Author Topic: மனங்களில் மகரஜோதி!  (Read 708 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
மனங்களில் மகரஜோதி!
« on: January 21, 2013, 03:54:46 AM »
டிச., 30 – சபரிமலை மகரவிளக்கு விழா ஆரம்பம்!

இறைவனை ஜோதி வடிவாக வழிபடும் வழக்கம், ஆதிகாலத்திலிருந்தே இருக்கிறது. இருள் சூழ்ந்த உலகிற்கு ஒளி தந்த சூரியனையும், சந்திரனையும் ஆதிமக்கள் கடவுளாகப் பார்த்தனர். இந்த வழக்கம் தான், எல்லா தெய்வங்களையும் ஒளி வடிவாகக் காண வைத்தது.
திருவண்ணாமலையிலும், முருகனின் மலைக்கோவில்களிலும், கார்த்திகை தீப வடிவில் இறைவனை ஒளி வடிவாக வணங்குகிறோம். அநியாயம் எனும் இருளின் வடிவமான நரகாசுரன் இறந்ததை, தீபமேற்றி தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.
வள்ளலாரின், "அருட்பெருஞ் ஜோதி’யை வடலூரில் தரிசிக்கிறோம். ஆக, அன்று முதல் இன்று வரை, ஒளியை தெய்வமாக வழிபடும் வழக்கம் இருந்துள்ளது.
அவ்வகையில், தர்ம சாஸ்தாவான ஐயப்பனை ஒளி வடிவில் தரிசிக்கும் நாளே, மகர ஜோதி திருநாள். சூரியன் தன் வடதிசை பயணத்தை துவக்கும் உத்தராயண காலத்தின் துவக்க நாளான மகரசங்கராந்தியன்று, அவரை ஒளி வடிவில் தரிசிக்கிறோம். இதற்காக, டிச., 30 முதல் ஜன., 20 வரை, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
பரசுராமர் அமைத்த கோவில்களில் ஒன்றே சபரிமலை. இங்கே தர்மசாஸ்தாவின் அவதாரமான ஐயப்பன் நித்திய பிரம்மச்சாரியாக இருக்கிறார். அதே நேரம், ஆரியங்காவு, அச்சன்கோவில் ஆகிய இடங்களில், பூர்ணா, புஷ்கலா என்ற துணைவியருடன் உள்ளார். தன் தீவிர பக்தரான பந்தள மன்னர் ராஜசேகரன், முந்தைய பிறவி ஒன்றில் வைத்த கோரிக்கையை ஏற்று, ஐயப்பன் என்ற பெயரில் அவருக்கு வளர்ப்பு மகன் ஆனார்.
அந்த பிறவியில், பிரம்மச்சாரியாக இருந்து, தன் தந்தைக்கு தொந்தரவு கொடுத்த கொள்ளைக்காரர்களை அழித்தார். இவர், சிவனுக்கும், விஷ்ணுவாகிய மோகினிக்கும் தர்மசாஸ்தாவாக அவதரித்த போது, மகிஷி என்ற அரக்கியை வதம் செய்தார்.
சபரிமலைக்கு முதலாவதாகச் செல்பவர்கள், கன்னி ஐயப்பன்மார் எனப்படுவர். இவர்கள் அவசியம், 41 நாள் விரதம் இருந்தே செல்ல வேண்டும். இதற்கு கார்த்திகை மாதம் என்றோ, மற்ற மாதங்கள் என்றோ, பாகுபாடு இல்லை. ஏற்கனவே சென்று வந்தவர்கள், குறைந்த பட்சம் ஐந்து நாட்களாவது விரதம் இருந்து, மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களில் செல்ல வேண்டும். மலை ஏறும்போது மிகுந்த சக்தி தேவைப்படுகிறது. எனவே, விரத நாட்களில் பிரம்மச்சரிய விரதத்தை அவசியம் கைக்கொள்ள வேண்டுமென விதி வகுக்கப்பட்டுள்ளது.
ருத்ராட்சம் அல்லது துளசி மாலை அணிந்து செல்ல வேண்டும். உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் இருமுறை குளித்தால் மட்டும் போதாது. மனதை அடக்கி, ஐயப்பனை மட்டும் மனதில் தாங்கி, மிகக் கடுமையாக விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
தெய்வங்களிலேயே ஐயப்பனுக்கு மாலை அணிபவரை மட்டும்தான், சுவாமி என சொல்வது வழக்கம். தெய்வமும், மனிதனும் ஒன்றாகி விடுவதையே இது காட்டுகிறது. பாவத்தையும், புண்ணியத்தையும் உள்ளடக்கிய இருமுடி கட்டு இருந்தால்தான் மலையையே மிதிக்க வேண்டும் என்பது விதி.
ஐயப்பனை, சாஸ்தா என்கின்றனர். இது, சாஸ்த்ரு என்ற சமஸ்கிருதச் சொல்லில் இருந்து உருவானது. சாஸ்த்ரு என்றால், அரிகரபுத்திரன். தமிழில் அய்யன், அப்பன் என்ற சொற்கள் பெருமைக்குரிய ஒருவரைக் குறிக்க கூறப்படுபவை. இதை இணைத்தே, அய்யப்பன் என்று பெயர் வந்து, ஐயப்பன் ஆக திரிந்திருக்க வேண்டும்.
சபரிமலை செல்பவர்கள், ஏதோ சுற்றுலா போல் எண்ணாமல், பயபக்தியுடன் சென்று வாருங்கள். ஒருமித்த தியான உணர்வுடன் சென்று வருவோரின் மனங்களில், அந்த ஐயப்பன் மகரஜோதியாய் ஒளிர்வான்.