Author Topic: போலி டாக்டர்கள் பெருகுவது ஏன்?  (Read 2251 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.




போலி மருத்துவர்கள் பிடிபடுவது வழக்கமான செய்தி தான். ஆனால் ஒரே நாளில் நடத்திய சோதனையில் -மதுரை மாவட்டத்தில் மட்டும் பனிரெண்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டதாக தினகரன் இணையத்தில் வாசித்த செய்தி சற்றே திடுக்கிடத்தான் செய்தது. இவ்வளவு போலி மருத்துவர்களா? அன்றைக்கு தான் சர்வதேச மருத்துவர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டாலும் - தைரியமாக இன்னொரு பக்கம் போலி மருத்துவர்கள் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருப்பது எதனால்?

தினகரன் இணையம் தந்த செய்தியை பார்த்துவிட்டு - போலி மருத்துவர்கள் தொடர்ந்து இயங்குவதற்கும், பொதுமக்களின் ஆதரவு அவர்களுக்கு இருப்பதற்கும் என்ன காரணம் என்று பார்ப்போம். தினகரன் இணையம் தந்தி செய்தி. " நேற்றிரவு நடந்த அதிரடி சோதனையில் 12 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டத்தில் போலி டாக்டர்கள் அதிகளவில் கிளினிக் நடத்தி வருவதாக எஸ்பி பாலகிருஷ் ணனுக்கு புகார் வந்தது.

அவரது உத்தரவின் பேரில் போலி டாக்டர்களை கண்டுபிடிக்க அமைக் கப்பட்ட தனிப்படை போலீசார் நேற்றிரவு மாவட்டம் முழுவதும் தனியார் கிளினிக்குகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.இதில், மேலூரை அடுத்த கீழவளவில் கிளினிக் நடத்தி வந்த உலகநாதபுரத்தை சேர்ந்த சமயமுத்து (40), கூடக்கோவிலில் கிளினிக் நடத்திய எலியார்பத்தி பரமேஸ்வரன்(45), அவனியாபுரத்தில் கிளினிக் நடத்திய வில்லாபுரத்தை சேர்ந்த சம்சத்பானு (35), அதே பகுதியில் கிளினிக் நடத்திய வில்லாபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (55), சமயநல்லூர் பஸ் நிறுத்தம் எதிரில் கிளினிக் நடத்திய இளங்கோவன், தேனூ ரில் கிளினிக் நடத்திய விவேகானந்தன் உள்பட 12போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் சோதனையில் இவர்கள் டாக்டருக்கான முறையான படிப்பு படிக்கவில்லை என்பதும், போலி ஆவணங்கள் வைத்திருந்ததும் தெரிந்தது. போலீசார் போலி ஆவணங்களை கைப்பற்றினர். மதுரை மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் போலி டாக்டர்கள் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"
போலி மருத்துவர்கள் கைது தொடர்ந்தாலும், போலி மருத்துவர்கள் தொடர்ந்து இருப்பதற்கான காரணம் - பொதுமக்களின் ஆதரவு அவர்களுக்கு இருப்பதே காரணம். சரி போலி மருத்துவர்களை நாடுவது ஏன். பொதுமக்களுக்கு தெரியும். அவர்கள் மருத்துவ படிப்பு படிக்காதவர்கள் தாம் என்று. ஆனாலும் அவர்களை போலி மருத்துவர்களாக பொதுமக்கள் கருதுவதில்லை. "கம்பவுண்டர்" எனறோ "கம்பவுண்டர் டாக்டர்" என்றோ விளிக்கப்படுவார்கள். எனது பதினாறு வயது வரை, எங்கள் குடும்ப மருத்துவராக ஒரு கம்பவுண்டரே இருந்தார்.

அரசாங்கத்தின் பார்வைக்கு அவர் போலி மருத்துவரே. "கைராசியானவர்" என்று சொல்லப்படுபவராக இருந்தார். காலையில் ஒன்பதரை மணிக்கு கிளினிக்கை துவங்கினால் மதியம் இரண்டரை ஆகிவிடும். பிறகு ஐந்து மணிக்கு வந்தால் இரவு பதினொரு மணியாகிவிடும் கிளினிக்கை மூட... அசல் டாக்டரை விட இந்த நகல் டாக்டரை மக்கள் நிறையவே நம்பினார்கள். அர்ப்பணிப்பு உணர்வு அதிகம் இருந்தது. அவர் இறந்த பிறகு தான், வேறு வழியில்லாமல் அசல் டாக்டரை நாடியது.

அப்போதெல்லாம் அரசு, அத்தகைய மருத்துவர்கள் மீது யாதொரு நடவடிக்கை எடுத்து இருக்கவில்லை. மக்கள் எந்த நம்பிக்கையில் இத்தகைய கம்பவுண்டர்களை நாடுகிறார்கள். மக்களுக்கு தங்கள் அருகாமையில் ஒரு டாக்டர் தேவை. அவர் நியாயமான (குறைவான) கட்டணம் பெறுபவராக இருப்பது மிக அவசியம். புறநகர் பகுதிகளில், கிராமப்புறங்களில் அசல் டாக்டர்கள் கூட்டம் அதிகம் வராமல், கட்டுப்படியாகாத வருமானத்தில் கிளினிக் வைப்பது இயலாது காரியம்.

மேலும் பெரும்பாலானவர்கள் பெரிய நகரங்களில் வசிப்பதையே பெருமையாக, கௌரவமாக நினைக்கிறார்கள். மிகப்பெரிய மருத்துவமனை கட்ட வேண்டும் என்பதே அவர்களின் கனவாக உள்ளது. ஆனால் வியாதி, மருத்துவர்கள் இல்லாத ஊர் என்பதற்காக வராமல் இருப்பதில்லையே. அரசு சுகாதார மையங்கள் எல்லாமே சரியாக இயங்குகிறது என்று சொல்ல முடியாத சூழலில் பொதுமக்கள் பாவம் என்ன செய்வார்கள். போலி மருத்துவர்களை நாடுகிறார்கள் அல்லது மருந்து கடையில் வியாதியை சொல்லி மாத்திரையை வாங்கி விழுங்குகிறார்கள்.

மேலும் போலி மருத்துவர்கள் என்று சொல்லப்படுகிற கம்பவுண்டர்களில் - பரம்பரை மருத்துவர் இருப்பது போல பரம்பரை கம்பவுண்டர்களும் உண்டு. அவர்களிடத்தில் பரம்பரை பரம்பரையாக வைத்தியம் பார்க்கிறவர்களும் இருக்கிறார்கள். அறிவு கூர்மையில், நோயின் தன்மையை அறிவதில் மருத்துவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்றாலும் அவர்கள் போலி மருத்துவர்கள் என்றே சொல்லப்படுகிறார்கள். போலி மருத்துவர்கள் தொடர்ந்து இயங்க - வியாபாரமாகிவிட்ட இன்றைய மருத்துவ சூழலும், சாமானியன் மருத்துவமனைக்கு செல்ல அஞ்சுகிற சூழலுமே முதல் காரணம்.

"சாதாரண ஜுரம்" என்றாலும் தீட்டி விடுகிறார்கள். நம் ஜனத்தொகைக்கு ஏற்ப போதிய மருத்துவர்கள் இல்லை என்பதோடு வியாபாரமாகி விட்ட மருத்துவத்துறையும் - போலி மருத்துவர்கள் பெருக ஒரு காரணம். வியாபாரமாகிவிட்ட மருத்துவத்தின் விளம்பரம் ஒன்று இவ்வாறிருந்தது. கரு தரித்தது கண்டு பிடித்த நாள் முதல் பேறுகாலம் வரை க்கான மருத்துவ செலவு... இருபதாயிரம். உடனே அணுகவுமாம். பணத்தை கட்டிய பிறகு - அவர்களின் வைத்தியம் பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் அவர்கள் பின்னாலேயே செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள் போலும்.

இதே வியாபார தந்திரத்தை பெரும்பாலான பிரசவ மருத்துவமனைகள் கடைப்பிடிக்க துவங்கி விட்டால் ஏழை தாய்மார்களின் கதி. போலி மருத்துவர்கள் கைது செய்யப்படும் அதே வேளை - நகரம் முதல் குக்கிராமம் வரை சீரான மருத்துவ வசதி கிடைக்க அரசு ஆவன செய்ய வேண்டும். மக்கள் எதிர்பார்ப்பது அதையே.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்