனர் எனவும் அக் குழந்தைகள் ஒன்றுபட்டு ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளும் உடைய ஒரு கடவுளாயின எனவும் கூறுவர். இதனை ஐந்தாம் பரிபாடலிற் காண்க. வருதிகிரி கோலவுணன் என்பன வினைத்தொகைகள். திகிரி மலை. குருகு-கிரவுஞ்சம் என்னும் ஒரு பறவை. இவை தலைவன் வரைவொடு வருதற்பொருட்டு மகளிர் முருகனை வாழ்த்தியபடியாம்.

பாட்டு மடை

10. இறை..........என்றாள்

(இதன் பொருள்) இறை வளை நல்லாய் கறி வளர் தண் சிலம்பண் செய்த நோய் அறியாள்-தோழீ! மிளகு வளருகின்ற குளிர்ந்த மலையினையுடைய நம் பெருமான் நமக்குச் செய்த நோய் இஃதென்று அறிந்துகொள்ள மாட்டாத; அன்னை அலர் கடம்பன் என்றே-மடவோளாகிய நம்மன்னை இந்நோய் மலருகின்ற கடம்பினையுடைய முருகனால் வந்தது என்று கருதி; தீர்க்க. இந் நோயைத் தீர்க்கும் பொருட்டு; வெறி ஆடல் தான் விரும்பி முருகனுக்கு. வெறியாட்டெடுத்தலைத் தான் மிகவும் விரும்பி; வேலன் வருக என்றாள்-வேல்மகனை அழைத்து வருக என்று கூறினள்; இது நகை ஆகின்று-அன்னையின் இச் செயலை நினைக்குந்தோறும் எனக்கு நகைப்புண்டாகின்றது காண்; என்க.

(விளக்கம்) இது முதல் நான்கு பாடல்கள் தலைவி தோழிக்கு அறத்தொடு நின்றது. கறி-மிளகு. சிலம்பன்-குறிஞ்சித் தலைவன் நோய்-காமநோய். கடம்பன்-முருகன்; முருகனால் வந்ததென்று கருதி அது தீர்க்க வேலன் வருகென்றாள் என இயையும்

11. ஆய்வளை............மடவன்

(இதன் பொருள்) ஆய்வளை நல்லாய்-அழகிய வளையலை அணிந்த தோழியே கேள்; மாமலை வெற்பன் நோய் தீர்க்க வேலன் வரும்-பெரிய மலைநாடனாகிய நம் பெருமான் நமக்குச் செய்த இந்த நோயைத் தீர்ப்பதற்கு வேலன் வந்தாலும் வருவான்; வேலன் வருமாயின் மடவன்-வேல் மகன் வருவானானால் அவன் அறிவிலியே ஆவான்; குருகு பெயர்க்குன்றம் கொன்றான் வருமாயின் அவனின் மடவன்-அவ் வேலன் அழைக்கும்பொழுது கிரவுஞ்ச மலையை அழித்தவனாகிய முருகக் கடவுள் வருமாயின் அவனினும் காட்டில் தேற்றமாக அக் கடவுளும் அறிவிலியே காண்!; இது நகையாகின்று-இது நகைப்பைத் தருகின்றது என்க.

(விளக்கம்) ஆய்வளை-நுண்ணிய தொழிலையுடைய வளையலுமாம். வருமாயின் என்பதனைப் பின்னும் கூட்டுக.

12. தெறிவளை.....வருமாயின்

(இதன் பொருள்) செறிவளைக்கை நல்லாய்-செறிந்த வளையலணிந்த தோழியே கேள்; வெறிகமழ் வெற்பன் நோய் தீர்க்க வேலன் வரும்-மணம் கமழ்கின்ற மலையினையுடைய நம் பெருமானால் உண்டான இந்த நோயைத் தீர்க்க வேல்மகன் தேற்றமாக வருவான். ஏன் எனின் வேலன் மடவன்-அவ் வேல் மகன் அறியாமையுடையன் ஆதலான்; அல் அமர் செல்வன் புதல்வன் தான் வருமாயின்-வடவாலின்கீழ் அமர்ந்த இறைவனுடைய மகனாகிய அம் முருகன் தானும் அவ் வேலன் அழைக்க வருவானாயின்; அவனினும் மடவன்-அவ் வேல் மகனினும் காட்டில் அறியாமையுடையவனே காண்; இது நகையாகின்று-இது நகைப்பைத் தருகின்றது.

(விளக்கம்) வெறி-மணம். வெற்பன்-தலைவன். தான் : அசைச் சொல். ஆலமர் செல்வன்-தக்கிணாமூர்த்தி

13: நேரிழை.........வருமாயின்

(இதன் பொருள்) நேர் இழை நல்லாய்-நுண்ணிய தொழிலமைந்த அணிகலன்களையுடைய தோழியே கேள்: மலைநாடன் மார்பு தருவெம்நோய் தீர்க்க வேலன் வரும் மலைநாட்டையுடைய நம் பெருமானுடைய மார்பினால் வந்த இந்த வெவ்விய இக் காமநோயைத் தீர்ப்பதற்கு வேலன் தேற்றமாக வருவான்; தீர்க்க வரும் வேலன் தன்னினும்-இந் நோயைத் தீர்க்க வருகின்ற வேலனினும் காட்டின்; கார்க்கடப்பந் தார் எம் கடவுள் தான் வருமாயின் மடவன்-கார்ப்பருவத்திலே மலருகின்ற கடப்ப மலர் மாலையை அணிந்த எம்முடைய திணைத் தெய்வமாகிய முருகன் தானும் அவ்வேலன் வேண்ட வருவானாயின் அறியாமையுடையவனே காண்; நகை ஆம்-ஆகவே அன்னையின் இச் செயல் எனக்கு நகைப்பையே தருகின்றது; என்க.

(விளக்கம்) நேர் இழை என்புழி நேர்மை நுண்மை மேற்று; அழகுமாம். கடப்பந்தார்-முருகனுக்குரிய மாலை. குறிஞ்சிக் கடவுளாதலின் எம் கடவுள் என்றாள். இவை நான்கும் தலைவி தோழிக்கு அறத்தொடு நின்றது. இனி, தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவி அவன் கேட்ப வெறியாடல் கூறி வரைவு கடாஅயது எனினுமாம்.

பாட்டு மடை

14: வேலனார்........வேண்டுதுமே

(இதன் பொருள்) வேலனார் வந்து வெறியாடும் வெங்களத்து-அன்னையின் வேண்டுகோளுக் கிணங்கி அவ் வேலனார் வந்து வெறியாடல் நிகழ்த்துகின்ற வெவ்விய அக்களத்தின்கண்; நீலப் பறவை மேல் நேரிழை தன்னோடும் ஆல் அமர் செல்வன் புதல்வன் வரும்-நீல நிறமான மயிலின்மேல் ஏறி அழகிய அணிகலன்களையுடைய வள்ளி நாச்சியாரோடும் இறைவன் மகனாகிய முருகப்பெருமான் எழுந்தருளுவான்; வந்தால் மால்வரை வெற்பன் மண வணி வேண்டுதுமே-முருகப்பெருமான் வருவானாயின் யாம் பெரிய மூங்கிலையுடைய மலைநாட்டுத் தலைவனாகிய நம் பெருமானுடைய திருமணத்தின்கண் மங்கல அணி பெறுமாறு வேண்டிக்கொள்வேம் காண்; என்க

(விளக்கம்) வேலனார்: இகழ்ச்சி. நீலப்பறவை-மயில். நேரிழை என்றது வள்ளியை. அவள் தம் குலப்பெண்ணாதலின் அவளை மட்டும் கூறினாள். வெறியாடலினும் நமக்கும் ஒரு பயன் உளது, என்றவாறு இஃது ஏனைத் தாழிசைகளுக்கும் ஒக்கும்

15: கயிலை................எனவே

(இதன் பொருள்) கயிலை நம்மலை இறை மகன்ஐ-கயிலாயம் என்னும் அழகிய மலையின்கண் எழுந்தருளியிருக்கின்ற இறைவனுடைய மகனாகிய முருகப் பெருமானே; அயல் மணம் ஒழி அவர் மணம் அருள் என-எதிலார் மணம் பேசி வருவதனை ஒழித்தருளுக, எம் பெருமானுடைய திருமணம் நிகழுமாறு அருள் செய்திடுக என்று நின்னை வேண்டிக்கொண்டு; நின் மதிநுதல் மயில் இயல் மடவரல் மலையர்தம் மகளார் செயலை மலர்புரை திருவடி தொழுதேம்-நின்னுடையவும் பிறை போன்ற நுதலையும் மயில் போன்ற சாயலையும் மடப்பத்தையுமுடைய குறவருடைய மகளாராகிய வள்ளி நாச்சியாருடையவும் ஆகிய அசோகினது மலரையொத்த அழகிய திருவடிகளைத் தொழுகின்றோம் என்க.

(விளக்கம்) கயிலைமலை இறை-சிவபெருமான் மகனை என்புழி ஐகாரம் சாரியை. மடவரால்-மடப்பம் வருதலையுடையவள். மலையர் குன்றவர். செயலை-அசோகம். நின்னுடையவும் மகளாருடையவும் ஆகிய திருவடி எனக் கூட்டுக. அயன் மணம் எனக் கொண்டு பிரசா பத்தியம் என்பர் அரும்பத உரையாசியர். இவ்வுரை சிறப்பின்று! அயல் மணம் எனக் கொண்டு இதனைப் பிறர் மண வரவு கூறி வரைவு கடாஅதலுக்கு ஏதுவாக்குதலே சிறப்பாம். அவர் மணம் என்றது தலைவன் மணத்தை.

16: மலைமகள்...........எனவே

(இதன் பொருள்) மலைமகள் மகனை நின் மதிநுதல் மடவரல்-இமயமலையின் அரசனுடைய மகளாகிய  உமை அம்மையின் மகனாகிய முருகப்பெருமானே நின்னுடைய பிறை போன்ற நெற்றியையுடைய மனைவியாகிய மடந்தை தானும்; குலமலை உறைதரு குறவர் தம் மகளார்-சிறந்த மலைகளிலே வாழ்கின்ற குறவர் குடியிற் பிறந்த மகளாரேயல்லரோ; நிலை உயர் கடவுள் நின் இணையடி தொழுதேம்-இவ்வாறு பிறந்த குலத்தாலும் பெண் கொண்ட குலத்தானும் சிறப்புற்றுப் பிறகடவுளார் நிலையினும் உயர்ந்திருக்கின்ற கடவுளாகிய உனது இரண்டு திருவடிகளையும் அப் பிறப்புரிமை பற்றி அக் குலத்தே மாகிய யாங்கள் கை கூப்பித் தொழுகின்றேம் அஃதெற்றுக் கெனின்; அவர் பலர் அறி மணம் படுகுவர் என-எம் தலைவர் நின் அருளால் இக்களவு மணத்தைக் கைவிட்டுச் சுற்றத்தார் பலரும் அறிதற்குரிய நல்ல திருமணத்தைச் செய்துகொள்க என்னும் பொருட்டே யாம்; என்க.

(விளக்கம்) மலைமகள்-பார்வதி. குறவர் தம் மகள்-வள்ளி எனவே நீயும் குறத்திமகன் நின் மனைவியும் குறத்தி; இவ்வாற்றால் நின் நிலை ஏனைக் கடவுளினும் உயர்ந்தது என்று பாராட்டியபடியாம். யாங்களும் குறமகளிராதலின் அவ்வுரிமைபற்றி நின் அடி தொழுதேம் என்றவாறு. பலர் அறிமணம்-கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் உறவினர் அறியக் கொடுப்பக் கொள்வது(தொல் கற்பீ-1)

17: குறமகள்.......எனவே

(இதன் பொருள்) குறமகள் அவள் எம் குலமகள் அவளொடும் அறுமுக ஒருவன்-குறமகளாகிய அவ் வள்ளி தானும் எம்முடைய குலத்தில் பிறந்தவள் ஆதலால் அவள் திருவடிகளோடு ஆறுமுகங்களையுடைய ஒப்பற்ற இறைவனாகிய; நின் அடியிணை தொழுதேம்-நின்னுடைய திருவடியிணையையும் ஒரு சேரக் கைகுவித்துத் தொழுகின்றேம், அஃதெற்றுக்கெனின்; துறைமிசை நினது இருதிருவடிதொடுநர்-நீர்த் துறையின்கண் நின்னுடைய இரண்டு அழகிய அடிகளையும் தொட்டு எமக்குச் சூள் மொழிந்த எங்காதலர்; நன்மணம் பெறுக பிழை மணம் விடு என-நின் அருளால் பலரறியும் நல்ல திருமணத்தைச் செய்துகொள்வாராகவும் பிழையான இக் களவு மணத்தைக் கைவிடுவாராகவும் என்னும் பொருட்டேயாம்; என்க

(விளக்கம்) வள்ளி எம் குலமகளாதலின் தொழுதேம் எனவே வானோர் மகளாகிய தெய்வயானையின் அடிகளைத் தொழமாட்டேம் என்றாருமாயிற்று. பிழை மணம்-களவு மணம் விடுக என்பதன் ஈறு தொக்கது; செய்யுள் விகாரம்.

பாட்டு மடை

18: என்றியாம்......தோழி

(இதன் பொருள்) என்று யாம் பாட-என்று யாம் இவ்வாறு பாடா நிற்ப; மன்றல் அம் கண்ணி மலை நாடன்-மணங்கமழும் அழகிய மலர் மாலையைத் தலையில் அணிந்திருந்த இம் மலைநாட்டுத் தலைவனாகிய நம் பெருமான்; மறை நின்று கேட்டருளிப் போவான் முன் சென்றேன்-நம் பாடல்களை மறைந்து நின்று எஞ்சாமல் கேட்டுப் பின்னர்த் தன்னூர் நோக்கிப் போகின்றவன் முன்னர் யான் தமியளாய்ச் சென்றேன்; அவன் தன் திரு அடி  கைதொழுது நின்றேன்-அவனுடைய அழகிய அடிகளை நோக்கிக் கைக்கூப்பித் தொழுது நின்று; உரைத்தது கேள் தோழி வாழி-யான் அவனுக்குக் கூறியதனை உனக்குக் கூறுவேன் கேட்பாயாக தோழீ நீ நீடுழி வாழ்க; என்றாள் என்க.

(விளக்கம்) மறை நின்று-கரந்து சிறைப்புறமாக நின்று. சென்று நின்ற யான் உரைத்தது கேள்; என்க. வாழி: அசைச் சொல்லுமாம்

19: கடம்பு.........சிறுகுடியோரே

(இதன் பொருள்) கடம்பு சூடி உடம்பிடி ஏந்தி மடந்தை பொருட்டால் இவ்வூர் வருவது-ஐயனே நீ கடப்பமாலையை அணிந்துகொண்டு வேலைக் கையிலேந்தித் தலைவியின் பொருட்டு இந்த வூருக்கு இவ்வாறு வருவது நின்னை முருகன் என்று கருதி ஒதுங்கிப் போவாரல்லது ஐயுறுவார் இலர் ஆகும் பொருட்டன்றே, நின் கருத்து நிறைவேறு மாறில்லை, எற்றாலெனின் உனக்கு; அறுமுகம் இல்லை அணி மயில் இல்லை குறமகள் இல்லை செறிதோள் இல்லை-நின்பால் கடம்பும் உடம்பிடியும் உளவேனும் முருகனுக்குரிய ஆறுமுகங்கள் இல்லை அழகிய மயிலூர்தியும் இல்லை அவன் மருங்கில் உறையும் வள்ளிநாச்சியாரும் இல்லை மேலும் நெருங்கிய தோள்கள் பன்னிரண்டும் இல்லையே! இங்ஙனம் ஆதலின்: கடம்பூண் தெய்வமாக நேரார்-நின்னைக் காண்பவர் உன்னைப் பராவுக் கடன் பூணுகின்ற தங்கள் தெய்வமாகிய முருகனே இவனென்று உடன்படமாட்டார் காண்; இச் சிறுகுடியோர் மன்ற மடவர்-இவ்வூரில் வாழ்கின்ற குறவர் தேற்றமாக அறியாமை யுடையவராதலான் என்று இங்ஙனம் கூறிவிட்டேன் என்றாள்; என்க.

(விளக்கம்) கடம்பு-கடப்ப மாலை. உடம்பிடி-வேல் மடந்தை. தலைவி. முருகன் இறைவனாதலான் கடம்புசூடி உடம்பிடியேந்தி ஒரு முகத்தோடும் இங்ஙனம் தோன்றுதல் கூடும் என்னும் மெய்யறிவு மடவோராகிய இச் சிறு குடியோர்க்கு இல்லை என்று அவரை இகழ்வாள் போல, இச் சிறுகுடியோர் நின்வரவை அறிந்து யாண்டும் பழி தூற்றித்திரிகின்றார். அதற்குக்காரணம் நல்லறிவின்மையே என அலர் மிகுதி அறிவித்தாளும் ஆதல் உணர்க.

பாட்டு மடை

20: என்றீங்கு.....பாடுதும்யாம்

(இதன் பொருள்) என்று ஈங்கு அலர் பாடு பெற்றமை யான் உரைப்பக் கேட்டு-தோழி! இவ்வாறு சொல்லி இவ்வூரின்கண் அலர் மிக்கதனை யான் தலைவனுக்கு எடுத்துக் கூற அதனைக் கேட்டு; புலர்வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன-புலர்ந்து வாடுகின்ற தனது நெஞ்சத்தை நம் பக்கலிலே விட்டுப்போன; மலர் தலை வெற்பன வரைவானும் போலும்-விரிந்த இடத்தையுடைய இம் மலைநாட்டுத் தலைவனாகிய நம் பெருமான் வரைவொடு வந்து திருமணமும் செய்துகொள்வான் போலும் இனி யாமும் அத் திருமணம் இனிது நிகழ்தற்பொருட்டு; முலையினால் மாமதுரை கோள் இழைத்தாள் காதல் தலைவனை-தனதொரு முலையினாலே பெரிய மதுரை நகரத்தை தீயுண்ணும்படி செய்தவளுடைய காதலுக்குரிய கணவனை; வானோர் தமராருங் கூடி பலர்தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த நிலை ஒன்று பாடுவதும் யாம்-தேவர்களாகிய இந்திரனுடைய சுற்றத்தார்கள் எல்லோரும் கூடி வந்து அத் தேவர் முதலிய எல்லோரும் கைகூப்பித் தொழுதற்கியன்ற நம் பத்தினித் தெய்வத்திற்குக் கண்கூடாகக் காட்டி வழங்கிய சிறப்புத் தன்மையினைச் சுட்டி யாம் இனி ஒரு பாட்டுப் பாடுவேமாக என்றாள் என்க.

(விளக்கம்) பாடு பெறுதல்-பெருகுதல். புலர்ந்து வாடும் நெஞ்சம் என்க. கோள் இழைத்தல்-கொள்ளுதலைச் செய்தல், என்றது தீ பற்றிக் கொள்ளுதலைச் செய்தால் என்றவாறு. இனி, தீயோரைக் கொன்றழித்தவள் எனினுமாம். வானோராகிய இந்திரன் தருமர் ஆருங் கூடி என்க. தமரார்; ஒரு சொல் எனினுமாம். பெயரறியாமையின் கண்ணகி கூற்றையே வேறு வாய்பாட்டால் கூறி மாமதுரை கோளிழைத்தாள் எனவும், தம் கருத்தால் பலர்தொழு பத்தினி எனவும் பெயர் வழங்கினார்; பின், இவர் கூறும் பெயர்களுக்கும் இவ் விளக்கம் பொருந்தும். இவர் யாண்டும் கண்ணகி என அவள் பெயர் கூறாமையும் கருத்திற் கொள்ளற் பாலது

21: பாடுகம்.....வேண்டுதுமே

(இதன் பொருள்) பாடுகம் வா வாழி தோழி யாம் பாடுகம்-தோழி! இனி யாம் அவ்வாறு பாடுவோம் வருவாயாக; கோமுறை நீங்கக் கொடிமாடக் கூடலைத் தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம்-அரசன் தனது செங்கோன் முறைமையின் நீங்கியதனாலே உண்டான குற்றத்திற்கு அவனது கொடி உயர்த்தப்பட்ட மாட மாளிகைகளையுடைய கூடல் மாநகரத்தைத் தீக்கிரை யாக்கு மாற்றால் முறை செய்தவளாகிய நம் பத்தினித் தெய்வத்தைப் புகழ்ந்து யாம் பாடுவேமாக; தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுங்கால் மாமலை வெற்பன் மணவணி வேண்டுதுமே-அவ்வாறு தீயால் முறை செய்த பத்தினியைப் புகழ்ந்து பாடும் பொழுதும் யாம் நமது பெரிய மலைநாட்டையுடைய தலைவனுடைய திருமண அணியை அருள வேண்டுமென்று அத் தெய்வத்தின்பால் வரம் வேண்டுவேமாக என்றாள் என்க.

(விளக்கம்) பாடுகம்: தன்மைப் பன்மை வினைமுற்று. இவை இடை மடக்கி வந்தன. தீ முறை செய்தாள்: பெயர். வெற்பன்-தலைவன் என்னும் துணையாய் நின்றது

22: பாடுற்று............ஒழியாரே

(இதன் பொருள்) பாடு உற்றுப் பத்தினிப் பெண்டிர் பரவித் தொழுவாள் ஓர் பைத்து அரவு அல்குல் நம் பைம் புனத்து உள்ளாள்-தீ முறை செய்தமையால் பெருமையுற்று உலகத்திலுள்ள  பத்தினிப் பெண்டிர்கள் எல்லாரும் புகழ்ந்து தொழப் படுகின்ற அரவின் படம் போன்ற அல்குலையுடையா ளொருத்தி பசிய இப் புனத்தின்கண் நமக்குத் தெய்வமாக இருக்கின்றாள்; பைத்தர வல்குல் கணவனை வானோர்கள் உய்த்துக் கொடுத்தும் உரை ஒழியார்-அத் தெய்வத்திற்கு அவள் கணவனைத் தேவர்கள் கொணர்ந்து கொடுத்த பின்னரும் அவளைப் புகழ்தல் ஒழிந்திலர் என்றாள்; என்க.

(விளக்கம்) பாடு-பெருமை: அஃதாவது பத்தினிப் பெண்டிர்க் கெல்லாம் எடுத்துக்காட்டாகத் திகழ்தல். இக்காரணத்தால் பத்தினிப் பெண்டிரும் பரவித் தொழுவாராயினர், என்க. பைத்தர வல்குல்: அன் மொழித் தொகை. உய்த்துக் கொடுத்தல்-வலியக் கொணர்ந்து கொடுத்தல். உரை-புகழ்

23: வானக.........இல்லாளே

(இதன் பொருள்) வானக வாழ்க்கை அமரர் தொழுது ஏத்தக் கான நூறு வேங்கைக் கீழாள் ஓர் காரிகையே-வானுலகின்கண் வாழுகின்ற சிறந்த வாழ்க்கையையுடைய தேவர்கள் தாமும் கைதொழுது ஏத்தும்படி நமது குறிஞ்சிக் காட்டின்கண்ணுள்ள நறிய இவ் வேங்கை மரத்தின் கீழே தெய்வமாக ஒரு காரிகை எப்பொழுதும் இருப்பாளாயினள்; கான நறு வேங்கைக் கீழாள் கணவனொடும் வானக வாழ்க்கை மறுதரவோ இல்லாளே-இங்ஙனம் அவள் தானும் வேங்கைக் கீழ் இருப்பாளேனும் தான் தன் கணவனோடும் வானுலகத்தின்கண் இன்புற்றமர்ந்து வாழும் வாழ்க்கையினின்றும் மீளுதல் ஒரு காலத்தும் இல்லாதவளும் ஆவாள்.

(விளக்கம்) மறுதரவு-மீட்சி. அவள் தெய்வமாதலின் இங்கு அங்கு எனாதபடி எங்குமிருப்பாள் என்றவாறு

24. மறுதரவு.......இவ்வூர்

(இதன் பொருள்) மறுதரவு இல்லாளை ஏத்தி நாம் பாட இவ்வூரும் ஓர் பெற்றி பெறுகதில் அம்ம-தனது தெய்வ வாழ்க்கையினின்றும் ஒருபொழுதும் மீள்கிலாத அப் பத்தினித் தெய்வத்தைப் புகழ்ந்து யாம் பாடுதலாலே இந்தக் குன்றவர் ஊரும் ஒரு சிறப்பினைப் பெறுவதாக; இவ்வூர் பெற்றியுடையதே பொற்றொடி மாதர் கணவன் மணங்காணப் பெற்றி உடையது-இந்த ஊர் ஒருதலையாகப் பெருமையுடையதே பெருமையுடையதே அப் பெருமை தான் யாதோ எனின் பொன் வளையலணிந்த எம் பெருமாட்டிக்கும் அவள் கணவனுக்கும் நிகழவிருக்கின்ற திருமணங் காணலாகின்ற புதியதொரு சிறப்பையுடையதாகலாம்; என்றாள்; என்க

(விளக்கம்) தில்: அசைச் சொல். அம்ம: கேட்பித்தற்கண் வந்தது. பெற்றி-தன்மை; அது சிறப்பின் மேனின்றது. அடுக்கு தேற்றம் பற்றி வந்தது. மாதர் என்றது தலைவியை முன்னிலைப் புறமொழி

25: என்றியாம்.............கோவே

(இதன் பொருள்) என்று யாம் கொண்டு நிலை பாடி ஆடும் குரவையைக் கண்டு நம் காதலர் கை வந்தார்-தோழி! இவ்வாறு கூறி யாமெல்லாம் கொண்டு நிலை என்னும் பாட்டினைப் பாடிக் கொண்டு ஆடா நின்ற குரவைக் கூத்தினை மறைய நின்று கண்டு நம் பெருமான் நம் வழிப்பட்டு வரைவொடு வந்தார் காண் இனி நீ வருந்தாதே கொள்! வில் எழுதிய இமயத்தொடு கொல்லி ஆண்ட குறவர்கோ-தனது பொறியாகிய வில்லினை எழுதிய இமய மலையினோடு கொல்லிமலையினையும் ஒருசேர ஆட்சி செலுத்திய குடநாட்டார் மன்னனாகிய செங்குட்டுவன்; ஆனாவைகலும் ஆனாது உண்டு மகிழ்ந்து வாழியர்-இடையறாது பிறக்கின்ற நாள்கள்தோறும் பூ நறுந்தேறல் பருகி உள்ளம் ஒழிவின்றி மகிழுமாறு நீடுவாழ்வானாக.

(விளக்கம்) கொண்டு நிலை-பொருளைக் கொண்டு நிற்கும் நிலை என்பர் அரும்பதவுரையாசிரியர். மறைய நின்று கண்டு என்க. கைவந்தார்-நம் வழிப்பட்டு வந்தார். அஃதாவது வரைவொடு வந்தார் என்றவாறு. முன்னர்(22) தீ முறை செய்தாளை யேத்தி யாம் மண அணி வேண்டுதும் என்றமையின் யாம் இப்பத்தினித் தெய்வத்தை ஏத்திப் பாடியதனால் நம் காதலர் கை வந்தார் என்றாளாயிற்று, குரவைக் கூத்தாடுவார் கூத்தின் முடிவில் தம் அரசனை வாழ்த்துதல் மரபு-இதனை ஆய்ச்சியர் குரவை இறுதியினும் ஆய்ச்சியர் பாண்டியனை வாழ்த்தி முடித்தலானும் உணர்க.

பா-கொச்சகக்கலி

குன்றக் குரவை முற்றிற்று
.
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 28, 2012, 07:46:24 AM
25. காட்சிக் காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அஃதாவது கற்புக்கடவுளாகிய கண்ணகிக்குக் கடவுள் படிவம் சமைத்தற்கு இன்ன மலையில் கற்கொள்ள வேண்டுமென நெஞ்சால் ஆராய்ந்து கண்டதனைக் கூறும் பகுதி என்றவாறு.

மாநீர் வேலிக் கடம்பு எறிந்து, இமயத்து,
வானவர் மருள, மலை வில் பூட்டிய
வானவர் தோன்றல், வாய் வாள் கோதை,
விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து,
இளங்கோ வேண்மாளுடன் இருந்தருளி,  5

துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம் என,
பைந் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி,
வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன்,
வள மலர்ப் பூம் பொழில் வானவர் மகளிரொடு  10

விளையாட்டு விரும்பிய விறல் வேல் வானவன்
பொலம் பூங் காவும், புனல் யாற்றுப் பரப்பும்,
இலங்கு நீர்த் துருத்தியும், இள மரக் காவும்,
அரங்கும், பள்ளியும், ஒருங்குடன் பரப்பி;
ஒரு நூற்று நாற்பது யோசனை விரிந்த  15

பெரு மால் களிற்றுப் பெயர்வோன் போன்று;
கோங்கம், வேங்கை, தூங்கு இணர்க் கொன்றை,
நாகம், திலகம், நறுங் காழ் ஆரம்,
உதிர் பூம் பரப்பின் ஒழுகு புனல் ஒளித்து,
மதுகரம், ஞிமிறொடு வண்டு இனம் பாட,  20

நெடியோன் மார்பில் ஆரம் போன்று
பெரு மலை விளங்கிய பேரியாற்று அடைகரை
இடு மணல் எக்கர் இயைந்து, ஒருங்கு இருப்ப-
குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும்,
வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும்,  25

தினைக் குறு வள்ளையும், புனத்து எழு விளியும்,
நறவுக் கண் உடைத்த குறவர் ஓதையும்,
பறை இசை அருவிப் பயம் கெழும் ஓதையும்,
புலியொடு பொரூஉம் புகர்முக ஓதையும்,
கலி கெழு மீமிசைச் சேணோன் ஓதையும்,  30

பயம்பில் வீழ் யானைப் பாகர் ஓதையும்,
இயங்கு படை அரவமோடு, யாங்கணும், ஒலிப்ப-
அளந்து கடை அறியா அருங்கலம் சுமந்து,
வளம் தலைமயங்கிய வஞ்சி முற்றத்து,
இறைமகன் செவ்வி யாங்கணும் பெறாது,  35

திறை சுமந்து நிற்கும் தெவ்வர் போல;
யானை வெண் கோடும், அகிலின் குப்பையும்,
மான் மயிர்க் கவரியும், மதுவின் குடங்களும்,
சந்தனக் குறையும், சிந்துரக் கட்டியும்,
அஞ்சனத் திரளும், அணி அரிதாரமும்  40

ஏல வல்லியும், இருங் கறி வல்லியும்,
கூவை நூறும், கொழுங் கொடிக் கவலையும்,
தெங்கின் பழனும், தேமாங் கனியும்,
பைங் கொடிப் படலையும், பலவின் பழங்களும்,
காயமும், கரும்பும், பூ மலி கொடியும்,  45

கொழுந் தாள் கமுகின் செழுங் குலைத் தாறும்,
பெரும் குலை வாழையின் இருங் கனித் தாறும்;
ஆளியின் அணங்கும், அரியின் குருளையும்,
வாள்வரிப் பறழும், மத கரிக் களபமும்,
குரங்கின் குட்டியும், குடா அடி உளியமும்,  50

வரை ஆடு வருடையும், மட மான் மறியும்,
காசறைக் கருவும், ஆசு அறு நகுலமும்,
பீலி மஞ்ஞையும், நாவியின் பிள்ளையும்,
கானக்கோழியும், தேன் மொழிக் கிள்ளையும்;
மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டு-ஆங்கு  55

ஏழ் பிறப்பு அடியேம்; வாழ்க, நின் கொற்றம்!
கான வேங்கைக் கீழ் ஓர் காரிகை
தான் முலை இழந்து, தனித் துயர் எய்தி,
வானவர் போற்ற மன்னொடும் கூடி,
வானவர் போற்ற, வானகம் பெற்றனள்;  60

எந் நாட்டாள்கொல்? யார் மகள் கொல்லோ?
நின் நாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்;
பல் நூறாயிரத்து ஆண்டு வாழியர்! என-
மண் களி நெடு வேல் மன்னவன் கண்டு
கண் களி மயக்கத்துக் காதலோடு இருந்த  65

தண் தமிழ் ஆசான் சாத்தன் இஃது உரைக்கும்
ஒண் தொடி மாதர்க்கு உற்றதை எல்லாம்,
திண் திறல் வேந்தே! செப்பக் கேளாய்;
தீவினைச் சிலம்பு காரணமாக,
ஆய் தொடி அரிவை கணவற்கு உற்றதும்;  70

வலம் படு தானை மன்னன் முன்னர்,
சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும்;
செஞ் சிலம்பு எறிந்து, தேவி முன்னர்,
வஞ்சினம் சாற்றிய மா பெரும் பத்தினி,
அம் சில் ஓதி! அறிக எனப் பெயர்ந்து, 75

முதிரா முலைமுகத்து எழுந்த தீயின்
மதுரை மூதூர் மா நகர் சுட்டதும்;
அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்த
திரு வீழ் மார்பின் தென்னர் கோமான்
தயங்கு இணர்க் கோதை தன் துயர் பொறாஅன்,  80

மயங்கினன் கொல் என மலர் அடி வருடி,
தலைத்தாள் நெடுமொழி தன் செவி கேளாள்,
கலக்கம் கொள்ளாள், கடுந் துயர் பொறாஅள்,
மன்னவன் செல்வுழிச் செல்க யான் என
தன் உயிர்கொண்டு அவன் உயிர் தேடினள்போல்,  85

பெருங்கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள்;
கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை
இற்று எனக் காட்டி, இறைக்கு உரைப்பனள்போல்,
தன் நாட்டு ஆங்கண் தனிமையின் செல்லாள்,
நின் நாட்டு அகவயின் அடைந்தனள் நங்கை என்று,  90

ஒழிவு இன்றி உரைத்து, ஈண்டு ஊழி ஊழி
வழிவழிச் சிறக்க, நின் வலம் படு கொற்றம் என-
தென்னர் கோமான் தீத் திறம் கேட்ட
மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன்
எம்மோரன்ன வேந்தர்க்கு உற்ற  95

செம்மையின் இகந்த சொல், செவிப்புலம் படாமுன்,
உயிர் பதிப் பெயர்த்தமை உறுக, ஈங்கு என,
வல் வினை வளைத்த கோலை மன்னவன்
செல் உயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது
மழைவளம் கரப்பின், வான் பேர் அச்சம்;  100

பிழை உயிர் எய்தின், பெரும் பேர் அச்சம்;
குடி புர உண்டும் கொடுங்கோல் அஞ்சி,
மன்பதை காக்கும் நன் குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது, தொழுதகவு இல் என,
துன்னிய துன்பம் துணிந்து வந்து உரைத்த  105

நல் நூல் புலவற்கு நன்கனம் உரைத்து-ஆங்கு,
உயிருடன் சென்ற ஒரு மகள்-தன்னினும்,
செயிருடன் வந்த இச் சேயிழை-தன்னினும்,
நல்-நுதல்! வியக்கும் நலத்தோர் யார்? என,
மன்னவன் உரைப்ப-மா பெருந்தேவி,  110

காதலன் துன்பம் காணாது கழிந்த
மாதரோ பெரும் திரு உறுக, வானகத்து;
அத்திறம் நிற்க, நம் அகல் நாடு அடைந்த இப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும் என-
மாலை வெண்குடை மன்னவன் விரும்பி,  115

நூல் அறி புலவரை நோக்க, ஆங்கு அவர்,
ஒற்கா மரபின் பொதியில் அன்றியும்,
வில் தலைக்கொண்ட வியன் பேர் இமயத்துக்
கல் கால்கொள்ளினும் கடவுள் ஆகும்;
கங்கைப் பேர் யாற்றினும், காவிரிப் புனலினும்,  120

தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து என-
பொதியில் குன்றத்துக் கல் கால்கொண்டு,
முது நீர்க் காவிரி முன் துறைப் படுத்தல்,
மறத் தகை நெடு வாள் எம் குடிப் பிறந்தோர்க்கு,
சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று;  125

புன் மயிர்ச் சடைமுடி, புலரா உடுக்கை,
முந்நூல் மார்பின், முத்தீச் செல்வத்து
இருபிறப்பாளரொடு பெரு மலை அரசன்
மடவதின் மாண்ட மா பெரும் பத்தினிக்
கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின்,  130

வழி நின்று பயவா மாண்பு இல் வாழ்க்கை
கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும்,
முது குடிப் பிறந்த முதிராச் செல்வியை
மதிமுடிக்கு அளித்த மகட்பால் காஞ்சியும்,
தென் திசை என்- தன் வஞ்சியொடு வட திசை 135

நின்று எதிர் ஊன்றிய நீள் பெருங் காஞ்சியும்,
நிலவுக் கதிர் அளைந்த நீள் பெரும் சென்னி
அலர் மந்தாரமோடு ஆங்கு அயல் மலர்ந்த
வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை
மேம்பட மலைதலும், காண்குவல் ஈங்கு என, 140

குடைநிலை வஞ்சியும், கொற்ற வஞ்சியும்,
நெடு மாராயம் நிலைஇய வஞ்சியும்
வென்றோர் விளங்கிய வியன் பெரு வஞ்சியும்,
பின்றாச் சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும்,
குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும்,  145

வட்கர் போகிய வான் பனந் தோட்டுடன்,
புட்கைச் சேனை பொலிய, சூட்டி;
பூவா வஞ்சிப் பொன் நகர்ப் புறத்து, என்,
வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என-
பல் யாண்டு வாழ்க, நின் கொற்றம்,ஈங்கு! என, 150

வில்லவன்கோதை வேந்தற்கு உரைக்கும்:
நும் போல் வேந்தர் நும்மொடு இகலி,
கொங்கர் செங் களத்துக் கொடு வரிக் கயல் கொடி
பகைபுறத்துத் தந்தனர்; ஆயினும், ஆங்கு அவை
திகைமுக வேழத்தின் செவிஅகம் புக்கன;  155

கொங்கணர், கலிங்கர், கொடுங் கருநாடர்,
பங்களர், கங்கர், பல் வேல் கட்டியர்,
வட ஆரியரொடு, வண்தமிழ் மயக்கத்து, உன்
கடமலை வேட்டம் என் கண்- புலம் பிரியாது;
கங்கைப் பேர் யாற்றுக் கடும் புனல் நீத்தம்,  160

எம் கோமகளை ஆட்டிய அந் நாள்,
ஆரிய மன்னர் ஈர்- ஐஞ்ஞாற்றுவர்க்கு
ஒரு நீ ஆகிய செரு வெங் கோலம்
கண் விழித்துக் கண்டது, கடுங் கண் கூற்றம்
இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய  165

இது நீ கருதினை ஆயின், ஏற்பவர்
முது நீர் உலகின் முழுவதும் இல்லை;
இமய மால் வரைக்கு எம் கோன் செல்வது
கடவுள் எழுத ஓர் கற்கே; ஆதலின்,
வட திசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம்  170

தென் தமிழ் நல் நாட்டுச் செழு வில், கயல், புலி,
மண் தலை ஏற்ற வரைக, ஈங்கு, என-
நாவல் அம் தண் பொழில் நண்ணார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா;
வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே  175

தம் செவிப் படுக்கும் தகைமைய அன்றோ?
அறை பறை என்றே அழும்பில் வேள் உரைப்ப-
நிறை- அரும் தானை வேந்தனும் நேர்ந்து,
கூடார் வஞ்சிக் கூட்டுண்டு சிறந்த
வாடா வஞ்சி மா நகர் புக்கபின்-   180

வாழ்க, எம் கோ, மன்னவர் பெருந்தகை!
ஊழிதொறு ஊழி உலகம் காக்க என,
வில் தலைக் கொண்ட வியன் பேர் இமயத்து, ஓர்
கல் கொண்டு பெயரும் எம் காவலன்; ஆதலின்,
வட திசை மருங்கின் மன்னர் எல்லாம்  185

இடு திறை கொடுவந்து எதிரீர் ஆயின்,
கடல் கடம்பு எறிந்த கடும் போர் வார்த்தையும்,
விடர்ச் சிலை பொறித்த வியன் பெரு வார்த்தையும்,
கேட்டு வாழுமின்; கேளீர் ஆயின்,
தோள்- துணை துறக்கும் துறவொடு வாழுமின்;  190

தாழ் கழல் மன்னன்- தன் திருமேனி,
வாழ்க, சேனாமுகம்! என வாழ்த்தி,
இறை இகல் யானை எருத்தத்து ஏற்றி,
அறை பறை எழுந்ததால், அணி நகர் மருங்கு- என்.

உரை

1-9: மாநீர்..........செல்வோன்

(இதன் பொருள்) மா நீர் வேலிக்கடம்பு எறிந்து இமயத்து வானவர் மலைவில் பூட்டிய-கரிய நீரையுடைய கடலை அரணாகக் கொண்டு அக் கடலின் நடுவே நின்ற கடப்ப மரத்தினை வெட்டி வீழ்த்தி மேலும் இமயமலைகாறும் அரசர் பலரையும் வென்று வாகை சூடிச்சென்று அவ்விமய மலையின் நெற்றியின்கண் தேவர்களும் வியக்கும்படி போர் செய்தற்குக் காரணமான தனது விற்பொறியைப் பொறித்துவைத்த; வானவர் தோன்றல் வாய்வாள் கோதை-சேரர்குலத் தோன்றலாகிய வென்றி வாய்த்த வாளேந்திய சேரன் செங்குட்டுவன்; விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து இளங்கோ வேண்மாளுடன் இருந்து-விளங்காநின்ற நீராவியையுடைய வெள்ளிமாடம் என்னும் அரசமாளிகையின்கண் இளங்கோ வேண்மாள் என்னும் தன் கோப்பெருந்தேவியோடு இருந்தபொழுது; அருளி-தன் பரிசனங்களுக்கு அருளிப்பாடு செய்து; துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும் மஞ்சுசூழ் சோலை மலை காண்குவம் என-இடையறாது முழங்குகின்ற முழவுகள் போல அருவிகள் முழங்குதற்குக் காரணமான முகில் சூழாநின்ற சோலைகளையுடைய மலை வளங்களைச் சென்று கண்டு மகிழ்வேம் எனக் கருதி; பைந்தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி-பசிய பொன்னாலியன்ற வளையலணிந்த மகளிர் கூட்டத்தோடு பரவி ஒருங்கு கூடி; வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன்-வஞ்சி நகரத்தின் தனது அரண்மனை முற்றத்தினின்றும் புறப்பட்டும் போகின்றவன்; என்க.

(விளக்கம்) மா நீர்-கடல். சேரன் கடலின் கண் சென்று அங்கு நின்ற கடப்ப மரத்தினை வெட்டினான் என்பதனை, வலம்படு முரசிற் சேரலாதன். முந்நீ ரோட்டிக் கடம்பறுத்து எனவும் சால்பெருந்தானைச் சேரலாதன், மால்கடலோடிக் கடம்பறுத்தியற்றிய பண்ணமை முரசு எனவும் வருவனவற்றால் (அகநா, 127. 347) அறிக. வானவர் இரண்டனுள் முன்னது தேவர்; பின்னது சேரர் மலைவில்; வினைத்தொகை. வென்றி வாய்ந்த வாள் என்க. கோதை-சேரன்; ஈண்டுச் செங்குட்டுவன் இலவந்தி-நீராவி; இல்லறத்தினுள் செய்யப்பட்ட நீர் நிலை. இளங்கோ வேண்மாள்-சேரன் செங்குட்டுவன் மனைவியின் பெயர். அருளி என்பது கட்டளையிட்டு என்றவாறு அரும்பதவுரையில் அருளிப்பாடிட்டு என்பது மது. வஞ்சி சேரர் தலைநகரம்

10-16: வளமலர்.......போன்று

(இதன் பொருள்) வளமலர்ப் பூம்பொழில் வானவர் மகளிரொடு விளையாட்டு விரும்பிய விறல் வேல் வானவன்-வளமிக்க மலரையுடைய பூஞ்சோலையினூடே அரம்பையரோடு ஆடுகின்ற விளையாட்டினை விரும்பிய வெற்றியையுடைய வேலேந்திய இந்திரனானவன் அவ்விளையாட்டின் பொருட்டு; பொலம் பூங்காவும் புனல் யாற்றுப் பரப்பும் இலங்கு நீர்த் துருத்தியும் இளமரக் காவும்-அழகிய பூம்பொழில்களையும் நீர் நிரம்பிய மாற்றுப் பரப்பினையும் விளக்கமுடைய நீரின் இடைக் குறையாகிய துருத்திகளையும் இளமரச் சோலைகளையும்; அரங்கும் பள்ளியும் ஒருங்குடன் (களிற்றுப்) பரப்பி-கூத்தாட்டரங்கையும் பள்ளி இடங்களையும் ஒருசேர யானைகளின் மேலேற்றிய பரப்புதலாலே; ஒரு நூற்று நாற்பது யோசனை விரிந்த-நூற்று நாற்பது யோசனை தூரம் விரிந்தனவாகிய விளையாட்டுப் பொருள்களோடே; பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று-மிகப் பெரிய ஐராவதம் என்னும் களிற்று யானையின் மிசை ஏறியூர்ந்து செல்பவனைப் போல என்க. 

(விளக்கம்) வானவன்-இந்திரன். பொலம் பூங்கா. பொன்னிறமான பூக்களையுடைய கற்பகக்காவுமாம். துருத்தி-ஆற்றிடைக்குறை அரங்கு. நாடகமேடை. பள்ளி-படுக்கை. பூங்கா முதலியவற்றைக் களிற்றின்மேல்பரப்பி, என்க. பெருமால் களிறு என்றது ஐராவதத்தை

17-23: கோங்கம்.............இருப்ப

(இதன் பொருள்) கோங்கம் வேங்கை தூங்கு இணர்க்கொன்றை நாகம் திலகம் நறுங்காழ் ஆரம்-கோங்கும் வேங்கையும் தொங்குகின்ற பூங்கொத்துக்களையுடைய கொன்றையும் சுரபுன்னையும் மஞ்சாடியும் நறுமணமுடைய காழுடைய சந்தனமும் ஆகிய; உதிர் பூம்பரப்பின் ஒழுகு புனல் ஒலித்து-இம்மரங்களினின்றும் உதிருகின்ற மலர்களினால் ஆகிய பரப்பினூடே தன்கண் ஒழுகுகின்ற நீர் மறையா நிற்பவும்; மதுகரம் ஞிமிறொடு வண்டினம் பாட-மதுகரமும் வண்டினங்களும் இசை முரலா நிற்பவும்; நெடியோன் மார்பில் ஆரம் போன்று பெருமலை விளங்கிய பேரியாற்று அடை கரை- திருமாலினது மார்பின்கண் அணிந்த மணி ஆரம் போல, பெரிய மலையைக் குறுக்கிட்டுச் செல்லும் பேரியாறு என்னும் யாற்றினது நீரடை கரையாகிய இடுமணல் எக்கர் இயைந்து ஒருங்கு-நீர் கொணர்ந்து குவித்த எக்கராகிய திடரின்கண் தன் பரிசனங்ளோடே பொருந்தி ஒருங்கு குழுமி இருப்ப; என்க.

(விளக்கம்) கோங்கம்..........ஆரம் என்னும் துணையும் மரத்தின் பெயர்கள் அம் மரத்தினின்றும் உதிருகின்ற பரப்பினுள் தன்பால் ஒழுகு புனல் ஒளிப்ப என்க. மதுகரம் ஞிமிறு வண்டு என்பன வண்டின் வகை. நெடியோன்-திருமால். இவன் பெருமலைக்குவமை. ஆரம் ஆற்றுக்குவமை அடைகரையரகிய எக்கர், இடுமணலாகிய எக்கர் எனத் தனித்தனி கூட்டுக. (9) செல்வோன் வானவர் பெயர் வோன் போன்று சென்று எக்கர் இயைந்து இருப்ப என ஒரு சொல் பெய்து முடித்துக் கொள்க.

24-32: குன்ற............ஒலிப்ப

(இதன் பொருள்) குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும்-குன்றத்தின்கண் குரவைக் கூத்தாடும் ஒலியும், குறமகளிர் பாடுகின்ற குறிஞ்சிப்பண் ஒலியும்; வென்றிச் செல்வேள் வேலன் பாணியும்-வெற்றியையுடைய சிவந்த மேனியையுடைய முருகனை வாழ்த்துகின்ற வேன்மகன் பாடுகின்ற தேவபாணியின் ஒலியும்; தினைக்குறு வள்ளையும்-குறத்தியர் தினையைக் குற்றுகின்ற உலக்கைப் பாட்டொலியும்; புனத்து எழுவிளியும்-தினைப்புனங்களிலே காவல் செய்கின்ற மகளிர் எழுப்புகின்ற ஒலியும் நறவுக்கண் உடைத்த குறவர் ஓதையும்-தேனைத் தம்மிடத்தேயுடைய இறால்களை யழித்த குறவர்கள் மகிழ்ச்சியால் ஆரவாரிக்கின்ற ஒலியும்; பறை இசை அருவி பயம் கெழும் ஓதையும்-பறைமுழக்கம் போன்று முழங்கி விழுகின்ற அருவிகளின் பயன் பொருந்திய ஒலியும்; புலியொடு பொருஉம் புகர்முக ஓதையும் புலிகளோடு போரிடுகின்ற யானைகளின் பிளிற்றொலியும்; மீமிசைச் சேணோன் கலிகெழும் ஓதையும்-மரத்தின்மீது அமைத்த பரணின்மேல் இருப்பவனாகிய கானவன் எடுத்த செருக்குடைய பாட்டொலியும்; பயம்பில் வீழ் யானைப் பாகர் ஓதையும்-தாம் அகழ்ந்த குழியின்கண் வீழ்ந்த யானையைக் கண்ட பாகர்கள் மகிழ்ந்த ஆரவாரிக்கின்ற ஒலியும்; இயங்குபடை வெட்சிப்பூச்சூடிப் பகைப்புலம் நோக்கிச் செல்லுகின்ற படை மறவர் ஆரவாரிக்கின்ற ஒலியோடு கூடி அக்காட்டகத்தின்கண் எவ்விடத்தினும் ஒலியா நிற்ப என்க.

(விளக்கம்) குறிஞ்சி நிலமாதலின் குன்றக்குரவை கூறினார் கொடிச்சியர்-உயர்ந்த குறக்குல மகளிர். பாணி-தேவபாணி குறுவள்ளை-குற்றுகின்ற வள்ளைப் பாட்டு; உலக்கைப் பாட்டு; புனம் தினைப்புனம்; விளி-கூக்குரலுமாம். நறவு-தேன். அருவி-தினை முதலிய பயன் விளைத்தலின் பயங்கெழு மோதை என்றார். புகர்முகம்-யானை. களி. செருக்கு, மீமிசை-உயர்ந்த பரண். சேணோன் மேலிருப்பவன். பயம்பு. யானையை வீழ்த்திப் பீடிக்கும் குழி இயங்கு படைஅரவமென்றது வெட்சித்திணையில் ஒரு துறை

குன்றக்குறவர் சேரன் செங்குட்டுவனைக் காணுதற்குக் கையுறை சுமந்து கொடு வருதல்

33-36: அளந்து.........போல

(இதன் பொருள்) அளந்து கடையறியா அருங்கலம் சுமந்து இவ்வளவென்று கணித்து எல்லை காணுதற்கு இயலாத மதிப்புடைய பேரணிகலன்களைச் சுமந்து கொண்டுவந்து; வளம் தலை மயங்கிய வஞ்சி முற்றத்து-பல்வேறு வளங்களும் விரவிக்கிடக்கின்ற வஞ்சி நகரத்து அரண்மனை முற்றத்தின்கண்; இறை மகன் செவ்வி பெறாது யாங்கணும் திறைசுமந்து நிற்கும் தெவ்வர் போல-சேரன் செங்குட்டுவனைக் காணுதற்குச் செவ்வி கிடைக்கப் பெறாமையால் தாம் கொணர்ந்த அத்திறைப் பொருள்களைச் செவ்வி வந்துறும்பொழுது முந்துற் பொருட்டுச் சுமந்து வண்ணமே நிற்கின்ற பகை மன்னர்களைப்போல, என்க

(விளக்கம்) அருங்கலம்-பெறற்கரிய பேரணிகலன், தலை மயங்குதல்-விரவிக்கிடத்தல் இறை மகன்-அரசன் அத் திறைப் பொருளை என்க. தெவ்வர்-பகைவர். இவர் பின்வரும் குன்றக் குறுவருக்குவமை

குறவர் சுமந்துவரும் பொருள்களின் வகை

37-47: யானை.........தாறும்

(இதன் பொருள்) யானை வெண்கோடும் அகிலின் குப்பையும்-யானையினது வெள்ளிய மருப்பும் அகிலின் குவியலும்; மான் மயிர்க் கவரியும் மதுவின் குடங்களும் சந்தனக் குறையும் சிந்துரக் கட்டியும்-மான் மயிரால் இயன்ற சாமரையும் தேன்குடங்களும் சந்தனக் குறடும் சிந்துரக் கட்டியும்; அஞ்சனத் திரளும் அணி அரி தாரமும் ஏல வல்லியும் இருங்கறி வல்லியும்-அஞ்சனக் கட்டியும் பூசிக்கொள்ளும் அரிதாரமும் ஏலக்கொடியும் கரிய மிளகுக்கொடியும்; கூவை நூறும் கொழுங்கொடிக் கவலையும்-கூவைக்கிழங்கின் நீறும் கொழுவிய கவலைக்கொடியும்; தெங்கின் பழனும் தேமாங்கனியும் பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும்-முதிர்ந்த தேங்காயும் இனிய மாம்பழமும் பசிய கோடியையுடைய பச்சிலையும் பலாவினது இனிய பழங்களும், காயமும் கரும்பும் பூமலிகொடியும் கொழுந்தான் கமுகின் செழுங்குலைத் தாறும்-வெள்ளுள்ளியும் கரும்பும் பூக்கள் மிக்க கொடியும் கொழுவிய அடியினையுடைய கமுகினது வளவிய குலையாகிய தாறும் பெருங்குலை வாழையின் இருங்கனித் தாறும். பெரிய குலையினையுடைய மலை வாழையினது பெரும் பழங்களையுடைய தாறும், என்க.

(விளக்கம்) கோடு-மருப்பு (தந்தம்). குப்பை-குவியல் மது-தேன். குறை-குறடு(கட்டை) அஞ்சனம்-ஒருவகை மருந்து மை. அணி-அழகுமாம். நூறு. நீறு(பொடி) கவலை-ஒருவகைக் கொடி. தெங்கு-தென்னை. பழன் என்றது நெற்றினை படலை-பச்சிலை என்னும் ஒரு கொடி. வாழை-மலைவாழை. கமுகம் தாறு-வாழைத்தாறு என்பன மரபுச் சொல்.

குறவர் கொணர்ந்த உயிரினங்கள்

48-55: ஆளியின்............கொண்டாங்கு

(இதன் பொருள்) ஆளியின் அணங்கும் அரியின் குருளையும் வாள்வரிப் பறழும் மதகரிக் களபமும்-ஆளிக்குட்டியும் சிங்கக்குட்டியும் புலிக்குட்டியும் மதயானைக் கன்றும், குரங்கின் குட்டியும் குடாவடி உளியமும் வரையாடு வருடையும் மடமான் மறியும்-குரங்குக் குட்டியும் வளைந்த காலையுடைய கரடிக்குட்டியும் மலையில் ஏறி விளையாடும் வருடை மான்குட்டியும் அழகிய மான்குட்டியும்; காசறைக் கருவும் ஆசு அறு நகுலமும் பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும்-கத்தூரிக்குட்டியும் குற்றமற்ற கீரியும் தோகையையுடைய மயிலும் புழுகுப் பூனைக்குட்டியும்; கானக்கோழியும் தேன்மொழிக் கிள்ளையும் மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டு-காட்டுக்கோழியும் இனிய மொழியையுடைய கிளியும் ஆகிய இப் பொருள்களையெல்லாம் சேரன் செங்குட்டுவனுக்குக் கையுறையாக அம் மலையின் மேல் வாழுகின்ற மாக்களாகிய குறவர் தங்கள் தலையின் மேல் சுமந்துகொண்டு, வந்து என்க.

(விளக்கம்) அணங்கு, குருளை பறழ் களபம் குட்டி மறி பிள்ளை என்பன அவ்வவற்றின் இளமைப் பெயர்கள் என்றுணர்க. ஆளி அரி என்பன சிங்கத்தின் வகைகள். வாள்வரி-புலி: அன்மொழித் தொகை குடாவடி-வளைந்த கால். வருடை ஒருவகை மான். நாவி-புழுகுப்பூனை

செங்குட்டுவனைக் குறவர் கண்டு கூறியது

55-63: ஆங்கு.......வாழியரென்

(இதன் பொருள்) ஆங்கு-சேரன் செங்குட்டுவன் வீற்றிருந்த அவ்விடத்தை அணுகி அவன் திருவடிகளில் விழுந்து வணங்கி ஏழ் பிறப்பு அடியேம் வாழ்க நின் கொற்றம்-ஏழு பிறப்பும் நாங்கள் அடிமையாவேம் வேந்தர் வேந்தே நின்னுடைய அரசுரிமை நெடிது வாழ்வதாக என்று பணிந்த பின்னர் அச் சேரமன்னனை நோக்கிப் பெருமானே! கான வேங்கைக் கீழ் ஓர் காரிகைதான் முலை இழந்து தனித்துயர் எய்தி-நம்முடைய காட்டின் கண்ணதாகிய நெடுவேள் குன்றத்தின் தாழ் வரையில் ஒரு வேங்கை மரத்தின் கீழே ஒப்பற்ற அழகினையுடையாளொருத்தி தன் முலைகளில் ஒன்றனை இழந்து பிறர் யாரும் பட்டறியாத பெருந்துன்பத்தை எய்தி நின்றவள்; வானவர் போற்ற மன்னொடும் கூடி வானவர் போற்ற வானகம் பெற்றனள்-விண்ணுலகத்தினின்றும் இழிந்துவந்த தேவர்கள் அவள் இழந்த கணவனையும் காட்டி மலர்மாரி தூவிப் புகழ்ந்து போற்றி அழைப்ப அக்கணவனொடும் கூடி அவ் வானவர் போற்றி அழைப்ப வானவூர்தியிலேறி எளியேங்கள் கண்டு நிற்கும்பொழுதே விண்ணுலகம் எய்தினள்; எந் நாட்டாள் கொல் யார் மகள் கொல்லோ நின்னாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்-அவள் தான் எந்த நாட்டினளோ? யார் மகளோ? அறிகின்றிலேம் அவளை நின்னுடைய இத்திருநாட்டின்கண் பிறந்தவளோ என்று எவ்வளவு நினைத்துப் பார்த்தபொழுதும் அறிகின்றிலேம்; பல் நூறாயிரத்து ஆண்டு வாழியர் என-மன்னர்-மன்னனே! எம்பெருமான் பற்பல நூறாயிரம் ஆண்டுகள் வாழ்க என்று கூறி வாழ்த்தா நிற்ப; என்க

(விளக்கம்) பெயர் அறியாமையின் காரிகை யென்றொழிந்தார். முலை இழந்தமை கண்கூடாகக் கண்டு கூறியபடியாம். மண மதுரையோடு அரசு கேடுற வல்வினை வந்து ருத்தகாலைக் கணவனை அங்கு இழந்து போந்த கடுவினையேன் எனக் கண்ணகியாரே அறிவித்தமையால் தனித்துயர் எய்தி என்றார். அவள்தான் யாராக இருக்கலாம் என்று யாங்கள் ஆராய்த்து பார்த்தும் அவளை இந் நாட்டினளாக அறிகின்றிலேம் ஆதலால் அவள் எந்நாட்டாளோ யார் மகளோ என்றனர். இந் நிகழ்ச்சி எமக்குப் பெரிதும் வியப்பைத் தருகின்றது என்பது. குறிப்புப் பொருள், என்க.

தண்டமிழ் ஆசான் சாத்தன் செங்குட்டுவனுக்குக் கூறியது

64-66: மண்கிளி...........உரைக்கும்

(இதன் பொருள்) மண் களி நெடுவேள் மன்னவன் கண்டு-நிலவுலகம் மகிழ்வதற்குக் காரணமான நெடிய வேலையுடைய அரசனாகிய சேரன் செங்குட்டுவனை அப்பொழுது அங்கு வந்து பரிசில் காரணமாகக் கண்டு அவனது தோற்றப் பொலிவினாலே; கண்களி மயக்கத்துக் காதலோடு இருந்த-தனது கண் களித்தற்குக்  காரணமான மருட்கையோடும் அன்போடும் அவன் பக்கலிலே அமர்ந்திருந்த; தண் தமிழ் ஆசான் சாத்தன். இஃது உரைக்கும்-குளிர்ந்த தமிழ் முழுதும் உணர்ந்த பேராசிரியனாகிய சாத்தன் என்னும் புலவன் குன்றக் குறவர் கூறிய செய்தி கேட்டுத் தன்னை வியந்து நோக்கிய அம்மன்னவனுக்கு இவ் வரலாற்றினைக் கூறுவான்; என்க.

(விளக்கம்) மண்களி மன்னவன் நெடுவேல் மன்னவன் எனத் தனித்தனி கூட்டுக. மன்னவனை நட்புடைமை காரணமாக வந்து கண்டு இருந்த சாத்தன் எனினுமாம் கேட்போர் உள்ளம் குளிர்தற்குக் காரணமான தமிழ் என்க. சாத்தன்-மதுரைக் கூல வாணிகன் சாத்தனார் என்னும் பெரும் புலவர்; இவரே மணிமேகலை யென்னும் பெரும் காப்பியத்தை இயற்றியவரும் ஆவார். இச் சிலப்பதிகாரம் தோன்றுவதற்கும் இவரே காரணமாயிருந்தவர் என்பதனை இக் காதை யானும் இந் நூற் பதிகத்தானும் உணரலாம்.

சாத்தனார் கண்ணகி வரலாறு கூறுதல்

67-77: ஓண்டொடி...........சுட்டதும்

(இதன் பொருள்) திண் திறல் வேந்தே ஒள் தொடி மாதர்க்கு உற்றத்தை எல்லாம் செப்பக் கேளாய்-திண்ணிய ஆற்றலுடைய அரசே! அக் குறவர்களால் குறிப்பிடப்பட்ட விண்ணுலகம் புகுந்த நங்கைக்கு நிகழ்ந்த நிகழ்ச்சியை யெல்லாம் யான் அறிகுவன் ஆதலின் அதனை யான் கூறக் கேட்பாயாக என்று தொடங்கி கூறுபவன்; தீவினை சிலம்பு காரணமாக ஆய்தொடி அரிவை கணவற்கு உற்றதும்-முற்பிப்பிற் செய்த தீவினையானது ஒரு சிலம்பு காரணமாக அழகிய வளையலணிந்த அக் கண்ணகியின் கணவனாகிய கோவலனுக்குத் தன் பயனை ஊட்டுதலாலே நிகழ்ந்த நிகழ்ச்சியும்: வலம்படு தானை மன்னன் முன்னர் சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும்-வெற்றியையே தோற்றுவிக்கும் படைகளையுடைய பாண்டிய மன்னனாகிய நெடுஞ்செழியன் முன்னிலையில் தன்பால் எஞ்சிய சிலம்பை ஏந்திச்சென்ற அக் கண்ணகி உரைத்த வழக்கும்; செஞ்சிலம்பு எறிந்து தேவி முன்னர் வஞ்சினம் சாற்றிய மாபெரும் பத்தினி-பாண்டியன் வழக்குத் தோற்ற பின்னர்த் தன் கையிலிருந்த செம்பொற் சிலம்பினை எறிந்து அக்கோப்பெருந்தேவி முன்னிலையிலே வஞ்சின மொழிகள் பல கூறிய திருமாபத்தினியாகிய கண்ணகி கூந்தலையுடைய கோப்பெருந்தேவியே ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும் என் பட்டிமையும் காண்குறுவாய் என்று கூறி அவ்விடத்தினின்றும் போய்; முதிரா முலைமுகத்து எழுந்த தீயின் மதுரை மூதூர் மாநகர் சுட்டதும்-தன்னுடைய இளமையுடைய மூலையைக் கையால் திருகி எடுத்துச் சுழற்றியபோது அம்மூலையின் முகத்தினின்று எழுந்த தீயினாலே மதுரை என்னும் பழைய ஊராகிய பெரிய நகரத்தைச் சுட்டொழித்ததும்; என்க

(விளக்கம்) மாதர்-கண்ணகி. உற்றதை-ஐகாரம் சாரியை எல்லாம் எஞ்சாமைப் பொருட்டு, வெயிலெல்லாம் கழிந்தது என்பது போல, இதனை ஒருமைப் பன்மை மயக்கம் என மயங்குவாரும் உளர். அரிவை, சேயிழை என்பன வாளா சுட்டுப் பெயராந் துணையாய் நின்றன. மன்னன்: நெடுஞ்செழியன். ஐம்பால் என்னும் வழக்குப் பற்றி, சில்லோதி என்றார்.

கோப்பெருந்தேவியின் கற்பு மாண்பு

68-86: அரிமான்..............மாய்ந்தனன்

(இதன் பொருள்) அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்த திரு வீழ் மார்பின் தென்னர் கோமான்-சிங்கம் அரசு கட்டிலின் மேல் வீற்றிருந்த திருமகள் விரும்புதற்குக் காரணமான தென்னாட்டவர் மன்னனாகிய தன் கணவன்; தயங்கு இணர்க்கோதை தன் துயர் பொறாஅன் மயங்கினன் கொல்லென-விளங்குகின்ற பூங்கொத்துக்களாலியன்ற மாலையையுடைய கண்ணகியினுடைய துன்பத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமையால் இங்ஙனம் மயங்கி வீழ்ந்தான் போலும் என்று நினைத்து; மலர் அடி வருடி-அம் மன்னனுடைய மலர்  போன்ற அழகிய அடிகளைத் தன் கையால் வருடி; தலைத்தாள் நெடுமொழி தன் செவி கேளாள்-அப்பொழுது கண்ணகி கூறிய வீர மொழிகளைத் தன் செவியால் கேளாதவளாகவும்; கலக்கங் கொள்ளாள் கடுந்துயர் பொறாள்-மன்னவன் உயிர் நீத்தமை கண்டு திகைத்தமையால் அது கருதி நெஞ்சத்தின்கண் கலக்கமும் கொள்ளாதவளாகவும் கணவன் இறந்தமையால் எய்திய கொடுந்துன்பத்தைப் பொறாதவளாகவும்; மன்னவன் செல்வுழிச் செல்கயான் என-அரசன் உயிர் சென்ற இடத்திற்குச் செல்வதாக என்னுடைய உயிரும் என்று துணிந்து; தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடினள் போல் பெருங் கோப்பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள்-தன்னுடைய உயிரைக் கருவியாகக் கொண்டு மாய்ந்த அம் மன்னனுடைய உயிரைத் தேடிப் போவாள் போல, அப்பாண்டிய மன்னனுடைய கோப்பெருந்தேவி தானும் அம்மன்னவனோடு ஒருசேர உயிர் நீத்தனளாக

(விளக்கம்) அரிமான் ஏந்திய அமளி என்றது அரசு கட்டிலை (சிங்காதனத்தை) திருவீழ் மார்பின் தென்னவர்கோ என(சிலப் 20:22-3) முன்னும் கூறினர். தயங்கிணர்க் கோதை-கண்ணகி, மன்னவன் நிலைமை அக் கோப்பெருந்தேவியின் நெஞ்சம் முழுவதையும் கவர்ந்து. கொண்டமையால் கண்ணகியின் வஞ்சினங்களைக் கேளாதவளாயினன் எனவும் கணவன் இறந்த துன்பம் கையறு நிலைமையை எய்துவித்தலால் கலங்கவும் மாட்டாளாய் அப்பொழுதே அக் கோப்பெருந்தேவியும் உயிர் நீத்தனள். அவன் உயிர் நீத்ததறிந்தவுடன் தானும் உயிர் நீத்தலால் தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடினள்போல் மாய்ந்தனள் என்றார்.

கண்ணகி சேரனாடு வந்தது

87-92: கொற்ற வேந்தன்..........கொற்றமென

(இதன் பொருள்) கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை இற்று எனக் காட்டி இறைக்கு உரைப்பனள் போல்-வெற்றியையுடைய பாண்டிய மன்னனது கொடுங்கோல் ஆட்சியின் இயல்பு இத்தன்மைத்து என்று தன்பால் நிகழ்ந்தவற்றையே எடுத்துக் காட்டிச் செங்கோல் மன்னனாகிய உனக்குக் கூறக் கருதியவள் போன்று; தன் நாட்டு ஆங்கண் தனிமையில் செல்லாள்-தான் பிறந்த நாடாகிய சோழநாட்டின்கண் கணவனை இழந்து தமியளாய்ச் செல்ல விரும்பாளாய்; நங்கை நின் பாட்டு அகவயின் அடைந்தனள் என்று-அத்திருமா பத்தினி நினக்குரிய இந்த நாட்டினுள்ளே வந்தெய்தினள் என்று அக் கண்ணகியின் வரலாற்றினை அச் சாத்தனார்; ஒழிவின்று உரைத்து ஈண்டு ஊழி ஊழி வழி வழி நின் வலம்படு கொற்றம் சிறக்க என-சிறிதும் ஒழிவில்லாமல் கூறி வேந்தர் பெருமானே ஊழிதோ றூழி வழி வழியாக நின்னுடைய வெற்றியுடைய அரசியல் அறம் சிறப்பதாக என்று அச்சாத்தனார் கூறா நிற்ப, என்க.

(விளக்கம்) இற்று-இத்தன்மைத்து; இறை: முன்னிலைப் புறமொழி; இறையாகிய நினக்கு என்க. தன்னாடு என்றது சோழநாட்டினை கணவனை இழந்தமை தோன்ற தனிமையில் செல்லாள் என்றார் ஈண்டு

தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்
தோன்றலிற் றோன்றாமை நன்று     (231)

எனவரும் திருக்குறள் நினைக்கத்தகும் நங்கை-மகளிருள் தலை சிறந்தவள் ஒழிவின்று குற்றிய லிகரம் உகரமாயிற்றுச் செய்யுளாதலின் வழிவழிச் சிறக்க நின் வலம்படு கொற்றம் என வாழ்த்துதல் ஒரு மரபு. இதனை மதுரைக் காஞ்சியினும் காண்க, (194)

சேரன் செங்குட்டுவன் பரிவுரை

93-104: தென்னர்............உரைத்து

(இதன் பொருள்) தென்னர் கோமான் தீத்திறங் கேட்ட மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன்-தென்னாட்டவர் வேந்தனாகிய நெடுஞ்செழியனுடைய செங்கோல் வளைந்த தீய செய்தியைக் கேட்டருளிய சேர நாட்டு மன்னர் பெருமானாகிய செங்குட்டுவன் தன் நெஞ்சத்தினுள் பெரிதும் வருந்தி அப் புலவரை நோக்கிக் கூறுபவன்; எம்மோரன்ன வேந்தர்க்கு உற்ற புலவரை நோக்கிக் கூறுபவன்; எம்மோரன்ன வேந்தர்க்கு உற்ற செம்மையின் இகந்த சொல் செவிப்புலம் படாமுன்-எம்மை யொத்த பிற வேந்தர்களுக்குத் தனக்கு எய்திய நடுவுநிலைமையினின்றும் நீங்கிய இப் பழிச்சொல் செவியின்கண் சென்று புகுவதற்கு முன்னர் அப் பாண்டிய மன்னன்; உயிர்பதிப் பெயர்த்தமை ஈங்கு உறுக என-தன் உயிரைத் தன் உடம்பினின்றும் நீக்கிய இச் செய்தி இப்பொழுதே விரைந்து சென்று புகுவதாக என்று கருதி; மன்னவன் வல்வினை வளைத்த கோலை செல் உயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது-அம் மன்னவனுடைய வலிய ஊழ்வினையால் வளைக்கப்பட்ட அவனது கோலை உயிர் அவ்வளைவினை நிமிர்த்து மீண்டும் செங்கோலாக்கிவிட்டது! வாழ்க! அம் மன்னவன் புகழ்; மழை வளம் கரப்பின் வான் பேர் அச்சம் உயிர் பிழை எய்தின் பெரும் பேர் அச்சம்-இயல்பாகவே உலகின்கண் மழை வறந்து வளம் குறைந்தாலும் மக்கள் வன்பழி தூற்றுவரே என்னும் மிகப் பெரிய அச்சம் தோன்றும் உலகின்கண் வாழும் உயிர்கள் தம் ஊழ்வினையாலே வருந்துமிடத்தும் மாந்தர் தம்மைத் தூற்றுவரே என்னும் மிகப் பெரிய அச்சம் தோன்றும்; குடிபுரவுண்டும்-தம் குடிமக்கள் தம்மால் மாந்தர் தம்மைத் தூற்றுவரே-தம் குடிமக்கள் தம்மால் நன்கு புரக்கப்பட்ட வழியும்; கொடுங்கோலாக்கி விடுமோ என ஒவ்வொரு நொடிப்பொழுதும் அஞ்சுதற்குக் காரணமான; மன்பதை காக்கும் நன்குடிப்பிறத்தல் துன்பம் அல்லது தொழுதகவு இல் என-இம் மக்கள் தொகுதியைப் பாதுகாக்கின்ற நல்ல அறக்கடமையை மேற்கொண்ட இவ்வரசர் குடியில் பிறத்தலால் ஒருவனுக்கு எய்துவது துன்பமேயல்லது தொழத்தகுந்த சிறப்பு யாதொன்றுமில்லை என்று; துன்னிய துன்பம் துணிந்து வந்து உரைத்த நன்னூல் புலவற்கு நன்கனம் உரைத்து-கண்ணகி முதலியோர்க்கு ஊழ்வினை காரணமாக வந்துற்ற துன்பங்களை யெல்லாம் அறிந்து தெளிந்து புலவராகிய அச் சாத்தனாருக்குத் தன் பரிவுரைகளை நன்றாக எடுத்துச் சொல்லிய பின்னர் என்க.

(விளக்கம்) தென்னர் கோமான்-நெடுஞ்செழியன் எம்மோ ரன்ன எம்மையொத்த இதுமுதல் ஈங்கென என்னுமளவும் செங்குட்டுவன் உட்கோள் உயிர்பதிப் பெயர்த்தல்-உயிரை அதன் உறையுளாகிய உடம்பினின்றும் நீக்குதல். உண்ணாநோன்போ டுயிர்பதிப் பெயர்த்ததும் என்பர் பின்னும்(27: 83) உண்ணா நோன்போ டுயிர் பதிப் பெயர்ப்புழி என்பது மணிமேகலை (14: 95) இகந்த சொல் செவிப் புலம் படுதற்குமுன் உயிர்பதிப் பெயர்த்த இச் செய்தி அவர் செவிப் புலம் புகுதுக என்றவாறு. வல்வினை தீவினைமேற்று. மழைவளம் கரத்தல், இயற்கை நிகழ்ச்சி. உயிர்பிழை எய்துதல், ஊழ்வினையின் செயல். இவற்றிற்குக் கூட உலகோர் தம்மைப் பழிப்பர் என்று அரசர் அஞ்ச நேருகிறது குடிமக்கள் நன்கு தம்மால் பாதுகாக்கப்படும் பொழுதும் வல்வினை தம் செங்கோலை வளைத்துவிடுமோ என்றும் அவர் அஞ்சிக்கிடக்க நேர்கின்றது. இத்தகைய அச்ச்திற்கே இருப்பிடமாகிய அரசர் குடியிற் பிறத்தல் துன்பமல்லது தொழுதகவில்லை என இவ்வரசர் பெருமான் தனது பட்டறிவினால் உணர்ந்து கூறுகின்ற இம்மொழிகள் சாலவும் பெருந்தகைமையுடையவாக விருத்தல் உணர்ந்து மகிழற்பாலது துணிந்து-தெளிந்து. புலவன்-சாத்தனார் தனது-பெருந்தகைமை தோன்ற உரைத்தமை கருதி நன்கனம் உரைத்து என அடிகளார் பாராட்டினர்.

செங்குட்வேன் தன் பெருந்தேவியை நோக்கி வினவுதல்

106-110: ஆங்கு...............உரைப்ப

(இதன் பொருள்) நன்னுதல்-அழகிய நுதலையுடையோய்!; ஆங்கு உயிருடன் சென்ற ஒரு மகள் தன்னினும் செயிருடன் வந்த இச் சேயிழை தன்னினும்-அம் மதுரையின்கண் தன் கணவன் உயிருடன் தன் உயிரையும் நீத்துப்போன ஒப்பற்ற கற்புடையாளும் சினத்தோடே நமது நாட்டிற்கு வந்த கண்ணகி யென்னும் கற்புடையாளும் ஆகிய இவ்விரண்டு மகளிருள் வைத்து, வியத்தகு நலத்தோர் யார்-நம்மால் வியக்கத்தகுந்த சிறப்புடையோர் யார் என்று; மன்னவன் உரைப்ப-அச்சேரன் செங்குட்டுவன் வினவா நிற்ப, என்க.

(விளக்கம்) இச்சேரன் செங்குட்டுவன் வினவுவதும் ஒரு கற்புடையாளை ஆதலின் தகுந்தவர்பாலே வினவப்பட்டன; இவ்வினாக்களுக்கு விடை கூறுதல் அரிதென்றே நம்மனோர்க்குத் தோன்றுதல் உணர்க. ஆங்கு என்றது மதுரையை. கணவன் உயிருடன் ஒரு சேரத் தன் உயிரும் நீத்துச் சென்ற ஒரு மகள் என்றவாறு. ஒருமகளென்றது அவள் செயலின் அருமை தோன்ற நின்றது.

கோப்பெருந்தேவியின் விடையும் வேண்டுகோளும்

110-114: மாபெருந்தேவி........வேண்டுமென

(இதன் பொருள்) மா பெருந்தேவி காதலன் துன்பம் காணாது கழிந்த மாதரோ பெருந்திரு வானகத்து உறுக-அதுகேட்ட அக்கோப்பெருந்தேவி பெரும! தன் காதலனாகிய அப்பாண்டிய மன்னனுடைய துன்பத்தைக் காணுமுன்பே உயிர்நீத்த அப் பாண்டிமாதேவி கற்புடைமகளிர் பெறுதற்கியன்ற பெருஞ் செல்வத்தை விண்ணவர் உலகத்தின்கண் பெறுவாளாக; அத்திறம் நிற்க-அது கூறவேண்டா; நம் அகல் நாடு அடைந்த இப் பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும் என-நம்முடைய அகன்ற இந்நாட்டிற்குத் தானே வந்தெய்திய இக்கற்புக் கடவுளை யாம் வழிபாடு செய்தல் வேண்டும் என்று கூறாநிற்ப என்க.

(விளக்கம்) காதலன் இறந்துழி இறத்தல் இவ்வுலகத்துக் கற்புடை மகளிர்க்கெல்லாம் இயல்பாதலின் அப் பாண்டியன் தேவியின் செயல் வியத்தற்குரிய தொன்றன்று எனவும். அப் பெருந்தகைச் செயலால் எய்தும் பயனை அவள் எய்துக எனவும் உவந்துரைத்தபடியாம். இவ்விருவருள் வியத்தகும் நலத்தாள் இக்கண்ணகியே என்னும் இவ்விருவருள் வியத்தகும் நலத்தாள் இக்கண்ணகியே என்னும் தன் கருத்தினை உடம்பொடு புணர்த்தி இப்பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும் என இத்தேவி கூறும் விடையும் வேண்டுகோளும் பெரிதும் பாராட்டுதற்குரியன பாண்டியன் தேவி கற்புடைய மகன். கண்ணகி கற்புடை மகளிர்கெல்லாம் கடவுள்; என்று கூறிய இவ்விடையின் கண் இவருள் வியத்தகு நலத்தோள் இவள் என்னும் தன் கருத்து நன்கு விளங்கிக் கிடத்தலுணர்க இதனோடு

காதல ரிறப்பிற் கனையெரி பொத்தி
ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது
இன்னுயி ரீவர் ஈயா ராயின்
நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுவர்
நளியெரி புகாஅ ராயின் அன்பரோ(டு)
உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர்
பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து
அத்திறத் தாளும் அல்லளெம் மாயிழை
கணவற் குற்ற கடுந்துயர் பெறாஅள்
மணமலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக்
கண்ணீ ராடிய கதிரிள வனமுலை
திண்ணிதிற் றிருகித் தீயழற் பொத்திக் காவலன் பேரூர் கனையெரி யூட்டிய மா பெரும் பத்தினி   (மணிமே: 2: 42-55)

எனவரும் மாதவி கூற்று நினைவிற் கொள்ளற்பாற்று. நம் அகல் நாடு அடைந்த என்பது நாம் செய்த தவத்தால் நம் அகல் நாடு அடைந்த என்பதுபட நின்றது. கடவுள் ஆதலின் பரசல் வேண்டும் என்றாள். எனவே இக் கற்புக் கடவுளுக்குக் கோயிலெடுத்துப் படிமமும் சமைத்து விழாவெடுத்து வழிபாடு செய்தல் வேண்டும் என்பது தேவியின் கருத்தாயிற்று. இக் கருத்துணர்ந்த செங்குட்டுவன் அதற்கிணங்க மேலே கூறுவதும் காண்க.

செங்குட்டுவன் திருவுளக் குறிப்புணர்ந்த அமைச்சர் கூற்று

115-121: மாலை.........உடைத்தௌ

(இதன் பொருள்) மாலை வெண்குடை மன்னவன் விரும்பி நூல் அறி புலவரை நோக்க-பெருந்தேவியின் கருத்தையுணர்ந்த மலர்மாலை சூட்டப்பெற்ற கொற்ற வெண்குடையை யுடைய அச் சேர மன்னனும் அக் கருத்தினைப் பெரிதும் விரும்பி மருங்கிருந்த அமைச்சர்களை நோக்க; ஆங்கவர்-அப்பொழுது அவ்வமைச்சர் தாமும் அம் மன்னனுடைய குறிப்பறிந்து கூறுபவர்; ஒற்கா மரபின் பொதியில் அன்றியும் வில் தலைக்கொண்ட வியன்பேர் இமயத்து கல் கால் கொள்ளினும் கடவுள் ஆகும்-அழியாமல் நிற்கும் முறைமையினையுடைய பொதியில் மலையிலாதல் அல்லாமலும் விற்பொறியைத் தன்னிடத்தே கொண்ட அகன்ற பெரிய இமயமலையிலாதல் கல்லை அடிச்செய்து கைக்கொண்டாலும் இரண்டு கடவுள் படிமம் செய்தற்குத் தகுதியுடையனவே ஆகும்; கங்கைப் பேர்யாற்றினும் காவிரிப் புனலினும் தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து என-அங்ஙனம் கற்கொள்ளுமிடத்து இமயக் கல்லாயின் கங்கைப் பேரியாற்று நீரினும் அல்லது பொதியமலைக் கல்லாயின் காவிரிப் பேரியாற்று நீரினும் அமிழ்த்திச் செய்யும் மங்கல நீர்முழுக்குத் தகுதியுடையதாகும் என்று கூறாநிற்ப என்க.

(விளக்கம்) ஒற்கா மரபு-நிலைத்து நிற்கும் இயல்பு. இதனை, பொதியிலாயினும் இமயமாயினும்.....ஒடுக்கம் கூறார் என அடிகளார் கூறுமாற்றானும் (க. மங்கல) உணர்க. இமயமும் தமக்குரியது என உரிமை காட்டுவார் வில்தலை கொண்ட இமயம் என்றார். வில்-சேரர்( இலச்சனை) பொறி. கால் கொள்ளுதல்-வரைத்து அடித்தெடுத்துக் கொள்ளுதல். கங்கைப் பேரியாற்றினும் காவிரிப் புனலினும் என்றது எதிர் நிரனிறை. கல்லை நீரில் மூழ்குவித்துச் செய்யும் ஒரு சடங்காதலின் தங்கிய நீர்ப்படை யென்றார்.

செங்குட்டுவன் கூற்று

122 முதலாக, 149- ஈறாக ஒரு தொடர்

122-130: பொதியில்.......எனின்

(இதன் பொருள்) பொதியில் குன்றத்துக் கல்கால் கொண்டு முது நீர்க் காவிரி முன் துறைப்படுத்தல்-பொதியமலையிடத்தே கல் அடிச்செய்து கைக்கொண்டு பழைமையான நீர்வளமிக்க காவிரிப் பேரியாற்றின்கண் துறையிடத்தே நீர்ப்படை செய்தல்; மறத்தகை நெடுவாள் எம்குடிப் பிறந்தோர்க்குச் சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று-மறப் பண்புமிக்க நெடிய வாளையுடைய எம்முடைய சேரர் குடியிற் பிறந்த மன்னர்க்குச் சிறப்போடு பொருந்தி வருகின்றதொரு செயல் ஆகாது; புன மயிர்ச்சடைமுடிப் புலராஉடுக்கை முந்நூல் மார்பின் முத்தீச்செல்வத்து இருபிறப்பாளரொடு-புல்லிய மயிரால் தெற்றிய சடையாலியன்ற முடியினையும் ஈரம்புலராத ஆடையினையும் மூன்றாகிய பூணூலையுடைய மார்பினையும் மூன்று வகைப்பட்ட வேள்வித் தீயாகிய செல்வத்தையும் உடைய அந்தணரோடு; பெரு மலை அரசன் மடவத்தின் மாண்ட மாபெரும் பத்தினிக்குக் கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின்-பெரிய மலை அரசன் இளமையிலேயே மாட்சிமையுடைய மிகப் பெரிய பத்தினியாகிய கண்ணகிக் கடவுளுக்குப் படிவம் அமைக்க ஒரு கல் நமக்குக் கொடானாயின் என்க.

(விளக்கம்) பொதியில் நம் தமிழகத்து மலையும் காவிரி தமிழகத்து யாறுமாதலின் அம் மலையில் கற் கொண்டு அக் காவிரியில் நீர்ப்படை செய்தல் நம் வீரத்திற்குச் சிறப்பாக மாட்டாது என்பது கருத்து. முத்தீ-ஆகவனீயம், காருக பத்தியம், தக்கிணாக்கினி. இருப்பிறப்பாளர் அந்தணர். பூணூல் அணிதற்கு முன்னர் மக்கட்டன்மையும், அணிந்த பின்னர்த் தெய்வத் தன்மையும் ஆகிய இருவகைப் பிறப்பினையுமுடையார்; பார்ப்பனர். மடம்-ஈண்டு இளமை. எழுதல்-செய்தல். பெண் கொடுப்போர் பார்ப்பனர் முன்னிலையில் கொடுத்தல் இயல்பாதலின் இரு பிறப்பாளரொடு தாரானெனின் என்றார். மலை அரசன் என்றது இமயமலையை

131-140: வழிநின்று..........ஈங்கென

(இதன் பொருள்) வழிநின்று பயவா மாண்பு இல்வாழ்க்கை கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும்-தமது கருத்தின் வழி நிலைத்து நின்று பயன்படாத மக்கள் வாழ்க்கையின் இயல்பை இறந்தோர் இறவாதிருந்தோர்க்கு எடுத்துக் காட்டிய முதுகாஞ்சியும்; முதுகுடிப் பிறந்த முதிராச் செல்வியை மதி முடிக்கு அளித்த மகட்பாற் காஞ்சியும்-அம் மலை அரசன் பழைய தனது குடியிற் பிறந்த மூவாமையையுடைய உமையைப் பிறைசூடிப் பெருமானுக்கு வழங்கிய மகட்பாற் காஞ்சியும்; தென் திசை என்றன வஞ்சியொடு வடதிசை நின்று எதிர் ஊன்றிய நீள் பெரும் காஞ்சியும்-தென்திசையினின்றும் மேற் செல்லுதற்கு இடனான என்னுடைய வஞ்சியோடே அம் மலை அரையன் எதிராக நின்று தடுத்த நீண்ட பெரும் காஞ்சியும்; நிலவுக் கதிர் அளைந்த நீள்பெரும் சென்னி அலர் மந்தாரமொடு ஆங்கு அயல் மலர்ந்த வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை-நிலவின் ஒளி தவழ்ந்த உயர்ந்த பெரிய முடியினிடத்து மலர்ந்த மந்தார மாலையினோடே அவ்விடத்து அதன் பக்கத்தே மலர்ந்த வேங்கை மலரால் புனைந்த விளக்கமுடைய வெற்றிமாலையும்; மேம்பட மலைதலும் ஈங்குக் காண்குவல் என-மேன்மையுண்டாகச் சூடுதலையும் யான் இப்பொழுதே காண்பேனாக என்று கூறி என்க.

(விளக்கம்) கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சி என்றது முதுகாஞ்சியை அஃதாவது நிலையாமையை என்க. இதனைத் தொல் காப்பியனார் கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமை என்பர். மதி முடி-இறைவன்; பிறை சூடியவன் என்பது பொருள். மகட்பாற் காஞ்சி. இதனை நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு மகட்பாடஞ்சிய வலிந்து வந்த அரசனை முது குடித்தலைவர் எதிர்த்தல், என்க. வஞ்சி தன்னை மதியாத வேந்தனை வஞ்சிப்பூ குடிச்சென்று அடர்த்தல் பெருங்காஞ்சி இதனை

தாங்குதிறல் மறவர் தத்தம் ஆற்றல்
வீங்குபெரும் படையின் வெளிப்படுத் தன்று

எனவரும் (புற-மாலை) கொள்வானும் உணர்க. விறல் மாலை-வெற்றி மாலை இமயமலையின் சென்னியில் அமரர் உறைதலின் அவரையும் வென்று இமயக் குன்றிலுறையும் மறவரையும் வென்று மகளாதற்குரிய கல்லை வலிந்துகொள்ளுதலும் ஆகிய வெற்றிக்கு அறிகுறியாகச் சூடப்படுதலின் மந்தார மலரும் வேங்கை மலரும் விரவிச் சூடிக்கொள்ளுகின்ற விறல் மாலை என்றான், காண்குவல் என்பது-செய்து காண்பேன் என்றவாறு.

141-149: குடைநிலை.........சூடுதுமென

(இதன் பொருள்) குடைநிலை வஞ்சியும் கொற்ற வஞ்சியும்-குடை நாட்கோளும் கொற்ற வஞ்சியும்; நெடுமாராயம் நிலைஇய வஞ்சியும்-நெடிய மாராயம் நிலைபெற்ற வஞ்சியும்; வென்றோர் விளங்கிய வியன்பெரு வஞ்சியும்-வெற்றிகொண்டோர் விளங்கிய சிறந்த பெருவஞ்சியும்; பின்றாச் சிறப்பின் பெருஞ் சோற்று வஞ்சியும்-தாழாச் சிறப்பினையுடைய பெருஞ்சோற்று வஞ்சியும்; குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும்; வடகர் போகிய வான்பனக் தோட்டுடன் புட்கைச்சேனை பொலியச்சூட்டி-இடையே முரிதல்லில்லாத  சிறந்த பனந்தோட்டோடு மேற்கோளையுடைய தானை விளங்க அணிவித்து; பூவாவஞ்சிப் பொன்னகர்ப்புறத்து என்வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என-அழகிய வஞ்சிநகரின் புறத்தே எனது பகைவரைப் பொருத வினைவாய்த்த வாளிற்கு வஞ்சிமாலை சூடுவேம் என்று கூற;

(விளக்கம்) குடை நிலை வஞ்சி-குடை நாட்கோடல்; பெய்தா மஞ்சுரும்பிமிரப் பெரும்புலவர் புகழ்பாடக், (பு-வெ. 38) கொய்தார் மன்னவன் குடைநாட் கொண்டன்று; வையகம் வணங்க வாளாச் சினனெனச்; செய்கழல் வேந்தன் சீர்மிகுத்தன்று( பு-வெ. 42) மாராய வஞ்சி-அரசனாற் சிறப்பெய்து நிலை; மாராயம் பெற்ற நெடு மொழியானும் (தொல். புறத். 8, இளம், 3) மறவேந்தனிற் சிறப்பெய்திய விறல் வேலோர் நிலையுரைத்தன்று (பு. வெ. 46) பெருவஞ்சி-பகைவர் நாட்டைக் கொளுத்துதல். முன்னடையார் வளநாட்டைப் பின்னருமுடன் றெரிகொளீஇ யன்று(பு. வெ. 57) பெருஞ்சோற்று வஞ்சியும்-வீரர்களுக்குப் பெருஞ் சோறளித்தல்; பிண்டமேய பெருஞ்சோற்று நிலையும்(தொல். புறத். 8, இளம். 3) திருந்தார் தெம்முனை தெறுகுவ ரிவரெனப் பெருஞ்சோ றாடவர் பெறுமுறை வகுத்தன்று( பு. வெ 58) கொற்றவள்ளை-அரசன் புகழைக் கூறுவதுடன் பகைவர் நாடு அழிந்ததற்கு இரங்கல்; குன்றச் சிறப்பிற்கொற்ற வள்ளையும் (தொல். புறத். 8. இளம். 3) மன்னவன் புகழைக் கூறுவதுடன் பகைவர் நாடு குழிந்ததற்கு இரங்கல் குன்றாச் சிறப்பிற்கொற்ற வள்ளையும் (தொல். புறத். 8. இளம்.3) மன்னவன் புகழ்கிளந் தென்னார் நாடழி பிரங்கின்று( பு வெ. 43) வட்கர் போகிய இடையில் முரிதல் இல்லாத; பகைவர்-முதுகிட்டுப் போதற்குக் காரணமான எனினுமாம். வட்கர் போகிய வளர் இளம் போந்தை( புற. நா. 100) என வருதலும் காண்க. அரசர்கள் தமக்குரிய அடையாளப் பூக்களோடு வெட்சி முதலிய உரிப்பொருட்கியன்ற மலரைச் சூடிக்கோடல் வழக்கம். இதனை பொலந்தோட்டுப் பைந்தும்பை மிசை அலங்குளைய உழிஞைப் பவரொடு மிலைந்து, எனவும் வருவனவற்றாலுணர்க. பூட்கை, புட்கை: விகாரம்; மேற்கோள் என்னும் பொருட்டு பூவா வஞ்சி-கருவூர் ஈண்டுச் சேரன் செங்குட்டுவன் யான் இமயமலையின்கண் கல் கொள்ளுமிடத்து ஆண்டுப் பகைவர் தடுப்பார் உளராயின் குடைநிலை வஞ்சி முதலாகப் பெருஞ் சோற்று வஞ்சி ஈறாகத் தன் சேனைக்குச் சூட்டுவேன் என்னும் கருத்தினைப் பொதுவாக, பெருமலை அரசன் கல் தாரான் எனின் இவற்றைச் சூட்டி வாய்வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என்று கூறினன் என்க. வஞ்சி சூடுதலாவது

வஞ்சி தானே முல்லையது புறனே
எஞ்சா மன்நசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித்தனறே

என்பதனாலுணர்க. இவ்வாற்றால் சேரன் செங்குட்டுவன் யாம் இமயத்தில் கல் கால்கோடற்குப் போங்கால் எதிர்க்கும் மன்னரொடு போர் ஆற்றுதற்கு வஞ்சி சூடிச் செல்வேம் என்றானாயிற்று.

வில்லவன் கோதை வேந்தனுக் குரைத்தல்

150-155: பல்யாண்டு..........புக்கன

(இதன் பொருள்) பல்யாண்டு வாழ்க நின் கொற்றம் ஈங்கு  என வில்லவன் கோதை வேந்தற்கு உரைக்கும்-இங்ஙனம் அமைச்சரை நோக்கி அரசன் கூறியவுடன் அவருள் வில்லவன் கோதை என்னும் பெயருடைய அமைச்சன் வேந்தர் பெருமானே உன்னுடைய வெற்றி இந்நிலவுலகத்தில் பல்லாண்டு பல்லாண்டு வாழ்வதாக! என வாழ்த்தி அவ்வேந்தனுக்குச் சொல்லுவான்; நும் போல் வேந்தர் நும்மோடு இகலி-நும்மோடு ஒத்த வேந்தராகிய சோழனும் பாண்டியனும் ஆகிய இரண்டு மன்னவர்களும் நும்மோடு மாறுபட்டு; கொங்கர் செங்களத்துக் கொடுவரி கயல் கொடி பகைப் புறத்துத் தந்தனராயினும்-கொங்கருடைய நாட்டின்கண் அமைந்த குருதியால் சிவந்த போர்க்களத்தின் கண் நுமக்குத் தோற்றுத் தமக்குரிய புலிக்கொடியையும் மீனக்கொடியையும் பகைத்துப் பொருத அக்களத்திலேயே நுமக்குத் தந்து ஓடினாராயினும்; ஆங்கு அவை திகை முகவேழத்தின் செவிஅகம் புக்கன-அப்போர்க் களத்தில் நிகழ்ந்த வெற்றிப் புகழ்கள் எட்டுத் திசைகளிலும் நிற்கின்ற யானைகளின் செவிகளினூடும் சென்று புகுந்தன; என்றான் என்க.

(விளக்கம்) அரசனுக்கு ஏதேனும் சொல்லத் தொடங்குபவர் அரசனே வாழ்த்தித் தொடங்குதல் மரபு ஆதலால் வில்லவன் கோதை என்னும் அமைச்சன் தன் கருத்துரைப்பவன் பல்யாண்டு வாழ்க நன் கொற்றம் என்று வாழ்த்தித் தொடங்குகின்றான். நும்போல் என்புழிப் பன்மை செங்குட்டுவனையும் அவன் முன்னோரையும் உளப்படுத்திய படியாம். கொடுவரி-புலிக்கொடி. கயல்-மீன்கொடி எனவே வேந்தர் என்றது சோழனையும் பாண்டியனையும் என்பது பெற்றாம். பகைபுறம்: வினைத்தொகை; பகைக்கும் இடம்; (போர்க்களம்) திகை-திசை அவை என்றது பலவகைப்பட்ட வெற்றிப் புகழும் என்றவாறு; செவி புகுவன அவையே யாதலின்.

156-167: கொங்கணர்.........இல்லை

(இதன் பொருள்) கொங்கணர் கலிங்கர் கொடுங் கருநாடர் பங்களர் கங்கர் பல்வேல் கட்டியர் வட ஆரியரொடு-கொங்கணரும் கலிங்கரும் கொடிய கன்னடரும் வங்கரும் கங்கரும் பல வேற்படையே யுடைய கட்டிவரும் வடவாரியரு மாகிய இவ்வேற்று நாட்டுப் படைகள் கூடி வந்த போர்க்களத்தின்கண்; வண்தமிழ் மயக்கத்து-வளவிய நம் தமிழ்ப் படை போராற்றுதற்குப் புகுந்து கலந்த பொழுது; உன் கடமலை வேட்டம் என் கட்புலம் பிரியாது-அப்பகைவருடைய கூட்டத்தில் நீ உனது களிற்று யானையின் மேலேறிச் சென்று ஆடிய வேட்டை என்னுடைய கண்ணை விட்டுப் போகாது; எங்கோ மகளை கங்கைப் பேர் யாற்றுக் கடும்புனல் நீத்தம் ஆட்டிய அந்நாள்-எம்முடைய அரச வன்னையைப் பண்டு யாம் கங்கை யென்னும் பேரியாற்றினது விரைந்து வருகின்ற நீராகிய புண்ணிய தீர்த்தத்தில் ஆடச்செய்த அந்த நாளிலே; ஆரிய மன்னர் ஈர் ஐஞ்ஞாற்றுவர்க்கு ஒரு நீயாகிய செருவெங்கோலம் கண்விழித்துக் கண்டது கடுங்கண்-வட ஆரியராகிய அரசர் ஓராயிரவர்க்கு எதிராக நீ தமியையாய் நின்று ஆற்றிய நினது வெவ்விய போர்க் கோலத்தைக் கண்ணை விழித்துப் பார்த்தது தறுகண்மையுடைய கூற்றம் மட்டுமே யன்றோ; இமிழ் கடல் வேலியைத் தமிழ் நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின் ஏற்பவர்-முழங்குகின்ற கடல் சூழ்ந்த இந்நிலவுலகத்தை முழுதும் தமிழ் நாடாகவே ஆக்கும் பொருட்டு இமயத்தில் கல்கால் கொள்ளுதலாகிய இச்செயலை நீ திருவுளங்கொண்டாயாயின் நின்னைப் பகைத்து எதிர்ப்பவர்; முது நீர் உலகின் முழுவதும் இல்லை-கடல் சூழ்ந்த இவ்வுலகின்கண் யாண்டும் யாரும் இல்லை; என்றான் என்க.

(விளக்கம்) வளைந்த கரு நாடருமாம் (கன்னடர்) பங்களர்-வங்காள நாட்டினர், கொங்கணர் முதலாகக் கட்டியர் ஈறாகக் கூறப்பட்ட நாட்டினர். ஆரியர் அல்லர் என்பது தோன்ற வடவாரியரொடு என விதந்தோதினர் இவருள் கங்கரும் கட்டியரும் தமிழ் நாட்டுக் குறுநில மன்னர் என்பர். இதனை நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி துன்னரும் கடுந்திறல் கங்கன் கட்டி எனவரும் அகநானூற்றானும் உணரலாம். வண்டமிழ் வளவிய தமிழ் நாட்டுப் படை. கடமலை யானை வேட்டம் என்றது பகைப்படையைக் கொன்று ஒழித்ததனை யான் கண்கூடாக நின்று கண்ட காட்சி என் கண்ணை விட்டகலாது என்றவாறு. ஆட்டிய-நீராட்டிய. எங்கோமகள் என்றது செங்குட்டுவன் தாயை. ஈர் ஐஞ்ஞாற்றுவர், மிகுதிக்கு ஓர் எண் அதற்குக்கடுங்கண் உண்மையால் என ஏதுக் காட்டியபடியாம். பிற தேவரும் மக்களும் அச்சத்தால் கண்ணை மூடிக்கொண்டனர் என்பது கருத்து. ஆக்கிய ஆக்குவதற்கு இது-இக்கல் கொள்ளும் செயல் முது நீர்-கடல்.

148-177: இமைய................ஈங்கென

(இதன் பொருள்) இமைய மால்வரைக்கு எங்கோன் செல்வது கடவுள் எழுத ஓர் கற்கே ஆதலின்-இமயமென்னும் பெரிய மலைக்கு எம்பெருமான் போதல் பத்தினித் தெய்வத்திற்குப் படிவம் சமைத்தற்கு ஒரு கல் கொள்ளுதற் பொருட்டேயாதலால்; வடதிசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம்-வடதிசையின்கண் உள்ள நாடுகள் ஆளும் அரசர்களுக்கெல்லாம்; தென் தமிழ் நல் நாட்டுச் செழுவில் கயல்புலி மண்தலை ஏற்ற ஈங்கு வரைக என-தென்திசையிலுள்ள நல்ல மூன்று தமிழ்நாட்டிற்கு முரிய வளவிய வில்லும் கயலும் புலியும் ஆகிய மூன்றிலச்சினைகளையும் ஒருங்கே இடப்பெற்ற முகப்பையுடைய திருமந்திர ஓலைகளை இப்பொழுதே வரைந்து உய்த்தருளுக என்று வில்லவன் கோதை யென்னும் அவ்வமைச்சன் கூறாநிற்ப என்க.

(விளக்கம்) எங்கோன்: முன்னிலைப் புறமொழி எழுத-அமைக்க. கற்கு-கல் கொள்ளுதற்கு. இத் தெய்வமும் தமிழும் சேர சோழ பாண்டிய நாடு மூன்றற்கும் பொதுவாதலின் இப்பணி முத்தமிழ் நாட்டிற்கும் பொது ஆதலால் வடதிசை மன்னர்க்கு வரையும் ஓலையின் கண் வில்லும் கயலும் புலியும் ஆகிய மூன்றையும் பொறித்தல் வேண்டும் என்பது அவ்வமைச்சன் கருத்து என்று உணர்க. மண் -இலச்சினை ஒற்றும் மண், ஈண்டு ஆகுபெயர். இவை வில்லவன் கோதை கூற்று.

அழும்பில்வேள் என்னும் அமைச்சன் கூறல்

173-180: நாவலந்..............புக்கபின்

(இதன் பொருள்) அழும்பில்வேள் நாவல் அம் தண் பொழில் நண்ணார் ஒற்று நம் காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா-வில்லவன கோதை கருத்துரை கூறிமுடித்தபின் அழும்பில்வேள் என்னும் அமைச்சன் அரசனை நோக்கிக் கூறுபவன், பெருமானே வாழ்க நின் கொற்றம் இந்த நாவலந் தண்பொழிலின்கண் உள்ள நம்முடைய பகை மன்னவருடைய ஒற்றர்கள் நம்முடைய காவல் மிக்க தலைநகரமாகி இவ்வஞ்சியின் முற்றத்திலே எப்பொழுதும் இருப்பர் ஆதலால்; வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே தம் செவிப்படுக்கும் தகைமைய அன்றோ-கச்சணிந்த யானைகளை யுடைய அப் பகைவருடைய ஒற்றர்களே இச்செய்தியை அவரவர் அரசருடைய செவியின்கண் புகவிடுக்கும் தன்மையை யுடையன ரல்லரோ ஆதலால் அவ்வரசர்களுக்குத் திருமுகம் உய்த்தல் வேண்டா நம் நகரத்திலேயே; பறை அறை என்று உரைப்ப-இச் செய்தியைப் பறை அறைந்து அறிவித்தலே அமையும் ஆதலின் பறை அறைவித்தருளுக என்று அவ்வமைச்சன் தன் கருத்துரையா நிற்ப; நிறை யருந்தானை வேந்தனும் நேர்ந்து-நிறைந்த அரும்பெரும் படைகளையுடைய அவ் வேந்தன்தானும் அவ் விழும்பில் வேளின் கருத்திற் குடன்பட்டு; கூடார் வஞ்சிக் கூட்டுண்டு சிறந்த வாடா வஞ்சிமாநகர் புக்க பின்-பகை மன்னவர்மேல் வஞ்சிப்பூச் சூடிச் சென்று அம்மன்னவர் இறுத்த திறைப் பொருளாலே பெரிதும் சிறந்த தன் தலைநகரமாகிய வஞ்சி நகரத் திற்குச் சென்று புகுந்தபின்னர் என்க.

(விளக்கம்) ஒற்று என அஃறிணைவாய்பாட்டால் கூறினமையின் தகைமைய என்று முடிக்கப்பட்டது. ஒற்று-ஒற்றர் இதனால் பிற நாட்டு ஒற்றர்கள் ஒவ்வொரு நாட்டினும் எப்பொழுதும் பல்வேறு வேடம் புனைந்து வதிந்திருப்பர் என்பது பெற்றாம். அழும்பில் வேள் மற்றோர் அமைச்சன். இந் நிகழ்ச்சியால் பண்டைக்காலத்து அரசர் எச் செயலையும் தம் அமைச்சரொடு ஆராய்ந்து துணியும் வழக்கம் உடையரென்பதும் அறியப்படும். கூடார்-பகைவர். வஞ்சிக்கூட்டு-வஞ்சிப்பூச்சூடிப் படையெடுத்துச் சென்று பகைவரிடத்திலிருந்து திறையாகப் பெற்று ஈட்டிய பொருள். அவற்றை உண்டு சிறந்த என்றது அப்பொருளால் பயன் பெற்றுச் சிறந்த என்றவாறு. வாடா வஞ்சி-வெளிப்படை: வஞ்சி நகரம் என்க. காட்டகத்தினின்றும் மீண்டும் நகர் புக்கபின் என்க.

வள்ளுவர் முரசறைதல்

181-194: வாழ்க...............மருங்கென்

(இதன் பொருள்) வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை-வாழ்க எங்கள் அரசனாகிய மன்னவர் மன்னன்; ஊழி தொறு ஊழி உலகங் காக்கென-ஊழிதோறும் ஊழிதோறும் அப் பெருந்தகையே இவ்வுலகத்தைக் காத்தருளுக என்று தொடக்கத்தே மன்னனை வாழ்த்திச் செய்தி கூறும் வள்ளுவர்; எம் காவலன் வில்தலைக் கொண்ட வியன்பேர் இமயத்து ஓர் கல் கொண்டு பெயரும்-எங்கள் மன்னவனாகிய சேரன் செங்குட்டுவன் பண்டே தனது விற்பொறியைத் தன்னிடத்தே கொண்ட அகன்ற பெரிய இமயமலையின்கண் பத்தினிக் கடவுளுக்கு உருவம் அமைத்தற்கு ஒரு கல்லைக் கைக்கொண்டு மீள்வன்; ஆதலின் வடதிசை மருங்கின் மன்னர் எல்லாம் இடுதிறை கொடுவந்து எதிரீர்-இங்ஙனமாதலின் வடதிசையின்கண் உள்ள அரசர்கள் எல்லீரும் எம்மரசனுக்கு இடக் கடவ திறைப் பொருளையும் கொணர்ந்து வந்து எதிர்கொள்ளக் கடவீர்; எதிரீர் ஆயின் கடல் கடம்பு எறிந்த கடும்போர் வார்த்தையும் கேட்டு வாழுமின்-அவ்வாறு எதிர்கொள்ளீராயின் அத்தகையீர் கடலுள் புகுந்து ஆங்கு எங்கள் அரசன் கடலின் கண்ணதாகிய கடம்பினை வெட்டிய கடிய போரினாலே உண்டான புகழையும் அல்லது மலையின்கண் ஏறி எம்பெருமான் அம் மலை முழைஞ்சின்மேல் தனது விற்பொறியைப் பொறித்தமையால் உண்டான பரந்த பெரிய புகழையும் கேட்டு வாழக்கடவீர்; கேளீராயின் தோள்துணை துறக்கும் துறவொடு வாழுமின்-அவ்வாறு அப் புகழ்களைக் கேளாதொழியின் நுங்கள் தோளுக்குத் துணையாக அமைந்த மனைவிமாரைத் துறந்துபோகின்ற துறவறத் தோடு பொருந்தி வாழக்கடவீர்; தாழ்கழல் மன்னன் தன் திருமேனி வாழ்க சேனாமுகம் என வாழ்த்தி-பகைமன்னர் வந்து வணங்குதற்குக் காரணமான வீரக்கழலையுடைய எங்கள் அரசனுடைய திருமேனியாகிய சேனாமுகம் வாழ்வதாக, என்று இறுதியினும் தம் மன்னனை வாழ்த்தி; இறை இகல் யானை எருத்தத்து ஏற்றி அணிநகர் மருங்கு அறை பறை எழுந்தது-அரச யானையின் பிடரின்கண் ஏற்றி அவ் வள்ளுவர் அழகிய அந் நகரப் பகுதிகளிலே எவ்விடத்தும் முழக்குகின்ற முரசினது ஒலி எழாநின்றது என்க.

(விளக்கம்) அரசனுடைய பணிகளை மக்களுக்கு முரசு அறைந்து அறிவிக்கும் வள்ளுவர் தொடக்கத்திலும் அரசனை வாழ்த்தித் தொடங்குதலும் இறுதியில் வாழ்த்தி முடித்தலும் மரபு. மன்னன் கற்கொண்டு வரும்பொழுது வடநாட்டு மன்னரெல்லாம் திறைப் பொருளோடு வந்து எதிர்கொள்ளல் வேண்டும். எதிர்கொள்ளாதார் கடலில் புகுந்தேனும் மலையில் ஏறியேனும் மறைந்து வாழவேண்டும் அவ்விடங்களிலும் அவன் கடம்பெறிந்த புகழும் சிலை பொறித்த பெரும்புகழும் பேசப்படும் ஆதலால் அதைக் கேட்டே வாழ்தல் வேண்டும். கேட்க மனமில்லாதார் மனைவி மக்களைத் துறந்து வாழவேண்டும். எனவே அவனைப் பகைத்திருப்போர் இவ்வுலகில் வாழ்தல் அரிது என்றவாறாயிற்று. இக் கருத்தினோடு

யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்          (895)

எனவரும் திருக்குளையும் நினைக

விடர்-மலை முழை. மலை ஏறி முழையிற் புகுந்து வாழுமின் என்பார் மலையை விடர் என்ற பெயரால் குறிப்பிட்டார் தோட்டுணை-மகளிர் தாழ்கழல்-பகைவர் வணங்கும் அடிகள். திருமேனியாகிய சேனாமுகம் வாழ்க என மாறுக. இறை இகலி யானை- பட்டத்து யானை. பறை, ஈண்டு முரசு.

பா- நிலைமண்டிலம்

காட்சிக் காதை முற்றிற்று.
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 28, 2012, 08:29:29 AM
26. கால்கோள் காதை

 
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அஃதாவது-சேரன் செங்குட்டுவன் இமயமலைக்குச் சென்று பத்தினித் தெய்வத்திற்குக் கல் எடுத்துவந்த செய்தியைக் கூறும் பகுதி என்றவாறு.

இதன்கண் அச் சேரமன்னன் முன்னரே கனகனும் விசயனும் என்னும் ஆரிய மன்னர்கள் தமிழ் அரசரை இகழ்ந்தனர் என்று வடதிசையிலிருந்து வந்த முனிவர் கூறக் கேட்டிருந்தானாதலின் இமயமலையில் எடுக்கும் கல்லை அவ்விரண்டு மன்னர் முடியிலும் ஏற்றிக்கொணர்வேன் என்று வஞ்சினம் கூறி நன்னாளிலே வாளையும் குடையையும் புறவீடு செய்து படைத் தலைவர்களுக்குப் பெருஞ்சோறு வழங்கி யானை முதலிய நாற்பெரும் பகைளோடே வஞ்சிசூடி வடதிசையை நோக்கிச் செல்பவன் முதலில் நீலகிரியில் தங்கினன். அவ்விடத்தே கூத்தர் ஆடிய கூத்துகளைக் கண்டு மகிழ்ந்து அவ்விடத்தே திறைகொணர்ந்து வணங்கிய மன்னர்களோடு அளவளாவி மகிழ்ந்தமையும் பின்னர் அவ்விடத்தினின்றும் புறப்பட்டுக் கங்கையாற்றை அடைந்தமையும் அவ்வாற்றை நட்பரசர் கொணர்ந்த ஓடங்களின் வாயிலாகக் கடந்து, அப்பால் பகையரசர் நாட்டின்கண் சென்று பாசறை அமைத்து அதன்கண் இருந்தமையும் இவன் வரவுணர்ந்த கனகவிசயரை உள்ளிட்ட மன்னர் பலர் வந்து போர்செய்யத் தொடங்கினராக, அப் போரின்கண் அப் பகைவர்களை வென்று அவர்களுள் கனகவிசயரென்னும் அரசர்களைக் கைப்பற்றி வைத்து அவ்விடத்தினின்றும் அமைச்சர்களை ஏவி இமயத்தில் கல் கொண்டு வரச் செய்தமையும் அக் கல்லைக் கனகவிசயர் முடித்தலைமிசை யேற்றிக் கொணர்ந்தமையும் ஆகிய செய்திகள் கூறப்படுகின்றன.

அறை பறை எழுந்தபின், அரிமான் எந்திய
உறை முதல் கட்டில் இறைமகன் ஏற;
ஆசான், பெருங்கணி,அரும் திறல் அமைச்சர்,
தானைத் தலைவர்-தம்மொடு குழீஇ,
மன்னர்- மன்னன் வாழ்க! என்று ஏத்தி, 5

முன்னிய திசையின் முறை மொழி கேட்ப-
வியம் படு தானை விறலோர்க்கு எல்லாம்
உயர்ந்து ஓங்கு வெண்குடை உரவோன் கூறும்
இமயத் தாபதர் எமக்கு ஈங்கு உணர்த்திய
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி  10

நம்பால் ஒழிகுவது ஆயின், ஆங்கு அஃது
எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம்:
வட திசை மருங்கின் மன்னர்- தம் முடித் தலைக்
கடவுள் எழுத ஓர் கல் கொண்டு அல்லது,
வறிது மீளும், என் வாய் வாள், ஆகில்;  15

செறி கழல் புனைந்த செரு வெங் கோலத்துப்
பகை அரசு நடுக்காது, பயம் கெழு வைப்பின்
குடி நடுக்குறூஉம் கோலேன் ஆக என-
ஆர் புனை தெரியலும், அலர் தார் வேம்பும்,
சீர் கெழு மணி முடிக்கு அணிந்தோர் அல்லால், 20

அஞ்சினர்க்கு அளிக்கும் அடு போர் அண்ணல்! நின்
வஞ்சினத்து எதிரும் மன்னரும் உளரோ?
இமயவரம்ப! நின் இகழ்ந்தோர் அல்லர்;
அமைக நின் சினம், என, ஆசான் கூற-
ஆறு- இரு மதியினும் காருக அடிப் பயின்று,  25

ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து,
வெந் திறல் வேந்தே, வாழ்க, நின் கொற்றம்!
இரு நில மருங்கின் மன்னர் எல்லாம் நின்
திரு மலர்த் தாமரைச் சேவடி பணியும்
முழுத்தம் ஈங்கு இது; முன்னிய திசைமேல்  30

எழுச்சிப்பாலை ஆக என்று ஏத்த-
மீளா வென்றி வேந்தன் கேட்டு,
வாளும் குடையும் வட திசைப் பெயர்க்க என-
உரவு மண் சுமந்த அரவுத் தலை பனிப்ப,
பொருநர் ஆர்ப்பொடு முரசு எழுந்து ஒலிப்ப;  35

இரவு இடங்கெடுத்த நிரை மணி விளக்கின்
விரவுக் கொடி அடுக்கத்து நிரயத் தானையொடு
ஐம் பெருங்குழுவும், எண் பேர் ஆயமும்,
வெம் பரி யானை வேந்தற்கு ஓங்கிய
கரும வினைஞரும், கணக்கியல் வினைஞரும், 40

தரும வினைஞரும், தந்திர வினைஞரும்;
மண் திணி ஞாலம் ஆள்வோன் வாழ்க! என,
பிண்டம் உண்ணும் பெரும் களிற்று எருத்தின்
மறம் மிகு வாளும், மாலை வெண்குடையும்,
புறநிலைக் கோட்டப் புரிசையில் புகுத்தி;  45

புரை தீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன்
அரைசு விளங்கு அவையம் முறையிற் புகுதர-
அரும் படைத் தானை அமர் வேட்டுக் கலித்த
பெரும் படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்து-
பூவா வஞ்சியில் பூத்த வஞ்சி  50

வாய் வாள் நெடுந்தகை மணி முடிக்கு அணிந்து,
ஞாலம் காவலர் நாள் திறை பயிரும்
காலை- முரசம் கடைமுகத்து எழுதலும்,
நிலவுக் கதிர் முடித்த நீள் இருஞ் சென்னி,
உலகு பொதி உருவத்து, உயர்ந்தோன் சேவடி 55

மறம் சேர் வஞ்சி மாலையொடு புனைந்து,
இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி, வலம் கொண்டு,
மறையோர் ஏந்திய ஆவுதி நறும் புகை
நறை கெழு மாலையின் நல் அகம் வருத்த,
கடக் களி யானைப் பிடர்த்தலை ஏறினன்-  60

குடக்கோ குட்டுவன் கொற்றம் கொள்க என,
ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம் கோண்டு, சிலர் நின்று ஏத்த,
தெண்- நீர் கரந்த செஞ் சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணி முடி வைத்தலின்,  65

ஆங்கு- அது வாங்கி, அணி மணிப் புயத்துத்
தாங்கினன் ஆகி, தகைமையின் செல்வுழி-
நாடக மடந்தையர் ஆடு அரங்கு யாங்கணும்
கூடையின் பொலிந்து, கொற்ற வேந்தே!
வாகை, தும்பை, மணித் தோட்டுப் போந்தையோடு  70

ஓடை யானையின் உயர் முகத்து ஓங்க,
வெண்குடை நீழல் எம் வெள் வளை கவர்ந்து,
கண் களிகொள்ளும் காட்சியை ஆக என-
மாகதப் புலவரும், வைதாளி கரும்,
சூதரும், நல் வலம் தோன்ற, வாழ்த்த;  75

யானை வீரரும், இவுளித் தலைவரும்,
வாய் வாள் மறவரும் வாள் வலன் ஏத்த-
தானவர்- தம்மேல் தம் பதி நீங்கும்
வானவன் போல, வஞ்சி நீங்கி;
தண்டலைத் தலைவரும் தலைத் தார்ச் சேனையும்  80

வெண் தலைப் புணரியின் விளிம்பு சூழ் போத,
மலை முதுகு நெளிய, நிலை நாடு அதர்பட,
உலக மன்னவன் ஒருங்குடன் சென்று- ஆங்கு;
ஆலும் புரவி, அணித் தேர்த் தானையொடு
நீலகிரியின் நெடும் புறத்து இறுத்து ஆங்கு;  85

ஆடு இயல் யானையும், தேரும், மாவும்,
பீடு கெழு மறவரும் பிறழாக் காப்பின்
பாடி இருக்கை, பகல் வெய்யோன் தன்
இரு நிலமடந்தைக்குத் திருவடி அளித்து- ஆங்கு,
அரும் திறல் மாக்கள் அடியீடு ஏத்த,  90

பெரும் பேர் அமளி ஏறிய பின்னர்-
இயங்கு படை அரவத்து ஈண்டு ஒலி இசைப்ப,
விசும்பு இயங்கு முனிவர், வியல் நிலம் ஆளும்
இந்திர திருவனைக் காண்குதும் என்றே,
அந்தரத்து இழிந்து- ஆங்கு, அரசு விளங்கு அவையத்து,  95

மின் ஒளி மயக்கும் மேனியொடு தோன்ற;
மன்னவன் எழுந்து வணங்கி நின்றோனை-
செஞ் சடை வானவன் அருளினில் விளங்க
வஞ்சித் தோன்றிய வானவ! கேளாய்;
மலயத்து ஏகுதும்; வான் பேர் இமய  100

நிலயத்து ஏகுதல் நின் கருத்துஆகலின்,
அரு மறை அந்தணர் ஆங்குளர் வாழ்வோர்;
பெரு நில மன்ன! காத்தல் நின் கடன் என்று,
ஆங்கு அவர் வாழ்த்திப் போந்ததன் பின்னர்-
வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க! என, 105

கொங்கணக் கூத்தரும் கொடுங் கருநாடரும்
தம் குலக்கு ஓதிய தகைசால் அணியினர்;
இருள் படப் பொதுளிய சுருள் இருங் குஞ்சி
மருள் படப் பரப்பிய ஒலியல் மாலையர்;
வடம் சுமந்து ஓங்கிய வளர் இள வன முலை,  110

கருங் கயல் நெடுங் கண் காரிகையாரோடு;
இருங் குயில் ஆல, இன வண்டு யாழ்செய,
அரும்பு அவிழ் வேனில் வந்தது; வாரார்
காதலர் என்னும் மேதகு சிறப்பின்
மாதர்ப் பாணி வரியொடு தோன்ற-  115

கோல் வளை மாதே! கோலம் கொள்ளாய்;
காலம் காணாய்; கடிது இடித்து உரறிக்
காரோ வந்தது! காதலர் ஏறிய
தேரோ வந்தது, செய்வினை முடித்து! என,
காஅர்க் குரவையொடு கருங் கயல் நெடுங் கண்  120

கோல் தொடி மாதரொடு குடகர் தோன்ற-
தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து,
வாள்வினை முடித்து மற வாள் வேந்தன்
ஊழி வாழி!என்று ஓவர் தோன்ற-
கூத்துள்படுவோன் காட்டிய முறைமையின்  125

ஏத்தினர் அறியா இருங் கலன் நல்கி
வேத்தினம் நடுக்கும் வேலோன் இருந்துழி-
நாடக மகளிர் ஈர்- ஐம்பத்திருவரும்,
கூடு இசைக் குயிலுவர் இருநூற்று எண்மரும்,
தொண்ணூற்று அறுவகைப் பாசண்டத் துறை  130

நண்ணிய நூற்றுவர் நகை- வேழம்பரும்,
கொடுஞ்சி நெடுந் தேர் ஐம்பதிற்று இரட்டியும்,
கடுங் களி யானை ஓர் ஐஞ்ஞாறும்,
ஐ- ஈராயிரம் கொய் உளைப் புரவியும்
எய்யா வட வளத்து இரு பதினாயிரம்  135

கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்,
சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற
கஞ்சுக முதல்வர் ஈர்- ஐஞ்ஞாற்றுவரும்,
சேய் உயர் வில் கொடிச் செங்கோல் வேந்தே!
வாயிலோர் என வாயில் வந்து இசைப்ப-  140

நாடக மகளிரும், நலத்தகு மாக்களும்,
கூடு இசைக் குயிலுவக் கருவியாளரும்,
சஞ்சயன்- தன்னொடு வருக ஈங்கு என-
செங்கோல் வேந்தன் திரு விளங்கு அவையத்து,
சஞ்சயன் புகுந்து, தாழ்ந்து பல ஏத்தி,  145

ஆணையில் புகுந்த ஈர்- ஐம்பத்திருவரொடு
மாண் வினையாளரை வகை பெறக் காட்டி-
வேற்றுமை இன்றி நின்னொடு கலந்த
நூற்றுவர்- கன்னரும், கோல் தொழில் வேந்தே!
வட திசை மருங்கின் வானவன் பெயர்வது  150

கடவுள் எழுத ஓர் கற்கே ஆயின்,
ஓங்கிய இமயத்துக் கல் கால்கொண்டு
வீங்கு நீர்க் கங்கை நீர்ப்படை செய்து- ஆங்கு,
யாம் தரும் ஆற்றலம் என்றனர் என்று,
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோய் வாழ்க! என- 155

அடல் வேல் மன்னர் ஆர் உயிர் உண்ணும்
கடல் அம் தானைக் காவலன் உரைக்கும்:
பாலகுமரன் மக்கள், மற்று அவர்
காவா நாவின் கனகனும் விசயனும்,
விருந்தின் மன்னர்- தம்மொடும் கூடி,  160

அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர்- ஆங்கு என,
கூற்றம் கொண்டுஇச் சேனை செல்வது;
நூற்றுவர்- கன்னர்க்குச் சாற்றி, ஆங்கு,
கங்கைப் பேர் யாறு கடத்தற்கு ஆவன
வங்கப் பெரு நிரை செய்க- தாம் என, 165

சஞ்சயன் போனபின்- கஞ்சுக மாக்கள்,
எஞ்சா நாவினர், ஈர்- ஐஞ்ஞாற்றுவர்;
சந்தின் குப்பையும் தாழ் நீர் முத்தும்
தென்னர் இட்ட திறையொடு கொணர்ந்து;
கண்ணெழுத்தாளர் காவல் வேந்தன்  170

மண் உடை முடங்கல் அம் மன்னவர்க்கு அளித்து- ஆங்கு,
ஆங்கு, அவர் ஏகிய பின்னர்-
வீங்குநீர் ஞாலம் ஆள்வோன், ஓங்கிய
நாடு ஆள் செல்வர் நல் வலன் ஏத்த,
பாடி இருக்கை நீங்கிப் பெயர்ந்து;  175

கங்கைப் பேரியாற்றுக் கன்னரிற் பெற்ற
வங்கப் பரப்பின் வட மருங்கு எய்தி;
ஆங்கு அவர் எதிர்கொள, அந் நாடு கழிந்து- ஆங்கு,
ஓங்கு நீர் வேலி உத்தரம் மரீஇ,
பகைப் புலம் புக்கு, பாசறை இருந்த  180

தகைப்பு- அரும் தானை மறவோன்- தன் முன்-
உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன்,
சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன்,
வட திசை மருங்கின் மன்னவர் எல்லாம்,
தென்தமிழ் ஆற்றல் காண்குதும் யாம் என,  185

கலந்த கேண்மையில் கனக விசயர்
நிலம் திரைத் தானையொடு நிகர்த்து மேல்வர-
இரை தேர் வேட்டத்து எழுந்த அரிமா
கரிமாப் பெரு நிரை கண்டு, உளம் சிறந்து
பாய்ந்த பண்பின், பல் வேல் மன்னர்  190

காஞ்சித் தானையொடு காவலன் மலைப்ப;
வெயில் கதிர் விழுங்கிய துகில் கொடிப் பந்தர்,
வடித் தோல் கொடும் பறை, வால் வளை, நெடு வயிர்,
இடிக் குரல் முரசம், இழும் என் பாண்டில்,
உயிர்ப் பலி உண்ணும் உருமுக் குரல் முழக்கத்து  195

மயிர்க் கண் முரசமொடு, மாதிரம் அதிர;
சிலைத் தோள் ஆடவர், செரு வேல் தடக் கையர்,
கறைத் தோல் மறவர், கடுந் தேர் ஊருநர்,
வெண் கோட்டு யானையர், விரை பரிக் குதிரையர்,
மண் கண் கெடுத்த இம் மா நிலப் பெரும் துகள்,  200

களம் கொள் யானைக் கவிழ் மணி நாவும்
விளங்கு கொடி நந்தின் வீங்கு இசை நாவும்
நடுங்கு தொழில் ஒழிந்து, ஆங்கு ஒடுங்கி, உள்செறிய;
தாரும் தாரும் தாம் இடை மயங்க;
தோளும் தலையும் துணிந்து வேறாகிய  205

சிலைத் தோள் மறவர் உடல் பொறை அடுக்கத்து,
எறி பிணம் இடறிய குறை உடல் கவந்தம்
பறைக் கண் பேய்மகள் பாணிக்கு ஆட;
பிணம் சுமந்து ஒழுகிய நிணம்படு குருதியில்
கணம் கொள் பேய்மகள் கதுப்பு இகுத்து ஆட;  210

அடும் தேர்த் தானை ஆரிய அரசர்
கடும் படை மாக்களைக் கொன்று, களம் குவித்து;
நெடுந் தேர்க் கொடுஞ்சியும், கடுங் களிற்று எருத்தமும்,
விடும் பரிக் குதிரையின் வெரிநும், பாழ்பட;
எருமைக் கடும் பரி ஊர்வோன் உயிர்த் தொகை,  215

ஒரு பகல் எல்லையின், உண்ணும் என்பது
ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய,
நூழிலாட்டிய சூழ் கழல் வேந்தன்,
போந்தையொடு தொடுத்த பருவத் தும்பை
ஓங்கு இருஞ் சென்னி மேம்பட மலைய-  220

வாய் வாள் ஆண்மையின், வண்தமிழ் இகழ்ந்த
காய் வேல் தடக்கைக் கனகனும் விசயனும்,
ஐம்பத்திருவர் கடும் தேராளரொடு,
செங்குட்டுவன் - தன் சின வலைப் படுதலும்-
சடையினர், உடையினர், சாம்பல் பூச்சினர்,  225

பீடிகைப் பீலிப் பெரு நோன் பாளர்,
பாடு பாணியர், பல் இயத் தோளினர்,
ஆடு கூத்தர், ஆகி; எங்கணும்,
ஏந்து வாள் ஒழிய, தாம் துறை போகிய
விச்சைக் கோலத்து வேண்டுவயின் படர்தர-  230

கச்சை யானைக் காவலர் நடுங்க,
கோட்டுமாப் பூட்டி, வாள் கோல் ஆக,
ஆள் அழி வாங்கி, அதரி திரித்த
வாள் ஏர் உழவன் மறக்களம் வாழ்த்தி;
தொடி உடை நெடுங் கை தூங்கத் தூக்கி,  235

முடி உடைக் கருந் தலை முந்துற ஏந்தி;
கடல் வயிறு கலக்கிய ஞாட்பும், கடல் அகழ்
இலங்கையில் எழுந்த சமரமும், கடல்வணன்
தேர் ஊர் செருவும், பாடி; பேர் இசை
முன் தேர்க் குரவை முதல்வனை வாழ்த்தி;  240

பின் தேர்க் குரவைப் பேய் ஆடு பறந்தலை-
முடித் தலை அடுப்பில், பிடர்த் தலைத் தாழி,
தொடித் தோள் துடுப்பின் துழைஇய ஊன் சோறு
மறப் பேய் வாலுவன் வயின் அறிந்து ஊட்ட,
சிறப்பு ஊண் கடி இனம், செங்கோல் கொற்றத்து  245

அறக்களம் செய்தோன் ஊழி வாழ்க! என-
மறக்களம் முடித்த வாய் வாள் குட்டுவன்,
வட திசை மருங்கின் மறை காத்து ஓம்புநர்
தடவுத் தீ அவியாத் தண் பெரு வாழ்க்கை,
காற்றூ தாளரை, போற்றிக் காமின் என,  250

வில்லவன் கோதையொடு வென்று வினை முடித்த
பல் வேல் தானைப் படை பல ஏவி,
பொன் கோட்டு இமயத்து, பொரு அறு பத்தினிக்
கல் கால் கொண்டனன், காவலன் ஆங்கு- என். 255

சேரன் செங்குட்டுவன் அரியணை ஏறியிருந்து தானைத் தலைவரை நோக்கிக் கூறியது

1-8: அறை பறை..........கூறும்

(இதன் பொருள்) அறை பறை எழுந்தபின் அரிமான் ஏந்திய முறை முதல் கட்டில் இறைமகன் ஏற-வள்ளுவர் அறைந்த முரசினது ஒலி நகரத்திலே யாங்கணும் எழுந்தபின்னர்ச் சிங்கத்தாற் சுமக்கப்பட்ட முறைமையினையும் தலைமைத் தன்மையினையும் உடைய அரசு கட்டிலின்கண் சேரன் செங்குட்டுவன் எழுந்தருளுதலும்; ஆசான் பெருங்கணி அருந்திறல் அமைச்சர் தானைத் தலைவர் தம்மொடு குழீஇ-ஆசாரியனும் பெருமையுடைய நிமித்திகனும் தம் தொழிலில் அரிய ஆற்றலமைந்த அமைச்சரும் படைத்தலைவர்களோடு வந்து அரசவையின்கண் கூடி; மன்னர் மன்னன் வாழ்க என்று ஏத்தி-வேந்தர் வேந்தன் நீடுழி வாழ்க என்று வாழ்த்தியபின்; முன்னிய திசையின் முறைமொழி கேட்ப-தத்தமக்கு என்று குறிப்பிடப்பட்ட திசைகளிலே நின்று அவ் வேந்தன் கூறுகின்ற மொழிகளை முறைமையினோடே கேளா நிற்ப ; வியம்படு தானை விறலோர்க்கு எல்லாம் உயர்ந்து ஓங்கு வெள் குடை உரவோன் கூறும்-ஏவிய பணியில் நிற்கின்ற படையின் தலைவர்களாகிய வெற்றியையுடைய தலைவர்களுக்கெல்லாம் புகழால் மிகவும் உயர்ந்த கொற்ற வெண்குடையையுடைய மன்னன் சொல்வான் என்க.

(விளக்கம்) அரிமான்-சிங்கம் முதல் கட்டில்-முதன்மையுடைய அரசு கட்டில். அரசவைக்கணிவன் ஆதலின் பெருங்கணி என்றார் திறல்-அமைச்சுத் தொழில் ஆற்றல். முன்னிய-குறித்த. வியம் படுதல். ஏவிய பணி தலைநிற்றல் தலைவரை விறலோர் என்றார். அவர் தலைமைத் தன்மைக்கு அதுவே காரணமாதலின் ஏனை அரசர் குடையினும் சிறந்த குடை என்பது தோன்ற உயர்ந்தோங்கு வெண்குடை என்றார். உரவோன் செங்குட்டுவன்

செங்குட்டுவன் செப்பும் வஞ்சினம்

9-18: இமைய............ஆகென

(இதன் பொருள்) இமையத் தாபதர் எமக்கு ஈங்கு உணர்த்திய அமையா வாழ்க்கை அரசர் வாய்மொழி நம்பால் ஒழிகுவது ஆயின்-இமயமலையினின்றும் வந்த துறவோர் எமக்கு இவ்விடத்தே அறிவித்த பொருந்தாத வாழ்க்கையையுடைய வட நாட்டரசர் வாய் காவாதுரைத்த மொழியானது நம்மிடத்தே மட்டும் கிடக்கும் ஒரு சொல்லாகிவிடின்; ஆங்கு அஃது எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம்-அவ்வழி அச் சொல் எம்மையொத்த சோழனும் பாண்டியனுமாகிய இரண்டு அரசர்களுக்கு எம்மிடத்தே இகழ்ச்சியைத் தோற்றுவிப்பதாம் ஆதலின்; வடதிசை மருங்கின் மன்னர்தம் முடித்தலை கடவுள் எழுத ஓர் கல்கொண்டு அல்லது என் வாய்வாள் வறிது மீளும் ஆகில் அவ் வடதிசைக்கண் வாழ்கின்ற அம் மன்னருடைய முடித்தலையின்மேல் பத்தினிக் கடவுளுக்குப் படிவம் அமைத்தற்கு யாம் கொள்ளும் கல்லை ஏற்றிக்கொண்டு மீள்வதல்லது என்னுடைய வெற்றி வாய்ந்த வாள் வறிதே மீண்டுவருமாயின்; செறிகழல் புனைந்த செருவெம் கோலத்துப் பகை அரசு நடுக்காது-செறிந்த வீரக்கழல் கட்டிய போர் செய்தற்கியன்ற வெவ்விய கோலத்தோடே சென்று எனது பகை அரசர்களை அச்சத்தால் நடுங்கச் செய்யாமல்; பயம்கெழு வைப்பின் குடி நடுக்குறூஉங் கோலேன் ஆக என-உணவு முதலிய பயன்கள் பொருந்திய எனது நாட்டின்கண் வாழுகின்ற என்னுடைய நன்குடி மக்களைத் துன்பத்தால் நடுங்கச் செய்கின்ற கொடுங்கோல் மன்னன் ஆவேனாக; என்றான் என்க.

(விளக்கம்) தாபதர்-துறவோர். ஈங்கு-இங்கு வந்து தன் செற்றத்திற்கு ஆளானமையின் அவர் வாழ்விழத்தல் ஒருதலை என்பது தோன்ற அமையா வாழ்க்கை அரைசர் என்றான். வாய்காவாது உரைத்த மொழி என்பது தோன்ற மொழியென் றொழியாது வாய் மொழி என்றான். அப் பழமொழி மூவர்க்கும் பொதுவாயினும் நம்பால் கூறப்பட்டதாகலின் பின்னொரு காலத்தே இது கேட்டும் சேரன் அஞ்சிக்கிடந்தான்; யாமாயின் அப்பொழுதே சென்று அவ்வரசர் முடித்தலை கொய்வோம் எனச் சோழனும் பாண்டியனும் எம்மை இகழ்தற்கு இடம் தரும் என்றான் என்பது கருத்து. தமிழ் வேந்தராதலின் அவரை எம்போல் வேந்தர் என்றான். மன்னர் கனகனும் விசயனும் என்க. வாய்வாள்: வினைத்தொகை. நடுங்காது-நடுங்கச் செய்யாது. நடுக்குறூஉம்-நடுங்கச் செய்யும்.

ஆசான் கூற்று

19-24: ஆர் புனை.............கூற

(இதன் பொருள்) ஆசான்-அரசன் கூறிய வஞ்சினம் கேட்ட நல்லாசிரியன் அரசனை நோக்கி; ஆர்புனை தெரியலும் அலர்தார் வேம்பும் சீர்கெழு மணிமுடிக்கு அணிந்தோரல்லால்-ஆத்தி மலரால் தொடுத்த மாலையையும் மலர்ந்த வேப்பந்தாரையும் அழகு பொருந்திய தம்முடைய மணிமுடிக்  கலனின்மீது அணிந்துள்ள சோழனையும் பாண்டியனையுமே இகழ்ந்ததல்லால்; இமயவரம்ப நின் இகழ்ந்தோர் அல்லர்-இமயமலையை எல்லையாகவுடைய ஏந்தால் அவ் வடவாரிய மன்னர் நின்னை இகழ்ந்தாரல்லர்; நின் சினம் அமைக-ஆதலால் நின்னுடைய சினம் தணிவதாக; அஞ்சினர்க்கு அளிக்கும் அடுபோர் அண்ணல் நின் வஞ்சினத்து எதிரும் மன்னரும் உளரோ எனக் கூற-நின்பால் அஞ்சிய பகைவர்க்கும் தஞ்சமளிக்கும் கொல்லும் போராற்றல் மிக்க அண்ணலே நீ கூறிய இவ் வஞ்சின மொழியைக் கேட்டு அஞ்சுவ தல்லது நின்னை எதிர்க்கின்ற மன்னர்தாமும் இவ் வையகத்தில் யாரும் இலர்காண் என்று அறிவுறுத்தா நிற்ப என்க.

(விளக்கம்) ஆர்-ஆத்திப்பூ. அலர்தார் வேம்பு-மாலையாகவே மலரும் வேப்பமாலை எனினுமாம். ஆர் புனைந்தவன் சோழன். வேம்பு புனைந்தவன் பாண்டியன்.

பேராண்மை யென்ப தறுகணொன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றத னெஃகு     (குறள். 773)

என்பது பற்றி மறச்சிறப்புக் கூறுவான், அஞ்சினர்க்களிக்கும் அடுபோரண்ணல் என்றான்.

கணிவன் கூற்று

25-31: ஆறிரு............ஏத்த

(இதன் பொருள்) ஆறு இரு மதியினும் காருக அடிப்பயின்று ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து-ஒரு யாண்டின் கண்ணவாகிய பன்னிரண்டு திங்களினும் கோள்கள் நிற்கும் நிலையை ஆராய்ந்து நன்கு பயின்று கணித நூலுக்குரிய ஐந்து உறுப்புகளின் இலக்கணங்களையும் வல்லார்வாய்க் கேட்டு முடித்த பெருங்கணிவன் தானே எழுந்துநின்று கூறுபவன்; வெம்திறல் வேந்தே நின்கொற்றம் வாழ்க-வெவ்விய போராற்றல் வாய்ந்த வேந்தர் பெருமானே நின் வெற்றி நீடுழி வாழ்வதாக: இரு நிலம் மருங்கின் மன்னர் எல்லாம் நின் திருமலர்த் தாமரைச் சேவடிபணியும் முழுத்தம் ஈங்கு இது-பெரிய இந் நிலவுலகில் வாழுகின்ற மன்னரெல்லாம் நின்னுடைய திருமகள் வீற்றிருக்கின்ற மலராகிய செந்தாமரை மலரையொத்த சிவந்த திருவடிகளைப் பணிவதற்கு உரிய நல்ல முழுத்தம் இப்பொழுது நிகழ்கின்ற இம் முழுத்தமேயாகும்; முன்னிய திசைமேல் எழுச்சிப்பாலை ஆக என்று ஏத்த ஆதலால் பெருமான் நினைத்த அவ் வட திசைமேல் படையெழுச்சி செய்யும் அப் பகுதியை உடையை ஆகுக என்று அறிவித்துக் கைகுவித்துத் தொழாநிற்ப என்க.

(விளக்கம்) ஆறிருமதி-சித்திரை முதலிய பன்னிரண்டு திங்கள். காருக அடி-கோள்கள் நிற்கும்நிலை. கோள்கள் இடையறாதியங்கலின் ஆறிருமதியினும் இடையறாது பயிலுதல் வேண்டிற்று. ஐந்து கேள்வி - ஐந்து உறுப்புகளைப்பற்றிய கேள்வி அறிவு. அவ்வுறுப்புகளாவன: திதிவாரம் நாள் (நட்சத்திரம்) யோகம் கரணம் என்பன. பஞ்சாங்கம் பார்த்தல் என்பதுமது. இனி நட்பு ஆட்சி உச்சம் பகை நீசம் என்னும் கோளின் தன்மை ஐந்தும் எனினுமாம். முழுத்தம்-நல்லபொழுது. பாலை-பகுதியையுடையை. இம்முழுத்தம் கழிந்தொழியின் இத்தகைய முழுத்தம் கிடைத்தலரிது என்பதுபற்றி இக் கணிவன் விதுவிதுப் புற்று, அரசன் தன்னை விளிக்கு முன்னரே எழுந்து நின்று அரசனுக்கு முழுத்தம் அறிவித்தல் முறைமையாகாது; முறை தவறியும் இக் கணிவன் இங்கு அரசனுக்குக் கூறுவது அரசனுடைய நலத்தில் அவன் கொண்டிருக்கின்ற விருப்ப மிகுதியை நமக்குப் புலப்படுத்தும்.

சேரன் செங்குட்டுவன் எழுச்சியின் ஆரவாரம்

32-47: மீளாவென்றி.............புகுதர

(இதன் பொருள்) மீளாவென்றி வேந்தன் கேட்டு வாளுங் குடையும் வடதிசைப் பெயர்க்க என-தன்னைவிட்டு நீங்காத வெற்றி பொருந்திய செங்குட்டுவன் அப் பெருங்கணியின் சொற் கேட்டவுடன் படைத்தலைவரை நோக்கி அங்ஙனமாயின் இந் நன்முழுத்தத்திலேயே நமது வெற்றிவாளையும் கொற்ற வெண்குடையையும் வடதிசை நோக்கிப் புறவீடு செய்வீராக என்று பணிப்ப, அப்பொழுதே; உரவு மண் சுமந்த அரவுத்தலை பனிப்ப பொருநர் ஆர்ப்பொடு முரசு எழுந்து ஆர்ப்ப-வலிமையுடைய இந் நிலவுலகத்தைச் சுமந்துள்ள ஆதிசேடன் என்னும் பாம்பினது ஆயிரம் தலைகளும் பொறை ஆற்றாது நடுங்கும்படி மறவர்கள் செய்யும் ஆரவாரத்தோடே வீரமுரசங்களின் முழக்கமும் எழுந்து ஆரவாரிப்ப; இரவு இடங்கெடுத்த நிரைமணி விளக்கின் விரிவுக்கொடி அடுக்கத்து நிரயத் தானையோடு-இரவினது இருள் உறைதற்கு உரிய இடம் இல்லையாம்படி செய்த நிரல்பட்ட அழகிய விளக்கொளியின்கண் கலந்த கொடி நெருங்கிய பகைவர்க்கு  நரகத்தையொத்த படைகளோடு; ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும்-அமைச்சரையுள்ளிட்ட ஐம்பெரும் குழுவினரும் கரணத்தியலவரை உள்ளிட்ட எண் பேராயத்தினரும்; வெம்பரி யானை வேந்தற்கு ஓங்கிய கரும வினைஞரும் கணக்கியல் வினைஞரும் தரும வினைஞரும் தந்திர வினைஞரும்-விரைந்து செல்லும் யானையையுடைய அரசனுக்குக் கண்போற் சிறந்தவராகிய சான்றோரும் காலம் கணிக்கும் தொழிலையுடைய கணிக மாக்களும் அரசியல் அறம் கூறுவோரும் படையிடத்துத் தொழில் செய்வோரும் ஆகிய இவரெல்லாம்; மண் திணி ஞாலம் ஆள்வோன் வாழ்க என-மண் திணிந்த நிலவுலகத்தை ஆள்கின்ற எம் அரசன் நீடுழி வாழ்க என்று வாழ்த்துக் கூறி; பிண்டம் உண்ணும் பெருங்களிற்று எருத்தின் மறம் மிகு வாளும் மாலை வெண்குடையும் புறநிலைக் கோட்டப் புரிசையின் புகுத்தி-அரசன் பிண்டித்துக் கொடுத்த பிண்டத்தை உண்ணும் சிறப்புப் பெற்ற பெரியகளிறாகிய பட்டத்து யானையின் பிடரியின்மேல் மறப்பண்பு மிகுதற்குக் காரணமான வாளையும் மலர்மாலை சூட்டிய கொற்ற வெண்குடையையும் ஏற்றிவைத்து அரண்மனையின் புறத்தே நிற்கின்ற கொற்றவை கோயிலின் மதிலகத்தே புகவிடுத்து; புரைதீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன் அரைசு விளங்கு அவையம் முறையின் புகுதர-குற்றமில்லாத வஞ்சிப் பூமாலையைத் தனக்குரிய பனம்பூ மாலையொடு ஒருசேரப் புனைகின்றவனான தம் அரசன் விளங்குதற்கிடனான அவையின்கண் தத்தமக்குரிய முறைமையோடே புகாநிற்ப என்க

(விளக்கம்) பனிப்ப, ஒலிப்ப, தானையோடு குழுவும் ஆயமும் நால்வகை வினைஞரும் ஆள்வோன் வாழ்கென வாழ்த்தி எருத்தின்கண் வானையும் குடையையும் புகுத்திப் பின்னர் அரசவையின்கண் புகாநிற்ப என இயையும்.

பொருநர்-போர்க்களம் பாடும் பொருநருமாம். நிரை மணி விளக்கின்............புகுத்தி என்றமையால் இந் நிகழ்ச்சிகள் அற்றை நாள் இரவின்கண் நிகழ்ந்தமை பெற்றாம். நிரையத்தானை. நரகின்கண் எமபடர் சித்திரவதை செய்யுமாறுபோலே பகைவரைச் சித்திரவதை செய்யும் படை மறவர் என்றவாறு. ஐம்பெருங்குழு-அமைச்சர் புரோகிதர் சேனாபதியர், தவாத் தொழிற்றூதுவர் சாரணரென்றிவர் பார்த்திபர்க் கைம்பெருங் குழுவெனப் படுமே எனுமிவர்.

எண்பேராயம்-கரணத்தியலவர் கருமகாரர் கனகச் சுற்றங் கடைகாப்பாளர், நகர மாந்தர் நளிபடைத் தலைவர், யானை வீர ரிவுளி மறவர், இனைய ரெண்பே ராய மென்ப எனுமிவர்.

கரும வினைஞர்-சடங்கு செய்வோர். கணக்கியல் வினைஞர்-காலக்கணிதர். கணக்கு எழுதுவோருமாம். தரும வினைஞர்-அறங் கூறுவோர்; (நியாயாதிபதி) புறநிலைக் கோட்டம் என்றது கொற்றவை கோயிலை. மன்னர் நன்னாளிலே இவ்வாறு வாளையும் குடையையும் புறவீடு செய்யும் வழக்கத்தை, குடைநாட்கோள் வாள்நாட்கோள் எனவரும் புறத்திணைத் துறைகளால் உணர்க. வஞ்சி-போர்ப்பூ. போந்தை-அடையாளப்பூ அவையம். அவை

செங்குட்டுவன் வடதிசை யாத்திரை

48-60: அரும்படை..........ஏறினன்

(இதன் பொருள்) அரும்படைத்தானை அமர் வேட்டுக் கலித்த பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்து-வெல்லுதற்கரிய படைக்கலன்களேந்திய மறவருக்கும் போரைப் பெரிதும் விரும்பி ஆரவாரித்த பெரிய நாற்பெரும் படைத்தலைவர்க்கும் தானே உடனிருந்து பெருஞ்சோற்று விருந்தளித்து; பூவா வஞ்சியிற் பூத்தவஞ்சி வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக்கு அணிந்து-வஞ்சி நகரத்திலே மலர்ந்த வஞ்சிப்பூவால் தொடுத்த மாலையை வென்றிவாய்த்த வாளையுடைய பெரிய புகழையுடைய அவ்வேந்தர் பெருமான் தனது அழகிய முடியின்கண் அணிந்து; ஞாலங் காவலர் இறைபயிரும் நாள் காலை முரசம் கடைமுகத்து எழுதலும்-உலகத்தை யாளும் மன்னர்கள் தாம் செலுத்தக்கடவதிறைப் பொருளைக் கொணர்ந்து இறுத்தற்கு அழைக்கும் அறிகுறியாக விடியற்காலத்தே முழங்கும் முரசம் அரண்மனை வாயிலிலே முழங்காநிற்ப; நிலவுக்கதிர் நீள் இருஞ் சென்னி  உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் சேவடி-நிலவொளி பரப்பும்யிறையை அணிந்த நீண்ட பெரிய முச்சியினையும் உலகங்களை யெல்லாம் தன்னுள்ளே அடக்கிக்கொண்டிருக்கின்ற உருவத்தையும் உடைய ஏனைக் கடவுளரினும் உயர்ந்த முழுமுதல்வனாகிய சிவபெருமானுடைய சிவந்த திருவடிகளை; மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு-மறப்பண்பு சேர்தற்கு அறிகுறியான வஞ்சி மாலையொடு ஒருசேர நெஞ்சின் நினைந்து புனைந்து பிறர் யாரையும் வணங்காத தன் தலையால் வணங்கி அவ்விறைவனை வலங்கொண்டு வந்து; மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை நறைகெழு மாலையின் நல் அகம் வருத்த-அந்தணர் தம் கையின் ஏந்திவந்த ஆவுதியின் நறுமணம் கமழும் புகையானது தான் சூடிய தேன்பொருந்திய மலர்மாலையின் அழகிய இடத்தை வருத்தாநிற்ப; கடக்களி யானைப் பிடர்த்தலை யேறினன்-மதவெறியினையுடைய யானையினது பிடரின்கண் ஏறினன்; என்க.

(விளக்கம்) பெருஞ்சோறு வகுத்தலாவது வேந்தன் போர் கருதிப் புறப்படும்பொழுது அப் போர் மறவரொடு தானும் உடன் உண்பான் போல அவரைப் பாராட்டுதற்குப் பிண்டித்து வைத்த உண்டியைத் தன் கையால் வழங்குதல். இதனை பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை எனவரும் தொல்காப்பியத்தால் உணர்க. (புறத் 8) பூவா வஞ்சி-வெளிப்படை. இறைவன் திருவடிகள் தன் தலைமேலனவாக நினைத்து வழிபாடு செய்தலை உயர்ந்தோன் சேவடி வஞ்சி மாலையொடு புனைந்து என்றார். இறைஞ்சாச் சென்னி என்றது இறைவனையன்றிப் பிறரை வணங்காச் சென்னி என்றவாறு. உயர்ந்தோன் என்றது, சிவபெருமானை. உலகத்திலுள்ள எல்லாப் பொருளும் தன்னுள் அடக்கி நிற்றலின் அவ்வாறு கூறினர், இதனை

நின்ற சைவ வாதிநேர் படுதலும்
பரசுநின் தெய்வ மெப்படித் தென்ன
இருசுட ரோடிய மானனைம் பூதமென்
றெட்டு வகையு முயிரும்யாக் கையுமாய்க்
கட்டிநிற் போனுங் கலையுருவி னோனும்
படைத்துவிளை யாடும் பண்பி னோனுந்
தன்னில் வேறு தானொன் றிலோனும்
அன்னோ னிறைவ னாகுமென் றுரைத்தனன்

எனவரும் மணிமேகலையானும் (27....87. 95) அறிக. வேள்விச் சாலையினின்றும் மறையோர் ஏந்தி வந்த நறும்புகை என்பது கருத்து அதன் மிகுதி கூறுவார் மாலையின் நல்லகம் வருத்த என்றார்.

இதுவுமது

61-67: குடக்கோ............செலவுழி

(இதன் பொருள்) ஆடகமாடத்து அறி துயில் அமர்ந்தோன் சேடங்கொண்டு சிலர் குடக்கோக் குட்டுவன் கொற்றங்கொள்க என திருவனந்தபுரத்தில் பொன்னாலியன்ற திருக்கோயிலின் கண் பரப்பணைமிசை அறிதுயில் கொண்டு கிடந்த திருமாலுக்கு வழிபாடு செய்யப்பட்ட சேடத்தை அந்தணர் சிலர் கொணர்ந்து செங்குட்டுவன் முன்னின்று சேரநாட்டு அரசனாகிய செங்குட்டுவன் வெற்றி கொள்வானாக என வாழ்த்திக்கொடுப்ப; தெள்நீர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச்சேவடி மணிமுடி வைத்தலின்-தெளிந்த கங்கை நீர் முழுவதும் மறைதற்குக் காரணமான சிவந்த சடையையுடைய இறைவனது அழகிய சிவந்த திருவடிகளை முன்பே தனது அழகிய முடியின்கண் சூட்டியிருத்தலால்; ஆங்கு அது வாங்கி அணி மணிப்புயத்துத் தாங்கினனாகித் தகைமையின் செல்வுழி-அத் திருமால் அடியார் வழங்கிய துளபமாலை முதலிய அச் சேடத்தை வாங்கித் தனது அணிகலன் அணிந்த தோளின்மேல் அணிந்து கொண்டவனாய்த் தனக்கியன்ற பெருந்தகைமையோடே அவ்விடத்தினின்றும் போம்பொழுது என்க.

(விளக்கம்) ஆடக-மாடம்-திருவனந்தபுரத்தில் திருமால் பள்ளி கொண்டிருக்கும் இடம். அது பொன் மாடம் ஆதலின் ஆடக மாடம் எனப்பட்டது. சேடம்-ஈண்டுப் பிரசாதம்; அவை துளபமாலை முதலியன. சிலர் என்றது திருமால் அடியாரை. முன்னரே சிவன் திருவடி மலரை முடிக்கணிந்திருத்தலின் பின்னர்க் கொணர்ந்த திருமால் சேடத்தைத் தோளில் அணிதல் வேண்டிற்று என அடிகளார் ஏதுக் கூறினரேனும் செங்குட்டுவன் சைவ சமயத்தினன் என்பதும் வைணவ சமயம் முதலிய பிற சமயங்களை வெறுப்பவனல்லன் என்பதுமாகிய உண்மையையே அடிகளார் இங்ஙனம் நயம்படக் கூறுகின்றார் என்பதுணர்க.

இதுவுமது

68-73: நாடக.............ஆகென

(இதன் பொருள்) நாடகமடந்தையர் ஆடு அரங்கு யாங்கணும் கூடையில் பொலிந்து-நாடகக்கணிகை மகளிர்தாம் ஆடுகின்ற அரங்குகள் எங்கும் கைகூப்பிப் பொலிவுடன் தோன்றி; கொற்ற வேந்தே வாகை தும்பை மணித்தோட்டுப் போந்தையோடு ஓடை யானையின் உயர்முகத்து ஓங்க-வெற்றியையுடைய வேந்தர் பெருமானே! வாகை மாலையும் தும்பை மாலையும் அழகிய இதழையுடைய போந்தை மாலையோடு முக படாஅம் அணிந்த நினது களிற்றியானையின் உயர்ந்த முகத்தின்கண் உயர்ந்து விளங்கும்படி; வெண்குடைநீழல் எம் வெள்வளை கவரும் கண் களிகொள்ளும் காட்சியை ஆக என-நீ அந்த யானை மிசைக் கொற்ற வெண்குடை நீழலில் வீற்றிருந்து மீண்டுவரும் பொழுது எம்முடைய சங்க வளையல்களைக் கவர்கின்ற எங்களுடைய கண்கள் கண்டு பெரிதும் மகிழ்ச்சி கொள்ளுதற்குக் காரணமான தோற்றம் உடையை ஆம் வந்தருளுக! என்று வாழ்த்தா நிற்ப, என்க.

(விளக்கம்) கூடை-இரட்டைக் கை. குவித்துக் கும்பிட்ட கை என்றவாறு. வாகை கூறியது, அரசர் சூடுவன யானைக்கும் சூட்டுதலின், வாகையும் தும்பையும் போந்தையோடு நின் யானை முகத்து ஓங்கித் தோன்ற என்றார். தும்பை பகை அரசனுடன் போர் செய்தலைக் கருதிச் சூடப்படும் பூ. வாகை பகைவனை வென்றபின் சூடுகின்ற பூ. ஆதலின் நீ முதலில் தும்பை சூடிப் பகைவரை வென்று வாகை சூடி மீண்டு வருவாயாக என்பார் வாகை தும்பை போந்தையோடு ஓங்க என்றார். ஓடை-முக படாஅம். வெள்வளை கவரும் காட்சியை எனவும் கண்களி கொள்ளும் காட்சியை எனவும் தனித்தனி கூட்டுக.

செங்குட்டுவன் நீலகிரியை எய்துதல்

74-85: மாகத........ஆங்கு

(இதன் பொருள்) மாகதப் புலவரும் வைதாளிகரும் சூதரும் நல் வலம் தோன்ற வாழ்த்த-மாகதப் புலவரும் வைதாளிகரும் சூதரும் நல்ல வெற்றி தோன்றுமாறு வாழ்த்தா நிற்ப; யானை வீரரும் இவுளித் தலைவரும் வாய்வாள் மறவரும் வாள்வலன் ஏத்த-யானை மறவரும் குதிரை மறவரும் வென்றி வாய்த்த வாள் மறவரும் வாளினால் உண்டாகும் வெற்றியைப் புகழா நிற்ப; தானவர் தம்மேல் தம்பதி நீங்கும் வானவன்போல வஞ்சி நீங்கி-அசுரர்மேல் போர் செய்தற்குத் தனது தலைநகரமாகிய அமராவதியினின்றும் புறப்பட்டுப் போகின்ற அமரர் கோமானைப்போலத் தன் தலைநகரமாகிய வஞ்சியினின்றும் புறப்பட்டு; தண்டத் தலைவரும் தலைத்தார்ச் சேனையும் வெள்தலை புணரியின் விளிம்பு சூழ்போத-படைத்தலைவர்களும் முதன்மையுடைய தூசிப்படையும் வெள்ளிய தலையையுடைய கடலினது கரையின்மேல் சூழ்ந்து செல்லாநிற்ப; மலை முதுகு நெளிய நிலை நாடு அதர்பட உலகமன்னவன் ஒருங்கு உடன்சென்று-மலைகள் முதுகு நெளியும்படியும் சமநிலைபெற்ற நாடுகளிலே பெரிய வழிகள் உண்டாகும்படியும் இந் நிலவுலகத்தை ஆளுகின்ற மன்னவனாகிய அச் சேரன் செங்குட்டுவன் அப் படைகளோடே கூடிச் சென்று; ஆலும் புரவி அணித்தேர் தானையொடு ஆங்கு நீலகிரியின் நெடும் புறத்து இறுத்து ஆங்கு-ஆரவாரிக்கின்ற குதிரைப்படை அழகிய தேர்ப்படை முதலிய படைகளோடே அவ்விடத் தெதிர்ப்பட்ட நீலகிரியினது நெடிய பக்கத்திலே தங்கி அவ்விடத்தில் என்க.

(விளக்கம்) மாகதப் புலவர்-இருந்தேத்துவார்; வைதாளிகர் வைதாளி பாடுவோர் சூதர்-நின்றேத்துவார். இவுளி-குதிரை. தானவர்-அசுரர். வானவன்-இந்திரன் புணரி-கடல். விளிம்பு-கரை. மலை முதுகு நெளிய என்றதனால் நிலைநாடு சமமாக நிலை பெற்ற நாடு என்க. நீலகிரி-ஒரு மலை . இறுத்தல்-தங்கி இருத்தல்

இதுவுமது

89-91: ஆடியில்.............பின்னர்

(இதன் பொருள்) ஆடு இயல் யானையும் தேரும் மாவும் பீடுகெழு மறவரும் பிறழாக் காப்பின்-அசைகின்ற இயல்பினையுடைய யானையும் தேரும் குதிரையும், பெருங்குடிப் பிறந்த பெருமை மிக்க தொல்படை மறவரும் தத்தம் கடமையில் திரிபில்லாத காவலையுடைய; பாடி இருக்கை பகல் வெய்யோன் தன் இருநில மடந்தைக்குத் திரு அடி அளித்து ஆங்கு-படைவீட்டின்கண் நடுவுநிலையைப் பெரிதும் விரும்புகின்ற அம் மன்னவன் தன்னுடைய தேவியாகிய பெரிய நிலமகளுக்குத் தனது அழகிய அடிகளை வழங்கியபொழுது; அருந் திறல் மாக்கள் அடி ஈடு ஏத்தப் பெரும் பேரமளி ஏறியபின்னர்-பகைவரால் வெல்லுதற்கரிய பேராற்றல் பொருந்திய மறவர் தனது திருவடி பெயர்த்திடுந்தோறும் வணங்கி வாழ்த்தா நிற்பச் சென்று; பெருமைமிக்க பெரிய அரசு கட்டிலின்கண் ஏறி அமர்ந்தபின்னர் என்க.

(விளக்கம்) யானை நிற்கும்பொழுது அசைந்த வண்ணமே நிற்கும் இயல்புடையது ஆதலின் ஆடியல் யானை என்றார். மறவர்க்குப் பீடு மறக்குடிப் பிறத்தல். பாடி இருக்கை-கூடாரமிட்டுப் படைகள் தங்கி இருக்குமிடம். பகல்-நடுவு நிலைமை. அரசனைத் திருமாலாகக் கருதுதலின் நிலமகளைத் தேவியாகக் கருதித் தன் இருநில மடந்தைக்குத் திருவடி அளித்து என்றார். இங்ஙனமே கட்டுரை காதையின்கண் இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கி அவள் தணியா வேட்கையும் சிறிது இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கி அவள் தணியா வேட்கையும் சிறிது தணித்தனன் (121-22) எனப் பாண்டியனையும் ஓதுதலுணர்க. இருநில மடந்தைக்குத் திருவடி அளித்து என்பது ஊர்தியினின்றும் நிலத்தின்மேல் இறங்கி என்றவாறு பெரும் பேரமளி என்றது அரியணையை.

முனிவர் சேரன் செங்குட்டுவனைக் காண்டல்

92-104: இயங்குபடை.............பின்னர்

(இதன் பொருள்) இயங்குபடை அரவத்து ஈண்டு ஒலி இசைப்ப எடுத்துச் செலவினையுடைய அப் படைகளின் முழக்கங்கள் ஒன்று கூடி எழுகின்ற பேரொலியானது வானத்தினும் சென்று ஒலித்தலாலே உணர்ந்த; விசும்பு இயங்கு முனிவர்-அந்தரசாரிகளாகிய முனிவர்கள்; வியல்நிலம் ஆளும் இந்திர திருவனைக் காண்குதும் என்று-அகன்ற நிலத்தை ஆளுகின்ற இந்திரனை யொத்த செல்வமிக்க சேரன் செங்குட்டுவனை யாமும் சென்று காண்பேம் என்னும் கருத்துடையராய்; அந்தரத்து இழிந்து ஆங்கு அரசுவிளங்கு அவையத்து மின் ஒளி மயக்கும் மேனியொடு தோன்ற-விண்ணினின்றும் நிலத்தின்கண் இழிந்து அப் பாடியிருக்கையின்கண் அவ்வரசன் அரியணையிலிருந்து திகழுகின்ற அந் நல்லவையின்கண் மின்னலினது ஒளியையும் மழுக்கும் பேரொளி படைத்த திருமேனியோடு எழுந்தருளாநிற்ப; மன்னவன் எழுந்து வணங்கி நின்றோனை-அம் முனிவருடைய வரவுகண்டு மகிழ்ந்த சேரன் செங்குட்டுவன் அரியணையினின்றும் எழுந்து வணங்கி நின்கின்றவனை-அம் முனிவர்கள் நோக்கி; செஞ்சடை வானவன் அருளினில் விளங்க வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்-சிவந்த சடை முடியையுடைய சிவபெருமானின் திருவருளாலே சேரர்குலம் விளங்கும்படி வஞ்சி நகரத்திலே பிறந்த சேரமன்னவனே! யாம் உனக்குக் கூறுவதொன்றுளது அதனைக் கேட்பாயாக; மலையத்து ஏகுதும்-யாங்கள் இப்பொழுது இமயமலையினின்றும் பொதிய மலைக்குச் செல்கின்றோம்; வான் பேர் இமய நிலையத்து ஏகுதல் நின்கருத்து ஆகலின்-உயரிய பெரிய இமயமாகிய மலை நிற்குமிடத்திற்குச் செல்லுதல் உன்னுடைய கருத்தாதலால்; ஆங்கு அருமறை அந்தணர் வாழ்வோர் உளர்-அவ்விமயமலையில் உணர்தற்கரிய மறைகளை ஓதி உணர்ந்த சிறப்புடைய அந்தணர் பலர் வாழுகின்றோர் உளர்; நெருநிலமன்ன பேணல் நின்கடன் என்று பெரிய நில உலகத்தை ஆளுகின்ற வேந்தனே நீ அங்குச் சென்ற பொழுது அவ்வந்தணர்களுக்குத் தீங்கு நேராவண்ணம் குறிக்கொண்டு பாதுகாத்தல் நினக்குரிய தலையாய கடமைகாண் இதுவே யாங்கள் உனக்குக் கூறக்கருதியதாம் என்று அறிவித்து ஆங்கு அவர் வாழ்த்திப் போந்ததன் பின்னர்-அவ்விடத்தினின்றும் அம் முனிவர் அரசனை வாழ்த்திப் போனதன் பின்னர் என்க.

(விளக்கம்) இயங்கு படையென்றது எடுத்துச் செலவினை மேற் கொண்டிருக்கின்ற படை என்றவாறு. யானையின் பிளிற்றொலியும் குதிரையின் கனைப்பொலியும் மறவர் ஆர்ப்பொலியும் ஒன்று சேர்ந்து எழுந்த பேரொலி என்பார் அரவத்தீண்டொலி என்றார். இசைப்ப என்னும் செயவென்னெச்சம் முனிவர் உணர்தற்கு ஏதுப் பொருட்டாய் நின்றது. முனிவர்-அந்தரசாரிகள். இந்திர திருவன்-இந்திரன் போன்ற செல்வமுடையவன். செஞ்சடை வானவன் அருளினில் தோன்றிய வானவ என்றது செங்குட்டுவன் இருமுதுகுரவரும் சிவபெருமான்பால் நோன்புகிடந்து வரமாகப் பெற்ற மகவு என்றுணர்த்தியவாறாம் அக்குலம் விளங்க என்க. வானவ என்றது சேரனே என்றவாறு மலையம்-பொதியில். வான்-வெண்மையுமாம். நிலையம் நிற்குமிடம் ஆண்டுப் போர் நிகழ்தல் கூடும் அந் நிகழ்ச்சியால் அங்கு வாழும் அந்தணர்க்குத் தீங்கு நேராவண்ணம் பேணுக என்று ஓம்படை செய்தபடியாம். இக் கடமை நினக்குரிய கடமையேயாம் ஆயினும் யாமும் நினைவூட்டுகின்றேம் என்பதுபட பெருநில மன்ன! எனவும் பேணல் நின் கடனெனவும் ஓதினர். ஆயின் ஓதாமையே அமையு மெனின் அஃ தொக்கும் ஆயினும் அங்கு அந்தணர் வாழ்வோர் உளர் என்பது செங்குட்டுவன் அறியானாதல் கூடுமாகலின் அறிவித்தல் வேண்டிற்று என்க.

செங்குட்டுவனைக் காணக் கொங்கணக்கூத்தரும் கன்னடக்கூத்தரும் வருதல்

105-115: வீங்குநீர்..........தோன்ற

(இதன் பொருள்) வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க என-பெருகிய கடலால் சூழப்பட்ட நிலவுலகத்தை ஆள்கின்ற சேரர் பெருமான் நீடூழி வாழ்க என்று வாழ்த்தியவராய் கொங்கணக் கூத்தரும் கொடும் கருநாடரும் தம் குலக்கு ஓதிய தகைசால் அணியினர்-கொங்கண நாட்டுக் கூத்தரும் வளைவுடைய கன்னட நாட்டுக் கூத்தரும் தங்கள் தங்கள் குலத்திற்குக் கூத்த நூலில் ஓதப்பட்ட அழகமைந்த ஒப்பனையுடையராய்; இருள்படப் பொதுளிய சுருள் இருங்குஞ்சி மருள்படப் பரப்பிய ஒலியல் மாலையர்-இருளுண்டாகும்படி செறிந்த சுருண்ட கரிய தமது தலைமயிரில் கண்டோர்க்கு வியப்புத் தோன்றும்படி பரப்பப்பட்ட தழைத்த மாலையை யுடையராய்; வடம்சுமந்து ஓங்கிய வளர் இள வன முலை கருங்கயல் நெடுங்கண் காரிகையாரோடு-தம்முடைய விறலியராகிய முத்துவடத்தைச் சுமந்துகொண்டு உயர்ந்தபின்னும் வளரும் இயல்புடைய இளைய அழகிய முலையினையும் கரிய கயல்மீன் போன்ற நெடிய கண்ணையும் உடைய அழகிய மகளிரோடே; அரும்பு அவிழ் வேனில் இருங்குயில் ஆல இன வண்டு யாழ்செய வந்தது-எம் காதலர் எமக்குக் குறிப்பிட்டுப் போன நாளரும்புகள் மலருகின்ற இளவேனில் பருவந்தானும் கரிய குயில்கள் கூவவும் தம்மனத்தோடுகூடிய வண்டுகள் யாழிசைபோன்று முரலா நிற்பவும் இதோ வந்துவிட்டது; காதலர் வாரார்-எம்முடைய காதலரோ இன்னும் வந்திலர் என்னும் மேதகு சிறப்பின் மாதர்ப் பாணி வரியொடு தோன்ற-என்னும்  பொருளமைந்த மேன்மை தக்கிருக்கின்ற சிறப்பையுடைய காதற்பண்ணாகிய வரிப்பாடலைப் பாடியவாறு அரசன்முன் தோன்றா நிற்ப; என்க.

(விளக்கம்) வீங்கு நீர்-கடல். வளைந்த கன்னட நாடு என வளைவை நாட்டிற்கேற்றுக. குலக்கு-குலத்திற்கு தகை-அழகு. அணி-ஒப்பனை குஞ்சி-ஆண் மயிர். மருள்-வியப்பு. மயக்கம் என்பாரும் உளர். ஒலியல்-தழைத்தல். மாலையர் என்னுமளவும் கூத்தரில் ஆடவரைக் கூறியபடியாம். மேலே அவர் தம் விறலியரைக் கூறுகின்றார். விறலியர்-விறல்பட நடிக்கும் மகளிர் இருங்குயில் என்பது முதல் காதலர் என்பது ஈறாக அக் கூத்தர் பாடிக்கொண்டு வந்த வரிப் பாடல் என்க. அதன் பொருள் காதல் ஆதலின் மாதர்ப்பாணி என்றார். மாதர்-காதல் எனவே காதற் பாட்டு என்பதாயிற்று. வரி-நாடகத் தமிழ்ப் பாடல்; உரு என்பதுமது, இக்காலத்தார் உருப்படி என்பர்.

குடகக்கூத்தர் வருகை

116-121: கோல்வளை.......தோன்ற

(இதன் பொருள்) கோல்வளை மாதே கோலங் கொள்ளாய்-திரண்ட வளையலணிந்த எம்பெருமாட்டியே விரைந்து நீ நின்னை அழகு செய்துகொள்வாயாக அஃது எற்றுக்கெனின்; கார்கடிது இடித்து உரறி வந்தது-முகிலோ கடிதாக இவித்து முழங்கிக்கொண்டு உதோ வானத்தின்கண் வந்தது, ஆதலால்; காலம் காணாய்-இதுவே நம் பெருமான் மீண்டுவருவதாக நம்பால் கூறிச்சென்ற காலம் என்பதை நினைத்துப் பார்ப்பாயாக; செய்வினை முடித்து காதலர் ஏறிய தேர் வந்தது என-தாம் கருதிச் சென்ற செய்வினையைச் செய்துமுடித்து நம் காதலர் ஏறிய தேர்தானும் வந்துவிட்டது, ஆதலால் என்னும் பொருளமைந்த; கா அர்க் குரவையொடு-கார்ப்பருவத்தே முல்லை நிலத்து மகளிர் பாடுகின்ற குரவைப் பாட்டைப் பாடியவண்ணம் வருகின்ற; கருங்கயல் நெடுங்கண் கோல் தொடி மாதரோடு குடகர் தோன்ற-கரிய கயல்போன்ற நெடிய கண்ணையும் திரண்ட வளையலையும் உடைய விறலியரோடு குட நாட்டுக் கூத்தர்தாமும் அம் மன்னவன் முன்னர்வந்து தோன்றாநிற்ப என்க.

(விளக்கம்) கோல்-திரட்சி. கோலம்-ஒப்பனை. காலம்-நம் பெருமான் குறித்துச் சென்ற காலம் என்பதுபட நின்றது. இது கார்ப்பருவத்தே பிரிவாற்றாமையால் வருந்துகின்ற தலைவியை ஆற்றுவிக்கும் பொருட்டுத் தோழியர் குரவைக் கூத்தாடுவார் கார் வரவும் தேர் வரவும் கண்டு தலைவிக்குக் கூறி ஆற்றுவித்ததாகப் பொருளமைந்த குரவைப்பாட்டு. இப் பாட்டினைப் பாடிய வண்ணம் வருகின்ற கூத்திய ரோடு குடகக் கூத்தர் வந்து தோன்றினர் என்க.

ஓவர் வருகை

122-124: தாழ்தரு............தோன்ற

(இதன் பொருள்) தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து வான் வினைமுடித்து-கண்டோர் மனம் தம்மிடத்தே தங்கிக்கிடத்தற்குக் காரணமான ஒப்பனையையுடைய தம் மகளிரோடே மகிழ்ச்சியினால் சிறப்புற்று வாளால் செய்யும் போர்த் தொழிலை வெற்றியுடன் முடித்து; மறவாள் வேந்தன் ஊழி வாழியர் என்று ஓவர் தோன்ற-வீரவாளை ஏந்திய வேந்தன் நீடூழி வாழ்க என்று வாழ்த்துக் கூறியவராய் ஓவர்கள் செங்குட்டுவன்முன் வந்து தொழாநிற்ப என்க.

(விளக்கம்) காதலன் மனம் தம்பால் தாழ்தருதற்குக் காரணமான கோலம் என்க. ஓவர்-ஏத்தாளர் பாடற் கீழ் மக்களுமாம். 

செங்குட்டுவன் செயல்

125-127: கூத்துள்..........இருந்துழி

(இதன் பொருள்) கூத்து உள்படுவோன் காட்டிய முறைமையின் ஏத்தினர்-இவ்வாறு கொங்கணக் கூத்தர் முதலாக ஓவர் ஈறாகத் தன்னைக் காணவந்த கூத்தர்கள் தம்முள் ஒவ்வொரு குழுவினர்க்கும் உரிய ஆடலாசிரியன் கற்பித்த முறைமைப்படி தன்னைப் புகழ்ந்து பாடி ஆடிய அக் கூத்தர்களுக்கெல்லாம் பரிசிலாக அறியா இருங்கலன் நல்கி-அவர்தாம் பண்டு எவ்விடத்தும் பெற்றறியாத பேரணிகலன்களை வழங்கி; வேந்து இனம் நடுக்கும் வேலோன் இருந்துழி-பகைமன்னர்களைத் தம் இனத்தோடே நடுங்கச் செய்கின்ற வெற்றிவேலேந்திய அச் சேரன் செங்குட்டுவன் இனிது வீற்றிருந்தபொழுது என்க.

(விளக்கம்) கூத்துள் படுவோன்-ஆடலாசிரியன். வேலோன்-செங்குட்டுவன்

செங்குட்டுவனுக்கு நண்பராகிய நூற்றுவர் கன்னர் வரவிடுத்தவை

128-140: நாடக.......இசைப்ப

(இதன் பொருள்) நாடக மகளிர் ஈர்ஐம்பத்து இருவரும்-நாடகக் கணிகை மகளிர் ஒருநூற்று இருவரும்; கூடு இசைக் குயிலுவர் இருநூற்று எண்மர்-ஒருங்கு குழுமிய குயிலுவக் கருவி இசைப்போர் இருநூற்று எண்மரும், தொண்னூற்று அறுவகைப் பாசண்டத் துறை நண்ணிய நகை வேழம்பர் நூற்றுவரும் தொண்ணூற்றாறு வகைப்பட்ட சமய சாத்திரத் துறைகளை நன்கு கற்றுத்தெளிந்த நகைப்பைத் தோற்றுவிக்கும் வேழம்பர் ஒரு நூற்றுவரும்; கொடுஞ்சி நெடுந்தேர் ஐம்பதிற்று இரட்டியும் கொடுஞ்சிறையையுடைய நூறு நெடிய தேர்களும்; கடுங்களி யானை ஓர் ஐஞ்னூறும்-மிக்க வெறியையுடைய ஐந்நூறு யானைகளும் ஐயீராயிரம் கொய்உளைப் புரவியும்-பதினாயிரம் கத்தரிகையால் கொய்து மட்டம் செய்யப்பட்ட பிடரிமயிரையுடைய குதிரைகளும்; எய்யா வடவளத்து இருபதினாயிரம் கண் எழுத்துப் படுத் தன கைபுனை சகடமும்-யாண்டும் காணப்படாது வடநாட்டின்கண் மட்டும் தோன்றுகின்ற வளமான சரக்குகளை அவற்றின் பெயர் அளவு முதலியன குறிக்கப்பட்ட மூடைகளை ஏற்றி அழகு செய்யப்பட்ட இருபதினாயிரம் வண்டிகளும்; சஞ்சயன் முதலாத் தலைக்கீடுபெற்ற கஞ்சுக முதல்வர் ஈர்ஐஞ்னூற்றுவரும்-சஞ்சயன் என்னும் தூதர் தலைவனையுள்ளிட்ட அரசவரிசையாகிய தலை அணி பெற்ற மெய்ப்பைபுக்க தலைவர்கள் ஓர் ஆயிரவரும்; சேய் உயர் வில் கொடி செங்கோல் வேந்தே-ஏனைய கொடிகளினும் காட்டில் மிகவும் உயரத்தே பறக்கின்ற விற்கொடியையும் செங்கோன்மையையும் உடைய வேந்தர் பெருமானே; வாயிலோர் என வாயில்வந்து இசைப்ப-நம்முடைய பாடிவீட்டின் முற்றத்திலே வந்து நிற்கின்றனர் என்று வாயில்காவலன் வந்து அரசனுக்குக் கூறாநிற்ப என்க.

(விளக்கம்) குயிலுவர்-இசைக் கருவி வசிப்பவர். தொண்ணூற்று அறுவகைப் பாசண்டத்துறை-தொண்ணூற்று அறுவகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை இதனைக் கனாத்திறம் உரைத்த காதையி(15ஆம் அடி) னும் விளக்கத்திலும் காண்க. நகை வேழம்பர்-நகைச்சுவைப்பட நடிக்கும் கூத்தர். எய்யாத என்னும் பெயரெச்சத்தீறு கெட்டது. வடவளம்-வடநாட்டில் விளையும் உணவுப்பொருள். தலைக்கீடு-அரசியலில் இன்ன தொழிலைச் செய்பவர் என்பதற்கு அறிகுறியாகிய தலைப்பாகை போன்ற அணி. கஞ்சுகம்-மெய்ப்பை(சட்டை) வாயில்: ஆகுபெயர். வாயில்காவலன் என்க.

சஞ்சயன் செங்குட்டுவனைக் காணுதல்

141-145: நாடக..........ஏத்தி

(இதன் பொருள்) நாடக மகளிரும் நலத்தகு மாக்களும் கூடு இசை குயிலுவக் கருவியாளரும் சஞ்சயன் தன்னொடு வருக ஈங்கு என-அதுகேட்ட மன்னவன் நாடக மகளிரும் ஏனைய கலை நலங்கெழுமிய மக்களும் பொருந்திய இசைக் கருவியாளர்களும் சஞ்சயனோடு வருவாராக இப்பொழுதே என்று கூறாநிற்ப; செங்கோல் வேந்தன் திருவிளங்கு அவையத்து சஞ்சயன் புகுந்து தாழ்ந்து பல ஏத்தி-செங்கோன்மையுடைய வேந்தனது பணிபெற்றபின் திருமகள் விளங்காநின்ற அவ்வரசவையின்கண் சஞ்சயன் என்னும் அத் தூதர்குழுத் தலைவன் புகுந்து அரசன் அடியில் வீழ்ந்து வணங்கி அவனுடைய பலவேறு புகழ்களையும் எடுத்தோதிய பின்னர் என்க.

(விளக்கம்) வாயிலோன் உரைத்தமை கேட்ட அரசன் அவரெல்லாம் இங்கு வருக என அவ் வாயிலோன் அச் செய்தியைத் தன்பால் வந்து அறிவிக்கக் கேட்ட சஞ்சயன் அவையத்துப் புகுந்து தாழ்ந்து ஏத்தினன் என்க.

சஞ்சயன் கூற்று

149-155: ஆணை..........வாழ்கென

(இதன் பொருள்) ஆணையில் புகுந்த ஈர்ஐம்பத்திருவரொடு மாண் வினையாளரை வகைபெறக் காட்டி-அரசனுடைய கட்டளை பெற்றுத் தன்னோடு வந்து புகுந்த நாடகமகளிர் ஒரு நூற்றிருவரோடே மாட்சிமை மிக்க கலைத்தொழிலாளர்களை மன்னனுக்கு வகை வகையாக இன்னின்ன கலையில் இன்னின்னவர் வல்லுநர் என அறிவித்தபின்னர் அரசனை நோக்கி; கோல் தொழில் வேந்தே-செங்கோன்மைத் தொழிலில் திறமிக்க சேரவேந்தனே; வேற்றுமையின்றி நின்னொடு கலந்த நூற்றுவர் கன்னரும்-ஒரு சிறிதும் மனவேற்றுமை இல்லாமல் நின்னோடு நட்புக்கொண்டுள்ள நூற்றுவர் கன்னரும் நினக்குக் கூறுமாறு பணித்த செய்தி ஒன்று உளது. அதனைக் கேட்டருளுக என்று கூறுபவன்; வடதிசை மருங்கின் வானவன் பெயர்வது கடவுள் எழுத ஓர் கற்கு ஆகின்-வடக்கு நோக்கிச் சேரமன்னன் செல்லுவது பத்தினித் தெய்வத்திற்குப் படிவம் பண்ணவேண்டிய கல்லின் பொருட்டே எனின்; யாம் ஓங்கி இமயத்து கல் கால்கொண்டு வீங்குநீர் கங்கை நீர்ப்படை செய்து-யாங்களே உயர்ந்த அவ்விமய மலைக்குச் சென்று அதன்பால் கல்லை அடிச்செய்து கைக்கொண்டு வந்து பெருகிய நீரையுடைய கங்கைப் பேரியாற்றின்கண் அதனை நீர்ப் படுத்தும் சடங்கினையும் செய்து முடித்து; ஆங்குத் தரும் ஆற்றலம் என்றனர்-பெருமானே நினது நாட்டிற்கே கொணர்ந்து தருகின்ற வலிமையை உடையேம் என்று இக் கருத்தினை நின்பால் அறிவித்திடுக என்று என்னை ஏவினர்; என்று வீங்குநீர் ஞாலம் ஆள்வோய் வாழ்க என-என்று அச் சஞ்சயன் வேந்தனுக்குக் கூறிக் கடல்சூழ்ந்த நில உலகம் முழுவதையும் ஆளுகின்ற பெருமானே நீ நீடூழி வாழ்க என்று வாழ்த்தியபின் என்க.

(விளக்கம்) ஐம்பத்திருவர் என்றது முன் கூறப்பட்ட நாடக மகளிரை மாண் வினையாளர் என்றது ஏனைய கலைஞரை. நூற்றுவர் கன்னர் என்போர் செங்குட்டுவனோடு கேண்மை பூண்டு ஒழுகும் வடநாட்டு மன்னர் என்க. வானவன்-சேரன். கற்கேயாயின் என்புழி ஏகாரம் பிரிநிலை. கல்லின் பொருட்டேயானால் பெருமான் அங்குப் போதல் வேண்டா, யாமே சென்று அக் கல்லைக் கொணர்ந்து தருவேம் என்பது இதனால் போந்த பொருள்.

செங்குட்டுவன் சஞ்சயனுக்குக் கூறுதல்

156-163: அடல்வேல்..........தாமென

(இதன் பொருள்) அடல்வேல் மன்னர் ஆர் உயிர் உண்ணும் கடல் அம் தானை காவலன் உரைக்கும்-கொலைத்தொழிலையுடைய வேல் ஏந்துகின்ற பகை மன்னருடைய மீண்டும் பெறுதற்கரிய உயிரைப் பருகுகின்ற கடல்போலும் பெரிய அழகிய படைகளையுடைய சேரன் செங்குட்டுவன் சஞ்சயன் கூறிய செய்திகேட்ட பின்னர்ச் சொல்லுவான்; ஆங்கு பாலகுமரன் மக்கள் மற்றவர் காவா நாவின் கனகனும் விசயனும்-தூதுவனே நம் படை யெழுச்சி கல்கோள் மட்டும் கருதியது அன்று, பின் எற்றுக் கெனின் அவ் வடநாட்டின்கண் பாலகுமரன் என்னும் ஓர் அரசனுடைய மக்கள் இருவர் உளர், மற்று அவர் தாமும் தமது நாவினைக் காத்துக்கொள்ளும் அறிவின்மை காரணமாகக் கனகனும் விசயனும் ஆகிய அவ் இருமடவோரும்; விருந்தின் மன்னர் தம் மொடுங் கூடி-புதுவோராகிய மன்னர் சிலரோடு கூடியிருந்து அளவளாவுங்கால்; அருந் தமிழ் ஆற்றல் அறிந்திலர் என-பிறரால் வெல்லுதற்கரிய தமிழ் மன்னருடைய பேராற்றலை இன்னும் அறிந்துகொள்ளாதவராய் இருக்கின்றனர் என்பது அவர் சொல்லட்டத்தால் தெரியவந்தது, ஆதலால், இச் சேனை கூற்றுங் கொண்டு செல்வது-அம் மடவோர்க்கு அருந்தமிழ் ஆற்றலை அறிவித்தற் பொருட்டு இத் தமிழ்ப்படை கூற்றத்தைத் தன்னோடு அழைத்துக்கொண்டு போவதாம், என்றான் என்க.

(விளக்கம்) அடல்-கொல்லுதல் மன்னர்-பகை மன்னர் காவலன்: செங்குட்டுவன். பால குமரன் மக்கள் இருவர் உளராம் கனகனும் விசயனும் என்பது அவர் பெயராம் அவர் தாம் விருந்தின் மன்னரொடு கூடி அளவளாவும் பொழுது அவர் கூறிய கூற்றுகளால் தமிழாற்றல் அறிந்திலர் என்பது தெரிய வந்தது என்றவாறு. எனவே தமிழ் மன்னரை அவர் இகழ்ந்தமையை மறைத்துப் பிறிதொரு வாய் பாட்டால் கூறினான் ஆயிற்று. எனவே இதற்கு யாமே போதல் வேண்டும் என்பது இதனாற் போந்த பயன் என்க.

இதுவுமது

164-165: நூற்றுவர்..............தாமென

(இதன் பொருள்) நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி தூதனே இச் செய்தியை நீ சென்று என் நண்பராகிய நூற்றுவர் கன்னர்க்கு அறிவித்து மேலும்; ஆங்குக் கங்கைப் பேரியாறு கடத்தற்கு ஆவன வங்கப் பெருநிரை தாம் செய்க என-அவ்விடத்திலுள்ள கங்கையாகிய பெரிய யாற்றினை நமது இப் பெரும் படை கடந்து அக்கரை சேர்தற்கு வேண்டியனவாகிய ஓடங்களின் பெரிய வரிசையை அந் நூற்றுவர் கன்னர்செய்து தருவராக என்று கூறா நிற்ப என்க.

(விளக்கம்) வங்கப் பெருநிரை-ஓடங்களின் பெரிய வரிசை. பெரும் படை கங்கையைக் கடக்க வேண்டுதலின் வங்கங்களின் வரிசையும் நீளமாக இருத்தல் வேண்டும் என அறிவித்தவாறாம் தாம் என்றது நூற்றுவர் கன்னரை.

தென்னவர் திறைப்பொருள் உய்த்தல்

166-172: சஞ்சயன்......பின்னர்

(இதன் பொருள்) சஞ்சயன் போனபின்-சஞ்சயன் அரசன்பால் விடைபெற்றுச் சென்றபின்னர்; எஞ்சா நாவினர் கஞ்சுக மாக்கள் ஈர் ஐஞ்ஞாற்றுவர்-தாம் கூறவேண்டிய கூற்றைக் குறை கிடப்பக் கூறாத நல்ல நாவன்மையை யுடையவராகிய மெய்ப்பை புக்க ஓராயிரம் தூதுவர்; தென்னர் இட்ட சந்தின் குப்பையும் தாழ்நீர் முத்தும் திறையொடு கொணர்ந்து-தென்னாட்டு மன்னவர் இறுத்த சந்தனக் குறட்டின் குவியலும் கடல்முத்தும் பிற திறைப் பொருளோடே கொணர; காவல் வேந்தன் கண் எழுத்தாளர்-காத்தல் தொழிலையுடைய வேந்தனாகிய சேரன் செங்குட்டுவனுடைய திருமந்திரவோலை எழுதும் எழுத்தாளர் அவை பெற்றுக்கொண்டமைக்கு; மண் உடை முடங்கல் அம் மன்னவர்க்கு அளித்து ஆங்கு-இலச்சினையிடப்பட்ட திருவோலையை அத் தென்னாட்டு மன்னவருக்கு அளித்தபொழுதே; ஆங்கு அவர் ஏகியபின்னர்-அவ்விடத்தினின்றும் அக் கஞ்சுக மாக்கள் சென்ற பின்னர் என்க.

(விளக்கம்) தென்னர்-சேரநாட்டுத் தென்பகுதியை ஆளுகின்ற மன்னர் எனினுமாம். இனிப் பாண்டிய மரபிலுள்ள மன்னர் எனினுமாம். தாழ் நீர் முத்து-கடலின்கட் படும் முத்து. கண்ணெழுத்தாளர் திருமந்திர ஓலை எழுதுவோர். வேந்தன்: செங்குட்டுவன். மன்னவர் தென்னர், அவர்-அக் கஞ்சுமாக்கள்.

செங்குட்டுவன் நீலகிரியினின்றும் புறப்பட்டுக் கங்கையைக் கடந்து வடநாட்டில் புகுதல்

172-181: மன்னிய........தன்முன்

(இதன் பொருள்) மன்னிய வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் ஓங்கிய நாடு ஆள் செல்வர் நல்வலன் ஏத்த-நிலைபெற்ற கடல்சூழ்ந்த உலகத்தை ஆள்பவனாகிய செங்குட்டுவன் வளத்தால் உயர்ந்த நாடுகள் பலவற்றையும் ஆள்கின்ற அரசர்கள் தனது சிறந்த வெற்றியைப் புகழ்ந்து பாராட்டா நிற்ப; பாடி இருக்கை நீங்கிப் பெயர்ந்து கங்கைப் பேர்யாற்றுக் கன்னரின் பெற்ற வங்கப் பரப்பின் வடமருங்கு எய்தி-தான் வீற்றிருந்த படைவீட்டினின்றும் புறப்பட்டுச் சென்று கங்கை என்னும் பெரிய யாற்று நீரை நூற்றுவர் கன்னரால் பெறப்பட்ட ஓடங்களின்மேல் ஏறிக்கடந்து அக் கங்கையின் வடகரையை அடைந்து; ஆங்கு அவர் எதிர்கொள அந்நாடு கழிந்து ஆங்கு ஓங்கு நீர் வேலி உத்தரம் மரீஇ-அவ் வடகரையின்கண் அந்நூற்றுவர் கன்னர் தன்னை எதிர்கொண்டு சிறப்புச் செய்யப் பின்னர் அந்த நாட்டையும் கடந்துபோய் அப்பாலுள்ள பெருகுகின்ற நீரையுடைய மருதப் பரப்பினையுடைய வடநாட்டினை எய்தி; பகைப்புலம் புக்கு-அப்பாலுள்ள பகைவருடைய நாட்டின்கண் புகுந்து; பாசறை இருந்த தகைப்பு அருந்தானை மற்வோன் தன்முன்-அவ்விடத்தே பாசறை அமைத்துத் தங்கியிருந்த பிறரால் தடுத்து நிறுத்துதல் அரிய படைகளையுடைய மற மன்னனாகிய அச் செங்குட்டுவன் முன்னர்; என்க.

(விளக்கம்) ஞாலமாள்வோன்: செங்குட்டுவன். வலன்-வெற்றி. பாடியிருக்கை-படை வீடு கன்னர்-தன் நண்பராகிய நூற்றுவர் கன்னர். கன்னரால் அமைத்துத் தரப்பெற்ற வங்கத்தின் மிகுதி தோன்ற வங்கப் பரப்பின் என்றார். அவர்-நூற்றுவர் கன்னர். நீர் வேலி-நீர் சூழ்ந்த மருதப் பரப்பு என்க.

செங்குட்டுவன் பகைமன்னர் வந்து எதிர்த்தல்

182-187: உத்தரன்.........மேல்வர

(இதன் பொருள்) உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன் வடதிசை மருங்கின் மன்னவர் எல்லாம்-உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன் என்னும் பெயரையுடைய அவ் வடதிசையின்கண் உள்ள பல்வேறு நாடுகளையும் ஆளுகின்ற அரசர் எல்லாம் ஒருங்கு குழுமி; கனக விசயர் கலந்த கேண்மையின் யாம் தென் தமிழ் ஆற்றல் காண்குதும் என-கனகனும் விசயனும் ஆகிய இரண்டு மன்னரோடும் பொருந்திய நட்புடைமை காரணமாக யாமெல்லாம் கூடிச்சென்று தென்றிசைக் கண்ணதாகிய தமிழ் மன்னனுடைய போராற்றலை அவனுடன் பொருது அளந்து காண்போம் என்று துணிந்து; நிலம் திரைத்தானையொடு நிகர்த்து மேல்வர-நிலவுலகத்தைச் சுருங்கிய தாக்குகின்ற பெரிய நாற்பெரும் படையொடு தம்மூள் ஒத்துச் செங்குட்டுவன்மேல் போருக்கு வர என்க.

(விளக்கம்) உத்தரன் முதலியவர் வடநாட்டு அரசர்கள்; கனக விசயரின் நண்பர்கள்; தென் தமிழ்: ஆகுபெயர்; தமிழ் அரசன் என்றவாறு. நிலம் திரைத்தானை-நிலத்தைச் சுருக்கிக் காட்டும் அளவு பெருகிய படை என்றவாறு. இதனோடு

பார் சிறுத்தலிற் படைபெ ருத்ததோ
படைபெ ருத்தலிற் பார்சி றுத்ததோ
நேர்செ றுத்தவர்க் கரிது நிற்பிடம்
நெடுவி சும்பலால் இடமு மில்லையே

எனவரும் கலிங்கத்துப் பரணிச் (348) செய்யுளையும் ஒப்பு நோக்குக. நிகர்த்து-மானம் ஊக்கம் இவற்றால் கனக விசயரை ஒத்து என்க நேர்வர எனினுமாம்.

செங்குட்டுவனின் போர்த்திறம்

(இதன் பொருள்) இரைதேர் வேட்டத்து எழுந்த அரிமா கரிமாப் பெருநிரைகண்டு உளம் சிறந்து பாய்ந்த பண்பின்-பகைமன்னர் வரவுகண்டு இரை தேர்தற்பொருட்டு வேட்கைக்கு எழுந்து வந்த ஒரு சிங்கமானது தன் எதிரே வருகின்ற யானையினது பெரிய வரிசையைக் கண்டு மனம் மிகவும் மகிழ்ந்து அவ்வியானைக் கூட்டத்தின்மேலே பாய்ந்த தன்மைபோல விரைந்து சென்று; பல்வேல் மன்னர் காஞ்சித் தானையொடு காவலன் மலைப்ப-பலவாகிய வேலையுடைய அவ்வரசர்களால் கொணரப்பட்ட எதிரூன்றிய அப் படைகளோடே சேரன் செங்குட்டுவன் தன் படைகளோடு சென்று போராற்றா நிற்ப என்க.

(விளக்கம்) அரிமா-சிங்கம். கரிமா-யானை. உளம் சிறந்து ஊக்கம் மிகுந்து எனினுமாம். மன்னர் என்றது உத்தரன் முதலியோரை காஞ்சித் தானை-எதிர் வந்து போர் செய்யும் படை. உட்காது எதிர் ஊன்றல் காஞ்சி, எனவரும் பழம் பாடலும் நோக்குக.

இதுவுமது

192-103: வெயிற்கதிர்........செறிய

(இதன் பொருள்) துகிற்கொடிப் பந்தர் வெயில் கதிர் விழுங்கிய இரு திறத்துப் படைகளினும் உயர்த்தப்பட்ட துகிலாலியன்ற கொடிகளின் பந்தல்கள் ஞாயிற்றின் வெயில் ஒளியை மறைத்தொழித்தன; வடித்தோல் கொடும்பறை வால்வளை நெடுவயிர் இடிக்குரல் முரசம் இழுமென் பாண்டில் உயிர்ப்பலி உண்ணும் உருமுக் குரல் முழக்கத்து மயிர்க்கண் முரசமோடு மாதிரம் அதிரவடித்த தோல் டோர்க்கப்பட்ட வளைந்த போர்ப்பறையும் வெள்ளிய சங்கும் நீண்ட கொம்பும் இடிபோன்று முழங்கும் போர் முரசமும் இழும் என்னும் ஓசையையுடைய கஞ்சக் கருவியும் உயிராகிய பலியை உண்ணுகின்ற இடிபோலும் ஒலியையுடைய மயிர் சீவாது போர்த்த கண்ணையுடைய வீரமுரசமும் ஆகிய இவையெல்லாம் ஒருங்குகூடி எட்டுத் திசைகளும் அதிரும்படி முழங்காநிற்பவும்; சிலைத்தோள் ஆடவர் செருவேல் தடக்கையர் கறைத்தோல் மறவர் கடுந்தேர் ஊருநர் வெண்டோட்டு யானையர் விரைபரிக் குதிரையர் மண்கண் கெடுத்த மாநிலப் பெருந்துகள்-வில்லையுடைய தேளையுடைய மறவரும் போர்வேலை ஏந்திய பெரிய கையையுடைய மறவரும் கருங்கடகுபற்றிய மறவரும் விரைந்தியங்கும் தேரின்கண் ஏறி ஊர்கின்ற மறவரும் வெள்ளிய மருப்புக்களையுடைய யானை ஊர்ந்துவரும் மறவரும் விரைந்த செலவினையுடைய குதிரை ஊர்ந்துவரும் மறவரும், மண்ணினது இடத்தைக் கிண்டிக் கொடுத்தலாலே இந்தப் பெரிய நிலத்தினின்றும் எழும் மிக்க துகள்கள்; களங்கொள் யானைக் கவிழ்மணி நாவும் விளங்குகொடி நந்தின் வீங்கு இசை நாவும்-களத்தில் புகுந்த போர்யானைகளுக்குக் கொடியிற்கட்டிய மிக்க இசையையுடைய சங்குகளின் நாக்களும்; நடுங்குதொழில் ஒழிந்து ஆங்கு ஒடுங்கி உள்செறிய-அசைந்து ஒலிக்கும் தொழில் ஒழிந்து ஒடுங்கும்படி அவற்றினுள்ளே புகுந்து நிறையா நின்ப என்க.

(விளக்கம்) கொடிப் பந்தர் கதிரை விழுங்கின என்றவாறு. வடித்தோல்-வடித்த தோல்; பதம் செய்த தோல் என்றவாறு. பறை-போர்ப்பறை. வளை-வெற்றிச் சங்கு. வயிர்-கொம்பு. முரசம்-போர் முரசம் என்பார் இடிக்குரல் முரசம் என்றார். பாண்டில்-வெண்கலத்தால் செய்த தாளம். அதன் ஒலி இழுமென்றிருக்கும் என்க. மயிர்க் கண் முரசம்-மயிர் சீவாது போர்த்த முரசம் என்க. மந்திரம்-திசை. சிலை-வில். கறைத்தோல்-ஒரு வகைக் கடகு. மண்கண் கெடுத்த என்பதற்கு மண்ணுலகத்தில் வாழும் உயிர்களின் கண்ணை அவித்த(துகள்) எனினுமாம். நந்தின் இசைநா என்றமையால் வெண்கலத்தால் சங்கு வடிவமாகச் செய்யப்பட்ட ஒரு வகை மணியின் நா எனக்கொண்டு இம் மணி கொடியின்கண் கட்டப்படும் ஆதலின் கொடி நந்தின் நா என்றார் எனக் கோடல் தகும். நந்து-சங்கு. துகள் செறிதலால், மணிகளின் நா இயக்கமின்றி உள் ஒடுங்கின என்க.

இதுவுமது

204-212: தாகும்......குவித்து

(இதன் பொருள்) தாரும் தாரும் தாம் இடைமயங்கத் தோளும் தலையும் துணிந்து வேறு ஆகிய-இருதிறத்துத் தூசிப்படைகளும் ஒன்றனூடு ஒன்று புக்குத் தம்முள் கைகலந்து போர் ஆற்றுதலாலே தோள்களும் கால்களும் துணிக்கப்பட்டு வேறுபட்டுக் கிடக்கின்ற; சிலைத்தோள் மறவர் உடல் பொறை அடுக்கத்து-வில்லையுடைய தோளையுடைய அம் மறவருடைய உடற்சுமைகளாலியன்ற மலைகளிலே ஏறி; எறிபிணம் இடறிய குறை உடல் கவந்தம் முன்னரே ஏறண்டுகிடக்கின்ற பிணங்களிலே கால் இடறுண்ட தலையற்ற உடலாகிய கவந்தங்கள்; பறைக்கண் பேய்மகள் பாணிக்கு ஆட-பறைபோன்ற கண்களையுடைய பெண் பேய்கள் தம் கையாலே புடைக்கின்ற தாளத்திற் கிணங்கக் கூத்தாடா நிற்பவும்; பிணம் சுமந்து ஒழுகிய நிணம்படு குருதியில் கணம் கொள் பேய்மகள் கதுப்பு இகுத்து ஆட-பிணங்களைச் சுமந்து கொண் டியங்குகின்ற நிணமாகிய நுரைகளையுடைய குருதிப் பேரியாற்றின்கண் கூட்டம் கூட்டமாகக் கூடியுள்ள பெண் பேய்கள் தமது கூந்தலைத் தாழ விட்டு நீராடி மகிழா நிற்பவும்; அடுந்தேர்த்தானை ஆரிய அரசன் கடும்படை மாக்களைக் கொன்று களம் குவித்து-பகைவரைக் கொல்லும் ஆற்றலுடைய தேர் முதலிய நாற்பெரும் படைகளையும் உடைய அவ் வடவாரிய மன்னருடைய கடிய படைமறவர்களையெல்லாம் கொன்று அவர் தம்முடலைப் போர்க்களத்தின்கண்ணே குவித்தமையாலே என்க.

(விளக்கம்) தார்-தூசிப்படை. உடற் பொறை-உடலாகிய சுமை தோளும் தாளும் வேறாகிய உடற் பொறை, எனவும் மறவர் உடற் பொறை எனவும் தனித்தனி கூட்டுக. அடுக்கம்-மலை எறி-பிணம்-வெட்டுண்ட பிணம். தலை துணிபட்ட பின்னரும் இயங்கும் கவந்தங்கள் பிணம் இடறுதலாலே தடையுண்டு நின்று ஆடின அவ்வாட்டம் களித்து ஆடும் பேய் மகளிர் கை கொட்டுகின்ற தாளத்திற் கியைந்தன என்றவாறு. பேய் மகளின் கண்ணுக்குப் பறையுவமை இதனோடு பேய்க் கண்ணன் பிளிறுகடி முரசம் எனவரும் பட்டினப் பாலையையும் நினைக. (234) நிணமாகிய நுரைபடு குருதியாகிய நீரில் என்க. இகுத்தல்-தாழ்த்துதல்; முழுகுவித்து என்றவாறு. குவித்து குவித்தலாலே, (217) ஆரிய அரசர் அறிய என இயையும்.

இதுவுமது

213-218: நெடுந்தேர்......வேந்தன்

(இதன் பொருள்) நெடுந்தேர்க் கொடுஞ்சியும் கடுங்களிற்று எருத்தமும் விடும்பரிக் குதிரையின் வெரிநும் பாழ்பட-தம்முடைய மறவர் வீற்றிருந்த நெடிய தேரின்கண் இருக்கையாகிய கொடுஞ்சியும், கடிய களிற்றியானையின் பிடரும் மறவர்களால் செலுத்தப்பட்டுப் பின்னர் அவர் வீழ்ந்தமையாலே தாமே செல்லும் செலவினையுடைய குதிரைகளின் முதுகும் பாழ்பட்டுக் கிடக்கும்படி; எருமைக் கடும்பரி ஊர்வோன் உயிர்த்தொகை ஒரு பகல் எல்லையின் உண்ணும் என்பது-வருமையாகிய கடிய குதிரையை ஊர்ந்து வருகின்ற கூற்றுவன் உயிர்த் தொகுதிகளை ஒரு நாள் ஒரு பொழுதின் அளவிலே உண்டொழிப்பன் என்னும் உண்மையை; ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய-கனகனும் விசயனும் முதலிய அவ் வாரியவரசர் அப் போர்க்களத்திலே நன்கு அறிந்துகொள்ளுமாறு; நூழில் ஆட்டிய சூழ்கழல் வேந்தன்-கொன்று குவிப்பதாகத் துணிந்து வீரக்கழல் அணிந்த மன்னவனாகிய சேரன் செங்குட்டுவன்; என்க.

(விளக்கம்) படை மாக்கள்-படை மறவர்; கொடுஞ்சி-தேரின் கண் தாமரை மலர் வடிவாகச் செய்தமைத்த இருக்கை. கொடுஞ்சியும் களிற்றெருத்தமும் குதிரை வெரிநும் தம் மேலிருந்த மறவர் இறந்து பட்டமையின் பாழ்பட்டன என்க. எருமையாகிய பரியூர்வோன்-கூற்றுவன். தமிழ்ப்படை கொணரும் கூற்றுவன்.........அறிய என்றவாறு. என்னை! அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் எனக் கூற்றங் கொண்டிச் சேனை செல்வது என்றானாதலின் அக் கூற்றமாகிய எருமைக்கடும்  பரியூர்வோன் என்பதே கருத்தாகக் கொள்க.

நூழில் ஆட்டிய-கொன்று குவிக்கக் கருதிய வேந்தன் என்க.

219-224: போந்தை.........படுதலும்

(இதன் பொருள்) போந்தையொடு தொடுத்த பருவத் தும்பை ஓங்கு இருஞ் சென்னி மேம்பட மலய-தன் அடையாளப் பூவாகிய பனம்பூவோடே விரவிக்கட்டிய செவ்வியையுடைய தும்பைப் பூவை மிகவும் உயர்ந்த தன் தலைமிசைச் சூட்டிக்கொண்டவளவிலே; வாய் வாளாண்மையின் வண் தமிழ் இகழ்ந்த காய் வேல் தடக்கைக் கனகனும் விசயனும்-தம் நாவையடக்கி வாளா திருக்கமாட்டாமையாலே வளவிய தமிழ் மன்னரின் போராற்றலை இகழ்ந்தவராகிய பகைவரைக் கொல்லும் வேலேந்திய பெரிய கையையுடைய கனகன் என்பவனும் விசயன் என்பவனுமாகிய ஆரிய மன்னரிருவரும்; ஐம்பத்து இருவர் கடுந்தேராளரொடு செங்குட்டுவன்தன் சினவலைப் படுதலும்-தம் நட்பினராகிய ஐம்பத்திரண்டு மறவர் கடிய செலவினையுடைய தேரினையுடைய யாரொடு வந்தவர் அப் போர்க் களத்தே செங்குட்டுவனுடைய சினமாகிய வலையினுள்ளெய்துதலும்; என்க.

(விளக்கம்) பருவத் தும்பை-செவ்வியையுடைய தும்பைப்பூ. தும்பைப்பூ போர்க்கறிகுறியாகச் சூடப்படும் இதனை

தும்பை தானே நெய்தலது புறனே
மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்று தலையழிக்கும் சிறப்பிற் றென்ப

என வருந் தொல்காப்பியத்தான் உணர்க.

ஈண்டுத் தம் மைந்து பொருளாக அருந்தமிழ் ஆற்றல் அறியா நிகழ்ந்து போர்செய்தற்கு வந்து எதிர்ந்த வேந்தரைச் செங்குட்டுவன் சென்று அவர்தம் தலைமை அழித்தலுணர்க. வாய்வாளாண்மை-வாய்வறிது இராமை என்பது அரும்பதவுரை வாயாகிய வாளின் ஆண்மை எனப் பொருள் கூறிப் பின்னும்; வாய் வாளாமை என்பது ஒன்றும் பேசாதிருத்தலாதலின் இச் சொல் அதனின் வேறாகும் என்பர் திரு நாட்டாரவர்கள்.

கனகனும் விசயனும் தமக்குத் துணையாகக் கடுந்தேர் மறவர் ஐம்பத்திருவருடன் வந்தெதிர்ந்தாராயினும் அவன் சினத்திற்காளான பொழுதே அஞ்சித் தப்புதற்குச் செய்த உபாயங்களை இனி அடிகளார் கூறுகின்றனர் தப்பிய போதலரிதாதலின் சினத்தை வலை என்றார்.

கனகவிசயர் முதலியோர் நிலைமை

225-230: சடையினர்...........படர்தர

(இதன் பொருள்) சடையினர் உடையினர் சாம்பல் பூச்சினர் பீடிகைப் பீலிப் பெருநோன்பாளர் பாடு பாணியர் பல் இயத்தோளினர் ஆடுகூத்தர் ஆகி-சடையை உடையவரும் துவராடை முதலிய துறவோர்க்கியன்ற ஆடைகளை உடுத்தவரும் சாம்பல் முதலிய சமயக் குறியீடுகளை மேற்கொண்டவரும் தருப்பை மான் தோல் முதலிய துறவோர் இருக்கைகளை யுடையவரும் மயிற்பீலியையும் உண்ணா நோன்பு முதலிய பெரிய நோன்புகளையும் உடைய பல்வேறு இன்னிசைக் கருவிகளையுடைய தோளையுடையவருமாகிய கூத்தாடுகின்ற கூத்தரும் என்று கூறப்பட்ட பல்வேறு கோலங்களையும் பூண்டவர்களாய்; ஏந்துவாள் ஒழியத் தாம் துறைபோகிய விச்சைக்கோலத்து வேண்டுவயின் படர்தர-தாம் போர்க்கு வந்தபொழுது தாம் ஏந்திவந்த வாள் முதலிய போர்க் கருவிகள் ஒழியத் தாம் தாம் பண்டு கற்றுவல்ல வித்தைகட்கேற்ற கோலங் கொண்டவராகித் தாம் தாம் வேண்டிய விடத்திற்குச் செல்லா நிற்ப. என்க.

(விளக்கம்) கனகவிசயருடன் வந்த அரசராகிய உத்தரன் முதலிய மன்னரும் அவர்தம் போர்மநவரும் போரிற்பட்டவர் கிடப்ப எஞ்சியவரெல்லாம் தாம் தாம் கொணர்ந்த போர்க் கருவிகளைக் கைவிட்டுச் சடை முதலியவற்றையுடைய துறவோரும் பாணரும் கூத்தரும் ஆகிய இன்னோரன்ன கோலம் புனைந்து அப் போர்க்களத்தினின்றும் தாம் விரும்பிய விடத்திற்கு ஓடிப்போயினர் என்றவாறு. இனி இக் காட்சியோடு கலிங்கத்துப்பரணியில் வருகின்ற வரைக்கலிங்கர் தமைச் சேர மாசை ஏற்றி, வன்தூறு பறித்த மயிர்க்குறையும் வாங்கி. அரைக் கலிங்கம் உரிப்புண்ட கலிங்கர் எல்லாம் அமணர் எனப் பிழைத்தாரும் அநேகர் ஆங்கே, எனவும் வேடத்தாற் குறையாது முந்நூலாக வெஞ்சிலை நாண் மடித்திட்டு விதியாற் கங்கை ஆடப் போந்தகப் பட்டேம் என்றே அரிதனைவிட்டுயிர் பிழைத்தார் அநேகர் ஆங்கே எனவும்வருந் தாழிசைகள் ஒப்பு நோக்கற்பாலன.

இனி, கம்பநாடர் தாமும் தம் காப்பியத்திற்கிணங்க-மீனாய் வேலையை யுற்றார் சிலர் சிலர் பசுவாய் வழிதொறு மேய்வுற்றார் ஊனார் பறவையின் வடிவுற்றார் சிலர் சிலர் நான்மறையவ ருருவானார் யானார் கண்ணிள மடவா ராயினர் முன்னே தங்குழல் வகிர்வுற்றாரானார் சிலர் சிலர் ஐயா! நின் சரணென்றார் நின்றவரரியென்றார் என வோதுதலும் ஈண்டு ஒப்புக் காணத்தகும்.

பீடிகை-முனிவர் இருக்கை (தருப்பை மான்றோல் முதலியன) விச்சை-வித்தை பீலிப் பெருநோன்பாளர்-சமணத் துறவோர் பாடு பாணியர்-பாணர். பல்லியத்தோளினர் என்றது-கூத்தரை துறைபோதல்-கற்றுமுதிர்தல்

வாளேருழவன் மறக்களம் வாழ்த்திப் பேயாடு பறந்தலை

231-241: கச்சை........பறந்தலை

(இதன் பொருள்) கச்சை யானைக் காவலர் நடுங்கக் கோட்டுமாப் பூட்டி வாள் கோலாக-கழுத்தின்கண் கயிற்றை உடைய யானைகளை உடைய படை மன்னர்கள் அச்சத்தால் நடுங்கும்படி மருப்புக்களை உடைய களிற்றியானைகளை எருமைக் கடாக்களாகப் பூட்டி வாளைக் கையின்கண் அக் கடாவைத் தூண்டும் கோலாகக் கொண்டு; ஆள் அழி வாங்கி அதரி திரித்த வாள் ஏருழவன் மறக் களம் வாழ்த்தி-பகை வீரர்களாகிய வைக்கோலை இழுத்துக் களத்திலே விட்டுக் கடாவிட்ட வாளாகிய ஏரை உடைய உழுதொழிலாளனாகிய சேரன் செங்குட்டுவனுடைய போர்க்களத்தின்கண் அவனது வெற்றிப் புகழை வாழ்த்தி; பேய் தொடியுடை நெடுங்கை தூங்கத் தூக்கி முடிஉடைக் கருந்தலை முந்துற ஏந்தி-பிணந்தின்னும் பேய்ப் பெண்டிர் வீர வலையம் அணிந்த மறவர்களுடைய நீண்ட கைகள் தூங்கும்படி தம்கையால் தூக்கி முடிக்கலன் அணிந்த கரிய மயிர் செறிந்த அம் மறவருடைய தலை முற்பட்டுத் தோன்றும்படி தம் கையில் ஏந்திக்கொண்டு அம் மகிழ்ச்சி காரணமாக; கடல் வயிறு கலக்கிய ஞாட்புங் கடல்அகழ் இலங்கையில் எழுந்த சமரமுங் கடல்வணன் தேர்ஊர் செருவும் பாடி அவன் பண்டு திருப்பாற்கடலைக் கடைந்தபொழுது உண்டான போர்ச் சிறப்பினையும் நான்கு திசைகளிலும் கடல்களையே அகழியாகக் கொண்ட இலங்கையின்கண் உண்டான அரக்கர்களின் போர்களத்தில் உண்டான வெற்றிப் புகழையும் கடல்போன்ற நில நிறமுடைய கண்ணபெருமான் விசயனுக்குத் தேர்ப்பாகனாயிருந்து நிகழ்த்திய பாரதப் போரினது சிறப்பினையும் பாடிக்கொண்டு; பேரிசை முதல்வனை முன்தேர்க் குரவை வாழ்த்தி-இவ்வாறு மூன்று பெரும்புகழையும் உடைய திருமாலாகிய சேரன் செங்குட்டுவன் என்னும் தலைவனுடைய தேரின் முன்னின்று குரவைப் பாட்களாலே வாழ்த்தி; பின் தேர்க்குரவை ஆடு பறந்தலை-மீண்டும் வாகைசூடிய அம் மன்னவனுடைய தேர் இயங்கும்பொழுதும் அதன்பின் நின்று அப் பேய்கள் குரவைக் கூத்தாடுதற்கிடனான அவ் வடநாட்டுப் போர்களத்தின்கண் என்க.

(விளக்கம்) கேட்டுமா-யானை. காவலர்-பகை மன்னர். ஆள்-வீரன். அழி-வைக்கோல். அதரி திரித்தல்-கடாவடித்தல் வாளேருழவன் என்றது செங்குட்டுவனை. பேய்தொடியுடைய எனக் கூட்டிக் கொள்க. தொடி-வீரவலையம் எனக் கொண்டு மறவர்கை எனக்கோடலே சிறப்பு. பேய் மறவர் உடலைத் தூக்குங்கால் அம் மறவர் கைகள் தூங்கவும் தலைமுந்துறவும் தூக்கின என்பது கருத்து. செங்குட்டுவனைத் திருமாலாகக் கருதி அவன் கடல் கலக்கிய புகழ் முதலிய மூன்று புகழையும் பாடி என்றவாறு. கடல்வண்ணன் தேரூர் செரு என்றது பாரதப்போரினை. இங்ஙனம் பாடுவது, பூவைநிலை என்னும் ஒரு புறத்துறை இதனை,

மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்
தாவா விழுப்புகழ்ப் பூவை நிலை

என வெட்சித்திணைப் புறனடையிற் கூறுவர் ஆசிரியர் தொல்காப்பியனார். முன்தேர்க் குரவை, பின்தேர்க் குரவை என்பன, தும்பைத் திணையில் வருகின்ற துறைகள்.

மறக்கள வேள்வி

242-247: முடித்தலை.............குட்டுவன்

(இதன் பொருள்) மறப்பேய் வாலுவன் முடித்தலை அடுப்பின் பிடர்த்தலைத் தாழித் தொடித்தோள் துடுப்பின் துழைஇய ஊன் சோறு-வீரமுடைய பேயாகிய மடையன் வீரமன்னர்களுடைய முடியணிந்த தலைகளை அடுப்பாகக் கோலி அவ்வடுப்பின் மேல் வீரர்களுடைய தொடியணிந்த கைகளை அகப்பைகளாகக் கொண்டு துழாவிச் சமைத்த ஊனாகிய சோற்றினை வயின் அறிந்து ஊட்ட-செவ்விதெரிந்து பேய்களுக்கு ஊட்டும்படி சிறப்பு ஊன் கடியினம் செங்கோல் கொற்றத்து அறக்களம் செய்தோன் ஊழி வாழ்க என-இவ்வாறு சிறப்பான ஊனாகிய உணவினை உண்டு மகிழ்ந்த அப் பேய்க்கூட்டங்கள் தனது செங்கோன்மை பிறழாவண்ணம் செய்த வெற்றியினாலே மறக்களமாகிய போர்க்களத்தையும் எமக்கு விருந்தூட்டி அறக்களமாகச் செய்தவனாகிய செங்குட்டுவன் நீடூழி வாழ்வானாக! என்று வாழ்த்தும்படி மறக்களம் முடித்த வாய்வாள் குட்டுவன்-வடநாட்டின்கண் தனது மறக்கள வேள்வியைச் செய்துமுடித்த வெற்றிவாய்த்த வீரவாளை ஏந்திய சேரன் செங்குட்டுவன் என்க.

(விளக்கம்) முடித்தலை............ஊட்ட என்னும் இப் பகுதியோடு

ஆண்டலையணங்கடுப்பின், வய வேந்த ரொண் குருதி. சினத்தீயிற் பெயர்பு பொங்கத், தெறலருங் கடுந்துப்பின், விறல் விளங்கிய விழுச்சூர்ப்பிற் றொடித் தோட்கை துடுப்பாக ஆடுற்றவூன் சோறு, நெறியறிந்த கடிவாலுவன், அடியொதுங்கிப் பிற்பெயராப், படையோர்க்கு முருகயர, (மதுரைக், 29-38) எனவரும் பகுதியை ஒப்பு நோக்குக. முடித்தலை என்றது பகை மன்னர் தலையை அடுப்பிற்கு வன்மை வேண்டுதலின் முடித்தலை எனல் வேண்டிற்று. தாழி-பானை. வாலுவன்-சமையற்காரன்; மடையன் என்பதும் அது. வயின் அறிதல்-செவ்விதெரிதல்;(பதம் பார்த்தல்) சிறப்பூண்-விருந்துணவு. கடி-பேய். பேய்கள் போர்களத்தையும் தங்களுக்கு ஊன் சோறு வழங்கு மாற்றால் அறக்களமாகச் செய்தான்; என்று வாழ்த்தின என்ற படியாம்.

செங்குட்டுவன் கல் கால் கொள்ளுதல்

248-254: வடதிசை..............காவலனுங்கென்

(இதன் பொருள்) வில்லவன் கோதையொடு வென்று வினைமுடித்த பல்வேல்தானைப் படை பல ஏவி-வில்லவன் கோதை என்னும் அமைச்சனோடே அவ் வடவாரிய மன்னர் பலரையும் போர் செய்து வென்று தாம் மேற்கொண்டு சென்ற வினையையும் முற்று வித்த பலவாகிய வேல் முதலிய படைக்கலங்களையுடைய மறவர்களோடே தேர் முதலிய படைகள் பலவற்றையும் செலுத்தி; கால் தூதாளரை-மேலும் காற்றுப்போல விரைந்து செல்லும் தூதுவர்களை அழைத்து நீவிர் விரைந்துபோய்; வடதிசை மருங்கின் மறைகாத்து ஓம்புநர் தடவுத்தீ அவியாத் தண்பெரு வாழ்க்கை போற்றிக் காமின் என-வடதிசையின் கண் இமயமலைச் சாரலிலே வாழ்கின்ற தமக்குரிய நான்கு மறைகளையும் ஓதி அவ்வாறு ஒழுகுமாற்றால் உலகத்திலுள்ள மன்னுயிர்களை நன்கு பாதுகாக்கின்ற அந்தணர்களது வேள்விக் குழியின்கண் வளர்கின்ற வேள்வித் தீயானது ஒருபொழுதும் அவியாத குளிர்ந்த பெரிய வாழ்க்கையை நம்மனோர் இடையூறு செய்யாவண்ணம் பேணிக் கொள்ளுமின் எனவும் சொல்லிவிட்டமையால்; காவலன் ஆங்கு பொன்கோட்டு இமயத்து-சேரமன்னனாகிய செங்குட்டுவன் பொன்னிறமாக மின்னுகின்ற கோடுகளைஉடைய இமயமலையின் கண்; பொரு அறு பத்தினிக் கல்கால் கொண்டனன்-தனக்குவமை யில்லாத திருமா பத்தினியாகிய கண்ணகிக் கடவுளுக்குத் திருவுருச் சமைத்தற்கு வேண்டிய கல்லை அடித்து எடுத்துக் கைப்பற்றினன் என்க.

(விளக்கம்) வில்லவன் கோதை என்பான், செங்குட்டுவனுக்கு முதலமைச்சன் ஆவான் என்பது, காட்சிக் காதையினும்(151) கண்டாம். வென்று வினை முடித்த தானை என்றது கனகவிசயர் முதலிய வடநாட்டரசரை வென்று தனது வஞ்சினத்தை முடித்த பேராற்றல் படைத்த தானை என்பது தோன்ற நின்றது.

இனி, நீலகிரியின் பக்கத்தில் தான் பாடி வீட்டின்கண் வீற்றிருந்த பொழுது விசும்பில் சென்ற சாரணர் தன் முன் வந்து தன்பால் அருமறை அந்தணர் ஆங்குளர் வாழ்வோர் பெருநில மன்னன் காத்தல் நின்கடன் என்று ஓம்படை செய்தமையை நினைவு கூர்ந்து தன் படை மறவரால் அவ்வந்தணருக்குத் தீங்கு நேராவண்ணம் தூதரை ஏவினன் என்றவாறு. இதனால் செங்குட்டுவனுடைய நினைவாற்றலும் கடமையுணர்ச்சியும் பொச்சாப்பின்மையும் ஆகிய நற்பண்புகள் விளங்குதல் உணர்க. பொருவது பத்தினி என்றது. உலகிலுள்ள பத்தினி மகளிருள் வைத்தும் தனக்குவமையாவார் ஒருவரும் இல்லாத திருமாபத்தினி என்பதுபட நின்றது.

பா-நிலமண்டில ஆசிரியப்பா

கால்கோட் காதை முற்றிற்று.
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 28, 2012, 08:32:37 AM
27. நீர்ப்படைக் காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அஃதாவது செங்குட்டுவன் இமய மலையினின்றும் எடுத்துக் கொணர்ந்த கல்லைக் கங்கைப் பேரியாற்றின்கண் நீர்ப்படை செய்தல் என்னும் சடங்கினை நிகழ்த்திய செய்தியைக் கூறும் பகுதி என்றவாறு.

இதன்கண் செந்தமிழ் நாட்டரசர் ஆற்றலறியாது இகழ்ந்துரைத்த கனகனும் விசயனும் ஆகிய இரண்டு அரசர்களின் முடிமேல் பத்தினிக்கல்லை ஏற்றுவித்துக் கங்கையாற்றின்கண் நீர்ப்படை செய்தலும் கங்கையின் தென்கரையில் வந்து படை வீட்டில் வீற்றிருந்து, நிகழ்ந்த போரின்கண் விழுப்புண் பட்டுத் துறக்க மெய்திய மறவர்களுடைய மைந்தர்களுக்குப் பொன்னாலியன்ற வாகைப்பூக்களை வழங்கி இருத்தலும், அங்கு வந்த மாடலன் என்னும் பார்ப்பனனால் தமிழ் நாட்டில் நிகழ்ந்த செய்திகளை அறிந்து கொள்ளுதலும் அப் பார்ப்பனனுக்குத் துலாபாரம் புகுதல் என்னும் பெருந்தானத்தைச் செய்தலும் தான் சிறை பிடித்து வந்த கனக விசயரைத் தன்னோடொத்த தமிழரசராகிய சோழனுக்கும் பாண்டியனுக்கும் காட்டி வருமாறு தன் கோத்தொழிலாளரொடு அம் மன்னரைப் போக்குதலும் பின்னர்த் தன் தலை நகரத்திற்குச் செல்லுதலும் பிறவும் கூறப்படும்

நீர்ப்படை என்பது, புறத்திணைத்துறைகளுள் ஒன்று. அது போரின்கண் புறங்கொடாது நின்று விழுப்புண் பட்டு விண்ணகம் புக்க வீரர்களை வழிபடுதற் பொருட்டுக் கல் எடுத்து அக் கல்லினைப் புண்ணிய நீரின்கண் மூழ்குவித்துத் தூய்மை செய்தலும், பின்னர் அக் கல்லின்கண் அவ் வீரருடைய பெயரும் பீடும் எழுதி நிறுத்தி மங்கல நீராட்டுதலும் ஆம்.

வீர மறவர்க்கியன்ற இம்முறை வீர பத்தினியாகிய கண்ணகிக்கும் பொருந்துமென்று கருதிச் செங்குட்டுவன் தனது பேராண்மை தோன்ற இமயத்தினின்றும் கொணர்ந்த அக் கல்லைக் கங்கையில் நீர்ப்படை செய்தனன் என்றுணர்க.

வட பேர் இமயத்து வான் தரு சிறப்பின்
கடவுள் பத்தினிக் கல் கால்கொண்ட பின்,
சின வேல் முன்பின் செரு வெங் கோலத்துக்
கனக- விசயர்- தம் கதிர் முடி ஏற்றி,
செறி கழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல்  5

அறியாது மலைந்த ஆரிய மன்னரை,
செயிர்த் தொழில் முதியோன் செய் தொழில் பெருக
உயிர்த் தொகை உண்ட ஒன்பதிற்று இரட்டி என்று,
யாண்டும், மதியும், நாளும், கடிகையும்,
ஈண்டு நீர் ஞாலம் கூட்டி எண்கொள;  10

வரு பெரும் தானை மறக்கள மருங்கின்,
ஒரு பகல் எல்லை, உயிர்த் தொகை உண்ட
செங்குட்டுவன் தன் சின வேல் தானையொடு
கங்கைப் பேர் யாற்றுக் கரை அகம் புகுந்து
பால் படு மரபில் பத்தினிக் கடவுளை 15

நூல் திறன் மாக்களின் நீர்ப்படை செய்து-
மன் பெரும் கோயிலும், மணி மண்டபங்களும்,
பொன் புனை அரங்கமும், புனை பூம் பந்தரும்,
உரிமைப் பள்ளியும், விரி பூஞ் சோலையும்,
திரு மலர்ப் பொய்கையும், வரி காண் அரங்கமும்,  20

பேர் இசை மன்னர்க்கு ஏற்பவை பிறவும்,
ஆரிய மன்னர் அழகுற அமைத்த
தெள்ளு நீர்க் கங்கைத் தென் கரை ஆங்கண்,
வெள்ளிடைப் பாடி வேந்தன் புக்கு-
நீள் நில மன்னர் நெஞ்சு புகல் அழித்து,  25

வானவ மகளிரின் வதுவை சூட்டு அயர்ந்தோர்;
உலையா வெஞ் சமம் ஊர்ந்து அமர் உழக்கி,
தலையும் தோளும் விலை பெறக் கிடந்தோர்;
நாள் விலைக் கிளையுள், நல் அமர் அழுவத்து,
வாள் வினை முடித்து, மறத்தொடு முடிந்தோர்;  30

குழிக் கண் பேய்மகள் குரவையின் தொடுத்து,
வழி மருங்கு ஏத்த, வாளொடு மடிந்தோர்;
கிளைகள்- தம்மொடு, கிளர் பூண் ஆகத்து
வளையோர் மடிய, மடிந்தோர்; மைந்தர்-
மலைத்துத் தலைவந்தோர் வாளொடு மடிய,  35

தலைத் தார் வாகை தம் முடிக்கு அணிந்தோர்;
திண் தேர்க் கொடுஞ்சியொடு தேரோர் வீழ,
புண் தோய் குருதியிற் பொலிந்த மைந்தர்;
மாற்று- அரும் சிறப்பின் மணி முடிக் கருந் தலை,
கூற்றுக் கண்ணோட, அரிந்து களம் கொண்டோர்;  40

நிறம் சிதை கவயமொடு நிறப் புண் கூர்ந்து,
புறம்பெற, வந்த போர் வாள் மறவர்-
வருக தாம் என, வாகைப் பொலந் தோடு
பெருநாள் அமயம் பிறக்கிடக் கொடுத்து,
தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்து,  45

பாடு துறை முற்றிய கொற்ற வேந்தன்,
ஆடு கொள் மார்போடு, அரசு விளங்கு இருக்கையின்;
மாடல மறையோன் வந்து தோன்றி,
வாழ்க, எம் கோ! மாதவி மடந்தை
கானல் - பாணி கனக- விசயர்- தம்   50

முடித் தலை நெரித்தது; முதுநீர் ஞாலம்
அடிப்படுத்து ஆண்ட அரசே, வாழ்க! என-
பகைப் புலத்து அரசர் பலர் ஈங்கு அறியா
நகைத் திறம் கூறினை, நான்மறையாள!
யாது, நீ கூறிய உரைப் பொருள் ஈங்கு? என-  55

மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும்:
கானல் அம் தண் துறைக் கடல் விளையாட்டினுள்
மாதவி மடந்தை வரி நவில் பாணியோடு,
ஊடல் காலத்து, ஊழ்வினை உருத்து எழ,
கூடாது பிரிந்து, குலக்கொடி- தன்னுடன்  60

மாட மூதூர் மதுரை புக்கு, ஆங்கு,
இலைத் தார் வேந்தன் எழில் வான் எய்த,
கொலைக் களப் பட்ட கோவலன் மனைவி,
குடவர் கோவே! நின் நாடு புகுந்து
வட திசை மன்னர் மணி முடி ஏறினள்.  65

இன்னும் கேட்டருள், இகல் வேல் தடக் கை
மன்னர் கோவே! யான் வரும் காரணம்
மா முனி பொதியின் மலை வலம் கொண்டு,
குமரி அம் பெரும் துறை ஆடி மீள்வேன்,
ஊழ்வினைப் பயன் கொல்? உரைசால் சிறப்பின்  70

வாய் வாள் தென்னவன் மதுரையில் சென்றேன்
வலம் படு தானை மன்னவன்- தன்னைச்
சிலம்பின் வென்றனள் சேயிழை என்றலும்,
தாது எரு மன்றத்து, மாதரி எழுந்து,
கோவலன் தீது இலன்; கோமகன் பிழைத்தான்; 75

அடைக்கலம் இழந்தேன்; இடைக் குல மாக்காள்!
குடையும் கோலும் பிழைத்தவோ? என,
இடை இருள் யாமத்து, எரிஅகம் புக்கதும்;
தவம் தரு சிறப்பின் கவுந்தி சீற்றம்
நிவந்து ஓங்கு செங்கோல் நீள் நில வேந்தன்  80

போகு உயிர் தாங்க, பொறைசால் ஆட்டி,
என்னோடு இவர் வினை உருத்ததோ? என,
உண்ணா நோன்போடு உயிர் பதிப் பெயர்த்ததும்;
பொன் தேர்ச் செழியன் மதுரை மா நகர்க்கு
உற்றதும்-எல்லாம் ஒழிவு இன்றி உணர்ந்து, ஆங்கு  85

என் பதிப் பெயர்ந்தேன் என் துயர் போற்றிச்,
செம்பியன் மூதூர்ச் சிறந்தோர்க்கு உரைக்க;
மைந்தற்கு உற்றதும், மடந்தைக்கு உற்றதும்,
செங்கோல் வேந்தற்கு உற்றதும் கேட்டு;
கோவலன் தாதை கொடுந் துயர் எய்தி,  90

மா பெரும் தானமா வான் பொருள் ஈத்து , ஆங்கு,
இந்திர-விகாரம் ஏழுடன் புக்கு, ஆங்கு,
அந்தர- சாரிகள் ஆறு- ஐம்பதின்மர்
பிறந்த யாக்கைப் பிறப்பு அற முயன்று,
துறந்தோர்- தம் முன் துறவி எய்தவும்; 95

துறந்தோன் மனைவி மகன் துயர் பொறாஅள்,
இறந்த துயர் எய்தி, இரங்கி மெய் விடவும்;
கண்ணகி தாதை கடவுளர் கோலத்து
அண்ணல் அம் பெரும் தவத்து ஆசீவகர் முன்
புண்ணிய தானம் புரிந்து, அறம் கொள்ளவும்;  100

தானம் புரிந்தோன் தன் மனைக் கிழத்தி
நாள் விடூஉ, நல் உயிர் நீத்து, மெய் விடவும்;
மற்று அது கேட்டு, மாதவி மடந்தை
நற்றாய் தனக்கு. நல் திறம் படர்கேன்;
மணிமேகலையை வான் துயர் உறுக்கும்  105

கணிகையர் கோலம் காணாதொழிக என,
கோதைத் தாமம் குழலொடு களைந்து,
போதித் தானம் புரிந்து, அறம் கொள்ளவும்;
என் வாய்க் கேட்டோ ர் இறந்தோர் உண்மையின்,
நல் நீர்க் கங்கை ஆடப் போந்தேன்;  110

மன்னர் கோவே, வாழ்க, ஈங்கு! என-
தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்த
வாடா வஞ்சி வானவர் பெருந்தகை,
மன்னவன் இறந்த பின், வளம் கெழு சிறப்பின்
தென்னவன் நாடு செய்தது ஈங்கு உரை என-  115

நீடு வாழியரோ, நீள் நில வேந்து! என,
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும் நின்
மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா,
ஒத்த பண்பினர், ஒன்பது மன்னர்
இளவரசு பொறாஅர்; ஏவல் கேளார்;  120

வள நாடு அழிக்கும் மாண்பினர்; ஆதலின்,
ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்து, அவன்
பொன் புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்!
பழையன காக்கும் குழை பயில் நெடுங் கோட்டு
வேம்பு முதல் தடிந்த, ஏந்து வாள் வலத்து,  125

போந்தைக் கண்ணிப் பொறைய! கேட்டருள்
கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன்
பொன் தொழில் கொல்லர் ஈர்- ஐஞ்ஞாற்றுவர்
ஒரு முலை குறைத்த திரு மா பத்தினிக்கு,
ஒரு பகல் எல்லை, உயிர்ப் பலி ஊட்டி,  130

உரை செல வெறுத்த மதுரை மூதூர்
அரைசு கெடுத்து அலம் வரும் அல்லல் காலை,
தென் புல மருங்கின், தீது தீர் சிறப்பின்,
மன்பதை காக்கும் முறை முதல் கட்டிலின்,
நிரை மணிப் புரவி ஓர் ஏழ் பூண்ட   135

ஒரு தனி ஆழிக் கடவுள் தேர்மிசைக்
காலைச் செங் கதிர்க் கடவுள் ஏறினன் என,
மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்;
ஊழிதொறு ஊழி உலகம் காத்து,
வாழ்க, எம் கோ! வாழிய, பெரிது! என- 140

மறையோன் கூறிய மாற்றம் எல்லாம்
இறையோன் கேட்டு, ஆங்கு, இருந்த எல்லையுள்;
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் விழுங்க,
பகல் செல, முதிர்ந்த படர் கூர் மாலை,
செந் தீப் பரந்த திசை முகம் விளங்க,  145

அந்திச் செக்கர், வெண் பிறை தோன்ற;
பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க;
இறையோன் செவ்வியில் கணி எழுந்து உரைப்போன்,
எண் நான்கு மதியம், வஞ்சி நீங்கியது;
மண் ஆள் வேந்தே வாழ்க! என்று ஏத்த-  150

நெடுங் காழ்க் கண்டம் நிரல் பட நிரைத்த
கொடும்பட நெடு மதில் கொடித் தேர் வீதியுள்,
குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன
உறையுள் முடுக்கர் ஒரு திறம் போகி,
வித்தகர் கைவினை விளங்கிய கொள்கைச்  155

சித்திர விதானத்துச், செம் பொன் பீடிகை,
கோயில், இருக்கைக் கோமகன் ஏறி,
வாயிலாளரின் மாடலன் கூஉய்,
இளங்கோ வேந்தர் இறந்ததன் பின்னர்,
வளம் கெழு நல் நாட்டு மன்னவன் கொற்றமொடு  160

செங்கோல் தன்மை தீது இன்றோ? என-
எம் கோ வேந்தே, வாழ்க! என்று ஏத்தி,
மங்கல மறையோன் மாடலன் உரைக்கும்
வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப,
எயில் மூன்று எறிந்த இகல் வேல் கொற்றமும்;  165

குறு நடைப் புறவின் நெடுந் துயர் தீர,
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க,
அரிந்து உடம்பு இட்டோ ன் அறம் தரு கோலும்;
திரிந்து வேறாகும் காலமும் உண்டோ?
தீதோ இல்லை, செல்லற் காலையும்,  170

காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு என்று
அரு மறை முதல்வன் சொல்லக் கேட்டே-
பெருமகன் மறையோன் பேணி, ஆங்கு, அவற்கு
ஆடகப் பெரு நிறை ஐ-ஐந்து இரட்டி,
தோடு ஆர் போந்தை வேலோன், தன் நிறை  175

மாடல மறையோன் கொள்க என்று அளித்து- ஆங்கு,
ஆரிய மன்னர் ஐ- இருபதின்மரை,
சீர் கெழு நல் நாட்டுச் செல்க என்று ஏவி-
தாபத வேடத்து உயிர் உய்ந்துப் பிழைத்த
மா பெரும் தானை மன்ன-குமரர்;   180

சுருளிடு தாடி, மருள் படு பூங் குழல்,
அரி பரந்து ஒழுகிய செழுங் கயல் நெடுங் கண்,
விரி வெண் தோட்டு, வெண் நகை, துவர் வாய்,
சூடக வரி வளை, ஆடு அமைப் பணைத் தோள்,
வளர் இள வன முலை, தளர் இயல் மின் இடை,  185

பாடகச் சீறடி, ஆரியப் பேடியோடு;
எஞ்சா மன்னர் இறை மொழி மறுக்கும்
கஞ்சுக முதல்வர் ஈர்-ஐஞ்ஞாற்றுவர்,
அரி இல் போந்தை அருந்தமிழ் ஆற்றல்
தெரியாது மலைந்த கனக விசயரை   190

இரு பெரு வேந்தர்க்குக் காட்டிட ஏவி-
திருந்து துயில் கொள்ளா அளவை, யாங்கணும்,
பரம்பு நீர்க் கங்கைப் பழனப் பாசடைப்
பயில் இளந் தாமரை, பல் வண்டு யாழ்செய,
வெயில் இளஞ் செல்வன் விரி கதிர் பரப்பி,  195

குண திசைக் குன்றத்து உயர்மிசைத் தோன்ற;
குட திசை ஆளும் கொற்ற வேந்தன்
வட திசைத் தும்பை வாகையொடு முடித்து,
தென் திசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு-
நிதி துஞ்சு வியன் நகர், நீடு நிலை நிவந்து  200

கதிர் செலவு ஒழித்த கனக மாளிகை,
முத்து நிரைக் கொடித் தொடர் முழுவதும் வளைஇய
சித்திர விதானத்து, செய் பூங் கைவினை,
இலங்கு ஒளி மணி நிரை இடைஇடை வகுத்த
விலங்கு ஒளி வயிரமொடு பொலந் தகடு போகிய,  205

மடை அமை செறிவின், வான் பொன் கட்டில்,
புடை திரள் தமனியப் பொன் கால் அமளிமிசை,
இணை புணர் எகினத்து இள மயிர் செறித்த
துணை அணைப் பள்ளித் துயில் ஆற்றுப்படுத்து- ஆங்கு,
எறிந்து களம் கொண்ட இயல் தேர்க் கொற்றம்  210

அறிந்து உரை பயின்ற ஆயச் செவிலியர்,
தோள்-துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக என,
பாட்டொடு தொடுத்து, பல் யாண்டு, வாழ்த்தச்
சிறு குறுங் கூனும் குறளும் சென்று,
பெறுக நின் செவ்வி; பெருமகன் வந்தான்; 215

நறு மலர்க் கூந்தல் நாள் அணி பெறுக என-
அமை விளை தேறல் மாந்திய கானவன்
கவண் விடு புடையூஉக் காவல் கைவிட,
வீங்கு புனம் உணீஇய வேண்டி வந்த
ஓங்கு இயல் யானை தூங்கு துயில் எய்த,  220

வாகை, தும்பை, வட திசைச் சூடிய
வேக யானையின் வழியோ, நீங்கு என,
திறத்திறம் பகர்ந்து, சேண் ஓங்கு இதணத்து,
குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்-
வட திசை மன்னர் மன் எயில் முருக்கிக்  225

கவடி வித்திய கழுதை ஏர் உழவன்,
குடவர் கோமான், வந்தான்; நாளை,
படு நுகம் பூணாய், பகடே! மன்னர்
அடித் தளை நீக்கும் வெள்ளணி ஆம் எனும்
தொடுப்பு ஏர் உழவர் ஓதைப் பாணியும்  230

தண் ஆன் பொருநை ஆடுநர் இட்ட,
வண்ணமும், சுண்ணமும், மலரும், பரந்து;
விண் உறை வில் போல் விளங்கிய பெரும் துறை,
வண்டு உண மலர்ந்த, மணித் தோட்டுக் குவளை
முண்டகக் கோதையொடு முடித்த குஞ்சியின்  235

முருகு விரி தாமரை முழு மலர் தோய,
குருகு அலர் தாழைக் கோட்டு மிசை இருந்து,
வில்லவன் வந்தான்; வியன் பேர் இமயத்துப்
பல் ஆன் நிரை யொடு படர்குவிர் நீர் என,
காவலன் ஆன் நிரை நீர்த்துறை படீஇ,  240

கோவலர் ஊதும் குழலின் பாணியும்
வெண் திரை பொருத வேலை வாலுகத்துக்
குண்டு நீர் அடைகரைக் குவை இரும் புன்னை,
வலம்புரி ஈன்ற நலம் புரி முத்தம்
கழங்கு ஆடு மகளிர் ஓதை ஆயத்து  245

வழங்கு தொடி முன்கை மலர ஏந்தி,
வானவன் வந்தான், வளர் இள வன முலை
தோள் நலம் உணீஇய; தும்பை போந்தையொடு
வஞ்சி பாடுதும், மடவீர்! யாம் எனும்
அம் சொல் கிளவியர் அம் தீம் பாணியும்  250

ஓர்த்து உடன் இருந்த கோப்பெருந்தேவி
வால் வளை செறிய, வலம்புரி வலன் எழ,
மாலை வெண்குடைக்கீழ், வாகைச் சென்னியன்
வேக யானையின் மீமிசைப் பொலிந்து,
குஞ்சர ஒழுகையிற் கோநகர் எதிர்கொள, 255

உரை

செங்குட்டுவன் கனகவிசயர் முடித்தலையில் கல்லேற்றி வஞ்சினம் முடித்தது

1-13: வடபேரி..............செங்குட்டுவன்

(இதன் பொருள்) செறிகழல் வேந்தன்-செறியக் கட்டிய வீரக்கழலை உடைய மன்னனாகிய சேரன் செங்குட்டுவன்; வடபேர் இமயத்து வான்தரு சிறப்பின் கடவுள் பத்தினிக் கல்கால் கொண்டபின்-வடதிசைக் கண்ணதாகிய பெரிய இமயமலையின் கண் மழை தருவதற்கியன்ற பெருஞ் சிறப்பினை உடைய கடவுளாகிய வீரபத்தினிக்குப் படிவம் சமைத்தற்கு வேண்டிய கல்லை வரை செய்து கைக்கொண்ட பின்னர்; சினவேல் முன்பின் செருவெம் கோலத்துக் கனகவிசயர்தம் கதிர்முடி-ஏற்றி-வெகுளுதற்குக் காரணமான வேற்படையையும் ஆற்றலையும் போர் செய்தற்குரிய வெவ்விய கோலத்தையும் உடைய கனகனும் விசயனுமாகிய அவ்வரசர் ஒளிபொருந்திய முடிக்கலனணிந்த தலையின்மேல் ஏற்றிவைத்து; செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக-கொலைத்தொழிலை உடைய பழையவனாகிய கூற்றுவன் தான் செய்துவருகின்ற அக் கொலைத் தொழில் மிகும் படி; உயிர்த்தொகை உண்ட-இவ்வுலகத்து உயிர்க்கூட்டங்களை உண்டொழித்த போர்கள்; ஒன்பதிற்று இரட்டி என்று யாண்டும் மதியும் நாளும் கடிகையும் கூட்டி ஈண்டு நீர் ஞாலம் எண் கொள-பதினெட்டு என்று ஓர் எண்ணை நிறுத்தி அதனோடு யாண்டினையும் திங்களையும் நாளையும் நாழிகையையும் கூட்டிக் கடல்சூழ்ந்த இவ்வுலத்திலுள்ள மாந்தர்கள் எண் குறிக்கும்படி; தென் தமிழ் ஆற்றல் அறியாது மலைந்த ஆரிய மன்னரை-தென் திசைக்கண்ணதாகிய தமிழகத்து மறவர்களுடைய பேராற்றலின் சிறப்பினை அறியாமையால் அக் கனகவிசயருக்குத் துணையாக வந்து போர்புரிந்த உத்தரன் முதலிய வடவாரிய மன்னரும்; வருபெருந்தானை உயிர்த்தொகை மறக்கள மருங்கின் ஒரு பகல் எல்லை உண்ட செங்குட்டுவன்-அம் மன்னரோடு வந்த நாற்பெரும் படைகளும் ஆகிய உயிர்க் கூட்டங்களைப் போர்களத்தின்கண் ஒரு நாளினது ஒரு பகலினுள்ளும் பதினெட்டும் நாழிகைக்குள் கொன்று குவித்த சேரன் செங்குட்டுவன் என்க.

(விளக்கம்) பேரிமயம்-மலைகளுள் வைத்துப் பெரிய மலையாகிய இமயம் என்றவாறு. வான்: ஆகுபெயர்; மழை என்க. துறக்கம் தரும் சிறப்பு என்பது சிறப்பின்று. கனகவிசயர் முடியின்மேல் கல்லேற்றி வருகுவல் என்பது தான்செய்த வஞ்சினமாதலின் அவ்வாறே அவ்வரசர் முடிமேல் கல்லேற்றினன் என்பது கருத்து. தமிழாற்றல்-தமிழ் மறவர் போராற்றல்-ஆரியமன்னரும் அவரொடு வருபெரும்-தானையும் ஆகிய உயிர்தொகையை உண்ட என்க. திருமாலாகிய செங்குட்டுவன் கூற்றுவன் தொழில் பெருகும்படி உயிர்த்தொகையை உண்ட போர்கள் நான்கு. அவற்றுள் முதலாவது பதினெட்டு யாண்டுகளிலும், இரண்டாவது பதினெட்டுத் திங்களினும், மூன்றாவது பதினெட்டு நாளினும், நான்காவது பதினெட்டு நாழிகையினும் நிகழ்ந்தன என்று உலகத்தார் கூறும்படி வடவாரியரோடு செய்த போர் பதினெட்டு நாழிகையில் முடிவுற்றது என்பது கருத்து, எனவே இது பூவை நிலை என்னும் ஒருபுறத்திணைத்துறை என்றுணர்க, செயிர்த்தொழில் முதியோன் என்றது கூற்றுவனை திருமால் செய்த போர்களாவன :

1-மோகினியாகித் தேவாசுரப் போரை மூட்டி நிகழ்த்தியது.
2-இராமனாகி இலங்கையில் அரக்கரோடு செய்த போர்.
3-கண்ணனாகி நிகழ்த்திய பாரதப்போர்.
4-செங்குட்டுவனாகி வடவாரியரோடு செய்த போர். இவை நிரலே பதினெட்டு யாண்டும் திங்களும் நாளும் நாழிகையும் ஆகிய காலத்தில் நிகழ்ந்தன என்பது கருத்து.

செங்குட்டுவன் பத்தினிக் கல்லைக் கங்கையில் நீர்ப்படை செய்து தென்கரை எய்துதல்

13-24: தன்சினவேல்............புக்கு

(இதன் பொருள்) தன்சின வேல் தானையொடு கங்கைப் பேர்வாற்றுக் கரை அகம் புகுந்து-(செங்குட்டுவன்) தனது வெகுளி மிக்க வேல் ஏந்திய போர் மறவர் முதலிய பெரும் படையோடு அவ் வடதிசையினின்றும் மீண்டு கங்கை என்னும் பேரியாற்றினது கரையகத்தே வந்தெய்தி; பத்தினிக் கடவுளை நூல் திறன் மக்களின் நீர்ப்படை பால்படு மரபின் செய்து-திருமாபத்தினிக்குச் சமைத்த கடவுள் படிமத்தை மெய் நூற் கல்வித்திறன் மிக்க அந்தணர்களைக் கொண்டு நீர்ப்படுத்தும் பகுதியின்பாற்பட்ட முறைமையோடே தெய்வத் தன்மைமிக்க அக் கங்கையாற்றிலேயே நீப்படுத்துதலாகிய மக்கலச் சடங்கினைச் செய்து முடித்துப் பின்னர்; மன் பெருங்கோயிலும் மணிமண்டபங்களும் பொன்புனை அரங்கமும் புனைபூம் பந்தரும்-மன்னன் கொலுவீற்றிருத்தற்குரிய பெரிய அத்தாணி மண்டபமும் அழகிய பிறநண்டபங்களும் பொன்னால் அழகு செய்யப்பட்ட கலை அரங்கங்களும் அழகு செய்யப்பட்ட பூங்கொடிப் பந்தர்களும்; உரிமைப் பள்ளியும் விரிபூஞ்சோலையும் திருமலர்ப் பொய்கையும் வரிகாண் அரங்கமும்-அரசர்குரிய துயில்கொள்ளும் பள்ளி யாரையும் அவர் விளையாடுதற்குரிய பரந்த பூம்பொழிலும் நீராடுதற்குரிய தாமரை மலரை உடைய நீர்நிலையும் கூத்தாட்டுக் கண்டு மகிழ்தற்குரிய மன்றமும்; பேர்இசை மன்னர்க்கு ஏற்பவை பிறவும்-பெரும்புகழ் பெற்ற மன்னர் தங்கியிருத்தற்கு வேண்டுவனவாகிய பிறவும்; ஆரிய மன்னர் அழகுஉற அமைத்த தெள்ளுநீர்க் கங்கைத் தென்கரை ஆங்கண்-தன்பால் நட்புரிமை உடைய ஏனைய ஆரிய மன்னர்கள் ஒருங்கு குழுமித் தன் பொருட்டாக அழகுமிகும்படி அமைத்து வைத்துள்ள தெளிந்த நீரை உடைய அக் கங்கையாற்றினது தென்கரையாகிய அவ்விடத்தே; வெள்ளிடைப்பாடி வேந்தன் புக்கு-ஒரு வெட்டவெளியின் கண்ணதாகிய படவீட்டின்கண்ணே அச் சேரன் செங்குட்டுவன் புகுந்தருளி, என்க.

(விளக்கம்) நீர்ப்படை பாற்படு மரபின் செய்து எனக் கூட்டுக. நூற்றிறன் மாக்கள் என்றது சடங்கறிந்த அந்தணரை. பெருங்கோயில் என்றது அத்தாணி மண்டபத்தை. மணிமண்டபங்கள் என்றது அரசர்க்கு வேண்டிய பிற மண்டபங்களை. அரங்கம் என்றது இசை இயல் முதலிய கலைமன்றங்களை. உரிமைப்பள்ளி என்றது அரசன் புறப் பெண்டிர் பணிசெய்யுமாறு துயிலும் பள்ளி அறையை. போர்மேற் சென்ற அரசர்க்குப் புறப்பெண்டிர் பணிசெய்தலை முல்லைப் பாட்டில் காண்க, வரிகாண் அரங்கம்-கூத்தாடல் காணும் இடம். ஆரிய மன்னர் செங்குட்டுவனோடு கேண்மை ஆரிய மன்னர்கள் வெள்ளிடைப்பாடி-வெட்டவெளியிலே கட்டி அமைத்த படவீடுகள் (கூடாரங்கள்)

செங்குட்டுவன் போரில் விழுப்புண் பட்டு மடிந்த மறவர் மைந்தர்க்குப் பரிசில் நல்குதல்

25-34: நீணில.......மைந்தர்

(இதன் பொருள்) நீள் நில மன்னர் நெஞ்சு புகல் அழித்து வானவ மகளிரின் வதுவை சூட்டயர்ந்தோர்-நெடிய நில உலகத்தை ஆளுகின்ற பகை மன்னருடைய நெஞ்சின்கண் செருக்கினை யொழித்து அப் பகைவருடைய படைக்கலன்களால் விழுப்புண் பட்டு உயிர் நீத்து வீரமறவர்க்குரிய துறக்கமெய்தி ஆங்கு வானவர் மகளிரால் மணமாலை சூட்டப்பெற்ற மறவரும்; உலையா வெம்சமம் ஊர்ந்து அமர் உழக்கித் தலையும் தோளும் விலைபெறக் கிடந்தோர்-புறங்கொடாத வெவ்விய பகைவருடைய போர்க் களத்தின்கண்ணே தமியராய் முன்னேறிச்சென்று தம் போராற்றலாலே பகைவரைப் பெரிதும் கலக்கி அப் பகைவருடைய வாளேறுண்டு தம் தலையும் தோளும் துணியுண்டு அவை விலைபெறும்படி களத்திலே மாண்டு கிடந்த மறவரும்; நாள் விலைக் கிளையுள் நல் அமர் அழுவத்து வாள்வினை முடித்து மறத்தொடு முடிந்தோர்- தமது வாழ்நாளைப் புகழுக்கு விலையாகக் கொடுக்கின்ற தம்மை ஒத்த மறக்குடிப் பிறந்த தம் உறவினராகிய மறவர்களோடே கூடிப் பெரிய போர்க்களத்தினூடே புகுந்து வாட்போரை வெற்றியோடே செய்து முடித்து வீரத்தோடே புறக்கிடாது நின்று உயிர்துறந்த மறவோரும்; குழி கண் பேய்மகள் குரவையில் தொடுத்து வழிமருங்கு ஏத்த வாளொடு மடிந்தோர்-உள்குழிந்த கண்ணையுடைய பேய்மகளிர் மகிழ்ந்து ஆடுகின்ற குரவைக் கூத்தின்கண் தாம் பாடுகின்ற பாட்டிற்குப் பொருளாகும்படி தம் புகழைப் புனைந்து தம் கால்வழித் தோன்றல்களையும் வாழ்த்தும்படி கைவாளினோடு போர்க்களத்திலே மடிந்தொழிந்த மறவர்களும்; கிளைகள் தம்மொடு கிளர்பூண் ஆகத்து வளையோர் மடிய மடிந்தோர் மைந்தர்-தம் சுற்றத்தாரோடு ஒளிர்கின்ற அணிகலன் அணிந்த உடம்பினோடு வளையலணிந்த தம் காதலிமாரும் இறந்தொழியும்படி போர்க்களத்திலே மடிந்த மறவருடைய மைந்தரும் என்க.

(விளக்கம்) மன்னர்-பகை மன்னர். புகல்-செருக்கு. போர்க்களத்திலே புறமிடாது நின்று பட்ட மறவரை வானவர் மகளிர் பெரிதும் காதலித்து மணமாலை சூட்டி வரவேற்பர் என்பதுபற்றி இறந்துபட்ட மறவரை வானவ மகளிரின்..........அயர்ந்தோர் என்றளர். உலையா-புறங்கொடாத. ஊர்ந்தமர் உழக்குதல்-அமரில் முன்னேறிச் சென்று பகைவரைக் கலக்குதல். புறக்கிடாமையால் மறத்தொடு முடித்தோர் என்றார், தாம் மடிந்தமை கேட்டால் அப்பொழுதே தம் கிளைஞரும் காதலிமாரும் மடிவர் என்பது அறிந்திருந்தும் அவர் பொருட்டுப் புறக்கிடாமல் வீரத்தின் பொருட்டு மடிந்த மறவருடைய மைந்தர் என்றவாறு.

இதுவுமது

35-47: மலைத்து............இருக்கையின்

(இதன் பொருள்) மலைத்துத் தலைவந்தோர் வாளொடு மடியத் தலைத்தார் வாகை தம்முடிக்கு அணிந்தோர்-போர்க்களத்தின்கண் தம்மோடு எதிர்த்து முன்னேறிவந்த பகை மறவர் தமது வாளோடு மடிந்து வீழும்படி போர் செய்து தூசிப்படையிலேயே வாகை மாலையைத் தம் முடியில் அணிந்துகொண்ட மறவரும்; திண்தேர்க் கொடுஞ்சியொடு தேரோர்வீழப் புண்தோய் குருதியில் பொலிந்த மைந்தர்-திண்ணிய தமது தேரினது இருக்கையின் கண் இருந்தவாறே பகைவராகிய தேர்மறவர் தமது வாளேறு பட்டுத் தலை துணிப்புண்டு வீழ்தலாலே அம் மறவருடைய புண்ணினின்றும் குதித்த குருதி படுதலாலே பொலிவுற்றுத் திகழ்ந்த மறவரும்; மாற்று அருஞ் சிறப்பின் மணிமுடிக்கருந் தலைக் கூற்றுக் கண்ணோட அரிந்து களங்கொண்டோர்-விலையிடுதற்கரிய சிறப்பினை உடைய மணிகள் அழுத்தப்பெற்ற முடிக்கலன அணிந்த மாற்றரசருடைய கரிய தலையைக் கையாற் பற்றிக் கூற்றுவனும் இரங்கும்படி தம் கைவாளால் அரிந்து போர்களத்தின்கண் தம் கையிற் கொண்டுவந்த மறவரும் நிறம் சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்து புறம் பெறவந்த போர்வாள் மறவர்தாம் வருக என-பகைவர் படைக்கலன்பட்டு நிறம் சிதைந்தொழிந்த கவசத்தினூடே மார்பிற்பட்ட புண் மிகவும் ஆழ்ந்து தம் முதுகிலே தோன்றும்படி போர் செய்து மீண்டு வந்த போர்வாள் ஏந்திய மறவரும் ஆகிய இவர் தாம் வருவாராக என்று அழைத்து; வாகைப் பொலந்தோடு-அவர் பெற்ற வெற்றிக்குப் பரிசிலாகப் பொன்னால் செய்யப்பட்ட வாகைப் பூமாலைகளை; பெருநாள் அமயம் பிறக்கிடக் கொடுத்து-சிறப்பு நாளிலே பரிசில் வழங்குதற்கென வரையறை செய்தபொழுது கழிந்த பின்னரும் நெடும்பொழுது இருந்து வழங்கி; தோடு ஆர்போந்தை இதழ் நிரம்பிய பனம்பூ மாலையைத் தும்பைப்பூ மாலையோடு ஒருசேர அணிந்து புலவர் பாடுதற்கு ஏற்ற போர்த்துறையின் வினைகளைச் செய்து முடித்த வெற்றியை உடைய அச் செங்குட்டுவன் வீற்றிருந்த ஆடுகொள் மார்போடு அரசு விளக்கு இருக்கையின்-வெற்றிகொண்டு பொலிந்த மார்பினோடு தனது அரசுரிமையும் இனிது விளங்காநின்ற தனது கொலுவிருங்கைப் பொழுதில் என்க.

(விளக்கம்) தலைத்தாள் வாகை-தூசிப்படையில் நின்றே பகை வரைப் புறங்கண்டு வாø சூடி வருதல். கொடுஞ்சி-தாமரைப்பூ வடிவிற்றாகச் செய்து தேர்த்தட்டின் நடுவண் நிறுத்திய இருக்கை . தேர் மறவர் இதன்கண் இருத்தல் மரபு. தேரோர்-தேர் மறவர். மணிமுடிக் கருந்தலை என்றது அரசர் தலை என்றற்கு. கூற்றும் கண்ணோட-எனல் வேண்டிய சிறப்பும்மை தொக்காது. தலையை அரிந்து களத்தில் வெற்றி கொண்டோர் என்க. நிறம் இரண்டனுள் முன்னது வண்ணம்; பின்னது மார்பு. பொலம்-பொன். அமயம் பொழுது. புலவர் பாடும் போர்த்துறை என்க. ஆடு-வெற்றி.

மாடலன் வருகை

48-55: மாடல.....ஈங்கென

(இதன் பொருள்) மாடல மறையோன் வந்து தோன்றி-மாடலன் என்னும் பெயரை உடைய அந்தணன் அச் செங்குட்டுவன் முன்னர் வந்து தோன்றி; வாழ்க எம்கோ-நீடூழி வாழ்வானாக எங்கள் மன்னர் பெருமான் என் வாழ்த்தி அரசனை நோக்கிக் கூறுபவன்; முதுநீர் ஞாலம் அடிப்படுத்தாண்ட அரசே-கடல்சூழ்ந்த நில உலகத்தை முழுவதும் வென்று அடிப்படுத்திக்கொண்டு அருளாட்சி செய்த அரசனே ஈதொன்று கேள்; மாதவி மடந்தை கானற்பாணி கனகவிசயர்தம் முடித்தலை நெரித்தது-மாதவி என்னும் இளமையுடைய நாடகக் கணிகையானவள் கடற்கரையினிடத்துப் பண்டொருநாள் பாடிய கானல்வரிப் பாட்டானது இதோ இங்கிருக்கின்ற கனகனும் விசயனுமாகிய இவ்வரசருடைய முடிகணிந்த தலையை நேரித்தது நினைக்கும்பொழுது எனக்கு வியப்பூட்டுவதொன்றாய் இருந்தது, நீ நீடூழி வாழ்க என்று கூறா நிற்ப; அது கேட்ட செங்குட்டுவன் மாடலனை நோக்கி நான் மறையாள் பகைப்புலத்து அரசர்பால் அறியாநகைத்திறம் ஈங்குக் கூறினை-நான்கு மறைகளையும் கற்றுணர்ந்த அந்தண, நீ நம் பகை நாட்டரசர் பலரும் அறிந்திலாத நகைச்சுவை உடைய தொரு செய்தியை இவ்விடத்தே கூறினாய்; ஈங்கு நீ கூறிய உரைப்பொருள் யாது என-இவ்விடத்தே நீ சொன்ன அச் சொற்றொடரின் பொருள் தான் என்னையோ நீயே கூறுவாயாக என்று அம் மன்னவன் கூற என்க.

(விளக்கம்) கானற்பாணி-கடற்கரையிலிருந்து பாடிய பாட்டு முதுநீர்-கடல். ஒரு மடந்தை பாடிய கானல்வரிப் பாட்டு அரசருடைய முடித்தலையை நெரித்தது, என்ற மாடலன் கூற்று பேதைமையுடையது போல் தோன்றி நகைச்சுவை யுடைத்தாதலுணர்க. இது பிறன் பேதைமை நிலைக்களனாகத் தோன்றிய நகை என்க.

மாடலன் விடை

56-65: மாடல.......ஏறினன்

(இதன் பொருள்) மாடல மறையோன் மன்னவர்க்கு உரைக்கும் அது கேட்ட மாடலன் என்னும் அந்தணன் அச் செங்குட்டுவனுக்குச் சொல்வான்; குடவர் கோவே-சேர நாட்டார் தம்முடைய செங்கோல் வேந்தனே; கானல் அம்தண் துறை கடல் விளையாட்டினுள் மாதவி மடந்தை வரிநவில் பாணியொடு-சோழ நாட்டுக் கடற்கரைச் சோலையையுடைய அழகிய குளிர்ந்த துறையின்கண் நிகழ்ந்த கடல் விளையாட்டின்கண் மாதவி என்னும் நாடகக் கணிகை இசைப்பாட்டாகப் பாடிய கானல்வரிப்  பாட்டுக் காரணமாக ; ஊடல் காலத்து ஊழ்வினை உருத்து எழ-நிகழ்ந்த ஊடற்பொழுதின்கண் தனது முற்பிறப்பிலே செய்த தீவினையானது பயனளிப்பதாக அவன் உள்ளத்தே எண்ணமாகிய உருவத்தைக்கொண்டு எழுதலாலே; கூடாது பிரிந்து-மீண்டும் அம் மாதவியுடன் கூடாமல் அவளைத் துவரத்துறந்து; குலக்கொடி தன்னுடன் மாடமூதூர் மதுரை புக்கு-உயர்ந்த குலப் பிறப்பாட்டியாகிய தன் மனைவியாகிய கண்ணகியுடன் மாடமாளிகை களையுடைய பழைய நகரமாகிய மதுரையின்கண் வந்து புகுந்து; ஆங்கு இலைத்தார் வேந்தன் எழில்வான் எய்த-அந் நகரத்தின்கண் இலை விரவிப் புனைந்த வேப்பந்தாரை அணிந்த பாண்டியனாகிய நெடுஞ்செழியன் அழகிய வானுலகத்தே புகும்படி; கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி-கொலைக்களத்திலே இறந்தொழிந் கோவலன் என்னும் வணிகனுடைய வாழ்க்கைத் துணைவியாகிய அக் கண்ணகி; நின்நாடு புகுந்து வடதிசை மன்னர் மணிமுடி ஏறினள்-நினக்குரிய சேர நாட்டிலே வந்து புகுந்து வானவர் எதிர்கொள வான் உலகின்கண் ஏறியதன்றியும் தான் தெய்வமாய் வடநாட்டை ஆளுகின்ற கனகனும் விசயனுமாகிய இம் மன்னர்களுடைய அழகிய முடியின்மீதும் கல்லின்கண் திருவுருவம்கொண்டு ஏறினள் அல்லளோ இதுவே யான் குறித்துரைத்த பொருள், என்றான் என்க.

(விளக்கம்) கடல் விளையாட்டு என்றது பூம்புகார் இந்திரவிழாவினிறுதியில் நிகழ்ந்த கடல் விளையாட்டை, வரிநவில்பாணி-வரிப்பாட்டாகப் பாடிய பாட்டு, வடவாரிய மன்னர் அறியாமைப்பொருட்டு நெடுஞ்செழியன் செய்தியைப் பெரிதும் மறைத்து இலைத்தார் வேர்தன் எழில்வான் எய்த என இவ்வேந்தணன் உரைக்கும் நலமுணர்க.

மாடலன் தன் வரலாறு செங்குட்டுவனுக்கு மொழிதல்

66-71: இன்னும்........சென்றேன்

(இதன் பொருள்) இகல் வேல் தடக்கை மன்னர் கோவே இன்னும் யான் வரும் காரணம் கேட்டு அருள்-வெற்றி வேலேந்திய பெரிய கையையுடைய வேந்தர் வேந்தே இன்னும் யான் இங்கு வருவதற்கு அமைந்த காரணம் வியத்தகும் ஒன்றேயாம், ஆதலால் அதனையும் கூறுவேன் திருச்செவி ஏற்றருளுக; ஊழ்வினைப் பயன்கொல்-அக் கோவலனுக்குப்போல எனக்கும் வந்தெய்திய பழவினையின் பயனேபோலும்! யானும்; மாமுனி பொதியின் மலை வலங்கொண்டு குமரியம் பெருந்துறையாடி மீள்வேன் சிறந்த-அகத்திய முனிவன் உறைகின்ற பொதிய மலையை வலம் வந்து வணங்கிக் குமரி என்கின்ற அழகிய பெரிய கடல்துறையிலே நீராடி மீண்டுவருவேன் எமது நாடுநோக்கிச் செல்லாமல்; உரைசால் சிறப்பின் வாள்வாய் தென்னவன் மதுரையிற் சென்றேன்-புகழ்மிக்க சிறப்பினையுடைய வென்றி வாய்த்த வாளையுடைய பாண்டிய மன்னனுடைய தலைநகரமாகிய மதுரையின்கண் சென்றேன், என்றான் என்க.

(விளக்கம்) குமரியில் நீராடி மீளுகின்ற நான் நேரே என்னூருக்கே சென்றிருக்கலாமல்லவோ, யான் செய்த ஊழ்வினை காரணமாக அங்ஙனம் செல்லாமல் மதுரைக்குச் சென்றேன் என இம்மறையோன் தன்னையே நொந்துகொள்கின்றான்.

மதுரை சென்றதனால் தனக்கும் தீவினை பல வந்துற்றமை கருதிக் கோவலனுக்கு ஊழ்வினை வந்தமையாலே மதுரைக்கு வந்தான் என்று கூறியவன் அந்நினைவு காரணமாக ஊழ்வினைப் பயன் கொல்யானும் மதுரையிற் சென்றேன் என்கின்றான்.

இதுவுமது

72-78: வலம்படு...........புக்கதும்

(இதன் பொருள்) வலம்படு தானை மன்னவன் தன்னைச் சிலம்பின் வென்றனள் சேயிழை என்றலும்-வெற்றியுடைய படையையுடைய பாண்டிய மன்னனைத் தனது ஒற்றைச் சிலம்பினைச் சான்றுகாட்டி வழக்குரைத்து வெற்றிபெற்றாள் கண்ணகி என்னும் செய்தி கேட்டபொழுதே; தாது எரு மன்றத்து மாதரி எழுந்து கோவலன் தீது இலன் கோமகன் பிழைத்தான்-பூந்தாதுகளே எருவாகிக் கிடக்கும் ஊர் மன்றத்தின்கண் இருந்த மாதிரி என்னும் இடைக்குல மடந்தை துன்பம் பொறாளாய் அவ்விடத்தினின்றும் எழுந்து அந்தோ என் மகன் கோவலன் ஒரு சிறிதும் தீது செய்திலன் என்பது யான் நன்கறிவேன். நம் அரசன் மகனே செங்கோன் முறைமையின் தவறினான் என்பது தேற்றம்; இடைக்குல மாக்காள் குடையும் கோலும் பிழைத்த-தீதறியாத இடைக்குலத்தில் பிறந்த மக்களாகிய ஆயர்களே பண்டொரு காலத்தும் பிழை செய்தறியாத நம் மன்னவனுடைய வெண்கொற்றக் குடையும் வெம்மை செய்தது, செங்கோலும் வளைந்தொழிந்தது அவையேயன்றி; ஓ அடைக்கலமிழந்தேன் என-அந்தோ அடிச்சியும் பேணுதற்குரிய பெரியோர் தந்த அடைக்கலப் பொருளை இழந்துவிட்டேனே இனி யான் உயிர் வாழ்கில்லேன் என்று கதறி; இடையிருள் யாமத்து எரி அகம் புக்கதும்-அற்றைநாள் நள்ளிரவிலேயே தீயினுட் புகுந்து நன்றந்ததும்; என்க. 

(விளக்கம்) பண்டொரு காலத்தும் தோல்வி கண்டறியாத மன்னவன் இன்று தோற்றனன் என்று இரங்குவான் வலம்படுதானை மன்னவன் என்றாள். கண்ணகியின் கற்பின் திறத்தை வியப்பாள் அத்தகைய மன்னனைக் சேயிழை சிலம்பின் வென்றாள் என்றான். தாதெரு மன்றம் என்பது குரவைக் கூத்து நிகழ்ந்த இடத்தை பேணுதற்குரிய அடைக்கலத்தைப் பேணாது இழந்தேன் ஆதலின் கெடுக என் ஆயுள் என மாதிரி எரியகம் புக்கதும் என்க.

இதுவுமது

79-83: தவந்தரு...........பெயர்ந்தேன்

(இதன் பொருள்) தவந்தரு சிறப்பின் கவுந்தி சீற்றம்-இங்ஙனமே தவத்தின் பயனை எல்லாம் தனது ஒழுக்கத்தினாலே காட்டித் தருகின்ற சிறப்பினை உடைய கவுந்தியடிகளாருக்கு, (கண்ணகி கோவலன் நெடுஞ்செழியன் மதுரைமாநகர் ஆகிய இவர்க்கெல்லாம் நிகழ்ந்தமை தெரிந்தபொழுது கண்ணகிக்கும் கோவலனுக்கும் உற்ற துன்பம் காரணமாக) எழுந்த வெகுளியை; நிவந்து ஓங்கு செங்கோல் நீள்நில வேந்தன் போகு உயிர் தாங்க-மிகவும் உயர்ந்து திகழ்கின்ற செங்கோன் முறைமையினையுடைய நீண்ட பாண்டிய நாட்டினை ஆளுகின்ற நெடுஞ்செழியனுடலினின்றும் தானே புறப்பட்டுப்போன அவனது உயிரின் பெருமை தணித்துவிட்டமையாலே தணிந்த; அப் பொறைசால் ஆட்டி என்னோடு இவர் வினை உருத்ததோ என-அந்தப் பொறுமை என்னும் சால்பினை ஆளுதலையுடைய கவுந்தியடிகளார் என்னையும் ஒரு கருவியாகக் கொண்டு இக் கண்ணகி கோவலருடைய பழவினை உருக்கொண்டுவந்து ஊட்டிற்றுப்போலும், ஆகவே அவர் துயரத்திற்கு யானும் ஒரு காரணமாகின்றேன் என்று வருந்தி; உண்ணத நோன்போடு உயிர் பதிப் பெயர்த்ததும்-உண்ணத நோன்போடு இருந்து தம்முடம்பினின்றும் உயிரை அகற்றியதும்; பொன் தேர்ச் செழியன் மதுரை மாநகர்க்கு உற்றதுமெல்லாம்-பொன்னாலியன்ற தேரை உடைய பாண்டியனுடைய மதுரை மாநகரத்தைத் தீயுண்டமையும் பிறவும் ஆகிய எல்லா நிகழ்ச்சிகளையும்; ஒழிவு இன்று உணர்ந்து ஆங்கு என்பதிப் பெயர்ந்தேன்-ஒன்றும் ஒழிவில்லாமல் தெரிந்துகொண்டு பின்னர் யான் என் ஊருக்குச் சென்றேன் என்றான் என்க.

(விளக்கம்) கவுந்தியடிகளாரின் சினம் பாண்டியன் தன்தவற்றினை உணர்ந்தபொழுதே உயிர் நீத்தமை கேட்டு அவன்பால் இரக்கமாக மாறி விட்டமையின் அவனது உயிர் தாங்க என்றார். ஆயினும் கோவலனுடைய துன்பத்திற்குத் தானும் ஒரு கருவியானமையின் அத் துன்பத்திற்குரிய தீவினையென்று தன்பாலும் இருத்தல் வேண்டும் என்று கருதி அத்தீவினைக்குக் கழுவாயாக அடிகளாரும் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார் என்றுணர்க. என்னை? நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம்(குறள்-320) என்பது திறவோர் காட்சி ஆதலின் என்க. 

இதுவுமது

86-97: என்துயர்...........விடவும்

(இதன் பொருள்) என் துயர் போற்றி-வேந்தர் பெருமானே! மதுரையின்கண் என் ஆருயிர் நண்பனாகிய கோவலன் முதலியோருக்கு நிகழ்ந்த துன்பம் பற்றி என் நெஞ்சில் தோன்றிய துன்பத்தை யான் ஒருவாறு தணித்துக்கொண்டேனாய் செம்பியன் மூதூர்ச் சிறந்தோர்க்கு உரைக்க-யான் சோழனுடைய பழைய நகரமாகிய காவிரிப்பூம் பட்டினத்திலிருந்த கோவலனுக்கும் கண்ணகிக்கும் சிறந்தவராகிய அவருடைய இருமுது குரவரும் ஏனையோருமாகிய உறவினர்களுக்கும் கூறாநிற்ப; கோவலன் தாதை மைந்தற்கு உற்றதும் மடந்தைக்கு உற்றதும் செங்கோல் வேந்தற்கு உற்றதும் கேட்டு-இவ்வாற்றால் கோவலனுடைய தந்தையாகிய மாசாத்துவான் என்னும் வணிகர் பெருமகன், மகனாகிய கோவலனுக்கு எய்திய துன்பத்தையும் மருகியாகிய கண்ணகிக்கு எய்திய துன்பத்தையும் இவர்கள் வாயிலாய்ச் செங்கோன்மை தவறாத பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு நேர்ந்த அழிவினையும் கேள்வியுற்று; கொடுந்துயர் எய்தி-ஆற்றொணாத பெருந் துன்பத்தை அடைந்து; வான் பொருள் மாபெருந்தானமா ஈத்து ஆங்கு-தான் அறநெறி நின்று ஈட்டிய தனது சிறந்த பொருள் முழுவதனையும் உத்தம தானமாக வழங்கிவிட்டு அப்பொழுதே இல்லாம் துறந்துபோய்; இந்திர விகாரம் ஏழுடன் புக்கு-அந் நகரத்திலுள்ள இந்திரனால் அமைக்கப்பட்ட ஏழு அரங்குகளை உடைய தவப் பள்ளியில் புகுந்து; ஆங்கு அந்தர சாரிகள் பிறந்த யாக்கைப் பிறப்பு அற முயன்று துறந்தோர் ஆறு ஐம்பதின்மர் தம்முன்-அப் பள்ளியின்கண் விசும்பின்கண் திரிகின்ற வித்தை கைவந்தவரும் தாம் பிறந்துள்ள இவ் வுடம்பிலிருந்தபடியே இனிப் பிறப்பு அற்றுப்போம்படி முயற்சி செய்து இவ்வுலக வாழ்க்கையைத் துறந்தவருமாகிய முந்நூற்றுவர் முனிவர்களுடைய முன்னிலையிலே தானும் துறவறத்தை மேற் கொள்ளா நிற்பவும்; துறந்தோன் மனைவி மகன் துயர் பொறாள் இறந்த துயர் எய்தி இரங்கி மெய் விடவும்-அங்ஙனம் துறந்த மாசாத்துவான் மனைவியாகிய கோவலன் தாயும் தன் மகனுக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறுக்கமாட்டாதவளாய் எல்லையற்ற துன்பத்தை எய்தி வருந்தி உடம்பினை நீத்து இறந்தொழியவும் என்க.

(விளக்கம்) செம்பியன்-சோழன். மூதூர்-காவிரிப்பூம்பட்டினம் சிறந்தோர்-நெருங்கிய சுற்றத்தார்-செங்கோல் வேந்தன் என்றது நெடுஞ்செழியனை. இந்திர விகாரம்-இந்திரனால் அமைக்கப்பெற்ற அரங்குகள். துறவி-துறவறம். இறந்த துயர்-எல்லைகடந்த துன்பம்.

இதுவுமது

98-102: கண்ணகி..............விடவும்

(இதன் பொருள்) கண்ணகி தாதை கடவுளர் கோலத்து அண்ணல் அம் பெருந்தவத்து ஆசீவகர் முன் புண்ணிய தானம் புரிந்து அறங்கொள்ளவும்-இங்ஙனமே கண்ணகியின் தந்தையாகிய மாநாய்கன்றானும் துறவோர்க்குரிய கோலம் பூண்டு பெருமை மிக்க அழகிய பெரிய தவத்தையுடைய ஆசீவகர் பள்ளியுட்புகுந்து அவர் முன்னிலையில் தன் பொருளை எல்லாம் புண்ணியம் பயக்கும் தானமாக வழங்கி அவர்தம் அறத்தை மேற்கொள்ளா நிற்கவும்; தானம் புரிந்தோன் தன்மனைக்கிழத்தி நாள் விடூஉ நல்லுயிர் நீத்து-அவ்வாறு புண்ணியதானம் புரிந்தவனாகிய மாநாய்கனுடைய மனைவி தானும் இத் துயரம் பொறாளாய்த் தானே வாழ்நாளை விடுகின்ற தனது நல்லுயிரைத் துறந்து இறந்துபடா நிற்கவும் என்க.

(விளக்கம்) கண்ணகி தாதை-மாநாய்கன். கடவுளர் கோலம்-துறவோர் கோலம். ஆசீவகர்-சமண மதத்தில் ஒரு வகுப்பினர் இவர்க்குத் தெய்வம் மறகலி எனவும் நூல் நவகதிர் எனவும் கூறுவர். இம் மதத்தின் இயல்பை மணிமேகலை இருபத்தேழாம் காதையினும் நீலகேசியில் ஆசீவக வாதச்சருக்கத்தினும் (13) விரிவாகக் காணலாம். தானம் புரிந்தோன் மனைக்கிழத்தி என்றது கண்ணகியின் தாயை. துன்ப மிகுதியால் அவள் உயிர் அவள் முயற்சி இன்றியே புறப்படுதலின் நான் விடூஉ நல்லுயிர் என்றும் அதற்கு அவள் பெரிதும் உடன்படுதலின் நீத்து எனவும் ஓதினர்.

இதுவுமது

103-111: மற்றது......ஈங்கென

(இதன் பொருள்) மற்று அது கேட்டு மாதவி மடந்தை-கோவலனுக்கும் கண்ணகிக்கும் நிகழ்ந்த அச் செய்தியைக் கேள்வியுற்று மாதவியாகிய நாடக மடந்தை தானும்; நல் தாய் தனக்கு நல்திறம் படர்கேன்-தன்னை ஈன்ற தாயாகிய சித்திராபதிக்கு அன்னாய் யான் இனி நன்னெறியிலே செல்லத் தொடங்கி விட்டேன் அஃது எற்றுக்கெனின்; மணிமேகலையை வான் துயர் உறுக்குங் கணிகையர் கோலங் காணாது ஒழிக என-என் மகள் மணிமேகலையை மாபெரும் துன்பம் தருகின்ற பொல்லாத இந்த நாடகக் கணிகையர் கோலத்தின்கண் வைத்துக் காணாதொழியும் பொருட்டேயாம் என்றறிவுறுத்து; கோதை தாமம் குழலொடு களைந்து-தான் அணிந்திருந்த கோதையாகிய மலர் மாலையினைக் கூந்தலோடே ஒருசேரக் கலைந்துவிட்டு; போதித்தானம் புரிந்து; அறம் கொள்ளவும்-துறவறத்தை மேற்கொள்ளா நிற்பவும்; என்வாய்க் கேட்டோர் இறந்தோர் உண்மையின்-வேந்தர் பெருமானே! கோவலன் கண்ணகிக்கு நிகழ்ந்த இச் செய்தியை என் வாய்மொழி வாயிலாகக் கேட்டவர்களில் இறந்தொழிந்தோரும் பலர் இருத்தலால் அவர் இறப்பிற்குக் காரணம் என் வாய்மொழியே ஆதல் பற்றி அத் தீவினைக்கு யானும் ஒரு காரணமாகி அதனால் எனக்கு வந்தெய்திய தீவினையைப் போக்குதற் பொருட்டு; நல்நீர் கங்கை ஆடப் போந்தேன் புண்ணிய தீர்த்தமாகிய இக் கங்கைப் பேரியாற்றின்கண் நீராடுதற் பொருட்டு இப்பொழுது யான் இங்கு வந்துள்ளேன்; மன்னர் கோவே ஈங்கு வாழ்க என-வேந்தர் வேந்தே! இந் நில உலகத்தின்கண் நீடூழி வாழ்வாயாக! என்று அம் மாடல மறையோன் கூறா நிற்ப என்க.

(விளக்கம்) நற்றாய்-மாதவியை ஈன்ற தாய்; சித்திராபதி நற்றிறம்-நன்னெறி; அஃதாவது துறவறம். கணிகையர் கோலம் தனக்கும் பெருந்துன்பம் விளைத்தமையால் இக் கோலம் என்னோடு முடிக. மணிமேகலைக்கு இவ் வாழ்க்கை வேண்டா என்னும் கருத்தால் இங்ஙனம் கூறினள். மணிமேகலை அருந்தவப்படுதல் அல்லது யாவதும் திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படாஅள் என மணிமேகலையினும் (2:55-7) மாதவி ஓதுதல் உணர்க. குழல்-கூர்தல். மாசாத்துவான் மனைவி முதலியோர் இறப்பிற்குத் தான் கூறிய செய்தியே காரணமாதல் பற்றி இத் தீவினையில் தனக்கும் பங்குண்டு என்று இம் மாடல மறையோன் கூறுகின்றான். எனவே இவன் தீவினைக்குப் பெரிதும் அஞ்சுதல் அறிக.

செங்குட்டுவன் மாடலனை வினாதல்

112-115: தோடார்................உரையென

(இதன் பொருள்) தோடார் போந்தை தும்பையொடு முடித்த வாடா வஞ்சி வானவர் பெருந்தகை-இதழ் நிரம்பிய பனம்பூவைத் தும்பைப்பூவோடு அணிந்த வஞ்சி மாநகரத்துச் சேரர் குலத் தோன்றலாகிய பெருந்தகைமையையுடைய அச் செங்குட்டுவன் அம் மறையோன் வாயிலாகச் சோழ நாட்டுச் செய்தி கேட்டவன் பாண்டிய நாட்டுச் செய்தியையும் கேட்க விரும்பி நான்மறையாளனே மதுரையின்கண்; மன்னவன் இறந்தபின் வளம் கெழு சிறப்பின் தென்னவன் நாடு செய்தது ஈங்கு உரை என-பாண்டியன் நெடுஞ்செழியன் அரசு கட்டிலில் துஞ்சிய பின்னர் வளம் பொருந்திய சிறப்பினையுடைய அப் பாண்டியனுடைய நாட்டின்கண் நிகழ்ந்த செய்தியை இப்பொழுது எனக்குக் கூறுவாயாக என்று கேட்ப என்க.

(விளக்கம்) வாடாவஞ்சி-வஞ்சி நகரத்திற்கு வெளிப்படை வானவர்-சேரர். மன்னவன் என்றது நெடுஞ்செழியனை நாடு ஆகுபெயர். நாடு செய்தது உரை என்றது நாட்டின்கண் நிகழ்ந்தவற்றைக் கூறுக என்றவாறு.

மாடல மறையோன் செங்குட்டுவனுக்குப் பாண்டியனாட்டுச் செய்தி கூறுதல்

116-126: நீடு வாழியரோ............கேட்டருள்

(இதன் பொருள்) நீள் நில வேந்து நீடு வாழி அரோ என-அது கேட்டு நெடிய இந் நிலவுலகத்தை ஆட்சி செய்கின்ற வேந்தர் பெருமான் நீடூழி வாழ்க என்று அம் மன்னனை வாழ்த்திய; மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும்-மாடலன் என்னும் அந்தணன் செங்குட்டுவனுக்குச் சொல்லுவான்; நின் மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்-பெருமானே! நின் மைத்துனனாகிய சோழன் பெருங்கிள்ளியொடு பொருந்தாமையினாலே தம்முள் ஒத்த ஒன்பது மன்னர்களும்; இளவரசு பொறாஅர் ஏவல் கேளார் வளநாடு அழிக்கும் மாண்பினர் ஆதலின்-அப் பெருங்கிள்ளியின் கீழ்த் தரம் இளவரசராக இருத்தலைப் பொறாதவராய் அக் கிள்ளிவளவன் ஏவலையும் கேளாதவராய் நாட்டினுள் கலகம் விளைத்து, அவனுடைய வளம் பொருந்திய நாட்டினை அழித்தலையே தமக்குப் பெருமையென்று கொள்பவர் ஆதலாலே; ஒன்பது குடையும் ஒரு பகலொழித்து அவன் பொன்புனை திகிரி ஒரு வழிப்படுத்தோய்-அப் பகை மன்னர்களுடைய ஒன்பது குடையையும் ஒரு பகற்பொழுதிலேயே அழித்து நின் மைத்துனனாகிய அக் கிள்ளிவளவனுடைய பொன்னால் அழகு செய்யப்பட்ட ஆமைச்சக்கரத்தை ஒரு நெறியுருட்டச் செய்து வாழ்வித்தருளிய வள்ளலே; பழையன் காக்கும் குழை பயில் நெடுங்கோட்டு வேம்பு முதல் தடிந்த ஏந்து வாள் வலத்துப் போந்தைக் கண்ணிப் பொறைய கேட்டருள்-பழையன் என்னும் அரசனால் பாதுகாக்கப்பட்டிருந்த தளிர் மிகுந்த நெடிய கொம்புகளையுடைய அவனது காவல் மரமாகிய வேம்பினை வேரோடு வெட்டி வீழ்த்திய உயர்ந்த வாள் வெற்றியை உடைய பனம்பூ மாலையைப் புனைந்த மலைநாட்டார் கோமானே கேட்டருளுக என்றான் என்க.

(விளக்கம்) மைத்துன வளவன்கிள்ளி என்பவனை, பெருங்கிள்ளி எனவும் பெருநற்கிள்ளி எனவும் வரலாற்று நூலாசிரியர் கூறுவர் பொருந்தாமையால் ஒத்த பண்பினர் என்க. இவ்வொன்பதின்மரும் இளவரசராயிருத்தலைப் பொறார் ஏவல் கேளார், எனவே இவர்கள் கிள்ளிவளவனுக்கு நெருங்கிய தாய்த்தார் என்பது பெற்றாம். இவர் தாயம் வேண்டிக் கலகமுண்டாகி நாட்டின் வளத்தை அழித்தனர் என்பதும், செங்குட்டுவன் கிள்ளிவளவனுக்கு மைத்துனனாதலின் தானே நேரிற் சென்று அவ்வொன்பதின்மரையும் அழித்து அக் கிள்ளிவளவனுக்கு அரசுரிமையை நிலைநாட்டினன் என்பதும் பாண்டிய மரபினனாகிய பழையன் என்பானுடைய காவல் மரத்தைச் செங்குட்டுவன் வெட்டி வீழ்த்தினன் என்பதுமாகிய பழைய வரலாற்றுண்மைகள் இம் மாடல மறையோன் மொழியால் பெற்றாம்.

இதுவுமது

127-140: கொற்கை......பெரிதென

(இதன் பொருள்) பொன் தொழிற் கொல்லர் ஈரைஞ்ஞாற்றுவர்-பொன்னால் பணிசெய்யும் பொற்கொல்லன் ஓராயிரவர் நம்முள் வைத்து ஒரு பொற்கொல்லன் தீமை செய்தமையால் நம் பழங்குடி பழிபூண்டது என்று நாணி; ஒரு முலை குறைத்த திருமாபத்தினிக்கு-ஒரு முலையைத் திருகி எறிந்த கண்ணகியாகிய அத்திருமா பத்தினித் தெய்வத்திற்கு; ஒரு பகல் எல்லை உயிர்பலி ஊட்டி-ஒரு பகற் பொழுதிலேயே தம் தலையைத் தாமே அரிந்து உயிர்ப்பலி ஊட்ட; உரை, செல வெறுத்த மதுரை மூதூர்-இப்பொற் கொல்லருடைய செயலால் உண்டான புகழ் எங்கும் பரக்கும்படி மிக்க மதுரையாகிய அப் பேரூர்; அரசு கெடுத்து அலம் வரும் அல்லல் காலை-அரசனை இழந்து சுழலுகின்ற அத் துன்பப் பொழுதிலே; கொற்கையிலிருந்த வெற்றி வேல் செழியன்-கொற்கைப் பட்டினத்தில் இருந்து செங்கோலோச்சிய வெற்றிவேற் செழியன் என்னும் பெயரையுடைய பாண்டியன்; தென்புல மருங்கின் தீது தீர் சிறப்பின் மன்பதை காக்கும் முறை-தென்னாட்டின்கண் குற்றம் தீர்ந்த சிறப்பையுடைய மக்களினத்தைக் காக்கும் முறைமை நெடுஞ்செழியனுக்குப் பின்னர்த் தனக்கே உரித்தாதலின்; முதற்கட்டிலின்மேல்; நிரை மணி ஓர் ஏழ் புரவி பூண்ட ஒரு தனி ஆழிக் கடவுள் தேர்மிசை-நிரல்பட்ட அழகிய ஏழு குதிரைகள் பூட்டப் பெற்ற ஒரு சிறந்த உருளையையும் கடவுள் தன்மையையும் உடைய தேரின் மேல்; காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினன் என-தனக்குரிய பொழுதாகிய விடியற் காலத்திலே சிவந்த கதிர்களையுடைய ஞாயிறாகிய கடவுள் ஏறித் தோன்றினாற்போல்; மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்-மாலைப் பொழுதிலே தோன்றும் முறைமையினையுடைய திங்கள் குலத் தோன்றலாகிய அவ் வேந்தன் ஏறாநின்றனன்; ஊழிதோறு ஊழி உலகங்காத்து எங்கோ வாழ்க பெரிது வாழியர் என-ஊழிகள் பலவும் இந் நிலவுலகத்தைக் காவல் செய்து எங்கள் அரசர் பெருமான் வாழ்வானாக மிகவும் வாழ்வானாக என்று அம் மாடல மறையோன் கூறா நிற்ப என்க.

(விளக்கம்) இதன்கண் வெற்றிவேற்செழியன் மதுரை மூதூர் அலம்வரும் அல்லற்காலைக் கட்டிலின் ஏறினன் என இயையும். பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ்ஞாற்றுவர் ஒரு முலை குறைத்த திருமா பத்தினிக்கு ஒருபகல் எல்லை உயிர்ப்பலிப்யூட்டி உரை செலவெறுத்த மதுரை மூதூர் எனக் கொல்லரின் செயல் மதுரைக்கு அடைமொழியாக வந்தது. இவை வெற்றிவேற்செழியன் என்னும் எழுவாய்க்கும் முடிக்குஞ் சொல்லாகிய ஏறினன் என்பதற்கும் இடையே வருகின்ற மதுரைக்கு அடைமொழியாய் வந்தது. இக் கருத்தறியாதார் வெற்றி வேற்செழியன் அரியணை ஏறவந்தவன் ஏறுதற்கு முன்னர்க் குற்றம் சிறிதும் இல்லாத ஆயிரம் பொற்கொல்லர்களைப் பிடித்துக்கொணர்ந்து கண்ணகித் தெய்வத்திற்கு உயிர்ப்பலியாக வெட்டிக் கொன்று அரியணையில் ஏறினன் என்பர். இங்ஙனம் பொருள் கொண்டவரே இந்நூல் முகத்திலுள்ள உரை பெறு கட்டுரையின்கண்(1) அன்று தொட்டு.........துன்பமும் நீங்கியது என அவலம் சிறிதுமின்றி வரைவாராயினர். அடிகளாரே இங்ஙனம் கருதியிருப்பார் எனின் அவர் தாமும் குளிக்கப்போய்ச் சேரு பூசிக்கொண்டவரே என்பது தேற்றம். என்னை? ஒரு பொற்கொல்லன் செய்த ஒரு வஞ்சகச் செயலால் அந் நாடு பட்டபாட்டினை வெற்றிவேற்செழியன் அறிந்திலன் என்று யாரே சொல்லத் துணிவர்? ஒரு பொற்கொல்லன் செய்த குற்றத்திற்காகக் குற்றம் சிறுதுமில்லாத ஆயிரம் பொற்கொல்லரைக் கொன்றவன் எத்துணை அறிவிலியாதல் வேண்டும்? ஈண்டு எம்முரையே அடிகளார் கருத்தாதல் வேண்டும். அஃது என்னையோ வெனின் தம் குடிப்பிறந்த ஒரு பொய்வினைக் கொல்லன் செய்த தீவினையால் அம் மதுரைக்கும் மன்னன் முதலியோருக்கும் எய்திய துன்பத்தையும் தமது பொற்கொல்லர் குடிக்கு எய்திய பழியையும் பொறாத மானப் பண்புமிக்க பொற்கொல்லர் எண்ணிறந்தோர் தம்மைத்தாமே உயிர்ப்பலியாகக் கண்ணகியை நினைந்து உயிர்நீத்தனர். இவ்வருஞ்செயல் பற்றியும் மதுரைக்குண்டான புதுப்புகழ் உலகெல்லாம் பரந்தது. அத்தகைய மதுரையின்கண் வெற்றிவேற்செழியன் காலைக்கதிரவன் தேர்மிசை ஏறுதல்போல அரியணை ஏறினன் என்பதேயாம் என்க.

காலக்கணிவன் செங்குட்டுவனுக்குக் கூறுவது

141-150: மறையோன்........ஏத்த

(இதன் பொருள்) மறையோன் கூறிய மாற்றம் எல்லாம்-இவ்வாறு நான்மறையாளனாகிய அம் மாடலன் கூறிய தமிழகத்துச் செய்தியை எல்லாம்; இறையோன் கேட்டு ஆங்கு இருந்த எல்லையுள்-வேந்தனாகிய செங்குட்டுவன் கூர்ந்து கேட்டுணந்து அப்படி வீட்டின்கண் இருந்த பொழுது; அகல்வாய் ஞாலம் ஆர் இருள் விழுங்க பகல் செலமுதிர்ந்த படாகூர் மாலைச் செந்தீப் பரந்த திசைமுகம் விளங்க-அகன்ற இடத்தையுடைய உலகத்தை நிறைந்த இருள் விழுங்கிக்கொள்ளும்படி பகற்பொழுது கழிந்து விட்டமையாலே முற்றிய துன்பம் மேலும் மிகும்படி அந்திவானம் என்னும் செந்நெறுப்புப் பரவிய மேலைத் திசையினது முகம் விளக்கமுறும்படி; அந்திச் செக்கர் வெண்பிறை தோன்ற பெருந்தகை பிறை ஏர் வண்ணம் நொக்க-அவ்வந்திப் பொழுதின்கண் செல்வானத்தினிடையே வெள்ளிய இளம்பிறை தோன்றுதலாலே அரசர் பெருந்தகையாகிய செங்குட்டுவன் அப் பிறையினது எழுச்சியுடைய அழகினைக் கூர்ந்து நோக்காநிற்ப; இறையோன் செவ்வியின் கணியெழுந்து உரைப்போன்-அவ் வேந்தனுடைய கூர்ந்த நோக்கத்தின் குறிப்பறிந்த கணிவன் அம் மன்னனுடைய திருமுகச் செவ்வி பெற்றவுடன் எழுந்து கூறுபவன், மண் ஆள் வேந்தே வஞ்சி நீங்கியது எண் நான்கு மதியம் வாழ்க என்று ஏத்த-நில உலகத்தை ஆளும் எம் வேந்தனே! யாம் நமது வஞ்சி நகரத்தினின்றும் வடநாட்டின்கண் வந்தபின்னர்க் கழிந்த காலத்தின் அளவை முப்பத்து இரண்டு திங்கள்கள் ஆம். எம்பெருமான் நீடூழி வாழ்க என்று தொழாநிற்ப என்க.

(விளக்கம்) அகல்வாய்-அகன்ற இடம். பகல்-ஞாயிறுமாம். படர்-காம நோய். காலை அரும்பிப் பகல் எல்லாம் போதாகி, மாலை மலருமிந் நோய் எனவரும் திருக்குறளும் (1227) நினைக. மாலையாகிய செந்தீ என்க. செக்கர்-செவ்வானம். ஏர் எழுச்சி. பெருந்தகை: செங்குட்டுவன். நோக்கத்தின் குறிப்பறிந்து தான் கூறுதற்கு நீங்கியது: சாதியொருமை எனினுமாம்.

செங்குட்டுவன் மாடலனை அழைத்துச் சோழன் நிலைமையை வினாதல்

151-161: நெடுங்காழ்.........ஓவென

(இதன் பொருள்) நெடுங்காழ்க் கண்டம் நிரல்பட நிரைத்த கொடும்பட நெடுமதில் கொடித்தேர் வீதியுள்-நெடிய கழிகளுடனே சேர்த்தமைந்த கண்டத்திரையை வரிசையாக அமைந்த வளைந்த படாஅம் ஆகிய நெடிய மதில் அமைந்த கொடி உயர்த்திய தேரோடும் வீதியின்கண்; குறியவும் நெடியவும் குன்று கண்டு அன்ன-குறுகிய வடிவுடையனவும் நீண்ட வடிவமைந்தனவும் ஆகி மலைகளைப் பார்த்தாற் போன்றனவும் ஆகிய; உறையுள் முடுக்கர் ஒரு திறம் போகி-இல்லங்களமைந்த குறிய தெருவின் ஒரு பக்கத்தே சென்று; வித்தகர் கைவினை விளங்கிய கொள்கைச் சித்திர விதானத்துச் செம்பொன் பீடிகை-ஓவியப் புலவருடைய கைத் தொழிலாலே விளக்கமுற்ற கோட்பாட்டினையுடைய ஓவியப் பந்தலின் கீழ் அமைந்த செம் பொன்னால் இயன்ற பீடமாகிய; கோயில் இருக்கைக் கோமகன் ஏறி-அரண்மனைக்குரிய இருக்கையாகிய அரசு கட்டிலின் மேல் அவ்வரசர் பெருமான் எழுந்தருளி இருந்து, வாயிலாளரின் மாடலன் கூஉய் இளங்கோ வேந்தர் இறந்ததன் பின்னர் வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு செங்கோல் தன்மை தீது இன்றோ என-வாயில் காவலாளரை ஏவி மாடல மறையோனை அழைப்பித்து அவ்விருவரும் தமியராய் இருந்துழிச் செங்குட்டுவன் மாடலனை நோக்கி அந்தணனே! சோழ நாட்டின் கண் கலாம் விளைத்த இளவரசர் ஒன்பதின்மரும் இறந்தொழிந்த பின் வளம் பொருந்திய அழகிய சோழ நாட்டு மன்னவனாகிய என் மைத்துன வளவன் கிள்ளியின் வெற்றியும் செங்கோலின் தன்மையும் தீதிலவாக இருக்கின்றனவோ? என வினவ என்க.

(விளக்கம்) நெடுங்காழ்க் கண்டம்-நெடிய குத்துக்கோல்களுடனே பல நிறத்தால் கூறுபட்ட திரைச்சீலை; கண்டம்-கூறுபாடு கண்டம் குத்திய மண்டப எழினி எனவும் பிற சான்றோரும்(பெருங்கதை, சீவக) கூறுவர். உறையுள்-வீடு முடுக்கர்-குறுந்தெரு. வித்தகர்-புலவர். கோயிலிருக்கை என்றது அரசு கட்டிலை. தமிழ் மன்னரின் செய்தியை வடவாரியமன்னர் அறியலாகாது என்னும் கருத்தால் செங்குட்டுவன் தனி இடத்தே சென்றிருந்து மாடல மறையவனை அழைத்து வினவிய படியாம். இளங்கோ வேந்தர் என்றது முன்னர்(118) மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் என்றவரை. கொற்றம்-வெற்றி. கொற்றமொடு கூடிய செங்கோற்றன்மை என்றலின் தீதின்றோ என்முடிந்தது.

மாடலன் விடை

162-172: எங்கோ.........கேட்டே

(இதன் பொருள்) மங்கல மறையோன் மாடலன் எங்கோ வேந்தே வாழ்க என்று ஏத்தி உரைக்கும்-மங்கலத் தன்மை மிக்க மறையவனாகிய அம் மாடலன் அது கேட்டு எம் வேந்தர் பெருமானே நீ நீடூழி வாழ்வாயாக என்று வாழ்த்திக் கூறுவான்:-வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப எயில் மூன்று எறிந்த இகல் வேல் கொற்றமும்-வெயில் போன்று ஒளி வீசி விளங்குகின்ற மணியாரம் பூண்ட அமரர்களும் வியக்கும்படி விசும்பில் தூங்கும் மூன்று மதில்களையும் எறிந்து தொலைத்த போர் வேலினது வெற்றியும்; குறு நடைப் புறவின் நெடுந்துயர் தீர எறி தரு பருந்தின் இடும்பை நீங்க அரிந்து உடம்பு இட்டோன் அறம் தருகோலும்-குறு குறு நடக்கும் நடையையுடைய ஒரு புறாவினது நெடிய துன்பம் தீரவும் அப் புறாவினைக் கொல்லுதற்குத் துரத்தி வந்த பருந்தினது பசித்துன்பம் ஒருங்கே நீங்கவும் தானே அரிந்து தனது உடம்பின் தசையைத் துலையின்கண் இட்டவனாகிய அச் சோழ மன்னனுடைய உலகிற்கு அறத்தை வழங்குகின்ற செங்கோலின் தன்மையும்; திரிந்து வேறு ஆகுங் காலமும் உண்டோ-தம் தன்மையில் வேறுபட்டுப் போகும் காலமும் ஒன்று உண்டாகுமோ; உண்டாகாதன்றே; செல்லல் காலையும் காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு என்று அருமறை முதல்வன் சொல்லக் கேட்டு-போகூழால் துன்பம் வந்துற்ற காலத்தும் காவிரிப் பேரியாற்றின் நீரால் பாதுகாக்கப்படுகின்ற அச் சோழ நாட்டிற்கு அரசுரிமை பூண்ட அம் மன்னவனுக்குத் தீது ஒரு சிறிதும் இல்லைகாண் என்று உணர்தற்கரிய நான்கு மறைகளையும் ஓதி உணர்ந்த முதல்வனாகிய மாடலன் என்னும் அந்தணன் கூறக் கேட்டு மகிழ்ந்தபின் என்க.

(விளக்கம்) மங்கலம்-ஆக்கம். எயில்-வானத்தில் தொங்கிக் கொண்டிருந்த மூன்று மதில்கள். அவற்றைப் பண்டொரு காலத்தே ஒரு சோழ மன்னன் நுறுக்கி வீழ்த்தினன் என்பது வரலாறு. இதனை 195: தூங்கெயின் மூன்றெறிந்தசோழன் (சிலப். 29 (17) ஒன்னாருட்குந் துன்னருங் கடுந்திறற், றூங்கெயிலறிந்த நின் னூங்கணோர் (புறநா, 395-6) வீங்குதோட்செம்பியன் சீற்றம் விறல் விசும்பல் தூங்குமெயிலுந் தொலைத்தலால் (பழ-69) ஒன்னா, ரோங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியும், தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை, நாடாநல்லிசை நற்றோச் செம்பியன் (மணி1:4) தேங்குதூங்கெயிலெறிந்த தொடித்தோட்செம்பியன்(மணி1:4) தேங்கு தூங்கெயிலெறிந்தவனும்(கலிங்க. இராச 17) வாங்குந் திருக்கொற்ற வாளொன்றின் வாய்வாய்ப்பத, தூங்கும் புரிசை துணித்த கோன் (இராசராச,13) தூங்குமெயிலெறிந்த சோழனும் (விக்கரம, 9) எனப் பல்வேறிடங்களிலும் வருவற்றாலறிக. புறவின் துயர் தீரவும் பருந்தின் இடும்பை நீங்கவும் உடம்பு அரிந்து இட்டோன சிபி என்னும் ஒரு சோழனாவான்.

செங்குட்டுவன் செயல்

173-178: பெருமகன்...............ஏவி

(இதன் பொருள்) பெருமகன் மறையோன் பேணி ஆங்கு அவற்கு ஆடகப் பெருநிறை ஐ ஐந்து இரட்டி-அரசர் பெருமகனாகிய அச் சேரன் செங்குட்டுவன் அருமறை முதல்வனாகிய அம் மாடல மறையோனைப் பெரிதும் பாராட்டி அப்பொழுது அவ்வந்தணனுக்குப் பொன் கட்டியாகிய பெரிய நிறையையுடைய ஐம்பது துலாம் அளவிற்றாகிய; தன்னிறை-தன் உடம்பின் நிறையாகிய பொற்பரிசிலை; தோடு ஆர் போந்தை வேலோன் மாடல மறையோன் கொள் கென்று அளித்து-இதழமைந்த பனம்பூ மிலைந்த வேலேந்திய அச் செங்குட்டுவன் இத் தானத்தை மாடல் மறையோன் கொள்வானாக என்று வழங்கிப் பின்னர்; ஆங்கு ஆரிய மன்னர் ஐ இருபதின்மரைச் சீர்கெழு நன்னாட்டுச் செல்க என்று ஏவி-அப் பாடிவீட்டின்கண் தன்னோடு இருந்த நண்பராகிய ஆரிய மன்னர் நூற்றுவரையும் சிறப்புப் பொருந்திய அவருடைய நல்ல நாட்டிற்குப் போதுக என்று விடை கொடுத்த பின்னர் என்க.

(விளக்கம்) ஐம்பது துலாம் பொன் ஆகிய தனது உடம்பின் நிறையைஉடைய ஆடகம் என்க-ஆடகம்-பொன். இங்ஙனம் வழங்கும் தானத்தை துலாபாரம் புகுதல் என்பர். ஐயிருபதின்மர் என்றது நூற்றுவர் கன்னரை. அவரவர் நன்னாட்டிற்கு என்க.

இதுவுமது

179-191: தாபத...........ஏவி

(இதன் பொருள்)தாபத வேடத்து உயிருய்ந்து பிழைத்த மாபெருந்தானை மன்ன குமரர்-போரின்கண் புறங் கொடுத்துத் துறவோர் வேடம் புனைந்து அவ்வாற்றால் உயிருடன் தப்பிப் பிழைத்த மிகப் பெரிய படைகளோடு வந்தவராகிய அரசர் மக்களையும்; சுருள் இடு தாடி மருள் படு பூங்குழல் அரி பரந்து ஒழுகிய செழுங்கயல் நெடுங்கண் விரிவெள் தோடு வெள் நகைத்துவர்வாய்-சுருண்டிருக்கின்ற தாடியையும் மயக்கமுண்டாக்குகின்ற அழகிய கூந்தலையும் செவ்வரி பரவி ஓடிய வளவிய கயல்மீன் போன்ற நீண்ட கண்ணையும் மலர்ந்த வெள்ளிய மலர்மாலையினையும் வெள்ளிய பற்களையும் பவழம் போன்ற வாயையும்; சூடக வரிவளை ஆடு அமைப் பணைந்தோள் வயர் இள வன முலைத் தளரியல் மின் இடை-சூடகம் என்னும் வரிகளை உடைய வளையல்களையும் அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோள்களையும் வளருகின்ற இளைய அழகிய முலையையும் தளருகின்ற நடையினையும் மின்னல் போன்ற இடையினையும் பாடகச் சீறடி ஆரியப் பேடியோடு-சிலம்பணிந்த சிறிய அடிகளை உடைய ஆரிய நாட்டுப் பேடியுடனே; எஞ்சா மன்னர் இறை மொழி மறுக்கும் கஞ்சுக முதல்வர் ஈரைஞ்ஞாற்றுவர்-மறப்பண்பு ஒழியாத பகை மன்னருடைய மேலான மொழியையும் மறுத்துரைக்கும் மன வலிமையோடே கூடிய மெய்ப்பை புகுந்த தலையாய தூதுவர் ஓராயிரவரை; அரியின் போந்தை அருந்தமிழ் ஆற்றல் தெரியாது மலைந்த கனக விசயரை-பகை மன்னர்களுள் வைத்துப் பனம்பூச் சூடி வருகின்ற அரிய தமிழ் மறவருடைய போராற்றும் திறமையைத் தெரிந்து கொள்ள மாட்டாமையால் எதிர்த்து வந்து போராற்றிப் புறமிட் டோடிய கனகனும் விசயனுமாகிய ஆரிய மன்னர் இருவரையும்; இருபெருவேந்தர்க்குக் காட்டிட ஏவி-தன்னோடொத்த சோழனும் பாண்டியனுமாகிய இரண்டு முடி வேந்தர்களுக்கும் காட்டிக் கொணருமாறு கட்டளையிட்டு என்க.

(விளக்கம்) தாபத வேடம்-துறவோர் வேடம். மாபெருந்தானை மன்ன குமரர் என்றது இகழ்ச்சி. அரி-செவ்வரி. நகை-பல். துவர்-சிவப்புமாம். கஞ்சுகமுதல்வர்-
தூதர். தூதர் என்பதற்கு அறிகுறியான மெய்ப்பை அணிந்திருத்தல் பற்றி இவர்களைக் கஞ்சுகி மாக்கள் என்பர். சஞ்சுகம்-மெய்ப்பை(சட்டை) இருபெரு வேந்தர் என்றது சோழனையும் பாண்டியனையும்.

செங்குட்டுவன் கண்படை நிலை

192-199: திருந்து.........தானையொடு

(இதன் பொருள்) திருந்து துயில் கொள்ளா அளவை-வடவாரிய மன்னரை வென்று கண்ணகித் தெய்வத்திற்கு கற்கொண்டு பெயர்ந்த செங்குட்டுவன் சினந் தணிந்து பாடிவீட்டின்கண் இன்துயில் கொள்ளும் பொழுது; யாங்கணும் பரம்பு நீர்க் கங்கைப் பழனப் பாசடை எவ்விடத்தும் பரந்து பாய்கின்ற நீரையுடைய கங்கையாற்றின் மருங்கமைந்த பழனங்களிலே பசிய இலையையுடைய; இளந்தாமரை பயில் பல் வண்டு யாழ் செய இளமையுடைய செந்தாமø நாள் மலர்களில் பயிலுகின்ற பலவாகிய வண்டுகள் யாழ்போன்ற இனிய இசையைப் பாடும் படி; வெயில் இளம் செல்வன் விரிகதிர் பரப்பி-வெயில் ஒளியையுடைய காலைக் கதிரவன் விரிகின்ற ஒளியைப் பரப்பி-குணதிசைக் குன்றத்து உயர்மிசை தோன்ற-கிழக்குத் திசையின்கண் உள்ள உதயகிரி என்னும் மலையினது உயர்ந்த உச்சியின் மேல் வந்து தோன்றா நிற்ப; குடதிசை ஆளுங் கொற்ற வேந்தன்-தமிழ் கத்து மேற்றிசையிலுள்ள நாட்டை ஆளுகின்ற வெற்றியை உடைய செங்குட்டுவன் என்னும் அரசன்; வடதிசைத் தும்பை வாகையொடு முடித்து-வடதிசைக்கண் சென்று வடவாரிய மன்னருடைய போர்களத்தின்கண் தும்பைப் பூச் சூடிப் புகுந்து போராற்றி வென்று வாகைப்பூச் சூடுதலோடே அப் போரினை முடித்து; தென் திசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு-தனக்குரிய தென் திசையை நோக்கி மீண்ட வெற்றியை யுடைய நாற்பெரும் படையோடு என்க

(விளக்கம்) திருந்து துயில் என்றது கண்படை நிலை என்னும் வாகைத் திணைத்துறை அஃதாவது மண்கொண்ட மறவேந்தன் கண்படை நிலை மலிந்தன்று எனவரும்( புறப்-வெண்பாமாலை-வாகை-29) கொளுவான் உணர்க.

செங்குட்டுவன் வஞ்சியை நோக்கி வருதல்

200-நிதி துஞ்சு என்பது முதலாக 256-குட்டுவனென் என்னுந்துணையும் ஒரு தொடர்

200-206: நிதிதுஞ்சு..........கட்டில்

(இதன் பொருள்) நிதி துஞ்சு வியல் நகர் நீடுநிலை நிவந்து கதிர் செலவு ஒழித்த கனக மாளிகை-பல்வேறு வகைப் பொருள்களும் குவிந்து வாளா கிடக்கின்ற அகன்ற கருவூலத்தோடே நெடிய நிலைகளோடே உயர்ச்சி பெற்று ஞாயிற்று மண்டிலத்தின் இயக்கத்தைத் தடுப்பதுபோன்று உயர்ந்த பொன்னால் இயன்ற மாளிகையாகிய உவளகத்தின்கண்; முத்து நிரைக் கொடித்தொடர் முழுவதும் வளைஇய-முத்துக்களைக் கோத்த நிரல்பட்ட சல்லியும் தூக்குமாகிய தொடராலே முழுவதும் வளைக்கப்பட்ட; சித்திர விதானத்து-சித்தரங்கள் எழுதப் பெற்ற மேற்கட்டியினை உடைய; செய்பூங்கைவினை இலங்கு ஒளி மணிநிரை இடை இடை வகுத்த-திறம்படச் செய்யப்பட்ட பொலிவுடைய கைத்தொழில் அழகுடனே விளங்குகின்ற மாணிக்கங்களை வரிசை வரிசையாக இடை இடையே பதிக்கப்பட்ட, விலங்கு ஒளி வயிரமொடு பொலந்தகடு போகிய-பக்கத்திலே பாய்கின்ற ஒளியை உடைய வயிரம் இழைக்கப் பெற்ற பொற்றகட்டினைத் தைத்த; மடையமை செறுவின் வான் பொற்கட்டில்-மூட்டுவாய் நெருங்கும்படி கடாவிய உயரிய பொன்னால் இயன்ற கட்டிலாகிய என்க.

(விளக்கம்) நிதி-பொன்மணி முதலியன. அவை மிக்குக் கிடத்தலின் நிதி துஞ்சும் நகர் என்றார். நகர் ஈண்டுக் கருவூலம். அரண்மனை மாளிகையின் உயர்ச்சியை விதப்பார் கதிர் செலவொழித்த கனக மாளிகை என்றார். மாளிகை ஈண்டு உவளகம். வளைஇய-வளைத்த பொலந்தகடு-பொற்றகடு.

இதுவுமது

207-213: புடை.......வாழ்த்த

(இதன் பொருள்) புடை திரள் தமனியப் பொன்கால் அமளிமிசை-பக்கந்திரண்டுள்ள பொற்குடம் அமைந்த அழகிய கால்களையுடைய படுக்கைக் கட்டிலின் மேல்; இணைபுணர் எகினத்து இளமயிர் செறித்த துணை அணைப் பள்ளி-தன் சேவல் அன்னத்தோடே புணர்ந்த பெடை அன்னம் புணர்ச்சி இன்பத்தால் உள்ளம் உருகி உதிர்த்து விட்ட மெல்லிய தூவிகளைத் திரட்டிப் பஞ்சாக அடைத்த காதல் துணைவர் தம்முள் ஒருவரை ஒருவர் முயங்குவதற்கு இடனான அணைகளையுடைய பள்ளியின் மேல்; துயில் ஆற்றுப் படுத்து-துயிலைப் போக்கி; ஆங்கு எறிந்து களங்கொண்ட இயல் தேர்க் கொற்றம் அறிந்து உரை பயின்ற ஆயச் செவிலியர்-அவ் வட நாட்டின்கண் வடவாரிய மன்னரைக் கொன்று குவித்து அப் போர்களத்திலே பெற்ற இயங்குகின்ற தேரினது வெற்றியை உள்ளவாறு உணர்ந்து சொல்லிச் சொல்லிப் பழகிய கூட்டமாகிய செவிலித்தாயார்; தோள் துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக எனப் பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டு வாழ்த்த-நீ இத் துணை நாளும் நினது தோளுக்குப் பொருந்திய நின் வாழ்க்கைத் துணைவியைத் துறந்திருந்தமையாலே உண்டான துன்பத்தை இப்பொழுது தவிர்ந்து இன்புறுக என்று தாம் பாடுகின்ற பாட்டோடு இணைத்துப் பல்லாண்டு கூறி வாழ்த்தா நிற்பவும் என்க.

(விளக்கம்) துணைபுணர் அன்னத்தூவியில் செறிந்த இணை அணை மேம்படத் திருந்து துயில் என அந்திமாலைச் சிறப்பச்செய் காதையினும் வந்தமை அறிக(67-8) ஆற்றுப் படுத்துதல்-போக்கிவிடுதல்.

இதுவுமது

214-224: சிறுகுறு.......பாணியும்

(இதன் பொருள்) சிறு குறுங்கூனும் குறளும் சென்று-அரண்மனையின்கண் பெருந்தேவி மாளிகையில் குற்றேவல் புரியும் சிறிய குறிய கூனுருவமுடையோரும் குறள் உருவமுடையோரும் கோப்பெருந்தேவி இளங்கோ வேண்மாள் முன்னிலையில் விரைந்து சென்று தேவீ; பெருமகன் வந்தான் பெறுகநின் செவ்வி-நம் பெருமான் வடதிசை நோக்கி ஆள்வினை மருங்கின் பிரிந்து சென்றவன் மீண்டு வந்துற்றனன் ஆதலால் அவனை வரவேற்கத்தகுந்த நின்னுடைய செவ்வியை நீ பெறுவாயாக; நறுமலர்க் கூந்தல் நாளணி பெறுக என-நினது நறிய மலரையுடைய கூந்தலானது நாட்காலத்திலே செய்கின்ற ஒப்பனையைப் பெறுவதாக எனவும்; அமைவிளை தேறல் மாந்தியகானவன் கவண்விடு புடையூஉக் காவல் கைவிட-மூங்கிற்றண்டின்கண் பெய்து முதிர்வித்த தேறலைப் பருகிய குறவன் கவண் கல்லெறிந்து விலங்குகளை அடிக்கின்ற தனது காவல் தொழிலைக் கல்லெறிந்து விலங்குகளை அடிக்கின்ற தனது காவல் தொழிலைக் கைவிட்டமையாலே அச் செவ்வி நோக்கி; வீங்குபுனம் உணீஇய வேண்டி வந்த ஓங்கு இயல் யானை தூங்கு துயில் எய்த-விளைடு பெருகிய தன்மையை உடைய யானையானது தினை உண்ணுதலைக் கைவிட்டு நன்கு தூங்குவதாகிய உறக்கத்தை எய்தும்படி; வாகை தும்பை வடதிசைச் சூடிய வேக யானையின் வழியோ நீங்கு என-வாகை மாலையும் தும்பை மாலையும் வடதிசையின் கண் நம் அரசன் சூடுதற்குக் காணமான விரைந்த யானைப் படைகளை மீண்டும் ஊர்ப்புகுதும் வழி இதுவேயாகும் ஆகவே இவ்விடத்தினின்றும் நீங்குவாயாக என்று பொருளமைந்து, திறத்திறம் பகர்ந்து சேண் ஓங்கு இதணத்துக் குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்-திறத்திறம் என்னும் அப் பண்ணின்கண் அமைத்து மிகவும் உயர்ந்த பாணின்கண் இருந்து குறமகளிர் பாடிய குறிஞ்சிப்பண்ணும் என்க.

(விளக்கம்) கானவன்-தேறல் பருகியமையால் மயங்கிக் காவலைக் கை விட்டானாக அந்தச் செவ்வி பார்த்து தினையுண்ண வந்த யானை குறத்தியர் பரண்மிசை இருந்து பாடிய குறிஞ்சிப் பண்ணைக் கேட்டு மயங்கித் தான் வந்த காரியத்தை மறந்து நின்றபடியே தூங்கிற்று. அது கண்ட அக் குற மகளிர் மீண்டும் பாடுபவர், யானையே! நீற்குமிடம் யானைப்படை போகும்வழி ஆதலின் அவ்விடத்தை விட்டுப் போய் விடு என்று பாடினர் என்பது கருத்து.

இதுவுமது

225-230: வடதிசை...............பாணியும்

(இதன் பொருள்) பகடே வடதிசை மன்னர் மண் எயில் முருக்கி கவடி வித்திய கழுதை ஏர் உழவன் குடவர் கோமான் வந்தான்-எருதே! எருதே! நீ ஒரு செய்தி கேள்! வடதிசை மன்னராகிய கனகவிசயரை உள்ளிட்ட அரசர்களுடைய நிலைபேறுடைய மதில்களை அழித்து வெள் வாகை விதைத்த கழுதைபூட்டிய ஏரை உழுகின்ற குடநாட்டு அரசனாகிய சேரன் செங்குட்டுவன் வாகை சூடி மீண்டும் வந்தான்; நாளை மன்னர் அடித்தளை நீக்கும் வெள் அணி ஆம்-நாளை பகையரசருடைய கால் விலங்குகளை அகற்றுதற்குக் காரணமான பிறந்த நாள் மங்கல விழா அச் செங்குட்டுவனுக்கு நிகழுமாதலின்; படுநுகம் பூணாய் எனும்-உள் பிடரில் படுகின்ற நுகத்தடியைப் பூண்டு நீ உழவேண்டியதில்லைகாண் என்னும் பொருளமைத்துப் பாடுகின்ற; தொடுப்பு ஏர் உழவர் ஓதைப் பாணியும்-விளாக்கோலி உழுகின்ற பெரிய உழவர் முழங்குகின்ற ஏர் மங்கலப் பாடலும் என்க.

(விளக்கம்) கவடி-வெள் வரகு. பண்டைக் காலத்துப் பகை மன்னர் அரண்களை அழித்த அரசர் கோவேறு கழுதைகளை ஏரிற் பூட்டி அரண்மனையின் உள்ளே உழுது உண்ணுதற்குதவாத வெள்வரகினை விதைப்பது ஒரு வழக்கம். தொடுப்பு-விளாக்கோலுதல். ஒன்றனோடு ஒன்று தொடர்புடையதாகக் கோலப்படுதலின் அப் பெயர்த்தாயிற்று தொடுப்பு-விதைப்புமாம். உழவர் பாணி. ஏர்மங்கலப் பாட்டு.

இதுவுமது

231-241: தண்ணான்.............பாணியும்

(இதன் பொருள்) தண்ஆன் பொருநை ஆடுநர் இட்ட வண்ணமும் சுண்ணமும் மலரும் பரந்து-தண்ணிய ஆன்பொருநைப் பேரியாற்றின்கண் நீராடுகின்ற மாந்தர் விடுத்த வண்ணங்களும் சுண்ணப் பொடிகளும் பல்வேறு வண்ண மலர்களும் நீரின்கண் பரவி, விண் உறை வில்போல் விளங்கிய பெருந்துறை-வானத்தே தோன்றுகின்ற இந்திர வில்லைப்போன்று பல்வேறு வண்ணத்தோடு விளங்குகின்ற பெரிய நீராடு துறையின்கண்; வண்டு உணமலர்ந்த மணித்தோட்டுக் குவளை முண்டகக் கோதையொடு முடித்த குஞ்சியின்-வண்டுகள் தேனுண்ணும்படி மலர்ந்துள்ள நீலமணிபோலும் நிறமுடைய கருங்குவளைப் பூமாலையை முள்ளிப் பூமாலையோடு சேர்த்து அணிந்திருக்கின்ற தலை மயிரின்கண்; முருகுவிரி தாமரை முழுமலர் தோய-மணம் பரப்புகின்ற தாமரையினது முழுமையான மலரையும் அணிந்துகொண்டு; குருகு அலர் தாழைக் கோட்டுமிசை கொம்பின் மேலே ஏறி இருந்து; வியன்பேரிமயத்து வில்லவன் வந்தான்-அகன்ற பெரிய இமய மலையினின்றும் நம் சேரர் பெருமான் மீண்டு வந்தான்; பல் ஆன் நிரையொடு நீர் படர்குவிர் என-அவன் அத் திசையினின்றும் திறைப்பொருளாகப் பெற்று வருகின்ற பல்வேறு வகைப்பட்ட ஆனிரையோடு சேர்ந்து நீங்களும் செல்லுவீர் என்று கூறி; காவலன் ஆனிரை நீர்த்துறை படீஇ-அச் சேரன் செங்குட்டுவனுக்குரிய ஆனிரையை நீருண்ணத் துறையின்கண் செலுத்திநின்று; கோவலர் ஊதும் குழலின் பாணியும்-இடையர்கள் மகிழ்ந்து ஊõதநிற்கும் வேய்ங்குழலிசையும் என்க.

(விளக்கம்) ஆன்பொருநை-ஓர் யாற்றின் பெயர் இக்காலத்தே தாமிரபரணி என்பர். தண் பொருநை என்பதே இவ்வாறு வழங்குகின்றது என்க. விண்ணுறை வில்-இந்திர வில். முண்டகக் கோதை முள்ளிப்பூ மாலை. குஞ்சி-ஆண் மயிர். குருகு போன்று அலர் தாழை என்க. குருகு-கொக்கு. இது வெண்டாழை மலருக்குவமை. வில்லவன் சேரன் இமயத்தினின்று கொணருகின்ற பல்லான் நிரை என்க.

இதுவுமது

242-250: வெண்டிரை...........பாணியும்

(இதன் பொருள்) வெள்திரை பொருத வேலை வாலுகத்துக் குண்டுநீர் அடைகரை குவையிரும் புன்னை-வெள்ளிய அலைகள் மோதப்பெற்ற கடற்கரையின்கண் அமைந்த மணற்குன்றின்மருங்கே ஆழமான நீரையுடைய அடைகரையின்கண் அடர்ந்துள்ள கரிய புன்னை நீழலின்கண்; வலம்புரி ஈன்ற நலம்புரி முத்தம் வலம்புரிச் சங்கு கருவிலிருந்து ஈன்ற அழகிய விரும்புதற்குக் காரணமான முத்துக்களை; கழங்காடு மகளிர் ஓதை ஆயத்து-கழங்காட்டம் ஆடுகின்ற நெய்தல் நிலத்து மகளிரின் ஆரவாரமுடைய கூட்டத்தின்கண் அம் மகளிர்; வழங்கு தொடி முன்கைமலர ஏந்தி-இயங்குகின்ற வளையலை உடைய முன் கையை அகல விரித்து ஏந்திக்கொண்டு; மடவீர் யாம்-மகளிர்களே இனி யாமெல்லாம்; வானவன் வந்தான் வளர் இள வன முலை தோள் நலம் உணீஇய-நம் சேரர்பெருமான் வாகைசூடி மீண்டு வந்தான். இனி அவன் நம்மைக் காதலித்து வளருகின்ற இளைய அழகிய முலைகள் அவனது தேரளினது ஊற்றின்பத்தை நுகரும்படி; தும்பை போந்தையொடு வஞ்சி பாடுதும் எனும்-வாகை சூடுதற்குக் காரணமான தும்பைப் பூமாலையையும் அவன் அடையாளப் பூவாகிய பனம்பூ மாலையையும் வஞ்சிப்பூ மாலையையும் இனிப் பாடக் கடவேம் என்கின்ற; அம் சொல் கிளவியர் அம் தீம்பாணியும்-அழகிய சொல்லையுடைய மொழியினை உடைய அம் மகளிர் பாடுகின்ற அழகிய இனிய நெய்தற்பண்ணும் என்க.

(விளக்கம்) வேலை-கடற்கரை. வாலுகத்துக் கரை குண்டு நீர் அடைகரை எனத் தனித்தனி கூட்டுக! வாலுகம்-மணற்குன்று குண்டு நீர்-ஆழமான நீர். வலம்புரி ஈன்ற முத்தத்தைக் கழங்காடு மகளிர் முன்கை மலரக் கழங்காக ஏந்தி என்க. வஞ்சி வஞ்சி நகரமுமாம். இதன் கண் குறிஞ்சிப் பாணியும் உழவர் ஓதைப் பாணியும்(மருத நிலப்பண்) குழலின் பாணி(முல்லைப்பண்) அந்தீம்பாணி (நெய்தற்பண்) என நான்கு நிலத்திற்கு முரிய நான்கு பண்களும் வந்தமை உணர்க.

இதுவுமது

251-256: ஓர்த்துடன்.........குட்டுவனென்

(இதன் பொருள்) ஓர்த்து உடன் இருந்த கோப்பெருந்தேவி வால்வளை செறிய -செவியால் ஆராய்ந்து கொண்டிருந்த கோப்பெருந்தேவியாகிய இளங்கோ வேண்மாளின் உடம்பு மகிழ்ச்சியால் பூரிப்படைந்து அவளது வெள்ளிய சங்கு வளையல்கள் செறியா நிற்ப; செங்குட்டுவன் வலம்புரி வலன்எழ மாலை வெண்குடைக்கீழ்-செங்குட்டுவன் என்னும் சேரர் பெருமான் வலம்புரிச் சங்கங்கள் வெற்றியை விளக்கி முழங்கவும் மலர்மாலையணிந்த கொற்ற வெண்குடை நிழலின்கீழ் அமர்ந்து வாகைச் சென்னியன் வேக யானையின் மீமிசைப் பொலிந்து-வாகைமாலை சூடிய முடியையுடையவனாய் விரைந்து வருகின்ற யானையின் பிடரின்மேல் பொலிவுற வீற்றிருந்து: குஞ்சர ஒழுகையிற் கோநகர் எதிர்கொள வஞ்சியுட் புகுந்தனன்-மங்கலச் சின்னமாகிய யானை அணி முதலியவற்றோடு தலைநகரத்திலுள்ள சான்றோர் எதிர்கொள்ளும் படி நகரத்தின்கண் புகுந்தான் என்பதாம்.

(விளக்கம்) அரசனுடைய வருகையினைப் பாடும் பாடல்களை ஓர்த்தலால் பிரிவாற்றி இருந்த கோப்பெருந்தேவி என்க. மங்கலத்தின் பொருட்டு அப் பெருந் தேவி பிரிந்துறைந்த காலத்தில் எல்லாம் சங்கு வளையல் ஒன்றுமே அணிந்திருந்தமை தோன்ற வால்வளை செறிய என்றார். வேகயானை-சினமிக்க யானையுமாம். யானையின் பிடரியில் இடப்பட்ட பொன்னிருக்கையின் மேலிருத்தலால் யானையின் மிசை என்றொழியாது யானையின் மீமிசை என்றார். ஒழுகை-அணி. கோநகர்-தலை நகரம் ஆகு பெயர். நகரத்துச் சான்றோர் என்க.

பா-நிலைமண்டில ஆசிரியப்பா

நீர்ப்படைக் காதை முற்றிற்று.
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 28, 2012, 08:35:38 AM
28. நடுகற் காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அஃதாவது-கற்புக் கடவுளாகிய கண்ணகிக்குத் திருவுருச் சமைத்தற்கு வடபேரிமயத்தினின்றும் கொணர்ந்த கல்லின்கண் அக் கண்ணகியின் திருவுருவத்தை நடுதலும், மீண்டும் அக் கல்லை நூன் முறைப்படி திருக்கோயிலின்கண் நிறுத்தி வைத்தலும் மீண்டும் அக் கல்லின்கண் கண்ணகித் தெய்வத்தை நிறுத்துதலும் ஆகிய செய்திகளைக் கூறும் பகுதி என்றவாறு.

இனி, இக் காதையின்கண் செங்குட்டுவன் கோப்பெருந்தேவியுடன் கூடி நிலாமுற்றத்தின்கண் கூத்தாட்டுக் கண்டு மகிழ்தலும் பின்னர் அத்தாணி மண்டபத்தில் அரசு கட்டில் ஏறி இருத்தலும் கனக விசயரைத் தமிழ் வேந்தர் இருவர்க்கும் காட்டி மீண்டு வந்த கஞ்சுக மாக்கள் சோழனும் பாண்டியனும் செங்குட்டுவனை இகழ்ந்தமையை அறிவுறுத்துதலும் அது கேட்டுச் செங்குட்டுவன் பெரிதும் சினந்தெழுதலும் அப்பொழுது நான்மறை முதல்வனாகிய மாடலன் அவ் வரசனுடைய சினத்தைத் தணித்து இளமையும் செல்வமும், யாக்கையும் நிலையுதலில்லாப் பொருள்கள் என்னும் உண்மையைத் திறம்பட அறிவுறுத்துதலும் நல்லறமே செய்யும் நன்னெறியின்கண் செல்லுமாறு அறிவுறுத்துதலும் அவ்வரசனும் மாடலன் மொழிகளாலே மெய்யுணர்டு பெற்றவனாய் அறக்கள வேள்வி முதலியன செய்தலும் கண்ணகித் தெய்வத்திற்குக் கோயில் அமைத்தலும் அத் தெய்வத்திற்குப் படிமம் அமைத்தலும் அப் படிமத்தில் கண்ணகித் தெய்வத்தை நிலை நாட்டுதலும் பிறவும் கூறப்படும்.

தண் மதி அன்ன தமனிய நெடுங் குடை
மண்ணகம் நிழல் செய, மற வாள் ஏந்திய,
நிலம் தரு திருவின் நெடியோன்-தனாது
வலம் படு சிறப்பின் வஞ்சி மூதூர்-
ஒண் தொடித் தடக் கையின் ஒண் மலர்ப் பலி தூஉய், 5

வெண் திரி விளக்கம் ஏந்திய மகளிர்,
உலக மன்னவன் வாழ்க! என்று ஏத்தி,
பலர் தொழ, வந்த மலர் அவிழ் மாலை-
போந்தைக் கண்ணிப் பொலம் பூந் தெரியல்
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்தர் 10

யானை வெண் கோடு அழுத்திய மார்பும்,
நீள் வேல் கிழித்த நெடும் புண் ஆகமும்,
எய் கணை கிழித்த பகட்டு எழில் அகலமும்,
வை வாள் கிழித்த மணிப் பூண் மார்பமும்,
மைம்மலர் உண் கண் மடந்தையர் அடங்காக்  15

கொம்மை வரி முலை வெம்மை வேது உறீஇ;
அகில் உண விரித்த, அம் மென் கூந்தல்
முகில் நுழை மதியத்து, முரி கருஞ் சிலைக் கீழ்,
மகரக் கொடியோன் மலர்க் கணை துரந்து,
சிதர் அரி பரந்த செழுங் கடைத் தூது  20

மருந்தும் ஆயது, இம்மாலை என்று ஏத்த,
இருங் கனித் துவர் வாய் இள நிலா விரிப்ப,
கருங் கயல் பிறழும் காமர் செவ்வியின்
திருந்து எயிறு அரும்பிய விருந்தின் மூரலும்,
மாந்தளிர் மேனி மடவோர்-தம்மால்  25

ஏந்து பூண் மார்பின் இளையோர்க்கு அளித்து;
காசறைத் திலகக் கருங் கறை கிடந்த
மாசு இல் வாள் முகத்து, வண்டொடு சுருண்ட
குழலும், கோதையும், கோலமும், காண்மார்,
நிழல் கால் மண்டிலம் தம் எதிர் நிறுத்தி; 30

வணர் கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழீஇ,
புணர் புரி நரம்பின் பொருள் படு பத்தர்,
குரல் குரலாக வரு முறைப் பாலையின்,
துத்தம் குரலாத் தொல் முறை இயற்கையின்,
அம் தீம் குறிஞ்சி அகவல் மகளிரின்,  35

மைந்தர்க்கு ஓங்கிய வரு விருந்து அயர்ந்து;
முடி புறம் உரிஞ்சும் கழல் கால் குட்டுவன்
குடி புறந்தருங்கால் திரு முகம் போல,
உலகு தொழ, தோன்றிய மலர் கதிர் மதியம்
பலர் புகழ் மூதூர்க்குக் காட்டி நீங்க  40

மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப
ஐங் கணை நெடு வேள் அரசு வீற்றிருந்த
வெண் நிலா-முன்றிலும், வீழ் பூஞ் சேக்கையும்,
மண்ணீட்டு அரங்கமும், மலர்ப் பூம் பந்தரும்
வெண் கால் அமளியும், விதான வேதிகைகளும்,  45

தண் கதிர் மதியம்-தான் கடிகொள்ள-
படு திரை சூழ்ந்த பயம் கெழு மா நிலத்து
இடை நின்று ஓங்கிய நெடு நிலை மேருவின்,
கொடி மதில் மூதூர் நடு நின்று ஓங்கிய
தமனிய மாளிகைப் புனை மணி அரங்கின்,  50

வதுவை வேண்மாள் மங்கல மடந்தை
மதி ஏர் வண்ணம் காணிய வருவழி
எல் வளை மகளிர் ஏந்திய விளக்கம்,
பல்லாண்டு ஏத்த, பரந்தன, ஒருசார்,
மண் கணை முழவும், வணர் கோட்டு யாழும்,  55

பண் கனி பாடலும், பரந்தன, ஒருசார்;
மான்மதச் சாந்தும், வரி வெண் சாந்தும்,
கூனும் குறளும், கொண்டன, ஒருசார்;
வண்ணமும் சுண்ணமும், மலர்ப் பூம் பிணையலும்,
பெண் அணிப் பேடியர் ஏந்தினர், ஒருசார்;  60

பூவும், புகையும், மேவிய விரையும்,
தூவி அம் சேக்கை சூழ்ந்தன, ஒருசார்;
ஆடியும், ஆடையும், அணிதரு கலன்களும்,
சேடியர் செல்வியின் ஏந்தினர், ஒருசார்-
ஆங்கு, அவள்-தன்னுடன் அணி மணி அரங்கம்  65

வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஏறி
திரு நிலைச் சேவடிச் சிலம்பு வாய் புலம்பவும்,
பரிதரு செங் கையில் படு பறை ஆர்ப்பவும்,
செங் கண் ஆயிரம் திருக் குறிப்பு அருளவும்,
செஞ் சடை சென்று திசைமுகம் அலம்பவும்;  70

பாடகம் பதையாது, சூடகம் துளங்காது,
மேகலை ஒலியாது, மென் முலை அசையாது,
வார் குழை ஆடாது, மணிக்குழல் அவிழாது,
உமையவள் ஒரு திறன் ஆக, ஓங்கிய
இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்  75

பாத்து-அரு நால் வகை மறையோர் பறையூர்க்
கூத்தச் சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து; அவன்
ஏத்தி நீங்க இரு நிலம் ஆள்வோன்
வேத்தியல் மண்டபம் மேவிய பின்னர் -
நீலன் முதலிய கஞ்சுக மாக்கள்   80

மாடல மறையோன்-தன்னொடும் தோன்றி,
வாயிலாளரின் மன்னவற்கு இசைத்தபின்,
கோயில் மாக்களின் கொற்றவன் தொழுது-
தும்பை வெம்போர்ச் சூழ் கழல் வேந்தே!
செம்பியன் மூதூர்ச் சென்று புக்கு, ஆங்கு,  85

வச்சிரம், அவந்தி, மகதமொடு, குழீஇய
சித்திர மண்டபத்து இருக்க வேந்தன்
அமர் அகத்து உடைந்த ஆரிய மன்னரொடு
தமரிற் சென்று, தகை அடி வணங்க,
நீள் அமர் அழுவத்து, நெடும் பேர் ஆண்மையொடு  90

வாளும் குடையும் மறக்களத்து ஒழித்து,
கொல்லாக் கோலத்து உயிர் உய்ந்தோரை
வெல் போர்க் கோடல் வெற்றம் அன்று என,
தலைத் தேர்த் தானைத் தலைவற்கு உரைத்தனன்,
சிலைத் தார் அகலத்துச் செம்பியர் பெருந்தகை-  95

ஆங்கு நின்று அகன்றபின், அறக்கோல் வேந்தே!
ஓங்கு சீர் மதுரை மன்னவன் காண,
ஆரிய மன்னர் அமர்க்களத்து எடுத்த
சீர் இயல் வெண்குடைக் காம்பு நனி சிறந்த
சயந்தன் வடிவின் தலைக்கோல், ஆங்கு,  100

கயந் தலை யானையின் கவிகையிற் காட்டி,
இமையச் சிமயத்து, இருங் குயிலாலுவத்து,
உமை ஒரு பாகத்து ஒருவனை வணங்கி,
அமர்க்களம் அரசனது ஆக, துறந்து,
தவப் பெரும் கோலம் கொண்டோ ர்-தம்மேல்  105

கொதி அழல் சீற்றம் கொண்டோ ன் கொற்றம்
புதுவது என்றனன் போர் வேல் செழியன் என்று,
ஏனை மன்னர் இருவரும் கூறிய
நீள்-மொழி எல்லாம் நீலன் கூற-
தாமரைச் செங் கண் தழல் நிறம் கொள்ளக்  110

கோமகன் நகுதலும் குறையாக் கேள்வி
மாடலன் எழுந்து, மன்னவர் மன்னே,
வாழ்க! நின் கொற்றம் வாழ்க! என்று ஏத்திக்
கறி வளர் சிலம்பில் துஞ்சும் யானையின்,
சிறு குரல் நெய்தல், வியலூர் எறிந்தபின்;  115

ஆர் புனை தெரியல் ஒன்பது மன்னரை
நேரிவாயில் நிலைச் செரு வென்று;
நெடுந் தேர்த் தானையொடு இடும்பில் புறத்து இறுத்து,
கொடும் போர் கடந்து; நெடுங் கடல் ஓட்டி;
உடன்று மேல்வந்த ஆரிய மன்னரை, 120

கடும் புனல் கங்கைப் பேர் யாற்று, வென்றோய்!
நெடுந் தார் வேய்ந்த பெரும் படை வேந்தே!
புரையோர் தம்மொடு பொருந்த உணர்ந்த
அரைசர் ஏறே! அமைக, நின் சீற்றம்!
மண் ஆள் வேந்தே! நின் வாழ் நாட்கள்  125

தண் ஆன் பொருநை மணலினும் சிறக்க!
அகழ் கடல் ஞாலம் ஆள்வோய், வாழி!
இகழாது என் சொல் கேட்டல் வேண்டும்-
வையம் காவல் பூண்ட நின் நல் யாண்டு
ஐ-ஐந்து இரட்டி சென்றதன் பின்னும், 130

அறக்கள வேள்வி செய்யாது, யாங்கணும்,
மறக்கள வேள்வி செய்வோய் ஆயினை;
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்து,
போந்தைக் கண்ணி, நின் ஊங்கணோர் மருங்கின்,
கடல் கடம்பு எறிந்த காவலன் ஆயினும்,  135

விடர் சிலை பொறித்த விறலோன் ஆயினும்
நான்மறையாளன் செய்யுள் கொண்டு,
மேல் நிலை உலகம் விடுத்தோன் ஆயினும்,
போற்றி மன் உயிர் முறையின் கொள்க என,
கூற்று வரை நிறுத்த கொற்றவன் ஆயினும்,  140

வன் சொல் யவனர் வள நாடு ஆண்டு,
பொன் படு நெடு வரை புகுந்தோன் ஆயினும்,
மிகப் பெரும் தானையோடு இருஞ் செரு ஓட்டி,
அகப்பா எறிந்த அருந்திறல் ஆயினும்,
உரு கெழு மரபின் அயிரை மண்ணி,  145

இரு கடல் நீரும் ஆடினோன் ஆயினும்,
சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து,
மதுக் கொள் வேள்வி வேட்டோ ன் ஆயினும்,
மீக்கூற்றாளர் யாவரும் இன்மையின்,
யாக்கை நில்லாது என்பதை உணர்ந்தோய்-  150

மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் மருங்கின்
செல்வம் நில்லாது என்பதை வெல் போர்த்
தண்தமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின்
கண்டனை அல்லையோ, காவல் வேந்தே?-
இளமை நில்லாது என்பதை எடுத்து ஈங்கு  155

உணர்வு உடை மாக்கள் உரைக்கல் வேண்டா,
திருஞெமிர் அகலத்துச் செங்கோல் வேந்தே!
நரை முதிர் யாக்கை நீயும் கண்டனை-
விண்ணோர் உருவின் எய்திய நல் உயிர்
மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்;  160

மக்கள் யாக்கை பூண்ட மன் உயிர்,
மிக்கோய்! விலங்கின் எய்தினும் எய்தும்;
விலங்கின் யாக்கை விலங்கிய இன் உயிர்
கலங்கு அஞர் நரகரைக் காணினும் காணும்;
ஆடும் கூத்தர்போல், ஆர் உயிர் ஒருவழி, 165

கூடிய கோலத்து ஒருங்கு நின்று, இயலாது;
செய் வினை வழித்தாய் உயிர் செலும் என்பது
பொய் இல் காட்சியோர் பொருள் உரை ஆதலின்,
எழு முடி மார்ப! நீ ஏந்திய திகிரி
வழிவழிச் சிறக்க, வய வாள் வேந்தே!  170

அரும் பொருள் பரிசிலேன் அல்லேன், யானும்;
பெரும் பேர் யாக்கை பெற்ற நல் உயிர்
மலர் தலை உலகத்து உயிர் போகு பொது நெறி,
புலவரை இறந்தோய்! போகுதல் பொறேஎன்;
வானவர் போற்றும் வழி நினக்கு அளிக்கும்,  175

நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்
அரு மறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய,
பெரு நல் வேள்வி நீ செயல் வேண்டும்,
நாளைச் செய்குவம் அறம் எனின், இன்றே
கேள்வி நல் உயிர் நீங்கினும் நீங்கும்;  180

இது என வரைந்து வாழு நாள் உணர்ந்தோர்
முதுநீர் உலகில் முழுவதும் இல்லை;
வேள்விக் கிழத்தி இவளொடும் கூடி,
தாழ் கழல் மன்னர் நின் அடி போற்ற,
ஊழியோடு ஊழி உலகம் காத்து,   185

நீடு வாழியரோ, நெடுந்தகை! என்று
மறையோன் மறை நா உழுது, வான் பொருள்
இறையோன் செவி செறு ஆக வித்தலின்-
வித்திய பெரும் பதம் விளைந்து, பதம் மிகுந்து,
துய்த்தல் வேட்கையின், சூழ் கழல் வேந்தன்  190

நான்மறை மரபின் நயம் தெரி நாவின்,
கேள்வி முடித்த, வேள்வி மாக்களை
மாடல மறையோன் சொல்லிய முறைமையின்
வேள்விச் சாந்தியின் விழாக் கொள ஏவி-
ஆரிய அரசரை அரும் சிறை நீக்கி,   195

பேர் இசை வஞ்சி மூதூர்ப் புறத்து,
தாழ் நீர் வேலித் தண் மலர்ப் பூம் பொழில்
வேளாவிக்கோ மாளிகை காட்டி,
நன் பெரு வேள்வி முடித்ததன் பின் நாள்,
தம் பெரு நெடு நகர்ச் சார்வதும் சொல்லி, அம்  200

மன்னவர்க்கு ஏற்பன செய்க, நீ என,
வில்லவன்-கோதையை விருப்புடன் ஏவி-
சிறையோர் கோட்டம் சீமின்; யாங்கணும்,
கறை கெழு நாடு கறைவிடு செய்ம் என,
அழும்பில் வேளோடு ஆயக்கணக்கரை 205

முழங்கு நீர் வேலி மூதூர் ஏவி-
அரும் திறல் அரசர் முறை செயின் அல்லது,
பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது என,
பண்டையோர் உரைத்த தண் தமிழ் நல் உரை,
பார் தொழுது ஏத்தும் பத்தினி ஆதலின்,  210

ஆர் புனை சென்னி அரசர்க்கு அளித்து;
செங்கோல் வளைய உயிர் வாழாமை,
தென் புலம் காவல் மன்னவற்கு அளித்து;
வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை, யாவதும்
வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை  215

வடதிசை மருங்கின் மன்னவர் அறிய,
குடதிசை வாழும் கொற்றவற்கு அளித்து;
மதுரை மூதூர் மா நகர் கேடுற,
கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்து;
நல் நாடு அணைந்து, நளிர் சினை வேங்கைப்  220

பொன் அணி புது நிழல் பொருந்திய நங்கையை-
அறக்களத்து அந்தணர், ஆசான், பெருங்கணி,
சிறப்புடைக் கம்மியர்-தம்மொடும் சென்று;
மேலோர் விழையும் நூல் நெறி மாக்கள்
பால் பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து,  225

இமையவர் உறையும் இமையச் செல் வரைச்
சிமையச் சென்னித் தெய்வம் பரசி,
கைவினை முற்றிய தெய்வப் படிமத்து,
வித்தகர் இயற்றிய, விளங்கிய கோலத்து,
முற்றிழை நன் கலம் முழுவதும் பூட்டி,  230

பூப் பலி செய்து, காப்புக் கடை நிறுத்தி,
வேள்வியும் விழாவும் நாள்தொறும் வகுத்து,
கடவுள் மங்கலம் செய்க என ஏவினன்-
வடதிசை வணக்கிய மன்னவர் ஏறு என்.

உரை

சேரன் செங்குட்டுவன் வஞ்சிபுகுந்த நாளின் மாலைக்கால நிகழ்ச்சி

1-8: தண்மதி...............மாலை

(இதன் பொருள்) தண்மதியன்ன தமனிய நெடுங்குடை மண்ணக நிழல் செய-குளிர்ந்த முழுவெண் திங்கள்போன்ற வடிவத்தை உடைய காம்பும் முகப்பும், பொன்னால் இயன்ற நெடிய தனது குடையானது இந்நில வுலகத்தின்கண் வாழுகின்ற உயிர்களுக்கெல்லாம் இன்ப வாழ்க்கையாகிய நிழலை வழங்கா நிற்ப; மறவாள் ஏந்திய நிலந்தரு திருவின் நெடியோன் தனது-தன்பகைவரை வெல்லுதற்பொருட்டு மறப்பண்பு மிகுந்த வாளை ஏந்திய காரணத்தால் பகையரசர் தம் நிலத்தினின்றும் கொணர்ந்து அளக்கின்ற திறைப் பொருளாகிய செல்வத்தையும் நீண்ட புகழையும் உடையோனாகிய செங்குட்டுவனுடைய; வலம் படு சிறப்பின் வஞ்சி மூதூர்-வடநாட்டு வெற்றி காரணமாக உண்டான புதிய சிறப்பினை உடைய வஞ்சி என்னும் அந்தம் பழைய தலைநகரத்தின்கண்; ஒள்தொடித் தடக்கையின் ஒள் மலர் பிலிதூஉய் வெள்திரி விளக்கம் ஏந்திய மகளிர்-ஒளியுடைய பொன் வளையலணிந்த தமது பெரிய கைகளினாலே ஒள்ளிய முல்லை மலராகிய பலிப்பொருளைத் தூவி வெள்ளிய திரியின்கண் விளக்கினை ஏற்றிக் கையில் ஏந்திய மகளிர்; உலக மன்னவன் வாழ்க என்று ஏத்திப் பலர் தொழவந்த மலர் அவிழ்மாலை-உலகத்தை ஆளுகின்ற மன்னவனாகிய சேரன் செங்குட்டுவன் நீடு வாழ்க என்று வாழ்த்தா நிற்ப, சான்றோர் பலரும் தெய்வந் தொழா நிற்ப வந்தெய்திய மல்லிகை முதலிய மலர்கள் மலர்கின்ற அற்றைநாள் மாலைப்பொழுதின்கண் என்க.

(விளக்கம்) மறவாள் ஏந்தியவனும் நிலந்தரு திருவினை உடையோனும் ஆகிய நெடியோன் என்க. அவன் மூதூரின்கண் மலர்தூவி விளக்கம் ஏந்திய மகளிர் வாழ்கெனப் பலர் தொழவும் வந்த மாலை என்க. ஏத்தி என்னும் எச்சத்தை ஏத்த எனத் திருத்திக் கொள்க.

மறக்குடி மகளிர் செயல்

9-21: போந்தை............ஏத்த

(இதன் பொருள்) போந்தைக் கண்ணிப் பொலம்பூந் தெரியல்-பனம்பூவால் இயன்ற கண்ணியாகிய பொற்பூ மாலையை அணிந்த வராய்ச் சென்று; வேந்து வினை முடித்த ஏந்துவாள் வலத்தர்-தம் அரசன் கருதிய போர்த்தொழிலை முற்றுவித்த தம் கையில் ஏந்திய வாளையும் வெற்றியையும் உடைய மறவர்களுடைய; யானை வெண்கோடு அழுத்திய மார்பும்-பகைவர் யானையின் வெள்ளிய கொம்பு மாய்ந்தமையால் உண்டான புண்ணையுடைய மார்பினையும்; நீள்வேல் கிழித்த நெடும் புண் ஆகமும்-அப்பகைவர் எறிந்த நீண்ட வேல்கள் கிழித்தமையால் உண்டான நெடிய புண்ணையுடைய மார்பினையும்; எய்கணை கிழித்த பகட்டு எழில் அகலமும்-அப் பகைவர் எய்த அம்புகள் கிழித்தமையால் உண்டான புண்ணையுடைய பெரிய அழகிய மார்பினையும்; வைவாள் கிழித்த மணிப்பூண் மார்பமும்-பகைவருடைய கூரிய வாள் கிழித்தமையால் உண்டான புண்ணையுடைய மணிக்கலன் பூண்ட மார்பினையும்; மைமலர் உண்கண் மடந்தையர்-அம் மறவருடைய காதலிமாராகிய நீலமலர் போன்ற மை உண்ட கண்களை உடைய மகளிர்கள்; அடங்கா-கச்சின் கண் அடங்காத; கொம்மை வரிமுலை வெம்மை வேதுறீஇ-பருத்த தேமலையுடைய முலைகளினது வெப்பத்தால் வேது கொண்டு; அகில் உணவரித்த அம் மென் கூந்தல் முகில் நுழை மதியத்து-அகிற் புகையை உட்கொள்ளும்படி விரித்து விடப்பட்ட அழகிய மெல்லிய தமது கூந்தலாகிய முகிலின் உள்ளே நுழைகின்ற தமது முகமாகிய திங்களின்கண் அமைந்த; முரிகருஞ் சிலைக்கீழ்-வளைந்த கரிய புருவமாகிய வில்லின்கீழ் அமைந்த; மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து-மகரமீன் எழுதிய கொடியை உடைய காமவேள் அவர் கண்களாகிய மலரம்புகளை நம்மீது எய்துப் புண்செய்து; சிதர் அரி பரந்த செழுங்கடைத் தூது-சிதரிய செவ்வரி ஓடியவளவிய அவரது கடைக்கண்ணாகிய தூது பண்டு நமக்குத் துன்பம் தருவதாய் இருப்பினும்; இம் மாலைப் பொழுதின்கண் அச் செழுங்கடைக் கண்ணே நம் நெஞ்சின் புண்ணிற்கு மருந்தாகவும் அமைவதாயிற்று என்று அம் மறவர் பாராட்டு எடுப்ப என்க.

(விளக்கம்) வேந்து வினை-அரசன் ஏவிய போர்த்தொழில் போர்த்தொழிலின்கண் யானைக் கோடு முதலியவற்றால் விழுப்புண் பட்ட மறவர்கள் இல்லம் புகுந்தவுடன் அவர்தம் காதலிமார் அன்புடன் முயங்குதலால் அப்புண்கள் வேதுபிடித்தாற் போன்று துன்பம் தாரா தொழிந்தன என்பது கருத்து. பாசறையின்கண் அக்காதலிமாருடைய கூந்தலாகிய முகிலின் கீழ் அமைந்த அவர்தம் முகமாகிய திங்களின்கண் புருவமாகிய வில்லை வளைத்து வில்லின் கீழதாகிய கண்ணாகிய மலர்க் கணையை ஏவி மன்மதன் துன்புறுத்தவும் அவருடைய கடைக்கண் அவர்பால் தம்மை இழுத்துத் துன்புறுத்தவும் கண்டேம். இப்பொழுது அக்கண் பார்வையும் கடைக்கண் தூதும் எமக்கு இன்பமளிக்கின்றன, என்று அம் மறவர் மகிழ்ந்த படியாம்.

இதுவுமது

22-31: இருங்கனி.........தழீஇ

(இதன் பொருள்) இருங்கனித் துவர்வாய் இளநிலா விரிப்பக்கருங் கயல் பிறழுங் காமர் செவ்வியில்-பெரிய கோவைப் பழம் போன்று சிவந்த வாயானது சிறிய நிலவொளியைப் பரப்பக் கரிய கயல்மீன் போன்று பிறழ்கின்ற அழகிய காட்சியோடே திருந்து எயிறு அரும்பிய விருந்தின் மூரலும்-திருத்தமுற்ற பற்களினின்றும் அரும்புகின்ற புதிய புன்னகையும்; மாந்தளிர் மேனி மடவோர் தம்மால் ஏந்துபூண் மார்பின் இளையோர்க்கு அளித்து -மாவினது தளிர்போன்ற நிறத்தையுடைய மகளிரால் அணிகலன் அணிந்த மார்பினை உடைய இளைய மறவர்க்கு வழங்கி; காசறைத் திலகக் கருங்கறை கிடந்த மாசு இல்லாள் முகத்து-கத்தூரித் திலகமாகிய கரிய களங்கம் கிடந்ததல்லால் பிறிதொரு களங்கமுமில்லாத ஒளிபடைத்த தமது முகத்தின்கண்; வண்டொரு சுருண்ட குழலுங் கோதையும் கோலமும் காண்மார்-மொய்த்த வண்டுகளோடே- சுருண்டு கிடக்கின்ற தம்முடைய கூந்தலையும் கூந்தலின்கண் அணிந்துள்ள மாலையையும் இவற்றின் அழகையும் காணும்பொருட்டு நிழல்கால் மண்டிலம் தம் எதிர் நிறுத்தி-தமது உருவத்தின் நிழலை வெளிப்படுத்துகின்ற கண்ணாடி மண்டிலத்தை அம் மகளிர் தமக்கு முன்னர் நிறுத்தி; வணர்கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழீஇ-வளைந்த கோட்டினை உடைய சிறிய யாழை எடுத்து அணைத்துக்கொண்டு என்க.

(விளக்கம்) கனி- கோவைக்கனி துவர்-பவழமுமாம். காமர் அழகு. மாலையானது மடவோர் தம்மால் விருந்தின் மூரல் இளையோர்க்கு அளித்து என்க. காசறை கத்தூரி. கறை-களங்கம் திலகத்தை அன்றி மற்றொரு கறையும் இல்லாத முகம் என்றவாறு மண்டிலம்-ஈண்டுக் கண்ணாடி.

இதுவுமது

32-40: புணர்புரி...............நீங்க

(இதன் பொருள்) புணர்புரி நரம்பின் பொருள்படு பத்தர்-இசையாலே தம்மு ளியைகின்ற நரம்பினையும் இசையின்பமாகிய நுகர் பொருள் தோன்றுதற்கு இடனான பத்தர் என்னும் உறுப்பினையுமுடைய அந்த யாழினின்றும்; குரல் குரலாக வருமுறைப்பாலையில்-குரல் குரலாகப் பிறக்கின்ற செம்பாலை முதலிய பண்ணுடன்; துத்தங்குரலாத் தொல்முறை இயற்கையின் அம்தீம் குறிஞ்சி அகவன் மகளிரின்-துத்தங் குரலாகத் தோன்றுகின்ற படுமலைப் பாலையும் பழைய முறைமையினையுடைய செவ்வழிப் பாலையும் அழகிய இனிய குறிஞ்சிப் பண்ணும் ஆகிய பண்களைப் பாடுகின்ற மகளிர் வாயிலாய்; மைந்தர்க்கு ஓங்கிய வருவிந்தமர்ந்து-அம் மைந்தரக்குச் சிறந்த பெறற்கரிய இசை விருந்தினையும் செய்து; முடிபுறம் உரிஞ்சுங் கழல் கால் குட்டுவன் குடி புறந்த தருங்கால் திருமுகம்போல வணங்குகின்ற பகை மன்னர்களின் முடிக்கலன்கள் தம்மீதிலே உராய்தற்குக் காரணமான வீரக்கழலணிந்த காலையுடைய செங்குட்டுவன் தன் குடிமக்களை அளிசெய்து பேணுங்கால் அவனது அழகிய முகம் விளங்குவது போல விளங்காநின்ற; உலகுதொழத் தோன்றிய மலர்கதிர் மதியம்-சான்றோர்கள் கைகுவித்து வணங்கும்படி வானத்தே தோன்றிய விரிந்த கதிரை உடைய திங்களை, பலர்புகழ் மூதூர்க்குக் காட்டி நீங்க-உலகத்தில் உள்ள சான்றோர் பலரும் புகழா நின்ற பழைய வஞ்சி நகரத்திற்குக் காட்டி மாலைக்காலம் நீங்கா நிற்ப என்க.

(விளக்கம்) பொருள்-இசையாகிய பொருள் இசை மிக்குத் தோன்றுவதற்குப் பத்தர் காரணமாதலின் பொருள்படுபத்தர் என்றார். குரல் குரலாக வரும் முறைப்பாலை என்பது செம்பாலை முதலியவற்றை குரலில் உழை தோன்றக் குறிஞ்சியாழ் என்பர். துத்தங் குரலாகத் தோன்றுவது படுமாலைப்பாலை என்பர். இவற்றின் இயல்புகளை ஆய்ச்சியர் குரவையில் காண்க. மைந்தர் என்றது போர் மறவரை மாலை மடவோர் தம்மால் மூரலையும், அகவன் மகளிரால் இசையையும் மைந்தர்க்கு அளித்து மதியத்தை மூதூர்க்குக் காட்டி நீங்க, என்க. குட்டுவன் குடிபுறந்தருங்கால் இன்முகத்தோடிருத்தலின் அவன் திருமுகம்போல மதியம் என்றார்.

இரவுக்கால நிகழ்ச்சிகள்

41-52: மைந்தரும்........வருவழி

(இதன் பொருள்) மைந்தருள் மகளிரும் வழிமொழி கேட்ப-உலகத்தின்கண் உள்ள ஆடவரும் பெண்டிரும் தன்வழிப்பட்டு நின்று தன் மொழிப்படி ஒழுகா நிற்ப; ஐங்கணை நெடுவேள் அரசு வீற்றிருந்த வெள்நிலா முன்றிலும் வீழ்பூஞ் சேக்கையும்-ஐந்து வகைப்பட்ட மலர்க்கணைகளை உடைய நெடிய காமவேள் கொலுவீற்றிருந்த வெள்ளிய நிலா முற்றத்திலும் காதலர்கள் ஒருவரை ஒருவர் விரும்புதற்கிடனான மலர்ப் பாயல்களினும்; மண் ஈட்டு அரங்கமும் மலர்ப்பூம் பந்தரும் வெண்கால் அமளியும் விதான வேதிகைகளும்-சுதை தீற்றிய கூத்தாட்டரங்கங்களிலும், மலரால் இயற்றப்பட்ட பூம் பந்தர்களிலும் யானைக் கொம்புகளால் இயன்ற கால்களையுடைய கட்டில்களிடத்தும் மேற்கட்டி இடப்பட்ட மேடைகளிடத்தும்: தண்கதிர் மதியம் தான்கடி கொள்ள-குளிர்ந்த ஒளியினையுடைய திங்கள் ஒளி மிகவும் விளக்கஞ் செய்ய; படுதிரை சூழ்ந்த பயங்கெழு மாநிலத்து இடைநின்று ஓங்கிய நெடுநிலை மேருவின்-கடல்சூழ்ந்த பயன் பொருந்திய பெரிய இந்நிலவுலகத்தின் நடுவிடத்தே நின்று உயர்ந்த நீண்ட நிலைமையினையுடைய மேருமலையாகிய பொன்மலைபோன்று; கொடிமதில் மூதூர் நடுநின்றோங்கிய-கொடி உயர்த்தப்பட்ட மதில் சூழ்ந்த வஞ்சி நகரத்தின் நடுநிலத்தே நிலைத்து நின்று உயர்ந்த; தமனிய மாளிகைப் புணைமணி அரங்கின்-பொன்னால் இயன்ற தனது மாளிகையின்கண் அழகுபடுத்தப்பட்ட மணி மேடையின்மேல் செங்குட்டுவனின் வாழ்க்கைத் துணைவியாகிய; வதுவை வேண்மாள் மங்கல மடந்தை மதிஏர் வண்ணங் காணிய வருவழி-வேண்மாள் என்னும் மங்களத் தன்மை பொருந்திய கோப்பெருந்தேவி திங்களினது எழுச்சியில் உண்டான அழகைக் கண்டு மகிழ்தற்கு வருகின்றபொழுது என்க.

(விளக்கம்) மைந்தரும் மகளிரும் என்றது காதற்கேண்மை உடையாரை. வேள்-காமவேள். உலகெங்கும் எவ்வுயிரிடத்தும் அவன் ஆணை செல்லுதலின் அவனது வழிமொழி கேட்ப என்றார். வெண்ணிலா மதியம் முதலிய இடங்களில் மிகுதியும் விளக்கமுறுதலின் மதியம் கடிகொள் என்றார். கடி-விளக்கம்; உரிச்சொல் மனைமாட்சி உடைய பெருந்தேவி என்பார் மங்கல மடந்தை என்றார். என்னை? மங்கலமென்பது மனைமாட்சி எனவரும் திருக்குறளும் காண்க. காணிய-காண்பதற்கு.

இதுவுமது

53-64: எல்வளை........ஒருசார்

(இதன் பொருள்) எல்வளை மகளிர் ஏந்திய விளக்கம் பல்லாண்டு ஏத்தப் பரந்தன வொருசார்-ஒளியுடைய வளையலணிந்த மகளிரால் ஏந்தப்பட்ட விளக்குகள் அத் தேவியார்க்கு பல்லாண்டு கூறி வாழ்த்துதற்பொருட்டு ஒருபக்கத்தே வந்து பரவின மண்கணைமுழவும் வணர்கோட்டு யாழும் பண்கனி பாடலும் பரந்தன வொருசார்-மண் பூசப்பெற்ற திரண்ட மத்தளமும் வளைந்த தண்டினை உடைய யாழும் ஆகிய இசைக்கருவிகளோடே இசையின்பம் கனிகின்ற பாடல்களும் ஒருபக்கத்தே பரவின; மான் மதச் சாந்தும் வரிவெள் சாந்தும் கூனும் குறளும் கொண்டன-ஒருசார்-கத்தூரிக் குழம்பும் தொய்யில் எழுதுதற்குரிய வெள்ளிய சந்தனமும் கூன் உடையோரும் குறள் உரு உடையோரும் ஒருபக்கத்தே ஏந்திவந்தனர்; வண்ணமும் சுண்ணமும் மலர் பூம்பிணையலும், பெண்அணிப் பேடியர் ஒருசார் ஏந்தின-வண்ணக் குழம்புகளும், சுண்ணங்களும், மலர்ந்த பூமாலைகளும், பெண் இயல்புமிக்க பேடியரால் ஒரு பக்கத்தே ஏந்தப்பட்டன; பூவும் புகையும் மேவிய விரையும் தூவியஞ் சேக்கை சூழ்ந்தன-ஒருசார்-மலர்களும் அகில் முதலிய நறுமணப் புகைகளும் விரும்பப்பட்ட மணப்பொருள்களும் அன்னத் தூவியால் இயன்ற பள்ளியை ஒருபக்கத்தே சூழ்ந்திருந்தன; ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும் ஒருசார் சேடியர் செவ்வியன் ஏந்தினர்-கண்ணாடியும் ஆடைகளும் அணிதற்குரிய அணிகலன்களும் ஒருபக்கத்தே அவற்றை வேண்டும் செவ்வி அறிந்து உதவுதற் பொருட்டுப் பணி மகளிர் ஒருபக்கத்தே ஏந்தி நின்றனர் என்க.

(விளக்கம்) எல்-ஒளி. பல்லாண்டு பாடுவோர் கையில் விளக்கேந்திப்-பாடுதல் மரபு. கணை-திரட்சி. வணர்கோடு-வளைந்த யாழ்த்தண்டு. பண்-இன்பம் கனிந்த பாடல் என்க. பெண்ணணிப் பேடியர்-பெண்மையை அவாவிப் பெண்டிர்போல அணிந்துகொள்ளும் பேடியர். ஆடி-கண்ணாடி. ஆடி முதலியவற்றைச் செவ்வி தெரிந்து கொடுப்பதற்காகச் சேடியர் ஏந்தி நின்றனர் என்றவாறு.

அரசனும் தேவியும் கூத்தாட்டுக் கண்டு மகிழ்தல்

45-79- ஆங்கு........பின்னர்

(இதன் பொருள்) ஆங்கு அவள் தன்னுடன் அணி மணி அரங்கம் வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஏறி-அப்பொழுது அக் கோப்பெருந் தேவியோடு அழகிய மணி பதித்த அந்த நிலா முற்றத் தின்கண் கடல் சூழ்ந்த நில உலகத்தை ஆளுகின்ற செங்குட்டுவனும் எறி இனிது வீற்றிருந்து; பாத்தரு நால்வகை மறையோர்-பகுத்துக் காணுதலரிய நான்கு வகைப்பட்ட மறைகளையும் ஓதி உணர்ந்த அந்தணர் வாழுகின்ற; பறையூர்க் கூத்தச் சாக்கையன்-பறையூர் என்னும் ஊரில் பிறந்தவனாகிய கூத்தச் சாக்கையன் என்னும் கலைஞன்; திருநிலைச் சேவடிச் சிலம்பு வாய் புலம்பவும்-அழகு நிலைபெற்றிருக்கின்ற சிவந்த அடியின்கண் அணிந்துள்ள சிலம்பு வாய்விட்டு முரலாநிற்பவும்; செங்கையின் பரிதரு படுபறை ஆர்ப்பவும்-சிவந்த கையிலே ஏந்திய ஒலிபடுகின்ற துடிமுழங்கவும்; செங்கண் ஆயிரம் திருக்குறிப்பருளவும் செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும்-சிவந்த கண்கள் எண்ணிறந்த கருத்துகளை வெளியிட்டருளவும் சிவந்த சடை பரந்து சென்று எட்டுத் திசைகளையும் துழாவவும்; பாடகம் பதையாது சூடகம் துளங்காது மேகலை ஒலியாது மென்முலை அசையாது வார்குழை ஆடாது மணிக்குழல் அவிழாது உமையவள் ஒரு திறன் ஆக-தனது ஒரு கூற்றிலமைந்த தேவியின் உருவின்கண் உள்ள சிலம்பு அசையாமலும் வளையல் குலுங்காமலும் மேகலை ஒலியாமலும் மெல்லிய முலை அசையாமலும் நீண்ட காதணியாகிய தோடு ஆடாமலும் நீலமணிபோன்ற நிறமுடைய கூந்தல் அவிழாமலும் இறைவி தனது ஒரு கூற்றிலே அமைந்திருப்ப; ஓங்கிய இமையவன் ஆடிய கொட்டிச் சேதம் ஆடலின்-ஏனைக் கடவுளரினும் உயர்ந்த கடவுளாகிய பிறவா யாக்கையின் பெரியோன் ஆடி யருனிய கொட்டிச்சேதம் என்னும் கூத்தின் ஆடிக் காட்டுதலாலே; மகிழ்ந்து அவன் ஏத்தி நீங்க-பெரிதும் மகிழ்ச்சியடைந்து அக் கூத்தச் சாக்கையன் பரிசில்பெற்று அரசனையும் தேவியையும் வாழ்த்தி அவ்விடத்தினின்றும் போயினனாக; இருநிலம் ஆள்வோன்-பெரிய நிலத்தை ஆளுகின்ற செங்குட்டுவன்; வேத்து  இயல் மண்டபம் மேவிய பின்னர்-அரசியல் நடத்துதற்குரிய அத்தாணி மண்டபத்தை அடைந்த பின்னர் என்க.

(விளக்கம்) (74) பாத்தரு நால்வகை மறையோர் வாழ்கின்ற பறையூர் என்னும் ஊரில் உள்ள சாக்கையன் என்னும் கூத்தன்தேவி யோடிருந்த அரசன்முன் வந்து இமையவன் ஆடிய கொட்டிச்சேதம் என்னும் கூத்தினை ஆடிக்காட்ட மகிழ்ந்து என இயைபு காண்க. கொட்டிச்சேதம்-கொடுகொட்டி என்னும் ஒருவகைக் கூத்து; இக் கூத்து இறைவனால் ஆடப்பெற்றது என்பர். ஒரு பக்கத்தில் இறைவியின் உறுப்புகளாகிய கை திருவடி இடை காது முதலியவற்றில் அணிந்துள்ள பாடகம் சூடகம் மேகலை குழை முதலியன ஆடாத வண்ணம் இறைவன் கூற்றிலுள்ள சேவடிச் சிலம்பு புலம்பவும் கையில் பறை ஆர்ப்பவும் கண் குறிப்பருளவும் சடை திசைமுகம் அலம்பவும் இமையவன் இக் கூத்தை ஆடினன். சாக்கையனும் அவ்வாறே ஒருபக்கத்தில் ஆண்கோலமும் மற்றொரு பக்கத்தில் பெண் கோலமும் பூண்டு ஒருபக்கம் அசைவின்றி ஒருபக்கத்தால் மட்டும் ஆடிக்காட்டினன் என்றுணர்க. இக் கூத்தின் இயல்பைத் திரிபுரமெரியத் தேவர் வேண்ட, எரிமுகப் பேரம் பேவல் கேட்ப, உமையவளொரு திறனாகவோங்கிய இமையவனாடிய கொடுகொட்டியாடலும் (சிலப். 6:40-43) கொட்டி கொடுவிடையோ னாடிற்றதற்குறுப் பொட்டிய நான்காமெனல் (சிலப் 3: 14; மேற்) படுபறை பலிவியம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ கொடுகொட்டி யாடுங்கால்............கொண்ட சீர் தருவாளோ(கலி கடவுள் 5-7); கொட்டி யாடற்கேற்ற மொட்டிய, உமையவளொருபாலாக வொருபால், இமையா நாட்டத் திறைவ னாகி, அமையா வுட்கும் வியப்பும் விழைவும், பொலிவும் பொருந்த நோக்கித் தொக்க, அவுண ரின்னுயிரிழப்ப வக்களம், பொலிய வாடின னென்ப (கலி. கடவுள் 5-7, மேற்) எனவருவனவற்றா லறிக.

செங்குட்டுவனைக் கஞ்சுக மாக்கள் வந்து காணுதல்

80-83: நீலன்...........தொழுது

(இதன் பொருள்) நீலன் முதலிய கஞ்சுக மாக்கள்-பண்டு பால குமரன் மக்களாகிய காவாநாவின் கனகவிசயரைச் சோழனுக்கும் பாண்டியனுக்கும் காட்டி வம்மின் என அவருடன் போக்கிய நீலன் என்பவனை உள்ளிட்ட கஞ்சுக மாக்களாகிய தூதர்கள் அப் பணியைச் செய்துமுடித்து மீண்டவர்; மாடல மறையோன் தன்னொடுந் தோன்றி-மாடலன் என்னும் அந்தணனோடு வந்து; வாயிலாளரின் மன்னவர்க்கு இமைத்தபின்-தம் வரவினை வாயில் காப்போர் வாயிலாக அரசனுக்கு அறிவித்தபின்னர்; கோயில் மாக்களின் கொற்றவன் தொழுது-அம் மன்னவன் விடுத்த அரண்மனைப் பணியாளர் பின்னர்ச் சென்று அரசனுடைய அடிகளில் வீழ்ந்து வணங்கிச் சொல்லுபவர் என்க.

(விளக்கம்) கோயில் மாக்கள்-அரண்மனையின்கண் குற்றேவன் செய்பவர். நீலன் முதலிய தூதுவர் கொணர்ந்த செய்தி தனித்திருந்து அறியற்பாலதாகலின் அரசன் வேறு பணியாளர்கள் ஏவி அவர்களை அழைத்தான் என்பது கருத்து.

சோழன் இகழ்ந்தமையை மன்னனுக்கு அறிவித்தல்

84-95: தும்பை..........பெருந்தகை

(இதன் பொருள்) தும்பை வெம்போர்ச் சூழ்கழல் வேந்தே-வடநாட்டின்கண் சென்று அந் நாட்டு மன்னரோடு போர்க் களத்திலே தும்பைப்பூச் சூடிச்சென்று வெவ்விய போர் செய்து வாகை சூடிய வீரக்கழல் கட்டிய வேந்தனே கேட்டருளுக; செம்பியன் மூதூர்ச் சென்று புக்கு ஆங்கு-அடியேங்கள் கனகவிசயரை அழைத்துக் கொண்டு சோழனுடைய பழைய நகரத்தை எய்தி அவ்விடத்தே; வேந்தன் வச்சிரம் அவந்தி மகதமொடு குழீஇய சித்திர மண்டபத்து இருக்க-அச் சோழமன்னன் வச்சிரநாட்டரசனும் அவந்திநாட்டரசனும் மகதநாட்டு மன்னனும் திறையாக இறுத்த கொற்றடபந்தரும் பட்டி மண்டபமும் தோரணவாயிலும் பிறவுமாகிய அரும்பொரு ளமைந்த சித்திர மண்டபத்தின்கண் இருந்தசெவ்வியறிந்து அங்கு; அமர் அகத்து உடைந்த ஆரிய மன்னரொடு தமரின் சென்று தகையடி வணங்க-வடநாட்டுப் போரின்கண் புறங்கொடுத்த கனகவிசயரோடும் அவ்வரசனுடைய பணியாளரோடும்கூடி அம் மன்னவனுடைய கட்டளை பெற்று அவன் முன்னிலையிற் சென்று அழகிய அவன் அடிகளை வணங்கி யாம் கொண்டு சென்ற செய்தியையும் அறிவித்தேம். அது கேட்ட அம் மன்னவன்; நீள் அமர் அழுவத்து நெடும் பேர் ஆண்மையொடு வாளும் குடையும் மறக்களத்து ஒழித்து கொல்லாக் கோலத்து உயிர் உயர்ந்தோரை-நீண்ட போர்க்களத்தின்கண் எதிர்ந்துவந்து தமது நெடிய பெரிய ஆண்மைத் தன்மையோடே வாளையும், குடையையும் வீரங்கெழுமிய அப் போர்க் களத்திலே ஒழித்துவிட்டுச் சாதற்கு அஞ்சிப் பிறர் கொல்ல வொண்ணாத  தவக்கோலம் பூண்டு உயிர் தப்பி ஓடியவரை; வெல் போர்க்கோடல் வெற்றம் அன்று என-வெல்லுதற்குரிய போர்க்களத்திலே கைப்பற்றிக்கொண்டு வருதல் வெற்றியன்று என்று; தலைத் தேர்த்தானைத் தலைவர்க் குரைத்தனன்-தலைமைத் தன்மையுடைய தேர்ப்படைத் தலைவனுக்குக் கூறினன்; சிலைத்தார் அகலத்துச் செம்பியர் பெருந்தகை-வில்லையும் ஆத்தி மாலையையும் உடைய மார்பினையுடைய அச் சோழர்குலத் தோன்றலாகிய பெருந்தகை மன்னன் என்றார் என்க.

(விளக்கம்) தும்பை வெம்போர்-வலிமை காரணமாக எதிர்த்து வந்த பகையரசரை எதிர் சென்று போர்செய்து அவர் தலைமைத் தன்மையைக் கெடுத்தல். செம்பியன் மூதூர் என்றது உறையூரை. வச்சிரம் அவந்தி மகதமொடு குழீஇய சத்திர மண்டபம் என்றது இந் நாட்டிற்குரிய மூன்று அரசர்களும் திறையிட்ட பந்தர் தோரணவாயில் பட்டிமண்டபம் என்னும் இவற்றோடு கூடிய மண்டபம். இதனைப் பிறந்தவழிக் கூறல் என்னும் ஆகுபெயர் என்பர். வச்சிர நன்னாட்டுக் கோனிறை கொடுத்த கொற்றப் பந்தரும், மகதநன்னாட்டு வாள்வாய் வேந்தன், பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும் அவந்தி வேந்த னுவந்தனன் கொடுத்த, நிவந்தோங்கு மரபிற் றோரண வாயிலும்(சிலப்.5:99-104) என்பதனானுமறிக. தமர்-சோழ மன்னனுடைய பணியாளர். அழுவம்-களப்பரப்பு. கொல்லாக் கோலம்-தவக்கோலம். வெற்றம்-வெற்றி. தேர்த்தானைத் தலைவற்கு உரைத்தனன் என்றது எள்ளியுரைத்தான் என்பதுபட நின்றது. சிலையையும் தாரையும் உடைய செம்பியர் பெருந்தகை என்க, பெருந்தகை என்றது இகழ்ச்சிக் குறிப்பு.

அத் தூதுவர் பாண்டியன் கூறியதுரைத்தல்

96-107: ஆங்கு...........என்று

(இதன் பொருள்) அறக்கோல் வேந்தே-அறத்திற் பிறழாத செங்கோன்மையுடைய வேந்தனே; ஆங்கு நின்று அகன்றபின் அடியேங்கள் அவ்வரசனுடைய நாட்டினின்றும் நீங்கிய பின்னர்; ஓங்குநீர் மதுரை மன்னவன் காண உயர்ந்த-புகழையுடைய மதுரையை ஆளுகின்ற பாண்டிய மன்னன்பால் இக் கனக விசயரோடு சென்று காணா நிற்ப; போர்வேல் செழியன்-போர்த் தொழில் வல்ல வேலேந்திய அப் பாண்டிய மன்னன்; ஆரிய மன்னர் அமர்க்களத்து எடுத்த சீர் இயல் வெள் குடைக் காம்பு-வடவாரிய மன்னர்களது போர்க்களத்தின்கண் கைப்பற்றிக் கொண்ட அழகு பொருந்திய தமது வெண்கொற்றக் குடையினது காம்பாகிய மூங்கிற்கோலை; ஆங்கு நனி சிறந்த சயந்தனது வடிவினை உடையதாகக் கருதப்படும் தலைக்கோலாகும்படி; கயந்தலை யானையின் கவிகையிற் காட்டி-பெரிய தலையினையுடைய யானையின் மேல் உம்முடைய மன்னன் கவித்த குடைநிழலிலே வைத்துக் காணும்படி செய்து தாங்கள் போர்க்களத்தினின்றும் புறமிட்டோடி; இமைய சிமையத்து இருங்குயிலாலுவத்து  -இமயமலையின் குவட்டிலமைந்த பெரிய குயிலாலுவம் என்னும் இடத்துக் கோயில் கொண்டருளிய; உமை ஒரு பாகத்து ஒருவனை வணங்கி-உமா தேவியார் எழுந்தருளிய ஒரு கூற்றையுடையவனாகிய ஒப்பற்ற கடவுளை வழிபாடு செய்து; அமர்க்களம் அரசனது ஆகத்துறந்து-தங்கள் நாட்டின் கண்ணதாகிய போர்க்களம் நுங்களரசனுக்குரிமையாம்படி உலகினைத் துவரத் துறந்து போய்தவப் பெருங்கோலம் கொண்டோர் தம் மேல்-தவக்கோலமாகியடத்தும் மறக்கள வேள்விகளையே செய்வதன் கண் ஊக்கமுடைமையாய் இருக்கின்றனை; என்றான் என்க.

(விளக்கம்) நெடுந்தார்-நெடிய வாகைமாலை(115) நீ வியலூர் எறிந்த பின்னர் ஒன்பது மன்னரை வென்றது முதலாக ஆரிய மன்னரை வென்றது ஈறாகப் போர்பல செய்து நெடுந்தார் வேய்ந்த பெரும்படை வேந்தன் ஆதலான் சோழனும் பாண்டியனும் நின்னை இகழ்ந்தமையை இப் பேருலகம் ஏற்றுக்கொள்ளாது. ஆதலால் நின் சீற்றம் அமைக. மேலும் நீ சான்றோரால் மதிக்கப்படும் ஒரு சான்றோன் ஆதலாலும் நின் சீற்றம் அமைக என இம் மாடல மறையோன் ஏதுக்கள் பல கூறுதல் உணர்க. ஆன்பொருநை-ஒருயாறு. யாற்று மணலினும் வாழ்நாட்கள் சிறக்க என்றது வாழ்நாள் எண்ணினால் மிக்கனவாக என்றவாறு. இவ்வாறு வாழ்த்துதல் மரபு. இதனை எங்கோ வாழிய..........பஃறுளி மணலினும் பலவே (புறநா. 9: 8-11) சிறக்க நின்னாயுள், மிக்குவரு மின்னீர்க்காவிரி எக்கரிட்ட மணலினும் பலவே (புறநா, 43: 21-3) நீ நீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர் வெண்டலைப் புணரியலைக்குஞ் செந்தில் நெடுவேணிலை இய காமர்வியன்றுறைக் கடுவளி தொகுப்ப வீண்டிய வடுவா ழெக்கர் மணலினும் பலவே( புறநா. 55: 17-21) என வருவனவற்றானும் உணர்க. அகழ்கடல்-அகழ் போன்ற கடலுமாம். அறக்கள வேள்வி-அறம் நிகழ்தற்கிடனான இராசசூயம் குதிரை வேள்வி முதலியன. மறக்கள வேள்வி-வீரத்தால் போர்செய்த களத்தின்கண் பகைவர் ஊனைப் பேய் முதலியவற்றை உண்பித்தல்.

மாடல மறையோன் செங்குட்டுவனுக்குச் செவியறிவுறுத்தல்

133-150: வேந்துவினை...........உணர்ந்தோய்

(இதன் பொருள்) வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்துப் போந்தைக் கண்ணி நின் ஊங்கணோர் மருங்கில்-அரசர்களுக்கென அற நூல்களுள் விதிக்கப்பட்ட வினைகளை நன்கு முடித்தவர்களும் ஏந்திய வாளால் பெறுகின்ற வெற்றியையுடையோரும் பனம்பூ மாலையைச் சூடுவோரும் ஆகிய நின்னுடைய முன்னோர்களுள் வைத்துச் சாலச் சிறந்தவராகிய அரசருள்; கடல் கடம்பு எறிந்த காவலனாயினும் விடர்ச்சிலை பொறிந்த விறலோனாயினும்-கடலின்கண் சென்று அங்குப் பகைவர்களுடைய தீவகத்தில் நின்ற கடப்ப மரமாகிய காவல் மரத்தை வெட்டி வீழ்த்திய புகழ்மிக்க வேந்தனாயினும் அன்றி இமயமலையின் முழையமைந்த புறத்தில் தனது இலச்சினை ஆகிய வில்லைப் பொறித்துவைத்த வெற்றி யையுடைய அரசனாயினும் அன்றி; நால் மறையாளன் செய்யுள் கொண்டு மேல் நிலை உலகம் விடுத்தோன் ஆயினும்-நான்கு மறைகளையும் ஓதிய பார்ப்பனப் புலவன் ஒருவன் தன்னைப் பாடிய செய்யுளை ஏற்றுக்கொண்டு அதற்குப் பரிசிலாக அப் புலவன் விரும்பிய வண்ணம் அறக்கள வேள்வி பலவும் செய்து அவனை மேலுலகத்திற்கே உடம்போடு செல்வித்தவனாயினும்; போற்றி மன்னுயிர் முறையில் கொள்க எனக் கூற்றுவரை நிறுத்த கொற்றவன் ஆயினும்-அன்றி, பாதுகாத்தலைச் செய்து இவ்வுலகத்தே நிலைபெற்ற உயிர்களைக் கைக் கொள்ளும் பொழுது அவர்க்கியன்ற அகவைக் காலம் நூறாண்டும் கழிந்த பின்னர்க் கொள்ளுகின்ற முறைமையினாலே கொள்ளக் கடவாய் எனக் கூற்றுவனையும் தனது கட்டளையின் கண் நிறுத்திவைத்த வெற்றி வேந்தன் ஆயினும், வன்சொல் மவனர் வளநாடு ஆண்டு பொன் படு நெடுவரை புகுந்தோன் ஆயினும்-கேள்விக்கின்னாத வன்சொல்லைச் சொல்லுகின்ற மவனருடைய வளம் பொருந்திய நாட்டினை வென்று அடிப்படுத்து ஆட்சி செய்து பொன்னாகத் தோன்றுகின்ற நெடிய மேருமலைவரையில் சென்றவனாயினும்; மிகப் பெருந்தானையோடு இருஞ்செரு வோட்டி-மிகவும் பெரிதாகிய படைகளோடே சென்று செய்த பெரிய போரின்கண் பகைவரை ஓடச் செய்து அகப்பா எறிந்த அருந்திறலாயினும்-பகைவர் மதிலை அழித்த அரிய ஆற்றல் படைத்தவனாயினும்; உருகெழு மரபின் அயிரை மண்ணி இருகடல் நீரும் ஆடினேன் ஆயினும்-அச்சம் பொருந்துதற்குக் காரணமான பகைவனுடைய அயிரை ஆற்றிலும் சென்று நீராடி மேலும் குணகடல், குடகடல் என்னும் இரண்டு கடல்களிலும் சென்று நீராடிய அரசனாயினும்; சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து மதுக்கொள் வேள்வி வேட்டோனாயினும்-இந்திரனுடைய அமராபதியினின்றும் சதுக்கப் பூதங்களைத் தனது வஞ்சி நகரத்திற்கும் கொண்டு வந்து மதுவருந்துதற்குக் காரணமான வேள்வியைச் செய்தவனாயினும்; மீக் கூற்றாளர் மாவரும் இன்மையின்-இங்ஙனம் ஒவ்வொரு வகையால் புகழ பெற்றிருந்த இவருள் ஒருவரேனும் இல்லாதொழிந்தமையால்; யாக்கை நில்லாதென்பதை உணர்ந்தோய்-இவ்வுலகத்தின்கண் உடம்பு நிலைநிற்க மாட்டாது என்னும் உண்மையை உணர்ந்திருக்கின்றாய் அல்லையோ என்றான் என்க.

(விளக்கம்) ஊங்கணோர்-இச் சேர நாட்டின்கண் இருந்தவராகிய நின் முன்னோர்களாகிய சேரர்கள். கடற்கடம் பெறிந்த காவலன்-கடலிலுள்ள தீவுகளை ஆளுகின்ற ஓர் அரசனுடைய காவல் மரமாகிய கடம்பினை வெட்டி அம்மன்னனைத் தன்னடிப்படுத்த ஒரு சேர மன்னன் விடர்ச்சிலை பொறித்தவன் என்பான் குடக்கோச்சேரலன். குட்டுவர் பெருந்தகை விடர்ச்சிலை பொறித்த வேந்தன் என(மணிமே.28: 103-4) பிறரும் ஓதுதல் உணர்க. நான்மறையாளன் என்றது பாலைக் கவுதமனரை. இவரை மேனிலை உலகம் விடுத்தோன் இமய வரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு சூட்டுவன் என்பர். இவனுடைய வரலாற்றினைப் பதிற்றுப்பத்தில் மூன்றாம்பதிகத்தில் பல்யானைச் செல்கெழு சூட்டுவனைப் பாலைக்கவுதமனார் பாடினார் பத்துப்பாட்டு; பாடிப் பெற்ற பரிசில் நீர் வேண்டியது கொண்மினென யானும் என் பார்ப்பணியும் சுவர்க்கம் புகல் வேண்டு மெனப் பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெருவேள்வி கேட்பித்துப் பத்தாம் பெருவேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினார் என்பதனானறிக. கூற்றுவரை நிறுத்தலாவது-மக்களுக்கென வகுத்த நூறாண்டும் வாழ்ந்த பின்னரே அவர் உயிரைக் கவர்தல் வேண்டும் எனக் கூற்றுவனுக்கும் விதிவகுத்து அவ்வாறே நிகழ்வித்தல். இங்ஙனம் ஒரு சேர மன்னன் செய்தான் என்பர். யவனர்நாடு-மேனாட்டிலுள்ள சோனகர் முதலீயோருடைய நாடு. அகப்பா-இதனை அரண் என்பர். கடற்கடம் பெறிந்த காவலன் முதலாக வேள்வி வேட்டோன் ஈறாக உள்ள பேராற்றலும் பெரும்புகழும் உடைய மன்னர்களும் மாண்டொழிந்தமையாலே யாக்கை நில்லாது என்பதை நீயே உணர்ந்திருக்கின்றனை அல்லையோ என்றவாறு. மீக்கூற்றாளர்-பெரும்புகழாளர். இவற்றால் யாக்கை நிலையாமை கூறி. இனிச் செல்வ நிலையாமையும் இளமை நிலையாமையும் கூறுகின்றான்.

151-158: மல்லன்........கண்டனை

(இதன் பொருள்) மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் மருங்கில் செல்வம் நில்லாது என்பதை-வானம் பொருந்திய இப் பேருலகத்தின்கண் வாழுகின்ற மாந்தர் யாரிடத்தும் செல்வம் நிலைத்து நில்லாது என்னும் உண்மையை; வெல்போர்த் தண் தமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின் கண்டனை அல்லையோ-சென்ற இடத்திலெல்லாம் வெல்லும் போராற்றல்மிக்க குளிர்ந்த தமிழ் நாட்டுப்படை மறவர்களை அறியாமையால் இகழ்ந்த இக் கனக விசயரை யுள்ளிட்ட ஆரிய அரசரிடத்தே நீ தானும் கண்கூடாகக் கண்டனை யல்லையோ; காவல் வேந்தே-உலகத்தை ஆளுகின்ற அரசனே; இளமை நில்லாது என்பதை ஈங்கு உணர்வுடைய மாக்கள் எடுத்து ஈங்கு உரைக்கல் வேண்டா-இளமைப் பருவம் நிலைத்து நில்லாமல் விரைந்து கழிந்தொழியும் என்னும் உண்மையை இவ்விடத்தே மெய்யுணர்வுடைய சான்றோர்கள் மேற்கோள்கள் எடுத்துக் காட்டிக் கூறிக்காட்டலும் வேண்டுமோ? வேண்டாவன்றோ, எற்றலெனின்; திருஞெமிர் அகலத்துச் செங்கோல் வேந்தே நரை முதிர் யாக்கை நீயுங் கண்டனை-திருமகள் வீற்றிருக்கின்ற திருமார்பினையும் செங்கோலையும் உடைய வேந்தனே நரைத்து முதிர்ந்த உடம்பினை நீயும் இப்பொழுது எய்தினை அல்லையோ? இவ்வுண்மையை நினது பட்ட றிவினாலேயே உணர்ந்து கொண்டிருப்பாய் என்றான் என்க.

(விளக்கம்) கனக விசயர் முதலிய அரசர் நொடிப் பொழுதில் தம் மரச செல்வத்தை இழந்தமையால் கண்டாய். இளமை நில்லாமையை உன்னுடைய நரைத்து முதிர்ந்த யாக்கையே நினக்கு அறிவுறுத்தும் என்றவாறு.

உயிர்போகு பொதுநெறி

159-174: விண்ணோர்.............பொறேஎன்

(இதன் பொருள்) விண்ணோர் உருவின் எய்திய நல் உயிர் மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்-தேவர் உருவத்திலே பிறந்து தேவர் உலகத்தை அடைந்த நல்ல உயிரானது அவ்வுடம்பை ஒழித்து மீண்டும் மண்ணுலகத்தில் வாழுகின்ற மக்கட் பிறப்பிலே திரும்பினும் திரும்பும்; மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர் மிக்கோய் விலங்கின் எய்தினும்-எய்தும் மக்கள் உடம்பெடுத்து நிலவுலகத்தே நிலைத்து வாழுகின்ற உயிரானது வேந்தருள் மேம்பட்டவனே விலங்குடம்பினை எய்திய பிறத்தலும் கூடும்; விலங்கின் யாக்கை விலங்கிய இன்னுயிர் கலங்கு அஞர் நரகரைக் காணினுங் காணும்-அவ் விலங்குப் பிறப்பினின்றும் நீங்கிய இனிய உயிரானது நெஞ்சு கலங்குதற்குக் காரணமான துன்பம் பொருந்திய நரகருடைய உடம்பினைப் பெறினும் பெறும் இவ்வாறு; ஆடுங் கூத்தர் போல் ஆருயிர் ஒருவழிக் கூடிய கோலத்து ஒருங்கு நின்று இயலாது-அரங்கத்தில் ஏறிக் கூத்தாடுகின்ற கூத்தர்களைப் போல அரிய உயிரானது ஓரிடத்தே எய்திய கோலத்தோடே ஒருங்கு கூடி ஓரிடத்திலேயே நிலைத்து நின்று இயங்க மாட்டாது; உயிர் செய்வினை வழித்தாய் செலும் என்பது பொய் இல் காட்சியயோர் பொருளுரை ஆதலின்-உயிரானது தான் செய்த வினைக்குத் தக அவ்வினையின் வழியே இயங்கும் என்பது மருளரு காட்சியோர் கண்டுரைத்த வாய்மையான மொழியே ஆதலால்; எழு முடி மார்ப நீ ஏந்திய திகிரி வழிவழிச் சிறக்க வயவாள் வேந்தே-ஏழு மன்னர்களுடைய முடிக்கலனைக் கொண்டு சமைத்த ஆரம் பூண்ட மார்பை உடையோய் நீ நின் திருக்கையில் ஏந்திய ஆணைச் சக்கரம் நின் வழிவழியாகச் சிறப்பதாக! பெரிய வாளை உடைய வேந்தனே; யானும் அரும்பொருள் பரிசிலேன் அல்லேன்-இவ்வறிவுரையைக் கூறுகின்ற அந்தணனாகிய யானும் பெறுதற்கரிய பொருளைப் பரிசிலாகப் பெறுகின்ற அவாவினாலே இவற்றைக் கூறுவேனல்லேன்; புலவரை இறந்தோய்-அறிவின் எல்லையைக் கடந்த பெருமைகளை உடைய வேந்தனே; பெரும்பேர் யாக்கை பெற்ற நல்லுயிர்-பெறுதற்கரிய பெருமையினையுடைய இந்த உடம்பினைப் பெற்ற நல்வினையையுடைய சிறந்த நின்னுடைய உயிர்; மலர்தலை உலகத்து உயிர் போகுபொதுநெறி-விரிந்த இடத்தையுடைய  இந் நிலவுலகத்தின்கண் உடம்பொடு தோன்றிய வாழுகின்ற எளிய உயிரினங்கள் செல்லுகின்ற பொதுவான நெறியிலே; போகுதல் பொறேன்-செல்லுவதனை நின்பால் அன்பு மிக்க யானோ பொறுக்கில்லேன் காண் என்றான் என்க.

(விளக்கம்) தேவ கதி, மக்கள் கதி, விலங்கு கதி, நரக கதி என நால்வகைக் கதியினும் உயிர்கள் தத்தம் இருவேறு வகை வினைகளுக் கேற்ப மாறிமாறிப் பிறந்துழலும். அங்ஙனம் பிறக்கும் உயிர் நல்வினையின் பயனாகத் தன் வினைக்கேற்ப மக்களாகவே விலங்காகவோ பிறப்பெய்தும். உயிர்கள் தீவினையின் பயனாய் நரகராய்ப் பிறந்துழலும். நரகத்தில் அவ்வினை தீர்ந்தவுடன் விலங்காகவோ மக்களாகவோ பிறக்கும். இங்ஙனம் உயிரெல்லாம் மாறிமாறிப் பிறந்து இன்பதுன்பங்களை நுகர்வதே உயிர்களுக்கியன்ற பொதுநெறி ஆகும் என்பது. இதனால் அம் மாடல மறையோன் செங்குட்டுவனுக்குச் செவியறிவுறுத்த செய்தியாம் என அறிக. உயிர்கள் இவ்வாறு மாறி மாறி உடம்பெடுத்து உழல்வதற்கு ஆடுங்கூத்தர் மாறி மாறி வேடம் புனைந்து வந்து வந்து ஆடுதல் உவமை என்க. எழுமுடி மார்ப என்றது பகை மன்னருடைய ஏழு முடிக்கலன்களைக் கொண்டியற்றிய மணியாரம் பூண்ட மார்பை உடையவனே என்றவாறு. பரிசில் வேண்டி வரும் இரவலர், புரவலர் மகிழும் வண்ணம் புனைந்துரைப்பர்; யான் பரிசில் வேண்டிக் கூறுகின்றேன் அல்லேன். சான்றோனாகிய நீ மக்கட் பிறப்பிற்கியன்ற சிறப்பு நெறியின்கண் செல்ல வேண்டுமென்னும் கருத்தினாலேதான் இங்ஙனம் இடித்துரைக்க நேர்ந்தது என்பான் அரும்பொருள் ..........பொறேஎன் என்றான் என்க.

இதுவுமது

175-178: வானவர்...........வேண்டும்

(இதன் பொருள்) வானவர் வழி நினக்கு அளிக்கும் நான்மறை மருங்கின்-தேவர்களும் விரும்பிப் போற்றுகின்ற வீட்டு நெறியை உனக்கு வழங்குகின்ற சிறப்பு நெறியாகிய; நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்-நான்கு மறைகளிடத்தும் கூறப்பட்ட பல்வேறு வகை வேள்விகளையும் அறிந்த பார்ப்பனனைக் கொண்டு; அருமறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய பெருநல் வேள்வி நீ செயல் வேண்டும்-உணர்தற்கரிய மறைகளிடத்தே நின்போன்ற அரசர்களுக்கு என விதிக்கப் பட்டிருக்கின்ற உயர்ந்த பெரிய நன்மை தருகின்ற அறக்கள வேள்விகள் பலவற்றையும் இற்றை நாள் தொடங்கி நீ செய்தருள வேண்டும் என்று யான் விரும்புகின்றேன் என்றான் என்க.

(விளக்கம்) வானவர் போற்றும் வழி என்றது வீட்டு நெறியை; பார்ப்பாளைக் கொண்டு என்க. மறையிடத்து அரசர்க்கு விதித்த வேள்விகள் பல ஆதலின் அவற்றை விலக்குதற்கு ஓங்கிய பெருநல் வேள்வி செயல் வேண்டும் என்றான். நீ செயல் வேண்டும் என்றது இற்றைநாள் தொடங்கிச் செய்ய வேண்டும் என்பதுபட நின்றது.

இதுவுமது

179-186: நாளை.........என்று

(இதன் பொருள்) நாளைச் செய்குவம் அறம் எனில் இற்றே கேள்விகல் உயிர் நீங்கினும் நீங்கும்-யாவராயினும் தத்தமக்குரிய அறங்களை எப்பொழுதுமே செய்து கொண்டிருத்தல் வேண்டும், அங்ஙனமின்றி நாளைக்குச் செய்வோம் நாளைக்குச் செய்வோம் எனக் காலம் தாழ்த்திருப்பாராயின் அறக் கேள்வியைக் கேட்டிருக்கின்ற மக்கட்பிறப்பை உடைய நல்ல அவ்வுயிர் தானும் இப்பொழுதே அப் பிறப்பினை நீத்துச் செல்லினும் செல்லும், அன்றியும்; வாழும் நாள் இது என வரைந்து உணர்ந்தோர் முதுநீர் உலகில் முழுவதும் இல்லை-தாம் வாழுதற்குரிய நாளின் எல்லை இதுவேயாகும் என்று வரையறுத்து அறிந்து கொண்டவர் இதுகாறும் கடல்சூழ்ந்த இந்நில உலகத்தின்கண் யாண்டும் எவ்விடத்தும் இல்லை, ஆதலால் நினக்குரிய அவ்வறத்தினை இன்றே மேற்கொண்டு; வேள்விக்கிழத்தி இளவொடுங் கூடி தாழ் கழல் மன்னர் நின்னடி போற்ற-நீ செய்கின்ற அவ்வறக்கள வேள்விக் களத்தின்கண் தலைவனாகிய நினக்குத் தலைவியாக இருக்கும் உரிமை பூண்ட கோப்பெருந்தேவியாகிய இவ்வரசியாரோடுங் கூடி நின் அடியின் கண் வந்து வணங்குகின்ற வீரக் கழலணிந்த அரசர்கள் பலரும் நின் திருவடியே வணங்கி வாழ்த்தும்படி; நெடுந்தகை ஊழியோடு ஊழி உலகங்காத்து நீடு வாழி அரோ என்று-நெடுந்தகாய் ஊழி ஊழியாக இந்நிலவுலகத்தைப் பாதுகாத்துக் கொண்டு நெடிது வாழ்வாயாக என்று சொல்லி; என்க.

(விளக்கம்) நாளைச் செய்குவோம் என்றது நாளைச் செய்வோம் நாளைச் செய்வோம் எனக் காலந்தாழ்த்திருத்தலைக் கருதிற்று. அறக்கேள்வியுடைய நல்லுயிர் என்க. ஏனைப் பிறப்புகளில் அறத்தைக் கேட்டலும் இயலாமையின் அந் நன்மையையுடைய மக்கள் உயிர் என்பார் கேள்வி நல்லுயிர் என்றார். கேட்டல் மாத்திரையே பயன் தாராமையின் பயனின்றியே அவ்வுயிர் இன்றே நீங்கினும் நீங்கும் என்றவாறு. இனி, கேள்வி மாத்திரையால் உளதாகிய உயிர்  என்பாரும் உளர். முதுநீர்-கடல்........முழுவதும் இல்லையென்றது எப்பொழுதும் எவ்விடத்தும் யாரும் இல்லை என்பதுபட நின்றது.

அறிவுரை கேட்ட அரசன் செயல்

187-194: மறையோன்...........ஏவி

(இதன் பொருள்) மறையோன் மறைநா இறையோன் செவி செறுவாக உழுது வான் பொருள் வித்தலின்-அம் மாடல மறையோன் அம் மறைகளை நன்கு பயின்ற தனது நர்வாகிய ஏரினால் சேரன் செங்குட்டுவனுடைய செவிகளைக் கழனிகளாகக் கொண்டு ஆழ உழுது அக் கழனியிடத்தே அறம் என்னும் சிறந்த பொருளாகிய விதையை விதைத்தமையினாலே; வித்திய பெரும்பதம் விளைந்து பதம்மிகுத்து துய்த்தல் வேட்கையின்-அவ்வாறு விதைக்கப்பட்ட பெரிய உணவாகிய விதை நன்கு விளைந்து அவ்வுணவுமிகுதலாலே அவ்வுணவால் உண்டாகின்ற பயனை நுகரவேண்டும் என்னும் விருப்பங் காரணமாக; சூழ்கழல் வேந்தன் நான்மறை மரபின் நயம் தெரி நாவின் கேள்வி முடித்த வேள்வி மாக்களை-சுற்றிய வீரக்கழலையுடைய அவ் வேந்தன் அப் பொழுதே நான்கு மறைகளையும் ஓதும் முறைமையினாலே ஓதி அவற்றின் சொல்நயம் பொருள்நயம் முதலியவற்றை நன்குணர்ந்த செந்நாவினையுடைய வராய்க் கேட்பனவற்றை யெல்லாம் கேட்டு முடித்த வேள்வி செய்தற்கியன்ற பார்ப்பனர்களை; மாடல மறையோன் சொல்லிய முறைமையின் வேள்விச் சாந்தியின் விழாக் கொள ஏவி-அம் மாடல மறையோன் என்னும் அந்தணன் அறிவுறுத்த முறைமைப் படியே அழைத்து வேள்வியாகிய அமைதியினையுடைய விழாவை இயற்றும்படியாக ஏவிய பின்னர் என்க.

(விளக்கம்) நாவாகிய ஏரினை எனவும் செவியைச் செறுவாகக் கொண்டு எனவும் வான் பொருளாகிய விதையை எனவும் கூறிக் கொள்க. பெரும்பதம்-விதைக்கு ஆகுபெயர். பதம்-உணவு. மரபின் ஓதிநயம் தெரிந்த நா எனவும் கேள்வியைக் கேட்டு முடித்த எனவும் கூறிக் கொள்க. வேள்வி உயிர்க்கு அமைதி தருதற் பொருட்டாதலின் வேள்விச்சாந்தி என்றார். விழா-வேள்வி செய்யும் செயல்.

இதுவுமது

195-202: ஆரிய...........ஏவி

(இதன் பொருள்) ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கி-கனக விசயரை உள்ளிட்ட வடவாரிய மன்னர்களையும் தப்புதற்கரிய சிறைக்கோட்டத்தினின்றும் விடுதலை செய்து அம் மன்னர்களுடைய தகுதிக்கேற்ப; பேர் இசை வஞ்சி மூதூர்ப் புறத்துத் தாழ் நீர் வேலித் தண் மலர்ப் பூம்பொழில் வேளாவிக்கோ மாளிகை காட்டி-பெரிய புகழையுடைய வஞ்சி நகரமாகிய தனது பழைய தலைநகரின் பக்கத்தே அமைந்த ஆழ்ந்த நீரையுடைய அகழியையும் குளிர்ந்த மலரையுடைய பூம்பொழில்களையும் உடைய வேளாவிக்கோமாளிகை என்னும் பெயரையுடைய மாடமாளிகையை அவ்வரசருக்கு உறையுனாகக் காட்டி அங்கிருக்கச் செய்து; நன் பெரு வேள்வி முடித்ததன் பின்னாள் தம் பெரு நெடுநகர் சார்வதுஞ்சொல்லி-தான் தொடங்கியிருக்கின்ற பெரிய வேள்விச் சாந்தியாகிய திருவிழாவைச் செய்து முடித்ததன் மறுநாள் அம் மன்னர்கள் தம்முடைய பெரிய நெடிய நகரங்களுக்குச் செல்லலாகும் என்பதனையும் அவர்களுக்குச் சொல்லி; நீ அம் மன்னவற்கு ஏற்பன செய்க என-நீ அக் கனக விசயர் முதலிய வட வாரிய மன்னவர்கள் தகுதிக் கேற்பனவாகிய உதவிகளைக் குறைவின்றிச் செய்வாயாக என்று சொல்லி; வில்லவன் கோதையை விருப்புடன் ஏவி-வில்லவன் கோதை என்னும் அமைச்சனை அக் காரியத்தின்கண் ஆர்வத்தோடே ஏவிவிட்டுப் பின்னர் என்க.

(விளக்கம்) இப் பகுதியின்கண் செங்குட்டுவனுடைய நெஞ்சம் மறநெறியைக் கைவிட்டு அறநெறியின்கண் ஊக்கத்தோடே செயற்படுதல் உணர்க. இவற்றில் ஆரிய அரசராகிய பகைவர்க்கும் பேரன்பு காட்டி அவரைச் சிறை வீடு செய்தலோடமையாது தான் எடுத்துள்ள வேள்வி விழா முடியுந்துணையும் அவரும் தன்னுடனிருந்து மகிழ்ந்து செல்ல வேண்டும் என்னும் கருத்தால் அவ்வாரிய மன்னருடைய தகுதிக்கேற்ற மாளிகையைக் காட்டச் செய்தலும் மேலும் அவர்க்கு ஏற்பனவெல்லாம் செய்யும் பொருட்டும் அமைச்சர்களுள் முதல்வனாகிய வில்லவன் கோதையையே ஆர்வத்துடன் ஏவுதலும் ஆகிய இச் செய்திகள் எத்துணை இன்பம் பயப்பனவாயுள்ளன உணர்மின்.

இதுவுமது

203-206: சிறையோர்.............ஏவி

(இதன் பொருள்) சிறையோர் கோட்டஞ் சீமின் யாங்கணும் கறைகெழு நல்லூர்க் கறைவீடு செய்ம் என-நம் நாட்டகத்திலுள்ள சிறைக் கோட்டங்களில் எல்லாம் சிறை செய்யப்பட்டுள்ள குற்றம் புரிந்தோர்களை யெல்லாம் விடுதலை செய்து விடுமின்! நம் நாட்டின்கண் இறைப்பொருள் கொடாமல் இருக்கின்ற நல்ல ஊர்க்குடி மக்களை யெல்லாம் அவ்விறைப்பொருள் செலுத்துதலினின்றும் விடுதலை செய்துவிடுங்கள் என்று அறிவித்து; அழும்பில் வேளோடு ஆயக்கணக்கரை முழங்கு நீர் வேலி மூதூர் ஏவி-அழும்பில் வேள் என்னும் அமைச்சனது தலைமையோடே இறைப்பொருள் கணக்குத் தொழிலாளரையும் சேர்த்து முழங்குகின்ற கடல் சூழ்ந்த பழைய ஊர்கள்தோறும் ஏவி விட்டு என்க.

(விளக்கம்) சிறையோர் கோட்டம்-சிறைக்கோட்டம். கறை- இறைப்பொருள். ஆயக்கணக்கர்-இறைப்பொருள் கணக்கை எழுதுபவர். மூதூர் என்றது தனதாட்சியின் கீழ்ப்பட்ட ஊர்களை.

இதுவுமது

207-217: அருந்திறல்...........களித்து

(இதன் பொருள்) அருந்திறல் அரசர் முறை செயினல்லது-வெல்லுதற்கரிய போராற்றல் மிக்க அரசர் அரியணையிலிருந்து செங்கோல் முறைப்படி ஆட்சி செய்தாலன்றி, பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப் பண்டையோர் உரைத்த தண்தமிழ் நல்லுரை-பெரிய புகழையுடைய மகளிர்க்கும் கற்பறம் சிறந்து தோன்ற மாட்டாது என்று பண்டைக்காலத்தோர் கூறியருளிய குளிர்ந்த தமிழாலியன்ற அழகிய மொழியின் புகழை; பார் தொழுது ஏத்தும் பத்தினி-ஆகலின்-இவ்வுலகத்தோர் எல்லாம் கைகுவித்துத் தொழுது பாராட்டுகின்ற திருமா பத்தினியாகத் தான் இருத்தலாலே; ஆர்புனை சென்னி அரசற் களித்து-ஆத்தி மாலை சூடுகின்ற சென்னியையுடைய சோழ மன்னனுக்கு வழங்கி; செங்கோல் வளைய உயிர் வாழாமை தென்புலங்காவல் மன்னவற்கு அளித்து-தமது செங்கோல் சிறிது வளைந்தாலும் தாம் உயிர் வாழாப் பெருந்தகைமையாகிய புகழைத் தென்னாட்டரசனாகிய பாண்டியனுக்கு வழங்கி; வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை யாவதும் வேந்தர் வெஞ்சினம் விளியார் என்பதை-தாம் கூறிய சூண்மொழி மெய்யாய விடத்தல்லது சிறிதும் சிறந்த குடியிற் பிறந்த அரசர் தமது வெவ்விய சினத்தை விடார், என்னும் புகழை; வடதிசை மருங்கின் மன்னவர் அறியக் குடதிசை வாழுங் கொற்றவற் களித்து-வடநாட்டின்கண் ஆட்சி செய்கின்ற ஆரிய மன்னர் நன்கு அறிதற்குக் காரணமான பெரும் புகழை மேற்றிசையின் கண்ணதாகிய சேர நாட்டின்கண் வாழுகின்ற வெற்றியை உடைய செங்குட்டுவனுக்கு வழங்கி என்க.

(விளக்கம்) அருந்திறல் அரசராகிய சோழ மன்னர் செங்கோன் முறைமையின் சிறந்திருந்தமையின் கண்ணகியைப் போன்ற பார் தொழு தேத்தும் பத்தினி அந் நாட்டில் தோன்றினள் என உலகம் புகழுமாதலின் கண்ணகி தனது பத்தினித் தன்மையால் அப் புகழைச் சோழனுக்கு அளித்தான் என்பது கருத்து. மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனின் இன்றால் என்பது மணிமேகலை(22: 208-9)

அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல்

என்பது திருக்குறள்(543) எனவரும் இவற்றால் பண்டையோருரைத்த தண்டமிழ் நல்லுரை அங்ஙனமாதல் உணர்க. தென்புலங் காவல் மன்னவன்-நெடுஞ்செழியன். விளியார்-கெடார். சினம் தணியார் என்றவாறு. குடதிசை வாழும் கொற்றவன்-செங்குட்டுவன்.

218: 221: மதுரை.........நங்கையை

(இதன் பொருள்) மதுரை மூதூர் மாநகர் கேடுற-மதுரையாகிய மிகப் பழைய பெரிய நகரம் அழியும்படி: கொதி அழல் சீற்றம் கொங்கையினின்றும் தோற்றுவித்து; நல் காடு அணைந்து நளிர்சினை வேங்கை-நல்ல தனது நாட்டிற்குத் தானே வந்து செறிந்த கிளைகளையுடைய வேங்கை மரத்தினது பொன் அணி புது நிழல் பொருந்திய நங்கையை-பொன் போன்ற மலர்ந்த அழகையுடைய புதிய நிழலின்கண் நின்ற திருமா பத்தினியாகிய கண்ணகித் தெய்வத்தை என்க.

(விளக்கம்) கொதி அழலைத் தனது சீற்றத்தால் தன் கொங்கையினின்றும் விளைத்து என்க, அத்தகைய பத்தினித் தெய்வம் தானே தன்பால் வருதற்குக் காரணமான நன்மையை உடைய தன் நாட்டை அடைந்து என்றவாறு. பொன்போல் மலர்ந்து அழகியதாகிய வேங்கையின் புது நிழல் எனினுமாம். புதிதாகத் தளிர்த்து மலர்ந்து நிழல் தருதலின் புது நிழல் என்றார்.

செங்குட்டுவன் பத்தினிப் படிமத்திற்குக் கடவுள் மங்கலம் செய்வித்தல்

222-234: அறக்கள........ஏறென்

(இதன் பொருள்) அறக்களத்து அந்தணர் ஆசான் பெருங்கணி சிறப்புடைக் கம்மியர் தம்மொடும் சென்று-அறக்கள வேள்வி செய்த அந்தணர்களோடும் தன் நல்லாசிரியனோடும் பெரிய கணிவனோடும் பத்தினிப் படிமமும் திருக்கோயிலும் அமைத்த தம் தொழிலிற் சிறப்பு மிக்க கம்மியரோடும் சென்று; மேலோர் விழையும் நூல் நெறி மாக்கள் பால் பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து-உயர்ந்தோர் விரும்புகின்ற சிற்ப நூல் நெறியினை அறிந்த அச் சிறப்புடைக் கம்மியர் கோயிலுக்குரிய கூறுபாடுகள் எல்லாம் அமையும்படி இயற்றிய அத் திருமா பத்தினித்தெய்வத்திற்குரிய கோவிலின்கண்; வடதிசை வணங்கிய மன்னவர் ஏறு-தென்தமிழாற்றல் அறியாது இகழ்ந்த வடபுலத்து மன்னர்களை வென்று வணங்கும்படி செய்த அரசர்களுள் வைத்து அரிமான் ஏறு போன்றவனாகிய செங்குட்டுவன் முற்பட; இமையவர் உறையும் இமையச் செவ்வரைச் சிமையச்சென்னித் தெய்வம் பரசி-தேவர்கள் உறைதற்கிடனான இமயமலையின் கண் செங்குத்தான குவட்டின் உச்சியில் எழுந்தருளியுள்ள இறைவனை வழிபாடு செய்து பின்னர்; கைவினை முற்றிய தெய்வப் படிமத்து-செய்ய வேண்டிய செய்கை யெல்லாம் செய்து முடிக்கப்பட்ட கண்ணகியினது தெய்வத் திருவுருவத்தின்கண்; வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து முற்று இழை நல்கலம் முழுவதும் பூட்டி-அணிகலன் செய்யும் தொழிலின்கண் வித்தகமுடையோரால் இயற்றப்பட்ட விளங்கிய அழகோடு கூடிய தொழில் திறம் முற்றிய இழைகளாகிய நல்ல அணிகலன் முழுவதையும் அணிவித்து; பூப்பலி செய்து-மலர்தூவி வழிபாடு செய்து; காப்புக்கடை நிறுத்தி-காவல் தெய்வங்களையும் கடை வாயிலின்கண் நிறுத்தி; நாள்தோறும் வேள்வியும் விழாவும் வகுத்து-நாள்தோறும் அத் தெய்வத்திற்கு வேள்வி விழாவும் திருவிழாவும் நடைபெறுமாறு அவற்றிற்குரிய வழிகளையும் வகுத்து; கடவுள் மங்கலம் செய்க என ஏவினன்-பத்தினிக் கடவுளையும் அப் படிமத்திலே நிறுத்தும்படி அத் தெழிலுக் குரிய அந்தணர் முதலியோரைப் பணித்தருளினன் என்பதாம்.

(விளக்கம்) அறக்களத்து அந்தணர் என்றது முன்னர் (194) வேள்விச் சாந்தியின் விழாக்கொள ஏவிய அந்தணரை. ஆசான் தன்னுடைய பேராசிரியன். கணி-முன்பு காட்சிக் காதையில் கூறப்பட்ட கணிவன். கம்மியர்-சிற்பியர்; கோட்டமும் படிமமும் சமைத்தவர். தான் வழிபடும் தெய்வமாதலின் இமையத்துச்சியில் உறையும் தெய்வமாகிய சிவபெருமானை முற்பட வழிபாடு செய்வித்தனன் என்க. காப்புக்கடை நிறுத்துதல்-மந்திர விதியால் காவல் தெய்வங்களை வாயிலின்கண் நிறுத்துதல். கடவுள் மங்கலம் செய்தல்-கண்ணகித் தெய்வத்தைப் படிமத்தில் மந்திர விதியால் நிறுத்துதல்.

பா. நிலைமண்டில ஆசிரியப்பா

நடுகற் காதை முற்றிற்று.
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 28, 2012, 08:38:38 AM
29. வாழ்த்துக் காதை

உரைப் பாட்டு மடை

அஃதாவது-இதன்கண் சேரன் செங்குட்டுவன் கண்ணகித் தெய்வத்திற்குக் கடவுள் மங்கலம் செய்த பின்னர், முன்னரே மாடல மறையோன் வாயிலாகக் கோவலனுக்கும் கண்ணகிக்கும் நிகழ்ந்த துயரச் செய்திகளை அறிந்தவருள் துன்பம் பொறாமல் இறந்தொழிந்ததோரொழிய எஞ்சிய கண்ணகியின் செவிலியும் தோழியாகிய தேவந்தியும் புகார் நகரத்தினின்றும் புறப்பட்டு மதுரைக்கு வந்து அங்கு மாதரியின் மகளாகிய ஐயையைக் கண்டு அவளோடும் மதுரையினின்றும் புறப்பட்டு வையைக் கரையின் வழியே மலை நாட்டை அடைதலும், அங்குக் கண்ணகிக்குத் திருக்கோயிலெடுத்துக் கடவுட் படிமம் வைத்துக் கடவுள் மங்கலம் நிகழ்வித்து விழாக் கண்டிருந்த செங்குட்டுவனுக்குத் தேவந்தி முதலியோர் தம்மை அறிவித்துக் கண்ணகியை நினைந்து அரற்றுதலும் தேவந்தி கண்ணகித் தெய்வத்திற்கு ஐயையைக் காட்டி அரற்றியவுடன் அங்கிருந்த செங்குட்டுவன் காணும்படி கண்ணகித் தெய்வம் மின்னல் போன்று விண்ணின்கண் தனது கடவுள் நல் அணி காட்டியதும், அக் காட்சியைக் கண்டு செங்குட்டுவன் பெரிதும் வியத்தலும், வஞ்சி மகளிர் கண்ணகித் தெய்வத்தைப் பாடுதலும், தமிழ்நாட்டு மூவேந்தரையும் வாழ்த்துதலும், கண்ணகித் தெய்வம் செங்குட்டுவனை வாழ்த்துதலும் கூறப்படும். இவ்வாற்றால் இக் காதை இப் பெயர்பெற்றது.

குமரியொடு வட இமயத்து ஒருமொழி வைத்து உலகு ஆண்ட
சேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன்,
கொங்கர் செங் களம் வேட்டு, கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய
செங்குட்டுவன், சினம் செருக்கி வஞ்சியுள் வந்து இருந்த காலை;
வட ஆரிய மன்னர், ஆங்கு ஓர் மடவரலை மாலை சூட்டி
உடன் உறைந்த இருக்கை தன்னில், ஒன்று மொழி நகையினராய்,
தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர் செரு வேட்டு, புகன்று எழுந்து,
மின் தவழும் இமய நெற்றியில் விளங்கு வில், புலி, கயல், பொறித்த நாள்,
எம் போலும் முடி மன்னர் ஈங்கு இல்லை போலும் என்ற வார்த்தை,
அங்கு வாழும் மாதவர் வந்து அறிவுறுத்த இடத்து ஆங்கண்,
உருள்கின்ற மணி வட்டைக் குணில் கொண்டு துரந்ததுபோல்,
இமய மால் வரைக் கல் கடவுள் ஆம் என்ற வார்த்தை இடம் துரப்ப;
ஆரிய நாட்டு அரசு ஓட்டி, அவர் முடித்தலை அணங்கு ஆகிய
பேர் இமயக் கல் சுமத்தி, பெயர்ந்து போந்து; நயந்த கொள்கையின்,
கங்கைப் பேர் யாற்று இருந்து, நங்கை-தன்னை நீர்ப்படுத்தி,
வெஞ்சினம் தரு வெம்மை நீங்கி; வஞ்சி மா நகர் புகுந்து;
நில அரசர் நீள் முடியால் பலர் தொழு படிமம் காட்டி,
தட முலைப் பூசல் ஆட்டியைக் கடவுள் மங்கலம் செய்த பின்னாள்-
கண்ணகி-தன் கோட்டத்து மண்ணரசர் திறை கேட்புழி-
அலம்வந்த மதி முகத்தில் சில செங் கயல் நீர் உமிழ,
பொடி ஆடிய கரு முகில் தன் புறம் புதைப்ப, அறம் பழித்து;
கோவலன், தன் வினை உருத்து, குறுமகனால் கொலையுண்ண;
காவலன்-தன் இடம் சென்ற கண்ணகி-தன் கண்ணீர் கண்டு,
மண்ணரசர் பெரும் தோன்றல் உள் நீர் அற்று, உயிர் இழந்தமை
மா மறையோன் வாய்க் கேட்டு; மாசாத்துவான் தான் துறப்பவும்,
மனைக்கிழத்தி உயிர் இழப்பவும், எனைப் பெரும் துன்பம் எய்தி,
காவற்பெண்டும், அடித் தோழியும்,
கடவுள் சாத்தனுடன் உறைந்த தேவந்தியும் உடன் கூடி
சேயிழையைக் காண்டும் என்று, மதுரை மா நகர் புகுந்து;
முதிரா முலைப் பூசல் கேட்டு, ஆங்கு, அடைக்கலம் இழந்து, உயிர் இழந்த
இடைக்குல மகள் இடம் எய்தி; ஐயை அவள் மகளோடும்
வையை ஒருவழிக்கொண்டு; மா மலை மீமிசை ஏறி,
கோமகள்-தன் கோயில் புக்கு; நங்கைக்குச் சிறப்பு அயர்ந்த செங்குட்டுவன் திறமுரைப்பர் மன்; 1

முடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ
வட பேர் இமய மலையில் பிறந்து,
கடு வரல் கங்கைப் புனல் ஆடிப் போந்த
தொடி வளைத் தோளிக்குத் தோழி நான் கண்டீர்,
சோணாட்டார் பாவைக்குத் தோழி நான் கண்டீர்.  2

மடம் படு சாயலாள் மாதவி-தன்னைக்
கடம்படாள், காதல் கணவன் கைப் பற்றி,
குடம் புகாக் கூவல் கொடுங் கானம் போந்த
தடம் பெரும் கண்ணிக்குத் தாயர் நான் கண்டீர்,
தண் புகார்ப் பாவைக்குத் தாயர் நான் கண்டீர்.  3

தற்பயந்தாட்கு இல்லை; தன்னைப் புறங்காத்த
எற்பயந்தாட்கும் எனக்கும் ஓர் சொல் இல்லை;
கற்புக் கடம் பூண்டு, காதலன் பின் போந்த
பொற்றொடி நங்கைக்குத் தோழி நான் கண்டீர்;
பூம் புகார்ப் பாவைக்குத் தோழி நான் கண்டீர்.  4

செய் தவம் இல்லாதேன் தீக் கனாக் கேட்ட நாள்,
எய்த உணராது இருந்தேன், மற்று என் செய்தேன்?
மொய் குழல் மங்கை முலைப் பூசல் கேட்ட நாள்,
அவ்வை உயிர் வீவும் கேட்டாயோ, தோழீ?
அம்மாமி-தன் வீவும் கேட்டாயோ, தோழீ? 5

கோவலன்-தன்னைக் குறுமகன் கோள் இழைப்ப,
காவலன் தன் உயிர் நீத்தது-தான் கேட்டு, ஏங்கி,
சாவது-தான் வாழ்வு என்று, தானம் பல செய்து,
மாசாத்துவான் துறவும் கேட்டாயோ, அன்னை?
மாநாய்கன் தன் துறவும் கேட்டாயோ, அன்னை?  6

காதலன் தன்-வீவும், காதலி நீ பட்டதூஉம்,
ஏதிலார் தாம் கூறும் ஏச்சு உரையும் கேட்டு, ஏங்கி,
போதியின் கீழ் மாதவர்முன் புண்ணிய தானம் புரிந்த
மாதவி-தன் துறவும் கேட்டாயோ, தோழீ?
மணிமேகலை துறவும் கேட்டாயோ, தோழீ? 7

ஐயம் தீர் காட்சி அடைக்கலம் காத்து ஓம்ப
வல்லாதேன் பெற்றேன் மயல் என்று உயிர் நீத்த
அவ்வை மகள் இவள்-தான், அம் மணம் பட்டிலா,
வை எயிற்று ஐயையைக் கண்டாயோ, தோழீ?
மாமி மட மகளைக் கண்டாயோ, தோழீ?  8

என்னே! இஃது என்னே! இஃது என்னே! இஃது என்னே கொல்!
பொன் அம் சிலம்பின், புனை மேகலை, வளைக் கை,
நல் வயிரப் பொன் தோட்டு, நாவல் அம் பொன் இழை சேர்,
மின்னுக் கொடி ஒன்று மீவிசும்பில் தோன்றுமால்!  9

தென்னவன் தீது இலன்; தேவர் கோன்-தன் கோயில்
நல் விருந்து ஆயினான்; நான் அவன்-தன் மகள்
வென் வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன்;
என்னோடும், தோழிமீர்! எல்லீரும், வம், எல்லாம். 10

வஞ்சியீர், வஞ்சி இடையீர், மற வேலான்
பஞ்சு அடி ஆயத்தீர்! எல்லீரும், வம், எல்லாம்;
கொங்கையால் கூடல் பதி சிதைத்து, கோவேந்தைச்
செஞ் சிலம்பால் வென்றாளைப் பாடுதும்; வம், எல்லாம்.
தென்னவன் தன் மகளைப் பாடுதும் வம், எல்லாம்
செங்கோல் வளைய, உயிர் வாழார் பாண்டியர் என்று
எம் கோ முறை நா இயம்ப, இந் நாடு அடைந்த
பைந் தொடிப் பாவையைப் பாடுதும்; வம், எல்லாம்;
பாண்டியன்-தன் மகளைப் பாடுதும்; வம், எல்லாம்.  11

வானவன், எம் கோ, மகள் என்றாம்; வையையார்
கோன்-அவன்-தான் பெற்ற கொடி என்றாள்; வானவனை
வாழ்த்துவோம் நாமாக, வையையார் கோமானை
வாழ்த்துவாள் தேவ மகள்.   12

தொல்லை வினையான் துயர் உழந்தாள் கண்ணின் நீர்
கொல்ல, உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ!
வாழியரோ, வாழி, வரு புனல் நீர் வையை
சூழும் மதுரையார் கோமான்-தன் தொல் குலமே!  13

மலையரையன் பெற்ற மடப் பாவை-தன்னை
நில அரசர் நீள் முடிமேல் ஏற்றினான் வாழியரோ!
வாழியரோ, வாழி, வரு புனல் நீர் ஆன்பொருநை
சூழ்தரும் வஞ்சியார் கோமான்-தன் தொல் குலமே!  14

எல்லா! நாம்-
காவிரி நாடனைப் பாடுதும்; பாடுதும்,
பூ விரி கூந்தல்! புகார்.   15

வீங்குநீர் வேலி உலகு ஆண்டு, விண்ணவர் கோன்
ஓங்கு அரணம் காத்த உரவோன் யார், அம்மானை?
ஓங்கு அரணம் காத்த உரவோன் உயர் விசும்பில்
தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன்காண், அம்மானை;
சோழன் புகார் நகரம் பாடேலோர், அம்மானை.  16

புறவு நிறை புக்கு, பொன்னுலகம் ஏத்த,
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார், அம்மானை?
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் முன் வந்த
கறவை முறை செய்த காவலன் காண், அம்மானை;
காவலன் பூம் புகார் பாடேலோர், அம்மானை.  17

கடவரைகள் ஓர் எட்டும் கண் இமையா காண,
வடவரைமேல் வாள் வேங்கை ஒற்றினன் யார், அம்மானை?
வடவரைமேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும்
குடை நிழலில் கொண்டு அளித்த கொற்றவன்காண், அம்மானை
கொற்றவன் பூம் புகார் பாடேலோர், அம்மானை.  18

அம்மனை தம் கையில் கொண்டு, அங்கு அணி இழையார
தம் மனையில் பாடும் தகையேலோர், அம்மானை;
தம் மனையில் பாடும் தகை எலாம் தார் வேந்தன்
கொம்மை வரி முலைமேல் கூடவே, அம்மானை;
கொம்மை வரி முலைமேல் கூடின், குல வேந்தன்
அம் மென் புகார் நகரம் பாடேலோர், அம்மானை  19

பொன் இலங்கு பூங்கொடி! பொலம் செய் கோதை வில்லிட,
மின் இலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப, எங்கணும்,
தென்னவன் வாழ்க, வாழ்க! என்று சென்று பந்து அடித்துமே;
தேவர் ஆர மார்பன் வாழ்க! என்று, பந்து அடித்துமே. 20

பின்னும் முன்னும், எங்கணும், பெயர்ந்து; உவந்து, எழுந்து, உலாய்;
மின்னு மின் இளங் கொடி வியல் நிலத்து இழிந்தென,
தென்னவன் வாழ்க, வாழ்க! என்று சென்று, பந்து அடித்துமே;
தேவர் ஆர மார்பன் வாழ்க! என்று பந்து அடித்துமே.  21

துன்னி வந்து கைத்தலத்து இருந்ததில்லை; நீள் நிலம்-
தன்னில்-நின்றும் அந்தரத்து எழுந்ததில்லை-தான் என,
தென்னவன் வாழ்க, வாழ்க! என்று சென்று, பந்து அடித்துமே;
தேவர் ஆர மார்பன் வாழ்க! என்று, பந்து அடித்துமே. 22

வடம் கொள் மணி ஊசல் மேல் இரீஇ, ஐயை
உடங்கு ஒருவர் கைநிமிர்த்து-ஆங்கு, ஒற்றை மேல் ஊக்க,
கடம்பு முதல் தடிந்த காவலனைப் பாடி
குடங்கை நெடுங் கண் பிறழ, ஆடாமோ ஊசல்;
கொடு வில் பொறி பாடி, ஆடாமோ ஊசல்.  23

ஓர் ஐவர் ஈர்-ஐம்பதின்மர் உடன்று எழுந்த
போரில், பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த
சேரன், பொறையன், மலையன், திறம் பாடி,
கார் செய் குழல் ஆட, ஆடாமோ ஊசல்;
கடம்பு எறிந்த வா பாடி, ஆடாமோ ஊசல். 24

வன் சொல் யவனர் வள நாடு, வன் பெருங்கல்,
தென் குமரி, ஆண்ட; செரு வில், கயல், புலியான்
மன்பதை காக்கும் கோமான், மன்னன், திறம் பாடி;
மின் செய் இடை நுடங்க, ஆடாமோ ஊசல்;
விறல் வில் பொறி பாடி, ஆடாமோ ஊசல்.  25

தீங் கரும்பு நல் உலக்கை ஆக, செழு முத்தம்
பூங் காஞ்சி நீழல், அவைப்பார் புகார் மகளிர்;
ஆழிக் கொடித் திண் தேர்ச் செம்பியன் வம்பு அலர் தார்ப்
பாழித் தட வரைத் தோள் பாடலே பாடல்;
பாவைமார் ஆர் இரக்கும் பாடலே பாடல்.  26

பாடல்சால் முத்தம் பவழ உலக்கையால்
மாட மதுரை மகளிர் குறுவரே;
வானவர் கோன் ஆரம் வயங்கிய தோள் பஞ்சவன்-தன்
மீனக் கொடி பாடும் பாடலே பாடல்;
வேப்பந்தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல்  27

சந்து உரல் பெய்து, தகைசால் அணி முத்தம்,
வஞ்சி மகளிர் குறுவரே, வான் கோட்டால்
கடந்து அடு தார்ச் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை
படர்ந்த நிலம் போர்த்த பாடலே பாடல்
பனந்தோடு உளம் கவரும் பாடலே பாடல்  28

ஆங்கு, நீள் நில மன்னர், நெடு வில் பொறையன் நல்
தாள் தொழார், வாழ்த்தல் தமக்கு அரிது; சூழ் ஒளிய
எம் கோமடந்தையும் ஏத்தினாள், நீடூழி,
செங்குட்டுவன் வாழ்க! என்று.   29

உரை

உரைப் பாட்டு மடை

1: குமரியொடு...........திறமுரைப்பர் மன்

(இதன் பொருள்) குமரியொடு வட இமயத்து ஒருமொழி வைத்து உலகு ஆண்ட சேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேர்யாற்றுக் கரை போகிய செங்குட்டுவன் சினம் செருக்கி வஞ்சியுள் வந்திருந்த காலை-தமிழ்நாட்டுத் தென் திசைக்கு எல்லையாகிய தென்குமரி தொடங்கி நாவலம் தண்பொழிலுக்கு வடக்கு எல்லையாய் அமைந்த இமைய மலைகாறும் தனது ஆணையாகிய ஒரு மொழியையே வைத்து உலகினை ஆட்சி செய்த சேரலாதன் என்னும் சேர மன்னனுக்குரிய தேவியருள் விளங்குகின்ற ஒளியை உடைய ஞாயிற்றின் மரபில் தோன்றிய சோழ மன்னனுடைய மகளாகிய கோப்பெருந்தேவி செஞ்சடை வானவன் திருவருளாலே ஈன்றருளிய மைந்தன் கொங்கரொடு குருதியாற் சிவந்த களத்தின்கண் பகைவரை நூழிலாட்டி மறக்கள வேள்வி செய்து வாகை சூடிக் கங்கை என்னும் பேரியாற்றின் தென்கரை வரையில் சென்ற செங்குட்டுவன், எஞ்சிய பகைவர்பாலும் தனது சினத்தை மிகுத்தவனாய் மீண்டும் தனது வஞ்சி நகரத்தினுள் வந்திருந்த காலத்தே; வட ஆரிய மன்னர் ஆங்கு ஓர் மடவரலை மாலை சூட்டி உடன் உறைந்த இருக்கை தன்னில்-வட நாட்டின்கண் ஆட்சி செய்கின்ற அரசர்கள் அவ் வடநாட்டின்கண் ஓர் அரசன் மகளுக்கு மாலை சூட்டும் மண விழாவின் பொருட்டு ஒரு திருமண மன்றத்தின்கண் எல்லோருள் ஒருங்கு குழுமியிருந்த அக் கூட்டத்தின்கண்; ஒன்று மொழி நகையினராய் தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர் செருவேட்டு புகன்று எழுந்து மின் தவழும் இமய நெற்றியில் விளங்குவில் புலி கயல் பொறிந்த நாள் எம்போலும் முடிமன்னர் ஈங்கு இல்லைபோலும் என்ற வார்த்தை-ஒரு கருத்தையே எல்லோரும் ஒத்துக்கொண்டு பேசுகின்ற பேச்சினையும் அப் பேச்சின்கண் தோன்றும் நகைப்பினையும் உடையராய்த் தமக்குள்ளே சொல்லாடிக்கொண்டிருப்பவர்-இந் நாவலம் தீவின் தென்திசைக் கண்ணதாகிய தமிழ்நாட்டை ஆளுகின்ற சேர சோழ பாண்டிய மன்னர்கள் போர்த் தொழிலைப் பெரிதும் விரும்பிப் படையொடு வந்து மின்னல் தவழ்தற்கிடனான நமது இமய மலையினது நெற்றியின்கண் இற்றை நாளும் விளங்கும்படி தமது வெற்றிக்கு அறிகுறியான தமதிலச்சினைகளாகிய வில்லையும் புலியையும் கயல்மீனையும் தனித்தனியே பொறித்து வைத்துப்போன அந்தக் காலத்திலே நம்மைப் போன்ற பேரரசர்கள் இவ் வடநாட்டின்கண் இல்லைபோலும், என்று கூறி நகைத்த மொழியை; அங்கு வாழும் மாதவர் வந்து அறிவுறுத்தவிடத்து ஆங்கண்-அம் மணவிழாவிலே அவ்வரசர்கள் கூறிய அம் மொழியை அவ் வடநாட்டின்கண் வாழ்கின்ற முனிவர்கள் வந்து செங்குட்டுவனுக்கு அறிவுறுத்திய பொழுதாகிய அச் செவ்வியிலேயே;

உருள்கின்ற மணிவட்டைக் குணில் கொண்டு துரந்ததுபோல் இமயமால்வரைக் கல் கடவுள் ஆம் என்ற வார்த்தை இடம் துரப்ப-தானே உருளும் இயல்புடைய மணியாலியன்ற வட்டினைக் குறுந்தடினைக் கைக்கொண்டு தாக்கிச் செலுத்துவதுபோலே கண்ணகித் தெய்வத்திற்கு இமயம் என்னும் பெரிய மலையின்கண் அமைந்த கல்லே கடவுள் படிமம் சமைத்தற்குத் தகுதியாகும் என்று தன் அவைக்களத்து நூலறி புலவர் கூறிய மொழி அவ்விடத்தினின்றும் தன்னைச் செலுத்துதலாலே; ஆரியநாட்டு அரசு ஓட்டி அவர் முடித்தலை அணங்கு ஆகிய பேர் இமயக்கல் சுமத்திப் பெயர்ந்து போந்து-படையெடுத்துச் சென்று அவ் வடவாரிய நாட்டு அரசராகிய கனகவிசயரும் உத்திரனும் முதலிய அரசர்களைப் போர்க்களத்தின்கண் புறங்கொடுத் தோடச்செய்து அவருள் கனகவிசயர் என்னம் அரசருடைய முடிக்கலன் அணிதற்குரிய தலையின்கண் கடவுள் படிமமாதற் பொருட்டுக் கைக்கொண்ட பெரிய அவ்விமய மலையினது கல்லைச் சுமத்தி மீண்டு வந்து; நயந்த கொள்கையின் கங்கைப் பேர்யாற்று இருந்து நங்கை தன்னை நீர்ப்படுத்தி வெம்சினம் தரும் வெம்மை நீங்கி வஞ்சிமாநகர் புகுந்து நீள் முடியால் நில அரசர் பலர் தொழும் படிமம் காட்டி தடமுலைப் பூசலாட்டியைக் கடவுள் மங்கலம் செய்த பின்நாள்-தான் விருபியம் கோட்பாட்டிற் கிணங்கச் கங்கை யென்னும் அப் பேரியாற்றின் கரையின்கண் இருந்து பத்தினித் தெய்வத்திற்குரிய அக்கல்லினை நீர்ப்படை செய்து பண்டு அவ் வடவாரிய மன்னர்பால் எழுந்த வெவ்விய வெகுளி உண்டாக்கிய வெப்பம் தணியப்பெற்று அங்கிருந்து புறப்பட்டுத் தனது வஞ்சிமாநகரத்தின்கண் புகுந்து தமது நீண்ட முடியைத் தாழ்த்தி நிலத்தை ஆளுகின்ற அரசரும் பிறருமாகிய பலராலும் தொழுதற்குரிய கடவுட் படிமமும் சமைத்து அப் படிமத்தின்கண் பெரிய முலையினால் பூசல் விளைத்த கண்ணகித் தெய்வத்தை மறைமொழியினால் கடவுள் மங்கலமும் செய்தருளிய நாளின் வழி நாளின் கண்;

கண்ணகி திருக்கோயிலின் பந்தரிடத்திருந்து அச் செங்குட்டுவன் நிலத்தை ஆளும் அரசர்கள் தனக்கு அளித்த திறைப் பொருள் பற்றி அக் கோத் தொழிலாளரிடத்து வினவி இருந்த பொழுது; கோவலன் தன் வினை உருத்துக் குறு மகனால் கொலை உண்ண-கோவலனுடைய பழவினை உருத்து வந்து ஊட்டியது காரணமாகப் பொய்த் தொழிற் கொல்லனாகிய ஒரு சிறுமையுடையோனால் கொலையுண் டிறந்துபட்டமையாலே; அலம் வந்த மதிமுகத்தில் சில செங்கயல் நீர் உமிழப் பொடியாடிய கருமுகில் தன் புறம் புதைப்ப அறம் பழித்து காவலன் தன் இடம் சென்ற கண்ணகி தன் கண்ணீர் கண்டு-சிலம்பு மாறச் சென்ற கணவன் வந்திலாமையால் சுழற்சியுற்ற திங்களை ஒத்த தனது முகத்தின் கண் அமைந்த சில சிவந்த கயன்மீன்கள் போன்ற கண்கள் நீர் உமிழா நிற்பவும்  புழுதி படிந்த கரிய முகில் போன்ற தன் கூந்தல் சரிந்து முதுகை மறைப்பவும் அரசனுடைய செங்கோல் அறத்தைப் பழித்துக்கொண்டு அவ்வரசனாகிய பாண்டியன் அறத்தை பழித்துக்கொண்டு அவ்வரசனாகிய பாண்டியன் நெடுஞ்செழியன் அவைக்களத்து ஏறி முறை கேட்பச் சென்ற கண்ணகியினது கண்ணீரைக் கண்டபொழுதே; மண் அரசர் பெருந்தோன்றல் உள்நீர் அற்று உயிர் இழந்தமை மாமறையோன் வாய் கேட்டு-நிலத்தை ஆளுகின்ற அரசர் குடியினுள் வைத்துச் சிறந்த குடியில் தோன்றியவனாகிய நெடுஞ்செழியன் தனது நெஞ்சத்தின்கண் அறப்பண்பு அற்றொழிந்தமையின் உயிர் துறந்தமை முதலிய மதுரையில் நிகழ்ந்த இந் நிகழ்ச்சிகளை யெல்லாம் சிறந்த அந்தணனாகிய மாடலன் வாயிலாகக் கேட்டு; மாசாத்துவான் தான் துறப்பவும் மனைக்கிழத்தி உயிரிழப்பவும் எனைப் பெரும் துன்பம் எய்தி-கோவலன் தந்தையாகிய மாசாத்துவான் துறவறத்தை மேற்கொள்ளவும் தாயாகிய பெருமானைக் கிழத்தி உயிர் துறப்பவும் என்று இன்னோரன்ன பெருந்துன்பங்களை ஒன்றன்மேல் ஒன்றாக எய்தி; காவல் பெண்டும் அடித் தோழியும் கடவுள் சாத்தனுடன் உறைந்த தேவந்தியும் உடன் கூடிச் சேயிழையைக் காண்டும் என்று-புகார் நகரத்திலிருந்த கண்ணகி நல்லாளின் செவிலித்தாயும் கண்ணகியின் உசாஅத் துணைத் தோழியும் அவளுடைய பார்ப்பனத் தோழியாகிய கடவுளாகிய சாத்தனோடு வதிந்த தேவந்தியும் ஒருங்கு கூடி நம் சேயிழையாகிய கண்ணகி என்னாயினள் என யாம் அங்குச் சென்று காண்பே மென்றுட் கொண்டு;மதுரை மாநகர் புகுந்து முதிரா முலைப் பூசல் கேட்டு-மதுரை மாநகரத்திற்குச் சென்று அங்குக் கண்ணகி தனது இளமுலையைத் திருகி எறிந்து விளைத்த பூசலைக் கேள்வியுற்று; ஆங்கு அடைக்கலம் இழந்து உயிர் இழந்த இடைக்குல மகளிடம் எய்தி-அந் நகரின் புறஞ் சேரியின்கண் தான் பெற்ற அடைக்கலப் பொருளாகிய கண்ணகியை இழந்தமையாலே தனதுயிரைத் தீயினுள் புகுந்து போக்கிய இடைக்குலத்தில் பிறந்த முதுமகளாகிய மாதிரியின் இருப்பிடத்தை அடைந்து; அவள் மகள் ஐயை யோடும் வையை ஒரு வழிக் கொண்டு மாமலை மீமிசை ஏறி கோமகள் தன் கோயில் புக்கு-அங்குத் தாம் கண்ட அம் மாதிரியின் மகளாகிய ஐயை என்பவளோடும் கூடிப் பண்டு கண்ணகி சென்ற வழியாகிய வையையின் ஒரு கரையையே வழியாகக் கொண்டு சென்று ஆங்கு மலை நாட்டின்கண் தம்மெதிர் தோன்றிய பெரிய நெடுவேள் குன்றத்தின் மேலே மிகவும் ஏறிச் சென்று அங்கு இறைமகள் என்று தன்னைக் கூறிக்கொள்கின்ற கண்ணகியின் கோயிலின்கண் புகுந்து அவ்விடத்தே; நங்கைக்குச் சிறப்பயர்ந்த செங்குட்டுவற்குத் திறமுரைப்பர் மன்-அத் திருமா பத்தினிக்குத் திருவிழா நிகழ்த்திய செங்குட்டுவனைக் கண்டு அவனுக்குத் தம்முடைய தன்மையைக் கூறுவாராயினர் என்க.

(விளக்கம்) நாவலம் பொழில் முழுவதும் அவன் ஆணை சென்றமையின் குமரியொடு வடவிமயம் என எல்லை கூறினார். ஒரு மொழி என்றது ஆணையை ஞாயிற்றுச் சோழன்-ஞாயிற்று மரபில் பிறந்த சோழன் செங்குட்டுவன் முன்னொரு முறை வடதிசைக்கண் படையெடுத்துச் சென்றவன் கங்கையாற்றின் தென்கரைகாறும் சென்று மீண்டான் எனவும் அப்பொழுது தன் வரவு கேட்டு வந்தடி வணங்காமையின் அப்பாலுள்ள பகைவர் மேல் சினத்தை மிகுத்து மீண்டு வந்து வஞ்சியுள் இருந்தான் என்க. ஒன்று மொழி நகையினர்-ஒரு கருத்தையே எல்லோரும் ஒருமித்துக் கூறி எள்ளி நகைத்தவராய் என்றவாறு. அம் மொழியாவது இக் காலத்தே தமிழர் நம் வடநாட்டின்கண் வரின் அவரை யாம் வென்று புறமிட்டோடச் செய்வேம் என்பது. தமிழ் மன்னர்கள் தனித்தனியே வடதிசைக்கள் வந்து நம்மனோரை வென்று வாகை சூடிய பொழுது இந்த நாட்டின்கண் நம் போன்ற வீர மன்னர் இருந்திலர். இருந்தாராயின் அவர் இமய நெற்றியில் விற்புலி கயல் பொறித்துப் போதல் எங்ஙனம் என்று எள்ளியபடியாம். போலும்: ஒப்பில் போலி மணி வட்டு-மணி இழைத்த உருளை, உருண்டை வடிவமான வட்டுக் காயுமாம். வட்டு-சூதாடு கருவி. குணில் என்பது குறுந்தடி. நீண்முடியால் நீலவரசர் பலர் தொழும் படிவம் என்க. முலைப் பூசலாட்டி-கண்ணகி. அறம் பழித்து என்றதற்கு அறக்கடவுளைப் பழித்து எனினுமாம். குறுமகன்-பொற்கொல்லன். காவற் பெண்டு-செவிலித்தாயருள் ஒருத்தி. அடித்தோழி என்றது செவிலியின் மகளை. அடைக்கலமிழந்து உயிர் இழந்த இடைக்குல மகள் என்றது மாதிரியை. கண்ணகி பின்னர்த் தன்னைப் பாண்டியன் மகளாகக்கூறிக் கொள்ளுதலின் கோமகள் கோயில் என்றார். இனி மகளிர்கெல்லாம் கோவாகிய மகள் எனினுமாம் சிறப்பு-திருவிழா. மன்: அசைச் சொல்.

தேவந்தி சொல்

2: முடி மன்னர்.......கண்டீர்

(இதன் பொருள்) முடிமன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ வட பேர் இமய மலையில் பிறந்து-போந்தை வேம்பே ஆர் எனவரும் அடையாளப் பூ மாலையைச் சூடுகின்ற சேரர் பாண்டியர் சோழர் என்னும் மூன்று குலத்தில் பிறந்த முடிமன்னர் மூவராலும் நன்கு காக்கப்படுகின்ற தெய்வங்கள் உறைதற் கிடனான வடதிசைக் கண்ணதாகிய பெரிய இமயமலையிலே பிறந்து; கடுவரல் கங்கைப் புனல் ஆடிப் போந்த-விரைந்து வருதலையுடைய கங்கை யாற்றினது தெய்வத் தன்மையுடைய நீரின்கண் ஆடி இத்திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள; தொடிவளைத் தோளிக்கு நான் தோழி கண்டீர்-தொடியையும் வளையையும் உடைய தோளை உடைய இக் கண்ணகிக்கு நான் தோழி கண்டீர்; சோணாட்டார் பாவைக்கு நான் தோழி கண்டீர்-சோழ நாட்டில் பிறந்தோர்க் கெல்லாம் மகளாகிய பாவைபோலும் இக் கண்ணகிக்கு அடிச்சியும் ஒரு தோழியாவேன் கண்டீர் என்றாள் என்க.

(விளக்கம்) தமிழரசர் மூவரும் ஒவ்வொரு காலத்து அவ்விமய மலை வரையில் உள்ள அரசரையெல்லாம் அடிப்படுத்துத் தமது இலச்சினையையும் மலையிற் பொறித்துப் பேணுதலின் மூவருங் காத்து ஓம்பும் மலை என்றாள். மலையிற் பிறத்தலாவது அம் மலையிற் கொண்ட கல்லாலியற்றிய படிமத்தைத் தனதுருவமாகக் கொள்ளுதல். இனி வடபேரிமய மலையிற் பிறந்து அம் மலையிலேயே பிறந்து கடுவரற் கங்கைப் புனலாடிப் போந்த என இமயமலையிற் பிறத்தலைக் கங்கைக்கும் கண்ணகிக்கும் பொதுவாகக் கொள்க. சோழ நாட்டில் பிறத்தலின் அந் நாட்டினர் எல்லார்க்கும் மகளாகிய பாவைக்கு என்க. சேரணாட்டில் மக்கட் பிறப்பிற் பிறந்து மீண்டும் இமயமலையில் தெய்வப் பிறப்புப் பிறந்து போந்த பாவை என்பது கருத்தாகக் கொள்க.

காவற் பெண்டு சொல்

3. மடம்படு......கண்டீர்

(இதன் பொருள்) மடம்படு சாயலாள் மாதவி தன்னைக் கடம்படாள் காதற் கணவன் கைப்பற்றி-மடப்பம் பொருந்திய சாயலை உடையவளும் கோவலன் தன்னைப் பிரிதற்குக் காரணமான மாதவி தன்னையும் ஒரு சிறிது வெகுண்டு பேசாதவளும் அம் மாதவி மனையினின்றும் தன் மனைக்கு வந்த காதலையுடைய கணவனாகிய கோவலனைச் சிறிதும் வெறுக்காமல் அவன் கையைப் பற்றிக்கொண்டு; குடம்புகாக் கூவற் கொடுங்கானம் போந்த-நீரின்மையால்  குடம் புகுந்தறியாத வறிய கேணியை யுடைய கொடிய பாலை நிலத்திலே வந்த; தடம் பெருங் கண்ணிக்கு நான் தாயர் கண்டீர் தண் புகார்ப் பாவைக்கு நான் தாயர் கண்டீர்-மிகவும் பெரிய கண்களையுடைய இக் கண்ணகிக்கு அடிச்சி செவிலித்தாய் ஆவேன் கண்டீர்! குளிர்ந்த புகார் நகரத்திலே பிறந்த பாவை போல்வாளாகிய இக் கண்ணகிக்கு நான் செவிலித்தாய் கண்டீர் என்றான்; என்க.

(விளக்கம்) மடம்-பெண்மைக் குணங்களுள் ஒன்று. சாயல்-ஐம்பொறிகளாலும் நுகர்தற்கியன்ற மென்மை. சாயலாளும் போந்தவளுமாகிய கண்ணிக்கு என்க. கடம்படாள்-மிகவும்வெகுளாள். தவக்குத் தீமை செய்தமை பற்றி அம் மாதவியை ஒரு காலத்தும் வெறுத்துச் சினவாதவள் என்பது கருத்து. இது தீதும் நன்றும் பிறர் தர வாரா என்னும் மெய்யுணர்வுபற்றிப் பிறக்கும் தெளிவு. கணவனை வெறுமை கூற வேண்டாவாயிற்று. குடம் புகாக் கூவல் என்றது நீரின்மையாகிய காரணத்தை விளக்கி நின்றது. கண்ணகியின் பேரருள் தோன்றுதற்குத் தடம் பெரும் கண்ணி என்று விதந்தாள்.

அடித் தோழி சொல்

4. தற் பயந்தாட்கு............கண்டீர்

(இதன் பொருள்) தன் பயந்தாட்கு (ஓர் சொல்) இல்லை தன்னைப் புறங்காத்த என் பயந்தாட்கும் எனக்கும் ஓர் சொல் இல்லை-பூம்புகாரினின்றும் புறப்படும் பொழுது தன்னை ஈன்ற நற்றாய்க்கும் ஒரு சொல் சொன்னாளில்லை. அவ்வாறே பிறந்த நாள் தொடங்கி எடுத்துவளர்த்துப் புறம் புறமே நின்று பேணிய அவள் செவிலித்தாயாகிய என்னை ஈன்றவளுக்கும், பிறந்த நாள் தொடங்கி உடணுண்டு உடனுறங்கி உடன் வளர்ந்த உயிர்த் தோழியாகிய அடிச்சிக்கும் ஒரு சொல் சொன்னாளில்லை; கற்புக் கடம் பூண்டு காதலன் பின் போந்த பொன்தொடி நங்கைக்கு நான் தோழி கண்டீர்-தனக்குரிய கற்பறத்தைப் பேணுவதையே தனது தலையாய அறமாக மேற்கொண்டு தன் காதலன் எழுக என்றவுடன் மறுக்கும் சொல் ஒன்றும் இல்லாமல் அவனைப் பின் தொடர்ந்து வந்த பொன் வளையலணிந்த நங்கையாகிய இக் கண்ணகிக்கு அடிச்சி உயிர்த்தோழியாவேன் கண்டீர்; பூம்புகார்ப் பாவைக்கு நான் தோழி கண்டீர்-அழகிய புகார் நகரத்தே தோன்றிய இக் கண்ணகிக்கு அடிச்சி தோழியாவேன் கண்டீர் என்றாள் என்க.

(விளக்கம்) தற் பயந்தாள் என்றது கண்ணகியின் நற்றாயை. தோழி செவிலி மகளாதலின் அவளை எற்பயந்தாள் என்றாள். ஓர் சொல்-தனது பிரிவுபற்றிய ஏதேனும் ஒருசொல். கற்புக் கடம் பூண்டாளுக்குக் கணவனினும் சிறந்த கேளிர் இல்லையாதலினாலும் எமக்குச் சொன்னால் தன் போக்கிற்குச் சிறிது இடையூறு நேர்தல் கூடும் என்பதனாலும் சொல்லாது காதலன் பின் போயினள் என்றவாறு. இன்துணை மகளிர்க்கு இன்றியமையாக் கற்புக் கடம்பூண்ட இத் தெய்வமல்லது பொற்புடைத் தெய்வம் யாங் கண்டிலமால் எனக் கவுந்தியடிகளாரும் பாராட்டினமை நினைக. (எண் 15. 142-4)

தேவந்தி யரற்று

5. செய்தவம்......தோழி

(இதன் பொருள்) செய்தவம் இல்லாதேன் தீக்கனா கேட்ட நாள் எய்த உணராது இருந்தேன் மற்று என் செய்தேன்-தோழீ! முற்பிறப்பிலே தவஞ் செய்திலாத தீவினை யாட்டியேன், நீ என்னிடம் கண்ட தீக்கனாவைக் கூறிய அந்த நாளிலே அக் கனாப் பற்றி ஆழ்ந்து உணராதிருந் தொழிந்தேன் ஐயகோ என்ன காரியம் செய்துவிட்டேன்; மொய்குழல் மங்கை முலைப் பூசல் கேட்ட நாள்-செறிந்த கூந்தலையுடைய நங்காய் நீ மதுரையிற் செய்த முலைப் பூசலைக் கேட்டபொழுது; அவ்வை உயிர் வீவுங் கேட்டாயோ தோழீ-நின் அன்னை உயிர் நீத்த செய்தியையும் நீ யாரேனும் கூறக் கேட்டதுண்டோ? தோழீ; அம்மாமி தன்வீவுங் கேட்டாயோ-நின்னுடைய மாமியினது சாவினையும் நீ கேட்டதுண்டோ? என்று அழுதாள்; என்க.

(விளக்கம்) தேவந்தி முதலியோர் செங்குட்டுவனுக்குத் தம்மை அறிவித்த பின்னர்த் துன்பம் பொறாமல் கண்ணகியின் தெய்வப்  படிமத்தை நோக்கி இங்ஙனம் கூறி அழுகின்றனர் என்க. அரற்றுதல். வாய்விட்டுப் புலம்புதல். கண்ணகி தான் கண்ட தீக்கனாவைத் தேவந்திக்குக் கூறியதனைக் கனாத் திறமுரைத்த காதையில் காண்க. எய்த உணர்தல்-ஆழ்ந்து உணர்தல். அங்ஙளம் உணர்ந்திருந்தேனாயின் ஓரோவழி நீ மதுரைக்குப் போகாவண்ணம் தடை செய்திருப்பேன் என்று அன்பு மிகுதியால் தேவந்தி இங்ஙனம் கூறுகின்றனள் என்க. மங்கை: விளி; முன்னிலைப் புறமொழி எனினுமாம். அவ்வை-தாய். அம்மாமி என்பது ஒருசொல். அம்மான் என்னும் ஆண்பாலுக்குப் பெண்பாற் சொல் என்றறிக.

காவற் பெண்டரற்று

6: கோவலன்............வன்னை

(இதன் பொருள்) அன்னை கோவலன் தன்னைக் குறுமகன் கோள் இழைப்ப காவலன் தன் உயிர் நீத்தது நான் கேட்டு ஏங்கி-அன்னாய் நின் கணவனாகிய கோவலனைக் கீழ் மகனாகிய பொய்த் தொழில் கொல்லன் கொல்லும்படி செய்யப் பின்னர்த் தன் தவற்றினை உணர்ந்த பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் நீத்த இச் செய்தியைக் கேட்டுத் துயரம் பொறாமல் ஏங்கி, சாவது தான் வாழ்வு என்று தானம் பல செய்து-இனி எனக்கு வாழ்க்கை என்பது இறந்துபடுதலேயாம் என்றுட்கொண்டு தன் வள நிதி அனைத்தையும் கொண்டு பலவேறு தானங்களையும் செய்துவிட்டு; மாசாத்துவான் துறவுங் கேட்டாயோ-நின் மாமனாகிய மாசாத்துவான் என்னும் பெரும் புகழ்படைத்த வாணிகன் துறவறம் மேற்கொண்டமையையும் கேட்டதுண்டோ; அன்னை மாநாய்கன் தன் துறவுங் கேட்டாயோ-அன்னாய் அங்ஙனமே நின் தந்தையாகிய மாநாய்கன் என்பானும் இச் செய்தி கேட்டு அங்ஙமே துறவறம் புகுந்தமையைக் கேட்டதுண்டேயோ! என்று சொல்லி அழுதாள் என்க,

(விளக்கம்) கோள்-கொலை. காவலன்: நெடுஞ்செழியன்.சாவது தான் வாழ்வென்றது இனி இவ்வுலகின்கண் தனக்கு வாழ்க்கை என்ப தொன்றில்லை என்று கருதியவாறாம். துறவு உலக வாழ்க்கையைத் துறத்த லாதலின் அதுவே சாவுமாயிற்று.

அடித்தோழியரற்று

7: காதலன்...........தோழி

(இதன் பொருள்) தோழீ காதலன் தன் வீவும் காதலி நீ பட்ட தூஉம் ஏதிலார் தாம் கூறும் ஏச்சு உரையுங் கேட்டு ஏங்கி தோழியே தனது பெருங்காதலுக்கிடனான கோவலனுடைய மறைவையும் அவனால் பெரிதும் காதலிக்கப்பட்ட நீ பட்ட பெரும் துன்பங்களையும் புகார் நகரத்திலுள்ள அயலோர் கூறும் பழிமொழிகளையும் கேட்டு இத் துன்பங்களைப் பொறாமல் பெரிதும் ஏக்கமெய்தி; போதியின்கீழ் மாதவர்முன் புண்ணிய தானம் புரிந்த-அரசமரத்தின்கீழ் இருந்து பெரிய தவத்தைச் செய்கின்ற துறவோர் முன்னிலையிலே தனது பொருளையெல்லாம் புண்ணிய தானமாக வழங்கிய; மாதவி தன் துறவும் கேட்டாயோ-அம் மாதவி தானும் துறவறம் புகுந்த செய்தியை நீ கேட்ட துண்டோ; தோழி மணிமேகலை துறவும் கேட்டாயோ-என் ஆருயிர்த் தோழி  நீ தான் நின் மகளாகிய மணிமேகலை ஆற்றவும் இளம் பருவத்திலேயே துன்பம் ஆற்றாதவாளாய்த் துறவறம் புகுந்த செய்தியைக் கேட்டதுண்டேயோ? என்று சொல்லி அழுதாள் என்க.

(விளக்கம்) இருவர்க்கும் காதலன் ஆதலின் பொதுவாகக் காதலன் என்றாள். மாதவியைத் துறந்தவுடன் கண்ணகியின்பால் எய்துதலின் அவனது காதல் புலப்படுதலின் அவன் காதலியாகிய நீ பட்டதுவும் என்றாள் என்க. பட்டது-பட்ட துன்பம். ஏதிலார்-அயலோர். ஏச்சுரை-பழிச்சொல். மாதவர்-ஈண்டு அறவணவடிகளார். மணிமேகலை துறவும் என்புழி மணிமேகலை துறவும் என்று எடுத்தோதி இரக்கச்சுவை உடையதாக்குக.

தேவந்தி ஐயையைக் காட்டி அரற்றியது

8: ஐயந்தீர்..........தோழீ

(இதன் பொருள்) ஐயந்தீர் காட்சி அடைக்கலம் காத்து ஓம்பவல்லாதேன்-தவத்தோர் அடைக்கலம் தான் சிறிது ஆயினும் மிகப் பேரின்பம் தரும் என்பதன்கண் சிறிதும் ஐயமில்லாது தெளிந்த மெய்க்காட்சியோடு ஏற்றுக்கொண்ட அடைக்கலப் பொருளை நன்கு காத்துப் பேணுதற்கு வன்மையில்லாத நான்; பெற்றேன் மயல்-இப்பொழுது பித்துற்றொழிந்தேன் என்று அரற்றியவளாய்; உயிர்நீத்த அவ்வை மகள் இவள் தான்-தீப்பாய்ந்து உயிர்விட்ட தாயன்புடைய மாதரியின் மகள் இதோ நிற்கும் இவள்தான்; தோழீ அம் மணம் பட்டிலா வை எயிற்று ஐயையை கண்டாயோ-தோழீ அழகிய திருமணம் நிகழ்த்தப் பெறாத கூரிய எயிற்றையுடைய நின் நாத்தூண் நங்கையாகிய ஐயையைப் பார்த்தனையோ; மாமி மடமகளைக் கண்டாயோ தோழீ-நின்னுடைய மாமியின் இளமகளாகிய இவளைப் பார்த்தனையோ என்று சொல்லி அழுதாள் என்க.

(விளக்கம்) ஐயந்தீர் காட்சி என்பதனை ஆகுபெயராகக்கொண்டு கவுந்தியடிகள் என்பர் அரும்பதவுரை யாசிரியர். மயல்-பித்து அவ்வை என்றது எவ்வுயிரிடத்தும் தாயன்புடைமை கருதி. மாதரி என்க. அம் இசை நிறை எனினுமாம். மணம்பட்டிருக்க வேண்டும் ஆயினும் அவ்வை உயிர்நீத்தலால் மணம்பட்டிலாள் என்றிரங்கிய படியாம். மாமி என்றது நின் மாமி என்றவாறு.

(தேவந்தி முதலியோர் பெரிதும் துன்பமுற்று இங்ஙனம் அழுது புலம்பியபோது வானத்தின்கண் கண்ணகித் தெய்வம் தோன்றுதல்)

செங்குட்டுவன் கூற்று

9: என்னே...............தோன்றுமால்

(இதன் பொருள்) என்னே இஃது என்னே இஃது என்னே இஃது என்னே கொல்(விண்ணின்கண் கண்ணகியின் கடவுள் உருவினைக் கண்ட செங்குட்டுவன் பெரிதும் வியப்பெய்தி) இஃது என்னையோ! இஃது என்னையோ!!! இஃது என்னையோ!!! இஃது என்னையோ! மீ விசும்பின்-வானத்தின் மிக உயர்ந்த விடத்தே; பொன் அம் சிலம்பின் புனை மேகலை வளைக்கை நல் வயிரப் பொன் தோட்டு நாவலம் பொன் இழை சேர்-பொன்னால் இயற்றிய சீறடிச் சிலம்பினோடும் இடையில் அணியப்பட்ட மேகலையோடும் வளையல் அணிந்த கைகளோடும் அழகிய வைரம் வைத்திழைத்த பொன்னோடு கூடிய தோடணிந்த செவிகளோடும் சாம்பூந்தம் என்னும் சிறந்த பொன்னால் இயற்றிய அணிகலன் பிறவும் அணிந்துகொண்டுள்ள; மின்னுக்கொடி ஒன்று தோன்றுமால்-கொடி மின்னல்போலும் ஒரு பொண்ணுருவம் தோன்றுகின்றதே; என்று சொல்லி(செங்குட்டுவன்) வியந்தான் என்க.

(விளக்கம்) வியப்பு மிகுதிபற்றி வந்தது. என்னே இஃது என்பது நான்குமுறை அடுக்கி வந்தது. அவ்வுருவம் இன்னதென்று அறியாமையால் இஃது என்னும் அஃறினைச் சொல்லால் சுட்டினான். இதனால் கண்ணகித் தெய்வம் அணிகலன்கள் பலவற்றோடும் மின்னற் கொடி போன்று செங்குட்டுவனுக்கு வானின்கட் காட்சி அளித்தமை பெற்றாம்.

செங்குட்டுவற்குக் கண்ணகியார் கடவுணல்லணி காட்டியது

(குறிப்பு: இத் தலைப்பு மேலுள்ள ஒன்பதாம் செய்யுளுக்கு உரியதாய்ச் செங்குட்டுவன் கூற்று என்பதற்கு முன்னர் இருப்பது பொருத்தமாகத் தோன்றுகின்றது)

கண்ணகித் தெய்வத்தின் கூற்று

10: தென்னவன்................வம்மெல்லாம்

(இதன் பொருள்) தோழிமீர் எல்லீரும் என்னோடு லம் எல்லாம் அன்புடைய என்னுடைய தோழியர் எல்லோரும் என்னோடு வாருங்கள்; தென்னவன் தீது இலன் தேவர்கோள் தன் கோயில் நல்விருந்து ஆயினான்-தென்னாட்டு அரசனாகிய பாண்டிய மன்னன் பிழை செய்தானாயினும் அறிந்து செய்திலன் ஆதலின் அவன் தீவினை சிறிதும் இல்லாதவன் ஆயினன். அறியாது தான் செய்த தவற்றினுக்கு அதுவே கழுவாகிய அவன் இப்பொழுது தேவேந்திரனுடைய அரண்மனையின்கண் நல்ல விருந்தாளன் ஆயினான்; நான் அவன் தன் மகள்-யான் இப்பொழுது என் மக்கட் பிறப்பு மாறி அப் பாண்டியன் காரணமாகத் தெய்வப் பிறப்பு எய்தினமையால் யான் அவனுடைய மகளாவேன்; வென் வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன்-வென்றியையுடைய வேலை ஏந்திய முருகனுடைய இக் குன்றின்கண் யான் இனி விளையாடுதலை ஒருடொழுதும் ஒழியேன் என்றாள் என்க.

(விளக்கம்) தென்னவன்: நெடுஞ்செழியன். வென்வேலான் : முருகன். யான் விளையாட்டு அகலேன் ஆதலின் என் தோழிமீர் எல்லாம் என்னோடு வந்து விளையாடுமின் என்பது கருத்து. குன்று செங்கோடு என்பது அரும்பதவுரை. 

வஞ்சி மகளிர் சொல்

11: வஞ்சியீர்........வம்மெல்லாம்

(இதன் பொருள்) வஞ்சியீர்-வஞ்சி நகரத்து மகளிர்களே; வஞ்சி இடையீர்-வஞ்சிக் கொடி போலும் மெலிந்து துவளும் இடையை உடையீர்; மற வேலான் பஞ்சு அடி ஆயத்தீர் எல்லீரும் வம்மெல்லாம்-வீர வேலேந்திய செங்குட்டுவனுடைய அலத்தகமூட்டிய சிற்றடியை உடைய ஆய மகளிர் எல்லோரும் வாருங்கள், எற்றுக் கெனின்; கொங்கையால் கூடல் பதி சிதைத்துக் கோவேந்தைச் செஞ்சிலம்பால் வென்றாளைப் பாடுதும் வம்மெல்லாம்-தனது கொங்கையினாலே மதுரை மாநகரத்தை அழித்து வேந்தர் வேந்தனாகிய பாண்டியனைச் செம் பொன்னால் இயன்ற சிலம்பினாலே வென்ற வீர பத்தினியைப் பாடுவோம், எல்லீரும் வாருங்கள்; தென்னவன் தன் மகளைப் பாடுதும் வம்மெல்லாம்-அப் பாண்டியனுடைய மகளாகிய இக் கற்புக் கடவுளைப் புகழ்ந்து பாடுவோம் எல்லீரும் வாருங்கள்; பாண்டியர் செங்கோல் வளைய உயிர் வாழார் என்று எங்கோ முறைநா இயம்ப-பாண்டிய மன்னர்கள் தமது செங்கோல் ஊழ்வினையால் வளைந்த விடத்தும் உயிர் துறப்பதன்றி வாழ்கின்ற சிறுமையுடையோர் அல்லர்; என்று பெரிதும் புகழ்ந்து நம் அரசனாகிய செங்குட்டுவனுடைய முறைமை தவறாத செந்நாவினாலே பாராட்டும்படி; இந் நாடு அடைந்த பைந்தொடிப் பாவையைப் பாடுதும் வம்மெல்லாம்-இந்தச் சேர நாட்டை விரும்பி வந்து சேர்ந்த பசிய வளையலை அணிந்த பாவை போல்வாளாகிய இக் கற்புக் கடவுளைப் புகழ்ந்து பாடுவோம் எல்லீரும் வாருங்கள்; பாண்டியன் தன் மகளைப் பாடுதும் வம்மெல்லாம்-பாண்டிய மன்னனுடைய மகளாகிய இக் கற்புத் தெய்வத்தைப் பாடுவோம் எல்லீரும் வாருங்கள் என்றார் என்க.

(விளக்கம்) வஞ்சியீர்-வஞ்சி நகரத்துள்ளீர் எனவும் வஞ்சிக் கொடிபோலும் இடையீர் எனவும் கூறிக்கொள்க. வடவாரியரை வென்றமை கருதி மறவேலான் என்றார்: அவன் செங்குட்டுவன் பஞ்சு-செம்பஞ்சுக் குழம்பு. வம்மெல்லாம் என்றது வம்மின் என்னும் துணையாய் நின்றது. மேல் வருவனவற்றிற்கும் இஃது ஒக்கும். தண்டமிழ் ஆசான் சாத்தன் வாயிலாக நெடுஞ்செழியன் உயிர்நீத்த செய்தியைச் செங்குட்டுவன் அறிந்தபொழுது,

எம்மோ ரன்ன வேந்தற் குற்ற
செம்மையி னிகந்தசொல் செவிப்புலம் படாமுன்
உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்கென
வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது டு(காட்சி 95-99

என்று நெஞ்சாரப் பாராட்டியதைக் கருதிச் செங்கோல்............இயம்ப என்றவாறு.

ஆயத்தார் சொல்

12: வானவன்...................மகள்

(இதன் பொருள்) நாம் வானன் எம் கோமகள் என்றாம்-யாம் சேரனாகிய எங்கள் மன்னனுடைய மகள் என்று கூறிப் பாராட்டினோம்; தான் வையையார் கோன் பெற்ற கொடி என்றாள்-கற்புக் கடவுளாகிய அவளோ தான் வையைப் பேரியாறு புனல் பரப்பும் பாண்டிய நாட்டு மன்னனாகிய அந் நெடுஞ்செழியன் ஈன்றெடுத்த மகள் என்று கூறிக்கொள்கின்றாள்; நாம் வானவனை வாழ்த்துவோம் ஆக-வஞ்சி நகரத்து மகளிராகிய நாம் இக் கற்புக் கடவுளுக்குத் திருக்கோயில் எடுத்துத் தெய்வப் படிமம் சமைத்து நிறுவி வேள்விச் சாந்தியும் செய்தருளிய நங்கள் மன்னனாகிய சேரனை வாழ்த்துவோம்; தேவமகள்-தெய்வமாகிய கண்ணகி; வையையார் கோமானை வாழ்த்துவாள்-அப் பாண்டிய மன்னனைத் தானே வாழ்த்துவாளாக என்றார் என்க.

(விளக்கம்) வானவர்-சேரன். வானவனாகிய எங்கோ என்க. தான் கோனவன் பெற்ற கொடி என்றாள் என மாறுக. நாம் என்பதை முன்னும் கூட்டி நாம் வானவன் மகள் என்றாம் எனக் கூட்டுக. ஆதலால் நாம் வானவனை வாழ்த்துவோம் தேவ மகள் கோமானை வாழ்த்துவான் என ஏதுக் கூறியபடியாம்.

வாழ்த்து

13: தொல்லை.........தொல்குலமே

(இதன் பொருள்) தொல்லை வினையால் துயர் உழந்தாள் கண்ணின் நீர் கொல்ல உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ-முற்பிறப்பில் செய்த தீவினை காரணமாகத் துன்பமுற்ற கண்ணகியினது கண்ணில் நின்றும் உகுகின்ற நீரானது தன்னைக் கொல்லா நிற்பத் தன் உயிரைக் கொடுத்த அரசனாகிய பாண்டிய மன்னன் புகழ் நீடூழி வாழ்வதாக; வருபுனல் நீர் வையை சூழும் மதுரையார் கோமான தன் தொல்குலம்-இடையறாது வருகின்ற புனலாகிய தண்ணீரையுடைய வையைப் பேரியாற்றினால் சூழப்பெற்ற மதுரை மாநகரத்தில் வாழ்வோருடைய கோமானாகிய அப் பாண்டியனுடைய பழைய குலந்தானும்; வாழியர் வாழி-வழிவழிச் சிறந்து நீடூழி வாழ்வதாக; என்றார் என்க.

(விளக்கம்) தொல்வினை-பழவினை. துயருழந்தாள்: கண்ணகி கண்ணின் நீர் கண்டளவே தோற்றான் உயிர் என வழக்குரை காதையின்கண்ணும் வருதல் உணர்க. அக் குலத்தில் பிறந்தோரும் அறவோராயிருந்து உலகத்தைக் காப்பார் என்பது பற்றிக் குலத்தையும் வாழ்த்தினர். தொல்குலம்-படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வருகின்ற பாண்டியர் குலம். வையையார் கோமானைத் தேவமகள் வாழ்த்துவாள் எனக் கூறினாரேனும் கடவுள் வாழ்த்தாமை கண்டு அப் பாண்டியனை வஞ்சி மகளிர் தாமே வாழ்த்தியபடியாம் இது.

14: மலையரையன்..............தொல்குலமே

(இதன் பொருள்) மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை நீலவரசர் நீள் முடிமேல் ஏற்றினான் வாழியர்-மலைகளுக்கெல்லாம் அரசாகிய இமயமலை ஈன்றெடுத்த மடப்பமுடைய திருமா பத்தினியை வடநாட்டினை ஆளும் கனகவிசயர் என்னும் அரசருடைய நெடிய முடியின்மேல் ஏற்றிக்கொணர்ந்த ஆற்றலுடைய நம் மன்னர் பெருமான் நீடூழி வாழ்க; வருபுனல் நீர் ஆன் பொருநை சூழ் தரும் வஞ்சியார் கோமான் தன் தொல் குலம்-பொதியமலையினின்றும் வருகின்ற புனலாகிய புண்ணிய நீரையுடைய ஆன்பொருநை என்னும் யாறு சுழன்று வருகின்ற வஞ்சி நகரத்தே வாழ்வோருடைய அரசனாகிய சேரன் செங்குட்டுவனுடைய பழைய மன்னர் குலம்; வாழியர் வாழி-வழி வழிச் சிறந்து நீடூழி வாழ்வதாக என்றார் என்க.

(விளக்கம்) மலையரையன் என்றது இமயத்தை. அம் மலையின்கண் கற்கொண்டு அமைக்கப்பட்ட கடவுட் படிமத்தில் கண்ணகி எழுந்தருளியிருத்தலின் அத் தெய்வத்தை மலையரையன் பெற்ற மடப்பாவை என்றார். அரசர்: கனகவிசயர்.

15: எல்லா நாம்............புகார்

(இதன் பொருள்) எல்லா நாம் காவிரி நாடனைப் பாடுதும் பூவிரி கூந்தல் புகார் பாடுதும்-தோழி இனி யாம் காவிரி நாட்டையுடைய சோழ மன்னனையும் பாடுவோமாக, அஃது எற்றுக்கெனின்; பூவிரி கூந்தல் புகார்-பூமலர்ந்த கூந்தலையுடைய இக் கண்ணகித் தெய்வம் தோன்றுதற்கிடனாயிருந்தது அம் மன்னனுடைய பூம்புகார் நகரம் அன்றோ? ஆதலால் அந் நகரத்தை பாடுவேம் என்றார் என்க.

(விளக்கம்) எல்லா-விளி, தோழீ என்றவாறு. காவிரி நாடன்: சோழன் பூவிரி கூந்தல்: கண்ணகி. கண்ணகி பிறந்தது அவன் நகரமாதலின் அவனையும் அந் நகரத்தையும் பாடுவோம் என்பது கருத்து செங்கோல் மன்னர் நாட்டிலேதான் இத்தகைய பத்தினி மகளிர் பிறத்தல் கூடும். ஆதலால் கண்ணகியின் புகழில் அம் மன்னனுக்கே முதற் கூறு உரித்தாம் என்பது கருத்து. இக் கருத்தேபற்றி மேல் வருகின்ற பாடல்களிலும் சோழனே முதலிடம் பெறுதல் அறிக.

அம்மானை வரி

அஃதாவது அம்மானை என்பது மகளிர் விளையாட்டினுள் ஒன்று. வரி-பாடல். அம்மானை ஆடுமகளிர் வினாவும் செப்புமாகப் பாடுவது மரபு.

16: வீங்குநீர்..............அம்மானை

(இதன் பொருள்) அம்மானை வீங்குநீர் வேலி உலகு ஆண்டு விண்ணவர் கோன் ஓங்கு அரணம் காத்த உரவோன் யார்-அன்னையே! பெருகுகின்ற நீரையுடைய கடல் சூழ்ந்த இந் நிலவுலகத்திலே பிறந்து செங்கோன்மை பிறழாது அரசாட்சியும் செய்து மேலும் அமரர் கோமானாகிய இந்திரனுக்கு உதவியாகச் சென்று அவனுடைய உயர்ந்த மதில் அரணையுடைய அரண்மனையையும் காத்தருளிய பேராற்றல் உடைய அரசன் யார், நீ அறிவாயோ; அம்மானை ஓங்கு அரணம் காத்த உரவோன் உயர் விசும்பில் தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன்காண்-தாயே! யான் நன்கு அறிவேன். அவ்வாறு ஓங்கு அரணம் காத்த உரவோன் உயர்ந்த விண்ணின்கண் இயங்கிக்கொண்டிருந்த அசுரர்களுடைய மதில்கள் மூன்றனையும் தகர்த்தெறிந்த சோழனை காண்; அம்மானை சோழன் புகார் நகரம் பாடல்-தாயே அங்ஙனமாயின் அச் சோழனுடைய பூம்புகார் நகரத்தை இனி வாழ்த்திப் பாடுவோமாக என்க.

(விளக்கம்) அம்மானை தாயென்னும் பொருளுடையது. அம்மானை ஆடுவோர் ஒருவரை ஒருவர் அன்னையே என்று விளித்து வினாவியும் செப்பியும் பாடுவாராகக் கொள்க. பாடல்-வியங்கோள்; தன்மையில் வந்தது. ஓர் இசை நிறை.

17: புரவுநிறை.............அம்மானை

(இதன் பொருள்) அம்மானை புறவு நிறை புக்கு பொன் உலகம் ஏத்த குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார்-அன்னையே ஒரு புறாவினது எடையைச் சமமாக்கப் புகுந்து வானுலகத்தோர் புகழும்படி உறுப்புக் குறைபாடில்லாத தனது உடம்பின்கண் தசையை எல்லாம் அரிந்து துலாவின்கண் வைத்தருளிய அற வெற்றியை உடைய அரசன் யார் நீ அறிவையோ; அம்மானை குறைவில் உடம்பரிந்த கொற்றவன் முன்வந்த தன் அரண்மனை முன் வந்து ஆராய்ச்சி மணியே அசைத்த கறவை முறை செய்த காவலன் காண்-கற்றாவிற்குத் தன் அரும் பெறல் மகனை ஆழியில் மடித்துச் செங்கோன் முறைமை செய்தவனாகிய சோழ மன்னன்காண்; காவலன் பூம்புகார் பாடல்-அத்தகைய சிறப்புடையோனாயின் அம் மன்னனையும் அவனது பூம்புகார் நகரத்தையும் இனி யாம் பாடுவோமாக.

(விளக்கம்) புறவு-புறா. பொன்னுலகம். வானுலகத்தில் வாழ்வோர்; ஆகுபெயர். குறைவில் உடம்பரிந்த என்பதற்கு; புறவின் நிறைக்குத் தன் தசை குறையும்பொழுதெல்லாம் உடம்பின் தசையை அரிந்த வைத்த கொற்றவன் எனினுமாம். கறவை-கறக்கும் பசு. எனவே கன்றையுடைய பசு என்பதாயிற்று; பாடல்-வியங்கோள் தன்மைப்பன்மையில் வந்தது.

18: கடவரைகள்................அம்மானை

(இதன் பொருள்) அம்மானை கடவரைகள் ஓர் எட்டும் கண்இமையா காண-அன்னையே! மதம் பொழிகின்ற மலைகளை யொத்த திசையானைகள் எட்டும் வியப்பினால் தம் கண்களை இமையாதனவாய் நின்று கூர்ந்து காண எட்டுத் திசைகளையும் வென்று அவ் வெற்றிக்கு அறிகுறியாக; வடவரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் யார்? வடக்கின்கண்ணதாகிய இமயமலையின் நெற்றிமிசை வாள் போன்ற கோடுகள் அமைந்த புலிப்பொறியை ஒற்றி வைத்தவன் யாரென்று நீ அறிவாயோ; அம்மானை வடவரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும்-அன்னாய்! அங்ஙனம் வடவரை மேல் வாள் வேங்கை ஒற்றியவன் திக்கு எட்டனையும் தனது ஒரு குடை நிழலின்கண் அடங்கும்படி அடிப்படுத்திக் கொண்டருளிய சோழ வேந்தன் காண்; கொற்றவன் பூம்புகார் பாடல் அத்தகைய புகழ்வாய்ந்த வேந்தனுடைய பூம்புகார் நகரத்தை யாம் பாடுவோமாக.

(விளக்கம்) கடவரை-யானை; வெளிப்படை எட்டும் என்றதனால் திசையானைகள் என்பது பெற்றாம். எட்டுத் திக்குகளையும் வென்றமையால் அவை வியந்து கண் இமையாமல் நோக்கின என்பது கருத்து. வடவரை- இமயம் எட்டுத்திசை அரசர்களையும் வென்றமையினால் அவற்றையும் தன் குடைநிழலில் கொண்டு அளித்தான் என்பது கருத்து.

19: அம்மனை...........அம்மானை

(இதன் பொருள்) அம்மானை அம்மனை தம் கையிற்கொண்டு அங்கு அணியிழையார் தம்  மனையில் பாடும் தகை-அன்னாய் அம்மனைக் காயைத் தம் கையிலே ஏந்திக்கொண்டு அவ்விடத்தே அழகிய அணிகலன் அணிந்த மகளிர் தமது மனையின்கண் இருந்தே பாடுகின்ற தன்மை எற்றிற்கு; அம்மானை தம் மனையில் பாடும் தகை எலாம் தார் வேந்தன் கொம்மை வரி முலைமேற் கூடவே-அன்னாய்! அங்ஙனம் அணியிழையார் தம் மனையில் பாடும் தன்மை எல்லாம் வெற்றி மாலை அணிந்த அச் சோழ மன்னன் தமது பருத்த தொய்யிலெழுதப் பெற்ற கொங்கைகளின் மேல் முயங்கித் தம்மைக் கூடுதற் பொருட்டேயாம்; அம்மானை கொம்மை வரிமுலைமேற் கூடின்-அன்னாய்! அங்ஙனம் அவ்வரசன் தன்னைப் பாடும் மகளிர் கொம்மை வரிமுலை  மேல் கூடுவானாயின்; குலவேந்தன் அம் என் புகார் நகரம் பாடல்-யாமும் அந்தச் சோழர்குல வேந்தனையும் அவனது அழகு தானாயிருக்கின்றதென்று சொல்லத் தகுந்த அவனுடைய புகார் நகரத்தையும் வாழ்த்திப் பாடுவோமாக என்க.

(விளக்கம்) அம்மனை ஈண்டு அம்மனை ஆடுவார் கையில் உள்ள காய். பாடுந்தகையேல் என்றது குறிப்பாக வினவியபடியாம். கொம்மை-பருமை வரி-தொய்யில், தேமலுமாம். அம்மானை வரி நான்கினும்(1) அரணம் காத்தவன் முசுகுந்தன்; (2) உடம்பரிந்தவன் சிபி;(3) வடகரை மேல் வேங்கை ஒற்றியவன் கரிகாலன்; என்க.

கந்துக வரி

20: பொன்னிலங்கு...............பந்தடித்துமே

(இதன் பொருள்) பொன் இலங்கு பூங்கொடி பொலம் செய்கோதை வில்லிட-பொன் நிறம் விளங்குகின்ற மலர்க்கொடி போன்ற தோழியே! யாம் நமது பொன்னால் இயன்ற மாலை ஒளி வீசவும்; மின் இலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப-மின்னல் போல் விளங்குகின்ற நமது மேகலை அணிகள் ஆரவாரிக்க ஆரவாரிக்க; எங்கணும் சென்று-இக் களத்தில் எவ்விடத்தும் போய்ப் போய்; தென்னன் வாழ்க வாழ்க என்று பந்து அடித்தும்-பாண்டியன் வாழ்க வாழ்க என்று வாழ்த்திப் பந்தடித்து ஆடுவோமாக; தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்தும்-தேவர்களுக்கியன்ற மணியாரத்தைத் தாங்கிய வலிய மார்பையுடைய அப் பாண்டிய மன்னன் வாழ்க என்று சொல்லிப் பந்தினை அடித்திடுவோம் என்றாள் என்க.

(விளக்கம்) பூங்கொடி: அன்மொழித் தொடர் கொடிபோல்வாய் எனத் தோழியை விளித்தவாறு. பொலம்-பொன் . வில்-ஒளி தென்னன்-பாண்டியன். அடித்தும்: தன்மைப்பன்மை. தேவேந்திரன் தான் இட்ட ஆரத்தின் பொறை தாங்காது இவன் அழிந் தொழிக என்று கருதி ஒரு மணியாரத்தை இட்டானாக பாண்டியன் மிக எளிதாகவே அதனைச் சுமந்தான்: ஆதலால் அந் நிகழ்ச்சி அவன் மார்பிற்குப் புகழாயிற்று என்று கொள்க.

21: பின்னும்.............அடித்தும்

(இதன் பொருள்) பின்னும் முன்னும் எங்கணும் பெயர்ந்து வந்து எழுந்து உலாய்-பின்பக்கமும் முன்பக்கமுமாகிய எவ்விடத்தினும் சென்று வந்தும் இருந்தும் எழுந்தும் உலாவியும்; மின்னும் மின் இளங்கொடி வியல் நிலத்து இழிந்து என-ஒளி விடுகின்ற மின்னலாகிய கொடிகள் பெரிய நில உலகத்தின்கண் இறங்கி ஆடுமாப்போலே; சென்று தென்னன் வாழ்க வாழ்க என்று பந்தடித்தும்-அங்குமிங்கும் சென்று பாண்டியன் வாழ்க வாழ்க என்று பாடிப் பந்தடித்து ஆடுவோமாக; தேவர் ஆரமார்பன் வாழ்க என்று பந்தடித்தும் -தேவருக்குரிய மணியாரத்தைப் பூண்ட மார்பினையுடைய பாண்டியன் வாழ்க என்று சொல்லிப் பந்தடித்து ஆடுவோமாக என்க.

(விளக்கம்) எழுந்து என்றமையால் இருந்தும் எழுந்தும் எனக் கொள்க. மின்னு-ஒளி. மின்னிளங்கொடி-கொடி மின்னல்.

22. துன்னி..............அடித்துமே

(இதன் பொருள்) துன்னி வந்து கைத்தலத்து இருந்தது இல்லை நீள்நிலம் தன்னில் நின்றும் அந்தரத்து எழுந்தது இல்லைதான் என-நமது பந்தாட்டத்தைக் காண்பவர் இப் பந்துகள் நெருங்கிவந்து நமது கையிடத்தே இருந்ததும் இல்லை, நீண்ட நிலத்தினின்றும் வானத்தே எழுந்ததும் இல்லை என்று கூறி மருளும் படி; தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்தடித்துமே; தேவர் ஆரமார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே என்க; 

(விளக்கம்) காண்பவர் பந்துகள் நிலத்தில் இருக்கின்றனவா அல்லது வானத்திலேயே நிற்கின்றனவா அல்லது இப் பெண்களின்  கையின்கண் இருக்கின்றனவா என்று அறியாதவண்ணம் அத்துணை விரைவாகச் சென்று பந்தடிப்போம் என்றவாறு.

ஊசல் வரி

23: வடங்கொண்மணி..............ஊசல்

(இதன் பொருள்) வடங்கொள்மணி ஊசல் மேல் இரீஇ-கயிறுகளைக்கொண்ட அழகிய ஊசலின் மேல் ஏறி இருந்து; ஐயை உடங்கு ஒருவர் கை நிமிர்த்து ஆங்கு ஒற்றை மேல் ஊக்க- நிலத்தில் நிற்கின்ற ஐயையுடனே நிற்பாருள் யாரேனும் ஒருவர் தமது கையை உயர்த்தி ஒற்றைத் தாளத்தை ஒற்றி அக் கையை மேலே தூக்கும்படியாய்; கடம்பு முதல் தடித்த காவலனைப் பாடி பகைவருடைய காவல் மரமாகிய கடம்பினை வேரோடு வெட்டி வீழ்த்திய சேர மன்னனுடைய புகழ்களைப் பாடிக்கொண்டு; குடங்கை நெடுங்கண் பிறழ ஊசல் ஆடாமோ-உள்ளங்கை அளவிற்றாகிய நமது நெடியகண் பிறழும்படி யாம் ஊசலாடுவோம்; கொடுவில் பொறிபாடி ஊசல் ஆடாமோ-அவ்வரசர் பெருமான் தனது இலச்சினையாகிய வில்லை இமய நெற்றியில் பொறித்த புகழைப் பாடிக்கொண்டு யாம் ஊசல் ஆடுவோம்.

(விளக்கம்) வடம்-ஊசலின் கயிறு. மணி-அழகு. மணிபதித்த ஊசல் எனினுமாம். இரீஇ-இருந்து. உடங்கொருவர்-உடன் நிற்பாரில் ஒருவர். ஒற்றை-ஒற்றைத் தாளம். முதல்-வேர். குடங்கை-உள்ளங்கை. இது கண்ணின் அகலத்திற்கு உவமை. ஆடாமோ: ஓகாரம் வினா. அஃது உடன்பாட்டுப் பொருளை வற்புறுத்தி நின்றது. விற் பொறி-வில்லைப் பொறித்தமை.

24: ஓரைவர்............ஊசல்

(இதன் பொருள்) ஓர் ஐவர் ஈர் ஐம்பதின்மர் உடன்று எழுந்த போரில்-பாண்டவர் ஐவரும் கவுரவர் நூற்றுவரும் தம்முள் கலாய்த்தமையால் தோன்றிய பாரதப் போரின்கண்; போற்றாது பெருஞ்சோறு தான் அளித்த சேரன் பொறையன் மலையன் திறம் பாடி-பொருள் மிகுதியாகச் செலவாகிவிடுமே என்று கருதி அவற்றைப் பேணிக்கொள்ளாமல் போர் முடியுந்துணையும் இரு திறத்துப் படைகளுக்கும் மிக்க உணவினைத் தான் ஒருவனே வழங்கிய வள்ளலாகிய சேரன் பொறையன் மலையன் என்னும் திருப் பெயர்களையுடைய சேரலாதனுடைய பெருந்தகைமையைப் பாடிக்கொண்டு; கார் செய்குழல் ஆட ஊசல் ஆடாமோ கடம்பு எறிந்த ஆ பாடி ஊசல் ஆடாமோ-முகில் போன்ற நமது கூந்தல் ஆடும்படி யாம் ஊசலாடுவோம் அம் மன்னர் பெருமான் பகைவர் கடம்பினை வெட்டி வீழ்த்திய போர் நெறியினைப் பாடிக்கொண்டு ஊசல் ஆடுவோமாக என்க.

(விளக்கம்) ஐவர்-பாண்டவர். ஈரைம்பதின்மலர்-கவுரவர்கள். இவை எண்ணால் வருபெயர். போற்றாது-பொருளினைப் போற்றிக் கொள்ளுவோம் என்று நினையாமல் எனினுமாம். இருவர் படைக்கும் வழங்குதலின் பெருஞ்சோறு எனல் வேண்டிற்று. இங்ஙனம் செய்தவன் பெருஞ் சோற்றுதியன் நெடுஞ்சேரலாதன் என்னும் சேரன் என்க. கார் செய்-என்புழி. செய்-உவமவுருபு. எறிந்தவாறு என்பதன் ஈறு தொக்கது.

25: வன்சொல்...................ஊசல்

(இதன் பொருள்) வன்சொல் யவனர் வளநாடு வன் பெருங்கல் தென்குமரி ஆண்ட-வன்சொல்லையுடைய யவனருடைய வளமிக்க நாட்டினையும் வலிய பெரிய மலையாகிய இமயமலை தொடங்கித் தென்திசைக்கண்ணதாகிய குமரித்துறை வரையில் ஆட்சி செய்தமையால்; செருவில் கயல் புலியான்-போர்க் கருவியாகிய வில்லும் கயல்மீனும் புலியும் ஆகிய முத்தமிழ் வேந்தர்க்குமுரிய இலச்சினைகள் மூன்றனையும் தன்னுடையனவாகக் கொண்டவனும்; மன்பதை காக்கும் கோமான் மன்னன் திறம் பாடி-மக்கள் இனத்தைச் செங்கோன்மை பிறழாமல் காவல் செய்கின்ற மன்னனும் ஆகிய நம் சேரர் பெருமானுடைய செங்கோன்மையைப் புகழ்ந்து பாடிக்கொண்டு; மின்செய் இடை நுடங்க ஊசல் ஆடாமோ விறல்வில் பொறி பாடி ஊசல் ஆடாமோ-மின் போன்ற நம்மிடை துவள யாம் ஊசலாடுவோம். வெற்றி தருகின்ற அவனது வில் இலச்சினையையும் புகழ்ந்து பாடி யாம் ஊசல் ஆடுவோம் என்க.

(விளக்கம்) வன் சொல்-இயல்பாகவே வல்லோசையை உடைய மொழி என்க. வன் பெருங்கல்-இமயம். இமயம் முதல் குமரி வரையில் ஆட்சி செய்தமையின் முத்தமிழ் வேந்தர்க்கும் உரிய மூன்றிலச்சினைகளையும் தனக்கே உரியனவாக்கிக் கொண்டவன் என்பார் செருவில் கயல் புலியான் என்றார். மன்பதை-மக்கள் தொகுதி.

26: தீங்கரும்பு..........பாடல்

(இதன் பொருள்) தீங்கரும்பு நல் உலக்கையாக செழு முத்தம் பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர்-இனிய கரும்புகளையே அழகிய உலக்கைகளாகக் கையிற் கொண்டு வளவிய முத்துக்களாகிய அரிசியை அழகிய காஞ்சி மரத்தின் நீழலின் கீழே குற்றுபவராகிய பூம்புகார் நகரத்து மகளிர்; ஆழிக் கொடித்திண் தேர்ச் செம்பியன்-உருளைகளையும் கொடியையுமுடைய திண்ணிய தேரை உடைய சோழ மன்னனுடைய; வம்பு அலர்தார்ப் பாழித் தடவரைத் தோள் பாடலே பாடல்-புதிதாக மலர்ந்த ஆத்தி மாலையை உடைய விரிந்த பெரிய மலைபோன்ற தோள்களைப் புகழ்ந்து பாடுகின்ற பாடல்களே சிறந்த பாடல்களாம்; பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்-அப் புகார் நகரத்து அம் மகளிர் அங்ஙனம் பாடி ஆரவாரிக்கின்ற பாடல்களே சிறந்த பாடல்களாம் என்க.

(விளக்கம்) வள்ளைப்பாட்டு-உலக்கைப் பாட்டு. அவைப்பார்-குற்றுபவர். ஆழி-தேரினது உருள். கொடி-புலிக்கொடி. வம்பு. புதுமை. தார்-ஈண்டு ஆத்தித்தார். பாழி-அகலம். பாடலே என்புழி ஏகாரம் பிரிநிலை. ஆரிக்கும்: விகாரம். ஆரவாரிக்கும் என்க.

27: பாடல்...............பாடல்

(இதன் பொருள்) பாடல்சால் முத்தம் பவழ உலக்கையால் மாட மதுரை மகளிர்-புலவருடைய பாடலுக்கமைந்த முத்துக்களைப் பவழமாகிய உலக்கையைக் கொண்டு மாடமாளிகைகளையுடைய மதுரை மாநகரத்து மகளிர் குற்றி விளையாடுவர், அங்ஙனம் விளையாடுபவர்; வானவர் கோன் ஆரம் வயங்கிய தோள் பஞ்சவன் தன் மீனக்கொடி பாடும் பாடலே பாடல்-தேவேந்திரன் இட்ட மணியாரம் விளங்குகின்ற தோளையுடைய பாண்டியனுடைய கயல் மீன்கொடியைப் புகழ்ந்து பாடுகின்ற பாடல்களே சிறந்த பாடல்களாம்: வேப்பந்தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல்-அவன் அணிந்துள்ள வேப்பமாலை தமது நெஞ்சினை வருத்தும் தன்மையைப் பாடுகின்ற பாடலே சிறந்த பாடலாம் என்க.

(விளக்கம்) முத்துக்களுள் பாண்டியனுடைய கொற்கை முத்தே புலவர் பாடுதற்கமைந்த சிறப்புடையதாதலின் அதனையே பாடல் சால் முத்தம் என்றார். குறுவர்-குற்றவார். அங்ஙனம் குற்றுபவர் எனச் சில சொல் பெய்து கொள்க. மீனம்-கயல் மீன். உணக்கும் உலர்த்தும் என்றது வருத்தும் என்றவாறு.

28: சந்துரல்...............பாடல்

(இதன் பொருள்) சந்து உரல் பெய்து தகை சால் அணி முத்தம் வான் கோட்டால் வஞ்சி மகளிர் குறுவர்-சந்தன மரத்தால் இயன்ற உரலின்கண் பெய்து அழகமைந்த முத்துக்களை யானையினது வெள்ளிய மருப்பாகிய உலக்கையால் வஞ்சி நகரத்து மகளிர் குற்றி விளையாடுபவர், அங்ஙனம் ஆடுங்கால் அம் மகளிர் பாடுகின்ற; கடந்து அடு தார்ச் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை படர்ந்த நிலம் போர்த்த பாடலே பாடல்-பகைவரை வஞ்சியாமல் எதிர்நின்று வெல்லுகின்ற வாகை மாலையையுடைய அச் சேர மன்னன் பகைவருடைய கடம்பினை வெட்டி வீழ்த்திய புகழானது அகன்ற இந் நிலவுலகத்தை முழுவதும் மூடிக்கொண்டமையைப் பாடுகின்ற பாடலே சிறந்த பாடலாம்; பனந்தோடு உளங்கவரும் பாடலே பாடல்-அம் மகளிர் அவன் குடியுள்ள பனம்பூ மாலையானது தமது நெஞ்சினைக் கவருகின்ற தன்மையைப் பாடுகின்ற பாடலே சிறந்த பாடல் ஆம்; என்க.

(விளக்கம்) சந்து-சந்தனம். சந்தன மரத்தால் செய்த உரல் என்க. முத்தமாகிய அரிசியைப் பெய்து என்க. வான்கோடு என்றது யானை மருப்பினை. அதனை உலக்கையாகக் கொண்டு குறுவர் என்க, வார்த்தை-புகழ். படர்ந்த நிலம்-விரிந்த நிலம். கவரும் தன்மையைப் பாடும் பாடல் என்க.

கண்ணகித் தெய்வம் செங்குட்டுவனை வாழ்த்துதல்

29: ஆங்கு..............என்று

(இதன் பொருள்) ஆங்கு-அவ்வழி; நீள் நில மன்னர்-நெடிய இந் நிலவுலகத்தை ஆளுகின்ற மன்னருள் வைத்து; நெடுவில் பொறையன் நல் தாள் வாழ்த்தல்-நீண்ட விற் பொறிமையுடைய சேரனுடைய நல்ல திருவடிகளை வாழ்த்துதல்; தாள் தொழார் தமக்கு அரிது-அவனுடைய திருவடிகளை வணங்காத பகை அரசர்களுக்கு மட்டுமே அரியாதொரு செயலாம். ஏனைய மன்னரெல்லாம் வாழ்த்துதல் இயல்பேயாகும், அது கிடக்க; சூழ் ஒளிய எங்கோ மடந்தையும்-தன்னைச் சூழ்ந்துள்ள ஒளி வட்டத்தோடு கூடிய எங்கள் சேரன் மகளாகிய கற்புக் கடவுள் தானும் செங்குட்டுவன் நீடூழி வாழ்க என்று ஏத்தினாள்-செங்குட்டுவன் இவ்வுலகில் நீடூழி வாழ்கவென்று சொல்லித் தன்னுடைய தெய்வ மொழியினால் வாழ்த்தினாள் என்பதாம்.

(விளக்கம்) செங்குட்டுவனுடைய அடிகளை வாழ்த்துவோர் இவ்வுலகத்து மன்னருள் பலர் உளர். அவ் வாழ்த்துப் பெறுதல் அவனுக்கு எளிது. இக் கற்புக் கடவுளின் வாழ்த்தே பெறற்கரிய பேறாம். அத்தகைய பேற்றினை எங்கள் அரசன் பெற்றான் எனக் கண்ணகியின் வாழ்த்துப் பெற்றபின் ஆயமகளிர் தம்முள் உவந்து கூறியவாறு. அத் தெய்வம் தன்னை வையையார் கோமான் மகள் என்றாலும் யாங்கள் எங்கள் சேரன் மகள் என்றே கொள்கின்றேம் என்பது தோன்ற எங்கோ மடந்தையும் ஏத்தினள் என்றார். இங்ஙனம் அக் கற்புக் கடவுள் வாழ்த்தினமையாலே அச் செங்குட்டுவனுடைய புகழ் உலகம் உள்ள துணையும் உளதாம் எனபதில் ஐயமில்லை.

பா. கொச்சகக் கலியால் இயன்ற இசைப் பாடல்கள்

வாழ்த்துக் காதை முற்றிற்று.
Title: Re: சிலப்பதிகாரம்
Post by: Anu on February 28, 2012, 08:41:34 AM
30. வரம் தரு காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அஃதாவது-கண்ணகியாகிய திருமா பத்தினித் தெய்வம் செங்குட்டுவனை உள்ளிட்ட அரசர் பலர்க்கும் அவரவர் விரும்பிய வரத்தை ஈந்தருளிய செய்தியைக் கூறும் பகுதி என்றவாறு இக் காதையின்கண் இடைப்பிறவரலாகக் கண்ணகியின் தோழியாகிய தேவந்தி செங்குட்டுவனுக்கு மணிமேகலை துறவின் வரலாறு கூறதலும், தேவந்தியின்மேல் சாத்தன் என்னும் தெய்வம் ஏறி ஆடுதலும், அத் தெய்வம் தீர்த்தம் தெளிக்கச் செய்தலும் அவ்வழி அரட்டன் செட்டியின், இரட்டைப் பெண்களும் தம் முற்பிறப்புத் தோன்ற அரற்றுதலும் சேடக் குடும்பியின் சிறிமியும் அவ்வாறு அரற்றுதலும் மாடலன் அரசனுக்குத் தேவந்தியின் வியத்தகு வரலாறு விளம்புதலும், இந்நிகழ்ச்சிகளின் வாயிலாய் மாடலன் அறிவுரை பல அரசனுக்கு அறிவுறுத்தலும் சாலவும் இன்பமும் பயனும் உடையனவாம் இவற்றின் மேலும் இக் காப்பியத் திறுதியின்கண் இளங்கோவடிகளார் இக் காப்பியத்தின் பயனாக நம்மனோர் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் இவை என அறிவுறுத்துதல் மாபெரும் பயன் தரும் தன்மைத்து.

வட திசை வணங்கிய வானவர் பெருந்தகை
கடவுள் கோலம் கண்-புலம் புக்க பின்,
தேவந்திகையைச் செவ்விதின் நோக்கி,
வாய் எடுத்து அரற்றிய மணிமேகலை யார்?
யாது அவள் துறத்தற்கு ஏது? இங்கு, உரை என-  5

கோமகன் கொற்றம் குறைவு இன்று ஓங்கி
நாடு பெரு வளம் சுரக்க என்று ஏத்தி,
அணி மேகலையார் ஆயத்து ஓங்கிய
மணிமேகலை-தன் வான் துறவு உரைக்கும்
மை ஈர் ஓதி வகை பெறு வனப்பின்  10

ஐ-வகை வகுக்கும் பருவம் கொண்டது;
செவ் வரி ஒழுகிய செழுங் கடை மழைக் கண்
அவ்வியம் அறிந்தன; அது தான் அறிந்திலள்;
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த
நித்தில இள நகை நிரம்பா அளவின;  15

புணர் முலை விழுந்தன; புல் அகம் அகன்றது;
தளர் இடை நுணுகலும், தகை அல்குல் பரந்தது;
குறங்கு இணை திரண்டன; கோலம் பொறாஅ
நிறம் கிளர் சீறடி நெய் தோய் தளிரின;
தலைக்கோல் ஆசான் பின் உளனாக, 20

குலத் தலை மாக்கள் கொள்கையின் கொள்ளார்;
யாது நின் கருத்து? என் செய்கோ? என,
மாதவி நற்றாய் மாதவிக்கு உரைப்ப-
வருக, என் மட மகள் மணிமேகலை! என்று,
உருவிலாளன் ஒரு பெரும் சிலையொடு  25

விரை மலர் வாளி வெறு நிலத்து எறிய,
கோதைத் தாமம் குழலொடு களைந்து,
போதித்தானம் புரிந்து, அறம்படுத்தனள்-
ஆங்கு, அது கேட்ட அரசனும் நகரமும்
ஓங்கிய நல் மணி உறு கடல் வீழ்த்தோர்-  30

தம்மில் துன்பம் தாம் நனி எய்த,
செம்மொழி மாதவர், சேயிழை நங்கை
தன் துறவு எமக்குச் சாற்றினள் என்றே
அன்பு உறு நல் மொழி அருளொடும் கூறினர்
பருவம் அன்றியும் பைந் தொடி நங்கை  35

திரு விழை கோலம் நீங்கினள் ஆதலின்,
அரற்றினென் என்று, ஆங்கு, அரசற்கு உரைத்தபின்-
குரல் தலைக் கூந்தல் குலைந்து பின் வீழ;
துடித்தனள் புருவம்; துவர் இதழ்ச் செவ் வாய்
மடித்து, எயிறு அரும்பினள்; வரு மொழி மயங்கினள்; 40

திரு முகம் வியர்த்தனள்; செங்கண் சிவந்தனள்;
கைவிட்டு ஓச்சினள் கால் பெயர்த்து எழுந்தனள்
பலரறி வாராத் தெருட்சியள் மருட்சியள்
உலறிய நாவினள்; உயர் மொழி கூறித்
தெய்வம் உற்று எழுந்த தேவந்திகை-தான்-  45

கொய் தளிர்க் குறிஞ்சிக் கோமான்-தன் முன்
கடவுள்-மங்கலம் காணிய வந்த
மடமொழி நல்லார் மாண் இழையோருள்,
அரட்டன் செட்டி-தன் ஆய்-இழை ஈன்ற
இரட்டையம் பெண்கள் இருவரும் அன்றியும்,  50

ஆடகமாடத்து அரவு-அணைக் கிடந்தோன்
சேடக் குடும்பியின் சிறு மகள் ஈங்கு உளள்
மங்கல மடந்தை கோட்டத்து-ஆங்கண்
செங் கோட்டு உயர் வரைச் சேண் உயர் சிலம்பில்,
பிணிமுக நெடுங்கல் பிடர்த்தலை, நிரம்பிய  55

அணி கயம் பல உள; ஆங்கு அவை இடையது,
கடிப்பகை நுண் கலும், கவிர் இதழ்க் குறுங் கலும்,
இடிக் கலப்பு அன்ன இழைந்து உகு நீரும்,
உண்டு ஓர் சுனை; அதனுள் புக்கு ஆடினர்
பண்டைப் பிறவியர் ஆகுவர்; ஆதலின்,  60

ஆங்கு-அது கொணர்ந்து, ஆங்கு, ஆய்-இழை கோட்டத்து
ஓங்கு இருங் கோட்டி இருந்தோய்! உன் கை,
குறிக்கோள் தகையது; கொள்க எனத் தந்தேன்;
உறித் தாழ் கரகமும் உன் கையது அன்றே;
கதிர் ஒழிகாறும் கடவுள் தன்மை   65

முதிராது; அந்நீர் முத் திற மகளிரைத்
தெளித்தனை ஆட்டின், இச் சிறு குறுமகளிர்
ஒளித்த பிறப்பினர் ஆகுவர் காணாய்;
பாசண்டன் யான்; பார்ப்பனி-தன்மேல்,
மாடல மறையோய்! வந்தேன் என்றலும்- 70

மன்னவன் விம்மிதம் எய்தி, அம் மாடலன்-
தன் முகம் நோக்கலும்-தான் நனி மகிழ்ந்து,
கேள் இது, மன்னா! கெடுக நின் தீயது!
மாலதி என்பாள் மாற்றாள் குழவியைப்
பால் சுரந்து ஊட்ட, பழ வினை உருத்து,  75

கூற்று உயிர் கொள்ள, குழவிக்கு இரங்கி,
ஆற்றாத் தன்மையள், ஆர் அஞர் எய்தி,
பாசண்டன்பால் பாடுகிடந்தாட்கு,
ஆசு இல் குழவி அதன் வடிவு ஆகி
வந்தனன்; அன்னை! நீ வான் துயர் ஒழிக என,  80

செந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கி,
பார்ப்பனி-தன்னொடு பண்டைத் தாய்பால்
காப்பியத் தொல் குடிக் கவின் பெற வளர்ந்து,
தேவந்திகையைத் தீவலம் செய்து,
நால்-ஈர்-ஆண்டு நடந்ததன் பின்னர்,  85

மூவா இள நலம் காட்டி, என் கோட்டத்து,
நீ வா என்றே நீங்கிய சாத்தன்,
மங்கலமடந்தை கோட்டத்து ஆங்கண்,
அங்கு உறை மறையோனாகத் தோன்றி,
உறித் தாழ் கரகமும் என் கைத் தந்து,  90

குறிக்கோள் கூறிப் போயினன்; வாரான்
ஆங்கு அது கொண்டு போந்தேன் ஆதலின்,
ஈங்கு இம் மறையோள்-தன்மேல் தோன்றி,
அந் நீர் தெளி என்று அறிந்தோன் கூறினன்-
மன்னர் கோவே! மடந்தையர்-தம்மேல்  95

தெளித்து ஈங்கு அறிகுவம் என்று அவன் தெளிப்ப-
ஒளித்த பிறப்பு வந்து உற்றதை ஆதலின்,
புகழ்ந்த காதலன் போற்றா ஒழுக்கின்
இகழ்ந்ததற்கு இரங்கும் என்னையும் நோக்காய்;
ஏதில் நல் நாட்டு யாரும் இல் ஒரு தனி,  100

காதலன்-தன்னொடு கடுந் துயர் உழந்தாய்;
யான் பெறு மகளே! என் துணைத் தோழீ!
வான் துயர் நீக்கும் மாதே, வாராய்!-
என்னோடு இருந்த இலங்கு இழை நங்கை-
தன்னோடு இடை இருள் தனித் துயர் உழந்து,  105

போனதற்கு இரங்கிப் புலம்புறும் நெஞ்சம்;
யான் அது பொறேஎன்; என் மகன், வாராய்!-
வரு புனல் வையை வான் துறைப் பெயர்ந்தேன்;
உருகெழு மூதூர் ஊர்க் குறுமாக்களின்
வந்தேன் கேட்டேன்; மனையில் காணேன்; 110

எந்தாய்! இளையாய்! எங்கு ஒளித்தாயோ?-
என்று, ஆங்கு, அரற்றி, இனைந்துஇனைந்து ஏங்கி,
பொன் தாழ் அகலத்துப் போர் வெய்யோன் முன்,
குதலைச் செவ் வாய்க் குறுந் தொடி மகளிர்
முதியோர் மொழியின் முன்றில் நின்று அழ-  115

தோடு அலர் போந்தைத் தொடு கழல் வேந்தன்
மாடல மறையோன்-தன் முகம் நோக்க,
மன்னர் கோவே, வாழ்க! என்று ஏத்தி,
முந்நூல் மார்பன் முன்னியது உரைப்போன்;
மறையோன் உற்ற வான் துயர் நீங்க, 120

உறை கவுள் வேழக் கைஅகம் புக்கு,
வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற
காதலி-தன்மேல் காதலர் ஆதலின்,
மேல்நிலை உலகத்து அவருடன் போகும்
தாவா நல் அறம் செய்திலர்; அதனால்,  125

அஞ் செஞ் சாயல் அஞ்சாது அணுகும்
வஞ்சி மூதூர் மா நகர் மருங்கின்,
பொன்-கொடி-தன்மேல் பொருந்திய காதலின்,
அற்பு உளம் சிறந்து-ஆங்கு அரட்டன் செட்டி
மட மொழி நல்லாள் மனம் மகிழ் சிறப்பின்  130

உடன் வயிற்றோராய் ஒருங்குடன் தோன்றினர்-
ஆயர் முதுமகள் ஆய்-இழை-தன்மேல்
போய பிறப்பில் பொருந்திய காதலின்,
ஆடிய குரவையின், அரவு-அணைக் கிடந்தோன்
சேடக் குடும்பியின் சிறு மகள் ஆயினள்- 135

நல் திறம் புரிந்தோர் பொற்படி எய்தலும்,
அற்பு உளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்,
அறப் பயன் விளைதலும், மறப்பயன் விளைதலும்,
பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும்,
புதுவது அன்றே; தொன்று இயல் வாழ்க்கை-  140

ஆன் ஏறு ஊர்ந்தோன் அருளின் தோன்றி,
மா நிலம் விளக்கிய மன்னவன் ஆதலின்,
செய் தவப் பயன்களும், சிறந்தோர் படிவமும்,
கை அகத்தன போல், கண்டனை அன்றே;
ஊழிதோறு உழி உலகம் காத்து,   145

நீடு வாழியரோ, நெடுந்தகை! என்ற
மாடல மறையோன்-தன்னொடும் மகிழ்ந்து-
பாடல்சால் சிறப்பில் பாண்டி நல் நாட்டுக்
கலி கெழு கூடல் கதழ் எரி மண்ட
முலைமுகம் திருகிய மூவா மேனி   150

பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து,
நித்தல் விழா அணி நிகழ்க என்று ஏவி,
பூவும், புகையும், மேவிய விரையும்,
தேவந்திகையைச் செய்க என்று அருளி,
வலமுறை மும் முறை வந்தனன் வணங்கி,  155

உலக மன்னவன் நின்றோன் முன்னர்-
அரும் சிறை நீங்கிய ஆரிய மன்னரும்,
பெரும் சிறைக்கோட்டம் பிரிந்த மன்னரும்,
குடகக் கொங்கரும், மாளுவ வேந்தரும்,
கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்,  160

எம் நாட்டு ஆங்கண் இமையவரம்பனின்
நல்நாள் செய்த நாள் அணி வேள்வியில்
வந்து ஈக என்றே வணங்கினர் வேண்ட-
தந்தேன் வரம்! என்று எழுந்தது ஒரு குரல்-
ஆங்கு, அது கேட்ட அரசனும், அரசரும்,  165

ஓங்கு இருந் தானையும், உரையோடு ஏத்த,
வீடு கண்டவர்போல், மெய்ந் நெறி விரும்பிய
மாடல மறையோன்-தன்னொடும் கூடி,
தாழ் கழல் மன்னர் தன் அடி போற்ற,
வேள்விச் சாலையின் வேந்தன் போந்தபின்- 170

யானும் சென்றேன்; என் எதிர் எழுந்து,
தேவந்திகைமேல் திகழ்ந்து தோன்றி,
வஞ்சி மூதூர் மணி மண்டபத்திடை
நுந்தை தாள் நிழல் இருந்தோய்! நின்னை
அரைசு வீற்றிருக்கும் திருப் பொறி உண்டு என்று, 175

உரைசெய்தவன் மேல் உருத்து நோக்கி,
கொங்கு அவிழ் நறுந் தார்க் கொடித் தேர்த் தானைச்
செங்குட்டுவன்-தன் செல்லல் நீங்க,
பகல் செல் வாயில் படியோர்-தம்முன்,
அகலிடப் பாரம் அகல நீக்கி,   180

சிந்தை செல்லாச் சேண் நெடுந் தூரத்து,
அந்தம் இல் இன்பத்து, அரசு ஆள் வேந்து என்று-
என் திறம் உரைத்த இமையோர் இளங்கொடி-
தன் திறம் உரைத்த தகைசால் நல் மொழி
தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்!-  185

பரிவும் இடுக்கணும், பாங்குற, நீங்குமின்;
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்
பொய் உரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊன் ஊண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்ம்மின்; தவம் பல தாங்குமின்;  190

செய்ந்நன்றி கொல்லன்மின்; தீ நட்பு இகழ்மின்;
பொய்க் கரி போகன்மின்; பொருள்-மொழி நீங்கன்மின்;
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
பிறர் மனை அஞ்சுமின்; பிழை உயிர் ஓம்புமின்;  195

அற மனை காமின்; அல்லவை கடிமின்;
கள்ளும், களவும், காமமும், பொய்யும்,
வெள்ளைக் கோட்டியும், விரகினில், ஒழிமின்
இளமையும், செல்வமும், யாக்கையும், நிலையா
உள நாள் வரையாது ஒல்லுவது ஒழியாது;  200

செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடுமின்-
மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு-என்.

உரை

செங்குட்டுவன் தேவந்திகையை வினாதல்

1-5: வடதிசை............உரையென்

(இதன் பொருள்) வடதிசை வணக்கிய வானவர் பெருந்தகை-வடநாட்டு மன்னர்களை வென்று தன் அடிப்படுத்த சேரர் குலத்தோன்றலாகிய பெருந்தகைமை மிக்க செங்குட்டுவனுடைய கண்புலம் கடவுட் கோலம் புக்க பின்-கண்ணறிவிற்குக்  கண்ணகியினுடைய தெய்வத்திருவுருவம் தோற்றமளித்த பின்னர் அம் மன்னவன்; தேவந்திகையைச் செவ்விதின் நோக்கி-தேவந்திகை என்னும் பார்ப்பன் மகளை நன்கு பார்த்து; வாயெடுத்து அரற்றிய மணிமேகலை யார்? அவள் துறத்தற்கு ஏது யாது ஈங்கு உரையென-அன்னையே! இம் மூதாட்டி இப்பொழுது மணிமேகலை துறவும் கேட்டாயோ தோழீ! என்று வாய்விட்டு அழுவதற்குக் காரணமான அந்த மணிமேகலை என்பவள் யார்? அவள் தானும் துறவி ஆதற்குக் காரணம் தான் யாது? இவற்றை இப்பொழுது எனக்குக் கூறுவாயாக என்று கூறாநிற்ப என்க.

(விளக்கம்) வாயெடுத்தரற்றியது அடித்தோழி ஆதலின் இம் மூதாட்டி என வருவித்துக் கூறிக் கொள்க. வானவர்-சேரர். கடவுட் கோலம்-கண்ணகியார் வானத்தின்கண் திருவுருக்கொண்டு காட்டிய காட்சி. கட்புலம்-கண்ணறிவு. அரற்றுதல்-புலம்புதல் ஏது-காரணம்.

தேவந்திகை சேரனுக்கு மணிமேகலையின் வரலாறு செப்புதல்

6-9: கோமகன்..........உரைக்கும்

(இதன் பொருள்) நாடுபெருவளம் சுரக்க என்று ஏத்தி-அதுகேட்ட தேவந்திகை மன்னனை நோக்கி வேந்தர் பெருமானே! நின்னுடைய ஆட்சியிலமைந்த நாடு மிகுந்த வளங்களைத் தருவதாக என்று சொல்லி அரசனைப் பாராட்டிப் பின்னர்; அணிமேகலையார் ஆயத்து ஓங்கிய மணிமேகலை தன் வான்துறவு உரைக்கும்-அழகிய மேகலை முதலிய அணிகலன்களையுடையவராகிய தோழியர் கூட்டத்தினுள் இருக்கும் பொழுதும் உயர்ந்த தனித்தன்மையுடன் விளங்குகின்ற மணிமேகலையினது தூய துறவுக் கோலத்தின் வரலாற்றினைப் பின் வருமாறு கூறுவாள் என்க.

(விளக்கம்) அரசனுக்கு ஏதேனும் சொல்லத் தொடங்குபவர் வாழ்த்தித் தொடங்குதல் மரபு. அணி-அழகு; அணிகின்ற மேகலை எனினுமாம். மேகலையாராகிய ஆயம் என்க. ஆயம்-மகளிர் குழாம். ஓங்கிய தோற்றத்தால் உயர்ந்து தோன்றுகின்ற என்றவாறு. துறவு துறவிற்குரிய காரணம்.

இதுவுமது

10-23: மையீரோதி.............உரைப்ப

(இதன் பொருள்) மாதவி நற்றாய்-வேந்தே! மணிமேகலை என்பவள் மாதவிக்கும் கோவலனுக்கும் மகளாவாள். கோவலனுக்குற்றது கேட்டு மாதவி துறவு பூண்டாள். அதன் பின்னர் அம் மாதவியின் தாயாகிய சித்திராபதி என்னும் முதிய கணிகை மாதவியின்பாற் சென்று அம் மணிமேகலையின்கண் நிலைமை கூறுபவள் மகளே! கேள் நின் மகள் மணிமேகலைக்கு மைஈர்ஓதி வகைபெறு வனப்பின் ஐவகை வகுக்கும் பருவங் கொண்டது-அவளது கரிய நெருப்புடைய கூந்தல் கூறுபடுத்துதலாலே உண்டாகும் அழகிற்கேற்ப ஐந்து வகையாக வகுக்கும் பருவத்தை யெய்தியது; செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண் அவ்வியம் அறிந்தன அதுதான் அறிந்திலன் -அவளது செவ்வரி படர்ந்த வளமான குளிர்ந்த கண்ணினது கடைப்பகுதி கண்டோரை மயக்கும் செயலை அறிந்து கொண்டன, அச் செயலை அம் மணிமேகலை இன்னும் அறியாதிருக்கின்றனள்; பவளத்துள் ஒளி ஒத்து ஒளிர் சிறந்த நித்தில இளநகை நிரம்பா அளவின்-இதழ்களாகிய பவளச் செப்பினுள்ளே ஒளியானும் நிரலானும் தம்முள் ஒத்து விளங்குகின்ற முத்துகளைப் போன்ற இளமையுடைய பற்கள் இன்னும் முழுதும் நிரம்பாத அழகினை உடையனவாயின: புணர்முலை விழுந்தன-புணர்தற்குக் காரணமான முலைகள் அடியுற் றெழுந்தன; புல் அகம் அகன்றது தளர் இடை நுணுகலும் தகை அல்குல் பரந்தது-தழுவுதற்குரிய மார்பிடம் விரிந்தது அதற்கேற்பத் தளருகின்ற அவளுடைய இடை பின்னும் நுண்ணிதாகலும் அழகிய அவளுடைய அல்குற் பரப்பும் விரிவதாயிற்று; குறங்கு இணைதிரண்டன கோலம் பொறா-அவளுடைய அல்குற் பரப்பும் விரிவதாயிற்று; குறங்கு இணைதிரண்டன கோலம் பொறா-அவளுடைய தொடைகளிரண்டும் திரண்டன  ஆயினும் அணிகலன்களைப் பொறுக்க மாட்டாவாயின; நிற்கிளர் சீறடி அடிகள் நெய் தோய்க்கப் பெற்ற மாந்தளிர் போல்வனவாயின; தலைக்கோல் ஆசான் பின் உளனாகக் குலத்தலை மாக்கள் கொள்கையிற் கொள்ளார்-அவளுக்குப் பயிற்றுவிக்கும் ஆடலாசிரியன் முன் வாராமையாலே அவளை உயர்குடியினராகிய நகரமாந்தர் சிறந்த கணிகையாக ஏற்றுக் கொள்கிலர்; இங்ஙனம் ஆதலின்; நின் கருத்து யாது? அவளைப் பற்றிய நின்னுடைய எண்ணந்தான் என்னையோ? என் செய்கு என மாதவிக்குரைப்ப-அவளை ஈன்ற தாயாகிய நீ செய்யக் கடவன செய்யாதொழியின் மிகவும் முதியவளாகிய நான் என் செய்ய மாட்டுவேன், என்று இரங்கி அம் மாதவிக்குக் கூறா நிற்ப என்க.

(விளக்கம்) மாதவி நற்றாய் என(23) என்பதனை மையீரோதி (10) என்பதன்முன் கூட்டுக. ஆண்டு இசையெச்சத்தால் கூற வேண்டுவன பலவும் கூறிக் கொள்க. அவ்வியம்-வஞ்சம் முதலிய தீக் குணங்கள். அவள் கண்கள் தம்மைக் கண்டோரை வஞ்சித்து மயக்கும் தன்மையுடையனவாய் விட்டன. அத்தன்மையை அவள் இன்னும் அறிந்திலள் என்றவாறு. பவளம்-வாய் இதழ்களுக்குக் குறிப்புவமம். முலை விழுந்தன என்றது அவை அடியிட்டு எழுந்தன என்றவாறு. மாதர்க்குக் கண்ணும் தோளும் அல்குலும் பெருகியிருத்தல் வேண்டுமென்பர். குறங்கு தொடை. தமது மென்மையால் அணிகலன்களை அத் தொடைகள் பொறா என்றவாறு. தலைக்கோலாசான் என்றது ஆடலாசிரியனை தாயாகிய நீ இங்ஙனம் இருத்தலின் ஆசிரியன் முன் வரத் தயங்கிப் பிண்ணிடுகின்றான் என்பாள் தலைக்கோலாசான் பின்னுளன் ஆக என்றாள். குலத்தலை மாக்கள் என்றது உயர்குடிப் பிறப்பாளராகிய செல்வர் மக்களை. ஆடல் முதலிய கலைப் பயிற்சியுடைய கணிகை மகளிரே சிறந்தோர் என்று உலகம் கொள்ளுதலுண்மையின் நின் மகளை அவ்வாறு உயர்ந்தவளாகக் கருத மாட்டார் என்றவாறு. நின் கருத்து யாது என்றது துறந்தவளாகிய உன்னுடைய கருத்து அவளைப் பற்றி எங்ஙன முளது என்று மணிமேகலைக்கு இரங்கிக் கூறியவாறு. என் செய்கு-யான் என் செய்வேன். தான் மிகவும் முதியவளாதலின் அவட்கு யான் ஏதும் நலன் செய்ய வல்லேனல்லேன் என்று இரங்குவாள் என் செய்கு? என்றாள். இத்துணையும் தேவந்தி மணிமேகலையின் இயல்பு கூறுபவன் அவளைப் பற்றிச் சித்திராபதி கூறியவற்றைக் கூறிய படியாம்.

தேவந்திகை மாதவியின் செயல் கூறியது

24-28: வருக........படுத்தனள்

(இதன் பொருள்) என் மடமகள் மணிமேகலை வருக என்று-அரசே! மாதவி தன் தாயாகிய சித்திராபதி கூறியவை கேட்டு அவள் பேததைமைக் கிரங்கியவளாய் என்னுடைய இளமை ததும்பும் மகளாகிய அம் மணிமேகலை என்பாள் ஈங்கு வருவாளாக வென்றழைத்து; உருவிலாளன் ஒரு பெருஞ் சிலையொடு விரை மலர் வாளி வெறு நிலத்து எறிய-உருவமில்லாதவனாகிய காமவேள் தன்னுடைய ஒப்பற்ற பெரிய கருப்பு வில்லோடு மணமுடைய மலராகிய அம்புகளையும் வறிய நிலத்தின்மேல் வீசி விட்டு வருந்தும்படி; கோதைத் தாமம் குழலொடு களைந்து போதித்தானம் புரிந்து அறம் படுத்தனள்-அம் மணிமேகலையினுடைய மலர் மாலை மணிமாலை முதலிய மாலைகளை அவளது அழகிய கூந்தலோடே களையும்படி செய்து புத்தப்பள்ளியில் விடுத்து விரும்பி அப் புத்தர் அறத்தை மேற்கொள்வித்தனள் என்றாள் என்க.

(விளக்கம்) உருவிலாளன்-அனங்கள்; காமவேள். சிலை-ஈண்டுக் கருப்பு வில். காமவேள் இவளைக் கருவியாகக் கொண்டு தன்னாலே வெல்லுதற்குரிய துறவோர் பலரையும் வெல்லக் கருதியிருந்தானாதலால் அவள் துறவு பூண்டமையால் பெரிதும் வருந்தி வில் முதலியவற்றை வீசியெறிந்தான் என்பது கருத்து போதித்தானம்-பவுத்தப்பள்ளி அறம் படுத்தல்-வைராக்கியம் சொல்லுதல். 

இதுவுமது

29-37: ஆங்கது..........உரைத்தபின்

(இதன் பொருள்) ஆங்கு அது கேட்ட அரசனும் நகரமும்-அப் பொழுது மாதவி மணிமேகலையைத் துறவறம் புகுத்த அச் செய்தியைக் கேள்வியுற்ற சோழ மன்னனும் அப் புகார் நகரத்து வாழ்கின்ற மக்களும்; ஓங்கிய நல்மணி உறுகடல் வீழ்த்தோர் தம்மின் தாம் துன்பம் நனி எய்த-உயர்ந்த சிறந்த மாணிக்கத்தைப் பெரிய கடலின் நடுவே வீழ்த்தி விட்டவர் போன்று தமக்குள்ளே பெருந் துன்பத்தைப் பெரிதும் எய்தா நிற்ப; செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தன் துறவு எமக்குச் சாற்றினர் என்றே-நடுவு நிலைமை உடைய மொழியையுடைய பெரிய தவத்தையுடைய அறவணவடிகளார் சிவந்த அணிகலனை அணிதற்கியன்ற மகளிருள் சிறந்த மணிமேகலை தனது துறவற உறுதி மொழியை எம் முன்னிலையிற் சொல்லினள் என்று அரசர் பெருமானே! அவ்வறவண அடிகளார் தாமே; அன்பு உறு நல்மொழி அருளொடுங் கூறினர்-அன்புமிக்க இந்த நல்ல செய்தியை என்பால் அருளுடைமையால் சொல்லினர் என்று அரசற்கு கூறி அத் தேவந்திகை பின்னரும்; ஆங்கு அரசற்கு பருவம் அன்றியும் பைந்தொடி நங்கை திருவிழை கோலம் நீங்கினளாதலின் அரற்றினென் என்று உரைத்த பின் மீண்டும் அச் செங்குட்டுவனுக்குப் பெருமானே! துறவு பூண்பதற்குரிய பருவம் இல்லாமலேயே பசிய வளையலையணிந்த அம் மணிமேகலை திருமகளும் விரும்புதற்குக் காரணமான தனது பேரழகைத் துறந்தாளாதலாலே அந் நிகழ்ச்சியை நினைந்து அடியேன் அழுதேன் என்று கூறிய பின்னர் என்க.

(விளக்கம்) அது-அச் செய்தி அரசன்: சோழ மன்னன். நகரம்-நகர் வாழ் மக்கள்: ஆகுபெயர் வீழ்த்தோர் தம்மின் வீழ்த்தவரைப் போல மாதவர்: அறவணவடிகள். மாதவர், நங்கை எமக்குத் துறவு சொன்னாள் என்று கூறினர் எனக் கூட்டுக. பருவம்-துறத்தற்குரிய பருவம். அஃதாவது காமம் சான்ற கடைக்கோள்காலை திரு-திருமகள் அதனை நினைந்து அரற்றினேன் என்றவாறு.

தேவந்திகை மேல் தெய்வம் ஏறி ஆடுதல்

38-45: குரற்றலை............தான்

(இதன் பொருள்) குரல்தலைக் கூந்தல் குலைந்து பின்வீழ-இவ்வாறு செங்குட்டுவனுக்கு மணிமேகலையின் திறம் உரைத்து நின்ற பொழுது கதுமெனக் கொத்துகளைத் தன்னிடத்தேயுடைய தனது கூந்தல் தானே அவிழ்ந்து முதுகிலே சரியா நிற்ப அத் தேவந்திகை; புருவந் துடித்தனள் துவர் இதழச் செவ்வாய் மடித்து எயிறு அரும்பினள் வருமொழி மயங்கினள்-தன் புருவங்களிரண்டும் துடிக்கப் பெற்றனள், பவளம் போன்ற இதழ்களையுடைய தனது சிவந்த வாயை மடித்துப் புன்முறுவல் பூத்தனள்; தானே புறப்படுகின்ற மொழிகள் மயங்கப் பெற்றனள்; திருமுகம் வியர்த்தனள் செங்கண் சிவந்தனள்-தனது அழகிய முகத்தில் வியர்வை துளிக்கப் பெற்றனள்-இயல்பாகவே சிவந்த தன் கண்கள் மேலும் சிவப்பேறப் பெற்றனள்; கைவிட்டு ஓச்சினள் கால் பெயர்த்து எழுந்தனள்-தன் கைகளை ஒற்றையும் இரட்டையுமாகித் திசைகளிலே விட்டெறிந்தனள், கால்களை நின்ற நிலையினின்றும் பெயர்த்து ஆடினள்; பலர் அறிவாரா தெருட்சியள் மருட்சியள் உலறிய நவினள் உயர் மொழி கூறி-அங்கு நின்ற மக்கள் பலரும் அறிய வொண்ணாத தெளிவும் மயக்கமும் உடையவளாய் நீர் வற்றிய நாவினை உடையவளாய் உயர்ந்த மொழிகளைக் கூறிக் கொண்டு; தெய்வம் உற்று எழுந்த தேவந்திகைதான்-தெய்வமேறப் பெற்று எழுந்தாடிய அத் தேவந்திகை என்னும் பார்ப்பனி தானும் என்க.

(விளக்கம்) குரல்-கொத்து. எயிறு அரும்புதல்-புன்முறுவல் பூத்தல். தெய்வத்தினருளால் தானே தோன்றும் மொழி என்பார். வருமொழி என்றார். இப் பகுதியில் தெய்வம் ஏறி ஆடுவோர் இயல்பை இயற்கை நவிற்சியாக அடிகளார் ஓதியிருத்தலுணர்க. இதனோடு தெய்வ முற்றே னவிநயஞ் செப்பிற் கைவிட் டெறிந்தகலக்க முடைமையு மடித்தெயிறு கவுவிய வாய்த்தொழி லுடைமையும் துடித்த புருவமுந் துளங்கிய நிலையும் செய்ய முகமுஞ் சேர்ந்த செருக்கும் எய்து மென்ப வியல்புணர்ந் தோரே என வரும் அடியார்க்கு நல்லார் மேற்கோள் ஒப்ப நோக்கற்பாலது.

தேவந்திகை செங்குட்டுவனுக்கு முன்பு மாடலனுக்குக் கூறுகின்ற தெய்வ மொழிகள்

46-52: கொய்தவிர்............ஈங்குளள்

(இதன் பொருள்) கொய்தளிர்க் குறிஞ்சிக் கோமான் தன்முன்-கொய்துகட்டிய தளிர் விரவிய குறிஞ்சிப் பூமாலையையுடைய அரசர் பெருமானாகிய சேரன் செங்குட்டுவன் முன்னிலையிலே மாடலனைநோக்கிக் கூறுபவன் மாணிழையோருள்-கற்புடைக் கடவுளாகிய கண்ணகியின் மங்கல விழாக் காண வந்த அழகிய மொழியையுடைய மாட்சிமையுடைய அணிகலனணிந்த இம் மகளிர் கூட்டத்தினுள்; அரட்டன் செட்டி தன் ஆயிழை ஈன்ற இரட்டையம் பெண்கள் இருவரு மன்றியும்-அரட்டன் செட்டி என்னும் வணிகனுடைய மனைவி ஈன்ற இரட்டையாகப் பிறந்த அழகிய பெண்களிருவரும் இருக்கின்றனர் அவர்களையல்லாமலும்; ஆடக மாடத் தரவணைக்கிடந்தோன் சேடக் குடும்பியின் சிறுமகள் ஈங்குள்ள-திருவனந்தபுரத்தின்கண் அரவணையின்மிசை அறிதுயில் கொண்டு கிடந்தருளிய திருமாலுக்குத் திருத்தொண்டு புரிகின்ற குடும்பத்தலைவனது இளமகள் ஒருத்தியும் இங்கு வந்திருக்கின்றனள் என்றாளென்க.

(விளக்கம்) இவை செங்குட்டுவன் முன்னிலையிலே தேவேந்திகை என்னும் பார்ப்பனியின் மேலேறிய தெய்வத்தின் மொழிகள். கொய்தற்குரிய தளிரையுடைய குறிஞ்சி தழைத்துள்ள மலை நாட்டுக் கோமான் எனினுமாம். கடவுள்-கண்ணகிக் கடவுள். அரட்டன்: பெயர். ஆயிழை, மனைவி என்னும் பொருட்டு இரட்டைப் பெண்கள்-ஒரே கருவிலிருந்து பிறந்த இரண்டு பெண்கள். ஆடகமாடம் என்பது திருவனந்தபுரத்துத் திருமால் கோயிலை குடும்பி-குடும்பத்தையுடையவன். சிறுமகள்-ஆண்டிளையாள்.

இதுவுமது

53-60: மங்கல..........ஆகுவர்

(இதன் பொருள்) மங்கல மடந்தை கோட்டத்து ஆங்கண்-மங்கலா தேவியின் கோயிலமைந்துள்ள அவ்விடத்தே செங்கோட்டு உயர் வரைச் சேண் உயர் சிலம்பின்-செங்குத்தாக உயர்ந்துள்ள குவடுகளையும் உயர்ந்து வளர்ந்த மூங்கிலையும் உடைய தாய் மிகவும் உயர்ந்திருக்கின்ற மலையின்கண்! பிணிமுக நெடுங்கல் பிடர்த்தலை-மயில் போன்ற உருவமைந்ததொரு பாறையின்மேல்; நிரம்பிய அணி கயம் பலவுள-நீரான் நிரம்பிய அழகிய சுனைகள் பலவுள்ளன; ஆங்கு அவை இடையது கடிப்பகை நுண்கலுங் கவிர் இதழ்க் குறுங்கலும் இடிக்கலப்பு அன்ன இழைந்துகு நீரும் உண்டோர் சுனை-அவ்விடத்தே அச் சுனைகளின் நடுவண் உளதாய் வெண் முருக்கம்பூவினது இதழ்களைப் போன்ற குறிய செந்நிறக் கற்களும் பன்னிற மாவுகளையும் விரவினாற் போன்ற நிறமுடையதாய் நெகிழ்ந்து வீழ்கின்ற நீரினையும் உடையதாய் உளது ஒரு சுனை; அதன் உள் புக்காடினர் பண்டைப் பிறவியராகுவர்-அச் சுனையின்கண் புகுந்து நீராடியவர்கள் பழைய பிறப்பினது நினைவினை உடையராகிவிடுவர் என்றாள் என்க.

(விளக்கம்) மங்கல மடந்தை என்பதற்கு அரும்பதவுரையாசிரியர் மங்கலாதேவி என்று பொருள் கூறினர். எனவே இத் தெய்வம் பிறிதொரு தெய்வம் என்றே கொள்ளற்பாலது. இத் தெய்வத்தைக் கண்ணகி என்று கொள்வாருமுளர். அவர் உரை பொருந்தாமை தேவந்திகையின் மேலேறிய சாத்தன் என்னுந் தெல்வம் ஈண்டுக் கூறுஞ் செய்திகள் இறந்த காலத்தன், ஆதலினாலென்க. கோட்டம் கோயில். செங்கோடு-செங்குத்தாக வுயர்ந்த குவடு. பிணிமுகம்-மயில் கயம்-சுனை. கடிப்பகை-வெண் சிறுகடுகு. கவிரிதழ்-முருக்கம் பூவின் இதழ். இது வண்ணமும் வடிவமும் பற்றி உவமை. பண்டைப் பிறவியர்-முற்பிறப்பின் நினைவுகளை உடையவர்.

இதுவுமது

60-70: ஆதலின்.............என்றலும்

(இதன் பொருள்) ஆதலின் ஆங்கு அது கொணர்ந்து-அங்ஙன மாதலின் அவ்விடத்துள்ள அச் சுனைநீரைக் கொண்டுவந்து; ஆங்கு ஆயிழை கோட்டத்து ஓங்கு இருங்கோட்டி இருந்தோய்- அப்பொழுது அம் மங்கலாதேவியின் கோயிலினது உயர்ந்த பெரிய மாட வாயிலின்கண் நீ இருந்தனையாதலின்; உன் கைக்குறிக்கோள் தகையாது கொள்க எனத் தந்தேன்-உன்னுடைய கையில் கொடுத்த யான் இந்நீர் தெய்வத் தன்மையுடையதாதலின் நின்னால் குறிக்கொண்டு போற்றி வைத்துக் கொள்ளும் தன்மையது என்று சொல்லி இதனைக் கொள்வாயாக என்று கொடுத்தேன் அல்லனோ! அந் நீரையுடைய; உறித்தாழ் கரகமும் உன் கையது அன்றே-உறியின்கண் வைக்கப்பட்ட அந் நீர்க் கரகமும் இப்பொழுது உன் கையின்கண் உளதன்றோ; கதிர் ஒழி காறும் கடவுள் ஆட்டின்-ஞாயிறும் திங்களும் அழிந்தொழியுங்காறும் அந் நீரினது கடவுட்டன்மை முதிர்ந்தொழியாது அற்றை நாள்போலவே இருப்பதாம், அத்தகைய அந்த நீரை யான் முன் கூறிய அரட்டன் செட்டியின் இரட்டைப் பெண்களும் சேடக் குடும்பியின் சிறு மகளுமாகிய அம் மூன்று மகளிரின் தலையில் தெளித்து நீராடினால்; இச்சிறு குறுமகளிர் ஒளித்த பிறப்பினர் ஆகுவர் காணாய்-இம்மூன்று சிறிய குறிய மகளிரும் முற்பிறப்பின் உணர்ச்சியை உடையராகுவர். இவ்வுண்மையை நீ அங்ஙனம் செய்து காண்பாயாக!; மாடல மறையோய் யான் பாசண்டன் பார்ப்பனி தன்மேல் வந்தேன் என்றலும்-மாடல மறையோனே! யான் பாசண்டச் சாத்தன் என்னும் தெய்வம் காண்! என்னோடு தொடர்புடைய இந்தத் தேவந்தியாகிய பார்ப்பனியின் மேல் வந்துள்ளேன் என்று தேவந்திகையின் மேல் வந்த அத் தெய்வம் கூறுதலும் என்க.

(விளக்கம்) அது-அந்நீர். ஆயிழை என்றது மங்கலா தேவி யென்னும் தெய்வத்தை. கோட்டத்துக் கோட்டி-கோயில் வாயில். ஞாயிறும் திங்களும் என்பார் கதிர் எனப் பொதுமையில் ஓதினர் மூன்று மகளிரும் மூவகைத் தனித் தன்மையுடையராதலின் முத்திற மகளிர் எனப்பட்டனர். ஒளித்த பிறப்பு-மறைந்த பிறப்பு. அஃதாவது முற்பிறப்பு. காணாய் என்றது அங்ஙனம் செய்து காண்பாயாக என்றவாறு. பாசண்டன்-பாசண்டச் சாத்தன் என்னுந் தெய்வம். பார்ப்பனி என்றது என்னோடு தொடர்புடைய பார்ப்பனி என்பதுபட நின்றது.

மாடலன் அத் தெய்வக் கூற்றினை மன்னனுக்கு விளக்குதல்

71-80: மன்னவன்.............ஒழிகென

(இதன் பொருள்) மன்னவன் விம்மிதம் எய்தி அம் மாடலன் தன்முக நோக்கலும்-தேவந்திகையின் தெய்வ மொழி கேட்ட செங்குட்டுவன் பெரிதும் வியப்படைந்து அம் மாடல மறையோனுடைய முகத்தை நோக்குதலும்; தான் நனி மகிழ்ந்து இது கேள் மன்னா நின் தீயது கேடுக-அரசனுடைய குறிப்பறிந்த மாடல மறையோன் பெரிதும் மகிழ்ந்து இச் செய்தியை யான் கூறுவேன் கேட்டருள்க! அரசே! நினக்குத் தீமை ஒழிவதாக; மாலதி யென்பாள் மாற்றாள் குழவியைப் பால் சுரந்து ஊட்டப் பழவினை யுருத்துக் கூற்று உயிர்கொள்ள-பூம்புகார் நகரத்திலே மாலதி என்னும் பெயரையுடைய பார்ப்பனி ஒருத்தி தன் மாற்றாளுடைய மகவின் பால் அன்புடையளாய் இருந்தமையால் அவள் கொங்கைகளிலே பால்  சுரப்ப அதனை அம் மகவிற்கு ஊட்டா நிற்ப அம் மகவினது ஊழ்வினை வந்து உருத்துதலாலே கூற்றுவன் அக் குழவி பால் விக்கின்மை ஏதுவாக அதன் உயிரைக் கவர்ந்து கொள்ளாநிற்றலால் அம் மாலதி என்பாள், குழவிக்கு இரங்கி ஆற்றாத் தன்மையளாய் ஆர் அஞர் எய்தி-இறந்துபோன அம் மகவின் பொருட்டு எய்திய துன்பம் ஆற்றொணாத தன்மை உடையவளாய்ப் போக்குதற்கரிய பெருந்துன்பத்தை அடைந்து பிறர் அறியாமல் அம் மகவினைக் கைக்கொண்டு சென்று; பாசண்டன்பால் பாடு கிடந்தாட்கு-பாசண்டச் சாத்தன் கோயிலிற் சென்று அக் குழந்தை உயிர் பெற வரம் வேண்டி நோன்பு கிடந்தாளுக்கு இரங்கி; ஆசுஇல் குழவி அதன் வடிவாகி-அப் பாசண்டச் சாத்தன் தானே குற்றமற்ற அம் மகவினது உருவத்தைக் கொண்டு; அன்னை வந்தனன் நீ வான்துயர் ஒழிக என-தாயே இதோ யான் வந்தேன் நீ நினது பெரிய துன்பத்தை விடுக என்று கூறி என்க.

(விளக்கம்) ஈண்டுக் கூறிய வரலாற்றினைக் கனாத்திறம் உரைத்த காதையின்கண் விளக்கமாகக் காணலாம். மாலதி மகப் பேறற்றவள்; அவள் மாற்றாள் குழவியினிடத்து அன்பு மிகுதி கொண்டமையால் அவள் கொங்கையில் பால் சுரப்பதாயிற்று எனவும் அப் பாலினை அக் குழவிக்கு ஊட்டுங்கால் ஊழ்வினை காரணமாக பால் விக்கி அக் குழவிமரித்தது எனவும் கொள்க. அன்புடைமையாலும் பழிக்கு அஞ்சியும் இரங்கிப் பெருந்துயரெய்தினளென்க. பாடு கிடத்தல்-வரம் வேண்டிப்பட்டினி கிடத்தல். காசு-குற்றம். வான் துயர்-பெருந்துன்பம்.

இதுவுமது

81-94: செந்திறம்............கூறினன்

(இதன் பொருள்) செந்திறம் புரிந்தோன்-இவ்வாறு செவ்விய அருளைச் செய்த அச் சாத்தன்; செல்லல் நீக்கி-அப் பார்ப்பனியின் துயரத்தைப் போக்கி; பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்ப்பால் காப்பியத் தொல்குடிக் கவின் பெற வளர்ந்து-அம் மாலதியாகிய பார்ப்பனியோடும் இறந்த குழவியின் பழைய தாயாகிய அம் மாற்றாளிடத்துச் சென்று காப்பியக்குடி யென்னும் சிறப்புப் பெயர் பெற்ற அப் பழைய குடி தன்னாலே அழகுறும்படி வளர்ந்து; தேவந்திகையைத் தீவலஞ் செய்து நால் ஈர் ஆண்டு நடந்ததன் பின்னர்-தேவந்திகை என்னும் இப் பார்ப்பனியை மறைவிதப்படி தீவலஞ் செய்து மணந்துகொண்டு இல்லறம் மேற்கொண்டு எட்டாண்டுகள் கழிந்த பின்னர்; மூவா இளநலங் காட்டி நீ என் கோட்டத்து வா என்றே நீங்கிய சாத்தன்-ஒருநாள் தேவந்திகைக்குத் தனக்கியல்பான மூவரமையும் இளமையுமுடைய அழகினைத் தனித்துக் காட்டி இனி நீ என் கோயிலில் வந்து என்னைக் காண்பாயாக! என்று சொல்லி அம் மானிட உருவத்தை நீங்கி மறைந்துபோன அச் சாத்தன் என்னுந் தெய்வம்; மங்கலமடந்தை கோட்டத்து ஆங்கண் அங்கு உறை மறையோனாகத் தோன்றி-அரசே! பண்டொருநாள் யான் மங்கலாதேவியின் கோயில் வாயிலில் இருக்கும்பொழுது அவ்விடத்தே வாழும் ஒரு பார்ப்பனன்போல வடிவுகொண்டு என் கண்முன் தோன்றி; உறித்தாழ்க் கரகமும் என் கைத்தந்து-உறியின்கண் வைக்கப்பட்ட தெய்வத் தன்மையுடைய அந் நீர்ப்பாண்டத்தையும் என் கையிற் கொடுத்து; குறிக்கோள் கூறி கோயினன் வாரான்-அதனைக் குறிக்கொண்டு போற்றிக்கொள்ளும்படியும் சொல்லி மறைந்து போயினன் மீண்டும் வந்தலன் யானும்; ஆங்கு அது கொண்டு போந்தேன் ஆதலின்-அவ்விடத்தே அதனை ஏற்றுக்கொண்டு அதனோடு இங்கு வந்துளேன் ஆதலால்; அறிந்தோன் ஈங்கு இம் மறையோன் தன்மேல் தோன்றி அந்நீர் தெளி என்று கூறினன்-முழுதும் அறிந்தவனாகிய சாத்தன் என்னும் அத் தெய்வமே இவ்விடத்தே அவனுக்கு மனைவியாம் உரிமையுடைய இப் பார்ப்பனியின் மேலேறி அத் தெய்வத் தன்மையுடைய நீரினை அம் மகளிர் மேல் தெளித்திடுமாறு கூறினான் என்றான் என்க.

(விளக்கம்) செந்திறம் புரிந்தோன் என்பதற்கு மிக்க கல்விகளையும் கேள்விகளையும் கற்றும் ஒழுகியும் துறைபோய்ச் செவ்விய பண்புடையோன் ஆகிய சாத்தன் எனினுமாம். செல்லல்-துன்பம். பண்டைத் தாய் என்றது இறந்த குழவிக்குத் தாயாகிய மாற்றானை.  காப்பியக் குடியாகிய தொல்குடி எனக் குடியை முன்னும் கூட்டுக. இனி, தொல்காப்பியக் குடி எனக் கொண்டு அப் பெயருடைய ஒரு குடி பண்டைக் காலத்துப் புகார் நகரத்திலிருந்தது எனக் கோடலுமாம். ஒரோவழி ஆசிரியர் தொல்காப்பியனார் இக் குடியிற் பிறந்தவர் எனக் கருதுதலும் கூடும். தீவலஞ்செய்து என்றது திருமணஞ் செய்து கொண்டு என்றவாறு. மூவா இளநலம் என்றது தெய்வத்திற்குரிய அழகினை, மங்கல மடந்தை கோட்டத் தாங்கண் உறை மறையோனாகத் தோன்றி என்றமையால் மங்கல மடந்தை கண்ணகியல்லாமை காண்க, அறிந்தோன் என்றது முழுதும் அறிந்தவனாகிய சாத்தன் என்றவாறு.

மாடலன் அம் மகளிர்மேல் நீர் தெளித்தலும் அம் மகளிர் முற்பிறப் புணர்ச்சியுடைய ராதலும்

95-97: மன்னர்...........ஆதலின்

(இதன் பொருள்) மன்னர் கோவே மடந்தையர் தம்மேல் தெளித்து ஈங்கு அறிகுவம் என்று அவன் தெளிப்ப-வேந்தர் பெருமானே; அம் மகளிரின் மேல் அத் தெய்வத் தன்மையுடைய நீரினைத் தெளித்து இவ்விடத்தே அதன் தெய்வத்தன்மையை யாமும் அறிவோமாக என்று சொல்லி அம் மாடல மறையோன் அம் மகளிரின் மேல் அந் நீரைத் தெளியா நிற்ப; ஒளித்த பிறப்பு வந்து உற்றதை யாதலின்-அந் நீரின் சிறப்பினால் அம் மகளிர்க்கு முற்பிறப்பின் உணர்ச்சி வந்து எய்தியது ஆதலாலே என்க.

(விளக்கம்) மடந்தையர் என்றது, ஈண்டுப் பருவம் குறியாமல் மகளிர் என்னும் பொருட்டாய் நின்றது. அவன்-அம் மாடல மறையோன். ஒளித்த பிறப்பு-மறைந்த பிறப்பு. அஃதாவது முற்பிறப்பு உற்றதை என்புழி ஐகாரம் சாரியை.

அம் மகளிர் பழம்பிறப் புணர்ச்சியோடே அரற்றுதல்

98-103: புகழ்ந்த..............வாராய்

(இதன் பொருள்) புகழ்ந்த காதலன் போற்றா ஒழுக்கின் நிகழ்ந்ததற்கு இரங்கும் என்னையும் நோக்காய்-உலகத்தாரால் புகழப்பெற்ற நின்னுடைய கணவனாருடைய சான்றோர் போற்றுதலில்லாத தீய ஒழுக்கம் காரணமாக நினக்கு நிகழ்ந்த துன்பத்தை நோக்கி நின் பொருட்டு வருந்தியிருக்கும் என்னையும் நோக்கினாயில்லை; ஏதில் நல் நாட்டு யாரும் இல் ஒரு தனி-தொடர்பில்லாத பிற நல்ல நாட்டிடத்தே துணையாவார் ஒருவரும் இல்லாத மிக்க தனிமையையுடைய; நின் காதலன் தன்னொடு கடுந்துயர் உழந்தாய்-நின் காதலனோடு வந்து கடிய துன்பத்தை எய்தினாய்; யான் பெறுமகளே-எளியேன் தவம் செய்து பெற்ற அரும் பெறல் மகளே! என் துணைத்தோழீ-எனக்குத் துணையாயிருந்த தோழியைப் போன்றவளே; வான்துயர் நீக்கும் மாதே வாராய்-எனது மகப்பேறில்லாத பெருந்துயரத்தை நீக்கிய என் மகளே என்முன் வரமாட்டாயோ என் செய்வேன் என்று அழுதாள் அவருள் ஒருத்தி என்க.

(விளக்கம்) இவை முற்பிறப்பிலே கண்ணகியின் தாயாய் இருந்து இப் பிறப்பிலே அரட்டன் செட்டியின் மகளாகியவள் கூற்று என்றுணர்க. மண் தேய்த்த புகழினான் ஆதலின் கோவலனைப் புகழ்ந்த காதலன் என்றாள். புகழ்ந்த-புகழப்பட்ட. போற்றா வொழுக்கம் என்றது, கோவலனுடைய பரத்தைமை ஒழுக்கத்தை. அது காரணமாக நிகழ்ந்தது என்றது கண்ணகி கணவனால் கைவிடப்பட்டு வருந்தி இருந்தமையை. நீ பேரன்புடையளாய் இருந்தும் நின்னைப் பிரிந்தால் யான் இறந்து படுவேன் என்று எண்ணாமல் பிரிந்து போயினை என்பாள் என்னையும் நோக்காய் என்றாள். நன்னாடு என்றது இகழ்ச்சி. கடுந்துயர் என்றது கணவன் கொலையுண்டமையால் கண்ணகி எய்திய துன்பத்தை. வான்துயர்-மிகப் பெருந்துயர். வராய்-வருகின்றிலை. 

செட்டியின் மற்றொரு பெண் அரற்றுதல்

104-107: என்னோடு............வாராய்

(இதன் பொருள்) என் மகன்-என் மகனே!; என்னோடு இருந்த இலக்கு நங்கை தன்னோடு இடை இருள் தனித்துயர் உழந்து நீதான் நின் தாயாகிய என்னோடே இல்லத்திலிருந்த விளங்குகின்ற அணிகலன் அணிதற்குரிய மகளிருள் சிறந்தவளாகிய என் மருகியாகிய கண்ணகியோடே இடை யாமத்துப் பேரிருளிலே புறப்பட்டு ஒப்பற்ற துன்பம் எய்தி நகரத்தை விட்டு; போனதற்கு இரங்கிப் புலம்பு உறும் நெஞ்சம்-நீ எம்மைத் துறந்து போனதற்கு ஆற்றாமல் வருந்திப் புலம்பா நின்றது என்னுடைய நெஞ்சம்; யான் அது பொறேஎன்-யான் அத் துன்பத்தை ஆற்றுகிலேன்; வாராய்-என் நிலைமை கண்டு வைத்தும் நீதானும் என்பால் வருகின்றிலை என் செய்கேன் என்று மற்றொரு பெண் அரற்றினள் என்க.

(விளக்கம்) இது கோவலன் தாய் கூற்று. நங்கை என்றது கண்ணகியை. தனித்துயர்-ஒப்பற்ற பெருந் துன்பம். வாராய்-வருகின்றிலை. வர மாட்டாயோ எனினுமாம்.

சேடக் குடும்பியின் சிறுமகள் அரற்று

108-115: வருபுனல்.........நின்றழ

(இதன் பொருள்) வருபுனல் வையை வான் துறைப் பெயர்ந்தேன் வந்தேன்-இடையறாது வருகின்ற நீரினையுடைய வையைப் பேரியாற்றின் சிறந்த துறைக்கு நீராடுதற் பொருட்டுப் போனேன், நீராடி மீண்டு வந்தேன்; மனையிற் காணேன்-உன்னை என புதுமனையிடத்தே காணேனாய்ப் பின்னர்; உருகெழு மூதூர் குறுமாக்களின் கேட்டேன்-அழகு பொருந்திய பழைய நகரமாகிய மதுரை மாநகரத்தில் சிறுவர் வாயிலாய் நினக்குற்ற செய்தியைக் கேள்வியுற்றேன்; எந்தாய் இளையாய் எங்கு ஒளித்தாயோ-என் அப்பனே! இளமையுடையோனே! நீதான் எங்குச் சென்று மறைந்தாயோ அறிகிலேன்; என்று ஆங்கு அரற்றி என்று இன்னன கூறி அழுது; இனைந்து இனைந்து ஏங்கிக்குதலைச் செவ்வாய் குறுந்தொடி மகளிர்-வருந்தி வருந்தி ஏங்கி மழலை மாறாத சிவந்த வாயினையும் குறிய தொடியினைமுடைய அம் மகளிர் மூவரும்; பொன் தாழ் அகலத்துப் போர் வெய்யோன் முன்-திருமகள் வதிகின்ற மார்பினையும் போர்த் தொழிலின்கண் விருப்பத்தையுமுடைவனாகிய செங்குட்டுவனின் முன்னிலையிலே; முதயோர் மொழியின்-முதிய மகளிர் கூறுதற் கியன்ற மொழியைக் கூறி; முன்றில் நின்றழ-கண்ணகி கோயிலின் வாயிலின்கண் நின்று அழா நிற்ப என்க.

(விளக்கம்) வருபுனல்: வினைத்தொகை. வான் துறை-சிறந்த நீராடு துறை. உறு-அச்சமுமாம். குறுமாக்கள் என்றது சிறுவரை பொன்-திருமகள். வெய்யோன்-விருப்ப முடையோன். குதலை-மழலைச் சொல். முதியோர். முதிய மகளிர். முன்றில்-கோயில் வாயில்.

மாடலன் கூற்று

116-125: தோடலர்...............அதனால்

(இதன் பொருள்) தோடு அலர் போந்தைத் தொடுகழல் வேந்தன் மாடல மறையோன் தன் முகம் நோக்க-இதழ் விரிந்த பனம்பூ மாலையினையும் கட்டப்பட்ட வீரக்கழலினையும் உடைய வேந்தனாகிய செங்குட்டுவன் இந் நிகழ்ச்சியானும் பெரிதும் வியப்புற்றவனாய் மீண்டும் அம் மாடல மறையோனுடைய முகத்தை நோக்கா நிற்ப; முந்நூன் மார்பன் மன்னர் கோவே வாழ்க என்ற ஏத்தி-அதுகண்ட அம் மாடலன் அம் மன்னவன் குறிப்புணர்ந்து வேந்தர் வேந்தே! நீடு வாழ்வாயாக என்று அம் மன்னனை வாழ்த்தி; முன்னியது உரைப்போன்-அவ் வேந்தன் அறியநினைத்ததனைக் கூறுபவன் அரசே! மறையோன் உற்ற வான் துயர் நீங்க உறைகவுள் வேழக் கையகம் புக்கு வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற காதலி தன்மேல் காதலர் ஆதலின்-தன்பால் தானம் பெறுதற்பொருட்டு வந்து யானையால் பற்றப் பட்ட அந்தணன் எய்திய பெருந்துன்பம் நீங்கும்படி மதம் பெய்கின்ற கவுளையுடைய அந்த யானையின் கையகத்தில் தானே சென்று புகுந்து அவ்வந்தணனைப் பாதுகாத்த நல்வனை காரணமாகக் கொலையுண்ட பொழுதே அமரவடிவம் பெற்றவனாகிய கோவலனும் அவன் வாழ்க்கைத் துணைவியாகப் பெற்ற அன்புமிக்க கண்ணகியும் ஆகிய இருவர் மேலும் பெரும் பேரன்புடையராதலின்; அவருடன் மேனிலை உலகத்துப் போகும் தாவா நல் அறஞ் செய்திலர் அதனால்-அக் கோவலன் கண்ணகி என்னும் இருவருடனும் தாமும் வானுலகத்திற்குப் போதற்கு வேண்டிய கெடாத நல்ல அறத்தை இவர் செய்திலர் ஆதலால் முற்பிறப்பிலே அவ்வன்பு காரணமாக இறந்தொழிந்த இம் மகளிர் அதனால் என்க.

(விளக்கம்) முன்னியது-நினைத்தது. கோவலன் மறையோன் ஒருவனுடைய துயர் நீங்கும் பொருட்டு வேழத்தின் கையகம் புக்கமையை அடைக்கலக் காதையின்கண் காண்க. கொலையுண்ட பொழுதே கோவலன் அமரன் ஆவதற்குக் காரணம் இத்தகைய நல்வினைகளே ஆதலின் அவற்றுள் சிறப்புப்பற்றி ஒன்றனைக் கூறி ஏதுவாக்கினர். வானோர் வடிவம் பெற்றவன் மேலும் அவன் பெற்ற காதலி தன் மேலும் காதலர் என இயையும். மேனிலையுலகம் வானுலகம். அதனால் உயிர் துறந்த அம் மகளிர் என வருவித்தோதுக.

இதுவுமது

129-135: அஞ் செஞ்சாயல்...........ஆயினள்

(இதன் பொருள்) பொற்கொடி தன்மேல் பொருந்திய காதலின் அன்புளம் சிறந்து ஆங்கு-அம் மூவரும் கண்ணகி தன்பால் தமக்குண்டான அன்பு காரணமாக மேலும் அவள்பால் அவ்வன்புள்ளம் மிகுந்து அவ்வழி; அம் செம் சாயல் அஞ்சாது அணுகும் வஞ்சி மூதூர் மாநகர் மருங்கின்-அழகிய செவ்விய சாயலையுடைய அக் கண்ணகி வேற்றரசர் நாடெனச் சிறிதும் அஞ்சாது வந்தெய்திய இந் நாட்டின்கண்  வஞ்சி என்னும் பழைமை மிக்க நமது பெரிய நகரத்தின்கண்ணே; அரட்டன் செட்டி மடமொழி நல்லாள் மனம் மகிழ்சிறப்பின் உடன் வயிற்றோராய் ஒருங்கு உடன் தோன்றினர்-அரட்டன்செட்டி என்னும் வணிகனுடைய மடப்பமுடைய மொழியையுடைய மனைவியானவள் மனம் மிகவும் மகிழ்தற்குக் காரணமான சிறப்போடே அவள் வயிற்றில் ஒரு கருப்பத்தினராய் ஒரு பொழுதிலே (கண்ணகியின் தாயும், மாமியும்) இரட்டைப் பெண்களாய்ப் பிறந்தனர் வேந்தே!; போய பிறப்பின் ஆயர் முதுமகள்-கழிந்த பிறப்பில் இடைக்குல மடந்தையாய் முதியளாய் இருந்த மாதிரி என்பவளும் அங்ஙனமே-ஆயிழை தன்மேல் அமைந்த அன்பு காரணமாகவும் அவள் அப் பிறப்பிலே ஆடிய குரவைக் கூத்துக் காரணமாகவும்; அரவணைக் கிடந்தோன் சேடக் குடும்பியின் சிறுமகள் ஆயினள்-நின்னுடைய நாட்டின் கண் ஆடக மாடத்தின்கண் அரவப் பாயலின்கண் அறிதுயில் கொண்டு கிடந்த திருமாலின் அடித்தொண்டு பூண்ட குடும்பத் தலைவனுக்குச் சிறிய மகளாகத் தோன்றினாள் என்றான் என்க.

(விளக்கம்) அம் சாயல் செஞ்சாயல் எனத் தனித்தனி இயையும் பொற்கொடி: கண்ணகி. அற்புளம்-அன்புளம்: மென்றொடர் வேற்றுமைக்கண் வன்றொடராயிற்று. கண்ணகியின் தாயும் மாமியும் அரட்டன் செட்டி மனைவியின் வயிற்றில் இரட்டைப் பெண்களாய்ப் பிறந்தனர் என்பது கருத்து. ஒருங்குடன் தோன்றுதல்-ஒருங்கே இரட்டையராய்ப் பிறத்தல். ஆயர்முதுமகள்: மாதிரி போயபிறப்பு-கழிந்த பிறப்பு. மாதிரி கண்ணகியின்பால் அன்பு காரணமாக அவன் அணுகிய நாட்டின் கண்ணும் திருமாலுக்கு அன்புடையளாய்க் குரவைக்கூத்து எடுத்தமையால் மேலும் அத்திருமாலுக்குத் தொண்டு பூண்டு ஒழுகும் குடும்பத்தினும் தோன்றினாள் என்றவாறு.

இதுவுமது

135-147: ஆதலால்.............மகிழ்த்து

(இதன் பொருள்) நல்திறம் புரிந்தோர் பொன்படி எய்தலும்-வேந்தர் பெருமானே! இங்ஙனம் ஆதலாலே நல்லறங்களை விரும்பிச் செய்தவர் பொன்னுலகத்தை எய்துதலும்; அன்பு உளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்-ஒருவர்பால் அன்புள்ளத்தினாலே சிறந்தவர்கள் அவ்வன்பினாலே பற்றப்பட்டவர் சென்ற வழியிற்சென்று பிறத்தலும்; அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும்-ஒருவர் செய்த நல்வினையின் பயன் அவருக்கே வந்து சேருதலும் அங்ஙனமே தீவினைப் பயனும் செய்தவர்பாலே வந்து சேருதலும் அங்ஙனமே தீவினைப் பயனும் செய்தவர்பாலே வந்து சேருதலும்; பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும்-இந் நிலவுலகத்திலே பிறந்து வாழ்பவர் இறந்தொழிதலும் அவ்வாறே இவ்வுலகத்து இறந்தொழிந்தவர் மீண்டும் பிறத்தலும் ஆகிய இவையெல்லாம்; புதுவதன்றே தொன்றியல் வாழ்க்கை-உயிர்களுக்குப் புதியனவாகிய செய்கை அன்று, படைப்புக்காலம் தொடங்கி நிகழ்ந்து வருகின்றதொரு வாழ்க்கையே யாகும்; ஆன் ஏறு ஊர்ந்தோன் அருளில் தோன்றி மாநிலம் விளக்கிய மன்னவன் ஆதலின்-நீதான் காளையை ஊர்ந்து வருகின்ற இறைவனுடைய திருவருளாலே சேர மன்னவர் குடியில் தோன்றி இப் பெரிய நில வுலகத்தை அறத்தினாலே விளக்கமுறச் செய்த அரசனாதலால்; செய்தவப் பயன்களும் சிறந்தோர் படிவமும் கையகத் தன்போல் கண்டனை அன்றே-சான்றோர் செய்யும் தவத்தின் பயன்களையும் உயர்ந்தோருடைய உருவங்களையும் நின் அகங்கையில் உள்ள பொருள்களைக் காணுமாறே நன்கு அறிந்துகொண்டனையல்லையோ; நெடுந்தகை ஊழிதோறூழியுலகங் காத்து நீடு வாழியரோ யென்ற-வேந்தே! நெடுந்தகாய் பற்பல ஊழிகள் இருந்த இந் நிலவுலகத்தை நன்கு காவல் செய்து நீடு வாழ்வாயாக என்று வாழ்த்திய; மாடல மறையோன் தன்னொடு மகிழ்ந்து-மாடலன் என்னும் அவ்வந்தணனோடு பெரிதும் மகிழ்ந்து என்க.

(விளக்கம்) நற்றிறம்-நல்வினை. புதுவது: ஒருமைப் பன்மை மயக்கம். ஆனேறு ஊர்ந்தோன்-சிவபெருமான். கையகத்தன-கையின்கண் உள்ள பொருள். நெடுந்தகை: அன்மொழித்தொகை.

செங்குட்டுவன் செயல்

148-156: பாடல்..............முன்னர்

(இதன் பொருள்) பாடல் சால் சிறப்பில் பாண்டி நல் நாட்டுக் கலிகெழு கூடல் கதழ் எரி மண்ட-புலவர்கள் பாடுதற்கமைந்த பெருஞ்சிறப்பினையுடைய பாண்டியாகிய நல்ல நாட்டின் தலை நகரமாகிய ஆரவாரம் பொருந்திய மதுரை விரைகின்ற தீப்பிழம்புகள் பற்றி மிக்கெரியும்படி; முலை முகம் திருகிய மூவாமேனிப் பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து-தனது இடக்கொங்கையைத் திருகி வட்டித் தெறிந்த மூவாத தெய்வத்திருமேனியையுடைய திருமா பத்தினியாகிய கண்ணகித் தெய்வம் உறையும் கோயிலுக்கு வேண்டிய அருச்சனாபோகம் என்னும் பொருளைவரையறுத்துவைத்து அத் தெய்வத்திற்கு; நித்தல்விழா அணிநிகழ்க என்று ஏவி பூவும் புகையும் மேவிய விரையும் தேவந்திகையைச் செய்க என்று அருளி-நாள்தோறும் நிகழ்த்தும் திருவிழா வரிசையும் நிகழ்க என்று அதற்குரிய பணியாளர்களையும் ஏவிவிட்டுத் தெய்வத்திற்கு மலரணிதலும் நறுமணப்புகை எடுத்தலும் அதற்குரிய மணப்பொருட்களை அணிதலும் முதலிய அணுக்கத் தொண்டுகளை அத் தெய்வத்தின் திருமேனியைத் தீண்டித் தேவந்திகை என்னும் இப் பார்ப்பனியே செய்க என்று பணித்து; வலமுறை மும்முறை வந்தனன் வணங்கி உலக மன்னவன் நின்றோன் முன்னர்-அப் பத்தினிக் கோட்டத்தை வலமுறையாக மூன்றுமுறை சுற்றிவந்து வணங்கியவனாய் இந் நிலவுலகத்து மன்னவனாகிய அச் சேர மன்னன் நின்றானாக அங்ஙனம் நின்றவன் முன்பு என்க.

(விளக்கம்) பாடல்-புலவர் பாடும் பாட்டு. கலி-ஆரவாரம். கூடல்-நான்மாடக் கூடல் என்னும் மதுரை. கதழ்எரி-விரைந்து பற்றும் நெருப்பு. தெய்வத்திருமேனி பெற்றமை தோன்ற மூவாமேனிப் பத்தினி என்றார். படிப்புறம்-அருச்சனாபோகம் என்பர் அரும்பத உரையாசிரியர்; அஃதாவது கோயில் வழிபாடு முதலியவற்றிற்கு வேண்டிய பொருள் வருவாய்க்கு நில முதலியன விடுதல். நித்தல் விழா-நாள்தோறுஞ் செய்யுஞ் சிறப்பு. அச் சிறப்புகள் நிரல் படச் செய்தலின் விழாவணி என்றார். அணி-நிரல். வந்தனன் முற்றெச்சம். மன்னவன் நின்றானாக அவன் முன்னர் என்க.

கண்ணகி வரந் தருதல்

157-164: அருஞ்சிறை..............ஒருகுரல்

(இதன் பொருள்) அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் பெருஞ்சிறைகோட்டம் பிரிந்த மன்னரும்-தாமே கடத்தற்கரிய சிறையினின்றும் விடுவிக்கப்பட்ட கனக விசயரையுள்ளிட்ட வடவாரிய மன்னரும் கண்ணகிக் கடவுள் மங்கலத்தின் பொருட்டுச் சிறை வீடு செய்தமையால் பெரிய சிறைக்கோட்டத்தினின்றும் வெளிவந்த பிறமன்னரும்; குடகக்கொங்கரும் மாளுவ வேந்தரும் கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்-செங்குட்டுவனாலே இம் மங்கல விழாவிற்கு அழைக்கப்பட்ட குடகநாட்டுக் கொங்கர்களும் மாளுவ நாட்டு மன்னர்களும் நாற்றிசையிலும் கடல் சூழப்பெற்ற இலங்கைத் தீவின் அரசனாகிய கயவாகு என்னும் அரசனும்  அக் கற்புடைத் தெய்வத்தைக் கைகுவித்து வணங்கி; எம் நாட்டு ஆங்கண் இமயவரம்பன் இந் நல்நாள் செய்த நாளணிவேள்வியின் யாங்கள் எங்கள் நாடாகிய அவ்விடத்தே நினக்கெடுக்கும் திருக்கோயில்களினும் இமய மலையை எல்லையாகக் கொண்ட இச் செங்குட்டுவன் இந்த நல்ல நாளின்கண் நினக்கு நிகழ்த்திய இம் மங்கலமுடைய அழகிய இவ் வேள்வியின்கண் நீ எழுந்தருளி வந்தாற் போன்றே; வந்தீக என்றே வணங்கினர் வேண்ட-எழுந்தருளி வரவேண்டும் என்று வணங்கி வேண்டா  நிற்ப அப்பொழுது; தந்தேன் வரம் என்று  எழுந்தது ஒருநூல்-அங்ஙனமே தந்தேன் வரம் என்று வானத்தின்கண் எழுந்தது ஒரு தெய்வத் தீங்குரல் என்க.

(விளக்கம்) அருஞ்சிறை நீக்கிய ஆரிய மன்னர் என்றது முன்னர் ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கி வேளாவிக்கோ மாளிகையில் வைத்துப் போற்றப்பட்டவரை. இதனை (நடுகல் 195-202 ஆரிய..................ஏவி) என்பதனாலுணர்க. பெருஞ்சிறைக்கோட்டம் பிரிந்த மன்னர் என்றது பண்டு பல்வேறு காலங்களில் சிறைக்கோட்டத்தினிடப்பட்டுக் கண்ணகி விழாவின்பொருட்டுச் சிறைவீடு செய்யப்பட்ட மன்னர்களை. குடகக்கொங்கரும் மாளுவவேந்தரும் கயவாகு வேந்தனும் சேரன் செங்குட்டுவன் அழைப்பிற்கிணங்கி வந்திருந்த அரசர்களென்றுணர்க. எம் நாட்டினிடத்தே யாம் நினக்குச் செய்யும் வேள்வியில் இற்றைநாள்  செய்த இவ்வேள்வியில் நீ வந்தாற்போலவே வந்தருளுக என்று வேண்டியவாறாம். இமயவரம்பனிந் நன்னாட்செய்த என்புழி வரம்பன் இந் நல்நாள் செய்த எனக் கண்ணழித்துக் கொள்க. இதன்கண் (வரம்பனின்) சிறப்பு னகர மெய் பதிப்பித்திருத்தல் தவறு. அதனைப் பொதுநகரமெய்யாகத் திருத்திக்கொள்க. இதுவே பாடம் என்பதற்குச் செய்த நாளணி என இறந்த காலத்தாற் கூறியிருத்தலே சான்றாதல் உணர்க. நாளணி வேள்வியின்(ல்) என என்றும் பாடந் திருத்துக. இன் ஐந்தாவதன் உருபு. உறழ் பொருட்டு. வேள்வியில் வந்தாற்போல வருக என்பது கருத்து. இந் நுணுக்கம் உணராதார் இவற்றிற்குப் போலியுரை கூறியொழிந்தார்.

அரசர்கள் செங்குட்டுவனை வணங்குதல்

165-170: ஆங்கது..............போந்தபின்

(இதன் பொருள்) ஆங்கு அதுகேட்ட அரசனும்  அரசரும் ஓங்கு இருந் தானையும் உரையோடு ஏத்த-அத் தெய்வத் தீங்குரலைச் செவியுற்ற செங்குட்டுவனும் ஆரிய மன்னரை உள்ளிட்ட அரசர்களும் புகழாலுயர்ந்த பெரிய படைத்தலைவரும் அத் தெய்வத்தைப் புகழோடே வாழ்த்தித்தொழா நிற்ப; வீடு கண்டவர்போல் அக் குரல் கேட்ட அம் மன்னவர்கள் அந்தமிலின்பத்து அழியாத வீட்டின்பத்தை யடைந்தவர்போல; மெய்ந்நெறி விரும்பிய மாடல மறையோன் தன்னொடும் மகிழ்ந்து-வாய்மை நெறியையே விரும்பும் இயல்புடைய மாடல மறையோன் என்னும் அந்தணனோடுங் கூடி மகிழ்ந்து; வேந்தன்-செங்குட்டுவன்; தாழ்கழல் மன்னர் தன்னடி போற்ற-வீரக்கழல் கட்டிய ஏனைய அரசரெல்லாம் தன் திருவடிகளைப் போற்றி வணங்கும்படி; வேள்விச் சாலையின் போந்தபின்-அத் திருக்கோயில் வாயிலினின்றும் வேள்விச்சாலையின்கண் அமைந்த தன் இருக்கைக்குச் சென்றபின் என்க.

(விளக்கம்) அது என்றது அக் குரலை. அரசனும் அரசரும் என்றது செங்குட்டுவனும் ஏனைய மன்னரும் என்றவாறு. தானை-தானைத் தலைவருக் காகுபெயர். உரை-புகழ். மன்னர் வீடுகண்டவர்போல மகிழ்ந்து என்க. மன்னர் தன் அடி போற்ற வேந்தன் மறையோனொடுங் கூடி வேள்விச் சாலையின் போந்தபின் என்று இயைத்துக் கொள்க.

இளங்கோவடிகளார் தமியராய்ச் சென்று கண்ணகித் தெய்வத்தை வணங்குதலும் அத் தெய்வம் அவரைப் பாராட்டுதலும்

171-184: யானும்.................சென்றேன்

(இதன் பொருள்) யானும் அக் கண்ணகித் தெய்வத்தை வணங்கும் பொருட்டுத் தமியேனாய் அத் தெய்வத்திருமுன்னர்ச் சென்றேன். அங்ஙனம் சென்றுழி அத் தெய்வந்தானும்; தேவந்திகைமேல் திகழ்ந்து தோன்றி என் எதிர் எழுந்து-தன் தோழியாகிய தேவந்திகையின்மேல் ஏறி மெய்ப்பாடுகளுடனே விளங்கித் தோன்றி அவள் வாயிலாய் எனக்கு எதிரே எழுந்து வந்து என்னை நோக்கி; வஞ்சிமூதூர் மணிமண்டபத்திடை நுந்தைதாள் நிழல் இருந்தோய் நின்னை-நீ வஞ்சி நகரத்தில் அரண்மனையின்கண் அழகிய திருவோலக்க மண்டபத்தின்கண் நின் தந்தையாகிய சேரலாதனின் மருங்கே இருந்தோதியாகிய நின்னை ஒரு நிமித்திகன் நோக்கி, அரைசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டு என்ற உரை செய்தவன்மேல்-இவ்விளங்கோவிற்கு அரசுக்கட்டிலில் ஏறியிருந்து புகழ்பெறுவதற்குக் காரணமான சிறப்பிலக்கணம் உள்ளது என்று கூற அங்ஙனம் கூறிய அந் நிமித்திகன் முகத்தினை: உருத்துநோக்கி-நீ சினந்துநோக்கி; கொங்கு அவிழ் நறுந்தார்க் கொடித் தேர்த்தானை செங்குட்டுவன் தன் செல்லல் நீங்க-மணம் விரிந்த நறிய மாலையினையும் கொடியுயர்த்திய தேர் முதலிய படைகளையுமுடைய உன் தமையனாகிய செங்குட்டுவனுடைய மனத்துன்பம் நீங்கும்படி; பகல் செல் வாயிற் படியோர் தம்முன்-குணவாயிற் கோட்டத்தின் கண் இருந்த துறவோர்களின் முன்னிலையிலே; அகலிடப்பாரம் அகல நீக்கி-அகன்ற நிலவுலகத்தையாளும் பெருஞ்சுமை நின்னிடத்தினின்றும் அகலும்படி துறந்துபோய்; சிந்தை செல்லாச் சேண் நெடுந்தூரத்து அந்தம் இல் இன்பத்து அரசு ஆள்வேந்து என்று-உள்ளமும் செல்லமாட்டாத மிகவும் நெடுந்தொலைவிலுள்ள முடிவில்லாத இன்பமாகிய வீட்டுலகத்தை அரசாட்சி செய்திருக்கின்ற வேந்தன் ஆயினை நீ என்று; என் திறம் உரைத்த-எனது தன்மையை யெடுத்துக் கூறிய: இமையோர் இளங்கொடி தன்திறம் உரைத்த தகைசால் நன்மொழி-தேவர்களின் மகளாகிய கண்ணகித் தெய்வத்தின் தன்மையைக் கூறிய அழகு பொருந்திய நல்லமொழிகளை (யுடைய இக் காப்பியத்தினை) என்க.

(விளக்கம்) யானும் சென்றேன் என்றது இளங்கோவடிகளார் தம்மையே குறித்த படியாம். முன்னர்ச் செங்குட்டுவன் முதலிய அரசர்களும் தானைத் தலைவரும் கோயில் முன்றிலின்கண் குழுமி நின்றமையின் அடிகளார் அக் கூட்டத்துடன் கலந்து கொள்ளாதவராய் அவர்கள் சென்றபின்னர்த் தாம் மட்டும் தமியராய்ச் செல்லல் வேண்டிற்று. துறவறம் போற்றுகின்ற அடிகளார்க்கு அங்ஙனம் தமித்துச் செல்லுதல் பொருத்தமாதல் உணர்க. தேவந்திகைமேல்  கண்ணகித் தெய்வத்தின் ஆவியுருவம் ஏறி என் எதிர் எழுந்து வந்தது என்றவாறு. தெய்வம் ஏறினமைக்கு அறிகுறியான மெய்ப்பாடுகள் எல்லாம் தேவந்திகைமேல் காணப்பட்டமையின் தேவந்திகை மேல் திகழ்ந்து தோன்றி என்றார். (173) வஞ்சிமூதூர் என்பது தொடங்கி (182) அரசாள் வேந்து என்பது ஈறாகத் தேவந்திகையின் வாயிலாய் அக் கண்ணகித் தெய்வம் கூறியவற்றை அடிகளார் கொண்டு கூறிய படியாம். நுந்தை-உன் தந்தை இருந்தோயாகிய நின்னை என்க. திருப்பொறி-சிறந்த இல்க்கணம். திருவுண்டாக்கும் ஊழ்வினை எனினுமாம். உரைசெய்தவன்-நிமித்திகன். உருத்துநோக்குதல்-சினந்து நோக்குதல். மூத்தோன் இருக்க இளையோன் அரசாளல் கோத்தருமம் அன்மையின் செங்குட்டுவன் அந் நிமித்திகன் கூற்றைக் கேட்டு வருந்துவனல்லனோ! அவ் வருத்தம் நீங்கும்பொருட்டு என்பது படச் செங்குட்டுவன் தன் செல்லல் நீங்க என்றபடியாம் பகல்செல் வாயில் என்றது குணவாயில் கோட்டத்தை. படியோர்-நோன்புடையோர். அரைசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டு என்று உரை செய்த நிமித்திகன் மொழியினை அந்தமில் இன்பத்து அரசு ஆள் வேந்தனாகும் ஆற்றல் மெய்ம்மையாக்கினை என அத் தெய்வம் பாராட்டினபடியாம். இளங்கொடி என்பது மகள் என்னும் பொருட்டாய் நின்றது. அவள் தன்றிறம். இக் கண்ணகியின் வரலாறு. தகைசால் நன்மொழி என்றது இக் காப்பியத்திற்கு ஆகுபெயர். 

இளங்கோவடிகளார் இக்காப்பியம் கேட்டமையின் பயன் இவையென அறிவுறுத்துதல்

185-202: தெரிவுற.................ஈங்கென்

(இதன் பொருள்) தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்-நன்கு பொருள் தெளிவுறும்படி கேட்டமையால் உண்டாகும் அறிவுச் செல்வத்தின் தகுதியைப் பெற்றுள்ள நன்மையுடையீரே!; பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்-போகூழ் காரணமாகப் பொருள் முதலியன இழப்பு நேருமிடத்தும் பிறரால் துன்பம் நேருமிடத்தும் பரிவுறுதலும் இடுக்கணுறுதலும் நுமக்கு அயலாகும்படி விலகிவிடுமின்; தெய்வந் தெளிமின்-தெய்வம் உண்டு என்பதனையும் அதன் நியதிப்படியே இவ்வுலகியல் நிகழ்கின்றது என்னும் உண்மையையும் ஐயந்திரிபறத் தெரிந்து கொள்மின்; தெளிந்தோர்ப் பேணுமின்-அவற்றைத் தெளிந்திருக்கின்ற பெரியோரைப் போற்றி அவர்தம் அறிவுரையின் படி ஒழுகுமின்; பொய்யுரை அஞ்சுமின்-எஞ்ஞான்றும் பொய் கூறுதற்கு அச்சம் கொள்ளுமின்; புறம்சொல் போற்றுமின்-புறங்கூறுதல் ஒழித்துக் தூயராகுமின்; ஊன் ஊண் துறமின்-ஊன் உண்ணுதலை விட்டொழியுங்கள்; உயிர்க்கொலை நீங்குமின்-உயிர்களைக் கொல்லுந் தொலினின்றும் விலகுமின்; தானம் செய்மின்-இயலுந்துணையும் வழங்குமின்; தவம்பல தாங்குமின்-நோன்புகள் பலவற்றையும் மேற்கொள்ளுங்கள்; செய்ந்நன்றி கொல்லன்மின்-பிறர் உமக்குச் செய்த நன்மையை மறந்து விடாதீர்கள்; தீநட்பு இகழ்மின்- கூடா நட்பினை இகழ்ந்து கைவிடுமின்; பொய்க்கரி போகன் மின்-பொய்ச்சான்று கூறுதற்கு அறங்கூறவையம் ஏறப் போகா தொழியுங்கள்; பொருள் மொழி நீங்கன்மின்-உறுதிப் பொருள் பயக்கும் அறவோர் மொழிக்கு மாறாக ஒழுகன்மின்; அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்-அறவோர்கள் குழுமியிருக்கின்ற அவையிடத்தை ஒருபொழுதும் அகலாமல் அணுகி இருமின்; பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர் மின்-தீவினையாளர் கூட்டத்தினின்றும் எங்ஙனமாயினும் தப்பிப் போய்விடுமின்; பிறர்மனை யஞ்சுமின் -பிறர்மனைவியை நோக்குதற்கும் அஞ்சுமின்; பிழையுயிர் ஓம்புமின்-துன்புறுகின்ற உயிரினங்களைப் பாதுகாவல் செய்மின்; அறமனை காமின்-அறத்தாற்றில் மணந்துகொண்ட மனைவியைக் கைவிடாது போற்றுமின்; அல்லவை கடிமின்-வரைவின் மகளிரை மருவுதல் முதலிய தீய ஒழுக்கங்களைக் கைவிடுமின்; கள்ளுங்களவும் காமமும் பொய்யும் வெள்ளைக்கோட்டியும் விரகினில் ஒழிமின்-கள்ளுண்ணுதலையும் களவுகொள்ளுதலையும் பிற மகளிரைக் காமுறுதலையும் பொய்மொழிதலையும் வறுமொழியாளரொடு கூடியிருத்தலையும் எவ்வகை உபாயத்தினாலேனும் ஒழித்து விடுமின்; மல்லல் மா ஞாலத்து வாழ்வீர்-வளம் பொருந்திய பெரிய இந்நிலவுலகத்திலே பெறுதற்கரிய மக்கள் யாக்கை பெற்று வாழ்கின்ற மாந்தர்களே நீவிர் எல்லாம்; ஈங்கு இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா-நீங்கள் பெற்றிருக்கின்ற இவ்வுடம்பும் அதன் இளமைப் பருவமும் இவற்றிற்கு இன்றியமையாத பொருள்களும் நும்மிடத்தே நிலைத்திருக்கமாட்டா, ஆதலாலே; உளநாள் வரையாது-நுமக்கென நுமது ஊழ்வினை வகுத்துள்ள நுமது வாழ் நாள்களை வீழ்நாளாகச் செய்யாமல்; ஒல்லுவது ஒழியாது-நும்மால் செய்யக்கடவ நல்லறங்களை இடையறாமல் செய்து; செல்லும் தேஎத்துக் குறுதுணை தேடுமின்-இவ்வுலகினின்றும் இறந்து இனி நீர் செல்லவிருக்கின்ற இடத்தின்கண் நுமக்கு மிக்க துணையாகின்ற அறத்தையே தேடிக்கொள்வீராக என்பதாம்.

(விளக்கம்) பரிதல்-இழப்பிற்கு வருந்துதல். இடுக்கண்-தாம் செய்யும் வினைக்குத் தடையுண்டாதல் முதலிய துன்பங்கள். பாங்கு பக்கம். இவற்றிற்கு உள்ளத்தில் இடங்  கூடக் கொடுத்தல் வேண்டா என்பார் அவை நுமக்குப் பக்கத்திலே போம்படி அவற்றை நீங்கள் நீங்கிப்போமின் என்பது கருத்து. தெய்வம்-ஊழ்வினை. அது தெய்வத்தின் ஆணையேயாதலின் ஆகுபெயர். தெளிந்தோர்-மருளறு காட்சியுடைய மேலோர். புறஞ்சொல்லாமல் நும்மைப் போற்றிக்கொள்ளுமின் என்றவாறு. ஊன் உண்ணுதலும் கொலைக்குடன்படும் குற்றமாகலின் ஊனூண் துறமின் என்றார். தானம்-சான்றோர்க்கு வழங்குதல். இளம்பற்றி இரவலர்க்கு வழங்கும் ஈதலும் கொள்க. தவம் நோன்பு. அவை கொல்லாமை பொய்யாமை ஊனுண்ணாமை முதலியனவாகப் பலவகைப் படுதலின் தவம் பல தாங்குமின் என்றார். தாங்குதல்-மேற்கொள்ளுதல். செய்ந்நன்றி கொல்வார்க்கு உய்வின்மையின் செய்ந்நன்றி கொல்லன்மின் என்றார். தீ நட்பு-தீயோர் நட்பு. அது தீவினைக்குக் காரணமாதலின் துவர விடுமின் என்பார் இகழ்மின் என்றார். பொய்க்கரி-பொய்ச்சான்று. பொருள் மொழி-அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப்பொருள் பயக்கும் மொழி. அறவோர்-எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர். மனம் தீவினை நயத்தலும் நல்வினை நயத்தலும் இனம்பற்றி வருதலின் அறவோர் அவைக்களம் அகலாதணுகுமின் எனவும் பிறவோரவைக் களம் பிழைத்துப் பெயர்மின் எனவும் அறிவுறுத்தினார். பிழையுயிர்-இன்னலுறும் உயிர். அவற்றை ஓம்புதலாவது உணவும் மருந்தும் வழங்கிக் காத்தல். அறமனை-அறத்தாற்றில் மணஞ்செய்து கொண்ட மனைவி. அல்லவை-அறமல்லாதவை. அவை வரைவின் மகளிர் முதலியோரைக் காமுறுதல் முதலியன. வெள்ளைக் கோட்டி- அறிவிலிகள் கூட்டம். தாம் விட்டொழித்தாலும் அவர் தாமே வந்து அணுகுதலும் உண்டாகலின் ஏதேனும் உபாயத்தால் அவர் கூட்டத்தைத் துவரக் கைவிட்டொழியும் என்பார் விரகினில் ஒழிமின் என்றார். விரகு-உபாயம். உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது என்பதற்கு அறுதியிட்டுள்ள வாழ்நாள் கழிதலைக் கைவிடாது சாரக்கடவதாய துன்பம் சாராது நீங்காது என்பாருமுளர். அவ்வுரை போலி நுமக்கென வரைந்த வாழ்நாளில் சிலவற்றை வரையாமலும் இயலும் அறத்தை ஒழியாமலும் செய்து செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின் என்க.

பா. நிலைமண்டில ஆசிரியப்பா

கட்டுரை

முடி உடை வேந்தர் மூவருள்ளும்
குட திசை ஆளும் கொற்றம் குன்றா
ஆர மார்பின் சேரர் குலத்து உதித்தோர்
அறனும், மறனும், ஆற்றலும், அவர்-தம்
பழ விறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும்,  5

விழவு மலி சிறப்பும், விண்ணவர் வரவும்,
ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டுக்
குடியின் செல்வமும், கூழின் பெருக்கமும்,
வரியும், குரவையும், விரவிய கொள்கையின்,
புறத் துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய  10

மறத் துறை முடித்த வாய் வாள் தானையொடு
பொங்கு இரும் பரப்பின் கடல் பிறக்கு ஓட்டி,
கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய
செங்குட்டுவனோடு ஒரு பரிசு நோக்கிக்
கிடந்த வஞ்சிக் காண்டம் முற்றிற்று. 15

1-15: முடியுடை..............முற்றிற்று

(இதன் பொருள்) முடியுடைய வேந்தர் மூவருள்ளும்-வடவேங்கடம் தென் குமரி ஆயிடைக் கிடந்த தமிழ் கூறும் நல்லுலகத்தை ஆளுகின்ற முடியுடைய வேந்தர்களாகிய சோழரும் பாண்டியரும் சேரரும் ஆகிய மூன்று மன்னர்களுள் வைத்து; குடதிசை யாளுங் கொற்றங் குன்றா ஆர மார்பிற் சேரர் குலத்து உதித்தோர்-மேற்றிசைக் கண்ணதாகிய சேரநாட்டினையாளும் வெற்றி குறையாத மணியாரம் அணிந்த மார்பினையுடைய சேரர் குலத்துப் பிறந்த வேந்தருடைய; அறனும் மறனும் ஆற்றலும்-அறப்பண்பாடும் மறச்சிறப்பும் இவற்றில் அவர்களுக்குரிய ஆற்றலும்; அவர்தம் பழவிறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும்-அச் சேரருடைய பழைய வெற்றியையுடைய பழைய நகரமாகிய வஞ்சி மாநகரத்தின் தலைமைப்பண்பு மேம்பட்டுத் திகழ்தலும் விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும்-அம் மாநகரின்கண் திருவிழாக்கள் மிக்குள்ள சிறப்பும் தேவர்கள் வருதலும்; ஒடியா இன்பத்து அவருறை நாட்டுக் குடியின் செல்வமும் கூழின் பெருக்கமும்-கெடாத இன்பங்களையுடைய அவர் வாழுகின்ற நாட்டின்கண் வழிவழியாக வாழ்ந்து வருகின்ற நற்குடிகளின் செல்வச்சிறப்பும் உணவுப் பொருள்களின் பெருக்கமும், ஆகிய இவற்றோடே; வரியுங் குரவையும் விரவிய கொள்கையின்-பாடலும் ஆடலும் தம்முள் விரவிய கோட்பாட்டினையுடைய; புறத்துறை மருங்கின்-புறத்திணைக்குரிய துறைகளுக்கேற்ப அறத்தொடு பொருந்திய மறத்துறை முடித்த-அறத்தோடு கூடிய போர்களைச் செய்து முடித்த; வாள்வாய் தானையொடு பொங்கு இரும்பரப்பின் கடல் பிறக்கோட்டி-வாள்வென்றி வாய்த்த படைகளோடே சென்று பொங்குகின்ற பெரிய பரப்பினையுடைய கடலில் வருகின்ற பகைவரொடு போர் செய்து புறங்கொடுத்தோடும்படி செய்து பின்னரும்; கங்கைப் பேர்யாற்றுக் கரைபோகிய-கங்கை என்னும் பேரியாற்றினது கரையின் வழியாக இமயமலை வரையில் போர் மேற்சென்ற செங்குட்டுவன் என்னும் சிறந்த மன்னனோடு; ஒரு பரிசு நோக்கிக்கிடந்த வஞ்சிக் காண்டம் முற்றிற்று-ஒரு தன்மையாக நோக்கும்படி கிடந்த வஞ்சிக் காண்டம் என்னும் இம் மூன்றாம் பகுதியும் முற்றிற்று என்க.

(விளக்கம்) இக் காண்டத்திற் கூறும் செய்தியெல்லாம் செங்குட்டுவனோடு தொடர்புபட்டுக் கிடத்தலின் செங்குட்டுவனோடு ஒரு பரிசு நோக்கிக் கிடந்த வஞ்சிக்காண்டம் என்றார். இச் சேரருடைய அறப் பண்பும் மறப்பண்பும் ஆற்றற்சிறப்பும் இக் காண்டத்தில் ஆங்காங்கு வருதல் காண்க. விழவு மலி சிறப்பு வாழ்த்துக் காதையால் உணர்க பிறவும் அன்ன.

வரந்தரு காதை முற்றிற்று

வஞ்சிக் காண்டம் முற்றிற்று

நூல் கட்டுரை

குமரி, வேங்கடம், குண குட கடலா,
மண் திணி மருங்கின் தண் தமிழ் வரைப்பில்,
செந்தமிழ் கொடுந்தமிழ் என்று இரு பகுதியின்,
ஐந்திணை மருங்கின், அறம், பொருள், இன்பம்,
மக்கள் தேவர் என இரு சார்க்கும்   5

ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர,
எழுத்தொடு புணர்ந்த சொல் அகத்து எழு பொருளை
இழுக்கா யாப்பின் அகனும் புறனும்
அவற்று வழிப்படூ உம் செவ்வி சிறந்து ஓங்கிய
பாடலும், எழாலும், பண்ணும், பாணியும்  10

அரங்கு, விலக்கே, ஆடல், என்று அனைத்தும்
ஒருங்குடன் தழீஇ, உடம்படக் கிடந்த
வரியும், குரவையும், சேதமும், என்று இவை
தெரிவுறு வகையான், செந்தமிழ் இயற்கையில்,
ஆடி நல் நிழலின் நீடு இருங் குன்றம்  15
காட்டு வார்போற் கருத்துவெளிப் படுத்து
மணிமே கலைமேல் உரைப்பொருள் முற்றிய
சிலப்பதி காரம் முற்றும்.

1-18: குமரிவேங்கடம்...................முற்றும்

(இதன் பொருள்) குமரி வேங்கடம் குண குட கடலா மண் திணி மருங்கில் தண் தமிழ் வரைப்பில்-தென்றிசைக்கண் குமரித்துறையும் வடதிசைக்கண் திருவேங்கட மலையும் கிழக்கிலும் மேற்கிலும் கடல்களும் எல்லையாக இவ்வெல்லைக்குள்ளமைந்த மண் திணிந்த நிலைப்பகுதியாகிய குளிர்ந்த தமிழ்மொழி வழங்குகின்ற இந் நாட்டின்கண்; செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிருபகுதியின்-செந்தமிழ் நாடும் கொடுந்தமிழ் நாடும் என்று இரு கூறு பட்ட நிலத்தின்கண்; ஐந்திணை மருங்கின்-குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து வகைப்பட்ட நிலங்களிலே வாழ்வார்க்கு; அறம் பொருள் இன்பம்-உறுதிப் பொருளாகிய அறமும் பொருளும் இன்பமுமாகிய மூன்றனையும்; மக்கள் தேவர் என இருசார்க்கும் ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர-உயர்திணை என்று கூறப்படுகின்ற மக்களும் தேவருமாகிய இருதிறத் தார்க்கும் பொருந்திய முறைமையோடே கூடிய ஒழுக்கத்தோடு சேரும்படி; எழுத்தொடு புணர்ந்த சொல் அகத்தில் எழுபொருளை எழுத்தும் அவ்வெழுத்துக்களோடு கூடிய சொல்லும் அச் சொற்களினின்றும் தோன்றுகின்ற பொருள்களும்; இழுக்கா யாப்பின்-வழுவில்லாத செய்யுளாலே; அகனும் புறனும் அகப்பொருளும் புறப்பொருளுமாகிய இருவகைப் பொருளும்; அவற்று வழிப் படூஉஞ் செவ்வி சிறந்து ஓங்கிய-அவ்விருவகைப் பொருள் வழிப்படுகின்ற அழகு சிறந்து உயர்ந்த; பாடலும் எழாலும் பண்ணும் பாணியும்-பாட்டும், யாழும், பண்ணும்; தாளமும், அரங்கு விலக்கு ஆடல் என்று அனைத்தும்-கூத்தாட்டரங்கமும், விலக குறுப்பும், கூத்தும் என்று கூறப்படுகின்ற இவையெல்லாம்; ஒருங்கு உடன் தழீஇ உடன்படக் கிடந்த-ஒருசேரத் தழுவிக் கொண்டு ஒன்றுபட்டுக் கிடந்த; வரியும் குரவையும் சேதமும் என்றிவை-வரிப்பாடலும், குரவைக் கூத்தும் சேதமும் என்னும் இவை எல்லாம்; தெரிவுறு வகையால்-யாவர்க்கும் விளங்கும் ஒரு முறைமையாலே; செந்தமிழ் இயற்கையின்-செந்தமிழுக்குரிய இலக்கணத்தோடே; ஆடி நன்னிழலின் நீடு இருங்குன்றம் காட்டுவார்போல்-கண்ணாடியின் தெளிந்த நிழலின்கண் உயர்ந்த பெரிய மலையின்துருவத்தை நன்கு காட்டுவார்போல்; கருத்து வெளிப்படுத்து-நூலாசிரியரின் கருத்துக்களையும் நன்கு வெளிப்படுத்திக் காட்டி; மணிமேகலை மேலுரைப் பொருண்முற்றிய-மணிமேகலை என்னும் மற்றொரு காப்பியத்திலே சென்று தான் உரைக்கவேண்டிய பொருள்களுள் இறுதியில் நின்ற வீடு என்னும் பொருள் முற்றுப்பெறுதற்குக் காரணமான; சிலப்பதிகார முற்றும்-இளங்கோவடிகளார் செய்த சிலப்பதிகாரமென்னும் இப் பெருங்காப்பியம் இனிது முற்றுப் பெற்றது.

(விளக்கம்) இக் கட்டுரை நூலாசிரியராலன்றிப் பிறராற் செய்யப் பட்டது. ஏனைக் காண்டங்களுக்கும் இங்ஙனம் வருகின்ற கட்டுரைகளும் நூல்முகப்பில் நின்ற உரைபெறு கட்டுரையும் பிறராற் செய்யப்பட்டன என்பதே எமது துணிவு. இவ்வாற்றால் இக் கட்டுரையின்கண் வரியும் குரவையும் சேதமும் என்பன போலப் பொருத்தமில்லாத தொடர்கள் வருதலும் காண்க. மேலும் இச் சிலப்பதிகாரத்திலேயே வீடுபேறும் கூறப்பட்டிருத்தலும் உணர்க. இதன் பொருள் மணிமேகலையிற் சென்று முற்றும் என்பது பொருந்தாக் கூற்று.

நூற் கட்டுரை முற்றிற்று.

சிலப்பதிகாரம் முற்றிற்று.