Author Topic: நம் பெண்கள் மாட்டைவிடவா கேவலமாகி விட்டார்கள்?  (Read 2294 times)

Offline Yousuf

நினைத்துப் பார்த்தால் அருவருப்பாக இல்லை?

‘இப்போது நடக்கும் திருமணங்கள் வியாபாரம் போல் ஆகிவிட்டன.’ வியாபாரம் என்றால் பணத்தைக் கொடுத்து ஒரு பொருளை வாங்குவது அல்லது பொருளை விற்று பணத்தைப் பெறுவது.

சரி, நம் கையை விட்டுப் பணம் போகும் போது பொருள் நம் கைக்கு வர வேண்டும் – அது தான் வியாபாரம். ஆனால், திருமணத்தில் பணம் நம் கையை விட்டுப் போகிறது, பெண்ணும் போகிறாள், ஆனால், நம் கைக்கு எதுவும் வருவதில்லை.

இது எந்த வியாபார விதிக்கும் உட்பட்டதாக இல்லையே.. மோசடி வியாபாரமாக அல்லவா இருக்கிறது!

சந்தையில் மாடு விற்பவன் கூட மாட்டைக் கொடுத்து விட்டுப் பணத்தை எண்ணி வாங்கிக் கொள்கிறான். ஆனால் பெண்ணைப் பெற்றவனோ, பெண்ணையும் கொடுத்து, பொன்னையும் கொடுத்து, சீர் வரதட்சினை என்ற பெயரில் புழங்குவதற்கு சாமான்களையும் கொடுத்து, பிறகு பணத்தையும் கொடுக்கிறான்..

பெண் வீட்டிற்கு எத்தனை வீண் செலவுகள்!பெண் பார்த்தல், நிச்சயதார்த்தம், ஆடம்பரமான மண்டபம் அல்லது ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விருந்து, மறு வீடு என்று விருந்துக்கு மேல் விருந்தாகவும், பலகார வகைகள், சீர் என்று வித விதமான செலவினங்கள். கட்டில், பீரோ, ஏசி, ஃபிரிஜ் என்பதெல்லாம் காலத்தின் கட்டாயமாகிவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, தங்கம் விற்கும் விலையில் படித்த மாப்பிள்ளை என்றால் குறைந்த பட்சம் ஐம்பது பவுன் என்பது எழுதாத சட்டமாகி விட்டது.


நம் பெண்கள் மாட்டைவிடவா கேவலமாகி விட்டார்கள்?

இதை பெண்களும் யோசிக்க வேண்டிய விஷயம்..

பொன்னோடும், பொருளோடும் மாமியார் வீட்டுக்குப் போவது தான் பெருமை என்ற எண்ணத்தை பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இருந்தாலும், பலர் ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் எல்.ஐ.சி.இன் திருமகள் திருமணத் திட்டம் என்று வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கிகளில் சேமிக்கத் தொடங்கி விடுகின்றனர். காரணம், அப்படி சேர்க்கும் தொகை அவள் திருமண வயதில் வட்டியோடு குட்டி போட்டு பெருந்தொகையாக இருக்கும். இப்படி சேர்த்த பணத்தையோ, அல்லது வட்டிக்கு கடன்பட்டோ தான் கைக்கூலியாகவும், நகையாகவும், சீராகவும், கொடுக்கிறார்கள். நினைத்துப் பார்த்தால் அருவருப்பாக இல்லை?


பெண் தேடும் போது, தன்னை விட உயரமான பெண்ணை மணக்க ஒரு ஆண் விரும்புவதில்லை. தன்னை விட உயரம் குறைந்த பெண்ணையே மணக்க விரும்புகிறான்.
மனோதத்துவரீதியாகப் பார்த்தால், இதற்குக் காரணம், தன் மனைவியை விட தான் உயர்ந்திருக்க வேண்டும், அவள் அன்னாந்து பார்க்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான்.

உடலளவில் மட்டும் உயர்ந்திருந்தால் போதுமா?

உள்ளத்தால் உயருதல் தான் மனிதனுக்கு அழகு. ஒரு பெண்ணும் தன் கணவன் அப்படி உள்ளத்தால் உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவாள். அப்படிப்பட்டவனையே மதிப்பாள்.


இன்று எந்த லாபமும் கருதாமல் ஒரு பெண்ணை மணந்தால், அடுத்த தலைமுறையும் திருந்தும். இந்தப் ஈனப் பழக்கம் வேரோடு அழிந்து விடும். நம் உடலை விட்டு உயிர் பிரிந்த வினாடியே நாம் சொந்தம் என்று சொல்லிக் கொள்ளும் எதுவும் நமக்கு சொந்தம் இல்லாமல் போய்விடும்.