Author Topic: மரபணு மாற்றப்பட்ட உயிரி!  (Read 646 times)

Offline micro diary

பருத்தித் தொழில் இந்திய பெருநிலப் பரப்பில் இருந்தே பிற நாடுகளுக்குப் பரவியதாக ஆங்கிலக் கலைக் களஞ்சியங்கள் குறிப்பிடுகின்றன. பருத்திச் சாகுபடி என்பது தமிழகத்தில் பன்னெடுங்காலமாக நடைபெற்று வரும் தொழில் ஆகும். பருத்தி ஆடைகள் பற்றியும் அவற்றின் வேலைப்பாடுகள் பற்றியும் சங்க இலக்கியங்கள் நிறையப் பேசுகின்றன.
"பருத்தின் பெண்டின் பனுவல் அன்ன" (புறநானூறு 125)
"பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து" - (புறநானூறு 326)
என்ற வரிகள் பெண்கள் பருத்தியில் இருந்து பஞ்சைப் பிரித்து நூல் நூற்பதைக் குறிப்பிடுகின்றன.
"அரவு உரி அன்ன உறுவை நல்கி" என்ற (பொருநர் ஆற்றுப்படை 83) வரி, பாம்புத் தோலைப் போன்ற உடைகளைப் பற்றிப் பேசுகின்றது.
"நூலினு மயிரினு றுழைநூற்பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்" (சிலம்:14:205-207)
என்ற சிலப்பதிகார வரிகள் தமிழகத்தில் ஆடைத் தொழிலின் உச்சத்தைக் குறிக்கின்றது.
இப்படியாக தமிழர்களின் வாழ்க்கை முறையோடு இணைந்து வந்த பருத்திச் சாகுபடியும் நெசவுத் தொழிலும் ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னர் பெரிதும் மாற்றம் அடைந்தது. நம்நாட்டின் பண்டைய பருத்தி இனங்கள் அழிக்கப்பட்டன. கருங்கண்ணிப் பருத்தி போன்ற நாட்டினப் பருத்திகள் மறைந்தன. ஆங்கிலேயர்கள் தங்களது யாங்கசயர் ஆலைகளுக்கு வேண்டிய நீண்ட இழைப் பருத்தியான அமெரிக்கப் பருத்தியைச் சாகுபடி செய்யச் சொல்லி வற்புறுத்தினர். நமது நாட்டினப் பருத்திகள் குட்டை இழைப் பஞ்சைக் கொண்டவை. இவை ராட்டைகளில் நூற்பதற்கு ஏற்றவை. இவை காலங்காலமாக மக்களிடம் இருந்து வந்தவை. மிகக் கடுமையான சட்டங்கள் மூலமும் வரிகள் மூலமும் இந்தப் பருத்திச் சாகுபடியை ஆங்கிலேயர்கள் தடுத்தனர்.
18-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை இந்தியாவில் இருந்து பருத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வந்தது. கி.பி. 1720ஆம் ஆண்டளவில் இங்கிலாந்துக்கான மொத்த துணி வணிகத்தில் கலிக்கோ துணி 20 விழுக்காடு பங்காக இருந்துள்ளது. இது 1780ஆம் ஆண்டில் 6 விழுக்காடாகவும் 1840ஆம் ஆண்டில் 4 விழுக்காடாகவும் மாறியுள்ளது. (Inikori 2002: 517)
பதினெட்டாம் நூற்றாண்டு இந்தியா மிகவும் கொந்தளிப்பான சூழலில் இருந்தது. மாட்சிமை மிக்க தொழில்துறை அக்கறையற்ற தன்னலமிக்க ஆட்சியாளர்கள் சூறையாடப்பட்டது. பகுதி சார்ந்து இருந்த குறுநில மன்னர்களும் தளபதிகளும் தங்களுக்கு வேண்டிய மட்டும் வரியை மக்களிடம் இருந்து தண்டிக் கொண்டனர். அதை தில்லிக்குக் கொடுப்பதில்லை. இவர்களுக்கென்று தனிப்படைகளை அமைத்துக் கொண்டனர். இதனால் மைய அரசு சிதையத் தொடங்கியது. ஆங்கிலேயர்களின் வணிக வருகை இதை விரைவுபடுத்தியது. ஆங்கிலேயர்கள் சிறு தொகையைக் கொடுத்து பெருநிலங்களை வாங்கிக் கொண்டனர். பல இடங்களில் உழவர்களின் நிலங்கள் சிதைக்கப்பட்டன, குளங்கள் அழிக்கப்பட்டன. உழவுர்களுக்கு தங்களது விளைச்சலில் ஆறில் ஒருபங்கு மட்டுமே தரப்பட்டது. (Bayly 1983, 70). இப்படியாகச் சிதைக்கப்பட்ட உழவும் தொழிலும் மக்களிடம் வறுமையை உருவாக்கியது. இந்திய நெசவாளர்கள் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். பருத்தியை மட்டும் ஏற்றுமதி செய்ய வற்புறுத்தினர். இங்கிருந்து பருத்தி ஒரு நாளைக்கு 7 செண்ட் என்ற முறையில் (ஒரு ஆள் சம்பளம்) திரட்டப்பட்டு யாங்கசயருக்கு கப்பலில் அனுப்பப்பட்டது. அது மீண்டும் துணியாகி 100 விழுக்காடு லாபம் ஏற்றப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு விற்கப்பட்டது என்று காந்தியடிகள் கூறியதை ஃபிஷர் எழுதுகிறார்.
நாட்டுப் பருத்தியை தரமற்றது என்று ஆங்கிலேயர்கள் கூறினர். ஏனெனில் அது அவர்களது எந்திரங்களுக்கு ஏற்ற நீண்ட இழைகளைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவை நமது நாட்டுக்கு மிகப் பொருத்தமானவை. மிகக்குறைவான நீர் இருந்தால் போதுமானது, நோய்களை எதிர்த்து வளரும் திறன் பெற்றது. விதைகளும் உழவர்களிடமே இருக்கும். இப்படியாக தற்சார்புத் தன்மை மிக்க அந்த பருத்தியைத்தான் ஆங்கிலேயர்கள் அழித்தார்கள். தங்களது விதைகளைப் புகுத்தினார்கள். ஆனால் இந்திய நாடு 1947இல் அரசியல் விடுதலை பெற்ற பிறகும் அந்த வெளிநாட்டு இனங்களையே தொடர்ந்து நமது தலைவர்களும் அறிவாளிகளும் கொடுத்ததன் நோக்கம்தான் என்ன?
வீரிய விதைகள் என்று அறிமுகம் செய்த விதைகள் நோய்களையும், பூச்சிகளையும் கொண்டு வந்தன. இன்று அதிகமாக பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படும் ஒரே பயிர் பருத்திதான். மிகக் கடுமையாக உழைத்து பருத்தியைச் சாகுபடி செய்தாலும் க்ட்டுபடியான விலை கிடைப்பதில்லை. ஏனெனில் உலகச் சந்தை மிக முதன்மையான பங்கை வகிக்கின்றது. உலகமயமாக்கலுக்குப் பின்னர் சந்தை திறந்துவிடப்படுவதால் சூதாட்டத்தின் அளவு எல்லை மீறிப் போய்விட்டது. சினா வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பருத்திக்கு கடும் வரிகளை போட்டுவிடுகிறது. இதனால் உள்ளூர் உழவர்கள் தப்பிக்க முடிகிறது. இந்தியாவில் இறக்குமதி வரியை உயர்த்தவிடாமல் துணி ஆலை முதலாளிகள் கைவண்ணம் வேலை செய்கிறது. இதனால் பாதிக்கப்படுவது வாயில்லாப் பூச்சியான உழவர்கள்தாம். அமெரிக்கா தனது நாட்டு பருத்திச் சாகுபடியாளர்களுக்கு மிக அதிக அளவு மானியம் கொடுத்து விலையைக் குறைத்து விடுகிறது. உலக வணிக நிறுவனம் கூறும் எந்த விதிகளையும் மீறி அமெரிக்கா தனது நாட்டு உழவர்களுக்கு மானியத்தைத் தருகிறது. கடந்த 2004ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3.2 பெரும் பேராயிரம் (பில்லியன்) அமெரிக்க டாலர்களை மானியமாக வழங்கியது. அத்துடன் 1.6 பில்லியன் தொகையை ஏற்றுமதிக்கான கடனாக வழங்கியுள்ளது. ஏறத்தாழ 400 பேராயிரம் (மில்லியன்) அமெரிக்க டாலர்கள் தொகையானது 2001-03 ஆண்டளவில் மட்டும் ஆப்பிரிக்க நாட்டு பருத்தி உழவர்களுக்கு அமெரிக்காவின் மானியங்களால் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாலியில் உள்ள உழவர்கள் தங்களது பருத்திக்கு 25 விழுக்காடு குறைவான விலை கொடுக்கப்படும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை. (ஆக்ஸபாம்) பெரும்பாலும் அமெரிக்க கொடக்கும் மானியங்கள் யா€வுயும் பெரும் பண்ணையாளர்களை குறிவைத்தே தரப்படுகின்றன. (இந்தியாவிலும் அப்படித்தான்) அதாவது 78% மானியம் 10% பண்ணையாட்களுக்குக் கிடைக்கின்றன. பருத்தி உழவர்கள் வரலாறு காணாத அளவிற்கு தற்கொலை செய்து வருகின்றனர். ஆந்திரா, மராட்டியம், பஞ்சாப் என்று இந்தப் பட்டியல் நீள்கின்றது. பெரும்பாலான உழவர்கள் கந்துவட்டிக் காரர்களாலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன் மராட்டிய மாநில அரசு பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 2500 இல் இருந்து 1750 ஆக குறைத்துவிட்டது, இதனால் மிகக் பெரும் அதிர்ச்சிக்கு உழவர்கள் உள்ளானார்கள்.
இந்தியச் சாகுபடிப் பரப்பளவில் பருத்தி 5% இடத்தைக் கொண்டுள்ளது. ஆனால் 54% அளவிற்கு பூச்சிக்கொல்லி நஞ்சு அதற்காக பயன்படுத்தப்படுகிறது. முதலில் 1980களில் வெள்ளை ஈ தாக்குதல் ஏற்பட்டது. அதைத் தடுக்க பைரித்ராய்டு வகை பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அதற்கு பூச்சிகள் கட்டுப்படவில்லை. எனவே அதைவிடக் கடுமையான எண்டோசல் பான், குவினோபாஸ், மோனோகுரோட்டோபாஸ், குளோரிபைரிபாஸ் போன்றவற்றைப் பயன்படுத்தினர். இதன் பின்னர் நிலைமை மேலும் மோசமானது. அமெரிக்கன் காய்ப்புழு, இளஞ் சிவப்புக் காய்ப்புழு போன்ற புழுக்கள் பெருகத் தொடங்கின. இதை எதிர்கொள்ளாத முடியாத உழவர்கள் தங்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். ஏறத்தாழ 100000 உழவர்கள் பருத்திச் சாகுபடியால் ஈடுபட்ட காரணத்தால் தற்கொலை செய்துள்ளனர்.
பருத்திச் சாகுபடியைப் பொருத்த அளவில் மானாவாரி, இறவை ஆகிய இரண்டும் முறையும் உண்டு. மொத்தச் சாகுபடியில் 35 விழுக்காடு பாசனப் பரப்புக் கொண்டதாக இருக்கிறது. இந்தியாவில் பருத்திச் சாகுபடி ஆண்டுக்கு ஆண்டு மிக அதிகரித்து வருகிறது. 1950ஆம் ஆண்டைக் காட்டிலும் 2004/05ஆம் ஆண்டளவில் இரண்டு மடங்கு அதாவது 9.5 பேராயிரம் (மில்லியன்) நூற்றேர் (எக்டேர்) அளவிற்று உயர்ந்துள்ளது.
மிகப் பெரும் அளவில் பருத்தியில் பூச்சிக் கொல்லிகள் பயன்பட்டதால் மண்வளம் இழந்ததோடு, இடுபொருள் செலவும் அதிகமாகிக் கொண்டே வந்தது. இதனைக் காரணமாக வைத்து மிக புதிய தொழில்நுட்பம் என்ற பெயரில் மரபீனி மாற்றம் செய்யப்பட்ட பருத்தியை அறிமுகம் செய்தனர். விதைகளைச் சேமித்து மறுவிதைப்புச் செய்து கொள்ளும் உழவனின் உரிமையை மறுப்பதும், இந்திய விதைச் சந்தையை முழுக்கக் கைப்பற்றுவதும் மரபீனி மாற்ற விதைத் தொழில்நுட்ப அறிமுகத்தின் நோக்கமாகும். உலகிலுள்ள பெரும் விதைச் சந்தைகளில் ஒன்று இந்திய விதைச் சந்தை. 2000-ம் ஆண்டில் நம் நாட்டின் விதைச் சந்தை மதிப்பு ரூபாய் 2000 கோடிகளாகும். கி.பி. 2007ல் அது மூன்று மடங்காக மாறியுள்ளது.
ஒரு நாட்டின் இறையாண்மை அந்நாட்டின் உணவுப் பாதுகாப்பைப் பொறுத்தது. உணவுப் பாதுகாப்பு அங்கு நடைபெறும் வேளாண்மையைப் பொறுத்தது. வேளாண்மைக்கான இறையாண்மையோ விதைகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே விதைகள் மிகவும் இன்றியமையாதவை. இந்த விதைத் துறையில் நுழைந்துள்ள பெரும் நிறுவனம் மான்சாண்டோ. அது அறிமுகப்படுத்தியுள்ள பருத்திவிதை பாசில்லஸ் துரிஞ்சியஸ் (Bt)
இந்த பாசில்லஸ் விதை 1996-ஆம் ஆண்டு சந்தைக்கு வந்தது. பாசில்லஸ் துருஞ்சியஸ் என்ற நுண்ணுயிரி இயற்கை வழி வேளாண்மையில் உழவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பூச்சிக்கொல்லி, தீமை செய்யும் புழுக்களில் உணவுப் பாதையில் இந்த நுண்ணுயிர் சென்று நச்சுத் தன்மையை உருவாக்கும். படிகம் போன்ற நஞ்சு தோன்றி புழுவினைக்கொன்றுவிடும். இந்த முறையைக் கண்டறிந்த பன்னாட்டு நிறுவனங்களும், அதன் ஆராய்ச்சியாளர்களும், பாசில்லஸ் நுண்ணுயிரின் மரபீனியில் இருந்து படிக ஏசி (cr. AC) என்ற நஞ்சு உருவாக்கும் தன்மையை எடுத்து, பருத்திவிதையில் பொருத்தியுள்ளனர். இதற்கு பால்கார்டு விதை என்ற பெயரும் கொடுத்துள்ளனர்.
பருத்தியில்தான் அதிகம் பூச்சிகொல்லி பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் மட்டும் 1.7 கோடி உழவர்கள் பருத்திச் சாகுபடி செய்கின்றனர். இவர்கள் ஆளுக்கு இரண்டரை ஏக்கருக்கும் குறைவாக நிலம் உள்ளவர்கள். இந்தியாவில் மரபீனி மாற்ற விதைகளுக்கு இருந்த தடை நீக்கப்பட்டு விட்டது. ஆனால் அதற்கு முன்பே திருட்டுத்தனமாக இந்த விதை சந்தைக்குள் புகுந்துவிட்டது என்பது வேறு கதை. இந்த விதையை அறிமுகம் செய்யும் போது, "பூச்சி கொல்லி, களைக்கொல்லி எதுவும் தேவையில்லை. விளைச்சல் பெருமளவு கிடைக்கும்" என்ற கூறினார்கள். ஆனால் அது உண்மையன்று. எல்லாப் பூச்சிகளையும் இந்த விதையில் உள்ள நஞ்சால் கொல்ல முடியாது. புகையிலைப்புழுக்களை மட்டும் படிக ஏசி கட்டுப்படுத்தும். இந்தியாவில் பெரிதும் காணப்படுபவை அமெரிக்கன் காய்ப்புழு வகையினம். இதற்கு படிக 1 ஏசி (cry I AC) என்ற நஞ்சு தேவைப்படும். அத்துடன் பூச்சிகள் இந்த நஞ்சினை எதிர்த்து வாழும் எதிர்ப்புத் திறனை வளர்த்துக் கொள்கின்றன. சினாவில் 1999ம் ஆண்டு பாசில்லஸ் நஞ்சுக்கு 7 முதல் 10 மடங்கு எதிர்ப்புத் திறன் கொண்ட பூச்சிகளைக் கண்டறிந்து கூறினர். தென்கிழக்கு அமெரிக்காவில் உருளைப்புழுக்கள் எதிர்ப்பாற்றல் கொண்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது. இதை அமெரிக்க மேம்பாட்டு முகவாண்மை (USDA) என்ற நிறுவனமே கூறியது.
விளைச்சலை எடுத்துக்கொண்டால் 1980க்குப் பிறகு அமெரிக்காவிலேயே (மரபீனிப் பருத்திக்குப் பின்பும்) பருத்தி விளைச்சல் குறைந்துவிட்டது. பன்மயப்பட்ட பருத்தியினங்கள் மறைந்து ஒரே வகைப் பருத்தியின் பரவலால் ஏற்பட்ட சிர்கேடு என்று இதைக் கூறுகின்றனர்.
இந்தியாவில், மத்தியப்பிரதேசத்தில், கார்கோன் மாவட்டத்தில் பாசில்லஸ் பருத்திச்செடி விளைச்சலில் 100% தோல்வி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சேலம் பகுதியிலும் இதே கதைதான். இழப்பீடு கேட்டு உழவர்கள் போராடினர். ஆந்திராவில் அரசே இழப்பீடு கேட்டு போராடியது. சினாவில் கடுமையாகத் தோல்வி கண்டுள்ளது. ஆனால் இயற்கையின் சாதகமான வாய்ப்புகளால் சின்ன சின்ன வெற்றிகளைக் காட்டி மிகப்பெரிய விளம்பரங்கள் மூலம் விற்பனையைப் பெருக்கி வருகின்றனர். இதற்கு பல்கலைகழகங்கும் உடந்தை என்பதுதான் வேதனையானது. இந்திய, நாட்டுப் பருத்தியினங்கள் வறட்சியின்போது 20% இழப்பை ஏற்படுத்தின்‘ல் பாசில்லஸ் பருத்தி 100% இழப்பை ஏற்படுத்துகிறது என்கின்றனர்.
மரபீனி மாற்ற விதைகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள மரபீனிப் பொறியியல் ஒப்புறுதிக் குழுவின் (Genetic engineering approval committee) செயல்பாடுகள் குறித்து பல்வேறு மாற்றுக் கருத்துக்கள் தோன்றியுள்ளன. பாசில்லஸ் பருத்தியை உள்நுழைய விட்டதற்காக இவ்வமைப்பின் மீது கடும் குற்றச் சாட்டுகள் வைக்கப்படுகின்றன. ஆனால் இதற்கெல்லாம் முன்பாகவே மரபீனி மாற்ற விதைகளை "நவபாரத்" என்ற வணிக நிறுவனம் விற்று வந்தது. இது குறித்து மெத்தனமாக இருந்த அரசு, மிகக் காலதாமதமாக மே மாதம் நடிவடிக்கை எடுத்தது. இதற்காகச் சூழலியலாளர்கள் பெரும் "போர்" நடத்தவேண்டியதாயிற்று. ஆயினும் வேளாண்மையில் பெருத்த சேதாரம் ஏற்பட்டுவிட்டது.
இதேபோல் பிற பருத்திகளுடன் பாசில்லஸ் பருத்தி "கலந்து" விட்டது. இரண்டாம், மூன்றாம் தலைமுறைச் செடிகளை, சட்டத்திற்குப் புறம்பாகவே உருவாக்கிவிட்டனர். இந்த "கள்ள விதைகள்" குஜராத், ஹரியானா, பஞ்சாப் போன்ற (தமிழ்நாட்டிற்கும் கூட வந்திருக்கலாம்) இடங்களில் விற்பனைக்கு வந்து விட்டன. குஜராத்திலுள்ள ஒரு காதி நிறுவனம் உருவாக்கிய பருத்தியாடை, பாசில்லஸ் மரபீனி மாற்றப் பஞ்சில் நெய்யப்பட்டது. இதை அணிந்த பலருக்கு உடல் அரிப்பும், தடிப்பும் ஏற்பட்டதாகச் செய்திகள் வந்துள்ளன.
பாசில்லஸ் பருத்தி சாகுபடி செய்த இடத்தில் 20% பரப்பில் வழக்கமான பருத்தியைச் சாகுபடி செய்யவேண்டும்! இது நிறுவனத்தின் பரிந்துரை. ஏனெனில் பாசில்லஸ் பருத்தியில் இருந்து வரும் நஞ்சுக்குத் தப்பி வாழும் பூச்சிகள் வயலில் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் பூச்சிகள் எதிர்ப்புத் திறனற்ற மற்ற பூச்சிகளோடு இணைந்து எதிர்ப்புத்திறன் இல்லாத பூச்சிகள் தோன்றும். அவ்வாறு சாதாரணப் பருத்தி இல்லை என்றால் எல்லாப் பூச்சிகளுமே எதிர்ப்புத்திறன் பெற்று விடும். எனவே இந்த 20% ஒதுக்கீடு வேண்டும். இதற்கு "புகலிடப்பகுதி" என்றும் பெயர் வைத்துள்ளனர்! இது ஒரு வேளை அமெரிக்கா போன்ற ஆயிரம் ஏக்கர் பண்ணைகளுக்குப் பொருந்தலாம். இந்தியாவில் 2 ஏக்கர் வைத்துள்ள உழவர் எவ்வாறு ஒதுக்கீடு செய்ய முடியும்?
பொதுவாக இந்திய வேளாண்மையில் விதையின் பங்கு மிக இன்றியமையாதது. மரபு வழியாக விதையை அடிப்படையாகக் கொண்ட பல பழமொழிகள் நம் நாட்டில் புழங்கி வருகின்றன. பண்டை நாளில் இருந்தே விதையின் பரிமாற்றம் பண்ட மாற்றாகவே இருந்து வந்தது. பசுமைப் புரட்சிக்குப் பின்பே விதைப் பொருளியல் பண மதிப்பைப் பெற்ற வணிகத் துறையில் குறிப்பான இடத்தைப் பிடிக்கத் தொடங்கியது. வெளிநாட்டுக் கடன்களாலும், பிற ஒதுக்கீடுகளாலும் பசுமைப் புரட்சியின் பெருமையும் வீரிய விதைகளின் பரப்புதலும் நடைபெற்றன. அதனால் வந்த துயரோ மிகப் பெரியதாகிவிட்டது.
இது ஒரு புறம் இருக்க, கடந்த 1991ம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவின் அடிப்படையான வேளாண் துறையைக் குறிவைத்துக் கைப்பற்றும் நோக்கோடு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் முனைப்பாகக் படையெடுத்துள்ளன. இனிமேல் வருங்காலங்களில் உழவர்கள் விதைகளை தமக்கென வைத்துக்கொள்ள முடியாதவாறும், அரசுகளே தமது கட்டுப்பாட்டில் விதை இருப்பைக் கொண்டுவர இயலாதவாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு உலக வணிக நிறுவனம் அதன் துணையான வணிகம் சார் நுண்மதிச் சொத்துரிமை ஒப்பந்தம் ஆகியவை உதவி புரிகின்றன. வீரிய விதைகள் உட்புகுந்தபோது நமது உழவர்களின் விதை சேமிக்கும் பழக்கம் மறைந்தது. இப்போது வந்துள்ள மரபீனி நுட்பவியல் விதைகள் வழியாக உழவர்களிடமிருந்து விதை சேமிக்கும் உரிமையும் பறிபோகவுள்ளது.
இந்திய விதைச் சந்தை மட்டுமின்றி மூன்றாம் உலக நாடுகளின் விதைச் சந்தை முழுவதையும் கைப்பற்ற பன்னாட்டுத் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. ஆனால் இந்தியச் சந்தைதான் மிகப்பெரியது. எனவே இதில் அவர்களுக்கு முகாமையான குறி உள்ளது. சினாவின் சந்தையைவிட இந்தியச்சந்தைதான் அவர்களுக்கு ஏதுவாக உள்ளது. ஏனெனில் சினச் சந்தையில் தடுப்பும் சமன்பாடும் (Check and Balace) உள்ளது.
இத்துடன் பன்னாட்டு நிறுவனங்கள் தமது பெரும் ஆராய்ச்சித் திட்டங்கள் வழியாக பெறப்பட்டுள்ள நுட்பவியல் அறிவையும், காப்புரிமையும் (Paten right) வைத்துக்கொண்டு, உலகை ஆட்டிப் படைக்கின்றன. உயிரி நுட்பவியல் துறையில் விதைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் வியப்புக்குரியன. மரபீனிகளை (genes) மாற்றி விதைகளின் அடிப்படைக் குணநலன்களையே மாற்றிவிட முடியும். மான்சாண்டோ நிறுவனம் பருத்தி, சோயா மொச்சை போன்ற பல பயிர்களுக்கு காப்பு உரிமை பெற்றுவிட்டது. இந்நிறுவனம் உலகின் மிகப்பெரிய விதை நிறுவனமாகும. இதன் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் நில நாடுகளின் வரவு-செலவுத் திட்டத்தைவிடக் கூடுதலாகும்.
மேலும், மான்சாண்டோ நிறுவனம் தனது மரபீனி மாற்ற உயிரியின் (Genetically Modified Organism) பயனாக உருவாகும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும்போது, அதில் மரபீனி மாற்றப் பொருள் என்று பொருள்படும் குறிப்பை அச்சிட மறுத்து வருகிறது. எனவே இதனாலும், பெரும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இதனால் மூன்றாம் உலக நாடுகளை நோக்கி இந்நிறுவனங்கள் ஓடி வருகின்றன. இத்தகைய விதைகளின் படையெடுப்பினால் இந்திய போன்ற உயிரிப்பன்மயம் (Bio - diversity) மிக்க நாடடில் உள்ள ஏராளமான மரபு விதையினங்கள் மறைந்து போக வாய்ப்புள்ளது.
அடுத்ததாக, நச்சுத்தன்மை கொண்ட களைக் கொல்லிகளைத் தொடர்ந்து பயன்படுத்துப்போது நிலமும் பாழாகின்றது. புதிய களைச் செடிகள் எதிர்ப்புத் திறனுடன் தோன்றுகின்றன. கூடவே மகரந்தச் சேர்க்கையின்போது, மரபீனி மாற்றச் செடியின் மகரந்தத்தூள் பிற செடியுடன் சேரும் நிலையில் வேறு புதிய சிக்கலான "களைகள்" தோன்றலாம். இதற்கும் மேலாக, உழவர்களின் தீர்மானிக்கும் உரிமையும், சாகுபடி உரிமையும் பறிபோய், பன்னாட்டு நிறுவனங்களின் பண்ணையடிமைகள் போல் உழவர்கள் மாறும் சூழல் உள்ளது. ஒரு நாட்டின் இறையாண்மையும், அதன் நிலைப்பாடும் அந்தாட்டின் உணவு உறுதிப் பாட்டில்தான் உள்ளது. உணவுப் பாதுகாப்பிற்குப் பங்கம் வருமேயானால், எந்த நாடும் தனது தன்னுரிமையைத் தொடர்ந்து காப்பாற்ற முடியாது. இப்போது படையெடுத்தள்ள, பி.டி பருத்தியும் பிற மரபீனி மாற்ற விதைகளும் நாட்டின் இறையாண்மைக்கு வேட்டு வைக்கலாம்.
இந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை எதிர்த்து ஒரு சில நாடுகளில் போராடிய மக்கள் இயக்கங்கள் வெற்றி பெற்றுள்ளன. இவ்வாறு உரிமைக் குரல் எழுப்ப, ஐ.நா. அமைப்பின் உயிரிப் பன்மய ஒப்பந்தம் (Bio Diversity Convention) வாய்ப்பளிக்கிறது. இது ஓர் உலகளாவிய ஒப்பந்தம், இந்தியா இதில் கையொப்பமிட்டுள்ளது. உலக வணிக நிறுவனத்தின் பல்வேறு விதிகளின் கிடுக்குப் பிடியில் இருந்து தப்ப இதன் விதிகள் உதவும்.
அது மட்டும் போதாது சட்டவிதிகளுக்குள் ஒருபுறம் போராடிக்கொண்டே மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியும் அவர்களைத் திரட்டியும் போராட வேண்டும். அப்போதுதான் நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பும், கோடிக்கணக்கான உழவர்களின் வாழ்வுரிமையும் காக்கப்படும்
« Last Edit: April 01, 2012, 07:52:30 PM by Global Angel »

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: Genetically Modified Organism
« Reply #1 on: December 02, 2011, 05:02:31 PM »
nalla thagaval...konjam Space vitu paragraph-a potu iruntha nalal irukum


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Genetically Modified Organism
« Reply #2 on: December 02, 2011, 09:01:22 PM »
ஆமா பருத்தி ஆடைகள் தான் உடலுக்கு நன்று வேர்வையை உறிஞ்சும் .. ஆனா இபோ அதெல்லாம் போட்ட பிச்சகரங்கனு நினைபான்கனே யார்ழ்ம் பயன்படுதுரதில .....