Author Topic: திருக்குர்ஆனும் மனிதனும்!  (Read 850 times)

Offline Yousuf

‘மனிதன் சுதந்திரமுள்ளவன், பொறுப்புள்ளவன்,

நன்மை தீமைகளை பிரித்தறியும் ஆற்றல் உள்ளவன்,

இறைவனுடைய சட்டங்களுக்க கீழ்படியும் இயல்புள்ளவன்.

அவன் செய்த பாவங்களுக்காக பிறர் பிணை நிற்க வேண்டிய அவசியமில்லை.

அவனது குற்றங்களுக்காகவும், பாவங்களக்காகவும் அவனே மன்னிப்புக் கேட்க வேண்டும்.

அருளும், அன்பும், இரக்கமும் நிறைந்த இறைவன் அவனுடைய பாவங்களை மன்னிப்பான்’ என்கிறது திருக்குர்ஆன்.

‘ஒவ்வொரு குழந்தையும் இறைவனுக்கு கீழ்படியும் சட்டத்திற்குட்பட்டு, அதாவது முஸ்லீமாகவே பிறக்கின்றது’ என்று நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

அவ்வாறு தூய்மையாகப் பிறந்த குழந்தை, பிறகு, சூழ்நிலையின் காரணமாக மாறுபட்டு விடுகின்றது. குழந்தை மனிதனாக வளர்கின்றது. அந்த மனிதன் இறைவனால் அவனுக்கு அருளப்பட்ட பகுத்தறிவைப் பயன்படுத்துகின்றான். நல்லவனாகவோ கெட்டவனாகவோ ஆகின்றான்.
அவன் தீமை செய்தால் வருந்தி பாவமன்னிப்புத் தேடுவதற்காக இறைவன் அவனுக்கு நீண்ட அவகாசம் அளிக்கின்றான். எனவே, ஆன்மீகத்துறையில் முன்னேற்றம் அடைவதும், அடையாததும் மனிதன் கையில் இருக்கிறது.

அவன் இறைவனை முழுமனதுடன் நம்பி பாவமன்னிப்பு கோரினால் இறைவன் அவனை மன்னிக்கின்றான். பிறகு, இறையருளால் நற்கருமங்களைச் செய்ய ஆரம்பிக்கின்றான். தான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இறைவனுடைய கருணையும், உதவியும் கிடைக்கிதென உணர்கின்றான். மரணம் வந்தால் புன்முறுவலுடன் ஏற்றுக்கொள்கிறான். அதாவது, மரணத்திற்கு முன்னால் மரணித்து காருண்யம் நிறைந்த இறைவனுடைய திருவருளைப் பெறுகின்றான்.


திருக்குர்ஆனில் ‘திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம். எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு.’ (அல்குர்ஆன்: 95: 4,5,6)

எனவே மனிதனிடம் இரண்டு விதமான நன்மைகள் அமைந்துள்ளன. ஒன்று மிருகத் தன்மை. மற்றொன்று தெய்வீகத் தன்மை. மிருகத் தன்மையை அகற்றி விட்டுத் தூய்மையான ஆன்மீகப் பாதையில் செல்லும் மனிதன் இறைநேசனாகி விடுகின்றான். இத்துறையில் முன்னேறிச் செல்லும் மனிதனுக்கு இறைவனுடைய உதவி நிச்சயமாகக் கிடைக்கின்றது.

மனிதனுடைய கடமையெல்லாம் முழுமுயற்சி செய்து இறைவனுடைய பிரியத்தையும் கருணையையும் பெறுவதற்காக முயற்சி செய்தலே. அவ்வாறு செய்யும் மனிதனுக்கு நன்னெறியில், அதாவது இறைநெறியில் செல்லுமாறு இறைவன் உதவி செய்வதாகத் திருக்குர்ஆனில் வாக்களிக்கின்றான்.

‘இறைவன் ஒருவனையே நோக்கி நற்கருமங்கள் செய்வோருக்கு அவர்களுடைய இறைவனிடம் நற்கூலி உண்டு. அவர்கள்மீது அச்சம் வராது. ஆவர்கள் துக்கப்பட மாட்டார்கள்’ என்று இறைவனின் திருவேதம்; மிகத்தெளிவாகக் கூறுகின்றது. எனவே, மனிதன் ஈடேற்றம் (நஜாத்) அடைய வேண்டுமானால், இறைவன் ஒருவனையே நோக்கி படிப்படியாக அவன்பால் நெருங்கி அவனை அடைய வேண்டும் என்று திருக்குர்ஆன் போதிக்கின்றது.

நற்கருமங்கள் பாவங்களை அழித்து விடுகின்றன என்பது இஸ்லாமிய நம்பிக்கை. எனவே, மனிதன் தனது சக்திகளை நல்ல விதத்தில் பயன்படுத்தி, நற்கருமங்களைச் செய்து, இறைவனுடைய விருப்பத்திற்கிணங்கி நடக்க வேண்டும். கருணையாளனாகிய இறைவன் மனிதனை ஏற்றுக் கொண்டு அருள் செய்வான் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள்.

திருக்குர்ஆனில் எத்தனையோ இடங்களில் இறைவனுடைய படைப்புகள் அனைத்திலும் மனிதன் ஒருவனே தலைசிறந்தவன் எனக் கூறப்பட்டுள்ளது. அத்தகைய மனிதனுக்காக இப்பிரபஞ்சத்தில் உள்ள சூரியன், சந்திரன், காற்று, நீர், நெருப்பு உள்பட அத்தனைப் பொருள்களும் படைக்கப்பட்டு அவனுக்கு அடங்கி நடக்கும்படி செய்யப்பட்டுள்ளன. சுருங்கக் கூறுமிடத்து, மனிதனுக்காக இறைவன் அருளியுள்ள அருட் கொடைகளை மனிதன் கணிக்கவே முடியாது.

‘இறைவன் மனிதனக்கு சுயஆட்சி செய்யும் சக்தியை அளித்திருக்கின்றான்’ என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. நமது பொறுப்பை இறைவன் நம்மிடமே நம்பிக்கையுடன் கொடுத்து விட்டான் என்பதை உணரவேண்டும். உதாரணமாக இந்த பூமியை இறைவன் நம்மிடம் ஒப்படைத்துள்ளான். அதிலுள்ள பொருட்களை நாம் நல்லவிதத்தில் பயன்படுத்தி நமது வாழ்க்கையை வளமாக்க வேண்டும். சமுதாயத்திலுள்ள மக்களுடன் நேர்நெறியில் நடந்து, ஒழுக்கத்தையும் சமுதாய ஒற்றுமையையும் இன்பத்தையும் வளர்க்க வேண்டும். சமுதாய, அரசியல் சட்டங்களுக்குக் கீழ்படிந்து பொதுநலத்தில் பங்குபெற வேண்டும்.

நாம் நினைத்ததைச் செய்வதற்காக நமக்குச் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை எந்த முறையில் சமுதாய மக்கள் முக்காலத்திலும் பயன்படுத்துகிறார்களோ, அந்த அளவில் உலகிற்கு முன்னேற்றம் கிடைக்கும். எனவே மனித குலத்தின் படைப்பில் உயர்வும் தாழ்வும் வெற்றியும் தோல்வியும் அந்த மனித குலத்தையே சார்ந்தது.

மனிதன் அவசர புத்தியுள்ளவன். ஒரே நிலையற்றவன், நேர்மை தவறியவன், நன்றி கெட்டவன், பொறுமையில்லாதவன் என்றெல்லாம் மனிதனுடைய பலவீனத்தைப் பற்றி திருக்குர்ஆன் அடிக்கடி குறிப்பிடுகின்றது. இறைவனுடைய இந்த வசனங்கள் ஒரு தாய் தன் குழந்தையின் குறைகளை நினைத்து வருந்துவதைப் போன்ற வசனங்களாகும். இதன் உட்கருத்து என்னவென்றால், பலவீனமுள்ள ஒரு மனிதன் இறைவனின்பால் இரவும், பகலும் பிரார்த்தனை செய்து, நேர்வழி நடந்து, இம்மையிலும், மறுமையிலும் உயர்வடைய வேண்டும் என்பதே.

அதற்குரிய பிரார்த்தனை பின்வருமாறு:

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.

(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).

(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!

(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல. (அல்குர்ஆன்: 1: 1-7)


திருக்குர்ஆனில் மற்றோர் இடத்தில் இறைவனுடைய நீதியைக் குறிப்பிட்டு அதே சமயத்தில் அவனுடைய கருணையும் விளக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பிறகு, ஆத்மீகப் பாதையில் தள்ளாடிக் கொண்டு சென்று, நம்பிக்கை குறைந்து தன் உதவிக்காகவும், சக்திக்காகவும், இறைவனை நாடி நிற்கும் உதவியற்ற ஒரு மனிதனுடைய நெஞ்சிற்கு சாந்தியும், திருப்தியும், உறுதியும் அளிக்கின்ற மற்றொரு அழகான பிரார்த்தனையாவது:


‘அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே!’ (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;) ‘எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!’ (அல்குர்ஆன்: 2: 286)