Author Topic: ~ ஓநாயும் நரியும் ! ~  (Read 708 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218418
  • Total likes: 23087
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ ஓநாயும் நரியும் ! ~
« on: July 22, 2015, 10:49:26 PM »
ஓநாயும் நரியும் !



அடர்ந்த காடு ஒன்றில் ஓர் ஓநாயும் நரியும் வசித்துவந்தன. நரியைவிட ஓநாய் பலசாலி என்பதால், ஓநாய் சொல்லும் வேலைகளை எல்லாம் நரி செய்துவந்தது. நாட்கள் செல்லச் செல்ல ஓநாயின் கொடுமைகளை நரியால் தாங்க முடியவில்லை.

ஒருநாள் காட்டு வழியாக இரண்டும் சென்றுகொண்டிருந்தன. அப்போது ஓநாய் நரியைப் பார்த்து, 'ஏய் சோம்பேறி... எனக்குப் பசிக்கிறது. எங்கேயாவது போய் சாப்பாடு கொண்டு வா. இல்லாவிட்டால் உன்னைச் சாப்பிட்டுவிடுவேன்' என்றது.

நரி பக்கத்தில் இருந்த கிராமத்துக்குச் சென்றது. அங்கே ஓர் ஆடு, இரண்டு குட்டிகளைப் போட்டிருந்தது. அதில் ஒரு குட்டியைப் தூக்கிவந்து ஓநாயிடம் கொடுத்தது. ஓநாய் அந்த ஆட்டுக் குட்டியைச் சாப்பிட்டு முடித்தது. அப்படியும் அதற்குப் பசி அடங்கவில்லை. தானே கிராமத்துக்குள் சென்று இன்னொரு ஆட்டுக் குட்டியையும் பிடிக்க முயற்சிசெய்தது. ஆனால், ஓநாயைப் பார்த்ததும் தாய் ஆடு கத்த ஆரம்பித்தது.

கிராமத்துக்காரர்கள் விழித்துக்கொண்டார்கள். அந்தக் கிராமத்துக்குள் காணமல்போன ஆடு, கோழிகளுக்கு எல்லாம் இந்த ஓநாய்தான் காரணம் என்று அதை நையப் புடைத்து அனுப்பினார்கள். உடம்பு முழுவதும் வீங்கிப்போய் காட்டுக்கு வந்துசேர்ந்தது ஓநாய்.

அடுத்த நாள், ஓநாயும் நரியும் வயல் வழியாகப் போய்க்கொண்டிருந்தன. அப்போதும் ஓநாய் நரியைப் பார்த்து, 'ஏய் சோம்பேறி... எனக்குப் பசிக்கிறது. சாப்பாடு கொண்டு வா. இல்லாவிட்டால் உன்னைச் சாப்பிட்டுவிடுவேன்' என்றது.

'இங்கே ஒரு வீட்டில் ரொட்டி சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் போய் எடுத்து வருகிறேன்' என்று சொல்லிவிட்டுச் சென்றது நரி.

அந்த வீட்டுக்குள் நுழைந்த நரி, வீட்டுப் பெண்மணி பார்க்காத நேரத்தில் ஆறு ரொட்டிகளைத் திருடிவந்து ஓநாயிடம் கொடுத்தது. ரொட்டிகள் மிகவும் சுவையாக இருந்ததால், எல்லாவற்றையும் வேகமாகச் சாப்பிட்டு முடித்தது ஓநாய்.

'ஆகா என்ன சுவை. என் பசி மேலும் கூடிவிட்டது!' என்ற ஓநாய், மேலும் ரொட்டிகளைத் தேடி அந்த விவசாயியின் வீட்டுக்குப் போனது. அங்கே போய் ரொட்டியை எடுக்க முயற்சித்தபோது, ஒரு பாத்திரத்தைத் தட்டிவிட்டது. 'கடா.. முடா’ என ஏற்பட்ட பெரும் சத்தத்தால், விவசாயியின் மனைவி ஓநாயைப் பார்த்துவிட்டாள்.

உடனே சத்தம் போட்டு ஊர் மக்களைக் கூட்டிவிட்டாள். எல்லோரும் சேர்ந்து ஓநாயை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார்கள். நொண்டிக்கொண்டே காட்டுக்குள் வந்த ஓநாய், 'இதெல்லாம் உன்னுடைய சதிதான்'' என்று நரியைத் திட்டியது.

அடுத்த நாளும் வயல்வெளியில் ஓநாயும் நரியும் சென்றுகொண்டிருந்தன. கால்களில் அடிபட்டு இருந்ததால், கால்களை இழுத்தபடியே நடந்து வந்த ஓநாய், 'இப்போது எனக்குப் பசிக்கிறது. ஏதாவது கொண்டுவராவிட்டால், உன்னைத் தின்றுவிடுவேன்' என்றது.

'இறைச்சி விற்பவனின் வீடு அருகில்தான் இருக்கிறது. அங்கே போய் இறைச்சித் துண்டை எடுத்து வருகிறேன்' என்றது நரி.

'நானும் உன்னுடன் வருகிறேன். தனியாகப் போனால், யாரிடமாவது மாட்டி அடி வாங்கிக்கொண்டே இருக்கிறேன்' என்றது ஓநாய்.

இரண்டும் அந்த வீட்டுக்குச் சென்றன. அந்த வீட்டின் சுவரில் ஒரு சிறிய துளை இருந்தது. அதன் வழியாக இரண்டும் உள்ளே சென்று, அங்கே இருந்த இறைச்சியைத் தின்றன. நரி மட்டும் அந்தத் துளை வழியாக வெளியே போவதும் உள்ளே வருவதுமாக இருந்தது. அந்தத் துளை வழியாக வெளியே செல்லக்கூடிய அளவுக்கு மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதால் அப்படிச் செய்தது.

இதைப் பார்த்த ஓநாய், 'என்ன செய்கிறாய்?' என்று கேட்டது.

'யாராவது வருகிறார்களா என்று பார்க்கிறேன்' என்றது நரி.

'கிடைத்தது விருந்து’ என்று ஏகத்துக்கும் சாப்பிட்டுக் கொண்டிருந்தது ஓநாய். ஒரு கட்டத்தில், சாப்பிடுவதை நிறுத்திவிட்டது நரி. திடீரென இறைச்சிக் கடைக்காரன் அங்கே வந்துவிட்டான். அவனைப் பார்த்த நரி, அந்தத் துளையின் வழியாக வெளியேறிவிட்டது. ஓநாய் நிறையச் சாப்பிட்டுவிட்டதால், அதனால் வெளியேற முடியவில்லை. நன்றாக மாட்டிக்கொண்டது.

தன் இறைச்சி எல்லாம் போய்விட்டது என்ற ஆத்திரத்தில் அவன் ஓநாயை அடி அடி என்று அடித்தான். ஓநாய் பரிதாபமாக இறந்துபோனது.

அதற்குப் பிறகு, நரி நிம்மதியாக வசிக்க ஆரம்பித்தது.