FTC Forum

தமிழ்ப் பூங்கா => வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) => Topic started by: Anu on February 23, 2012, 12:04:03 PM

Title: மணிமேகலை
Post by: Anu on February 23, 2012, 12:04:03 PM
தமிழில் தோன்றிய முதல் சமயக்காப்பியம்

தமிழில் தோன்றிய முதல் சமயக்காப்பியம் மணிமேகலை. இந்நூல் பவுத்தமத நீதிகளை எடுத்துச் சொல்கிறது. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரால் எழுதப்பட்டது. சிலப்பதிகாரக் கதையின் தொடர்ச்சியாக இந்நூல் அமைந்துள்ளது. இவ்வுண்மையை சிலப்பதிகாரத்தின் உரைபெறு கட்டுரை எடுத்துக் கூறுகிறது. அதனால் காப்பியங்களில் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்நூலுக்கு மணிமேகலைத் துறவு என்றொரு பெயரும் உண்டு. இக்காப்பியத்தின் கதாநாயகியே மணிமேகலை.  சிலப்பதிகாரத்தின் கதைத்தலைவனான கோவலனுக்கும், ஆடலரசியான மாதவிக்கும் பிறந்த மகள் மணிமேகலை. கோவலனின் குலதெய்வமான மணிமேகலையின் பெயரை தன் மகளுக்கு சூட்டினான். தன் பாட்டி சித்ராபதியையும், தாய் மாதவியையும் போல கணிகையாக வாழ மணிமேகலைக்கு  விருப்பமில்லை. கற்புக்கரசி கண்ணகியைப் போன்று அறவழியில் அவள் வாழ்ந்தாள்.

சக்கரவாளக்கோட்டம் என்னும் இடத்தில் உறங்கிக் கொண்டிருந்த மணிமேகலையை அவளுடைய குலதெய்வமான மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்தீவிற்குத் தூக்கிச் சென்றது. அங்குள்ள புத்தக்கோயிலை வணங்கி தன் பழம்பிறப்பைப் பற்றி அவள் தெரிந்து கொண்டாள். முற்பிறவியில் இலக்குமி என்னும் பெயரில் வாழ்ந்ததை அறிந்தாள். முழுமதி நாளான வைகாசி விசாகநாளில் அமுதசுரபி என்னும் அட்சய பாத்திரத்தைப் பெற்றாள். பசியின் கொடுமையில் இருந்து மக்களைக் காப்பதற்காக அந்த பாத்திரத்தைப் பயன்படுத்தினாள். அறவண அடிகள் என்னும் துறவியிடம் அறிவுரை கேட்டு, ஆதிரை என்னும் கற்புக்கரசியிடம் முதன் முதலில் பிச்சை ஏற்றாள். அன்று முதல் அந்த பாத்திரத்தில் அள்ள அள்ளஅன்னம் குறையாமல் வந்தது.

இக்காப்பியம் 30 காதைகளைக் கொண்டதாகும். முதல் காதையான விழாவறை காதையில் கூறப்படும் இந்திர விழாவே, தற்கால பொங்கல் பண்டிகை எனக்கருதப்படுகிறது. இவ்விழா 28 நாட்கள் நடந்துள்ளது. சிறைச்சாலையை அறச்சாலையாக்கிய பெண்மணி மணிமேகலை. பசிக்கொடுமையைப் போக்கியவளின் புகழை, என் நாவால் உரைக்க முடியாது என்று சாத்தனார் மணிமேகலையின் பெருமையை இந்நூலில் புகழந்துள்ளார். உலக வாழ்வில் இளமையோ, செல்வமோ நிலையில்லாதவை. வீடுபேறு என்னும் மோட்சத்தை பிள்ளைகளாலும் பெற்றுத் தர முடியாது. அறம் என்னும் தர்மசிந்தனை ஒன்று மட்டுமே நமக்கு சிறந்த துணை என்பதே மணிமேகலை காப்பியத்தின் சாரமாகும்.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்னும் வரி இந்நூலில் இடம் பெற்றுள்ள சிறப்பான பாடல் வரியாகும். தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யர் நூலாசிரியர் சாத்தனாரின் புலமையைப் பெரிதும் பாராட்டியுள்ளார்.

பதிகம் (கதைபொதி பாட்டு)

அஃதாவது-இந்நூலின்கட் போந்த பொருளை நிரலாகத் தொகுத்துக் கூறும் சிறப்புப் பாயிரம் என்றவாறு

பதிக்க கிளவி பல்வகை பொருளைத்
தொகுதி யாக்க சொல்லுத றானே

என்பது முணர்க.

இனி, பதிகம் என்ற சொல் பாயிரம் என்னும் பொருட்டுமாகும் என்பதனை.

முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
புறவுரை தத்துரை புனைந்துரை பாயிரம்

என வரும் நன்னூற் சூத்திரத்தால் உணர்க.

பாயிரம் பொதுவும் சிறப்பும் என இரு வகைத்து. அவற்றுள் இப்பதிகம் நூற்கேயுரிய சிறப்புப் பாயிரம் ஆகும்.

இனி இதன்கண் மணிமேகலை என்னும் இப்பெருங் காப்பியத்தின் பிறப்பிடமாகிய காவிரிப்பூம்பட்டினத்தின் வரலாறும் அதனைத் தலைநகராகக் கொண்ட சோழ நாட்டைப் புரக்கும் காவிரி என்னும் பேரியாற்றின் வரலாறும், காவிரிப்பூம்பட்டினத்தின்கண் ஒரு நூறு கேள்வி யுரவோனாகிய இந்திரனுக்கு விழாவெடுத்தற்கு முரசறைதல் தோற்றுவாயாகவும் மணிமேகலை பிறப்பற வேண்டி நோன்பு மேற்கொள்ளல் இறுவாயாகவும் அமைந்த கதையைத் தம் மகத்துட் கொண்ட உள்ளுறுப்புக்களும் நிரல்படுத்திக் கூறப்பட்டுள்ளன.

இளங்கதிர் ஞாயீ றெள்ளுந் தோற்றத்து
விளங்கொளி மேனி விரிசடை யாட்டி
பொன்றிகழ் நெடுவரை உச்சித் தோன்றித்
தென்றிசைப் பெயர்ந்தவிக் தீவத் தெய்வதம்
சாகைச் சம்பு தன்கீழ் நின்று -5

மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு
வெந்திற லரக்கர்க்கு வெம்பகை நோற்ற
சம்பு வெண்பாள் சம்பா பதியனள்
செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்
கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட - 10

அமர முனிவன் அகத்தியன் றனாது
கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை
செங்குணக் கொழுகியச் சம்பா பதியயல்
பொங்குநீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற
ஆங்கினி திருந்த அருந்தவ முதியோள் - 15

ஓங்குநீர்ப் பாவையை உவந்தெதிர் கொண்டாங்கு
ஆணு வீசும்பின் ஆகாய கங்கை
வேணவாத் தீர்த்த விளக்கே வாவெனப்
பின்னலை முனியாய் பொருந்தவன் கேட்டீங்கு
அன்னை கேளிவ் வருந்தவ முதியோள் - 20

நின்னால் வணங்குந் தகைமையள் வணங்கெனப்
பாடல்சால் சிறப்பிற் பரதத் தோங்கிய
கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி
கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான்நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை - 25

தொழுதனள் நிறபவத் தொன்மூ தாட்டி
கழுமிய உவகையிற் கவாற்கொண் டிருந்து
தெய்வக் கருவுந் திசைமுகக் கருவும்
செம்மலர் முதியோன் செய்த அந்நாள்
என்பெயர்ப் படுத்த இவ் விரும்பெயர் மூதூர் - 30

நின்பெயர்ப் படுத்தேன் நீவா ழியவென
இருபாற் பெயரிய உருகொழு மூதூர்
ஒருநூறு வேள்வி உரவோன் றனக்குப்
பெருவிழா அறைந்ததும் பெருகிய தலரெனச்
சிதைந்த நெஞ்சிற் சித்திரா பதிதான் - 35

வயந்த மாலையான் மாதவிக் குரைத்ததும்
மணிமே கலைதான் மாமலர் கொய்ய
அணிமலர்ப்  பூம்பொழில் அகவயிற் சென்றதும்
ஆங்கப் பூம்பொழில் அரகிளங் குமரனைப்
பாங்கிற் கண்டவள் பளிக்கறை புக்கதும் - 40

பளிக்கறை புக்க பாவையைக் கண்டவன்
துளக்குறு நெஞ்சில் துயரொடும் போயபின்
மணிமே கலாதெய்வம் வந்துதோன் றியதும்
மணிமே கலையைமணி பல்லவத் துய்த்ததும்
உவவன மருங்கினவ் வுரைசால் தெய்வம் -45

சுதமதி தன்னைத் துயலெடுப் பியதூஉம்
ஆங்கத் தீவகத் தாயிழை நல்லாள்
தான் றுயி லுணர்ந்து தனித்துய ருழந்ததும்
உழந்தோ ளாங்கணோர் ஒளிமணிப் பீடிகைப்
பழம்பிறப் பெல்லாம் பான்மையி ணுணர்ந்ததும் -50

உணர்ந்தோள் முன்னர் உயிர்தெய்வந் தோன்றி
மணங்கவ லொழிகென மந்திரங் கொடுத்ததும்
தீப திலகை செவ்வனந் தோன்றி
மாபெரும் பாத்திரம் மடக்கொடிக் களித்ததும்
பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு - 55

யாப்புறு மாதவத் தறவணர்த் தொழுததும்
அறவண வடிகள் ஆபுத் திரன்றிறம்
நறுமலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும்
அங்கைப் பாத்திரம் ஆபூத் திரன்பால்
சிந்தா தேவி கொடுத்த வண்ணமும் - 60

மற்றப் பாத்திரம் மடக்கொடி யேந்திப்
பிச்சைக் கவ்வூர்ப் பெருந்தெரு வடைந்ததும்
பிச்சைக் யேற்ற பெய்வளை கடிஞையிற்
பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும்
காரிகை நல்லாள் காயசண் டிகைவயிற்று - 65

ஆனைத் தீக்கெடுத் தம்பலம் அடைந்ததும்
அம்பலம் அடைந்தனள் ஆயிழை யென்றே
கொங்கலர் நறுந்தார் கோமகன் சென்றதும்
அம்பல மடைந்த அரசிளங் குமரன்முன்
வஞ்ச விஞ்சையின் மகள்வடி வாகி - 70

மறஞ்செய் வேலோன் வான்சிறைக் கோட்டம்
அறஞ்செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
காயசண் டிகையென விஞ்சைக் காஞ்சனன்
ஆயிழை தன்னை அகலா தணுகலும்
வஞ்ச விஞ்சையின் மன்னவன் சிறுவனை - 75

மைந்துடை வாளில் தப்பிய வண்ணமும்
ஐயரி யுண்கண் அவன்றுயர் பொறாஅள்
தெய்வக் கிளவியிற் றெளிந்த வண்ணமும்
அறைகழல் வேந்தன் ஆயிழை தன்னைச்
சிறைசெய் கொன்றதுஞ் சிறைவீடு செய்ததும் - 80

நறுமலர்க் கோதைக்கு நல்லற முரைத்தாங்கு
ஆய்வளை ஆபூத் திரனா டடைந்ததும்
ஆங்கவன் றன்னோ டணியிழை போகி
ஓங்கிய மணிபல் லவத்திடை யுற்றதும்
உற்றவ ளாங்கோர் உயர்தவன் வடிவாய்ப் - 85

பொற்கொடி வஞ்சியற் பொருந்திய வண்ணமும்
நவையறு நன்பொரு ளுரைமி னோவெனச்
சமயக் கணக்கர் தந்திறங் கேட்டதும்
ஆங்கத் தாயரோ டறவணர்த் தேர்ந்து
பூங்கொடி கச்சி மாநகர் புக்கதும் -90

புக்கவள் கொண்ட பெய்யுருக் களைந்து
மற்றவர் பாதம் வணங்கிய வண்ணமும்
நவத்திறம் பூண்டு தருமங் கேட்டுப்
பவத்திற மறுகெனப் பாவை நோற்றதும்
இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப - 95

வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு
ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனனென்

உரை

தோற்றுவாய்

1-8: இளங்கதிர் .........பதியினள்

(இதன் பொருள்) பொன் திகழ் நெடுவரை உச்சி இத்தீவைத் தெய்வதம்-பொன் மயமாக விளங்குகின்ற நெடிய மேருமலையின் உச்சியின்கண் இந்த நாவலந் தீவின் காவல் தெய்வமானது;  இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து விளங்கு ஒளி மேனி விரி சடையாட்டி தோன்றி - இளமையுடைய கதிர்களையுடைய ஞாயிற்று மண்டிலத்தையும் இகழ்தற்குக் காரணமான பேரொளியோடு காணப்படுகின்ற விளக்கமான ஒளிப் பிழம்பாகிய திருமேனியையும் விரிந்த சடையையும் உடையவளாய் அருளுருவங் கொண்டு தோன்றி; மாநில மடந்தைக்கு வரும் துயர் கேட்டு - பெரிய நிலமகளுக்கு அரக்கர்களால் உண்டாகின்ற துன்பங்களைத் தன்பால் முறையிடுகின்ற அமரர்கள் வாயிலாய்க் கேள்வியுற்று வெம்திறல் அரக்கர்க்கு வெம்பகை-வெவ்விய ஆற்றலுடைய அவ்வரக்கர்களுக்கும் அச்சமுண்டாக்கும் பகையாவதற்குரிய ஆற்றலைப் பெறும் பொருட்டு; சாகை சம்பு தன்கீழ் நின்று நோற்ற - கிளைகளை யுடைய நாவல் மரத்தின் கீழே நின்று தவம் செய்தமையாலே; சம்பு என்பாள்- சம்பு என்று பெயர் பெற்றவள்; தென்திசை பெயர்ந்த சம்பா பதியினள் - அம் மேருமலையினின்றும் தெற்குத் திசையை நோக்கி எழுந்தருளிய காலத்தே சம்பாபதி என்னும் தன் பெயரோடு படைக்கப்பட்டிருந்த பூம்புகார் நகரத்திலே திருக்கோயில் கொண்டு வீற்றிருப்பாளாயினள்; என்க.

(விளக்கம்) ஞாயிறு திருமேனிக்கும் கதிர் விரிசடைக்கும் உவமை. இஃது எதிர் நிரல் நிறை உவமை. ஆகவே ஞாயிற்றை எள்ளும் மேனியையும் அதன் இளங்கதிரை எள்ளும் சடையையும் உடைய அருளுருவம் கொண்டு பொன்வரை உச்சியில் தோன்றித் துயர் கேட்டுச் சம்புவின் கீழ் நின்று நோற்றமையால் சம்பு எனப் பெயர் பெற்று, பொன் மலையினின்றும் தென்றிசை நோக்கிப் பெயர்ந்து வந்து தென்றிசையின்கண் தனக்கெனப் பிரமனால் தன் பெயரோடே படைக்கப்பட்டிருந்த சம்பாபதி என்னும் நகரத்தில் எழுந்தருளி இருப்பாளாயினள் என்பது கருத்தாகக் கொள்க.

இதனால் காவிரி ஒரு பேரியாறாகக் காட்சி தருதற்கு முன்பு சம்பாபதி என்னும் பெயரையுடையதாய் இருந்த அந்நகரமே காவிரியாறு சோழ மன்னர்களால் பெரிய யாறாகச் செய்யப்பட்ட பின்னர் காவிரிப்பூம்பட்டினம் எனவும் காவிரி கடலொடு கலக்கம் சிறப்புக் கருதிக் பூம்புகார் நகரம்  எனவும் பெயர் பெற்றது என்று உணரப்படும்.

இதனை (26-30) ஆம் அடிகளில் கூறுமாற்றான் அறியலாம் ஆகவே, சம்பு வென்பாள் சம்பாபதியினள் என்றது, சம்பு என்னும் அக்காவற்றெய்வம் பொன்வரையுச்சியினின்றும் தென்திசைப் பெயர்ந்து வந்து நான்முகன் தன் பெயர்ப்படுத்த சம்பாபதி என்னும் இடத்திலே உறைந்தது என்றவாறு. இத் தெய்வம் காவிரியாறு தோன்று முன்பே அவ்வடத்திலே எழுந்தருளி யிருந்தது என்பதும் பின்னர்க் கூறுமாற்றானுணரலாம்.

காவிரியின் தோற்றம்

6-18 செங்கதிர் ........வாவென

(இதன் பொருள்.) செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும் வேட்கையின் காந்தமன் - சிவந்த ஒளியையுடைய கதிரவன் வழித் தோன்றிய தெய்வத் தன்மையுடைய தான் பிறந்த குலத்தினைப் புகழால் உலகுள்ள துணையும் விளக்க வேண்டும் என்றெழுந்ததொரு விருப்பங் காரணமாகச் சோழர் குலத்திலே தோன்றிய காந்தன் என்னும் மன்னவன்; அமர முனிவன் அகத்தியன் கஞ்சம் வேண்ட -தேவமுனிவனாகிய அகத்தியன்பாற் சென்று தன்னாட்டை வளம் படுத்துதற்கு இன்றியமையாத நீர் வழங்க வேண்டுமென்று வேண்டா நிற்றலால்; தனாது கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை- அம் முனிவன், நீர் பேரியாறாகப் பெருகிச் சென்று அச் சோழ நாட்டினை வளம்படுத்தத் திருவுளங் கொண்டு அதற்குக் கால்கோள் செய்பவன் தன்னுடைய நீர் கரத்தைக் குடக மலையுச்சியிலே சென்று கவிழ்த்தமையாலே அதிலிருந்து ஒழுகிய நீர் அம்முனிவன் கருதியாங்குப் பேரியாறாகப் பெருகிக் காவிரிப்பாவை என்னும் பெயரோடு; செங்குணக்கு ஒழுகி-நேர் கிழக்குத் திசை நோக்கி ஒழுகி; அச் சம்பாபதி அயல் பொங்கு நீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற -சம்பாபதி என்னும் தெய்வம் எழுந்தருளியிருந்த சம்பாபதி என்னும் அத்திருப்பதியின் மருங்கே மிக்க நீரையுடைய கடற்பரப்பிலே புகுந்து பொலியா நிற்ப; ஆங்கினிதிருந்த -அச் சம்பாபதியிலே மகிழ்ந்தெழுந்தருளியிருந்த; அருந்தவ முதியோள் -அரிய தவத் தினையுடைய பழையோளாகிய அச் சம்பாபதி என்னும் தெய்வம்; உவந்து - அந் நதி நங்கை வரவு கண்டு பெரிதும் மகிழ்ந்து; ஓங்கு நீர்ப் பாவையை எதிர் கொண்டு -உயரிய தெய்வத் தன்மையுடைய அக் காவிரி நங்கையை எதிர் சென்று அன்புடன் வரவேற்று; ஆங்கு ஆணுவிசும்பின் ஆகாய கங்கை-அவ்விடத்திலேயே தன்னோகை கூறுபவள் ஆருயிர்களின்பால் அன்பு மிக்கவளே! விசும்பாகிய உயர் குலத்துப் பிறந்த ஆகாய கங்கையாகிய நங்கையே; வேணவாத்தீர்த்த விளக்கே -சோழ மன்னனும் அவன் குடிமக்களும் நீண்ட காலமாகத் தம்முட் கொண்டிருந்த பேரிய அவாவினை நிறைவேற்றி அவர்களுடைய துன்பவிருளைத் துவரப் போக்கிய ஒளி விளக்கே ;வா என வருக வருக என்று பாராட்டி வரவேற்ப என்க.

(விளக்கம்) திருக்குலம் -தெய்வத் தன்மையுடைய குலம். சோழ மன்னர்,கதிரவன் குலத்து மன்னர் என்பது நூனெறி வழக்கம். காவிரி தோன்று முன்னர்ச் சோழர் நாடு நீர் வளம் பெறாது வறுமையுற்றுக் கிடந்தமையால் அந்த நாட்டரசனாகிய காந்தன் அக் குறை தீர்த்துத் தான் பிறந்த அந்த நாட்டையும்  தான் பிறந்த சோழர் குலத்தையும் புகழுடைய தாக்க விரும்பி அகத்தியன்பாற் சென்று வரம்வேண்டினனாக அவன் வேண்டுகோட் கிணங்கிய அகத்தியன் அந் நாட்டினை நீர் நாட்டாக்கத் திருவுளங் கொண்டு அந் நாட்டினைப் புரக்கும் ஒரு போறியாற்றைப் படைத்து வழங்க விரும்பி அதற்குக் கால்கோள் செய்பவன் குடகமலை யுச்சியில் ஏறிச் சென்று தன் கரக நீரை கவிழ்த்துவிட, அந்நீர் பெருகிப் பேராறாகிச் செங்குணக் கொழுகிச் சோணாட்டிற் புக்குக் புனல் பரப்பி வளஞ் செய்து சம்பாபதியின் மருக்கே கடலிற் பாய்ந்தது எனவும் அக் காவிரி வருகையால் மகிழ்ந்த சம்பாதி என்னும் தெய்வம் அந் நீர் மகளை எதிர் சென்று வரவேற்று மகிழ்ந்தான் எனவும் இப் பகுதி காவிரியின் தோற்றமும் காரணமும் கட்டுரைத்த படியாம்.

கம்சம்- நீரை பிறப்பித்தல். கஞ்ச வேட்கை எனச் சொற் கிடந்தாங்கே நீருண்டாக்கும் விருப்பத்தால் எனினுமாம். கஞ்சம் என்பதே நீர் என்னும் பொருட்டென லுமாம். (கஞ்சம் கலங்குவன என்பது நளவெண்பா) காந்தன்-சோழர் குலத்து மன்னருள் ஒருவன்.மன்-அரசன். பகீரதன் தானே தவம் செய்து கங்கையை நிலவுலகிற்குக் கொணர்ந்தனன். காந்தன் தவத்தினால் பேராற்றுலுடைய அகத்தியனை வணங்கி அவன்பால் வரமாகப் பெற்று அவ்வாகாய கங்கையையே காவிரிப் பாவையாகச் சோழநாட்டிற்குக் கொணர்ந்தான் என்க. அகத்தியன் கடல் குடித்தவன். அவன் பேரியாறு படைத்தல் பெரிதில்லை. தன் கரத்திலிருந்த ஆகாய கங்கையாகிய நீரையே காவிரிப்பேரியாறாகப் பெருகிவரச் செய்தான் ஆதலின் அவன் கரக நீர் ஆகாய கங்கை என்பது தோன்ற அமர முனிவன் அகத்திழன் என்று விதித்தார். ஆணு:பண்பாகு பெயர்; விளி.அன்பே என்று விளித்தப்படியாம். ஆணுவே! ஆகாய கங்கையே! விளக்கே! வா! என்று தன் ஆர்வந் தோன்ற மும்முறை விளித்தப்படியாம்.பொங்குநீர்ப் பரப்பு என்னும் பன்மொழித் தொடர், கடல் என்னும் ஒருபொருள் மேனின்றது மலைத்தலைய கடற்காவிரி என்பது பட்டினப்பாலை (9).விளக்கு என்றமையால் துன்பவிருள் போக்கும் விளக்கு என்று கூறக் கொள்க. வேணவா -மிக்க அவா.

அகத்தியன் காவிரிநங்கைக்கு அத் தெய்வத்தை
அறிமுகப் படுத்துதலும், காவிரி வணங்குதல்

19-26: பின்னலை..........நிற்ப

(இதன் பொருள்.) பின்னிலை முனியாய் பெருந்தவன்-தன்னாற் படைக்கப்பட்டுச் செங்குணக்காக இயங்கி வருகின்ற அக் காவிரிப் பாவையின் பின்னே அவளது இயக்கங் கண்டு மகிழ்தற்கு அவள் பின்னரே தொடர்ந்து வருவதனை வெறாமல் விருப்பத்தோடு வந்த பெரிய தவத்தையுடைய அவ்வமா முனிவர்; கேட்டு-சம்பாபதி அந் நதிமகளை வரவேற்கும் பாராட்டுரையினைக் கேட்டு மகிழ்ந்து; அன்னை கேள் இ அருந்தவ முதியோள் நின்னால் வணங்குந் தன்மையள் வணங்கு என-மன்னுயிர்க் கெல்லாம் அன்னையாகிய காவிரி மகளே கேள். நின்னை பாராட்டும் இந்த அரிய தவத்தை யுடைய இவள் கன்னிகையாகக் காணப்படினும் நிலமடந்தையின் காவல் தெய்வமாகிய கொற்றவை ஆதலின் முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழமையோளாகிய இறைவியே ஆதலின உன்னால் வணங்கப்படுதற் கியன்ற பெருமையுடையாள் காண்! ஆதலால் அத் தெய்வத்தை வணங்குவாயாக என்று பணித்தலாலே; பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய கோடாச் செங்கோல் சோழர் தங்குலக் கொடி-நல்லிசைப் புலவராலே பாடுதற் கமைந்த பொருஞ் சிறப்பமைந்த இப் பாரத நாட்டிலே புகழாலுயர்ந்ததும் எஞ்ஞான்றும் வளைந்திலாதது மாகிய செங்கோலையுடைய சோழ மன்னருடைய குலத்திற்கே உரிமைபூண்ட பூங்கொடிபோல் வாளும்; கோள் நிலை திரிந்து கோடை நீடினும் தான் நீலை திரிபாத் தமிழ்ப்பாவை -கோள்கள் நன்னிலை பிறழ்ந்து கோட்டைக் காலமே நீண்டாலும். தான் தனது புனலாலே மன்னுயிர் புரக்கும் தனது நிலை பிறழா தவளும் குளிர்ந்த தமிழ் மொழியைத் தனது வளத்தாலே வளர்ப்பவளும் திருமகள் போல்பவளுமாகிய அக் காவிரி நங்கை அம் முனிவன் பணித்தாங்கு; தொழுதனள் நிற்ப - சம்பாபதியைக் கைகுவித்துத் தொழுது தலையாலே வணங்கி நிற்ப என்க.

(விளக்கம்) தன்னாற் படைக்கப்பட்ட காவிரி ஒழுகும் வனப்பினைக் கண்டுகளிக்கும் கருத்தாலே அம் மாபெருந்தவனும் பின்னலை முனியாது  விரும்பி அவளைப் பின் தொடர்ந்து வந்தான் என்றவாறு. அவன் பின்னிற்றற்கு ஒண்னாத பெருமையுடையான் என்பது தோன்ற பெருந்தவன் என்றார். காவிரியின் பால் மகவன்பு கொண்டு அவனும் பின்னலை முனியாது அவளைத் தொடர்ந்தான் என்று அவனுடைய அன்பின் நிலை கூறியவாறு. அன்னை என்று  விளித்தான் தன்மகளாதலின். உயிர்கட் கெல்லாம் அன்னை என்பது பற்றி அங்ஙனம் விளித்தான் எனினுமாம். பாரத நாட்டிலமைந்த ஏனைமன்னர் செங்கோள்களினும் காட்டில் உயர்ந்த செங்கோல்; எஞ்ஞான்றும் கோட்டாச் செங்கோல் என்று தனித் தனி இயையும் ஏனை மன்னரால் கைப்பற்ற வியலாமை பற்றிச் சோழர் தங்குலக்கொடி என்றார்.

இனி, கோணிலை திரிந்து...பாவை என்னும் இதனோடு- வசையில் புகழ் வயங்கு வெண்மீன்-திசைதிரிந்து தெற்கேகினும்-தற்பாடிய தளியுணவின் -புட்டோம்பப் புயன்மாறி-வான்பொய்ப்பினும் தான்பொய்யாமலைத் தலைய கடற் காவிரி -புனல் பரந்து பொன் கொழிக்கும் எனவும்,(பட்டினப்-1-7) இலக்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும் அந்தண்காவிரி வந்து கவர்பூட்ட எனவும் (புறம். 357-8) கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும், விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்......காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலே எனவும் (சிலப்-10:1092-8) வரும் பிறசான்றோர் பொன்மொழிகளையும் ஒப்பு நோக்குக. வளமில்வழி மொழிவளனும் கலைப்பெருக்கமும், உண்டாத லின்மையின் தமிழ் மொழியின் ஆக்கத்திற்கும் காவிரி காரணமாதல் பற்றி, தண்டமிழ்ப் பாவை என்றொரு பெயரும் கூறினர் தொமுத்தனள். தொழுது,

சம்பாபதி காவிரி வாழ்த்துதல்

26-31: அத்தொல்.........வாழியவென

(இதன் விளக்கம்) அத்தொல் மூதாட்டி கழுமிய உவகையின் கவான் கொண்டு இருந்து- அவ்வாறு காவிரிப் பாவையாலே தொழப்பட்ட மிக்க முதுமையையுடைய அச் சம்பாபதி என்னும் தெய்வந் தானும் அந்நதிமகளோடு உளம் ஒன்றிய அன்பினாலே மகிழ்ந்து அக் காவிரிப் பாவையைத் தழுவித் தன் மடிமிசை இருத்திக் கொண்டிருத்து கூறுபவன் அன்னையே!; செம்மலர் முதியோன் செந்தாமரை மலரில் உறையும் முதுபெருங் கடவுளாகிய பிரமன் உலகங்களைப் படைக்கத் தொடங்கி; தெய்வக் கருவும் திசைமுகக் கருவும்-மகாராசிகலோக முதலிய அறுவகை உலகங்களையும் அவற்றில் வாழும் தெய்வகணப் பிண்டங்களையும் நான்கு திசைகளினும் அமைந்துள்ள இருபது வகைக்கப்பட்ட பிரமகணப் பிண்டங்களையும் படைத்துப் பின் இந்நிலவுலகத்தையும் இதன்கண் வாழும் மக்கட் பிண்டங்டளையும்; செய்த அந்நாள் - படைத்த அப் பண்டைக் காலத்திலேயே; என் பெயர்ப்படுத்த இவ் இரும்பெயர் மூதூர் - சம்பாபதி என்னும் எனது பெயரோடு படைத்தருளிய பெரிய புகழையும் பழைமையையும் உடைய இந்த ஊரினை; நின் பெயர் படுத்தேன் - இற்றை நாள தொடங்கியான காவிரிப் பூம்பட்டினம் என வழங்குமாறு நினது பெயரோடும் இணைத்தேன் காண; நீ வாழிய என - நீடுழி வாழ்வாயாக என்று வாழ்த்தியருள என்க.

(விளக்கம்.) படைப்புக் காலத்திலேயே படைப்புக் கடவுள் முக்காலமும் உணர்ந்தவன் ஆதலின் இந்நகரத்தை யான் இருத்தற்கியன்ற இடமாகப் படைத்துச் சம்பாபதி என்னும் பெயரும் சூட்டினன். ஆதலின் யானும் எனக்குரிய பொன்வரையுச்சியிலே தோன்றி நில மடந்தைக்கு அரக்கரால் அழிவு வரும் என்று பிறதெய்வங்கள் கூறக் கேட்டு அவர்கள் அஞ்சத்தகுந்த பேராற்றலை அப் பொன்வரையுச்சியில் நிற்கும் சாகைச்சம்புவின் கீழ் நெடுங்காலம் தவம்செய்து பெற்றுப் பின்னர், இச் சம்புத்தீவன் காவற்றெய்வமாகிய கொற்றவையாகி இச் சம்பாபதி நகரத்திலே வதிகிறேன். ஆதலின் இந் நகரம் மாபெருஞ் சிறப்புடையதாம். இற்றைநாள் தொடங்கி இம்மூதூர் காவிரி பூம்பட்டினம் என்னும் பெயரோடும் நிலவுக! நீ வாழ்க! என்று அத்தெய்வம் அந்நகர் வரலாறும் பெருமையும் பழமையும் காவிரிக்கு அறிவுறுத்து வாழ்த்திற்று என்க.

இனி உலகங்கள் முப்பத்தொன்று என்பதும் அவைபொன்மலையை நடுவண் கொண்டு அதன் மேலும் கீழும் நடுவிலும் உள்ளன என்பதும் பௌத்தர் கொள்கையாம். இவற்றைப் படைப்புக் கடவுள் படைக்கும் பொழுது தெய்வலோக முதலிய மேலுலகத்தைப் படைத்துப் பின்னர் மக்கள் உலகாகிய இந்நிலவுலகத்தைப் படைத்தான் என்பதும் அங்ஙனம் நிலவுலகத்தைப் படைக்கும் பொழுதும் சம்புத்தீவையே முற்படப் படைத்து அதன் தென்றிசைமருக்கில் அதன் காவற்றெய்வமாகிய சம்பு என்னும் தெய்வம் உறைதற் பொருட்டுச் சம்பாபதி என்னும் பெயரோடு ஒரு நகரையும் படைத்தான் என்பதும் இப்பகுதியில் பாட்டிடை வைத்த குறிப்புப் பொருளாகக் கொள்க. ஈண்டுத் தெய்வக் கரு என்றது ஆறுவகைப்பட்ட தெய்வங்களையும் அவர் வாழும் உலகங்கங்களையுமாம்; திசைமுகக் கரு என்றது, இருபது வகைக்கப்பட்ட பிரமலோகங்களையும் அவற்றின் உறையும் பிரமகணங்களையும் என்க. இனி இவ்விருவகை உலகங்களையும் படைத்துழி என்பெயர்ப்படுத்த இவ்விரும் பெயர் மூதூர் என்றமையின் பின்னர் நிலவுலகத்தைப் படைக்கும் பொழுது முற்படப் புகார் நகரம் படைக்கப்பட்டது என்பதும் பெற்றாம். எனவே புகார் நகரம் படைப்புக் காலந்தொட்டு அதனை ஆளும் அரசரால் சோழமன்னரால் வழிவழி ஆளப்பட்டுப் பதியெழுவறியாய் பழங்குடி கெழீஇய பண்பாட்டோடு புகழையும் பெற்று வருகிறதென்றவாறாயிற்று. இதனோடு,

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பிற் றலைப்பிரிதல் இன்று

என்னும் குறளிற்கு ஆசிரியர் பரிமேலழகர் வகுத்த விளக்கவுரையில் தொன்று தொட்டு வருதல் சேர சோழ பாண்டியர் என்றாற் போலப் படைப்புக்காலந் தொடங்கி மேம்பட்டு வருதல் என்பதனைக் ஒப்பு நோக்கி இரண்டற்குமுள்ள உறவுணர்ந்து மகிழ்க.

இனி இவ்வுலகங்களை பற்றிய விரிவான விளக்கம் சக்கரவாளக் கோட்ட முரைத்தகாதையில் தரப்படும். அவற்றைக் ஆண்டுக் கண்டு கொள்க.

இப் பெருங்காப்பியத்தின் உள்ளுறுப்புக்கள்

32-44: இருபால் ................... உய்த்ததும்

இதன் பொருள் : இருபால பெயரிய உருகெழு மூதூர்- இவ்வாற்றால் சம்பாபதி என்றும் காவிரிப்பூம்பட்டினம் என்றும் இருவகையான பெயர்களைக் கொண்டு பகைவர்க்கு அச்சத்தைத் தரும் பழைய ஊராகிய அந்த நகரத்தே; ஒரு நூறு வேள்வி உரவோன் தனக்கு பெருவிழா அறைந்ததும்-ஒப்பற்ற நூறு வேள்விகளைச் செய்து முடித்தமையாலே அமரருக்கு அரசனாம் பேறு பெற்ற ஆற்றலுடைய இந்திரனுக்குப் பெரிய விழா வெடுத்தற் பொருட்டு மன்னவன் பணிமேற் கொண்டு தொல்குடி வள்ளுவன் முரசறைந்த தூஉம்; அலர் பெருகியது என சிதைந்த நெஞ்சின் சித்திராபதிதான் வயந்த மாலையான் மாதவிக்கு உரைத்ததும் -மாதவி துறவு பூண்டமையால் தங்குடிக்குப் பழி பெரியதாயிற்றென்று கருதியதனாற் கலங்கிய நெஞ்சதையுடைய சித்திராபதி வயந்தமாலை என்னும் கூனியை ஏவி அப்பழியை மாதவிக்கு அறிவுறுத்திய தூஉம்; மணிமேகலை தான் மாமலர் கொய்ய அணிமலர்  பூம்பொழில் அகவயின் சென்றதும் மாதவியால் துறவிற் புகுத்தப்பட்ட மணிமேகலை புத்தருக்கு அணிவித்தற்குச் சிறந்த புதுமலர் கொய்துவரும் பொருட்டு அழகிய மலர்வனத்தினுள்ளே சென்று புகுந்ததூஉம்; ஆங்கு அப் பூம்பொழில் அரசிளங் குமரனைப் பாங்கிற் கண்டு அவள் பளிக்கறை புக்கதும் - அப்பொழுது அம் மலர்வனத்தினூடே மன்னிளங்குமரனாகிய உதயகுமரன் தன் பக்கலிலே வருதலை அவன் தேர் ஒலியாற் கண்டு அம் மணிமேகலை அங்கிருந்த பளிக்கறையினுட் புகுந்து கொண்டதூஉம்; பளிக்கரை புக்க பாவையைக் கண்டவன் - பளிக்கறையின்கட் புகுந்திருந்த மணிமேகலையைப் பளிங்கிணூடே கண்ட அம் மன்னிளங்குமரன்; துளக்குறுநெஞ்சில் துயரொடு போய பின் - காமத்தாலே கலங்கிய நெஞ்சில் நிறைந்த துன்பத்தோடே அம் மலர்வனத்தைவிட்டுச் சென்ற பின்னர்; மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியதும்-மணிமேகலா தெய்வம் அங்கு மக்களுருக் கொண்டு வந்து தோன்றிய தூஉம்; மணிமேகலையை மணி பல்லவத்து உய்த்ததும்-அத்தெய்வம் மணிமேகலையை உறங்கும்பொழுது எடுத்துப் போய் மணி பல்லவம் என்னும் சிறியதொரு தீவின்கண் வைத்ததும் என்க;

(விளக்கம்) இருபாற் பெயரிய: சம்பாபதி, காவிரிப்பூம்பட்டினம் என்னும் இரண்டு பெயர்களையுடைய.நூறு பெருவேள்வி செய்து முடித்தவனே இந்திரனாம் தகுதிபெறுவான் ஆதலின் அவ் வரலாறு தோன்ற வாளாது இந்திரன் என்னாது ஒருநூறு வேள்வி உரவோன் என்றார். இந்திரவிழா ஆண்டுதோறும் சித்திரா பருவத்திலே தொடங்கி இருபத்தெட்டு நாள் நிகழ்த்தப்பட்டுக் கடலாட்டோடு நிறைவுறும் ஒருமாபெருந்திருவிழா ஆகலின் பெருவிழா என்றார். அலர்- பழி.அஃதாவது வேத்தியல்.......உரைநூற் கிடக்கையும் கற்றுத் துறைபோகிய ஒரு நாடகக்கணிகை நற்றவம் புரிந்தது நாணுடைத்து என மாக்கள் தூற்றும் பழிச்சொல். சித்திராபதி-மாதவியின் தாய். வயந்தமாலை-மாதவியின் பணிமகள். மணிமேகலை - கோவலனுக்கும் மாதவிக்கும் தோன்றியவள். இக் காப்பியத்தலைவியுமாவாள்.அரசிளங்குமரன் - உதயகுமரன். பளிங்கு அறை - வேற்றுமைப் புணர்ச்சியால் மென்றொடர் வன்றொடராயிற்று. பளிங்கினாலியன்ற அறை என்க. பாவை: மணிமேகலை. மணிமேகலா தெய்வம் - இந்திரன் பணிமேற்கொண்டு மணிபல்லவம் முதலிய சில தீவுகளைக் காக்குமொரு தெய்வம்; கோவலனுடைய குலத்தெய்வமுமாம். இத் தெய்வம் தன் முன்னோன் ஒருவனைக் கடலில் மூழ்கி இறைவாவண்ணம் செய்த உதவியைக் கருதி அத் தெய்வத்தின் நினைவுக்குறியாகவே தன் மகட்குக் கோவலன் மணிமேகலை என்னும் பெயரும் சூட்டினான்.

இதுவுமது

45-50 : உவவன..............உணர்ந்ததும்

(இதன் பொருள்) உவவனம் மருங்கின் அவ் உரை சால் தெய்வதம் சுதமதி தன்னைத் துயில் எடுப்பியதூஉம்- அம் மலர்வனத்தின் பக்கத்திலே அப் புகழ் மிக்க மணிமேகலா தெய்வம் மீண்டும் வந்து ஆங்குத் தூங்கு துயிலெய்திக் கிடந்த சுதமதி என்பவளைத் துயிலுணர்த்தியதும்; ஆங்கு அத் தீவகத்து ஆயிழை நல்லாள் தான் துயில் உணர்ந்து தனித்துயர் உழந்ததும் - மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் துயில் கலையாவண்ணம் எடுத்துப் போய்த் துயிலக்கிடத்தி வந்த அவ்விடத்தே (அஃதாவது-அம் மணிபல்லவத் தீவின் கண்ணே) அழகிய அணிகலன் அணிதற்கியன்ற பெண்ணின் நல்லாளாகிய மணிமேகலை வழி நாட் காலையிலே தானே துயிலுணர்ந்து தனக்கு நேர்ந்த தென்னென்றறியாமையாலே மாபெருந் துன்பத்தாலே வருந்தியதும் உழந்தோள் ஆங்கண் பான்மையின் ஓர் ஒளி மணி பீடிகை பழம் பிறப்பு எல்லாம் உணர்ந்ததும் - அவ்வாறு துன்ப மெய்திய அம் மணிமேகலை ஏதுநிகழ்ச்சி எதிர்ந்துள்ளமையால் அவ்விடத்தேயிருந்த ஓர் ஒளியுடைய மணிகளாலியன்ற புத்த பீடிகையைக் கண்டு தொழுதமையால் தன் பழம் பிறப்பும் அதன் கண் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுமாகிய அரிய செய்திகள் பலவற்றையும் தானே உணர்ந்து கொண்டதும் என்க.

(விளக்கம்) உவவனம் -மக்களால் உண்டாக்கப்பட்ட பூம்பொழில். உரை - புகழ். சுதமதி - மாதவியின் தோழியும் மணிமேகலைக்குறுதுணையாய்ச் சென்றவளும் ஆகிய ஒரு பார்ப்பனப் பெண் துறவி (பிக்குணி).துயிலெடுப்பியது-துயிலினின்றும் எழுப்பியது. அத்தீவகம் - முன் கூறப்பட்ட மணிபல்லவம். உழந்தோள் : பெயர்.பீடிகை - புத்தபீடிகை.பான்மையின் -ஏது நிகழ்ச்சி எதிர்ந்தமையின்; ஊழ்வினை நிகழ்ச்சியை ஏது நிகழ்ச்சி என்பது பௌத்தருடைய வழக்கு.

இதுவுமது

51-58: உணர்ந்தோள்.........உரைத்ததும்

(இதன் பொருள்) உணர்ந்தோள முன்னர் உயர்தெய்வம் தோன்றி மனம் கவல் ஒழிக என மந்திரம் கொடுத்ததும் - பழம் பிறப்புணர்ந்த அம் மணிமேகலையின் முன்னர்ச் உயரிய பண்புடைய மணிமேகலா தெய்வம் தானே எளிவந்து தோன்றி மகளே! நின்நெஞ்சத்துத் துன்பங்களை யெல்லாம் ஒழித்திடுக என ஆறுதல் கூறி, அரிய மூன்று மறை மொழிகளை அறிவுறுத்ததும்; தீப திலகை செவ்வனம் தோன்றி மாபெரும் பாத்திரம் மடக் கொடிக்கு அளித்ததும் - தீவ திலகை என்னும் மற்றொரு தெய்வம் மணிமேகலை முனனர்த் தோன்றிச் செவ்விதாக மிகப் பெரிய சிறப்பு வாய்ந்த அமுதசுரபி என்னும் பிச்சைப் பாத்திரம் ஒன்றனை இளங்கொடி போல்வளாகிய அம் மணிமேகலைக்கு வழங்கியதும் பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு யாப்புறும் மாதவத்து அறவணர்த் தொழுததும் - அமுதசுரபியைப் பெற்று மறைமொழியினுதவியாலே அம் மணிமேகலை வான் வழியாகப் பறந்துவந்து புகார் நகரம் எய்தித் தன் தாயராகிய மாதவியோடும் சுதமதியோடும் கூடிக் கட்டமைந்த பெரிய தவவொழுக்கத்தையுடைய அறவணவடிகளைக் கண்டு வணங்கியதும்; நறுமலர்க் கோதைக்கு - நறிய மலர் மாலையணியத் தகுந்த இளமையுடைய மணிமேகலைக்கு; அறவணவடிகள் ஆபுத்திரன் திறம் நன்கனம் உரைத்ததும் - அறவணவடிகளார் அமுதசுபிக்குரியவனான ஆபுத்திரன் என்பானுடைய வரலாறும் பண்புமாகிய செய்திகளை யெல்லாம் விளக்கமாக விளம்பியதும் என்க.

(விளக்கம்) உணர்ந்தோள் :பெயர்; மணிமேகலை. தீய தெய்வமும் உளவாகலின் அவற்றினீக்குதற்கு உயர் தெய்வம் என்றார்; அஃதாவது - மணிமேகலா தெய்வம். கவல் - துன்பம். மந்திரம் - மறைமொழி. மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு வேற்றுரு வெய்தவும்; வானத்தே இயங்கவும் பசிபிணியின்றி இருத்தற்கும் வேண்டிய ஆற்றல் தரும் மூன்று அரிய மந்திரங்களை செவியறிவுறுத்தது; இவற்றை ஈந்தமையால் இனி நீ மணங்கவல வேண்டா என்று ஆறுதலும் கூறிற்று என்க. செவ்வனம்-செம்மையாக. திருவுருவங்கொண்டு தோன்றி என்க. வேண்டுவார் வேண்டும் உண்டியை வேண்டுமளவும் சுரந்தளிக்கும் மிகக் பெரிய சிறப்புடைய பாத்திரம் என்றவாறு பெருமை ஈண்டு அதன் அளவின் மேல் நில்லாது சிறப்பின் மேனின்றது. மடக்கொடி என்றது அவளது இளமையை விதந்தபடியாம். பைந்தொடி : மணிமேகலை. சுதமதி மணிமேகலையின் பால் தாய்மை யன்புடையாளாதல் பற்றி அவளையும் உளப்படுத்துத் தாயர் எனப் பன்மைச் சொல்லாற் கூறினர். பிறாண்டும் இங்கனமே கூறுதல் காணலாம். யாப்புறுமாதவம் - பொறிபுலன்களைக் கட்டியொழுகும் பெரிய தவம். ஆபுத்திரன்- இக் காப்பிய வுறுப்பினுள் சிறந்தோர் உறுப்பாக அமைத்தவன்; அமுதசுரபியைத் தெய்வத்திடம் முதன்முதலாகப் பெற்றவன்; தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த பெருந்தகை; ஆவால் பாலூட்டி வளர்க்கப்பட்டவன். நன்கனம் -நன்கு; நன்றாக.

இதுவுமது

59-68 : அங்கை ...........சென்றதும்

(இதன் பொருள்) அங்கைப் பாத்திரம் ஆபுத்திரன்பால் சிந்தா தேவி கொடுத்த வண்ணமும் - தன் அகங்கையி லேந்திய அமுதசுரபி என்னும் பிச்சை பாத்திரத்தை ஆபுத்திரனுடைய அருளுடைமை கண்டிரங்கிய கலைமகளாகிய சிந்தாதேவி என்னும் தெய்வம் அவன்பால் கொடுத்த திறமும்; மற்று அப்பாத்திரம் மடக்கொடி ஏந்திப் பிச்சைக்கு அவ்வூர்ப் பெருந்தெரு அடைந்ததும் -மேலும் அவ்வமுத சுரபியை மணிமேகலை அங்கையிலிலேந்தி முதன்முதலாக அதன்கண் பிச்சை ஏற்கும் பொருட்டு அகன்ற புகார் நகரத்துத் தெருவிலே எய்தியதும்; பிச்சை ஏற்ற பெய்வளை கடிஞையின் பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும் -அவ்வாறு பிச்சைபுக்க மணிமேகலை ஏந்திய அம்மாபெரும் பாத்திரத்தின்கண் முதன் முதலாகச் சிறந்த கற்புடைய மகளாகிய ஆதிரை நல்லாள் பலரும் பகுத்துண்டற் கியன்ற உணவினைப் பிச்சையாகப் பெய்ததும்; காரிகை நல்லாள் காயசண்டிகை வயிற்று ஆனைத்தீக் கெடுத்து அம்பலம் அடைந்ததும் - அழகுமிக்க மணிமேகலை அமுத சுரபியில் ஏற்ற பிச்சை யுணவினை ஊட்டிக் காயசண்டிகை என்பவளை நீண்ட காலமாகப் பற்றி வருத்திய ஆனைத்தீ என்னும் வயிற்று நோயை தீர்த்துப் பின்னர் உலகவறவி என்னும் அம்பலத்தை எய்தியதும்; ஆயிழை அம்பலம் அடைந்தாள் என்று கொங்கு அலர் நறுந்தார்க் கோமகன் சென்றதும் - மணிமேகலை உலக வறவி என்னும் அம்பலம் எய்திய செய்தி கேட்டுத்தேனோடு மலர்ந்த நறிய ஆத்திமாலை சூடிய சோழமன்னன் மகனாகிய உதயகுமரன் அவளைத் கைப்பற்றும் கருத்தோடு அவ்வம்பலத்திற்குச் சென்றதும்; என்க 

(விளக்கம்) அங்கை - அகங்கை; உள்ளங்கை. அகம் என்னும் நிலைமொழி ஈற்றுயிர்மெய்கெட்டது சிந்தாதேவி - தலைமகள். நகரமாதலின் பெருந்தெரு என்றார். பத்தினிப் பெண்டிர் என்றது ஆதிரையை; பத்தினி ஆகலின் ஒருவரைக் கூறும் உயிர்மொழியாகக் கருதிப் பன்மைக்கிளவியால் கூறினர். பன்னையொருமை மயக்கம் எனினுமாம். பாத்தூண் - பகுத்துண்ணும் உணவு. காரிகை - அழகு அம்பலம் - உலக அறவி என்னும் பெயருடையதாய்ப் புகார் நகரத்திருந்ததொரு பொதுவிடம். ஆங்கு இரவலர் வந்து குழுமுவர் ஆதலின் அவர்க்கூட்டும் பொருட்டு அங்கு மணிமேகலை எய்தினன் என்பது கருத்து. அயிழை: மணிமேகலை அவள் உலகவறவி புகுந்தாள் என்று கேள்வியுற்று அரசிளங்குமரன் அவளைக் கைப்பற்றி வருங் கருத்துடன் அம்பலம் அடைந்தான் என்பது கருத்து.

இதுவமது

69-78: அம்பலம்............ வண்ணமும்

(இதன் பொருள்.) அம்பலம் அடைந்த அரசிளங்குமரன் முன் வஞ்ச விஞ்சையன் மகள் வடிவாகி - தன்னைப் பெரிதும் கரமுற்று அவ்வம்பலம் புக்க அக் கோமகன் முன் அவன் தன்னைக் அறியா வண்ணம் வஞ்சித்துப் போகும் பொருட்டு விச்சாதரன் மனைவியாகிய காயசண்டிகையின் உருவத்தை மேற்கொண்டு அவனைப் போக்கியபின் அவ் வுருவத்தோடு அந்நகரத்துச் சிறைக் கோட்டம் புகுந்து ஆங்குப் பசியால் வருந்துவோர் துயர் களையு மாற்றால்; மறஞ்செய் வேலோன் வான் சிறைக் கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய வண்ணமும் - வீரப்போர் செய்யும் வேலேந்திய சோழ மன்னனுடைய உயர்ந்த சிறைக் கோட்டத்தையே அறக் கோட்டமாக மாற்றிய செய்கையும்; விஞ்சைக் காஞ்சனன் காய சண்டிகை என - மணிமேகலை காயசண்டிகை யுருவத்தோடு அம்பலத்திலே வந்த அரசிளங்குமரனோடு சொல்லாட்டம் நிகழத்தியபொழுது அவளைக் காணவந்தவனாகிய விச்சாதரன் அவளைத் தன் மனைவியாகிய காய சண்டிகை என்றே கருதி அவள் ஒழுக்கத்தை ஐயுற்று அவ்வையந் தீர்க்குக் கரந்துறைபவன்: ஆயிலை தன்னை அகலாது அணுகலும் -அரசன் மகன் மணிமேகலையை காணும் வேட்கையால் அறங்கேட்டும் அகலாதவனாய் மீண்டும் அங்கு வந்தமையால்: வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனைக் மைந்துடை வாளில் தப்பிய வண்ணமும் - வஞ்சத்தாலே கரந்திருந்த அவ்விச்சாதரன் மனைவன் மகனாகிய உதயகுமரனை வலிமை மிக்க வாளால் எறிந்து போனதும்; மை அரி யுண்கண் அவன் துயர் பொறாஅள் தெய்வக் கிளவியில் தெளிந்த வண்ணமும் - கரிய நிறமும் செவ்வரியும் உடையவாய்க் கண்டோர் நெஞ்சத்தைப் பருகும் பேரெழில் படைத்த கண்ணையுடைய மணிமேகலை அரசன் மகன் இறந்தமையா லெய்திய துன்பத்தைப் பெறாமல் வழிந்திப் பின்னர்க் கந்திற் பாவையாகிய தெய்வம் வருவதுரைத்துத் தேற்றத் தெளிந்த தன்மையும்; என்க.

(விளக்கம்) வஞ்சத்தாலே விஞ்சையான் மகள் வடிவாகி என்க. விஞ்சையன் - விச்சாதரன். மகள் - மனைவி. மனைவியை மகள் என்னும் வழக்கு இந்நூல் பிறாண்டும் காணப்படும். கதைத்தொடர்பு நன்கு விளங்குதற் பொருட்டு ஈண்டைக்கு வேண்டுவன சில சொற்கள் தந்துரைக்கப்பட்டன. இவ்வாறு தந்துரைப்பன இசையெச்சத்தாற் கொள்ளப்படுவன. யாண்டும் இதனைக் அறிந்து கடைப்பிடிக்க. வேளோன் : சோழமன்னன் மக்களைச் சிறைசெய்தலும் வேந்தற்கு வடுவன்று அவனுக்கியன்ற கடமை என்பார் மறஞ்செய் வேலோன் என மன்னனை விதந்தார். கோட்டம் இரண்டும் ஈண்டுக் கட்டிடம் என்னுந் துணையாம். வாளில் தப்புதல் - வாளாலெறிந்து கொல்லுதல். மை அரி உண் கண் என்னும் பன்மொழித் தொடர் மணிமேகலை என்னும் துணையாய் நின்றது. அவன் என்றதும் உதயக்குமரனை. மணிமேகலை பற்பல பழம் பிறப்புக்களிலே அவன் மனைவியாகி அவனோடு வாழ்ந்தவளாதலின் பழம் பிறப்பணபுணர்ச்கியுடைய மணிமேகலை அவன் இறந்தமை பொறாது வருந்தனள் என்பது கருத்து. தெய்வம் - கந்திற் பாவையினிற்குந் தெய்வம். கிளவி - சொல்.

இதுவுமது

79-88: அறைகழல்........ கேட்டதும்

(இதன் பொருள்) அறை கழல் வேந்தன் ஆயிழை தன்னைச் சிறை செய் கென்றதும் - ஆரவாரிக்கும் வீரக்கழலணிந்த சோழ மன்னன் மணிமேகலையைச் சிறையிடச் செய்ததும்; சிறைவீடு செய்ததும் - பின்னர்ச் சிறைவீடு செய்வித்ததும்; ஆய்வளை நறுமலர்க் கோதைக்கு நல் அறம் உரைத்து ஆங்கு ஆபுத்திரன் நாடு அடைந்ததும் - சிறை வீடு பெற்ற மணிமேகலை நறிய மலர் மாலையணிந்த கோப்பெருந் தேவிக்கு நல்லனவாகிய அறங்கள் பல வற்றையும் அறிவுறுத்து அப்பால் ஆபுத்திரன் மறுமையில் மன்னவனாகி அருளாட்சி செய்கின்ற சாவக நாட்டிற்குச் சென்றதும் அணியிழை ஆங்கு அவன் தன்னோடு போகி ஓங்கிய மணி பல்லவத்திடை உற்றதும் - மணிமேகலை அந் நாட்டரசனாகிய ஆபுத்திரனோடு சென்று உயர்ந்த மணி பல்லவத் தீவினகட் புகுந்ததும்; உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவாய்ப் பொற்கொடி வஞ்சியின் பொருந்திய வண்ணமும் - மணி பல்லவத்தை எய்திய மணிமேகலை அவ்வாசனை அவனாட்டிற்குப் போக்கி அப்பால் அத் தீவினின்றும் ஓர் உயரிய தவவொழுக்க முடைய துறவோன் வடிவத்தை மேற்கொண்டு அழகிய கொடியுயர்த்தப் பட்ட வஞ்சிமா நகரத்தே வந்துற்ற செய்தியும்; நவை அறுநன் பொருள் உரைமினோ எனச் சமயக் கணக்கர் தம் திறம் கேட்டதும் அவ் வஞ்சிமா நகரத்திலே அம்மாதவன் வடிவத்தோடே சென்று, பிறப்புப்பிணி அறுதற் கியன்ற நன்மை தருகின்ற நுமது தத்து வங்களைக் கூறுங்கோள்! என்று பல்வேறு சமயத் தலைவர்களையும் தனித்தனியே கண்டு வினவி, அவ்வவர் சமயங்கட்கியன்ற தத்துவங்களை யெல்லாம் கேட்டறிந்ததும் என்க.

(விளக்கம்) அறை கழல்: வினைத்தொகை. சிறைவீடு. சிறைக்கோட்டத்தினின்றும் விடுதலை செய்தல். நறுமலர்க் கோதை: கோப் பெருந்தேவி. ஆய்வளை: மணிமேகலை. அவன் நாடு - ஆபுத்திரன் மறுபிறப்பில் அரசனாகி ஆட்சி செய்கின்ற நாடு. அஃதாவது சாவகநாடு. பொற்கொடி வஞ்சி - அழகிய கொடியுயர்த்திய வஞ்சிநகரம் என்க. வெளிபடை. நவை - பிறவிப்பணி. நன்பொருள் - தத்துவம். சமயக் கணக்கர் - சமய முதல்வர்.

இதுவுமது

89-98: ஆங்க ......வைத்தான்

(இதன் பொருள்) ஆங்கு அத்தாயரோடு அறவணர்த் தேர்ந்து - அவ் விடத்திலே தன் தாயராகிய மாதவியையும் சுதமதியையும் நல்லாசிரியராகிய அறவணடிகளாரையும் கண்டு அடிவணங்க விரும்பியும்; பூங்கொடிகச்சி மாநகர் புக்கதும் - மணிமேகலை ஆங்குத் துறவியாயிருந்த மாசாத்துவான் வேண்டுகோட் கிணங்கியும் வானத்தே இயங்கிக் காஞ்சிமா நகரத்தே சென்று புகுந்ததும்; புக்கவன் கொண்ட பொய்யுருக் களைந்து - காஞ்சியிற் புகுத்தவள் தான் மேற்கொண்டிருந்த மாதவன் வடிவத்தைத் துறந்து; மற்று அவர் பாதம் வணங்கிய வண்ணமும் - தான் காணவிரும்பிய தாயாரும் அடிகளாரும் தன்னைத்தேடி வந்தவரைக் கண்டு மகிழ்ந்து அவரடிகளிலே வீழ்ந்து வணங்கிய வண்ணமும்; தவத்திறம் பூண்டு தருமம் கேட்டு - தவக்கோலம் பூண்டு அறவணவடிகளார்பால் பௌத்த தருமங்களைக் கேட்டுணர்ந்தும்; பாவை பவத்திறம் அறுகென நோற்றதும்; மணிமேகலை தருமங் கேட்ட பின்னர்ப் பிறப்பிற்குக் காரணமாக பழவினைத் தொகுத்து துவரங் கெடுவதாக என்னும் குறிக்கோளோடு பொருளகளின்பால் பற்றறுதற்குரிய நெறியில் அதற்கியன்ற நோன்புகளைக் கடைபிடித் தொழுகியதும் ஆகிய இவற்றை யெல்லாம்; இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப - இளங்கோ வடிகளார் என்னும் சேரமுனிவன் தலைமை வீற்றிருந்தருளி விரும்பிக் கேளாநிற்ப; வளம்கெழு கூல வாணிகன் சாத்தன் - வளம் பொருந்திய மதுரைக் கூல வாணிகனாகிய தண்டமிழ்ப் புலவன்; ஆறு ஐம் பாட்டினுள் -முப்பது காதைகளிலே அரங்கேற்றி; மணிமேகலை துறவு மாவண் தமிழ்த் திறம் அறிய வைத்தனன்.- மணிமேகலை துறவு என்னும் இத் தொடர்நிலைச்செய்யுளா லியன்ற மணிமேகலை துறவு என்னும் பெயரையுடைய இவ் வனப்பியல் நூல் வாயிலாக எழுத்து வளமும் சொல்வளமும் பொருள்வளமும் ஆகிய வளம் பலவும் பெற்றுச் சிறந்துள்ளமையாலே பெருவளமுடைய மொழியாக விளங்குகின்ற நந்தமிழ் மொழியானது சிறப்பினை உலகுள்ள துணையும் மக்கள் அறியும்படி மாபெருங் காப்பியமாக இயற்றி நிறுவினன் என்பதாம்.

(விளக்கம்) பொய்யுரு -வேற்றுருவம். இளங்கோ வேந்தன் என்றது இளங்கோவடிகளாரை. இளங்கோ என்ற பின்னரும் வேந்தன் என்று வேண்டாது கூறியது, அவர் தாமும் சிந்தை செல்லாச் சேணெடுந் தூரத்து அந்தம் இல் அரசாள் வேந்தாக இருத்தலைக் கருதிக் காணுமாறு தாம் வேண்டிய தொன்றனை முடித்தற் பொருட்டென்க. கண்ணகித் தெய்வமே அவரை இளங்கோ வேந்தனாகவே கண்டு பாராட்டியதனை(சிலப், வர - 180 -3 சிலப்பதிகாரத்தில் காண்க.

மணிமேகலை துறவு என்பதே இக் காப்பியத்திற்கு ஆசிரியரிட்ட பெயர் என்பதனை இப் பதிகத்தால் அறியலாம். இவ்வாறே நீலகேசித் தெருட்டு என அதன் ஆசிரியர் இட்ட பெயர் இறுதிச்சொல் மறைந்து நீலகேசி என்று வழங்கிவருவதும் நினைக.

கூலவாணிகன் சாத்தனார் கொள்கை பௌத்த தருமத்தை மக்கள் அறியவைத்தலே யாகும். ஆயினும் அவருடைய கருத்து நிறைவேறிற்றில்லை. மற்று மணிமேகலையால் எய்திய பயன், மானண் தமிழ்த் திறமே யாய் முடிந்தது. அத் தமிழ்த்திறம் பற்றியே இந்நூல் தமிழகத்தே தமிழ் மொழி நிற்கும் அளவும் நின்று நிலவும் ஆற்றில் பெற்றுத் திகழ்கின்றது என்பதில் ஏதும் ஐயமில்லை.

இப் பாயிரம்(பதிகம்) பிறராற் செய்யப்பட்டது. சாத்தன் என ஆசிரியரைப் படர்க்கையாகப் பேசுவதே இதற்குச் சான்று. இனி இப் பாயிரத்தில் ஆக்கியோன் பெயர் சாத்தன் என்பதனாலும் வண்டமிழ்த்திறம் என்றதனால் அதற்கியன்ற எல்லையே இதற்கும் எல்லை என்பதும் போந்தன. முதனூலாகலின் வழிகூற வேண்டாவாயிற்று. மணிமேகலை துறவு என்பதும் நூற்பெயர். காலம் களம் காரணம் என்னும் பாயிரவுறுப் புக்கள் பலவும் அமைந்துள்ளமையும் அறிக.

பதிகம் முற்றிற்று.
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 08:44:31 AM
1. விழாவறை காதை

முதலாவது விழாவறைந்த பாட்டு

அஃதாவது: பூம்புகார் நகரத்து வாழ்கின்ற சமயக் கணக்கர் முதலிய பெரியோர் ஒருங்கு கூடி அந் நகரத்திலே வாண்டு தோறும் நிகழ்த்தப்பட்டு வருகின்ற இந்திர விழா என்னும் பெருவிழா எடுத்தற்குரிய சித்திரைத் திங்களின் முழுமதி நாள் அணுகி வருதலானே அவ் விழாவிற்குக் கால் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து அதனை நகரமக்கட்கு அறிவிக்கும் படி வழக்கம் போல விழா முரசம்  அறையும் முதுகுடிப் பிறந்த வள்ளுவனுக்கு அறிவிப்பு, அது கேட்ட வள்ளுவன்றாணும் வச்சிரக் கோட்டத்தில் வைக்கப்பட்டிருக்கின்ற மணங்கெழு முரசத்தைக் கச்சையானைப் பிடர்த்தலை ஏற்றித் தானும் ஏறியிருந்து அவ் விழா நிகழப் போவதனையும் அதற்குக் கால் கோள் செய்யும் நாளையும் விழாவின் பொருட்டு நகரத் தெருக்கள் தோறும் முரசறைந்த செய்தியைக் கூறும் பாட்டு என்றவாறு. இக் காதையினால் இற்றைக் கிர்கடாயிரம் ஆண்டுகட்கு முன்னர்த் தமிழகத்து மாந்தர் விழா நிகழ்த்தும் முறையும், அவர் ஒப்பற்ற நாகரிகமும் இனிது விளங்கும்.

உலகம் திரியா ஓங்கு உயர் விழுச் சீர்ப்
பலர் புகழ் மூதூர்ப் பண்பு மேம்படீஇய
ஓங்கு உயர் மலயத்து அருந் தவன் உரைப்ப
தூங்கு எயில் எறிந்த தொடித் தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று
மண்ணகத்து என்தன் வான் பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக் கோள் எடுத்த
நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என
அமரர் தலைவன் ஆங்கு அது நேர்ந்தது
கவராக் கேள்வியோர் கடவார் ஆகலின்  01-010

மெய்த் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும்
இத் திறம் தம் தம் இயல்பினின் காட்டும்
சமயக் கணக்கரும் தம் துறை போகிய
அமயக் கணக்கரும் அகலார் ஆகி
கரந்து உரு எய்திய கடவுளாளரும்
பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும்
ஐம் பெருங்குழுவும் எண் பேர் ஆயமும்
வந்து ஒருங்கு குழீஇ வான்பதி தன்னுள்
கொடித் தேர்த் தானைக் கொற்றவன் துயரம்
விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்  01-020

மடித்த செவ் வாய் வல் எயிறு இலங்க
இடிக் குரல் முழக்கத்து இடும்பை செய்திடும்
தொடுத்த பாசத்து தொல் பதி நரகரைப்
புடைத்து உணும் பூதமும் பொருந்தாதாயிடும்
மா இரு ஞாலத்து அரசு தலையீண்டும்
ஆயிரம்கண்ணோன் விழாக் கால்கொள்க என
வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
ஏற்று உரி போர்த்த இடி உறு முழக்கின்
கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை  01-030

முரசு கடிப்பு இகூஉம் முதுகுடிப் பிறந்தோன்
திரு விழை மூதூர் வாழ்க! என்று ஏத்தி
வானம் மும் மாரி பொழிக! மன்னவன்
கோள் நிலை திரியாக் கோலோன் ஆகுக!
தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்
ஆயிரம்கண்ணோன் தன்னோடு ஆங்கு உள
நால் வேறு தேவரும் நலத்தகு சிறப்பில்
பால் வேறு தேவரும் இப் பதிப் படர்ந்து
மன்னன் கரிகால்வளவன் நீங்கிய நாள்
இந் நகர் போல்வதோர் இயல்பினது ஆகிப்  01-040

பொன்நகர் வறிதாப் போதுவர் என்பது
தொல் நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின்
தோரண வீதியும் தோம் அறு கோட்டியும்
பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும்
பாவை விளக்கும் பல உடன் பரப்புமின்
காய்க் குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்
பூக் கொடி வல்லியும் கரும்பும் நடுமின்
பத்தி வேதிகைப் பசும் பொன் தூணத்து
முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின்
விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும்  01-050

பழ மணல் மாற்றுமின் புது மணல் பரப்புமின்
கதலிகைக் கொடியும் காழ் ஊன்று விலோதமும்
மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின்
நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா
பதி வாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறு ஆக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யுமின்
தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும்
புண்ணிய நல்லுரை அறிவீர்! பொருந்துமின்
ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள்  01-060

பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்
பற்றாமாக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்
வெண் மணல் குன்றமும் விரி பூஞ் சோலையும்
தண் மணல் துருத்தியும் தாழ் பூந் துறைகளும்
தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும்
நால் ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என
ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும்
களிறும் சூழ்தர கண் முரசு இயம்பி
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க! என வாழ்த்தி
அணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கு என்  01-072

இந்திர விழாவின் வரலாறு

1-10: உலகம்..........ஆகலில்

(இதன் பொருள்) உலகம் திரியா ஓங்கு உயிர் விழுச்சீர் பலர் புகழ் மூதூர் பண்பு மேம்படீஇய - சான்றோர் சென்ற நெறிநின்றொழுகுதலில் ஒரு பொழுதும் பிறழா தொழுகுதல் காரணமாகப் பெரிதும் உயர்ந்துள்ள தனது மாபெரும் சிறப்பினைப் பிறநாட்டிலுள்ள சான்றோர் பலரும் புகழாநிற்றற் கிடமான பழைய ஊராகிய புகார் நகரத்தின் தெய்வத் தன்மை காலந்தோறும் மேம்பட்டு வளர்தற் பொருட்டாக; ஓங்கு உயர் மலயத்து அருந்தவன் உரைப்ப - வானுற உயர்ந்து புகழானும் உயர்ந்த பொதிய மலையின்கண் இறைவன் ஏவலாலே எழுந்தருளியிருக்கும் செய்தற்கரிய தவங்களைச் செய்துயர்ந்த அகத்தியமுனிவன் பணிப்ப: தூங்கு எயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் - வானத்திலே இயங்குகின்ற மதில்களை அழித்த வீர வலைய மணிந்த சோழ மன்னன் ஒருவன்; விண்ணவர்தலைவனை வணங்கி முன்னின்று - தனக்கு நன்றிக் கடன்பட்டுள்ள அமரர்கோமனை வணங்கி அவன் முன்னிலையிலேயே நின்று; மண்ணகத்து என்றன் வான்பதி தன்னுள் - நிலவுலகத்திலமைந்த என்னுடைய தலை நகரத்தினுள்; மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என - விண்ணவரும் கரந்துரு வெய்தி வந்து கரண்டற்கு விரும்புதற்குக் காரணமான பெரிய தொரு திருவிழாவை நினைக்கு யாங்கள் எடுத்தலை மேற்கொண்ட இருபத்தெட்டு நாளினும் நீ அந்நகரத்தே அவ்விழாவினை ஏற்றுக் கொண்டு உறுதியாக அங்கேயே இனிதாக வீற்றிருந்தருளல் வேண்டும் இது யான் நின்பால் பெற விரும்பும் வரம் என்று வேண்டா நிற்ப; அமரர் தலைவன் ஆங்கு அது நேர்ந்தது - தேவர் கோமனும் மறாஅது அவ்வாறே தந்த வரத்திற்கு; கவராக் கேள்வியோர் - ஐயுறாமைக்குக் காரணமான மெய்ந்நூற் கேள்வியினையுடைய சான்றோர்; கடவார் ஆதலின் - மாறுபட்டொழுகாராதலின் என்க.

(விளக்கம்) உலகம் என்றது சான்றோருடைய ஒழுக்கத்தை,ஓங்குயர் விழுச்சீர், என்று ஒருபொருட்பன்மொழி பலவற்றை அடைபுணர்த்தோதினர். புகார் நகரத்துப் புகழ் சாலவும் உயர்ந்த புகழ்; தனக்குத் தானே நிகரான புகழ் என்றுணர்த்தற்கு. அப் புகழ் அத்தகையதாதலை புறவிற்காகத் துலாம் புக்கதும் ஆன்கன்றிற்கு மகனை ஆழியின் மடித்ததும் தூங்கெயில் எறிந்து அமரரைப் புரந்ததும் ஆகிய இன்னோரன்ன அந்நாட்டு மன்னர் செயற்கரிய செயல்களாலறிக. நாகநீள் நகரொடும் போகநீள் புகழ்மன்னும் புகார் என இளங்கோவடிகளாரும் (மங்கல) பாராட்டுதலறிக. பலர் அயல் நாட்டுச் சான்றோர் பலரும் என்க என்னை புகழத்தகுந்தவர் அவரேயாகலான். பண்பு - தெய்வப்பண்பு. அருந்தவன் - அகத்தியன். அகத்தியன் சோழனுடைய மூதூர் மேம்படுதற் பொருட்டுச் செம்பியன்பால் நீ இவ்வரத்தைக் கேள் என்றுரைத்தமையாலே செம்பியன் இந்திரன்பால் நீ விழாக்கோள் எடுத்த நாலேழ் நாளினும் என் பதியில் நன்கினிதுறைதல் வேண்டும் என வரங் கேட்டான்; அவனும் செய்ந்நன்றிக் கடன்பட்டிருத்தலான் அவ் வரத்தை மறாது நேர்ந்தனன் என்றவாறு. வானத்தே இயங்கு மதிலினுள் இருந்து அரக்கர் வானவர் ஊரெல்லாம் புகுந்து அவர்க்குக் கேடு விளைத்தனர். அம் மதிலை ஒரு சோழன் அழித்து அமரரைப் பாதுகாத்தனன். இவ்வாற்றல் நன்றிக் கடன்பட்ட இந்திரன் நீ விரும்பும் வரங்கேள் என்ன அச்சோழன் அகத்தியர் அறிவுறுத்தபடி வரம்கேட்டனன். அவனும் நேர்ந்தனன் என்க.

இவ் வீரச் செயல்பற்றி அச்சோழமன்னன் தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் எனப்பட்டான்.

விண்ணவர் தலைவனை வணங்கி முன்னின்று மண்ணகத்து என்றன் வான்பதி என்று பாட்டிடைவைத்த குறிப்பினாலே வரங்கேட்டது வானவருலகத்திலே என்பதும் பெற்றாம். இச் சோழன் அசுரர் மதிலை அழித்து அமரரைக் காத்தமையால் அடுதல் அவர்க்கு ஒரு புகழாகாது என மாறோக்கத்து நப்பசலையார் நவில்வர்.

ஒன்னு ருட்கும் துன்னருங் கடுந்திறல்
தூங்கெயி லெறிந்த நின்னூங்க ணோர்நினைப்பின்
அடுதல் நின்புகழும் அன்றே

என்பது அந் நல்லிசைப்புலவர் மணிமொழி.

மேலோர் - அமரர்.

விழாக்குழுவினர்

11-18: மெய்த்திறம் .......குழீஇ

(இதன் பொருள்) மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடு என்னும் இத்திறம் தம் தம் இயல்பில் காட்டும் - மெய்ந்நூல் வழக்கும் உலகியல் வழக்கும் நன்மைதருகின்ற துணி பொருளும் வீடுபேறும் ஆகிய இவையிற்றைச் சொல்லான் மட்டும் அறிவுறுத்துதலே யன்றித் தம் தம் ஒழுக்கத்தானும் நன்கு தெரியக் காட்டும் சிறப்புடைய; சமயக் கணக்கரும் - பல்வேறு சமயக் குரவர்களும்; தம் துறை போகிய அமயக் கணக்கரும் தமக்குரிய கணிதத்துறையில் கற்று மிகுந்த புகழுடைய காலக் கணிவரும்; அகலாராகி கரந்துரு வெய்திய கடவுளாளரும் - தமக்குரிய விண்ணவர் பதியினும் இந்நகரம் சிறந்ததென்று கருதித் தம்முருவம் கரந்து மக்களுருவிற் றிரிகின்ற தேவர்களும்; பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும் - வணிகத் தொழிலின் பொருட்டு உலகத்துள்ள நாடெல்லாம் சென்று மீண்டு வந்து ஒருங்கு கூடியிருக்கின்ற பல்வேறு மொழி பேசுகின்ற வேற்று நாட்டு வணிகத்தலைவரும்; ஐம்பெருங் குழுவும் - அமைச்சர் முதலிய ஐம்பெருங்குழுவினுள்ளாரும்; எண் பேராயமும் - கரணத்தியலவர் முதலிய எண் பேராயத்தாரும் ஆகிய கோத் தொழிலாளரும்; வந்து ஒருங்கு குழீஇ -ஊரம்பலத்தே வந்து ஒருங்கே கூடியிருந்து என்க.

(விளக்கம்) மெய்திறம் - மெய்ந்நூல் வழக்கு; வழக்கு -உலகியல் வழக்கு; நன்பொருள் - தத்துவங்கள். வீடு - வீட்டினியல்பு. இத்திறம் தம்தம் இயல்பில் காட்டுதலாவது இவற்றின் வழி நின்று ஒழுக்கத்கதைத் தம்தம்மிடத்தேயே பிறர் அறிந்து கொள்ளுமாறு ஒழுகுமாற்றால் பிறரை அறியச்செய்யும் சிறப்புடையோராதல். எனவே சொல்லுதல் யார்க்கும் எளிதாதலால் இவர் தம்தம் சமயத்தைத் தமது ஒழுக்கத்தாலேயே அறிவுறுத்துபவர் என அவர் பெருமையை விதந்தோதிய படியாம்.

சோழநாடு நீர் நாடாகலின் மருதத்திணைத் தெய்வத்தின் பெயரால் பெருவிழா எடுப்பதாயிற்று; ஆயினும் இவ்விழா நிகழும் போது அந்நகரத்தமைந்த பல்வேறு சமயஞ்சார்ந்த கடவுளர்க்கும் அவ்வவ் முறைப்படியே விழா நிகழ்த்தும் வழக்கம் உண்மையின் விழா வெடுத்தற்குப் பல்வேறு சமயக் கணக்கர்களும் வந்து குழுமினர் என்றுணர்க. இதனால் அக்காலத்தே சமயப் பூசலில்லாமை நன்குணரப்படும். இரப்போரும் ஈவாரும் இல்லாமையால் தமக்குரிய விண்ணுலக வாழ்க்கையை வெறுத்துக் கடவுளாளரும் பூம்புகாரில் கரந்துருவெய்தி மக்களூடே மக்களாய் வாழ்த்தினர் என்க. அவர்க்கே விழா வெடுக்கப் போவதால் அவரும் அக்குழுவினுள் கலந்து கொண்டனர் என்க.

ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் கோத்தொழிலாளராவார். அவருள் ஐம்பெருங்குழு அமைச்சரும் புரோகிதரும் சேனாபதியரும் தூதுவரும் ஒற்றரும் என்னும் இவர்கள் குழு. எண்பேராயம் - கரணத்தியலவர் கருமவிதிகள் கனகச்சுற்றம் கடைகாப்பாளர் நகரமாந்தர் நளிபடைத்தலைவர் யானைவீரர் இவுளி மறவர் இனையர் என்க.

இப்பகுதியால் பண்டைக்காலத்தே ஊர்ப்பொதுக் காரியங்களை நகர் வாழ் மக்களும் சான்றோரும் அரசியற் சுற்றத்தாறும் பிறநாட்டு வணிகத்தலைவரும் ஒருங்குகுழுமியே எண்ணித்துணியும் வழக்கமிருந்தமை அறியப்படும். இஃது அக்காலத்து நாகரிகச் சிறப்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாகும். குழீஇ -கூடி.

விழாக்கோள் மறப்பின் விளையுந் தீமைகள்

18-26: வான்பதி........கொள்கென

(இதன் பொருள்) விழாக் கோள் மறப்பின் நம் தலை நகரத்தே இந்திர விழா வெடுத்தலை நம்மனோர் மறந்தொழியின்; வான்பதி தன்னுள் கொற்றவன் துயரம் விடுத்த பூதம் - பண்டு அமராபதியிடத்தே நம் வேந்தனாகிய முசுகுந்தனுக்கு அசுரரால் நேர்ந்த துன்பத்தைத் துடைத்த நாளங்கடியிடத்துப் பூதமானது மடித்த செவ்வாய் வல் எயிறு இலங்க இடிக்குரல் முழக்கத்து இடும்பை செய்திடும் - சினத்தாலே மடித்த சிவந்த தன் வாயின் வலிய பற்கள் திகழும்படி இடிபோன்ற தன் குரலாலே முழக்கஞ் செய்து மாந்தருக்கு துன்பஞ் செய்யாநிற்கும்; தொடுத்த பாசத்துத் தொல்பதி நரகரைப் புடைத்துணும் பூதமும் பொருந்தா தாயிடும் - அதுவுமின்றித் தன் கைக் கயிற்றினாலே நமது பழைய இந்நகரத்திலுள்ள கயமாக்களைக் கட்டிக்கொடுபோய்ப் புடைத்து விழுங்குமாற்றால் நன்மை செய்திடும் சதுக்கப் பூதமும் அத் தொழிலில் பொருந்தாது நல்லோருக்கும் இடும்பை செய்யும்; மாயிரு ஞாலத்து அரசுதலை ஈண்டும் ஆயிரம் கண்ணோன் விழாக் கால் கொள்கென - ஆதலின் இப்பேருலகத்து பன்னரெல்லாம் வந்து கூடுதற்குக் காரணமான இத்திரவிழாவிற்குக் கால் கோள் செய்க என்று முடிவு செய்யாநிற்ப என்க.

(விளக்கம்) வான்பதி - வானநாட்டுத் தலைநகரம், அமராபதி. கொற்றவன் - முசுகுந்தன் என்னும் சோழமன்னன். இவன் இந்திரனுக்கு உற்றழியுதவச் சென்று அமராபதியைக் காத்துநின்ற பொழுது அசுரர் இருட்கணையால் அவன் கண்ணை மறைத்தபொழுது அவ்விடுக்கணை ஒரு பூதம் போக்கியது. அப்பூதம் இந்திரனால் ஏவப்பட்டுப் புகார் நகரத்தே நாளங்காடியிடத்தே இருந்து அந்நகரத்தைக் காவல் செய்துவந்தது என,(சிலப் -6: 13) இச்செய்தி கூறப்பட்டுளது. புடைத்துணும் பூதம் - சதுக்கப்பூதம். இதனியல்பினை தவமறைந் தொழுதும் தன்மையி லாளர் அவமறைந் தொழுகும் அலவைப்பெண்டிர், அறைபோ கமைச்சர், பிறர் மனை நயப்போர், பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென், கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக், காத நான்கும் கடுங்குர லெடுப்பிப் பூதம் புடைத்தணும் பூத சதுக்கமும் எனவரும் சிலப்பதிகாரத்தானு மறிக. (5: 128-36).

ஞாலத்துள்ள அரசர் முதலாக அனைவரும் வந்தீண்டும் விழா என்க. ஆயிரங்கண்ணோன்- இந்திரன். கொள்க என்று முடிவுசெய்ய என்க.

இனி இந்திரவிழாவை மறந்து கைவிடத்தகுந்த சூழ்நிலை அந்நகரத் திருந்தமையால் இங்ஙனம் கூடி முடிவுசெய்தல் வேண்டிற்று. என்னை கோவலன் அந் நகரத்தை நீங்கியதற்கே அந்நகரத்து மாந்தர் இராமன் வனம் போன நாள் அயோத்தி மாந்தர் அவலமுற்றாற்போல அவல முற்றனர் என்பது சிலப்பதிகாரத்தால் அறியப்பட்டது. இதனை

அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர் பெரும்பேதுற்றதும்   (சிலப்-95-9)

எனவரும் கோசிகமாணி கூற்றாலறிக. அப்பாலும் கோவலனுக்கும் கண்ணகிக்கும் நேர்ந்த நிகழ்ச்சிகளும் அதுகேட்டு மாசாத்துவானும் மாநாய்கனும் துறவு பூண்டமையும் இருவர் மனைவிமாரும் இறந்தமையும் இவற்றிற்கெல்லாம் மேலாக மாதவி துறவு பூண்டமையும் அம்மாநகரத்திற்குப் பேரிழவாகத் தோன்றியிருத்தல் கூடும் என்பதும், இக் காரணத்தால் அவர் விழா வெடுத்தற்கண் ஊக்கமின்றி இருத்தல் கூடும் என்பதும் ஈண்டு நுண்ணுணர்வாற் கண்டு கொள்ளல் கூடும் அன்றோ. இது விழாக்கோள் மறப்பின் எனப் பாட்டிடை வைத்த குறிப்பினாற் போந்த பொருளாம். எனவே விழாக்கொள்ளாது விடலாம். விட்டால் இன்னின்ன இன்னல் உண்டாகும் ஆதலால் விழாவெடுத்தலே நன்று என்று அக்குழுவினர் முடிவு செய்தபடியாம். ஈண்டு இக்குறிப்புப் பொருள் கொள்ளாக்காலை இப்பகுதி வேண்டா கூறலாய் முடியும் என்க.

வள்ளுவன் விழாவறையத் தொடங்குதல்

27-34: வச்சிரக்...........ஆகுக

(இதன் பொருள்) வச்சிரக் கோட்டத்து மணங் கெழு முரசம்- வச்சிரக் கோட்டத்திலே முரசு கட்டிலில் வைக்கப்பட்டு நாள் தோறும் வழிபாடு செய்துவருதலாலே நறுமணங் கமழாநின்ற விழா முரசினை; கச்சையானைப் பிடர்த்தலை ஏற்றி - கச்சை கட்டிய அரச யானையின் பிடரிடத்தே ஏற்றிவைத்து; ஏற்றுரிபோர்த்த இடி உறுமுழக்கின் கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை முரசு கடிப்பு இடும் முதுகுடிப் பிறந்தோன் - தன்னோடு ஒத்த ஆனேற்றினோடு பொருது வென்ற இளையஆனேற்றினது தோலை உரித்துப் போர்த்துக் கட்டப்பட்டதும் இடிபோன்று முழங்கும் முழக்கத்தையுடையதும் கூற்றுவினைத் தான் முழங்குமிடத்திற்கு அழைப்பதும் பகைவர் குருதியைக் காணும் வேட்கையையுடைதுமாகிய வீரமுரசத்தைக் குறுந்தடியால் முழக்கும் உரிமை பூண்ட பழைய குடியிற் பிறந்த வள்ளுவன் தானும் ஏறியிருந்து. திருவிழைமூதூர் வாழ்க என்று ஏத்தி திருமகள் எப்பொழுதும் விரும்பி வீற்றிருததற்குக் காரணமான பூம்புகார் நகரம் நீடுழி வாழ்க என்று முதன் முதலாக நகரத்தை வாழ்த்திப் பின்னர்; வானம் மும்மாரி பொழிக மன்னவன் கோள் நிலை திரியாக் கோலோன் ஆகுக - வானம் திங்கள் தோறும் மும்முறை மழை பொழிவதாக என்றும் மன்னன் கோள்கள் நிலைதிரியாமல் நன்னெறியில் இயங்குதற்குக் காரணமான செங்கோன்மை உடையான் ஆகுக என்றும் வாழ்த்திப் பின்னர் விழாவறிவுறுப்பவன்; என்க.

(விளக்கம்) விழாமுரசம் எப்பொழுதும் வச்சிரக்கோட்டத்தில் முரசு கட்டிலில் வைக்கப்பட்டிருக்கும். நாள்தோறும் நறுமலர் சூட்டி நறுமணப்புகையும் எடுத்தல் தோன்ற மணங்கெழு முரசும் என்றார் வச்சிரக்.....ஏற்றி என்னும் இந்த இரண்டடிகளும் இளங்கோவடிகளாருடைய மணிமொழியைப் பொன்போல்ப் போற்றித் தண்டமிழாசான் சாத்தனார் ஈண்டுப் பொதிந்துவைத்துள்ளனர். (சிலப்- 5:141-2) வச்சிரக்கோட்டம் -இந்திரனுடைய வச்சிரப்படை நிற்குங்கோயில். கச்சை - யானையின் கீழ்வயிற்றிற் கட்டும் கயிறு. பிடர்த்தலை என்புழித்தலை. ஏழாவதன் சொல்லுருபு.

வீரமுரசத்திற்கு வீரப்பண்புமிக்க ஆனேற்றின் வளங்கெழுமிய தோலை மயிர்சீவாது போர்த்தல் ஒரு மரபு; இதனை ஏறிரண்டுடன் மடுத்து வென்றதன் பச்சை சீவாது போர்த்த......முரசம் என்பதனானும் (புரநா-288) உணர்க. முழக்கினாலே கூற்றினைத் தன்னிடத்திற்கு வருமாறு அழைக்கும் முரசு எனினுமாம். குருதிவெள்ளத்தைக் காணும் வேட்கை என்க. மன்னனுடைய வீரமுரசத்தை முழக்கும் உரிமை பெறுதல் வள்ளுவர்க்கு ஒரு பேறு. வழிவழியாக அம்முரசம் முழக்கும் உரிமையுடையோன் என்பார் முதுகுடிப்பிறந்தோன் என்றார்.

விழாச் சிறப்பு

35-42: தீவக.........ஆதலில்

(இதன் பொருள்) தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்- இந் நாவலந் தீவினுள்ள மாந்தர் எல்லாம் பகை பசி பிணி முதலியவற்றால் இடுக்கணுறாமைப் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்தியாகிய இப்பெருவிழா நிகழ்த்தா நின்ற இருபத்தெட்டு நாள் முடியும் துணையும்; ஆயிரம் கண்ணோன் தன்னோடு ஆங்குள நால் வேறு தேவரும் இந்நகரத்திலே இனிது உறைவதாக வரமீந்த இந்திரனோடு அவ்வானுலகத்தே வதிகின்ற நால் வேறு வகைப்பட்ட தேவர்களும்; நலத்தகு சிறப்பின் பால் வேறு தேவரும் - தத்தமக்கே சிறந்துரிமையுடைய பல்வேறு நன்மைகள் காரணமாகப் பல்வேறு பகுதியினராகிய ஏனைய தேவர்களும்; இப்பதிப் படர்ந்து - இந்நகரத்திருத்தலாலுண்டாகும் இன்பத்தை நினைந்து; மன்னன் கரிகால் வளவன் நீங்கிய நாள் - இந் நகரத்து மன்னனாயிருந்த கரிகாற் சோழன் வடநாட்டரசரைப் போரில் வென்று புகழ் பெறக் கருதி வடநாட்டின் மேல் சென்ற நாளிலே; இந் நகர் போல்வது ஓரியல்பினது ஆகி - இப் பூம்புகார் நகரம் வறிதாய்க்  கிடந்ததொரு தன்மையுடையதாய்; பொன்னகர் வறிதா போதுவர் -தாம் வாழுகின்ற பொன்னகரமாகிய அமராபதி நகரம் வறிதாகக் கிடக்கவிட்டு இப் புகார் நகரத்திற்கு வந்திடுவர் என்பது; தொல்நிலை உணர்த்தோர் துணி பொருள் ஆதலில் - பண்டும் பண்டும் இத் திருவிழாக் காலத்துத் தன்மையைக் கூர்ந்துணர்ந்த சான்றோர் தெளிந்ததோருண்மை யாதலாலே (என்றான்) என்க.

(விளக்கம்) தீவகம் - நாவலந்தீவு. இத் தீவகத் தெய்வத்தின் பெயரால் படைப்புக் காலத்திலேயே சம்பாபதி என்னும் நகரம் படைக்கப் பட்டமையான் அதன்கண் நிகழ்த்தும் சாந்தி இத் தீவக முழுமைக்கும் உரியதாம் என்பார் தீவகச் சாந்தி என்றார். ஆயிரங் கண்ணோன் அப் பெருவிழா நிகழ்தரு நாலேழ் நாளும் அங்கு வந்து இனிதிருப்பதாக வரந்தந்தமையால் அங்கு வரும் கடப்பாடுடையான் ஆதலின் அவன் வரவு கூறாமலே அமையு மாகலின் ஏனைய தேவர் வரவை உடனிழகழ்ச்சி ஒடு உருபு கொடுத்தோதினன், நால் வேறு தேவர் என்றது, வசுக்களும் கதிரவரும் உருத்திரரும் மருத்துவருமாய் நால்வகைப்பட்ட தேவர் என்றவாறு.

பால் வேறு தேவர் என்றது பதினெண் வகைப்பட்ட தேவர்களை. படர்ந்து - நினைந்து கரிகால்வளவன்  நீங்கிய நாள் என்றது - கரிகாற் சோழன் வடநாட்டரசரை வென்று வாகை சூடக் கருதி நால்வேறு படைகளோடும் புகார் நகரத்தினின்றும் வடதிசையிற் சென்று விட்டமையால் புகார் நகரம் பொலிவற்று வறிதாய்க் கிடந்த அந்த நாளில் போல என்றவாறு. இந்திரன் முதலியோர் வந்துவிட்டமையால் வறிதே கிடக்கும் பொன்னகரத்திற் குவமையாதல் வேண்டி இங்ஙனம் கூறினர். இவ் வரலாற்றினை இருநில மருங்கின்.......அந்நாள் எனவரும் சிலப்பதிகாரத்திற் காண்க (5: 86-94) தொன்னிலை - பண்டு இப் பெருவிழாவிற்கு அத் தேவர் அவ்வாறு வந்த நிலைமை

வள்ளுவன் நகர் அணி செய்யுமாறு அறிவித்தல்

1. விழாவறை காதை

(முதலாவது விழாவறைந்த பாட்டு)

அஃதாவது: பூம்புகார் நகரத்து வாழ்கின்ற சமயக் கணக்கர் முதலிய பெரியோர் ஒருங்கு கூடி அந் நகரத்திலே வாண்டு தோறும் நிகழ்த்தப்பட்டு வருகின்ற இந்திர விழா என்னும் பெருவிழா எடுத்தற்குரிய சித்திரைத் திங்களின் முழுமதி நாள் அணுகி வருதலானே அவ் விழாவிற்குக் கால் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து அதனை நகரமக்கட்கு அறிவிக்கும் படி வழக்கம் போல விழா முரசம்  அறையும் முதுகுடிப் பிறந்த வள்ளுவனுக்கு அறிவிப்பு, அது கேட்ட வள்ளுவன்றாணும் வச்சிரக் கோட்டத்தில் வைக்கப்பட்டிருக்கின்ற மணங்கெழு முரசத்தைக் கச்சையானைப் பிடர்த்தலை ஏற்றித் தானும் ஏறியிருந்து அவ் விழா நிகழப் போவதனையும் அதற்குக் கால் கோள் செய்யும் நாளையும் விழாவின் பொருட்டு நகரத் தெருக்கள் தோறும் முரசறைந்த செய்தியைக் கூறும் பாட்டு என்றவாறு. இக் காதையினால் இற்றைக் கிர்கடாயிரம் ஆண்டுகட்கு முன்னர்த் தமிழகத்து மாந்தர் விழா நிகழ்த்தும் முறையும், அவர் ஒப்பற்ற நாகரிகமும் இனிது விளங்கும்.


உலகம் திரியா ஓங்கு உயர் விழுச் சீர்ப்
பலர் புகழ் மூதூர்ப் பண்பு மேம்படீஇய
ஓங்கு உயர் மலயத்து அருந் தவன் உரைப்ப
தூங்கு எயில் எறிந்த தொடித் தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று
மண்ணகத்து என்தன் வான் பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக் கோள் எடுத்த
நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என
அமரர் தலைவன் ஆங்கு அது நேர்ந்தது
கவராக் கேள்வியோர் கடவார் ஆகலின்  01-010

மெய்த் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும்
இத் திறம் தம் தம் இயல்பினின் காட்டும்
சமயக் கணக்கரும் தம் துறை போகிய
அமயக் கணக்கரும் அகலார் ஆகி
கரந்து உரு எய்திய கடவுளாளரும்
பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும்
ஐம் பெருங்குழுவும் எண் பேர் ஆயமும்
வந்து ஒருங்கு குழீஇ வான்பதி தன்னுள்
கொடித் தேர்த் தானைக் கொற்றவன் துயரம்
விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்  01-020

மடித்த செவ் வாய் வல் எயிறு இலங்க
இடிக் குரல் முழக்கத்து இடும்பை செய்திடும்
தொடுத்த பாசத்து தொல் பதி நரகரைப்
புடைத்து உணும் பூதமும் பொருந்தாதாயிடும்
மா இரு ஞாலத்து அரசு தலையீண்டும்
ஆயிரம்கண்ணோன் விழாக் கால்கொள்க என
வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
ஏற்று உரி போர்த்த இடி உறு முழக்கின்
கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை  01-030

முரசு கடிப்பு இகூஉம் முதுகுடிப் பிறந்தோன்
திரு விழை மூதூர் வாழ்க! என்று ஏத்தி
வானம் மும் மாரி பொழிக! மன்னவன்
கோள் நிலை திரியாக் கோலோன் ஆகுக!
தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்
ஆயிரம்கண்ணோன் தன்னோடு ஆங்கு உள
நால் வேறு தேவரும் நலத்தகு சிறப்பில்
பால் வேறு தேவரும் இப் பதிப் படர்ந்து
மன்னன் கரிகால்வளவன் நீங்கிய நாள்
இந் நகர் போல்வதோர் இயல்பினது ஆகிப்  01-040

பொன்நகர் வறிதாப் போதுவர் என்பது
தொல் நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின்
தோரண வீதியும் தோம் அறு கோட்டியும்
பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும்
பாவை விளக்கும் பல உடன் பரப்புமின்
காய்க் குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்
பூக் கொடி வல்லியும் கரும்பும் நடுமின்
பத்தி வேதிகைப் பசும் பொன் தூணத்து
முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின்
விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும்  01-050

பழ மணல் மாற்றுமின் புது மணல் பரப்புமின்
கதலிகைக் கொடியும் காழ் ஊன்று விலோதமும்
மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின்
நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா
பதி வாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறு ஆக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யுமின்
தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும்
புண்ணிய நல்லுரை அறிவீர்! பொருந்துமின்
ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள்  01-060

பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்
பற்றாமாக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்
வெண் மணல் குன்றமும் விரி பூஞ் சோலையும்
தண் மணல் துருத்தியும் தாழ் பூந் துறைகளும்
தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும்
நால் ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என
ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும்
களிறும் சூழ்தர கண் முரசு இயம்பி
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க! என வாழ்த்தி
அணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கு என்  01-072


விழாவறை காதை

உரை

இந்திர விழாவின் வரலாறு

1-10: உலகம்..........ஆகலில்

(இதன் பொருள்) உலகம் திரியா ஓங்கு உயிர் விழுச்சீர் பலர் புகழ் மூதூர் பண்பு மேம்படீஇய - சான்றோர் சென்ற நெறிநின்றொழுகுதலில் ஒரு பொழுதும் பிறழா தொழுகுதல் காரணமாகப் பெரிதும் உயர்ந்துள்ள தனது மாபெரும் சிறப்பினைப் பிறநாட்டிலுள்ள சான்றோர் பலரும் புகழாநிற்றற் கிடமான பழைய ஊராகிய புகார் நகரத்தின் தெய்வத் தன்மை காலந்தோறும் மேம்பட்டு வளர்தற் பொருட்டாக; ஓங்கு உயர் மலயத்து அருந்தவன் உரைப்ப - வானுற உயர்ந்து புகழானும் உயர்ந்த பொதிய மலையின்கண் இறைவன் ஏவலாலே எழுந்தருளியிருக்கும் செய்தற்கரிய தவங்களைச் செய்துயர்ந்த அகத்தியமுனிவன் பணிப்ப: தூங்கு எயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் - வானத்திலே இயங்குகின்ற மதில்களை அழித்த வீர வலைய மணிந்த சோழ மன்னன் ஒருவன்; விண்ணவர்தலைவனை வணங்கி முன்னின்று - தனக்கு நன்றிக் கடன்பட்டுள்ள அமரர்கோமனை வணங்கி அவன் முன்னிலையிலேயே நின்று; மண்ணகத்து என்றன் வான்பதி தன்னுள் - நிலவுலகத்திலமைந்த என்னுடைய தலை நகரத்தினுள்; மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என - விண்ணவரும் கரந்துரு வெய்தி வந்து கரண்டற்கு விரும்புதற்குக் காரணமான பெரிய தொரு திருவிழாவை நினைக்கு யாங்கள் எடுத்தலை மேற்கொண்ட இருபத்தெட்டு நாளினும் நீ அந்நகரத்தே அவ்விழாவினை ஏற்றுக் கொண்டு உறுதியாக அங்கேயே இனிதாக வீற்றிருந்தருளல் வேண்டும் இது யான் நின்பால் பெற விரும்பும் வரம் என்று வேண்டா நிற்ப; அமரர் தலைவன் ஆங்கு அது நேர்ந்தது - தேவர் கோமனும் மறாஅது அவ்வாறே தந்த வரத்திற்கு; கவராக் கேள்வியோர் - ஐயுறாமைக்குக் காரணமான மெய்ந்நூற் கேள்வியினையுடைய சான்றோர்; கடவார் ஆதலின் - மாறுபட்டொழுகாராதலின் என்க.

(விளக்கம்) உலகம் என்றது சான்றோருடைய ஒழுக்கத்தை,ஓங்குயர் விழுச்சீர், என்று ஒருபொருட்பன்மொழி பலவற்றை அடைபுணர்த்தோதினர். புகார் நகரத்துப் புகழ் சாலவும் உயர்ந்த புகழ்; தனக்குத் தானே நிகரான புகழ் என்றுணர்த்தற்கு. அப் புகழ் அத்தகையதாதலை புறவிற்காகத் துலாம் புக்கதும் ஆன்கன்றிற்கு மகனை ஆழியின் மடித்ததும் தூங்கெயில் எறிந்து அமரரைப் புரந்ததும் ஆகிய இன்னோரன்ன அந்நாட்டு மன்னர் செயற்கரிய செயல்களாலறிக. நாகநீள் நகரொடும் போகநீள் புகழ்மன்னும் புகார் என இளங்கோவடிகளாரும் (மங்கல) பாராட்டுதலறிக. பலர் அயல் நாட்டுச் சான்றோர் பலரும் என்க என்னை புகழத்தகுந்தவர் அவரேயாகலான். பண்பு - தெய்வப்பண்பு. அருந்தவன் - அகத்தியன். அகத்தியன் சோழனுடைய மூதூர் மேம்படுதற் பொருட்டுச் செம்பியன்பால் நீ இவ்வரத்தைக் கேள் என்றுரைத்தமையாலே செம்பியன் இந்திரன்பால் நீ விழாக்கோள் எடுத்த நாலேழ் நாளினும் என் பதியில் நன்கினிதுறைதல் வேண்டும் என வரங் கேட்டான்; அவனும் செய்ந்நன்றிக் கடன்பட்டிருத்தலான் அவ் வரத்தை மறாது நேர்ந்தனன் என்றவாறு. வானத்தே இயங்கு மதிலினுள் இருந்து அரக்கர் வானவர் ஊரெல்லாம் புகுந்து அவர்க்குக் கேடு விளைத்தனர். அம் மதிலை ஒரு சோழன் அழித்து அமரரைப் பாதுகாத்தனன். இவ்வாற்றல் நன்றிக் கடன்பட்ட இந்திரன் நீ விரும்பும் வரங்கேள் என்ன அச்சோழன் அகத்தியர் அறிவுறுத்தபடி வரம்கேட்டனன். அவனும் நேர்ந்தனன் என்க.

இவ் வீரச் செயல்பற்றி அச்சோழமன்னன் தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் எனப்பட்டான்.

விண்ணவர் தலைவனை வணங்கி முன்னின்று மண்ணகத்து என்றன் வான்பதி என்று பாட்டிடைவைத்த குறிப்பினாலே வரங்கேட்டது வானவருலகத்திலே என்பதும் பெற்றாம். இச் சோழன் அசுரர் மதிலை அழித்து அமரரைக் காத்தமையால் அடுதல் அவர்க்கு ஒரு புகழாகாது என மாறோக்கத்து நப்பசலையார் நவில்வர்.

ஒன்னு ருட்கும் துன்னருங் கடுந்திறல்
தூங்கெயி லெறிந்த நின்னூங்க ணோர்நினைப்பின்
அடுதல் நின்புகழும் அன்றே

என்பது அந் நல்லிசைப்புலவர் மணிமொழி.

மேலோர் - அமரர்.

விழாக்குழுவினர்

11-18: மெய்த்திறம் .......குழீஇ

(இதன் பொருள்) மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடு என்னும் இத்திறம் தம் தம் இயல்பில் காட்டும் - மெய்ந்நூல் வழக்கும் உலகியல் வழக்கும் நன்மைதருகின்ற துணி பொருளும் வீடுபேறும் ஆகிய இவையிற்றைச் சொல்லான் மட்டும் அறிவுறுத்துதலே யன்றித் தம் தம் ஒழுக்கத்தானும் நன்கு தெரியக் காட்டும் சிறப்புடைய; சமயக் கணக்கரும் - பல்வேறு சமயக் குரவர்களும்; தம் துறை போகிய அமயக் கணக்கரும் தமக்குரிய கணிதத்துறையில் கற்று மிகுந்த புகழுடைய காலக் கணிவரும்; அகலாராகி கரந்துரு வெய்திய கடவுளாளரும் - தமக்குரிய விண்ணவர் பதியினும் இந்நகரம் சிறந்ததென்று கருதித் தம்முருவம் கரந்து மக்களுருவிற் றிரிகின்ற தேவர்களும்; பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும் - வணிகத் தொழிலின் பொருட்டு உலகத்துள்ள நாடெல்லாம் சென்று மீண்டு வந்து ஒருங்கு கூடியிருக்கின்ற பல்வேறு மொழி பேசுகின்ற வேற்று நாட்டு வணிகத்தலைவரும்; ஐம்பெருங் குழுவும் - அமைச்சர் முதலிய ஐம்பெருங்குழுவினுள்ளாரும்; எண் பேராயமும் - கரணத்தியலவர் முதலிய எண் பேராயத்தாரும் ஆகிய கோத் தொழிலாளரும்; வந்து ஒருங்கு குழீஇ -ஊரம்பலத்தே வந்து ஒருங்கே கூடியிருந்து என்க.

(விளக்கம்) மெய்திறம் - மெய்ந்நூல் வழக்கு; வழக்கு -உலகியல் வழக்கு; நன்பொருள் - தத்துவங்கள். வீடு - வீட்டினியல்பு. இத்திறம் தம்தம் இயல்பில் காட்டுதலாவது இவற்றின் வழி நின்று ஒழுக்கத்கதைத் தம்தம்மிடத்தேயே பிறர் அறிந்து கொள்ளுமாறு ஒழுகுமாற்றால் பிறரை அறியச்செய்யும் சிறப்புடையோராதல். எனவே சொல்லுதல் யார்க்கும் எளிதாதலால் இவர் தம்தம் சமயத்தைத் தமது ஒழுக்கத்தாலேயே அறிவுறுத்துபவர் என அவர் பெருமையை விதந்தோதிய படியாம்.

சோழநாடு நீர் நாடாகலின் மருதத்திணைத் தெய்வத்தின் பெயரால் பெருவிழா எடுப்பதாயிற்று; ஆயினும் இவ்விழா நிகழும் போது அந்நகரத்தமைந்த பல்வேறு சமயஞ்சார்ந்த கடவுளர்க்கும் அவ்வவ் முறைப்படியே விழா நிகழ்த்தும் வழக்கம் உண்மையின் விழா வெடுத்தற்குப் பல்வேறு சமயக் கணக்கர்களும் வந்து குழுமினர் என்றுணர்க. இதனால் அக்காலத்தே சமயப் பூசலில்லாமை நன்குணரப்படும். இரப்போரும் ஈவாரும் இல்லாமையால் தமக்குரிய விண்ணுலக வாழ்க்கையை வெறுத்துக் கடவுளாளரும் பூம்புகாரில் கரந்துருவெய்தி மக்களூடே மக்களாய் வாழ்த்தினர் என்க. அவர்க்கே விழா வெடுக்கப் போவதால் அவரும் அக்குழுவினுள் கலந்து கொண்டனர் என்க.

ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் கோத்தொழிலாளராவார். அவருள் ஐம்பெருங்குழு அமைச்சரும் புரோகிதரும் சேனாபதியரும் தூதுவரும் ஒற்றரும் என்னும் இவர்கள் குழு. எண்பேராயம் - கரணத்தியலவர் கருமவிதிகள் கனகச்சுற்றம் கடைகாப்பாளர் நகரமாந்தர் நளிபடைத்தலைவர் யானைவீரர் இவுளி மறவர் இனையர் என்க.

இப்பகுதியால் பண்டைக்காலத்தே ஊர்ப்பொதுக் காரியங்களை நகர் வாழ் மக்களும் சான்றோரும் அரசியற் சுற்றத்தாறும் பிறநாட்டு வணிகத்தலைவரும் ஒருங்குகுழுமியே எண்ணித்துணியும் வழக்கமிருந்தமை அறியப்படும். இஃது அக்காலத்து நாகரிகச் சிறப்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாகும். குழீஇ -கூடி.

விழாக்கோள் மறப்பின் விளையுந் தீமைகள்

18-26: வான்பதி........கொள்கென

(இதன் பொருள்) விழாக் கோள் மறப்பின் நம் தலை நகரத்தே இந்திர விழா வெடுத்தலை நம்மனோர் மறந்தொழியின்; வான்பதி தன்னுள் கொற்றவன் துயரம் விடுத்த பூதம் - பண்டு அமராபதியிடத்தே நம் வேந்தனாகிய முசுகுந்தனுக்கு அசுரரால் நேர்ந்த துன்பத்தைத் துடைத்த நாளங்கடியிடத்துப் பூதமானது மடித்த செவ்வாய் வல் எயிறு இலங்க இடிக்குரல் முழக்கத்து இடும்பை செய்திடும் - சினத்தாலே மடித்த சிவந்த தன் வாயின் வலிய பற்கள் திகழும்படி இடிபோன்ற தன் குரலாலே முழக்கஞ் செய்து மாந்தருக்கு துன்பஞ் செய்யாநிற்கும்; தொடுத்த பாசத்துத் தொல்பதி நரகரைப் புடைத்துணும் பூதமும் பொருந்தா தாயிடும் - அதுவுமின்றித் தன் கைக் கயிற்றினாலே நமது பழைய இந்நகரத்திலுள்ள கயமாக்களைக் கட்டிக்கொடுபோய்ப் புடைத்து விழுங்குமாற்றால் நன்மை செய்திடும் சதுக்கப் பூதமும் அத் தொழிலில் பொருந்தாது நல்லோருக்கும் இடும்பை செய்யும்; மாயிரு ஞாலத்து அரசுதலை ஈண்டும் ஆயிரம் கண்ணோன் விழாக் கால் கொள்கென - ஆதலின் இப்பேருலகத்து பன்னரெல்லாம் வந்து கூடுதற்குக் காரணமான இத்திரவிழாவிற்குக் கால் கோள் செய்க என்று முடிவு செய்யாநிற்ப என்க.

(விளக்கம்) வான்பதி - வானநாட்டுத் தலைநகரம், அமராபதி. கொற்றவன் - முசுகுந்தன் என்னும் சோழமன்னன். இவன் இந்திரனுக்கு உற்றழியுதவச் சென்று அமராபதியைக் காத்துநின்ற பொழுது அசுரர் இருட்கணையால் அவன் கண்ணை மறைத்தபொழுது அவ்விடுக்கணை ஒரு பூதம் போக்கியது. அப்பூதம் இந்திரனால் ஏவப்பட்டுப் புகார் நகரத்தே நாளங்காடியிடத்தே இருந்து அந்நகரத்தைக் காவல் செய்துவந்தது என,(சிலப் -6: 13) இச்செய்தி கூறப்பட்டுளது. புடைத்துணும் பூதம் - சதுக்கப்பூதம். இதனியல்பினை தவமறைந் தொழுதும் தன்மையி லாளர் அவமறைந் தொழுகும் அலவைப்பெண்டிர், அறைபோ கமைச்சர், பிறர் மனை நயப்போர், பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென், கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக், காத நான்கும் கடுங்குர லெடுப்பிப் பூதம் புடைத்தணும் பூத சதுக்கமும் எனவரும் சிலப்பதிகாரத்தானு மறிக. (5: 128-36).

ஞாலத்துள்ள அரசர் முதலாக அனைவரும் வந்தீண்டும் விழா என்க. ஆயிரங்கண்ணோன்- இந்திரன். கொள்க என்று முடிவுசெய்ய என்க.

இனி இந்திரவிழாவை மறந்து கைவிடத்தகுந்த சூழ்நிலை அந்நகரத் திருந்தமையால் இங்ஙனம் கூடி முடிவுசெய்தல் வேண்டிற்று. என்னை கோவலன் அந் நகரத்தை நீங்கியதற்கே அந்நகரத்து மாந்தர் இராமன் வனம் போன நாள் அயோத்தி மாந்தர் அவலமுற்றாற்போல அவல முற்றனர் என்பது சிலப்பதிகாரத்தால் அறியப்பட்டது. இதனை

அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர் பெரும்பேதுற்றதும்   (சிலப்-95-9)

எனவரும் கோசிகமாணி கூற்றாலறிக. அப்பாலும் கோவலனுக்கும் கண்ணகிக்கும் நேர்ந்த நிகழ்ச்சிகளும் அதுகேட்டு மாசாத்துவானும் மாநாய்கனும் துறவு பூண்டமையும் இருவர் மனைவிமாரும் இறந்தமையும் இவற்றிற்கெல்லாம் மேலாக மாதவி துறவு பூண்டமையும் அம்மாநகரத்திற்குப் பேரிழவாகத் தோன்றியிருத்தல் கூடும் என்பதும், இக் காரணத்தால் அவர் விழா வெடுத்தற்கண் ஊக்கமின்றி இருத்தல் கூடும் என்பதும் ஈண்டு நுண்ணுணர்வாற் கண்டு கொள்ளல் கூடும் அன்றோ. இது விழாக்கோள் மறப்பின் எனப் பாட்டிடை வைத்த குறிப்பினாற் போந்த பொருளாம். எனவே விழாக்கொள்ளாது விடலாம். விட்டால் இன்னின்ன இன்னல் உண்டாகும் ஆதலால் விழாவெடுத்தலே நன்று என்று அக்குழுவினர் முடிவு செய்தபடியாம். ஈண்டு இக்குறிப்புப் பொருள் கொள்ளாக்காலை இப்பகுதி வேண்டா கூறலாய் முடியும் என்க.

வள்ளுவன் விழாவறையத் தொடங்குதல்

27-34: வச்சிரக்...........ஆகுக

(இதன் பொருள்) வச்சிரக் கோட்டத்து மணங் கெழு முரசம்- வச்சிரக் கோட்டத்திலே முரசு கட்டிலில் வைக்கப்பட்டு நாள் தோறும் வழிபாடு செய்துவருதலாலே நறுமணங் கமழாநின்ற விழா முரசினை; கச்சையானைப் பிடர்த்தலை ஏற்றி - கச்சை கட்டிய அரச யானையின் பிடரிடத்தே ஏற்றிவைத்து; ஏற்றுரிபோர்த்த இடி உறுமுழக்கின் கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை முரசு கடிப்பு இடும் முதுகுடிப் பிறந்தோன் - தன்னோடு ஒத்த ஆனேற்றினோடு பொருது வென்ற இளையஆனேற்றினது தோலை உரித்துப் போர்த்துக் கட்டப்பட்டதும் இடிபோன்று முழங்கும் முழக்கத்தையுடையதும் கூற்றுவினைத் தான் முழங்குமிடத்திற்கு அழைப்பதும் பகைவர் குருதியைக் காணும் வேட்கையையுடைதுமாகிய வீரமுரசத்தைக் குறுந்தடியால் முழக்கும் உரிமை பூண்ட பழைய குடியிற் பிறந்த வள்ளுவன் தானும் ஏறியிருந்து. திருவிழைமூதூர் வாழ்க என்று ஏத்தி திருமகள் எப்பொழுதும் விரும்பி வீற்றிருததற்குக் காரணமான பூம்புகார் நகரம் நீடுழி வாழ்க என்று முதன் முதலாக நகரத்தை வாழ்த்திப் பின்னர்; வானம் மும்மாரி பொழிக மன்னவன் கோள் நிலை திரியாக் கோலோன் ஆகுக - வானம் திங்கள் தோறும் மும்முறை மழை பொழிவதாக என்றும் மன்னன் கோள்கள் நிலைதிரியாமல் நன்னெறியில் இயங்குதற்குக் காரணமான செங்கோன்மை உடையான் ஆகுக என்றும் வாழ்த்திப் பின்னர் விழாவறிவுறுப்பவன்; என்க.

(விளக்கம்) விழாமுரசம் எப்பொழுதும் வச்சிரக்கோட்டத்தில் முரசு கட்டிலில் வைக்கப்பட்டிருக்கும். நாள்தோறும் நறுமலர் சூட்டி நறுமணப்புகையும் எடுத்தல் தோன்ற மணங்கெழு முரசும் என்றார் வச்சிரக்.....ஏற்றி என்னும் இந்த இரண்டடிகளும் இளங்கோவடிகளாருடைய மணிமொழியைப் பொன்போல்ப் போற்றித் தண்டமிழாசான் சாத்தனார் ஈண்டுப் பொதிந்துவைத்துள்ளனர். (சிலப்- 5:141-2) வச்சிரக்கோட்டம் -இந்திரனுடைய வச்சிரப்படை நிற்குங்கோயில். கச்சை - யானையின் கீழ்வயிற்றிற் கட்டும் கயிறு. பிடர்த்தலை என்புழித்தலை. ஏழாவதன் சொல்லுருபு.

வீரமுரசத்திற்கு வீரப்பண்புமிக்க ஆனேற்றின் வளங்கெழுமிய தோலை மயிர்சீவாது போர்த்தல் ஒரு மரபு; இதனை ஏறிரண்டுடன் மடுத்து வென்றதன் பச்சை சீவாது போர்த்த......முரசம் என்பதனானும் (புரநா-288) உணர்க. முழக்கினாலே கூற்றினைத் தன்னிடத்திற்கு வருமாறு அழைக்கும் முரசு எனினுமாம். குருதிவெள்ளத்தைக் காணும் வேட்கை என்க. மன்னனுடைய வீரமுரசத்தை முழக்கும் உரிமை பெறுதல் வள்ளுவர்க்கு ஒரு பேறு. வழிவழியாக அம்முரசம் முழக்கும் உரிமையுடையோன் என்பார் முதுகுடிப்பிறந்தோன் என்றார்.

விழாச் சிறப்பு

35-42: தீவக.........ஆதலில்

(இதன் பொருள்) தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்- இந் நாவலந் தீவினுள்ள மாந்தர் எல்லாம் பகை பசி பிணி முதலியவற்றால் இடுக்கணுறாமைப் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்தியாகிய இப்பெருவிழா நிகழ்த்தா நின்ற இருபத்தெட்டு நாள் முடியும் துணையும்; ஆயிரம் கண்ணோன் தன்னோடு ஆங்குள நால் வேறு தேவரும் இந்நகரத்திலே இனிது உறைவதாக வரமீந்த இந்திரனோடு அவ்வானுலகத்தே வதிகின்ற நால் வேறு வகைப்பட்ட தேவர்களும்; நலத்தகு சிறப்பின் பால் வேறு தேவரும் - தத்தமக்கே சிறந்துரிமையுடைய பல்வேறு நன்மைகள் காரணமாகப் பல்வேறு பகுதியினராகிய ஏனைய தேவர்களும்; இப்பதிப் படர்ந்து - இந்நகரத்திருத்தலாலுண்டாகும் இன்பத்தை நினைந்து; மன்னன் கரிகால் வளவன் நீங்கிய நாள் - இந் நகரத்து மன்னனாயிருந்த கரிகாற் சோழன் வடநாட்டரசரைப் போரில் வென்று புகழ் பெறக் கருதி வடநாட்டின் மேல் சென்ற நாளிலே; இந் நகர் போல்வது ஓரியல்பினது ஆகி - இப் பூம்புகார் நகரம் வறிதாய்க்  கிடந்ததொரு தன்மையுடையதாய்; பொன்னகர் வறிதா போதுவர் -தாம் வாழுகின்ற பொன்னகரமாகிய அமராபதி நகரம் வறிதாகக் கிடக்கவிட்டு இப் புகார் நகரத்திற்கு வந்திடுவர் என்பது; தொல்நிலை உணர்த்தோர் துணி பொருள் ஆதலில் - பண்டும் பண்டும் இத் திருவிழாக் காலத்துத் தன்மையைக் கூர்ந்துணர்ந்த சான்றோர் தெளிந்ததோருண்மை யாதலாலே (என்றான்) என்க.

(விளக்கம்) தீவகம் - நாவலந்தீவு. இத் தீவகத் தெய்வத்தின் பெயரால் படைப்புக் காலத்திலேயே சம்பாபதி என்னும் நகரம் படைக்கப் பட்டமையான் அதன்கண் நிகழ்த்தும் சாந்தி இத் தீவக முழுமைக்கும் உரியதாம் என்பார் தீவகச் சாந்தி என்றார். ஆயிரங் கண்ணோன் அப் பெருவிழா நிகழ்தரு நாலேழ் நாளும் அங்கு வந்து இனிதிருப்பதாக வரந்தந்தமையால் அங்கு வரும் கடப்பாடுடையான் ஆதலின் அவன் வரவு கூறாமலே அமையு மாகலின் ஏனைய தேவர் வரவை உடனிழகழ்ச்சி ஒடு உருபு கொடுத்தோதினன், நால் வேறு தேவர் என்றது, வசுக்களும் கதிரவரும் உருத்திரரும் மருத்துவருமாய் நால்வகைப்பட்ட தேவர் என்றவாறு.

பால் வேறு தேவர் என்றது பதினெண் வகைப்பட்ட தேவர்களை. படர்ந்து - நினைந்து கரிகால்வளவன்  நீங்கிய நாள் என்றது - கரிகாற் சோழன் வடநாட்டரசரை வென்று வாகை சூடக் கருதி நால்வேறு படைகளோடும் புகார் நகரத்தினின்றும் வடதிசையிற் சென்று விட்டமையால் புகார் நகரம் பொலிவற்று வறிதாய்க் கிடந்த அந்த நாளில் போல என்றவாறு. இந்திரன் முதலியோர் வந்துவிட்டமையால் வறிதே கிடக்கும் பொன்னகரத்திற் குவமையாதல் வேண்டி இங்ஙனம் கூறினர். இவ் வரலாற்றினை இருநில மருங்கின்.......அந்நாள் எனவரும் சிலப்பதிகாரத்திற் காண்க (5: 86-94) தொன்னிலை - பண்டு இப் பெருவிழாவிற்கு அத் தேவர் அவ்வாறு வந்த நிலைமை

வள்ளுவன் நகர் அணி செய்யுமாறு அறிவித்தல்

43-54: தோரண...சேர்த்துமின்

(இதன் பொருள்) தோரண வீதியும் தோமறு கோட்டியும் பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும் பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின் - தோரணங்களையுடைய பெருந்தெருக்களிடத்தேயும் குற்றமற்ற அறவோர் கூடும் ஊர்மன்றங்களிடத்தும் நிறை குடங்களையும் பொற்பாலிகைகளையும் பாவை விளக்குகளையும் பலப்பலவாக ஒருங்கே வைத்து அணி செய்யுங்கோள் எனவும்; காய்க்குலைக் கமுகும் வாழையும்  வஞ்சியும் பூங்கொடி வல்லியும் கரும்பும் நடுமின - காய் நிரம்பிய குலைகளோடு கூடிய கமுகுகளையும் வாழைகளையும் வஞ்சிக்கொடிகளையும் அழகிய மலர்க்கொடிகளையும் கரும்புகளையும் நட்டு அணி செய்யுங்கோள்! எனவும் பத்தி வேதிகைக் பசும்பொன் தூணத்து முத்துத் தாமம் முறையொடு காற்றுமின் - நிரலாகத் தெற்றிகளிலே நிறுத்தப்பட்டுள்ள பசும்பொன்னாற் செய்யப்பட்ட தூண்கள் தோறும் முத்து மாலைகளை நிரல்படத் தூக்கி அணி செய்யுங்கோள் எனவும்; விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும் பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின்- திருவிழா மிக்கு நிகழ்தற் கிடமான பழைய இந் நகரத்துச் சிறப்பு வீதிகளிடத்தும் சிறப்பு மன்றங்களிடத்து முள்ள பழைய மணலை மாற்றி அவ்விடமெல்லாம் புதிய மணல் கொணர்ந்து அழகாகக் பரப்புங்கோள் எனவும்; கதலிகைக் கொடியும் காழ் ஊன்று விலோதமும் கோத்துக் கட்டும் கதலிகைக் கொடிகளையும் மூங்கிற் கோலை ஊன்றி அதன் உச்சியிற் கட்டுதற்குரிய கொடிகளையும் இல்லந்தோறும் மதலை மாடங்களினும் முன்றிலினும் நிரலே உயர்த்துங்கோள்! எனவும் என்க.

(விளக்கம்) தோரண வீதி என்பது தோரணத்தால் அழகு செய்தற்கியன்ற சிறப்பான வீதிகளை. தோரணங் கட்டுதல் கூறாமலே அமையும் ஆதலின் தோரணங் கட்டுமின் என்னாது உடம்படுத்துத் தோரண வீதி என்றான். அல்லது எஞ்ஞான்றும் தோரணம் கட்டப்பட்ட வீதி எனக் கோடலுமாம். நன்மக்கள் குழுமியிருத்தற்குரிய மன்றங்கள் என்பான்தோம் அறு கோட்டி என்றான். தோம் - களவு முதலிய குற்றங்கள் கோட்டி - கூட்டம். கூடுமிடத்தை ஆகுபெயரால் கோட்டி என்றான். பொலம் - பொன். பாவை விளக்கு - படிமம் கையிலேந்திய விளக்கு காய்க் குலையை வாழைக்கும் கூட்டுக. வஞ்சி - பொன்னிறமான ஓர் அழகிய பூங்கொடி. இதனைப் பொற் கொடிப் பெயர் வஞ்சி என வெளிப்படைப் பொருளுக்கு அடைபுணர்த்தலான் அறிக. இதனை ஒரு வகை மரமாகக் கருதுவாரும் உளர்.

பத்தியாக வேதிகையில் நிறுத்தப்பட்ட பொற்றூண். தூணம்- தூண். முத்து மாலைகளையும் அழகாக நாலவிடுதல் வேண்டும் என்பான் முறையொடு நாற்றுமின் என்றான். மூதூரில் விழவு மலிதற் கிடமான வீதியும் மன்றமும் என்றவாறு.

கதலிகைக் கொடிமதலை மாடத்தும் வாயிலில் காழூன்றுவிலோதமும் சேர்த்துமின் என்ற குறிப்பினால் கதலிகைக் கொடி யென்றது நூலிலே கோத்துத் தோரணம் போன்று கட்டப்படும் துகிற் கொடி என்க. காழ் - கோல். விலோதம் என்பது உருவினாற் பெரிய துகிற் கொடி போலும். இதனைக் கோல் உச்சியிற் சேர்த்துயர்த்து நடப்படும் என்பது தெரித்தோதப் பட்டது. வினை வேறுபடுதலால் சேர்த்துமின் எனப்பொது வினையால் அறிவித்தனன்.

மதிலை மாடம் - மாளிகையின் முகப்பிலமைந்த சிறு மாடம்.

இதுவுமது

54-63: நுதல்விழி......அகலுமின்

(இதன் பொருள்) நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப் பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக - நெற்றிக் கண்ணையுடைய கடவுள் முதலாக இந்நகரத்திலே வதிகின்ற சதுக்கப்பூதம் ஈறாக வமைந்த தெய்வங்கட்கெல்லாம் தம்முன் வேறு வேறு வகைப்பட்ட விழாக்களையும் வேறு வேறு வகையான செய்தொழில்களையும்; ஆறு அறிமரபின் - செய்யும் நெறியினை அறிந்தவர்கள் அவ்வவற்றிற் கேற்ப நிகழ்த்துங்கோள் எனவும்; தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும் புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின் - குளிர்ந்த புதுமணல் பரப்பட்ட பந்தரிடத்தும் தங்குதற்கியன்ற பொதியில்களிலும் அறமாகிய நன்மொழியை அறிவுறுத்தற்கு அறிந்த சான்றோர் சென்று சேருங்கோள் எனவும்; ஒட்டிய உறுபொருள் வாதிகள் பட்டி மண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின் - யாமே வெல்வேம் எனச் சூள் மொழிந்து தத்தமக்குப் பொருந்திய பொருளைச் சொற்போரில் வென்று நிலை நாட்டும் சமயவாதிகள் ஆங்காங்குள்ள பட்டிமண்டபங்களிலே ஏறும் மரபறிந்து ஏறக் கடவீர் எனவும்; பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும் செற்றமும் கலாமும் செய்யாது விலகிச் செல்லுங்கோள் எனவும் என்க.

(விளக்கம்) நெற்றியில் தோற்றுவித்துக் கொண்டு விழித்த கண்ணையுடைய முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் என்க. பெருந் தெய்வத்திற்கு சிவபெருமானையும் சிறு தெய்வதிற்குச் சதுக்கப் பூதத்தையும் எடுத்தோதியபடியாம். எனவே, இந்திரனுக்கு எடுக்கும் அவ்விழா நாட்களிடையே அந்நகரத்து உறைகின்ற எல்லாத் தெய்வங்களுக்கும் விழா நிகழ்த்தப்படும் வழக்க மூண்மை பெற்றாம். இதனை,

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வே ளணிதிகழ் கோயிலும்

என்றற் றொடக்க முதலாக

வேறுவேறு கடவுளர் சாறுசிறந் தொருபால்

என்னுந் துணையும் நிகழும் இளங்கோவடிகளார் திருமொழியானும் (5:169-78) அறிக. ஆறு அறி மரபின் அறந்தோர் என்றது- விழா நிகழ்த்தும் நெறியினை அறியும் முறையானே அறிந்தோர் என்றவாறு. நிருத்தம் முதலிய ஆறங்களையு முணர்ந்த முறைமையுடைய அந்தணர் என்பாருமுளர். இவ்வுரை பொருந்தாது. என்னை வேத நெறிப்படாத பாசண்டிகள் தெய்வங்களும் உளவாகலின் என்க. ஈண்டுப் புண்ணிய நல்லுரை அறிவர் பொருந்துமின், என்றதற் கேற்பச் சிலப்பதிகாரத்தினும் திறவோர் உரைக்கும் செயல் சிறந் தொருபால் (5:181) என வருதலும் நினைக. ஒட்டிய - சூளுரைத்த. பட்டி மண்டபம் - சொற்போர் நிகழ்த்தும் முறைமை. பற்றா மாக்கன் - பகைவர். செற்றம் - தீராச் சினம். கலாம்- கலகம்; போர்.

இதுவுமது

64-72: வெண்மணல்........மருங்கென்

(இதன் பொருள்) நன்கு அறிந்தோர் வெள்மணல் குன்றமும் விரிபூஞ்சோலையும் தண்மணல் துருத்தியும் தாழ் பூந்துறைகளும் - நன்மை யறிந்த மாந்தர்களே வெள்ளிய மணற் குன்றுகளிடத்தும் மலர்ந்த பூம்பொழில்களிடத்தும்; குளிர்ந்த மணற்பரப்புக்களையுடைய ஆற்றிடைக் குறைகளிடத்தும் ஆழ்ந்த அழகிய நீர்த்துறைகளிடத்தும் விழாக் காண்டற்கு; தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும் நால் ஏழ் நாளினும் - தேவர்களும் மக்களும் தம் முள் வேற்றுமை பாராட்டாமல் ஒருங்கே திரிதற்குக் காரணமான விழா நிகழும் இருபத்தெட்டு நாள்களும், எனவும் எடுத்துக் கூறி; ஒளி றுவாள் மறவரும் தேரும் மாவும் களிறும் சூழ்தரக் கண்முரசு இயம்பி - விளங்குகின்ற வாட்படை ஏந்திய மறவரும் தேவர்களும் குதிரைகளும் களிற்றியானைகளும் தன்னைச் சூழ்ந்து வருமாறு குறுந்தடியாலே அவ்விழா முரசின் முகத்திலே தாக்கி முழக்கி; பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க என - (இறுதியில்) மக்கள் பசிப்பிணியும் உடற்பிணியும் தம்முள் மாறுபட்டுப் பகைக்கின்ற பகைமையும் நீக்கப் பெற்று நாடெங்கணும் மழையும் தென் முதலிய பொருள் வளமும் மிகுவனவாக என்று வாழ்த்தி; அகநகர் மருங்கு அணி விழா அறைந்தனன் - அகநகரத்தும் புறநகரத்தும் அவ்வள்ளுவன் அழகிய இந்திர விழாவை முரசறைந்து அறிவித்தனன்; என்பதாம்.

(விளக்கம்) மணற் குன்றம், பட்டினப் பாக்கத்திலுள்ளவை. துருத்தி, காவிரியின் கண்ணுள்ளவை. துறை என்றது. காவிரியில் நீராடுதுறையும் கடலின்கட் டுறையும் நீர்நிலைகளிற் றுறையும் ஆகிய அனைத்திற்கும் பொது. தேவர் கரந்துரு வெய்தி மக்கட் குழுவினுட் புகுந்து திரிதலின் ஒத்துடன் திரிதரும் என்றார். முரசறையும் வள்ளுவன் தொடக்கத்தினும் முடிவினும் இங்ஙனம் நாடு அரசன் மக்கள் முதலியோரை வாழ்த்துதன் மரபு. பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென எனவரும். இவ்வடிகள் சிலப்பதிகாரத்தும் இவ்வாறே நிகழ்தலுமறிக. (சிலப்- 5: 72-3).

இனி இக்காதையை - அருந்தவன் உரைப்ப செம்பியன் வானவர் தலைவனை உறைகென நேர்ந்தது கடவாராதலின் சமயக்கணக்கர் முதலியோர் குழீஇ, கால்கொள்கெனப் பிறந்தோன் ஏற்றி இயம்பி ஏத்தி வாழ்த்தி பொழிக ஆகுக பரப்புமின் நடுமின் நாற்றுமின் மாற்றுமின் பரப்புமின் சேர்த்துமின் செய்யுமின் பொருந்துமின் ஏறுமின் அகலுமின் என அணிவிழா நகரினும் மருங்கினும் அறைந்தனன் என இயைத்திடுக.

விழாவறை காதை முற்றிற்று

(இதன் பொருள்) தோரண வீதியும் தோமறு கோட்டியும் பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும் பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின் - தோரணங்களையுடைய பெருந்தெருக்களிடத்தேயும் குற்றமற்ற அறவோர் கூடும் ஊர்மன்றங்களிடத்தும் நிறை குடங்களையும் பொற்பாலிகைகளையும் பாவை விளக்குகளையும் பலப்பலவாக ஒருங்கே வைத்து அணி செய்யுங்கோள் எனவும்; காய்க்குலைக் கமுகும் வாழையும்  வஞ்சியும் பூங்கொடி வல்லியும் கரும்பும் நடுமின - காய் நிரம்பிய குலைகளோடு கூடிய கமுகுகளையும் வாழைகளையும் வஞ்சிக்கொடிகளையும் அழகிய மலர்க்கொடிகளையும் கரும்புகளையும் நட்டு அணி செய்யுங்கோள்! எனவும் பத்தி வேதிகைக் பசும்பொன் தூணத்து முத்துத் தாமம் முறையொடு காற்றுமின் - நிரலாகத் தெற்றிகளிலே நிறுத்தப்பட்டுள்ள பசும்பொன்னாற் செய்யப்பட்ட தூண்கள் தோறும் முத்து மாலைகளை நிரல்படத் தூக்கி அணி செய்யுங்கோள் எனவும்; விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும் பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின்- திருவிழா மிக்கு நிகழ்தற் கிடமான பழைய இந் நகரத்துச் சிறப்பு வீதிகளிடத்தும் சிறப்பு மன்றங்களிடத்து முள்ள பழைய மணலை மாற்றி அவ்விடமெல்லாம் புதிய மணல் கொணர்ந்து அழகாகக் பரப்புங்கோள் எனவும்; கதலிகைக் கொடியும் காழ் ஊன்று விலோதமும் கோத்துக் கட்டும் கதலிகைக் கொடிகளையும் மூங்கிற் கோலை ஊன்றி அதன் உச்சியிற் கட்டுதற்குரிய கொடிகளையும் இல்லந்தோறும் மதலை மாடங்களினும் முன்றிலினும் நிரலே உயர்த்துங்கோள்! எனவும் என்க.

(விளக்கம்) தோரண வீதி என்பது தோரணத்தால் அழகு செய்தற்கியன்ற சிறப்பான வீதிகளை. தோரணங் கட்டுதல் கூறாமலே அமையும் ஆதலின் தோரணங் கட்டுமின் என்னாது உடம்படுத்துத் தோரண வீதி என்றான். அல்லது எஞ்ஞான்றும் தோரணம் கட்டப்பட்ட வீதி எனக் கோடலுமாம். நன்மக்கள் குழுமியிருத்தற்குரிய மன்றங்கள் என்பான்தோம் அறு கோட்டி என்றான். தோம் - களவு முதலிய குற்றங்கள் கோட்டி - கூட்டம். கூடுமிடத்தை ஆகுபெயரால் கோட்டி என்றான். பொலம் - பொன். பாவை விளக்கு - படிமம் கையிலேந்திய விளக்கு காய்க் குலையை வாழைக்கும் கூட்டுக. வஞ்சி - பொன்னிறமான ஓர் அழகிய பூங்கொடி. இதனைப் பொற் கொடிப் பெயர் வஞ்சி என வெளிப்படைப் பொருளுக்கு அடைபுணர்த்தலான் அறிக. இதனை ஒரு வகை மரமாகக் கருதுவாரும் உளர்.

பத்தியாக வேதிகையில் நிறுத்தப்பட்ட பொற்றூண். தூணம்- தூண். முத்து மாலைகளையும் அழகாக நாலவிடுதல் வேண்டும் என்பான் முறையொடு நாற்றுமின் என்றான். மூதூரில் விழவு மலிதற் கிடமான வீதியும் மன்றமும் என்றவாறு.

கதலிகைக் கொடிமதலை மாடத்தும் வாயிலில் காழூன்றுவிலோதமும் சேர்த்துமின் என்ற குறிப்பினால் கதலிகைக் கொடி யென்றது நூலிலே கோத்துத் தோரணம் போன்று கட்டப்படும் துகிற் கொடி என்க. காழ் - கோல். விலோதம் என்பது உருவினாற் பெரிய துகிற் கொடி போலும். இதனைக் கோல் உச்சியிற் சேர்த்துயர்த்து நடப்படும் என்பது தெரித்தோதப் பட்டது. வினை வேறுபடுதலால் சேர்த்துமின் எனப்பொது வினையால் அறிவித்தனன்.

மதிலை மாடம் - மாளிகையின் முகப்பிலமைந்த சிறு மாடம்.

இதுவுமது

54-63: நுதல்விழி......அகலுமின்

(இதன் பொருள்) நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப் பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக - நெற்றிக் கண்ணையுடைய கடவுள் முதலாக இந்நகரத்திலே வதிகின்ற சதுக்கப்பூதம் ஈறாக வமைந்த தெய்வங்கட்கெல்லாம் தம்முன் வேறு வேறு வகைப்பட்ட விழாக்களையும் வேறு வேறு வகையான செய்தொழில்களையும்; ஆறு அறிமரபின் - செய்யும் நெறியினை அறிந்தவர்கள் அவ்வவற்றிற் கேற்ப நிகழ்த்துங்கோள் எனவும்; தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும் புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின் - குளிர்ந்த புதுமணல் பரப்பட்ட பந்தரிடத்தும் தங்குதற்கியன்ற பொதியில்களிலும் அறமாகிய நன்மொழியை அறிவுறுத்தற்கு அறிந்த சான்றோர் சென்று சேருங்கோள் எனவும்; ஒட்டிய உறுபொருள் வாதிகள் பட்டி மண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின் - யாமே வெல்வேம் எனச் சூள் மொழிந்து தத்தமக்குப் பொருந்திய பொருளைச் சொற்போரில் வென்று நிலை நாட்டும் சமயவாதிகள் ஆங்காங்குள்ள பட்டி மண்டபங்களிலே ஏறும் மரபறிந்து ஏறக் கடவீர் எனவும்; பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும் செற்றமும் கலாமும் செய்யாது விலகிச் செல்லுங்கோள் எனவும் என்க.

(விளக்கம்) நெற்றியில் தோற்றுவித்துக் கொண்டு விழித்த கண்ணையுடைய முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் என்க. பெருந் தெய்வத்திற்கு சிவபெருமானையும் சிறு தெய்வதிற்குச் சதுக்கப் பூதத்தையும் எடுத்தோதியபடியாம். எனவே, இந்திரனுக்கு எடுக்கும் அவ்விழா நாட்களிடையே அந்நகரத்து உறைகின்ற எல்லாத் தெய்வங்களுக்கும் விழா நிகழ்த்தப்படும் வழக்க மூண்மை பெற்றாம். இதனை,

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வே ளணிதிகழ் கோயிலும்

என்றற் றொடக்க முதலாக

வேறுவேறு கடவுளர் சாறுசிறந் தொருபால்

என்னுந் துணையும் நிகழும் இளங்கோவடிகளார் திருமொழியானும் (5:169-78) அறிக. ஆறு அறி மரபின் அறந்தோர் என்றது- விழா நிகழ்த்தும் நெறியினை அறியும் முறையானே அறிந்தோர் என்றவாறு. நிருத்தம் முதலிய ஆறங்களையு முணர்ந்த முறைமையுடைய அந்தணர் என்பாருமுளர். இவ்வுரை பொருந்தாது. என்னை வேத நெறிப்படாத பாசண்டிகள் தெய்வங்களும் உளவாகலின் என்க. ஈண்டுப் புண்ணிய நல்லுரை அறிவர் பொருந்துமின், என்றதற் கேற்பச் சிலப்பதிகாரத்தினும் திறவோர் உரைக்கும் செயல் சிறந் தொருபால் (5:181) என வருதலும் நினைக. ஒட்டிய - சூளுரைத்த. பட்டி மண்டபம் - சொற்போர் நிகழ்த்தும் முறைமை. பற்றா மாக்கன் - பகைவர். செற்றம் - தீராச் சினம். கலாம்- கலகம்; போர்.

இதுவுமது

64-72: வெண்மணல்........மருங்கென்

(இதன் பொருள்) நன்கு அறிந்தோர் வெள்மணல் குன்றமும் விரிபூஞ்சோலையும் தண்மணல் துருத்தியும் தாழ் பூந்துறைகளும் - நன்மை யறிந்த மாந்தர்களே வெள்ளிய மணற் குன்றுகளிடத்தும் மலர்ந்த பூம்பொழில்களிடத்தும்; குளிர்ந்த மணற் பரப்புக்களையுடைய ஆற்றிடைக் குறைகளிடத்தும் ஆழ்ந்த அழகிய நீர்த்துறைகளிடத்தும் விழாக் காண்டற்கு; தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும் நால் ஏழ் நாளினும் - தேவர்களும் மக்களும் தம் முள் வேற்றுமை பாராட்டாமல் ஒருங்கே திரிதற்குக் காரணமான விழா நிகழும் இருபத்தெட்டு நாள்களும், எனவும் எடுத்துக் கூறி; ஒளி றுவாள் மறவரும் தேரும் மாவும் களிறும் சூழ்தரக் கண்முரசு இயம்பி - விளங்குகின்ற வாட்படை ஏந்திய மறவரும் தேவர்களும் குதிரைகளும் களிற்றியானைகளும் தன்னைச் சூழ்ந்து வருமாறு குறுந்தடியாலே அவ்விழா முரசின் முகத்திலே தாக்கி முழக்கி; பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க என - (இறுதியில்) மக்கள் பசிப்பிணியும் உடற்பிணியும் தம்முள் மாறுபட்டுப் பகைக்கின்ற பகைமையும் நீக்கப் பெற்று நாடெங்கணும் மழையும் தென் முதலிய பொருள் வளமும் மிகுவனவாக என்று வாழ்த்தி; அகநகர் மருங்கு அணி விழா அறைந்தனன் - அகநகரத்தும் புறநகரத்தும் அவ்வள்ளுவன் அழகிய இந்திர விழாவை முரசறைந்து அறிவித்தனன்; என்பதாம்.

(விளக்கம்) மணற் குன்றம், பட்டினப் பாக்கத்திலுள்ளவை. துருத்தி, காவிரியின் கண்ணுள்ளவை. துறை என்றது. காவிரியில் நீராடுதுறையும் கடலின்கட் டுறையும் நீர்நிலைகளிற் றுறையும் ஆகிய அனைத்திற்கும் பொது. தேவர் கரந்துரு வெய்தி மக்கட் குழுவினுட் புகுந்து திரிதலின் ஒத்துடன் திரிதரும் என்றார். முரசறையும் வள்ளுவன் தொடக்கத்தினும் முடிவினும் இங்ஙனம் நாடு அரசன் மக்கள் முதலியோரை வாழ்த்துதன் மரபு. பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென எனவரும். இவ்வடிகள் சிலப்பதிகாரத்தும் இவ்வாறே நிகழ்தலுமறிக. (சிலப்- 5: 72-3).

இனி இக்காதையை - அருந்தவன் உரைப்ப செம்பியன் வானவர் தலைவனை உறைகென நேர்ந்தது கடவாராதலின் சமயக்கணக்கர் முதலியோர் குழீஇ, கால்கொள்கெனப் பிறந்தோன் ஏற்றி இயம்பி ஏத்தி வாழ்த்தி பொழிக ஆகுக பரப்புமின் நடுமின் நாற்றுமின் மாற்றுமின் பரப்புமின் சேர்த்துமின் செய்யுமின் பொருந்துமின் ஏறுமின் அகலுமின் என அணிவிழா நகரினும் மருங்கினும் அறைந்தனன் என இயைத்திடுக.

விழாவறை காதை முற்றிற்று
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 08:46:27 AM
2. ஊரலருரைத்த காதை

இரண்டாவது ஊரலருரைத்த பாட்டு

அஃதாவது விழாவறைதல் கேட்ட மாந்தர் மாதவியை நினைந்து நாடகக் கணிகை துறத்தல் நாணுத்தக வுடைத்து என யாண்டும் பழிதூற்றுதல் கேட்ட சித்திராபதி அப் பழி பிறந்தமையை வயந்த மாலையை ஏவி மாதவிக்கு அறிவித்த செய்தியைக் கூறுகின்ற செய்யுள் என்றவாறு.

இதன்கண் -விழாவறைந்த வண்ணமே பூம்புகார் நகரம் மக்களால் அணிசெய்யப்பட்டது. உரியநாளிலே  இந்திர விழாவும் தொடங்கி நிகழ்வதாயிற்று. இறந்த யாண்டில் இவ் விழாவிற் கலந்து கொண்டு மக்கட்குக் கிடைத்தற்கரிய கலையின்பம் நல்கிய தன் மகள் மாதவி, கோவலனுக்கும் கண்ணகிக்கும் ஊழ்வினை உருந்து வந்தூட்டிய கொடுந்துயர் கேட்டு மணிமேகலையை வான் துயர் உறுக்கும் கணிகையர் கோலம் காணா தொழிகெனக் கோதைத் தாமம் குழலொடு களைந்து போதித்தானம் புரிந்தறங் கொண்டமையாலே இவ் விழாவிற்கு மாதவியும் மணிமேகலையும் வாராமையாலே சித்திராபதி பெரிதும் வருந்தியவளாய் மாதவியின் தோழியாகிய வயந்த மாலையை அழைத்து நீ மாதவியின்பாற் சென்று இம்மாநகரத்து மக்கள் அவளைப் பற்றித் தூற்றாநின்ற பழிச் சொல்லை எடுத்துக் கூறுக; என்று பணித்தமையும் அத்தோழியும் அவள் துறவுக்குப் பெரிதும் வருந்தியிருந்தமையாலே அவ்வாறே சென்று மாதவியிருந்த தவப் பள்ளியில் மலர் மண்டபத்தே சென்று அவள் வாடிய மேனிகண்டு உளம் வருந்தி அந் நகரத்து மாந்தர் எல்லாம் நாடகக்கலை கற்றுத் துறைபோகிய நீ நற்றவம் புரிந்தது நாணுத் தகவுடைத்து என்று தூற்றும் பண்பில்லாப் பழி மொழியை எடுத்துக் கூறித் தனனோடு வருமாறு அழைத்த செய்தியும்

அதுகேட்ட மாதவி தான் உயிரோடிருந்ததே நாணம் அற்ற செயலாம் என்று வருந்துபவள் பத்தினிப் பெண்டிரியல்பு கூறி அவருள் கண்ணகி தலை சிறந்தமையும் கூறி அவள் மகளாகிய மணிமேகலை இழி தகவுடைய நாடகக் கணிகையாகாள், யானும் இத் துறவினின்று மீண்டு வருவேன் அல்லேன் காண் என்றியம்பி அறவண அடிகளார் தனக்கு அறங்கூறி ஒருவா றுய்வித்தலாலே உயிரோடிருக்கின்றேன். யான் இனி இப் பள்ளியினின்று வருவேனல்லேன் எனக் கூறி விடுப்பதும் வயந்தமாலை கையறவுடையளாய் மீண்டு செல்லுதலும் ஆகிய இச்செய்திகள் கூறப்படும்.

நாவல் ஓங்கிய மா பெருந் தீவினுள்
காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த
தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்
மணிமேகலையொடு மாதவி வாராத்
தணியாத் துன்பம் தலைத்தலை மேல் வர
சித்திராபதி தான் செல்லல் உற்று இரங்கி
தத்து அரி நெடுங் கண் தன் மகள் தோழி
வயந்தமாலையை வருக எனக் கூஉய்
பயம் கெழு மா நகர் அலர் எடுத்து உரை என
வயந்த மாலையும் மாதவி துறவிக்கு  02-010

அயர்ந்து, மெய் வாடிய அழிவினள் ஆதலின்
மணிமேகலையொடு மாதவி இருந்த
அணி மலர் மண்டபத்து அகவயின் செலீஇ
ஆடிய சாயல் ஆய் இழை மடந்தை
வாடிய மேனி கண்டு உளம் வருந்தி
பொன் நேர் அனையாய்! புகுந்தது கேளாய்!
உன்னோடு இவ் ஊர் உற்றது ஒன்று உண்டுகொல்?
வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்துக்
கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும்
பண் யாழ்க் கரணமும் பாடைப் பாடலும்  02-020

தண்ணுமைக் கருவியும் தாழ் தீம் குழலும்
கந்துகக் கருத்தும் மடைநூல் செய்தியும்
சுந்தரச் சுண்ணமும் தூ நீர் ஆடலும்
பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும்
காயக் கரணமும் கண்ணியது உணர்தலும்
கட்டுரை வகையும் கரந்து உறை கணக்கும்
வட்டிகைச் செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும்
கோலம் கோடலும் கோவையின் கோப்பும்
காலக் கணிதமும் கலைகளின் துணிவும்
நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த   02-030

ஓவியச் செந் நூல் உரை நூல் கிடக்கையும்
கற்று துறைபோகிய பொன் தொடி நங்கை
நல் தவம் புரிந்தது நாண் உடைத்து என்றே
அலகு இல் மூதூர் ஆன்றவர் அல்லது
பலர் தொகுபு உரைக்கும் பண்பு இல் வாய்மொழி
நயம்பாடு இல்லை நாண் உடைத்து என்ற
வயந்தமாலைக்கு மாதவி உரைக்கும்
காதலன் உற்ற கடுந் துயர் கேட்டு
போதல்செய்யா உயிரொடு நின்றே
பொன் கொடி மூதூர்ப் பொருளுரை இழந்து  02-040

நல் தொடி நங்காய்! நாணுத் துறந்தேன்
காதலர் இறப்பின் கனை எரி பொத்தி
ஊது உலைக் குருகின் உயிர்த்து அகத்து அடங்காது
இன் உயிர் ஈவர் ஈயார் ஆயின்
நல் நீர்ப் பொய்கையின் நளி எரி புகுவர்
நளி எரி புகாஅர் ஆயின் அன்பரோடு
உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர்
பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து
அத் திறத்தாளும் அல்லள் எம் ஆய் இழை
கணவற்கு உற்ற கடுந் துயர் பொறா அள்  02-050

மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப
கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை
திண்ணிதின் திருகி தீ அழல் பொத்தி
காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய
மா பெரும் பத்தினி மகள் மணிமேகலை
அருந் தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத் தொழில் படாஅள்
ஆங்கனம் அன்றியும் ஆய் இழை கேளாய்
ஈங்கு இம் மாதவர் உறைவிடம் புகுந்தேன்
மற வணம் நீத்த மாசு அறு கேள்வி   02-060

அறவண அடிகள் அடிமிசை வீழ்ந்து
மா பெருந் துன்பம் கொண்டு உளம் மயங்கி
காதலன் உற்ற கடுந் துயர் கூறப்
பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக! என்று அருளி
ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி
உய் வகை இவை கொள் என்று உரவோன் அருளினன்
மைத் தடங் கண்ணார் தமக்கும் எற் பயந்த  02-070

சித்திராபதிக்கும் செப்பு நீ என
ஆங்கு அவள் உரை கேட்டு அரும் பெறல் மா மணி
ஓங்கு திரைப் பெருங் கடல் வீழ்த்தோர் போன்று
மையல் நெஞ்சமொடு வயந்த மாலையும்
கையற்றுப் பெயர்ந்தனள் காரிகை திறத்து என்  02-075

உரை

1-9: நாவல்........உரையென

(இதன் பொருள்) நாவல் ஓங்கிய மாபெருந் தீவினுள் - நாவன் மரம் உயர்ந்து நிற்பதனால் நாவல்தீவு எனப் பெயர் பெற்ற மிகவும் பெரிய இத்தீவின்; காவல் தெய்வம் தேவர் கோற்கு எடுத்த தீவகச் சாந்தி செய்தரு நல்நாள் - முதல் முதலாகச் சம்பாபதி என்னும் காவல் தெய்வமானது பொதுவாக இத்தீவில் வாழ்வோர்க்கு அரக்கர் முதலியோராலுண்டாகும் தீங்கு அகலவும் பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் உடையராய் இனிது வாழ்தற் பொருட்டும் அமரர்க்கரசனாகிய இந்திரனுக்குச் செய்த பெருவிழா இவ்வாண்டினும் நிகழ்த்தப் பெற்று வருகின்ற நன்மையுடைய நாளிலே; சித்திராபதி மணிமேகலையொடு மாதவி வாராத் தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வா - சித்திராபதி மானவள் மணிமேகலையும் மாதவியும் வந்து கலந்து கொள்ளாமையாலே வேறெவ்வாற்றானும் தணிக்க வொண்ணாத துன்பம் நினைக்குந்தோறும் ஒருகாலைக்கு ஒருகால் பெருகியே வருதலானே ; செல்லல் உற்று இரங்கி -பெரிதும் வருந்தி அவர் திறத்திலே மிகவும் இரக்கமெய்தி; அரிதத்து நெடுங்கண் தன் மகள் தோழி - செவ்வரி படர்ந்த நெடிய கண்ணை யுடைய தன் மகளாகிய மாதவியின் உசாஅத்துணைத் தோழியாகிய; வயந்த மாலையை வருக எனக் கூஉய் - வயந்த மாலை என்பாளைத்  தன்பால் வருக என்று அழைத்து; பயம்கெழு மாநகர் அலர் எடுத்து உரைஎன வயந்தமாலாய் நீ இப்பொழுதே மாதவியின்பாற் சென்று பயன் மிக்க இப்பெரும் நகரத்துள் வாழும் மாந்தர் இடந்தொறும் இடந்தொறும் அவள் திறத்திலே தூற்றுகின்ற பழியை அவள் உளங்கொள்ளுமாற்றால் எடுத்துக் கூறுவாயாக என்று ஏவா நிற்றலாலே; என்க.

(விளக்கம்) காவல் தெய்வம் - சம்பாபதி. தீவகத்தே வாழ்வோரைக் காத்தலே தன் கடமை யாதலின் அவர்கட்குத் தீங்கு வாராமைப் பொருட்டும் நலம் பெருகுதற் பொருட்டும் மருதத்திணைத் தெய்வமாகிய இந்திரனைக் குறித்து முதன் முதலாகத் தொடங்கிய விழா வென்க சோழனாடு மருதவைப்பு மிக்க நாடாதலின் அந்நாட்டுத் தலை நகரத்தில் இவ் விழா வெடுத்தல் பொருத்தமாதலுணர்க.

செய்தருநாள் என்னும் வினைத்தொகை: செய்கின்ற நிகழ்காலங் குறித்து நின்றது. சித்திராபதி, மாதவியின் கலை நல வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்ட நற்றாய் ஆகலானும் மாதவியின் துறவு காரணமாக மாதவியையும் அவள் மகளாகிய மணிமேகலையையும் அவர் தம் கலைச்செல்வத்தையும் ஒருசேர இழந்தவளாதலானும் அவட்கெய்திய துன்பம் தணியாத் துன்பமாய் தலைத்தலை மேல்வர என்றார். தலைத்தலை என்றது நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் எனக் காலத்தின் மேனின்றது. செல்லல் - துன்பம். மாதவி கண்ணழகில் மிகவும் சிறப்புடையள் ஆதலால் அவள்தன்கண்ணே அவள் நினைவின் முன்னிற்றல் தோன்ற, தத்தரி நெடுங்கண் தன் மகள் என்றார். ஆசிரியர் இளங்கோவடிகளாரும் அவளைக் குறிப்பிடுந்தோறும் மறவாமே மாமலர் நெடுகண் மாதவி என்றே இனிதி னியம்புவர். கூஉய்-கூவி; அழைத்து மாதவி வாராள் என்னும் நினைவால் உரைத்து அழைத்து வருதி என்னாது, உரை என்றொழிந்தாள். அவள் பழியஞ்சும் பண்புடையாள் ஆதலின் வருவதாயின் இது கேட்டுவருதல் கூடும் என்னும் கருத்தினால் அலர் எடுத்துரை என்றாள். தன் துயர முதலிய கூறற்க என்பது குறிப்பு.

வயந்த மாலையின் அன்பு

10-15: வயந்த.........வருந்தி

(இதன் பொருள்) வயந்த மாலையும் மாதவி துறவிக்கு அயர்ந்து மெய்வாடிய அழிவினன் ஆதலின் - அவ் வயந்தமாலை என்னும் தோழி தானும் மாதவியின்பால் பேரன்பு கொண்டவளாதலின் அவள் மேற்கொண்ட துறவொழுக்கத்திற்குச் சித்திராபதியினுங் காட்டில் மிகவும் நெஞ்சழிந்து ஊணும் உறக்கமும் அருகி உடல் மெலிதற்குக் காரணமான துன்பமுடையளாதலாலே; மணிமேகலை மாதவியிருந்த அணிமலர் மண்டபத்து அகவயின் செலீஇ- ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள்ளமையாலே புத்தப் படிமத்திற்கு அணிதற்குரிய மலர்மாலை தொடுக்கு மிடமாகிய மண்டபத்திற்குள்ளே புகுந்து; ஆறிய சாயல் ஆய் இலை மடந்தை வாடிய மேனி கண்டு உளம் வருந்தி - பண்டு அசைத்த சாயலையும் அழகிய அணிகலன்களையுமுடைய அயகிய இளையளாயிருந்த அம் மாதவியினுடைய துயரத்தாலும் நோன்பாலும் வாடியிருந்த திருமேனியைக் கண்டு மேலும் வருந்திக் கூறுபவள் என்க.

(விளக்கம்) துறவி- துறவு. மாதவியின்பாற் சென்ற வயந்தமாலை அவளைத் தனியிடத்தேயும் காணலாம்; அவ்வாறன்றி இவள்வாயிலாய் மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள்ளமையின் அதற்கிணங்க மணிமேகலையோடிருந்ததொரு செவ்வியற் காண்பாளாயினள் என்பது குறிப்பு.

ஆடிய சாயல் - அசைந்த மென்மை. மடந்தை - ஈண்டு இளைமை யுடையோள் என்னும் குறிப்புப் பொருள் மேனின்றது. செலீஇ- சென்று.

வயந்தமாலை மாதவிக்குக் கூறுதல்
16-26: பொன்னே.......கணக்கும்

(இதன் பொருள்) பொன் நேர் அனையாய் - திருமகளையே ஒக்கும் நங்காய்; புகுந்தது கேளாய் - உன் செயல் காரணமாக இப்பொழுது நம் மாநகரத்தே நிகழ்ந்ததொரு செய்தியைக் கூறுவேன் கேட்டருள்க; உன்னோடு இவ்வூர் உற்றது உண்டு கொல் நாடக மேத்தும் ஆடலணங் காகிய நின்னோடு இம் மாநகரத்து மரந்தர்க் குண்டான பகைமை ஏதேனும் உளதோ! இல்லையன்றே அங்ஙனமாகவும்; வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்து கூத்தும் - பாட்டும் தூக்கும் துணிவும் வேந்தர்க்காடும் கூத்தும் எல்லா மாந்தர்க்கும் பொதுவாக ஆடும் கூத்தும் என்று வகுத்துக் கூறப்படுகின்ற இருவகைப்பட்ட  கூத்துக்களின் இலக்கணங்களும், அவற்றிற் கியன்ற பண் வகையும் செந்தூக்கு முதலிய ஏழுவகைப் பட்ட தூக்கு வகையும் தாளவகையும்; பண்யாழ் கரணமும் - பண்ணுறுத்திய யாழ்க் கரணங்களும்; பாடைப் பாடலும் - அகக் கூத்தும் புறக் கூத்துமாகிய இருவகைக் கூத்திற்குமுரிய உருக்கள் எனப்படும் பாடல்களும் தண்ணுமைக் கருவியும் - தண்ணுமை முதலிய தோற் கருவி வாசிக்கும் வகையும்; தாழ் தீங்குழலும் - மந்த இசையினாற் சிறப்பெய்தும் வேய்ங்குழல் வாசிக்கும் வகையும்; கந்துகக் கருத்தும் மடைநூல் செய்தியும் - பந்தாடுதலின்கண் சிறந்த கருத்து வகையும், அட்டில் நூலறிவும் அடிசல் சமைக்கும் தொழில் வகையும்; சுந்தரச் சுண்ணமும் - அழகு தருகின்ற பொற் சுண்ணம் முதலியன செய்தலும்; தூநீராடலும் - தூய நீர்விளையாட்டு வகையும்; பாயல் பள்ளியும் - காதலரோடு இனிதாகப் பள்ளி கொள்ளுதற்கியன்ற கலைகளும்; பருவத்து ஒழுக்கமும் - வேனிற் பருவம் முதலிய அறுவகைப் பருவங்கட்கும் ஏற்ப ஒழுகும் ஒழுக்கமும்; காயக் கரணமும் - உடம்பினாற் கலவிப் பொழுதின் நிகழ்த்தும் அறுபத்துநான்கு வகைத் தொழின் முறைகளும்; கண்ணியது உணர்த்தலும் - குறிப்பறிந்து கொள்ளும் திறமும்; கட்டுரை வகையும் - பொருள் பொதிந்த சொற்களாலே பேசுகின்ற வகைகளும்; கரந்துறை கணக்கும் - பிறர் அறியாவண்ணம் மறைந்து வதியும் முறையும் என்க.

(விளக்கம்) வேத்தியல் - அரசர் பொருட்டுச் சிறப்பாக ஆடும் கூத்து. பொதுவியல் - பொதுமக்கள் எல்லாரும் கண்ட களிக்க ஆடும் கூத்து. இங்ஙனம் கூறுவர்(சிலப்) அரும்பதவுரையாசிரியர். அடியார்க்கு நல்லார், இவையிரண்டும் நகைத்திறச் சுவைபற்றி நிகழும் விதூடகக் கூத்து; எனவும் இவற்றை வசைக்கூத்தும் எனவும் விளக்குவர். பாட்டு - பண். இவற்றியல்பெலாம் சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதையில் கண்டுகொள்க.

தூக்கு - தாளங்களின் வழிவரும் செந்தூக்கு மதலைத்தூக்கு துணி புத்தூக்கு கோயிற்றூக்கு நிவப்புத்தூக்கு கழாற்றூக்கு நெடுந்தூக்கு என்னும் ஏழுதூக்குக்களுமாம். துணிவு - தாளம். அவை - கொட்டும், அசையும், தூக்கும், அளவும். இவற்றுள் கொட்டென்பது அரை மாத்திரை; வடிவு க அசையென்பது ஒரு மாத்திரை; வடிவு, எ தூக்கென்பது இரண்டு மாத்திரை; வடிவு உ அளவு என்பது மூன்று மாத்திரை; வடிவு ஃ என்பர். பண்ணியாழ்: வினைத்தொகை. கரணம் - செய்கை. படைப்பாடல் - அகக்கூத்திற்கும் புறக்கூத்திற்கும் இயன்ற இசைப்பாடல்கள். இசைப்பாடல் எனினும் உருக்கள் எனினும் ஒக்கும். இக்காலத்தார் உருப்படி எனலும் காண்க. தண்ணுமை, இதனை அகப்புறவு முழவு என்ப. குழல் - வேய்ங்குழல் கந்துகம் - பந்து மடைநூல் சமையற்கலை பற்றிய நூல். செய்தியும் - மடைநூலும் மடைத்தொழிற் செய்கியும் என்க. பாயற் பள்ளி - இடக் கரடக்கல். பருவம் - வேனில் முதலிய பருவம். மகளிர்க்குரிய பேதை பெதும்பை முதலியனவுமாம். காயக்கரணம்: இடக்கர் அடக்கு. கட்டுரை - சொல்லாட்டம். கரந்துறை கணக்கு - மறைந்து வதிதற்கியன்ற முறை.

இதுவுமது

27-37: வட்டிகை........உரைக்கும்

(இதன் பொருள்) வட்டிகைச் செய்தியும் - எழுதுகோல் கொண்டியற்றும் தொழிற்றிறமும்; மலர் ஆய்ந்து தொடுத்தலும் மலர்களை வண்ணம் வடிவம் மணம் முதலியவற்றால் ஆராய்ந்து அழகாகத் தொடுத்தலும்; கோலங்  கோடலும் - உள்வரிக் கோலம் புனைந்து கொள்ளலும்; கோøயின் கோப்பும் - முத்துப் பவழம் முதலியவற்றைக் கோவைப் படுத்தலும்; காலக் கணிதமும் - காலக்கணக்கிய லறிதலும்; கலைகளின் துணிவும் - அறுபத்துநான்கு வகைப்பட்ட கலைகளை அறிந்து தெளிதலும்; நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த ஓவியச் செந்நூல் உரைநூல் கிடக்கையும் - நாடகமாடும் மகளிர் பயில்வதற் கென்றே அறிஞர்களால் நன்றாக வகுத்து வரையப்பட்ட ஓவியங்களையுடைய செவ்விய நூலில் அவை கிடக்கும் முறையே அறித்தலும் ஆகிய இக் கலைகளை எல்லாம்; கற்றுத் துறைபோய் பொற்றொடி நங்கை - நன்கு ஐயந்திரிபறப் பயின்று அந் நாடகத் துறையில் தலைவரம்பாகத் திகழ்கின்ற பொன்தொடி யணிந்த நாடகமகளிரிற் றலைசிறந்த நாடகக் கணிகை யொருத்தி; நல்தவம் புரிதல் சிறந்த தவவொழுக்கத்தை மேற்கொள்வது; நாண் உடைத்து ஆராயுங்கால் நாணுதற்குரியதொரு செயலாகும் என்று சொல்லி; அலகில் மூதூர் ஆன்றவர் அல்லது - அளவில்லாத மாந்தர் வாழுகின்ற நந்தம் பழைய நகரத்தின்கண்ணுறைகின்ற ஆன்றவிந்தடங்கிய சான்றோரை யல்லதும்; பலர் தொகுபு உரைக்கும் பண்பு இல் வாய்மொழி - பிறரும் இடந்தொறும் கூட்டம் கூட்டமாகக் கூடியிருந்து பேசுகின்ற பண்பாடு இல்லாத உண்மையோடு கூடிய பழமொழி; நயம்பாடு இல்லை - நம்மனோர்க்கு அழகுண்டாக்குதல் இல்லை யாகலின்; நாணுடைத்து என்ற - அதனைக்கேட்கும் நம்மனோர்க்கும் நாணந் தருதலைத் தன்பாலுடைய தாகவே உளதுகாண்! என்று கூறிய; வயந்த மாலைக்கு மாதவி உரைக்கும் - வயந்த மாலைக்க மறு மொழியாக அவளை நோக்கி மாதவி கூறுகின்றாள் என்க.

(விளக்கம்) வட்டிகை - எழுதுகோல். கோலம் - உள்வரிக்கோலம்; அஃதாவது பல்வேறு வேடங்களும் புனைந்து கொள்ளும் திறம். காலக் கணிதம் - காலத்தைக் கணிக்கும் தொழில். துணிவு - தெளிவு. ஓவியச் செந்நூல் - நாடகமகளிர்க் கியன்ற நிற்றல் இருத்தல் முதலியவற்றையும் ஒற்றைக்கை இரட்டைக்கை முதலிய அவினய வகைகளையும் ஓவியமாக வரைந்து காட்டப்பட்ட நூல் என்க. அவ்வோவியங்கள் முறைபடுத்திக்கிடத்தப்பட்டு அவற்றின் விளக்கவுரைகளும் வரையப்பட்டிருத்தலும் இந்நூல் நாடக மகளிர் பொருட்டே ஆக்கப்பட்டது என்பதும் தோன்ற நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கை என்று விதந்தோதினார். இப்பழி கூறுதற்குரியோர் ஆன்றவிந்தடங்கிய சான்றோரேயாவர், அவரையன்றியும் ஏனையோரும் தூற்றுகின்றனர் என்பாள் ஆன்றவரல்லது பலர்தொகுப்புரைக்கும் வாய்மொழி என்றாள். பிறர்பழிதூற்றும் மொழி தீயமொழியாதலின் பண்பில் மொழி என்றாள். வாய்தந்தன கூறுகின்றனர் என்பாள் வாய்மொழி என்றாள். அவர்மொழியில் வாய்மையும் உளது என்பாள் அங்ஙனம் கூறினன் என்பதும் ஒன்று. என்னைச் அச் செயல் வாய்மையாகவே நாணுத் தருவ தொன்றே என்பது அவட்கும் உடம்பாடாகலின் என்க.

மாதவி வயந்தமாலைக்குக் கூறும் மறுமொழி

38-48: காதலன்.......பெண்டிர்

(இதன் பொருள்) நற்றொடி நங்காய் காதலன் உற்ற கடுந்துயர் கேட்டே செய்யா உயிரொடு நின்றே - அழகிய வளையலணிந்த நங்கையாகிய தோழியே கேள்! யான் துறவினால் நாணுந்துறந்தேனல்லேன் எளியேன் என் ஆருயிர்க் காதலனாகிய கோவலன் எய்திய பெரிய துயரச் செய்தியைக் கேட்டிருந்தேயும் யாக்கையை விட்டுத் தானே போகமாட்டாத புல்லிய உயிரைத் தாங்கிப் பின்னும் வாழ்வுகந்திருக்கின்றமையால்; பொன் கொடி மூதூர் பொருள் உரை இழந்து - அழகிய கொடியுயர்த்தப்பட்ட இப் பழைய நகரத்துள் வாழும் மாந்தர் எல்லாம் ஒருவாராய் என்னைப் பாராட்டுதற் கியன்ற பொருள் பொதிந்த புகழ் மொழியையும் இழந்து; நாணுத்துறந்தேன் - நாணத்தைக் கைவிட்டவளே ஆகின்றேன் காண்! பத்தினிப் பெண்டிர் - வாய்மையான பத்தினி மகளிரின் இயல்பு கேள்; காதலர் இறப்பின் - தம்மாற் காதலிக்கப்பட்ட தங்கேள்வர் ஊழ்வினை காரணமாக இறந்துபடின்; கனை எரி பொத்தி - மிக் கெரியுமாறு நெருப்பை மூட்டி; உலை ஊது குருகின் உயிர்த்து - கொல்லனுலையில் ஊதப்படுகின்ற துருத்தியின் மூக்குக் கனலோடு உயிர்க்கும் உயிர்ப்புப் போன்று வெய்தாக உயிர்த்து; அகத்து அடங்காது - தம்முள்ளத்தே அடங்க மாட்டாமையாலே; இன் உயிர் ஈவர் - தமதினிய உயிரைக் நீத் தொழிவர்; ஈயாராயின் - அவ்வாறு உயிர் நீத்திலராய விட்டதே; நல்நீரப் பொய்கையின் நளி எரி புகுவர் - குளிர்ந்த நீர்நிலை புகுந்து மாய்ந்தொழிவர்; நளி எரி புகாஅர் ஆயின அன்பரோடு உடனுரை வாழ்க்கைக்கு நோற்று உடம்படுவர் - அவ்வாறு செறிந்த தீயினுள் முழுகி மாயாதவிடத்தே இறந்துபட்ட தம் காதலரோடு மறுமைக்கண் கூடியுறையும் வாழ்க்கையை எய்தும் பொருட்டுக் கைம்மை நோன்பின் மேற்கொண்டிருந்து இம்மை மாறியபொழுது அக் காதலரோடு கூடி வாழா நிற்பர்காண் என்றான் என்க.

(விளக்கம்) வயந்தமாலை கற்றுத்துறை போகிய நங்கை நற்றவம் புரிந்தது நாணுடைத்து என்று ஊர் அலர் தூர்க்கின்றது என்றாளாதலின், மாதவி அங்ஙனம் அலர்தூற்றுதற்குக் காரணம், அவர் தவறு மன்று; நான் தவம் புரிந்ததுமன்று. காதலன் கொலையுண்ட செய்தி கேட்டபின்னரும் யான் நாணம்கெட்டவளாகின்றேன். அவர் தூற்றம் அலரும் இவ்வகையால் வாய்மையை ஆகின்றது. எனவும், வாய்மை யாகவே யான் பத்தினிமகளாயிருந்தால் கடுந்துயர் கேட்டவுடன் என் உயிர் தானே போயிருத்தல் வேண்டும்;  அங்ஙனம் போந்துணிவற்ற புல்லுயிர் தாக்கிப் பின்னும் வாழ்வு கந்தருக்கின்றமையாலே புகழையும் இழந்தேன். பழியையும் சுமந்தேயிருக்கின்றேன் என்று தன்னையே நொந்துரைக்கின்ற இம்மொழிகள் அவளுடைய பேரன்பை மிகத் தெளிவாகக் காட்டுதலுணர்க. நற்றொடிநங்காய் என்று விளித்தது இகழ்ச்சிக் குறிப்பு.

கனை எரி - மிக்க நெருப்பு. எரி - உலையின்கண்ணிடப்பட்ட நெருப்பு. இதனைத் துன்பமாகிய தீ மூளப்பட்டு என்பாருமுளர். அவ்வுரை பொருந்தாமை யுணர்க நளி - செறிவு. எரிபுகுவர் என்றது தீயின மூழ்கி இறப்பர் என்றவாறு. உடம்பு அடுவர் எனக் கண்ணழித்து உடம்பை வருத்துவர் என்பாருமுளர்.

இனி, இம்மாதவி கூற்றிற்கு,

ஓருயிராக உணர்க உடன்கலந் தோர்க்(கு)
ஈருயி ரென்ப ரிடைதெரியார்-போரில்
விடனேந்தும் வேலோற்கும் வெள்வளையி னாட்கும்
உடனே யுலந்த துயிர்  (புற-வெண்பாமாலை, 268)

என வரும் வரலாற்று வெண்பாவிற் றலைவியும்,

அரிமா னேந்திய அமளிமிசை யிருந்த
திருவீழ் மார்பின் தென்னர் கோமான்
தயங்கிணர்க கோதை தன்துயர் பொறாஅன்
மயங்கினன் கொல்லென மலரடி வருடித்
தலைத்தா ணெடுமொழி தன்செவி கோளாள்
கலக்கங் கொள்ளாள் கடுந்துயர் பொறாஅள்
மன்னவன் செல்வுழிச் செல்க யானெனத்
தன்னுயிர் கொண்டவ னுயிர்தே டினள்போல்
பெருங்கோப் பெண்டு மொருங்குடன் மாய்ந்தனள்

என வரும் நெடுஞ்செழியன் பெருந்தேவியும் காதலர் இறந்தவுடன் இன்னுயிர்ந்தமைக்கும், நன்னரீப்பொய்கையின் நளிபெயரிபுக்கமைக்கு,

பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டீமம்
நுமக்கரி தாகுக தில்ல எமக்கெம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென அரும்பற
வள்ளித ழவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே                 (புறம்-246)

எனக் கூறித் தன் கணவன் பூதப்பாண்டியன் இறந்துழி தீப்பாய்ந்திறந்த பெருங்கோப்பெண்டு என்னும் புலமையாட்டியும் சிறந்த எடுத்துக் காட்டாவார். மேலும், உடனுறைவாழ்க்கைக்கு நோற்கும் நோன்பினியல்பை,

அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டா
தடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்ளெட் சாந்தொடு புளிபெய் தட்ட
வேளை வெந்தை வல்சி யாகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிர்                                              (புறம் 246)

எனவரும். அப்பெருங்கோப் பெண்டின் கூற்றே சான்றாதலும் உணர்க.

மாதவி மணிமேகலை நாடகக்கணிகை யாகாளெனல்

48-57: பரப்பு.....படாஅள்

(இதன் பொருள்) பரப்பு நீர் ஞாலத்து அத்திறத்தாளும் அல்லள்-கடல் சூழ்ந்த இந்நிலவுலகத்தேயான் கூறிய அத்தகையபத்தினிப் பெண்டிர் போலவாளும் அல்லள்; எம் ஆயிழை - எங்கள் கண்ணகி நல்லாள்; கணவற்கு உற்ற கடுந்துயர் பொறாஅள்-தன் காதலனுக்கு எய்திய பெருந்துன்பத்தைக் கேட்டு நெஞ்சுபொறுக்கொணாத துன்பமுடையளாகி; மணம்மலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக் கண்ணீராடிய கதிர் இளவனமுலை - நறுமண மிக்குக் கமழ்கின்ற தன் கூந்தல் சரிந்து தன் முதுகினை மறைப்பவும்; தன் கண்ணினின்றும் வீழ்ந்த துன்பக் கண்ணீரின் மூழ்கிய ஒளியுடைய அழகிய இளமுலையில் ஒன்றனைத் தன் கையாலேயே; தண்ணிதின திருகி - திட்பமாகப் பற்றித் திருகி வட்டித்து எறிந்து; தீ அழல் பொத்தி - தீயாகிய அழலைக் கொளுவி; காவலன் பேரூர் கனை எரி மூட்டிய - பாண்டிய மன்னனுடைய தலை நகரமாகிய மதுரை முழுவதும் பெரிய தீயை மூட்டிய தெய்வத்தன்மையுடைய; மாபெரும் பத்தினி-மிகப் பெரிய பத்தின்யல்லளோ?; மகள் மணிமேகலை - அக் கற்புத் தெய்வத்தின் மகள் ஆவாள் இம் மணிமேகலை; அருந்தவப் படுத்தல் அல்லது - ஆதலின் அக் கற்புத் தெய்வத்தின் சிறப்பிற் கேற்ப இம் மணிமேகலையை அரிய தவவொழுக்கத்தின் பால் செலுத்துவதல்லது; யாவதும் திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள் - சிறிதும் உளம் திருந்துதற்குக் காரணமாகத் தீய செய்கைகளையுடைய பரத்தைமைத் தொழிலில் ஈடுபடாள் காண் என்றாள் என்க.

(விளக்கம்) தன் அன்புரிமை தோன்றக் கண்ணகியை மாதவி எம்மாயிழை என்கிறாள். எம் மென்னும் பொதுப் பெயர் கோவலனையும் மணிமேகலையையும் உளப்படுத்தியது. திருகுதல் அருமை தோன்றத் திண்ணிதிற்றிருகி என்றாள். எம் மாயிழை ஞாலத்துள்ள யான் கூறிய பத்தினிப் பெண்டிரின் திறத்தினும் மேம்பட்டுப் பேரூர் எரிமூட்டிய தெய்வக் கற்புடையாள். அத்தகைய பத்தினி மகள் மணிமேகலை. ஆதலின் தவப்படுத்தற்கே உரியள் தீத் தொழிலில் ஈடுபடாள் என மணிமேகலையைக் கண்ணகி மகளாகவே கொண்டு கூறினள். என்னை கோவலன் என்னோடு கேண்மை கொண்டிராவிடின் இவள் அவள் திருவயிற்றிலேயே கருவாகிப் பிறந்திருப்பாள் மன்! என்னும் கருத்தால். இப்பொழுது நிலம் இழந்ததேனும் வித்து உயர்ந்ததாகலின் அஃது இந்நிலத்தினும் தனக் கியன்ற விளைவையே செய்யும் என்பாள் தீத் தொழிற் படாள் என்றாள்.

மாதவி அறவணர்பால் அறங்கேட்டு அமைதி கொண்டமை கூறத் தானும் மீளாமையைக் குறிப்பாக அறிவித்தல்

58-63: ஆங்கனம்.......கூற

(இதன் பொருள்) ஆங்கனம் அன்றியும் - அவ்வாறு மணிமேகலை நிலையிருப்பதுமல்லாமல்; ஆயிழை கேளாய் - வயந்தமாலாய் இனி என்னிலைமை இயம்புவேன் கேட்பாயாக; ஈங்கு இம்மாதவர் உறைவிடம் புகுந்தேன் - யான் கணிகையே ஆதலின் காதலன் உற்ற கடுந்துயர் கேட்டுப் போதல் செல்லாவுயிரொடு நின்றேனாயினும் ஆற்றெணாத் துயருழந்து அதற்கு ஆறுதல் தேடி இங்கு இப் பௌத்த சங்கத்தார் உறைகின்ற இத் தவப் பள்ளியிற் புகுந்தேன் காண் ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளதாதலாற் போலும். இவ்விடத்தே; மறவணம் நீத்த மாசு அறு கேள்வி அறவணவடிகள் அடிமீசை வீழ்ந்து - தீவினையின் நிழலும் ஆடாவண்ணம் அவற்றைத் துவரக் கடிந்தமையால் மாசு அற்ற அறக் கேள்வியையுடைய அறவணடிகள் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற அறவோரைக் காணப்பெற்று அவர் திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி; மாபெருந் துன்பம் கொண்டு - மிகப் பெரிய துன்பத்தைச் சுமந்து கொண்டு ஆற்றாமையாலே; உளம் மயங்கி - நெஞ்சழித்து செய்வதறியாமல் மயங்கி அவர்பால்; காதலன் உற்ற கடுந்துயர் கூற - என ஆருயிர்க் காதலன் கொலைக்களப் பட்ட மிக்க துன்பத்தைக் கூறாநிற்றலாலே; என்க

(விளக்கம்) ஆங்கனம் அன்றியும் என்றது மணிமேகலை அவ்வாறு ஆதலன்றியும் இனி என்றிறம் உரைப்பேன் என்பதுபட நின்றது. ஆயிழை: வயந்தமாலை; அண்மைவிளி. எனக்கும் ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளதாதலாற் போலும் ஈங்கு இம்மாதவர் உறைவிடம் புக்கேன் என்பது அவள் கருத்தாகக் கொள்க. மறவணம்-மறத்தின் வண்ணம். தீவினையின் தன்மை நீத்த அறவண அடிகள். மாசறு கேள்வி அறவண அடிகள் எனத் தனித்தனி இயையும் . அறவணன் - அறத்தின் திருவுருவமானவன். எனவே இஃது அச் சங்கத்தாரீப்த சிறப்புப் பெயர் என்பதுணரப்படும்.சாதலில் இன்னாததில்லை ஆகலின் கொலையுண்டமையைக் கடுந்துயர் என்றாள்.

அறவணர் அருவிய அறவுரைகள்

64-66: பிறந்தோர்........அருளினன்

(இதன் பொருள்) பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் - அது கேட்ட அடிகளார் அடிச்சிக்குப் பெரிதும் இரங்கி என் துயரத்திற்கு ஆறுதல் கூறுபவர் அளியோய் வருந்தற்க! உலகின் கண் பிறப்பெடுத்துழலவோர் யாவரேனும் எய்துவது ஒருகாலைக் கொருகால் மிகுத்து வரந்துன்பமட்டுமே காண்; பிறவார் உறுவது பெரும் பேரின்பம் - இன்ப பிறவாநிலை எய்னோர் யாவர் அவர்க்கு மட்டுமே எய்துவதாம் மக்கள் அவாவுகின்ற மாபெரும் பேரின்பம்; முன்னது பற்றின் வருவது - துன்பம் அனைத்திற்கும் பிறப்பிடமாகிய முற் கூறப்பட்ட பிறப்புப் பற்றினாலே வருவதொன்றும்; பின்னது பின்னே கூறப்பட்ட இன்பநிலைகளமாகிய பிறவாமையோ; அற்றோர் உறுவது அறிக - பற்றற்றோர்க்குத் தானே எய்துவதொன்றாம்; அறிக என்றருளி- இவ்வாய்மைகள் நான்கினையும் நன்கு அறிந்து கொள்ளக் கடவாய் என்று முற்பட இவற்றை அறிவித்துப் பின்னர்; ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி - பற்றறுதிக்குக் காரணமான ஐந்து வகைப்பட்ட ஒழுக்கங்களி னிலக்கணங்களையும் நன்கு அறிவுறுத்து; இவை உய்வகை கொள் என்று உரவோன் காட்டினன்-இவையே நீ எய்திய மாபெருந் துன்பக்கடலினின்றும் கரையேறி உறுதியாகக் கடைப்பிடித்துக் கொள்ளக் கடவாய் என்று அப் பேரறிவாளர் திருவாய் மலர்ந்தருளினர் காண் என்றாள் என்க

(விளக்கம்) ஆதலால் யான் ஒருவாறு அம் மாபெருந் துன்பத்தினின்றும் நீங்கி அமைதி பெற்றுள்ளேன் காண் என்பது இதனாற் போந்த குறிப்புப் பொருளாம் என்க.

இப்பகுதியில் புத்தபெருமான் போதி மூலத்துப் பொருந்தியிருந்துழிக் கண்ட மெய்க் காட்சிகள் நான்கும் சுருங்கக்கூறி விளங்க வைத்திருக்கும் தண்டமிழ் ஆசான் சாத்தனார்தம் புலமை வித்தகம் நினைந்து நினைந்து மகிழற்பாலதாம்.

பௌத்த சமயத்தின் உயிராக விளங்குவன இந்த நான்கு வாய்மைகளேயாம். அவை, துன்பம், துன்பந் துடைத்தல், துன்பவருவாய், துன்பம் துடைத்தல் நெறி என்னும் இவையேயாம்.

இவையிற்றுள்-பிறப்பு துன்பங்கட் கெல்லாம் நிலைக்களனாதலின் பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் என முதல் வாய்மை கூறப்பட்டது பிறவாமையே இன்பநிலையம் ஆதலின் பிறவார் உறுவது பெரும் பேரின்பம் என இரண்டாம் வாய்மை இயம்பப்பட்டது. முன்னது என்றது பிறப்பினை; அதற்குக் காரணம் பற்றுடைமை ஆதலின், முன்னது பற்றின் வருவது என மூன்றாவதாகிய வாய்மை துன்ப வருவாய்(வரும் வழி) கூறப்பட்டது. பிறவாமையே துன்பம் துடைக்கும் நெறி ஆகலின் பின்னது-பற்றறுதி. பின்னது அற்றோர் உறுவது என்பதனால் நான்காம் வாய்மை நவிலப்பட்டமை நுண்ணிதின் உணர்க. இவ் வாய்மைகள் நான்கும் உலகிலுள்ள எல்லாச் சமயங்கட்கும் எல்லா நாட்டிற்கும் எக் காலத்திற்கும் பொருந்தும் சிறப்புடையன வாதலும் உணர்க.

இங்ஙனம் துணிபொருள் கூறியவர் அவற்றை எய்துதற்குரிய ஏதுவும் இயம்பினர் என்பாள் ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி அருளினன் என்றாள். சீலம்-ஒழுக்கம். அவையாவன: காமம் கொலைகள் பொய் களவு என்னும் ஐந்து தீவினைகளையும் துவரக் துயந்தொழுகுதலாம். காமத்தைத் துறந்தபொழுதே துன்பம் இல்லையாக; இவ்வாற்றல் யான் ஈண்டு ஒருவாறு துன்பந் துடைக்கும் நெறிநிற்றலால் உயர்ந்திருக்கின்றேன் என்று மாதவி வயந்த மாலைக்குத் தன்னிலை கூறத் தானும் வரமாட்டாமையைக் குறிப்பினால் கூறியபடியாம். தான் உழந்த மாபெருந் துன்பத்தை ஆற்றுவித்த அறவண அடிகளின் அறிவாற்றலின் சிறப்புத் தோன்ற அவரை உரவோள் என்று அறியும் ஆற்றலும் ஒருங்கே உணர்த்தும் பெயரால் கூறினள் என்க.

வயந்தமாலை வறிதே மீண்டுபோதல்

70-75: மைத்தடங்கண்..........திறத்தென்

(இதன் பொருள்) நீ மைத்தடங் கண்ணார் தமக்கும் என் பயந்த சித்திராபதிக்கும் என்னிலைமையைக் கூறுவாயாக என்று ஆங்கு அவள் உரை கேட்டு அவ்விடத்தே மாதவி கூறிய மொழியைக் கேட்டவளவிலே; வயந்த மாலையும் காரிகை திறத்துக் கையற்று-மாதவியை மீட்டுச் செல்லும் கருத்தோடு வந்த அவ் வயந்தமாலை தானும் அம் மாதவி திறத்திலே தான் பின் ஏதும் சொல்லவா செய்யவோ இயலாத கையாறு நிலையுடையளாகி; அரும் பெறல் மாமணி ஓங்கு திசைப் பெருங்கடல் வீழ்த்தோர் போனறு அரிதாகப் பெற்றதொரு மாணிக்க மணியை உயர்ந்த அலைகளையுடைய பெரிய கடலிலே போகட்டுவிட்டவர் போலே; மையல் நெஞ்சமொடு பெயர்ந்தனள்-பெரிதும் மயக்கமுற்ற நெஞ்சத்தோடே வறிதே செல்வாளாயினள்; என்பதாம்.

(விளக்கம்) தன் தோழிமார் தன் கூற்றிற்குப் பொருளுணரார் ஆயினும் அவர்க்கும் கூறுக என்னும் இகழ்ச்சி தோன்ற அவரை மைத்தடங்கண்ணார் என்றாள். என்னை அழகு செய்த புறக்கண்ணேயுடையர் அகக் கண்ணில்லா அவர்க் கெல்லாம் இவை விளங்க மாட்டா என்பதே அவள் கருத்தாதலின் என்க.

இனி இத்துணைத் துன்பத்திற்கும் ஆளாகும் என்னைப் பெற்றமையாலும் அவள் கருதியது நிறைவேறாமையாலும் அவள் தீவினையாட்டியே ஆதல்வேண்டும் என்பது குறிப்பாகத் தோன்றற் பொருட்டு அன்னைக்கு என்னாது தனக்கும் அவட்கும் அயன்மை விளங்கித் தோன்ற எற்பயந்த சித்திராபதி எனத் தன் நற்றாயைக் கூறினள். இதனால் அவட்குப் பற்றறுதி கைவந்தமையும் புலப்படுதலறிக. வயந்தமாலையும் அன்பு பொருளாக அன்றிப் பொருட்பொருட்டே அழைக்கவந்தவள் ஆதலின் அவட்கு மாமணியை இழந்தவர் உவமையாக எடுக்கப்பட்ட நயமுணர்க.

இனி இக்காதையை-நன்னாளில் மாதவி வாராத்துன்பம் மேல்வர, சித்திராபதி இரங்கி வயந்தமாலையைக் கூவி அலரை மாதவிக்கு உரைஎன அவள் சென்று மாதவியைக் கண்டு வருந்தி அனையாய் கேளாய் வாய்மொழி நாணுடைத்து என அவட்கு மாதவி உரைக்கும் துறந்தேன் மணிமேகலை தீத்தொழில் படாஅள் யான் புகுந்து வீழ்ந்து மயங்கிக் கூற உரவோன் அறிகென்று நாட்டி, அருளினன். இதனைக் கண்ணார்க்கும் சித்திராபதிக்கும் நீ சென்று செப்பு என வயந்தமாலையும் கையற்றுப் பெயர்ந்தனள் என இயைத்திடுக.

ஊரலர் உரைத்த காதை முற்றிற்று.
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 08:48:47 AM
3. மலர்வனம் புக்க காதை

மூன்றாவது மலர்வனம் புக்கபாட்டு

அஃதாவது-மாதவியும் வயந்த மாலையும் சொல்லாட்டம் நிகழ்த்தும் பொழுது மணிமேகலை புத்த படிமத்திற்கு அணிய வேண்டிய மலர் மாலை தொடுக்கும் செயலீடுபட்டிருந்தாளாக, அவர்கள் சொல்லாட்டத்திடையே மாதவி கூற்றில் தன் அன்புத் தந்தையாகிய கோவலன் உற்ற கொடுந்துயரும் பேசப்பட்டமையால் அச் செய்தியால் அவள் உள்ளத்தே துன்ப நினைவுகள் தோன்ற அவன் உகுத்த கண்ணீர் மலர்மாலையில் வீழ்ந்து அதனை வாலாமையுடையதாக்கியது. அதனால் அற்றே நாள் வழி பாட்டிற்குப் புதிய மலர் பறித்து வந்து தொடுக்க கருதி அம்மலர் பறித்து வருதற்கு மாதவி மணிமேகலையை ஏவினள்; அவட்குத் துணையாகச் செல்வதற்குச் சுதமதி என்னும் அன்புமிக்க பிக்குணி தானே முன்வந்தளள். ஆகவே மணிமேகலையும் சுதமதியும் புதியமலர் கொண்டு வருதற் பொருட்டுத் தீதற்றதாகக் கருதப்படும் உவவனம் என்னும் மலர் வனத்தில் சென்று புகுந்த செய்தியைக் கூறும் செய்யுள் என்றவாறு.

இதன்கண்- மணிமேகலைக்குத் தந்தையின் பாலுள்ள அன்பின் தன்மையும்; அவளுடைய பேரழகின் சிறப்பும் சாத்தனாரால் வியத்தகுமுறையில் கூறப்பட்டுள்ளன.

மேலும் சுதமதி தன் வரலாறு கூறுதலும்; அந்நகரத்திலுள்ள மலர்ப்பொழில்கள் பலவற்றின் பல்வேறு தன்மைகளைக் கூறுதலும் உவவனத்திலுள்ள பளிக்கறை பற்றிய வரலாறு கூறுதலும் பெரிதும் சுவை பயப்பனவாம். சுதமதியும் மணிமேகலையும் மலர் வனம் நோக்கிச் செல்லும் பொழுது வழியிலே நிகழும் ஒரு களிமகன் செயல் நகைச்சுவை தருவதாம் மணிமேகலையைக் கண்டிரங்குவார் மொழிகள் வாயிலாய்ப் புலவர் மணிமேகலையின் பேரழகைப் புலப்படுத்தும் வித்தகப் புலமை பெரிதும் இன்பம் பயப்பதாம். இவ்வாறு இக் காதையில் பல்வேறு சுவைகள் நிரம்பியுள்ளன.


வயந்தமாலைக்கு மாதவி உரைத்த
உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி
மா மலர் நாற்றம் போல் மணிமேகலைக்கு
ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளது ஆதலின்
தந்தையும் தாயும் தாம் நனி உழந்த
வெந் துயர் இடும்பை செவிஅகம் வெதுப்ப
காதல் நெஞ்சம் கலங்கிக் காரிகை
மாதர் செங் கண் வரி வனப்பு அழித்து
புலம்பு நீர் உருட்டிப் பொதி அவிழ் நறு மலர்
இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட  03-010

மாதவி மணிமேகலை முகம் நோக்கி
தாமரை தண் மதி சேர்ந்தது போல
காமர் செங் கையின் கண்ணீர் மாற்றி
தூ நீர் மாலை தூத்தகை இழந்தது
நிகர் மலர் நீயே கொணர்வாய் என்றலும்
மது மலர்க் குழலியொடு மா மலர் தொடுக்கும்
சுதமதி கேட்டு துயரொடும் கூறும்
குரவர்க்கு உற்ற கொடுந் துயர் கேட்டு
தணியாத் துன்பம் தலைத்தலை எய்தும்
மணிமேகலை தன் மதி முகம் தன்னுள்  03-020

அணி திகழ் நீலத்து ஆய் மலர் ஒட்டிய
கடை மணி உகு நீர் கண்டனன் ஆயின்
படை இட்டு நடுங்கும் காமன் பாவையை
ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ?
பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்?
ஆங்கனம் அன்றியும் அணி இழை! கேளாய்
ஈங்கு இந் நகரத்து யான் வரும் காரணம்
பாராவாரப் பல் வளம் பழுநிய
காராளர் சண்பையில் கௌசிகன் என்போன்
இருபிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன்  03-030

ஒரு தனி அஞ்சேன் ஒரா நெஞ்சமோடு
ஆராமத்திடை அலர் கொய்வேன் தனை
மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன்
திரு விழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த
பெரு விழாக் காணும் பெற்றியின் வருவோன்
தாரன் மாலையன் தமனியப் பூணினன்
பாரோர் காணாப் பலர் தொழு படிமையன்
எடுத்தனன் எற் கொண்டு எழுந்தனன் விசும்பில்
படுத்தனன் ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன்
ஆங்கு அவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி  03-040

நீங்கினன் தன் பதி நெட்டிடை ஆயினும்
மணிப் பூங் கொம்பர் மணிமேகலை தான்
தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள்
பல் மலர் அடுக்கிய நல் மரப் பந்தர்
இலவந்திகையின் எயில் புறம் போகின்
உலக மன்னவன் உழையோர் ஆங்கு உளர்
விண்ணவர் கோமான் விழாக் கொள் நல் நாள்
மண்ணவர் விழையார் வானவர் அல்லது
பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும்
வாடா மா மலர் மாலைகள் தூக்கலின்  03-050

கைபெய் பாசத்துப் பூதம் காக்கும் என்று
உய்யானத்திடை உணர்ந்தோர் செல்லார்
வெங்கதிர் வெம்மையின் விரி சிறை இழந்த
சம்பாதி இருந்த சம்பாதி வனமும்
தவா நீர்க் காவிரிப் பாவை தன் தாதை
கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும்
மூப்பு உடை முதுமைய தாக்கு அணங்கு உடைய
யாப்பு உடைத்தாக அறிந்தோர் எய்தார்
அருளும் அன்பும் ஆர் உயிர் ஓம்பும்
ஒரு பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின்  03-060

பகவனது ஆணையின் பல் மரம் பூக்கும்
உவவனம் என்பது ஒன்று உண்டு அதன் உள்ளது
விளிப்பு அறைபோகாது மெய் புறத்து இடூஉம்
பளிக்கறை மண்டபம் உண்டு அதன் உள்ளது
தூ நிற மா மணிச் சுடர் ஒளி விரிந்த
தாமரைப் பீடிகை தான் உண்டு ஆங்கு இடின்
அரும்பு அவிழ்செய்யும் அலர்ந்தன வாடா
சுரும்பு இனம் மூசா தொல் யாண்டு கழியினும்
மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய்
கடம் பூண்டு ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர்  03-070

ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி தான் உறும்
நீங்காது யாங்கணும் நினைப்பிலராய் இடின்
ஈங்கு இதன் காரணம் என்னை? என்றியேல்
சிந்தை இன்றியும் செய் வினை உறும் எனும்
வெந் திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும்
செய் வினை, சிந்தை இன்று எனின் யாவதும்
எய்தாது என்போர்க்கு ஏது ஆகவும்
பயம் கெழு மா மலர் இட்டுக்காட்ட
மயன் பண்டு இழைத்த மரபினது அது தான்
அவ் வனம் அல்லது அணி இழை! நின் மகள்  03-080

செவ்வனம் செல்லும் செம்மை தான் இலள்
மணிமேகலையொடு மா மலர் கொய்ய
அணி இழை நல்லாய்! யானும் போவல் என்று
அணிப் பூங் கொம்பர் அவளொடும் கூடி
மணித் தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ
சிமிலிக் கரண்டையன் நுழை கோல் பிரம்பினன்
தவல் அருஞ் சிறப்பின் அராந்தாணத்து உளோன்
நாணமும் உடையும் நன்கணம் நீத்து
காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி
உண்ணா நோன்போடு உயவல் யானையின்  03-090

மண்ணா மேனியன் வருவோன் தன்னை
வந்தீர் அடிகள்! நும் மலர் அடி தொழுதேன்
எம் தம் அடிகள்! எம் உரை கேண்மோ
அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர்
புழுக்கறைப் பட்டோர் போன்று உளம் வருந்தாது
இம்மையும் மறுமையும் இறுதி இல் இன்பமும்
தன் வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது
கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின்
விளை பூந் தேறலில் மெய்த் தவத்தீரே!
உண்டு தௌிந்து இவ் யோகத்து உறு பயன்  03-100

கண்டால் எம்மையும் கையுதிர்க்கொணம் என
உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று
உண்ம் என இரக்கும் ஓர் களிமகன் பின்னரும்
கணவிர மாலையின் கட்டிய திரள் புயன்
குவி முகிழ் எருக்கின் கோத்த மாலையன்
சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடுஞ் சினைத்
ததர் வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன்
வெண் பலி சாந்தம் மெய்ம் முழுது உரீஇப்
பண்பு இல் கிளவி பலரொடும் உரைத்து ஆங்கு
அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம்  03-110

தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும்
ஓடலும் ஓடும் ஒரு சிறை ஒதுங்கி
நீடலும் நீடும் நிழலொடு மறலும்
மையல் உற்ற மகன் பின் வருந்தி
கையறு துன்பம் கண்டு நிற்குநரும்
சுரியல் தாடி மருள் படு பூங் குழல்
பவளச் செவ் வாய் தவள வாள் நகை
ஒள் அரி நெடுங் கண் வெள்ளி வெண் தோட்டு
கருங் கொடிப் புருவத்து மருங்கு வளை பிறை நுதல்
காந்தள் அம் செங் கை ஏந்து இள வன முலை  03-120

அகன்ற அல்குல் அம் நுண் மருங்குல்
இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து
வாணன் பேர் ஊர் மறுகிடைத் தோன்றி
நீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய
பேடிக் கோலத்துப் பேடு காண்குநரும்
வம்ப மாக்கள் கம்பலை மூதூர்
சுடுமண் ஓங்கிய நெடு நிலை மனைதொறும்
மை அறு படிவத்து வானவர் முதலா
எவ் வகை உயிர்களும் உவமம் காட்டி
வெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய  03-130

கண் கவர் ஓவியம் கண்டு நிற்குநரும்
விழவு ஆற்றுப் படுத்த கழி பெரு வீதியில்
பொன் நாண் கோத்த நன் மணிக் கோவை
ஐயவி அப்பிய நெய் அணி முச்சி
மயிர்ப் புறம் சுற்றிய கயிற்கடை முக் காழ்
பொலம் பிறைச் சென்னி நலம் பெறத் தாழ
செவ் வாய்க் குதலை மெய் பெறா மழலை
சிந்துபு சில் நீர் ஐம்படை நனைப்ப
அற்றம் காவாச் சுற்று உடைப் பூந் துகில்
தொடுத்த மணிக் கோவை உடுப்பொடு துயல்வர  03-140

தளர் நடை தாங்காக் கிளர் பூண் புதல்வரை
பொலந் தேர் மீமிசைப் புகர் முக வேழத்து
இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி
ஆல் அமர் செல்வன் மகன் விழாக் கால்கோள்
காண்மினோ என கண்டு நிற்குநரும்
விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியைக்
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்
மணிமேகலை தனை வந்து புறம் சுற்றி
அணி அமை தோற்றத்து அருந் தவப் படுத்திய
தாயோ கொடியள் தகவு இலள் ஈங்கு இவள்  03-150

மா மலர் கொய்ய மலர்வனம் தான் புகின்
நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள
வல்லுநகொல்லோ மடந்தை தன் நடை?
மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன
சாயல் கற்பனகொலோ தையல் தன்னுடன்?
பைங் கிளி தாம் உள பாவை தன் கிளவிக்கு
எஞ்சலகொல்லோ? இசையுந அல்ல
என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக
செந் தளிர்ச் சேவடி நிலம் வடு உறாமல்
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்  03-160

திலகமும் வகுளமும் செங் கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முட முள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழுங் கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும்
எரி மலர் இலவமும் விரி மலர் பரப்பி
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே
ஒப்பத் தோன்றிய உவவனம் தன்னைத்
தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு
மலர் கொய்யப் புகுந்தனள் மணிமேகலை என்  03-171

உரை

மணிமேகலை தந்தையையும் தாயையும் நினைத்து வருந்துதல்

1-6: வயந்த.......வெதுப்ப

(இதன் பொருள்) மாமலர் நாற்றம் போல் பெரிய நாளரும்பு மலர்ந்துழி அதன்கண் மணம் தோன்றுமாறு போலே; மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளது ஆதலின்-மணிமேகலை முற்பிறப்பிலே செய்த வினைத்தொகுதி அவளுள்ளே முதிர்ந்து தன் பயனை ஊட்டுதற்கியன்ற செவ்வி பெற்றிருத்தலாலே; வயந்தமாலைக்கு மாதவி உரைத்த-சித்திராபதியின் ஏவலாலே தனக்கு ஊரலர் உரைத்துக் தொருட்டவந்த வயந்த மாலைக்கு மறுமொழியாக மாதவி கூறிய; உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி-வாடுதற்குக் காரணமான நோயாகிய துன்பக்கிளவியை நிலைக்களனாகக் கொண்டு பிறந்து; தந்தையும் தாயும் தாம் நனி உழத்த வெம்துயர் இடும்பை செவியகம் வெதுப்ப-தன் தந்தையும் தாயுமாகிய கோவலனும் கண்ணகியும் பெரிதும் நுகர்ந்த வெவ்விய துன்பத்தோடு கூடிய தீச் சொல்லாகிய நெருப்பு அவளுடைய செவியினுட் புகுந்து நெஞ்சத்தைச் சுடா நிற்றலாலே, என்க.

(விளக்கம்) வயந்தமாலைக்கு மாதவியுரைத்த உரை. உயங்குநோய் வருத்தத்து உரை எனத் தனித்தனி இயையும். உயங்குதல்-வாடுதல். நோயாகிய வருத்தத்தைத் தன் பொருளாகக் கொண்ட உரையை ஒற்றுமை கருதி வருத்தத்து உரை என்றார். வருத்தத்தின் மிகுதிதோன்ற உயங்கு நோய்வருத்தம் என ஒரு பொருட்பலசொல் அடுக்கி அடை புணர்த்தார்.

பருவமெய்தி மலரும் மலரின்கண் நாற்றம் தோன்றுதல் முதிர்ந்து செவ்விபெற்ற வினையினின்றும் அதன் பயனாகிய நுகர்ச்சி தோன்றுதற்கு உவமை. ஊழ்வினை ஏது நிகழ்ச்சி எதிர்தல் என்பது பௌத்த நூல் வழக்கு.

மாதவி முன்னைக் காதையில் உரைத்த உயங்கு நோய் வருத்தத்து உரை என்றது அவள் காதலன் உற்ற கடுந்துயர் கேட்டுப்போதல் செய்யா வுயிரொடு நின்றேன் என்றும் கணவற்குற்ற கடுந்துயர் பொறாஅள்....கூந்தல் புதைப்பத்....திருகி எரியூட்டிய பத்தினி என்றும் கூறிய உரைகளை என்க. இவை செவியுட்புகுந்து அவள் தந்தைதாயார் பட்ட துயரமெல்லாம் நினைப்பித்து நெஞ்சத்தை வெதுப்பின் என்றவாறு.

மணிமேகலை கண்ணீர் உகுத்தலும் மாதவி செயலும்

(இதன் பொருள்) காரிகை காதல் நெஞ்சம் கலங்கி-அம் மணிமேகலை அவர்பாற் கொண்டுள்ள அன்பு காரணமாகப் பெரிதும் நெஞ்சம் கலங்கி உருகுதலாலே; மாதர் செங்கண்-அவளுடைய காதல் கெழுமிய சிவந்த கண்கள்; புலம்பு நீர்-துன்பக் கண்ணீரைப் பெருக்கி; வரிவனப்பு அழித்து-தம்பாற் படர்ந்த செவ்வரிகளை மறைத்து; உருட்டி அவள் தொடுக்கின்ற கட்டவிழ்ந்து மலராநின்ற நறிய மலரினது விளக்குகின்ற இதழ்களையுடைய மாலையின் மேல் வீழ்த்தி அதனை நினைத்து வாலாமைப் படுத்தி விட்டமையாலே; மாதவி மணிமேகலை முகம் நோக்கி-இது கண்ட மாதவி மணிமேகலையின் முகத்தைப் பரிவுடன் நோக்கி; தாமரை தண்மதி சேர்ந்தது போலக் காமர் செங்கையின் கண்ணீர் மாற்றி-தாமரை மலர் ஒன்று குளிர்ந்த திங்கள் மண்டிலத்தைத் தீண்டியது போன்று தன் அழகிய கையை அவள் முகத்திலே சேர்த்துச் சிவந்த அக்கையினாலே அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டுக் கூறுபவள்; தூநீர் மாலை தூத்தகை இழந்தது-அன்புடையோய் தூய நீர்மையையுடைய இம் மலர் மாலை நின் கண்ணீர் பட்டுத் தனது தூய தன்மையை இழந்துவிட்டது; நீயே நிகர் மலர் கொணர்வாய்-இம் மாலை நம்மிறை வழிபாட்டிற்காகாதாகலின் இப்பொழுது நீயே மலர் வனத்திற் சென்று புதிய மலர்களைக் கொய்து கொணர்வாயாக என்று கூறாநிற்ப; என்க.

(விளக்கம்) மணிமேகலைக்கு ஏதுநிகழ்ச்சி எதிர்ந்துளதாகலின் உரை வாயிலாய் இடும்பை தோன்றி அவளது செவியகம் வெதுப்ப அதனால் அக் காரிகை நெஞ்சு கலங்க அவள் செங்கண் புலம்பு நீர் பெருக்கி வரிவனப்பு அழித்து உருட்டி மாலையில் இட்டு நீராட்ட அது கண்ட மாதவி மணிமேகலை முகம் நோக்கித் தன் செங்கையின் கண்ணீர் மாற்றிக் கூறுபவள் மாலை இழந்தது நீயே நிகர் மலர் கொணர்வாய் என்று கூறலும் என்று இயைத்திடுக. இப்பகுதி பெரிதும் அவலச் சுவை பயத்தலுணர்க. காரிகை: மணிமேகலை. மாந்தர்-அழகு; காதல் எனினுமாம். வரி-செவ்வரி. அதன் வனப்பை அழித்து என்றது கண்ணீர் பெருகி அவற்றை மறைத்தலை. புலம்பு நீர்-துன்பக்கண்ணீர். வனப்பு-அழகு. இட்டு நீராட்டல் என்பதன் ஒரு சொன்னீர்மைத்தாகக் கோடலுமாம். தாமரை மாதவி கைக்கும் மதி, மணிமேகலை முகத்திற்கும் உவமைகள். தூநீர்-தூயதன்மை. தூத்தகை என்பதுமது, நிகர்மலர், புதுமலர். ஒளிமலர் என்பாருமுளர்.

சுதமதியின் பரிவுரைகள்

16-25: மதுமலர்..........நின்றிடின்

(இதன் பொருள்) மதுமலர்க் குழலியொடு மாமலர் தொடுக்கும் சுதமதி கேட்டுத் துயரொடுங் கூறும்-தேன் பொருந்திய மலரணிதற்கியன்ற கூந்தலையுடைய மணிமேகலையோடே சிறந்த மலர்மாலை தொடுத்துக் கொண்டிருந்த சுதமதி யென்னும் பெயரையுடைய மற்றொரு பிக்குணி மாதவி கூறிய மொழியைக் கேட்டவளவிலே மணிமேகலை திறத்திலே துன்பமுடைய நெஞ்சத்தோடே மாதவியை நோக்கிக் கூறவாள்; குரவர்க்கும் ஊழ்வினை உருத்து வந்தூட்டுதலானே வந்தெய்திய கொடிய துன்பத்தைச் செவியேற்று அவரை நினைந்து ஆறாக பெருந்துயரம் எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் எய்தா நின்ற; மணிமேகலையின் தன் மதிமுகந் தன்னுள் அணிதிகழ் நீலத்து ஆய் மலர் ஓட்டிய கடை மணி உகுநீர் கண்டனன் ஆயின் - இம் மணிமேகலையின் நிறை மதி போன்ற திருமுகத்தின்கண் ணமைந்த அழகு விளங்குகின்ற நீலத்தின் ஆராய்தற்கியன்ற மலரின் அழகைப் புறமிடச் செய்த கண்ணின் மணியின் கடைப்பகுதியினின்றும் துளித்த துன்பக் கண்ணீரைக் கண்டுளனாயின்; காமன் படை இட்டு நடுங்கும் காமவேள் தன் கருப்பு வில்லும் அருப்புக் கணையுமாகிய படைக் கலன்களை நிலத்திலே எறிந்து விட்டு ஆற்றொணாத் துயரத்தாலே நடுங்குவான் அல்லனோ; பாவையை - அத்தகைய பேரழகு படைத்த பாவை போன்ற இவள் மலர் கொய்யப் போகும் வழியிலே; ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ-ஆண்மக்கள் கண்டக்கால் அக் காட்சியைவிட்டு அப்பாற் போதலும் உளதாகுமோ; பெற்றியின் நின்றிடின் பேடியர் அன்றோ-கண்ட பின் மயங்காமல் தமக்கு இயல்பான அறிவோடு நின்றால் அவர் பேடியர் ஆதல் ஒருதலையன்றோ என்றாள் என்க.

(விளக்கம்) சுதமதி வரலாற்றினை அடுத்த அவளை கூறக்கேட்போம். இவள் மணிமேகலைபால் தாய்மையன்பு கொண்டிருப்பவள் ஆதலின், அவளை மலர்க்கொய்யப் போம்படி மாதவி பணித்தமையால் அங்கனம் போனால் அவட்குத் தீமையுண்டாகும் என்னுங் கருத்தால் துயருற்றுக் கூறுகின்றாள் என்க. அவளுடைய பேரழகே அவட்குத் தீமைபயக்கும் என்பான் அவ்வழகினை இவ்வாறு விதந்தோதுகின்றாள். காமனுக்கு மகளிரே சேனையாகலின் அச்சேனைக்கு இவள் தலைவியாதலின் அவள் துன்பக்கண்ணீரைக்கண்டுகாமன் பொறானாய்ப் படையிட்டு நடுங்குவான் என்றவாறு. இவளைக் கண்ட ஆடவர் எத்தகையோராயினும் மயங்காதிரார் என்பதனை, பெற்றியின் நின்றிடின் அவர் பேடியராகத் தாமிருப்பர் என்றாள். இவ்வாற்றால் இச் சுதமதி மணிமேகலையின் பேரழகை நுண்ணிதல் கூறக்காட்டுதல் பெரிதும் இலக்கிய இன்பம் நல்குதல் உணர்க.

மகளிர் யாண்டும் தனியே செல்லுதல் தகாது என்பதற்குச்
சுதமதி தன்னையே எடுத்துக் காட்டாகக் காட்டல்

26-35: ஆங்ஙனம்.........வருவோன்

(இதன் பொருள்) ஆங்ஙனம் அன்றியும்-அவ்வாற்றானன்றியும் (இவள் தனித்தலர் கொய்யப் போகாமைக்குப் பிறிது காரணமும் உளது அது என் வரலாறு கூறவே நீ அறிந்து கொள்வாய் ஆகலின்) அணியிழை ஈங்கு யான் இந்நகரத்துவரும் காரணம் கேளாய்-அணியிழாய் இங்கிருக்கும் யான் இப் பூம்புகார் நகரத்திற்கு வர நேர்ந்த காரணத்தைக் கூறுவல் கேட்பாயாக பாராவாரம் பல்வளம் பழுகிய காராளர் சண்பையின் கௌசிகன் என்போன்-பல்வேறு கடல்படுபொருள் வளமும் நிரம்பிய காராளர் என்னும் வகுப்பினர் மிக்குவாழ்கின்ற சண்பை என்னும் நகரத்தே குடியிருப்புடைய கௌசிகன் என்னும் பெயரையுடைய; இருபிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன்-பார்ப்பனனுக்கு ஒரே மகளாயிருந்த யான்; ஒரே நெஞ்சமொடு ஒருதனி அஞ்சேன் ஆராமத்திடை அலர் கொய்வேன்றனை-யாதொன்றனையும் ஆராய்ந்தறியாத என் பேதை நெஞ்சத்தால் மிகவும் தனிமையுடையேனாய்ச் சிறிதும் அஞ்சாமல் ஒரு மலர்ப்பொழிலும் புகுந்து மலர் செய்கின்ற என்னை; மாருத வேகன் என்பான் ஓர் விஞ்சையன்-மாருத வேகன் என்னும் பெயரையுடையான் ஒரு விச்சாதரன்; திருவிழை மூதூர் தேவர் கோற்கு எடுத்த பெருவிழா காணும் பெற்றயின் வருவோன்-திருமகள் பெரிதும் விரும்புமியல்புடைய இப் பழைய நகரத்தின்கண்  அவ்வாட்டைக்கு நிகழ்த்தும் பெரிய இந்திரவிழாவைக் கண்டு களிக்கும் கருத்தொடு விசும்பின் வழியே வருபவன்; தாரன் மாலையன் தமனியப் பூணினன் பாரோர் காணப் பலர் தொழும் படிமையன் உடையனாய் பொற்கலன்கள் பூண்டவனாய் இந்நிலவுலகத்தார் கண்டிராததும் கண்டோர் பலரும் கை தொழில் தகுந்ததுமாகிய உருவச் சிறப்புமுடையான் காண் என் எடுத்தனன் கொண்டு எழுந்தனன் கொண்டு வானத்திலே பறந்து போயினன்; ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன்-அவ் வானத்தின்கண் யானும் அவன் கருதியாங்கியைந் தொழுகலானேன்காண் ஆங்கு அவன் ஈங்கு எனை கண்மாறி அகன்று- ஆங்கு அவ்வாறு செய்த அவ்விச்சாதரன் இந் நகரத்திலே எனைக் கைவிட்டுச் சிறிதும் கண்ணோட்டமின்றிப் பிரிந்து; தன்பதி நெட்டிடை ஆயினும் நீங்கினன்-தன்னூர் மிகவும் நீண்ட வழியுடையதாக இருப்பினும் என்னைச் சிறிதும் நினையாதவனாய்த் தான் மட்டுமே போயொழிந்தான் நாண் என்றாள் என்க.

(விளக்கம்) ஆங்ஙன மன்றியும்-என்றது அவ்வாறன்றியும் வேறு காரணங்களாலும் அவட்குத் தீமை வரலாம் என்பதுபட நின்றது. இது பாட்டிடைவைத்த குறிப்பாற் போந்த பொருள். இனி ஆங்ஙனமன்றியும் என்பதனுடன் 42 ஆம் அடிக்கட்கிடந்த மணிமேகலைதான் தனித்தலர் கொய்யும் தகைமையள் அல்லள் அதற்கு எடுத்துக்காட்டாக (26) அணியியை கேள் என இயைத்துப் பொருள் கூறினும் அமையும். என்னை அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் இயன்று பொருள் முடியத் தந்தனர் உணர்த்தல் மாட்டு என மொழிப் பாட்டியல் வழக்கின் என்பது ஓத்தாகலின் என்க(தொல்-செய்யு-210). பாரா வாரம்- கடல். காராளர்-ஒரு சாதியினர்: பூவைசியர்; அவராவார் வணிகருள் உழுதுண்போர். இவர் உழுதுண்ணலே அன்றிக் கலத்தினுஞ் சென்று பொருளீட்டுவோராதலின், பாராவாரம் பல்வளம் பழுநிய காராளர் சண்பை என்றார். சண்பை சீகாழிநகர்போலும். அஞ்சுல தஞ்சல் அறிவார் தொழில் என்பதை ஓரா நெஞ்சமொடு என்றவாறு. ஆராமம் மலர்ப்பொழில். பூம்புகார் என்பது தோன்றித் திருவிழைமூதூர் என்றாள். பெருவிழா என்றது-இந்திரவிழாவை. இந்திரவிழாவிற்கு விச்சாதரரும் வருகுவர் என்பதை, சிலப்பதிகாரத்தில் கடலாடு காதையானும், (1-34 வெள்ளி காண்போன்) இந்நூலிற் காயசண்டிகை வரலாற்றானும் உணர்க. விஞ்சையன்-விச்சாதரன். படிமையன்-உருவமுடைய மாறி, கண்ணோட்டமின்றி-இதற்கு வேறு கூறுவாருமுளர். அதற்கு எடுத்துக்காட்டும் காட்டுவர். ஆயினும் ஈண்டைக்கு அவ்வுரை பொருந்தாமை நுண்ணுணர்வாற் கண்டுகொள்க நெட்டிடையாயினும் நீங்கினன் என மாறுக.

இதுவுமது

42-43: பணி............அல்லள்

(இதன் பொருள்) மணிப்பூங்கொம்பர் மணிமேகலை தான்-இக் காரணங்களாலே அழகிய மலர்க் கொடி போன்று பருவம் கெழுமிய நம் மணிமேகலை நல்லாள்; தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள்-நீ ஏவியாங்குத் தமியளாய்ச் சென்று மலர்வனம் புக்கு கொய்து வருந்தன்மையுடையள் அல்லள் காண் என்றாள் என்க.

(விளக்கம்) இக்காரணங்களாலே தனித்து அலர் கொய்யப் போதல் கூடாது என்பது கருத்து.

மலர்ப் பொழில்களும் அவற்றின் சிறப்பியல்பும்

44-58: பன்மலர்........எய்தார்

(இதன் பொருள்) பன்மலர் அடுக்கிய நல்மரப் பந்தர் இலவந்தி கையின் எயில்புறம் போகின் உலக மன்னவன் உழையோர் ஆங்குளர்-பன்னிறமுடைய மலர்க் கொடிகளை நிரல்பட நட்டுப் படரவிட்ட நல்ல மரத்தாலியன்ற பூம்பந்தர்களையுடைய இலவந்திகையினது மதிலின் புறத்தே சென்றக்கால் உலகாள் மன்னனுடைய பணி மாக்கள் ஆங்கிருப்பவர் ஆதலின் அந்நெறிச் செலல் தகாதுகாண்; விண்ணவர் கோமான் விழாக்கொள் நல் நாள் வானவர் அல்லது மன்னவர் விழையார்-இந்திரனுக்கு விழா நிகழ்த்தும் இருபத்தெட்டு நல்ல நாளினும் இந்திரன் சுற்றத் தாராகிய வானுலகத்துத்தேவர் வந்து தங்குதலின்றி நிலவுலகத்து மாந்தர் உட்புக விரும்பார் என்பதும்; பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும்-இசை பாடும் வண்டுகள் தாமும் முரன்று மூசுதலில்லாத பல்வேறு வகைப்பட்ட மரங்களிலெல்லாம்; வாடா மாமலர் மாலைகள் தூக்கலின்-வானவர் நாட்டுக் கற்பக மரங்களினின்றும் அத் தேவர்கள் கொணர்ந்த வாடாத சிறப்புடைய மலர்களாற் றொடுக்கப்பட்ட மாலைகளைத் தூக்கிவிட்டிருத்தலானே; கைபெய் பாசத்துப் பூதம் காக்குமென்று-அங்கெல்லாம் கையிடத்தே கயிற்றையுடைய பூதம் காவல் செய்யும் என்று; உணர்த்தோர் உய்யானத்திடைச் செல்லார்-அறிந்த மாந்தர் அரசன் உரிமையோடும் ஆடுதற்கியன்ற உய்யானத்தின் வழியே செல்வாரல்லர், இவையிரண்டு பொழிலும் இங்கனமாக; வெங்கதிர் வெம்மையின் விரிசிறை இழந்த-கதிரவனை அணுகப் பறந்தலானே அவன் வெம்மையாலே விரிந்த சிறகை இழந்து; சம்பாதியிருந்த சம்பாதி வனமும்-சம்பாதி யென்னுங் கழுகரசன் தவமிருந்தமையாலே சம்பாதி வனம் என்று கூறப்படுகின்ற மலர்வனமும்; ஆங்கு-அவ்வாறே; தவா நீர்க் காவிரிப்பாவை தன் தாதை கவேரன் இருந்த கவோ வனமும்-கெடாத நீரையுடைய காவிரியாகிய நீர்த்தெய்வத்தின் தந்தையாகிய கவேரன் என்னும் மன்னன் தவமிருந்தமையாலே கவேர வனம் என்று கூறப்படுகின்ற மலர்வனமும்; மூப்படை முதுமைய-ஏனைய மலர் வனங்களினுங் காட்டில் காலத்தால் மூப்புடைய பழைமையுடையனவாதலால்; தாக்கு அணங்கு உடைய -அவை மக்களைத் தீண்டி வருத்தும் தெய்வங்களைத் தம்பாலுடையன காண்; யாப்புடைத்தாக அறிந்தோர் எய்தார்-இவ்வுலகுரையை உறுதியுடையதாக வுணர்ந்தவர் யாரும் அவ்விரண்டினூடும் புகுதார் காண்; என்றாள் என்க.

(விளக்கம்) பல்வேறு மணமும் நிறமுமுடைய மலர்கொடிகளை நிரல் படவைத்துப் படரவிட்ட மரப்பந்தர் என்க. இவற்றைப் பூம்பந்தர் என்னாது மரநிழல் என்பாருமுளர். நன்மரம் என்றது பந்தரிட்ட மரத்தை. இலவந்திகை-இயந்திரவாவி; அஃதாவது நீரை வேண்டும் பொழுது நிரப்பவும் ஏனையபொழுது வடித்துவிடவும் பொறியமைத்தவாவி. இஃது அரசனும் உரிமை மகளிரும் நாடோறும் நீராடற்குரியதாம். இதனியல்பை இலவந்திகை-நீராவியைச் சூழந்த வயந்தச் சோலை; அஃது அரசனும் உரிமையும் ஆடும் காவற் சோலை எனவரும் அடியாருக்கு நல்லார் உரையானும் (சிலப்-10:30-31) நிறைகுறின் நிறைத்துப் போக்குறின் போக்கும் பொறிப்படை யமைந்த பொங்கில வந்தகை எனவரும் பெருங்கதையானும்(1-40:311-2) உணர்க. உலக மன்னவன் என்றது-சோழமன்னனை. உழையோர்- பணிமாக்கள். உழையோரிருத்தலதன் அங்குப் போதல் கூடாது என்பது குறிப்பு.

விழாக்கோள் ஈரேழ் நாளும் விண்ணகர் வறிதே கிடப்ப அமரர் எல்லாம் ஈங்கு வந்து உய்யானத்திடை இருத்தலின் அங்கு அவர் கொணர்ந்த கற்பகமலர்மாலை மரந்தொறும் தூக்கப்பட்டிருக்கும். மேலும் பூதங்காக்கும் ஆதலால் உணர்ந்தோர் செல்லார் என்றவாறு. இனிச் சம்பாதிவனமும் கவேரவனமும் முதுமைய அணங்குடைய ஆதலின் அவற்றினுள்ளும் போதல் கூடாது. யாப்புடைத்தாக அறிந்தோர் என்றது, (அணங்குடைய என்னும் இவ்வுலகுரையை) உறுதியுடையதாக அறிந்தோர் என்றவாறு.

சம்பாதி-சடாயுவின் உடன்பிறந்தவன். இவன் வானுலகம் புகப் பறந்து போன பொழுது கதிரவன் சினத்திற்கு ஆளாகிச் சிறகு தீயப் பெற்றான் இதனை,

ஆயுயர் உம்பா நாடு காண்டும் என்றறிவு தள்ளி
மீயுயர் விசும்பி னூடு மேற்குறச் செல்லும் வேலை
காய்கதிர்க் கடவுட்டேரைக் கண்ணுற்றும் கண்ணு றாமுன்
தீயையுந் தீக்குந் தெய்வச் செங்கதிர்ச் செல்வன் சீறி
.........................................
வெந்துமெய் யிறகு தீந்து விழுந்தனென் விளகி லாதேன்
                                                              (கம்பரா - சம்பா-54-5)

எனவரும் அச் சம்பாதி கூற்றானே யுணர்க.

உவவனமும் பளிக்கறையும்

59-68: அருளும்.........கழியினும்

(இதன் பொருள்) அருளும் அன்பும் ஆர் உயிர் ஓம்பும் ஒரு பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின்-இனி இவையிற்றைத்தவிர ஆருயிர்களின் பால் பேரருளும் அன்பும் அவ்வாருயிரைப் பாதுகாக்க வேண்டும் என்னும் ஒப்பற்ற பெரிய கோட்பாடும் ஒரு பொழுதும் தன்னைவிட்டு நீங்காத தவத்தினை யுடைய; பகவானது ஆணையின் பல் மரம் பூக்கும் உவவனம் என்பது ஒன்றுண்டு-புத்த பெருமானுடைய கட்டளையினாலே பருவமல்லாத பொழுதும் மலருகின்ற சிறப்பினையுடைய உவவனம் என்னும் ஒரு மலர்ப் பொழிலும் உளதுகாண்; அதன் உள்ளது-அவ் வுவ வனத்தின் உள்ளிடத்ததாய்; விளிம்பு அறை போகாது மெய்புறத்திரூஉம் பளிக்கு அறை மண்டபம் உண்டு-தன்னுட் புகுந்தவர் எழுப்பும் ஒலி வெளிப்படாது உருவத்தை மட்டும் புறத்தே காட்டும் பளிங்கினாலியன்ற அறையினையுடைய மண்டபம் ஒன்று உளது காண்; அதன் உள்ளது-அம் மண்டபத்தின் உள்ளிடத்ததாய்; தூகிறமாமணிச் சுடர் ஒளி விரிந்த தாமரைப் பீடிகைதான் உண்டு-தூயநிறமுடைய மாணிக்க மணியின் சுடர் போலச் சுடர்விடுகின்ற ஒளியோடு மலர்ந்த தாமரை மலர் வடிவிற்றாகிய மேடையென்றும் உளதுகாண்; ஆங்கு இடின்-அம் மேடையின் மேலிட்டால்; அரும்பு அவிழ் செய்யும்-அரும்புகள் நன்கு மலர்ந்தலைச் செய்யும்; தொல் மாண்டு கழியினும் மலர்ந்தன வாடா சுரும்பினம் மூசா-தொன்று தொட்டுத் தோன்றி மறையுமியல்புடைய யாண்டுகள் பல கழித்தாலும் மலர்ந்த அம் மலர்கள் வாட மாட்டா அவையிற்றில் வண்டினமும் மொய்க்கமாட்டா காண் என்றாள் என்க.

(விளக்கம்) அருள்-எல்லாவுயிரிடத்தும் பரந்து பட்டுச் செல்லும் நெஞ்சநெகிழ்ச்சி. அன்பு-தொடர்புடையார்மாட்டுச் செல்லும் நெஞ்ச நெகிழ்ச்சி. பகவனுக்கு அணுக்கமில்லாதனவும் அணுக்கமுடையனவுமாக உயிர்கள் இருவகைப்படுதலின் இரண்டும் கூறினள். பூட்கை கொள்கை. நோன்பு-தவம். பகவன்-புத்தர். ஆனையின் என்றமையால் மலரும் பருவமில்லாத போதும் மலரம் என்றாளாயிற்று. உள்ளது-உள்ளிடத்ததாய்; மண்டபம் ஒன்றுண்டு. அதனகத்ததாய்ப் பீடிகை ஒன்றும் உளது என்க. விளிப்பாகிய அறை: இருபெயரொட்டு. தூநிறம்-தூய நிறம். ஆங்கு-அப் பீடிகையில். அரும்பு மலரும் மலர்ந்தவை வாடா மூசப்படா. தொல்யாண்டு பொருட்கேற்ற அடை. தொன்று தொட்டுத் தோன்றி மறையும் யாண்டு என்க.

இதுவுமது

69-79: மறந்தேன்...........அதுதான்

(இதன் பொருள்) மாதவி அதன் திறம் மறந்தேன்- மாதவி நங்காய் அப் பீடிகையின் தன்மை யொன்றனைக் கூற மறந் தொழிந்தேன்; கேளாய்-அதனையும் கூறுவேன் கேள்; ஓர் தெய்வம் கருத்திடை வைத்துக் கடம் பூண்டோர் ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடிதான் உறும்-யாதானும் ஒரு தெய்வத்தைத் தம் நெஞ்சத்தே திண்ணிதாக நினைந்து அத் தெய்வத்தை வழிபாடு செய்தலையே தங்கடமையாகக் கொண்டவர் அம் மேடையின்மேல் அத் தெய்வத்தின் திருவடிக்கிடுவதாக நினைத்து மலரை இட்டால் அஃது அவ்விடத்தினின்றும் மறைந்து அத் தெய்வத்தின் திருவடியைச் சென்று சேர்வதாம்; நீனைப்பிலராய் இடின்-யாரேனும் யாதொறும் தெய்வத்தையும் நினைத்தலின்றி அதன்மேல் மலரை வறிதே இடுவாராயின்; யாங்கணும் நீங்காது-அம் மலர் யாண்டும் போகாமல் அம் மேடையின் மேலேயே கிடவாநிற்கும்; ஈங்கு இதன் காரணம் என்னை என்றியேல்-இம் மேடையி லிவ்வாறு நிகழும் அற்புத நிகழ்ச்சிக்குக் காரணந்தான் என்னையோ என்று வினைவுவாயாயின் கூறுவேன் கேள். அதுதான்-அத் தாமரைப் பீடிகை தானும்; பண்டு மயன்-முன்பொரு காலத்தே அமரர் தச்சனாகிய மயன் என்பவன்; சிந்தை இன்றியும் செய்வினை உறும் எனும் வெந்திறல் நோன்பிகள் விழுமங் கொள்ளவும்-ஒருவன் இதனைச் செய்யவேண்டும் என்னும் நினைவின்றியே செய்ததொரு வினையின் பயனும் அவனுக்கு வந்துறாமல் வீண்போகாது என்னும் கோட்பாடுடைய வெவ்விய ஆற்றலுடைய தவத்தோர் தம் கொள்கை தவறென்று தமது அறியாமைக்கு வருந்த வேண்டும் என்றும்; சிந்தையின்று எனின் செய்வினை யாவதும் எய்தாது என்போர்க்கு ஏதுவாகவும்-தான் செய்யும் வினையின்கட் செய்யவேண்டும் என்னும் தன்முனைப்பு இல்லை யாயவழி ஒருவன் செய்த வினையின் பயன் அவனுக்குச் சிறிதேனும் வந்துறாது என்னும் கொள்கையுடையவர்க்கு அக்  கொள்கையைச் சாதிக்குமோர் ஏதுவாக வேண்டும் என்றும் கருதி; பயன்கெழு மாமலர் இட்டுக்காட்ட இழைத்த மரபினது- இருவிழியும் இவ்வாறு பயன்தரும் சிறந்த மலரை இட்டு மெய்யறிவு காட்டற் பொருட்டே இயற்றிய முறைமையினை உடைத்தாகலான்; அதுதான்-அப்பிடிகைதானும் இவ்வற்புதம் நிகழ்த்துகின்றது காண் என்றாள் என்க.

(விளக்கம்) அதன்திறம்-அப்பீடிகையின் சிறப்பு. கடம்-கடமை. ஒரு தெய்வத்தைக் கருத்திடைவைத்து என்றது ஒரு தெய்வத்தை வழி படுதெய்வமாக மதித்து என்றவாறு. அவர்- அத்தெய்வம். இதன் காரணம் இங்ஙனம் நிகழ்கின்ற அற்புதச் செயலுக்கான காரணம். வெந்திறல் நோன்பிகள் என்றது இகழ்ச்சி. அவராவார் ஆருகதர். அவர் நினையாது வினைசெய்யினும் அவ்வினையும் செய்தவனுக்குத் தன் பயனை ஊட்டாது கழியாதெனும் கோட்பாடுடையர். அதனை,

ஒத்த வன்றனை யுறுபகை யேயெனக்
குத்தி னானுக்கும் கொலைவினை யில்லெனப்
புத்த னீருரைத் தீரங்கோர் புற்கலம்
செத்த வாறது சிந்திக்கற் பாலதே

எனவரும் நீலகேசியானும் அதனுரையானும் உணர்க. (நீல-543) மற்றிச்செய்யுளே, செய்வினை சிந்தையின்றெனின் யாவதும் எய்தாதென் போர் பௌத்தர் என்பதற்கும் எடுத்துக்காட்டாதலறிக.

ஆருகதர் உடலை வருத்தும் கடுநோன்புடையராதலின் அவரை வெந்திறல் நோன்பிகள் என்றிகழ்தபடியாம். அது-அப் பீடிகை.

மணிமேகலைக்குத் துணையாகச் சுதமதியும் செல்லுதல்

80-85: அவ்வனம்..........செல்வுழீஇ

(இதன் பொருள்) அணியிழை நின்மகள் அவ்வனம் அல்லது செவ்வனம் செல்லும் செம்மைதான் இலள்-மகளிர்க்கு அணிகலன் போல்பவளாகிய நின்மகளாகிய மணிமேகலை மலர் கொய்தற்குச் செல்வதாயின் அவ்வுவவனத்திற்கு நேராகச் செல்வதல்லது பிற வனத்திற்குச் செல்லும் தகுதியுடையாள் அல்லள்; மாமலர் கொய்ய-சிறந்த மலரைக் கொய்துவருதற்கு; மணிமேகலையொடு அணியிழை நல்லாய்-உவவனத்திற்கும் அவள் தமியளாய்ப் போகவறியாள் ஆகலின் அவளோடு மாதவி நல்லாய்; யானும் போவல் என்று-யானும் துணையாகச் செல்வேன் காண் என்று தானே முறைபட்டு எழுந்து; அணிப் பூங்கொம்பர் அளளொடும் கூடி மணித்தேர் வீதியில் சுதமதி செல்வுழி -அழகிய பூங்கொம்பு போன்ற அம் மணிமேகலையோடு கூடி மணி யொலிக்கும் தேர்களியங்கும் பெருந் தெருவின்மேல் சுதமதி அவட்கு வழிகாட்டிச் செல்லுகின்ற பொழுது என்க.

(விளக்கம்) அவ்வனம்-அந்த உவவனம். அணியிழையாகிய நின்மகள் என்க. செவ்வனம்-நேர். செம்மை-தகுதி. கொம்பர் போன்றவளோடு கூடி என்க.

களிமகனும் சமணத்துறவியும்

86-93: சிமிலி.........கேண்மோ

(இதன் பொருள்) சிமிலிக் கரண்டையன் நுழை கோல் பிரம்பினன்-உறியிலிட்டுத் தூக்கிய நீர்க்கரகத்தையுடையவனும் நுண்ணிதாகத் திரண்ட பிரம்மைப் பற்றியவனும்; தவல் அருஞ் சிறப்பின் அராந்தாணத்துளோன்-கேடில்லாத சிறப்பினையுடைய அராந்தாணம் என்னும் அருகன் கோயிலில் உறைபவனும் ஆகிய அமணசமயத்துத் துறவியொருவன்; நாணமும் உடையும் நன்கனம் நீத்து-நாணத்தையும் ஆடையையும் துவரத்துறந்து; காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி-கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிர்க்கும் தன்னியக்கத்தால் இன்னல் உண்டாமோ என்று நிலத்தை மிதிக்கவும் அஞ்சித் செயலறவுடையனாய் ஏக்கமுற்று; உண்ணாநோன்பொடு உயவில் யானையின் மண்ணா மேனியன் வருவோன்றன்னை-உண்ணா நோன்பினாலே பசியால் வருந்தும் யானை போலக் கழுவாத உடம்பையுடையனாய் அவ்வீதியின்கண் வருபவனை;(103) ஓர் களி மகன்-கள்ளுண்டு களித்தானொரு கயவன்; வந்தீர் அடிகள் நும்மடி தொழுதேன்-எதிர்நின்று மறித்துக் கூறுபவன் அடிகேள் வருக வருக நீவிரே எளிவந்தருளினிர் அடியேன் நும்முடைய திருவடிகளைத்  தொட்டுக் கைகுவித்துத் தொழுதேன் ஏற்றருளுக எம்தம் அடிகள்- எங்கள் அடிகளே; எம் உரை-எளியேம் வேண்டுகோளையும் கேண்மோ-செவியேற்றருள்க என்றான் என்க.

(விளக்கம்) சிமிலி-உறி. கரண்டை-கரகம். நுழைகோல் நுண்ணியதிரட்சி. தவல்கேடு. அராந்தாணம்-அருகன்கோயில். காணாவுயிர்- கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிரினம். அவற்றினை மிதித்துழிக் கொலைத்தீவினை வருமென்று வருத்தி ஏங்கினன் என்பது கருத்து. அவ்வாறு சமணசமயத்துறவோர் வருத்துதலை-

குறுந ரிட்ட குவளையம் போதொடு
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
நெறிசெல் வருத்தத்து நீரஞ ரெய்தி
அறியா தடியாங் கிடுதலுங் கூடுங்
எறிநீரேடைகரை யியக்கிந் தன்னின்
பொறிமா ணலவனும் நத்தும் போற்றா
தூழடி யொதுக்கத் துறுநோய் காணின்
தாழ்தரு துன்பந் தாங்கவு மொண்ணா
                                (சிலப். 10: 84-93)
எனவரும் கவுந்தியடிகளார் கூற்றானுமுணர்க. உயவல் யானை-வருந்துகின்ற யானை மண்ணா மேனி-கழுவாத உடம்பு. வந்தீர்-எளிவந்தீர். இஃது அசதியாடியபடியாம். களிமகன் என்னும் எழுவாய் (103) முன்னே கூட்டப்பட்டது. கேண்மோ-ஓ: முன்னிலையசை.

இதுவுமது

94-103: அழுக்குடை..........பின்னரும்

(இதன் பொருள்) அழுக்குடை யாக்கையில் புகுந்த நும் உயிர் புழுக்கறைப் பட்டோர் போன்று உளம் வருந்தாது-அழுக்கோடு கூடிய நும்முடைய உடம்பினுள் புகுந்துறைகின்ற நுமதுயிரானது புழுக்கமிக்க அறையாகிய சிறையிலிடப்பட்டவர் போன்றுள்ளம் பெரிதும் வருந்தர்வண்ணஞ் செய்து; இம்மையும் மறுமையும் இறுதியில் இன்பமும் தன்வயின் தரூஉம்-(இதோ இக் கலத்திலுள்ள இக்கள்ளை நோக்குமின் இஃதெத்தகைய தோவெனின்) இஃது இம்மையில் நுகர வேண்டிய இன்பத்தையும் இம்மை மாறித் துறக்கத்தே நுகர்தற்கியன்ற அமரருலகவின்பத்தையும்

இவற்றிற்குத் அப்பாற் பெறக் கிடந்த கடையிலாவின்பம் என்று நுங்கள் இறைவன் கூறும் வீட்டின்பத்தையும் தன்னுள்ளிருந்தே வழங்கும் என்று; என் தலைமகன் உரைத்தது-இதன் பெருமை என் நல்லாசிரியர் செவியரிவுறுத்து எனக்கருளிய தொன்றும்; கொழுமடல் தெங்கின் விளைபூந்தேறலின் கொலையும் உண்டோ-வளமான மடல்களையுடைய தென்னையின் பூவாகிய பாளையிற் பிறந்த இந்தக் கள்ளில் கொலைத்தீவினையும் உண்டோ இல்லையாகலின்; மெய்த் தவத்தீரே-கொல்லாமை மேற்கொண்டொழுகா நின்ற வாய்மையான தவத்தையுடையீரே; உண்டு தெளிந்து இவ்யோகத்து உறுபயன் கண்டால் எம்மையும் கையுதிர்க் கொண்ம் என இக் காலத்திலுள்ள கள்ளை ஒருமுறை பருகி அதனொடு கலந்து ஒன்ணுபட்டு நும் நெஞ்சந் தெளித்து இந்த யோகத்தினது மிக்க பயனை நீயர் கண்டுகொண்டு எம்முரை பொய்யாயின் பின்னர் இக்கள்ளோடு எம்மையும் கையை அசைத்துப் போக்குமின் என்று கையை அசைத்துப் போக்குமின் என்று சொல்லி; உண்ணா நோன்பி தன்னொடும் சூள் உற்று உணம் என இரக்கும் ஓர் களிமகன்-உண்ணா நோன்பையுடைய அத் துறவி முன்னர் நின்று பருகீராயின் நும்மை விடேன் என்று வஞ்சினங்கூறி அடிகேள் சிறிது பருகிக் பாருங்கள் என்று வேண்டுகின்ற அக்களிமகள் பின்பும் என்க.

(விளக்கம்) சமணத்துறவோர் நீராடார் ஆதலின் அதனை விதந்து அழுக்குடையாக்கை என்றான். அழுக்கால் மயிர்த்துளைகளும் அடை பட்டிருத்தலின் அவர் உடம்பைப் புழுக்கறையோ டுவமித்தான். புழுக்கறை-கடிய குற்றமிழந்தோரை இட்டுவைக்கும் புழுக்கமிக்க நிலவறை எனவே அக்காலத்துச் சிறைக் கோட்டத்துள் இஃதொன்றென்றறிக. கடையிலாவின்பம் எனச் சமணர் கூறும் வழக்கிற்கேற்ப இறுதியிலின்பம் என்றான். கள்ளின் பெருமை கூறுவான் மூவகை யின் பத்தையும் இது தன்னுளளிருந்தே வழங்கும் என்றான். நுமக்குத் தலை மகனாகிய அருகன் போன்று எமக்கும் ஒரு முதல்வனுளன் அவனே இதனருமையை அறிவுறுத்தினன் என்பான் என்தலைமகன் உரைத்தது öன்றான். நுங்கன் கோட்பாடாகிய கொல்லா விரதத்திற்கும் கள் பொருந்தும் என்பான் தேறலிற் கொலையும் உண்டோ என்றான்; வினா அதன் எதிர்மறைபொருளை வலியுறுத்து நின்றது. யோகம்-இரண்டறக்கலத்தல். கள்ளின் வெறி உண்டவர்களை விழுங்கி அவர் அறிவை இல்லையாக்கித் தானேயாய் நிற்றலால் இதுவே பயனால் சிறந்ததொரு யோகம் என்பான் இவ்யோகத்தின் உறுபயன் என்றான். கண்டால் ஏற்றுக்கொண்மின் இன்றேல் எம்மையும் கையுதிர்த்துப் போக்குமின் என்றவாறு. சமணத்துறவோர் தந்நெறியொழுகாதாரைக் கண்டக்கால் அவரோடு வாயாற் பேசாமல் கையை அசைத்தே அகற்றுவர் ஆதலின் எம்மையும் கையுதிர்க்கொண்மின் என்றான். கையுதிர்-கையை அசைத்தல். உண்ணாநோன்பி-இரண்டுவாவும் அட்டமியும் முட்டுப் பாடும் பட்டினி விட்டுண்ணும் விரதி. களிமகன் பின்னரும், மையலுற்ற மகன் பின்பும் வருந்தி(115), நிற்குநரும் என இயையும்.

ஒரு பித்தன் செயல்

104-115: கணவிர......நிற்கநரும்

(இதன் பொருள்) கணவிர மாலையிற் கட்டிய திரள் புயன்-அலரிப் பூமாலையாலே கட்டப்பட்ட திரண்ட புயங்களையுடையவனும்; குவிமுகிழ் எருக்கின் கோத்த மாலையன்-கூம்பிய அரும்புகளையுடைய எருக்கம் பூவினால் தொடுக்கப்பட்ட மாலையினை மார்பில் அணிந்தவனும்; சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடுஞ்சினை ததர் வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன்-இடையிலே நைந்து சிதைந்த கந்தையோடு மிகவும் உயர்ந்த நெடிய மரக்கிளைகளினின்று உலர்ந்து தாமே உதிர்த்த சுள்ளிகளை ஒடித்து அக்கந்தல் துணியில் மடிகோலிக் கட்டிய ஆடையை உடையவனும் ஆகி; பலரோடும் பண்பு இல்மொழி உரைத்து-எதிர்வரும் ஏதிலார் பலரோடும் வாய்தந்த பொருளற்ற மொழிகளைப் பேசி; ஆங்கு அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம் தொழூஉம் எழூஉம் அங்கனம் பேசும் பொழுதே அழுவான் தரையிலே விழுவான் அழுது ஏதேனும் பிதற்றுவான் கூவுவான் கை கூப்பித் தொழுது வீழ்ந்து வணங்குவான் பின்னர் எழுவான்; சுழலலும் சுழலும் ஓடலும் ஓடும்-நின்றவாறே சுழலுதலும் செய்வான் பொள்ளென அவ்விடத்தினின்று விரைந்து ஓடுதலையுஞ் செய்வான்; ஒரு சிறை ஒதுக்கி நீடலும் நீடும்-ஒரு பக்கத்தே ஒதுக்கி நெடிது நிற்றலும் செய்வான்; நிழலொடு மறலும்-தனது நிழலொடு பகைத்து மறவுரை பல கூறுவான்; மையல் உற்ற மகன் பின் இவ்வாறு பித்தேறி உழலுகின்ற ஒருவன் பின்னே; வருந்திக் கையிறு துன்பம் கண்டு நிற்குநரும்-அவன் நிலைக்குப் பெரிதும் இரங்கி வருந்தி அவன் திறத்திலே தாம் கையற்று நிற்றற்குக் காரணமான அவன் துன்பங்களைக் கண்டு நிற்பவர்களும் என்க.

(விளக்கம்) கணவிரமாலை-அலரிப்பூமாலை. எருக்கிற் கோத்த மாலை-எருக்கம் பூக்கள் கோக்கப் பெற்ற மாலை என்க. சிதவற்றுணி-கந்தற்றுணி. ததர்வீழ்பு-செறிந்து வீழ்ந்தவையாகிய சுள்ளி. சுழலலும் சுழலும் என்றது அதன் மிகுதி தோற்றுவித்து நிற்கும் ஒரு சொன்னீர்மைத்து ஓடலும் ஓடும் என்பதுமது. நிழலொடு மறலுதல்-நிழலைப் பகைவனைப் பார்க்குமாறு சினந்து நோக்கி வீரம் பேசிப் போரிடுவான் போலாதல்.

பேடியாடல்

116-125: சுரியல்..........காண்குநகும்

(இதன் பொருள்) நீள் நீலமளந்தோன் மகன்-நெடிய நிலத்தை ஓரடியாலே அளந்தருளிய திருமாலின் அவதாரமாகிய கண்ணன் மகனாகிய காமன் அவதாரமாகிய பிரத்தியும்நன் என்பவன்; முன்-பண்டு தன் மகனாகிய அகிருத்தினைச் சிறைவீடு செய்தற் பொருட்டு சென்று; வாணன் பேர் ஊர் மறுகிடை-வாணாசுரனுடைய பெரிய நகரமாகிய சோ வினது வீதியிடத்தே; சுரியல் தாடி மருள்படு பூங்குழல் பவளச் செய்வாய்த் தவள வாள் நகை-சுரண்ட தாடியையும் கண்டோர் மயங்குதற்குக் காரணமான அழகிய கூந்தலையும் பவளம் போன்று சிவந்த வாயினையும் வெள்ளிய ஒளி தவழும் எயிறுகளையும்; ஒள் அரி நெடுங்கண் வெள்ளி வெள் தோட்டுக் கருங் கொடி புருவத்து-ஒள்ளிய செவ்வரி படர்ந்த நீண்ட கண்ணையும் மிகவும் வெண்மையான சங்கினாற் செய்த தோடணிந்த செவியினையும் கரிய ஒழுங்குபட்ட புருவத்தையும்; மருங்குவளை பிறைநுதல்-இருபக்கத்தும் வளைந்த பிறைத்திங்கள் போன்ற நெற்றினையும்; காந்தன் அம் செங்கை ஏந்து இள வன முலை அம் நுண் மருங்குல் அகன்ற அல்குல்-காந்தள் மலர் போன்ற அழகிய சிவந்த கையினையும் அணந்துநிற்கும் இளமையும் எழிலுமுடைய முலையினையும் அழகோடு நுணுகிய இடையினையும் அகலிதாகிய அல்குலையும்; இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து-மகளிர்க்கியன்ற ஆடை மரபினைக் கடந்த முழந்தாளளவிற்றாகிய வட்டுடையினையும் தோளினும் முலையினும் எழுதிய பத்திக் கீற்றின் அழகினையுமுடைய; பேடிக்கோலத்து-ஆண்மையழிந்து பெண்மையவாவிய பேடியின் கோலம் பூண்டு; ஆடிய பேடு காண்குநரும்-ஆடியருளிய பேடு என்னும் புறநாடகமாடுவார் ஆடுங்கூத்தினைக் கண்டு களிப்போரும் என்க.

(விளக்கம்) சுரியல்-சுருண்ட. கண்டோர் மருள்படும் கூந்தல் என்க. நகை-எயிறு. அரி-செவ்வரி. தோடு-ஒருவகைக்காதணி. கொடி-புருவம். மகளிர் உடுக்கும் ஆடை மரப்பினை இகந்த வட்டுடை. இகத்தல்-கடத்தல். வட்டுடை-முழந்தாள் அளவிற்றாகிய ஒருவகை உடை. வாணன் பேரூர்-வாணாசுரன் நகரம்; இதற்குத் சோநகரம் என்பது பெயர். நிலமளந்தோன்-திருமால்; ஈண்டுக் கண்ணன் மேற்று. அவன் மகன் பிரத்தியும் நன். இவன் மகன் அநிருத்தன் சிறையிடப்பட்டான். அவனை மீட்கச் சென்றுழி, பிரத்தியும்நன் அந் நகரமறுகில் பேடிக்கோலங்கொண்டு கூத்தாடினான். அக்கூத்திற்குப் பேடு என்று பெயர் இதனைப் புறநாடகம் பதினொன்றனுள் ஒன்று என்ப. வாணன் பேரூரில் ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக் காமன் ஆடிய பேடியாடலும் (சிலப்-6-54-5 என்பர் இளங்கோ. பிரத்தியும்நன் காமனின் அவதாரம் ஆதலின் காமர் என்றார், இனி இதனோடு

சுருளிடு தாடி மருள்படு பூங்குழல்
அரிபரந் தொழுகிய செழுங்கய னெடுங்கண்
விரிவெண் டோட்டு வெண்ணகைத் துவர்வாய்ச்
சூடக வரிவளை ஆடமை பணைத்தோள்
வளரிள வனமுலைத் தளரியன் மின்னிடைப்
பாடகச் சீறடி ஆரியப் பேடி

எனவரும் இளங்கோ வாக்கு (27:181-6) ஒப்புக்காணத் தகும்.

கண்கவர் ஓவியம்

126-131: வம்ப.........நிற்குநரும்

(இதன் பொருள்) வம்பமாக்க-இந்திர விழாக் காண்டற் பொருட்டு அந் நகரத்திற்கு வந்துள்ள புதிய மாந்தர்; கம்பலை மூதூர்-ஆரவார மிக்க பழைய அப் பூம்புகார் நகரத்திலே காட்சி பலவும் கண்டு வருபவர் அத்தேர்வீதியின் இருமருங்கும் அமைந்த; சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்-செங்கல்லாலியன்ற உயர்ந்து நிற்கின்ற நெடிய ஏழடுக்கு மாளிகை ஒவ்வொன்றினும்; மை அறு படிவத்து வானவர் முதலா எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி-குற்றமற்ற வடிவத்தையுடைய எத்தகைய உயிர்களுக்கும் அவ்வவற்றிற்கு உவமையாமாறு தங்கலைத்திறத்தைக் காட்டி; விளக்கத்து வெள்சுதைதீற்றிய விளக்கமான வெண் சாந்தினையுடைய சுவரின் கண்; வித்தகர் இயற்றிய-ஓவியக்கலை கற்றுத் துறை போகிய வித்தகப் புலமையோர் வரைந்துள்ள; கண்கவர் ஓவியம் கண்டு நிற்குநரும்-காண்போர் கண்களைத் தம் அழகாலே கவருமியல் புடைய ஓவியங்களைக் கண்டு வியந்து நிற்போரும் என்க.

(விளக்கம்) சுடுமண்-செங்கல். நெடுநிலைமனை-எழுநிலை மாட மாளிகை. படிவம்-வடிவம். வானவர் முதலா எவ்வகையுயிரும் என்றது அறுவகைப் பிறப்பினையும் உடைய உயிர்களையும் என்றவாறு. ஓவியங் காண்போர்க்கு இப்படித்தான் இந்திரன் இருப்பான்; இப்படித்தான் திருமகள் இருப்பாள் என அவ்வோவியங்கள் உவமமாகும்படி கலைத்திறத்தால் காட்டி என்க. பன்னிறங்கொண்டு வரையவேண்டுதலின் வெண்சுதை வேண்டிற்று. விளக்கத்து வெண்சுதை என மாறுக. விளக்கத்து இயற்றிய என இயைப்பினும் ஆம். எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி நுண்ணிதினுணர்ந்த நுழைந்த நோக்கின் கண்ணுள் வினைஞரும் என,(மதுரை-556)பிறகும் ஓதுதல் காண்க.

தளர்நடை தாங்காக் கிளர்பூண் புதல்வர்

132-145: விழாவாற்று.......நிற்குநரும்

(இதன் பொருள்) விழா ஆற்றுப்படுத்த கழிபெரு வீதியில்-இந்திரவிழா இனிது நிகழுமாறு அணி செய்து அதன்வழிப் படுத்தப்பட்ட மாபெருந் தெருவிடத்தே; பொன் நாண் கோத்த நல்மணிக் கோவை ஐயவி அப்பிய நெய்மணி முச்சி-பொன்னாலியன்ற நாணிலே கோக்கப்பட்ட அழகிய மணிக் கோவையும் சிறுவெண் கடுகினை அப்பிய நெய்யணிந்த உச்சியில் அமைந்த; மயிர்ப்புறம் சுற்றிய கயில் கடை முக்காழ் பொலம் பிறை-மயிரைக் கொண்டையாகக் கட்டி அதைச் சுற்றிக்கட்டப்பட்ட கோக்கியை நுனியிலுடைய முப்புரியாகிய முத்துமாலையும் அதனோடு கட்டிய பொன்னாற் செய்த பிறையும்; சென்னி நலம் பெறத்தாழ-தலை அழகு பெறுமாறு தாழ்ந்து கிடப்பவும்; செவ்வாய்க்குதலை மெய் பெறு மழலை சிந்துபு சில்நீர் ஐம்படை நனைப்ப-பொருள் விளங்காததும் எழுத்துருவம் பெறாததும் ஆகிய மழலை மொழியோடு சிந்தித் தம் வாயூறல் தம் மார்பிடைக் கிடக்கும் ஐம்படைப்பூந்துகில்-மறைக்க வேண்டிய உறுப்பை மறைத்துக் காக்கும் கருத்தாலன்றி வாளாது அழகின் பொருட்டு இடையிலே சுற்றிவிடப்பட்ட உடையாகிய அழகிய துகிலானது; தொடுத்த மணிக் கோவை உடுப்பொடு துயல்வர-தொடுக்கப்பட்ட மணிக்கோவையாலியன்ற உடையினோடு சேர்ந்து அசையா நிற்பவும்; தளர் நடை தாங்காக் கிளர்பூண் புதல்வரை-இயல்பாகவே தளர்ந்து நடக்கும் அவர்தம் நடை தாங்கா வண்ணம் மிகுதியாக அணிந்துவிடப்பட்ட விளங்குகின்ற அணிகலன்களையுடைய தத்தம் மக்களை; பொலம் தேர்மிசைப் புகர்முக வேழத்து-பொன்னாலியன்ற தேரின்மீது அமைத்தமையால் மேலும் உயர்ந்துள்ள புள்ளிகளையுடைய முகத்தையுடைய பொன்னாலியன்ற யானையினது பிடரிடத்தே; இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி ஆலமர் செல்வன் மகன் விழாக் கால் கோள் காண்மினோ என-விளங்குகின்ற பொன் வளையலணிந்த மகளிர் சிலர் தரைமீதும் தேரின்மீதும் நின்று ஏற்றி வைத்து ஆலமர் செல்வனாகிய நம் இறைவன் மகன் முருகன் இதோ வீதிவலஞ் செய்தல் ஆகிய விழாவைத் தொடங்குகின்றான். எல்லீரும் வந்து காணுங்கோள் என்று ஏனைய ஆயமகளிர்க்குக் காட்ட; கண்டு நிற்குநரும்-அங்ஙனமே வந்து அக் காட்சியைக் கண்டு மகிழ்ந்து நிற்போரும் என்க.

(விளக்கம்) விழா வாற்றுப்படுத்த வீதி என்றது விழா நிகழ்த்துதற்குத் தகுந்ததாக அணிமுதலியவற்றான் நெறிப்படுத்தப்பட்ட வீதி என்றவாறு. அது தேர்வீதியாதலின் கழிபெருவீதி என்றார். ஐயவி-வெண்சிறு கடுகு. இது பேய் முதலியவற்றால் துன்பம் வாராமைப் பொருட்டு சிறுவர் தலையில் அப்பிவிட்டபடியாம். புதல்வர்க்குக் காவற் பெண்டிர் கடிப்பகை எறிந்து தூபம் காட்டித் தூங்குதுயில் வதியவும் எனப் பிறாண்டும் ஓதுவர்(7:57-9)முச்சியில் கொண்டை யாகப் புனைந்த மயிர்ப்புறஞ் சுற்றி என்க. கயில்-கோக்கி;(கொக்கி) கயிற்கடை-கோக்கியில்.கடை: ஏழாவதன் உருபு கயிற் கடைப்பிறை என்க. நலம்-அழகு. குதலை-பொருள் விளக்காச் சொல். மெய்-எழுத்துருவம். சின்னீர் என்றது வாயூறலை. ஐம்படை-திருமாலுடைய சங்கு முதலிய ஐந்து படைகளின் வடிவமாகச் செய்து மகவிற்கு மார்பின்கண் அணியும் ஒருவகை அணிகலன். அற்றம்-சோர்வு; இடக்கரடக்கு. மறைக்க வேண்டிய உறுப்புக்களை மறைத்து மானங்காத்தற் பொருட்டன்றி வாளாது அழகின் பொருட்டுச் சுற்றிய பூந்துகில். மணிக் கோவைகளைத் தூங்கவிட்டு ஆடைபோல அற்றங் காத்தற்கு அரையிற் கட்டும் அணியை உடுப்பு என்றார். தம்முடம்பையே தாங்காது தளரும் நடைக்கு மேலும் பொறையாக அணியப்பட்ட பூண் என்பார் நடைதாங்காப்பூண் என்றார். தேர்-பொற் சிறுதேர் அதன் மிசை பொன் யானையை ஏற்றி அதன் பிடரில் புதல்வரை ஏற்றிவைத்து முருகன் விழாத்தொடங்குகின்றார்கள் காண்மினோ என்றவாறு. ஆலமர் செல்வன் மகன்-முருகன்.

மணிமேகலை மலர் கொய்யப் போவாளைக் கண்டு

மாந்தர் பெரிதும் மனம் மறுகுதல்

146-158: விராடன்.......இனைந்துக

(இதன் பொருள்) விராடன் பேரூர் விசயன் ஆம் பேடியைக் காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்-விராடனுடைய தலை நகரத்து வீதியிலே செல்லாநின்ற விசயனாகிய பேடியைக் காணுதற்கு அவாவிச் சூழ்ந்துக்கொண்ட ஆரவாரமுடைய அந்நகரத்து மாந்தரைப் போன்று; மணிமேகலைதனை வந்து புறஞ் சுற்றி சுதமதியோடு மலர் கொய்ய அவ்வீதியிலே செல்லாநின்ற மணிமேகலையைக் கண்ட அந்நகரத்து மக்கள் பலரும் அவள் பக்கலிலே வந்து சூழ்ந்துகொண்டு; அணி அமை தோற்றத்து அருந்தவப் படுத்திய தாயோ கொடியள் தகவு இலள் செய்யாக் கோலத்தோடு இவளைச் செயற்கரிய தவநெறியிலே செலுத்திய மாதவியும் ஒரு தாய்மையுடையள் ஆவாளோ? அவள் தாயல்லள் பெரிதும் கொடியவள், பண்பற்றவள்! ஈங்கு இவள் மலர் வனம்தான் புகின்-இவற்றே இவள் மலர்ப் பொழிலினூடே புகுந்தக்கால்; ஆங்கு உள நல் இள அன்னம் மடந்தை தன் நடை நாணாது வல்லுந கொல்லோ- அப் பொழிலில் வாழ்கின்ற அழகிய அன்னப் பறவைகள் இவள் நடையைக் கண்டு நாணி ஓடுவதல்லது நாணாமல் அங்கு வாழ வல்லமையுடையன ஆகுமோ? ஒருதலையாய் ஓடியேபோம்; ஆங்குள மாமயில் தையல் முன் வந்து நிற்பன தன்னுடன் சாயல் கற்பன கொலோ- அப் பொழிலிடத்தே வாழ்கின்ற அழகிய மயில்களுள் வைத்து நாணாது துணிந்து வந்து நிற்கின்ற மயில்கள் ஒரோவழி இவளிடத்தேயுள்ள சாயலைத் தாமும் கற்க விரும்புவன ஆதல் வேண்டும்; உள பைங்கிளிகள் தாம் பாவை தன் கிளவிக்கு எஞ்சல கொல்லோ இசையுந அல்ல-அப் பொழிலிலே மழலை பேசித்திரிகின்ற பச்சைக்கிளிகள் தாமும் இனிமையினாலே இவளுடைய மொழி தரு மினிமையை விஞ்சி விடமாட்டா ஏன்? ஒப்பாவனவும் இல்லை; என்று இவை சொல்லி-என்று இவையும் இவை போல்வனவும் தத்தம் வாய்தந்தனவெல்லாம் பரிந்து சொல்லி யாவரும் இனைந்து உக- எத்தகையோரும் இவள் பொருட்டுப் பெரிதும் நெஞ்சழிந்து ஒழுகுமாறு வருந்த என்க.

(விளக்கம்) பன்னிரண்டாண்டு காட்டிலுறைந்த பின்னர் ஓராண்டு பிறர் அறியாவண்ணம் கரந்துறைதல் வேண்டும் என்று துரியோதனனுடன் உடன்படிக்கை செய்துகொண்ட பாண்டவர் விராடநகரத்தில் உள்வரிக்கோலம் பூண்டுறைந்தனர் என்பது மகாபாரதம். அப்பொழுது அருச்சுனன் பேடியுருத்தரித்து அந்நகரத்திற் செல்ல அப்பேடியைக்காண நகரமாந்தர் ஆரவாரத்துடன் வந்து அப் பேடியைச் சூழ்ந்தது ஈண்டுத் துறவோர் பள்ளியினின்றும் மலர்வனம் புகச்செல்லும் மணிமேகலையை மாந்தர் சூழ்ந்தமைக்குவமை.

கம்பலை-ஆரவாரம். அணியமை தோற்றம்- அணிகலன் இல்லாமலும் திகழும் இயற்கை அழகு. இதனைச் செய்யாக்கோலம் என்பர் இளங்கோ. தாயோ என்னும் வினா எதிர்மறைப் பொருளை வற்புறுத்தி நின்றது. வல்லுந-பொறுக்கும் வன்மையுடையன. ஓ:எதிர்மறை கற்பன கொல்லோ என்புழி, கொல்லும் ஓவும் அசைச்சொற்கள். வினாவாக்கி-கற்கவியலா தெனினுமாம். எஞ்சல-விஞ்சா; மிகா. இசையுநவும் அல்ல எனல் வேண்டிய எச்சவும்மை தொக்கது. இசையுந ஒப்பாவன. இவை என்றது தாயோ கொடியள் என்பது முதலியவற்றை.

மணிமேகலையும் சுதமதியும் மலர்வனம் புகுதல்

159-171 :செந்தளிர்......மணிமேகலையென்

(இதன் பொருள்) செந்தளிர்ச் சேவடி நிலம் வடுவுறாமல்-சிவந்த தளிர்போன்று சிவந்த அடியினாலே நிலத்தில் சுவடு தோன்றாதபடி நடந்து; குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும் திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும் நரந்தமும் நாகமும் பரந்தலர் புன்னையும்-குராமரமும் வெண் கடப்ப மரமும் குருந்தும் கொன்றையும் திலகமரமும் வகுள மரமும் சிவந்த காலையுடைய வெட்சியும் நரந்த மரமும் நரகமரமும் பரந்து மலரும் புன்னையும்; பிடவமம் தளவமும் முடமுள் தாழையும் குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்-குட்டிப்பிடவங் கொடியும் செம்முல்லையும் வளைத்த முள்ளையுடைய தாழையும் வெட்பாலையும் செருந்தியும் மூங்கிலும் வளவிய காலையுடைய அசோக மரமும்; செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண்பகமும் எரிமலர் இலவமும்-செருந்தி மரமும் வேங்கை மரமும் பெருஞ்சண்பக மரமும் நெருப்புப் போன்ற மலரையுடைய இலன மரமும் ஆகிய இவையெல்லாம்; விரிமலர் பரப்பி-மலர்ந்த மலர்களைப் பரப்பியிருத்தலாலே; வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செங்கைப்படாம் போர்த்ததுவே ஒப்பத் தோன்றிய-ஓவியப் புலவர் வரைந்த விளக்கமான கைத் தொழிலாகிய சித்திரங்கள் அமைந்த செய்கையையுடைய படா அத்தினால் போர்க்கப்பட்டதை ஒத்துக்காணப்பட்ட; உவவனம் தன்னை தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு-உவவன மென்னும் அத் தெய்வப் பூம்பொழிலை அணுகியவுடன் அதனைக் கைகூப்பித் தொழுது இதுதான் அம்மலர் வனமென்று தனக்குக் காட்டிய சுதமதி என்பாளொடு; மணிமேகலை மலர் கொய்யப் புகுந்தனள்-மணிமேகலை மலர் கொய்தற்கு அவ்வனத்தினுள் புகுந்தனள் என்பதாம்.

(விளக்கம்) குரவமுதலாக இலவ மீறாக் கூறப்பட்ட மரங்களும் கொடிகளும் பிறவும் பகவனதாணையால் ஒரு சேர மலர்ந்து பரப்பித் தோன்றுதற்கு ஓவியப்புலவர் திறம்பட வரைந்த சித்திரங்களையுடைய துகில் உவமை.

தொழுதனள்: தொழுது முற்செற்றம். பகவனதாணையிற் பன்மரம் மலர்தலும் மயனிழைத்த பீடிகையை உடையதாதலும் ஆகிய தெய்வத் தன்மைபற்றிச் சுதமதி அதனை அணுகியவுடன் கைகூப்பித் தொழுது காட்டினள் என்க.

இனி இக் காதையை மாதவியுரைத்த வுரைமுன் தோன்றி மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளதாகலின் வெதுப்பக் கலங்கி அழித்துருட்டி நீர் ஆட்ட மாதவி நோக்கிக் கொணர்வாயென்றலும் சுதமதி கூறும் காமன் நடுங்கும் ஆடவர் அகறலும் உண்டோ நின்றிடிற் பேடியர் அன்றோ அன்றியும் யான் வரும் காரணங் கேளாய் கொய்வேனை எடுத்தனன் எழுந்தனன் படுத்தனன் ஆயினேன் நீங்கினன் ஆதலால் நின்மகள் செவ்வியிலள் போகின் ஆங்குளர் செல்லார் எய்தார் உவவனம் ஒன்றுண்டு யானும் போவல் என்று செல்வுழி நிற்குநரும் காண்குநரும் நிற்குநரும் இனைந்துகக் காட்டிய சுதமதியோடு மணிமேகலை கொய்யப் புகுந்தனள் என இயைத்திடுக

மலர்வனம் புக்க காதை முற்றிற்று
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 08:50:51 AM
4. பளிக்கறை புக்க காதை

நான்காவது மணிமேகலை உதயகுமரனைக் கண்டு பளிக்கறை புக்க பாட்டு

அஃதாவது -உவவனத்தினுட் சுதமதியோடு மணிமேகலை புகுந்தனளாக, அவள்பால் பெருங்காதல் கொண்டிருந்த அரசிளங்குமரனாகிய உதயகுமரன் அவளைத் தன் தேரிலேற்றிவரத் துணிந்து தேரோடு அவ் வுவவனத்தை அணுகியபொழுது மணிமேகலை அவன் வரவினைத் தேரின் ஒலியாலுணர்ந்து அக்கோமன் தன்பால் கன்றிய காமமுடையவனைதலைப் பண்டே கேள்வியுற்றிருந்தனளாகலின் பெரிதும் அஞ்சி அவ்  வுவவனத்திருந்த பளிக்கறையினுட் புகுந்து தாழக் கோலையிட்டுக் கொண்டதும் பின்னர் ஆங்கு நிகழ்ந்தனவும் கூறுகின்ற செய்யுள் என்றவாறு.

இதன்கண்-மணிமேகலைக்குச் சுதமதி அம்மலர்ப்பொழிலின் அழகைக் காட்ட அவள் கண்டு மகிழ்தலும், உதயகுமரன் மதங்கொண்ட யானையை அடக்கி மறவர் சூழத் தேரிலேறி மணிமேகலை சென்ற வீதயில் வருபவன், ஆங்கு எட்டிகுமரன் வாயிலாக மணிமேகலை மலர்வனம் புகப்போன்மை அறிந்து அங்ஙனமாயின் ஆங்குச் சென்று அவளை என் தேரிலேற்றி வருகுவென், என்று சூள்மொழிந்து தன் தேரை உவவனம் நோக்கிச் செலுத்தி அதனை அணுகுதலும் அதன் ஆரவாரத்தால் அங்ஙனம் வருபவன் அரசன் மகனே யாதல் வேண்டும் என்று மணிமேகலை சுதமதிக்குக் கூறுதலும், அவள் அஞ்சி நடுங்கி மணிமேகலையை அங்குள்ள பளிக்கறை மண்டபத்துட் புகுத்திப் பளிக்கறையின் அகத்தே தாழக்கோல் இட்டுக் கொண்டிருக்கச் செய்தபின் அதனாலே ஐந்து விற்கிடைத் தொலைவில் நிற்றலும், கழிபெருங்காம வேட்கையுடன் உதயகுமரன் தேரினின்றிழிந்து உவவனத்துள்ளே மணிமேகலையைத் தேடி வருபவன் அவளைக் காணாமல் சுதமதியை மட்டும் கண்டு அவள்பால் மணிமேகலையின் இயல்பினைத் தனது வேட்கை தோன்ற வினவுதலும், சுதமதி அச்சத்தோடு அவ்வரசிளங்குமரனுக்கு மக்கள் யாக்கையின் இழிதகைமையை எடுத்தோதுதலும், அதனைக் கேட்கும் பொழுதே மணிமேகலையைத் துருவித் திரியும் அவன்  கண்ணில் பளிக்கறை புக்க பாவையின் உருவம் பளிங்கினூடே வந்து புகுந்ததுவும் பிறவும் அழகாகக் கூறப்பட்டுள்ளன.

பரிதி அம் செல்வன் விரி கதிர்த் தானைக்கு
இருள் வளைப்புண்ட மருள் படு பூம்பொழில்
குழல் இசை தும்பி கொளுத்திக்காட்ட
மழலை வண்டு இனம் நல் யாழ்செய்ய
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்
மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பன காண்!
மாசு அறத் தெளிந்த மணி நீர் இலஞ்சி
பாசடைப் பரப்பில் பல் மலர் இடை நின்று
ஒரு தனி ஓங்கிய விரை மலர்த் தாமரை
அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப  04-010

கரை நின்று ஆலும் ஒரு மயில் தனக்கு
கம்புள் சேவல் கனை குரல் முழவா
கொம்பர் இருங் குயில் விளிப்பது காணாய்!
இயங்கு தேர் வீதி எழு துகள் சேர்ந்து
வயங்கு ஒளி மழுங்கிய மாதர் நின் முகம் போல்
விரை மலர்த் தாமரை கரை நின்று ஓங்கிய
கோடு உடை தாழைக் கொழு மடல் அவிழ்ந்த
வால் வெண் சுண்ணம் ஆடியது இது காண்!
மாதர் நின் கண் போது எனச் சேர்ந்து
தாது உண் வண்டு இனம் மீது கடி செங் கையின்  04-020

அம் சிறை விரிய அலர்ந்த தாமரைச்
செங் கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு
எறிந்து அது பெறா அது இரை இழந்து வருந்தி
மறிந்து நீங்கும் மணிச் சிரல் காண்! எனப்
பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட
மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி
மதி மருள் வெண்குடை மன்னவன் சிறுவன்
உதயகுமரன் உரு கெழு மீது ஊர்
மீயான் நடுங்க நடுவு நின்று ஓங்கிய
கூம்பு முதல் முறிய வீங்கு பிணி அவிழ்ந்து  04-030

கயிறு கால் பரிய வயிறு பாழ்பட்டு ஆங்கு
இதை சிதைந்து ஆர்ப்ப திரை பொரு முந்நீர்
இயங்கு திசை அறியாது யாங்கணும் ஓடி
மயங்கு கால் எடுத்த வங்கம் போல
காழோர் கையற மேலோர் இன்றி
பாகின் பிளவையின் பணை முகம் துடைத்து
கோவியன் வீதியும் கொடித் தேர் வீதியும்
பீடிகைத் தெருவும் பெருங் கலக்குறுத்து ஆங்கு
இரு பால் பெயரிய ஒரு கெழு மூதூர்
ஒரு பால் படாஅது ஒரு வழித் தங்காது  04-040

பாகும் பறையும் பருந்தின் பந்தரும்
ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப
நீல மால் வரை நிலனொடு படர்ந்தெனக்
காலவேகம் களி மயக்குற்றென
விடு பரிக் குதிரையின் விரைந்து சென்று எய்தி
கடுங்கண் யானையின் கடாத் திறம் அடக்கி
அணித் தேர்த் தானையொடு அரசு இளங் குமரன்
மணித் தேர்க் கொடுஞ்சி கையான் பற்றி
கார் அலர் கடம்பன் அல்லன் என்பது
ஆரங்கண்ணியின் சாற்றினன் வருவோன்  04-050

நாடக மடந்தையர் நலம் கெழு வீதி
ஆடகச் செய்வினை மாடத்து ஆங்கண்
சாளரம் பொளித்த கால் போகு பெரு வழி
வீதி மருங்கு இயன்ற பூ அணைப் பள்ளி
தகரக் குழலாள் தன்னொடு மயங்கி
மகர யாழின் வான் கோடு தழீஇ
வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின்
எட்டிகுமரன் இருந்தோன் தன்னை
மாதர் தன்னொடு மயங்கினை இருந்தோய்!
யாது நீ உற்ற இடுக்கண்! என்றலும்  04-060

ஆங்கு அது கேட்டு வீங்கு இள முலையொடு
பாங்கில் சென்று தான் தொழுது ஏத்தி
மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு
எட்டிகுமரன் எய்தியது உரைப்போன்
வகை வரிச் செப்பினுள் வைகிய மலர் போல்
தகை நலம் வாடி மலர் வனம் புகூஉம்
மாதவி பயந்த மணிமேகலையொடு
கோவலன் உற்ற கொடுந் துயர் தோன்ற
நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி
வெம் பகை நரம்பின் என் கைச் செலுத்தியது  04-070

இது யான் உற்ற இடும்பை என்றலும்
மது மலர்த் தாரோன் மனம் மகிழ்வு எய்தி
ஆங்கு அவள் தன்னை என் அணித் தேர் ஏற்றி
ஈங்கு யான் வருவேன் என்று அவற்கு உரைத்து ஆங்கு
ஓடு மழை கிழியும் மதியம் போல
மாட வீதியில் மணித் தேர் கடைஇ
கார் அணி பூம்பொழில் கடைமுகம் குறுக அத்
தேர் ஒலி மாதர் செவிமுதல் இசைத்தலும்
சித்திராபதியோடு உதயகுமரன் உற்று
என்மேல் வைத்த உள்ளத்தான் என  04-080

வயந்தமாலை மாதவிக்கு ஒரு நாள்
கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின்
ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய் இழை!
ஈங்கு என் செவிமுதல் இசைத்தது என் செய்கு? என
அமுது உறு தீம் சொல் ஆய் இழை உரைத்தலும்
சுதமதி கேட்டுத் துளக்குறு மயில் போல்
பளிக்கறை மண்டபம் பாவையைப் புகுக என்று
ஒளித்து அறை தாழ் கோத்து உள்ளகத்து இரீஇ
ஆங்கு அது தனக்கு ஓர் ஐ விலின் கிடக்கை
நீங்காது நின்ற நேர் இழை தன்னை   04-090

கல்லென் தானையொடு கடுந் தேர் நிறுத்தி
பல் மலர்ப் பூம்பொழில் பகல் முளைத்தது போல்
பூ மரச் சோலையும் புடையும் பொங்கரும்
தாமரைச் செங் கண் பரப்பினன் வரூஉம்
அரசு இளங் குமரன் ஆரும் இல் ஒரு சிறை
ஒரு தனி நின்றாய்! உன் திறம் அறிந்தேன்
வளர் இள வன முலை மடந்தை மெல் இயல்
தளர் இடை அறியும் தன்மையள்கொல்லோ?
விளையா மழலை விளைந்து மெல் இயல்
முளை எயிறு அரும்பி முத்து நிரைத்தனகொல்?  04-100

செங் கயல் நெடுங் கண் செவி மருங்கு ஓடி
வெங் கணை நெடு வேள் வியப்பு உரைக்கும்கொல்?
மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை
தானே தமியள் இங்கு எய்தியது உரை? எனப்
பொதி அறைப் பட்டோர் போன்று உளம் வருந்தி
மது மலர்க் கூந்தல் சுதமதி உரைக்கும்
இளமை நாணி முதுமை எய்தி
உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு
அறிவும் சால்பும் அரசியல் வழக்கும்
செறி வளை மகளிர் செப்பலும் உண்டோ?  04-110

அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல்
வினை விளங்கு தடக் கை விறலோய்! கேட்டி
வினையின் வந்தது வினைக்கு விளைவு ஆயது
புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது
மூப்பு விளிவு உடையது தீப் பிணி இருக்கை
பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம்
புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை
அவலம் கவலை கையாறு அழுங்கல்
தவலா உள்ளம் தன்பால் உடையது
மக்கள் யாக்கை இது என உணர்ந்து  04-120

மிக்கோய்! இதனைப் புறமறிப்பாராய்
என்று அவள் உரைத்த இசை படு தீம் சொல்
சென்று அவன் உள்ளம் சேராமுன்னர்
பளிங்கு புறத்து எறிந்த பவளப் பாவையின்
இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன் என்  04-125

உரை

(1-முதலாக 25-இறுதியாக, உவவனத்தினுள் புக்க மணிமேகலைக்கு அதன் எழிலையும் அங்குறையும் பறவை முதலியவற்றையும் சுதமதி காட்டிக் கூறுவதாய் வரும் ஒரு தொடர்)

மயிலாடரங்கு

1-9: பரிதி.......காண்பன காண்

(இதன் பொருள்) பரிதி அம் செல்வன் விரிகதிர் தானைக்கு இருள் வளைப்புண்ட மருள்படு பூம்பொழில்-ஞாயிற்றுக் கடவுளாகிய உலக முழுதாள்கின்ற அழகிய அரசனுடைய திசையெலாம் விரிந்த கதிர்களாகிய படைமறவர்க்கு அஞ்சிப்புகுந்த இருளானது அப் படைமறவர்க்கு அஞ்சிப்புகுந்த இருளானது அப் படைமறவர்களாலே நாற்றிசையும் சூழ்ந்து முற்றுகையிடப்பட்டமையால் உள் புகுந்தோர் இது பகலோ இரவோ என்று மருள்தற்குச் காரணமான
அம் மலர்ப் பொழிலினூடே; தும்பி குழல் இசை கொளுத்திக் காட்ட-தும்பிகள் வேய்ங்குழலின் இசையைக் கூட்டிக் காட்டா நிற்பவும்; வண்டு இனம் மழலைநல் யாழ் செய்ய-வண்டுக் கூட்டங்கள் கேள்விக்கினிய அழகிய யாழிசையை உண்டாக்கவும்; வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்-ஞாயிற்றின் ஒளி ஒரு பொழுதும் நுழைதல் அறிந்திலாததும் குயில்களும் நுழைத்தே செல்லுதற் கியன்ற செறிவுடையதுமாகிய அப் பொழிலிடத்தே; மயில் ஆடு அரங்கின் மந்தி காண்பன காண்-மணிமேகலாய்! அதோ மயிலாகிய நாடகக் கணிகை கூத்தாடா நின்ற கூத்தாட்டரங்கின் கண் மந்தியாகிய அவையோர் இருந்து காண்பனவற்றைக் காண்பாயாக என்றாள் என்க.

(விளக்கம்) பரிதி-ஞாயிறு. செல்வன்-அரசன். அழியாத ஒளிச் செல்வன் என்பார், அஞ்செல்வன் என்றார். அவன் பகையாகிய இருளை நாற்றிசையும் பரந்து சென்று அழித்தலின் விரிகதிர் தானையாயிற்று. பகையாகிய இருள் புக்குக் கரந்திருத்தலான் அத் தானையால் வளைப் புண்டிருக்கும் அரணாகிய பொழில் என்றவாறு.

தும்பி-வண்டு. இசை கொளுத்துதல்-இசையைப் பொருத்துதல். மழலை-இன்பம். வெயிலாகிய பகை நுழையவியலாது. குயில் இருட்கின மாதலின் அவைமட்டும் புகும் பொதும்பர் எனவும் ஒருபொருள் தோன்றிற்று. கணிகையாகிய மயில் எனவும் அவையோராகிய மந்தி எனவும் கூறிக்கொள்க.

அரசவன்னம் கொலுவிருத்தல்

7-13: மாசற.........காணாய்

(இதன் பொருள்) மாசு அறத் தெளித்த மணிநீர் இலஞ்சிப் பாசடைப் பரப்பின்-அழுக்கற்றமையாலே நன்கு தெளிந்துள்ள படிகமணி போன்று தூயதாகிய பொய்கையாகிய தன் அரண்மனையகத்தே பசிய இலையாகிய கம்பளம் விரிக்கப்பட்ட திருவோலக்க மண்டபத்தில்; பல்மலர் இடைநின்று ஒரு தனி ஓங்கிய விரைமலர்த்தாமரை ஆங்கு-பல்வேறு மலர்க் கூட்டங்களாகிய இருக்கைகளுள் வைத்துத் தனக்கே சிறந்துரிமையுடைய தொரு பேரழகோடு உயர்ந்து மலர்ந்துள்ள நறுமணங் கமழுகின்ற தாமரையாகிய அரசு கட்டிலின் மேலே; இனி அரச அன்னம் இருப்ப-காட்சிக்கினிதாக அன்னமாகிய அரசன் கொலுவீற்றிருப்ப; கரை நின்று ஆலும் ஒரு மயிலுக்குக் கம்புட் சேவல் கனைகுரன் முழவு ஆக-அவ்விலஞ்சியின் கரையாகிய ஆடலரங்கினின்று கூத்தாடுகின்ற ஒப்பற்ற மயிலாகிய விறலியினது ஆடலுக்கியையச் சம்பங்கோழிச் சேவலாகிய முழவோனுடைய மிக்கவொலி மத்தள முழக்கம் ஆக; கொம்பர் இருங்குயில் விளைப்பது காணாய் பூங்கொம்பிலுள்ள கரிய குயிலாகிய பாணன் பாடுவதனையும் காண்பாயாக என்றாள் என்க.

(விளக்கம்) மணி-படிகமணி. பாசடை-பசியஇலை. இது பச்சைக் கம்பளமென்க. இருக்கும் இருக்கைக்குப் பல்வேறு இடைநின்று ஒரு தனி ஓங்கிய விரைமலர்த் தாமரை ஆங்கு-பல்வேறு பறவைகள் இருக்கும் நீர்பூக்கள் உவமை; தனிநின்றோங்கிய விரைமலர்த் தாமரையாகிய அரசு கட்டில் என்க. கரை-ஆடலரங்கு எனவும், மயில் விறலி எனவும் கொள்க. கம்புட்சேவல்-சம்பங்கோழியிற்
சேவல்: இதனை முழவோன் எனவும், குயிலை பாணனாகவும் கூறிக் கொள்க. என்னை அன்ன அரசன் கொலுவீற்றிருத்தலால், இங்ஙனம் இனிதின் இயம்பினர். இது குறிப்புவமம் என்னும் அணி. விளிப்பது-பாடுவது. விளித்த இன்னமிர்துறழ்கீதம் (சீவக-1941)என்புழியும் அஃதப்பொருட்டாதலறிக.

வேறு பல காட்சிகள்
14-25: வயங்குதேர்...........காட்ட

(இதன் பொருள்) தேர் இயங்கு வீதி எழுதுகள் சேர்ந்து வணங்கு ஒளி மழுங்கி நின் மாதர் முகம் போல்-யாம் வந்த தேரோடும் வீதியிலே கம்பலை மாக்கள் சூழ்தலாலே எழுந்த புழுதி படிந்தமையாலே விளங்கும் ஒளி மழுங்கியிருக்கின்ற நின்னுடைய அழகிய முகத்தைப் போன்று; கரை நின்று ஓங்கிய கோடு உடைத்தாழைக் கொழுமடல் அவிழ்ந்த வால் வெள் சுண்ணம் ஆடிய இவ்விலஞ்சியன் கரையிலே நின்றுயர்ந்துள்ள கொம்பின் மலர்ந்துள்ள தாழம்பூவினது கொழுவிய அகமடலில் உதிர்ந்த மிக்க வெள்ளிய துகள் மூடியதனால் தன்னொளி மழுங்கிய; விரை மலர்த்தாமரை இது காண்-மணமுடைய மலராகிய தாமரை மலரிதனையும் காண்பாயாக; மாதர் நின்கண் போது எனச் சேர்ந்து தாது உண் வண்டினம் மீது கடிசெங்கையின் அலர்ந்த தாமரை-அழகிய நின்னுடைய கண்ணை மலர் என நினைத்து வந்து வீழ்ந்து தாதுண்ண முயலுகின்ற வண்டுகளின் மேலோச்சிக் கடிகின்ற நின் சிவந்த கையைப் போன்று மலர்ந்துள்ள தாமரை மலரின் மேல்; செங்கயல் பாய்ந்து பிறழ்வன-சிவந்த கயல் மீன்கள் பாய்ந்து பிறழ்கின்றவற்றை; அம் சிறைவிரிய ஆங்குக் கண்டு எறிந்து அது பெறா அது-வானத்தே தனது அழகிய சிறகுகள் விரிய அசையாமல் பறந்து அப்பொழுது கண்டு சிறகொடுக்கி விரைந்து எறிந்தும் அம் மீனைப் பற்றமாட்டாமல்; இரை இழந்து-தனக்கியன்ற இரையினை இழந்து; வருந்தி மறிந்து நீங்கும் மணிச்சிரல் காண் என-உளம் வருந்தி மீண்டு போகும் அழகிய அச்சிரற் பறவையின் செயலையும் அழகையும் காண்பாயாக என்று; பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட-அப் பூம்பொழிலின் அழகையும் பொய்கையின் அழகையும் மணிமேகலைக்குச் சுதமதி காட்டா நிற்ப; என்க.

(விளக்கம்) இதன்கண்-மணிமேகலைக்குக் கூறுகின்ற சுதமதியின் கூற்றை ஞாபகவேதுவாக வைத்து நம்மனோர்க்கு நினைவூட்டும் செய்தியும் உண்டு. அச் செய்தியை ஈண்டுக் கருப்பொருட் புறத்தே தோற்றுவிக்கும் இப் புலவர் பெருமான் வித்தகம் பெரிதும் வியக்கத்தக்கதாம்.

அது வருமாறு: தாமரை மலரில் பிறழ்ந்த செங்கயல் கண்டு வானத்தேசிறைவிரியக்காத்துநின்ற மணிச்சிரல் தனக்கு எளிதாகக்கிட்டு மோரிரை என்று கருதி விரைந்து அதன் மேல் வீழ்ந்து பற்றியும், அவ் விரை பெறாமல் மறிந்து விண்ணில் மீண்டது என்னுமிதன் புறத்தே,மலர்வனம் புக்கமையால் மணிமேகலை தனக்கு எளிதாகக் கிடைத்து விடுவாள் என்று கருதி அவள்மேற் சென்ற அரசிளங்குமரன் தன்கருத்து நிறைவேறாமல் வாளாது மறிந்து (இறந்து) விண்ணேறினன் என்னும் பின்னிகழ்ச்சியை இப்புலவர் பெருமான் நம்மனோரை நினைக்குமாறு செய்கின்றார். இதுஞாபக வேது எனப்படும். புலவர்நினைந்த தொன்றனைக் கதையோடு தொடர்பு படுத்தாமலே பயில்வோருளத்தே தோற்று விக்கக் கருதி அதற்கு ஏதுமாத்திரையே புறத்தே தோற்றுவித்தலாம். இஞ்ஞாபகம் காரணமாகச் சிரல் இரைபெறாது இழந்து வருந்தி மறிந்து நீங்கியது என்று விதந்தோதியிருத்தலறிக. மறித்து நீங்கும் என்ற சொல் பொய்தது உதயகுமரன் திறத்திலே இறந்தொழிந்தான் என்னும் பொருட்கியைதற் பொருட்டேயாம் என்பது நுண்ணுணர்வற் கண்டு கொள்க.

நகரத்தின்கண் காலவேகம் என்னும் யானை மதமயக்குற்றுச் செய்யும் செயல்கள்

26-34: மணிமே........போல

(இதன் பொருள்) மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி-இவ்வாறு மணிமேகலை அந்த மலர்ப் பொழிலின் இயற்கையழகினைக் கண்டு மகிழாநிற்கும் பொழுது; மதிமருள் வெள்குடை மன்னவன் சிறுவன் உதயகுமரன்-திங்கள் மண்டிலம் போன்ற வெண் கொற்றக் குடையையுடைய சோழ மன்னனுடைய மகன் உதயகுமரன் என்பான்(செய்தன சொல்வாம்); உருகெழு மூதூர்-பகைவர்க்கு அச்சந்தருகின்ற அப் பூம்புகார் நகரத்திலே; (44) கால வேகம் களிமயங்கு உற்றென-காலவேகம் என்னும் களிற்றியானையானது காமத்தாற் களித்தற்குக் காரணமான மதவெறிப்பட்டபடியாலே; நீயான் நடுங்க நடுவுநின்ற ஓங்கிய கூம்பு முதல் முறிய வீங்கு பிணி அவிழ்ந்து-மாலுமியானவன் செயலறவினாலே திகைத்து நடுங்கும்படியும் மரக்கலத்தின் நடுவிடத்தே நின்றுயர்ந்த பாய்மரம் முறிந்து போம்படியும் செறியக் கட்டின கட்டவிழ்ந்து கயிறுகள் புரியற்றுப் போகவும்; இதை வயிறு பாழ் பட்டாங்குச் சிதைந்து ஆர்ப்ப-பாயின் நடுவிடம் கிழிந்து பாழ்வெளியாய் விடவும் பாய் சிதைந் தொழியவும் அகத்துள்ள மாக்கள் எல்லாம் அழுது ஆரவாரம் செய்யவும்; திரை பொரு முந்நீர் இயங்குதிசை அறியாது-அலைகள் மோதா நின்ற கடலிடத்தே தான் செல்ல வேண்டிய திசையையும் அறியமாட்டாமல்; யாங்கணும் ஓடி-தள்ளிய திசைகளிலெல்லாம் ஓடியலைந்து; மயங்கு கால் எடுத்த-சுழற்காற்றாலியக்கப்படுகின்ற; வங்கம் போல-மரக்கலத்தைப் போன்று, என்க.

(விளக்கம்) மதிமருள் என்னும் அடைமொழி வெண்குடைக்குவமை யாதலோடன்றி  மதிமருள்.....சிறுவன் என்பதனோடும் இயைவிக்கலா மாதலின் ஏதுநிகழ்ச்சி எதிர்ந்துள்ளமையாலே பிக்குணியாகிய மணிமேகலையின் பால் கன்றிய காமமுடையனாய் அறிவுமயங்கிய அரசிளங்குமரன் எனவும் பொருள் கோடற்கும் இயைந்து நிற்றலால் இஃது இரட்டுறமொழிதல் என்னும் உத்தியின் பாற்படுதலும் உணர்க. எழுவாய் சேய்மையிற் கிடந்தமையின் ஈண்டுக்கொண்டு கூட்டப்பட்டது. காலவேகம் என்பது பட்டத்தியானையின் பெயர். களிமயக்கம்-காமவெறியாலுண்டான அறிவு மயக்கம். நீயான்-மாலுமி. கூம்பு-பாய்மரம். இதை வயிறுபாழ்பட என இயைக்க. இதை-பாய். நடுவிடம் கிழிந்து வெளியாகிவிட என்றவாறு. நீயான்-யானைப்பாகனுக்கும்,மரக்கலம்-யானைக்கும்,மயங்கு கால்-களிமயக்கத்திற்கும் உவமைகளாக உணர்க. மயங்குகால்-சுழற்காற்று மூதூர்க்குக் கடலுவமை.

இதுவுமது

35-44: காழோர்.........படர்ந்தென

(இதன் பொருள்) காழோர் கை அற மேலோர் இன்றி-குத்துக் கோற்காரர் தம்மாலாந்துணையும் குத்தியும் மடங்காமையாலே செயலற்றொழியத் தன் மேலிருந்து செலுத்தும் பாகர் யாருமில்லாமல் செய்து; பாகின் பிளவையின் பணை முகந்துடைத்து-அப் பாகர் தோட்டியாற் குத்திப் பிளந்த புண்ணின்பரிய வாயினின் றொழுகும் குருதியைத் தன் கையாற் றுடைத்துக் கொண்டு; கோ இயல் வீதியும் கொடித் தேர் வீதியும் பீடிகைத் தெருவும் பெருங்கலக்குறுத்து-அரசற்கியன்ற வீதியிடத்தும் கொடி உயர்த்திய தேரோடும் வீதியிடத்தும் அங்காடித் தெருவிடத்தும் புகுந்து மாபெருங் கலக்கத்தை மக்கட்குண்டாக்கி; ஆங்கு இருபால் பெயரிய உருகெழு மூதூர்-அவ்வாறே பட்டினப்பாக்கமும் மருவூர்ப் பாக்கமும் என்னும் இருவகைப் பெயரையுடைய அச்சம் பொருந்திய அம் மூதூரின்கண், யாங்கணும்; ஒருபால் படாஅது ஒருவழித் தங்காது-ஒரு பக்கத்திலே படாமலும் ஓரிடத்திலே நில்லாமலும்; பாகும் பறையும் பருந்தின் பந்தரும் ஆதுலமாக்களும் அலவுற்று விளிப்ப-பாகுத் தொழிலோரும் பறையறை வோரும் பந்தர் போல் நிழலிட்டுத் தன்னைச் சூழ்ந்து பறக்கும் பருந்துக் கூட்டமும் ஆற்றா மாந்தரும் மனஞ்சுழன்று துன்பக் குரல் எழுப்பும்படி; நீலமால்வரை நிலத்தோடு படர்ந்தென நீல நிறமுடைய மலையொன்று நிலத்திலே இயங்குகினாற் போன்று இயங்காநிற்ப, என்க.

(விளக்கம்) காழ்-குத்துக்கோல். மேலோர்-பிடரிலிருந்து செலுத்தும் பாகர். பாகின் பிளவை-பாகர் தோட்டியாற் குத்திப்பிளந்த புண். முகம்-புண்ணின் வாய். காழோரும் பாகரும் தன் முகத்திற் புண்களைக் கையினாற்றுடைத்து எனினுமாம். பீடிகைத்தெரு-அங்காடித்தெரு. இருபாற்பெயரிய என்றது ஈண்டுப் பட்டினப்பாக்கம் மருவூர்ப்பாக்கம் என்னும் இருபகுதியாகிய பெயரையுடைய என்பதே கருத்து. என்னை ஒருபாற் படா அது என்பதனால். இனி காவிரிப்பூம்பட்டினம் சம்பாபதி என்னும் இருபாற் பெயரிய மூதூர் என்றல் ஈண்டுச் சிறப்பில்லை.(கால.....படர்ந்தென என்னும் அடி கூட்டிப் பொருள் கூறப்பட்டது.)

உதயகுமரன் மறச்செயல்

45-50:விபேரி...........வருவோன்

(இதன் பொருள்) அரசு இளங்குமரன் விடுபசிக் குதிரையின் விரைந்து சென்று எய்தி-யானையால் நிகழுகின்ற இன்னலைப் பணிமாக்கள் அறிவித்தவுடனே இளவரசனாகிய உதயகுமரன் தனக்கெனவே விடப்பட்டிருக்கின்ற விரைந்த செலவினையுடையதொரு குதிரையில் ஏறி விரைந்து அக்களிற்றியானையின் பால் சென்றடைந்து; கடுங்கண் யானையின் கடாத்திறம் அடக்கி-சினமிக்க அக் களிற்றியானையின் மதவெறியை அடக்கித் தளையிடுவித்து; அணிந்தேர்த் தானையொடு-அழகிய தேர்ப்படையோடு; தானும் மணித்தேர் கொடுஞ்சி பற்றி-தானும் ஒரு மணிகட்டி அணி செய்யப் பெற்ற தேரில் ஏறி அத் தேரிலுள்ள இருக்கையில் அமராமல் தன்னைக் காண விரும்பும் மக்களுக்கு நன்கு காட்சி நல்குதற் பொருட்டு அவ் விருக்கையைக் கையாற் பற்றி நின்றவாறே, கார் அலர் கடம்பன் அல்லன் என்பது ஆரங்கண்ணியில் சாற்றினன்வருவோன்-தன்னைக் காண்பவர்க் கெல்லாம் தான் கார் காலத்தே மலருங் கடப்பமாலை யணியும் முருகவேள் அல்லன் சோழமன்னன் மகனே என்னும் உண்மையைத் தான் அணிந்திருக்கின்ற ஆத்திமாலையினாலே அறிவித்துத் தேரூர்ந்து வருகின்றவன்; என்க.

(விளக்கம்) விடுகுதிரை பரிக்குதிரை எனத்தனித்தனிகூட்டுக. தனக்காக விடப்பட்ட விரைந்த செலவையுடைய குதிரை என்றவாறு. இனி, குதிரைப்படையொடு கூட்டாமல் ஏறியூர்தற் பொருட்டு விடப்பட்ட குதிரையுமாம். கொடுஞ்சி தாமரைவடிவிற்றாகச் செய்து தேர்த்தட்டில் இடப்பட்ட இருக்கை. காலவேகத்தை அடக்கிய வெற்றிபற்றித் தன்னைக் காண்டற்கு அவாவி இருமருங்கும் கூடிநிற்கும் மாந்தர் நன்கு கண்டு களித்தற் பொருட்டு இருக்கையிலமராமல் அதனைப் பற்றிநின்றவாறே வருபவன் என்பது கருத்து. இக்காலத்தும் ஊர்வலம்வருந் தலைவர் இவ்வாறு ஊர்தியில் இராமல் எழுந்து நின்று வருதலைக் காணலாம். உதயகுமரனைக் காண்போர் இவன் முருகனோ உதய குமரனோ என்று ஐயுறுதல் கூடும். ஆதலின் அங்ஙனம் ஐயுறாமைப் பொருட்டு உதயகுமரன் ஆத்திசூடி வருகின்றான் என்னும் இது தற்குறிப்பேற்றம் என்னும் அணியாகும்.

கடம்பன்-முருகன். ஆரங்கண்ணி-ஆத்திமாலை. இது சோழ மன்னர்க்குரிய அடையாளப் பூமாலை.

இனி, கொடுஞ்சி என்பதற்கு உ.வே.சா ஐயரவர்கள், தாமரைப்பூ வடிவமாகப் பண்ணித் தேர்த்தட்டின் முன்னே நடுவது என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர் என எடுத்துக்காட்டி, மேலும் இது தாமரைமொட்டு வடிவமுள்ளது என்றும் விளக்கினர். இவ்விளக்கம் விளங்காவிளக்கமாம். என்னை! கொடுஞ்சி என்பது தேரிலிடப்படும் இருக்கையே அன்றிவேறன்று. இவ்வுண்மை அவ்விளக்கங்களால் விளக்கமாகாததோடு அது தாமரை மொட்டு வடிவமுள்ளது என்பது இருக்கைக்குப் பொருந்தாமையும் உணர்க. இனி அஃது இருக்கையே என்பது சிலப்பதிகாரத்தில் காணப்பட்டது. அதனை-

கடும்படை மாக்களைச் கொன்று களங்குவித்து
நெடுந்தேர்க் கொடுஞ்சியும் கடுங்களிற் றெருத்தமும்
விடும்பரிக் குதிரையின் வெரிநும் பாழ்பட  (26:12-14)

என்புழி கொடுஞ்சி என்பது களிற்றெருத்தமும் குதிரையின் வெரிநும் (முதுகு) போன்று மறவர் இருக்குமிடம் என்பது நன்கு விளக்கமாதல் நுண்ணுணர்வாற் கண்டு கொள்க.

உதயகுமரன் எட்டி குமரனை வினாதல்

56-60: நாடக......என்றலும்

(இதன் பொருள்) நாடக மடந்தையர் நலம் கெழு வீதி ஆடகச் செய்வினை மாடத்து ஆங்கண்-நாடகக் கணிகையர் வாழ்கின்ற அழகு பொருந்திய வீதியில் வரும்பொழுது அவ்வீதியிலுள்ள தொரு பொன்னாலியன்ற கலைத்தொழிற் சிறப்பமைந்த ஒரு மாளிகையின் மேல்மாடத்தின்கண், பெளித்த கால் போகுபெருவழிச் சாளரத்தின் அருகிலே; வீதி மரங்கு இயன்ற பூ அணைப்பள்ளி-தெருப்பக்கமாக இடப்பட்டதொரு மலர்ப்பள்ளிக் கட்டிலின் மேல்; தகரக் குழலாள் தன்னொடு மயங்கி-மயிர்ச் சந்தனம் நீவிய கூந்தலையுடைய தன் காமக்கிழத்தியோடே மனம் மயங்கி; மகரயாழின் வான் கோடு தழீஇ வட்டிகைச் செய்தியின் வரைத்த பாவையின் இருந்தோன்-மகர யாழினது சிறந்த கோட்டினை ஒரு கையால் பற்றிய வண்ணம் எழுதுகோளால் எழுதபட்டதோர் ஓவியமே போன்று சிறிதும் இயக்கமின்றி அமர்ந்திருந்த; எட்டிகுமரன் தன்னை-எட்டிப்பட்டம் பெற்ற கொழுங்குடிச் செல்வனாகிய வணிக விளைஞனை உதயகுமரன் கண்டு வினவுபவன்; மாதர் தன்னொடு மயங்கினை இருந்தோய்-நங்கையொருத்தியொடு பெரிதும் மயங்கி இருக்கின்றாய்; நீ உற்ற இடுக்கண் யாது என்றலும்-நண்பனே நீ இவ்வாறு மயங்கியிருத்தற்கு இப்பொழுது நீ எய்திய துன்பம் என்னையோ என்று வினவுதலும்,என்க.

(விளக்கம்) ஆடகம்-ஒருவகைப் பொன். பொளித்த-குடைந்த. கால்-காற்று. பெரிய சாளரம் என்பார் பெருவழி என்றார். அஃது அம்மாளிகையின் மேன்மாடத்து வீதிப்பக்கமாக இருந்தது என்பதும், அச் சாளரத்தின் அருகே பள்ளிக்கட்டில் இடப்பட்டிருந்ததும் என்பதும் அதன்மேல் எட்டிகுமரன் தன்னை மறந்திருந்தான் என்பதும் அவன் மருங்கே அவன் காமக்கிழத்தியும் வாளாதிருந்தாள் என்பதும் அச் சாளரத்தின் வழியே உதயகுமரன் ஒவியம் போன்றிருக்கும் அவனைக் கண்டு வினவிளன் என்பதும் அவன்றானும் செல்வக் குடியிற் பிறந்த பெருநிதிக் கிழவன் என்பதும் தண்டமிழ் ஆசான் சாத்தனார் சொற் சுருங்கத் திறம்பட விளக்கியிருத்தல் உணர்க.

எட்டி-வணிகருட் சிறந்தோருக்கு அரசனால் வழங்கப்படும் ஒரு பட்டம். குமரன் என்றது உதயகுமரனுக்கு நண்பனாகும் அவனது இளமை கூறியவாறு.

மகிழ்ந்திருக்க வேண்டிய செவ்வியில் மயங்கியிருக்கின்றனை என்பாள் மாதர் தன்னொடும் மயங்கினை இருந்தோய் என்றான். இங்ஙனம் இவன் மயங்குதற்குக் காரணம் மனத்துன்பமே ஆதல் வேண்டும் என்னும் ஊக்கத்தால் இவ்வாறு வினாவினன். இவ் வூகத்திற்கு இவன் மாதர் அத்துன்பத்திற்குக் கழுவாய் ஏதும் செய்யாமல் வாளாவிருந்தமையே ஏதுவாயிற்று என்க.

எட்டிகுமரன் காரணம் இயம்புதல்

61-71: ஆங்கது.......என்றலும்

(இதன் பொருள்) ஆங்கு அதுகேட்டு-அவ்வாறு வினவிய உதயகுமரன் குரல் கேட்டவுடனே மயக்கத்தினின்று விழிப் படைந்தவனாய் எட்டி குமரன் வீங்கு இளமுலையொடு தான் பாங்கிற் சென்று தொழுது ஏத்தி-துணுக்குற் றெழுந்த அவ் வெட்டி குமரன் பருத்த கொங்கைகளையுடைய தன் காமக் கிழத்தியோடே விரைந்து உதயகுமரன் தேர் மருங்கே எய்திக் கை கூப்பித் தொழுது கொற்றவ நீடுழி வாழ்க! நின் வரவறியாது கெட்டேன் என்று தன் பிழைக்கு வருந்திப் பின்னும் புகழ்ந்தேத்தி; மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு-தேன் துளிக்கும் மலர் மாலை அணிந்த அக் கோவிளங்குமரனுக்கு; எய்தியது உரைப்போன்-விடையாக அங்கு நிகழ்ந்ததனைக் கூறுபவன், வகை வரிச் செப்பினுள் வைகிய மலர் போல் தகைநலம் வாடி மலர்வனம் புகூஉம் மாதவி பயந்த மணிமேகலையொடு-ஒழுங்காக வரிந்து கட்டப்பட்ட செப்புக் கலத்தினூடே வைக்கப்பட்டிருந்த மலர் போன்று தன் பருவத்திற்குத் தகுதியான தனது பேரழகு வாடி இத் தெருவிலே நடந்து சிறிது முன்பு சென்றவளாகிய மாதவி ஈன்ற மணிமேகலையைக் கண்டதனாலே; கோவலன் உற்ற கொடுந்துயர் தோன்ற நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி-அக் காட்சி வாயிலாய் அவள் தந்தையாகிய கோவலன் எய்திய கொடிய துயரம் என்னெஞ்சிலே தோன்றவே அது கலங்கிற்றாக அது காரணமாக என்நெஞ்சமானது தன்பால் நிலை பெற்றிருந்த பண்ணிற்கியன்ற நரம்பினை இயக்கும் தன் பண்பிற்கு மாறாக; வெம்பகை நரம்பில் என்கைச் செலுத்தியது; அதற்குப் பகை நரம்பிலே என் கையைச் செலுத்திவிட்டது; இது யான் உற்ற இடும்பை என்றலும்-இதுவே யான் பெருமானுடைய வரவும் அறியாதவண்ணம் பெரிதும் மயங்கி இருந்தமைக்கு எய்திய காரணமாம்; பெருமான் நீடு வாழ்க என்றறிவுறுத்தலும் என்க.

(விளக்கம்) ஆங்கது கேட்டு என்றது அங்குநிகழும் ஆரவாரமும் அறியமாட்டாதிருந்த அவன் மயக்கமிகுதி தோன்ற நின்றது. வீங்கிள முலை-காமக்கிழத்தி. எய்தியது-நிகழ்ந்த காரணம். பௌத்தப்பள்ளியின் கட்டுக்காவன் மிகுதிபற்றி அதனுள் அடங்கி இருந்த மணிமேகலையை வகைவரிச் செப்பினுள் வைகிய மலர் என்றான். மணிமேகலை யினால் தோன்றிய கொடுந்துயர் என்றது, கோவலன் கொலைப்பட்டதனை. துயர் தோன்ற நெஞ்சு தான் மேற்கொண்டிருந்த இசைத்தொழின் நீர்மையில் நீங்கித் தன்னை அறியாது பகைநரம்பில் கையைச் செலுத்திப் பண்ணையும் கொடுத்தது இவ்வாற்றால் மயக்கமுற்றேன்: பகைநரம்பு-நின்ற நரம்பிற்கு ஆறாவதும் மூன்றாவதுமாகும். நின்ற நரம்பிற்கு ஆறும் மூன்றும் சென்று பெற நிற்பது கூடமாகும் என்பது அடியார்க்கு நல்லார் மேற்கோள்(சிலப்-8;33-4)

உதயகுமரன் அதுகேட்டு மகிழ்ந்து மணிமேகலையைக் கைப்பற்றத் துணிதல்

72-78: மதுமலர்............இசைத்தலும்

(இதன் பொருள்) மதுமலர்த் தாரோன் மனம் மகிழ்வெய்தி-தேன் பொதுளிய மலர்மாலையணிந்த அவ்வரசிளங் குமரன்றானும் மணிமேகலை மலர்வனத்திற்குச் சென்ற செய்தியை எட்டிகுமரன் வாயிலாய்க் கேட்டுப் பெரிதும் மனம் மகிழ்ச்சி அடைந்து; ஆங்கு அவள் தன்னை என் அணித்தேர் ஏற்றி வருவேன் என்று அவற்கு உரைத்து; நண்பனே நன்று சொன்னாய் அம்மலர் வனத்தே யானும் சென்று அம் மணிமேகலையை என் அழகிய தேரில் ஏற்றி கொண்டு மீண்டும் இங்கு வருவேன் காண் என்று அவ் வணிகனுக்கு அறிவித்துப் பின்னர்; ஆங்கு ஓடு மழை கிழியும் மதியம் போல மாடவீதியின் மணித்தேர் கடை இவானத்தே இயங்குகின்ற ஒரு முகிலைக் கிழித்தியங்கும் திங்கள் மண்டிலம் போன்று மாட மாளிகைகளையுடைய வீதியிலே தன் தலையிலே அணிந்து கொள்ளும் உவவனம் என்னும் அப் பூம்பொழிலின் வாயிலை அணுகிய பொழுது; அத் தேர் ஒலி மாதர் செவி முதல் இசைத்தலும்-அத் தேர் செய்யும் ஆரவாரம் அப் பொழிலகத்திருந்த மணிமேகலையின் செவியிடத்தே சென்று ஒலித்தலாலே என்க.

(விளக்கம்) உதய குமரன் மணிமேகலையின்பால் இயற்கையாகவே காதலுடையவனா யிருந்தும் சித்திராபதியால் தூண்டப்பட்டிருந்தும் அவள் தவப்பள்ளியிடத்தாளா யிருத்தல் அறிந்து அவளை நாடி உயிர் குடித்தோன்றலாகிய தான் அங்குப் போதல் பழிதருஞ் செயலாம் என்றுணர்ந்து அதுகாறும் மனமடக்கியிருந்தான் ஆதலின் அவள் இப் பொழுது பூம்பொழிலிலிருக்கின்றமை எட்டிகுமரனால் அறிந்து அங்குச் சென்று அவளைப் பற்றிவருதல் கூடும் என்று மனமகிழ் வெய்தினன் என்றவாறு. எட்டிக்குமரன் உதயகுமரனுக்கு நண்பனாதலானும் அச் செயல் அவனுக்கு உடன்பாடாம் என்பதனானும் அவளைத் தேரேற்றி ஈங்கு வருவேன் என்று அவனுக்குக் கூறினன் என்க.

உதயகுமரன் தன்னைக் காணவந்து குழுமிய நகரமாந்தர் குழுவினூடே தேரூர்ந்து வந்தவன் இச் செய்தி கேட்டவுடன் தன்தேரோடு ஒத்தியங்கும் அக்கூட்டம் விலகுமாறு தன்தேரைக் கடவித் தனியே செல்கின்றன் ஆகலின் அதற்கு ஓடுமழை கிழியும் மதியம் போலத் தேர் கடைஇ உவமை எடுத்தோதினர். மதியம் தேர்க்கும் முகில் மக்கட் கூட்டத்திற்கும் உவமை. இவ்வுவமையின் அழகுணராது இதற்குத் தத்தம் வாய்தந்தன கூறுவாருமுளர்: வானத்தே முகிலாற் சூழப்பட்டதிங்கள் அம் முகில்களியங்குதல் தோன்றாமல் தான் இயங்குதல் போன்று காட்சிதரும். முகில்கள் திங்களைவிட்டு நீங்கிய பொழுதில் திங்கள் முகில்களைக் கிழித்துக்கொண்டு தனித்து விரைந்தியங்குமாறு போலே காட்சி தரும். இது மயக்கக் காட்சியே ஆயினும் ஆதனையே உவமையாக எடுத்தனர் என்று நுண்ணிதின் அறிந்திடுக. மக்கட்குழு மேனின்று நோக்குவர்க்குக்  கூந்தலும் குஞ்சியும் செறித்து முகில் போறலும் உணர்க.

தேரொலிகேட்ட மணிமேகலை நிலையும் சுதமதி அவளைப் பளிக்கறை புகுத்தலும்

79-88: சித்திரா.............இரீஇ

(இதன் பொருள்) ஆயிழை சித்திராபதியோடு உதயகுமரன் உற்று என்மேல் வைத்த உள்ளத்தான் என-அன்னாய் ஈதொன்று கேள் சித்திராபதியோடு தொடர்புற்று உதயகுமரன் என்னும் வேந்தன் மகன் என்பால் காமுற்ற நெஞ்சையுடையனாக இருக்கின்றான் என்று; வயந்தமாலை மாதவிக்கு ஒருநாள் கிளிந்த மாற்றம் கேட்டேன்-வயந்தமாலை என் அன்னையாகிய மாதவிக்கு ஒரு நாள் அறிவித்த செய்தியை யான் என் செவியாலே கேட்டிருக்கின்றேன்; ஆதலின் ஈங்கு என் செவிமுதல் இசைத்தது ஆங்கு அவன் தேர் ஒலி போலும்-ஆகையால் இப்பொழுது என் செவியால் கேட்ட ஒலி அம் மன்னன் மகன் என் பொருட்டு ஊர்ந்து வருகின்ற தேரின் ஒலியே போலும்; என் செய்கு-அங்ஙனமாயின்யான் என் செய்வேன் என அமுது உறு தீங்சொல் ஆயிழை உரைத்தலும்-என்று பெரிதும் அஞ்சி அமிழ்தம் போன்ற இனிய சொல்லையுடைய மணிமேகலை சுதமதிக்குக் கூறாநிற்ப; சுதமதி கேட்டுத் துளக்குறு மயில்போல்-சுதமதி அவள் கூறிய அஞ்சுதகு சொற்களைக் கேட்டு நடுங்குகின்ற மயில்போன்று நடுங்கி; பாவையைப் பளிக்கறை மண்டபம்புகுக என்று ஒளித்து-பாவை போலும் மணிமேகலையை விரைத்து அழைத்துக் கொடுபோய்ப் பளிக்கு அறை மண்டபத்தினூடே புகுவாயாக என்று கூறிப் புகுவித்து மறைத்து; அறை உள்ளகத்து தாழ்கோத்து இரீஇ-அப் பளிக்கறையின் உள்ளே அமைந்த தாழக்கோலைக் கோத்துக் கொண்டு இருக்கச் செய்து என்க.

(விளக்கம்) சித்திராபதியோடுற்று என்றது சித்திராபதி அவ்விழி முயலுதலின் அவளோடு தொடர்புற்று என்பதுபடநின்றது. சித்திராபதி அங்ஙனம் முயலுதல் பின்னரும் அறியப்படும். கிளிந்த-கூறிய போலும்: ஒப்பில் போலி. ஈங்கு-இப்போழுது செய்கு-செய்வேன்; என்செய்கு என்றாள் உய்தற்கு வழிகாணாக் கையறவினால். வேடர்வரவு கண்டு துளிக்குறுமயில் என வருவித்துக் கூறலுமாம். கோத்து-கோப்பித்து எனப் பிறவினைப் பொருட்டாய் நின்றது. என்னை? மணிமேகலையை உள்ளகத்தே தாழ்கோத்துக் கொண்டிருப்பித்து என்பதே கருத்தாகலான். தாழக் கோல் உள்ளகத்தேயே அமைந்திருக்குமாகலின் சுதமதி அதனைக் கோத்த லியையாமையும் உணர்க. புறத்திருந்தும் உள்ளகத்தே தாழ் கோத்தலும் கூடுமாம் பிறவெனின் அது பாதுகாவலுக்கு அமையா தென்க. இரீஇ-இருப்பித்து.

உதயகுமரன் சுதமதியைக் காண்டல்

89-96: ஆங்கது............அறிந்தேன்

(இதன் பொருள்) ஆங்கு அது தனக்கு ஓர் ஐவிலின் கிட்ககை நீங்காது நின்ற நேரிலை தன்னை-அப் பளிக்கறையினின்றும் ஏறத்தாழ ஐந்து விற்கிடைத் தொலைவிற்கு அப்பாற் செல்லாமல் அணுக்கமாகவே நின்ற சுதமதி; கல்லென் தானையொடு கடுந்தேர் நிறுத்தி-செய்தி யறியாமையாலே தன் தேரினைக் கலீர் என்னும் ஆரவாரத்தோடு தொடர்ந்து வந்த படைமறரோடே தனியே விரைந்து வந்த தன் தேரினையும் நிறுத்தித் தேரினின்று மிழிந்து தமியனாய் உவவனத்தினுட் புகுந்து; பல்மலர்ப் பூம்பொழில் பகல் முளைத்தது போல்-பல்வேறு மலர்களையுடைய அப்பூம்பொழிலினூடே ஒரு கதிரவன் தோன்றி வருமாறு போலே காணப்பட்டு மணிமேகலை நிற்குமிடத்தை அறிதற் பொருட்டு; பூமரச் சோலையும் புடையும் பொங்கரும் தாமரைச் செங்கண் பரப்பினன் வரூஉம்-பூமரங்கள் செறித்த சோலையினூடும் பக்கங்களினும் செய்குன்றுகளின் பாலும் தனது செந்தாமரை மலர் போன்ற கண்ணின் பார்வையைப் பரப்பிப் பார்த்து வருகின்ற; அரசிளங் குமரன் அம் மன்னவன் மகன் ஆங்கு நின்றவளை நோக்கி; ஆரும் இல் ஒரு சிறை நின்றாய்-யாரும் இல்லாத தனியிடத்தே நின்றனை உன் திறம் அறிந்தேன். உன்னைப் பற்றிய செய்தி யான் முன்னமே அறிந்துள்ளேன் என்றான்; என்க.

(விளக்கம்) அது-பளிக்கறைமண்டபம். வில்-ஒரு நீட்டலளவை ஒருவில்-நான்கு முழம். ஐவிலின் கிட்ககை என்றது, ஏறத்தாழ இறுபது முழத்தொலைவு என்பதாயிற்று. மன்னர் முதலியோரைத் தொழுபவர் ஐந்துவிற்கிடைக்கு அப்பால் நின்றுதொழவேண்டும் என்னும் மரபு முளது. இதனை, ஐவிலினகல நின்றாங் கடிதொழு திறைஞ்சினாற்கு எனவரும் சிந்தாமணியானு முணர்க(1704). தானையொடு நிறுத்தி என்றமையால் தானே மறவரும் விறைந்தோடும் வேந்தன் மகன் தேரினை விடாது தொடர்ந்து வந்துற்றமை பெற்றாம். பகல்-கதிரவன். கண்பரப்பினன்-கட்பார்வையை இடையீடின்றிச் செலுத்தி. பரப்பினன்: முற்றெச்சம். மணிமேகலை எங்குளள் என்று ஆராய்வான் அவ்வாறு யாண்டும் நோக்கி வந்தான் என்பது கருத்து. 60-நேரிழை தன்னைக் கண்ட என ஒரு சொல்பெய்து இயைக்க. தனியே நின்றனை நீ யார் எனவினவத் தொடங்கியவன் அணுகிய பொழுது அவள் சுதமதியாதலை அறிந்து கொண்டமையின் உன்திறமறிந்தேன் என்கின்றான் நீ மணிமேகலைக்குத் துணையாக வந்தசெய்தியும் அறிந்துளேன் என்பது குறிப்பு.

மன்னவன் மகன் மணிமேகலையின்றிறம் சுதமதியின்பால் வினாதல்

97-104: வளரிள உரையென

(இதன் பொருள்) வளர் இள வள முலை மடந்தை தளர் இடை அறியும் தன்மையள் கொல்லோ-நன்று நங்காய் வளருகின்ற இளைய அழகிய முலையினையுடைய மணிமேகலை தன் காதலன் காமத்தாலே தளர்கின்ற செவ்வியைத் தானே தெரிந்து கொள்கின்ற தண்மை யுடையளாயிருப்பாளல்லளோ? மெல்லியல் விளையா மழலை விளைந்து முளை எயிறு அரும்பி முத்து நிரைத்தன கொல்-அம் மெல்லியலாளுக்கு எழுத்துருவம் பெறாத இள மழலை எழுத்துருவம் பெற்றுச் செவ்வாயில் பாற்பற்கள் விழுந்து எயிறுகள் முளைத்து வளர்ந்து தம்முள் ஒத்து முத்துக்கள் போன்று நிரல்பட்டு விட்டன வன்றோ?; செங்கயல் நெடுங்கண் செவிமருங்கு ஓடி வெங்கணை நெடுவேள் வியப்பு உரைக்கும் கொல் சிவந்த கயல்மீன் போன்ற அவளுடைய சிவந்த கண் அவளது செவியினருகே அடிக்கடி ஒடிப்போய் வெவ்விய மலரம்புகளையுடைய நெடிய காமவேள் தம்மைக் கொண்டு உலகினைக் மருட்டும் வியத்தகு தானே ஒரீஇ தமியள் இங்கு எய்தியது உரை என-இனி இவை கிடக்க மணிமேகலை பெரிய துறவோர் உறைகின்ற இடத்தினின்றும் தானே நீங்கித் தமியளாய் இவ் வுவவனத்திற்கு வந்த தற்குரிய காரணம் என்னை? இதற்கு மட்டுமேனும் விடை தருக என்று பணிப்ப என்க.

(விளக்கம்) ஈண்டு உதயகுமரன் சுதமதியை நோக்கி மணிமேகலையின் உறுப்புகளின் இயல்பையும் அவளியல்பையும் வினாதல் அவற்றின் இயல்பினை அறிந்துகொள்ளுங் கருத்தால் வினவும் அறியாவினாக்கள் அல்ல, அவையெல்லாம் அவள்பாலெழுந்த காமவேட்டை மிகுதியினாலே; இவ்வாறு அவற்றின் இயல்புகளைத் தன்னுள்ளே நினைந்து நினைந்து தானே இன்புறுதற் பொருட்டாம். ஆதலாற்றான் வினவியதொன்றற்கு விடை வருதலை எதிர்பாராமல் மேலும்மேலும் வினாக்களை அடுக்கிக் கொண்டே போகின்றான். இங்ஙனம் ஆதல் கைக்கிளைத்திணைக்கு இயல்பு. இதனை சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல் புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே எனவரும் தொல்காப்பியத்தானும் உணர்க.(அகத்-53).

தளரிடை-காமத்தால் நெஞ்சந்தளரும் செவ்வி. விளையாமழலை-இளமழலை முத்துக்கள் போன்று நிரல்பட்டனவா? என்றவாறு. சங்கத்தை நீங்கிவந்தமை கருதித் தமியள் இங்கு எய்தியது என்றான். இவ்வினாவிற்கு மட்டும் ஒருதலையாக நீ விடைதருக என்பான் ஈங்கு எய்தியது உரை என்றான்.

சுதமதி உதய குமரனுக்குக் கூறும் நயவுரைகள்

105-112: பொதியறை......கேட்டி

(இதன் பொருள்) மதுமலர்க் கூந்தல் சுதமதி பொதி அறைப் பட்டோர் போன்று உளம் வருந்தி-அதுகேட்ட சுதமதி புழுக்கறையிடத்தே அகப்பட்டுக் கொண்டவர் வீடுபெற விழிகாணாமல் வருந்துதல் போன்று உள்ளத்தினூடே பெரிதும் வருந்தி; உரைக்கும்-உதய குமரனுக்குக் கூறுவாள்; இளமை நாணி முதுமை எய்தி உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு-தான் இளையனாயிருத்தலால் இவன் முறைகூற அறியான் என்று முறை வேண்டினார் கருதுவர் என்று எண்ணி நாணமெய்தி முதியோனாக உள்வரிக் கோலம் பூண்டு அவையமேறி யிருந்து வழக்குரைக்குஞ் சான்றோர் பாராட்டும் வண்ணம் தீர்ப்புரை வழங்கிய திருமாவளத் தான் வழித் தோன்றலாகிய பெருமானுக்கு; அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் செறிவளை மகளிர் செப்பலும் உண்டோ-அறிவு பற்றி யாதல் சால்புடைமை பற்றியாதல் அரசியல் வழக்குப் பற்றியாதல் கையிற் செறிய வளையலணியும் பேதை மகளிராகிய எம்மனோர் ஏதேனும் அறிவுறுத்துதலும் உண்டேயோ; அனையது ஆயினும் யான் ஒன்றுகிளிப்பல்-என்னிலை அத் தன்மையுடையதே மாயினும் பெருமான் வினவியபடியால் யான் ஒன்று கூறத் துணிக்கிறேன்; வினை விளக்கு தடக்கை விறலோய் கேட்டி-ஆட்சித் தொழில் விளக்குகின்ற பெரிய கையினையுடைய கொற்றவனே கேட்டருள்க; என்றாள் என்க.

(விளக்கம்) வேந்தன் சீரின் ஆந்துணை இம்மையாலே சுதமதி இவனிடமிருந்து மணிமேகலையை மீட்டுக்கொடுபோதற்குச் சிறிதேனும் வழிகாணாமல் தன்னுள்ளே வருந்துகின்றாளாகலின் பொதியறைப் பட்டோர் போன்று என உவமை தேர்ந்துரைத்தார். இனி ஒழுக்கொடு புணர்ந்த அவனுடைய விழுக்குடிப்பிறப்பே ஒரோவழி நமக்கு உய்தி தருதல் கூடும் என்னும் கருத்தால் அதனையே அவனுக்கு எடுத்துக்காட்டுவாள். இளமை........மருகற்கு என அவனைப் பாராட்டுஞ் சுதமதியின் நுண்ணறிவு பாராட்டத்தக்கதொன்றாம். இதனால் அவளறிவுறுத்தும் வரலாறு வருமாறு

கரிகாலன் இளம்பருவத்திலேயே அரசு கட்டிலேறியவன்; அப் பொழுது முறை வேண்டிவந்த வாதியும் பிரதிவாதியும் ஆகிய இருதிறக்தாருமே இத்துணை இளைஞன் நம் வழக்கத்திற்குத் தீர்வுகாணமாட்டுவனோ என்று ஐயுறுவாராயினர். இதனைக் குறிப்பினால் அறிந்துகொண்ட கரிகாலன் நாளை அறனறிந்து மூத்த அறிவுடையார் ஒருவரைக்கொண்டு நுங்கள் வழக்கிற்கு முடிவு கூறுவிப்போம் என்று அவரைப் போக்கி விட்டான். மறுநாள் தானே முதியோள் கோலம்பூண்டு அறங்கூறவையமேறி இருந்து அவ் வழக்கிற்கு முடிவு கூறினன்; அம் முடிவு உலகம் உவப்ப தொன்றாயிருந்தது என்பதாகும். இதனை

உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமது மக்கள் உவப்ப-நரைமுடித்துச்
சொல்லான் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்           (21)

எனவரும் பழமொழி வெண்பாவானு முணர்க.

இனி இதன்கண் சுதமதி நினக்கு அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் செறிவளை மகளிர் செய்பலும் உண்டோ? என்று அவனைப் பாராட்டுஞ் சொற்றொடர் அரசன் மகனே நீ இப்பொழுது மேற்கொண்டிருக்குஞ் செயல் நின் அறிவுக்கும் பொருந்தாது, சான்றாண்மைக்கும் பொருந்தாது, அரசியலுக்கும் பொருந்தாது. ஆயினும் இவற்றை உனக்குக் கூறுந்தகுதி எனக்கல்லை. என்செய்கோ? என்னும் கருத்தினைக் குறிப்பாக அட்ககியிருத்தலும் உணரற்பாற்று.

கிளப்பல்-சொல்வேன். கேட்டி-கேள்.

மக்கள் யாக்கையின் இயல்பு

113-125: வினையின்......முன்னென்

(இதன் பொருள்) மக்கள் யாக்கை வினையின் வந்தது-மக்கள் பெற்றிருக்கின்ற உடம்பு முன்னே செய்த வினையின் பயனாக வந்து தோன்றிய தொன்றாம்; வினைக்கு விளைவு ஆயிது-மீண்டும் வினைகள் விளைதற் கிடனாயது; புனைவன நீங்கின் புலால் புறத்து இடுவது-அது தானும் தனது இழிதகைமையை மறைத்தற் பொருட்டுப் புனைகின்ற ஆடை முதலியவற்றைப் புனையாது நீங்கி விடிலோ புலால் நாற்றத்தைப் புறமெல்லாம் பரப்புமொரு புன்மையுடையதாம்; மூப்பு விளவு உடையது-கணந்தோறும் முதுமையுறுவதும் ஒருநாள் இறந்து படுவதுமாம்; தீப்பிணி இருக்கை துன்பந் தகும் பிணிகள் பலவும் இருத்தற் கிடமாம்; பற்றின் பற்று இடம்-பற்றுக்கள் பற்றுதற்கியன்றதோ ரிடமாம்; குற்றக் கொள்கலம்-காம முதலிய குற்றங்களை எல்லாம் தன்பாற் கொண்டிருக்கின்ற மட்கலம் போல்வதாம்; அரவு அடங்கு புற்றின் செற்றச் சேக்கை-நச்சுப் பாம்பு அடக்கி யிருக்குமொரு புற்றைப் போன்று சினம் என்னும் தீய பண்பு அடக்கியிருக்குமொரு இருக்கையாம்; அவலம் கவலை கையாறு அழுங்கல் தவலா உள்ளம் தன்பால் உடையது-அவலமும் கவலையும் கையாறும் அழுங்கலும் என்று கூறப்படுகின்ற நால்வகைத் துன்பங்களும் நீங்காததொரு நெஞ்சத்தைத் தன்பால் எஞ்ஞான்றும் கொண்டிருப்பதாம்; இது என வுணர்ந்து-இஃதென்று இதனியல் புகளை ஆராய்ந்துணர்ந்து; மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய் அறிவு மிக்க அரசன் மகனே இவ்வுடம்பினை அகம் புறமாக மாற்றி அகக் கண்ணால் நோக்கி யருள்வாயாக; என்று அவள் உரைத்த இசைபாடு தீஞ்சொல் -என்று அச் சுதமதி கூறிய பொருத்தமான இனிய சொல்;சென்று அவன் உள்ளம் சேரா முன்னர்-சென்று அவன் நெஞ்சத்திலே பதியு முன்பே; இளங்கோ மன் பளிக்கு புறத்து எறிந்த பவளப் பாவையின் இளவரசனாகிய உதயகுமரன் கண் முன்னர்ப் பளிங்குப் பேழையுள் வைக்கப்பட்டுத் தன் உருவத்தைப் புறத்தே தோற்றுவிக்கும் பவளத்தாலியன்றதொரு பாவையைப் போன்று; இளங்கொடி தோன்றும்-மணிமேகலையின் உருவம் பளிக்கறையூடிருந்து தோன்றா நிற்கும் என்பதாம்.

(விளக்கம்) வினை-மனமொழிமெய் என்னும் மூன்றிடத்தும் தோன்றும் பத்துவகைப்படுந் தீவினையும் அவற்றிற்கு மாறாகிய நல்வினைகளுமாம். முற்பிறப்பிலே செய்த வினையின் பயனாகத் தோன்றியது; பின்னும் பிறத்தற்கேதுவாகிய வினைகள் விளைதற்கிடனாவது என்றவாறு. புனைவன-ஆடையும் நறமணப் பொருள்களுமாம். விளிவு-சாவு. பிணிவாத பித்த சிலேத்துமங்களின் சமமின்மையாலே உடம்பிற்றோன்றும் எண்ணறந்த பிணிகள். பிணியெனப்படுவது சார்பிற் பிறிதாய் இயற்கையிற்றிரிந்து உடம்பு இடும்பைபுரிதல் என இந்நூலுள் (30-98-9) கூறப்படுதலறிக. மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர், விளிமுதலா எண்ணிய மூன்று எனவரும் திருக்குறளும்(941) நினைக. பற்று-பசைஇய அறிவு, அவ்வறிவு பற்றியிருக்குமிடம் என்க. குற்றம் காமவெகுளி மயக்கங்கள். அரவு அடங்கு புற்றின் என மாறுக. செற்றம்-சினம். சேக்கை-தங்குமிடம் அவலம்-துன்பம் தோன்றியநிலை. கவலை அதுதீர்க்க வழிதேடும் நிலை. கையாறு-வழிகாணாது திகைக்கும் நிலை. அழுங்கல் துன்பத்தே அழுந்திவருந்தும் நிலை. தவலா-நீங்காத, ஈறுகெட்டது. இதுவென இத்தன்மைத்தென்று. அறிவுமிக்கோய் என்க. புறமறிப்பார்த்தலாவது யாதானும் ஒரு பையைப் புறம் அகம் ஆகும்படி புரட்டிப்பார்த்தால், மற்றதனைப் பைமறியாய் பார்க்குப் படும் என்பது நாலடி(42). அங்ஙனம் பார்க்குங்கால் என்பும் தடியும் உதிரமும் அன்றி இவ்வாக்கையில் வேறு ஏதும் சிறப்பின்மை அறியப்படும் என்பது குறிப்பு. இங்ஙனம் கூறியது இத்தகைய இழிதகைய யாக்கையே மணிமேகலையின் யாக்கையும், அதனை நீ வளரிளவனமுலை எனவும், முளையெயிறு அரும்பி முத்து நிரைத்தன்ன எனவும், செங்கயல் நெடுங்கண் எனவும் பாராட்டுதல் நின் அறிவுடைமைக்கு அழகாகுமோ. அங்ஙனம் கூறாதே கொள் என்னும் குறிப்பெச்சப்பொருள் தோற்றுவித்தற் பொருட்டாம். இவள்மொழி பொருளியல்புணர்த்தும் மெய்ம்மைத் தன்மைத்தாதல் கருதி இசைபடுதீஞ் சொல் என்றார். அவ்வறையின் பளிங்கு புறத்தே புறப்படவிட்ட இளங்கொடி உருவம் பவளம் பாவையின் இளங்கோமுன் தோன்றும் என இயைப்பினுமாம்.

இனி, இக்காதையினை-காண்பன காண் காண் எனச் சுதமதி காட்ட மணிமேகலை காண்புழி மன்னவன் சிறுவன் வருவோன் இருந்தோன்றன்னை போது என்றலும் உரைப்போன் என்றலும் எய்தி உரைத்துக் கடைஇக் குறுக ஒலிமணிமேகலை செவிமுதல் இசைத்தலும் மணிமேகலை உரைத்தலும் இரீஇ நின்ற நேரிழை தன்னை உதயகுமரன் நின்றோய் அறிந்தேன் தன்மையள் கொல்லோ உரைக்குங்கொல் உரையெனச் சுதமதி உண்டோ கிளிப்பல் கேட்டி என்றுரைத்தசொல் சேராமுன்னர் இளங்கோமுன் இளங்கடி தோன்றுமால் இயைத்திடுக.

பளிக்கறை புக்க காதை முற்றிற்று.
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 08:53:26 AM
5. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை

ஐந்தாவது மணிமேகலை உதயகுமரன்பால் உள்ளத்தாள் என மணிமேகலை தனக்கு மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய பாட்டு

அஃதாவது: பளிக்கறைக் குள்ளிருக்கின்றாள் மணிமேகலை என்றறிந்த உதயகுமரன் அவளைக் கைப்பற்றுதற்கு முயன்றும் மாட்டாமையால் இகழ்ச்சி மொழி சில கூறி இவளை இனி யான் சித்திராபதிவாயிலாய் எய்துவேன் என்று காமத் துன்பத்தோடே அச் சோலையை விட்டுப் போயினன் பின்னர்ப் பளிக்கறையினின்று வெளிவந்த மணிமேகலை தன்னெஞ்சமும் நிறை கடந்து அவன் பின்னே செல்லலுற்றது. காமம் பெருவலியுடைய தொன்று போலும் என்று அதனை வியந்து நிற்கின்ற பொழுது இந்திர விழாக்காண அந் நகரத்திற்கு வந்திருந்த மணிமேகலா தெய்வம் அப் பொழிலில் இருக்கின்ற புத்த பீடிகையைத் தொழுதன் மேலிட்டு (அந் நகரத்தில் வாழுகின்ற மாயவித்தை செய்பவளாய்) மணிமேகலைக்கும் சுதமதிக்கும் அறிமுகமாயிருந்த ஒரு மானிட மகள் வடிவத்தோடு அங்கு புத்த பீடிகையைத் தொழுதமை கூறும் செய்யுள் என்றவாறு.

இதன்கண்-பளிக்கறை உள்ளே தாழ்கோல் தாழ்கோல் கோத்திருந்தமையாலேயும் அது தெய்வத் தன்மையை யுடைய பொழில் என்பது கருதியும், தான் பெருங்குடித் தோன்றலாதலானும் மணிமேகலையை வலிந்து கைப்பற்ற முயலாமலே பக்கலிலே நின்ற சுதமதியை நோக்கி மணிமேகலையினியல்புகளை மன்னன் மகன் வினவுதலும்,அவள் மணிமேகலை காமத்தை வென்றவள் சாபமிடும் ஆற்றல் உடையள் ஆதலின் பெருமான் அவளை மறந்தொழிக என்று அறிவுறுத்துதலும், அதுகேட்டு அவன் நகைத்து அவள் அத்தகையளாயினும் யான் கைப்பற்றியே தீர்வேன் என்று கூறிப் பின்னர்ச் சுதமதியின் வரலாறு வினவுதலும், அவள் தன் வரலாற்றைச் சுவைபடச் சொல்லுதலும், பின்னர் உதயகுமரன் அவ்விடம் விட்டகன்று போதலும், மணிமேகலை பளிக்கறையி னின்றும் புறம் போந்து தன்னெஞ்சம் தன்னை இகழ்ந்த அம் மன்னன் மகன் பின்னே சென்றதொன்று கூறிக் காமம் அத்தகைய பெருவலியுடையது போலுமென்று வியந்து நிற்க; மணிமேகலா தெய்வம் மானுடமகள் வடிவத்தோடு அவ்வுவவனத்தே வந்து புத்தபீடிகையைத் தொழுதலும், அந்திமாலை வரவும் அழகாகக் கூறப்பட்டுள்ளன.

இளங்கோன் கண்ட இளம் பொன் பூங்கொடி
விளங்கு ஒளி மேனி விண்ணவர் வியப்ப
பொரு முகப் பளிங்கின் எழினி வீழ்த்து
திருவின் செய்யோள் ஆடிய பாவையின்
விரை மலர் ஐங் கணை மீன விலோதனத்து
உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப
ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன்
காவி அம் கண்ணி ஆகுதல் தௌிந்து
தாழ் ஒளி மண்டபம் தன் கையின் தடைஇச்
சூழ்வோன் சுதமதி தன் முகம் நோக்கி  05-010

சித்திரக் கைவினை திசைதொறும் செறிந்தன!
எத் திறத்தாள் நின் இளங்கொடி? உரை என
குருகு பெயர்க் குன்றம் கொன்றோன் அன்ன நின்
முருகச் செவ்வி முகந்து தன் கண்ணால்
பருகாள் ஆயின் பைந்தொடி நங்கை
ஊழ் தரு தவத்தள் சாப சரத்தி
காமற் கடந்த வாய்மையள் என்றே
தூ மலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப
சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழீஇ?
நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின்?  05-020

செவ்வியள் ஆயின் என்? செவ்வியள் ஆக! என
அவ்விய நெஞ்சமொடு அகல்வோன் ஆயிடை
அம் செஞ் சாயல்! அராந்தாணத்துள் ஓர்
விஞ்சையன் இட்ட விளங்கு இழை என்றே
கல்லென் பேர் ஊர்ப் பல்லோர் உரையினை
ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி ஆய் இழை!
ஈங்கு இவள் தன்னோடு எய்தியது உரை என
வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி
தீ நெறிப் படரா நெஞ்சினை ஆகு மதி!
ஈங்கு இவள் தன்னோடு எய்திய காரணம்  05-030

வீங்குநீர் ஞாலம் ஆள்வோய்! கேட்டருள்!
யாப்பு உடை உள்ளத்து எம் அனை இழந்தோன்
பார்ப்பன முதுமகன் படிம உண்டியன்
மழை வளம் தரூஉம் அழல் ஓம்பாளன்
பழ வினைப் பயத்தான் பிழை மணம் எய்திய
எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின்
குரங்கு செய் கடல் குமரி அம் பெருந் துறைப்
பரந்து செல் மாக்களொடு தேடினன் பெயர்வோன்
கடல் மண்டு பெருந் துறைக் காவிரி ஆடிய
வட மொழியாளரொடு வருவோன் கண்டு ஈங்கு  05-040

யாங்கனம் வந்தனை என் மகள்? என்றே
தாங்காக் கண்ணீர் என் தலை உதிர்த்து ஆங்கு
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும்
காதலன் ஆதலின் கைவிடலீயான்
இரந்து ஊண் தலைக்கொண்டு இந் நகர் மருங்கில்
பரந்து படு மனைதொறும் திரிவோன் ஒரு நாள்
புனிற்று ஆப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன்
கணவிர மாலை கைக்கொண்டென்ன
நிணம் நீடு பெருங் குடர் கை அகத்து ஏந்தி
என் மகள் இருந்த இடம் என்று எண்ணி  05-050

தன் உறு துன்பம் தாங்காது புகுந்து
சமணீர்காள்! நும் சரண் என்றோனை
இவன் நீர் அல்ல என்று என்னொடும் வெகுண்டு
மை அறு படிவத்து மாதவர் புறத்து எமைக்
கையுதிர்க்கோடலின் கண் நிறை நீரேம்
அறவோர் உளீரோ? ஆரும் இலோம்! எனப்
புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற
மங்குல் தோய் மாட மனைதொறும் புகூஉம்
அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன்
கதிர் சுடும் அமயத்துப் பனி மதி முகத்தோன்  05-060

பொன்னின் திகழும் பொலம் பூ ஆடையன்
என் உற்றனிரோ? என்று எமை நோக்கி
அன்புடன் அளைஇய அருள்மொழி அதனால்
அஞ்செவி நிறைந்து நெஞ்சகம் குளிர்ப்பித்து
தன் கைப் பாத்திரம் என் கைத் தந்து ஆங்கு
எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க
எடுத்தனன் தழீஇ கடுப்பத் தலை ஏற்றி
மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன்
சா துயர் நீங்கிய தலைவன் தவ முனி
சங்கதருமன் தான் எமக்கு அருளிய  05-070

எம் கோன் இயல் குணன் ஏதம் இல் குணப் பொருள்
உலக நோன்பின் பல கதி உணர்ந்து
தனக்கு என வாழாப் பிறர்க்கு உரியாளன்
இன்பச் செவ்வி மன்பதை எய்த
அருளறம் பூண்ட ஒரு பெரும் பூட்கையின்
அறக் கதிர் ஆழி திறப்பட உருட்டி
காமற் கடந்த வாமன் பாதம்
தகைபாராட்டுதல் அல்லது யாவதும்
மிகை நா இல்லேன் வேந்தே வாழ்க! என
அம் சொல் ஆய் இழை! இன் திறம் அறிந்தேன்  05-080

வஞ்சி நுண் இடை மணிமேகலை தனைச்
சித்திராபதியால் சேர்தலும் உண்டு என்று
அப் பொழில் ஆங்கு அவன் அயர்ந்து போய பின்
பளிக்கறை திறந்து பனி மதி முகத்துக்
களிக் கயல் பிறழாக் காட்சியள் ஆகி
கற்புத் தான் இலள் நல் தவ உணர்வு இலள்
வருணக் காப்பு இலள் பொருள் விலையாட்டி என்று
இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்
இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை?  05-090

இதுவே ஆயின் கெடுக தன் திறம்! என
மது மலர்க் குழலாள் மணிமேகலை தான்
சுதமதி தன்னொடும் நின்ற எல்லையுள்
இந்திர கோடணை விழா அணி விரும்பி
வந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம்
பதிஅகத்து உறையும் ஓர் பைந்தொடி ஆகி
மணி அறைப் பீடிகை வலம் கொண்டு ஓங்கி
புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்
உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ!
குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய்  05-100

முற்ற உணர்ந்த முதல்வா என்கோ!
காமற் கடந்தோய் ஏமம் ஆயோய்
தீ நெறிக் கடும் பகை கடிந்தோய் என்கோ!
ஆயிர ஆரத்து ஆழி அம் திருந்து அடி
நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன்? என்று
எரி மணிப் பூங் கொடி இரு நில மருங்கு வந்து
ஒரு தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கி
நில வரை இறந்து ஓர் முடங்கு நா நீட்டும்
புல வரை இறந்த புகார் எனும் பூங்கொடி
பல் மலர் சிறந்த நல் நீர் அகழிப்  05-110

புள் ஒலி சிறந்த தெள் அரிச் சிலம்பு அடி
ஞாயில் இஞ்சி நகை மணி மேகலை
வாயில் மருங்கு இயன்ற வான் பணைத் தோளி
தருநிலை வச்சிரம் என இரு கோட்டம்
எதிர் எதிர் ஓங்கிய கதிர் இள வன முலை
ஆர் புனை வேந்தற்குப் பேர் அளவு இயற்றி
ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய
ஒரு பெருங் கோயில் திருமுகவாட்டி
குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும்
குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும்  05-120

வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடு ஆக
எள் அறு திருமுகம் பொலியப் பெய்தலும்
அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய
தன்னுறு பெடையைத் தாமரை அடக்க
பூம் பொதி சிதையக் கிழித்துப் பெடை கொண்டு
ஓங்கு இருந் தெங்கின் உயர் மடல் ஏற
அன்றில் பேடை அரிக் குரல் அழைஇ
சென்று வீழ் பொழுது சேவற்கு இசைப்ப
பவளச் செங் கால் பறவைக் கானத்து
குவளை மேய்ந்த குடக் கண் சேதா  05-130

முலை பொழி தீம் பால் எழு துகள் அவிப்ப
கன்று நினை குரல மன்று வழிப் படர
அந்தி அந்தணர் செந் தீப் பேண
பைந் தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப
யாழோர் மருதத்து இன் நரம்பு உளரக்
கோவலர் முல்லைக் குழல் மேற்கொள்ள
அமரக மருங்கில் கணவனை இழந்து
தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல
கதிர் ஆற்றுப்படுத்த முதிராத் துன்பமோடு
அந்தி என்னும் பசலை மெய்யாட்டி
வந்து இறுத்தனளால் மா நகர் மருங்கு என்  05-141

உரை

பளிக்கறையின் புறந்தோன்றிய மணிமேகலையின் உருவத்தைக் கண்ட உதயகுமரன் ஓவியமென்றே கருதி வியத்தல்

1-7: இளங்கோன்.........வியப்போன்

(இதன் பொருள்) இளங்கோன் கண்ட இளம் பொற்பூங்கொடி விளக்கு ஒளி மேனி- இளவரசனாகிய உதயகுமரன் கண்ட பளிக்கறைப் புறத்தே புறப்படவிட்ட இளமையுடைய பொன்னிறமான காமவல்லி போல்வளாகிய மணிமேகலையின் விளங்குகின்ற ஒளியுடைய திருமேனியை; விண்ணவர் வியப்ப-அமரர்களும் வியங்கும்படி; ஓவியன் பளிங்கின பொருமுக எழினி வீழ்த்து-ஓவியத் துறை கை போகிய ஓவியப் புலவன் ஒருவன் பளிக்குநிறம் உடையதொரு பொருமுக எழினி என்னும் திரைச் சீலையைத் தூங்கவிட்டு அதன்மேல் தான வரையும் ஓவியம்; திருவின் செய்யோள் ஆடிய பாவையின்-செல்வததிற் கியன்ற தெய்வமாகிய திருமகள் மேற்கொண்டு ஆடிய கொல்லிப் பாவையின் உருவம் போன்று; விரைமலர் ஐங்கணை மீன விலோதனத்து உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப-மணங்கமழும் மலரம்புகளையும் மீனக் கொடியையும் உடைய காமவேளின் குறும்பினாலே தன்னைக் கண்டோருடைய உருவத்தை மாறுபடுத்த வேண்டும் என்று; உள்ளத்து உள்ளியது-தன் உள்ளத்திலே கருதி வரையப்பட்டதோர் ஓவியமே என்று கருதி; வியப்போன்-மருண்டு நோக்குபவன்; என்க.

(விளக்கம்) உதயகுமரன் பளிக்கறையின் உள்ளிருந்து தோன்றும் மணிமேகலையின் விளங்கொளிமேனியை அதனுட்புறத்தே சிறந்த ஓவியனால் வரையப்பட்டதோர் ஓவியமே என்று கருதி அவ்வோவியம் தனது காமத்தைப் பெருக்கி உடம்பை மெலிவித்தலாலே. இதனை எழுதியவன் இவ்வோவியம் தன்னைக் கண்டோரை இவ்வண்ணம் மெலிவித்தல் வேண்டும் என்று கருதியே வரைந்திருத்தல் வேண்டும் என்று துணிந்து பின்னும் அவன் கலைத்திறத்தை வியந்து நிற்கின்றான் என்பதாம்.

பொற்கொடி-கற்பகத்தின் மேற்படரும் ஒரு வானுலகத்துப் பூங்கொடி. ஈண்டு மணிமேகலையின் நெஞ்சமும் உதயகுமரன் என்னும் கற்பகத்தின் மேற்படர்தலின் அப் பொற்கொடியையே உவமை எடுத்தார். இது கருத்துடை அடைகொளி என்னும் அணியின் பாற்படும். பாவை கொல்லிப்பாவை. அஃதாவது-திருமகள். போர்க்கு வந்தெதிர்ந்த அசுரர் போகித்து மெலிந்து வீழும்படிபுனைந்துகொண்டதொரு பெண்மைக்கோலம். இவ்வுருவம் கொல்லிமலையின் மேற்புறத்திலே வரையப்பட்டுளதென்றும் அதனைக் கண்டோர் அப் பொழுதே மோகித்து மயங்குவர் என்றும் கூறுப. இவ்வோவியனும் அப்பாவையுருவத்தைக் கண்டோரை மயக்குறுத்தும் கருத்தோடு இதனை இங்கு வரைந்துள்ளான் என்று இம்மன்னன் மகன் கருதுகின்றான். என்னை? அதுகானும் தன்னைப் பெரிதும் மோகித்து மயங்கும்படி செய்தலான். பாவையைக் கண்டவுடனே காமவேள் குறும்பும் கண்டோர் உளத்தே தோன்றி அவற்றின் மெய்ப்பாட்டையும்  தோற்றவித்து உருவத்தை மாறுபடுத்துதலின் இங்ஙனம் உடனிகழ்ச்சிப் பொருளுடைய ஒடு உருபு பெய்து கூறியவாறு காமவேளின் செயலும் உடன் தோன்றுதல் பற்றி அவனுடைய மலரம்புகளையும் உடனோதினன். பளிங்கின் நிறமமைந்த படாஅஞ் செய்து அதன்மேல் எழுதியிருத்தலின் அது வியத்தகு செயலாயிற்று. தன்னை அது தன்பாலீர்த்தலின் உருவம் பெயர்ப்ப உள்ளியதிது என்று கருதினன்.

உதயகுமரன் செயலும் சொல்லும்

8-12: காவியம்.......உரையென

(இதன் பொருள்) காவியக் கண்ணி ஆகுதல் தெளிந்து-வியந்து கூர்ந்து நோக்கிய உதயகுமரன் அதன் கண்ணழகிலீடுபட்டு நெடிது நோக்கியவழி அவை இமைத்தலைக் கண்டு நீலமலர் போலும் கண்களையுடைய மணிமேகலையே இவள் ஓவியம்
அல்லள் என்று ஐயந்தெளிந்து அவளைக் கைப்பற்றுதற் பொருட்டு; ஒளி தாழ் மண்டபம் தன் கையின் தடைஇச் சூழ்வோன்-ஒளி தங்கியிருக்கின்ற அப் பளிக்கறை மண்டபத்துள்ளே தானும் புகவிரும்பி அதற்கு வாயில் காணுதற்கு முயன்று அஃதிருக்குமிடம் அறிதற்குத் தன் கையாலே தடவிப் பார்த்தவண்ணம் அதனைச் சுற்றி வருபவன்; சுதமதி தன்முகம் நோக்கி-சுதமதியை நோக்கி நங்காய் இம் மண்டபம் சாலவும் அழகியது காண்; சித்திரக் கைவினை திசைதொறுஞ் செறிந்தன-இதனுள் நான்கு பக்கங்களினும் ஓவியங்களாகிய கலைஞர் செய்தொழிறறிறம் செறிந்துள்ளன ஆதலால் என்று கூறிய பின்னரும் அவளை நோக்கி; எத்திறத்தாள் நின் இளங்கொடி உரை என-இவை கிடக்க; உன் தோழியாகிய மணிமேகலை எத்தன்மையுடையவள் இதற்கு விடைதருதி என்றிரப்ப என்க.

(விளக்கம்) மணிமேகலை ஓவியம் என்று கருதி அதன் உறுப்புநலங்களைக் கூர்ந்து பார்த்து வருங்கால் அவள் தன்னை நோக்கியிருக்கும் அவள் கண்களில் தன்பார்வையை நேருக்கு நேர் செலுத்தியவழி அவள் காணத்தால் இமைகளை இறுக மூடிக்கொண்டனள் ஆதலின் இவ்வுருவம் மணிமேகலையின் உருவமே என்று தெளிந்து கொண்டாள் என்னும் இத்துணையும் குறிப்பாகப் புலப்படுமாறு பிற சொல்லாற் கூறாது காவியங் கண்ணி ஆகுதல் தெளிந்து என குவன் தெளிவிற்குக் காரணமான கண்மேலிட்டு அறிவுறுத்தும் நுணுக்கம் பேரின்பம் பயப்பதொன்றாம்.

பின்னும் பளிக்கறையுள்புகுந்து அவளைக் கைப்பற்றுவதே தன் கருத்தாகவும், உட்புகுதும் வழிநாடி நாற்புறமும் சூழ்வருபவன் அஃதுட் புறம் தாழ்கோத்த பளிங்குக் கதவமாதலின் உட்புகுகவும் இயலாமல் தானுற்ற ஏமாற்றத்தையும் உள்ளிருப்பவள் மணிமேகலை என்று தான் அறிந்து கொண்டமையையும் சுதமதி அறியாவண்ணம் மறைத்தற் பொருட்டு இவ்வரசிளங்குமரன் சுதமதி தன் முகம் நோக்கிச் சித்திரக் கைவினை திசை தொறும் செறிந்தன என்று கூறிக்கொள்கின்றான். என்னை தான் இம் மண்டபத்தினூடே வரைந்துள்ள ஓவியங்களைக் காண்டற்கு விழைந்தே அதனைச் சுற்றி வந்ததாகவும், பளிக்குமண்டபத்தின் நான்கு பக்கங்களினும் மணிமேகலை உருவம் தோன்றுவதனைத் தான் இதன் நாற்புறத்தும் சித்திரச் செய்வினை செறிந்துள்ளதாக நினைப்பதாகவும் அச் சுதமதி நினைப்பாளாக என்பதே அவன் கருத்தாதலின் என்க. இஃது எத்துணை நுணுக்கமான கருத்து நோக்கி மகிழ்மின்.

நன்று, ஓவியக்காட்சி கண்டாயிற்று. இனி, என்னை சுதமதியை மதியுடம்படுவித்து அவள் வாயிலாகலே மணிமேகலையை எய்தக்கருதி அதற்குத் தோற்றுவாய் செய்பவன் தான் அவள் பின்னிற்கும் தன் எளிமைதோன்ற, நின் இளங்கொடி எத்திறத்தாள் என்று நம்மனோரும் அவன் திறத்திலே பரிவுகொள்ளுமாறு வினவிச் செயலற்று நிற்றல் உணர்க. இதன்கண் மணிமேகலையை நின் இளங்கொடி என்றது நீ நினைத்தவண்ணம் அவள் நடப்பாள் அவளை என் முயற்சியால் எய்தவியலாது எனத் தான் அவள் நடப்பாள் அவளை என் முயற்சியால் எய்த வியலாது எனத் தான் அவள் பின்னிற்றலைத் தெற்றென் வுணர்த்துதல் இயலாமையின் குறிப்பாக அவள் உணரும் பொருட்டே இவ்வாறு வினவுகின்றான். இவ்வாற்றால் இக் காதனிகழ்ச்சி அகப்புறமாகி. காட்சி ஐயம் தெளிதல் மதியுடம்படுத்தல் என்னும் துறைகளை யுடையதாதலும் உணர்க

சுதமதியின் பரிவுரை

13-19: குருகு...........உரைப்ப

(இதன் பொருள்) குருகு பெயர்க்குன்றம் கொன்றோன் அன்ன நின் முருகச் செவ்வி முகந்து தன கண்ணால் பருகாள் ஆயின் கிரவுஞ்சம் என்னும் பறவையின் பெயர் கொண்ட மலையைத் தகர்த்தொழித்த முருக வேளையே ஒத்து விளங்குகின்ற நின்னுடைய இவ்விளமைப் பேரழகினை நிரம்ப முகந்து கொண்டு தன் கண்களாகிய வாயால் பருகா தொழிவாளாய்விடின பின்னர்வாய்ச் சொற்கள் என்ன பயனுமில்; பைந்தொடி நங்கை அவளுடைய அத் திட்பம் ஒன்றே அவள்; ஊழ்தரு தவத்திள் சாப சரத்தி காமற் கடந்த வாய்மையள்-பற்பல பிறப்பிலே அடிப்பட்டு வருகின்ற ஊழாலே தரப்பட்ட மாபெருந் தவத்தையுடையாளென்பதும் சாபமாகிய கொல்கணைகளையுடையாள் என்பதும் காம வேளின் குறும்புகளை யெல்லாம் கடந்துயர்ந்த மெய்யுணர்வுடையாள் என்பதும் தேற்றமாம் அன்றோ என்று; தூமலர்ச் சுதமதி உரைப்ப-தூய மலர் போன்ற உள்ளமுடைய அச் சுதமதி அவளுடைய திறம் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் இஃதென்று அறிவியா நிற்ப என்க.

(விளக்கம்) மன்னவன் மகனே உன்னைக் கண்டும் நிலைகலங்காமல் அம் மணிமேகலை இருப்பாளானால் பின்னர் அவளைப்பற்றி நீ கேட்டறிவதற்கே யாதொன்றுமில்லை. உன்னைக் கண்டுவைத்தும் உன் அழகை வாரிப் பருகாத அவள் திட்பமே அவள் மாபெருந் தவவாற்றல் உடையாள் என்பதையும் அவள் சாபமிடும் ஆற்றல் பெற்றிருப்பாள் என் பதையும் மெய்யுணர்வு பெற்றவள் என்பதையும் அறிவுறுத்தும் சான்றாகுமன்றோ என்கின்றாள். இதனால் உன்னை அவள் நேருக்குநேரே பார்த்தும் நிலைகலங்காதிருத்தலை நீயுந்தான் அறிகின்றனை. யானும் நீ மறைத்தாயேனும் அறிகின்றேன். ஆதலால் இதனை நீயே உணர்ந்து கொள்ளலாமே என்னைக் கேட்பது வீண் என்ற இடித்துரையைக் கேட்டற்கினிய மொழிகளாலே கூறும் இவள் நாநலம் வியத்தற் பாலதாம்.

உதயகுமரன் பின்னும் பின்னிலை முயறல்

19-27: சிறை...........உறையென

(இதன் பொருள்) செழும்புனல் மிக்குழீஇ சிறையும் உண்டோ காமம் காழ கொளின நிறையும் உண்டோ-அது கேட்ட உதயகுமரன் நன்று நங்காய் நீ அறியாது கூறுதி, வளவிய நீர் மிககுப் பெருகினால் அதனைத் தடுத்து நிறுத்தும் அணைதானும் உளதாமோ உளதாகாதன்றே அங்ஙனமே ஆடவராயின் என? பெண்டிர் ஆயினென்? காமப்பண்பு மிக்குப் பெருகியக்கால் அதனைத்தடுத்து நிறுத்தும் நெஞ்சுறுதியும் உளதாமோ? ஆகாது காண்; செவ்வியள ஆயின் என் செவ்வியள் ஆக என-மற்று மணிமேகலை தான் நீ கூறுமாறு காமற் கடந்த வாய்மையளாகும் செம்மையுடையளாயினுலும் அதனால் என்? அவ்வாறே அவள் செம்மையுடைளாகவே இருந்திடுக என்று கூறி; வவ்வி நெஞ்சமொடு அகல்வோன-அவள் திருவுருவத்தைக் கூர்ந்து கொண்டதொரு கள்ளவுள்ளத்தோடே அவ் வுவவனத்தை விட்டுச் செல்லத் தொடங்குபவன்; ஆயிடை-அதற்கிடையிலே மீண்டும் சுதமதியை நோக்கி; அச்செஞ்சாயல்-அழகிய செம்மையுடைய மெல்லியால் நீதானும் அராந்தாணத்துள் ஓர் விஞ்சையன் இட்ட விளங்கிழை என்று-அருகன் கோயின் மருங்கில் யாரோ ஒரு விச்சாதரனால் பற்றிக் கொணர்ந்து விடப்பட்ட பெண் என்று; கல் என பேரூர் பலலோர் உரையினை-கல்லென்று ஆரவாரிக்கும் இப் பெரிய நகரத்திலே பலராலும் கூறப்படும் கூற்றையுடையை அல்லையோ; ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி-அவ்வருகத்தானத்தே அவ்வாருகதர் உறையுமிடத்தினின்றும் விலகி; ஈங்கு ஆயிழை இவள் தன்னோடு எய்தியது உரை என-இங்குப், பௌத்தர் சங்கத்திற் சேர்த்திருக்கின்ற மணிமேகலையாகிய இவளோடு பகவனதாணையில் பன்மரம் பூக்கும் பௌத்தர் உவவனத்திற்கு வந்ததற்கியன்ற காரணம் என்னையோ? கூறுதி என்று பணிப்ப என்க.

(விளக்கம்) சுதமதி மணிமேகலையைக் காமற் கடந்த வாய்மையள் என்றதனை மறுத்து அவட்குப் பேதைமையூட்டுவான் சிறையும் உண்டோ.........செவ்வியள் ஆக என்கின்றான். இதனால் நீ காமப்பண்பின் இயல்பறிவாயல்லை; ஒரோவழி மணிமேகலைக்குக் காமம் இன்னும் காழ் கொண்டிலது போலும் அது காழ்கொள்ளும் பொழுதுதான் அவள் காமற் கடந்த செவ்வயளா அல்லளா? என்பது தெரியவரும்; அது காழ்கொள்ளும் துணையும் செவ்வியளாகவே இருந்திடுக என்று அசதியாடுகின்றான். இவ்வாறு உதயகுமரன் கூறுவதன் கருத்து மணிமேகலை தன்னைக் கண்ணிமையாது பார்த்து நின்றவள் தான் அவள் கண்ணை நோக்கிய பொழுது இமைத்துக் கண்களை மூடிக்கொண்டமையால் அவள் தன்னை பெரிதும் காதலிக்கின்றாள் என்னும் குறிப்புணர்ந்தமை யாலே; யாம் இங்கனமாகவும் அவளியல்பறியாது பேசும் சுதமதியை எள்ளிப்பேசிய பேச்சை இவை என்றுணர்க. வவ்விய நெஞ்சமொடு என்று கொண்டு அனள் உருவத்தை முழுதும் (தன்னுள்ளக் கிழியில் வரைத்து கவர்ந்து கொண்ட நெஞ்சமோடு என்பதே சிறப்பு. அவ்வியம் என்று பிரித்து அழுக்காறு என்று பொருள் கொண்டு பிறர்க்கு இவள் உரியளாதல் கூடுமோ என்பதால் உளதாகிய பொறாமை என்பாருமுளர். இங்ஙனம் கூறுவோர் அக் கூற்று அவனது ஆண்மையையே இழுக்குப்படுத்துதலை அறியார் போலும்.

இழுக்கோடு புணரா விழுக்குடிப்பிறப்பினனாதலின் கடவுள் மலர் வனத்தில் அப்பாலும் காமவிளையாடல் புரியத்துணியாது அகல்வோன் பின்னும் சுதமதியை அவளது உசாஅத்துணைத் தோழியாகவே கருதி அவளைப் பின்னும் மதியுடம்படுத்த வேண்டி அவள் வரலாற்றை நன்கறியும் பொருட்டே நங்காய் உன்னை யான் அராந்தாணத்துவிஞ்சையன் இட்ட விளங்கிழை என்னுந்துணையே அறிவேன்: அங்ஙனமாயின் இவட்கும் உனக்கும் தொடர்பு எவ்வாறுண்டாயது என்றறிய இங்ஙனம் வினவினன் என்க.

அவர் உறைவிடம் என்றது ஆருகதர் உறையும் அருகத்தானத்தை அராந்தாணம் என்பதும் அது.

சுதமதி உதயகுமரன் வினாவிற்கு விடைகூறுதல்

28-38: வார்கழல்..........பெயர்வோன்

(இதன் பொருள்) வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி நெடிய வீரக்கழலணிந்த வேந்தர் பெருமானே நீடுழி வாழ்க நின் ஆரங்கண்ணி; தீ நெறிப்படரா நெஞ்சினை ஆகுமதி-நின முன்னோர் போன்று நீதானும் தீய நெறியிலே செல்லாத நன்னர் நெஞ்சம் உடையையாகுக; வீங்கு நீர் ஞாலம் ஆள்வோய் ஈங்கு இவள் தன்னோடு எய்திய காரணம் கேட்டருள்-கடல் சூழ்ந்த நிலவுலகத்தை ஆளும் தகுதிமிக்கோய் யான் இவ்வுவவனத்திற்கு இம் மணிமேகலையோடு கூடி வருதற்கியன்ற காரணத்தைக் கூறுவல் திருச்செவியேற்றருள்க; யாப்புஉடை உள்ளத்து எம் அனையிழந்தோன்-என்னை இழந்ததோடன்றிக் கற்புடைமையாற் பெரிதும் தனக்குப் பொருந்திய உள்ளத்தையுடையளாயிருந்த எம் அன்னையாகிய தன் மனைவியையும் இழந்துவிட்டவனாகிய என் தந்தையாகிய; பார்ப்பன முதுமகன் படிமவுண்டியன் பார்ப்பன முதியவறான எத்தகையனோவெனின நோற்றுப் பட்டினி விட்டுண்பவனும்; மழை வளம் தரூஉம் அழலோம்பாளன் உலகிற்கு மழை வளத்தைத் தருதற்குரிய வேள்வித்தீயை முறைப்படி ஓம்புபவனும் ஆவான்காண்; பழவினைப்பயத்தால் பிழை மணம் எய்திய என கெடுத்து இரங்கி-பழவினையின் பயனாகத் தவறான மணம் எய்திய என்னை இழந்து அன்பு மிகுதியால் என பொருட்டுப் பெரிதும் இரக்கமுற்று; தன் தகவு உடைமையின்-தனக்குரிய பெருந்தகைமையை உடையவனாயிருந்தமையாலே; குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறை-குரங்குகளாலே இயற்றப்பட்ட திருவணையையுடைய கடலின்கண் அமைந்த பெரிய புண்ணியத் துறையாகிய கன்னியாகுமரித் துறையில் ஆடுதற் பொருட்டு: பரந்து செல் மாக்களொடு-பரவிச் செல்லாநின்ற மாந்தரோடு கூடி; தேடினன் பெயர்வோன் என்னைத் தேடிக் காணுங் குறிக்கோளோடு வருபவன்; என்க.

(விளக்கம்) தீநெறிப்படரா நெஞ்சினையாகுமதி என்றது வாழ்த்துவது போன்று அப் பெருந்தகைக்கு இன்றியமையாத அறிவுரை கூறியவாறாம். நீயோ உலகம் ஆளும் வேந்தன்: யாமோ ஆற்றவும் எளியேமாகிய பிக்குணிகள்; எம்திறத்திலே பெருமான் ஏதம் செய்யா தொழுகுதல்  வேண்டும் என்றுநினைவூட்டுகின்றாள். மதி: முன்னிலையசை காரணம் கூறுவல் கேட்டருள் என்றவாறு.

எம்மனை-எம் அன்னை என்னையிழந்ததே யன்றியும் எம் மன்னையையும் இழந்தோன் என்பதுபட நிற்றலின் இறந்தது தழீஇய எச்சவும்மை தொக்கது. எம்மனை என்றது எம்மூர் என்றாற் போலத் தன்னுடன் பிறந்தாரையும் உளப்படுத்தபடியாம். உயர்ந்த தாய் தந்தையர்க்குத் தோன்றியும் பழவினைப் பயத்தாற் பிழைமணம் எய்தினே னல்லது என் பிழையன்று என்பாள் தந்தையையும் தாயையும் பெரிதும் பாராட்டுகின்றனள். படிமம்-நோன்பு. தன்தகவு என்றது அந்தணனுக்கியன்ற அருளுடைமையை. குரங்கு செய்கடல் என்றது செய்கடல் என்றது தென்கடல் என்னுமாத்திரையை அறிவித்து நின்றது. குரங்கு அணைசெய்த கடல் என்றவாறு. குமரி-கண்ணியாகுமரி. குமரி ஒரு நதி என்பதும் அஃது கடல் கோட்பட்டமையின் அக் கடலும் குமரிக்கடல் எனப் பெயர் பெற்ற தெனவும் கூறுப. நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் என்பது சிலப்பதிகாரம்.(8:1. என்னைத் தேடியவனாய் என்க. அங்ஙனம் அவன் தகவுடைமையை ஏதுவாக்கினள்

இதுவுமது

39-46: கடல் மண்டு.......திரிவோன்

(இதன் பொருள்) கடல் மண்டு பெருந்துறைக் காவிரி ஆடிய வடமொழியாளரொடு வருவோன்-கடலிற் புகுதும் பெரிய துறையையுடைய காவிரியில் நீராடுதற் பொருட்டு ஈண்டு வருகின்ற வடமொழியையுடைய ஆரியரொடு கூடி வருபவன்; கண்டு என்மகள் ஈங்கு யாங்கனம் வந்தனை என்றே-என்னைக் கண்டு அந்தோ என் அருமை மகளே நீ இந்நகரத்திற்கு எவ்வாறு வந்துற்றனை என்று சொல்லி வாய்விட்டுக் கதறியழுது; தாங்காக் கண்ணீர் என்தலை உதிர்த்து-தடைசெய்தற்கியலாத அன்புக் கண்ணீரை என்தலைமேல் உதிர்த்து; ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும்-பிழை மணம் பட்டமையாலே ஓதற்றொழிலை முதன்மையாகக் கொண்ட பார்ப்பன வாழ்க்கைக்குப் பொருந்தேன் ஆயதனையும் பொருளாகக் கருதாத; காதலன் ஆதலின் ஆங்குக் கைவிடலீயான்-பேரன்புடையவன் ஆதலாலே அவ்விடத்தையே என்னைக் கைவிட்டுப் பிரிதலாற்றானாகி; இரந்தூணதலைக் கொண்டு-அந்தணரில்லத்தே பிச்சை புக்குண்ணும் வாழ்க்கையை மேற்கொண்டு; இந்நகர் மருங்கின பரந்துபடு மனைதொறும் திரிவோன்-பிச்சையின் பொருட்டு இம்மாநகரத்திலே பரவலாக வமைந்துள்ள பார்ப்பனர் இல்லந்தோறும் சென்று திரிபவன்; என்க.

(விளக்கம்) கடல் மண்டு பெருந்துறை என்றது காவிரி கடலொடு கலக்கும் புகாரை. அதனாலேயே அதற்குப் புகார் நகரம் என்பது பெயராயிற்று. புகார்-சங்கமுகம். அது புண்ணியத் தீர்த்தமாதலின் நீராடு பெருந்துறையும்  ஆயிற்று வடமொழியாளர் என்றது ஆரியப்பார்ப்பனரை. என்று கதறியழுதனன் என்பது கருத்து. தாங்காக் கண்ணீர்-தடுத்தலியலாத அன்புக் கண்ணீர் என்றவாறு; ஈண்டு,

அன்பிற்கு முண்டோ அடைக்குந்தா ழார்வலர்
புன்கணீர் பூசல் தரும்             (குறள்-71)

எனவரும் பொன்மொழி நினைக்கத்  தகும். தகுதி பற்றி, பார்ப்பனர் மனைதொறும் என்றாம்.

இதுவுமது

46-55: ஒருநாள்.........கோடலின்

(இதன் பொருள்) ஒருநாள் புனிற்றாப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன-அங்ஙனம் திரிகின்ற நாள்களுள் வைத்து ஒருநாள் அணித்தாக ஈன்ற ஆவொன்று சினந்து பாய்ந்தமையாலே அதன் கோட்டாற் கிழிக்கப்பட்ட பெரியபுண்ணை வயிற்றிலுடையவனாய்; நிணம்நீடு பெருங்குடர் கணவிரமாலை கைக்கொண்டு என்ன கையகத்து ஏந்தி-அப் புண்வழியே நிணத்தோடு கூடிய நீண்ட தனது பெருங்குடர் சரிந்துகுவது அறுந்தொழியா வண்ணம் செவ்வலரிப்பூமாலையைச் சுருட்டிக் கையிலேந்தி வருமாறுபோலே தோன்றும்படி தன் கையகத்தே தாங்கி ஏந்திக் கொண்டு; என்மகள் இருந்த இடம் என்று எண்ணி-இவ்வாரந் தாணம் என்மகள் நெடுநாள் இருந்து பழகியவிடம் என்று நினைந்து அவ்வுரிமைபற்றி; தன் உறுதுன்பம் தாங்காது புகுந்து தனக்குண்டான பெருந்துன்பம் பொறானாய் அவ்வருகத் தானத்திலே புகுத்து; சமணீர்காள் நும்சரண் என்றோனை-சமணச் சான்றோரே! சமணச் சான்றோரே! அளியோன் நுஙகட்கு அடைக்கலம் கண்டீர் என்று கதறியழுதவனைக் கண்டுழி; மை அறுபடிவத்து மாதவர்-குற்றாதீர்ந்த தவவேடந்தாங்கிய மாபெருந்துறவோர் எல்லாம் ஒருங்குகூடி; என்னொடும் வெகுண்டு. அவன் மகள் என்பதுபற்றி அவனையும் என்னையும் ஒருசேரச் சினந்து உரடபுபவர்; இவண் நீர் அல்ல என்று-இத்தகையோரை ஏற்றுக்கோடலும் பரிவுகாட்டலும் தெய்வத் தன்மையுடைய இவ்வராந்தாணத்திற்குப் பொருந்தும் நீர்மைகள் ஆகா என்னும் கருத்தோடு; புறத்துக் கைஉதிர்க்கோடலின்-வாயாற் கூறாமல் தமது கையை அசைக்குமாற்றால் எமைப் புறத்தே துரத்திவிட்டமையாலே; என்றாள் என்க.

(விளக்கம்) புனிற்று ஆ-அணிமையில் கன்றீன்ற ஆ. அதற்கு அணுகியவரைச் சினந்து பாய்தல் இயல்பு. பாய்ந்த என்றது பாய்ந்து வயிறு கிழியக் குத்திய என்பதுபட நின்றது. பாய்ந்தமையாலே பட்ட புண்ணினன் என்க. கணவிர மாலையின் சுருள் கையிலேந்திய குடாச் சுருளிற் குவமை. கணவிரம்-செவ்வலரிப்பூ; ஆகுபெயர். பெருங்குடர் என்றது-மலக்குடரை. என் மகளிருந்து பழகிய இடம் என்று எண்ணி அவ்வுரிமை பற்றி வந்து சரண்புகுந்தான் என்பது கருத்து. இஃது அத் துறவோரின்பால் கண்ணோட்டம் எட்டுணையும் இல்லை என்று காட்டற்குக் கூறியது. என்னை ? கண்ணோட்டம் என்பது தன்னொடு பயின்றாரைக் கண்டால் அவர் கூறியன மறுக்க மாட்டாமைக்குக் காரணமான ஒரு பண்புடைமையே யாதலின். கண்ணோட்ட மின்மையையும் வெகுளியுண்மையையும் முற்படக் காட்டிப் பின்னர் மையறுபடிவத்து மாதவர் என்றது முற்றிலும் அவற்றிற்கு எதிர்மறைப் பொருள் பயக்கும் இகழ்ச்சி  மொழியாதல் உணர்க. புற வேடத்திற்குக் குறைவில்லை என்பாள் மையறுபடிவத்து மாதவர் என்கின்றாள். இவன் என்றதும் இகழ்ச்சி. என்னை? கடவுள் உறையுமிடமாகிய அவ்விடத்திற்கு அருளுடைமை நீரல்ல என்பதுபட நிற்றலின். மௌன விரதிகளாதலின் கையுதிர்க் கோடல் வேண்டிற்று. இதுவும் இகழ்ச்சி. இச் சுதமதி வாயிலாய்த் தண்டமிழாசான் சாத்தனார் திறம்பட அவர் காலத்துச் சமணத் துறவோரின் இழிதகைமையை எடுத்துக் காட்டினர். இதனைக் காட்டவே இங்ஙனம் ஒரு சூழ்நிலையை அவர் உருவாக்கியுள்ளனர்; அவர் ஆருகதரின் இப்புன்மை பொறாது பௌத்த சமயம் புக்கு அச்சமயத்தைப் பரப்பும் நோக்கமடையோராதல் ஈண்டு நினையற்பாலதாம். இனி, அவர் காலத்துப் பௌத்தத் துறவிகளின் சான்றாண்மையும் இவர் இச் சுதமதியின் வாயிலாகவே உணர்த்துவதனைக் காண்பாம்.

இதுவுமது

55-64: கண்ணிறை.......குளிர்ப்பித்து

(இதன் பொருள்) கண் நிறை நீரேம் புறவோர் வீதியில் ஆரும் இலேம அறவோர் உளிரோ என புலம்பொடு சாற்ற-இவ்வாறு அச் சமண சமயத்து மாதவர் எம்மைத் துரத்திவிட்டமையால் உறுதுயர் பொறாமையாலே கண்களில் வெள்ளமாய்ப் பெருகி வீழும் நீரையுடையேமாய் அவ்வராந்தாணத்தின புறத்தே வாழ்வோருடைய தெருவிலே சென்று மாபெருந்துயரத்திற்கு ஆளாயினேம் களைகணாவார் ஒருவரையேனும் உடையேமல்லேம் ஆதலால் அளியேமாகிய எமமிடுக்கண் தீர்க்கும் அறவோர் யாரேனும் உள்ளீரோ உள்ளராயின் எம்மைப் புறந்தம்மின் என்று அரற்றிக் கூவாநிற்ப; மங்குல் தோய் மாடமனைதொறும் புகூஉம் அங்கையிற் கொண்டபாத்திரம் உடையோன்-அவ்வீதியிலமைந்த முகில் தவழும் மாடங்களையுடைய இல்லந்தோறும் பிச்சைபுகுதற்கியன்ற கோரகை என்னும் அகங்கையிற் கொண்ட பாத்திரத்தையுடையவனும்; கதிர்சுடும் அமயத்துவம் பனி மதமுகத்தோன்- ஞாயிறு சுடுகின்ற அந்த நண்பகற்பொழுதினும் குளிர்ந்த திங்கள் மண்டிலம் போலே அருள்பொழியும் திருமுகத்தையுடையவனும்; பொன்னில் திகழும் பொலம் பூவாடையன்-பொன்போலத் தூய்தாக விளக்குகின்ற பொன்னிற மருதம் பூந்துவரூட்டிய ஆடையையுடையவனும் ஆகிய பௌத்ததுறவோன் ஒருவன் எம்மையணுகி; என உற்றனிரோ-நீயிர் என்ன இடுக்கண் எய்தினிரோ என்று; எமை நோக்கி-எம்மை பரிந்து நோக்கி எமத்திடுக்கணை அறிந்துக்கொண்டபின்; அன்புடன் அளைஇய அருள் மொழியதனால் அஞ்செவி நிறைத்து நெஞ்சம் குளிர்ப்பித்து-அஞ்சன்மின் நீயிர் உற்ற துயரத்தை யாமகற்றுவோம் என்பன போன்ற அன்போடளாவிய அருள்மொழி பலகூறி எமது உட்செவியை நிறைத்து எமதுள்ளத்தையும் குளிர்ப்பண்ணி என்க.

(விளக்கம்) அறவோர்-எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர். அராந்தாணத்து அறவோர் ஒருவரேனும் இலர் என்பது இதனாற் போந்தமையும் உணர்க. அருகரல்லாத புறவோர் வாழும் வீதி என்றவாறு: காணார் கேளார் கான்முடிடப்பட்கடார் முதலிய ஆதுலர்க்கும் அன்னம் இடவேண்டுதலின் மாடந்தோறும் புகுதல் வேண்டிற்று. அங்கை-அகங்கை; உள்ளங்கை. உள்ளம் எப்பொழுதும் குளிர்ந்திருந்தலின் கதிர் சுடும் அமயத்தும் பனிமதி முகமுடையன் ஆயினன் என்பது கருத்து. பொன்னிற்றிகழும் ஆடையன் என்றது. ஆடையின்றியாதல் பாயுடுத்தாதல் அமண் துறவோர் போல்பவ னல்லன் என்பது குறிப்பாகத் தோற்றுவித்தபடியாம். முன்னர் நாணமும் ஆடையும் நன்கனம் நீத்து மண்ணாமேனியன் என(3:88-91) ஆருகதத்துறவோனை அறிவித்தமையும் நினைக. பொலம்பூ வாடையன்-பொன் போன்ற நிறமுடைய அழகிய துவராடை யுடுத்தோன். அது மஞ்சள் நிறத்தது ஆகலின் வண்ணம் பற்றிக் பொன் உவமமாகிறது. அகனமர்ந்து முகத்தான் அமர்ந்து நோக்கி அன்புடன் அளைஇய அருள்மொழி கேட்ட வளவிலே எம் துன்பம் முழுதும் தீர்ந்தாற் போன்று உள்ளம் குளிர்ந்தோம் என்றது. இங்ஙனம் பேசுவதே மொழியாற் செய்யும் நல்வினை என்னும் புத்தருடைய கொள்கையை அவன் முழுதும் மேற்கொண்டொழுகுபவன் என்பதை புலப்படுத்து நின்றது.

இதுவுமது

65-70: தன்கை........அருளிய

(இதன் பொருள்) தன்கைப் பாத்திரம் என்கைத் தந்து-தன் அங்கையிலேந்திய பிச்சைப் பாத்திரத்தை என்கையிலே கொடுத்துவிட்டு; ஆங்கு எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க-அப்பொழுதே என் தந்தை எய்திய துன்பம் நீங்கும் வண்ணம்; தழீஇ எடுத்தனன் தலை ஏற்றிக் கடுப்ப மாதவர் உறைவிடம் காட்டிய தன்னிருகைகளானும் மகவினை எடுப்பார் போன்று தழுவி எடுத்துத் தன்தலையாலே சுமந்து விரைந்துசென்று தன்னோரனைய சிறந்த துறவோர் உறைவிடத்தை எமக்கு உறையுளாகக் காட்டியவனும்; மறையோன் சாதுயர் நீக்கிய தலைவன்-பார்ப்பனனாகிய எந்தைக்குப் பின்னும் மருத்துவஞ்செய்து அவன்சாதற்குரிய பெருந்துயரத்தை நீக்கியவனும் தலைமையடையவனும்; தவமுனி சங்கதருமன் தான் எமக்கு அருளிய-வினையின் நீங்கி விளங்கி ய அறிவுடையவனுமாகிய சங்கதருமன் என்னும் சிறப்புப் பெயருடைய நல்லாசிரியன் தானே முனைவந்து எந்தையும் யானும் ஆகிய எம்மிருவருக்கும் திருவாய் மலர்ந்தருளிய; என்க.

(விளக்கம்) ஆங்கு-அப்பொழுதே. இரண்டு கைகளானும் தழுவி எடுக்க வேண்டித் தன்கைப் பாத்திரத்தை என் கைத்தந்து என்பது கருத்து. குடர் சரிந்து வீழாதபடி எடுக்க வேண்டுதலின் தழீஇ எடுத்தல் வேண்டிற்று. இரண்டு கைகளானும் அவனை மேனோக்கிய வண்ணம் மகவினை எடுக்குமாறு போலவே எடுத்தத் தலைமிசை ஏற்றிக் கொடு விரையச் சென்றுமாதவர் உறைவிடத்தை எமக் குறையுளாகக் காட்டிப் பின்னும் மருத்துவத்தால் சாதுயர் நீக்கியவன் என்றாள் என்க. தலைவன் என்றது சங்கத் தலைமையுடைமையை, சங்கதருமன் என்றது சிறப்புப் பெயர். சங்கத்தார்க்கு அறம் அறிவுறுத்தும் ஆசான் என்பது சிறப்புப் பெயர். சங்கத்தார்க்கு அறம் அறிவுறுத்தும் ஆசான் என்பது கருத்து. அவன்றானே முன்வந்து எமக்கு அறிவுறுத்தருளிய என்க. இவ்வாற்றால் நூலாசிரியர் பௌத்தத் துறவோரின் சான்றாண்மை புலப்படுத்திய நுணுக்க முணர்க.

இதுவுமது

71-76: எங்கோன்................வாழ்கென

(இதன் பொருள்) எம்கோன்-எம்முடைய இறைவனும்; இயல்குணன்-இயல்பாகவே மெய்யுணர்வு தலைப்பட்டவனும்; ஏதும் இலகுணப் பொருள்-குற்றமில்லாத குணங்கட்கெல்லாம் தானே பொருளானவனும்; உலகநோன்பின் பலகதி உணர்ந்து-துறவாமலே நோன்பு நோற்று உயிர்கள் பிறக்கும் பலவேறு பிறப்புக்களினும் பிறந்து பிறர்க்குரியாளன-தனக்கென முயன்று வாழாமல் பிறர் வாழ்தற் பொருட்டே முயல்பவனும் ஆகிய; இன்பச் செவ்வி மனபதை எய்த-தான் கண்ட வீட்டின்பம் எய்துதற்குரிய செவ்வியை மன்னுயிரெல்லாம் எய்துதறகுரிய; அருளறம் பூண்ட ஒருபெரும் பூட்கையின்-அருளாகிய அறத்தை மேற்கொண்டொழுகுமொரு பெரிய கோட்பாட்டோடு; அறக்கதிர் ஆழி திறப்பட உருட்டி-அறமாகிய ஒளியுடைய சக்கரத்தைச் சிறிதும் சோர்வின்றி உருட்டி; காமன கடந்த வாமன்-காமனை வென்றுயர்ந்த அழகனகிய புத்ததேவனுடைய; தகைபாராட்டுதல் அல்லது-தெய்வத்தன்மையை இடையறாது பாராட்டுகின்ற செந்நாவையுடையேனல்லது; மிகைநாவிலலேன் வேந்தே வாழ்க என வேறு தெய்வங்களைப் பாராட்டற்கியன்ற மிகையான செயலையுடைய நாவல்லேன் அரசே நீடுழி வாழ்க! என்றாள் என்க.

(விளக்கம்) எங்கோன்-எமக்கு ஆத்தனானவன். பௌத்தர்கள் ஆத்தனாகிய புத்தனையே கடவுளாகவும் கொள்வர். இதனை,

முற்றுணர்ந்து புவிமீது கொலையாதிய
தீமை முனிந்து சாந்தம்
உற்றிருந்து கருணையினாற் பரதுக்க
துக்கனா யும்ப ரோடு
கற்றுணர்ந்த முனிவரருங் கண்டுதொழப்
பிடகநூல் கனிவான் முன்னம்
சொற்றருந்த வுரைத்தருளூந் தோன்றலே
கடவுள்அருட் டோன்ற லாவான்

எனவரும் மெய்ஞ்ஞான விளக்கத்தானும் (சருக்கம் 32-4) உணர்க. குணமாகிய பொருள் என்க. உலக நோன்பு-துறவாமலே மேற்கொள்ளும் நோன்பு. புத்தர் வினையாலன்றி அருள் காரணமாகக் கை வந்த முத்தியைக் கைவிட்டு வாலறிவுடன் விலங்கு முதலிய பிறப்புக்களினும் புக்கும் பிறர்க் குழன்றார் என்பர். இதனை

வானாடும் பரியாயும் மரிணமாயும்
வனக்கேழற் களிறாயு மெண்காற்புண்மான்
றானாயு மனையெருமை ஒருத்தலாயுந்
தடக்கையிளங் களிறாயுஞ் சடங்கமாயு
மீனாயு முயலாயு மன்னமாயு
மயிலாயும் கொலைகளவு கட்பொய்காமம்
வரைந்தவர்தா முறைந்தபதி மானாவூரே

எனவரும் நீலகேசியில்(206) யாமெருத்துக்காட்டிய பழஞ்செய்யுளானு மூணர்க. ஏதமில் குணப் பொருள் என்றதனை

மீனுருவாகி மெய்ம்மையிற் படிந்தனை
மானுருவாகியே வான்குண மியற்றினை

எனவும்

எறும்புகடை அயன்முதலா எண்ணிறந்த வென்றுரைக்கப்
பிறந்திறந்த யோனிதொறும் பிரியாது சூழ்போகி
எவ்வுடம்பி லெவ்வுயிர்க்கும் யாதொன்றால் இடரெய்தின்
அவ்வுடம்பி லுயிர்க்குயிரா யருள்பொழியுந் திருவுள்ளம்

எனவும். வரும் பழம் பாடல்களையும் (வீரசோழியம் யாப்பு எடத்துக் காட்டுக்கள்) ஒப்பு நோக்குக. இன்பச் செவ்வி என்றது-வீடுபெறும் நிலைமையை. இதனை 30 ஆம் காதையில் விளங்கக் காணலாம். மன்மதை-மன்னுயிர். தகை-கடவுட்டன்மை யாகிய பெருந்தகைமை. மிகைநா-இதனைக் கடந்து பிற தெய்வங்களை வாழ்த்தும் நா.

உதயகுமரன் போதலும் மணிமேகலை தன்னிலை சுதமதிக்கு இயம்பலும்

80-90: அஞ்சொல்........நெஞ்சம்

(இதன் பொருள்) அம்சொல் ஆயிழை நின்திறம் அறிந்தேன்-அழகிய சொற்றிறமமைந்த சுதமதி நல்லாய் நன்று யான் நின் வரலாறு அறிந்துகொண்டேன்; வஞ்சி நுண்ணிடை மணிமேகலை தனைச் சித்தராபதியால் சேர்தலும் உண்டு என்று அயர்ந்து வஞ்சிக் கொடிபோலும் நுண்ணிய இடையையுடைய மணிமேகலை யான் சித்திராபதிவாயிலாய்ச் சேர்தற்கும் இடன் உண்டுகாண் அவள் செவ்வியளாயின் செவ்வியளாகுக என்று தன் செயலறவினாற் கூறியவனாய்; ஆங்கு அப் பொழில் அவன் போய்பின்-அவ்வளவின் அம் மலர்ப் பொழிலினின்றும் அவ்வரசிளங்குமரன் அகன்றுபோய் பின்னர்; பளிக்கறை திறந்து மணிமேகலை அப் பளிக்கறையின் தாழ்நீங்கித் திறந்து வந்தவள்; பனிமதி முகத்துக் களிக்கபல் பிறழாக் காட்சியளாகி-குளிர்ந்த திங்கள் மண்டிலம் போன்ற தன் முகத்தின்கண் களிக்கன்ற கயல்மீன் போன்ற கண்கள் அவனைக் கண்டகாட்சி கலங்காமைப் பொருட்டுப் பிறழாது நிலைத்த காட்சியையுடையளாய்ச் சுதமதியை அணுகிக்கூறுபவள்; (60) அன்னாய்-அன்னையே ஈதொன்றுகேள்; புதுவோன்-நமக்குப் புதியவனாகிய இவ்வரசன் மகன் என்னை; கற்புத்தான் இலள் நல் தவ உணர்வு இலள் வருணக் காப்பு இளல் பொருள் விலையாட்டி என்று இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது-இவள் நிறையில்லாதவள், நன்மை மிக்க தவத்திற்குக் காரணமான மெய்யுணர்வு கைவரப் பெறாதவள், வருணத்தாலே தன்னைத்தான காக்கும் குலமகளும் அல்லள்; பொதுமக்கள், பொருட் பொருட்டுத் தன்னையே விற்கு மியல்புடையள் என்று இன்னோரன்ன கூறி இகழ்ந்தவனாய் என அழகின் பொருட்டே காமுறுபவன் என்று தானும் இகழ்ந்து புறக்கணியாமல்; என் நெஞ்சம்(புதுவோன்) பின் போனது-எனது புல்லிய நெஞ்சம் அவ்வேதிலானையும் விரும்பி அவனைத் தொடர்ந்து அவன் பின்னே போயொழிந்தது! என்றாள் என்க.

(விளக்கம்) கண் களிக் கயல்போல் இடையறாது பிறழ்தல் தமக்கியல் பாகவும் அவனைக் கண்ட காட்சி மறையும் என்று அஞ்சிப் பிறழாதிருக்கின்ற காட்சியளாகி என்றவாறு. கற்புத்தானிலள் என்று இகழ்ந்தான் என்றது அவன் நிறையும் உண்டோ காமம் காழ் கொளின் என்றதன் குறிப்புப் பொருளை உட்கொண்டு கூறியபடியாம். நிறை கைகூடாதாகவே தவவுணர்வும் இலள் என்பதும் குலமகள் அல்லள் என்பதும் வருணக் காப்பின்மையும் பொருள் வலையாட்டியாதலும் ஆகிய வசைச் சொற்கள் அனைத்தும் அதன் குறிப்புப் பொருளாக மணிமேகலை கொண்டு கூறுகின்றாள் போலும். இனி அவன் இங்கனம் இகழ்ந்தமையை வழீ மொழிதல் வாயிலாய் பெறவைத்தவாறுமாம். இகழ்ந்தனனாகி நயந்தோன் என்றது அவன் நம்மழகை மட்டுமே நயக்கின்றான் என்றவாறு. என்னெஞ்சம் என்றது என் புல்லிய நெஞ்சம் என்பதுபட நின்றது.

சொற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன் றன்று                 (1255)

எனவரும் திருக்குறள் ஈண்டு நினைக்கத்தகும். புதுவோன் என்பதனை எழுவாயாகவும் எடுத்துக் கூட்டுக.

மணிமேகலா தெய்வம் வந்து தோன்றுதல்

90-96: இதுவோ.........பைந்தொடியாகி

(இதன் பொருள்) அன்னாய் இதுவோ காமத்தியற்கை-அன்புடையோய்! இவ்வாறு உயர்வும் இழிதகைமையும் உன்னிப் பாராமல் சென்றவிடத்தால் நெஞ்சத்தைச் செலுத்தும் இத் தீய பண்புதான் காமத்தின் இயல்பேயோ யான் இதுகாறும் அறிந்திலேன்காண்; அது திறம் இதுவே ஆயின் அதன் திறம் கெடுக என-அக் காமத்தின் தன்மை இவ்விழிதகைமையே ஆயின் அதன் ஆற்றல் ஒழிவதாக! என்று வியந்துகூறி; மதுமலர்க் குழலாள் மணிமேகலைதான்-தேன் பொதுளிய மலரணியும் பருவமுடைய கூந்தலையுடைய அம் மணிமேகலை நல்லாள்; சுதமதி தன்னொடு நின்ற எல்லையுள்-அன்புடைய சுதமதியோடு சொல்லாடி நின்றபொழுதில்; இந்திரகோடணை விழா அணி விரும்பி தேவேந்திரனுக்கு அந் நகரத்தே நிகழ்கின்ற ஆரவாரமுடைய விழாவின் அழகைக் காண விரும்பி; வந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம்-வந்து காணுகின்ற மணிமேகலா தெய்வம் என்னும் மணிமேலையின் தந்தைவழிக்குல தெய்வமானது மணிமேகலை நெஞ்சம் காமுற்றுப் புதுவோன் பின்போன செவ்வியறிந்து அவளைத் தடுத்து நன்னெறிப்படுத்துதற் பொருட்டு; பதியகத்து உறையும் ஓர் பைந்தொடியாகி-அந் நகரத்திலே வாழுமொரு பசிய வளையலையுடையா ளொரு மானுடமகள் வடிவந்தாங்கி; என்க.

(விளக்கம்) இதுவோ-இத்தகைய இழிதகவுடையதோ என்புழி ஓகாரம் ஒழியிசை. என்னை? அனையதாயினும் அழிக்குதும் என்பது குறித்து நிற்றலின். கோடணை-ஆரவாரம். அணி-அழகு. காண்குறூஉம்-என்றமையால் அத் தெய்வம் இந்திர விழாக் கால் கொண்ட பொழுதே அங்கு வந்தமை பெற்றாம். ஈண்டு வருதற்குக் காரணம் மணிமேகலைக்கு எதிர்ந்துள ஏது நிகழ்ச்சியை அறிந்து அவ்வழி அவளை ஆற்றுப்படுத்தற்குக் கருதியதாம் என்க. என்னை? அஃது அவட்குக் குல தெய்வமும் ஆகலான். அதனை,

வந்தேன் அஞ்சன் மணிமேகலை யான்
ஆதிசால் முனிவன் அறவழிப் படூஉம்
ஏதுமுதிர்ந் துளது இளங்கொடிக் காதலின்
விஞ்சையிற் பெயர்த்துநின் விளங்கிழை தன்னை
வஞ்சமின் மணிபல் லவத்திடை வைத்தேன்

எனப் பின்னர் அத் தெய்வமே(துயலெழுப்பிய காதையில்) இயம்புதலானும் அறிக. இக் கருத்தை யுட்கொண்டே இக் காதை முகப்பின் (.......உதயகுமரன் பால் உள்ளத்தாள் என மணிமேகலைக்கு மணிமேலா தெய்வம் வந்து தோன்றிய பாட்டு.) என்று முன்னையோர் வரைந்தனர் என்றுணர்க.

மணிமேகலா தெய்வம் புத்தபீடிகையை வலஞ்செய்து வாழ்த்தி வணங்குதல்

96-108: மணியறை.........நீட்டும்

(இதன் பொருள்) மணி அறைப் பீடிகை வலங்கொண்டு ஓங்கி-உவவனத்தின் கண்ணதாகிய அப் பளிக்கறையின் உள்ளே அமைந்த புத்தபீடிகையை வலமாக வந்து பின்னர் வானத்தின் கண் உயர்ந்துநின்று; புலவன்-எல்லார்க்கும் அறிவாயுள்ளவனே; தீர்த்தன-தூயோனே!; புண்ணியன-அறத்தின் திரு மூர்த்தியே!; புராணன்-பழைமையுடையோனே!; உலகநோன்பின் உயர்ந்தோய் எனகோ-உன்னை, துறவாமலே நோன்பு செய்து உயர்ந்தோன் என்று புகழவேனோ?; குற்றம் கெடுத்தோய்-காம வெகுளிமயக்கமாகிய குற்றங்களை அழித்தவனே என்றும்; செற்றம் செறுத்தோய்-அடிப்பட்ட சினத்தையே சினந்தவனே என்னும்; முற்ற வுணர்ந்த முதல்வா என்கோ-முழுதும் ஓதாமலே உணர்ந்திட்ட முழுமுதல்வனே என்றும் பாராட்டுவேனோ?; காமற் கடந்தோய் ஏம்ம ஆவோய் தீநெறிக்கடும்பகை கடிந்தோய் என்கோ-காமனை வென்றவனே மன்னுயிர்க்கெல்லாம் காவலானவனே  தீமை பயக்கும் வழியிற் செலுத்தும் ஐம்பொறிகளாகிய கடிய பகையை வெனறொழித்தவனே என்று சொல்லிப் புகழவேனோ?;
ஆயிர ஆர்த்து ஆழியம் திருந்து அடி-நின்னுடைய ஆயிரம் ஆரக்கால்களோடு கூடிய சக்கர ரேகையுடைய அழகிய திருவடிகளை; ஆயிரம் நாஇலேன்-ஆயிரம் நாவுகளின்றி ஒரே நாவுடைய யான்; ஏததுவது எவன்-புகழ்ந்து பாராட்டுதல் எங்ஙனமாம்; என்று என்று பலவும் சொல்லிப் புகழ்ந்து; எரிமணிப் பூங்கொடி இருநிலம் மருங்கு வந்து ஒருதனி திரிவது ஒத்து-ஒளிவீசும் அழகிய காமவல்லி என்னும் வான்நாட்டுப் பூங்கொடி ஒன்று தனித்து நிலவுலகத்திலே திரிந்தாற் போன்று; ஓதியின் ஒதுங்கி-ஓதிஞானத்தோடே இயங்கி; நிலவரை இறந்து(ஓர்) முடங்கு நாநீட்டும்-நிலப்பரப்பினைக் கடந்து கானிலந் தோயாமலே நின்று அவன் புகழ் கூறமாட்டாமையால் முடக்கிய தன் நாவினை நிமிர்த்துப் புகழாநிற்கும் என்க.

(விளக்கம்)  மணியறை-பளிக்கறை. வானத்திலோங்கி என்க புண்ணியன்-அறவோன் குற்றம்-காமவெகுளி மயக்கம். என்கோ என்பேனா? புராணம்-பழைமை. ஏமம்-பாதுகாவல்; இன்பமுமாம். தீநெறி-தீயவழியில் ஒழுகும் ஒழுக்கம். தீயநெறியிற் செலுத்தும் கடியபகை. ஆயிரம் ஆரங்களையுடைய சக்கரக் குறி கிடந்த திருந்தடி என்க. நின்னைப் புகழ் நாவாயிரம் வேண்டும் அவையிலேன் எவ்வாறு புகழ்வல்? என்றவாறு. ஓதி-மெய்யறிவு; முக்காலமும் அறியும் முற்றறிவுமாம். ஓர்: அசை. கூற மாட்டாது முடங்கி நாவை மீண்டும் நிமிர்த்து என்க. நிமிர்த்திப் பாராட்ட என்று முடிந்திடுக. நீட்டும் நீட்டிப் பாராட்டிப் பரவுவாள் என்க. நீட்டும்: செய்யும் என்னும் முற்றச் சொல்.

அந்திமாலையின் வரவு

(109 ஆம் அடிமுதலாக,141 ஆம் அடிமுடியப் புகார் நகரத்தே அற்றைநாள் அந்திமாலை வரவின் வண்ணனையாய் ஒரு தொடர்.)

109-122: புலவரை...........பெய்தலும்

(இதன் பொருள்) புலவரை இறந்த புகார் எனும் பூங்கொடி-அறிவினது எல்லையையும் கடந்துதிகழ்கின்ற பேரழகோடு கூடிய பூம்புகார் நகரம் என்னும் மலர்ந்த கொடிபோலும் மடந்தை எத்தகையளோ வெனின் அவள்தான்; பல்மலர் சிறந்த நல்நீர் அகழி அடி-பல்வேறு வண்ணமலர்களாலே நல்ல நீர்மையையுடைய (நீரையுடைய) அகழியாகிய திருவடிகளையும் அவ்வகழியின் கண்ணிருந்து ஆரவாரிக்கின்ற; புள ஒலிசிறந்த தௌஅரிச் சிலம்பு-பறவை இனமாகிய அவ்வடியிற் கிடந்து முரலும் சிறந்த தெளிந்த ஓசையைச் செய்யும் பரல்களையுடைய சிலம்புகளையும்; ஞாயில் இஞ்சி-ஞாயிலென்னும் உறுப்போடு கூடிய மதில்வட்டமாகிய; நகை மணிமேகலை-(அந்நகர் நங்கை இடையிலணிந்த) ஒளிமிக்க மணிகளாலியன்ற மேகலை என்னும் அணிகலனையும் வாயில் மருங்கு இயன்ற வான் டணைத்தோளி-வாயிலின இரு மருங்கும் நடப்பட்டுள்ள உயர்ந்த மூங்கிலாகிய தோள்களையும் உடையாள்; தருநிலை வச்சிரம் என எதிர்எதிர் ஓங்கிய இருகோட்டம்-தருநிலைக் கோட்டம் எனவும் வச்சிரக் கோட்டம் எனவும் கூறப்படுகின்ற ஒன்றற்கொன்று எதிர்எதிராக உயர்ந்து திகழும் இரண்டு கோட்டங்களாகிய; கதிர் இளவனமுலை-ஒளியும் இளைமையும் அழகும் உடைய இரண்டு முலைகளையும்; ஆர்புனை வேந்தற்குப் பேரளவு இயற்றி ஊழிஎண்ணி நீடுநின்று ஓங்கிய ஆத்திமாலை சூடிய சோழமன்னனுக் கென்றே உலகத்து அரண்மனைகளுள் வைத்துப் பெரிய அளவுடையதாக இயற்றப்பட்டு ஊழிபலவும் எண்ணியறிந்து நீடூழிகள் நிலைத்து நின்று புகழாலுயர்ந்திருக்கின்ற; ஒரு பெருங்கோயில்-உலகில் ஒப்பற்ற பெரிய அரண்மனையாகிய; திருமுகவாட்டி -அழகிய முகத்தினையும் உடையவளாவாள்; குணதிசை மருங்கின் நாளமுதிர் மதியமும் குடதிசை மருங்கின் சென்றுவீழ் கதிரும்-அற்றை நாள் கீழ்த்திசையினின்றும் எழாநின்ற வளர்பிறைப் பக்கத்து நாளெல்லாம் முதிர்ந்தமையாலே முழுவுருவமும் பெற்ற நிறைத் திங்கள் மண்டிலமும் மேற்றிசையிலே சென்று வீழ்கின்ற ஞாயிற்று மண்டிலமும்; வெள்ளி வெளதோட்டொடு பொன்தோடு ஆக-வெள்ளியாலியன்ற வெள்ளைத் தோடாகவும் பொன்னாலியன்ற செந்தோடாகவும்; எள் அறு திருமுகம் பொலியப் பெய்தலும்-குற்றமற்ற அந் நகர நங்கையின் அழகிய முகமானது மேலும் பொலிவுறும்படி காலம் என்னும் அவளுடைய தோழியானவள் அணிந்து விடாநிற்பவும் என்க.

(விளக்கம்) புலவரை-அறிவின் எல்லை; அழகு அறிவிற்கன்றி உணர்ச்சிக்குப் புலனாதலின் அறிவின் எல்லை இறந்த என்றார். அகழியாகிய அடியையும் அதன்கண் பன்னிற மலரினின்று ஆரவாரிக்கின்ற புள்ளொலியாகிய அவள் தன் சிலம்பையும். இஞ்சியாகிய மேகலையையும், இருமருங்கும் நடப்பட்ட மூலையினையும், அரண்மனையாகிய திருமுகத்தையும் உடைய பூம்புகார் என்னும் நகர் மடந்தைக்கு அற்றைநாள் எழுகின்ற திங்கள் மண்டிலத்தை ஒரு செவியினும், வீழ்கின்ற ஞாயிற்று மண்டிலத்தை ஒரு செவியினும் வெள்ளித் தோடாகவும் பொன் தோடாகவும் அரண்மனையாகிய திருமுகம் பொலியும்படி காலமாகிய அந் நகர் நங்கையின் தோழி அணிந்து விடவும் என்க. இது குறிப்புவமை அணி. காலமாகிய தோழி என வருவித்துக் கூறுக.

தருநிலை வச்சிரம் என இரு கோட்டம் என்றது தருநிலைக் கோட்டமும் வச்சிரக் கோட்டமும் ஆகிய இரு கோட்டங்களும் என்றவாறு. தரு-கற்பகம். கற்பசத்தரு நிற்கும் கோட்டமும் வச்சிரப்படை நிறுத்தப்பட்ட கோட்டமும் என்க. கோட்டம்-கோயில். இவை ஒன்றற் கொன்று அணித்தாக ஒன்றுபோல உயர்ந்த கோட்டங்களாதலின் இங்ஙனம் உருவகஞ் செய்தார்.

இதுவுமது

123-132: அன்னச்சேவல்.........படர

(இதன் பொருள்) அன்னச் சேவல் அயர்ந்து விளையாடின தன் உறுபெடையைத் தாமரை அடக்க-அன்னப்பறவையினுள் வைத்துச் சேவலன்னமானது பெரிதும் தன்னை மறந்து காதல் விளையாடல் நிகழ்த்திய தனக்குரிய பெடையன்னத்தைக் கதிரவன் மேலைக்கடலில் மறைதலாலே ஆட்டத்திற்குக் களமாயிருந்த தாமரை மலரானது இதழ்குவித்துத் தன்னுள்ளே அடக்கி மறைத்துக் கொள்ளுதலாலே; பூம்பொதி சிதையத் கிழித்துப் பெடைகொண்டு ஓங்கு இரு தெங்கின் உயர்மடல் ஏற-அத் தாமறையின் இதழ்களாலியன்ற பொதி சிதைந்தழியும்படி கிழித்து அச் சேவலன்னம் தன்பெடையன்னத்தை எடுத்துக்கொண்டு உயர்ந்து நிற்கின்ற தெங்கினது உயர்ந்த மடலினூடே ஏறியிருப்பவும் அன்றில் பெடை அரிக்குரல் அழைஇச் சென்றுவீழ் பொழுது சேவற்கு இசைப்ப-பெடையன்றில் தனது அரித்தெழுகின்ற குரலாற் கூவுமாற்றாலே குடகடலிலே கதிரவன் சென்று வீழ்கின்ற அந்திமாலையாகிய பொழுதின் வரவினைத் தன் சேவலன்றிலுக்கு அறிவிப்பவும்; பவளச் செங்கால் பறவைக் கானத்துக் குவளைமேய்ந்த-பவளம் போன்று சிவந்த கால்களையுடைய அன்னப்பறவைகள் செறிந்துள்ள கானகத்தினுதடே குவளை மலர்களை மேய்ந்த; சேதா குடம் முலைக்கண் பொழி தீம்பால் எழுதுகள் அவிப்ப-செவ்விய பசுக்களின் குடம்போன்ற முலையிற் கண்களிற் சுரந்து பொழியாநின்ற இனிய பாலே அவற்றின் இயக்கத்தாலே எழுகின்ற துகளை அடக்கும்படி; கன்று நினை குரல்-தத்தம் கன்றை நினைத்துக் கூப்பிடுகின்ற குரலையுடைய வாய் விரைந்து; மன்றுவழிப் படர-தத்தம் மன்றங்களிற்குச் செல்கின்ற வழியின்மேற் செல்லா நிற்பவும் என்க.

(விளக்கம்) இதன்கண் தனக்குரிய பெடையை, தாமரை பொதிந்து கொள்ள அதுகண்ட அன்னச் சேவலானது அப்பொதியைச் சிதைத்து அப் பெடையை எடுத்துக் கொண்டு தெங்கின் உயர் மடலில் ஏறிற்றாகக் கூறிய இக் கருப்பொருட் புறத்தே உதயகுமரனுடைய உள்ளத் தடத்தில் மலர்ந்துள்ள ஏது நிகழ்ச்சியாகிய தாமரை மலரானது மணிமேகலையாகிய தூய அன்னத்தைத் தன்னுள் வைத்துக் காமமாகிய தன்னிதழ்களாலே மறைந்துக் கொள்ளா நிற்ப அவ் விதழ்கள் சிதையும்படி மணிமேகலா தெய்வம் மணி பல்லவத்திற்கு எடுத்துப் போய் உயரிய துறவு நெறியில் சேர்ப்பித்தலாகிய பொருள் தோன்றி அற்றை நாளிரவு நிகழ்ச்சியை ஒருவாறாக நினைப்பித்து நிற்றலையும் நினைக. இவ்வாறு ஒன்று கூற அதுவே பிறிதொரு பொருளையும் நினைவூட்டுவதாக அமைக்குந் திறம் சாத்தனார் போன்ற மாபெருங் கலைஞர்க்கே இயல்வது போலும். இங்ஙனம் தோன்றுவதனை,(தொனிப் பொருள் என்னும்) குறிப்புப் பொருள் என்க.

காதற்றுணையைப் பிரிந்துறைய நேரின் அன்றிற் பறவை இறந்து படும் ஆதலால் தனக்கிரை கொணரச் சென்றுள்ள சேவலுக்குத் தனது அரிக்குரலாலே கதிரவன் மறைவதனை அறிவிக்கின்றது என்க. அரிக் குரல்-அரித்தெழும் ஒலி; இஃது இழுமென்னும் இனிய வொலிக்கு முரண் ஆய வொலியாம். அழைஇ-அழைத்து. குடக்கண்-குடம்பால் கறக்கும் முலையின்கண் எனலுமாம் இத்தகைய பசுக்களைக் குடச்சுட்டு என்னும் பெயராலும் குறிப்பதுண்டு. இதனை....

புல்லார் நிரைகருதி யாஞ்செல்லப் புண்ணலம்
பல்லார் அறியப் பகர்ந்தார்க்குச்-சொல்லால்
கடஞ்சுட்ட வேண்டா கடுஞ்சுரையா னான்கு
குடஞ்சுட் டினத்தாற் கொடு

எனவரும் புறப்பொருள் வெண்பாமாலை வரலாற்று வெண்பாவானும் அதன் உரையானும் உணர்க(வெட்சி-18).

சேதா-செவ்விய பசு. சிவந்த நிறமுடைய பசு எனலுமாம். பசுக்களில் சிவப்புப் பசுவே சிறந்தது என்பது இதன் கருத்தென்க.

சேதா...........படர என்னுமிதனோடு மதவுநடை நல்லான் வீங்குமாண் செருத்தல் தீம்பால் பிலிற்றக் கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் மாலையும் எனவும்(அகநா-14) ஆன்கணங் கன்று பயிர் குரல மன்று நிறை புகுகர (குறிஞ்சி-217) எனவும் வரும் பிறநூற் சொற்றொடர்களையும் ஒப்பு நோக்குக.

இதுவுமது

133-141: அந்தியந்தணர்........மருங்கென்

(இதன் பொருள்) அந்தணர் அந்திச் செந்தீப் பேண-மறையவர் தம்மறை விதித்தாங்கு அந்திப் பொழுதிலே வளர்க்க வேண்டிய வேள்வித் தீயை அவிசொரிந்து வளர்ப்பவும்; பைந்தொடி மகளிர் பலர் விளக்கெடுப்ப-பசிய பொன் வளையலணிந்த மங்கலமகளிர் பலரும் தத்தம் மனைதொறும் திருவிளக் கேற்றித் தொழா நிற்பவும்; யாழோர் மருதத்து இன்னரம்பு உளர-யாழ் வாசிக்கும் இசைவாணராகிய பாணரகள் மருதப்பண் எழீஇ இனிய இசை தரும் யாழ் நரம்புகளை வருடாநிற்பவும்; கோவலர் முல்லைக்குழல் மேற் கொள்ள-கோவலராகிய ஆயர்கள் தமக்குரிய முல்லைப் பண்ணை வேய்ங்குழலிடத்தே ஊதாநிற்பவும்; அமரகம் மருங்கில் கண்வனை இழந்து தமர் அகம் புகூஉம் ஒருமகள் போல-போர்க் களத்திடத்தே தன் கணவன் இறந்து படுதலாலே பெருந்துன்பத்தோடே தன் பெற்றோர் இல்லத்திற்குத் தனியே செல்லும் ஒரு மங்கையைப் போல; கதிர் ஆற்றுப்படுத்த முதிராசத்துன்பமோடு அந்தி என்னும் பசலை மெய்யாட்டி-கதிரவனாகிய தன் கணவனை மறைந்தொழியும்படி போக்கி விட்டமையாலே முடிவில்லாத பிரிவுத்துன்பத்தோடே அந்தி மாலை என்னும் பெயரையுடைய பசலை பாய்ந்த மெய்யினையுடைய நங்கை; மாநகர் மருங்கு வந்து இறுத்தனள்-பெரிய அப் பூம்புகார் நகரிடத்தே வந்து தங்குவாளாயினள்; என்பதாம்.

(விளக்கம்) (23-41) இவ்வந்திமாலை வண்ணனையில் அன்னச் சேவல் தாமரை முதலிய மருதக்கருப் பொருளும் அன்றிற் சேவல் பெடை முதலிய நெய்தற் கருப்பொருளும், ஆவும் கோவலருமாகிய முல்லைக்கருப் பொருளும் வந்து மயங்கின.

கதிரவனைப் போக்கிய என்க. பிரிவாற்றாமையால் பசலைபூத்த மெய்யினை உடையளாய் என்றவாறு. செக்கர் வானத்தை அவளுடைய பசலை மெய்யாக உருவகித்த படியாம்.

மணிமேகலை தமரையும் காதலனாகிய உதயகுமரனையும் பிரிந்து போய் வருந்துதலைக் கருத்துட் கொண்டு புலவர் பெருமான் இக் காதையைத் துன்பியல் முடிவுடைத்தாக இயற்றினர். என்னை? அடுத்து வருவன அவலச் சுவையே நிரம்பிய காதைகளாதலால் அச் சுவைக்கு இவ்வாறு கால்கோள் செய்கின்றனர், காப்பியவுத்தி பலவும் கைவந்த தண்டமிழ் ஆசான் சாத்தனார் என்க.

இனி இக் காதையை-இளங்கோன் கண்ட பூங்கொடி உருவம் பெயர்ப்ப வியப்போன் தெளிந்து சூழ்வோன் உரையென, உரைப்ப ஆகென அகல்வோன்,உரையினை உரையென வேந்தே கேட்டருள், இழந்தோன் வருவோன் கண்டு உதிர்த்துத் திரிவோன் புண்ணினன் புகுந்து என்றோனை. என்னொடும் கையுதிர்க் கோடலின், உடையோன் நோக்கித், தந்து ஏற்றிக் காட்டிய சங்கதருமன். அருளிய தகை பாராட்டுதல் அல்லது இல்லேன் என அறிந்தேன் என்று. போயபின் என் நெஞ்சம் போனது கெடுக என, தெய்வம் ஆகி நீட்டும் நீட்ட; அடக்க இசைப்பப் படர எடுப்ப உளரக் கொள்ள இழந்து மெய்யாட்டி  மாநகர் மருங்கு இறுத்தனள் என்று இயைத்திடுக.

மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை முற்றிற்று
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 08:56:16 AM
6. சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை

ஆறாவது மணிமேகலை தனக்கு மணிமேகலா தெய்வம் சக்கரவாளக் கோட்டம் உரைத்து அவளை மணிபல்லவத்துக் கொண்டுபோன பாட்டு

அஃதாவது-அரசன் மகன் சென்ற பின்னர் அங்குப் பதியகத் துறையுமோர் பைந்தொடியாகி வந்த மணிமேகலா தெய்வம் நீயிர் எற்றிற்கு இங்கு நிற்கின்றீர் என வினவ, சுதமதி மன்னன் மகன் நிலைமை கூறுதலும் அது கேட்ட தெய்வம் நீங்கள் வந்த வழியே சென்றால் மன்னன் மகன் மணிமேகலையைப் பற்றிக் கொள்வான் ஆதலால் இட் பொழிலின் மேற்றிசை மதிலிலமைந்த சிறிய வழியே சென்று, சக்கரவாளக் கோட்டத்தேயுள்ள துறவோர் இருக்கைக்குச் செல்லுமின், என அதுகேட்ட சுதமதி சுடுகாட்டுக் கோட்டம் என்பதனை நீ சக்கரவாளக் கோட்டம் என்கின்றினை அதற்குக் காரணம் என்? என வினவ அத் தெய்வம் அதன் வரலாற்றை விரிவாகக் கூறக் கேட்டிருந்த சுதமதி, உறங்கி விட்டாள். அப்பால் அத் தெய்வம் மணிமேகலையை மயக்கி எடுத்து வான் வழியே சென்று மணிபல்லவத்தீவிலே துயில்வித்தவாறே இட்டுச் சென்ற செய்தியைக் கூறுஞ்செய்யுள் என்றவாறு.

இதன்கண் சக்கரவாளக் கோட்டத்து வரலாறு கூறு மாற்றால், தமிழ்ச்சான்றோருடைய புறப்பொருளின்பாற்படும் காஞ்சித்திணைப் பொருள் பயில்வோருளத்தே நன்கு பதியுமாறு சாத்தனார் மிகவும் திறம்பட வகுத்தோதுகின்றார். அப்பாலும் ஒரு பார்ப்பனச் சிறுவன் அச் சக்கரவாளக் கோட்டத்துட் புகுந்து அஞ்சி இல்லம் புகுந்து உயிர் துறந்தமையும், அவன் தாய் கோதமையெனபாள் குழந்தையின் பிணத்தை எடுத்துக் கொண்டு சென்று சம்பாதி கோயிலின் முன்னின்று முறையிடுதலும், சம்பாபதி அவட்கு வெளிப்பட்டுக் கூறுதலும் அத் தெய்வத்தின் அறிவுரைகளும் செயலும் கற்போருளத்தே.

பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும்
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே

என ஆசிரியர் தொல்காப்பியனார் ஓதிய காஞ்சித் திணைப் பொருளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் தோன்றுமாறு இக்காதை திகழ்கின்றது. இது துறவு நூலாகலின் நிலையாமை யுணர்ச்சி கைவந்தர்லொழிய மெய்யுணர்வு பெறுதல் சாலாமையின் அவ் வுணர்ச்சியைத் தோற்றுவிக்கும் இக் காதை இந் நூலுக்கு இன்றியமையாச் சிறப்புடையதுமாகும்.

அந்தி மாலை நீங்கிய பின்னர்
வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம்
சான்றோர் தம் கண் எய்திய குற்றம்
தோன்றுவழி விளங்கும் தோற்றம் போல
மாசி அறு விசும்பின் மறு நிறம் கிளர
ஆசு அற விளங்கிய அம் தீம் தண்கதிர்
வெள்ளி வெண் குடத்துப் பால் சொரிவது போல்
கள் அவிழ் பூம் பொழில் இடைஇடைச் சொரிய
உருவு கொண்ட மின்னே போல
திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள்  06-010

ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன்
பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி
பதிஅகத்து உறையும் ஓர் பைந்தொடி ஆகி
சுதமதி நல்லாள் மதி முகம் நோக்கி
ஈங்கு நின்றீர் என் உற்றீர்? என
ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும்
அரசு இளங் குமரன் ஆய் இழை தன் மேல்
தணியா நோக்கம் தவிர்ந்திலனாகி
அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும்
புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான்  06-020

பெருந் தெரு ஒழித்து இப்பெரு வனம் சூழ்ந்த
திருந்து எயில் குடபால் சிறு புழை போகி
மிக்க மாதவர் விரும்பினர் உறையும்
சக்கரவாளக் கோட்டம் புக்கால்
கங்குல் கழியினும் கடு நவை எய்தாது
அங்கு நீர் போம் என்று அருந் தெய்வம் உரைப்ப
வஞ்ச விஞ்சையன் மாருதவேகனும்
அம் செஞ் சாயல் நீயும் அல்லது
நெடு நகர் மருங்கின் உள்ளோர் எல்லாம்
சுடுகாட்டுக் கோட்டம் என்று அலது உரையார்  06-030

சக்கரவாளக் கோட்டம் அஃது என
மிக்கோய்! கூறிய உரைப் பொருள் அறியேன்
ஈங்கு இதன் காரணம் என்னையோ? என
ஆங்கு அதன் காரணம் அறியக் கூறுவன்
மாதவி மகளொடு வல் இருள் வரினும்
நீ கேள் என்றே நேர் இழை கூறும் இந்
நாமப் பேர் ஊர் தன்னொடு தோன்றிய
ஈமப் புறங்காடு ஈங்கு இதன் அயலது
ஊரா நல் தேர் ஓவியப் படுத்துத்
தேவர் புகுதரூஉம் செழுங் கொடி வாயிலும்  06-040

நெல்லும் கரும்பும் நீரும் சோலையும்
நல்வழி எழுதிய நலம் கிளர் வாயிலும்
வெள்ளி வெண் சுதை இழுகிய மாடத்து
உள் உரு எழுதா வெள்ளிடை வாயிலும்
மடித்த செவ் வாய் கடுத்த நோக்கின்
தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து
நெடு நிலை மண்ணீடு நின்ற வாயிலும்
நால் பெரு வாயிலும் பாற்பட்டு ஓங்கிய
காப்பு உடை இஞ்சிக் கடி வழங்கு ஆர் இடை
உலையா உள்ளமோடு உயிர்க் கடன் இறுத்தோர்  06-050

தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றி
பீடிகை ஓங்கிய பெரும் பலி முன்றில்
காடு அமர் செல்வி கழி பெருங் கோட்டமும்
அருந் தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும்
ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும்
நால் வேறு வருணப் பால் வேறு காட்டி
இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த
குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன
சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்
அருந் திறல் கடவுள் திருந்து பலிக் கந்தமும்  06-060

நிறைக் கல் தெற்றியும் மிறைக் களச் சந்தியும்
தண்டும் மண்டையும் பிடித்துக் காவலர்
உண்டு கண் படுக்கும் உறையுள் குடிகையும்
தூமக் கொடியும் சுடர்த் தோரணங்களும்
ஈமப் பந்தரும் யாங்கணும் பரந்து
சுடுவோர் இடுவோர் தொடு குழிப் படுப்போர்
தாழ் வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்
இரவும் பகலும் இளிவுடன் தரியாது
வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும்
எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி  06-070

 நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும்
துறவோர் இறந்த தொழு விளிப் பூசலும்
பிறவோர் இறந்த அழு விளிப் பூசலும்
நீள் முக நரியின் தீ விளிக் கூவும்
சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்
புலவு ஊண் பொருந்திய குராலின் குரலும்
ஊண் தலை துற்றிய ஆண்டலைக் குரலும்
நல் நீர்ப் புணரி நளி கடல் ஓதையின்
இன்னா இசை ஒலி என்றும் நின்று அறாது
தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி  06-080

கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து
காய் பசிக் கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும்
மால் அமர் பெருஞ்சினை வாகை மன்றமும்
வெண் நிணம் தடியொடு மாந்தி மகிழ் சிறந்து
புள் இறைகூரும் வெள்ளில் மன்றமும்
சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு
மடைதீ உறுக்கும் வன்னி மன்றமும்
விரத யாக்கையர் உடை தலை தொகுத்து ஆங்கு
இருந் தொடர்ப் படுக்கும் இரத்தி மன்றமும்
பிணம் தின் மாக்கள் நிணம் படு குழிசியில்  06-090

விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும்
அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும்
வெள்ளில் பாடையும் உள்ளீட்டு அறுவையும்
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்
நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும்
யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை
தவத் துறை மாக்கள் மிகப் பெருஞ் செல்வர்
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
முதியோர் என்னான் இளையோர் என்னான்
கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப இவ்  06-100

அழல் வாய்ச் சுடலை தின்னக் கண்டும்
கழி பெருஞ் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து
மிக்க நல் அறம் விரும்பாது வாழும்
மக்களின் சிறந்த மடவோர் உண்டோ?
ஆங்கு அது தன்னை ஓர் அருங் கடி நகர் என
சார்ங்கலன் என்போன் தனி வழிச் சென்றோன்
என்பும் தடியும் உதிரமும் யாக்கை என்று
அன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி
வழுவொடு கிடந்த புழு ஊன் பிண்டத்து
அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய்க் கொண்டு  06-110

உலப்பு இல் இன்பமோடு உளைக்கும் ஓதையும்
கலைப் புற அல்குல் கழுகு குடைந்து உண்டு
நிலைத்தலை நெடு விளி எடுக்கும் ஓதையும்
கடகம் செறித்த கையைத் தீநாய்
உடையக் கவ்வி ஒடுங்கா ஓதையும்
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை
காய்ந்த பசி எருவை கவர்ந்து ஊண் ஓதையும்
பண்பு கொள் யாக்கையின் வெண்பலி அரங்கத்து
மண் கணை முழவம் ஆக ஆங்கு ஓர்
கருந் தலை வாங்கி கை அகத்து ஏந்தி  06-120

இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய் மகள்
புயலோ குழலோ கயலோ கண்ணோ
குமிழோ மூக்கோ இதழோ கவிரோ
பல்லோ முத்தோ என்னாது இரங்காது
கண் தொட்டு உண்டு கவை அடி பெயர்த்து
தண்டாக் களிப்பின் ஆடும் கூத்துக்
கண்டனன் வெரீஇ கடு நவை எய்தி
விண்டு ஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்து ஈங்கு
எம் அனை! காணாய்! ஈமச் சுடலையின்
வெம் முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என  06-130

தம் அனை தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும்
பார்ப்பான் தன்னொடு கண் இழந்து இருந்த இத்
தீத்தொழிலாட்டியேன் சிறுவன் தன்னை
யாரும் இல் தமியேன் என்பது நோக்காது
ஆர் உயிர் உண்டது அணங்கோ? பேயோ?
துறையும் மன்றமும் தொல் வலி மரனும்
உறையுளும் கோட்டமும் காப்பாய்! காவாய்
தகவு இலைகொல்லோ சம்பாபதி! என
மகன் மெய் யாக்கையை மார்பு உறத் தழீஇ
ஈமப் புறங்காட்டு எயில் புற வாயிலில்  06-140

கோதமை என்பாள் கொடுந் துயர் சாற்ற
கடி வழங்கு வாயிலில் கடுந் துயர் எய்தி
இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை
என் உற்றனையோ? எனக்கு உரை என்றே
பொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற
ஆரும்இலாட்டியேன் அறியாப் பாலகன்
ஈமப் புறங்காட்டு எய்தினோன் தன்னை
அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது
உறங்குவான் போலக் கிடந்தனன் காண் என
அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா  06-150

பிணங்கு நூல் மார்பன் பேது கந்தாக
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது
மா பெருந் துன்பம் நீ ஒழிவாய் என்றலும்
என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்தருளில் என்
கண் இல் கணவனை இவன் காத்து ஓம்பிடும்
இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும்
முது மூதாட்டி இரங்கினள் மொழிவோள்
ஐயம் உண்டோ ஆர் உயிர் போனால்
செய்வினை மருங்கின் சென்று பிறப்பு எய்துதல்?
ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல்  06-160

ஈங்கு எனக்கு ஆவது ஒன்று அன்று நீ இரங்கல்
கொலை அறம் ஆம் எனும் தொழில் மாக்கள்
அவலப் படிற்று உரை ஆங்கு அது மடவாய்
உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர்
இலரோ இந்த ஈமப் புறங்காட்டு
அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம்!
நிரயக் கொடு மொழி நீ ஒழிக என்றலும்
தேவர் தருவர் வரம் என்று ஒரு முறை
நான்மறை அந்தணர் நல் நூல் உரைக்கும்
மா பெருந் தெய்வம்! நீ அருளாவிடின்  06-170

யானோ காவேன் என் உயிர் ஈங்கு என
ஊழி முதல்வன் உயிர் தரின் அல்லது
ஆழித் தாழி அகவரைத் திரிவோர்
தாம் தரின் யானும் தருகுவன் மடவாய்!
ஈங்கு என் ஆற்றலும் காண்பாய் என்றே
நால் வகை மரபின் அரூபப் பிரமரும்
நால் நால் வகையில் உரூபப் பிரமரும்
இரு வகைச் சுடரும் இரு மூவகையின்
பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும்
பல் வகை அசுரரும் படு துயர் உறூஉம்  06-180

எண் வகை நரகரும் இரு விசும்பு இயங்கும்
பல் மீன் ஈட்டமும் நாளும் கோளும்
தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்து
வரம் தரற்கு உரியோர் தமை முன் நிறுத்தி
அரந்தை கெடும் இவள் அருந் துயர் இது எனச்
சம்பாபதி தான் உரைத்த அம் முறையே
எங்கு வாழ் தேவரும் உரைப்பக் கேட்டே
கோதமை உற்ற கொடுந் துயர் நீங்கி
ஈமச் சுடலையில் மகனை இட்டு இறந்த பின்
சம்பாபதி தன் ஆற்றல் தோன்ற  06-190

எங்கு வாழ் தேவரும் கூடிய இடம் தனில்
சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்து
நடுவு நின்ற மேருக் குன்றமும்
புடையின் நின்ற எழு வகைக் குன்றமும்
நால் வகை மரபின் மா பெருந் தீவும்
ஓர் ஈர் ஆயிரம் சிற்றிடைத் தீவும்
பிறவும் ஆங்கு அதன் இடவகை உரியன
பெறு முறை மரபின் அறிவு வரக் காட்டி
ஆங்கு வாழ் உயிர்களும் அவ் உயிர் இடங்களும்
பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து  06-200

மிக்க மயனால் இழைக்கப்பட்ட
சக்கரவாளக் கோட்டம் ஈங்கு இது காண்
இடு பிணக் கோட்டத்து எயில் புறம் ஆதலின்
சுடுகாட்டுக் கோட்டம் என்று அலது உரையார்
இதன் வரவு இது என்று இருந் தெய்வம் உரைக்க
மதன் இல் நெஞ்சமொடு வான் துயர் எய்தி
பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்ப
இறந்து இருள் கூர்ந்த இடை இருள் யாமத்துத்
தூங்கு துயில் எய்திய சுதமதி ஒழியப்
பூங்கொடி தன்னைப் பொருந்தித் தழீஇ  06-210

அந்தரம் ஆறா ஆறு ஐந்து யோசனைத்
தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த
மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம்
அணி இழை தன்னை வைத்து அகன்றது தான் என்  06-214

உரை

திங்கள் மண்டிலத்தின் தோற்றம்

1-8: அந்தி...........சொரிய

(இதன் பொருள்) அந்தி மாலை நீங்கிய பின்னர்-அவ்வாறு வந்திறுத்த அந்திமாலைப் பொழுது போன பின்பு; வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம்-குணகடலினின்று மெழுந்து வானத்தே தனது ஒளியாலே விரிந்து தோன்றிய திங்கள் மண்டிலமானது; சான்றோர் தங்கண் எய்திய குற்றம் தோன்றுவழி விளங்கும் தோற்றம் போல-நற்பண்புகளால் நிறைந்த உயர்குடிப்பிறந்தார் மாட்டுளதாகும் குற்றம் தான் சிறிதேயாயினும் அது பிறரால் காணப்படும்பொழுது பெரிதாக விளங்கித் தொன்றுமாறு போலே; மாசுஅறு விசும்பின் மறுநிறம் கிளர-குற்றமற்ற வானிடத்தே தன் மறுவானும் ஒளியானும் விளங்கித் தோன்றா நிற்ப; ஆசு அற விளங்கிய அம் தீம் தண் கதிர் வெள்ளி வெள்குடத்துப் பால் சொரிவது போல்-குற்றமில்லாமல் விளங்கிய அதனுடைய அழகிய இனிய குளிர்ந்த நிலாக்கதிர்கள் வெள்ளியாலியன்ற தூய வெண்மையான குடத்தினின்றும் பால் பொழியுமாறு போலே; கள் அவிழ் பூம்பொழில் இடை இடைச் சொரிய தேன் துளிக்கின்ற உவவனம் என்னும் அம் மலர்ப்பூம்பொழிலகத்தே இடையிடையே பொழியா நிற்ப என்க.

(விளக்கம்) வந்து தோன்றிய என்றது வானத்திலே உயர்ந்து வந்து தோன்றிய என்பதுபட நின்றது. மலர்கதிர்: வினைத்தொகை. சான்றோர் தங்கண் எய்திய குற்றம்போல........மறுநிறம் கிளர என்னுமிதனோடு;

குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போ லுயர்ந்து     (957)

எனவரும் திருக்குறளையும் நினைவு கூர்க.

மாசு அறு விசும்பின் என்புழி மாசு என்றது முகில் மழை முதலியவற்றை மறுவானும் நிறத்தானும் கிளர என்க. இனி மறுவானது அதன் மார்பிலே மட்டும் விளங்க, அதன் கதிர்கள் பூம்பொழிலினும் வந்து இடை இடையே சொரிய எனக்கோடலுமாம். நிறம்-ஈண்டு மார்பு. கள்தேன். பொழில்-உவவனம்.

மணிமேகலா தெய்வம் சுதமதியையும் மணிமேகலையையும் அணுகி வினாதல்

9-15: உருவு.......உற்றீரென

(இதன் பொருள்) உருவு கொண்ட மின்னே போலத் திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள்-பெண்ணுருக் கொண்டதொரு மின்னல் போன்ற மணிமேகலா தெய்வம் இந்திரவில் போன்று பல்வேறு நிறங்களையும் வானிடத்தே பரப்பி விளங்குகின்ற திருமேனியுடையவளாய்; ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன் பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி-எண்ணில் புத்தர்கட்கும் முற்படத் தோன்றிய முதல்வனும் உலகினைத் தனது அறமாகிய சக்கரத்தையுருட்டி அருளாட்சி செய்பவனும் ஆகிய புத்தபெருமானுடைய பாதபங்கயம் கிடந்த பீடிகையை வலஞ்செய்து வணங்கி வாழ்த்தியவள் பின்னர்; பதியகத்து உறையும் ஓர் பைந்தொடியாகி-அப் பூம்புகார் நகரத்தே வாழ்வாள் ஒருத்தியின் வடிவத்தை மேற்கொண்டு; சுதமதி நல்லாள் மதிமுகம் நோக்கி ஈங்கு நின்றீர் என்உற்றீர் என-ஐந்து விற்கிடைத் தொலைவில் அங்குநின்ற சுதமதி என்னும் அறப்பண்பு மிக்கவளது திங்கள் போன்ற திருமுகத்தை நோக்கி நீவிரிருவீரும் இப்பொழுது இவ்விடத்திலே தமியராய் நிற்கின்றீர், இவ்வாறு நிற்றற்குக் காரணமான இடுக்கண் ஏதெனும் எய்தினிரோ இயம்புக! என்று வினவ என்க.

(விளக்கம்) உருவு கொண்டமின்னே போல என்றாரேனும் மின் ஒரு பெண்ணுருவு கொண்டாற் போல என்பது கருத்தாகக் கொள்க. திருவில்-இந்திரவில். இந்திரவில் போன்று பல்வேறு ஒளிகளையும் பரவவிட்டு என்க ஆதிமுதல்வன் என்றது-கௌதம புத்தரை. உலகத்தே அறத்தைச் சான்றோர் உள்ளத்தே புகுத்தி அருளாட்சி செய்தலின், அறவாழி ஆள்வோன் என்றார்.
அழி என்றது ஆணையை. அதனை ஆழியாகக் கூறுவது மரபு. இந்திரவில் இன்னவாறு தோன்றும் எனப் புலப்படாமையினால் அங்ஙனம் தோன்றுகின்ற தெய்வங்கட்குவமை யாயிற்று என்பாருமுளர். அவ் விளக்கம் போலி என்னை? அஃது எவ்வாறு தோன்றுகின்றது என்பது யாவர்க்கும் இனிது விளக்குதலின். பாத பீடிகை என்றது. பளிக்கறையினகத்தே மயனால் இயற்றப்பட்ட பீடிகையை. பணிந்தனள்-பணிந்து. பைந்தொடி, என்றது பெண் என்னுந் துணையாய் நின்றது. மதிமுகம்: உவம உருபு கொக்கது. மகளிர் நிற்கத்தகாத இடத்தினும் பொழுதினும் நிற்கின்றீர் என்பாள் ஈங்கு நின்றீர் என்றாள். அதற்கொரு காரணம் இருத்தல் வேண்டும், அது தெரிந்திலது என்பாள் போல வினவியபடியாம். பதியகத்து உறையு மோர் பைந்தொடியாகி வந்தமைக் கிணங்க வினவியவாறு. என்-என்ன இடுக்கண். சுதமதியோடு மணிமேகலையையும் உளப்படுத்திப் பன்மையால் வினவினள்.

மணிமேகலா தெய்வம் அம் மகளிர்க்குக் கூறுதல்

16-26: ஆங்கவள்..........உரைப்ப

(இதன் பொருள்) ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும்-அங்ஙனம் வினவியபொழுது அச்சுதமதி நல்லாள் அத் தெய்வத்திற்கு முன்பு அவ்விடத்தே அவ்வரசிளங்குமரன் கூறியதனை எடுத்துக் கூறாநிற்ப; அரசு இளங்குமரன் ஆயிழை தன் மேல் தணியா நோக்கம் தவிர்ந்திலன் ஆகி-அது கேட்ட அம்மணிமேகலா தெய்வம் அம் மகளிரை நோக்கி அன்புடையீர்! அவ்வரசன் மகனாகிய இளமையுடைய உதயகுமரன், நீ கூறியவாறு இம் மணிமேகலையின்பால் தணியாத் காம நோக்கம் தவிராதவனாயிருந்தும் ; அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும்-இழுக்கொடு புணரா விழுக்குடிப் பிறப்புடையோன் ஆதலின் இவ் வுவவனம் பகவனதாணையிற் பன்மரம் பூக்கும் இயல்புடையதாய் அச் சமயத் துறவோர்க்கே உரிய தெய்வத் தன்மையுடைய தாகலின் இதனூடே இவளைக் கைப்பற்றுதல் பழியாம் என்பது கருதி இப்பொழுது இவ்விடத்தினின்று நீங்கினன் ஆயினும்; புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான்-துறவோரல்லாத ஏனையோர் வாழுகின்ற வீதியினிடத்தே நீயிர் செல்லுங்கால் அவன் இவளைக் கைப்பற்றுதலின்றிப் போகான்காண்!; பெருந்தெருவொழித்துப் பெருவனம் சூழ்ந்த திருந்து எயில் குடபால் சிறுபுழை போகி-ஆதலால் நீயிர் நுமது பள்ளிக்குச் செல்லும் பொழுது நீவிர்வந்த அந்தப் பெரிய தெருவழியே செல்லுதலைக் தவிர்த்துப் பெரிய இந்த உவவவனத்தைச் சூழ்ந்துள்ள அழகிய மதிலிடத்தே மேற்றிசையிலுள்ள சிறியதொரு புழைக்கடைவாயில் வழியே சென்று; மிக்க மாதவர் விரும்பினர் உறையும் சக்கரவாளக் கோட்டம் புக்கால்-மிகுந்த பெரிய தவத்தையுடைய துறவோர் விரும்பித் தங்குஞ் சிறப்புடைய சக்கரவாளக்கோட்டத்துள் புகுந்து விட்டால்; கங்குல் கழியினும்-அதனூடேயே இவ்விரவுப் பொழுது முழுவதும் கழிந்தாலும்; கடுநவை எய்தாது அங்கு நீர்போம் என்று அருந்தெய்வம் உரைப்ப-கடிய துன்பம் ஒன்றும் நுமக்குண்டாக மாட்டாது ஆதலாலே அவ்வழியே சென்று அச் சக்கரவாளக் கோட்டத்திறகே நீவிரிருவீரும் போவீராக என்று காண்டற்கரிய அத் தெய்வம் கட்டுரைப்ப; என்க.

(விளக்கம்)  ஆங்கு இரண்டனுள் முன்னது காலத்தையும் பின்னது இடத்தையும் சுட்டியவாறு. அவள்: சுதமதி. அவன்: உதயகுமரன். தணியாத காமநோக்கம்-பெயரெச்சத்தின் ஈறு கெட்டது. அறத்தோர் என்றது துறவோரை. அவன் உயிர்குடிக் பிறப்பினன் ஆகலின் ஈண்டு இவளைக்கைப்பற்றுதல் பழியென்றுட் கொண்டு அகன்றனன் என்றவாறு பெருந்தெருவில் இவளைக் கைப்பற்றுதல் அவனுக்குப் பழியாகாமையின் அவன் இவள் வரவு பார்த்து அங்குத் தேற்றமாக இருப்பான்; ஐயமில்லை, ஆதலின் அவ்வழியே செல்லற்க என்று தெரிந்தோதிய படியாம். புழைபுழைக்கடைவழி. பெருவனம் என்றது உவவனத்தை. சக்கரவாளக் கோட்டத்தே கடுநவை எய்தாமைக்கு ஏதுக்கூறுவாள், மிக்க மாதவர் விரும்பி யுறையும் சக்கரவாளக் கோட்டம் என்றாள்.

காண்டற்கரிய தெய்வம் இங்ஙனம் எளிவந்துரைப்ப என்பார், அருந்தெய்வம் உரைப்ப என்றார்.

சுதமதி மணிமேகலா தெய்வத்தை வினாதல்

27-36: வஞ்ச.....கூறும்

(இதன் பொருள்) வஞ்ச விஞ்சையான் மாருத வேகனும் அம் செஞ்சாயல் நீயும் அல்லது-அது கேட்ட சுதமதி அத் தெய்வத்தை நோக்கி அன்புடையோய்! வஞ்ச நெஞ்சமுடைய மாருதவேகன் என்னும் விச்சாதரனும் அழகிய செவ்விய மென்மையுடைய நங்கையே நீயும் அல்லது; நெடு நகர் மருங்கின் உள்ளோர் எல்லாம் நெடிய இப் பூம்புகார் நகரத்தில் வாழுகின்ற மாந்தர் எல்லாருமே நின்னாற் கூறப்பட்ட கோட்டத்தை; சுடுகாட்டுக் கோட்டம் என்றலது உரையார்-சுடுகாட்டுக் கோட்டம் என்று குறிப்பிட்டுக் கூறுவதேயன்றிப் பிறிதொரு பெயரானும் கூறுதலிலர்; மிக்கோய் அது சக்கரவாளக் கோட்டம் எனக் கூறிய உரைப் பொருள் அறியேன்-அறிவான் மிக்க நீதானும் அதனைச் சக்கரவாளக் கோட்டம் என்றே கூறிய சொல்லின் பொருளை யான் சிறிதும் தெரிகிலேன்; ஈங்கு சொல்லின் பொருளை யான் சிறிதும் தெரிகிலேன்; ஈங்கு இதன் காரணம் என்னையோ என-இங்கு நீ இவ்வாறு இதற்குப் பெயர் கூறுதற்கியன்ற காரணந் தான் யாதோ? என்று வினவாநிற்ப; ஆங்கு அதன் காரணம் அறியக் கூறுவன்-அது கேட்ட அத் தெய்வம் நல்லாய் நன்றுவினவினை அவ்வாறு அதனைக் கூறுவதற்குரிய காரணம் நீ நன்கு அறிந்து கொள்ளுமாறு விளக்கமாகக் கூறுவேன்; நீ மாதவி மகளோடு வல் இருள் வரினும் கேள்- நீ தானும் இம் மாதவி மகளோடு பொறுமையுடனிருந்து நள்ளிரவு வந்துறினும் கேட்டறிந்து கொள்ளக்கடவை, கேட்பாயாக என்று; நேரிழை கூறும்-முற்பட வலியுறுத்துப் பின்னர் நேரிய அணிகலன்களையுடைய அம் மணிமேகலா தெய்வம் கூறாநிற்கும் என்க.
****
(விளக்கம்) தன்னைக் கண்ணோட்டஞ் சிறிதுமின்றிக் கைவிட்டுப் போனமையாலே விஞ்சையான் என்னாது வஞ்சவிஞ்சையன் என்றான். நெடுநகர் என்றது- பூம்புகார் நகரத்தை. வஞ்ச விஞ்சையான் கூற்றுப் பொய்யாதலும் கூடும் என்றிருந்தவன் இவளும் அங்ஙனம் கூறுதலின் ஒரு காரணம் உவதாதல் வேண்டும் என்னும் ஊகத்தால் வினவுகின்றாளாகலின் மிக்கோய் கூறிய உரைப்பொருள் என்றாள். வஞ்சவிஞ்சையனே அன்றி மிக்கோயும் கூறுகின்றனை ஆதலின் அது பொருள் உரையே ஆதல் வேண்டும் அஃதறிகிலேன் என்றவாறு.

இனி, அத் தெய்வந்தானும் அஃதறிந்து கொள்ள வேண்டிய தொன்றே ஆதலால் கூறுவன் கேள் என்கின்றது. மணிமேகலையும் உணரற்பாலது அச் செய்தி என்பது தோன்ற மாதவி மகளோடு வல்லிருள் வரினும் கேள் என்றாள். என்னை? அவட்குக் துறவின் செல்லும் ஏது நிகழ்ச்சி எதிர்துண்மையின் அதற்கின்றியமையாத நிலையாமை யுணர்ச்சியைத் தோற்றுவிக்கும் செய்தியாகலின்; வல்லிருள்-என்றது ஆகு பெயராய் இரவு என்னும் துணை. இச் செய்தியைக் கேட்டல் அவட்கு ஆக்கமாம் ஆதலின் என்க. நிலையாமை யுணர்ச்சியைத்  மெய்யுணர்வார்க்கு இன்றியமையாத தென்பதனை:

அவற்றுள் நிலையாமையாவது- தோற்ற முடையன யாவும் நிலையுதலிலவாந்தன்மை. மயங்கிய வழிப் பேய்த்தேரிற் புனல்போலத் தோன்றி, மெய்யுணர்ந்த வழிக் கயிற்றில் அரவுபோலக் கெடுதலிற் பொய்யென்பாரும், நிலைவேறுபட்டு வருதலால் கணந்தோறும் பிறந்திறக்கு மென்பாரும் ஒருவாற்றான் வேறுபடுதலும் ஒருவாற்றான் வேறுபடாமையும் உடைமையின் நிலையாமையும் நிலையுதலும் ஒருங்கேயுடைய வென்பாருமெனப் பொருட்பெற்றி, கூறுவார் பலதிறத்தராவார்; எல்லார்க்கும் அவற்றது நிலையாமையும் உடம்பாடாகலின் ஈண்டு அதனையே கூறுகின்றார். இஃதுணர்ந்துழியல்லது பொருள்களின்மேல் பற்று விடாதாகலின், இது முன் வைக்கப்பட்டது எனவரும் பரிமேலழகர் பொன் மொழிகள் ஈண்டு நினைவிற் கொள்ளற் பாலனவாம்(குறள் அதி-34-முன்னுரை).

(34-இந்நாமப் பேரூர் என்பது முதலாக; 205-இதன் வரவு இது என்னுமளவும் மணிமேகலா தெய்வத்தின் கூற்றாய் ஒரு தொடர்)

சக்கரவாளக்கோட்ட வண்ணனை

36-49: இந்நாம...... இஞ்சி

(இதன் பொருள்) இந்நாமப் பேரூர் தன்னொடு தோன்றிய ஈமப் புறங்காடு ஈங்கு- பகைவர்க்கு அச்சம் விளைவிக்கும் பெரிய தலை நகரமாகிய இந்நகரம் தோன்றிய காலத்தே அதனோடு தோன்றிய முதுமையுடைய ஈமவிறகுகளையுடைய சுடுகாடு இவ்வுவவனத்தின்; அயலாது- பக்கத்திலே உளதாம்; ஊரா நல்தேர் ஓவியப் படுத்துத் தேவர் புகுதரூஉம் செழுங்கொடி வாயிலும்-அது தானும் வலவன ஏவா வானவூர்தியின் ஓவியம் வரையப்பட்டுத் தேவர்கள் மட்டும் உள்ளே புகுதற்கமைந்த வளவிய கொடியுயர்த்தப்பட்ட வாயினும்; நெல்லும் கரும்பும் நீரும் சோலையும் நல்வழி எழுதிய நலம்கிளர் வாயிலும்- நெற்பயிரும் கரும்பும் நீர்நிலைகளும் சோலையும் உடைய நல்ல நெறியும் வரைந்து ஓவியப்படுத்தப்பட்ட அழகுமிகும் வாயிலும்; வெள்ளி வெள்சுதை இழுகிய மாடத்து உள்உருவு எழுதா வெள் இடை வாயிலும்- மிகவும் வெண்மையான சுண்ணச்சாந்து தீற்றிய மாடத்தையும் அதனுள் ஓவியம் ஒன்றும் வரையாமல் வெற்றிடமாக விடப்பட்டிருக்கின்ற வாயிலும்; மடித்த செவ்வாய்க் கடுத்த நோக்கின் தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து-உதடுகளை மடித்துள்ள சிவந்த வாயையும் கடிய வெகுளியையுடைய நோக்கத்தையும் நரகன் ஒருவனைக் கட்டிய கயிற்றையும், அவனை எறிதற்கு ஓக்கிய சூலப்படையையும் உடையதாய்க் கட்டிவிடப்பட்ட; நெடுநிலை மண்ணீடுநின்ற வாயிலும்-நேராக உயர்ந்து நிற்கின்ற நிலையினையுடைய பூதப்படிமம் நிற்கின்ற வாயிலும் ஆகிய; நால்பெருவாயிலும் பால்பட்டு ஓங்கிய காப்பு உடை இஞ்சி- நான்கு பெருவாயில்கள் நான்கு பக்கங்களினும் அமைக்கப்பட்டு நாற்புறமும் சூழ்ந்து உயர்ந்த காவலையுடைய மதிலையும் என்க.

(விளக்கம்) நாமம்-அச்சம். ஊராநற்றேர்-வலவனேவா வானவூர்தி. தேவர் புகுதரூஉம் செழுங்கொடிவாயிலும் என்றது, தேவராதற்குரிய நல்வினை செய்தார் நுண்ணுடம்போடு கூடிய உயிரைத் தங்களுலகிற்கு அழைத்துச் செல்லுதற்கு அச் சக்கரக் கோட்டத்தில் வந்து புகுவாராதலின் அவர்க்கெனவே சிறப்பாக வகுக்கப்பட்டு அச்சிறப்புக்கு அறிகுறியாக வானவர் ஊர்தியாகிய வலவனேவா வானவர் ஊர்தியின் ஓவியம் வரையப்பட்டும் அதற்கேயுரிய கொழுங்கொடி உயர்த்தப்பட்டும் திகழும் வாயிலும் என்றவாறு.

இனி இதனைப் பாட்டிடைவைத்த குறிப்பினாலே ஏனைய மூன்று வாயிலின் சிறப்புகளையும் இப் புலவர் பெருமான் இதனைப் பயில்பவர்களே குறிப்பாக வுணர்ந்து கொள்ளுமாறு புனைந்திருக்கும் பேரழகு நம்மைப் பேரின்பத்திலே திளைப்பிக்கின்றது. அக் குறிப்புப் பொருளை இனி ஈண்டு ஆராய்ந்தெடுத்துக் காட்டுவாம்.

உயிரினங்கள் தத்தம் வினையின் பயனாக மூன்றுலகங்களினும் சென்று பிறக்கும் என்பதும், பற்றற்ற உயிர் பேராவியற்கையாகிய பேரின்ப வாழ்வைப் பெறும் என்பதும், உலகாயத சமயத்தார்க் கல்லது ஏனைய சமயத்தார்க்கும் பெரும்பாலும் ஒப்பமுடிந்த கொள்கையாம். பேராவியற்கை என்னும் இந் நிலையே வீடு எனவும் முத்தி எனவும் கூறுவர் பௌத்தர். இந் நிலையையே நிருவாணம் என்று கூறுவர். ஆகவே இம்மையே நல்வினை செய்த உயிர்கள் தேவர்களால் வரவேற்கப்பட்டு அச் சக்கரவாளக் கோட்டத்தினின்றும் புறப்படும் வாயிலை மட்டும் விளக்கினர். இனி, நல்வினையும் தீவினையும் விரவச் செய்த வுயிர்கள் மீண்டும் இன்பமும் துன்பமும் விரவிய நுகர்ச்சியையுடைய மக்கள் பிறப்பையே எய்தும் ஆகலின் அவ்வுயிர் புறப்படுதற்கும் அவற்றிற்குரிய கடன்கள் செய்தற்குரிய மக்கள் புகுதருதற்கும் உரிய வாயில் என்பதற்குரிய அடையாளங்களாகவே இவ் வுலக வாழ்விற்கின்றியமையாத பொருள்களாகிய நெல்லும் கரும்பும் நீரும் சோலையும் நல்வழி மருங்கே பொறிக்கப்பட்டது ஒரு வாயில் எனவும் இனித் தீவினை செய்தவுயிர்கள் காலதூதர்களாலே பாசத்தால் பிணிக்கப்பட்டு நரகிலிடப்பட்டு வதைக்கப்படும் என்பதற்கறிகுறியாகவும் அவ்வினத்துப் பேயும் பூதமும் புகுதருதற்கும் அத்தீய வுயிர்கள் புறப்படுதற்கும் உரிய வாயிலது என்றறிவுறுத்தற்கு

மடித்த செவ்வாய்க் கடுத்த நோக்கின் தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து
நெடுநிலை மண்ணீடு

ஒருவாயிலின்கண் சிற்பியரால் கட்டி நிறுத்தப்பட்டது எனவும், இனி, மெய்யுணர்வு சிறந்து அவாவறுத்த தூயவுயிர்கள் பேராவியற்கை பெறுதற்கு இவ்வுலகிற்கு ஈண்டு வாராநெறிச் செல்வன புறப்பட்டுப் போதற்கியன்ற வாயில் என்பதற்கு அறிகுறியாகவே ஒரு வாயில்

வெள்ளி வெண்சுதை இழுகிய மாடத்து
உள்ளுரு எழுதா வெள்ளிடை வாயில்

மயனால் அமைக்கப்பட்டது. என்னை? வீடெய்துவோர் உளம் இவ் வுலகப் பொருள்களில் யாதொன்றனிடத்தும் பற்றில்லாமல் முழுத்தூய்மை  பெற்று வறிதிருக்குமாதலின், அவ்வுயிர் போகும் அவ் வாயில் தூய்மைக்கே அறிகுறியாகிய வெள்ளி வெண்சுதை தீற்றி ஓவியப் பொருள் ஏதும் வரையப்படாமல் வெள்ளிடையாக (வெற்றிடமாக) விடப்படல் வேண்டிற்று. இவையெல்லாம் யாம் நுண்ணுணர்வாற் காணுங்கால் அக் காட்சி பேரின்பம் பயத்தலும் உணர்ந்து கொள்க.

இவ்வாறு நான்கு வாயிலும் நால் வேறு வகை பட்டனவாகப் புலவர் பெருமான் ஓதுதற்குக் காரணம் இருத்தல் வேண்டும் என்னும் கருத்தாலே ஆராய்ந்து கூறும் பொரும் இவை.

மண்ணீடு-சுடுமண் கொண்டு செய்து சுதை தீற்றிய படிவம்(உருவம்). இத் தொழில் செய்வோரை மண்ணீட்டாளர் என்று அறிவுறுத்துவர் ஆசிரியர் இளங்கோவடிகளார்(சிலப். 5-30). மண் மாண்புனை பாவை என்பர் வள்ளுவனார். அதற்குப் பரிமேலழகர் சுதையான் மாட்சிமைப்படப் புனைந்த பாவை என்றுரை வகுப்பர்(407-குறள்). வாயிலும் வாயிலும் வாயிலும் ஆகிய நாற் பெருவாயிலும் என இயையும். இஞ்சி-மதில்

இதுவுமது

49-53: கடி....கோட்டமும்

(இதன் பொருள்) கடி வழங்கும் ஆர்இடை-அம் மதிலக வரைப் பினூடே மக்கள் வழங்குதலரிய நிலப்பரப்பிலே; உலையா உள்ளமோடு உயிர்க்கடன் இறுத்தோர் தலைதூங்கு நெடுமரம் தாழ்ந்து புறம் சுற்றி-உறுதியிற்றளராத நெஞ்சத்தோடே நின்று தம் தலைமயிரால் மரக்கிளையில் நன்கு முடியிட்ட பின்னர்த் தாமே தம் கழுத்தை யரிந்து தாம் தமது பராவுக்கடனாகிய உயிரைக் கொடுத்த வீரமறவருடைய தலைகள் தூங்காநின்ற நெடிய மரங்களின் கிளைகள் தாழ்ந்து பக்கமெல்லாம் சூழப்பெற்று;  பீடிகை ஓங்கிய முன்றில் காடு அமர்செவ்வி கழிபெருங் கோட்டமும் சுடுகாட்டை விரும்பியறையும் இறைவியாகிய கொற்றவை எழுந்தருளியிருக்கின்ற மிகவும் பெரிய திருக்கோவிலும் என்க.

(விளக்கம்) உயிர்க்கடன் இறுத்தோர்-தம் தலையைத் தாமே அரிந்து தமதின்னுயிரை இறைவிக்குப் பலியாக வழங்குபவர். இங்ஙனம், உயிர்க் கடன் இறுத்தலை அவிப்பலி என்று தமிழருடைய பொருளியல் நூல் கூறும். அவி-ஆவி. ஆவிப்பலி கொடுக்கும் மறவரே மறத்திற்குத் தலைவரம்பாவார் என்ப. இங்ஙனம் அவிப்பலி கொடுத்தலை.

ஆர்த்துக் களங்கொண்டோர் ஆரம ரழுவத்துச்
சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்குக் கருந்தலை
வெற்றி வேந்தன் கொற்றங் கொள்கென
நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங்கு
உயிர்ப்பலி யுண்ணும் உருமுக்குரன் முழக்கத்து
மயிர்க்கண் முரசொடு வான்பலி யூட்டி

எனவரும் சிலப்பதிகாரத்தானும்(5:83-8), அங்ஙனம் உயிர்க் கடனிறுக்குங் காலத்தே அம் மறவருடைய உலையா உள்ளத்தினியல்பை,

மோடி முன்றலையை வைப்பரே
முடிகுலைந்த குஞ்சியை முடிப்பரே
ஆடிநின்று குருதிப்புதுத் திலதமும்
அம்மு கத்தினி லமைப்பரே

எனவரும் (சிலப்-5:76-88: அடியார்க்-உரைமேற்கோள்) தாழிசையானும்,

அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவராலோ
அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்பராலோ
கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவுமாலோ
குறையுடலம் கும்பிட்டு நிற்குமாலோ

எனவரும் கலிங்கத்துப் பரணியானும்(கோயில்-15) அறிக.

இனி உயிர்கடனிறுப்போர் சிலர் தமது சிகையை மரக்கிளையில் முடிந்துவிட்டுப் பின் கழுத்தை அரிதலால் தலைதூங்கு நெடுமரம் என்றார், இதனை

வீங்குதலை நெடுங்கழையின் மிசைதோறும்
திசைதோறும் விழித்து நின்று
தூங்குதலை சிரிப்பனகண் டுறங்குதலை
மறந்திருக்குஞ் சுழல்கட் சூர்ப்பேய்

என்பதனாலறிக.(கலிங்க- கோயில்-21)

பெரும்பலி என்றார் அவிப்பலி யாதலின். பீடிகை- பலிபீடம். காடமர் செல்வி-கொற்றவை.

இதுவுமது

54-65: அருந்தவர்......பரந்து

(இதன் பொருள்) அருந் தவத்தார்க்கு ஆயினும் அரசற்கு ஆயினும் ஒருங்கு உடன்மாய்ந்த பெண்டிர்க்காயினும்-அரிய தவவொழுக்கந் தாங்கிய துறவோர்க் காதல், அரசருக்கு ஆதல் தங்கணவர் மாய்ந்தக்கால் அவரோடு ஒருங்கே தம்முயிரையும் மாய்த்துக் கொண்ட கற்புடைய மகளிர்க்காதல்; நால்வேறு வருணப் பால் வேறுகாட்டி-அந்தணரும் அரசரும் வணிகரும் வேளாளரும் ஆகிய பகுதிகளையுடைய மாந்தர்களுக்கு அப் பகுதிகளுக்குரிய மரபுகளையும் வேறு வேறு தெரியும்படி அவற்றிற்குரிய அடையாளங்களோடு காட்டி; இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த-இறந்துபட்டவர் திறத்திலே அவரவர்க்குச் சிறந்த கேளிராயோர் எடுத்த; குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்-குறியனவாகவும் நெடியனவாகவும் அமைந்த மலைக்கூட்டத்தைக் கண்டாற் போன்ற காட்சியையுடைய செங்கலாலியற்றப்பட்ட உயர்ந்த நிலையினையுடைய கோயில்களும்; அருந் திறல் கடவுள் திருந்து பலிக்கந்தமும்-தடுத்தற்கரிய பேராற்றல் பொருந்திய கடவுளர்க்குத் திருத்தமுடைய பலிகளையிடுதற்பொருட் டமைக்கப்பட்ட பல வேறுவகையான தூண்களும்; நிறைக் கல் தெற்றியும்-வீரமறவர்க்கு நிறுத்தப்பட்ட கல்களையுடைய மேடைகளும்; மிறைக்களச் சந்தியும்-குற்றம்புரியும் கொடியாரைக் கொலை செய்தொறுத்தற்கியன்ற கொலைக்களமாகிய சந்தியும்; தண்டும் மண்டையும் பிடித்துக் காவலர் உண்டுகண் படுக்கும் உறையுள் குடிகையும்-தடியும் மட்கலமும் கையிற்கொண்டு அச் சக்கரவாளக் கோட்டத்தைக் காவல் செய்கின்ற காவலர்கள் உணவுண்டு உறங்குதற்கியன்ற இடமாகிய குடில்களும்; தூமக்கொடியும்-எரிகின்ற ஈமத்தினின்று தோரணங்களும்-ஈமத்தில் எரிகின்ற தீப்பிழம்புகளாகிய தோரணங்களும்; ஈமப்பந்தரும் யாங்கணும் பரந்து-ஈமநெருப்பு மழையாலவியாமைப் பொருட்டு இடப்பட்டுள்ள சாரப்பந்தர்களும் ஆகிய இவையெல்லாம் எங்கும் பரந்து காணப்பட்டு; என்க.

(விளக்கம்) அருந்தவர்க்கும் அரசர்க்கும் கற்புடை மகளிர்க்கும் இடுகாட்டில் கோவில் எடுக்கும் வழக்கம் உண்மை அறிக. அந்தணர் முதலிய வருணம் நாள்கிற்கும் வேறு வேறு அடையாளம் உண்மையின் கோயில்களினும் அவ்வடையாளமிட்டு இவர் இனையர் இன்ன வகுப்பினர் என யாவரும் அறியும்படி காட்டி என்பது கருத்து. சிறந்தோர்-இறுதிக்கடன் செய்தற்குச் சிறப்புரிமையுடையோர் எனினுமாம்.

பொருளுடைமைக்கும் இறந்தோர் தகுதிக்கும் ஏற்பக குறியவும் நெடிவுமாக எடுக்கப்பட்டவை என்க.

சுடுமண்- செங்கல். கந்தம்-தூண். நிறைக்கல்-வீரமறவர்க்கு நினைவுச்சின்னமாக நிறுத்தப்பட்ட கல். இறுத்தல்-இறை என்றானாற் போன்று, நிறுத்தல்- நிறை என்றாயிற்று. தெற்றி-மேடை. மிறை-குற்றம். களம் என்றமையால் இது கொலையால் கொடியாரை வேந்தொறுக்கும் கொலைக்களம் என்பது பெற்றாம். இக் களம் பல கோத் தொழிலாளரும் கூறுமிடகலின் சந்தி எனப்பட்டது. இதற்குப் பிற ரெல்லாம் சிறப்பில்லாவுரை கூறிப்போந்தார்.

உறையுளாகிய குடிகை, குடில் என்பன தூய தமிழ்ச் சொற்களே. கடி-வீடு. கை, இல் என்னும் சிறுமைப் பொருட்பின்னொட்டு சேர்ந்து குடிகை, குடில் என ஆயிற்று. கொடி-ஒழுங்கு, கொடி என்றதற்கிணங்க நூலாசிரியர் தோரணமும் பந்தரும் என்ற நயமுணர்க.

சக்கரவாளக் கோட்டத்தெழும் ஓசைவகைகள்

66:79: சுடுவோர்..... நின்றறாது

(இதன் பொருள்) சுடுவோர் இடுவோர் தொடுகுழிப்படுப்போர் தாழ்வயின் அடைப்போர் தாழியின் கவிப்போர்-அச் சக்கரவாளக்கோட்டத்து மக்கட்பிணத்தை ஈமத்தேற்றிச் சுடுபவரும் அவற்றைக் கொணர்ந்து ஒருபுறத்தே வாளாது போகடுவோரும் தோண்டப்பட்ட குழியிலிட்டுப் புதைப்பவரும் தாழ்ந்த பள்ளங்களிலே அடைத்து வைப்பவரும் மண்ணாற்செய்த தாழீயிலிட்டுக் கவிழ்ப்பவருமாய்; இரவும் பகலும் இளிவுடன் தரியாது வருவோர் பெயர்வோர் மாறாச்சும்மையும்-இரவும் பகலுமாகிய இருபொழுதினும் வாலாமையுடன் இருத்தல் பொறாமல் வருபவரும் கடன்முடித்துப் போவாரும் எழுப்புகின்ற இடையறாத ஆரவாரமும்; எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி-இறவாதிருந்தோர்க்கெல்லாம் நுங்கட்கும் இவ்வாறு செய்யும் ஈமச்சடங்குண்டு என்பதனை அறிவுறுத்துக் கேட்டோர்; நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும்-நெஞ்சத்தை அச்சத்தால் நடுங்கப்பண்ணுகின்ற நெய்தற்பறை முழக்கமும்; துறவோர் இறந்த தொழுவிளிப் பூசலும்-துறவுபூண்டவர் இறந்தமையாலே ஏனையோர் அவரைத் தொழுது வாழ்த்தும் வாழ்த்தொலியும்; பிறவோர் இறந்த அழுவிளிப் பூசலும்-துறவாத மாந்தர் இறந்தமையால் அவர் சுற்றத்தார் அழுதலாலே எழுகின்ற அழுகை ஒலியும்; நீள்முக நரியின் தீவிளிக்கூவும்- நீண்ட முகத்தையுடைய நரிகள் ஊளையிடுகின்ற கேள்விக்கின்னாததாகிய கூக்குரலும்; சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்- சாகக்கிடக்கின்றவரை விரைந்து சாகும்படி கூப்பிடுகின்ற கூகையின் குழறல் ஒலியும்; புலஊண்பொருந்திய குராலின் குரலும்-ஊன் உண்ணுதலிலே பொருந்திய கோடான் குரல்களும்; ஊண்தலை துற்றிய ஆண்டலைக் குரலும்-உணவாக மாந்தர் தலைமூளையை உண்ட ஆண்டலைப்புள் மகிழ்ந்தெடுத்த குரலோசையும்; இன்னா இசையொலி ஆகிய இன்னாமதருகின்ற இசைகளின் கூட்டமாகிய பேரொலியானது; நல்நீர் புணரி நளிகடல் ஓதையின்-நல்ல நீரையுடைய ஆறுகள் புக்குப் புணர்தலையுடைய செறிந்த கடலினது முழக்கம் போன்று; என்றும் நின்று அறாது-எப்பொழுதும் நிலைபெற்று நிற்ப தல்லது ஒருபொழுதும் ஒழியமாட்டாது என்றாள் என்க.

(விளக்கம்) பிணங்களைச் சுடுவோரும் இடுவோரும் குழிப்படுப்போரும் அடைப்போரும் கவிப்போருமாய்ப் பல்வேறுவகையாக இறுதிக் கடன்கள் செய்ய, இரவும் பகலுமாகிய இருபொழுதும் வருவோரும் செல்வோரும் செய்யும் ஆரவாரமும் நெய்தற்பறை முழக்கம் ஓசையும் தொழும் பூசலும் அழும் பூசலும் நரி கூகை குரால் ஆண்டலைப்புள்ளும் ஆகிய இவை செய்யும் ஆரவாரமும் ஆகிய எல்லாம் இன்னா இசையாய் ஒன்றாகிக் கடலோதை போல் எப்பொழுதும் ஒலிக்க.

இடுவோர்-வாளாது போகட்டுச் செல்வோர். மக்கட் பிணமும் நரிமுதலிய பிறவுயிர்கட்கு உணவாதலின் அவற்றைச் சுடுதல் முதலியன செய்யாமற் போகட்டுப் போவதும் சிறந்த அறமாம் என்று கருதும் கோட்பாடுடையோரும் அக்காலத்திருந்தனர் என்பது இதனால் அறியப்படும். தாழ்வயின் அடைத்தலாவது பள்ளத்திலிட்டுப் பிணத்தைப் பல விடங்கட்கும் இழுத்தேகாமல் அவ்விடத்திலேயே தின்றுவிடும்படி வழியை அடைத்து விடுதலாம். தாழி- மட்பாண்டம். இதனை முதுமக் கட்டாழி என்ப. கீழே ஒரு தாழியிலிட்டு மற்றொரு தாழியாற் கவிப்பது என்க. இளிவு-வாலாமை  தரியாது என்றது-காலந்தாழ்த்தாமல் என்றவாறு. சும்மை-ஆரவாரம். எஞ்சியோர் மருங்கின் ஈமஞ்சாற்றுதலாவது சாப்பறை முழக்கம். சாவுண்டென்பதனை மறந்துவாழ்வோர்க்கு நுமக்கும் சாவுண்டென்பதனை அறிவுறுத்தல். இதனை

மணங்கொண்டீண் டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே டொண்டொண்டொண்ணென்னும் பறை எனவரும் நாலடியானும்(25) உணர்க.

கூகை குழறுதலை இறக்கும் காலம் அணித்தாக வந்துற்றோரை அறிந்துவிரைவில் இறந்து பட்டு ஈமப்புறங்காட்டிற்கு வருமாறு அழைப்பதாகக் கருதுமொரு கோட்பாடு பற்றிச் சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும் என்றார். இல்லத்திற் கணுக்கமாகக் கூகையிருந்து குழறினால் இற்றை நாளும் அஞ்சி அதனை ஓட்டுவாரும், அணுமையில் யாரேனும் ஈண்டுச் சாவார் உளர் என்பாரும் உளர். தலையூண்துற்றிய ஆண்டலை என மாறுக. ஈண்டு ஊண் என்றது மூளையாகிய உணவை. துற்றுதல்- தின்னல். நன்னீராகிய யாறுகள் சென்று புணர்தலையுடைய நளிகடல் என்க. ஓதை-முழக்கம்.

சக்கரவாளக் கோட்டத்துள்ள மரங்களும் மன்றமும்

(இதன் பொருள்) தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து-தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஆகிய மரங்கள் வளரப் பெற்றுக் கான்றையும் சூரையும் கள்ளியுமாகிய செடிகள் செறியப்பெற்று; காய் பசிக் கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும் மாமலர் பெருஞ்சினை வாகை மன்றமும்-உடம்பு வற்றுதற்குக் காரணமான பதியையுடைய கடிய பேய் கூட்டமாகக் கூடியிருக்கின்ற முகில் தவழ்கின்ற பெரிய கிளைகளோடு கூடிய வாகை மரம் நிற்றலாலே வாகை மன்றம் என்று கூறப்படுகின்ற மன்றமும்; புள்வெள்நிணம் தடியோடு மாந்தி மகிழ் சிறந்து இறைகூறும் வெள்ளில்மன்றமும்- பல்வேறு பறவைகளும் மக்கள் யாக்கையின் வெள்ளிய நிணத்தையும் தசையையும் நிரம்பத் தின்றமையாலே மகிழ்ச்சி மிகப்பெற்று நெடும்பொழுது தங்குதற்கிடமான விளாமரம் நிற்றலாலே வெள்ளில்மன்றம் எனப்படும் மன்றமும்; சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு மடை தீ உறுக்கும் வன்னி மன்றமும்-சுடலையிலேயே சாந்துணையுமிருந்து இறந்துபடுவது என்னும் நோன்பினை மேற்கொண்டு அந்நோன்பினை தளராத உள்ளத்தோடிருந்து தாம் பெற்ற வாய்க்கரிசியாலே சோறு சமைத்தற்கு மண்டையிலிட்டுத் தீயின் மேல் ஏற்றும் இடமாகிய வன்னிமறம் நிற்கும் மன்றமும்; விரத மாக்கையர் உடைதலை தொகுத்து ஆங்கு இருந்தொடர்பபடுக்கும் இரத்தி மன்றமும்-விரதங்காக்கும் யாக்கையினையுடையோர் உடைத்த தலைகளைத் தொகுத்துப் பெரிய மாலையாகத் தொடுக்குமிடமாகிய இலந்தை மரம் நிற்கும் மன்றமும்; பிணம்தின் மாக்கள் நிணம்படு குழிசியில் விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும்-பிணத்தைத் தின்று வாழும் இயல்புடைய மாக்கள் கொண்டாடும் வெற்றிடமாகிய மன்றமும் ஆகிய இவ்விடங்களிலெல்லாம் என்க.

(விளக்கம்) தான்றி முதலிய மூன்றும் மரங்கள் என்றும், கான்றை முதலிய மூன்றும் செடிகள் என்றும் கொள்வாருமுளர். காய்பசி: வினைத்தொகை எனினுமாம். காய்தற்குக் காரணமான பசியுமாம்; காய்தல்-வற்றுதல்; நெடும்பசியால் அறவுலர்ந்து நெற்றாய் அற்றேம் என்பது பேய் முறைப்பாடு (கலிங்கத்து) பேய்ப் பிறப்பிற் பெரும் பசியே எஞ்ஞான்றும் அலைக்கும் என்னும் கோட்பாடு பற்றி; காய்பசிக் கடும்பேய் என்று விதந்தார். மால்-முகில். மால்-என்பதற்கு மயக்கம் எனவே பொருள் கொண்டு மயக்கமே உருக்கொண்டு எஞ்ஞான்றும் அமர்பந்திருத்தற்கிடமான பெருஞ்சினை எனலுமாம். பேய்கள் இருந்து மயக்குறுத்துதல் பற்றி அங்ஙனம் கூறினர். என்க.

மன்றம்-உயிரினங் கூடும் இடம். பெரும்பாலும் மன்றங்களில் யாதானும் மரம் நிற்பதுண்டு. ஈண்டு வாகை மரம் நிற்கும் மன்றம் வாகை மன்றம் எனவும், வெள்ளில் நின்ற மன்றம் வெள்ளில் மன்றம் எனவும், வன்னி மரம் நின்ற மன்றம் வன்னி மன்றம் எனவும், இரத்தி மரம் நின்ற மன்றம் இரத்தி மன்றம் எனவும் கூறப்படுகின்றன. மரமொன்றும் நில்லாத மன்றத்தை வெள்ளிடை மன்றம் என்றனர். சிலப்பதிகாரத்தினும் நகரத்துள்ளே அமைந்த மன்றம் பல கூறப்பட்டன, அவற்றுள்ளும்

உள்ளுநர்ப பனிக்கும் வெள்ளிடை மன்றம்

என ஒரு மன்றம் கூறப்படுதலறிக(5-17)

இனி, ஈமப்புறங்காட்டிலிருந்து நோன்பு செய்வாரும் உளர் என்பதனை, நீலகேசியில்,

இறைவி கோட்டத்து ளீரிரு திங்கள தகவை
உறையு ளாகவவ் வுறையருங் கேட்டகத் துறைவான்
பொறையும் ஆற்றலும் பூமியு மேருவு மனையான்
சிறைசெய் சிந்தைய னந்தமில் பொருள்களைத் தெரிந்தான்

ஆகிய முனிச்சந்திர பட்டாரகன் எனும் பெயர் முனிவன் பலாலயம் என்னும் சுடுக்காட்டினூடிருந்தே நோன்பு செய்தான் எனக் கூறப் பட்டிருத்தலாலுணர்க. இத்தகையோரும் சுடலை நோன்பிகள் ஆகுவர். இனி இவரைக் காபாலிக சமயத்துறவோர் என்பாரும் உளர்(நீலகேசி-33).

சுடலை நோன்பிகள் தம் வயிற்றுத் தீத்தணித்தற்கு அங்குக் கிடைக்கும் வாய்க்கரிசியை மண்ணுலியன்ற மண்டையில் உலை நீர் பெய்து சோறு சமைத்தற்கு அம் மண்டையை ஈமத்தீயில் வைப்பர் என்று கொள்க. அவருறையுமிடம் வன்னி மன்றம் என்று கொள்க. விரத யாக்கையர் என்றது மாவிரத சமயத் துறவோரை. இவர் மாந்தர் தலை யோட்டினை மாலையாகக் கோத்து அணிவாராதலின் உடைதலை தொகுத்து இரத்தி மன்றத்தே தொடர்ப்படுத்துவர் என்க. மாவிரதமாவது... சாத்திரத்திற் கூறும் முறையே தீக்கை பெற்று எலும்பு மாலை யணிதல முதலிய சரியைகளின் வழுவாதொழுகினவர் முத்தராவார் என்பது மாதவச் சிவஞான யோகியாரின் மணிமொழி.(சிவஞானபாடியம். அவையடக்கம்) பிணந்தின் மாக்கள் நிணம்படு குழிசியில் விருந்தாட்டயரும் வெள்ளிடை மன்றமும் என் புழிக் கூறப்படும் மாக்களும் ஒரு வகைச் சமயத் துறவோர் என்று கோடலுமாம். என்னை? காபால சமயத்துறவோர் நாடோறும் மனிதர் தலையோட்டில் ஐயமேற்றுண்பவர் எனச் சிவஞான முனிவர் கூறுதலானும் (சிவ-அவையடக்) மெய்ஞ்ஞான விளக்கத்தில் இவரைக் காளாமுக மதத்தினர் என்று கூறி இவர் கபால பாத்திர போசனம் சவ பஸ்மதாரணம் சவமாம் சபத்துவம் தண்டதாரணம்: சுராகும்பத் தாபன பூசை முதலியன உடையவர்(மெய்ஞ். மதவிளக்) எனக் கூறப் படுதலால், இவரையே ஈண்டு வெள்ளிடை மன்றத்து நிணம்படு குழிசியில் விருந்தாட்டயரும் பிணந்தின் மாக்கள் என்று சாத்தனார் குறிப்பிடுகின்றனர் எனல் மிகையன்று.

அவ்வீம்ப்புறங்காட்டிற் காணப்படும் பொருள்கள்

92-96: அழற்பெய்...... பறந்தலை

(இதன் பொருள்) அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும் புழல் என்னும் தின்பண்டத்தைப் பெய்து கொணரும் மட்பாண்டமும்;
வெள்ளில் பாடையும்- வெள்ளிலாகிய பாடையும்; உள்ளீட்டு அறுவையும்- பிணத்தை அகத்தே இட்டு மூடிக்கொணர்ந்த கோடிச் சீலையும்; பரிந்த மாலையும்- பாடை பிணம் இவற்றிற் கணியப்பட்டு அறுத்தெறியப்பட்ட மலர் மாலைகளும்; உடைந்த கும்பமும்-உடைக்கப்பட்ட குடங்களின் ஓடுகளும்; நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும்-சிதறிய நெல்லும் பொரிகளும் ஆவிக்குப் பலிப் பொருளாகப் பிணத்தின் வாயிலிடும் சில அரிசிகளும்; யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை-எவ்விடத்தும் பரந்து கிடக்கின்ற உயர்ந்த பெரிய அப் பாழிடமாகிய சுடு காடுதானும்; என்க.

(விளக்கம்) அழல்- பிணஞ்சுடக் கொணரும் நெருப்பு. குழிசி- பானை. வெள்ளில்-பாடை; வெள்ளிலாகிய பாடை என்க. பிணமாகிய உள்ளீட்டை உடைய அறுவை என்க. பாடையின் உள்ளே விரித்த அறுவையுமாம். அறுவை-துகில். நெல்சிந்தும் வழக்கமும் பலி அரிசியிடுதலும் இக்காலத்தும் உண்டு. ஆவிக்குப் பலியாகப் பிணத்திலிடும் அரிசையைச் சில்பலியரிசி என்றார். என்னை? ஒரு பிடியளவாகச் சிலரே இடுதலின் சிலவாகிய பலியரிசி என்றார். இக்காலத்தே வாய்க்கரிசி என்பது மது.

இனி ஈண்டுக் கூறப்படும் இவ் வருணனைகளோடு

ஆங்கமாநக ரணைந்தது பலாலைய மென்னும்
பேங்கொள் பேரதவ் வூரது பிணம்படு பெருங்காடு
ஏங்கு கம்பலை யிரவினும் பகலினு மிகலி
யோங்கு நீர்வையத் தோசையிற் போயதொன் றுளதே

எனவும்,

விண்டு நீண்டன வேய்களும் வாகையும் விரவி
இண்டு மீங்கையு மிருள்பட மிடைந்தவற் றிடையே
குண்டு கண்ணின பேய்களும் கூகையும் குழறிக்
கண்ட மாந்தர்தம் மனங்களைக் கலமலக் குறுக்கும்

எனவும்

ஈமத் தூமமு மெரியினு மிருளொடு விளக்கா
வூமைக் கூகையு மோரியு முறழுறழ் கதிக்கும்
யாமத் தீண்டிவந் தாண்டலை மாண்பில வழைக்கும்
தீமைக் கேயிட னாயதோர் செம்மலை யுடைத்தே

எனவும்,

வெள்ளின் மாலையும் விரிந்தவெண் டலைகளுங் கரிந்த
கொள்ளி மாலையுங் கொடிபடு கூறையு மகலும்
பள்ளி மாறிய பாடையு மெல்லும்புமே பரந்து
கள்ளி யாரிடைக் கலந்ததோர் தோற்றமுங் கடிதே

எனவும்,

காக்கை யார்ப்பன கழுதுதங் கிளையொடு கதறித்
தூக்க ளீர்ப்பன தொடர்ந்தபல் பிணங்களுந் தூங்கச்
சேக்கை கொள்வன செஞ்செவி யெருவையு மருவி
யாக்கை கொண்டவர்க் கணைதலுக் கரிதது பெரிதும்

எனவும்,

கோளி யாலமும் கோழரை மரங்களுங் குழுமித்
தூளி யார்த்தெழு சுடலையும் உடலமுந் துவன்றி
மீளி யாக்கைய தாக்கியுண் பேய்க்கண மிகைசூழ்
கூளி தாய்க்கென வாக்கிய கோட்டமொன் றுளதே

எனவும் வரும், நீலகேசிச் செய்யுள்கள் ஒப்பு நோக்கற்பாலன. (தருமவுரை: 27,28,29,30,31,32.)

மணிமேகலா தெய்வம் மக்களின் அறியாமைக் கிரங்குதல்

97-104: தவத்துறை....... உண்டோ

(இதன் பொருள்) (நங்கையீர்! ஈதொன்று கேண்மின்!;) தவத்துறை மாக்கள் மிகப் பெருஞ்செல்வர் ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் முதியோர் என்னான் இளையோர் என்னான்-இவர் உயர்ந்த தவநெறியிலே ஒழுகுகின்ற பெரியோர் இவர் மிகப் பெரிய செல்வமுடையோர் இவர் அணிமைக் காலத்தே மகவீன்ற இளம் பருவமுடைய மகளிர், இவர் துன்பம் பொறுக்கமாட்டாத இளங்குழவிகள், இவர் ஆண்டான் முதிர்ந்த சான்றோர், இவர் ஆண்டிளைய காளையர் என்று சிறிதும் எண்ணிப் பார்த்து இரங்காதவனாய்; கொடுந் தொழிலாளன் கொன்றனன் குவிப்ப-கொடிய கொலை செய்யுந் தொழிலையே மேற் கொண்டிருக்கின்ற கூற்றுவன் நாள்தோறும் மன்னுயிர்களைக் கொன்று குவியாநிற்ப; இவ்வழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்- இந்த நெருப்பையே வாயாகக் கொண்ட ஈமப்புறங்காடு கொன்று போகட்ட உடல்களைத் தின்று தீர்ப்பதனைக் கண்கூடாகக் கண்டு வைத்தும்; கழிபெருஞ் செல்வக் கள்ளாட்டயர்ந்து- மிகப் பெரிய செல்வமாகிய கள்ளை யுண்டு களித்து விளையாடி; மிக்க நல் அறம் விரும்பாது வாழும்- மிகச் சிறந்த நல்ல அறங்களைச் செய்தற்கு விரும்பாமல் உயிர் வாழுகின்ற; மக்களில் சிறந்த மடவோர் உண்டோ- மாந்தரினுங் காட்டில் பெரிய மடமையுடையோர் பிறர் உளரோ? கூறுமின்! என்றாள் என்க.

(விளக்கம்) துறவின்கட்புகுதற் கியன்ற ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள்ள மணிமேகலைக்கும் அந்நெறிக்கட் பயிலும் சுதமதிக்கும் ஒரு சேர யாக்கை நிலையாமை செல்வம் நிலையாமை இளமை நிலையாமை என்னும் மூவகை நிலையாமைகளும் உள்ளத்தின்கண் நன்கு பதியுமாறு முதன் முதலாக மணிமேகலா தெய்வம் சக்கரவாளக் கோட்ட வரலாறு கூறுதலைத் தலைக்கீடாகக் கொண்டு கேட்போர்க்கு அவ் வுணர்ச்சி தலைதூக்குமாறு தனது தெய்வ மொழியாலே செவியறிவுறுத்துகின்றது என்பதனை இதனைப் பயில்வோர் நன்குணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

ஈண்டு யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை ஆகிய மூன்று நிலையாமை போதரத் துறவோர் இறந்து படுதலையும் மிகப் பெருஞ்செல்வர் இறந்து படுதலையும் இளம் பெண்டிர் இறந்துபடுதலையும் பாலகர் இறந்துபடுதலையும் நிரல்பட வோதுதல் உணர்க. ஈங்குக் கூறப்படுவோருள் துறவோரிறந்து பாடுறுதல், தவத்தாலும் யாக்கையை அழியாதபடி செய்தல் சாலாது என்பதுணர்த்தற் பொருட்டாம். இனிச் செல்வ நிலையாமையும் இரு வகைப்படும். அவையாவன செல்வத்தை யீட்டிய செல்வர் இறத்தலும் அவருளராகச் செல்வமே அவரைக் கைவிட்டழிந்து போதலுமாம். சிறப்பு நோக்கிச் செல்வம் நிற்கச் செல்வரே இறந்துபடுதல் கூறியவாறு. இளமை நிலையாமை தோன்ற இளம் பெண்டிர் எனப்பட்டது. இன்பம் நுகர்தற்கியன்ற பருவம் வந்துறு முன்னரும் யாக்கை அழிதலுண்மையின் ஆற்றாப் பாலகர் அழிவையும் உடன் கூறிற்று. ஈற்றிளம் பெண்டிர் என்றமையால் பீட்பிதுக்கியும் கூற்றம் கொல்லுதலும் போந்தமை யுணர்க. மெய்யுணர்வார்க்கு நிலையாமையுணர்ச்சி இன்றியமையாமையை முன்னும் கூறினாம்.

கொடுந் தொழிலாளன்- கூற்றுவன். கொன்றனன்- கொன்று. அழலாகிய வாய். சுடலை-சுடுகாடு. கண்டும் என்றது காட்சியளவையால் கண்கூடாகத் தாமே ஐயந்திரிபறக் கண்டு வைத்தும் என்பதுபட நின்றது.

செல்வம் செருக்கைத் தோற்றுவித்தலின் கள்ளாகக் குறிப்புவமம் செய்யப்பட்டது. அறம் ஒன்றே செல்வத்துப் பயனாகவும் பிறந்தோர்க்கு ஆக்கமாகவும், பொன்றுங்காற் பொன்றாத் துணையாகவும் மீண்டும் பிறப்புற்று வாழ்நாள் வழியிடைக்கும் கல்லாகவும் அமையும் மாபெருஞ் சிறப்புடையது என்பது தோன்ற மிக்க நல்லறம் என்றும் அத்தகைய பேற்றினை அறியத்தகும் பிறப்பு மக்கட் பிறப்பே என்பது தோன்றவும் மக்களிற் சிறந்த மடவோர் உண்டோ? என்றும் ஓதியவாறாம். ஓகாரம் வினா. அதன் எதிர்மறையாகிய இல்லை என்னும் பொருளை வற்புறுத்தி நின்றது.

இனி, மணிமேகலை நெஞ்சம் காமத்தால் நெகிழ்ந்து புதுவோன் பின்றைப் போயதனை அங்ஙனம் போகாமைப் பொருட்டுத் தானிற்கின்ற துறவறத்தை உறுதியாகக் கடைப்பிடித்திடுக என்று ஈண்டு வற்புறுத்துவதே அத் தெய்வத்தின் கருத்தாகலின் ஈண்டு அறம் என்பது துறவின் மேனின்றது அது தோன்றவே அறம் என வாளாது கூறாமல் மிக்க அறம் என்று அத்தெய்வம் விதந்து கூறிற்று.

யாக்கையின் இழிதகைமை

105-115: ஆங்கது....ஓதையும்

(இதன் பொருள்) ஆங்கு அது தன்னை-அவ்வாறிருக்கின்ற அச் சக்கரவாளக் கோட்டத்தை; ஓர் அருங்கடி நகர் என-ஓர் அரிய காவலமைந்த நகரம் என்று கருதி அதனூடே புகுந்து; தனிவழிச் சென்றோன் சார்ங்கலன் என்போன்-இரவிலே தமியனாய்ச் சென்றவனாகிய சார்ங்கலன் என்னும் ஒரு பார்ப்பனச் சிறுவன் அவ்விடத்தே; யாக்கை என்புந் தடியும் உதிரமும் என்று அன்பு உறும் மாக்கட்கு அறியச் சாற்றி- மாக்களே உடம்பென்று நும்மால் பேணப்படும் பொருள் வறிய எழும்பும் தசையும் குருதியுமாகிய அருவருக்கத் தகுந்த இவ்விழிதகைப் பொருள்களின் கூட்டமேயன்றிப் பிறிதொரு பெருந்தகைமையும் உடையதன்று காண்! என்று அதன்பால் பெரிதும் அன்பு கொள்ளுகின்ற அறிவிலிகளுக்குத் தன்னையே சான்றாக்கி நன்கு அறிவுறும்படி; வழுவொடு கிடந்த புழுவூண் பிண்டத்து- நிணத்தோடு கிடந்த புழுக்கள் நெளிகின்ற அழுகிய ஊனோடு கூடிய பிணத்தினது; அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய்க்கொண்டு உலப்பில் இன்பமொடு உளைக்கும் ஓதையும்- பண்டு செம்பஞ்சுக் குழம்பூட்டி அழகு செய்யப்பட்டிருந்த அடிகளை நரிகள் தம் வாயாற் கொண்டு அழியாத இன்பதோடு ஊளையிடாநின்ற ஒலியையும்; கழுகு கலைப்புற அல்குல் குடைந்து உண்டு நிலத்திலை நெடுவிளி எடுக்கும் ஓதையும்- கழுகு மேகலையென்னும் அணிகலனாலே பண்டு புறத்தே அழகு செய்யப்பட்ட அல்குலை அலகினாலே குடைந்து குடைந்து வயிறு நிரம்பத் தின்றமையாலே பெரிதும் மகிழ்ந்து நிலத்தின்மேனின்று நீளிதாகக் கூவுகின்ற ஒலியும்; கடகம் செறிந்த கையைத் தீ நாய் உடையக் கல்வி ஒடுங்கா ஓதையும்- பண்டு கங்கணம் செறிந்து கிடந்த கையைச் சுடுகாட்டு நாய் என்புமுறிய வாயாற் கவ்வித் தின்று ஒழியாமல் குரைக்கின்ற ஒலியும்; என்க.

(விளக்கம்) ஈண்டுக் கூறப்படும் பிணம் பெண்பிணம் என்பது கூறாமலே விளங்கும். கேட்போர் மகளிராதலின் தம்முடம்பிலேயே அருவருப்புத் தோன்றுதற் பொருட்டு அத் தெய்வம் பெண்ணுடம்பையே விதந்தெடுத்துக் கூறியபடியாம். பின்னும் இவ் விளக்கம் கொள்க.

தடி- தசை. வழு-உடம்பிலுள்ள நிணம். அலத்தகம்- செம்பஞ்சுக் குழம்பு. உளைக்கும்- ஊளையிடும். நிலைத்தலை என்ற பாடத்திற்கு நிமிர்த்திய தலை என்க. கலை-மேகலை. கடகம்-கங்கணம். தீநாய்-சுடு காட்டிலேயே வாழும் நாய். இதனை ஒரு சாதி நாய் என்பாருமுளர். என்புடையக் கவ்வி என்க.

இனி இப் பகுதியோடு

குடருங் கொழுவுங் குருதியு மென்பும்
தொடரும் நரம்பொடு தோலும்-இடையிடையே
வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்
எத்திறத்தா ளீர்ங்கோதை யாள்   (46)

எனவரும் நாலடி வெண்பா ஒப்புநோக்கற்பாலது.

இதுவுமது

116-127: சாந்தம்....எய்தி

(இதன் பொருள்) சாந்தம் தோய்ந்த ஏந்து இளமுலை காய்ந்த பசி எருவை கவர்ந்து ஊண் ஓதையும்- சந்தனம் நீவப்பெற்ற அணந்த இளமுலையின் ஊனை மிகவும் வருந்திய பசியோடு வந்த பெருங்கழுகு அலகினாலே கவர்ந்து தின்று மகிழ்ந்து கூவும் ஒலியும்; பண்பு கொள் யாக்கையின் வெள்பலி யரங்கத்து-பல்வேறு பண்புகளைக் கொண்டுடிருந்த மக்கள் உடம்பைச் சுட்டமையாலேயுண்டான வெண்ணிறமான் சாம்பற் குவியலாலியன்ற மேடை மேலே: ஓர் பேய் மகள் ஆங்கு ஓர் கருந்தலை வாங்கி-ஒரு பெண் பேயானது ஆங்குக் கூந்தலாலே கறுப்பாகக் கிடந்த தலையைத் திருகித் தன்; கையகத்து- கையிடத்திலே; மண்கணை முழவம் ஆக ஏந்தி- மண் பூசப்பெற்ற தண்ணுமையாக ஏந்திக் கொண்டு; இரும்பேர் உவகையின் எழுந்து- மிகவும் பெரிய மகிழ்ச்சியோடு எழுந்து நின்று அத் தலையின்கண் அமைந்த உறுப்புக்களைத் தனித்தனி நோக்கிக் காமுகர்; புயலோ குழலோ கயலோ கண்ணோ குமிழோ மூக்கோ இதழோ கவிரோ பல்லோ முத்தோ என்னாது இரங்காது-இது முகிலோ அல்லது கூந்தல் தானோ? இவை கயல் மீனகளோ அல்லது கண்கள் தாமோ? இது குமிழ் மலரோ அல்லது மூக்குத்தானோ? இவை அதரங்களோ அல்லது முருக்கமலரிதழ்களேயோ? இவை பற்களோ அல்லது முத்துக் கோவையோ? என்று அவற்றைச் சிறிதும் பாராட்டாமலும் அவற்றின் பால் இரக்கங் கொள்ளாமலும்; கண்தொட்டு உண்டு அத் தலையிலமைந்த கண்களை அகழ்ந்தெடுத்துத் தின்றவாறே; கவை அடிபெயர்த்து- தனது கவைத்த விரல்களையுடைய அடிகளைப் பெயர்த்து; தண்டாக் களிப்பின் ஆடும்- தணியாத மகிழ்ச்சியோடே ஆடா நின்ற கூத்தினை; கண்டனன் வெரீஇ கடுநவை எய்தி அச்சத்தாலே பெருந் துன்பமெய்தி என்க.

(விளக்கம்) சார்ங்கலன் என்போன், ஓதைபல கேட்டுச் சென்றவன் பேய்மகள் ஆடும் கூத்துக்கண்டு நவை எய்தி என்க. கடுநவை எய்தி என்பதற்குப் பேயாற் பிடிக்கப்பட்டு என்று கூறுவாருமுளர். அவ்வுரை போலி என்னை? அணங்கும் பேயும் பிடிப்பதுமில்லை உயிருண்பதுமில்லை என்று சாதிப்பதே இந்நூலாசிரியரின் மேற்கோளாதலின் பேயாற் பிடியுண்டதாகவும் பேய் உயிருண்டதாகவும் கருதுவதற்குக் காரணம், பேதமையேயன்றி அந் நிகழ்ச்சியெல்லாம் ஊழ்வினையின் நிகழ்ச்சிகளே என்று காட்டுவதற்கே நூலாசிரியர் இச் சார்ங்கலன் கதையே ஈண்டுப் படைத்துள்ளார் ஆதலின் என்க.

எருவை-கழுகில் ஒருவகை. பண்புகொள் யாக்கை என்றது இகழ்ச்சி எனினுமாம். வெண்பலி யரங்கம் என்றது சாம்பலாலியன்ற மேட்டினை. மண்பூசப் பெற்ற திரண்ட முழவம் என்க. உவகை- சிறந்த ஊண் கிடைத்தமை பற்றி யுண்டாயது. காமுகர் கூந்தல் முதலியவற்றைப் புயல் முதலியனவாகக் குறிப்புவமஞ் செய்து பாராட்டுதலை நலம் பாராட்டுதல் என்ப. இப் பேய் அங்ஙனம் பாராட்டிற்றில்லை: பரிவு கொள்ளவுமில்லை என்பாள் புயலோ.... என்னாது இரங்காது என்றாள். தொட்டு- அகழ்ந்து. தண்டா- தணியாத.

சார்ங்கலன் செயல்

128-131: விண்டோர்.....வைத்தலும்

(இதன் பொருள்) விண்டு ஓர்திசையின் விளித்தனன் பெயர்ந்து-அவ்விடத்தினின்றும் நீங்கி மெய்மறந்து தான்சென்ற திசையை நோக்கி அம்மையே என்று கூவியவனாய் விரைந்து தன்னில் முன்றிலை எய்தி ஆங்கெதிர்வந்த அன்னையை நோக்கி. எம்மனை ஈங்கு காணாய் ஈமச் சுடலையின்- என் அன்னையே ஈங்கு என்னை நோக்குதி ஈமம் எரிகின்ற சுடுகாட்டின்கண்; வெம் முதுபேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என- வெவ்விய முதுமையுடைய தொரு பேய்க்கு யான் என் உயிரைக் கொடுத்தொழிந்தேன்! என்று பிதற்றிய வண்ணம்; தம்மனை தன்முன் வீழ்ந்து மெய்வைத்தலும்- தன் தாயின் முன்னிலையிலேயே வீழ்ந்து உயிர்நீத்தலும்; என்க.

(விளக்கம்) விண்டு- நீங்கி. ஓர் திசை  என்றது தான் சென்று கொண்டிருந்த அத் திசையில் என்றவாறு. விளத்தனன் என்றது அம்மையே! என்று தன் அன்னையே அழைத்து அலறியவனாய் என்றவாறு. பெயர்ந்து- ஓடி. எம்மனை- எம்மன்னை; மரூஉவழக்கு தம்மனை என்பதும் அது: வெம்முது பேய்க்கு என்னுயிர் கொடுத்தேன் என்றது இவ்வாறு சொல்லிப் பிதற்றி என்றவாறு. மெய்வைத்தலும் என்றது வீழ்ந்து இறத்தலும் என்றவாறு.

சார்ங்கலன் தாய் கோதமை செயல்

132-138: பார்ப்பான் ....பதியென

(இதன் பொருள்) பார்ப்பான் தன்னொடு கண் இழந்து இருந்த இத் தீத்தொழிலாட்டி- தன் கணவனாகிய பார்ப்பனனோடு தானும் கண்ணிழந்திருந்த இந்தப் பார்ப்பனிதானும் காவற்றெய்வமாகிய சம்பாபதியை உள்ளத்தால் நோக்கி; சம்பாபதி- சம்பாபதி யென்னுந் தெய்வமே! கேள்!; என் சிறுவனை- அளியேனாகிய என் ஒரு மகனாகிய இச் சிறுவனை; யாருமில் தமியேன் என்பது நோக்காது- களைகணாவார் யாரும் இல்லாதேன் என்பதனை எண்ணியிரங்காமல்; ஆர் உயிர் உண்டது அணங்கோ பேயோ- அரிய உயிரையுண்டது தெய்வமேயோ அல்லது அவன் கூறியவாறு முதுபேய்தானோ? அறிகிலேன்; துறையும் மன்றமும் தொல்வலிமரனும் உறையுளும் கோட்டமும் காப்பாய்- நீர்த்துறைகளிடத்தும் மன்றங்களிடத்தும் பழைமையான வலிமையுடைய மரங்களிடத்தும் மக்கள் வதியும் பிறவிடங்களினும் கோயில்களிடத்தும் மக்களுக்குத் தெய்வத்தானால் பேய்களினானாதல் தீங்கொன்றும் நிகழாவண்ணம் காக்கும் பேரருள் உடையாய்; காவாய்- எளியேமாகிய எம்மைக் காவாது கைவிட்டனை; தகவு இலை கொல்லோ- எம்மாட்டு அத்தகைய அருள் உடையாய் அல்லையோ! என்று அரற்றி; என்க.

(விளக்கம்) பார்ப்பான் என்றது- பார்ப்பனனாகிய என் கணவன் என்பதுபட நின்றது. பார்ப்பானொடு கண்ணிழந்திருந்த தீத் தொழிலாட்டி என்றமையால் தானும் கண்ணிழந்தமை குறித்தாள். இவ்வாற்றால் தீத் தொழிலாட்டி என்றது தீவினையாட்டி என்னும் பொருளுடைய தெனினுமாம். சிறுவன் என்றாள் அவனும் இரங்கற் குரியான் என்பது தோற்றுவித்தற்கு. யாருமில் தமியேன் என்பதுமது. அணங்கு- தீண்டி வருத்தும் தெய்வம். துறை- நீராடுதுறை. துறை முதலியன அணங்கானும் பேயானும் தீங்குறுத்தப் படுமிடம். தகவு என்றது மன்னுயிர்புரக்கும் பேரருளுடைமையை. எல்லார்க்கும் அருள் செய்யும் அருளுடையாய்க்கு எம்பால் அஃதொழிந்ததோ என்றரற்றியபடியாம்.

இனி, இக் காதையில் சக்கரவாளக் கோட்டத்தின் வரலாறு கூறுதல் தலைக்கீடாக 34. இந் நாமறப் பேரூர் தோன்றிய ஈமப்புறங்காடு என்பது தொடங்கி 131. வீழ்ந்து மெய் வைத்தலும் என்பதீறாக, பிறப்பாகிய துன்பம் எய்துதற்குக் காரணமான, காம வெகுளி மயக்கங்கள் என்னும் முக்குற்றமும் விளைதற்குக் காரணமான பிறப்பினை உண்டாக்கும் பற்றினை அறுத்தற்கு இன்றியமையாத ஐவகைப் பாவனை யுள்ளும் தலைசிறந்த (துன்பியல்) அசுப பாவனை மணிமேகலைக்குக் கைவருதற் பொருட்டு இவ்வுடம்பு,

அநித்தம் துக்கம் அநான்மா அசுசி

என்னும் நான்கு மெய்யுணர்ச்சிகளையும் மிகவும் நுண்ணிதாகச் செவியறிவுறுத்திய அருமையை உணர்க. இவ்வுண்மை அறியப்படாவிடின் இதனைப் பயில்வோர் இக் காதையின் சிறப்பைச் சிறிதும் உணராராவர் என்க. மேலே கூறப்பட்ட ஐவகைப் பாவனைகளும் 30. பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதையில் நன்கு விளக்கப்படும்.

கோதமை சம்பாபதியிடம் முறையிடுதல்

139-149: மகன்மெய்....காணென

(இதன் பொருள்) கோதமை என்பாள் மகன் மெய் யாக்கையை மார்பு உறத் தழீஇ-இவ்வாறு அரற்றிய கோதமை என்னும் அப் பார்ப்பினி செய்தமை கேண்மின்! அவள்தான் தன் மகனுடைய உயிரற்ற மெய்யாகிய அவ்வுடம்பினைத் தன் கைகளாலே எடுத்துத் தன்மார்புபோடு நன்கு பொருந்துமாறு தழுவிச் சுமந்து கொடுபோய்; ஈமப் புறங்காட்டு எயில் புற வாயிலின் கொடுந்துயர் சாற்ற- அச்சுடுகாட்டுக் கோட்டத்தின் மதிலினது வாயிற்புறத்திலே கிடத்திநின்று சம்பாபதியை மனத்தானினைந்து வாயால் அழைத்துத் தானெய்திய கொடிய அத் துன்பத்தைக் கூறி முறை வேண்டாநிற்ப; பொன்னின் பொலிந்த நிறத்தாள்- பொன் போன்ற நிறமுடையவளாகச் சம்பாபதி என்னும் அத் தெய்வந்தானும் அவளுடைய அகக்கண் முன்னர் வந்து; கடி வழங்கு வாயிலின் கடுந்துயர் எய்தி இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை என் உற்றனையோ எனக்கு உரை என்று தோன்ற-நங்காய்! பேய்கள் திரிகின்ற இவ் வாயிலிடத்தே கொடிய துன்பமெய்தி நள்ளிரவில் இவ்விருள்மிக்க யாமத்திலே என்னை இங்கு வருமாறு அழைக்கும் நீ தான் எத்தகைய இன்னல் எய்தினையோ அதனை எனக்கு இயம்புக என்று பரிவுரை கூறத் தோன்றாநிற்ப ஆரும் இல்லாட்டி என் அறியாப் பாலகன் ஈமப்புறங் காட்டு எய்தினோன் தன்னை-பாதுகாவல் செய்தற்குரியார் யாருமில்லாத அளியேனாகிய என் ஒருமகனாகிய விரகறியாத சிறுவன் நீயே எழுந்தருளியிருக்கின்ற இச் சுடுகாட்டின்கண் வந்தடனை ஆருயிர் உண்டது அணங்கோ பேயோ-அரிய உயிரைக் குடித்ததுநின் ஆட்சியிலடங்கிய அணங்கேயோ பேயோயான் அறிகின்றிலேன்; உறங்குவான் போலக் கிடந்தனன்காண் என-உதோ துயில்பவனைப் போன்று கிடக்கின்றனன் நீயே கண்டருளுதி என்று கூற; என்க.

(விளக்கம்) மெய்யாகிய யாக்கை: இரு பெயரொட்டு. கொடுந்துயர்- மகனை இழந்த பொறுக்கொணாத் துன்பம். சாற்ற- கூறிமுறை வேண்ட என்க. புறக்கண் குருடாகலின் அகக்கண் முன்னே உருவத்தோடு தோன்ற என்க. என்னுற்றனையோ எனக்குரை என்றது பரிவுரை. பொன்னிற் பொலிந்த நிறத்தாள் தோன்ற என்றமையால் அத் தெய்வம் அவள் அகக் கண்ணால் காண்டற்கியன்ற அருளுருவம் கொண்டு தோன்ற என்க. இக் காட்சி கனாக்காட்சி போல்வதாம் என்றுணர்க.

கணவனும் கண்ணிலன் யானும் கண்ணிலேன் எம்மைத் தாங்குங்கேளிரும் இலேன் எமக்குதவியாயிருந்த இச் சிறுவனைக் கொன்றது உன் அருளாட்சிக்கண் நிகழத் தகாததொரு கொடுமை; இங்ஙனம் நிகழவும் நீ வாளா திருந்தது என்னையோ? என்று முறையிட்ட படியாம்.

சம்பாபதி மறுமொழிழும் கோதமை வேண்டுகோளும்

150-153: அணங்கும்.... என்றலும்

(இதன் பொருள்) அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா-அது கேட்ட அத் தெய்வம் அவள் வினாவிற்கு மறுமொழியாக, பார்ப்பனியே ஈதொன்றுகேள்! நீ நினைக்கின்றபடி அணங்காதல் பேயாதல் அரிய உயிரை உண்ண மாட்டா; பிணங்கு நூல் மார்பன் பேது கந்து ஆக ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது- முறுக்குண்ட பூணூலணிந்த இச் சிறுவனுடைய பேதமையையே பற்றுக்கோடாகக் கொண்டு இவன் முற்பிறப்பிலே செய்த தீவினையாகிய இவனது ஊழே இவன் உயிரைக் கவர்ந்து கொண்டு போயிற்றுக்காண்! இஃதியற்கை என்றுணர்ந்து கொள்வாயாக!; மாபெருந்துன்பம் நீ ஒழிவாய் என்றலும்- நின் பேதமை காரணமாக நீ எய்துகின்ற இம் மாபெருந்துன்பத்தைக் களைந்து அமைதிகொள்வாயாக என்று தேற்றுரை கூறாநிற்ப என்க.

(விளக்கம்) அணங்கு-பிறவுயிரைத் தீண்டி வருத்தும் தெய்வம். உயிர் அணங்கு முதலியவற்றால் உண்ணப்படும் உணவுப் பொருளன்று ஆதலால் அதனை அவை உண்ணும் என்று கருதுவதே அறியாமை என்று விளக்கியபடியாம். இனி தீதும் நின்றும் பிறர்தர வாரா அவை முன்பு செய்த பழவினைப் பயனாகத் தாமே வருவன. உன் மகன் இறந்தமைக்கும் அவன் பழவினையே காரணம் என்றுணர்ந்து துன்பந்தவிர் என்று ஆறுதல் கூறியபடியாம்.

இதுவுமது

154-163: என்னுயிர்...மடவாய்

(இதன் பொருள்) என்  உயிர் கொண்டு இவனுயிர் தந்து அருளின் இவன்கண் இல் என் கணவனைக் காத்து ஓம்பிடும்-அதுகேட்ட அவ்வன்புமிக்க தாயாகிய கோதமை அத் தெய்வத்தை நோக்கி எல்லாம்வல்ல தெய்வம் நீ அதலாலே இவன் ஊழ்வினை வேண்டுவது ஓர் உயிரேயாகலின் என்னுயிரைக் கைக்கொண்டு இச்சிறுவன் உயிரைமீட்டுத் தந்தருள்வாயாயின் அளியேனுடைய கண்ணில்லாத கணவனை இச்சிறுவன் பேணிக்காப்பாற்றுவனாகலின்; இவன் உயிர்தந்து என் உயிர்வாங்கு என்றலும்-இச்சிறுவன் உயிரை மீட்டுத்தந்து அதற்கீடாகக் கண்ணற்றவளாகிய என் உயிரைக் கவர்ந்து கொண்டருள்க! என்று வேண்டாநிற்ப; முது மூதாட்டி இரங்கினள் மொழிவோள்-அவ் வேண்டுகோள் கேட்ட அம் மிகப் பழைய தெய்வமாகிய சம்பாபதிதானும் அவள் பொருட்டுப் பெரிதும் பரிவு கொண்டு அவட்குக் கூறுபவள்; மடவாய்- மடப்பமிக்க பார்ப்பன மகளே கேள்!; ஆருயிர் போனால் செய்வினை மருங்கின் சென்று பிறப்பெய்துதல் ஐயம் உண்டோ- ஓருடலின்கண்ணிருந்து- வாழும் உயிர் இறந்துபோனக்கால் அவ்வுயிர் மீண்டும் அப் பழவினைசார்பாகவே போய் மற்றுமொரு பிறப்பின் எய்தும் என்னும் திறவோர் காட்சியில் உனக்கு ஐயமும் உண்டேயோ? ஐயுறாதே கொள், அஃது அங்ஙனமே சென்று மீண்டும் பிறப்பெய்தா நிற்கும் என்பது தேற்றமேகாண்; ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல்- அவ்வாறாகிய நின்மகன் உயிரை மீட்டுக்கொணர்ந்து இறந்துபட்ட இவ் வுடம் பிலே புகுத்தி நீ எய்திய ஆற்றுதற்கரிய துன்பத்தைக் களைதல்; ஈங்கு எனக்கும் ஆவது ஒன்று அன்று- ஈங்குக் காவற்றெய்வ மாயிருக்கின்ற எனக்கும் ஆற்றலாகும் ஓர் எளிய செயல் அன்று காண்!; நீ இரங்கல்- நீ இங்ஙனம் வருந்தாதே கொள்; ஆங்கது- நீ கூறுவது; கொலை அறம் ஆம் எனும்-ஓர் உயிரின துயர்களைதற்குப் பிறிதோர் உயிரைக்  கொலை செய்தலும் அறம் ஆகும் என்று கூறுகின்ற; கொடுந்தொழில் மாக்கள் அவலப் படிற்று உரை- கொலைத்தொழில் செய்கின்ற மடவோர் கூறுகின்ற துன்பத்திற்குக் காரணமான வஞ்சகமொழியே காண்!; என்க.

(விளக்கம்) மன்பதையின் துயர்தீர்த்தற் பொருட்டு வேள்விக் களத்திலே உயிர்ப்பலி செய்கின்றவர் கொள்கையே ஓருயிர்க்கு ஈடாக மற்றோர் உயிரைப் பலி யிடுவதும் அறமாம் என்பது. அது தீவினையேயன்றி அறமாகாது அதனால் விளைவது மீண்டும் துன்பமேயன்றிப் பிறிதில்லை; ஊன் உண்ணுதற்கு விரும்பும் தீயோர் கூறும் வஞ்சக மொழியே அஃது; அதனைக் கைவிடுக என்று தேற்றியபடியாம். இங்ஙனம் கூறுவோர் இயல்பும் அவர்வினை இயல்பும் அவர் மொழியியல்பும் ஒருசேரத் தெரித்தோதுகின்ற அத் தெய்வம் கொலை அறம் ஆம் எனும் கொடுந்தொழின் மாக்கள் அவலப் படிற்றுரை ஆங்காது எனச் சொற்றிறம் தேர்ந்து கூறுதலறிக.

ஈங்கு எனக்கும் ஆவது ஒன்றன்று எனல் வேண்டிய சிறப்பும்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது.

போன நின்மகன் உயிரும் புதுப்பிறப்பெய்தி வாழும். ஆதலால் நீ இரங்கல் என்று தேற்றியபடியாம். இரங்கல்- இரங்காதேகொள். அவலம்-துன்பம்; படிறு-வஞ்சம். ஆங்கது ஓருயிர்க்கு ஈடாக மற்றோருயிரைக் கொடுத்து மீட்கலாம் என்னும் நின்கோட்பாடு.

இதுவுமது

163-167: உலக.... என்றலும்

(இதன் பொருள்) ஆங்காது மடவாய் அவ்வுண்மை கேட்பாயாக! உலக மன்னர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர் இலரோ-அன்புடையோய்! இந்நிலவுலகத்தை ஆளும் திருவுடைய மன்னர்கள் இறந்தபொழுது அவர் உயிர்க்கு ஈடாக உயிர் வழங்குவோர் இப் பேருலகில் இலர் என்றோ நினைதி!; எண்ணிறந்தோர் உயிர்வழங்க முன்வருபவர் உளர்காண்; இந்த ஈமப் புறங்காட்டு அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம்- பார்ப்பன மகளே! இந்தச் சுடுகாட்டுக் கோட்டத்தினுள்ளேயே இறந்த அரசரைப் புதைத்து அதன்மேல் நினைவுக்குறியாக எடுக்கப்பட்ட கோயில்கள் ஆயிரத்திற்கு மேலும் இருக்கின்றனகாண்!; நிரயக் கொடு மொழி நீ ஒழி என்றலும்-ஆதலாலே, உயிர்க்குயிர் ஈவேன் என்னும் நிராயத்துன்பந்தரும் இம் மொழியைக் கூறாது விடுக என்று; கூறியருளுதலும் என்க.

(விளக்கம்) உலக மன்னவர் என்றது சோழ மன்னர்களை. இலரோ என்புழி ஓகாரம் எதிர்மறை. பலர் உயிரீவோர் உளராவர் என அதன் எதிர்மறைப் பொருளை வற்புறுத்து நின்றது. ஆயிரங் கோட்டம் என்றது மிகுதிக்கு ஓரெண் காட்டியவாறு. நிரயக் கொடுமொழி என்றது. இவனுயிர்க்கு என்னுயிர் கொள் என்றதனை.

கோதமை கூற்று

168-171: தேவர்......ஈங்கென

(இதன் பொருள்) தேவர் வரம் தருவர் என்று நால்மறை அந்தணர் நல்நூல் ஒரு முறை உரைக்கும்- தெய்வமே கேட்டருள் துன்புழந்து வருந்தினோர் வழிபாடு செய்து வேண்டினால் தெய்வங்கள் அத் துயர் தீர்க்கும் வரத்தை வழங்குவர் என்று நான்கு மறைகளாகிய அந்தணருடைய மெய்ந்நூல்கள் அவர்க்கு உய்திபெறும் ஒரு முறைமையினைக் கூறாநிற்கும்; மாபெருந் தெய்வம் நீ அருளாவிடின்-அத் தெய்வங்களுள்ளும் மிகப் பெரிய தெய்வமாகிய நீயே யான் கேட்ட இவ்வரத்தை வழங்கி அருளாதொழியின்; யான் ஈங்கு என் உயிர் காவேன் என-அளியேன் இவ்வுலகத்துப் பின்னும் வாழ்வுகந்து என் உயிரைப் பேணுவேனல்லேன் காண்! என்றாள் என்க.

(விளக்கம்) ஒரு முறை-துன்புற்றோர்க்குய்தி பயக்கும் ஒரு வழி நான்மறையாகிய நன்னூல் அந்தணர் நன்னூல் எனத் தனித்தனி இயையும். தெய்வங்களுள் வைத்துத் தலைசிறந்த தெய்வமாகிய நீயே என்பாள், மாபெருந் தெய்வம் நீ என்றாள், பிரிநிலை ஏகாரஞ் செய்யுள் விகாரத்தால் தொக்கது.

சம்பாபதியின் மறுமொழி

172-185: ஊழிமுத....இதுவென

(இதன் பொருள்) ஊழி முதல்வன் உயிர்தரின் அல்லது -ஊழி முடிவின் மீண்டும் உலகியற்றும் பெருங்கடவுளாகிய பிரமன் இறந்தொழிந்த உயிரைப் படைத்துத் தந்தால்(தருதல் கூடும் அவன்) அல்லது; ஆழித்தாழி அகவரைத் திரிவோர் தாம்தரின் யானும் தருகுவன்-சக்கரவாளமாகிய தாழியினூடே என்னைப் போன்று திரிகின்ற தேவர்கள் தாம் நீ வேண்டுமாறு நின் மகன் உயிரை மீட்டுத் தருவார் உளராயின் யானும் நின்மகன் உயிரை மீட்டுத் தருகுவேன் காண்!. மடவாய்- மடப்ப மிக்க பார்ப்பன மகளே நீயே; ஈங்கு என் ஆற்றலும் காண்பாய் என்று இப்பொழுதே என்னுடைய ஆற்றலையும் காணக்கடவாய் என்று கூறி; நால்வகை மரபின் அரூபப் பிரமரும் நால் நால் வகையின் உரூபப் பிரமரும்-நரல்வேறு முறைமையினையுடைய அரூபப் பிரமர்களும், பதினாறு வகைப்பட்ட உரூபப் பிரமரும்; இருவகைச் சுடரும்-ஞாயிறுந் திங்களுமாகிய இருவகைப்பட்ட ஒளிக்கடவுளரும்-இரு மூவகையின் பெருவனப்பு எய்திய தெய்வதகணங்களும்-ஆறு வகைப்பட்ட பேரழகுடைய தெய்வக் கூட்டங்களும்; பல்வகை அசுரரும்-பலவேறு வகைப்பட்ட அசுரர்களும் படுதுயர் உறூஉம் எண்வகை நரகரும்-பெருந்துன்பத்தை எய்தா நின்ற எட்டு வகைப்பட்ட நரகரும்; இருவிசும்பு இயங்கும் பல்மீன் ஈட்டமும்- பெரிய வானத்திலே இயங்கா நின்ற பலவாகிய மீன் கூட்டமும்; நாளும் கோளும் தன் அகத்து அடக்கிய- நாண்மீன்களும் கோள்களும் ஆகிய தேவ கணங்களையெல்லாம் தன்னுள்ளே அடக்கிக் கொண்டிருக்கின்ற; சக்கரவாளத்து- சக்கரவாளமாகிய இவ்வண்டத்தினுள்ளே உறைகின்ற; வரந்தரர்க்கு உரியோர் தமை முன் நிறுத்தி- மாந்தர்க்கு வரந்தருதற்கு உரிமையுடையோரை எல்லாம் சம்பாபதி தனது ஆற்றலாலே வரவழைத்து அக்கோதமையின் அகக்கண் முன்னர் நிறுத்தி வைத்து; இவள் அருந்துயர் இது- தேவர்களே கேண்மின்! இப் பார்ப்பனிக்கு இப்போது எய்தியிருக்கின்ற தீர்ததற்கரிய  துயரம் இஃதேயாம்; அரந்தை கெடுமின் என-நும்மில் யாரேனும் இவளுடைய இத் துன்பத்தைப் போக்கியருளுமின் என்று வேண்டாநிற்ப என்க.

(விளக்கம்) ஊழி முதல்வன் என்றது இவ் வுலகம் அழிந்தொழிந்த ஊழியின் பின்னர் மீண்டும் உலகத்தைப் படைக்கின்ற பிரமதேவனை இவன் செந்தாமரை மலர்மேல் வீற்றிருப்பவன் என்பது பௌத்தர் கொள்கை. பிரமர் பலவகைப்பட்டுப் பலராதலின் இவனை ஊழி முதல்வன் என்றும். செம்மலர் முதியோன் என்றும் மகாப்பிரமா என்றும் விதந்தோதுவர். உலகப் படைப்பு அந்தம் ஆதி என்மனார் புலவர் எனச் சைவசித்தாந்தத்தே கூறப்படுமாறே இவரும் ஊழிக்குப் பின் உலகம் படைக்கும் முதல்வன் என்றே கூறுதல் உணர்க. ஆழித்தாழி- சக்கரவாளக் கோட்டமாகிய தாழிவடிவிற்றாகிய அண்டம் என்க.

திரியுந் தேவரில் யாரேனும் தருவார் உளராயின் யானுந் தருகுவன் என்றது, அவ் வரந்தருதற்கு எத் தேவராலும் இயலாது என்பதுபட நின்றது. எனக்குரிய ஆற்றல் எனக்குளது அதனைக் காட்டுவல் நீயே அதனையும் காண்க. நீ கேட்கும் வரந்தரும் ஆற்றல் ஊழி முதல்வற்கன்றிப் பிற தேவருக்கில்லை என்பதனைக் தெரிந்து விளக்கியபடியாம். தேவர்களை எல்லாம் ஒருங்கழைத்துக் காட்டுமாற்றால் சம்பாபதி தன் ஆற்றலை வெளிப்படுத்திக் காட்டியவாறாம்

நால்வகை மரபின் அரூபப் பிரமர்- நால்வகை உலகங்களின் வாழும் உருவமற்ற பிரமர்கள்; இவர்கள் ஐந்தாந்தியானத்தில் தேறியவர் என்பர். இவர் இருப்பிடம்(1) ஆகாசாநந்தியாயதன லோகம்; (2) விஞ்ஞானா நந்தியாயதன லோகம்; (3) ஆகிஞ்சந் யாயதன லோகம்; (4) நைவசம்ச்ஞானா சம்ச்ஞானாயதன லோகம் என்னும் நான்குமாம். இவை நான்கும் அரூபப்பிரம லோகங்கள் எனப்படும்.

பதினாறு வகை மரபின் உரூபப்பிரமர்: பதினாறு வகை உலகங்களில் உருவத்தோடு வாழும் பிரமர்கள் என்பர்; இவர்களில் முதலாந் தியானத்தில் தேறியவர் வாழுமுலகம்(1) பிரமகாயிக லோகம்; (2) பிரமபுரோகித லோகம். (3) மகாப்பிரம லோகம் (4) பரீத்தாப லோகம் என்னம் நான்குமாம்.

இரண்டாந்தியானத்தில் தேறியவர் வாழுமிடம் (1) அப்பிர மாணாபலோகம்; (2) ஆபாசுவர லோகம்; (3) பரீத்தசுப லோகம்; (4) அப்பிரமாணசுப லோகம் என்னும் நான்குமாம்.

மூன்றாந் தியானத்தில் தேறியவர் வாழுமிடம்-(1) சுபகிருஞ்ஞ லோகம்(2) பிருகத்பல லோகம்; (3) அசஞ்ஞாசத்துவ லோகம்; (4) அப்பிருக லோகம் என்னும் நான்குமாம்.

நான்காந்தியானத்தில் தேறியவர் வாழுமிடம்-(1) அதப லோகம்; (2) சுதரிச லோகம்; (3) சுதரிசி லோகம்; (4) அகநிட்டலோகம் என்னும் நான்குமாம். இவை தியானவகையால் நால் நான்கு வகைப் படுதலின் நானால்வகையின் உரூபப் பிரமரும் என்று தெரித்தோதினர்.

இனி அரூபப்பிரமரும் உரூபப்பிரமரும் ஆகிய இருவகைப் பிரமரும் வாழும் உலகம் இருபதனையும் நிட்காம லோகங்கள் என்றும் ஓதுப

இருவகைச் சுடரும் என்றது-ஞாயிற்றுத் தேவனையும் திங்கட்டே வனையுமாம்

பெருவனப் பெய்திய தெய்வதகணங்களும் என்றது இந்நிலவுலகத்தியே செய்த நல்வினையின் பயனாகிய இன்ப நுகர்ச்சி எய்துதற்கியன்ற ஆறுவகைப்பட்ட தேவலோகங்களினும் வாழும் தேவரினங்களை. இவர் இன்ப நுகர்தற்குரிய லோகம் என்பது தோன்ற பெருவனப் பெருவனப் பெய்திய தெய்வதகணம் என்றார்.

நல்வினையால் தேவராய்ப் பிறந்த இவர் வாழும் உலகங்கள் (1) மகாராசிக லோகம்; (2) திரயத்திரிஞ்ச லோகம்; (3) யாம லோகம்;(4) துடிதலோகம்; (5) நிருமாணரதி லோகம்; (6) பரநிருமித வய வருத்தி லோகம் என்னும் இந்த ஆறுலகங்களுமாம்.

மேலே கூறப்பட்ட இருபத்தாறுலகங்களும் நல்வினை செய்தோர்க் குரிய மேலுலகங்களாம்.

இனி, மக்கள் வாழும் இந்நிலவுலகம் ஒன்றுமே நடுவிலமைந்த உலகமாம். ஆகவே நல்வினை என்னும் இருவகை வினைகளும் விரவிய உயிர்கள் இதன்கட் பிறந்து இன்பம் துன்பம் என்னும் இருவகை நுகர்ச்சிகளையும் எய்தும் என்ப. இக் காரணத்தால் பௌத்தர்கள் வினைகளின் கூட்டத்தை வேதனைக் கந்தம் என்பர். வினைகள் இரண்டென்னாது மூன்று என்பர். இதனை,

இனிவே தனையா வனஇன்ப மொடு
துனிவே தருதுன் பமுமாம் இடையும்
நனிதா நலதீ வினையன் மையினாம்
பனிவே யிணைபன் னியதோண் மடவாய்   (488)

எனவரும் நீலகேசிச் செய்யுளானும்; அதற்கு நுகர்ச்சிக் கந்தம்-இன்ப நுகர்ச்சியும் துன்பநுகர்ச்சியும். இவ்விரண்டும் விரவிய சமநுகர்ச்சியும் என மூவகைப்படும் என்று விளக்கிய விளக்கவுரையானும் உணர்க.

பல்வகை அசுரர் என்றார் அவர் தாமும் தாஞ்செய்த தீவினையின் பயனாக அவற்றின் வன்மை மென்மைகட் கேற்பப் பலவகைப்படுதலின். தீவினை மிகுதியால் எட்டுவகைப்பட்ட நரகப் புரைகளிலே இடப்பட்ட உயிர்களைப் பிரித்து எண்வகை நரகர் என்றார். இவ்வெண்வகை நரகப் பகுதிகளும் நரகலோகம் என்னும் ஓருலகத்தின் உட்பகுதிகளாம்.

அந்நரகங்கள்-(1) மகாநிரயம்; (2) இரௌரவம்; (3) காலசூத்திரம்; (4) சஞ்சீவனம்; (5) மகரவீசி; (6) தபனம்;(7) சம்பிரதாபனம்;( 8) சங்கதம் என்னும் இவ் வெட்டுமாம்.

இனித் தீவினைப் பயனாகச் சென்று பிறப் பெய்தும் உலகங்களை இருள் உலகம் என்ப. அவை தாமும் நான்கு வகைப்படும். (1) நரகலோகம்; (2) திரியக் குலோகம்; (3) பிரேதலோகம்;(4) ஆசுரிக லோகம் என்னும் இந்த நான்குமாம்.

நிலவுலகத்தின் கீழுள்ள இவை நான்கும் கீழுலகம் எனத் தொகுத்தோதப்படும்.

இனி, நல்வினை தீவினை இரண்டும் விரவு வினையுமாகிய மூன்று வினைகளானும் உயிர்கள் எய்தும் இருள் உலகம் நான்கும் நிலவுலகம் ஒன்றும் ஒளி உலகம் ஆறுமாகிய பதினொருலகத்தையும் காமலோகங்கள் என்றும் தொகுத்தும் கூறுப.

மேலே கூறியவாற்றால் பௌத்த சமயத்தார் கூறுகின்ற காம லோகம் பதினொன்றும் நிட்காம லோகம் இருபதும் ஆகிய முப்பத்தோரு லோகங்களையும் அவற்றினியல்புகளையும் அறிக.

பன்மீனீட்டம் என்றது விசும்பில் எண்ணிறந்தனவாகக் காணப்படுகின்ற விண்மீன்களே. நாள் என்றது அசுவனி முதலிய இருபத்தேழு மீன்களையுமாம். கோள்களில் முன்னர்த் தேவரோடு கூட்டிய ஞாயிற்றையும் திங்களையும் தவிர்த்து எஞ்சிய ஏழு கோள்கையுமாம். மேலே கூறப்பட்ட முப்பத்தோருலகங்களையும் பன்மீன்களையும் கோள்களையும் நாள்களையும் தன்னகத்தே அடக்கியிருக்கும் ஓர் அண்டமே சக்கரவாளம் ஆம். இங்ஙனமே எண்ணிறந்த சக்கரவாளங்கள் உள என்பது பிடக நூலோர் துணிவாம் என்றுணர்க.

வரந்தருதற் குரியோர் என்றது இவற்றுள் மேலுலகத்தும் நிலவுலகத்தும் உறையும் தெய்வங்களை அரந்தை-துன்பம்.

தேவர் கூற்றும் கோதமையின் செயலும்

126-129: சம்பாபதி.... இறந்தபின்

(இதன் பொருள்) எங்கு வாழ் தேவரும்-எவ்வெவ்வுலகத்தும் வாழ்வோராய்ச் சம்பாபதியின் ஆணைக்கடங்கிச் சுடுகாட்டுக் கோட்டத்தே வந்து சேர்ந்த தேவரெல்லாம்; சம்பாபதி தான் உரைத்த அம்முறையே உரைப்பக் கேட்டு-அச் சம்பாபதி என்னும் ஆற்றல் சால் தெய்வம் உரைத்தவாறே ஊழி முதல்வன் உயிர்தரின் அல்லது ஆழித்தாழி அகவரைத் திரியும் யாந்தர வல்லேம் என்று கூற அது கேட்டு; கோதமை உற்ற கொடுந்துயர் நீங்கி- மெய்யுணர்ந்தமையாலே கோதமை என்னும் அப்பார்ப்பனிதானும் பேதமை காரணமாகப் பண்டு தான் எய்திய கொடிய துன்பத்தினின்று நீங்கி; மகனை ஈமச் சுடலையி
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 08:58:13 AM
7. துயிலெழுப்பிய காதை

ஏழாவது மணிமேகலா தெய்வம் உவவனம் புகுந்து சுதமதியைத் துயிலெழுப்பிய பாட்டு

அஃதாவது: மணிமேகலையை உவவனத்தினின்றும் எடுத்துப் போய் முப்பது யோசனைத் தொலைவில் கடலினுள்ளிருக்கும் மணிபல்லவம் என்னும் தீவின்கண் வைத்து அவ்விடத்தினின்றும் மீண்டும் புகார் நகரத்து உவவனத்தினூடே துயிலில் ஆழ்ந்திருந்த சுதமதியை எழுப்பித் தான் செய்தமையைக் கூறி மாதவிக்கும் அந் நற்செய்தியைக் கூறும்படி பணித்து மறைந்த செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு.

இதன்கண்- உவவனத்தின்கண் மணிமேகலையைக் கண்ணெதிரே கண்டு வைத்தும்; அவளது மடங்கெழுநோக்கின் மதமுகந் திறப்புண்டு இடங்கழி தன் நெஞ்சத்திளைமையானை கல்விப்பாகன் கையகப்படா அது ஒல்காவுள்ளத் தோடுமாயினும் ஒழுக்கொடு புணர்ந்த விழுக்குடிப் பிறந்தோ னாதலின் பகவனது ஆணையிற் பன்மரம் பூக்கும் அத் தெய்வப் பூம்பொழிலில் அவளைக் கைப்பற்றுதல் குடிப்பழியாம் என்றஞ்சி அகன்ற அரசிளங் குமரனாகிய உதயகுமரன் தன் அரண்மனைக்கண் காம நோயாற் பெரிதும் வருந்தி நாளைக்கு அவளை யான் எப்படியும் கைப்பற்றுவேன் என்னும் துணிவுடன் பொங்கு மெல்லமளியில் கண்டுயிலாது கிடந்தோன் முன்னர், மணிமேகலா தெய்வம் தோன்றி மன்னறம் கூறி மன்னவன் மகனே! தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த அவத்திறம் ஒழிக என்றறிவுறுத்து அப்பால் உவவனத்திலே துயில் கொண்டிருந்த சுதமதியை எழுப்பித் தான் மணிமேகலா தெய்வம் என்றறிவித்து மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளதாலின் அவளை நன்னெறிக்கட் செலுத்தவே யான் எடுத்துப் போயினேன், என்னை மாதவி முன்னரே அறிகுவள், மணிமேகலை இற்றைக்கு ஏழா நாள் நலம் பல எய்தி இங்கு வந்து சேர்வாள் என்று கூறும் அத் தெய்வத்தின் அருட்டிறமும், பின்னர்ச் சுதமதி சக்கரவாளக் கோட்டம் புக்கதும்; ஆங்குக் கந்திற் பாவை சுதமதிக்குக் கூறும் அற்புதக் கிளவியும்; இரவு வண்ணனையும் பெரிதும் இன்பம் பயப்பனவாக அமைந்திருத்தலைக் காணலாம்.

மணிமேகலை தனை மணிபல்லவத்திடை
மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி
மணிமேகலை தனை மலர்ப் பொழில் கண்ட
உதயகுமரன் உறு துயர் எய்தி
கங்குல் கழியின் என் கை அகத்தாள் என
பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன்
முன்னர்த் தோன்றி மன்னவன் மகனே!
கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும்
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும்
மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லை  07-010

மன் உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன்
தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும்
தவத் திறம் பூண்டோள் தன்மேல் வைத்த
அவத் திறம் ஒழிக என்று அவன்வயின் உரைத்த பின்
உவவனம் புகுந்து ஆங்கு உறு துயில் கொள்ளும்
சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி
இந்திர கோடணை இந் நகர்க் காண
வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான்
ஆதிசால் முனிவன் அறவழிப்படூஉம்
ஏது முதிர்ந்தது இளங்கொடிக்கு ஆதலின்  07-020

விஞ்சையின் பெயர்த்து நின் விளங்கு இழை தன்னை ஓர்
வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன்
பண்டைப் பிறப்பும் பண்புற உணர்ந்து ஈங்கு
இன்று ஏழ் நாளில் இந் நகர் மருங்கே
வந்து தோன்றும் மடக்கொடி நல்லாள்
களிப்பு மாண் செல்வக் காவல் பேர் ஊர்
ஒளித்து உரு எய்தினும் உன்திறம் ஒளியாள்
ஆங்கு அவள் இந் நகர் புகுந்த அந் நாள்
ஈங்கு நிகழ்வன ஏதுப் பல உள
மாதவி தனக்கு யான் வந்த வண்ணமும்  07-030

ஏதும் இல் நெறி மகள் எய்திய வண்ணமும்
உரையாய் நீ அவள் என் திறம் உணரும்
"திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு" என
கோவலன் கூறி இக் கொடி இடை தன்னை என்
நாமம் செய்த நல் நாள் நள் இருள்
"காமன் கையறக் கடு நவை அறுக்கும்
மா பெருந் தவக்கொடி ஈன்றனை" என்றே
நனவே போலக் கனவு அகத்து உரைத்தேன்
ஈங்கு இவ் வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று
அந்தரத்து எழுந்து ஆங்கு அருந் தெய்வம் போய பின்  07-040

வெந் துயர் எய்தி சுதமதி எழுந்து ஆங்கு
அகல் மனை அரங்கத்து ஆசிரியர் தம்மொடு
வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி
ஆடல் புணர்க்கும் அரங்கு இயல் மகளிரின்
கூடிய குயிலுவக் கருவி கண் துயின்று
பண்ணுக் கிளை பயிரும் பண் யாழ்த் தீம் தொடை
கொளை வல் ஆயமோடு இசை கூட்டுண்டு
வளை சேர் செங் கை மெல் விரல் உதைத்த
வெம்மை வெய்து உறாது தன்மையில் திரியவும்
பண்பு இல் காதலன் பரத்தமை நோனாது  07-050

உண் கண் சிவந்து ஆங்கு ஒல்கு கொடி போன்று
தெருட்டவும் தெருளாது ஊடலோடு துயில்வோர்
விரைப் பூம் பள்ளி வீழ் துணை தழுவவும்
தளர் நடை ஆயமொடு தங்காது ஓடி
விளையாடு சிறு தேர் ஈர்த்து மெய் வருந்தி
அமளித் துஞ்சும் ஐம்படைத் தாலி
குதலைச் செவ் வாய் குறு நடைப் புதல்வர்க்குக்
காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து
தூபம் காட்டி தூங்கு துயில் வதியவும்
இறை உறை புறவும் நிறை நீர்ப் புள்ளும்  07-060

கா உறை பறவையும் நா உள் அழுந்தி
விழவுக் களி அடங்கி முழவுக் கண் துயின்று
பழ விறல் மூதூர் பாயல் கொள் நடு நாள்
கோமகன் கோயில் குறு நீர்க் கன்னலின்
யாமம் கொள்பவர் ஏத்து ஒலி அரவமும்
உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து
நிறை அழி யானை நெடுங் கூ விளியும்
தேர் வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும்
ஊர் காப்பாளர் எறி துடி ஓதையும்
முழங்கு நீர் முன் துறைக் கலம் புணர் கம்மியர்  07-070

துழந்து அடு கள்ளின் தோப்பி உண்டு அயர்ந்து
பழஞ் செருக்கு உற்ற அனந்தர்ப் பாணியும்
அர வாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை
விரவிய மகளிர் ஏந்திய தூமத்து
புதல்வரைப் பயந்த புனிறு தீர் கயக்கம்
தீர் வினை மகளிர் குளன் ஆடு அரவமும்
வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும்
புலிக் கணத்து அன்னோர் பூத சதுக்கத்து
கொடித் தேர் வேந்தன் கொற்றம் கொள்க என
இடிக் குரல் முழக்கத்து இடும் பலி ஓதையும்  07-080

ஈற்று இளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
கடுஞ் சூல் மகளிர் நெடும் புண் உற்றோர்
தம் துயர் கெடுக்கும் மந்திர மாக்கள்
மன்றப் பேய்மகள் வந்து கைக்கொள்க என
நின்று எறி பலியின் நெடுங் குரல் ஓதையும்
பல் வேறு ஓதையும் பரந்து ஒருங்கு இசைப்ப
கேட்டு உளம் கலங்கி ஊட்டு இருள் அழுவத்து
முருந்து ஏர் இள நகை நீங்கிப் பூம்பொழில்
திருந்து எயில் குடபால் சிறு புழை போகி
மிக்க மா தெய்வம் வியந்து எடுத்து உரைத்த  07-090

சக்கரவாளக் கோட்டத்து ஆங்கண்
பலர் புகத் திறந்த பகு வாய் வாயில்
உலக அறவியின் ஒரு புடை இருத்தலும்
கந்து உடை நெடு நிலைக் காரணம் காட்டிய
அந்தில் எழுதிய அற்புதப் பாவை
மைத் தடங் கண்ணாள் மயங்கினள் வெருவ
திப்பியம் உரைக்கும் தெய்வக் கிளவியின்
இரவிவன்மன் ஒரு பெரு மகளே!
துரகத் தானைத் துச்சயன் தேவி!
தயங்கு இணர்க் கோதை தாரை சாவுற  07-100

மயங்கி யானை முன் மன் உயிர் நீத்தோய்!
காராளர் சண்பையில் கௌசிகன் மகளே!
மாருதவேகனோடு இந் நகர் புகுந்து
தாரை தவ்வை தன்னொடு கூடிய
வீரை ஆகிய சுதமதி கேளாய்!
இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து
தன் பிறப்பு அதனொடு நின் பிறப்பு உணர்ந்து ஈங்கு
இலக்குமி ஆகிய நினக்கு இளையாள் வரும்
அஞ்சல் என்று உரைத்தது அவ் உரை கேட்டு
நெஞ்சம் நடுக்குறூஉம் நேர் இழை நல்லாள்  07-110

காவலாளர் கண் துயில்கொள்ளத்
தூ மென் சேக்கைத் துயில் கண் விழிப்ப
வலம்புரிச் சங்கம் வறிது எழுந்து ஆர்ப்பப்
புலம் புரிச் சங்கம் பொருளொடு முழங்கப்
புகர் முக வாரணம் நெடுங் கூ விளிப்ப
பொறி மயிர் வாரணம் குறுங் கூ விளிப்ப
பணை நிலைப் புரவி பல எழுந்து ஆலப்
பணை நிலைப் புள்ளும் பல எழுந்து ஆலப்
பூம்பொழில் ஆர்கைப் புள் ஒலி சிறப்பப்
பூங்கொடியார் கைப் புள் ஒலி சிறப்பக்  07-120

கடவுள் பீடிகைப் பூப் பலி கடைகொளக்
கலம் பகர் பீடிகைப் பூப் பலி கடை கொளக்
குயிலுவர் கடைதொறும் பண் இயம் பரந்து எழக்
கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்து எழ
ஊர் துயில் எடுப்ப உரவுநீர் அழுவத்துக்
கார் இருள் சீத்து கதிரவன் முளைத்தலும்
ஏ உறு மஞ்ஞையின் இனைந்து அடி வருந்த
மா நகர் வீதி மருங்கில் போகி
போய கங்குலில் புகுந்ததை எல்லாம்
மாதவி தனக்கு வழு இன்று உரைத்தலும்  07-130

நல் மணி இழந்த நாகம் போன்று அவள்
தன் மகள் வாராத் தனித் துயர் உழப்ப
இன் உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள்
துன்னியது உரைத்த சுதமதி தான் என்  07-134

உதயகுமரன் முன்னர் மணிமேகலா தெய்வம் வந்து தோன்றல்

1-7: மணிமே...... தோன்றி

(இதன் பொருள்) மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை மணிமேகலைதனை வைத்து நீங்கி-இவ்வாறு மணிமேகலா தெய்வமானது உவவனத்தினின்று முப்பதி யோசனைத் தூரத்தில் தென் கடலிற் கிடக்கும் மணிபல்லவம் என்னும் தீவினிடை மணிமேகலையைக் கொடுபோய்த் துயில் கலையாவண்ணம் மெத்தென வைத்துப் பின்னர் அத் தீவினின்றும் நீங்கி; மணிமேகலைதனை மலர்ப்பொழில் கண்ட உதயகுமரன் உறுதுயர் எய்தி-அம் மணிமேகலையைப் பகவனதாணையில் பல்மரம் பூக்கும் தெய்வத்தன்மையுடைய உவவனமாகிய மலர்ப் பொழிலிற் கண்ட அரசிளங்குமரனாகிய உதயகுமரன் அவ்விடத்தே அவளைக் கைப் பற்றுதற்கஞ்சி மீண்டவன் மிக்க காமநோயாலே வருந்தி; கங்குல் கழியில் என் கையகத்தாள் என-இற்றை நாளிரவு கழிந்தக்கால் அவள் என் கையகத்தே இருப்பாள் அதற்காவன செய்குவல் என்னும் துணிவோடு பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன் முன்னர்த் தோன்றி-ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுயர்ந்த மெல்லிய படுக்கையின் மேலே கண்ணிமைகள் பொருந்தாமல் படர்மெலிந்திருப்பவன் கண்முன் மின்னே போலப் பெண்ணுருவங் கொண்டு நின்று என்க.

(விளக்கம்) மணிமேகலா தெய்வம் மணிமேகலையைப் பாதுகாத்துக் கடைபோக நன்னெறியிலே செலுத்தும் குறிக்கோளுடன் அவளை எடுத்து மணிபல்லவத்திடை வைத்தாலும், அவள் மீண்டும் புகார் நகரத்திற்கு வரும் பொழுது அவள் பால் கழிபெருங் காமம் கொண்டவனாய் உதயகுமரன் அவளைக் கைப்பற்றவே முயல்வான் ஆகலின் அவள் தெய்வத்தின் துணைவலியும் தவவலியும் உடையாள் என்று அவன் அறியும்படி செய்து அச்சுறுத்தற் பொருட்டு அப்பொழுதே அவன் முன் தோன்றியவாறு. இஃது எதிரதாக் காக்கும் அறிவு எனப்படும் என்னை?

எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்     (429)

என நிகழும் தமிழ் மறையும் நினைக.

மணிமேகலா தெய்வம் உதயகுமரனுக்குச் செங்கோல் காட்டல்

7-14: மன்னவன்.......உரைத்தபின்

(இதன் பொருள்) மன்னவன் மகனே! எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோனன்றியும், வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சு சுடத் தான் தன் அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோனுமாகிய செங்கோன் மன்னர் வழிவழிச் சிறந்து வந்த சோழ மன்னவன் மகனே! ஈதொன்று கேள்! கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும்-அரசன் குறிக்கொண்டு பேணுதற் கியன்ற செங்கோன்மை பிறழுமானால் வெள்ளி முதலிய கோள்கள் தம் நிலையி லியங்காமல் பிறழ்ந்தியங்கா நிற்கும்; கோள் நிலை திரிந்திடின் மாரி வறங்கூரும்-அங்ஙனம் கோள்கள் நிலை பிறழ்ந்தியங்கினாலோ மழை பொய்த்து உலகிலே வற்கட மிகாநிற்கும்; மாரி வறங்கூரின் மன்னுயிர் இல்லை-மாரி பொய்த்து வற்கட மிகுமாயின் உடம்பொடு தோன்றி நிலைபெற்று வாழ்கின்ற உயிர்கள் இறந்துபடும்; மன்னுயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன் தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும்-இங்ஙனம் ஆயின் உலகில் நிலைபெற்று வாழ்கின்ற உயிர்கள் எல்லாம் அரசனுடைய உயிரே ஆகும் என்று ஆன்றோர் கூறும் பெருந்தகைமை அவ்வரசன்பால் சிறிதும் இல்லையாம்; தவத்திறம் பூண்டோள் தன் மேல் வைத்த அவத்திறம் ஒழிக என்று அவன்வயின் உரைத்தபின்- செங்கோன் முறை பிறழாது அத்தகைய பெருந்தகைமையோடு அருளாட்சி புரிந்த நின்முன்னோர் நெறிநின்று நீ தானும் தவவொழுக்கத்தை மேற்கொண்டொழுகுகின்ற மணிமேகலையின்பாற் கொண்டுள்ள நின் கேட்டிற்கே காரணமான இடங்கழி காமத்தைக் கைவிட்டு விடுவாயாக! என்று அத் தெய்வம் அவனுக்குக் கூறி அச்சுறுத்திய பின்று என்க.

(விளக்கம்) மன்னவன் என்றது- செங்கோன்மை பிறழாத சிபியும் மனுவும் போன்ற புகழ் மிக்கோர் மரபின் வந்த சோழமன்னன் என்பது பட நின்றது. கோல்-அரசியலறம். அஃது ஒருபாற் கோடாது செவ்விய கோல் போறலின் செங்கோல் என வழங்கப்படும். ஈண்டு அடை மொழியின்றிக் கோல் என நின்றது. முறை கோடுதலை ஈண்டுக் கோல் திரியின் என்றார்.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
யொல்லாது வானம் பெயல்   (559)

எனவரும் திருக்குறளையும் நினைக.

கோள்-மழைதரும் வெள்ளி முதலிய கோள்கள். மாரிவறங் கூர்தல்- மழை பெய்யா தொழிதல்.

மன்னுயிரெல்லாம் மண்ணாள் வேந்தன் தன்னுயிர் எனபதனோடு

நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்
அதனால் யானுயி ரென்ப தறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே       (புறநா-186)

எனவரும் மோசிகீரனார் பொன்மொழி ஒப்புநோக்கற் பாலதாம்.

இனி ஈண்டுத் தண்டமிழ் ஆசான் சாத்தனார் கூறிய இதனை, ஆசிரியர் திருத்தக்க தேவரும் தம் பெருங்காப்பியத்தூடே( சீவக:225)

கோள்நிலை திரிந்து குறைபடப் பகல்கண் மிஞ்சி
நீணில மாரி யின்றி விளைவஃகிப் பசியும் நீடி
பூண்முலை மகளிர் பொற்பின் கற்பழிந் தறங்கண் மாறி
ஆணையிவ் வுலகு கேடாம் அரசுகோல் கோடி னென்றான்

எனப் பொன்போற் பொதிந்து வைத்துள்ளமையும் உணர்க.

தவத்திறம்- நோன்பு. அவத்திறம்- கேட்டிற்குக் காரணமான பொருந்தாக் காமம். அது கோன்முறையன்றாகலின் ஒழிக என்றறிவுறுத்தபடியாம்.

மணிமேகலா தெய்வம் உவவனத்தே சென்று சுதமதியைத் துயிலெழுப்பித் தெருண்மொழி கூறுதல்

(15- உவவனம் என்பது தொடங்கி 40- போயின் என்னுமளவும் ஒரு தொடர்)

15-25: உவவனம்.....தோன்றும்

(இதன் பொருள்) உவவனம் புகுந்து ஆங்கு உறுதுயில் கொள்ளும் சுதமதி தன்னைத் துயில் இடை நீக்கி மீண்டும் மணிமேகலா தெய்வம் உவவனத்திலே புகுந்து அவ்விடத்தே மிக்க துயில் கொண்டிருந்த சுதமதியைத் துயிலுணர்த்தி; அஞ்சல் யான் மணிமேகலை இந்நகர் இந்திரகோடணை காண வந்தேன்-சுதமதி அஞ்சாதே கொள்! யான் நும்மோடுறவு கொண்டுள்ள மணிமேகலா தெய்வங்காண்! இப் பூம்புகார் நகரத்தே நிகழாநின்ற இந்திரவிழாக் காண்டற்கு ஈண்டு வந்தேன்! இளங்கொடிக்கு ஆதிசால் முனிவன் அறவழிப்படூஉம் ஏது முதிர்ந்துளது ஆகலின்-இப்பொழுது இளமையுடைய மணிமேகலைக்குப் புத்த பெருமான் திருவாய் மலர்ந்தருளிய அறநெறியில் ஒழுகுதற்குக் காரணமான பழவினைத் தொகுதி முதிர்ச்சியுற்றுப் பயனளிக்கும் செவ்வி பெற்றிருத்தலாலே; நின் விளங்கு இழை தன்னை விஞ்சையில் பெயர்த்து ஓர் வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன்- நின் வளர்ப்பு மகளாகிய மணிமேகலையை என் வித்தையினாலே துயில் கலையாவண்ணம் இவ்விடத்தினின்றும் எடுத்துப் போய் என் காவலிலமைந்தமையின் சிறிதும் வஞ்சச் செயல் நிகழ்தலில்லாத மணிபல்லவம் என்னும் தீவிடத்தே வைத்துள்ளேன்; பண்புற பண்டைப் பிறப்பும் உணர்ந்து-அவள் அவ்விடத்தே நிகழும் தெய்வப் பண்பு எய்துதலாலே அவளுடைய அறிதற்கரிய பழைய பிறப்பின் வரலாற்றையும் உணர்ந்துகொண்டு; ஈங்கு இந்நகர் மருங்கே இன்று ஏழ் நாளில் வந்து தோன்றும்-இந் நாவலம் பொழிலகத்துள்ளே இப் பூம்புகார் நகரத்தின்கண் இற்றைக்கு ஏழா நாள் வான் வழியாக வந்து தோன்றுவள்; என்க.

(விளக்கம்) உறுதுயில்- மிக்கவுறக்கம். இந்திரகோடணை-இந்திர விழா. மணிமேகலை- மணிமேகலா தெய்வம். ஆதிசான் முனிவன் என்றது கௌதம புத்தரை. ஏது- பழவினை. இளங்கொடி: மணிமேகலை. விஞ்சை- வித்தை. மணிபல்லவத் தீவின்கண் அவட்கு ஏதம் சிறிதும் வரமாட்டா தென்பாள், வஞ்சமில் மணிபல்லவம் என்றாள் ஈங்கு-இந் நாவலந் தீவின்கண். நகர்-புகார் நகரம். உரையாய்- கூறுவாயாக; அவள் என்திறம் உணரும்- அம் மாதவி என் பெயர் கேட்கு மளவிலேயே என்னை இன்னார் என்று உணர்ந்து கொள்ளுவள், எங்ஙனமெனின்; கோவலன் திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு எனக் கூறிக் கொடியிடை தன்னை நாமம் செய்த நல் நாள்- மணிமேகலையின் தந்தையாகிய கோவலன் அலையெறியும் பெரிய கடலிடத்தே எங்குலதெய்வம் ஒன்றுளது என்று என் வரலாற்றை மாதவி முதலியோர்க்கு எடுத்துச் சொல்லித் தன் குழவியாகிய அவட்கு மணிமேகலை என்னும் என் பெயரையே சூட்டிய அந்த நல்ல நாளில்; என்க.

இதுவுமது

25-35: மடக்கொடி......நன்னாள்

(இதன் பொருள்) மடக்கொடி நல்லாள் களிப்புமாண் காவல் பேரூர் ஒளித்துரு எய்தினும் உன் திறம் ஒளியாள்-மடப்பமுடைய பூங்கொடி போலும் அழகுடைய அம் மணிமேகலை களித்து வாழ்தற்குப் பெரிதும் மாட்சிமையுடைய செல்வச் செழிப்பும் காவலும் அமைந்த தலைநகரமாகிய இப் பூம்புகாருக்கு அவள் மீண்டும் வரும்போது தனக்குரிய வுண்மையுருவத்தோடு வாராமல் வேற்றுருக் கொண்டே வருவள் காண்! அவ்வாறு அவள் வேற்றுருவில் வந்து ஈண்டுக் கரந்துவருவாளாயினும் தன்னை உனக்கு மறையாமல் உன் திறத்திலே தன்னை வெளிப்படுத்திக் காட்டுவள்; ஆங்கு அவள் இந்நகர் புகுந்த அந்நாள் ஈங்கு நிகழ்வன ஏதும் பலவுள-அவ்வாறு அவள் வேற்றுருவத்தோடு இம்மாநகர் புகுந்த அக்காலத்தே இங்கே நிகழ்விருக்கின்ற பழவினை நிகழ்ச்சிகள் பற்பல உள அவை நிகழுங்காண்!; நீ மாதவி தனக்கு யான் வந்த வண்ணமும் மகள் ஏதம் இல் நெறி எய்திய வண்ணமும்- நங்காய்! இவை நிற்க! இனி நீ போய் மாதவியைக் காண்புழி, யான் இந்நகரத்திற்கு வந்த செய்தியையும் என் வாயிலாய் அவள் அருமை மகளாகிய மணிமேகலை குற்றமில்லாத நன்னெறியிலே சென்றுள்ள செய்தியையும்; உரையாய்-கூறுவாயாக; அவள் என்திறம் உணரும் அம்மாதவி என் பெயர் கேட்குமளவிலேயே என்னை இன்னார் என்று உணர்ந்து கொள்ளுவள், எங்ஙனமெனின்; கோவலன் திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு எனக் கூறிக் கொடியிடை தன்னை என் நாமம் செய்த நல் நாள்-மணிமேகலையின் தந்தையாகிய கோவலன் அலையெறியும் பெரிய கடலிடத்தே எங்குலதெய்வம் ஒன்றுளது என்று என் வரலாற்றை மாதவி முதியோர்க்கு எடுத்துச் சொல்லித் தன் குழவியாகிய அவட்கு மணிமேகலை என்னும் என் பெயரையே சூட்டிய அந்த நல்ல நாளில்; என்க.

(விளக்கம்) நல்லாள்: மணிமேகலை. களிப்பு- ஈண்டு வாழ்க்கையின்பம் என்னும் பொருட்டு. பேரூர்- தலைநகரமாகிய பூம்புகார். ஒளித்துரு- வேற்றுருவம். உன்திறம்-உனக்கு. ஆங்கு-அவ்வாறு. அந்நாள் என்றது அக்காலத்தே என்பதுபட நின்றது. ஏது நிகழ்ச்சி- பழவினை விளைவுகள். தெய்வமாகலின் எதிர்காலத்து நிகழ்ச்சிகளாகிய உதயகுமரன் கொலையுண்ணல் முதலியவற்றைக் கருதி ஏதுநிகழ்ச்சி பலவுள என்று கூறுகின்றது. யான் வந்த வண்ணம் என்றது மணிமேகலா தெய்வமாகிய யான் வந்த வண்ணமும் என்பதுபட நின்றது.

இனி, சுதமதி, மாதவி இத்தெய்வத்தை அறியாளாகலின் தெய்வத்தால் எடுத்துப் போகப்பட்ட தன் மகட்கு என்னுறுமோ? என்று அஞ்சுதல் இயல்பாதல் பற்றிச் சொல்லாது விடுவாளாதலின், அத் தெய்வம் என்பெயர் கேட்குமளவிலேயே மாதவி என்னை அறிந்து கொள்வாள். மேலும் தன் மகட்கு ஏதம் சிறிதும் நிகழமாட்டாதென்று ஆறுதலும் அடைகுவள்; ஆதலால் நீ இவற்றை அஞ்சாது அவட்குக் கூறுக என்று தெளிவித்தற் பொருட்டு இக் கருத்தெல்லாம் அடங்க அவள் என்றிறம் உணரும் என்று கூறும் நுணுக்கம் உணர்க. பின்னும் அவள் அறிந்தமை எவ்வாறு என்னும் ஐயம் சுதமதிக்குப் பிறக்கு மாகலின் அவ்வையம் அகற்றுதற்கு அவ் வரலாற்றையும் அறிவித்தல் வேண்டிற்று.

மணிமேகலைக்குப் பெயர் சூட்டிய நாளில் கோவலன் எங்குல தெய்வம் ஒன்றுளது, அதன் பெயரையே இக் குழவிக் கிடுக என்று என் பெயரை இடுவித்த பொழுது என் வரலாற்றையும் மாதவி முதலியோர்க்குக் கூறினன்; இவ்வாற்றால் மாதவி என்னை அறிகுவள் என்றவாறு.

இனி, ஈண்டுக் கூறும் இச் செய்தியை

மாந்தளிர் மேனி மாதவி மடந்தை
பால்வாய்க் குழவி பயந்தன ளெடுத்து
வாலா மைந்நா ணீங்கிய பின்னர்
மாமுது கணிகையர் மாதவி மகட்கு
நாம நல்லுரை நாட்டுது மென்று
தாமின் புறாஉந் தகைமொழி கேட்டாங்
கிடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல்
உடைகலப் பட்ட வெங்கோன் முன்னாள்
புண்ணிய தானம் புரிந்தோ னாகலின்
நண்ணுவழி யின்றி நாள்சில நீந்த
இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன்
வந்தே னஞ்சன் மணிமே கலையான்
உன்பெருந் தானத் துறுதி யொழியாது
துன்ப நீங்கித் துயர்க்கடல் ஒழிகென
விஞ்சையிற் பெயர்த்து விழுமந் தீர்த்த
எங்குல தெய்வப் பெயரீங் கிடுகென
அணிமே கலையார் ஆயிரங் கணிகையர்
மணிமே கலைஎன வாழ்த்திய ஞான்று
மங்கல மடந்தை மாதவி தன்னோடு
செம்பொன் மாரி செங்கையிற் பொழிய
...........................கருணை மறவ!

எனவரும் சிலப்பதிகாரத்து. அடைக்கலக் காதையில்(22-53) மாடல மறையோன் கூற்றானும் உணர்க.

மாதவிக்கு யான் நேரிலே தோன்றியும் உவகை கூறியுளேன்; ஆதலின் அவள் அறிகுவள் என்று அத் தெய்வம் கூறுதல்

35-40: நள்ளிருள்.........போயபின்

(இதன் பொருள்) நள் இருள் கனவு அகத்தே நனவு போல- செறிந்த இருளையுடைய இடையாமத்தே துயிலிலாழ்ந்திருந்த அம் மாதவியின் கனவிலே நனவிலே தோன்றுமாறு போல அவள் நன்குணர்ந்து கொள்ளும்படி உருவங் கொண்டு தோன்றி; காமன் கை அறக் கடுநவை அறுக்கும் மாபெருந் தவக்கொடி ஈன்றனை என்றே உரைத்தேன்- நங்காய்! காம வேளின் குறும்பு தன்பாற் செல்லாமையாலே கையறவு கொள்ளும்படி பெருந் துன்பத்திற் கெல்லாம் பிறப்பிடமாகிய பிறவிப் பிணியை அறுத்தொழிக்கும் மிகப் பெரிய நோன்புகளாகிய நறுமண மலர்களைப் பூத்தற் கியன்றதொரு தெய்வப்பூங்கொடியையே நீ பெற்றுள்ளனை நீடூழி வாழ்க! என்று அவளை வாழ்த்தியுமிருக்கின்றேன்; ஈங்கு இவ்வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று-ஈங்கு இப்பொழுது கூறுகின்ற இந் நிகழ்ச்சியையும் நீ ஆங்கு அவள்பாற் சென்று கூறக்கடவை என்று சுதமதிக்குப் பணித்து; அருந்தெய்வம் ஆங்கு அந்தரத்து எழுந்து போனபின்-காண்டற்கரிய அம் மணிமேகலா தெய்வம் அப்பொழுதே அவள் கட்புலங் காண விசும்பிலே எழுந்து மறைந்து போனபின்பு; என்க.

(விளக்கம்) நள்ளிருள்-என்றது மாதவி துயிலில் ஆழ்ந்திருந்த இடையாமம் என்பதுபட நின்றது. காமன் கையற என்றது-காமன் தன் செயலில் இவள்பால் தோல்வியுற்று வருந்த என்பதுபட நின்றது. இனி இவள் துறவுபூணுவதால் தன் வெற்றிக்கு இனி இவள் துணையாகாள் என்று காமன் கையறவு கொண்டான் என்பது மொன்று. கடுநவை என்றது பிறப்பினை. நோன்பாகிய மலர்களை மலரும் பூங்கொடி போல்வாள் என்க.

எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்    (குறள்-92)

என்பதும்,

தம்மிற் றம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது   (குறள்-68)

என்பதும் கருதி மாதவி மகிழுமாற்றால் மணிமேகலா தெய்வம் அத்தகு மகவினைப் பெற்றாய் எனப் பாராட்டற் பொருட்டு மாபெருந்தவக் கொடியீன்றனை என ஓகை கூறினேன் என்று சுதமதிக்குக் கூறிய படியாம். கனவிற் பெரும்பாலன விழிப்புற்ற பின்னர்த் தெளிவாகத் தோன்றா அத்தகைய கனவன்று, அவள் நெஞ்சில் அழியாது பதிவுற்றிருக்கும் கனவு என்பது தோன்ற நனவே போலக் கனவகத் துரைத்தேன் என்றது. யான் ஈங்குக் கூறிய இந் நிகழ்ச்சியை நான் கூறியவாறே கூறிக் காட்டுக என்பதற்கு ஈங்கிவ் வண்ணம் ஆங்கவட்குரை என்று பணித்தது எனலுமாம்.

சுதமதி துயரொடு சக்கரவாளக் கோட்டம் புகப்போதலும் புகார் நகரத்து நள்ளிரவு வண்ணனையும்

(42 ஆம் அடி முதலாக 86 ஆம் அடி முடியுந்துணையும் நள்ளிரவின் வண்ணனையாய் ஒரு தொடர்)

41-49: வெந்துயர்........ திரியவும்

(இதன் பொருள்) சுதமதி வெம்துயர் எய்தி ஆங்கு எழுந்து- சுதமதி மணிமேகலையின் பிரிவாற்றாமையாலுண்டான வெவ்விய துன்பத்தை எய்தி அம் மலர்பொழிலின்கண் அவ்விடத்தினின்றும் எழுந்து செல்பவள்; அகல் மனை அரங்கத்து ஆசிரியர் தம்மொடு வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி- அகன்ற தமதில்லத்திலே இயற்றப்பட்ட ஆடலரங்கத்திலே அக் கலைப் பயிற்சி செய்விக்கும் இயலாசிரியனும் ஆடலாசிரியனும் யாழாசிரியனும் குழலோனும் தண்ணுமையோனுமாகிய ஆசிரியரோடிருந்து ஆடற்கலையின் வகைகளைப் பயின்று கொள்ளும் மக்கட்கு வட்டணை முதலிய அவிநய வகைகளை யெல்லாம் செய்து காட்டி ஆடல்புணர்க்கும் அரங்கு இயல் மகளிரின்-ஆடல்கலையைப் பயிற்றுவிக்கின்ற அரங்கத்தே ஆடும் மகளிர் அத் தொழிலை நிறுத்திக் கண் முகிழ்த்துயிலுதல் போன்றே; கூடிய குயிலுவக் கருவி கண் துயின்று-அவ்வாடன் மகளிரோடு கூடி முழங்கிய, குழல் முதலிய குயிலுவக் கருவிகளும் தத்தம் கண்ணவிந்து வாளாது கிடப்பவும்; பண்ணுக்கிளை பயிரும் பண் யாழ்த் தீந்தொடை கொளைவல் ஆயமோடு இசை கூட்டு உண்டுபண்களையும் திறன்களையும் நன்கிசைக்கின்ற பண்ணுறுத்தப் பட்ட இனிய ஒலிகளையுடைய நரம்புகளை வருடிப் பண்பாடுதலில் வல்ல மகளிரோடே கூடியிருந்து யாழிசையும் மிடற்றுப் பாடலும் பிறவும் ஆகிய இசையின்பங்களை இனிது நுகர்ந்து பின்னர்; விளைசேர் செங்கை மெல்விரல் உதைத்த வெம்மை வெய்து உறாது தன்மையில் திரியவும்-துயில் மயக்கத்தால் மகளிர் வளைமணிந்த சிவந்த தம்முடைய கைவிரலாலே மெல்லென வருடிய நரம்புகள் வெப்பம் வேண்டுமளவு வெய்தாக உறாமையாலே தளர்ந்து அவற்றிலெழும் இசை தன் தன்மையில் பிறழா நிற்பவும் என்க.

(விளக்கம்) ஆசிரியர்-ஆடற்கலைக் கின்றியமையாத குழலாசிரியர் முதலியோர். வட்டணை- வர்த்தனை; கமலவர்த்தனை. அஃதாவது கைத்தலங் காட்டல். இதனை,  தோற்பொலி முழவும் யாழுந் துளைபயில் குழலு மேங்கக் காற்கொசி கொம்புபோலப் போந்து கைத்தலங்கள் காட்டி எனவரும் சிந்தாமணிக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் வலக் கால் முன் மிதித்தேறி வலத்தூணைச் சேர்ந்து கைத்தலங் காட்டுதல் கமலவர்த்தனை என்னும் விளக்கவுரையானு முணர்க. மாக்களை என்பதற்கு முதனீண்டதெனக் கொண்டு தம்மக்கட்கு எனக் கொள்க. ஆடற்கலையைக் கற்பிக்கும் மகளிர் என்க. குயிலுவக் கருவி குழல் முதலிய இசைக் கருவிகள். இதனை கூடிய குயிலுவக்  கருவிக ளெல்லாம் குழல் வழி நின்ற தியாழே யாழ் வழித் தண்ணுமை நின்றதுதகவே, தண்ணுமைப் பின் வழி நின்றது முழவே முழவொடு கூடிநின் றிசைத்த தாமந் திரிகை என்பதனானுமுணர்க. (சிலப். 3:138-142) பண்ணும் கிளையும் என்க. கிளை- திறம். கொளை- பண். துயில் மயக்கத்தாலே மெல்விரலால் மெல்ல வருடலின் நரம்பில் வெப்பம் வெய்தாக உறதாக ஒலி தன்மையில் திரியவும் என்க.

இதுவுமது

50-59: பண்பில்...... வதியவும்

(இதன் பொருள்) பண்பு இல் காதலன் பரத்தமை நோனாது- தமது பாடறிந்தொழுகும் பண்பற்றவராகிய தம் காதலர் பரத்தையரோடு கூடியொழுகும் ஒழுக்கத்தைப் பொறாத குலமகளிர்; உண் கண் சிவந்து-அவர்பா லெழுந்த சினத்தாலே தம்மையுண்ட கண்கள் சிவக்கப் பெற்று; தெருட்டவும் தெருளாது ஊடலொடு துயில்வோர்- தம் கணவர் தம் பள்ளியிடத்தே வந்து தமது குற்றமின்மையைக் கூறி ஊடலுணர்த்தா நிற்பவும் ஊடல் தீராதாராய்ப் பொய்த்துயில் கொள்பவர்; விரைப் பூம்பள்ளி வீழ்துணை தழுவவும்- தம் சினத்திற்கஞ்சி மணமலர் பரப்பிய அப் பள்ளியிலே ஒரு புறத்தே கிடக்கின்ற தம்மால் விரும்பப்படும் அக் காதலரைத் துயில் மயக்கத்தாலே தழுவுவார் போலத் தழுவிக் கொள்ளவும் என்க.

(விளக்கம்) காதலன் பரத்தமை நோனாது துயில்வோர் என்றது ஒருமைப் பன்மைமயக்கம். இதனை, அஃதை தந்தை அண்ணல் யானை அடுபோர்ச் செழியர் என்புழிப் போலக் கொள்க.

ஊடலொடு பொய்த்துயில் கொள்வோர், தம் ஆற்றாமையால் தம்மருகே அஞ்சிக் கிடக்கும் காதலரைத் துயில் மயக்கத்தாலே தம்மையறியாது தழுவுவார் போலத் தழுவவும் என்க. என்னை? குலமகளிர்க்குத் தங்காதலர் பரத்தைமை நோனாது கடிந்தொழுகல் கூடாமையான் இங்ஙனம் உபாயத்தால் தழுவினர் என்க. இதனை.

சேக்கை இனியார்பாற் செல்வான் மனையாளால்
காக்கை கடிந்தொழுகல் கூடுமோ கூடா

எனவரும் பரிபாடலினுங் காண்க.(பரி-20-86-7)

இதுவுமது

54-63: தளர்நடை.......நடுநாள்

(இதன் பொருள்) தளர் நடை ஆயிமொடு தங்காது ஓடி விளையாடு சிறு தேர் ஈர்த்து- தளர்த்த நடையையுடைய சிறாஅர் கூட்டத்தோடு கூடி ஓரிடத்தும் தங்கி இளைப்பாறுதலின்றி ஓடுதலைச் செய்து தாம் விளையாடுதற்கியன்ற சிறிய தேர்களை இழுத்து; மெய் வருந்தி-உடல் வருந்தி; அமளித்துஞ்சும் ஐம்படைத்தாலிக்குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்க்கு- அவ் வருத்தம் தீரப் பஞ்சணைமிசை ஆழ்ந்து துயில்கொண்டுள்ள ஐம்படைத்தாலி என்னும் பிள்ளைப் பணி பூண்டுள்ள மழலை பேசுகின்ற சிவந்த வாயையும் குறுகுறு நடக்கும் நடையையுமுடைய மக்களுக்கு; காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து தூபம் காட்டித் தூங்கு துயில் வதியவும்- செவிலித் தாயர் ஐயவியைத் தூவி அகிற்புகை காட்டிய பின்னர் அவர் பக்கலிலே தாமும் மிக்க துயிலிலே ஆழ்ந்து கிடப்பவும்; இறை உறை புறவும் நிறை நீர்ப்புள்ளும் காஉறை பறவையும்-இல்லிறப்பிலே தங்குகின்ற புறாக்களும் நிறைந்த நீர் நிலைகளிலே மலரின் மேலுறைகின்ற பறவைகளும் பொழிலிலே உறைகின்ற பறவைகளும்; நாஉள் அழுந்தி- தத்தம் நா அலகினாடே அழுந்தி ஓலியவிந்துறங்கியிருப்பவும்; விழவுக்களி அடங்கி முழவுக்கண் துயின்று பழவிறல் மூதூர் பாயல் கொள் நடுநாள்- விழாவின் மகிழ்ச்சியாரவாரமும் அடங்கி முழவு முதலிய இசைக்கருவிகளும் தம் கண்களில் ஒலியெழாது அவிந்து கிடப்பவும் பழைதாகிய வெற்றியையுடைய முதுமையுடைய அப் பூம்புகார் நகரமே இவ்வாறு பள்ளி கொண்டிருக்கின்ற இரவின் நடுயாமத்தே என்க.

(விளக்கம்) தளர்நடை ஆயம் என்றது இளஞ்சிறாஅர் கூட்டத்தை அவர் ஆடும் பொழுது இளைப்பாற வேண்டும் என்று கருதி ஓரிடத்தும் தங்கியிருத்தலில்லை, இஃதவரியல்பு ஆகலின் தங்காது ஓடி என்றார்.

தேரில் ஏறி யின்புறுதற்கு மாறாக இவர் தேரினை ஈர்த்தலிலேயே பேரின்பம் எய்துவர், விளையாட்டினாலே மெய்வருந்திய வருத்தம் தீர இவர் பள்ளியில் ஆழ்ந்து துயிலுவர். இவர்க்குக் காவற் பெண்டிர் எறிந்து காட்டிப் பின் தாமும் துயில என்க. காவற் பெண்டிர்-செவிலித்தாயர். தூங்குதுயில்- மிக்கதுயில். கடிப்பகை-ஐயவி; வெண்சிறு கடுகு. ஐம்படைத்தாலி- திருமாலின் சங்கு முதலிய ஐந்து படைகளையும் பொன்னாற் செய்து கோத்ததொரு பிள்ளைப்பணி திருமால் காவற் கடவுளாதலின் மக்களைக் காத்தற் பொருட்டு அணிவது இவ் வைம்படைத்தாலி என்க.

இறை-இறப்பு. புறவு- புறா, நீர்ப்புள்-நீரில் வாழுமியல்புடைய பறவைகள். பறவைகள் துயிலுங் காலத்தே மிகவும் ஆழ்ந்து துயல்வன ஆதலின் அவ்வியல்பு தோன்ற நாவுள்ளழுந்தி என்றார். அழுந்தித் துயிலவும் அடங்கித் துயின்றும் மூதூர் பாயல்கொள் நடுநாள் என்க.

நள்ளிரவில் அந் நகரத்துள் நிகழும் நிகழ்ச்சிகள்

64-76: கோமகன்......அரவமும்

(இதன் பொருள்) கோமகன் கோயில் குறுநீர்க் கன்னலின்- சோழமன்னனுடைய அரண்மனையின்கண் நாழிகை வட்டிலின் உதவியாலே; யாமங் கொள்பவர் ஏத்தொலியரவமும்- பொழுதினை அளந்து காணும் கணிமாக்கள் அரசனை வாழ்த்தும் பாடலோடு தாங்கண்ட பொழுதினை நகரத்துள்ளார்க்கு அறிவிக்கின்ற அரச வாழ்த்துப் பாடலாலெழுகின்ற ஒலியும்; உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து நிறை அழியானை நெடுங் கூவிளியும் கட்டப்பட்டிருக்கின்ற கொட்டிலினூடேயே நின்று கவளமும் கொள்ளாமையாலுண்டான மெய் வருத்தத்தோடே காம மிகுதியாலே நெஞ்சத்தின்கண் நிறையழிந்து யானைகள் தத்தம் காதற்றுணையைக் கருதி நீளிதாகப் பிளிறாநின்ற பிளிற்றொலியும்; தேர் வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும்- தேரோடுதற்குரிய பெருந் தெருக்களிடத்தும் சிறிய வழியாகிய முடுக்குகளிடத்துள்; ஊர் காப்பாளர் எறி துடியோதையும்- நகரங்காக்கும் காவன் மறவர் முழக்கும் துடியும் முழக்கமும்; முழங்கு நீர் முன் துறைக் கலம்புணர் கம்மியர்- ஆரவாரிக்கின்ற கடற்றுறையிடத்தே மரக்கலம் இயைக்கின்ற கம்மத் தொழிலாளர்; துழந்து அடுகள்ளின் தோப்பியுண்டு அயர்ந்து பழஞ் செருக்கு உற்ற அனந்தல் பாணியும்- தம்மிலத்திலேயே துழாவிச் சமைத்த நெல்லாலியன்ற கள்ளைப் பருகித் தம்மை மறந்து முதிர்ந்த செருக்குடனே அக் கள் மயக்கத்தூடே பாடுகின்ற பாடலோசையும்; அரவாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை விரவிய மகளிர் ஏந்திய தூமத்து அரம் போன்ற வாயினையுடைய வேப்பிலையாகிய பேய்ப் பகையினையும் வெண்சிறு கடுகாகிய பேய்ப்பகையினையும் விரவியிட்ட தூபக்காலை மகளிர் கையிலேந்திய புகையினோடும் வந்து; புதல்வரைப் பயந்து புனிறுதீர் கயக்கம் தீர்வினை மகளிர்- மகவீன்றமையால் வாலாமையுடைய அணுமைக் காலம் தீர்ந்து தாயாராகிய மகளிர் ஈனுதலாலெய்திய கயக்கத்தை நீராடுதலாலே தீர்க்கின்ற தொழிலையுடைய குலமகளிர்; குளன் ஆடு அரவமும்- பிறர் தம்மை நோக்காமைப் பொருட்டு அவ்விடையிருள் யாமத்தே குளத்தின்கண் நீராடுதலாலே எழுகின்ற ஒலியும் என்க.

(விளக்கம்) கோமகன்: சோழமன்னன். கோயில்-அரண்மனை குறுநீர்க் கன்னல் -காலத்தை அளந்து காண்டற்குரியதொரு கருவி. அஃதாவது ஒரு வட்டிலின்கண் நீரை நிரப்பி அதன் அடியில் மிகச்சிறியதொரு துளையமைத்து அத் துளை வழியாக நீர் வடியும் பொழுதினை நொடி நாழிகை முதலிய காலக் கூறுபாடாக அறிதற்கு வரையிட்டுப் பொழுதினை அளந்து காண்டல். இதனை.

பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள்
தொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி
எறிநீர் வையகம் செலீஇய செல்வோய்நின்
குறிநீர்க் கன்னல் இனைத்தென் றிசைப்ப

எனவரும் முல்லைப் பாட்டானும்(55-58) அறிக.

யாமங் கொள்பவர்- நாழிகைக் கணக்கர். அவர் அரசனுக்குச் சென்று நாழிகைக்குக் கவி சொல்லுவார் எனவும்,

பூமென் கணையும் பொருசிலையும் கைக்கொண்டு
காமன் திரியும் கருவூரா- யாமங்கள்
ஒன்றுபோ யொன்றுபோ யொன்றுபோய் நாழிகையும்
ஒன்றுபோ யொன்றுபோய் ஒன்று

என்றோர் எடுத்துக் காட்டும் தந்தனர் அடியார்க்கு நல்லார் (சிலப்-5: 49-உரை விளக்கம்)

உறையுள்-யானைக் கொட்டில். காமக்குணம் மேலிட்டிருத்தலால் கவளங் கொள்ளாது உடம்பு மெலிந்து வருந்தும்யானை நிறையழியானை எனத் தனித்தனி கூட்டுக.

துடி-ஒருவகைத் தோற் கருவி. கலம் புணர் கம்மியர் என்றது மரக்கலஞ் செய்யும் கம்மாளரை. இனி மரக்கலத்தில் சேர்ந்து தொழில் செய்வோருமாம். துழந்தடுதல்-துடுப்பினாலே துழாவிச் சமைத்தல். தோப்பி- நெல்லாற் சமைத்த ஒருவகைக் கள் இல்லடுகள்ளின் தோப்பி பருகி எனவரும் பெரும்பாணாற்றுப் படையும் நோக்குக(142). செருக்கு-ஈண்டுக் கள்ளினா லெய்திய வெறி. அது தானும் நெடுங்காலமாகப் பயின்று முதிர்ந்த வெறி யென்பார், பழஞ்செருக்கு என்றார். அணந்தர்-மயக்கம். எனவே வாய்தந்தன பாடும் பாட்டு என்க. பாணி- பாட்டு. அரவாய்- வேப்பிலை: அன்மொழித்தொகை. ஐயவி வெண்சிறு கடுகு. கடிப்பகை- பேய்ப்பகை. அஃதாவது பேய் அஞ்சி யகலுதற்குக் காரணமாதலின் அதற்குப் பகையாகிய பொருள் என்றவாறு. புனிற்று மகளிராதலின்  இருவகைக் காப்பும் வேண்டிற்று. கயக்கம் என்றது மகப்பேற்றால் உண்டான பொலிவழிவினை.

மகவீன்ற சில நாளில் அக் கயக்கம் தீர்தற்கு நீராடி ஒப்பனை செய்தற்கேற்றதாக உடம்பு சீர்படும் அன்றோ, அத்தகைய செவ்வியைப் புனிறு தீர்ந்த செவ்வியாகக் கேடல் மரபு. அங்ஙனஞ் செவ்வியுறுதற்கு ஒன்பது நாட்கள் வேண்டும். பத்தா நாளிரவிற் சென்று குளிர்ந்த நீரினாடி வாலாமை கழிப்பர் எனக் கூறும் நூல் உளது என்பர் அறிஞர் இவ்வாறு நீராடும் வழக்கத்தை

கணவ ருவப்பப் புதல்வர்ப் பயந்து
பணைத்தேந் திளமுலை யமுத மூறப்
புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு
வளமனை மகளிர் குளநீ ரயர

எனவரும் மதுரைக் காஞ்சியானும் (600-603) உணர்க. குளன்: போலி

இதுவுமது

77-87: வலித்த....கலங்கி

(இதன் பொருள்) வலத்த நெஞ்சின் ஆடவர் அன்றியும்- தம்முள் ஒருவரோடொருவர் பகை கொண்டு கறுவு கொண்ட நெஞ்சினையுடைய பகை மறவர் யாருமில்லாதிருந்தும்; புலிக்கணத்து அன்னோர் பூத சதுக்கத்து-புலிக்கூட்டத்தையே ஒத்தவராகிய அந்நகரத்து மறக்குடிப் பிறந்த போர் வீரர்கள் பூத சதுக்கம் என்னுமிடத்திற்குத் தாமே வந்து; கொடித்தேர் வேந்தன் கொற்றம் கொள்க என- புலிக்கொடி யுயர்த்திய தேரையுடைய நங்கள் சோழ மன்னன் சென்ற போர்தொறும் வென்றியே கொள்வானாக என்று பராவி; இடிக்குரல் முழக்கத்து இடும்பலி ஓதையும்-இடி போன்று முழங்கும் வீர  முரசமுழக்கத்தோடே சதுக்கப்பூதத்திற்குத் தம்முயிரைத் தாமே வழங்குகின்ற ஆரவாரமும்; ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் கடுஞ்சூல் மகளிர் நெடும்புண் உற்றோர் தம் துயர் கெடுக்கும் மந்திரமாக்கள் மகவீன்ற இளமகளிரும் துன்பம் பொறாத பால்வாய்ச் சிறு குழவிகளும் தலைச் சூல் உற்றிருக்கின்ற மகளிரும் நெடிய புண்பட்டு வருந்துவோரும் ஆகிய இத்தகையோர் பேய் முதலியவற்றானும் பிணியானும் எய்திய துன்பத்தைத் தீர்த்தற் பொருட்டு மந்திரம் பண்ணும் மந்திரவாதியர்; மன்றப் பேய்மகள் வந்துகைக் கொள்கென நின்று எறி பலியின் நெடுங்குரல் ஓதையும்-வாகை மன்றத்திலே வதிகின்ற பேய்த்தலைவி வந்து யாம் தருகின்ற ஆடு கோழி முதலியவற்றின் குருதிப் பலியை ஏற்றருள்கவென்று அப் பேயை வண்ணித்துப் பாடிக் கூவி அழைக்கின்ற நெடிய அழைப்பாரவாரமும்; பல்வேறு ஓதையும் பரந்து ஒருங்கு இசைப்பக் கேட்டு உளங் கலங்கி- நரியின் ஊளையும் நாயின் குரைப்பும் ஆகிய இன்னோரன்ன பிற ஆரவாரங்களும் திசையெலாம் பரவி ஒருங்கே கேட்கும் பேராரவாரத்தைக் கேட்டு நெஞ்சம் அச்சத்தாலே கலங்கி; என்க.

(விளக்கம்) பகைவர் இல்லாத காலத்தேயும் மன்னவன் கொற்றம் நாளும் நாளும் உயர்க என்று வீரமறவர் தம் முயிரையே தெய்வத்திற்குப் பலியிடும் வழக்க முண்மையை,

ஆர்த்துக் களங்கொண்டோர் ஆரம ரழுவத்துச்
சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்குக் கருந்தலை
வெற்றி வேந்தன் கொற்றங் கொள்கென
நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங்
குயிர்ப்பலி யுண்ணும் உருமுக்குரன் முழக்கத்து
மயிர்க்கண் முரசமொடு வான்பலி யூட்டி

எனவரும் சிலப்பதிகாரத்தானும் (5:83-8) உணர்க. இதனை அவிப்பலி என்பர் ஆசிரியர் தொல்காப்பியனார். இது வீரச்சுவை: அவிப்பலி செய்வோர் பலிக்கும் வலிக்கும் தலைவரம்பாயோர் என்னும் மாபெரும் புகழ்க்குரியோர் என்ப.

ஈற்றிளம் பெண்டிர் முதலியோர் பிணி முதலியவற்றிற்கியன்ற
மருந்துண்ணவும் பத்தியங் காக்கவும் வலியற்றவர் ஆவர். இவர்க்கு மனவலியும் இன்மையின் பேயாலே எளிதிற் பற்றப்படுவர். ஆதலின் இவர் துயர் மந்திர மாக்களாலேயே தீர்க்கப்படும்; ஆதலால் இத்தகையோரைத் தனியே வாங்கி எண்ணினர். இச் செயல் தமக்குடன்பாடன்மையின் மந்திர மாக்கள் என்றார். என்னை? உயிர்க் குயிரீதல் மடமை என்பாள் சம்பாபதி

கொலை அறமாமெனும் கொடுங்தொழி லாளர்
அவலப் படிற்றுரை ஆங்கது

என முன்னைக் காதையில் (162-163) அறிவுறுத்துதலும் நினைக.

மன்றம்- வாகைமன்றம். காய்பசிக் கடும்பேய் கணங்கொண்டீண்டு மாமலர் பெருஞ்சினை வாகை மன்றமும் என் முன்னும் கூறினமை (சக்கர. 82-83) நினைக.

நின்றெறி பலி என்றது ஆடு கோழி முதலியவற்றின் குருதியிற் குழைத்த சோற்றினை வானத்தே எறியும் பலி என்றவாறு. இவ்வோசையெல்லாம் சுதமதி கேட்டுக் கலங்கி என்க.

சுதமதி உலக வறவியிற் புகுதல்

87-93: ஊட்டிருள்.......இருத்தலும்

(இதன் பொருள்) முருந்து ஏர் இளநகை ஊட்டு இருள் அழுவத்து பூம்பொழில் நீங்கி-முருந்து போன்ற கூர்த்த வெள்ளிய பற்களையுடைய அச் சுதமதியானவள் காரரக்கின் குழம்பினை ஊட்டினாற் போன்று பெரிதும் இருண்டுகிடக்கும் பரம்பினையுடைய அந்த உவவனமாகிய பூம்பொழிலினின்றும் நீங்கி; திருந்து குடபால் எயில் சிறுபுழை போகி-அழகிய மேற்றிசைமதலி னமைந்த சிறிய வாயிலிற் புகுந்து சென்று; மிக்க மா தெய்வம் வியந்து எடுத்து  உரைத்த சக்கரவாளத்து ஆங்கண்- மிகவும் சிறந்த அருளுடைய பெரிய மணிமேகலா தெய்வம் வியந்து எடுத்துக் கூறிய சக்கரவாளக் கோட்டத்தே ஆங்கோரிடத்தே; பலர் புகத்திறந்த பகுவாய் வாயில்- வருவோர் பலரும் புகுதற் பொருட்டுத் திறந்தே கிடக்கின்ற பிளந்தவாய் போன்ற வாயிலிற் புகுந்து; உலக வறவியின் ஒருபுடை இருந்தாலும்-உலக வறவி என்னும் ஊரம் பலத்தே ஒரு பக்கத்திலே அமர்ந்திருத்தலும்; என்க.

(விளக்கம்) அருளுடைமைபற்றி மணிமேகலா தெய்வத்தை மிக்க மா தெய்வம் என்றார். பகுவாய்- பிளந்த வாய். வாய் போன்ற வாயில் என்க. உலகவறவி-பூம்புகார் நகரத்துப் பெரியதோர் ஊரம்பலம். அஃதுலகத்துள்ள மாந்தர்க் கெல்லாம் பொதுவிடம் என்பது புலப்பட அதற்கு அப் பெயர் இடப்பட்ட தென்க.

கந்தற்பாவை சுதமதியை விளித்தல்

94-105: கந்துடை........கேளாய்

(இதன் பொருள்) நெடுநிலை உடைக் கந்து அந்தில்- நெடிதாக நிற்கும் நிலையினையுடைய தூணாகிய அவ்விடத்தே; காரணம் காட்டிய எழுதிய அற்புதப் பாவை- பண்டு மயன் என்பான் வருபவர் பிறப்பிற்குக் காரணமாகிய அவருடைய முற்பிறப்பு முதலியவற்றை அறிவித்தற் பொருட்டியற்றிய வியத்தகு படிமத்திலே உறைகின்ற தெய்வம் ஒன்று; மைத்தடங் கண்ணாள் மயங்கியருள் வெருவ- அச் சுதமதி பின்னும் அவ்விருளில் மயங்கி அஞ்சும்படி; திப்பியம் உரைக்கும் தெய்வக்கிளவியின்-இறந்த கால எதிர்கால நிகழ்ச்சிகளைக் கூறுகின்ற தெய்வத்தன்மையுடைய தனக்குரிய தெய்வ மொழியாலே பேசத் தொடங்கி; இரவி வன்மன் ஒரு பெருமகளே துரகத்தானைத் துச்சயன் தேவி- இரவி வன்மன் என்பவனுடைய ஒப்பற்ற பெருமையுடைய மகளே! குதிரைப்படை மிக்க துச்சயன் என்பவனுடைய மனைவியே! தயங்கு இணர்கோதை தாரை சாவு உற- விளங்குகின்ற மலர் மாலையணிந்த நின் தமக்கையாகிய தாரை என்பாள் பொறுக்ககில்லாது இறந்தொழியும்படி; மயங்கி யானை முன் மன்னுயிர் நீத்தோய்- மயக்கமுற்று யானை முன் சென்று நிலைபெற்ற உயிரை விட்டவளே!; காராளர் சண்பையில் கௌசிகன் மகளே- காராளர் மிக்கு வாழ்கின்ற சண்பை மாநகரத்தேயுறையும் கௌசிகன் என்னும் பார்ப்பனன் மகளே! மாருத வேகனொடு இந்நகர் புகுந்து தாரை தன்னொடு கூடிய வீரையாகிய சுதமதி கேளாய்- மாருதவேகன் என்னும் விச்சாதரன் கைப்பற்றின்மையாலே அவனோடு இப் பூம்புகார் நகரத்தே வந்து தாரையாகிய நின் தமக்கை மாதவியோடு கூடி யுறைகின்ற வீரையாகிய சுதமதியே! ஈதொன்று கேட்பாயாக! (என்று விளித்து முன்னிலைப்படுத்தி) என்க.

(விளக்கம்) நெடுநிலை உடைக்கந்து அந்தில் என மாறிக் கூட்டுக. காரணம்-இப் பிறப்பிற்குக் காரணமான பழம்பிறப்பு. காட்டிய: செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்; காட்ட என்க.மயன் எழுதிய பாவை, அற்புதப் பாவை எனத் தனித்தனி கூட்டுக. மைத்தடங் கண்ணாள் என்றது சுதமதி என்னும் பெயராந்துணை. மயங்கி வெருவ என்க. திப்பியம்- தெய்வத் தன்மையான செய்தி. அஃதாவது, பழம்பிறப் புணர்த்துதல் எதிரது கூறல் முதலியன. தெய்வக்கிளவி- தெய்வத்திற் கியன்ற மொழி. அஃதாவது வாயாற் கூறாமல் வானொலி மாத்திரையாகவே கூறுதல்.

இரவிவன்மன்- அசோதர நகரத்து அரசன். சுதமதியின் முற் பிறப்பில் அவட்குத் தந்தையானவன்.

துச்சயன்- சுதமதியின் முற்பிறப்பிற் கணவனாயிருந்தவன். இவன் கச்சய நகரத்து மன்னன்.

தாரை- சுதமதியின் முற்பிறப்பிலே அவளுக்குத் தமக்கையாயிருந்தவள். வீரை என முற்பிறப்பிற் பெயர் பெற்றிருந்த சுதமதி, யானை யாலறையுண் டிறந்தாள்; அது பொறாமல் தாரை தானே உயிர் விட்டாள் என்பது கருத்து.

சண்பை- சீகாழி. அங்க  நாட்டிலுள்ள சம்பா நகரம் என்பாருமுளர். மயங்கி- கள்ளால் மயங்கி என்பதுபட நின்றது. தாரை மறுபிறப்பில் மாதவியாகப் பிறந்தாள்; வீரையாகிய நீ சுதமதியாகப் பிறந்து அவளோடு கூடினை என்றறிவித்தபடியாம்.

இனி, அன்புக் கேண்மை கொண்டு வாழ்பவர் இம்மை மாறி மறுமை எய்திய விடத்தும் மீண்டும் கூடி அவ்வன்பினை வளர்த்துக் கொள்வார் என்பது பௌத்த சமயத்தினர் கோட்பாடாதல் பெற்றாம். ஆசிரியர் இளங்கோவும் இக்கொள்கையை யுடையர் என்பதனைச் சிலப்பதிகாரத்து (30) வரந்தரு காதையின் நிகழ்ச்சிகளால் அறியலாம். மேலும் அவர்

நற்றிறம் புரிந்தோர் பொற்படி யெய்தலும்
அற்புளஞ் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்

என்றோதியதற்கு ஈண்டுத் தாரையும் வீரையுமாகிய அற்புளஞ் சிறந்த உடன் பிறந்த மகளிரிருவரும், மறுபிறப்பில் மாதவியும் சுதமதியும் வேறு இடங்களினும் குடிகளினும் பிறந்திருந்தும் பற்றுவழி மீண்டும் கூடியது சிறந்த எடுத்துக் காட்டாதலும் அறிக.

இதுவுமது

104-110: இன்றேழ்.......... நல்லாள்

(இதன் பொருள்) இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து- இற்றைக்கு ஏழாநாளின் இரவின் இருள் செறிந்த இடையாமத்திலே; இலக்குமியாகிய நினக்கு இளையாள் தன் பிறப்பதனொடு நின்பிறப்பு உணர்ந்து ஈங்கு வரும்- முற்பிறப்பிலே இலக்குமி என்னும் பெயரோடிருந்த நின் தங்கை தன் முற்பிறப்பினையும் உன்னுடைய முற்பிறப்பினையும் அறிந்துகொண்டு இந் நகரத்திற்கு வருவாள் காண்!; அஞ்சல் என்று உரைத்தது அவ் உரை கேட்டு- ஆதலால் நீ அஞ்சாதே கொள்! என்று அக் கந்திற் பாவை தன் தெய்வக் கிளவியாலே தெரிந்துக் கூறியதாக அந்த மொழிகளைக் கேட்டு; நெஞ்சம் நடுங்குறூஉம் நேரிழைநல்லாள்- அச்சத்தால் தன்னுள்ளம் நடுங்குகின்ற அச் சுதமதி நல்லாள்; என்க.

(விளக்கம்) இடையிருள் யாமம்- நள்ளிரவு. இலக்குமி என்றது மணிமேகலையின் முற்பிறப்பின்கண் அவட்கெய்திய பெயரை. இதனால் மாதவியும் சுதமதியும் மணிமேகலையும் பிறப்பிலே நிரலே தாரையும் வீரையும் இலக்குமியும் என்னும் பெயர்களையுடைய ஒரு தாய்வயிற்றுடன்பிறந்த மகளிராயிருந்தனர் என்பது பெற்றாம். தெய்வம் கூறிற்றேனும் அது தெய்வமொழியாதல் பற்றியும் மகளிர் இயல்பு பற்றியும் சுதமதிக்கு அச்சமே பிறந்தது. என்னை?

அணங்கே விலங்கே கள்வர்தம் மிறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே    (மெய்-8)

எனவரும் தொல்காப்பியம் அணங்கும் அச்சம் பிறத்தற்கு நிலைக்களமாம் எனக் கூறுதலும் நினைக. அணங்கு- தெய்வம். நேரிழை நல்லாள் என்றது வாளாது சுதமதி என்னும் பெயர் மாத்திரையாய் நின்றது.

(111 ஆம் அடிமுதலாக 124 ஆம் அடிமுடிய வைகறைப் பொழுதின் வண்ணனையாய் ஒரு தொடர்)

பூம்புகாரில் வைகறை யாமத்து நிகழ்ச்சிகள்

111-124: காவலாளர்..........பரந்தெழ

(இதன் பொருள்) காவலாளர் கண்துயில் கொள்ள- இரவெல்லாம் துயிலின்றி நகரங்காத்த காவற் றொழிலாளர் கண் மூடித் துயிலா நிற்பவும்; தூமென் சேக்கைத் துயில் கண் விழிப்ப-தூய மெல்லிய பஞ்சணையிற் றுயின்று கொண்டிருந்த காதலர்கள் கண்கள் துயிலுணர்ந்து விழித்துக் கொள்ளவும்; வலம்புரிச் சங்கம் வறிது எழுந்து ஆர்ப்ப- வலம்புரிச் சங்கங்கள் பொருளின்றி மங்கலமாக ஆரவாரிப்பவும்; புலம்புரிச்சங்கம் பொருளொடு முழங்க அறிவை விரும்புகின்ற புலவர் கூட்டம் கடவுள் வாழ்த்தாகிய பொருளோடு பாடி முழங்கா நிற்பவும்; புகர்முக வாரணம் நெடுங்கூ விளிப்ப-புள்ளிகளையுடைய முகத்தையுடைய யானைகள் தம்மைக் குளிர் நீராட்டும் பாகரை நெடிதாகக் கூவிப் பிளிறவும்; பொறி மயிர் வாரணம் குறுங்கூ விளிப்ப- புள்ளி பொருந்திய மயிரையுடைய கோழிச் சேவல்கள் குறிய கூவுதலாலே கதிர்வரவியம்பா நிற்பவும்; பணைநிலைப் புரவி பல எழுந்து ஆல- பந்தியிற் கட்டப் பெற்று நிற்றலையுடைய பலப்பலவாகிய குதிரைகளும் அந் நிலையை வெறுத்து நிலை யெர்ந்து கனையா நிற்பவும்; பணைநிலைப் புள்ளும் பல எழுந்து ஆல- மரக்கிளைகளிலே உறக்கத்தே நிலை பெற்ற காக்கை முதலிய பறவைகளும் எழுந்து ஆரவாரிப்பவும்; பூம்பொழில் ஆர்கை புள்ளொலி சிறப்ப- மலர்ப் பொழில்களினூடே நிறைந்துள்ள பறவைகளின் பாட்டொலி மிகா நிற்பவும்; பூங்கொடியார் கை புள்ளொலி சிறப்ப- மலர்க் கொடி போன்ற மகளிரின் கையிலணிந்த வளையல்களின் ஒலியும் மிகா நிற்பவும்; கடவுள் பீடிகை பூப்பலி கடைகொள்-இரவில் விழாக் கொள்ளும் கடவுளர்க்குப் பலிபீடங்களிலே மலர்ப்பலியிட்டு விழாவை முடிவு செய்யா நிற்பவும்; கலம்பகர் பீடிகை கடை பூம்பலி கடை கொள்-அணிகலம் விற்கும் அங்காடித் தெருவில் கடைகளெல்லாம் முற்றத்தே மலர்ப்பலி கொள்ளா நிற்பவும்; குயிலுவர் கடைதொறும் பண்இயம் பரந்து எழ-இசைக்கருவியாளர் உறையுமிடமெல்லாம் பண்ணிசையும் கருவியிசையும் பரவி எழாநிற்பவும்; கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் சிற்றுண்டி செய்து கொடுப்போர் கடைதோறும் சிற்றுண்டிகள்; பரந்து எழ- பரவுதல் செய்து மிகா நிற்பவும்; என்க.

(விளக்கம்) காவலளார்-ஊர்காப்பாளர்; தேர் வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும் ஊர்காப்பாளர் எறிதுடி யோதையும் என இக் காதையில்(68-69) முன்னும் கூறப்பட்டமை யுணர்க. சேக்கைத் துயில்கண் என்றது காதலர் கண்களை துயில்வோர் விரைப் பூம்பள்ளி வீழ்துணை தழுவவும் என முன்னும்(52-53) கூறப்பட்டமை உணர்க. வலம்புரிச்சங்கம்- சங்குகளிற் சிறந்தது. இது மங்கலச் சங்கு புலம்-அறிவு. புகர்முக வாரணம்-யானை. பொறிமயிர் வாரணம்- சேவல். பொழில் ஆர்கை- பொழிலில் நிறைதலையுடைய. பூங்கொடியார் கைப்புள் என்றது-வளையலை. மாதர் இல்லத்தே தொழிலில் முனைதலின் வளைகள் மிக்கொலித்தன என்றவாறு. இனி, பூங்கொடியில் தாதுண்ணும் அறுகாற் சிறு பறவையின் இசையொலி எனினுமாம்.

கலம்பகர் பீடிகை-அணிகலம் விற்கும் அங்காடித் தெரு. கடை- அங்காடித் தெருவிலுள்ள பல்வேறு கடைகளும் என்க. கடை வாயிலில் வைகறையில் பூவிடுதங் மரபு.

குயிலுவர்-இசைக் கருவி குயிலுவோர். கூடிய குயிலுவக் கருவி கண் துயின்று என முன்னும் வந்தமை யறிக. பண்ணியம்- தின் பண்டங்கள். கொடுப்போர்- செய்து கொடுப்போர். இவர் உணவு விற்போர் என்க.

சுதமதி மாதவியைக் கண்டு மணிமேகலையைப் பற்றிக் கூறுதலும்; இருவர் நிலைமையும்

125-134:ஊர்துயில்.........தானென்

(இதன் பொருள்) ஊர் துயில் எடுப்ப-இவ்வாறு அம் மூதூரில் வாழ்வாரையெல்லாம் உறக்கத்தினின்றும் எழுப்புதற்கு; உரவு நீர் அழுவத்துக் கார் இருள் சீத்துக் கதிரவன் முளைத்தலும் வலிமைமிக்க நீர்ப்பரப்பாகிய குணகடலினின்றும் கரிய இருளைத் துரந்து கதிரவன் தோன்றா நிற்பவும்(சுதமதி நல்லாள்) ஏ உறு மஞ்ஞையின் இனைந்து-அம்பேறுண்ட மயில் போன்று பெரிதும் உளம் வருந்தித் தன் மெல்லடிகள் வருந்துமாறு, மாநகர் வீதி மருங்கின் போகி-அப் பூம்புகார் நகரத்து வீதி வழியாக நடந்து சென்று; போய கங்குலிற் புகுந்ததை யெல்லாம் கழிந்த இரவிலே நிகழ்ந்த நிகழ்ச்சிகளை யெல்லாம்; மாதவி தனக்கு வழுவின்று உரைத்தலும்- மாதவிக்குச் சிறிதும் பிறழாமல் கூறியதனாலே; அவள் நல் மணி இழந்த நாகம் போன்று தன் மகள் வாராத் தனித்துயர் உழப்ப-அம் மாதவிதானும் தான் உமிழ்ந்த அழகிய மணியை இழந்துவிட்ட நாகப் பாம்பு போன்று தன் மகளாகிய மணிமேகலை மீண்டு வாராமையாலே எழுந்த மாபெருந்துன்பத்திலே அழுந்தா நிற்ப; துன்னியது உரைத்த சுதமதி- மணிமேகலைக்கு நிகழ்ந்ததனை மாதவிக்குக் கூறிய அச் சுதமதி தானும்; இன் உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள்- தனக்கினிய உயிரையே இழந்தொழிந்த உடம்புபோல இருப்பாளாயினள்; என்பதாம்.

(விளக்கம்) உரவுநீர்-கடல். ஆக்கல் அளித்தல் அழித்தல் என்னும் மூன்று பேராற்றலும் உடையதாகலின் அதற்கது பெயராயிற்று. உரவு-ஆற்றல். அழுவம்-பரப்பு. ஏ-அம்பு. இனைதல்-வருந்துதல். இஃது உள்ளத்தின்கண் எய்திய துயரத்திற்குவமை ஆதலின் அடிவருத்தத்தை வேறு கூறினர். போய கங்குல்-கழிந்த இரவு. எல்லாம்- எஞ்சாமைப் பொருட்டு. வழு-குற்றம்; ஈண்டுப் பிறழ்ச்சி. வாராத் துயர் என்புழி பெயரெச்சத் தீறு கெட்டது. தனித் துயர்- பெருந்துன்பம். சுதமதிதானும் எனல் வேண்டிய எச்சவும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது.

இனி இக்காதையை- மணிமேகலையை மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி உதயகுமரன் இருந்தோன் முன்னர்த் தோன்றி மகனே! கோல் திரிந்திடின் கோள் திரியும் கோள் திரிந்திடின் வறங்கூறும் கூரின் உயிர் இல்லை. உயிர் வேந்தன் உயிர் என்னும் தகுதி இன்றாகும். அவத்திறம் ஒழிகென உரைத்தபின் சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி அஞ்சல், மணிமேகலை யான், ஏது முதிர்ந்தது, இளங்கொடிக்கு; ஆதலின் பெயர்த்து வைத்தேன் இன்று ஏழ் நாளில் வந்து தோன்றும்.  ஒளியாள் ஈங்கு நிகழ்வன பலவுள. மாதவிக்கு உரையாய்! என்திறம் உணரும்! கனவகத்துரைத்தேன் உரை எனப் போயபின், சுதமதி எழுந்து கேட்டுக் கலங்கிப் போகி ஒரு புடை இருத்தலும், பாவை கிளவியின் மகளே! தேவி நீத்தோய், சுதமதி கேளாய் இளையாள் வரும் அஞ்சல் என்றுரைத்த உரை கேட்டு, நல்லாள் கதிரவன் முளைத்தலும் வருந்தப் போகி மாதவிக்கு உரைத்தலும், அவள் உழப்ப, சுதமதி இருந்தனள் என இயைத்துக் கொள்க.

துயிலெழுப்பிய காதை முற்றிற்று.
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 09:00:05 AM
8. மணிபல்லவத்துத் துயருற்ற காதை

எட்டாவது மணிமேகலை மணிபல்லவத்துத் துயிலெழுந்து துயருற்ற பாட்டு

அஃதாவது: மணி பல்லத்தின்கண் மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் துயில் கலையாமலே வைத்துப் போன பின்னர் அத்தீவகத்தில் துயில்கொண்டிருந்த மணிமேகலை வைகறையிலேயே வழக்கம்போல் துயிலுணர்ந்து நோக்கினவள் அவ்விடம் தான் கண்டிராத புதிய இடமாயிருத்தல் கண்டு யாதொன்றும் காரணங் காணமாட்டாளாய்ப் பெரிதும் திகைத்தனள். கதிரவன் தோன்றிய பின்னர் ஆங்கு எழுந்து சுற்றிப் பார்த்து மக்கள் வழக்கமும் இல்லாமையால் வருந்தித் தன் தந்தையை நினைந்து அழுதரற்றும் செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு.

இதன்கண் மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் துயிலக்கிடத்திய மணிபல்லவத்தின் வண்ணனையும் பூம்புகார் நகரத்து உவவனத்தே துயில்கொண்டு மணிபல்லவத் தீவின் கண் துயிலுணர்ந்த மணிமேகலை பண்டறி கிளையொடு பதியும் காணாளாய்க் கண்டறியாதன கண்ணிற் கண்டு மருள்பவளின் நிலைமையை இப் புலவர் பெருமான் தன்மை நவிற்சியாகக் கூறிக் காட்டும் புலமைத்திறமும் பெரிதும் போற்றத் தகுவனவாக அமைந்திருத்தல் காணலாம்.

மணிமேகலை மருண்டு தந்தையை நினைந்து அழுதரற்றும் பகுதி ஓதுபவர் உள்ளத்தை உருக்கம் இயல்பிற்றாக அமைந்துளது. மணிபல்லவத் தீவு அழகொழுகப் புனைந்துரைக்கப்பட்டுள்ளது. அப்பால் அத் தீவிலுள்ள புத்தபீடிகையின் வரலாறும் தெய்வத்தன்மையும் இக்காதையில் இனிது கூறப்பட்டுள்ளன.

ஈங்கு இவள் இன்னணம் ஆக இருங் கடல்
வாங்கு திரை உடுத்த மணிபல்லவத்திடை
தத்து நீர் அடைகரை சங்கு உழு தொடுப்பின்
முத்து விளை கழனி முரி செம் பவளமொடு
விரை மரம் உருட்டும் திரை உலாப் பரப்பின்
ஞாழல் ஓங்கிய தாழ் கண் அசும்பின்
ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி
வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி
முடக் கால் புன்னையும் மடல் பூந் தாழையும்
வெயில் வரவு ஒழித்த பயில் பூம் பந்தர்  08-010

அறல் விளங்கு நிலா மணல் நறு மலர்ப் பள்ளித்
துஞ்சு துயில் எழூஉம் அம் சில் ஓதி
காதல் சுற்றம் மறந்து கடைகொள
வேறு இடத்துப் பிறந்த உயிரே போன்று
பண்டு அறி கிளையொடு பதியும் காணாள்
கண்டு அறியாதன கண்ணில் காணா
நீல மாக் கடல் நெட்டிடை அன்றியும்
காலை ஞாயிறு கதிர் விரித்து முளைப்ப
உவவன மருங்கினில் ஓர் இடம்கொல் இது!
சுதமதி ஒளித்தாய்! துயரம் செய்தனை!  08-020

நனவோ கனவோ என்பதை அறியேன்!
மனம் நடுக்குறூஉம் மாற்றம் தாராய்!
வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும்
மெல் வளை! வாராய் விட்டு அகன்றனையோ?
விஞ்சையின் தோன்றிய விளங்கு இழை மடவாள்
வஞ்சம் செய்தனள்கொல்லோ? அறியேன்!
ஒரு தனி அஞ்சுவென் திருவே வா! எனத்
திரை தவழ் பறவையும் விரி சிறைப் பறவையும்
எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்கு சிறை முழுவலும்
அன்னச் சேவல் அரசன் ஆக  08-030

பல் நிறப் புள் இனம் பரந்து ஒருங்கு ஈண்டி
பாசறை மன்னர் பாடி போல
வீசு நீர்ப் பரப்பின் எதிர் எதிர் இருக்கும்
துறையும் துறை சூழ் நெடு மணல் குன்றமும்
யாங்கணும் திரிவோள் பாங்கு இனம் காணாள்
குரல் தலைக் கூந்தல் குலைந்து பின் வீழ
அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி
வீழ் துயர் எய்திய விழுமக் கிளவியின்
தாழ் துயர் உறுவோள் தந்தையை உள்ளி
எம் இதில் படுத்தும் வெவ் வினை உருப்ப  08-040

கோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து
வை வாள் உழந்த மணிப் பூண் அகலத்து
ஐயாவோ! என்று அழுவோள் முன்னர்
விரிந்து இலங்கு அவிர் ஒளி சிறந்து கதிர் பரப்பி
உரை பெறு மும் முழம் நிலமிசை ஓங்கித்
திசைதொறும் ஒன்பான் முழ நிலம் அகன்று
விதி மாண் நாடியின் வட்டம் குயின்று
பதும சதுரம் மீமிசை விளங்கி
அறவோற்கு அமைந்த ஆசனம் என்றே
நறு மலர் அல்லது பிற மரம் சொரியாது  08-050

பறவையும் முதிர் சிறை பாங்கு சென்று அதிராது
தேவர் கோன் இட்ட மா மணிப் பீடிகை
பிறப்பு விளங்கு அவிர் ஒளி அறத்தகை ஆசனம்
கீழ் நில மருங்கின் நாக நாடு ஆளும்
இருவர் மன்னவர் ஒரு வழித் தோன்றி
எமது ஈது என்றே எடுக்கல் ஆற்றார்
தம பெரும் பற்று நீங்கலும் நீங்கார்
செங் கண் சிவந்து நெஞ்சு புகையுயிர்த்துத்
தம் பெருஞ் சேனையொடு வெஞ் சமம் புரி நாள்
இருஞ் செரு ஒழிமின் எமது ஈது என்றே  08-060

பெருந் தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும்
பொரு அறு சிறப்பின் புரையோர் ஏத்தும்
தரும பீடிகை தோன்றியது ஆங்கு என்  08-063

மணிபல்லவத்தே மணிமேகலை துயிலுமிடத்தின் மாண்பு

1-12: ஈங்கிவள்.........அஞ்சிலோதி

(இதன் பொருள்) இவள் ஈங்கு இன்னணம் ஆக- இப் பூம்புகார் நகரத்திலே மணிமேலையைப் பிரிந்து ஆற்றாமையால் பெரிதும் வருந்திய சுதமதி என்பாளின் நிலைமை இவ்வாறாக; இருங்கடல் வாங்கு திரை உடுத்த மணிபல்லவத்து இடை- பெரிய கடலினது நாற்புறமும் வளைந்து வந்து மோதுகின்ற அலைகளை அணிந்துள்ள மணி பல்லவம் என்னும் தீவினகத்தே; தத்து நீர் அடை கரை சங்கு உழுதொடுப்பின் முத்து விளை கழனி-தவழுகின்ற நீரை அடைக்கின்ற கரையினையும் சங்குகளால் உழப்பட்டு விதைத்த விதைப்பின்கண் முத்துக்களாகிய கூலம் விளைகின்ற வயல்களையும்; முரி செம்பவளமொடு விரை மரம் உருட்டும் திரை உலாப் பரப்பின்- கொடிகளிலே முரிந்த சிவந்த பவளக் கொடிகளையும் உடை கலங்களினின்றும் மிதந்த சந்தனம் முதலிய நறுமண மரங்களையும் சுமந்து வந்து உருட்டுகின்ற அலைகள் உலாவுகின்ற நெய்தனிலப்பரப்பினையும்; ஞாழல் ஓங்கிய தாழ் கண் அசும்பின்- புலிநகக் கொன்றை மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள தாழ்ந்த நன்னீர் ஊற்றுக் கண்களையுடைய ஈரம்புலராத நிலப்பகுதியினையும் ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி வண்டு உண மலர்ந்த- ஆம்பலும் குவளையுமாகிய கொடிகள் தம்முள் விரவிப் படர்ந்து கலந்து பசித்துவருகின்ற வண்டுகள் தாதுண்டு மகிழுமாறு மலர்ந்திருக்கின்ற; குண்டு நீர் இலஞ்சி- ஆழமான நீரையுடைய பொய்கைக் கரையினையும்; முடக்கால் புனையும் மடல் பூந் தாழையும் வெயில் வரவு ஒழித்த-அக்கரையின் மேனின்ற முடம்பட்ட காலையுடைய புன்னை மரமும் மடலாற்சிறந்த பூவினையுடைய தாழையும் தழைத்துச் செறிதலாலே வெயில் புகுதாதபடி தடுத்துள்ள; பயில் பூம் பந்தர்-பயிலுதற் கினிய பூக்களோடியன்ற நீழலின் கீழ்; அறல் விளங்கு நிலாமணல் நறுமலர்ப்பள்ளி- வரிவரியாகத் திகழா நின்ற நிலவொளி போன்ற நிறமமைந்த மணற்பரப்பின் மேல் மணிமேகலா தெய்வம் பரப்பிய நறிய மலராகிய பாயலின் மேலே; துஞ்சு துயில் எழூஉம் அம்சில் ஓதி-ஆழ்ந்து துயின்ற துயிலினின்றும் வழக்கம் போன்று எழுகின்ற மணிமேகலை; என்க.

(விளக்கம்) ஈங்கு இவள் என்றது புகார் நகரத்துள்ள சுதமதி என்றவாறு. இன்னணம்- இவ்வாறு இவள் இவ்வாறாக எனவே, இஃது இனி யாம், மணிமேகலா தெய்வம் விஞ்சையிற் பெயர்த்து மணி பல்லவத்திடை வைத்து நீங்கிய மணிமேகலையின் திறங் கூறுவாம் என்று குறிப்பாக நுதலிப் புகுந்தவாறாயிற்று. வாங்கு- வளைந்த. அடைகரையினையுடைய கழனி சங்கு உழுகழனி தொடுப்பின் கழனி முத்துவிளை கழனி என்று தனித்தனி கூட்டுக. இது சொல் மாத்திரையால் மருதத்திணை கூறியபடியாம். உழுதல் கூறவே வித்தலும் விளைபொருளும் கூறினார். சங்கு உழுது முத்தாகிய விதையை விதைப்ப முத்தாகிய கூலங்களே விளையும் கழனி என்றார். கழனி- மருதத்திணையில் விளைநிலம். முரி செம்பவளம்: வினைத்தொகை. கொடியில் முரிந்த செம்பவளம் என்றவாறு. விரை மரம்-சந்தன மரம் முதலியன. இவை உடை கலத்தினின்றும் மிதந்தவை. நீரினின்றும் மரங்களைக் கரை யேற்றுவார் அவற்றை உருட்டியே ஏற்றவர் ஆதலின் உருட்டுந்திரை என்றார். மரமுருட்டியவர் இளைப்புற்றுச் சிறிது வாளாதுலாவுதலும் இயல்பாதலின், இத் திரைகளும் அங்ஙனமே உலாவும் என்றார்.

ஞாழல்- புலிநகக் கொன்றை. தீவுகளின் கரையோரப் பகுதிகள் தாமே நன்னீர் ஊற்றெடுக்கும் ஊற்றுக் கண்களையுடையனவாய் எப்பொழுதும் நீர்க்கசிவுடையவாய் வளமுடையவாகவும் இருத்தல் இயல்பு. அவ்விடத்தே ஞாழல் முதலிய மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. அசும்பு- நீர்க்கசிவுடைய நிலம். அவ்விடத்தே இலஞ்சியும் ஒன்றுளதாயிருந்தது. அதன்கரையில் புன்னையும் தாழையும் தழைத்தோங்கி வெயில் புகாதபடி தடுத்து நிழலிட்டிருந்தன. அதன்கீழ் நிலவொளி தவழும் மணற் பரப்பின் மேலே புதிய மலர்களைப் பரப்பி அம் மலர்ப் பாயலின் மேல் மணிமேகலா தெய்வம் தனது பேரருளுக்கு ஆளான மணிமேகலையைத் துயிலவிட்டு அத் தெய்வம் அகன்றது என்பது இதனால் இனிது பெற்றாம். கதிரவன் எழுமுன்னர்த் துயிலுணர்ந்து எழுகின்ற தன் வழக்கப்படியே மணிமேகலை துயிலெழுந்தாள் என்பது தோன்ற அந்நறுமலர்ப் பள்ளித் துஞ்சுதுயில் எழு மஞ்சில் ஓதி என்றார். என்னை? ஆண்டுத் துயிலுணர்த்துவார் பிறர் யாரும் இன்மையின் அப்பொழுது அங்ஙனம் துயிலுணர்ந் தெழுவது அவள் வழக்கம் என்பது போதருதலறிக. துஞ்சு துயில் என்றது துஞ்சுதல் போன்று தன்னையறியாது ஆழ்ந்து துயிலும் துயில் என்றவாறு. துஞ்சினாற் செத்தாரின் வேறல்லர் என்பார் வள்ளுவனார். நல்லுறக்கத்திற்கு இயல்பும் இதுவே என்றுணர்க.

மணிமேகலையின் மருட்கை நிலை

13-27: காதல்.......வாவென

(இதன் பொருள்) காதல் சுற்றமும் மறந்து கடைகொள் வேறு இடத்துப் பிறந்த உயிரே போன்று-அன்பு காரணமாகத் தனக்குத் தாயே தந்தையே மாமனே மாமியே இன்னோரன்ன உறவுத் தொடர்ப்பாட்டோடு தன்னைச் சூழ விருந்த சுற்றத் தாரை எல்லாம் ஒருசேர மறந்து இம்மை வாழ்க்கை இறுதி எய்த மீண்டும் வேறோர் இடத்தே சென்று புதிய பிறப்பினை எய்தியதோர் உயிர் போலவே; பண்டு அறிகளையொடுபதியும் காணாள்-முன்பு தான் பயின்றறிந்த தாய் முதலிய சுற்றத்தாரோடு தான் வாழ்தற் கிடமான புகார் நகரத்தையும் காணாதவளாகி; கண்டு அறியாதன கண்ணிற் காணா-முன்பு ஒரு பொழுதும் கண்டறியாத புதிய பொருள்களையும் இடத்தையுமே தன் கண்களாலே கண்டு மருளும் பொழுது; நீல மாக்கடல் நெட்டிடை அன்றியும் காலை ஞாயிறு கதிர்விரித்து முளைப்ப நீலநிறமுடைய பெரிய கடல் நெடுந்தூரத்திற் கிடத்தலின்றித் தன்னருகே கிடத்தலாலே அந்த விடியற்காலத்தே ஞாயிற்றுமண்டிலம் தன் கதிர்களை விசும்பிலே பரப்பி அக்கடலினின்றும் தோன்றுதல் கண்டு தான் இருக்கும் இடத்தை ஐயுற்று ஆராய்பவள்; உவவனம் மருங்கினில் இது ஓர் இடம் கொல்- நெருநல் யான் சுதமதியோடு மலர் கொய்ய வந்துபுக்க உவவனத்தினுள் அமைந்துள்ள ஓரிடமே இவ்விடம் ஆதல் வேண்டும். ஆம். ஆம். இஃதுவ வனத்தில் ஓரிடமே; ஆயின், சுதமதி யாண்டுப் போயினள்? அவள் நம்மை அசதியாடக் கருதி அயலிலே ஒளிந்திருப்பாள் என்று கருதி; சுதமதி ஒளித்தாய் துயரஞ் செய்தனை-சுதமதீ! சுதமதீ! நீ ஒளித்திருக்கின்றாய்காண்! விளையாடுஞ் செவ்வி இஃதன்று காண்! ஒளித்துறைதல் வாயிலாய் நீ எனக்குத் துன்பமே செய்தொழிந்தாய்!; நனவோ கனவோ என்பதை அறியேன்- அன்புடையோய்! யான் இப்பொழுது விழிப்பு நிலையிலிருக்கின்றேனா! அல்லது துயிலிடத்தே கனவுதான் கண்டு மருள்கின்றேனா! இவற்றுள் எந்நிலையினேன் என்று அறிகின்றிலேன்; மனம் நடுங்குறூஉம் மாற்றம் தாராய்-என் நெஞ்சம் அச்சத்தால் நடுங்குகின்றது ஆதலால் விளையாடாதே கொள்! மறுமொழி தருவாய்!; வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும் வலிய இரவு எப்படியோ கழிந்தொழிந்தது நம்மைக் காணாமையால் அன்னையாகிய மாதவி பெரிதும் மயங்கித்துன்புறுவாள் அல்லளோ? எல்வளை வாராய்-ஓ சுதமதி! இத்துணை கூறியும் நீ என்முன் வந்தாயில்லையே!; விட்டு அகன்றணையோ-அன்புடையோய் ஒரோவழி நீ என்னைத் தமியளாய் ஈண்டே துயில விட்டுப் போய்விட்டனையோ? அவ்வாறு போகவும் துணியாயே! விஞ்சையில் தோன்றிய விளக்கு இழைமடவாள் வஞ்சம் செய்தனள் கொல் அறியேன்-என்னிது! என்னிது! ஒரோவழி நெருநல் இரவு விந்தையுடையவளாய் நம்பால் வந்தெய்திச் சக்கரவாளக் கோட்டத்து வரலாறு கூறிக்கொண்டிருந்த மங்கை ஏதேனும் வஞ்சகச் செயல் செத்தொழிந்தனளோ? அவள் என்னாயினள் என்றும் அறிகின்றிலேனே! ஒரு தனி அஞ்சுவென் திருவேவா என- பெருந்தனிமையாலே எய்தும் துன்பத்திற்கும் அஞ்சுகின்றேன் அருட்செல்வமேயனைய சுதமதியே விரைந்து என்முன் வருதி! என்று பற்பலவும் கூறிக்கொண்டு; என்க.

(விளக்கம்) மணிமேகலா தெய்வத்தாலே முழுதும் வேறாய இடத்திலே விஞ்சையாற் பெயர்த்து வைத்த மணிமேகலைக்கு இம்மைமாறி வேறிடத்திற் பிறந்த உயிரை இப்புலவர் பெருமான் உவமையாக எடுத்துக்கூறும் புலமைத்திறம் நினைந்து நினைந்து மகிழற் பாலதாம்.

ஓரிடத்தே துயின்று அத்துயில் கலையாமலேயே மற்றோரிடத்தே பெயர்த்திடப்பட்ட ஒரு பெண் துயிலுணர்ந்து கொள்ளும் மருட்கையை இவர் எத்துணைத் திறம்படத் தன்மை நவிற்சியாகப் புனைந்துள்ளார், நோக்குமின்!

மணிபல்லவத்தின் கீழ்ப்பகுதியில் கடன் மருங்கிலமைந்தது மணிமேகலையை வைத்த இலஞ்சிக்கரை ஆதலால் கதிரவன் நீரினின்றே அணித்தாகத் தோன்றும் காட்சியை மணிமேகலை நன்கு கண்டனன் என்பது தோன்ற நீல மாக்கடல் நொட்டிடை யன்றியும் காலை ஞாயிறு கதிர் விரிந்து முளைப்ப எனக் கதிரவன் தோற்றத்தை விதந்தெடுத்து விளம்பினர்.

முன்னாளிரவு உவவனத்திலேயே இரவிடை இவள் துயில்கொண்டவளாதலின் இஃது உவவனத்தின்கண்ணமைந்த ஓரிடமே என்று ஊகிக்கின்றாள். அங்ஙனமாயின் நம்மோடிருந்த சுதமதி யாண்டுளள் என்று பின்னர் ஆராய்கின்றனள். மற்று அவளைக் காணாமையின், அவள் நம் பால் கழிபெருங் காதலுடையாள் ஆதலின் நம்மைக் கைவிட்டுப் போகத் துணியாள் ஆயின், அவள்? .......அவள் முன்பே துயிலுணர்ந்தவள் நம்மை எழுப்பவும் மனமின்றி இவள் தானே எழுக! என்றிருந்தவள் நாம் எழுந்து திகைப்பது கண்டு நகைப்பது கருதி இவ்விடத்திலே மறைந்துறைபவள் ஆதல் வேண்டும் என்று மணிமேகலை ஊகிக்கின்றாள்; இஃது இயற்கையோடு எத்துணைப் பொருத்தமாக அமைந்துளது காண் மின்! இங்ஙனம் ஊகித்தவள் உரத்த குரலில் சுதமதீ! சுதமதீ! சுதமதீ! என்று பன்முறை கூவி அழைத்திருப்பாள்; அங்ஙனம் அழைத்தாள் என்பதனைப் புலவர் பெருமான் அடுக்கிக் கூறாது சுதமதி ஒளித்தாய்! என ஒருமுறை விளித்தாள் போலக் கூறினரேனும் இதனைப் பாட்டிடை வைத்த குறிப்பால் யாம் உரையில் அடுக்கிக் கூறினாம்.

சுதமதி ஒளிந்துறைந்தாலும் அண்மையிலேயே ஒளிந்திருப்பாள் என்னும் கருத்தால் சுதமதி ஒளித்தாய் என அண்மை விளியால் விளித்தனள்; விளித்து நீ ஒளித்திருக்கின்றனை என்பது தெரிந்து கொண்டேன் எழுந்து வருதி என்பது இதன் குறிப்பாம். பின்னர்ப் பன்முறை விளித்தும் அவள் வாராமையாலே, இது கனவோ நனவோ என்பதை யறியேன் மனம் நடுங்குறூஉம் மாற்றந்தாராய் என்று தன்னிலை கூறி விரைந்து வெளிவர வேண்டுகின்றனள். பின்னும் சுதமதி அசதியாட ஒளிந்தே இருக்கின்றாள் என்றுட் கொண்டு அங்ஙனம் விளையாட்டயரும் செவ்வியோ இஃது என்று அவட்குப் பேதைமை யூட்டுவாள் வல்லிருள் கழிந்தது நம் வரவு காணாமையாலே மாதவி பெரிதும் மயங்குவளே அதனை நீ நினைந்திலையோ என அவள் விரைந்து வருதற்கு ஏதுவும் கூறி அழைக்கின்றாள். பின்னும் சுதமதி வாராமையால் முன்னாளிரவு தம்மோடு சொல்லாடி யிருந்த விஞ்சையிற் றோன்றிய விளங்கிழை மடவாள்நினைவு அவள் உள்ளத்தே அரும்புகின்றது. அவள் ஏதேனும் வஞ்சம் செய்திருப்பாளோ என்று ஐயுறுகின்றாள்; மருள்கின்றாள். பின்னும் சுதமதியே ஒரு தனி அஞ்சுவன் திருவே வா என்றிரந்து வேண்டுகின்றாள்.இத்துணையும் நிகழ்ந்தபின் சுதமதி ஈண்டில்லை. ஆதலின் அவ் வஞ்சவிஞ்சை மகளால் ஏதோ குறும்பு செய்யப்பட்டுளதோ என்று ஐயுறுகின்றாள்; இஃது உவவனம் அன்று போலும்! அதனை ஆராய்வல் என்னும் எண்ணத்தாலே எழுந்து ஆராயத் தலைப்படுகின்றனள். இப்புலவர் பெருமான் தாமே ஈண்டு அம் மணிமேகலையாய் மாறிவிடுகின்ற அவர்தம் வித்தகப் புலமையை எத்துணைப் புகழ்தாலும் மிகையாகாது. வாழ்க அவர் புகழும் அவர் வழங்கிய தண்டமிழ்க் காப்பியமும்.

மணிமேகலை எழுந்து திரிந்து இடம் ஆராய்தல்

28-35: திரைதவழ்........காணாள்

(இதன் பொருள்) திரை தவழ் பறவையும் விரிசிறைப் பறவையும் எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்கு சிறை முழுவலும்- நீரின் மேலே தவழ்ந்து சென்று இரை தேர்கின்ற கடற்பறவைகளும் விரிந்த சிறகுகளோடு வானத்தில் பறந்து திரிந்து இரை தேர்கின்ற பறவைகளும் ஓரிடத்தினின்றும் மற்றோரிடத்திற்கு நீரினின்றும் எழுந்து பறந்துபோய் வீழுகின்ற சில்லைச்சாதிப் பறவைகளும்,ஓடுங்கிய சிறகுகளுடனே நீரினுள் முழுகித் தமக்கியன்ற இரையைப் பற்றிக்கொண்டு தலைதூக்கும் முழுவற் சாதிப் பறவைகளும் ஆகிய நால் வேறு வகைப்பட்ட பறவைகளும் நால் வேறு படை மறவர்களாகவும்; சேவல் அன்னம் அரசனாக-அவற்றுள் சேவலாகிய அன்னப் பறவையே அரசனாகவும்; பல் நிறப் புள்ளினம் பரந்து ஒருங்கு ஈண்டி-பல்வேறு நிறம் அமைந்த பறவைக்கூட்டம் பரந்து தனித்தனியிடத்தே குழுமி; பாசறை மன்னர் பாடி போல- பகை மன்னரிருவர் போர் ஆற்றுதற் பொருட்டு நால் வேறு படைகளுடனே வந்து பாசறையிலிருப்போர் ஒருவர்க்கொருவர் எதிர் எதிர் ஆகத் தத்தம் படையை எதிர் எதிரே விட்டிருந்தாற் போன்று; வீசு நீர்ப்பரப்பின் எதிர் எதிர் இருக்கும்-அலைஎறிகின்ற நெய்தனிலப் பரப்பிலே (துறையினது) இருபக்கங்களிலும் எதிர் எதிரே இருக்கின்ற கடற்றுறையும்; துறைசூழ் நெடுமணற் குன்றமும் யாங்கணும் திரிவோள்-அத் துறையைச் சூழ்ந்துள்ள நெடிய மணற் குன்றுகளும் ஆகிய எவ்விடத்தும் திரிந்து நோக்கி வருபவள்; பரங்கு இனம் காணாள் பண்டு தன் பக்கத்திலே காணப்படும் பொருள்களுக்கு இனமாகிய எப் பொருளையும் காணப் பெறாளாகி என்க.

(விளக்கம்) இவர் கடற்பறவையை அவை இரைதேருமாற்றாலேயே ஈண்டு நான்கு வகையாகப் பிரித்துக் காட்டுகின்றனர். அவையாவன; நீரின்மேல் தவழ்ந்து தமது தோலடியாலே நீரை உதைத்துச் சென்று எதிர்ப்படுகின்ற இரையை அலகாற் பற்றிக் கொள்வனவும்; விசும்பிலே பறந்த வண்ணமே திரிந்து இரையைக்காணும் பொழுது வீழ்ந்து பற்றிக் கொள்வனவும்,ஓரிடத்தினின்றும் மற்றோரிடத்திற்குப் பறந்துபோய் விழுந்து இரை தேர்ந்து பற்றிக் கொள்வனவும், சிறகொடுக்கி நீரினுள் முழுகி நீரினூடேயே இயங்கி ஆங்ககப்படும் இரையைப்பற்றிப் பின் தலை தூக்குவனவுமாம். இவற்றிற்கு(1. அன்னம், 2. சிரல், 3. கடற்காக்கை, 4. குளுவை முதலியவற்றை எடுத்துக் காட்டுகளாகக் கொள்க. இவற்றுள் அன்னச் சேவல் சிறந்திருத்தலின் அதனை அரசன் என்றார். நால் வேறுபடைகளுக்கு நால்வேறு பறவை இனம் காட்டினர். வீசு நீர்ப்பரப் பென்றது அலைதவழும் நிலப் பகுதியை. துறை கூறினர் ஆங்கு மக்கள் இலரேனும் மரக்கலங்கள் வந்து நங்கூரமிட்டு நிறுத்தப் படுவதும் மக்கள் கலத்தினின்றும் இறங்கித் தங்கியிருத்தலும் நிகழ்தலின் அதற்கான துறையும் அங்கு உண்டு என்பதுணர்த்தற்கு. இதனை,

வங்க மாக்களொடு மகிழ்வுட னேறிக்
கால்விசை கடுகக் கடல்கலக் குறுதலின்
மாலிதை மணிபல் லவத்திடை வீழ்த்துத்
தங்கிய தொருநாள் தானாங் கிழிந்தனன்
இழிந்தோன் ஏறினன் என்றிதை எடுத்து
வழங்குநீர் வங்கம் வல்லிருள் போதலும்
வங்கம் போயபின் வருந்துதுயர் எய்தி
அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின்

எனவும்(14-79-86)

கம்பளச் செட்டி கலம்வந் திறுப்ப

எனவும் இந்நூலில் பிறாண்டும் வருவனவற்றாலறிக. (25:184)

இனி, இதனோடு

கம்புட் கோழியுங் கனைகுர னாரையுஞ்
செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும்
கானக் கோழியு நீர்நிறக் காக்கையும்
முள்ளு மூரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழூஉக் குரல்பரந்த வோதையும்

எனவரும் சிலப்பதிகாரப் பகுதியை (10.114-119) ஒப்பு நோக்குக.

மணிமேகலை தந்தையை நினைந்து அழுதல்

36-43: குரற்றலை.......முன்னர்

(இதன் பொருள்) குரல் தலைக் கூந்தல் குலைந்து பின் வீழகொத்துக் கொத்தாக அடர்ந்துள்ள தன் தலையின்கட் கூந்தல் சரிந்து பின்புறத்தே வீழுமாறு; அரற்றினள் கூஉய் அழுதனள் வாய்விட்டு அரற்றிக் கூவி அழுதவளாய்; ஏங்கி வீழ்துயர் எய்திய விழுமக்கிளவியில் தாழ்துயர் உறுவோள்-ஏங்கி நிலத்தில் வீழ்தற்குக் காரணமான துன்பமுடைய துயரந் தருகின்ற மொழிகளைக் கூறுதலோடே ஆழ்ந்த தனிமைத் துன்பத்தை நுகர்பவள்; தந்தையை உள்ளி-தன் அன்புத் தந்தையாகிய கோவலனை நினைவு கூர்ந்து; எம் இதின் படுத்தும் வெவ்வினை உருப்ப எம்மை இந்நிலையாமைக் காளாக்கிய வெவ்விய ஊழ்வினை வந்துருத்தலாலே; கோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து வைவாள் உழந்த- திரண்ட வளையலணிந்த காதலாளாகிய என் அன்னையுடனே வேற்றுவர் நாட்டிலே சென்று ஆங்குக் கூரியவாளே றுண்ணும் கொடிய துன்பத்தை நுகர்ந்த; மணிப்பூண் அகலத்து  ஐயாவோ என்று அழுவோள் முன்னர்- மணியணிகலன் அணியும் அழகிய மார்பினையுடைய ஐயாவோ என்று கதறி அழுகின்ற அம் மணிமேகலையின் முன்னர் என்க.

(விளக்கம்) குரல் தலைக்கூந்தல்- கொத்துக் கொத்தாகத் தலையிலுள்ள கூந்தல் என்க. துன்பத்தானாதல் இன்பத்தானாதல் நெஞ்சம் நெகிழ்ந்துழிக் கூந்தல் நெகிழ்தல் ஒரு மெய்ப்பாடாம்; இதனை கூழைவிரித்தல் என்பர் ஆசிரியர் தொல்காப்பியனார்(மெய்ப்-14) விழுமக் கிளவி- துன்பத்திற் பிறந்த சொல். துன்ப மிக்கவர் அன்புடையோரை உள்ளுதலியற்கை. மகளிர்க்கு அவ்வழி அழுகை வருதல் இயல்பு.

தந்தைக்கு வந்த வெவ்வினையே தம்மை இந் நெறியிற் செலுத்தியது என்னாமல் எம்மை இங்ஙனம் துன்புறும் நெறியிற் செலுத்தவந்த யாஞ் செய் வெவ்வினையே நும்மை வைவாள் உழப்பித்தது என்பாள் எம்மிதிற் படுத்தும் வெவ்வினை என்கின்றாள். மாதர்-காதல். மாதர் என்றாள் கண்ணகியின் கற்புச் சிறப்பு மேம்பட்டுத் தோன்றுதற்கு. ஐயா என்றது அத்தனே என்றவாறு.

மணிமேகலைக்குப் புத்த பீடிகை புலப்படுதல்

(44 ஆம் முதலாக, 42 ஆம் அடி முடியப் புத்த பீடிகையின் வண்ணனையாய் ஒரு தொடர்)

44-53: விரிந்திலங்.......ஆசனம்

(இதன் பொருள்) விரிந்து இலங்கு அவிர் ஒளிசிறந்து கதிர் பரப்பி- நாற்றிசையினும் பரவித்திகழும் பேரொளி இடையறாது மிகுதலாலே எப்பொழுதும் சுடரைப் பரப்பிக்கொண்டு, உரை பெறும் மும்முழம் நிலமிசை ஓங்கி- சிற்பநூலிற் கூறப்படுகின்ற முறைப்படி மூன்று முழம் நிலத்தினின்று முயர்ந்தம்; திசை தொறும் ஒன்பான் முழம் நிலம் அகன்று- நான்குதிசைகளினும் ஒன்பதுமுழம் நிலப்பரப்பின்மேல் அகன்றும்; மீமிசை-அப்பீடத்தின் உச்சியிலே நடுவிடத்தே, விதிமாண் ஆடியின் வட்டம் குயின்று- நூல்விதியினாலே மாண்புடைய பளிங்கினாலே வட்ட வடிவமான பீடமிட்டு; பதும் சதுரம் விளங்கி-அதன் நாப்பண் புத்தருடைய பாதபங்கயம் அழுந்திக் கிடந்த சதுரவடிவிற்றாகிய மேடையால் விளக்கமெய்தி; தேவர்கோமான்- அமரர்க்கு அரசனாகிய இந்திரன் இதுதான்; அறவோற்கு அமைந்த ஆசனம் என்று-அறத்தின் திருவுருவமாகிய புத்த பெருமான் எழுந்தருளுதற்குப் பொருந்திய இருக்கையாம் என்று சொல்லி, இட்ட மாமணிப் பீடிகை-இடப்பட்ட சிறந்த மணிகள் இழைத்த பீடிகையாதலாலே; மரம் நறுமலர் அல்லது பிற சொரியாது-அயலில் நிற்கின்ற மரங்கள் தாமும் தன்மேலே நறிய மணங்கமழும் புதிய மலர்களைக் சொரிவதல்லது பிறவற்றைச் சொரியப்படாததும்; பறவையும் உதிர் சிறை பாங்கு சென்று அதிராது பறவைகள் தாமம் உதிரும் இயற்கையையுடைய சிறகுகள் தமக்கிருத்தலாலே தன் பக்கலிலே தம் சிறகுகளை அடித்துப் பறத்தலில்லாததும்; பிறப்பு விளக்கு அவிர் ஒளி அறத்தகை ஆசனம்-தன்னைக் கண்டவர்க்கெல்லாம் அவரவர் முற்பிறப்பு விளங்கித் தோன்றுவதற்குக் காரணமாய் விளங்குகின்ற தெய்வத்தன்மையுடைய ஒளியையுடையதும் ஆகிய அறப்பெருந் தகையாளனாகிய புத்தருடைய இருக்கையாம்; என்க.

(விளக்கம்) அப்பீடிகை தன்னைக் கண்ட முற்பிறப்புக்களை யுணர்த்துவது. அவ்வாறே பறவைகளும் மரமும் பறவையும் அதன் தெய்வத்தன்மையை உணர்தலின் மரம் மலரன்றிப் பிறவற்றைச் சொரியாது. பறவை அதன் சிறகதிர்ந்து பறவாது என்றவாறு.

பரப்பி ஓங்கி அகன்று குயின்று விளங்கி அமைந்த ஆசனம் அது தானும் சொரியப் படாததும் அதிர்க்கப்படாததும் தேவர்கோன் இட்டதும் ஆகிய பீடிகை, அதுதானும் பிறப்பு விளங்கும் ஒளியையுடைய அறத்தகை ஆசனமுமாம் என இயைத்திடுக. அறத்தகை-புத்தர்.

இதுவுமது

54-63: கீழ்நில......ஆங்கென்

(இதன் பொருள்) கீழ்நில மருங்கின் நாகநாடு ஆளும் இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி ஈது எமது என்றே எடுக்கல் ஆற்றார்- கிழக்குத் திசையிலுள்ள நாகநாட்டினை ஆளுகின்ற இருவேறு மன்னர்கள் அம் மணிபல்லவத்திலே ஒரே செவ்வியில் வந்து, இத் தீவு எம்முடையதாகலின் இம் மாமணிப்பீடிகையும் எமக்கே உரியதாகும் என்று இருவரும் தனித் தனியே உரிமை கொண்டாடி அதனைத் தத்தம் நாட்டிற்குக் கொண்டுபோக எண்ணித் தனித்தனியே நிலத்தினின்றும் பெயர்த்தெடுத்தற்குப் பெரிதும் முயன்றும் அது செய்யவியலாதாராகிய பின்னரும்; தம் பெரும் பற்று நீங்கலும் நீங்கார்-அதன்பால் பசைஇய தத்தம் அவாவினை விலக்குதலும் செய்யவியலாதாராய்த் தம்முடையதே என்னும் உரிமையை நிலைநாட்டுதற் பொருட்டு ஒருவரோடொருவர் இகலி; செங்கண் சிவந்து நெஞ்சு புகை உயிர்த்து தம் பெருஞ் சேனையோடு வெஞ்சமம் புரிநாள்-இயற்கையாகவே சிவந்துள்ள தங்கண்கள் சினத்தாலே மேலும் சிவக்க நெஞ்சம் புகையை உயிர்ப்பத் தத்தமக்குரிய பெரிய படைகளைத் திரட்டிக் கொண்டு வெவ்விய போர்த்தொழிலைச் செய்கின்றபொழுது; பெருந்தவ முனிவன்- பெரிய தவத்தினையுடைய வினையினீங்கி விளங்கிய அறிவினையுடைய முனைவனாகிய புத்தபெருமான் எழுந்தருளி; ஈது எமது இருஞ்செரு ஒழிமின் என்றே- இப் பீடிகை எமக்கே உரிமையுடையதாகும் ஆதலால் நீயிர் ஆற்றும் போரினை ஒழிமின் என்று இருவரையும் அமைதியுறச் செய்த பின்னர்; இருந்து அறமுரைக்கும்-அதன்மேலமர்ந்து அவ்விருவருக்கும் தமது அறத்தைச் செவியறிவுறுத்தியருளிய; பொருவு அறு சிறப்பின் புரையோர் ஏத்தும் தரும் பீடிகை தோன்றியது-ஒப்பற்ற சிறப்புண்மையாலே மேலோர் வாழ்த்தி வணங்குகின்ற அத் தரும பீடிகை மணிமேகலை கண்ணிற்குப் புலப்படுவதாயிற்று; என்பதாம்.

(விளக்கம்) நாவலந் தீவிற்குக் கிழக்கே கடலினூடமைந்த நாக நாட்டை ஆட்சி செய்யும் இருவேறு மன்னர் என்க. தீவு; தமக்கே உரியதாகலின் அதன் கண்ணமைந்த மாமணிப் பீடிகையும் எமக்கே உரியதாம் என்று உரிமை கொண்டாடி எடுக்க முயன்று இயலாமையால் தம்முடைய தென்னும் உரிமையை நிலைநாட்ட இருவரும் படை கூட்டிப் பெரும்போர் செய்தனர் என்பது கருத்து.

அவர் போரை ஒழித்து அவ்வரசர்க்கு அதன் மேலிருந்து புத்தர் தாமே அறமுரைத்தலாலே அப் பீடிகை பொருவறு சிறப்புடையதாயிற் றென்க.

மற்று அவ்வரசர் அதனைக் கண்டபோது அவர்க்கு அவர்தம் பழம் பிறப்புணர்ச்சி வாராமைக்குக் காரணம் அவர் உள்ளம் அன்பிற்படாது அவாவின்பாற் பட்டிருந்தமை என்க. அன்றி, புத்தன் எழுந்தருளித்தன்மேலமர்ந்து அறமுரைத்த பின்னரே அப் பீடிகைக்கும் அவ்வாற்றல் வந்துற்றதென்க கோடலுமாம்.

பற்று- பொருள்களின்பால் பசைஇய அறிவு. இருஞ்செரு- பெரும்போர். பெருந்தவ முனிவன்: புத்தன். உலகிலுள்ள பிற புத்த பீடிகைகளுக்கு முற்பிறப்புணர்த்தும் ஆற்றலின்மையின் பொருவது சிறப்பின் தரும்பீடிகை என அதன் தனித்தன்மையை விதந்தோதினர்.

இதன் இக் காதையை- ஈங்கு இவள் இன்னணமாக, மணிபல்லவத் திடை நறுமலர்ப் பள்ளித் தூங்கு துயில் எழூஉம் அஞ்சில் ஓதி, காணாள் கண்டு, முளைப்பச் சுதமதி துயரஞ் செய்தனை அறியேன் மாற்றம் தாராய் மாதவி மயங்கும் அகன்றனையோ மடவாள் செய்தனள் கொல்லோ அஞ்சுவன் வா எனத் திரிவோள் காணாள் வீழ ஏங்கி உறுவோள் உள்ளி அழுவோள் முன்னர்ப் பீடிகையாகிய ஆசனம், முனிவன் அறமுரைக்கும் அத் தரும் பீடிகை தோன்றியது என இயைத்திடுக.

மணிபல்லவத்துத் துயருற்ற காதை முற்றிற்று.
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 09:03:22 AM
9. பீடிகைகண்டு பிறப்புணர்ந்த காதை

ஒன்பதாவது மணிமேகலை மணிபல்லவத்திடைப் பீடிகை கண்டு பிறப்புணர்ந்த பாட்டு

அஃதாவது மணிமேகலை மணிபல்லவத்தில் நறுமலர்ப் பள்ளியினின்றும் துயிலுணர்ந்தவள் அவ்விடத்துப் புதுமையால் பெரிதும் மருண்டு ஞாயிறு தோன்றிய பின்னர் எழுந்து யாங்கணும் திரிபவள் தன்முன்னே தோன்றிய புத்தபீடிகையைக் கண்ணுற்றபொழுது அப் பீடிகையின் தெய்வத்தன்மை காரணமாகத் தனது பழம் பிறப்பு வரலாற்றைக் உணர்ந்துகொண்ட செய்தியைக் கூறுஞ்செய்யுள் என்றவாறு.

இதன்கண் ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள்ள காரணத்தாலே மணிமேகலை புத்தபீடிகையைக் கண்டவுடனேயே இறையன்பாலே அவட்கெய்திய மெய்ப்பாடுகளும், அதனை அன்புடன் வலம் வந்து நிலத்தில் விழுந்து வணங்கி எழுந்தவுடனே தனது முற்பிறப்பின் செய்திகளை எல்லாம் உணர்ந்துகோடலும், முற்பிறப்பிலே பிரமதருமன் என்னும் முனிவனைத் தான் கண்டவாறே தன் அகக்கண் முன்னர்க் காண்டலும், முற்பிறப்பிலே காயங்கரை என்னும் யாற்றின் கரையிலிருந்து அம்முனிவர் பெருமான் தனக் குரைத்தவை எல்லாம் அவ்வாறே நிகழ்கின்றன என்று விம்மித மெய்துதலும், தான் அசோதரம் ஆளும் இரவிவன்மன் என்னும் அரசனுக்கும் அமுதபதி என்னும் அரசிக்கும் மகளாய் இலக்குமி என்னும் அரசிளங்குமரியா யிருந்தமையும்; தான் , சித்திபுரம் என்னும் நகரத்து அரசன் தேவியாகிய நீலபதி என்னும் அரசி வயிற்றிற் றோன்றிய அரசிளங் குமரனாகிய இராகுலனுக்கு வாழ்க்கைத்துணைவியாகியதும் பிறவும் ஆகிய செய்திகள் பலவும் மருட்கையணி தோன்ற மிகவும் அழகாகப் புனைந்துரைக்கப்படுகின்றன.

ஆங்கு அது கண்ட ஆய் இழை அறியாள்
காந்தள் அம் செங் கை தலை மேல் குவிந்தன
தலைமேல் குவிந்த கையள் செங் கண்
முலை மேல் கலுழ்ந்து முத்தத் திரள் உகுத்து அதின்
இடமுறை மும் முறை வலமுறை வாரா
கொடி மின் முகிலொடு நிலம் சேர்ந்தென்ன
இறு நுசுப்பு அலச வெறு நிலம் சேர்ந்து ஆங்கு
எழுவோள் பிறப்பு வழு இன்று உணர்ந்து
தொழு தகை மாதவ! துணி பொருள் உணர்ந்தோய்!
காயங்கரையில் நீ உரைத்ததை எல்லாம்  09-010

வாயே ஆகுதல் மயக்கு அற உணர்ந்தேன்
காந்தாரம் என்னும் கழி பெரு நாட்டுப்
பூருவ தேயம் பொறை கெட வாழும்
அத்திபதி எனும் அரசு ஆள் வேந்தன்
மைத்துனன் ஆகிய பிரமதருமன்!
ஆங்கு அவன் தன்பால் அணைந்து அறன் உரைப்போய்
தீம் கனி நாவல் ஓங்கும் இத் தீவிடை
இன்று ஏழ் நாளில் இரு நில மாக்கள்
நின்று நடுக்கு எய்த நீள் நில வேந்தே!
பூமி நடுக்குறூஉம் போழ்தத்து இந் நகர்  09-020

நாக நல் நாட்டு நானூறு யோசனை
வியன் பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும்
இதன்பால் ஒழிக என இரு நில வேந்தனும்
மா பெரும் பேர் ஊர் மக்கட்கு எல்லாம்
ஆவும் மாவும் கொண்டு கழிக என்றே
பறையின் சாற்றி நிறை அருந் தானையோடு
இடவயம் என்னும் இரும் பதி நீங்கி
வட வயின் அவந்தி மா நகர்ச் செல்வோன்
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை
சேய் உயர் பூம்பொழில் பாடி யெய்து இருப்ப  09-030

எம் கோன் நீ ஆங்கு உரைத்த அந் நாளிடைத்
தங்காது அந் நகர் வீழ்ந்து கேடு எய்தலும்
மருள் அறு புலவ! நின் மலர் அடி அதனை
அரசொடு மக்கள் எல்லாம் ஈண்டிச்
சூழ்ந்தனர் வணங்கித் தாழ்ந்து பல ஏத்திய
அருளறம் பூண்ட ஒரு பேர் இன்பத்து
உலகு துயர் கெடுப்ப அருளிய அந் நாள்
அரவக் கடல் ஒலி அசோதரம் ஆளும்
இரவிவன்மன் ஒரு பெருந்தேவி
அலத்தகச் சீறடி அமுதபதி வயிற்று  09-040

இலக்குமி என்னும் பெயர் பெற்றுப் பிறந்தேன்
அத்திபதி எனும் அரசன் பெருந்தேவி
சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள்
நீலபதி எனும் நேர் இழை வயிற்றில்
காலை ஞாயிற்றுக் கதிர் போல் தோன்றிய
இராகுலன் தனக்குப் புக்கேன் அவனொடு
பராவரும் மரபின் நின் பாதம் பணிதலும்
எட்டு இரு நாளில் இவ் இராகுலன் தன்னைத்
திட்டிவிடம் உணும் செல் உயிர் போனால்
தீ அழல் அவனொடு சேயிழை மூழ்குவை  09-050

ஏது நிகழ்ச்சி ஈங்கு இன்று ஆதலின்
கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய
தவாக் களி மூதூர்ச் சென்று பிறப்பு எய்துதி
அணி இழை! நினக்கு ஓர் அருந் துயர் வரு நாள்
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி
அன்று அப் பதியில் ஆர் இருள் எடுத்து
தென் திசை மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும்
வேக வெந் திறல் நாக நாட்டு அரசர்
சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து ஆங்கு
அறச் செவி திறந்து மறச் செவி அடைத்து  09-060

பிறவிப் பிணி மருத்துவன் இருந்து அறம் உரைக்கும்
திருந்து ஒளி ஆசனம் சென்று கைதொழுதி
அன்றைப் பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு
இன்று யான் உரைத்த உரை தெளிவாய் என,
சா துயர் கேட்டுத் தளர்ந்து உகு மனத்தேன்
காதலன் பிறப்புக் காட்டாயோ? என
ஆங்கு உனைக் கொணர்ந்த அரும் பெருந் தெய்வம்
பாங்கில் தோன்றி பைந்தொடி! கணவனை
ஈங்கு இவன் என்னும் என்று எடுத்து ஓதினை
ஆங்கு அத் தெய்வதம் வாராதோ? என
ஏங்கினள் அழூஉம் இளங்கொடி தான் என்  09-071

மணிமேகலை புத்தபீடிகையை வலம்வந்து வணங்கலும் பழம் பிறப்புணர்தலும்

1-8: ஆங்கது.........உணர்ந்து

(இதன் பொருள்) ஆங்கு அதுகண்ட ஆயிழை அறியாள்-அம்மணிபல்லவத்தின்கண் புத்த பெருமானுக்கியன்ற அத் தருமபீடிகையைக் கண்ணாற் கண்டதுணையானே மணிமேகலை நல்லாள் தான் எய்திய துயரங்களைச் சிறிதும் அறியாள் என்பதென்னை? அவள் தன்னை முழுதும் அறியாததொரு நிலையினை எய்தினள்; காந்தள் அம்செங்கை தலைமேல் குவிந்தன-அவளுடைய செங்காந்தள்மலர் போன்ற சிவந்த கைகள் தாமே எழுந்து அவள் தலையின்மேல் கூம்பிக் கும்பிட்டன; தலைமேல் குவிந்த கையள் செங்கண் கலுழ்ந்து முலைமேல் முத்தத்திரள் உகுந்து- தாமே தலைமேலேறிக் குவிந்து கும்பிட்ட சிவந்த கைகளையுடைய மணிமேகலை அன்பு மேலீட்டாலே நெஞ்சுருகி அழுது தன் சிவந்த கண்களினின்றும் கண்ணீர்த்துளிகளை முத்துக்கள் போன்று மிகுதியாக முலைமேற் சொரிந்து; அதினிடம் முறை மும்முறை வலமுறை வாரா-அப் பீடிகையின் மருங்கே சென்று நூல்சொன்ன முறைப் படியே மூன்று முறை அதனை வலமுறையாகச் சுற்றி வந்து; கொடிமின் முகிலொடு நிலம் சேர்ந்தென்ன- கொடியுருவமுடைய மின்னலொன்று முகிலோடே நிலத்தில் வந்து பொருந்தினாற் போன்று; இறும் நுசுப்பு அலச ஆங்கு-ஒடிவது போன்று நுணுகிய தன்னிடை வருந்தும்படி அப் பீடிகையின் முன்னர்; வெறு நிலம் சேர்ந்து எழுவோள்- வெற்றிடத்திலே விழுந்து வணங்கி அந்நிலத்தினின்றும் எழுபவள்; பிறப்பு வழுவு இன்று உணர்ந்து- தனது முற்பிறப்பின் வரலாற்றைச் சிறிதும் குற்ற மில்லாமல் நன்குணர்தலாலே; என்க.

(விளக்கம்) அது-அத் தரும பீடிகை. ஆயிழை- மணிமேகலை. அறியாள் என்றது தன்னைக் கவ்விய துயரத்தோடு தன்னையும் அறியாமல் மெய்மறந்தாள் என்பதுபட நின்றது. புத்த பீடிகையைக் கண்டவுடன் மணிமேகலை தன்னை மறத்தற்குக் காரணம் பழவினை காரணமாக அவள் நெஞ்சத்தின்கண் நிகழ்ந்த இறையன்பு மேலிட்டமையே யாகும். ஆகவே இஃது அன்பின் மெய்ப்பாடேயாகும். பண்டும் பண்டும் பல பிறப்புக்களிலே புத்தன்பால் அடிப்பட்டுவந்த அன்புதான் வெளிப்படுதற்கியன்ற ஏது நிகழ்ச்சி எதிர்ந்தமையாலே ஈண்டு மணிமேகலைக்கு நிகழும் மெய்ப்பாடுகள் எல்லாம் அவ்விறையன்பின் மிகுதியால் பிறப்பனவே என்றுணர்க.

இது புதுமை பற்றிவந்த மருட்கை என்னும் மெய்ப்பாடு என்பாரு முளர். அது பொருந்தாது. என்னை? ஈண்டு மணிமேகலையின் பால்நிகழும் மெய்மறத்தலும் கைகுவித்தலும் கண்ணீரரும்பலும் பிறவும் இறையன்பு மிக்குழி யுண்டாகும் மெய்ப்பாடுகளோடு ஒத்திருத்தலும் மருட்கை யுற்றோர்க்கு இம் மெய்ப்பாடுகள் சிறிதும் ஒவ்வாதிருத்தலும் கீழே தரும் எடுத்துக் காட்டுக்களாலே இனிதினுணர்க அவற்றுள் இறையன்பின் மேலீட்டால் நிகழும் மெய்ப்பாடுகளை

கையுந் தலைமிசை புனையஞ் சலியன
கண்ணும் பொழிமழை யொழியாதே
பெய்யுந் தகையன கரணங் களுமுடன்
உருகும் பரிவின பேறெய்தும்
மெய்யுந் தரைமிசை விழுமுன் பெழுதரு
மின்றாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர்கும் பிடுமவர்
ஆர்வம் பெருகுத லளவின்றால்
(திருத்தொண்டர்-1438)

எனவரும் அருமைச் செய்யுளை ஈண்டு மணிமேகலை நிலைகூறும் பகுதியோடு ஒப்பு நோக்கி யுணர்க.

இனி, மருட்கை யுற்றோர் மெய்ப்பாடுகள் வருமாறு: அற்புத அவிநய மறிவரக் கிளப்பிற் சொற்சோர்வுடையது சோர்ந்தகையது மெய்ம்மயிர் குளிர்ப்பது வியத்தக வுடைய தெய்திய திமைத்தலும் விழித்தலும் இகவாதென் றையமில் புலவர் அறைந்தன ரென்ப என வரும் அடியார்க்கு நல்லார் மேற்கோளான் (சிலப். 3.12-25) உணர்க. அல்லதூஉம், புதுமை பற்றி வந்த மருட்கையணி முன்னைக் காதையிலே 15 ஆம் அடி முதலாக 43 ஆம் அடிகாறும் கூறிப் போந்தமையும் அறிக.

அதனிடம் முறை எனக் கண்ணழித்து முறை நூன்முறைப்படி என்க. மணிமேகலையின் திருமேனிக்கு மின்னற்கொடியும் அவள் கூந்தலுக்கு முகிலும் உவமை.

இறுநுசுப்பு: வினைத்தொகை. இறும் என்றையுறுதற்குக் காரணமான நுசுப்பு என்க. வெறுநிலம் என்றது வெற்றிடம் என்றவாறு. அலச-வருந்த. வழுவின்றுணர்ந்து என்புழி இன்றி என்னும் குற்றியலிகரம் குற்றியலுகரமாய்த் திரிந்தது.

மணிமேகலை பிரமதருமன் என்னும் முனிவனை முன்னிலைப்படுத்துப் பழம்பிறப்பி னிகழ்ச்சிகளை உரைத்தல்

9-16: தொழுதகை........உரைப்போய்

(இதன் பொருள்) தொழு தகை மாதவ துணிபொருள் உணர்ந்தோய்- அமரரும் முனிவரும் தொழுதற்கியன்ற தகுதியையுடைய பெரிய தவத்தையுடையோய்! தெளிதற்குரிய மெய்ப்பொருளை உணர்ந்த பெரியோய்!; காயங் கரையின் நீ உரைத்ததை எல்லாம் வாயே ஆகுதல் மயக்கு அற உணர்ந்தேன்- காயங் கரை என்னும் பேரியாற்றின் கரையின்மேல் பூம்பொழிலின்கண்ணிருந்தருளி அடிச்சிக்குத திருவாய் மலர்ந்தருளிய செய்தி எல்லாம் உண்மையே ஆதலே அடிச்சி ஐயமும் திரிபுமாகிய மயக்கஞ் சிறிதும் இல்லாமல் உணர்ந்துள்ளேன்; காந்தாரம் என்னும் கழிபெரு நாட்டு பூருவதேயம் பொறைகெட வாழும் காந்தாரம் என்னும் பெயரையுடைய மிகப் பெரிய நாட்டின்கண்ணதாகிய பூருவதேயம் என்னும் நாட்டின்கண் நிலமகட்குப் பொறையாகிய தீவினையாளர் மிகாவண்ணம் செங்கோலோச்சி வாழ்கின்ற; அத்திபதி எனும் அரசு ஆள் வேந்தன் மைத்துனன் ஆகிய பிரமதரும-அத்திபதி என்னும் பெயரோடு அரசாட்சி செய்கின்ற மன்னனுக்கு மைத்துனனாகிய பிரமதருமனென்னும் சிறப்புப் பெயர் பெற்ற பெருமானே! ஆங்கு அவன்றன்பால் அணைந்து அறன் உரைப்போய்-அப் பூருவதேயத்தே அம் மன்னன்பாற் சென்று அறஞ்செவியறிவுறுத்துகின்ற நீதானும்; என்க.

(விளக்கம்) புத்தபீடிகையை வணங்கி எழும்பொழுதே பழம் பிறப்புணர்ச்சியோடே எழுந்த மணிமேகலை முற்பிறப்பிலே தான் காயங்கரை என்னும் யாற்றங்கரையிற் கண்டளவளாவிய பிரமதத்தமுனிவனைத் தனது அகக்கண் முன்னர்க் கண்டு அக்காலத்தே அவன் கூறியவையனைத்தும் உண்மையாகவே நிகழ்ந்து வருதலைக் கண்டு அம் முனிவனைப் பாராட்டுபவள் அவனை மாதவ எனவும் உணர்ந்தோய் எனவும் முன்னிலைப்படுத்திப் பாராட்டுகின்றபடியாம். காயங்கரை-ஓரியாறு உரைத்ததை என்புழி ஐகாரம் சாரியை. வாய்-உண்மை. காந்தாரம் என்னும் கழிபெரு நாட்டின் கீழ்த்திசை நாட்டை ஆளும் அரசன் எனினுமாம். பூருவம்- கீழ்த்திசை. பிரமதருமன் என்னும் முனிவன் அத்திபதி என்னும் அரசனுடைய மைத்துனனாயிருந்து துறவு பூண்டவன் என்பது இதனாற் பெற்றாம். பிரமதரும என்றது விளி. ஆங்கு-அப் பூருவதேயத்தில். அவன்: அத்திபதி என்னும் அரசன். உரைப்போய்: விளி.

இதுவுமது

17-28: தீங்கனி...........செல்வோன்

(இதன் பொருள்) நீள் நிலவேந்தே தீங்கனி நாவல் ஓங்கும் இத்தீவு இடை இன்று ஏழ் நாளில்- நெடிய நிலத்தை ஆளுகின்ற அத்திபதியரசே! ஈதொன்று கேட்பாயாக! இனிய கனிதரும் நாவல் மரம் நிலை பெற்று ஓங்கி நிற்கும் இந்நாவலந்தீவினிடத்தே இற்றைக்கு ஏழா நாளிலே; இரு நில மாக்கள் நின்று நடுக்கு எய்த- பெரிய நிலத்திலே வாழுகின்ற மாந்தரெல்லாம் செயலற்று நின்று அச்சத்தால் நடுக்கமுறும்படி; பூமி நடுக்குறூஉம் போழ்தத்து-நிலநடுக்கம் உண்டாகும் அப் பொழுது; இந்நகர் நாக நல் நாட்டு நால் நூறு யோசனை வியன் பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும்- நினது தலைநகரமாகிய இந்த நகரமும் கிழக்குத் திசையிலமைந்த நாகருடைய நல்ல நாட்டின்கண் நானூறு யோசனை நிலப்பரப்பும் அகன்ற பாதலத்திலே அழுந்தி அழிந்தொழியும் காண்! இதன் பால் ஒழிக என- ஆதலால் இங்கு நின்றும் புறம் போவாயாக! என்று அறிவுறுத்தியருளுதலாலே; இரு நில வேந்தனும்-அது கேட்ட பெரிய நிலத்தை ஆள்கின்ற அத்திபதி யரசன்றானும் நின் பணி தலைமேற்கொண்டு; மாபெரும் பேரூர் மக்கட்கு எல்லாம்- மிகமிகப் பெரியதாகிய தனது நகரத்தே வாழுகின்ற தன் குடிமக்கட் கெல்லாம்; ஆவும் மாவும் கொண்டு கழிக என்றே பறையில் சாற்றி-அச் செய்தியை அறிவிப்பவன் நுங்கள் ஆக்களையும் ஏனைய விலங்கினங்களையும் கைக்கொண்டு அப்பாற் சென்றுய்யுங்கோள் என்று பறையறைவிக்குமாற்றால் அறிவித்து; நிறை அருந் தானையோடு- தன்பாலமைந்த நிறைந்த வெலற்கரிய நால்வேறு வகைப்படைகளோடே; இடவயம் என்னும் இரும்பதி நீங்கி வடவயின் அவந்தி மாநகர்ச் செல்வோன்- இடவயம் என்னும் தனது பெரிய தலைநகரத்தினின்றும் புறப்பட்டு வடதிசையிலுள்ள அவந்தி என்னும் பெரிய நகரம் புகச் செல்லுபவன்; என்க.

(விளக்கம்) தீங்கனி நாவலோங்குமித் தீவிடை என்றது நாவலந்தீவத்தை. இதன் பெயர்க் காரணம் தெரித்தோதிய படியாம். இந் நகரும்-என்றது இடவய நகரத்தை. இந் நாகநன்னாட்டு நானூறி யோசனையும் எனல் வேண்டிய எண்ணும்மை தொக்கன. நாக நன்னாடு நாவலந்தீவின் கீழ்த்திசையிற் கடலின்கண்ணமைந்ததொரு பெரிய நாடு. இதனை முன்னைக் காதையினும்(54) கீழ் நில மருங்கின் நரகநாடு என்றுகுறிப்பிட்டமை யுணர்க.

பூமி நடுக்குறூஉம் போழ்தத்து என்றாரேனும் பூமி நடுக்குறும் என்னும் அப்போழ்தத்து என்றும் அறுத்தோதுக. விலங்குகளில் ஆக்கள் தம்முயிர் கொடுத்தும் காப்பாற்றப்படுஞ் சிறப்புடைமை பற்றி அதனைத் தனித்து வாங்கி ஏனையவற்றை மா என்னும் பொதுப் பெயரோ லோதியவாறு ஆவிற்கு அச்சிறப்புண்மையை

ஆவும் ஆணியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும்... ...
எம்மம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்எனா
அறத்தாறு நுவலும் பூட்கை

எனவரும் நெட்டிமையார் கூற்றானும்

பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி எனுமிவரைக் கைவிட்டு

எனவரும் கண்ணகியார் கூற்றானும் (சிலப்-21:53-4) இனிதினுணர்க

இதுவுமது

29-37: காயங்கரை.....அந்நாள்

(இதன் பொருள்) காயங்கரை யெனும் பேரியாற்று அடைகரை சேய் உயர் பூம் பொழில் பாடி செய்திருப்ப-காயங்கரை என்னும் பெரிய யாற்றினது நீரடைகரையிடத்தே மிகவும் உயர்ந்து வளர்ந்துள்ளதொரு பொழிலின்கண் அவ்வரசன் கட்டூரமைத்துப் படைகளோடு தங்கியிருந்தானாக; எங்கோன் நீ ஆங்கு உரைத்த அந்நாளிடை அந்நகர் தங்காது வீழ்ந்து கேடு எய்துதலும்- எம்பெருமானே நீ இடவயநகரத்தே கூறியவாறே அற்றைக்கு ஏழாநாளிலேயே அவ்விடவய நகரம் சிறிதும் எஞ்சாது பாதலத்திலே நில நடுக்கத்தாலே வீழ்ந்தழிந் தொழிதலும் மருள் அறு புலவ- பேதைமை அற்ற மெய்க்காட்சியாளனே; அரசொடு மக்கள் எல்லாம் நின் மலர் அடியதனை ஈண்டி சூழ்ந்தனர் வணங்கித் தாழ்ந்து பல ஏத்திய-அந் நிகழ்ச்சி வாய்மையே ஆதல் அறிந்த அத்திபதி யரசனோடு ஏனைய மக்களும் நின்னுடைய செந்தாமரை மலர் போன்ற திருவடியிற் புகல் புகுந்து நின்னைச் சூழ்ந்துகொண்டு வணங்கித் திருவடியிலே வீழ்ந்து நின் புகழ் பலவும் கூறி ஏத்தியதும்; அருள் அறம் பூண்ட ஒரு பேரின்பத்து-ஆதிபகவன் திருவாய் மலர்ந்தருளிய அனைத்துயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுதலாகிய அருள் அறத்தை மேற்கொள்ளுமாற்றால் வந்துறும் ஒப்பற்ற பேரின்பத்தை எய்துவித்து; உலகு துயர் கெடுப்ப அருளிய அந்நாள்- நின்னைச் சரண்புகுந்த அம் மக்களே யன்றி இப் பேருலகத்து வாழும் மாந்தரனைவருடைய துயரத்தையும் போக்கி உய்யக் கொள்வான் திருவுளங் கொண்டு அவ்வருளறத்தை எல்லா மக்கட்கும் செவியறிவுறுத்தியதும் ஆகிய அந்தக் காலத்திலே; என்க.

(விளக்கம்) (28) செல்வோன் பாடி செய்திருப்ப என்க. பாடிகட்டூர்; படைவீடு. எங்கோன்: முன்னிலைப் புறமொழி. ஆங்கு-அவ்விடவய நகரத்தில். அந்நாள்-அற்றைக்கு ஏழாநாள். தங்காது- சிறிதும்எஞ்சாமல், சூழ்ந்தனர்: முற்றெச்சம். பூண்டமையால் வந்துறும் ஒரு பேரின்பம் என்க. அஃதாவது நிருவாண நிலை. அதனை எய்தினாலன்றித் துயரம் போகாமையின் அதனை ஏதுவாக்கினார். தாழ்ந்து பல ஏத்தியதும் அருளியதும் ஆகிய அந்நாள் என இயைக்க. அந்நாள் என்றது அந்தக்காலத்திலே என்பதுபட நின்றது.

மணிமேகலை தன் முற்பிறப்பின் வரலாறு கூறுதல்

38-47: அரவ.....பணிதலும்

(இதன் பொருள்) அரவக் கடல் ஒலி அசோதரம் ஆளும் இரவி வன்மன் ஒரு பெருந்தேவி- ஆரவார முடைய கடல் இடையறா தொலிக்குமாறு இடையறாத பேராரவாரமுடைய அசோதரம் என்னும் நகரத்திருந்து அரசாட்சி செய்கின்ற இரவிவன்மன் என்னும் அரசனுடைய முதன் மனைவியாகிய கோப்பெருந்தேவி அலத்தகச் சீறடி அமுதபதி வயிற்று இலக்குமி என்னும் பெயர் பெற்றுப் பிறந்தேன்- செம்பஞ்சிக் குழம்பூட்டிய சிறிய அடிகளையுடைய அமுதபதி என்பவளுடைய வயிற்றிலே அடிச்சி இலக்குமி என்னும் பெயருடையேனாய்ப் பிறந்திருந்தேன்; அத்திபதி எனும் அரசன் பெருந்தேவி அடிச்சிக்குப் பெதும்பைப் பருவம் வந்துற்றபோது யான், அத்திபதி என்னும் அரசனுடைய கோப்பெருந் தேவியும்; சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள்- சித்திபுரத்தில் ஆட்சி செய்யும் சீதரன் என்னும் அரசனுடைய அழகிய மகளும் ஆகிய; நீலபதி என்னும் நேர் இழைவயிற்றின் காலை கதிர் ஞாயிறு போல் தோன்றிய- நீலபதியென்னும் நேரிய அணிகலன் அணிந்த அரசியின் திருவயிற்றிலே காலையில் தோன்றும் கதிர்களையுடைய ஞாயிறு போல் தோன்றிய; இராகுலன் தனக்குப் புக்கேன- இராகுலன் என்னும் கோக்குமரனுக்கு வாழ்க்கைத் துணையாகப் புகுந்தேன்; அவனோடும் பராவரும் மரபின் நின் பாதம் பணிதலும்; ஒருநாள் என் கணவனாகிய இராகுலனோடு வந்து யான் நின்னைக் கண்டு புகழ்தற்கரிய முறைமையினையுடைய நின் திருவடிகளிலே வீழ்ந்து வணங்கினேனாக அப்பொழுது என்க.

(விளக்கம்) அரவக்கடல் போன்ற ஒலியினையுடைய அசோதர நகரம் என்க. அலத்தகம்- செம்பஞ்சிக் குழம்பு. அமுதபதி: பெயர். இலக்குமி என்னும் பெயர் பெற்றுப் பிறந்தேன் என்றாரேனும் பிறந்து இலக்குமி என்னும் பெயர் பெற்றேன் என்பது கருத்தாகக் கொள்க.

சீதரன்- சீதர மன்னன். காலைக் கதிர் ஞாயிறுபோல் என்க. புக்கேன் என்றது வாழ்க்கைத் துணைவியாகப் புக்கேன் என்றவாறு. பராவு அரும்-பராவுதல் அரிய.

இதுவுமது

48-57: எட்டிரு........வைத்தலும்

(இதன் பொருள்) எட்டு இரு நாளின் இவ் விராகுலன் தன்னை திட்டிவிடம் உண்ணும்- எம்பெருமான் அடிச்சியை நோக்கி இற்றைக்குப் பதினாறாநாள் நின் கணவனாகிய இந்த இராகுலனைத் திட்டிவிடம் என்னும் நாகம் உயிர் பருகிவிடும்; செல் உயிர் போனால் சேயிழை அவனொடு தீ அழல் மூழ்குவை- செல்லுதற்குரிய போகூழ் தலைப்பட்ட நின் கணவன் உயிர் போனக்கால் நீ அவனோடு ஈமத் தீயாகிய நெருப்பில் முழுகி உயிர் துறப்பாய் காண் என்றும்; ஈங்கு ஏது நிகழ்ச்சி இன்று ஆதலின்- அப்பால் இந் நாட்டில் நினக்குப் பழவினையாலுண்டாகும் நிகழ்ச்சி யாதும் இல்லையாதலின்; கவேரகன்னிப் பெயரொடு விளங்கிய தவாக்களி மூதூர் சென்று பிறப்பு எய்துதி- நீ கவேரன் மகவாகிய காவிரியின் பெயரை அடை மொழியாகப் பெற்றுக் கெடாத மகிழ்ச்சியையுடைய பழைமையுடைய காவிரிப்பூம் பட்டினத்திலே போய்ப் பிறப்பாய் காண் என்றும்; அணியிழை நினக்கு ஓர் அருந்துயர் வருநாள் மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி அழகிய அணிகலன்களையுடைய இலக்குமியே இன்னும் கேள், இம்மை மாறி மறுமையாகி அந்தப் பிறப்பிலே நின்னால் கடத்தற் கரிய ஒப்பற்ற துயர் (ஒன்று வந்துறும்) வந்துறுகின்ற அந்த நாளிலே, மணிமேகலா தெய்வம் என்னும் நின்குல தெய்வம் தானே நின்னை அத் துயரத்தினின்றும் எடுத்து நன்னெறிப் படுத்துதற்கு  எளிவந்து நின் கண்முன் தோன்றி; அன்று அப்பதியின்ஆர் இருள் எடுத்துத் தென் திசை மருங்கில் ஓர் தீவு இடைவைத்தலும்- அற்றை நாளிலேயே நள்ளிரவிலே நின்னை எடுத்துப் போய்த் தென்திசையிலமைந்த ஒரு தீவின்கண் இட்ட பின்னர்; என்க.

(விளக்கம்) இராகுலன்- முற்பிறப்பில் இலக்குமியா யிருந்த மணிமேகலையின் காதலன். எட்டிருநாள்- பதினாறாம் நாள். இதனால் பிரமதத்த முனிவர் இந் நிகழ்ச்சிகளை அவள் கணவன் அறியாவண்ணம் இலக்குமிக்கு மட்டும் தனித்துக் கூறியதாதல் வேண்டும் என்று கருதுக. செல்லுயிர் என்றாள் இறந்துபாடுறும் போகூழ் வந்தெய்தப் பெற்ற உயிர் என்பதறிவித்தற்கு.

திட்டிவிடம்- தன் நோக்கம் பட்ட துணையானே உயிர்கள் இறந்து படுதற்குக் காரணமான கொடிய நச்சுத் தன்மையை நோக்கத்திலேயே கொண்டிருக்கும் ஒரு நாகப் பாம்பு. இதனால் இதற்குத் திட்டி விடம் என்பதே பெயராயிற்று. புத்தர் பிறந்த பிறப்புக்களிலே திட்டிவிடம் என்னும் நச்சுப் பாம்பாகப் பிறந்து கண் விழித்தாற் பிறவுயிர் சாமென்றஞ்சிக் கண் விழியாதே கிடந்தார் என்னும் ஒரு கதை புத்தசாதகக் கதையிலுள தென்பது நீலகேசி உரையிற் காணப்படுதலு முணர்க.

திட்டிவிட மன்ன கற்பின் செல்வியை

என்பது கம்பர் வாக்கு;(தாடகை-10)

கவேரன் என்னும் அரசன் தவம் செய்து பெண் காவிரிநதி யாகினள் என்பது பௌராணிக மதம். கவேரகன்னிப் பெயரொடு விளங்கிய மூதூர் என்றது காவிரி என்னும் அடைபுணர்த்தோதப்படும் காவிரிப் பூம்பட்டினத்தை. அருந்துயர் என்றது- கடத்தற்கரிய துயரம் என்றவாறு. அஃதாவது உதயகுமரன் மணிமேகலையின்பாற் கழிபெருங்காமமுடையவனாய் அவளைக் கைப்பற்ற முயன்றதனை. மணிமேகலையின் நெஞ்சமும் அவன் பின்னர்ப் போனமையால் அஃது அவளால் கடந்தற்கரிய துயர் ஆயிற்றென்பார் ஆயிழை நினக்கோர் அருந்துயர் வரும் நாள் என்று பிரமதத்த முனிவர் அறிவித்தனர் என்றவாறு. அப் பதி- பூம்புகார் நகரம். தீவு- மணிபல்லவம்.

பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு இன்று யான் உரைத்த உரை தெளிவாய் என- அற்றைநாட் பகற் பொழுதிலேயே உன்னுடைய இப்பிறப்பின் வரலாற்றினை உணர்ந்து மேலும் இற்றைநான் இங்கியான் உனக்குக் கூறகின்ற இம் மொழி யெல்லாம் வாய்மையே ஆதலையும் நீலே உணர்ந்து கொள்வாய் என்றும் கூறாநின்றனை என்றாள் என்க.

(விளக்கம்) வேகம்-சினமிகுதி. திறல்- போர் செய்யும் ஆற்றல். மனமாசு-அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் என்னும் நான்குமாம். மறச்செவி-தீயவற்றைக் கேட்டற்கவாவும் செவி. இது பயிற்சியா லெய்துமொரு வழக்கம். அறச்செவி-அறங்கேட்டற்கு அவாவுடைய செவி. இதுவும் பயிற்சியா லெய்துவதேயாம். பிறவிப்பிணி மருத்துவன்- பிறவிநோய் தீர்தற் கியன்ற நல்லற மருந்துகளை ஊட்டி மீண்டும் பிறவிப்பிணி வாராமற் செய்யும் மருத்துவனாகிய புத்த பெருமான். ஈங்கு என்றது முற்பிறப்பிலே பிரமதத்த முனிவரைக் கண்ட இடத்தை. உரை வாயேயாதலை நீயே தெளிந்து கொள்ளுவாய் என்று நீ கூறியவாறே இற்றைநாள் காயங்கரையின் நீ உரைத்ததை யெல்லாம் வாயே ஆகுதல் மயக்கற உணர்ந்தேன் என்று முன்பே நுதலிப் புகுதல்(10-11) ஈண்டு நினைக.

(முற்பிறப்பிலே இலக்குமி யாகிய) மிணமேகலை பிரமதத்தனை வினவினமையும் அவன் கூறிய மாற்றமும்)

45-71: சாதுயர்....தானேன்

(இதன் பொருள்) சாதுயர் கேட்டுத் தளர்ந்து உகும் மனத்தேன் காதலன் பிறப்பும் காட்டாயோ என-என் ஆருயிர்க் கணவன் திட்டிவிடத்தாற் சாதலும் யான் தீயினிற் புகுந்துசாதலும் ஆகிய சாதற்றுன்பங்களைக் கேட்டு அப்பொழுதே தளர்ந்துருகி ஒழுகும் மனத்தை யுடையேனாகிய யான் பெரும்! அடிச்சியின் மறுபிறப்பிஃதொன்று மட்டும் கூறியருளினை அதனினும் காட்டில் யான் பெரிதும் அறிந்துகொள்ள விரும்புகின்ற என் காதலன் மறுமையில் எய்தும் பிறப்பினையும் அறிவித்தருள மாட்டாயோ? என்று நின்னை அவலத்தோடு வினவ; ஆங்கு உனைக்கொணர்ந்த அரும் பெருந்தெய்வம் பாங்கின் தோன்றி ஈங்கு இவன் பைந்தொடி கணவனை என்னும் என்று எடுத்து ஓதினை- அது கேட்ட நீ அம் மணிபல்லவத்திற்கு உன்னை கொண்டுவந்த அந்த மாபெருஞ் சிறப்புடைய மணிமேகலா தெய்வத்தானே மீண்டும் நின்பக்கலிலே வந்து தோன்றி இன்ன விடத்துப் பிறந்திருக்கின்ற இன்ன பெயருடையவனே நின் கணவனாகிய இராகுலன் என்று அறிவிக்கும் என்று எடுத்துக்கூறா நின்றனை; ஆங்கு அத்தெய்வம் வாராதோ என இளங்கொடி ஏங்கினள் அழூஉம் நீ கூறியாங்கு அவ்வரும் பெருந் தெய்வம்(இப்பொழுது என்பக்கலிலே வரற்பாலது) வாராதொழியுமோ? என இளமையுடைய அம் மணிமேகலை பின்னும் தன் பேதைமை காரணமாக ஏங்கி அழாநின்றனள்; என்பதாம்.

(விளக்கம்) (48) எட்டிரு நாளிலிவ் விராகுலன் திட்டி விட முணும் என்பது முதலாக(64) இன்றியான் உரைத்த உரை தெளிவாய் என்பதீறாக நீ காயங்கரையில் உரைத்தவை எல்லாம் வாயே ஆகுதல் மயக்கற வுணர்ந்தேன். பின்னர் அரும் பெருந் தெய்வம் பாங்கிற்றோன்றி ஈங்கு இவன் என்னும் என்று எடுத்தோதினை அல்லையோ! அத் தெய்வம் வரக் கண்டிலேன் அது மட்டும் பொய்ப்ப ஒரோ வழி வாரா தொழியுமோ என்று சொல்லி ஏங்கி அழுதனள் என்றவாறு.

காதலன் சாவாகிய துயர் கேட்டு என்றவாறு. காதலன் பிறப்புங் காட்டாயோ? என்றது என் பிறப்புக் காட்டினை அங்ஙனமே காதலன் பிறப்புங் காட்டாயோ என்பதுபட நின்றது. பைந்தொடி முன்னிலைப் புறமொழி. கணவனை: ஐகாரம் அசைச் சொல். நின் கணவன் இன்னவிடத்தே பிறந்து இப் பெயரோடிருக்கும் இவன் என்று நினக்குக் கூறும் என்று எடுத்தோதினை என்றவாறு. அது மட்டும் பொய்க்குமோ என்னையுற்றேங்கி அழுதனள் என்க.

இனி, இக் காதையை-ஆங்கு அது கண்ட ஆயிழை அறியாள் கைதலைமேற் குவிந்தன, குவிந்த கையள் வலமுறை வாராச் சேர்ந்து எழுவோள் உணர்ந்து மாதவ உணர்ந்தோய் நீ உரைத்ததை எல்லாம் வாயே ஆகுதல் உணர்ந்தேன், பிரமதரும! உரைப்போய் இந்நகர் கேடெய்தலும், புலவ அருளிய அந்நாள் கேடெய்தலும் ஒழிகெனச் சாற்றிச் செல்வோன் இருப்ப நீ உரைத்த நாளிடைகேடெய்தலும், புலவ அருளிய அந்நாள் பிறந்தேன் புக்கேன் பணிதலும், விடமுணும் மூழ்குவை ஈங்கின்றாதலின் சென்று பிறப்பெய்துதி துயர்வருநாள் தெய்வம் தோன்றி எடுத்து வைத்தலும் சென்று தொழுதி தெளிவாய் என, தளர்ந்துகு மனத்தேன் காட்டாயோ என, தெய்வம் தோன்றி இவன் என்னும் என்று ஓதினை அத் தெய்வம் வாராதோ என இளங்கொடி அழூஉம் என்றியைத்திடுக.

பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை முற்றிற்று
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 09:05:32 AM
10. மந்திரங் கொடுத்த காதை

பத்தாவது மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி மந்திரங் கொடுத்த பாட்டு

அஃதாவது: மணிமேகலையை மணிபல்லவத்திடை வைத்து நீங்கிய மணிமேகலா தெய்வம் அவள் மாமலர்ப் பள்ளியினின்றும் துயிலுணர்ந்து மருட்கையாலே பெரிதும் வருந்தி எழுந்து யாங்கணும் திரிபவள் தந்தையை உள்ளி ஐயாவோ என்று அழுது புலம்புங்கால் தன் கண்ணுக்குத் தோன்றிய மாமணிப் பீடிகையைக் கண்டு தன்னையும் மறந்து அதனை வலஞ்செய்து வீழ்ந்து வணங்கி எழுந்த பொழுது தனது பழம்பிறப்புணர்ச்சியோ டெழுந்தாளன்றே; எழுந்தவள் முற்பிறப்பில் காயங்கரை என்னுமிடத்துப் பிரமதத்தன் கூறியவை எல்லாம் வாய்மையாதல் கண்டு அவளை முன்னிலைப்படுத்து அவன் உரைத்தவை எல்லாம் உரைத்து, யான் பழம் பிறப்புணர்ந்துழி மாபெருந் தெய்வம் வந்து உனக்குப் பேருதவி செய்யும் என்றாயன்றே! அத் தெய்வம் வந்திலதே என் செய்கோ? என்று அழுபவள் முன்னர் மணிமேகலா தெய்வம் தோன்றி அவள் மேற் கொள்ளும் அருளறம் முட்டின்றி நடைபெறுதற்கு இன்றியமையாத மந்திரஞ் சிலவற்றைச் செவியறிவுறுத்த செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு.

இதன்கண்- மணிமேகலா தெய்வம் வந்தவுடன் மணிமேகலைக்கு அப்  பீடிகையே நங்கடவுள் என்றுணர்த்தற் பொருட்டு அதனைப் புகழந்தேத்தி வணங்குதலும்; மணிமேகலை அத் தெய்வத்தைத் தன் கணவனாகிய இராகுலன் எங்குளன் என்று வினாதலும், அத் தெய்வம் முற்பிறப்பிலே இலக்குமியாகி இராகுலனோடு இல்லறம் நிகழ்த்துங்கால் மணிமேகலை சாதுசக்கரன் என்னும் துறவோனை உண்டி கொடுத்து வழிபாடு செய்தமையும் அதனாலாம் பயனும் அம் முற்பிறப்பிலே மாதவியும் சுதமதியும் அவட்குடன் பிறந்தாராயிருந்தமையும் இப் பிறப்பில் மணிமேகலைக்கு அவர் தாயும்தோழியுமாயிருப்பதுவும்; இனி எதிர்காலத்தே நிகழவிருப்பனவும் இனிதின் அறிவுறுத்தலும் பின்னர் மந்திரங்களைச் செவியறிவுறுத்தலும் பிறவும், அழகாகக் கூறப்படுகின்றன.

அறவோன் ஆசனத்து ஆய் இழை அறிந்த
பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐது என
விரை மலர் ஏந்தி விசும்பூடு இழிந்து
பொரு அறு பூங் கொடி பூமியில் பொலிந்தென
வந்து தோன்றிய மணிமேகலா தெய்வம்
முந்தைப் பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப
உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி
பொருள் வழங்கு செவித் துளை தூர்ந்து அறிவு இழந்த
வறம் தலை உலகத்து அறம் பாடு சிறக்கச்
சுடர் வழக்கு அற்றுத் தடுமாறுகாலை ஓர்  10-010

இள வள ஞாயிறு தோன்றியதென்ன
நீயோ தோன்றினை நின் அடி பணிந்தேன்
நீயே ஆகி நிற்கு அமைந்த இவ் ஆசனம்
நாமிசை வைத்தேன் தலைமிசைக் கொண்டேன்
பூமிசை ஏற்றினேன் புலம்பு அறுக என்றே
வலம் கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர்ப்
பொலம் கொடி நிலமிசைச் சேர்ந்தெனப் பொருந்தி
உன் திருவருளால் என் பிறப்பு உணர்ந்தேன்
என் பெருங் கணவன் யாங்கு உளன்? என்றலும்
இலக்குமி கேளாய் இராகுலன் தன்னொடு  10-020

புலத்தகை எய்தினை பூம்பொழில் அகவயின்
இடங்கழி காமமொடு அடங்கானாய் அவன்
மடந்தை மெல் இயல் மலர் அடி வணங்குழி
சாதுசக்கரன் மீவிசும்பு திரிவோன்
தெரு மரல் ஒழித்து ஆங்கு இரத்தினத் தீவத்துத்
தரும சக்கரம் உருட்டினன் வருவோன்
வெங்கதிர் அமயத்து வியன் பொழில் அகவயின்
வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி
மெல் இயல்! கண்டனை மெய்ந் நடுக்குற்றனை
நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச  10-030

இராகுலன் வந்தோன் யார்? என வெகுளலும்
விரா மலர்க் கூந்தல்! அவன் வாய் புதையா
வானூடு இழிந்தோன் மலர் அடி வணங்காது
நா நல்கூர்ந்தனை என்று அவன் தன்னொடு
பகை அறு பாத்தியன் பாதம் பணிந்து ஆங்கு
அமர! கேள் நின் தமர் அலம் ஆயினும்
அம் தீம் தண்ணீர் அமுதொடு கொணர்கேம்
உண்டி யாம் உன் குறிப்பினம் என்றலும்
எம் அனை! உண்கேன் ஈங்குக் கொணர்க என
அந் நாள் அவன் உண்டருளிய அவ் அறம் 1  10-040

நின்னாங்கு ஒழியாது நின் பிறப்பு அறுத்திடும்
உவவன மருங்கில் உன்பால் தோன்றிய
உதயகுமரன் அவன் உன் இராகுலன்
ஆங்கு அவன் அன்றியும் அவன்பால் உள்ளம்
நீங்காத் தன்மை நினக்கும் உண்டு ஆகலின்
கந்தசாலியின் கழி பெரு வித்து ஓர்
வெந்து உகு வெங் களர் வீழ்வது போன்ம் என
அறத்தின் வித்து ஆங்கு ஆகிய உன்னை ஓர்
திறப்படற்கு ஏதுவா சேயிழை! செய்தேன்
இன்னும் கேளாய் இலக்குமி! நீ நின்  10-050

தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும்
ஆங்கு அவர் தம்மை அங்க நாட்டு அகவயின்
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன்
துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன்
அவருடன் ஆங்கு அவன் அகல் மலை ஆடி
கங்கைப் பேர் யாற்று அடைகரை இருந்துழி
மற வணம் நீத்த மாசு அறு கேள்வி
அறவணன் ஆங்கு அவன்பால் சென்றோனை
ஈங்கு வந்தீர் யார்? என்று எழுந்து அவன்
பாங்கு உளி மாதவன் பாதம் பணிதலும்  10-060

ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன்
மா துயர் எவ்வம் மக்களை நீக்கி
விலங்கும் தம்முள் வெரூஉம் பகை நீக்கி
உடங்கு உயிர் வாழ்க என்று உள்ளம் கசிந்து உக
தொன்று காலத்து நின்று அறம் உரைத்த
குன்ற மருங்கில் குற்றம் கெடுக்கும்
பாத பங்கயம் கிடத்தலின் ஈங்கு இது
பாதபங்கய மலை எனும் பெயர்த்து ஆயது
தொழுது வலம் கொள்ள வந்தேன் ஈங்கு இப்
பழுது இல் காட்சியீர்! நீயிரும் தொழும் என  10-070

அன்று அவன் உரைத்த அவ் உரை பிழையாது
சென்று கைதொழுது சிறப்புச் செய்தலின்
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும்
கோதை அம் சாயல்! நின்னொடு கூடினர்
அறிபிறப்பு உற்றனை அறம் பாடு அறிந்தனை
பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை
பல் வேறு சமயப் படிற்று உரை எல்லாம்
அல்லி அம் கோதை! கேட்குறும் அந் நாள்
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
விளை பொருள் உரையார் வேற்று உரு எய்தவும்  10-080

அந்தரம் திரியவும் ஆக்கும் இவ் அருந் திறல்
மந்திரம் கொள்க என வாய்மையின் ஓதி
மதி நாள் முற்றிய மங்கலத் திருநாள்
பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன்
திருவறம் எய்துதல் சித்தம் என்று உணர் நீ
மன் பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி
நின் பதிப் புகுவாய் என்று எழுந்து ஓங்கி
மறந்ததும் உண்டு என மறித்து ஆங்கு இழிந்து
சிறந்த கொள்கைச் சேயிழை! கேளாய்
மக்கள் யாக்கை உணவின் பிண்டம்  10-090

இப் பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும் என்று
ஆங்கு அது கொடுத்து ஆங்கு அந்தரம் எழுந்து
நீங்கியது ஆங்கு நெடுந் தெய்வம் தான் என்

உரை

தனிமைத்துயராலே தெய்வத்தின் வரவு காணாமல் அழுது
நிற்கும் மணிமேகலை காணும்படி மணிமேகலா தெய்வம்
வானத்தினின்றும் மலர் ஏந்திய கையளாய் இறங்கி
வந்து மலர்தூவி மணிமேகலை கேட்கும் வண்ணம் புத்த
பீடிகையைப் பரவிப் பணிந்து ஏத்தல்

1-12: அறவோன்.............பணிந்தேன்

(இதன் பொருள்) அறவோன் ஆசனத்து ஆயிழை அறிந்த பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐது என-புத்த பெருமானுடைய இருக்கையாகிய பீடிகையைக் கண்டு கை தொழுது வணங்கினமையாலே மணிமேகலை நல்லாள் தன் பழம் பிறப்பை அறிந்தவளாயினள் இனி, மேலே நன்னெறிக்கண் செல்லுதற் கியன்ற பழவினையாகிய ஏதுவும் நன்கு முதிர்ந்து அவள் பண்பும் அழகிதாயிருக்கின்றது என மகிழ்ந்து, விரை மலர் ஏந்தி-கைகளிலே பீடிகைக்குப் பலிதூவுதற்குரிய நறுமணங் கமழும் மலர்களை ஏந்திக்கொண்டு; விசும்புஊடு இழிந்து- மணிமேகலை கண்காண வானத்துள்ளிருந்து இறங்கி; பொருவு அறு பூங்கொடி பூமியிற் பொலிந்தென வந்து தோன்றிய-ஒப்பற்ற காமவல்லி என்னும் வானநாட்டுப் பூங்கொடி ஒன்று நிலவுலகத்திலிறங்கிப் பொலிந்து தோன்றுமாறு போலே மணிமேகலையின் பக்கலிலே வந்து தோன்றிய; மணிமேகலா தெய்வம் முந்தைப் பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப-மணிமேகலா தெய்வமானது தனது பழம்பிறப் புணர்ச்சி கைவரப் பெற்றமையால் தன்வரவினை எதிர் பார்த்து அழுது நிற்கும் அம் மணிமேகலை கேட்கும்படி, பீடிகையை நோக்கிக் கை தொழுது கூறுபவள்; உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி பொருள் வழங்கு செவித்துளை தூர்ந்து அறிவு இழந்த வறந்தலை உலகத்து-எந்தையே! இந் நிலவுலகத்திலே வாழுகின்ற மாந்தரெல்லாம் தமக்குரிய நல்லுணர்வு அழியப் பெற்று உறுதிப் பொருள்கள் புகும் வழியாகிய அவர்தம் செவித்துளை யெல்லாம் தீ மொழிகள் செறிந்து தூர்ந்து போதலாலே மெய்யறிவினை இழந் தொழிந்தமையால் மெய்யறிவின் திறத்திலே வற்கடமுற்றுக் கிடந்த இந்நிலவுலகத்திலே; அறம் பாடு சிறக்க மீண்டும் அந் நல்லறம் தனக்குரிய பெருமையோடு சிறந்து தழைக்கும்படி; சுடர் வழக்கு அற்றுத் தடுமாறு காலை ஓர் இளவள ஞாயிறு தோன்றியது என்ன-ஞாயிற்று மண்டிலம் தோன்றாமலொழிந்து போதலாலே உயிர்கள் நெறியறியாது தடுமாற்றமுறுகின்ற பொழுது ஒப்பற்ற இளஞாயிறு குணகடலினின்றுந் தோன்றினாற் போலே; நீ தோன்றினை; துடிதலோகம் ஒழிய நீ வந்து பிறந்து இவ்வுலகத்தை உய்யக் கொண்டனை யல்லையோ! நின் அடி பணிந்தேன்-நின் மலர் அடிகளில் இம்மலர்களை இட்டுப் பணிகின்றேன் காண்! என்றாள் என்க.

(விளக்கம்) இது மணிமேகலா தெய்வம் மணிமேகலையை நன்னெறிப்படுத்தும் குறிக்கோள் உடையதாகலின் ஈண்டுத் தமக்குத் தெய்வம் புத்த பெருமானே என்றும், அத் தெய்வத்தைப் பீடிகையாகிய அவனுடைய அறிகுறியை அவனாகவே மதித்து இவ்வாறு வாழ்த்தி வணங்குதல் வேண்டும் என்றும் அறிவுறுத்தற் பொருட்டு அதனை வாயாற் கூறாமல் தனது செயலாலே அறிவுறுத்திய படியாம்.

மக்கட்கு நல்லறிவு கொளுத்தும் நல்லாசிரியன் எந்தச் சமயத்தைச் சார்ந்தவனாயினும் தனது சொல்லாலே அறிவுறுத்துதலினுங் காட்டில் தனது ஒழுக்கத்தாலே அறிவுறுத்துதலே தலைசிறந்த வழியாகும் என்பதனை ஈண்டு இம் மாபெருந் தெய்வத்தின் செயலே அறிவுறுத்துதலறிக.

உலகத்தில் அறவொழுக்கம் தலைதடுமாறும்பொழு தெல்லாம் அறவோர் தோன்றி இவ் வுலகத்தை மீண்டும் அறந்தலை நிறுத்துவர் என்பது பல சமயத்தார்க்கும் ஒப்ப முடிந்தொரு கொள்கையாம். அதற்கிணங்கவே ஈண்டுப் புத்தருடைய பிறப்பு நிகழ்ச்சியையும் இத் தெய்வம்-உயிர்கள் எல்லாம்...........நீயோ தோன்றினை! என்று பாராட்டுதலும் அறிக. பௌத்த சமயத்தவர் உலகம் அநாதியாக உள்ளது அதன்கண் ஆருயிரை அறஞ் செவியறிவுறுத்திய புத்த பெருமானே இறைவன் ஆவான் என்னும் சித்தாந்த முடையவராவார். அப் புத்த பெருமானைப் பீடிகையிற் கண்டு பீடிகையை அவனாகவே கருதி வழிபாடு செய்தல் வேண்டும் என்பது அவர்தம் பிடகநூல் காட்டும் நெறியாம். இதனை, மேலே நீயேயாகி நிற்கமைந்த இவ்வாசனம் என இத் தெய்வம் கூறுமாற்றானுணர்க.

இனிப் பௌத்தர்கள் புத்த பெருமானையே கடவுளாகக் கருதுபவர் என்பதனை

முற்றுணர்ந்து புவிமீது கொலை முதலா
கியதீமை முனிந்து சாந்த
முற்றிருந்து கருணையினாற் பரதுக்க
துக்கனா யும்ப ரோடு
கற்றுணர்ந்த முனிவரருங் கண்டுதொழப்
பீடகநூல் களிவான் முன்னம்
சொற்றிருந்த வுரைத்தருளுந் தோன்றலே
கடவுள்அருட் டோன்ற லாவான்

எனவரும் மெய்ஞ்ஞான விளக்கத்தானும்(32-புத்த.சருக்கம்) உணர்க. ஈண்டு மணிமேகலா தெய்வம் சொல்வனவும் செய்வனவும் மணிமேகலை கண்டும் கேட்டும் அறிந்து கொள்ளற் பொருட்டேயாம் என்பது முந்தைப் பிறப்பெய்தி நின்றோள்கேட்ப என்றமையாற் பெற்றாம்.

சுடர் வழக்கற்றுத் தடுமாறு காலை ஞாயிறு தோன்றிய தென்ன என்னும் உவமை இல்பொருளுவமையாம். என்னை? சுடர் வழக்கறுதல் எஞ்ஞான்று மின்மையின்.

நீயோ தோன்றினை என்புழி ஓகாரம் பிற கடவுளர் அவ்வாறு தோன்றினாரிலர் எனப் பொருள் கொள்ளின் பிரிநிலையாம்; வாளாது அசைநிலை என்னலுமாம்.

இதுவுமது

13-16: நீயே........முன்னர்

(இதன் பொருள்) நீயே ஆகி நிற்கு அமைந்த இவ் ஆசனம் நாமிசை வைத்தேன்- பெருமானே எம்மனோர்க்கு நீயாகவே காட்சி தருகின்ற நீ இருந்தற முரைத்தற் கமைந்த இத் தரும பீடிகையை யான் இடையறாது வாழ்த்துமாற்றால் எனது நாவின்மேலேயே வைத்திருக்கின்றேன்; தலை மிசைக் கொண்டேன் தலையாலே வணங்குமாற்றால் எஞ்ஞான்றும் என்தலைமேலும் தாங்கியிருக்கின்றேன்; பூமிசை ஏற்றினேன்-என் உள்ளத் தாமரைப்பூவில் இடையறாது நினையுமாற்றால் எழுந்தருளவும் செய்துள்ளேன்; புலம்பு அறுகு என்றே-அஃது எற்றுக்கெனின் துன்பத்திற் கெல்லாம் காரணமாயிருக்கின்ற என் பவத்திறம் அற்றொழிவேனாதற் பொருட்டே என்று சொல்லி; வலங்கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர்- வலம் வந்து அத் தரும பீடிகையை வணங்கி வழிபாடு செய்கின்ற அம் மணிமேகலா தெய்வத்தின் முன்பு என்க.

(விளக்கம்) இதனால் மனமொழி மெய்களாகிய முக்கருவிகளாலும் புத்த பெருமானை வழிபாடு செய்யும் மரபு அறிவுறுத்தமை அறிக. இவ்வாறு வணங்கும் மரபினை மும்மையின் வணங்கி எனப் பிறாண்டும் (பவத்திற மறுகென.......3) கூறுதலாலறிக.

பூ- நெஞ்சத் தாமரைப்பூ புலம்பு: ஆகுபெயர்; பிறவிப்பிணி அறுகு-அறுவேன். வணங்குவோள்-வணங்கும் தெய்வம்.

மணிமேகலை மணிமேகலா தெய்வத்தை வணங்கி வினவுதலும் அத் தெய்வம் விடை கூறுதலும்

17-23: பொலங்கொடி....வணங்குழி

(இதன் பொருள்) பொலம் கொடி நிலமிசைச் சேர்ந்தெனப் பொருந்தி-அவ்விடத்தே அத் தெய்வத்தின் வரவு பார்த்து நின்ற மணிமேகலை தன் வழிபாட்டை முடித்தெழுந்த மணிமேகலா தெய்வத்தின் திருவடிகளிலே பொற்கொடி ஒன்று நிலத்தின் மேலே வீழ்ந்து கிடப்பது போலே வீழ்ந்து வணங்கி எங்கள் குல தெய்வமே நீயே எளிவந்து என்னை இத் தீவினிடை இட்டனை ஆதலால்; உன் திரு அருளால் என் பிறப்பு உணர்ந்தேன்- நின்னுடைய திருவருளாலே இப் புத்த பீடிகையைக் கண்டு தொழுது அடிச்சி என்னுடைய பழம்பிறப்பினை உணர்ந்து கொண்டிருக்கின்றேன்!; என் பெருங் கணவன் யாங்கு உளன் என்றலும்-என் முற்பிறப்பிற் கணவனாயிருந்து திட்டி விடத்தாலிறந்து போயவன் இப்பொழுது இருக்கின்றனன் இதனை எனக்கறிவித்தருளுக! என்று வேண்டா நிற்றலும்; இலக்குமி கேளாய்- இலக்குமியே கேள்!; இராகுலன் தன்னொடு பூம் பொழில் அகவயின் புலத்தகை எய்தினை-நீ தானும் நின் கணவனொடு கூடிக் களித்து வாழுங்காலத்தே ஒரு நாள் பூம் பொழிலிடத்தே சென்று அவனோடாடிய நீ சிறிது ஊடல் கொண்டு அவனுக்கு முகங்கொடாயாயினை; இடங்கழி காமமொடு அடங்கானாயவன்- நின் கணவன் பணிமொழி பல கூறி ஊடலுணர்த்தியும் நீ உணராது பின்னும் ஊடுதலாலே நின்பாற் கொண்ட மிகப் பெரிய காமம் காரணமாக நின் சினத்திற்கு அடங்கானாகியவன்; மடந்தை மெல்லியல் மலரடி வணங்குழி- மடந்தாய்! நின்றுடைய மெல்லியல்புடைய மலர் போன்ற அடிகளிலே வீழ்ந்து வணங்கும் பொழுது, என்க.

(விளக்கம்) பொலம் கொடி- பொன்னிறமான காமவல்லி என்னும் மலர்க்கொடி. இது மணிமேகலைக்குவமை. தான் அத் தீவிற்கு வந்ததும் பீடிகை கண்டு தொழுதலும் பழம்பிறப் புணர்ந்ததும் எல்லாம் அத் தெய்வத்தின் அருள் காரணமாக எய்திய நலங்களே என்பாள் உன்திருவருளால் உணர்ந்தேன் என்றாள். என் கணவன் யாண்டுளன் என்று இப்பொழுது நீ எனக்கறிவுறுப்பாய் என்று யான் அறிகுவெனாயினும் அவனிலை அறிய விதுப்புறும் நெஞ்சம் உண்மையால் அதனை இப்பொழுதே கூறியருள்க என்பது தோன்ற என் பெருங் கணவன் யாங்குளன் என்று விதுப்புற்று வினவுகின்றனள்.

 நீ நின் பழம்பிறப்புணர்ந்தமையையும் யான றிகுவன் என்பது மணிமேகலை யுணரும் பொருட்டு மணிமேகலை என்று விளியாது இலக்குமி! என்றே அத் தெய்வம் அவளை விளிப்ப தாயிற்று. அதனைக் கூறுவன் கேள் என்பதுபட இலக்குமி கேளாய் என்று பணித்தது.

புலத்தகை- புலக்குந் தன்மை. ஊடுதல் காமத்திற் கின்பமாதலின் நீ புலத்தகை எய்தினை. அவனுடைய அல்லல் நோய் காண்கஞ் சிறிது என நீ அவன் உணர்த்தவும் உணராயாய் ஊடனீட்டித்தனை; அவ்வழி நீயே ஊடல் தீரும் அளவும் அடங்குதலே அவன் செய்யற்பாற்றாகவும் அங்ஙனம் அடங்கானாய் அவன் நின் மலரடி வணங்கினான், அத்துணைப் பெரிது அவன் நின்பாற் கொண்ட காமம் என்பாள் இடங்கழி காமமொடு அடங்கானாய் என்றாள். இத்துணையும் இடங்கழி காமம் எனப் பாட்டிடை வைத்த குறிப்பினாற் கொண்ட பொருளென்றுணர்க.

மடந்தை: விளி; முன்னிலைப்புறமொழியுமாம்.

சாதுசக்கரன் வரவும், இராகுலன் சினத்தலும்

24-35: சாது........பணிந்தாங்கு

(இதன் பொருள்) சாதுசக்கரன் மீவிசும்பு திரிவோன்- சாதுசக்கரன் என்னும் பெயருடையவனாய் உயர்ந்த வானத்திலே இயங்கி நாடு தோறும் சென்று அறங்கூறும் சாரணன் ஒருவன்; இரத்தின தீவத்து தெருமரல் ஒழித்து- இரத்தினத் தீவிற் சென்று அங்கு வாழும் மாந்தர் மனச்சுழற்சியைத் தனது அறவுரையாலே அகற்றி; ஆங்கு தருமசக்கரம் உருட்டினன் வருவோன்- அத் தீவிலே அறவாழி இடையறாது உருளும்படி செய்து வான்வழியே வருபவன்; வெங்கதிர் அமயத்து வியன் பொழில் அகவயின் வந்து தோன்றலும்- வெவ்விய வெயில் சுடுகின்ற நண்பகலிலே நீவிர் காமவிளையாட்டயர்ந்த அகன்ற அப் பூம்பொழிலினூடே இழிந்து நுங்கள் முன்பு வந்து தோன்றாநிற்ப; மெல்லியல் கண்டனை மயங்கினை கலங்கி மெய்ந் நடுங்குற்றனை நல்கூர் நுகப்பினை நாணினை இறைஞ்ச- மெல்லியலாகிய இலக்குமியே நீயே அவன் வரவினை முற்படக் கண்டனை உடல் நடுங்கினாய் மயங்கினாய் நெஞ்சு கலங்கினை ஒருவாறு தெளிந்து அம்முனிவனை எதிர் கொண்டு நின் நுண்ணிடை துவள் நாணி வணங்கினாய்; இராகுலன் வந்தோன் யார் என வெகுளலும்-இடங்கழி காமத்தாலே நின்னடிக்கண் வணங்கிய இராகுலன் அவன்வரவு தனக்கு இடையூறு விளைத்தலின் இப்பொழுது ஈங்கு வந்தெய்தியவன் யாவன் என்று வெகுண்டு உரப்புதலும்; விரா மலர்க் கூந்தல் விரவிய மலர் அணிந்திருந்த கூந்தலையுடைய நீ பெரிதும் அஞ்சி; அவன் வாய் புதையா வானூடு இழந்தோன் மலரடி வணங்காது நாநல் கூர்ந்தனை என்று-அவ்விராகுலனுடைய வாயினை நின்கையாற் பொத்தி வானத்தினின்றும் இழிந்து வருகின்ற இருத்தியுடைய இம்முனிவரை மலரடியிலே வீழ்ந்து வணங்காதொழிந்தது மன்றி நாவினால் இன்சொலியம்பாமல் சிறுமையுற்றனை என்று அறிவுறுத்துப் பின்பு; அவன் தன்னொடு-தன்பிழையுணர்ந்து கொண்ட இராகுலனோடு நீ சென்று; பகை அறு பாத்தியன் காம முதலிய உட்பகை அறுதற்குக் காரணமான புத்தருடைய திருவடிக்கன்பனாகிய அச் சாதுசக்கரனுடைய; பாதம் பணிந்து ஆங்கு-திருவடிகளில் வீழ்ந்து வணங்கியவுடன் என்க.

(விளக்கம்) சாதுசக்கரன் அறவோர் குழுவிலுள்ளோன். என்னை? குழு மண்டலித்துக் குழுமி இருத்தலியல்பாகலின் அதற்குச் சக்கரம் என்பது பெயராயிற்று. எனவே சாதுசங்கத்துள்ளோன் என்ப தாயிற்று. ஈண்டுச் சாதுசங்கம் என்றது பௌத்தரில் துறவோர் கூட்டத்தை. மீவிசும்பு திரிவோன் என்றதனால் இவன் இருத்தி(சித்தி) கை கூடுப் பெற்றவன் என்பது பெற்றாம்; இருத்தி பெற்றவர், நிலத்திற் குளித்து நெடுவிசும் பேறிச் சலத்தில் திரியும் தெய்வத்தன்மை யுடையராயிருப்பர் என்பது நிலத்திற் குளித்து நெடுவிசும்பேறிச் சலத்திற் றிரியு மோர் சாரணன் தோன்ற என இந் நூலில் வருதலானும்(24-46-7) உணர்க.

இத்தகைய சாரணர் நாடுகள்தோறும் சென்று மக்கட்கு அறஞ் செவியறிவுறுத்துவது வழக்கம். சமண் சமயத்தும் இத்தகைய சாரணர் உளர் என்பது

பெரும்பெயர் ஐயர் ஒருங்கட் னிட்ட
இலங்கொளிச் சிலாதல மேலிருந் தருளிப்
பெருமக னதிசயம் பிறழா வாய்மைத்
தருமஞ் சாற்றுஞ் சாரணர் தோன்ற

எனவரும் சிலப்பதிகாரத்தானும்(10-160-163) தெளிக.

இவரை அந்தரசாரிகள் என்றும்கூறுப. பாசிலைப்போதி அணிதிகழ் நீழலறவோன் திருமொழி அந்தரசாரிகள் அறைந்தனர் சாற்றும் என்பர்இளங்கோவடிகளார்; (சிலப்-11-13). இனி அறத்தை ஆழியாக உருவகித்த லுண்டாகலின் அறஞ் செவியறிவுறுத்தலையே சக்கரம் உருட்டுதலாகக் கொண்டு இவனை அறவாழி யுடையோன் என்னும் பொருள்படச் சாது சக்கரன் என்றழைத்தனர் எனினுமாம். இதனை இரத்தினத் தீவத்துத் தரும சக்கர முருட்டினன் வருவோன் என்பது வலியுறுத்துதலுணர்க.

இனி, பௌத்தத் துறவோர் ஓம் மணிபத்மே கூஉம் என்ற மறை மொழி பொறித்த வட்டவடிவமாகப் பொன்னாற் செய்யப்பட்ட சக்கரத்தைக் கையிற் கொண்டுருட்டும் வழக்க முடையோராதலின், இவனும் அச்சக்கரத்தை உருட்டுபவனாய் வருபவன் எனினுமாம் என்பாருமுளர் தரும சாரணர் தங்கிய குணத்தோர் கருமுகிற் படலத்துக் ககனத் தியங்குவோர் எனப் பிறாண்டுளம் ஓதுதல் போன்று ஈண்டும் விசும்பு திரிவோன் என்றமையாது,மீவிசும்பு திரிவோன் என்றார். இரத்தின தீவம் மணிபல்லத்திற்கு அணித்தாகிய மற்றொரு தீவு. சாது சக்கரன் நிலத்திலிழிந்தமைக்குக் குறிப்பாக ஏதுக் கூறுவார் வெங்கதிரமையத்து வியன்பொழி லகவயின் வந்து தோன்றலும் என்றார்.

நின் கணவன் நின் அடியில் வீழ்ந்து வணங்கும் செவ்வியில் அச்சாது சக்கரன் வந்துற்றமையால் செய்வதறியாது மயங்கினை, கலங்கி மெய்ந்நடுக்குற்றனை, நாணினை என்று அத் தெய்வம் கூறியபடியாம்.

இனி, நின் கணவன் இடங்கழி காமமுடையனாய் நின்னூடல் தீர்க்குஞ் செயலுக்கு இடையூறாக விருந்தமையால் வெகுண்டு இன்னாச் சொல் கூறி உரப்பினன் என்பாள் இராகுலன் வந்தோன் யாரென வெகுளலும் என்றாள். இதனால் காமவெகுளி மயக்கங்களின் புன்மையை இத் தெய்வம் எடுத்துக் காட்டிய நுணுக்கமும் ஈண்டு நினைக.

மலரடி வணங்குதற்கு நீ ஏதுக்காட்டுவாய் வானூடிழிந்தோன் மலரடி வணங்காது நாநல் கூர்ந்தனை என்றவாறு. இன் சொல்லே நாவிற்கியன்ற செல்வம் ஆதலின் அது கூறி வரவேலாததூஉமன்றி வந்தோன் யார் என இன்னாச்சொல் இயம்பி நின் நாவினது வறுமையைக் காட்டினை என்று நீ நின் கணவனை அறிவுறுத்தினை என்றவாறு. பாத்தியன் என்பது அடியவன் என்னும் பொருளுடையது. திருவாதவூர்ச் சிவபாத்தியன் எனவரும் நம்பியாண்டார் நம்பி வாக்கிற்கும் சிவனடியான் என்பதே பொருள் என்க. பகையறு பாதத்திற்கு அன்பன் என்பாள் பகையறு பாத்தியன் என்றாள். பகையறுபாதம் என்றது புத்தர் திருவடியை. பகை காம முதலியன.

இனி, இலக்குமி மெய்ந்நடுக்குறுதல் இறைபொருளாகப் பிறந்த அச்சம் என்னும் மெய்ப்பாடு.

இராகுலனுக்குத் தன் கருத்து நிறைவேறுதற்கு இடையூறாகத் தோன்றி அலைத்தல் பற்றி வெகுளி பிறந்தது என்க. தன் மனைவி இறைஞ்சக் கண்டு வெகுளி பிறந்ததெனின் மனைவியையே வெகுள்வான்மன். என்னை? ஈண்டுக் குடிகொன்றவள் இலக்குமியே யாதலின் அக் கருத்துப் போலி என்க.

இதுவுமது

34-41: அமர......அறுத்திடும்

(இதன் பொருள்) அமர கேள்- தேவனே! அடிச்சியின் வேண்டு கோளிதனைக் கேட்டருள்வாயாக! நின் தமர் அலம் ஆயினும்-அடியேங்கள் உனக்குச் சுற்றத்தாராகும் தகுதியுடையேமல்லே மாயினும்; அமுதொடு அம்தீம்தண்ணீர் கொணர்கேம்-உணவினோடு அழகிய இனிய குளிர்நீரும் கொணர்வேம்; உண்டி அவற்றை உண்டருள்க; யாம் உன் குறிப்பினம்-அடியேங்கள் முன்னர் அறியாமையாற் பிழை செய்தேமாயினும். இனிப் பெருமான் குறிப்பின் வழி ஒழுகுவேம், என்று நீ அச் சாது சக்கரனுக்கு இனியன் கூறவே; அவனும் எம் அனை உண்கேன் ஈங்குக் கொணர்க இன் சொல்லால் உள்ளமுருகி எம்மனோர்க்கெல்லாம் அன்னை அனையாய் ஒருதலையாக நீ கொணருபவற்றை யான் உண்பேன் காண்! அவற்றை இங்கே கொண்டு வருவாயாக என்று ஆர்வத்தோடே பணிப்ப, நீயும் கொணர்ந்து அன்புடன் அம்முனிவனை ஊட்டினையல்லையோ!; அந்நாள் அவன் உண்டருளிய அவ்வறம் அக்காலத்தே அச்சாது சக்கரன் நின் உணவை ஏற்று உண்டருளினமையாலே நினக்கெய்திய நல்வினை; நின் ஆங்கு ஒழியாது நின் பிறப்பு அறுத்திடும்-அப் பிறப்பிலேயே நின்னிடத்தினின்றும் ஒழியாமல் இப் பிறப்பினும் தொடர்ந்து வந்து நின் பிறவிப்பிணியையும் அறுத்திடும் காண்! அத் தகையது அறவோர்க் கெதிரும் நல்வினை என்றாள் என்க.

(விளக்கம்) சாதுக்கரன் நிலவுலகத்திலேயே மக்கள் யாக்கையிலேயே அமரனாகி விட்டான் என்பது தோன்ற அமர! என்று இலக்குமி விளித்த வாறாம். தன் கணவன் சாதுசக்கரனைக் கண்டபொழுதே மலரடி வணங்காமல் வந்தோன் யார்! என வெகுண்டமை கருதி அவனெனத் தான் என வேற்றுமை நோக்காது அப் பிழையை இருவருடையதாகவும் கொள்க என்பாள் யாம் நின் தமரலம் ஆயினும் என்றாள். சிறியேம் பிழையைப் பொறுத் தருள்க. அதற்கு அறிகுறியாக யாம் கொணரும் அமுதம் நீரும் உண்டருளுதல் வேண்டும் என்றிரந்த படியாம்.

இனி, சாது சக்கரனும் இலக்குமியின் அன்பின் பெருமையைத் தான் உணர்ந்தமை தோன்ற எம்மனை உண்கேன் ஈங்குக் கொணர்க என்று விதுப்புற்றுப் பணித்ததின் இலக்கிய நயமுணர்க. இனி, அந்நாள் அவன் உண்டருளிய அறம் ஒழியாது நின்பிறப் பறுத்திடும் எனவரும் இதனோடு

சிவஞானச் செயலுடையோர் கையிற் றானம்
திலமளவே செய்திடினும் நிலமலைபோல் திகழ்ந்து
பவமாய்க் கடலினழுந் தாதவகை யெடுத்துப்
பரபோகம் துய்ப்பித்துப் பாசத்தை அறுக்கத்
தவமாரும் பிறப்பொன்றிற் சாரப் பண்ணிச்
சரியைகிரி யாயோகந் தன்னிலுஞ் சாராமே
நவமாகும் தத்துவஞா னத்தை நல்கி
நாதனடிக் கமலங்கள் நண்ணுவிக்குந் தானே

எனவரும் சிவஞானசித்தியார்ச் (சுப-278) செய்யுளை ஒப்பு நோக்கி இரண்டற்கும் நெருங்கிய உறவுண்மை உணர்க. ஈண்டு

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்  (87)

எனவரும் அருமைத் திருக்குறளும் நினைக.

இதுவுமது

42-49: உவவன........செய்தேன்

(இதன் பொருள்) சேயிழை உவவனம் மருங்கில் உன்பால் தோன்றிய உதயகுமரன் அவன் உன் இராகுலன்- மணிமேகலையே கேள்! புகார் நகரத்துப் பகவனது ஆணையிற் பன்மரம் பூக்கும் உவவனத்துள் பளிக்கறையின்பக்கலிலே உனக்குமுன் வந்து தோன்றிய அரசிளங்குமரனாகிய உதயகுமரனே நீ இலக்குமியாயிருந்த பொழுது நின் கணவனாயிருந்தவனாகிய அந்த இராகுலன் காண்!; ஆங்கு அவன் அன்றியும்- பழவினை காரணமாக அவ்வாறு மாறிப்பிறந்த பிறப்பினும் உன்னைக் காமுற்று வந்தணுகிய அவ்வுதயகுமரனே யன்றியும்; அவன் பால் உள்ளம் நீங்காத்தன்மை நினக்கும் உண்டாகலின்-முற்பிறப்பிற் கணவனாயிருந்தமையாலே அவ்வுதயகுமரன் பால் நின் நெஞ்சம் சென்று அவனை மறவாது காமுற்றுருக்குமொரு பண்பு உன்னிடம் உளது ஆதலாலே; கந்த சாலியின் கழிபெருவித்து ஓர் வெந்துகு வெள்களர் வீழ்வது போன்ற என-நின்னெஞ்சம் அவளைத் தொடர்ந்து செல்லுமிந்நிகழ்ச்சி நெற்களுள் சிறந்ததாகிய கந்தசாலி என்னும் நெற்பயிரினது வளமுடைய மிகப் பெரியதொரு விதையானது வெந்து மாவாகி உதிர்வதற்கிடனான் வெள்ளிய களர்நிலத்திலே வீழ்வதனை ஒக்கும் என்று யான் கருதி; அறத்தின் வித்து ஆகிய உன்னை ஓர் திறப்படற்கு ஏதுவாச் செய்தேன்- நல்லறத்தின் சிறந்த வித்தாகத் திகழுகின்ற நின்னை அவ்வறம் முளைத்துப் பயிராகித் தழைத்துத் தன் பயனை விளைவிக்கும் தன்மையைப் பெறுதற்குத் தகுதியாக நின்னை உவவனத்தினின்று என் விஞ்சையிற் பெயர்த்துப் பழம் பிறப்புணர்த்தும் இத்தரும பீடிகையைக் கண்டு நீ ஆக்க முறுதற்கு அதனயலிலே யான் நின்னை இட்டகன்றேன் காண்; என்று கூறிற்று என்க.

(விளக்கம்) (49) சேயிழை என்னும் விளி ஈண்டு மணிமேகலை என விளித்தபடியாம்.

உதயகுமரனாகிய அவனே முற்பிறப்பில் உன் கணவனாயிருந்த இராகுலன் என்றவாறு. அவன் முற்பிறப்பின் பால் நின்னிடத்தே இடங்கழி காம முடைமையின் அப் பற்றுக் காரணமாகவே ஊழ்வினை அவனை நின்பாற் கொணர்ந்தது; நீயும் அவன்பாலங்ஙனமே காமமுடைய ஆதலின் நின்னெஞ்சமும்(5: 848) கற்புத்தானிலள் நற்றவவுணர்வு இலள் வருணக்காப்பிலள் பொருள் விலையாட்டி யென்று இகழ்ந்தனனாகி நயந்தோன் என்னாது அவன் பின் சென்றதன்றே! அந் நெகிழ்ச்சியை நீ அறியுமாறே யானும் அறிந்தேன், அந் நிகழ்ச்சி நல்வித்துக் களர் நிலத்துகுவது போன்றதாம்.யான் என் விஞ்சையிற் பெயர்த்து ஈங்குக் கொணருமாற்றால் உன் ஊழ் வலியைக் கெடுத்து நன்னெறிப் படுத்தினேன் காண் என்று அத் தெய்வம் கூறுகின்றது ஈண்டு,

ஊழையும் உப்பக்கங் காண்ப ருலைவின்றித்
தாழா துஞற்று பவர்      (620)

என்னும் அருமைத் திருக்குறள் நிலைக்கத்தகும்

மணிமேகலாய்! புதுவோன் பின்றை நின்னெஞ்சம் போன தெனினும் காமத்தியற்கை இதுவே யாயின் அதன் திறம் கெடுக என்று அதற்குலைவின்றி நெஞ்சுறுதியும் பூண்டு நின்றனை.யானும் அச்செவ்வியறிந்து காமத்தின் திறங்கொடுதற் கேதுவாக ஓர் திறப்பட இது செய்தேன் என்று கூறுகின்றது. அத் தெய்வம் ஈண்டு

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றத் தான்முந் துறும் (1023)

எனவரும் திருக்குறள் நினைக்கத்தகும்.

ஓர் திறப்படலாவது பொறிவழி மணஞ் செல்லாமல் தடுத்து மெய்ப் பொருளை உணரும் ஒரே நெறியில் மனத்தைச் செலுத்துதல் அது ஈண்டு அருளறம் பூணுதலாம் என்க.

தெய்வம் மாதவி, சுதமதி, என்னும் இருவருடைய பழம் பிறப்புக்களையும் மணிமேகலைக்கு அறிவித்தல்

50-60: இன்னும்.........பணிதலும்

(இதன் பொருள்) இன்னும் கேளாய்- மணிமேகலாய்! இன்னும் நீ அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளும் உள அவற்றையும் கூறுவல் கேட்பாயாக!; நீ இலக்குமி-முற்பிறப்பிலே நீ இலக்குமியாயிருந்தனையல்லையோ அப் பிறப்பிலே; நின் தவ்வையர் ஆவோர்; தாரையும் வீரையும்- நினக்குத் தமக்கையராய்த் தாரை என்பாளும் வீரை என்பாளும் ஆகிய இருமகளிருளராயினர் காண்; ஆங்கு அவர் தம்மை அங்க நாட்டு அகவயின் கச்சயம் ஆளும் கழற்கால் வேந்தன் துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன்-அங்ஙனம் இருந்த நின்னுடன் பிறந்த மகளிரிருவரையும் அங்க நாட்டினகத் தமைந்த கச்சயம் என்னும் குறு நிலத்தை ஆளும் வீரக்கழலணிந்த துச்சயன் என்னும் வேந்தன் ஒருவனே வாழ்கைத் துணைவியராக மணந்து கொண்டனன்; ஆங்கு அவன் அவருடன் அகல் மலையாடிக் கங்கைப் பேரியாற்று அடைகரை இருந்துழி-அங்கு அத் துச்சய மன்னன் தன் மனைவியராகிய தாரையோடும் வீரையோடும் அகன்ற மலையிடத்தே சென்று விளையாட்டயர்ந்து கங்கை என்னும் பேரியாற்றின் நீரடை கரையின்கண் ஒரு பொழிலின்கண் இளைப்பாறி இருந்த பொழுது; மறவணம் நீத்த மாசு அறு கேள்வி அறவணன் ஆங்கு அவன் பால் சென்றோனை- தீவினையின் தன்மை முழுவதையும் துடைத்தொழிந்த குற்றமற்ற பிடகநூற் கேள்வியையுடைய அறவண வடிகள் என்பார் அக்கரையிடத்திருந்த துச்சயமன்னன்பால் வந்த வரை நோக்கி; ஈங்கு வந்தீர் யார் என்று எழுந்தவன்-இவ்விடத்திற்கு வந்துற்ற நீர் யாவிரோ என்று வினவி எழுந்து எதிர் சென்றவன்; பாங்கு உளி மாதவன் பரதம்பணிதலும் அவருடைய அறிவொளி திகழும் திருவுருவத்தை நோக்கி இவர் அறத்தின் திருவுருவமே ஆயவர் என்று நினைத்து அம் மாதவருடைய திருவடியிலே வீழ்ந்து வணங்கா நிற்றலும்; என்க.

(விளக்கம்) பிரமதத்த முனிவனை முற்பிறப்பிலே காதலன் பிறப்புங்காட்டாயோ என்றிரந்தாய்க்கு அச் செய்தியை மறுமையில் அரும்பெருந் தெய்வம் அறிவுறுத்தும் என்றொழிந்தான் அல்லனோ அதற்கேற்ப யான் இதுகாறும் இயம்பியது நின் கணவனுடைய செய்தியாம். அதுவே அன்றி யான் நினக்கு அறிவுறுத்தும் செய்தியும் உள அவற்றையும் கேள் என்பதுபட இன்னும் கேளாய்! என அருள் கெழுமிய அத் தெய்வம் உள்ளி உள்ளி அறிவுறுத்த வேண்டிய வெல்லாம் அறிவுறுத்துகின்றது என்க. நீ இலக்குமி என மாறுக. நீ முற்பிறப்பில் இலக்குமியாயிருந்தனை இதனை நீயே அறிகுதி என்பது இதன் குறிப்பு. தாரையும் வீரையும் என்னுமிருவரும் நின் தவ்வையராயிருந்தனர் என வழி மொழியுமாற்றால் கூறிக் கொள்க. அங்க நாட் டகவயிற் கச்சயம் எனவே கச்சயம் அங்க நாட்டிலமைந்துள்ள குறுநிலப் பகுதி என்பதாயிற்று. கச்சயம் ஒரு நகரம் எனினுமாம்.

அவருடன்- தாரையும் வீரையும் ஆகிய மனைவியரிருவருடனும் மலையில் விளையாடி என்க. வந்தவுடன் ஈங்கு வந்தீர் யார் என்று எழுந்து சென்று அவர் பாங்கு உள்ளி மாதவன் என்றுணர்ந்து அவன் பாதம் பணிதலும் என்க. பாங்கு உளி என்புழி உள்ளி-உளி என விகாரம் எய்தி நின்றது.

இதுவுமது

61-70: ஆதி......தொழுமென

(இதன் பொருள்) ஆதி முதல்வன் அறவாழி ஆள்வோன்-புத்தர்களுக்கெல்லாம் தலைவனாகிய புத்தபெருமானும் தனது அறவாழியையுருட்டி அறிஞர் உலகத்தைத் தன் அருளாட்சியின் கட்படுத்து ஆள்கின்றவனும், ஆகிய நம்மிறைவன்; மக்களை மாதுயர் எவ்வம் நீக்கி-மாந்தரினத்திற்குப் வெகுளி மயக்கங்களாகிய பெரிய துன்பங்களைப் போக்கி; விலங்கும் தம்முள் வெரூஉம் பகைநீக்கி உடங்கு உயிர் வாழ்க என்று- விலங்கினங்களும் தம்முள் ஒன்றினை ஒன்று அஞ்சுதற்குக் காரணமான தமதுட்பகை களைந்து அன்பினாலே ஒன்றி இன்புற்று வாழ்க என்னும் தனது கருணாபாவனை காரணமாக; உள்ளம் கசிந்து உக-கேட்போர் உள்ளமுருகி ஒழுகுமாறு; தொன்று காலத்து நின்று அறமுரைத்த குன்றம் மருங்கில் பழைய காலத்திலே ஏறி நின்று தன் மெய்க்காட்சிகளாகிய அருளறத்தை மாந்தர்க்கு அறிவுறுத்திய இந்த மலையின் மேலே; குற்றம் கெடுக்கும் பாத பங்கயம் கிடத்தலின்- கண்டவர்களின் மனமாசு தீர்க்கும் அப் பெருமானுடைய திருவடித்தாமரைகளின் சுவடு பதிந்து கிடத்தலாலே; ஈங்கு இது பாத பங்கய மலை எனும் பெயர்த்து ஆயது- இவ்விடத்தே உள்ள இந்த மலை, பாதபங்கய மலை என்னும் பெயர் உடையதாயிற்று; ஈங்கு தொழுது வலம் கொள வந்தேன்- இம் மலையை யான் தொழுது வலம் செய்து வணங்கவே இங்கு வந்துள்ளேன்; இப் பழுது இல் காட்சியீர் நீயிரும் தொழும் என-இந்த அருளறமாகிய குற்றமற்ற மெய்க் காட்சியையே மேற்கொண்டு இல்லறத்தே நிற்கின்ற நீவிரும் எம்மோடு வலம் வந்து மலையைக் கைதொழுது உய்யுங்கோள் என்று அறிவுறுத்துதலாலே என்க.

(விளக்கம்) ஆதி முதல்வன் என்றது கௌதம புத்தரை. அறம் முதலும் முடிவு மற்றது ஆகலின் அதனை முதலும் முடிவுமற்ற சக்கரமாகக் குறிப்புவமம் செய்வது நூனெறி வழக்கமாகும். தனது அறவாழியாலே அறிஞர் உலகத்தை ஆளுபவன் என்க. எவ்வம் என்றது ஆகு பெயராக அதற்குக் காரணமாகிய பிறப்பின் மேனின்றது. என்னை? பிறந்தோருறுவது பெருகிய துன்பம் என்பது புத்தருடைய மெய்மைகளுள் முதலாவதாதலறிக. அதனை நீக்குதலாவது. விசுத்தி மார்க்கத்தே செலுத்தி விடுவது.

விலங்குந் தம்முள் வெரூஉம் பகைநீங்கி
உடங்குயிர் வாழ்கவென் றுள்ளங் கசிந்து
.........................................அறமுரைத்த

என நிகழும் இதனோடு

எல்லாவுயிரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே

எனவரும் தாயுமானார் திருவாக்கினை ஒப்பு நோக்கி யுணர்க.

அன்பினாலே உடங்குயிர் வாழ்க என்று

என்க தொன்று காலம்- பழைய காலம்.

பாதபங்கயம் என்றது புத்தருடைய திருவடிச் சுவடுகளை.

துச்சயனும் மனைவிமாரும், பௌத்த சமயத்தைச் சார்ந்த இல்லறத் தாராதலின் அவரைப் பழுதில் காட்சியீர்! என்று அறவண அடிகள் விளித்தனர் என்க.

அப் பாத பங்கயம் தன்னை கண்டோர் காம வெகுளி மயக்கங்களைக் கெடுக்கும் தெய்வத்தன்மையுடைய தாகலின் நீயிருந் தொழும் என்றார் என்க.

இதுவுமது

71-80: அன்றவன்..............உரையார்

(இதன் பொருள்) அன்று அவன் உரைத்த அவ்வுரை பிழையாது சென்று கைதொழுது சிறப்புச் செய்தலின்-அற்றை நாள் அவ்வறவணவடிகள் பணிந்த மொழி பிழைபடாவண்ணம் தாரையும் வீரையும் ஆகிய நின் தமக்கையரிருவரும் கணவனும் அவ்வடிகளார் பின் சென்று அப் பாதபங்கயமலையை வலம் வந்து கை கூப்பித் தொழுது அதற்கு விழா வெடுத்தலாலே; மாதவியாகியும் சுதமதியாகியும் கோதை அம்சாயல் நின்னோடு கூடினர்-அவரிருவருள் தாரை யென்பவள் மாதவியாகியும் வீரை சுதமதியாகியும் வேறு வேறிடத்துப் பிறந்து வைத்தும் அந் நல்வினைப் பயனாக அருளறம் பூண்டு நினைக்குத் தாயாகவும் செவிலித்தாயாகவும் மணிமேகலை நல்லாய் நின்னோடு அன்புத் தொடர்புடையராயினர் காண்! அறிபிறப்பு உற்றனை அறம்பாடு அறிந்தனை-இனி நீ தானும் முற்செய் நல்வினைப் பயனாக முற்பிறப்பினை அறியத்தகுஞ் சிறப்புடைய பிறப்பினையும் பெற்றிருக்கின்றனை அதன் மேலும் அருளறத்தின் பெருமைகளையும் நன்கறிந்துள்ளனை அல்லையோ! பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை-இனி எதிர் காலத்திலே இவ்வருளறமல்லாத பிற அறங்களைக் கூறுகின்ற பல்வேறு சமயக்கணக்கர் தந் துணி பொருள்களையும் நீயே கேட்டுத் தெரிந்து கொள்குவை; அல்லியங்கோதை- மணிமேகலையே நீ; பல்வேறு சமயப்படிற்றுரை எல்லாம் கேட்குறும் அந்நாள் உனக்கு பல்வேறு  வகைப்பட்ட சமயவாதிகளும் தத்தம் சமயப்பொருளாக நினக்குக் கூறுகின்ற பொய் மொழிகளையெல்லாம் நீ அவ்வவர் பாற் சென்று வினவித் தெரிய முயலுகின்ற உனக்கு; யாவரும் இளையன் வளையள் என்று விளைபொருள் உரையார்-அச் சமயக் கணக்கர் எல்லாம் இவள் இளைமையுடையோள் என்றும் வளையலணியும் பெண்பாலினள் என்றும் கருதித் தத்தம் சமயத்தின் துணிபொருளாகிய சித்தாந்தத்தைக் கூறுதற்கு உடன்படார் ஆதலாலே; என்க.

(விளக்கம்) அவன்: அறவணன். அவ்வுரை என்றது அறவணவடிகள் நீயிரும் தொழும் என்று பணிந்த மொழியை. சிறப்பு- விழா. இனி அறவணவடிகளார்க்கு உண்டி முதலியன கொடுத்துச் சிறப்புச் செய்தலின் எனலுமாம். அவ்வறப் பயன் விளைதலின் மாதவியும் சுதமதியும் ஆகி, நின்னொடுங் கூடி அருளறம்பூண்டனர் என்பது கருத்து. அறிபிறப்புற்றனை அறம்பாடறிந்தனை ஆதலின் நின் முற்பிறப்பைப் பற்றி யான் கூற வேண்டியதில்லை என்றவாறு. படிற்றுரை- பொய்யுரை. வஞ்சகவுரையுமாம். வளையோள் என்றது பெண்பாலினள் என்றவாறு.

மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு மந்திரம் செவியறி வுறுத்துதல்

80-88: வேற்றுரு..........இழிந்து

(இதன் பொருள்) வேற்றுருவு எய்தவும் அந்தரம் திரியவும் ஆக்கும் இவ் அருந்திறன் மந்திரம் கொள்க என-இத்தகைய இடையூறுண்டாகாமைக்கும் யாண்டும் இனிதிற் போக்குவரவு புரிதற்கும் உதவியாக நின்னை வேற்றுருவம் எடுத்துக் கொள்ளவும் விசும்பினூடு திரியவும் செய்யும் பெறற்கரிய தெய்வத்தன்மையையுடைய இந்த மந்திரங்களை நின் செவியினூட் கொள்வாயாக என்று கூறி; வாய்மையின் ஓதி-அம் மந்திரம் அவட்கு வாய்க்குந்தன்மையோடு செவியறிவுறுத்து; மதி நாள் முற்றிய மங்கலத் திருநாள் பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன் திருஅறம் எய்துதல் சித்தம் என்று நீ உணர்- பின்னரும் மணிமேகலைக்குத் தேற்றுரை கூறுகின்ற அந்த மணிமேகலா தெய்வம் நல்லாய்! திங்களும் விசாகநாளும் முதிர்ந்து பொருந்தும் மங்கலமுடைய வைகாசித் திங்கள் நிறைமதி நன்னாளிலே இவ்வுலகியலறிவு தூர்ந்துபோம்படி அவற்றை நீ இகழ்ந்து கைவிட்டு மெய்மூலம் பெருந்தியிருந்து மாரனை வென்று வீரனாகத் திருவாய் மலர்ந்தருளிய திருவறம் தலைப்படுதல் ஒருதலையாம் என்று நீ உணர்ந்து கொள்வாயாக என்று பணிந்து அவ்விடத்தினின்றம் வானத்திலே எழுந்து உயர்ந்து பின்னரும்; மறந்ததும் உண்டு என மறித்து ஆங்கு இழிந்து- நங்காய்! நினக்குக் கூறவேண்டியது ஒன்றனை யான் மறந்து விட்டதுமுண்டு என்று கூறக் கொண்டு மீண்டும் அவ்விடத்திலேயே இழிந்து வந்து என்க.

(விளக்கம்) வேற்றுருக்கோடல் சமயக் கணக்கரிடம் மாதவன்வடிவிற் சென்று வினாதற்கு மட்டுமின்றி வேறு செவ்விகளினும் மணிமேகலைக்கு வேண்டப்பட்டமையின் மந்திரங் கொடுத்தற்கு விளை பொருள் உரையார் என்றது ஞாபகவேதுவாந்துணையே ஆயிற்று.

பொதுவறிவு-உலகியலறிவு. புலம்-மெய்க்காட்சி. மாதவன் புத்தன். திருவறம் என்றது, அருளறத்தை-அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லையாகலின் அதனையே செல்வம் ஆக்கி, திருவறம் என்றாள். என்னை? ஆகவே மக்களாய்ப்பிறந்தோர் எய்துதற்குரிய சிறப்புச் செல்வமாகவும், ஏனைய செல்வமெல்லாம் பொதுச் செல்வமாம் ஆதலின் என்க, இதனை.

அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள                (241)

எனவும்,

நல்லாற்றா னாடி அருளாள்க பல்லாற்றான்
தேரினும் அஃதே துணை            (242)

எனவும் வரும் தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் திருவாக்கானு முணர்ந்து கொள்க.

சித்தம்-ஒருதலை. இது மணிமேகலையை அத் தெய்வம் அந் நெறியிலூக்குவித்தற்குக் கூறியபடியாம்.

நின் பதி என்றது-புகார் நகரத்தை. விடை கொடுத்து விசும்பிலேறிய தெய்வம் மீண்டும் யான் மறந்ததும் உண்டு எனத் தன் பிழையைக் கூறிக் கொண்டு இழிந்து வந்தது என்னுமிது, அத் தெய்வம் அவள்பால் வைத்த அருட்பெருமையை நன்கு விளக்குதலறிக. இது, தண்டமிழாசான் சாத்தனாருடைய புலமை வித்தகத்தையும் விளக்குதலுணர்க.

மணிமேகலா தெய்வம் மீண்டும் பசியறுக்கும் மந்திரங்கொடுத்தல்

89-93: சிறந்த........தானென்

(இதன் பொருள்) சிறந்த கொள்கைச் சேயிழை கேளாய்- மக்கட் பிறப்பிற்குரிய சிறந்த கொள்கையை மேற்கொண்டொழுகுகின்ற சேயிழாய் இது கேள்!; மக்கள் யாக்கை உணவின் பிண்டம்-மக்களுடைய உடம்பானது உணவினாலியன்றதொரு தொகுதியே ஆதலால் இப் பெரு மந்திரம் இரும்பசி அறுக்கும் என்று-இப் பொழுது யான் நினக்குச் செவியறிவுறுக்கும் இந்த மந்திரமானது நினக்கெய்தும் பெரிய பசியைத் தீர்க்குமொரு தெய்வத்தன்மை யுடைத்து இதுவும் நினக்கின் றியமையாததாம், ஆகவே இதனையும் ஏற்றுக் கொள்ளுதி! என்று சொல்லி; ஆங்கு அது கொடுத்து ஆங்கு-அவ்வாறே அம் மந்திரத்தையும் செவியறிவுறுத்த பொழுதே; நெடுந்தெய்வம் அந்தரம் எழுந்து ஆங்கு நீங்கியது- நெடிய புகழுடைய அம் மணிமேகலா தெய்வம் வானத்திலே எழுந்து போய் அவ் வானத்தினூடேயே மறைந்து போயிற்று; என்பதாம்.

(விளக்கம்) மக்கள் யாக்கை உணவின் பிண்டம் என்றது நீயும் மக்கட் பிறப்பினள் ஆதலின் உனக்குப் பசித்துன்பம் அடிக்கடி வந்துறும். ஆதலின் அதற்கும் ஒரு பாதுகாப்பு வேண்டும் என்றவாறு. உண்டி முதற்றே உணவின் பிண்டம் என்பது புறநானூறு. மந்திரங்களுள் தலைசிறந்த மந்திரம் இதுவே என்பது தோன்ற, பெருமந்திரம் என்று கூறிற்று.

இனி, இக் காதையினை ஆயிழை ஆயினள் பெற்றியும் ஐதென வந்து தோன்றிய தெய்வம் வணங்குவோள் முன்னர்ப் பொருந்தி உணர்ந்தேன் யாங்குளன் என்றலும் கேளாய் புலந்தாய் இராகுலன் வணங்குழித் திரிவோன் உருட்டி வருவோன் தோன்றலும் கண்டனை உற்றனை இறைஞ்ச இராகுலன் வெகுளலும் நீ வாய் புதையா, நல்கூர்ந்தனை என்று அவனொடு பாத்தியன் பாதம் பணிந்து கொணர்கேம் உண்டியாம் குறிப்பினம் என்றலும் கொணர்கென உண்டருளிய அறம் அறுத்திடும், உதயகுமரன் உன்இராகுலன், உன்னைத் திறம்படச் செய்தேன், கேளாய் நின் தவ்வையராவோர் தாரையும் வீரையும் சிறப்புச் செய்தலின் மாதவி யாகியும் சுதமதியாகியும் நின்னொடு கூடினர், உற்றனை அறிந்தனை கேட்குவை உரையார் எய்தவும் திரியவும் ஆக்கும் இம் மந்திரம் கொள்கென ஓதி, திருநாள் அறம் எய்துதல் சித்தம் உணர் நீ பதிப் புகுவாய் என்று எழுந்து ஓங்கி உண்டென மறித்து இழிந்து கேளாய் பிண்டம் இம் மந்திரம் பசி அறுக்கும் என்று கொடுத்து எழுந்து தெய்வம் நீங்கியது என இயைத்திடுக.

மந்திரம் கொடுத்த காதை முற்றிற்று.
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 09:08:00 AM
11. பாத்திரம் பெற்ற காதை

பதினொன்றாவது மணிமேகலைக்குத் தீவதிலகை கோமுகி என்னும் பொய்கையிலெழுந்த பாத்திரம் கொடுத்த பாட்டு

அஃதாவது-மணிமேகலா தெய்வம் மந்திரம் கொடுத்து மறைந்த பின்னர்த் தீவதிலகை என்னும் தெய்வம் மணிமேகலை முன்வந்து தோன்றி நீ யார் என்று வினவி அறிந்த பின்னர்த் தானே அம் மாமணிப் பீடிகையின் காவற்றெய்வம் எனத் தன்னையும் அறிவித்து, அங்குள்ள கோமுகி என்னும் கொழுநீரிலஞ்சியின் வைகாசித் திங்கட் பூரணை நாளில் ஆபுத்திரன் கை அமுத சுரபி நீரினின்றும் மேலெழுந்து ஆண்டுக் கொருமுறை தோன்றுவதாம் அந் நன்னாள் இந்த நாளே என்று சொல்லி அப் பாத்திரம் நினக்குக் கிடைக்கும் என, மணிமேகலை அத் தீவதிலகையொடு அப்பொய்கையை வலம் வந்து அதனைப் பெறும் கோட்பாட்டோடு நிற்ப அம் மணிமேகலையின் கையில் அப்பொய்கையிலெழுந்த அமுதசுரபி வந்துற்றது. இவ்வாற்றால் மணிமேகலை அமுதசுரபியைப் பெற்ற செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு.

இனி இதன்கண் தீவதிலகை மணிமேகலை முன் தோன்றி நீ யார் என்று வினவிய பொழுது அவள் விடையிறுத்தலும் தன் வரலாறும் பயனும் விளம்புதலும், மணிமேகலை அன்னாய் நீ யார் என்று தீவதிலகையை வினவியபொழுது அவள்தன் வரலாறு கூறுதலும், கோமுகி என்னும் கொழுநீரிலஞ்சியினின்று ஆபுத்திரன் கை அமுத சுரபி மேலெழுந்து தோன்றும் நாள் இதுவே, அதன் சிறப்பெல்லாம் நின்னூரின்கண் அறவணனடிகளார் நினக்கு அறிவுறுத்துவர் என்றும் அப் பாத்திரம் இப்பொழுது நினக்குக் கிடைக்கும் என்று இயம்பி அப் பொய்கையை இருவரும் வலம் வந்து வணங்கி நிற்றலும் கையில் வந்துறுதலும் அது பெற்றபின்னர் மணிமேகலை மாத்திரையின்றி மனமகிழ் வெய்திய புத்தபெருமானை ஏத்துபவள் மாரனை வெல்லும் வீரநின்னடி எனத் தொடங்கி என்னாவிற் கடங்காது என்று முடிக்கும் வழிபாட்டுச் செய்யுட் பகுதியும், தீவதிலகை பசிப்பிணியின் கொடுமையை மணிமேகலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டோடு அறிவுறுத்துதலும், செய்ந்நெறி வாழ்கையின் இயல்பு கூறுதலும் அதுகேட்ட மணிமேகலை அமுதசுரபி கொண்டு நாவந்தீவிடத்தே சென்று பசிப்பிணியுற்றோர்க் கெல்லாம் உண்டி கொடுத்து அருளறம் ஓம்ப விதுப்புற்றுக் கூறும் கூற்றுக்களும் மணிமேகலை அமுத சுரபியோடு வான்வழியே இயங்கி வந்து தன் வரவு நோக்கி மயங்கும் மாதவி முன்னர் வந்து தோன்றி அவளும் சுதமதியும் வியக்குமாறு அற்புத மொழிவாயிலாய் அவர்தம் முற்பிறப்பு வரலாறு கூறுவதும் இவையெல்லாம் வியத்தகுமுறையில் கூறப்படுகின்றன.

மணிமேகலா தெய்வம் நீங்கிய பின்னர்
மணிபல்லவத்திடை மணிமேகலை தான்
வெண் மணல் குன்றமும் விரி பூஞ்சோலையும்
தண் மலர்ப்பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கிக்
காவதம் திரிய கடவுள் கோலத்துத்
தீவதிலகை செவ்வனம் தோன்றிக்
கலம் கவிழ் மகளிரின் வந்து ஈங்கு எய்திய
இலங்கு தொடி நல்லாய்! யார் நீ? என்றலும்
எப் பிறப்பு அகத்துள் யார் நீ என்றது
பொன் கொடி அன்னாய்! பொருந்திக் கேளாய்!  11-010

போய பிறவியில் பூமி அம் கிழவன்
இராகுலன் மனை யான் இலக்குமி என் பேர்
ஆய பிறவியில் ஆடல் அம் கணிகை
மாதவி ஈன்ற மணிமேகலை யான்
என் பெயர்த் தெய்வம் ஈங்கு எனைக் கொணர இம்
மன் பெரும் பீடிகை என் பிறப்பு உணர்ந்தேன்
ஈங்கு என் வரவு இது ஈங்கு எய்திய பயன் இது
பூங் கொடி அன்னாய் யார் நீ? என்றலும்
ஆய் இழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த
தீவதிலகை செவ்வனம் உரைக்கும்  11-020

ஈங்கு இதன் அயல் அகத்து இரத்தினத் தீவத்து
ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை
அறவியங் கிழவோன் அடி இணை ஆகிய
பிறவி என்னும் பெருங் கடல் விடூஉம்
அறவி நாவாய் ஆங்கு உளது ஆதலின்
தொழுது வலம் கொண்டு வந்தேன் ஈங்கு
பழுது இல் காட்சி இந் நல் மணிப் பீடிகை
தேவர் கோன் ஏவலின் காவல் பூண்டேன்
தீவதிலகை என் பெயர் இது கேள்
தரும தலைவன் தலைமையின் உரைத்த  11-030

பெருமைசால் நல் அறம் பிறழா நோன்பினர்
கண்டு கைதொழுவோர் கண்டதன் பின்னர்
பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி
அரியர் உலகத்து ஆங்கு அவர்க்கு அறமொழி
உரியது உலகத்து ஒருதலையாக
ஆங்கனம் ஆகிய அணி இழை! இது கேள்
ஈங்கு இப் பெரும் பெயர்ப் பீடிகை முன்னது
மா மலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சி
இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து  11-040

ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்ற பின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும்
மா பெரும் பாத்திரம் மடக்கொடி! கேளாய்
அந் நாள் இந் நாள் அப் பொழுது இப் பொழுது
நின்னாங்கு வருவது போலும் நேர் இழை!
ஆங்கு அதில் பெய்த ஆருயிர்மருந்து
வாங்குநர் கைஅகம் வருத்துதல் அல்லது
தான் தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்  11-050

நறு மலர்க் கோதை! நின் ஊர் ஆங்கண்
அறவணன் தன்பால் கேட்குவை இதன் திறம்
என்று அவள் உரைத்தலும் இளங்கொடி விரும்பி
மன் பெரும் பீடிகை தொழுதனள் வணங்கி
தீவதிலகை தன்னொடும் கூடி
கோமுகி வலம் செய்து கொள்கையின் நிற்றலும்
எழுந்து வலம் புரிந்த இளங்கொடி செங் கையில்
தொழும்தகை மரபின் பாத்திரம் புகுதலும்
பாத்திரம் பெற்ற பைந் தொடி மடவாள்
மாத்திரை இன்றி மனம் மகிழ்வு எய்தி  11-060

மாரனை வெல்லும் வீர! நின் அடி
தீ நெறிக் கடும் பகை கடிந்தோய்! நின் அடி
பிறர்க்கு அறம் முயலும் பெரியோய்! நின் அடி
துறக்கம் வேண்டாத் தொல்லோய்! நின் அடி
எண் பிறக்கு ஒழிய இறந்தோய்! நின் அடி
கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய்! நின் அடி
தீ மொழிக்கு அடைத்த செவியோய்! நின் அடி
வாய்மொழி சிறந்த நாவோய்! நின் அடி
நரகர் துயர் கெட நடப்போய்! நின் அடி
உரகர் துயரம் ஒழிப்போய்! நின் அடி  11-070

வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு
அடங்காது! என்ற ஆய் இழை முன்னர்
போதி நீழல் பொருந்தித் தோன்றும்
நாதன் பாதம் நவை கெட ஏத்தித்
தீவதிலகை சேயிழைக்கு உரைக்கும்
குடிப் பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும் புணை விடூஉம்
நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும்
பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப் பிணி என்னும் பாவி அது தீர்த்தோர்  11-080

இசைச் சொல் அளவைக்கு என் நா நிமிராது
புல் மரம் புகையப் புகை அழல் பொங்கி
மன் உயிர் மடிய மழைவளம் கரத்தலின்
அரசு தலைநீங்கிய அரு மறை அந்தணன்
இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன்
அரும் பசி களைய ஆற்றுவது காணான்
திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன்
இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர்
வந்து தோன்றிய வானவர் பெருந்தகை
மழை வளம் தருதலின் மன் உயிர் ஓங்கி  11-090

பிழையா விளையுளும் பெருகியது அன்றோ?
ஆற்றுநர்க்கு அளிப்போர் அறம் விலைபகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உயிர்க் கொடை பூண்ட உரவோய் ஆகி
கயக்கு அறு நல் அறம் கண்டனை என்றலும்
விட்ட பிறப்பில் யான் விரும்பிய காதலன்
திட்டிவிடம் உணச் செல் உயிர் போவுழி  11-100

உயிரொடு வேவேன் உணர்வு ஒழி காலத்து
வெயில் விளங்கு அமயத்து விளங்கித் தோன்றிய
சாதுசக்கரன் தனை யான் ஊட்டிய
காலம் போல்வதோர் கனா மயக்கு உற்றேன்
ஆங்கு அதன் பயனே ஆர் உயிர் மருந்து ஆய்
ஈங்கு இப் பாத்திரம் என் கைப் புகுந்தது
நாவலொடு பெயரிய மா பெருந் தீவத்து
வித்தி நல் அறம் விளைந்த அதன் பயன்
துய்ப்போர் தம் மனை துணிச் சிதர் உடுத்து
வயிறு காய் பெரும் பசி அலைத்தற்கு இரங்கி  11-110

வெயில் என முனியாது புயல் என மடியாது
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து முன்
அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால்
ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கி
தீம் பால் சுரப்போள் தன் முலை போன்றே
நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சைப் பாத்திரத்து
அகன் சுரைப் பெய்த ஆருயிர்மருந்து அவர்
முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன் என
மறந்தேன் அதன் திறம் நீ எடுத்து உரைத்தனை
அறம் கரியாக அருள் சுரந்து ஊட்டும்  11-120

சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது
ஆங்கனம் ஆயினை அதன் பயன் அறிந்தனை
ஈங்கு நின்று எழுவாய் என்று அவள் உரைப்பத்
தீவதிலகை தன் அடி வணங்கி
மா பெரும் பாத்திரம் மலர்க் கையின் ஏந்திக்
கோமகன் பீடிகை தொழுது வலம் கொண்டு
வானூடு எழுந்து மணிமேகலை தான்
வழு அறு தெய்வம் வாய்மையின் உரைத்த
எழு நாள் வந்தது என் மகள் வாராள்!
வழுவாய் உண்டு! என மயங்குவோள் முன்னர்  11-130

வந்து தோன்றி அவர் மயக்கம் களைந்து
அந்தில் அவர்க்கு ஓர் அற்புதம் கூறும்
இரவிவன்மன் ஒரு பெரு மகளே!
துரகத் தானைத் துச்சயன் தேவி!
அமுதபதி வயிற்று அரிதின் தோன்றி
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்
அவ்வையர் ஆயினீர் நும் அடி தொழுதேன்
வாய்வதாக மானிட யாக்கையில்
தீவினை அறுக்கும் செய் தவம் நுமக்கு ஈங்கு
அறவண அடிகள் தம்பால் பெறுமின்  11-140

செறி தொடி நல்லீர்! உம் பிறப்பு ஈங்கு இஃது
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும்
மா பெரும் பாத்திரம் நீயிரும் தொழும்! என
தொழுதனர் ஏத்திய தூமொழியாரொடும்
பழுது அறு மாதவன் பாதம் படர்கேம்
எழுக என எழுந்தனள் இளங்கொடி தான் என்  11-146

உரை

மணிமேகலையின் முன்னர்த் தீவதிலகை என்னும் காவற் றெய்வம் வந்து தோன்றி நீ யார்? என வினாதல்

1-8: மணிமே...........என்றலும்

(இதன் பொருள்) மணிமேகலா தெய்வம் நீங்கிய பின்னர்- மணிமேகலா தெய்வம் மீண்டும் வந்து மந்திரம் கொடுத்து வானத்திலேறி மறைந்து போன பின்பு; மணிமேகலை தான் மணிபல்லவத்திடை வெண் மணல் குன்றமும் விரிபூஞ் சோலையும் தண் மலர்ப் பொய்கையும் பல்லவத் தீவின்கண்ணுள்ள வெள்ளிய மணற்குன்றுகளினும் மலர்ந்த பூம்பொழில்களிடத்தும் குளிர்ந்த நீர்ப் பூக்கள் மலர்ந்துள்ள இயற்கை நீர்நிலை மருங்குகளினும் சென்று சென்று கவலை சிறிதுமின்றி ஆங்காங்கு நெடும்பொழுது தங்கியிருந்து அவற்றின் அழகைக் கூர்ந்து நோக்கி மகிழ்ந்து; காவதம் திரிய-ஒரு காததூரம் சுற்றித் திரியா நிற்ப; தீவதிலகை கடவுள் கோலத்துச் செவ்வனம் தோன்றி-அம் மணிமேகலை முன்னர் அத் தீவத்துக் காவற்றெய்வமாகிய தீவதிலகை என்பாள் தனக்கியன்ற கடவுள் உருவத்தோடு நன்கு எய்திய இலங்கு தொடி நல்லாய் நீ யார் என்றலும்-மரக்கலம் கவிழாநிற்ப அதனினின்றும் உய்ந்து கரையேறினாள் ஒரு மகள் போன்று மக்கள் வழக்கற்ற இத் தீவினிடையே வந்து இவ்விடத்தை அடைந்த நங்கையே நீ யார்? கூறுதி என்று அத் தெய்வம் வினவாநிற்ப என்க.

(விளக்கம்) மணிமேகலை புத்தபீடிகையைத் தொழுது பழம் பிறப்புணர்ச்சி கைவந்தமையானும் மாபெருந்தெய்வமாகிய மணிமேகலா தெய்வம் தன்னைக் காப்பதனைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பது அதன் செயலாலும் சொல்லாலும் அறிந்துகொண்டமையானும் அத் தெய்வம் உணர்த்திய செய்திகளானும் இப்பொழுது சிறிதுந் துன்பமற்றவளாயினள் என்னுமிச் செய்தியை அவள் குன்றமும் பொழிலும் பிறவுமாகிய இடந்தோறும் இடந்தோறும் சென்று சென்று ஆண்டாண்டு நின்று நின்று அத் தீவின் அழகை நுகருமாற்றால் இப் புலவர் பெருமான் இனிது நம்மனோர்க்குக் குறிப்பாக அறிவுறுத்தும் நுணுக்கம் உணர்க. தீவதிலகை தெய்வவுருவத்தோடு எதிர் தோன்றி நீ யார் என்று வினவியதற்கும் மேல் அவள் வினவெதிர் வினாவாக விடை இறுக்கும் சொற்றிறத்தானும் அவள் இப்பொழுது எய்தியிருக்கின்ற புதிய நிலைபுலப்படும்.

தாழ்ந்தனள்- தங்கி நின்று நோக்கி என்றமையால் அவற்றின் அழகையே அவள் நோக்கினாள் என்பது பெற்றாம். ஆராமையாலே அங்கங்கே நின்று நின்று நோக்கினள் என்பார் தாழ்ந்தனள் நோக்கி என்றார். இவ்வழகுக்காட்சியி லீடுபட்டு அவள் சுற்றிய தூரம் ஒரு காவதம் இருக்கும் என்பார் காவதந்திரிய என்றார்.

தீவதிலகை அம்மணிபல்லவத்துக் காவற்றெய்வம். கலம் கவிழ்ந்த காலை அதனினின்றும் உய்ந்து கரையேறிய மகள் போல என்றது அத் தகையோரையன்றி மாந்தர் வருதலில்லாத தீவிற் றமியளாய்க் காணப் படுதற்கு உவமை எடுத்தோதினள். அவள் நிலைமை அங்ஙனமில்லாமையால் உவமை யாகவே கூறினள்.

மணிமேகலை தீவதிலகைக்கு மறுமொழி கூறுதல்

9-18: எப்பிறப்பு...........என்றலும்

(இதன் பொருள்) பொன் கொடி அன்னாய்-அது கேட்ட மணிமேகலை தீவதிலகையைச் செவ்வனம் நோக்கிக் காமவல்லி போன்ற கவினொடு தோன்றிய அன்னையே நீ; யார் நீ என்றது எப்பிறப்பு அகத்துள்- நீ என்னை யார் என்று அறிந்து கொள்ள விரும்பி வினவியது என்னுடைய பிறப்புக்களுள் வைத்து எந்தப் பிறப்பைச் சுட்டி வினவப்பட்டதோ! யானறிகிலேன் ஆதலின் யான் அறிந்துள எனது முற்பிறப்பினும் இப்பிறப்பினும் என்னை இன்னள் இன்னள் என்று தனித்தினியே விளம்புவல்; பொருந்திக் கேளாய்-நீ தானும் மனமியைந்து கேட்டருள்வாயாக! யான் போய் பிறப்பில் பூமியங்கிழவன் இராகுலன் மனைவி என்பேர் இலக்குமி-யான் எனது முற்பிறப்பிலே நிலத்தை ஆளும் உரிமையுடைய இராகுலன் என்னும் அரசிளங் குமரனுடைய மனைவியாயிருந்தேன், அப் பிறப்பில் இலக்குமி என்பதே என் பெயராகும்; ஆய பிறவியில்-மாறிப்பிறந்ததாகிய இப் பிறப்பிலோ; யான் ஆடல் அம் கணிகை மாதவி ஈன்ற மணிமேகலை- யான் நாடகக் கணிகையாகிய மாதவி என்பவள் ஈன்ற மகளாகிய மணிமேகலை என்னும் பெயருடையேன் காண்! என் பெயர்த் தெய்வம் ஈங்கு எனைக் கொணர இம் மன் பெரும் பீடிகை என் பிறப்பு உணர்ந்தேன்-என் பெயரையுடையதாகிய மணிமேகலா தெய்வம் பூம்புகார் நகரத்திலிருந்து இம் மணிபல்லவத்தீவிற்கு எடுத்து வர யான் ஈண்டு நிலைபெற்றுள்ள பெருமை மிக்க மாமணிப் பீடிகையினாலே என் முற்பிறப்பினை உணர்ந்துள்ளேன் காண்!; இது ஈங்க என்வரவு இது ஈங்கு எய்திய பயன்-இதுவே இங்கே என்னுடைய வரவிற்குக் காரணம் இதுவே யான் இங்கு வந்தமையால் எய்திய பயனுமாம்; பூங்கொடி அன்னாய் நீ யார்? என்றறிய விரும்புகின்றேன் அறிவித்திடுவையோ? என்று வினவாநிற்ப என்க.

(விளக்கம்) யான் என் இரண்டு பிறப்புக்களை அறிந்துள்ளேன் அவற்றுள் எப் பிறப்பினை நீ வினவினை என்றவாறு. இரண்டையும் அறிவிப்பேன் கேள் என்கின்றனள். போய பிறவி-முற்பிறப்பு. ஆய-பிறவி-அது போய பின் ஆய பிறப்பு. அஃதாவது-இப் பிறப்பு ஆடலங்கணிகை- நாடகக்கணிகை. கணிகையர் பலதிறப்படுவர்; அவருள் மாதவி அகக் கூத்தாடும் கணிகை எனற்கு ஆடலங்கணிகை என்றாள். என் பெயர்த் தெய்வம் என்றது மணிமேகலா தெய்வத்தை. அத் தெய்வம் கொணருதலால் வந்தேன் பீடிகையைக் கண்டமையாலே பிறப்புணர்ந்தேன் என இரண்டற்கும் காரணம் தெரிந்தோதினள் மீண்டும் அத் தெய்வம் வினவாமைப் பொருட்டென்க. மணிமேகலையின் இம் மொழிகளில் கல்வி நிலைக்களனாகவும் செல்வம் நிலைக்களனாகவும் பிறந்த பெருமிதச் சுவை தோன்றுதலுணர்க.

தீவதிலகை மணிமேகலைக்குக் தன்னை அறிவித்தல்

1929: ஆயிழை........என் பெயர்

(இதன் பொருள்) ஆயிழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த தீவதிலகை செவ்வனம் உரைக்கும்-மணிமேகலையையும் அவள் பீடிகை கண்டு பிறப்புணர்ந்தமையையும் அறிந்து கொண்ட தீவதிலகை அவளை நன்கு மதித்தவளாய் அவள் வினாவிற்கு விளக்கமாக விடை கூறுவாள்; ஈங்கு இதன் அயலகத்து இரத்தின தீவத்து ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை- நங்காய்! இந்த மணிபல்லவத்தின் அணித்தாக இரத்தின தீவம் என்றொரு தீவுளது காண்! அதன்கணுள்ள மிகவும் உயர்ந்த சமந்தம் என்னும் மலையுச்சியின் மேலே; அறவியங் கிழவோன் அடியிணை ஆகிய-அருளறத்தை உரிமையாகவுடைய புத்த பெருமானுடைய திருவடியிணையின் சுவடாகிய; பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம் அறவி நாவாய் ஆங்கு உளது ஆதலின்-பிறவி என்கின்ற பெரிய துயர்க்கடலினின்றும் உயிர்களைக் கரை யேற்றி விடுகின்ற அறத்தன்மையுடைய மரக்கலம் ஆங்கோரிடத்தே உளதாகலின்; தொழுது துயர்க்கடலினின்றும் உயிர்களைக் கரை யேற்றி விடுகின்ற அறத்தன்மையுடைய மரக்கலம் ஆங்கோரிடத்தே உளதாகலின்; தொழுது வலங் கொண்டு வந்தேன்-அங்குச் சென்று அதனைக் கைதொழுது வலமுறைவந்து வணங்கி மீண்டு வந்தேன் காண்! பழுதுஇல் காட்சி இந்நல் மணிப்பீடிகை தேவர்கோன் ஏவலின் காவல் பூண்டோன்-குற்றமற்ற மெய்க்காட்சியை நல்கும் தெய்வத் தன்மையுடைய இந்த  அழகிய மணியாலியன்ற பீடிகையை இவ்விடத்தே இட்ட தேவேந்திர னுடைய பணி தலைமேற்கொண்டு காவற்றொழில் பூண்டுள்ளேன்; என் பெயர் தீவதிலகை-என்னடைய பெயர் தீவதிலகை என்பதாம் சொல்லி என்க.

(விளக்கம்) புத்த பீடிகையைக் கண்டுழியும் அருளறம் பூண்ட அறவோர்க்கன்றிப் பழம் பிறப்புணர்ச்சி உண்டாதலில்லை என்பது கீழ்நிலமருங்கில் நாக நாடாளும் இருவர் மன்னவர் ஒரு வழித் தோன்றி அதனைக் கண்டுழியும் அவ்விருவர்க்கும் பழம் பிறப்புணர்ச்சி உண்டோ காமையாலறியப்பட்டது(எட்டாங்காதை) எனவே, ஈண்டுத் தீவதிலகை மணிமேகலை இறுத்த விடையினால் இவள் மனப்பாட்டறம் என்னும் அருளற நெறியிற் பிறப்புக்கடோறும் அடிப்பட்டு வந்த நன்னர் நெஞ்சமுடையாள் என்று அவளைப் பெரிதும் மதித்து அவள்பால் சொல்லாட்டம் நிகழ்த்துகின்றாள் என்று உணர்த்தற்கு ஆயிழை தன் பிறப்பறிந்தமையறிந்த தீவதிலகை என வேண்டாதன விதந்து கூறி வேண்டியது முடித்தனர்.

இரத்தினதீவம் இலங்காதீவத்தில் ஒரு பகுதி என்றும், அஃது இக் காலத்தில் இரத்தினபுரி என்று வழங்கப்படுகின்றது என்றும், அதில் சமனொளி என்னும் பெயருடைய மலையும் அதன்கண் புத்தர் திருப்பதியும் உளதென்றும் அம் மலையைச் சிலர் சமந்தகூடம் என்றும் சிலர் சமனெலை யென்றும் வழங்குகின்றனர் என்றும், இந் நூலாசிரியரும் பின்னர் 28 ஆங் காதையில்(107-109) இதனை,

இலங்கா தீவத்துச் சமனொளி யென்னும்
சிலம்பினை யெய்தி வலங்கொண்டு மீளும்
தரும சாரணர்

எனறோதுதலானும் அம் மலையே ஈண்டுத் தீவதிலகையால் கூறப்படுவது என்றும் அறிஞர் கூறுகின்றனர்(இம் மலை இப்பொழுது ஆடம்ஸ் பீக் என்று ஆங்கிலத்திற் கூறப்படுகிற தென்றும்  கூறுவர்)

சமந்தம்-சமந்தம் என்னும் மலை. அறவி-அறத்தின் திருமூர்த்தி. கிழவன்-தலைவன்; புத்தன் என்க. பிறவியைக் கடல் என்றமையின் அடியிணையை நாவாய் என்றார். வந்தேன் என்றது ஈண்டிருந்து சென்று மீண்டு வந்தேன் என்றவாறு. தேவர்கோமானே இம் மாமணிப்பீடிகையை ஈங்கிட்டனன்; மேலும் அதற்குக் காவலாக என்னையும் ஈங்குறையப் பணித்தான் என்பது கருத்து.

தீவதிலகை மணிமேகலையைப் பாராட்டுதல்

29-36: இதுகேள்..............அணிஇழை

(இதன் பொருள்) இது கேள்-நங்கையே இப் பீடிகையின் மாண்பு கூறுவல் இதனையும் கேட்பாயாக! கண்டு கைதொழுவோர் தரும தலைவன் தலைமையின் உரைத்த பெருமைசால் நல் அறம் பிறழா நோன்பினர்-இப் பீடிகையைக் கண்ட துணையானே இறையன்பாலே நெஞ்சம் நெகிழப்பட்டுக் கைகூப்பி வணங்கும் இயல்புடையோர் யாவரேனும் அவர் பண்டும் பண்டும் பலப்பல பிறப்புகளினும் அறவியங்கிழவோனாகிய புத்தபெருமான் இயல்பாகவே ஓதாதுணர்ந்த தமது தலைமைத் தன்மை காரணமாக உலகிற்குத் திருவாய் மலர்ந்தருளிய பெருமை அமைந்த நல்லறமாகிய அருளற நெறியிற் சிறிதும் பிறழாது அடிப்பட் டொழுகிவந்த தாளாளர் என்பதில் ஐயமில்லை; கண்டதன் பின்னர் நண்டைய பிறவியர் ஆகுவர்-அத்தகைய கருவிலே திருவுடையர் கண்ட தன் பின்னர் அவருடைய பழம் பிறப்புணர்ச்சி முழுவதும் கைவரப் பெறுவர்காண்; பைந்தொடி உலகத்து அரியர்- நங்காய் அத்தகைய நல்லறம் பிறழா நோன்பினர் இந் நிலவுலகத்தே காண்டற்கரியராவார்காண்!; ஆங்கு அவர்க்கு அறமொழி உரியது அவ்வாறு கண்டு கைதொழும் திருவுடையார்க்கு அவ்வறவாழி அந்தணன் அறிவுறுத்த திருவற மொழி முழுவதும் உரியதாகுங்காண்!; உலகத்து ஒருதலையாக ஆங்ஙனம் ஆகிய அணியிழை-இந் நிலவுலகத்து அவ்வாறு அவ்வறம் பலப்பல பிறப்பில் அடிப்பட்டுவந்து அதன் பயனையும் ஒருதலையாகப் பெற்றுயர்ந்த தவச் செல்வி நீ என்பது அறிந்தேன் என்றாள் என்க.

(விளக்கம்) தருமதலைவன்-புத்தன். தலைமை- நல்லாசிரியனாதற்கு இன்றியமையாத முற்றுணர்வுடைமை புத்த பெருமானுக்கு அத்தகு தலைமைத் தன்மை யுண்மையை,

பூமகனே முதலாகப் புகுந்தமரர் எண்டிசையும்
தூமலரா லடிமலரைத் தொழுதிரந்து வினவியநாள்
காமமும் கடுஞ்சினமுங் கழிப்பரிய மயக்கமுமாய்த்
தீமைசால் கட்டினுக்குத் திறற்கருவி யாய்க்கிடந்த
நாமஞ்சால் நமர்களுக்கு நயப்படுமா றினிதுரைத்துச்
சேமஞ்சார் நன்னெறிக்குச் செல்லுமா றருளினையே

எனவும்,

எண்ணிறந்த குணத்தோய்நீ யாவர்க்கு மரியோய்நீ
உண்ணிறைந்த வருளோய்நீ யுயர்பாரம் நிறைந்தோய் நீ
மெய்ப்பொருளே யறிந்தோய்நீ மெய்யறமிங் களித்தோய்நீ
செப்பரிய தவத்தோய்நீ சேர்வார்க்குச் சார்வு நீ

எனவும்,

நன்மைநீ தின்மைநீ நனவுநீ கனவுநீ
வன்மைநீ மென்மைநீ மதியுநீ விதியுநீ
இம்மைநீ மறுமைநீ இரவுநீ பகலுநீ
செம்மைநீ கருமைநீ சேர்வுநீ சார்வுநீ

எனவும்,

அருளாழி பயந்தோய்நீ அறவாழி நயந்தோய்நீ
மருளாழி துரந்தோய்நீ மறையாழி புரிந்தோய்நீ

எனவும்,

மாதவரின் மாதவனீ வானவருள் வானவனீ
போதன ருட் போதனனீ புண்ணியருட் புண்ணியனீ

எனவும்,

ஆதிநீ யமலனீ அயனுநீ அரியுநீ
சோதிநீ நாதனீ துறைவனீ இறைவனீ

எனவும்,

அருளுநீ பொருளுநீ அறவனீ அநகனீ
தெருளுநீ திருவுநீ செறிவுநீ செம்மனீ

எனவும், பாராட்டி வருகின்ற பழைய செந்தமிழ்த் தீம்பாடலானு முணர்க.(இவ்வருமைப் பாடல் வீரசோழியம் 11ஆம் கலித்துறையின் உரையிற் கண்டது)

கண்டுகை கொழுவோர் பிறழா நோன்பினர் என மாறுக. நீயும் முற்றவமுடைய பொற்றொடியே என்பாள் ஆங்ஙனம் ஆகிய அணியிழை என்று பாராட்டினள் ஈண்டு

தவமுந் தவமுடையார்க் காகும்

எனவரும் திருவள்ளுவர் பொன்மோழி நினைக.

தீவதிலகை அமுத சுரபி என்னும் அரும்பெறற்
பாத்திரமும் ஈண்டு நினக்குக் கிடைக்கும் எனல்

36-47: இதுகேள்............போலும்

(இதன் பொருள்) இதுகேள்- மணிமேகலாய் நினக்கு ஆக்கமாகிய இன்னொரு செய்தியாகிய இதனையும் கேட்பாயாக; ஈங்கு இப்பெரும் பெயர்ப் பீடிகை முன்னது-இவ் விடத்துள்ள இம் மாபெரும் புகழை யுடைய இம் மாமணிப் பீடிகையின் முன் பக்கத்திலே யுளதாகிய; மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சி- கரிய நிறமுடைய மலராகிய குவளையும் நெய்தலும் விரவிமலர்ந்த இந்தக் கோமுகி என்னும் பெயருடைய நிரம்பிய நீரையுடைய நீர்நிலையினின்றும்; இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து ஒருபதின் மேலும் ஒரு மூன்று சென்றபின்- பெரும் பொழுதுகளில் வைத்து இந்த இளவேனிற் பொழுதின்கண் கார்த்திகை முதலிய பதின் மூன்று நாள்களும் கழிந்த பின்னர்; மீனத்து இடைநிலை மீனத்து அகவயின்- நாள் மீனகளுள் நடுவு நிற்றலையுடைய விசாகநாளின் கண்; ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் மாபெரும் பாத்திரம் ஆபுத்திரன் என்னும் அறவோன் கையின்கண்ணிருந்த அமுதசுரபி என்னும் மிகவும் பெருமையுடைய பிச்சைப்பாத்திரம்; போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்- தோன்று நாளாலே புத்தபெருமான் போன்று மேலே எழுந்து வந்து தோன்றுங் காண்; மடக் கொடி-இளைமையுடைய பூங் கொடியேபோல் வாளே!; கேளாய்-கேட்பாயாக; அந்நாள் இந்நாள் அப்பொழுது இப்பொழுது-அந்த வைகாசித் திங்கள் தூய நிறைத் திங்கள் நாளே இற்றை நாள் அம் மாபெரும் பாத்திரம் நீரினின்றும் மேலெழுந்து தோன்றும் முழுத்தமும் இம் முழுத்தமேயாம் ஆகவே; நின்னாங்கு வருவது போலும்-அம் மாபெரும் பாத்திரம் நின்பால் வந்தெய்துங்காண்! என்றாள் என்க.

(விளக்கம்) பெரும் பெயர்- பெரிய புகழ். இலஞ்சி- நீர் நிலை இருது- பெரும்பொழுது. இளவேனில் சித்திரைத் திங்களும் வைகாசித் திங்களும் ஆகிய இரண்டு திங்களுமாம். இவற்றுள் வைகாசித் திங்களில் என்பாள், எரிகதிர் இடபத்து என்றாள். எரிகதிர்-ஞாயிறு. இனி, இக்கால வழக்கில் நாள்மீன்களுள் நடுவண்நிற்பது சித்திரை மீனாக, ஈண்டு விசாக மீனை மீனத்து நடுநிலை மீன் என்பதற்கு அறிஞர் காட்டும் அமைதி வருமாறு:

ஒவ்வோராண்டினும் பகலையும் இரவையும் தம்முட் சமமாக முப்பது முப்பது நாழிகையாகவே பெற்ற விழுவநாள்களில் ஒன்றாகிய சித்திரை விழுவில் எந்த நாளில் ஞாயிற்றிற்குப் புகுதி யுண்டாகின்றதோ, அந் நாள் மீனை முதலாக வைத்துக் கூறுதல் கணிக நூல் வழக்காதலின் பண்டொரு காலத்தே ஞாயிற்றுக்குச் சித்திரை விழுவ நாள் கார்த்திகை நாளாதல் கண்டு கார்த்திகை மீனையே முதன் மீனாக வைத்து வழங்குவாராயினர்; பின்னர் வராக மிகிரர் என்னும் பெருங் கணவர் தமது காலத்தே சித்திரை விழுவம் அச்சுவினியில் ஞாயிற்றின் புகுதியுண்டா யிருத்தலை அறிந்து அச்சுவினியை முதன் மீனாக வைத்தெண்ணும் வழக்கத்தை யுண்டாக்கினர்; ஆதலால் அவ் வராகமிகிரர் காலத்திற்கு முன்பிருந்த வழக்கத்தால் கார்த்திகையை முதன் மீனாகக் கொண்டு ஈண்டு விசாகம் நடுநிலை மீன் எனப்பட்டது என்ப.

ஒரு பதின் மேலும் மூன்று -பதின் மூன்று. இஃது எண்ணால் நாள்களுக்குப் பெயராயிற்று. கார்த்திகை முதலாகப் பதின்மூன்று நாள் மீன்களும் கழிந்தபின் வரும் மீனாகிய விசாகம் எனவும். இருபத்தேழு மீன்களுள் நடுவுநிலை மீனாகிய விசாகம் எனவும் தனித்தனி இயைத்திடுக.

போதித்தலைவன்-புத்தர் அவரோடு தோற்றத்தால் பொருந்தித் தோன்றும் என்க. அஃதாவது- போதித்தலைவன் போல விசாக நாளாகவையின் தோன்றும் என்றவாறு. எனவே அப் பாத்திரம் அந்த நாளில் தோன்றுதற்குரிய காரணமும் உடன் தெரித்தோதியபடியாம். அந் நன்னாளில் பிறந்த புத்தன் உலகினர் எல்லார்க்கும் நல்லறம் வழங்கினாற் போன்று இப் பாத்திரமும் உலகினர்க் கெல்லாம் உண்டிகொடுத்து அருளறம் புரிவோர்பாற் சேறற் பொருட்டு அவ்வறவோன் பிறந்த நாளிலே ஆண்டுதோறும்- தோன்றும். அதனை ஏற்றற்குத் தகுதியுடைய அறவோரைப் பெறாமையாலே மீண்டும் நீரினுள் மூழ்கி விடும். இப் பொழுது எவ்வாற்றானும் அத் தகுதியுடைய நீ இந்த நாளில் இப் பொழுது இவ்விடத்திலே வந்தெய்தினை ஆதலின் அப் பாத்திரம் நின் பால் வந்தெய்தும் என்று தெய்வமாகலின் எதிரதுணர்ந்து கூறிற்றென்க. போலும்:ஒப்பில் போலி.

தீவதிலகையோடு மணிமேகலை கோமுகியை வலம் வந்து நிற்றலும் அமுதசுரபி அவள் கையில் வந்துறுதலும்

47-58: நேரிழை...........புகுதலும்

(இதன் பொருள்) நேரிழை- மணிமேகலயாய்! அமுதசுரபி என்னும் அம் மா பெரும் பாத்திரத்தின் சிறப்பினை யான் சிறிது கூறுவல் கேள்; ஆங்கு அதிற் பெய்த ஆருயிர் மருந்து வாங்கு நர் கையகம் வருத்துதல் அல்லது-அவ்வமுத சுரபி என்னும் பாத்திரத்திலே இட்ட ஆருயிரின் பசிப்பிணிதீர்க்கும் மருந்தாகிய உணவு பின்னர் ஏற்போருடைய கையைத் தனது பொறையாலே வருத்துவதன்றி; தான் தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்- இடப்பட்ட அவ்வுணவு ஒருபொழுதும் ஒழிதலின்றி மேன் மேலும் வளருகின்றதொரு தெய்வத்தன்மை யுடைய தாங்காண்! நறுமலர் கோதை- நறிய மலர்மாலை போன்று யாவராலும் விரும்பப்படுகின்ற நங்கையே!; இதன் திறம்-அதன் சிறப்பும் வரலாறும் பிறவு மெல்லாம்; நின் ஊர் ஆங்கண் அறவணன் தன் பால் கேட்குவை என்று- நீ நின் ஊரிற் சென்றவிடத்தே அறவணவடிகளார்பால் கேட்டறிகுவை காண்! ஈண்டு அது கூறப் பொழுது இல்லை என்று; அவள் உரைத்தலும்-அத் தீவதிலகை அறிவித்தலும்; இளங்கொடி விரும்பி- மணிமேகலைதானும் அப் பெறற்கரும் பேற்றினைப் பெறுதற்கு விரும்பி மீண்டும்; மன் பெரும் பீடிகை தொழுதனள் வணங்கி- ஆரா அன்பினாலே என்றும் நிலைபெற்றுள்ள பெருமையுடைய அத் தருமபீடிகையைக் கைகூப்பித் தொழுது நிலத்தில் வீழ்ந்து வணங்கிப் பின்னர்; தீவதிலகை தன்னொடுங் கூடி அத் தெய்வத்தோடு சேர்ந்து; கோமுகி வலம் செய்து கோள்கையின் நிற்றலும்-அக் கோமுகி என்னும் கொழுநீரிலஞ்சியை வலமுறை வந்து அப் பாத்திரத்தை ஏற்றுக் கொள்ள ஏந்திய கைகளோடே நின்றவளவிலே; தொழுந்தகை மரபின் பாத்திரம் எழுந்து நீரினின்று தொழத்தகுந்த தெய்வத் தன்மையுடைய அமுத சுரபி என்னும் அப் பாத்திரம் மேலெழுந்து மணிமேகலை மருங்கில் வந்து; வலம் புரிந்த இளங்கொடி செங்கையில் புகுதலும்- தன்னை வலம் வந்து நிற்கும் அம் மணிமேகலையின் ஏந்திய சிவந்த கைகளிலே புக்கமர்தலும்; என்க.

(விளக்கம்) நேரிழை: மணிமேகலை. அதில்-அவ்வமுத சுரபியில் ஆருயிர்மருந்து-உணவு. தன் பொறையால் ஏற்போருடைய கையை வருத்தும் என்றவாறு. தான் என்றது-ஆருயிர் மருந்தென்ற உணவினை அது தோன்றும் பொழுதும் இப்பொழுதே என்றமையின், அதன் திறமெலாம் யான் உரைத்தற்குச் செவ்வி இஃதன்று நீ அதனியல்பெலாம் அறவணடிகள் பால் கேட்குவை என்று கூறி முடித்தவாறாம்.

கொள்கையின் ஏற்றுக் கொள்ள ஏந்திய கையோடு நிற்றலும் என்க. அதனை ஏற்க வேண்டும் என்னும் கோட்பாட்டோடு நிற்றலும் எனினுமாம்.

வலம் புரிந்த இளங்கொடி செங்கை என்றது அப் பாத்திரம் தன் மருங்கு வந்துற்றவுடன் மணிமேகலை அப் பாத்திரத்தையும் வலம் வந்து கை யேந்தி அதனை ஏற்க ஏந்திய செங்கை என்பதுபட நின்றது.

பாத்திரம் பெற்ற மணிமேகலை பகவனைப் பராவுதல்

59-72: பாத்திரம்............முன்னர்

(இதன் பொருள்) பாத்திரம் பெற்ற பைந்தொடி மடவாள்- இவ்வாறு அமுதசுரபி என்னும் மாபெரும் பாத்திரத்தை எய்திய பசிய வளையலணிதற்கியன்ற இளமகளாகிய மணிமேகலை எல்லையில்லாத மனமகிழ்ச்சியை எய்தி அப் பேற்றினைத் தனக் கருளிய புத்த பெருமானை வணங்கி வாழ்த்துபவள்; மாரனை வெல்லும் வீர நின் அடி- காமனைக் கடிந்து வென்ற வீரனே நின் திருவடிகளை; தீ நெறிக் கடும்பகை கடிந்தோய் நின்னடி- தீய நெறியிலொழுகுதற்குக் காரணமான காம முதலிய கொடிய உட்பகையை எல்லாம் அழித்தவனாகிய நின்திருவடிகளை பிறர்க்கு அறம் முயலும் பெரியோய் நின்னடி- நினக்கென முயலாது பிறர்க்கு அறமுண்டாக்கும் பொருட்டே முயலுகின்ற பெருமையுடையோனே நின் திருவடிகளை; துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்னடி- மேனிலையுலகத்தையும் விரும்புகிலாத பழைமையுடையோய் நின் திருவடிகளை; எண் பிறக்கு ஒழிய இருந்தோய் நின்னடி- மக்கள் எண்ணங்கள் எட்டமாட்டாமற் பின்னே கிடக்கும்படி உயர்நிலையிற் சென்றிருந்த நின் அடிகளை; பிறர்க்குக் கண் அளிக்கும் கண்ணோய்- பிறர்கெல்லாம் அகக் கண்ணை அளிக்கின்ற கண்ணோட்ட முடையவனே; நின் அடி நின் அடிகளை; தீ மொழிக்கு அடைத்த செவியோய் நின் அடிபொய் முதலிய தீயமொழி சிறிதும் உட்புகாதபடி காவல் செய்யப்பட்ட திருச்செவிகளையுடையோனே! நின்திருவடிகளை; வாய் மொழி சிறந்த நாவோய் நின் அடி- வாய்மையே ஆகிய நன் மொழியே நவிலுதலிற் சிறந்த செந்நாவினையுடையோய் நின் திருவடிகளை; நரகர் துயர் கெட நடப்போய் நின் அடி- நரகத்திற் கிடந்துழலும் தீவினையாளர் எய்துகின்ற அந் நகரத்துயரமும் இல்லையாம்படி அவர் பொருட்டு அந் நரகருலகத்தினும் புகுகின்றவனே! நின் திருவடிகளை; துயரம் ஒழிப்போய் நின் அடி- நரகர்களின் துன்பத்தையும் அகற்றும் அருளாளனே நின் திருவடிகளை; வணங்குதலல்லது-வாளாது வணங்குதலேயன்றி; வாழ்த்தல்- புகழ்ந்து வாழ்த்துதல்; என் நாவிற்கு அடங்காது- எளியேனாகிய என் ஒரு நாவிற்கடங்காதன்றே! என்ற ஆயிழை முன்னர்-என்று வாழ்த்தி வணங்கிய மணிமேகலையின் முன்பு என்க.

(விளக்கம்) மாத்திரை-அளவு. எல்லை-அருளறம் பூண்டோளாதலின் அவ்வறத்திற்கு இன்றியமையாத கருவியாகிய அமுத சுரபி பெற்றமை யால் அளவற்ற வுவகை பெற்றனள். இது செல்வம் நிலைக்களனாகப் பிறந்த உவகை. மாரன்-அவாக்களை நெஞ்சத்தே தோற்றுவிக்கும் ஒரு தேவன் என்பது பவுத்த சமய நூற்றுணி. காமற் கடந்த வாமன் என முன்னும் வந்தது. அங்கும் காமன் என்றதும் மாரன் என்னும் அத் தேவனையேயாம்.

தீநெறிக் கடும்பகை என்றது காம வெகுளி மயக்கங்களை. போதி மரத்தின்கீழ், புத்தருக்கு மெய்யுணர்வு பிறந்துழி மாரன் நீ இப்பொழுது நிருவாண மெய்துக என்றானாக அது கேட்ட புத்தர் மயங்கினாராக பிரமதேவர் வந்து நீ இப்பொழுது அந் நிலையை அடைதல் வேண்டா! நீ ஈண்டுக் கண்ட அறங்களை உலகிற்கறிவுறுத்து அந் நிலையை உலகத்தவர் எல்லாரும் எய்தும்படி செய்வித்து அப்பால் நிருவாணமெய்துக என்று கூற, அது கேட்ட புத்தர் கைவந்த நிருவாண நிலையையும் துறந்து உலகிற்கு அறவுரை அறிவுறுத்துவாராயினர் என்று புத்தர் வரலாறு கூறும்.

முன்றான் பெருமைக்க னின்றான் முடி வெய்து காறும்
நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான் தனக்கென்
றொன்றானு முள்ளான் பிறர்க்கே உறுதிக் குழந்தான்
அன்றே இறைவன் அவன்றாள் சரணாங்க ளன்றே

எனவரும் குண்டகேசிச் செய்யுள் ஈண்டு நினையற்பாலது

பிறர்க்கற மருளும் பெரியோன் எனப் பின்னும்(21-178) கூறுவர்.

துறக்கமும் அழிதன்மாலைத்தென்று அதனையும் வேண்டாத் தொல்லோய் என்றவாறு. எண்-எண்ணம். பிறக்கு-பின்னே. கண் அகக் கண். கண்ணோய்- கண்ணோட்டமுடையோய்.

இனி, இந்திரன் வந்து புத்தருடைய கண்களை இரந்து நிற்ப அவர் கண்களையும் வழங்கினார் என்பது பற்றிக் கண்பிறர்க் களிக்கும் கண்ணோட்டமுடையோய் என்றாள் எனினுமாம். இதனை- விண்ணவர் நாயகன் வேண்டக், கண்ணினி தளித்த காதற், புண்ணியன் இருந்த போதி, நண்ணிட நோய்நலியாவே எனவரும் பழம் பாடலானும்(வீர சோழியம் யாப்பு-3 உரைமேற் கோள்)

கண் கொடுத்தான் தடிகொடுத்தான் எனவும் ....இரண்டு கண்ணை........வந்திரந்தவர் மகிழ்ந்தே ஈயும் வானவர் தாம் உறைந்தபதி மானாவூரே எனவும் வரும் நீலகேசிச் (205) செய்யுளானும் மேற் கேளானும் உணர்க.

தீமொழி- பொய் குறளை கடுஞ்சொல் பயனில் சொல் என்பன மொழி புகாமைக்கு அடைத்த செவி என்க. புத்தர் நரகர் துயர் கெட நடந்ததனை அருவினை சிலர் கெட வொருபெரு நரகிடை எரிசுடர் மரைமல ரெனவிடும் அடியினை எனவரும் செய்யுளானும் உணர்க(வீர சோழியம். யாப்பு-11 உரைமேற்கோள்)

உரகர்- நாகர். புத்தர் இவர் துயரம் ஒழித்ததனை மீதியல் கருடனை விடவர வொடுபகை விதி முறை கெடவறம் வெளியுற வருளினை எனவும் பொற்புடை நாகர் தம் துயரம் போக்கினை எனவும், பைந் நாகர் குலமுய்ய வாயமிழ்தம் பகர்ந்தனையே எனவும், ஆரமிழ்த மணிநாகர் குலமுய்ய வருளினையே எனவும், வார்சிறைப்புள் ளரையற்கும் வாய்மை நெறி பகர்ந்தனையே எனவும் வரும்(þ வீர சோழியம் யாப்பு-11) மேற்கோட் செய்யுள்களானும் உணர்க.

தீவதிலகை பசிப்பிணியின் கொடுமையை மணிமேகலைக்குக் கூறுதல்

73-81: போதி....நிமிராது

(இதன் பொருள்) தீவதிலகை போதி நீழல் பொருந்தித் தோன்று நாதன் பாதம் நவை கெட ஏத்தி- தீவதிலகை தானும் போதி மரத்தின் நீழலிலே எழுந்தருளிக் காட்சியளிக்கும் முதல்வனாகிய புத்த பெருமானுடைய திருவடிகளைப் பிறவிப்பிணி தீரும்பொருட்டு வாழ்த்தி வணங்கிய பின்னர்; சேயிழைக்கு உரைக்கும்- மணிமேகலைக்குக் கூறுவாள்; பசிப்பிணி என்னும் பாவி- மக்கட்கு வருகின்ற பசிப்பிணி என்று கூறப்படுகின்ற பாவியானது; குடிப்பிறப்பு அழிக்கும்-உயர்ந்த குடியிற் பிறந்தார்க்கு இயல்பாகவே அமைந்துள்ள செப்ப முதலிய உயரிய பண்புகளைத்தானும் அழித்தொழித்துவிடும்; விழுப்பம் கொல்லும்-அவர் எய்திய சிறப்புக்களையும் இல்லையாக்கிவிடும்; பிடித்த கல்விப் பெரும்புணைகளையும் இல்லையாக்கிவிடும்; பிடித்த கல்விப் பெரும்புணைவிடூஉம்- பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரையேறுதற் பொருட்டுக் கைப்பற்றிய கல்வியாகிய பெரிய தெப்பத்தையும் அகற்றிவிடும்; நாண் அணி களையும்- நாணாகிய அணிகலனைக் களைந்துவிடும்; மாண் எழில் சிதைக்கும்- மாட்சிமையுடைய அழகையும் அழித்து விடும்; பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்- தாம் மணந்து கொண்ட வாழ்க்கைத் துணைவியரோடு ஏதிலார் முன்றிலிலே நிறுத்தி வைக்கும்; அது தீர்த்தோர்-அத்தகைய கொடிய பசிப்பிணியைத் தீர்த்து விடுகின்றவருடைய; இசைச் சொல் அளவைக்கு என் நா நிமிராது- புகழ்ச் சொல்லைக் கடைபோகச் சொல்லுதற்கு எனது நா துணிந்து எழமாட்டாது காண்! என்றாள் என்க.

(விளக்கம்) குடிப்பிறப்பு-உயர்ந்த குடியிற் பிறந்த மேன் மக்களுக்கு இயல்பாகவிருக்கும் உயரிய பண்புகள்; அவையாவன: செப்பம் நாண் ஒழுக்கம் வாய்மை நகை ஈகை இன்சொற்கூறல் பிறரை இகழாமை முதலியன. விழுப்பம் என்றது தமது முயற்சியாலெய்திய சிறப்புக்களை. பிறவிப் பெருங்கடலை நீந்துதற்குக் கைப்பற்றிய கல்வி என்க. பெரும் புணை என்றமையால் பிறவிப் பெருங்கடல் என்பது பெற்றாம். அறிவினை நிச்சிநிரப்பக் கொல்லும் என்பது பற்றி இங்ஙனம் கூறினார். விடூஉம் என்றது விடுவிக்கும் என்பதுபட நின்றது. நாண் அணி- நாணாகிய அணிகலம். அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு என்பது திருக்குறள்(1014).

இனி, ஈண்டு பிறந்த குலமாயும் பேராண்மை மாயும் சிறந்ததங் கல்வியு மாயும் எனவரும் நாலடியும்(285) நோக்குக. பசி-தீவினைகட் கெல்லாம் காரணமாதலின், பாவி என்றார். அதன் கொடுமை பற்றிப் பண்பையே பண்பியாகக் கூறிய படியாம். அழுக்காறென ஒருபாவி எனவும், இன்மை என ஒரு பாவி எனவும் திருவள்ளுவரும் ஓதுதல் உணர்க. இதற்கு ஆசிரியர் பரிமேலழகர் பண்பிற்குப் பண்பி இல்லை யேனும் தன்னை ஆக்கினானை இரும்மையும் கெடுத்தற் கொடுமை பற்றி அழுக்காற்றினைப் பாவி என்றார் என்பர். யாதானும் ஒரு பண்பின் சிறுமை பெருமை கொடுமை முதலியவற்றைக் கூறுங்கால் சிறுமை முதலியன பண்புகளாகவும் அவற்றையுடைய பண்புகளை பண்பிகளாகவும் அமைதலின் பண்பிற்குப் பண்பி இல்லை என்பது போலி உரை என்க.

கொடுத்தார் எனும் சொல் மூவுலகும் கேட்குமே என்பது பற்றி அவர் இசையை அளத்தற்கு நாவெழாது என்றவாறு. விரிப்பின் அகலுமாகலின் கடைபோகாமையால் அஞ்சி நா எழாது என்பது கருத்து. புகழ் அளவுபடாமையை,

உரைப்பார் உரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் பிற்கும் புகழ்          (232)

எனவரும் திருக்குறளானு முணர்க

பசிப்பிணியின் கொடுமைக்கோர் எடுத்துக்காட்டு

82-91: புன்மரம்...............அன்றோ

(இதன் பொருள்) புல் மரம் புகையப் புகை அழல் பொங்கி மன்னுயிர் மடிய மழை வளம் கரத்தலின்-ஒரு காலத்தே நிலவுலகத்தே பசும்புல்லும் மரங்களும் எரிந்து புகையும்படி காட்டுத்தீப் பற்றி மிகுமாறு மழைவளம் ஒழிந்து போதலாலே; அரசு தலை நீங்கிய அருமறை அந்தணன்-தனக்கியன்ற அரசுரிமையையும் தன்னிடத்தினின்றும் நீங்கப் பெற்றவனாய்க் காட்டகத்தே தவஞ் செய்து கொண்டிருந்த உணர்தற்கரிய மறைகளையுணர்ந்த அறவோனாகிய விசுவாமித்திர முனிவன் காயும் கனியும் இலையும் கிழங்குமாகிய தனக்குரிய உணவுகளில் யாதொன்றும் கிடைக்கப் பெறாமையின், அரும்பசி களைய இருநிலமருங்கின் யாங்கணும் திரிவோன்- தனக்குண்டான பொறுத்தற்கரிய பசிப்பிணிவய அகற்றற் பொருட்டு உணவு தேடிப் பெரிய நிலப்பரப்பிலே எங்குந் திரிபவன்; ஆற்றுவது காணான்-அப் பசியைத் தணித்தற்கியன்ற உணவு பிறிதொன்றனையும் காணப் பெறானாய்; திருந்தாநாய் ஊன் தின்னுதல் உறுவோன்-ஆண்டு இறந்து கிடந்த அருவருப்புடைய நாயினது ஊனைத் தின்னத் தொடங்கி; இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர்-உண்பதற்கு முன்பு செய்வதற்குரிய இந்திர சிறப்பு என்னும் தேவர் வழிபாட்டைச் செய்பவன் முன்னிலையிலே; வந்து தோன்றிய வானவர் பெருந்தகை-அந் நிலைகண்டிரங்கி அம் முனிவன் முன்வந்து தோன்றி அவ்வரும் பசியைப் போக்கிய அமரர் கோமானாகிய பெருந்தகைமையுடையோன்; மழைவளம் தருதலின் மன்னுயிர் ஓங்கிப் பிழையா விளையுளும் பெருகியது அன்றோ-அந் நிகழ்ச்சியைத் தலைக்கீடாகக் கொண்டு நிலவுலகிற்கு மழையினாலே வளத்தை வழங்குதலாலே அற்றைநாள் தொடங்கிப் பிழைத்தலில்லாது விளைபொருளும் பெருகிய தென்னும் இவ் வரலாற்றை நீயும் கேட்டிருப்பாய் அல்லையோ; என்றாள் என்க.

(விளக்கம்) புல் மரம் புகையப் புகை அழல் பொங்கி மன்னுயிர் மடிய மழைவளம் கரத்தலின் எனவரும் இதனோடு,

விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே
பசும்புற் றலைகாண் பரிது               (16)

எனவும்

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துண்ணின் றுடற்றும் பசி           (13)

எனவும், வரும் திருக்குறள்களையும் நினைவு கூர்க.

விசுவாமித்திரன் அரசுரிமை துறந்து கானகம் புக்குத் தவஞ்செய்தலின், அரசுதலை நீங்கிய முனிவன் என்றார். துறவோனாதலின் அருமறை அந்தணன் என்றார். எல்லா இன்பங்களையும் துறந்து அரமறைகளையுமுணர்ந்து துறவியாயிருந்தவன்றானும் பசிப்பிணி ஆற்றான் ஆயினன் எனப் பசிப்பிணியின் கொடுமையை விளக்குவார் உவமைகளை ஏற்ற அடைமொழி தேர்ந்து புணர்ந்து விதந்தார்.

இந்திர சிறப்பு என்றது, தேவர்க்குப் பலியிடுதலை, உண்ணும் உணவினை முதலில் தேவர்கட்குப் பலியாக்கிப் பின்னர் உண்ணுதல் வேண்டும் என்பது மனுநூல் விதி. அல்லதூஉம் இவ்விதி பிடகநூல் விதியாதலும் கூடும்.

இந்திரன் இம் முனிவனிலைக்கு இரங்கித் தானே போதருதலின் அவனைப் பெருந்தகை என்றார். இதனைப் பாட்டிடை வைத்த குறிப்பினாலே இந்திரன் வந்து அம் முனிவன் அரும்பசி களைந்து உலகிற்கு மழைவளம் தந்தனன் என்பதும் கூறிக்கொள்க.

விசுவாமித்திரன் இங்ஙனம் நாயூன்தின்ன முயன்றமை மனுநூலின் 10 ஆம் அத்தியாயத்தில் 108 ஆம் சுலோகத்தினும் கூறப்பட்டுளதென்பர்.

தீவதிலகை மணிமேகலைக்கு அறிவுரை கூறுதல்

92-98: ஆற்றுநர்..................என்றலும்

(இதன் பொருள்) ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர் தாமே முயன்று உண்ணும் தாளாளர்க்கு உண்டி கொடுப்போர் அறம்விற்கும் வணிகரேயாவர் ஆதலின் அவர் வாழ்க்கை அற வாழ்க்கை எனப்படாது; உலகின் ஆற்றாமாக்கள் அரும்பசிகளைவோர் மேற்றே மெய்ந்நெறி வாழ்க்கை-உலகின்கண் தாமே முயன்றுண்ணவியலாத வறியவர்க்குத் தாமே நீக்குதற்கரிய பசிப்பிணியை உண்டி கொடுத்துத் தீர்த்துவிடுகின்ற மக்கள் பாலதாம் வாய்மையான அறவாழ்க்கை; மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே-எனவே அம் மெய்ந்நெறி வாழ்க்கையை மேற்கொண்டு மண் செறிந்த இந்நிலவுலகத்திலே வாழும் அத்தகைய ஆற்றாமாக்கட்கு எல்லாம் உணவு கொடுத்தவர் மாத்திரம் ஆகார் உயிரையே வழங்குபவர் ஆகின்றனர் காண்!; உயிர் கொடை பூண்ட உரவோய் ஆகி கயக்கு அறு நல்அறம் கண்டனை என்றலும்-இனி மணிமேகலையே கேள் இத்தகைய பேரறம் செய்தற்குத் தலைசிறந்த கருவியாகிய இவ்வமுத சுரபியைப் பெற்ற திருவுடைய நீ இது சுரக்கும் ஆருயிர் மருந்தை ஆற்றா மாக்கட்கெல்லாம் வழங்குமாற்றால் அவர்க்கெல்லாம் உயிர் வழங்கும் ஆற்றலுடைய தெய்வமேயாகி ஆருயிரின் கலக்கம் அறுதற்குக் காரணமான நன்மைமிக்க அருளறத்தைச் செய்தாய் அல்லையோ என்று அத் தெய்வம் உவகை கூறுதலும் என்க.

(விளக்கம்) ஆற்றுநர் ஈண்டு உடையோர் என்பதுபட நின்றது உடையோர்க்கு உண்டி வழங்குவதனை அறம் என்று கருதி அவரையெல்லாம் ஒருங்கு கூட்டி உண்டி வழங்குபவர் உலகில் இக்காலத்துச் சாலப் பலராவார். இவர் செய்வன புகழ் விரும்பியோ பிற ஏதேனும் விரும்பியோ செய்பவராவார். இவர் அறம் என்னும் செல்லாக் காசை விலையாகக் கொடுத்து அதற்கு மாற்றாகப் புகழ் என்னும் பொய்யையே பொருளாகக் கருதி வாங்குகின்ற மடவோரே யாவார், ஆதலின் இவரை அறம் விலை பகர்வோர் என்றொழிந்தார், அதற்கு யாதும் பொருள் பெறாமையின்.

இனி, இம்மைச் செய்தது மறுமைக்காமெனும் கருத்தோடு ஆற்றுநர்க்கே அளிப்பாரும் உளர். இவரை அறவிலை வாணிகர் என்று புறநானூறு (134) புகலும்.

இனி வள்ளுவர், ஈகைக்கு அவ்வதிகாரத்திலேயே

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீ துடைத்து     (குறள், 220)

எனத் தெள்ளத் தெளிய இலக்கணம் இயம்பின்மை ஈண்டு நினைந்து மகிழற்பாற்று. ஏற்றகை மாற்றாமை என்னானும் தாம் வரையாதாற்றாதார்க் கீவதாம் ஆண்கடன் என்பது நாலடி (98). உயிர்க் கொடை-உயிர் வழங்குதல். கயக்கு-கலக்கம். நல்லறங் கண்டனை நல்லறங் காண்பாய். காண்டல் ஈண்டு செய்து காண்பாய் என்பதுபட நின்றது. தெளிவுபற்றிக் காண்பாய் எனல் வேண்டிய எதிர்காலவினைச் சொல் இறந்த காலமாயிற்று;

வாராக் காலத்து வினைச் சொற் கிளவி
இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும்
இயற்கையும் தெளிவுங் கிளக்குங் காலை
                  (தொல்-சொல்: வினை- 48)

என்னும் இலக்கணமும் உணர்க.

மணிமேகலை ஆற்றாமாக்கட்கு உண்டி கொடுத்தற்குப் பெரிதும் விதுவிதுப்புற்றுக் கூறுதல்

99-109: விட்ட..........புகுந்தது

(இதன் பொருள்) விட்ட பிறப்பில் யான் விரும்பிய காதலன் திட்டிவிடம் உணச் செல் உயிர் போவுழி-அது கேட்ட மணிமேகலை ஆற்றவும் மகிழ்ந்து அன்னாய்! கழிந்த பிறப்பிலே இலக்குமியாயிருந்த யான் காதலித்த என் ஆருயிர்க் காதலனைத் திட்டிவிடம் என்னும் பாம்பின் நஞ்சுண்ணா நிற்ப அவனது போகூழுடைய உயிரானது போகும்பொழுது அத் துன்பம் பொறாமல்; உயிரொடு வேவேன் உணர்வு ஒழிகாலத்து- உயிரோடு தீயினுள் மூழ்கி வேகின்ற என்னுடைய உணர்வு அழிகின்ற பொழுது; வெயில் விளங்கு அமயத்து விளங்கித் தோன்றிய சாது சக்கரனை-வெயில் மிகவும் விளக்கமெய்தும் நண்பகலிலே என் கண்முன் வானின்றிழிந்து வந்து தோன்றிய சாதுசக்கரன் என்னும் துறவோனை; யான் ஊட்டிய காலம் போல்வது ஓர் கனாமயக்கு உற்றேன்- யான் உண்டி கொடுத்து ஓம்பிய காலத்தைப்போன்று ஒருகனா என்னெஞ்சத்தே நிகழக்கண்டேன்; ஆங்கு அதன் பயனே-அப் பிறப்பில் எனது இறுதிப் பொழுதிற் கண்ட அந்த அறக்காட்சியின் பயனாகவே; இப் பாத்திரம் ஈங்கு என் கைப் புகுந்தது- இவ்வரும் பெறல் அமுதசுரபி அடிச்சி கையில் வந்தெய்தியது என்றாள் என்க.

(விளக்கம்) உயிர் உடம்பினின்றும் பிரியும் பொழுது அவ்வுயிர் அது காறும் முதன்மையாகக் குறிக்கொண்டிருந்த எண்ணமே ஏனைய எண்ணங்களைக் கீழ்ப்படுத்து உள்ளத்தின்கண் தன் காட்சியைத் தோற்றுவிக்கும் என்றும். அக் காட்சிக் கியன்ற பிறப்பே அடுத்து வந்துறும் வந்துற்ற காலத்து அவ்வெண்ணத்திற்கியன்ற சூழ்நிலைகளை ஊழ்வினை வகுத்துக் கொடுக்கும் என்றும் திறவோர் கூறுவர், அதற்கேற்ப ஈண்டும் மணிமேகலை முற்பிறப்பிலே பூண்டிருந்த அருளறக் காட்சியே அவள் ஆவி துறக்கும் பொழுது தோன்ற, அவ்வருளறம் மீண்டும் தொடர்ந்து பூணும்படி ஆகூழ் அமுதசுரபியை அவள்கையிற் புகுவித்தது என்பது கருத்து. இதனையே பவுத்த சமயத்தவர் ஏது நிகழ்ச்சி எதிர்தல் என்றோதுப. இதனை இந் நூலாசிரியர் பின்னர்,

மணிபல் லவத்திடை மன்னுடம் பிட்டுத்
தணியா மன்னுயிர் தாங்குங் கருத்தொடு
சாவக மாளும் தலைத்தாள் வேந்தன்
ஆவியிற் றுதித்தனன்

எனபதனானும் உணர்க.(14:101-104)

இன்னும், பிறப்பென்னும் திருக்குறள் (358) விளக்கவுரையின் கண் ஆசிரியர் பரிமேலழகர் உயிர் உடம்பினீங்குங் காலத்து அதனால் யாதொன்று பாவிக்கப்பட்டது அஃது அதுவாய்த் தோன்றுமென்பது எல்லா ஆகமங்கட்கும் துணிபு என ஓதுவதும் ஈண்டு நினைவு கூர்க.

இதுவுமது

107-113: நாவலொடு...............பலரால்

(இதன் பொருள்) நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து-நாவல் என்னும் மரப் பெயரை அடைபுணர்த் தோதப்படுகின்ற நாவலந் தீவு என்னும் பெயரையுடைய மிகவும் பெரிய தீவின்கண்ணே; நல் அறம் வித்தி விளைந்த அதன் பயன் துய்ப்போர் தம்மனை முற்பிறப்பிலே நன்மை தருகின்ற அறமாகிய விதையை விதைத்து இம்மையிலே விளைந்த பயனாகிய பல்வேறு செல்வங்களையும் நுகர்ந்து மகிழ்கின்ற மாந்தர் தம் நெடுநிலை மாடமனை முன்றிலின் கட்சென்று; சிதர்த்துணி உடுத்து வயிறு காய் பெரும்பசி அலைத்தற்கு இரங்கி- நைந்த கங்தைத்துணியை உடுத்துத் தம் வயிறு தம்மை இடையறாது துன்புறுத்தும் பெரும்பசிக்கு ஆற்றாது அலமந்து; வெயில் என முனியாது புயல் என மடியாது புறங்கடை நின்று- வெயில் என்று வெறாமலும் மழை யென்று சோம்பிக்கடவாமலும் அம் மனையிற் புகுதாமலும் வெளியிடத்தேயே நின்று; புன்கண் கூர்ந்து- பசிப்பிணி மிகுந்து முன் அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால்-முற்பிறப்பிலே செய்த தீவினை காரணமாக அம் மணிகளிலே புகவும் மாட்டாராய் நிற்கவும் மாட்டாராய்ப் பெரிதும் வருந்தும் மாக்கள் பலராவார் என்க.

(விளக்கம்) நாவல் என்னும் அடைபுணர்த்தப்பட்ட பெயரையுடைய தீவு நாவலந்தீவு. அறம் வித்தி என மாறுக. அதன் பயன் இன்பம் சிதர்த்துணி-நைந்தபழந்துணி; கந்தை. புறங்கடைநின்று வாயிலில்நின்று உட்புகுதமாட்டாமையால் முனியாதும் மடியாதும் நிற்றல் வேண்டிற்று.

அறங்கடை- தீவினை. ஈண்டு நல்லதன் நலனும் தீயதன் தீமையும் ஒருசேர. நல்லறம் வித்தி விளைந்த பயன் துய்ப்போர் மனையும் அதன் முன்றிலில் முன் அறங்கடை நின்றோர் புன்கண்கூர்ந்து அயர்ந்து அங்கும் நிற்கவும் பெறாராய் அயர்வோர் நிலையும் உணர்த்தப்பட்டமை உணர்க. இதனோடு

அகத்து ஆரே! வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி யிருப்பரே மேலைத்
தவத்தால் தவஞ்செய்யா தார்

எனவரும் நாவடி (31) யும் நினைக.

இதுவுமது

114-118: ஈன்ற...............என

(இதன் பொருள்) ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கித் தீம்பால் சுரப்போள் தன் முலை போன்று-தான் பெற்ற குழந்தையின் முகத்தைப் பார்க்குமளவிலேயே அதன் பசித்துயருக்குப் பெரிதும் இரக்கமெய்தி இனிய பாலைச் சுரக்கின்ற தாயினது கொங்கையைப் போன்று; நெஞ்சு வழிப் படூஉம் விஞ்சைப் பாத்திரத்து அகன் சுரைப் பெய்த ஆருயிர் மருந்து-வருந்தி வந்தோர்தம் நெஞ்சில் நினைத்தவாறே உணவைத் தோற்றுவிக்குமொரு வித்தையைத் தன்பாற் கொண்டுள்ள இத் தெய்வப் பிச்சைக்கலத்தினது அகன்ற உட்பகுதியிலே முதன் முதலாகப் பெய்யப்பட்ட உணவானது; அவர் முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன் என அவ்வாற்றா மாக்களுடைய வருந்து முகம் கண்டதுணையானே அவர் விரும்பும் உணவைச் சுரக்கின்ற அற்புதத்தைத் கண்டு மகிழ்வதற்கு வேணவாவுடையேன்காண்! என்றுகூற என்க.

(விளக்கம்) அன்னை மகவின் முகம் பார்த்த அளவிலேயே அவள் கொங்கை அப்பொழுதே அம் மகவு விரும்பும் பாலைச் சுரந்து பிலிற்றும் அன்றோ! அங்ஙனமே இப் பிச்சைக்கலம் பசியால் வருந்துவோர் வந்துற்றபோதே அவர் நெஞ்சம் விரும்பும் உணவைச் சுரந்துவிடும் என்றவாறு. எனவே வருபவர் எத்தகைய உணவை விரும்புவாரோ அத்தகைய உணவை அவர் கூறுமுன்பே அக்கலம் சுரக்கும் என்றவாறாயிற்று. இங்ஙனம் சுரப்பதுவே காண்டற்கரிய அற்புதச் செயலாகலின் அதனைக் காண யான் பெரிதும் விரும்புகின்றேன் என்றாள். எனவே யான் இடையறாது அவ்வறத்தைச் செய்யுமாற்றால் அக்காட்சியைக் கண்டு மகிழ விதுப்புற்று நிற்கின்றேன் காண் எனத் தீவதிலகைக்கு அறிவித்தபடியாம்.

கயக்கறும் நல்லறம் செய்குதி என்று பணிந்த தெய்வத்திற்கு அவ்வறஞ் செய்தலில் தனக்கிருக்கின்ற விதுப்புறவினை அறிவிக்கும் இம் மொழிகள் பெரிதும் இன்பம் செய்தலறிக. தீவதிலகை இன்றியமையாத மற்றொரு செய்தியையும் அறிவுறுத்து மணிமேகலைக்கு விடைகொடுத்தல்

119-123: மறந்தேன்............உரைப்ப

(இதன் பொருள்) அதன் திறம் மறந்தேன்-அதுகேட்ட தீவதிலகை மணிமேகலையாய் அவ்வமுதசுரபியின் பண்பிலே உனக்குயான அறிவிக்கவேண்டிய தொன்றனை யான் என் மறதியாலே அறிவியாதொழிந்தேன் காண்; நீ எடுத்து உரைத்தனை- நின் ஆகூழ்காரணமாகப் போகலும் யான் மறந்த செய்தியை மீண்டும் யான் நினைவு கூரும் வண்ணம் நீயே அச் செய்தியை விதந்து கூறா நின்றனை; அறம் கரியாக அருள் சுரந்து ஊட்டும் சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது-அறமே சான்றாக உள்ளத்தே அருள் சுரந்து ஆற்றாமாக்கட்கு உணவூட்டுகின்ற சிறப்புடையோர் முதன்முதலில் அதன்கண் ஆருயிர் மருந்தைப் பிச்சையாகப் பெய்தாலன்றி ஏனையோர் பெய்யின் நன்கு சுரவாதுகாண்! ஆதலின் நீ ஆங்ஙனம் ஆயினை-அவ்வாறு முதன் முதலாகச் சிறந்தோர்பால் ஏற்கும் கடப்பாடுடையை ஆயினை பின்னர்; அதன் பயன் அறிந்தனை-அங்ஙனம் ஏற்பின் நீ விரும்பும் அதன் பயனாகிய அஃதுணவு சுரக்கும் காட்சியையும் கண்டு மகிழ்வாய்!; ஈங்கு நின்று எழுவாய் என்று அவள் உரைப்ப-இனி நீ இம் மணிபல்லவத்தினின்றும் எழுந்து நின்னூர் புகப் போவாயாக என்று பணித்தலும் என்க.

(விளக்கம்) அறத்திற்காகவே அறஞ்செயதல் வேண்டும் என்பாள் அறங்கரியாக என்றாள். அஃதாவது அறம் பிறர்கண்டு மதித்தற் பொருட்டுச் செய்யப்படுவது அன்று. அறம் செய்யும் பண்புடைமை மட்டுமே அச் செயற்குச் சான்றாதல் வேண்டும் என்றவாறு. இதனாலேயே நின் வலக்கையாற் செய்யும் அறம் உன் இடக்கை அறியாவண்ணம் செய்க என்று இயேசு பெருமான் இயம்புவாராயினர். அறம் சான்றதலாவது அவன் மனச்சான்றிற் கிணங்கச் செய்தலாம். அருள் சுரக்க வேண்டும் என்று அவன் மனச்சான்று கட்டளையிட்டவழி அது சான்றாக அங்ஙனமே அருள்சுரப்பதாம் என்க. இவ்வாறு செய்யப்படும் அறம் அவன் மனத்தையன்றிப் பிறர் யாருமே அறியாவண்ணம் செய்யப்படுதலும் கூடுமாகலின் அதற்குப் பிறிதொரு சான்றின்மையறிக. இங்ஙனம் செய்வதே வாய்மையான அறமுமாம் என்க.

ஈண்டுத் தீவதிலகை தான் மறந்ததாகக் கூறியது, அமுதசுரபியில் முதன் முதலிற் பிச்சையாக உணவுபெய்வோர். அறங்கரியாக அருள் சுரந்தூட்டும் சிறந்தோராக விருத்தல் வேண்டும். அவர் பெய்தால் செவ்வனம் சுரக்கும். இன்றேல் அங்ஙனம் சுரக்கமாட்டாது என்னும் அப் பாத்திரத்தின் தன்மையையேயாம். இதனை நான் கூறமறந்தேன். நீ விஞ்சைப்பாத்திரத்து அகன்சுரைப் பெய்த ஆருயிர் மருந்து அவர்முகம் கண்டு சுரத்தல் என்ற எடுத்துரைத்தமையால் யான் அஃது அங்ஙனம் சுரப்பது சிறந்தோர் பிச்சை பெய்தவழி அவர் பொருட்டே சுரப்பதாம் என்னும் அதன் திறத்தை நினைவு கூர்ந்தேன். நீ முதன் முதலில் அங்ஙனம் சிறந்தோர் பாற் சென்றே முதன் முதலாகப் பிச்சை ஏற்பாய். ஏற்றவழி அஃது அங்ஙனமே சுரந்து நீ விரும்பிய பயனை அளிக்கும். அதனால் இன்பம் எய்துக என்பாள் ஆங்ஙனம் ஆயினை அதன்பயன் அறிந்தனை என்றாள். ஈண்டும் தெளிவுபற்றி ஆகுக, அறிவாய் என வேண்டிய எதிர்காலவினைச் சொற்கள் இறந்தகாலத்தாற் கூறப்பட்டன. இதற்கு இலக்கண விளக்கம்(98) கயக்கறு நல்லறம் என்புழிக் கூறினாம். ஆண்டுக் கண்டுகொள்க.

ஈண்டு நூலசிரியரின் இக்கருத்தறியாது தீவதிலகை முன்பு கூறியதையே கூறியதாக உரை கூறுவாரும் உளர். அவர் உரையும் விளக்கமும் போலியாதல் ஆராய்ந்தறிக.

மணிமேகலை மணிபல்லவத்திலிருந்து பூம்புகார் நகரத்தில் மாதவி முன்னர் வந்துதோன்றுதல்

124-132: தீவ..................கூறும்

(இதன் பொருள்) மணிமேகலை தீவ திலகை தன் அடிவணங்கி அவ்வன்புப் பணிமொழிகேட்ட மணிமேகலை அத் தெய்வமகளின் திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி; மாபெரும் பாத்திரம் மலர்க் கையின்ஏந்தி கோமகன் பீடிகை தொழுது வலம் கொண்டு மிகவும் பெருமையுடைய அமுதசுரபியைத் தன் தாமரை மலர் போன்ற கையிலே ஏந்திப் புத்தபெருமானுடைய பீடிகையையும் வலம்வந்து மந்திரத்தின் துணைகொண்டு வானினூடு எழுந்து (பூம்புகார் நகர் நோக்கி வான்வழியாக வருபவள் அந் நகரத்தின் கண்) வழுஅறு தெய்வம் வாய்மையின் உரைத்த எழுநாள் வந்தது என்மகள் வாராள்-சுதமதியின்பாற் குற்றமற்ற கந்திற் பாவையாகிய தெய்வம் வாய்மையாக அறிவுறுத்த ஏழாநாளும் வந்துற்றது என் மகள் மணிமேகலை இன்னும் வந்திலளே!; வழுவாய் உண்டு என் மயங்குவோள் முன்னர் வந்து தோன்றி- அத் தெய்வ மொழி பொய்ம் மொழி ஆதலும் உண்டாமோ! என்று ஐயுறும் மயங்கி யிருக்கின்ற மாதவி முன்னிலையிலே வானின்றிழிந்து வந்து தோன்றிய மணிமேகலை; அவர் மயக்கம் களைந்து-அங்கிருந்த மாதவியும் சுதமதியும் ஆகிய இருவருடைய மனமயக்கத்தையும் போக்கி; அந்தில் அவர்க்கு ஓர் அற்புதம் கூறும்-அவ்விடத்தே தன் வரவு கண்டு வியப்புற்றிருக்குமிருவர்க்கும் அவ் வியப்பின் மேலும் ஓர் அற்புதமான மொழியைக் கூறுவாள்; என்க.

(விளக்கம்) சுதமதி தனக்குக் கூறியபடி தெய்வம் உரைத்த மொழி பொய்க்குமோ என்று மாதவி மயங்கினள் என்க. வாய்மை- மெய்ம்மொழி. வழுவாய்- பொய். தப்புதல் எனலுமாம். அவர் என்றது சுதமதியையம் உளப்படுத்தவாறு. அந்தில்-அவ்விடம். அற்புதம்-அதிசயம். அம் மொழி மேலே கூறுவன.

மணிமேகலை அற்புதம் கூறுதல்

133-141: இரவி..................பிறப்பு

(இதன் பொருள்) இரவிவன்மன் ஒரு பெருமகளே-இரவிவன்மன் என்னும் மன்னவன் மகளே!; துரகத்தானைத் துச்சயன் தேவி-குதிரைப்படை மிக்க துச்சய மன்னவன் தேவிமாரே!; அமுதபதி வயிற்று அரிதின் தோன்றித் தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் அவ்வையர் ஆயினர்-அமுதபதி என்னும் கோப்பெருந்தேவியின் திருவயிற்றில் அரிதாகப் பிறந்து இலக்குமியாகிய எனக்குத் தவ்வையராயிருந்த தாரையும் வீரையுமாகிய நீவிர் இருவருமே ஈண்டு மாதவியும் சுதமதியும் ஆகி இருவருமே எனக்கு இம்மையில் அன்னையராயினீர் காண்! ஆகவே; நும்மடி தொழுதேன்-இப் பிறப்பும் முப்பிறப்பும் ஆகிய இரு பிறப்பினும் என்னால் தொழப்படும் சிறப்புடைய நும் மிருவருடைய திருவடிகளையும் தொழுகின்றேன்; மானிட யாக்கையில் ஈங்கு தீவினை அறுக்கும் செய்தவம் நுமக்கு வாய்வது ஆக-இம் மக்கட் பிறப்பில் ஈங்குப் பிறப்பிற்குக் காரணமான தீவினையை அறுத்தற்குக் காரணமாக நீயிர் செய்யும் தவம் நுமக்கு வாய்ப்புடைய தாகுக!; செறிதொடி நல்லீர் உம் பிறப்பு அறவண அடிகள் தம்பால் பெறுமின்-நும்முடைய பழம் பிறப்பின் வரலாற்றில் எஞ்சியவற்றையும் அறவண வடிகளார்பால் கேட்டறிந்து கொண்மின்!; என்றாள் என்க.

(விளக்கம்) அவர் என்றது மாதவி போன்றே மயங்கி யிருக்கும் சுதமதியை உளப்படுத்தியவாறு. என்னை? அவளும் மணிமேகலையின் பிரிவாற்றாமல் தனித்துயர் உழக்கும் மாதவியினும் காட்டில் பெரிதுந் துயருற்றனள் என்பது துயிலெழுப்பிய காதையில் சுதமதி இன்னுயிர் இழந்த யாக்கையினிருந்தனள் என்றமையாலறிக (துயிலெ...133-134)முற்பிறப்பில் அவர் தாரையும் வீரையும் ஆகியிருந்த செய்தி அற்புதமாக முன்னரே அறிந்த செய்தியே ஆயினும், அதனை இவளும் கூறுதலின் ஈண்டும் அற்புதச் செய்தியாயிற்று.அவற்றுள் எஞ்சியவற்றை அறவணர் அறிவிப்பர் என்பாள் அறவணடிகள் தம்பாற் பிறப்புப் பெறுமின் என்றாள், என்னை? அறவணடிகளார் அவர்தம் முற்பிறப்பை பெறுமின் என்றாள் நேரிற் கண்டவர் என்பது மணிமேகலா தெய்வம் கூறிய கூற்றால் மணிமேகலை அறிந்திருத்தலால் இங்ஙனம் கூறினள் அல்லதூம் வருகின்ற காதையில்(12) ஆங்கவர் தந்திறம் அறவணன் தன்பால் பூங்கொடி நல்லாய் கேள் என்றுரைத்ததும் என மணிமேகலை மணிமேகலா தெய்வம் தனக்குக் கூறியதாகவே ஓதுதலின், மந்திரங் கொடுத்த காதையில் இது காணப்படாமையின் இப் பொருள்பட வரும் மணிமேகலா தெய்வத்தின் கூற்று ஏடெழுதுவோரால் விடப்பட்டிருத்தல் கூடும் என்று நினைத்தற்கும் இடந்தருகின்றது. முன்பு தவ்வையரும் இப்பொழுது அவ்வையரும் ஆயினமையால் நீயிர் உம்மையினும் இம்மையினும் என்னாற் றொழுந்தகையுடையீரே ஆகுதிர் ஆதலால் நும்மடியைப் பேரன்புடன் தொழுகின்றேன் என்பதுபட தவ்வையராகிய............தொழுதேன் என்று விதந்தெடுத்து விளம்பினள் செய்தவம் வாய்வதாக என மாறுக.

மணிமேகலை அமுதசுரபியை அவர்க்குக் காட்டி அறவணவடிகளாரைத் தொழுதற்கு அவரொடும் போதல்

141-146: ஈங்கிஃது............தானென்

(இதன் பொருள்) ஈங்கு இஃது ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் மாபெரும் பாத்திரம்-அன்னையீர்! இதோ என் கையகத்திருக்கும் இப் பாத்திரம் அறவோனாகிய ஆபுத்திரன் என்பவன் கையகத்திருந்த மாபெருந் தெய்வத் தன்மையுடைய அமுதசுரபி என்னும் பெயருடைய அரும்பெற்ற பாத்திரமாகும் ஆதலின்; நீயிரும் தொழும் என- நீயிரும் இதனைத் தொழுவீராக! என்று கூற; தொழுதனர் ஏத்திய தூமொழியாரொடும்-அது கேட்டு ஆர்வத்தோடு அமுதசுரபியைக் கைகூப்பித் தொழுது வாழ்த்திய தூய மொழியையுடைய அம் மாதவியையும் சுதமதியையும் நோக்கி, இனி யாம்; பழுது அறுமாதவன் பாதம் படர்கேம் எழுக என-குற்றமற்ற பெரிய தவத்தையுடைய அறவணவடிகளாருடைய திருவடிகளிடத்தே செல்லுதும் எழுமின்! என்று கூற;(தூமொழியாரொடும்) இளங்கொடி எழுந்தனள்-அது கேட்டு ஆர்வத்தோடு எழுந்த மாதவியும் சுதமதியுமாகிய அத் தூமொழி மடவாரோடு இளையளாகிய மணிமேகலை எழுந்து போயினள் என்பதாம்.

(விளக்கம்) பழுது- பிறப்பிற்கு ஆகுபெயர். பிறப்பறுதற்குக் காரணமான மாதவம் எனத் தவத்தின் மேனின்றது. தூமொழியாரை எழுகென எழுந்த அத் தூமொழியாரோடும் இளங்கொடி எழுந்தனள் என்க.

மாதவனைச் சரண்புகுவேம் என்பாள் மாதவன் பாதம் படர்கேம் என்றாள்.

இனி இக் காதையை மணிபல்லவத்திடை தெய்வம் நீங்கிய பின்னர் மணிமேகலை குன்ற முதலியவற்றை நோக்கித் திரிய அவள் முன்னர்த் தீவதிலகை தோன்றி யார் நீ என்றலும் அவள் அன்னாய் கேளாய் யான் போய பிறவியில் இராகுலன் மனை; இலக்குமி என் பெயர்; ஆய பிறவியில் மாதவியீன்ற மணிமேகலை, ஈங்குத் தெய்வம் கொணரப் பிறப் புணர்ந்தேன்; என் வரவிது பயனிது யார் நீ என்றலும் தீவதிலகை உரைக்கும் தொழுது வந்தேன் ஈங்குப் பூண்டேன் தீவதிலகை என் பெயர்; இது கேள்! ஆபுத்திரன் கை அமுதசுரபி தோன்றும் அதன் திறம் செய்து நின்னூரங்கண் கேட்குவை என்று உரைத்தலும் வணங்கிக் கூடிச் செய்து நிற்றலும் செங்கையிற் பாத்திரம் புகுதலும் மடவாள் மகிழ்வெய்தி வீர நின்னடி வாழ்த்தல் என் நாவிற் கடங்காது என்ற ஆயிழை முன்னர் நாதன் பாதம் ஏத்திச் சேயிழைக்குத் தீவதிலகை உரைக்கும் கொல்லும் விடுஉம் சிதைக்கும் நிறுத்தும் பாவி அது தீர்த்தோர் இசைச் சொல் அளவைக்கு நா நிமிராது உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் ஆகிக் கண்டனை என்றலும் பாத்திரம் என்கைப் புகுந்தது அயர்வோர் பலர், காண்டல் வேட்கையேன் என, ஆயினை அறிந்தனை ஏழுவாய் என்று உரைப்ப வணங்கி எழுந்து மணிமேகலை பெறுமின் இது பாத்திரம் தொழும் என படர்கேம் என இளங்கொடி எழுந்தனள் என இயைத்திடுக.

பாத்திரம் பெற்ற காதை முற்றிற்று.
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 09:10:08 AM
12. அறவணர்த் தொழுத காதை

பன்னிரண்டாவது மணிமேகலை பாத்திரங் கொண்டு தன்னூர் அறவணர்த் தொழுத பாட்டு

அஃதாவது: மணிமேகலை அமுதசுரபியின் திறம் நின்னூரில் அறவணன் தன்பால் கேட்குவை என்று தீவதிலகை அறிவுறுத்தமையாலும் அறவணருடைய பெருமையை மணிமேகலா தெய்வமும் கூறி முற்பிறப்பிலே நின் தமைக்கையராயிருந்த தாரையும் வீரையுமே மாதவியாகவும் சுதமதியாகவும் நின்னொடு கூடினர் என்று அறிவுறுத்தமையானும் அவ்வறவண அடிகளாரைக் கண்டு தொழும் ஆர்வம் மிக்குத் தாயராகிய மாதவியோடும் சுதமதியோடும் சென்று வணங்கி அரிய பல உண்மைகளை அவர்பாலறிந்த செய்தியைக் கூறும் செய்யுள் என்றவாறு.

இதன்கண்- மணிமேகலை மாதவியோடும் சுதமதியோடும் அறவணவடிகளார் உறையும் பள்ளி இருக்குமிடம் வினவிச் சென்று அவர் அடிகளில் வணங்கித் தான் முன்பு உவவனதிற்குச் சென்றதும் ஆங்கு உதயகுமரன் வந்ததும் முதலாகத் தீவதிலகை அறவணர்பால் ஆபுத்திரன் வரலாறு கேள் என்று விடுப்ப வந்தது ஈறாகக் கூறுதலும் அறவணவடிகள் மீண்டும் பாதபங்கய மலையைப் பரவிச் சென்று மாதவிக்கும் சுதமதிக்கும் கணவனாகிய துச்சயனை ஒரு பொழிலிற் கண்டு உசாவியதும் அவன் தாரையும் வீரையும் சாவுற்றமை கூறியதும்; அறவணர் தம்மொரு பிறப்பிலே முற்பகுதியிலே தாரையும் வீரையுமாய் அரசன் மனைவியா யிருந்தவரே மாறிப் பிறந்து மாதவியும் சுதமதியுமாகி அப்பிறப்பின் பிற்பகுதியிலே தம்முன் வந்து நிற்றலைக் கண்டு

ஆடுங் கூத்தியர் அணியே போல
வேற்றேர் அணியொடு வந்தீரோ!

என வியந்து மணிமேகலைக்கு அவர் முற்பிறப்பு நிகழ்ச்சிகளைச் சொல்லியும் அமையாராய், புத்த ஞாயிறு தோன்றுதற்குக் காரணமும் அவன் தோன்றிய பின்னர் இவ்வுலகம் எய்தும் நலங்களும் விதந்தெடுத்துக் கூறுதலும் அமுதசுரபியைப் பெற்ற மணிமேகலைக்கு மக்கள் தேவர் என இருசாரார்க்கும் ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன் அது பசிப்பிணி தீர்த்தலே எனத் தவப்பெரு நல்லறம் சாற்றலும் பிறவும் பெரிதும் இன்பம் தரும் வகையில் கூறப்படுகின்றன.

ஆங்கு அவர் தம்முடன் அறவண அடிகள்
யாங்கு உளர்? என்றே இளங்கொடி வினாஅய்
நரை முதிர் யாக்கை நடுங்கா நாவின்
உரை மூதாளன் உறைவிடம் குறுகி
மைம் மலர்க் குழலி மாதவன் திருந்து அடி
மும் முறை வணங்கி முறையுளி ஏத்தி
புது மலர்ச் சோலை பொருந்திய வண்ணமும்
உதயகுமரன் ஆங்கு உற்று உரைசெய்ததும்
மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை
அணி இழை தன்னை அகற்றிய வண்ணமும்  12-010

ஆங்கு அத் தீவகத்து அறவோன் ஆசனம்
நீங்கிய பிறப்பு நேர் இழைக்கு அளித்ததும்
அளித்த பிறப்பின் ஆகிய கணவனை
களிக் கயல் நெடுங் கண் கடவுளின் பெற்றதும்
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்
வெவ் வினை உருப்ப விளிந்து கேடு எய்தி
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும்
கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர்
ஆங்கு அவர் தம் திறம் அறவணன் தன்பால்
பூங் கொடி நல்லாய்! கேள் என்று உரைத்ததும்  12-020

உரைத்த பூங்கொடி ஒரு மூன்று மந்திரம்
தனக்கு உரைசெய்து தான் ஏகிய வண்ணமும்
தெய்வம் போய பின் தீவதிலகையும்
ஐயெனத் தோன்றி அருளொடும் அடைந்ததும்
அடைந்த தெய்வம் ஆபுத்திரன் கை
வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும்
ஆபுத்திரன் திறம் அறவணன் தன்பால்
கேள் என்று உரைத்து கிளர் ஒளி மா தெய்வம்
போக என மடந்தை போந்த வண்ணமும்
மாதவன் தன்னை வணங்கினள் உரைத்தலும்  12-030

மணிமேகலை உரை மாதவன் கேட்டு
தணியா இன்பம் தலைத்தலை மேல் வர
பொன் தொடி மாதர்! நல் திறம் சிறக்க
உற்று உணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன்
நின் நெடுந் தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த
அந் நாள் அன்றியும் அரு வினை கழூஉம்
ஆதி முதல்வன் அடி இணை ஆகிய
பாதபங்கய மலை பரவிச் செல்வேன்
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன்
துச்சயன் தன்னை ஓர் சூழ் பொழில் கண்டேன்  12-040

மா பெருந் தானை மன்ன! நின்னொடும்
தேவியர் தமக்கும் தீது இன்றோ? என
அழிதகவு உள்ளமொடு அரற்றினன் ஆகி
ஒளி இழை மாதர்க்கு உற்றதை உரைப்போன்
புதுக் கோள் யானைமுன் போற்றாது சென்று
மதுக் களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம்
ஆங்கு அது கேட்டு ஓர் அரமியம் ஏறி
தாங்காது வீழ்ந்து தாரை சாவுற்றதூஉம்
கழி பெருந் துன்பம் காவலன் உரைப்ப
பழ வினைப் பயன் நீ பரியல் என்று எழுந்தேன்  12-050

ஆடும் கூத்தியர் அணியே போல
வேற்று ஓர் அணியொடு வந்தீரோ? என
மணிமேகலைமுன் மடக்கொடியார் திறம்
துணி பொருள் மாதவன் சொல்லியும் அமையான்
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த
நறு மலர்க் கோதாய்! நல்கினை கேளாய்
தரும தலைவன் தலைமையின் உரைத்த
பெருமைசால் நல் அறம் பெருகாதாகி
இறுதி இல் நல் கதி செல்லும் பெரு வழி
அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண் அடைத்தாங்கு  12-060

செயிர் வழங்கு தீக் கதி திறந்து கல்லென்று
உயிர் வழங்கு பெரு நெறி ஒரு திறம் பட்டது
தண் பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம்
உண்டு என உணர்தல் அல்லது யாவதும்
கண்டு இனிது விளங்காக் காட்சி போன்றது
சலாகை நுழைந்த மணித் துளை அகவையின்
உலா நீர்ப் பெருங் கடல் ஓடாது ஆயினும்
ஆங்கு அத் துளை வழி உகு நீர் போல
ஈங்கு நல் அறம் எய்தலும் உண்டு எனச்
சொல்லலும் உண்டு யான் சொல்லுதல் தேற்றார்  12-070

மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின்
சக்கரவாளத்துத் தேவர் எல்லாம்
தொக்கு ஒருங்கு ஈண்டி துடித லோகத்து
மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப
இருள் பரந்து கிடந்த மலர் தலை உலகத்து
விரி கதிர்ச் செல்வன் தோன்றினன் என்ன
ஈர் எண்ணூற்றோடு ஈர் எட்டு ஆண்டில்
பேர் அறிவாளன் தோன்றும் அதன் பிற்பாடு
பெருங் குள மருங்கில் சுருங்கைச் சிறு வழி
இரும் பெரு நீத்தம் புகுவது போல  12-080

அளவாச் சிறு செவி அளப்பு அரு நல் அறம்
உளம் மலி உவகையோடு உயிர் கொளப் புகூஉம்
கதிரோன் தோன்றும் காலை ஆங்கு அவன்
அவிர் ஒளி காட்டும் மணியே போன்று
மைத்து இருள் கூர்ந்த மன மாசு தீரப்
புத்த ஞாயிறு தோன்றும்காலை
திங்களும் ஞாயிறும் தீங்கு உறா விளங்க
தங்கா நாள் மீன் தகைமையின் நடக்கும்
வானம் பொய்யாது மா நிலம் வளம்படும்
ஊன் உடை உயிர்கள் உறு துயர் காணா  12-090

வளி வலம் கொட்கும் மாதிரம் வளம்படும்
நளி இரு முந்நீர் நலம் பல தரூஉம்
கறவை கன்று ஆர்த்தி கலம் நிறை பொழியும்
பறவை பயன் துய்த்து உறைபதி நீங்கா
விலங்கும் மக்களும் வெரூஉம் பகை நீங்கும்
கலங்கு அஞர் நரகரும் பேயும் கைவிடும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் மன் உயிர் பெறாஅ
அந் நாள் பிறந்து அவன் அருளறம் கேட்டோர்
இன்னாப் பிறவி இகந்தோர் ஆதலின்  12-100

போதி மூலம் பொருந்திய சிறப்பின்
நாதன் பாதம் நவை கெட ஏத்துதல்
பிறவி தோறும் மறவேன் மடக்கொடி!
மாதர் நின்னால் வருவன இவ் ஊர்
ஏது நிகழ்ச்சி யாவும் பல உள
ஆங்கு அவை நிகழ்ந்த பின்னர் அல்லது
பூங் கொடி மாதர் பொருளுரை பொருந்தாய்!
ஆதி முதல்வன் அருந் துயர் கெடுக்கும்
பாதபங்கய மலை பரசினர் ஆதலின்
ஈங்கு இவர் இருவரும் இளங்கொடி! நின்னோடு  12-110

ஓங்கு உயர் போதி உரவோன் திருந்து அடி
தொழுது வலம் கொண்டு தொடர் வினை நீங்கிப்
பழுது இல் நல் நெறிப் படர்குவர் காணாய்
ஆர் உயிர் மருந்து ஆம் அமுதசுரபி எனும்
மா பெரும் பாத்திரம் மடக்கொடி! பெற்றனை
மக்கள் தேவர் என இரு சார்க்கும்
ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன்
பசிப் பிணி தீர்த்தல் என்றே அவரும்
தவப் பெரு நல் அறம் சாற்றினர் ஆதலின்
மடுத்த தீக் கொளிய மன் உயிர்ப் பசி கெட
எடுத்தனள் பாத்திரம் இளங்கொடி தான் என்  12-121

மணிமேகலை மாதவியோடும் சுதமதியோடும் சென்று அறவணவடிகளாரை வணங்கித் தான் எய்திய பேறுகளை இயம்புதல்

1-6: ஆங்கவர்...............ஏத்தி

(இதன் பொருள்) ஆங்கு அவர் தம்முடன் இளங்கொடி அறவண அடிகள் யாங்கு உளர் என்று வினா அய்-இவ்வாறு மாதவியோடும் சுதமதியோடும் அறவணர் திருவடிகளை வணங்க எழுந்த இளைய பூங்கொடி போல்வளாகிய மணிமேகலை அவ்வறவணவடிகளார் எவ்விடத்தே உறைகின்றார் என்று அறிந்தோரை வினவித் தெரிந்துகொண்டு; நிரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின் உரை முதாளன் உறைவிடம் குறுகி- நரைத்து முதிர்ந்த யாக்கையுடைய யாரேனும் நடுக்கமில்லாத செந்நாவினை யுடையராய் அறமுரைத்தலிற்றிலை சிந்த முதுமையுடையோராயிருந்த அவ்வறவணவடிகளார் உறைகின்ற தவப் பள்ளியை அடைந்து; மைம்மலர்க் குழலி- கரிய கூந்தலையுடைய அம் மணிமேகலை அவரைக் கண்டதும்; மாதவன் திருந்து அடி மும்முறை வணங்கி முறையுளி ஏத்தி-அந்தப் பெரிய தவத்தை யுடையவனுடைய திருந்திய நடையினையுடைய திருவடியை மூன்றுமுறை வலம்வந்து வணங்கி நூன்முறைப்படி வாழ்த்திய பின்னர் என்க.

(விளக்கம்) அவர்- மாதவியும் சுதமதியும். வினாஅய்- வினவி. யாக்கை நரைத்து முதிர்ந்ததேனும் மொழிகுழறல் முதலியன இன்றி நன்கு உரைக்கும் ஆற்றலோடிருந்தனர் என்பது தோன்ற நடுங்கா நாவின் உரை மூதாளன் என்றார். உறைவிடம் என்றது தவப்பள்ளியை. மைம் மலர்க்குழலி, வாளாது சுட்டுப் பெயராந்துணையாய் நின்றது. ஒழுக்கத்தை அடியின் பாலதாக்கித் திருந்தடி என்றார். முறை-நூன்முறை அவருடைய வாழ்த்தினைப் பெற்றபின்னர் என்று பாட்டிடை வைத்த குறிப்பினாலே கூறிக்கொள்க.

மணிமேகலை தன் திறத்திலே நிகழ்ந்தவற்றை அறவண அடிகளார்க்கு அறிவித்தல்

7-20: புதுமலர்............உரைத்தலும்

(இதன் பொருள்) புதுமலர்ச் சோலை பொருந்திய வண்ணமும் மாதவியின் பணி மேற்கொண்டு மலர் கொய்தற் பொருட்டுத் தானும் சுதமதியும் உவவனத்திற் சென்று புகுந்த செய்தியும் ஆங்கு உதயகுமரன் உரை செய்ததும்-அம் மலர்வனத்துள் உதயகுமரன் தன்பால் பெரிதும் காமமுடையவனாய் வந்து கூறிய செய்தியும்; மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை அணியிழை தன்னை அகற்றிய வண்ணமும்-அவ் வுவவனத்தினின்றும் மணிமேகலா தெய்வம் விஞ்சையிற் பெயர்த்துத் தன்னை மணிபல்லவத்திடை வைத்துப் போய செய்தியும்; ஆங்கு அத் தீவகத்து அறவோன் ஆசனம் நீங்கிய பிறப்பு நேரிழைக்கு அளித்ததும்-அங்கு அம் மணிபல்லவத் தீவின்கண் தான்கண்ட புத்தபெருமானுடைய இருக்கையாகிய தருமபீடிகை தனக்குப் பழம் பிறப்புணர்த்திய செய்தியும்; அளித்த பிறப்பின் ஆகிய கணவனைக் களிக்கயல் நெடுங்கண் கடவுளிற் பெற்றதும்- பழம் பிறப்புணர்த்துமாற்றால் அப் பிறப்பின்கண் தனக்குக்கணவனாகிய இராகுலன் மாறிப்பிறந்த பிறப்பினைக் களிக்கின்ற கயல்மீன் போன்ற நெடிய கண்ணையுடைய மணிமேகலா தெய்வத்தாலே அறியப் பெற்றதும்; மீண்டும் அத் தெய்வம் தன்னை நோக்கி; தவ்வையராகிய தாரையும் வீரையும் வெவ்வினை உருப்ப விளிந்து கேடு எய்தி-முற்பிறப்பிலே உனக்குத் தமக்கைமாராயிருந்த தாரை என்பவளும் வீரை என்பவளும் தாம் முற்செய் தீய ஊழ்வினை உருந்து வந்தூட்டுதலாலே இறந்து அவ்வுடம்பு ஒழிந்த பின்னர்; மாதவியாகியும் சுதமதி யாகியும் கோதையம் சாயல் நின்னொடுங்கூடினர்- நின் தாயாகிய மாதவியும் தாயன்பு சான்ற சுதமதியுமாகப் பிறப்புற்று மணிமேகலாய் நின்னோடும் தொடர்புடையராயினர் எனவும்; பூங்கொடி நல்லாய் ஆங்கு அவர்தந்திறம் அறவணன் தன்பால் கேள் என்று உரைத்ததும்- பூங்கொடி போலும் அழகுடையோய் நீ நின்னூரின்கண் அத் தாரையும் வீரையுமாகிய நின் தமக்கையர் செய்தியை அறவணவடிகளார்பாற் சென்று கேட்கக் கடவை என்று தனக்குக் கூறிய செய்தியையும்; என்க.

(விளக்கம்) புதுமலர்ச்சோலை என்றது-உவவனத்தை. உதயகுமரன் ஆங்கு உற்று உரை செய்ததும் என்றது அவன் தன்னை இகழ்ந்தமையையும் சித்தராபதியாற் சேர்தலும் உண்டு என்று கூறியதனையும் கருதிக் கூறியபடியாம்.

அறவோன் ஆசனம்-புத்தபீடிகை. பிறப்புணர்ச்சியை அளித்தது என்றவாறு. ஆகிய கணவன் என்றது இராகுலனை. கடவுள்- மணிமேகலா தெய்வம். மீன் தன் குஞ்சுகளைப் பார்க்குமாபோலே அவள்பால் அருட்பார்வை கொண்ட தெய்வம் என்பாள், களிக்கயல் நெடுங்கட் கடவுள் என்றாள்(15) தவ்வையராகி...........(20) நல்லாய் கேள் என்பன மணிமேகலா தெய்வத்தின் கூற்றைக் கொண்டு கூறிய படியாம்.

இதுவுமது

21-30: உரைத்த.........உரைத்தலும்

(இதன் பொருள்) உரைத்த பூங்கொடி ஒரு மூன்று மந்திரம் தனக்கு உரை செய்து தான் ஏகிய வண்ணமும்-அறவணவடிகள்பால் கேள் என்று கூறிய மலர்க்கொடி போன்ற அழகுடைய மணிமேகலா தெய்வம் ஒப்பற்ற மூன்று மந்திரங்களைத் தனக்குச் செவியறிவுறுத்தி வானத்திலேறி மறைந்த செய்தியும்; தெய்வம் போய்பின் தீவதிலகையும் ஐயெனத் தோன்றி அருளொடும் அடைந்ததும்-அத் தெய்வம் மறைந்து போன பின்னர்த் தீவதிலகை என்னும் மற்றொரு தெய்வம் ஐயென்று தான் வியக்கும்படி வானின்றிழிந்து தனக்கு முன் தோன்றி அருளோடும் தன்னை எய்தியதும்; அடைந்த தெய்வம் ஆபுத்திரன்கை வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும்-அருள் ஒழுகும் முகத்தோடும் அடைந்த காவற் றெய்வமாகிய அத் தீவதிலகை தானும் ஆபுத்திரன் என்னும் அறவோன் கையகத்துப் பயின்ற வணங்கத் தகுந்த சிறப்போடு கூடிய அமுதசுரபி யென்னும் பிச்சைக் கலத்தை அதனியல்பெல்லாம் வாய்மையாகக் கூறித் தன்கையிற் புகுதுமாறு செய்தருளியதும்; ஆபுத்திரன் திறம் அறவணன் தன்பால் கேள் என்று உரைத்து அமுதசுரபிக்குரிய ஆபுத்திரனுடைய வரலாற்றை அறவணவடிகள்பால் கேட்டறிக என்று சொல்லி; கிளர் ஒளி மாதெய்வம் போக என மடந்தை போந்த வண்ணமும்-மிக்கு விளங்கும் ஒளியையுடைய சிறந்த அத் தீவதிலகை யென்னும் தெய்வம் இனி, நீ நின்னூர்க்கும் செல்லுக என்று விடுப்பத் தான் புகார் நகர்க்கு வான்வழியாக வந்தெய்திய செய்தியும் ஆகிய இவற்றையெல்லாம்; மாதவன் தன்னை வணங்கினள் உரைத்தலும்-அவ்வறவணவடிகளாரை வணங்கிச் சொல்லா நிற்றலும் என்க.

(விளக்கம்) பூங்கொடி:மணிமேகலா தெய்வம் (23). தெய்வம்- மணிமேகலா தெய்வம் (25). தெய்வம்- தீவதிலகை. ஐயென- வியக்கும்படி. ஐவியப்பாகும்(தொல்-உரி-29) வியத்தகுமொன்றனைக் காண்போர் ஐ என்று வாயாற் கூறி வியத்தல் உண்மையின் ஐ எனத் தோன்றி, என்றார். ஆபுத்திரன் திறம் ஆபுத்திரன் வரலாறு முதலியன.

அறவணவடிகளார் மகிழ்ந்து மாதவியும் சுதமதியுமாகிய இருவருடைய முற்பிறப்பு வரலாறு கூறுதல்

31-40: மணிமேகலை...................கண்டேன்

(இதன் பொருள்) மணிமேகலையுரை மாதவன் கேட்டுத் தலைத்தலை மேல்வர தணியா இன்பம்-மணிமேகலை கூறிய மொழிகளைக் கேட்ட அறவணவடிகளார் அவள் எய்திய ஆக்கங்கள் பலவற்றையும் கூறும்பொழுது ஒவ்வோராக்கத்திடத்தும் அவர் எய்தும் மகிழ்ச்சி மிகுத்துப் பெருகி வருதலாலே குறையாத பேரின்பத்தை யுடையவராய்; பொற்றொடி மாதர் நல்திறம் சிறக்க-நன்று நன்று நங்காய் நின்னாலே உலகிலே தோன்றும் பொன்வளையலணியும் மகளிரினத்தின் நற்பண்புகள் சிறந்தோங்குக; இவர் திறம் உரைக்கேன் நீ உற்று உணர்வாய்- மாதவியும் சுதமதியும் ஆகி ஈங்கு வந்தெய்திய இவருடைய வரவாற்றில் நீ அறிந்தது கிடப்ப எஞ்சியவற்றை யான் இப் பொழுது நினக்குக் கூறுவல் உள்ளம் பொருந்திக் கேட்டுணர்ந்து கொள்வாயாக; நின் நெடுந் தெய்வம் நினக்கு உரைத்த அந்நாள் அன்றியும்-உன் குலதெய்வமாகிய புகழால் நீண்ட அம் மணிமேகலா தெய்வம் நினக்குக் கூறிய அந்த நாளிலே யான் சென்ற தன்றியும்; அருவினை கழூஉம் ஆதிமுதல்வன் அடியிணை ஆகிய பாத பங்கயமலை பரவிச் செல்வேன்- போக்குதற்கரிய வினைகளைத் துவாரத் துடைக்கும் ஆதிசினேந்திரனாகிய புத்தருதடைய திருவடித் தாமரையின் சுவடு கிடப்பதாகிய அப் பாதபங்கய மலையை உள்ளத்தாலே நினைந்து வாழ்த்தி மீண்டுமொருநாள் அதனை வலம் வருதற் பொருட்டுச் செல்லும் யான்; கச்சயம் ஆளும் கழல்கால் வேந்தன் துச்சயன்றன்னை ஓர் சூழ் பொழில் கண்டேன் கச்சய நகரத்தை ஆள்கின்ற வீரக் கழலணிந்த காலையுடைய வேந்தனாகிய துச்சயனை முன்போலவே மரங்கள் சூழ்ந்த ஒரு சோலையிலே கண்டேன்காண் என்றார்; என்க.

(விளக்கம்) மணிமேகலை கூறிய செய்தியில் அவள் பெற்ற ஆக்கம் பலவாகலின் ஒவ்வோர் ஆக்கத்தையும் கேட்கும் தோறும் அறவண அடிகளார் இன்பம் மேலும்மேலும் பெருக இறுதியில் அவளைப் பாராட்டுவார் நின்னால் நின்னினத்து மாதர் நற்றிறம் உலகில் சிறப்பதாக! என்று வாழ்த்தினர் என்க. இதற்கு இங்ஙனம் நுண்ணிதின் உரை கூறாது பொற்றொடிமாதர் என்பதனை விளி என்று கொள்வார் உரை சிறவாமை யுணர்க. பிறர் ஆக்கங்கண்டு பெரிதும் மகிழ்தலும் எல்லாரும் இன்புற்று வாழவேண்டும் என்று விரும்புவதுமே சான்றேரியல்பாகலின்.

மாதவியும் சுதமதியுமாகிய இருவருடைய முற்பிறப்பின் முடிவுகள் இவ் வுலக நிலையாமையை நன்குணர்த்தி மணிமேகலையின் மெய்யுணர்விற்கு ஆக்கமா யமையும் என்பது கருதி இவர் திறம் உரைக்கேன் உற்றுணர்வாய் என்று விதந்தோதினர்.

மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்குக் குலதெய்வமாதல் பற்றி நின்தெய்வம் என்றார். தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் அத் தெய்வத்தின் பெருந்தகைமைபற்றி நெடுந்தெய்வம் என்றார்.

நின் தெய்வம் நினக்கெடுத்துரைத்த அந்நாள் என்றது துச்சயன் மனைவியரோடு மலையில் ஆடிக் கங்கைக் கரையிருந்துழி அறவணன் ஆங்கு அவன்பாற் சென்றான் என மணிமேகலா தெய்வம் கூறிய அந் நாளை என்க.(10-55-8) அந்நாள் அன்றியும் மீண்டும் ஒருநாள் செல்வேன் என்றவாறு.

இதுவுமது

41-50: மாபெருந்..............எழுந்தேன்

(இதன் பொருள்) மாபெருந்தானை மன்ன-அப்பொழுது யான் அம் மன்னனை நோக்கி, மிகப் பெரிய படைகளையுடைய வேந்தனே!; நின்னொடும் தேவியர் தமக்கும் தீது இன்றோ என-உனக்கும் உன் மனைவிமார் இருவர்க்கும் தீது ஏதுமின்றி இனிது வாழ்கின்றீரோ என வினவினேனாக!; அழிதகவு உள்ளமொடு அரற்றினன் ஆகி ஒளி இழை மாதர்க்கு உற்றதை உரைப்போன் அதுகேட்ட அம் மன்னவன் துன்பத்தாலே அழிகின்ற நெஞ்சத்தோடே வாழ்விட்டு அழுகின்றவனாய் ஒளிமிக்க அணிகலன் அணிந்த தன் மனைவியர் இருவர்க்கும் ஒருசேர நிகழ்ந்த நிகழ்ச்சியைக் கூறுபவன்; வீரை மதுக்களி மயக்கத்து போற்றாது புதுக்கோள் யானை முன் சென்று மாய்ந்ததூஉம்-தன் மனைவியரிருவருள் இளையாளாகிய வீரை என்பவள் கள்ளுண்டு களித்தமையாலுண்டான மயக்கங் காரணமாகப் புதுவதாகப் பற்றிக் கொணர்ந்த காட்டியானையின்முன் தன்னைப் போற்றிக் கொள்ளமற் சென்று அதனால் கொல்லப்பட் டொழிந்த செய்தியும்; தாரை ஆங்கு அதுகேட்டுத் தாங்காது ஓர் அரமியம் ஏறி வீழ்ந்து சாவுற்றதூஉம்- மூத்தாளாகிய தாரை தானும் அப்பொழுதே வீரையின் சாவுச் செய்தியைக் கேட்டுத் துயரம் தாங்கமாட்டாமல் ஒரு நெடுநிலை மாடத்துச்சியிலுள்ள நிலா முற்றத்திலேறி அங்கிருந்து நிலத்திலே குதித்து இறந்துபட்ட செய்தியுமாகிய; கழிபெருந் துன்பம் காவலன் உரைப்ப-மிகவும் பெரிய துயரச் செய்திகளை அம் மன்னவன் சொல்லியழ; பழவினைப் பயன் நீ பரியல் என்று எழுந்தேன்-அது கேட்ட யானும் இவையெல்லாம் பழவினையின் பயன்களே யாகும் ஆகவே, அவற்றிற்கு வருந்துதல் பயனில் செயலாம் வருந்தற்க என்று ஆறுதல் கூறி அவ்விடத்தினின்றும் சென்றேன்காண்; என்றார் என்க.

(விளக்கம்) மன்ன: விளி மாதர்-தாரையும் வீரையும் ஆகிய மன்னன் மனைவியர்.புதுக்கோள்யானை-புதிதாகப் பற்றிக் கொணர்ந்து பழக்கப்படாத காட்டியானை. போற்றாது- தன்னைப் போற்றுதல் செய்யாது. வெம்பு கரிக்கு ஆயிரந்தான் வேண்டுமே என்னும் அறிவுரையைப் போற்றாது எனினுமாம். வீரை-இளையாள். தங்கையிறந்தமையாலுண்டான துயரம் பொறாது தாரை அரமியம் ஏறி வீழ்ந்திறந்தாள் என்றாள் என்க.

இதன்கண்- கள்ளுண்டலால் வரும் கேடும் காமத்தால் வரும் துன்பமும் பற்றுடைமையால் வருந்துன்பமும் யாக்கை நிலையாமையுமாகிய அறிவுரைகளும் குறிப்பாகப் போந்தமையும் உணர்க.

அறவண அடிகளார் மணிமேகலை முதலியோரைப் பாராட்டி அவர்க்குப் புத்தபெருமானுடைய தோற்றச் சிறப்பறிவுறுத்துதல்

51-62: ஆடுங்.............பட்டது

(இதன் பொருள்) ஆடுங் கூத்தியர் அணியேபோல வேற்றோர் அணியொடு வந்தீர் என-அவ்வாறு முற்பிறப்பிலே தாரையும் வீரையும் இலக்குமியும் என்னும் பெயரோடு சிறந்த அரசியராய்த் திகழ்ந்த நீயிரே கூத்தாட்டரங்கில் ஏறி ஆடும் நாடக மகளிர் ஒரு கோலம் புனைந்து ஆடியவர் அவ் வேடத்தைக் களைந்து அவ் வேடத்திற்கு மாறுபட்டவராக வேடம் புனைந்து வருமாறு போலவே என் முன்னர் வந்துள்ளீர்; ஓ என-நும்வரவு பெரிதும் வியக்கத் தகுந்தது கண்டீர்! என்று வியந்து மணிமேகலை முன் மடக்கொடியார் திறம்- மணிமேகலைக்கு முன்பு மாதவியும் சுதமதியும் ஆகிய அம் மடந்தையர் முற்பிறப்பிலே தாரையும் வீரையும் என்னும் அரசியராயிருந்து இறந்துபட்ட நிகழ்ச்சிகளை; துணிபொருள் மாதவன் சொல்லியும் அமையான்- மெய்ப்பொருளை யுணர்ந்த பெரிய தவத்தை யுடைய அவ்வறவணவடிகள் ஆர்வத்துடன் அறிவித்தும் அமையாராய்; பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த நறுமலர்க் கோதாய்- பழம் பிறப்பும் அறநெறியும் ஏது நிகழ்ச்சி காரணமாக நன்குணர்ந்த நறிய மலர்மாலை போன்ற மணிமேகலையே இனி யான் கூறுவதனை; நல்கினை கேளாய்- செவி கொடுத்துக் கேட்பாயாக!; தரும தலைவன் தலைமையின் உரைத்த பெருமைசால் நல்லறம் பெருகாது ஆகி- அறத்தின் முதல்வனாகிய புத்தபெருமான் தன் இறைமைத் தன்மை  காரணமாக உலகினர்க்கு ஓதியருளிய பெருமை மிக்க அழகிய அருளறம் உலகின்கண் பெருகாதொழியா நிற்ப; இறுதியில் நல்கதி செல்லும் பெருவழி-முடிவில்லாத நன்னிலையை எய்தச் செல்லுதற்குரிய அவ்வற நெறிதானும்; அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண் அடைத்து ஆங்கு-அறுகம் புல்லும் நெருஞ்சியும் அடந்து சிறிதும் இயங்க இடமின்றி அடைத்தாற் போலாகி  விட்டமையாலே; உயிர் வழங்கு பெருநெறி- மக்கட் பிறப்பெய்திய உயிர்கள் செல்லுதற் கமைந்த பெரிய வழியானது; செயிர் வழங்கு தீக்கதி திறந்து-குற்றங்களே பயில வழங்கும் தீய வழியாகத் திறக்கப்பட்டு; கல் என் ஒரு திறம்பட்டது-உயிர்கள் துன்பத்தால் ஆரவாரஞ் செய்தற் கியன்றதொரு தன்மையை யுடையதாயிற்று என்றார் என்க.

(விளக்கம்) ஆடுங்கூத்தியர் அணி-நாடகமாடும் மகளிர் புனைந்து கொள்ளும் வேடம்; கூத்தியர் மாற்றுவேடம் புனைந்து கொண்டு வந்து தோன்றுதல் போல் முன்னர் அரசியராய் வேடம் புனைந்து நடித்த நீயிர் இப்பொழுது பிக்குணி வேடம் புனைந்து கொண்டு எம்முள் வந்தீர் என்று வியந்த படியாம். அறவணவடிகளார் மணிமேகலை கூற்றால் இம் மாதவியும் சுதமதியும் தாம் தமது இளமைப் பருவத்திலே அரசியராய்க் கண்கூடாகக் காணப்பட்டவர். இவரே தமக்கு உண்டி முதலியன கொடுத்துப் போற்றியவர். அவ்வரசியரே மாறிப் பிறந்து இம்மையிலேயே தம்முதுமைப் பருவத்தே தம்மைக் காணப் பிக்குணிமகளிராய் வந்தனர் என்றறிந்தமையால் இந் நிகழ்ச்சி அவர்க்குப் பெரிதும் வியப்பை நல்குவதாயிற்று ஈண்டு ஆசிரியர் இளங்கோவடிகளார் மாடலன் கூற்றாக, ஆடுங் கூத்தர்போல் ஆருயிர் ஒரு வழிக் கூடிய கோலத் தொருங்குநின் றியலாது என்றோதிய தொடர் நினைவிற் கொள்ளற் பாலதாம்(சிலப்-28:195-196).

துணிபொருள் மாதவன்-அறவண அடிகள். அறவி-அறநெறி. நல்கினை-உவந்தனை எனலும் ஆம். உவந்து நல்கினும் நல்காயாயினும் என்புழி (புறநா-80)யும் அஃது அப் பொருட்டாதலறிக. தரும தலைவன்-புத்தர். இறுதியில் நற்கதி-வீடு. பெருவழி-அறநெறி. செயிர்-குற்றம். உயிர் வழங்கு பெருநெறி. என்றது மக்கட் பிறப்பெய்தியவர் பெரும்பாலோர் வாழும் நெறி. காம முதலிய செயிர்கட்கு அறுகையும் நெருஞ்சியும் உவமை என்க. தீக்கதி- பிறப்பினுட் புகுவதுதற்குக் காரணமான தீநெறி. ஒரு திறம்பட்டது என்றது மாந்தர் வாழும் நெறி தீக்கதியில் மட்டும் புகுதும் ஒரே வழியாக விட்டது. எனவே மாந்தர் வாழ்க்கையில் அறம் முழுதும் அழிந்தது, மறமே யாண்டும் பெருகியது என்றவாறாயிற்று.

புத்தர் மீண்டும் பிறக்கும் காலம்

63-71: தண்பனி.........ஆதலின்

(இதன் பொருள்) ஈங்கு-இந் நிலவுலகத்திலே; நல்அறம்-புத்த பெருமான் ஆதியிலோதிய நல்லறமானது; தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம் உண்டு என உணர்தல் அல்லது-குளிர்ந்த பனி மூட்டத்தாலே மறைக்கப்பட்ட சிவந்த ஒளியையுடைய ஞாயிற்று மண்டிலமானது அழிவற்றது ஆதலால் உளதாதல் வேண்டும் என்று கருத்தளவையால் மட்டும் உணரப்படுவதன்றி, யாவதும் கண்டு இனிது விளங்காக் காட்சி போன்றது; சிறிதும் காட்சியளவையாற் காணப்பட்டு நன்கு விளங்காத மானதக் காட்சி மாத்திரையே ஆதல் போல்வதாயிற்று; சலாகை நுழைந்த மணித்துளை அகவையின் பெருங்கடல் உலாநீர் ஓடாதாயினும்- சிறிய சலாகை துளைத்துப் புகுந்த மணியின் கண்ணதாகிய சிறிய துளையினூடே பெரிய கடலிலே உலாவுகின்ற நீர் முழுவதும் புகுந்து செல்லாதாயினும்; ஆங்கு அத் துளைவழி உகும் நீர்போல-அவ்வாறாய அச்சிறிய மணித்துளை வழியே குடத்தின் முகந்து கொண்ட அக் கடல் நீரே ஒழுகுதல் போன்று; ஈங்கு நல்லறம் எய்தலும் உண்டு என-இவ் வுலகில் அந் நல்லறம் புகுதலும் உண்டு என்னும் கருத்தினாலே; யான் சொல்லலும் உண்டு- யான் செவ்வி பெற்றுழி அவ்வறத்தை அறிவுறுத்தலும் உண்டு; மல்லன் மாஞாலத்து மக்களே ஆதலின் சொல்லுதல் தேற்றார்-அங்ஙனம் அறிவுறுத்தும் பொழுதும் கேட்போ ரெல்லாம் வளமுடைய பெரிய இவ்வுலகத்து வாழ்கையையே அவாவுகின்ற மக்களே யாதலால் அவ்வறத்தைக் கேட்கும் கேளாராய்ச் சிறிதும் தெளிவாரல்லர்காண் என்றார் என்க.

(விளக்கம்) நல்லறம் இக்காலத்தே பனியால் விழுங்கப்பட்டுக் கட்புலனுக்குப் புலப்படாமல் கருத்தளவைக்குப் புலப்படுகின்ற ஞாயிறு போலக் காட்சியளவைக்குப் புலப்படாமல் மானதக்காட்சிக்கே புலப்படுவதொன்றாயிருக்கிறது. அங்ஙனமாயினும் யான் ஒல்லுமளவிற்கு அவ்வறத்தை உலகினர்க்குக் கூறி வருகின்றேன். கூறிய விடத்தும் கேட்போர் தகுதியின்மையால் அவ்வறத்தைத் தெளிகின்றிலர் என்று அறவணவடிகளார் பரிந்து கூறுகின்றனர் என்க.

கதிர் மண்டிலத்தைப் பனி விழுங்கினாலும் அதன் பேரொளி ஒரோ வழி அதனையும் ஊடுருவி அப் பணி மண்டலத்தின் புறம்பேயும் புலப்பட்டு அதனுள்ளே தனதுண்மையைப் புலப்படுத்தாமலிராது ஆதலின் நல்லறம் உண்டென உணர்தல் அல்லது யாவதும் கண்டினிது விளங்காக் காட்சி போன்றது என்னும் இவ்வுவமை ஆழ்ந்த கருத்துடையது இதனோடு,

உண்டோ லம்மவிவ் வுலக மிந்திரர்
அமிழ்த மியைவ தாயினு மினிதெனத்
தமிய ருண்டலு மிலரே முனிவிலர்
துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப்
புகழெனின் உயிரும் தொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளல ரயரவிலர்
அன்ன மாட்சி யனைய ராகித்
தமக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே    (புறநா. 182)

எனவரும் செய்யுள் நினைவு கூரற்பாலதாம்

யாவதும்- சிறிதும். மக்களேயாதலின் சொல்லுதல் தேற்றார் என மாறுக.

இதுவுமது

72-82: சக்கரவாள................புகூஉம்

(இதன் பொருள்) சக்கரவாளத்துத் தேவர் எல்லாம் தொக்கு இச் சக்கர வாளத்தினூடே வாழ்கின்ற தேவர்கள் எல்லாம் கூடி; ஒருங்கு துடிதலோகத்து ஈண்டி- ஒரு சேரத் துடிதலோகத்திலே சென்று; மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப-அங்குறைகின்ற தேவர்களுள் சிறந்த தேனுடைய திருவடிகளிலே வீழ்ந்து வேண்டா நிற்றலாலே; இருள் பரந்து கிடந்த மலர்தலை உலகத்து விரிகதிர்ச் செல்வன் தோன்றினன் என்ன-இருள் பரவிக் கிடந்த உலகின்கண் விரிந்த ஒளியையுடைய கதிரவன் தோன்றினாற் போன்று; ஈர் எண்ணாற்றோடு ஈர்எட்டு ஆண்டில்-இற்றை நாளிலிருந்து ஆயிரத்தறுதூற்றுப் பதினாறா மாண்டில்; பேரறிவாளன் தோன்றும் அதன் பிற்பாடு- பேரறிவுடையவனாகிய புத்தபெருமான் பிறந்தருளுவன் அப்பால்; பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி இரும்பெரு நீத்தம் புகுவதுபோல- பெரிய நீர் நிலையின்கண் கட்டப்பட்டுள்ள மதகாகிய சிறிய வழியனாலே மிகப் பெரிய வெள்ளம் புகுவதுபோல; அளவாச் சிறு செவி அளப்பு அரு நல் அறம்- எண்ணிறந்த மாந்தர் தம் சிறிய செவியினூடு அளத்தல் அரிய நன்மையுடைய மனப்பாட்டற மானது; உயிர் உளமலி உவகையொடு கொளப் புகூஉம்- மாந்தர் உயிர் உள்ளத்தே மிகுகின்ற மகிழச்சியோடு ஏற்றுக் கொள்ளுமாறு இனிது புகுங்காண் என்றார் என்க.

(விளக்கம்) இருள் அறியாமைக்குவமை. பேரறிவாளன்-புத்த பெருமான். பிற்பாடு- பின்பு: ஒரு சொல்.

துடிதலோகத்துறைகின்ற பிரபாபாலன் என்னும் தேவனே தேவர் வேண்டுகோட் கிணங்கி நிலவுலகிலே பிறந்தான் என்று பவுத்தர் நூல் சில நுவலும். கதிர்ச்செல்வன்-ஞாயிறு.

யான் கூறும் இவ்வறம் சலாகை நுழைந்த மணித்துளையினூடே ஒழுகும் நீர் போன்று ஒரு சிலர் செவியினூடு மிகவும் சிறிதே புகுதும். அவர்தாமும் மாக்களாதலால் அதனையும் தெளிகின்றிலர். புத்த பெருமான் தோன்றி அறங்கூறுங்கால் மதகு வழியாகக் குளத்தினூடு புகுகின்ற நீர் போன்று மிகுதியாக மாந்தர் செவியிற் புகுவதாம். அவர் முன்னிலையிற் சென்ற மாக்களும் அவரது தெய்வத் தன்மையாலே அவ்வறங்களைக் கேட்கும் போதே அவற்றைத் தெளிந்து பெரிதும் மகிழவும் மகிழ்வர் எனப் புத்தருக்கும் தமக்குமுள்ள வேற்றுமையை அடிகளார் ஈண்டு மணிமேகலைக்கு அறிவுறுத்துகின்றனர் என்றுணர்க.

ஈண்டு அறவணவடிகளார் புத்தர் ஆயிரத்தறுநூற்றுப் பதினாறாம் ஆண்டில் மீண்டும் நிலவுலகத்துப் பிறப்பார் என்று அறிவிப்பது அவர் கூறிய அவ்வாண்டிற்குப் பின்னர் நிகழும் காலத்தைக் குறிப்பதோ அன்றி யாதேனும் ஒரு சகாப்தத்தைக் குறிப்பதுவோ உறுதியாகத் துணிதற்கில்லை. ஒரோ வழி ஆதி புத்தர் பிறந்த யாண்டினை முதலாகக் கொண்டு வழங்கி வந்த புத்த சகாப்தம் ஒன்றிருந்திருக்கலாம்; அங்ஙனம் கொள்ளின் அப் புத்த சகாப்தத்தின்கண், அறவணர் காலங்காறும் கழிந்த யாண்டுகள் நிற்க அவற்றிற்கு மேல் நிகழும் யாண்டுகளாகக் கொள்ளல் வேண்டும்; உலகில் அறந்தலைதடுமாறும் பொழுதெல்லாம் நிலவுலகில் புத்தர் பிறந்து அறந்தலை நிறுத்துவர் என்பது பவுத்த சமயத்தார் கொள்கையுமாகும். இதனோடு,

சாவாது பிறவாது தனிமுதலா யிருந்தநான்
ஆவாவிவ் வுலகுபடும் அழிதுயர்தீர்ப் பதற்காக
மேவாது நின்றேயென் மாயையினான் மெய்யேபோல்
ஓவாது பிறந்திடுவன் உகந்தோறும் உகந்தோறும்

எனப் பகவத்கீதையில் வரும் கண்ணனுடைய திருவாக்கு ஒப்புநோக்கற் பாலதாம்(4-சம்பிரதாயவத்தியாயம்: செய் 7)

ஈண்டு அறவண அடிகளார் கூறும் புத்தர் பிறப்பு ஆதிபுத்தருடைய பிறப்பன்று; வழிவழிப்பிறக்கும் புத்தர்களுள் ஒருவர் பிறப்பையே கூறுகின்றார் என்று கொள்க.

இதுவுமது

83-92: கதிரோன்............தரூஉம்

(இதன் பொருள்) கதிரோன் தோன்றும் காலை ஆங்கு அவன் அவிர் ஒளி காட்டு மணியே போன்று மைத்து இருள் கூர்ந்த மனமாசு தீர ஞாயிறு தோன்றும் பொழுது அதன் விளங்குகின்ற ஒளியைத் தன்னுள்ளிருந்து வெளிப்படுத்துகின்ற சூரிய காந்தக் கல்லைப் போன்று, பண்டு கருகி இருள் மிகுந்த மாந்தருடைய மனம் அழுக்கு அகன்று தம்முள்ளிருந்து அறவொளியை வெளிப்படுத்தும்படி; புத்த ஞாயிறு தோன்றும் காலைத் திங்களும் ஞாயிறும் தீங்கு உறா விளங்க-புத்தன் என்னும் அவ்வறிவொளிப் பிழம்பு உலகிலே தோன்றிய காலத்தே வானத்தே இயங்குகின்ற திங்களும் ஞாயிறும் உள்ளிட்ட கோள்கள் எல்லாம் உலகில் தீங்கு நிகழாதபடி நன்னெறியிலே இயங்கி விளங்கா நிற்ப; தங்கா நாள் மீன் தகைமையின் நடக்கும்- சிறிதும் தங்காமல் இயங்குகின்ற அசுவினி முதலிய நாண்மீன்கள் தாமும் அங்ஙனமாய நன்னெறியிலேயே இயங்குவனவாம்; வானம் பொய்யாது-முகில் திங்களுக்கு மூன்று முறை பெய்யும் தன் தொழிலில் பிழையாது; மாநிலம் வளம்படும்-பெரிய நிலமும் கூல முதலிய செல்வத்தாற் சிறக்கும்; ஊன் உடை உயிர்கள் உறுதுயர் காணா-உடம்பெடுத்து வாழுகின்ற உயிர்கள் தாமும் மிக்க துன்பத்தை நுகாமாட்டா; வளி வலம் கொட்கும்- காற்றும் இனிதாக வலமாகச் சுற்றியியங்கும்; மாதிரம் வளம்படும்-மலைகளும் செல்வத்தாற் சிறக்கும். நளிஇரு முந்நீர் நலம் பல தரும்- செறிந்த பெரிய கடல் தானும் உயிர்கட்கு நன்மை பலவற்றையும் வழங்கா நிற்கும் என்றார் என்க.

(விளக்கம்) கதிரோன்.......காலை எனவரும் இதனோடு,

சூரியகாந் தக்கல்லி னிடத்தே செய்ய
சுடர்தோன்றி யிடச்சோதி தோன்று மாபோல்
ஆரியனாம் ஆசான்வந் தருளால் தோன்ற
அடிஞானம் ஆன்மாவில் தோன்றும்

எனவரும் சிவஞான சித்தியார்(சுபக்-280) நினைக்கத்தகும். அல்லதூஉம்

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு       (454)

எனவரும் அருமைத் திருக்குறளையும் நோக்குக.

மைத்து-கறுத்து. இருள்-அறியாமை. மனமாசு-அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் என்பன. மாசுதீர்ந்த நெஞ்சமே அறத்தின் பிழாம்பாதலின் மாசுதீர என்றொழிந்தார். என்னை?

மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற                 (குறள்-34)

எனவரும் பொய்யில் புலவன் பொருள் உரையும் காண்க.

நிலவுலகின்கண் வளம் மிகுதற்கும் வற்கடம் தீர்தற்கும் காரணமான வான் சிறப்புக் கோளும் நாளும் நன்னெறியிலியங்கும் பொழுதுண்டாம் என்பது பற்றி,

திங்களும் ஞாயிறும் தீங்குறா விளங்கத்
தங்கா நாண்மீன் தகைமையி னடக்கும்

என்றார். வளி-காற்று. காற்று வலஞ்சுற்றின் உலகின் வளம் பெருகும் என்ப. இதனை வலமாதிரத்தான் வளிகொட்ப எனவரும் மதுரைக் காஞ்சியினும் காண்க(5) மாதிரம்-மலை. மலைவளம் படுதலாவது- மலை தரும் பல பண்டங்களும் மிகுதல். அவையாவன தக்கோலம் தீம்பூத்தகைசால் இலவங்கம் கப்பூரம் சாதியோ டைந்து எனபன. முந்நீர் நலம்பலதரும் என்றதும் கடல்தரும் பல பண்டமும்-மிகுந்து நலந்தரும் என்றவாறு. அவை ஓர்க்கோலை சங்கம் ஒளிர் பவளம் வெண்முத்தம் நீர்ப்படும் உப்பினோடு டைந்து என்ப(சிலப்-10,107, மேற்)

இதுவுமது

92-103: கறவை..............மறவேன்

(இதன் பொருள்) கறவை கன்று ஆர்த்திக் கலநிறை பொழியும் பால் கறத்தலையுடைய ஆக்கள் தம் கன்றின் வயிறு நிறையச் சுரந்தூட்டிய பின்னரும் கறக்கும் கலங்கள் நிறையும்படி பாலைச் சுரந்து பொழியா நிற்கும்; பறவை பயன் துய்த்து உறைபதி நீங்கா- பறவைகள் தாம் வாழுமிடங்களிலேயே தமக்கு வேண்டிய இரைகளைப் பெற்றுத் தின்று காமவின்பமும் நுகர்ந்து தாம் தாம் இருக்கு மிடங்களினின்றும் பிறவிடங்களுக்குச் செல்ல மாட்டா; விலங்கும் மக்களும் வெரூஉப் பகை நீங்கும்-விலங்குப் பிறப்புற்ற உயிரும் மக்கட் பிறப்புற்ற உயிரும் தம்முள் ஒன்றற் கொன்று அஞ்சுதற்குக் காரணமான பகைமைப் பண்புகள் இலவாம்; கலங்கு அஞர் நரகரும் பேயும் கைவிடும்-நெஞ்சு கலங்குதற்குக் காரணமான துன்பத்தை நரகர் உயிரும் பேயுயிரும் விட்டொழியும்; கூனும் குறளும் ஊமும் செவிடும் மாவும் மருளும் மன்னுயிர் பெறா கூனும் குறளும் ஊமையும் செவிடும் ஊன்தடியும் மருளும் என்னும் குறையுடைய பிறப்புக்களை உயிர்கள் பெறாவாம்; அந் நாள் பிறந்து அவன் அருள் அறம் கேட்டோர்-புத்தபெருமான் பிறக்கின்ற அந்தக் காலத்திலே பிறந்து அப் பெருமான் அறிவுறுக்கும் அருளறத்தைக் கேட்கும் திருவுடையோர்; இன்னாப் பிறவி இகந்தோர் ஆதலின்-துன்பத்திற் கெல்லாம் காரணமாயிருக்கின்ற பிறப்பென்னும் பெருங்கடலையே கடந்தவராவாராதலின்; போதி மூலம் பொருந்திய சிறப்பின் நாதன்பாதம் நவைகெட ஏத்துதல் பிறவிதோறு மறவேன்-போதி மரத்தின் நிழலிலமர்ந்த சிறப்பினையுடைய நம் மிறைவனுடைய திருவடிகளை வாழ்த்திப் பிறப்பறும்படி வணங்குதலை யான் பிறப்புக்கடோறும் மறவேன் காண்! என்றார் என்க.

(விளக்கம்) நிலவுலகம் மழைவளம் பெற்றிருத்தலால் ஆக்கள் வயிறார மேய்ந்து பால் மிகுதியாகச் சுரக்கும் என்பார் கறவை கன்றார்த்திக் கலம் நிறைபொழியும் என்றார். கன்றும் ஆர்த்தி எனல் வேண்டிய உயர்வு சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. ஆர்த்தி-ஊட்டி. கலம்-கறக்குங் கலம். நிறை- நிறையுமாறு. தானே பிலிற்றும் என்பார் பொழியும் என்றார். வளம் பெற்றிருத்தற்கு ஆப்பயன் மிகுதல் அறிகுறி; அங்ஙனமே வற்கடத்தின் அறிகுறியாக, ஆசிரியர் திருவள்ளுவனார்,

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவான் எனின்       (540)

என்புழி ஆபயன் குன்றும் என்பதூஉ முணர்க.

பறவைபயன்றுய்த்து என்றது உண்டும் புணர்ந்தும் இன்பந்துய்த்து என்பதுபட நின்றது. விலங்குயிரும் மக்கள் உயிரும் பகைநீங்கும் என்க. நரகரும் பேயும் பிறப்புவகையால் துன்பமுறுவன. அவையும் அச் செயலை விடும் என்க. கை-செயல், பிறவுயிர்க்கு அஞர் செய்தலைக் கைவிடும் எனினுமாம்.

கூன் முதலிய பிறப்புக்கள் பயனில் பிறப்புக்கள். புத்தர் தோன்றிய பின்னர் உயிர் கூன்முதலிய உறுப்புக்குறை யுடையனவாகப் பிறவா என்றவாறு. இவற்றை,

சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்
கூனுங் குறளும் ஊமும் செவிடும்
மாவு மருளு முளப்பட வாழ்நர்க்(கு)
எண்பே ரெச்ச மென்றிவை எல்லாம்
பேதைமை யல்ல தூதிய மில்

எனவரும் புறநானூற்றுச் செய்யுளினும்(28) காண்க.

அருளறம்- பவுத்தசமயத்தின் சிறப்பறம். இனி மறவேன் மடக்கொடி என்னுந் தொடரை மறவேல் மடக்கொடி எனக் கண்ணழித்து அத்தகைய நாதன் பாதம் ஏத்துதலை மறவேல் என மணிமேகலைக்குச் செவியறிவுறுத்தனர் எனினுமாம்.

அறவணர் மாதவி சுதமதி என்னும் இருவர் திறமும் அறிவுறுத்து மணிமேகலைக்கு நல்லறம் சாற்றுதல்

103-115: மடக்கொடி................பெற்றனை

(இதன் பொருள்) மடக்கொடி மாதர் நின்னால் வருவன இவ்வூர் ஏது நிகழ்ச்சி பல உள-இளம் பூங்கொடி போலும் மணிமேகலையே! உன்னைத் தலைக்கீடாகக் கொண்டு இந் நகரத்தில் நிகழ்ச்சிக்கு வருவனவாகிய பழவினை நிகழ்ச்சிகள் பல உள, அவை யாவும் ஆங்கு நிகழ்ந்த பின்னர் அல்லது-அந் நிகழ்ச்சிகள் எல்லாம் அவ்வாறே நிகழ்ந்து முடிந்த பின்னர் அன்றி; பூங்கொடி மாதர்- பூங்கொடி போலும் நங்காய்!; பொருள் உரை பொருந்தா- மெய்ப் பொருள் அறிவுரை நினக்குப் பொருந்த மாட்டா, அவை நிற்க; ஈங்கு இவர் இருவரும் ஆதிமுதல்வன் அருந்துயர் கெடுக்கும் பாதபங்கய மலை பரசினர் ஆதலின்- நின்னோடிங்கு ஆடுங் கூத்தர்போல் வேற்றோர் உருவொடு வந்த இத் தாரையும் வீரையும் ஆகிய மாதவியும் சுதமதியும் கழிந்த பிறப்பில் ஆதி புத்தருடைய பாதபங்கயம் கிடந்த பாதபங்கய மலையை வலம் வந்து தொழுத நல்வினையை உடையராகலின், நின்னோடு ஓங்கு உயர் போதி உரவோன் திருந்து அடிதொழுது வலங் கொண்டு அங்ஙனமே முற்பிறப்பில் நல்வினைப் பேறுடைய நின்னோடு மிகவும் உயர்ந்த மெய்க் காட்சியாளனாகிய புத்த பெருமானுடைய அழகிய திருவடிகளைத் தொழுது வலஞ் செய்யுமாற்றால்; தொடர்வினை நீங்கிப் பழுது இல் நல்நெறிப் படர்குவர் காணாய்- பிறவிகடோறும் தொடர்ந்து வருகின்ற இருவகை வினையும் துவா நீங்கப் பெற்றுக் குற்றமற்ற நன்னெறியாகிய வீட்டு நெறியிலே செல்லா நிற்பர், இவர் திறம் இங்ஙனமாக மடக்கொடி; ஆருயிர் மருந்தாம் அமுதசுரபி எனும் மாபெரும் பாத்திரம் பெற்றனை மணிமேகலாய்! நீதானும் நினது ஆகூழ் காரணமாக ஆருயிர்க்கு மருந்தாகின்ற அமுதசுரபி என்னும் மிகவும் சிறப்புடைய தெய்வத் தன்மையுடைய பாத்திரத்தைப் பெற்றிருக்கின்றாய் அல்லையோ என்றார் என்க.

(விளக்கம்) மடக்கொடி மாதர்: விளி. இவ்வூர் என்றது-புகார் நகரத்தை. பொருள் உரை- மெய்ப்பொருள் அறிவுறுக்கும் செவியறிவுறூஉ. இருவரும்- மாதவியும் சுதமதியும். நின்னோடு என்றது இவர் போலவே நல்வினையாற்றிய நின்னோடு என்பதுபட நின்றது. தொடர் வினை- பிறப்புக்கடோறும் காரணகாரிய முறைப்படி தொடர்ந்து வரும் பழ வினைகள். பழுது இல் நன்னெறி என்றது வீட்டிற்குக் காரணமான துன்பம் துடைக்கும் நெறியாகிய நாலாவது வாய்மையை. மீட்சி நெறி எனினுமாம். அமுதசுரபிபெற்றனை ஆதலால் அதனாற் செய்யத்தகும் அறவினையை நீ மேற்கொள்ளுதி என்பார் மேலே செய்யத்தகும் நல்லறம் கூறுகின்றனர் என்க.

மக்கள் தேவர் என இரு சார்க்கும் ஒத்த மடிவின் ஓர் அறம்

116-121: மக்கள்...............தானென்

(இதன் பொருள்) மக்கள் தேவர் என இரு சார்க்கும் ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன்- நிலவுலகிற் பிறந்த மக்கட்டொகுதியும் வானுலகிற் பிறந்த தேவர் தொகுதியுமாகிய இருவகைத் தொகுதிக்கும் ஒத்ததான ஒரு முடிவையுடைய ஒப்பற்ற நல்லறம் ஒன்றனைக் கூறுவல் கேட்பாயாக!; பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும் தவப்பெரும் நல் அறம் சாற்றினர்-அதுதான் யாதெனின் ஆற்றாமாக்கள் அரும்பசி களைதல் ஆகும் என்றே தீவதிலகை கூறினாற் போன்றே அவ்வறவணவடிகளாரும் அதனையே மிகப்பெரிய அறமாக அறிவுறுத்தனர்; ஆதலின்-ஆதலால்; மடுத்த தீக்கொளிய மன்னுயிர் பசி கெட- மூட்டிய தீயினாற் சுடப்படுகின்ற உயிர்கள் போன்று வருந்தும் உயிர்களின் பசித்துயர் தீரும்படி; இளங்கொடி பாத்திரம் எடுத்தனள் மணிமேகலை ஆருயிர் மருந்தாகிய அமுதசுரபி என்னும் மாபெரும் பாத்திரத்தைத் தன் அருள் கெழுமிய கையிலேந்துவாளாயினள்; என்பதாம்.

(விளக்கம்) உடம்பொடு வாழும் உயிர்கட்கெல்லாம் உணவு இன்றியமையாமையின் பசிதீர்க்கும் அறம் மக்கள் தேவர் இருமாரார்க்கும் பொதுவாயிற்று. மக்கள் தேவர்க்கு அவிசொரிந்து வேள்வியாற்றி அரும்பசிகளைகின்றனர். தேவர் மழைவளந்தந்து அரும்பசிகளைகின்றனர் என்க. இவ்வாற்றால் இவ்வறம் இருசார்க்கும் ஒத்தலறிக. இனிஇதனோடு,

சிறந்தாய்க் கீதுரைக்கலாம் சிந்தனையை முடிப்பதே
துறந்தார்க்குக் கடனாகிற் சோறலாற் பிற வேண்டா
இறந்தார்க்கு மெதிரார்க்கும் இவட்காலத் துள்ளார்வான்
பிறந்தார்க்கு மிதுவன்றிப் பிறிதொன்று சொல்லாயோ

எனவரும் நீலகேசிச் செய்யுள்(281) ஒப்பு நோக்கத்தகும்

அவரும் என்புழி உம்மை தீவதிலகையே அன்றி அவரும் என இறந்தது தழீஇ நின்ற எச்சவும்மை

இனி, இக்காதையை இளங்கொடி வினவிக்குறுகி மாதவன் அடியை வணங்கி ஏத்தி உரைத்தலும் கேட்டு அவரும் அறஞ்சாற்றினராதலின் இளங்கொடி எடுத்தனள் என இயைத்திடுக.

அறவணர்த் தொழுத காதை முற்றிற்று.
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 09:12:47 AM
13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

(பதின்மூன்றாவது மணிமேகலைக்கு அறவணர் ஆபுத்திரன் திறம் கூறிய பாட்டு)

அஃதாவது: மன்னுயிர்ப் பசி கெட மணிமேகலை அமுத சுரபியைக் கையிலேந்தியமை கண்ட அறவணவடிகளார் ஆபுத்திரன் திறம் அறவணர் தன்பால் கேள் என்று தீவ திலகை என்னும் தெய்வம் கூறிற்று என மணிமேகலை தமக்கு அறிவித்ததனை நினைவு கூர்ந்து அத் தெய்வப் பாத்திரத்தைப் பெற்ற ஆபுத்திரன் வரலாற்றை மணிமேகலைக்கு அறிவித்த செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு.

இதன்கண்- தண்டமிழ் ஆசான் சாத்தனார் ஆபுத்திரன் பிறப்பையும் வைதிக சமயத்துப் பார்ப்பனர் அருள் சிறிதுமிலராய் வேள்விக் களத்திலே கொன்று ஊன் தின்னும் பொருட்டு நெடுநில மருங்கின் மக்கட்கெல்லாம் பிறந்த நாள் தொட்டுஞ் சிறந்த தன் தீம்பால் அறந்தரும் நெஞ்சோடு அருள் சுரந்தூட்டும் ஆவைக் கட்டி வைத்திருத்தலையும், அது கண்டு அருள் கெழுமிய உள்ளம் உடைய சிறுவனாகிய ஆபுத்திரன் அவ்வாவினைக் காப்பாற்றத் துணிந்து அப் பார்ப்பனர் அறியாவண்ணம் நள்ளிருளிலே கைப்பற்றிக் கொண்டு போதலையும், அதனைத் தேடிச் சென்ற அந்தணர் ஆபுத்திரனைத் தொடர்ந்து போய்க் கண்டு அவனைக் கோலாற் புடைத்து அவன் பிறப்பினார் புலைச் சிறுமகன் வாய்தந்தன கூறி வைதலையும்;

ஆபுத்திரன் அவர்தம் இருடிகள் பிறப்பு முறை கூறி எள்ளி நகைத்தலையும் பார்ப்பனர் அவனை ஊரைவிட்டுத் துரத்தி விடுதலையும் அந்தணர் சேரியில் அவன் பிச்சைப் பாத்திரத்திலே கல்லிடுகின்ற கொடுமையையும், பின்னர் ஆபுத்திரன் மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும் தக்கண மதுரை சென்று சிந்தா தேவியின் செழுங்கலை நியமித்து முன்றிலை இருப்பிடமாகக் காணார் கேளார் கான்முடப்பட்டோர், பேணுக ரில்லோர் பிணி நடுங் குற்றோர் முதலிய இன்னோரன்ன ஓடுதலைமடுத்துக் கண்படை கொள்ளுதலையும் கற்போர் உளமுருகக் கட்டுரைத் துள்ளனர். இக்காதை புத்தர் அறிவுறுத்த அறநெறி நிற்பான் ஒருவனுடைய வரலாறாகலின் மிகவும் சிறந்ததொரு காதையாகத் திகழ்கின்றது.

மா பெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அருளிய
ஆபுத்திரன் திறம் அணி இழை! கேளாய்
வாரணாசி ஓர் மறை ஓம்பாளன்
ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன்
பார்ப்பனி சாலி காப்புக் கடைகழிந்து
கொண்டோற் பிழைத்த தண்டம் அஞ்சி
தென் திசைக் குமரி ஆடி வருவோள்
சூல் முதிர் பருவத்து துஞ்சு இருள் இயவிடை
ஈன்ற குழவிக்கு இரங்காள்ஆகி
தோன்றாத் துடவையின் இட்டனள் நீங்க  13-010

தாய் இல் தூவாக் குழவித் துயர் கேட்டு ஓர்
ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர் தீர
நாவான் நக்கி நன் பால் ஊட்டி
போகாது எழு நாள் புறங்காத்து ஓம்ப
வயனங்கோட்டில் ஓர் மறை ஓம்பாளன்
இயவிடை வருவோன் இளம்பூதி என்போன்
குழவி ஏங்கிய கூக் குரல் கேட்டுக்
கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்து ஆங்கு
ஆ மகன் அல்லன் என் மகன் என்றே
காதலி தன்னொடு கைதொழுது எடுத்து  13-020

நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை! என
தம் பதிப் பெயர்ந்து தமரொடும் கூடி
மார்பிடை முந்நூல் வனையாமுன்னர்
நாவிடை நல் நூல் நன்கனம் நவிற்றி
ஓத்து உடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம்
நாத் தொலைவு இன்றி நன்கனம் அறிந்த பின்
அப் பதி தன்னுள் ஓர் அந்தணன் மனைவயின்
புக்கோன் ஆங்குப் புலை சூழ் வேள்வியில்
குரூஉத் தொடை மாலை கோட்டிடைச் சுற்றி
வெரூஉப் பகை அஞ்சி வெய்து உயிர்த்துப் புலம்பிக்  13-030

கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி
வலையிடைப் பட்ட மானே போன்று ஆங்கு
அஞ்சி நின்று அழைக்கும் ஆத் துயர் கண்டு
நெஞ்சு நடுக்குற்று நெடுங் கணீர் உகுத்து
கள்ள வினையின் கடுந் துயர் பாழ்பட
நள் இருள் கொண்டு நடக்குவன் என்னும்
உள்ளம் கரந்து ஆங்கு ஒரு புடை ஒதுங்கி
அல்லிடை ஆக் கொண்டு அப் பதி அகன்றோன்
கல் அதர் அத்தம் கடவாநின்றுழி
அடர்க் குறு மாக்களொடு அந்தணர் எல்லாம்  13-040

கடத்திடை ஆவொடு கையகப்படுத்தி
ஆ கொண்டு இந்த ஆர் இடைக் கழிய
நீ மகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய்
புலைச் சிறு மகனே! போக்கப்படுதி என்று
அலைக் கோல் அதனால் அறைந்தனர் கேட்ப
ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியைக்
கோட்டினில் குத்திக் குடர் புய்த்துறுத்துக்
காட்டிடை நல் ஆக் கதழ்ந்து கிளர்ந்து ஓட
ஆபுத்திரன் தான் ஆங்கு அவர்க்கு உரைப்போன்
நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின்  13-050

விடு நில மருங்கில் படு புல் ஆர்ந்து
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம்
பிறந்த நாள் தொட்டும் சிறந்த தன் தீம் பால்
அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும்
இதனொடு வந்த செற்றம் என்னை
முது மறை அந்தணிர்! முன்னியது உரைமோ?
பொன் அணி நேமி வலம் கொள் சக்கரக் கை
மன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய
அரு மறை நல் நூல் அறியாது இகழ்ந்தனை
தெருமரல் உள்ளத்துச் சிறியை நீ அவ்  13-060

ஆ மகன் ஆதற்கு ஒத்தனை அறியாய்
நீ மகன் அல்லாய் கேள் என இகழ்தலும்
ஆன் மகன் அசலன் மான் மகன் சிருங்கி
புலி மகன் விரிஞ்சி புரையோர் போற்றும்
நரி மகன் அல்லனோ கேசகம்பளன்
ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று
ஓங்கு உயர் பெருஞ் சிறப்பு உரைத்தலும் உண்டால்
ஆவொடு வந்த அழி குலம் உண்டோ
நான்மறை மாக்காள் நல் நூல் அகத்து? என
ஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும்  13-070

ஈங்கு இவன் தன் பிறப்பு யான் அறிகுவன் என
நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள்
வடமொழியாட்டி மறை முறை எய்தி
குமரி பாதம் கொள்கையின் வணங்கி
தமரின் தீர்ந்த சாலி என்போள் தனை
யாது நின் ஊர்? ஈங்கு என் வரவு? என
மா மறையாட்டி வரு திறம் உரைக்கும்
வாரணாசி ஓர் மா மறை முதல்வன்
ஆரண உவாத்தி அரும் பெறல் மனைவி யான்
பார்ப்பார்க்கு ஒவ்வாப் பண்பின் ஒழுகி  13-080

காப்புக் கடைகழிந்து கணவனை இகழ்ந்தேன்
எறி பயம் உடைமையின் இரியல் மாக்களொடு
தெற்கண் குமரி ஆடிய வருவேன்
பொன் தேர்ச் செழியன் கொற்கை அம் பேர் ஊர்க்
காவதம் கடந்து கோவலர் இருக்கையின்
ஈன்ற குழவிக்கு இரங்கேனாகித்
தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன்
செல் கதி உண்டோ தீவினையேற்கு? என்று
அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கு இவன்
சொல்லுதல் தேற்றேன் சொல் பயம் இன்மையின்  13-090

புல்லல் ஓம்பன்மின் புலை மகன் இவன் என
ஆபுத்திரன் பின்பு அமர் நகை செய்து
மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோ
முது மறை முதல்வன் முன்னர்த் தோன்றிய
கடவுள் கணிகை காதல் அம் சிறுவர்
அரு மறை முதல்வர் அந்தணர் இருவரும்
புரி நூல் மார்பீர்! பொய் உரை ஆமோ?
சாலிக்கு உண்டோ தவறு? என உரைத்து
நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான் என்றே  13-100

தாதை பூதியும் தன் மனை கடிதர
ஆ கவர் கள்வன் என்று அந்தணர் உறைதரும்
கிராமம் எங்கணும் கடிஞையில் கல் இட
மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும்
தக்கண மதுரை தான் சென்று எய்தி
சிந்தா விளக்கின் செழுங் கலை நியமத்து
அந்தில் முன்றில் அம்பலப் பீடிகைத்
தங்கினன் வதிந்து அத் தக்கணப் பேர் ஊர்
ஐயக் கடிஞை கையின் ஏந்தி
மை அறு சிறப்பின் மனைதொறும் மறுகி  13-110

காணார் கேளார் கால் முடப்பட்டோர்
பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர்
யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி
உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து
கண்படைகொள்ளும் காவலன் தான் என்  13-115

ஆபுத்திரன் தோற்றம்

1-10: மாபெரும்..........நீங்க

(இதன் பொருள்) அணி இழை மா பெரும் பாத்திரம் மடக் கொடிக்கு அருளிய ஆபுத்திரன் திறம் கேளாய்-மகளிர்க் கெல்லாம் அணிகலனாகத் திகழுகின்ற மணிமேகலாய்! நீ ஏந்திய மாபெருஞ் சிறப்புடைய இவ்வமுதசுரபியை நினக்கு வழங்கிய ஆபுத்திரன் என்னும் அவ்வறவோனுடைய வரலாறும் பண்பாடுமாகிய இயல்பெலாம் கூறுவேன் கேட்பாயாக!; வாரணாசி ஓர்மறை ஓம்பாளன் ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன்- வாரணாசி என்னும் மூதூரில் மறை நூல்களைப் பிறர்க்கு ஓதுவிக்குமாற்றால் அவை இறந்துபடாமல் காத்தற்றொழிலை மேற்கொண்ட மறை நூலாசிரியன் அபஞ்சிகன் என்னும் பெயருடையான் ஒரு பார்ப்பனன் இருந்தனன்; பார்ப்பனி சாலி காப்புக்கடை கழிந்து கொண்டோன் பிழைத்த தண்டம் அஞ்சி-அவன் மனைவியாகிய சாலி என்பவள் தனது கற்பென்னும் திட்பத்தைத் தன் நிறையுடைமையாற் காக்கும் காவலின் எல்லையைக் கடந்து ஒழுகுமாற்றால், தன் கணவனுக்குப் பொருந்தா தவளாய்ப் பிழை செய்து விட்டமையாலுண்டாகும் தண்டனைக்கு அஞ்சி அதற்குக் கழுவாயாக; தென் திசைக்குமரி ஆடிய வருவோள்-தென் திசையின் கண்ணதாகிய கன்னியாகுமரித் துறையில் நீராடுதற் பொருட்டு வருபவள்; சூல் முதிர் பருவத்துத் துஞ்சு இருள் இயவு இடை-தான் எய்தியிரு த சூலானது முதிர்ந்த பருவத் திலே ஊர் மக்கள் துயிலுதற் கியன்ற நள்ளிருள் யாமத்திலே தான் செல்லும் வழியிலே கருவுயிர்த்து; ஈன்ற குழவிக்கு இரங்காளாகி-பழியஞ்சித் தான் ஈன்ற மகவிற்கும் இரங்காதவளாய்; தோன்றாத் துடவையின் இட்டனள் நீங்க- பிறர் பார்வைக்குக் காணப்படாத மறைவிடமானதொரு தோட்டத் தினூடே அம் மகனைப் போகட்டுப் போக என்க.

(விளக்கம்) மணிமேகலை ஆபுத்திரன் திறம் அறவணன் றன்பாற்கேள் என்று தீவதிலகை கூறிற்றென்பதை ஞாபகவேதுவாகக் கொண்டு ஈண்டு அறவணர் ஆபுத்திரன் திறம் கேள் என்று கூறத் தொடங்குகின்றார் என்க. மடக்கொடிக்கு என்றது உனக்கு என்னும் துணையாய் நின்றது. வாரணாசி-ஓர் ஊர், (காசி). மறை எழுதாக்கிளவியாதலின் பிறர்க்கு ஓதுவித்து அஃது இறந்து படாமற் காப்பவள் (உபாத்தி) என்பார் மறை ஓம்பாளன் என்றார். ஆரணம்- மறை. பார்ப்பனி என்பது சாதியைக் குறியாமல் மனைவி என்னும் பொருட்டாய் நின்றது. பார்ப்பனரில் பார்ப்பான் கணவன் என்னும் பொருளினும் பார்ப்பனி மனைவி என்னும் பொருளினும் வழங்கும் இதனை என் கணவனும் மாற்றாளும் என்னும் பொருளில் பார்ப்பானொடு மனையாள் என்மேற் படாதன இட்டு ஏற்பன கூறார் எனவரும் மாலதி கூற்றானுமறிக.(சிலப்-9:7-8) இந் நூலினும், பார்ப்பான்றன்னொடு கண்ணிழந்திருந்த இத்தீத்தொழிலாட்டி எனவரும் கோதமை கூற்றினும் அஃதப் பொருட்டாதலறிக.(6-132-3)

காப்பு- கற்புக்காப்பு. கடைகழிதலாவது எல்லை கடந்து ஒழுகுதல். தண்டம்- நகரத்திலுண்டாகும் துன்பம். குமரி- கன்னியாகுமரி. ஆடிய-ஆட பருவத்து என்றது பருவம் வந்துற்றபொழுது என்றவாறு. ஈன்ற குழவிக்கு இரங்காளாகி என்றது, பழக்கஞ்சி ஈன்ற குழவிக்கும் இரங்காளாகி என்பதுபட நின்றது. பிறர் பார்வைக்குத் தோன்றாத்துடவை என்க. துடவை-தோட்டம்.

அக் குழவியை ஆகாத்தோம்பலும் இளம்பூதி என்னும் அந்தணன் எடுத்துப் போதலும்

11-20: தாயில்............எடுத்து

(இதன் பொருள்) தாய் இல் தூவாக் குழவித் துயர் கேட்டு-தாயில்லாமையாலே பாலுண்ணாத அக் குழவி ஒழியாது கூப்பிடுகின்ற துயரமான அழுகை யொலியைச் செவியுற்று; ஓர் ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர்தீர நாவான் நக்கி-ஒரு கறவைப் பசு வந்து அவ்விடத்தே அக் குழவியின் துன்பந்தீரும்படி தனது நாவினாலே நக்கியும்; நல் பால் ஊட்டி-நல்ல பாலை அதன் வாழிற் பிலிற்றி ஊட்டியும்; எழு நாள் போகாது புறங்காத்து ஓம்ப-ஏழு நாள் காறும் அதற்குப் புறம் போகாமல் அயலகலே நின்று பாதுகாவா நிற்ப; வயனங் கோட்டில் ஓர் மறை ஓம்பாளன்- வயனங்கோடு என்னும் ஊரில் உறையும் ஒரு பார்ப்பனன்; இயவு இடை வருவோன்-அத் தோட்டத் தயலிலே கிடந்த வழி மேலே வருபவனும்; இளம்பூதி என் போன்-இளம்பூதி என்னும் பெயரையுடையவனும் ஆகிய அவ்வந்தணன்; குழவி ஏங்கிய கூக்குரல் கேட்டு துன்பமொடு கழுமிய கண்ணீர் உகுந்து-அக் குழவி ஏங்கி அழுத கூக்குரலைக் கேட்டுத் துன்பத்தோடு கலந்த கண்ணீரைச் சொரிந்து; ஆங்கு ஆமகன் அல்லன் என் மகன் என்றே-ஆங்குக் காணப்பட்ட ஆவின் மகனாகான், இனி இவன் என் மகனே ஆவான் என்று சொல்லி, காதலி தன்னொடு கைதொழுது எடுத்து-தன்னுடன் வந்த தன் மனைவியோடே அணுகிக் கடவுளை நினைந்து கை கூப்பித் தொழுது அன்புடன் அம் மகவை எடுத்தக் கொண்டு; என்க.

(விளக்கம்) தாயில்லாமையால் பாலுண்ணாத குழவி என்க. அதன் துயர்-அக் குழவியின் பசித்துயர். வயனங்கோடு-ஓர் ஊர். இயவு- வழி. துன்பமொடு கழுமிய கண்ணீர் என மாறுக. இஃது அன்பு என்னும் மெய்ப்பாடு. ஆமகன் அல்லன் என் மகன் என்றே காதலி தன்னொடு கைதொழுதெடுத்து என்னப் பாட்டிடைவைத்த குறிப்பால் இவர்கள் மகப்பேறில்லாதவர் என்பதும், இறைவனே இம் மகவினை அருளினன் என்று மகிழ்ந்து எடுத்துப் போயினர் என்பதும் பெற்றாம் மேல் வருவனவும் இக் கருத்தை வலியுறுத்தல் காணலாம்.

இளம்பூதியும் மனைவியும் அக் குழவியைப் பேணி வளர்த்தல்

21-26: நம்பி............அறிந்தபின்

(இதன் பொருள்) நம்பி பிறந்தான் நம் கிளை பொலிக என மகப் பேறில்லாத நமக்கு இறைவனருளாலே ஆண் மக்களுள் சிறந்த நம்பி பிறந்தனன் இவன் வழியாக நம் மரபு இனி வழி வழிச் சிறந்து பொலிவதாக என்று பெரிதும் மகிழ்ந்து; தம் பதிப் பெயர்ந்து தமரொடும் கூடி- தம்மூர்க்குப் போய்த் தம் சுற்றத் தாரோடு கூடி; மார்பிடை முந்நூல் வனையா முன்னர்-அம் மகவின் மார்பிலே பூணுநூல் புனைவதற்கு முன்னரே; நாவிடை நன்னூல் நன்கனம் நவிற்றி-நாவிடத்திலே நன்மை தரும் மெய்ந்நூற் பயிற்சியை நன்றாகச் செய்வித்து. ஓத்து உடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம்- மறை நூலையுடைய அந்தணர்க்குப் பொருந்திய கலைகள் அனைத்தையும்; நாத்தொலைவு இன்றி-நாவினாலே பிறர்க்குத் தோல்வியுறாத வண்ணம் நன்கனம் அறிந்தபின்-அவன் நன்றாகக் கற்றுத் தெளிந்த பின்னர் என்க.

(விளக்கம்) கிளை-மரபு. முந்நூல்- பூணுநூல். நன்னூல்- மறைகளும் உறுப்பு நூல்களும். நாவினால் பிறர்க்குத் தோலாதவாறு கற்றறிந்தபின் என்க. இத்தகைய இவனுடைய தோலாத நாவன்மையை இக் காதையிலேயே 63 ஆம் அடி முதலாக 69 அடியீறாகவும், 93 ஆம் அடி தொடங்கி 98 ஆம் அடியீறாகவும் வருகின்ற இவ்வாபுத்திரன் கூற்றால் நன்குணரலாம்.

இனி, அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம் நாத்தொலைவின்றி நன்கனம் அறிந்தபின் என்றமையால் ஒத்துக்களில் அந்தணர்க்கு ஒவ்வாதனவும் பலவுளவாக அவற்றை யெல்லாம் ஓதாமல் அந்தணர்க்கு ஒத்தவற்றையே நன்கு பயின்றான் ஒவ்வாதனவற்றை நாத்தொலைவில்லாமைக்கே அறிந்தான் எனவும் நுண்ணிதிற் பொருள் காண்க. இனி,

அந்தணர் என்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்       (30)

எனவரும் அருமைத் திருக்குறளானே அந்தணர் இயல்பும் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவார்க்குப் பொருந்தாதன சாலப்பல வேதத்துள் இருத்தலும் அறிக.

ஓதலந்தணர்க்கு ஓவ்வா வொழுக்கமும் ஆபுத்திரன்றன் அருள்மிகு செயலும்

27-37: அப்பதி............கரந்தாங்கு

(இதன் பொருள்) அப்பதி தன்னுள் ஓர் அந்தணன் மனைவயின் புக்கோன்-ஒரு நாள் ஆபுத்திரன் வயனங்கோடு என்னும் அவ்வூரின்கண் தான் வாழும் பார்ப்பனச் சேரியின்கண் தனக்கியன்ற ஏது நிகழ்ச்சி காரணமாக ஒரு பார்ப்பனன் இல்லிற் புகுந்தவன்; ஆங்குப் புலைசூழ் வேள்வியில் குரூஉத் தொடைமாலை கோட்டிடை சுற்றி வெரூஉப் பகை அஞ்சி வெய்து உயிர்த்துப் புலம்பி-அவ்விடத்தே அப் பார்ப்பனர்கள் தாம் மறு நாள் ஊன்தின்றற்கு ஏதுவாக வேள்வி செய்வதாக ஒரு சூழ்ச்சி செய்து நிகழ்த்தும் வேள்விக் களத்திலே கொன்று தின்பதற்காக நிறமிக்க மலர்மாலை தனது கொம்பின்கண் சுற்றப்பட்டுத் தன்னைக் கொல்பவரும், தான் பெரிதும் அஞ்சுதற்குக் காரணமாகியவரும் கொடிய பகைவருமாகிய அப் பார்ப்பனர்க்குப்  பெரிதும் அஞ்சி உய்தி காணாமல் வெய்தாக மூச்செறிந்து வருந்தி; கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி வலை இடைப்பட்ட மானே போன்று கொலைத் தொழிலையே மிகுதியாகச் செய்கின்ற வேடர் வில்லற்கு அஞ்சி ஓடிப் போய் அவர் வளைத்த வலையில் அகப்பட்டுக் கொண்ட மான் போல; அஞ்சி நின்று அழைக்கும் அத்துயர் கண்டு-அஞ்சி அவராற் கட்டப்பட்ட வேள்வித்தூண் மருங்கே நின்று அம்மா! அம்மா! என்று இடையறாது கதறி அழைக்கின்ற ஓர் ஆவினது துன்ப நிலையைக் கண்டு; நெஞ்சு நடுங்குற்று தனது அருளுடைய நெஞ்சம் நடுங்கி; நெடுங்கண் நீர் உகுத்து நெடிய தன் கண்ணால் துன்பக் கண்ணீர் சொரிந்து; கள்ள  வினையால் கடுந்துயர் பாழ்பட நள் இருள் கொண்டு நடுங்குவன் வண்ணம் களவாடிப் போகுமொரு செயலாலே இதனுடைய கொடிய துன்பம் இல்லையாம்படி இதனை இற்றை நாள் கள்ளிரவின் இருளிலே யான் கைப்பற்றிக் சென்று உய்விப்பேன் என்னும் கருத்துடையவனாய் அக் கருத்தைப் பிறர் அறியா வண்ணம் மறைத்துக் கொண்டு; என்க.

(விளக்கம்) புக்கேன் என்றது ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள காரணத்தால், தானே சென்று புகுந்தவன் என்பதுபட நின்றது. அந்தணன் என்றது இகழ்ச்சி; என்னை? அந்தணர்க்கொவ்வாப் புலைசூழ் வேள்வி செய்யத் தலைப்பட்டவன் ஆதலின் என்க. புலை சூழ்தலாவது புலால் உண்ணும் புன்மையைக் கடவுள் வழிபாடு போலக் காட்டி மறைத்தல். அதன் புன்மை தெரித்தோதுவார் புலை சூழ் வேள்வி எனத் தகுதியான அடைமொழி புணர்த்தார். குரூஉ-நிறம். வேள்விக்களத்திற் கொல்லும் உயிரினங்கட்கு மாலை சூட்டித் தூப முதலியன காட்டுதல் மரபு. அம் மரபுப்படி மாலைசூட்டி வேள்வித்தூணிற் கட்டப்பட்டுப் பார்ப்பனரைக் காணுந்தோறும் அஞ்சி அஞ்சிக் கதறுகின்ற ஆ எனவும் வலையிடைப் பட்ட மான் போன்று அஞ்சி அழைக்கும் ஆ எனவும் தனித்தனி கூட்டுக.

பகை என்றது பார்ப்பனரை. புலம்பி- வருந்தி. நவிலுதல்- மிகுதியாகச் செய்தல்.

கள்ளவினை- களவு செய்தல். ஆபுத்திரன் சிறுவன் ஆதலானும் அந்த ஆவினைக் காப்பாற்றுதற்கு வேறு வழி காணாமையானும் இதனைக் கள்ளவினை செய்தேனும் காப்பாற்றுவல் என்று துணிந்தனன்.

இனி, பிறர் உடைமையா யிருப்பதியாதொரு பொருளையும் அவரை வஞ்சித்துக் கொள்ளக் கருதும் கருத்தன்றோ களவென்னும் காரறிவாண்மை; இச் செயல் தீவினையே ஆகும். ஆவின் துயர்களைதல் நல்வினையே ஆயினும் அந் நல்வினையின் பொருட்டு ஒரு தீவினை செய்தல் அறவோர்க்கு ஆகாதாம் பிறவெனின்; அற்றன்று, அதற்கு விடையாகக் கீழே வருகின்ற இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் கூறும் நுண்ணுரையைக் கூர்ந்து நோக்குக. அஃதாவது,

களவு என்னுஞ் சொற்கேட்டுக் களவு தீதென்பதூஉம், காமம் என்னுஞ் சொற் கேட்டுக் காமம் தீதென்பதூஉம் அன்று; மற்று அவை நல்ல ஆமாறும் உண்டு; என்னை? ஒரு பெண்டாட்டி தமரோடு கலாய்த்து நஞ்சுண்டு சாவல் என்னும் உள்ளத்தளாய் நஞ்சு கூட்டி வைத்து விலக்குவாரை இல்லாத போழ்து உண்பல் என்று நினைவிடத்து, அருள் உடையான் ஒருவன் அதனைக் கண்டு, இவள் இதனை உண்டு சாகாமல் கொண்டு போய் உகுப்பல் என்று அவளைக் காணாமே கொண்டுபோய் உகுத்திட்டான். அவளும் சனநீக்கத்துக்கண் நஞ்சுண்ட சாவான் சென்றாள்; அது காணாளாய்ச் சாக்காடு நீங்கினாள், அவன் அக்களவினான் அவளை உய்யக் கொண்ட மையின் நல்லூழிற் செல்லும் என்பது. மற்றும் இது போல்வன களவாகா, நன்மை பயக்கும் என்பது

எனவரும். இவர் காட்டும் இவ்வமைதி ஈண்டும் நன்கு பொருந்துதல் உணர்ந்து கொள்க.(இறையனார் களவியல் சூத்திரம்1. உரை)

பார்ப்பனர் ஆபுத்திரனைத் தொடர்ந்து போய் அலைத்தலும் ஆவின் செயலும்

37-48: ஆங்கொரு..............கிளர்ந்தோட

(இதன் பொருள்) ஆங்கு ஒரு புடை ஒதுங்கி அல் இடை ஆக் கொண்டு அப்பதி அகன்றோன் கல் அதர் அத்தம் கடவா நின்றுழி-அவ்வேள்விக் களத்தின் பக்கத்திலேயே ஓரிடத்தே பிறர் தன்னை அறியாவண்ணம் ஒதுங்கி இருந்து அற்றை நாள் இரவின் இடையாமத்தே அவ்வாவினைக் கைப்பற்றிக் கொண்டு அவ்வூரை விட்டுப் போகின்றவன், அதனோடு பருக்கைக் கற்களையுடைய அருவழியிலே செல்லும் பொழுது; அந்தணர் எல்லாம் அடர்க்குறு மாக்களொடு கடத்திடை ஆவொடு கையகப் படுத்தி அப் புலைசூழ் வேள்வி நிகழ்த்தும் அறவோராகிய பார்ப்பனமாக்கள் எல்லாம் தமக்கு வேண்டிய கூட்டமான சிற்றினமாக்களோடு விரைந்து சென்று அவ் வருநெறியின் கண்ணே செல்கின்ற ஆபுத்திரனை அவன் கைப்பற்றிச் செல்லும் ஆவினோடு ஒரு சேர வளைத்துக் கொண்டு; ஆ கொண்டு ஆர் இடை கழிய நீ மகன் அல்லாய்-ஏடா வேள்விப் பசுவைக் களவாடிக் கொண்டு இவ்வாறு அருநெறியிலே போதற்கு நீ கீழ் மகன் அல்லையே! இளம்பூதியின் மகனாகிய நீ இவ்வாறு செய்தற்கு; நிகழ்ந்தது உரையாய்- காரணமாய் உனக்கு வந்தது யாது? அதனைச் சொல்!; புலைச் சிறுமகனே போக்கப் படுதி- புலையன் சிறு மகனே! சொல்லாயேல் இப்பொழுதே எங்களால் உயிர் போக்கப் படுவாய்! சொல்! என்று சொல்லி; அலைக்கோல் அதனால் அறைந்தனர் கேட்ப- பிறரை அடித்து அலைக்கும் கைக் கோலாலே பலரும் புடைத்து வினவாநிற்ப; நல் ஆ-அது கண்ட நல்ல அந்தப் பசுவானது; நின்று ஆட்டி அலைக்கும் அந்தணர் உவாத்தியை-அங்ஙனம் அலைப்பவருள் தலைவனாக நின்று ஆபுத்திரனை மிகவும் வருத்துகின்ற அப் பார்ப்பனர் உவாத்தி யாயனை; கோட்டினில் குத்திக் குடர் புய்த்து-தன் கொம்பினாலே வழிற்றிலே குத்திக் குடரை அறுத்துச் சரித்துவிட்டு; கதழ்ந்து கிளர்ந்து காட்டிடை ஓட- விரைந்து துள்ளிக் கொண்டு காட்டினூடே புகுந்து ஓடி மறைய என்க.

(விளக்கம்) ஆங்கு-அவ் வேள்விக் களத்தில். அல்-இரவு. பதிவயனங்கோடு. கடம்-அருநெறி. நீசமகன் என்றும் பாடம். நீ மேலோனாகிய இளம்பூதி மகனாயிருந்தும் கீழ் மகன் செய்வது செய்தாய் அதற்குக் காரணம் சொல். நிகழ்ந்தது ஈண்டுக் காரணமாக நிகழ்ந்தது என்பது படநின்றது. ஐகாரம்:அசை.

புலைச்சிறுமகன் என்றது புலையன் மகனே என்று வைதபடியாம். சொல்லாயாயின் உயிர் போக்கப்படுதி என்று அச்சுறுத்தியவாறு. அலைக்கோல்-அடிக்கும் கோல். நின்று ஆட்டி அலைக்கும் உவாத்தி என்று மாறுக.

புய்த்தல் ஈண்டு அறுத்தல். அதன் செயல் நன்றி பேணியதாக முடிதலின் நல்லா என்றார். கிளர்தல்-துள்ளுதல்.

ஆபுத்திரன் அப் பார்ப்பனருக்கு அறிவுரை கூறுதல்

49-56: ஆபுத்திரன்..............உரைமோ

(இதன் பொருள்) ஆபுத்திரன்றான் ஆங்கு அவர்க்கு உரைப்போன் அது கண்ட ஆபுத்திரன்றானும் அப்பொழுது அப் பார்ப்பனர்க்கு நல்லறிவு கூறுபவன்;முதுமறை அந்தணர்- மிகவும் பழைய மறை நூலுக்குரியவர் ஆகின்ற அருளுடைய அந்தணர்களே!; நோவன செய்யன்மின்- பிறவுயிர்கள் துன்புறுதற்கியன்ற தீய செயல்களைச் செய்யாதே ஒழியுங்கோள்!; விடுநிலம் மருங்கின் படுபுல் ஆர்ந்து- மக்கள் பயிர் செய்யாது கைவிட்ட நிலத்திலே தாமே தோன்றுகின்ற புற்களை மேய்ந்து தன்னை ஓம்பிக் கொண்டு அப்பாலும்; மக்கட்கு எல்லாம் பிறந்த நாள் தொட்டும் சிறந்த தன் தீம்பால்-உலகிலே வாழும் நம் போன்ற மாந்தர் அனைவருக்கும் அவரவர் பிறந்தநாள் தொடங்கி அவர் வாழும் நாள்காறும் அவர் உணவினுள் தலைசிறந்த உணவாகிய தனது பருதற்கினிய பாலை; அறம் தரும் நெஞ்சோடு அருள் சிறந்து ஊட்டும்-அறம் என்பது இஃதே என்று நம்மனோர்க்கெல்லாம் காட்டித் தருமொரு நன்னர் நெஞ்சத்தோடு அருளோடு தானே சுரந்து நம்மைப் பருகச் செய்யும்; இதனோடு இந்தப் பசுவினிடத்தே; வந்த செற்றம் என்னை-நுமக்குண்டான பழம் பகைதான் யாது?; முன்னியது உரைம்-இப்பசுவைக் கொன்றொழிப்பதற்கு நீங்கள் நிலைத்ததற்குக் காரணம் கூறுங்கோள்! என்றான் என்க.

(விளக்கம்) நொடிவன- கூறுவன. விடு நிலம்-மாந்தர் பயிர் செய்யாமல் விடப்பட்ட நிலம். படுபுல்-தாமே தோன்றும் புல், என்றது ஆவிற்கு யாம் உணவிடவேண்டா என்றவாறு. பிறந்த நாள் என்றது மக்கள் பிறந்த நாளை. மக்கள் பிறந்த நாள் தொட்டும் என்றவும்மை சிறப்பு. இறக்கு நாள்காறும் பால் உணவு கோடல் கூற வேண்டா என்பது தோன்ற, பிறக்கு நாள் தொட்டும் என்றொழிந்தான். பாலினும் சிறந்த வுண்வின்மையால் சிறந்தபால் என்றான். தானும் தன்னுடம்பைப் பிறர் உதவியின்றிப் பேணிக் கொண்டு தன் பாலாலே பிறரை ஊட்டும் இச் செயல் முழுதும் அறமே ஆதலின் ஆக்கள் நெஞ்சம் அறத்தை மக்கட்குக் காட்டும் நெஞ்சம் என்று பாராட்டினன். இதனொடும் பட நின்றது முதுமறை அந்தணிர் என்றது இகழ்ச்சி. உரையும் என்னும் ஏவற்பன்மை ஈற்றுயிரும் மெய்யும் கெட்டு ஓகாரம் பெற்று முடிந்தது. நிகழ்ந்தது உரையாய் என்றார்க்கு, முன்னியது உரைமோ என்று மறுமொழி தந்தவாறு. முன்னியது கொலை செய்தலை ஆதலின், அக் கொலையினின்றும் உய்யக் கொள்ளும் அருளே என் செயற்குக் காரணம் என இதனால் அவர் வினவிற்கு விடையிறுத்தானாதலும் உணர்க. என்றான் என ஒரு சொல் பெய்க.

பார்ப்பனர் ஆபுத்தரனை இகழ்தல்

57-62: பொன்..................இகழ்தலும்

(இதன் பொருள்) பொன் அணி வலங் கொள் நேமி சக்கரக்கை மன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய அருமறை நல் நூல் அறியாது இகழ்ந்தனை-ஏடா! திருமகளே மார்பில் அணிந்திருக்கின்றவனும், அசுரர்களை வெற்றி கொள்ளுதற்கியன்ற நேமி என்னும் சக்கரப்படையை  ஏந்திய கையையுடையவனும் நிலையுதலுடைய உயிர்கள் தோன்றுதற்குக் காரணமானவனும் ஆகிய திருமாலின் மகனாகிய நான்முகன் பார்ப்பனராகிய எமக்கே சிறந்துரிமை யுடையனவாம்படி ஓதியருளிய அறிதற்கரிய எம்முடைய நல்ல மறை நூல்களின் அருமை பெருமைகளை அறியாமையாலே எம்முடைய வேள்வித் தொழிலே நீ குறிப்பாக இகழ்ந்து கூறுகின்றாய்; தெருமரல் உள்ளத்துச் சிறியை நீ ஆமகன் ஆதற்கு ஒத்தனை கேள்- நிலையின்றிச் சுழலும் நெஞ்சத்தையுடைய சிறியோனாகிய நின் பெயராகிய ஆபுத்திரன் என்பதற்கு மிகவும் பொருத்தமாகவே இருக்கின்றனை எற்றாலெனின் கேள்; அறியா நீ-அந்தணராகிய எம்மியல்பறியாத மடவோனே; நீ மகன் அல்லாய்- நீ தானும் மக்கட் பிறப்பினை என்பதால் ஐயமில்லை என்று அவன் பிறப்பைப் பற்றி இகழ்தலும்-இகழாநிற்றலும் என்க.

(விளக்கம்) நேமிச்சக்கரம் எனக் கூட்டி இரு பெயரெட்டாகக் கொள்க. முதல்வன்- காரணன். திருமால் தானே உயிரும் உலகுவாய் விரிகின்றான் என்பது வைணவசித்தாந்தம் ஆதலின் அஃது அப் பொருட்டாயிற்று. இதனை,

..............இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும்
ஏமமார்ந்த நிற்பிரிந்தும்
மேவல்சான்றன எல்லாம்
சேவல்(கருடன்)ஓங்கு உயர்கொடி யோயே

எனவரும் பரிபாடலானும்(4:33-5) உணர்க. அல்லதூஉம்,

மம யோனிர் மஹத்ப்ரஹ்ம ததமின்கர்ப்பம் ததாம்யகள்
ஸம்ப்பவ: ஸர்வபூதானாம் ததோபவதி பாரத

எனவும்,

ஸர்வயோனிஹு கௌந்தேய மூர்த்தய: ஸம்ப்பவந்தியா:
தாஸாம் ப்ரஹ்ம மஹ
த்யோனிரஹம் பீஜப்ரத: பிதா

எனவும் வரும் பகவத் கீதையானும் உணர்க.(குணாத்ரய, சுலோ 3-4)

மகன்- நான்முகன். அருமறை நன்னூல்-வேதநூல். தெருமரல் சுழற்சி. சிறியை- சிறுமையுடையை. என்றது, ஆறறிவுடையையல்லை ஐயறிவே உடையை என்றவாறு. ஐந்தறிவேயுடைமையின் ஆமகன் ஆதற்கு ஒத்தனை என்றிகழ்ந்த படியாம். மாவும் மாக்களும் ஐயறி வுயிரே என்னும் தொல்காப்பியமும் நினைக. நீ மகனல்லாய் என்றது விலங்கே என்னும் அவர் கருத்தை வலியுறுத்தற் பொருட்டு தக்க இன்ன தகாதன இன்னவென்று ஓக்க உன்னலராயின் உயர்ந்துள மக்களும் விலங்கே என நிகழும் கம்பநாடர் வாக்கும்(வாலி-112) ஈண்டு ஒப்பு நோக்கத்தகும் நோக்கத்தகும்

ஆபுத்தரன் பார்ப்பனர் பிறப்பு முறை கூறப் பழித்தல்

63-69: ஆன்மகன்................அகத்தென

(இதன் பொருள்) நான் மறை மாக்கள்-அது கேட்ட(ஆபுத்திரன்) நான்கு மறைகளையும் உயை மாக்களே கேளுங்கோள்!; அசலன் ஆன் மகன் சிருங்கி மான் மகன் விரிஞ்சி புலிமகன்-அசல முனிவன் ஆவின் வயிற்றிற் பிறந்தவன் என்றும், சிருங்கி முனிவன் மான் வழிற்றில் பிறந்தவன் என்றும் விரிஞ்சி முனிவன் புலி வயிற்றில் பிறந்தவன் என்றும் நீவிரே கூறுவரே இவர் பிற்க; புரையோர் போற்றும் கேச கம்பளன் நரி மகன் அல்லனே- நுங்களில் யர்ந்தோராற் போற்றிப் புகழப்படுகின்ற கேசகம் பள முனிவன் விலங்குகளுள் வைத்து இழிகுணமுடைய நரி வயிற்றிற் பிறந்தவன் என்பீரே அவன் அங்ஙனம் பிறந்தவன் அல்லன் என்னவும் துணிவீரோ? ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று-இங்கு யான் எடுத்துக் கூறிய இவரை எல்லாம் நீவிர் நுங்குலத்தைச் சேர்ந்த அறவோர் கூட்டத்தினர் என்று சொல்லி; ஓங்குயர் பெருஞ்சிறப்பு உரைத்தலும் உண்டால்- மிக மிக உயர்ந்த பெரிய சிறப்புடையராய் புகழ்ந்து கூறுவதும் உண்டன்றோ!; ஆவொடு வந்த-ஆவோடு தொடர்புடையதாகி வந்ததனால்; அழிகுலம் நன்னூலகத்து உண்டோ-இழிந்த குலமாம் என்று நுங்கள் நான்மறைகளினூடே எங்கேனும் ஓதிக்கிடக்க நீயிர் கண்டதுண்டேயோ!; என-என்று அவரைத் திறம்படப் பழித்துக் கூறாநிற்ப என்க.

(விளக்கம்) அசலன் ஆன்மகன் என்றும் இங்ஙனமே பிறவற்றையும் மாறுக. அசலமுனிவன் முதலிய நுங்குல முதல்வர் பலர் விலங்கின மக்கள் என்று நும் நன்னூலே கூறுகின்றன; அவரை நீயிரும் வானளாவப் புகழ்தலும் புகழ்கின்றீர். அறந்தரும் நெஞ்சத்து அருள் சுரந்தூட்டும் ஆமகன் ஆயினால் என்ன கெட்டுப் போயிற்று. இழிந்த நரிமகனும்கூட ஒருவன் உங்கள் குலத்துள்ளானல்லனோ அவனை மிகவும் புகழ்வீரே! உங்கள் மறை நூலில் ஆமகன் இழிகுலத்தான் என்று கூறியிருப்பதாகவும் தெரிந்திலது என்று ஈண்டு நாத்தொலைவில்லாத அந்நல்லோன் திறம்படச் சொல்லம்பு தொடுத்தல் கண்டு மகிழ்க. நீங்கள் கற்ற நூலும் மெய்ந்நூலன்றென்றும் நீவிரும் மக்கள் அல்லீர் என்றும் ஒருசேரப் பழிப்பான், நான்மறை மாக்õள் என்றும் நன்னூல் என்றும் திறம்பட எடுத்தோதினான்; இவை இகழ்ச்சி தம்மையிகழ் வாரைத் தாமவரின் முன்னிகழ்க! எனவரும் (நாவடி) சான்றோர் வாக்கிற்கும்,

பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளும்
திறன்றெரிந்து கூறப் படும்       (186)

என நிகழும் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் திருவாக்கிற்கும் இதனினும் காட்டில் சிறந்த எடுத்துக்காட்டு வேறெந்த இலக்கியத்தினும் காண்டலரிது.

இருடி கணம்-துறவோர் கூட்டம்

ஓரந்தணன் ஆபுத்திரன் வரலாறு கூறி இகழ்தல்

70-81: ஆங்கவர்..............இழந்தேன்

(இதன் பொருள்) ஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன்-அவ்வாறு ஆபுத்திரன் தன் சொல்லாலே சுடப்பட்ட பார்ப்பனர்களுள் வைத்து ஒரு பார்ப்பனன்; உரைக்கும்- ஏனைய பார்ப்பனர்க்குக் கூறுவான்; ஈங்கு இவன் பிறப்பு யான் அறிகுவன் என-ஈங்குள்ளாருள் வைத்து இவ்வாபுத்திரன் பிறப்பினை யான் நன்கு அறிகுவேன்! நமரங்காள் கேண்மின் என்று தோற்றுவாய் செய்து கொண்டு சொல்லுபவன்; நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள் வடமொழியாட்டி- யான் பண்டொருநாள், வழி நடை வருத்தத்தாலே இளைத்த மெய்யினையுடையவளும் பார்ப்பனியும்; மறைமுறை எய்தி குமரி பாதம் கொள்கையின்  வணங்கி-தீ வினைக்கு வேதத்திலே கூறப்பட்ட கழுவாய் செய்யும் விதியின்படி சென்று குமரியில் நீராடி ஆண்டெழுந்தருளிய குமரித் தெய்வத்தின் திருவடிகளை வணங்க வேண்டும் என்னும் தன் கோட்பாட்டிற்கியைய அங்ஙனமே நீராடி வணங்கி மீண்டு வருபவளும்; தமரின் தீர்த்த சாலி என்போள் தனது சுற்றத்தார் தொடர்பற்றுத் தமியள் ஆனவளும் சாலி என்னும் பெயருடையவளுமாகிய ஒருத்தியை வழியிலே கண்டு; நின் ஊர் யாது ஈங்கு வரவு என் என நின்னுடைய ஊர் யாது தமியையாய் இங்கே வருதற்குக் காரணம் யாது? என்று யான் வினவ; மாமறையாட்டி- சிறந்த மறையோர் குலத்தவளாகிய அச் சாலிதானும்; வருதிறம் உரைக்கும்-தான் அவ்வாறு வருதற்கியன்ற காரணத்தைக் கூறுவாள்; வாரணாசி-ஐய! என்னூர் வாரணாசியாம்; யான் ஓர் மாமறை முதல்வன் ஆரண உவாத்தி அரும்பெறல் மனைவி-அளியேன் அவ்வூரில் வாழும் சிறந்த மறைகளை ஓதிச் சிறந்தவனும் மறை ஓதுவிக்கும் உவாத்திமைத் தொழிலையுடையவனும் ஆகிய ஒரு பார்ப்பனனுக்கு அரும்பேறாக வாய்த்த மனைவியாகி வாழ்ந்திருந்தேன்; பார்ப்பார்க்கு ஒவ்வாப் பண்பின் ஒழுகிக் காப்புக் கடைகழிந்து-பார்ப்பனர்க்குப் பொருந்தாத தன்மையினையுடைய தீயொழுக்கந் தலைப்பட்டு ஒழுகி மகளிர்க்கு இன்றியமையாத கற்புக்காவலன் எல்லையைக் கடந்தமை காரணமாக; கணவனை இழந்தேன்-கணவனோடு வாழும் வாழ்க்கையை இழந்தொழிந்தேன்;(என்றாள்) என்க.

(விளக்கம்) நடவை- நடைவழி. நல்கூர் மேனி-இளைத்த உடம்பு. வடமொழியாட்டி-பார்ப்பனி. மறைமுறை- வேதத்தில் தீவினைக்குக் கழுவாயாகக் கூறப்பட்ட விதி. குமரி-ஒரு தெய்வம். கொள்கை-குமரி நீராடித் தீவினையைத் தீர்க்கவேண்டும் என்னும் கோட்பாடு. தமர்-சுற்றத்தார். சாலி- பெயர். மறையாட்டி- பார்ப்பனி. அரும் பெறல் மனைவியாகப் பாராட்டப்பட்டிருந்தேன் எனக் கழிந்ததற் கிரங்கிக் கூறினள் என்பது கருத்து. காப்பு- கற்புக்காப்பு. எனவே கற்பொழுக்கத்தில் வழுவி என்றாளாயிற்று. கணவனாற் கைவிடப்பட்டமையால் கணவனை இழந்தேன் என்றவாறு.

இதுவுமது

82-91: எறிபயம்.................இவனென

(இதன் பொருள்) எறிபயம் உடைமையின்-ஆறலை களவர் அலைப்பர் என்னும் அச்சமிருத்தலாலே; இரியல் மாக்களோடு- என்போல நிலைகெட்டு ஆறு செல் ஏதின் மாக்களொடு கூடி; தென் கண் குமரி ஆடிய வருவேன்-தமிழகத்துத் தென் கோடியிலுள்ள குமரித்துறையில் நீராடற் பொருட்டு வரும் யான்; பொன் தேர்ச் செழியன் கொற்கையம் பேரூர்க் காவதம் கடந்து- பொன்னாலியன்ற தேரையுடைய பாண்டியனுடைய கொற்கை என்னும் பெரிய பட்டினத்தைக் கடந்து ஒரு காததூரம் வந்துழிக் கருவுயிர்த்து; கோவலர் இருக்கையின்-அவ்விடத்திருந்த ஆயர்சேரியின் மருங்கே; தோன்றாத்துடவையின்- மறைவிடமா யிருந்ததொரு தோட்டத்தின்கண்; ஈன்ற குழவிக்கு இரங்கேன் ஆகி இட்டனன் போந்தேன்-ஐயனே! யானீன்ற மகவிற்கு ஒரு சிறிதும் இரக்கங் கொள்ளாமல் போகட்டு வந்தேன்; தீவினையேற்குச் செல்கதி உண்டோ-இத்தகைய மாநெருந் தீவினையைத் துணிந்து செய்த எனக்கு இனி எரி நிரையமேயன்றிப் பிறிதொரு புகலிடமும் உளதாகுமோ? இதுதான் என் வரலாறு என்று சொல்லி; அல்லல் உற்று அழுத அச் சாலி ஈங்கு இவன்- பெரிதும் துன்பமுற்று அழுத அவள் மகன் ஈன்று போகட்டுப் போன மகனே இங்கு ஆவினைக் களவு கொண்டு வந்த இவன்; சொல்லுதல் தேற்றேன்-இவ் வரலாற்றை இதுகானும் யான் பிறர்க்குச் சொல்லுதலைத் துணிந்திலேன்; எற்றாலெனின்; சொல் பயன் இன்மையின்-அங்ஙனம் சொல்லின் அச் சொல்லால் இவனுக்குப் பழி பிறத்தலன்றிப் பிறிதொரு பயனும் இன்மையாலே; இவன் புலை மகன்-இவன்றான் புன்றொழிலாற் பிறந்த கீழ் மகன் ஆதலில்; புல்லல் ஓம்பன்மின்-இவளை யாரும் தீண்டுதலும் பேணுதலும் செய்யாதொழிமின்; என-என்று அப்பார்ப்பனன் கூறாநிற்ப என்க.

(விளக்கம்) எறி பயம்-ஆறலைகள்வர் எறிவர் தோன்றும் அச்சம் எறிதல்-துன்புறுத்துதற் கியன்ற புடைத்தல் வெட்டுதல் கொல்லுதல் முதலியவற்றிற்குப் பொதுப் பெயர். இவற்றில் ஏதேனும் செய்வர் என்பது பற்றிப் பொதுச் சொல்லாற் கூறினன். இரியன் மாக்கள் என்றது நிலைகெட்டுத் திரியும் வறியோரை. இவர், தீர்த்த மாடும் துறைகட்கும் திருவிழா நிகழும் திருப்பதிகட்கும் திரள்திரளாகச் செல்லும் வழக்கமுடையராதலின் இரியன் மாக்களொடு வருவேன் என்றாள் என்க.

ஆடிய-ஆடற்பொருட்டு. செழியன்- பாண்டியன். கொற்கை-பாண்டியர் தலைநகரமாகிய ஒரு பட்டினம். கோவலர் இருக்கை-ஆய்ச்சேரி.

அளியன் இவள், ஆகாத்தோம்பி ஆப்பயன் அளிக்கும் கோவலர் வாழ்க்கையோர் கொடும்பாடில்லை: ஒரோஒவழி அவர் காணின் இம் மகவு உய்தலும் கூடும் என்று கருதி அவள் தாய்மையுள்ளம் கோவலர் இருக்கையில் இட்டுப்போகத் துணிந்தது போலும். செல்கதி-புகலிடம். தீவினையேற்கு என்றது, இத்தகைய மாபெருந் தீவினையைத் துணிந்து செய்த எனக்கு என்பதுபட நின்றது. அவள்-அச் சாலி என்பவள். சொல்லுதல் தேற்றேன்- சொற்பயம் இன்மையின் என இப் பார்ப்பனன் கூறும் மொழிகள்,

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்      (200)

எனும் அறத்தின் வழிப்பட்டதே போன்று இவ்வருமைத் திருக்குறளையும் நினைவுறுத்துகன்ற தாயினும் அவ்வறத்தைக் கடைப்பிடியாகக் கொள்ளாமல் ஈண்டுக் கூறியதே அவன் அறவோன் அன்மையை எடுத்துக் காட்டுவதாகவும் அமைதலறிக.

புல்லல்-புல்லாதே கொண்மின். ஒம்பன்மின்-பாதுகாவா தெழிமின்; இங்ஙனமன்றி, புல்லலோம்பன்மின் என்பதனை ஒரு சொன்னீர்மைத்தாக்கி, தீண்டலைச் செய்யாதொழிக என்பாருமுளர்.

ஆபுத்திரன் நகைத்து மீண்டும் அசதியாடுதல்

92-99: ஆபுத்திரன்.....நிற்ப

(இதன் பொருள்) ஆபுத்திரன் பின்பு அமர்நகை செய்து-அது கேட்ட ஆபுத்திரன் மீண்டும் கேட்போர் விரும்பும்படி இனிதாக நகைத்து மாமறை மாக்காள் வருங்குலம் கேண்மோ- பெரிய மறைநூல்களையுடைய மாக்களே நீயிர் பிறந்துவந்த நுங்கள் பார்ப்பனக் குலத்தின் வரலாறு அறியீர் போலும் ஆயிற் கூறுவல் கேளுங்கோள்!; முதுமறை முதல்வன் முன்னர்த் தோன்றிய- பழைய வேத முதல்வனாகிய பிரமன்பால் உங்கள் குலத்திற்கு முதன் முதலாகப் பிறந்த; அருமறை முதல்வர் அந்தணர் இருவரும் -அரிய மறைகட்கு முதல்வராகிய பார்ப்பனராகிய வதிட்டனும் அகத்தியனும்; கடவுள் கணிகை காதல் அம் சிறுவர்- நாடகக் கணிகையாகிய திலோத்தமையின் வயிற்றிற் பிறந்து அவரால் அன்பு செய்யப்பட்ட தேவ கணிகையின் மக்கள் என்று நுங்கள் நூல் கூறுகின்றதே; புரிநூல் மார்பீர் பொய் உரை ஆமோ-முப்புரி நூலையுடைய பார்ப்பனரே அந் நூலுரை பொய்யுரையாகி விடுமோ! சாலிக்குத் தவறு உண்டோ- சாலிக்கு மட்டும் அவ்வொழுக்கம் தவறாகிவிடுமோ; என உரைத்து நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப-என்று சொல்லி நான்கு வேதங்களையும் ஓதும் மாக்களாகிய அப் பார்ப்பனரை எள்ளி நகைத்து நிற்ப; என்க.

(விளக்கம்) அமர்நகை- கண்டோர் விரும்பத் தகுந்த இனிய நகை முறுவலித்து நகுதலும் அளவே நகுதலும் பெருகச் சிரித்தலும் என நகை மூவகைப்படுமாதலின் இவற்றுள் அளவே நகுதலை, அமர்நகை என்றார் எனினுமாம். ஈண்டு அமர்நகை செய்து எனவும் நகுவனன் நிற்ப எனவும் ஈரிடத்தே கூறப்பட்ட நகை இரண்டனுள் முன்னது எள்ளல் பொருளாகப் பிறந்ததாம். அதுதானும் தான் பிறரை எள்ளி நகுதலும் பிறரால் எள்ளிப்பட்டவழித் தான் நகுதலும் என இரண்டு வகைப்படும் ஆகலின் இது பிறரால் எள்ளப்பட்ட வழித் தான் நக்கபடியாம்! இனி, பின்னது பிறர் பேதைமை பொருளாகப் பிறந்தகையாம். என்னை? அப் பார்ப்பனன் கூறும் பழி தனக்கு முண்மையறியாமை பற்றிப் பிறந்தலான் என்க. இவற்றை

எள்ளல் இளமை பேதைமை மடனென்
றுள்ளப் பட்ட நகைநான் கென்ப

எனவரும் தொல்காப்பியத்தானும் அதற்குப் பேராசிரியர் வகுத்த உரை விளக்கத்தானும் உணர்க( மெய்ப்-4)

மாமறை மாக்காள் என்றது, அவர் தம் அறிவின்மை கருதியதாம் கடவுட்கணிகை- தேவகணிகை. அருமறைமுதல்வ ரந்தணர் என்றது இகழ்ச்சி.

புரிநூல் மார்பீர் என்றான், மெய்ந்நூல் கற்றிலீர் என்றிடித்தற்கு. ஆமோ என்புழி வினா ஆகாது என அதன் எதிர்மறைப் பொருளை வற்புறுத்தி நின்றது.

இனி, பார்ப்பனக்குல முதல்வராகிய வதிட்டனும் அகத்தியனும் கடவுட் கணிகைக் காதலஞ் சிறுவர் ஆதலை, நீலகேசியில் வேதவாதச் சருக்கம் 3 ஆம் செய்யுட்குச் சமய திவாகரர் புங்கன் மரபில் முதன்மையுடையவனாகிய வதிட்டனே அகத்தியனே...........என்றிவருள் வதிட்டனும் அகத்தியனும் பிரமன் திலோத்தமை என்னும் தேவகணிகையைக் கண்டகாலத்துக் கலயத்துப் பிறந்தனர்............இங்ஙனமே நுங்கள் வேத வழிப்பட்ட நூல்கள் கூறிக் காண்டுமன்றே என வோதியுள்ளமையானும் உணர்க.

ஆபுத்திரன் மதுரையை எய்துதல்

100-108: ஓதல்...............வதிந்து

(இதன் பொருள்) ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான் என்றே தாதை பூதியும் தன் மனை கடிதர-ஆபுத்திரன் பிறப்பு முறை கேட்டமை யானும் அவன் வேதத்தையும் வேள்வியையும் வேதியரையும் ஒரு சேரப் பழித்து நகுதலாலும் இவன் வேதம் ஓது தலையுடைய பார்ப்பனருக்குப் பொருந்தியவன் அல்லன் என்று கருதி வளர்ப்புத் தந்தையாகிய இளம்பூதியும் தன் இல்லத்திற்கு வாராதபடி விலக்கி விட்டமையாலே; அந்தணர் உறைதரும் கிராமம் எங்கணும்-பார்ப்பனர் வாழும் ஊர்களிலே சென்று பிச்சை ஏற்பானாக, அங்கே வாழுகின்ற அந்தணர் தாமும்; ஆகவர் கள்வன் என்று கடிஞையிற் கல் இட-இவன் வேள்விப் பசுவைக் களவாடிய கள்வன் என்று இகழ்ந்து அவன் பிச்சைக் கலத்திலே உணவிடாமே கற்களை இடாநிற்றலாலே; சென்று மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும் தக்கண மதுரை தான் எய்தி- அவ்வூர்களின்றும் போய்த் தமது தாளாண்மையாலே ஈட்டிய மிக்க செல்வத்தாலே வருந்தோம்புதல் முதலிய அறங்களைச் செய்து புகழாலே விளங்கிய கொழுங்குடிச் செல்வர் மிக்கு வாழா நின்ற தென்னாட்டின் தலைநகரமாகிய மதுரையை அடைந்து; சிந்தா விளக்கின் செழுங்கலை நியமத்து அந்தின் முன்றில்- மாந்தருடைய மனத்தின்கண் ஞான விளக்காக நின்று திகழும் தெய்வமாகிய கலைமகள் எழுந்தருளியிருத்தலாலே கலை நியமம் என்னும் அழகிய திருக்கோயிலின் வாயிலாகிய அவ்விடத்தேயுள்ள; அம்பலப் பீடிகைத் தங்கினன் வதிந்து-ஊரம்பலமாகிய மேடையிலே தங்கியவன் அவ்விடத்தையே உறைவிடமாகக் கொண்டுறைந்து என்க.

(விளக்கம்) ஓதல்-ஓதற்றொழிலையுடைய. ஒரு பார்ப்பான் ஆபுத்திரன் பிறப்பு வரலாறு கூறி இவன் புலைச்சிறுமகன் இவனைப் புல்லல்; ஓம்பன்மின்! என்று கூறினமையானும், அவனே பார்ப்பனரை இகழ்ந்தமையானும் இவன் நம்மனோர்க்கு ஒவ்வான் என்று தாதையாகிய இளம்பூதி இனி எம்மில்லம் புகுதாதே கொள்! என்று விலக்கினன் என்றவாறு.

அந்தணனாலேயே வளர்க்கப்பட்டமையின் கிராமங்களிலேயும் அந்தணர் சேரியிலே பிச்சை ஏற்கலானான்மன்! மற்று இவன் ஏனையோ ரில்லத்தே பிச்சை ஏற்றிருப்பின் இக்கொடுமை செய்யார் என்று இரங்குவார் நூலாசிரியர் அந்தணர் உறைதரும் கிராமம் எங்கணும்கடிஞையிற் கல்லிட என்றார். அவர் அங்ஙனம் கொடுமை செய்தற்குரிய காரணத்தையும் தெரித்தோதுவார் ஆகவர் கள்வன் என்று கல்லிட என்றார். ஈண்டு ஆ என்றது வேள்விக்குப் பலியிடுதற்குரிய பசு என்பதுபட நின்றது, என்னை? பிறர் ஆவைக் கவர்ந்திருப்பின் அவர் இது செய்யாராகலின். கடிஞை- பிச்சை ஏற்கும் ஓடு. எத்தகைய வன்கண்ணருஞ் செய்யத் துணியாத கொடுஞ் செயல் இது. இதனை,

நினைத்த திதுவென்றந் நீர்மையை நீக்கி
மனத்த தறிந்தீவார் மாண்டார்-புனத்த
குடிஞை யிரட்டுங் குளிர்வரை நாட
கடிஞையிற் கல்லிடுவா ரில்

எனவரும் பழமொழி வெண்பாவானும் அறிக   (246)

செல்வத்து விளங்குதலாவது ஈதலாற் பெரும்புகழ் எய்துதல் வடமதுரையும் உளதாகலின் தக்கண மதுரை என்று தெரித்தோதினர் தக்கணம்- தென்றிசை. வடக்கினும் ஒரு மதுரையுண்மையை அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்தில்(16:46-7) ஆயர் பாடியின் அசோதை பெற்றெடுத்த பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ என வரும் அடிகட்கு வரைத்த உரையின்கண் ஐயையும் மாதரியும் இந்த மதுரையில் இவ்வாயர்பாடியில் யாம் பெற்ற இந் நல்லமுதம் உண்கின்ற இந்த நம்பி அந்த மதுரையில் ஆயர் பாடியில் அசோதை பெற்ற அந்த நல்லமுதம் உண்ணும்.........கண்ணனோ தான் என வரைதலானும் உணர்க. சிந்தா விளக்கு-கலைமகள். கலைநியமம்- கலைத் தொழிலாற் சிறப்புற்ற கோவிலுமாம். அந்தில்-அவ்விடத்தே: அசைச் சொல்லுமாம். தங்கினவன் அதனையே உறைவிடமாகக் கொண்டு வதிந்து என்க.

ஆபுத்திரன் அறச்செயலும் அமைதி நிலையும்

108-115: அத் தக்கணப் பேரூர்-அந்தத் தென்றமிழ் நாட்டுத் தலைநகரமாகிய மாமதுரையின்கண் வதிகின்ற அவ் வாபுத்தின்றானும் மடிந்திராமல்; ஐயக் கடிஞை கையின் ஏந்தி- ஒரு பிச்சைப் பாத்திரத்தைக் கையின்கண் ஏந்தி; மை அறு சிறப்பின் மனைதொறும் மறுகி-குற்றமற்ற  அறச் சிறப்பினையுடைய கொழுங் குடிச் செல்வருடைய மனைகள் தோறும் ஊக்கத்துடனே சென்று சென்று மிகுதியாக உணவினைப் பிச்சை ஏற்று வந்து; காணர் கேளார் கால்முடப்பட்டோர் பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர் யாவரும் வருக என்று இசைத்து அம்பலத்துச் சென்று ஆங்கு இவன் வருகைக்காகக் காத்திருக்கின்ற குருடரும் செவிடரும் கால் முடம்பட்டோரும் தம்மைப் பாதுகாப்பவர் இல்லாத வலியற்ற வறியோரும்; பல்வேறு பிணிகளும் பற்றி நலியப் பெரிதும் வருந்துவோரும் ஆகிய இன்னோரன்ன மக்கட் கூட்டத்தை அணுகி வருக! வருக! என்று இனிதாக அழைத்து; உடன் ஊட்டி-அனைவரையும் ஒருங்கே உணவூட்டி; உண்டு ஒழி மிச்சில் உண்டு-அவர் உண்டபின் எஞ்சிய உணவினைத் தான் உண்டு; காலவன் ஓடு தலை மடுத்துக் கண்படை கொள்ளும்-ஆருயிர் காவலனாகிய அவ்வருளறச் செல்வன் இரவு வந்துறுதலும் தன் பிச்சைக் கலமாகிய திருவோட்டினையே கவிழ்த்துத் தலையணையாகக் கொண்டு பேரமைதியோடு துயிலுவான் என்றார் என்பதாம்.

(விளக்கம்) இவ் வாபுத்திரன் பவுத்தத் துறவோர்க் கெல்லாம் தலைவரம்பாகக் காட்டப்பட்டவன். இதனைப் போன்று சாந்துணையும் வாழுபவர் வாழ்வாங்கு வாழ்பவர் என்பது கூறாமலே அமைவதாம்.

இனி இவ்வாபுத்திரன்றானே ஏற்போனாகவிருந்தும் ஓவாதே ஒல்லும் வகையால் வீழ்நாள் படாமை நன்றாற்றி வாழுந் திறமுணர்க. மற்று இவ்வாறு வாழ்ந்த இவ்வாபுத்திரன்றானும் மீண்டும் பிறப்புற்றான் என்பராலோ எனின் அதுதானும் புத்தர் அறத்திற்குப் பெரிதும் பொருந்துவதேயாம் என்னை? புத்தரே தமக்குக் கைவந்த வீட்டினையும் வேண்டாது கைவிட்டுப் பிறர்க்கமுயலும் பொருட்டுப் பல்வேறு பிறப்புகளிலே பிறந்துழன்றார் என்பராதலால் இதனை வீடும் வேண்டா விறல் என்னும் பெருநிலை என்று கொள்க.

ஈண்டு அறவணவடிகளார் ஆபுத்திரன் திறம் அறிவித்தலும் குறிப்பாக நீயும் அவனேபோல வாழுதி என்று அறஞ்செவியுறுத்த படியாம் என்க. ஓடுதலைமடுத்துக் கண்படை கொள்ளுதலிலே அவனது வீடுபேறும் உளது என்றும் உணர்தல் வேண்டும். பிச்சை ஏற்பவனைக் காவலன் என்று கட்டுரைத்த ஆசிரியர் திறம் சாலவும் வியக்கற் பாற்று.

இனி, இக் காதையை -ஆயிழை கேளாய் சாலி கழிந்து அஞ்சி வருவோள் குழவியை இட்டுநீங்க ஆவந்து அணைந்து ஓம்ப பூதி எடுத்துப் பெயர்ந்து நவிற்ற புக்கோன் ஆத்துயர் கண்டு உற்றுஉகுத்துக் கரந்து ஒதுக்கி கொண்டு கடவாநின்றுழி அந்தணர் அகப்படுத்திக் கேட்ப நல்லா, குத்திப் புய்த்துறுத்து ஓட, ஆபுத்திரன் உரைப்போன் உரைமோ என அந்தணரிகழ்தலும் ஆபுத்திரன் உண்டோ என அந்தணன் உரைக்கும் புல்லல் ஓம்பன்மின் என ஆபுத்திரன் நகுவனன் நிற்ப பூதி கடிதர கிராமம் எங்கணும் கல்லிட காவலன் மதுரை சென்று ஊட்டி உண்டு கண்படைகொள்ளும் என இயைத்திடுக.

ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை முற்றிற்று.
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 09:15:44 AM
14. பாத்திர மரபு கூறிய காதை

(பதினான்காவது மணிமேகலைக்கு அறவணர் அமுத சுரபியென்னும் பாத்திரஞ் சிந்தாதேவி ஆபுத்திரற்குக கொடுத்தவண்ணம் கூறிய பாட்டு)

அஃதாவது: அறவணவடிகள் மணிமேகலை கையில் ஏந்திய அமுதசுரபி என்னும் அரும்பெறற் பாத்திரம் ஆபுத்திரனுக்குக் கிடைத்த வரலாற்றைக் கூறுமாற்றால் எஞ்சிய ஆபுத்திரன் வரலாற்றோடு அம் மாபெரும் பாத்திரத்தின் தெய்வத்தன்மையையும் அறிவித்த செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு.

இதன்கண்-ஓடுதலை மடுத்துக் கண்படை கொண்டிருந்த அவ் வாபுத்திரனிடம் ஒரு மாரி நடுநாளிலே வழி நடந்திளைத்து வந்தோர் வந்து வயிறு காய் பெரும் பசி மலைக்கும் என்று கூறக் கேட்ட பொழுது அவ் வள்ளற் பெருமகன் ஆற்றுவது காணானாகி மாபெருந்துயருற்று மயங்குதலும் அப்பொழுது அவன் நிலைக்கிரங்கிய அருண்மிகு கலைத்தெய்வமாகிய சிந்தாதேவி அவனெதிர் தோன்றி ஏடா அழியல் எழுந்திது கொள்ளாய் நாடுவறங் கூரினும் இவ்வோடு வறங் கூராது என்று சொல்லி அமுதசுரபி என்னும் அரும்பெறற் பாத்திரத்தை அவன் கையிற் கொடுத்து மறைதலும் அப்பொழுது ஆபுத்திரன் அத்தெய்வத்தை ஏத்தும் அழகும்; அந்நாள் தொடங்கி அமுதசுரபியைக் கொண்டு மன்னுயிர் ஓம்பும் திறமும், இவன் செய்த அறமிகுதியாலே இந்திரன் பாண்டு கம்பளம் துளங்குதலும், இந்திரன் ஒரு முதுபார்ப்பனக் கோலத்தோடு உன் தானப்பயன் பெரிது; அதனைப் பெறுக!; என அது கேட்ட ஆபுத்திரன் இந்திரன் எள்ளி வெள்ளை மகன்போல் விலாவிறச் சிரித்து, தன் அறச் செயலாலே தான் பெறுகின்ற இன்பத்திற் கீடாக உன் வானுலகத்தே யாதுனது என வினாதலும், இகழப்பட்ட இந்திரன் ஆபுத்திரன் அவ்வறஞ் செய்தற்கு இடனில்லாதபடி உலகத்தை வளப்படுத்துதலும் வளம்பெற்றுழி இவ்வுலகம் எய்திய இழிதகவும் ஆபுத்திரன் அறஞ் செய்தற் கிடனின்றி அலமருதலும் சாவக நாட்டிலே வற்கடமெய்தி மன்னுயிர் மடியும் செய்தி கேட்டு அந் நாட்டிற்குச் செல்ல மரக்கல மேறி விரைதலும், மரக்கலம் மணிபல்லவத்தின் மருங்கே நிறுத்தப்பட்டுழி இறங்கிய ஆபுத்திரன் மீண்டும் ஏறுமுன் மரக்கலம் போய்விடுதலும், மணிபல்லவத்திலே தமியனாகிய ஆபுத்திரன் தான்மட்டும் உண்டுயிர் வாழ்தலை வெறுத்து அமுதசுரபி அறவோர் கைப் படுவதாக என வேண்டி நீர் நிலையில் விட்டுப் பின் உண்ணா நோன்போடுயிர் துறத்தலும் பிறவும் இனிதாகக் கூறப்படுகின்றன.

ஆங்கு அவற்கு ஒரு நாள் அம்பலப் பீடிகை
பூங் கொடி நல்லாய் புகுந்தது கேளாய்
மாரி நடு நாள் வல் இருள் மயக்கத்து
ஆர் இடை உழந்தோர் அம்பலம் மரீஇ
துயில்வோன் தன்னைத் தொழுதனர் ஏத்தி
வயிறு காய் பெரும் பசி மலைக்கும் என்றலும்
ஏற்றூண் அல்லது வேற்றூண் இல்லோன்
ஆற்றுவது காணான் ஆர் அஞர் எய்த
கேள் இது மாதோ கெடுக நின் தீது என
யாவரும் ஏத்தும் இருங் கலை நியமத்துத்  14-010

தேவி சிந்தாவிளக்குத் தோன்றி
ஏடா! அழியல் எழுந்து இது கொள்ளாய்
நாடு வறம் கூரினும் இவ் ஓடு வறம் கூராது
வாங்குநர் கைஅகம் வருந்துதல் அல்லது
தான் தொலைவு இல்லாத் தகைமையது என்றே
தன் கைப் பாத்திரம் அவன் கைக் கொடுத்தலும்
சிந்தாதேவி! செழுங் கலை நியமத்து
நந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்!
வானோர் தலைவி! மண்ணோர் முதல்வி!
ஏனோர் உற்ற இடர் களைவாய்! எனத்  14-020

தான் தொழுது ஏத்தித் தலைவியை வணங்கி
ஆங்கு அவர் பசி தீர்த்து அந் நாள் தொட்டு
வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின்
மக்களும் மாவும் மரம் சேர் பறவையும்
தொக்கு உடன் ஈண்டிச் சூழ்ந்தன விடாஅ
பழு மரத்து ஈண்டிய பறவையின் எழூஉம்
இழுமென் சும்மை இடை இன்று ஒலிப்ப
ஈண்டுநீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன்
பாண்டு கம்பளம் துளக்கியது ஆதலின்
தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி  14-030

வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி
மா இரு ஞாலத்து மன் உயிர் ஓம்பும்
ஆர் உயிர் முதல்வன் தன் முன் தோன்றி
இந்திரன் வந்தேன் யாது நின் கருத்து
உன் பெரும் தானத்து உறு பயன் கொள்க என
வெள்ளை மகன் போல் விலா இற நக்கு ஈங்கு
எள்ளினன் போம் என்று எடுத்து உரை செய்வோன்
ஈண்டுச் செய் வினை ஆண்டு நுகர்ந்திருத்தல்
காண்தரு சிறப்பின் நும் கடவுளர் அல்லது
அறம் செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர்  14-040

நல் தவம் செய்வோர் பற்று அற முயல்வோர்
யாவரும் இல்லாத் தேவர் நல் நாட்டுக்கு
இறைவன் ஆகிய பெரு விறல் வேந்தே
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்து அவர்
திருந்து முகம் காட்டும் என் தெய்வக் கடிஞை
உண்டிகொல்லோ உடுப்பனகொல்லோ
பெண்டிர்கொல்லோ பேணுநர்கொல்லோ
யாவை ஈங்கு அளிப்பன தேவர்கோன்? என்றலும்
புரப்போன் பாத்திரம் பொருந்து ஊண் சுரந்து ஈங்கு
இரப்போர்க் காணாது ஏமாந்திருப்ப  14-050

நிரப்பு இன்று எய்திய நீள் நிலம் அடங்கலும்
பரப்பு நீரால் பல் வளம் சுரக்க! என
ஆங்கு அவன் பொருட்டால் ஆயிரம்கண்ணோன்
ஓங்கு உயர் பெருஞ் சிறப்பு உலகோர்க்கு அளித்தலும்
பன்னீராண்டு பாண்டி நல் நாடு
மன் உயிர் மடிய மழை வளம் இழந்தது
வசித் தொழில் உதவ மா நிலம் கொழுப்பப்
பசிப்பு உயிர் அறியாப் பான்மைத்து ஆகலின்
ஆர் உயிர் ஓம்புநன் அம்பலப் பீடிகை
ஊண் ஒலி அரவம் ஒடுங்கியது ஆகி  14-060

விடரும் தூர்த்தரும் விட்டேற்றாளரும்
நடவை மாக்களும் நகையொடு வைகி
வட்டும் சூதும் வம்பக் கோட்டியும்
முட்டா வாழ்க்கை முறைமையது ஆக
ஆபுத்திரன் தான் அம்பலம் நீங்கி
ஊரூர் தோறும் உண்போர் வினாஅய்
யார் இவன்? என்றே யாவரும் இகழ்ந்து ஆங்கு
அருந்த ஏமாந்த ஆர் உயிர் முதல்வனை
இருந்தாய் நீயோ! என்பார் இன்மையின்
திருவின் செல்வம் பெருங் கடல் கொள்ள  14-070

ஒரு தனி வரூஉம் பெருமகன் போல
தானே தமியன் வருவோன் தன்முன்
மாநீர் வங்கம் வந்தோர் வணங்கிச்
சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின்
ஊன் உயிர் மடிந்தது உரவோய்! என்றலும்
அமரர் கோன் ஆணையின் அருந்துவோர்ப் பெறாது
குமரி மூத்த என் பாத்திரம் ஏந்தி
அங்கு அந் நாட்டுப் புகுவது என் கருத்து என
வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி
கால் விசை கடுகக் கடல் கலக்குறுதலின்  14-080

மால் இதை மணிபல்லவத்திடை வீழ்த்துத்
தங்கியது ஒரு நாள் தான் ஆங்கு இழிந்தனன்
இழிந்தோன் ஏறினன் என்று இதை எடுத்து
வழங்கு நீர் வங்கம் வல் இருள் போதலும்
வங்கம் போய பின் வருந்து துயர் எய்தி
அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின்
மன் உயிர் ஓம்பும் இம் மா பெரும் பாத்திரம்
என் உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன்
தவம் தீர் மருங்கின் தனித் துயர் உழந்தேன்
சுமந்து என் பாத்திரம்? என்றனன் தொழுது  14-090

கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியின்
ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று என விடுவோன்
அருள் அறம் பூண்டு ஆங்கு ஆர் உயிர் ஓம்புநர்
உளர்எனில் அவர் கைப் புகுவாய் என்று ஆங்கு
உண்ணா நோன்போடு உயிர் பதிப் பெயர்ப்புழி
அந் நாள் ஆங்கு அவன் தன்பால் சென்றேன்
என் உற்றனையோ? என்று யான் கேட்பத்
தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன்
குண திசைத் தோன்றி கார் இருள் சீத்துக்
குட திசைச் சென்ற ஞாயிறு போல  14-100

மணிபல்லவத்திடை மன் உடம்பு இட்டு
தணியா மன் உயிர் தாங்கும் கருத்தொடு
சாவகம் ஆளும் தலைத் தாள் வேந்தன்
ஆ வயிற்று உதித்தனன் ஆங்கு அவன்தான் என்  14-104

உரை

ஆபுத்திரன் பசியால் நலிந்து நள்ளிரவிலே வந்து தன்னை இரந்தவர்க்கு ஆற்றுவது காணாமல் ஆரஞர் எய்துதல்

1-8: ஆங்கவற்கு.................எய்த

(இதன் பொருள்) பூங்கொடி நல்லாய்- பூங்கொடி போன்று நற்பண்புகள் மலர்ந்து திகழுகின்ற நன்மையையுடைய மணிமேகலாய்!; ஆங்கு அவற்கு ஒருநாள் அம்பலப் பீடிகை புகுந்தது கேளாய்- அவ்வாறிருந்த அந்த ஆபுத்திரனுக்கு ஒருநாள் அவனிருந்த அவ்வம்பலப்பீடிகையிடத்தே நிகழ்ந்ததொரு நிகழ்ச்சியைக் கூறுவேன் கேட்பாயாக!; மாரி நடுநாள் வல் இருள் மயக்கத்து-கார்ப்பருவத்தே மழை பெய்து கொண்டிருந்த ஒரு நாளினது இரவின் இடையாமத்தே செறிந்த இருள் பொருந்தியிருக்கும் பொழுதில்; ஆர் இடை உழந்தோர் அருவிழியிலே நடந்து வருந்தியவர் சிலர்; அம்பலம் மரீஇ ஆபுத்திரன் ஓடு தலைமடுத் துறங்கிக்கிடந்த அம்பலத்தை அடைந்து; துயில்வோன்றன்னைத் தொழுதனர் ஏத்தி-உறங்குபவனை எழுப்பிக் கைகூப்பித் தொழுது புகழ்ந்து; வயிறு காய் பெரும் பசி மலைக்கும் என்றலும்-ஐயனே இப்பொழுது எம்மை எமது வயிறே சுடுதற்குக் காரணமான பெரிய பசி கொல்லுகின்றது ஆற்றுவே மல்லேம் என் செய்தும்! என்று கூறுதலும்; ஏற்று ஊண் அல்லது வேற்று ஊண் இல்லோன் பகலிலே இரந்து உண்ணும் உணவையுடையனாதலன்றி இரவிலே வேறு உணவு சிறிதும் தன்பாலில்லாத அளியன் அவ்வாபுத்திரன் என் செய்வான்!; ஆற்றுவது காணான் ஆரஞர் எய்த அவர் தம் வயிற்றுப் பசித் தீயைத் தணித்தற்குரிய வழியொன்றும் காணமாட்டாமையால் பொறுத்தற்கரிய துன்பத்தை யடையா நிற்ப என்க.

(விளக்கம்) ஆங்கு என்றது முன்னர் ஓடு தலைமடுத்துக் கண்படை கொள்ளும் என்றதனைச்  சுட்டி அவ்வாறிருக்கும் அவனை என்பதுபட நின்றது. கார்ப்பருவத்து ஒருநாள் என்னாது மழைபெய்து கொண்டிருந்த கார்ப்பருவத்து ஒருநாள் என்பது தோன்ற மாரி நடுநாள் என்றார். மரீஇ-மருவி. துயில்வோனை எழுப்பி என்றொரு சொல் பெய்க. மலைக்கும் கொல்லும்; இருள்மயக்கத்து-இருள் பொருந்தியபொழுதில், ஆற்றுவது அவர் பசியைத் தணிக்கும் வழி. அஞர்-துன்பம். அருளுடைய நெஞ்சத்தனாகலின் தானே அருந்துயர் எய்தினன். இங்கு,

இன்னா திரக்கப் படுத லிரந்தவர்
இன்முகப் காணு மளவு     (குறள்-224)

எனவும்,

சாதலி னின்னாத தில்லை யனிததூஉம்
ஈத லியையாக் கடை           (குறள்-230)

எனவும், வருந் திருக்குறள்கள் நினைக்கத்தகும்

ஆபுத்திரன் முன் சிந்தாதேவி என்னும் தெய்வம் தோன்றுதல்

9-16: கேளிது...........கொடுத்தலும்

(இதன் பொருள்) ஏடா இது கேள்!-ஏடா ஆபுத்திரனே! யான் கூறுமிதனைக் கேள்! ஆழியல்-வருந்தாதே கொள்!; நின் தீது கெடுக-நின் துயரம் நினக்கினி இல்லையாகுக!; எழுந்து இது கொள்ளாய் என-எழுந்து இதனை ஏற்றுக்கொள்வாய்! என்னும் அருளுரையோடு அவன்கண் முன்னே!; யாவரும் ஏத்தும் இருங்கலை நியமித்துச் சிந்தா விளக்கு தேவி தோன்றி-அமரரும் முனிவரும் மாந்தரும் ஆகிய எல்லாரும் எப்பொழுதும் வாழ்த்தி வணங்கும் பெருமையுடைய பெரிய கலை நியமம் என்னும் திருக்கோயிலிலே உறைகின்ற கலைமகளாகிய சிந்தா விளக்கு என்னும் தெய்வம் அவ் வள்ளலின் முன்னர் அருளுருவங் கொண்டு எருந்தருளி வந்து; நாடு வறங் கூரினும் இவ்வோடு வறங்  கூராது- நாடுகளில் வற்கடமிகனும் மிகும் இவ்வோடு எஞ்ஞான்றும் வற்கடமுறாமல்; வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது தான் தொலைவு இல்லாத் தகைமையது-ஏற்போர் கைகளைத் தான் வழங்கும் உணவின் பொறையாலே துன்புறுத்துதல் அல்லாமல் தன்னுள்ளே ஒரு பொழுதும் உணவு அறுதல் இல்லாததொரு தெய்வத்தன்மையுடையது காண்; என்று-என்று சொல்லி; தன் கைப் பாத்திரம் அவன் கைக் கொடுத்தலும்-தன் திருக்கையிலிருந்த ஒரு பாத்திரத்தை அவ்வாபுத்திரன் கையிற் கொடுத்து மறைந்தருளுதலும் என்க.

(வளக்கம்) மாதோ: அசைச்சொல். கலைத்தெய்வமாகலின் அவன் துயர் தான் பொறாமல் செவ்வியறிந்து தானே எளிவந்து ஈண்டு ஆபுத்திரன் கையில் பாத்திரமீந்து போகின்றது. இச் செவ்வியும் இத் தெய்வத்தின் திருவருளும் கற்போர் உள்ளத்தைக் கனிந்துருகச் செய்தலுணர்க.

கலைத்தெய்வத்தைத் தெய்வமும் முனிவரும் சான்றோரும் ஆகிய யாவரும் தொழுவர் ஆதலின் யாவரும் ஏத்தும் என்றார். சிந்தா விளக்கு-உள்ளத்திற் சுடர்விடும் அறிவு; அத் தெய்வம் அறிவிற்குரிய தெய்வமாகலின் அழகிய இப்பெயர் பெறுவதாயிற்று. அறிவை வளர்க்கும் நகரமாதலின் அங்குக் கலைமகட்குத் திருக்கோயி லெடுக்கப்பட்டிருந்தமை நம்மனோர்க்கும் உவகையளிப்பதாகவே யுளது.

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த சால்புடைய அந் நகரத்தின் மாண்பு இதனானும் சிறப்புறுதலறிக.

ஆபுத்திரன் கலைத்தெய்வத்தை உளங்கனிந்தேத்துதல்

17-21: சிந்தா..................வணங்கி

(இதன் பொருள்) சிந்தா தேவி செழுங்கலை நியமித்து நந்தா விளக்கே நரமிசைப் பாவாய்-அம் மாபெரும் பாத்திரத்தைப் பெற்ற அவ்வாபுத்திரன் அளப்பரும் உவகை எய்தியவனாய் அருள் மிகும் அத் தெய்வத்தை வாழ்த்துபவன், உள்ளக் கோயிலிலே எழுந்தருளி உலகம் புரக்கும் தெய்வத்திருவே! சான்றோர் கைகுவித்து வணங்கி யுய்தற்பொருட்டுக் கலை வளத்தாலே கவினுற்றுத் திகழுகின்ற இத்திருக்கோயிற் படிவத்தேயும் எழுந்தருளிய அவியாத பேரொளிப் பிழம்பே! சான்றோரின் தூய செந்நாவின்கண் எழுந்தருளி உலகிற்கு உறுதிப்பொருளை உணர்த்தும் தெய்வப் பாவையோ!; வானோர் தலைவி மண்ணோர் முதல்வி ஏனோர் உற்ற இடர் களைவாய் என-அமரர் தலைவியே நிலவுலகத்து வாழ்கின்ற மாந்தர்வாழ்விற்கும் முதல்வியே அறிவின் தெய்வமாகிய நீயே அருண் மிகுதியாலே உலகின்கண் ஆற்றா மாக்களின் அருந்துயராகிய பசிப்பிணியையும் அகற்றுவாயாயினை, வாழ்க நின் திருவடி மலர்கள் என்று; தான் தொழுது ஏத்தித் தலைவியை வணங்கி-தான் தன் கைகளைத் தலைமேற் குவித்துக் கும்பிட்டு அத் தலைமைத் தெய்வத்தைத் தரைமிசை வீழ்ந்து வணங்கிய பின் என்க.

(விளக்கம்) நந்தா விளக்கு- அவியாத விளக்கு. அவள் அறிவுப் பேரொளியாகலின் அவியாத விளக்கு என்றான். தெய்வங்களுக்கும் நீ தெய்வமாவாய் என்பான் வானோர் தலைவி என்றான். மண்ணுலகத்து மாந்தரும் அறம்பொருள் இன்பங்களாகிய உறுதிப்பொருள் களையுணர்ந்து வாழ்வாங்கு வாழவைக்கும் தெய்வம் நீயே என்பாள் மண்ணோர் முதல்வி என்றான். ஏனோர் என்றது, அவள் திருவருளை நாடாது உணவினையே நாடி ஏக்கற்று நிற்கும் ஆற்றாமாக்களை. இடர்-அவர்தம் வயிறுகாய் பெரும்பசி. பசி களையும் தொழில் திருமகளுடையதாம். நின் பேரருள் காரணமாக நின்னருளை நாடாத ஏனையோர் இடர் களைதற்கு நீ எளிவந்து அதற்கு ஒப்பற்ற கருவியாகிய இம் மாபெரும் பாத்திரத்தை நல்கினை ஆதலின் நீ ஏனோர் இடரும் களைவாயாயினை வாழ்க நின்றிருவருள் என்று வாழ்த்தியபடியாம்.

ஆபுத்திரன் அமுதசுரபி கொண்டு ஆருயிர் ஓம்புதல்

22-27: ஆங்கவர்...................ஒலிப்ப

(இதன் பொருள்) ஆங்கு அவர் பசி தீர்த்து-முன்னர் அவ்விடத்தே வயிறு காய் பெரும் பசி மலைக்கும் என் செய்கோம் என்று இரந்து நின்ற ஆற்றாமாக்களின் அரும் பசியை அவர் வேண்டியாங்கு அவ்வமுதசுரபி சுரந்த உணவை வழங்கித் தீர்த்து; அந்நாள் தொட்டு வாங்கு கை வருந்த மன்னுயிர் ஓம்பலின்-அந்த நாள் முதலாக இடையறாது ஏற்கும் இரவலர் ஏந்திய கைகள் வருந்துமளவிற்கு உணவு வழங்கி நிலைபெற்ற உயிரினங்களை யெல்லாம் பாதுகாத்து வருதலாலே; மக்களும் மாவும் மரம் சேர் பறவையும் உடன் தொக்கு ஈண்டி சூழ்ந்தன விடாஅ-மாந்தரும் விலங்களும் மரத்திலுறைகின்ற பறவையினங்களும் ஆகிய பல்வேறுயிரினங்களும் ஒருங்கே கூடி ஆபுத்திரனைச் சூழ்ந்து கொண்டு விடாதனவாய் ஆரவாரித்தலாலே, பழுமரத்தின் ஈண்டிய பறவையின்-பழுத்த மரத்தின்கட் கூடி ஆரவாரிக்கின்ற பறவையின் ஆரவாரம் போல; எழூஉம் இழும் என் சும்மை இடை இன்று ஒலிப்ப- அவ்விடத்தினின்றும் எழுகின்ற இம்மென்னும் கேட்டற்கினிய பேரொலி இடையறாது ஒலியா நிற்ப என்க.

(விளக்கம்) ஆங்கு அவர் என்றது முன்பு ஆரிடையுழந்து ஆங்குவந்து பசிமலைக்கும் என்று கூறிய இரவலரை. வாங்கு கை-ஏற்கின்ற இரவலர் கைகள். அவை இடுகின்ற உணவின் பொறையால் வருந்தும்படி வழங்கினன் என்றவாறு. மக்களே அன்றி விலங்குகளும் பறவைகளும் உணவு வேண்டி வருதலின் அவற்றுக்கும் ஏற்றவுணவினை அம் மாபெரும் பாத்திரம் சுரந்தளித்தலின் மன்னுயிர் அனைத்தையும் ஓம்பினன் என்க. எழூஉம்-எழகின்ற. சும்மை- பேராரவாரம். இடையறாது ஒலிக்குமாறு அறஞ் செய்தானாக என்று அறத்துமுடித்திடுக.

பழுமரத்தீண்டிய பறவையின் எழூஉம் இழுமென் சும்மை என்னுமிதனோடு

பழுமர முள்ளிய பறவையின் யானுமவன்
இழுமென் சும்மை இடனுடை வரைப்பின்

எனவும் (நெருநரா-64-65)

ஆர்கெழு குறடுசூட் போன்றவன்
சீர்கெழு வளமனை திளைத்து மாசனம்
கார்கெழு கடலெனக் கலந்த வல்ல தூஉம்
பார்கெழு பழுமரப் பறவை யொத்தவே

எனவும் (சீவக-828) வரும் பிறசான்றோர் கூற்றும் நோக்குக.

தேவேந்திரன் பாண்டு கம்பளம் துளங்குதலும் ஆபுத்திரனைக் காண அவன் அந்தணனாகி வருதலும்

28-35: ஈண்டு.......................கொள்கவென

(இதன் பொருள்) ஈண்டுநீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன் பாண்டு கம்பளம் துளக்கியது ஆகலின்-இங்கே கடல் சூழ்ந்த நிலவுலகத்திலே இவ்வாறு இவ்வாபுத்திரன் செய்கின்ற பேரறச் செயலானது வானுலகத்தே அமரர் கோமான் வீற்றிருக்கின்ற பாண்டு கம்பளம் என்னும் இருக்கையைக் குலுக்கியதனாலே அத் தேவேந்திரன் தனக்கியன்ற கடமையை அவ்வாருயிர் முதல்வனுக்குச் செய்யும்பொருட்டு; ஓர் வளைந்த யாக்கை மறையோன் ஆகி தண்டு கால் ஊன்றித் தளர்ந்த நடையின்-ஒரு கூன் விழுந்த யாக்கையையுடைய முதிய பார்ப்பனனாக உள்வரிக் கோலங் கொண்டு கைத் தண்டையே காலாக ஊன்றி நடக்கின்ற தளர்ச்சியுற்ற நடையையுடையவனாய்; மா இரு ஞாலத்து மன்னுயிர் ஓம்பும் ஆருயிர் முதல்வன் தன்முன் தோன்றி- மிகவும் பெரிய நிலவுலகத்திலே உடம்பிலே நிலைபெற்றிருக்கின்ற உயிரினங்களை எல்லாம் உண்டி கொடுத்துப் பாதுகாக்கின்ற அரிய உயிர் முதல்வனாகிய ஆபுத்திரன் முன்னர் வந்து நின்று; உன் பெருந்தானத்து இந்திரன் வந்தேன் நின் கருத்து யாது உறுபயன் கொள்க என- நீ செய்துள்ள பேரறங் காரணமாக நின்னைக் காண்டற்குத் தேவேந்திரனாகிய யான் இவ்வுள்வரிக் கோலத்தோடு நின்பால் வந்துளேன் காண்! இத்தகைய பேரறத்தைச் செய்தற்குக் காரணமான நின் கருத்துத் தான் யாது? அவ்வறத்தினால் உனக்கு மிகவும் பயன் விளைந்துளது அப் பயனை நீ கருதுமாற்றல் கைக் கொள்ளக் கடவை, நீ கருதியதனை இன்னே கொள்க! என்று அறிவியா நிற்ப என்க.

(விளக்கம்) நிலவுலகத்தே ஏதேனும் பேரறம் செய்வோர் உளராய் விடத்தே அத்தகைய அறவோர் உளராதலை இந்திரனுடைய இருக்கை அசையுமாற்றால் அவனுக்கு அறிவுறுத்தும் என்பதும், அங்ஙனம் இருக்கை யசைதற்குக் காரணமான அறவோரைச் சென்று கண்டு அவர் விரும்புவன அளித்து அவரை மகிழ்வித்தல் வேண்டும் என்பதும், நிலவுலகில் அறவோர்க்கு ஏதேனும் இடையூறு நிகழ்ந்துழியும் அவனிருக்கை அசைந் தறிவுறுத்தும் என்பதும் அப்பொழுதும் இந்திரன் அவ்வறவோர்க்கெய்திய இடையூறு களைதற்கு ஆவன செய்தல் வேண்டும் என்பதும் இந் நிகழ்ச்சியான் அறியப்படும். இக் கொள்கை பவுத்த சமயத்தவர்க்கும் சமண சமயத்துக்கும் பொதுவானதொரு கொள்கை என்பது இந் நூலாலும் சமண நூலாகிய சீபுராணத்தாலும் அறியப்படும் என்ப.

இந்திரன் அறவோர்க் கெல்லாம் அரசனாகலின் வானுலகத்தேயன்றியும் நிலவுலகத்தும் அறவோர் திறத்திலே அவன் அருளாட்சி செய்யும் கடப்பாடுடையன் என்பது இவ்விருசமயத்தவர்க்கும் கொள்கைபோலும்.

இனி, இந்திரன் இந்நிலவுலகத்து ஏனையமாந்தர் தன்னைக் காணாமைப் பொருட்டு முதுபார்ப்பனனாக உள்வரிக் கொலங் கொண்டு வந்தனன் என்க. என்னை? உள்வரிக் கோலம் பூண்டு வந்துழியும் அவன் ஆபுத்திரனை அணுகியவுடன் இந்திரன் வந்தேன் எனத் தன்னைத்தானே அறிவித்தலால் அவன் வேற்றுருக்கோடலில் பயன் ஏனையோர் காணாமையே என்பது பெற்றாம்.

இனி, நிலவுலகத்திலே நூறு வேள்வி செய்தவனே இந்திரப் பதவி பெறுதற்குரியவன் என்றும் அத்தகைய அறவோர் உளராயவழி அவன் தன்பதவியை இழப்பான் என்பதை அறிந்து அத்தகைய அறவோர்  உருவாகாதபடி பார்த்துக்கோடலும் அவன் தன் பதவியைப் பேணிக் கொள்ளும் உபாயமாம். ஈண்டும் ஆபுத்திரன் அறம்பெருகி வருவதாலே தன்பதவி பறிபோம் என்னும் அச்சத்தாலே அவ்வறத்தைத் தவிர்க்கவே இந்திரன் வந்து பயன் கொள்ளுமா றிரக்கின்றனன் என்று கோடலே பெரிதும் பொருத்தமாம். என்னை? இது பொருளுடைமையோர்க்குரியதோர் இயற்கையான புன்செயல் என்பது இந் நிலவுலகத்துப் பெருநிதிக் கிழவர்பாலும் காணப்படுதலானும் இந்திரன் அறத்தை உவப்பவனாயின் ஆபுத்திரன்பாற் செற்றங்கொண்டு அவனறம் நிகழாவண்ணம் அவனைப் பகைத்துச் செயல்புரியுத் தலைப்படான் ஆகலானும், அவன் கொள்கைக்காக அவனைப் பெரிதும் போற்றுதலே செய்திருத்தல் வேண்டுமன்றோ? ஆகவே செல்வத்திற் கியன்ற அழுக்காறும் பதவிபேணும் கருத்துமே மேலே அவன்செயலால் புலப்படுதல் நுண்ணிதின் உணர்க.

இனி, அவன் இருக்கையாகிய பாண்டுகம்பளம் அவனைத் துளக்குவதற்கும், இனி இப் பதவி உனக்கில்லை என்பதன் அறிகுறியாகக் கோடலே பொருத்தமாம். இந்திரன் யாரேனும் நிலவுலகில் அருந்தவஞ் செய்யத் தலைப்பட்டால் அவர் தவத்தை அழிக்க முற்படுகின்ற செயலும் இக் கருத்தையே வலியுறுத்துவதாகும். இவ்வரலாறு செல்வத்திற்கியன்ற தொரு சிறுமைக்கே எடுத்துக்காட்டாகும் என்றுணர்க.

இந்திரன் வந்தேன் யாது நின்கருத்து உன்பொருந்தானத்துறுபயன் கொள்கென இந்திரன் ஆபுத்திரனை இரப்பதும் தன்பதவிக்கு வரத்தக்க செல்வர்க்குக் கைக்கூலி கொடுத்து அவரைத் திசைமாற்றி விடுகின்ற புன்செயலே அன்றிப் பிறிதில்லை என்றுணர்க. இப் புன்மை கண்டன்றோ ஆபுத்திரன் விலாவிறச் சிரிக்கின்றான். இங்ஙனம் நுண்ணிதின் உணராக்கால் அவன் நகைப்பு அவனை வெள்ளமகனாகவே செய்துவிடும் என்க.

ஆபுத்திரன் இந்திரன் பேதைமை கண்டு பெருகச் சிரித்தல்

34-43: வெள்தள.........வேந்தே

(இதன் பொருள்) வெள்ளைமகன் போல் விலா இற நக்கு ஈங்கு எள்ளினன் போம் என்று எடுத்து உரை செய்வோன்-உண்டி கொடுத்து உயிரோம்பும் பேரறத்தைத் தடை செய்ய நயந்து முயலுகின்ற இந்திரனுடைய பேதைமையை நினைந்து அமர் நகை செய்யும் இயல்புடைய அவ்வாபுத்திரன்றானும் பேதை மகன் ஒருவன் சிரிப்பது போன்று விலா வென்பு இறும்படி வாய் விட்டுப் பெருகச் சிரித்து இவ்விடத்திலே அவ்விந்திரனை இகழ்ந்து போமையா! போம்!! என்று சொல்லித் தான் பெறுகின்ற பேரின்பத்தையும் தனக்கு வழங்குதற்கு யாதுமில்லாத இந்திரனுடைய நல்குரவினையும் அவனுக்கு விளங்க விதந்தெடுத்துக் கூறுபவன்; ஈண்டுச் செய்வினை ஆண்டு நுகர்ந்திருத்தல் காண்தகு நும் கடவுளர் அல்லது-இந் நிலவுலகத்திலே வாழுங் காலத்தே இம்மைச் செய்தது மறுமைக்காகும் என்னும் பண்ட மாற்றறிவோடு செய்த நல்வினையின் பயனாகிய ஊதியத்தை நுகர்ந்திருத்தலைக் கண்டிருக்கும் சிறப்பினையுடைய நும் குடிகளாகிய மரப்பாவை போன்ற அவ்வமரரை அல்லது; அறஞ் செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர் நல் தவம் செய்வோர் பற்று அற முயல்வோர் யாவரும் இல்லா- நெஞ்சத்தருள் சுரந்து அறத்தின் பொருட்டே அறஞ் செய்கின்றவரும் ஆற்றா மாக்கள் அரும பசி களைந்து அவர்தம் அல்லல் களைந்து பாதுகாக்கும் வள்ளன்மையுடையோரும் தங்கருமமாகிய தவத்தைச் செய்வோரும் பவத்திறம் அறுகெனப் பற்றறுத்தற்கு முயல்பவரும் ஆகிய இத் திறத்து மெய்ந்நெறி வாழ்க்கையுடையோருள் ஒருவரேனும் இல்லாத; தேவர் நல் நாட்டுக்கு இறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே- தேவர் வாழுகின்ற அழகிய நாட்டை முறை செய்து காப்பாற்றும் தலைவனாகிய பெரிய வெற்றியையுடைய வேந்தரே கேட்டருள்க! என்றான்; என்க.

(விளக்கம்) வெள்ளை மகன்- அறிவிலி சிரிப்பிலே பொழுது போக்குதல் சிறியவர்க்கியல்பு. சான்றோர் நகைப்புழியும் அளவாகவே நகைப்பர். பேதையரே வெடிச் சிரிப்புச் சிரிப்பர். முன்னைக்காதையில் ஆபுத்திரன் பின்பு அமர் நகைசெய்து(92) என்றது அவனுக்கு இயற்கையான நகைப்பாம். ஈண்டு இந்திரன் பேதைமை சாலப் பெரிதாகிய காரணத்தால் விலாவிற்ச் சிரித்தல் வேண்டிற்று.

இனி இந்திரன் அறவோனுக்குரிய பேரின்பம் வழங்க விரும்பியே தானத்துறபயன் கொள்க என்றலின் இச் செயல் பேதைமையுடைய தாய் நகை பிறப்பித்தற் கிடனாகாதாம் பிறவெனின் அற்றன்று;

எல்லா வுயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்   ( தொல் - சூ-1168)

என்பதன்றே இன்பத்திலக்கணம் ஈண்டு ஆபுத்திரனுக் கின்பமாவது யாதென இந்திரன் தேவனாயிருந்தும் அறியமாட்டாமையும், ஆற்றா மாக்கள் அரும்பசி களையும் ஆபுத்திரன் கொடுப்பதற்கு அழுக்காறு கொண்டு அவ்வறத்தை நிகழாமற் றடுத்தற்கு முயலுதலும் மாபெரும் பேதமையே. இது செய்பவர் மக்களாயின் அவன் அமர் நகையே செய்திருப்பன். அவன்றானும் அமரர்கோமான் ஆயதனால் அவன் விலாவிற நகல் இயல்பே என்க. ஈண்டு,

வாமனனாகி வந்து மண்ணிரந்த மாலுக்குக் கொடேல் என்று தடுத்த வெள்ளியை மாவலி நீ பெரும்பேதை காண்! வெள்ளி என்னும் பெயர் நினக்குச் சாலவும் பொருந்துமென்று இகழ்ந்து,

எடுத்தொருவ ருக்கொருவர் ஈவதனின் முன்னே
தடுப்பது நினக்கழகி கோதகைவில் வெள்ளி!
கொடுப்பது விலக்குகொடி யோய்உனது சுற்றம்
உடுப்பதுவு முண்பதுவு மின்றிவிடு கின்றாய்

எனவும்,

வெள்ளியை யாதல் விளம்பினை மேலோர்
வள்ளிய ராக வழங்குவ தல்லால்
எள்ளுவ வென்சில இன்னுயி ரேனும்
கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால்

எனவும் வரும் கம்பநாடர் திருவாக்கும், இவற்றிற்கும் முதலாக நின்ற தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉ
முண்பதூஉ மின்றிக் கெடும்       (196)

எனவும்

நல்லா றெனினும் கொளறீது மேலுலக
மில்லெனினு மீதலே நன்று     (222)

எனவும் வரும் பொன் மொழிகளும் நினைவுகூர்வார்க்கு இந்திரன் பேதைமையும் அவன் செய்யும் தீவினையும் நன்கு விளங்கும். இத்தகைய பேதைமை கண்டு அம் மேலோன் விலாவிற நகைத்தது, சாலவும் பொருத்தமே என்க.

வெள்ளை மகன்போல் என்னும் உவமை இயல்பாக அவன் வெள்ளை மகனல்லாமையை விளக்கி நின்றது.

விலாவிறநக்கு என்றது பெருகச் சிரித்து என்பதுபட நின்றது. சிரித்துச் சிரித்து விலாவொடிந்து போயிற்று என்னும் வழக்கு இக் காலத்தும் உளதாதலறிக.

எள்ளினன்: முற்றெச்சம் எடுத்துரை செய்வோன் என்றது அவன் பேதைமைக்குரிய காரணங்களை விதந்து கூறுபவன் என்றவாறு. நுகர்ந்திருத்தலைக் காண்டகு சிறப்பு என்றது அச் செயல் இழிதகவுடையது என்றிகழ்ந்தபடியாம்.

இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
அறவிலை வணிகரே

ஆகிய அவர் செய்ததுதானும் அறமன்று ஒரு வணிகத் தொழிலே என்பான் ஈண்டுச் செய்த அறம் என்னாது செய்வினை என்றும் தேவர் என்னாது கடவுளார் என்றும் ஓதினன். எமக்காயின் அவர்வணிகரே என்பதுதோன்ற நுங்கடவுளர் என்றான்.

இனி, அறஞ் செய்மாக்கள் முதலிய செய்ந்நெறி வாழ்க்கையோர் யாவரும் இல்லாத நாட்டை நன்னாடு என்றது இகழ்ச்சி. இங்ஙனம் இகழ்ந்தவன் அவனைப் பெருவிறல் வேந்தே என்றது இகழ்ச்சி மேலிகழ்ச்சியாம்.

ஆபுத்திரன் யான் எய்தும் இன்பத்தினும் சிறந்த இன்பம் நின்னுலகத்தில் யாதுமில்லை எனலும், சினந்த இந்திரன் அவனை  ஒருத்தற்குச் செய்யும் செயலும்

44-54: வருந்தி................அளித்தலும்

(இதன் பொருள்) தேவர்கோன்- அமரர் கோமானே! ஈதொன்று கேள்! என் தெய்வக் கடிஞை வருந்தி வந்தோர் அரும்பசி களைந்து அவர் திருந்து முகம் காட்டும்-இதோ என் கையிலிருக்கின்ற தெய்வத்தன்மையுடைய பிச்சைக் கலமாகிய அமுதசுரபி என்னும் இத் திருவோடு என்பால் பசியினாலே வருந்தி வருபவருடைய பொறுத்தற்கரிய பசித்துன்பத்தைப் போக்கி இன்பத்தாலே திருத்த மெய்திய அவருடைய முகத்தை எனக்குக் காட்டுங்காண்! அக் காட்சியால் யான் எய்தும் பேரின்பம் சாலவும் பெரிது; உண்டி கொல்லோ உடுப்பன கொல்லோ பெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ ஈங்கு அளிப்பன யாவை- பெரியீர்! நீவிர் நும் பொன்னாட்டில் இன்பப் பொருளாகக் கொண்டாடுகின்ற நுமது உணவாகிய அமிழ்தமோ! அல்லது நீயிர் உடுத்துகின்ற பொன்னாடைகளோ! அல்லது நீயிர் கூடி மகிழும் அரம்பையராகிய ஆடன் மகளிரோ! அல்லது நுமக்காவன செய்யும் பணயாளரோ! அல்லது இன்னோரன்னவை பிறவோ எனக்கு இத்தகு பேரின்பந் தாற்பாலவை அவற்றுள் ஒன்று கூறுக!; என்றலும்-என்று அவ்வறவோன் வினவியவளவிலே; ஆயிரம் கண்ணோன்-ஓராயிரம் கண்களையுடைய அத் தேவேந்திரன் அவன்பால் உட்பகை கொண்டவனாய்; அவன் பொருட்டால் அவ்வறவோனை ஒறுக்கும் பொருட்டு; புரப்போன் பாத்திரம் பொருந்து ஊண் சுரந்து ஈங்கு இரப்போர்க் காணாது ஏமாந்திருப்ப-ஆருயிர் ஓம்பும் அவ்வறவோன் தன் அங்கைப் பாத்திரம் இரப்போர்க்குப் பொருந்துகின்ற உணவாயகிய ஆருயிர் மருந்தைச் சுரந்து வழங்குவதாக இருப்பவும் அவனுக்குத் தம் திருந்து முகங் காட்டிய பேரின்பம் செய்வோராகிய இரவலரைக் காணப் பெறாமையாலே அப் பேரின்பம் பெறாமல் ஏமாந்திருக்கும்படியாக; நீள் நீலம் அடங்கலும் நிரப்பு இன்று எய்திய-அவனுறைகின்ற நெடிய இந் நாவலந்தீவு முழுவதும் வறுமை சிறிதும் இன்றி இருக்குமொரு நிலைமை அடையும் வண்ணம்; பரப்பு நீரால் பல்வளம் சுரக்க என- தன்னுடைய முகில்கள் குறையும் மிகையுமின்றிப் பொழிந்து பரப்புகின்ற நீரினாலே பல்வேறு வளங்களையும் பெருக்குக என்று முகில்களுக்குப் பணிக்குமாற்றாலே; உல கோர்க்கு ஓங்கு உயர் பெருஞ்சிறப்பு அளித்தலும்-இந் நாவலந் தீவில் வாழுகின்ற மாந்தர்க்கெல்லாம் பண்டொரு காலத்தும் பெற்றிராத மிகவும் உயர்ந்த செல்வப் பேறாகிய பெருஞ் சிறப்பை வழங்கிவிடா நிற்றலாலே; என்க.

(விளக்கம்) புரப்போன்-ஆபுத்திரன். இரப்போரே தம்திருந்து முகத்தாலே ஆபுத்திரனுக்குப் பேரின்பம் செய்தலின் அவ்வின்பத்திற்கு அவன் ஏக்கற்றிருக்க இதுவே வழியாம் நம்மை இகழ்ந்தமைக்கு அவனை ஒறுத்தல் அவனை ஏமாந்திருப்ப வைத்தல் என்றுகருதி இந்திரன் இவ்வாறு செய்தான் என்க. அவ்வறவோன் பொருட்டால் இவ்வுலகினர்க்கு நலமே எய்துவதாயிற்று என்பது தோன்ற நூலாசிரியர் அவன் பொருட்டால் ஆயிரம் கண்ணோன் ஓங்குயிர் பெருஞ்சிறப்பு உலகோர்க்கு அளித்தான் என்றார்.

இனி, ஆயிரங்கண்ணிருந்தும் யாதுபயன்? அவ்வறவோனுடைய அருள் நிரம்பிய உள்ளத்தைக் கண்டு மகிழ அகக்கண் ஒன்றேனும் இலன் என்றிகழ்தற்கு ஆயிரங்கண்ணோன் என்று கண்களை விதந்தெடுத்தோதினர். சுரக்க என்று முகில்களைப் பணிக்குமாற்றால் என இசை யெச்சம் வருவித் தோதப்பட்டது.

நிரப்பு- நல்குரவு. இன்றி என்னும் வினை எஞ்சிகரம் இன்று என உகரமாயிற்று செய்யுளாதலின். எய்திய செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். நீணிலம் என்றதும் உலகோர் என்றதும் நாவலந்தீவு என்னும் துணையாம் என்னை? உலகின் பகுதியையும் உலகம் என்னும் வழக்குண்மையை மாயோன்மேய காடுறை யுலகமும் எனவரும் தொல்காப்பியத்தினும்( பொருள- சூ-5) காண்க.

இனி, இக் காதையிலேயே சாவக நன்னாட்டுத் தண்பெயல்மறுத்தலின் ஊனுயிர் மடிந்தது (70-75) எனவருதலின் ஈண்டு நீணிலம் என்பதற்கும் உலகம் என்பதற்கும் நாவலந் தீ வெனவே பொருள் கூறல் வேண்டிற்று. ஆயின் பாண்டிநாடெனலே சாலும் பிறவெனின்! அற்றன்று நாவலந் தீவின் ஏனைப்பகுதியில் வற்கடம் நிகழ்ந்திருப்பின் ஆபுத்திரன்றானே அங்குச் சென்றிருப்பன், அது பொருளன்றென்க. அவன் அல்லது அப் பகுதியில் உள்ளவர் அவன்பால் வருதலும் கூடுமாகலின் மரக்கலமேறிச் செல்லுதலின் யாமுரைத்ததே நல்லுரை என்று கொள்க.

வறுமையில் வழி வையக மெய்தும் சிறுமை

55-64: பன்னீ...............முறைமையதாக

(இதன் பொருள்) பாண்டி நல் நாடு பன்னீராண்டு மன்னுயிர் மடிய மழை வளம் இழந்தது-இங்ஙனம் இந்திரன் சிறப்புச் செய்தற்கு முன்னர்ப் பாண்டியனுடைய நல்ல நாடானது பன்னிரண்டு ஆண்டுகள் தன்பால் வாழும் உயிரினம் இறந்து படும்படி மழை வளம் பெறாமல் வற்கடமுற்றுக் கிடந்தது இப் பொழுது; வசித் தொழில் உதவ மாநிலம் கொழுப்ப-இந்திரன் ஆணையாலே மழை பெருக்கி உதவி செய்தலாலே; பாண்டி நாட்டோடு பெரிய இந் நாவலந் தீவு முழுவதுமே செல்வச் செழிப்புற்றமையாலே; உயிர் பசிப்பு அறியாப் பான்மைத்து ஆகலின்- உயிரினம் சிறிதும் பசிப்பணியை அறியாத தொரு தன்மையைப் பெற்றமையாலே; ஆர் உயிர் ஓம்புநன் அம்பலப் பீடிகை ஊண் ஒலி அரவம் ஒடுங்கியது ஆகி-அரிய உயிர்களைப் பாதுகாக்கும் ஆபுத்திரன் உரையும் அம்பலப் பீடிகையிடத்தே இரவலரும் பிறவுயிரும் குழுமி உண்பதனாலே யுண்டாகும் மகிழ்ச்சி ஆரவாரம் நாளுக்கு நாள் அடங்கி இல்லையாகி; விடரும் தூர்ததரும் விட்டேற் றாளரும் நடவை மாக்களும் நகையொடு வைகி அதற்கு மாறாகத் தீயொழுக்கமுடைய கயமாக்களும் பரத்தைமை ஒழுக்கமுடையயோரும் கல்லெறிந்தன்ன இன்னாச் சொல் கூறு கின்றவரும் வாளாது ஊர் சுற்றித் திரியுமாக்களும் வந்து சிரிப்பொலியோடு குழுமி; வட்டும் சூதும் வம்பக் கோட்டியும் முட்டாவாழ்க்கை முறைமையது ஆக- வட்டுருட்டலும் சூதுப்போராடுதலும் வறுமொழி பேசி மகிழ்வோர் குழுமி ஆரவாரித்தலும் ஆகிய புன்னெறியாளர் குறையின்றி வாழ்கை நடத்தும் முறைமையையுடையதாகி விட்டமையாலே; என்க.

(விளக்கம்) பண்டு பன்னீராண்டு வற்கடமுற்றுக்கிடந்த பாண்டியனாடு இப்பொழுது மாநிலங்கொழுத்தலாலே உயிர் பசிப்பறியாப் பான்மைத் தாகலின் உயிர் ஓம்புநன் பீடிகை ஊணொலி ஒடுங்கியதாகி விடர் முதலியோர் முட்டாவாழ்க்கை  நிகழ்த்தும் முறைமையதாகி விட்டமையாலே என்க.

இதனால், மாந்தர் உடலோம்பதற்கியன்ற தொழில் ஏதும் செய்ய வேண்டாதபடி இந்நிலவுலகம் ஏதேனும் ஒரு தெய்வத்தாலே வனமுடையதாக்கி விடப்பட்டால் அப்பொழுது இவ்வுலகத்தே மாந்தர் வாழ்க்கை எத்துணைக் கீழ்மையுடையதாகி விடும் என்பதை இந்நூலாசிரியர் மிகவும் நுண்ணிதாக எண்ணிப்பார்த்து இவ்வாறிருக்கும் என்று இங்குக் கூறிக் காட்டும் புலமை வித்தகம் எண்ணி இறும்பூது கொள்ளற்பாலதம் இனி,

இரப்பாரை இல்லாயி னீர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று    (குறள்-1058)

என்னும் அருமையான திருக்குறளைப் பாடிய தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்தாமும் இங்ஙனம் ஓருலகத்தைத் தமது கூர்த்த அகக்கண்ணிற் கற்பனை செய்து பார்த்து அத்தகையதோர் உலகம் மக்கள் வாழ்தற்கு ஒருசிறிதும் தகுதியுடையதாக இராது எண்றுணர்ந்தே இத் திருக்குறளைப் பாடியருளினர் என்பதில் ஐயமில்லை. இதனால் உலகில் இரப்போர் என்றென்றும் இருத்தல் வேண்டும் என்று அத் தெய்வப்புலவர் கருதினர் என்று கருதிவிடுதல் அறியாமையேயாம். ஆயின் அவர் கருத்துத் தான் என்னை எனின்? உலகம் உள்ளதுணையும் இரப்பவரும் இருக்கவே செய்வர், நும்கடன் இரவாமல் முயன்று வாழ்வதேயாம். இரப்பார்க்கு ஈதலும் நும் முதற் கடன் என்பதே அத் தெய்வப்புலவர் கருத்தாம் என்றுணர்க.

இற்றைநாளினும் செல்வச்செழிப்பு மிக்கதாகவும் இரவலர் இல்லையாகச் செய்யப்பட்டதும் ஆகிய நாட்டில் மாந்தர் வாழ்க்கைப்பண்பாடு வீழ்ச்சி யெய்திய காரணத்தால் தற்கொலைகளும் மனக்குழப்பமும் பித்துப் பிடித்தலும் ஏனைய நாட்டினும் மிக்குவருவனவாக யாம் செய்தித்தாள்களிற் காணுஞ் செய்திகள் ஈண்டுக்காட்டிய சான்றோர் கருத்துகளுக்கு அரணாதல் நுண்ணிதின் அறிந்து கொள்க.

வசித்தொழில்- மழையின் தொழில். பசிப்பு- பசிப்பிணி. ஆருயிர் ஓம்புநன்-ஆபுத்திரன் ஊண்ஒலி- உண்பார் செய்யும் ஆரவாரம்.

விடர்- பிறர்க்குத் தீங்கு செய்வோராகிய கயவர். இவர் செயல்விடம் போலுதலின் விடர் எனப்பட்டார் என்னை?

ஈங்கு விடந்தலையில் எய்தும் இருந்தேளுக்கு
வாய்ந்த விடங்கொடுக்கில் வாழுமே- நோக்கரிய
பைங்கணர விற்குவிடம் பல்லளவே துச்சனர்க்
கங்கமெல் லாம்விடமே யாம்   (நீதிவெண்பா-18)

எனவருஞ் செய்யுளும் நோக்குக.

தூர்த்தர்- பரத்தர் தூர்த்தரும் தூர்ப்பாரலர் (நீதிநெறி விளக்கம்) என்புழியும் அஃதப் பொருட்டாதலுணர்க. விட்டேற்றாளர் கல்லெறிந்தன்ன இன்னாச் சொல்பேசும் கயவர். நடவை-நடைவழி. நாடு கொழுப்ப உயிர் பசி அறியாப் பான்மைத்தாகலின் பீடிகை ஒலி ஒடுங்கியதாகி வைகி இத்தகைய வாழ்க்கை முறைமையதாக என இயைக்க.

ஆபுத்திரன் ஊர்தொறும் உண்போர் வினவிச் செல்லல்

65-75: ஆபுத்திரன்.................என்றலும்

(இதன் பொருள்) ஆபுத்திரன் தான் அம்பலம் நீக்கி ஊர் ஊர் தோறும் உண்போர் வினா அய்-ஆபுத்தின்றானும் இரப்போர் யாரையும் காணப் பெறாமையாலே அவ்வம்பலத்தினின்றும் புறப்பட்டு ஊர்தோறும் ஊர்தோறும் சென்று இரவலர் உளரோ என அவ்வூர்களில் வாழ்வோரை வினவிய வழி; யாவரும் யார் இவன் என்றே இகழ்ந்தாங்கு- வியத்தகுமிவனுடைய வினாவைக் கேட்ட ஊர் மாக்கள் இங்ஙனம் வினவும் இவன்றான் யாவனோ? பித்தேறியவனோ பேய் பிடிக்கப்பட்டவனா? என்றென்று தத்தம் வாய் தந்தன கூறி இகழ்ந்துழி; அருந்து ஏமாந்த ஆருயிர் முதல்வனை-இவ்வாறு பிறர் அருந்துதல் கண்டின்புறுமின்பத்திற்குப் பெரிதும் ஏக்கற்றிருக்கின்ற ஆருயிர்க் கெல்லாம் முதல்வனாந் தகுதியுடைய அவ்வாபுத்திரனை; இருந்தாய் நீயோ என்பார் இன்மையின்-ஐய இங்கிருக்கின்ற நீ ஆபுத்திரனேயோ? என்று வினவி உவப்பார் ஒருவரேனும் இந்நீணிலத்தே இல்லாமையாலே; திருவின் செல்வம் பெருங்கடல் கொள்ள ஒரு தனி வரூஉம் பெருமகன் போலத் தானே தமியன் வருவோன் தன் முன்-ஆகூழாலே தான் பெற்ற திருத்தகு செல்வத்தைப் பெரிய கடல் கொண்டு விட்டமையாலே தான் மட்டும் உய்ந்து கரையேறி வருமொரு பெருந்தகை வணிகனைப் போலத் தான் மட்டும் தமியனாக ஒரு வழியிலே வருகின்ற அவ்வறவோன் முன்னர்; மா நீர் வங்கம் வந்தோர் வணங்கி- வேற்று நாட்டிலிருந்து கடலிலே மரக்கலம் ஏறி வந்திறங்கி வருகின்ற வணிகருள் இவனைப் பண்டறிவுடையோர் சிலர் கண்டு கை குவித்து வணங்கி; உரவோய்-ஆருயிர் ஓம்பும் ஆற்றலமைந்த அறவோய்!; சாவக நல் நாட்டுத் தண் பெயல் மறுத்தலின் ஊண் உயிர் மடிந்தது என்றலும்- யாம் சென்றிருந்த சாவகம் என்னும் நல்ல நாட்டிலே நீண்ட காலமாகக் குளிர்ந்த மழை பெய்யா தொழிந்தமையாலே உடம்பெடுத்த உயிரினம் இறந்தொழிந்தது கண்டீர்! என்றறிவியா நிற்ப; என்க.

(விளக்கம்) உண்போர் வினவிவருவோர் உலகத்தின்மையாலே இங்ஙனம் வினவுபவன் பித்தேறியவனோ பேய் பிடிக்கப்பட்டவனோ இன்னன் என்றறிகிலேம் என வினவப்பட்டோர் இகழ்ந்தனர் என்றவாறு இகழ்ந்தாங்கு இகழ்ந்துழி. அருந்து அருந்தல்: தொழிற் பெயர் விகுதிதொக்கது. இந்திரனாலும் வரவேற்கும் மாபெருஞ் சிறப்புடைய ஆபுத்திரனை இப்பொழுது நீயோ இங்கிருந்தனை என்று வினவுவார் காமும் இலராயினர் என்றிரங்கியவாறு. திருவின் செல்வம் என்றது சிறப்புடைய செல்வம் என்றவாறு. திருத்தகு செல்வத்தோடு கடலில் வந்துழிச் செல்வத்தைக் கடல் கொள்ளத் தான் மட்டுமே தமியனாய் வருகின்ற வணிகனைப் போல என்க. என்னை? அங்ஙனம் வருமியல்புடையோர் வணிகரே யாதலின். இங்ஙனம் தகுதி பற்றி உரைகூறினாம். ஏக்கற்று வருதற்கு வணிகன் உவமை. செல்வம் ஈண்டு அருள் அறமாகிய செல்வத்திற் குவமை வருவோன்:பெயர்: ஆபுத்திரன். வங்கம்-மரக்கலம். வணங்கி என்றமையால் இவனைப் பண்டறிந்தவர் என்பது பெற்றாம் ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப் பசியை மாற்றுவார் ஆற்றலிற் பின் (குறள் 225) என்பது பற்றி ஆபுத்திரனை உரவோய்! என்று விளித்தனர் உரவு-ஆற்றல். இங்ஙனம் விளித்தார் நின் ஆற்றல் இப்பொழுது அந் நாட்டிற்குப் பெரிதும் பயன்படும் என்னும் தமது கருத்துக் குறிப்பால் தோற்றுவித்தற்கு.

ஆபுத்திரன் மரக்கலமேறி ஆருயிர் ஓம்பச் செல்லுதல்

76-84: அமரர்................போதலும்

(இதன் பொருள்) அமரர் கோன் ஆணையின் அருந்துவோர்ப் பெறாது குமரி மூத்த என் பாத்திரம் ஏந்தி-இந்திரனுடைய கட்டளையினாலே ஏற்றுண்ணும் இரவன்மாக்களைப் பெறாமையாலே காதலனைப் பெறாமல் கன்னியாகவே இருந்து வறிதே மூப்பெய்தினாளொரு மகளைப் போன்று வறிதே காலங் கழியப் பெறுகின்ற என்னுடைய தெய்வப் பாத்திரமாகிய அமுதசுரபியைக் கைக்கொண்டு; ஆங்கு அந்நாட்டுப் புகுவது என் கருத்து என- நீயிர் கருதியாங்கு அச் சாவக நாட்டிற் புகுந்து ஆருயிர் ஓம்ப வேண்டும் என்பதே என் கருத்தும் என்று அவர்கட்கு உவகை மொழிந்து பின்னர்; மகிழ்வுடன் மாக்களொடு வங்கம் ஏறி பெரிய மகிழ்ச்சியோடே சென்று வேற்று நாட்டிற்குச் செல்லும் மக்களோடே மரக்கலத்திலேறிச் செல்லும் பொழுது; கால் விசை கடுக்க கடல் கலக்குறுதலின் நீர் வழங்கும் வங்கம் மால் இதை வீழ்ந்து-காற்றினது வேகம் மிகுதலாலே இயங்குகின்ற அம் மரக்கலமானது தன் பெரிய பாய்களை இறங்கி; மணிபல்லவத்தீவினது துறையிலே ஒரு நாள் தங்குவதாயிற்று; தான் ஆங்கு இழிந்தனன்- ஆபுத்திரன் மரக்கலத்தினின்றும் அம் மணிபல்லவத் தீவின்கண் இறங்கி இருந்தனனாக; வல் இருள் இழிந்தோன் ஏறினன் என்று இதை எடுத்து-அற்றை இரவின்கண் செறிந்த இருளையுடைய இடை யாமத்தே காற்று விசை தணிந்து அமைதியுற்றமை கண்ட அம் மரக்கலத்து நீகான் தரையிலிறங்கிய ஆபுத்திரன் ஏறினன் என்று கருதியவனாய்ப் பாய் விரித்துச் செல்ல வேண்டிய திசை நோக்கிச் செலுத்துதலாலே; வங்கம் போதலும்-அம் மரக்கலம் போய் விட்டமையாலே என்க.

(விளக்கம்) குமரிமூத்தல்-மணமின்றிக் கன்னிப்பெண் தமியளாகவே மூத்துவிடுதல். பயனின்றி வறிதே காலங் கழித்தமைக்குவமையாக இங்ஙனம் கூறினர். தனக்கும் பிறர்க்கும் பயனின்றிக் கிடத்தல் பற்றித் தானுமகிழாமல் காதலனை மகிழ்வியாமலும் வறிதே காலம் போக்கும் குமரி மூத்தாளை உவமை எடுத்தார்; இவ்வாறே ஆசிரியர் திருவள்ளுவனாரும்,

அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வ மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று    (குறள்-1007)

என ஓதுதலும் உணர்க.

கால்-காற்று. மால் இதை- பெரிய பாய். இழிந்தோன்:ஆபுத்திரன் நீகான்- மரக்கலம் இயக்குபவன். இனித் திண்ணை மெழுகிற்று என்றாற் போல வங்கத்தையே வினைமுதலாகக் கூறினுமாம். இருளில் போனமையால் ஆபுத்திரன் அது போனமை அறிந்திலன் என்பதும் அறிந்தாம்.

ஆபுத்திரன் உண்ணா நோன்பின் உயிர்பதிப் பெயர்த்தல்

85-95: வங்கம்......................பெயர்ப்புழி

(இதன் பொருள்) வங்கம் போய பின்-இவ்வாறு மரக்கலம் சென்ற பின்னர்; வருந்து துயர் எய்தி- பெரிதும் வருந்தி அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின்-அம் மணிபல்லவத்தீவகத்தே மாந்தர் ஒருவரும் வாழ்வோர் இல்லாமையாலே; மன்னுயிர் ஓம்பும் இம் மாபெரும் பாத்திரம் என் உயிர் ஓம்புதல் யான் பொறேன்- நிலை பெற்ற எண்ணிறந்த உயிர்களைப் பாதுகாக்கும் பெருஞ்சிறப்பமைந்த இவ்வமுத சுரபியானது என்னுடைய உயிரைப் பாதுகாக்குமளவிற்றாகச் சிறுமையுறு வதனை யான் பொறுத்துக் கொள்ள வல்லேன் அல்லேன்; தவந்தீர் மருங்கின் தனித் துயர் உழந்தேன்-முற்பிறப்பிற் செய்த நல்வினை தீர்ந்துவிட்ட பக்கலிலே ஒப்பற்ற பெரிய துயரத்தை நுகர்ந்தொழிந்தேன்; ஒழிந்திடுக; பாத்திரம் சுமந்து என் என்றனன் தொழுது-இந் நிலையிலே இத் தெய்வப் பாத்திரத்தைச் சுமந்து கொண்டு வாளாதுயிர்வாழ்தலிற் பயன் என்னை? என்று கருதியவனாய் அப் பாத்திரத்தைத் தொழுது; கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியில் விடுவோன் ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று என-ஆண்டுக் கிடந்த கோமுகி என்னும் பெயரையுடைய பொய்கை நீரிலே முழுகவிடுபவன் தெய்வப் பாத்திரமே நீ ஓரியாண்டிற்கு ஒரு முறை ஒரு நாள் மட்டும் நீரின் மேலெழுந்து தோன்றுவாயாக! என்றும், ஆங்கு அருள் அறம் பூண்டு ஆருயிர் ஓம்புநர் உளர் எனின் அவர் கைப் புகுவாய் என்று அப்பொழுது ஈண்டு யாரேனும் அருளறத்தை மேற்கொண்டு அரிய உயிர்களைப் பாதுகாக்கும் நன்னர் நெஞ்சம் உடையோர் இவ்விடத்தே வந்திருப்பாராயின் அத் திருவுடையோர் கையிலே சென்று எய்துவாயாக வென்றும் வேண்டுதல் செய்து விட்ட பின்னர்; ஆங்கு உண்ணா நோன்போடு உயிர்பதிப் பெயர்ப்புழி அவ்விடத்திலேயே உண்ணா நோன்புடனே வடக்கிருந்துயிர் விடுகின்ற செவ்வியிலே; என்க.

(விளக்கம்) வருந்துதற்குக் காரணமான துன்பம் எனினுமாம். அங்கு-அம் மணிபல்லவத்தீவில் இதனால் அத் தீவு மக்கள் வாழ்தவில்லாத வறுந்தீவு என்பது பெற்றாம்.

ஈத்துவத்தற் கிடமின்மையாலே அவ்வின்னாமையோடு உயிர் சுமந்து வாழ்தல் யான் பொறுக்ககிலேன் என்றவாறு. ஈண்டு,

சாதலி னின்னாத தில்லை யினிததூஉ
மீத லியையாக் கடை  (குறள்-230)

எனவரும் அருமைத் திருக்குறளுக்கு இவ்வாபுத்திரன் தலைசிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்தலுணர்க.

தவம் என்றது நல்வினையை. பாத்திரம் சுமந்து என்? என மாறுக. உண்ணாநோன்பினால் உயிர் துறத்தலை வடக்கிருத்தல் என்று கூறுப.

ஆபுத்திரன் மாறிப் பிறந்தமை கூறுதல்

96-104: அந்நாள்............தானென்

(இதன் பொருள்) அந் நாள் ஆங்கு யான் அவன்பால் சென்றேன் மணிமேகலாய் கேள் அவன் உயிர்பதிப் பெயர்க்கின்ற அதே நாளிலே அத் தீவகத்திலே அறவோன் ஆசனம் தொழச் சென்ற யான் அவனிடத்தே சென்றேனாக; என உற்றனையோ என்று கேட்ப-அவனை நோக்கி நீ இங்ஙனம் உயிர் நீத்தற்குக் காரணமாக எய்திய இடுக்கண் என்னையோ? என்று வினவ; தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன்-அவன்றானும் தனக்கு வந்துற்ற துயரங்கள் பலவற்றையும் தானே எனக்கு எடுத்துக் கூறினன் காண்!; குலதிசைத் தோன்றிக் கார் இருள் சீத்துக் குடதிசைச் சென்ற ஞாயிறு போல-நங்காய்! அவ்வறவோன்றானும் கீழ்த்திசையிலே தோன்றித் தன் பேரொளியாலே உலகைக் கவிந்து மூடிய கரிய இருளைப் போக்கி உயிர்கட்குத் துயர் துடைத்து இன்பம் வழங்கியவாறே மேற்றிசையிலே சென்று மறைந்த ஞாயிற்று மண்டிலம் போன்று தான் தோன்றிய நாள் தொடங்கி அருளறமே பூண்டு ஆருயிர்க் கொல்லாம் உண்டி கொடுத்து அருந்துயர் களைந்து பேரின்பம் வழங்கியவாறே மணிபல்லவத்திடை மன் உடம்பு இட்டு மன்னுயிர் தாங்கும் தணியாக் கருத்தொடு- மணிபல்லவத்தீவகத்தே தன்னுயிர் தங்கியிருந்த உடம்பினைப் போகட்டுப் பின்னரும் உலகிலே உடம்பொடு நிலைபெற்ற உயிரினங்களைப் பாதுகாக்கும் தணியாத ஆர்வமுடைய கருத்துடனே போய்; ஆங்கு அவன் சாவகம் ஆளும் தலைத்தாள் வேந்தன் ஆவயிற்று உதித்தனன்-அவ்வாபுத்திரன் தான் கருதிச் சென்ற அந்தச் சாவக நாட்டை ஆட்சி செய்கின்ற தலைசிறந்த முயற்சியையுடைய மன்னவன் நாட்டில் ஓர் ஆவினது வயிற்றிலே கருவாகி மக்கள் உருவத்தோடே பிறந்தனன் காண்! என்று அறவண வடிகள் மணிமேகலைக்கு அறிவித்தனர் என்பதாம்.

(விளக்கம்) அந்நாள்-ஆபுத்திரன் உயிர் நீக்கும் நாள். யான் புத்த பீடிகையைத் தொழச் சென்றேன் என்றாராகக் கூறிக் கொள்க. தன் உற்றன-தனக்கு வந்துற்ற துன்பங்கள்.

ஞாயிறு-ஆபுத்திரன் தோற்றத்திற்கும் செயற்கும் மறைவிற்கும் உவமை. காரிருள் சீத்து என்றுவமைக்குக் கூறிய அடைமொழியைப் பொருட்கும் ஏற்றிப் பொருந்துமாறு அவனது அருளறச் செயலும் விரித்துக் கூறப்பட்டது.

அவாவின் வழித்தாக வழி முறைத் தோற்றம் வரும் ஆகலின் சாவக நாடு சென்று ஆங்கு ஆருயிர் ஓம்பும் கருத்தோடு இறந்தமையாலே அந் நாட்டிலே சென்று பிறந்தனன் என்றும் தன்னை வளர்த்த ஆனினத்தின் பாற் பேரன்புடையனாயிருந்தமையின் ஆவயிற்றிற் பிறந்தான் என்றும் அப் பிறப்பிலே செய்த நல்வினைப் பயனாக மன்னனுக்கு அணுக்கராகிய முனிவருடைய பசு வயிற்றிற் பிறந்து மன்னனும் ஆயினன் என இதன் கண் குறிப்புப் பொருள் தோற்றுவித்தமையும் அறிக.

இனி இக் காதையை-அவற்குப் புகுந்தது கேளாய்! உழந்தோர் ஏத்தி மலைக்கும் என்றலும் இல்லோன் அஞர் எய்த கெடுக தீது என விளக்குத் தோன்றி அழியல் கொள்ளாய் என்றே கொடுத்தலும் தலைவியை வணங்கி பசிதீர்த்து ஓம்பலின் சும்மை ஒலிப்ப இந்திரன் கம்பளம் துளங்கியது ஆகலின் ஊன்றி ஆகித்தோன்றிக் கொள்கென, நக்கு உரைப்போன் வேந்தே காட்டும் கடிஞை யாவை அளிப்பன என்றலும், புரப்போன் இருப்ப உலகோர்க்கு அளித்தலும் நாடு கொழுப்ப பீடிகை முறைமையதாக நீங்கி ஏமாந்த முதல்வனை நீயோ என்பார் இன்மையின் வருவோன் முன் வந்தோர் வணங்கி மடிந்தது என்றலும் புகுவது என் கருத்தென ஏறி இழிந்தனன் வங்கம் போதலும் துயர் எய்தி இன்மையின் பொறே என் என விடுவோன் புகுவாய் என்று பெயர்ப்புழி சென்றேன் கேட்ப உரைத்தனன் உடம்பிட்டு வேந்தன் ஆவயிற்றுதித்தனன் என்றியைத்திடுக.

பாத்திர மரபு கூறிய காதை முற்றிற்று.
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 09:19:23 AM
15. பாத்திரங் கொண்டு பிச்சை புக்க காதை

(பதினைந்தாவது மணிமேகலை பாத்திரங் கொண்டு பிச்சைக்கும் பெருந்தெரு போய பாட்டு)

அஃதாவது அறவணர்பால் ஆபுத்திரன் வரலாறும் அவன் சிந்தாதேவி அருளிய அமுதசுரபியைப் பெற்று ஆருயிர் ஓம்பியதும் அமுதசுரபியின் மாண்பும் பிறவும் கேட்டறிந்த பின்னர் அமுதசுரபியை அங்கை ஏந்தி அதன்பால் ஆருயிர் மருந்து ஒழிவின்றிச் சுரத்தற் பொருட்டு முதன் முதலாக, பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம் பிச்சை யேற்றல் பெருந்தகவுடைத்து என்னும் கொள்கையுடையவளாய்ப் பிக்குணிப் கோலத்தோடு பெருந்தெருவிலே பிச்சை ஏற்றற்குச் சென்ற செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு.

இதன்கண்-ஆபுத்திரனை நாவான் நக்கிப் பாலூட்டி ஏழு நாள்காறும் புறம் போகாமனின்று புரந்த பசு அந் நல்வினைப் பயனாலே சாவக நாட்டிலே மண்முகன் என்னும் மாமுனிவன்பால் எய்திய பொற் கோடும் பொற் குளம்பும் உடைய தாய்க் கண்டோ ரெல்லாம் கைதொழு தேத்தும்படி ஈனா முன்னமே இன்னுயிர்க் கெல்லாம் தான் முலை சுரந்தூட்டி அருளறம் பேணா நின்ற செய்தியும்; அம் மாமுனிவன் அப் பசுவின் வயிற்றிலே பொன் முட்டையிலே மழை வளம் சுரப்பவும் மன்னுயிர் ஓம்பவும் உயிர் காவலன் ஒருவன் வந்து பிறப்பான் என்று தன் இருத்தியால் அறிந்து கூறியதும் ஆகிய இச் செய்திகளையும் அறவணர் மீண்டும் மணிமேகலைக்குக் கூறி, அப் பசுவின் வயிற்றில் புண்ணிய மிகுதியாலே ஆபுத்திரன் பொன் முட்டையினூடே மக்கள் உருவிலே கருவாகி வளர்ந்து பிறத்தலும் ஆபுத்திரன் மீண்டும் பிறந்த அப்பொழுது உலகின்கண் புத்தபிரான் பிறக்கும்போதுண்டாகும் நன்னிமித்தமெல்லாம் நிகழ்ந்த செய்தியும் உலகத் துள்ளோர் வியப்புறுதலும் துறவோர் கந்திற்பாவையின்பாற் சென்று அந் நன்னிமித்தங்கட்குக் காரணம் வினாதலும் அஃது அறவணர்பாற் கேட்டறிமின் என்றதும் அவரெல்லாம் தம்பால் வந்து கேட்ட செய்தியும் கூறி மணிமேகலையை அறஞ்செய்யப் பணித்தலும் அவள் பிச்சை ஏற்கப் பெருந்தெரு அடைந்ததும், காயசண்டிகை ஆதிரை மனையகத்திலே ஏற்க வேண்டும் எனலும் பிறவும் கூறப்படும்.

இன்னும் கேளாய் இளங்கொடி மாதே!
அந் நாள் அவனை ஓம்பிய நல் ஆத்
தண்ணென் சாவகத் தவள மால் வரை
மண்முகன் என்னும் மா முனி இடவயின்
பொன்னின் கோட்டது பொன் குளம்பு உடையது
தன் நலம் பிறர் தொழத் தான் சென்று எய்தி
ஈனாமுன்னம் இன் உயிர்க்கு எல்லாம்
தான் முலை சுரந்து தன் பால் ஊட்டலும்
மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த
ஆன்ற முனிவன் அதன் வயிற்று அகத்து  15-010

மழை வளம் சுரப்பவும் மன் உயிர் ஓம்பவும்
உயிர் காவலன் வந்து ஒருவன் தோன்றும்
குடர்த் தொடர் மாலை பூண்பான் அல்லன்
அடர்ப் பொன் முட்டை அகவையினான் என
பிணி நோய் இன்றியும் பிறந்து அறம் செய்ய
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன்
தற்காத்து அளித்த தகை ஆ அதனை
ஒல்கா உள்ளத்து ஒழியான் ஆதலின்
ஆங்கு அவ் ஆ வயிற்று அமரர் கணம் உவப்பத்
தீம் கனி நாவல் ஓங்கும் இத் தீவினுக்கு  15-020

ஒரு தான் ஆகி உலகு தொழத் தோன்றினன்
பெரியோன் பிறந்த பெற்றியைக் கேள் நீ
இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து
ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்ற பின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலைவனொடு பொருந்திய போழ்தத்து
மண்அகம் எல்லாம் மாரி இன்றியும்
புண்ணிய நல் நீர் போதொடு சொரிந்தது
போதி மாதவன் பூமியில் தோன்றும்
காலம் அன்றியும் கண்டன சிறப்பு என  15-030

சக்கரவாளக் கோட்டம் வாழும்
மிக்க மாதவர் விரும்பினர் வியந்து
கந்து உடை நெடு நிலை கடவுள் எழுதிய
அந்தில் பாவை அருளும் ஆயிடின்
அறிகுவம் என்றே செறி இருள் சேறலும்
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன்
தணியா உயிர் உய சாவகத்து உதித்தனன்
ஆங்கு அவன் தன் திறம் அறவணன் அறியும் என்று
ஈங்கு என் நாவை வருத்தியது இது கேள்
மண் ஆள் வேந்தன் மண்முகன் என்னும்  15-040

புண்ணிய முதல்வன் திருந்து அடி வணங்கி
மக்களை இல்லேன் மாதவன் அருளால்
பெற்றேன் புதல்வனை என்று அவன் வளர்ப்ப
அரைசு ஆள் செல்வம் அவன்பால் உண்மையின்
நிரை தார் வேந்தன் ஆயினன் அவன் தான்
துறக்க வேந்தன் துய்ப்பிலன்கொல்லோ?
அறக் கோல் வேந்தன் அருளிலன்கொல்லோ
சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும்
நலத்தகை இன்றி நல் உயிர்க்கு எல்லாம்
அலத்தல்காலை ஆகியது ஆய் இழை!  15-050

 வெண் திரை தந்த அமுதை வானோர்
உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்தாங்கு
வறன் ஓடு உலகின் வான் துயர் கெடுக்கும்
அறன் ஓடு ஒழித்தல் ஆய் இழை! தகாது என
மாதவன் உரைத்தலும் மணிமேகலை தான்
தாயர் தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி
கைக்கொண்டு எடுத்த கடவுள் கடிஞையொடு
பிக்குணிக் கோலத்துப் பெருந் தெரு அடைதலும்
ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர்க் குறுமாக்களும்
மெலித்து உகு நெஞ்சின் விடரும் தூர்த்தரும்  15-060

கொடிக் கோசம்பிக் கோமகன் ஆகிய
வடித் தேர்த் தானை வத்தவன் தன்னை
வஞ்சம் செய்துழி வான் தளை விடீஇய
உஞ்சையில் தோன்றிய யூகி அந்தணன்
உருவுக்கு ஒவ்வா உறு நோய் கண்டு
பரிவுறு மாக்களின் தாம் பரிவு எய்தி
உதயகுமரன் உளம் கொண்டு ஒளித்த
மதுமலர்க் குழலாள் வந்து தோன்றி
பிச்சைப் பாத்திரம் கையின் ஏந்தியது
திப்பியம் என்றே சிந்தை நோய் கூர  15-070

மண மனை மறுகில் மாதவி ஈன்ற
அணி மலர்ப் பூங் கொம்பு அகம் மலி உவகையின்
பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம்
பிச்சை ஏற்றல் பெருந் தகவு உடைத்து எனக்
குளன் அணி தாமரைக் கொழு மலர் நாப்பண்
ஒரு தனிஓங்கிய திருமலர் போன்று
வான் தருகற்பின் மனை உறை மகளிரின்
தான் தனி ஓங்கிய தகைமையள் அன்றோ
ஆதிரை நல்லாள்? அவள் மனை இம் மனை
நீ புகல்வேண்டும் நேர் இழை! என்றனள்  15-080

 வட திசை விஞ்சை மா நகர்த் தோன்றித்
தென் திசைப் பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை
மாதவன் தன்னால் வல் வினை உருப்ப
சாவம் பட்டு தனித் துயர் உறூஉம்
வீவு இல் வெம் பசி வேட்கையொடு திரிதரும்
காயசண்டிகை எனும் காரிகை தான் என்  15-086

உரை

அறவண அடிகள் மணிமேகலைக்கு ஆபுத்திரனைப் புரந்தருளிய ஆன் அந் நல்வினைப்பயனாலே சாவகத்தீவிற்றோன்றினமை கூறுதல்

1-8: இன்னும்..........ஊட்டலும்

(இதன் பொருள்) இளங் கொடி மாதே இன்னும் கேளாய்- இளைய பூங்கொடி போலும் மெல்லியல்புடைய மணிமேகலையே அருளறத்தின் மாண்பினை யுணர்த்தும் செய்திகள் இன்னும் சிலவுள அவற்றையும் கூறுவேம் கேட்பாயாக! அந் நாள் அவனை ஓம்பிய நல் ஆ பண்டு சாலி என்னும் வடமொழியாட்டி ஈன்ற குழவிக் கிரங்களாகிக் கோவலர் சேரி மருங்கிலே ஒரு தோட்டத்திலே போகட்டுப் போன குழவியாகிய அவ்வா புத்திரனைப் பால் சுரந்தூட்டி ஏழு நாள் காறும் புறம் போகாது நின்று பாதுகாத்த அறந்தரு நெஞ்சத்து அந்த நல்ல ஆவானது அவ்வறங் காரணமாக மாறிப் பிறந்த பிறப்பிலே; தண் என் சாவகத்துத் தவளமால் வரை- எப்பொழுதும் தண்ணென்று குளிர்ந்திருக்கின்ற சாவக நாட்டின் கண்ணதாகிய தவள மால் வரை என்னும் மலையிடத்தே தவஞ் செய்திருந்த; மண்முகன் என்னும் மாமுனி இடவயின் தான் சென்று எய்தி- மண்முகன் என்னும் பெயரையுடைய சிறந்த முனிவருடைய தவப்பள்ளியின்; பொன்னின் கோட்டது பொன் குளம்பது தன் நலம் பிறர் தொழ ஆவயிற்றிற் புகுந்து கருவாகி- பொன்னாலியன்ற கோடுகளையும் பொன்னாலியன்ற குளம்புகளையும் உடையதாகத் தனது அழகினைக் கண்ட துணையானே இது தெய்வத்தன்மையுடைய தென்று யாவரும் கை குவித்துத் தொழத்தகுந்ததாக ஆவாகவே பிறப்பெய்தி வளர்ந்து; ஈனா முன்னம்-தான்  கன்றீன்பதற்கு முன்னரே; தான் முலை சுரந்து தன்பால் ஊட்டலும்-தன் அறந்தரு நெஞ்சம் காரணமாகத் தானே தனது முலை சுரக்கப் பெற்றுப் பிலிற்றாநிற்ப தன் தீம்பாலைப் பிறவுயிர்கட்கு ஊட்டா நிற்ப என்க.

(விளக்கம்) யாதானும் ஓர் அறத்தின்கண்  ஆற்றுப் படுத்துபவர் அவ்வறத்தினைப் பல்லாற்றானும் அறிவுறுத்தியவழிக் கேட்போர்க்கு அதன்கண் ஊக்கம் மிகுத லியல்பாதல் பற்றித் தேவர்க்கும் மக்கட்கும் ஒத்த அறங்கூறிய அறவண அடிகளார் மீண்டும் அறப்பயனை அறிவுறுத்துபவர் இத்தகைய நல்லறஞ் செய்த நம்பியாகிய ஆபுத்திரன் மீண்டும் தனது அறந்தரு நெஞ்சத்திற்கேற்பவே நிற்பிறப்பெய்தி மீண்டும் அவ்வற நெறியே பற்றி ஒழுகும் செய்தியைக் கூறத்தொடங்கு பவர் தொடக்கத்தே முற்பிறப்பிலே அவனைப் பாலூட்டிப் பாதுகாத்த ஆவானது மீண்டும் கண்டோர் கைதொழத் தகுந்த வியத்தகு ஆவாகவே தோன்றி ஈனாமுன்னரே பால் சுரந்தூட்டிய செய்தியையும் ஆருயிர்கள் அன்புளஞ் சிறந்தவழி மாறிப் பிறக்கும் பிறப்பினும் அவ்வன்புத் தொடர்பாலே அணுக்கராகவே பிறத்தலுமாகிய இச் செய்திகளை அவள் கேட்டல் அவட்கு ஆக்கமாம் என்னும் கருத்தாலே இன்னும் கேளாய் என்று தொடங்குகின்றனர். இன்னும் கேளாய்! என்றது இவற்றைக் கேட்டல் உனக்கு இன்றியமையாதாம் எனபதுபட நின்றது.

அந்நாள் என்றது ஆபுத்திரன் சாலிவயிற்றிற் பிறந்தபோது அவள் அக்குழவியைத் தோன்றாத்துடவையிலிட்டுச் சென்ற நாளைச் சுட்டிகின்றது

தவளமால் வரை என்றது, தவளமலை என்னும் பெயருடைய மலை என்றவாறாம். இனி, பனிபடர்ந்து வெண்மையாக விளங்குமொரு பெரிய மலை என்பது பொருளாகக் கோடலுமாம். மாமுனி இவ் வயின் சென்றெய்த என்றாரேனும் அம்முனிவனுடைய  நல்லாவின் வயிற்றிற்பிறந்து என்பது கருத்தாகக் கொள்க. என்னை? பொன்னின் கோட்டது பொற் குளம்புடையதாய்ப் பிறர் தொழத்தோன்றி ஈனா முன்ன முலை சுரந்தூட்டலும் எனப் பாட்டிடை வைத்த குறிப்பாலே பசு வயிற்றுப் பிறந்து வளர்ந்து ஈனா முன்னமே பால் சுரந்தூட்டியது என்பது பெற்றாமன்றே

தன் நலம்- தனது அழகு

மண்முக முனிவன் தனது அவதிஞானத்தால் ஆபுத்திரன் அப் பசுவின் வயிற்றில் மக்கள் வடிவுடன் பிறப்பான் என்று முன்னரே அறிந்து கூறுதல்.

9-14: மூன்று...........வயினானென

(இதன் பொருள்) மூன்று காலமும் தோன்ற நன்குணர்ந்த ஆன்ற முனிவன்-இத்தகு பசுவிற்குரியவனும், மூன்று காலத்து நிகழ்ச்சிகளும் தன்னுள்ளே தோன்றும் வண்ணம் மெய்ப் பொருளையுணர்ந்தவனும் ஆன்றவிந்து அடங்கியவனுமாகிய அம் மண்முக முனிவன் அந்த அவதி ஞானத்தாலே உணர்ந்து அதன் வயிற்று அகத்து-அப் பசுவினுடைய திருவயிற்றிலே கருவாகி; மழைவளம் சுரப்பவும் மன்னுயிர் ஓம்பவும் உயிர் காவலன் ஒருவன் வந்து தோன்றும்-இச் சாவக நன்னாட்டிலே மழை தன்னாற் பிறக்கும் வளங்களைச் சுரந்து வழங்குமாறும் ஈண்டு நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாத்தற்கும் ஆருயிர்க் காவலன் ஒருவன் வந்து பிறந்தருளுவன்; குடர்த்தொடர் மாலை பூண்பான் அல்லன் பொன் அடர் முட்டை அகவயினான் என- அவ்வாருயிர்க் காவலன் இப் பசுவின் வயிற்றிலே மகனாகப் பிறக்குங் காலத்தே கன்று பிறத்தல் போலாதல் மகன் பிறத்தல் போலாதல் குடரின் தசைத் தொடராலியன்ற மாலை பூண்டு பிறவான் பொன் தகட்டாலே இயன்றதொரு முட்டையின் அகத்திருப்பவனாகப் பிறந்தருளுவன் என்று முற்படவே பிறர்க்குக் கூறிபடியே என்க.

(விளக்கம்) சாவக நாடு முன்னரே மழை வளங் கரத்தலின் மன்னுயிர் மடிந்து வற்கடமுற்றுக் கிடத்தலாலே இந் நாட்டில் இற்றைக் கிருக்கும் இன்னலெலாம் தீர இப் பசுவின் வயிற்றிலே ஓருயிர் காவலன் வந்து தோன்றுவான் எனவும், இப் பசு ஏனைய பசுக்கள் போலாது பொற்கொம்பும் பொற் குளம்பும் உடையதாகப் பிறந்தாற் போன்று இதன் வயிற்றிற் பிறக்குங் காவலனும் குடர்மாலை பூண்டு பிறவாமல் பொன் முட்டையினூடு உருவாகி வந்து பிறப்பான் எனவும் அம் முற்றுணர்வுடைய முனிவன் முற்படவே கூறினர் என்பது கருத்து. அடர் தகடு.

அகவயினான்- உள்ளிடத்துள்ளான்

ஆபுத்திரன் சாவக நாட்டில் ஆவயிற்றுப் பிறத்தல்

15-21: பிணி........கேணீ

(இதன் பொருள்) பிணி நோய் இன்றியும் பிறந்து அறஞ் செய்ய மணிபல்லவத்திடை மன்னுயிர் நீதோன்- தன்வயமாகப் பிணித்துக் கொண்டு துன்புறுத்துகின்ற நோய் யாதொன்றும் தன்னுடம்பில் இல்லாமல் இருக்கவேயும், ஈதலியையாமை காரணமாக எய்திய மாபெருந்துயர் பெறாமல் உண்ணா நோன்பின் உயிர்பதிப்பெயர்த்து மாறிப் பிறந்தேனும் அறஞ் செய்யக் கருதி மணிபல்லவத் தீவினிடத்தே உடம்பிலே நிலைபெற்றிருந்த தன்னுயிரைத் தறுத்தவனாகிய அவ்வாபுத்திரன்; தன் காத்து அளித்த தகை ஆ அதனை ஒல்கா உள்ளத்து ஒழியானாதலின் கைவிடப்பட்ட குழவியாகிய தன்னை அறந்தரு நெஞ்சத்தோடு அருள் சுரந்தூட்டிப் பாதுகாத்த பெருந்தகைமையுடைய அந்த ஆவின்பால் நன்றியுடைமையால் நினைவு கூர்தலில் ஒரு பொழுதுந் தளர்ந்திலாத நெஞ்சமுடையனாயிருந்தமையாலே; ஆங்கு அவ்ஆவயிற்று -மண்முகமுனிவன் றவப்பள்ளியிலே மாறி ஆவாகவே பிறந்துள்ள அவ்வாவினது திருவயிற்றிலே; தீங்கனி நாவல் ஓங்கும் இத் தீவினுக்கு ஒருதான் ஆகி அமரர்கணம் உவப்ப உலகு தொழத் தோன்றினன்-இனிய கனிகளைடைய நாவன் மரம் ஓங்கிய இந்தப் பெருஞ்சிறப்புடைய தீவகத்திலே வள்ளன்மைக்குத் தான் ஒருவனே தலை சிறந்தவனாகித் தேவர் கூட்டங்கள் பெரிதும் மன மகிழவும் இந்நிலவுலகத்து மாந்தர் எல்லாம் கைகூப்பித் தொழவும் சாலி வயிற்றில் மகனாகப் பிறந்தனன்; பிறந்த பெற்றியை நீ கேள்-அவ் வள்ளற் பெரியோன் சாவக நாட்டில் ஆவயிற்றிற் பிறந்த தன்மையும் கூறுவல் நீ கேட்பாயாக!; என்றார் என்க.

(விளக்கம்) ஏனைய மாந்தரெல்லாம் பிணிப்பட்டு வருந்தி இறப்பதே இயல்பு- மற்று இவன் அவ்வாறிறந்தானல்லன். ஈதற்கிடமின்மையாலே அந்நிலை சாதலினுங்காட்டில் இன்னா நிலையாக இருந்தமையாலே அது பொறாது வடக்கிருந்து தானே உயிரை நீத்தனன். அங்ஙனம் இறந்துழி மாறிப் பிறக்கும் பிறப்பிலேனும் ஈத்துவக்கும் சூழ்நிலை எய்தும் என்னும் கருத்தோடிறந்தானாதலின், அத்தகையதொரு சூழ்நிலையையுடைய நாட்டிலே மகனாகப் பிறந்தான். பண்டு தனக்கு வளர்ப்புத் தாயாகிய ஆவின்பால் பேரன்புடையனாதலின் அதன் வயிற்றிலே அதனை நற்றாயாகவே கொண்டு பிறந்தான் என்றறிவுறுத்த படியாம்.

இதனால் உயிர்கள் மாறிப் பிறக்கும் பொழுது அவ்வவை செய்த வினைகட் கேற்பவும் குறிக்கோளுக்கு ஏற்ற சூழ் நிலையிலேயும் பற்றுடையோர் தொடர்புடையனவாகவே பிறக்கும் என்பதும் பௌத்தர் மெய்க்காட்சி என்பதறியலாம். இக் கொள்கை மறுபிறப்புண்டென்னும் கொள்கையுடைய பிற சமயவாதிகட்கும் ஒத்ததொரு கொள்கையே ஆதலும் அறியற்பாற்று.

ஒற்கா- தளராத ஒருதானாகி-தானே தலைசிறந்தவனாகி நல்லோர் பிறப்பினை அமரரும் மாந்தரும் ஒருசேர உவப்பர் என்பது தோன்ற அமரர் கணம் உவப்ப உலகு தொழத் தோன்றினன் என்றார். பண்டு சாலி வயிற்றிற் றோன்றினன் அப் பெரியோன் இப் பிறப்பில் சாவக நாட்டில் பிறந்த பெற்றியும் கேள் நீ எனச் சுட்டுச் சொல் வருவித்தோதுக.

பெரியோன்- ஆபுத்திரன்; பெற்றி- தன்மை.

சாவகத்திலே ஆபுத்திரன் ஆவயிற் றுதித்தபொழுது உலகில் தோன்றிய அற்புத நிகழ்ச்சிகள்

23-30: இருதிள...............சிறப்பென

(இதன் பொருள்) இருதிள வேனில் எரிகதிர் இடபத்து ஒருபதின் மேலும் ஒரு மூன்று சென்ற பின்-பருவங்களுள் வைத்துக் காண்டற்கினிய இளவேனிற் பருவத்திலே ஞாயிற்று மண்டிலம் இடபவிராசியிலிருக்கும் வைகாசித் திங்களிலே நாண்மீன்களுள் வைத்துக்கார்த்திகை முதலாகப் பதின்மூன்று மீன்கள் கழிந்தபின்; மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்- நாண் மீன்களுள் வைத்து நடுவு நிற்றலையுடைய விசாக நன்னாளிலே; போதித் தலைவனொடு பொருந்திய போழ்தத்து- புத்தபிரான் பிறந்த நாள் என்னும் புகழோடு பொருந்திய சிறப்புடைய பொழுதிலே; மண்ணகம் எல்லாம் மாரியின்றியும் புண்ணிய நல்நீர் போதொடு சொரிந்தது- நிலவுலகத்திலே எவ்விடத்தும் மழையில்லாதிருக்கவேயும் ஆகாய கங்கையாகிய புண்ணியமுடைய நல்ல நீரானது கற்பக மலர்களோடு விரவி மழை போலப் பொழியா நின்றது; போதி மாதவன் பூமியில் தோன்றும் காலம் அன்றியும் சிறப்புக் கண்டனவென- அரசமரத்தின் நீழலிற் பொருந்தியிருந்து மெய்க்காட்சி எய்திச் சிறந்த தவத்தையுடைய புத்த பெருமான் பிறந்த காலத்தே இங்ஙனம் அற்புதம் தோன்றுவதல்லது  இக்காலத்தும் அவ்வற்புதக் காட்சிகள் நம்மாற் காணப்பட்டன; ஆகவே இதற்குமொரு காரணமுளதாதல் வேண்டுமென்று கருதியவராய் என்க.

(விளக்கம்) இருதிள..............பொருந்தி என்னு மளவும் இந்த மூன்றடிகளும் 11 ஆங் காதையினும் 40-42 ஆம் அடிகளில் முன்னும் இங்ஙனமே வந்தமை நினைக. இந் நூலாசிரியர் பிறாண்டும் முன்பு கூறிய பொருள்களே மீளவுங் கூற நேர்துழி அச் சொற்றொடர்களை மீண்டும் நிலை பிறழாது ஓதும் வழக்கமுடையவராதலைப் பல்வேறிடங்களில் காணலாம். இவ்வடிகட்கு விளக்கம் 11 ஆம் காதா 40-42 ஆம் அடிகட்குக் கூறியவற்றையே கொள்க.

மாரியின்றியும் புண்ணிய நன்னீர் போதொடு மாரி போன்று சொரிந்தது என்றவாறு. புண்ணிய நன்னீர் என்றது ஆகாய கங்கையை போது-கற்பகமலர். ஆகாய கங்கை கற்பகப் போதொடு சொரிந்த அற்புதம் புத்தர்பிரான் பிறந்த பொழுது நிகழ்ந்ததொரு அற்புதம் என்பர். புத்த பெருமான் பிறப்பு நிகழாத இப்பொழுதும் அந்த அற்புதம் காணப்படுதலாலே இதற்குக் காரணமான நிகழ்ச்சி ஒன்று ஏதேனும் நிலவுலகல் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்று ஊகித்து மாதவர் அது பற்றி ஆராயத்தலைப்பட்டனர் என்பது கருத்து.

போதி மாதவன்-புத்தன்.போதி மாதவன் பூமியிற் பன்முறை பிறத்தண்டாகலின் அவன் பிறக்கும்பொழுதெல்லாம் இத்தகு அற்புதம் நிகழும் என்பது பௌத்தர் துணிபு.

சிறப்புக் கண்டன என-என மாறிச் சிறப்புக்கள் காணப்பட்டன என (32) வியந்து என வியையும்.

அறவணர், அற்புத நிகழ்ச்சி பற்றி மாதவர் கந்திற்பாவையை வினவினர் என்றும் அத் தெய்வம் அவரை எல்லாம் என்பாலேவியது என்றும் மணிமேகலைக்கு அறிவித்தல்

31-39: சக்கர.................வருத்தியது

(இதன் பொருள்) சக்கரவாளக் கோட்டம் வாழும் மிக்க மாதவர் வியந்து விரும்பி- இந்நகரத்துச் சக்கரவாளக் கோட்டத்தே யுறை கின்ற பெரிய தவமுடைய துறவோர் எல்லாம் பெரிதும் வியப்பெய்தி அதற்கியன்ற காரணத்தை அறிதற்கு விரும்பி; நெடுநிலைக்கந்து உடை பாவைக் கடவுள் எழுதிய அந்தில் பாவை அருளும் ஆயிடின் அறிகுவம் என்றே-நெடிது நிற்கும் நிலையினையுடைய தூணிலே கடவுள் படிமம் எழுதப்பட்ட அவ்விடத்திலே சென்று அப் பாவை அறிவிக்குமானால் அறிவேம் என்று துணிந்து; செறி இருள் சேறலும்- செறிந்த இருளையுடைய நள்ளிரவிலே அங்குச் சென்றிருப்ப; மணிபல்லவத்திடை மன்னுயிர் நீத்தோன் சாவகத்து தணியா உயிர் உய உதித்தனன்-அவர் கருத்தறிந்த அக் கந்திற்பாவை தானும் அறவோரே கேண்மின் மணிபல்லவத் தீவின்கண் தன்னுடம்பிலே நிலை பெற்ற தன்னுயிரை ஈதலியையாமையில் நீத்தவனாகிய ஆபுத்திரன் சாவக நாட்டிலே பசிப்பிணி தணியப்பெறாது பெரிதும் வருந்தும் உயிர்கள் உய்யும்பொருட்டுப் பிறப்பெய்தினன் அவ்வறவோன் பிறப்பினாலேதான் இவ்வற்புதம் நிகழ்வதாயிற்று; அவன் திறம் அறவணன் அறியும் என்று- மேலும் அவ்வாபுத்திரன் செய்தியெல்லாம் அறவணவடிகள் கந்திற் பாவை; என் நாவை வருத்தியது- என்னுடைய நாவையும் வருந்துமாறு செய்து விட்டது காண்; என்றார் என்க.

(விளக்கம்) மாதவர், ஈண்டுப் பௌத்தத் துறவோர். கந்திற்பாவையினது பக்கலிலே சென்றிருப்போர்க்கு அது தன் தெய்வக் கிளவியின் திப்பிய முரைக்கும் ஆகலின் சென்று வினவிலும் என்னாது சேறலும் என்றொழிந்தார். சேறலும்- செல்லலும் நீத்தோன்: பெயர்; ஆபுத்திரன். தணியா- பசித்துன்பம் தணியாத: பெயரெச்சத் தீறு கெட்டது. உய் உய்ய. அறவணன் அறியும் என்று அக் கந்திற் பாவை கூறிவிட்டமையாலே அவரெல்லாம் என்பால் வந்து வினவ அவர்க்கெல்லாம் யான் ஆபுத்திரன் திறம் பல முறை கூறல் வேண்டிற்று என்பது தோன்றப் பாவை என்னாவையும் வருத்தியது என்றார் இறந்தது தழீஇய எச்சவும்மை தொக்கது செய்யுள் விகாரம்.

ஆபுத்திரன் அரசனாயின்மை கூறல்

39-45: இதுகேள்.......................அவன்றான்

(இதன் பொருள்) இதுகேள், மண் ஆள் வேந்தன் மண்முகன் என்னும் புண்ணிய முதல்வன் திருந்து அடி வணங்கி மணிமேகலாய்! ஆவயிற்றுப் பிறந்த அவ்வாபுத்திரன் வரலாற்றில் எஞ்சிய இதனையும் கேட்பாயாக! சாவகம் என்னும் அந்த நாட்டை ஆளுகின்ற அரசனாகிய பூமிசந்திரன் என்பான் இவ்வற்புத நிகழ்ச்சியை அறிந்து அம்மகவினை வளர்க்கின்ற மண்முகன் என்னும் அறத்தலைவன் தவப்பள்ளியை எய்தி அவ்வறவோனுடைய திருந்திய அடிகளில் வீழ்ந்து வணங்கி; மக்களை இல்லேன்-அடிகேள்! அடியேன் மக்கட் பேறில்லேன்! என்று தன் குறை கூறிக் குறிப்பாலே இரந்து நிற்ப அவ்வறவோன் அம் மகவினை அவ்வரசனுக்கு வழங்கினனாக; மாதவன் அருளால் புதல்வனைப் பெற்றேன் என்று அவன் வளர்ப்ப- மகவைப் பெற்ற அம் மன்னவன்றானும் இந்த மாதவருடைய பேரருளாலே பெரிதும் வருந்தாமலே அருமந்த மகனைப் பெறுவேனாயினேன் என்று மகிழ்ந்து அம் மகவினைக் கொடுபோய் வளர்த்தமையாலே; அவன்பால் அரைசு ஆள் செல்வம் இருந்தமையாலே; அவன்றான்-அவனால் வளர்க்கப்பட்ட அவ்வாபுத்திரன்றானும் உரிய பருவத்திலே; நிரை தார் வேந்தன் ஆயினன்- நிரல்பட்ட மலர்மாலை யணிந்து செங்கோல் ஓச்சும் அரசனும் ஆயினன் காண்! என்றார் என்க.

(விளக்கம்) இதுவும் கேள் எனல் வேண்டிய எச்ச உண்மை தொக்கது. இது என்றது அவன் வரலாற்றில் எஞ்சிய விதுவும் என்பதுபட நின்றது.

மண்- ஈண்டுச் சாவகநாடு. மக்களியில்லேன் என்று பாட்டிடை வைத்த குறிப்பினாலே அம் மாதவன் அம் மகவினை வழங்கினன் என்பது பெற்றாம். என்று மகிழ்ந்து வளர்ப்ப என்க. அரைசாள் செல்வம் படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்னும் ஆறுவகை உறுப்புகள். அவன்றான் வேந்தன் ஆயினன் என மாறுக. அவன்:ஆபுத்திரன்

அறவணவடிகள்  மணிமேகலை இனிச் செய்யக்கடவ அறம் இஃதென அறிவுறுத்துதல்

46- 55: துறக்க...........உரைத்தலும்

(இதன் பொருள்) துறக்க வேந்தன் துய்ப்பு இலன் கொல்லோ அறக்கோல் வேந்தன் அருள் இலன் கொல்-வானவர் கோமான் ஈண்டுச் செய்யும் வேள்வியின் வாயிலாய்த் தான் நுகரும் அவி உணவு நுகர்தல் இலனாயினனோ? அன்றி அறம் பிறழாத செங்கோல் வேந்தனாகிய சோழமன்னன் உயிர்களின்பாற் றான் செலுத்தும் அருளைச் செலுத்துதல் இலன் ஆயின்னோ? அன்றி பிறவாற்றாலோ யாம் காரணம் அறிகின்றிலேம் ஆயினும்; காவிரி நீர் சுரந்து புரந்து பரக்கவும்-காவிரியாறானது தன்னியல்பு பிறழாவண்ணம் வழக்கம் போலவே நீர் சுரந்து உயிரினங்களைப் பாதுகாத்துப் பாய்ச்சும் நீர் நாடெங்கணும் பரவாநிற்கவே; நலத்தகை இன்றி நல்உயிர்க்கு எல்லாம் அலத்தற் காலை ஆகியது- நலமுறும் தகுதி இல்லாமல் இந் நாட்டிலே வாழும் நன்மையுடைய உயிர்கட்கெல்லாம் துன்புறுதற்குரிய வற்கடம் நிலவாநின்றது; ஆயிழை- மகளிரிக்கெல்லாம் அணிகலனாகத் திகழுகின்ற மணிமேகலாய்! சூழ்நிலை இவ்வாறிருத்தலாலே; வெள் திரை தந்த அமுதை வானோர் உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்தாங்கு- வெள்ளிய அலைகளையுடைய திருப்பாற் கடல் வழங்கிய அமிழ்தத்தில் வானோர் தாமுண்டு எஞ்சி யிருந்ததனைப் பிறவுயிர் உண்ணுதல் தவிர்த்து வாளாது வைத்தாற் போன்று ; வறன் ஓடு உலகின் வான் துயர் கெடுக்கும் அறன் ஓடு ஒழித்தல் தகாது என மாதவன் உரைத்தலும் வற்கடம் பாவியிருக்கின்ற இந்நாட்டிலே வாழும் உயிர்களின் மாபெருந்துன்பமாகிய பசிப்பிணியைத் தீர்த்துய்விக்கும் தெய்வத் தன்மையுடைய பேரறத்தின் திருவுருவமாகத் திகழுகின்ற அமுதசுரபியாகிய இத் திருவோட்டின் செயல் நிகழாவண்ணம் அதனை வாளாது வைத்திருத்தல் நம்மனோர்க்குத் தகாது காண் என்று சிறந்த தனவொழுக்கமுடைய அறவணவடிகள் அறிவுறுத்தா நிற்றலும் என்க.

(விளக்கம்) சோழ நாட்டிலே வழக்கம் போலவே காவிரி நீர் முட்டின்றிப் பெருகிவந்து யாண்டும் பரவிப்பாயவும் இந் நாட்டிலே இப்பொழுது வற்கடம் நிலவுகின்றது; இதற்குரிய காரணம் யாமறிகிலேம் என இம்மாதவர் இயம்புகின்றனர். ஈண்டுக் கதை நிகழ்ச்சிக்கு வற்கடம் இன்றி அமையாதாக; அவ் வற்கடத்திற்குச் செங்கோல் நிலைதிரிந்ததாகக் கூறுதல் வேண்டும். இப்புலவர் பெருமான் சோழனுக்கும் பழிபிறவாவண்ணம் இம்முனிவரைப் பேசவைத்திருக்கின்ற நுணுக்கம் நினைந்தின்புற்ற பாலதாம்.

இனி, மழையில்லாமல் நிலவுலகில் வற்கடம் நிகழ்தற்குரிய காரணங்களுள் இரண்டனை மட்டும் இவர் ஈண்டு எடுத்துக் கூறிய இவற்றுள் யாதொன்று யாம் அறிகின்றிலேம் என்னுமாற்றால் ஈண்டு அக் குறை இரண்டனையுமே யாமறிகின்றிலேம் ஆயினும் வற்கடம் மட்டும் நிகழ்தல் கண்கூடாகத் தெரியவருகின்றது என்கின்றனர்.

வற்கடம் நிகழ்தற்கு மழையின்மையே காரணம்; மழை பெய்கின்றது. யாற்றுநீர் யாண்டும் பரவவும் காண்கின்றோம். என்றதனால் மழை காலந்தவறி மிகுதியாகவும் காலத்திலே பெய்யாமலும் போவதால் இவ்வற்கடம் நிகழ்வது போலும் இங்ஙனம் ஆதற்கு, இந்திரன் தனக்குச் செய்ய வேண்டிய வேள்வியை இம் மன்னவன் காலத்திலே செய்யாது விடுகின்றான் என்று செய்யும் குறும்பு என்னலாம், என்று ஒருதலை துணிந்து, மற்று அரசன் அறக்கோல் வேந்தன் ஆதலால் அவன் அருளிலன் ஆவனோ ஆகான் எனக் கூறினார் போலவும் பொருள்படுதல் அறிக.

வேள்வியைப் பௌத்தர்கள் வெறுப்பவர் ஆதலின் தனக்கு அவி சொரியாமையாலே ஆயிரங் கண்ணோன் செய்த குறும்பே இவ் வற்கடத்திற்குக் காரணம் என இம்முனிவர் ஒருதலை துணிந்து கூறுகின்றனர் என்க.

இனி, இக்கருத்தை வலியுறுத்தற்குப் போலும் அத்துறக்க வேந்தன் உண்டொழி மிச்சிலைப் பிறவுயிருண்ணுதலை ஒழித்துப் பாதுகாத்து வைத்தான் எனவும் அவ்வாறு நீ பல்லுயிரோம்பும் அமுதசுரபியை ஒழித்தல் தகாது எனவும் இதனானும் இந்திரனுக்கு ஓரிழுக் குரைத்தமை உணர்க.

வறன் ஓடு உலகு- வற்கடம் பரவுகின்ற உலகம்: அறன் ஓடு- உண்டி கொடுத்து உயிர் கொடுக்கும் அறஞ் செய்தற் கருவியாகிய அமுதசுரபி. அலத்தற் காலையில் உண்டி கொடுத்துயிர் ஓம்புதலே இப்பொழுது நின் கடமையாகும் என்பதனை அறவணவடிகள் இதனால் வற்புறுத்தபடியாம்.

மணிமேகலைக்கு பிக்குணிக் கோலத்துப் பெருந்தெருவில்
பிச்சைப் பாத்திரம் ஏந்திச் செல்லுதல்

55-69: மணிமே..................பரிவெய்தி

(இதன் பொருள்) மணிமேகலைதான் தாயர் தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி-அதுகேட்ட மணிமேகலையும் பெரிதும் மகிழ்ந்து தாயாராகிய மாதவியோடும் சுதமதியோடும் அவ்வடிகளார் திருவடிகளிலே வீழ்ந்து அவரைப் பற்பல நன்றியும் புகழும் நவின்று வாழ்த்திய பின்னர்; கைக் கொண்டு எடுத்த கடவுள் கடிஞையொடு-தான் பண்டு செய்த நற்றவத்தாலே தன் கையிலே கொண்டு ஏந்திய அமுதசுரபியாகிய கடவுட்டன்மையுடைய  அத் திருவோட்டினோடு; பிக்குணிக் கோலத்துப் பெருந்தெரு அடைத்தலும்-தவக்கோலந் தாங்கியவளாய் அப் பூம்புகார் நகரத்துப் பெரிய தெருவிலே செல்லாநிற்றலும்; ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர்க்குறுமாக்களும் மெலித்து உகுநெஞ்சின் விடரும் தூர்த்தரும் கொடிக் கோசம்பிக் கோமகனாகிய வடித்தேர்த்தானை வத்தவன் தன்னை மணிமேகலையைப் பிக்குணிக் கோலத்திலே கண்டதும் பெரிதும் ஆரவாரஞ் செய்து ஒருங்கே குழுமிய அவ்வூர்ச் சிறுவர்களும் நெஞ்சம் நெகிழ்ந்துருகுகின்ற கயமாக்களும் பரத்தரும் கொடியுயர்த்திய கோசம்பி நகரத்தை ஆளும் கோமகனாகிய வடித்த தேர்ப்படையையுடைய வத்தவநாட்டு மன்னன் உதயணகுமரனை உஞ்சை நகரத்தரசன் பிரச்சோதனன்; வஞ்சஞ் செய்துழி- வஞ்சகச் செயலாலே சிறைக்கோட்டத்திலிட்ட பொழுது; வான்தளை விடீஇய- பெரிய தளையினின்றும் உதயணனை விடுவித்தற் பொருட்டு; உஞ்சையில் தோன்றிய யூகி அந்தணன் உருவுக்கு ஓவ்வா உறுநோய் கண்டு-உஞ்சை மாநகரத் தெருவிலே மாறுவேடம் புனைந்து வந்து தோன்றிய அமைச்சனாகிய யூகி என்னும் பார்ப்பனன் தான் மேற்கொண்டுள்ள உருவத்திற்குப் பொருந்தாதபடி பித்தேறினான் போலவும் பேயேறினான் போலவும் வாய்தந்தன பேசி வருந்தும் வருத்தத்தைக் கண்டு; பரிவுறு மாக்களின்-அவனைச் சூழ்ந்துகொண்டு அவன் நிலைக்கு வருந்தி நின்ற மாந்தர் போன்று; தாம் பரிவெய்தி-தாமும் மணிமேகலையின் உருவிற் கொவ்வாநிலைக்குப் பெரிதும் இரக்கம் எய்தி என்க.

(விளக்கம்) தாயர் என்றது, மாதவியையும் சுதமதியையும், கடவுட்கடிஞை- தெய்வத்தன்மையுடைய பிச்சைக்கலன். அஃதாவது, அமுதசுரபி. பிக்குணி- பௌத்தர்களுள் பெண்பால் துறவி. இங்ஙனம் கூறுவது அச் சமயத்தார் மரபு.

மெலித்து- மெலிந்து என்பதன் விகாரம். மணிமேகலையின் பண்டைய செல்வ நிலைமையையும் இற்றை நாள் அவள் பிச்சை புக்க நிலையையும் கருதி அவள் பொருட்டு நெஞ்சிளகி உருகினர் என்றவாறு. குறுமாக்கள்- சிறுவர்.

கோசம்பி- வத்தவநாட்டுத் தலைநகரம். வத்தவன்- வத்தநாட்டு மன்னனாகிய உதயணன். உதயணனைப் பிரச்சோதன மன்னன் யானைப் பொறியினாலே வஞ்சித்துச் சிறைப்பிடித்துச் சிறையிலிட்டனன்.

உதயணன் அமைச்சனாகிய யூகியந்தணன் மாறுவேடம் புனைந்து கொண்டு பிரச்சோதனனுடைய தலைநகரமாகிய உஞ்சை நகரத்தின் தெருவிலே பித்தன் போல நடித்துச் சென்றான். அப்பொழுது அந்நகர மாந்தர் அவனைச் சூழ்ந்து கொண்டு அவனுருவிற்கொவ்வாத நோய் உடையனாதற்கு இரங்கி நின்றார். அவர் போன்று ஈண்டும் நகரமாக்கள் மணிமேகலையின் உருவிற் கொவ்வாத நிலை கண்டு இரங்கினர் என உவமம் எடுத்தோதியபடியாம். யூகிக்கு உஞ்சைமாக்கள் பரிவுற்றமையை-உதயணகுமார காவியத்தில் உஞ்சைக் காண்டத்தில் 72 ஆம் செய்யுள் முதலாக, 83 ஆஞ் செய்யுள் ஈறாக வருகின்ற செய்யுள்களால் உணர்க.

இதுவுமது

67-70: உதய ................கூர

(இதன் பொருள்) உதயகுமரன் உளம் கொண்டு ஒளித்த மதுமலர்க்குழலாள் வந்து தோன்றி-சின்னாள் முன்னர் நங்கோமகனாகிய உதயகுமரனுடைய நெஞ்சத்தை முழுவதும் நவர்ந்துகொண்டு பிறர் யாரும் அறியாதபடி இந்நகரத்தினின்றும் மறைந்துபோன தேன்துளிக்கும் மலர்க் கூந்தலையுடைய இம் மணிமேலை மீண்டும் பிறர் யாம் காணாதபடியே இப்பெருந் தெருவினூடே வந்து நம்மனோர்க்குக் கண்கூடாகத் தோன்றி; பிச்சைப் பாத்திரம் கையின் ஏந்தியது- பிச்சை ஏற்றற்குரிய திருவோட்டைக் கையில் ஏந்தி நிற்குமிக் காட்சி; திப்பியம் என்றே சிந்தை நோய் கூர-ஒரு தெய்வத்தன்மை யுடைத்து என்று அவள் நிலைக்குப் பெரிதும் நெஞ்சழிந்து துன்புறா நிற்ப என்க.

(விளக்கம்) ஊர்க்குறுமாக்களும் விடரும் தூர்த்தரும் உதயகுமரன் மணிமேகலையைத் தேரில் ஏற்றி வருவல் என்று எட்டிகுமரனுக்குச் சூண்மொழிந்து போனவன் வறிதே மீண்டமையும் அற்றை நாளிலிருந்து மணிமேகலையை அந்நகரத்தே யாரும் அறியாதபடி மணிமேகலா தெய்வம் எடுத்துப் போன செய்தியும் அறியாமையாலே அவள் எங்கோ மாயமாய் மறைந்துவிட்டனள் என்று வியப்புற்றிருந்தாராக, மீண்டும் அவள் வான்வழியாக வந்திறங்கிமையாலே அவள் வருகையும் காணாராயிருந்தவர், பொள்ளென அவள் பிக்குணிக் கோலத்தோடு பிச்சைப்பாத்திரம் ஏந்திப் பெருந்தெருவில் வந்துற்றமை ஆகிய அவள் செயலெல்லாம் பெரிதும் வியக்கத்தக்கவா யிருத்தலின், உதயகுமரன் உளங் கொண்டொளித்தமையும் பின்னர் வந்து தோன்றினமையும் அவள் பிச்சைப்பாத்திரம் ஏந்தினமையும் ஆகிய அனைத்துமே திப்பியம் என்று வியந்தனர். மேலும் அவள் கோவலன் மகளாய் மாபெருஞ் செல்வத்தினூடே வளர்ந்தமை யாவரும் அறிகுவர் ஆதலினானும் அவளுடைய இளமைக்கும் அழகுக்கும் சிறிதும் பொருந்தாத வண்ணம் பிச்சைபுக்கமை கருதி அனைவருமே அவட்கிரங்கிச் சிந்தை நோய் கூர்ந்தனர் என்பது கருத்து

திப்பியம்-ஈண்டு வியப்பு என்னும் பொருண்மேனின்றது

மணிமேகலை அமுதசுரபியின்கண் முதன் முதலாகப் பத்தினிப் பெண்டிர் இடும் பிச்சை ஏற்றல் வேண்டும் எனலும் காயச்சண்டிகை ஆதிரைபால் ஏற்றிடுக எனலும்

71-80: மணமனை..................என்றனள்

(இதன் பொருள்) மணமனை மறுகின் மாதவி ஈன்ற அணி மலர்ப் பூங்கொடி- திருமணஞ் செய்துகொண்டு இல்லறம் பேணுவோர் இனிது வாழுகின்ற மங்கல மனைகளையுடைய அப்பெருந்தெருவிலே பிச்சைப்பாத்திரம் ஏந்திச் சென்றவளாகிய மாதவி பெற்ற அழகிய மலர்கணிரம்பிய பூங்கொடி போல் வாளாகிய மணிமேகலை தனக்கு அணுக்கமாக நிற்கின்ற மடந்தை ஒருத்தியை நோக்கி; அகமலி உவகையின் பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம் பிச்சை ஏற்றல் பெருந்தகவு உடைத்து என அன்புடையோய் இத் திருவோட்டில் முதன் முதலாகப் பிச்சை ஏற்குங்கால் விருந்தினரைக் கண்டபொழுதே உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியோடே கொணர்ந்து கற்புடை மகளிர் அன்போடு இடுகின்ற உணவை ஏற்பதே பெருந்தன்மை யுடையதாகும். என்று கூறாநிற்ப; குளன் அணி தாமரைக் கொழுமலர் நாப்பண் ஒரு தனி ஓங்கிய திருமலர் போன்று- அங்ஙனம் வினவிய மணிமேகலையின் குறிப்பறிந்து கூறும் அம் மடந்தை அன்னாய் கேள்! குளத்தினூடே யாண்டும் மலர்ந்து அதனை அழகு செய்கின்ற தாமரையினது கொழுவிய மலர்களின் நடுவே தான் தமியே அனைத்து மலரினுங்காட்டில் உயர்ந்து திகழாநிற்குமொரு அழகிய தாமரை மலரைப் போன்று; வான் தரும் கற்பின் மனையுறை மகளிரில்- மழை பெய்விக்கும் தெய்வத்தன்மை யுடைய கற்பென்னும் திட்பத்தோடு இம் மங்கல மனைகளிலே இருந்து இல்லறம் பேணும் மகளிருள் வைத்து; ஆதிரை நல்லாள் தான் தனியோங்கிய தகைமையள் அன்றோ-ஆதிரை என்னுய் பெயரையுடைய நங்கைதான் தனிச் சிறப்புடையளாய் உயர்ந்திருக்கின்ற பெருந்தகைமை உடையாள் என்பதை நீ யறியாயோ?அறிந்திருப்பாய் அல்லையோ? நேரிழை மகளிர்க்கெல்லாம் அணிகலனாகத் திகழுகின்ற தவச்செல்வியே கேள்; இம் மனை அவள் மனை நீ புகல் வேண்டும்-இதோ அணித்தாக இருக்கின்ற இம் மங்கல மனையே அவள் வாழும் மனையாகும் ஆகவே நீ முதன் முதலாக அம் மனை முன்றிலிலே பிச்சை புகுதல் வேண்டும்; என்றனள்-என்று அறிவித்தனள்; என்க.

(விளக்கம்) மணமனை என்றது திருமணஞ் செய்துகொண்டு மணமக்கள் இல்லறம் ஓம்பும் மனை என்றவாறு. அகமலி உவகையின் என்றது விருந்தினர் வரப்பெற்றோம் என்று உளம் நிறைந்த மகிழ்ச்சியோடு என்பதுபட நின்றது. ஈண்டு

முகத்தா னமர்ந்தினது நோக்கி அகத்தானாம்
இனசோ லினதே அறம்                  (93)

எனவரும் திருக்குறளையும் நினைக.

பண்புடன் இடூஉம் என்புழி பண்பு என்றது அன்பு என்க. என்னை?

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது               (45)

எனவரும் திருக்குறட் கருத்தினை நோக்குக.

பத்தினிப் பெண்டிர் இடும் பிச்சை ஏற்றல் பெருந்தகைமை என்று மணிமேகலை கூறியதன் குறிப்பு அத்தகைய பத்தினிப் பெண்டிர் உறையும் மனை யாது நீ அறிகுவையோ அறிதியாயின் கூறுதி என்பதே யாம். இக் குறிப்பறிந்து அம் மடந்தை கூறுகின்றாள் என்க.

இனி, அவள் கூறும் உவமையழகு நினைந்து நினைந்து மகிழற் பாலதாம். இங்கு இம் மனைகளுள் வாழும் மகளிர் எல்லாருமே பத்தினி மகளிரேயாவர் ஆயினும் அவருள்ளும் தலைசிறந்து திகழுபவள் ஆதிரை என்பவளே! என்றிறுத்தபடியாம்.

வான்தரு கற்பு- வேண்டும் பொழுது மழை பெய்விக்கத் தகுந்த தெய்வக்கற்பு. வான்- மழைக்கு ஆகுபெயர். ஈண்டு

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை          (55)

எனவரும் திருக்குறள் நினைக்கப்படும்

புகல்- பிச்சைபுகல். இம் மனைபுகல் வேண்டும் என்றது நின் கருத்து அதுவாயின் இந்த மனையிற் புகுதுக! என்பதுபட நின்றது. அதுவும் சேய்த்தன்றென்பாள் இம் மனை எனச் சுட்டினாள்.

காயசண்டிகை வரலாறு

81-86: வடதிசை..............தானென்

(இதன் பொருள்) வடதிசை விஞ்சை மாநகர்த் தோன்றித் தென்திசை பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை-அவ்வாறு ஆதிரை மனையை மணிமேகலைக்கு அறிவித்தவள் யாரோ எனின், வடதிசையின் கண்ணுள்ள விச்சாதரர் நகரங்களுள் வைத்துக் காஞ்சனபுரம் என்னும் பெரிய நகரத்திலே பிறந்து வைத்தும் தென்திசையில் உள்ள பொதியமலை மருங்கில் ஒரு சிறிய யாற்றினது நீரடை கரையிடத்தே; வல்வினை உருப்ப- தான் முற்பிறப்பிலே செய்த தீவினை உருத்துவந்தூட்டுதலாலே; மாதவன் தன்னால் சாவம்பட்டுத் தனித்துயர் உறூஉம் சிறந்த தவத்தையுடைய துறவோன் ஒருவனாலே சாவம் இடப்பட்டு மாபெருந்துன்பத்தை நுகர்ந்து கொண்டிருப்பதற்குக் காரணமான; வீவுஇல் வெம்பசி வேட்கையொடு திரிதரும் காயசண்டிகை என்னும் காரிகை-ஒரு பொழுதும் அழிதலில்லாத வெவ்விய பசித்துன்பத்தோடும் அதனைத் தணிக்கும் பேரவாவோடும் அந்நகரத் தெருக்களிலே இடையறாது சுற்றித் திரிகின்ற காய சண்டிகை என்னும் வித்தியாதர மகளே யாவாள் என்பதாம்.

(விளக்கம்) காயசண்டிகை என்னும் இவ் விச்சாதரி இக் காப்பியக்கதைக்கு இன்றியமையாத ஓருறுப்பாவாள். ஆதலில் நூலாசிரியர் இவள் வரலாற்றை ஈண்டு விதந்தெடுத்து விளம்பினர். இவள் வரலாறு மேலும் விளக்கமாகக் கூறப்படும் ஆதலின் ஈண்டுச் சுருக்கமாகவே சொல்லிவைத்தனர்.

விஞ்சைமாநகர்- விச்சாதரருடைய பெரிய நகரம். தனித்துயர் பெருந்துன்பம். காரிகை- பெண்.

இனி இக்காதையை- மாதே கேளாய்! நல்லாய் எய்தி ஊட்டலும் மண்முகமுனிவன் ஒருவன் தோன்றும் அவன் பொன் முட்டை அகவையினான் என, மன்னுயிர் நீத்தோன் ஒழியானாதலின் சாவகத்துதித்தனன் நீர் சொரிந்தது, மாதவர் வியந்து அறிகுவம் என்று சேறலும் பாவை அறவணன் அறியுமென்று ஈங்கென் நாவை வருத்தியது. இதுகேள்! மண்ணாள் வேந்தன் இல்லேன் பெற்றேன் என்று வளர்ப்ப அவன்பால் செல்வம் உண்மையின் அவன் வேந்தன் ஆயினன். அலத்தற் காலை ஆகியது. அறன் ஓடு துயர் கெடுக்கும் ஒழித்தல் ஆயிழை தகாது என மணிமேகலை ஏந்திக் கடிஞையொடு தெரு அடைதலும் மாக்களும் தூர்த்தரும் ஒளித்த குழலாள் தோன்றி ஏந்தியது திப்பியம் என்று நோய் கூர; கொம்பு ஏற்றல் தகவுடைத்தென இம் மனை அவள் மனைபுகல் வேண்டும் என்றனள் (அவள் யாரெனின்) வடதிசைத் தோன்றிவினை உருப்பத் துயர் உறூஉம் பசி வேட்கையொடு திரிதரும் காயசண்டிகை எனும் காரிகை, என இயைத்திடுக.

பாத்திரம் கொண்டு பிச்சைபுக்க காதை முற்றிற்று.
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 09:22:18 AM
16. ஆதிரை பிச்சையிட்ட காதை

(பதினாறாவது மணிமேகலைக்கு ஆதிரையென்னும் பத்தினிப் பெண்டிர் பாத்தூணீத்த பாட்டு)

அஃதாவது: அமுதசுரபியின்கண் முதன்முதலாக அகமலி உவகையின் பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடும் பிச்சை ஏற்றல் பெருந்தகவுடைத்து என்னுங் கோட்பாட்டோடு ஆதிரையின் மங்கலமனை முன்றிலிலே மணிமேகலை தான் புனையா வோவியம் போல நிற்ப, அதுகண்ட ஆதிரை நல்லாள் அகமலியுவகையளாய் அவளைத் தொழுது வலங்கொண்டு அமுதசுரபி என்னும் அரும் பெரும் பாத்திரம் நிறைதருமாறு ஆருயிர் மருந்தைக் கொணர்ந்து பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகென வாயார வாழ்த்திப் பெய்து அருளறத்திற்குக் கால்கோள் செய்தமையைக் கட்டுரைக்கும் செய்யுள் என்றவாறு.

இதன்கண்- ஆதிரையின் கற்பின் பொற்பு விளங்கும் வரலாற்றினைக் காயசண்டிகை மணிமேகலைக்குக் கூறுபவள் ஆதிரை கணவனாகிய சாதுவன் கணிகையின் கேண்மை கொண்டு வட்டினுஞ் சூதினும் வான் பொருள் தோற்றுக் கேடெய்துதலும் கணிகையாற் கைவிடப்பட்டு மரக்கலமேறிப் பொருளீட்டய் போதலும் கடலில் மரக்கலம் உடைந்தொழிதலும் சாதுவன் ஒடிமரம் பற்றி நீந்திப் போய் நக்கசாரணர் நாகர் வாழ் மலைப்பக்கம் சார்ந்து நாகர் தலைவன்பால் எய்துதலும் உடைந்த மரக்கலத்தே உயிருய்ந்தோர் பூம்புகார்க்கு வந்து சாதுவன் சாவுற்றான் என ஆதிரைக்கறிவித்தலும் அவள் தீப்பாய்தலும் தீ அவளைச் சுடாது நீரெனக் குளிர்ந்திருத்தலும், அவள் தீயுங் கொல்லாத் தீவினையாட்டியேன் இனி யாது செய்வேன் என்று ஏங்குதலும் அசரீரி அந்தரம் தோன்றி நின் கணவன் உயிருய்ந்துளன் என்று கூறுதலும் நீராடி இல்லம் புகுவாள் போன்று ஆதிரை மனை புகுதலும் சாதுவன் நக்கர் தலைவனாலே நயக்கப்பட்டு நம்பிக்கிளையளோர் நங்கையைக் கொடுத்து வெங்களும் ஊனும் வேண்டுவ கொடும் எனத் தன் பணிமாக்கட்குக் கட்டளையிடுதலும் அதுகேட்ட சாதுவன் அருளறமுடையனாதலின் அவற்றை மறுத்து நக்கர் தலைவனுக்கு நல்லறம் கூறுதலும் பிறவும் பெரிதும் இனிமையாக ஓதப்படுகன்றன. இக் காதையினால் தமிழகத்தே புத்த சமயத்தைத் தழுவிய தமிழர்கள் தமது பழைய பண்பாட்டை விடாமல் அச் சமயத்தோடு சார்த்தித் தமிழகத்துப் பண்பு கெடாமல் வாழ்ந்திருந்ததொரு தனிச் சிறப்பை இனிதாக இப்புலவர் பெருமான் அறிவித்துள்ளார் ஆதலின் இக்காதை ஒரு வரலாற்றுச் சிறப்புடையதாகவும் திகழ்கின்றது; அச்சிறப்பினை இதனுரையில் உரியவிடத்தே எடுத்துக் காட்டுதும்; அவற்றை ஆண்டுக் கண்டு கொள்க.

ஈங்கு இவள் செய்தி கேள் என விஞ்சையர்
பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போள்
ஆதிரை கணவன் ஆய் இழை! கேளாய்
சாதுவன் என்போன் தகவு இலன் ஆகி
அணி இழை தன்னை அகன்றனன் போகி
கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க
வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி
கெட்ட பொருளின் கிளை கேடுறுதலின்
பேணிய கணிகையும் பிறர் நலம் காட்டி
காணம் இலி என கையுதிர்க்கோடலும்  16-010

வங்கம் போகும் வாணிகர் தம்முடன்
தங்கா வேட்கையின் தானும் செல்வுழி
நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ
ஒடி மரம் பற்றி ஊர் திரை உதைப்ப
நக்க சாரணர் நாகர் வாழ் மலைப்
பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன்
நாவாய் கேடுற நல் மரம் பற்றிப்
போயினன் தன்னோடு உயிர் உயப் போந்தோர்
இடை இருள் யாமத்து எறி திரைப் பெருங் கடல்
உடை கலப் பட்டு ஆங்கு ஒழிந்தோர் தம்முடன்  16-020

சாதுவன் தானும் சாவுற்றான் என
ஆதிரை நல்லாள் ஆங்கு அது தான் கேட்டு
ஊரீரேயோ! ஒள் அழல் ஈமம்
தாரீரோ? எனச் சாற்றினள் கழறி
சுடலைக் கானில் தொடு குழிப்படுத்து
முடலை விறகின் முளி எரி பொத்தி
மிக்க என் கணவன் வினைப் பயன் உய்ப்பப்
புக்குழிப் புகுவேன் என்று அவள் புகுதலும்
படுத்து உடன் வைத்த பாயல் பள்ளியும்
உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது  16-030

ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில்
சூடிய மாலையும் தொல் நிறம் வழாது
விரை மலர்த் தாமரை ஒரு தனி இருந்த
திருவின் செய்யோள் போன்று இனிது இருப்பத்
தீயும் கொல்லாத் தீவினையாட்டியேன்
யாது செய்கேன்? என்று அவள் ஏங்கலும்
ஆதிரை! கேள் உன் அரும் பெறல் கணவனை
ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்பப் போகி
நக்க சாரணர் நாகர் வாழ் மலைப்
பக்கம் சேர்ந்தனன் பல் யாண்டு இராஅன்  16-040

சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன்
வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும்
நின் பெருந் துன்பம் ஒழிவாய் நீ என
அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும்
ஐ அரி உண் கண் அழு துயர் நீங்கி
பொய்கை புக்கு ஆடிப் போதுவாள் போன்று
மனம் கவல்வு இன்றி மனைஅகம் புகுந்து என்
கண் மணி அனையான் கடிது ஈங்கு உறுக! என
புண்ணியம் முட்டாள் பொழி மழை தரூஉம்
அரும் பெறல் மரபின் பத்தினிப் பெண்டிரும்  16-050

விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள்
ஆங்கு அவள் கணவனும் அலைநீர் அடைகரை
ஓங்கு உயர் பிறங்கல் ஒரு மர நீழல்
மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து
துஞ்சு துயில்கொள்ள அச் சூர் மலை வாழும்
நக்க சாரணர் நயமிலர் தோன்றி
பக்கம் சேர்ந்து பரி புலம்பினன் இவன்
தானே தமியன் வந்தனன் அளியன்
ஊன் உடை இவ் உடம்பு உணவு என்று எழுப்பலும்
மற்று அவர் பாடை மயக்கு அறு மரபின்  16-060

கற்றனன் ஆதலின் கடுந் தொழில் மாக்கள்
சுற்றும் நீங்கித் தொழுது உரையாடி
ஆங்கு அவர் உரைப்போர் அருந்திறல்! கேளாய்
ஈங்கு எம் குருமகன் இருந்தோன் அவன்பால்
போந்தருள் நீ என அவருடன் போகி
கள் அடு குழிசியும் கழி முடை நாற்றமும்
வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில்
எண்கு தன் பிணவோடு இருந்தது போல
பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி
பாடையின் பிணித்து அவன் பான்மையன் ஆகிக்  16-070

கோடு உயர் மர நிழல் குளிர்ந்த பின் அவன்
ஈங்கு நீ வந்த காரணம் என்? என
ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும்
அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன்
வருந்தினன் அளியன் வம்மின் மாக்காள்
நம்பிக்கு இளையள் ஓர் நங்கையைக் கொடுத்து
வெங் களும் ஊனும் வேண்டுவ கொடும் என
அவ் உரை கேட்ட சாதுவன் அயர்ந்து
வெவ்உரை கேட்டேன் வேண்டேன் என்றலும்
பெண்டிரும் உண்டியும் இன்றுஎனின் மாக்கட்கு  16-080

உண்டோ ஞாலத்து உறு பயன்? உண்டுஎனின்
காண்குவம் யாங்களும் காட்டுவாயாக என
தூண்டிய சினத்தினன் சொல் என சொல்லும்
மயக்கும் கள்ளும் மன் உயிர் கோறலும்
கயக்கு அறு மாக்கள் கடிந்தனர் கேளாய்
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும்
அல் அறம் செய்வோர் அரு நரகு அடைதலும்
உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர்  16-090

கண்டனை ஆக! என கடு நகை எய்தி
உடம்பு விட்டு ஓடும் உயிர் உருக் கொண்டு ஓர்
இடம் புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய்
அவ் உயிர் எவ்வணம் போய்ப் புகும், அவ் வகை
செவ்வனம் உரை எனச் சினவாது இது கேள்
உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி
மற்றைய உடம்பே மன் உயிர் நீங்கிடின்
தடிந்து எரியூட்டினும் தான் உணராதுஎனின்
உடம்பிடைப் போனது ஒன்று உண்டு என உணர் நீ
போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது  16-100

யானோ அல்லேன் யாவரும் உணர்குவர்
உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம்
கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை
ஆங்கனம் போகி அவ் உயிர் செய் வினை
பூண்ட யாக்கையின் புகுவது தெளி நீ
என்று அவன் உரைத்தலும் எரி விழி நாகனும்
நன்று அறி செட்டி நல் அடி வீழ்ந்து
கள்ளும் ஊனும் கைவிடின் இவ் உடம்பு
உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன்
தமக்கு ஒழி மரபின் சாவுறுகாறும்  16-110

எமக்கு ஆம் நல் அறம் எடுத்து உரை என்றலும்
நன்று சொன்னாய்! நல் நெறிப் படர்குவை
உன் தனக்கு ஒல்லும் நெறி அறம் உரைத்தேன்
உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின்
அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி
மூத்து விளி மா ஒழித்து எவ் உயிர்மாட்டும்
தீத்திறம் ஒழிக! எனச் சிறுமகன் உரைப்போன்
ஈங்கு எமக்கு ஆகும் இவ் அறம் செய்கேம்
ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க எனப்
பண்டும் பண்டும் கலம் கவிழ் மாக்களை  16-120

உண்டேம் அவர் தம் உறு பொருள் ஈங்கு இவை
விரை மரம் மென் துகில் விழு நிதிக் குப்பையோடு
இவை இவை கொள்க என எடுத்தனன் கொணர்ந்து
சந்திரதத்தன் என்னும் வாணிகன்
வங்கம் சேர்ந்ததில் வந்து உடன் ஏறி
இந் நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து
தன் மனை நன் பல தானமும் செய்தனன்
ஆங்கனம் ஆகிய ஆதிரை கையால்
பூங் கொடி நல்லாய்! பிச்சை பெறுக! என
மனைஅகம் புகுந்து மணிமேகலை தான்  16-130

புனையா ஓவியம் போல நிற்றலும்
தொழுது வலம் கொண்டு துயர் அறு கிளவியோடு
அமுதசுரபியின் அகன் சுரை நிறைதர
பார்அகம் அடங்கலும் பசிப் பிணி அறுக என
ஆதிரை இட்டனள் ஆருயிர்மருந்து என்  16-135

(இக் காதை 129 ஆம் அடிகாறும் ஆதிரை வரலாற்றினைக் கூறுகின்ற காயசண்டிகை கூற்றாய் ஒரு தொடர்)

ஆதிரை கணவன் சாதுவன் கேடெய்துதல்

1-10: ஈங்கிவள்..............கோடலும்

(இதன் பொருள்) விஞ்சையர் பூங்கொடி- விச்சாதரியாகிய பூங்கொடி போன்ற காய சண்டிகை மணிமேகலை நோக்கி; ஆயிழை ஈங்கு இவள் செய்தி கேள் என- மணிமேகலாய்! ஈங்கு யான் கூறிய இவ்வாதிரையின் வரலாற்றினைக் கூறுவல் கேட்பாயாக! என்று சொல்லி மணிமேகலையை முன்னிலைப்படுத்திக் கொண்டு மாதர்க்கு புகுந்ததை உரைப்போள்- அவ்வாதிரைக்கு நிகழ்ந்த செய்தியைக் கூறுபவள்; ஆயிழை கேளாய் ஆதிரை கணவன் சாதுவன் என்போன் தகவு இலன் ஆகி- ஆயிழாய்! கேள் இந்த ஆதிரை நல்லாள் கணவனாகிய சாதுவன் என்னும் பெயருடையன் ஆவான் அவன் பெருந்தன்மையிலனாய் இன்பத் துறையில் எளியனாகி; அணியிழைதன்னை அகன்றனன் போகி கற்புக் கடம்பூண்ட தெய்வம் போலவாளாகிய அறிகலனணிந்த தன் மனைவி ஆதிரை நல்லாளைப் பிரிந்து போய்; கணிகை யொருத்தி கைத்து ஊண்நல்க- தன்னைக் காமுற்ற கணிகை மகள் ஒருத்தி தன் பரத்தைமைத் தொழிலால் ஈட்டிய பொருளாலியன்ற உணவினை நாடொறும் வழங்குதலாலே அதனை உண்டு; வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி- வட்டாடுதலும் சூதாடுதலும் ஆகிய தீத்தொழில்களிலீடுபட்டுத் தன் முன்னோர் ஈட்டி வைத்த பெரும்  பொருளையெல்லாம் தொலைத்து விட்டமையாலே; கெட்ட பொருளின் கிளை கேடு உறுதலின்-இவ்வாறு கெட்டொழிந்த பொருள் காரணமாக அப் பொருட்கு வருவாய் ஆகிய நிலமும் பிறவுமாகிய பொருட் பகுதிகள் எல்லாம் கேடுறுதலாலே; பேணிய கணிகையும் காணம் இலி என பிறர் நலம் காட்டிக் கை உதிர்க் கோடலும்-பொருளிருக்குமளவும் தன்னைப் பொய்யன்பு காட்டி உண்டியும் கொடுத்துப் பேணி வந்த அக்கணிகை தானும் இவன் பொன்னில்லாதவன் என்றறிந்த பொழுதே தன்னைக் காமுற்று வருகின்ற பிறராகிய செல்வரின் சிறப்பை இவனுக்குக் கூறிக்காட்டி இனி நீ என் மனைக்கு வாராதே கொள் எனக் கையை அசைத்துப் போக்கி விடாநிற்ப என்க.

(விளக்கம்) ஈங்கிவள் என்றது ஈண்டு யான் கூறிய அவ்வாதிரை என்றவாறு செய்தி என்றது- ஆதிரை தெய்வக் கற்புடையாள் என இவ்வுலகம் அறிதற்குக் காரணமாக அவட்கெய்திய செய்தியை விஞ்சையர் பூங்கொடி: காயசண்டிகை; மாதர்க்கு-ஆதிரைக்கு. புகுந்ததை- நிகழ்ந்த செய்தியை ஆயிழை:விளி. அணியிழை ஆதிரை. கணிகை கைத்தூண் என்றது- கணிகைத் தொழிலால் செய்த பொருளாலாய உண்டி. இஃது உண்ணத்தகாமைக்கு ஏதுவை விதந்து கூறியபடியாம். கடவதன்று நின் கைத்தூண் வாழ்க்கை எனச் சிலப்பதிகாரத்தினும் வருதலுணர்க.(15-57)

வட்டினும் சூதினும் கெட்ட பொருட்கு முதலாகிய வழியைக் கிளை என்றார். பொருளின் வருவாய்க்குரிய கிளைகள் என்க. அவை நிலமும் தொழிலுமாம். பேணிய- என்றது பொருள் உள்ளதுணையும் பேணிய கணிகை என்பதுபட நின்றது. பிறர் நலம் காட்டுதலாவது இன்னின்னார் என்னை விரும்புகின்றனர் அவர் இத்துணை நலம் உடையர் என்று நாணாது கூறுதல். இனி இன்னின்ன கணிகையர் இன்னின்னாரால் இத்துணை நலம் எய்தினர் என எடுத்துக் காட்டலுமாம். இது நின்னால் யாது பயன் எனக் கைவிட்டுப் போக்கற் பொருட்டு. காணம்- பொன். கையுதிர்க் கோடல்- கைப்பற்றுதற்கு எதிர்மறை. அகற்றுதல் என்னும் பொருட்டாய ஒரு சொல் எனினுமாம்.

சாதுவன் மரக்கலமேறிச் செல்லுதலும் அவனுக்கு நேர்ந்த நிகழ்ச்சியும்

11-21: வங்கம்.......................உற்றானென

(இதன் பொருள்) தானும் வங்கம் போகும் வணிகர் தம்முடன் தங்கா வேட்கையின் செல்வுழி- தனது தீயொழுக்கத்தாலே தீதுற்ற அச் சாதுவன்றானும் பொருளீட்டற் பொருட்டு மரக்கல மேறி வேற்று நாட்டிற்குச் செல்லும் வணிகரோடு கூடி ஓரிடத்தினும் தங்காமல் பிறநாடெல்லாம் காண்டல் வேண்டும் என்னும் வேணவரவோடு கடலினூடே செல்லும்பொழுது; நளி இரு முந்நீர் வளிகலன் வெளவ - செறிந்த பெரிய கடலானது சூறைக் காற்று வீசிக் கவிழ்த்தலால் மரக்கலத்தை விழுங்கி விட்டமையாலே; ஒடி மரம் பற்றி ஊர் திரை உதைப்ப நக்க சாரணர் நாகர் வாழ்மலைப் பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன் காற்றினாலே மோதிக் கவிழ்க்கப்பட்ட அம் மரக்கலத்தல் முறிந்து மிதக்கின்ற மரத்தைத் தெப்பமாகப் பற்றிக் கொண்டு கரை நோக்கி இயங்குகின்ற அலைகள் அம் மரத்தினை உந்திச் செலுத்துதலாலே சென்று ஆடையின்றித் திரிகின்றவராகிய நாகர் என்போர் வாழுகின்ற தீவின் மலைப்பக்கத்தே நிலத்திலேறி அவர் வயப்பட்டனன் இவன் நிலை இன்னதாக; நாவாய் கேடு உற நல்மரம் பற்றி உயிர் உயப் போந்தோர்-இவனோடு மரக்கலத்திற் சென்றவர் அம் மரக்கலங் கெட்டபொழுது இவனைப் போலவே ஒடிந்த நல்ல மரத்துண்டுகளைப் பற்றி அவனோடு உயிர் உய்தற்கு முயன்று சென்றோருள் சிலர் பூம்புகார் நகரத்திற்கே சென்று கரை ஏறியவர்; இடை இருள் யாமத்து எறி திரைப் பெருங்கடல் உடைகலப்பட்டு ஆங்கு ஒழிந்தோர் தம்முடன் சாதுவன் தானும் சாவு உற்றான் என-இரவின் இருள் மிக்க இடையாமத்திலே மோதுகின்ற அலைகளையுடைய பெரிய கடலின் கண் உடைந்து மூழ்கிய மரக்கலத்தினூடே அகப்பட்டு அங்கு இறந்தவர்களோடு கூடச் சாதுவன்றானும் இறந்தொழிந்தான் என்று கருதி அச் செய்தியை நகரிற் கூறிவிட்டமையாலே என்க.

(விளக்கம்) தங்கா வேட்கை என்றது-ஓரிடத்தே தங்காமல் யாண்டுஞ் சென்று காண வேண்டும் என்னும் அவா. இனி ஊரகத்தே தங்காமைக்குக் காரணமான பொருள் வேட்கையால் எனினுமாம்.

தானும்- சாதுவனும் நளி-குளிர்ச்சியுமாம். முந்நீர் வளி கவிழ்த்தலாலே வெளவ என்க. மரக்கலம் மூழ்கிவிட என்பது கருத்து. மரக்கலத்தில் ஒடிந்து தனித்து மிதக்கும் மரம் என்க. ஊர்திரை: வினைத்தொகை.

நக்க சாரணர் நாகர்- ஆடையின்றித் திரிகின்ற நாகர் என்னும் ஒரு வகை மலையில் வாழும் மாக்கள். இவர் நாகத்தைத் தெய்வமாகக் கருதி வழிபடுவோராதலின் நாகர் என்னும் பெயர் பெற்றனர் என்ப. அவர் பான்மையன்-அவர் வயப்பட்டவன்.

உயிருயப் போந்தவர் சிலர் வெவ்வேறு திசைகளிற் சென்றுய்ந்தாராக அவருள் நன் மரம் பற்றிய காரணத்தாலே மீண்டும் புகார் நகரத்தில் வந்து கரையேறி யுய்ந்தாரும் சிலர் உளராயினர்; அவர் மரக்கலத்துளகப்பட்டு இறந்தவரோடே சாதுவனும் இறந்தனன் என்று எண்ணியே அவன் இறந்தான் என்றே சொல்லி விட்டனர் என்க.

கணவன் இறந்தான் எனக் கேள்வியுற்ற ஆதிரையின் செயல்

22-28: ஆதிரை.....................புகுதலும்

(இதன் பொருள்) ஆங்கு அது கேட்டு ஆதிரை நல்லாள்-ஆங்குப் பரவிய அச் செய்தியைக்கேட்டுக் கற்புடைமையிற் சிறந்த ஆதிரை என்னும் நங்கை அப்பொழுதே; ஊரீரேயோ-இம்மூதூரில் வாழும் பல்சான்றீரே பல்சான்றீரே!; ஒள் அழல் ஈமம் தாரீரோ எனச் சாற்றினள் கழறி-கணவனை இழந்த அளியேனுக்கு யான் மூழ்குதற்கியன்ற ஒள்ளிய நெருப்பினைச் சுடுகாட்டின்கண் வளர்த்துத் தரமாட்டீரோ? என்று பலர்க்கும் அறிவிக்க அவர் தாமும் அவள் தீயின் முழுகுதல் வேண்டா என அவளைத் தடுத்த பொழுது அவரையெல்லாம் இடித்துரை கூறி அடக்கி அவர்களைக் கொண்டே; சுடலைக் கானில் தொடுகுழிப்படுத்து முடலை முளி விறகின் எரி பொத்தி-சுடுகாட்டுக் கோட்டத்துள்ளமைந்த நன்காட்டின்கண் தீ வளர்த்தற்குத் தோண்டும் குழியை முறைப்படி தோண்டச் செய்து அக் குழியிலடுக்கிய முறுக்கேறி உலர்ந்த விறகின்கண் தீ மூட்டி; மிக்க என் கணவன் வினைப்பயன் உய்ப்பப் புக்குழிப் புகுவேன் என்று அவள் புகுதலும்- எனக்குத் தெய்வத்தினும் மிக்கவனாகிய என்னுடைய கணவன் தான் செய்த பழவினை செலுத்துதலாலே சென்று மாறிப் பிறந்த விடத்தே யானும் என்னுயிரும் மாறிப் பிறக்கு மாற்றால் அவன் மனைவியே ஆகுவேன் என்னும் கோட்பாட்டோடே அவ்வாதிரை அத் தீயினுட் புகாநிற்ப என்க.

(விளக்கம்) அது- சாதுவன் சாவுற்றான் என்ற செய்தி. ஊரீர் என்றது ஊரிலுள்ள தன் குலத்துச் சான்றோரை. ஈமம்-சுடுகாட்டில் பிணஞ்சுட அடுக்கும் விறகு. சுடுகாடெனினுமாம். சாற்றுதல் வற்புறுத்துக் கூறுதல். கழறிஎன்றார். ஊரவர் அவளைத் தடுத்தமையும் அவரையெல்லாம் இடித்துக் கூறித் தன் கருத்தின் வழி ஒழுகினாள் என்பது போதர. முளி விறகின் என மாறுக. முடலை விறகு-முதிர்ந்த ஒழுங்கற்ற முருட்டுக் கட்டைகள். முளிதல்-உலர்தல். எரிபொத்தி தீமூட்டி.

மிக்க என் கணவன் என்றது எனக்குத் தெய்வத்தினுங் காட்டிற் சிறந்தவனாகிய என் கணவன் என்றவாறு.

செய்வினைக் கேற்பவே மறுபிறப்பு வந்துறுமாகலின் வினைப்பயன் உய்ப்பப் புக்குழிப் புகுவேன் என்றாள். என்னை? இன்பமும் துன்பமும் அவனுக்கும் தனக்கும் ஒன்றாகவே வருதலின். புக்குழிப் புகுவேன் என்றது அவன் பிறப்புற்றவிடத்தே பிறந்து மீண்டும் அவனுக்கே மனைவியாவேன் என்பதுபட நின்றது. ஈண்டு

காதலர் இறப்பின் கனையெரி பொத்தி
ஊதுலைக் குருகின் உயிர்த்தகத்து அடங்காது
இன்னுயிர் ஈவர் ஈயா ராயின்
நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுவர்

எனப் பண்டு மாதவி வயந்த மாலைக்குக் கூறியது நிலைக்கற்பாலதாம் (ஊரலர்................42-45)

தீப்பாய்ந்த ஆதிரை ஊறின்றியமைதல்

29-34: படுத்து..............ஏங்கலும்

(இதன் பொருள்) படுத்துடன் வைத்த பாயல் பள்ளியும் உடுத்த கூறையும் ஒள் எரி உறாஅது- தீப்புகுதுவோர் கிடத்தற்கென சமவிறகடுக்கின்மேல் விரித்து அதனோடு கிடத்திய பாயலாகிய படுக்கையிடத்தினும் அதன்கட் புகந்து வைகிய ஆதிரை நல்லாள் உடுத்திருந்த கோடிப் புடைவையினுங் கூட ஒள்ளிய நெருப்புப் பற்றாமலும்; ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலின் சூடிய மாலையும் தொல் நிறம் வழாது- பூசிய சந்தனமும் கட்டிய கூந்தலிலே சூட்டப் பெற்ற மலர் மாலையும் புலர்ந்தும் கருகியும் தத்தம் நிறங் கெடாமலும்; விரைமலர்த் தாமரை ஒரு தனி இருந்த திருவின் செய்யோள் மலராகிய தனதிருக்கையின்கண் தான் ஒருத்தியே தமித்திருந்த திருமகள் போன்று குளிர்ந்து இனிதாகச் சிறிதும் ஊறின்றியிருத்தலும் என்க.

(விளக்கம்) கணவன் இறந்தமையால் தீப் புகுதும் பத்தினிப் பெண்டிர் ஈமவிறகின் மேல் படுத்தற்குப் பாய் விரித்தல் வழக்கம் என்பதும் தீப்புகு மகளிர் மலர் சூடிச் சாந்தம் நீவிப் புதுப்புடைவையுடுத்தும் ஒப்பனை செய்துகொண்டு புகுவர் என்பதும் இதனாலறியப்படும்.

பூசிய சந்தனம் புலர்ந்து நிறம் கெடாமலும் சூடிய மலர் கருகி நிறம் வாடாமலும் இருந்தன. ஈம விறகில் தீப்பற்றிச் சூழக் கொழுந்து விட்டெரிய அதன் நாப்பண் சிறிதும் ஊறின்றி அமர்ந்திருக்கும் ஆதிரை நல்லாளுக்குச் செந்தாமரை மலரின் மேல் எழுந்தருளியிருக்கும் திருமகள் உவமை. சூழ்ந்தெரியும் தீப்பிழம்புகள் செந்தாமரை மலரின் மலர்ந்த இதழ்களாகவும் பாயல் பொகுட்டாகவும் ஆதிரை திருமகளாகவும் கொண்டு இவ்வுவமையின் அழகுணர்ந்து மகிழற்பாற்று. திருவின் செய்யோள்- திருமகள் என்னுந்துணை.

ஆருயிர் நீங்காத ஆதிரையின் துயரமும் தெய்வம் தெளித்துத் தேற்றுதலும்

35-44: தீயும்....................அறைதலும்

(இதன் பொருள்) அவள் தீயும் கொல்லாத் தீவினையாட்டியேன் யாது செய்வேன் என்று ஏங்கலும்- தீயினாலே சிறிதும் துன்புறுத்தப்படாமல் உயிரோடிருந்த அந்த ஆதிரை நல்லாள் தீயாகிய தெய்வம் தீண்டவும் ஒருப்படாத மாபெருந்தீவினை செய்துளேன் போலும், அந்தோ இனி யான் எவ்வாற்றால் என்னுயிரைப் போக்கமாட்டுவேன் என்று பெரிதும் ஏங்கி அழா நிற்ப; அசரீரி அந்தரம் தோன்றி-அவளது பேதைமை காரணமாகத் தோன்றிய அவளுடைய துயர்கண்டு அருட்பிழம்பாக யாண்டும் நிறைந்திருக்கின்ற தெய்வம் வானிடத்தே ஒலியுருவில் தோன்றி; ஆதிரை கேள்- ஆதிரை நல்லாய் தீ நின்னைக் கொல்லாமைக்குக் காரணம் கூறுவல் கேள்; உன் அரும் பெறல் கணவனை ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்பப் போகி-உன் அரும் பெறல் கணவன் இறந்திலன் காண்! கடலுள் மூழ்கிய மரக்கலத்திலே ஒடி மரம் பற்றிக் கிடந்த நின் கணவனை இயங்கும் அலைகள் உந்திக்கொடு போதலாலே அவன் போய்; நக்கசாரணர் நாகர் வாழ்மலைப் பக்கம் சேர்ந்தனன்- நக்கசாரணராகிய நாகர்கள் வாழுகின்ற மலைப்பக்கத்திலே சேர்ந்துயிருய்ந் திருக்கின்றனன் காண்!; பல்யாண்டு இராஅன்-அவன் அங்குப் பல யாண்டுகள் தங்கி இருப்பானல்லன்; சந்திர தத்தன் எனுமோர் வணிகன் வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும்-இன்னும் சின்னாளிலே அம் மலைப் பக்கமாகச் சந்திரதத்தன் என்னும் ஒரு வணிகனுடைய மரக்கலம் வந்தெய்தும் அந்த மரக்கலத்திலேறி நின் கணவனும் வந்து நின் கண்முன் தோன்றா நிற்பன காண்; நீ நின் பெருந் துன்பம் ஒழிவாய் என-ஆதலின் நீ எய்துகின்ற நின் பெரிய துன்பம் ஒழிந்து இனி திருப்பாயாக என்று; அறைதலும்- கூறா நிற்றலாலே என்க.

(விளக்கம்) தீயும் கொல்லாத் தீவினையாட்டியேன் என்றது தீத் தானும் தெய்வமாகலின் என்னைத் தீண்டுதல் தகாது என்று கைவிடத் தகுந்த மாபெருந் தீவினை செய்துள்ளேன் போலும் அதனால் என்னைத் தீண்டா தொழிந்தது என ஆதிரை கற்பித்துக் கொள்ளும் காரணம் நுண்ணியதாதலறிக. யாது செய்கேன் என்றது இனி எவ்வாற்றால் உயிர் துறப்பேன் என்று ஐயுற்றபடியாம்.

உன் கணவன் உயிருடன் இருத்தலாலும் நீ கற்பின் கனலியாதலானும் தீ உன்னைக் கொல்லா தொழிந்தது என்று குறிப்பாகக் காரணம் தெரிவித்தபடியாம்.

அசரீரி-அருவமாயிருக்கின்ற தெய்வம். அந்தரந் தோன்றி என்றது வானத்தில் ஒலியாகத் தோன்றி என்றவாறு. கணவனை இழந்த துன்பமாகலின் பெருந்துன்பம் என்று அத் தெய்வம் கூறுகின்றது.

ஆதிரை மகிழ்ந்து இல்லம் புகுதல்

45-51: மையரி....................ஆயினள்

(இதன் பொருள்) மை அரி உண்கண் அழுதுயர் நீங்கிப் பொய்கை புக்கு ஆடிப் போதுவாள் போன்று-அசரீரி கூறிய ஆறுதல் மொழி கேட்டலும் கறுத்துச் செவ்வரி படர்ந்த மை எழுதிய கண்ணையுடைய ஆதிரை நங்கை யாது செய்கேன் எனக் கையற்றுக் கலங்கியழுதற்குக் காரணமான துன்பம் நீங்கிக் குளிர்ந்தகுளத்தில் முழுகி ஆடி வருவாள் போன்று அத் தீக்குழியினின்றும் புறப்பட்டு; மனம் கவல்வு இன்றி- மனத்திற் சிறிதும் கவலை இன்றி; மனை அகம்புகுந்து-பெரிதும் மகிழ்ச்சியுடையளாய் இல்லம் புகுந்து; என் கண்மணி அனையான் கடிது ஈங்கு உறுக என-என் கண்ணினுட் பாவை போல்வானாகிய என் காதலன் விரைந்து எம்மில்லம் புகுவானாக என்னும் வேண்டுகோளோடே; புண்ணியம் முட்டாள்-அருள் அறத்தை முட்டுப்பாடின்றிச் செய்பவள்; பொழி மழை தரூஉம் அரும் பெறல் மரபின் பத்தினிப் பெண்டிரும் விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள்-பொழிகின்ற மழையைத் தாம் விரும்பிய போது பெய்யென ஏவிப் பெய்விக்கும் தெய்வத்தன்மையுடைய இன்றியமையாச் சிறப்பினையுடைய பத்தினி மகளிரும் விரும்பித் தொழத் தகுந்த வியப்புடைய தெய்வக் கற்புடையளாகத் திகழ்கின்றனள் காண்; என்றாள் என்க.

(விளக்கம்) மை- கரிய. அரி- செவ்வரி; உண்கண்- மையுண்டகண் இது பன்மொழித் தொடர். ஆதிரை என்னும் பெயராந்துணை. தீயுள் மூழ்கியவள் பொய்கை புக்காடிப் போதுவாள் போன்று போந்தாள் என்க. கண்மணி யானையான் என்றது சாதுவனாகிய தன் கணவனை சாதுவன் கணிகையின் கேண்மை கொண்டு தன்னைத் துறந்து தீயொழுக்கி னின்றவனாக இருந்தும் அவனை இவள் கண்மணி யனையான் என்று பாராட்டுதல் அவள் தெய்வக் கற்பிற்குச் சிறந்ததொரு சான்றாம் இக்கருத்தினை

சேக்கை இனியார்பாற் செல்வான் மனையாளால்
காக்கை கவிந்தொழுகல் கூடுமோ கூடா
தகவுடைய மங்கையர் சான்றாண்மை சான்றார்
இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்

எனவரும் பரிபாடலினும் காண்க. (20-86-89)

காயசண்டிகை முன்பு கூறிய சாதுவன் வரலாற்றில் எஞ்சிய துரைத்தல்

52-59: ஆங்க....................எழுப்பலும்

(இதன் பொருள்) ஆங்கு அவள் கணவனும் அலைநீர் அடைகரை ஓங்கு உயர் பிறங்கல் ஒரு மரநீழல்- மணிமேகலை நங்காய் யான் முன்பு நாகர் வாழ்மலைப் பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன் என்று அறிவித்த அவ்வாதிரை கணவனாகிய சாதுவன் செய்திகேள் அவன் எய்தி அலை எறிகின்ற கடலினது நீர் அடைகரையில் மிகவும் உயர்ந்துள்ளதொரு மலையின் மேல் ஏறி அவ்விடத்தே ஒரு மரத்தின் நீழலிலே இருந்தவன்; மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து துஞ்சு துயில் கொள்ள முகல்களையுடைய பெரிய கடலிலே அகப்பட்டுத் தான் அலைப்புண்ட உடற்றுன்பம் மிகப்பெற்றுத் தன்னை மறந்து துயில் கொள்ளா நிற்ப; அச் சூர் மலை வாழும் நக்கசாரணர் நயமிலர் தோன்றிப் பக்கம் சேர்ந்து-அந்த அச்சந்தருகின்ற மலையின் கண் வாழ்கின்ற நக்க சாரணராகிய மக்கட் பண்பில்லாதவர் உணவு தேடிவருபவர் அவ்விடத்துத் தாமே வந்தெய்தி ஆண்டுத் துயின்று கிடக்கின்ற சாதுவன் பக்கத்திலே வந்து கூர்ந்து நோக்கியவர்; இவன் பரிபுலம்பினன் தானே தமியன் வந்தனன் அளியன்-இங்குக் கிடக்குமிவன் பெரிதும் வருந்தியவன் என்று தோன்றுகின்றது தான் தமியனாகவே இங்கு வந்துளான் நம்மால் பெரிதும் இரங்கத் தகுந்தவன் என்று தமக்குள்ளேயே அசதியாடுபவராய்; ஊன் உடை இவ்வுடம்பு உணவு என்று எழுப்பலும்-ஊன் மிக்கிருக்கின்ற இவனுடைய இவ்வுடம்பு இப்பொழுது நமக்கு ஒரு வேளை உணவாகலாம் என்று சொல்லிக் கொண்டு அவனைத் துயிலுணர்த்தி எழுப்புமளவிலே என்க.

(விளக்கம்) அலைநீர்- கடல் பிறங்கல்- மலை. மஞ்சு- முகில் மால் கடல் உழந்த நோய்- பெரிய கடலினின்றும் ஒடிமரம் பற்றிக் கிடந்து குளிராலும் பசியாலும் எய்திய துன்பம். அது கூர்த்தலாவது- செயலறவெய்துதல். சூர்மலை- அச்சந்தருமலை. மக்களைத் தின்பவர் வாழு மலையாதலின் சூர்மலை என்றார். நயம்-ஈண்டு மக்கட்பண்பு. கண்ணோட்டம் எனினுமாம்.

கடலிடையே உடைகலப்பட்டு ஒடிமரம் பற்றி வந்து கரையேறிய வரை அவர் பண்டும் பலரைப் பார்த்தவராதலின் இவனும் அங்ஙனம் கடலில் உழந்தவன் என்று அவன் உடல்நிலை கண்டே இவன் பரிபுலம்பினன் என்றார். பரிபுலம்பினன்- பெரிதும் துன்பப்பட்டவன் பலர் வந்திருந்தால் நமக்கு இரை பெரிதும் கிட்டியிருக்கும். ஆனால் இவனோ தனியனாக வந்திருக்கின்றான் என்பார் தாமே தமியன் வந்தான் என்று பரிந்துரைக்கின்றனர். இவனைத் தின்றுவிட்டால் இவன் துயரம் துவரப்போம் ஆதலின் இவனும் நம்மால் இரங்கித் தகுந்தவனே ஆகின்றான் என்று அசதியாடியபடியாம். பரிபுலம்பினனேனும் உடம்பில் தசை மிகுதியாகவே உளது என்பார் ஊனுடைய உடம்பு என்றார். உணவு என்றது நமக்கிது ஒரு பொழுதைக்குப் போதிய உணவேயாம் என்பதுபட நின்றது.

சாதுவன் நாகர் தலைவனைக் காண்டல்

60-71: மற்றவர்.................குளிர்ந்தபின்

(இதன் பொருள்) மற்று அவர் பாடை மயக்கு அறு மரபில் கற்றனன் ஆதலின்- மணிமேகலாய்! நாகராலே எழுப்பப்பட்ட அச் சாதுவன்றானும் அந்த நாகர் மொழியைச் சிறிதும் மயக்கம் இல்லாத முறையிலே நன்கு கற்றிருந்தபடியாலே, தமது மொழியாலே தன்னை உரப்பி எழுப்பிய அந்த நாகரோடு அவரும் வியப்புறும் வண்ணமும் தன்பாலன்புறும்படியும் கேள்விக்கினி தாம்படி அந் நாகர் மொழியாலே அவருடன் சொல்லாடுமாற்றால் அவரைத் தன் வயப்படுத்திவிட்டமையாலே; சுற்றும் நீங்கித் தொழுது உரையாடியாங்கு- அவனைச் சூழ்ந்து மிகவும் அணுக்கராய் நின்ற அந் நாகர் மருட்சியுற்றுப் பெரிதும் விலகி நின்று கைகூப்பித் தொழுது வணக்கத்துடன் பேசிய பின்னர்; அவர் உரைப்போர்-அந் நக்க சாரணர் சாதுவனுக்குத் தமது வேண்டுகோளைக் கூறுபவர்; அருந்திறல் கேளாய் ஈங்கு எம் குருமகன் இருந்தோன் அவன்பால் நீ போந்தருள் என பெறுதற்கரிய பேராற்றலுடையோய் நின்னோடு சொல்லாடும் திறம் எமக்கில்லை இம் மலையிடத்தே எங்கள் குருமகன் இருக்கின்றனன், அவன்பால் நீ எழுந்தருளல் வேண்டும் என்று அழையா நிற்றலாலே; அவருடன் போகி-அவரோடு சென்று; கள் அடு குழிசியும் கழி முடை நாற்றமும் வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில்-கள் சமைக்கும் பானையும் மிக்க ஊன் நாற்றமும் வெள்ளிய என்போடு கூடிய ஊன் வற்றலும் விரவியுள்ளதோர் இருக்கையின்கண்; எண்கு தன் பிணவோடு இருந்தது போலப் பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி ஏற்றைக் கரடியொன்று தன் காதற்றுணையாகிய பெண்கரடியோடு கூடியிருந்தாற் போன்று தன் காதற் பெண்டாட்டியோடு வீற்றிருந்த தன்மையைப் பார்த்து; பாடையின் பிணித்து அவன் பான்மையன் ஆகி-அவனையும் தன்னுடைய மொழியினிமையாலே தன் வயப்படுத்திக்கொண்டு அவன் பக்கத்து அவனாலே விரும்பப்படும் தன்மையையுடையவனாகி; கோடுயர் மரநிழல் குளிர்ந்தபின்-அவனிருந்த கிளைகயோடுயர்ந்துள்ளதொரு பெரிய மரத்தின் நீழலிலே அவனால் நன்கு மதிக்கப்பட்டுக் கொல்வர் என்னும் அச்சந் தீர்ந் துளங் குளிர்ந்திருந்த பின்னர் என்க.

(விளக்கம்) மற்றவர் பாடை-அந்த நாகர் தாய்மொழியாகிய நாகமொழி. நாகருள் நாகரிக மிக்கவரும் உளர் என்பது கீழ்நில மருங்கின் நாக நாடாளும் இருவர் மன்னவர் என முற் கூறப்பட்டமையால் அறியப்படும் ஈண்டுக் கூறப்படுகின்ற நாகர் அவரினத்தவராய் அவர் பேசுகின்ற நாக மொழியே பேசுகின்ற நாகரிகமில்லாத நாகர்கள் மேலும், ஆடையுடுத்தாது திரியுமளவிற்குத் தாழ்ந்த காட்டகத்தே வாழும் மாக்கள். மக்களைக் கொன்று தின்பவரும் ஆவார். ஆகவே இவரைப் பிரித்துக் காட்டவே புலவர் பெருமான் இவரை நக்க சாரணர் நாகர் என அடைபுணர்த்து ஓதுகின்றனர். ஈண்டுச் சாதுவன் கற்ற மொழி நாகரிகமுடைய நாகர் பேசும் மொழியாகும். ஆகவே தாம் பேசும் மொழியே பேசுகின்ற சாதுவனுடைய மொழியைக் கேட்டலும் நக்கசாரணர் நாகர் இவன் தம்மினத்து மேன்மகன் என்று கருதி அச்சத்தாலே அணுக்கராய் நின்றவர் சற்று நீங்கித் தூரத்தே நின்று தொழுது உரையாடுகின்றனர் என்றுணர்தல் வேண்டும். இவன்பால் இவர் பெரிதும் அச்சமெய்தியதனை இவர் அவனை அருந்திறல் என்று விளிப்பதனாலும் அறியலாம். மேன் மகனாகலின் தமக்குள் மேன்மகனாய் விளங்கும் தங் குருமகன்பால் அழைத்தேகக் கருதி ஈங்கு எங் குருமகன் இருந்தோன் அவன்பால் போந்தருள் என்று வேண்டுகின்றனர்.

கல்லாத மாக்கட்குக் கற்றறிந்தவர்பால் மருட்கையும் அச்சமும் தோன்றுதல் இயல்பு.

குருமகன் இருந்தோன் என்புழி ஆகாரம் ஓகாரமாயிற்றுச் செய்யுளாதலின்.

குழிசி- பானை. முடை-ஊன். என்புணங்கல்-என்போடு கூடிய ஊன்வற்றல். எண்கு- கரடி. பிணவு, ஈண்டுக் கரடியின் பெண்ணுக்கு வந்தமையை,

பன்றி புல்வாய் நாயென மூன்றும்
ஒன்றிய என்ப பிணவென் பெயர்க்கொடை

என்னும் தொல்காப்பியமரபியற் சூத்திரத்தின்கண்(60) ஒன்றிய என்ற இலேசானே அமைத்துக் கொள்க. இங்ஙனமே பரிபாடலினும் வேழப்பிணவு (10-15) என இப் பெயர் யானைக்கும் வருவதூஉ முணர்க.

பெண்டு- பெண்டாட்டி; மனைவி மனையறமில்லாமை பற்றி மனைவி என்னாது பெண்டு என்ற நுண்மை நோக்குக.

குளிர்ந்த பின் என்றது, கொன்று தின்பர் என்னும் அச்சந்தீர்ந்து உள்ளம் குளிர்ந்த பின் என்றபடியாம்.

நக்கசாரணர் நாகர் குருமகன் செயல்

71-79: அவன்.....................என்றலும்

(இதன் பொருள்) அவன் நீ ஈங்கு வந்த காரணம் என் என சாதுவனுடைய மொழியினிமையால் பிணிப்புண்ட அந் நாகர் தலைமகன் சாதுவனை நோக்கி ஐய எமது மலைக்கு நீ வருதற்கியன்ற  காரணம் யாது? என்று வினவா நிற்ப; ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும்- அங்ஙனம் வினவிய அந் நாகர் தலைவனுக்குச் சாதுவன் தான் அலைமிக்க கடலில் எய்திய துன்ப நிகழ்ச்சியை எடுத்துக் கூறவே அது கேட்ட அத் தலைவன்; அருந்துதல் இன்றி அலைகடல் உழந்தோன் வருந்தினன் அளியன்-உணவுமின்றிப் பெரிதும் அலைக்கின்ற கடலிலே இவன் துன்புற்று வருந்தினன் நம்மால் இரக்கப்படத் தக்கவன் என்று சாதுவன் திறத்திலே பரிவு கூர்ந்து தன் பணி மாக்களை நோக்கி; மாக்காள் வம்மின் நம்பிக்கு இளையள் ஓர் நங்கையைக் கொடுத்து வெம்களும் ஊனும் வேண்டுவ கொடும் என- ஏவலர்களே விரைந்து வாருங்கள் இப்பொழுதே ஆடவருட் சிறந்திருக்கின்ற இந்த நம்பிக்குப் பொருத்தமாக இளமையுடையளாய் நம் மகளிரிற் சிறந்த நங்கை யொருத்தியையும் கொடுத்து அவ்விருவர்க்கும் வெவ்விய கள்ளும் ஊனுமாகிய உணவுகளையும் வேண்டும் பிற பொருள்களையும் கொடுங்கோள் என்று கட்டளையிடா நிற்ப; அவ்வுரை கேட்ட சாதுவன் அயர்ந்து-அத் தலைவன் கூற்றைக் கேட்ட சாதுவன் பெரிதும் வருந்தி; வெவ்வுரை கேட்டேன் வேண்டேன் என்றலும்- நீ அன்பு மிகுதியாலே கூறினையேனும் யான் கேட்கலாகாத தீய மொழிகளைக் கேட்கலாயினேன் நின்னால் கூறப்பட்ட பொருள்களை யான் விரும்புகிலேன் காண்! பொறுத்தருள்க! என்று மறுத்துக் கூறலும் என்க.

(விளக்கம்) அவன்- நாகர் தலைவன். ஈங்கு நீ வந்த காரணம் என்? என்றது மேன் மகனாகிய நீ கீழோர் ஆகிய யாங்கள் உறையுமிடத்திற்கு வர நேர்ந்த காரணம் என்னை? என்று வினவியபடியாம்.

அவற்கு-அந் நாகர் தலைவனுக்கு.  நம்பி என்றான் இவன் ஆண் மக்களுள் தலை சிறந்தவன் என்னும் கருத்தால். இவனுக்கேற்ற இளமகள் ஒருத்தியை ஆராய்ந்து கொடுமின் என்பான் இளையளோர் நங்கையைக் கொடுத்து என்றான்.

அயர்ந்து-வருந்தி. அவன் கட்டளையை மறுத்துழி அவன் தீங்கு செய்யவும் கூடும் என்று கருதி அயர்ந்து என்பது கருத்து.

களும்- கள்ளும்: விகாரம். வேண்டுவ பிறவும்-இவன் விரும்பும் பிறவும். அவை இருப்பிடம் கலம் படுக்கை முதலியன. வெவ்வுரை தீய மொழி. அப் பொருள்களை யான் வேண்டேன் என்றவாறு.

நாகர் தலைவன் வியப்பும் வினாக்களும்

80-83: பெண்டிரும்..............சொல்லென

(இதன் பொருள்) தூண்டிய சினத்தினன்- சாதுவன் தன் கட்டளையை மறுத்த மாற்றத்தாலே தூண்டப்பட்டெழுந்த வெகுளியை யுடையவனாகிய அந் நாகர் குருமகன்; ஞாலத்து பெண்டிரும் உண்டியும் இன்று எனின் மாக்கட்கு உறுபயன் உண்டோ-விருந்தினனே! எற்றிற்கு என் நன்கொடைகளை நீ மறுக்கின்றனை இந் நிலவுலகத்திலே மகளிரும் உணவும் இல்லை எனின் இதன்கண் வாழும் மாந்தருக்கு எய்தும் இன்பம் பிறிது ஏதேனும் உண்டோ? யாமறிகின்றிலேம்; உண்டு எனின் சொல் யாங்களும் காண்குவம் காட்டுவாயாக என- நீ உண்டு என்று கூறுவாயாயின் கூறுதி யாங்களும் அறிந்து கொள்வேங் காண் அவற்றை எமக்குங் காட்டுவாயாக என்று கூறாநிற்ப; என்க.

(விளக்கம்) பெண்டிருமுண்டியு மின்றெனின் மாக்கட்கு உண்டோ ஞாலத்து உறுபயன் என நிகழுமிதனோடு

பெண்டிரும் உண்டியும் இன்பமென் றுலகில்
கொண்டோர்               (14:39-40)

எனவரும் சிலப்பதிகாரம் ஒப்பு நோக்கற்பாலதாம்.

சாதுவனுக்கு நலஞ் செய்யும் கருத்தோடு கூறியவற்றை மறுத்துரைத்தலும் அம் மறுப்பு அவன் சினத்தைத் தூண்டுதலியல்பே யாதலறிக. உண்டெனின் யாங்களும் காண்குவம் என்றது இகழ்ச்சி இன்றெனின்-இல்லையாயின்.

சாதுவன் அறங்கூறல்

83-91: சொல்லும்....................ஆகென

(இதன் பொருள்)  சொல்லும்-அது கேட்ட சாதுவன் கூறுவான்; கயக்கறு மாக்கள்- கலங்குதலில்லாத அறிவுடைய சான்றோர்; மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும் கடிந்தனர்- அறிவினை மயக்கு மியல்புடைய கள்ளுண்ணுதலையும் உடம்பிலே நிலைபெற்ற உயிர்களைக் கொல்லுதலையும் தீவினை என்று கருதி விலக்கிவிட்டனர்; கேளாய்- அதற்குக் காரணம் கூறுவல் கேட்பாயாக!; பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின் தலைவனே இவ்வுலகிலே பிறந்தவர் இறந்து போதலும் இறந்து போனவர் மீண்டும் பிறப்பெய்துதலும் விழித்திருப்பவர் உறங்குவதும் உறங்கியவர் மீண்டும் விழிப்புறுதலும் போன்றதாம் என்னும் மெய்க்காட்சி வாய்மையே ஆதலின்; நல்அறம் செய்வோர் நல் உலகு அடைதலும் அல் அறம் செய்வோர் அருநரகு அடைதலும் உண்டு என உணர்தலின்-மேலும் பிறந்து வாழ்வோருள் வைத்து நன்மை பயக்கும் நல்வினையைச் செய்தவர் இறந்த பின்னர் நன்மையுடைய மேனிலையுலகங்களிலே சென்று இன்புற்றிருத்தலும் அல்லாத தீவினையைச் செய்தவர் இறந்த பின்னர்ப் பொறுத்தற்கரிய துன்பமுடைய நரக லோகத்திலே சென்று துன்பத்திலழுந்துதலும் உண்டு என்று திறவோர் காட்சியினால் தெளிந்திருத்தலாலே; உரவோர் களைந்தனர் கண்டனை ஆகு என-அறிஞர் அவற்றை நீக்கினர் என்று அறிவாயாக! என்று கூறா நிற்ப என்க.

(விளக்கம்) சொல்லும்- சொல்வான். கள் தன்னையும் மறப்பிக்கும் பெரியதொரு மயக்கஞ் செய்வதாகலின் மயக்குங் கள்ளும் என அதன் தீமையையும் விதந்தோதினன். ஈண்டு,

கையறி யாமை யுடைத்தே பொருள் கொடுத்து
மெய்யறி யாமை கொளல்       (குறள்-925)

எனவரும் திருவள்ளுவர் திருவாக்கும்,

ஏயின விதுவலான்மற் றேழைமைப் பால தென்னோ
தாயிவள் மனைவி யென்னும் தெளிவன்றேல் தரும மென்னாம்
தீவினை யைந்தின் ஒன்றாம் அன்றியும் திருக்கு நீங்கா
மாயையின் மயங்கு கின்றாம் மயக்கின்மேல் மயக்கும் வைத்தாம்

எனவரும் கம்பநாடர் திருவாக்கும் நினையற்பாலன

மன்னுயிர்-உடம்பில் நிலைபெற்ற வுயிர். கோறல்-கொல்லுதல் இனி நக்கசாரணர் நாகர்தலைவன் ஆகலின் அவனுடைய தகுதி நோக்கி ஈண்டு அறங் கூறும் சாதுவன் இல்லறத்தோர்க் கோதிய பஞ்சசீலம் என்னும் ஐவகை அறமும் கூறாமல் கள்ளுண்ணாமையும் கொல்லாமையும் ஆகிய இரண்டறங்களே கூறியொழிந்தான்; இவ்விரண்டுமே தலைசிறந்தனவாம் இவற்றையே கூறினன். ஏனைய பொய்யாமையும் காமமின்மையும் கள்ளாமையும் ஆகிய மூன்றும் அவர்க்கு ஆற்றலாகாவறங்கள் ஆதலின் என்க. என்னை? அவர் இன்னும் இல்லறமே தலைப்படாத காடுறை வாழ்வினர் ஆதலின் இவை அவர்க்கு விளங்காமையின் பயனில கூறலாய் முடியுமாதலான்.

ஈண்டு பிறந்தவர்.............விழித்தலும் எனவரும் இவ்வடிகள் உறங்குவது போலும் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு எனவரும் (339 திருக்குறட் கருத்தை இவர் பொன்போற் போற்றி வைத்தமை யுணர்க.

கயக்கு-கலக்கம். மேலே கயக்கறு மாக்கள் இவற்றைக் கடிந்தமைக்குக் காரணம் கூறுபவனும், நல்லறம் செய்வோர் நல்லுல கடைதலும் அல்லறஞ் செய்வோர் அருநரகு அடைதலும் உண்டு என்று அச்சுறுத்தினன் என்னை? அச்சமே கீழ்களது ஆசாரம் என்பதுபற்றி நீயிர் இவற்றைச் செய்வீராயின் அருநரகடைந்து அளவிலாத் துயரத்துக் காளாவீர் என்று, அச்சுறுத்தல் வேண்டிற் றென்க. உரவோர் அறிஞர்.

கண்டனை ஆக என்றது இதனை நன்குணர்ந்து கொள்ளுதி என்று வற்புறுத்தியபடியாம்.

நாகர் குருமகன் நகைத்து வினவுதல்

91-95: கடுநகை.....................உரையென

(இதன் பொருள்) கடுநகை எய்தி-அதுகேட்ட அந் நாகர் குருமகன் இவன் நமது நன்கொடையை இகழ்ந்ததூஉமன்றி அச் செயலுக்குத் தகுந்த காரணமும் கூறாமல் வாய்தந்தன கூறுகின்றான் என்று கருதி அவன் மடமை கருதிச் சினத்தோடு விலாவிற்ச் சிரித்து வினவுபவன்! புதுவோய்!; ஈங்கு உடம்பு விட்டு ஓடும் உயிர் உருக்கொண்டு ஓர் இடம் புகும் என்று எமக்கு உரைத்தாய்-இவ்வுலகத்திலே உடம்பைப் போகட்கு ஓடுகின்ற உயிரானது மீண்டும் உடம்பெடுத்துக் கொண்டு நல்லுலகமும் நரகருலகமும் ஆகிய இரண்டிடங்களுள் வைத்து ஓருலகத்திலே புகுதும் என்று கூறினையன்றோ? வறுங்காற்றேயாகிய உயிர் காற்றோடு கலந்தொழிதலன்றி; அவ்வுயிர் எவ்வணம் போய்ப்புகும்-இறந்தொழிந்த அவ்வுயிர் எவ்வாறு சென்று மற்றோருடம்பிலே புகமுடியும்? அவ்வகை செவ்வனம் உரையென-அது புகுதும் வகையை எமக்கு விளக்கமாகக் கூறிக்காண் என்று சொல்லிப் பின்னும் வெகுளா நிற்ப என்க.

(விளக்கம்) உயிருண்மையறியாதோர் உயிர்ப்பையே (பிராண வாயுவை) உயிர் என்ற கருதுதல் இயல்பாகலின் அவர் கருத்திற்கேற்ப உரைவிரித்தாம். இதனை

யாதுமில்லை உயிரிவை யாம் சொலும்
பூதமே யெனப் போந்திருந் தென்னொடு
வாதஞ் செய்கின்ற பூதமவ் வாதமோ
யாதைம் பூதங்க டம்முள்ளு மஃதினி

எனவரும் நீலகேசிச் செய்யுளுள் நீலகேசி ஐம்பூதங்களுள் என்னோடு வாதம் செய்யும் பூதம் அவ்வாதமோ (பிராணவாயுவோ) எனப் பூதவாதியை வினவுமாற்றா லறிக.

மூச்சுகாற்றே இவ்வுடம்பிற்குயிர், அஃதியங்குங்காறும் இவ்வுடம்பியங்கும். இயங்காதொழியின் உடம்பியங்காது. ஆகவே உடம்பிற் புகாது ஒழிந்த மூச்சுக்காற்றுக் காற்றுடன் கலப்பதன்றி வேறோர் உடம்பிற்புகும் என்பதும் வேறோரிடத்திலே வாழும் என்பதும் அந் நாகர் தலைவனுக்குப் பெரும் பேதைமையாகத் தோன்றினமையின். அப் பேதைமை நிலைக்களனாகப் பெருநகை தோன்றுவதாயிற்று. பண்டும் சினந்து வினவியவனுக்குச் சாதுவன் கூற்றுத் தகுந்த காரணமாகப் படாமையிற் பின்னும் சினந்தே வினவினான் என்பது மேலே சாதுவன் சினவாது இதுகேள்! என்று விடை கூறப்புகுமாற்றால் அறியலாம்.

சாதுவன் உயிருண்மையும் மறுபிறப்பும் பிறவும் நாகர் குருமகனுக்கு அறிவுறுத்துதல்

95-106: சினவா..............உரைத்தலும்

(இதன் பொருள்) சினவாது இதுகேள்-தலைமகனே! வெகுளாதே கொள்! நின் வினாக்களுக்கு விடை கூறுவல் அதனைக் கூர்ந்து கேட்பாயாக!; உடல் உயிர் வாழ்வுழி உற்றதை உணரும்-உடலின் கண்ணிருந்து உயிர் வாழ்கின்ற காலத்தே அவ்வுடல் தன்கண் வந்துறுகின்ற புலன்களுள் வைத்து யாதானும் ஒன்றனைத் தன் ஐம்பொறிகளுள் வைத்து அப் புலனுக்கு இயைந்த ஒரு பொறியாலே உணர்கின்ற இயல்புடையதாம்; மற்றையவுடம்பே மன் உயிர் நீங்கிடின் தடித்து எரியூட்டினும் தான் உணராது அவ்வாறு பொறிகளாலே புலன்களை உணரும் இயல்புடைய அவ்வுடம்பு தானே பொறிகளின் வாயிலாயுணரும் பொருளாய்த் தனக்குள்ளில் நிலைபெற்றிருந்த உயிர் போய்விட்ட காலத்தே வாளாலே துணித்துத் தீயாற் சுட்டாலும் தான் ஒரு சிறிதும் உணரமாட்டாது இவ்வியல்பு நீயும் நன்கறிந்ததே யாமன்றோ; எனின் உடம்பிடைப் போனது ஒன்று உண்டு என உணர் நீ-இங்ஙனமாதலின் பண்டு இன்பதுன்பங்களை நுகர்ந்திருந்த பொருளொன்று அவ்வுடம்பினின்றும் போய் விட்டது என்று தெரிகின்றதன்றே அதுவே அவ்வுயிர் என்று நீ உணர்ந்து கொள்ளக்கடவாய்; போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது யானோ அல்லேன் யாவரும் உணர்குவர்-தாம் வாழுகின்ற இல்லத்திலிருந்து புறப்பட்டுப் போனவர்க்கு அவர் புகுந்துறைவதற்கு மற்றோர் இல்லம் இருக்கும் என்பதனை யான் மட்டுமோ அறிவேன் யாவருமே நன்கறிகுவால்லரோ?; உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம் கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை-இனி இது நிற்க மற்றொன்று கூறுவல் கேள், நீ நின் இவ்விருப்பிடத்திலே உறங்கும்பொழுது உன் உடம்பு இவ்விடத்தினின்றும் தனியே பல காவத தூரத்திற்கப்பாலும் சென்று பல்வேறு செயல்களைச் செய்து இன்ப துன்பநுகர்ச்சிகளை எய்துமொரு விந்தையை நீ நின்னுடைய கனவிடத்தே பன்முறையும் கண்டிருப்பாயல்லையோ; ஆங்ஙனம் போகி அவ்வுயிர் செய்வினை பூண்ட யாக்கையில் புகுவது நீ தெளி-அவ்வாறே சென்று அந்த உயிரானது தான் செய்த வினைக்கிணங்க எடுத்த உடலின்கண் புகுந்து வாழ்வதாம் என்று நீ தெளிந்து கொள்ளுதி; என்று அவன் உரைத்தலும்- என்று சாதுவன் கூறியவளவிலே; என்க.

(விளக்கம்) செவ்வனம்- செவ்வையாக; விளக்கமாக. சினவாது என்றமையால் அவன் வெகுண்டமை பெற்றாம். உடல் உயிர் வாழ்வுழி உற்றதை யுணரும் என்க. உற்றதை என்றது புலனை சாதியொருமை. சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் புலன்களை உணரும் என்றவாறு. உடல் கருவிகளால் உணரும் என்பதாம். கருவி- மெய்வாய் கண் மூக்குச் செவி மனம் என்னும் ஆறுமாம். உயிர் நீங்கிடில் அவ்வுடம்பே உணராமையின் உணர்தற்கு வினை முதலாக அவ்வுடம்பிடை இருந்து போனது ஒன்றுண்டு என்று தெரிகின்றதன்றோ அதுவே உயிர் என நீ உணர் என்றறிவுறுத்தபடியாம். இங்ஙனம் புலன்களை யுணருமியல்பு உயிர்ப்பிற்கு இல்லை என்பதும் இதனால் அறிவுறுத்தினானுமாதலறிக.

ஓரிடத்திலிருந்து புறப்பட்டுப் போனவர் பிறிதோரிடத்தே சென்றுறைவர் என்பது கூறாமலே அமையும் என்பான் யாவரும் உணர்குவர் என்றான்.

இனி அவ்வுயிர் உடம்பு கிடப்பத் தான் மட்டும் புறம் போமாற்றை உணர்ததுவான் உடம்பீண்டொழியக் கடந்து சேட் சேறல் கனவினுங் காண்குவை என்றான். இதனால் கனவிற் காணப்படும் அருவுடம்பினுள் உயிர் இருத்தலைக் கூறாது கனவையே அஃதாவது அருவுடம்பையே உயிர் என்று அறிவுறுத்தானாம், என்னை? அவன் ஐயந்தீர்த்தற்கு அருவுடம்பினியல்பு கூறுதல் மிகையாய் அவனுக்குப் பிறிதும் ஐயந்தோற்றுவிக்குமாகலின் என்க.   

அவ்வுயிர் எவ்வணம் போய்ப்புகும் என்பதே அவன் வினாவாதலின் உயிர் உறக்கத்தே பருவுடம்பை நீத்து அருவுடம்பிற் சேட் சேறலைக் கனவின்கண் வைத்து அறிவுறுத்தான். உறங்கும் போது உடல் உயிர்ப்புடன் கிடத்தலின் இதனானும் உயிர்ப்பு உயிர் அன்று என்று அறிவுறுத்தானும் ஆயினன் ஆதலறிக.

இதனாற் பயன் நல்லறம் செய்வோர் நல்லுலகடைதலும் அல்லறம் செய்வோர் அருநரகடைதலும் கூடும் என்று அக் குருமகனுக்கு அறிவித்தலாம் என்க.

இதனால் அவன் நன்கொடையைத் தான் மறுத்தமைக்குச் சிறந்த காரணம் அறிவுறுத்தினமையும் அறிக.

நாகர் தலைவன் நன்றிநவின்று எமக்காம் நல்லறம் நவிலுக என்று சாதுவனைச் சரணடைதல்

104-111: எரிவிழி..................என்றலும்

(இதன் பொருள்) எரிவிழி நாகனும்- சாதுவன் கூறிய புதுமையுடைய மொழிகளைக் கேட்டவுடன் தீப்போன்று எரிகின்ற கண்களையுடைய அந் நாகர் குருமகன் பெரிதும் வியந்து பின்னும் அவனுடைய சொன்னயத்தாலே பிணிப்புண்டவனாய்ச் சாதுவனைப் பெரிதும் மதித்து; நன்று அறிசெட்டி நல் அடி வீழ்ந்து நல்லறத்தை நன்குணர்ந்த வணிகனாகிய அச் சாதுவனுடைய அழகிய அடிகளிலே வீழ்ந்து வணங்கி; கள்ளும் ஊனும் கைவிடின் இவ்வுடம்பின் உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன்- பெரியோய்! நீ கூறிய அறவுரை சிறந்ததே ஆயினும், நீ அறிவுறுத்தவாறு யானும் கள்ளையும் ஊனையும் உண்ணாது கைவிடு வேன்மன்! அங்ஙனம் அவற்றைக் கைவிட்டாலோ இந்த உடம்பினுள்ளே உறைந்து வாழும் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுதல் இயலாதேனாவேன் காண்!; தமக்கு ஒழிமரபின் சாவு உறும் காறும் எமக்கு ஆம் நல் அறம் எடுத்துரை என்றலும்- உயிர்கட்கு வரையறுத்துள்ள முறைமையாலே இந்த உடம்பு சாக்காடெய்து மளவும் எம்மால் ஆற்றலாகும் நல அறங்களை மட்டும் எடுத்துக் கூறுவாயாக! என்று வேண்டா நிற்றலும் என்க.

(விளக்கம்) கள்ளையும் ஊனையுமே உண்டு பழகி விட்டமையாலே அவற்றைக் கை விட்டால் வேறுணவு கோடல் எம்மாலியல்வதன்று என்பது கருத்து. தமக்கு ஒழிமரபு என்றது மன்னுயிர்கட்கு இன்னது செய்யலாகாது என்று விலக்கப்பட்ட முறைமையை. இவற்றை அன்றி வேறு அறம் உளவேல் கூறுக அவற்றைக் கடைப்பிடிப்பல் என்பது கருத்து.

நன்றறி செட்டி  நாகர்கடைப் பிடித்தற்கியன்ற நல்லறங் கூறுதல்

112-123: நன்று.............கொள்கென

(இதன் பொருள்) நன்று சொன்னாய் நல் நெறிப் படர்குவை உன் தனக்கு ஒல்லும் அற முரைக்கேன்-அது கேட்ட சாதுவன் பெரிதும் மகிழ்ந்து தலைமகனே நீ நன்றே கூறினை இனி நீ படிப்படியாக நன்னெறியிலே சென்று சென்று உய்பவும் உய்குவை காண்! நீ விரும்பியவாறே உன்னால் கடைப்பிடித் தொழுகற் பால அறங்களும் உள அவற்றைக் கூறுவல்கேள்!; உடைகல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின் அடுதொழில் ஒழிந்து ஆர் உயிர் ஓம்பி- என்னைப் போன்று கடலில்கண் தாம் ஏறிவரும் மரக்கலம் உடைந்துழி அதனினின்று ஒடி மரம் பற்றி வருகின்ற மக்கள் அரிதின் உயிர் தப்பி இங்கு வந்து உற்றங்கால் அவரைக் கொல்லும் தீத்தொழிலைக் கைவிட்டு அவருடைய அரிய உயிரைப் பாதுகாத்திடுவாயாக!; மூத்து விளி மா வொழித்து எவ்வுயிர் மாட்டும் தீத்திறம் ஒழிக என்-அப்பாலும் ஊன்தினறல் கைவிட மாட்டாயேனும், தாமே முதுமையுற்று இறந்துபடுகின்ற விலங்குகளின் ஊனை உண்பதல்லது எல்லா உயிர்களிடத்தும் அருள் உடையையாகித் தின்னுதற் பொருட்டாக அவற்றைக் கொல்லுகின்ற தீவினையைச் செய்யா தொழிவாயாக, இவ் விரண்டும் உனக்கு ஒல்லும் அறங்களே யாதலின் இவற்றையே கடைப்பிடித் தொழுகுதி என்று கூற சிறுமகன் உரைப்போன் ஈங்கு எமக்கு ஆகும் இவ்வறம் செய்கேன்-இவற்றைக் கேட்டுக் கீழ்மகனாகிய அந் நாகர் தலைவன் தன் உடம்பாட்டைக் கூறுபவன் ஐய! நீ கூறிய இவ்வற மிரண்டும் எம்மால் மேற் கொண்டொழுகத் தக்க அறமே ஆகும் ஆதலின் இவற்றைக் கடைப் பிடியாகக் கொண்டொழுகுவேன் காண்!; ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க-அதோ அவ்விடத்தே கிடக்கின்ற உனக்கு ஆக்கமாகின்ற பெறற்கரும் பொருள்களை யெல்லாம் நீ ஏற்றுக் கொள்வாயாக என்று சொல்லிச் சாதுவனுக்குப் பொருட்குவியல் சிலவற்றைக் காட்டிக் கூறுபவன்; பண்டும் பண்டும் கலங்கவிழ் மாக்களை உண்டேம்-ஐயனேபழைய காலந் தொட்டு மரக்கலம் கவிழ்ப்பெற்று உயிருய்ந்து ஈங்கு வந்துற்ற மாந்தர்களைப் பன்முறை கொன்று தின்றேமாக; ஈங்கு இவை அவர் தம் உறுபொருள்-இதோ இவ்விடத்தே குவிந்து கிடக்கும் இப் பொருள்கள் அம் மாந்தர் கொடுவந்தமையாலே மிக்குக் கிடக்கும் பொன் முதலிய பொருள்களாம். இவையேயன்றி; விரை மரம் மெல் துகில் விழுநிதிக் குப்பையோடு- அதோ அவ்விடத்தே சந்தன மரமும் அகிலும் பிறவுமாகிய நறுமணங் கமழும் மரங்களும் மெல்லிய ஆடைகளும் இன்னோரன்ன பிறவுமாகிய இவற்றையும் பொன் முதலிய உனக்குச் சிறந்த பொருட்குவியல்களோடே இக் குவியல்களையும் நீ ஏற்றுக் கொள்வாயாக! என்று வழங்கா நிற்ப; என்க.

(விளக்கம்) நன்று சொன்னாய் என்றான் முன் போன்று கடுநகை எய்தி இவற்றையும் இகழ்ந்து கை விடாமல் எமக்கு ஆம் நல் அறம் உரை என அறத்தைக் கேட்டற்கு அவாவி வேண்டுதல் பற்றி, அவ்வாறு அற நெறியை அவாவி நிற்போர் மேலும் மேலும் அந்நெறி பற்றி ஒழுகுதலியல்பாதல் பற்றி இனி நீ உய்ந்தாய் என்று உவகை கூறுவான், நன்னெறிப் படர்குவை என்று பாராட்டினன்; இக் கருத்தோடு

பல்சான் றீரே பல்சான் றீரே
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் மூப்பின் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை இரங்குவிர் மாதோ
நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
எல்லாரும் உவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமா ரதுவே

எனவரும் இனிய புறநானூற்றுப் பாடற் கருத்தும் ஒப்புக்காணத்தகும் (195)

இனி, ஒல்லும் அறநெறி உரைக்கேன்

என்னும் இது,

ஒல்லும் வகையான் அறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாம் செயல்         (33)

எனவரும் அருமைத் திருக்குறளையும் நினைப்பித்தலுணர்க

அடுதொழில்-கொல்லும் தொழில்

இனி ஊன் உண்ணாமல் என் உயிர் ஓம்புதல் ஆற்றேன் என்றானாகலின் அதற்குப் புறனடையாக ஒரு வழி கூறுவான், மூத்துவிளி மாக்களின் ஊனைத் தின்னுக என்றான்

இனி, ஈண்டு இச் சாதுவன் மூத்துவிளி மாவின் ஊனைத் தின்னுக என்றது செத்ததெல்லாம் மண்ணோடொத்தலினானும் ஊன்தின்னா தோம்புதல் அந் நாகர் தலைவனுக்கு ஒல்லாது என்பதானும் புறனடையாகக் கூறப்பட்டதே யன்றிப் பிறிதொன்று மில்லை. ஆதி புத்தர் அறமுரைக்குங் காலத்தே இங்ஙனமே கீழ் மக்கட்கு அறிவுறுத்தியிருத்தலும் கூடும். இதனைப் பிற்காலத்துப் பௌத்தர்கள் விதியறமே போலத் தஞ்சமய நூல்களினும் புகுத்தி விடுவார் ஆயினர் என்பதும், பிடக நூலிலேறிய இவ் விதி காரணமாக இக் காலத்தே பவுத்த சமயத் துறவோர் தாமும் விலைப்பாலில் ஊன் கொண்டு தின்கின்றனர். இங்ஙன மன்றித் தினற் பொருட்டாய் விலைப்பாலில் ஊன் கொண்டு தின்னலாம் என்று புத்தர் பெருமான் பிடக நூலிற் கூறி வைத்துள்ளார் என்பது அருட்பிழம்பாகிய அப் பெரியோர் இயல்பறியாதவர் படைத்து மொழிக் கிளவியே என்று உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

இனி ஈண்டுச் சாதுவன் ஊன் தின்றலைத் தீவினை என்பதனால் பண்டு பவுத்த சமயத்தைத் தழுவிய தண்டமிழாசான் சாத்தனாரை யுள்ளிட்ட தமிழகத்துப் பவுத்தர் எல்லாம் ஊன் உண்ணாமையை மேற் கொண்டிருந்தவரே என்பது புலனாகும். இது பற்றி யாம் நீலகேசி முன்னுரையினும் ஆராய்ச்சி செய்து வரைந்துள்ளேம். அறிய விரும்புவோர் அம் முன்னுரையைப் பயின்றறிக. ஈண்டு,

தீனற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டா லூன்றருவா ரில்    (256)

எனவரும் திருக்குறளும், நினைவிற் கொள்ளற்பாலதாம்.

தீத்திறம்- கொலை செய்யும் தீவினை. பொன்னும் மணியும் விரை மரமும் பிறவுமாகிய அரும்பொருள் எல்லாம் நக்க சாரணர் ஆகிய தமக்குப் பயன் படாமையின் உனக்கு ஆகும் அரும்பொருள் என்றான்.

பண்டும் பண்டும் என்னும் அடுக்குப் பன்மை பற்றி வந்தது. விரை மரம்-நறுமணப் பொருளாகிய சந்தனம் முதலியவை. விழுநிதிக்குவை என்றது பொன்மணி முதலியவற்றாலியன்ற அணிகலன்களை. அவை உடைகலப்பட்டு உய்ந்து வந்தோர் அணிந்திருந்தவை என்க.

காயசண்டிகை மணிமேகலையை ஆதிரை கையாற் பிச்சை பெறுக எனல்

123-129: எடுத்தனன்..................பெறுகென

(இதன் பொருள்) சந்திர தத்தன் என்னும் வணிகன் வங்கம் சேர்ந்தது- சாதுவன் அத் தீவினருகே சந்திர தத்தன் என்னும் வணிகன் மரக்கலம் வந்து சேர்ந்ததனைக் கண்டு; எடுத்துக் கொணர்ந்தனன் வந்து அதில் உடன் ஏறி இந்நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து- நாகர் தலைவன் கொள்கெனக் கொடுத்த சிறந்த பொருள்களில் வேண்டுமவற்றைக் கைக்கொண்டு அவற்றைப் பொதிகளாக்கி எடுத்துக் கொண்டு வந்து அம் மரக்கலத்தி லேறிக் கடல் கடந்து வந்து இப் பூம்புகார் நகரத்தை அடைந்து தன் கற்புடைய மனைவியோடு கூடி இனிது வாழ்க்கை நடத்தி; தன் மனை நன்பல தானமும் செய்தனன் தன்னில்லத்தே நன்மை தருகின்ற பல தானங்களையும் செய்து சிறந்தனன் காண்!; பூங்கொடி நல்லாய் ஆங்ஙனம் ஆகிய ஆதிரை கையால் பிச்சை பெறுக என- மகளிருள் சிறந்த மணிமேகலை நங்காய்! இவ்வாறு பத்தினிப் பெண்டிருள்ளும் தலை சிறந்து விளங்கா நின்ற அவ்வாதிரை நல்லாளுடைய பெருந்தகைமையுடைய கையாலே இடப்படுகின்ற ஆருயிர் மருந்தாகிய பிச்சையினை நீ முதன் முதலாக ஏற்றருளுக என்று அறிவியா நிற்ப என்க.

(விளக்கம்) வங்கம் சேர்ந்ததில் என்றது சேர்ந்த வங்கத்தில் என்றவாறு இனி வங்கம் சேர்ந்தது அதில் என்னும் மொழிகளில் நிலை மொழியீற்றினின்ற குற்றியலுகரமும் அஃதேறிய வல்லொற்றும் ஈற்றபலுயிரும் விகார வகையாற் கெட்டனவாகக் கொண்டு சேர்ந்தது+ அதில் எனக் கண்ணழித்து வினை முற்றும் சுட்டுப் பெயருமாக அறுத்துப் பொருள் கூறலுமாம்.

இந்நகர்-புகார்நகர். இவள்: ஆதிரை. ஆங்கனமாகிய என்றது அவ்வாறு பத்தினிகளுள் தலை சிறந்த பத்தினியாகத் திகழ்கின்ற என்பது பட நின்றது.

பூங்கொடி நல்லாய் என்றது மணிமேகலையை விளித்தபடியாம்

மணிமேகலை ஆதிரைநல்லாள்பாற் பிச்சை ஏற்றல்

130-135: மனையகம்..............மருந்தென்

(இதன் பொருள்) மணிமேகலை தான் மனையகம் புகுந்து புனையா ஓவியம் போல நிற்றலும்-அது கேட்ட மணிமேகலை தானும் அவளறிவுரையை ஏற்றுக் கொண்டவளாய் அவ்வாதிரை நல்லாள் மங்கல மனையின் முன்றிலிலே சென்று அமுத சுரபியைச் செங்கையில் ஏந்தி வண்ணங்களைக் கொண்டு எழுதப் படாத ஓவியம் போன்று வாய் வாளாது நிற்ப; ஆதிரை-அவள் வருகை கண்ட ஆதிரை நல்லாள் தானும்; தொழுது வலம் கொண்டு பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக என துயர் அறு கிளவியோடு- நிலவுலகத்தே வாழுகின்ற உயிர்களின் பசி நோய் ஒழிவதாக! என்று சொல்லி வாழ்த்தும் உயிர்களின் துயர் கெடுதற்குக் காரணமான வாழ்த்துரையோடு; அமுத சுரபியின் அகன்சுரை நிறைதர ஆருயிர் மருந்து இட்டனன்-அமுத சுரபி என்னும் அரும் பெறற்பாத்திரத்தினது அகன்ற உள்ளிடம் நிறையும்படி உணவாகிய ஆருயிர் மருந்தைப் பெய்தருளினள் என்பதாம்.

(விளக்கம்) மனையகம் என்றது முன்றிலை. புனையா ஓவியம்- வடிவ மட்டும் வரைந்து வண்ணம் தீட்டப்பெறாத நிலையில் உள்ள வோவியம். இவ்வுவமை மணிமேகலையின் மாண்புடைய இயற்கை யழகை ஆடையணி கலன்களாலே ஒப்பனை செய்யப்படாமை பற்றிக் கூறப்பட்டதாம் இங்ஙனமே ஒப்பனை  செய்யப்படாது இயற்கை யழகோடு மட்டு மிருந்த கோப்பெருந்தேவியாகிய தலைவியை ஆசிரியர் நக்கீரனார் தாமும் அம்மா சூர்ந்த அவிர் நூற் கலிங்கமொடு புனையா வோவியம் கடுப்ப என்றோதுவர் (நெடுநல்வாடை- 146-7) இன்னும் தண்டமிழா சான் சாத்தனார் இவ்வினிய வுவமையை, புனையா வோவியம் புறம் போந்தென்ன மனையகம் நீங்கி வாணுதல் விசாகை உலக அறவியின் ஊடு சென்றேறி எனப் பிறாண்டும் (22-88) ஓதி இன்புறுத்துவர் கவிச்சக்கரவர்த்தி யாகிய கம்பநாடர் தாமும் இப் புனையா வோவியத்தைப் புகையூட்டிச் சீதைக்குவமை கூறுவர்.

தேவுகெண்கடல் அமிழ்து கொண்டு அநங்கவேள் செய்த ஓவியம் புகையுண்டதே ஒக்கின்ற உருவாள் என்பது அத் தெய்வப் புலவர் திருவாக்கு (இராமா- காட்சிப்-11)

புனையா வோவியம் போல வாய்வாளாது நிற்றலும் என்க. துறவோர் பிச்சை ஏற்புழி ஒரு பசுக்கறக்கும் அளவுடைய பொழுது முன்றிலிலே வாய்வாளாது நின்று பொறுமையோடு ஏற்றல் வேண்டும்; அவ் வளவில் பிச்சை இட்டால் ஏற்றல் வேண்டும்; இடராயின், அயன் மனை முன்றிலிற் சென்று ஏற்றல் வேண்டும் என்பது துறவோர் திறத்தியன்ற தொரு விதியாம் என்ப.

பாரக மடங்கலும் பசிப்பிணி அறுகென வாழ்த்தும் துயரறு கிளவியோடு இட்டனள் என்க. துயர்அறு கிளவி- துயர் அறுதற்குக் காரணமான வாழ்த்துச் சொல்.

இனி, இக் காதையை- விஞ்சையர் பூங்கொடி ஈங்கு இவள் செய்திகேள்! என உரைப்போள் ஆதிரை கணவன் ஆகிப்போகி வழங்கி வங்கம் போகும் வணிகர் தம்முடன் செல்வுழி, முந்நீர் கலன் வெளவப் பற்றி மலைப்பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆகினன். போந்தோர் சாதுவன் சாவுற்றான் என, ஆதிரை அது கேட்டு எரிபொத்திப் புகுதலும்

எரி உறாஅது இனிதிருப்ப. தீவினை யாட்டியேன் யாது செய்கேன் என்றவள் ஏங்கலும், அசரீரி ஆதிரை கேள் உன் கணவனைக் கொண்டுய்ப்பப் போகி சேர்ந்தனன். இராஅன் வந்தனன் தோன்றும் ஒழிவாய் என மனையகம் புகுந்து முட்டாள் வியப்பினள் ஆயினள். கணவனும் துயில்கொள்ள எழுப்பலும் எழுந்தருள் எனப்போகி நோக்கி உரைத்தலும் கொடுமென வேண்டேன் என்றலும் கொள்கென ஏறி வாழ்ந்து செய்தனன் ஆதிரை கையால் பெறுகென காயசண்டிகை கூற நிற்றலும் ஆதிரை ஆருயிர் மருந்து இட்டனள் என இயைத்திடுக.

ஆதிரை பிச்சையிட்ட காதை முற்றிற்று.
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 09:24:59 AM
17. உலகவறவி புக்க காதை

(பதினேழாவது மணிமேகலை காயசண்டிகை என்னும் விச்சாதரி வயிற்று யானைத் தீயவித்து அம்பலம் புக்க பாட்டு)

அஃதாவது-அமுதசுரபி யென்னும் அரும்பெருந் தெய்வப் பாத்திரத்திலே முதன் முதலாக அகமலி உவகையின் பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம் பிச்சை ஏற்றல் பெருந்தக வுடைத்து என்னும் கருத்தோடு மணிமேகலை முதன் முதலாக அத்தகு மரபின் பத்தினியாகிய ஆதிரை நல்லாள் முன்றிலிலே சென்று புனையா ஓவியம் போல் நின்று அவ்வாதிரை நல்லாள் பாரக மடங்கலும் பசிப்பிணி அறுகெனத் தொழுது வலங்கொண்டு அமுதசுரபி நிறையப் பெய்த ஆருயிர் மருந்தாகிய பிச்சையை ஏற்றவள், அவ்வமுத சுரபியாலே ஆற்றாமாக்கள் அரும்பசி களைந்து நாடோறும் அருளறம் ஆற்றுதற்கு அந் நகரத்தே ஊரம்பலத்தே புகுந்து ஆங்கு ஆருயிர் ஓம்பும் செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு.

இதன்கண்- காயசண்டிகை என்னும் விச்சாதரி ஆனைத்தீநோயாலே ஆற்றவும் துயருழப்பவள், மணிமேகலையின் அறச் செயல்கண்டு உணவு வேண்டலும் அமுதசுரபியினின்றும் உணவு பெற்றுண்ட பொழுதே அவளது ஆனைத்தீ நோய் அகன்று விடுதலும் அவள் மணிமேகலைக்குத் தன் வரலாறு கற்போர் உள்ளம் கசிந்துருகுமாறு கூறுதலும், உலகவறவியின்கண் உறுபசியுழந்தோரும் பாதுகாப்பவர் ஆருமின்மையின் அரும்பிணி யுற்றோரும் இடுவோர்த் தேர்ந்திருப்போர் பலராவார், நீ அங்குச் சென்று அறம்புரிக என்று அறிவுறுத்துதலும் மணிமேகலை உலக அறவியின்பாற் சேறலும் ஆண்டுச் சம்பாபதி கோட்டத்தை மும்மையின் வணங்கிக் கந்திற் பாவையையும் கைதொழுதேத்திதலும், உலகவறவியின்கண் ஊண் ஒலி எழுதலும் பிறவும் அழகுற ஓதப்பட்டுள்ளன.

பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற
பிச்சைப் பாத்திரப் பெருஞ் சோற்று அமலை
அறத்தின் ஈட்டிய ஒண் பொருள் அறவோன்
திறத்து வழிப்படூஉம் செய்கை போல
வாங்கு கை வருந்த மன் உயிர்க்கு அளித்துத்
தான் தொலைவு இல்லாத் தகைமை நோக்கி
யானைத்தீ நோய் அகவயிற்று அடக்கிய
காயசண்டிகை எனும் காரிகை வணங்கி
நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று  17-010

குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்
அன்னை கேள் நீ ஆர் உயிர் மருத்துவி
துன்னிய என் நோய் துடைப்பாய்! என்றலும்
எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம்
பிடித்து அவள் கையில் பேணினள் பெய்தலும்
வயிறு காய் பெரும் பசி நீங்கி மற்று அவள்
துயரம் நீங்கித் தொழுதனள் உரைக்கும்  17-020

மாசு இல்வாள் ஒளி வட திசைச் சேடிக்
காசு இல் காஞ்சனபுரக் கடி நகர் உள்ளேன்
விஞ்சையன் தன்னொடு என் வெவ் வினை உருப்பத்
தென் திசைப் பொதியில் காணிய வந்தேன்
கடுவரல் அருவிக் கடும் புனல் கொழித்த
இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன்
புரி நூல் மார்பின் திரி புரி வார் சடை
மரவுரி உடையன் விருச்சிகன் என்போன்
பெருங் குலைப் பெண்ணைக் கருங் கனி அனையது ஓர்
இருங் கனி நாவல் பழம் ஒன்று ஏந்தி  17-030

தேக்கு இலை வைத்துச் சேண் நாறு பரப்பின்
பூக் கமழ் பொய்கை ஆடச் சென்றோன்
தீவினை உருத்தலின் செருக்கொடு சென்றேன்
காலால் அந்தக் கருங் கனி சிதைத்தேன்
உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன்
கண்டனன் என்னைக் கருங் கனிச் சிதைவுடன்
சீர் திகழ் நாவலில் திப்பியம் ஆனது
ஈர் ஆறு ஆண்டில் ஒரு கனி தருவது
அக் கனி உண்டோர் ஆறு ஈர் ஆண்டு
மக்கள் யாக்கையின் வரும் பசி நீங்குவர்  17-040

பன்னீராண்டில் ஒரு நாள் அல்லது
உண்ணா நோன்பினேன் உண் கனி சிதைத்தாய்!
அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து
தந்தித் தீயால் தனித் துயர் உழந்து
முந்நால் ஆண்டில் முதிர் கனி நான் ஈங்கு
உண்ணும் நாள் உன் உறு பசி களைக! என
அந் நாள் ஆங்கு அவன் இட்ட சாபம்
இந் நாள் போலும் இளங்கொடி! கெடுத்தனை!
வாடு பசி உழந்து மா முனி போய பின்
பாடு இமிழ் அருவிப் பய மலை ஒழிந்து என்  17-050

அலவலைச் செய்திக்கு அஞ்சினன் அகன்ற
இலகு ஒளி விஞ்சையன் விழுமமோடு எய்தி
ஆர் அணங்கு ஆகிய அருந் தவன் தன்னால்
காரணம் இன்றியும் கடு நோய் உழந்தனை!
வானூடு எழுக என மந்திரம் மறந்தேன்!
ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி
வயிறு காய் பெரும் பசி வருத்தும் என்றேற்கு
தீம் கனி கிழங்கு செழுங் காய் நல்லன
ஆங்கு அவன் கொணரவும் ஆற்றேன்ஆக
நீங்கல் ஆற்றான் நெடுந் துயர் எய்தி  17-060

ஆங்கு அவன் ஆங்கு எனக்கு அருளொடும் உரைப்போன்
சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்
கம்பம் இல்லாக் கழி பெருஞ் செல்வர்
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி
நோற்றோர் உறைவது ஓர் நோன் நகர் உண்டால்
பல நாள் ஆயினும் நிலனொடு போகி
அப் பதிப் புகுக என்று அவன் அருள்செய்ய
இப் பதிப் புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன்
இந்திர கோடணை விழவு அணி வரு நாள்
வந்து தோன்றி இம் மா நகர் மருங்கே  17-070

என் உறு பெரும் பசி கண்டனன் இரங்கி
பின் வரும் யாண்டு அவன் எண்ணினன் கழியும்
தணிவு இல் வெம் பசி தவிர்த்தனை வணங்கினேன்
மணிமேகலை! என் வான் பதிப் படர்கேன்
துக்கம் துடைக்கும் துகள் அறு மாதவர்
சக்கரவாளக் கோட்டம் உண்டு ஆங்கு அதில்
பலர் புகத் திறந்த பகு வாய் வாயில்
உலக அறவி ஒன்று உண்டு அதனிடை
ஊர்ஊர் ஆங்கண் உறு பசி உழந்தோர்
ஆரும் இன்மையின் அரும் பிணி உற்றோர்  17-080

இடுவோர்த் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால்
வடு வாழ் கூந்தல்! அதன்பால் போக என்று
ஆங்கு அவள் போகிய பின்னர் ஆய் இழை
ஓங்கிய வீதியின் ஒரு புடை ஒதுங்கி
வல முறை மும் முறை வந்தனை செய்து அவ்
உலக அறவியின் ஒரு தனி ஏறி
பதியோர் தம்மொடு பலர் தொழுது ஏத்தும்
முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கிக்
கந்து உடை நெடு நிலைக் காரணம் காட்டிய
தம் துணைப் பாவையைத் தான் தொழுது ஏத்தி  17-090

வெயில் சுட வெம்பிய வேய் கரி கானத்துக்
கருவி மா மழை தோன்றியதென்ன
பசி தின வருந்திய பைதல் மாக்கட்கு
அமுதசுரபியோடு ஆய் இழை தோன்றி
ஆபுத்திரன் கை அமுதசுரபி இஃது
யாவரும் வருக ஏற்போர் தாம்! என
ஊண் ஒலி அரவத்து ஒலி எழுந்தன்றே
யாணர்ப் பேர் ஊர் அம்பல மருங்கு என்  17-098

உரை

மணிமேகலை அமுதசுரபி சுரக்கின்ற ஆருயிர் மருந்தாகிய உண்டி கொடுத்து ஆற்றாமாக்கள் அரும் பசி களைதலும் அவ்வற்புதங் கண்ட காயசண்டிகை மணிமேகலையை வணங்குதலும்

1-8: பத்தினி..............வணங்கி

(இதன் பொருள்) பத்தினிப் பெண்டிர் பாத்து ஊண் ஏற்ற பிச்சைப் பாத்திரம் பெருஞ்சோற்று அமலை- பத்தினிப் பெண்டிருலளும் சிறந்த பத்தினிப் பெண்டிராகிய ஆதிரை நல்லாள் பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகெனத் தன்னை வலஞ் செய்து தொழுது பலரொடும் பகுத்துண்டற்கியன்ற ஆருயிர் மருந்தை அமுதசுரபியிலிட அவ்வுணவு அமுதசுரபியினின்றும் இடையறாது சுரக்கின்ற பெரிய சோற்றுத் திரளையை; அறத்தின் ஈட்டிய ஒண் பொருள் அறவோன் திறந்து வழிப்படும் செய்கை போல-அறநெறியிலே நின்று தொகுக்கப் பெற்ற ஒள்ளிய பொருளானது அவ்வறவோன்பால் நாடொறும் பெருக்க மெய்திப் பின்னரும் அவனாலே அவ்வற நெறியிலேயே செலவு செய்யப்பட்டு அவனுக்கும் பிறர்க்கும் ஆக்கமாகும் செயல்போல; வாங்கு கை வருந்த மன் உயிர்க்கு அளித்துத் தான் தொலைவு இல்லாத் தகைமை நோக்கி- மணிமேகலை தனது அறவொழுக்கங் காரணமாக எய்திய அவ்வமுத சுரபியினின்றுஞ் சுரக்கின்ற உண்டியை ஏற்போருடைய கைகள் வருந்துமாறு மன்னுயிர் பலவற்றிற்கும் வழங்கியும் தான் அவ்வுணவு சுரத்தல் ஒழியாத அதன் தெய்வத் தன்மையை அவளுடனிருந்தே நோக்கி; ஆனைத் தீ நோக்கி அகவயிற்று அடக்கிய காய சண்டிகை என்னும் காரிகை வணங்கி -ஆனைத் தீ யென்னும் கொடிய நோயைத் தனது வயிற்றினூடே அடக்கிப் பெரிதும் வருந்தி யிருக்கின்ற காய கண்டிகை என்னும் அவ் விச்சாதர மகள் மணிமேகலையின் திருவடிகளிலே வீழ்ந்து அன்போடு வணங்கி யென்க.

(விளக்கம்) பத்தினிப் பெண்டிர் என்றது ஆதிரை நல்லாளை. அவளிட்ட உணவு தானும் பலரோடிருந்து பகுத்துண்ணற் பொருட்டே அப் பத்தினியால் ஆக்கப்பெற்ற சிறப்புடையது என்பார் அதனைப் பாத்தூண் என்று விதந்தார்.

அஃதாவது பலருக்கும் பகுத்தூட்டப்படும் உணவு என்றவாறு.

ஈண்டு

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்

எனவருந் திருக்குறளும் (44) நினைக்கப்படும்.

பத்தினிப் பெண்டிர் கையில் ஏற்கப்பட்டதாதலின் அதன்கட் சுரக்கும் பெருஞ்சோற்றமலை மன்னுயிர்க் களித்தும் தொலைவில்லாத தாயிற்று எனத் தொலைவில்லாமைக்குப் பத்தினிப் பெண்டிர் பாத்தூண் என்றது குறிப்பேதுவாக நின்றது. என்னை? அமுதசுரபி அறவோர்பால் முதன் முதலாக ஏற்றால் நன்கு சுரக்கும் ஏனையோர்பால் இரப்பின் நன்கு சுரவாது, இதனை நன்கு நினைவிற் கொள்க எனபாள் தீவதிலகை மறந்தேன் அதன் திறம் அறங்கரியாக அருள்சுரந்தூட்டும் சிறந்தோர்க் கல்லது செவ்வனம் சுரவாது என்றறிவுறுத்தினமையும் அவ்வறிவுரையை மறவாதிருந்த மணிமேகலை தானும் முதன் முதலாக அகமலி உவகையிற் பத்தினிப்பெண்டிர் பண்புடன் இடூஉம் பிச்சையேற்றல் பெருந்தக வுடைத்து என்று காயசண்டிகைக்குக் கூறி ஆதிரைபால் ஏற்றமையும் ஈண்டு நினைக.

பெருஞ்சோற்றமலை- மிக்க சோற்றுத்திரளை

அறவோனால் அறத்தின் ஈட்டிய பொருள் அவ்வறவோன்பாற் பெருக்கம் எய்தி மீண்டும் அவன்பால் அறத்தின் வழிப்படும் பொழுது அழிவின்றி மேலும் மேலும் வளமாப்போலே அமுதசுரபியின்கண் அமலை தொலைவில்லாது வளர்வதாயிற்று என்று உவமை கூறியபடியாம். அறவோன்- மணிமேகலைக்குவமை அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் என்றது  அவள் முன்னை நல்வினையாற் பெற்ற அமுதசுரபியும் அதன்கண் ஆதிரைபால் ஏற்ற ஆருயிர் மருந்துமாகிய இரண்டற்கும் உவமையாகும். மன்னுயிர்க் களித்தும் எனல் வேண்டிய சிறப்பும்மை தொக்கது.

ஆனைத்தீநோய்- எத்துணை யுண்டாலும் இடையறாது பசித்துத் துன்புறுத்துவதொரு கொடிய நோய். அகவயிறு- வயிற்றகம். அடக்குதலருமை தோன்ற அடக்கிய என்றார்.

காயசண்டிகையின் அகவயிற்றடக்கிய ஆனைத்தீ நோயின் கொடுமையை அவள் கூறுதல்

9-16: நெடியோன்......................என்றலும்

(இதன் பொருள்)  அன்னை நீ கேள்-ஆருயிர்க் கெல்லாம் அன்னையே! நீ என் துயர் கேட்டருள்க!; நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று நீள் நிலமளந்த நெடுமால் தானும் மயங்கி இந் நிலவுலகத்திலே இராமனாகப் பிறந்துழலுங் காலத்தே வலிமையுடைய அடைத்தற் கரிய கடலிலே அணை கோலி யடைத்த பொழுது; குரங்கு கொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம்; குரங்குகள் பெயர்த்துக் கொணர்ந்து வீசிய நெடிய மலைகள் எல்லாம்; அணங்கு உடை அளக்கர் வயிறுபுக்கு ஆங்கு- தெய்வத் தன்மையையுடைய அக் கடலின் வயிற்றினுட் புகுந்து மறைந்தொழிந்தாற் போன்று; என்றன் பழவினைப் பயத்தால் இட்டது ஆற்றாக் கட்டழல் கடும்பசிப்பட்டேன்-அளியேன் என்னுடைய பழவினைப் பயனாலே இட்ட உணவு எவ்வளவேனும் ஒரு சிறிதும் தணிக்கவியலாத பெரு நெருப்பை ஒத்த பெரிய பசி நோய்வாய்ப் பட்டேன்காண்! ஆர் உயிர் மருத்துவி-ஆற்றுதலரிய பசிப் பிணியகற்றும் உயிர்களின் மருத்துவச்சியே!; துன்னிய என் நோய் துடைப்பாய் என்றலும்- நின் திருவடிகளில் தஞ்சமாக வந்தெய்திய என்னுடைய அக் கொடிய ஆனைத்தீ நோயைத் துவர நீக்கி என்னை உய்யக் கொள்வாயாக என்று வேண்டா நிற்றலும் என்க.

(விளக்கம்) நெடியோன்- திருமால். திருமாலும் உயிரினத்தவன் என்பதே பவுத்தர் கொள்கையாம். கடவுள் என்பது அவர்க்குடம் பாடன்று. ஆகவே அவன் பிறப்பெய்தியதற்குங் காரணம் மயக்கமே என்பதவர் கருத்தாகலின், நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி என்றாள். அணங்கு- தெய்வம். இனி வருத்துதலுடைய எனினுமாம். நெடுமலை-தான் ஏற்றுண்ணும் உணவிற்குவமை.

ஆருயிரை எல்லாம் ஊட்டி வளர்த்தலின் காயசண்டிகை மணிமேகலையை அன்னை! என்று விளிக்கின்றாள். ஆருயிரின் பசிப்பிணி தீர்த்தலின் மருத்துவி என்றாள். துன்னிய என்றது அடைக்கலம் புகுந்த என்றவாறு. நோய்-ஆனைத்தீநோய். காயசண்டிகை மணிமேகலை வழங்கிய உணவுண்டு ஆனைத் தீ நோய் அகலப்பெற்றுத் தன் வரலாறு கூறுதல்

17-26: எடுத்த.....................இருந்தேன்

(இதன் பொருள்) எடுத்த பாத்திரத்து அமுதம் பிடித்து ஏந்திய அவள் கையில் பேணினள் பெய்தலும்-மணிமேகலை ஆருயிர் ஓம்புதற்குத் தன் செங்கையில் தாங்கிய அமுதசுரபியிற் சுரந்த சோற்றில் ஒரு பிடி சோற்றைப் பிடித்து ஏற்றற்கு ஏந்திய காயசண்டிகையின் கையிலே அவள் வேண்டுகோளை நிறைவேற்றி அவளைப் பேணுங் கருத்துடையளாய் இடுதலும்; வயிறு காய பெரும்பசி நீங்கி மற்றவள் துயரம் நீங்கித் தொழுதனள் உரைக்கும்-ஆனைத் தீ நோய் காரணமாக இடையறாது தன் வயிறு காய்தற்குக் காரணமான பெரிய பசி தீர்ந்தொழிந்தமையாலே அக் காய சண்டிகை தன் தீராத மனத்துன்பமும் தீரப்பெற்று மகிழ்ந்து மணிமேகலையைக் கை குவித்துத் தொழுது கூறுவாள்; மாசு இல் வால் ஒளி வடதிசைச் சேடிக் காசு இல் காஞ்சினபுரக் கடிநகர் உள்ளேன்-அன்னையே! அளியேன் வரலாறு கூறுவல் கேட்டருளுக! யான் வட திசைக் கண்ணதாகிய குற்றமற்ற வெள்ளிய ஒளியையுடைய வெள்ளி மலையின் கண்ணுள்ள விததியாதரர் உலகிலே குற்றமற்ற காஞ்சனபுரம் என்னும் காவலமைந்த நகரத்திலுள்ள விச்சாதர மகளாவேன் காண்!; என் வெவ்வினை உருப்ப-என் வெவ்விய பழவினை உருத்து வந்தமையாலே; விஞ்சையன் தன்னொடு தென்திசைப் பொதியில் காணவந்தேன்-விச்சாதரனாகிய என் கணவனோடு கூடித் தென் திசையிலுள்ள பொதிய மலையைக் கண்டு தொழுதற் பொருட்டு வந்த யான்; கடுவால் அருவிக் கடும்புனல் கொழித்த விடுமணல் கான்யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன்- விரைந்து வருதலையுடைய அருவியாகிய கடிய நீர் கொழித்துப் போகட்ட ஒன்றோடொன் றொட்டாமல் கிடக்கும் மணற் பரப்பினையுடைய ஒரு காட்டியாற்றின்கட் சென்று ஆங்கு என் கணவனோடு ஒரு சேர வீற்றிருந்தேனாக; என்றாள் என்க.

(விளக்கம்) எடுத்த என்றது ஆருயிரோம்ப எடுத்த என்பதுபட நின்றது. பாத்திரம்-அமுதசுரபி. அமுதம் பிடித்து ஏந்திய அவள் கையிற் பெய்தலும் என மாறுக. கையிற் பெய்தலும் பேணினள் பெய்தலும் எனத் தனித்தனி கூட்டுக. பேணினள்-பேணி. அஃதாவது அவள் வேண்டுகோளைப் போற்றிக் கேட்டு அவ்வாறு அவள் நோய் துடைத்தல் வேண்டும் என்று குறிக்கொண்டு என்றவாறு. அமுதம் சோறு. சோற்றைப் பிடித்துண்டலும் பிடித்து ஈதலும் இயல்பு. ஒரு பிடி சோறு என்னும் வழக்கும் நோக்குக.

பண்டு எவ்வளவு உணவு இட்டாலும். ஆற்றப் படாத ஆனைத் தீப்பசி மணிமேகலை கையாற் பிடித்திட்ட ஒரு பிடி சோற்றாலே நீங்கிற்று என்றுணர்த்தியவாறாம். துயரம் என்றது மனத்துன்பத்தை. தொழுதனள்- தொழுது. சேடி- விச்சாதரருலகு. அது வெள்ளி மலையின்கண்ணதாகலின், வாலொளிச் சேடி என்றாள். வெவ்வினை- தீவினையாகிய பழவினை. உருப்ப- பக்குவ மெய்திப் பயன் நுகர்விக்கும் செவ்வித்தாக. காசு-குற்றம். விஞ்சையன் என்றது கணவன் என்பதுபடநின்றது. காணிய; காண-கண்டு தொழ என்பது கருத்து. கொழித்தல்- தெள்ளுதல். மணல் ஒன்றனோடு ஒன்று ஒட்டாமல் தனித்தனியே கிடத்தல் பற்றி விடு மணல் என்றாள்.

இதுவுமது

27-34: புரிநூன்......................சிதைத்தேன்

(இதன் பொருள்) புரிநூல் மார்பின் திரிபுரி வார்சடை மரவுரிஉடையன் விருச்சிகன் என்போன்- முறுக்குண்ட பூணுநூலுடைய மார்பையும் திரித்து முறுக்கிவிட்ட நீண்ட சடையையும் மரவுரியாகிய ஆடையையும் உடையவனாகிய விருச்சிகன் என்னும் முனிவன் ஒருவன்; பெண்ணைப் பெருங்குலை கருங்கனி அனையது ஓர் இருங்கனி நாவல் பழம் ஒன்று ஏந்தி-பனையினது பெரிய குலையின்கட் பழுத்த கரிய பனம் பழம் போன்ற ஒரு முறையில் ஒரோ ஒரு பெரிய பழத்தை மட்டும் பழுக்குமியல்புடைய நாவல்  மரத்தினது பழம் ஒன்றனைக் கையிலேந்தி வந்து; தேக்கு இலை வைத்து சேண நாறு பூ கமழ் பொய்கைப் பரப்பின் ஆடச் சென்றோன்- தேக்கினது இலையிலே அதனை ஓரிடத்தே வைத்து விட்டு நெடுந்தொலை நீர்ப் பூக்கள் மணக்கின்ற பொய் கையின்கண் நீராடச் சென்றானாக; தீவினை உருத்தலின்- தீய என் பழவினை தன் பயனை யூட்டுஞ் செவ்வி பெற்று வந்துற்றமையாலே அளியேன்; செருக்கொடு சென்றேன்- வழியைப் பார்த்துப் போகாமல் களிப்பொடு அங்கு மிங்கும் பார்த்துச் சென்றேனாதலின்; அந்தக் கருங்கனி காலால் சிதைத்தேன்-அந்தக் கரிய நாவற் கனியை என் காலாலே மிதித்துச் சிதைத் தொழித்தேன்; என்றாள் என்க.

(விளக்கம்) புரிநூல்-பூணுநூல்-வார்சடை- நெடியசடை.உடையன்- ஆடையை யணிந்தவன். பெண்ணை- பனை. நாவற்கனிக்குப் பனங்கனி உவமை. இருங்கனி- பெரிய கனி. ஓர் இருங்கனி நாவல் பன்னீராட்டைக்கொரு முறை ஒரு கனியே தருகின்ற நாவல் மரம் என்க. சேண்-தொலைவிடம். சென்றோன்- சென்றான்; ஆ ஓவாயிற்று. செருக்கு- களிப்பு.

இதுவுமது

35-46: உண்டல்...........களைகென

(இதன் பொருள்) உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன் பொய்கையில் நீராடியபின் தான் வைத்துச் சென்ற நாவற் பழத்தை உண்ணும் வேட்கையோடு மீண்டும் அங்கு வந்துற்ற அவ் விருச்சிக முனிவன்; கருங்கனிச் சிதைவுடன் என்னைக் கண்டனன்-கரிய அந் நாவற் பழம் சிதைந்து கிடத்தலையும் அதனைச் சிதைத்த அறிகுறியோடு நின்ற என்னையும் ஒருங்கே கண்டனன்; சீர் திகழ் நாவலில் திப்பியமானது ஈர் ஆறு ஆண்டின் ஒரு கனி தருவது- விச்சாதரியே! நின்னாற் சிதைக்கப்பட்ட இந் நாவற் கனியின் வரலாறு கேள்! சிறப்புற்று விளங்குகின்ற நாவல் மரங்களில் வைத்து இந்தக் கனிதந்த நாவல் மரமானது தெய்வத்தன்மை யுடையது, பன்னிரண்டாண்டிற்கு ஒரு முறை ஒரோவொரு கனியை மட்டுமே கனிந்து தருவது காண்!; அக் கனி உண்டோர் ஆறு ஈர் ஆண்டு மக்கள் யாக்கையின் வரும்பசி நீங்குவர்-அந்தக் கனியைத் தின்பவர் யாவரேனும் மீண்டும் அந் நாவல் மரம் கனி தரும் பன்னிரண்டாண்டும் மக்கள் யாக்கையின்கண் ஒரு நாளிற் பன்முறை வந்து வருத்தும் பசிப்பிணி நீங்கப் பெறுவர்; பன்னிராண்டில் ஒரு நாள் அல்லது உண்ணா நோன்பினேன்- பன்னிரண்டாண்டினுள் ஒரு நாள் உண்பதல்லது எஞ்சிய நாள்களில் உண்ணாத நோன்பையுடைய யான்; உண் கனி சிதைத்தாய்- உண்ணுதற்கு வைத்திருந்த இத் தெய்வக் கனியைக் காலாலே சிதைத்தொழிந்த நீ; அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து தந்தித் தீயால் தனித்துயர் உழந்து- வான் வழியே இயங்குதற்குரிய மறை மொழியை இழந்து ஆனைத் தீ யென்னும் கொடிய நோயாற் பற்றப்பட்டு ஒப்பற்ற பெருந்துன்பத்தை நுகர்ந்து; முந்நால் ஆண்டின் முதிர்கனி நான் ஈங்கு உண்ணும்நாள் உன் பசி களைக என மீண்டும் இற்றை நாளினின்றும் பன்னிரண்டாம் ஆண்டின்கண் இந் நாவன் மரத்திலே காய்ந்து முதிர்ந்த இத்தகைய கனியைப் பெற்று யான் இவ்விடத்திலே உண்ணும்பொழுது நீ தானும் உன் ஆனைத் தீ நோயா லெய்தும் பசியைத் தீர்த்துக் கொள்ளக் கடவை என்று சொல்லி; அந் நாள் ஆங்கு அவன் இட்ட சாபம் இந் நாள் போலும் இளங்கொடி கெடுத்தனை-அந்த நாளிலே அக் காட்டியாற்றின்கண் அவ் விருச்சிக முனிவன் இட்ட சாபம் நீங்கும் நாள் இந்த நாளே போலும்; நோன்பினாலே உயர்ந்த இளைய மலர்க்கொடி போலும் நீ ஒரு பிடி சோற்றினாலே அம் மாபெரும் பசியைத் தணித் தருளினை காண்!; என்றாள் என்க.

(விளக்கம்) திப்பியம்- தெய்வத் தன்மையுடையது; நோன்பு விரதம். உண்கனி: வினைத்தொகை. மந்திரம்- மறை மொழி பிறர் அறியா வண்ணம் தம்முள்ளேயே கணிக்கப்படுவது ஆதலின் அப் பெயர் பெற்றது. மந்திரம் இழந்து என்றது-அதனாலாம் பயனை இழந்து என்றவாறு.

தந்தி-யானை, ஆனைத்தீ நோயைத் தந்தித்தீ என்றார் முந்நாலாண்டு- பன்னிரண்டாண்டு அரும்பி மலர்ந்து பிஞ்சாகிக் காயாகிக் கனி யொன்று கனிதற்குப் பன்னீராண்டு ஆகும் என்பது தோன்ற முந் நாலாண்டின் முதிர்கனி என்றார். அந்நாள் இந் நாள் போலும் என்றது சாபமிட்ட நாளினின்றும் பன்னீராண்டும் கழிந்தபின் நிகழும் நாள் இது போலும் என்றவாறு.

இதுவுமது

49-61: வாடுபசி.............உரைப்போன்

(இதன் பொருள்) வாடுபசி உழந்து மாமுனி போயபின்-உடம்பு வாதெற்குக் காரணமான பெரிய பசியால் வருந்திச் சிறந்த முனிவனாகிய விருச்சிகன் அவ்விடத்தினின்றுஞ் சென்ற பின்னர்; என் அலவலைச் செய்திக்கு அஞ்சினன் பாடு இமிழ் அருவிப் பயமலை ஒழிந்து அகன்ற விலகு ஒளி விஞ்சையன்- எளியேன் விழிப்பின்மையாற் செய்த மனஞ் சுழன்று வருந்துதற்குக் காரணமான செயல் பற்றி அம் முனிவனால் யாது விளையுமோ என்று அச்ச மெய்தி ஆரவாரஞ் செய்து வீழுகின்ற அருவியையும் பயனையும் உடைய அம் மலையை விட்டு ஓடிப்போன மழுங்கிய ஒளியையுடைய என் கணவனாகிய விச்சாதரன்றானும்; விழுமமோடு எய்தி-துன்பத்தோடு மீண்டும் என்பால் வந்து யான் சாபத்தா லெய்திய ஆனைத் தீ நோயை அறிந்து பெரிதும் இரங்கி; ஆர் அணங்கு ஆகிய அருந்தவன் தன்னால் காரணம் இன்றியும் கடுநோய் உழந்தனை- பெறற் கரிய தெய்வத் தன்மையையுடைய அரிய தவத்தையுடைய முனிவனாலே காரணமில்லாமலே கடிய நோய்க்கு ஆளாகித் துன்புறுகின்றனை இதற்குக் கழுவாய் தேடுதற்கு யாம் நமது விச்சாதரருலகிற்கு இன்னே செல்வோம்; வானூடு எழுக என- வானத்தே என்னோடு எழுந்து வருவாயாக என்று பணித்தலும்; மந்திரம் மறந்தேன் ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி வயிறு காய் பெரும்பசி வருத்தும் என்றேற்கு-அது கேட்ட யான், ஐய வானூடு இயங்குதற்கு வேண்டிய மந்திரத்தையும் மறந்தொழிந்தேனே! எங்ஙனம் வானத்தே இயங்க மாட்டுவேன், மேலும், உடம்பினின்றும் உயிர் நீங்குமளவற்கு வெப்பத்தோடு தோன்றி வயிற்றினைச் சுட்டெரிக்கின்ற பெரிய பசித் தீத்தானும் வருத்துகின்றதே என் செய்கேன்? என்று சொல்லி வருந்துகின்ற எனக்கு; ஆங்கு அவன் தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன கொணரவும்-அது கேட்ட வப்பொழுதே அன்புமிக்க என் கணவன்றானும் காட்டினுட் சென்று இனிய பழங்களும் கிழங்குகளும் வளவிய காய்களும் ஆகிய நல்ல உணவுகளைக் கொண்டு வந்து கொடுப்பவும் அவற்றை யெல்லாம் உண்ட பின்னரும்; ஆற்றேன் ஆக-என் பசித்துன்பம் சிறிதும் தணிந்திலாமையாலே அது பெறாது வருந்துவேனாக; நீங்கல் ஆற்றான் நெடுந்துயர் எய்தி ஆங்கு-அந் நிலையில் என்னை நீங்கிச் செல்லவியலாதவனாய் என் பொருட்டுப் பொறுத்தற்கரிய துன்பம் எய்திய பொழுது; அவன் என்ககு அருளொடு உரைப்போன்-என் கணவன் எனக்குத் தன் அருளுடைமை காரணமாகக் கூறுபவன்; என்க.

(விளக்கம்) வாடுபசி: வினைத்தொகை. அலவலை-அலமரல்; அஃதாவது மனச்சுழற்சி. முனிவனால் யாது நேருமோ என்று அஞ்சிவிச்சாதரன் அம் மலைக்கு அப்பால் ஓடிப்போயினன் என்றவாறு பாடு ஆரவாரம். இமிழ் என்றது செய்கின்ற என்பதுபட நின்றது. பயம் பயன். அவை சந்தனம் முதலியவை. அணங்கு-தெய்வத் தன்மை. விலகு ஒளி எனக் கண்ணழித்து அச்சத்தால் மழுங்கிய ஒளி என்க. விழுமம்-துன்பம். விஞ்சையன் என்றது என் கணவன் என்பதுபட நின்றது.

உருப்பு- வெப்பம். நல்லன: பலவறிசொல்.

இதுவுமது

62-67: சம்பு............செய்ய

(இதன் பொருள்) சம்புத் தீவினுள் தமிழகம் மருங்கில்-அன்புடையோய்! இந்த ஆனைத் தீ நோயை ஒல்லுந்துணை ஆற்றிக்கோடற்கு ஓர் உபாயம் கூறவல் கேள்! இந்த நாவலந் தீவின்கண் யாம் இப்பொழுதிருக்கின்ற இத் தமிழ் நாட்டின் கண்; கம்பம் இல்லா- பகைவருக்கஞ்சி நடுங்குதல் ஒரு பொழுதும் இல்லாதவரும்; கழிபெருஞ்செல்வர் ஆற்றாமாக்கட்கு ஆற்றும் துணையாகி நோற்றோர் உறைவது ஓர் நோன் நகர் உண்டால் மாபெருஞ் செல்வமுடையோரும் தமக்குற்ற துன்பத்தைத் தாமே துடைத்துக் கொள்ளமாட்டாத எளிய மாக்கட்கெல்லாம் அவ்வத்துன்பத்தைத் துடைத்துக் கோடற்கு உற்ற துணைவர்களாகி மெய்ந்நெறி வாழ்க்கை வாழ்பவரும் ஆகி அதற்கியன்ற நோன்பினை பண்டும் பண்டும் பல பிறப்பிலே செய்து அடிப்பட்டு வருகன்ற மேன்மக்கள் வதிகின்ற படை வலிமையுடைய நகரம் ஒன்றுளது காண்! பல நாள் ஆயினும் நிலனொடு போகி அப் பதிபுகுக என்று அவன் அருள் செய்ய வானூடு இயங்கும் மந்திரம் மறந்தொழிந்தமையாலே பல நாள் கழியுமாயினும் நிலத்தின் வழியாகவே நடந்து அப் பூம்புகார் என்னும் அம் மாநகரத்திலே சென்று புகுவாயாக! என்று அறிவித்தருளிச் சென்றனன் என்றாள் என்க.

(விளக்கம்) சம்புத் தீவு-நாவலம் தீவு. தமிழகம் என்றது வடவேங்கடம் தென்குமரி ஆயிடைக் கிடந்த மூன்று தமிழ் நாட்டையும் கம்பம்- நடுக்கம்; இது பகைவர் வரவினால் நிகழ்வது. ஒரு பொழுதும் பகைவர் வரவு நிகழாமையின் அங்கு வாழும் செல்வர், நடுக்கமில்லாதார் என்றான் என்க. கழிபெருஞ் செல்வர் என்றது மாக வானிகர் வண்கை மாநாய்கனும், வருநிதி பிறர்க் கார்த்தும் மாசாத்துவானும் போன்ற கொழுங்குடிச் செல்வர்களை. அந் நகரத்தே பிறந்து அங்ஙனம் வாழ்தற்கு நோன்பு பல செய்திருத்தல் வேண்டும் என்பான், நோற்றோர் என்றான். ஆசிரியர் இளங்கோவடிகளாரும். அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர் உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய காயமலர்க் கண்ணியும் காதற் கொழூநனும் என்றோதுதலறிக. (மனையறம்-9-11). பாட்டிடை வைத்த குறிப்பால்-அப் பதி என்றது பூம்புகார் என்னும் அம் மாநகரம் என்பது பெறப்படும்.

அவன்-என் கணவன். அருள் செய்து போயினனாக என்று வருவித்து முடித்திடுக.

இதுவுமது

68-72: இப்பதி............கழியும்

(இதன் பொருள்) இப்பதிப் புகுந்து யான் உறைகின்றேன் நங்காய்! என் கணவன் அறிவித்தபடியே நிலத்திலே நடந்து வந்து இப் பூம்புகார் நகரத்தே புகுந்து இரந்துண்டு இவ்விடத்திலே உறைகின்றேன் காண்!; அவன்-என்பா லன்புமிக்க என் கணவன் நீங்கலாற்றாது ஒருவாறு நீங்கி எம் வித்தியாதரருல கிற்குச் சென்றவன்றானும், யாண்டுதோறும் இம் மாநகரத்திலே; இந்திர கோடணை விழா அணிவருநாள்-இந்திரவிழா அழகுற வருகின்ற நாளிலே; இம் மாநகர் மருங்கே வந்து-இப் பூம்புகார் நகரத்திலே வந்து; என் உறுபசி கண்டனன் இரங்கி என் முன் தோன்றி-எனது மிக்க பசித்துன்பத்தையறிந்து என் பொருட்டுப் பெரிதும் இரங்கி; பின்- பின்னர்; வரும் யாண்டு எண்ணினன் கழியும்-எதிர்வரும் யாண்டின் இந்திர விழா நாளில் வருதற்குக் கருதிச் செல்லா நிற்பன் காண்!; இதுவே என் வரலாறு என்று கூறி என்க.

(விளக்கம்) இப்பதி என்றது பூம்புகார் நகரத்தை. இந்திர கோடணை யாகிய விழா என்க. கோடணை விழா-இரு பெயரொட்டு விழாவின் அழகு வரும் நாள் என்க. உறுபசி- மிக்கபசி. பின் வருகின்ற யாண்டின் வருதற்கெண்ணி என்க.

காயசண்டிகை நன்றி கூறி விடை கொள்பவள் மணிமேகலை அறஞ்செய்தற்கேற்ற இடம் உலகவறவியே எனல்

73-83; தணிவில்........பின்னர்

(இதன் பொருள்) மணிமேகலை- மணிமேகலை என்னும் மாதவக் கொழுந்தே!; தணிவில் வெம்பசி தவிர்த்தனை வணங்கினேன் ஒரு பொழுதுந் தணிதலில்லாத என ஆனைத்தீயின் வெவ்விய அரும்பசியை ஒரு பிடி அன்னமாகிய ஆருயிர் மருந்தாலே துவரத் தீர்த்தருளினை,யாண் நினக்கு செய்யும் கைம்மாறும் உளதோ காண்! என் தலையாலே நின் திருவடியை வணங்கு நின்றேன் காண்!; என் வான்பதிப் படர்கேன்-இனி யான் என் சிறந்த நகரமாகிய விச்சாதர ருலகின்கண்ணதாகிய காஞ்சன புரத்திற்குச் செல்லுவேன் காண்! வானூடு இயங்கும் மந்திரமும் நினைவில் வந்துற்றது, யான் நினக்குக் கூறுவதும் ஒன்றுண்டு அஃதியாதெனின்; துக்கம் துடைக்கும் துகள் அறு மாதவர் சக்கரவாளக் கோட்டம் உண்டு- பிறவித் துன்பத்தைத் துவரத் துடைக்கின்ற குற்றமற்ற பெரிய துறவோர் வாழுமிடமாகிய சக்கரவாளக் கோட்டம் ஒன்று இந் நகரத்தே உண்டு அதனைச் சுடுகாட்டுக் கோட்டம் என்றலது இவ்வூரவர் கூறார்; ஆங்கு அதில்-அச் சக்கரவாளக் கோட்டத்தின்கண்; பலர் புகத் திறந்த புகுவாய் வாயில் உலக அறவி ஒன்று உண்டு- பலரும் தடையின்றிப் புகுதற் பொருட்டு அகலிதாகப் பகுக்கப்பட்ட வாயிலையுடைய உலக அறவி என்னும் பெயரையுடைய அம்பலம் ஒன்றுளது காண்; அதனிடை ஊர் ஊர் ஆங்கண் உறுபசி உழந்தோர்-ஊர்தோறும் ஊர்தோறும் மிக்க பசித்துன்பம் உற்றவரும்; அரும்பிணி உற்றோர்- தம்மால் தீர்த்தற்கரிய பிணிப்பட்டவருள்; ஆரும் இன்மையின்-தாம் இல்லாமையாலே வந்து குழுமி; இடுவோர் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால் -தமக்கு உணவு கொடுப்போர் உளரோ என்று ஆராய்ந்து அவ்விடத்திலேயே வதியும் ஆற்றாமாக்கள் சாலப் பலராவார் காண்!; வடுவு ஆழ் கூந்தல் அதன்பால் போகு என்று ஆங்கு அவள் போகிய பின்னர்-அறல் ஆழ்ந்து கிடக்கும் கூந்தலையுடைய ஆருயிர் மருத்துவியே நீ அவ்வுலகவறவியின்பாற் சென்று புகுவாயாக! என்று சொல்லி அவ்விடத்தினின்றும் காயசண்டிகை வானத்திலே எழுந்து போன பின்னர் என்க.

(விளக்கம்) ஆனைத்தீ நோயாலாகிய பசி என்பாள் தணிவில் வெம் பசி என்றாள். என் வான்பதிப்படர்கேன் எனப் பாட்டிடை வைத்த குறிப்பினால் மறந்த வானிலியங்கும் மந்திரமும் நினைவுறப் பெற்றேன் என்றாளுமாயிற்று. இனி, வான் என்பதிப்படர்கேன் என மாறி வான் வழியே என் பதிக்குப் போவேன் என்றாள் எனினுமாம். பவுத்தர் மெய்க் காட்சிகளுள் தலை சிறந்தது துக்கம் துடைத்தலே ஆதலின் அஃதொன்றனையே கூறி யொழிந்தாள்.

அந்நகர மாந்தர் சுடுகாட்டுக் கோட்டம் என்றலது கூறாராகலின் அதற்குச் சக்கரவாளக் கோட்டம் என்பதே தலையாய பெய ரென்பதை மணிமேகலைக்கு அறிவுறுப்பாள் போன்று சக்கரவாளக் கோட்டம் உண்டு; என்றாள். மணிமேகலை அச் சக்கரவாளக் கோட்டம் என்னும் அதன் பெயரும் வரலாறும் பண்டே அறிந்தவளாதலின் சக்கரவாளக் கோட்டத்தில் எனலே அமையும்;உண்டென்று அறிவுறுத்துதல் மிகையாம்பிற வெனின், அற்றன்று! அச் செய்தி காயசண்டிகை அறியாளாகலின் அங்ஙன மறிவுறத்தியதாகப் புலவர் ஓதினமை அவரது நுண்புலமைக்கு இதுவே ஒரு சிறந்த எடுத்துக் காட்டும் ஆதல் நுண்ணிதின் உணர்க. இனி, காயசண்டிகைக்கும் அப் பெயர் தெரியாதாம் பிறவெனின், மாருதவேகனும் நீயுமே சக்கரவாளக் கோட்டம் என்கின்றீர் அதற்குக் காரணமென்ன எனப் பண்டு சுதமதி வினவினள் என்றமையால் தேவகணத்தா ரெல்லாம் அவ் வரலாறு அறிவர் என்பது போந்தமையால் விச்சாதரியாகிய காயசண்டிகைக்கும் மாருத வேகனுக்குப் போல அவ் வரலாறு தெரியும் என்பது போதரப் புலவர் பெருமான் அங்ஙனம் ஓதினர் என்க.

உலக அறவி என்றது பூம்புகார் நகரத்து ஊர் அம்பலத்திற்கே சிறப்புப் பெயர்; என்னை? முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும் வழங்கத் தவா வளத்தது (சிலப்: மனையற- 3-4) என்பது பற்றி அஃதப் பெயர் பெற்றது என்க.

வடுவுஆழ் கூந்தல்-அறல் ஆழ்ந்து கிடக்கும் கூந்தல். இனி வடுவகிர் எனினுமாம். அதன்பாற் போகு என்றது நின் அருளறம் முட்டின்றி நடத்தற் கேற்ற இடம் அதுவே என்னும் குறிப்புடையதாம்.

மணிமேகலை உலகவறவியற் புகுதல்

83-90: ஆயிழை..........ஏத்தி

(இதன் பொருள்) ஆயிழை ஓங்கிய வீதியின் ஒரு புடை ஒதுங்கி அதுகேட்ட மணிமேகலை மகிழ்ந்து இரண்டு பக்கங்களினும் மாடங்கள் உயர்ந்துள்ள அவ் வீதியிலே ஒருபக்கமாக நடந்துபோய்; (உலக அறவியை) வலமுறை மும்முறை வந்தனை செய்து-வலம் வந்து மனமும் மொழியும் மெய்யுமாகிய முக்கருவிகளானும் முறைப்படியே (அதனை) வணங்கிய பின்னர்; அவ் வுலக வறவியின் ஒரு தனியேறி-அவ் வுலக வறவியென்னும் சிறந்த அம்பலத்தின்கண் மிகவும் சிறப்புற ஏறி; பதியோர் தம்மொடு பலர் தொழுது ஏத்தும் முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கி-அதன் கண்ணமைந்துள்ளதும் அந் நகர் வாழ் மாந்தரும் பிறவிடங் களிலிருந்து வருவோரும் ஆகிய பலராலும் தொழப்படுகின்ற சிறப்புடைய இறைவியாகிய சம்பாபதியின் திருக்கோயிலையும் அங்ஙனமே மும்முறையானும் வணங்கிப் பின்னர்; நெடுநிலைக் கந்துடை காரணங் காட்டிய தம் துணைப்பாவையைத் தான் தொழுது ஏத்தி-நெடிதாக நிற்கும் நிலையினையுடைய தூணின் கணிருந்து ஏது நிகழ்ச்சிகளை எடுத்துப் பண்டு சுதமதிக்குக் கூறியவாற்றல் தமக்கு உற்றுழியுதவுந் துணையாகிய கந்திற் பாவையாகிய தெய்வத்தையும் கை குவித்துத் தொழுது வழிபாடு செய்து என்க.

(விளக்கம்) மாடமோங்கிய வீதி என்க ஒரு புடை ஒதுங்கிப் போயது வருவோர் போவோர்க்கு இடையூறில்லாமைப் பொருட்டென்க. மும்முறை-மூன்று முறை எனினுமாம். ஒரு தனியேறி-சிறப்புற வேறி. பலர் என்றது, யாத்திரீகரை. தேவரும் முனிவருமாகிய பலரும் எனினுமாம். முன்னைப் பழைமைக்கும் முன்னைப் பழைமையுடையாளாதல் பற்றிச் சம்பாபதி என்னுங் கொற்றவையை முதியோள் என்றார். கோட்டம்-கோயில்.

பாவை- கந்திற்பாவை; சம்பாபதி கோயிலின்கண் கிழக்கேயுள்ள தொரு நெடுநிலைத் தூணில் மயனால் இயற்றப்பட்டதொரு பாவை. காரணம்-ஏது நிகழ்ச்சி. சுதமதிக்கு இப் பாவை மணிமேகலை நிலை கூறி மாதவியையும் சுதமதியையும் ஆற்றுவித்தமை பற்றித் தந்துணைப்பாவை என்றார். துயிலெழுப்பிய காதை 96-109 நோக்குக. இக் கருத்தறியாதார் இதற்குக் கூறும் உரை போலி யென்க. தந்துணை என்றது மாதவி சுதமதி தானாகிய மூவரையும் உளப்படுத்தோதிய படியாம்.

மணிமேகலை ஆற்றாமாக்கள் அரும்பசி களைதல்

91-98: வெயில்..............மருங்கென்

(இதன் பொருள்) வெயில் சுட வெம்பிய வேய்கரி கானத்து கருவி மாமழை தோன்றியது என்ன-முதுவேனிற் பருவத்து வெயிலாலே சுடப்பட்டு வெந்த மூங்கில்கள் கரிந்த காட்டிடத்தே மின்னலும் இடியுமாகிய தொகுதியையுடைய முகில்கள் தாமே வானத்தே தோன்றிப் பெரிய மழையைப் பெய்தாற் போல; பசிதின வருந்திய பைதல் மாக்கட்கு- பசியாலே தின்னப்பட்டுலந்த உடம்போடே வருந்தி ஆங்கு இடுவோர்த் தேர்ந்து வந்து குழுமிய ஆற்றா மாக்களிடையே; ஆயிழை அமுதசுரபியொடு தோன்றி- மணிமேகலை அமுதசுரபி என்னும் அவ்வரும்பெறற் பாத்திரத்தோடே எழுந்தருளி; அவர்களைப் பொது நோக்கான் நோக்கி; ஏற்போர் தாம் யாவரும் வருக- மக்களே நுங்களில் ஏற்றுண்போரெல்லாம் வாருங்கள்!; இஃது ஆபுத்திரன் கை அமுதசுரபி-இதோ யான் ஏந்தியிருக்கின்ற இத் திருவோடு பண்டு ஆபுத்திரன் என்னும் அறவோன் சிந்தாதேவியென்னும் செழுங்கலை நியமத்துத் தெய்வத்தின்பாற் பெற்று அனைத்துயிர்கட்கும் உண்டி கொடுத்து உயிர் கொடுத்த தெய்வத் திருவோடு ஆதலால் அனைவரும் வம்மின்; என என்று அழைத்தபொழுதே; யர்ணர்ப் பேரூர் அம்பலம் மருங்கு ஊண் ஒலி அரவத்து ஒலி எழுந்தன்று-புதுவருவாயையுடைய பெரிய நகரமாகிய பூம்புகாரில் உலக அறவி என்னும் அவ்வம்பலத்தே ஆற்றாமாக்கள் ஏற்றுண்ணுதலாலுண்டாகும் ஒலி பேராரவாரமாகி எழுந்தது என்க.

(விளக்கம்) வேய்- மூங்கில். மூங்கில் வெப்பத்தைப் பெரிதுல் பொறுத்துக் கொள்ளும் ஒரு புல். ஆகவே, வேயும் கரிகானம் எனம் வேண்டிய சிறப்பும்மை தொக்கது; செய்யுள் விகாரம்.

ஆபுத்திரன் செய்த அறத்தின் புகழ் உலகெலாம் பரவியிருக்கும் என்னும் கருத்தால் இஃது ஆபுத்திரன் கை அமுதசுரபி என்றாள். எனவே எல்லீரும் இனிதுண்ணலாம் என்றறிவித்தாளும் ஆயிற்று. பிச்சை ஏலாதாரும் அக் குழுவில் இருத்தல் கூடுமாகலின், அவர் வெகுளாமைப் பொருட்டு ஏற்போர் தாம் யாவரும் வருக என்றாள். அரவத்தொலி என்றது பேராரவாரம் என்றவாறு.

இனி, இக் காதையை- காயசண்டிகை நோக்கி வணங்கி, துடைப்பாய் என்றலும் மணிமேகலை பெய்தலும் அவள் உரைக்கும்; உரைப்பவள் அதன்பாற் போக என்று கூறிப் போகிய பின்னர் ஆயிழை ஒதுங்கிச் செய்து ஏறித்தொழுது வணங்கி ஏத்தி, தோன்றி வருக என அம்பலம் மருங்கு ஒலி யெழுந்தன்று என இயைத்திடுக.

உலக அறவி புக்க காதை முற்றிற்று.
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 09:27:48 AM
18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை

(பதினெட்டாவது மணிமேகலை அம்பலமடைந்தமை சித்திராபதி உதயகுமரனுக்குச் சொல்ல அவன் அம்பலம் புக்க பாட்டு)

அஃதாவது- மாதவியும் மணிமேகலையும் பவுத்தப் பள்ளி புக்கமை கேட்டுத் தணியாத் துன்பந் தலைத்தலை மேல்வர மனம் வெந்திருந்த சித்திராபதி மணிமேகலை பிச்சைப் பாத்திரம் ஏந்தி உலகவறவியினூடு சென்றேறிய செய்தி கேட்டவுடன் பழங்கரும்புண்ணக வயின் தீத்துறு செங்கோல் சென்று சுட்டாற் போன்று பெரிதும் வருந்தி, அவள்பால் இடங்கழி காமமோடிருந்த இளவரசனாகிய உதயகுமரன்பாற் சென்று மணிமேகலையைக் கைப்பற்றித் தேரிலேற்றி வருமாறு ஊக்குவித்தமையால் உதயகுமரன் மணிமேகலையைக் கைப்பற்றி வருங் கருத்தோடு அவளிருக்கின்ற உலகவறவி என்னும் அம்பலத்திற் சென்று புகுந்த செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு.

இதன்கண்- சித்திராபதியானவள் மணிமேகலை பிக்குணிக் கோலத்தோடு பிச்சைப் பாத்திரம் ஏந்தி உலகவறவியினூடு சென்றேறினள் என்ற செய்தி கேட்குக் கொதித்த உள்ளமொடு வெய்துயிர்த்துக் கலங்கித் தன்னோர் அனைய கூத்தியன் மடந்தையர்க் கெல்லாம் கூறும் பரிவுரைகளும், மணிமேகலை ஏந்திய பிச்சைக் கடிஞையைப் பிச்சை மாக்கள் பிறர் கைக்காட்டி உதயகுமரனால் அவளைப் பொற்றேர்க் கொண்டு போதேனாகின் யான் இன்னள் ஆகுவல் என்று சூளுரைத்துக் குறுவியர் பொடித்த முகத்தோடு இளங்கோவேந்தன் இருப்பிடங் குறுகும் காட்சியும், ஆங்கு அரசிளங்குமரன் திருந்தடி வணங்கி நிற்றலும் மணிமேகலையைக் கைப்பற்றமாட்டாத தனது ஏக்கறவு தோன்ற அவன் மணிமேகலையின் தாபதக் கோலம் தவறின்றோ என நலம் வினவுவான் போல வினவுதலும், சித்திராபதியும் உதயகுமரனும் தம்முட் சொல்லாட்டம் நிகழ்த்துதலும், உதயகுமரன் மணிமேகலையின்பாற் கண்ட தெய்வத்  தன்மைகளைச் சித்திராபதிக்குக் கூறி அவளைக் கைப்பற்ற நன்கு துணியானாதலும்; அது கண்ட சித்திராபதி அவ்விறைமகனைத் தன் வயப்படுத்தும் பொருட்டுச் சிறுநகை எய்திச் செப்புகின்ற அவளது பேச்சுத் திறங்களும், அவள் வயப்பட்ட அரசிளங்குமரன் உலகவறவி சென்று புகுதலும் ஆங்கு மணிமேகலையை அவன் வினவும் வினாக்களும், அதற்கவள் கூறும்விடைகளும் மணிமேகலை சம்பாபதி கோயிலுட்புகுந்து காயசண்டிகை வடிவங்கொண்டு மீண்டு வருதலும் மணிகேலை கோயிலுட் கரந்திருக்கின்றனள் என்று கருதிய உதயகுமரன் கோயிலுட்புகுந்து அவளைத் தேடுதலும்; காணாமல் திகைத்துச் சம்பாபதியாகிய தெய்வத்தை நோக்கிக் கூறுஞ் செய்தியும் சூளுறவும் பிறவும் இலக்கியவின்பம் பொதுள இயம்பப்பட்டுள்ளன.

ஆங்கு அது கேட்டு ஆங்கு அரும் புண் அகவயின்
தீத் துறு செங் கோல் சென்று சுட்டாங்குக்
கொதித்த உள்ளமொடு குரம்பு கொண்டு ஏறி
விதுப்புறு நெஞ்சினள் வெய்து உயிர்த்துக் கலங்கித்
தீர்ப்பல் இவ் அறம்! என சித்திராபதி தான்
கூத்து இயல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும்
கோவலன் இறந்த பின் கொடுந் துயர் எய்தி
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது
நகுதக்கன்றே! நல் நெடும் பேர் ஊர்
இது தக்கு என்போர்க்கு எள் உரை ஆயது!  18-010

காதலன் வீய கடுந் துயர் எய்திப்
போதல்செய்யா உயிரொடு புலந்து
நளி இரும் பொய்கை ஆடுநர் போல
முளி எரிப் புகூஉம் முது குடிப் பிறந்த
பத்தினிப் பெண்டிர் அல்லேம் பலர் தம்
கைத்தூண் வாழ்க்கைக் கடவியம் அன்றே
பாண் மகன் பட்டுழிப் படூஉம் பான்மை இல்
யாழ் இனம் போலும் இயல்பினம் அன்றியும்
நறுந் தாது உண்டு நயன் இல் காலை
வறும் பூத் துறக்கும் வண்டு போல்குவம்  18-020

வினை ஒழிகாலைத் திருவின் செல்வி
அனையேம் ஆகி ஆடவர்த் துறப்பேம்
தாபதக் கோலம் தாங்கினம் என்பது
யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே?
மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி
போது அவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய
உதயகுமரன் ஆம் உலகு ஆள் வண்டின்
சிதையா உள்ளம் செவ்விதின் அருந்தக்
கைக்கொண்டு ஆங்கு அவள் ஏந்திய கடிஞையைப்
பிச்சை மாக்கள் பிறர் கைக் காட்டி  18-030

மற்று அவன் தன்னால் மணிமேகலை தனைப்
பொன் தேர்க் கொண்டு போதேன் ஆகின்
சுடுமண் ஏற்றி அரங்கு சூழ் போகி
வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர்
அனையேன் ஆகி அரங்கக் கூத்தியர்
மனைஅகம் புகாஅ மரபினன் என்றே
வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகையுயிர்த்து
வஞ்சக் கிளவி மாண்பொடு தேர்ந்து
செறி வளை நல்லார் சிலர் புறம் சூழக்
குறு வியர் பொடித்த கோல வாள் முகத்தள்  18-040

கடுந் தேர் வீதி காலில் போகி
இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி
அரவ வண்டொடு தேன் இனம் ஆர்க்கும்
தரு மணல் ஞெமிரிய திரு நாறு ஒரு சிறைப்
பவழத் தூணத்து பசும் பொன் செஞ் சுவர்த்
திகழ் ஒளி நித்திலச் சித்திர விதானத்து
விளங்கு ஒளி பரந்த பளிங்கு செய் மண்டபத்து
துளங்கும் மான் ஊர்தித் தூ மலர்ப் பள்ளி
வெண் திரை விரிந்த வெண் நிறச் சாமரை
கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச  18-050

இருந்தோன் திருந்து அடி பொருந்தி நின்று ஏத்தித்
திருந்து எயிறு இலங்கச் செவ்வியின் நக்கு அவன்
மாதவி மணிமேகலையுடன் எய்திய
தாபதக் கோலம் தவறு இன்றோ? என
அரிது பெறு சிறப்பின் குருகு கருவுயிர்ப்ப
ஒரு தனி ஓங்கிய திரு மணிக் காஞ்சி
பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய
நாடகம் விரும்ப நல் நலம் கவினிக்
காமர் செவ்விக் கடி மலர் அவிழ்ந்தது
உதயகுமரன் எனும் ஒரு வண்டு உணீஇய  18-060

விரைவொடு வந்தேன் வியன் பெரு மூதூர்ப்
பாழ்ம்ம் பறந்தலை அம்பலத்து ஆயது
வாழ்க நின் கண்ணி! வாய் வாள் வேந்து! என
ஓங்கிய பௌவத்து உடைகலப் பட்டோன்
வான் புணை பெற்றென மற்று அவட்கு உரைப்போன்
மேவிய பளிங்கின் விருந்தின் பாவை இஃது
ஓவியச் செய்தி என்று ஒழிவேன் முன்னர்
காந்தள் அம் செங் கை தளை பிணி விடாஅ
ஏந்து இள வன முலை இறை நெரித்ததூஉம்
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த  18-070

முத்துக் கூர்த்தன்ன முள் எயிற்று அமுதம்
அருந்த ஏமாந்த ஆர் உயிர் தளிர்ப்ப
விருந்தின் மூரல் அரும்பியதூஉம்
மா இதழ்க் குவளை மலர் புறத்து ஓட்டிக்
காய் வேல் வென்ற கருங் கயல் நெடுங் கண்
அறிவு பிறிதாகியது ஆய் இழை தனக்கு என
செவிஅகம் புகூஉச் சென்ற செவ்வியும்
பளிங்கு புறத்து எறிந்த பவளப் பாவை என்
உளம் கொண்டு ஒளித்தாள் உயிர்க் காப்பிட்டு என்று
இடை இருள் யாமத்து இருந்தேன் முன்னர்ப்  18-080

பொன் திகழ் மேனி ஒருத்தி தோன்றிச்
செங்கோல் காட்டிச் செய் தவம் புரிந்த
அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய் என்றனள்
தெய்வம்கொல்லோ? திப்பியம்கொல்லோ?
எய்யா மையலேன் யான்! என்று அவன் சொலச்
சித்திராபதி தான் சிறு நகை எய்தி
அத் திறம் விடுவாய் அரசு இளங் குருசில்!
காமக் கள்ளாட்டிடை மயக்குற்றன
தேவர்க்கு ஆயினும் சிலவோ செப்பின்?
மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி  18-090

ஆயிரம் செங் கண் அமரர் கோன் பெற்றதும்
மேருக் குன்றத்து ஊரும் நீர்ச் சரவணத்து
அருந் திறல் முனிவர்க்கு ஆர் அணங்கு ஆகிய
பெரும் பெயர்ப் பெண்டிர்பின்பு உளம் போக்கிய
அங்கி மனையாள் அவரவர் வடிவு ஆய்த்
தங்கா வேட்கை தனை அவண் தணித்ததூஉம்
கேட்டும் அறிதியோ வாள் திறல் குருசில்?
கன்னிக் காவலும் கடியின் காவலும்
தன் உறு கணவன் சாவுறின் காவலும்
நிறையின் காத்துப் பிறர் பிறர்க் காணாது  18-100

கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப்
பெண்டிர் தம் குடியில் பிறந்தாள் அல்லள்
நாடவர் காண நல் அரங்கு ஏறி
ஆடலும் பாடலும் அழகும் காட்டி
சுருப்பு நாண் கருப்பு வில் அருப்புக் கணை தூவச்
செருக் கயல் நெடுங் கண் சுருக்கு வலைப் படுத்துக்
கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்குப்
பண் தேர் மொழியின் பயன் பல வாங்கி
வண்டின் துறக்கும் கொண்டி மகளிரைப்
பான்மையின் பிணித்துப் படிற்று உரை அடக்குதல்  18-110

கோன்முறை அன்றோ குமரற்கு? என்றலும்
உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து
விரை பரி நெடுந் தேர்மேல் சென்று ஏறி
ஆய் இழை இருந்த அம்பலம் எய்தி
காடு அமர் செல்வி கடிப் பசி களைய
ஓடு கைக்கொண்டு நின்று ஊட்டுநள் போலத்
தீப் பசி மாக்கட்குச் செழுஞ் சோறு ஈத்துப்
பாத்திரம் ஏந்திய பாவையைக் கண்டலும்
இடங்கழி காமமொடு அடங்காண் ஆகி
உடம்போடு என் தன் உள்ளகம் புகுந்து என்  18-120

நெஞ்சம் கவர்ந்த வஞ்சக் கள்வி
நோற்றூண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி
ஏற்றூண் விரும்பிய காரணம் என்? என
தானே தமியள் நின்றோள் முன்னர்
யானே கேட்டல் இயல்பு எனச் சென்று
நல்லாய்! என்கொல் நல் தவம் புரிந்தது?
சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப
என் அமர் காதலன் இராகுலன் ஈங்கு இவன்
தன் அடி தொழுதலும் தகவு! என வணங்கி
அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும்  18-130

இறை வளை முன்கை ஈங்கு இவன் பற்றினும்
தொன்று காதலன் சொல் எதிர் மறுத்தல்
நன்றி அன்று! என நடுங்கினள் மயங்கி
கேட்டது மொழியேன் கேள்வியாளரின்
தோட்ட செவியை நீ ஆகுவை ஆம் எனின்
பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும்
இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம்
மக்கள் யாக்கை இது என உணர்ந்து
மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன்
மண்டு அமர் முருக்கும் களிறு அனையார்க்கு  18-140

பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டோ
கேட்டனை ஆயின் வேட்டது செய்க! என
வாள் திறல் குருசிலை மடக்கொடி நீங்கி
முத்தை முதல்வி முதியாள் இருந்த
குச்சரக் குடிகை தன் அகம் புக்கு ஆங்கு
ஆடவர் செய்தி அறிகுநர் யார்? எனத்
தோடு அலர் கோதையைத் தொழுதனன் ஏத்தி
மாய விஞ்சை மந்திரம் ஓதிக்
காயசண்டிகை எனும் காரிகை வடிவு ஆய்
மணிமேகலை தான் வந்து தோன்ற  18-150

அணி மலர்த் தாரோன் அவள்பால் புக்குக்
குச்சரக் குடிகைக் குமரியை மரீஇப்
பிச்சைப் பாத்திரம் பெரும் பசி உழந்த
காயசண்டிகை தன் கையில் காட்டி
மாயையின் ஒளித்த மணிமேகலை தனை
ஈங்கு இம் மண்ணீட்டு யார் என உணர்கேன்?
ஆங்கு அவள் இவள் என்று அருளாய் ஆயிடின்
பல் நாள் ஆயினும் பாடுகிடப்பேன்!
இன்னும் கேளாய் இமையோர் பாவாய்!
பவளச் செவ் வாய்த் தவள வாள் நகையும்  18-160

அஞ்சனம் சேராச் செங் கயல் நெடுங் கணும்
முரிந்து கடை நெரிய வரிந்த சிலைப் புருவமும்
குவி முள் கருவியும் கோணமும் கூர் நுனைக்
கவை முள் கருவியும் ஆகிக் கடிகொள
கல்விப் பாகரின் காப்பு வலை ஓட்டி
வல் வாய் யாழின் மெல்லிதின் விளங்க
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப்
புதுக் கோள் யானை வேட்டம் வாய்ந்தென
முதியாள்! உன் தன் கோட்டம் புகுந்த
மதி வாள் முகத்து மணிமேகலை தனை
ஒழியப் போகேன் உன் அடி தொட்டேன்
இது குறை என்றனன் இறைமகன் தான் என்  18-172

உரை

மணிமேகலை பிக்குணிக் கோலங் கொண்டு அம்பலம்புக்க செய்திகேட்ட சித்திராபதியின் சீற்றமும் செயலும்

1-9: ஆங்கது................கூறும்

(இதன் பொருள்) சித்திராபதிதான்-முன்னரே தீவகச் சாந்தி செய்தரும் நன்னாள் மணிமேகலையோடு மாதவி வாராமையாலே தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வர நெஞ்சம் புண்ணாகியிருந்த சித்திராபதியாகிய மாதவியின்தாய்; ஆங்கு அது கேட்டாங்கு மணிமேகலை பிச்சைப் பாத்திரம் ஏந்திப் பிக்குணிக் கோலத்தோடு உலகவறவியினூடு சென்றேறினள் என்னும்  அப்பொழுது நிகழ்ந்த செய்தியைக் கேட்டவளவிலே; கரும்புண் அகவயின் தீதிறு செங்கோல் சென்று சுட்டாங்கு-பழம் பெரும் புண்ணினூடே தீயினுட் செருகிப் பழுக்கக் காய்ச்சிய சிவந்த சூட்டுக்கோல் புகுந்து சுட்டு வருத்தினாற் போன்று அச் செய்தி முன்னரே புண்பட்டிருந்த தன்னெஞ்சத்தை ஆற்றவும் வருத்தியதனாலே; கொதித்தவுள்ளமொடு குரம்பு கொண்டேறி விதுப்புற நெஞ்சினள் வெய்து உயிர்த்துக் கலங்கி- வெம்மிய நெஞ்சத்தோடு எல்லையைக் கடந்துயர்ந்து துடிதுடிக்கின்ற நெஞ்சத்தையுடையவளாகி வெய்தாக நெடுமூச் செறிந்து கலக்கமுற்று; இ அறம் தீர்ப்பல் என-மணிமேகலை மேற்கொண்ட இவ் வறத்தை ஒழித்து அவளை மீட்பல் என்று துணிந்து; கூத்தியல் மடந்தையர்க்கெல்லாம் கூறும்-அத் தெருவில் உறைகின்ற நாடகக் கணிகை மகளிர் அங்கு வந்து குழுமியவர்களை நோக்கிக் கூறுவாள் என்க.

(விளக்கம்) சித்தராபதி முன்பே நெஞ்சம் புண்ணாகி மாதவி மணிமேகலை இருவர் பெரிதும் வருந்தி யிருப்பளாதலின் இப் பொழுது மணிமேகலையும் பிக்குணியாகிய செய்தி ஆற்றொணாத்துயர் செய்தலியல்பே ஆகலின் அதற்கேற்ப உவமை தேர்ந்துரைப்பவர் கரும் புண் அகவயின் தீத்துறு செங்கோல் சென்று சுட்டாங்கு என்றினிதின் ஓதினர். சுட்டாங்கு-சுட்டாற்போல. சுட்டாங்கு அச் செய்தியாற் சுடப்பட்டுக் கொதித்த என்றவாறு. குரம்பு கொண்டேறுதல்-அணையிடப் பட்டிருந்து பின்னர் அவ்வணையையும் உடைத்துக் கொண்டு செல்லுதல். எனவே ஈண்டுச் சித்திராபதி முன்னர்த் துன்பத்தைத் தன்னுள் அடக்கி யிருந்த ஆற்றைலையும் அழித்து இத் துயரம் மிக்கெழுந்த தென்பார் இங்ஙனம் உவமை கூறினர். குரம்பு-அணைக்கட்டு. விதுப்புறு நெஞ்சு-இதற்கேதேனுஞ் செய்ய வேண்டும் என்று முனைப்புற்றுத் துடிக்கும் நெஞ்சம்.

கூத்தியன் மடந்தையர்க் கெல்லாம் கூறும் என்ற குறிப்பால் அப் பொழுது அவள் எய்திய இன்னல் நிலைக்கு இரங்கி அங்குக் கூத்தியல் மகளிர் வந்து குழுமினர் என்பது பெற்றாம்.

தீர்ப்பல் இவ்வறம் என்றது சித்திராபதியின் உட்கோள். கூத்தியல் மடந்தையர்- நாடகக் கணிகை மகளிர்.

சித்திராபதியின் சூள் உரை

7-15: கோவலன்.............அல்லேம்

(இதன் பொருள்) கோவலன் இறந்தபின் மாதவி கொடுந்துயர் எய்திய மாதவர் பள்ளியுள் அடைந்தது- நமரங்காள் எல்லீரும் கேளுங்கள்! கோவலன் என்னும் வணிகன் மாமதுரை சென்று கொலையுண்டிறந்த பின்னர் மாதவியாகிய என் மகள் கொடிய துன்ப மெய்திச் சிறந்த தவத்தோர்க்கே உரிய பவுத்தருடைய தவப் பள்ளியிலே புகுந்த செயலானது, நகுதக்கன்று நம்மனோர்க்கெல்லாம் நகத் தகுந்ததொரு செயலேயாயிற்று; நல்நெடும் பேரூர் இது தக்கு என்போர்க்கு எள் உரை ஆயது- நன்மையுடைய நெடிய பெரிய இப் பூம்புகார் நகரத்தே ஆடலும் பாடலும் அழகுமாகிய கலையைப் பேணி வாழுகின்ற இந் நாடகக் கணிகையர் செயலும் நமக்கு இன்றியமையாத தகுதியுடைய தொன்றே என்று நம்மைப் பாராட்டும் கலையுணர்வுடையோர்க்கெல்லாம் நம்மை இகழும் மொழியைத் தோற்றுவிப்பதாகவும் ஆயிற்றுக் கண்டீர்!; காதலன் வீய கடு துயர் எய்தி போதல் செல்லா உயிரொடு புலந்து- யாமெல்லாம் தம் காதலன் இறந்துபட்ட பொழுதே கடிய துயரத்தை அடைந்து தானே போயொழியாத தம் உயிரினது புன்மை கருதி அதனொடு பிணங்கி; நளி இரும் பொய்கை ஆடுநர் போல முளி எரி புகூஉம் முதுக்குடிப் பிறந்த பத்தினிப் பெண்டிர் அல்லேம்-குளிர்ந்த பெரிய நீர் நிலையில் புகுந்து நீராடுவார் போன்று வேகின்ற ஈமத்தீயிலே புகுதுமியல் புடைய பழைய உயர் குடியிலே பிறந்த பத்தினிப் பெண்டிரல்லமே என்றாள் என்க.

(விளக்கம்) கோவலன் என்றது யாரோ ஒரு வணிகனாகிய கோவலன் என்பதுபட நின்றது. என்னை? நகர நம்பியர் பலர். நம்மைக் காமுற்று வருபவர் ஆவர். அவருள் ஒருவனாகக் கருதிக் கோவலன் இறந்தமை பற்ற மாதவி ஒரு சிறிதும் கவலாதிருக்க வேண்டியவள் என்பதுபட அவனது அயன்மை தோன்ற வாளாது கோவலன் என்றாள் என்க. நம்மனோரால் நகுதக்கதொன்று. பேரூரின்கண் கலைப்பொருள் பற்றி இவர் வாழ்க்கையும் தக்கது என்று நம்மைப் பாராட்டும் கலையுணர் பெருமக்களுக்கு எள்ளுரை ஆயது என்று நுண்ணிதிற் கூறுக.

முதுக்குடிப் பிறந்தோர், காதலன் இறப்பின் அப்பொழுதே தானே போகும் உயிரே தலையாய பத்தினிப் பெண்டிர் உயிரியல்பாகும், அங்ஙனம் போகாத உயிரைப் புலந்து இடையாய பத்தினிப் பெண்டிர் முளியெரி புகுவர். கடையாய பத்தினிப் பெண்டிர் நோன்பு மேற்கொள்வர். மாதவி அம் முதுக்குடிப் பிறந்தாள் அல்லள் ஆகவும் அவர் செய்வது செய்தாள். இச் செயல் பத்தினிப் பெண்டிர்க்காயின் புகழும் மதிப்பும் தரும். நம்மனோர் செய்யின் நம்மனோரில் எஞ்சியோர்க்கு நகைப்பையும் முதுக்குடிப் பிறந்தோர்க்கு எள்ளல் உரையையுமே தோற்றுவிக்கும் என்று கூறுகின்றனள் என்க.

காதலர் இறந்தவழிப் பத்தினிப் பெண்டிர் நிலையை ஊரலர் தூற்றிய காதையில் மாதவியும் திறம்பட ஓதினமை ஈண்டு நினைவிற் கொள்க.

சித்திராபதி கணிகையரியல்பு கூறல்

15-24: பலர்..........அன்றே

(இதன் பொருள்) பலர் தம் கைத்து ஊண் வாழ்க்கை கடவியம் அன்றே!- நமரங்காள்! யாமெல்லாம் நம்மைக் காமுற்று வருகின்ற நகர நம்பியர் பலருடைய கைப்பொருளைக் கவர்ந்துண்ணும் வாழ்க்கையையே கடமையாகக் கொண்டுளேமல்லமோ!; பாண் மகன் பட்டுழிப் படூஉம் யாழ்இனம் போலும் பான்மையில் இயல்பினம்-இனி யாமெல்லாம் நம்மைக் காமுற்று வருவோன் ஒருவன் இறந்தொழிந்தானாயின் என்னாவோம் எனின் பாணன் இறந்தபொழுது அவன் பயின்ற யாழ் முதலிய இசைக் கருவி தம்மைப் பயிலவல்ல கலைவாணர் பிறர் கையிலே பட்டு அவராலே பயிலப்படுமாறுபோல நமக்கு வேண்டுவன செய்து நம்மொடு பயிலத் தகுந்த பிற காமுகர் பாலேம் ஆகும் இயல்பினம் அல்லமோ? அன்றியும்; நறுந்தாது உண்டு நயன்இல் காலை வறும் பூ துறக்கும் வண்டும் போல்குவம்-ஏன்? நம்மைக் காமுற்று வருபவன் செல்வனாந்துணையும் அவனை நயந்து செல்வம் இன்றி நல்குரவுடையனாய பொழுதே நாம் கைவிட்டு விடுவதனால் யாம் நறிய தேன் உள்ள துணையுமிருந்து அஃதொழிந்த பொழுது அந்த வறும்பூவைத் திரும்பிப் பாராமல் மீண்டுமொரு தேன் பொதுளிய மலரை நாடிச் செல்லும் வண்டினத்தையும் ஒப்பாகுவம் அல்லமோ? வண்டென நம்மை நாம் தாழ்த்திக் கூறிக் கொள்வானேன்?வினையொழி காலை திருவின் செல்வி அனையேம் ஆகி ஆடவர் துறப்பேம் வினையொழிகாலைத் திருவின் செல்வி அனையேம் ஆகி- ஆகூழ் ஒழிந்த விடத்தே தன்னாதரவிற் பட்டவரைக் கைவிட்டகன்று பிறரிடம் போகும் திருமகளாகிய தெய்வத்தைப் போலவே யாமும்; ஆடவர் துறப்பேம்- பொருளின்றி நல்குரவுற்றாரை அப் பொழுதே துறந்துவிடுவோ மல்லமோ! இத்தகைய இயல்புடைய நாடகக் கணிகையராகிய யாம்; தாபதக் கோலம் தாங்கினம் என்பது- யாரோ ஒரு காமுகன் இறந்துபட்டான் என்று துறவுக் கோலம் பூண்டேம் என்னும் இச் செய்தி உலகில் வாழும்; யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே- எத்தகையோரும் எள்ளி நகையாடுதற் கியன்ற தொரு செய்தியே யாகும் என்பது தேற்றம் என்றாள் என்க.

(விளக்கம்) பலர்- செல்வர் பலர். கைத்து-கைப்பொருள். பான் மையில் யாம் பாண்மகன் பட்டுழிப் படூஉம் யாழினம் போலும் இயல்பினம் என மாறுக. பான்மை- இயல்பு. இஃதென் சொல்லியவாறோ வெனின் பயிற்சிமிக்க பாணனுடைய யாழ் அவன் இறந்துழித் தான் அழிவின்றியே பயிற்சிமிக்க பிறபாணர் கையதாய்த் தன் தொழிலைச் செய்யுமாறுபோல யாமும் நமது பிறப்பியல்பினாலே நம்மொடு பயிலும் செல்வர்பாற் பயிலுதலும்; அவன் இறந்துபடின் துயரமின்றி அத்தகு பிறசெல்வர்பாற் பயிலுவோம், இதுவே நமக்கியல்பான பண்பு. இத்தகைய பண்புடைய யாம் ஆயிரவருள் ஒருவனாகக் கருதப்படுகின்ற ஒரு காமுகச் செல்வன் இறந்தான் எனத் துறவுக் கோலம் பூண்பது உலகில் அனைவராலும் எள்ளி நகைத்தற் குரியதொரு செயலேயாம் என்றவாறு. இது பொதுவிற் கூறப்பட்டதேனும் முன்பு கோவலன் இறந்தபின் கொடுந்துயர் எய்தி மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது நகுதக்கன்றே என்றதனை ஏதுவும் எடுத்துக் காட்டுங் கூறி மாதவி செயலைப் பழித்த படியாம்.

இனிக் கோவலன்  தன் மனைவி சிலம்பை விற்குமளவிற்கு நல்குர வெய்தினான் ஆகலின் அவனை மாதவியே கைவிடற்பால ளாவாள் அத்தகையோன் தானே அவளைத் துறந்தமை கருதின் அவள் மகிழவே வேண்டும். அவளஃதறியாது கடுந்துயர் எய்தி மாதவர் பள்ளியுள் அடைவது எத்துணைப் பேதைமைத் தென்றற்கு யாம் நறுந்தாதுண்டு நயனில் காலை வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம் அல்லமோ என்றாள். இவ்வாறு செய்வது இழிதகவுடைத்தென்று எண்ணற்க. திருவின் செல்விகூட நம்மோரனைய இயல்பினளே என்று தம் குலத்திற்கும் ஒரு சிறப்புக் கூறுவாள் யாம் திருவின் செல்வி அனையேம் ஆகி ஆடவர்த் துறப்பேம் என்றனள். ஈண்டு இவள் இராமவதாரத்திற் கம்பர் காட்டும் கொடுமனக் கூனி போலவே காணப்படுதல் இவளுடைய மொழித் திறத்தில் வைத்துணர்க.

சித்திராபதியின் சினஞ்சிறந்து செப்பிய வஞ்சினமொழி

25-36: மாதவி...........சாற்றி

(இதன் பொருள்) மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி போது அவிழ்செவ்வி பொருந்துதல் விரும்பிய- நத்தம் குலவொழுக்கங் கடந்த அறிவிலியாகிய அந்த மாதவி பெற்ற மணிமேகலையென்னும் பெயரையுடைய பூங்கொடி அரும்பி இதழ்விரித்து மலருகின்ற புத்தம் புதிய செவ்வியிலே அம் மலரினகத்தே அமர்ந்து புதுத் தேன் பருகுதற்குப் பெரிதும் அவர்க்கொண்ட;(அலமருகின்றது ஒரு மணிவண்டு நமரங்காள்! அவ்வண்டினை நீயிர் அறியீர் போலும் எதிர்பார்த்துத் திரிகின்ற அவ்வண்டு) உதயகுமரன் ஆம் உலகு ஆள் வண்டின்- உதயகுமரன் என்னும் பெயரையுடைய உலகத்தையே ஆளுமொரு சிறப்பான வண்டு கண்டீர்! அவ் வண்டின்; சிதையா உள்ளம் செவ்விதின் அருந்த-உறுதி குலையாத உள்ளமாகிய திருவாயினாலே நன்கு ஆரப் பருகும்படி; கைக் கொண்டு ஆங்கு அவள் ஏந்திய கடிஞையைப் பிச்சைமாக்கள் பிறர்கைக் காட்டி- யான் கைப்பற்றிக் கொண்டு அந்த மணிமேகலை தன் செங்கையி லேந்தியிருக்கின்ற பிச்சைக் கலத்தை இயல்பாகப் பிச்சை ஏற்கும் இரவலர் கையிடத்தாகும்படி பறித்து வீதியிலே வீசிப் போகட்டு; மற்று அவன்றன்னால் மணிமேகலை தனைப் பொன் தேர் கொண்டு போதேன் ஆகின்-முன் யான் கூறிய அவ்வுதிய குமரனாலேயே அவளை அவனது பொன்னாலியன்ற தேரிலே ஏற்றுவித்துக் கொண்டு வருவேன் காண்! அங்ஙனம் வாராதொழிவேனாயின்; சுடுமண் ஏற்றி அரங்கு சூழ் போகி வடுவொடு வாழும் மடந்தையர் தம் ஓர் அனையேன் ஆகி நம்மனோரில் குடிக்குற்றப்பட்டுத் தலையிலே செங்கலை ஏற்றிச் சுமக்கச் செய்து நாடக அரங்கினை நாட்டவர் காணச் சுற்றி வந்தமையாலே தமக்குண்டான பழியோடு உயிர் சுமந்து வாழுமகளிரோடு ஒரு தன்மையுடையேனாய்; அரங்கக் கூத்தியர் மனையகம் புகா மரபினன் என்று வஞ்சினம் சாற்றி-உலகினர் மதிப்பிற்குரியராக இனிது வாழுகின்ற நாடகக் கணிகையர் வாழ்கின்ற இல்லம் புகாத முறைமையினையுடைய இழிதகைமையுடையேன் ஆகுவன் இது வாய்மை! என்று பலரும் கேட்கச் சூண்மொழி சொல்லி; என்க.

(விளக்கம்) பூம்புகார் நகரத்தே வாழ்கின்ற நாடகக் கணிகையர் மரபினுள்ளும் சித்திராபதியின் குடி பெரிதும் சிறப்புடைய குடி என்பதனை

தெய்வ மால்வரைத் திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திரன் சிறுவனொடு
தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய
மலைப்பருஞ் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய
பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை
தாதவிழ் புரிகுழன் மாதவி    (அரங்கேற்று-1-7)

எனவும்,

மங்கை மாதவி வழிமுதற் றோன்றிய
அங்கர வல்குலும்     (6-2-4-5)

எனவும் வரும் சிலப்பதிகாரத்தானும் அறியப்பட்டது

அத்துணைச் சிறப்பான குடிப் பெருமையை இம் மாதவி தாபதக்கோலந் தாங்குமாற்றால் கெடுத் தொழிந்தாள் என்பது அவள் உட்கோள் ஆகும். மேலும் அவள் அக் குலக் கொழுந்தாகிய மணிமேகலை என்னும் மலர்பூங் கொம்பினை அது மலர்ந்துள்ள செவ்வியில் பிக்குணிக் கோலம் பூட்டிப் பிச்சைப் பாத்திரம் ஏந்திச் செல்ல விடுத்த செயலை எண்ணுந்தோறும் அவள் சினம் தலைத் தலைப் பெருகி வருகின்றது. அவளுக்கும் குடிப்பழி வந்துற்றதைக் காணவே, (தம்முள்ளும் சித்திராபதி குடியினாற் பெரிதும் தனக்கு மதிப்புண்டென்று செருக்குற்றிருந்த வட்கும் பழிவந்துற்றமை கண்டு உள்ளுள்ளே உவத்தற்கே ஏனைய கணிகையர்) அரங்கக் கூத்தியர் எல்லாம் ஒருங்கு குழுமி நிற்கின்றனர். ஆதலால் அளியள் அச் சித்திராபதி அம் மகளிர் முன் தன் குடிப்பழி தீர்த்தற்குத் தான் செய்யப் போவது இன்னது என்று சீற்றஞ் சிறக்கப் பேசும் இப் பேச்சுக்கள் பெரிதும் இயற்கை நவிற்சியே ஆதலறிக.

இனி, மாதவியின்பா லுண்டான வெறுப்பினாலே என் மகள் என்னாது அவளை ஏதிலாள் போன்று மாதவி என்றமையும் உணர்க மணிமேகலை தவறிலள்; அவள் தாய் பூட்டிய கோலத்தை ஏற்றனள் என்னுங் கருத்துடையளாதலின் அவளை மணிமேகலையாகிய வல்லி என்றும், அவ் வல்லி புதிதலரும் பூவின்கட் பொருந்திக் காமத் தேனுகர ஓர் உலகாள் வண்டு காத்திருக்கின்றது என்றும் கூறுமிக்கூற்றுத் தன் செருக்கை மீண்டும் நிலைநாட்டுதற் பொருட்டுத் தன் குடிப்பெருமை கூறியவாறு.

பிச்சைப் பாத்திர மேந்திப் பெருந் தெருப்புக்காளொரு கணிகை மகளை உலகாள் வேந்தன் மகன் ஒருவன் விரும்புதலும் உளதாமோ? என்று ஐயுறுவார் அக் கணிகையருட் பலர் உளராகலாமன்றே, அவர் தம் ஐயந் தீர்ப்பாள் அவ் வண்டு, சிதையாவுள்ளம் உடைய வண்டு என்றாள். அவ் வேந்தன் மகன் அவளைப் பெறுதற் பொருட்டு யான் ஏவிய அனைத்தும் செய்குவன் என்பது தோன்ற மற்றவன்றன்னால் மணிமேகலையைப் பொற்றேர்க் கொண்டு போதுவல் கண்டீர்! என்றாள்.

மணிமேகலை பிச்சைப் பாத்திரம் ஏந்தியதாலே வந்த இழிவொன்று மில்லை. அவள் தானும் என் வழிக்குடன்பட்டு வருவாள் என்பது தோன்ற பிச்சைப் பாத்திரம் பிறர் கைக் காட்டிப் பொற்றேர்க் கொண்டு போதுவல் என்றாள். இனி சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின் என்பதனாலும்( சிலப்- 14:146) பதியிலாரிற் குடிக் குற்றப் பட்டாரை ஏழு செங்கற் சுமத்தி ஊர் சூழ்வித்தல் மரபு எனவரும் அடியார்க்கு நல்லார் விளக்கத்தாலும் அக் காலத்தே அவ் வழக்க முண்மை புலனாகும்.

வடுவொடு வாழும் கணிகையர் ஏனைய கணிகையர் மனையகம்புகுதல் கூடாதென்னும் விதியுண்மையும் இவள் கூற்றாற் பெற்றாம்.

சித்திராபதி உதயகுமரன் அரண்மனை எய்துதல்

37-42: நெஞ்சு...........குறுகி

(இதன் பொருள்) நெஞ்சு புகை உயிர்த்து- சினத்தீப் பற்றி எரிதலாலே நெஞ்சினின்றும் புகைபோன்று வெய்தாக உயிர்ப் பெறிந்து அவ்விடத்தினின்றும் அரண்மனை நோக்கிச் செல்லுபவள் செல்லும் பொழுதே; மாண்பொடு வஞ்சக் கிளவி தேர்ந்து மன்னவன் மகனைத் தன் வழிப்படுத்தற்கு அவனுடைய மாட்சிமையோடு பொருந்துகின்ற வஞ்சக மொழிகளை இன்னின்னவாறு பேசுதல் வேண்டும் என்று தன்னெஞ்சத்தே ஆராய்ந்து கொண்டு; செறிவளை நல்லார் சிலர் புறஞ் சூழ- தன் குற்றேவற் சிலதியருள்ளும் திறமுடையார் ஒரு சிலரே தன்னைச் சூழ்ந்துவாரர் நிற்ப; குறுவியர் பொடித்த கோலவான் முகத்தள்-குறிய வியர்வை நீர் அரும்பியுள்ள அழகிய ஒளி படைத்த முகத்தையுடைய அச் சித்திராபதி; கடுந்தேர் வீதி காலின் போகி விரைந்து-தேர்களியங்குகின்ற வீதி வழியே காலாலே கடுகிச் சென்று; இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி- இளவரசனாகிய உதயகுமரன் உறைகின்ற இடத்தை அணுகி என்க.

(விளக்கம்) நெஞ்சத்தே சினத்தீ பற்றி எரிதலின் அங்கிருந்து வருகின்ற உயிர்ப்பைப் புகை என்றே குறிப்புவம மாக்கினர். தான் வயப்படுத்த வேண்டிய மன்னிளங் குமரன் பெருந்தகைமைக் கேற்பவே பேச வேண்டுதலின் வஞ்சக் கிளவியாயினும் மாண்புடையவே தேர்ந்து கொள்ளல் வேண்டிற்று. மன்னன் மகன்பாற் செல்ல வேண்டுதலின் திறமுடைய ஒரு சில பணிமகளிரையே தேர்ந்து அவர் தற்சூழச் சென்றாள் என்றவாறு. சித்திராபதி தானும் ஊர்வசி வழித் தோன்றியவள் ஆதலின் அவள் முகம் அந்த முதுமைக் காலத்தும் அழகும் ஒளியும் உடைத்தாகவே இருந்தது. அம் முகத்திற் பொடித்த குறு வியரும் அவட்கு ஓரணியே தந்தது என்பார் குறுவியர் பொடித்த கோலவாள் முகத்தள் என்று விதந்தோதினர். காலிற்போகி- காற்றுப் போல விரைந்து சென்று எனினுமாம்.

உதயகுமரன் இருக்கை வண்ணனை

43-51: அரவ.................ஏத்தி

(இதன் பொருள்) அரவ வண்டொடு தேன் இனம் ஆர்க்கும் தருமணல் ஞெமிரிய திரு நாறு ஒரு சிறை-நறுமணத்தினன்றி வேறிடஞ் செல்லுதலில்லாத இயல்புடைய வண்டினங்களும் தேனினங்களுமே இசை முரன்று திரிகின்ற புதுவதாகக் கொணர்ந்து பரப்பிய மணலையுடைய அழகின் பிறப்பிடமாகிய ஒரு பக்கத்திலே; பவழத்தூணத்துப் பசும் பொன் செஞ்சுவர்த் திகழ் ஒளி நித்திலச் சித்திரவிதானத்து விளங்கு ஒளி பரந்த-பவழங்களாலியன்ற தூண்களையும் பசிய பொன்னாலியன்ற சிவந்த சுவரின்கண் விளங்குகின்ற ஒளியும் முத்தினாலியன்ற சித்திரச் செயலமைந்த மேற்கட்டியினின்றும் விளங்குகின்ற ஒளியும் யாண்டும் பரவப்பெற்ற; பளிங்கு செய் மண்டபத்து- பளிங்கினாலே அழகுறச் செய்யப் பெற்றதொரு மண்டபத்தினூடே இடப்பட்ட; துளங்கு மான் ஊர்தித் தூமலர்ப்பள்ளி-ஒளிதவழுகின்ற பொன்னானும் மணியானுஞ் செய்த அரிமான்கள் சுமந்திருக்கின்ற தூய மலர்கள் பரப்பப்பட்ட பள்ளியின் மேல் வெள் திரை விரிந்த வெள்நிறச் சாமரை கொண்டு இருமருங்கும் கோதையர் வீச- வெள்ளிய பாற்கடலின் அலைகள் போல விரிந்து புரள்கின்ற வெண்ணிறமான சாமரைகளைச் செங்கையிலேந்தி அக் கட்டிலின் இரண்டு பக்கத்தேயும் அழகிய மங்கல மகளிர் நின்று வீசாநிற்ப; இருந்தோன் திருந்து அடி பொருந்தி வீற்றிருந்த அரசிளங்குமரனாகிய உதயகுமரன் அழகிய திருவடியிலே வீழ்ந்து வணங்கிச் சித்திராபதி; நின்று ஏத்தி எழுந்து கை கூப்பித் தொழுது நின்று பாராட்ட என்க. 

(விளக்கம்) அரவம்-இசைமுரற்சி. வண்டு தேன் சுரும்பு மிஞிறு தும்பி என்பன வண்டுகளின் வகைகள். அவற்றுள் வண்டும் தேன் என்பனவும் நறுமணங்கமழும் மலர்களிலன்றிப் பிற மலர்களிற் செல்லா என்பது பற்றி அவ் விரண்டனையும் ஓதினர் என்பர். இதனைச் சீவக சிந்தாமணியில்(892) மிஞிற்றில் சுரும்பு சிறத்தலின் அதனை முற்கூறினார்..........இவை எல்லா மணத்திலுஞ் செல்லும்; மதுவுண்டு தேக்கிடுகின்ற வண்டுகாள்! மதுவுண்டு தேக்கிடுகின்ற தேன்காள்! என்க. இவை நல்ல மணத்தே செல்லும் என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறும் நல்லுரையாலறிக.

தருமணல்- கொணர்ந்து பரப்பிய புதுமணல். ஞெமிர்தல்-பரப்புதல். திரு அழகு. நாறுதல்- தோன்றுதல். இனி, புதுமணல் பரப்பிய இடம் திருப்பாற்கடல்போற் றிகழ்தலின் திருமகள் பிறக்கும் பாற்கடற் பரப்புப் போலுமோரிடத்தே எனினுமாம்.

பவழத்தால் தூணிறுத்திப் பசும்பொன்னாற் சுவரியற்றப் பட்டிருத்தலின் செவ்வொளி திகழா நிற்ப, வெண்ணிற முத்துப் பந்தரின் கீழ் இயற்றப்பட்ட பளிக்கு மண்டபம் என்க. இது மண்டபத்துள்ளமைந்த பள்ளியறை என்க.

துளங்கும் மானூர்தி என்றார் மான்களும் மணியினும் பொன்னினும் இயன்றவை என்பது தோன்ற. துளங்கும்- ஒளிதவழ்கின்ற. மான்-அரிமான், சிங்கம். நான்கு சிங்கங்கள் சுமந்து நிற்பது போன்று அவற்றைக் கால்களாக அமைத்துச் செய்த பள்ளிக் கட்டில் என்க. அரசன் மகன் கட்டிலாதலின் அரிமான் சுமந்த கட்டில் வேண்டிற்று. திரை போல விரிந்த சாமரை என்க. கோதையர் என்றார் அவரது இளமை தோன்ற. இவர் பணி மகளிர். அடி பொருந்தி-அடியில் வீழ்ந்து வணங்கி. அரசரை வணங்குவோர் கொற்றங் கூறி வாழ்த்துதல் மரபு ஆதலின் ஏத்தி என்றது வாழ்த்தி என்றவாறாயிற்று.

உதயகுமரன் சித்திராபதியின்பால் மணிமேகலை நிலை என்னாயிற் றென்று வினாதலும் அவள் விடையும்.

52-63: திருந்து..................வேந்தென

(இதன் பொருள்) திருந்து எயிறு இலங்கச் செவ்வியின் நக்கவன் சித்திராபதியின் வருகை கண்டு தன் அழகிய பற்கள் தோன்று மளவில் இதழ் திறந்து சிறிதே சிரித்த உதயகுமரன் அவள் முகம் நோக்கி; மாதவி மணிமேகலையுடன் எய்திய தாபதக் கோலம் தவறு இன்றோ என-முதியோய் நின் மகள் மாதவி தன் மகளோடு ஒரு சேர மேற்கொண்ட பிக்குணிக் கோலம் பிழையின்றி நன்கு நடைபெறுகின்றதோ? என்று நாகரிகமாக வினவா நிற்ப; வாழ்க நின் கண்ணி அரிது பெறு சிறப்பின் குருகு கருவுயிர்ப்ப ஒரு தனி ஓங்கிய திருமணிக் காஞ்சி- மாதவி பெறுதலாலே ஒப்பற்ற பெருஞ் சிறப்போடு உயர்ந்து விளங்குகின்ற அழகிய மணிமேகலை தானும் இப்பொழுது; பாடல் சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய நாடகம் விரும்ப நல்நலம் கவினிக்காமர் செவ்விக் கடிமலர் அவிழ்ந்தது- புலவர்களால் பாடப்பெற்ற இசைப்பாடல்களோடு கூடிய நாடக நூலின்கண் உயர்ந்து திகழ்கின்ற ஆடற்கலை தானே தன்னைப் பெரிதும் விரும்பி வரவேற்கும்படி ஆடல் பாடல் அழகு என்னும் அழகிய மூன்று பண்புகளானும் நன்மைகள் நிரம்பிப் பேரழகெய்தி, காதல் பிறக்கும் செவ்வியையும் விளக்கத்தையும் உடையவளாய் நெஞ்சமாகிய நறுமலர் நன்கு தளையவிழப் பெற்றனள்; உதயகுமரன் என்னும் ஒரு வண்டு உணீஇய விரைவொடு வந்தேன்-அந் நாண் மலரிற் பொதுளிய நறுந்தேனை உதயகுமரன் என்னும் பெயரையுடைய ஒப்பற்ற வண்டு பருக வேண்டும் என்னும் குறிக்கோளுடனேயே அடிச்சி ஈண்டு விரைந்து வந்துளேன்; வாள் வாய் வேந்து-வாள் வென்றி வாய்ந்த வேந்தர் பெருமானே; வியன் பெருமூதூர் பாழ்மம் பறந்தலை அம்பலத்து ஆயது-ஆயினும் அம் மலர் இப்பொழுது மாதவி ஏவலாலே அகன்ற பெரிய பழைய இப் பூம்புகார் நகரத்தே பாழ்பட்ட இடமாகிய நன்காட்டின்கண் உலக வறவியென்னும் அம்பலத்தே சென்றுளது என்றாள் என்க.

(விளக்கம்) ஒரு காரியத்தில் தோல்வியுற்றிருப்பவர் அக் காரியத்துத் துணை செய்தவரைக் கண்ட பொழுது சிறிது நகைப்பது இயல்பு. அவ்வியல்பு தோன்ற உதயகுமரன் எயிறிலங்கு மளவே நக்கனன் என்றார். சித்திராபதி கூற்றின் வெளிப்படைப் பொருளே ஈண்டு உரையில் விரித்து வரையப்பட்டது. சித்திராபதி அங்குள்ள பணி மாந்தர்க்கும் பொருள் விளங்காத வகையில் உதய குமரனுக்கு மட்டுமே பொருள் தெளிவாகப் புலப்படும்படி கூறுகின்ற வித்தகம் பெரிதும் வியக்கத் தகுந்ததாம்.

சித்திராபதி தன் கூற்றின் பொருளை மறைத்தல் வேண்டி அதனையே சிலேடை வகையாலே வேறுவாய்பாட்டாற் கூறுகின்றாள். ஆகவே அவள் கூற்றிற்கு-அரிதாகவே காணப்படுகின்ற சிறப்பையுடைய குருக்கத்தி என்னும் பூங்கொடி ஒன்று அழகிய காஞ்சிப் பூவை மலர்ந்துளது. அங்ஙனம் மலர்ந்துள்ள அவ் வற்புத நிகழ்ச்சியைப் புலவர் பாடுஞ் சிறப்புடைய இப் பாரத கண்டத்திலே அமைந்த நாடுகளில் வாழ்கின்ற மாந்தர் எல்லாம் கண்டுகளிக்க விரும்புமாறு அக் காஞ்சிப்பூத்தானும் நாளரும்பாயிருந்தது; மண முதலிய நலங்களோடே அழகுடையதாய் நன்கு மலர்ந்துளது; அம் மலரிற்றேன் தெய்வத்தன்மையுடையதாக இருத்தல் வேண்டும் ஆகலின் அம் மலரின் திப்பியத் தேனை எங்கள் இறை மகனாகிய வண்டே உண்ண வேண்டும்; என்று கருதி இவ் வற்புத நிகழ்ச்சியைக் கூறவே யான் விரைந்து வந்தேன் என்பதே அவள் ஆண்டுள்ளோர் அறியும்படி கூறிய செய்தியாம்.

இதன் கண்-குருகு-குருக்கத்தி; மாதவி. கருவுயிர்ப்ப-மலரைத் தோற்றுவிக்க; ஈன. மணிக்காஞ்சி-அழகிய காஞ்சி மரம்(மாதவி மகள்) மணிமேகலை என்பவள். பாடல்-இசைப் பாடல்-இயல் பாடல்; பரதம்- பரதகண்டம்; பரதநூல். நாடகம்-கூத்து-நாட்டில் வாழ்வோர். நன்னலம்- நல்ல அழகு; அழகிய பெண்மை நலம். காமர் செவ்வி-காதல் தோன்றும் செவ்வி; அழகிய செவ்வி. கடிமலர் அவிழ்தல்- மணமுடைய மலர் மலர்தல். திருமணம் புரிதற்கியன்ற பூப்புப் பருவம் அடைதல்.

மணிமேகலையை மலராக உருவகித்தமைக்கும் அவளை மலராகவே கூறியதற்கும் உதயகுமரனை வண்டாகக் கூறியது பொருந்துதலும் உணர்க.

உதயகுமரன் அவள்பால் இடங்கழி காமமுடையாள் என்பதனை அவள் முன்பே அறிவாள் ஆதலின் அவள் உலகவறவியில் இருக்கும் பொழுதே சென்று கைப்பற்றுக, இன்றேல் வேறிடங்கட்குப் போதலும் கூடும் என்று அவனை ஊக்குவாள் யான்  விரைவொடு வந்தேன் என்றாள். முன்போல அவள் பகவனத்தாணையால் பன்மரம் பூக்கும் மலர் வனத்தில் இல்லை, இப்பொழுது அச்சஞ் சிறிதுமின்றிக் கைப்பற்றி வரலாம் என்பாள் அது பாழ்ம் பறந்தலை அம்பலத்தாயது என்றாள். நீ வேந்தன் என்பாள் வாய்வாள் வேந்தே என்பாள் வாய்வாள் வேந்தே என்றாள். இம்முறை நீ வெற்றியொடு மீள்குவை என்பாள் நின் கண்ணி வாழ்க! என்றாள்.

மணிமேகலையின்பால் காதல் கொண்டு கைகூடாமையால் ஏக்கற்றிருக்கும் உதயகுமரனின் உள்ளம்

63-80: ஓங்கிய...........முன்னர்

(இதன் பொருள்) ஓங்கிய பவுவத்து உடைகலப்பட்டோன் வான் புணை பெற்றென-அலைகள் உயர்ந்த பெரிய கடலின்கண் தான் ஊர்ந்து வந்த மரக்கலம் உடையக் கடலின் மூழ்கி உயிர் துறக்கும் நிலையை யடைந்தவொருவன் அவ்விடத்திலேயே தான் உய்ந்து கரையை எய்துதற் கேற்ற சிறப்புடைய தெப்பத்தைக் கண்டு அதனைத் தவறவிடாமல் கைப்பற்றுதல் போன்று; மணிமேகலையின்பால் தனக்குண்டான காமக்கடலை நீந்த மாட்டாது உயிர் துறக்கும் நிலையிலிருந்த உதயகுமரன் அச் சித்திராபதியின் வாயிலாய் இனி மணிமேகலையைக் கைப்பற்றி உய்யலாம் போலும் என்னும் உறுதி கொண்ட உள்ளத்தவனாய்; மற்று அவட்கு உரைப்போன்-அச் சித்திராபதிக்குக் கூறுவான்!; இஃது மேவிய பளிங்கின் விருந்தின் பாவை ஓவியச் செய்தி என்று ஒழிவேன் முன்னர்-மூதாட்டியே கேள்! பளிக்கறையினுள்ளிருந்து புறத்தே தோற்றிய மணிமேகலையின் உருவத்தை யான் கண்ணுற்ற பொழுது இவ்வுருவம் அதற்குத் தகந்த பளிங்கின் கண் ஓவியப் புலமைமிக்கோன் ஒரு வித்தகன் தன்கைத்திறம் தோன்ற இதுகாறும் யாரானும் வரையப்படாததொரு புதுமையோடு வரையப்பட்டதொரு பெண்ணோவியம் என்றே எண்ணிப் பெரிதும் அவ்வோவியன் தன்னுள்ளத்தே கருதிய அழகின் சிறப்பினை யானும் கருதிப்பார்த்து அஃது ஓர் ஓவியச் செயலே என்று அவ்விடத்தினின்றும் புறப்படுகின்ற பொழுது என் கண் முன்னரே; காந்தளம் செங்கைத் தளைபிணி விடா ஏந்து இள வனமுலை இறை நெரித்ததூஉம்-அங்ஙனம் கருதப்பட்டு நின்ற அம் மணிமேகலையின் செங்காந்தள் மலர் போன்ற சிவந்த கைகள் விரலாலே ஒன்றனோடொன்று பிணித்துக் கொண்ட பிணிப்பினை விடாவாய் அவளுடைய அணந்த இளைய அழகிய முலையிரண்டனையும் ஒரு சேரச் சிறிது நெரித்த செய்கையும்; அன்றியும், ஒளிர்பவளத்துள் ஒத்து ஒளி சிறந்த முத்து கூர்த்து அன்ன முள் எயிற்று அமுதம் அருந்து ஏமாந்த ஆர் உயிர் தளர்ப்ப-அவளுடைய ஒளியுடைய பவளம் போன்று சிவந்த திருவாயினுள்ளே தம்முள் நிரல்பட்டு ஒத்து வெள்ளொளியினாலே சிறப்புற்ற முத்துக்கள் தமக்கியல்பான வட்ட வடிவத்தைப் பெறாமல் கூர்த்திருந்தாற்போன்று கூரிய அவளதுவாலெயிற்றின் ஊறுகின்ற அமிழ்தினும் இனிய நீரைப் பருகுதற்கு ஏக்கற்று நிற்கின்ற உய்தற்கரிய என் உயிர் தழைக்கும்படி; விருந்தின் மூரல் அரும்பியதூஉம்-புதுமையுடையதொரு புன்முறுவல் பூத்த செய்கையும் ஆகிய இவற்றைக் கண்டு; ஆய் இதழ்க்குவளை மலர் புறத்து ஓட்டிக் காய் வேல் வென்ற கருங்கவல் நெடுங்கண்- அழகிய இதழையுடைய கருங்குவளைப் பூவை அழகாலே வென்று புறங் கொடுத்தோடச் செய்து பின்னரும் பகைவர் உரங்கிழித்து வருத்தி அவர்தங் குருதியாற் சிவந்த வேற்படையையும் வென்ற கரிய கயல்மீன் போன்ற நெடிய அவளுடைய கண்கள் தாமே; ஆயிழை தனக்கு அறிவு பிறிது ஆகியது எனச் செவியகம் புகூஉச் சென்ற செவ்வியும்- நம்மையுடைய மணிமேகலைக்கு இப்பொழுது அறிவு வேறுபட்டது காண் என்று மறைவாக அறிவுறுத்தற்கு அவளுடைய செவிமருங்கே ஓடி மீண்டும் மற்றொரு செவிக்குக் கூறுதற்குச் சென்றதொரு செய்கையும் ஆகிய இச் செயல்களாலே; பளிங்கு புறத்து எறிந்த பவளப்பாவை- பண்டு அப் பளிக்கறையானது தன்னகத்திருந்து புறத்தே வீசிய பவளப்பாவை போல்வாளாகிய அம் மணிமேகலை; உயிர்க்காப்பு இட்டு என் உளம் கொண்டு ஒளித்தாள் என்று இடை இருள் யாமத்து இருந்தேன் முன்னர்-என்னுடைய ஆருயிர் உடம்பை விட்டுப் போகாமைக்கும் ஒரு பாதுகாப்பினைச் செய்து வைத்து என்னுடைய நெஞ்சத்தை மட்டும் கவர்ந்து கொண்டு கரந்தொழிந்தாள் என்று செயலறவு கொண்டு, அற்றை நாளிரவு இப் பள்ளிக் கட்டிலின் மேல் எப்படியும் இவ்விரவு கழிந்தால் அவள் என்கையகத் தாள் ஆகுவள் என்னும் நம்பிக்கையோடு துயிலின்றித் தனித்துச் சிந்தனையிலாழ்ந்திருந்தேனாக! அப்பொழுது என் கண் முன்னர்; என்க.

(விளக்கம்) மணிமேகலையை மன்னவன் மகன் மலர்வனத்தே சென்று கைப்பற்றிச் சென்றவன் யாண்டும் அவளைக் காணப் பெறானாய் ஆங்கொருசார் சுதமதியை வினவி நின்ற பொழுது பளிக்கறையுட் புக்கிருந்த மணிமேகலையுருவம் புறத்தே தெரிந்ததனை ஓவியச் செய்தி என்றே கருதி அவ்வோவியத்தின் அழகிலீடுபட்டு அதனைக் கூர்ந்து நோக்கி அதனை இயற்றிய ஓவியனுடைய கலையுள்ளத்தைப் பாராட்டி மீளக் கருதியபொழுது உள்ளிருந்த மணிமேகலையின் பால் நிகழ்ந்த மெய்ப்பாடுகள் ஈண்டு அவனாற் சித்தராபதிக்குக் கூறப்படுகின்றன.

மணிமேகலா தெய்வம் எடுத்துப் போனமையால் அவள் நிலையறியாத உதய குமரன் அற்றை நாள் இரவு பெருந்துய ரெய்தி, கங்குல் கழியிலென் கையகத்தாள் என்றிருந்தவன் மற்றை நாள் தொடங்கி அற்றை நாள்காறும் அவளைக் காணப் பெரிதும் முயன்றும் காணப் பெறாமையாலே இனித் தன் உயிர்க்கு உய்தியில்லை போலும் என்று துயர்க் கடலுள் மூழ்கி யிருந்தான் என்பது தோன்ற இப் புலவர் பெருமான் இவனை உடைகலப் பட்டோனாகவும் சித்திராபதியை வான்புணையாகவும் ஓதும் நுண்மை யுணர்க.

இனி, அம் மணிமேகலை, இளவன முலை நெரித்ததும் மூரல் அரும்பியதும் கண்ணினது மருட்சியும் அவள் தன்பால் தீராக்காதலுடையாள் என்பதை நன்கு அறிவித்து விட்டமையின், அதுபற்றி அவன் உயிர் வாழ்கின்றான் ஆதலின் அச் செயல்களால் என் உயிர் போகாமல் காப்பிட்டு வைத்தாள் என்றான். மீண்டும் தன் னெஞ்சத்தை முழுதும் கவர்ந்து கொண்டவை தாமும் அச் செயல்களே யாதலால் உயிர்க்குக் காப்பிட்டு என்னுடலில் நிறுத்தி அதற்குத் துணையாகிய உள்ளத்தைக் கவர்ந்து கொண்டு போயினள் என்கின்றான். ஈண்டு

மணிமேகலை மூரல் அரும்பியதும் அவள் கண்களின் மிளிர்ச்சியும் பிறவும் அவள் உதய குமரனைப் பெரிதும் காதலிக்கின்றனள் என்பதற்குக் குறிப்பறிவுறுத்துவனவாகவும், அவள் அவனாற் பற்றற்கரியளானமையால் மீண்டும் அச் செயல்களே அவனுக்குப் படர்மெலிந்திரங்கற்குக் காரணமாகவும் ஆயபடியறிக.

இனி மணிமேகலை நம்பாற்படுவாள் என்னுங் கருத்தாலே அவனுடலில் உயிர் தங்குவதாயிற்று. வழிநாள் முதற் கொண்டு அற்றை நாள் காறும் அவளைப் பற்றிய செய்தி யாதொன்றும் அறியப்படாமையால் காமம் என்னும் கரை காணாத கடலைக் கையானீந்திக் கொண்டு இனி உய்வேனோ மாட்டேனோ என்னும் ஐயுறவோ டிருந்தவனுக்குச் சித்திராபதி வான்புணையாயினள். ஆயவட்கு மணிமேகலையின் மனநிலை இன்னது என இவ்விளவரசன் இயம்புதல் இன்றியமையாதாயிற்று. என்னை? மணிமேகலை உடன் படுவளோ படாளோ என்னும் ஐயம் அவட்கிருத்தல் இயல்பாகலின். அது தீர்தற்கு இது கூறினன் என்க.

இனி மணிமேகலை உலகவறவி புக்கமையால் கைப்பற்றுதற்கு எளியளாயினும் அவளைக் கைப்பற்றுதற்குத் தடையாயிருக்கின்றதோரச் சத்தை அவ்வரசிளங் குமரன் இனிச் சித்திராபதிக்குக் கூறுகின்றனன்.

இளவரசனின் எய்யா மையலும் சித்திராபதியின் சிறுநகையும்

81-89: பொன்றிகழ்.........செப்பின்

(இதன் பொருள்) பொன் திகழ் மேனி ஒருத்தி தோன்றிச் செங்கோல் காட்டி- பொள்ளெனப் பொன் போன்று விளங்குகின்ற திருமேனியையுடைய ஒரு நங்கை வந்து நின்று எனக்குச் செங்கோன்மையினின்றும் பிறழ்வதனாலே மன்னர்க்குண்டாகும் இழிதகைமையை எடுத்துக்காட்டி; அங்கு அருந்தவம் புரிந்த அவள் தன் திறம் அயர்ப்பாய் என்றனள்-ஆங்குப் பவுத்தருடைய தவப்பள்ளியிற் சேர்ந்து ஆற்றுதற்கரிய தவத்தை மேற்கொண்டிருக்கின்ற மணிமேகலை திறத்திலே நீ நினைக்கின்ற நினைவுகளை மறந்தொழிக என்று கூறி அப்பொழுதே மறைந்தொழிந்தனள் காண்; தெய்வம் கொல்லோ திப்பியம் கொல்லோ-அங்ஙனம் தோன்றி எனக்கு அறிவுரை கூறியது யாதேனும் ஒரு தெய்வமோ? அல்லது, அம் மணிமேகலைக் கெய்திய தெய்வத் தன்மையாலே நிகழ்ந்ததோர் அற்புத நிகழ்ச்சியேயோ!!; யான் எய்யா மையலேன் என்று அவன் சொல-யான் இற்றை நாள் காறும் அந் நிகழ்ச்சிக்குரிய காரணம் யாதொன்றும் அறியமாட்டாமல் மயங்கியே இருக்கின்றேன் காண்!; என்று அவ்வரசிளங்குமரன் கூற; சித்திராபதி தான் சிறு நகை எய்தி அரசிளங்குரிசில் அத்திறம் விடுவாய்-அது கேட்ட சித்திராபதி புன்முறுவல் பூத்து மன்னவன் மகனாகிய எங்கள் இளவரசே! அந் நிகழ்ச்சி தலைக்கீடாகச் சிறிதும் கவலாதே கொள்!; தேவர்க்கு ஆயினும் காமக் கள்ளாட்டிடை மயக்குற்றன செப்பின் சிலவோ- மக்களாகிய நம்மனோர் கிடக்கத் தேர்களுக்குக் கூடக்காமமாகிய கள்ளுண்டு களித்தற்குக் காரணமான இவ்விளையாட்டிடையே உண்டாகும் இத்தகைய மயக்கக் காட்சிகள் ஒரு சிலவோ ஆயிரம் நிகழ்தலுண்டு காண்! என்றாள் என்க.

(விளக்கம்) பொன் திகழ் மேனி ஒருத்தி என்றான் அவள் இன்னள் என்று அறியாமையினாலே. ஈண்டு உதயகுமரன் கூறுவது-அவன் மணிமேகலையை மலர்வனத்திலே கைப்பற்ற முயன்று செவ்வி பெறாமல் வறிதே மீண்ட. அற்றை நாள் இரவு மணிமேகலா தெய்வம் கங்குல் கழியில் என் கையைத்தாள் என எண்ணமிட்டுக் கொண்டு பொங்கு மெல்லமளியிற் பொருந்தாது உறுதுய ரெய்தி இருந்தோன் முன்னர்த் தோன்றி மன்னவன் மகனே! கோல் நிலை திரிந்திடின் கோணிலை திரியும்.........அவத்திறம் ஒழிக. என்றறிவுறுத்து மறைந்த நிகழ்ச்சியை (துயிலெழுப்பிய காதை-5-14)

ஈண்டு அவன் பொன்திகழ் ஒருத்தி தோன்றிச் செங்கோல் காட்டிச் செய்தவம் புரிந்த அங்கவடன் திறம் அயர்ப்பா யென்றனள் தெய்வம் கொல்லோ திப்பியம் கொல்லோ எய்யா மையலேன் என்று சித்திராபதிக்குக் கூறியது. இங்ஙனமாதலின் அவளைக் காமுறாது விடுவதோ அன்றிக் காமுற்று மீண்டும் கைப்பற்ற முயல்வதோ இரண்டனுள் யாது செய்யற்பாலது என்று துணியாமைக்குக் காரணமான மயக்கத்தோடிருக்கின்றேன் என்பது குறிப்பாகத் தோன்றும்படி கூறியதாம். என்னை? அவன்றானும்

..................நன்னுதன் மடந்தையர்
மடங்கெழு நோக்கின் மதமுகம் திறப்புண்டு
இடங்கழி நெஞ்சத் திளமை யானை
கல்விப் பாகன் கையகப் படாஅது
ஒல்கா உள்ளத் தோடு மாயினும்
ஒழுக்கொடு புணர்ந்த     (சிலப்-23; 35-40)

விழுக்குடிப் பிறப்புடையோன் ஆதலானும், அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் ஆதலானும் அப் பெரியோன் தனது அச்சத்தையே இதனால் சித்திராபதிக்குப் பொதுவாகச் சொல்லிக் காட்டுகின்றான் என்று கொள்க.

ஆயினும் சித்திராபதி தனது சிறு நகையாலேயே அவ் வச்சத்திற் செம்பாதியைத் தவிர்த்து எஞ்சிய பாதியைச் சொல்லாலே தவிர்த்து விடுகின்ற அவள் சொற்றிறம் பெரிதும் வியத்தற்பாலதாம்.

இப்படி ஆயிரம் ஆயிரம் மயக்கக் காட்சிகள் காமக்கள்ளாட்டாடுவாரிடையே காணப்படும். இத்தகைய மயக்கக் காட்சிகள் தேவர்களுக்குக் கூட ஏற்படும் ஆதலின் அத்திறம் விடுவாய் அரசிளங்குரிசில் என இம் முது கணிகை அவ்வச்சத்தை மிகமிக எளிதாகவே பேசி எடுத்தெறிந்து தவிர்க்கும் இவள் நுண்ணறிவை எண்ணி எண்ணி இறும்பூது கொள்கின்றோம்.

ஈண்டு, இராவணன் காம மயக்க முதிர்ச்சியாலே சீதையை உருவெளித் தோற்றமாக உள்ளத்திலே படைத்துக் கொண்டு சூர்ப்பனகையை அழைத்து இந் நின்றவளாங் கொல் நீ இயம்பிய சீதை? என்று வினவுதலும் அவள் தானும் காமக்கள்ளாட்டிடை மயக்குற்று இராமனை உருவெளித் தோற்றத்தே காண்பவள் சூழ்நிலையையும் மறந்து போய் வந்தான் இவனாகும் அவ் வல்வில் இராமன் என்று விடை கூறுதலும் அது கேட்ட இராவணன் அவளைச் சினந்து மண்பாலவரோ நம்மை மாயை விளைப்பர்! பேதாய்! நின் விடைக்குப் பொருள் என்னென்றுரப்புதலும் அதற்கவள்

ஊன்றும் உணர்வு அப்புறம் ஒன்றினும் ஓடலின்றி
ஆன்று முளதாம் நெடிதுஆசை கனற்ற நின்றாய்க்கு
ஏன்றுன் எதிரே விழிநோக்கும் இடங்கள் தோறும்
தோன்றும் அனையாள் இது தொன்னெறித் தாகும்

என்றும் இன்னோரன்ன காமக்கள்ளாட்டிடை மயக்குற்றனவாகிய மருட்காட்சிகள் என்றும் அறிவுறுத்தல் ஒப்புநோக்கற் பாலதாம்.

சித்திராபதி அவன் போதைமைபற்றி ஈண்டுச் சிறுநகை தோற்றுவிக்கின்றாள். இந் நகைப்பு வாய்மையன்று நடிப்பு.

சிலவோ என்புழி ஓகாரம் எதிர்மறையாய் அதன் மறுதலைப் பொருளை வற்புறுத்து நின்றது. அஃதாவது சிலவல்ல எண்ணிறந்தனவுள என்றவாறு. உதயகுமரன் மணிமேகலை மூரலரும்பியமையால் என் ஆருயிர் தளிர்த்த தென்றமையால் அவனைக் காமக் கள்ளாடினானாகவே கூறினள் என்க.

காமக் கள்ளாட்டிடை மயங்கிய தேவர்க்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள்

90-97: மாதவன்...............குருசில்

(இதன் பொருள்) மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி ஆயிரஞ் செங்கண் அமரர் கோன் பெற்றதும்- பெரிய தவவொழுக்கத்தே நின்ற கவுதமமுனிவருடைய பத்தினியாகிய அகலிகையின் பால் காமத்தால் மயக்குற்றுப் பற்பல நாள் மாபெருந் துன்பம் எய்தி ஆயிரம் சிவந்த கண்களை அமரர் கோமானாகிய இந்திரன் எய்திய செய்தியும்; மேருக்குன்றத்து ஊரு நீர்ச் சரவணத்து அருந்திறல் முனிவர்க்கு ஆர் அணங்கு ஆகிய பெரும் பெயர்ப் பெண்டிர் பின்பு உளம் போக்கிய அங்கி மனையாள் மேருமலையுச்சியினின்று ஊர்ந்து வருகின்ற அருவி நீர் நிரம்பிய சரவணப் பொய்கைக் கரையிடத்தே தவம் புரிபவராகிய அரிய ஆற்றலமைந்த முனிவர் எழுவருக்கும் பொருந்திய வாழ்க்கைத் துணைவியராகிய பெரிய புகழையுடைய பத்தினிப் பெண்டிரின்பால் காமுற்றுத் தன் நெஞ்சத்தை அவர்பால் போகவிட்டுப் பெரிதும் துன்பமுற்ற நெருப்புக் கடவுளின் மனைவியாகிய சுவாகை என்னும் தெய்வமகள்; அவண்-தன் கணவன் காம நோயால் கடுந்துயரெய்திய அவ்விடத்தே; தங்கா வேட்கை தனை-அத்தீக் கடவுளின் அறிவின் எல்லையிலே தங்காமல் மாற்றார் மனைவியர் பாற் சென்ற அவனது காமவேட்கையை; அவர் அவர் வடிவாய் தணித்ததூஉம்-அவ்வேழு முனிவர் மனைவிமாருள் ஒவ்வொருவர் வடிவத்தையும் தானே எடுத்துக் கொண்டு வந்து அவனைப் புணர்ந்து ஆற்றுவித்து அவனை உய்வித்த செய்தியும் ஆகிய தேவர்க்கும் எய்திய காமக் கள்ளாட்டு மயக்கச் செய்திகளை; வாள் திறல் குரிசில்- வாட் போரிற் பேராற்றல் வாய்ந்த இளவரசனே நீ; கேட்டும் அறிதியோ- நீ தானும் கற்றறிந்திருப்பாய் இல்லையாகிற் கேட்கும் அறிந்திருப்பாய் அல்லையோ! என்றாள் என்க.

(விளக்கம்) மாதவன்- கவுதம முனிவன். மடந்தை-அகலிகை. மடந்தையை நுகரும் பொருட்டு என்க. ஆயிரஞ் செங்கண் என்றது இடக்கரடக்கு.

ஊருநீர்-ஊர்ந்துவரும் அருவிநீர் சரவணம்- நாணற்புதர் சூழ்ந்த தொரு நீர்நிலை. சரவணத்துக் கரையிடத்தே தவஞ் செய்யும் முனிவர் என்றவாறு. அணங்கு- பெண்டு என்னும் பொருட்டாய் நின்றது. பெரும் பெயர்-புகழ். அங்கி- நெருப்புக்கடவுள். மனையாள் என்றது அவன் மனைவியாகிய சுவாகை என்பாளை. அவரவர் வடிவு-அம் முனிவர் பத்தினிமார் ஒவ்வொருவருடைய வடிவத்தையும் என்க. ஈண்டுக் கூறப்படும் இக்கதை, (அங்கி மனையாள் அம் முனிவர் மனைவிமார் வடிவத்தை எடுத்துக் கொண்டு வந்து ஒவ்வொரமையத்து அங்கியின் காம வேட்கையைத் தணித்த கதை) வியாச பாரதத்தில் ஆரணிய பருவத்தில் 224-6 ஆம் அத்தியாயத்தில் காணப்படுகின்ற தென்பர். 

தேவர்கள் தாமும் காமக் கள்ளாட்டிடை மயக்குற்று முறை பிறழ்ந்தொழுகினர். நீ மணிமேகலையின்பாற் கொண்ட காமம் நின் செங்கோன்மைக்குப் பொருந்தியதொரு காமமே; பொன்றிகழ் மேனி ஒருத்தி தோன்றி இவ்வொழுக்கம் செங்கோன்மைக்குப் பொருந்தாது என்பதுபட நினக்குச் செங்கோல் காட்டினளாகக் கண்டதாகக் கூறிய காட்சியும் மயக்கக் காட்சியே காண் என்று அவனுக்கு இனிச் சித்திராபதி செங்கோல் காட்டுகின்றாள்.

சித்திராபதி மணிமேகலையை உதயகுமரன் கைப்பற்றி வருதல் செங்கோன் முறைமையே யாம் எனத் தேற்றுரை பகர்தல்

68-102: கன்னி................அல்லள்

(இதன் பொருள்)  கன்னிக் காவலும் கடியிற் காவலும் தன்உறு கணவன் சாவுறின் நாவலும் நிறையின் காத்து- மன்னவன் மகனே! இடையிருள் யாமத்து நின் முன்னர்ப் பொன்றிகழ் மேனி ஒருத்தி தோன்றிச் செங்கோல் காட்டி அவள் திறம் அயர்ப்பாய் என்று கூறி மறைந்தனள் என்குதி இதுவும் காம மயக்கத்தே தோன்றியதொரு மருட்காட்சியே காண், எற்றாலெனின், நின்னாற் காமுறப்படுகின்ற மணிமேகலை யார்? அவள்தான் கன்னிமைப் பருவத்தினும் அடுத்துவருகின்ற திருமணத்தின் பின்னிகழும் கற்பொழுக்கந் தலைநிற்கும் நெடிய பருவத்தினும் ஓரோஓ வழித் தம்மைப் பொருந்திய கணவர்க்குச் சாக்காடு வந்துற்றக்கால் பின்னிகழுகின்ற கைம்மை கூர் பருவத்தினும்; நிறையின் காத்து-தமது நெஞ்சத்தைத் தங்குடிக்குரிய பண்பாகிய நிறை என்னும் ஆற்றலாலே புறம் போகாமற் காவல் செய்து; பிறர் பிறர் காணாது- தம்மழகைப் பிற ஆடவர் கண்டு காமுறாவண்ணம் கரந்தொழுகி; தெய்வமும் பேணாது- தங்கணவரைத் தொழுதலன்றித் தெய்வங்களையும் பேணித் தொழாமல் வாழ்தற்குரிய; பெண்டிர்தம் குடியில் பிறந்தாள் அல்லள்- பத்தினிப் பெண்டிருடைய உயர்ந்த குடியிலே பிறந்த குலமகள் அல்லளே; என்றாள் என்க.

(விளக்கம்) கன்னி- பெதும்பைப்பருவம் எய்தியும் திருமணம் நிகழப் பெறாத இளம் பெண். கடி- திருமணம். கடியிற் காவலாவது- கணவனோடு இல்லறம் நிகழ்த்தும் பருவம். சாவுறின் என்றது கணவன் மணநாள் தொடங்கி எந்த நாளினும் சாதலுண்டாகலின் ஊழ்வினை காரணமான அவ்வாறு மிக்க இளமையிலேயே கணவனுக்குச் சாவு நேர்ந்துழி என்பதுபட நின்றது. என்னை? கணவன் நூறாண்டு வாழ்ந்து சாவுறுமிடத்து மனைவிக்குக் கற்புக் காவல் கூற வேண்டாமையின் சாவுறின் என்றது கணவன் இளம்பருவத்திலேயே இறந்துபடின் என்றவாறே யாம் என்க.

நிறையாலல்லது கற்புப் பிறிதோராற்றானும் காக்கப் படுவதல்லாமையின் நிறையிற் காத்து என்று கருவியையும் விதந்தோதினள் ஈண்டு,

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை      (57)

எனவரும் திருக்குறளையும் கொண்டோ னல்லது தெய்வம் பேணாப் பெண்டிர் என்புழி,

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனம் பெய்யு மழை

எனவரும் திருக்குறளையும் நினைவு கூர்க.                (55)

இதுவுமது

103-111: நாடவர்....................என்றலும்

(இதன் பொருள்) நாடு அவர் காண நல் அரங்கு ஏறி-நாட்டில் வாழும் காமுகர் எல்லாம் கண்டு களிக்கும்படி இலக்கண முறைப்படி அமைக்கப் பெற்ற அழகிய நாடக அரங்கின் கண் நூல் விதித்த முறையாலே ஏறி; ஆடலும் பாடலும் அழகும் காட்டி-தாம் பயின்றுள்ள கூத்தின் சிறப்பையும் பாடல்களின் இனிமையையும் தமக்கியற்கையாகவும் செயற்கையாகவும் எய்திய அழகின் சிறப்பினையும் நன்கு தெரிவுறக் காட்டு மாற்றாலே; சுருப்பு நாண் கருப்புவில் அருப்புக்கணை தூவ-அக் காமுகர் நெஞ்சத்திலே காமவேள் தன் வண்டுகளாலியன்ற நாணைத் தனது கரும்பாகிய வில்லிலேற்றித் தனக்கியன்ற மலரம்புகளை எய்து நெகிழ்விக்கப் பெற்றனவாகிய; கண்டோர் நெஞ்சம்- தம்மைக் கண்ட அக் காமுகருடைய நெஞ்சமாகிய மீன்களை; செருக்கயல் நெடு கண் சுருக்கு வலைப்படுத்துக் கொண்டு- ஒன்றனோடொன்று எதிர்ந்து போர் புரிகின்ற இரண்டுகயற் கொண்டைகளை யொத்த நெடிய தம் கண்ணாகிய சுருக்கு வலையை வீசி அகப்படுத்துச் சுருக்கி எடுத்துக்கொண்டு சென்று; அகம் புக்கு-தம்மில்லத்தே புகுந்து, பண் தேர் மொழியில் பல பயன் வாங்கி- தம்முடைய பண்பேன்றினினம செய்யும் மொழிகளாலே அவரை வயப்படுத்து அவரிடத்தே தாம் பெறக்கிடந்த பயன்கள் பலவற்றையும் கைப்பற்றிக் கொண்ட பின்னர்; வண்டின் துறக்கும் கொண்டி மகளிரை-வறும் பூத்துறக்கும் வண்டு போல அவரைத் துறந்துவிடுகின்ற கொள்ளைச் செயலையுடைய பரத்தை மகளிரைத் தாமும்; பான்மையின் பிணித்து-அவர்தம் குடிக்கியன்ற பண்போடு ஒழுகும்படி கட்டுப்பாடு செய்து; படிற்று உரை அடக்குதல்-அவர் கூறுகின்ற மாயப் பொய்ம் மொழிகள் செல்லாதன வாகும்படி அடக்கிவைத்தல்; குமரற்குக் கோல் முறை அன்றோ அரசிளங்குமரனாகிய நினக்கே யுரிய செங்கோல் முறைமை யாகாதோ? என்றாள் என்க.

(விளக்கம்) நாட்டவர் என உயிர் முதல்வரு மொழியாயின் நெடிற்றொடர் இரட்டுதலே பெரும்பான்மை, சிறுபான்மை இரட்டாது புணர்தலும் உண்மையின் நாடவர் எனப் புணர்ந்தது; காடக மிறந்தார்க்கே யோடுமென் மனனே என்புழிப் போல.

நாட்டில் வாழும் காமுக ரெல்லாம் காண என்றவாறு. பத்தினி மகளிர் பிறர் பிறர்க் காணாது வாழ்வர் என்று முற்கூறியதும் நினைக. நல்லரங்கு என்றது. நூன் முறைப்படி யமைந்த ஆடலரங்கினை. அஃதாவது:-ஏழிகோ லகலத்தினையும் எண்கோல் நீளத்தினையும் ஒரு கோல் உயரத்தினையும் வாய்தல் இரண்டனையும் உடைய அரங்கென்ப.( சிலப்-3:101-5)

ஓவியச் செந்நூல் உரை நூல் கிடக்கையில் நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த கலைகள் பிறவும் பலவுள வேனும் அவற்றுள்ளும் இவையே தலை சிறந்து திகழ்தல் பற்றி ஆடலும் பாடலும் அழகும் காட்டி என்று இம் மூன்றனையே விதந் தெடுத்தோதினள்; ஆசிரியர் இளங்கோவடிகளார் தாமும் கணிகையரை எண்ணென் கலையோர், எனவும்,(14:166) எண்ணான் கிரட்டி இருங்கலை பயின்ற..............மடந்தையர் (22-13-8-26) எனவும் ஓதுவரேனும் அவற்றுள்ளும் இவை சிறந்தமைபற்றி, ஆடலும் பாடலும் அழகு மென்றீக் கூறிய மூன்றின் ஒன்று குறை படாமல் என விதந்தெடுத் தோதினமையு முணர்க.

சுருப்பு நாண், கருப்புவில், அருப்புக் கணை என்பன மென்றொடர் வன்றொடராயின அல்வழிப் புணர்ச்சியாகலின், தூவ என்னும் வினைக்குத் தகுதியால் காமவேள் என்னும் வினைமுதல் வருவித்தோதுக சுருக்கு வலை- விரித்து வீசப்பட்டு இழுக்குங்கால் தானே சுருங்கிக் கொள்ளும் ஒருவகை வலை. கண்வலை என்க. வலை என்றமையால் நெஞ்சமாகிய மினைப் படுத்து என்க. பண்தேர் என்புழி தேர் உவமவுருபின் பொருட்டு. பல பயன்- பலவகைப்பட்ட செல்வங்கள்.

நறுந்தாதுண்டு நயனில் காலை வறும்பூத் துறக்கும் வண்டு போல் குவம் என இவள் இக் காதையிலே கூறினள் ஆதலின் அது நம்மனோர் நினைவின்கண் நிற்கும் என்னுங் கருத்தால் ஈண்டு வாளாது வண்டிற்றுறக்கும் கொண்டி மகளிர்- என்றார். கொண்டி மகளிர்- என்றது, பட்டி மகளிர்; வேசையர் பான்மையிற் பிணித்து என்றது அவர் குடி யொழுக்கம்பற்றி நடக்கும்படி கட்டுப்படுத்தி வைத்து என்றவாறு. படிற்றுரை- வஞ்சகமொழி; பொய்யுமாம், ஈண்டு மணிமேகலை துறவுக்கோலம் பூண்டு அதற்கேற்பப் பேசும் பேச்செல்லாம் வறும் பொய்ம்மொழி. அங்ஙனம் பொய் பேசி மக்களை வஞ்சியாமற் செய்வது செங்கோன் முறையே என்பாள் கோன் முறையன்றோ குமரற்கு என்றாள். குமரற்கு என்றது முன்னிலைப் புறமொழி. கீழ்மக்கள் மேன்மக்களோடு உரையாடுங்கால் இங்ஙனம் முன்னிலைப்புறமொழியாகக் கூறுதல் ஓர் ஒழுக்கமாம். இதனை இற்றை நாளினும் உலகியலில் காணலாம்.

ஈண்டு, உதயகுமரன் அறவோனாதலின் அவன் மணிமேகலையை அணுகும்பொழுது அவள் பேசும் துறவோர் மொழிகளைக் கேட்டு அஞ்சி வாளாது மீளாமைப் பொருட்டுக் கொண்டி மகளிரைப் பான்மையிற் பிணித்துப் படிற்றுரை அடக்குதல் உனக்குரிய அறமே என்கின்றாள்.

மேலும், நீ பொன்றிகழ் மேனி யொருத்தி தோன்றி நீ அவள் திறம் அயர்ப்பாய் என்று கூறி மறைந்தது என்கின்றாய், அது தெய்வமும் அன்று அம்மொழி திப்பயமும் அன்று, அக் காட்சி வறிய உருவெளித்தோற்றம் போல்வதொரு மருட்காட்சி என்று இதனால் அவனைத் திறம்படத் தேற்றினாளுமாதலறிக.

உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து மணிமேகலையைக் கைப்பற்றி வருதற்கு உலகவறவி நோக்கி விரைதல்

112-118: உதய..............காண்டலும்

(இதன் பொருள்) உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து விரைபரி நெடுந்தேர் மேல் சென்று ஏறி- சித்திராபதியின் திறமிக்க தேற்றுரைகளைக் கேட்ட உதயகுமரனுடைய உள்ளம் தன்னிலையினின்று அவள் காட்டிய நெறியின் மேலதாய்த் திரிந்து விட்டமையாலே அவள் கூறியபடியே மணிமேகலையைக் கைப்பற்றி அவள் கூறும் படிற்றுரைகள் அடக்கி அவள் குடிக்கியன்ற வொழுக்கத்தே நிறுத்தத் துணிந்து அப்பொழுதே விரைந்து செல்லும் இயல்புடைய குதிரைகளைப் பூட்டி நிறுத்தப்பட்ட தனது நெடிய தேரின் மேற் சென்று ஏறி; ஆயிழை இருந்த அம்பலம் எய்தி- விரைந்து போய் மணிமேகலை இருந்த உலக அறவி என்னும் ஊரம்பலத்தே சென்று அவ்விடத்தே; காடு அமர் செல்வி கடிப் பசி களைய -காட்டிலே வீற்றிருக்கின்ற கொற்றவையாகிய காளி தன்னருள் நீழலிலே வாழுகின்ற கூளிகளுக்குற்ற பசிப் பிணியை அகற்றுதற் பொருட்டு; ஓடு கைக் கொண்டு நின்று ஊட்டுகள் போல-ஒரு திருவோட்டினைக் கைக் கொண்டு அவற்றினிடைய நின்று தன்தருளாலே அவ்வோட்டிலே கொடுக்கக் கொடுக்கக் குறையாமல் சுரக்கின்ற உணவினை அக் கூளிகட்கு வழங்குகின்ற அவ்விறைவியேபோற் றோற்றந்தந்து; தீப்பசி மாக்கட்குச் செழுஞ்சோறு ஈத்துப் பாத்திரம் ஏந்திய பாவையைக் காண்டலும்- தீய பசியாலே வருந்துகின்ற ஆற்றாமாக்கட் கெல்லாம் அமுதசுரபியிலே இடையறாது சுரவா நிறை வளமான சோற்றுத் திரளையை அள்ளி அள்ளி வழங்குபவளாய் அமுதசுரபியென்னும் அரும் பெரும் பாத்திரத்தை அங்கையில் ஏந்தி நிற்கின்ற கொல்லிப் பாவை போன்ற மணிமேகலையைக் கண் கூடாகக் கண்ட வளவிலே என்க.

(விளக்கம்) உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து என்றமையால் அவன் மணிமேகலா தெய்வம் கோன்முறை காட்டி, தவத்திறம் பூண்டோன் தன் மேல் வைத்த அவத்திறம் ஒழிக என்றறிவுறுத்தமை கேட்டு அஞ்சி மணிமேகலையைக் கைப்பற்றுங் கொள்கையைக் கைவிட்டு அவள் பால் உண்டான தன் இடங்கழி காமத்தைக் கைவிடமாட்டானாய்ப் பெரிதும் துன்புழந்தான். அங்ஙன மிருந்தவன் முன்பு கைவிட்டிருந்த செயலைச் செய்வதென உள்ளம் பிறழ்ந்தான் என்பது பெற்றாம்.

ஈண்டுச் சித்திராபதி இவ்வாறு மருட்காட்சி காமங்கதுவப் பெற்றார்க்குத் தோன்றுதல் இயல்பு காண்! என்று கூறியதனால் அவள் கூற்றை வாய்மை என்றே கொண்டு விட்டான் என்க. அவன் உள்ளத்தின் விதுப்புரவினை விரைபரி நெடுந்தேர் ஏறி அம்பல மெய்தினான் என்பதனால் அறிவுறுத்தார்.

மணிமேகலைக்குக் காடு அமர் செல்வியும், இரவன் மாக்கட்குக் கூளியும் உவமை. காடமர் செல்வி- காளி. கடி-கூளி; பேய். பாவை- கொல்லிப்பாவை போன்ற மணிமேகலை.

மணிமேகலையைக் கண்ட உதயகுமரன் எண்ணித் துணிதல்

119-127: இடங்கழி.....கேட்ப

(இதன் பொருள்) இடங்கழி காமமொடு அடங்கான் ஆகி- பண்டு மலர்வனத்திலே மணிமேகலையின் காதற் குறிப்பை கண்டு வைத்து அவள்பால் தணியா நோக்கம் தவிர்ந்திலனாகி அறந்தோர் வனம் என்றஞ்சி மீண்டவன் இப்பொழுது ஊரம்பலத்தே கண்டமையாலே தன்கட்டுக் கடங்காது வரம்பு கடந்து அவள்பாற் செல்கின்ற காமமுடையவனாகியும் உயர் குடிப் பிறப்புடையோன் ஆதலின் தன்னுள்ளே எண்ணித் துணிபவன்; யானே- வாயிலாவாரையின்றி யானே; தானே தமியள் நின்றோள் முன்னர் சென்று-அவள் தனித்து நிற்கின்ற செவ்வி நோக்கி அவள் முன்னிலையிலே சென்று; உடம்போடு என்தன் உள்ளகம் புக்கு என் நெஞ்சம் கவர்ந்த வஞ்சகக் கள்வி- உன் உடம்போடு என் கண் வழியாக என் உள்ளத்தினூடு புகுந்து என் நெஞ்சம் முழுவதையும் கவர்ந்து கொண்ட கள்வியாகிய நீ; நோற்று ஊண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி ஏற்று ஊண் விரும்பிய காரணம் என் என கேட்டல் இயல்பு என துணிந்து- நோன்பு மேற் கொண்டு பட்டினி விட்டுண்ணும் வாழ்க்கையினாலே உடம்பும் உள்ளமும் சுருங்குவதற்குக் காரணமான தவவொழுக்கத்தைத் தாங்கிய பிச்சை ஏற்றுண்ணும் உணவினை விரும்பியதற்குக் காரணந்தான் என்னையோ? என்று வினவத் தெரிந்து கொள்ளுதலே முறையாகும் என்று தன்னுள் ஆராய்ந்து துணிந்து அங்ஙனமே அவள் தமியளாய் நிறை செவ்வியின் அவள் முற்சென்று; நல்லாய் என்கொல் நல் தவம் புரிந்தது நங்கையே இத்தகைய கள்வியாகிய நீ எற்றிற்குத் தவம்புரியத் தொடங்கியது; செல்லாய்-அதற்குரிய காரணத்தை எனக்குக் கூறுவாயாக; என்று உடன் கேட்ப-என்று அப்பொழுதே மணிமேகலையை வினவா நிற்ப என்க.

(விளக்கம்) இடங்கழி காமமொடு அடங்கானாகியும் எனல் வேண்டிய சிறப்பும்மை தொக்கது. என்னை? அடங்கானாகியும் எண்ணித் தன்னியல்பிற் கேற்ற செயலே செய்தலன்றி அவளைக் கைப்பற்றுதன் முதலிய மிகை ஏதுஞ் செய்திலாமை அவன் துயர்குடிச் சிறப்பிற்குச் சான்றாய் நிற்றலின் என்க. பிறர் பொருளைக் களவாடியவரை அரசன் வினவுதல் கோன் முறைமையே யாகலின் கள்வி அதற்கு மாறாகித் தவம் புரிந்தது என் என்று வினவுதல் தனக்கு இயல்பு என்று துணிந்த படியாம்.

உதயகுமரன் தன்னுள்ளத்தை அவள் கவர்ந்தமை முன்பு சித்திராபதிக்குக் கூறுமாற்றாலே பெற்றாம். அருந்தே மாந்த ஆருயிர் தளிர்ப்பத் தன்னைக் கண்டுழி அவள் விருந்தின் மூரலரும்பி வைத்தும் அதற்கியைய வொழுகாமல் அவள் தவம் புரிந்தது அடாது என்பதே அவன் ஈண்டு எடுத்துக் காட்டுகின்ற குற்றம். மற்று அவள் தவம் புரிவதே குற்றம் என்பது அவன் கருத்தல்லாமை யுணர்க. உடம்போடு......யானே கேட்ட லியல்பெனத் துணிந்தானாகலின் அதனை வழிமொழிந்து அவ்வாறே கேட்டனன் என்று கூறிக்கொள்க. அல்லது-அவ்வாறு தன்னுட்டுணிந்து சென்று அவை யெல்லாம் அவள்-நெஞ்சறியுமாதலின் நல்லாய் என்கொல் தவம் புரிந்தது சொல்லாய் என்னுமளவே வினவினன் எனக்கோடலுமாம். என்னை? அவள் முன்னிலையினின்று அது கூற அவன் நாத்துணிதலரிதாகலின் இங்ஙனம் வினவவும் அவன் துணிந்தமையின் அருமை தோன்ற அத் துணிவை விதந்து துணிந்து கேட்ப என்றார். நல்லாய் என்று விளித்தான் அதனினும் சிறந்த விளிச்சொல் பிறிதொன்று காணமாட்டாமையின்.

மணிமேகலையின் உள்ளத்தினியல்பும் செயலும்

128-133: என்னமர்..........மயங்கி

(இதன் பொருள்) ஈங்கு இவன் என் அமர் காதலன் இராகுலன்-அவ் வேந்தன் மகன் வினவிய சொற்களைக் கேட்ட மணிமேகலை இங்கு வந்து இவ்வாறு என்னை வினவுவான் முற்பிறப்பிலேயும் என்னைப் பெரிதும் காதலித்து என் கணவனாயிருந்த இராகுலனே ஆதலின்; இவன்றன் அடிதொழுதலும் தகவு என வணங்கி இவனுடைய திருவடிகளிலே வீழ்ந்து வணங்கித் தொழுவதும் எனக்குத் தகுதியே யாம் என்று தன்னுட் கருதியவளாய் அவன் அடிகளில் வீழ்ந்து வணங்கி; நெஞ்சம் அறைபோய் அவன் பால் அணுகினும் ஈங்கு இவன் இறைவளை முன் கை பற்றினும் என் பேதை நெஞ்சம் என்னைக் கீழறுத்துப் போய் அவனிடத்தே அணுகினும் அணுகுக! அல்லது இவன்றானும் அடிப்பட்டு வந்த அன்புடைமை காரணமாக ஆற்றானாய் மூட்டுவாயையுடைய வளையலணியத் தகுந்த என் முன்னங்கையைப் பற்றிக் கொள்ளினும் கொள்ளுக!; தொன்று காதலன் சொல் எதிர் மறுத்தல் நன்றியன்று என்று நடுங்கினள் மயங்கி-முற்பிறவிதொட்டு அடிப்பட்டு வருகின்ற என் காதலனாகிய இவனுடைய மொழிக்கு மாறு கூறல் நல்லறமன்று என்று நினைந்து தானும் அக்காமத்தாலேயே மயக்க மெய்தி என்க.

(விளக்கம்) மணிமேகலைக்கு மணிமேகலா தெய்வம் உவவனமருங்கில் உன்பால் தோன்றிய உதயகுமரனவன் உன் இராகுலன், ஆங்கு அவனன்றியும் அவன் பாலுள்ளம் நீங்காத் தன்மை நினக்கும் உண்டு என்றறிவித்தமையால் தன் முற்பிறப்பிற் கணவனாக இருந்த இராகுலனே இவன் என்றும் அவ்வன்புத் தொடர்ச்சியாகிய ஏது நிகழ்ச்சியே இப்பிறப்பினும் இவனுக்கு, என்னைக் காட்டுவித்தது என்றும் அவ்வாறே அவன்பால் என்னெஞ்சமும் நீங்காத் தன்மைத்தாகின்றது, என்று கருதி அவன்பாற் பரிவுள்ளங் கொண்டவளாய்க் கணவனைக் கற்புடை மகளிர் தொழுமாறே தொழுதவள், இவ்வுண்மை இவனறியானாயினும் அப் பழவினை வலியால் இவன்பால் என்னெஞ்சம் அறை போகின்றது; போயிற் போதுக! அங்ஙனமே அப் பழவினையா லுந்தப்பட்டு வந்த இவன் என் கையைப் பற்றுதலும் கூடும், பற்றினும் பற்றுக. தன் னெஞ்சறிவது பொய்யற்க என்னும் அறம்பற்றிக் கணவனாகிய இவனை வணங்குவல் அப்பாலும் அவன் வினாவிற்கும் விடை கூறுவல் என்று மணிமேகலை ஈண்டு மயங்குகின்றனள் என்றுணர்க.

இனி, தொன்று காதலன் ஆயினும் இவன் பிறப்பறுத்தற்கியன்ற நல்வினை செய்திலன், தான் செய்த நல்வினையே பிறப்பறுத்தற்கியன்ற தொரு நன்னெறியில் தன்னைச் சேர்ப்பித்துளது என்றறிந்துள ளாகலின் ஈண்டு இரண்டு பேரறங்கள் தம்முள் எதிர்ந்து போரிடுதலானே அவள் உள்ளம் மயங்கி இவற்றுள் பழைய அன்பு நெறியே வென்று மீண்டும் தன்னை அவன்பாற் படுத்துப் பறவிப் பெருங்கடலுள் வீழ்த்து விடுமோ என்றையுற்று அச்சமெய்தி நடுங்கினள் என்பது கருத்தாகக் கொள்க.

என் அமர்காதலன்- என்னை விரும்பிய கணவன். தொன்று பழைமையான. நன்றி- நல்லறம். நடுங்கினள்: முற்றெச்சம்.

மணிமேகலை உதயகுமரன் வினாவிற்கு விடை இறுத்தல்

134-142: கேட்டது..........செய்கென

(இதன் பொருள்) கேட்டது மொழிவேன் நீ கேள்வியாளரின் தோட்ட செவியை ஆகுவை ஆம் எனின்- வேந்தன் மகனே! நீ என்னை வினவிய காரணத்தை யான் இப்பொழுது கூறுவல் நீதானும் கேள்வியை விரும்பிக் கேட்டுப் பயின்ற பயன்பெற்றுச் சிறந்த கேள்வியாளர் போன்று அறக் கேள்விகளாலே நன்கு துளைக்கப்பட்ட செவிகளை உடையையாயிருப்பாய் ஆயின்(யான் கூறும் காரணம் நினக்கும்பயன் தருவதாகுமானால்) மக்கள் யாக்கை இது பிறத்தலும் மூத்தலும் பிணப்பட்டு இரங்கலும் இறத்தலும் உடையது பெருமானே! யான் எடுத்துக் கொண்டிருக்கின்ற மக்களுடைய பிறந்த பின்னர்க் கணந்தோறும் மூத்தலையும் பல்வேறு பிணிகளின்பாற் பட்டுத் துன்புறுதலையும் என்றேனுமொரு நாள் இறத்தலையும் உடையதாகும்; இடும்பைக் கொள்கலம்-துன்பத்தை நிரப்பி வைத்துள்ள தொரு மட்பாண்டம் போன்றது; என உணர்ந்து-என்று நன்குணர்ந்து கொண்டமையாலே; மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன்-அப் பிறவிப் பெருங்கடலினின்று உய்ந்து கரையேறுதற்குரிய அறங்களுள் வைத்துத் தலைசிறந்த நன்மை யுடையதாகிய அருளறத்தை மேற்கொள்ளுதலைப் பெரிதும் விரும்பினேன், இதுவே இந் நற்றவத்தை யான் செய்தற்குரிய காரணமாகும்; மண்டு அமர் முருக்கும் களிறு அனையார்க்குப் பெண்டிர் கூறும் பேரறிவு உண்டோ- நாற்பெரும் படையும் மண்டி வருதற்கிடமான போரின்கண் பகைவரைக் கொன்றழிக்கும் பேராற்றலுடைய பெருமானை ஒத்த களிற்றியானை போன்ற தறுகண்மையுடைய வீரர்களுக்கு என் போன்ற மெல்லியன் மகளிர் கூறுதற்குரிய பேரறிவும் உளதாகுமோ! இல்லையாகலின் பெருமான் வினாவிற்கு மட்டுமே விடை இறுத்துள்ளேன்; கேட்டனையாயின்-யான் கூறிய விடையைச் செவியேற்றருளினையாயின்; வேட்டது செய்க என- இனிப் பெருமான் விரும்பியதனைச் செய்தருள்வாயாக! என்று விடை கூறிய பின்னர் என்க.

(விளக்கம்) என் கொல் நற்றவம் புரிந்தது? என்பதே உதயகுமரன் வினாவாதலின் அதற்கு விடை கொடாது மறுத்தல் நன்றியன்று என்றுட்கொண்டு விடை கூறத் தொடங்கும் மணிமேகலை கேட்டதற்கு விடை தருதல் என கடமையாகலின் அதற்கு விடை தருவேன் என்பாள் கேட்டது மொழிவேன் என்று தொடங்கி; என் விடைக்குப் பொருளுணர்வாய் எனின் நீ நன்கு அறவரைகளைப் பலகாலும் கேட்டுப் பயின்றடிப்பட்ட செவிகளை உடையை ஆதல் தேற்றம் என்பாள். நீ கேள்வியாளரின் தோட்ட செவியை ஆகுவை என்றாள். உணர்ச்சி உணர்வோர் வலித்தேயாகலின் அத்தகைய வலி நினக்குளதாகும் எனின் நன்று இன்றெனினும் கேட்டதற்கு விடை கூறுதல் என் கடமை யாதலின் மொழிவேன் என்றாள்.

பிறத்தல் முதலியவாக எண்ணிறந்த துயரங்களுக்குக் கொள்கல மாகும் மக்கள் யாக்கையாகிய இஃதென்று யான் நன்கனம் உணர்ந்து கொண்டமையே நற்றவம் புரிதற்குக் காரணமாம், என்பதே மணிமேகலை இறுத்த விடையாகும்.

யான் மெல்லியல்புடைய எளிய பெண் மகள். நீயோ மண்டமர் மூருக்கும் களிறனையை ஆதலின் நீ இப்பொழுது என் திறத்திலே ஏது வேண்டுமாயினும் செய்யக் கூடும். நீ இனி வேட்டது செய்க, நின்னைத் தடுப்பார் யாருமிலர் என்பதுபட உலகின் மேல் வைத்துக் களிறனை யார்க்குப் பெண்டிர் கூறும் பேரறிவுண்டோ வேட்டது செய்க என்றாள்.

மிக்க நல்லறம் என்றது அருளுடைமையை, அதனையன்றிப் பிறவிப் பெருங் கடலைக் கடத்தற்குப் பிறிதொரு வழியில்லையாகலின் அதனை அங்ஙனம் விதந்துரைத்தாள் என்னை?

அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு       (247)

எனவும்,

நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றாற்
றேரினும் அஃதே துணை      (242)

எனவும் வரும் அருமைத் திருக்குறள்களையும் நோக்குக.

இதுவே பவுத்த சமயக் கோட்பாடாகும். பண்டைக் காலத் தமிழ்த் திறவோர் மெய்க் காட்சியும் இதுவே யாகும் என்றுணர்க. இவ்வறத்தினை ஆசிரியர் தொல்காப்பியனார் மக்கள் வாழ்க்கையின் வெற்றியாகக் கருதி வாகைத் திணையின் பாற்படுத்தி அருளொடு புணர்ந்த அகற்சி என்றொரு துறையாக அமைத்து வைத்தனர்.(வாகை-சூ-21)

கேட்டனையாயின் வேட்டது செய்க, என்றது நீ யாது செய்யினும் யான் மேற்கொண்ட அறத்தினின்றும் பிறழேன் காண்! என்னுங் குறிப்பெச்சப் பொருள் பயந்து நின்றது.

உதயகுமரன் முன்னிலையினின்றும் மணிமேகலை தற்காத்தற் பொருட்டு விரைந்து கொற்றவை கோயிலுட் புகுந்து வேற்றுருக் கொண்டு வெளிப்படுதல்

142-150: வாட்டிறல்..............தோன்ற

(இதன் பொருள்) மடக்கொடி வாள் திறல் குரிசிலை நீங்கி இவ்வாறு விடையிறுத்த இளம்பூங்கொடி போல்வாளாகிய மணிமேகலை வாட் போராற்றல் மிக்க இடங்கழி காமத்தானாகிய இவன் முன் யான் இனி நிற்றலும் தகாதென வுட்கொண்டு பொள்ளென அவ்விடத்தினின்றும் நீங்கி; முத்தை முதல்வி முதியாள் இருந்த குச்சரக் குடிகை தன் அகம் புக்கு ஆங்கு முன்னைப் பழைமைக்கும் முன்னைப் பழைமையுடைய முழுமுதலாகிய இறைவி எழுந்தருளியிருக்கின்ற குச்சரக்குடிகையினுட் புகுந்து ஆங்குச் சிறிது பொழுது நின்று ஆராய்பவள்; ஆடவர் செய்தி அறிகுநர் யார் என-காமம் கைமிகின் மடலேறுதலும் பிறிதும் ஆகும் இயல்புடைய இத்தகைய ஆடவர் தக்கது இன்னது தகாததின்னது என்று ஆராய்ந்து துணிந்து ஒன்றனைச் செய்யும் இயல்புடையாராகார் ஆதலின் அரசன்மகன் விழுக்குடிப் பிறப்பினன் ஆயினும் இக் காமச்சூழ்நிலையில் அவன் இது செய்வான் இது செய்யான் என்று யாரே துணிந்து கூறவல்லுநர் இங்ஙன மாகலின் யாம் நமதறிவுடைமையால் இவனிடமிருந்து தப்புதலே நன்றென்று தன்னுட்கொண்டு; தோடுஅலர் கோதையைத் தொழுதனள் ஏத்தி-அக் குச்சரக் குடிகையில் எழுந்தருளிய இதழ் விரிந்து நறுமணங்கமழும் மலர்மாலை சூட்டப்பெற்றுள்ள காவற் றெய்வமாகிய சம்பாபதியைக் கைகூப்பித் தொழுது வாழ்த்தி; மாயவிஞ்சை மந்திரம் ஓதி- மாய வித்தையின் பாற்பட்ட வேற்றுருக் கொள்ளுதற்கியன்ற மந்திரத்தை மனத்தினுள் உருவேற்றி; காயசண்டிகையெனும் காரிகை வடிவாய் மணிமேகலை வந்து தோன்ற-ஆண்டுப் பலரானும் அறியப்பட்டிருந்த விச்சாதரியாகிய காயசண்டிகையின் உருவத்தை எடுத்துக் கொண்டு முன்பு தன் முன்னிலையிலே நின்று நீங்கிக் குடிகையுட் புக்க அம் மணிமேகலையே மீண்டும் அக் குடிகையுணின்றும் வெளிப்பட்டுத் தோன்றா நிற்ப என்க.

(விளக்கம்) முந்தை, முத்தை என வலித்தல் விகாரம் எய்தியது-முந்தை முதல்வியாகிய முதியோள் என்க. அவளாவாள் சம்பாபதி என்னும் காவற்றெய்வம் குச்சரக் குடிகை- கூர்ச்சர நாட்டினர் கட்டுகின்ற கலைத்தொழின் முறையாலே கட்டப்பெற்ற சிறிய கோயில்; மண்டபமுமாம். மணிமேகலை தற்காத்துக் கொள்ள முயலுதலின் காவற்றெய்வத்தைத் தன்னைக் காத்தருள வேண்டிக் கைதொழுதவாறாம். காமம் காழ்கொளின் ஆடவர் மடலேறுதல் முதலிய வன்செயலும் செய்வர், இறந்துபடுதலும் செய்வர், அத்தகையோர் யாது செய்யார்? மனம் போனவாறே ஏதும் செய்வர். மடலேறாப் பீடு மகளிர்க்கே உரித்து. ஆகவே யானும் ஒல்லும் வகையால் அவன் வன்செயலுக்கு ஆளாகாது தப்புவதே அறிவுடைமை என்னும் இத்துணைக் கருத்துந் தோன்ற ஆடவர் செய்தி அறிகுநர் யார்? என ஆடவரை மட்டும் தனித்தெடுத்தோதினள்.

இனி ஆடவர் காமங் காழ்கொளின் அத்தகையராதலை,

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறு மடல்          (குறள், 1133)

எனவருந் திருக்குறளானும்,

கடலே றியகழி காமம் பெருகின் கரும்பனையின்
மடலே றுவர் மற்றும் செய்யா தனசெய்வர் மாநிலத்தே   
                  (களவி-உரைமேற்-79)

எனவரும் பாண்டிக் கோவையானும்,

மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியுஞ் சூடுப
மறுகின் ஆர்க்கவும் படுப
பிறிதும் ஆகுப காமங்காழ் கொளினே (17)

எனவரும் குறுந்தொகையானும் உணர்க.

இனி மகளிர் காமங்காழ் கவுளின் இவ்வாறு மிகை செய்யாப் பீடுடையர் என்பது பற்றி ஆடவர் செய்தி என்று ஆடவரை மட்டும் பிரித்தோதினள். மகளிர் அங்ஙனம் மிகை செய்யார் என்பதனை

கடலன்ன காம முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்

எனவரும் அருமைத் திருக்குறளாலு முணர்க.

தோடலர்கோதை: அன்மொழித் தொகை; சம்பாபதி.

உண்மை வடிவத்தை மறைத்து வேறுருவந் தருதலால் வேற்றுருக் கொள்ளும் மந்திரத்தை மாயவிஞ்சை மந்திரம் என்றார். 

மணிமேகலையைக் காணாமல் மன்னன் மகன் அலமருதல்

151-158: அணிமலர்............கிடப்பேன்

(இதன் பொருள்) அணிமலர்த் தாரோன் அவள்பால் புக்கு- விரைந்து தன் முன்னிலையினின்றும் கோயிலினுட் புகுந்த மணிமேகலை வரவினை எதிர்பார்த்து நின்ற அழகிய மலர்மாலையணிந்த அவ்வரசிளங்குமரன் பாத்திரமேந்தி வெளிவருகின்றவள் பாற் சென்று அவள் மற்றொருத்தியாதல் கண்டு, பிச்சைப் பாத்திரத்தை இவள் கையிற் கொடுத்துவிட்டு மணிமேகலை கோயிலினுள் கரந்திருக்கின்றாள் என்று கருதியவனாய்; குச்சரக்குடிகைக் குமரியை மரீஇ-தானும் அக் குச்சரக் குடிகையாகிய கோயிலுட் புகுந்து மணிமேகலையைத் தேடி அவளை யாண்டும் காணானாகி ஆங்கெழுந்தருளிய சம்பாபதியைத் தொழுது கூறுபவன்; இமையோர் பாவாய் பிச்சைப் பாத்திரம் பெரும்பசியுழந்த காயசண்டிகை தன் கையில் காட்டி- தேவர்கட்குந் தெய்வமாகிய சம்பாபதியே கேள்! தன் கையிலிருந்த பிச்சைக் கலத்தை நாளும் ஆனைத் தீ நோயாலே ஆற்றொணாத பெரிய பசித்துன்பத்தே கிடந்துழன்ற காயசண்டிகை என்பவள் கையிலே கொடுத்துவிட்டு; மாயையின் ஒளித்த மணிமேகலைதனை தான் கற்ற மாயவித்தையாலே ஈண்டுக் கரந்துறைகின்ற மணிமேகலையை; ஈங்கு இம்மண்ணீட்டு யார் என உணர்கேன் இங்கே நிறைந்துள்ள சுதையாலியன்ற மகளிர் உருவங்களுள் வைத்து மணிமேகலையின் உருவம் யாது என்று யான் எவ்வண்ணம் அறிந்து கொள்ளமாட்டுவேன்! அறிகின்றிலேன் ஆதலாலே; ஆங்கு அவள் இவள் என்று அருளாய் ஆயிடின்-அவ்விடத்திலே நிற்கின்ற உருவமே உன்னால் தேடப்படுகின்ற மணிமேகலையின் உருவமாகும் என்று நீயே எனக்குக் காட்டியருளாயாயின்; பல் நாள் ஆயினும் பாடுகிடப்பேன்- நீ உளம் இரங்கி அங்ஙனம் காட்டுதற்குப் பல நாள் கழியினும் யான் நின் திருமுன்பே வரங்கிடப்பேன் காண்! என்றான் என்க.

(விளக்கம்) அணிமலர்த்தாரோன்: உதயகுமரன். அவள் என்றது காயசண்டிகை வடிவத்தில் வந்த மணிமேகலையை. கையிற் பாத்திரம் ஏந்தி வருதல் கண்டு மணிமேகலையே வருகின்றாள் என்று கருதி அணுகியவன் அவள் காயசண்டிகையாதல் கண்டு மணிமேகலை தன் கைப் பாத்திரத்தை இவள்பாற் கொடுத்துத் தான் கோயிலினுள்ளே மறைந்துறைகின்றனள் என்று கருதித் தானும் அவளைத் தேடிக் கோயிலினுள் புகுந்தான் என்பதே கருத்தாகலின் அதற்கியன்ற சொற்கள் இசை யெச்சத்தால் வருவித்தோதப்பட்டன.

குமரி: சம்பாபதி. மரீஇ- மருவி; அணுகி என்றவாறு. மண்ணீடு- சுண்ணச்சாந்தா லியற்றிய சிற்ப உருவம். மணிமேகலையை இச் சிற்ப உருவங்களினூடே யார்? என அறிகின்றிலேன் என்றமையால் மணிமேகலையின் எழிலும் அங்குள்ள சிற்பங்களின் அழகும் ஒன்றற்கொன் றுவமை யாகி இருவழியும் சிறப்பெய்துதல் உணர்க. இறைவி கோயிலாகலின் அம் மண்ணீடுகள் மகளிர் உருவங்களாதலும் இயல்பாதல் உணர்க.

இனி, யார் என்னும் வினைக்குறிப்பு மணிமேகலைதனை யார் என உணர்கேன் என உயர்திணைக்கண் வந்ததாயினும் ஐயப்புலப் பொதுச் சொல் மண்ணீடு என்பதாம். ஆகவே அஃறிணைப் பொதுச் சொல்லாகிய யார் என உணர்கேன் என்பது திணைவழுவாம் ஆதலின். இம் மண்ணீடுகளின் உருவங்களுள் வைத்து மணிமேகலை யுருவம்யாது என்றறிகேன் என்பதை கருத்தாகலின் திணை வழுவமைதியாகக் கொள்க. ஆங்கவள் இவள் என்றதும் நின்னால் தேடப்படும் மணிமேகலை யுருவம் இஃதாம் என்று காட்டியருளாயாயிடின் என ஐயப்புலப் பொதுச் சொல்லாகாமல் உயர்திணைச் சொல்லாற் கூறியதனையும் திணைவழுவமைதியாகவே கொள்க.

நான் யார் என ஞானங்கள் யார் என்புழியும் இவ்வழுவுண்மையும் அதனை அமைத்துக் கொண்டமையும் உணர்க. பாடு கிடப்பேன்- வரங்கிடப்பேன் பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்கு என் புழியும்(சிலப்-9-15) அஃதப் பொருட்டாதல் அடியார்க்கு நல்லார் உரையானும் அறிக.

உதயகுமரன் சம்பாபதி திருமுன் தன்னிலை கூறிக் குறையிரத்தல்

159-172: இன்னும்...............தானென்

(இதன் பொருள்) இமையோர் பாவாய்- தேவர்கட்கும் தெய்வமாகிய சம்பாபதியே; இன்னும் கேளாய்!-அடியேன் உற்ற குறையோ பெரிது அதனைக் கூறுவல் வெறாமல் திருச்செவியேற்றருள்வாயாக!; பவளச் செவ்வாய் தவள் வாள் நகையும் அஞ்சனஞ் சேராச் செங்கயல் நெடுங்கணும்-அம் மணிமேகலை தானும் தன்னுடைய பவளம் போன்று சிவந்த வாயின்கண் நிரல் பட்டிருக்கின்ற வெள்ளிய ஒளி தவழும் எயிறுகளும் மை தீட்டப் பெறாத சிவந்த கயல்மீன் போன்ற நெடிய கண்ணும்; முரிந்து கடை நெரிய வரிந்த சிலைப் புருவமும்- வளைந்து கடைப்பகுதி நெரியும்படி விரிந்து கட்டப்பட்ட வில்லினை ஒத்த புருவமும் ஆகிய தனது இம் மூன்றுறுப்புகளே நிரலே; குவி முன் கருவியும் கோணமும் கூர்நுனைக
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 09:31:35 AM
19. சிறைக்கோட்டம் அறக் கோட்டமாக்கிய காதை

(பத்தொன்பதாவது மணிமேகலை காயசண்டிகை வடிவாய்ச் சிறைக் கோட்டம் புக்குச் சிறைவீடு செய்து அறக் கோட்டமாக்கிய பாட்டு)

அஃதாவது: சம்பாபதி முன்பு மணிமேகலை ஒழியப் போகேன் பன்னாளாயினும் பாடு கிடப்பேன், உன்னடி தொட்டு உறுதி கூறுகின்றேன் என விஞ்சினஞ் சாற்றியவுடன் அங்குச் சித்திரத்தைப் பற்றுக்கோடாகக் கொண்டுறைகின்ற ஒரு தெய்வம் நீ ஆராய்ச்சியின்றி வஞ்சினங் கூறினை என்று கூறக்கேட்ட உதயகுமரன் அத் தெய்வம் பேசியதனையும் பண்டு தன் முன் பொன்றிகழ் மேனி ஒருத்தி தோன்றிச் செங்கோல் காட்டிய தனையும் மணிமேகலை ஏந்திய அமுதசுரபியின் தெய்வத் தன்மையையும் ஒரு சேர எண்ணிப் பெரிதும் வியப்பெய்திப் பின்னும் மணிமேகலையின் செயல்களைப் பார்த்தே அவளைப்பற்றி நன்கு தெரிதல் வேண்டும் என்று கருதி, அவ்விடத்தினின்றும் அகன்று போய்பின் மணிமேகலை தன்னுருவோடு திரியின் மன்னன் மகன் நம்மைத் தொடர்வான் என்று அஞ்சிக் காயசண்டிகையின் வடிவத்தோடிருந்தே ஆற்றாமாக்கட்கு ஆற்றுந்துøணாயகி உண்டி கொடுத்து உயிரோம்புவள் சிறைக்கோட்டம் புகுந்து ஆங்குச் சிறைப்பட்டுக்கிடப்போரைக் கணடிரங்கி அவர்க்கெல்லாம் உண்டி வழங்கா நிற்ப, ஒரே பாத்திரத்தால் எண்ணிறந்த உயிர்க்கு உண்டி வழங்கும் அவ்வற்புதங் கண்டு வியந்து இச் செய்தியைக் காவலர் அரசனுக்கு அறிவிப்ப அவனும் அவளை அழைப்பித்து வினவி அவளது தெய்வத் தன்மையை வியந்து நின் திறத்திலே யான் செயற்பால துண்டாயிற் கூறுக! என்று வேண்டினனாக அது கேட்ட மணிமேகலை அங்குச் சிறைப்பட்டு வருந்துவோரையெல்லாம் விடுதலை செய்து அதனை அறக்கோட்டம் ஆங்குக என்று வேண்ட, அரசனும் அவள் வேண்டுகோட் கிணங்கிச் சிறையோர் கோட்டத்தை அறவோர் கோட்டமாகச் செய்த செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு.

இதன்கண் சோழமன்னன் விளையாடும் பூம்பொழில் வண்ணனை அக் காலத்து அரசர் வாழ்க்கைச் சிறப்பினைக் கண்கூடாகக் காட்டும் சொல்லோ வியமாகத் திகழ்கின்றது.

மணிமேகலையின் அறச்செயல் கண்டு வியந்த அரசன் அவளை நீ யார்? இத்தெய்வத் தன்மையுடைய திருவோடு நினக்கு எவ்வாறு கிடைத்த தென்று அருள்புரி நெஞ்சோடு வினவுதலும், அதற்கு மணிமேகலை இரட்டுற மொழிதலாகத் தன்னை விஞ்சை மகள் என்றறிவித்துப் பின்னர் மன்னனை மனமார வாழ்த்துதலும் இப்பாத்திரம் அம்பலமருங்கோர் தெய்வந் தந்தது திப்பியமானது யானைத்தீ நோய் அரும்பசி கெடுத்தது என அவன் தன்னைக் காயசண்டிகையாகவே கருதுதற் பொருட்டுக் கூறும் விடைகளும், பின்னர் அரசன் யான் செயற்பாலது என் இளங்கொடிக்கு என்று வினாதலும், அவள் வேண்டுகோளும் கற்போர் உளமுருக்கும் பான்மையனவாகக் கூறப்பட்டுள்ளன.

முதியாள் திருந்து அடி மும்மையின் வணங்கி
மது மலர்த் தாரோன் வஞ்சினம் கூற
ஏடு அவிழ் தாரோய்! எம் கோமகள் முன்
நாடாது துணிந்து நா நல்கூர்ந்தனை என
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும்
உதயகுமரன் உள்ளம் கலங்கி
பொதி அறைப் பட்டோர் போன்று மெய் வருந்தி
அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய் என்றே
செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம்  19-010

பை அரவு அல்குல் பலர் பசி களையக்
கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம்
முத்தை முதல்வி அடி பிழைத்தாய் எனச்
சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம்
இந் நிலை எல்லாம் இளங்கொடி செய்தியின்
பின் அறிவாம் எனப் பெயர்வோன் தன்னை
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண
பகல் அரசு ஓட்டி பணை எழுந்து ஆர்ப்ப
மாலை நெற்றி வான் பிறைக் கோட்டு
நீல யானை மேலோர் இன்றிக்   19-020

காமர் செங் கை நீட்டி வண்டு படு
பூ நாறு கடாஅம் செருக்கி கால் கிளர்ந்து
நிறை அழி தோற்றமொடு தொடர முறைமையின்
நகர நம்பியர் வளையோர் தம்முடன்
மகர வீணையின் கிளை நரம்பு வடித்த
இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்பப்
பொறாஅ நெஞ்சில் புகை எரி பொத்தி
பறாஅக் குருகின் உயிர்த்து அவன் போய பின்
உறையுள் குடிகை உள்வரிக் கொண்ட
மறு இல் செய்கை மணிமேகலை தான்  19-030

மாதவி மகள் ஆய் மன்றம் திரிதரின்
காவலன் மகனோ கைவிடலீ யான்!
காய்பசியாட்டி காயசண்டிகை என
ஊர் முழுது அறியும் உருவம் கொண்டே
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி
ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் அவர்
மேற்சென்று அளித்தல் விழுத்தகைத்து என்றே
நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனர் ஆம் என
முதியாள் கோட்டத்து அகவயின் இருந்த
அமுதசுரபியை அங்கையின் வாங்கிப்  19-040

பதிஅகம் திரிதரும் பைந் தொடி நங்கை
அதிர் கழல் வேந்தன் அடி பிழைத்தாரை
ஒறுக்கும் தண்டத்து உறு சிறைக்கோட்டம்
விருப்பொடும் புகுந்து வெய்து உயிர்த்துப் புலம்பி
ஆங்குப் பசியுறும் ஆர் உயிர் மாக்களை
வாங்கு கைஅகம் வருந்த நின்று ஊட்டலும்
ஊட்டிய பாத்திரம் ஒன்று என வியந்து
கோட்டம் காவலர் கோமகன் தனக்கு இப்
பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும்
யாப்பு உடைத்தாக இசைத்தும் என்று ஏகி  19-050

நெடியோன் குறள் உரு ஆகி நிமிர்ந்து தன்
அடியில் படியை அடக்கிய அந் நாள்
நீரின் பெய்த மூரி வார் சிலை
மாவலி மருமான் சீர் கெழு திரு மகள்
சீர்த்தி என்னும் திருத் தகு தேவியொடு
போது அவிழ் பூம்பொழில் புகுந்தனன் புக்குக்
கொம்பர்த் தும்பி குழல் இசை காட்டக்
பொங்கர் வண்டு இனம் நல் யாழ்செய்ய
வரிக் குயில் பாட மா மயில் ஆடும்
விரைப் பூம் பந்தர் கண்டு உளம் சிறந்தும்  19-060

புணர் துணை நீங்கிய பொய்கை அன்னமொடு
மட மயில் பேடையும் தோகையும் கூடி
இரு சிறைக் விரித்து ஆங்கு எழுந்து உடன் கொட்பன
ஒரு சிறைக் கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி
மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும்
ஆடிய குரவை இஃது ஆம் என நோக்கியும்
கோங்கு அலர் சேர்ந்த மாங்கனி தன்னைப்
பாங்குற இருந்த பல் பொறி மஞ்ஞையைச்
செம் பொன் தட்டில் தீம் பால் ஏந்திப்
பைங் கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம் என்றும்  19-070

அணி மலர்ப் பூம்பொழில் அகவயின் இருந்த
பிணவுக் குரங்கு ஏற்றி பெரு மதர் மழைக் கண்
மடவோர்க்கு இயற்றிய மா மணி ஊசல்
கடுவன் ஊக்குவது கண்டு நகை எய்தியும்
பாசிலை செறிந்த பசுங் கால் கழையொடு
வால் வீ செறிந்த மராஅம் கண்டு
நெடியோன் முன்னொடு நின்றனன் ஆம் என
தொடி சேர் செங் கையின் தொழுது நின்று ஏத்தியும்
ஆடல் கூத்தினோடு அவிநயம் தெரிவோர்
நாடகக் காப்பிய நல் நூல் நுனிப்போர்  19-080

பண் யாழ் நரம்பில் பண்ணு முறை நிறுப்போர்
தண்ணுமைக் கருவிக் கண் எறி தெரிவோர்
குழலொடு கண்டம் கொளச் சீர் நிறுப்போர்
பழுநிய பாடல் பலரொடு மகிழ்வோர்
ஆரம் பரிந்த முத்தம் கோப்போர்
ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர்
குங்கும வருணம் கொங்கையின் இழைப்போர்
அம் செங்கழுநீர் ஆய் இதழ் பிணைப்போர்
நல் நெடுங் கூந்தல் நறு விரை குடைவோர்
பொன்னின் ஆடியில் பொருந்துபு நிற்போர்  19-090

ஆங்கு அவர் தம்மோடு அகல் இரு வானத்து
வேந்தனின் சென்று விளையாட்டு அயர்ந்து
குருந்தும் தளவும் திருந்து மலர்ச் செருந்தியும்
முருகு விரி முல்லையும் கருவிளம் பொங்கரும்
பொருந்துபு நின்று திருந்து நகை செய்து
குறுங் கால் நகுலமும் நெடுஞ் செவி முயலும்
பிறழ்ந்து பாய் மானும் இறும்பு அகலா வெறியும்
வம் எனக் கூஉய் மகிழ் துணையொடு தன்
செம்மலர்ச் செங் கை காட்டுபு நின்று
மன்னவன் தானும் மலர்க் கணை மைந்தனும்  19-100

இன் இளவேனிலும் இளங்கால் செல்வனும்
எந்திரக் கிணறும் இடும் கல் குன்றமும்
வந்து வீழ் அருவியும் மலர்ப் பூம் பந்தரும்
பரப்பு நீர்ப் பொய்கையும் கரப்பு நீர்க் கேணியும்
ஒளித்து உறை இடங்களும் பளிக்கறைப் பள்ளியும்
யாங்கணும் திரிந்து தாழ்ந்து விளையாடி
மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண் தமிழ் வினைஞ்அர் தம்மொடு கூடிக்
கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினைப்  19-110

பவளத் திரள் கால் பல் மணிப் போதிகைத்
தவள நித்திலத் தாமம் தாழ்ந்த
கோணச் சந்தி மாண் வினை விதானத்துத்
தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின்
பைஞ் சேறு மெழுகாப் பசும் பொன் மண்டபத்து
இந்திர திருவன் சென்று இனிது ஏறலும்
வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால்
சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி
எஞ்சா மண் நசை இகல் உளம் துரப்ப
வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி   19-120

முறம் செவி யானையும் தேரும் மாவும்
மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த
தலைத் தார்ச் சேனையொடு மலைத்துத் தலைவந்தோர்
சிலைக் கயல் நெடுங் கொடி செரு வேல் தடக் கை
ஆர் புனை தெரியல் இளங்கோன் தன்னால்
காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை
வலி கெழு தடக் கை மாவண்கிள்ளி!
ஒளியொடு வாழி ஊழிதோறு ஊழி!
வாழி எம் கோ மன்னவர் பெருந்தகை!
கேள் இது மன்னோ! கெடுக நின் பகைஞர்  19-130

யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இம்
மா நகர்த் திரியும் ஓர் வம்ப மாதர்
அருஞ் சிறைக்கோட்டத்து அகவயின் புகுந்து
பெரும் பெயர் மன்ன! நின் பெயர் வாழ்த்தி
ஐயப் பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு
மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள்
ஊழிதோறு ஊழி உலகம் காத்து
வாழி எம் கோ மன்னவ! என்றலும்
வருக வருக மடக்கொடி தான் என்று
அருள் புரி நெஞ்சமொடு அரசன் கூறலின்  19-140

வாயிலாளரின் மடக்கொடி தான் சென்று
ஆய் கழல் வேந்தன் அருள் வாழிய! எனத்
தாங்கு அருந் தன்மைத் தவத்தோய் நீ யார்?
யாங்கு ஆகியது இவ் ஏந்திய கடிஞை? என்று
அரசன் கூறலும் ஆய் இழை உரைக்கும்
விரைத் தார் வேந்தே! நீ நீடு வாழி!
விஞ்சை மகள் யான் விழவு அணி மூதூர்
வஞ்சம் திரிந்தேன் வாழிய பெருந்தகை!
வானம் வாய்க்க! மண் வளம் பெருகுக!
தீது இன்றாக கோமகற்கு! ஈங்கு ஈது  19-150

ஐயக் கடிஞை அம்பல மருங்கு ஓர்
தெய்வம் தந்தது திப்பியம் ஆயது
யானைத்தீ நோய் அரும் பசி கெடுத்தது
ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது என
யான் செயற்பாலது என் இளங்கொடிக்கு? என்று
வேந்தன் கூற மெல் இயல் உரைக்கும்
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து
அறவோர்க்கு ஆக்குமது வாழியர்! என
அருஞ் சிறை விட்டு ஆங்கு ஆய் இழை உரைத்த
பெருந் தவர் தம்மால் பெரும் பொருள் எய்த
கறையோர் இல்லாச் சிறையோர் கோட்டம்
அறவோர்க்கு ஆக்கினன் அரசு ஆள் வேந்து என்  19-162

உரை

வஞ்சினங் கூறிய மன்னவன் மகனுக்கு ஆண்டுச் சித்திரத்திலே நிற்குந் தெய்வம் கூறுதல்

1-6: முதியாள்...........கூறலும்

(இதன் பொருள்) மதுமலர்த் தாரோன் முதியாள் திருந்து அடி மும்மையின் வணங்கி- தேன்பிலிற்றும் மலர்மாலையணிந்த திருவடிகளை மனம் மொழி மெய் என்னும் மூன்று கருவிகளானும் வழிபாடு செய்து சூண் மொழிந்தவளவிலே; வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரம் ஒன்று தெய்வம் சிற்பப்புலமை மிக்க வித்தகர்களாலே இயற்றப்பட்டதும் விளக்கமான கலைத் தொழிற்றிறமமைந்ததுமாகிய ஒரு சித்திரத்திலே பொருந்தியுறை வதுமாகி ஒரு தெய்வம் தனது தெய்வக்கிளவியாலே; ஏடு அவிழ்தாரோய் எம் கோமகள் முன் நாடாது துணிந்து நாநல் கூர்ந்தனை என-இதழ்விரிந்த மலராற் புனைந்த மலர் மாலையணிந்த மன்னவன் மகனே! நீ தானும் எம்மிறைவி திருமுன்னின்று சிறிதும் ஆராயாமல் துணிவுற்று வாளாது வஞ்சினம் கூறி நாநலமிழந்து வறுமையுற்றனை காண்! என்று; கூறலும் கூறக் கேட்டலும் என்க.

(விளக்கம்) முதியாள் என்றது சம்பாபதியை. திருந்தடி-இலக்கணத்தாற் செவ்விதாக வமைந்த திருவடி; தாரோன்: உதயகுமரன் மும்மை- மன மொழி மெய்கள். வஞ்சினம்- சூண்மொழி; அஃதாவது அருளாயாயிடின் பன்னாளாயினும் பாடுகிடப்பேன் என்று கூறியதாம்.

நாநல் கூர்தல்-நாநலமிழத்தல்; பயனில மொழிதல். எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்ப திழுக்கு எனவரும் திருக்குறட் கருத்தை யுள்ளுறுத்து நாடாது துணிந்து நாநல் கூர்ந்தனை எனத் தெய்வம் கூறியவாறாம். ஒன்று தெய்வம்- பொருந்தியுறையும் தெய்வம்.

உதயகுமரனின் மருட்கை

7-19-: உதய...............தன்னை

(இதன் பொருள்) உதயகுமரன் உள்ளம் கலங்கி பொதியறைப் பட்டோர் போன்று மெய் வருந்தி-உதயகுமரன் தன் துயரத்தினின்றும் தப்புதற்குப் பிறிதொரு வழியும் காணமாட்டாமை யாலே பொதியறை என்னும் கீழறைக்கண் அகப்பட்டவர் போன்று உடம்பு மெலிந்து வருந்தி மயங்குபவன்; அங்கு செங்கோல் காட்டி அவள் தன் திறம் அயர்ப்பாய் என்ற தெய்வமும் திப்பியம்-யாம் நமது பள்ளியறைக்கண் அவளையே எண்ணித் துயிலாதிருந்த பொழுது பொன்னிற் பொலிந்த நிறத்தோடு தோன்றி எனக்குச் செங்கோல் முறைமையை எடுத்துக் காட்டித் தவத்திறமுடைய அம் மணிமேகலையை மறந்துவிடு என்று கூறிய தெய்வக் காட்சியும் தெய்வத் தன்மையுடைத்தா யிருந்தது; பைஅரவு அல்குல் பலர் பசி களையக் கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம்-அன்றியும் பாம்பின் படம் போன்ற அல்குலையுடைய அம் மணிமேகலை ஆற்றாமாக்கள் அரும்பசி களைதற்குக் கருவி யாகத் தன் கையிலேந்தியிருந்த பிச்சைக்கலன் தானும் தெய்வத்தன்மை யுடைத்தாயிருந்தது; முத்தை முதல்வி அடி பிழைத்தாய் எனச் சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம் சம்பாபதி திருமுன் திருந்தடி தொட்டுச் சூளுரைத்துப் பிழை செய்தொழிந்தாய் என்று வித்தகரியற்றிய இச் சித்திரங் கூறுகின்ற இவ்வடித்துரை தானும் தெய்வத்தன்மையுடைய தாகவே; உளது; இந்நிலை எல்லாம் பின் இளங்கொடி செய்தியில் அறிவோம் எனப் பெயர்வோன் தன்னை- மருட்கை விளைக்கின்ற இத் தெய்வத்தன்மைகளுக்கெல்லாம் காரணம் இனி அந்த மணிமேகலையின் செயல்களை யாம் ஆராய்ந்தறிந்து கொள்ளக்கடவேம் என்று கருதியவனாய் அவ்விடத்தினின்றும் போகின்ற உதய குமரனை என்க.

(விளக்கம்) திப்பியம்- தெய்வத் தன்மையால் நிகழ்வது; மக்கட் டன்மைக்கப்பாற்பட்ட நிகழ்ச்சி என்பது கருத்து. செங்கோல் காட்டிய தெய்வம் என்றது மணிமேகலா தெய்வத்தை. பையரவல்குல்; அன்மொழித்தொகை; மணிமேகலை பலர் பசியை ஒரே பாத்திரம் உணவு சுரந்தூட்டுவது திப்பியம் என்றவாறு. சித்திரம்- ஈண்டுச் சிற்பம், ஓவியம் எனினுமாம். இந்நிலை என்றது இவ்வாறு மருட்கை விளைத்தற்குக் காரணமான நிலைமைகள். செய்தி- செய்கை.

உதயகுமரன் காமத்துயருழந்துயிர்த்தல்

17-28: அகல்வாய்.............போயபின்

(இதன் பொருள்) அகல்வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண பகல் அரசு ஓட்டிய பணை எழுந்து ஆர்ப்ப-அகன்ற இடத்தையுடைய நிலவுலகத்தை விலக்குதற்கரிய இருள் விழுங்கிவிடும்படி ஞாயிறாகிய அரசனைப் புறங்காட்டி ஓடச் செய்து உலகின்கண் வெற்றி முரசின் முழக்கம் எழுந்து ஆரவாரியாநிற்ப; மாலை நெற்றி வான்பிறைக் கோட்டு நீல யானை- மாலைப் பொழுதாகிய நெற்றியினையும் வெள்ளிய பிறையாகிய மருப்பையுமுடைய நீலநிறம் பொருந்திய இரவாகிய யானையானது; மேலோர் இன்றி-தன்னையடக்குபவராகிய பாகர் யாருமில்லாமல்; காமர் செங்கை நீட்டி- விருப்பமாகிய தன் செவ்விய கையை உலகிலே நீட்டி; வண்டுபடு பூநாறு கடாஅஞ் செருக்கி வண்டுகள் மொய்த்தற்குக் காரணமான ஏழிலைப்பாலை மலரினது மணம்கமழ் தலாகிய மதத்தாலே செருக்குற்று; கால் கிளர்ந்து காற்றைப் போல விரைந்து; நிறை அழி தோற்றமொடு தொடர் தன்னைக் கண்டோருடைய மனத்திட்பம் அழிதற்குக் காரணமான தோற்றத்தோடு தொடரா நிற்பவும்; முறைமையின்-இசை நூல் முறைப்படியே; நகர நம்பியர் விளையோர் தம்முடன் மகரவீணையினை கிளை நரம்பு வடித்த இளிபுணர் இன்சீர் எஃகு உளம் கிழிப்ப-பூம்புகார் நகரத்தே வாழுகின்ற மேன்மக்களுள் வைத்து இளமையுடைய ஆடவர் தங் காதலியரோடு களித்திருந்து மகரயாழின்கண் கிளைநரம்புகளை வருடி எழுப்பிய இளி முறையாலே கூட்டப்பெற்ற இனிய தாளவறுதியுடைய பண்ணாகிய வேலானது பாய்ந்து ஊடுருவிப் புண் செய்யப்பட்டு; பொறாஅ நெஞ்சில் புகை எரிபொத்தி பறா அக்குருகின் உயிர்த்து அவன் போயபின்-உண்டாகின்ற துன்பத்திற்கு ஆற்றாது அலமருகின்ற தனது நெஞ்சத்திலே புகையுடைய காமத்தீப் பற்றித் தீய்த்தலாலே கொல்லுலைக்கண் துருத்தியுயிர்க்கு மாறு போலே வெய்தாக நெடுமூச்செறிந்து அவ்வரசன் மகன் அவ்விடத்தினின்றும் அகன்று போயபின்பு என்க.

(விளக்கம்) பெயர்வோன்றன்னை நீல யானை தொடர இன்சீர் எஃகுளம் கிழிப்ப உயிர்த்து அவன் போயபின் என இயையும்.

அகல்வாய்-அகன்ற இடத்தையுடைய. இனி ஞாலத்தை அகல்வாய் இருள் உண்ண என மாறி வாயை இருண்மேலேற்றலுமாம். பகலரசு-ஞாயிறு. மாலை முரசு முழங்குதல் உண்மையின் இரவு என்னும் நீல யானை தன் பகையாகிய பகலரசனை வென்று(மாலை முரசாகிய தனது) வெற்றி முரசம் முழங்கும்படி அவன் ஆட்சி செய்த ஞாலத்தை எல்லாம் இருளாகிய தன்வாய் விழுங்காநிற்பக் காம விருப்பம் என்கின்ற தன் கையை நீட்டிச் செருக்கி (உதயகுமரனுடைய) நிறையழி தோற்றமொடு அவனைத் தொடரவும் இன்சீராகிய எஃகு உளம் கிழிப்பவும் அது பொறாஅத நெஞ்சிற் (காமமாகிய) புகையெரி மூள ஆற்றாது உயிர்த்து அவன் போயபின் என்க.

இரவை யானையாக உருவகித்தலின் மாலையை அதன் நெற்றியாகவும் பிறையை மருப்பாகவும் இருளை நிறமாகவும் உருவகித்தனர்.

இரவு உலகில் காமத்தை உண்டாக்குதலின் அதனை அதன் கையாக உருவகித்தார். ஏழிலைப்பாலை மலர் இரவில் மலரும் போலும். ஆகவே அம் மலர் யானையின் மதநாற்றம் போலும் நாற்றமுடையதாதல் பற்றி அந் நாற்றத்தை அந்த யானை பொழியும் மாநாற்றமாக உருவகித்தார். ஏழிலைப்பாலை மலர் யானைமதம் நாறுமியல்புடைத் தென்பதை

பாத்த யானையிற் பதங்களிற் படுமத நாறக்
காத்த வங்குச நிமிர்ந்திடக் கால்பிடித் தோடிப்
பூத்த வேழிலைப் பாலையைப் பொடிப்பொடி யாகக்
காத்தி ரங்களாற் றலத்தொடுந் தேய்த்ததோர் களிறு

எனவரும் இராமாவதாரச் செய்யுளானும்( வரைக்-6) உணர்க.

முறைமையின்-நூல் முறைமையாலே. நகர நம்பியர் என்றது, நகரத்துப் பெருங்குடி மக்களாகிய இளைஞர்களை. இவர்கள் தங் காதலிய ரோடிருந்து யாழ்வருடிப் பாடுகின்ற இசை உதயகுமரன் காமநோயை மிகுவித்தலின் இன்சீர் எஃகு என்றார். இன்சீர் என்றது அன்மொழித் தொகையாய்ப் பண் என்னும் பெயர்ப் பொருட்டாய் நின்றது. இனிய தாளவறு தியையுடைய பண் என்றவாறு.

எரி-காமத்தீ. பொத்தி-மூண்டு. பறாஅக்குருகு- கொல்லன் உலைக்களத்துத் துருத்தி; வெளிப்படை, பாயா வேங்கை பறவாக் கொக்கு என்பன போல. அவன்: உதயகுமரன்.

உதயகுமரன் போனபின் மணிமேகலை உட்கோளும் செயலும்

29-38: உறையுள்........ஆமென

(இதன் பொருள்)  உறையுள் குடிகை உள்வரிக்கோலம் கொண்ட மறு இல் செய்கை மணிமேகலைதான்- சம்பாபதி எழுந்தருளியிருக்குமிடமாகிய குச்சரக் குடிகையினின்றும் காய சண்டிகையாக உள்வரிக்கோலம் பூண்ட குற்றமில்லாத நல்லொழுக்கத்தையுடைய அம் மணிமேகலை தானும் தான் இனிச் செய்யக்கடவதென்னென்று தன்னுள்ளே ஆராய்பவள்; மாதவி மகளாய் மன்றம் திரிதரின்- மாதவி மகளாகிய யான் எனக்குரிய உருவத்தோடே இவ்வுலக வறவியாகிய பாதுகாவலற்ற இவ்வம்பலத்தே இவ்வாறு திரிவேனாயின்; மன்னவன் மகன் கைவிடலீயான்- வேந்தன் மகன் நம்மைக் கைவிட்டுப் போவானல்லன், ஆகவே அவனிடத்தினின்றும் யான் தப்புதல் வேண்டின்; காயசண்டிகை காய் பசியாட்டி என ஊர் முழுதும் அறியும் உருவம் கொண்டே- காயசண்டிகை என்னும் அவ் விச்சாதரி இடையறாது வயிறு துன்புறுத்துதற்குக் காரணமான ஆனைத் தீ நோயுடையாள் என்று இப் பூம்புகார் நகரத்தில் வாழ்வோரெல்லாம் நன்கு அறிகுவர் ஆதலால் என்னுருக்கரந்து யான் இப்பொழுது மேற்கொண்டிருக்கும் இக் காயசண்டிகை யுருவத்தோடேயே எப்பொழுதும் புறஞ் சென்று; ஆற்றாமாக்கட்கு ஆற்றுந்துணை ஆகி ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் அவர் மேற் சென்று அளித்தல் விழுத்தகைத்து என்றே பசித்துயரம் பொறாமல் வருந்துகின்ற இரவன்மாக்கள் பசியை மாற்றி அவரை ஆற்றாவாராக்குதற் பொருட்டு இல்லந்தொறும் சென்று பிச்சை ஏற்றலும் அப் பிச்சையுண்டியை ஆற்றாமாக்கட்கு வழங்குதலும் பிச்சை ஏற்போர்க்குரிய கடமைகளாகும் என்றும், அவ்வாறு இரப்பவர் தாமும் காணாரும் கேளாரும் முதலியவராக அவ்வாற்றாமாக்கள் இருக்குமிடத்தே சென்று அவ்வுணவினை வழங்கிப் பேணுதல் மிகவும் சிறந்த நல்வினையாகும் என்றும்; நூல் பொருள் உணர்ந்தோர்- பிடக நூலின் பொருளை ஐயந்திரிபற உணர்ந்த சான்றோர்; நுனித்தனர்- கூறுந் துணர்ந்துரைத்தனர் ஆதலின்; அம் என-அங்ஙனம் செய்தலே இப்பொழுது நமக்கியன்ற செயலாகும் என்று துணிந்து என்க.

(விளக்கம்) இப் பகுதியில் மணிமேகலை தனக்கும் தன்னாலே பிறர்க்கும் சிறிதும் இடர் வாராமைக்கும் ஆற்றாமாக்கட்கு ஆற்றுந் துணையாய் அவர்க்கெல்லாம் இன்பஞ் செய்தற்கும் சூழ்கின்ற இச் சூழ்ச்சி பெரிதும் நுணுக்க முடையதாதலுணர்க. இங்ஙனம் சூழவல்ல அறிவை எதிரதாக் காக்கும் அறிவு என்று தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் போற்றிக் கூறுவர்

எதிரதாக் காக்கும் மறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்      (429)

என்பது செந்தமிழ் மறை

ஆனைத் தீப்பசியை ஆற்றுதற் பொருட்டுக் காயசண்டிகை இடையறாது அந் நகரத்திலே பிச்சை ஏற்றத் திரிந்தமையாலே அவளை ஊர் முழுதும் அறியும். அவள் அவ்வூரை விட்டுப் போய் விட்டமை மணிமேகலை மட்டும் அறிகுவள். அவ்வூரிற் பிறர் யாரும் அறியாமையின் அவ்வுருவங் கொண்டு திரிந்தால் தன்னை எல்லாரும் காயசண்டிகை என்றே கருதுவர்; மன்னவன் மகனும் நாளடைவில் தன்னை மறந்தொழிவான் என்றுட் கொண்ட படியாம்.

பிச்சை ஏற்பது தானும் பிறர் பொருட்டே ஏற்றல் வேண்டும், ஏற்போர் ஒல்லும் வகையால் அவ்வாற்றானும் ஓவாத அறவினை செய்தல் வேண்டும், தம் பொருட்டு ஏற்றல் தீவினையாம் என்னு மிவ்வறங்கள் பிடகநூல் கூறும் அறங்கள் போலும் என்னை? இவ்வறம் நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனர் என்றமையால் ஈண்டு நூலெனப்படுவது பிடக நூல்களே யாதலின் என்க.

இரப்போர்க்கு ஏற்றலும் இடுதலும் கடன் ஆகலின் யாம் இடுவது கண்டும் அயிர்ப்பாரிலர் என்று துணிவாள் அவர் மேற் சென்றளித்தல் விழுத்தகைத்து என்று நூலோர் நுனித்தனர் என்று நினைந்தனள் என்க.

நுனித்தல்- நுணுக்கமாக அறிதல். ஆம் என-என்று அறுத்துக் கண்ணழித்து இங்ஙனம் செய்தலே இப்பொழுதைக்கு நமக்குத் தகதி யாம் என்று கருதி என்று பொருள் விரித்திடுக.

மணிமேகலை சிறைக்கோட்டம் புகந்து உண்டி கொடுத்து உயர் அறம் பேணல்

39-46: முதியாள்.....................ஊட்டலும்

(இதன் பொருள்) முதியாள் கோட்டத்து அகவயின் இருந்த அமுதசுரபியை அங்கையின் வாங்கி- சம்பாபதியின் கோயிலாகிய குச்சரக்குடிகையின் உள்ளே தான் கொடுபோய் வைத்திருந்த அமுதசுரபி என்னும் தெய்வத்தன்மையுடைய திருவோட்டினை எடுத்துத் தன் அழகிய கையிலே ஏந்தி; பதி அகம் திரிதரும் பைந்தொடி நங்கை- காயசண்டிகை வடிவத்தோடே அந் நகரத்தினூடே இரவலரை நாடித் தான் வேண்டியாங்கு இயங்குகின்ற அம் மணிமேகலை நல்லாள்; அதிர் கழல் வேந்தன் அடிபிழைத்தாரை ஒறுக்கும் தண்டத்து உறுசிறைக் கோட்டம் விருப்பொடும் புகுந்து-ஒலிக்கின்ற வீரக்கழல் கட்டிய சோழ வேந்தன் தன் திருவடியின் கீழிருந்தும் அறியாமையாலே பிழை செய்த மாக்களை அப் பிழைக்குத்தகத் துன்புறுத்தும் தண்டம் காரணமாகப் பிழை செய்த அம் மாக்கள் புக்குறைகின்ற சிறைக்கோட்டத்தினுள்ளே உண்டி கொடுத்து அவர் உறுபசி களைதற்குப் பெரிதும் விரும்பிப் புகுந்து; ஆங்கு வெய்து உயிர்த்துப் புலம்பி பசிஉறு மாக்களை-அச் சிறைக் கோட்டத்தில் துன்பத் தாலே வெய்தாக நெடுமூச்செறிந்து பசியாலும் வருந்தியிருக்கின்ற அரிய உயிரையுடைய மாக்களை இனிதிற்கூவியழைத்து; வாங்கு கையகம் வருந்த நின்று ஊட்டலும்-அம் மக்கள் ஏந்துகின்ற கைகள் பொறையால் வருந்துமாறு மிகுதியாக அமுதசுரபியினின்றும் உணவுகளை நிரம்பப்பெய்து உண்ணச் செய்யுமளவிலே என்க.

(விளக்கம்) முதியாள்: சம்பாபதி. கோட்டத்து அகவயினிருந்த அமுத சுரபியை வாங்கி என்றமையால்-முன்னர்க் காயசண்டிகை வடிவாய்ப் பாத்திரம் ஏந்தி வந்து தோன்றியவள் மன்னவன் மகன் போயபின் மீண்டும் கோயிலுட் புகுந்து வைத்த பாத்திரத்தை இன்னது செய்வல் என எண்ணித் துணிந்த பின் எடுத்தாள் என்பது பெற்றாம்.

வாங்கி-எடுத்து. பைந்தொடி: மணிமேகலை. பசியால் வருந்துவோர் சிறைக் கோட்டத்துள் மிக்கிருப்பர் என்னும் கருத்தால் சிறைக் கோட்டத்துப் புகுந்தபடியாம்.

அதிர்கழல்-ஒலிக்கின்ற வீரக்கழல். பகைவர் உள்ளம் நடுங்குதற்குக் காரணமான வீரக்கழல் எனினுமாம். வேந்தன் அடிபிழைத்தார் என்றது- நாட்டினிற் செங்கோன் முறையினில்லாமல் குற்றம் புரிந்த மாந்தரை, ஒறுத்தல்-துன்புறுத்துதல் உறுசிறை: வினைத்தொகை. ஆருயிர் என்றார் துன்புழித் தொறும் காதலிக்கப் படுமருமையுடைத்தாதல் பற்றி.

கோட்டங் காவலர் வியந்து கோவேந்தனுக் கறிவிக்கச் செல்லுதல்

47-50: ஊட்டிய................ஏகி

(இதன் பொருள்) கோட்டங் காவலர்-கோவேந்தனுடைய சிறைக் கோட்டத்தைக் காவல் செய்கின்ற அரசியற் பணியாளர் மணிமேகலை அச் சிறைக் கோட்டத்தே புகுந்து பசியால் வருந்துகின்ற மாந்தரையெல்லாம் அழைத்து அமுதூட்டி நிற்கும் காட்சியைக் கண்ணுற்று; ஊட்டிய பாத்திரம் ஒன்று என வியந்து-என்னே! இஃது என்னே! எண்ணிறந்த மாந்தர்க் கெல்லாம் இவள் அவரவர் வேண்டியவுணவினை ஏற்போர் கையகம் வருந்துமாறு வழங்கும் கருவி இவள் கையிலேந்திய திருவோடு ஒன்று மட்டுமே யாகவுளது, இக்காட்சி பெரிதும் வியக்கத் தக்கது என்று மருண்டு; கோமகன் தனக்கு இப் பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும்-யாம் நம்மரசர் பெருமானுக்கு இத் திருவோடு உணவு தருகின்றதும் அவ்வுணவினை ஆர்வத்தோடு நின்றூட்டுவதுமாகிய இவ்வற்புதம்; யாப்புடைத்தாக-திருச்செவியோடு தொடர்புடையதாகும்படி; இசைத்தும் என்று ஏகி- சென்று கூறுவேம் என்று துணிந்து போய் என்க.

(விளக்கம்) பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும் ஆகிய இவ்வற்புதக் காட்சியை என்று வருவித்தோதி யாப்புடைத்து என்னும் ஒருமையோடியைக்க அன்றி: பன்மை ஒருமை மயக்கம் எனினுமாம் இசைத்தும்-கூறுவேம்.

(51-ஆம் அடிமுதலாக, 116 ஆம் அடியீறாகச் சோழ மன்னனுடைய பொழில் விளையாட்டு வண்ணனையாக ஒரு தொடர்)

சோழமன்னன் உரிமையோடு சென்று பூம்பொழிலிற் புகுந்து விளையாடுதல்

51-60: நெடியோன்................சிறந்தும்

(இதன் பொருள்) நெடியோன் குறள் உருவு ஆகி- திருமால் தேவர்கள் வேண்டுகோட்கிணங்கிக் காசிபன் என்னும் முனிவன் பத்தினியாகிய அதிதி என்பவள் வயிற்றில் குறிய உருவமுடையவனாகப் பிறந்து மாவலியின் வேள்விக் களத்திலே சென்று; நிமிர்ந்து தன் அடியில் படியை அடக்கிய அந்நாள்- பேருருக் கொண்டு தனது ஒரே திருவடியில் இந் நிலவுலகத்தை எல்லாம் அடக்கி அளந்து தனதாக்கிக் கொள்ளும் பொருட்டுப் பண்டொரு காலத்தே மூன்றடி மண்ணிரந்த நாளிலே; நீரின் பெய்தமூரிவார் சிலை மாவலி மருமான்-ஆசிரியனாகிய வெள்ளிதடுக்கவும் இல்லை என்னாமல் அவ் வாமனன் இரந்த மண்ணை நீர் வார்த்து வழங்கிய வள்ளன்மையையும் அமரர் முதலியோரையும் வெல்லுதற்கியன்ற பெரிய நெடிய விற்படையையும் உடைய புகழாளனாகிய மாவலியின் வழித்தோன்றலாகிய மன்னவனுடைய; சீர்கெழு திருமகள் சீர்த்தி என்னும் திருத்தகு தேவியொடு-கற்புடைமையாலே புகழ் பொருந்திய செல்வமகளாகிய சீர்த்தி என்னும் திருப்பெயரையுடைய திருமகளை ஒத்த தன் பெருந்தேவியோடு; போது அவிழ் பூம் பொழில் புகுந்தனன்(மாவண்கிள்ளியாகிய சோழமன்னவன்)- நாளரும்புகள் இதழ் விரிக்கின்ற தனது பூம்பொழிலிலே புகுந்தானாக; புக்கு கொம்பர்த் தும்பி குழல்இசை காட்ட பொங்கர் வண்டு இனம்  நல் யாழ் செய்ய குயில் வரி பாட மாமயில் ஆடும்-புகுந்து அப் பொழிலினூடு ஒரு சார் மலர்ந்த கொம்புகளிலே தேன் தேர்கின்ற தும்பிகள் தமது முரற்சியாலே வேய்ங் குழலின் இன்னிசையைக் செய்யாநிற்பவும் அப் பொழிலிடத்துப் பல்வேறு வகைப்பட்ட வண்டுகள் யாழின் இசைபோன்று இனிதாக முரலா நிற்பவும் குயில்கள் இனியமிடற்றுப் பாடலைப் பாடா நிற்பவும் நீலமயில்கள் விறலியர் போன்று கூத்தாடுகின்ற; விரைப் பூம்பந்தர் கண்டு உளம் சிறந்தும்- நறுமணம் கமழ்கின்ற மலர்க்கொடிகளாலியன்ற ஆடலரங்கு போன்ற பந்தரின் எழில் கண்டு உள்ளத்தில் உவகைமிக்கும்; என்க.

(விளக்கம்) ஈண்டுக் கூறப்படுகின்ற சோழமன்னனை மாவண்கிள்ளி என்பர். இக் காதையில் 127 ஆம் அடியில் வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி என்றோதுதல் காண்க. பிறிதோர் இடத்தில் நெடுமுடிக்கிள்ளி என்றலின் கிள்ளி என்பதே இவன் பெயர் என்று தெரிகின்றது. இவனைக் கிள்ளி வளவன் என்றும் கூறுப.

இக் கிள்ளியின் மனைவியின் பெயர் சீர்த்தி என்பதாம். இவளைப் புலவர் பெருமான் ஈண்டு நான்கு அடிகளாலே விதந்தெடுத்துப் பாராட்டி நம்மனோர்க்கு அறிவிக்கின்றனர். இவ்வடிகளாலே இக் கோப்பெருந் தேவி புகழப்படுகின்றாளேனும் அது வஞ்சப் புகழ்ச்சியேயாம். அவளை அரக்கி என்றிகழ்வதே நூலாசிரியர் குறிப்பாகும். இவள் பின்னர் மணிமேகலைக்குச் செய்யும் கொடுமை இரக்க மென்றொரு பொருளிலாத நெஞ்சினராகிய அரக்கர் செய்தற்கியன்ற செயலாக இருத்தலின் அவளுடைய குலம் அரக்கர் குலம் என்பதை அறிவுறுத்தவே புலவர் இவ்வாறு வஞ்சப் புகழ்ச்சியாகப் பாராட்டுகின்றனர். இந் நுணுக்க முணராக்கால் ஈண்டு நீளதாக அவளைப் புகழ்வது மிகைபடக் கூறலாய் முடியும் என்க.

மாவலி தேவர்களுக் கிடுக்கண் செய்ய அது பெறாத தேவர் திருமாலிடத்தே தஞ்சம் புக்கனர். அவர் இடுக்கண் தீரத் திருமால் குறள் உருவாகிச் சென்று மாவலியின்பால் மூவடி மண்ணிரந்தான்; திருமாலின் சூழ்ச்சியை அறிந்த வெள்ளி கொடாதே என்று தடுத்தான்; அவனை இகழ்ந்து நீர்வார்த்த நில மீந்தான். அம் மாவலியின் இவ் வள்ளன்மைச் சிறப்புக் குறிப்பாகத் தோன்றுதற்கே நீரிற் பெய்த என்றார். அவனுடைய ஆற்றற் சிறப்பை வில்லிற் கேற்றி மூரிவார் சிலை மாவலி என்றார்.

மாவலி மருமான்- மாவலி மரபிற்றோன்றிய ஓரரசன். அவள் அரக்கர் மரபிற் பிறந்தவள் என்றறிவித்தலே புலவர் கருத்தாகலின் அவள் தந்தை பெயர் கூறாது மாவலி மருமான் மகள் என்றொழிந்தார். திருமகள் என்றது செல்வ மகள் எனவும் திருத்தகு தேவி என்றது திருமகள் எனத் தகுந்த தேவி எனவும் வெவ்வேறு பொருள் காண்க. மாவலி மரபு மன்னர் பாணவரசர் எனவும் கூறப்படுவர். அவராவார் வாணகப்பாடி முதலிய இடத்தை ஆட்சி செய்தவர். போது- நாளரும்பு. அன்றலரும் அரும்பு என்றவாறு. கொம்பர் மலர்க்கொம்பு. தும்பி வண்டு என்பன அவற்றின் வகை. யாழ்: ஆகுபெயர் வரியையுடைய குயிலுமாம். மா- சிறப்புமாம். விரை நறுமணம்.

இதுவுமது

91-70: புணர்...........என்றும்

(இதன் பொருள்) புணர் துணை நீங்கிய பொய்கை அன்னமொடு மடமயிற் பேடையும் தோகையும் கூடி- தன்னோடு புணரும் காதற்றுணையாகிய பெடையன்னம் பிரியப் பெற்றுப் பொய்கையின்கண் தனத்திருக்கின்ற அன்னச் சேவலொடு தோகையையுடைய ஆண் மயிலும் அதன் புணர் துணையாகிய மடப்பமுடைய பெடையும் தம்முட் கூடி; ஆங்கு இருசிறை விரித்து எழுந்து உடன் கொட்பன-அவ் விடத்தே தம்மிரு சிறகுகளையும் விரித்தெழுந்து ஒரு சேரச் சுற்றி வருபவற்றை; ஒரு சிறைக் கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி-ஓரிடத்தே கண்டபொழுது உள்ளத்தே பெரிதும் மகிழ்ந்து; மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும் ஆடிய குரவை இஃது ஆம் என நோக்கியும்-நீலமணி போன்ற நிறமுடைய மாயவனும் அவன் தமையனாகிய பலதேவனும் நப்பின்னைப் பிராட்டியும் ஒருங்கு கூடி ஆடிய குரவைக் கூத்தையே ஒக்கின்றது இப் பறவைகள் கூடி ஆடுகின்ற இக் காட்சி என்று நெடும் பொழுது அவ்வழகை நோக்கி நின்றும்; கோங்கு அலர் சேர்ந்த மாங்கனி தன்னை பாங்கு உற இருந்து பல்பொறி மஞ்ஞையை-கோங்க மரத்திலே மலர்ந்திருக்கின்ற ஒரு மலரின் மேலே பொருந்துமாறு அதனயலே நிற்கின்ற மாமரத்திலே காய்த்துத் தூங்குகின்ற முகஞ் சிவந்த கனியையும் அதன் பக்கத்திலே கோங்கங் கொம்பிலே அமர்ந்திருக்கின்ற பலவாகிய புள்ளிகளையுடைய மயிலையும் ஒருங்கே நோக்கி; செம்பொன் தட்டில் தீம்பால் ஏந்திப் பைங்கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம் என்றும்- சிவந்த பொன்னாலியன்றதொரு தட்டிலே இனிய பாலைப் பெய்து கையிலேந்தித் தான் வளர்க்கின்ற பசிய கிளிக்கு ஊட்டுவாளொர நங்கையைக் காண்பது போல்கின்றது இக்காட்சி என்று அக்காட்சியை நயந்து நோக்கியும்; என்க.

(விளக்கம்) புணர்துணை-புணர்ந்து மகிழ்தற்குக் காரணமான பெடையன்னம். துணை நீங்கிய அன்னம் என்றது சேவலன்னத்தை. இது பலதேவனுக்குவமை. தோகை-ஆண்மயில் இது ;நீலமணி வண்ணனாகிய மாயவனுக்கும் அதன் பெடை நப்பின்னைப் பிராட்டிக்கும் உவமைகள்.

குரவை-கை கோத்தாடும் ஒரு வகைக்கூத்து.

மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும் ஆடிய குரவை என்பதனோடு

மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும்
கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர
ஆய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசோதையார் தொழுதேத்தத்
தாதெருமன் றத்தாடும் குரவையோ தகவுடைத்தே

எனவரும் சிலப்பதிகாரமும்(17) நினைவு கூரற்பாலதாம்.

மலர்ந்த கோங்கமலர்க்குப் பொன்னாலியன்ற தட்டும் அம் மலர்மேற் பொருந்தத் தூங்கும் மாங்கனிக்குப் பைங்கிளியும் அவற்றின் மருங்கே மரக்கிளையிலமர்ந்திருக்கின்ற மயிலுக்குப் பாவை(பெண்)யும் உவமைகள். பைங்கிளி என்ற குறிப்பாலும் காயென்னாது கனி என்றதனாலும் முகஞ்சிவந்த கனி என்று கொள்க. கனிந்த முகம் கிளியின் அலகிற்கும் பசிய ஏனைய பகுதி கிளியின் உடலிற்கும் உவமைகளாக நுண்ணிதிற் கண்டு கொள்க.

இனி இவ்வுவமையோடு

வண்டளிர் மாஅத்துக் கிளிபோல் காயகிளைத்துணர்

எனவும்,(அகம்-37)

சேடியல் வள்ளத்துப் பெய்தபால் சிலகாட்டி
ஊடுமென் சிறுகிளி யுணர்ப்பவள் முகம்போல
............................................
கடிகயத் தாமரைக் கமழ்முகை கரைமாவின்
வடிதீண்ட வாய்விடூஉம் வயலணி நல்லூர!
 
எனவும் வரும்(கலி-72) பிற சான்றோர் கூற்றுக்களும் நோக்கத் தகுவனவாம்.

இதுவுமது

71-78: மணி................ஏத்தியும்

(இதன் பொருள்) மணி மலர்ப் பூம்பொழில் அகவயின்-அழகிய மலர்களையுடைய பூம்பொழிலினுள்ளிடத்தே; பெருமதர் மழைக்கண் மடவோர்க்கு இயற்றிய மாமணி ஊசல்- பெரிய மதர்த்த குளிர்ந்த கண்ணையுடைய உரிமை மகளிர் ஏறி ஆடுதற் பொருட்டு இயற்றப்பட்ட சிறந்த மணிகள் பதித்த பொன்னூசலின் மேல்; கடுவன் இருந்த பிணவுக் குரங்கு ஏற்றி ஊக்குவது கண்டு நகை எய்தியும்-ஆண் குரங்கு தன் பக்கலிலே இருந்த தன் காதலியாகிய பெண் குரங்கை ஏற்றி வைத்து ஆட்டுவதனைப் பார்த்து நகைத்தும்; பாசிலை செறிந்த பசுங்கால் கழையொடு வால் வீசெறிந்த மராஅங் கண்டு- பசிய இலைகள் செறிந்திருக்கின்ற பிச்சை நிறமான தண்டினையுடைய மூங்கிலோடு வெள்ளிய நாண் மலர் செறிய மலர்ந்து நிற்கின்ற வெண்கடப்ப மரத்தினையும் ஒரு சேரக் கண்டு இக் காட்சியானது; நெடியோன் முன்னொடு நின்றனன் ஆம் என-நெடுமாலாகிய மாயவன் தன் தமையனாகிய பலதேவனோடு நிற்பவனுடைய தோற்றத்தை நினைவூட்டுகின்றது என்று இறையன்பு கொண்டு; தொடி சேர் செங்கையின் தொழுது நின்று ஏத்தியும்-வீர வலையங் கிடந்த தனது சிவந்த கைகளைக் குவித்து நின்று வாழ்த்தியும் என்க.

(விளக்கம்) மணிமலர்-அழகிய மலர். பிணவுக் குரங்கு-பெண் குரங்கு. பிணவு என்னும் சொல் குரங்கிற் பெண்ணிற்கு வந்தமை தொல்-மரபி-58 ஆம் சூத்திரத்தே ஒன்றிய என்று இலேசாற் கொள்க.

மடவோர் என்றது உவளகத்து மகளிரை. மணி கூறியதனால் மணி பதித்த பொன்னூசல் என்க. கடுவன்-ஆண் குரங்கு. குரங்குகள் மக்கள் செய்வதனைப் பார்த்தவழி அது போலத் தாமும் செய்யும் இயல்புடையன ஆதல் ஈண்டு நினைக. நெடியோன்-மாயவன். மாயவனுக்கு இலை செறிந்த பச்சை மூங்கில் உவமை. வெள்ளிய மலர் செறிந்த வெண்கடம்பு பலதேவனுக்குவமை. இதனோடு ஒருகுழை ஒருவன் போல் இணர் சேர்ந்த மராஅமும் எனவரும் கலியடியையும்(26) நோக்குக. பச்சைமூங்கிலும் வெண்மலர் செறிந்த மராஅமும் ஓரிடத்தே சேர்ந்து நிற்குங் காட்சி மாயவனும் பலதேவனும் ஓரிடத்தே நிற்குங் காட்சி போறலின் அக் கடவுளர்பால் அன்புடைமையின் கைகூப்பித் தொழுதனன் என்றவாறு. தொடி-வீரவலையம்.

அரசனோடாடும் அரிவையரியல்பு

79-92: ஆடல்..............அயர்ந்து

(இதன் பொருள்) ஆடல் கூத்தினோடு அவிநயம் தெரிப்போர் நாடகக் காப்பிய நல் நூல் நுனிப்போர்-கதை தழுவாமல் இசைப்பாட்டின் தாளத்திற் கேற்பக் கால்பெயர்த்திட்டாடுமியல்பினையுடைய ஆடற் கலையினோடு பாட்டின் பொருள் புலப்படக் கை காட்டி அவிநயிக்கும் இசைக்கலையும் நாடக வழிக்குப்பற்றி இயற்றப்பட்ட அகப்பொருட் பனுவல்களின் உள்ளுறையும் இறைச்சியுமாகிய நுண்பொருளை நுணுக்கமாக உணர்ந்து கூறும் இயற் கலையுமாகிய மூன்று கலைகளையும் கூர்ந்துணர்ந்தவரும்; பண் யாழ் நரம்பின் பண்ணுமுறை நிறுப்போர்-எழிசைகளையுமுடைய யாழின் நரம்புகளை வருடிப் பண்களை நூன் முறைப்படி எழுவி இசைக்க வல்லாரும்; தண்ணுமைக் கருவிக் கண் எறி தெரிவோர்-தோற் கருவிகளுள் தலையாய மத்தளத்தின் இருமுகத்தினும் இசைகூட்டி அடித்தலை நன்குணர்ந்தவரும்; குழிலொடு கண்டம் கொளச் சீர் நிறுப்போர்-வேய்ங் குழலின் இசையோடு தமது மிடற்றிசை பொருந்தும்படி பாடி தாளத்தாலே அளப்பவரும்; பழுகிய பாடல் பலரொடு மகிழ்வோர்-இலக்கணம் நிரம்பி இன்பம் கெழுமிய பண்களைப் பலர் கேட்ப அரங்கிலிருந்து பாடிக் கேட்போர் பலரும் மகிழ்தல் கண்டு அவரினுங் காட்டிற் பெரிதும் மகிழுபவரும்; ஆரம் பரிந்த முத்தம் கோப்போர்-அறுந்த மாலையினின்றும் உதிர்ந்த முத்துக்களை அழகுறக் கோப்பவரும்; ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர்-ஈரமின்றி உலர்ந்த சந்தனச் சுண்ணத்தை வியர்வொழிய மார்பிலே அப்புவோரும்; குங்குமம் கொங்கையின் வருணம் இழைப்போர்-குங்குமத்தைக் கொண்டு முலைகளுக்கு வண்ணந் தீற்றுவோரும்; அம் செங்கழுநீர் ஆய்இதழ் பிணைப்போர்-அழகிய செங்கழுநீரினது அழகிய மலரை மாலையாகத் தொடுப்பவரும்; நல் நெடுங் கூந்தல் நறுவிரை குடைவோர்-இயற்கையழகுமிக்க நெடிய தம் கூந்தலை நறுமணப் புகையிலே மூழ்குவிப்பவரும்; பொன்னின் ஆடியின் பொருந்துபு நிற்போர்-திருமகள் போன்று தமது நிழல் நிலைக்கண்ணாடியிலே பொருந்தும்படி அதனெதிரே தமதழகைக் கண்டு நிற்பவரும் ஆகிய; ஆங்கவர் தம்மொடு-இன்னோரன்ன கலை நலமிக்க மகளிர் பலரோடுங் கூடி; அகல் இரு வானத்து வேந்தனின் சென்று விளையாட்டு அயர்ந்து-அகன்ற பெரிய வானுலகத்து வாழும் அமரர் கோமானாகிய இந்திரன் அரம்பையரோடு சென்று கற்பகப் பொழிலில் விளையாடுமாறு போலப் பூம்பொழிலிற் புகுந்து விளையாடல் செய்து என்க.

(விளக்கம்) ஆடல்-தாளத்திற்கேற்ப அடிபெயர்த்து ஆடும் நடனம் அவிநயம்-பாடலின் பொருள் தோன்றக் கை காட்டி வல்லபஞ் செய்தல். நாடகக் காப்பியம்-அகப்பொருட்பனுவல். என்னை? இது நாடக வழக்கும் உலக வழக்குந் தழுவி இயற்றப்படுஞ் செய்யுள் ஆதலின் நாடகக் காப்பியம் என்றார். நுனித்தல்-உள்ளுறையும் இறைச்சியும் குறிப்புமாகிய செய்யுட் பொருளைக் கூர்ந்துணர்ந்து கூறுதல். என்னை?

கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
உணர்வுடை மார்ந்தர்க் கல்லது தெரியின்
நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே

என்பவாகலின் (தொல்-மெய்ப்-சூ-27) நன்னூல் அறிவோர் என்னாது நுனிப்போர் என்றார். எனவே ஈண்டு இயல் இசை நாடகம் என்னும் முத்திறத்துத் தமிழ்க்கலையும் வல்ல மகளிரும் கூறப்பட்டமையிறிக.

தண்ணுமை- மத்தளம். கண் என்றது அதன் இரண்டு முகங்களையும். எறி-எறிதல்; முழக்குதல். கண்ணெறி என்பதனை நெறி எனக் கண்ணழித்துக் கண்களில் இசை கூட்டும் நெறி எனினுமாம். என்றது இரண்டு கண்களினும் சுதி கூட்டும் முறை என்றவாறு. என்னை?

இடக்கண் இளியாய் வலக்கண் குரலாய்
நடப்பது தோலியற் கருவி யாகும்

என்பது முணர்க.(சிந்தா- செய்=675-நச்சி=உரை)

குழல்- வேய்ங்குழல். கண்டம்-மிடறு. குழலிசையோடு மிடற்றிசை பொருந்தப் பாடித் தாளத்தால் அளந்து அறுதி செய்வோர் என்க.

பழுநிய-நிரம்பிய; முற்றிய. பாடல்-இசைப் பாடல்; உருக்கள் ஆரம்-மாலை. பரிந்த முத்து-அறுந்துதிர்ந்த முத்து. விளையாட்டாகலின் ஆரம் அறுந்து உதிரும் முத்துக் கோக்கும் மகளிரும் வேண்டிற்று. ஈரம் புலர்ந்த சாந்தம்- சந்தனச் சுண்ணம். ஆடுங்கால் வியர்வை யொழியச் சுண்ணம் அப்புவோர் என்றவாறு. கூந்தலை நறுமணப் புகையில் மூழ்குவிப்போர் என்க. கூந்தலில் விரையூட்டி நீரின் மூழ்கி விளையாடுவோர் எனினுமாம். பொன்னின்- திருமகள் போல. இவரும் இன்னோரன்ன பிற மகளிரும் என்பார் ஆங்கவர் தம்மொடு என்றார். வேந்தன்-இந்திரன் வேந்தன் தீம்புனலுலகமும் என்புழி அஃதப் பொருட்டாதலறிக. விளையாட்டயர்ந்து- விளையாடி என்னும் ஒரு சொன்னீர்மைத்து.

பூம்பொழிலின் இயல்பு

93-99: குருந்தும்.............நின்றும்

(இதன் பொருள்) குருந்தும் தளவும் திருந்து மலர்ச்செருந்தியும் முருகு விரி முல்லையும் கருவிளம் பொங்கரும்-அவ் விளையாட்டில் இளைப்புழிக் குருந்த மர நிழலினும் செம்முல்லைப் பூம்பந்தரின் கீழும் அழகிய மலரையுடைய செருந்தி மரத்தின் நீழலினும் மணம் பரவுகின்ற முல்லைப் பூம்பந்தரின் கீழும் கருவிள மரச்சோலையினூடும்; பொருந்துபு நின்று-சேர்ந்து நின்றும்; திருந்து நகை செய்தும்- விளையாட்டின் வெற்றி தோல்வி பற்றி ஒருவரோடுடொருவர் அழகிய புன்முறுவல் செய்தும்; குறுங்கால் நகுலமும் நெடுஞ் செவி முயலும் பிறழ்ந்துபாய் மானும் இறும்பு அகலா வெறியும்-குறிய கால்களையுடைய கீரியும் நெடிய செவியையுடைய முயலும் பொள்ளெனத் தம்மைக் கண்டவுடன் திசைமாறி ஓடுகின்ற மானும் குறுங்காட்டைவிட்டு அகலாமல் நிலைத்து வாழுகின்ற யாடும் ஆகிய உயிரினங்களைக் கண்டுழி; வம் எனக் கூஉய்-இங்கு வாருங்கள் என்று தன் விளையாட்டுத் தோழரை யழைத்து; மகிழ்துணையொடு தன் செம்மலர்ச் செங்கை காட்டுபு நின்றும்-அவ்விடத்தே தோழியரோடு விரைந்து வந்துற்ற தான் மகிழ்தற்குக் காரணமான வாழ்க்கைத் துணைவியாகிய சீர்த்தி என்னும் பெருந்தேவியோடு சேரநின்று அவற்றை அவர்க்குத் தன் செந்தாமரை மலர் போன்ற சிவந்த கையாலே காட்டி மகிழ்ந்து நின்றும் என்க.

(விளக்கம்) விளையாட்டயர்ந்து இளைத்துழி என்க. தளவு-செம்முல்லை. செருந்தி-ஒரு மரம். தளவு முல்லை என்பன அவை படர்ந்த பந்தர்க்கு ஆகுபெயர். பொங்கர்-சோலை. விளையாடுவோர் அணிவகுத்துத் தம்முள் மாறுபட்டு நின்று ஆடி வென்றாலும் தோற்றாலும் அவை பற்றிப் பேசி நகுதல் இயல்பாகலின் திருந்து நகை செய்தும் என்றார். திருந்து நகை-எள்ளல் முதலிய குற்றமற்ற நகை எனினுமாம், உடலும் உள்ளமும் ஆக்கமுற்றுத் திருந்துதற்குக் காரணமான நகை எனினுமாம்.

குறுங்கால் நகுலமும் நெடுஞ்செவி முயலும் எனவும் பாய்மானும் அகலா வெறியும் எனவும் வருவனவற்றுள் முரண்அணி தோன்றிச் செய்யுளின்பம் மிகுவித்தல் உணர்க.

நகுலம்-கீரி. இறும்பு-குறுங்காடு. வெறி-யாடு. வம்மென மாதரைக் கூஉய், வரவழைத்து அவர்களில் மகிழ் துணையோடு நின்று அவையிற்றை இன்னின்ன என்று சொல்லிக் கையாற் சுட்டிக் காட்டி என்றவாறு. காட்டுபு-காட்டி.

பிற விளையாட்டிடங்கள்

100-109: மன்னவன்..............விளையாடி

(இதன் பொருள்) மன்னவன்றானும்-இவ்வாறு மாதரார் குழுவினோடு விளையாட்டயர்ந்து அவரோடு காட்சி பல கண்டு நின்ற அரசன் பின்னரும்; மலர்க்கணை மைந்தனும் இன் இளவேனிலும் இளங்கால் செல்வனும்-அவ்வுரிமை மகளிரேயன்றி, காமவேளும் ஆடற்கு இனிய இளைமையுடைய வேனிலரசனும் இளைமையுடைய தென்றலாகிய செல்வனும் உடங்கியைய மாலைப் பொழுதில் மெல்லென ஆடுபவன்; எந்திரக் கிணறும் கல் இடும் குன்றமும் வந்து வீழ் அருவியும் மலர்ப்பூம்பந்தரும்-வேண்டும்பொழுது நீரை நிரப்பவும் வேண்டாத பொழுது கழிக்கவும் ஆகிய பொறியமைக்கப் பெற்ற கிணறுகளின் மருங்கும் கல்லிட்டுக் கட்டப் பெற்ற செய்குன்றுகளின் மருங்கும் வேண்டும் பொழுது வந்து வீழ்கின்ற நீர்வீழ்ச்சியின் மருங்கும் மலர்க் கொடிகள் படர்ந்த நறுமணங்கமழும் பல்வேறு மலர்ப் பந்தரினூடும்; நீர்ப்பரப்பு பொங்கையும் கரப்பு நீர்க்கேணியும் நன்னீர்ப் பரப்பினையுடைய நீர் நிலையின் கரைகளிடத்தும் ஒளித்து உறை இடங்களும்-தேடுவார்க்கு அகப்படாமல் கரந்திருத்தற் கியன்ற இடங்களினூடும்; பளிக்கறைப் பள்ளியும் பளிங்காலியன்ற மண்டபங்களாகிய தங்குமிடங்களும் ஆகிய யாங்கணும் திரிந்து தாழ்ந்து விளையாடி- பல் வேறிடங்களினும் திரிந்து இருந்தும் மெல்லென விளையாடுதலைச் செய்து என்க.

(விளக்கம்) 55 ஆம் அடி தொடங்கி, 78- தொழுது நின்றேத்தியும் என்பது முடிய மன்னவன் மகளிரொடு பூம்பொழிலிற் புகுந்து முற்பகலில் ஆங்காங்குச் சென்று அதனழகு கண்டு கண்டு மகிழ்தலும், 79 ஆம் அடி தொடங்கி 95 ஆம் அடிகாறும் மன்னவன் ஆடற்கூத்தியர் முதலிய கலைநலம் மிக்க மகளிரோடு மரநீழலினும் சோலையினூடும் இளைப்பாறி இருந்து பல்வேறு கலையின்பம் துய்த்திருத்தலும், நண்பகல் நிகழ்ச்சிகள் என்றும், 96 ஆம் அடி தொடங்கி 106 ஆம் அடி முடிய அம் மன்னவன் அம் மகளிரொடு தென்றற் காற்றை இனிது நுகர்ந்தவாறே யாங்கணும் மெல்லத் திரிந்தும் தாழ்ந்தும் ஆடிய மென்மையான நிகழ்ச்சிகள் என்றும் நிரலே கூறப்பட்டிருத்தல் குறிக் கொண்டு நோக்குக. ஏன்? இவன் உதயகுமரனுடைய தந்தையாகலின் அவன் முதுமைப் பருவத்திற் கேற்ப ஈண்டுக் கூறப்படுவன எல்லாம் காட்சி காண்டலும் வாளாது உலாப் போதலுமாகவே கூறல் வேண்டிற்று.

மாலைப் பொழுதிலே மகளிரொடு ஆடுதற்கியன்ற வேட்கையும் அவ்விளவேனிற் பருவமும் மெல்லிய தென்றற் பூங்காற்றும் யாண்டுந் திரிதரும் மன்னனுக்குப் பேருதவி செய்தலின் அவற்றையும் அவனுடைய விளையாட்டுத் தோழர்களாகவே குறிப்புவமஞ் செய்தார்.

இளவேனில்-சித்திரையும் வைகாசியும் ஆகிய இரண்டு திங்களுமாம். இப் பருவம் அழகு மாலையிலேதான் பெரிதும் மாண்புற்றுத் திகழும். பூந்தென்றலும் பிற்பகலிலேதான் இனிதாக இயங்கும். இவற்றைப் பட்டறிவால் உணர்க.

எந்திரக்கிணறு............பளக்கறைப் பள்ளியும் எனவரும் இப் பகுதியோடு

அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்
தண்பூங் காவும் தலைத்தோன் றருவிய
வெண்சுதைக் குன்றொடு வேண்டுவ பிறவும்
இளையோர்க் கியற்றிய விளையாட் டிடத்த
சித்திரப் பூமி வித்தகம் நோக்கி

எனவரும் பெருங்கதைப் பகுதி(1-33:3-7) ஒப்புநோக்கற் பாலதாம்.

எந்திரக்கிணறு-வேண்டுங்கால் நீர் நிரப்பவும் வேண்டாதபொழுது கழிக்கவும் பொறி பொருத்தப்பட்ட கிணறு.

கல்இடும் குன்றம் என மாறுக-கல்லிட்டுக் கட்டப்பட்ட செய்குன்றம் என்க. இக் குன்றத்தின் இயல்பினை

வெள்ளித் திரண்மேல் பசும்பொன் மடற்பொதிந்து
அள்ளுறு தேங்கனிய தாம்பொற் றிரளசைந்து
புள்ளுறு பொன்வாழைக் கானம் புடையணிந்த
தெள்ளுமணி அருவிச் செய்குன்றம் சேர்ந்தார்

எனவரும் சூளாமணி யானும்(1946) உணர்க.

சுரப்பு நீர்க்கேணி- நீருண்மை தெரியாமல் மறைக்கப்பட்டுள்ள கேணி

ஒளித்துறை இடம்-வழியும் எதிர்முட்டும் கிளை வழியும் பலப்பல வாக ஒளிந்து விளையாடற் பொருட்டுச் செய்யப்பெற்ற வழிகள். இவற்றில் களைவழி போலத் தோன்றுவன உள்ளே சென்றால் அடைபட்டிருக்கும். இவ் வழியினூடும் கிளை வழிகள் பல காணப்படும். இவ் வழிகளினூடே சென்று ஒளிந்திருப்பாரைக் கண்டுபிடித்தல் அரிது. ஆதலின் ஒளிந்து விளையாடும் இத்தகைய இடத்தையே ஈண்டு ஒளித்துறை இடம் என்றார். பள்ளி-தங்குமிடம்.

திரிந்தும் தாழ்ந்தும் என எண்ணும்மை விரித்தோதுக.

பைஞ்சேறு மெழுகாப் பசும் பொன் மண்டபத்தில் இந்திர திருவன் சென்றினிதேறுதல்

107-119: மகத................ஏறலும்

(இதன் பொருள்) மகத வினைஞரும் மராட்டக் கம்மரும் அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்- மகதநாட்டுப் பிறந்த மணித்தொழில் வித்தகரும் மராட்டநாட்டுப் பிறந்த பொற் கம்மாளரும் அவந்திநாட்டுப் பிறந்த இரும்புசெய் கொல்லுத் தொழிலாளரும் யவனநாட்டுப் பிறந்த மரங்கொல் தச்சுத் தொழிலாளரும்; தண்தமிழ் வினைஞர் தம்மொடு கூடி-குளிர்ந்த தமிழ் வழங்கும் நாட்டிலே பிறந்த தொழில் வித்தகரோடு கூடி; கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினை- மன்னன் கருத்தைத் தெரிந்துகொண்டு இனிதாக இயற்றப்பட்ட காண்போர் கண்ணைக் கவருகின்ற கலையழகு மிளிரும் தொழிற் சிறப்பமைந்ததாய்; பவளத் திரள்கால் பல்மணிப் போதிகை தவள நித்திலத் தாமம் தாழ்ந்த கோணச்சந்தி மாண்வினை விதானத்து-பவளத்தாலியற்றிய திரண்ட தூண்களையும் ஒன்பது வகையான மணிகளும் பதிக்கப்பட்ட போதிகைகளையும் வெள்ளிய முத்துமாலைகள் தூங்காநின்ற மூலைகளாகிய மூட்டுவாய்களையும், மாட்சிமை பெற அமைத்த மேற்கட்டியினையும் உடையதாய்; தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின் பொன்னாலே கூரை வேயப் பெற்றதுமாய்ப் பல்வேறு வகைப்பட்ட கலையழகோடு கூடி; பைஞ்சேறு மெழுகா பசும்பொன் மண்டபத்து-பசிய ஆப்பியாலே மெழுகப்படாமல் பசிய பொற்றகட்டாலே தளமிடப்பட்ட மண்டபத்தின்கண்; இந்திர திருவன் சென்று இனிது ஏறலும்-தேவேந்திரன் போன்ற பெரிய செல்வச் சிறப்புடைய அச் சோழ மன்னன் இனிது சென்று ஏதுமளவிலே என்க.

(விளக்கம்) இப் பகுதியோடு

யவனத் தச்சரும் அவந்திக் கொல்லரும்
மகதத்துப் பிறந்த மணிவினைக் காரரும்
பாடலிப் பிறந்த பசும்பொன் வினைஞரும்
கோசலத் தியன்ற வோவியத் தொழிலரும்
வத்த நாட்டு வண்ணக் கம்மரும்

எனவரும் பெருங்கதைப் பகுதி(1.58:40-44) ஒப்பு நோக்கற் பாலதாம்.

இதனால் மகதவினைஞர் என்றது அந்நாட்டு மணிவினைஞரை என்பது பெற்றாம். கம்மர்- வண்ணவினைஞர் எனவும் ஈண்டு மராட்டியர் அத்தொழிலில் சிறப்புடையர் எனவும் கொள்க. கொல்லர்-இரும்புத் தொழிலாளர். தச்சர்-மரங்கொல் தச்சர்.

பல நாட்டுக் கலைத்திறமும் ஒருங்கே திகழ வேண்டும் என்னும் கலையுணர்வு காரணமாக மகத முதலிய பிறநாட்டு வினைஞரும் வரவழைக்கப்பட்டுத் தண்டமிழ் வினைஞர் தம்மொடுங் கூட்டி வினை செய்விக்கப்பட்டனர் என்பது கருத்து.

திரள்கால்-திரட்சியுடைய தூண். போதிகை-தூணின் மேல் பொருத்தப்பட்டு உத்தரத்தைத் தாங்குமோருறுப்பு. பன்மணிப்போதிகை என்றதனால் இவ்வுறுப்புப் பொன்னாலியற்றப்பட்டுப் பல்வேறு மணிகளும் பதிக்கப்பட்டிருந்தன என்பது பெற்றாம்.

தவளநித்திலத் தாமம்-வெள்ளிய முத்துமாலைகள். கோணச் சந்தி-மூலையாகிய மூட்டுவாய். விதானம் சுடு மண்ணோடு முதலியவற்றால் வேயப்படாமல் பொன்னாலியன்ற ஓட்டால் வேயப்பட்ட கூரையையுடைய மண்டபம் என்க. பைஞ்சேறு என்றது-ஆப்பியை. ஆப்பியால் மெழுக வேண்டாது பசும்பொற் றளமிடப்பட்ட மண்டபம் என்பது கருத்து.

இந்திரதிருவன்-இந்திரன் போன்ற பெருஞ் செல்வமுடைய சோழமன்னன்.

கோட்டங் காவலர் செயல்

117-130: வாயிலுக்கு..................பகைஞர்

(இதன் பொருள்) வாயிலுக்கு இசைத்து-மன்னவன் இருக்குமிடம் வினவி அப் பசும் பொன் மண்டபத்திற்கு வந்தெய்திய சிறைக் கோட்டங் காவலர் தம் வரவினை வாயில் காவலருக்கு அறிவிக்குமாற்றால்; மன்னவன் அருளால்-அரசனுடைய கட்டளை பெற்றமையால் மண்டபத்துள்ளே புக்கு; சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி-தூரிய இடத்திலேயே அவன் திருவடி நோக்கி நிலத்தில் வீழ்ந்து வணங்கியதல்லாமலும் அவன் திருவருள் நோக்கம் தம்மிசை வீழ்ந்த செவ்வியினும் நிலத்தில் வீழ்ந்து வணங்கிக் கூறுபவர்; வாழி எங்கோ-வாழ்க எங்கள் கோமான்!; எஞ்சா மண் நசைஇ இகல் உளம் துரப்ப-ஒரு பொழுதும் குறையாத மண்ணை விரும்பிப் பிறரைப் பகைக்கும் ஊக்கமானது செலுத்துதலாலே; வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி- வஞ்சி மாநகரத்தினின்னும் வஞ்சிப் பூமாலையைச் சூடி; முறம் செவி யானையும் தேரும் மாவும் மறம்கெழு நெடுவாள் வயவரும் மிடைந்த-முறம் போன்ற செவிகளையுடைய யானைப் படையும் தேர்ப்படையும் குதிரைப் படையும் மறப்பண்புடைய நெடிய வாள் முதலிய படைக்கல மேந்தும் போர் மறவரும் ஆகிய நாற் பெரும் படைகளுஞ் செறிந்த; தலைத்தார்ச் சேனையொடு மலைத்துத் தலைவந்தோர்-தலைமைத் தன்மை பொருந்திய தூசிப்படையோடு வந்து போர் செய்து முற்பட்டு வந்தவராகிய சேர மன்னனும் பாண்டிய மன்னனும் ஆகிய முவேந்தர் இருவரையும்; செருவேல் தடக்கை ஆர் புனை தெரியல் இளங்கோன் தன்னால்- போர் வேல் ஏந்திய பெரிய கையையும் ஆத்திப்பூவாற் றொடுக்கப்பட்ட மாலையினையும் உடைய நங்கள் இளைய வேந்தனை ஏவுமாற்றாலே; காரியாற்று சிலை கயல் நெடுங் கொடி கொண்ட- காரியாற்றின்கண் பொருது வென்று அவருடைய விற் கொடி மீன் கொடி ஆகிய அடையாளக் கொடியிரண்டையும் ஒரு சேரக் கைப்பற்றிக் கொண்ட; காவல் வெள்குடை வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி-குடிமக்கட்குத் தண்ணிழல் செய்து பாதுகாக்கும் வெண்கொற்றக் குடையையும் பகைவரைக் கொன்று நூழிலாட்டுதற்கியன்ற வலிய பெரிய கையையும் பெரிய வள்ளன் மையையும் உடைய கிள்ளிவளவனாகிய நங்கள் கோமான்; ஒளியொடு ஊழிதோறு ஊழி வாழி-புகழோடு ஊழி பலப்பல இனிது வாழ்க; மன்னவர் பெருந்தகை இது கேள்-வேந்தர் வேந்தே எளியேம் விண்ணப்பமிதனைத் திருச்செவி ஏற்றருள்க; நின் பகைவர் கெடுக- நின்னுடைய பகைவர் கெட்டொழிக! என்று வாழ்த்தி முன்னிலைப் படுத்திக் கூறுபவர், என்க.

(விளக்கம்) வாயிலுக்கு-வாயில் காவலருக்கு. மன்னவன் அருள் என்றது அவனது கட்டளையை. சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி என்றது மன்னவன் கட்டளை பெற்று அவனைக் காணச் செல்வோர் அவன் தம்மை நோக்கினும் நோக்காமல் பொது நோக்குடையவனாயிருப்பினும் ஏழு கோல் தொலைவிற்கு இப்பாலே திருவடிநோக்கித் தொழுது நிலத்தில் வீழ்ந்து வணங்கி எழுந்து நிற்பர். பின்னர் மன்னவன் தம்மைச் சிறப்பாக நோக்குமாற்றால் செவ்வி பெறப்பொழுதும் மீண்டும் நிலத்தில் வீழ்ந்து வணங்கி யெழுந்தே தாம் கூற வேண்டிய செய்தியைக் கூறுதல் மரபு. இம் மரபு தோன்றச் சேய் நிலத்திலே வணங்கியதன்றி மீண்டும் செவ்வி பெற்ற பொழுதும் வணங்கினர் என்றவாறு. இம் மரபுண்மையை

இருந்த மன்னவற் கெழுகோ லெல்லையுட்
பொருந்தல் செல்லாது புக்கவ ளிறைஞ்ச
வண்ணமும் வடிவு நோக்கி மற்றவன்
கண்ணி வந்தது கடுமை சேர்ந்ததென்
றெண்ணிய இறைவன் இருகோல் எல்லையுள்
துன்னக் கூஉய் மின்னிழை பக்கம்
மாற்றம் உரையென மன்னவன் கேட்ப
இருநில மடந்தை திருமொழி கேட்டவட்
கெதிர்மொழி கொடுப்போன் போல விறைஞ்ச

எனவரும் பெருங்கதையாலு முணர்க.    (1.47:53-61)

செவ்வியின் வணங்கி என்றது அவன் தம்மைக் குறிக் கொண்டு நோக்கும் செவ்வி பெற்ற பொழுது மீண்டும் வணங்கி என்றவாறு. வணங்கி என்பதனை முன்னும் கூட்டுக.

வஞ்சி சேரமன்னர் தலைநகரம். வஞ்சி சூடி என்றதனால் பாண்டியன் சேரன்பாற் சென்று அவனொடும் அங்கிருந்தே வஞ்சி சூடி வந்தான் என்பது பெற்றாம். சிலையென்றொழியாது கயலும் கூறினமையின் மலைத்துத் தலைவந்தோர் சேரனும் பாண்டியனும் என்பது பெற்றாம். வஞ்சிப்பூச் சூடி என்க. மாற்றார் நிலத்தைக் கவரும் கருத்துடைய மன்னர் வஞ்சிப் பூச்சூடிச் செல்வது மரபு, இதனை

வஞ்சி தானே முல்லையது புறனே
எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே

எனவரும் கொல்காப்பியத்தானும்(புறத்திணை-சூ.7) அறிக.

ஈண்டும் ஆசிரியர் தொல்காப்பியனார் மொழியை எடுத்துப் பொன் போல் போற்றி எஞ்சா மண்ணசைஇ எனப் பொதிந்து வைத்திருத்தலு முணர்க.

வயவர்-போர் மறவர்; தார்ச் சேனை- தூசிப்படை. இளங்கோன் என்றது கிள்ளிவளவன் தம்பியாகிய நலங்கிள்ளியை. காரியாறு சோணாட்டின்கண் ஒரு யாறு. இதற்குத் திருத்தொண்டர் மாக்கதையில் திருநாவுக்கரசர் வரலாற்றில் வருகின்ற திருக்காரிக் கரை என்பதனை (செய்யுள் 343) எடுத்துக்காட்டுவாருமுளர். வடதிசைக்கண்ணதாகக் கூறப்படும் இக்காரி(க்கரை) இவ்வரலாற்றோடு பொருந்துமா? என்று ஆராய்ந்து காண்டற்குரியதாம் மற்று, ஈண்டுக் காரியா றென்றதே இக்காலத்தே கோரையாறென்று வழங்கப்படுகின்றது என்று ஊகிக்கவும் இடனுளது. இந்த யாறு மன்னார்குடி திருத்தருப்பூண்டிக் கூற்றங்களினூடு பாய்கின்றது. மலைத்துத் தலைவந்தோர் பாண்டியனும் சேரனுமாதலின் இங்ஙனம் ஊகிக்கின்றாம்.

அளியும் தெறலும் தோன்ற வெண்குடையும் வலிகெழுதடக்கையும் கூறினர். அவனது வள்ளன்மைச் சிறப்புத் தோன்ற மாவன் கிள்ளி என்றார்.

கோட்டங் காவலர் கோவேந்தனுக்குக் கூறல்

131-138: யானை................என்றலும்

(இதன் பொருள்) யானைத் தீ நோய்க்கு அயர்ந்து மெய் இம்மாநகர்த் திரியும் ஓர் வம்ப மாதர்-யானைத் தீ என்னும் நோயாற் பற்றப்பட்டு அது செய்யும் துயர்க்கு ஆற்றாமல் உடம்பு வாடி இரத்தற் பொருட்டு இப் பெரிய நகரத்தில் தெருக்கள் தோறும் திரிகின்ற இந்நகரத்திற்குப் புதியவளாகிய ஓர் இரவன் மகள்; அருஞ்சிறைக் கோட்டத்து அகவயின் புகுந்து- தப்புதற் கரிய நமது சிறைக் கோட்டத்தினுள்ளே புகுந்து; பெரும் பெயர் மன்ன நின் பெயர் வாழ்த்தி-பெரிய புகழையுடைய அரசே நின் திருப்பெயரை எடுத்துக் கூறி வாழ்த்தி; ஐயப்பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள்- பிச்சைப் பாத்திரம் ஒரோஒவொன்றனைக் கைக் கொண்டு நின்று தன்னைச் சூழ்ந்து கொள்கின்ற ஆற்றாமாக்கள் அனைவர்க்கும் வேண்டுமளவுண்ணும்படி உண்டி வழங்குகின்றனள். இஃதோர் அற்புதமிருந்தவாறு அறிந்தருள்க என்று சொல்லி; வாழி எங்கோ மன்னவ என்றலும்- வாழ்க எங்கள் கோமானாகிய மன்னவனே என்று வாழ்த்தா நிற்ப என்க.

(விளக்கம்) வம்பமாதர் என்றார் அவள் இந்நாட்டினள் அல்லள் புதியவள் என்பது தோன்ற. அவளை ஊர் முழுதும் அறியுமெனினும் அரசன் அறிதற்கு ஏதுவின்மையின், இங்ஙனம் பிச்சை ஏற்றுத் திரிவாள் ஒருத்தி என அறிவித்தனர். பிச்சை ஏற்பவள் ஆகலின் அவளால் தீமையொன்றும் நிகழாதென்று யாங்கள் அவளைத் தடுத்திலம் என்பது தோன்ற, அருஞ்சிறைக் கோட்டத்தகவயிற் புகுந்து என்றார். அவள் தானும் அரசன்பால் நன்மையே நினைப்பவள் என்பது தோன்ற, நின் பெயர் வாழ்த்தி என்றார். நின்பெயர் வாழ்த்தி என்றது சோழமன்னன் மாவண்கிள்ளி நீடூழி வாழ்க என்று வாழ்த்தினள் என்றவாறு.

ஐயப்பாத்திரம்- பிச்சைக்கலம். ஒரு பாத்திரத்தைக் கொண்டே தன்னைச் சூழ்ந்து மொய்த்துக் கொள்வோர்க்கெல்லாம் உண்டி வழங்குகின்றாள், இஃதோர் அற்புதம் இருந்தவாறு அரசர் பெருமான் அறிந்தருள்க என்று வியப்பறிவித்தபடியாம்.

மன்னவன் வியந்து வரவேற்றல்

139-145: வருக.............கூறலும்

(இதன் பொருள்) அரசன் அருள்புரி நெஞ்சமொடு மடக்கொடி வருக வருக என்று கூறலின்-அவ்வற்புதம் கேட்டு வியப்புற்ற அரசன்றானும் அத்தகையாட்கு நம்மால் ஓல்லும் வகை அருளல் வேண்டும் என்னும் ஆர்வமுடைய நன்னர் நெஞ்சத்தோடு அந்நல்லாள் ஈண்டு வருக! வருக! என்று இருமுறை இயம்பாநிற்றலின்; வாயிலாளரின் மடக்கொடிதான் சென்று-அரசனுடைய வரவேற்பை அறிவித்த வாயிலாளரோடு மணிமேகலை தானும் அரசன் திருமுன் சென்று; ஆய்கழல் வேந்தன் அருள் வாழிய என-அழகிய வீரக்கழல் கட்டிய திருவடியையுடைய அரசர் பெருமானுடைய அருளுடைமை நெடிது வாழ்க! என்று வாழ்த்தா நிற்ப; அரசன் தாங்க அரும் தவத்தோய் நீ யார்? ஏந்திய இ கடிஞை யாங்கு ஆகியது என்று கூறலும்-அது கேட்டு மகிழ்ந்த அம் மன்னவன் தாங்குதற் கரிய தவவொழுக்கத்தையுடைய நங்காய்! நீ யார்? நின் கையிலேந்திய தெய்வத்தன்மையுடைய இத் திருவோடு நின் கையில் எவ்வண்ணம் வந்துற்றது? என்று வினவுதலும் என்க.

(விளக்கம்) வருக வருக என்று இருமுறை அடுக்கிக் கூறியது மன்னனுடைய ஆர்வமிகுதியைக் காட்டும். விரைந்துபோய் அத்தகைய வியத்தகு நங்கையை விரைந்து இங்கு அழைத்து வம்மின் என வாயிலாளர்க்குக் கட்டளையிட்டபடியாம். வாயிலாளர்-ஈண்டுக் கோட்டங் காவலர்.

எளியளாகிய என்னை அழைத்தமைக்குக் காரணமான நின் அருள் வாழிய என்று வாழ்த்தியவாறு. அருளறமே அனைவரும் பேணற்பாலதாகலின் நின்பால் அவ்வருளறம் நிலைத்து வாழ்க என்று வாழ்த்தினள் எனக் கோடலுமாம்.

மணிமேகலை காயசண்டிகை வடிவக்தினும் பிக்குணிக் கோலமே பூண்டிருத்தலின் அவள் வரலாறறியாத மன்னவன் அவளைத் தாங்கருந் தவத்தோய் என்று விளித்தான். தவத்தால் இருத்தி பெற்றார்க்கன்றி இத்தகைய அற்புதச் செயல் நிகழ்த்தலாகாமையின் இங்ஙனம் இனிதின் விளித்தான். மேலும் ஒரு பாத்திரத்தாலே பல்லுயிர் ஓம்புகின்றனள் என்று கேட்டிருந்தமையின் இங்ஙனம் அற்புதம் விளைக்கும் இப் பாத்திரம் எங்ஙனம் நின்னுடையதாகியது என்றும் வினவினன். கூறலும் என்றது வினவலும் என்பதுபட நின்றது.

மணிமேகலை மன்னன் வினாவிற்கும் விடை கூறுதல்

145-154: ஆயிழை...........இதுவென

(இதன் பொருள்) ஆயிழை கூறும்-அது கேட்டு மணிமேகலை கூறுவாள்; விரைத்தார் வேந்தே நீ நீடூழி வாழி- மணமிக்க ஆத்தி மாலையையுடைய அரசே நீ நீடூழி காலம் வாழ்வாயாக!; யான் விஞ்சை மகள் விழவு அணி மூதூர் வஞ்சம் திரிந்தேன்-யான் ஒரு வித்தியாதரமகளாவேன், திருவிழாக்களாலே நாடோறும் அழகுறுகின்ற பழைய இம் மாநகரத்தின்கண் யான் இதுகாறும் என்னை இன்னன் என யாருக்கும் அறிவியாமல் வஞ்சித்தே திரிந்தேன் காண்; பெருந்தகை வாழிய-என்னைப் பொருளாக மதித்தழைத்த நின் பெருந்தகையை வாழ்க!; வானம் வாய்க்க- நின்னாட்டின்கண் மழைவளம் வாய்ப்புடைய தாகுக!; மண் வளம் பெருகுக- நின்னுடைய நாட்டின்கண் வளம்பலவும் பெருக!; கோமகற்குத் தீது இன்றாக-இங்கே பெருமானுக்குச் சிறிதும் தீமை இல்லையாகுக; ஈது ஐயக்கடிஞை என் கையிலேந்திய இப் பாத்திரம் யான் ஏற்றுண்ணும் பிச்சைப் பாத்திரமாகும்; அம்பலமருங்கு ஓர் தெய்வம் தந்தது-இது தானும் உலகவறவியின் பக்கத்திலே ஒரு தெய்வத்தால் வழங்கப்பட்டது; திப்பியம் ஆயது-அக் காரணத்தாலே தெய்வத்தன்மை யுடையது மாயிற்று; ஆனைத்தீ நோய் அரும்பசி கெடுத்தது-ஆனைத்தீ நோய் என்னும் கொடிய நோய் காரணமாகத் தோன்றிய உய்தற்கரிய பெரும் பசியையும் இது தீர்த்திருக்கின்றது காண்; அப்பாலும் ஊண் உடை மாக்கட்கு இது உயிர் மருந்து என- பசிப்பிணியாலே உடலும் உடைந்து வருந்தி ஆற்றாமாக்கட்கு இப் பாத்திரம் அப்பிணி தீர்த்து உயிர் தந்து ஓம்புமொரு மருந்துமாகும் காண்! என்று கூறாநிற்ப என்க.

(விளக்கம்) விஞ்சை மகள்- வித்தியாதரமகள்; மந்திரத்தாலே வேற்றுருக் கொண்டிருக்கும் மகள்-என இருபொருளும் தோன்றுதலுணர்க.

வஞ்சந்திரிந்தேன்- என்னை இன்னள் என அறிவியாமல் இதுகாறும் வஞ்சகமாகவே திரிந்தேன் எனவும் வஞ்சமாக உருவந்திரிந்தேன் (உருவம் மாறுபட்டேன்) எனவும் இதற்கும் இருபொருள் காண்க. இனி, கோமகற்கு ஈங்குத் தீது இன்றாக என்றதும்-அரசனாகிய நின்னுடைய மகனும் என் பழைய கணவனுமாகிய உதயகுமரனுக்கு இங்கே தீங்கு நிகழாமைப் பொருட்டே வஞ்சம் திரிந்தேன் எனவும் ஒரு பொருள் தோன்றுமாறும் உணர்க.

நின் மகனுக்கும் தீதின்றாக என்று வாழ்த்தியவாறும் ஆயிற்று, கோமகன்- கோவாகிய மகன்; அரசனாகிய நின் மகன் உதயகுமரன் என இருபொருளும் காண்க.

அம்பலமருங்கில் ஆபுத்திரனுக்குத் தெய்வந்தந்தது எனவும் எனக்குத் தெய்வந்தந்தது எனவும் இரட்டுற மொழிந்தமையும் காயசண்டிகையின் ஆனைத்தீ நோய் அரும்பசி கெடுத்தது எனவும் ஆனைத்தீ நோயின் அரும்பசியையும் கெடுத்த அற்புதமுடையது எனவும் பிறர் அயிராவண்ணம் இருபொருள்படுமாறும் உணர்க.

வேண்டுகோளாகிய வினாவும் விடையாகிய வேண்டுகோளும்

155-162: யான்.................வேந்தென்

(இதன் பொருள்) வேந்தன் இளங்கொடிக்கு யான் செயற்பாலது என் என்று கூற-அது கேட்ட அரசன் மணிமேகலையை நோக்கி இளமை மிக்க நினக்கு யான் செய்யத் தகுந்த உதவி யாது? என்று வினவா நிற்ப; மெல்லியல் உரைக்கும்-அது கேட்ட மணிமேகலை அரசனுக்குக் கூறுவாள்:- சிறையோர் கோட்டம் சீத்து அறவோர்க்கு ஆக்கும் அது வாழியர் என அரசே நீ எனக்குச் செய்யும் உதவியும் உளது காண்! அஃதாவது சிறையிடப்பட்டோர் உறைகின்ற அச் சிறைக்கோட்டத்தை அவ்விடத்தினின்றும் இடித்து அகற்றிப் பின்னர் அவ்விடத்தைத் துறவறத்தோர் உறையும் தவப்பள்ளியாக அமைக்கும் அதுவே, பெருமான் நீடூழி வாழ்க! என்று சொல்லி வாழ்த்தா நிற்ப; அரசு ஆள் வேந்து- செங்கோன்மை பிறழாது அரசாட்சி செலுத்தும் அக் கிள்ளிவளவன்றானும் இளங்கொடி கூறியாங்குச் செய்குவல் என்றுடம்பட்டு; அருஞ்சிறைவிட்டு தன் அடிபிழைத்துத் தண்டனை பெற்றிருந்தோரை எல்லாம் தப்புதற்கரிய அச் சிறைக் கோட்டத்தினின்றும் வீடு செய்து; ஆங்குக் கறையோரில்லாச் சிறையோர் கோட்டம்-அவ்விடத்திலே கறை வீடும் செய்யப்பட்டமையின் தண்டனை பெற்ற அரசிறைக் கடனாளரும் இல்லாதொழிந்த சிறையோர் உறையும் அக் கோட்டத்தை; ஆயிழை உரைத்த பெருந்தவர் தம்மால் பெரும் பொருள் எய்த-மணிமேகலையாலே கூறப்பட்ட பெரிய தவத்தையுடைய அறவோரைப் பேணுமாற்றால் எய்தும் அற முதலிய பெருமையுடைய உறுதிப் பொருளை எய்த விரும்பி; அறவோர்க்கு ஆக்கினன்-அத் துறவோர் உறையுளாக மாற்றியருளினன் என்பதாம்.

(விளக்கம்) இளங்கொடி: மணிமேகலை யான் செயற்பாலது என் என்றது உனது அருளறம் தழைத்தற்கு அரசனாகிய யான் செய்யத் தகுந்த அறக்கடமை என்னை? என்றவாறு. மணிமேகலை தான் மேற்கொண்டுள்ள அருளறத்தின் பாற்பட்ட சிறைக்கோட்டஞ் சீத்தலையே தனக்குச் செய்யும் உதவியாகக் கூறியபடியாம்.

சிறைக் கோட்டஞ் சீத்தலாவது தன்னடி பிழைத்துத் தண்டனை பெற்றாரை எல்லாம் விடுதலை செய்துவிடுதல். அடிபிழைத்தாரும் அரசிறை இறுக்காதவரும் ஆகிய இருவகையாரையும் வீடு செய்தான் என்பது தோன்றக் கறையோர் இல்லாச் சிறைக் கோட்டம் என்று விதந்தார். கறை-அரசிற்கு இறுக்கக்கடவ பொருள். இதனால் சிறைவீடும் கறை வீடும் செய்து அருள் அறத்தைத் தனக்காகும் முறையில் அவ் வேந்தனும் மேற் கொண்டனன் என்பது பெற்றாம். அரசற்கியன்ற அருளறம் இத்தகையனவாதலை

சிறைப்படு கோட்டஞ் சீமின் யாவதும்
கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின்
இடுபொரு ளாயினும் படுபொரு ளாயினும்
உற்றவர்க் குறுதி பெற்றவர்க் காமென
யானை யெருத்தத் தணிமுர சிரீஇக்
கோன்முறை அறைந்த கொற்ற வேந்தன்

எனவும்,                   (சிலப்-23: 126-133)

சிறையோர் கோட்டஞ் சீமின் யாங்கணும்
கறைகெழு நாடு கறைவீடு செய்ம்மென

எனவும்;   (சிலப்-28:203-204) பிற சான்றோர் ஓதுமாற்றானும் உணர்க.

பெருந்தவர் தம்மால் பெரும்பொருள் என்றது அவர்க்கு உண்டியும் உறையுளும் வழங்கும் நல்வினைப் பயனாக எய்தும் அறம் பொருள் இன்பம் வீடு முதலிய உறுதிப் பொருள்களை. அத்தகைய நல்வினையால் அத்தகைய உறுதிப்பொருள் எய்துதலை இக் காவியத்தில் மணிமேகலையும் மாதவியும் சுதமதியும் முற்பிறப்பிலே அறவோர்ப் பேணிய நல்வினை அவர்கட்கு இப்பிறப்பிலே எய்தி ஆக்கஞ் செய்யுமாற்றானும் அறிக இக்கருத்தோடு

சிவஞானச் செயலுடையோர் கையில் தானம்
திலமளவே செய்திடினும் நிலமலைபோல் திகழ்ந்து
பவமாயக் கடலின் அழுந் தாதவகை யெடுத்துப்
பரபோகந் துய்ப்பித்துப் பாசத்தை அறுக்கத்
தவமாரும் பிறப்பொன்றிற் சாரப் பண்ணிச்
சரியைகிரி யாயோகந் தன்னினுஞ் சாராமே
நவமாகும் தத்துவஞா னத்தை நல்கி
நாதனடிக் கமலத்தை நணுகுவிக்குந் தானே

என வரும் சிவஞான சித்தியார்ச் (சுபக்-278) செய்யுள் ஒப்பு நோக்கற் பாலதாம்.

இனி இக் காதையை

தாரோன் வஞ்சினம் கூறத் தெய்வம் கூறலும் கலங்கி வருந்திப் பெயர்வோன்றன்னைத் தொடரக் கிழிப்ப உயிர்த்துப் போய பின் மணிமேகலை நுனித்தனரா மென்று வாங்கிப் புகுந்து ஊட்டலும் காவலர் வியந்து இசைத்துமென்றேகி, திருவன் சென்றேறலும் இசைத்து வணங்கி; சுரந்தனள் என்றலும், வருக வருக என்றரசன் கூறலும் மடக்கொடி சென்று வாழிய என நீ யார் யாங்காகியது இக் கடிஞை என அரசன் கூறலும் ஆயிழை உரைக்கும்; வாழி விஞ்சைமகள் யான் திரிந்தேன் வாழிய வாய்க்கப் பெருகுக தீதின்றாக ஐய கடிஞை தந்தது ஆயது கெடுத்தது மருந்து என வேந்து விட்டு ஆக்கினன் என இயைத்திடுக.

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை முற்றிற்று.
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 09:34:39 AM
20. உதயகுமரனைக் காஞ்சனன் வாளாலெறிந்த காதை

(இருபதாவது மணிமேகலை காய சண்டிகை வடிவெய்த, காயசண்டிகை கணவனாகிய காஞ்சனன் என்னும் விச்சாதரன் வந்து காய சண்டிகை யாமெனக் கருதி அவள் பின்னிலை விடா உதயகுமரனைப் புதையிருட்கண் உலகவறவியில் வாளாலெறிந்து போன பாட்டு)

அஃதாவது: மணிமேகலையின் பால் இடங்கழி காம முடையவனாகிய உதயகுமரன் மீண்டும் அவளைக் கைப்பற்றித் தன் பொற்றேரி லேற்றிவரத் துணிந்து பின்னிலை விடானாகி முயலுங்கால் காயசண்டிகையின் கணவனாகிய விச்சாதரன் காயசண்டிகை வடிவினின்ற மணிமேகலை உதயகுமரனோடு நெருங்கிச் சொல்லாடுதல் கண்டும் அவள் தன்னைப் பொருட்படுத்தாமை கண்டும் உதய குமரனுக்கும் தன்மனைவியாகிய காயசண்டிகைக்கும் காமத் தொடர்பிருத்தல் வேண்டும் என்று ஐயுற்று அது தெளிதற்குக் கரந்திருந்தானாக, மணிமேகலையே காய சண்டிகையாக மாற்றுருவங் கொண்டிருக்கின்றாள் என்றுணர்ந்த அம் மன்னன் மகன் அவள் செய்தி யறிகுவல் என நள்ளிரவிற் றமியனாய் வந்து உலகவறவியினூடு புகுவானை அவ் வித்தியாதரன் வாளால் வெட்டி வீழ்த்திச் சென்ற செய்தி கூறுஞ் செய்யுள் என்றவாறு.

இதன்கண்- மணிமேகலையின் விருப்பப்படி மன்னவன் கொடுஞ்சிறைக் கோட்டத்தே புத்தருக்குக் கோயிலமைத்தும் அறவோர்க்குப் பள்ளிகளமைத்தும் அட்டிற் சாலையும் அருந்துநர் சாலையும் அமைத்துக் கட்டுடைச் செல்வக்காப்புடையதாகச் செய்த செய்தியும்; உதயகுமரன் மணிமேகலையின் பால் இடங்கழி காமத்தனாய் மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும் அவள் அம்பலத்தினின்றும் நீங்கிய செவ்வியிற்பற்றி என் பொற்றேர் ஏற்றி அவள் கற்ற விஞ்சையும் கேட்டு அவள் கூறும் அஞ்சொலறிவுரையும் கேட்டு ஆற்றவும் மகிழ்வல் என்று துணிந்து உலகவறவியிற் சென்று ஏறுதலும், காய சண்டிகை வடிவந்தாங்கி நிற்கும் மணிமேகலையைக் காயசண்டிகை யென்றே எண்ணி அவள் மருங்கே சென்று ஒரே பாத்திரத்தினின்றும் உணவினை வாரி வாரி அவள் எண்ணிறந்தோர்க்கு வழங்கும் அற்புதச் செய்தி கண்டு இறும்பூதெய்தி அவளை அணுகி அப் பாத்திரத்தின் வரலாறு வினவுதலும் பழைமைக் கட்டுரை பல பாராட்டிய வழியும் அவள் அவனை விழையாவுள்ளத்தோடு அவ்விடத்தினின்றும் நீங்கி ஆங்கு வந்த உதயகுமரன் பாற் சென்று அவனுக்கு மக்கள் யாக்கையின் இழிதகைமை அறிவுறுத்தற் பொருட்டு அப்பொழுது அவ்வழிச் சென்ற நரை மூதாட்டியைக் காட்டி அவள் உறுப்புகளின் தன்மைகளைச் சுட்டிக்காட்டி

தூசினும் மணியினும் தொல்லோர் வகுத்த
வஞ்சந் தெரியாய் மன்னவன் மகனென

செவியறிவுறுத்துதலும், அங்ஙனம் அறிவுறுத்துவாளேனும் அவள் அவன்பாற் காமக் குறிப்புடையளாகவே இருத்தலும் காய சண்டிகையின் கணவன் தன் மனைவி தன்னைச் சிறிதும்  பொருட்படுத்தாது ஏதிலானோடு காதன் மொழி பேசுகின்றாள் என்று கருதிக் கடுஞ்சின முடையனாய்ப் பின்னும் அவள் நிலை அறிதற்கு அம்பலத்தில் ஒரு சார் புற்றடங்கு அரவெனப் புகுந்து கரந்துறைதலும்-அரண்மனைக்குச் சென்ற அரசன் மகன் மணிமேகலையின் நிலைமை அறிதற்கு மீண்டும் ஆயிழை யிருந்த அம்பல மணைந்து வேகவெந்தீ நாகங்கிடந்த போகுயர் புற்றளை புகுவான் போல விச்சாதரன் கரந்துறைகின்ற உலக வறவியினூடு புகுதலும் அவன்றானும் இவன் காயசண்டிகையின் பாலே வந்தனன் என்று துணிந்து வெகுண்டு உதயகுமரன் பின் சென்று அவனுடைய மணித்தோள் துணியும்படி வாளால் எறிந்து காயசண்டிகை என்று கருதிய மணிமேகலையைக் கைப் பற்றிச் செல்லுதலும் அப்பொழுது கந்திற்பாவை அவனுக்குக் கூறுகின்ற ஊழ்வினை விளைவுகளும்; உண்மையறிந்த விச்சாதரன் கன்றிய நெஞ்சொடு விண்வழியே தன்னூர் நோக்கிப் போதலும் பிறவும் கற்போர்க்கு மருட்கைச் சுவை பற்பல விடங்களிலே தோன்றும்படி கூறப்படுகின்றன.

அரசன் ஆணையின் ஆய் இழை அருளால்
நிரயக் கொடுஞ் சிறை நீக்கிய கோட்டம்
தீப் பிறப்பு உழந்தோர் செய் வினைப் பயத்தான்
யாப்பு உடை நல் பிறப்பு எய்தினர் போலப்
பொருள் புரி நெஞ்சின் புலவோன் கோயிலும்
அருள் புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும்
அட்டில் சாலையும் அருந்துநர் சாலையும்
கட்டு உடைச் செல்வக் களிப்பு உடைத்து ஆக
ஆய் இழை சென்றதூஉம் ஆங்கு அவள் தனக்கு
வீயா விழுச் சீர் வேந்தன் பணித்ததூஉம்  20-010

சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து
அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
கேட்டனன் ஆகி அத் தோட்டு ஆர் குழலியை
மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும்
பொதியில் நீங்கிய பொழுதில் சென்று
பற்றினன் கொண்டு என் பொன் தேர் ஏற்றி
கற்று அறி விச்சையும் கேட்டு அவள் உரைக்கும்
முதுக்குறை முதுமொழி கேட்குவன் என்றே
மதுக் கமழ் தாரோன் மனம் கொண்டு எழுந்து
பலர் பசி களைய பாவை தான் ஒதுங்கிய  20-020

உலக அறவியின் ஊடு சென்று ஏறலும்
மழை சூழ் குடுமிப் பொதியில் குன்றத்துக்
கழை வளர் கான் யாற்று பழப் வினைப் பயத்தான்
மாதவன் மாதர்க்கு இட்ட சாபம்
ஈர் ஆறு ஆண்டு வந்தது வாராள்
காயசண்டிகை! எனக் கையறவு எய்தி
காஞ்சனன் என்னும் அவள் தன் கணவன்
ஓங்கிய மூதூர் உள் வந்து இழிந்து
பூத சதுக்கமும் பூ மரச் சோலையும்
மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும்  20-030

தேர்ந்தனன் திரிவோன் ஏந்து இள வன முலை
மாந்தர் பசி நோய் மாற்றக் கண்டு ஆங்கு
இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம்
ஒன்றே ஆயினும் உண்போர் பலரால்
ஆனைத்தீ நோய் அரும் பசி களைய
வான வாழ்க்கையர் அருளினர்கொல்? எனப்
பழைமைக் கட்டுரை பல பாராட்டவும்
விழையா உள்ளமொடு அவன்பால் நீங்கி
உதயகுமரன் தன்பால் சென்று
நரை மூதாட்டி ஒருத்தியைக் காட்டி   20-040

தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி
வெண் மணல் ஆகிய கூந்தல் காணாய்
பிறை நுதல் வண்ணம் காணாயோ நீ
நரைமையின் திரை தோல் தகையின்று ஆயது
விறல் வில் புருவம் இவையும் காணாய்
இறவின் உணங்கல் போன்று வேறாயின
கழுநீர்க் கண் காண் வழுநீர் சுமந்தன
குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ
நிரை முத்து அனைய நகையும் காணாய்
சுரை வித்து ஏய்ப்பப் பிறழ்ந்து போயின  20-050

இலவு இதழ்ச் செவ் வாய் காணாயோ நீ
புலவுப் புண் போல் புலால் புறத்திடுவது
வள்ளைத் தாள் போல் வடி காது இவை காண்
உள் ஊன் வாடிய உணங்கல் போன்றன
இறும்பூது சான்ற முலையும் காணாய்
வெறும் பை போல வீழ்ந்து வேறாயின
தாழ்ந்து ஓசி தெங்கின் மடல் போல் திரங்கி
வீழ்ந்தன இள வேய்த் தோளும் காணாய்
நரம்பொடு விடு தோல் உகிர்த் தொடர் கழன்று
திரங்கிய விரல்கள் இவையும் காணாய்  20-060

வாழைத் தண்டே போன்ற குறங்கு இணை
தாழைத் தண்டின் உணங்கல் காணாய்
ஆவக் கணைக்கால் காணாயோ நீ
மேவிய நரம்போடு என்பு புறம் காட்டுவ
தளிர் அடி வண்ணம் காணாயோ நீ
முளி முதிர் தெங்கின் உதிர் காய் உணங்கல்
பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து
தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த
வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன்! என
விஞ்சை மகளாய் மெல் இயல் உரைத்தலும்  20-070

தற்பாராட்டும் என் சொல் பயன் கொள்ளாள்
பிறன் பின் செல்லும் பிறன் போல் நோக்கும்
மதுக் கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டி
பவளக் கடிகையில் தவள வாள் நகையும்
குவளைச் செங் கணும் குறிப்பொடு வழாஅள்
ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து இழை
ஈங்கு ஒழிந்தனள் என இகல் எரி பொத்தி
மற்றவள் இருந்த மன்றப் பொதியிலுள்
புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்து அடங்கினன்  20-0810

காஞ்சனன் என்னும் கதிர் வாள் விஞ்சையன்
ஆங்கு அவள் உரைத்த அரசு இளங் குமரனும்
களையா வேட்கை கையுதிர்க்கொள்ளான்
வளை சேர் செங் கை மணிமேகலையே
காயசண்டிகை ஆய் கடிஞை ஏந்தி
மாய விஞ்சையின் மனம் மயக்குறுத்தனள்
அம்பல மருங்கில் அயர்ந்து அறிவுரைத்த இவ்
வம்பலன் தன்னொடு இவ் வைகு இருள் ஒழியாள்
இங்கு இவள் செய்தி இடை இருள் யாமத்து
வந்து அறிகுவன் என மனம் கொண்டு எழுந்து  20-090

வான்தேர்ப் பாகனைப் மீன் திகழ் கொடியனை
கருப்பு வில்லியை அருப்புக் கணை மைந்தனை
உயாவுத் துணையாக வயாவொடும் போகி
ஊர் துஞ்சு யாமத்து ஒரு தனி எழுந்து
வேழம் வேட்டு எழும் வெம் புலி போல
கோயில் கழிந்து வாயில் நீங்கி
ஆய் இழை இருந்த அம்பலம் அணைந்து
வேக வெந் தீ நாகம் கிடந்த
போகு உயர் புற்று அளை புகுவான் போல
ஆகம் தோய்ந்த சாந்து அலர் உறுத்த  20-100

ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகுதலும்
ஆங்கு முன் இருந்த அலர் தார் விஞ்சையன்
ஈங்கு இவன் வந்தனன் இவள்பால் என்றே
வெஞ் சின அரவம் நஞ்சு எயிறு அரும்பத்
தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்தென
இருந்தோன் எழுந்து பெரும் பின் சென்று அவன்
சுரும்பு அறை மணித் தோள் துணிய வீசி
காயசண்டிகையைக் கைக்கொண்டு அந்தரம்
போகுவல் என்றே அவள்பால் புகுதலும்
நெடு நிலைக் கந்தின் இடவயின் விளங்கக்  20-110

கடவுள் எழுதிய பாவை ஆங்கு உரைக்கும்
அணுகல் அணுகல்! விஞ்சைக் காஞ்சன!
மணிமேகலை அவள் மறைந்து உரு எய்தினள்
காயசண்டிகை தன் கடும் பசி நீங்கி
வானம் போவழி வந்தது கேளாய்
அந்தரம் செல்வோர் அந்தரி இருந்த
விந்த மால் வரை மீமிசைப் போகார்
போவார் உளர்அனின் பொங்கிய சினத்தள்
சாயையின் வாங்கித் தன் வயிற்று இடூஉம்
விந்தம் காக்கும் விந்தா கடிகை   20-120

அம் மலைமிசைப் போய் அவள் வயிற்று அடங்கினள்
கைம்மை கொள்ளேல் காஞ்சன! இது கேள்
ஊழ்வினை வந்து இங்கு உதயகுமரனை
ஆர் உயிர் உண்டதுஆயினும் அறியாய்
வெவ் வினை செய்தாய் விஞ்சைக் காஞ்சன!
அவ் வினை நின்னையும் அகலாது ஆங்கு உறும்
என்று இவை தெய்வம் கூறலும் எழுந்து
கன்றிய நெஞ்சில் கடு வினை உருத்து எழ
விஞ்சையன் போயினன் விலங்கு விண் படர்ந்து என் 20-129

உரை

அரசன் ஆணையாலே சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கப்படுதல்

1-8: அரசன்...............ஆக

(இதன் பொருள்) ஆயிழை அருளால் அரசன் ஆணையின்- மணிமேகலையின் அருளுடைமை காரணமாகவும், அவள் வேண்டுகோட் கிணங்கிய அரசன் இட்ட கட்டளை காரணமாகவும்; நிரயக் கொடுஞ்சிறை நீக்கிய கோட்டம்-தன்னுள் உறைபவர்க்கு நரகம் போன்று பெருந்துயர் செய்கின்ற கொடிய சிறையாகுந் தன்மையை நீக்கப்பெற்ற பின்னர் அக் கட்டிடமே; தீப்பிறப்பு உழந்தோர் செய்வினைப் பயத்தால் யாப்பு உடை நல்பிறப்பு எய்தினர்- போல-உம்மைச் செய்த தீவினையின் பயனாகத் தீய பிறப்பிற் பிறந்து அத் தீமையின் பயனை நுகர்ந்து கிடந்தவர் இம்மையிற் செய்த நல்வினைப் பயன் காரணமாக மீண்டும் அந் நன்மையோடு தொடர்புடைய நற்பிறப்பை எய்தி நன்மையே செய்கின்ற மாந்தர் போன்று; பொருள்புரி நெஞ்சின் புலவோன் கோயிலும்-மெய்ப்பொருளையே விரும்புகின்ற பேரறிவுடைய புத்தபெருமானுடைய திருக்கோயிலும்; அருள்புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும்-எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அறவோராகிய துறவுடையோர் உறைகின்ற தூய தவப்பள்ளியும்; அட்டில் சாலையும்-ஆருயிர் மருந்தாகிய உண்டி சமைக்கின்ற மடைப்பள்ளியும்; அருந்துநர் சாலையும்-உணவுண்ணுபவர்க்கு வேண்டிய அறக்கோட்டமும் என்னும் பகுதிகளாக; கட்டு உடை செல்வக் காப்பு உடைத்து ஆக-கட்டப்பட்டு, இவற்றிற்கின்றியமையாத செல்வமாகிய காவலையும் உடையதாகத் திகழ் என்க.

(விளக்கம்) நிரயம்-நரகம். நரகம் போன்று மன்னுயிரை வருத்தும் கொடிய சிறைக்கோட்டம். ஆயிழை அருளாலும் அரசனுடைய ஆணையாலும் இப்பொழுது மன்னுயிர்க்குப் பேரின்பம் தருகின்ற துறக்கம் போலத் திருக்கோயிலும் தவப்பள்ளியும் மடைப்பள்ளியும் உண்ணும் மண்டபமும் ஆகிய பல பகுதிகளாகக் கட்டுதலுடைத்தாய் மேலும் இவற்றிற்கு வேண்டிய செல்வமாகிய காவலையும் உடைய அறக்கோட்டமாகத் திகழ்ந்தது என்றவாறு.

தீப்பிறப்பு-பிறருக்குத் தீமையே செய்யும் இயல்புடைய பிறப்பு. முற்செய் வினையால் தீப்பிறப்பிற் பிறந்துழந்தோர் இப்பிறப்பிற் செய்த நல்வினையால் நற்பிறப்பு எய்தினவரைப் போல, முன்பு நரகத் துன்பத்தைச் செய்யும் சிறைக்கோட்டம் இப்பொழுது துறக்கவின்பத்தைத் தருமிடமாக மாறியது என்க.

ஒரோவழி மணிமேகலை ஒரு நாள் அதன்கட் புகுந்து ஆற்றாமாக்கட் கெல்லாம் உண்டி கொடுத்து உயிர் ஓம்பிய நல்லறம் நிகழ்தற்கிடமாயிருந்தமையால் அவ்வறத்தின் பயனாக அச் சிறைக் கோட்டம் அறக் கோட்டமாக மாறியது கண்டீர் என்னும் ஒரு குறிப்பும் அதற்குக் கூறிய உவமையாலே கொள்ளக் கிடந்தமையும் நுண்ணிதின் உணரலாம்.

பொருள் புரி நெஞ்சின் புலவோன் என்றது புத்தபெருமானை பொருள்- மெய்ப்பொருள். அறவோர் என்றது அருளறம் பூண்ட பவுத்தத் துறவோரை.

அட்டிற்சாலை-மடைப்பள்ளி. அருந்துநர்சாலை என்றது உண்ணுமிடத்தை. இவை யெல்லாம் மன்னுயிர்க்கின்பங் தருமிடங்களாதலறிக.

செல்வக்காப்பு- செல்வமாகிய காவல். அஃதாவது அவ்வறக்கோட்டத்தில் இறைவனுக்குப் பூசனையும் அறவோர்க்கும் பிறர்க்கும் உண்டியும் நிகழ்தற்கு அரசன் விட்ட முற்றூட்டாகிய செல்வத்தையே ஈண்டுச் செல்வக்காப்பு என்றார் என்றுணர்க.

உதயகுமரன் செயல்

9-19: ஆயிழை...............எழுந்து

(இதன் பொருள்) மதுக் கமழ் தாரோன்-தேன்மணங் கமழுகின்ற ஆத்திப்பூமாலை யணிந்த அரசிளங் குமரனாகிய உதயகுமரன்; ஆயிழை சென்றதூஉம்-அரசன் அழைப்பிற்கிணங்கி மணிமேகலை அவன் திருமுன் சென்ற செய்தியையும் வீயா விழுச்சீர் வேந்தன் ஆங்கு அவள் தனக்கு பணித்ததூஉம் இறவாத பெரும்புகழையுடைய அரசன் அவ்விடத்தே அம் மணிமேகலைக்குத் தான் செய்யக்கடவது என்? என்று வினவிய செய்தியையும்; சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும்- மணிமேகலை விரும்பியபடியே அரசன்றானும் சிறையோர் கோட்டம் என்னும் பெயரையே அகற்றி அவ்விடத்தை அருள் கெழுமிய நன்னர் நெஞ்சமுடைய துறவோர் உறையும் அறக்கோட்டமாக அமைத்த செய்தியையும்; கேட்டனன் ஆகி-பிறர் கூறக் கேள்வியுற்றவனாகி; அத் தோட்டு ஆர் குழலியை-என்னை இவ்வண்ணஞ் செய்து மற்றொரு நெறியிலே செல்லுகின்ற அம் மணிமேகலையை; மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும்- சான்றோர் என்னை இகழ்ந்தாலும் அரசனே என்னை ஒறுத்தாலும்; பொதியில் நீங்கிய பொழுதில் சென்று பற்றினன் கொண்டு என் பொன் தேர் ஏற்றி-அம்பலத்தினின்றும் அயலே செல்லும் செல்வியில் சென்று கைப்பற்றிக் கொணர்ந்து என்னுடைய பொற்றேரிலே ஏற்றி; கற்று அறிவிச்சையும் கேட்டு அவள் உரைக்கும் முதுக் குறை முதுமொழி கேட்குவன்-அவள் இங்ஙனம் மாயம் பல செய்தற்கெனக் கற்றறிந்திருக்கின்ற வித்தைதான் யாது என்று கேட்டபின் அவள் கூறுகின்ற அறிவுசான்ற முதுமொழிகளையும் கேட்பேன்; என்று மனங்கொண்டு எழுந்து-என்று தன் நெஞ்சினுள்ளே துணிந்துடனே எழுந்து போய் என்க.

(விளக்கம்) ஆயிழை: மணிமேகலை. வீயா-இறவாத பணித்த தூஉம்-அவள் பொருட்டுப் பணிமாக்கட்குக் கட்டளையிட்டதூஉம் எனலுமாம். தோடு ஆர் குழலி, தோட்டார் குழலி என விகாரம். மதியோர்-அறிவுசான்றோர். பற்றினன் கொண்டு-பற்றிக்கொண்டு. ஊரம்பலத்தே புகுந்து கைப்பற்றுதல் முறைமையன் றென்பது கருதிப் பொதியில் நீங்கிய பொழுதற் பற்றிக் கொள்வேன் என் றுட்கொண்ட படியாம். ஈண்டுக் காமம் காழ் கொண்டவழி ஆடவர் மடலேறுவர், உயிரும் விடுவர் என்பதற்கு உதயகுமரன் அவளைக் கைப்பற்றுதல் பற்றித் தன்னை மதியோர் எள்ளினும் எள்ளுக, மன்னவன் காயினும் காய்க! என்று துணிதல் சிறந்த எடுத்துக் காட்டாகும். இது காதலின் பொருட்டு மடலேறுதற் கொத்ததொரு துணிவே என்க. என்னை? வாய்மையான காதலுக்கு இடையூறெய்தின் சாதலன்றி வேறுய்தியின்மையால்.

மணிமேகலையின் அருமைப்பாடு கருதிப் பொற்றேர் ஏற்றிக் கொடுவருவல் என்றான். ஒரே பாத்திங்கொண்டு பலரை யுண்பித்தற்கும் வேற்றுருக் கோடற்கும் யாண்டுக் கற்றனை என்று கேட்டறிகுவலென்பான் கற்றறிவிச்சையும் கேட்டு என்றான். மற்று அவள் இப் பொழுதும் முதுக்குறை முதுமொழி கூறாதிராள். அக்கூற்று என் கருத்திற்கு முரணுமாயினும் அவற்றை அவள் கூறக்கேட்குங்கால் என் அருந்தேமாந்த ஆருயிர் தளிர்க்குமாதலின் அவற்றையும் கேட்டிடுவேன் என்கின்றான். முதுக்குறை முதுமொழி என்றது முன்னம் அவள் தான் தவந்தாங்கியதற்குக் காரணமாக மக்கள் யாக்கையினியல்பு கூறியதை நினைந்து கூறியபடியாம்(18:134-138) ஈண்டு அவற்றை இகழும் குறிப்புடன் முதுக்குறை முதுமொழி என்கின்றான். எழுந்து சென்றென்க.

காயசண்டிகையின் கணவன் செயல்

20-31: பலர்..............திரிவோன்

(இதன் பொருள்) பாவை பலர் பசி களைய ஒதுங்கிய உலகவறவியின் ஊடு சென்று ஏறலும்-மணிமேகலை ஆற்றாமாக்கள் பலருடைய அரும்பசியையும் ஒருசேரக் களைந்து மகிழ்வித்தற் பொருட்டுப் புகுந்த உலகவறவியாகிய அம்பலத்தினூடு சென்று புகுதாநிற்ப; காஞ்சனன் என்னும்- காஞ்சனன் என்னும் பெயரையுடைய (காயசண்டிகையின் கணவனாகிய) விச்சாதரன்; மழை சூழ் குடுமிப் பொதியிற் குறைத்து கழைவளர் கான்யாற்று- முகில் தவழுகின்ற உச்சியினையுடைய பொதியமலை மருங்கில் மூங்கில்கள் தழைத்து வளருதற்கிடனான காட்டியாற்றின் படுகரிலே; பழவினைப் பயத்தால்-ஊழ்வினை காரணமாக; மாதவன் மாதர்க்கு இட்ட சாபம் ஈர் ஆறு ஆண்டு வந்தது-விருச்சிக முனிவன் என் காதலிக்கு இட்ட சாபம் கட்டி நிற்கும் பன்னீராட்டைக் காலமும் கழிந்து உய்திக் காலமும் வந்துற்றது; காயசண்டிகை வாராள்- காயசண்டிகையோ இன்னும் வந்திலள்; எனக் கையறவு எய்தி-அவட் கென்னுற்றதோ என்று வருந்தி; ஓங்கிய மூதூருள் வந்து இழிந்து-அவள் இருந்த உயர்ந்த புகழையுடைய பழைய நகரமாகிய பூம்புகாரிலே வான்வழியே வந்திறங்கி பூதசதுக்கமும் பூமலர்ச்சோலையும் மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும் தேர்ந்தனன் திரிவோன்- பூதநிற்கும் நாற்சந்தியினும் பூவையுடைய பூம்பொழிலிடத்தும் ஊர்மன்றங்களினும் ஊரம்பலத்தினும் சென்று சென்று அவளைத் தேடித் திரிகின்றவன், என்க.

(விளக்கம்) பலர்-ஆற்றாமாக்கள் பலருடைய. பாவை: காயசண்டிகை வடிவங்கொண்டுள்ள மணிமேகலை. ஊடு-உள்ளே. மழை-முகில். குடுமி-உச்சி. பொதியிற் குன்றம்- பொதியின் மலை. ஈர் ஆறு ஆண்டு என்றது, ஈர் ஆறாம் ஆண்டு என்பதுபட நின்றது. அஃதாவது- பன்னிரண்டாம் ஆண்டின் இறுதியும் வந்தது என்றவாறு. அவ்விறுதி அச் சாப வீடு பெறும் நாளாதலின், அவள் சாப வீடு பெற்றிருப்பள் அங்ஙனமாயின் அவள் உடனே ஈண்டு வந்திருப்பளே வாராமைக்குக் காரணம் என்னோ என்று ஐயுற்றுக் கையற வெய்தினன் என்பதாம். அவள் என்னும் சுட்டுப் பெயரை விளக்கத்தின் பொருட்டு இயற்பெயராக்கி உரை கூறப்பட்டது.

புகழான் ஓங்கிய மூதூர் என்க. அஃதாவது- பூம்புகார் நகரம். பூதசதுக்கம்- பூதநிற்குமிடமாகிய நாற்சந்தி. இதனியல்பை

தவமறைந் தொழுகுந் தன்மை யிலாளர்
அவமறைந் தொழுகு மலவற் பெண்டிர்
அறைபோ கமைச்சர் பிறர்மனை நயப்போர்
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக்
காத நான்கும் கடுங்குர லெடுப்பிப்
பூதம் புடைத்துணும் பூத சதுக்கமும்

எனவருஞ் சிலப்பதிகாரத்தால்(5:128-134) இனிதினுணர்க.

மன்றம்-மரத்து நிழலில் ஊர் மக்கள் கூடுமிடம். பொதியில் என்றது உலகவறவியை. தேர்ந்தனன்: முற்றெச்சம்.

காஞ்சனன் காயசண்டிகை வடிவந்தாங்கிய மணிமேகலையைக் காயசண்டிகை என்றே கருதி அவள் மருங்கு சென்று பழைமைக் கட்டுரை பல பாராட்டுதல்.

31:37: ஏந்திள..............பாராட்டவும்

(இதன் பொருள்) ஏந்திள வனமுலை-காயசண்டிகை வடிவந்தாங்கி உலகவறவியினூடு சென்று பாத்திர மேந்தி மணிமேகலை யானவள்; மாந்தர் பசி நோய் மாற்றக் கண்டு-ஆற்றாமாந்தர் பலருடைய பசி நோயையும் உணவீந்து மாற்றுபவளைக் காயசண்டிகையாகவே கண்டு வியந்து; ஆங்கு-அவளிடம் அணுகி அன்புடையோய்!; இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம் ஒன்றே ஆயினும் உண்போர் பலரால்- இற்றைநாள் நீ நின் கையிலேந்திய பிச்சைப் பாத்திரம் ஒன்றே ஆகவும் அதனூடிருந்து நீ வழங்கும் உணவினை உண்பவரோ எண்ணிலராயிருக்கின்றனர் இந் நிகழ்ச்சி கண்டு யான் பெரிதும் வியப்புறுகின்றேன் காண்! ஆனைத்தீ நோய் அரும்பசி களைய வான் வாழ்க்கையர் அருளினர் கொல் என-இத்தகு தெய்வத்தன்மையுடைய அரும்பெறற் பாத்திரத்தை நினக்குச் சாபத்தாலே எய்திய ஆனைத்தீநோய் காரணமாக நீ எய்துகின்ற தீர்த்தற்கரிய பசி நோயின் துன்பத்தைக் கண்டிரங்கி அதனை நீக்கும் பொருட்டு வானுலகத்தே வாழும் தேவர்கள் வழங்கினரோ? இது நீ தனது பழைய காதலன்பு தோன்றுதற்குக் காரணமான பொருள் பொதிந்த மொழிகள் பலவற்றையும் கூறி நலம் பாராட்டா நிற்பவும் என்க.

(விளக்கம்) இன்று என்றது இற்றை நாள் வியத்தகு நிகழ்ச்சி யொன்றனைக் காணுகின்றேன்! என்பதுபட நின்றது.

வான வாழ்க்கையர்-தேவர்கள். இப் பாத்திரம் தெய்வத் தன்மையுடைத்தாகலின் இது தெய்வத்தாலேயே வழங்கப்பட்டிருத்தல் வேண்டும் என ஊகித்து வினவுவான், வான வாழ்க்கையர் அருளினர் கொல் என்று வினவியவாறு. பழைமை- பழைதாகிய காதற்கேண்மை. பாராட்ட-நலம் பாராட்ட, நலம், ஈண்டு பெறலரும் பேறு பெற்றிருத்தலாம்.

மணிமேகலை அவனை இன்னாள் என அறியாளாய் உதயகுமரன்பாற் சென்று அறஞ்செவியறிவுறுத்துதல்

38-40: விழையா................காட்டி

(இதன் பொருள்) விழையா உள்ளமொடு அவன் பால் நீங்கி-தன் அறச்செயலிலே கருத்தூன்றியிருந்த மணிமேகலை தன்னை அணுகிய காஞ்சன்னையாதல் அவன் கூறிய கட்டுரையையாதல் சிறிதும் விரும்பாத நெஞ்சத்தனளாய் அவனிடத்தினின்றும் விலகி; உதயகுமரன்றன்பாற் சென்று-தன் பழைய கணவனாகிய உதயகுமரனைத் தெருட்டி நன்னெறிப் படுத்தும் கருத்துடையவளாய் அவனை விழைத்த மூதாட்டி உள்ளத்தோடு அவ்வரசிளங்குமரனை அணுகி; நகர மூதாட்டி ஒருத்தியைக் காட்டி-அவ்வுலகவறவியிலே உறை வாள் ஒரு நரைத்து முதிர்ந்த கிழப்பருவத்தாளைச் சுட்டி காட்டிக் கூறுபவள்

(விளக்கம்) அவன்பால்-காஞ்சனனிடத்தினின்றும். ஆற்றாமாக்களுள் ஒருத்தியாக ஆங்குறைவாளி ஒரு நரை மூதாட்டியைக் காட்டி என்க. அவனுக்கு நல்லறிவு கொளுத்துவான் கூறுபவள் என்க. இவை இசையெச்சம்.

மக்கள் யாக்கையின் இழிதகைமை

41-66: தண்ணறல்...........உணங்கல்

(இதன் பொருள்) தண் அறல் வண்ணம் திரிந்து வேறு ஆகி மன்னவன் மகனே! இம் மூதாட்டியின் கூந்தல் தானும் பண்டு குளிர்ந்த கருமணல் போன்ற நிறமுடையதாகத் தான் இருந்திருத்தல் வேண்டும், இப்பொழுதோ அக் கருநிறம் முழுவதும் மாறுபட்டு அதற்கு முரண்பட்டதாகி; வெண்மணல் போன்ற நிறமுடைய கூந்தலாகி விட்டதனைக் காண்பாயாக!; பிறைநுதல் வண்ணம்- எண்ணாட் பக்கத்துப் பிறைத்திங்கள் போலும் பேரழகுடையது என்று பாராட்டப்படுகின்ற மகளிரின் நுதலின் தன்மை; நரைமையின் திரைதோல் தகைமை இன்றாயது நீ காணாயோ-அவ்வெண்மை நிறத்தோடும் திரைந்த தோலோடும் சிறிதும் அழகில்லாததாகியதனை நீ இவள்பால் கண்டிலையோ?; விறலவில் புருவம் இவையும் இறவின் உணங்கல் போன்று வேறு ஆயின காணாய்- வெற்றிதருகின்ற வில் என்று பாராட்டப்படுகின்ற புருவங்களாகிய இவை தாமும் இறாமீன் வற்றல் போன்று சுருண்டு அருவருப்புண்டாக்குவனவாய் மாறுபட்டுத் தூங்குகின்றவற்றையும் காண்பாயாக!; கழுநீர்க்கண் காண் வழுநீர் சுமந்தன- கருங்குவளை மலர் போன்று கவினுடையன என்று பாராட்டப் பெற்ற கண்களைப் பார்! பீளையும் நீரும் சுமந்திருக்கின்றன; குமிழ்மூக்கு இவைகாண் உமிழ்சீ ஒழுங்குவ-குமிழம்பூப் போன்ற மூக்கின் துளைகளாகிய இவற்றை நோக்குதி உமிழுகின்ற அருவருக்கத் தகுந்த சீயைத் துளிக்கின்றன; நிரை முத்து அனைய நகையும் காணாய்- நிரல்பட அமைத்த முத்துகள் என்று பாராட்டப்படுகின்ற பற்களின் இயல்பையும் ஈண்டுக் கண்டறிதி; சுரைவித்து ஏய்பபப் பிறழ்ந்து வேறு ஆயின-சுரையினது விதை போன்று நிரந்திரிந்து நிலையும் பிறழ்ந்து வேறுபட்டன; நீ இலவு இதழ் செவ்வாய்- நீ இலவமலர் போன்று சிவந்த வாய் என்று பாராட்டப்படுகின்ற சிவந்த வாய்; புலவுப் புறத்திடுவது காணாயோ-புலால்நாற்றத்தைப் புறமெங்கும் பரப்புவதனைக் கண்டிலையோ?; வள்ளைத் தாள்போல் வடிகாது இவை காண் உள் ஊண் வாடிய உணங்கல் போன்றன-வள்ளைக் கொடி போன்று வடிந்த அழகிய காதுகள் எனது வண்ணிக்கப் படும் காதுகளாகிய இவற்றை நோக்குதி உள்ளிருந்த ஊன் உலர்ந்துபோன வற்றிலைப்போல்கின்றன அல்லவோ?; இறும்பூது சான்ற முலையும் காணாய்-காமுகர்க்கு எப்பொழுதும் வியத்தற் குரியவாகிய இம் மூலைகளினியல்பையும் ஈண்டுக் கண்டுணர்தி வெறும்பை போல வீழ்ந்து வேறு ஆயின-உள்ளீடற்ற தோற்பைகள் போன்று தொங்கி அருவருப்புத் தரும் வேறு தன்மை யுடையன வாயினவன்றோ?; இளவேய்த் தோளும் காணாய்-இளமையுடைய பச்சைமூங்கில் போன்றன என்று பாராட்டப்படும் தோள்களையும் காணுதி; தாழ்ந்து ஒசி தெங்கின் மடல் போல் திரங்கி வீழ்ந்தன-சரிந்து ஒசிந்த தென்னை மட்டை போன்று சுருங்கித் தூங்குகின்றனவன்றோ; நரம்பொடு விடுதோல் உகிர்த்தொடர் கழன்று திரங்கிய விரல்கள் இவையும் காணாய்-நரம்பும் அவற்றோடு தொடர்பற்ற தோலுமாய் நகத்தின் வரிசையும் கழன்று வற்றியிருக்கின்ற விரல்களாகிய இவற்றின் இயல்பையும் காண்பாயாக; வாழைத் தண்டே போன்ற குறங்கு இணை தாழைத் தண்டின் உணங்கல் காணாய்-வாழைத் தண்டே போல்வன இவை என்று வண்ணிக்கப்படுகின்ற துடையிரண்டும் தாழைத் தண்டின் வற்றல் போல்கின்றன அவற்றின் இயல்பையும் அறிதி; நீ ஆவக்கணைக்கால்-நீ தானும் அம்புக் கூடு போன்ற அழகுடையன என்னும் கணைக்காலிரண்டும்; மேவிய நரம்போடு என்பு புறங்காட்டுவ காணாயோ-தமக்குப் பொருந்திய நரம்போடு எலும்புகளையும் புறத்தார்க்கும் காட்டுவன ஆதலைக் காண்கின்றிலையோ?; தளிர் அடி வண்ணம் முளிமுதிர் தெங்கின் உதிர்காய் உணங்கல்-தளிர்போன்ற மெல்லிய அடிகளின் தன்மை உலர்ந்த முதிர்ந்த தெங்கினின்றும் உதிர்ந்தகாயாகிய நெற்றின் தன்மை யுடையனவாதலை; நீ காணாயோ நீ கண்கூடாகக் காண்கின்றிலையோ என்றாள் என்க.

(விளக்கம்) அறல்-கருமணல் . நரைமை-வெண்மை திரை தோல் வினைத்தொகை. தகை-அழகு. விறல்-வெற்றி. இறவின் உணங்கல்-இறாமீன்வற்றல். கழுநீர்-மலர்க்கு ஆகுபெயர் வழுவும் நீரும் என்க வழு-பீளை. குமிழ்-குமிழம்பூ-மூக்கின்றுளைகளைச் சுமந்தன எனப் பலவறி சொல்லாற் கூறப்பட்டது. நகை-பல். ஏய்ப்ப: உவமஉருபு. புலவு-புலால் நாறுகின்ற. இறும்பூது-வியப்பு.வெறுந் தோற்பை என்க. தாழைத் தண்டின் வற்றல்-உலர்ந்து சுருங்கிய தாழைத் தண்டென்றவாறு. ஆவம்-அம்புக்கூடு. என்பு-எலும்பு. தெங்கின் காய் உணங்கல் என்றது, தென்னை நெற்றினை.

இதுவுமது

68-80: பூலினும்-காணாயோ

(இதன் பொருள்) மன்னவன் மகன்-வேந்தன் மகனே!; தொல்லோர்-முன்னையோர்; புலால் பூவினும் சாந்தினும்-மகளிரின் யாக்கையின்கண் இத்தகைய புலால் நாறுமியற்கையை கறிய மணங்கமழும் மலர்களானும் சாந்தம் முதலிய நறுமணம் பொருள்களாலும் ஒல்லுந்துணையும்; மறைத்துத் தூசினும் மணியினும் யாத்து வகுத்த வஞ்சம் தெரியாய்-மறைத்து விட்டு மேலும் அதன் விகாரங்கள் அழகிய ஆடைவகைகளையும் மணி முதலியவற்றாலியன்ற அணிகலன்களையும் அழகாக அணிந்து வைத்து அதனைக் கண்டோர் காமுறும்வண்ணம் அழகுடையதாய் யாப்புறுத்திய வஞ்சகச் செயலையும்; ஆராய்ந்து தெரிந்து கொள்வாயாக; என-என்று சொல்லி மெல்லியல் விஞ்சை மகளாய் உரைத்தலும்-மணிமேகலை காயசண்டிகையாய் நின்று செவியறிவுறுத்தலும் என்க.

(விளக்கம்) ஈண்டு மணிமேகலை அவன்பால் முற்பிறப்பினின்றும் அடிப்பட்டு வருகின்ற அன்பு காரணமாக அவனுக்கும் மெய்யறிவு கொளுத்தித் தான் செல்லும் நன்னெறிக்கண் ஆற்றுப்படை செய்வான் யாக்கையின் இயல்பினை விதந்தெடுத்துச் செவியறிவுறுத்தியபடியாம்.

யாக்கையின் தன்மையை உள்ளவாறு உணர்ந்தாலன்றி அதன்கண் பற்று அறாது, இவ்வாறு யாக்கையின் இழிதகைமையை இடையறாது சிந்தித்துப் பற்றறுத்தல் வேண்டும் என்பது புத்தருடைய அறிவுரையாகும். இங்ஙனம் சிந்தித்தலை அசுப்பாவனை என்று பவுத்த நூல்கள் கூறும் இந்நூலினும்

அநித்தம் துக்கம் அநான்மா அசுசியெனத்
தனித்துப் பார்த்தப் பற்றறுத் திடுதல் 

என வருதலறிக(30:254-5)

இனி ஈண்டு, பூவினும்.....தெரியாய் எனவருமிப் பகுதியோடு

கூராரும் வேல்விழியார் கோலா கலங்க ளெல்லாம்
தேராத சிந்தையரைச் சிங்கி கொள்ளு மல்லாமல்
நேராயு ணிற்கு நிலையுணர்ந்து நற்கருமம்
ஆராய் பவருக்கு அருவருப்ப தாய்விடுமே

எனவும்

வால வயதின் மயக்கு மடந்தையருங்
கால மகன்றதற்பின் கண்டெவரு மேயிகழ
நீலநறுங் குழலு நீடழகு நீங்கியவர்
கோலதொரு கையூன்றிக் கொக்குப்போ லாயினரே

எனவும்,

கிட்டா தகன்மின் கிடப்பதிற் பொல்லாங் கென்(று)
இட்டா ரலரேல் இலங்கிழையார் தம்முடம்பிற்
பட்டாடை மேல்விரித்துப் பாதாதி கேசாந்த
மட்டாய் மறைத்துவரு மார்க்கமது வென்கொண்டோ

எனவும்,

வீசிய துர்க்கந்தம் வெளிப்படுத்தும் மெய்யிலெனக்
கூசி மறைப்பதன்றேற் கோற்றொடியார் அங்கமெங்கு
நாசி மணக்க நறுங்குங் குமசுகந்தம்
பூசி முடித்தல்பசி போக்கும் பொருட்டேயோ

எனவும்,

மாற்றரிய தமூத்தை வாய்திறக்கு முன்னமெழு
நாற்ற மறைக்கவன்றேல் நாவழித்துப் பல்விளக்கிக்
கோற்றொடியார் நன்னீருங் கொப்புளித்துப் பாகுசுருள்
தீற்றுவது மென்குதலை தீர்க்குமருந் தென்றேயோ

எனவும்,

பட்டாடை சாத்திப் பணிமே கலைதிருத்தி
மட்டா யவயங்கண் மற்றவைக்கு மேற்குவண்ணம்
கட்டாணி முத்தும் கனகமணிப் பூடணங்கள்
இட்டால் அலதவருங் கென்னோ வியலழகே

எனவும் அசுபபாவனைக்கு அற்புதமாக வந்த இச் செய்யுள்களையும் ஒப்பு நோக்கி உணர்க.  (மெய்ஞ்ஞான விளக்கம். நீருப-14-9)

விஞ்சை மகளாய்-காயசண்டிகையாய்

காஞ்சணன் உட்கோளும் கரந்துறைவும்

71-81: தற்பாரா..... விஞ்சையன்

(இதன் பொருள்) தன் பாராட்டும் என் சொல் பயன் கொள்ளான் காயசண்டிகை வடிவத்தோடு நின்று உதயகுமரனுக்கு முதுக்குறை முதுமொழி எடுத்துக்காட்டிய மணிமேகலையின் செயலைக் கண்ட காஞ்சனன் காயசண்டிகையே இங்ஙனம் ஆயினன் என்றுட் கொண்டவனாய்! என்னே! இஃதென்னே! இவன்தான் தன்னை யான் அன்புடன் பாராட்டிக் கூறுகின்ற சொற்களின் யான் அன்புடன் பாராட்டிக் கூறுகின்ற சொற்களின் பயனைச் சிறிதும் கருத்துட் கொள்கின்றிலள்; பிறன் பின் செல்லும் பிறன் போல நோக்கும்-கணவனாகிய என் கண் காணவே பிறனொருவன் பின்னேயே செல்கின்றாள் என்னை நோக்குழியும் ஏதிலானை நோக்குமாறு போலவே நோக்குகின்றனள்; மதுக்கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு முதுக்குறை முதுமொழி எடுத்துக்காட்டி-தேனமணங் கமழும் ஆத்திப்பூமாலை அணிந்திருக்கின்ற இவ்வரசன் மகனுக்கு இவள் அறிவுரை கூறுவாள் போன்று அறிவுசான்ற பழமொழிகள் பலவற்றை எடுத்துக் கூறுகின்றாளாயினும்; பவளக் கடிகையின் தவள வாள நகையும் குவளைச் செங்கணும் குறிப்பொடு வழாஅள்-பவளத்துணுக்குகள் போன்ற தன் வாயிதழ்களின் மேலே தவழ்கின்ற வெள்ளிய எயிற்றின் ஒளி தவழ்கின்ற புனமுறுவல் பூப்பதனானும் குவளை மலர் போன்ற தன் சிவந்த கண்களிலே காமப் பண்பு ததும்பக் காதற் குறிப்பிற் சிறிதும் வழுவாமல் நோக்குகின்ற நோக்கமுடைமையானும்; ஈங்கு இவன் காதலன்-இந் நகரத்தின்கண் இம் மன்னவன் மகன் இவளுக்குக் காதலன் ஆயினன் என்பது தேற்றம்; ஆகலின் ஏந்திழை ஈங்கு ஒழிந்தனள் என-இங்ஙனமிருத்தலாலே தான் காயசண்டிகை தனக்கெய்திய சாபம் தீர்ந்தபின்னரும் தனக்குரிய விச்சாதர நாட்டை வெறுத்து இந் நகரத்திலேயே தங்கினள் என்று கருதியவனாய்; இகழ் எரி பொத்தி-மன்னன் மகன்பா லெழுந்த பகைமை காரணமாகத் தன்னெஞ்சத்தே வெகுளித் தீமூண்டெரியா நிற்ப; காஞ்சனன் என்னும் பெயரையுடைய ஒளிமிக்க வாளையுடைய அவ்விச்சாதரன்; மற்று அவள் இருந்த மன்றப் பொதியிலுள் புற்றடங்கு அரவின் புக்கு ஒளித்து அடங்கினன்-அக் காயசண்டிகை பண்டு வதிந்த மன்றயாகிய ஊரம்பலத்தினூடு ஒருசார் புகுந்து புற்றினுள்ளே அடங்கியிருக்கும் பாம்பு போலே தன்னை யாரும் அறியாவண்ணம் கரந்துறைவானாயினன் என்க.

(விளக்கம்) தன் என்றது, காயசண்டிகையை, பிறன் பின் செல்லும் என்றது. கணவனாகிய என்னைக் கண்டு வைத்தும் ஏதிலாள் பின் செல்கின்றாள் என்பதுபட நின்றது.

பிறன்போல் என்றதும், கணவனாகிய என்னை ஏதிலானை நோக்குவது போல் போக்குகின்றாள் என்பதுபட நின்றது. மன்னவன் மகனும் இவள்பால் காதலுடையனாதலின் தன்னை மலர் மாலை முதலியவற்றால் அழகு செய்து கொண்டு வந்துள்ளான் போலும் என்னும் தனது ஐயந்தோன்ற உதயகுமரனை மதுக்கமழ் அலங்கல் மன்னவன் மகன் என்றான். இதன்கண் காயசண்டிகை தன்னைக் கைவிட்டு அவனைக் காதலித்தற்குக் காரணமான சிறப்பிது என்பது தோன்ற, பிறன் என்னாது மன்னவன் மகன் என்ற நுணுக்கம் உணர்க எடுத்துக் காட்டியும் எனல் வேண்டிய இழிவு சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. பேசுவது ஞானம் இடை பேணுவது காமம் என்று கனல்வான், வாணகையும் செங்கணும் குறிப்பொடு வழாஅள் என்றான். ஈண்டுக் குறிப்பாவது வெள்ளையுள்ளத்தோடு நேரிட்டு நோக்காமல் கள்ளவுள்ளத்தோடு பாராதாள் போன்று பார்த்தல். ஈண்டு மணிமேகலை அவன்பாற் காதல்புடையள் ஆதலின் தன் காதல் அவனுக்குத் தோன்றாமைப் பொருட்டுக் கள்ளத்தோடே நோக்கினள் என்பது இக் காஞ்சனன் கூற்றால் யாமும் உணர்கின்றோமல்லமோ!

ஈங்கு இவன் அவட்குக் காதலன் என்பது தேற்றம் என அறுத்து முடித்திடுக. காதலன் என்றது இகழ்ச்சி. ஏந்திழை: காயசண்டிகை. இவள் என்னும் பொருட்டாய் நின்றது. இகல்-பகைமை; ஆகு பெயராய்ச் சினத்தைக் குறித்து நின்ற தெனினுமாம்.

மன்றப் பொதியில்: இருபெயரொட்டு. அவள்: காயசண்டிகை. அரவம் தன்னைப் பிறர் அறியாவகை உறையுமிடத்தே கரந்துறையும் இயல்பிற்று ஆதலும் நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும் என்பதனாலுமுணர்க. பின்னர் அவன் செயலுக்கியன்ற கருவியும் அவன் பாலிருந்தமை தோன்றக் கதிர்வாள் விஞ்சையன் என்று விதந்தார் என்னை? படை கொண்டார் நெஞ்சம் நன்றூக்காதாகலின் படையுண்மையையும் விதந்தோதினர்.

உதயகுமரன் உட்கோளும் செயலும்

82-93: ஆங்கவள்.........போகி

(இதன் பொருள்) ஆங்கு அவள் உரைத்த அரசிளங்குமரனும் அவ்விடத்திலே மணிமேகலையாலே அறிவுரை கூறப்பட்ட மன்னவன் மகனாகிய இளமைமிக்க உதயகுமரன்றானும்; களையா வேட்கை கையுதிர்க் கொள்ளான்-ஊழ்வினையின் புணர்ப் பாதலாலே தன்னறிவினாலே சிறிதும் நீக்கலாகாத கழிபெருங்காம வேட்கை காரணமாக அவளைக் காயசண்டிகை என்றே கருதிக் கைவிட்டொழிய மாட்டானாகித் தன்னுள்ளே ஆராய்ந்து துணிபவன்; வளைசேர் செங்கை மணிமேகலையே-மாணிக்கத்தானும் பொன்னானுமியன்ற வளையல்கள் அவாவிச் சேர்தற்கியன்ற அழகிய சிவந்த கைகளையுடைய மணிமேலை தானே மாயவிஞ்சையின் காயசண்டிகை ஆய்மனம் மயக்குறுத்தனள் தான் கற்றுள்ள வேற்றுருக் கோடற்கியன்ற மாய மந்திரத்தாலே காயசண்டிகை வடிவந்தாங்கியவளாகிப் பிச்சைப்பாத்திரத்தை ஏந்தி என் முன் வந்து தன் முதுக்குறை முதுமொழிகளாலே என் மனத்தைப் பின்னும் மயக்குவித்தனள் ஆதல் வேண்டும் அம்பல மருங்கில் அயர்ந்து அறிவு உரைத்த இவ்வம்பலன் தன்னொடு வைகிருள் ஒழியாள்-உலகவறவியின்கண் இவளைக் காயசண்டிகை என்று கருதி நெஞ்சம் வருந்தி அறிவுரை கூறிய இப் புதியவனோடு இற்றை நாள் இருள்மிக்க இவ்விரவினைக் கழித்தற்கொருப்படாள்; இங்கு இவள் செய்தி-யான் மணிமேலையே என்று கருதுகின்ற இவளுடைய செயலை; இடையாமத்து இருள் வந்து அறிகுவன் எனமனங் கொண்டு எழுந்து-இற்றைக்கு நள்ளிரவிலே இருளினூடே வந்து ஒற்றி இவள் யார் என நன்கு அறிந்து கொள்வேன் என்றுட் கொண்டு அவ்விடத்தினின்றும் பெயர்ந்து; வான தேர்ப்பாகனை மீன்திகழ் கொடியனைக் கருப்பு வில்லியை அருப்புக்கணை மைந்தனை தன்னை இடையறாது வருத்துபவனும் வானத்தே இயங்குந் தென்றல் தேரினையும் மீன் எழுதப்பட்டு விளங்கும் கொடியையும் கரும்பாகிய வில்லையும் மலராகிய அம்புகளையும் உடைய ஆற்றல் மிக்கவனுமாகிய காம வேளையே; உயர்வுத் துணையாக-தன் ஆராய்ச்சிக் குற்ற துணைவனாகக் கொண்டு வயாவொடும் போகி-மிக்க காம வேட்கையொடு தன் மாளிகைக்குச் சென்று; என்க.

(விளக்கம்) அவள்: மணிமேகலை; உரைத்த-உரைக்கப்பட்ட கையுதிர்க் கொள்ளல்-கைவிட்டொழிதல் தன் மனக்கண்ணாலே மணிமேகலையின் செங்கையில் மணியானும் பொன்னானுமியன்ற வளையல்களையும் செறித்து அதன் அழகைச் சுவைப்பவன் அது தோன்ற வளைசேர் செங்கை மணிமேகலை என்றான். இங்ஙனம் கற்பனையாகச் சுவைப்பது காமுற்றோரியல்பு. மணிமேகலையே என்புழி ஏகாரம் தேற்றப் பொருட்டு: பிரிநிலைப் பொருளும் பயந்து நின்றது. மாயவிஞ்சை-வேற்றுருக் கொள்ளுதற்கியன்ற மந்திரம்.

மணிமேகலையாயின் இரவில் இப் புதியவனோடு தங்கியிராள் என்றவாறு. இஃது ஐயந்தீர்தற்குக் கருவி கூறியவாறாம். வம்பலன் புதியவன். வைகு இருள்-தங்கிய இருளையுடைய இரவு. வைகறை எனல் ஈண்டைக்குப் பொருந்தாது. இவள் என்றது, தனக்கு ஐயப்புலமாகிய இவள் என்றவாறு. அறிகுவன் என்றது ஐயமற அறிவேன் என்றவாறு.

காம வேள் இடையறாது தன்னோடிருந்து தன்னை ஊக்குதலின் அவனையே துணையாகக் கொண்டு சென்றான் என்றார்; பிறிதொரு துணை பெறாது தனியே சென்றாள் என்பது கருத்து. உயாவுத்துணை-வினாவிக்காரியந் தெரிதற்கியன்ற துணைவன். வயா-ஈண்டுக் கழிபெருங் காமவேட்கை.

உதயகுமரன் நள்ளிரவில் ஊழ்வலியாலே உலகவறவியினூடு சென்றேறுதல்

94-101: ஊர்துஞ்ச.........புகுதலும்

(இதன் பொருள்) ஊர்துஞ்சு யாமத்து ஒரு தனி எழுந்து முதூரின்கண் வாழும் மக்களையுள்ளிட்ட உயிரினமெல்லாம் உறங்கிக் கிடக்கின்ற இரவின் இடையாமத்திலே அவ்வரசிளங் குமரன் தான் கருதியாங்குப் பிறிதொரு துணையும் நாடாது தான் மட்டுமே தமியனாய்த் தன் மாளிகையினின்றும் எழுந்து, வேழம் வேட்டு எழும் வெம்புலி போல -யானையை புடைத்துத்தினன் அவாவிச் செல்லுகின்ற வெவ்விய புலி பதுங்கிச் செல்லுமாறு போலே தன் செலவினைப் பிறர் அறியாவண்ணம் கரந்து சென்று; கோயில் கழிந்து வாயில் நீங்கி ஆயிழை இருந்த அம்பலம் அணைந்து-அரண்மனையினின்றும் புறப்பட்டு வாயில் காவலரும் காணா வண்ணம் பெருவாயிலையுங் கடந்து போய் மணிமேகலை இருந்த அம்பலத்தை அணுகி; வேகவெந்தீ நாகம் கிடந்த போகு உயர் புற்று அளை புகுவான் போல-விரைந்து கொல்லும் வெவ்விய நச்சுப் பாம்பு கரந்து கிடக்கும் மிகவும் உயர்ந்துள்ள புற்றின்கண் அமைந்ததொரு பெரிய வளையினூடு புகுபவனைப் போன்று; ஆகம் தோய்ந்த சாந்து அலர் உறுத்த ஊழ் அடியிட்டு அதன் உள் அகம் புகுதலும்-தன் வரவினை அறிவுறுத்தா நிற்பவும் தன் வருகையைப் பிறர் அறியாதிருக்கும் முறைமையாலே ஒலியவித்து அடிபெயர்த்து அவவம்பலத் துள்ளே புகுமளவிலே என்க.

(விளக்கம்) போகித் தன் பள்ளியிலே கிடந்தவன் தான் கருதிய வண்ணமே ஊர்துஞ்சியாமத்து ஒரு தனி எழுந்து என்க. வாள் வேல் முதலிய படைக்கலத்தின் துணையுமின்றிச் சென்றமை கருதித் தனி எழுந்தான் என்னாது ஒருதனி எழுந்து என்று தனிமையை விதந்தார். தன் வருகையைத் தான் வேட்கும் வேழமும் அறியாவண்ணம் போதலும் அஞ்சாது போதரும் வேட்கையொடு போதலும் நள்ளிரவிற் போதலும் ஆகிய பொதுத்தன்மைகள் பலவும் கருதி வேழம் வேட்டெழும் வெம்புலியை உவமம் கொண்டனர். கோயிலையும் வாயிலையும் பிறர் அறியாவண்ணம் கடந்து நீங்குதலின் அருமை தோன்ற அவற்றைத் தனித்தனி எடுத்தோதினர், ஆயிழை: மணிமேகலை.

முன்னம் காஞ்சனன் அவளிருந்த மன்றப் பொதியிலுட் புற்றடங் காவிற் புக்கொளிந்தடங்கினன் என்றதனை மீண்டும் நினைவுறுத்தியது. வேண்டாகூறி வேண்டியது முடித்தல் என்னும் உத்தி. என்னை? வேகவெந்தீ நாகம் கிடந்த போகுயர் புற்றளை புகுவான் போல என்புழிப் பயில்வோர் நெஞ்சத்தே அவலச் சுவை இரட்டிப்பாதல் நுண்ணிதின் உணர்க.

சாந்தலர் உறுத்தவும் அஃதுணராது அடியிடுதலை ஒளியின்றிச் செல்வோர் செல்லும் முறைப்படி மெத்தென்று இட்டுச் சென்றனன் என்றிரங்குவார். சாந்தலர் உறுத்த ஊழ் அடியிட்டு என்றார். இப்பொருட்கு உறுத்தவும் எனல் வேண்டிய எச்சவும்மை தொக்கதாகக் கொள்க.

இனி, ஊழ் தானே அவனை அவ்வாறு செலுத்த அடியிட்டுப் புகுதலும் என்னும் பொருளும் தோன்ற ஊழடியிட்டு என இரட்டுற இயம்பினர்.

சாந்தலர் உறுத்த என்றது காஞ்சனன் அவன் வரவினைச் சந்தனத்தின் நறுமணத்தாலறிந்தனன் எனற்குக் குறிப்பேதுவாய் நின்றது. ஈண்டு உதயகுமரன் தன் வருகையைப் பிறர் அறியாவண்ணம் செல்ல வேண்டும் என்னும் கருத்தினனாய்ச் சென்றானேனும் அவன் வரவினைக் காஞ்சனனுக்கு அறிவுறுத்தும் கருவியொன்றனை அவன்பாலே அவனது ஊழ்வினை கூட்டி வைத்திருந்தமையை எண்ணுங்கால்

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்   (குறள்-380)

எனும் திருக்குறளும் நம் மெண்ணத்தின்கண் முகிழ்ப்பதாம்

காஞ்சனன் உதயகுமரன் வாளால் எறிதல்

102-109: ஆங்கு............புகுதலும்

(இதன் பொருள்) ஆங்கு முன் இருந்த அலர்தார் விஞ்சையன் அம்பலத்தினூடே முன்னரே காயசண்டிகையின் செயலை ஒற்றியறிதற்குக் கரந்திருந்த மலர்ந்த மாலையையுடைய வித்தியாதரனாகிய காஞ்சனன் உதயகுமரனுடைய வரவு கண்டவுடன்; ஈங்கு இவன் இவள்பால் வந்தனன் என்றே இவ்வம்பலத்தின்கண் இம் மன்னவன் மகன் காயசண்டிகையின் பொருட்டே வந்துள்ளான் என்று ஐயமறத் துணிந்தவனாய்; இருந்தோன் வெம்சின அரவம் நஞ்சு எயிறு அரும்பத் தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்தென எழுந்து பெரும்பின் சென்று அவன் சுரும்பு அறை மணித்தோள் துணிய வீசி கரந்திருந்த அக் காஞ்சனன் வெவ்விய வெகுளியையுடைய நாகப்பாம்பு நச்சுப்பற்கள் நிமிரும்படி தன் பெரிய வெகுளியோடே சீறி எழுந்து தனது படத்தை விரித்தாற் போன்று பெரிதும் சினந்தெழுந்து உதயகுமரனை முதுகுப்புறமாகப் பெரிதும் அணுகிச் சென்று அவனுடைய வண்டுகள் முரலும் மலர் மாலையணிந்த அழகிய தோள் துணிபடும்படி தன் கதிர்வாளால் வெட்டி வீழ்த்திப் பின்னர்; காயசண்டிகையைக் கைக்கொண்டு அந்தரம் போகுவல் என்று அவள்பால் புகுதலும்-தன் மனைவியாகிய காயசண்டிகைக் கைப்பற்றிக் கொண்டு வான் வழியே என்னூர்க்குப் போவேன் என்று கருதியவனாய்க் காயசண்டிகை வடிவத்தோடிருந்த மணிமேகலையிருந்த இடத்தை நோக்கிப் போகுமளவிலே என்க.

(விளக்கம்) ஊழ்-முறைமை; ஊழ்வினையுமாம் விஞ்சையன்-விச்சாதரனாகிய காஞ்சனன். இவன்-இளவரசன் மகன் இவள்பால் வந்தனன் என்றது இடக்கரடக்கு வீசிவிட்டுப் பின்னர் என்க அவள்பாற் புகுதலும் என்புழி அவள் என்றது காயசண்டிகை வடிவிலிருந்த மணிமேகலையை

கந்திற்பாவை காஞ்சனனுக்குக் கூறுதல்

110-121: நெடுநிலை...............அடங்கினள்

(இதன் பொருள்) நெடுநிலைக்கந்தின் இடவயின் விளங்க கடவுள் எழுதிய பாவை ஆங்கு உரைக்கும்-நெடிதாக உயர்ந்து நிற்கும் தூணில் ஓரிடத்தே விளக்கமாகக் கடவுள் தன்மையோடு பண்டு மயனாற் பண்ணிய பாவையின்கண் நீங்காது நிற்கும் தெய்வம் அக் காஞ்சனனுக்குக் கூறுகிறது. விஞ்சைக் காஞ்சன அணுகல் அவள் மணிமேகலை............மறந்து உரு எய்தினள் அணுகல்- விச்சாதரனே! அவளை அணுகாதே கொள்! அங்கிருப்பவள் நின் மனைவியாகிய காயசண்டிகையல்லன், பின்னே யாரோ வெனின்; மணிமேகலை-மணிமேகலை என்னும் பிக்குணிகாண்! அவளை அணுகாதே கொள்! அவள் காயசண்டிகையின் உருவத்தைத் தான் கரந்துறையும் உருவமாக மேற்கொண்டிருக்கின்றனள் காண்!; காயசண்டிகை தன் கடும்பசி நீங்கி வானம் போவுழி-இனி நின் காதலியாகிய காயசண்டிகை தன் சாபம் நீங்குழி இவளிட்ட ஆருயிர் மருந்தாயுண்டு தான் உழந்த கடிய பசியாகிய ஆனைத் தீ நோய் நீங்கி வான் வழியே நும்மூர் நோக்கிப் போகும் பொழுது; வந்தது கேளாய்-அவளுக்கு வந்த துன்பச் செய்தியைக் கூறுவேன் கேட்பாயாக!; அந்தரஞ் செல்வோர் வான் வழியே செல்லுமியல்புடைய வானவரும் முனிவரும் பிறரும் யாவரேனும்; அந்தரி இருந்த விந்தமால் வரை மீமிசைப் போகார்-கொற்றவையாகிய இறைவி எழுந்தருளியிருக்கும் விந்தமலையின் உச்சிக்கு நேர் மேலே பறந்து செல்லார், அதனை வலங் கொண்டு விலகியே செல்வார்காண்!; போவார் உளர் எனின் இச் செய்தி யறியாமல் யாரேனும் அவ் விந்தத்தின் உச்சிக்கு மேலே பறந்து செல்வார் உளராய பொழுது; விந்தம் காக்கும் விந்தாகடிகை பொங்கிய சினத்தள்-அவ் விந்த மலையினைக் காத்திருக்கின்ற விந்தாகடிகை என்னும் தெய்வம் மிகுந்த சினங்கொண்டவளாய்; சாயையின் வாங்கித் தன் வயிற்று இடூஉம் அவருடைய நிழலையே பற்றியிழுத்து அவரைத் தன் வயிற்றினூடே போகட்டுக் கொள்ளும்; அம் மலைமிசைப் போய் அவள் வயிற்று அடங்கினள்-காயசண்டிகையும் தன் அறியாமை காரணமாக அவ் விந்த மலையுச்சிக்கு மேலாகச் சென்று அவ் விந்தா கடிகையின் வயிற்றிலே அடங்கி யொழிந்தனள் காண்! என்று அறிவித்து என்க.

(விளக்கம்) விளங்க என்றது எதிர்கால நிகழ்ச்சிகள் விளங்க வேண்டி என்றவாறுமாம். கடவுள்-கடவுட்டன்மையோடு; கடவுட்டச்சன் எழுதிய பாவை எனலுமாம். விந்தாகடிகை என்பது அந்தரியின் மற்றொரு பெயர் என்பாருமுளர். விந்தாகடிகை வாங்கி வயிற்றிடூஉம் என்க அவள்: விந்தாகடிகை அடக்கினள் என்றது அவ்வாற்றாலிறந்தாள் என்றவாறு.

காஞ்சனன் கருத்தழிந்து தன்னூர்க்குச்  செல்லுதல்

122-129: கைம்மை..........படர்ந்தென்

(இதன் பொருள்) காஞ்சன கைம்மை கொள்ளேல்-காஞ்சனனே! இவள் மனைவி யல்லளாகலின் நின் நெஞ்சத்தே சிறுமை கொள்ளாதொழிக; விஞ்சைக் காஞ்சன- விச்சாதரனாகிய காஞ்சனனே இன்னு மொன்று கூறுவல்; இது கேள்-இதனையும் கேட்பாயாக!; உதயகுமாரனை ஊழ்வினை வந்து இங்கு ஆருயிர் உண்டது ஆயினும்-உதயகுமரனாகிய இவ்வரசிளங்குமரனை அவன் முற்பிறப்பிலே செய்த பழவினையே செவ்வியுற்று வந்து இவ்விடத்திலே அவனது அரிய உயிரைத் பருகியது, அங்கனமிருப்பினும்; அறியாய் வெவ்வினை செய்தாய்-நீ தானும் நன்கு ஆராய்ந்தறியாமல் தீவினை யொன்றனை ஈண்டுச் செய்தொழிந்தமையின்; அவ்வினை நின்னையும் அகலாது ஆங்கு உறும்-அத்தீவினை தானும் நின்னை விட்டகலாமல் அவ்வாறே செவ்வி பெற்றுத் தன் பயனை ஊட்டுதற்கு நின்பால் விட்டகலாமல் அவ்வாறே செவ்வி பெற்றுத் தன் பயனை ஊட்டுதற்கு நின்பால் வந்துறாமற் போகாது; என்று இவை தெய்வம் கூறலும்-என்று அறிதற்கரிய இச் செய்திகளை அக் கந்திற்பாவை யிடத்துறையும் தெய்வமானது கூறா நின்றவளவிலே; கன்றிய நெஞ்சில் கடுவினை உருத்து எழ-முன்னம் உதயகுமரனைச் சினந்த தன் நெஞ்சினுள்ளே தான் அறியாமல் செய்த கொலையாகிய இக் கொடிய தீவினையானது சினந்தெழுந்து சுடா நிற்ப; விஞ்சையான் எழுந்து விண் விலங்கு படர்ந்து போயினன்- விச்சாதரனாகிய அக் காஞ்சனன் பெரிதும் வருந்தி மேலே உயர்ந்தெழுந்து வானினூடே குறுக்காக இயங்கித் தன்னூர் நோக்கிச் சென்றனன்; என்பதாம்.

(விளக்கம்) கைம்மை என்றது சிறுமை என்னும் பொருட்டாய்த் தனக்குரியளல்லாதாளைக் கைப்பற்றக் கருதிய தீயகருத்தின் மேனின்றது. நினக்கு அறிவருந்தும் சினம் காரணமாக ஆராயாது தீவினை செய்தனை ஆகலின் அது தன் பயனை ஊட்டாது கழியாது என்பதுபட அறியாய் வெவ்வினை செய்தாய் அவ்வினை நின்னையும் அகலாது ஆங்குறும் என்று கந்திற்பாவை அறிவுறுத்துகின்றது என்னை?

அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய்
தந்நோய்போற் போற்றாக் கடை (குறள்-315)

எனவும்,

இன்னா வெனத்தா னுணர்ந்தவை துன்னுமை
வேண்டும் பிறன்கட் செயல்    (குறள்-316)

எனவும் வரும் அறங்களை அறிதற்கியன்ற அறிவு பெற்றிருந்தும் அறியாயாய் வெவ்வினை செய்தொழிந்தாய் என்றிரங்கிக் கழறியபடியாம். இத் தீவினை சிந்தாயின்றிச் செய்வினை அல்லாமையை நுண்ணுணர்வாற் கண்டு கொள்க. என்னை? ஓருயிரைக் கொல்ல வேண்டும் என்பதே அவன்கருத்தாகலின்; ஆகவே சிந்தை இன்றெனிற் செய்வினை யாவதும் எய்தாது என்னும் அவர் சித்தாந்தத்தோடு இது முரணாமையு மறிக. கன்றிய-சினந்த. கடுவினை-கொலை. விலங்கு-குறுக்காக.

இனி, இக் காதையினை-கோட்டம் காப்புடைத்தாக; தாரோன் கேட்டு எழுந்து சென்று ஏறலும், கணவன் கையறவெய்தி வந்து இழிந்து தேர்ந்து திரிவோன் கண்டு பழமைக் கட்டுரை பல பாராட்டவும் நீங்கி சென்று காட்டி காணாயோ நீ இவையும் காணாய் தகை இன்றாயது. வேறாயின சுமந்தன ஒழுக்குவ வேறாயின தொல்லோர் வகுத்த வஞ்சம் தெரியாய் என மெல்லியல் உரைத்தலும் கொள்ளான் செல்லும் நோக்கும் காட்டி வழாஅள் ஆதலின் ஒழிந்தனளென ஒளித்தடங்கினன் விஞ்சையன் குமரனும் மணிமேகலையே ஆய் ஏந்தி மயக்குறுத்தனள் இருளொழியாள் வந்தறிகுவனென எழுந்து போகி யாமத்து எழுந்து கழிந்து நீங்கி அணைந்து புகுதலும் விஞ்சையன் எழுந்து சென்று வீசிப்புகுதலும் பாவை உரைக்கும் விஞ்சையன் எழுந்து படர்ந்து போயினன் என முடித்திடுக.

உதயகுமரனைக் காஞ்சனன் வாளால் எறிந்த காதை முற்றிற்று
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 09:37:03 AM
21. கந்திற்பாவை வருவதுரைத்த காதை

(இருபத்தொன்றாவது-மணிமேகலை உதயகுமரன் மடிந்தது கண்டு உறுதுயரெய்த நெடுநிலைக் கந்தின் நின்ற பாவை வருவதுரைத்து அவள் மயக்கொழித்த பாட்டு)

அஃதாவது: விச்சாதரன் உதயகுமரன் பின் சென்று மணித்தோள் துணிய வாளால் வீசியதனானும் மணிமேகலையை அணுகச் சென்ற காஞ்சனனை மறித்து அவனுக்குக் கந்திற்பாவை அறிவுறுத்திய சொல்லானும் உண்டான அரவத்தாலே சம்பாபதி கோயிலினூடே துயின்றிருந்த மணிமேகலை விழித்துக் கந்திற்பாவை கூற்றினாலே உதயகுமரன் கொலையுண்டமை யுணர்ந்து அவன்பால் பற்பல பிறப்புகளிலே அடிப்பட்டு வந்த பற்றுண்மையாலே அவ்வுதயகுமரன் இறந்துபட்டமை பொறாமல் பற்பல கூறி அரற்றி அவன் உடலைத் தழுவி அழச்செல் வாளை இடையே கந்தற்பாவை தடுத்து இறந்தகாலச் செய்திகள் பற்பல கூறி உதயகுமரன் கொலையுண்டமைக்குக் காரணமான பழவினை இன்னதென இயம்பித் தேற்றி இனி, எதிர்காலத்தேயும் அவட்கு வர விருக்கின்ற ஏது நிகழ்ச்சியனைத்தையும் இயம்பி இனிது ஆற்றுவித்த செய்தியைக் கூறும் செய்யுள் என்றவாறு.

இனி, இதன்கண்-கந்துடை நெடுநிலை கடவுட் பாவை கூறும் கூற்றுக்கள் முழுவதுமே பயில்வோர்க்கு மெய்யறிவு கொளுத்தும் பண்புமிக்கன; ஆற்றவும் இனிமையும் மிக்கனவாயிருத்தலுணர்ந்து மகிழற்பாற்று. இக் காதை அவலச் சுவை பொதுளிதொரு காதையுமாகும்.

மணிமேகலை பிறப்புப் பலவற்றிற் றொடர்ந்து தனக்குக் கணவனாகவே வந்த உதயகுமரன்பால் பற்று மிக்கவளாகி அவனையும் மெய்யறிவு கொளுத்தி அவனுடைய பிறவிப்பிணியையும் அகற்றி விடப் பெரிதும் விரும்பி அவனுக்கு அறங்கூற முயன்றாவாகவும் தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று கருதி அவனைக் கொன்றொழித்ததாகவும் சொல்லி அழுதரற்று மொழிகள் அவலச்சுவைக்கு எடுத்துக் காட்டத் தகுவனவாக அமைந்திருக்கின்றன. இக் காதை பயில்பவர்க்கும் மெய்யுணர்வு தோற்றுவிக்கும் என்பதில் ஐயமில்லை.

கடவுள் எழுதிய நெடு நிலைக் கந்தின்
குடவயின் அமைத்த நெடு நிலை வாயில்
முதியாள் கோட்டத்து அகவயின் கிடந்த
மது மலர்க் குழலி மயங்கினள் எழுந்து
விஞ்சையன் செய்தியும் வென் வேல் வேந்தன்
மைந்தற்கு உற்றதும் மன்றப் பொதியில்
கந்து உடை நெடு நிலைக் கடவுள் பாவை
அங்கு அவற்கு உரைத்த அற்புதக் கிளவியும்
கேட்டனள் எழுந்து கெடுக இவ் உரு என
தோட்டு அலர்க் குழலி உள்வரி நீங்கித்  21-010

திட்டிவிடம் உண நின் உயிர் போம் நாள்
கட்டு அழல் ஈமத்து என் உயிர் சுட்டேன்
உவவன மருங்கில் நின்பால் உள்ளம்
தவிர்விலேன் ஆதலின் தலைமகள் தோன்றி
மணிபல்லவத்திடை என்னை ஆங்கு உய்த்து
பிணிப்பு அறு மாதவன் பீடிகை காட்டி
என் பிறப்பு உணர்ந்த என்முன் தோன்றி
உன் பிறப்பு எல்லாம் ஒழிவு இன்று உரைத்தலின்
பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும்
அறம் தரு சால்பும் மறம் தரு துன்பமும்  21-020

யான் நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்கக்
காயசண்டிகை வடிவு ஆனேன் காதல!
வை வாள் விஞ்சையன் மயக்கு உறு வெகுளியின்
வெவ் வினை உருப்ப விளிந்தனையோ! என
விழுமக் கிளவியின் வெய்து உயிர்த்துப் புலம்பி
அழுதனள் ஏங்கி அயாஉயிர்த்து எழுதலும்
செல்லல் செல்லல்! சேயரி நெடுங்கண்!
அல்லி அம் தாரோன் தன்பால் செல்லல்!
நினக்கு இவன் மகனாத் தோன்றியதூஉம்
மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம்  21-030

பண்டும் பண்டும் பல் பிறப்பு உளவால்
கண்ட பிறவியே அல்ல காரிகை
தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம்
விடுமாறு முயல்வோய்! விழுமம் கொள்ளேல்!
என்று இவை சொல்லி, இருந் தெய்வம் உரைத்தலும்
பொன் திகழ் மேனிப் பூங்கொடி பொருந்திப்
பொய்யா நாவொடு இப் பொதியிலில் பொருந்திய
தெய்வம் நீயோ? திருவடி தொழுதேன்
விட்ட பிறப்பின் வெய்து உயிர்த்து ஈங்கு இவன்
திட்டிவிடம் உணச் செல் உயிர் போயதும்  21-040

நெஞ்சு நடுங்கி நெடுந் துயர் கூர யான்
விஞ்சையன் வாளின் இவன் விளிந்ததூஉம்
அறிதலும் அறிதியோ? அறிந்தனை ஆயின்
பெறுவேன் தில்ல நின் பேர் அருள் ஈங்கு! என
ஐ அரி நெடுங் கண் ஆய் இழை! கேள் எனத்
தெய்வக் கிளவியில் தெய்வம் கூறும்
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை
மாயம் இல் மாதவன் வரு பொருள் உரைத்து
மருள் உடை மாக்கள் மன மாசு கழூஉம்
பிரமதருமனைப் பேணினிராகி   21-050

அடிசில் சிறப்பு யாம் அடிகளுக்கு ஆக்குதல்
விடியல் வேலை வேண்டினம் என்றலும்
மாலை நீங்க மனம் மகிழ்வு எய்தி
காலை தோன்ற வேலையின் வரூஉ
நடைத் திறத்து இழுக்கி நல் அடி தளர்ந்து
மடைக் கலம் சிதைய வீழ்ந்த மடையனை
சீலம் நீங்காச் செய் தவத்தோர்க்கு
வேலை பிழைத்த வெகுளி தோன்றத்
தோளும் தலையும் துணிந்து வேறாக
வாளின் தப்பிய வல் வினை அன்றே  21-060

விரா மலர்க் கூந்தல் மெல் இயல் நின்னோடு
இராகுலன் தன்னை இட்டு அகலாதது
தலைவன் காக்கும் தம் பொருட்டு ஆகிய
அவல வெவ் வினை என்போர் அறியார்
அறம் செய் காதல் அன்பினின் ஆயினும்
மறம் செய்துளது எனின் வல் வினை ஒழியாது
ஆங்கு அவ் வினை வந்து அணுகும்காலைத்
தீங்கு உறும் உயிரே செய் வினை மருங்கின்
மீண்டுவரு பிறப்பின் மீளினும் மீளும்
ஆங்கு அவ் வினை காண் ஆய் இழை கணவனை  21-070

ஈங்கு வந்து இவ் இடர் செய்து ஒழிந்தது
இன்னும் கேளாய் இளங் கொடி நல்லாய்!
மன்னவன் மகற்கு வருந்து துயர் எய்தி
மாதவர் உணர்த்திய வாய்மொழி கேட்டுக்
காவலன் நின்னையும் காவல்செய்து ஆங்கு இடும்
இடு சிறை நீக்கி இராசமாதேவி
கூட வைக்கும் கொட்பினள் ஆகி
மாதவி மாதவன் மலர் அடி வணங்கித்
தீது கூற அவள் தன்னொடும் சேர்ந்து
மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டு  21-080

காதலி நின்னையும் காவல் நீக்குவள்
அரைசு ஆள் செல்வத்து ஆபுத்திரன்பால்
புரையோர்ப் பேணிப் போகலும் போகுவை
போனால் அவனொடும் பொருளுரை பொருந்தி
மாநீர் வங்கத்து அவனொடும் எழுந்து
மாயம் இல் செய்தி மணிபல்லவம் எனும்
தீவகத்து இன்னும் சேறலும் உண்டால்
தீவதிலகையின் தன் திறம் கேட்டு
சாவக மன்னன் தன் நாடு அடைந்த பின்
ஆங்கு அத் தீவம் விட்டு அருந் தவன் வடிவு ஆய்  21-090

பூங் கொடி வஞ்சி மா நகர் புகுவை
ஆங்கு அந் நகரத்து அறி பொருள் வினாவும்
ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால்
இறைவன் எம் கோன் எவ் உயிர் அனைத்தும்
முறைமையின் படைத்த முதல்வன் என்போர்களும்
தன் உரு இல்லோன் பிற உருப் படைப்போன்
அன்னோன் இறைவன் ஆகும் என்போர்களும்
துன்ப நோன்பு இத் தொடர்ப்பாடு அறுத்து ஆங்கு
இன்ப உலகு உச்சி இருத்தும் என்போர்களும்
பூத விகாரப் புணர்ப்பு என்போர்களும்  21-100

பல் வேறு சமயப் படிற்று உரை எல்லாம்
அல்லி அம் கோதை! கேட்குறும் அந் நாள்
இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார்
அறனோடு என்னை? என்று அறைந்தோன் தன்னைப்
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த
நறு மலர்க் கோதை! எள்ளினை நகுதி
எள்ளினை போலும் இவ் உரை கேட்டு! இங்கு
ஒள்ளியது உரை! என உன் பிறப்பு உணர்த்துவை
ஆங்கு நிற்கொணர்ந்த அருந் தெய்வம் மயக்க
காம்பு அன தோளி! கனா மயக்கு உற்றனை  21-110

என்று அவன் உரைக்கும் இளங் கொடி நல்லாய்!
அன்று என்று அவன் முன் அயர்ந்து ஒழிவாயலை
தீவினை உறுதலும் செத்தோர் பிறத்தலும்
வாயே என்று மயக்கு ஒழி மடவாய்
வழு அறு மரனும் மண்ணும் கல்லும்
எழுதிய பாவையும் பேசா என்பது
அறிதலும் அறிதியோ? அறியாய்கொல்லோ?
அறியாய் ஆயின் ஆங்கு அது கேளாய்!
முடித்து வரு சிறப்பின் மூதூர் யாங்கணும்
கொடித் தேர் வீதியும் தேவர் கோட்டமும்  21-120

முது மர இடங்களும் முது நீர்த் துறைகளும்
பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடி
காப்பு உடை மா நகர்க் காவலும் கண்ணி
யாப்பு உடைத்தாக அறிந்தோர் வலித்து
மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும்
கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க
ஆங்கு அத் தெய்வதம் அவ் இடம் நீங்கா
ஊன் கண்ணினார்கட்கு உற்றதை உரைக்கும்
என் திறம் கேட்டியோ இளங் கொடி நல்லாய்!
மன் பெருந் தெய்வ கணங்களின் உள்ளேன்!  21-130

துவதிகன் என்பேன் தொன்று முதிர் கந்தின்
மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின்
நீங்கேன் யான் என் நிலை அது கேளாய்
மாந்தர் அறிவது வானவர் அறியார்
ஓவியச்சேனன் என் உறு துணைத் தோழன்
ஆவதை இந் நகர்க்கு ஆர் உரைத்தனரோ?
அவனுடன் யான் சென்று ஆடு இடம் எல்லாம்
உடன் உறைந்தார் போல் ஒழியாது எழுதி
பூவும் புகையும் பொருந்துவ கொணர்ந்து
நா நனி வருந்த என் நலம் பாராட்டலின்  21-140

மணிமேகலை! யான் வரு பொருள் எல்லாம்
துணிவுடன் உரைத்தேன் என் சொல் தேறு என
தேறேன் அல்லேன் தெய்வக் கிளவிகள்
ஈறு கடைபோக எனக்கு அருள்? என்றலும்
துவதிகன் உரைக்கும் சொல்லலும் சொல்லுவேன்
வருவது கேளாய் மடக் கொடி நல்லாய்!
மன் உயிர் நீங்க மழை வளம் கரந்து
பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய
ஆங்கு அது கேட்டே ஆர் உயிர் மருந்தாய்
ஈங்கு இம் முதியாள் இடவயின் வைத்த  21-150

தெய்வப் பாத்திரம் செவ்விதின் வாங்கித்
தையல்! நிற்பயந்தோர் தம்மொடு போகி
அறவணன் தானும் ஆங்கு உளன் ஆதலின்
செறி தொடி! காஞ்சி மா நகர் சேர்குவை
அறவணன் அருளால் ஆய் தொடி! அவ் ஊர்ப்
பிற வணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி
வறன் ஓடு உலகில் மழைவளம் தரூஉம்
அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவை
ஆய் தொடிக்கு அவ் ஊர் அறனொடு தோன்றும்
ஏது நிகழ்ச்சி யாவும் பல உள   21-160

பிற அறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம்
அறவணன் தனக்கு நீ உரைத்த அந் நாள்
தவமும் தருமமும் சார்பின் தோற்றமும்
பவம் அறு மார்க்கமும் பான்மையின் உரைத்து
மற இருள் இரிய மன் உயிர் ஏம் உற
அற வெயில் விரித்து ஆங்கு அளப்பு இல் இருத்தியொடு
புத்த ஞாயிறு தோன்றும்காறும்
செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா
இத் தலம் நீங்கேன் இளங்கொடி! யானும்
தாயரும் நீயும் தவறு இன்றுஆக   21-170

வாய்வதாக நின் மனப்பாட்டு அறம்! என
ஆங்கு அவன் உரைத்தலும் அவன் மொழி பிழையாய்
பாங்கு இயல் நல் அறம் பலவும் செய்த பின்
கச்சி முற்றத்து நின் உயிர் கடைகொள
உத்தர மகதத்து உறு பிறப்பு எல்லாம்
ஆண் பிறப்பு ஆகி அருளறம் ஒழியாய்
மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து
பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்குத்
தலைச்சாவகன் ஆய் சார்பு அறுத்து உய்தி
இன்னும் கேட்டியோ நல் நுதல் மடந்தை!  21-180

ஊங்கண் ஓங்கிய உரவோன் தன்னை
வாங்கு திரை எடுத்த மணிமேகலா தெய்வம்
சாதுசக்கரற்கு ஆர் அமுது ஈத்தோய்!
ஈது நின் பிறப்பு என்பது தௌிந்தே
உவவன மருங்கில் நின்பால் தோன்றி
மணிபல்லவத்திடைக் கொணர்ந்தது கேள் என
துவதிகன் உரைத்தலும் துயர்க் கடல் நீங்கி
அவதி அறிந்த அணி இழை நல்லாள்
வலை ஒழி மஞ்ஞையின் மன மயக்கு ஒழிதலும்
உலகு துயில் எழுப்பினன் மலர் கதிரோன் என்  21-190

உரை

மணிமேகலை துயில் காயசண்டிகை வடிவத்தைக் களைந்து தன்னுருக் கோடல்

1-10: கடவுள்.....நீங்கி

(இதன் பொருள்) கடவுள் எழுதிய நெடுநிலைக்கந்தின் குடவயின் அமைத்த நெடுநிலை வாயில் முதியாள் கோட்டத்து-கடவுட்டன்மையோடு இயற்றப்பட்ட பாவையையுடைய நெடிய நிலையினையுடைய தூணுக்கு மேற்றிசையிலே அமைக்கப்பட்டிருந்த குச்சரக் குடிஞை யென்னும் நெடிய நிலையையுடைய வாயிலமைந்த சம்பாபதியின் திருக்கோயிலின்; அகவயின் கிடந்த மதுமலர்க் குழலி மயங்கிளன் எழுந்து-உள்ளிடத்தே துயில்கொண் டிருந்த மணிமேகலையானவள் அம்பலத்தே யெழுந்த அரவம் கேட்டுத் துயில் மயக்கத்தோடு எழுந்து; (கந்திற் பாவையின் கடவுள் மொழியினாலே) விஞ்சையன் செய்தியும் வென்வேல் வேந்தன் மைந்தற்கு உற்றதும்- விச்சாதரன் உதயணனை வாளால் எறிந்து கொன்ற செய்தியையும் ;மன்றப் பொதியில் கந்து உடை நெடுநிலை கடவுள் பாவை ஆங்கு அவற்கு உரைத்த அற்புதக் கிளவியும்-அம்பலமாகிய அவ்வுலக வறவியின் தூணை இடமாகக் கொண்டு நெடிது நிலைபெற்றிருக்கின்ற தெய்வத் தன்மையுடைய அக் கந்திற் பாவையானது அப்பொது அவ் விச்சாதரனுக்குக் கூறிய வியத்தகு மொழிகளையும்; கேட்டனன் எழுந்து-கேட்டுத் துயில் மயக்கம் நீங்கி நன்கு விழிப்புற்றவளாய் அவ்விடத்தினின்றும் எழுந்து; தோட்டு அலர்குழலி இவ்வுரு கெடுக என உள்வரி நீங்கி-அம் மணிமேகலை இக் காயசண்டிகையின் வடிவம் என்னை விட்டொழிவதாக என்று அவ் வேற்றுருவத்தினின்று விலகித் தன் வடிவத்தோடே நின்று அரற்றுபவள்;

(விளக்கம்) கடவுள் என்றது-துவதிகனை. குடவயின்-மேற்றிசையின்கண். முதியாள் கோட்டம்-சம்பாபதி கோயில். கிடந்த என்றது துயில்கொண்டிருந்த என்றவாறு. மதுமலர்க்குழலி: மணிமேகலை மயங்கினள்: முற்றெச்சம். விஞ்சையன் செய்தி-உதயகுமரனை வாளால் எறிந்தமை வேந்தன் மைந்தன்: உதயகுமரன் உற்றது என்றது. கொலை யுண்டமையை அற்புதக் கிளவி-வியத்தகு மொழி; அஃதாவது, காயசண்டிகையின் நிலை இன்னது எனக் கூறியதாம். இவ்வுரு என்றது, தான் மேற்கொண்டிருந்த காயசண்டிகை வடிவத்தை; அவ்வடிவமே உதயகுமரன் கொலையுண்டமைக்குக் காரணம் என்னும் கருத்தால் கெடுக! என்றாள். தோடலர்-தோட்டலர் என விகாரம் எய்தியது. குழலி: மணிமேகலை. உள்வரி-வேடம் மேல்வருவன மணிமேகலையின் அரற்றல், ஆதலின் அரற்றுபவள் என எழுவாய் பெய்துரைத்துக் கொள்க.

மணிமேகலையின் அரற்றுரை

11-22: திட்டி..........காதல

(இதன் பொருள்) (22) காதல-என் ஆருயிர்க்காதலனே!; திட்டிவிடம் உண நின் உயிர்போம் நாள் கட்டழல் ஈமத்து என் உயிர் சுட்டேன்-அந்தோ! போய பிறப்பில் திட்டிவிடம் என்னும் பாம்பினது நஞ்சு பருகுதலாலே உன்னுடைய உயிர் போன நாளிலே அடிச்சியாகிய யான் மிக்க நெருப்பினை உடைய சுடுகாட்டின்கண் தீப்பாய்ந்து என் உயிரை யானே சுட்டுப் போக்கினேன், இப் பழந் தொடர்பு காரணமாக; உவவன மருங்கின் நின்பால் உள்ளம் தவிர்விலேன் ஆதலின்-மன்னவன் மகனாக இப்பிறப்பில் பிறந்து வந்த நின்னை யான் உவவனம் என்னும் பூம்பொழிலின்கண் முதன் முதலாகக் கண்டபொழுதே நின்பால் வந்த என் நெஞ்சத்தைத் தடுத்து நிறுத்த இயலாதேன் ஆயினேன், என் மன நிலை இங்ஙனம் இருத்தலின்; தலை மகள் தோன்றி என்னை ஆங்கு மணிபல்லவத்திடை உய்த்து என்பால் அருள் மிக்க எங்குல முதல்வியாகிய மணிமேகலா தெய்வம் அம் மலர்வனத்தினில் வந்து என்னைத் துயிலும்பொழுது அவ்விடத்தினின்றும் எடுத்துப்போய் மணிபல்லவத் தீவின் கண் வைத்தும்; பிணிப்பு அறு மாதவன் பீடிகை காட்டி என் பிறப்பு உணர்ந்த என் முன் தோன்றி-பற்றறுதற்குக் காரணமான பெரிய தவத்தை உடைய புத்தபெருமானுடைய பீடிகையைக் காணச் செய்து அவ்வாற்றால் என்னுடைய பழைய பிறப்பை உணர்ந்துகொண்டு நின்ற என் முன்னே எழுந்தருளி அத் தெய்வமானது; உன் பிறப்பு எல்லாம் ஒழிடு இன்று உரைத்தலின்-அப் பிறப்பிலே என் காதலனாகிய உன்னுடைய முற்பிறப்பும் இப்பிறப்பும் ஆகிய பிறப்புகளையும் இவற்றிற்கியன்ற காரணங்களையும் சிறிதும் ஒழிவின்றி அறிவித்தமையாலே; யான்-நின் காதலி ஆகிய யான் நின்பால் அன்பு மிகுந்து; பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும் அறந்தரு சால்பும் மறந்தரு துன்பமும்-பிறந்தவர்கள் இறந்து போதலும் இறந்தவர் மீண்டும் பிறந்தலும் இங்ஙனம் பிறந்தும் இறந்தும் சுழன்று வருகின்ற உயிர்களுக்கு அவை செய்கின்ற கல்வினைகள் கொணர்ந்து தருகின்ற மன அமைத்திக்குக் காரணமாகிய இன்பமும் அவை செய்த தீவினைகள் கொணர்ந்து தருகின்ற அமைதி அற்ற துன்பமும் ஆகிய இவற்றின் இயல்புகளையும்; நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்கக் காய சண்டிகை வடிவானேன் உனக்கு அறிவித்து உனது பிறவித் துயரங்களுக்கெல்லாம் காரணமாய் இருக்கின்ற இருள்சேர் இருவினையும் ஒழித்து நின்னை உய்விக்க கருதியன்றோ இக் காய சண்டிகை வடிவத்தை யான் மேற்கொள்ளலாயினேன் அந்தோ! அம்முயற்சியே நினது சாவிற்குக் காரணமாய் முடிந்ததே என்றாள் என்க.

(விளக்கம்) திட்டிவிடம்-கண்ணால் நோக்கியே கொல்லும் ஒருவகைப் பாம்பு. கட்டழல்-மிக்க நெருப்பு. என் உயிர் சுட்டேன் என்றது -தீப்பாய்ந் திறந்தேன் என்றவனாறு. நின்பால் உள்ளம் தவிர்விலேன் என்றது-அடிப்பட்டு வருகின்ற அன்புத் தொடர்பு காரணமாக மறு பிறப்பெய்தி வந்த நின்பால் எய்திய என் நெஞ்சத்தைத் தவிர்க்க இயலாதேன் ஆயினேன் என்பதுபட நின்றது. தலைமகள் என்றது- மணிமேகலா தெய்வத்தை; குலதெய்வமாதலின் தலைமகள் என்றாள். மாதவன்: புத்த பெருமான். காட்டினமையால் என் பிறப்பு உணர்ந்து நின்ற என்க. உன் என்றது-உதயகுமரனை யான் உனக்கு இடர்களைய எண்ணிக் காயசண்டிகை வடிவானேன். அதுவே உனக்குச் சாத்துன்பத்தை விளைவித்துவிட்டது என்று பரிந்துகூறியவாறு. ஈண்டு,

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்   (380)

எனவரும் திருக்குறள் நினைக்கத்தகும்.

இதுவுமது

23-26: வைவாள்...........எழுதலும்

(இதன் பொருள்) வைவாள் விஞ்சையன் மயக்குறு வெகுளியின் வெவ்வினை உருப்ப விளிந்தனையோ- கூரிய வாளையுடைய விச்சாதரனுடைய மயக்கம் காரணமாக மிக்க சினத்தைக் கருவியாகக் கொண்டு நின்று பழவினை சினந்து வந்து ஊட்டுதலாலே இறந்தொழிந்தாயோ; என விழுமக் கிளவியின் வெந்துயிர்த்துப் புலம்பி-என்று சொல்லி அழுகின்ற துன்ப மொழிகளோடே வெய்தாக மூச்செறிந்து தனிமையுற்று; அழுதனள் ஏங்கி அயாவுயிர்த்து எழுதலும்-நிலத்தில் வீழ்ந்து அழுது ஏங்கி நெடிடுயிர்ப்புக் கொண்டு உதயகுமரன் உடல் கிடக்கும் இடத்திற்குப் போக எண்ணிச் செல்லுமளவிலே; என்க.

(விளக்கம்) வை-கூர்மை. மயக்கு-அறியாமை. வெவ்வினை-கொடிய தீவினை உருப்ப என்றது. உருத்து வந்தூட்ட என்றவாறு, விழுமக்கிளவி-துன்பத்தாற் பிறந்த மொழி. வெய்துயிர்த்தல்-வெய்தாக நெடுமூச் செறிதல் புலம்பி-தனிமையுற்று. அழுதனள் :முற்றெச்சம் அயா உயிர்த்தல்-நெட்டுயிர்ப்புக் கொள்ளல்.

மணிமேகலையைக் கந்திற்பாவை தடுத்தல்

27-35: செல்லல்..............உரைத்தலும்

(இதன் பொருள்) இருந்தெய்வம் செல்லல் செல்லல்சே அரிநெடுங்கண் அல்லியம் தாரோன் தன்பால் செல்லல்-தூணகத் துறைகின்ற பெரிய தெய்வமானது போகாதே போகாதே சிவந்த வரிகள் படர்ந்த நெடிய கண்ணையுடைய மணிமேகலாய் அகவிதழ்களால் புனைந்த மலர்மாலை அணிந்த உதயகுமரன்பால் போகாதே கொள்; நினக்கு இவன் மகனாத் தோன்றியதூஉம் மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம்-உனக்கு இவ்வுதயகுமரன் கணவனாகப் பிறந்ததுவும் நின்னுடைய மனதிற்கு இனியவனாகிய இவனுக்கு நீ மனைவியாகப் பிறந்ததுவும்; கண்ட பிறவியே அல்ல-நீ உணர்ந்திருக்கின்ற உங்களுடைய முற்பிறப்பு மட்டுமே அல்ல; பண்டும் பண்டும் பல்பிறப்பு உளவால்-அதற்கு முன் நிகழ்ந்த பழங்காலத்தும் பன்முறை அங்ஙனமே கணவன் மனைவியாகப் பிறந்த பிறப்புகள் பற்பல உள்ளன; காரிகை-நங்கையே கேள்; தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம் விடுமாறு முயல்வோய்-நீ இப்பொழுது மாறி மாறி வருகின்ற பிறவிக் கடலின்கண் ஆழ்வதற்குக் காரணமான அப் பிறப்பினையே ஒழித்து விடுகின்ற நல்நெறியிலே செல்லுகின்ற முயற்சியை உடையை அல்லையோ ஆதலால்; விழுமங் கொள்ளேல் என்று இவை சொல்லி உரைத்தலும்-துன்புறாதே கொள் என்று இவ்வரிய செய்திகளைச் சொல்லித் தடுத்துக் கூறுதலும்; என்க.

(விளக்கம்) செல்லல்: எதிர்மறை வியங்கோள்; சேயரி நெடுங்கண்: அன்மொழித் தொகை. அல்லி-அகவிதழ். தாரோன் என்றது உதயகுமரனை. உதயகுமரன் உடம்பின் அருகே செல்லற்க என்று தடுத்தப்படியாம் மகன்-கணவன். மகள்-மனைவி. கண்ட பிறவி-புத்தபீடிகையின் தெய்வத்தன்மையாலும் மணிமேகலா தெய்வத்தின் திருவருளாலும் நீ உணர்ந்து கொண்டிருக்கின்ற உங்கள் முற்பிறப்பு என்றவாறு; தெய்வ மாதலின் இந்நிகழ்ச்சியை அறிந்து கூறிற்று என்க. காரிகை: விளி தடுமாறுதல்-மாறி மாறி மேலும் கீழுமாய் வருதல் பிறவிக் கடலில் என்க. தோற்றம் -பிறப்பு. தோற்றம் விடுமாறு முயல்வோய் விழுமம் கொள்ளேல் என்றது, போகாதே  போகாதே என்று தான் வற்புறுத்துத் தடுத்தற்குக் காரணம் இதுவென உடம்படுத்துக் கூறிய படியாம் என்னை?

மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை   (குறள்-345)

என்பது பற்றி பழவினைத் தொடர்புடைய அம் மன்னன் மகனை நீ மனத்தாலும் நினைதல் கூடாது எனவும், அவன் பொருட்டு நீ இவ்வாறு வருந்துதலும் கூடாது எனவும் அறிவுரை கூறியபடியாம். அறிதற்கரிய செய்திகளை எடுத்துக் கூறி அத் தெய்வம் உணர்த்திற்றென்பார் இவை சொல்லி உரைத்தலும் என வேண்டாது கூறி வேண்டியது முடித்தார்.

மணிமேகலை கந்திற்பாவையைத் தன் நன்றியறிவு தோன்றக் கைதொழுதல்

36-44: பொன்........ஈங்கென

(இதன் பொருள்) பொன்திகழ்மேனி பூங்கொடி பொருந்தி-பொன் போல விளங்குகின்ற திருமேனியையுடைய பூங்கொடி போல் பவளாகிய மணிமேகலை தானும் அத் தெய்வத்தின் மொழிக்குடன் பட்டு நின்று கூறுபவள்; பொய்யா நாவொடு இப் பொதியிலில் பொருந்திய தெய்வம் நீயோ-வியப்புற்றுப் பொய்த்தல் இல்லாத மொழி பேசுகின்ற நாவினோடு இவ் வம்பலத்தின்கண் தூணில் உறைகின்ற தெய்வம் ஒன்றுண்டு என்று அறிந்தோரால் கூறப் படுகின்ற கந்திற்பாவை என்னும் தெய்வம் நீ தானோ; திருஅடி தொழுதேன்-அங்ஙனமாயின் நன்றுகாண் அடியேன் நின்னுடைய திருவடிகளை நன்றியறிவுடன் கைகூப்பித் தொழுகின்றேன்; விட்ட பிறப்பின் ஈங்கு இவன் செல்உயிர் திட்டிவிடம் உண் யான் வெய்து உயிர்த்து நெஞ்சு நடுங்கி நெடுந்துயர்கூர போயது-கழிந்த பிறப்பின்கண் இங்கு வெட்டுண்டிறந்த மன்னன் மகன் உயிரைத் திட்டிவிடம் என்னும் பாம்பு கண்ணால் நோக்கிப் பருகுதலாலே உடலை விட்டுப் போகின்ற உயிரானது என்னுடைய உள்ளம் நடுங்கிப் பெரிய துயர் மிகுந்து யான் வருந்தும்படி போயதற்கும்; விஞ்சையன் வாளின் விளிந்ததுஉம் இப்பிறப்பின்கண் விச்சாதரனுடைய வாளினாலே இவன் வெட்டுண்டு இறந்தமைக்கும் காரணங்களையும்; அறிதலும் அறிதியோ அறிந்தனையாயின் நின் பேரருள் ஈங்கு பெறுவேன் தில்ல என அறிந்திருப்பாய் அல்லையோ அவற்றை அறிந்துள்ளாயாயின் நின்னுடைய பெரிய அருளால் இப்பொழுது அறிந்து கொள்ளப் பெறுவேன்: இஃது என் விருப்பமாம் என்று சொல்லிக் கை கூப்பி வணங்கா நிற்ப; என்க.

(விளக்கம்) விட்ட பிறப்பு-முற்பிறப்பு. இவன்-இம் மன்னன் மகன்-முற்பிறப்பில் இவனுயிர் திட்டி விடத்தால் போயதற்கும் இப்பிறப்பில் இவன் வாளால் இறந்ததற்கும் உரிய காரணங்களையும் நீ அறிந்திருத்தல் கூடும் அறிந்ததுண்டாயின் அவற்றையும் எனக்குக் கூறியருளுக, இஃது என் வேண்டுகோள் என்று கூறியபடியாம். தில்ல: விழைவின்கண் வந்தது; உரிச்சொல்.

கந்திற்பாவை மணிமேகலைக்கு காரணம் அறிவுறுத்தல்

45-52: ஐஅரி.............என்றலும்

(இதன் பொருள்) ஐ அரி நெடுங்கண் ஆயிழை கேள் என தெய்வக் கிளவியில் தெய்வம் கூறும்-அழகிய செவ்வரியோடிய நெடிய கண்ணையுடைய ஆயிழையே கூறுவல் கேட்பாயாக என்று சொல்லித் தனக்குரிய தெய்வ மொழியினாலே அக் கந்திற்பாவை கூறுகின்றது:-காயங்கரை எனும் பேரியாற்று அரைகரை மாயம் இல் மாதவன்-முற்பிறப்பிலே நீயும் நின் கணவனாகிய இராகுலனும் காயங்கரை என்னும் பெரிய யாற்றினது நீரடை கரையின் கண் எழுந்தருளி இருந்து பொய்மை சிறிதும் இல்லாத பெரிய தவத்தை உடைய புத்தர்; வருபொருள் உரைத்து மருள் உடை மாக்கள் மனமாசு கழூஉம்-உலகில் வந்து பிறந்தருளி அறங்கூறும் காலத்தையும் அறிவித்து அறியாமையுடைய மாந்தரின் மனத்தின்கண் உள்ள அழுக்ககற்றுபவனும் ஆகிய; பரமதருமனை பேணினிர் ஆகி-பிரமதருமன் என்னும் பெயரையுடைய துறவியைக் கண்டு அவனை நன்கு மதித்துப் போற்றுபவராய்; யாம் விடியல்வேலை அடிகளுக்கு அடிசில் சிறப்பு ஆக்குதல் வேண்டும் என்றலும்-யாங்கள் நாளை விடியற் காலத்தே அடிகளாருக்கு அடிசிலால் விருந்து செய்தற்கு விரும்பினேம் என்று நீவிர் இருவிரும் நுங்கள் மடைத்தொழிலாளனுக்குக் கூறாநிற்க; என்க.

(விளக்கம்) மாதவன் வருபொருள் என்றது-புத்தபெருமான் வந்து அவதரிக்கும் செய்தியை என்றவாறு; உலகத்தில் தீவினை மிகும் காலம் தோறும் புத்தபெருமான் ஈண்டு வந்து பிறந்தருளித் தமது அருள் அறத்தை நிலை நிறுத்துவர் என்பது பவுத்த நூற்றுணிபு. இதனை  ஈரெண்ணூற்றொ டீரெட்டாண்டிற் பேரறிவாளன் றோன்றும் எனவும்(12:77-8) புலவன் முழுதும் பொய்யின் றுணர்ந்தோ னுலகுயக் கோடற் கொருவன் றோன்று மந்தா ளவனறங் கோட்டோரல்ல தின்னாப் பிறவி யிழுக்குந ரில்லை எனவும்(25:45-8) கரவரும் பெருமைக் கபிலையும் பதியி ளளப்பரும் பாரமிதை யளவன்ற நிறைத்துத் துளக்கமில் புத்த ஞாயிறு தோன்றி(26-44-6) எனவும் இந்நூலுள்ளே பலவிடத்தும் வருதலாலும் காண்க. பிரமதருமன் ஒரு பவுத்தத் துறவி. இவர் வரலாற்றினை 9 ஆம் காதையில் விளக்கமாகக் காணலாம். ஆக்குதல் வேண்டினம் என்று மடைத்தொழிலாளனுக்கு அறிவிக்க என்க.

உதயகுமரன் வாளால் எறியுண்டமைக்குக் காரணமான தீவினை

53-62: மாலை..................அகலாதது

(இதன் பொருள்) மாலை நீங்க மனமகிழ்வு எய்தி காலை தோன்று அ வேலையின் வரூஉம்-அற்றை நாள் இரவு கழியா நிற்ப அவ்வறம் செய்தல் காரணமாக மனத்தின்கண் பெரிதும் மகிழ்ந்து நீங்கள் குறிப்பிட்ட அவ் விடியற்காலம் தோன்றுகின்ற பொழுதே வந்து; நடைத்திறத்து இழுக்கி நல்அடி தளர்ந்து மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனை-மகிழ்ச்சியின்கண் உண்டான சோர்வு காரணமாக நடந்து செல்லும் பொழுது வழுக்கித் தனது நல்ல கால் தளர்ந்து அக்களையின்கண் உள்ள அடிசிற் கலங்கள் தொழிலாளனைக் கண்டு; சீலம் நீங்கா செய்தவத்தோர்க்கு வேலை பிழைத்த வெகுளி தோன்ற-நின் கணவனுக்குப் பத்துவகை ஒழுக்கத்தினின்றும் நீங்காது செய்கின்ற தவத்தை உடையவராகிய பிரம தருமருக்கு உண்டி வழங்கும் பொழுது தவறியமையால் பெரிதும் சினம் தோன்றா நிற்ப அம்மடைத் தொழிலாளனுடைய; தோளும் தலையும் துணிந்து வேறாக வாளின் தப்பிய வல்வினை அன்றே-தோளும் தலையும் வெட்டுண்டு வேறுபட்டு வீழும்படி தனது வாளால் வெட்டிய வலிய கொலையாகிய தீவினை யல்லவோ; விராமலர் கூந்தல் மெல்லியல் நின்னோடு இராகுலன் தன்னை இட்டு அகலாதது மணம் விரவிய மலர்களை அணிந்த கூந்தலையுடைய மெல்லியலாயிருந்த இல்ககுமியாகிய நின்னோடு நின் கணவனாகிய இராகுலனையும் விட்டு நீங்காமல் தொடர்வது; என்க.

(விளக்கம்) மனமகிழ்ச்சியோடு வந்தமையால் சோர்வுற்று அடிவழுக்கி அம் மடையன் மடைக்கலம் சிதைய வீழ்ந்தான் என்பது தோன்ற மனமகிழ்வெய்தி வந்தான் என்றார். இதன் பயன் கொலையுண்டவனும் அறவோன் என்றுணர்த்தல். வேலை-ஈண்டு உண்ணுதற்குரிய பொழுது. தப்பிய-வெட்டிய. வல்வினை யாதலால் அஃது எங்ஙனம் தன் பயனை ஊட்டாது போம்? என்றவாறு மணிமேகலையின் முற்பிறப்பாகிய இலக்குமியின் மேற்றாக மணிமேகலையை விராமலர் கூந்தல் மெல்லியல் என இத் தெய்வம் கூறுகின்றது என்க. இராகுலன்-உதயகுமரனுடைய முற்பிறப்பின் பெயர்.

வல்வினையின் இயல்பு

63-71: தலைவன்..........ஒழிந்தது

(இதன் பொருள்) தம் பொருட்டு அல்லல் ஆகிய அவல் வெல்வினை தலைவன் காக்கும் என்போர் அறியார்-தன்னிடத்தே அன்பு செய்கின்ற அடியார்கள் என்பது கருதி அவ்வடியாராகிய தம்மால் செய்யப்பெற்ற துன்பத்திற்குக் காரணமான தீவினை வந்து துன்புறுத்தாற்படி தம் இறைவன் காப்பாற்றுவான் என்று கூறுபவர் அறிவிலாதார் ஆவர்; அறம் செய் காதல் அன்பினின் ஆயினும் மறம் செய்து உளது எனின் வல்வினை ஒழியாது-ஒருவன் அறம் செய்ய வேண்டும் என்னும் காதல் உடையவனாய் அவ்வன்பு காரணமாகவேனும் அவனால் தீவினை செய்யப்பட்டிருக்குமாயின் அத் தீவினை உருத்து வந்து தன் பயனை ஊட்டாது ஒழியாது காண்; ஆங்கு அவ்வினை வந்து அணுகும் காலை-அவ்வாறு அத் தீவினை வந்து தன் பயனை ஊட்டுவதற்கு அணுகும் காலத்தே; தீங்கு உறும் உயிரே செய்வினை தீமையை எய்துதற்குரிய அவ்வுயிர்க்குச் செய்த அப் பிறப்பினூடேயே ஊட்டினும் ஊட்டும், அல்லது அவ்வுயிர் தான் செய்த வினை வழியாக இறந்துபோய் மாறிப்பிறக்கின்ற பிறப்பின் கண் வந்து தன் பயனை ஊட்டினும் ஊட்டும்; ஆங்கு அவ்வினை காண் ஆயிழை கணவனை ஈங்கு வந்துஇ இடர் செய்து ஒழிந்தது. முற்பிறப்பில் அம் மடையனைக் கொன்ற அத் தீவினையே நின் கணவனாகிய இராகுலனை இங்கு இப் பிறப்பில் வந்து தன் பயனாக இக் கொலைத் துன்பத்தை ஊட்டிக் கழிந்தது; என்க.

(விளக்கம்) தம் பொருட்டு அல்லல் ஆகிய வெவ்வினை தலைவன் காக்கும் என்போர் என மாறிக் கூட்டுக; இவ்வாறு கூறுபவர் சைவசமய முதலிய பிற சமயத்தவர்கள். இதனை-

சிவனும் இவன் செய்தியெலாம் என்செய்தி என்றும்
செய்ததெனக் கிவனுக்குச் செய்ததென்றும்
பவமகல உடனாகி நின்றுகொள்வன் பரிவாற்
பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே  (சுபக்கம்-304)

எனவரும் சிவஞானசித்தியாரானும் அறிக.

இறைவன்பால் அல்லது துறவோர்பால் உண்டான அன்பு காரணமாகச் செய்யப்பட்டாலும் மறவினை ஊட்டா தொழியாது என்றவாறு.

மீண்டு வருபிறப்பின் மீளினும் என்றது அப் பிறப்பிலேயே எய்தும் எய்தாதாயின் என இறந்தது தழீஇய எச்சவும்மை உறும் உயிர்-உறுதற்குரிய வுயிர். ஆங்கு-அவ்வண்ணமே. அவ்வினை-மடையனைக் கொன்ற தீவினை. ஆயிழை: முன்னிலைப் புறுமொழி. இவ்விடர் இக்கொலைத் துன்பத்தை.

கந்திற்பாவை மணிமேகலைக்கு எதிர்காலத்து வரும் ஏது நிகழ்ச்சிகளை அறிவுறுத்துதல்

72-81: இன்னும்........நீங்குவ

(இதன் பொருள்) இளங்கொடி நல்லாய்-இளமையுடைய பூங்கொடி அழகுடைய மணிமேகலை நல்லாய்!; இன்னும் கேளாய்-இன்னும் நினக்கு அறிவுறுத்த வேண்டிய செய்திகள் உள்ளன அவற்றையும் கூறுவேன் கேட்பாயாக; மன்னவன்-சோழமன்னன்; மகற்கு வருந்து துயர் எய்தி-தன் மகனாகிய இவ்வுதயகுமரன் கொலை யுண்டமை அறிந்து பெரிதும் வருந்துதற்குக் காரணமான மகவன்பினாலே மாபெருந்துயர மெய்திப் பின்னர்; மாதவர் உரைத்த வாய்மொழி கேட்டு-பெரிய தவத்தையுடைய சான்றோர் எடுத்துக் கூறுகின்ற வாய்மையான அறிவுரைகளைக் கேட்டு அமைதியுற்ற பின்னர்; காவலன் நின்னையும் காவல் செய்து ஆங்கு இடும்-செங்கோன் முறைப்படி ஆருயிர் காவலன் ஆதலின் நின்னையும் தன் காவலிற் படுத்து அதற்கியன்ற சிறைக்கோட்டத்திலே இடுவன்; இராசமாதேவி ஈடு சிறை நீக்கி கூட வைக்கும் கொட்பினள் ஆகி-பின்னர் உதயகுமரன் அன்னையாகிய கோப்பெருந்தேவி தன் மகன் கொலையுண்டமைக்கு இவளே காரணம் என்று கருதி நினக்கு இடுக்கண் செய்ய வேண்டும் என்னும் தன் படிற்றுளம் கரந்து நின்னை மன்னவன் இட்ட ஈடுசிறைக்கோட்டத்தினின்றும் நீக்கித் தன்னோடு உவளகத்திலே வைத்துக் கொள்ளும் ஒரு கொள்கையுடையவளாகி;(தான் கருதிய வஞ்சச் செயல் சில செய்யவும் செய்வள்;) மாதவி மாதவன் மலரடி வணங்கித் தீது கூற-பின்னர் மாதவி நின் நிலையறிந்து போய் அறவண வடிகளாரின் மலர் போன்ற திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி நீ சிறைப்பட்டிருக்கின்ற துன்பச் செய்தியைக் கூறா நிற்றலாலே; அவள் தன்னொடும் சேர்ந்து மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டு-அம்மாதவியையும் தம்மோடு அழைத்துக் கொண்டு அறவணவடிகளார் கோப்பெருந் தேவியின்பாற் சென்று கூறிய அறிவுரையாகிய மெய்மொழிகளைக் கேட்டுப் பின்னர்; காதலி நின்னையும் காவல் நீக்குவள்-தன் மகன் காதலியாகிய நின்னையும் அக்கோப் பெருந்தேவி சிறை வீடு செய்குவன் காண்; என்க.

(விளக்கம்) மன்னவன் என்றது உதயகுமரன் தந்தையை மகற்கு வருந்துயர்-மகன் பொருட்டுத் தனக்கு வருந்துயருமாம். வருந்து துயர்-இடையறாது வருந்துதற்குக் காரணமான பெருந்துயர்; மகன் இறந்துபட்டமையால் வந்த துயரம்; அது மாபெருந் துன்பமாதலின் அங்ஙனம் விதந்தபடியாம்.

மாதவர்: உதயகுமரனுக்குற்ற துரைக்க இனிச் செல்ல விருக்கும் சக்கரவாளத்துத் துறவோர்களை. நினக்குப் பிறரால் தீங்கு நேராமைப் பொருட்டும் நின் அழகான் மயங்கி நகரத்து இளைஞர் தீமைக்கு ஆளாகாமைப் பொருட்டும் நின்னைத் தன் காவலிலே வைத்துக் கோடலே அம் மன்னவன் செங்கோன் முறைமை ஆதலின் அவன் காவல் செய்திடும் என்னாது காவலன் என்று எடுத்தோதினர். காவல் செய்தற்கியன்ற பிழை செய்திலாத நின்னையும் என்பது தோன்ற உயர்வு சிறப்பும்மை கொடுத்தோதினர்.

ஈடுசிறை- சிறையில் ஒருவகைச் சிறை எனக் கோடலுமாம். அஃதாவது-குற்றமில்லாதவரையும் பிறர் வருத்தாமைப் பொருட்டு வைக்கும் பாதுகாவற் சிறை என்க. இக் கருத்தாற்போலும் காவலன் நின்னைச் சிறை செய்யும் என்னாது நின்னையும் காவல் செய்து அதற்குரிய இடத்திலே இடும் என்பதுபட ஓதியதும். மேலும் அவ்விடத்திற்கு ஈடுசிறை என்னும் பெயர் என்பது தோன்ற ஈடுசிறை நீக்கி என்று ஓதியதூஉம் என்று கருத இடனுண்ணையுணர்க இக்காலத்தும் அத்தகு சிறைக் கோட்டமுண்மையும் நினைக.

கொட்பு-கோட்பாடு. (78) மாதவன்: அறவணர். தீது-மணிமேகலை சிறைப்பட்ட துன்பச்செய்தி. தன் மகற்குப் பல பிறப்புகளிலே காதலியானவள் என்னும் பரிவு காரணமாகவும் நின்னைச் சிறை வீடு செய்வாள் என்பது தோன்ற, காதலி நின்னையும் என்று வேண்டா கூறி வேண்டியது முடித்தார்.

இதுவுமது

82-91: அரசாள்..........புகுவை

(இதன் பொருள்) அரசு ஆள் செல்வத்து ஆபுத்திரன்பால் புரையோர்ப் பேணிப் போகலும் போகுவை-சிறைவீடு பெற்ற பின்னர் அரசாட்சியாகிய செல்வத்தையுடைய ஆபுத்திரனைக் காண்டற்கு விரும்பி அவன் இருக்கும் நகரத்திற்கு நின்னுடைய சான்றோராகிய அறவணர் மாதவி சுதமதி முதலிய மேலோரை வணங்கி அவர்பால் விடைபெற்றுச் செல்லவும் செல்வாய்; போனால் அவனொடும் பொருள் உரை பொருந்தி-அந்நகரத்திற்குச் சென்றால் அவ்வாபுத்திரனோடு அறவுரைகள் கூறி அவனோடு கேண்மை கொண்டிருந்து; மாநீர் வங்கத்து அவனொடும் எழுந்து மாயம் இல்செய்தி மணிபல்லவம் எனும் தீவகத்து இன்னும் சேறலும் உண்டால்-கடலின்கண் மரக்கலம் ஊர்ந்து வருகின்ற ஆபுத்திரனாகிய புண்ணியராசன் என்பவனோடு புறப்பட்டு நீ வானத்தின் வழியே பொய்மையில்லாத செயலையுடைய மணிபல்லவம் என்னும் தீவின்கண் மீண்டும் போதலும் உண்டாகும்; தீவதிலகையின் சாவகமன்னன் தன்திறம் கேட்டு தன் நாடு அடைந்த பின்-மணிபல்லவத்தின்கண் தீவதிலகை என்னும் தெய்வத்தின் வாயிலாக அச் சாவக நாட்டு மன்னனாகிய புண்ணியராசன் தன் பழம்பிறப்பு வரலாறுகளைக் கேட்டறிந்து கொண்டு அத் தீவினின்றும் தன்னுடைய நாட்டிற்குச் சென்ற பின்னர்; ஆங்கு அத் தீவம்விட்டு அருந்தவன் வடிவாய் பூங்கொடி வஞ்சி மாநகர் புகுவை பின்னர் நீயும் அவ்வாறே தீவினின்றும் அரிய மாதவனாகிய வேற்றுருவங் கொண்டு வஞ்சி மாநகரத்திற்குச் செல்லுவாய் என்க.

(விளக்கம்) ஆபுத்திரன் என்றது சாவக நாட்டில் புண்ணியராசனாகப் பிறந்திருக்கின்ற ஆபுத்திரன் என்றவாறு. புரையோர்-மேலோர் அவராவார், அறவணர் மாதவி சுதமதி சித்திராபதி முதலியோர். போகலும் போகுவை என்றது ஒரு சொல் நீர்மைத்து பொருளுரை என்றது பவுத்தர் அறவுரையை. பொருந்தி என்றது அவற்றைக் கேட்டு என்றவாறு. மாநீர்-கடல். வங்கம்-மரக்கலம். அவன் புண்ணியராசன். வங்கத்தில் வருகின்ற அவனோடு நீ வானத்தில் எழுந்து சேறலும் உண்டு என்க. சாவக மன்னன்-புண்ணியராசன். பூங்கொடி என்றது நீ என்னுந் துணை. புகுவை: முன்னிலை ஒருமை.

இதுவுமது

92-102: ஆங்கு............அந்நாள்

(இதன் பொருள்)  ஆங்கு அந்நகரத்து அறிபொருள் வினாவும் ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால்-அவ்விடத்தே அந்த வஞ்சி மாநகரத்தின்கண் உன்னால் மெய்ப்பொருளை வினவி அறிந்து கொள்ளுதற்குரிய உயர்ந்த நூற்கேள்வியையுடைய சான்றோர் பலராவர் அவரைக் கண்டு வினவுமிடத்தே அவர்களுள் வைத்து; இறைவன் எம் கோன் எவ்வுயிர் அனைத்தும் முறைமையின் படைத்த முதல்வன் என்போர்களும்-இறைவனே எங்களுக்குக் கடவுள், காணப்படுகின்ற எந்த உயிரினங்கள் உளவோ அவை அனைத்தையும் முறைமையினாலே படைத்தருளிய அவனே தலைவன் என்று கூறுவோர்களும்; தன் உரு இல்லோன் பிறஉரு படைப்போன் அன்னோன் இறைவன் ஆகும் என்போர்களும்-தனக்கென்று யாதோருருவமும் இல்லாதவனும் உயிரினங்களுக்கெல்லாம் உருவங்களைப் படைகின்றவனும் ஆகிய அத்தகையவனே எங்களுக்குக் கடவுளாகும் என்று கூறுவோர்களும்; துன்ப நோன்பு இத் தொடர்ப்பாடு அறுத்து ஆங்கு இன்ப உச்சி இருத்தும் என்போர்களும்-யாங்கள் மேற் கொண்டிருக்கின்ற துன்பத்தைப் பொறுக்கின்ற இந் நோன்பு தானே இப்பிறவித் தொடர்புக்குக் காரணமான பற்றினை அறுத்து அவ்விடத்தே அந்தமில் இன்பமுடைய உலகினது. உச்சியில் வைக்கும் என்று கூறுவோர்களும்; பூதவிகாரப் புணர்ப்பு என்போர்களும்-ஐம்பெரும் பூதங்களும் தம்முள் விகாரமெய்திக் கூடிய கூட்டமே உலகம் இதற்கொரு கடவுள் இல்லை என்று கூறகின்றவர்களும் இங்ஙனமாக; பல்வேறு சமய படிற்று உரை எல்லாம் அல்லியம் கோதை கேட்குறும் அந்நாள்-பல்வேறு வகைப்பட்ட சமயக்கணக்கர்கள் கூறுகின்ற பொய்ம் மொழியையெல்லாம் மணிமேகலாய் நீ கேட்கலாகின்ற அந்த நாளிலே; என்க.

(விளக்கம்) அறிபொருள்-அறிதற்குரிய மெய்ப்பொருள். இறைவன் என்றது அங்கிங்கெனாதபடி எங்குமிருக்கின்ற பரப்பிரமத்தை முறைமை என்றது ஒன்றிலிருந்து ஒன்றைத் தோற்றுவிக்கின்ற முறைமை. தன் உருவில்லோன்-தனக்கென்று உருவமில்லாதவன்; பிறவற்றிற்கு உருப்படைப்போன் என்க. அன்னோன்-அத்தகையவன்; துன்ப நோன்பே அறுத்து உச்சியில் இருந்தும் என்க. பூத விகாரப்புணர்ப்பு என்பவர்-பூதவாதிகள்; படிற்றுரை-பொய் மொழி; அல்லியங் கோதை முன்னிலைப் புறமொழி.

இதுவுமது

103-112: இறைவனும்.......ஒழிவாயலை

(இதன் பொருள்) இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார் இவ்வுலகத்திற்குக் கடவுளாவான் யாருமில்லை செத்தவர் மீண்டும் பிறப்பதில்லை ஆதலால்; அறனோடு என்னை என்று அறைந்தோன் தன்னை-அறம் என்னும் அவற்றினோடு மாந்தர்க்குற்ற தொடர்பு என்கொலோ என்று கூரிய பூதவாதியை நோக்கி; பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த நறுமலர்க்கோதை எள்ளினை நகுதி-முற்பிறப்பும் அறநெறியும் பண்பினோடு அறிந்துகொண்டிருக்கின்ற மணிமேகலாய்! நீ இகழ்ந்து நகைப்பாய்; இவ்வுரை கேட்டு எள்ளிவை போலும்-நீ நகைத்தமை கண்ட அப் பூதவாதி யான் கூறிய மொழியைக் கேட்டு நீ என்னை இகழ்ந்து நகைத்தாய் போலும்; இங்கு எள்ளியது உரை என-நீ இவ்விடத்திலே என்னை இகழ்ததற்குக் காரணம் கூறுதி என்று அவன் நின்னை வினவா நிற்ப அவனுக்கு; உன் பிறப்பு உணர்த்துவை-நீ உன்னுடைய முற்பிறப்பினை உணர்ந்திருக்கின்ற வரலாற்றினைக் கூறுவாய்; ஆங்கு நின் கொணர்ந்த அருந்தெய்வம் மயக்க காம்பு அன தோளி கனா மயக்கு உற்றனை என்று அவன் உரைக்கும்-அது கேட்ட அந்தப் பூதவாதி நின்னை நோக்கிக் கூறுபவன் அம் மணிபல்லவத்தின்கண் உன்னைக் கொண்டுவந்த காண்டற்கரிய தெய்வமே நின்னை மயக்கி விட்டமையாலே மூங்கில் போன்ற தோளையுடைய நீ கனவின்கண் மயங்கி அங்ஙனம் கண்டிருக்கின்றாய் என்று அவன் உனக்குக் கூறுவான்; இளங்கொடி நல்லாய் அன்று நன்று என்று அவன் முன் அயர்ந்து ஒழிவாய் அலை-மணிமேகலாய் நீ அங்ஙனம் அன்று என்று கூறுமளவிலே நில்லாமல் அவன் முன்னர் அறங் கூறுதலை மறந்து போகமாட்டாய் என்க. 

(விளக்கம்) இறைவனும் இல்லை............அறைந்தோன் என்றது பூதவாதியை இறந்தோர் பிறத்தல் இல்லையாதலால் மாந்தர் அறம் செய்தல் பயனில் செயலால் என்பான் இறந்தோர் பிறவார் அறனோடு என்னை என்றான். என்னை? என்னும் வீனாஅது பயனில் செயலாம் என்பது படநின்றது. அறவி-அறநெறி. நறுமலர்க் கோதை:முன்னிலைப் புறமொழி;காம்பன தோளி என்றது அத் தெய்வம் பூதவாதியின் கூற்றைக் கொண்டு கூறியபடியாம்; நிற்கொணர்ந்த அருந்தெய்வம் பூதாவதியின் கூற்றைக் கொண்டு கூறியபடியாம்; நிற்கொணர்ந்த அருந்தெய்வம் மயக்க மயக்குற்றனை என்று பூதவாதி கூறினான் என்றமையால் மணிமேகலை அவனுக்குத் தன் பிறப்புணர்த்தும் வழி மணிமேகலா தெய்வம் தன்னை எடுத்துப் போயதும் அதனால் புத்த பீடிகை கண்டு பிறப்புணர்ந்து வரலாறு முழுவதும் கூறுவாள் என்பதும் பெற்றாம். அயர்ந் தொழி வாயலை-மறந் தொழியாய்.

இதுவுமது

113-118: தீவினை.....கேளாய்

(இதன் பொருள்) மடவாய் தீவினை உறுதலும் செத்தோர் பிறத்தலும்-மணிமேகலாய்! ஒருவன் செய்த தீவினையின் பயன் அவனுக்கு வந்தெய்துதலும் இறந்தவர் மீண்டும் பிறத்தலும் வாயே என்று மயக்கொழி -உண்மையே என்று நீ அவன் உரையால் மயங்காதொழிக; வழுஅறு மானும் மண்ணும் கல்லும் எழுதிய பாவையும் பேசா என்பது குற்றமற்ற மரமும் மண்ணும் கல்லும் இவற்றால் பண்ணிய பாவைகளும் பேசமாட்டா என்னும் இயற்கையை; அறிதலும் அறிதியோ அறியாய் கொல்லோ அறியாய் ஆயின் ஆங்கு அது கேளாய்-நீ அறிந்திருப்பாயோ அறியமாட்டாயோ அறிந்திலா யாயின் அது பற்றி யான் கூறும் இதனையும் கேட்பாயாக; என்க.

(விளக்கம்) வாயே என்று அவனுடைய மயக்கத்தை ஒழித்திடுக எனக் கந்திற்பாவையின் வேண்டுகோளாகக் கோடலுமாம். வழு-குன்றம் பேசா என்பது என்றது பேசமாட்டா என்னும் இயற்கையை. கந்திற்பாவை தான் தூணின் நின்ற பாவை வாயிலாகப் பேசுதலால் தன் பேச்சிணை அவள் ஐயுறாமைப் பொருட்டு அத் தெய்வம் இது கூறிய படியாம். ஆங்கு அது என்றது. அவ்வியற்கைக்கு மாறாய் இக் கற்பாவை பேசுமிது என்றவாறு.

கந்திற் பாவை தன் வரலாறு கூறுதல்

119-129: முடித்து....கேட்டியோ

(இதன் பொருள்) முடித்துவரு சிறப்பின் மூதூர்-யாண்டு தோறும் செய்து முடித்து வருகின்ற இந்திர விழாவினையுடைய பழைய இப் பூம்புகார் நகரத்தின்கண்; கொடித்தேர் வீதியும் தேவர் கோட்டமும் முதுமா இடங்களும் முதுநீர்த் துறைகளும் பொதியிலும் மன்றமும் யாங்கணும்-கொடியுயர்திய தேர் ஓடுகின்ற வீதிகளிலும் கோயில்களிடத்தும் முதிய மரங்கள் நிற்கும் இடங்களிலும் பழைமையான நீராடும் துறைகளிடத்திலும் ஊரம்பலத்திலும் மன்றங்களிடத்தும் இன்னோரன்ன எவ்விடங்களிலும் பொருந்துபு நாடி காப்பு உடை மாநகர் காவலும் கண்ணி-பெருந்தும் இடங்களை ஆராய்ந்தறிந்து மதில் அரண் முதலிய காவலையுடைய பெரிய இந்நகரத்திற்குத் தெய்வக் காவலும் வேண்டும் என்றும் கருதி, யாப்புடைத்தாக அறிந்தோர் வலித்து மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும்-அவ்வத் தெய்வங்களுக்குப் பொருத்தமுடையதாக அவற்றின் இயல்பறிந் தோரால் துணியப் பெற்று மண்ணாலும் கல்லினாலும் மரத்தினாலும் சுவர்களிடத்தும்; கண்ணிய தெய்வம் காட்டுநர் வகுக்க ஆங்கு அத்தெய்வதம் அவ்விடம் நீங்கா அச் சான்றோரால் கருதப்பட்ட அத் தெய்வங்களின் உருவத்தைச் செய்து காட்டுபவராகிய மண்ணீட்டாளரும் கண்ணுள் வினைஞரும் இயற்றா நிற்ப அவ்வுருவங்களில் உறைகின்ற அத் தெய்வங்கள் அவ்விடங்களினின்றும் ஒரு பொழுதும் நீங்க மாட்டா ஆதலின்; ஊன் கணினார்கட்கு உற்றதை உரைக்கும் என் திறம் கேட்டியோ ஞானக்கண் இல்லாத மாந்தர்களுக்கு நிகழ்வதனை எடுத்துரைக் கின்ற என்னுடைய வரலாறு கேட்பாயா; என்க.

(விளக்கம்) தேவர் கோட்டம்-தெய்வத்திருக்கோயில்கள்; பொதியில்-கட்டிடத்தோடு கூடிய ஊரம்பலம். மன்றம்-மரநிழலையுடைய பொதுவிடம். காப்பு-மதில் முதலியன. காவலும் கண்ணி என்றது அரண்காவலேயன்றித் தெய்வக்காவலும் வேண்டுமென்று கருதி என்றவாறு. யாப்பு-பொருத்தம், வலித்து-துணியப்பட்டு. அறிந்தோரால் வலிக்கப்பட்டு மண் முதலியவற்றால் தெய்வதம் காட்டுநர் வகுக்க என இயைத்திடுக தெய்வதம் காட்டுநர்-மண்ணீட்டாளரும் கண்ணுள் வினைஞருமாம். அத் தெய்வம் அவ்விடம் நீங்கா எனவே யானும் எனக்கு வகுத்த இப் பாவையினின்று உற்றதுரைப்பேன் என்று அறிவித்தவாறும் ஆயிற்று. இது குறிப்பெச்சம் கேட்டியோ என்புழி ஓகாரம் அசைச்சொல்.

இதுவுமது

129-142: இளங்கொடி...........என

(இதன் பொருள்) இளங்கொடி நல்லாய்-இளைமையுடைய மணிமேகலை நல்லாய்!; மன்பெரும் தெய்வகணங்களின் உள்ளேன்-யான் நிலைபெற்ற பெருந்தெய்வக் கூட்டங்களுள் ஒரு தெய்வமாக இருக்கின்றேன்; துவதிகன் என்பேன்-துவதிகன் என்று பெயர் கூறப்படுவேன்; தொன்று முதிர் கந்தின் மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின் யான் நீங்கேன்-பழைமையினால் முதிர்வுற்ற இத் தூணின்கண் மயன் என்னும் தெய்வத்தச்சன் பொழுதும் யான் நீங்குகிலேன்; என் நிலையது கேளாய்-என்னுடைய தன்மையைக் கூறுவேன் கேள்; மாந்தர் அறிவது வானவர் அறியார்-மக்கள் அறிதற்கியன்ற மறைச்செய்தியைத் தேவர்களும் அறிந்துகொள்ள வல்லுநர் அல்லர் போலும்; ஓவியச் சேனன் என் உறுதுணைத்தோழன் ஆவதை ஆர் இந்நகர்க்கு உரைத்தனரோ-தெய்வங்களுள் வைத்துச் சித்திசேனன் என்பான் என்னுடைய நெருங்கிய உசாஅத்துணைத் தோழனாய் இருக்கின்ற செய்தியை யார்தாம் இந்நகர மக்களுக்கு அறிவித்தனரோ யானும் அறிகிலேன்; அவனுடன் யான் சென்று ஆடு இடம் எல்லாம் உடம் உறைந்தார் போல் ஒழியாது எழுதி-அச்சித்திர சேனனோடு யான் போய் விளையாடுகின்ற இடங்களிலெல்லாம் எம்முடன் கூடி இருந்தார் போன்று அவனையும் என்னையும் இணைத்து அவ்விடங்களில் ஒன்றேனும் ஒழியா வண்ணம் உருவெழுதி வைத்துக்கொண்டு; பூவும் புகையும் பொருந்துபு புணர்த்து-மலரும் மணப்புகையும் ஆகிய வழிபாட்டுப் பொருள்களைக் கூட்டி என்பால் வந்து; நாநனிவருந்த என் நலம் பாராட்டலின்-தம்முடைய நா மிகவும் வருந்துமளவிற்கு என்னுடைய அழகினை வர்ணித்துப் புகழ்தலின்; மணிமேகலை யான் வருபொருள் எல்லாம் துணிவுடன் உரைத்தேன்-மணிமேகலாய்! யான் அம் மக்களுக்கு எதிர்காலத்திலே நிகழ்கின்ற பொருளெல்லாம் தெளிவுடன் கூறுவேன் ஆயினேன்; என் சொல் தேறு என-ஆதலின் அங்ஙனமே யான் உனக்குக் கூறிய எதிர்கால நிகழ்ச்சிகளையும் உண்மை என்று தெளிந்துகொள்ளக் கடவாய் ஐயுறாதே கொள்; என்க.

(விளக்கம்) தெய்வங்களுள் யான் சிறந்த தெய்வ கணத்தைச் சேர்ந்துளேன் என்பது தோன்ற மன்பெருந் தெய்வகணம் எனல் வேண்டிற்று என்பேன்-எனப்படுவேன். ஒப்பாக என்பதன் ஈறு தொக்கது. பாவை-கந்தினிடத்துப் படிமம். எனக்கு ஒரு தோழன் சித்திரசேனன் என்பவன் உளன். யானும் சித்திரசேனனும் எங்குச் சென்றாலும் சேர்ந்து செல்வேம். அவனும் யானும் விரும்பி விளையாடுகின்ற இடங்களும் பல உள. அவ்விடங்களிலெல்லாம் என்னையும் அவனையும் இணைத்தே எழுதியிருக்கின்றனர். வாழ்த்தும்போது என்னுடைய நலத்தை மட்டும் தனித்தெடுத்துப் பாராட்டுகின்றனர். அவன் எனக்குத் தோழனாய் இருப்பதனையும் அறிந்து, யாங்கள் கூடி விளையாடும் இடங்களிலும் ஒன்றும் ஒளியாமல் எங்களை இணைத்தே எழுதியிருக்கின்றனர். இம் மறைச் செய்திகளை எல்லாம் மக்களாகிய இவர்கள் எப்படித்தான் அறிந்து கொள்ள முடிந்ததோ! அவர்கள் அறிந்து கெண்ட வழி யாது என அறிந்துகொள்ளத் தெய்வமாகிய எனக்கும் இயலவில்லை என மக்களைப் பாராட்டுகின்ற இக் கந்திற் பாவை மாந்தர் அறிவது வானவர் அறியார் போலும் என்று வியந்து கூறுகின்றது; என்க துணிவுடன் உரைத்தேன் என்றது உரைத்து வந்தேன் அவ்வாறே நினைக்கும் உரைத்த என் சொல் தேறு என்பதுபட நின்றது. தேறு-தெளி.

மணிமேகலை கந்திற்பாவையை எனக்கு எதிர்காலத்தே வரும் ஏது நிகழ்ச்சிகளைக் கடைபோகக் கூறுக என்று வேண்டுதல்

143-146: தேறேன்...........நல்லாய்

(இதன் பொருள்) தெய்வக் கிளவிகள் தேறேன் அல்லேன்-அதுகேட்ட மணிமேகலை அருளுடைய தெய்வமே கேள்! அடிச்சி தெய்வங்கள் கூறுகின்ற மொழிகளை வாய்மை என்று தெளிந்து கொள்ளும் அளவிற்கும் பட்டறிவுடையேன் ஆதலால் ஐயுறாது உன் மொழிகளைத் தெளிந்து கொள்வேன் காண், ஒரு வேண்டுகோள்! நீ கூறுகின்ற ஏது நிகழ்ச்சிகளை; எனக்கு ஈறு கடை போக அருள் என்றலும்-அடிச்சிக்கு அவற்றை எனது இறுதிகாறும் கூறி அருளுக என்று வேண்டிக் கொள்ளா நிற்ப; துவதிகன் உரைக்கும் மடக்கொடி நல்லாய் சொல்லலும் சொல்லுவேன் வருவது கேளாய்-அவ் வேண்டுகோட் கிணங்கிய துவதிகன் என்னும் அத் தெய்வம் கூறும் மடப்பம் உடைய பூங்கொடி போலும் அழகுடையோய் அங்ஙனமே நின்னுடைய இறுதிக்காலம் வருந்துணையும் நிகழும் ஏது நிகழ்ச்சியைக் கூறுகின்றேன் கேட்பாயாக; என்க.

(விளக்கம்) தேறேன் அல்லேன் என்னும் இரண்டு எதிர்மறையும் ஓருடன்பாட்டுப் பொருளை வற்புறுத்து நின்றன. ஈறு-சாக்காடு அங்ஙனம் தெளிவதற்குரிய பட்டறிவு எனக்கு மிகுதியும் உண்டென்பது இதன் குறிப்புப் பொருள். சொல்லலும் சொல்லுவேன் என்னும் அடுக்கு தேற்றமாகச் சொல்லுவேன் எனும் உறுதிப்பொருள் பயந்து நின்றது; இவ்வாறு அடுக்கிக் கூறும் வழக்கம் இந்நூலின்கண் பலவிடங்களில் காணப்படுகின்றது. அவ்விடமெல்லாம் இவ்விளக்கத்தைக் கோள்ளுக.

துவதிகன் கூற்று

147-154: மன்னுயிர்.........சேர்குவை

(இதன் பொருள்)  மன் உயிர் நீங்க மழைவளம் கரந்து பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய-உலகத்தில் உடம்பொடு நிலைபெற்று வாழுகின்ற உயிர்கள் மடிந்து போகும்படி மழையால் உண்டாகின்ற வளம் ஒழிந்து போனமையால் அழகிய மதிலை உடைய காஞ்சிமாநகரம் அழகொழிந்து போகாநிற்க; ஆங்கு அது கேட்டு ஆர் உயிர் மருந்தாய் ஈங்கு இம் முதியாள் இடவயின் வைத்த தெய்வப் பாத்திரம் செவ்விதின் வாங்கி-ஆங்கு நிகழ்ந்த மன்னுயிர் மடியும் செய்தியைக் கேட்டு அரிய உயிர்களுக்குச் சாக்காடு தவிர்க்கும் மருந்தாக இங்கு இச்சம்பாபதி திருக்கோயிலின்கண் வைத்துள்ள தெய்வத்தன்மையுடைய அமுதசுரபி என்னும் பிச்சைப் பாத்திரத்தைச் செவ்விதாகக் கையில் எடுத்துக் கொண்டு; தையல் நின் பயந்தோர் தம்மொடு போகி அறவணன் தானும் ஆங்கு உளன் ஆதலின்-மணிமேகலாய்! உன்னுடைய தாய்மார்களாகிய மாதவியோடும் சுதமதியோடும் சென்று அறவணவடிகளாரும் அக் காஞ்சி நகரத்திலேயே இருப்பது தெரிந்து; செறிதொடி காஞ்சி மாநகர் சேர்குவை-நீயும் வஞ்சி நகரத்தினின்றும் போய் அக் காஞ்சிமா நகரத்தை அடைவாய் என்க.

(விளக்கம்) நீங்க என்றது இறந்துபட என்றவாறு. பொன் அழகு. நீ அது கேட்டுத் தெய்வப்பாத்திரம் செவ்விதின் வாங்கி அறவணன் ஆங்குளன் ஆதலும் தெரிந்து நீயும் அவ்வுயிரைப் பாதுகாத்தற்கு அந் நகரத்தை அடைவாய் என்றவாறு.

இதுவுமது

155-160: அறவணன்.............பலவுள

(இதன் பொருள்) ஆய்தொடி அறவணன் அருளால் அவ்வூர் பிறவணம் ஒழிந்து நின்பெற்றியை ஆகி-அக் காஞ்சி நகரின் கண் நீ அறவணவடிகளாருடைய அறிவுரை கேட்டு அந் நகரத்தின் கண் நின் உருவிற்கு வேறுபட்ட அம் மாதவன் வடிவத்தைக் களைந்து நினைக்கியல்பான பெண்ணுருவத்தை உடையையாகி வறன்ஓடு உலகின் மழைவளம் தரூஉம் அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவை-வற்கடம் பரவிய இவ்வுலகத்தின்கண் மழை போல உணவாகிய செல்வத்தை யளிக்கும் அறப் பண்புடைய அமுதசுரபியைக் கையில் ஏந்தி உண்டி கொடுத்து அரிய உயிரினங்களைப் பாதுகாத்தலைச் செய்வாய்; ஆய் தொடிக்கு அவ்வூர் அறனோடு தோன்றும் ஏது நிகழ்ச்சி யாவும் பலவுள- நினக்கு அக் காஞ்சிநகரத்தின்கண் அவ்வறச் செயலோடு பழவினைப் பயன்கள் பலவும் நிகழவிருக்கின்றன; என்க.

(விளக்கம்) அறவணன் அருளால் என்றது அறவணருடைய அறிவுரையின்படி என்றவாறு. ஆய்தொடி : முன்னிலைப் புறமொழி பிறவணம்-வேற்றுருவம்; என்றது அவள் மேற்கொள்ளும் மாதவன் வடிவத்தை. வறன் ஓடு உலகு-வற்கடம் (பஞ்சம்) பரவிய உலகம். மழை போல உணவாகிய செல்வத்தை அளிக்கும் என்க வறன், அறன்; மகரத்திற்கு நகரம் போலி.

இதுவுமது

141-172: பிறவறம்............உரைத்தலும்

(இதன் பொருள்) பிறவறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம் அறவணன் தனக்கு நீ உரைத்த அந்நாள்-பவுத்தருடைய அறத்திற்கு வேறுபட்ட அறங்களையுடைய பிற சமயக்கணக்கர் உனக்கு வஞ்சி நகரத்திலே உரைத்த அறங்களை எல்லாம் அறவணவடிகளாருக்கு நீ எடுத்துக் கூறிய அந்த நாளிலே தவமும் தருமமும் சார்பில் தோற்றமும் பவம் அறு மார்க்கமும் பான்மையின் உரைத்தும் மறஇருள் இரிய மன்உயிர் ஏமுற-அது கேட்ட அறவணவடிகளார் உனக்குக் கூறுபவர் தவமும் தருமமும் ஒன்றை ஒன்று சார்ந்து தோன்றும் நிதானம் பன்னிரண்டும் பிறப்பறுதற்குக் காரணமான நன்னெறியும் என்னும் இவற்றைத் தமக்கே சிறந்துரிமையுடைய பண்போடு எடுத்துக் கூறித் தீவினையாகிய இருள் கெடவும் நிலைபெற்ற உயிரினம் இன்பமுறவும்; அறவெயில் விரித்து ஆங்கு அளப்பு இல் இருத்தியொடு புத்த ஞாயிறு தோன்றுங்காறும்-தமது அறமாகிய ஒளியை உலகிலே பரப்பி அவ்வாறே அளக்கலாகாத இருத்திகளோடே புத்த பெருமான் என்னும் ஞாயிற்று மண்டிலம் இவ்வுலகில் வந்து தோன்றுமளவும்; செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா-யான் இறந்தும் பிறந்தும் பவுத்தர் கூறுகின்ற மெய்ப்பொருளைப் பாதுகாத்து; இத் தலம் நீங்கேன் யானும்-இக் காஞ்சி நகரத்தைக் கைவிட்டுப் போகேன் யானும் இந் நகரத்திலேயே உறைவேன் காண்; இளங்கொடி நீயும் தாயரும் தவறு இன்றாக-இளமையுடைய நீயும் நின் தாயராகிய மாதவியும் சுதமதியும் அறத்தில் பிறழாது வாழ்வீராக; நின் மனப்பாட்டு அறம் வாய்வது ஆக என ஆங்கு அவன் உரைத்தலும் நின்னுடைய உள்ளத்தினுள் தோன்றிய இத் துறவறம் நினக்கு வாய்ப்புடையதாகுக என்று அவ்வறவணவடிகள் உனக்குக் கூறா நிற்பவும்; என்க.

(விளக்கம்) பிறவறம்-பிற சமயக் கணக்கர் அறநெறி. சார்பு பன்னிரண்டு நிதானங்கள். அவை பேதைமை செய்கை யுணர்வே யருவுரு, வாயில் ஊறே நுகர்வே வேட்கை, பற்றே பவமே தோற்றம் வினைப்பய, னிற்றென வகுத்த வியல்பீ ராறும் என்பன. இவை ஒன்றை ஒன்று சார்ந்து மண்டில வகையால் வருதலால் சார்பில் தோற்றம் எனப்பட்டன. இருத்தி-சித்தி; அவை அணிமா முதலிய எண் வகைப்படும். புத்த ஞாயிறு தோன்றுங்காறும் யானும் இத் தலம் நீங்கேன் நீயும் தாயரும் தவறின்றாக நினக்கு அறம் வாய்வதாக என்று அறவணர் நின்னை வாழ்த்துவார் என்றவாறு.

இதுவுமது

172-179: அவன்......உய்தி

(இதன் பொருள்) அவன் மொழி பழையாய் பாங்கு இயல் நல்அறம் பலவும் செய்த பின்-அவ்வறவணர் அறிவுறுத்த அறிவுரைகளினின்றும் பிறழாது அவற்றின் பகுதியில் இயன்ற நன்மையுடைய அறங்கள் பலவற்றையும் செய்தபின்; கச்சிமுற்றத்து நின் உயிர் கடைகொள-அக் காஞ்சி மாநகரத்தின் கண்ணே நின்னுயிர் இப் பிறப்பின் முடிவினை எய்தா நிற்பப் பின்னர்; உத்தர மகதத்து உறு பிறப்பு எல்லாம் ஆண் பிறப்பு ஆகி அருள் அறம் ஒழயாய்-நினக்கு வட மகதநாட்டில் பல பிறப்புகள் உண்டாகும், அப் பிறப்பெல்லாம் ஆணாகவே நீ பிறந்து புத்த பெருமான் திருவாய் மலர்ந்தருளிய அருளறத்தினின்றும் ஒழியாயாய்; மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்கு தலைச் சாவகனாய்ச் சார்பு அறுத்து உய்தி-அவ்வறத்திற்குரிய சிறப்போடு பிறப்பெய்தி மாந்தர்களின் மன மயக்கங்களை அறிவுரை கூறி அகற்றித் தனக்கென வாழாது பிறர் பொருட்டு நல்லறம் கூறுகின்ற புத்த பெருமானுக்குத் தலைமாணாக்கனாகிப் பற்றறுத்து வீடுபெறுவாய்காண்; என்க.

(விளக்கம்) அவன்: அறவணன்; பாங்கு-பகுதி கச்சி முற்றம் என்புழி முற்றம் ஏழாவதன் பொருட்டு ஆண் பிறப்பாகச் சார்பறுத்து உய்தி என்றமையால் ஆண் பிறப்பே வீடுபேற்றிற்குரியது என்பது பவுத்தர் கொள்கை என்பது பெற்றாம். தலைச்சாவகன் முதல் மாணாக்கன்.

இதுவுமது

180-190: இன்னும்...............கதிரோனென்

(இதன் பொருள்) இன்னும் கேட்டியோ நன்னுதல் மடந்தை இன்னும் சில கேட்பதற்கு விரும்புவாய் அல்லையோ? கூறுவன் கேள் அழகிய நுதலையுடைய பெண்ணே; ஊங்கண் ஓங்கிய உரவோன் தன்னை வாங்கு திரை எடுத்த மணிமேகலா தெய்வம் முன்னொரு காலத்திலே புகழால் உயர்ந்த அறிவுடையோனாகிய உன்குல முதல்வன் ஒருவனை உலகத்தை வளைந்துள்ள கடலின் கண்ணிருந்து எடுத்து உய்வித்த நின் குலதெய்வமாகிய மணிமேகலா தெய்வம்; சாது சக்கரற்கு ஆர் அமுது ஈத்தோய் ஈது நின் பிறப்பு என்பது தெளிந்தே உவவனம் மருங்கில் உன்பால் தோன்றி-நீ முற்பிறப்பில் சாது சக்கரனுக்கு உண்டி கொடுத்தமையால் இங்ஙனம் நீ பிறந்துள்ளாய் என்னும் உண்மையைத் தெரிந்து கொண்டே நீ உவவனத்தின் உள்ளே புக்கபொழுது உன்னிடத்தே வந்து தோன்றி உன் வாழ்க்கை நெறி பிறழ்தல் கூடாது என்பது கருதியே நின்னை; மணிபல்லவத்திடைக் கொணர்ந்தது கேள்-உவவனத்தினின்றும் எடுத்துப் போய் மணிபல்லவத்திலே சேர்த்தது இச் செய்தியைக் கூர்ந்து கேட்பாயாக; என துவதிகன் உரைத்தலும்-என்று அக் கந்திற் பாவையிடத்து நிற்கும் தெய்வம் கூறா நிற்றலும்; அவதி அறிந்த அணி இழை நல்லாள் துயர்க்கடல் நீங்கி-இவ்வாற்றால் தன் பிறப்பின் எல்லையை அறிந்து கொண்ட மணிமேகலை துன்பமாகிய கடலினின்றும் கரை ஏறி; வலை ஒழி மஞ்ஞையின் மனமயக்கு ஒழிதலும் மலர் கதிரோன் உலகு துயில் எழுப்பினன்-வேடர் வீசிய வலையினின்றும் தப்பிய மயில் போல ஊழ் வினையினாலே எய்திய தன் மன மயக்கத்தினின்றும் ஒழியுமளவிலே கடலினின்றும் தோன்றுகின்ற கதிரவன் உலகிலுள்ள உயிர்களை உறக்கத்தினின்றும் எழுப்பினன்; என்பதாம்.

(விளக்கம்) ஊங்கண்-முன்பு. தூங்கெயிலெறிந்த நின்னூங் கணோர் நினைப்பின்(புறநா-39) போந்தைக் கண்ணி நின்னூங் கணோர் மருங்கிற் கடற் கடம் பொறிந்த காவலன் (சிலப். 28: 134-135) திரை எடுத்த-அழுந்தி. இறவாவண்ணம் கடலினின்றும் எடுத்த இக் கதையை, (சிலப்பதிகாரம், 15: 28 ஆம் அடி முதலியவற்றிற் காண்க) சாது சக்கரற்கு-சாது சக்கரனென்னும் முனிவனுக்கு. ஈது-இத்தன்மையை யுடையது. அவதி-எல்லை. 190. மலர் கதிரோன்: வினைத்தொகை.

இனி இக் காதையை-குழலி எழுந்து கேட்டு எழுந்து நீங்கி வெய்துயிர்த்துப் புலம்பி அழுதேங்கி அவாவுயிர்த்தெழுதலும் இருந்தெய்வம் உரைத்தலும், பூங்கொடி பொருந்தி, நின்பொருள் பேறுவேன் என தெய்வங்கூறும்; அங்ஙனங் கூறுந்தெய்வம் என்சொற்றேறு என மணிமேகலை எனக்கு அருள் என்றலும்; துவதிகனுரைக்கும் அங்ஙன முரைக்குந் துவதிகன் உரைத்தலும் நல்லாள் நீங்கி மயக்கொழிதலும் கதிரோன் துயிலெழுப்பினனென இயைத்துக் கொள்க.

கந்திற்பாவை வருவதுரைத்த காதை முற்றிற்று.
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 09:51:16 AM
22. சிறைசெய் காதை

(இருபத்திரண்டாவது மணிமகலை பொருட்டால் மடிந்தான் உதயகுமரனென்பது மாதவர் வாய்க் கேட்ட மன்னவன் மணிமேகலையை மந்திரியாகிய சோழிகவேனாதியாற் காவல் கொண்ட பாட்டு)

அஃதாவது-உதயகுமரன் கொலையுண்ட செய்தியை அவன் தந்தையாகிய சோழ மன்னனுக்கு அறிவித்த முனிவர்கள் அவன் வருந்தாமைப் பொருட்டு அவன் கொலையுண்ட காரணத்தையும் கூற, அது கேட்ட மன்னவன் வருத்தமும் சினமும் தவிர்ந்து மணிமேகலையைச் சிறையிட்ட செய்தியைக் கூறும் செய்யுள் என்றவாறு.

இதன்கண்-சம்பாபதி கோயிலை விடியற் காலத்தே வழிபாடு செய்ய வந்த மக்கள் உதயகுமரன் கொலையுண்ட செய்தியைச் சக்கரவாளத்தில் இருந்த மாதவருக்கெல்லாம் அறிவித்தனராக; அது கேட்ட அத் துறவோர் மணிமேகலையின்பால் சென்று நிகழ்ந்தவற்றை எல்லாம் தெரிந்துகொண்டு அரசன்பால் சென்று மனக்கினதாக வாழிய வேந்தே! என விளித்து இன்றேயல்ல எனத் தொடங்கி அந்நகரத்தின்கண் கன்றிய காமக் கள்ளாட் டயர்ந்து பத்தினிப் பெண்டிர்பாற் சென்றணுகியும் நற்றவப் பெண்டிர் பின்னுளம் போக்கியும் தீவினையுருப்ப உயிரீறு செய்தோர் பாராள் வேந்தே பண்டும் பலரால் எனத் தோற்றுவாய் செய்து பண்டைக் காலத்தில் அந்நகரத்தின்கண் காவிரியில் நீராடி வருகின்ற பார்ப்பனி மருதி என்பவளை அரசன்மகன் ஒருவன் கண்டு காமுற்று அவளை அழைக்க மருதி மனங்கலங்கி மண்திணி ஞாலத்து மழை வளந் தரூஉம் பெண்டிராயின் பிறர் நெஞ்சு புகாஅர் என அக் குற்றத்தைத் தன் மேலதாக்கிக் கொண்டு சதுக்கப்பூதத்தின் முன்னிலையில் சென்று யான் செய்குற்றம் யான் அறிகில்லேன் யான் பிறனுளம் புக்கேன் அதற்குக் காரணம் என்னை? என அழுது அத் தெய்வத்தை வினவுதலும் அதற்கு அத் தெய்வம் அவளுக்குக் கூறுகின்ற மறுமொழியும், விசாகை என்னும் பத்தினியின் வரலாறும், விசாகை தருமதத்தனுக்குக் கூறுகின்ற அறிவுரைகளும், ககந்தன் மகன் மற்றொருவன் விசாகைக்குப் பூமாலை சூட்டுதற்கு முயலுதலும், பூமாலையோடு உயர்த்திய அவன் கை மீண்டும் தாழ்த்த இயலாது போக, அதனால் அவன் செயலை அறிந்த அரசன் மகன் என்றும் நோக்காமல் அவனை வாளால் எறிந்து கொன்ற செய்தியும் ஆக அம் மாதவர் தம்முள் ஒரு மாதவன் கூற்றாக வருவனவும் மீண்டும் அம் மாதவன் உதயகுமரனுடைய இடங்கழி காமம் காரணமாக மணிமேகலையை நிழல் போலத் தொடர்ந்ததும் காயசண்டிகையின் கணவன் உதயகுமரனைக் கொன்றமையும் அரசனுக்கு எடுத்துக் கூறி இவை எல்லாம் ஊழ்வினையின் செயல் என அம் மன்னவன் உதயகுமரன்பால் வெறுப்புற்றவனாய் உதயகுமரன் உடலை ஈமத்து ஏற்றி மணிமேகலையையும் காவல் செய்க என்று சோழிக வேனாதி என்னும் கோத்தொழிலாளனுக்குக் கட்டளையிடுதலும் பிறவுமாகிய செய்திகள் பலவும் பயில்வோர் உளமுருகக் கூறப்படுகின்றன.

கடவுள் மண்டிலம் கார் இருள் சீப்ப
நெடு நிலைக் கந்தில் நின்ற பாவையொடு
முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர்
உதயகுமரற்கு உற்றதை உரைப்ப
சா துயர் கேட்டுச் சக்கரவாளத்து
மாதவர் எல்லாம் மணிமேகலை தனை
இளங்கொடி! அறிவதும் உண்டோ இது- என
துளங்காது ஆங்கு அவள் உற்றதை உரைத்தலும்
ஆங்கு அவள் தன்னை ஆர் உயிர் நீங்கிய
வேந்தன் சிறுவனொடு வேறு இடத்து ஒளித்து  22-010

மா பெருங் கோயில் வாயிலுக்கு இசைத்து
கோயில் மன்னனைக் குறுகினர் சென்று ஈங்கு
உயர்ந்து ஓங்கு உச்சி உவா மதிபோல
நிவந்து ஓங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய!
வேலும் கோலும் அருட்கண் விழிக்க!
தீது இன்று உருள்க நீ ஏந்திய திகிரி!
நினக்கு என வரைந்த ஆண்டுகள் எல்லாம்
மனக்கு இனிது ஆக வாழிய வேந்தே!
இன்றே அல்ல இப் பதி மருங்கில்
கன்றிய காமக் கள்ளாட்டு அயர்ந்து  22-020

பத்தினிப் பெண்டிர்பால் சென்று அணுகியும்
நல் தவப் பெண்டிர்பின் உளம் போக்கியும்
தீவினை உருப்ப உயிர் ஈறுசெய்தோர்
பார் ஆள் வேந்தே! பண்டும் பலரால்
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன்
தன் முன் தோன்றல் தகாது ஒழி நீ எனக்
கன்னி ஏவலின் காந்த மன்னவன்
இந் நகர் காப்போர் யார்? என நினைஇ
நாவல் அம் தண் பொழில் நண்ணார் நடுக்குறக்
காவல் கணிகை தனக்கு ஆம் காதலன்  22-030

இகழ்ந்தோர்க் காயினும் எஞ்சுதல் இல்லோன்
ககந்தன் ஆம் எனக் காதலின் கூஉய்
அரசு ஆள் உரிமை நின்பால் இன்மையின்
பரசுராமன் நின்பால் வந்து அணுகான்
அமர முனிவன் அகத்தியன் தனாது
துயர் நீங்கு கிளவியின் யான் தோன்று அளவும்
ககந்தன் காத்தல்! காகந்தி என்றே
இயைந்த நாமம் இப் பதிக்கு இட்டு ஈங்கு
உள்வரிக் கொண்டு அவ் உரவோன் பெயர் நாள்
தெள்ளு நீர்க் காவிரி ஆடினள் வரூஉம்  22-040

பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின்
யாப்பறை என்றே எண்ணினன் ஆகி
காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்
நீ வா என்ன நேர் இழை கலங்கி
மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம்
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர்
புக்கேன் பிறன் உளம் புரி நூல் மார்பன்
முத் தீப் பேணும் முறை எனக்கு இல் என
மா துயர் எவ்வமொடு மனைஅகம் புகாஅள்
பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக்   22-050

கொண்டோர் பிழைத்த குற்றம் தான் இலேன்
கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிதாயினேன்
வான் தரு கற்பின் மனையறம் பட்டேன்
யான் செய் குற்றம் யான் அறிகில்லேன்
பொய்யினைகொல்லோ பூத சதுக்கத்துத்
தெய்வம் நீ எனச் சேயிழை அரற்றலும்
மா பெரும் பூதம் தோன்றி மடக்கொடி!
நீ கேள் என்றே நேர் இழைக்கு உரைக்கும்
தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் எனப் பெய்யும் பெரு மழை என்ற அப்  22-060

பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்!
பிசியும் நொடியும் பிறர் வாய்க் கேட்டு
விசி பிணி முழவின் விழாக் கோள் விரும்பி
கடவுள் பேணல் கடவியை ஆகலின்
மடவரல்! ஏவ மழையும் பெய்யாது
நிறை உடைப் பெண்டிர் தம்மே போல
பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை
ஆங்கு அவை ஒழிகுவை ஆயின் ஆய் இழை!
ஓங்கு இரு வானத்து மழையும் நின் மொழியது
பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போலக்  22-070

கட்டாது உன்னை என் கடுந் தொழில் பாசம்
மன் முறை எழு நாள் வைத்து அவன் வழூஉம்
பின்முறை அல்லது என் முறை இல்லை
ஈங்கு எழு நாளில் இளங்கொடி நின்பால்
வாங்கா நெஞ்சின் மயரியை வாளால்
ககந்தன் கேட்டு கடிதலும் உண்டு என
இகந்த பூதம் எடுத்து உரைசெய்தது அப்
பூதம் உரைத்த நாளால் ஆங்கு அவன்
தாதை வாளால் தடியவும் பட்டனன்
இன்னும் கேளாய் இருங் கடல் உடுத்த  22-080

மண் ஆள் செவத்து மன்னவர் ஏறே!
தருமதத்தனும் தன் மாமன் மகள்
பெரு மதர் மழைக் கண் விசாகையும் பேணித்
தெய்வம் காட்டும் திப்பிய ஓவியக்
கைவினை கடந்த கண் கவர் வனப்பினர்
மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு
ஒத்தனர் என்றே ஊர் முழுது அலர் எழ
புனையா ஓவியம் புறம் போந்தென்ன
மனைஅகம் நீங்கி வாள் நுதல் விசாகை
உலக அறவியினூடு சென்று ஏறி   22-090

இலகு ஒளிக் கந்தின் எழுதிய பாவாய்!
உலகர் பெரும் பழி ஒழிப்பாய் நீ என
மா நகருள்ளீர்! மழை தரும் இவள் என
நா உடைப் பாவை நங்கையை எடுத்தலும்
தெய்வம் காட்டித் தௌத்திலேன் ஆயின்
மையல் ஊரோ மன மாசு ஒழியாது
மைத்துனன் மனையாள் மறு பிறப்பு ஆகுவேன்
இப் பிறப்பு இவனொடும் கூடேன் என்றே
நற்றாய் தனக்கு நல் திறம் சாற்றி
மற்று அவள் கன்னி மாடத்து அடைந்த பின்  22-100

தருமதத்தனும் தந்தையும் தாயரும்
பெரு நகர் தன்னைப் பிறகிட்டு ஏகி
தாழ்தரு துன்பம் தலையெடுத்தாய் என
நா உடைப் பாவையை நலம் பல ஏத்தி
மிக்கோர் உறையும் விழுப் பெருஞ் செல்வத்துத்
தக்கண மதுரை தான் சென்று அடைந்த பின்
தருமதத்தனும் தன் மாமன் மகள்
விரி தரு பூங் குழல் விசாகையை அல்லது
பெண்டிரைப் பேணேன் இப் பிறப்பு ஒழிக! எனக்
கொண்ட விரதம் தன்னுள் கூறி   22-110

வாணிக மரபின் வரு பொருள் ஈட்டி
நீள் நிதிச் செல்வன் ஆய் நீள் நில வேந்தனின்
எட்டிப் பூப் பெற்று இரு முப்பதிற்று யாண்டு
ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன்
அந்தணாளன் ஒருவன் சென்று ஈங்கு
என் செய்தனையோ இரு நிதிச் செல்வ?
பத்தினி இல்லோர் பல அறம் செய்யினும்
புத்தேள் உலகம் புகாஅர் என்பது
கேட்டும் அறிதியோ? கேட்டனைஆயின்
நீட்டித்திராது நின் நகர் அடைக! எனத்  22-120

தக்கண மதுரை தான் வறிது ஆக
இப் பதிப் புகுந்தனன் இரு நில வேந்தே!
மற்று அவன் இவ் ஊர் வந்தமை கேட்டு
பொன் தொடி விசாகையும் மனைப் புறம்போந்து
நல்லாள் நாணாள் பல்லோர் நாப்பண்
அல்லவை கடிந்த அவன்பால் சென்று
நம்முள் நாம் அறிந்திலம் நம்மை முன் நாள்
மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன
ஆறு ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என்
நாறு ஐங் கூந்தலும் நரை விராவுற்றன  22-130

இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ?
உளன் இல்லாள! எனக்கு ஈங்கு உரையாய்
இப் பிறப்பு ஆயின் யான் நின் அடி அடையேன்
அப் பிறப்பு யான் நின் அடித்தொழில் கேட்குவன்
இளமையும் நில்லாது யாக்கையும் நில்லாது
வளவிய வான் பெருஞ் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத் துணை ஆவது
தானம் செய் என தருமதத்தனும்
மாமன் மகள்பால் வான் பொருள் காட்டி  22-140

ஆங்கு அவன் அவளுடன் செய்த நல் அறம்
ஓங்கு இரு வானத்து மீனினும் பலவால்
குமரி மூத்த அக் கொடுங் குழை நல்லாள்
அமரன் அருளால் அகல் நகர் இடூஉம்
படு பழி நீங்கி பல்லோர் நாப்பண்
கொடி மிடை வீதியில் வருவோள் குழல்மேல்
மருதி பொருட்டால் மடிந்தோன் தம்முன்
கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொளச்
சுரி இரும் பித்தை சூழ்ந்து புறந் தாழ்ந்த
விரி பூ மாலை விரும்பினன் வாங்கி  22-150

தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம் என
எல் அவிழ் தாரோன் இடுவான் வேண்டி
மாலை வாங்க ஏறிய செங் கை
நீலக் குஞ்சி நீங்காது ஆகலின்
ஏறிய செங் கை இழிந்திலது இந்தக்
காரிகை பொருட்டு எனக் ககந்தன் கேட்டுக்
கடுஞ் சினம் திருகி மகன் துயர் நோக்கான்
மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன்
ஊழிதோறு ஊழி உலகம் காத்து
வாழி எம் கோ மன்னவ! என்று   22-160

மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும்
வீயா விழுச் சீர் வேந்தன் கேட்டனன்
இன்றே அல்ல என்று எடுத்து உரைத்து
நன்று அறி மாதவிர்! நலம் பல காட்டினிர்
இன்றும் உளதோ இவ் வினை? உரைம் என
வென்றி நெடு வேல் வேந்தன் கேட்ப
தீது இன்று ஆக செங்கோல் வேந்து! என
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைக்கும்
முடி பொருள் உணர்ந்தோர் முது நீர் உலகில்
கடியப் பட்டன ஐந்து உள அவற்றில்  22-170

கள்ளும் பொய்யும் களவும் கொலையும்
தள்ளாது ஆகும் காமம் தம்பால்
ஆங்கு அது கடிந்தோர் அல்லவை கடிந்தோர் என
நீங்கினர் அன்றே நிறை தவ மாக்கள்
நீங்கார் அன்றே நீள் நில வேந்தே!
தாங்கா நரகம் தன்னிடை உழப்போர்
சே அரி நெடுங் கண் சித்திராபதி மகள்
காதலன் உற்ற கடுந் துயர் பொறாஅள்
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தனள்
மற்று அவள் பெற்ற மணிமேகலை தான்  22-180

முற்றா முலையினள் முதிராக் கிளவியள்
செய்குவன் தவம் என சிற்றிலும் பேர் இலும்
ஐயம் கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள்
ஆங்கு அவள் அவ் இயல்பினளே ஆயினும்
நீங்கான் அவளை நிழல் போல் யாங்கணும்
காரிகை பொருட்டால் காமம் காழ்கொள
ஆர் இருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன்
காயசண்டிகை வடிவு ஆயினள் காரிகை
காயசண்டிகையும் ஆங்கு உளள் ஆதலின்
காயசண்டிகை தன் கணவன் ஆகிய  22-190

 வாய் வாள் விஞ்சையன் ஒருவன் தோன்றி
ஈங்கு இவள் பொருட்டால் வந்தனன் இவன் என
ஆங்கு அவன் தீவினை உருத்தது ஆகலின்
மதி மருள் வெண்குடை மன்ன! நின் மகன்
உதயகுமரன் ஒழியானாக
ஆங்கு அவள் தன்னை அம்பலத்து ஏற்றி
ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து
காயசண்டிகை தன் கணவன் ஆகிய
வாய் வாள் விஞ்சையன் தன்னையும் கூஉய்
விஞ்சை மகள்பால் இவன் வந்தனன் என  22-200

வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி
ஆங்கு அவன் தன் கை வாளால் அம்பலத்து
ஈங்கு இவன் தன்னை எறிந்தது என்று ஏத்தி
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும்
சோழிக ஏனாதி தன் முகம் நோக்கி
யான் செயற்பாலது இளங்கோன் தன்னைத்
தான் செய்ததனால் தகவு இலன் விஞ்சையன்
மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல் இன்றுஎனின் இன்றால் சூ
மகனை முறைசெய்த மன்னவன் வழி ஓர்  22-210

துயர் வினையாளன் தோன்றினான் என்பது
வேந்தர் தம் செவி உறுவதன் முன்னம்
ஈங்கு இவன் தன்னையும் ஈமத்து ஏற்றி
கணிகை மகளையும் காவல் செய்க என்றனன்
அணி கிளர் நெடு முடி அரசு ஆள் வேந்து என்  22-215

உரை

சக்கரவாளத்து முனிவர் செயல்

1-10: கடவுள்............ஒளித்து

(இதன் பொருள்) கடவுள் மண்டிலம் கார் இருள் சீப்ப-கடவுள் தன்மையுடைய ஞாயிற்று மண்டிலம் குணகடலில் தோன்றி உலகத்தைக் கவ்வியிருக்கின்ற கரிய இருளை அகற்றுகின்ற நாட்காலத்தே யெழுந்து; நெடுநிலைக் கந்தின் நின்ற பாவையொடு? முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர்-நெடிய நிலைத்தூணின்கண் உறைகின்ற துவதிகன் என்னும் தெய்வத்தோடு சம்பாபதியின் திருக்கோயிலையும் வழிபாடு செய்கின்றவர்; உதயகுமரற்கு உற்றதை உரைப்ப-உதயகுமரன் கொலையுண்டு கிடந்தமையைக் கண்டு வந்து தமக்குக் கூறுதலாலே; சக்கர வாளத்து மாதவர் எல்லாம்-சக்கரவாளக் கோடத்தில் உலகவறவியின்கண் உறைகின்ற துறவோர் எல்லாம்; சாதுயர் கேட்டு அரசிளங்குமரன் இறந்தமையால் உண்டான பெருந்துயரம் தரும் செய்தியைக் கேட்டு; மணிமேகலையை அணுகி இளைய பூங்கொடி போல்வாய் இந்நிகழ்ச்சியை நீ அறிந்ததும் உண்டோ என்று வினவ; ஆங்கு அவள் தன்னை ஆர் ,உயிர் நீங்கிய வேந்தன் சிறுவனோடு வேறு இடத்து ஒளித்து-அம் மணிமேகலையையும் அரிய உயிர் நீங்கிய உதயகுமரன் உடம்பையும் வெவ்வேறிடத்து மறைத்து வைத்த பின்னர்; என்க

(விளக்கம்) கடவுள் மண்டிலம் என்றது கடவுள் தன்மையுடைய ஞாயிற்று மண்டிலத்தை என்னை? அம் மண்டிலம் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய இறைமைத் தொழில் மூன்றையும் செய்தலான் என்க. கந்தின் நின்ற பாவை-கந்திற் பாவை மேனின்ற தெய்வம். முதியோள்: சம்பாபதி. சாதுயர்-சாவினால் துயர்தரும் செய்தி. மணிமேகலைதனை அணுகி என்க. இது-இந் நிகழ்ச்சி மெய்யுணர்வு பெற்று மேனிகழ்வனவற்றை அறிந்தவள் ஆதலின் ஆஞ்சாமல் பட்டாங்குக் கூறினள் என்பார் துளங்காது உற்றதை உரைத்தலும் என்றார். வேறிடத்து என்றது வெவ்வேறிடத்து என்பதுபட நின்றது. அவளுக்குப் பிறரால் துன்பம் நிகழாமைப் பொருட்டும் அச் செய்தி பரவாமைப் பொருட்டும் சிறுவன் உடம்பையும் அவளையும் ஒளித்து வைத்தனர் என்பது குறிப்பு.

துறவோர் மன்னன்பால் செல்லுதல்

11-18: மாபெரும்.......வேந்தே!

(இதன் பொருள்) மாபெருங் கோயில் வாயிலுக்கு இசைத்து கோயில் மன்னனை குறுகினர் சென்று- மிகப் பெரிய அரண்மனையைக் காக்கும் வாயில் காவலருக்குத் தம் வரவினைக் கூறி அவர் வாயிலாய் மன்னவனுடைய உடம்பாடு பெற்று அரண்மனையினுள்ளே புகுந்து அரசனை அணுகிச் சென்று வாழ்த்துபவர்; வேந்தே ஈங்கு உயர்ந்து ஓங்கு உச்சி உவாமதி போல நவந்து ஓங்கு வெள் குடை மண்ணகம் நிழல் செய-அரசே நின் திருஓலக்கத்தின் மிக உயர்ந்து உச்சியில் அமைந்த முழுத் திங்கள் போன்று விளங்குகின்ற நினது வெண்கொற்றக்குடை இந் நிலவுலகம் முழுவதும் தண்ணிழல் செய்வதாக; வேலும் கோலும் அருள் கண் விழிக்க- நின்னுடைய வெற்றி வேலும் செங்கோலும் உயிர்களின் பால் அருளோடு நோக்குவனவாக; நீ ஏந்திய திகிரி தீது இன்றி உருள்க-நீ ஏந்தியிருக்கின்ற ஆணைச்சக்கரம் தடையின்றி உருள்வதாக; நினக்கு என வரைந்த ஆண்டுகள் எல்லாம் மனக்கு இனிதாக வாழிய-பெருமானே நினக்கென்று பால்வரை தெய்வம் வரையறைப்படுத்திய நின் அகவையாகிய ஆண்டுகள் எல்லாம் நீ நின் மனத்திற்கு இனிதாக நன்கு வாழ்ந்திருப்பாயாக என்று வாழ்த்தி; என்க.

(விளக்கம்) (9) மாதவர் ஒளித்து இசைத்து சென்று வாழ்த்துபவர் வேந்தே குடை நிழல் செய, வேலும் கோலும் விழிக்க, திகிரி உருள்க நீ வாழிய என்று இயைத்திடுக. நினக்கென்ப பால்வரை தெய்வம் வரைந்த ஆண்டுகள் என்க. மனக்கு-மனத்திற்கு.

துறவோர் அச் செய்தி கேட்டு அரசன் அதிர்ச்சி எய்தாமலும் சினவாமலும் அமைதி செய்தற்பொருட்டு நயம்பட உரைசெயத் தொடங்குதல்

19-24: இன்றே............பலரால்

(இதன் பொருள்) இன்றே அல்ல-இன்று மட்டுமல்ல; பார் ஆள் வேந்தே நிலவுலகத்தைச் செங்கோன் முறை பிறழாது ஆளுகின்ற அரசனே! இப் பதி மருங்கில்-இப் பூம்புகார் நகரத்திலேயே; கன்றிய காமக் கள்ளாட்டு அயர்ந்து-முதிர்ந்த காமமாகிய கள்ளையுண்டு களித்து ஆடி; பத்தினிப் பெண்டிர் பால் சென்று அணுகியும் நல் தவப் பெண்டிர் பின் உளம் போக்கியும்-கற்புடைய மகளிரிடத்தே காம நோக்கத்துடனே சென்றும் நல்ல தவ ஒழுக்கத்தை மேற்கொண்டுள்ள மகளிரின் பின் தம் நெஞ்சத்தைச் செலுத்தியும்; தீவினை உருப்ப உயிர் ஈறு செய்தோர் பண்டும் பலர்-தமது ஊழ்வினை உருத்து வந்து தம் பயனை ஊட்டுதலாலே தம்முயிர்க்குத் தாமே இறுதியைத் தேடிக் கொண்டோர் பண்டைக் காலத்திலும் பலர் ஆவர்; என்க.

(விளக்கம்) கன்றிய காமம்-முதிர்ந்த காமம். போலித் தவமும் உண்மையால் அதனினீக்குதற்கு நற்றவம் என்றார். இன்றே யல்ல என்றது இன்றும் அத்தகையார் உளர் எனக் குறிப்பால் உணர்தற் பொருட்டு. ஆல்: அசை.

இதுவுமது

25-32: மன்மருங்கு.............கூஉய்

(இதன் பொருள்) மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன் தம்முன் தோன்றல் தகாது ஒழி நீ என-வேந்தருடைய குலத்தை ஒழித்த பரசு என்னும் படைக்கலத்தையுடைய திருமாலாகிய பரசுராமன் முன்னிலையிலே காணப்படுதல் கூடாது ஆதலின் அவன் முன் தோன்றாது ஒழி நீ என்று; கன்னி ஏவலின் காந்த மன்னவன்-காவல் தெய்வமாகிய சம்பாபதி கட்டளை யிட்டமையால் காந்தன் என்னும் பெயரையுடைய வேந்தன்; இந் நகர் காப்போர் யார் என நினைஇ-அவ்வாறு யான் இந் நகரத்தை விட்டு நீக்கினேனானால் இந்த நகரத்தைப் பாதுகாப்பவர் யார் என்று தனக்குள் சூழ்ந்து; நாவலம் தண் பொழில் நண்ணார் நடுக்குற-இந் நாவலந் தீவில் பகைவர் அஞ்சி நடுங்குதற்குக் காரணமான வீரத்தோடு; காவல் கணிகை தனக்கு ஆம் காதலன் இகழ்ந்தோர் காயினும் எஞ்சுதல் இல்லோன்-கற்புக் காவலையுடைய கணிகை ஒருத்தியின்பால் தனக்குப் பிறந்த மகனும் பகைவர் சினந்து போர் செய்யினும் மறங்குறையாதவனும் ஆகிய; காந்தன் ஆம் என காதலின் கூஉய்-ககந்தன் செங்கோலோச்சுதற்குத் தகுந்தவனாவான் என்று துணிந்து மகனன்பினோடு அவனை அழைத்து; என்க.

(விளக்கம்) மன்மருங்கு-அரசர் குலம் மழுவாள்-பரசு என்னும் படை; நெடியோன்-திருமால்; என்வே பரசுராமன் என்றாயிற்று கன்னி என்றது கொற்றவையை; காந்த மன்னவன்-சோழர் குலத்து ஒரு மன்னன் நினைஇ-நினைத்து; நண்ணார்-பகைவர்; காவற் கணிகை ஒன்வன்றனக்கே உரிமை பூண்டு ஒழுகும் காமக்கிழத்தி, களத்தாடும் கூத்தி என்பாரும் இராக்கிடை வேசை என்பாரும் உளர். ஈண்டு அவ்வுரை போலி. எஞ்சுதல்-மறங்குறைதல்; அஃதாவது புறங்கொடுத்தல். ககந்தன் காந்தனக்கும் காமக் கிழத்திக்கும் பிறந்த மகன் ஆதலின் மகவன்போடு அழைத்தான் என்பது கருத்து.

ககந்தன் மகன் மருதியைக் காமுறுதல்

33-44: அரசாள்................கலங்கி

(இதன் பொருள்) அரசாள் உரிமை நின்பால் இன்மையின் பரசுராமன் நின்பால் வந்து அணுகான்-மைந்தனே! நாட்டை ஆளுகின்ற உரிமை நினக்கில்லாமையாலே பரசுராமன் உன்னோடு போர் செய்தற்கு வருவானல்லன்; யான் அமரமுனிவன் தனாது துயர்நீங்கு கிளவியின் தோன்று அளவும் ககந்தன் காத்தல்-யான் சென்று கடவுள் தன்மையுடைய அகத்தியருடைய வரமாகிய என் துன்பம் நீங்குதற்குக் காரணமான அருளுரை பெற்று மீண்டு வருமளவும் ககந்தன் இந் நாட்டினைப் பாதுகாப்பாயாக என்று சொல்லி; காகந்தி என்று இயைந்த நாமம் இப் பதிக்கு இட்டு-இந் நகரத்திற்கும் காகந்தி நகரம் என்று ஒரு பெயருஞ் சூட்டி; ஈங்கு உள்வரிக் கொண்டு அவ்வுரவோன் பெயர் நாள்-இந் நகரத்தினின்றும் மாறுவேடம் புனைந்து கொண்டு அறிவு சான்ற அக் காந்த மன்னன் இந் நகரத்தை விட்டுச் சென்ற பின்னர் ஒரு நாள்; காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்-காவிரிக் கரையின்கண் அக் ககந்த மன்னனுடைய இளைய மகன்; தெள்ளுநீர் காவிரி ஆடினன் வரூஉம் பார்ப்பனி மருதியை-தெளிந்த நீரையுடைய காவிரியாற்றின்கண் நீராடி வருகின்ற பார்ப்பனியாகிய மருதி என்பவளைக் கண்ணுற்று பாங்கோர் இன்மையின் யாப்பறை என்று எண்ணினன் ஆகி நீ வா என்ன-அவள் பக்கத்திலே யாரும் இல்லாமையால் அவள் அழகில் மயங்கி இவள் கற்பு என்னும் திட்பம் இல்லாதவள் என்று கருதியவனாய் நங்காய்! இங்கு வருவாயாக என்று தன் காமம் தோன்றும் இன்மொழியாலே அழையா நிற்ப; நேரிழை கலங்கி-அழகிய அணிகலன் அணிந்த அப் பார்ப்பனி அது கேட்டு நெஞ்சு கலங்கி; என்க.

(விளக்கம்) காமக்கிழத்தி வயிற்றிற் பிறந்த மகனாதலின் அரசாள் உரிமை இலன் என்றவாறு ஆகவே நீ அரசன் குலத்தை வேராறுப்பேன் என்பதே அவன் கொண்ட சூள் ஆதலின் நின்னை அணுகான் என்பது குறிப்பு. கடவுள் முனி என்றது கடல் குடித்தமையாலும் இமையத் திறைவனோடு துலையொக்க வீற்றிருத்தலாலும் இன்னோரன்ன அவன் சிறப்பினைக் குறித்தபடியாம். ஆடினள்: முற்றெச்சம். பாங்கோர்-பக்கத்திலிருப்பவர். பாங்கோர் இன்மையின் என்றது அவளை யாப்பறை என்று நினைத்தற்கும் வானென்றழைத்தற்கும் ஏதுவாக நின்றது. நீவா என்று தன் காமம் தோன்ற அழைக்க என்க. நேரிழை: மருதி.

மருதியின் மாண்புறு செயல்

54-56: மண்திணி.............அரற்றலும்

(இதன் பொருள்) மண்திணி ஞாலத்து மழை வளம் தரூஉம் பெண்டிராயின் பிறர் நெஞ்சு புகா அர் மண்ணாகிய அணுச் செறிந்த இந் நிலவுலகத்தில் பெய்யென்று சொல்லி மழை பெய்விக்கும் தெய்வத்தன்மையுடைய கற்பென்னும் திட்பமுடைய மகளிராயின் கணவர் நெஞ்சில் புகுவதன்றி மற்றையோர் நெஞ்சில் காமப் பொருளாகப் புலப்படார்; பிறன் உளம் புக்கேன்-அளியேன் பிறன் நெஞ்சத்தில் காமப் பொருளாகப் புகுந்தேன்! ஆயின் என் கற்பென்னாயிற்று?; புரிநூல் மார்பன் முத்தீ பேணும் முறை எனக்கு இல் என மா துயர் எவ்வமொடு மனை அகம் புகாஅள்-இனி முப்புரி நூல் அணிந்த மார்பினையுடைய பார்ப்பனன் வளர்க்கின்ற வேள்வித் தீயைக் காவல் செய்யும் தகுதி எனக்கு இல்லையாயிற்று என்று மிகவும் பெரிய துன்பத்தோடு தன் இல்லத்தின்கண் புகாமல்; பூத சதுக்கம் புக்கனள் மயங்கி-பூதம் நிற்கும் சதுக்கத்தையடைந்து காரணம் தெரியாமல் மயங்கி அச் சதுக்கத்தில் எழுந்தருளி இருக்கின்ற தெய்வமாகிய பூதத்தை நோக்கிக் கூறுபவள்; கொண்டோன் பிழைத்த குற்றம் தான் இலேன் கண்டோன் நெஞ்சில் காப்பு எளிது ஆயினேன்-தெய்வமே! யான் என் கணவன் திறத்திலே செய்த குற்றம் ஒன்றேனும் இலேன் அங்ஙனமிருப்பவும் என்னைக் கண்ட ஏதிலேன் ஒருவன் நெஞ்சினும் புகுந்து கரந்திருத்தற்குரிய எளியள் ஆயினேன்; வான் தரும் கற்பின் மனை அறம் பட்டேன்யானோ தருதற்கியன்ற கற்பொழுக்கத்தோடு இல்லறத்தின் கண் ஒருவனுக்கு வாழ்க்கைத் துணையாய்ப் புகுந்தேன்; யான் செய் குற்றம் யான் அறிகில்லேன்-யான் அங்ஙனம் பிறன் உளம் புகுதற்குரியதாகச் செய்த குற்றம் ஒன்றினையும் யான் அறிகின்றிலேன்; பூத சதுக்கத்து தெய்வம் நீ பொய்யினை கொல்லோ எனச் சேயிழை தன்மையுடையாய் இப்பூத சதுக்கத்துக் கண்கண்ட தெய்வமாக எழுந்தருளியிருந்த நீ இப்பொழுது இல்லை ஆயினையோ என்று சொல்லி அப் பார்ப்பினி அழா நிற்ப என்க.

(விளக்கம்) மண் என்றது மண்ணின் துகளை. மழை வளம் தருதல் பெய்யென்று ஏவுமளவிலே மழை பெய்விக்கும் தெய்வத்தன்மை மண்திணி ஞாலத்து மழைவளம் தரூஉம் பெண்டிராயின் பிறர் நெஞ்சு புகாஅர் என்னும் இவ்வடிகள் வேறெங்கும் காணப்படாத அரியாதொரு கற்பிலக்கணமாகத் திகழ்தல் உணர்க. இத்தகைய இலக்கணம் பிற மொழிக்கண்ணும் காண்டல் அரிது போலும், பிறனுளம் புக்கமையால் யான் கற்புடையேன் அல்லேன் போலும் கற்பிலேன் ஆதற்குரிய குற்றம் யான் என் நெஞ்சறியச் செய்திலேனே என்று இப் பார்ப்பினி அரற்றுதல் அவள் சிறப்பினை நன்கு விளக்குகின்றது.

சதுக்கப் பூதம் அல்லவை செய்வோரை அறைந்துண்ணும் இயல்புடையது. அது வாய்மையாயின் கற்பில் பிழைத்த என்னை அஃது அறைந்து உண்டிருத்தல் வேண்டும்; அல்லது யான் கற்புடையேன் ஆயின் என்னை நீ வா என்று அழைத்த அரசன் மகனை அறைந்து கொன்றிருத்தல் வேண்டும். இரண்டும் நிகழாமையின் அத் தெய்வம் இப்பொழுது ஈண்டில்லை போலும் என்னும் கருத்தினால் பொய்யினை கொல்லோ பூத சதுக்கத்துத் தெய்வம் நீ என்றாள்; பொய்யிளை இல்லையாயினை.

மருதி முன்னிலையில் சதுக்கப் பூதம் தோன்றி அவள் வினாவிற்கு விடையிறுத்தல்

57-97: மாபெரும்........இல்லை

(இதன் பொருள்) மாபெரும் பூதம் தோன்றி நீ கேள் என்று நேரிழைக்கு உரைக்கும்-அவ்வாறு மருதியின் முன்னர் மிகப் பெரிய உருவத்தோடு சதுக்கப் பூதம் தோன்றி மடப்பமுடைய நங்காய்! நீ யான் கூறுவதனைக் கேட்பாயாக என்று அம் மருதிக்குக் கூறும்:-தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய் எனப் பெருமழை பெய்யும் என்ற-தனக்கென்ப பிறிதொரு தெய்வம் கொண்டு தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு நாள் தோறும் துயிலெழும் பொழுதே அவன் திருவடிகளைத் தொட்டுக் கை கூப்பித் தொழுது எழுகின்ற கற்புடையவள் பெய் என்று பிணிக்கு மளவிலே பெரிய முகில் மழை பெய்யும் என்று திருவாய் மலர்ந்தருளிய; அப் பொய்யில் புலவன் பொருள் உரைதேறாய்-அந்தத் தெய்வப் புலமைத் திருவள்ளுவருடைய பொருள் பொதிந்த அறிவுரையைப் பயின்றிருந்தும் அதன் பொருளைத் தெளியாயாய் நீ; பிறர்வாய் பிசியும் நொடியும் கேட்டு விசி பிணிமுழவின் விழாக்கோள் விரும்பி கடவுள் பேணல் கடவியை ஆகலின்-ஏதிலார் கூறுகின்ற பிசியையும் நொடியையும் கேட்டு வாய்மை என்று கருதி அவரோடு கூடி வலித்துக் கட்டிய வார்க்கட்டினையுடைய முழவு முழங்குகின்ற திருவிழாக் கொள்ளும் காட்சியைப் பெரிதும் விரும்பிப் பிற தெய்வங்களையும் வழிபடுகின்ற செயலை ஒரு கடப்பாடாகக் கைக்கொண்டுள்ளனையாதலின்; மடவரல் ஏவ மழையும் பெய்யாது-மடப்பம் வருதலையுடைய நீ இப்பொழுது ஏவினால் மழையும் நின் ஏவல் கேட்டுப் பெய்யாது; நிறை உடைப் பெண்டிர் தம்மே போல பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை-மேற்கூறிய கற்பு நிறைவினையுடைய மகளிர் போல நின்னை நினைக்கும் பிறருடைய நெஞ்சத்தைச் சுடுகின்ற அத் தெய்வத் தன்மையும் நின்பால் இல்லை காண்; என்க.

(விளக்கம்) சதுக்கப் பூதம்-இதன் வரலாற்றைச் சிலப்பதிகாரம் 5: 128 ஆம் அடி முதலியவற்றால் உணர்க. இது தவம் மறைந்து ஒழுகும் தன்மையிலாளர் முதலிய அறுவகையினரைத் தன் பாசத்தால் கட்டிப் புடைத்துண்ணும் ஆதலால் அப் பூதம் கற்பிறந்தவளாகிய தன்னையும் தன்பால் தவறு செய்த ககந்தன் மகனையும் புடைத்துண்ணாமையின் நீ பொய்த்தனையோ என்று பழித்தமையின், அது பொறாத அத் தெய்வம் உரைத்தது என்று மாதவர் மன்னனுக்குக் கூறுகின்றனர் என்றுணர்க. இதன்கண் பொய்யில் புலவன் என்றது திருவள்ளுவரை; இப் புலவர்,

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை   (குறள், 55)

எனவரும் திருக்குறளைப் பொன்னே போல் போற்றியெடுத்து இக் காப்பியத்துள் முழுமையாக அமைந்திருத்தலும், வள்ளுவரைப் பொய்யில் புலவன் எனவும் அவர் உரையைப் பொருளுரை எனவும் பாராட்டியிருத்தலும் பண்டைக் காலத்தே திருக்குறள் பெற்றிருந்த நன்மதிப்பை நன்கு வெளிப்படுத்திக் காட்டும். பிசி-பிதிர் இக் காலத்தே புதிர் என்பதுமது. நொடி-விடுகதை. விழாக் கோள்-திருவிழாக் காணல். கடவியை-கடப்பாடாக உடையை மடவரல்: முன்னிலைப் புறமொழி. நிறை-கற்பு. கற்புடையாரைக் காமுகக்கயவர் நினைக்கும் பொழுதே அவர் நெஞ்சே அவரைச் சுடும். நீ கணவனை யன்றியும் வேறு தெய்வங்களையும் தொழுதல் உண்டாதலின் உனது கற்புடைமை அந்தக் தெய்வத் தன்மையை இழந்து விட்டது. இக் காரணத்தால் கற்புக் குறைபடினும் நீ அலவலைப் பெண்டிர் அல்லை ஆகலின் நின்னை என் பாசம் கட்டா தொழிந்தது என்று அத் தெய்வம் மருதிக்கு அமைதி கூறியபடியாம். மேலே ககந்தன் மகனைக் கட்டாமைக்கு அமைதி கூறுகின்றது.

இதுவுமது

68-77: ஆங்கவை.........செய்தது

(இதன் பொருள்) ஆங்கு அவை ஒழிகுவை ஆயின்-இவ்விரு வகை ஒழுக்கங்களையும் கை விடுவாயாயின்; ஆயிழை ஓங்கு இரு வானத்து மழையும் நின் மொழியது-பார்ப்பனியே உயர்ந்த பெரிய வானத்தின் கண்ணதாகிய மழையும் நின் ஏவலன்படி ஒழுகுவதாம்; பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போல என் கடுந்தொழிற் பாசம் உன்னைக் கட்டாது-தாம் விரும்பியபடி தீய வழிகளிலே ஒழுகுகின்ற அவலைப் பெண்டிரைக் கட்டுவது போலக் கடிய தொழிலையுடைய என்னுடைய கயிறு உன்னைக் கட்டாது; மன்முறை எழுநாள் வைத்து அவன் வரூஉம் பின் முறை அல்லது என்முறை இல்லை-அரசன் தீவினையாளரை ஏழு நாள்களுள் ஒறுத்தல் வேண்டும் ஆதலின் அரசனுக்குரிய ஏழு நாளையும் இடையில் வைத்துப் பார்த்து அரசன் தன் முறையில் வழுவின் பின் யான் முறை செய்வதல்லது யான் ஏழு நாள் கத்துள் அவனை ஒறுப்பது என் முறையில்லை; ஈங்கு எழு நாளில் இளங்கொடி நின்பால் வாங்கா நெஞ்சின் மயரியைக் கேட்டு வாளால் ககந்தன் கடிதலும் உண்டு என-இற்றை நாளிலிருந்து ஏழுநாள் அகவையின் இளைய பூங்கொடி போல்வாய் நின்னிடத்தே நின்றும் மீட்க மாட்டாத நெஞ்சத்தின்கண் மயக்கத்தையுடைய தன் மகன் செய்த பிழையை வினவித் தெரிந்து தான் தன் வாளாலேயே அவனைக் ககந்த மன்னன் எறிந்து தொலைத்தலும் உண்டாகும் என்று சொல்லி; இகந்த பூதம் எடுத்து உரை செய்தது. தீவினையைக் கடந்த அப் பூதம் இங்ஙனம் காரணம் எடுத்துக் கூறி மருதிக்கும் அறிவுறுத்தியது; என்க.

(விளக்கம்) ஆங்கு அவை என்றது பிசியும் நொடியும் கேட்டலும் பிற கடவுளைப் பேணலும் ஆகிய அவற்றை என்றவாறு. அவற்றைக் கை விட்டால் நிதானும் தெய்வங்களாலும் தொழத் தகுந்த கற்புடைத் தெய்வமாகத் திகழ்வாய். தம் மனம் விரும்பியபடி நடக்கும் பெண்டிரைக் கட்டுமாறு போல என் கயிறு உன்னைக் கட்டாது என்றவாறு. கட்டிக் கொள்ளுதலால் கடுந்தொழில் பாசம் எனப்பட்டது . மன்முறை-அரசன் செய்யும் முறைமை. எழு நாள் வைத்துப் பார்த்து அவன் வழுவுமாயின் அதன் பின் எனக்கு முறையாவதல்லது அதற்குள் எனக்கு முறை செய்யும் கடமை இல்லை என்பது கருத்து. ககந்த மன்னன் ஏழு நாள்களினூடேயே தன் மகன் செய்த பிழையின் பொருட்டுத் தன் வாளால் வெட்டிக் கொல்லுவான் என்று மருதியின் பொருட்டு அத் தெய்வம் அமைதி கூறுதல் உணர்க.

மாதவர் பின்னும் ஒரு பத்தினிப் பெண்ணின் வரலாறு கூறுதல்

77-87: அப்பூதம்..............அலரெழ

(இதன் பொருள்) அப் பூதம் உரைத்த நாளால் ஆங்கு அவன் தாதை வாளால் தடியவும் பட்டனன்-அந்தச் சதுக்கப் பூதம் சொன்னவாறே ஏழு நாள் அகவையுள் அவ்வாறே அவ்வரசிளங் குமரன் தன் தந்தையாகிய ககந்தனது வாளால் வெட்டுண்டொழிந்தான்; இருங்கடல் உடுத்த மண் ஆள் செல்வத்து மன்னவர் ஏறே இன்னும் கேளாய்-பெரிய கடலை ஆடையாக உடுத்துள்ள இந் நிலவுலகத்தை ஆளுகின்ற செல்வத்தையுடைய அரசர்களுக்கெல்லாம் ஏறுபோல்வாய் இன்னுமொன்று கேட்பாயாக; தருமதத்தனும் தன் மாமன் மகள் பெருமதர் மழைக் கண் விசாகையம்-தருமதத்தன் என்பவனும் அவன் மாமன் மகளாகிய பெரிய மதர்த்த குளிர்ந்த கண்களையுடைய விசாகை என்பவளும்; திப்பிய ஓவிய கைவினை கடந்த கண்கவர் வனப்பினர்-தெய்வத் தன்மையுடைய ஓவியப் புலவர்களின் வனப்பினர்-தெய்வத் தன்மையுடைய ஓவியப் புலவர்களின் கைத் தொழிகளையும் கடந்த கண்டோர் கண்ணைக் கவருகின்ற அழகுடையராய் ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகுதலால் அவ்வூரின்கண்; தெய்வம் காட்டும் யாழோர் மணவினைக்கு ஒத்தனர் என்றே-பால்வரை தெய்வத்தால் காட்டப்படுகின்ற கந்தருவமணமாகிய களவொழுக்கத்தின்கண் மனமொத்தவராய் ஒழுகுகின்றனர் என்று; மைத்துனன் முறைமையால்-தருமதத்தன் விசாகைக்கு மைத்துனன் முறைமையுடையன் ஆதலால்; ஊர்முழுது அலர்ஏழ-கொடிதறி பெண்டிர் தூற்றுதலாலே நகர் முழுவம் பழிச்சொல் எழாநிற்ப; என்க.

(விளக்கம்) நாளால்-நாளின்கண். தடியவும்-என்புழி உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை; மதர்க்கண், மழைக்கண் எனத் தனித்தனி கூட்டுக. தருமதத்தனும் விசாகையும் வனப்பினர் எனக் கூட்டுக. தெய்வம் காட்டும் யாழோர் மணவினை எனக் கூட்டுக; அஃதாவது களவுப் புணர்ச்சி. அப் பழிச் சொல்லைக் கேட்போர் நம்புவதற்கு மைத்துனன் முறைமை என்றது ஏதுவாயிற்று. ஊர்: ஆகு பெயர், அலர் பழிச் சொல்.

விசாகையின் செயல்

88-100: புனையா..........அடைந்தபின்

(இதன் பொருள்) வாள் நுதல் விசாகை புனையா ஓவியம் புறம் போந்தென்ன மனையகம் நீங்கி உலக அறவியின் ஊடு சென்று ஏறி-ஒளி படைத்த நெற்றியையுடைய அவ் விசாகை என்பவள் அப் பழிச் சொல் யொறாளாய் வண்ணம் தீட்டப் பெறாத பெண் ஓவியம் ஒன்று இடம் பெயர்ந்து சென்றாற்போல் இல்லத்தை விட்டுப் புறப்பட்டுப் போய் ஊரம்பலத்தினுள் புகுந்து சென்று; இலகு ஒளி கந்தின் எழுதிய பாவாய் நீ உலகர் பெரும்பழி ஒழிப் பாய் என-விளங்குகின்ற ஒளியையுடைய தூணின்கண் பண்ணப் பட்ட தெய்வப் பாவையே நீ இவ்வுலகத்தவர் நம்புதற்குக் காரணமான பெரிய இப் பழியைத் தீர்த்தருளுவாய் என்று வேண்டா நிற்ப; நாவுடைப்பாவை மாநகர் உள்ளீர் இவள் மழைதரும் என நங்கையை எடுத்தலும்-அவ் வேண்டுகோட் கிணங்கிய செந்நாவுடைய அக் கந்திற்பாவைதானும் அந் நகரத்திலுள்ளோர் அனைவர்க்கும் செவியிற்படும்படி பெருங்குர லெடுத்துப் பெரிய நகரத்தில் வாழும் மக்களே கேண்மின், இவ் விசாகை பெய்யெனப் பெய்யும் பெரு மழை; பழித்தற்குரியள் அல்லள் என்று மகளிருள் சிறந்த மாபெரும் பத்தினியாகிய விசாகையின் புகழை உயர்த்திக் கூறுதலும்; தெய்வம் காட்டி தெளித்திலேன் ஆயின் மையல் ஊர் மனமாசு ஒழியாது-அது கேட்ட பின்னும் அவ் விசாகை யான் இவ்வாறு தெய்வத்தின் வாயிலாக யான் பழியற்றிவள் இவ்வூரிலுள்ள மாந்தர்களின் மனத்திற் படர்ந்த என் பழிச் சொல் தீராதன்றோ இன்னும் என் நிறையின் சிறப்பினை இவ்வூர் மாக்கள் நன்கு உணர்தற் பொருட்டு; இப் பிறப்பு இவனொடும் கூடேன் மைத்துனன் மனையாள் மறு பிறப்பு ஆகுவேன் என்று-இந்தப் பிறப்பின்கண் தருமதத்தனோடு யான் சேர்கிலேன், மைத்துனனாகிய அவனுக்கு மலையாளாக என்னுடைய மறுபிறப்பின்கண் ஆகுவேன் என்று நற்றாய் தனக்கு நல்திறம் சாற்றி-தன்னை ஈன்ற தாய்க்குத் தனது நல்ல உறுதி மொழியை எடுத்துக் கூறி;மற்று அவள் கன்னி மாடத்து அடைந்தபின்-அவ் விசாகையானவள் கன்னி மாடத்திற்குச் சென்ற பின்னர்; என்க

(விளக்கம்) புனையா ஓவியம்-வண்ணம் தீட்டப் பெறாது வடிவம் மட்டும் எழுதி விடப்பட்ட ஓவியம் செய்யாக் கோலத்தோடிருத்தலில் இங்ஙனம் கூறினர். ஊடு சென்றேறி-உள்ளே புகுந்து சென்று ஒளிப்பாவாய், கந்தின் எழுதிய பாவாய் எனத் தனித்தனி கூட்டுக. இவள் மழைதரும் என்றது இவள் பெய்யென மழை பெய்யும் அத் துணைக் கற்பென்னும் திட்பம் உடையவள் என்று பாராட்டிய படியாம். நாஉடைப்பாவாய் என்றது கந்திற் பாவையை. எடுத்தல்-உயர்த்திக் கூறுதல். ஊர்: ஆகு பெயர். மாசு-பழிச்சொல். இவன்: தருமதத்தன் நற்றாய்-ஈன்ற தாய்; திறம்-உறுதிச் சொல். அவள் : விசாகை; கன்னிமாடம்-கன்னியாகவே யிருந்து காலம் போக்குதற்குரிய மாடம்.

தருமதத்தன் செயல்

101-110: தரும..........கூறி

(இதன் பொருள்) தருமதத்தனும் தந்தையும் தாயரும் தாழ்தரு துன்பம் தலைஎடுத்தாய் என நாவுடைப் பாவையை நலம்பல ஏத்தி-அப் பழிக்கு அஞ்சிய பெரிதும் வருந்தி இருந்த தருமதத்தனும் அவன் தந்தையும் தாயரும் ஆகிய அக் குடும்பத்தினர் கீழ்மையைத் தருகின்ற துன்பக் கடலினின்றும் எம்மைக் கரை யேற்றினாய் என்று நன்றி கூறச் செந்நாவுடைய கந்திற்பாவையை வணங்கி அதன் புகழ் பலவற்றையும் கூறி வணங்கிய பின்னர்; பெருநகர் தன்னை பிறகு இட்டு ஏகிமிக்கோர் உறையும் விழுப்பெரும் செல்வத்து தக்கண மதுரை தான் சென்று அடைந்தபின்-தாம் வாழுகின்ற பெரிய நகரமாகிய காவிரிப்பூம் பட்டினத்தைத் துறந்து சென்று சான்றோர் உறைகின்ற மாபெரும் செல்வத்தை உடைய தென் மதுரைக்குப் போய்ச் சேர்ந்தபின்; தருமதத்தனும் தன் மாமன் மகள் விரிதரு பூங்குழல் விசாகையை அல்லது பெண்டிரைப் பேணேன்-தருமதத்தன் தானும் தன்னுடைய மாமன் மகளாகிய இதழ்விரிகின்ற மலரையுடைய கூந்தலையுடைய விசாகையை மாறிப் பிறந்து வாழ்க்கைத் துணையாகக் கொள்வதல்லது பிற மகளிரை விரும்புகிலேன் ஆதலின்; இப் பிறப்பு ஒழிக என கொண்ட விரதம் தன்னுள் கூறி-இப் பிறப்பு இங்ஙனமே ஒழிவதாக என்று தன் கருத்துள் கொண்ட உறுதி மொழியைத் தன் நெஞ்சத்துள் கூறித் திண்ணிதாக்கிக் கொண்டு; என்க.

(விளக்கம்) தாயர்-நற்றாயும் செவிலித் தாயரும் எனப் பலராகலின் பன்மை கூறினார். பெருநகர் என்றது காவிரிப்பூம்பட்டினத்தை. பிறகிட்டு ஏகி என்றது பின்னே கிடக்க விட்டுப், போகி என்றவாறு. தாழ்தரு துன்பம்-தாழ்வைக் கொடுக்கின்ற துன்பம். பாவையைத் தொழுது நன்றி கூறி ஏத்தி என்க. மிக்கோர் உறைவதாகிய விழுப்பெரும் செல்வம் எனினுமாம். உத்தர மதுரையும் உண்டாகலின் தக்கண மதுரை என்றார். தான்: அசை தருமதத்தனும் என்புழி உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. விசாகை மறு பிறப்பில் தனக்கு மனையாள் ஆவேன் என உறுதி கூறியதற்குடம்பட்டுத் தருமதத்தனும் அங்ஙனமே தன்னுள் உறுதி செய்துகொண்டான் என்றவாறு.

இதுவுமது

111-122: வாணிக..............புகுந்தனன்

(இதன் பொருள்) வாணிக மரபின் வருபொருள் ஈட்டி நீள்நிதி செல்வனாய்-தான் பிறந்த குலத் தொழிலாகிய வாணிகத் தொழில் முறையின்படி அத் தொழிலைச் செய்து அதன் ஊதியமாக வருகின்ற பொருள்களைத் தொகுத்து மேன்மேலும் வளர்கின்ற பொருளையுடைய கொழுங்குடிச் செல்வனாகி; நீள் நில வேந்தனின் எட்டிப்பூப் பெற்று இருமுப்பதிற்று யாண்டு ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன்-நெடிய நீலவுலகத்தை ஆளுகின்ற பாண்டிய மன்னனால் எட்டிப்பட்டம் வழங்கப் பெற்று அதற்குரிய பொற்பூவினையும் விருதாகப்பெற்று இவ்வாறு அறுபது ஆண்டு அகவை காறும் பொருந்திய செல்வத்தினாலே மிகவும் உயர்ந்தவனாய் விளங்கினன் அப்பொழுது; அந்தணாளன் ஒருவன் சென்று இருநிதிச் செல்வ ஈங்கு என் செய்தனை பார்ப்பனன் ஒருவன் அத் தருமதத்தன்பால் சென்று பெரிய நிதியை உடைய வணிகர் பெருமானே இத்துணைப் பெரும் செல்வத்தோடு இந் நகரத்திருந்து உன் வாழ்நாளை வீழ்நாளாகக் கெடுத்தொழிந்ததல்லது வேறு புத்தேள் உலகம் புகாஅர் என்பது கேட்டும் அறிதியோ கேட்டனை ஆயின்-கற்புடை மனைவியை இல்லாத ஆடவர் தமியராய் இருந்து நூல்களில் கூறப்படுகின்ற பல்வேறு அறங்களையும் செய்தாலும் அமரர் வாழும் மேனிலையுலகில் புகமாட்டார் என்னும் இவ்வறிவுரையை நீ கேள்வி மாத்திரையானும் கேட்டறிந்த தில்லையோ இல்லையெனின் இப்பொழுதேனும் யான் கூறுவதனைக் கேட்டாய் அல்லையோ கேட்டாயெனின்; நீட்டித்து இராது நின்நகர் அடைக என-நீ இந்நகரத்தின்கண் நின்னகவை முதிரும்படி காலந்தாழ்த்திராமல் நின்னுடைய நகரத்திற்குச் சென்று கற்புடையாள் ஒருத்தியைக் கடிமணம் செய்து கொள்க என்று கூறா நிற்ப; தக்கண மதுரை தான் வறிது ஆக இப் பதிப் புகுந்தனன்-அது கேட்ட தருமதத்தன் நெஞ்சு கலங்கி அத் தென் மதுரை நல்கூரும்படி அதனை விட்டு இப் பூம்புகார் நகரத்தை யடைந்தான், என்க.

(விளக்கம்) வாணிக மரபாவது கொள்வது மிகையும் கொடுப்பது குறையுமாகாமல் பிறர் பொருளையும் தம் பொருள் போலப் பேணி வாணிகம் செய்தல். இதனை

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தமபோற் செயின்        (குறள்-120)

என்பதனாலும் உணர்க. எட்டிப்பூ-எட்டிப்பட்டம் பெற்ற வணிகர்க்கு அதற்கறிகுறியாகக் கொடுக்கும் பொற்பூ. எட்டி காவிதிப்பட்டம் தாங்கி(பெருங், 2.3:144) எட்டி காவிதி என்பன தேயவழக் காகிய சிறப்புப் பெயர்(தொல். தொகை. சூ. 12) என்பது நச்சிவிளக்கம். இருமுப்பதிற்றியாண்டு-அறுபதாட்டைப் பருவம். ஈங்கு என் செய்தனையோ இருநிதிச் செல்வ என்றது இருநிதி பெற்றிருந்தும் திருமணம் கொள்ளாமலும் மகப்பேற்றை யிழந்தும் நின் வாழ்நாளைக் கெடுத் தொழிந்தனை என்று இரங்கியதனைக் குறிப்பாக உணர்த்தி நின்றது. புத்தேள் உலகம்-தேவருலகம். காலம் நீட்டித்திராது-காலம் தாழ்த்திராது. அவனால் மதுரை நகரமே சிறப்புற்றிருந்தமையின் அவன் நீங்கினமையால் மதுரை வறிதாயிற்று என்றவாறு. இப்பதி இந்த நகரம்.

இதுவுமது

122-132: இருநில...........உரையாய்

(இதன் பொருள்) இரு நில வேந்தே-பெரிய நிலவுலகத்தை ஆளும் அரசனை; மற்று அவள் இவ்வூர் வந்தமை கேட்டு பொற்றோடி விசாகை நல்லாள் மனைப்புறம் போந்து நாணாள் பல்லோர் நரப்பண்-பொன்னால் இயன்ற வளையலையுடைய அவ்விசாகை நல்லாளும் தன் இல்லத்தினின்றும் புறத்தே வந்து நாணம் இலாளாய்ப் பலர் கூடிய கூட்டத்தினுள்; அல்லவை கடிந்த அவன் பால் சென்று-அறம் அல்லாதவற்றைச் செய்யாதொழிந்த தருமதத்தன்பால் சென்று மைத்துன!; நம்முள் நாம் அறிந்திலம் நம்மை முன் நாள் மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன-நெருங்கிய உறவினேம் ஆகிய நாம் ஒருவரை யொருவர் இப்பொழுது இன்னார் என அறிந்து கொள்கிலேம் நம்மிருவரையும் முற்காலத்தே ஒருவரைக் கண்டு ஒருவர் மயங்குமாறு செய்த ஆண்மையழகும் பெண்மையழகும் எவ்விடத்துச் சென்று மறைந்தனவோ அறிகின்றிலேம்; ஆறைந்து இரட்டியாண்டு உனக்கு ஆயது என் நாறு ஐங்கூந்தலும் நரை விராவுற்றன- அறுபதாட்டைப் பருவம் உனக்கும் வந்துற்றது என்னுடைய நறுமணங்கமழும் ஐம்பாலாகிய கூந்திலின் கண்ணும் நரைமயிர் கலந்து தோன்றுகின்றன; இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ உளன் இல்லாள் எனக்கு ஈங்கு உரையாய்-நம்முடைய இளமையும் காம வேட்கையும் இப்பொழுது எங்குச் சென்று மறைந்தனவோ நீ அறிவாயெனின் உள்ளத்தின்கண் திட்பம் இல்லாதோய் எனக்கும் இங்கு அறிவிப்பாய்; என்க.

(விளக்கம்) பொற்றொடியாகிய விசாகை நல்லாளும் என இயைத்துக் கொள்க. இனி, விசாகைதானும் நல்லாளாயிருந்தும் நாணாளாய் என இயைப்பினுமாம். நம்முள் நாம் அறிந்திலம் என்றது நம்முடைய யாக்கைகள் அத்துணை மாறுபட்டிருக்கின்றன என்ற வாறாம். மம்மர்-மயக்கம். வனப்பு ஆண்மை வனப்பும் பெண்மை வனப்பும் ஆதலின் ஒளித்தன எனப் பன்மை முடிபேற்றது. யாண்டகவை உனக்கு ஆயது என்க. யானும் அத்துணை முதிர்ந்துளேன் என்பாள் நாறைங் கூந்தலும் நரை விரவுற்றன என்றாள். இருவருடைய இளமையும் காமமும், என்க. உளன் ஆகுபெயராய் அதன் உறுதி மேல் நின்றது.

விசாகை தருமதத்தனுக்கு அறிவுரை கூறுதல்

133-142: இப்பிறப்பு..............பலவால்

(இதன் பொருள்) இப் பிறப்பாயின் யான் நின் அடி அடையேன் அப் பிறப்பு யான் நின் அடித் தொழில் கேட்குவன்-சூளுறவு செய்து கொண்ட இப் பிறப்புடையேனாகவே இனி யான் நின்னுடைய அடிச்சியாக நின்பால் எய்துகிலேன் இம்மை மாறி மறுமையாகிய அப் பிறப்பின்கண் யான் நீ ஏவிய குற்றேவலைச் செய்யும் நின் வாழ்க்கைத் துணைவி ஆகுவன் ஐய இவ்வுலகின்கண்; இளமையும் நில்லா-யாக்கையும் நில்லா வளவிய வானபெரும் செல்வமும் நில்லா மாந்தரிடத்துத் தோன்றுகின்ற இளமைப் பருவங்களும் அழியாமல் நில்லா அங்ஙனமே யாக்கைகளும் நிற்கமாட்டா வளமிக்க மிகப்பெரிய செல்வங்களும் நிற்கமாட்டா; புத்தேள் உலகம் புநதல்வருந் தாரார்-ஒருவனுக்கு அவனுடை மக்களும் மேனிலையுலகத்தைத் தருவாரல்லர் மிக்க அறமே விழுத்துணை ஆவது-யாவரேனும் அவரவர் செய்த மிகுந்த நல்வினையே அவரவர்க்குப் பொன்றுங்காலத்தே பொன்றாது துணையாவதாம் ஆதலால் இனி நீ; தானம் செய்என தருமதத்தனும் மாமன் மகள் பால் வான் பொருள்காட்டி-அறம் செய்வாயாக என்று அறிவுறுத்த அது கேட்ட தருமதத்தனும் மாமன் மகளாகிய விசாகைக்குத் தான் ஈட்டிக் கொணர்ந்த பெரும் பொருள் குவையைக் காட்டி; ஆங்கு அவன் அவளுடன் செய்த நல்லறம் ஓங்கு இருவானத்து மீனினும் பல வால்-அப்பொழுதிலிருந்து அத் தருமதத்தன் அவ் விசாகை நல்லாளுடன் இருந்து அப் பொருளால் செய்த நன்மை தருகின்ற அறங்கள் உயர்ந்த பெரிய வானத்திலே தோன்றுகின்ற மீன்களினும் காட்டில் சாலப் பலவாம்; என்க.

(விளக்கம்) இப் பிறப்பாய்-இப் பிறப்பாகவே இனி இப் பிறப்பாயின் யான் என்க கண்ணழிப்பாரும் உளர்; அப் பிறப்பு-மறுபிறப்பு. அடித்தொழில் கேட்குவன் என்றது, நினக்கு மனைவியாகுவேன் என்றவாறு. இளமையும் காமமும் நில்லா என்பதற்கு நாமே சான்றாயினேம். அங்ஙனமே யாக்கையும் செல்வமும் நிலையா என்பது கருத்து. மணந்து கொண்டு மகப்பே றெய்தக் கருதி வந்துள்ள அவன் கருத்தறிந்து நம் இளமையும் காமமும் ஒழிந்தன. அதுவேயுமன்றிப் புத்தேளுலகம் புதல்வர் தருவார் என்னும் நின்கருத்துப் பிழையாம் என்பது தோன்றப் புத்தேளுலகம் புதல்வரும் தாரார் என்றாள். உம்மை இழிவு சிறப்பு மிக்க அறமே விழுத்துணையாவது என்னும் இதனோடு

அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை    (குறள், 36)

எனவரும் திருக்குறளையும் நினைக

விசாகை நல்லாளும் அவன்பாற் சென்று தானம் செய்யெனக் கூற என இயையும். வானத்து மீன்-வீண்மீன்

ககந்தன் மூத்த மகனின் அடாச் செயல்

143-154: குமரி............ஆகலின்

(இதன் பொருள்) குமரி மூத்த அக் கொடுங்குழை நல்லாள் அமரன் அருளால் அகன் நகர் இடூஉம் படுபழி நீங்கி-கன்னியாகவே இருந்து மூத்தவளாகிய அந்த வளைந்த குழை அணிந்த அவ் விசாகைதானே பண்டு கந்திற் பாவையாகிய தெய்வத்தின் திருவருளால் புகாரின் அகநகரத்தில் வாழ்கின்ற மாக்கள் தன்மேலேற்றிய பெரும்பழி நீங்கிய பின்பு ஒரு நாள்; பல்லோர் நரப்பண் கொடிமிடை வீதியில் வருவோள் குழல் மேல்-பல மகளிர் நடுவே கொடி செறிந்த பெரிய வீதியின்கண் வருகின்ற வளுடைய கூந்தலின் மேலே; மருதி பொருட்டான் மடிந்தோன் தம்முன் காமம் காழ்கொள் கருகிய நெஞ்சினன்-முன்பு பார்ப்பனியாகிய மருதி காரணமாகக் கொலையுண்டவனுடைய தமையனாகிய ககந்த மன்னன் மகன் காமமாகிய தீ முதிர்ந்து கடுதலாலே கருகிய நெஞ்சை உடையவனாய்; தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம் என-நம் பண்டைத் தமிழ்ச் சான்றோர் உயர்த்துக் கூறிய களவு மணம் இதுவேயாம் எனச் சொல்லிக் கொண்டு தன் தலையில்; சுரி இரும் பித்தை சூழ்ந்து புறம் தாழ்ந்த விரிபூமாலை வாங்கி-சுருண்ட கரிய தலை மயிரினைச் சுற்றி முதுகிலே தூங்கவிட்டிருந்த மலர்ந்த மலர் மாலையைக் கையால்; எல்லவிழ் தாரோன் விரும்பினன் மாலை வாங்க-ஒளி விரிக்கின்ற பொன்மாலை யணிந்த அம் மன்னன் மகன் பெரிதும் விரும்பித் தன் தலையில் மாலையைக் கையில் ஏந்துதற்கு; ஏறிய செங்கை நீலக்குஞ்சி நீங்காதாகலின்-தலையில் ஏறிய அவனது சிவந்த கையானது கரிய அவனது மயிர் முடியினின்றும் நீங்காமல் நிலைபெற்று விடுதலின்; என்க.

(விளக்கம்) குமரிமூத்தல்-கன்னியாகவே இருந்து முதிர்ந்துவிடுதல்; அமரன்: கந்திற்பாவை. அகநகர்: ஆகுபெயர். படுபழி-மிக்கபழி தம்முன்-தமையன்.காமத்தீ முதிர்ந்து சுடுதலால் கருகிய நெஞ்சினன் என்க. பித்தை-ஆண்மகன் தலைமயிர் விரும்பினன்: முற்றெச்சம் தொல்லோர் என்றது பழங்காலத்துத் தொல்காப்பியர் முதலியோரை. மணம்-களவு மணம். இடுவான்-இட. குஞ்சி-ஆடவன் தலைமயிர். வருவோள் குழல் மேல் இடுவான் வேண்டி மாலை வாங்க ஏறிய கை நீங்காதாகலால் என இயைக்க.

இதுவுமது

155-161: ஏறிய............கூறலும்

(இதன் பொருள்) ஏறிய செங்கை இழிந்திலது இந்தக் காரிகை பொருட்டு என ககந்தன் கேட்டு-தன் மகனுடைய தலையில் ஏறிய சிவந்த கை இறங்காததற்கு இந்த விசாகையின் கற்புடைமையே காரணம் எனக் ககந்த மன்னன் கேள்வியுற்று; கடும் சினம் திருகி மகன் துயர் நோக்கான் மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன்-கடிய வெகுளி முறுகுதலாலே மகன் இறந்துபடுதலால் வருகின்ற துன்பத்தையும் ஒரு பொருளாகக் கொள்ளாதவராய் அம் மைந்தனையும் தனது வாளாலேயே வெட்டிக் கொன்றனன். இவையெல்லாம் இந் நகரத்திலே நிகழ்ந்த பழையவரலாறாம்; ஊழிதோறு ஊழி உலகம் காத்து வாழிய எம் கோ மன்னவ என்று-பல்லூழி காலம் இவ்வுலகத்து மன்னுயிரைப் பாதுகாத்து வாழ்வாயாக எங்கள் கோமானாகிய அரசனே என்று சொல்லி; மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும்-அத் துறவோரில் வைத்து ஒரு துறவி இவற்றைக் கூறா நிற்றலும்; என்க.

(விளக்கம்) செங்கை இழிந்திலது என்னும் இதனையும் இங்ஙனம் இழியாமைக்கு இந்தக் காரிகையின் கற்பே காரணம் என்பதனையும் அறிந்தோர் கூறக்கேட்டு என்க. சினந்திருகி-சினம்முறுகி. மகன் துயர்-மகன் உறுதுயர் எனவும் மகனால் தனக்குவரும் துயர் எனவும் இருபொருளில் மயங்கிற்று மைந்தன் தன்னை என்றது இம் மைந்தனையும் என்பதுபட நின்றது.

சோழ மன்னன் அத் துறவியை வினவுதல்

162-168: வீயா..........உரைக்கும்

(இதன் பொருள்) வீயா விழுச்சீர் வேந்தன் கேட்டனன் இவற்றை எல்லாம் கெடாத பெரும் புகழையுடைய அச் சோழ மன்னன் கூர்ந்து கேட்டனன் அங்ஙனம் கேட்டவன் அத் துறவோரை நோக்கி; நன்றறி மாதவிர்-நன்மையை நன்கு அறிந்த பெரிய தவத்தையுடையீர்; இன்றே யல்ல என்று எடுத்து உரைத்து நலம் பல காட்டினிர் இன்றும் உளதோ இவ்வினை உரைம் என-நீவிர் உரை தொடங்குங்கால் இன்று மட்டுமல்ல என்று தொடங்கிக் கூறுமாற்றால் அரசியல் நன்மையும் கற்புடை மகளிர் நன்மையும் ஆகிய நலங்கள் பலவற்றை எடுத்துக் காட்டலானீர் அங்ஙனமாயின் இன்றும் நிகழ்ந்துளதோ இத்தகைய நிகழ்ச்சி, உளதாயின் கூறிக் காட்டுமின் என்று வென்றி நெடுவேல் வேந்தன்கேட்ப-வெற்றியையுடைய வேலேந்திய அவ்வரசன் வினவுதலாலே; மாதவர் தம்முள் ஓர் மாதவன்-அத் துறவோரில் வைத்து ஒரு துறவோன்; தீது இன்றாக வேந்து செங்கோல் என-தீங்கின்று அரசர் பெருமானுடைய செங்கோன்மை நிகழ்வதாக என்று வாழ்த்தி; உரைக்கும்-சொல்வான்; என்க. 

(விளக்கம்) வீயாத என்பதன்கண் ஈற்றுயிர் மெய் கெட்டது. விழுச்சீர்-பெரும்புகழ் அங்ஙனம் கேட்டவன் என்க. இன்றே அல்ல என்றமையால் இன்றுமுளது என்பது போதருதலின் இன்றும் உளதோ இவ்வினை என்று அரசன் வினவினான். உரையும் என்பதன் ஈற்றுயிர் மெய் கெட்டு உரைம் என நின்றது. உரைக்கும்-சொல்லுவான்.

(இது முதலாக (169) (204) மாதவன் உரைத்தலும் என்பதிறுதியாக ஒரு மாதவன் உதயகுமரன் கொலையுண்டமையை அரசனுக்கு அறிவிப்பதாக ஒரு தொடர்)

துறவி கூற்று

169-179: முடிபொருள்..........அடைந்தனள்

(இதன் பொருள்) நீள் நில வேந்தே-நெடிய உலகத்தை ஆளுகின்ற அரசனே! இன்றும் அத்தகைய நிகழ்ச்சி ஒன்று நிகழ்ந்துளது கூறுவல் கேட்டருளுக; முடி பொருள் உணர்ந்தோர்-மெய்ப்பொருளை யுணர்ந்த சான்றோர்கள்; முதுநீர் உலகில் கடியப்பட்டன ஐந்து உள-கடல் சூழ்ந்த இந் நிலவுலகத்தின்கண் விலக்கப்பட்டனவாகிய தீவினைகள் ஐந்துள்ளன அவையாவன: கள்ளுண்டல் பொய் மொழிதல் களவு செய்தல் காமமாடுதல் என்பனவாம்; அவற்றில்-அவ்வைந்தனுள்ளே; கள்ளும் பொய்யும் களவும் கொலையும் தள்ளாதாகும் காமம்-கள் பொய் களவு கொலை ஆகிய நான்கு தீவினைகளையும் தன்பால் உடையதாம் காமம் என்னும் அத் தீவினை; தம்பால் ஆங்கு அது கடிந்தோர் அல்லவை கடிந்தோர் என-ஆதலால் தம்மிடத்தே அத்தகைய வற்றால் நிகழும் தீவினைகளையும் ஒரு சேர நீக்கினவர்களே ஆவர் என்று அறிந்து; நீங்கினர் அன்றே நிறைதவ மாக்கள் அக் காமத்தைக் கைவிட்டு நீக்கினோரே நிறைந்த தவ ஒழுக்கமுடைய சான்றோராவர்; நீக்காரன்றே தாங்கா நகரம் தன்னிடை உழப்போர்-அக் காமத்தை நீங்காதவர்தாம் துயரம் பொறுக்கொணாத நகரத்தில் வீழ்ந்து உழல்வோர் ஆவர்; சித்திராபதி மகள் சே அரி நெடுங்கண் மாதவி-சித்திராபதியின் மகளாகிய செவ்வரியோடிய நெடிய கண்ணையுடைய மாதவி என்னும் நாடகக் கணிகை; காதலன் உற்ற கடுந்துயர் பொறாஅள்-தன் காதலனாகிய கோவலன் எய்திய கடிய கொலைத் துன்பத்தைக் கேட்டு நெஞ்சு பொறாதவளாய்; மாதவர் பள்ளியுள் அடைந்தனள்-பெரிய தவத்தையுடைய அறவண வடிகள் தவப்பள்ளியின்கண் தஞ்சம் புகுந்தனள்; என்க.

(விளக்கம்) முடிபொருள்-மெய்ப் பொருள். முதுநீர்-கடல் காமத்தீவினை உடையார்பால் கள்ளுண்டலும் பொய் கூறுதலும் களவு கோடலும் கொலை செய்தலும் ஆகிய நான்கு தீவினைகளும் ஒருதலையாகவுளவாம் என்றவாறு. எனவே காமமே ஏனையவற்றிற்கும் காரணமாம் ஆகவே தம்பால் காமத் தீவினை நிகழாதவாறு விலக்கியவர் எல்லாத் தீவினைகளையும் ஒரு சேர விலக்கியவர் ஆவார். இவ்வுண்மையை யுணர்ந்து காமத்தைத் துவர விலக்கியவரே நிறைந்த தவமுடையோர் ஆவர்; விலக்காதவர் நரகத்தில் வீழ்வர் என்றவாறு. நீங்கார் நரகிடை உழப்போர் எனவே நீங்கினவர் துறக்கத்தும் விட்டுலகத்தினும் புகுந்தின்பம் எய்துவர் என்பது அருத்தாபத்தியால் பெற்றாம் காதலன்: கோவலன். கடுந்துயர்-கொலைப்பட்ட துன்பம். கேட்டுப் பொறாளாய் என்க. அடைந்தனள் என்றது தஞ்சம் அடைந்தனள் என்பதுபட நின்றது.

இதுவுமது

180-188: மற்றவன்.........காரிகை

(இதன் பொருள்) மற்று அவள் பெற்ற மணிமேகலை தான் முற்றாமுலையினள் முதிரா கிளவியள்-அம் மாதவி பெற்ற மணிமேகலை தானும் முதிராத முலையினையும் மழலை மாறாத மொழியினையும் உடைய இளமையுடையவளாய் இருந்தும்; தவம் செய்குவன் என சிற்றிலும் பேரிலும் ஐயம் கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள்-யானும் தவம் செய்வேன் எனத் துணிந்து சிறிய குடில்களிலும் ஊரம்பலத்தை அடைந்தனள்; ஆங்கு அவள் அ இயல்பினளே ஆயினும்-அம்வம்பலத்தின்கண் அம் மணிமேகலை அவள் மேற்கொண்ட அத் தவ ஒழுக்கத்தின்கண் பிறழாதவளாகவே யிருந்துழியும்; அவளை நீங்கான் நிழல்போல் யாங்கணும் காரிகை பொருட்டால் காமம் நிழலைப் போல எவ்விடத்தும் தொடர்பவன் அவளுடைய பேரழகு காரணமாகத் தன் நெஞ்சத்தே காமம் முதிர்ச்சியடைதலால்; ஆர் இருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன்-நிறைந்த இருளையுடைய நள்ளிரவினும் பழியஞ்சானாய் அவள் துயிலுகின்ற அம்பலத்தினூடும் புகுந்தனன்; காரிகை காயசண்டிகை வடிவாயினள்-அம்மணிமேகலை தானும் அவனுக்ககப்படாமல் தன் வடிவத்தைக் கரந்து காயசண்டிகை என்னும் மற்றொருத்தியின் வடிவத்தை மேற்கொண்டிருந்தாள்; என்க

(விளக்கம்) இம் மாதவன் நின்மகன் என்னும் உண்மையை முற்படக் கூறிவிட்டால் பின்னர் அவன் செய்த பிழை கூறும் செவ்வி பெறுதல் அரிதென்பது கருதி யாரோ ஒருவனுடைய ஒழுக்கத்தைக் கூறுபவன் போல முற்பட அவன் செய்த பிழையை மன்னன் உளம் கொள்ளும் வண்ணம் ஓதி வருகின்ற நுணுக்கம் நினைந்து நினைந்து இன்புறற் பாலதாய் இருத்தலுணர்க. முற்றாமுலையினள் என்றது அவன் காமம் காழ் கொள் ஏதுக்கூறியபடியாம் மணிமேகலை காமுறுதற்குரியள் அல்லள் என்பது தோன்றுதற்கு ஆங்கு அவள் அவ்வியல்பின்ளேயாயினும் என்றான். காரிகை-அழகு ஆரிருளும் எனல் வேண்டிய இழிவு சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது(188) காரிகை: மணிமேகலை. காயசண்டிகை வடிவாயினள் என்றது அவன் கையில் அகப்படாமைப் பொருட்டு அவ்வடிவாயினள் என்றவாறு.

இதுவுமது

189-193: காயசண்டிகை...............ஆகலின்

(இதன் பொருள்) காயசண்டிகையும் ஆங்கு உளள் ஆதலின் காயசண்டிகை என்னும் விச்சாதரி ஒருத்தியும் அவ்வம்பலத்திலிருக்கின்றாளாதலின்; காயசண்டிகை தன் கணவனாகிய வாய்வாள் விஞ்சையன் ஒருவன் தோன்றி-அக் காய சண்டிகையின் கணவனாகிய ஏறு தப்பாத வாளையுடைய விச்சாதரன் ஒருவன் அவளைக் காண்டற் பொருட்டு அச் செவ்வியில் அம்பலத்தில் வந்து; இவன் ஈங்கு இவள் பொருட்டால் வந்தனன் என மணிமேகலையின் பொருட்டு வந்தவனைக் கண்டு இவன் இவ்வம்பலத்திற்கு என் மனைவியாகிய காயசண்டிகையின் பொருட்டே வந்தான் போலும் என்று பிழைபடக் கருதி; ஆங்கு அவன் தீவினை உருத்தது ஆகலின்-அப்பொழுது அவனுடைய பழவினையும் தன் பயனை ஊட்டுதற்கு உருத்து வந்ததாதலால்; என்க.

(விளக்கம்) காயசண்டிகையும் ஆங்கு உளன் என்றது காயசண்டிகை சென்றுவிட்ட செய்தி இத் துறவிக்குத் தெரியாதாகலின் புலவர் பெருமான் அவன் கூற்றாக அங்ஙனம் கூறியது புலமை நுணுக்கங்களுள் ஒன்றாகும். மேலும் அவள் அந் நகரத்திருந்த செய்தியை அரசன் அறியானாதலே இயல்பாதலின் அவள் இருந்தமையும் உணர்த்துதல் வேண்டிற்று; இதுவும் ஒரு நுணுக்கமாம். வாய்வாள்-ஏறு தப்பாதவாள். விஞ்சையன் என்றது காஞ்சனனை. தோன்றி என்றது மனைவியைக் காணும் பொருட்டு வந்து என்பதுபட நின்றது. இவள் பொருட்டால்-இடக்கரடக்கு. ஈண்டும் இவன் எனச் சுட்டுப் பெயரால் கூறினார். அவன் என்பதும் அது.

இதுவுமது

194-204: மதிமருள்.............உரைத்தலும்

(இதன் பொருள்) மதிமருள் வெண்குடை மன்ன நின்மகன்-முழு வெண் திங்கள் போன்ற கொற்றவெண் குடையையுடைய மன்னனே நின்னுடைய மகனாகிய; உதயகுமரன் ஒழியானாக ஆங்கு அவள் தன்னை அம்பலத்து ஏற்றி-உதயகுமரன் தானும் நீங்கானாக அம் மணிமேகலையை ஊரம்பலத்தின்கண் ஏற்றி; ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து-உயர்ந்த இருளையுடைய நள்ளிரவிலே இவனையும் ஆங்குச் செலுத்தி; காயசண்டிகை தன் கணவனாகிய வாய்வாள் விஞ்சையன் தன்னையும் கூஉய்-காயசண்டிகையின் கணவனாகிய வாய்க்கும் வாளையுடைய விச்சாதரனையும் அவ்விடத்திற்கு அழைத்து; விஞ்சை மகள்பால் இவன் வந்தனன் என வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி-நின் மனைவியாகிய காயசண்டிகையின் பொருட்டே இவன் மனைவியாகிய காயசண்டிகையின் பொருட்டே இவன் இப்பொழுது இங்கு வந்தான் என்னும் ஒரு பிழையான எண்ணத்தைத் தோற்றுவித்து முன்னமே இவன் செயலை ஆராய்தல் பொருட்டு வஞ்சமாகக் கரந்திருந்த அவ் விச்சாதரனுடைய நெஞ்சத்தையும் கலக்கிவிட்டு; ஆங்கு அவன் தன் கைவாளால் அம்பலத்து ஈங்கு இவன் தன்னை எறிந்தது என்று ஏத்தி-அவ்விடத்தே அவ் விச்சாதரனுடைய கையிலிருந்த வாளினாலேயே அவ்வலம்பலத்தினூடேயே ஈங்குக் கூறப்பட்ட நின் மகனை வெட்டுவித்தொழிந்தது என்று சொல்லி வாழ்க நின் செங்கோல் என்று வாழ்த்தி; மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும் அத் துறவியருள் வைத்துச் சொல்வன்மையுடைய ஒரு துறவி உதயகுமரன் கொலையுண்ட செய்தியை அரசனுக்கு அறிவுறுத்தலும்; என்க.

(விளக்கம்) (169) முடிபொருள் என்று தொடங்கி (193) ஆங்கவன் தீவினை உருத்ததாகலின் என்பது வரையில் இம் மாதவன் கூறிய செய்தியின் சுருக்கம் வருமாறு-வேந்தே காமம் ஏனைய தீவினைகுக்கும் காரணமாம் அதனை விலக்கியவரே துறவோராவர். காமம் காழ் கொண்டவர் நரகத்  துன்பத்தை நுகர்வது இயற்கை. இன்று இந் நகரத்தில் நிகழ்ந்ததொரு நிகழ்ச்சியைக் கேள்! மணிமேகலை தவம் செய்யத் துணிந்து பிச்சையேற்றுண்டு ஊரம்பலததில் உறைந்தாள். அவள் அழகு மிக்கவள். அதனால் காமம் காழ் கொண்டு அவள் நிழல் போல எவ்விடத்தும் நீங்காதவனாய் நள்ளிரவிலே அம்பலத்திற்கும் வந்துவிட்டான்; அவள் அவனுக்கஞ்சிக் காயசண்டிகை வடிவம் கொண்டிருந்தாள். காயசண்டிகையின் கணவனும் மனைவியைக் காண அந் நள்ளிரவில் வந்தான் அவன் இவனைக் கண்டு தன் மனைவியின் பொருட்டே இவன் வந்தனன் என்று கருதும்படி அவனுடைய தீவினையும் அப்பொழுது செவ்வி பெற்றிருந்ததாகலின் என்று சொல்லுமளவும் நின்மகன் என்றாதல் உதயகுமரன் என்றாதல் குறிப்பிடாமல் அவன் இவன் என்னும் சுட்டுப் பெயராலேயே கூறி வந்தமையின் அவ்வரசன் தெரிந்து கொண்ட செய்தி இங்ஙனம் துணிந்து வந்தமையின் அவ்வரசன் தெரிந்து கொண்ட செய்தி இங்ஙனம் துணிந்து தவமகளை இடங்கழி காமத்தோடு விடாது தொடர்ந்து இரவினும் அம்பலத்தினும் துணிந்து புகும் தீயவன் ஒருவன் இந் நகரத்தில் இருக்கின்றான் என்பதேயாம்.

இச்செய்தி கேட்ட மன்னவன் நெஞ்சத்தில் அத்தகைய தீவினை செய்தவன் யாவன் என அறியும் அவாவும் அங்ஙனம் செய்தவனைக் கண்டுபிடித்து ஒறுக்கவேண்டும் என்னுமளவிற்குச் சினமும் உண்டாயிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அம் மாதவனோ அவன் யார் என்று இன்னும் கூறவில்லை. இவ்வாற்றால் மன்னவனுடைய அறிவு தடுமாறி இருக்குமன்றோ? இத் தடுமாற்றத்தைப் புலவர் பெருமான் அவன் குடையைப் பாராட்டுவார்போல மதிமருள் வெண்குடை மன்ன என இரட்டுறக் கூறியுள்ள நயமுணர்க. மதிமருள் என்றது திங்கள் போன்ற என வெண்குடைக்கு உவமாயிற்று. இது கேட்ட அரசன் மதிமருண்டிருப்பதும் இயற்கையே. இன்னும் தீவினையுருத்தாகலின் என ஏதுக் கூறி நின்மகன் உதயகுமரன் ஒழியானாக அவளை அம்பலத்தேற்றி இவனை ஆங்கு உய்த்து விஞ்சையனையும் அழைத்து இவன் நின்மனைவி பால் வந்தனன் எனக் காட்டி அவன் மனத்தையும் கலக்கி என்னுமளவும் உதயகுமரன் எழுவாய் போன்று கூறி வருதலால் ஈண்டும் அவன் தன் மகனே என்று அரசன் துணிதற்கு இடமில்லாமை உணர்க. இவ்வாறு இம் மாதவன் உதயகுமரன் ஐயப்புலத்தில் வைத்து அவன் செய்த பெருந்தீவினையைத் தெளிடுவுபடக் கூறிய பின்னர் மேலே கூறிய முடிக்கும் பொழுதுதான் அரசன் கொலையுண்டவன் தன்மகன் என்றுணரும்படி கூறி முடித்த நயம் உணர்ந்து மகிழ்க.

அரசன் செயல்

205-215: சோழிக..................வேந்தென்

(இதன் பொருள்) (205) அணிகிளர் நெடுமுடி அரசு ஆள் வேந்து-அழகு மிகுகின்ற நெடிய முடியினையுடைய அரசாட்சியைச் செய்கின்ற வேந்தனாகிய அச் சோழ மன்னன் தானும் இற்றை நாள் இத் தீவினை செய்தவன் தன் மகனாகிய உதயகுமரனே யென்பதும் அவன்றானும் விஞ்சையானால் கொலையுண்டான் என்பதும் நன்குணர்ந்த பின்னர்த் தன் தானைத் தலைவனாகிய சோழிக ஏனாதி தன் முகம் நோக்கி-சோழிக ஏனாதியினுடைய முகத்தை நோக்கிக் கூறுபவன்; இளங்கோன் தன்னை யான் செயற் பாலது தான் செய்ததனால் விஞ்சையன் தகவு இலன்-தானைத் தலைவனே இத்தகு தீவினை செய்த இளவரசனாகிய உதயகுமரனை யானே செய்ய வேண்டிய செங்கோன் முறைமை ஒன்றனை யான் செய்தற்கிடனிலாது தானே செய்து விட்டதனால் அவ் விச்சாதரன் பெருந்தகைமை இலன் ஆயினான் அது கிடக்க; மாதவர் நோன்பும் இன்று மடவார் கற்பும் இன்று காவலன் காவல் இன்று எனின்-சிறந்த தவத்தை மேற்கொண்ட துறவோருடைய நோன்பும் இல்லையாம் மடப்பமுடைய மகளிருடைய கற்பறமும் இல்லையாம் அரசனுடைய காவல் இல்லையாயின்; மகனை முறைசெய்த மன்னவன் வழி ஓர் துயர்வினையாளன் தோன்றினன் என்பது கன்றையிழந்த ஒரு பசுவின் துயர்தீர்தற் பொருட்டுத் தன் அரும்பெற்ற புதல்வனைத் தேராழியின் கீழ்க்கிடத்திக் கொன்று செங்கோன் முறை செய்த மனுவேந்தனுடைய மரபின்கண் இத்தகைய துன்பம் தருகின்ற தீவினையாளன் ஒருவன் பிறந்தான் என்னும் இப் பழிச்சொல்; வேந்தர் தம் செவி உறுவதன் முன்னம்-எம்மோரனைய பிற மன்னருடைய செவியில் சென்று புகுவதற்கு முன்நு; ஈங்கு இவன் தன்னையும் ஈமத்து ஏற்றி ஈங்குக் கொலையுண்ட உதயகுமரன் உடம்பையும் ஈமத்தீயில் இட்டொழித்து; கணிகை மகளையும் காவல் செய்க என்றனன்-அந் நாடகக் கணிகை மகளாகிய மணிமேகலையையும் காவலின்கண் வைத்திடுக என்று கட்டளையிட்டனன் என்பதாம்.

(விளக்கம்) ஏனாதி என்பது படை மறவருள் சிறந்தோர்க்கு அரசனால் வழங்கப்பெறும் ஒரு பட்டப்பெயராம். இதனை மாராயம் பெற்ற நெடுமொழியானும்(தொல் புறத் சூ. 8) என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியார்

போர்க் கடலாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக்
கார்க்கடல் பெற்ற கரையன்றோ-போர்க்கெல்லாம்
தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ்சே
ரேனாதிப் பட்டத் திவன்

என்று காட்டிய மேற்கோளாலும் உணர்க. சோழிக ஏனாதி என்றமையால் சோழ மன்னனால் ஏனாதிப்பட்டம் வழங்கப்பட்டவன் என்பது பெற்றாம். யான் செய்ய வேண்டிய கொலைத் தண்டனையை ஏதிலனாகிய தான் செய்தமையால் அவ் விஞ்சையனும் ஒரு தவறு செய்தான் என்பதுபடத் தகவிலன் என்றான். இன்று என்பதனை நோன்பும் இன்று கற்புமின்றி என இரண்டிடத்தும் கூட்டுக. மகனை முறை செய்த மன்னவன் என்றது மனுநீதிச்சோழனை இதனை

வாயிற் கடைமணி நடுநா நடுங்க
வாவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தான்றன்
அரும்பெறற் புதல்வனை யாழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகாரென் பதியே  (சிலப் 20: 53-6)

எனவரும் கண்ணகி கூற்றாலும் உணர்க. அம் மாதவனால் கூறப்பட்ட ககந்தன் மக்கள் இருவரையும் கொள்ளாது விடுத்தான். என்னை? அவ்விருவரும் குலப்பிறப்பினர் அல்லராகலின், அக் கருத்துத் தோன்ற ஓர் துயர்வினையாளன் என்றான். வேந்தர் என்றது எம்மோரனைய பிறவேந்தர் என்றவாறு. இதனை

எம்மோ ரன்ன வேந்தற் குற்ற
செம்மையி னிகந்தசொற் செவிப்புலம் படாமுன்
உயிர்பதிப் பெயர்த்தமை யுறுக வீங்கென

என வரும் சிலப்பதிகாரத்தினோடு 25: 95-97 ஒப்பு நோக்குக. கணிகை மகள் என்றான் கண்டோரெல்லாம் காமுறுதற்குரியவள் என்பது தோன்ற. அவ்வாறு பிறர் காமுற்றுக்கெடாமலும் வேந்தன் மகன் கொலையுண்டமைக்கு காரணம் இவளென்று கருதி மணிமேகலைக்கு நகர மக்கள் கேடுசூழாமலும் பாதுகாத்தல் தன் கடமை யாதலின் மணிமேகலையையும் காவல் செய்தல் வேண்டிற்று. இனி, மணிமேகலையையும் வெறுத்து அவளைக் கணிகை மகள் என்று கூறிக் காவல் செய்வித்தான் எனக் கருதுவாருமுளர். அங்ஙனம் கருதின் மணிமேகலையை அரசன் வெறுத்தற்குத் தன் மகன் கொலையுண்டமையன்றிப் பிறிதொரு காரணம் இன்மையின் அவ்வரசனுக்கே இழுக்காதலை அவர் நோக்கிற்றிலர்.

இக்காதையை-மண்டிலம் சீப்பப் புரிந்தோர் உரைப்பக் கேட்டு மாதவரெல்லாம் மணிமேகலையை நோக்கி, இதனை நீ அறிவதுமுண்டோ என, அவள் உரைத்தலும் அவளைச் சிறுவனோடு வேறிடத் தொளித்து இசைத்துச் சென்று குறுகி ஒரு மாதவனுரைத்தலும், கேட்டு வேந்தன் உரையும் என ஒரு மாதவன் உரைக்கும்; அங்ஙனம் உரைக்கும் மாதவன் ஏத்தி உரைத்தலும் வேந்து காவல் செய்கென்றனன் என, இயைத்திடுக.

சிறைசெய் காதை முற்றிற்று.
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 10:02:59 AM
23. சிறைவிடு காதை

(23. மணிமேகலை சிறைவீடு செய்த இராசமாதேவி குறைகொண்டிரப்பச் சீலங்கொடுத்த பாட்டு)

அஃதாவது அரசன் கட்டளைப்படி சோழிக வேனாதியால் சிறையிடப்பட்ட மணிமேகலை தன் மகனைக் கொன்றவள் என்னும் செற்றத்தால் இராசமாதேவி அரசன்பால் சென்று வஞ்சகமாய் மணிமேகலையைப் பெரிதும் மதிப்பவள் போலப் பேசி மணிமேகலையைத் தன்பால் இருக்கும்படி அரசன்பால் வேண்டி அவளை அச் சிறையினின்றும் மீட்டுக் கொணர்ந்து தன் பாதுகாவலில் வைத்து அவளுக்குப் பித்தேற்றுதற்குரிய மருந்தூட்டியும் கல்லாத இளைஞன் ஒருவனை விடுத்து மணிமேகலை கற்பினை யழிக்கச் சொல்லியும் நோய் கொண்டாள் என்று பொய் சொல்லிப் பல்வேறு வகையில் மணிமேகலையைத் துன்புறுத்த முயன்று பார்த்தும் அவற்றிற்கெல்லாம் மணிமேகலை தான் பெற்றுள்ள மந்திரங்களின் உதவியால் சிறிதும் தீங்கின்றி இருப்பாளாக; அது கண்ட இராசமாதேவி மணிமேகலை தெய்வத் தன்மையுடையவள்; அஃதறியாது அவளுக்குக் கேடு சூழ்ந்தமையின் தனக்கு இன்னும் என்னென்ன துன்பங்கள் வருமோவென்றஞ் சியவளாய் அவள்பால் சென்று யான் என்மகனை இழந்த துன்பம் காரணமாக இவ்வாறு பல தீங்குகளைச் செய்து விட்டேன் அவற்றைப் பொறுத்தருள வேண்டும் என்று சொல்லி மணிமேகலையை அவள் விருப்பம்போல ஒழுக விட்டுவிட்ட செய்தியைக் கூறும் செய்யுள் என்றவாறு.

அரசனுடைய சிறைக் கோட்டத்தினின்றும் இராசமாதேவி விடுவித்துக் கொண்டமையின் இது சிறைவிடுகாதை எனும் பெயர் பெற்றது.

இனி, இதன்கண் மணிமேகலையின்பால் செற்றம் கொண்ட இராசமாதேவி மணிமேகலையைச் சிறை மீட்டுக் கொணர்ந்து மணிமேகலைக்குச் செய்யும் வஞ்சகச் செயல்களும், அச் செயல்களுக்கு மணிமேகலை மந்திரவலிமையால் சிறிதும் துன்புறாதிருத்தலும் அது கண்ட இராசமாதேவி அஞ்சி நடுங்குதலும், மணிமேகலை இராசமா தேவிக்குத் தன் முற்பிறப்பினையும் உதயகுமரன் முற்பிறப்பினையும் அறிவுறுத்துதலும், உதயகுமரன் கொலையுண்டமைக்குரிய பழவினை இன்னது என அறிவுறுத்துதலும், மணிமேகலை இராசமாதேவி செய்த வஞ்சகச் செயல்களினின்றுந் தப்பிய வகை கூறுதலும் காமம் முதலியவற்றால் ஏற்படுகின்ற துன்பங்களை எடுத்துக் கூறி உயிர்களின்பால் அன்பு செலுத்துக என்று இராசமாதேவிக்கு நல்லறிவு கொளுத்துதலும் மகன் துயர் நெருப்பாக மனம் விறகாக இராசமாதேவியின் அகம் சுடுகின்ற வெந்தீயை அவித்துக் குளிரச் செய்தலும் அரசன்தேவி நன்றியுடையளாய்த் தொழுது அடிவீழ் முயல்பவளை மணிமேகலை தடுத்து நீ தொழுதல் கூடாது என் காதலன் தாய் அல்லையோ நீ; மாபெருந் தேவி என்று எதிர் வணங்குதலும் பிறவும் இனிதாகக் கூறப்படுகின்றன.

மன்னவன் அருளால் வாசந்தவை எனும்
நல் நெடுங் கூந்தல் நரை மூதாட்டி
அரசற்கு ஆயினும் குமரற்கு ஆயினும்
திரு நிலக் கிழமைத் தேவியர்க்கு ஆயினும்
கட்டுரை விரித்தும் கற்றவை பகர்ந்தும்
பட்டவை துடைக்கும் பயம் கெழு மொழியினள்
இலங்கு அரி நெடுங் கண் இராசமாதேவி
கலங்கு அஞ்அர் ஒழியக் கடிது சென்று எய்தி
அழுது அடி வீழாது ஆய் இழை தன்னைத்
தொழுது முன் நின்று தோன்ற வாழ்த்தி  23-010

கொற்றம் கொண்டு குடி புறங்காத்து
செற்றத் தெவ்வர் தேஎம் தமது ஆக்கியும்
தருப்பையில் கிடத்தி வாளில் போழ்ந்து
செருப் புகல் மன்னர் செல்வுழிச் செல்க என
மூத்து விளிதல் இக் குடிப் பிறந்தோர்க்கு
நாப் புடைபெயராது நாணுத் தகவுடைத்தே
தன் மண் காத்தன்று பிறர் மண் கொண்டன்று
என் எனப் படுமோ நின் மகன் மடிந்தது?
மன்பதை காக்கும் மன்னவன் தன் முன்
துன்பம் கொள்ளேல் என்று அவள் போய பின்  23-020

கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி
பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறம் மறைத்து
வஞ்சம் செய்குவன் மணிமேகலையை என்று
அம் சில் ஓதி அரசனுக்கு ஒரு நாள்
பிறர் பின் செல்லாப் பிக்குணிக் கோலத்து
அறிவு திரிந்தோன் அரசியல் தான் இலன்
கரும்பு உடைத் தடக் கைக் காமன் கையற
அரும் பெறல் இளமை பெரும்பிறிதாக்கும்
அறிவு தலைப்பட்ட ஆய் இழை தனக்குச்
சிறை தக்கன்று செங்கோல் வேந்து! எனச்  23-030

சிறப்பின் பாலார் மக்கள் அல்லார்
மறப்பின் பாலார் மன்னர்க்கு என்பது
அறிந்தனைஆயின் இவ் ஆய் இழை தன்னைச்
செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறை சொல
என்னோடு இருப்பினும் இருக்க இவ் இளங்கொடி
தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல் என்று
அங்கு அவள் தனைக் கூஉய் அவள் தன்னோடு
கொங்கு அவிழ் குழலாள் கோயிலுள் புக்கு ஆங்கு
அறிவு திரித்து இவ் அகல் நகர் எல்லாம்
எறிதரு கோலம் யான் செய்குவல் என்றே  23-040

மயல் பகை ஊட்ட மறு பிறப்பு உணர்ந்தாள்
அயர்ப்பது செய்யா அறிவினள் ஆகக்
கல்லா இளைஞன் ஒருவனைக் கூஉய்
வல்லாங்குச் செய்து மணிமேகலை தன்
இணை வளர் இள முலை ஏந்து எழில் ஆகத்துப்
புணர் குறி செய்து பொருந்தினள் என்னும்
பான்மைக் கட்டுரை பலர்க்கு உரை என்றே
காணம் பலவும் கைந் நிறை கொடுப்ப
ஆங்கு அவன் சென்று அவ் ஆய் இழை இருந்த
பாங்கில் ஒரு சிறைப்பாடு சென்று அணைதலும்  23-050

தேவி வஞ்சம் இது எனத் தௌந்து
நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி
ஆண்மைக் கோலத்து ஆய் இழை இருப்ப
காணம் பெற்றோன் கடுந் துயர் எய்தி
அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார்
நிரயக் கொடு மகள் நினைப்பு அறியேன் என்று
அகநகர் கைவிட்டு ஆங்கு அவன் போயபின்
மகனை நோய் செய்தாளை வைப்பது என்? என்று
உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள் என
பொய்ந் நோய் காட்டிப் புழுக்கறை அடைப்ப  23-060

ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த
வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப
ஐயென விம்மி ஆய் இழை நடுங்கி
செய் தவத்தாட்டியைச் சிறுமை செய்தேன்
என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது
பொன் நேர் அனையாய்! பொறுக்க என்று அவள் தொழ
நீலபதி தன் வயிற்றில் தோன்றிய
ஏலம் கமழ் தார் இராகுலன் தன்னை
அழற்கண் நாகம் ஆர் உயிர் உண்ண
விழித்தல் ஆற்றேன் என் உயிர் சுடு நாள்  23-070

யாங்கு இருந்து அழுதனை இளங்கோன் தனக்கு?
பூங்கொடி நல்லாய்! பொருந்தாது செய்தனை
உடற்கு அழுதனையோ? உயிர்க்கு அழுதனையோ?
உடற்கு அழுதனையேல் உன்மகன் தன்னை
எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே?
உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வு அரியது
அவ் உயிர்க்கு அன்பினை ஆயின் ஆய் தொடி!
எவ் உயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்
மற்று உன் மகனை மாபெருந்தேவி   23-080
செற்ற கள்வன் செய்தது கேளாய்
மடைக் கலம் சிதைய வீழ்ந்த மடையனை
உடல் துணிசெய்து ஆங்கு உருத்து எழும் வல் வினை
நஞ்சு விழி அரவின் நல் உயிர் வாங்கி
விஞ்சையன் வாளால் வீட்டியது அன்றே
யாங்கு அறிந்தனையோ ஈங்கு இது நீ? எனின்
பூங் கொடி நல்லாய்! புகுந்தது இது என
மொய்ம் மலர்ப் பூம்பொழில் புக்கது முதலா
தெய்வக் கட்டுரை தௌந்ததை ஈறா
உற்றதை எல்லாம் ஒழிவு இன்று உரைத்து  23-090

மற்றும் உரை செயும் மணிமேகலை தான்
மயல் பகை ஊட்டினை மறு பிறப்பு உணர்ந்தேன்
அயர்ப்பதுசெய்யா அறிவினேன் ஆயினேன்
கல்லாக் கயவன் கார் இருள் தான் வர
நல்லாய்! ஆண் உரு நான் கொண்டிருந்தேன்
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ
மாண் இழை செய்த வஞ்சம் பிழைத்தது?
அந்தரம் சேறலும் அயல் உருக் கோடலும்
சிந்தையில் கொண்டிலேன் சென்ற பிறவியில்
காதலற் பயந்தோய்! கடுந் துயர் களைந்து  23-100

தீது உறு வெவ் வினை தீர்ப்பதுபொருட்டால்
தையால்! உன் தன் தடுமாற்று அவலத்து
எய்யா மையல் தீர்ந்து இன் உரை கேளாய்
ஆள்பவர் கலக்குற மயங்கிய நல் நாட்டுக்
காருக மடந்தை கணவனும் கைவிட
ஈன்ற குழவியொடு தான் வேறாகி
மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி
புதல்வன் தன்னை ஓர் புரி நூல் மார்பன்
பதியோர் அறியாப் பான்மையின் வளர்க்க
ஆங்கு அப் புதல்வன் அவள் திறம் அறியான்  23-110

தான் புணர்ந்து அறிந்து பின் தன் உயிர் நீத்ததும்
நீர் நசை வேட்கையின் நெடுங் கடம் உழலும்
சூல் முதிர் மட மான் வயிறு கிழித்து ஓடக்
கான வேட்டுவன் கடுங் கணை துரப்ப
மான் மறி விழுந்தது கண்டு மனம் மயங்கி
பயிர்க் குரல் கேட்டு அதன் பான்மையன் ஆகி
உயிர்ப்பொடு செங் கண் உகுத்த நீர் கண்டு
ஓட்டி எய்தோன் ஓர் உயிர் துறந்ததும்
கேட்டும் அறிதியோ வாள் தடங் கண்ணி
கடாஅ யானைமுன் கள் காமுற்றோர்  23-120

விடாஅது சென்று அதன் வெண் கோட்டு வீழ்வது
உண்ட கள்ளின் உறு செருக்கு ஆவது
கண்டும் அறிதியோ காரிகை நல்லாய்
பொய்யாற்று ஒழுக்கம் பொருள் எனக் கொண்டோர்
கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ?
களவு ஏர் வாழ்க்கையர் உறூஉம் கடுந் துயர்
இள வேய்த் தோளாய்க்கு இது என வேண்டா
மன் பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை
துன்பம் தருவன துறத்தல் வேண்டும்
கற்ற கல்வி அன்றால் காரிகை!   23-130

செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர்
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர்
அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர்
திருந்து ஏர் எல் வளை! செல் உலகு அறிந்தோர்
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்தோர்
துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர்
மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார் என
ஞான நல் நீர் நன்கனம் தௌத்து
தேன் ஆர் ஓதி செவிமுதல் வார்த்து
மகன் துயர் நெருப்பா மனம் விறகு ஆக   23-140

அகம் சுடு வெந் தீ ஆய் இழை அவிப்ப
தேறு படு சில் நீர் போலத் தௌிந்து
மாறு கொண்டு ஓரா மனத்தினள் ஆகி
ஆங்கு அவள் தொழுதலும் ஆய் இழை பொறாஅள்
தான் தொழுது ஏத்தி தகுதி செய்திலை
காதலற் பயந்தோய் அன்றியும் காவலன்
மாபெருந்தேவி என்று எதிர் வணங்கினள் என்  23-147

உரை

மன்னவன் ஏவலின்படி வாசந்தவை என்னும் முதியவள் இராசமாதேவியின் பால் சென்று ஆற்றுவித்தல்

1-10: மன்னவன்..........வாழ்த்தி

(இதன் பொருள்) மன்னவன் அருளால்-சோழ மன்னனுடைய அருளை முன்னிட்டுக் கொண்டு அரண்மனையின்கண்; அரசற்காயினும் குமரர்க்காயினும் இருநில கிழமை தேவியர்க்கு ஆயினும்-அரசர்களுக்கேனும் மக்களுக்கேனும் பெரிய நிலத்தை ஆளும் உரிமை பூண்ட பட்டத்துத் தேவியருக்கேனும் ஏதேனும் துன்பம் வந்த காலத்தில் சென்று அத் துன்பத்தைத் தீர்த்தற்கு; கட்டுரை விரித்தும் கற்றவை பகர்ந்தும்-பொருள் பொதிந்த சொற்களை விரித்துக் கூறியும் தான் கற்ற அறிவுரைகளை எடுத்து விளக்கியும்; பட்டவை துடைக்கும் பயங்கெழு மொழியினள்-அவர்கள் உற்ற துன்பத்தைத் துடைக்கவல்ல பயன் பொருந்திய மொழியையுடையவளாகிய; வாசந்தவை எனும் நல்நெடும் கூந்தல் நரை மூதாட்டி- வாசந்தவை என்னும் பெயரையுடைய அழகிய நெடிய கூந்தல் நரைத்துள்ள முதியவள்; இலங்கு அரிநெடும் கண் இராசமாதேவி கலங்கு அஞர் ஒழிய கடிது சென்று எய்தி-விளங்குகின்ற செவ்வரியோடிய நெடிய கண்ணையுடைய இராசமாதேவிக்குத் தன் மகன் இறந்தமையால் உண்டான நெஞ்சு கலங்குதற்குக் காரணமான துன்பம் தீர்தற்பொருட்டு விரைந்து உவளகத்தே சென்று; அழுது அடி வீழாது-ஏனைய மகளிரைப் போல அழுதுகொண்டு அடியில் வீழாமல்; ஆயிழை தன்னை தொழுது முன்னின்று-இராசமாதேவியைக் கை குவித்துத் தொழுது அவள் முன்னிலையின் நின்றவாறே; தோன்ற வாழ்த்தி-தன் வருகை தோன்றுமாறு சிறப்பாகத் தேவியை வாழ்த்திக் கூறுபவள்; என்க.

(விளக்கம்) மன்னவன் அருளால் என்றது இராசமாதேவிக்கு ஆறுதல் கூறுதல் வேண்டும் என்னும் கருத்து அரசனுக்குண்மையைக் குறிப்பால் உணர்ந்துகொண்டு என்றவாறு. எனவே இவள் முற்பட அரசனுக்கு ஆறுதல் கூறவேண்டாமையும் பெற்றாம். நரையையுடைய மூதாட்டி என்க. அரசர்க்கு, தேவியர்க்கு என்பதற்கேற்பக் குமரர்க்கு  தருப்பையில் கிடத்தி.....விளிதல் என்பதனோடு ஓடன் மரீஇய பீடின் மன்னர், நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக் காதன் மறந்தவர் தீது மருங்கறுமார், அறம்புரி  கொள்கை நான்முறை முதல்வர், திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி, மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கென வாள்போழ்ந் தடக்கலு முய்ந்தனர் என வரும் புறப்பாட்டு (13) ஒப்பு நோக்கப்படும் மூப்பினும் பிணியினும் இறவாது அமர்க்களத்து வீழ்ந்தாரே துறக்கம் பெறுவர் என்பது நச்சினார்க்கினியர்(தொல் அகத் 44) உரை என்னெனப் படுமோ என்றது இகழ்ச்சி. நின்மகன் பொருட்டு நீ துன்பங்கொள்ளுதலை அரசன் காணின் நாணுவன் ஆதலால் நீ துன்பங்கொள்ளேல் என்பது குறிப்பு. இக் குறிப்பு பெரிதும் நுணுக்கமுடையத்தாய் இராசமாதேவி துன்பம் மறத்தற்கு ஏதுவாதலும் உணர்க.

அரசியின் வஞ்சகச் செயல்

21-30: கையாற்று............வேந்தென

(இதன் பொருள்) கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறம் மறைத்து-மகன் இறந்தமையால் பெரிதும் துன்பமுற்றுக் கையாற்றுக் கிடக்கும் என் நெஞ்சத்தைப் பிறர் அறியாவண்ணம் என்னுள்ளேயே மறைத்து அடக்கிக்கொண்டு பொய்யாகத் துன்புறாதவள் போன்று நடிக்கும் ஒழுக்கத்தைக் கைக்கொண்டு அதனால் என் வஞ்சம் புறத்தே தோன்றா வண்ணம்; மணிமேகலையை வஞ்சம் செய்குவன் என்று அம்சில் ஓதி-என் மகன் கொலையுண்டமைக்குக் காரணமான மணிமேகலையை வஞ்சித்து ஒறுக்குவன் என்று துணிந்து அழகிய சில பகுதியையுடைய கூந்தலையுடைய இராசமாதேவி தன்னுள் துணிந்து; அரசனுக்கு-தன் கணவனாகிய மன்னனுக்குச் செவ்வி பெற்ற ஒரு நாளில் கூறுபவள்; பிறர்பின் செல்லாப் பிக்குணிக் கோலத்து-பிறர் தன்னை விரும்பிப் பின் வாராமைக்குரிய மணிமேகலையின் தவவேடத்தைக் கண்டு; அறிவு திரிந்தோன் அரசியல் தானிலன்-தனதறிவு பிறழ்ந்துபோன நம் மகன் நம் அரசியலுக்கு ஏற்புடையான் அலன் ஆதலின் அவனைப் பற்றி யான் கவல்கிலேன்; கரும்புடை தடக்கை காமன் கையற அரும்பெறல் இளமை பெரும் பிறிதாகும்-கருப்பு வில்லையுடைய பெரிய கையையுடைய காமவேளும் செயலற்றுத் திகைக்கும்படி அரிய பேறாகிய தனது இளமைப் பருவத்தைக் கொண்டடொழிதற்குக் காரணமான; அறிவு தலைப்பட்ட ஆயிழை தனக்கு சிறைதக்கன்று செங்கோல் வேந்து என-மெய்யறிவு கைவரப்பெற்ற மணிமேகலை நல்லாளுக்குச் சிறைக் கோட்டம் தகுதியான இடம் அன்று செங்கோன்மையுடைய வேந்தர் பெருமானே இஃது என் கருத்தாம் என்று நயம்பட நவிலா நிற்ப; என்க.

(விளக்கம்) கையாற்றுள்ளம்-மகன் இறந்துபட்டமையால் துன்பம் மிகுந்து செயலற்றுக் கிடக்கும் நெஞ்சம். பொய்யாற்றொழுக்கம்-வஞ்சக ஒழுக்கம். அஞ்சிலோதி-இராசமாதேவி, அரசியல் தானிலன் ஆதலின் அவன் இறந்தமை பற்றி யானும் வருந்துகிலேன் என்பது குறிப்பு. பெரும்பிறிதாக்குதல்-சாகச் செய்தல்; பெரும் பிறிது சாவு. இளமையின் குறும்பு நிகழாவண்ணம் நன்கு அடக்கி விட்டாள் எனத் தான் மணிமேகலையைப் பெரிதும் மதிப்பாள் போல அதற்கேற்ற சொல் தேர்ந்து கூறுகின்றாள். அறிவு-மெய்யறிவு. ஆயிழை-மணிமேகலை. தக்கன்று-தகுதியுடையது அன்று. நீ இத்தகைய தவறு செய்தல் தகாது என்று இடித்துக் கூறுவாள் செங்கோல் வேந்து என்றாள்.

அரசன் செயல்

31-34: சிறப்பின்..............இறைசொல்

(இதன் பொருள்) மன்னர்க்குச் சிறப்பின் பாலார் மக்கள் அல்லார் மறப்பின் பாலார் என்பது-அரசர்க்கு அரசியல் இலக்கணமாகிய சிறப்பின் பாற்பட்ட மக்களே மக்கள் எனக் கொள்ளத் தகுந்தவர் அச் சிறப்பில்லாதவர் தம் மக்களாயினும் மக்களாகக் கருதாமல் மறக்கும் பகுதியின் பாற்படுவர் என்று சான்றோர் சொல்லுவர் இவ்வுண்மையை; அறிந்தனை ஆயின் இவ்வாயிழை தன்னை செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறைசொல்-யான் அறியுந்துணை நீயும் அறிந்திருப்பாயாயின் சிறைக் கோட்டத்திலிடப் பட்ட மணிமேகலையை நீயே செறிந்துள்ள சிறையினால் உண்டாகும் துன்பத்தைத் தீர்த்திடுக என்று அம் மன்னவன் அவள் கருத்துக்கிசைந்து கூறா நிற்ப; என்க.

(விளக்கம்) சிறப்பு-அரசாட்சிக்கு வேண்டிய சிறப்பிலக்கணம் ஏனையோர் தம் மக்களாயிருந்தாலும் மக்களாகக் கொள்ளப்பட்டார். அறிந்தனை ஆயின் என்றது என்னைப் போல அறிந்திருப்பதுண்டாயின் நன்று என்றவாறு. இதனானும் அரசன் மணிமேகலையைச் சிறை செய்தது அவளைப் பாதுகாத்திற் பொருட்டே என்பதறியலாம். தாய்மையுள்ள மாகலின் இவ்வாறு இராசமாதேவி கருதுதல் அரிது என்பது தோன்ற இங்ஙனம் கூறினான். இவ்வாறு பிறர் கருதாமல் அவளுக்குத் தீங்கியற்ற முற்படுவர் என்பது கருதியே யானும் அவளைச் சிறையிலிட்டுப் பாதுகாத்து வருகின்றேன் என்பது இதன்கண் குறிப்பெச்சப் பொருளாய் நின்றது. தன் விருப்பம் போலத் திரிய ஒண்ணாதபடி செறிய அடைபட்டுக் கிடப்பதனால் உண்டாகும் சிறைத்துன்பம் என்றவாறு. தீர்க்க என்றதன் ஈற்று உயிர்கெட்டது; விகாரம் அவனது இறைமைத் தன்மை விளங்குதலின் அக் கருத்துத் தோன்ற அரசன் என்னாது இறை என்றார்.

இராசமாதேவியின் வஞ்சகச் செயல்கள்

35-41: என்னோடு..............ஊட்ட

(இதன் பொருள்) என்னோடு இருப்பினும் இருக்க இவ்விளங்கொடி-பெருமானே நன்று, அங்ஙனமே செய்வல் சிறைவீடு செய்த பின்னர் மணிமேகலை என்னோடு உவளகத்தில் இருப்பினும் இருந்திடுக. அதனை விரும்பாது இவ்விளமையுடைய பிக்குணி; தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல் என்று-தன் தவவேடத்திற்கு இயையத் தனது பிச்சைப் பாத்திரத்தை ஏந்தித் தன் விருப்பப்படி போயினம் போகுக அவளைத் தடுப்பவர் யாரும் இல்லை என்று மன்னவன் மதிக்கும்படி கூறி; கொங்கு அவிழ் குழலாள் அங்கு அவள் தனை கூஉய் அவள் தன்னோடு கோயிலுள் புக்கு-நறுமணம் கமழும் கூந்தலையுடைய இராசமாதேவி அவ்விடத்தேயே மணிமேகலையைச் சிறைவீடு செய்வித்துத் தன்பால் அழைத்து அவளோடு தனது மாளிகையிலே புகுந்த பின்னர்; அறிவு திரித்து இ அகநகர் எல்லாம் எறிதரு கோலம் யான் செய்குவல் என்று-இம் மணிமேகலைக்குப் பித்தேற்றி இவள் அறிவைப் பிறழ்வித்து இந்த அகநகரத்தில் வாழுகின்ற மாந்தரெல்லாம் இவளை அடிக்கத் தகுந்ததொரு வண்ணத்தை யான் இவளுக்குச் சென்று விடுவல் என்று துணிந்து; மயல் பகை ஊட்ட-பித்துண்டாக்குகின்ற இயற்கைக்கு மாறான மருந்தை வஞ்சகமாக ஊட்டிவிடா நிற்ப; என்க.

(விளக்கம்) என்னோடு உவளகத்தில் இருப்பினும் இருக்க என்றவாறு இளங்கொடி: மணிமேகலை. ஓடு-பிச்சைப் பாத்திரம். கூஉய்-கூவி; அழைத்து கொங்கவிழ் குழலாள்: இராசமாதேவி அகநகர்-ஆகு பெயர். எறிதரும் என்புழி தரும் பகுதிப் பொருட்டு. கோலம்-தன்மை பகை-பகையான மருந்து

இதுவுமது

41-50: மறுபிறப்பு............அணைதலும்

(இதன் பொருள்) மறு பிறப்பு உணர்ந்தாள் அயர்ப்பது செய்யா அறிவினள் ஆக-மறு பிறப்பினையும் அறிந்துள்ள அறிவுவன்மையுடைய மணிமேகலை அம் மருந்து காரணமாக யாதொன்றினையும் மறத்தல் இல்லாத இயற்கை அறிவோடு பண்டு போல விளங்காநிற்ப அதுகண்ட இராசமாதேவி; கல்லா இளைஞன் ஒருவனை கூஉய் வல்லாங்கு செய்து-கல்லாக் கயவன் ஒருவனை மழைத்து ஏடா! உன்னால் இயலுமளவும் ஏதெனினும் செய்து; மணிமேகலை தன் இணைவளர் இளமுலை ஆகத்து புணர்குறி செய்து-மணிமேகலையினுடைய ஒன்றற்கு ஒன்று இணையாக வளருகின்ற இளைய முலைகளையுடைய உயர்ந்த அழகிய உடம்பின்கண் நீ புணர்ந்ததற்குரிய அடையாளங்களைச் செய்துவிட்டு; பொருந்தினள் என்னும் பான்மைக் கட்டுரை பலர்க்கு உரை என்று மணிமேகலை உன்னைக் காமுற்றுப் புணர்ந்தாள் என்னும் தன்மையையுடைய திட்பமான மொழிகளை நகரமாந்தர் பலருக்கும் கூறிப் பழி தூற்றுவாயாக என்று கற்பித்து; காணம் பலவும் கைநிறை கொடுப்ப-இத்தீச் செயலுக்கு அவன் உடன்படும் பொருட்டுக்கைக் கூலியாகப் பொற்காசுகள் பலவற்றையும் அவன் கை நிறையும்படி கொடுத்து ஏவ; ஆங்கு அவன் சென்று அ ஆயிழை இருந்த பாங்கில் ஒருசிறைப்பாடு சென்று அணைதலும்-அக் கய மகனும் அம் மணிமேகலை இருந்த பக்கத்தில் ஒரு புறமாகச் சென்று சேர்தலும்; என்க.

(விளக்கம்) மறு பிறப்புணர்ந்தாள் என்றது மணிமேகலையின் அறிவுப் பெருமையைக் குறிப்பாக உணர்த்தி அவ்வறிவாற்றலால் மருந்தின் ஆற்றலை அடக்கிப் பண்டு போலவே யிருந்தாள் என்பதற்குக் குறிப்பேது வாய் நின்றது. ஈண்டு இவ்வரசியின் இவ்விழிதகவு குறித்தே சாத்தனார் இவளைப் பண்டே அரக்கர் குலப்பாவை என்று அறிவுறுத்தினர் என்றுணர்க, இம் மருந்து நோய் உண்டாகுதலின் பகைமருந்து எனப் பட்டது. பகை: ஆகு பெயர். அயர்ப்பது-மறப்பது. பித்தேறியவர் ஒன்றை நினைத்து அதைச் சொல்லி முடிப்பதற்குள் அதனை மறந்த மற்றொன்றனைப் பேசுவர் ஆதலின் பித்தேறாமையை அதன் பண்புக் கேற்றி அயர்ப்பது செய்யா அறிவு என்றார். தீவினை செய்தற்கு உøம்படல் வேண்டிக் கல்லாக் கயமகனை அழைத்தாள் என்க. வல்லாங்குச் செய்து என்றது வலிந்துபுணர்க. வலிமையினால் அவளை வலிந்து பற்றிய புணர்க எனல் வேண்டியவள் தான் பெண்ணாகலின் இடக்கரடக்கி, வல்லாங்குச் செய்து என்றாள். ஆகத்துப் புணர்குறி பான்மை-முறைமை. கட்டுரை-கட்டிக் சொல்லும் பொய்ம்மொழி. காணம்-பொற்காசு. கைநிறை கொடுப்ப: விகாரம் இருந்த பாங்கு இருந்த பக்கம். ஒரு சிறைப்பாடு-ஒரு புறத்தில்

மணிமேகலையின் செயல்

51-60: தேவி.............அடைப்ப

(இதன் பொருள்) ஆயிழை-மணிமேகலை; இது தேவி வஞ்சம் எனத் தெளிந்து-ஆடவர் வரலாகா இடத்தில் இங்ஙனம் ஒரு முடலையாக்கையின் வருதற்குக் காரணம் இராசமாதேவியின் வஞ்சமே என்று நன்கு தெரிந்துகொண்டு; நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி ஆண்மைக் கோலத்து இருப்ப-நாவினால் ஓதுகின்ற மந்திரத்தை அஞ்சாமல் ஓதி அக் கயவனும் அஞ்சத் தகுந்த முடலையாக்கை ஆடவன் உருக்கொண்டு மணிமேகலையும் இருத்தலாலே; காணம் பெற்றோன் கடுந்துயர் எய்தி-கைக்கூலி பெற்ற அக் கயமகன் அங்கிருந்த ஆடவன் உருவத்தைக் கண்ணுற்று இவனால் நமக்குத் தீங்கு உண்டாகுமோ என்னும் அச்சத்தால் பெருந்துன்பமடைந்து; அரசர் உரிமையில் ஆடவர் அணுகார்-மன்னருடைய உரிமை மகளிர் இருக்கும் உவளகத்தில் இத்தகைய ஆடவர் அணுகுதல் இலர் ஆகவும் இங்கு ஒருவன் இருக்கின்றான்; நீராய் கொடுமகள் நினைப்பு அறியேன் என்று அகநகர் கைவிட்டு ஆங்கு அவன் போயபின்-நரகத்தில் வீழ்தற்குரிய அரசியாகிய இக் கொடும் பாவியின் கருத்து யாதென்று யான் அறிகின்றிலேன் யாதாயினும் ஆகுக யான் இங்கு இரேன் என்று துணிந்து அகநகரத்தைக் கைவிட்டு அக் கயமகன் ஓடிப்போன பின்னரும்; மகனை நோய் செய்தாளை வைப்பது என் என்று-நம் மகனைக் கொலையுண்ணும் அளவிற்குக் காமநோய் செய்து விட்டவளை இவ்வாறு இன்புற்றிருப்ப விட்டு வைத்திருப்பது என்ன பேதைமை என்று செற்றங்கொண்டவளாய்; உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள் என பொய் நோய் காட்டி புழுக்கு அறை அடைப்ப-பிற மகளிர்க்குத் தன் தீவினையை மறைத்தற்பொருட்டு மணிமேகலை பிழைக்க முடியாத நோயையுடையளாய் உண்ணுதலையே கைவிட்டாள் என்று சொல்லி ஏனைய மகளிர்க்குத் தான் படைத்த பொய் நோயை மெய்போலக் கூறிக் காட்டிய புழுக்கமிக்க நிலவறையிலிட்டு அடைத்து வைப்ப என்க.

(விளக்கம்) அரசர் உரிமையில் ஆடவர் அணுகார் என்பது பற்றி உவளகத்தில் தான் இருக்குமிடம் நோக்கி ஆடவன் ஒருவன் வருதல் கண்டு இதுவும் தேவியின் வஞ்சம் என்று அவன் தன்னைக் காணு முன் அவன் கண்டு அஞ்சத்தகுந்ததோர் ஆணுருவம் கொண்டு மணிமேகலையிருந்தாள் என்பது பாட்டிடைவைத்த குறிப்பினால் பெற்ற பொருள் என்னை? காணம் பெற்றோன் அவ்வாடவனைக் கண்டு கடுந்துயர் எய்தி என்றமையால். கடுந்துயர் எய்துதற்குக் காரணம் அவ்வாடவன் உருவத்தைக் கண்டு இவன் அஞ்சினான் என்பதன்றிப் பிறிதில்லையாகலின் என்க. நிரயக்கொடுமகள் நினைப்பு அறியேன் எனப் பாட்டிடை வைத்தமையால் இராசமாதேவி இவ்வாறு முருட்டுயாக்கை ஆடவரை யழைத்து அவரொடு காமக்களியாட்டம் செய்யும் வழக்க முடையாள் போலும் ! என்னையும் அது குறித்தே அழைத்திருப்பாள் என்றஞ்சி ஓடிப்போனான் என்க. அங்ஙனம் ஓடியவன் கயவனாகலின் ஊர்முழுதும் தூற்றியும் இருப்பன். ஈண்டு,

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு    (குறள், 204)

எனவும்

அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான்    (குறள், 1076)

எனவும் வரும் திருக்குறள்கள் நினைக்கப்படும்

இராசமாதேவியின் கழிவிரக்கம்

61-66 : ஊண்.......தொழ

(இதன் பொருள்) அந்த வாள் நுதல்-புழுக்கறையில் இடப்பட்ட ஒளியுடைய நுதலை உடைய மணிமேகலை-ஊண் ஒழி மந்திரம் உடைமையின் மேனி வருந்தாது இருப்ப-உணவின்றியும் நீண்ட நாள் இருத்தற்குரிய மந்திரம் தன்பால் இருத்தலால் அதனை யோதிச் சிறிதும் திருமேனி வாடாமலும் மனம் வருந்தாமலும் மகிழ்ந்திருப்ப; ஆயிழை ஐயென விம்மி நடுங்கி-இராசமாதேவி ஐயென்று பெரிதும் வியந் அத்தகையாளுக்கு அறியாது செய்துவிட்ட தன் தீவினையால் யாது நிகழுமோவென்றும் அச்சத்தால் உளம் விம்மி அழுது நடுங்கி மணிமேகலையை நோக்கி அந்தோ; என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது செய்தவத்தாட்டியை சிறுமை செய்தேன்-யான் பெற்ற செய்தவத்தாட்டியை சிறுமை செய்தேன்-யான் பெற்ற மகனுக்கு எய்திய துன்பத்தைப் பொறுக்க ஒண்ணாமல் செய்கின்ற தவவொழுக்கத்தை முழுவதும் ஆளுகின்ற தெய்வத் தன்மையுடைய உனக்குத் தீமை செய்தொழிந்தேனே என்று கழிவிரக்கம் கொண்டவளாய்;  பொன் ஏர் அனையாய்-பொன் போலும் அழகுடையாய்; அறியாமையால் செய்த என் பிழையைப் பொறுத்தருளுக என்று அவ்விராசமாதேவி கைகூப்பித் தொழாநிற்ப; என்க.

(விளக்கம்) ஊண்-உணவு: வாணுதல்: மணிமேகலை. ஐ-வியப்பு ஒன்றனைக் கண்டு வியப்போர் ஐயென்று வாயாற் சொல்லி வியத்தலும் உண்டு ஐ வியப்பாகும் என்பது தொல்காப்பியம், ஆயிழை: இராசமாதேவி, செய்தவத்தாட்டியை: முன்னிலைப் புறமொழி. சிறுமை-துன்பம். ஏர்-அழகு. பொன் போன்ற அழகுடையாய் என்க. பொறுக்க என்பதன் ஈற்றுயிர் கெட்டது. அவள்: இராசமாதேவி.

மணிமேகலை இராசமாதேவிக்குக் கூறும் அறிவுரை

67-75: நீலபதி.................யாரே

(இதன் பொருள்) நீலபதி தன் வயிற்றில் தோன்றிய ஏலம் கமழ்தார் இராகுலன் தன்னை அழல்கண் நாகம் ஆர் உயிர் உண்ண விழித்தல் ஆற்றேன் என் உயிர் சுடு நாள்-முற்பிறப்பிலே நீலபதி என்னும் அரசியின் வயிற்றில் பிறந்த ஏலமணம் கமழும் மலர்மாலையையுடைய இராகுலனை(இப் பிறப்பில் உதயகுமரனாகப் பிறந்தானை) தீப்போன்ற கண்ணையுடைய நாகப் பாம்பு அரிய உயிர் உண்டற்குக் கண் விழித்தமையைப் பொறேனாய் (அவன் மனைவி இலக்குமியாயிருந்த யான்) என் உயிரைத் தீக்குளித்துச் சுட்ட அந்த நாளிலே; இளங்கோன் தனக்கு யாங்கு இருந்து அழுதனை-இப் பிறப்பில் உன் வயிற்றிற் பிறந்து அரசிளங் குமரனாகிய இவனுக்கு எவ்விடத்தில் இருந்து நீ அழுதாய் கூறுதி பூங்கொடி நல்லாய்-பூங்கொடி போலும் அழகுடைய அரசியே! இப்பொழுது; பொருந்தாது செய்தனை-அழுகின்ற நீ தானும் பொருத்தமின்றி அழுகின்றாய், எற்றால் எனின்; உடற்கு அழுதனையோ உயிர்க்கு அழுதனையோ-இப்பொழுது கொலையுண்ட நின் மகனுடைய உடல் அழிந்தமை கண்டு அழுதாயோ அல்லது அவன் உயிர் போயிற்று என்று அழுதாயோ இவற்றுள் எது பற்றி அழுதாலும் அறியாமையே யாம், என்னை? உடற்கு அழுதனையேல் உன் மகன் தன்னை எடுத்துப் புறங்காட்டில் இட்டனர் யாரே-கண் கண்ட உடல் பற்றியே நீ அழுதிருத்தல் வேண்டும் அதற்கு அழுதால் நீ பெற்ற உன் மகன் உடம்பை எடுத்துப் போய்ச் சுடுகாட்டில் ஈமத்தீயிலேற்றி அழித்தது உங்களையன்றி வேறு யார்? ஆகவே நீங்களே அழித்துவிட்டு அழுதல் எற்றிற்கு என்றாள்; என்க.

(விளக்கம்) முற்பிறப்பில் உன்மகன் நீலபதி என்னும் அரசி மகனாய் இராகுலன் என்னும் பெயரோடு இருந்தான்; அவனுக்கு இலக்குமி என்னும் பெயரோடு யான் மனைவியாய் இருந்தேன்; இராகுலன் திட்டிவிடம் என்னும் பாம்பின் பார்வையால் இறந்தான்; அப்போது யான் தீயிற்பாய்ந் திறந்தேன் முற்பிறப்பில் இறந்த மகனுக்கு அழாத நீ அங்ஙனமே இப் பிறப்பில் இறந்தவனுக்கு மட்டும் அழுவதேன்? அன்றியும் நீ பெற்றது அவன் உடலை மட்டுமே; அவ்வுடலைத் தீயிலிட்டுச் சாம்பர் ஆக்குவானேன்? ஆக்கியபின் அழுவானேன்? இவ்வாற்றால் நீ பொருந்தாது செய்தனை என்று அறிவுறுத்தபடியாம்.

அழற்கண்-தீப்போலும் நஞ்சையுடைய கண். விழித்தல்-அவன்மேல் விழித்துக் கொல்லுதல். யாங்கிருந்தழுதனை என்னும் வினா அதன் எதிர்மறைப் பொருளை வற்புறுத்து நின்றது.

இதுவுமது

76-79: உயிர்க்கு.............வேண்டும்

(இதன் பொருள்) உயிர்க்கு அழுதனையேல்-உயிர் போனதற்கு அழுதேன் என்பாயாயின் அதுவும் பொருத்தமின்று என்னை? உயிரை நீ ஈன்றாயுமல்லை கண்டாயுமல்லை ஆதலின்; செயப்பாட்டு வினையால் உயிர் புகும் புக்கில்-தன்னால் செய்யப்பட்ட பழவினைக்கேற்ப போனவுயிர் சென்று புகும் உடம்பாகிய இடம்; தெரிந்து உணர்வு அரியது-எவ்விடத்தது என்று அறிந்து கொள்ளுதல் நம்மனோர்க்கு அரியதாம்; ஆய்தொடி அவ்வுயிர்க்கு அன்பினை ஆயின்-கோப்பெருந்தேவியே நின்னால் பெறப்படாத  தேனும் உயிரிடத்தே யான் பெரிதும் அன்புடையேன் ஆதலால் அழுகின்றேன் என்பாயாயின் அதுவும் பொருத்தமின்று. என்னை? எவ்வுயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்-உயிர்களில் வேற்றுமையின்மையால் உடம்பைவிட்டுப் போகின்ற உயிர் எல்லாவற்றிற்கும் நீ இவ்வாறு அழுதல் வேண்டும், அங்ஙனம் செய்கின்றலை ஆதலான் என்றாள்; என்க

(விளக்கம்) உயிரை அன்றும் காணாய் இன்றும் காணாய் என வரும்(கபிலரகவல்) பிற்றை நாள் செய்யுள் இதனைப் பின்பற்றி வந்தது உயிர் அவ்வவற்றின் வினைக்கேற்பத்தாமே பிறந்தும் இறந்தும் சுழல்வன அது பற்றி நீ அழுதல் பேதைமை.

இதுவுமது

80-90: மற்றுன்.................உரைத்து

(இதன் பொருள்) மா பெரும் தேவி மற்று உன் மகனை செற்றகள் வன் செய்தது கேளாய்-கோப்பெருந்தேவியே! உன் மகனாகிய உதயகுமரனைச் சினந்து கொன்றவன் காஞ்சனன் என்னும் விச்சாதரன் ஆவான். அவன் அங்ஙனம் செய்ததற்குரிய காரணமாகிய தீவினையை யான் கூறுவல் கேட்டருளுக; மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனை உடல் துணி செய்தாங்கு உருத்து எழும் வல்வினை-உன் மகன் இராகுலனாய் இருந்த முற்பிறப்பிலே அடிசிற்கலங்கள் சிதைந்துபோம்படி வழுக்கி அவற்றின் மேல் வீழுந்த தன் மடைத் தொழிலாளனை வாளால் உடல் துணியும்படி எறிந்து கொன்றமையால் உருத்து வந்த அக் கொடிய தீவினையானது; நஞ்சு விழி அரவின் நல் உயிர் வாங்கி-நஞ்சு விழி படைத்த நாகப்பாம்பினால் அப் பிறப்பிலேயே அவனது நல்ல உயிரைக் கவர்ந்ததோடு அமையாமல்; விஞ்சையன் வாளால் வீட்டியது-நின் மகனாகப் பிறந்த இப் பிறப்பினும் தொடர்ந்து வந்து விச்சாதரன் ஒருவன் வாளினாலே கொன்றொழித்தது காண்; இது நீ எங்ஙனம் அறிந்துகொண்டாயோ என்று என்னை வினவுதல் கூடும், அங்ஙனம் வினவுவாயாயின்; பூங்கொடி நல்லாய் புகுந்தது இது என-மலர்க்கொடி போலும் அழகுடைய மாபெருந்தேவியே! யான் அறிந்து கொள்ள நிகழ்ந்த நிகழ்ச்சி இது, அதனைக் கூறுவேன் கேள் என்று தொடங்கி; மெய்ம் மலர்ப் பூம்பொழில் புக்கது முதலா தெய்வக் கட்டுரை தெளிந்ததை ஈறா உற்றத்தை எல்லாம் ஒழிவு இன்று உரைத்து செறிந்த மலரையுடைய பூம்பொழிலாகிய உவவனத்திற்கு மலர் கொய்யும் பொருட்டுத் தான் சுதமதியோடு கூடிப் புகுந்தது முதலாக உலகவறவியின்கண் கந்திற்பாவைமேனிற்கின்ற துவதிகன் என்னும் தெய்வம் உதயகுமரன் கொலையுண்ட பின்னர் எடுத்துக் கூறிய பொருள் பொதிந்த மொழிகளால் தான் தெளிந்தது ஈறாக நிகழ்ந்தவற்றை எல்லாம் ஒன்றும் ஒழியாமல் எடுத்துக் கூறி என்க.

(விளக்கம்) செற்றகள்வன் என்றது சினந்த காஞ்சனனை உதயகுமரன் அறியாவண்ணம் பின்புறத்தே நின்று உயிர் கவர்ந்தான் ஆகலின் அவனைக் கள்வன் என்று உருவகித்தாள். செய்தது என்றது செய்ததற்குரிய காரணத்தை என்பதுபடநின்றது. மடைக்கலம்-அட்டிற்கலம். மடையன்-மடைத்தொழில் செய்பவன்; உண்டி சமைப்பவன். நஞ்சுவிழி அரவு-திட்டிவிடம். வீட்டியது-கொன்றது. யாங்கு-எவ்வாறு. புகுந்தது-நிகழ்ந்தது. பூம்பொழில் என்றது உவவனத்தை. தெய்வக் கட்டுரை-கந்திற்பாவை கூறிய பொருள் பொதிந்தசொல், தெளிந்ததை என்புழி ஐகாரம் சாரியை. ஈறாக என்பதன்கண் ஈற்றுயிர்மெய் தொக்கது. எல்லாம் என்பது எஞ்சாமைப்பொருட்டு. ஒழிவின்று என்பதில் குற்றியலிகரம் குற்றியலுகரமாயிற்று; செய்யுளாகலின்.

இதுவுமது

91-99: மற்று..............கொண்டிலேன்

(இதன் பொருள்) மணிமேகலைதான் மற்றும் உரை செய்யும்-பின்னர் அம் மணிமேகலை மேலும் சொல்லுகின்றாள்; மயல் பகை ஊட்டினை மறுபிறப்பு உணர்ந்தேன் அயர்ப்பது செய்யா அறிவினேன் ஆயினேன்-தேவியே! நீதானும் அறிவினை மயக்கப் பித்தேற்றும் பகை மருந்தினை எனக்கு ஊட்டினை யானோ மறுபிறப்பு உணருமளவிற்கு அறிவாற்றல் உடையேன் ஆகலின் பித்துடையார் போன்று தன்னைத்தான் மறந்திடாத நல்லறிவு உடையேனாயிருந்தேன்; நல்லாய் -நன்மை மிக்க அரசியே நின் ஏவலால்; கல்லாக் கயவன் கார் இருள் தான் வர நான் ஆண் உரு கொண்டிருந்தேன்-கல்லாத கயவன் ஒருவன் கரிய இருளின்கண் என்பால் வரும் பொழுது யான் ஆணுருக் கொண்டு தப்பினேன்; மாண் இழை செய்த வஞ்சம்-மாட்சிமையுடைய அணிகலன் அணிந்த இராசமாதேவியே! நீ பொய் நோய் காட்டி என்னைப் புழுக்கறையில் இட்ட வஞ்சகச் செயலினின்றும்; பிழைத்தது-யான் உயிர் தப்பியது; ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ-யான் உணவில்லாமலும் உயிரோடிருத்தற்குரிய மந்திரம் உடையேனாய் இருந்ததனாலன்றோ? அஃதின்றேல் இறந்து படுதல் தப்பாது; அந்தரம் சேறலும் அயல் உருக்கோடலும் சிந்தையில் கொண்டிலேன்-இவ்வாறன்றி நின் பாதுகாப்பினின்றும் வான் வழியே சென்று தப்பவும் வேற்றுருக் கொண்டு தப்பவும் யான் எண்ணுகிலேன் எனின்; என்க

(விளக்கம்) நல்லாய்: விளி மந்திரமுடைமையினன்றோ பிழைத்தது என்றது அஃதில்லையானால் இறந்தொழிவேன் என்பதுபட நின்றது. அந்தரம்-வானம் அயல் உருக்கோடல்-வேற்றுருக் கொள்ளுதல். இவற்றால் நின்னை விட்டு யான் போதல் கூடும்; ஆயினும் அவ்வாறு போவதற்கு யான் நினைந்திலேன் என்று சொல்லி மேலே அதற்கும் காரணம் கூறுகின்றாள் என்க.

இதுவுமது

99-103: சென்ற........கேளாய்

(இதன் பொருள்) தையால்-நங்கையே நின்னிடத்தினின்றும் ஓடிப்போதற்கு யான் நினையாமைக்குக் காரணம் கூறுவேன் கேள்; சென்ற பிறவியின் காதலன் பயந்தோய் கடுந்துயர் களைந்து தீது உறு வெவ்வினை தீர்ப்பது பொருட்டு-முற்பிறப்பிலே எனக்குக் காதலனாய் இருந்தவனை அவனது மறுபிறப்பின்கண் ஈன்ற தாய் அல்லையோ நீ? இவ்வாற்றால் எனக்கு மாமியாகிய உனக்கு வந்த கடுந்துன்பத்தைப் போக்கி மேலும் தீமை வருவதற்குக் காரணமான தீவினைகளை நின்னிடத்திருந்து ஒழிக்க வேண்டும் என்னும் என் விருப்பமே அதற்குக் காரணமாம், இதுகாறும் கூறியவற்றால்; உன் தன் தடுமாற்று அவலத்து எய்யா மையல் தீர்ந்து இன் உரை கேளாய் உன்னுடைய மனம் தடுமாறுதற்குக் காரணமான துன்பத்தையுடைய அறியாமையாகிய மயக்கத்தைக் கைவிட்டு இனி யான் கூறுகின்ற இனிய அறிவுரைகளைக் கேட்டருளுக; என்க.

(விளக்கம்) காதலன் என்றது இராகுலனை. பயந்தோய்-ஈன்றோய் மகன் இறந்தமையால் வந்த துன்பமாகலின் கடுந்துயர் என்றாள். இனி தீவினை செய்யாமல் தீர்க்கவேண்டுமென்னும் விருப்பம் காரணமாக என்க. தையால்: விளி. எய்யா மையல்-அறியாமைக்குக் காரணமான மயக்கம்.

மணிமேகலை காமம் முதலியவற்றால் வரும் தீவினைகளை விளக்குதல்

104-111: ஆள்பவர்....................நீத்தும்

(இதன் பொருள்) ஆள்பவர் கலக்கு உற மயங்கிய நல் நாட்டு காருக மடந்தை-நாட்டை யாளும் அரசர் கொடுங்கோன்மையால் கலக்குறப்பட்டு அறம் தலைதடுமாறிய நல்ல நாட்டின்கண் பண்டு இல்லறம் நடத்திய நங்கை ஒருத்தி தன்; கணவனும் கைவிட கணவனாலும் கைவிடப்பட்டு ஈன்ற குழவியொடு தான் வேறு ஆகி மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி-தான் ஈன்ற குழவியையும் கைவிட்டுத் தான் தமியளாய்ப் பிரிந்து போய் மயங்கி மனம் போனதொரு திசையிலே போய் ஆங்கோர் ஊரின்கண் வரைவின் மகளாய் வாழ்கின்ற காலத்திலே; புதல்வன் தன்னை ஓர் புரிநூல் மார்பன் பதியோர் அறியா பான்மையின் வளர்க்க-அவள் கைவிட்ட குழந்தையை ஒரு பூணுநூல் அணிந்த மார்பையுடைய ஒரு பார்ப்பனன் அவ்வூர்வாழ் மாந்தர் அறியாததொரு முறைமையாலே தன் பிள்ளை போல வளர்த்துவிட; ஆங்கு அப் புதல்வன் அவ்வாறு வளர்க்கப்பட்ட அம்மகன்; அவள் திறம் அறியான்-தன் தாயிருந்த ஊருக்கு ஒரு காரியத்தை முன்னிட்டுச் சென்றவன் அங்குப் பொது மகளாய் வாழ்க்கை நடத்திய தன் தாயைப் பொதுமகள் என்றே நினைத்து; தான் புணர்ந்து-அவளைப் புணர்ந்து அறிந்து பின் தன் உயிர் நீத்ததும்-பின்பு தாயென்றறிந்து அத் தீவினை பொறாமல் அவன் தன் உயிரை விட்டதும் என்க.

(விளக்கம்) ஆள்பவரால் கலக்குற மயங்கிய நாடு என்க. இது மடந்தையைக் கணவன் கைவிடவும் குழவியை அவள் பிரிந்து போதற்கும் ஏதுவாய் நின்றது. குழவியொடு: உருபுமயக்கம் வரையாளாய்-கற்பொழுக்கத்தை வரைந்து கொள்ளாது வலை மகளாய் என்க. பதியோர்-ஊரிலுள்ளோர். அவள்திறம்-அவள் தன் தாயென்னும் செய்தி. புணர்ந்தபின் அறிந்து என்க. இது காமத்தின் தீமைக்கு ஒன்று காட்டியவாறு.

இதுவுமது

112-119: நீர்நசை.............கண்ணி

(இதன் பொருள்) வாள் தடம் கண்ணி-வாள்போலும் நீண்ட பெரிய கண்ணையுடைய அரசியே; நீர்நசை வேட்கையின் நெடுங்கடம் உழலும் சூழ்முதிர் மடமான்-நீரை விரும்பும் வேட்கையினாலே நெடிய காட்டின்கண் நீர்நிலை தேடித் திரிகின்ற சூல் முதிர்ந்த இளைய மானினது; வயிறு கிழித்து ஓட கானவேட்டுவன் கடுங்கணை துரப்ப மான்மறி விழுந்தது கண்டு-வழிற்றைக் கிழித்து அப்பாலும் ஓடும்படி அக் காட்டில் வாழுகின்ற வேடன் ஒருவன் கடிய அம்பினைச் செலுத்துதலாலே அப் பெண்மான் விழுந்ததனைக் கண்டு ;மனம் மயங்கி நெஞ்சு கலங்கி; பயிர்க்குரல் கேட்டு அதன் பான்மையனாகி-அம் மான் தன் இனத்தை யழைக்குங் குரலைக் கேட்டு அதன் அருகிலே சென்று பார்த்து; உயிர்ப்பொடு செங்கண் உகுந்த நீர் கண்டு-சாகின்ற அந்த மான் நெட்டுயிர்ப்பெறிதலோடு துன்ப மிகுதிபால் தனது சிவந்த கண்ணினின்றுஞ் சொரிந்த நீரைப் பார்த்து; ஓட்டி எய்தோன் ஓர் உயிர் துறந்ததும்-அதன் மேல் அம்பு செலுத்திய வேடன் தான் செய்த அத் தீவினைக் காற்றாமல் ஒப்பற்ற தன்னுயிரையே துறந்த செய்தியை கேட்டும் அறிதியோ-நீ கேள்வி வாயிலாகவேனும் அறிவாயோ என்றாள்; என்க.

(விளக்கம்) நசை-வேட்கை-நச்சுதலாலே உண்டாகும் விருப்பம் மான் மறி-அம் மானின் சூலிலிருந்த குட்டிமான் எனினுமாம். ஓட்டி எய்தோன் என்றது சுட்டுப்பெயர் மாத்திரையாய் நின்றது. இது கொலையின் தீமைக்கு ஒன்று காட்டியவாறு.

இதுவுமது

120-130: கடாஅ...........காரிகை

(இதன் பொருள்) கள் காமுற்றோர்-கள்ளை விரும்பிப் பருகியவர் கடாஅ யானைமுன் விடாஅது சென்று அதன் வெள் கோட்டு வீழ்வது-மதம் பொருந்திய யானை முன் அணுகுதலை அக் களிப்புக் காரணமாக விலக்காமல் சென்று அந்த யானையின் வெள்ளிய கொம்பினால் குத்துண்டு சாவது; உண்ட கள்ளின் அறிதியோ-அழகுடைய அரசியே! நீ கண்டிருக்கின்றாயோ; பொய் ஆற்று ஒழுக்கம் பொருள் என கொண்டோர்-வஞ்சகமாக ஒழுகும் ஒழுக்கத்தைப் பொருள் என்று கருதியவர்; கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ-கையறுதலுக்குக் காரணமான துன்பமாகிய கடலில் அழுந்துதலன்றி உய்ந்ததும் இவ்வுலகில் உளதாகுமோ? ஆகாது காண்; இளவேய் தோளாய்க்கு-பச்சை மூங்கில் போன்ற தோளையுடைய இராசமாதேவியாகிய உனக்கு; களவு ஏர் வாழ்க்கையர் உறூஉம் கடுந்துயர் இது என வேண்டா-வயலில் ஏர் உழுது வாழ்வதை வெறுத்துக் களவுத் தொழிலையே ஏர்த் தொழிலாகக் கொண்டு வாழுகின்ற மாக்கள் எய்துகின்ற கடிய துன்பத்தின் தன்மையை இத்தகையது என்று யான் கூறியும் காட்ட வேண்டுமோ; மன்பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை-நிலைபெற்ற பெரிய இவ்வுலகத்தின்கண் வாழுகின் மாந்தர்களுக்கு இங்குக் கூறப்பட்ட காமம், கொலை, கள், பொய், களவு ஆகிய ஐந்தும்; துன்பம் தருவன- பெரிய துன்பங்களை உண்டாக்கும் ஆதலால்; துறத்தல் வேண்டும்-இவற்றைத் துவர விட்டொழித்தல் வேண்டும்; அங்ஙனம் ஒழியாவிடின். கற்ற கல்வி காரிகை அன்று-அவர் கற்ற கல்வியானது அவர்க்கு அழகாகாது என்றாள்; என்க.

(விளக்கம்) கடாஅயானை-மதங்கொண்ட யானை. கள் காமுற்றோர்-கள்ளை விரும்பி உண்டு களித்தோர் கள்ளுண்டு களித்தவர் அறிவு கெடுதற்கு ஒன்று காட்டுவாள் மதயானையின் முன்சென்று அதன் கொம்பால் குத்துண்டு சாதலைக் கூறினாள், பொய்யாற்று ஒழுக்கம்-பொய் கூறி அந் நெறியில் ஒழுகுதல்; கள்வேர் வாழ்க்கை-களவுத் தொழிலை உழவுத் தொழில் போல மேற்கொண்டு ஒழுகும் வாழ்க்கை. கைப்பொருள் வவ்வம் களவேர் வாழ்க்கைக் கொடியோர் என்பது பெரும்பாணாற்றுப்படை(40-45). இங்கு இவை-இங்கு எடுத்துக் காட்டப்பட்ட காமம் முதலிய ஐந்து துன்பம் தருவன ஆதலால் துறத்தல் வேண்டும் என்க. காரிகை அன்று என மாறுக.

ஞான நன்னீர்

131-139: செற்றம்...........வார்த்து

(இதன் பொருள்) மல்லன் மா ஞாலத்து வாழ்வோர் என்போர் செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர்-வளம் பொருந்திய பெரிய இந் நிலவுலகத்தில் வாழ்வாங்கு வாழ்பவர் என்று சொல்லத் தகுந்தவர் யாரெனின் தமதுள்ளத்தின்கண் வெகுளி தோன்றாமல் முழுதும் அடக்கியவரும் நன்மை தீமைகளை முழுவதும் ஆராய்ந்தறிந்தவரும்; அல்லன் மக்கட்கு இல்லது நிரப்புநர்-வறுமையால் அல்லல் உறும்மாக்கட்கு அவர்பால் இல்லாத பொருள்களை வழங்கி அக் குறையைத் தீர்த்து விடுபவரும் ஆவார்; திருந்து ஏர் எல்வளை-திருத்தமான அழகையும் ஒளியையும் உடைய வளையலையணிந்த கோப்பெருந்தேவியே; செல் உலகு அறிந்தோர் வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தோர்-இனித் தாம் செல்லுதற்குரிய மேனிலையுலகிற்கு நெறியறிந்தோர் யாரெனின் பசியினால் துன்புற்றுத் தம்பால் வந்தடைந்த வறியோருடைய ஆற்றுதற்கரிய அப் பசியைத் தீர்த்தவரே யாவர்; துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர்-பிறவித் துன்பத்தை அறுத்து உய்தற்குரிய தெளிந்த பொருளையறிந்தவர் யாரெனின்; மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார்-உயிர்களிடத்தெல்லாம் அன்பு செலுத்துதலில் ஒழியாத சான்றோர்களே யாவர்; என ஞான நன்னீர் நன்கனம் தெளித்து தேன் ஆர் ஓதி செவி முதல் வார்த்து-என்று சொல்லிமெய்யறிவாகிய நல்ல தண்ணீரை நன்றாக அவள் துன்ப நெருப்பின் மேல் தெளித்தும் வண்டுகள் பொருந்திய கூந்தலையுடைய அவ்வீராசமாதேவியின் செவியினுள்ளே வார்த்தும் என்க.

(விளக்கம்) செற்றம்-வெகுளி. அல்லல் மாக்கள்-துன்புறும் வறியவர்-செல்லுலகு-இனிச்செல்ல வேண்டிய மேனிலையுலகு. துன்பம் அறுத்தல்-பிறவித் துன்பத்தைப் போக்குதல் துணிபொருள்-தெளிந்த மெய்ப்பொருள், ஞானமாகிய நீர் என்க. தேன்-வண்டு, செவிமுதல் செவியில்.

மணிமேகலையை இராசமாதேவி தொழுதலும் அதனை மறுத்து மணிமேகலை தானே தொழுதலும்

140-147: மகன்.........வணங்கினளென்

(இதன் பொருள்) மகன் துயர் நெருப்பா மனம் விறகாக அகம் சுடு வெந்தீ ஆயிழை அவிப்ப-தன் மகனாகிய உதயகுமரன் கொலையுண்டமையா லுண்டான துன்பமே நெருப்பாகவும் தன் மனமே அந்நெருப்புப் பற்றி எரியும் விறகாகவும் இராசமாதேவியின் உள்ளுள்ளே சுட்டெரிக்கின்ற வெவ்விய அத் துன்பநெருப்பினை மணிமேகலை அவித்துவிடுதலாலே இராசமாதேவி; தேறுபடு சில் நீர் போல தெளிந்து மாறுகொண்டு ஓரா மனத்தினள் ஆகி-தேற்றாங் கொட்டை தீற்றப்பட்ட கலத்தின்கண் உள்ள சிறிய நீர் தெளிவது போலத் தெளிவடைந்து மணிமேகலையைப் பகைமைக்குணம் கொண்டு ஆராயாத அன்புடைய மனத்தையுடையவளாய்; ஆங்கு அவள் தொழுதலும் ஆயிழை பொறாஅள் தான் தொழுது ஏத்தி தகுதி செய்திலை-அப்பொழுது அவ்விராசமாதேவி மணிமேகலையைக் கைகூப்பித் தொழா நிற்றலும் அது கண்ட மணிமேகலை மனம் பொறாளாய்த் தானே கை கூப்பித் தொழுது நின்று பாராட்டிக் கோப்பெருந்தேவியே நீ என்னைத் தொழுவது தகுதியன்று ஏனெனில்; காதலன் பயந்தோய் அன்றியும் காவலன் மாபெரும் தேவி என்று எதிர் வணங்கினள்-நீ என் கணவனை ஈன்ற தாய் அல்லையோ அல்லாமலும் எல்லா மக்களாலும் தொழத்தகுந்த கோப்பெருந்தேவியும் ஆவாய் ஆதலின் என்று சொல்லித் தொழுகின்ற அரசியின் முன்னர்த் தலை வணங்கி நின்றாள் என்பதாம்.

(விளக்கம்) மகன் இறந்தமையால் உண்டான துன்பம் என்க. அகம் உள்ளிடம் ஆயிழை: மணிமேகலை. தேறு-தேற்றாங்கொட்டை. கலத்தின் நீர் என்பதுபடச் சின்னீர் என்றார். மாறு-பகைமை காதலன் என்றது உதயகுமரனை.

இனி, இதனை மூதாட்டி அருளால் சென்றெய்தி தொழுது முன்னின்று வாழ்த்தி, மன்னவன்றன் முன் துன்பங்கொள்ளேல் என்று போயபின் அஞ்சிலோதி கரந்து அடக்கிக் கொண்டு மறைத்து, மணிமேகலையை வஞ்சஞ் செய்குவல் என்று ஒருநாள் அரசனுக்கு சிறைதக்கதன்று என தீர்க்க என்று இறைசொல், குழலாள் அவளைக் கூஉய்ப் புக்கு, செய்குவல், என்று ஊட்ட அறிவினளாக; கொடுப்ப அணைதலும், இருப்ப, போயபின், அடைப்ப, இருப்ப, அவள் தொழ, மணிமேகலை ஒழிவின்றுரைத்து மற்றும் உரை செய்யும்: அங்ஙனமுரை செய்பவள் அவிப்ப, அவள் தொழுதலும், ஆயிழை பொறாஅளாய், மாபெருந்தேவி என்று எதிர் வணங்கினளென இயைத்துக் கொள்க.

சிறைவிடுகாதை முற்றிற்று.
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 10:05:36 AM
24. ஆபுத்திரனாடு அடைந்த காதை

(மணிமேகலை மாநகரொழித்து ஆபுத்திரனாடடைந்த பாட்டு)

அஃதாவது மணிமேகலை சிறைவீடு பெற்றபின் அறவண வடிகளை வணங்கி இராசமாதேவியும் சித்திராபதியும் ஆகிய இருவரையும் நோக்கி அறவணவடிகளார் அறமொழியை மறவாது கடைப்பிடித்து ஒழுகி உய்யுமின் என்று கூறி இப் பூம்புகார் நகரத்தில் யான் இருப்பேனாயின் என்னைக் கண்டோர் இவளே மன்னவன் மகனுக்குக் கூற்றுவனாயினாள் என்று பழிப்பர்; யான் அமுத சுரபியைப் பெற்றவனாகிய ஆபுத்திரன் மாறிப் பிறந்திருக்கின்ற சாவகநாட்டிற்குச் செல்ல வேண்டும். பின்னர் மாசு இல் மணிபல்லவமும் தொழுது ஏத்தல் வேண்டும். பின்னர் வஞ்சி நகரத்தில் புகுந்து ஆங்குக் கோயில் கொண்டிருக்கின்ற கற்புடைத் தெய்வமாகிய என் அன்னை கண்ணகித் தெய்வத்தையும் கண்டடி தொழுதல் வேண்டும் என்று அவர்க்கெல்லாம் அறிவித்துவிட்டு யான் யாங்குச் சென்றாலும் எனக்கு இடர் வருமென்று நீவிர் வருந்துதல் வேண்டா; யான் யாங்கணும் சென்று நல்லறம் செய்குவல் என்று எல்லாரையும் வணங்கி விட்டு உலக அறவியில் சென்று சம்பாபதியையும் கந்திற் பாவையையும் கைதொழுது வலங்கொண்டு இரவின்கண் வரன்வழியே பறந்து சென்று ஆபுத்திரன் நாட்டினை அடைந்த செய்தியைக் கூறும் செய்யுள் என்றவாறு.

இனி இதன்கண்-சித்திராபதி மணிமேகலையைச் சிறை வீடு செய்து தன்மாளிகைக்கு அழைத்துக் கொண்டுபோக முயலுதலும் இராசமாதேவி

கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவுமென்று றுரவோர் துறந்தவை

இத்தகைய தீவினைகளை எல்லாம் மேற்கொண்டிருக்கின்ற உன்னோடு அவற்றையெல்லாம் துறந்து தூய வாழ்க்கை மேற்கொண்டிருக்கின்ற மணிமேகலை உன் மனைக்கு இனி வருவாளல்லள் என்னோடு அரண்மனையிலேயே எஞ்ஞான்றும் இருப்பாலாக என்று கூறிச் சித்திராபதியின் வேண்டுகோளை மறுத்தலும்; அச் செவ்வியில் மாதவி மணிமேகலையைச் சிறை மீட்டற் பொருட்டு அரண்மனைக்கு அறவணரை யழைத்துக் கொண்டு வருதலும் அரசி அடிகளாரைக் கண்டவுடன் எழுந்து வணங்குதலும் அறவணவடிகளார் அரசிக்கு அறம் கூறுதலும் பிறவும் கூறப் பட்டிருக்கின்றன.

மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த
தொல் முது கணிகை தன் சூழ்ச்சியில் போயவன்
விஞ்சையன் வாளின் விளிந்தோன் என்பது
நெஞ்சு நடுக்குறக் கேட்டு மெய் வருந்தி
மாதவி மகள் தனை வான் சிறை நீக்கக்
காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்து ஆங்கு
அரவு ஏர் அல்குல் அருந் தவ மடவார்
உரவோற்கு அளித்த ஒருபத்து ஒருவரும்
ஆயிரம்கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள
மா இரு ஞாலத்துத் தோன்றிய ஐவரும்  24-010

ஆங்கு அவன் புதல்வனோடு அருந் தவன் முனிந்த
ஓங்கிய சிறப்பின் ஒருநூற்று நால்வரும்
திருக் கிளர் மணி முடித் தேவர் கோன் தன் முன்
உருப்பசி முனிந்த என் குலத்து ஒருத்தியும்
ஒன்று கடை நின்ற ஆறு இருபதின்மர் இத்
தோன்று படு மா நகர்த் தோன்றிய நாள் முதல்
யான் உறு துன்பம் யாவரும் பட்டிலர்
மாபெருந்தேவி! மாதர் யாரினும்
பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும்  24-020

பரந்து படு மனைதொறும் பாத்திரம் ஏந்தி
அரங்கக் கூத்தி சென்று ஐயம் கொண்டதும்
நகுதல் அல்லது நாடகக் கணிகையர்
தகுதி என்னார் தன்மை அன்மையின்
மன்னவன் மகனே அன்றியும் மாதரால்
இந் நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால்!
உம்பளம் தழீஇய உயர் மணல் நெடுங் கோட்டு
பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல்
கிளர் மணி நெடுமுடிக்கிள்ளி முன்னா
இளவேனில் இறுப்ப இறும்பூது சான்ற  24-030

பூ நாறு சோலை யாரும் இல் ஒரு சிறை
தானே தமியள் ஒருத்தி தோன்ற
இன்னள் ஆர்கொல் ஈங்கு இவள்? என்று
மன்னவன் அறியான் மயக்கம் எய்தாக்
கண்ட கண்ணினும் கேட்ட செவியினும்
உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும்
உற்று உணர் உடம்பினும் வெற்றிச் சிலைக் காமன்
மயிலையும் செயலையும் மாவும் குவளையும்
பயில் இதழ்க் கமலமும் பருவத்து அலர்ந்த
மலர் வாய் அம்பின் வாசம் கமழப்   24-040

பலர் புறங்கண்டோன் பணிந்து தொழில் கேட்ப
ஒரு மதி எல்லை கழிப்பினும் உரையாள்
பொரு அறு பூங்கொடி போயின அந் நாள்
யாங்கு ஒளித்தனள் அவ் இளங்கொடி! என்றே
வேந்தரை அட்டோன் மெல் இயல் தேர்வுழி
நிலத்தில் குளித்து நெடு விசும்பு ஏறி
சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற
மன்னவன் அவனை வணங்கி முன் நின்று
என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள்
அன்னாள் ஒருத்தியைக் கண்டிரோ அடிகள்?  24-050

சொல்லுமின் என்று தொழ அவன் உரைப்பான்
கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னைப்
பண்டு அறிவுடையேன் பார்த்திப கேளாய்
நாக நாடு நடுக்கு இன்று ஆள்பவன்
வாகை வேலோன் வளைவணன் தேவி
வாசமயிலை வயிற்றுள் தோன்றிய
பீலிவளை என்போள் பிறந்த அந் நாள்
இரவி குலத்து ஒருவன் இணை முலை தோய
கருவொடு வரும் எனக் கணி எடுத்து உரைத்தனன்
ஆங்கு அப் புதல்வன் வரூஉம் அல்லது  24-060

பூங்கொடி வாராள் புலம்பல்! இது கேள்
தீவகச் சாந்தி செய்யா நாள் உன்
காவல் மா நகர் கடல் வயிறு புகூஉம்
மணிமேகலை தன் வாய்மொழியால் அது
தணியாது இந்திர சாபம் உண்டு ஆகலின்
ஆங்குப் பதி அழிதலும் ஈங்குப் பதி கெடுதலும்
வேந்தரை அட்டோய்! மெய் எனக் கொண்டு இக்
காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல்
வாசவன் விழாக் கோள் மறவேல் என்று
மாதவன் போயின அந் நாள் தொட்டும் இக்  24-070

காவல் மா நகர் கலக்கு ஒழியாதால்
தன் பெயர் மடந்தை துயருறுமாயின்
மன் பெருந் தெய்வம் வருதலும் உண்டு என
அஞ்சினேன் அரசன் தேவி! என்று ஏத்தி
நல் மனம் பிறந்த நாடகக் கணிகையை
என் மனைத் தருக என இராசமாதேவி
கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை
தலைமையாக் கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை
புலைமை என்று அஞ்சிப் போந்த பூங்கொடி  24-080

நின்னொடு போந்து நின் மனைப் புகுதாள்
என்னொடு இருக்கும் என்று ஈங்கு இவை சொல்வுழி
மணிமேகலை திறம் மாதவி கேட்டு
துணி கயம் துகள் படத் துளங்கிய அதுபோல்
தௌயாச் சிந்தையள் சுதமதிக்கு உரைத்து
வளி எறி கொம்பின் வருந்தி மெய்ந் நடுங்கி
அறவணர் அடி வீழ்ந்து ஆங்கு அவர் தம்முடன்
மற வேல் மன்னவன் தேவி தன்பால் வரத்
தேவியும் ஆயமும் சித்திராபதியும்
மாதவி மகளும் மாதவர்க் காண்டலும்  24-090

எழுந்து எதிர்சென்று ஆங்கு இணை வளைக் கையால்
தொழும்தகை மாதவன் துணை அடி வணங்க
அறிவு உண்டாக என்று ஆங்கு அவன் கூறலும்
இணை வளை நல்லாள் இராசமாதேவி
அருந் தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி
திருந்து அடி விளக்கிச் சிறப்புச் செய்த பின்
யாண்டு பல புக்க நும் இணை அடி வருந்த என்
காண்தகு நல்வினை நும்மை ஈங்கு அழைத்தது
நாத் தொலைவு இல்லைஆயினும் தளர்ந்து
மூத்த இவ் யாக்கை வாழ்க பல்லாண்டு! என  24-100
தேவி கேளாய்! செய் தவ யாக்கையின்
மேவினேன் ஆயினும் வீழ் கதிர் போன்றேன்
பிறந்தார் மூத்தார் பிணி நோய் உற்றார்
இறந்தார் என்கை இயல்பே இது கேள்
பேதைமை செய்கை உணர்வே அருஉரு
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினைப் பயன்
இற்று என வகுத்த இயல்பு ஈர் ஆறும்
பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர்
அறியாராயின் ஆழ் நரகு அறிகுவர்  24-110

பேதைமை என்பது யாது? என வினவின்
ஓதிய இவற்றை உணராது மயங்கி
இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயற்கோடு உண்டு எனக் கேட்டது தௌிதல்
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம்
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும்
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
தொக்க விலங்கும் பேயும் என்றே
நல்வினை தீவினை என்று இரு வகையான்
சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி  24-120

வினைப் பயன் விளையும்காலை உயிர்கட்கு
மனப் பேர் இன்பமும் கவலையும் காட்டும்
தீவினை என்பது யாது? என வினவின்
ஆய் தொடி நல்லாய்! ஆங்கு அது கேளாய்
கொலையே களவே காமத் தீவிழைவு
உலையா உடம்பில் தோன்றுவ முன்றும்
பொய்யே குறளை கடுஞ் சொல் பயன் இல்
சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் எனப்  24-130

பத்து வகையால் பயன் தெரி புலவர்
இத் திறம் படரார் படர்குவர் ஆயின்
விலங்கும் பேயும் நரகரும் ஆகி
கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர்
நல்வினை என்பது யாது? என வினவின்
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி
சீலம் தாங்கித்தானம் தலைநின்று
மேல் என வகுத்த ஒரு மூன்று திறத்து
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி
மேவிய மகிழ்ச்சி வினைப் பயன் உண்குவர்  24-140

அரைசன் தேவியொடு ஆய் இழை நல்லீர்!
புரை தீர் நல் அறம் போற்றிக் கேண்மின்
மறு பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ!
பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு
இத் திறம் பலவும் இவற்றின் பகுதியும்
முத்து ஏர் நகையாய்! முன்னுறக் கூறுவல்
என்று அவன் எழுதலும் இளங்கொடி எழுந்து
நன்று அறி மாதவன் நல் அடி வணங்கி
தேவியும் ஆயமும் சித்திராபதியும்
மாதவர் நல் மொழி மறவாது உய்ம்மின்  24-150

இந் நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின்
மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று என்குவர்
ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின் நாள்
மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி
வஞ்சியுள் புக்கு மா பத்தினி தனக்கு
எஞ்சா நல் அறம் யாங்கணும் செய்குவல்
எனக்கு இடர் உண்டு என்று இரங்கல் வேண்டா
மனக்கு இனியீர்! என்று அவரையும் வணங்கி
வெந்துறு பொன் போல் வீழ் கதிர் மறைந்த
அந்தி மாலை ஆய் இழை போகி   24-160

உலக அறவியும் முதியாள் குடிகையும்
இலகு ஒளிக் கந்தமும் ஏத்தி வலம் கொண்டு
அந்தரம் ஆறாப் பறந்து சென்று ஆய் இழை
இந்திரன் மருமான் இரும் பதிப் புறத்து ஓர்
பூம்பொழில் அகவயின் இழிந்து பொறையுயிர்த்து
ஆங்கு வாழ் மாதவன் அடி இணை வணங்கி
இந் நகர்ப் பேர் யாது? இந் நகர் ஆளும்
மன்னவன் யார்? என மாதவன் கூறும்
நாகபுரம் இது நல் நகர் ஆள்வோன்
பூமிசந்திரன் மகன் புண்ணியராசன்   24-170

ஈங்கு இவன் பிறந்த அந் நாள் தொட்டும்
ஓங்கு உயர் வானத்துப் பெயல் பிழைப்பு அறியாது
மண்ணும் மரனும் வளம் பல தரூஉம்
உள் நின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல் என
தகை மலர்த் தாரோன் தன் திறம் கூறினன்
அகை மலர்ப் பூம்பொழில் அருந் தவன் தான் என்  24-176

உரை

(சித்திராபதி மணிமேகலையைச் சிறைமீட்டுத் தன் இல்லதிற்கு அழைத்துப்போக முயலுதல்)

1-10: மன்னன்..........ஐவரும்

(இதன் பொருள்) மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த தொல்முது கணிகைதன் சூழ்ச்சியில் பேரயவன்-அரசிளங் குமரனாகிய உதயகுமரனை வஞ்சித்து மணிமேகலையோடு கூட்டுதற்குப் பெரிதும் முதுமை எய்திய நாடகக் கணிகையாகிய சித்திராபதி செய்த சூழ்ச்சியினாலே மணிமேகலையைக் கைபற்றி வருவல் என்று துணிந்துபோன உதயகுமரன் அம்பலத்தின்கண்; விஞ்சையன் வாளின் விளிந்தோன் என்பது நெஞ்சு நடுக்குறக் கேட்டு மெய் வருந்தி விச்சாதரன் வாளினால் ஏறுண்டு இறந்தான் என்னும் செய்தியைச் சித்திராபதி தன் உள்ளம் நடுக்கம் எய்தும்படி கேள்வியுற்று உடல் மெலிந்து வருந்தி; மாதவி மகள்தனை வான்சிறை நீக்க-மாதவி மகளாகிய மணிமேகலையைப் பெரிய சிறையினின்றும் நீக்கித் தன் இல்லத்திற்கு அழைத்துப்போகக் கருதி அரண்மனையில் உவளகத்திற்குச் சென்று; காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்து ஆங்கு-இராசமாதேவியின் திருவடியிலே வீழ்ந்தபடியே கிடந்து அரசிக்குக் கூறுபவள் தேவியே கேள் பண்டொரு காலத்தே; அரவு ஏர் அல்குல் அருந்தவ மடவார்-பாம்பின் படம் போன்ற அல்குலையும் அரியதவத்தையுமுடைய தேவகணிகையராகிய மகளிர்; உரவோற்களித்த ஒருபத்தொருவரும-இந்திரனுக்கு வழங்கிய பதினொருவரும்; ஆயிரம் கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள-தேவேந்திரன் முன்னிலையிலே கூத்தாடுங்கால் அபிநயம் பிழைக்க ஆடினமையால்; மாயிருஞாலத்துத் தோன்றிய ஐவரும்-சாபமேற்று நிலவுலகத்திலே வந்து தோன்றிய ஐந்து மகளிரும். என்க.

(விளக்கம்) மன்ன குமரன்: உதயகுமரன் புணர்ந்த-கூட்ட தொன்முது கணிகை என்றது சித்திராபதியை தான் செய்த சூழ்ச்சியினால் என்க. போயவன் என்றது மணிமேகலையைக் கைப்பற்றி வருவேன் என்று போன உதயகுமரனை. சித்திராபதி செய்த சூழ்ச்சியையும் அச் சூழ்ச்சியால் உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து விரைபரித் தேர்மேல் சென்று ஏறி அம்பலம் புகுந்த செய்தியையும்(18) உதயகுமரன் அம்பலம் புக்ககாதையில் காண்க. அரவேர் அல்குல் அருந்தவ மடவார் என்றது தேவகணிகையரை ஒருபத்தொருவர்-பதினொருவர். ஆயிரம் கண்ணோன்: இந்திரன்.

இதுவுமது

11-18: ஆங்கவன்..........யாரினும்

(இதன் பொருள்) ஆங்கு அவன் புதல்வன் ஒரு அருந்தவன் முனிந்த ஓங்கிய சிறப்பின் ஒரு நூற்று நால்வரும்-அவ்விந்திரனுடைய மகனாகிய சயந்தனோடு அரிய தவத்தையுடைய அகத்தியனால் வெகுண்டு சபிக்கப்பட்ட உயர்ந்த கலைச்சிறப்பினையுடைய நூற்று நான்கு மகளிரும்; திருக்கிளர் மணிமுடி தேவர் கோன் தன் முன்-அழகு திகழ்கின்ற மணிமுடியையடைய இந்திரன் முன்னிலையிலே; முனிந்த உருப்பசி என் குலத்து ஒருத்தியும்-சாபம் பெற்ற ஊர்வசியாகிய என் குலத்தில் தோன்றிய ஒருத்தியும் ஆக; ஒன்று கடைநின்ற ஆறு இருபதின்மர்-நூற்றிருபத்தொருவர் ஆகிய தேவ கணிகைமகளிர்; தொன்றுபடு இ மகளிர் தோன்றிய நாள்முதல்-படைப்புக்காலத்திலேயே தோன்றிய பழைமையையுடைய இப் பூம்புகார் நகரத்தில் வந்து பிறந்த நாள்முதல்; மாபெரும் தேவி மாதர் யாரினும் யான் உறு துன்பம் யாவரும் பட்டிலர்-அத் தேவ கணிகையர் மரபிலே வழிவழியாகத் தோன்றி வருகின்ற நாடகக் கணிகை மகளிருள் வைத்து யான் எய்தும் துன்பம் வேறு எந்த மகளிரும் எய்தினார் இல்லை என்றாள்; என்க;

(விளக்கம்) வீழ்ந்தாங்கு-வீழ்ந்தபடியேகிடந்து. இங்குக் கூறப்பட்ட கணிகை மகளிர் வானுலகத்தினின்றும் காவிரிப்பூம் பட்டினத்திலே வந்து பிறந்து சிறப்புற்ற நாடகக்கணிகையராவர். ஈண்டுச் சித்திராபதி இந்நிலவுலகத்துக் கணிகையர் குலத்திலும் சிறந்தது தன்குலம் என்று சொல்லிக்கொள்கின்றனள். ஊர்வசி சாபமேற்று நிலவுலகில் பிறந்து மாதவி யென்னும் பெயரோடிருந்தாள் எனவும் அவள் பெயரையே அவள் மரபில் பிறந்த சித்திராபதி தன்மகளுக்கும் சூட்டினள் எனவும் வரும் வரலாறு சிலப்பதிகாரத்தில் அரங்கேற்ற காதையினும் கடலாடு காதையினும் காணப்படுகின்றன.

சித்தராபதி இராச மாதேவியை அச்சுறுத்துதல்

19-26: பூவிலே.........உண்டால்

(இதன் பொருள்) பூவிலே ஈத்தவன் பொன்றினன் என்று மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும்-அற்றைப் பரிசம் அளித்த கோவலன் இந்தனன் என்று கேள்வியுற்ற என்மகள் மாதவி அத் துன்பம் பொறாமல் பெரிய தவத்தோருறைகின்ற பவுத்தப் பள்ளியுள் எய்தியதும்; பரந்துபடு மனைதொறும் பாத்திரம் ஏந்தி அரங்கக் கூத்தி சென்று ஐயங் கொண்டதும்-பரந்து கிடக்கின்ற இல்லந்தோறும் பிச்சைப் பாத்திரத்தை ஏந்திக் கொண்டு ஆடங்கத்தின்கண் ஏறிக் கூத்தாடுகின்ற குலத்தில் பிறந்தும், மணிமேகலை சென்று பிச்சையேற்பதும் ஆகிய இவற்றைக்கண்ட; நாடகக் கணிகையர் நகுதல் அல்லது தன்மை அன்மையின் தகுதி என்னார்-எம்மோரனைய நாடகக் கணிகையர் இகழ்ந்து சிரிப்பதன்றி இச் செயல்கள் எங்குலத்திற்கு இயல்பல்லாமையால் தகுதி என்று கூறுவாரல்லர் அன்றியும்; மாதரால் மன்னவன் மகனே அன்றியும் இந்நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால்-கோப்பெருந்தேவியே! இம் மணிமேகலை காரணமாக நங்கோமகன் கொலையுண்ட துன்பம் அல்லாமலும் இப்பெரிய நகரில் வாழ்வார் அனைவர்க்கும் வரவிருக்கின்ற துன்பமும் ஒன்று உளது என்றாள்; என்க.

(விளக்கம்) பூவிலே-அற்றைப் பரிசம்; பூ இடக்கரடக்கு. பூவிலையீத் தவன்-கோவலன் என்க. பொன்றினன்-இறந்தான்: மாதவர்-அறவணவடிகளாருமாம். அரங்கக்கூத்தி: மணிமேகலை ஐயம்-பிச்சை தன்மை-இயல்பு. இவ்விரண்டும் சித்திராபதி யாவரும் படாத துன்பப்பட்டேன் என்பதற்கு ஏதுக்கூறியபடியாம். மேலே அரசி அஞ்சி மணிமேகலையைத் தன் பால் விடுத்தற்கு அரசியைச் சித்திராபதி அச்சுறுத்துகின்றாள். மணிமேகலையால் இந் நகரத்திற்கே பெருந்துன்பம் நிகழ்தல் கூடும் என்று தொடங்கி அதற்கு எடுத்துக்காட்டாக நெடுமுடிக்கிள்ளி வரலாறு ஒன்று கூறுகின்றாள்.

நெடுமுடிக்கிள்ளி வரலாறு

27-34: உம்பளம்............எய்தா

(இதன் பொருள்) உம்பளம் தழீஇய உயர் மணல் நெடுங்கோட்டு பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல்-உபபளத்தைத் தழுவிக்கிடந்த உயர்ந்த மணலால் இயன்ற கரையிடத்தே கடலினின்றும் வருகின்ற பெரிய அலைகள் உலாவுகின்ற புன்னை மரங்கள் அடர்ந்த கடற்கரைச்சோலையின்கண்; கிளர்மணி நெடுய முடியை விரும்பி அணிவதனால் நெடுமுடிக்கிள்ளி என்று அழைக்கப்படுகின்ற சோழமன்னன் நிற்கின்ற பொழுது காலமும்; இளவேனில் இறுப்ப-இளவேனில் பருவமாக இருக்க; முன்னா அச் சோழமன்னன் முன்னிலையிலே; இறும்பூது சான்ற பூநாறு சோலை-வியக்கத்தகுந்த மணம் கமழ்கின்ற அச் சோலையிலே; யாரும் இல் ஒருசிறை தானே தமியள் ஒருத்தி தோன்ற-பிறர் யாருமில்லாத துணையின்றித் தனியாக ஒரு மங்கை வந்து தோன்றாநிற்ப; ஈங்கு இவள் இன்னள் என்று யார் என்று மன்னவன் அறியான் மயக்கம் எய்தா-ஈங்குத் தோன்றிய இவள் இன்னாள் என்றாதல் யார் என்றாதல் அவ்வரசன் அறியாதவனாய் அவள் அழகினால் மயக்கம் எய்தி; என்க.

(விளக்கம்) உம்பளம்-உப்பளம்: விகாரம்.கோடு-கரை நெடு முடிக்கிள்ளி-ஒரு சோழ மன்னன் இறும்பூது-வியப்பு ஒருசிறை-ஓரிடம் தமியள்-தனியன்: இன்னள் என்று யார் கொல் என்று அறியான் என்க. அறியானாகவும் அவள் அழகில் மயக்கமெய்தி என்க.

இதுவுமது

35-45: கண்ட...........தேர்வுழி

(இதன் பொருள்) கண்ட கண்ணினும் கேட்ட செவியினும் உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும் உற்று உணர் உடம்பினும்-அங்ஙனம் மயங்கிய மன்னன் அவளைக் கண்ட கண்ணினும் அவள் இன்சொல்லைக் கேட்ட செவியினும் எயிற்றின் ஊறிய நீரைப் பருகிய வாயிடத்தும் மோந்த மூக்கினும் தீண்டி உணர்ந்த உடம்பிடத்தும்: வெற்றிச்சிலைக் காமன்-வெற்றியையுடைய கருப்பு வில்லையுடைய காமவேள் எய்த; மயிலையும் செயலையும் மாவும் குவளையும் பயில் இதழ் கமலமும் பருவத்து அலர்ந்த மலர்வாய் அம்பின் வாசம் கமழ-மல்லிகையும் அசோகும் மாவும் குவளையும் செறிந்த இதழையுடைய தாமரையும் ஆகிய இவற்றின் பருவத்திலே விரிந்த மலராகிய தனக்கு வாய்ந்த அம்புகளின் நறுமணம் கமழாநிற்க அவளொடு புணர்ந்து; பலர் புறம் கண்டோன்-பகைவர் பலரையும் போர்களத்திலே வென்று புறங்கண்டவனாகிய அம் மன்னவன்; பணிந்து தொழில் கேட்ப அம் மடந்தையைப் பணிந்து நாள்தோறும் அவள் ஏவிய தொழில்களை எல்லாம் செய்ய; ஒரு மதி எல்லை கழிப்பினும் உரையாள்-இவ்வாறே ஒரு திங்கள் முடியுந்துணையும் அவளோடிருந்து தான் இன்பமாகக் காலங் கழித்திருந்தாலும் தான் இன்னள் என்று அரசனுக்குக் கூறாதவளாய்; பொருவரு பூங்கொடி போயின் அந்நாள்-ஒப்பற்ற மலர்க்கொடி போலும் அம் மடந்தை அரசனைக் கைவிட்டு அவன் அறியாவண்ணம் போய்விட்ட அந்த நாளிலே; வேந்தரை அட்டோன்-பகை மன்னர்களை எல்லாம் கொன்று நூழிலாட்டிய அவ்வரசன் பெரிதும் ஆற்றாமையுடையவனாய்; அவ்விளங்கொடி யாங்கு ஒளித்தனள் என்றே-இளமையுடைய காமவல்லி போன்ற அவ்வழகி எங்குப்போய் ஒளித்தாளோ என்று மனம் மறுகி மெல்லியல் தேர்வுழி-மெல்லியலாகிய அந் நங்கையைத் தேடியலை இன்ற காலத்தே; என்க.

(விளக்கம்) அந் நங்கையுடைய திருமேனியைக் கண்ணால் கண்டு சுவைத்தும் இன்மொழியைக் கேட்டுச் சுவைத்தும் வாலெயிறூறிய நீரைப் பருகிச் சுவைத்தும் திருமேனியைத் தீண்டியும் கூந்தலை மோந்து சுவைத்தும் உணர்ந்தவரசன் ஆராமையோடு சுவைத்தான் என்பார் அதற்கு ஏதுவாகக் காமவேள் கண் முதலிய அவன் ஐம்பொறிகளிடத்தும் மயிலை முதலிய ஐந்து மலர் அம்புகளையும் இடையறாது எய்தான் என்பது தோன்ற அவற்றின் வாசம் அவன் பொறிகளில் கமழ என்றார். ஒருமதி-ஒரு திங்கள்; (அஃதாவது முப்பது நாள்) அந் நாள்களிலே தன்னை யாரென்று அரசனுக்கு அறிவியாமலே இருந்து, போகும் பொழுதும் அவன் அறியாவண்ணம் போயினள் என்றவாறு. ஈண்டு

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு
மொண்டொடி கண்ணே உள   (குறள்-1101)

என வரும் திருக்குறளை நினைக. பலர் புறங்கண்டோன் ஈண்டு ஒரு மகளுக்குப் பணிந்து தொழில் கேட்ப என்ற நயமுணர்க இக்கருத்தோடு

ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரு முட்குமென் பீடு   (குறள், 1088)

என வரும் திருக்குறளையும் நோக்குக.

கிள்ளியின் முன்னர் ஒரு சாரணன் தோன்றுதல்

46-57: நிலத்தில்...............அந்நாள்

(இதன் பொருள்) நிலத்தில் குளித்து நெடுவிசும்பு ஏறி சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற-அவ்வரசன் முன்னர் நீரில் முழுகுமாறு போல நிலத்தின்கண் முழுகியும் நெடிய வானத்திலே ஏறியும் நிலத்தில் மேல் நடப்பது போல நீரின் மேல் நடந்தும் திரிகின்ற இருத்திகள் பலவும் கைவந்த ஓரு சாரணன் தோன்றா நிற்ப; மன்னவன் அவனை வணங்கி முன் நின்று-அரசன் அவனை வணங்கி அவன் முன்னிலையிலே நின்று; அடிகள் என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள் அன்னாள் ஒருத்தியை கண்டிரோ சொல்லுமின் என்று தொழ-அடிகளே என்னுடைய ஆருயிர்க்காதலி இங்கு யான் அறியாவண்ணம் ஒளித்திருக்கின்றாள் அத்தகையாள் ஒரு நங்கையை இருத்தி பலவும் வல்ல தாங்கள் கண்டிருப்பீரோ கண்டிருப்பீராயின் எனக்குச் சொல்லியருள வெண்டும் என்று கைகுவித்துத் தொழா நிற்ப; அவன் உரைப்பான்-அச் சாரணன் சொல்லுவான்; பார்த்திப கேளாய் கண்டிலேனாயினும் காரிகை தன்னை பண்டு அறிவுடையேன்-அரசனே கேள் அவளை இப்பொழுது யான் கண்டிலேன் ஆனாலும் அவ்வழகியை யான் பண்டைக் காலத்தே அறிந்ததுண்டு அவள் யாரெனின்; நாகநாடு நடுக்கு இன்று ஆள்பவன் வாகை வேலோன் வளைவணன் தேவி-நாக நாட்டைக் குடிகள் துன்புறாத படி செங்கோல் செலுத்துபவனும் பகைவரை வென்று வாகை சூடுதற்கியன்ற வேலை ஏந்தியவனும் ஆகிய வளைவணன் என்னும் அரசனுடைய பட்டத்துத் தேவியாகிய; வாசமயிலை வயிற்றுள் தோன்றிய பீலிவளை என்போள் பிறந்த அந் நாள்-வாசமயிலை என்னும் பெயரையுடைய அரசியினது வயிற்றில் பிறந்த பீலிவளை என்னும் நங்கையையே நீ இப்பொழுது தேடுகின்றனை அவள் பிறந்த அந்த நாளிலே; என்க.

(விளக்கம்) நீரில் குளிப்பது போல நிலத்தில் குளிப்பதும் விசும்பில் ஏறுவதும் நீரின் மேல் நடப்பதும் சித்தி பெற்ற முனிவர் செயலாகும்; சித்தியைப் பவுத்தர்கள் இருத்தி என்பர். மன்னவன்: நெடுமுடிக் கிள்ளி. ஒளித்தாள்: முற்றெச்சம். அவன் உரைப்பான்-அச் சாரணன் சொல்லுவான்; இப்பொழுது கண்டிலேன் ஆயினும் என்க. காரிகை சுட்டுப் பொருட்டு. நடுக்கின்று: குற்றியலிகரம் உகரமாயிற்று. வளைவணன்:பெயர் வாசமயிலை: பெயர் பீலிவளை: பெயர்; இதனை யான் என் இருத்தியால் உணர்ந்துரைக்கின்றேன் என்பது குறிப்பு.

சாரணன் கூற்று

58-63: இரவி............புகூஉம்

(இதன் பொருள்) கணி இரவி குலத்து ஒருவன் இணை முலை தோய கருவொடு வரும் என எடுத்து உரைத்தனன்-அரசனே அந் நாகநாட் டரசனுடைய கணிவன் அவனுக்கு வேந்தே நின் மகள் தன்னுடைய பெதும்பைப் பருவத்திலே கதிரவன் குலத்தில் தோன்றிய ஒரு மன்னவன் தன் இணையாகிய முலையில் தோய்தலால் அம் மன்னவனுக்கு வயிற்றில் கருவுண்டாகி மீண்டும் நின்பால் வருவாள் என்று அவளுடைய எதிர்கால நிகழ்ச்சியை எடுத்துக் கூறினன். அவன் கூறியாங்கே அவள் வயிறு வாய்க்கப் பெற்று இப்பொழுது நாக நாடு சென்று விட்டாள்; ஆங்கு அப் புதல்வன் வரூஉம் அல்லது பூங்கொடி வாராள் புலம்பல் இது கேள்-அவ்வாறு நினக்குக் கருவாகிய அம் மகன் நின்பால் வந்து சேர்வானல்லது நின்னால் தேடப் படுகின்ற மலர்க்கொடி போலும் மெல்லியளாகிய அப் பீலிவளை மீண்டும் இங்கு வருவாள் அல்லள் ஆதலின் நீ வருந்தாதே கொள் அரசே இன்னும் ஒன்று கேள்; தீவகச் சாந்தி செய்யா நாள் உன் காவல் மாநகர் கடல் வயிறு புகூஉம்-இத் தீவகத்திற்குச் சாந்தியாகிய இந்திர விழா செய்யாதொழிந்த நாளிலே உன்னுடைய தலைநகரமாகிய காவலையுடைய பெரிய இப் பூம்புகார் நகரம் கடல் கோட்படும்; என்றான் என்க.

(விளக்கம்) இரவி குலத்தொருவன் என்றது கதிரவன் குலத்து மன்னவராகிய சோழ மன்னருள் ஒருவன் என்றவாறு கருவொடு வரும் வயிற்றில் கருவுண்டாகி வருவாள் கணி-காலக்கணிவன்; நிமித்திகன் ஆங்கு-அவ்வாறு. அப்புதல்வன்-நினக்குப் பிறந்த மகன், பூங்கொடி: பீலிவளை. புலம்பல்: எதிர்மறை வியங்கோள். வருந்தாதே கொள் என்றவாறு தீவகச்சாந்தி-இந்திர விழா. உன் காவலையுடைய மாநகருமாம் கடல் வயிறு புகுதல்-கடல் கோட்பட்டு மறைதல்

சித்திராபதி தன் அச்சம் இஃதெனல்

64-74: மணிமே............ஏத்தி

(இதன் பொருள்) அது மணிமேகலை தன் வாய்மொழி-அவ்வாறு இந்திர விழாச் செய்யாத நாளில் இந் நகரம் கடல் வயிறு புகுதல் வேண்டுமென்பது மணிமேகலா தெய்வத்தின் தப்பாத சாப மொழியாகும்; இந்திர சாபம் உண்டாகலின் தணியாது அங்ஙமேயாகுக என்று இந்திரனிட்ட சாபமும் உண்டாதலால் அது நிகழாதொழியாது; ஆங்கு பதி அழிதலும்-அவ்வாறு இந் நகரம் கடல் கோட்பட் டழிதலும் அழிந்த வழி; ஈங்குப் பதி கெடுதலும்-இங்கே அரசு கேடெய்துதலும்; வேந்தரை அடடோய்-பகை வேந்தனைக் கொன்றழித்தவனே; மெய்யெனக் கொண்டு -வாய்மையாக ;நிகழ்ந்துவிடும் என்று உள்ளத்தில் திட்பமாகக் கொண்டு; இக் காசு இல் மாநகர் கடல் வயிறு புகாமல் வாசவன் விழாக்கோள் மறவேல் என்று-இக் குற்றமற்ற பெரிய நகரம் கடலில் வீழ்ந்து அழிந்து போகாமைப் பொருட்டு நீ இந்திர விழாச் செய்தலை மறந்தொழியாதே கொள் என்று சொல்லி அறிவுறுத்தி; மாதவன் போயின அந் நாள் தொட்டும் இக் காவல் மாநகர் கலக்கு ஒழியாதால்-அச் சாரணன் போன அந்த நாளிலிருந்து இந்தக் காவலமைந்த பெரிய நகரத்தில் வாழுகின்ற மாந்தரெல்லாம் எப்பொழுதேனும் அந் நிகழ்ச்சி விடுமோ என்றஞ்சி நெஞ்சு கலங்குதல் ஒழிந்திலர்; மன் பெரும் தெய்வம் தன் பெயர் மடந்தை துயர் உறுமாயின் வருதலும் உண்டு என-எஞ்ஞான்றும் நிலையுதலுடைய பேராற்றலுடைய அம் மணிமேகலா தெய்வம் தன்னால் நிலை நிறுத்தப் பெற்ற குடியிற் பிறந்து அக் காரணத்தால் தன் பெயரையே கொண்டுள்ள இம் மணிமேகலை சிறையிடைக் கிடந்து துன்புறுவாளானால் சினம் கொண்டு அவளைப் பாதுகாத்துற் பொருட்டு இந் நகரத்திற்கு வருதலும் கூடும் என்று நினைத்து; அரசன் தேவி அஞ்சினேன் என்று ஏத்தி-அங்ஙனம் அத் தெய்வம் வந்தக் கால் கோப்பெருந்தேவியே இந் நகரத்திற்கு இன்னும் எத்தகைய கேடு சூழுமோ என்று அடிச்சி பெரிதும் அஞ்சிக் கிடக்கின்றேன் என்று சொல்லிப் பின்னும் அரசியைத் தொழுது வாழ்த்தி; என்க.

(விளக்கம்) அது-கடல் வயிறு புகுவது. இந்திர சாபமும் உண்டாகலின் எனல் வேண்டிய எச்சவும்மை தொக்கது செய்யுள் விகாரம். ஆங்குப் பதி-அவ்வாறு இந் நகரம் என்க. ஈங்குப்பதி-ஈங்கு நிலை பெற்றிருக்கின்ற அரசு-காசு-குற்றம். வாசவன்-இந்திரன். மாதவன்-சாரணன். மாநகர்-நகர்வாழ் மாந்தர்: ஆகுபெயர் கலக்கு-கலங்குதல் தன் பெயர் மடந்தை-மணிமேகலை தெய்வம்-மணிமேகலா தெய்வம் முன்னர்க் கடிய சாபமிட்ட அத் தெய்வம் சினந்து வருமானால் இன்னும் பெரிய கேடு சூழ்ந்து விடக்கூடும் என்று யான் அஞ்சுகின்றேன், என்று மணிமேகலையைச் சிறைவீடு செய்யக்கருதிச் சித்திராபதி அரசியை அச்சுறுத்துதலும் அத் தெய்வம் எங்கும் போய் விடவில்லை அது பேராற்றலுடையது என்பாள் மன்பெரும் தெய்வம் என்பதும், அத் தெய்வம் வருதலுக்கு ஏதுகாட்டுவாள் தன் பெயர் மடந்தை துயருறுமாயின் வருதலும் உண்டு என்பதும் பெரிதும் நுணுக்கமுடையன ஆதல் உணர்க. இங்ஙனம் அச்சுறுத்தற்கே மணிமேகலை சாபமிட்டிருக்கின்ற செய்தியை வலிந்து ஈங்கு அரசிக்குக் கூறுதலும் நினையுமிடத்தே கம்பருடைய கொடு மனக் கூனியும் நம்மகத்தே வந்து தோன்றுகின்றனள்.

சித்திராபதி மணிமேகலையைத் தன்பால் தருக எனலும் அரசி மறுத்துரைத்தலும்

75-82: நன்மனம்.........சொல்வுழி

(இதன் பொருள்) நன்மனம் பிறந்த நாடகக் கணிகையை என் மனைத் தருக என-இப்பொழுது தனது பட்டறிவு காரணமாக அறியாமை நீங்கி நல்லுளம் தோன்றி யிருக்கின்ற நாடகக் கணிகையை மணிமேகலையை யான் என்னில்லத்திற்கு அழைத்துப் போகும்படி தந்தருளுக என்று சொல்லி நயம்பட வேண்டிய சித்திராபதியை நோக்கி; இராசமாதேவி-அக் கோப்பெருந்தேவி கூறுபவள்-ஏடி சித்திராபதி; கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை கள்ளுண்ணலும் பொய் கூறுதலும் காமமாடுதலும் கொலை செய்தலும் உள்ளத்தின்கண் பிறர் பொருளைக் களவு செய்யக் கருதுதலும் என்னும் இத் தீவினைகள் ஐந்தும் அறிஞர்களால் விலக்கப்பட்டவையாம்; தலைமையாகக் கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை-இவற்றையே முதன்மையாகக் கொண்டு ஒழுகுகின்ற நின்னுடைய கடைப்பட்ட வாழ்க்கையானது; புலைமை என்று அஞ்சி போந்த பூங்கொடி-புலைத் தன்மையுடையது என்று அதனை அஞ்சி நன்னெறியிலே ஒழுகுகின்ற பூங்கொடி போல்பவளாகிய மணிமேகலை; நின்னொடு போந்த நின்மனைப் புகுதாள்-இனி நின்னோடு வந்து நின் இல்லத்திலே புகுதுதற்கு உடன்படாள் அவள்; என்னோடு இருக்கும் என்று ஈங்கு இவை சொல் உழி-என்னோடு இவ்வுவளகத்திலேயே இருப்பாள் என்று இங்குக் கூறியவற்றை அச்சித்திராபதிக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே என்க.

(விளக்கம்) நன்மனம் பிறந்த பட்டறிவினால் இப்பொழுது மணிமேகலைக்கு நல்லுளம் பிறந்திருக்கும் என்று கூறியபடியாம் இராசமாதேவி கள் முதலியன. உரவோர் துறந்தவை என்றது மணிமேகலை தனக்குக் கூறியவற்றைத் தன்னுளம் கொண்டு கூறியபடியாம். தலைமையில் வாழ்க்கை -கடைப்பட்ட வாழ்க்கை புலைமை கீழ்மை பூங்கொடி: மணிமேகலை.

கணிகையர் வாழ்க்கை கடையே (சிலப் 11-183)

என்பதும் காண்க.

மணிமேகலை நிலைமையைக் கேட்ட மாதவியின் செயல்

83-92: மணிமே.............வணங்க

(இதன் பொருள்) மணிமேகலை திறம் மாதவி கேட்டு துணி கயம் துகள்பட துளங்கியது போல் தெளியாச் சிந்தையள் மணிமேகலையின் நிலைமையை மாதவி கேள்வியுற்றுத் தெளிந்த குளத்தின்கண் காற்றுக் கொணர்ந்து வீசிய துகள்கள் படுதலாலே கலங்கியது போல் கலங்கித் தெளிவில்லாத நெஞ்சத்தையுடையளாய்; சுதமதிக்கு உரைத்து வளி எறி கொம்பின் வருந்தி மெய்ந் நடுங்கி-அச் செய்தியைத் தன்னுடன் இருந்த சுதமதிக்கும் சொல்லி அவளையும் அழைத்துக் கொண்டு துன்பத்தால் சூறைக் காற்றால் தாக்குண்ட பூங்கொம்பு போலச் சுழன்று வருந்தி மெய் நடுங்கச் சென்று; அறவணர் அடி வீழ்ந்து ஆங்கு அவர் தம்முடன் மறவேல் மன்னவன் தேவி தன்பால் வர-அறவணவடிகளாருடைய அடிகளிலே வீழ்ந்து வணங்கி அவ்விடத்தே தம்மோடு எழுந்த அவ்வடிகளாரோடு மூவருமாக வீர வேலையுடைய அரசனுடைய தேவியின் மாளிகைக்குச் செல்லா நிற்ப; தேவியும் ஆயமும் சித்திராபதியும் மாதவி மகளும் மாதவர்க் காண்டலும்-இராசமாதேவியும் ஆயமகளிரும் அங்கிருந்த சித்திராபதியும் மணிமேகலையும் அறவணவடிகளாருடைய வரவு கண்டவுடன்; எழுந்து எதிர் சென்று இணைவளைக் கையால் தொழுந்தகை மாதவன் துணை அடி வணங்க-தத்தம் இருக்கையினின்றும் எழுந்து அவர் எதிரே சென்று இரு கைகளையும் குவித்து எல்லாராலும் தொழத்தகுந்த சிறப்புடைய பெரிய தவத்தையுடையவராகிய அவ்வறவணருடைய திருவடிகளிலே விழுந்து வணங்கா நிற்ப; என்க.

(விளக்கம்) மணிமேகலை திறம் என்றது அவள் சிறையிடப் பட்டிருத்தலை துணியகம்-தெளிந்த நீர் நிலை துகள்-தூசி. துளங்கியது-துளங்கியவது என விகாரம் எய்திற்று சுதமதியோடும் சென்று அறவணர் அடிவீழ்ந்து அவரோடு மூவருமாக என்க. ஆயம்-தோழியரும் சிலதியருமாகிய மகளிர் கூட்டம். இணைக்கை வளைக்கை எனத் தனித்தனி கூட்டுக கையால் தொழுது தொழுந்தகை மாதவன் அடி வணங்க என்க. தொழுந்தகை-எல்லாராலும் தொழத் தகுந்த சிறப்பு.

இராசமாதேவி அடிகளாரை முகமன் கூறி வாழ்த்துதல்

93-100: அறிவு.........ஆண்டென

(இதன் பொருள்) அறிவு உண்டாக என்று ஆங்கு அவன் கூறலும் அங்ஙனம் வணங்கியவர்களை நோக்கி நுங்களுக்கெல்லாம் மெய்யறிவு உண்டாவதாக என்று அறவணடிகளார் வாழ்த்துக் கூறா நிற்ப; இணைவளை நல்லாள் இராசமாதேவி அருந்தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி திருந்து அடி விளக்கிச் சிறப்புச் செய்தபின்-பொருந்திய வளையலையுடைய நல்லாளாகிய இராசமாதேவி அரிய தவத்தையுடைய அம் முனிவருக்குப் பொருந்திய இருக்கையைக் காட்டி அதன்கண் எழுந்தருளச் செய்து அவருடைய அடிகளில் நன்னீர் பெய்து விளக்கி ஆண்டுச் செய்யக்கடவ சிறப்பெல்லாம் செய்த பின்னர் அடிகளாரை நோக்கி முகமன் கூறுபவள்; யாண்டு பல புக்க நும் இணை அடிவருந்த என்காண் தகு நல்வினை நும்மை ஈங்கு அழைத்தது-அகவை யாண்டுகள் பல சென்ற இத்தகைய முதுமைக் காலத்திலே நுங்களுடைய இணைந்த திருவடி மலர்கள் நடையால் மெலிந்து வருந்தும்படி அடியேன் செய்த நினைத்துக் காணத் தகுந்த நல்வினையே நும்மை இவ்விடத்திற்கு அழைத்துக் கொணர்ந்திருத்தல் வேண்டும்; நாத் தொலைவு இல்லை ஆயினும் இயாக்கை தளர்ந்து மூத்தது-அடிகளுடைய அறம் கூறும் செந்நாவினது வன்மை குறைந்ததில்லை யானாலும் யாக்கை மட்டும் பெரிதும் மூத்துளது இது; பல்லாண்டு வாழ்கஎன-பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்தாநிற்ப; என்க

(விளக்கம்) ஒன்றற்கொன்று இணையாகிய வளையலையுடைய எனினுமாம். அருந்தவர்க்கு அமைந்த ஆசனம்-துறவோர் இருத்தற்கு எனச் சிறப்பாக அமைந்த இருக்கை. அவை மணை தருப்பை முதலியவை என்னை?

நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய
                            (தொல், மரபி, 71)

என வரும் தொல்காப்பியத்தானும் உணர்க. இங்ஙனமே,

அணிசெய் கோழரை யரை நீழ லழகனைப் பொருந்தி
மணிக டாம்பல கதிர்விடு மலருடை மணைமேற்
றுணிவு தோற்றினை யெனச்சிலர் துதியொடு தொழுது
பணிய யாதுமோர் பரிவிலன் படம்புதைத் திருந்தான்    (நீலகேசி: 476)

என நீலகேசியினும் வருதலுணர்க. யாண்டு-அகவை. காண்டகுநல்வினை நினைத்துப் பார்க்கத்தகுந்த நல்வினை; நா: ஆகுபெயர்; சொல்வன்மை ஈண்டு இராசமா தேவியின் முகமன் பேரின்பம் பயத்தல் உணர்க.

அறவணர் கூற்று

101-110: தேவி..........அறிகுவர்

(இதன் பொருள்) தேவி கேளாய் செய் தவ யாக்கையின் மேவினேன் ஆயினும் வீழ் கதிர் போன்றேன்-இராசமாதேவியே முற்பிறப்பிலே செய்த நல்வினை காரணமாக இம்மையினும் செய்தற்கியன்ற அத் தவத்திற்குப் பொருந்திய நல்லதொரு யாக்கையோடு பிறந்தேன், அங்ஙனமாயினும் யாக்கையின் முதிர்ச்சியால் மேற்றிசையில் மறைதற்கு வீழ்ச்சியுறுகின்ற ஞாயிற்று மண்டிலம் போல்கின்றேன்; பிறந்தார் மூத்தார் பிணிநோய் உற்றார் இறந்தார் என்கை இயல்பே-உலகின்கண் பிறந்தனர் நாளுக்கு நாள் மூத்தனர் பின்னர்ப் பிணிக்கும் நோயினை எய்தினர் அது காரணமாக இறந்து பட்டார் என்பது நிலையாமையுடைய இவ்வுலகின் இயல்பேகாண், அது நிற்க இதுகேள்-உயிர்க்கு உறுதிதருகின்ற இவ்வறிவுரையைக் கேட்பாயாக; பேதைமை செய்கை உணர்வு அருவுரு வாயில் ஊறு நுகர்வு வேட்கை பற்று பவம் தோற்றம் வினைப்பயன் இற்று என வகுத்த இயல்பு ஈராறும்-பேதைமையும் செய்கையும் உணர்வும் அருவுருவும் வாயிலும் ஊறும் நுகர்வும் வேட்கையும் பற்றும் பவமும் தோற்றமும் வினைப்பயனும் ஆகிய ஒவ்வொன்றும் இத் தன்மைத்து என்று வகுத்துக் கூறப்பட்ட இயற்கைப் பொருளாகிய இப் பன்னிரண்டு நிதானங்களையும் பிறந்தோர் அறியின் பெரும்பேறு அறிகுவர் அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர்-பிறந்த மக்கள் அறிந்து கொள்வாராயின் பிறப்பினால் எய்தும் பெரிய பேறு இன்னதென்று அறிந்து கொள்வர் இவற்றை அறிந்திலராயின் அவர் ஆழும் நரகத்தையே அறிவார் என்பது தேற்றம் என்றார்; என்க.

(விளக்கம்) செய்தவத்திற்குப் பொருந்திய நல்யாக்கையின் என்க. வீழ்கதிர்-மேற்றிசையில் வீழ்ச்சியுறுகின்ற ஞாயிறு. பிறத்தலும் முத்தலும் பிணிநோய் உறுதலும் இறத்தலும் இவ்வுலகியல்பாகலின் அது பற்றிக் கவலுதல் வேண்டா என்பது குறிப்பு. பேதைமை முதலாக வினைப்பயன் ஈறாகக் கூறப்பட்ட பன்னிரண்டும் நிதானங்கள் எனப்படும். இவற்றின் இயல்புணர்ந்தோர் நன்னெறியில் ஒழுகி வீடு பெறுவர்; உணராதவர் தீவினைகள் செய்து நரகமே புகுவர் என்றறிவுறுத்த படியாம்.

நிதானங்களின் இயல்பு (1) பேதைமை

112-122: பேதைமை........காட்டும்

(இதன் பொருள்) பேதைமை என்பது யாது என வினவின் இவற்றுள் முன்னின்ற பேதைமை என்பது யாதென்று வினவினால் கூறுவன் கேள்; ஓதிய இவற்றை உணராது மயங்கி இயல் படு பொருளால் கண்டது மறந்து முயல்கோடு உண்டு என கேட்டது தெளிதல்-இங்குக் கூறப்பட்ட இந் நிதானங்கள் பன்னிரண்டையும் ஆராய்ந்து உணராமல் மயங்கி இயற்கையிலே தோன்றுகின்ற பொருள்களால் தாம் கண்கூடாகக் கண்டதனை மறந்து முயலுக்குக் கொம்புண்டென அறிவிலார் கூறியதனைக் கேட்டு அதனை உண்மையென்று துணிந்துகோடலாம்; உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் அலகில-மேலும் கீழும் நடுவும் ஆகிய மூவிடத்திலுமுள்ள மூன்று வகைப்பட்ட உயிரில் உலகங்களில் உயிருடைய உலகம் எண்ணிறந்தனவாம் அவையாவன; மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் தொக்க விலங்கும் பேயும் என்று பல் உயிர் அறு வகைத்து ஆகும்-மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் ஒருங்கு தொக்க விலங்குகளும் பேயும் என விரிவகையால் எண்ணிறந்த பலவாகிய உயிர்களெல்லாம் தொகை வகையால் இந்த ஆறு வகையுள் அடங்கும்; நல்வினை என்று இரு வகையால் சொல்லப்பட்ட கருவின் உள் தோன்றி-அவ்வுயிர்கள் நல்வினை என்றும் தீவினை என்றும் தாம் தாம் செய்கின்ற இருவகை வினை காரணமாக முன் கூறப்பட்ட மக்கள் முதலிய அறுவகைப் பிறப்பில் கருவாகிப் பிறந்து; வினைப்பயன் விளையும் காலை உயிர்கட்கு மனப்பேர் இன்பமும் கவலையும் காட்டும்-முன் செய்த இருவகை வினைகளின் பயனும் வந்து எய்தும் காலத்தில் அவ்வுயிர்களுக்கு மனத்தின்கண் பெரிய இன்பத்தையும் பெரிய துன்பத்தையும் தோற்றுவிக்கும் என்க.   

(விளக்கம்) உலகம் மூன்று என்றது மேலும் கீழும் நடுவும் என இடவகையால் மூவகைப்படுத்தோதியபடியாம். இவற்றின் விரியைச் சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதையின்கண் உணர்க. இவை உயிரில் உலகம் ஆம். இவற்றின்கண் உயிருடையவுலகம் அளவிறந்தன என்க. அவை பிறப்பு வகையால் மக்கள் முதலிய அறுவகைப்படும் என்றவாறு. இந்த உயிருலகம் தாம்தாம் செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப அறுவகைப்பட்ட பிறப்பில் தோன்றும் என்க. நல்வினை இன்பம் காட்டும் தீவினை கவலை காட்டும் என்றவாறு. இனி உயிர்களுக்குத் துன்ப நீக்கமே குறிக்கோள் ஆதலின் துன்பத்திற்குக் காரணமான தீவினையை முதற்கண் எடுத்து, இனி விதந்து கூறுவர்.

தீவினையின் இயல்பும் பயனும் (2) செய்கை

123-134: தீவினை.................தோன்றுவர்

(இதன் பொருள்) தீவினை என்பது யாது என வினவின் வினைகள் இரண்டனுள் தீவினையென்று சொல்லப்படுவது யாதென்று வினவுவாயாயின்; ஆய்தொடி நல்லாய் ஆங்கு அது கேளாய் அழகிய வளையலணிந்த நன்மையுடைய அரசியே அங்ஙனம் கூறிய அத் தீவினையை விளக்கிக் கூறுவேன் கேட்பாயாக; கொலை களவு காமத்தீவிழைவு உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்-கொலை செய்தலும் களவு கொள்ளுதலும் காமமாகிய விருப்பத்தை எய்துதலும் ஆகிய கெடாத உடம்பினால் தோன்றும் தீவினைகள் மூன்றும்; பொய் குறளை கடுஞ்சொல் பயன் இல் சொல் என சொல்லின் தோன்றுவ நான்கும்-பொய் கூறுதலும் கோள் சொல்லுதலும் கேட்போர் உள்ளத்தைப் புண்படுத்தும்படி கடுஞ்சொல் கூறுதலும் பயனில்லாத சொல்லைச் சொல்லுதலும் எனச் சொல்லிலே பிறக்கின்ற தீவினைகள் நான்கும்; வெஃகல் வெகுளல் பொல்லாக்காட்சி என்று உள்ளம் தன்னில் உருப்பன மூன்றும் என-வெஃகலும் வெகுளலும் பொல்லாக் காட்சியும் என்று உள்ளத்தில் தோன்றும் தீவினைகள்; பத்து வகையால்-பத்து வகைப்படும்; பயனை தெரி புலவர் இத் திறம் படரார்-இவற்றால் எய்தும் பயனை அறிந்துள்ள அறிவுடையோர் இத் தீய நெறியிலே ஒழுகார் படர்குவர் ஆயின் விலங்கும் பேயும் நரகரும் ஆகி கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர்-அங்ஙனமின்றி இத் தீவினைகளை அஞ்சாது அவற்றிற்கியன்ற வழியில் செல்வாராயின் அவற்றின்  பயனாக விலங்காகவாதல் பேயாகவாதல் நரகராகவாதல் கலங்கிய உள்ளத்தின்கண் துன்பத்தோடு தோன்றா நிற்பர் என்றார்; என்க.

(விளக்கம்) தீவினை கொலை களவு காமம் பொய் குறளை கடுஞ்சொல் பயனில்சொல் வெகுளல் பொல்லாக் காட்சி எனப் பத்துவகைப்படும் இவற்றுள் கொலை களவு காமம் ஆகிய மூன்றும் உடம்பினால் தோன்றும் தீவினை. பொய், குறளை, கடுஞ்சொல், பயனில்சொல் என்னும் நான்கும் மொழியால் தோன்றும் தீவினை. வெஃகல் வெகுளல் பொல்லாக்காட்சி என்னும் மூன்றும் மனத்தால் தோன்றும் தீவினை என்க. காமமாகிய தீவிழைவு என்க. பிணி முதலியவற்றையுடைய உடம்பில் இவை தோன்றா என்பது உணர்த்தற்கு உலையா உடம்பு என்றார். குறளை-கோள் பயனில் சொல்-அறம் பொருள் இன்பங்களுள் ஒன்றும் பயவாத சொல் வெஃகல்-விரும்புதல் வெகுளல்-சினத்தல். பொல்லாக் காட்சி-மயக்கக் காட்சி. இவை மூன்றுமே காம வெகுளி மயக்கம் எனப்படுவன.

நல்வினையின் இயல்பும் பயனும்

135: 140: நல்வினை...........உண்குவர்

(இதன் பொருள்) நல்வினை என்பது யாது என வினவின்-நல்வினையென்று சொல்லப்படுவது யாதென்று வினவுவாயாயின்; சொல்லிய பத்தின் தொகுதி நீங்கி-முன்னே சொல்லப்பட்ட கொலை முதலிய பத்து வகைப்பட்ட தீவினைகளினின்றும் விலகி சீலம் தாங்கி தானம் தலை நின்று-ஐந்து வகையும் பத்து வகையும் என்று கூறப்படுகின்ற நல்லொழுக்கங்களை மேற்கொண்டு தானம் முதலிய அறச் செயல்களை இடையறாது செய்து; மேல் என வகுத்த ஒரு மூன்று திறத்து தேவரும் மக்களும் பிரமரும் ஆகி மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்-உயர்ந்த பிறப்பென்று சான்றோரால் வகுத்துக் கூறப்பட்ட மூன்று வகைப் பிறப்பாகிய தேவரும் மக்களும் பிரமரும் ஆகிய பிறப்புகளை எய்தி அங்கு வந்து மகிழ்ச்சியைத் தருகின்ற அந் நல்வினை பயன்களைத் துய்த்து இனிதிருப்ப என்றார்; என்க.

(விளக்கம்) சொல்லிய பத்து-முன் கூறப்பட்ட தீவினைகள் பத்தும். சீலம்-ஒழுக்கம். இவை இல்லறம் துறவறம் முதலிய நிலை வேறு பாட்டால் ஐந்து வகையும் எட்டு வகையும் பத்துவகையுமாம். மேல்-உயர்ந்த பிறப்பு. வினைப்பயன்-நல்வினைப்பயன். உண்குவர்-நுகர்வர்.

அறவணர் எழுந்து போதலும் மணிமேகலை செயலும்

141-150: அரசன்.........உய்ம்மின்

(இதன் பொருள்) அரசன் தேவியொடு ஆயிழை நல்லீர் புரைதீர் நல்லறம் போற்றிக் கேண்மின்-இராசமாதேவியொடு ஈங்கிருக்கின்ற மகளிர் எல்லாம் குற்றமில்லாத நல்ல அருளறத்தைப் பேணக் கேட்டு உய்யுங்கோள் என்று சொல்லி மணிமேகலையை நோக்கி; மறுபிறப்பு உணர்ந்த மணிமேகலை-முற்பிறப்பிலே செய்த நல்வினை காரணமாக மறு பிறப்பு உணரும் திருவுடைய மணிமேகலாய்; நீ பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு இத்திறம் பலவும் இவற்றின் பகுதியும்-பிற சமயக் கணக்கர் அறங்களைக் கேட்டு உணர்ந்த பின்னர் நின்பால் வந்து உனக்கு இங்குக் கூறிய தத்துவங்கள் பலவற்றையும் இவற்றின் கூறுபாடுகளையும்; முத்தேர் நகையாய் முன்உறக் கூறுவல்-முத்துப் போன்ற பற்களையுடைய உன் முன்னிலையிலேயே உள்ளத்தில் பொருந்தும்படி அறிவுறுத்துவேன் காண்; என்று அவன் எழுதலும்-என்று சொல்லி அறவணர் இருக்கையினின்றும் எழா நிற்ப; இளங்கொடி எழுந்து-அது கேட்ட மணிமேகலை எழுந்து ; நன்று அறி மாதவன் நல்அடி வணங்கி-நன்மையை முழுதும் உணர்ந்த பெரிய தவத்தையுடைய அவ்வறவணவடிகளாருடைய திருவடிகளில் விழுந்து வணங்கிய பின்னர் மகளிரை நோக்கிக் கூறுபவள்; தேவியும் ஆயமும் சித்திராபதியும் மாதவர் நன்மொழி மறவாது உய்ம்மின்-இராசமாதேவியம் ஆய மகளிரும் சித்திராபதியும் ஆகிய எல்லீரும் அறவணவடிகளார் கூறுகின்ற நல்லற மொழிகளைக் கேட்டு அவற்றை மறவாமல் கடைப்பிடியாகக் கொண்டு ஒழுகி உய்யுங்கோள் என்று அறிவுறுத்த பின்னர்; என்க.

(விளக்கம்) புரை-குற்றம். நல்லறம் என்றது பவுத்தர் அறங்களை முனிவர் எஞ்சியவறங்களை யாம் பின்னர்க் கூறுவாம் அவற்றைப் போற்றிக் கேண்மின் என்றார் எனக் கோடலுமாம். மணிமேகலைக்கு நிகழவிருக்கின்ற ஏது நிகழ்ச்சிகளைக் கருதி அவை நிகழ்ந்த பின்னர்க் காஞ்சியினிடத்தே நின்பால் வந்து அறம் கூறுவேம் என்பது கருத்தாகக் கொள்க. பிறவறம்-பிற சமயக் கணக்கர் அறங்கள். நகையாய் முன்-நகையையுடைய உன் முன்னிலையிலே அவன்: அறவணவடிகள் நன்றறி-நல்லறத்தை அறிந்த.

மணிமேகலை அம் மகளிர்பால் விடை பெறுதல்

151-160: இந்நகர்.......போகி

(இதன் பொருள்) இந் நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின் மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று என்குவர். அன்புடையீரே! இன்னென்று கேண்மின்! இப் பூம்புகார் நகரத்தில் யான் தங்கியிருப்பேனாயின் வேந்தன் மகனுக்கு இவள் கொல்ல வருகின்ற கூற்றுவன் ஆயினன் என்று என்னை மாந்தர் பலரும் இகழ்வர் ஆதலால் யான் இங்கிருக்க நினைகிலேன்; ஆபுத்திரன் நாடு அடைந்த பின் நாள்-அறவோனாகிய ஆபுத்திரன் மாறிப் பிறந்திருக்கின்ற சாவக நாட்டிலே சென்று அவனோடளவளாவிய பின்னர்; மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி-குற்றமில்லாத மணிபல்லவத்திற்குச் சென்று அங்குப் புத்த பீடிகையைக் கைதொழுது வணங்கிய பின்னர்; மாபத்தினி தனக்கு வஞ்சியுள் புக்கு-என் அன்னையாகிய வீர மாபத்தினித் தெய்வத்தைக் கண்டு அடி வணங்குதல் பொருட்டு வஞ்சி மாநகரத்திலே புகுந்து வணங்கிய பின்னர்; யாங்கணும் எஞ்சா நல் அறம் செய்குவல்-எவ்விடத்தும் சென்று வீழ்நாள் படாமல் உயர்ந்த அறத்தைச் செய்வேன், இஃது என் உட்கொள்; மனக்கினியீர் எனக்கு இடர் உண்டு என்று இரங்கல் வேண்டா என்று அவரையும் வணங்கி-என் உளத்திற்கு இனிய அன்பர்களே யான் எங்குச் செல்லினும் எனக்கு யாதொரு துன்பமும் நிகழமாட்டாது ஆதலால் எனக்குத் துன்பம் உண்டாகுமோவென்று நீவிர் கவலுதல் வேண்டா என்று தேற்றுரை கூறி இராசமாதேவி யும் மாதவியும் சுதமதியும் முதலிய வணங்குதற்குரியவரையும் வணங்கி; வெந்து ஆறு பொன்போல் வீழ்கதிர் மறைந்த அந்தி மாலை ஆயிழை போகி-உலையின்கண் தீயில் வெந்து ஆறிய பொன்னைப் போல மிளிர்ந்து மேற்றிசையிலே வீழுகின்ற ஞாயிறு மறைந்துபோன அந்திமாலை பொழுதின்கண் மணிமேகலை அவர்கள்பால் விடை பெற்றுச் சென்று என்க.

(விளக்கம்) கண்டோரெல்லாம் பழி தூற்றப்பட்டு இவ்வூரில் வாழ்வதைவிட இவ்வூரை விட்டுப் போதலே நன்று என்றவாறு

தோன்றின் புகழொடு தோன்றக வஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று   (குறள்-236)

எனவரும் திருக்குறளும் ஈண்டு நினையற்பாலது ஆபுத்திரனாடென்றது, சாவகநாட்டினை மாபத்தினி தனக்கு வஞ்சியுள் புக்கு என மாறுக. பத்தினியை வணங்குதல் பொருட்டு என்பது கருத்தாகக் கொள்க. எஞ்சாநல்லறம்-வீழ்நாள்படாது செய்யும் நல்லறம். செய்தவமும் தெய்வக்காவலும் எனக்குண்மையின் இடருண்டு என்று இரங்கல் வேண்டா என்றாள் என்க. மனக்கு-மனத்திற்கு. அவரை என்றது இராசமாதேவியையும், தாயரையும் வெந்து ஆறு பொன் வீழும் ஞாயிற்றுக்குவமை வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப(அகம்: 71) என்பதும் காண்க. வெந்துறு பொன் என்றும் பாடம்.

மணிமேகலை வான்வழியே பறந்து ஆபுத்திரனாடடைதல்

161-168: உலக............கூறும்

(இதன் பொருள்) உலக அறவியும் முதியாள் குடிகையும் இலகு ஒளிக் கந்தமும் ஏத்தி வலம் கொண்டு அந்தரம் ஆறாப் பறந்து சென்று ஆயிழை-ஊரம்பலத்தையும் சம்பாபதியின் திருக்கோயிலையும் விளங்குகின்ற ஒளியையுடைய கந்திற் பாவையையும் கைதொழுதேத்தி வான் வழியாகப் பறந்து போய் அம் மணிமேகலை; இந்திரன் மருமான் இரும்பதிப் புறத்து ஓர் பூம்பொழில் அகவயின் இழிந்து பொறை உயிர்த்து-இந்திரனுடைய வழித் தோன்றலாகிய புண்ணிராசனுடைய பெரிய நகரத்தின் பக்கத்தே யமைந்த பூம்பொழிலினுள்ளே இறங்கி இளைப்பாறி; ஆங்கு வாழ் மாதவன் அடி இணை வணங்கி-அப் பூம்பொழிலின்கண் வாழுகின்ற துறவோன் ஒருவனைக் கண்டு அவன் அடிகளிலே வீழ்ந்து வணங்கி; இந் நகர் பேர் யாது இந் நகர் ஆளும் மன்னவன் யார் என மாதவன் கூறும்-அடிகளே இந் நகரின் பெயர் யாது? இந்த நகரத்தை ஆளும் அரசன் யார்? என்று வினவ அத் துறவோன் சொல்லுவான்; என்க

(விளக்கம்) உலக அறவி-ஊரம்பலம். ஆண்டுத் துறவோர் சங்கமிருத்தலின் தொழுதாள் என்க. முதியாள் குடிகை-சம்பாபதி கோயில் கந்தம்-தூண். கந்திற்பாவை என்க. ஆறாக என்பதன் ஈறுதொக்கது ஆயிழை: மணிமேகலை. இந்திரன் மருமான் என்றது புண்ணியராசனை; மருமான்-வழித்தோன்றல். பொறை உயிர்த்து-இளைப்பாறி.

அத்துறவோன் கூற்று

169-176: நாக..............தானென்

(இதன் பொருள்) நகைமலர் பூம்பொழில் அருந்தவன்-விளங்குகின்ற அம் மலர்ப் பூம்பொழில் உறைகின்ற அரிய தவத்தையுடைய அத் துறவோன்; இது நாகபுரம் நல்நகர் ஆள்வோன் பூமி சந்திரன் மகன் புண்ணியராசன்-இந் நகரத்தின் பெயர் நாகபுரமென்பது இந்த அழகிய நகரத்தை யாள்பவன் ஆவான்; ஈங்கு இவன் பிறந்த அ நாள் தொட்டு ஓங்கு உயர் வானத்து பெயல் பிழைப்பு அறியாது-இந் நாட்டின்கண் இப் புண்ணியராசன் பிறந்த அந்த நாளிலிருந்து மிகவும் உயர்ந்த வானத்தினின்றும் மழை பெய்தல் தவறுதல் அறியாது; மண்ணும் மரனும் வளம்பல தரூஉம்-நிலமும் மரங்களும் தாம் வழங்குகின்ற வளங்கள் பலவற்றையும் குறைவின்றித் தருகின்றன ஆதலால்; உயிர்க்கு உள் நின்று உருக்கும் நோய் இல் என-உயிரினங்களுக்கு உடம்பினுள்ளிருந்து மெலிவிக்கின்ற பசி முதலிய நோய் சிறிதுமில்லை என்று; தகை மலர்த் தாரோன் தன் திறம் கூறினன்-அழகிய மலர் மாலையணிந்த புண்ணியராசனுடைய பெருமையை விதந்தெடுத்து விளம்பினன்; என்பதாம்.

(விளக்கம்) இது நாகபுரம் என மாறுக. இந் நன்னகர் எனச் சுட்டுச் சொல் பெய்துரைக்க. பெயல்-மழை. மரன். மகரத்திற்கு னகரம் போலி. தாரோன்: புண்ணியராசன். திறம்-பெருமை. அகைமலர் எனக் கண்ணழித்துக் கோடலுமாம்

இனி, இக் காதையை, கணிகைகேட்டு வருந்தி, வீழ்ந்து, ஏத்தி, தருக என இராசமாதேவி இவை சொல்வுழி மாதவி அடிகளுடன் வரக் கண்டலும் வணங்க அவன் அறிவுண்டாக என்று கூறுலும் இராசமாதேவி ஆசனங்காட்டி விளக்கி வாழ்க என, தேவி கேளாய் நல்லீர் கேண்மின் மணிமேகலை முன்னுறக் கூறுவல் என்று எழுதலும் இளங்கொடி எழுந்து வணங்கி என்று வணங்கிப் போகி ஏத்திச் சென்று இழிந்து உயிர்த்து வணங்கி யாது யார் என அருந்தவன் தாரோன் தன் திறம் கூறினன் என இயைத்துக் கொள்க.

ஆபுத்திரனாடடைந்த காதை முற்றிற்று.
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 10:08:00 AM
25. ஆபுத்திரனோடு மணிபல்லவ மடைந்த காதை

(மணிமேகலை ஆபுத்திரனை மணிபல்லவத்திடை யழைத்துப் புத்த பீடிகை காட்டிப் பிறப்புணர்த்தி வஞ்சிமாநகர் புக்க பாட்டு)

அஃதாவது-மணிமேகலை ஆபுத்திரன் மாறிப் பிறந்து புண்ணியராசன் என்னும் பெயரோடிருந்தவனைக் கண்டு உன் கையிலிருந்த பாத்திரமே என் கையை யடைந்தது. நீ முற்பிறப்பில் செய்த நல்வினையின் பயனாகவே இப் பிறப்பில் அரசனாயினை அச் செல்வத்தால் அறிவு மயங்கினை நீ இப் பிறப்பில் பசு வயிற்றில் பிறந்தாய்; அதனையும் அறிந்தில்லை நீ மணிபல்லவத்திற்குச் சென்று புத்த பீடிகையைத் தொழுதாலன்றி உனது பழம் பிறப்பை அறியாய் என்று சொல்லி விட்டு மீண்டும் வான் வழியே பறந்து மணிபல்லவத்தில் இறங்கிப் புத்த பீடிகையைத் தொழுத செய்தியையும் மணிமேகலையின் சொற்கேட்டுப் புண்ணியராசனாகிய ஆபுத்திரனும் அரசாட்சியை அமைச்சன்பால் ஒப்புவித்து விட்டு மரக்கலம் ஏறி மணிபல்லவத்தை யடைந்த செய்தியும் அங்கு நிகழ்ந்த பிற நிகழ்ச்சிகளும் கூறும் செய்யுள் என்றவாறு.

இனி, இதன்கண் சாவக நாட்டின்கண் தருமசாவகன் என்பான் மணிமேகலையின் சிறப்பெல்லாம் புண்ணியராசனுக்குக் கூறுதலும் மணிமேகலை அவ்வரசனுக்குச் செல்வமுடைமையால் நீ அறிவு மயங்கினை நீ மணிபல்லவம் வலங்கொண்டால் அல்லது பிணிப்புறு பிறவியின் பெற்றியை யறியாய் ஆதலின் அரசனே நீ ஆங்கு வருதி என்று சொல்லிவிட்டு வானிலே பறந்து மணிபல்லவத்தில் வந்திறங்கி அங்குத் தன் முற்பிறப்பினை உணர்ந்து கூறுவனவும் சாவக நாட்டில் புண்ணியராசன் தன் அமைச்சனுக்குக் கூறும் செய்திகளும் அமைச்சன் அவனுக்குக் கூறும் மாற்றங்களும் புண்ணியராசன் மரக்கலம் ஏறி மணிபல்லவத்திற்கு வருதலும் மணிமகேலை அவனை யழைத்துச் சென்று தீவகம் வலம் செய்து தரும் பீடிகையைக் காட்டுதலும் அவன் தரும் பீடிகையை வலங்கொண்டு வணங்கியவுடனே அப் பீடிகை கையகத் தெடுத்துக் காண்போர் முகத்தைக் கண்ணாடி மண்டிலம் காட்டுவதுபோல அவனுடைய முற்பிறப்பினைக் காட்டுதலும் முற்பிறப்புணர்ந்த அவ்வரசன் தனக்கு அமுத சுரபி ஈந்த சிந்தா தேவியை வாழ்த்திப் புகழ்தலும் பின்னர் முற்பிறப்பிலே இறந்து போன தன் எலும்புக் கூட்டைக் கண்டு மயங்குதலும் அவன் இறந்தமையால் அவன்பால் அன்புடைய ஒன்பது செடிகள் அங்கு வந்து உயிர் நீத்தவர்களுடைய எலும்புக் கூடுகளையும் கண்டு மயங்குதலும் பின்னர் மணிமேகலை அவ்வரசனக்கு அறங் கூறுதலும் நீ மரக்கலம் ஏறி உன்னாட்டிற்குச் செல்லுதி என்று போக்கிய பின்னர் வஞ்சிமாநகர் நோக்கி வானத்து எழுந்து பறந்து போதலும் பிறவும் பெரிதும் சுவை கெழுமச் சொல்லப் பட்டிருக்கின்றன.

அரசன் உரிமையோடு அப் பொழில் புகுந்து
தருமசாவகன் தன் அடி வணங்கி
அறனும் மறனும் அநித்தமும் நித்தத்
திறனும் துக்கமும் செல் உயிர்ப் புக்கிலும்
சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும்
ஆரியன் அமைதியும் அமைவுறக் கேட்டு
பெண் இணை இல்லாப் பெரு வனப்பு உற்றாள்
கண் இணை இயக்கமும் காமனோடு இயங்கா
அங்கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும்
இங்கு இணை இல்லாள் இவள் யார்? என்ன  25-010

காவலன் தொழுது கஞ்சுகன் உரைப்போன்
நாவல் அம் தீவில் இந் நங்கையை ஒப்பார்
யாவரும் இல்லை இவள் திறம் எல்லாம்
கிள்ளிவளவனொடு கெழுதகை வேண்டிக்
கள் அவிழ் தாரோய்! கலத்தொடும் போகி
காவிரிப் படப்பை நல் நகர் புக்கேன்
மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்தாங்கு
ஓதினன் என்று யான் அன்றே உரைத்தேன்
ஆங்கு அவள் இவள்! அவ் அகல் நகர் நீங்கி
ஈங்கு வந்தனள் என்றலும் இளங்கொடி  25-020

நின் கைப் பாத்திரம் என் கைப் புகுந்தது
மன் பெருஞ் செல்வத்து மயங்கினை அறியாய்
அப் பிறப்பு அறிந்திலைஆயினும் ஆ வயிற்று
இப் பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ?
மணிப்பல்லவம் வலம் கொண்டால் அல்லது
பிணிப்புறு பிறவியின் பெற்றியை அறியாய்
ஆங்கு வருவாய் அரச! நீ என்று அப்
பூங் கமழ் தாரோன்முன்னர்ப் புகன்று
மை அறு விசும்பின் மடக்கொடி எழுந்து
வெய்யவன் குடபால் வீழாமுன்னர்  25-030

வான் நின்று இழிந்து மறி திரை உலாவும்
பூ நாறு அடைகரை எங்கணும் போகி
மணிப்பல்லவம் வலம் கொண்டு மடக்கொடி
பிணிப்பு அறு மாதவன் பீடிகை காண்டலும்
தொழுது வலம் கொள்ள அத் தூ மணிப்பீடிகைப்
பழுது இல் காட்சி தன் பிறப்பு உணர்த்த
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை
மாயம் இல் மாதவன் தன் அடி பணிந்து
தருமம் கேட்டு தாள் தொழுது ஏத்தி
பெருமகன் தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம்  25-040

விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும்
கலங்கு அஞர்த் தீவினை கடிமின் கடிந்தால்
தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர்
ஆகலின் நல்வினை அயராது ஓம்புமின்
புலவன் முழுதும் பொய் இன்று உணர்ந்தோன்
உலகு உயக் கோடற்கு ஒருவன் தோன்றும்
அந் நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது
இன்னாப் பிறவி இழுக்குநர் இல்லை
மாற்று அருங் கூற்றம் வருவதன் முன்னம்
போற்றுமின் அறம் எனச் சாற்றிக் காட்டி  25-050

நாக் கடிப்பு ஆக வாய்ப் பறை அறைந்தீர்
அவ் உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த
வெவ் உரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின்
பெரியவன் தோன்றாமுன்னர் இப் பீடிகை
கரியவன் இட்ட காரணம் தானும்
மன் பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய
என் பிறப்பு உணர்த்தலும் என்? என்று யான் தொழ
முற்ற உணர்ந்த முதல்வனை அல்லது
மற்று அப் பீடிகை தன்மிசைப் பொறாஅது
பீடிகை பொறுத்த பின்னர் அல்லது   25-060

வானவன் வணங்கான் மற்று அவ் வானவன்
பெருமகற்கு அமைத்து பிறந்தார் பிறவியைத்
தரும பீடிகை சாற்றுக என்றே
அருளினன் ஆதலின் ஆய் இழை பிறவியும்
இருள் அறக் காட்டும் என்று எடுத்து உரைத்தது
அன்றே போன்றது அருந் தவர் வாய்மொழி
இன்று எனக்கு என்றே ஏத்தி வலம் கொண்டு
ஈங்கு இவள் இன்னணம் ஆக இறைவனும்
ஆங்கு அப் பொழில் விட்டு அகநகர் புக்கு
தந்தை முனியா தாய் பசு ஆக   25-070

வந்த பிறவியும் மா முனி அருளால்
குடர்த் தொடர் மாலை சூழாது ஆங்கு ஓர்
அடர்ப் பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும்
மா முனி அருளால் மக்களை இல்லோன்
பூமிசந்திரன் கொடுபோந்த வண்ணமும்
ஆய் தொடி அரிவை அமரசுந்தரி எனும்
தாய் வாய்க் கேட்டு தாழ் துயர் எய்தி
இறந்த பிறவியின் யாய் செய்ததூஉம்
பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து
செரு வேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க  25-080

அரைசு வீற்றிருந்து புரையோர்ப் பேணி
நாடகம் கண்டு பாடல் பான்மையின்
கேள்வி இன் இசை கேட்டு தேவியர்
ஊடல் செவ்வி பார்த்து நீடாது
பாடகத் தாமரைச் சீறடி பணிந்து
தே மரு கொங்கையில் குங்குமம் எழுதி
அம் கையில் துறு மலர் சுரி குழல் சூட்டி
நறு முகை அமிழ்து உறூஉம் திரு நகை அருந்தி
மதி முகக் கருங் கண் செங் கடை கலக்கக்
கருப்பு வில்லி அருப்புக் கணை தூவ  25-090

தருக்கிய காமக் கள்ளாட்டு இகழ்ந்து
தூ அறத் துறத்தல் நன்று எனச் சாற்றி
தௌந்த நாதன் என் செவிமுதல் இட்ட வித்து
ஏதம் இன்றாய் இன்று விளைந்தது
மணிமேகலை தான் காரணம் ஆக என்று
அணி மணி நீள் முடி அரசன் கூற
மனம் வேறு ஆயினன் மன் என மந்திரி
சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி
எம் கோ வாழி! என் சொல் கேண்மதி
நும் கோன் உன்னைப் பெறுவதன் முன் நாள்  25-100

பன்னீராண்டு இப் பதி கெழு நல் நாடு
மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு
ஈன்றாள் குழவிக்கு இரங்காளாகி
தான் தனி தின்னும் தகைமையது ஆயது
காய் வெங் கோடையில் கார் தோன்றியதென
நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்!
தோன்றிய பின்னர் தோன்றிய உயிர்கட்கு
வானம் பொய்யாது மண் வளம் பிழையாது
ஊன் உடை உயிர்கள் உறு பசி அறியா
நீ ஒழிகாலை நின் நாடு எல்லாம்   25-110

தாய் ஒழி குழவி போலக் கூஉம்
துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ
உயர் நிலை உலகம் வேட்டனை ஆயின்
இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ!
பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே!
தன் உயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஓம்பும்
மன் உயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால்
மதி மாறு ஒர்ந்தனை மன்னவ! என்றே
முதுமொழி கூற முதல்வன் கேட்டு
மணிபல்லவம் வலம் கொள்வதற்கு எழுந்த  25-120

தணியா வேட்கை தணித்தற்கு அரிதால்
அரசும் உரிமையும் அகநகர்ச் சுற்றமும்
ஒரு மதி எல்லை காத்தல் நின் கடன் என
கலம் செய் கம்மியர் வருக எனக் கூஉய்
இலங்கு நீர்ப் புணரி எறி கரை எய்தி
வங்கம் ஏறினன் மணிபல்லவத்திடை
தங்காது அக் கலம் சென்று சார்ந்து இறுத்தலும்
புரை தீர் காட்சிப் பூங்கொடி பொருந்தி
அரைசன் கலம் என்று அகம் மகிழ்வு எய்தி
காவலன் தன்னொடும் கடல் திரை உலாவும்  25-130

தே மலர்ச் சோலைத் தீவகம் வலம் செய்து
பெருமகன்! காணாய் பிறப்பு உணர்விக்கும்
தரும பீடிகை இது எனக் காட்ட
வலம் கொண்டு ஏத்தினன் மன்னவன் மன்னவற்கு
உலந்த பிறவியை உயர் மணிப் பீடிகை
கைஅகத்து எடுத்துக் காண்போர் முகத்தை
மை அறு மண்டிலம் போலக் காட்ட
என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன்
தென் தமிழ் மதுரைச் செழுங் கலைப் பாவாய்!
மாரி நடு நாள் வயிறு காய் பசியால்  25-140

ஆர் இருள் அஞ்சாது அம்பலம் அணைந்து ஆங்கு
இரந்தூண் வாழ்க்கை என்பால் வந்தோர்க்கு
அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில்
நாடு வறம் கூரினும் இவ் ஓடு வறம் கூராது
ஏடா! அழியல் எழுந்து இது கொள்க என
அமுதசுரபி அங்கையில் தந்து என்
பவம் அறுவித்த வானோர் பாவாய்!
உணர்வில் தோன்றி உரைப் பொருள் உணர்த்தும்
மணி திகழ் அவிர் ஒளி மடந்தை! நின் அடி
தேவர் ஆயினும் பிரமர் ஆயினும்   25-150

நா மாசு கழூஉம் நலம் கிளர் திருந்து அடி
பிறந்த பிறவிகள் பேணுதல் அல்லது
மறந்து வாழேன் மடந்தை! என்று ஏத்தி
மன்னவன் மணிமேகலையுடன் எழுந்து
தென் மேற்காகச் சென்று திரை உலாம்
கோமுகி என்னும் பொய்கையின் கரை ஓர்
தூ மலர்ப் புன்னைத் துறை நிழல் இருப்ப
ஆபுத்திரனோடு ஆய் இழை இருந்தது
காவல் தெய்வதம் கண்டு உவந்து எய்தி
அருந்து உயிர் மருந்து முன் அங்கையில் கொண்டு  25-160

பெருந் துயர் தீர்த்த அப் பெரியோய்! வந்தனை
அந் நாள் நின்னை அயர்த்துப் போயினர்
பின் நாள் வந்து நின் பெற்றிமை நோக்கி
நின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர்
ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண்
ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர்
ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவை காண்
ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப
ஆய் மலர்ப் புன்னை அணி நிழல் கீழால்
அன்பு உடை ஆர் உயிர் அரசற்கு அருளிய  25-170

என்பு உடை யாக்கை இருந்தது காணாய்
நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கிப்
பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய்
கொலைவன் அல்லையோ? கொற்றவன் ஆயினை!
பலர் தொழு பாத்திரம் கையின் ஏந்திய
மடவரல் நல்லாய்! நின் தன் மா நகர்
கடல் வயிறு புக்கது காரணம் கேளாய்
நாக நல் நாடு ஆள்வோன் தன் மகள்
பீலிவளை என்பாள் பெண்டிரின் மிக்கோள்
பனிப் பகை வானவன் வழியில் தோன்றிய  25-180

புனிற்று இளங் குழவியொடு பூங்கொடி பொருந்தி இத்
தீவகம் வலம் செய்து தேவர் கோன் இட்ட
மா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி
கம்பளச் செட்டி கலம் வந்து இறுப்ப
அங்கு அவன்பால் சென்று அவன் திறம் அறிந்து
கொற்றவன் மகன் இவன் கொள்க எனக் கொடுத்தலும்
பெற்ற உவகையன் பெரு மகிழ்வு எய்தி
பழுது இல் காட்சிப் பைந்தொடி புதல்வனைத்
தொழுதனன் வாங்கி துறை பிறக்கு ஒழிய
கலம் கொண்டு பெயர்ந்த அன்றே கார் இருள்  25-190

இலங்கு நீர் அடைகரை அக் கலம் கெட்டது
கெடு கல மாக்கள் புதல்வனைக் கெடுத்தது
வடி வேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப
மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன்
நல் மணி இழந்த நாகம் போன்று
கானலும் கடலும் கரையும் தேர்வுழி
வானவன் விழாக் கோள் மா நகர் ஒழிந்தது
மணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள்
அணி நகர் தன்னை அலை கடல் கொள்க என
இட்டனள் சாபம் பட்டது இதுவால்  25-200

கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்த
வடி வேல் தடக் கை வானவன் போல
விரிதிரை வந்து வியல் நகர் விழுங்க
ஒரு தனி போயினன் உலக மன்னவன்
அருந் தவன் தன்னுடன் ஆய் இழை தாயரும்
வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர்
பரப்பு நீர்ப் பௌவம் பலர் தொழ காப்போள்
உரைத்தன கேட்க உறுகுவை ஆயின் நின்
மன் உயிர் முதல்வனை மணிமேகலா தெய்வம்
முன் நாள் எடுத்ததும் அந் நாள் ஆங்கு அவன்  25-210

அற அரசு ஆண்டதும் அறவணன் தன்பால்
மறு பிறப்பாட்டி வஞ்சியுள் கேட்பை என்று
அந்தரத் தீவகத்து அருந் தெய்வம் போய பின்
மன்னவன் இரங்கி மணிமேகலையுடன்
துன்னிய தூ மணல் அகழத் தோன்றி
ஊன் பிணி அவிழவும் உடல் என்பு ஒடுங்கித்
தான் பிணி அவிழாத் தகைமையது ஆகி
வெண் சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த
பண்பு கொள் யாக்கையின் படிவம் நோக்கி
மன்னவன் மயங்க மணிமேகலை எழுந்து  25-220

என் உற்றனையோ இலங்கு இதழ்த் தாரோய்?
நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது
மன்னா! நின் தன் மறு பிறப்பு உணர்த்தி
அந்தரத் தீவினும் அகன் பெருந் தீவினும்
நின் பெயர் நிறுத்த நீள் நிலம் ஆளும்
அரசர் தாமே அருளறம் பூண்டால்
பொருளும் உண்டோ பிற புரை தீர்த்தற்கு?
அறம் எனப்படுவது யாது? எனக் கேட்பின்
மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது  25-230

கண்டது இல் எனக் காவலன் உரைக்கும்
என் நாட்டு ஆயினும் பிறர் நாட்டு ஆயினும்
நல் நுதல்! உரைத்த நல் அறம் செய்கேன்
என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை
நின்திறம் நீங்கல் ஆற்றேன் யான் என
புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின்
மன் பெரு நல் நாடு வாய் எடுத்து அழைக்கும்
வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன் என்று
அந்தரத்து எழுந்தனள் அணி இழை தான் என்  25-239

உரை

சாவக நாட்டு மன்னன் தேவியோடு அம் முனிவனை வணங்க வந்தவன் மணிமேகலையைக் கண்டு இவள் யாரென்று வினவுதல்

1-10: அரசன்..........என்ன

(இதன் பொருள்) அரசன் உரிமையோடு அப் பொழில் புகுந்து தருமசாவகன் தன் அடி வணங்கி-நாகபுரத்து மன்னனாகிய புண்ணியராசன் தன் கோப்பெருந் தேவியோடு மணிமேகலை இறங்கியிருந்த அந்தப் பூம்பொழிலிலே சென்று அங்கு மணிமேகலைக்கு அறங்கூறிக் கொண்டிருந்த தருமசாவகன் என்னும் அத் துறவோனுடைய திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி அம் முனிவன் மணிமேகலைக்கு அறிவுறுத்துபவன்; அறனும் மறனும் அகித்தமும் நித்தத் திறனும் துக்கமும் செல் உயிர் புக்கிலும்-நல்வினையின் வகையும் தீவினையின் வகையும் நிலையில்லாத பொருகளி னியல்பும் நிலையுதலுடைய பொருளியல்பும் துன்பம் முதலிய வாய்மையினியல்பும் இறந்துபோம் உயிர்கள் புகுமிடம்; சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும் ஆரியன அமைதியும் அமைஉறக் கேட்டு-பன்னிரு நிதானங்களாலே உண்டாகும் பிறப்பும் அப் பிறப்பறுத்து வீடுபேறெய்தி உய்யும் வகையும் இவற்றை ஓதாதுணர்ந்து பதியுமாறு கேட்டு; பெண் இணை இல்லா பெருவனப்பு-உற்றதள் காமனோடு இயங்காகண் இணை இயக்கமும்-இவ்வுலகில் உள்ள பெண்களுள் வைத்து யாரும் தனக்குவமையில்லாத பேரழகு படைத்தவளும் ஆசையின் வழியியங்காத அவளுடைய கண்களின் அருள் நோக்கமும் நேரிலே கண்ட அப் புண்ணியராசனானவன்; அம் கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும் இங்கு இணை இல்லாள் இவள் யார் என்ன-பெரிதும் வியந்து அழகிய தன் கையில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்திக்கொண்டு அறங்கேட்கின்ற இங்கு நிற்கும் ஒப்பற்ற இந் நங்கை யாவளோ என்று வினவ என்க.

(விளக்கம்) அரசன்: புண்ணியராசன். உரிமை-மனைவி. தருமசாவகன்-அப் பொழிலின்கண் உறைவானாக முற்கூறப்பட்ட முனிவன் பெயர்; இப் பெயர் அறங்கோட்போன் என்னும் பொருட்டு. அறன்-உண்டி கொடுத்தல் முதலியன. மறன்-கள்ளுண்ணல் முதலியன-துக்கம்-துன்பம் முதலிய வாய்மைகள். புக்கில்-புகுமிடம். சார்பு-ஒன்றனை ஒன்று சார்ந்து பிறக்கும் நிதானங்கள். உய்தி-வீடு. ஆரியன்-மேலோன்; புத்தபெருமான் காமனோடியங்கா கண்ணிணை இயக்கம் என மாறுக, இங்கிருக்கின்ற இவள் என்க. யாரென்ன என்று வியந்து அரசன் வினவ என்க.

கஞ்சுகன் கூற்று

11-20: காவலன்..........என்றலும்

(இதன் பொருள்) காவலன் தொழுது-அவ்வாறு வினவிய அரசனைக் கைகூப்பித் தொழுது; கஞ்சுகன் உரைப்போன்-கஞ்சுகன் என்னும் கோத்தொழிலாளன் அவனுக்குக் கூறுபவன்; நாவலம் தீவில் இந் நங்கையை ஒப்பார் யாவரும் இல்லை-தென்குமரி வடவிமயம் ஆயிடைப் பரந்து கிடக்கும் பெரிய நாவலந் தீவின்கண் மகளிரில் சிறந்த இவளுக்கு ஒப்பாவார் பிறர் யாரொருவரும் இல்லை; இவள் திறம் எல்லாம்-இவளுடைய வரலாறு முழுவதும் (யான் அறிகுவன்) கிள்ளி வளவனொடு கெழுதகை வேண்டி கள் அவிழ் தாரோய் கலத்தொடும் போகி காவிரிப்படப்பை நல்நகர் புக்கேன்-சோழன் நெடுமுடிக் கிள்ளியினது கேண்மை பெறுவதை விரும்பித் தேன் துளிக்கும் மலர் மாலையணிந்த நீ என்னைத் தூது போக்கி பொழுது யான் மரக்கலத்தோடு அவனுக்கு வேண்டுவன வெல்லாம் ஏற்றிக் கொண்டு மரக்கலத்தோடே சென்று காவிரியையும் அதன் இருமருங்கினும் தோட்டங்களையும் உடைய அழகிய பூம்புகார் நகரத்திலே புகுந்தேன் அல்லெனோ; மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்து ஆங்கு ஓதினன் என்று-அந் நகரத்திலுள்ள பெரிய தவத்தையுடைய அறவணவடிகள் இவளுடைய பிறப்பு முதலியவற்றை நன்குணர்ந்து அந் நகரத்தில் எனக்குக் கூறினர் என்று: யான் அன்றே உரைத்தேன்-யான் மீண்டு வந்த அற்றை நாளிலே அரசே உனக்குக் கூறியிருக்கின்றேன்; ஆங்கு அவள் இவள்-அங்ஙனம் கூறப்பட்ட அம் மணிமேகலையே இங்கு நிற்கின்ற இவ்வணங்காவாள்; அவ் அகநகர் நீங்கி ஈங்கு வந்தனள் என்றலும்-அப் பூம்புகாரின் அகநகரத்தைக் கை விட்டு என்ன காரணமோ இங்கு வந்திருக்கின்றனள் என்று அக் கஞ்சுகன் அரசனுக்கு அறிவுறுத்திய பொழுது; என்க.

(விளக்கம்) காவலன்: புண்ணியராசன். கஞ்சுகன்-மெய்ப்பை(சட்டை) புக்க கோத்தொழிலாளன்; தூதன். பிரதானியுமாம். இந்  நங்கை-இங்கிருக்கின்ற இணையில்லா இவள். இவள் திறம்-இவள் வரலாறு கிள்ளி வளவன்-மாவண்கிள்ளி; உதயகுமரன் தந்தை. கெழுதகை-நட்புரிமை; நட்புரிமை கொள்ளும் பொருட்டு நீ என்னை விடுப்ப யான் கலத்தொடும் போகிப் புகார் நகரத்துப் புகுந்த பொழுது என்றவாறு. தாரோய் என்றது முன்னிலைப் பெயர் மாத்திரை. கலத்தொடும் என்றமையால் வரிசைப்பொருள் ஏற்றப்பெற்ற கலத்தொடும் என்பது குறிப்பாயிற்று. படப்பை-தோட்டக் கூறு. இவள் பிறப்பு என்றது இவளுடைய முற்பிறப்பும் இப் பிறப்பும் என்பதுபட நின்றது. உணர்ந்தாங்கு-உணர்ந்தபடி எனினுமாம். அன்றே உரைத்தேன் என்றது யான் மீண்டு வந்த அற்றை நாளிலேயே கூறியிருக்கின்றேன் என்றவாறு. அவ்வகநகர்-பூம்புகார் நகரம். ஈங்கு வந்தனள் என்றது இங்கே ஏதோ காரியமாக வந்திருக்கின்றனள் என்று அறிவுறுத்தபடியாம் இதனைத் தோற்றுவாயாக் கொண்டு மணிமேகலை மேலே தான் வந்த காரியம் கூறுகின்றாள் என்க.

மணிமேகலை புண்ணியராசனுக்குத் தான் வந்த காரியம் கூறி மணிபல்லவத்திற்குப் போதல்

20-31: இளங்கொடி...........இழிந்து

(இதன் பொருள்) இளங்கொடி நின் கைப்பாத்திரம் என் கை புகுந்தது-அது கேட்ட மணிமேகலை அக் கஞ்சுகன் கூற்றை ஏதுவாகக் கொண்டு புண்ணியராசன் முகம் நோக்கி அரசனே நீ முற்பிறப்பிலே ஆபுத்திரனாயிருந்து தெய்வத்தின்பாற் பெற்ற நின்னுடைய கையிலிருந்த தெய்வத்தன்மையுடைய அமுதசுரபி என்னும் அப் பாத்திரமே இது யான் செய்த தவத்தால் அஃது என் கையில் தானே வந்து சேர்ந்தது; மன் பெரும் செல்வத்து மயங்கினை அறியாய்-நீயோ முற்பிறப்பிலே செய்த நல்வினைப் பயனாக அரசனுக்கியன்ற பெரிய செல்வத்தைப் பெற்று அச் செல்வத்தினாலே மயக்கமும் எய்தினையாதலால் மெய்யறிவுடைய அல்லையாயினை.இச் சிறப்பிற்குக் காரணமான; அப் பிறப்பு அறிந்திலை ஆயினும்-ஆவால் வளர்க்கப் பெற்று ஆபுத்திரன் எனப்பெயர் பெற்று அருளறம் பேணிய உனது அப் பிறப்பினை நீ இப்பொழுது அறிந்தாயில்லை எனினும்; ஆவயிற்று இப் பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ-அறவோனாகிய ஆபுத்திரனே நீ என்பதற்கு அறிகுறியாகவே நீ இப் பிறப்பில் ஓர் ஆ வயிற்றினின்றும் பிறந்தனை அதுவும் நீ அறிந்தாயில்லை, ஆகவே அவ் வறத்திற்கேற்ப நீ பிறப்பற முயலும் முயற்சி செய்தலை, அதனை மறந்து நீ அவம் செய்வதன்றிப் பிறிது என்ன தான் செய்கின்றனை? இதனை உனக்கு அறிவிக்கவே யான் இங்கு வந்தது காண்; மணிபல்லவம் வலம் கொண்டால் அல்லது-இனி நீ மணிபல்லவத் தீவிற்கு வந்து ஆங்குள்ள புத்த பீடிகையை வலம் வந்து வணங்கினால் அல்லது; பிணிப்பு  உறு பிறவியின் பெற்றியை அறியாய்-மேலும் மேலும் பற்றுண்டாதற்குக் காரணமான இப் பிறப்பின் தன்மையை அறிந்து நீ உய்தி பெறுவாயல்லை ஆதலால் இதன்கண் நின்று உய்தி பெறுதற்கு; அரச நீ ஆங்கு வருவாய் என்று அப் பூங்கமழ் தாரோன் முன்னர் புகன்று-அரசனே நீ அம் மணிபல்லவத்திற்கு வருவாயாக என்று அந்த அழகிய நறுமணங் கமழ்கின்ற மலர்மாலையணிந்த புண்ணியராசன் முன்னர்ச் சொல்லிவிட்டு; வெய்பவன் குடபால் வீழா முன்னர் மடக்கொடி மை அறு விசும்பின் எழுந்து வான் நின்று இழிந்து ஞாயிறு மேற்றிசையில் வீழ்ந்து மறைவதற்கு முன்னர் இளங்கொடியாகிய அம் மணிமேகலை அந் நகரத்தினின்றும் குற்றமற்ற வானத்திலே பறந்துபோய் வானத்தினின்றும் அம் மணிபல்லவத் தீவின்கண் இறங்கி; என்க.

(விளக்கம்) இளங்கொடி: மணிமேகலை. நின் கைப்பாத்திரம் என்றது நீ முற்பிறப்பிலே தெய்வத்தால் பெற்ற அமுதசுரபி என்னம் அரும்பெறல் பாத்திரம் என்பதுபட நின்றது. என்கைப் புகுந்தது என்றது யான் செய்த தவத்தால் என்கைப் புகுந்தது என்பதுபட நின்றது. மன் பெருஞ் செல்வம்-அரசனுக்கியன்ற பெரிய செல்வம் என்க. செல்வத்து மயங்கினை என்புழி மயங்குதற்குச் செல்வம் ஏதுவாயிற்று. ஈண்டு

அறனி ரம்பிய வருளுடை யருந்தவர்க் கேனும்
பெறல ருந்திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம்
                       (மந்தரை-70)

எனவரும் கம்பராமாயணச் செய்யுளையும் நினைக. அறியாய் என்றது உய்யும் நெறி அறியாய் என்றவாறு. அப் பிறப்பு-ஆபுத்திரனாம் பிறப்பு அதற்கறிகுறியாக ஆவயிற்றுப் பிறந்த பிறப்பு என்க. செய்தனையோ என்ற வினா தவம் செய்யாது அவம் செய்கின்றாய் என்றவாறாம் மடக்கொடி: மணிமேகலை, வெய்யவன்-ஞாயிறு. மணிபல்லவத்தில் இறங்கி என்க. 

மணிமேகலை மணிபல்லவத்தில் மாதவன் பீடிகையை வணங்குதல்

31-40: மறிதிரை.............எல்லாம்

(இதன் பொருள்) மறிதிரை உலாவும் பூ நாறு அடை கரை எங்கணும் போகி மணிபல்லவம் வலம் கொண்டு-கரையில் மோதி மீளுகின்ற அலைகள் உலாவுகின்ற அம் மணிபல்லவத் தீவினது மலர் மணம் கமழும் நீரடை கரையில் எவ்விடத்தும் சென்று அத் தீவை வலம் வந்து மடக்கொடி பிணிப்பு அறு மாதவன் பீடிகை காண்டலும்-அம் மணிமேகலை பற்றற்ற பெரிய தவத்தையுடைய புத்த பெருமானுக்கியன்ற பீடிகையைக் கண்டவுடன் தொழுது வலம் கொள்ள-கை குவித்துத் தொழுது வலம் வந்து வணங்குமளவிலிலே; அத் தூமணிப் பீடிகை பழுது இல் காட்சி தன் பிறப்பு உணர்த்த-அந்தத் தூய மணிகளால் இயன்ற புத்த பீடிகையைக் கண்ட குற்றமற்ற அக் காட்சியானது தன்னுடைய முற்பிறப்பின் நிகழ்ச்சிகளைக் கண்கூடாகக் காட்டுதலலே அம் மணிமேகலை; காயம் கரையென்னும் பேர் யாற்று அடைகரை மாயம் இல் மாதவன் தன் அடி பணிந்து-அக் காட்சியினூடே காயங்கரை என்னும் பெரிய யாற்றினது நீரடை கரையின்கண் பொய்மையில்லாத பெரிய தவத்தையுடைய பிரமதருமன் என்னும் முனிவர் பெருமானைக் கண்கூடாக் கண்டு அம் முனிவனுடைய அடிகளிலே வீழ்ந்து வணங்கிக் கூறுபவள் முனிவர் பெருமானே!; தருமம் கேட்டு தாள் தொழுது ஏத்தி பெருமகன் தன்னொடும் பெயர்வோர்க் கெல்லாம்-ஆர்வத்துடன் வந்து நீ கூறுகின்ற அறங்களைக் கேட்டு மகிழ்ந்து நின்னுடைய திருவடியைத் தொழுது வாழ்த்தித் தங்கள் அரசனாகிய அத்திபதி என்பவனோடும் அவந்தி நகரத்திற்குச் செல்லும் மக்களுக்கெல்லாம்; என்க.

(விளக்கம்) பிணிப்பறு மாதவன்-புத்தர். பீடிகை-புத்த பீடிகை காட்சி பிறப் புணர்த்த என்க. காயங்கரை-ஒரு யாற்றின் பெயர் மாயம்-பொய். மாதவன்-பிரமதருமன் என்னும் முனிவன். பழம் பிறப்புணர்ந்த மணிமேகலையின் முற்பிறப்புத் தோன்றா நிற்ப. அக் காட்சியினூடு அப் பிறப்பில் தனக்கறங் கூறிய பிரமதருமன் என்னும் முனிவர் தோன்றுதலால் என்க. இனி வருவன மணிமேகலை கூற்று. அவை அம் முனிவனை முன்னிலைப்படுத்துக் கூறுவனவாம். பெருமகன் என்றது அத்திபதி என்னும் வேந்தனை. அவனொடும் பெயர்வோர் என்றது அத்திபதியின் குடிமக்களை. அவர்க்கெல்லாம் அம் முனிவன் கூறிய அறவுரைகளை ஈண்டு மணிமேகலை கொண்டு கூறுகின்றாள் என்க.

மணிமேகலை கூற்று

41-51: விலங்கு.............அறைந்தீர்

(இதன் பொருள்) விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும் கலங்கு அஞர் தீவினை கடிமின்-விலங்குப் பிறப்பினையும் நரகர்ப் பிறப்பினையும் பேய்ப்பிறப்பினையும் உண்டாக்குகின்ற உள்ளங் கலங்குதற்குக் காரணமான துன்பத்தைத் தருகின்ற தீவினைகளைச் செய்யாதொழியுங்கோள்; கடிந்தால்-அத் தீவினையைச் செய்யா தொழியின்; நல்வினை அயராது ஓம்புமின்-நல்வினைகளை மறவாது செய்யுங்கள் , எற்றுக்கெனின் தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர் ஆகலின்-செய்தால் தேவரும் மக்களும் பிரமரும் ஆகிய உயர்ந்த பிறப்புக்களை எய்துவீர் ஆதலால்; புலவன் முழுதும் பொய் இன்று உணர்ந்தோன் உலகு உயக்கோடற்கு ஒருவன் தோன்றும்-மெய்யறிவுடையவனும் முழுவதும் மயக்கமின்றி உணர்ந்தவனும் ஆகிய இவ்வுலகத்தை உய்யக் கொள்ளும் பொருட்டுப் பிறக்கின்ற ஒருவனும் ஆகிய புத்த பெருமான் இன்றியமையாத பொழுதிலே வந்து பிறப்பான்; அந்நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது இன்னாப் பிறவி இழுக்குநர் இல்லை-அக் காலத்திலே அப் புத்த பெருமான் திருவாய்மலர்ந்தருளுகின்ற அறங்களைக் கேட்கும் திருவுடையார் தப்புவதல்லது துன்பம் தருகின்ற இப் பிறவிக் கடலினின்றும் தப்பிக் கரையேறுவார் பிறர் யாரும் இல்லை ஆதலின்; மாற்று அரும் கூற்றம் வருவதன் முன்னம் அறம் போற்றுமின் என சாற்றிக் காட்டி-யாராலும் தடுத்தற்கரிய கூற்றுவன் வந்து நும்முயிரை உண்ணுதற்கு முன்பே நாளும் ஒல்லும் வகையால் ஓவாதே நல்லறத்தைச் செய்யுமின் என்று சொல்லிக் காட்டி; நா கடிப்பாக வாய் பிறை அறைந்தீர்-நும்முடைய நாவையே குறுந்தடியாகக் கொண்டு நும் வாயாகிய பறையை முழக்கினீர் என்றாள்; என்க.

(விளக்கம்) தீவினை கடிமின், கடித்தால் தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர் எனவும், மாற்றருங் கூற்றம் வருவதன் முன்னம் அறம் போற்றுமின் எனவும் வரும் இவற்றோடு

பல்சான் றீரே பல்சான் றீரே
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் மூப்பிற் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமி னதுதான்
எல்லாரு முவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே

எனவரும் (195) புறப்பாட்டினை ஒப்பு நோக்குக.

பிறவி இழுக்குதல்-பிறவிக் கடலினின்றும் உய்ந்து கரையேறுதல்; இதனை நிருவாணம் என்பர். மாற்றருங் கூற்றம்-தடுத்தற்கரிய கூற்றுவன்; சாதல் வருமுன்னர் என்றவாறு. சாற்றிக் காட்டுதல்-வற்புறுத்திச் சொல்லுதல். கடிப்பு-பறையடிக்கும் குறுந்தடி.

இதுவுமது

52-57: அவ்வுரை.........தொழ

(இதன் பொருள்) அ உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த-அவ்வறவுரையைக் கேட்ட பின்னர் யான் தமியேனாய் நும்முடைய திருவடிகளை வணங்கி வாழ்த்திய பொழுது; எங்கட்கு வெவ்வுரை விளம்பினிர் ஆதலின்-யானும் என் கணவனுமாகிய இருவர் திறத்தும் வெவ்விய துன்பம் தருகின்ற மொழிகளைக் கூறிய அருளினீர் ஆதலால்; பெரியவன் தோன்று முன்னர் இப் பீடிகை கரியவன் இட்ட காரணம் தானும்-புத்த பெருமான் இந் நிலவுலகிலே வந்து பிறப்பதற்கு முன்பே கரிய திருமேனியையுடைய தேவேந்திரன் இந்தப் பீடிகையை இங்கு இட்ட காரணமும்; மன்பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய என் பிறப்பு உணர்த்தலும் என் என்று யான் தொழ-பெருமையுடைய இப் பீடிகை உடம்பினின்றும் உயிர் இறந்துபட்ட எனது முற்பிறப்பினை உணர்த்தற்குக் காரணமும் என்னையோ என்று யான் வணங்கா நிற்ப.

(விளக்கம்) வெவ்வுரை என்றது நின் கணவன் இற்றைக்குப் பதினாறாம் நாள் திட்டிவிடம் என்னும் பாம்பால் உயிர் நீப்பன், அதனால் நீயும் தீயில் மூழ்குவை என்று சொன்ன சொற்களை. அந் நிகழ்ச்சியை 9 ஆம் காதை 48 ஆம் அடி முதலியவற்றால் உணர்க. பெரியவன்: புத்த பெருமான், கரியவன்: தேவேந்திரன்.

இதுவுமது

58-68: முற்ற...........ஆக

(இதன் பொருள்) முற்ற உணர்ந்த முதல்வனை அல்லது பொருளியல்புகளை எல்லாம் ஓதாதுணர்ந்த புத்த பெருமானையன்றி; மற்று அப் பீடிகை தன்மிசைப் பொறாஅது-மற்றையோர் யாரையும் அந்தப் பீடிகை தன்மேல் தாங்கமாட்டாது; பீடிகை பொறுத்த பின்னர் அல்லது வானவன் வணங்கான்-அப் பீடிகையானது தன் மேல் தாங்குமாற்றால் இவரே புத்த பெருமான் என்று அறிவித்த பின்னர் வணங்குதவதல்லது அவ்விந்திரன் வணங்குதல் இலன், இவ்வாற்றால்; மற்று அவ் வானவன் பெருமகற்கு அமைத்து-அத் தேவேந்திரன் புத்த பெருமான் இவன் என அறிந்துகொள்ளற்பொருட்டு இப் பீடிகையை அமைத்து வைத்து அப்பாலும்; தரும பீடிகை பிறந்தார் பிறவியை சாற்றுக என்று அருளினன்; இத் தரும பீடிகை இந் நிலவுலகத்துப் பிறந்த மாந்தருள் வைத்துத் தன்னை வலம் வந்து வணங்கியவருடைய முற்பிறப்பினையும் அறிவித்திடுவதாக என்று ஆணையிட்டருளினான்; ஆதலின் ஆயிழை பிறவியும் இருள் அறக்காட்டும் என்று எடுத்துரைத்தது-அக்காரணங்களால் இப் பீடிகை தன்மேல் பொறுக்குமாற்றால் புத்த பெருமானை இந்திரனுக்குக் காட்டித் தருவதோடன்றி ஆயிழாய் நின் முற்பிறப்பையும் விளக்கமாகக் காட்டாநிற்கும் என்று எடுத்துக் கூறியதாகிய; அருந்தவர் வாய்மொழி எனக்கு அன்றே போன்றது இன்று என்று ஏத்தி வலங்கொண்டு-அரிய தவத்தையுடைய பிரமதத்தருடைய மெய்ம்மொழி அவர் கூறிய அற்றை நாளில் இருந்தது போல இற்றை நாளும் எனக்குப் புதுமையுடையதாகவே இருக்கின்றது என்று சொல்லி ஏத்தி வலங்கொண்டு அப் புத்த பீடிகையை வாழ்த்தி வலம் வந்து; ஈங்கு இவள் இன்னணம் ஆக-இம் மணிபல்லவத்தீவின்கண் இம் மணிமேகலை இவ்வாறிருப்ப; என்க.

(விளக்கம்) முதல்வன்-புத்தர். வானவன்-இந்திரன். இந்திரன் புத்தரை அறிந்து கொள்ளுதற்கு இப் பீடிகையை இட்டனன். மேலும் அதுவே தன்னை வணங்கிய மாந்தர் பிறவியைச் சாற்றுக என்றும் அருளினன்; ஆதலால் அது உன் பிறவியையும் காட்டும் என்று கூறினான் என்றவாறு வாய்மொழி, அவன் கூறிய அன்று போலவே இன்றும் என் உள்ளத்தில் புதுமையாகவேயுளது என்று மணிமேகலை புத்தபீடிகையை வலங்கொண்டு ஏத்தினள் என்க.

புண்ணியராசன் தான் ஆ வயிற்றில் பிறந்தமையை அன்னையின்பால் கேட்டுணர்தல்

68-79: இறைவனும்...............நினைந்து

(இதன் பொருள்) இறைவனும் ஆங்கு அப்பொழில் விட்டு அகநகர் புக்கு-நாகபுரத்தில் மணிமேகலையால் அறிவுறுத்தப்பட்ட அரசனாகிய புண்ணியராசன் அப்பொழுதே அப் பூம்பொழிலை விட்டுத் தன் நகரத்தினுட் புகுந்து; தந்தை முனியா தாய் பசு ஆக வந்த பிறவியும் தன்னை வளர்த்த மணமுக முனிவனே தந்தையாகவும் தன்னை ஈன்ற தாய் ஒரு பசுவாகவும் தனக்கு வந்துள்ள அப் பிறப்பின் வரலாற்றையும்; மாமுனி அருளால் குடர்த்தொடர் மாலை சூழாது ஆங்கு ஓர் அடர்ப்பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும்-மண்முக முனிவனுடைய அருள் காரணமாக அப் பசுவின் வயிற்றினும் ஏனைப் பசுக்கள் சூல் கொள்ளுமாறுபோலக் குடரால் தொடர்ந்த தசை மாலையாலே சுற்றப்படாமல் அச் சூலிடத்தே ஒரு தகடாகிய பொன்னாலியன்ற மூட்டையினுள்ளே கருவாகி வளர்ந்திருந்த தன்மையையும்; மக்களை இல்லோன் பூமிசந்திரன் மாமுனி அருளால் கொடு  போந்த வண்ணமும்-மக்கட் பேறில்லாதவனாகிய பூமிசந்திரன் என்னும் அரசன் சிறந்த அம் முனிவனுடைய திருவருளாலே தன்னை மகவாக ஏற்றுக் கொண்டு தன் அரண்மனைக்குக் கொண்டு வந்த தன்மையும் அப் பூமிசந்திரன் மனைவியாகிய; ஆய்தொடி அரிவை அமரசுந்தரி எனும் தாய் வாய் கேட்டு தாழ்துயர் எய்தி-அழகிய வளையலையணிந்த அரிவைப் பருவத்தினளாகிய அமரசுந்தரி எனும் பெயரையுடைய தன் தாயின் வாய்ச் சொல்லாலேயே கேள்வியுற்று மனம் தாழ்தற்குக் காரணமான துன்பத்தை எய்தி; இறந்த பிறவியின் யாய் செய்ததூஉம் பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து-ஆபுத்திரனாயிருந்து இறந்துபோன பிறவியின்கண் தன்னையீன்ற தாயாகிய பார்ப்பினி சாலி செய்த இழிதகைச் செயலையும் மாறிப் பிறந்துள்ள இப் பிறப்பினும் ஆ வயிற்றில் பிறந்த இழிதகைமையையும் நினைந்து என்க.

(விளக்கம்) இறைவன்-புண்ணியராசன். முனி-மண்முக முனிவன் அடர்ப்பொன்-தகடாகிய பொன். பூமிசந்திரன்-நாகபுரத்தரசன் அமரசுந்தரி-பூமிசந்திரன் மனைவி; புண்ணியராசன் வளர்ப்புத்தாய் இறந்த பிறவியின் யாய் என்றது ஆபுத்திரனை ஈன்ற தாயாகிய பார்ப்பனியை; அவள் செய்ததாவது ஈன்ற குழவிக் கிரங்காளாய்த் தோன்றாத் துடவையின் இட்டுச் சென்றமை. பிறந்த பிறவியின் பெற்றி என்றது விலங்கின் வயிற்றில் பிறந்த இழிதகைமையை.

புண்ணியராசன் அமைச்சனுக்குக் கூறுதல்

80-92: செருவேல்...............சாற்றி

(இதன் பொருள்) செருவேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க-போர்க் கருவியாகிய வேல் ஏந்திய அரசர்கள் தங்குறை கூறுதற்குச் செவ்வி பெறாமல் அதனை எதிர்பார்த்து அது பெறுமளவும் அரண்மனை வாயிலின்கண் வாடிக்கிடப்ப; அரைசு வீற்றிருந்து புரையோர் பேணி-அரைசு கட்டிலில் ஏறிச் செம்மாந்திருந்து சான்றோரைப் போற்றுதல் செய்தும்; நாடகம் கண்டு நாடகத்தைக் கண்ணால் கண்டு களித்தும்; பாடல் பான்மையின் கேள்வி இன் இசை கேட்டு-பண்ணினது பண்பினால் உண்டாகின்ற கேட்டற்கியன்ற இனிய இசைகளைக் கேட்டு இன்புற்றும்; தேவியர் ஊடல் செவ்வி பார்த்து-உவளகத்தில் தேவிமார் ஊடியிருக்கின்ற செவ்வியைத் தெரிந்துகொண்டு நீடாது பாடகத் தாமரை சீறடி பணிந்து-அவர் ஊடல் நீடிக் காமவின்பம் பதன் அழிந்து கெடாமைப் பொருட்டு அவ்வூடலைத் தீர்த்தற்குப் பாடகம் அணிந்த தாமரைப் பூப்போன்ற மென்மையுடைய அவருடைய சிறிய அடிகளிலே விழுந்து வணங்கி அவ்வூடலைத் தீர்த்த பின்னர்; தேம் மரு கொங்கையில் குங்குமம் எழுதி-ஊற்றினிமை பொருந்தி அவர்தம் கொங்கையின் மேல் குங்குமச் சாந்து கொண்டு தொய்யில் எழுதி; அம் கையில் துறுமலர் சுரி குழல் சூட்டி-அழகிய தனது கையாலே செறிந்த மலர் மாலையை எடுத்துச் சுருண்ட அவர் தம் கூந்தலிலே சூட்டி விட்டு; நறுமுகை அமிழ்துறூஉம் திருநகை அருந்தி-நறிய முல்லையரும்பு போன்ற அழகிய எயிற்றில் ஊறும் ஊறலாகிய அமிழ்தத்தையொத்தி நீரைப் பருகி; மதிமுக கருங்கண் செங்கடை கலக்க-முழுமதி போன்ற அவர்தம் முகத்தின்கண்அமைந்த கரிய கண்ணினது சிவந்த கடைக்கண்ணோக்கம் நெஞ்சத்தைக் கலக்க அச் செவ்வி பார்த்து; கருப்பு வில்லி அருப்புக்கணை தூவ-காமவேள் தனது மலர்க்கண்களை ஏவுதலாலே; தருக்கிய காமக் கள்ளாட்டு இகழ்ந்து-முனைத்தெழுந்த காம நுகர்ச்சியாகின்ற இன்பமாகிய கள்ளையுண்டு களித்திருக்கும் இவ்வில்லற வாழ்க்கையை அதன் புன்மை நோக்கி இகழ்ந்து தள்ளி, தூ அறத் துறத்தல் நன்று எனச் சாற்றி-சிறிதும் பற்றின்றித் துறந்து போதலே நன்றாம் என்று சொல்லிக் காட்டி; என்க.

(விளக்கம்) செவ்வி பார்த்து உணங்குவதாவது தம்குறை கூறுதற் கேற்ற மனமொழி மெய்கள் இனியனாம் காலம் வருந்துணையும் அதனை எதிர்பார்த்து முற்றத்தில் வாடிக்கிடத்தல். அரசு கட்டிலில் ஏறி வீற்றிருந்து என்க; வீற்றிருத்தல்-இறுமாந்திருத்தல், புரையோர்-பெரியோர்; அவராவார் சான்றோரும் அமைச்சரும் ஆசிரியரும் முதலியோர். நாடகம்-கண்டின்புறும் கலை. பாடல்-கேட்டின்புறும் கலை என்பது பற்றி நாடகங் கண்டு இசை கேட்டு என்றான். செவ்வி பார்த்து நீடாது அடிபணிந்து அதனைத் தீர்த்து என்க, இதனோடு

உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது
மிக்கற்றா ளீள விடல்     (குறள்: 1302)

எனவும்

மலரினு மெல்லிது காமஞ் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்      (குறள்: 1289)

எனவும் வரும் திருக்குறள்களும் நினைக்கத்தகும். துறுமலர்-செறிந்த மலர். அமிழ்து உறூஉம் நகை-என்பது ஆகுபெயர். நகையின்கண் ஊறிய அமிழ்தம் போன்ற நீரை அருந்தி என்க. செங்கடை கலக்க-சிவந்த கடைக்கண்ணில் காமக்குறிப்புத் தோன்றித் தம் நெஞ்சத்தில் கலக்க எனினுமாம். கருப்பு வில்லி-காமவேள். தருக்கிய காமம்-முனைத்த காமம். தூஅற-பற்றுக் கோடற்றுப்போம்படி.

அரசன் மொழிகேட்ட அமைச்சகன் செயல்

93-104: தெளிந்த............ஆயது

(இதன் பொருள்) தெளிந்த நாதன் என் செவி முதல் இட்ட வித்து ஏதம் இன்றாய்-மெய்ப்பொருளைத் தெளிந்த தலைவனாகிய தருமசாவகன் என்னும் துறவோன் என்னுடைய செவியாகிய நிலத்தின்கண் விதைத்த விதையானது அழிவிலதாய் முளைத்துப் பயிராகி; மணிமேகலைதான் காரணமாக இன்று விளைந்தது-மணிமேகலையாகிய முகில் அருள் மழை பெய்தல் காரணமாக இற்றை நாள் நன்கு விளைந்தது; என்று அணி மணி நீள் முடி அரசன் கூற-என்று அழகிய மணியாலியன்ற நெடிய முடியையுடைய புண்ணியராசன் கூறாநிற்ப; மந்திரி சனமித்திரன் மன் மனம் வேறாயினன் என-அமைச்சனாகிய அச் சனமித்திரன் என்பவன் அரசன் மொழி கேட்டு இவ்வரசன் தன்மனம் வேறுபட்டிருக்கின்றான் என்று கருதி; அவன் தாள் தொழுது ஏத்தி எங்கோவாழி என் சொல் கேள்மதி-அப் புண்ணியராசனுடைய அடிகளில் வீழ்ந்து வணங்கிப் புகழ்ந்து எங்கள் அரசே நீடுழி வாழ்வாயாக அடியேன் சொல்லையும் சிறிது கேட்டருள்வாயாக; நும் கோன் உன்னைப் பெறுவதன் முன் நாள்-உன் தந்தையாகிய அரசன் உன்னை மகவாக ஏற்றுக்கொள்வதன் முன் சென்ற காலத்தே; இப் பதிகெழு நல்நாடு பன்னீராண்டு மன் உயிர் மடிய மழை வளம் கரந்து-இவ்வரசாட்சிக்குட் பொருந்திய நல்ல இச் சாவக நாடு தன்னிடத்தே நிலைபெற்ற உயிரினங்கள் இறந்தொழியுமளவு மழை பெய்யாது தன் வளத்தைக் கரந்து கொள்ளப்பட்டு; இங்கு ஈன்றாள் குழவிக்கு இரங்காள் ஆகி தான் தனி தின்னும் தகைமையது ஆயது-இங்குத் தாயானவள் தானீன்ற குழந்தை பசித்த அழுதல் கண்டும் அதற்கு இரங்காதவளாய் அரிதாகத் தான் பெற்ற உணவைத் தானே தனித்திருந்து தின்னுகின்ற இழிதகைமையை உடையதாயிருந்தது என்றான்; என்க.

(விளக்கம்) நாதன்: தருமசாவகன் செவி முதல்: முதல்-ஏழாவதன் சொல்லுருபு. ஏதம்-குற்றம்; செவியாகிய கழனியில் எனவும் மணிமேகலையாகிய முகில் எனவும் கூறிக் கொள்க. நீள்முடி-வழிவழியாக நீண்டு வருகின்ற முடியென்க. மன்-மன்னன்; மந்திரியாகிய சனமித்திரன் என்க. அவன்:புண்ணியராசன் கேள்மதி. ஈண்டு மதி: முன்னிலையசை. நுங்கோன் என்றது பூமிசந்திரனை. நன்னாடு-நல்ல சாவக நாடு வளங்கரந்து தகைமையது ஆயது என்க.

இதுவுமது

105-115: காய்............அன்றே

(இதன் பொருள்) காய் வெம் கோடையில் கார் தோன்றியது என நீ தோன்றினையே-கதிரவனால் சுடப்பெற்ற வெவ்விய முதுவேனிற் பருவத்தில் கார்ப்பருவம் தோன்றினாற் போல அத்தகைய வற்கடப்பொழுதிலே நீ இந் நாட்டின்கண் வந்து பிறந்தாய்; நிரைத்தார் அண்ணல் தோன்றிய பின்னர் தோன்றிய உயிர்கட்கு வானம் பொய்யாது- நிரல்படத் தொடுத்து மலர்மாலை யணிந்த தோன்றலாகிய நீ பிறந்த பின்பு இந் நாட்டிலே பிறந்த உயிர்கட்கு மழை பெய்யாமல் பொய்ப்பதில்லை; மண்வளம் பிழையாது ஊன் உடை உயிர்கள் உறுபசி அறியாநிலம் தனது வளமாகிய உணவுப் பொருள்களை வழங்குவதில் தப்புவதில்லை ஆதலன் உடம்பொடு பிறந்த உயிர்கள் மிக்க பசியை ஒரு பொழுதும் அறியாவாயின், இங்ஙனமாகலின்; நீ ஒழி காலை நின்நாடு எல்லாம் தாய் ஒழி குழவி போல கூஉம்-நீ துறந்து போன காலத்தில் நின் ஆட்சியின்கண்பட்ட இந்த நாட்டில் வாழும் உயிர்களெல்லாம் தாய் இறந்துபோன குழந்தை போலத் துன்புற்று நின்னைக் கூப்பிட்டழும் அல்லவோ; துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ உயர்நிலை உலகம் வேட்டனை ஆயின்-இவ்வாறு துயருறுகின்ற நிலைமையையுடைய இவ்வுலகத்துயிர்களைப் பாதுகாக்கும் கடமையைக் கை விட்டு நீ மட்டும் மேனிலை உலகம் புகுந்து இன்புறுதலை விரும்புவாயானால்; இறைவ உயிர்கள் இறுதி எய்தவும் பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே-அரசனே இவ்வுலகத்து உயிர்களெல்லாம் துன்பத்தால் துடித்து இறக்கும்படி கைவிட்டு நீ மட்டும் இன்பப் பேற்றினை விரும்பிச் சென்றாய் ஆகுவை அல்லையோ; என்க.

(விளக்கம்) காய் வெங்கோடை-முதுவேனிற் பருவம்; கார்-கார்ப்பருவம்; முகில் எனினுமாம். அண்ணல்-தலைமைத் தன்மையுடையோன். வானம்; ஆகுபெயர். உறுபசி-மிக்கபசி. கூஉம்-கூப்பிடும். தாயில் தூவாக் குழவி போல ஓவாது கூஉம் என்பது புறநானூறு. (4) உயர்நிலை உலகம்-வீட்டுலகம். இறுதி-சாவு. பெறுதி-பேறு (ஊதியம்)

புண்ணியராசன் செயல்

116: 126: தன்னுயிர்..........ஏறினன்

(இதன் பொருள்) தன் உயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஓம்பும் மன் உயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால்-தன் உயிர் துன்புறுதல் கருதி ஒரு சிறிதும் இரங்காதவனாய்ப் பிற உயிர்களின் துன்பம் தவிர்த்துப் பாதுகாக்கின்ற மன்னுயிர் முதல்வனாகிய புத்தபெருமான் திருவாய்மலர்ந்தருளிய அறத்தினும் சேர்ந்ததன்று நீ கூறும் இத்துறவு; மன்னவ மதிமாறு ஓர்ந்தனை என்று முதுமொழி கூற-அரசே நீ அறிவுக்கும் பொருந்தாது. மாறுபடுகின்ற ஒன்றனை நினைந்தனை என்று அவ்வமைச்சன் அறிவுரை கூறா நிற்ப; முதல்வன் கேட்டு-அரசனாகிய அப் புண்ணியராசன் அது கேட்டு அமைச்சனை நோக்கிக் கூறுபவன்; மணிபல்லவம் அரிதால்-அமைச்சனே நின்னறிவுரை சாலவும் நன்றே காண்! நீ விரும்பியவாறே யான் துறவி யாவே னல்லேன் ஆயினும் மணிபல்லவத் தீவிற்குச் சென்று ஆண்டுள்ள புத்தபீடிகையை வலம் வந்து வணங்குதற்கு என் நெஞ்சத்திலுண்டான தணியாத விருப்பமானது யான் அது செய்யாமல் தணித்தற்கியலாததா யிருக்கின்றது ஆதலால்; ஒரு மதி எல்லை அரசும் உரிமையும் அகநகர்ச் சுற்றமும் காத்தல் நின் கடன் என-யான் அங்குச் சென்று மீளும் பொருட்டு ஒரு திங்கள் முடியுந் துணையும் இவ்வரசாட்சியையும் உரிமை மகளிரையும் இவ்வக நகரில் வாழும் அரசியல் சுற்றத்தாரையம் காவல் செய்தல் உன் கடமையாகும், என்று சொல்லி அவற்றை யெல்லாம் அவ்வமைச்சன்பால் ஓம்படை செய்தபின்னர் அப் புண்ணியராசன்; கலம் செய் கம்மியர் வருக எனக் கூஉய்-தன் மரக்கலத்திலே தொழில் செய்யும் நீகான் முதலிய தொழிலாளர் வருவாராக என்றழைத்து அவரோடு; இலங்கு நீர் புணரி எறி கரை எய்தி வங்கம் ஏறினன்-விளங்குகின்ற நீரையுடைய கடல் அலை யெறிகின்ற கரையை யடைந்து மரக்கலத்தில் ஏறினன்; என்க.

(விளக்கம்) மன்னுயிர் முதல்வன்-புத்த பெருமான். அறமும் ஈதன்றால் என்புழி, உம்மை இழிவு சிறப்பு மதி-அறிவு முதுமொழி அறிவுரை. முதல்வன்: புண்ணியராசன். உரிமை-அரசன் மனைவி முதலிய மகளிர் சுற்றம்-ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் ஆம்; ஒருமதி-ஒரு திங்கள்(முப்பது நாள்) கம்மியர்-தொழிலாளர் வங்கம்-மரக்கலம்; முதல்வன் கேட்டு நின் கடன் என ஓம்படைசெய்து கூஉய் எய்தி ஏறினன் என்க.

புண்ணியராசனை மணிபல்லவத்தில் மணிமேகலை வரவேற்றல்

126-134: மணி...............மன்னவன்

(இதன் பொருள்) மணிபல்லவத்து இடை அக்கலம் தங்காது சென்று சார்ந்து இறுத்தலும்-மணிபல்லவத்தீவிற்கு இடையிலே சிறிதும் தங்காமல் அம் மரக்கலம் சென்று அத் தீவினை அணுகித் துறையின்கண் தங்குதலும்; புரைதீர் காட்சி பூங்கொடி பொருந்தி-குற்றமில்லாத மெய்க்காட்சியையுடைய பூங்கொடி போல்வாளாகிய மணிமேகலை அக் கடல் துறையின் பக்கத்தே வந்து போக்கியவள்; அரைசன் கலம் என்று அகமகிழ்வு எய்தி-அக் கலத்தின் வரவு கண்டு இது புண்ணியராசனுடைய மரக்கலமென்று துணிந்து உளம் பெரிதும் மகிழ்ந்து; காவலன் தன்னொடும் கடல்திரை உலாவும் தேமலர் சோலை தீவகம் வலம் செய்து-கலத்தினின்றும் வந்து கரையேறிய அப் புண்ணியராசனையும் வரவேற்று அவனோடும் கடலினது அலை வந்து உலாவுகின்ற தேன் துளிக்கும் மலர்களையுடைய சோலைகளோடு கூடிய அம் மணிபல்லவத்தீவை வலமாக வந்து அவ்வரசனுக்கு மணிமேகலை; பெருமகன் காணாய் பிறப்பு உணர்விக்கும் தருமபீடிகை இது எனக் காட்ட-அரசே உதோ பார் பழம் பிறப்பினை உணரச் செய்யும் தெய்வத் தன்மையுடைய தரும பீடிகை இது தான் என்று கட்டாநிற்ப; மன்னவன் வலம் கொண்டு ஏத்தினன்-அப் புண்ணியராசனும் பெரிதும் மகிழ்ந்து அப் புத்த பீடிகையை வலம் வந்து வீழ்ந்து வணங்கி வாழ்த்து வானாயினன்; என்க

(விளக்கம்) இறுத்தலும்-தங்குதலும். புரைதீர் காட்சி-மெய்க் காட்சி. அரைசன்: போலி. காவலன்: புண்ணியராசன். தேம்-தேன். தீவகம்-தீவு. பெருமகன்: அண்மைவிளி. மன்னவன்: புண்ணியராசன்.

புண்ணியராசன் பழம் பிறப்புணர்ந்து சிந்தாவிளக்கு என்னும் தெய்வத்தைப் புகழ்ந்தேத்துதல்

134-147: மன்னவற்கு............பாவாய்

(இதன் பொருள்) மன்னவற்கு உயர் மணிப்பீடிகை-அங்ஙனம் வாழ்த்திய அப் புண்ணியராசனுக்கு உயர்ந்த மணிகளால் இயன்ற அப் புத்த பீடிகை; மையறு மண்டிலம் கை அகத்து எடுத்து காண்போர் முகத்தைப் போல-குற்றமில்லாத கண்ணாடி வட்டம் தன்னைக் கையிலெடுத்துப் பார்ப்பவரின் முகத்தைக் காட்டுதல் போல; உலந்த பிறவியைக் காட்ட-கழிந்த பிறப்பினைக் காட்டா நிற்ப அது கண்ட அவ்வரசன் அக் காட்சியினூடே சிந்தாவிளக்கு என்னும் தெய்வத்தையும் கண்டு கூறுபவன்; என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன்-என்னுடைய முற்பிறப்பாகிய ஆபுத்திரன் பிறப்பையும் அறிந்து கொண்டேன் என் நெஞ்சத்தில் நின்ற துன்பம் முழுவதும் தீரவும் பெற்றேன்; தென் தமிழ் மதுரை செழும்கலை பாவாய்-நாவலந்தீவின்  தென்திசையின்கண் செந்தமிழ் வழங்கும் மதுரைமா நகரத்தின்கண் செழுங்கலை நியமமென்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளி இருக்கின்ற சிந்தாவிளக்கென்னும் தெய்வப் பாவையே! இப் பேற்றிற்குக் காரணம் நீயேயாவாய்; மாரி நடுநாள் வயிறு காய் பசியால் ஆர் இருள் அஞ்சாது அம்பலம் அணைந்து-பண்டொரு காலத்தே கார்ப்பருவத்தில் மழை பொழிந்து கொண்டிருந்த ஒரு நாளின் நள்ளிரவிலே தம் வயிறு தம்மைச் சுடுகின்ற பசித்தீயினுக் காற்றாமையால் நிறைந்த இருளையும் அஞ்சாமல் அம்பலத்திற்கு வந்து; ஆங்கு இரந்து ஊண் வாழ்க்கை என்பால் வந்தோர்க்கு-அவ்வம்பல மருங்கில் பிச்சையேற்றுண்ணும் வாழ்க்கையையுடையேனாய்த் துயின்றிருந்த என்னிடத்தே வந்து உணவு இரந்தவர்களுக்கு; அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில்-பசிதீர அருந்துதற்குரிய உணவு கொடுத்தற்கு வழிகாணாமல் வருந்துவேனாகிய என் கையில்; ஏடா அழியல் எழுந்து இது வந்து இத் திருவோட்டினை ஏற்றுக் கொள்வாயாக; நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது என-இந்நாடு முழுவதும் வறுமையுற்று வருந்தினும் இத்திருவோடு தன்கண் உணவின்றி வறுமையுறாது காண் என்று சொல்லி; அமுத சுரபி அம்கையில் தந்து என் பவம் அறுவித்த வானோர் பாவாய்-அமுதசுரபி என்னும் அத் தெய்வத் தன்மையுடைய பிச்சைப் பாத்திரத்தை என்னுடைய அகங்கையில் வழங்குமாற்றால் என்னுடைய பழவினைத் தொகுதியை அறச்செய்து என்னை உய்வித்த தெய்வங்களுக்கும் தெய்வமாகிய கலைத்தெய்வமே என்று வாழ்த்தி; என்க.

(விளக்கம்) மன்னவற்கு: புண்ணியராசனுக்கு. உலந்த பிறவி கழிந்த பிறப்பு; அஃதாவது ஆபுத்திரனாகிய முற்பிறப்பு, மையறு மண்டிலம்-குற்றமற்ற கண்ணாடி. வயக்குறு மண்டிலம் (கலி-25) என வருதலும் காண்க. மன்னவற்கு. காண்போர் முகத்தைக் கண்ணாடி காட்டுதல் போல பீடிகை உலந்த பிறவியைக் காட்ட என்க. என் பிறப்பறிந்தேன் என்பது தொடங்கிப் புண்ணியராசன் தன் முற்பிறப்பாகிய ஆபுத்திரனுக்கு நிகழ்ந்தவற்றை அகக்கண்ணின் முன் கண்டு கூறுவன மதுரையில் ஆபுத்திரன் அமுதசுரபி பெற்ற வரலாறு பாத்திர மரபு கூறிய காதையில் கூறப்பட்டுள்ளது. பவம்-பழவினைத் தொகுதி; பிறப்புக்குக் காரணமான சார்பு

இதுவுமது

148-157: உணர்வில்...........யிருப்ப

(இதன் பொருள்) உணர்வில் தோன்றி உரைப்பொருள் உணர்த்தும் மணிதிகழ் அவிர் ஒளி மடந்தை நின் அடி-உயர்திணை உயிர்களின் உள்ளுணர்வினுள் எழுந்தருளி அவர்க்கு இன்றியமையாத சொல்லின் பொருள்களை உணர்த்துகின்ற பளிக்கு மணியில் திகழ்ந்து விரிகின்ற ஒளி போன்று வெண்மையான ஒளியையுடைய திருமேனி படைத்த கலைமகளே நின்னுடைய திருவடிகள்; தேவர் ஆயினும் பிரமர் ஆயினும் நாமாசு கழூஉம் நலங்கிளர் திருந்து அடி-தேவர்களாயிருந்தாலும் பிரமர்களாயிருந்தாலும் அவர்களுடைய நாவினது குற்றத்தைப் போக்கி நலந்தோற்றுவிக்கும் அழகிய தெய்வத் தன்மையுடைய அடிகளாதலால் எளியேன்; பிறந்தபிறவிகள் பேணுதல் அல்லது-எத்தனை பிறப்புப் பிறந்தாலும் அவற்றை வழிபாடு செய்து வாழ்வதல்லது; மடந்தை மறந்து வாழேன் என்று ஏத்தி-நா மடந்தையே மறந்து கணப்பொழுதும் வாழ்கிலேன் கண்டாய் என்று சொல்லி வாழ்த்தி; மன்னவன் மணிமேகலையுடன் எழுந்து தென் மேற்கு ஆகச் சென்று-அப் புண்ணியராசன் மணிமேகலையோடு அவ்விடத்தினின்றும் எழுந்துதென்மேற்றிசையிலே சென்று; திரை உலாம் கோமுகி என்னும் பொய்கையின் கரை ஓர் தூ மலர் புன்னை துறை நிழல் இருப்ப-அத் திசையில் எதிர்ப்பட்ட அலை உலாவுகின்ற கோமுகி என்னும் பெயரையுடைய பொய்கையினது கரையிடத்தே ஒரு தூய மலரையுடைய புன்னை மரம் நிற்கின்ற துறையிடத்தே அப் புன்னை நிழலில் இளைப்பாறி இராநிற்ப; என்க.

(விளக்கம்) கலைமகள் உணர்விற்கு உணர்வாய் நின்று சொற்பொருள் உணர்த்தும் தெய்வம் என்கின்றான். கலைமகள் வெண்ணிறம் உடையள் ஆதலின் பளிக்கு மணியின் ஒளியை உவமை கூறினான்; மணிமுத்து எனினுமாம். தெய்வங்களுக்கும் நலமுண்டாக்கும் திருந்தடி நின்னுடைய அடி ஆதலால் யானும் அவற்றைப் பேணுதல் அல்லது மறந்து வாழேன் என்றான்; பிறந்த பிறவிகள்-பிறக்கும் பிறவிகள் தோறும் என்றவாறு.

தீவதிலகை என்னும் தெய்வம் தோன்றிப் புண்ணியராசனைப் புகழ்தல்

158-167: ஆபுத்திரன்.........இவைகாண்

(இதன் பொருள்) ஆபுத்திரனோடு ஆயிழை இருந்தது காவல் தெய்வதம் கண்டு உவந்து எய்தி-அவ்வாறு ஆபுத்திரனாகிய புண்ணியராசனோடு மணிமேகலை புன்னை நீழலின்கண் வீற்றிருந்த தனை அத் தீவகத்தின் காவற்றெய்வமாகிய தீவதிலகை கண்டு பெரிதும் மகிழ்ந்து திருவுருவங்கொண்டு அவர்கள் முன்னிலையில் சென்று புண்ணியராசனை நோக்கி; அருந்து உயிர் மருந்து முன் அம் கையில் கொண்டு பெரும் துயர் தீர்த்த அப் பெரியோய் வந்தனை-உயிர்கள் உண்ணும் உணவாகிய உயிர் மருந்தினைச் சுரந்து வழங்கும் அமுதசுரபியை முன்பு அகங்கையில் ஏந்திக் கொண்டு ஆருயிர்களின் பெரிய பசித்துன்பத்தைத் தீர்த்தருளிய அந்த ஆபுத்திரனாகிய பெரியோய் நீ மாறிப் பிறந்தும் ஈண்டு வந்துற்றனை; அந்நாள் நின்னை அயர்த்துப் போயினர் பின் நாள் வந்து நின் பெற்றிமை நோக்கி-அந்தக்காலத்திலே உன்னை மறந்து மரக்கலம் ஏறிப்போனவர்களில் சிலர் பிற்றை நாளில் நினைவு கூர்ந்து மீண்டும் இங்கு வந்து நீ உண்ணா நோன்பின் உயிர் நீத்த தன்மையை அறிந்து வருந்தி; நின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர் ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண்- நீ உண்ணா நோன்பிருந்த இடத்திலேயே தாமும் உண்ணா நோன்பிருந்து உடம்பினது எலும்புக் கூடுகள் இதோ கிடக்கின்றன இவற்றையும் காண்பாயாக அப்பாலும் ஆங்கு அவர் இட உண்டு அவர் உடன் வந்தோர் ஏங்கி மெய்வைத்தோர் என்பும் இவை காண்-அவ்வாறிறந்த செட்டி மக்கள் உணவு கொடுப்ப உண்டு அவரோடு வந்தவர்கள் அவர் இறந்தமை கண்டு துன்பத்தால் ஏங்கி இவ்விடத்தே இறந்தோரும் சிலர் உளர் அவர்கள் எலும்புக் கூடுகளும் இதோ கிடக்கின்றன இவற்றையும் காண்பாயாக என்றாள்; என்க.

(விளக்கம்) உயிர் மருந்து-அமுதசுரபி:ஆகுபெயர். அங்கை அகங்கை; உள்ளங்கை. அப்பெரியோர் என்றது அவ்வாபுத்திரன் ஆகிய பெரியோய் என்றவாறு. அந்நாள் என்றது முற்பிறப்பிலே மதுரையிலிருந்து மரக்கலமேறி இத் தீவத்தை அடைந்த அந்த நாளிலே என்றவா. பெற்றிமை என்றது உண்ணாநோன்போடு உயிர்பதிப் பெயர்த்தமையை; இவ் வரலாறு பாத்திர மரபு கூறிய காதையில் கூறப்பட்டுள்ளது. நீன்குறி-நீயிருந்த இடம். அவ்விடத்துத் தாமும் உண்ணா நோன்புடன் இருந்து அவரும் உயிர்நீத்தனர் என்னும் பொருளும் தோன்ற நின்குறி இருந்து தம்முயிர் நீத்தோர் என்றாள். இட உண்டவர்-உணவு கொடுக்க வாங்கி உண்டவர். மெய் வைத்தோர் என்றது இறந்தோர் என்றவாறு. என்பு-எலும்பு.

தீவதிலகை புண்ணியரசனுக்கு அவனது முற்பிறப்பின் உடல் என்பினைக் காட்டல்

168-174: ஊர்திரை.............ஆயினை

(இதன் பொருள்) ஊர்திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப ஆய் மலர்ப்புன்னை அணி நிழல் கீழால்-ஊர்ந்து வருகின்ற அலைகள் கொணர்ந்து சேர்த்த இவ்வுயர்ந்த மணல் புதைத்து விட்டமையால் அழகிய மலரையுடைய இப் புன்னை மரத்தின் நிழலில் இம் மணற்குவியலின் கீழே அன்புடை ஆர் உயிர் அரசற்கு அருளிய என்புடை யாக்கை இருந்தது காணாய்-அன்புடைய தனது உயிரைப் புண்ணியராசனாகிய உனக்கு வழங்கிவிட்ட எலும்புகளையுடைய உடம்பு உங்கே கிடந்தது அதனையும் நீ கண்டு கொள்வாயாக, இவ்வாற்றால் நீ தானும்; நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கி பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய்-நின்னுடைய உயிரையும் கொன்றொழித்தனை நின்னுடைய உயிரையும் கொன்றொழித்தனை நின்னுடைய உயிர் வருந்து மென்பதற்கிரங்கிப் பிற்காலத்தே நின்னைக் காண வந்த அன்புமிக்க பிறருடைய உயிர்களையும் கொன்றொழித்தாய்; கொலைவன் அல்லையோ கொற்றவன் ஆயினை-இவ்வாறு பல கொலைகள் செய்த தீவினையாளன் அல்லையோ நீ அங்ஙனமிருந்தும் நீ அரசனாகப் பிறந்துள்ளனையே இஃதொரு வியப்பிருந்தவாறு! என்று அத் தெய்வம் புண்ணியராசனுக்குச் சொல்லி வியந்து என்க.

(விளக்கம்) ஊர்திரை: வினைத்தொகை. ஆய் மலர்-அழகிய மலர். அன்புடை ஆருயிர் அரசற்கு அருளிய என்புடை யாக்கை என்றது அந்த யாக்கையிலிருந்த உயிரே இப்பொழுது புண்ணியராசனுடைய உயிராயிருப்பதுபற்றி ஆபுத்திரன் யாக்கை உயிருடன் இருக்கும் பொழுது ஆற்றாமாக்களுக்கு உண்டி கொடுத்ததூஉமின்றி இறக்கும் பொழுது தன்னுயிரை அரசன் ஒருவனுக்கு வழங்கியது என்னும் நயம்பட உரைத்தமை உணர்க. பல உயிர்களைக் கொன்றும் கொற்றவன் ஆயினை என்றது மருட்கை அணி. கொலைவன்-கொலைத் தொழிலாளன் இதனை வஞ்சப்புகழ்ச்சி எனலுமாம்.

தீவதிலகை மணிமேகலைக்குக் கூறுதல் புகார் நகரம் கடல் கோட்படுதல்

175-186: பலர்................கொடுத்தலும்

(இதன் பொருள்) பலர்தொழு பாத்திரம் கையின் ஏந்திய மடவால் நல்லாய் நின் தன் மாநகர் கடல் வயிறு புக்கது-பின்னர் அத் தீவதிலகை மணிமேகலையை நோக்கிப் பலராலும் தொழத்தகுந்த மாபெரும் பாத்திரமாகிய அமுதசுரபியைக் கையில் ஏந்துதற்குரிய செய்தவமுடைய மணிமேகலை நல்லாய் ஒன்று கேள்! அஃதாவது உன்னுடைய பெரிய நகரமாகிய பூம்புகார் நகரம் கடலில் அழுந்தி மறைந்தது காண்; காரணம் கேளாய்-அங்ஙனம் மறைந்ததற்குரிய காரணத்தையும் கூறுவல் கேட்பாயாக; நாக நல் நாடு ஆள்வோன் தன் மகள் பீலிவளை என்பாள் பெண்டிரின் மிக்கோள்-நாக நாடென்னும் நல்ல நாட்டை ஆள்பவனாகிய வளைவணன் என்னும் அரசனுடைய மகள் பீலிவளை என்னும் பெயரை உடையவள் மகளிருள் மாண்பு மிக்கவன் ஆவாள்; பனிப்பகை வானவன் வழியில் தோன்றிய புனிற்று இளம் குழவியொடு பூங்கொடி பொருந்தி கதிரவனாகிய தெய்வத்தின் மரபிலே பிறந்ததும் ஈன்றணிமைக் காலத்ததுமாகிய தன் பச்சிளங் குழவியோடே பூங்கொடி போல்வாளாகிய அப் பீலிவளை இம் மணிபல்லவத் தீவகத்தில் வந்து; இத்தீவகம் வலம் செய்து தேவர்கோன் இட்ட மாபெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி இம் மணிபல்லவத்தீவை வலம் வந்து பின்னர் அதனுள்ளே தேவேந்திரனால் இடப்பட்ட மிகவும் பெருமையுடைய புத்த பீடிகையையும் கண்டு அதனையும் வலம் வந்து வணங்கி ஏத்தும்பொழுது; கம்பளச் செட்டி கலம் வந்து இறுப்ப-கம்பளச் செட்டி என்னும் ஒரு வணிகனுடைய மரக்கலமானது இத் தீவின் துறையில் வந்து தங்கா நிற்ப; அங்கு அவன் பால் சென்று அவன் திறம் அறிந்து-அப் பீலிவளை தன் குழவியோடு அவ் வணிகன்பால் சென்று அவ் வணிகன் காவிரிப்பூம்பட்டினத்து வணிகன் என்பதனையும் அவன் மரக்கலம் அப்பொழுது அந் நகரத்திற்கே போக விருக்கிறது என்னும் அவனுடைய வரலாறு முழுவதும் தெரிந்துகொண்ட பின்னர்; இவன் கொற்றவன் மகன் கொள்க எனக் கொடுத்தலும்-வணிகனே இம் மைந்தன் உன்னுடைய அரசனாகிய நெடுமுடிக்கிள்ளியினுடைய மகனாவான் ஆகவே இவனை அவன்பால் சேர்ப்பித்தற் பொருட்டு இக் குழந்தையை நீ ஏற்றுக்கொள், நீ அந் நகரத்திற்குச் சென்றவுடன் அவ்வரசன்பால் ஒப்பித்திடுக என்று அறிவுறுத்துக் கொடா நிற்ப; என்க. 

(விளக்கம்) பாத்திரம்-அமுதசுரபி மாநகர்-காவிரிப்பூம் பட்டினம். கடல் வயிறு புகுதலாவது கடல் கோட்படுதல், மேலே காவிரிப்பூம்பட்டினம் கடல் வயிறு புகுந்தமைக்குக் காரணம் கூறப்படுகின்றது நாக நன்னாடாள்-வளைவணன் பனிப்பகை வானவன் கதிரவன். பீலிவளை-கதிரவன் குலத்தோன்றலாகிய நெடுமுடிக்கிள்ளிக்குக் கருக்கொண்டு ஈன்ற மகவாதலின் கதிரவன் வழியில் தோன்றிய குழவி என்றாள். புனிறு-ஈன்றணிமைக் காலம். தீவகம்-மணிபல்லவம். பீடிகை-புத்த பீடிகை. இறுப்ப-தங்க அவன் திறம்-அச் செட்டி பூம்புகார் நகரத்திற்குப் போகின்றவன் என்பது முதலிய வரலாறு. கொற்றவன்: நெடுமுடிக்கிள்ளி. கொற்றவன் மகன் இவன் கொள்க என்றது நின் கொற்றவன் மகனாதலின் இவனைக் கொடுபோய் அக் கொற்றவன்பால் கொடுத்திடுக என்னும் குறிப்புப் பொருள் கொண்டு நின்றது.

இதுவுமது

187-197: பெற்ற.......ஒழிந்தது

(இதன் பொருள்) பெற்ற உவகையன் பெருமகிழ்வு எய்தி-இத்தகையதொருபேறு பெற்றமையால் மகிழ்ந்தவன் அம் மகவினைப் பார்த்து மேலும் பெரிதும் மகிழ்ந்து; பழுது இல் காட்சி பைந்தொடி புதல்வனை தொழுதனன் வாங்கி-குற்றமற்ற தோற்றத்தையுடைய அப் பீலிவளை ஈந்த மகவினைக் கைதொழுது ஏற்றுக்கொண்டு தன் மரக்கலத்திற்கு வந்து; துறை பிறக்கு ஒழிய கலம் கொண்டு பெயர்ந்த அன்றே-அத் துறை பின்னே கிடக்கும்படி தன் மரக்கலத்தைச் செலுத்திக் கொண்டு போன அற்றை நாளிலே; கார் இருள் இலங்குநீர் அடை கரை அக்கலம் கெட்டது-கரிய இருளையுடைய இரவிலே விளங்குகின்ற அலைநீர் சென்றடைகின்ற கரை இருளையுடைய இரவிலே விளங்குகின்ற அலைநீர் சென்றடைகின்ற கரை மருங்கில் அம் மரக்கலம் உடைந்தொழிந்தது; கெடுகல மாக்கள் புதல்வனைக் கெடுத்தது வடிவேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப-மூழ்கிய அம் மரக்கலத்தினின்றும் உய்ந்து கரையேறிய மாந்தர் சென்று பீலிவளை கொடுத்த குழவியை இழுந்துவிட்ட செய்தியை வடித்த வேலேந்திய நெடுமுடிக்கிள்ளி மன்னவனுக்கு அறிவியா நிற்ப; மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன் நல்மணி இழந்த நாகம் போன்று-அச்செய்தி கேட்ட அச் சோழ மன்னவன் தன் மகவிற்கு நேர்ந்த அக் கேட்டினைப் பொறாதவனாய் நல்ல மணியை இழந்துவிட்ட யாகப்பாம்பு போலே; கானலும் கடலும் கரையும் தேர்வுழி வானவன் விழாக்கோள் மாநகர் ஒழிந்தது-அக் குழந்தையைக் காணும் பொருட்டுக் கடற்கரைச் சோலையிலும் கடலினூடும் கரை மருங்கினும் தேடித் திரிகின்றபொழுது இந்திரவிழா வெடுத்தலை அப் பூம்புகார் நகரம் ஒழிவதாயிற்று என்றாள்; என்க.

(விளக்கம்) பழுதில் காட்சிப் புதல்வனை. பைந்தொடி புதல்வனை எனத் தனித்தனி கூட்டுக. தொழுதனன்: முற்றெச்சம். பிறக்கு ஒழிய பின்னே கிடப்ப. கரை மருங்கில் கலம் கெட்டது என்க. கெடுகல மாக்கள்-கெட்ட கலத்தினின்றும் உய்ந்து கரையேறிய மாக்கள் என்க. கெடுத்தது-இழந்த செய்தியை. வடிவேலையுடைய நெடுமுடிக்கிள்ளி என்க. தேர்வுழி-தேடித்திரிகின்ற பொழுது. வானவன் விழாக்கோள்-இந்திர விழாச் செய்தலை.

இதுவுமது

198-206: மணிமேகலா............புக்கனர்

(இதன் பொருள்) மணிமேகலா தெய்வம் மற்று அது பொறஅள் அணி நகர் தன்னை அலைகடல் கொள்க என சாபம் இட்டனன் இது பட்டது-மணிமேகலா தெய்வமானவள் இந்திரவிழாச் செய்யாமையாகிய அக் குற்றத்தைப் பொறாமல் சினந்து அழகிய அந் நகரத்தை அலையையுடைய கடல் கவர்ந்து கொள்வதாக என்று சாபமிட்டனள் இதுவே அதற்குரிய காரணமாம்; கடவுள் மாநகர் கடல் கொள் பெயர்ந்த வடிவேல் தடக்கை வானவன் போல-தேவர்கள் வாழும் அமராபதி நகரத்தைக் கடல் கவர்ந்து கொள்ளா நிற்ப அந் நகரத்தினின்றும் தனியே புறம் போந்த வடித்த வேலையுடைய பெரிய கையையுடைய இந்திரனைப் போல; விரி திரை வந்து வியல் நகர் விழுங்க உலக மன்னவன் ஒரு தனி போயினன்-விரிகின்ற அலைகளையுடைய கடல் பெருகி வந்து அகன்ற தன் தலைநகரத்தைக் கவர்ந்து கொண்டமையாலே நிலவுலகத்தை ஆளும் அச் சோழ மன்னன் பெரிதும் தமியனாய் உய்ந்து போயினன்; அருந்தவன் தன்உடன் ஆயிழை தாயரும் வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர்-அரிய தவத்தினையுடைய அறவணவடிகளாருடன் மணிமேகலாய் நின்னுடைய தாயராகிய மாதவியும் சுதமதியும் மனம் வருத்தம் இல்லாமல் அந் நிகழ்ச்சியை முன்னரே யறிந்து அந் நகரத்தினின்றும் புறப்பட்டுச் சென்று வஞ்சிமாநகரினுள் புகுந்தனர்.

(விளக்கம்) அது பொறாஅள்-விழாக்கோள் ஒழிந்த அக் குற்றத்தைப் பொறாளாய் என்க. நகர்-பூம்புகார். இது பட்டது என மாறுக. பட்டது-நிகழ்ந்தது. கடவுள் மாநகர் -அமராபதி. வானவன் இந்திரன். கடவுள் மாநகர் கடல் கொளப் பெயர்ந்த வானவன் என்றது இல்பொருள் உவமை. வியல்நகர்-அகன்ற நகரம். உலக மன்னவன்: நெடுமுடிக்கிள்ளி. அருந்தவன் என்றது அறவணவடிகளாரை. அடிகளாருடன் நின் தாயரும் வருந்தாது ஏகினர் என்றது அறவணர் இந் நகரம் கடல்கோட்படும் என்று முற்படவே அறிந்து போக அவருடன் வருந்தாது ஏகினர் என்பதுபட நின்றது.

தீவதிலகை மறைந்து போதல்

207-213: பரப்பு..........போயபின்

(இதன் பொருள்) பரப்பு நீர் பவ்வம் பலர் தொழக் காப்போன் உரைத்தன-பெரும் பரப்பாகிய நீரையுடைய கடலைப் பலரும் கை தொழும்படி காவல் செய்கின்ற மணிமேகலா தெய்வத்தால் இவ் வரலாறு எனக்குக் கூறுப்பட்ட செய்திகளாம்; கேட்க உருகுவை ஆயின்-இன்னும் அத் தெய்வத்தின் செய்தி கேட்க ஆர்வம் கொண்டு மனம் உருகி நிற்பாயானால்; நின் மன் உயிர் முதல்வனை-நின்னுடைய உயிர் இப் பிறப்பெடுத்தற்கு உரிய முதல்வன் ஒருவனை; மணிமேகலா தெய்வம் முன் நாள் எடுத்ததும் அந் நாள் ஆங்கு அவன் அற அரசு ஆண்டதும்-அந்த மணிமேகலா தெய்வம் பண்டொரு காலத்தே கடல் நடுவே உடைந்த மரக்கலத்தினின்றும் எடுத்துக் கரையேற்றி விடுத்ததும் அந்த நாளிலே அவ் வணிகன் அறங்களுக்கு அரசாகிய புண்ணிய தானமென்னும் பேரறத்தைச் செய்ததும் பிறவும் ஆகிய செய்திகளை எல்லாம்; மறு பிறப்பாட்டி-மறுபிறப்புணரும் மணிமேகலாய் நீ; அறவணன் தன்பால் வஞ்சி உள் கேட்பை என்று-அறவணவடிகளிடத்தே வஞ்சி நகரத்தின்கண் கேட்டறிகுவை என்று சொல்லிவிட்டு; அந்தரத் தீவகத்து அருந்தெய்வம் போயபின்-அச் சிறு தீவகத்தின் அரிய காவற்றெய்வமாகிய அத் தீவதிலகை மறைந்து போனபின்னர்; என்க

(விளக்கம்) பவ்வம்-கடல். காப்போள்-காக்கும் மணிமேகலா தெய்வம்; இவை காப்போளால் எனக்குக் கூறப்பட்டன. உருகுவை-கேட்க விரும்பி உளம் உருகுவையாயின் என்க. கேட்கவுறுகுவை என்றும் பாடம்; இதற்கு, கேட்டற்கு அமைவாயானால் எனப் பொருள் கூறுக. மன்னுயிர் முதல்வன் என்றது கோவலன் குலத்தில் முன்னோனாகிய ஒரு வணிகனை. முன்னாளெடுத்தது என்றது பண்டொரு காலத்தில் மரக்கல முடைந்து கடலில் நீந்தி வருந்திய காலத்தில் எடுத்துப் பாதுகாத்த செயலை. அறவரசாண்டது-புண்ணியதானம் செய்தது. இதனை

நாத னாவோ ளளிநீர்ப் பரப்பின்
எவ்வமுற் றான்றன தெய்வ்வந் தீரெனப்
பவ்வத் தெடுத்துப் பாரமிதை முற்றவும்
அறவர சாளவு மறவாழி யுருட்டவும்
பிறவிதோ றுதவும் பெற்றிய ளென்றே
சாரண ரறிந்தோர் காரணங் கூற

என இந் நூலில்(29: 24-29) வருதலாலும் சிலப்பதிகாரத்தில் 15-31 ஆம் அடியினும் காண்க. மறுபிறப்பாட்டி-பழம் பிறப்பை உணர்ந்த சிறப்புடைய மணிமேகலாய் என்று விளித்தவாறு. அந்தரத் தீவகம்-சிறு தீவாகிய மணிபல்லவம். அருந்தெய்வம்: தீவதிலகை.

புண்ணியராசன் மணலையகழ்ந்து தனதுடலின் என்புக் கூட்டைக் கண்டு மயங்குதல்

214-220: மன்னவ.........மயங்க

(இதன் பொருள்) மன்னவன் இரங்கி-புண்ணியராசன் தனது முற்பிறப்பின் உடம்பு இம் மணலின் கீழ் உளது என்றது கேட்டுத் துன்புற்று அதனைப் பார்த்தற் பொருட்டு; மணிமேகலை உடன் துன்னிய தூமணல் அகழத் தோன்றி-அம் மணிமேகலையுடன் தானும் அங்குச் செறிந்த தூயமணலை அகழுதலாலே காணப்பட்டு; ஊண் பிணி அவிழவும் உடல் என்பு ஒடுங்கி தான் பிணி அவிழாத் தகைமையது ஆகி-அவ்வுடம்பானது தனது தசையின் பிணிப்பு அவிழ்ந்து மறைந்தொழிதலால் அவ்வுடலின் என்புக்கூடு ஒடுங்கித் தான் தனது கோப்புக் குலையாத தன்மையுடையதாய்; வெள் சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த பண்பு கொள் யாக்கையின் படிவம் நோக்கி-வெண்மையான சுண்ணச் சாந்து பூசப்பெற்று அவ்விடத்திலே இருத்தல் போல இருந்த தன்மையைக் கொண்டிருக்கின்ற தன் முற்பிறப்பாகிய ஆபுத்திரனின் உருவத்தைப் பார்த்து அதன்கண் உண்டான பற்றுக் காரணமாக; மன்னவன் மயங்க-அவ் வரசன் மயங்கா நிற்ப.

(விளக்கம்) மன்னவன்-புண்ணியராசன். மணிமேகலையுடன் என்றதனால் மணிமேகலையும் அவ்வறவோன் உடம்பைக் காண விரும்பிப் புண்ணியராசனோடு அத் தூமணலை அகழ்ந்தனள் என்பது பெற்றாம். ஊன் பிணி-தசைப்பற்று. தான்-உடம்பின் எலும்பு. சுதை-சுண்ணச்சாந்து. இருக்கையின்-இருத்தல் போல. படிவம்-உருவம் மன்னவன் அவ்வுடம்பு தன்னுடையதென்னும் பற்றுக் காரணமாக மயங்கினன் என்பது கருத்து.

மணிமேகலை புண்ணியராசனை மயக்கந்தீர்த்துச் செவியறிவுறுத்தல்

220-231: மணிமேகலை..........இல்என

(இதன் பொருள்) மணிமேகலை எழுந்து இலக்கு இதழ் தாரோய் என் உற்றனையோ-அது கண்ட மணிமேகலை எழுந்து விளங்குகின்ற மலர்மாலையை அணிந்த மன்னவனே! இங்ஙனம் மயங்குதற்கு இங்கு யாது தீங்கு வந்து எய்தப் பெற்றனை; நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது-நின்னுடைய நாட்டிற்கு வலிய வந்து யான் உன்னை இம் மணிபல்லவத்திற்கு அழைத்து வலிய வந்து யான் உன்னை இம் மணிபல்லவத்திற்கு அழைத்து வந்தது நின்னை இவ்வாறு மயக்குவித்தற்கன்று காண்; மன்னா நின் தன் மறு பிறப்பு உணர்த்தி அந்தரத் தீவினும் அகன் பெரும் தீவினும் நின் பெயர் நிறுத்த-வேந்தே! உன்னுடைய பழம்பிறப்பை உணர்வித்து இரண்டாயிரம் சிறுதீவுகளிடத்தும் அகன்ற நான்கு பெருந்தீவுகளிடத்தும் நின்னுடைய புகழை நிலைநிறுத்தற் பொருட்டே காண்; நீள் நிலம் ஆளும் அரசர் தாமே அருள் அறம் பூண்டால் புரை தீர்த்தற்கு பிறபொருளும் உண்டோ-நெடிய நிலவுலகத்தை ஆளுகின்ற அரசர்கள் தாமே புத்த பெருமான் திருவாய்மலர்ந்தருளிய அருளறத்தை மேற்கொண்டு ஒழுகுவாராயின் பின்னர் இவ்வுலகத்தில் குற்றம் தீர்த்தற்குரிய பொருள் பிற உண்டாகுமோ? யாண்டும் அருளறமே தழைத்தோங்குவதாம்; அறம் எனப்படுவது யாது என கேட்பின் மறவாது இதுகேள்-அவ் வருளறந்தான் எத்தகையதென்று வினவுவாயாயின் கூறுவன் மறவாமல் இதனைக் கேட்பாயாக. அஃதாவது,மன் உயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல் என-உடம்பொடு நிலைபெற்று வாழும் உயிர்களுக்கெல்லாம். இன்றியமையாது வேண்டப்படுவன உணவும் உடையும்உறைவிடமும் ஆகிய இம் மூன்றுமே யன்றி இன்றியமையாததாகக் கண்ட பொருள் பிறிதொன்றுமில்லை ஆதலால் இவற்றை அவ்வுயிர்களுக்கு வழங்குவதே அருளறம் எனப்படுவது காண் என்று மணிமேகலை அறிவுறுத்தா நிற்ப; என்க.

(விளக்கம்) அருள் என்னும் அன்பீன் குழவீ பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு (குறள், 757) என்பது பொய்யா மொழி யாகலின் பொருட் செல்வம் மிக்க அரசரே அருளறத்தைப் பேணமுற்படின் அவ்வறம் முட்டுப்பாடின்றி நடைபெறுவதாம்; மேலும் அரசன் எவ்வழி அவ்வழி குடிகள் என்பது முதுமொழியாகலின் குடி மக்களும் அருளறத்தை அவாவி மேற்கொள்வர். இங்ஙனம் நிகழின் உலகின்கண் துன்பமே இல்லையாய் இம் மண்ணுலகமே பொன்னுலகாய்த் திகழ்வதாம் என ஈண்டு மணிமேகலை புண்ணியராசனுக்கு அறம் அறிவுறுத்தனள் என்க.

புண்ணியராசன் கூற்று

231-239: காவலன்.......தானென்

(இதன் பொருள்) காவலன் உரைக்கும்-அது கேட்ட புண்ணியராசன் மணிமேகலைக்குக் கூறுவான்; என் நாட்டு ஆயினும் பிறர் நாட்டு ஆயினும் நல்நுதல் உரைத்த நல்அறம் செய்கேன்-என்னுடைய நாட்டிலும் பிறருடைய நாட்டிலும் நல்ல நெற்றியையுடைய நீ கூறிய இவ்வருளறத்தையான் நன்கு செய்வேன், மேலும்; என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை நின்திறம் நீங்கல் ஆற்றேன் யான் என்-என்னுடைய பழம் பிறப்பினை அறிவுறுத்தி என்னை நீ இப்பொழுது வேறொரு அறிவாளனாகப் படைத்துவிட்டாய், இவ்வாற்றால் எனக்குத் தாயும் தெய்வமும் ஆகின்ற உன்னைப் பிரிந்து யான் என்னூருக்குச் செல்ல ஆற்றுகிலேன் யான் என் செய்கோ என்று வருந்த; அணி இழை-அது கண்ட மணிமேகலை அவ்வரசனை நோக்கி; புன்கண் கொள்ளல்-வேந்தே! நீ இவ்வாறு துன்புறாதேகொள்; நின் மன் பெரும் நல் நாடு-அரசே! நின்னை அரசனாகவுடைய நினது பெரிய நல்ல நாட்டிலுள்ள உயிர்களெல்லாம்; நீ போந்ததற்கு இரங்கி வாய் எடுத்து அழைக்கும் நீ இங்கு வந்ததற்கே பெரிதும் வருந்தி உன்னை வாயால் கூப்பிட்டு அழைக்குங்காண் ஆதலால்; வங்கத்து ஏகுதி-நீ இங்குக் காலந்தாழ்த்தாது நின் மரக்கலத்திலேறி நின் நாட்டிற்குச் செல்வாயாக; வஞ்சியுள் செல்வன் என்று அந்தரத்து எழுந்தனள்-யானும் வஞ்சிமா நகரத்தினுள் செல்லுவேன் காண் என்று சொல்லி வானத்திலே எழுந்து பறந்தனள் என்பதாம்.

(விளக்கம்) ஆயினும் எண்ணிடைச் சொல் நன்னுதல்: முன்னிலைப் புறமொழி சிற்றறிவுடைய என் பழம் பிறப்பையு முணர்த்தி அருளறத்தையும் அறிவுறுத்து என்னைப் பேரறிஞனாய் அறவோனாய் நீ புதுவோனாகவே படைத்துவிட்டனை ஆதலால் எனக்குத் தெய்வமும் தாயும் போல்வாயாகிய உன்னைப் பிரிந்து செல்லலாற்றேன் என்று இப் புண்ணியராசன் வருந்துவது அவனது பேரன்பை நன்கு புலப்படுத்துகின்றது. ஈண்டுக் கம்பர் காவியத்தில் இராமனைப் பிரியலாற்றாது வருந்திய குகன் என்னும் வேடன் கூறுகின்ற

கார்குலாம் நிறத்தான் கூறக் காதல னுணர்த்து வானிப்
பார்குலாஞ் செல்வ நின்னை யிங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வ னேன்யா னின்னலி னிருக்கை நோக்கித்
தீர்கிலே னான தைய செய்குவ னடிமை யென்றான்
             (கம்ப-அயோ. கங்கை-44)

அன்புரையைப் பெரிதும் ஒத்துளது.

புன்கண்-துன்பம் நின் நன்னாடு நின்னை வாயால் கூவியழைக்கு மாதலால் நீ ஏகுதி என்றவாறு. புகார் கடல் வயிறு புக்கமையின் வஞ்சியுள் செல்வன் என்றாள் என்க.

இனி, இக் காதையை அரசன், புகுந்து வணங்கிக் கேட்டு, இவன் யார் என்னக் கஞ்சுகன், ஈங்கு வந்தனள் என்றலும் இளங்கொடி, வருவாய் என்று புகன்று எழுந்து இருந்து போகி வலங்கொண்டு பீடிகையைக் காண்டலும் அதனைத் தொழுது அவள் வலங்கொள்ள, அப் பீடிகை உணர்த்த, பணிந்து, போன்றது என்று ஏத்தி வலங்கொண்டு இன்னணமாக, இறைவனும் விட்டுப் புக்குக் கேட்டு எய்தி நினைந்து கள்ளாட்டிகழ்ந்து சாற்றி, விளைந்தது என்று கூற, மந்திரி சனமித்திரன் தொழுதேத்தி மன்னவ மதிமாறோர்ந்தனை என்ற முதுமொழி கூற. முதல்வன் கேட்டு, காத்தில் நின்கடன் என்று கூறிக் கூஉய்க் கரை யெய்தி ஏறினன். அக்கலம் சென்று சார்ந்திறுத்தலும் பூங்கொடி பொருந்தி மகிழ்வெய்தி வலஞ்செய்து, பீடிகை இது எனக் காட்ட மன்னவன் வலங்கொண்டு ஏத்தினன்; அவனுக்குப் பீடிகை பிறவியைக் காட்ட, மன்னவன், மறந்து வாழேன் என்று ஏத்தி மணிமேகலையுடன் எழுந்து சென்று இருப்ப, தெய்வதம் கண்டு உவந்தெய்தி, பெரியோய், வந்தனை; உடலென்பு இவைகாண், என்புமிவைகாண்; காணாய்; கொன்றாய்; கொண்டு அரசன் ஆயினை, மடவரனல்லாய், நகர் கடல் வயிறு புக்கது, காரணங்கேளாய்; மணிமேகலா தெய்வம் சாபமிட்டனள்; இது பட்டது; உலக மன்னவன் போயினன்; தாயரும் புக்கனர்; கேட்க உருகுவையாயின். வஞ்சியுட்கேட்பை என்று தெய்வம் போயபின் மன்னவன் இரங்கிப் படிவம் நோக்கி மயங்க, மணிமேகலை எழுந்து, கண்டதுஇல் என, காவலன் உரைக்கும்; அங்ஙனம் உரைப்பவன், நீங்கலாற்றேன் யான் என. அணியிழை, ஏகுதி; செல்வன் என்று எழுந்தனளென இயைத்திடுக.

ஆபுத்திரனோடு மணிபல்லவ மடைந்த காதை முற்றிற்று.
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 10:10:09 AM
26. வஞ்சிமாநகர் புக்க காதை

(மணிமேகலை கண்ணகி கோட்டமடைந்து வஞ்சிமாநகர் புக்க பாட்டு)

அஃதாவது: மணிமேகலை மணிபல்லவத்தினின்றும் வான் வழியாகச் சேரநாட்டுத் தலைநகரமாகிய வஞ்சிமா நகரத்திலே புகுந்த செய்தியும் அங்குக் கண்ணகித் தெய்வத்தையும் கோவலன் திருவுருவத்தையும் வணங்கிய செய்தியும் கூறும் செய்யுள் என்றவாறு.

இதன்கண் வஞ்சி நகரத்தில் புகுந்த மணிமேகலை தணியாக் காதல் தாய் கண்ணகியையும் கொடைகெழு தாதை கோவலன் தன்னையும் குறித்துச் சேரன் செங்குட்டுவன் திருக்கோயிலெடுத்து அவர்களுக்கு நிறுவியுள்ள திருவுருவங்களைக் காண்டற்குப் பெரிதும் விரும்பி அத்திருக்கோயிலில் புகுந்து அவர்களை வணங்கி நின்று தாமாகிய கண்ணகியை நோக்கி,

அற்புக்கட னில்லாது நற்றவம் படராது
கற்புக்கடன் பூண்டு நுங்கடன் முடித்த
தருளல் வேண்டுமென் றழுது முன்னிற்ப.

அதுகேட்ட அப்பத்தினித் தெய்வம் தன் மகளாகிய மணிமேகலைக்கு அவள் வினவிய வினாக்களுக்குப் பொருத்தமான விடைகூறுதலும், தாய் அன்பு கெழும இக்காதையில் கூறப்பட்டிருக்கின்றன.

இக்காதையின்கண் கண்ணகி கோவலர்களின் பழம்பிறப்பு வரலாறும் சேரன் செங்குட்டுவன் வடதிசையிற் சென்று அங்குள்ள கனகவிசயர் முதல் பல வடவாரிய மன்னரை வென்ற செய்தியும் கனகவியசர் முடிமிசைப் பத்தினித் தெய்வத்திற்குக் கடவுள் உருச்சமைக்கக் கல்லேற்றி வாகை சூடிவருதலும் பிறவுந் நயம்படக் கூறப்படுகின்றன.

அணி இழை அந்தரம் ஆறா எழுந்து
தணியாக் காதல் தாய் கண்ணகியையும்
கொடை கெழு தாதை கோவலன் தன்னையும்
கடவுள் எழுதிய படிமம் காணிய
வேட்கை துரப்ப கோட்டம் புகுந்து
வணங்கி நின்று குணம் பல ஏத்தி
அற்புக் கடன் நில்லாது நல் தவம் படராது
கற்புக் கடன் பூண்டு நும் கடன் முடித்தது
அருளல் வேண்டும் என்று அழுது முன் நிற்ப
ஒரு பெரும் பத்தினிக் கடவுள் ஆங்கு உரைப்போள்  26-010

எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது
வெம்மையின் மதுரை வெவ் அழல் படு நாள்
மதுராபதி எனும் மா பெருந் தெய்வம்
இது நீர் முன் செய் வினையின் பயனால்
காசு இல் பூம்பொழில் கலிங்க நல் நாட்டுத்
தாய மன்னவர் வசுவும் குமரனும்
சிங்கபுரமும் செழு நீர்க் கபிலையும்
அங்கு ஆள்கின்றோர் அடல் செரு உறு நாள்
மூ இரு காவதம் முன்னுநர் இன்றி
யாவரும் வழங்கா இடத்தில் பொருள் வேட்டுப்  26-020

பல் கலன் கொண்டு பலர் அறியாமல்
எல் வளையாளோடு அரிபுரம் எய்தி
பண்டக் கலம் பகர் சங்கமன் தன்னைக்
கண்டனர் கூறத் தையல் நின் கணவன்
பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும்
தீத் தொழிலாளன் தெற்றெனப் பற்றி
ஒற்றன் இவன் என உரைத்து மன்னற்கு
குற்றம் இலோனைக் கொலைபுரிந்திட்டனன்
ஆங்கு அவன் மனைவி அழுதனள் அரற்றி
ஏங்கி மெய்பெயர்ப்போள் இறு வரை ஏறி  26-030

இட்ட சாபம் கட்டியது ஆகும்
உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது எனும்
மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும்
சீற்றம் கொண்டு செழு நகர் சிதைத்தேன்
மேற் செய் நல் வினையின் விண்ணவர்ச் சென்றேம்
அவ் வினை இறுதியின் அடு சினப் பாவம்
எவ் வகையானும் எய்துதல் ஒழியாது
உம்பர் இல் வழி இம்பரில் பல் பிறப்பு
யாங்கணும் இரு வினை உய்த்து உமைப் போல
நீங்கு அரும் பிறவிக் கடலிடை நீந்தி  26-040

பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர்
மறந்தும் மழை மறா மகத நல் நாட்டுக்கு
ஒரு பெருந் திலகம் என்று உரவோர் உரைக்கும்
கரவு அரும் பெருமைக் கபிலை அம் பதியின்
அளப்பு அரும் பாரமிதை அளவு இன்று நிறைத்து
துளக்கம் இல் புத்த ஞாயிறு தோன்றிப்
போதிமூலம் பொருந்தி வந்தருளி
தீது அறு நால் வகை வாய்மையும் தெரிந்து
பன்னிரு சார்பின் பகுதித் தோற்றமும்
அந் நிலை எல்லாம் அழிவுறு வகையும்  26-050

இற்று என இயம்பி குற்ற வீடு எய்தி
எண் அருஞ் சக்கரவாளம் எங்கணும்
அண்ணல் அறக் கதிர் விரிக்கும்காலை
பைந்தொடி! தந்தையுடனே பகவன்
இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின்
துன்பக் கதியில் தோற்றரவு இன்றி
அன்பு உறு மனத்தோடு அவன் அறம் கேட்டு
துறவி உள்ளம் தோன்றித் தொடரும்
பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம்
அத் திறம் ஆயினும் அநேக காலம்  26-060

எத்திறத்தார்க்கும் இருத்தியும் செய்குவம்
நறை கமழ் கூந்தல் நங்கை! நீயும்
முறைமையின் இந்த மூதூர் அகத்தே
அவ்வவர் சமயத்து அறி பொருள் கேட்டு
மெய் வகை இன்மை நினக்கே விளங்கிய
பின்னர் பெரியோன் பிடக நெறி கடவாய்
இன்னது இவ் இயல்பு எனத் தாய் எடுத்து உரைத்தலும்
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
விளை பொருள் உரையார் வேற்று உருக் கொள்க என
மை அறு சிறப்பின் தெய்வதம் தந்த  26-070

மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவு ஆய்
தேவ குலமும் தெற்றியும் பள்ளியும்
பூ மலர்ப் பொழிலும் பொய்கையும் மிடைந்து
நல் தவ முனிவரும் கற்று அடங்கினரும்
நல் நெறி காணிய தொல் நூல் புலவரும்
எங்கணும் விளங்கிய எயில் புற இருக்கையில்
செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன்
பூத்த வஞ்சி பூவா வஞ்சியில்
போர்த் தொழில் தானை குஞ்சியில் புனைய
நில நாடு எல்லை தன் மலை நாடென்ன  26-080

கைம்மலைக் களிற்று இனம் தம்முள் மயங்க
தேரும் மாவும் செறி கழல் மறவரும்
கார் மயங்கு கடலின் கலி கொளக் கடைஇ
கங்கை அம் பேர் யாற்று அடைகரைத் தங்கி
வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து
கனக விசயர் முதல் பல வேந்தர்
அனைவரை வென்று அவர் அம் பொன் முடி மிசை
சிமையம் ஓங்கிய இமைய மால் வரைத்
தெய்வக் கல்லும் தன் திரு முடிமிசைச்
செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன்
வில் திறல் வெய்யோன் தன் புகழ் விளங்க
பொன் கொடிப் பெயர்ப் படூஉம் பொன் நகர்ப் பொலிந்தனள்
திருந்து நல் ஏது முதிர்ந்துளது ஆதலின்
பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கு என்  26-094

உரை

வஞ்சி நகரத்தில் மணிமேகலை கண்ணகி கோட்டம் புகுந்து கைதொழுதல்

1-9 : அணியிழை...........நிற்ப

(இதன் பொருள்) அணியிழை அந்தரம் ஆறா எழுந்து-மணிமேகலை வான் வழியாக எழுந்து பறந்து வஞ்சி மாநகரம் நோக்கி விரைபவள்; தணியாக் காதல் தாய் கண்ணகியையும் கொடைகெழு தாதை கோவலன் தன்னையும்-ஒரு பொழுதும் குறைவில்லாத காதலையுடைய தன் தாயாகிய கண்ணகித் தெய்வத்தையும் வள்ளன்மை பொருந்தி தன் தந்தையாகிய கோவலனையும்; கடவுள் எழுதிய படிமம் காணிய வேட்கை துரப்பக் கோட்டம் புகுந்து-தெய்வமாகச் சமைத்த திருவுருவங்களைக் காணுதற்கெழுந்த விருப்பம் செலுத்துதலாலே அவ்வஞ்சி நகரத்தில் அத்தெய்வங்கள் எழுந்தருளி இருக்கின்ற திருக்கோயிலின் முன்னர் இழிந்து கோயிலுள் புகுந்து; வணங்கி நின்று குணம் பல ஏத்தி-பேரன்போடு திருவடிகளில் வீழ்ந்து வணங்கி எழுந்து நின்று அவர்களுடைய பெருந்தகைக் குணங்கள் பலவற்றையும் புகழ்ந்து பாராட்டி அவருள் கண்ணகித் தெய்வத்தை முன்னிலைப்படுத்துக் கூறுபவள்; அற்புக் கடன் நில்லாது நல்தவம் படராது கற்புக் கடன் பூண்டு நும் கடன் முடித்தது அருளல் வேண்டும் என்று அழுது முன் நிற்ப-அன்னையே! நீவிர் கற்புடை மகளிர்க்குரிய அன்பின் வழி நின்று செய்யும் கடமையின் வழியினில்லாமலும் அங்ஙனம் நிற்கலாற்றதார் செல்லும் தவநெறியிற் செல்லாமலும் கற்புடைமையைக் கடமையாகப் பூண்டு அதன் ஆற்றலை வெளிப்படுத்துதலே அப்பொழுது செய்யத் தகுவதென்று அதனையே செய்து முடித்தற்குக் காரணம் காண்இலேன், அதனைக் கூறியருளுதல் வேண்டும் என்று சொல்லி அன்பினால் அழுது கைதொழுது அத்தெய்வத் திருமுன்னர் நிற்ப; என்க.

(விளக்கம்) அணியிழை : மணிமேகலை. அந்தரம்-வானம். ஆறாக எனவும் தணியாத எனவும் வருதல் வேண்டிய பெயரெச்சங்களின் ஈற்றுயிர்மெய் தொக்கன; செய்யும் விகாரம்: தாயாகிய கண்ணகி என்க. தாயாகிய கண்ணகி கற்புடைமையின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதுயர்ந்து விளங்கினாற்போலத் தாதையாகிய கோவலன் வள்ளன்மையால் விளங்கி இருந்தான் ஆதலின் அச்சிறப்புத் தோன்றக் கொடைகெழு தாதை கோவலன் என்றார். கோவலனுடைய கொடைச்சிறப்பினைச் சிலப்பதிகாரத்தில் அடைக்கலக் காதையின் (40) மங்கல மடந்தை என்பது தொடங்கி (61) இம்மை செய்தன யான் அறிநல்வினை என்னுமளவும் நிகழ்கின்ற மாடல மறையோன் கூற்றானும் உணர்க. எனவே இருவரும் தெய்வத் திருவுருவம் கோடற்கியன்ற இரு பெருஞ்சிறப்புகளையும் இப்புலவர் பெருமான் விதந்தோதினமை நுண்ணிதின் உணர்க. படிமம்-உருவம். கோட்டம்-கண்ணகியின் கோயில். சிலப்பதிகாரத்தில் தலைமைப் பற்றிச் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குத் திருவுருச் சமைத்தமை மட்டுமே கூறப்பட்டது. ஈண்டு இக்காதையினால் கண்ணகி திருவுருவத்தோடு கோவலனுக்கும் திருவுருச் சமைத்திருந்ததும் பெற்றாம் அற்புக்கடனில்லாது என்றது உலகின்கண் கற்புடை மகளிர் கணவனை இழந்த காலத்தே அத்துன்பம் பொறாது உயிர் நீப்பர். இன்றேல் தீயிற் புகுந்து உயிர் நீப்பர். இது தலையாய அன்புடையார் செயல் ஆதலின் நீவிர் தந்தை இறந்துழி இவ்வாறு உயிர் நீத்திலீர் என்பாள் அற்புக்கடனில்லாது என்றாள்.

இனி, இடையாய அன்புடையோர் மறுமையினும் தங்கணவரோடு உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம்படுவர். நீயிர் அதுவும் செய்திலீர் என்பாள் நற்றவம் படராது என்றாள். கற்புக்கடன் பூண்டு நீவிர் கற்புடைய மகளிர்க்குரிய கடமையாகிய தகைசான்ற சொற்காத்தல் என்பது பற்றி நுங்கணவனுக்குப் பழியின்மை காட்டுதற்கு அரசவையேறி வழக்குரைத்தீர் அதூஉம் சாலும் அப்பாலும் தீவினை சில செய்தற்குக் காரணம் அறிந்திலேன். அக்காரணத்தை அறிவித்தருளுக என்பாள் கற்புக்கடன் பூண்டு நுங்கடன் முடித்தது அருளல் வேண்டும் என்று அழுது முன்னின்றனள் என்க.

இதன்கண் நுங்கடன் முடித்தது அருளல் வேண்டும் என்புழி நுங்கடன் முடிந்ததன்கண் மிகை செய்தற்குக் காரணம் கூறுதிர் என்பது குறிப்பெச்சப் பொருளாம். இதுபற்றியே மணிமேகலை அழுது வினவினள் என்க. மேலும் கண்ணகியும் இவ்வினாவிற்கே சிறப்பாக விடையிறுத்தலாலும் இக்குறிப்புப் பொருள் வலியுறுதல் உணர்க.

இனி, கற்புடை மகளிர் கணவனை இழந்துழிச் செய்யுங் கடமைகளைக் கூறிக் கண்ணகி நல்லாள் மிகை செய்தமையையும் இந்நூலின் கண் 2ம் காதையில்,

காதல ரிறப்பிற் கனையெரி பொத்தி
ஊதுலைக் குருகி னுயிர்த்தகத் தடங்கா
தின்றுயி ரீவ ரீயா ராயின்
நன்னீர்ப் பொய்கையி னளியெரி புகுவர்
நளியெரி புகாஅ ராயி னன்பரோ
டுடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர்
பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்
தத்திறத் தாளு மல்லளெம் மாயிழை
கணவற் குற்ற கடுந்துயர் பொறாஅள்
மணமலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக்
கண்ணீ ராடிய கதிரிள வனமுலை
திண்ணிதிற் றிருகித் தீயழற் பொத்திக்
காவலன் பேரூர் கனையெரி மூட்டிய
மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை

எனவரும் மாதவி கூற்றலும் உணர்க. ஈண்டு மாதவி கண்ணகி மதுரையை எரியூட்டியதனைக் கண்ணகியின் பெருமையாகக் கருதினள். மணிமேகலையோ இக்காதையில் அதனை ஒரு குற்றமாகக் கருதி வினவுகின்றாள். இவ்வாற்றல் மாதவியினும் கண்ணகியினுங் காட்டில் மணிமேகலை சான்றாண்மையில் சிறந்தவள் ஆதல் கருதி இன்புறற்பாலதாம்.

கண்ணகி மணிமேகலைக்குக் கூறும் மறுமொழி

10-18 : (ஒருபெரும்...........உறுநாள்)

(இதன் பொருள்) ஒரு பெரும் பத்தினிக் கடவுள் ஆங்கு உரைம்போள்-இந்நிலவுலகிற்கே தனக்குவமையில்லாத ஒரு பெரும் பத்தினிக் கடவுளாகிய அக்கண்ணகி நல்லாள் அன்புடை அம்மகளுக்கு விடை கூறுபவள் அருமை மகளே கேள்; எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது வெம்மையின் மதுரை வெவ்அழல் படும் நாள்-எமக்குக் கடவுளாகிய உன் தந்தைக்கு நேர்ந்த கொலைத் துன்பங் கேட்டுப் பொறுக்க ஒண்ணாமையால் எழுந்த சினம் காரணமாக மதுரை மாநகரத்தை யாம் வெவ்விய தீக்கிரையாக்கிய பொழுது; மதுராபதி எனும் மாபெரும் தெய்வமானது எம்முன் தோன்றி நங்காய் நுமக்குற்ற இவ்விடுக்கண் நீங்கள் முற்பிறப்பிலே செய்த தீவினையின் பயன் காண், அத்தீவினை தான் யாதெனின்; காசு இல் பூம்பொழில் கலிங்க நல் நாட்டுத் தாய மன்னவர் வசுவும் குமரனும் சிங்கபுரமும் செழுநீர் கபிலையும் அங்கு ஆள்கின்றோர்-அற்றமில்லாத பூம்பொழில்களையுடைய கலிங்கமென்னும் நல்ல நாட்டின்கண் தம்முள் தாயத்தாராகிய அரசர் வசுவென்றும் குமரன் என்றும் உளராயினர் அவர் முறையே சிங்கபுரமென்னும் நகரத்திலும் செழிப்புடைய நீர்வளமுடைய கபிலபுரமென்னுந் நகரத்திலும் அங்கங்கிருந்து அரசாட்சி செய்கின்றவர்கள் தம்முன் பகைத்து; அடல்செரு உறுநாள்-ஒருவரையொருவர் கொல்லுதற்கியன்ற போர்த்தொழில் நிகழ்த்துகின்ற காலத்திலே; என்க.

விளக்கம் : நிலவுலகிலேயே கண்ணகிக்கு நிகரான கற்புடை மகளிர் இலர் ஆதலின் தனக்குவமை இல்லாத பத்தினி என்பது தோன்ற ஒரு பெரும் பத்தினிக் கடவுள் என்றார். எம்மிறை என்றது எமக்கு இறைவனாகிய உன் தந்தை என்பதுபட நின்றது. இடுக்கண் என்றது கோவலன் கொலையுண்டமையை. வெம்மையின்-சினத்தினால். அழல் படும்நாள்-அழல்படுத்திய நாள். நீர் என்றது கோவலனை உளப்படுத்தித் தெய்வம் கூறியபடியாம். இது நீர் முன் செய்வினை என்பது தொடங்கி (22) ஒழியாது என்னுமளவும் மதுராபதி என்னும் தெய்வம் கூறியதனை ஈண்டுக் கண்ணகித் தெய்வம் கொண்டு கூறுகின்றபடியாம். மதுராபதி-மதுரை நகரத்துக் காவல் தெய்வம். காசு-குற்றம். தாயமன்னவர்-ஒரு குடியிற் பிறந்த அரசர்கள். வசுவென்பான் சிங்கபுரத்தினும் குமரன் கபிலபுரத்தினும் இருந்து ஆள்கின்றோர் என்றவாறு.

இதுவுமது

19-28 : மூவிரு.........இட்டனன்

(இதன் பொருள்) மூ இரு காவதம் முன்னுநர் இன்றி யாவரும் வழங்கா இடத்தில்-ஆறு காவதத்தொலைவு இடைநிலத்தே முற்பட்டுச் செல்வோர் இல்லாமையால் மாந்தர் எவரும் வழங்குதலின்றிக் கிடந்த பாழ்வெளியிலே; பொருள் வேட்டு பல்கலன் கொண்டு பலர் அறியாமல் எல் வளையாளோடு அரிபுரம் எய்தி-பொருளீட்டுதற்குப் பெரிதும் அவாவிப் பல்வேறு அணிகலன்களைக் கபிலபுரத்தில் வாங்கிக் கொண்டு தன் போல் வணிகர் பலரும் அறியாவண்ணம் ஒளிபொருந்திய வளையலணிந்த தன் மனைவியோடே இரவின்கண் பகர் சங்கமன் தன்னை-தான் விற்கக் கொண்டுவந்த பண்டமாகிய அணிகலன்களை விலை கூறி விற்கின்ற சங்கமன் என்னும் வணிகனை; கண்டனர் கூற-கூறுதலாலே; தையல் நின் கணவன் பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும் தீத்தொழிலாளர்-நங்கையே! உன் கணவனாகிய அரசன்பால் தொழில் செய்யும் பரதன் என்னும் பெயரையுடைய தீவினையாளன்; தெற்றென பற்ற மன்னற்கு இவன் ஒற்றன் என உரைத்து-விரைவாகச் சென்று அவ்வணிகனைப் பற்றிக் கொண்டு போய் அரசனுக்குக் காட்டி இவன் வணிகனல்லன் கபிலபுரத்தினின்றும் வந்த ஒற்றனாவான் என்று பொய் சொல்லி; குற்றம் இலோனை கொலை புரிந்திட்டனன்-சிறிதும் குற்றமில்லாத அவ்வணிகனைக் கொலை செய்வித்திட்டான்; என்க.

(விளக்கம்) காவதம்-ஒரு நீட்டலளவை. போர் நிகழும் இடமாதலின் அவ்வழியே யாரும் முற்பட்டுச் செல்வதில்லை ஆதலின் அவ்விடம் மக்கள் வழக்கற்றுக் கிடந்தது என்க. சங்கமன் பொருள் வேட்கை காரணமாக மனைவியோடு அணிகலன்களைக் கபிலபுரத்திற் கொண்டு இருளிலே சிங்கபுரத்திற்குச் சென்று விற்றனன் என்க. அரிபுரம்-சிங்கபுரம். பண்டமாகிய கலம் என்க. பண்டம்-பொன் என்பாரு முளர். பகர்தல்-விற்றல். சங்கமன் : பெயர். தையல்:விளி. பார்த்திபன் தொழில். அரசியலில் வகிக்கும் உத்தியம். பரதன்-கோவலனுடைய முற்பிறப்பின் பெயர். மன்னற்கு-வசு என்னும் அரசனுக்கு. குற்றமிலோன் என்றது சங்கமனை.

இதுவுமது

29-37 : ஆங்கவன்..........ஒழியாது

(இதன் பொருள்) ஆங்கு அவன் மனைவி அழுதனள் அரற்றி ஏங்கி மெய் பெயர்ப்போள்-அப்பொழுது அச்சங்கமனுடைய மனைவியாகிய நீலி என்பவள் அழுது பூசலிட்டுத் துன்பத்தால் ஏங்கி உயிர் விடுபவள்; இறு வரை ஏறி இட்டசாபம் கட்டியது ஆகும் உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது எனும்-பெரியதொரு மலையுச்சியில் ஏறி நின்று நுமக்கு இட்ட சாபமானது நும்மைக் கட்டியுளதாம் முற்பிறப்பிற் செய்த அத்தீவினையானது இப்பொழுது நும்பால் வந்து சினந்து தன் பயனை ஊட்டாது ஒழியாது காண் என்கின்ற;  மெய்ம்மை கிளவி விளம்பிய பின்னும் சீற்றம் கொண்டு செழுநகர் சிதைத்தேன்-உண்மையான மொழியை அம்மதுராபதித் தெய்வம் எனக்குக் கூறிய பின்னரும் பெருஞ்சினங் கொண்டு வளமான மதுரைமாநகரத்தைத் தீயினால் சிதைத் தொழிந்தேன்; மேல் செய் நல்வினையின் விண்ணவர்ச் சென்றேம்-அன்புடைய மகளே யானும் உந்தையும் முற்பிறப்பிலே செய்த நல்வினையின் பயனாக வானவர்களாய் விண்ணுலகத்திலே சென்றேம்; அவ்வினை இறுதியின் அடுசினப்பாவம் எவ்வகையானும் எய்துதல் ஒழியாது-அந்நல்வினையின் முடிவில் மதுரையை அழித்தற்குக் காரணமான சினத்தாலுண்டான தீவினை எந்த வகையிலேனும் தன் பயனை ஊட்டுதற் பொருட்டு எம்மை வந்தடையாமல் போகாது; என்க.

(விளக்கம்) ஆங்கவன்-அச்சிங்கபுரத்தில் வாணிகம் செய்த சங்கமன். அழுதனள்: முற்றெச்சம். அரற்றுதல்-பூசலிடுதல். மெய் பெயர்த்தல்-உடம்பினின்றும் உயிரைச் செயற்கை முறையால் போக்குதல். இறுவரை-பெரிய மலை. உம்மை-முற்பிறப்பு. விண்ணவராகிச் சென்றேம் என்றவாறு. அவ்வினை-அந்நல்வினை. அடுசினம்: வினைத்தொகை.

இதுவுமது

38-47 : உம்பர்............அருளி

(இதன் பொருள்) உம்பர் இல் வழி-அந்நல்வினை இறுதியின் வானுலகத்தின் கண் ஏது நிகழ்ச்சி எமக்கில்லையாய பொழுது; இம்பரில் பல்பிறப்பு யாங்கணும் இருவினை உய்த்து உமைப்போல நீங்கரும் பிறவிக் கடல் இடை நீந்தி பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர்-இவ்வுலகத்தின்கண் பல்வேறு பிறப்புகளினும் நல்வினையும் தீவினையுமாகிய இருவினைகளாலும் செலுத்தப்பட்டு மக்கட் பிறப்பிலுள்ள உங்களைப் போலவே யாங்களும் உய்ந்து கரையேறுதற்கரிய பிறவியாகிய கடலின்கண் நீந்திப் பிறந்தும் இறந்தும் உழலா நிற்பேம் பின்னர்; மறந்தும் மழை மறா மகத நல் நாட்டுக்கு ஒரு பெரும் திலகம் என்று உரவோர் உரைக்கும் கரவு அரும் பெருமை கபிலையம்பதியில்-மறந்தேனும் மழை பெய்யாதொழியாத மகதமென்னும் அழகிய நாட்டிற்கே ஒரு பெரிய திலகம் போல்வது என்று சான்றோர்களால் கூறப்படுகின்ற யாரானும் மறைத்தற்கரிய சிறப்பினையுடைய கபிலை என்கின்ற அழகிய நகரத்தின்கண்; அளப்பரும் பாரமிதை அளவு இன்று நிறைத்து துளக்கம் இல் புத்த ஞாயிறு தோன்றி போதி மூலம் பொருந்தி வந்து அருளி-அளத்தற்கியலாத பாரமிதைகளை அளவில்லாமல் நிறைத்து நடுக்கமில்லாத புத்தபெருமானாகிய கதிரவன் தோன்றி அரசமரத்தின் நிழலின்கண் வீற்றிருந்தருளி; என்க.

(விளக்கம்) உம்பர்-வானுலகம். இவ்வழி-ஏது நிகழ்ச்சி இல்லாத பொழுது என்க. இருவினை-நல்வினையும் தீவினையும். உமைப்போல என்றது உங்களைப் போல மக்களாக என்றவாறு. தாம் இப்பொழுது தெய்வப் பிறப்புடைமை தோன்ற இங்ஙனம் பிரித்தோதினள். உழல்வோம் என்றது கோவலனை உளப்படுத்தியவாறாம். கபிலபுரம் மகதநாட்டின் தலைநகராதலின் அதனை உரவோர் ஒரு பெரும் திலகம் என்று உரைப்பார் என்பது கருத்து. கபிலபுரம் கபிலர் என்னும் முனிவர் தவஞ்செய்தமையால் அப்பெயர் பெற்றது என்பர். இதனைக் கபிலவஸ்து எனவும் வழங்குவர். பாரமிதை என்பதன் பொருள் கரையேறுதற்ரியது என்பதாம். அஃதாவது பிறவிக் கடலினின்றும் கரையேறுதற்குரியது என்றவாறு. இது பத்து வகைப்படும். அவையாவன: தானம், சீலம், பொறை, வீரியம், தியானம், உணர்ச்சி, உபாயம், அருள், வலி, ஞானம் என்னும் இப்பத்துமாம். இவற்றை,

தானஞ்சீல மும்பொறை தக்கதாய வீரியம்
மூனமில் தியானமே யுணர்ச்சியோடு பாயமும்
மானமில் லருளினைவ் வைத்தலேவ லிம்மையுஞ்
ஞானமீரைம் பாரமீதை நாடுங்கா லிவைகளும்   (நீலகேசி-354)

எனவரும் நீலகேசியானு முணர்க. புத்த ஞாயிறு-புத்தனாகிய கதிரவன். போதி மூலம்-அரசமரத்தின் அடி.

இதுவுமது

48-59 : தீதறு..................ஆகுவம்

(இதன் பொருள்) தீது அறு நால்வகை வாய்மையும் தெரிந்து-பிறப்பறுதற்குக் காரணமான நான்கு வகைப்பட்ட வாய்மைகளையும் நன்கு தெரிந்து; பன்னிரு சார்பின் பகுதித் தோற்றமும்-பேதைமை முதலிய பன்னிரண்டு வகைப்பட்ட நிதானங்கள் பிறக்கும் முறைமையையும்; அந்நிலை எல்லாம் அழிவுறும் வகையும் இற்று என இயம்பி-அப்பன்னிரண்டு சார்புகளும் அழிவெய்துகின்ற தன்மைமையும் தனித்தனியே இத்தன்மைத்து எனக் கூறி; குற்ற வீடு எய்தி-காம வெகுளி மயக்கங்களாகிய குற்றங்களினின்றும் விடுதலை பெற்று நின்று; எண்ணரும் சக்கரவாளம் எங்கணும் அண்ணல் அறக்கதிர் விரிக்கும் காலை-எண்ணற்கியலாத உலகமெங்கும் தலைமைத் தன்மையுடைய அப்புத்தபெருமான் அறமாகிய ஒளியைப் பரப்புகின்ற காலத்தே; பைந்தொடி தந்தை உடனே பகவன் இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின்-மணிமேகலாய்! யான் உன் தந்தையோடு சென்று பூம்புகார் நகரத்தே அப்புத்த பகவானுடைய இந்திரனால் நியமிக்கப்பட்ட அரங்குகள் ஏழனையும் தொழுது வணங்கிய நல்வினை காரணமாக; துன்பக்கதியில் தோற்றரவு இன்றி அன்பு உறும் மனத்தோடு அவன் அறம் கேட்டு-துன்பமுறுதற்குக் காரணமான நரக விலங்குப் பிறப்புகளில் பிறவாமல் அப்புத்த பெருமானிடத்து அன்புறுகின்ற நெஞ்சத்தோடே அப்புத்த பெருமான் திருவாய் மலர்ந்தருளுகின்ற நல்லறங்களைக் கேட்டு அது காரணமாக; துறவி உள்ளம் தோன்றி தொடரும் பிறவி நீத்த பெற்றிவள் ஆகுவம்-துறத்தற்கியன்ற நன்னர் நெஞ்சம் தோன்றப் பெற்று அது பற்றுக்கோடாகக் கொண்டு அநாதியாகத் தொடர்ந்து வருகின்ற பிறவியாகிய அலைகளையுடைய பெரிய கடலை நீந்தி உய்ந்து வீடுபேறு பெறும் தன்மையை உடையேம் ஆகுவேம் என்றாள்; என்க.

(விளக்கம்) தீது-பிறப்பு. நால்வகை வாய்மை-துன்பம் முதலியன. பன்னிருசார்பு-பேதைமை முதலிய பன்னிரண்டு நிதானங்கள். அழிவுறுவகை-அந்நிதானங்கள் அழிவுறும் முறைமை. இற்றென என்னும் ஒருமையை வாய்மை முதலியவற்றோடு தனித்தனி ஒட்டுக. குற்றத்தினின்றும் விடுதலை பெறுதலைக் குற்றவீடெய்தி என்றார். குற்றம்-காம, வெகுளி மயக்கங்கள். சக்கரவாளம்-உலகம். அண்ணல்-தலைமைத் தன்மை. இதனை அறத்திற்கேற்றினும் அமையும். புத்த ஞாயிறு என்றமையால் அறத்தைக் கதிர் என்றார். பைந்தொடி : முன்னிலைப் புறமொழி. தந்தை-நின் தந்தை; கோவலன். பகவன்-புத்தப்பெருமான். இந்திரனால் இயற்றப்பட்ட விகாரம் என்க. விகாரம்-அரங்கு. இவை பூம்புகார் நகரத்திலுள்ளவை. இதனை,

பணையைந் தோங்கிய பாசிலைப் போதி
அணிதிகழ் நீழ லறவோன் றிருமொழி
அந்தர சாரிக ளறைந்தனர் சாற்றும்
இந்திர விகார மேழுடன் போகி

எனவரும் சிலப்பதிகாரத்தானும் (10:11-4) உணர்க.

இதுவுமது

60-67 : அத்திறம்...........உரைத்தலும்

(இதன் பொருள்) அத்திறம் ஆயினும்-அப்படி இருந்தாலும்; அநேக காலம்-நீண்ட காலம் இங்குத் தெய்வமாக விருந்து; எத்திறத்தார்க்கும் இருத்தியும் செய்குவம்-எவ்வகைப்பட்ட மக்களுக்கும் சித்தி செய்து கொண்டிருப்பேம்; நறை கமழ் கூந்தல் நங்கை-மணங்கமழும் கூந்தலையுடைய மகளிருள் சிறந்த; நீயும் முறைமையின் இந்த மூதூர் அகத்தே அவ்வவர் சமயத்து அறிபொருள் கேட்டு-நீதானும் முறைமையாக இந்தப் பழைய வஞ்சி மாநகரத்தின்கண் உள்ள சமயக்கணக்கர் பலரையும் தனித்தனியே கண்டு ஒவ்வொரு சமயக்கணக்கரும் அவரவர் சமய நெறியின் வாயிலாய் மெய்ப்பொருளாக அறிந்த பொருள்களைக் கேட்டறிந்து; மெய்வகை இன்மை நினைக்கே விளங்கிய பின்னர்-அவர் கூறும் பொருளெல்லாம் உண்மையில்லாமை உனக்கே விளக்கமான பின்னர்; பெரியோன் பிடகநெறி கடவாய்-புத்த பெருமான் திருவாய் மலர்ந்தருளிய பிடக நூல் நெறியைக் கடவா தொழுகுவாய் காண்; இவ் இயல்பு இன்னது என தாய் எடுத்து உரைத்தலும்-உனக்கு எதிர்காலத்தே நிகழவிருக்கும் ஏதுநிகழ்ச்சியின் தன்மை இத்தன்மையதாம் என்று தாயாகிய கண்ணகித் தெய்வம் எடுத்துக் கூறாநிற்பவும் என்க.

(விளக்கம்) இருத்தி-சித்தி. அஃதாவது தம்மை வந்து வரம் வேண்டுவோர்க்கு வேண்டுவன வழங்குதல் முதலியன. நறைகமழ் கூந்தல் என்றது நங்கை என்னும் பெயர்ச்சொல்லுக்கு வாளாது இயற்கை அடைமொழியாய் நின்றது. மூதூர் என்றது வஞ்சி நகரத்தை. அறிபொருள்-ஆராய்ந்தறிந்து துணிந்த பொருள். மெய்வகை இன்மை-உண்மையில்லாமை. பெரியோன்:புத்த பெருமான். பிடகநெறி-பிடகம்; புத்தாகமங்களுக்குப் பெயர். அவை வினையபிடகம் சூத்திரபிடகம் அபிதர்மபிடகம் என மூன்று வகைப்படும். பிடகம்-கூடை என்னும் பொருட்டு. எனவே மூன்று வகைப்பட்ட அறமாகிய பொருளை நிரப்பி வைத்துள்ள கூடை போன்றவை என்பது கருத்து. இவ்வியல்பு இன்னது என்றது பிடகநெறி கடவாது நீ ஒழுகும் இவ்வியல்பு எதிர்காலத்தே இன்னதாம் என்றவாறு. தாய் : கண்ணகி. எடுத்துரைத்தலும் என்றது அவள் வினவாத பொருளையும் விதந்தெடுத்துக் கூறாநிற்ப என்றவாறு.

மணிமேகலை வேற்றுருக்கொண்டு வஞ்சி நகரத்துள்ளே புகுதல்

68-79 : இளையள்...........புனைய

(இதன் பொருள்) மையறு சிறப்பின் தெய்வதம்-குற்றமற்ற சிறப்பினையுடைய மணிமேகலா தெய்வம் தன்பால் அருள்கூர்ந்து; இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் விளைபொருள் உரையார் வேற்றுரு கொள்க எனத் தந்த-தன்னை நோக்கி நீ வஞ்சிமாநகரத்திற் சென்று சமயக்கணக்கரிடம் அறிபொருள் வினவும் பொழுது அவர் நின்னை இளமையுடையள் பெண்பாலாள் என்று கருதி உனக்கு அவர்கள் தம் சமயநெறியால் விளைந்த துணிபொருளைக் கூறுதற்கு ஒருப்படார் ஆதலின் அவரை வினவும்பொழுது அவர் நன்கு மதிக்கும்படி வேற்றுருக் கொள்வாயாக என்று சொல்லித் தானே வலியக் கொடுத்த; மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவாய்-மந்திரத்தை ஓதி ஒரு மாதவன் வடிவம் மேற்கொண்டவளாய் மணிமேகலை; தேவகுலமும் தெற்றியும் பள்ளியும் பூமலர்ப் பொழிலும் பொய்கையும் மிடைந்து-அவ்வஞ்சி நகரத்தே தெய்வத் திருக்கோயில்களிலும், மேடைகளிலும், தவப்பள்ளிகளிலும், பூவாகிய மலர்களையுடைய சோலைகளிடத்தும், குளக்கரைகளிடத்தும் நெருங்கி, நல்தவ முனிவரும் கற்று அடங்கினரும் நல்நெறி காணிய தொல்நூல் புலவரும் எங்கணும் விளங்கிய எயிலபுற இருக்கையில்-நல்ல தவத்தையுடைய துறவோரும் மெய்ந் நூல்களைக் கற்று மனம் பொறி வழிச் செல்லாமல் அடங்கப்பெற்ற சான்றோரும் நல்ல அறநெறியைக் கண்ட பழைய நூல்களைப் பயின்று முதிர்ந்த புலவர்களும் எவ்விடத்தும் இருந்து விளங்குகின்ற மதிலின் புறத்தேயுள்ள இருப்பினையுடைய; செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன் பூவா வஞ்சியில்-செங்குட்டுவன் என்னும் செங்கோலரசன் தலைநகரமாகிய அவ்வஞ்சி மாநகரத்தில்; போர்த்தொழில் தானை குஞ்சியில் பூத்தி வஞ்சி புனைய-போர்த்தொழிலில் வன்மையுடைய படை மறவர்கள் தமது முடியின்கண் மலர்ந்த வஞ்சிப் பூவாகிய போர்ப் பூவினைச் சூடா நிற்ப; என்க.

(விளக்கம்) இளையள்...........கொள்கென என்று மணிமேகலா தெய்வம் கூறியதனை இந்நூலில் 10ஆம் காதையில் (79-80) காண்க. தெய்வதம்: மணிமேகலா தெய்வம். மந்திரம்-வேற்றுருக் கொள்வதற்குரிய மந்திரம். தேவகுலம்-கோயில். தெற்றி-மேடை. பள்ளி-தவப்பள்ளி. காணிய-கண்ட. எயிற்புற இருக்கை-மதிலின் புறத்தேயுள்ள இருப்பிடம். பூத்த வஞ்சி-பகைவர் நிலத்தைக் கைக்கொள்ள நினைந்து போர் மேல் செல்லும் மறவர்கள் அணிந்து கொள்ளும் அடையாளப்பூ. பூவா வஞ்சி என்பதற்கு; முரணாகப் பூத்த வஞ்சி என்றார். பூவா வஞ்சி என்றது வஞ்சி நகரத்தை; வெளிப்படை. குஞ்சி-குடுமி.

இதுவுமது

80-85 : நிலநாடு.......இழிந்து

(இதன் பொருள்) நிலநாடு எல்லை தன் மலை நாடு என்ன-படை செல்லும் முல்லை நிலத்தையுடைய நாடு முழுதும் தனக்குரிய மலைகள் செறிந்த சேரநாடு போலத் தோன்றும்படி; கை மலைகளிற்று இனம் தம் உள்முயங்க-கையையுடைய மலைகளைப் போன்ற களிற்றி யானைப்படைகள் தம்முள் செறிந்து செல்லா நிற்ப; தேரும் மாவும் கழல்செறி மறவரும் கார் மயங்கு கடலின் கலிகொள கடைஇ-தேர்ப்படையும் குதிரைப்படையும் வீரக்கழல் கட்டிய காலாட்படையும் ஆகிய நால்வகைப் படையையும் முகில் முழக்கத்தோடு கூடிய கடல்போல முழங்கும்படி செலுத்திச் சென்று; கங்கை அம் பேர் யாற்று அடைகரை தங்கி வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து-கங்கை என்னும் அழகிய பேரிய மாற்றினது நீரடை கரையின்மேல் தங்கியிருந்து வங்கமாகிய ஓடங்களில் ஏறி அதன் வடகரையில் இறங்கி; என்க.

(விளக்கம்) மலைநாடு என்றமையால் நிலநாடு என்றது முல்லை நிலம் என்பதாயிற்று. யானைகள் மலைகளைப் போலச் செறிந்து போதலால் முல்லை நிலமும் குறிஞ்சி நிலம் போலத் தோன்றிற்று என்றவாறு. கைம்மலை என்றது கையையுடைய மலை போன்ற களிற்றினம் என்றவாறு. மா-குதிரை. கழல்-வீரக்கழல். கார்-முகில். கலி-முழக்கம். கடைஇ-கடவி; செலுத்தி. வங்க நாவி: இருபெயரொட்டுப் பண்புத்தொகை. வங்கமாகிய நாவி என்க. அஃதாவது ஓடம். ஓடத்திலேறி வடகரையில் இழிந்து என்க.

மணிமேகலை வஞ்சி நகரத்துள் புகுந்து தங்குதல்

86-94 : கனக...........படுத்தற்கென்

(இதன் பொருள்) கனக விசயர் முதல் பல வேந்தர் அனைவரை வென்று-கனகனும் விசயனும் முதலிய பல வேந்தர் வந்தெதிர்ந்தோர் எல்லாரையும் போர்க்களத்திலே வென்று; அவர் அம்பொன் முடிமிசை சிமையம் ஓங்கிய இமைய மால்வரை தெய்வக் கல்லும்-கனக விசயராகிய அவ்வாரிய மன்னருடைய அழகிய பொன்முடி சூடுதற்குரிய தலையின்மேல் குவடுகள் உயர்ந்துள்ள இமயமென்னும் பெரிய மலையின்கண் அடித்தெடுத்த பத்தினித் தெய்வவுருவம் செய்தற்கியன்ற கல்லையும்; தன் திரு முடிமிசை பொன்செய் வாகையும் சேர்த்திய சேரன்-தன்னுடைய அழகிய முடியின்மேல் பொன்னால் செய்த வாகைப்பூ மாலையையும் ஏற்றிய சேரன் செங்குட்டுவனாகிய; வில் திறல் வெய்யோன் தன் புகழ் விளங்க-வில்லினால் பெரும் வலிமையை விரும்பும் அம்மன்னவனுடைய புகழ் பெரிதும் விளங்கும்படி; திருந்து நல் ஏது முதிர்ந்து உளது ஆதலின்-தான் மேன்மேலும் திருந்துதற்குக் காரணமான நல்ல பழவினை முதிர்ந்துளது ஆதலின்; பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கு-பிறப்பின்கண் பொருந்திய துன்பம் முதலிய நான்கு வாய்மைகளையும் உலகத்திற்கு அறிவுறுத்தும் பொருட்டு; பொற்கொடி பெயராகிய வஞ்சி என்னும் பெயரையுடைய அழகிய நகரத்தின்கண் போலிவுற்றிருந்தனள் என்பதாம்.

(விளக்கம்) கனகவிசயர் என்பவர் செந்தமிழ் மறவரின் ஆற்றல் அறியாமல் தமக்குரிய ஆரிய நாட்டின்கண் ஒரு திருமணப்பந்தரில் இகழ்ந்தனர். இதனை ஒற்றர் வாயிலாய்ச் சேரன் செங்குட்டுவன் அறிந்திருந்தனன். பின்னர்ச் சில நாளிலேயே பத்தினித் தெய்வமாகிய கண்ணகிக்குத் திருவுருச் சமைத்தற்கு இமயத்திலாதல் பொதியிலாதல் கல் கொள்ளுதல் நன்றென அறிஞர் கூறக்கேட்டு இமயத்திலேயே கல்லெடுத்துக் காவா நாவின் கனகவிசயர் முடித்தலையில் ஏற்றிக் கொணருவல் என்று வஞ்சினங்க கூறிச் சேரன் செங்குட்டுவன் வடநாட்டின் மேல் படையெடுத்துப் போய்த் தான் கூறிய வஞ்சினம் தப்பாமல் கனகவிசயர் முடிமேல் இமயக்கல்லை ஏற்றிக் கொணர்ந்தான். இவ்வரலாறு ஈண்டுச் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் இவ்வரலாறு வஞ்சிக் காண்டத்தில் விரிவாகக் கூறப்பட்டிருத்தல் காணலாம். திறம்வெய்யோன்-வலிமையை விரும்புவோன். அவன் புகழ் தாயாகிய கண்ணகியாலே முன்னம் விளக்க மெய்தியது. அப்புகழே மேலும் விளக்கமெய்தும்படி அத்தெய்வத்தின் திருமகளாகிய மணிமேகலையும் அந்நகரத்திலே புகுந்து பொலிவுற்றிருந்தாள் என்க. பொற்கொடி பெயர்ப்படூஉம் பொன்நகர் என்றது வஞ்சி நகரத்தை.

இனி, இக்காதையை அணியிழை, எழுந்து புகுந்து நின்று ஏத்தி, அருளல் வேண்டும் என்று அழுது நிற்ப, பத்தினிக்கடவுள் உரைப்பாள்; அங்ஙனமுரைப்பவளாகிய தாய், இவ்வியல்பு இன்னது என எடுத்துரைத்தலும், மணிமேகலை ஓதி வடிவாய்ப் பொன்னகர்ப் பொலிந்தனனென இயைத்திடுக.

வஞ்சிமாநகர் புக்க காதை முற்றிற்று.
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 10:14:10 AM
27. சமயக்கணக்கர் தந்திறங் கேட்ட காதை

அஃதாவது-இதன்கண் வஞ்சிமா நகரத்தின்கண் புகுந்து பொலிவுற்றிருந்த மணிமேகலை சமயக்கணக்கர் பலரையும் கண்டு அவரவர் சமயத்திற்கியன்ற காட்சிகளைக் கேட்டுணர்தற்குப் பெரிதும் விரும்பி அவர்களைத் தனித்தனியே கண்டு அவற்றை வினவித் தெரிந்து கொண்ட செய்திகளைக் கூறுகின்ற செய்யுள் என்றவாறு.

நவை அறு நன் பொருள் உரைமினோ என
சமயக் கணக்கர் தம் திறம் சார்ந்து
வைதிக மார்க்கத்து அளவை வாதியை
எய்தினள் எய்தி நின் கடைப்பிடி இயம்பு என
வேத வியாதனும் கிருதகோடியும்
ஏதம் இல் சைமினி எனும் இவ் ஆசிரியர்
பத்தும் எட்டும் ஆறும் பண்புறத்
தம் தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர்
காண்டல் கருதல் உவமம் ஆகமம்
ஆண்டைய அருத்தாபத்தியோடு இயல்பு  27-010

ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவறிவு
எய்தி உண்டாம் நெறி என்று இவை தம்மால்
பொருளின் உண்மை புலங்கொளல் வேண்டும்
மருள் இல் காட்சி ஐ வகை ஆகும்
கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும்
நண்ணிய மூக்கால் நாற்றமும் நாவால்
சுவையும் மெய்யால் ஊறும் எனச் சொன்ன
இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று
துக்கமும் சுகமும் எனத் துயக்கு அற அறிந்து
உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி  27-020

பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி
சுட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது
கிட்டிய தேசம் நாமம் சாதி
குணம் கிரியையின் அறிவது ஆகும்
கருத்து அளவு ஆவது
குறிக்கொள் அனுமானத்து அனுமேயத்
தகைமை உணரும் தன்மையது ஆகும்
மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம்
பொது எனப்படுவது சாதன சாத்தியம்
இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும்  27-030

கடம் திகழ் யானைக் கான ஒலி கேட்டோன்
உடங்கு எழில் யானை அங்கு உண்டு என உணர்தல்
எச்சம் என்பது வெள்ள ஏதுவினால்
நிச்சயித்து அத் தலை மழை நிகழ்வு உரைத்தல்
முதல் என மொழிவது கருக்கொள் முகில் கண்டு
இது மழை பெய்யும் என இயம்பிடுதல்
என்னும் ஏதுவின் ஒன்று முக் காலம்
தன்னில் ஒன்றில் சார்ந்து உளதாகி
மண்ட உயிர் முதல் மாசு இன்றாகி
காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல்  27-040

உவமம் ஆவது ஒப்புமை அளவை
கவய மா ஆப் போலும் எனக் கருதல்
ஆகம அளவை அறிவன் நூலால்
போக புவனம் உண்டு எனப் புலங்கொளல்
அருத்தாபத்தி ஆய்க்குடி கங்கை
இருக்கும் என்றால் கரையில் என்று எண்ணல்
இயல்பு யானைமேல் இருந்தோன் தோட்டிற்கு
அயல் ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல்
ஐதிகம் என்பது உலகு மறை இம் மரத்து
எய்தியது ஓர் பேய் உண்டு எனத் தௌிதல்  27-050

அபாவம் என்பது இன்மை ஓர் பொருளைத்
தவாது அவ் இடத்துத் தான் இலை என்றல்
மீட்சி என்பது இராமன் வென்றான் என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்
உள்ள நெறி என்பது நாராசத் திரிவில்
கொள்ளத் தகுவது காந்தம் எனக் கூறல்
எட்டு உள பிரமாண ஆபாசங்கள்
சுட்டுணர்வொடு திரியக் கோடல் ஐயம்
தேராது தெளிதல் கண்டு உணராமை
எய்தும் இல் வழக்கு உணர்ந்ததை உணர்தல்  27-060

நினைப்பு என நிகழ்வ சுட்டுணர்வு எனப்படுவது
எனைப் பொருள் உண்மை மாத்திரை காண்டல்
திரியக் கோடல் ஒன்றை ஒன்று என்றல்
விரி கதிர் இப்பியை வெள்ளி என்று உணர்தல்
ஐயம் என்பது ஒன்றை நிச்சயியா
மையல் தறியோ? மகனோ? என்றல்
தேராது தெளிதல் செண்டு வெளியில்
ஓராது தறியை மகன் என உணர்தல்
கண்டு உணராமை கடு மாப் புலி ஒன்று
அண்டலை முதலிய கண்டும் அறியாமை  27-070

இல் வழக்கு என்பது முயற்கோடு ஒப்பன
சொல்லின் மாத்திரத்தால் கருத்தில் தோன்றல்
உணர்ந்ததை உணர்தல் உறு பனிக்குத் தீப்
புணர்ந்திடல் மருந்து எனப் புலம் கொள நினைத்தல்
நினைப்பு எனப்படுவது காரணம் நிகழாது
நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று
பிறர் சொலக் கருதல் இப் பெற்றிய அளவைகள்
பாங்குறும் உலோகாயதமே பௌத்தம்
சாங்கியம் நையாயிகம் வைசேடிகம்
மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர்   27-080

தாம் பிருகற்பதி சினனே கபிலன்
அக்கபாதன் கணாதன் சைமினி
மெய்ப்பிரத்தியம் அனுமானம் சாத்தம்
உவமானம் அருத்தாபத்தி அபாவம்
இவையே இப்போது இயன்று உள அளவைகள்
என்றவன் தன்னை விட்டு இறைவன் ஈசன் என
நின்ற சைவ வாதி நேர்படுதலும்
பரசும் நின் தெய்வம் எப்படித்து? என்ன
இரு சுடரோடு இயமானன் ஐம் பூதம் என்று
எட்டு வகையும் உயிரும் யாக்கையுமய்க்  27-090

கட்டி நிற்போனும் கலை உருவினோனும்
படைத்து விளையாடும் பண்பினோனும்
துடைத்துத் துயர் தீர் தோற்றத்தோனும்
தன்னில் வேறு தான் ஒன்று இலோனும்
அன்னோன் இறைவன் ஆகும் என்று உரைத்தனன்
பேர் உலகு எல்லாம் பிரம வாதி ஓர்
தேவன் இட்ட முட்டை என்றனன்
காதல் கொண்டு கடல்வணன் புராணம்
ஓதினன் நாரணன் காப்பு என்று உரைத்தனன்
கற்பம் கை சந்தம் கால் எண் கண்   27-100

தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு
உற்ற வியாகரணம் முகம் பெற்றுச்
சார்பின் தோன்றா ஆரண வேதக்கு
ஆதி அந்தம் இல்லை அது நெறி எனும்
வேதியன் உரையின் விதியும் கேட்டு
மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற
எத் திறத்தினும் இசையாது இவர் உரை என
ஆசீவக நூல் அறிந்த புராணனை
பேசும் நின் இறை யார்? நூற்பொருள் யாது? என
எல்லை இல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும்  27-110

புல்லிக் கிடந்து புலப்படுகின்ற
வரம்பு இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து
உரம் தரும் உயிரோடு ஒரு நால் வகை அணு
அவ் அணு உற்றும் கண்டும் உணர்ந்திடப்
பெய் வகை கூடிப் பிரிவதும் செய்யும்
நிலம் நீர் தீ காற்று என நால் வகையின
மலை மரம் உடம்பு எனத் திரள்வதும் செய்யும்
வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும்
அவ் வகை அறிவது உயிர் எனப் படுமே
வற்பம் ஆகி உறும் நிலம் தாழ்ந்து   27-120

சொற்படு சீதத்தொடு சுவை உடைத்தாய்
இழினென நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீத்
தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம்
காற்று விலங்கி அசைத்தல் கடன் இவை
வேற்று இயல்பு எய்தும் விபரீதத்தால்
ஆதி இல்லாப் பரமாணுக்கள்
தீதுற்று யாவதும் சிதைவது செய்யா
புதிதாய்ப் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா
முது நீர் அணு நில அணுவாய்த் திரியா
ஒன்று இரண்டாகிப் பிளப்பதும் செய்யா  27-130

அன்றியும் அவல்போல் பரப்பதும் செய்யா
உலாவும் தாழும் உயர்வதும் செய்யும்
குலாம் மலை பிறவாக் கூடும் பலவும்
பின்னையும் பிரிந்து தம் தன்மைய ஆகும்
மன்னிய வயிரமாய்ச் செறிந்து வற்பமும் ஆம்
வேய் ஆய்த் துளைபடும் பொருளா முளைக்கும்
தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம்
நிறைந்த இவ் அணுக்கள் பூதமாய் நிகழின்
குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின்
ஒன்று முக்கால் அரை கால் ஆய் உறும்  27-140

துன்று மிக்கதனால் பெயர் சொலப்படுமே
இக் குணத்து அடைந்தால் அல்லது நிலன் ஆய்ச்
சிக்கென்பதுவும் நீராய் இழிவதும்
தீயாய்ச் சுடுவதும் காற்றாய் வீசலும்
ஆய தொழிலை அடைந்திடமாட்டா
ஓர் அணுத் தெய்வக் கண்ணோர் உணர்குவர்
தேரார் பூதத் திரட்சியுள் ஏனோர்
மாலைப் போதில் ஒரு மயிர் அறியார்
சாலத் திரள் மயிர் தோற்றுதல் சாலும்
கருமம் பிறப்பும் கரு நீலப் பிறப்பும்  27-150

பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும்
பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும்
என்று இவ் ஆறு பிறப்பினும் மேவி
பண்புறு வரிசையின் பாற்பட்டுப் பிறந்தோர்
கழி வெண் பிறப்பில் கலந்து வீடு அணைகுவர்
அழியல் வேண்டார் அது உறற்பாலார்
இது செம்போக்கின் இயல்பு இது தப்பும்
அது மண்டலம் என்று அறியல் வேண்டும்
பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும்
உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும்  27-160

பெரிது அவை நீங்கலும் பிறத்தலும் சாதலும்
கருவில் பட்ட பொழுதே கலக்கும்
இன்பமும் துன்பமும் இவையும் அணு எனத் தகும்
முன் உள ஊழே பின்னும் உறுவிப்பது
மற்கலி நூலின் வகை இது என்ன
சொல் தடுமாற்றத் தொடர்ச்சியை விட்டு
நிகண்ட வாதியை நீ உரை நின்னால்
புகழும் தலைவன் யார்? நூற்பொருள் யாவை,
அப் பொருள் நிகழ்வும் கட்டும் வீடும்
மெய்ப்பட விளம்பு என விளம்பல் உறுவோன்  27-170

இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன்
தந்த நூற்பொருள் தன்மாத்திகாயமும்
அதன்மாத்திகாயமும் கால ஆகாயமும்
தீது இல் சீவனும் பரமாணுக்களும்
நல்வினையும் தீவினையும் அவ் வினையால்
செய்வுறு பந்தமும் வீடும் இத் திறத்த
ஆன்ற பொருள் தன் தன்மையது ஆயும்
தோன்று சார்வு ஒன்றின் தன்மையது ஆயும்
அநித்தமும் நித்தமும் ஆகி நின்று
நுனித்த குணத்து ஓர் கணத்தின் கண்ணே  27-180

தோற்றமும் நிலையும் கேடும் என்னும்
மாற்று அரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம்
நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம்
நிம்பத்து அப் பொருள் அன்மை அநித்தயம்
பயற்றுத் தன்மை கெடாது கும்மாயம்
இயற்றி அப் பயறு அழிதலும் ஏதுத்
தருமாத்திகாயம் தான் எங்கும் உளதாய்
பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா
அப்படித்தாகி அதன் மாத்திகாயமும்
எப் பொருள்களையும் நிறுத்தல் இயற்றும்   27-190

காலம் கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும்
ஏலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும்
ஆக்கும் ஆகாயம் எல்லாப் பொருட்கும்
பூக்கும் இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும்
சீவன் உடம்போடு ஒத்துக் கூடி
தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும்
ஓர் அணு புற்கலம் புற உரு ஆகும்
சீர்சால் நல்வினை தீவினை அவை செயும்
வரு வழி இரண்டையும் மாற்றி முன்செய்
அரு வினைப் பயன் அனுபவித்து அறுத்திடுதல்  27-200

அது வீடு ஆகும் என்றனன் அவன்பின்
இது சாங்கிய மதம் என்று எடுத்து உரைப்போன்
தனை அறிவு அரிதாய் தான் முக் குணமாய்
மன நிகழ்வு இன்றி மாண்பு அமை பொதுவாய்
எல்லாப் பொருளும் தோன்றுதற்கு இடம் எனச்
சொல்லுதல் மூலப் பகுதி சித்தத்து
மான் என்று உரைத்த புத்தி வெளிப்பட்டு
அதன்கண் ஆகாயம் வெளிப்பட்டு அதன்கண்
வாயு வெளிப்பட்டு அதன்கண் அங்கி
ஆனது வெளிப்பட்டு அதன்கண் அப்பின்  27-210

தன்மை வெளிப்பட்டு அதில் மண் வெளிப்பட்டு
அவற்றின் கூட்டத்தில் மனம் வெளிப்பட்டு
ஆர்ப்புறு மனத்து ஆங்கார விகாரமும்
ஆகாயத்தில் செவி ஒலி விகாரமும்
வாயுவில் தொக்கும் ஊறு எனும் விகாரமும்
அங்கியில் கண்ணும் ஒளியும் ஆம் விகாரமும்
தங்கிய அப்பில் வாய் சுவை எனும் விகாரமும்
நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும்
சொலப்பட்ட இவற்றில் தொக்கு விகாரமாய்
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் என  27-220

ஆக்கிய இவை வெளிப்பட்டு இங்கு அறைந்த
பூத விகாரத்தால் மலை மரம் முதல்
ஓதிய வெளிப்பட்டு உலகாய் நிகழ்ந்து
வந்த வழியே இவை சென்று அடங்கி
அந்தம் இல் பிரளயம் ஆய் இறும் அளவும்
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியம் ஆம்
அறிதற்கு எளிதாய் முக் குணம் அன்றி
பொறி உணர்விக்கும் பொதுவும் அன்றி
எப் பொருளும் தோன்றுதற்கு இடம் அன்றி
அப் பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய்  27-230

ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய்
நின்று உள உணர்வாய் நிகழ்தரும் புருடன்
புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உள
நிலம் நீர் தீ வளி ஆகாயம்மே
மெய் வாய் கண் மூக்கு செவி தாமே
உறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மே
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம்
ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம்
உயிர் எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம் எனச்
செயிர் அறச் செப்பிய திறமும் கேட்டு  27-240

வைசேடிக! நின் வழக்கு உரை என்ன
பொய் தீர் பொருளும் குணமும் கருமமும்
சாமானியமும் விசேடமும் கூட்டமும்
ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது
குணமும் தொழிலும் உடைத்தாய் எத் தொகைப்
பொருளுக்கும் ஏது ஆம் அப் பொருள் ஒன்பான்
ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை
காலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம்
ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும்
பயில் குணம் உடைத்து நின்ற நான்கும்  27-250

சுவை முதல் ஒரோ குணம் அவை குறைவு உடைய
ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை
மாசு இல் பெருமை சிறுமை வன்மை
மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம்
என்னும் நீர்மை பக்கம் முதல் அனேகம்
கண்ணிய பொருளின் குணங்கள் ஆகும்
பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு
உரிய உண்மை தரும் முதல் பொதுத்தான்
போதலும் நிற்றலும் பொதுக் குணம் ஆதலின்
சாதலும் நிகழ்தலும் அப் பொருள் தன்மை  27-260

ஒன்று அணு கூட்டம் குணமும் குணியும் என்று
ஒன்றிய வாதியும் உரைத்தனன் உடனே
பூத வாதியைப் புகல் நீ என்னத்
தாதகிப் பூவும் கட்டியும் இட்டு
மற்றும் கூட்ட மதுக் களி பிறந்தாங்கு
உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்
அவ் உணர்வு அவ் அப் பூதத்து அழிவுகளின்
வெவ் வேறு பிரியும் பறை ஓசையின் கெடும்
உயிரொடும் கூட்டிய உணர்வு உடைப் பூதமும்
உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும்  27-270

அவ் அப் பூத வழி அவை பிறக்கும்
மெய் வகை இதுவே வேறு உரை விகற்பமும்
உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே
கண்கூடு அல்லது கருத்து அளவு அழியும்
இம்மையும் இம்மைப் பயனும் இப் பிறப்பே
பொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல்
என்றலும் எல்லா மார்க்கமும் கேட்டு
நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன்
பிறந்த முன் பிறப்பை எய்தப் பெறுதலின்
அறிந்தோர் உண்டோ? என்று நக்கிடுதலும்  27-280

தெய்வ மயக்கினும் கனா உறு திறத்தினும்
மையல் உறுவார் மனம் வேறு ஆம் வகை
ஐயம் அன்றி இல்லை என்றலும் நின்
தந்தை தாயரை அனுமானத்தால் அலது
இந்த ஞாலத்து எவ் வகை அறிவாய்?
மெய்யுணர்வு இன்றி மெய்ப் பொருள் உணர்வு அரிய
ஐயம் அல்லது இது சொல்லப் பெறாய் என
உள்வரிக் கோலமோடு உன்னிய பொருள் உரைத்து
ஐவகைச் சமயமும் அறிந்தனள் ஆங்கு என்  27-289

உரை

1-4 : நவை..........இயம்பென

(இதன் பொருள்) சமயக் கணக்கர் தம் திறம் சார்ந்து-இவ்வாறு வஞ்சிமா நகரத்தின்கண் புகுந்து மாதவன் வடிவில் பொலிவுற்றிருந்த மணிமேகலை அந்நகரத்தின் கண் சமய நூலுணர்ந்த ஆசிரியர்மார்கள் தம் பக்கலிலே சென்று; நவையறுகன் பொருள் உரைமினோ என எய்தினள்-அச்சமயக்கணக்கர்களைத் தனித்தனியே கண்டு நும்முடைய சமயத்தில் உயிரின் பிறவிப்பிணி அறுதற்குக் காரணமான மெய்ப்பொருளைக் கூறுமின் என வினவப் புகுந்தனள்; வைதிக மார்க்கத்து அளவைவாதியை எய்தி-முதன் முதலாக வேதநெறியினை மேற்கொண்டொழுகும் அளவைவாதியின்பாற் சென்று அவனை நோக்கி; நின் கடைப்பிடி இயம்பு என-ஐயனே! நீ நின் சமயத்தில் கடைப்பிடித்தொழுகும் நின் நூற்பொருளை எனக்குக் கூறுவாயாக என வேண்டாநிற்ப என்க.

(விளக்கம்) நவை-துன்பம்; அஃதீண்டுப் பிறப்பின் மேனின்றது. நன்பொருள்-ஈண்டுத் தத்துவம். சமயக் கணக்கர்-சமய நூலுணர்ந்து அதனைப் பரப்புபவர். உரைமினோ என எய்தினவளாகிய மணிமேகலை என்க. வைதிக மார்க்கம்-வேதத்தின்கண் கூறப்பட்டுள்ள சமயநெறி. அளவை வாதி-காட்சி முதலிய அளவைகளால் ஆராய்ந்தே மெய்ப்பொருளை அறிதல் கூடும் என்னும் கொள்கை உடையவன். கடைப்பிடி-துணிபொருள்.

அளவை வாதியின் கூற்று அளவைகளும் அவற்றின் ஆசிரியர்களும்

5-13 : வேதவியாதனும்..........வேண்டும்

(இதன் பொருள்) வேதவியாதனும் கிருதகோடியும் ஏதம் இல்சைமினி எனும் இவ்வாசிரியர்-அதுகேட்ட அளவைவாதி (மணிமேகலையாகிய) மாதவனை நோக்கித் துறவியே அவ்வாறே கூறுவேன் என்று கூறுபவன் வேதவியாதனும் கிருதகோடியும் குற்றமில்லாத சைமினியும் என்று கூறப்படுகின்ற எம்மாசிரியன்மார் நிரலே; பத்தும் எட்டும் ஆறும் தத்தம் வகையால் தாம் பண்புஉற பகர்ந்திட்டனர்-பத்தளவையும் எட்டு அளவையும் ஆறளவையும் ஆகத் தாம் தாம் ஆராய்ந்து கண்ட முறைமையினாலே அவரவரே விளக்கிக் கூறினர். எங்ஙனம் கூறினர் எனின்; காண்டல் கருதல் உவமம் ஆகமம் ஆணடைய அருத்தாபத்தியோடு இயல்பு ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவறிவு எய்தி உண்டாம் நெறி என்று-காட்சியும் கருதலும் ஆகமமும் ஆகிய இவற்றின் அப்பாலாகிய அருத்தாபத்தியும் ஐதிகமும் மீட்சி ஒழிவறிவும் எய்தி உண்டாம் நெறியும் அளவைகள் என்று அறிவித்து; இவை தம்மால் பொருளின் உண்மை புலங்கொளல் வேண்டும்-இப்பத்தளவைகளாலும் அளந்து மெய்ப்பொருளின் இயல்பினை மாந்தர் அறிந்து கொள்ளவேண்டும் என்று செவியறிவுறுத்தனர் என்றான் என்க.

(விளக்கம்) வியாதன் என்னும் பெயருடைய முனிவர் பலர் உளராதலின் இவ்வியாதன் அவருள் வேதத்தை வகுத்துமுறை செய்த வியாதனை என்பது தோன்ற வேதவியாதன் என்று விதந்தோதினர் என்னை? மாயாவாதமும் பாற்கரியவாதமும் கிரீடாப்பிரமவாதமும் சத்தப்பிரமவாதமும் சத்தப்பிரமவாதமும் என்னும் நால்வேறுவகைப்பட்ட ஏகான்மவாத நூல் செய்த வியாசனும் உத்தர மீமாஞ்சை மதநூல் செய்த வியாதனும் மகாபாரதம் என்னும் இதிகாசமியற்றிய வியாதனும் என இப்பெயருடைய வியாத முனிவர் பலர் உளராதலும் இவர்க்கெல்லாம் பத்தளவைகள் உடம்பாடன்மையின் ஈண்டுக் கூறப்பட்ட, வேதவியாதர் அவர்களுள் ஒருவர் அல்லாமை அறிக. கிருதகோடி என்பவரைப் போதாயனர் எனவும் கிருதகோடி கவி எனவும் கூறுவார் உளர் என்பாரும் உளர். சைமினி என்பவர் வேதத்தில் கருமகாண்ட ஆராய்ச்சி செய்தற்கெழுந்த நூலாசிரியர் என்பர். வேதவியாதன் பத்தளவையும், கிருதகோடி எட்டளவையும், சைமினி ஆறளவையும், பகர்ந்திட்டனர் என்க. காண்டல் எனினும் காட்சி எனினும் ஒக்கும் கருதல் எனினும் கருத்து எனினும் ஒக்கும். அனுமானம் என்பதுமது நியாய நுலாசிரியர் ஆகிய கவுதம முனிவர் முதலியோர் உவமம் காண்டல் முதல் ஆகமம் ஈறாக உள்ள நான்களவைகளுள் ஏனைய அளவைகள் அடங்கும் ஆதலின் இவையே சிறப்புடையன. பிற சிறப்பில்லன என்பாரும் உளர் என்பது பற்றி ஆண்டைய அருத்தாபத்தியோடு எனப் பிரித்துக் கூறினர். ஐதிகம்-உலகுரை. அபாவம்-இன்மை. மீட்சியொழிவறிவு-மீட்சியினால் ஒழிந்த பொருளை அழியும் அளவை; பாரிசேடம் என்பதும் அது அபாவம்: இன்மையால் ஒரு பொருளை இல்லை என்று துணிவது. உண்டாம் நெறி எனினும் சம்பவம் எனினும் ஒக்கும் என்று செவியறிவுறுத்தனர் என்க.

1-காட்சியளவையின் வகை முதலியன

14-24 : மருளில்.................அறிவதாகும்

(இதன் பொருள்) மருள்இல் காட்சி ஐவகையாகும்-மயங்குதற்கு இடனில்லாத காட்சி அளவைதானும் ஐந்து வகைப்படுவதாம் அவை வருமாறு: கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும் மூக்கால் நாற்றமும் நாவால் சுவையும் மெய்யால் ஊறும் நண்ணிய இவை எனச் சொன்ன இவை-கண் செவி மூக்கு நா மெய் என்னும் ஐம்பொறிகளுள் வைத்துக் கண்ணால் நிறமும் செவியால் ஓசையும் மூக்கினால் நாற்றமும் நாவினால் சுவையும் மெய்யினால் ஊறும் ஆகிய இப்புலன்கள்; நண்ணிய எனச் சொன்ன-வந்துற்ற பொழுது அவ்வப் பொறிகளாலே இப்புலன்கள் உணரப்படும் என்று சான்றோரால் சொல்லப்பட்ட படி இப்பொறிகளால் நிரலே; கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று-பார்த்தும் கேட்டும் மோந்தும் உண்டும் தீண்டியும்; துக்கமும் சுகமும் என துயக்கு அற அறிந்து-உணர்ந்து பார்த்து இப்புலன்கள் தரும் நுகர்ச்சியைத் துன்பமென்றாதல் இன்பமென்றாதல் தடை சிறிதுமின்றி உணர்ந்து; உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி-உயிரும் கருவிகளும் நெஞ்சும் ஆகிய இவை பழுதில்லாமலும்; பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றியும்-பொருளில் பயின்றுணரும் உணர்ச்சியினோடே பயிலப்படுகின்ற பொருளும் இடமும் ஆகிய இவற்றானும் பழுதில்லாமலும்; சுட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது-சுட்டலும் பிறழ்தலும் இரட்டுற நினைதலும் ஆகிய குற்றம் பிறவாமலும்; கிட்டிய தேசம் நாமம் சாதிகுணம் கிரியையின் அறிவதாகும்-காணப்படும் பொருளைச் சார்ந்த இடம் பெயர் சாதி குணம் தொழில் என்னும் இவற்றால் நன்கறியும் அறிவே காட்சியளவை எனப்படுவதாம் என்க.

(விளக்கம்) மயக்கக் காட்சி அளவை ஆகாதென்பதற்கு மருளில் காட்சி என விதந்தார்; மருள் காட்சியாவது

பொருளல் லவற்றைப் பொருளென் றுணரு
மருளானு மாணாப் பிறப்பு  (குறள்-351)

என்பதனானும் உணர்க. காட்சி ஐந்தே இவற்றின்மேல் இல்லை என்பார் ஐந்து வகை ஆகும் என்று தொகுத்துக்கூறி மேலே அவற்றை வகுத்தோதுகின்றனர்.

இனி, காண்டல் என்பது கண்ணினது தொழிலாகவும் ஏனையவற்றிற்கும் பொருந்துவ தெங்ஙனமெனின்; ஈண்டுக் காண்டல் என்பது விளங்கவறிதல் என்னும் பொருள்மேனின்றது. என்னை! வேதங்கரை கண்டான் என்புழியும் காலமுன்று மவை கண்டு கூறியவன் என்புழியும், கண்டுரைப்பின் என்புழியும், சூத்திரப் பொருள் கண்டான் என்புழியும்,

செயிரிற் றலைப்பிரிந்த காட்சியா ருண்ணா
ருயிரிற் றலைப் பிரிந்த வூன்      (குறள்-258)

என்புழியும் அஃதப் பொருட்டாதலுணர்க.

கண் முதலிய பொறிகள் ஐந்தும் காட்சி முதலிய புலன்கள் ஐந்தும் அளவைவாதிகள் தோன்றுதற்கு முன்பே உலக வழக்கில் வழங்கப்பட்டு வருதல் தோன்ற கண்ணால் வண்ணமும்........ஊறும் எனச் சொன்ன இவை என்று முன்னையோர் மேலிட்டுக் கூறினர். நண்ணிய என்பதனை வண்ணம் முதலிய புலன்கள் ஐந்தனோடும் பொருந்த இடைநிலை விளக்கமாக்கிக் கூறிக்கொள்க. என்னை? நிறம் முதலிய புலன்கள் பொறிகளை வந்துற்றபொழுது அறிவதல்லது அவை வாராதபொழுது அறியமாட்டாமையின் என்க. இனி செவி முதலிய பொறிகட்கும் இஃதொக்கும். கட்பொறி சேய்மையிற் சென்றும் தனக்குரிய புலனைப் பற்றும் என்பாரும் உளராலோ எனின் அற்றன்று. அவர் கொள்கை போலி என்றொழிக. கண் முதலியவற்றோடு காணல் முதலியவற்றை நிரல் நிரையாகக் கொள்க. துயக்கு-தடை; சோர்வு எனினுமாம். வாயில் ஆகிய கருவிகள் பழுதுபட்டிருந்தால் காட்சியளவை பயனின்றாதலின் ஊறின்றி என்றார். ஒளி என்றது உயிரினது உணர்வை இஃதுணராதார் ஒளி ஞாயிறு திங்கள் தீ ஆகிய ஒளிகள் என்றார். இவ்வுரை போலி. என்னை? கண்ணொழிந்த செவி மூக்கு நா மெய் என்னும் நான்கு பொறிகளும் தத்தம் புலன்களைக் கோடற்கண் ஞாயிறு முதலியவற்றின் ஒளி வேண்டாமை நுண்ணிதின் உணர்க. இதனை,

இருளாக மூடுஞ்சு ழுத்தியி லிராத்திரியி
லிரவிசுட ரற்ற பொழுது
மருளாமலிருளையும் பொருளையுந் தெரிகின்ற
வகைகொண்டு சித்தாகுமே  (கைவல்யம்-414)

எனவரும் செய்யுளால் உணர்க. பொருள்-காட்சிப் பொருள். சுட்டல்-பொருள் உண்மை மாத்திரை காண்டல். திரிதல்-ஒன்றை மற்றொன்றாகக் கருதல். கவர் கோடல்-கண்டபொருளை இரட்டுறவே கருதல் (ஐயுறுதல்). சாதி-ஒருநிகரனவாகிய பல பொருட்குப் பொதுவாவதொருதன்மை.

2. கருத்தளவு

25-28: கருத்தளவு.............முதல்ஆம்

(இதன் பொருள்) கருத்தளவாவது-இனி அனுமான அளவை எனப்படுவது; குறிக்கொள் அனுமானத்து அனுமேயத் தகைமை உணரும் தன்மையதாகும்-ஏதுவுக்குப் பிறப்பிடமான குறியாகக் கொண்டு ஆராய்ச்சியினாலே சாதிக்கப்படும் பொருளின் உண்மையை உணர்த்தும் தன்மையுடையதாகும்; அது-இங்ஙனமாகிய அக்கருத்தளவை; மூவகை உற்று பொது எச்சம் முதல்ஆம்-பொது வென்றும் எச்சமென்றும் முதலென்றும் மூன்று பெயர் பெறுவனவாம்.

(விளக்கம்) கருத்தளவு-அனுமானப் பிரமாணம். அனுமானமாவது சாத்தியத்தை ஒழியச் சம்பவியாததாகிய சாதனத்தால் சாத்தியத்தைப் பற்றிப் பிறக்கும் ஞானமாகும் என்பர் நீலகேசி உரையாசிரியர் (நீலதரும-செய் 92). அனுமேயம் ஆராய்ந்துணரப்படுவது. அது மூவகை உற்று என மாறுக.

இதுவுமது

29-40 : பொது..............உணர்தல்

(இதன் பொருள்) பொது வெனப்படுவது-இவற்றுள் பொதுக் கருத்தளவை என்று கூறப்படுவது; சாதன சாத்தியம் இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும்-ஏதுவும் துணி பொருளும் ஆகிய இவை இரண்டும் தம்முள் தொடர்பின்றி இருந்தவிடத்தும்; கானம் கடம் திகழ்யானை ஒலி கேட்டோன்-காட்டில் நின்றும் வருகின்ற மதத்தால் விளங்கும் யானையினது பிளிற்றொலியைக் கேட்டவன் ஒருவன்; உடங்கு எழில் யானை அங்கு உண்டென உணர்தல்-அவ்வொலியோடு ஒருங்கே எழுச்சியுடைய மானையானது அக்காட்டின்கண் உண்டு என்று உணர்ந்து கொள்ளுதலாம்; எச்சம் என்பது வெள்ள ஏதுவினால் அத்தலை மழை நிகழ்வு நிச்சயித்து உரைத்தல்-இனி எச்சம் என்னும் கருத்தளவை மாற்றில் பெருகிவரும் வெள்ளமாகிய ஏதுவினால் அவ்வியாது தோன்றுதற்கிடனான சேயதாகிய அவ்விடத்தே மழை பெய்திருக்க வேண்டும் என்று துணிந்து கூறுதல்; முதல் என மொழிவது-இனி முதல் என்று கூறப்படும் கருத்தளவையாவது; கருகொள் முகில் என்று கூறப்படும் கருத்தளவையாவது; கருகொள் முகில் கண்டு இது மழை பெய்யும் என இயம்பிடுதல்-சூல்கொண்டு வருகின்ற மேகத்தைப் பார்த்து இம்மேகம் ஒருதலையாக மழை பொழியும் என்று துணிந்து கூறுதலாம்; என்னும் ஏதுவின் ஒன்று முக்காலம் தன்னில் ஒன்றின் சார்ந்து உளது ஆகி-என்று இங்ஙனம் கூறப்படுகின்ற மூன்று ஏதுக்களுள் வைத்து யாதேனும் ஒன்று இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலங்களுள் வைத்து ஒரு காலத்தைப் பொருத்தி உளதாகா நிற்பவும்; மாண்ட உயிர் முதல்-அறிவினால் மாட்சிமைப்பட்ட உயிராகிய வினை முதலும் முன் காண்டல் அளவைக்குக் கூறப்பட்டபடி உணர்வும் கருவிகளும் ஆகிய இவற்றால் குற்றம் இலதாய் இருந்து; காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல்-தான் காட்சியால் கண்ட பொருளை ஏதுவாகக் கொண்டு ஆராய்ந்து, கண்டிலாத பொருளுண்மையை உணர்ந்து கொள்ளுதலாம் என்றான் என்க.

(விளக்கம்) பொது-இதனைக் காரணனுமானம் எனவும் பூர்வானுமானம் எனவும் கூறுப. பொது முதலிய இம்மூன்றன் இயல்பையும்,

இடித்து மின்னி இருண்டு மேக
மெழுந்த போதிது பெய்யுமென்
றடுத்த தும்அகில் சந்த முந்தி
அலைத்துவார்புனல் ஆறுகொண்
டெடுத்து வந்திட மால்வ ரைக்க
ணிருந்து கொண்டல் சொரிந்ததென்று
முடித்ததும் இவை காட்சி யன்றனு
மான மென்று மொழிந்திடே

எனவரும் (சிவ, சித்தி. பரபக்கம் உலோகாயதன் மதமறுதலை, 2) செய்யுளானும் உணர்க. அந்நுவயம்-சேர்க்கை. அஃதாவது காரண காரியங்களுக் கிடையே இயற்கையாக அமைந்த தொடர்பு. கடம்-மதம். கானம்-காடு. உடங்கு-ஒருங்கு. எச்சம்-இதனைச் சேடானுமானம் எனவும் காரியானுமானம் எனவும் கூறுப. வெள்ளம் ஆகிய ஏது என்க. மழைநிகழ்வு-மழைபெய்தமை. கருக்கொள் முகில்-சூல் கொண்ட மேகம். இது-இம்மேகம். காண்டற் பொருள்-கண்ணால் கண்ட பொருள். கண்டிலது-காணப்படாத பொருள்.

3. உவமம், 4. ஆகமம், 5. அருத்தாபத்தி, 6. இயல்பு, 7. ஐதிகம்.

41-50 : உவமை...................தெளிதல்

(இதன் பொருள்) உவம மாவது-உவமஅளவை என்று சொல்லப்படுவது; ஒப்புமை அளவை-கண்டதும் காணாததுமாகிய இரண்டு பொருள்களின்கண் கிடந்த பொதுத்தன்மைகொண்டு கேள்வி அறிவினால் பண்டு காணாத பொருளை உணர்ந்து கொள்ளுதலாம், அஃதாவது; கவயமா ஆபோலும் என-கவயமா என்னும் காட்டு விலங்கினை அறியாதான் ஒருவனை அது பசுவைப் போன்றிருக்கும் என்று கேள்வியுற்றிருந்தவன் பின்னர்க் காட்டின்கண் ஆப்போன்றதொரு விலங்கைக் கண்டு இதுவே கவயமா என; கருதல்-துணிதலாம்; ஆகம அளவை-இனி நூல் அளவையாவது; அறிவன் நூலால் போக புவனம் உண்டு என புலங்கொளல்-வினையின் நீங்கி விளங்கிய அறிவினையுடைய நூலாசிரியன் நூலின்கண் ஓதியிருத்தல் கண்டு இவ்வுலகிற்கப்பால் துறக்கமும் நரகமுமாகிய வேறு உலகங்களும் உண்டு என்று துணிதல்; அருத்தாபத்தி-அருத்தாபத்தி என்னும் அளவையாவது; ஆய்க்குடி கங்கையிருக்கும் என்றால்-ஒருவன் இடையர் வாழும் சேரி கங்கையின்கண் உளது என்று கூறியவழி; கரையில் என்று எண்ணல்-அது கேட்டவன் கங்கை என்னும் சொல் கரை என்னும் பொருட்டு ஆகும். ஆதலின் கங்கையாற்றின் கரையில் இடைச்சேரி உளது என்று துணிதல்; இயல்பு-இனி இயல்பு என்னும் அளவையாவது; யானைமேல் இருந்தோன்-யானைமேல் ஏறி அதனைச் செலுத்துதற்கு அமைந்திருந்தோன் ஒருவன் கொடு என்று கையை நீட்டிய பொழுது அது கேட்டோன் அவன் கேட்கும் பொருள் தோட்டியே என்றறிந்து; தோட்டிக்கு அயல் ஒன்று ஈமாது அதுவே கொடுத்தல்-தான் துணிந்த தோட்டிக்கு வேறாக மற்றொன்றனையும் கொடாமல் அத்தோட்டியையே கொடுத்தல் ஆகும்; ஐதிகம் என்பது உலகுரை-இனி ஐதிக அளவை என்பது செவி வழியாக வருகின்ற உலகுரையே ஆம் அஃதாவது; இம்மரத்து எய்தியது ஓர் பேய் உண்டு என-உலகத்தோர் ஒரு மரத்தைக் குறித்து இம்மரத்தின்கண் உறைவதொரு பேய் உளது என்று நெடுநாளாகக் கூறிவருதலால் அது கேட்டோர் அங்ஙனமே அம்மரத்தில் ஒரு பேய் உளது என்று துணிதலாம் என்றான் என்க.

(விளக்கம்) உவமை-இருபொருளின்கண் கிடந்த ஒப்புமைத்தன்மை. இதனை ஒக்கும் இது எனக் கேட்டிருந்த ஒருவன் இதற்கும் அதற்கும் உள்ள ஒப்புமையைக் கண்டு பண்டு கண்டறியாத அதனை அவ்வொப்புமை காரணமாக அறிந்து கொள்ளுதல். கவயமா-ஆமா-காட்டுப்பசு. இது நாவால் நக்கியே பிறஉயிரைக் கொன்றுவிடும் ஒரு கொடிய விலங்கு. இக்காரணத்தால் இதுபற்றி உணர்த்தலும் உணர்தலும் வேண்டிற்று கண்ணன் கருமுகில் போல் வண்ணன் எனக் கேட்டவன் அவ்வுவமையால் அக்கண்ணனை அவ்வண்ணமுடையோனாகக் கருதி உணரும் உணர்ச்சியும் இவ்வளவையின் பாற்படும். ஆகமம்-முதனூல். அறிவன் என்றது வினையின் நீங்கி விளங்கிய அறிவனை. என்னை? அவனே நூல் செய்யும் தகுதி உடையன் ஆகலின் என்க. இதனை,

வினையி னீங்கி விளங்கி வறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும்  (தொல்.மரபி.96)

என்பதனானு முணர்க. போகபுவனம்-உயிர்கள் இவ்வுலகத்தே செய்யும் நல்வினை தீவினைகட்குரிய பயனாகிய இன்பதுன்பங்களை நுகர்தற்குரிய உலகங்கள், இப்போகபுவனங்கள் சமயங்கள்தோறும் மாறுபடும் எனினும் எல்லாச் சமயத்தார்க்கும் பொருந்தப் பொதுமறை செய்த அறிவன் நூலாகிய திருக்குறளினும்,

அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை
யாரிரு ளுய்த்து விடும்          (குறள்-121)

எனவரும் குறளின்கண் போகபுவனம் கூறப்பட்டிருத்தலும் உணர்க. இனி அருத்தாபத்தியின் இயல்பை வரும் செய்யுளால் உணர்க.

அடுத்துல கோதும் பொருளருத் தாபத்தி யாமதுதா
னெடுத்த மொழியினஞ் செப்புவ தாகுமிவ் வூரிலுளர்
படைத்தவ ரென்னிற் படையா தவருமுண் டென்றுமிவன்
கொடுப்பவனென்னிற் கொடாதாரு முண்டென்றுங் கொள்வதுவே (சிவ.சித்தி.அளவை-உரை)

எனவரும்,

பகலுண்ணான் பருத்திருப்பான் என்புழி இவன் இரவில் நன்கு உண்ணுவான் என்றுணர்வதும் அஃது. இயல்பளவைக்கு இங்ஙனமே,

மாமே லிருந் தொருகோறா வெனிற்சுள்ளிக் கோறாலும்
சோமே லிருந்தொரு கோறாவெனிற் றரலே துணிந்து
பூமேவு கண்ணமுத் தங்கோல் கொடுத்தலும் பூதலத்தே
நாமேவி யல்பென்று கூறுவர் நல்லசொன் னாவலரே

(என்றும் வரும் மேற்படி சிவசித்தி அளவை உரை மேற்கோள்) எனவரும் செய்யுளினும் கூறப்பட்டிருத்தல் உணர்க. இனி ஐதிக அளவைக்கு,

கொன்பயில் வேலைக் கடல்புடை சூழுங் குவலயத்தோ
ரன்புட னாலி லலகையுண் டென்பர்க ளென்பதுவு
மின்பயில் புற்றில் விடநாக முண்டென்ப ரென்பதுவும்
என்பர்க ணாவல ரென்பது மைதிக மென்பர்களே

எனவரும் செய்யுளின்கண் வேறுமோர் எடுத்துக்காட்டு வருதலும் உணர்க.

8. அபாவம், 9. மீட்சிஒழிவறிவு, 10. உண்டாம் நெறி, என்னும் அளவைகள்

51-56 : அபாவம்..............கூறல்

(இதன் பொருள்) அபாவம் என்பது-அபாவ வளவை என்று சொல்லப்படுவது; இன்மை ஓர் பொருளை அவ்விடத்துத் தவாது தான் இலை என்றல்-அஃதாவது ஒரு பொருள் ஓரிடத்தில் உளதாகத் துணிந்து அங்கு நன்கு தேடியபின் அப்பொருள் அங்கு இல்லாமை கண்டு அப்பொருள்தான் தேடிய அவ்விடத்தே இல்லை என்று துணிந்து அப்பொருளைத் தான் தேடிய அவ்விடத்தே தனது தெளிவு கெடாதபடி தானே இல்லையென்று துணிதல்; மீட்சி என்பது-மீட்சி அளவை என்று சொல்லப்படுவது வருமாறு; இராமன் வென்றான் என-இராமன் வெற்றி பெற்றனன் என்ற சொல் கேட்டவளவிலே; மாட்சிஇல் இராவணன் தோற்றமை மதித்தல்-அறமாண்பில்லாத இராவணன் தோற்றொழிந்தான் என்பதனையும் துணிதல்; உள்ள நெறி என்பது-உண்டாம் நெறி என்று கூறப்பட்ட அளவையாவது; நாராசத் திரிவில் கொள்ளத்தகுவது காந்தமெனக் கூறல்-இருப்புக்கோலின் சுழற்சியினாலே அறிந்து கொள்ளத்தக்கது அவ்விரும்பின்கண் காந்தம் உண்மை என்று துணிதல்;

(விளக்கம்) ஓரிடத்தே ஒருபொருள் இருக்கக்கூடும் என்று ஆராய்பவன் அப்பொருள் அங்கு இல்லை என்று துணிதலுக்கு அப்பொருளின் இன்மையே காரணமாதலின் அதுவும் ஓர் அளவையாயிற்று. தவாது என்றது தனது துணிவு பிழைபடாமல் என்றவாறு. துணிவாவது அப்பொருள் அவ்விடத்து இல்லை என்பது. இவ்வளவையை என்று மபாவம் முன் அபாவம் ஒன்றினென்றபாவம் எனப் பல்வேறுவகையானும் வகுத்து ஆராய்தலும் உண்டு. மீட்சியொழிவு அறிவு என்பதனை ஈண்டு மீட்சி என்றே ஓதியது மீட்சி அளவை என்றும் அது வழங்கப்படும் என்பது அறிவித்தற்கு. இதனை ஒழிபளவை எனவும் பாரிசேடவளவை எனவும் கூறுப. இவ்வளவைக்குச் சித்தியாரில் மறைஞான தேசிகர் எடுத்துக்காட்டும் செய்யுள் வருமாறு-

சீரா ரொழிபென்று செப்பப் படுவது திண்புவிமேற்
போராடி நின்று பொருதா ரிருவர்தம் போர்க்களத்துப்
பாரா ரிராகவன் வென்றா னெனிற்றன் பரிசழிந்து
நேரா மிராவணன் றேற்றசொல் லாகி நிகழ்வதுவே

எனவரும், இனி உண்டாநெறி எனினும் உள்ளநெறி எனினும் சம்பவ அளவை எனினும் ஒரு பொருளன. இதன் இயல்பினைச் சிவ.சித்தி-சுப அளவை மேற்கோளாக வரும்.

துயக்கற வுண்மை யென நா வலர்க டுணிந்துரைப்ப
தியற்கைப் பொருளினை யிற்றென லாமிது தானுரைக்கின்
வியக்குற்ற கால்சலிக் குந்தீச் சுடும்விய னீர்குளிரும்
வயக்குற்ற மண்வலி தென்றுபட் டாங்கு வழங்குவதே

எனும் பாட்டானுணர்க.

பிரமாண பாசங்கள்

57-61 : எட்டுள............நிகழ்வ

(இதன் பொருள்) பிரமாண பாசங்கள்-அளவைப் போலிகளும்; எட்டு உள-எட்டு இருக்கின்றன, அவையாவன; சுட்டு உணர்வொடு திரியக்கோடல் ஐயம் தேராதுதெளிதல் கண்டுணராமை-சுட்டுணர்வும் திரியக்கொள்ளுதலும் ஐயமும் தேராதுதெளிதலும் கண்டும் உணராமையும் ஆகிய இவற்றோடு; எய்தும் இல்வழக்கு உணர்ந்ததை உணர்தல் நினைப்பு என நிகழ்வ-சேரும் இல்வழக்கும் உணர்ந்ததை உணர்தலும் நினைப்பும் என்று நிகழ்கின்ற இவ்வெட்டுமாம் என்றான் என்க.

(விளக்கம்) பிரமாணபாசங்கள் எட்டுள என மாறுக. இது தொகுத்துக் கூறல் என்னும் உத்தி. பிரமாணபாசங்கள்-அளவைப் போலிகள். மேலே சுட்டுணர்வு.......நினைப்பன நிகழ்வ என்னுந்துணையும் வகுத்து மெய்ந்நிறுத்தல் என்னும் உத்தி.

அளவைப் போலியின் இலக்கணம்

61-77 : சுட்டுணர்வு...............அளவைகள்

(இதன் பொருள்) சுட்டுணர்வு எனப்படுவது-இனி இவ்வளவைப் போலிகள் எட்டனுள் வைத்துச் சுட்டுணர்வென்னும் அளவைப் போலியாவது; ஏனைபொருளுண்மை மாத்திரை காண்டல்-அறியப் புகுந்த எல்லாப் பொருள்களையும் அவற்றின் உண்மை மாத்திரம் கண்டொழிதலாம்; திரியக்கோடல் ஒன்றை ஒன்று என்றல்-திரியக்கோடல் என்பது ஒன்றை மற்றொன்றாகக் கருதல்; விரிகதிர் இப்பியை வெள்ளியென்று உணர்தல்-அஃதாவது விரிகின்ற ஒளியையுடைய சிப்பியைச் சிப்பி என்றுணராமல் வெள்ளி என்னும் உலோகமாக உணர்வது போல்வனவாம்; ஐயம் என்பது-ஐயம் என்னும் அளவைப் போலியாவது; ஒன்றை நிச்சயியா-கண்டதொரு பொருளைத் தேற்றமாகக் காணாத; மையல் தறியோ மகனோ என்றல்-மயக்கத்தால் தான் கண்ட பொருள் கட்டையோ மகனோ என்று ஐயுற்றுமொழிதல் போல்வது; தேராது தெளிதல்-தேராது தெளிதல் என்னும் அளவைப் போலியாவது; செண்டு வெளியில் தறியை ஓராது மகன் என உணர்தல்-செண்டு வெளியின்கண் நடப்பட்டுள்ள கட்டையை ஆராய்ந்து பாராமல் மகன் என்று உணர்ந்தொழிதல் போல்வதாம்; கண்டு உணராமை-கண்டுணராமையாவது ஒரு பொருளைக் கண்ணாற் கண்டு வைத்து அப்பொருளின் இயல்பு உணராதொழிதலாம், அது வருமாறு; கடுமா புலி ஒன்று அண்டல் கண்டும் அறியாமை-ஒருவன் தன்னைக் கொன்றொழிக்கும் கொடிய விலங்காகிய புலி ஒன்று அணுகி வருதல் கண்டும் அதனால் வரும் தீமையை உணராமை முதலிய போலிக் காட்சியாம்; இல்வழக்கு என்பது-இல்வழக்கென்னும் அளவைப் போலியாவது; முயல் கோடு ஒப்பன சொல்லின் மாத்திரத்தான் கருத்தில் தோன்றல்-முயற்கொம்பு என்பது போலும் பொருள்கள் வாய்மையில் இல்பொருளாகவும் சொற்கேட்ட துணையால் ஓர் உள் பொருள் போலக் கருத்திற்குப் புலப்படுதலாம்; உணர்ந்ததை உணர்தல்-உணர்ந்ததை உணர்தல் என்னும் அளவைப் போலியாவது ஒருவன் நன்குணர்ந்ததனேயே வாளாது மீண்டும் அளவை கூறி உணர்த்துதல், அஃதாவது; உறுபனிக்கு தீப்புணர்ந்திடல் மருந்து என புலங்கொள நினைத்தல்-பிறன் ஒருவனுக்கு மிக்க பனிதரும் துன்பத்திற்குத் தீக்காய்தல் மருந்தென்று கூற முற்படுதல் போல்வன; நினைப்பு எனப்படுவது-நினைத்தல் என்னும் அளவைப் போலியாவது; பிறர் காரணம் நிகழாது நினக்கு இவர் தாயுந் தந்தையும் என்று சொல கருதல்-ஒருவன் காரணமின்றியே உனக்கு இவர் தாயும் தந்தையுமென்று அறிவித்தல் கேட்டு அக்கூற்றினைத் துணிதலாம்; இப்பெற்றிய அளøவைகள்-யான் கூறிய அளவைகள்இத்தன்மையன என்றான்; என்க.

(விளக்கம்) எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பது பற்றி ஒரு பொருளின் உண்மை மட்டும் கண்டொழிதலால் பயனில்லை ஆகலின் சுட்டு அளவைப் போலியாயிற்று. திரியக்கோடல்-இதனை விபரீதக் காட்சி எனவும் கூறுப. ஐயம்: ஒரு பொருளைச் சுட்டுணர்வால் கண்டவன் அதனை அதுவோ இதுவோ என்று ஐயுறுதல். இவையெல்லாம் காட்சிப் போலிகள் என்னை? மெய்க்காட்சி மாசறு காட்சி ஐயம் திரிவு இன்றி விகற்பம் முன்னா ஆசு அற அறிவதாகும், என்பவாகலின் இவையெல்லாம் போலி ஆயின என்க. தேராது தெளிதல் என்பது-ஆராயாது தெளிதலும் பிழைபடுதல் உண்டாதலின் போலியாயிற்று. அளவைகள் நன்மை எய்தும் பொருட்டாகலின் புலியைக் கண்டவன் அதனால் தனக்குவரும் கேட்டை உணராமையால் அதுவும் போலியாயிற்று. அண்டலை என்புழி ஐகாரம் சாரியை. அதனால் எய்தும் தீமையை நன்குணர்த்தும் பொருட்டுப் புலியை எடுத்துக்காட்டினார். பரத்தை முதலியோரைக் கண்டு காமுறுவோர் காட்சியும் அவரால் வரும் தீமை உணராமையின் அக்காட்சியும் அளவைப் போலி என்றற்கு முதலிய கண்டும் அறியாமை என்றார். முயற்கோடு ஒப்பன என்றது ஆகாயப்பூ கழுதைக்கொம்பு காக்கைப் பல் முதலிய இல்பொருள் வழக்குகளையும் அகப்படுத்து நின்றது. இவை சொற்றொடர் மாத்திரையே அன்றிப் பொருள் இல்லாதன ஆகவும் பொருள் போல உள்ளத்தில் தோன்றுதலின் போலியாயிற்று. இக்காட்சி மானதக் காட்சி ஆதலின் கருத்தில் தோன்றல் என்றார். அளவையின்றியும் உலகத்தார் உணர்தற்கு எளிய பொருளை அளவையால் உணர்த்துதலும் போலி என்பார் உணர்ந்ததை உணர்த்தல் என்றார். இஃதுணராது உணர்ந்ததை உணர்தல் எனப்பாடந்திருத்தி உணர்ந்திருந்ததனையே மறித்தும் உணர்தல் என்று உரை கூறி அதனைக் குற்றம் என்று கூறுவார் உரை போலியாம் என்க. என்னை? உணர்ந்ததனை மறித்தும் உணராதார் இவ்வுலகத்தே வாழ்தல் அரிதாகலின் அஃது போலியாதல் எங்ஙனம்? இனி, தான் உணர்ந்ததனை ஆராய்ந்து தெளிய முற்படுவார் யாரே உளர்? இங்ஙனம் இதற்குக் கூறும் விளக்கமும் போலி என்க. நினைப்பு-பிறர் சொன்னதனை நினைத்தல். பிறர் கூற்று பொய்யாதலும் கூடுமாதலின் அதனால் உண்டான நினைப்பும் போலியாயிற்று.

சமயக்கணக்கர்களும் அளவைகளும்

78-86 : பாங்குறும்..............தன்னைவிட்டு

(இதன் பொருள்) பாங்கு உறும்-இவ்வளவைப் பகுதியை மேற்கொள்ளுகின்ற சமயங்கள்; உலோகாயதம் பவுத்தம். சாங்கியம் வைசேடிகம் மீமாஞ்சகமாம்-உலோகாயதமும் பவுத்தமும் சாங்கியமும் வைசேடிகமும் மீமாஞ்சையும் ஆகும்; சமய ஆசிரியர் தாம்-முறையே இச்சமயங்களுக்கு ஆசிரியர் ஆவார்; பிருகற்பதி சினன் கபிலன் அக்கபாதன் கணாதன் சைமினி-பிருகற்பதியும் புத்தனும் கபிலனும் அக்கபாதனும் கணாதனும் சைமினியும் என்னும் இம்முனிவர்களாவார்; மெயப்பிரத்தியம் அனுமானம் சாத்தம் உவமானம் அருத்தாபத்தி அபாவம்-இச்சமயங்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற அளவைகள் தாமும் மெய் முதலிய பொறிகளால் உணரப்படும் காட்சியளவையும் கருதலளவையும் நூலளவையும் உவம அளவையும் அருத்தாபத்தி அளவையும் அபாவ அளவையும் ஆகிய; இப்போது இயன்றுள அளவைகள்-இந்த ஆறு அளவைகளே இப்பொழுது நிரலே அச்சமயக்கணக்கர்களால் வழங்கப்பட்டு வருகின்ற அளவைகளாகும்; என்றவன் தன்னைவிட்டு-என்று அறிவித்தவனாகிய அளவை வாதியை விட்டு மாதவன் வடிவில் அப்பால் செல்லும் மணிமேகலை என்க.

(விளக்கம்) பாங்கு-பகுதி. இவ்வளவைகளின் பகுதி என்க. இவற்றை நிரலே உலோகாயத சமயத்திற்கு ஆசிரியன் பிருகற்பதி, அச்சமயத்திற்கு அளவை காட்சி அளவை மட்டுமே எனவும், பவுத்தத்திற்குப் புத்தன் ஆசிரியன் எனவும் காட்சியும் கருதலும் பவுத்த சமயத்திற்கு அளவை எனவும், சாங்கியத்திற்கு ஆசிரியன் கபிலன் எனவும், அளவைகள் காட்சி கருதல் நூல் ஆகிய மூன்றும் எனவும், நையாயிகத்திற்கு ஆசிரியன் அக்க பாதன், அளவைகள் காட்சி கருதல் நூல் உவமை ஆகிய நான்கும் எனவும், வைசேடிகத்திற்கு ஆசிரியன் கணாதன் எனவும், அளவைகள் காட்சி கருதல் நூல் உவமை அருந்தாபத்தி ஆகிய ஐந்தும் எனவும், மீமாஞ்சகத்திற்கு ஆசிரியன் சைமினி எனவும், அளவைகள், சாட்சி முதல் அபாவம் ஈறாகக் கூறப்பட்ட ஆறுமாம் எனவும் கொள்க. இவையே இப்போது வழங்குவன. எனவே ஏனைய நான்கு அளவைகள் கைவிடப்பட்டன என்றவாறும் ஆயிற்று. மீமாஞ்சையின் ஆசிரியரான சைமினி என்பவர் தாம் கண்ட ஆறளவைகளையும் கைக்கொண்டனர் என்பதனை மீமாஞ்சைச் சருக்கம் (மெய்ஞ்ஞான விளக்கம்-39) மூன்றாம் செய்யுளில்,

காணுதல் கருத லொப்புக் கட்டுரை பொரு ளபாவ
மேணுறு பிரமாணங்க ளிவை யாறே

என்பதனானும் உணர்க. என்றவன்-அளவை வாதி.

சைவவாதி

86-95 : இறைவன்.............உரைத்தனன்

(இதன் பொருள்) இறைவன் ஈசன் என நின்ற சைவவாதி நேர்படுதலும் எவ்வுலகத்திற்கும் முழு முதற்கடவுள் பரசிவமே என உட்கொண்டு அந்நெறி நின்றொழுகும் சைவவாதி தன் எதிரே வருதலும் அவனே நோக்கி; பரசும் நின் தெய்வம் எப்படித்து என்ன-ஐயனே! நீ வழிபடுகின்ற கடவுள் எத்தகையது கூறுக என்று வினவ; இயமானன் இருசுடரோடு ஐம்பூதம் என்று எட்டு வகையும் உயிரும் யாக்கையுமாய் கட்டி நிற்போனும்-உயிரும் ஞாயிறும் திங்களும் ஆகிய இரண்டு ஒளி மண்டிலங்களோடு நிலம் நீர் தீ வளி வெளி ஆகிய இவ்வெட்டு வகைப்பொருள்களும் தனக்கு உயிரும் உடம்புமாகப் படைத்துக் கொண்டு அவற்றின் உள்ளும் புறமும் தன் ஆணையால் கட்டி அவையே தானாய் நிற்பவனும்; கலை உருவினேனும்-மறைமொழியே தனக்கு உருவமாக உடையவனும்; படைத்து விளையாடும் பண்பினேனும்-உலகங்களைப் படைத்தல் முதலிய ஐந்து தொழில்களையும் இடையறாது செய்து விளையாடுகின்ற அருட்பண்பை உடையவனும்; துடைத்து துயர்தீர் தோற்றத்தோனும்-உயிர்களின் மலத்தைத் துடைத்துத் துன்பத்தைத் தீர்க்கின்ற பெருந்தகைமையை உடையோனும்; தன்னில் வேறு தான் ஒன்று இல்லோனும்-தன்னில் பிறிதாக வேறு ஒரு பொருளும் இல்லாதவனும் ஆகிய; அன்னோன் இறைவன் ஆகும் என்று உரைத்தனன்-அத்தகைய சிவபெருமானே எமக்குக் கடவுளாவான் என்று கூறினன் என்க.

(விளக்கம்) பரசுதல்-வழிபடுதல். எப்படித்து-எத்தன்மைத்து. இருசுடர்-ஞாயிறும் திங்களும். இயமானன்-உயிர். இருசுடரோடு........கட்டிநிற்போனும் எனவரும் இதனோடு,

இரு நிலனாய்த் தீயாகி நீரும் ஆகி
இயமானனாய் எறியுங் காற்றும் ஆகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாச மாய்அட்ட மூர்த்தி ஆகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறர் உருவும் தம் உருவும் தாமே யாகி
நெருநிலையாய் இன்றாகி நாளை ஆகி
நிமிர்புன் சடையடிகள் நின்றவாறே

எனவரும் திருநாவுக்கரசருடைய திருத்தாண்டகம் ஒப்புநோக்கற்பாலது. உயிரும் இருசுடரோடு என முன்னர்க் கூட்டுக. உயிர்களே தனக்கு உயிராகவும் ஏனைய பூதங்கள் தனக்குடம்பாகவும் என்பான் இயமானனும் ஐம்பூதமும் இருசுடரும் உயிரும் யாக்கையுமாய்க் கட்டி நிற்போனும் என்றான். இக்கருத்தினை அவையே தானாய் எனவரும் சிவஞான போதத்தானும் உணர்க. கலை என்றது-மறைமொழியை. அஃதாவது திருவைந்தெழுத்து மந்திரத்தை என்க. இதனை,

மந்திர மதனிற் பஞ்ச மந்திரம் வடிவ மாகத்
தந்திரம் சொன்ன வாறிங் கென்னெனிற் சாற்றக் கேள்நீ
முந்திய தோற்றத்தாலும் மந்திர மூலத் தாலும்
அந்தமில் சத்தி யாதிக் கிசைத்தலு மாகு மன்றே

எனவரும் (சிவ-சித்தி-சுப-செய்-79) செய்யுளானும் உணர்க.

இனி, கலை 38-என்றும் இவை சிவபெருமானுடைய உறுப்புகளாக உள்ளவை என்பவாதலின் கலை உருவினேன் என்றானெனினுமாம். என்னை? ஐயாற தன்மிசை எட்டுத்தலையிட்ட மையில்வான் கலை மெய்யுடன் பொருந்தி என வருதலும் காண்க (திருச்சிற்றம்பல-1.பேர்). படைத்து விளையாடும் பண்பினோன் என்பதனோடு, காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி எனவரும் திருவெம்பாவையை ஒப்பு நோக்குக துடைத்தல்-மூலமலத்தை நீக்குதல். துயர்-பிறவித்துன்பம். தோற்றம்-பெருந்தகைமை. தான் ஒன்றிலோன் என்புழி, தான்:அசை.

பிரமவாதி

96-97 : பிரமவாதி............என்றனன்

(இதன் பொருள்) பிரமவாதி பேர் உலகு எல்லாம்-பெரிய அண்டங்களாகிய உலகங்கள் எல்லாம்; ஓர் தேவன் இட்ட முட்டை என்றனன்-ஒப்பற்ற பிரமதேவனால் இடப்பெற்ற முட்டைகள் என்று கூறினன் என்க.

(விளக்கம்) மணிமேகலை சைவவாதியைவிட்டு அப்பால் எதிர்ப்பட்ட பிரமவாதியை வினவ அவன் இங்ஙனம் கூறினன் என்பது கருத்து. பின்வருவனவற்றிற்கும் இஃதொக்கும்.

வைணவவாதி

98-99 : காதல்...............உரைத்தனன்

(இதன் பொருள்) கடல்வணன் புராணம் காதல் கொண்டு ஓதினன்-கடல் போலும் நீலநிறமுடைய விட்டுணுவின் புராணத்தை அன்புற்று ஓதியுணர்ந்த வைணவவாதி இவ்வுலகமெல்லாம்; நாரணன் காப்பு என்று உரைத்தனன் திருமாலால் காக்கப்படுதலின் அவனே முழுமுதற் கடவுள் என்று கூறினான் என்க.

(விளக்கம்) காதல்-இறையன்பு. அவனே முழுமுதற் கடவுள் என்பது குறிப்புப் பொருள். ஓதினன்-பெயர்.

வேதவாதி

100-105 : கற்பம்................கேட்டு

(இதன் பொருள்) கற்பம் கை சந்தம் கால் எண்கண் தெற்று என் நிருத்தம் செவி சிக்கை மூக்கு உற்ற வியாகரணம் முகம் பெற்று-கற்பம் கையாகவும் சந்தோவிசிதி காலாகவும் சோதிடம் கண்ணாகவும் தெளிவாக உள்ள நிருத்தம் காதாகவும் சிக்கை முக்காகவும் அதனையுடைய வியாகரணம் முகமாகவும் இவ்வாறு உறுப்புகளையும் பெற்று; சார்பின்-தோன்றா ஆரணவேதக்கு ஆதி அந்தம் இல்லை-தான் ஒன்றினின்றும் பிறவாத சிறப்பினையுடைய ஆரணமாகிய வேதத்திற்குத் தோற்றமும் இறுதியும் இல்லை ஆதலின்; அது நெறி எனும் வேதியன் உரையின் விதியும் கேட்டு-அது கூறும் நெறியே வீடெய்துவிக்கும் நன்னெறி என்று கூறுகின்ற வேதவாதியின் விதியையும் கேட்டறிந்த பின்னர் என்க.

(விளக்கம்) கற்பம் முதலிய ஆறும் வேதாங்கம் என்பவாதலின் இங்ஙனம் உருவகிக்கப்பட்டன. சந்தம்-சந்தோவிசிதி. எண் என்றது சோதிடத்தை. இனி, இது பற்றி ஆசிரியர் நச்சினார்க்கினியர் இம்முறைமையினைச் சிறிது வேறுபடுத்தி ஆறங்கமாவன உலகியற் சொல்லையொழித்து வைக்கச் சொல்லையாராயும் நிருத்தமும், அவ்விரண்டையு முடனாராய்ந்த ஐந்திரத் தொடக்கத்து வியாகரணமும், போதாயனீயம், பாரத்துவாசம், ஆபத்தம்பம், ஆத்திரேயம் முதலிய கற்பங்களும், நாராயணீயம் வராகம் முதலிய கணிதங்களும் எழுத்தாராய்ச்சியாகிய பிரமமும் செய்யுளிலக்கணமாகிய சந்தமுமாம் (தொல்-புறத்-20-உரை) என்பர். சார்பில் தோன்றாமையாவது அனாதிநித்தியம் என்றவாறு. இதனை நீலகேசியின்கண்,

நாத்திக மல்லது சொல்லலை
யாயின்மு னான்பயந்த
சாத்திர மாவது வேதகின்
றேவாது தான்சயம்பு
சூத்திரி நீயது வல்லைய
லாமையிற் சொல்லுகிலாய்
போத்தந்தி யோவதன் றீமையென்
றான்பொங்கிப் பூதிகனே    (வேத 826)

எனவரும் பூதிகன் கூற்றாலும்,

முன்னுள மறைகள் எனவரும் சங்கற்ப மாயாவதி மதத்தானும் வேதம் அநாதி நித்தியம் எனவரும் பரிமேலழகர் (குறள்-543) உரையானும் உணர்க. வேதக்கு: சாரியையின்றி உருபு புணர்ந்தது. வேதியன், வேதவாதி.

மணிமேகலை உட்கோளும் செயலும்

106-109 : மெய்த்திறம்.............யாதென

(இதன் பொருள்) மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற எத்திறத்தினும் இவர் உரை இசையாது என-அது கேட்ட மணிமேகலை நூல் வழக்கும் உலக வழக்கும் எனக்கூறப்படுகின்றவற்றுள் எந்த வழக்கத்திற்கு அளவைவாதி முதலிய இச்சமயக்கணக்கர் மொழிகள் பொருந்தா என்றுணர்ந்தவளாய் அப்பால்; ஆசிவக நூல் அறிந்த புராணனை-ஆசீவக சமய நூலை நன்கு கற்றுணர்ந்த புராணன் என்னும் தலைவனை அணுகி, பேசும் நின் இறை யார் நூற்பொருள் யாது என-ஐய நின்னாற் கூறப்படும் உன்னுடைய இறைவன் யார் நின் நூல் கூறும் நன்பொருள் யாது என்று வினவா நிற்ப என்க.

(விளக்கம்) மெய்த்திறம்-நூல் வழக்கு. வழக்கென்றது உலக வழ்கினை. மெய்த்திறம் வழக்கு நன்பொரள் வீடெனும் இத்திரம் தத்தம் இயல்பினின் காட்டும் சமயக்கணக்கரும் என விழாவறை காதையினும் (11-13) வருதல் உணர்க. ஆசீவக நூல் நன்குணர்ந்த சமயக்கணக்கர் தலைவனைப் புராணன் என்று வழங்குவது வழக்கம் என்பது நீலகேசியில் துறவோர் தலைவனைப் பூரணன் என்பதனாலும் ஈண்டும் பூரணன் என்பதே புராணன் எனக் கோடற்கும் இடன் இருந்தலானும் உணரலாம்.

காரணம் வேண்டாக் கடவுட் குழாந்தன்னிற்
பேருணர் வெய்திப் பெரிதும் பெரியவன்
பூரண னென்பான் பொருவறக் கற்றவ
னாரணங் கன்னாட்கறிய வுரைக்கும் (நீலகேசி, ஆசீவக-668)

எனவே பூரணன் என்பதே விகாரத்தாலாதல் பிழைபட்டதால் ஈண்டுப் புராணன் என்றாயிற்று என்று கோடல் மிகையன்று என்க.

ஆசிவகவாதி

110-119 : எல்லையில்............படுமே

(இதன் பொருள்) எல்லைஇல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும் புல்லிக் கிடந்து புலப்படுகின்ற வரம்பில் அறிவன் இறை-அது கேட்ட ஆசீவக சமயத் தலைவனாகிய புராணன் அவ்வினாக்களுக்கு விடை இறுப்பவன்:-எல்லையில்லாமல் கிடக்கின்ற பொருள்களில் எல்லாம் அங்கிங்கெனாதபடி எங்கும் எக்காலத்தும் பொருந்திக் கிடந்து பொறிகளுக்குப் புலப்படுகின்ற அனந்தஞானம் உடையவனாகிய மற்கலிதேவன் என்பவனே எம்மால் வழிபடுகின்ற கடவுளாவான்; நூல் பொருள்கள் ஐந்து-எமது நூலாகிய நவகதிர் என்பதன்கண் கூறப்பட்ட பொருள்கள் ஐந்தேயாம், அவைதாம்; உரம் தரும் உயிரோடு ஒரு நால்வகை அணு-அறிவைத் தருகின்ற உயிரணுவோடு நான்கு வகை அணுக்களுமாம்; அவ்வணு உற்றும் கண்டும் உணர்ந்திட-அவ்வுயிரணுவானது தீண்டியும் பார்த்தும் உணர்த்திடும்படி; பெய் வகை கூடி பிரிவதும் செய்யும் நிலம், நீர், தீ, காற்று என நால்வகையின-ஊழ் கூட்டியவாறு தம்முள் கூடிப்பின் பிரிதலையும் செய்யும் நிலஅணுவும் நீரணுவும் தீயணுவும் காற்று அணுவும் என்று கூறப்படும் நாலுவகை அணுக்களும்; மலை மரம் உடம்பு என திரள்வதும் செய்யும் வெவ்வேறாகி விரிவதும் செய்யும்-அவ்வணுக்கள் மலை எனவும் மரம் எனவும் உடம்புகள் எனவும் கூறுங்கால் கூடி ஒன்றாகத் திரள்வதனையும் செய்யும், பிரியுங்கால் வேறு வேறாகி விரிவதனையும் செய்யும்; அவ்வகை அறிவது உயிரெனப்படும்-இங்ஙனம் ஆவதனை அறிவதுதான் உயிர் என்று சொல்லப்படும் என்றான் என்க.

(விளக்கம்) பொருள்கள்-காட்சிப்பொருள்கள். வரம்பில் அறிவு-அனந்தஞானம். இறைவன் என்றது மற்கலி தேவனை. நூல் என்றது அச்சமய நூலாகிய நவகதிர் என்பதனை. அந்நூல் ஒன்பது அதிகாரங்களை உடைத்தாகலின் அப்பெயர் பெற்றது. பொருள்கள் என்றது தத்துவங்களை. இவர் உயிரையும் அணுவென்றே கொள்வர். ஏனை அணுக்களோடு கூடுங்கால் ஏனைய அணுக்களுக்கும் அறிவூட்டும் அணு உயிரணுவே என்பான் உரந்தரும் உயிரோடு என அதனைப் பிரித்தோதினான். அவ்வணு என்றது உயிரணுவை. உயிரணு கூடுவதும் பிரிவதும் ஊழின் செயல் என்பான் பெய்வகைக் கூடிப்பிரிவதும் செய்யும் என்றான். உயிரணு மலை முதலியனவாக ஏனைய அணுக்களோடு கூடித் திரள்வதும் விரிவதும் செய்யும் என்றான். அறிவது உயிர் எனப்படுமே என்றதனால் ஏனை அணுக்கள் அறிவில்லா அணுக்கள் என்றானும் ஆயிற்று. இதுகாறும் உயிரோடு கூடிய ஏனைய அணுக்களையும் அவற்றுள் உயிரணுவின் இயல்பினையும் உணர்த்தியபடியாம். மேலே ஏனை நால்வகை அணுக்களின் இயல்பு கூறுகின்றான்.

நில அணுக்கள் முதலியவற்றின் இயல்பு

120-124 : வற்பம்.........கடன்

(இதன் பொருள்) நிலம் வற்பமாகி உறும்-நிலஅணு வன்மை உடையதாய்ச் செறியும்; நீர் தாழ்ந்து சொல்படு சீதத்தொடு சுவை உடைத்தாய் இழின் என நிலம் சேர்ந்து ஆழ்வது-நீரணு வீழ்ச்சியுற்றுச் சொல்லப்படுகின்ற தன்மையோடு சுவையும் உடையதாய் இழின் என்னும் ஒலியோடு நிலத்தைச் சேர்ந்து அதன்கண் அழுந்திப் போவதாம்; தீ தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து-இனித் தீ அணு சுடுதலும் மேனோக்கிச் செல்லுதலும் ஆகிய இயல்புகளை உடையதாம்; காற்று விலங்கி அசைத்தல் கடன்-காற்றிற்குக் குறுக்காக இயங்கிப் பிற பொருள்களை அசைப்பது இயல்பாம் என்றான் என்க.

(விளக்கம்) இவ்வணுக்களின் இயல்பை,
நிலநீ ரெரிகாற் றுயிரி னியல்பும்
பலநீ ரவற்றின் படுபா லவைதாம்
புலமா கொலியொன் றெழிய முதற்காஞ்
சலமா யதுதண் மையையே முதலாம்  (நீல.ஆசீவ-675)

எனவும்,

எறித்தன் முதலா யினதீ யினவாம்
செறித்த லிரையோ டிவைகாற் றினவா
மறித்தல் லறிதல் லவைதா முயிராம்
குறித்த பொருளின் குணமா லிவையே   (நீல.ஆசிவ-676)

எனவும் வரும் செய்யுளானும் இவற்றிற்கு யாம் எழுதிய உரைகளானும் விளக்கங்காண்க. வற்பம்-வன்மை. உறும்-செறியும். இழின்என என்பது ஒலிக்குறிப்பு. மேற்சேரியல்பு-மேலெழும் இயல்பு. அசைத்தல் என்றமையால் பிறபொருளை அசைத்தல் என்க. கடன்-ஈண்டு இயல்பு என்னும் பொருட்டு.

இதுவுமது

124-134 : இவை...........ஆகும்

(இதன் பொருள்) ஆதிஇல்லா பரம அணுக்கள் இவை-அனாதியாக உள்ள மிகவும் நுணுகிய இவ்வணுக்கள் கூடிப்பிரியும் செயல்களால் மரம் மலை உடம்பு முதலியனவாய்; வேறு இயல்பு எய்தும் விபரீதத்தால்-வேறு வேறாகும் தன்மையால் உண்டாகும் மாற்றங்காரணமாக; யாவதும் தீது உற்று சிதைவது செய்யா புதிதாய்ப் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா-தம்மியல்பில் சிறிதும் கெடுதலும் சிதைதலும் இல்லை அன்றியும், இக்கூட்டரவினால் புதிதாகத் தோன்றுதலும் ஓரணு மற்றோர் அணுவினுள் புகுவதும் இல்லை; முதுநீர் அணுநில அணுவாய் திரியா ஒன்று இரண்டாகி பிளப்பதும் செய்யா அன்றியும் அவல் போல் பரப்பதும் செய்யா-அனாதியாகிய இவ்வணுக்களுள் நீரணு நிலவணுவாகத் திரியவும் மாட்டா ஓரணு இரண்டாகப் பிளந்து போதலும் இல்லை, அல்லாமலும் இவை தமக்கியல்பான வட்ட வடிவத்தினின்று (நெருக்குண்ணுதல் காரணமாக) அவல் போன்ற தகட்டு வடிவமாய் விரியவும் மாட்டா; பலவும் உலாவும் தாமும் உயர்வதும் செய்யும் குலாம் மலை பிறவா கூடும்-இவ்வணுக்கள் பலவும் இயங்குதலும் தாழ்தலும் உயர்தலும் ஆகிய இச்செயல்களைச் செய்யும், மேலும் தம்முள் கூடும் மலையும் பிறவுமாகிய பொருள்களாகவும் கூடும்; பின்னையும் பிரிந்து தம் தன்மையவாகும்-மறுபடியும் பிரிந்துழித் தமக்கியல்பான நுண்ணணுக்களாகி விடும் என்றான் என்க.

(விளக்கம்) காற்றணுக்கள் உலாவும் நீரணு தாமும் ஆழும் தீயணு உயரும் நிலஅணு குலாம் என்று கொள்க. மலை முதலிய உலகப்பொருள்களாகக் கூடும் என்பது கருத்து. தந்தன்மை-தமக்கியல்பான நுண்ணணுவாம் தம்மை என்க. இனி இதனை,

அணுமே யினவைந் தவைதா மனைத்துங்
குணமே யிலவாங் குழுவும் பிரியு
முணன்மே யினுமுள் புகுதல் லுரையேங்
கணமே யெனினும் மொருகா லமிலை        (நீல.ஆசீவ-677)

எனவரும் செய்யுளானும் உணர்க.

இதுவுமது

134-145: மன்னிய..............மாட்டா

(இதன் பொருள்) மன்னிய வயிரமாய் செறிந்து வற்பமும் ஆம்-இவ்வணுக்கள் நிலைபெற்ற காழ்ப்பாய்த் தம்முள் செறிந்து பெரிதும் வன்மை உடைய மரமுமாம்; வேயாய்த் துளைபடும் பொருளா முளைக்கும்-மூங்கில் போன்ற உட்டுளையுடைய புற்களாகவும் முளைக்கும்; தேயாமதிபோல் செழுநில வரைப்பாம்-நிறைத் திங்கள் போன்று வளமான நில உலகமாகவும் திரளும்; நிறைந்த இவ்வணுக்கள் பூதமாய் நிகழின் குறைந்தும் ஒத்தும் கூடாவரிசையின்-இவ்வாறு செறிந்த இவ்வணுக்கூட்டம் தமக்கு வேண்டிய அளவில் குறைந்தாதல் ஒத்தாதல் கூடமாட்டா, அவை கூடுங்கால் தமக்குரிய முறைமையாலே; ஒன்று முக்கால் அரை காலாய் உறும்-ஒன்றும் முக்காலும் அரையும் காலும் ஆகக்கூடும்; துன்றும் மிக்கதனால் பெயர் சொல்லப்படும்-இங்ஙனம் கூடுமிடத்தே அக்கூட்டத்துள் மிகுந்துள்ள அணுக்களாலே பெயர் கூறப்படும்; இக்குணத்து அடைந்தால் அல்லது-ஈண்டுக் கூறப்பட்ட பண்பினால் தம்முள் கூடினாலலலது இவை நிலனாய் சிக்கென்பதுவும் நீராய் இழிவதும் தீயாய் சுடுவதும் காற்றாய் வீசலும் ஆயதொழிலை அடைந்திட மாட்டா-நிலமாகிச் செறிவதும் நீராகி ஒழுகுவதும் நெருப்பாகிச் சுடுவதும் காற்றாகி வீசுவதும் ஆகிய இத்தொழில் செய்யும் ஆற்றலை அடைந்திட மாட்டா என்றான் என்க.

(விளக்கம்) வைரம் என்றது மரத்தின் காழ்ப்பினை. துளை-உள் துளை. வேய் முதலிய பொருளாய் முளைக்கும் என்க. நிலமாகுங்கால் வட்ட வடிவிற்றாய்த் திரளும் என்பான் தேயாமதிபோல் என்று உவமை எடுத்தோதினான். இதனால் நிலம் வட்டவடிவிற்று என்னும் அறிவு பண்டைக்காலத்தும் இருந்தமை புலனாம். இனி, பூதமாய் நிகழ்வதாவது-நிலனாய் நீராய்த் தீயாய்க் காற்றாய் ஒலியாய் நிகழ்வது. இவ்வணுக்கள் பூதங்களாய் ஆகும்போது அவ்வவ்வணுத்திரள் அவ்வப்பூதமாதற்கு வேண்டிய அளவில் கூடும், குறைந்து கூடமாட்டா; பிற அணுக்களின் கூட்டத்தோடு ஒப்பவும் கூடா என்பான் குறைந்தும் ஒத்தும் கூடும் கூடா வரிசையில் கூடும் என்றான். வரிசை-முறைமை. கூடுங்கால், உயிரை ஒழிந்த ஏனைய அணுக்கள் கூடும் இடத்து நிலம் முதலிய நான்கு அணுக்களும் கூடும் ஓரணுவை விட்டு மூன்றணு தம்மில் கூடி நில்லாது, இரண்டணுக்களோடு இரண்டணுவாகக் கூடும். இரண்டும் மூன்றுமாகக் கூடா என்பது கருத்து. இனி ஒன்று முக்கால் அரை காலாய் உறும் என்னும் இதனையே பிறிதோர் ஆற்றால் கூறுவதும் உண்டு. அம்முறைமையாவது நிலத்தில் நாற்றம் உருவம் பரிசம் என்னும் நான்கும் நீரில் சுவை உருவம் ஊறு என்னும் மூன்றும் தீயில் உருவம் ஊறு என்னும் இரண்டும் காற்றில் ஊறு மட்டும் பொருந்தும் என வேறுவாய்பாட்டானும் கூறுப. அஃதாவது நான்கும் மூன்றும் இரண்டும் ஒன்றும் என்றது ஈண்டு ஒன்று முக்கால் அரை காலாய் உறும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை

ஒன்றினை ஒருவி மூன்றங் குற்றிடா திரண்டு விட்டு
நின்றிடா திரண்டு கூடும் நெறி நிலம் நான்கு நீர் மூன்று
இன்றிரண் டழல்கா லொன்றாய் இசைந்திடும் பூமி யிவ்வா
றென்றுநீர் தீகா லாகி ஈண்டுவ தென்றி யம்பும் (சிவ,சித்தி.பரபக்கம்.ஆசிவகன் மதம். 7)

எனவரும் செய்யுளான் உணர்க. மிக்கதனால் பெயர் சொல்லுவதாவது நில அணுமிக்கிருந்தால் நிலம் என்றும் நீரணுயிக்கிருந்தால் நீர் என்றும் இவ்வாறு மிக்கதனால் பெயர் பெறும் என்றவாறு. மேலே சொன்ன முறைப்படி இவ்வணுக்கள் கூடாவிடின் நிலம் முதலியன வன்மையுற்றுத் தாங்குதல் ஒழுகுதல் முதலிய தத்தம் தொழிலைச் செய்யும் திறம் பெறா என்று கொள்க.

இதுவுமது

146-157 : ஓரணு..............இயல்பு

(இதன் பொருள்) ஓர் அணு தெய்வக் கண்ணோர் உணர்குவர்-இவ்வணுக்களில் தனித்ததோர் அணுவைக் கேவலஞானம் என்னும் தெய்வக்கண் உடையோர் மட்டுமே காண்பர்; ஏனோச் அத்தெய்வக்கண் பெறாத மாந்தர் அவ்வணுக்கள்; பூதத்திரட்சியுள் தேரார்-பூதமாகத் திரண்ட வழியும் ஓரணுவைக் கண்டுணரார், இஃது எங்ஙனமெனின்; மாலைப்போதில் ஒரு மயிர் அறியார்-ஒளி மழுங்கிய மாலைப்பொழுதின்கண் தனித்து ஒரு மயிரை அறியமாட்டாதார்க்கு; சாலத்திரள் மயிர் தோற்றுதல் சாலும்-மிகத் திரண்ட மயிர்க்கற்றை காணப்படுதல் போலாம்; கரும்ம் பிறப்பும் கருநீலப் பிறப்பும் பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும் போன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும் என்று இ துறு பிறப்பினும் மேவி-கரியபிறப்பும் கருநீலப் பிறப்பும் பசிய பிறப்பும் செம் பிறப்பும் பொன் பிறப்பும் வெண் பிறப்பும் என்று கூறப்படும் இந்த ஆறுவகைப் பிறப்புகளினும் பொருந்தி; பண்பு உறு வரிசையின்பால் பட்டுப் பிறந்தோர்-தன்மையால் ஒன்றற்கொன்று மிகுகின்ற ஈண்டுக் கூறிய முறைமையின்படி பிறவியுட்பட்டுப் பிறந்தவர்கள், இறுதியாக; கழிவெண் பிறப்பில் கலந்து வீடு அணைகுவர்-வெண் பிறப்பினுள்ளும் மிக்க வெண் பிறப்பில் பிறந்து இறுதியாக வீட்டுலகத்தில் புகுவர்; அழியல் வேண்டார் அது உறற்பாலார்-துன்பம் உற்று நெஞ்சழிதலை விரும்பாத மக்களே அவ்வீட்டுலகத்தை எய்துதற்குரியராவார். இது செம்போக்கின் இயல்பு-இங்ஙனம் கூறும் இது பிறப்புற்றுப் படிப்படியாக உயர்ந்து போகும் நெரிய போக்கின் தன்மையாம் என்றான் என்க.

(விளக்கம்) இதனோடு,

வெண்மைநன் பொன்மை செம்மை நீல்கழி வெண்மை பச்சை
உண்மையிவ் வாறின் உள்ளும் கழிவெண்மை ஓங்கு வீட்டின்
வண்மைய தாகச் சேரும் மற்றவை உருவம் பற்றி
உண்மையவ் வொட்டுத் தீட்டுக் கலப்பினில் உணரும் என்றான்  (சிவ.சித்தி.பரபக்கம், ஆசீவகன்மதம், அ)

எனவரும் செய்யுளையும்,

மணிபுயிர் பொன்னுயிர் மாண்ட வெள்ளியின்
அணியுயிர் செம்புயி ரிரும்பு போலவாம்
பிணியுயி ரிறுதியாப் பேசி னேனினித்
துணிமின் மெனத்தொழு திறைஞ்சி வாழ்த்தினார்  (சீவக-3111)

எனவரும் செய்யுளையும் நினைக. கரும்ம் பிறப்பு முதலிய ஆறு பிறப்புகளும் ஒன்றற்கொன்று உயர்ந்த பிறப்பாம். இங்ஙனமே ஆருகத சமயத்திலும் ஒன்றறிவுயிர் முதலாக உயிர்கள் பிறந்து உயர்வன என்னும் கொள்கையும் உண்டு. கழிவெண் பிறப்பு என்றது மக்கட் பிறப்பினும் மெய்யுணர்வு உடைய மேலாய பிறப்பினை என்க.

இதுவுமது

157-166 : இதுதப்பும்.........விட்டு

(இதன் பொருள்) இதுதப்பும் அது மண்டலம் என்று அறியல் வேண்டும்-இவ்வாறு உயிர்கள் பிறப்புற்றுச் செம்போக்காக உயரும். இம்முறை தவறினால் பின்னரும் கீழ்க் கீழ்ப் பிறப்புகளில் புகுந்து சுழல்வதாம், அங்ஙனம் சுழல்வதனை மண்டலித்தல் என்று அறிந்து கொள்ளுதல் வேண்டும்; பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும் உறுமிடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும் பெரிது அவை நீக்கலும்-உயிர்கள் இவ்வாறு பிறந்துழலுங்கால் அவை செல்வம் முதலியவற்றைப் பெறுதலும் அவற்றை இழத்தலால் வறுமை உறுதலும் இவை வந்துறும் காலத்தே தப்பாமல் வந்துறுதலும் இவற்றால் இன்பதுன்பங்களை நுகர்தலும் மிகவும் அவ்வின்ப துன்பங்கள் நீங்கிப் போகலும்; பிறத்தலும் சாதலும் கருவிற்பட்ட பொழுதே கலக்கும்-பிறத்தலும் இறத்தலும் ஆகிய இவையெல்லாம் நிகழ்தற்குக் காரணமான பழவினைகளும் அவ்வுயிர்கள் தாம் வயிற்றில் கருவாகும் பொழுதே அவ்வுயிரோடு கலந்துவிடும்; இன்பமும் துன்பமும் இவையும் அணு எனத்தகும்-பிறந்தபின் நுகரும் இன்பங்களும் துன்பங்களும் ஆகிய இவை தாமும் அணுக்கள் என்றே கொள்ளத்தகும்; முன் உள ஊழே பின்னும் உறுவிப்பது-உயிர்கள் முற்பிறப்பிலே செய்தமையால் உளதாகிய பழவினையே பின்னர்ப் பிறக்கும் பிறப்பின்கண் ஊட்டுவதாம்; மற்கலி நூலின் வகை என்ன-எங்கள் இறைவனாகிய மற்கலி தேவனுடைய நூலாகிய நவகதிரில் கூறப்பட்ட பொருளின் வகை இதுவேயாம் என்று அறிவுறுத்த; தடுமாற்ற சொல் தொடர்ச்சியைவிட்டு-முன்னுக்குப்பின் முரணுகின்ற அந்த ஆசீவக வாதியோடு சொல்லாடுகின்ற தொடர்பினைக் கைவிட்டு அப்பால் என்க.

(விளக்கம்) பெறுதல்-உணவு உடை உறையுள் முதலிய பேறுகள். இடையூறு-நல்குரவு பிணி முதலியன. உறும் இடம்-அவை வந்தெய்தும் செவ்வி. அவை என்றது பேறுமுதலாகச் சுகம் ஈறாக உள்ளவற்றை. உயிர் கருவில்பட்டபொழுது கலக்கும் என்க. இன்பதுன்பம் பொறி புலன் முதலியவற்றால் ஆதலின் அவையும் அணுவாகும் என்றவாறு. தடுமாற்றச்சொல் தொடர்ச்சி என மாறுக. இதனை,

பேறிழ விடையூ றின்பம் பிரிவிலா திருக்கை மற்றும்
வேறொரு நாட்டிற் சேறல் விளைந்திடு மூப்புச் சாதல்
கூறிய எட்டும் முன்னே கருவினுட் கொண்டதாகும்
தேறிய ஊழிற் பட்டுச் செல்வதிவ் வுலகம் என்றான்

எனவும்,

புண்ணிய பாவம் என்னும் இரண்டணுப் பொருந்த வைத்தே
எண்ணிய இவற்றி னோடும் ஏழென எங்களோடு
நண்ணிய ஒருவன் கூறும் ஞானமிவ் வாற தென்று
கண்ணிய கருத்தி னோர்கள் கதியினைக் காண்பா யென்றான்

எனவும் வரும் செய்யுமோடு ஒப்பு நோக்குக. (சிவ-சித்தி-பர-ஆசீவ-1-10).

நிகண்டவாதி

167-176 : நிகண்ட....................திறத்த

(இதன் பொருள்) நிகண்டவாதியை நின்னால் புகழும் தலைவன் யாக நூல் பொருள் யாவை நீ உரை-அப்பால் மாதவன் வடிவில் நின்ற அம்மணிமேகலை நிகண்டவாதியை எய்தி ஐய! நின்னால் வணங்கி வாழ்த்தப்படுகின்ற கடவுள் யார்? உனது நூலும் அவை கூறும் பொருள்களும் யாவை? அவற்றை எனக்குக் கூறுதி, மேலும்; அப்பொருள் நிகழ்வும் கட்டும் வீடும் மெய்ப்பட விளம்பு என-அப்பொருள் நிகழ்ச்சிகளையும் கட்டு வீடு என்னும் இவற்றின் இயல்புகளையும் வாய்மையாக விளக்கிக் கூறுவாயாக என்று வேண்டா நிற்ப; விளம்பல் உறுவோன்-அது கேட்ட அந்நிகண்டவாதி அவ்வேண்டுகோட்கிணங்கி அவற்றை விளக்கிக் கூறத் தொடங்குபவன்; இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன்-தேவேந்திரனாலும் தொழப்பெறுகின்ற சிறப்பையுடைய அருகனே எங்கள் கடவுளாவான்; தந்த நூல்-அவன் அருளிய நூல் அங்காகமம் முதலிய மூன்றுமாம், அவற்றில் கூறப்பட்ட; பொருள்-பொருள்களாவன; தன்ம அத்திகாயம் கால ஆகாயமும் தீது இல் சீவனும் பரம அணுக்களும்-தன்மாத்தி காயமும் அதன்மாத்தி காயமும் காலமும் ஆகாயமும் அழிவற்ற உயிரும் நுண்ணணுக்களும்; நல்வினையும் தீவினையும்-நல்வினைகளும் தீவினைகளும்; அவ்வினையால் செய்உறு பந்தமும் வீடும் இத்திறத்த-அந்த இருவகை வினைகளாலும் செய்து கொள்ளுகின்ற கட்டும் வினையை ஒழித்தலால் உண்டாகின்ற வீடும் என்னும் இப்பத்து வகையினவாம் என்றான் என்க.

(விளக்கம்) நிகண்டவாதி-சமண சமயத்துள் இரண்டுவகை உண்டு. முற்கூறப்பட்ட ஆசீவகர் ஒருவகை. நிகண்டவாதிகள் ஒருவகை. திகம்பரத்துவத்தால் இருவரும் ஒத்து, அனேகாந்தவாதத்தில் மாறுபடுதலால் இவர் இருவகையினர் ஆயினர் என்க. இந்திரர் பவணேந்திரர் முதலியோர். இவர் பவணேந்திரர் நாற்பத்திருவரும் வியந்தரேந்திரர் முப்பத்திருவரும் கற்பேந்திரர் இருபத்திருவரும் திங்கள் ஞாயிறும் நரேந்திரனும் மிருகேந்திரனும் ஆகிய நூற்றுவரும் ஆவர். நூல் அங்காகமம் பூர்வாகமம் பகுசுருதி ஆகமம் என்னும் மூன்றுமாம். காலால காயம்-காலமும் ஆகாயமும் என்க. உயிர் நித்தியம் என்பான் தீதில் சீவனும் என்றான். தீதில் பரம அணுக்களும் என இரண்டற்கும் இயைப்பினும் ஆம். பந்தம்-கட்டு. நல்வினையும் தீவினையும் ஆகிய இருவினையும் பந்தத்திற்குக் காரணமாகலின் நல்வினையும் தீவினையும் ஆகிய அவ்வினைகளால் செய்யுறு பந்தமும் என்றான். பந்தம் அறுதலே வீடாகலின் வீடு என்று வாளா கூறினான். இவற்றை,

ஆண்டவ னோது நூல்களிற் பதார்த்த மையிரண் டுளவவை யனாதி
காண்டகு காலஞ் சீவன்றன் மாத்தி காயமோ டதன்மாத்தி காயம்
வேண்டுவ தான புண்ணியம் பாவம் விசும்புபுற் கலம்பந்தம் வீடென்
றீண்டுத லுறுமா லின்னவை படைப்ப தின்றியே யியலுமற் றன்றே

எனவரும் (மெய்ஞ்ஞான விளக்கம் 7) செய்யுளானும் உணர்க.

இதுவுமது

177-182 : ஆன்ற...............உரித்தாம்

(இதன் பொருள்) ஆன்ற பொருள் தன் தன்மையதாயும் தோன்று சார்வு ஒன்றின் தன்மையதாயும்-இங்ஙனம் அமைந்த பொருள் தனக்கியல்பாகிய பண்புடையதாயும், தனக்குச் சார்பாகத் தோன்றிய பொருள் ஒன்றனது பண்பை உடையதாயும்; அநித்தமும் நித்தமும் ஆகி நின்று நுனித்த குணத்து-நிலையாமையும் நிலையுதலும் உடையதாகி நின்று இத்தகையதாக ஆராய்ந்தறியப்பட்ட பண்பு காரணமாக; ஓர் கணத்தின் கண்ணே தோற்றமும் நிலையும் கேடு என்னும்-ஒரு கணப்பொழுதிலே காணப்படுதலும் நிலைபெறுதலும் அழிதலும் என்று கூறப்படுகின்ற; மாற்று அரும் மூன்றும் ஆக்கலும் உரித்தாம்-தவிர்க்கவியலாத இந்த மூன்று பண்புகளையும் உண்டாக்குதற்கும் உரிமை உடையதாம் என்க.

(விளக்கம்) இதனை, பொருளோடு நிலையுதலுடைய குணமும்; நிலையாமையுடைய குணமும் பொருளும், காட்டல் வேண்டுமெனின்; கடல் என்னும் பொருளில் நீரின் குணமாகிய குளிர் முதலியன அதன் நிலைக்குணங்களாம். கடலின் முழக்க முதலியன நிலையாக் குணங்கள், இவ்விரு வேறு குணங்களையுடைய கடல் பொருளாம். அன்றியும், பொன் என்னும் பொருளில் நிறமும் திண்மையும் கவர்ச்சியும் முதலாயின நிலைக்குணமாம். வள்ளம் முடி வளை முதலியன நிலையாக் குணங்களாம்; இங்ஙனம் இருவேறு குணங்களையும் உடைய பொன், பொருளாம். இவற்றுள் நிலைக்குணங்களின் நிலையுதற்றன்மையையும் நிலையாக் குணங்களின் நிலையாமையையும் உணர்க. இங்ஙனமாதலின் பொருள் நிலைத்தலும் நிலையாமையும் உடைத்தாம் என்றவாறு. (நீலகேசி: 114)

இனி ஓர் கணத்தில் ஒரு பொருள் தோற்றமும் நிலையும் கேடும் ஆகிய மூன்றனையும் எய்தும் என்பதனை-

உருவப் பிழம்பப் பொருளென்
றுரைப்பனிப் பாறயிர்மோர்
பருவத்தி னாம்பரி யாயப்
பெயரென்பன் பாலழிந்து
தருவித் துரைத்த தயிருரு
வாய்மும்மைத் தன்மையதாந்
திருவத்த தென்பொரு ளாதலைத்
தேர தெளியிதென்றாள்  (நீல-327)

எனவரும் செய்யுளானும் அதற்கு உருவப் பிழம்பாகிய புற்கலத்தைப் பொருள் என்பேன், பால் தயிர் முதலாயின அதனது பரியாயம் என்பேன், பாற்பரியாயத்து நின்ற புற்கலப் பொருள் தயிர்ப் பரியாயமடைந்து பரிணமித்தலின் தோற்றம் நிலையுறுதி என்னும் மூன்றையும் உடையதாய் நின்னாற் குற்றங்கூறப்படாத பெருமைத்தாம் என் பொருள் இதனைத் தெளி, என்றாள் என்க. எனவரும் எமதுரையானும் உணர்க.

இதுவுமது

183-194 : நிம்பம்..................புரிவிற்றாகும்

(இதன் பொருள்) நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம்-வேம்பின் வித்து வேம்பாகவே முறைத்து வளர்வது அதன் நிலையுதல் பண்பாம்; நிம்பத்து அப்பொருள் அன்மை அநித்தியம்-முளையின்கண் விதை காணா தழிதல் நிலையாமையாம்; பயற்றுத்தன்மை கெடாது கும்மாயம் இயற்றி அப்பயறு அழிதலும் காண்க-இனி, பயறு தன்மை கெடாமலே கும்மாயத்தை உண்டாக்கித் தனது உருவம் கெட்டொழிதலும் காண்க; ஏதுத்தருமாத்திகாயம்-இந்நிகழ்ச்சிக்குக் காரணமான தருமாத்திகாயம் என்பது; தான் எங்கும் உளதாய் பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியம் ஆம்-அவ்வாறு நடத்துதற்கு ஏற்ப அதுவும் நித்தியப்பொருளாம்; அதன்மாத்திகாயமும் அப்படித்தாகி-அதன்மாத்திகாயம் என்னும் பொருளும் அப்படியே நித்தியப் பொருளாய்; எப்பொருள்களையும் நிறுத்தல் இயற்றும்-எல்லாப் பொருள்களையும் நிலைநிறுத்துதலைச் செய்யும்; காலம் கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும் மேலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும் ஆக்கும்-இனி, காலம் என்பது கணம் என்னும் குறிய நிகழ்ச்சியையும் அப்பாலும் அக்கணத்தைக் கொண்டு கற்பம் என்று சொல்லுகின்ற நீண்டதொரு நிகழ்ச்சியையும் உண்டாக்குவதாம்; ஆகாயம் எல்லாப் பொருட்கும் பூக்கும் இடங்கொடுக்கும்-ஆகாயம் என்பது எல்லாப் பொருள்களும் மலர்தற்கு இடங்கொடுக்கின்ற பண்புடையதாகும் என்றான் என்க.

(விளக்கம்) இனி, நிம்பம்-வேம்பு. நிம்பம்........அழிதலும் என்னும் இப்பகுதியை,

உருவப் பிழம்பப் பொருளென்
றுரைப்பனிப் பாறயிர்மோர்
பருவத்தி னாம்பரியாயப்
பெயரென்பன் பாலழிந்து
தருவித் துரைத்த தயிருரு
வாய்மும்மைத் தன்மையதாந்
திருவத்த தென்பொரு ளாதலைத்
தேர தெளியிதென்றாள்       (நீல-327)

எனவரும் செய்யுளானும்,

பெற்றது தானுங்கும் மாயத்
திரிபு பயற்றியல்பே
யிற்ற திதுவென திட்டமென்
பாயிவ் விருமையினுந்
தெற்றெனத் தீர்ந்தோர் பொருளென்னை
தேற்றனித் தேற்றலையேன்
மற்றது வாமை மயிரெனச்
சொல்லுவன் மன்னுமென்றான்   (நீல-322)

எனவும் வரும் செய்யுளானும் உணர்க. இனி, பொருள் நிகழ்ச்சிக்கு ஏதுவெனக் கூறிய தருமாத்திகாயம் அதன்மாத்திகாயங்களின் இயல்புகளை,

அத்தியாய மூர்த்தியா யளவி றேசியாய்
ஒத்தள வுலகினோ டுலக லோகமாம்
தத்துவந் தனைச் செய்து தம்மத் தம்மமா
மத்திகள் செலவோடு நிலையிற் கேதுவாம்

எனவும்,

அச்சுநீர் தேரொடு மீனை யீர்த்திடா
அச்சுநீ ரன்றியத் தேரு மீன்செலா
அச்சுநீர் போலத்தம் மத்தி சேறலை
இச்சையு முயற்சியு மின்றி யாக்குமே

எனவும், அந்தரத் தறுபத்து மூன்ற தாகிய
இந்திர படலமு நிரைய மேழ்களு
மந்திர மலைமண்ணு மற்று நின்றிடா
அந்தமி னிலையதம் மத்தி யில்லையேல்

எனவும்,

பறவையின் சிறகொடு பாத நின்றுழி
நெறியினாற் செலவொடு நிலையை யாக்குமால்
உறவிபுற் கலமிவை யோட நிற்றலைச்
செறிவுறத் தம்மத்தம் மத்தி செய்யுமே

எனவும் வரும் (மேரு மந்தர. வைசய 88, 10, 11, 12) செய்யுள்களானும் உணர்க. கணம் எனினும் கணிகம் எனினும் ஒக்கும். கற்பம்-ஊழி. ஈண்டுக்கூறிய காலத்தின் சிற்றளவினையும், பேரளவினையும் கால நீ வேண்டாயாய் கணிகமும் கற்பமும் சாலமும் புனைந்துரைத்தி என வரும் (நீல-297) செய்யுட்கு வரும் விளக்க உரையின்கண்-

இனி, கணம் என்பது ஏழு செங்கழு நீரிதழை யொரு குறட்டிலடுக்கி வலியுடையோனொருவன் மிகவுங் கூரியதோர் உளி வைத்துக் கூடமிட்டுப் புடைத்தால் ஆறாம் புரையற்று ஏழாம் புரையிற் செல்லும் கால வளவாம்; கற்பமாவது ஒரு யோசனை யகன்றுயர்ந்ததொரு வைரமலை. கருவுடையாள் பட்டாடை தேய்க்கப்பட்டுக் கையறத் தேயும் கால வளவாம் என்பது பவுத்தர் கொள்கை என்பதனானும் உணர்க. பூக்கும் இடம்-விரியும் இடம். புரிவு-தன்மை, செயல் எனினுமாம். உளவென்ற பொருட்கெலாம் இடங்கொடுத்துடன் தளர்வின்றி நிற்பது ஆகாயம் என்பது மேருமந்தர புராணம். ( செய்.63)

இதுவுமது

195-201: சீவன்.............அவன்

(இதன் பொருள்) சீவன் உடம்போடு ஒத்துக்கூடி தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும்-உயிரானது பழவினையால் தனக்கெய்திய உடம்போடு இரண்டறக் கலந்து கெடாத சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் புலகன்களை நுகரும்; ஓர் அணு புற்கலம் புறஉரு ஆகும்-உயிரல்லாத ஓர் அணு புற்கலம் ஆம் இவ்வணுவே உயிர்க்கு உடம்பாகவும் ஐம்பெரும் பூதங்களாகவும் திரண்டுள்ள புறப்பொருள்களாகும்; சீர்சால் நல்வினை தீவினை அவை செய்யும் வருவழி. இரண்டையும் மாற்றி-உயிர்க்குச் சிறப்புப் பொருந்துகின்ற நல்வினையையும் துன்பம் தருகின்ற அவை செய்வதற்கும் வருவதற்கும் வாயில்களாகிய ஊற்று செறிப்பு இரண்டனையும் அடைத்து மாற்றி; முன் செய் அருவினைப் பயன் அனுபவித்து அறுத்திடுதல்-முன்னே செய்யப்பட்ட விலக்குதற்கரிய பழவினைகளை நுகர்ந்து அவற்றலாய கட்டை அவிழ்த்து விடுதல்; அது வீடு ஆகும் என்றனன் அவன்-அங்ஙனம் கட்டற்ற அந்நிலையே உயிர்க்கு வீடாகும் என்று கூறினன் நிகண்டவாதி என்க.

(விளக்கம்)

ஓர் அணுவே புற்கலமாம் அவ்வணுவின் திரட்சியே உயிருக்கு உடம்பும் நுகரும் பொருள்களும் ஆகிய புறஉருவங்களாம் என்றவாறு. எனவே அணுக்களின் திரட்சியே சுவை முதலிய புலன்களும் அவற்றின் நிலைக்களனாகிய ஐம்பெரும் பூதங்களும் ஆகிய உயிரில் பொருள்கள் என்றனாம். சீர்சால் நல்வினை எனவே பழிசால் தீவினை எனக் கொள்ளவைத்தான். செய்யும் வழி வரும்வழி என இரண்டையும் என்க. செய்யும் வழி அவா வரும் வழி-அஃது ஊற்று எனப்படும். மாற்றுதல்-அது செறிப்பு எனப்படும் பழவினையை நுகர்ந்து அறுத்திடுதல் உதிர்ப்பு எனப்படும். வீடு காதி அகாதி என்னும் வினைகளினின்றும் நீங்கி விடுதலை பெறுதல். அது-அங்ஙனம் அறுத்திட்டநிலை. அவன்-அந்நிகண்டவாதி. இதனை,

பெரும்பாவ மறத்துய்த்துப் பெறுதும்யாம் வீடென்னோ
மரும்பாவ காரிநீ யாவர்வா யதுகேட்டாய்
வரும்பாவ மெதிர்காத்து மன்னுந்தம் பழவினையு
மொருங்காக வுதிர்த்தக்கா லுயிர்த்தூய்மை வீடென்றாள் (நீல-313)

எனவரும் செய்யுளோடு ஒப்புக்காண்க.

சாங்கியவாதி

201-211 : பின்............வெளிப்பட்டு

(இதன் பொருள்) பின்-அப்பால் மணிமேகலை அந்நிகண்டவாதியை விட்டுச் சாங்கிய சமயத் தலைவனை எதிர்ப்பட்டு வினவிய வழி அவன்; இது சாங்கிய மதம் என்று எடுத்து உரைப்போன்-யான் கூறப்போவது எம்முடைய சாங்கிய மதத்திற்கியன்ற நன்பொருள் என்று சொல்லி அவற்றை எடுத்துச் சொல்லுபவன்; தனை அறிவரிதாய் தான் முக்குணமாய் மனநிகழ்வு இன்றி-தான் அருவமாதலின் மனத்தால் பற்றப்படாததாய்; மாண்பு அமை பொதுவாய் எல்லாப் பொருளும் தோன்றுதற்கு இடமெனச் சொல்லுதல் மூலப்பகுதி சித்தத்து-எப்பொருளுக்கும் தானே காரணம் சிறப்பமைந்த பொதுப் பொருளாய்க் கருத்துப் பொருளும் காட்சிப்பொருளும் ஆகிய எல்லாப் பொருள்களும் பிறத்தற்கிடன் என்று எம்முடைய நூலாற் சொல்லப்பட்டது மூலப்பகுதி என்னும் சித்தமாம்; (சித்தத்து) மான் என்று உரைத்த புத்தி வெளிப்பட்டு-மான் என்று கூறப்பட்ட புத்தி தத்துவம் வெளிப்பட; அதன்கண் அங்கி ஆனது வெளிப்பட்டு-அவ்வான வெளியினூடே காற்றுத்தோன்றா நிற்ப அக்காற்றினின்றும் தீயானது வெளிப்பட; அதன்கண் அப்பின் தன்மை வெளிப்பட்டு-அத்தீயினின்றும் நீரின் தன்மை வெளிப்பட; அதின் மண் வெளிப்பட்டு-அந்நீரினின்றும் மண்ணின் தன்மை வெளிப்பட இவ்வாறு ஐம்பெரும்பூதங்களும் வெளிப்பட்டனவாக என்க.

(விளக்கம்) தனை என்றது மூலப்பகுதியை. முக்குணம்-சாத்துவீகம், இராசதம், தாமதம் என்பன. இனை மனத்திற்கும் முதலாதலின் அதனாற் பற்றப்படா தென்பான் மன நிகழ்வின்றி என்றான். மாண்பு-தான் ஒன்றின் காரியம் ஆகாமல் தானே எல்லாப் பொருளுக்கும் முதலாம் சிறப்பு. முக்குணங்களின் பிழம்பே மூலப்பகுதியாதலின் பொதுவாய் என்றான். மூலப்பகுதி ஆகிய சித்தத்து என்க. எனவே சித்தம் என்பதும் அதற்குப் பெயர் என்பது பெற்றாம். சொல்லுதல்-சொல்லப்படுவது. மான்-மகத்தத்துவம். அதனை மகான் எனவும் கூறுப. புத்தி என்பதும் அதற்கொரு பெயர் என்பான் மானென்றுரைத்த புத்தி என்றான். வெளிப்பட்டு எனவரும் செய்தெ னெச்சங்களைச் செயவென் னெச்சங்களாகத் திரித்துக் கொள்க. அங்கி-தீ. அப்பின் தன்மை என்றது அப்பு என்னும் பெயராந் துணையாக நின்றது. அப்பு-நீர்.

இதுவுமது

212-221: அவற்றின்.............வெளிப்பட்டு

(இதன் பொருள்)  அவற்றின் கூட்டத்தின் மனம் வெளிப்பட்டு ஆர்ப்புறு மனத்து ஆங்கார விகாரமும்-அவ்வைம்பூதக் கூட்டரவின்கண் மனம் என்னும் தத்துவம் தோன்றா நிற்பப் புலன்களோடு கட்டுண்ணும் மனத்தினின்றும் அகங்கார வேற்றுமைகளும்; ஆகாயத்தின் செவி ஒலி விகாரமும்-ஆகாயத்தின் பண்பாகிய செவிக்குப் புலப்படும் ஒலி வேற்றுமைகளும்; வாயுவின் தொக்கும் ஊறு எனும் விகாரமும்-காற்றினின்றும் மெய்யென்னும் பொறியும் அதற்குப் புலனாகும் ஊற்றுப் புலவேற்றுமைகளும்; அங்கியில் கண்ணும் ஒளியுமாம் விகாரமும்-நெருப்பினின்றும் கட்பொறியும் அதற்குப் புலனாம் ஒளி வேற்றுமையும்; தங்கிய அப்பில் வாய்சுவை எனும் விகாரமும்-நிலத்தின்கண் தங்கியுள்ள நீரினின்றும் வாய் என்னும் பொறியும் அதற்குப் புலனாம் சுவை என்னும் புலவேற்றுமையும்; நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும்-மண்ணினின்றும் மூக்கு என்னும் பொறியும் அதற்குப் புலனாம் நாற்றப்புல வேற்றுமையும் பிறக்கும் என; சொலப்பட்டு அவற்றில் தொக்கு விகாரமாய்-எமது நூலின்கண் சொல்லப்பட்டுப் பின்னரும் ஈண்டுச் சொல்லப்பட்ட பொறிகளுள் வைத்து மெய்யின் வேறுபாடாய்; வாக்கு பாணி பரத பாயுரு உபத்தம் என ஆக்கிய இவை வெளிப்பட்டு-சொல்கைகால் எருவாய் கருவாய் என்ற தொழிற்கருவிகள் ஆக வியற்றப்பெற்ற இவ்வைந்தும் தோன்றும் என்றான் என்க.
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 10:17:24 AM
28. கச்சிமாநகர் புக்க காதை

(இருபத்தெட்டாவது தாயரோடு அறவணடிகளையுந் தேர்ந்து கச்சிமாநகர்க்கட் சென்ற பாட்டு.)

இதன்கண்: மணிமேகலை வஞ்சிநகரத்தே இருந்து அந்நகரத்தின்கண் சமயக்கணக்கர் உறையும் இடத்தே சென்று, அளவை வாதிமுதல் பூதவாதி ஈறாக உள்ள சமயக்கணக்கர்களைத் தனித்தனியே கண்டு அவ்வவர் சமயக் கருத்துகளையெல்லாம் வினவி நன்கு தெரிந்து கொண்ட பின்னர், மாதவியையும் சுதமதியையும் அறவணடிகளையும் காண விரும்பி அந்நகரத்தின் உள்ளே புகுந்து பல்வேறு காட்சிகளையும் கண்டு செல்பவள், அங்கொரு தவப்பள்ளியின்கண் தவம் செய்து கொண்டிருந்த தன் மூதாதையாகிய மாசாத்துவானைக் கண்டு தன் வரலாறுகளையும் கூறிப் பவுத்த தருமத்தை கேட்டற்கு விரும்பி அறவணடிகளைத் தேடிக்கொண்டு வந்தனையும், அம்மாசாத்துவானுக்கு அறிவித்த செய்தியும், மாசாத்துவான் தான் வஞ்சி நகரத்திலே தங்குதற்கு உரிய காரணத்தை மணிமேகலைக்கு அறிவித்துக் காஞ்சி நகரத்தில் மழையின்மையால் மன்னுயிர்கள் பசிப்பிணியால் வருந்தி மாய்கின்றன; நீ அந்நகரத்தை எய்தி அவ்வுயிர்கள் ஓம்புதல் வேண்டும் என்று வேண்டிக்கொண்ட செய்தியும், அவன் வேண்டுகோட் கிணங்கிய மணிமேகலை வஞ்சி நகரத்திலிருந்து வான் வழியாகக் காஞ்சி நகரம் புகுந்த செய்தியும், அந்நகரத்தில் புத்த பீடிகையின் மருங்கிருந்து அந்நகரத்தின்கண் பசிப்பிணியால் வருந்தும் மன்னுயிர்களை வரவழைத்து அவற்றிற்கு நல்லுணவளித்துக் காப்பாற்றிய செய்தியும், அந்நிகழ்ச்சியைக் கேட்டுத் தன்னைக் காண வந்த மாதவியையும் சுதமதியையும் அறவண வடிகளையும் கண்டு அன்பு பொங்க அவர் அடிகளில் வீழ்ந்து வணங்கி அவர்களுக்கு அமுதசுரபியில் சுரந்த அறுசுவை உண்டி நல்கி அளவிலாது மகிழ்ந்த செய்தியும் கூறப்படும்.

ஆங்கு தாயரோடு அறவணர்த் தேர்ந்து
வாங்கு வில் தானை வானவன் வஞ்சியின்
வேற்று மன்னரும் உழிஞை வெம் படையும்
போல் புறம் சுற்றிய புறக்குடி கடந்து
சுருங்கைத் தூம்பின் மனை வளர் தோகையர்
கருங் குழல் கழீஇய கலவை நீரும்
எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும்
தம் தமில் ஆடிய சாந்து கழி நீரும்
புவி காவலன் தன் புண்ணிய நல் நாள்
சிவிறியும் கொம்பும் சிதறு விரை நீரும்  28-010

மேலை மாதவர் பாதம் விளக்கும்
சீல உபாசகர் செங் கை நறு நீரும்
அறம் செய் மாக்கள் அகில் முதல் புகைத்து
நிறைந்த பந்தல் தசும்பு வார் நீரும்
உறுப்பு முரண் உறாமல் கந்த உத்தியினால்
செறித்து அரைப்போர் தம் செழு மனை நீரும்
என்று இந் நீரே எங்கும் பாய்தலின்
கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும்
ஒன்றிய புலவு ஒழி உடம்பின ஆகி
தாமரை குவளை கழுநீர் ஆம்பல்   28-020

பூமிசைப் பரந்து பொறி வண்டு ஆர்ப்ப
இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து
வந்து எறி பொறிகள் வகை மாண்பு உடைய
கடி மதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில்
பசு மிளை பரந்து பல் தொழில் நிறைந்த
வெள்ளிக் குன்றம் உள் கிழிந்து அன்ன
நெடு நிலைதோறும் நிலாச் சுதை மலரும்
கொடி மிடை வாயில் குறுகினள் புக்கு
கடை காப்பு அமைந்த காவலாளர்
மிடைகொண்டு இயங்கும் வியன் மலி மறுகும்  28-030

பல் மீன் விலைஞர் வெள் உப்புப் பகருநர்
கள் நொடையாட்டியர் காழியர் கூவியர்
மைந் நிண விலைஞர் பாசவர் வாசவர்
என்னுநர் மறுகும் இருங் கோவேட்களும்
செம்பு செய்ஞ்ஞ்அரும் கஞ்சகாரரும்
பைம்பொன் செய்ஞ்ஞ்அரும் பொன் செய் கொல்லரும்
மரம் கொல் தச்சரும் மண்ணீட்டாளரும்
வரம் தர எழுதிய ஓவிய மாக்களும்
தோலின் துன்னரும் துன்ன வினைஞரும்
மாலைக்காரரும் காலக் கணிதரும்   28-040

நலம் தரு பண்ணும் திறனும் வாய்ப்ப
நிலம் கலம் கண்டம் நிகழக் காட்டும்
பாணர் என்று இவர் பல் வகை மறுகும்
விலங்கரம் பொரூஉம் வெள் வளை போழ்நரோடு
இலங்கு மணி வினைஞ்அர் இரீஇய மறுகும்
வேத்தியல் பொது இயல் என்று இவ் இரண்டின்
கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும்
பால் வேறு ஆக எண் வகைப் பட்ட
கூலம் குவைஇய கூல மறுகும்
மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும்   28-050

போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும்
கண் நுழைகல்லா நுண் நூல் கைவினை
வண்ண அறுவையர் வளம் திகழ் மறுகும்
பொன் உரை காண்போர் நல் மனை மறுகும்
பல் மணி பகர்வோர் மன்னிய மறுகும்
மறையோர் அருந் தொழில் குறையா மறுகும்
அரைசு இயல் மறுகும் அமைச்சு இயல் மறுகும்
எனைப் பெருந் தொழில் செய் ஏனோர் மறுகும்
மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும்
புதுக் கோள் யானையும் பொன் தார்ப் புரவியும்  28-060

கதிக்கு உற வடிப்போர் கவின் பெறு வீதியும்
சேண் ஓங்கு அருவி தாழ்ந்த செய்குன்றமும்
வேணவா மிகுக்கும் விரை மரக் காவும்
விண்ணவர் தங்கள் விசும்பு இடம் மறந்து
நண்ணுதற்கு ஒத்த நல் நீர் இடங்களும்
சாலையும் கூடமும் தமனியப் பொதியிலும்
கோலம் குயின்ற கொள்கை இடங்களும்
கண்டு மகிழ்வுற்று கொண்ட வேடமோடு
அந்தர சாரிகள் அமர்ந்து இனிது உறையும்
இந்திர விகாரம் என எழில் பெற்று   28-070

நவை அறு நாதன் நல் அறம் பகர்வோர்
உறையும் பள்ளி புக்கு இறை வளை நல்லாள்
கோவலன் தாதை மா தவம் புரிந்தோன்
பாதம் பணிந்து தன் பாத்திர தானமும்
தானப் பயத்தால் சாவக மன்னவன்
ஊனம் ஒன்று இன்றி உலகு ஆள் செல்வமும்
செல்வற் கொணர்ந்து அத் தீவகப் பீடிகை
ஒல்காது காட்ட பிறப்பினை உணர்ந்ததும்
உணர்ந்தோன் முன்னர் உயர் தெய்வம் தோன்றி
மனம் கவல் கெடுத்ததும் மா நகர் கடல் கொள  28-080

அறவண அடிகளும் தாயரும் ஆங்கு விட்டு
இறவாது இப் பதிப் புகுந்தது கேட்டதும்
சாவக மன்னன் தன் நாடு எய்த
தீவகம் விட்டு இத் திரு நகர் புகுந்ததும்
புக்க பின் அந்தப் பொய் உருவுடனே
தக்க சமயிகள் தம் திறம் கேட்டதும்
அவ்வவர் சமயத்து அறி பொருள் எல்லாம்
செவ்விது அன்மையின் சிந்தை வையாததும்
நாதன் நல் அறம் கேட்டலை விரும்பி
மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும்  28-090

சொல்லினள் ஆதலின் தூயோய்! நின்னை என்
நல்வினைப் பயன்கொல் நான் கண்டது? எனத்
தையல் கேள் நின் தாதையும் தாயும்
செய்த தீவினையின் செழு நகர் கேடுற
துன்புற விளிந்தமை கேட்டுச் சுகதன்
அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின்
மனைத்திறவாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து
தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும்
நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே
மலையா அறத்தின் மா தவம் புரிந்தேன்  28-100

புரிந்த யான் இப் பூங் கொடிப் பெயர்ப் படூஉம்
திருந்திய நல் நகர் சேர்ந்தது கேளாய்
குடக் கோச் சேரலன் குட்டுவர் பெருந்தகை
விடர்ச் சிலை பொறித்த வேந்தன் முன் நாள்
துப்பு அடு செவ் வாய்த் துடி இடையாரொடும்
இப் பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள்
இலங்கா தீவத்துச் சமனொளி என்னும்
சிலம்பினை எய்தி வலம் கொண்டு மீளும்
தரும சாரணர் தங்கிய குணத்தோர்
கரு முகில் படலத்துக் ககனத்து இயங்குவோர்  28-110

அரைசற்கு ஏது அவ் வழி நிகழ்தலின்
புரையோர் தாமும் இப் பூம்பொழில் இழிந்து
கல் தலத்து இருந்துழி காவலன்விரும்பி
முன் தவம் உடைமையின் முனிகளை ஏத்திப்
பங்கயச் சேவடி விளக்கி பான்மையின்
அங்கு அவர்க்கு அறு சுவை நால் வகை அமிழ்தம்
பாத்திரத்து அளித்துப் பலபல சிறப்பொடு
வேத்தவையாரொடும் ஏத்தினன் இறைஞ்சலின்
பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும்
அறத்தகை முதல்வன் அருளிய வாய்மை  28-120

இன்ப ஆர் அமுது இறைவன் செவிமுதல்
துன்பம் நீங்கச் சொரியும் அந் நாள்
நின் பெருந் தாதைக்கு ஒன்பது வழி முறை
முன்னோன் கோவலன் மன்னவன் தனக்கு
நீங்காக் காதல் பாங்கன் ஆதலின்
தாங்க நல் அறம் தானும் கேட்டு
முன்னோர் முறைமையின் படைத்ததை அன்றி
தன்னான் இயன்ற தனம் பல கோடி
எழு நாள் எல்லையுள் இரவலர்க்கு ஈத்து
தொழு தவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய  28-130

வான் ஓங்கு சிமையத்து வால் ஒளிச் சயித்தம்
ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றது
கண்டு தொழுது ஏத்தும் காதலின் வந்து இத்
தண்டாக் காட்சித் தவத்தோர் அருளிக்
காவிரிப் பட்டினம் கடல் கொளும் என்ற அத்
தூ உரை கேட்டுத் துணிந்து இவண் இருந்தது
இன்னும் கேளாய் நல் நெறி மாதே!
தீவினை உருப்பச் சென்ற நின் தாதையும்
தேவரில் தோற்றி முன்செய் தவப் பயத்தால்
ஆங்கு அத் தீவினை இன்னும் துய்த்துப்  28-140

பூங்கொடி! முன்னவன் போதியில் நல் அறம்
தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கிக்
காதலி தன்னொடு கபிலை அம் பதியில்
நாதன் நல் அறம் கேட்டு வீடு எய்தும் என்று
அற்புதக் கிளவி அறிந்தோர் கூறச்
சொல் பயன் உணர்ந்தேன் தோகை! யானும்
அந் நாள் ஆங்கு அவன் அற நெறி கேட்குவன்
நின்னது தன்மை அந் நெடு நிலைக் கந்தில் துன்னிய
துவதிகன் உரையின் துணிந்தனை அன்றோ?
தவ நெறி அறவணன் சாற்றக் கேட்டனன்  28-150

ஆங்கு அவன் தானும் நின் அறத்திற்கு ஏது
பூங்கொடி! கச்சி மா நகர் ஆதலின்
மற்று அம் மா நகர் மாதவன் பெயர் நாள்
பொன் தொடி தாயரும் அப் பதிப் படர்ந்தனர்
அன்னதை அன்றியும் அணி இழை! கேளாய்
பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்து
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின்
அந் நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர்
இன்மையின் இந் நகர் எய்தினர் காணாய்
ஆர் உயிர் மருந்தே! அந் நாட்டு அகவயின்  28-160

கார் எனத் தோன்றிக் காத்தல் நின் கடன் என
அருந் தவன் அருள ஆய் இழை வணங்கித்
திருந்திய பாத்திரம் செங் கையின் ஏந்திக்
கொடி மதில் மூதூர்க் குடக்கண் நின்று ஓங்கி
வட திசை மருங்கின் வானத்து இயங்கித்
தேவர் கோமான் காவல் மாநகர்
மண் மிசைக் கிடந்தென வளம் தலைமயங்கிய
பொன் நகர் வறிதாப் புல்லென்று ஆயது
கண்டு உளம் கசிந்த ஒண் தொடி நங்கை
பொன் கொடி மூதூர்ப் புரிசை வலம் கொண்டு  28-170

நடு நகர் எல்லை நண்ணினள் இழிந்து
தொடு கழல் கிள்ளி துணை இளங் கிள்ளி
செம் பொன் மாச் சினைத் திருமணிப் பாசடைப்
பைம் பூம் போதிப் பகவற்கு இயற்றிய
சேதியம் தொழுது தென்மேற்கு ஆக
தாது அணி பூம்பொழில் தான் சென்று எய்தலும்
வையம் காவலன் தன் பால் சென்று
கைதொழுது இறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன்
கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள்
நாவல் அம் தீவில் தான் நனி மிக்கோள்  28-180

 அங்கையின் ஏந்திய அமுதசுரபியொடு
தங்காது இப் பதித் தருமதவனத்தே
வந்து தோன்றினள் மா மழை போல் என
மந்திரச் சுற்றமொடு மன்னனும் விரும்பி
கந்திற்பாவை கட்டுரை எல்லாம்
வாய் ஆகின்று என வந்தித்து ஏத்தி
ஆய் வளை நல்லாள் தன்னுழைச் சென்று
செங்கோல் கோடியோ செய் தவம் பிழைத்தோ
கொங்கு அவிழ் குழலார் கற்புக் குறைபட்டோ
நலத்தகை நல்லாய்! நல் நாடு எல்லாம்  28-190

அலத்தல்காலை ஆகியது அறியேன்
மயங்குவேன் முன்னர் ஓர் மா தெய்வம் தோன்றி
உயங்காதொழி நின் உயர் தவத்தால் ஓர்
காரிகை தோன்றும் அவள் பெருங் கடிஞையின்
ஆருயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும்
ஆங்கு அவள் அருளால் அமரர் கோன் ஏவலின்
தாங்கா மாரியும் தான் நனி பொழியும்
அன்னாள் இந்த அகல் நகர் புகுந்த
பின் நாள் நிகழும் பேர் அறம் பலவால்
கார் வறம் கூரினும் நீர் வறம் கூராது  28-200

பார் அகம் விதியின் பண்டையோர் இழைத்த
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியொடு
மா மணிபல்லவம் வந்தது ஈங்கு என
பொய்கையும் பொழிலும் புனைமின் என்று அறைந்து அத்
தெய்வதம் போய பின் செய்து யாம் அமைத்தது
இவ் இடம் என்றே அவ் இடம் காட்ட அத்
தீவகம் போன்ற காஅகம் பொருந்திக்
கண்டு உளம் சிறந்த காரிகை நல்லாள்
பண்டை எம் பிறப்பினைப் பான்மையின் காட்டிய
அங்கு அப் பீடிகை இது என அறவோன்  28-210

பங்கயப் பீடிகை பான்மையின் வகுத்து
தீவதிலகையும் திரு மணிமேகலா
மா பெருந் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு
ஒத்த கோயிலுள் அத்தகப் புனைந்து
விழவும் சிறப்பும் வேந்தன் இயற்ற
தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்திப்
பங்கயப் பீடிகை பசிப் பிணி மருந்து எனும்
அங்கையின் ஏந்திய அமுதசுரபியை
வைத்து நின்று எல்லா உயிரும் வருக என
பைத்து அரவு அல்குல் பாவை தன் கிளவியின்  28-220

மொய்த்த மூ அறு பாடை மாக்களில்
காணார் கேளார் கால் முடம் ஆனோர்
பேணா மாக்கள் பேசார் பிணித்தோர்
படிவ நோன்பியர் பசி நோய் உற்றோர்
மடி நல்கூர்ந்த மாக்கள் யாவரும்
பல் நூறாயிரம் விலங்கின் தொகுதியும்
மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி
அருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய்
பெருந் தவர் கைப் பெய் பிச்சையின் பயனும்
நீரும் நிலமும் காலமும் கருவியும்   28-230

சீர் பெற வித்திய வித்தின் விளைவும்
பெருகியதென்ன பெரு வளம் சுரப்ப
வசித் தொழில் உதவி வளம் தந்தது என
பசிப் பிணி தீர்த்த பாவையை ஏத்திச்
செல்லும்காலை தாயர் தம்முடன்
அல்லவை கடிந்த அறவண அடிகளும்
மல்லல் மூதூர் மன் உயிர் முதல்வி
நல் அறச்சாலை நண்ணினர் சேறலும்
சென்று அவர் தம்மைத் திருவடி வணங்கி
நன்று என விரும்பி நல் அடி கழுவி  28-240

ஆசனத்து ஏற்றி அறு சுவை நால் வகைப்
போனகம் ஏந்தி பொழுதினில் கொண்டபின்
பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து
வாய்வது ஆக என் மனப்பாட்டு அறம் என
மாயை விட்டு இறைஞ்சினள் மணிமேகலை என்  28-245

உரை

(இதன் கண் 1 முதல் 98 ஆம் அடிவரையில் மணிமேகலை நகரத்தில் புகுந்து செல்பவள் கண்டு செல்லும் காட்சிகளின் வண்ணனையாய் ஒரு தொடர்.)

மணிமேகலை வஞ்சியில் அகநகரத்துள்ளே புகுந்து செல்லுதல்

1-4 : ஆங்கு..................கடந்து

(இதன் பொருள்) ஆங்கு தாயரோடு அறவணர் தேர்ந்து-அவ்வஞ்சி மாநகரத்தின்கண் மணிமேகலை ஐவகைச் சமயமும் அறிந்த பின்னர் அப்பொழுதே தன்னையீன்ற தாயும் செவிலித்தாய் போல்பவளும் ஆகிய மாதவியும் சுதமதியும் ஆகிய தாயர் இருவரையும் அறவண அடிகளாரையும் காண்டற கெழுந்த தன் அவாக்காரணமாக, அவரைத் தேடிப் புறப்படுபவள்; வாங்குவில் தானை வானவன் வஞ்சியின் வேற்று மன்னரும் உழிஞை வெம்படையும் போல-வளைந்த வில்லேந்திய படைகளையுடைய சேர மன்னனுடைய வஞ்சி நகரத்தின்மேல் வந்த பகை மன்னர்களும் உழிஞைப்பூச் சூடிய வெவ்விய படைகளும் போல; புறம் சுற்றிய புறக்குடி கடந்து புறத்தே சூழ்ந்துள்ள புறக்குடி இருப்புகளைக் கடந்து போய் என்க.

(விளக்கம்) சுதமதியும் மாதவி போன்று மணிமேகலையின்பால் தாயன்பு மிக்கவள் ஆதலின் அவளையும் உளப்படுத்தித் தாயர் என்று பன்மையில் ஓதினர். உழிஞைப்படை-மதில் வளைக்கும் பகைமன்னர் படை. அவர் உழிஞைப்பூ சூடிவருதல் மரபு. புறக்குடி-புறநகர். இது நால்வகைப்பட்ட வீரரும் செறிந்திருக்கும் இடமாதலின் இங்ஙனம் உவமை எடுத்தோதினர்.

அகழியின் மாண்பு

5-22 : சுருங்கை............உடுத்து

(இதன் பொருள்) மனைவளர் தோகையர்-தமது அகநகரத்தின்கண் தமது மாடமனையுள்ளிருந்து மயில்தோகை போலும் கூந்தலையுடைய மகளிர் தமது; கருங்குழல் கழீஇய-கரிய கூந்தலைக் கழுவி விட்டமையால்; சுருங்கைத்தூம்பின் சுருங்கையாகிய துளை வழியே வந்து கலந்த நறுமணமுடைய; கலவை நீரும்-பல்வேறு மணங்கலந்த நன்னீரும், தந்தம் இல் எந்திரவாவியில் இளைஞரும் மகளிரும் ஆடிய சாந்துகழி நீரும்-தங்கள் தங்கள் இல்லத்தின் உள்ளே அமைத்த எந்திர வாவியின்கண் இளைய ஆடவரும் மகளிரும் ஒருங்கே நீராடியமையால் அவர் அணிந்த நறுமணச் சாந்துகள் கழிக்கப்பெற்ற மணநீரும்; புவிகாவலன் தன் புண்ணிய நல்நாள் சிவிறியும் கொம்பும் சிதறும் விரை நீரும்-உலகங் காவலனாகிய தம்மரசன் பிறத்தற்கியன்ற புண்ணியத்தையுடைய நல்ல நாளிலே அந்நகரமாந்தர் மகிழ்ச்சியால் ஒருவர்மேல் ஒருவர் சிவிறியும் கொம்பும் ஆகிய நீர் வீசும் கருவிகளால் சிதறிய நறுமணக் கலவை நீரும்; மேலை மாதவர் பாதம் விளக்கும் சீல உபாசகர் செங்கை நறுநீரும்-மக்கட் பிறப்பின் மேலெல்லையாகத் திகழும் பெரிய தவவொழுக்கமுடைய துறவோரின் திருவடிகளை விளக்குகின்ற தமக்குரிய நல்லொழுக்கத்தை மேற்கொண்ட இல்லறத்தோர் சிவந்த கைகளால் பெய்யும் நறிய நீரும்; அறம்செய் மாக்கள் அகில் முதல் புகைத்து நிறைந்த பந்தர் தசும்பு வார்நீரும்-அறம் செய்கின்ற மாந்தர் அகில் முதலிய மணப்புகை எடுத்து நீர்ச்சால்களில் நிறைத்துள்ள தண்ணீர்ப் பந்தல்களில் அச்சால்களினின்றும் ஒழுகும் நன்னீரும்; உறுப்பு முரண் உறாமல் கந்த உத்தியினால் செறித்து அரைப்போர் தம் செழுமனை நீரும்-உறுப்புகள் மாறுபடாமல் சேர்த்தற்கியனற் நறுமணப் பொருளைச் சேர்த்துச் சாத்தம்மியில் இட்டுச் சாந்தரைக்கின்ற தொழிலாளருடைய செழிப்புடைய இல்லத்தினின்றும் வருள் நீரும், என்று இந்நீரே எங்கும் பாய்தலின்-என்று இங்குக் கூறப்பட்ட இத்தகைய நறுமணம் கமழும் நீரே அந்நகரத்தினின்றும் எத்திசையினும் தன்னுள் வந்து பாய்தலாலே; கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும்-தன்னுள் வாழும் சினந்த முதலைகளும் இடங்கரு மீன்களும்; ஒன்றிய புலஒழி உடம்பினவாகி-தம் பிறப்போடு பொருந்திய தமக்கியல்பான புலால் நாற்றம் ஒழிந்து நறுமணமே கமழும் உடம்பை உடையனவாகா நிற்பவும்; தாமரை குவளை கழுநீர் ஆம்பல் பூமிசைப் பரந்து-தாமரையும் நீலமலரும் செங்கழுநீர் மலரும் ஆம்பல் மலரும் ஆகிய பன்னிற மலர்களும் தன் மேற்பரப்பெல்லாம் பரந்து விளங்கா நிற்பவும் பொறி வண்டு ஆர்ப்ப-பொன்னிறம் முதலிய பல்வேறு நிறத்தால் அமைந்த புள்ளிகளையுடைய வண்டுகள் எங்கும் முரன்று திரியா நிற்பவும் இவ்வாற்றால்; இந்திர தனு என இலங்கு அகழ உடுத்து-இந்திர வில் போன்று பல்வேறு நிறத்தோடு விளங்குகின்ற அகழியாகிய அழகிய ஆடையை உடுத்துக் கொண்டு என்க. 

(விளக்கம்) சுருங்கைத் தூம்பு-அந்நகரத்திலே பெய்யும் மழை நீரும் இல்லங்களில் மாந்தர் பயன்படுத்தும் நீரும் வெளியேறுதற் பொருட்டு நிலத்தின் கீழ்க்கல்லாலும் சுண்ணத்தாலும் இயற்றப்பெற்ற நீரோடும் குழாய் வழிகள். இதனால் அக்காலத்தே நிலத்தின்கீழே நீர்க்குழாய்கள் அமைந்திருந்த நனி நாகரிகச் சிறப்புணர்க.

நீணிலம் வகுத்து நீர் நிரந்துவந் திழிதரச்
சேணிலத் தியற்றிய சித்திரச் சுருங்கைசேர்
கோணிலத்து வெய்யவாங் கொடுஞ்சுறத் தடங்கிடங்கு (சீவக-142)

எனச் சிந்தாமணியினும் வருதல் காண்க.

மனைவளர் தோகையர் என்றதனால் இல்லத்தின் உள்ளேயே நீராடிக் குழல் கழுவிய நீர் என்பது கொள்க. குழல்-கூந்தல். அது மயிர்ச்சந்தன மணமும் மலர் மணங்களும் விரவியிருத்தலின் கலவை நீர் என்றார். இனி மகளிர் கருங்குழல் கழுவிய மணக்கலவை நீருமாம். என்னை-

பத்துத் துவரினு மைந்து விரையினும்
முப்பத் திருவகை யோமா லிகையினும்
ஊறின நன்னீ ருரைத்தநெய் வாசம்
நாறிருங் கூந்த னலம்பெற வாட்டி  (சிலப் 6 : 76-79)

என்பதனானும் அறிக. எந்திரவாவி வேண்டும்பொழுது நீர் பெருக்கவும் கழிக்கவும் பொறிகள் அமைக்கப்பட்ட செய் நீர்நிலை. இஃது இல்லத்தின் ஊடேயே அமைக்கப்படுவதாம். இவ்வாவியில் செழுங்குடிச் செல்வராகிய இளைஞரும் மகளிரும் தம் தம் இல்லத்தினூடேயே சேர்ந்து நீராடி மகிழ்வர் ஆதலின் தம் தம் இல் ஆடிய என்றார். இல்-மனை. இஃதுணராதார் தந்தமில் என்பதற்குப் பொருள் காண தொழிந்தார். புவி காவலன் புண்ணிய நன்னாள் என்றது மன்னன் பிறந்த நாளை. சிவிறி கொம்பு என்பன நீர் சிதறும் கருவிகளுள் சில. மாந்தருள் மாதவரே மேல் எல்லையின் வரம்பு ஆதலின் மேலை மாதவர் என்றார்; ஐகாரம் சாரியை. சீல உபாசகர்-பவுத்தருள் இல்லறத்தார். இவர் ஐந்து சீலங்களை மேற்கொண்டு ஒழுகுபவர். அவையாவன: கொல்லாமை பொய் சொல்லாமை களவின்மை காமமின்மை இரவாமை என்னும் இவ்வைந்து ஒழுக்கங்களுமாம். இவை இல்லறத்தார் மேற்கொள்ளற்பாலன ஆதலின் அவரை, சீல உபாசகர் என்றார். தசும்புதல்-கசிதலுமாம். உறுப்பு-புகையுறுப்பு. அவையாவன நேர்கட்டி செந்தேன் நிரியாசம் பச்சிலை ஆரம் அகில் உறுப்போடு ஆறு என்பன (சிலப்-5 : 14 உரைமேற்;) கந்த உத்தி என்பது, கலவை செய்தற்கியன்ற முறைகளைக் கூறுகின்ற நூற்பெயர் எனக்கோடலுமாம். எனவே, நூன் முறைப்படி செறித்து அரைப்போர் எனினுமாம். கராம், இடங்கர் என்பன முதலை வகை. கலவை நீரானும் மலரானும் பல்வேறு நிறத்தோடு கிடக்கும் அகழிக்கு வானவில் உவமையாயிற்று.

மதில் அரணும் மாடவாயிலும்

23-28 : வந்தெறி...........புக்கு

(இதன் பொருள்) வந்து எறி பொறிகள் வகை மாண்புடைய பகைவர் வந்துற்றபோது தாமே இயங்கி வந்து அவரைக் கொல்லுகின்ற பொறிகளின் வகையினால் சிறப்புடைய; கடிமதில் ஓங்கிய இடைநிலை வரைப்பின்-காவலையுடைய மதில் ஓங்கி நிற்கின்ற இடைநிலத்திலே; பசுமிளை பரந்து-பசுமையுடைய காவற்காடு பரந்து செறியப்பட்டு; பல்தொழில் நிறைந்த-பலவாகிய சிற்பத்தொழில் நிறைந்துள்ள; வெள்ளிக்குன்றம் உள் கிழிந்தன்ன-வெள்ளிமலையானது நடுவிடம் கிழிந்தாற் போலத் தோன்றுகின்ற; நெடுநிலை தோறும் நிலாச்சுதை மலரும்-நெடியநிலைகள் அமைத்த இடந்தோறும் நிலாப்போன்று சுண்ண ஒளி விரிதற்கிடனான; கொடியிடை வாயில் குறுகினள் புக்கு-வானத்தே உயர்த்திய கொடிகள் செறிந்த மாடவாயிலை எய்தி உள்ளே புகுந்து என்க.

(விளக்கம்) வந்து எறிதல் பகைவர் வந்தவுடன் தாமே இயங்கிவந்து அப்பகைவரைக் கொல்லும் பொறிகள் என்க. இப்பொறி வகைகளை

...................வளைவிற் பொறியும்
கருவிர லூகமுங் கல்லுமிழ் கவணும்
பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்
காய்பொன் னுலையுங் கல்லிடு கூடையும்
தூண்டிலுந் தொடக்கு மாண்டலை யடுப்பும்
கவையுங் கழுவும் புதையும் புழையும்
ஐயவித் துலாமுங் கைபெய ரூசியும்
சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்
எழுவுஞ் சீப்பு முழுவிறற் கணையமும்
கோலுங் குந்தமும் வேலும் பிறவும்   (சிலப் 14: 207-216)

எனப் பிறர் ஓதுமாற்றானு முணர்க.

இடைநிலை வரைப்பு-அகழிக்கும் மதிலுக்கும் இடைக் கிடந்த நிலப்பரப்பு. மிளை-காவற்காடு. தொழில் நிறைந்த நெடுநிலை எனவும், குன்றம் உள் கிழிந்தன்ன நெடுநிலை எனவும் தனித்தனி கூட்டுக.

மறுகுகள்

29-43 : கடை...............மறுகும்

(இதன் பொருள்) கடை காப்பு அமைந்த காவலாளர் மிடை கொண்டு இயங்கும் வியன்மலி மறுகும்-வாயில் காத்தற்கமைந்த காவல் மறவர் செறிந்து இயங்குகின்ற அகலம் மிக்க தெருவும்; பல்மீன் விலைஞர் வெள்உப்பு பகருநர் கள்நொடையாட்டியர் காழியர் கூவியர்-பல்வேறு மீன்களையும் விற்கின்ற பரதவரும் உப்பிவிற்கும் உமணரும் உமட்டியரும் கள்விற்கும் வலைச்சியரும் பிட்டுவாணிகரும் அப்பவாணிகரும்; மைந்நிண விலைஞர் பாசவர் வாசவர் என்னுகர் மறுகும்-ஆட்டிசைறச்சி விற்போரும் இலை அமுதிடுவோரும் பஞ்சவாசம் விற்போரும் என்று கூறப்படுபவராகிய சிறு வாணிகர் தெருவும்; இருங்கோ வேட்களும் செம்பு செய்ஞ்ஞரும் கஞ்சகாரரும் பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன் செய்கொல்லரும்-பெரிய மட்கலவாணிகராகிய குயவரும் செம்பு கொட்டிகளும் வெண்கலக் கன்னாரும் பசிய பொன்னால் அணிகலன் செய்வோரும் பொன் செய்கின்ற உருக்குத் தட்டாரும்; மரங்கொல் தச்சரும் மண்ணீட்டாளரும் வரந்தர எழுதிய ஓவியமாக்களும்-மரம் வெட்டித் தொழில் செய்யும் தச்சரும் சிற்பாசாரியரும் வழிபடுவார்க்கு வரந்தருகின்ற தெய்வத்தன்மை தோன்ற எழுதிய ஓவியங்களையுடைய சித்திரகாரிகளும்; தோலின் துன்னரும் துன்னவினைஞரும் மாலைக்காரரும் காலக் கணிதரும்-தோல் தைக்கும் செம்மாரும் ஆடை தைக்கும் தையற்காரரும் காலங்கணிக்கின்ற கணிவரும்; நலந்தரு பண்ணும் திறனும் வாய்ப்ப நிலம் கலம் கண்டம் நிகழக் காட்டும் பாணர் என்று இவர் பல்வகை மறுகும்-அழகு தருகின்ற பெரும் பண்ணும் சிறு பண்ணும் பொருந்த அவற்றை மூவகை இடமும் யாழும் மிடறும் ஆகிய இவற்றில் நிகழும்படி இசைத்துக் காட்டும் பாணரும் என்று இவரெல்லாம் வாழுகின்ற பலவகைப்பட்ட தெருக்களும் என்க.

(விளக்கம்) மிடை கொள்ளுதல்-செறிவு கொள்ளுதல். வியன்மலி அகலமிக்க. பாசவர்-கயிறு திரித்து விற்பார், பச்சிறைச்சி சூட்டிறைச்சி விற்பாருமாம். இலையமுது-வெற்றிலை. வாசம்-மணப்பொருள். வாசவர்-மணப்பொருள் விற்போர். அவை-தக்கோலம் தீம்புத் தகைசால் இலவங்கம், கப்பூரஞ் சாதியோடைந்து மாம். கோவேட்கள்-குயவர். இவர் வாணிகம் பெரிது என்பது தோன்ற இருங்கோ வேட்கள் என்றார். தட்டார் இருவகைப்படுவர். அவருள் பைம்பொன் செய்ஞ்ஞரும் என்றது பணித் தட்டாரை. பொன் செய் கொல்லர் என்றது, பொன்னை உருக்கி மாசகற்றும் உருக்குத் தட்டார் இரும்பு செய்கொல்லர் முதலியோரை. கொல் தச்சர்ர-கொஃறச்சர் என நிலைமொழி ஈற்று லகரம் ஆய்தமாகத் திரிந்தது. மண்ணீடு-சிற்பம். ஓவியத்தில் தெய்வப்பண்பு திகழ எழுதும் கலைத்திறம் தோன்ற வரந்தர எழுதிய ஓவிய மாக்கள் என்றார். தோலின் துன்னர் என்றது-செம்மாரை. இக்காலத்துச் சக்கிலியர் என்பர். இவரின் வேறுபடுத்துதற்குத் துன்ன வினைஞர் என்றார். இவர் ஆடை முதலியன தைக்கும் தையல்காரர். நலம்-அழகு, இன்பமுமாம். பண்-பாலை குறிஞ்சி மருதம் செவ்வழி என்னும் பெரும்பண். திறம்-அவற்றின் கிளைகள். நிலம்-பண் பிறக்கும் நிலைக்களம். அவை எழுத்தும் அசையும் சீரும் ஆம். இனி மந்தம் உச்சம் சமம் என்னும் மூன்று இடமுமாம். கலம்-யாழ். கண்டம்-மிடறு. ஈண்டுக் கூறப்பட்ட தொழிலாளர் தனித்தனித் தெருவில் வாழ்ந்தனர் என்பது தோன்ற என்று இவர் பல்வகை மறுகும் என்றார்.

இதுவுமது

44-53 : விலங்கரம்..............மறுகும்

(இதன் பொருள்) விலங்கரம் பொரூஉம் போழ்கரோடு இலங்குமணி வினைஞர் இரீஇய மறுகும்-வளைந்த வாளரம் கொண்டு அறுக்கும் வெள்ளிய சங்குகளைப் பிளப்பவரோடு விளங்குகின்ற முத்துக் கோக்கும் தொழிலாளர் தங்கிய தெருவும்; சீவத்தியல் பொதுவியல் என்று இவ்விரண்டின் கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும்-வேத்தியலும் பொதுவியலும் என்று வகுத்துக் கூறப்படுகின்ற இவ்விரண்டு வகையினும் அமைந்த ஆடல்கலை இலக்கணமெல்லாம் அறிந்துள்ள ஆடல் மகளிர் வாழுகின்ற தெருவும், பால் வேறு ஆக எண் வகைப்பட்ட கூலங் குவைஇய கூலமறுகும்-பகுதி இரண்டாக எட்டு வகைப்பட்ட கூலங்களைக் குவித்துள்ள கூலக்கடைத் தெருவும்; மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும்-மரகதரும் சூதரும் வேதாளிகரும் குடியிருக்கின்ற தெருவும்; போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும்-காமவின்பத்தைப் பேணிப் பெருக்கும் பொது மகளிர் வாழுகின்ற அழகிய தெருவும்; கண் நுழைகல்லா நுண் நூல் கைவினை வண்ண அறுசுவையர் வளம் திகழ் மறுகும்-காண்போர் கண்ணொளி புகுதாத நுண்ணிய நூலால் நெய்யும் கைத்தொழிலையுடைய பல்வேறு வண்ணங்களை உடைய ஆடைநெய்யும் தொழிலாளர் வாழுகின்ற செல்வத்தால் திகழுகின்ற தெருவும் என்க.

(விளக்கம்) விலங்கு-வளைவு. அரம்-வாளரம். போழ்நர்-அறுத்துப் பிளப்போர் சங்கறுப்பாரோடு இயைத்துக் கூறுதலின் ஈண்டு இலங்கு. மணி என்றது முத்து என்பது பெற்றாம். கூத்து வேத்தியலும் பொதுவியலும் என இருவகைப்படும். வேத்தியலை அகக்கூத்தென்றும் பொதுவியலைப் புறக்கூத்தென்பாரும் பிற கூறுவாரும் உளர். கூத்தியர்-நாடகக் கணிகையர். கூலங்கள் இரண்டு பகுதியாக ஒவ்வொரு பகுதியினும் எட்டு எட்டு வகை உள்ளன ஆதலின்பால் வேறு ஆக எண் வகைப்பட்ட கூலாம் என்றார். அவை வருமாறு: நெல்லு புல்லு வரகு தினை சாமை இறுங்கு தோரையொடு கழைவிளை நெல்லே இவ்வெட்டும் ஒருபாற்படும் கூலங்கள். இனி எள்ளுக் கொள்ளுப் பயறுழுந்து அவரைகடலை துவரை மொச்சை என்றாங்கு உடன் இவை முதிரைக் கூலத்துணவே என்னும் இவ்வெட்டும் ஒருவகைக் கூலம் என்க. குவைஇய-குவித்த. மாகதர்-இருந்தேத்துவார். சூதர்-நின்றேத்துவார். வேதாளிகர்-பலவகைத் தாளத்திலாடுவார்; சூதர் வாழ்த்த மாகதர்நுவல வேதாளிகரொடு நாழிகை இசைப்ப எனவும் (மதுரைக்-670-671) மாகதப்புலவரும் வைதாளிகரும் சூதரும் எனவும் (சிலப். 26:74-5) பிற சான்றோரும் ஓதுதலுணர்க. போகம் புத்தலாவது காமயின்பத்தைப் போற்றிப் பெருக்கிக் காட்டுதல். பொதுவர்-பொதுமகளிர். நுழைகல்லா-நுழையாத. அறுவையர்-புடைவை விற்போர்; நெய்வோருமாம்.

இதுவுமது

54-65: பொன்னுரை................இடங்களும்

(இதன் பொருள்) பொன் உரை காண்போர் நன்மனை நறுகும்-பொன்னை உரைத்து அதன் மாற்றினை அறிந்து கூறுவோர் வாழுகின்ற அழகிய இல்லங்கள் அமைந்த தெருவும்; பல்மணி பகர்வோர் மன்னிய மறுகும்-பல்வேறு வகைப்பட்ட மாணிக்கம் முதலிய மணிகளை விற்கும் மணிவாணிகர் நிலைத்திருந்து வாழும் தெருவும்; மறையோர் அருந்தொழில் குறையா மறுகும்-வேதியர் தமக்குரிய ஓதலும் ஓதுவித்தலும் முதலிய அரிய தொழில் குறைபடாத தெருவும்; அரைசியல் மறுகும் அமைச்சியல் மறுகும்-அரசு ஆள்பவர் வாழுகின்ற தெருவும் அமைச்சியலோர் வாழுகின்ற தெருவும்; ஏனைப் பெருந்தொழில் செய் ஏனோர் மறுகும்-ஏனைய தானை நடத்துதல் முதலிய பெரிய தொழில்களைச் செய்கின்ற தானைத் தலைவர் முதலியோர் வாழுகின்ற தெருவும்; மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும்-ஊர் மன்றங்களும் ஊரம்பலங்களும் முச்சந்தியும் நாற்சந்தியும்; புதுக்கோள் யானையும் பொற்றார் புரவியும் கதிக்கு உறவடிப்போர் கவின்பெறு வீதியும்-காட்டினின்றும் புதிதாகப் பிடித்துக் கொணர்ந்த யானைகளையும் பொன்னால் ஆகிய சதங்கை மாலை பூட்டிய குதிரைகளையும் அவ்வவற்றின் செலவிற்குப் பொருந்தப் பயிற்றும் யானைப்பாகரும் குதிரைப்பாகரும் வாழுகின்ற அழகுடைய வீதியும்; சேண் ஓங்கு அருவி தாழ்ந்த செய்குன்றமும்-மிக உயர்ந்து அருவி வீழ்கின்ற செய்குன்றங்களும்; வேணவாமிகுக்கும் விரைமரக்காவும்-தன்பால் புகுந்தவருடைய வேட்கையாகிய அவாவினை மிகுவிக்கும் இயல்புடைய நறுமண மலர்களை உடைய இளமரச் சோலைகளும்; விண்ணவர் தங்கள் விசும்பிடம் மறந்து நண்ணுதற்கு ஒத்த நல்நீர் இடங்களும்-தம்பால் வந்துற்ற தேவர்களும் தங்களுக்குரிய வானுலகத்தை மறந்து மீண்டும் வருவதற்குத் தகுந்த இன்பங்களை நல்கும் அழகிய நீர்நிலைகள் அமைந்த இடங்களும் என்க.

(விளக்கம்) பொன் உரை காண்டல்-பொன்னைக் கட்டளைக் கல்லின்கண் உரைத்து மாற்றறிதல். மணி-மாணிக்கம் முதலியன. மறையோர் தொழில்-ஓதல் ஓதுவித்தல் வேட்டம் வேட்பித்தல் ஈதல் ஏற்றல் என்னும் இவ்வறுவகைத் தொழிலுமாம். அரைசு-பெருநில மன்னரும் குறுநில மன்னரும்; ஏனை-எனை என முதல் குறுகியது; பெருந்தொழில் படைத்தொழில் முதலியன. மன்றம் பொதியில் என்பன ஊர்ப்பொது விடங்கள். இவ்விடங்களிலே ஊர் மக்கள் ஒருங்கு கூடியிருந்து வழக்காடுதல் அறங்கூறுதல் ஊர்ப்பொதுப் பணிகளை ஆராய்தல் முதலியன செய்வர். இவற்றுள் மன்றம் என்பது மரநிழலையுடைய வெளியென்றும் பொதியில் என்பது புதியவர் வந்து தங்கும் ஊர்ப்பொதுக் கட்டிடத்தை உடையது என்றும் கொள்க. பொதியிலில் அருட்குறியாகக் கல்தறிநட்டு அதனை வணங்குவதும் அக்கால வழக்கம்: இவற்றுள் தாதெரு மன்றம் என்னும் வழக்கானும், பாசிலை பொதுளியபோதி மன்றம் (சிலப்-23:79) என்பதனானும் மன்றம் என்பதன் இயல்பையும்,

கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்   (பட்டினப்-244-249)

என்பதனான் பொதியிலின் இயல்பையும் உணர்க. இக்காரணத்தால் இவற்றைச் சான்றோர் மன்றமும் பொதியிலும் என இணைத்தே கூறுதல் காணலாம். (முருகு-224; மணிமே-20:30.) சந்தி-முச்சந்தி; ஐஞ்சந்தியுமாம். சதுக்கம். இந்நகர வண்ணனை பெரும்பாலும் சொல்லாலும் பொருளாலும் சிலப்பதிகாரத்தில் இந்திர விழா வெடுத்த காதையில் பூம்புகார் நகர வண்ணனையையே ஒத்திருத்தல் காண்க. கதிக்குற வடித்தல்-போர் முதலியவற்றில் யானையும் புரவியும் செல்லுதற்குப் பொருந்துமாறு இவற்றின் நடையைத் திருத்திப் பயிற்றுதல். செய்குன்றம்-செயற்கை மலை. வேணவா-வேட்கையால் உண்டாகிய அவா. விரை மரம்-மணமலர் தரும் மரம்.

இதுவுமது

66-68 : சாலை...................வேடமொடு

(இதன் பொருள்) சாலையும் கூடமும் தமனிய பொதியிலும்-அறக்கோட்டமும் பொன்னாலியன்ற அறங்கூறும் அவையமும்; கோலம் குயின்ற கொள்கை இடங்களும்-இன்னோரன்ன சிற்பம் முதலியவற்றால் அழகு செய்யப்பெற்ற கோட்பாடமைந்த இடங்களும் ஆகிய இவற்றையெல்லாம்; கொண்ட வேடமொடு கண்டு மகிழ்வுற்று-அம்மணிமேகலை தான் முன்னர் மேற்கொண்ட மாதவன் வடிவத்தோடே சென்று கண்டு பெரிதும் மகிழ்ந்து என்க.

(விளக்கம்) சாலை-அறக்கோட்டம். கூடம் என்றது கனகம், வெள்ளி முதலியவற்றாலியன்ற கூடங்களை.

கண்ணெலாங் கவர்வன கனக கூடமும்
வெண்ணிலாச் சொரிவன வெள்ளி வேயுளும்
தண்ணிலாத் தவழ்மணித் தலமுஞ் சார்ந்தரோ
மண்ணினா லியன்றில மதலை மாடமே  (சூளாமணி : நகர-7)

எனவருதலுமறிக. தமனியப் பொதியில் என்றதனால் மேலோர் இருந்து அறங்கூறும் மன்றம் என்பது பெற்றாம். பொன்னம்பலம் என்னும் வழக்கும் உணர்க. கொண்டவேடம்-மாதவன் உருவம். மணிமேகலை தான் மேற்கொண்ட வேடமொடு கண்டு மகிழ்வுற்று என எழுவாய் பெய்தும் மாறிக் கூட்டியும் கொள்க.

மணிமேகலை மாசாத்துவான் மாதவம் புரிவோனைக் காண்டலும் தன் வரலாறு உணர்த்தலும்

69-74 : அந்தர................பணிந்து

(இதன் பொருள்) அந்தரசாரிகள் அமர்ந்து இனிது உறையும் இந்திர விகாரம் என எழில் பெற்று-புகாரிடத்தே வானத்து இயங்கும் ஆற்றல் பெற்ற பவுத்தத் துறவிகள் தங்கி இனிதாக வாழுகின்ற இந்திரன் மனத்தால் இயற்றப்பெற்ற இந்திரவிகாரம் என்னும் பெயருடைய அரங்குகள் போன்று அழகெய்தி அவ்வஞ்சிமா நகரத்தே அமைந்ததும்; நவைஅறு நாதன் நல்அறம் பகர்வோர் உறையும் பள்ளி-குற்றமற்ற தலைவனாகிய புத்தர் திருவாய் மலர்ந்தருளிய நன்மை தரும் அறவுரைகளைச் செவியறிவுறுத்தும் துறவோர் வதிவதுமாகிய ஒரு தவப்பள்ளியைக் கண்டு; இறைவனை நல்லாள் புக்கு-முன்கையில் வளையணிதற்கியன்ற இளமையை உடைய அம்மணிமேகலை நல்லாள் அதனுட் புகுந்து அப்பள்ளியின்கண்; கோவலன் தாவத மாதவம் புரிந்தோன் பாதம் பணிந்து-தன் தந்தையாகிய கோவலனை ஈன்ற தந்தையாகிய மாசாத்துவான் கோவலன் மறைவின் பின் துறவியாய் அங்கு வந்து பெரிய தவஒழுக்கம் பூண்டிருப்பவனைக் கண்குளிரக் கண்டு அவனுடைய திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி எழுந்து பின்னர் என்க.

(விளக்கம்) அந்தரசாரிகள்-தவவாற்றல் மிக்கு வானத்திலே இயங்கும் வன்மை பெற்ற துறவோர். இந்திர விகாரம் காவிரிப்பூம்பட்டினத்தில் புத்த சைத்தியத்தின்கண் அமைந்த ஏழு அரங்குகள். அவை வஞ்சியின்கண் பவுத்தத் துறவிகள் உறையும் பள்ளிக்கு உவமையாக எடுக்கப்பட்டன. இறைவனை நல்லாள் என்றது மணிமேகலையை. இங்ஙனம் கூறியது குறிப்பாக அவளது இளமையை விதத்தற் பொருட்டாம். கோவலன் தாதையாகிய மாசாத்துவான் துறவியாய் அங்கு வந்து தவம் புரிந்தோனைக் கண்டு வணங்கி என்பது கருத்து.

இதுவுமது

74-84 : தன்பாத்திர.........புகுந்ததும்

(இதன் பொருள்) தன் பாத்திர தானமும்-பின்னர்த் தன் மூதாதையாகிய அத்துறவிக்குத் தனது வரலாற்றைக் கூறுகின்ற மணிமேகலை தன் கையில் ஏந்தியுள்ள அமுதசுரபி என்னும் பிச்சைப் பாத்திரத்தினால் செய்யப்படும் அன்னதானத்தின் சிறப்பும்; தானப் பயத்தால் சாவக மன்னவன் ஊனம் ஒன்றி இன்றி-அந்த தானத்தைச் செய்த பயன் காரணமாக ஆபுத்திரன் சாவக நாட்டு மன்னவன் புண்ணியராசனாய்ப் பிழை ஒன்றும் நிகழா வண்ணம்; உலகு ஆள் செல்வமும்-உலகத்தை ஆளுகின்ற அரசச் செல்வம் பெற்ற சிறப்பும்; செல்வன் கொணர்ந்து அத்தீவகப் பீடிகை ஒல்காது காட்ட பிறப்பினை உணர்ந்ததும்-செல்வனாகிய அச்சாவக மன்னனை அழைத்து வந்து மணி பல்லவம் என்னும் தீவின்கண் அமைந்த புத்த பீடிகையைச் சோர்வின்றிக் காட்டுதலாலே அம்மன்னவன் தன் பழம் பிறப்பினை உணர்ந்த செய்தியும்; உணர்ந்தோன் முன்னர் உயர்தெய்வம் தோன்றி-பிறப்புணர்ந்த அப்புண்ணியராசன் முன் உயர்ந்த பண்பமைந்த தீவதிலகை என்னும் தெய்வம் எழுந்தருளி; மனங்கவல் கொடுத்ததும் மாநகர் கடல் கொள-அத்தெய்வம் மனக்கவலையைத் தீர்த்து ஆறுதல் அளித்ததும் பெரிய நகரமாகிய காவிரிப்பூம் பட்டினத்தைக் கடல் கொள்ளா நிற்ப அக்கடல்கோளால்; இறவாது அறவணவடிகளும் தாயரும் ஆங்குவிட்டு இப்பதிப்புகுந்தது கேட்டதும்-இறந்துபடாமல் அறவண அடிகளும் மாதவியும் சுதமதியும் ஆகிய தாயர் இருவரும் அப்பட்டினத்தைவிட்டு இவ்வஞ்சி மாநகரத்தின்கண் வந்து புகுந்த செய்தியை அத்தீவதிலகை என்னும் தெய்வம் கூறத்தான் கேட்டறிந்து கொண்ட செய்தியும்; சாவக மன்னன் தன் நாடு எய்த தீவகம்விட்டு இத்திருநகர்ப் புகுந்ததும்-சாவக மன்னனாகிய புண்ணியராசன் தனது நாட்டை அடையா நிற்பத் தான் அம்மணி பல்லவத் தீவைக் கைவிட்டு வேற்றுருக் கொண்டு இவ்வஞ்சியாகிய செல்வத்தலை நகரத்திலே புகுந்த செய்தியும் என்க.

(விளக்கம்) பாத்திரம்-அமுதசுரபி. தானப்பயம்-முற்பிறப்பிலே ஆபுத்திரனாக இருந்து இவ்வமுதசுரபியால் அன்னதானம் செய்த நல்வினைப்பயன் என்க. ஆபுத்திரன் சாவக மன்னவனாய்ப் பிறந்து என்க. செல்வன்:சாவக மன்னன். உணர்ந்தோன்: பெயர். கவல்-கவலை. மாநகர்-பூம்புகார். தாயார்-மாதவியும், சுதமதியும். இப்பதி-வஞ்சி நகரம். தீவகம்-மணிபல்லவம்.

இதுவுமது

84 - 92 : புக்கபின்................என

(இதன் பொருள்) புக்கபின் - இவ்வஞ்சி நகரத்தில் புகுந்த பின்னர்; அந்த பொய் உரு உடனே-யான் முன்னர்க் கந்திற் பாவை கூறியவாறு எடுத்துக் கொண்டிருந்த பொய்யாகிய அந்த மாதவன் வடிவத்தோடே; தக்க சமயிகள் தம் திறம் கேட்டதும்-சமயவாதிகள் உறைவிடம் சென்று வினவத்தகுந்த அளவைவாதி முதலிய சமயக்கணக்கர்களுடைய தத்துவங்களை வினவிக் கேட்டறிந்து கொண்ட செய்தியும்; அவ்வவர் சமயத்து அறிபொருள் எல்லாம்-அவ்வச்சமயக் கணக்கர் அவரவர் சமயம் சார்பாக அறிந்து கூறிய தத்துவம் எல்லாம்; செவ்விது அன்மையின் சிந்தை வையாததும்-தெளிவுடையன அல்லாமையால் அவற்றையெல்லாம் தான் தன்னெஞ்சத்தே கொள்ளாமல் கைவிட்டொழிந்த செய்தியும் பின்னர்; நாதன் நல்லறம் கேட்டலை விரும்பி-சிறந்த சமயத் தலைவனாகிய புத்தபெருமான் திருவாய் மலர்ந்தருளிய நன்மையுடைய அறங்களைக் கேட்டறிந்து கொள்ளுதலைப் பெரிதும் விரும்பி; மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும்-அவ்வறங் கூறுதலின்கண் சிறப்புமிக்க பெருந்துறவியாகிய அறவணவடிகளாரைத் தேடித் தான் அவ்விடத்திற்கு வந்த முறைமையினையும்; சொல்லினள் ஆதலின்-எடுத்து அம்மாசாத்துவானுக்கு அறிவித்தாள் ஆதலால் அது கேட்ட அம்மாதவனாகிய மாசாத்துவானும், வியத்தகும் இச்செய்திகளைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்தவனாய்; தூயோய் நின்னை நான் கண்டது என் நல்வினைப்பயன் கொல் என-அம்மணிமேகலையை நோக்கி நங்காய் இவ்வாறெல்லாம் சிறத்தற்குக் காரணமான மனத்தூய்மை உடையோயே! நின்னை யான் இங்ஙனம் எளிதில் கண்டதற்குக் காரணம் யான் செய்த நல்வினைப் பயனேயாம் என்று அவளைப் பாராட்டி என்க.

(விளக்கம்) முன்னரே கந்திற்பாவை தனக்கறிவித்திருந்த வேற்றுரு என்பது தோன்ற அந்தப் பொய்யுரு எனச் சேய்மைச் சுட்டால் சுட்டினள். செவ்விது: பன்மை ஒருமை மயக்கம். நாதன் என்றது சமயத் தலைவர்களுள் தலைசிறந்தவன் என்பதுபட நின்றது. அவன் : புத்தபெருமான். மாதவன் என்றது அறவணவடிகளை. அவர் அறங்கூறுதலில் வல்லவர் என்பதனை மறவண நீத்த மாசறு கேள்வி அறவணவடிகள் அடிமிசை வீழ்ந்து..........உரவோன் அருளினன் எனத் தன் தாயாகிய மாதவி கூற்றாகவும் கேட்டிருந்தனள் ஆதலின் அம்மாதவனைத் தேடி வந்த வண்ணமும் என்றாளாயிற்று. மணிமேகலை இத்தகைய பேறு பெறுதற்குக் காரணம் அவளது மனத்தூய்மையே ஆதலின் அக்கருத்துத் தோன்ற, தூயோய் என்று விளித்தான். நல்லோரைக் காண்பதுவும் நன்றே என்பது பற்றி அங்ஙனம் காண்டற்கும் முன்னை நல்வினையே காரணம் என்பான், நின்னைக் கண்டது என் நல்வினைப்பயன் என்றான் கொல்; அசைச் சொல்.

மாசாத்துவான் மணிமேகலைக்குத் தன் வரலாறு கூறுதல்

93-102 : தையல்...........கேளாய்

(இதன் பொருள்) தையல் கேள் நின் தாதையும் தாயும் செய்த தீவினையின் செழுநகர் கேடு உற துன்பு உற விளிந்தமை கேட்டு-தவம் செய்த தவமாகிய தையலே! யான் ஈங்கு வரும் காரணமும் கேட்பாயாக! நின்னுடைய அன்புத் தந்தையும் தாயும் ஆகிய கோவலனும் கண்ணகியும் முற்பிறப்பில் செய்த தீவினை காரணமாக வளமிக்க மதுரை மாநகரம் தீக்கிரையாகி அரசிழந்து கேடெய்தும்படியும் யாமும் தாமும் பெரிதும் துன்புறும்படியும் இறந்த செய்தியைக் கேட்டு ஆற்றேனாய் அவலமுற்று; சுகதன் அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின்-இவ் உலக நிலையாமை முதலிய மெய்யறிவு பெற்று அவ்வறிவு காரணமாகப் புத்தபெருமானுடைய அன்பினை முதலாகக் கொண்ட அருளறத்திற்குத் தகுதி உடையேன் ஆயினமையின்; மனைத்திற வாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து-இல்லின்கண் இருந்து செய்யும் வாழ்க்கையின் இன்பம் வறும் பொய் என்பதனை என் பட்டறிவினாலேயே அறிந்துகொண்டு; செல்வமும் யாக்கையும் தினைத்தனையாயினும் நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே-இம்மை வாழ்க்கைக்கு இன்றியமையாதன என்று கருதப்படுகின்ற செல்வமும் உடம்பும் உயிர் முகந்து கொண்டுவந்த வினை அளவில் நிற்பன அன்றி அவ்வினை ஒழிந்தால் ஒரு தினை அளவு பொழுதேனும் இவ்வுலகின்கண் நிலைத்திரா என்று நன்கு நெஞ்சத்தின்கண் உறுதியாக உணர்ந்து; மலையா அறத்தின் மாதவம் புரிந்தேன்-மாறுபாடில்லாத பவுத்த சமயங்கூறும் அறத்தை மேற்கொண்டு அந்நெறியில் பெரிய இத்தவத்தை மேற்கொண்டொழுகலானேன்; புரிந்த யான் இப்பூங்கொடி பெயர்ப் படூஉம் திருந்திய நல்நகர் சேர்ந்தது கேளாய்-அவ்வாறு ஒழுகிய யான் வஞ்சி என்னும் பூங்கொடியின் பெயரையுடைய அறத்தால் நன்கு திருந்திய அழகிய இந்த நகரத்தை எய்தற்குரிய காரணமும் இனிக் கூறுவேன் கேட்பாயாக என்றான் என்க.

(விளக்கம்) தையல்-அன்புடையோர் மகளிரை விளித்தற்கியன்தோரின் சொல். தன்னினும் கோவலன் கண்ணகி இருவரும் மணிமேகலைக்கு அன்புரிமை மிக்கார் என்பது தோன்ற மகனும் மருகியும் என்னாது நின் தாதையும் தாயும் என்றான். மாசாத்துவான் பேரருளாளன் ஆதலின் தனது துன்பத்திற்குக் காரணம் தன் மகனும் மருகியும் இறந்தமையினும் அவர் காரணமாகச் செழுநகர் கேடுற்றமை கேட்டதே முதன்மை உடைத்து என்பது தோன்றச் செழுநகர் கேடுற விளிந்தமை என்றான். இங்ஙனமே சிலப்பதிகாரத்தினும் மாசாத்துவானுடைய துறவறத்தைச் செங்குட்டுவனுக்கு அறிவிக்கின்ற மாடல் மறையோன் கூற்றாக-

மைந்தற் குற்றது மடந்தைக் குற்றதும்
செங்கோல் வேந்தற் குற்றதுங் கேட்டுக்
கோவலன் றதை கொடுந்துய ரெய்தி
மாபெருந்த தானமா வான்பொரு ளீத்தாங்
கிந்திர விகார மேழுடன் புக்காங்
கந்தர சாரிக ளாறைம் பதின்மர்
பிறந்த யாக்கைப் பிறப்பற முயன்று
துறந்தோர் தம்முன் துறவி யெய்தவும்   (27:88-65)

எனவரும் பகுதி ஒப்புநோக்கி உவத்தற்பாலதாம். சுகதன்-புத்தன். யான் இயல்பாகவே அன்புகொள் அறத்திற்கு எனினுமாம். அருகன்-அணுக்கமானவன். தகுதி உடையோன் எனினுமாம். மலையா அறம்-மாறுபடாத அறம் என்றது அருளறத்தை. என்னை?

நல்லாற்றா னடி யருளாள்க பல்லாற்றாற்
றேரினு மஃதே துணை (குறள்-242)

எனவரும் பொய்யாமொழியும் காண்க.

இனி, முன்பின் மலையா மங்கல மொழி என அவ்வறம் போற்றப்படுதலும் உணர்க. (மணி-30: 261). கொடி-வஞ்சி. தான் வருதற்கு இதுவும் ஒரு காரணம் என்பது தோன்ற, திருந்திய நன்னகர் என்றான்.

இதுவுமது

103-113 : குடக்கோ..........இருந்துழி

(இதன் பொருள்) குடக்கோச் சேரலன் குட்டுவர் பெருந்தகை விடர்ச்சிலை பொறித்த வேந்தன்-முத்தமிழ் நாட்டினுள் வைத்து மேலை நாட்டு மன்னனும் சேரர்குடித் தோன்றலும் குட்டநாட்டார் கோவாகிய பெருந்தகையும் வடவரை வென்று வான்றோய் இமயத்தின்கண் தனது இலச்சினையாகிய வில்லினைப் பொறித்த வேந்தனும் ஆகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்; முன்னாள் துப்பு அடு செவ்வாய் துடி இடையாரொடும் இப்பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள்-முற்காலத்தே ஒருநாள் பவளம் போன்ற சிவந்த வாயையும் உடுக்கை போன்ற இடையினையும் உடைய இளமகளிரோடும் விளையாடுதற் பொருட்டு இந்தப் பூம்பொழிலிலே புகுந்து ஆடி ஆங்கோரிடத்தே இருந்த பொழுது; இலங்காதீவத்து சமனொளி என்னும் சிலம்பினை எய்தி வலங்கொண்டு மீளும் தரும சாரணர் தங்கிய குணத்தோர்-இலங்கை என்னும் தீவின்கண் புத்தபெருமான் திருவுரு அமைந்த சமனொளி என்னும் பெயரையுடைய மலையினை அடைந்து அதனை வலஞ் செய்து வணங்கி மீள்பவரும் தரும சாரணரும் நிலைபெற்ற அருட்பண்புடையோரும்; ககனத்து கருமுகில் படலத்து இயங்குவோர் புரையோர் தாமும்-வானத்தில் கரிய முகில் குழாத்தினூடே வடதிசை நோக்கிச் செல்பவருமாகிய மேன்மையுடைய அத்துறவோர் தாமும்; அரைசற்கு அவ்வழி ஏது நிகழ்தலின்-அச்சேரமன்னனுக்கு அப்பொழுது ஆகூழ் நிகழ்தலாலே, இப்பூம்பொழில் இழிந்து கல் தலத்து இருந்துழி-அம்மன்னவன் தங்கியிருந்த இந்தப் பூம்பொழிலின்கண் வானத்தினின்றும் இறங்கிவந்து ஒரு கற்பாறையின் மேல் அமர்ந்திருந்த பொழுது என்க.

(விளக்கம்) குடக்கோவும் சேரலனும் பெருந்தகையும் ஆகிய வேந்தன் என்க. இவனை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என வரலாற்று நூலோர் கூறுவர். இவன் வரலாறு பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தில் காணப்படும். இவனைச் சோழன் (குளமுற்றத்துத் துஞ்சிய) கிள்ளி வளவன் வென்றான் எனக் கூறுங்கால் மாறோக்கத்து நப்பசலையார் இச்சேரனை-

பொன்படு நெடுங்கோட் டிமையம் சூட்டியவேம விற்பொறி
மாண்வினை நெடுந்தேர் வானவன் (புறநா.39)

என, பெருமிதம் படப்பேசுவர்; இளங்கோ விடர்ச்சிலை பொறித்த விறலோன் என்று ஓதுவர். துப்பு-பவளம். சூடி-உடுக்கை. சமனொளி என்பது மலையின் பெயர். தரும சாரணர் என்பவர் யாண்டும் சென்று மக்களுக்குப் புத்தர் அறத்தை அறிவுறுத்தும் தொண்டு பூண்ட துறவோர் ஆவர். குணம் என்றது அருள் மேனின்றது. வலங்கொண்டு மீளும் சாரணர் வடதிசை நோக்கிக் ககனத் தியங்குவோர் என்க. புரையோர்-துறவோருள்ளும் உயர்ந்தோர் என்பதுபட நின்றது. அத்துறவோர் இப்பூம்பொழிலில் இறங்க வேண்டும் என விரும்பி இறங்கினாரிலர். அரசன் ஆகூழே அவரை இறங்கும்படி செய்தது என்பது கருத்து. கற்றலம்-கற்பாறையாகிய இடம்.

இதுவுமது

113-122 : காவலன்..........அந்நாள்

(இதன் பொருள்) காவலன் முன் தவம் உடைமையின் முனிகளே விரும்பி ஏத்தி பங்கயச் சேவடி விளக்கி-அத்துறவோர் வரவுணர்ந்த அச்சேரமன்னன்றானும் முற்பிறப்பிலே செய்த தவப்பயன் காரணமாக அம்முனிவர்களைப் பெரிதும் விரும்பிப் புகழ்ந்து வழிபாடு செய்து அம்முனிவருடைய தாமரை மலர் போன்ற சிவந்த அடிகளை நீரால் கழுவி; பான்மையின் அங்கு அவர்க்கு அறுசுவை நால்வகை அமிழ்தம் பாத்திரத்து அளித்து-சிறந்த பண்பினோடு அவ்விடத்தேயே அம்முனிவர்களுக்கு ஆறுவகைச் சுவையோடு கூடிய நால்வேறு வகைப்பட்ட உணவுகளையும் துறவோர்க்கு அளிக்கத் தகுந்த உண்கலத்திலே பெய்து கொடுத்து உண்பித்து; பல பல சிறப்பொடு வேந்து அவையாரொடும் ஏத்தினன் இறைஞ்சலில்-பின்னரும் அம்முனிவர்களுக்குப் பலப்பல சிறப்புகளையுஞ் செய்து அம்மன்னன் தன் அரசியல் சுற்றத்தாரோடும் கூடி வாழ்த்தி வணங்குதலாலே அம்முனிவர்களும்; இறைவன் செவி முதல்-அவ்வேந்தனுடைய செவியின்கண்; அறத்தகை முதல்வன் அருளிய-அறத்தின் திருவுருவமாகிய தமது சமய முதல்வன் புத்த பெருமான் திருவாய் மலர்ந்தருளிய; பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும் வாய்மை இன்ப ஆர் அமுது-உயிர்களுக்குப் பிறப்பின்கண் எய்தும் துன்பத்தின் இயல்பும் அவை பிறவாமையுற்ற பொழுது எய்தும் இன்பத்தின் இயல்பும் இவற்றிற்குரிய காரண காரியங்களின் இயல்பும் ஆகிய மெய்க்காட்சிகள் என்னும் இன்பமேயான பெறுதற்கரிய அறவமுதத்தை; துன்பம் நீங்கச் சொரியும் அந்நாள்-அனாதி காலமாகத் தொடர்ந்து வருகின்ற அம்மன்னவனுடைய துன்பமெல்லாம் நீங்கிப்போம்படி அம்முனிவர்கள் சொற்பொழிவு செய்யும் அந்த நாளிலே என்க.

(விளக்கம்) காவலன்-இமயவரம்பன். முனிகள்-தரும சாரணர். பான்மை-பண்புடைமை. அறுசுவை நால்வகை அமிழ்தம்-கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என்னும் ஆறுசுவையும் பொருந்தச் சமைத்த உண்பனவும், தின்பனவும், நக்குனவனவும், பருகுவனவுமாகிய நால்வகை உணவு. பிறவா இன்பம்-பிறவாமையினால் எய்தும் வீட்டின்பம். அறத்தகை முதல்வன் என்றது புத்தனை. வாய்மை-நால்வகை உண்மைகள். அவையாவன:

துன்பம் தோற்றம் பற்றே காரணம்
இன்பம் வீடே பற்றிலி காரணம்
ஒன்றிய வுரையே வாய்மை நான் காவது  (மணிமே, 30-186-188)

என்பன,

இறைவன்-அரசன்.

இதுவுமது

123-136 : நின்பெரு..............இருந்து

(இதன் பொருள்) நின்பெருந் தாதைக்கு ஒன்பது வழிமுறை முன்னோன் கோவலன்-உன்னுடைய பேரன்புசால் தந்தையாகிய கோவலனுக்கு ஒன்பது தலைமுறைக்கு முன்னம் நங்குலத்திலே கோவலன் என்பான் ஒருவன் வாழ்ந்திருந்தான், அவன்; மன்னவன் தனக்கு நீங்காக் காதல் பாங்கனாதலின்-அவ்வரசனுக்கு ஒருபொழுதும் ஒழியாத அன்புடைய தோழனாய் இருந்தமையால்; தாங்கா நல்அறம் தானும் கேட்டு-ஏற்றுக் கோடற்கரிய நன்மை மிக்க அவ்வறவுரைகளைத் தானும் ஆர்வத்துடன் கேட்டமையால் மெய்யுணர்வு பெற்று; முன்னோர் முறைமையில் படைத்ததை அன்றி தன்னான் இயன்ற பலகோடிதனம்-தன் முன்னோர்கள் அறநெறி நின்று ஈட்டி வைத்த பொருளை அல்லாமலும் தன்னால் ஈட்டப்பெற்ற பற்பல கோடியாகிய நிதியங்களையும்; எழுநாள் எல்லையுள் இரவலர்த்து ஈத்து-ஒரு கிழமை முடிவதற்குள் வறியவர்க்கு வாரி வழங்கி விட்டு; தொழுதவம் புரிந்தோன்-உலகம் தொழுவதற்குக் காரணமான தவத்தை மேற்கொண்டவன்; சுகதற்கு வான் ஓங்கு சிமையத்து இயற்றிய வால் ஒளி சயித்தம்-புத்தனுக்கு வானுற உயர்ந்த மலை உச்சியில் எடுத்த வெள்ளிய ஒளியையுடைய திருக்கோயில்; ஈனோர்க்கு எல்லாம் இடர்கெட இயன்றது-இவ்வுலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் துன்பம் தீரும்படி தெய்வத்தன்மை உடையதாகத் திகழ்கின்றதாதலின்; கண்டு தொழுது ஏத்துங் காதலின் வந்து-அதனைக் கண்ணாரக் கண்டு தொழுது ஏத்துங் காதலின் வந்து-அதனைக் கண்ணாரக் கண்டு தொழுது வாழ்த்த வேண்டும் என்றெழுந்த அன்பினாலே இந்நகரத்திற்கு வந்து மீண்டும் நம் மூதூருக்குச் செல்லக் கருதினேனாக அக்கருத்தினை அறிந்த; இத்தண்டாக் காட்சித் தவத்தோர் அருளி-இங்குறைகின்ற தடையில்லாத மெய்க்காட்சியையுடைய துறவோர்கள் என்பால் அருள் கூர்ந்து; காவிரிப்பட்டினம் கடல் கொளும் என்ற-நீ செல்லுதற்குக் கருதுகின்ற காவிரிப்பூம்பட்டினமானது கடலால் கொள்ளப்படும் என்றறிவுறுத்த; அத்தூ உரை கேட்டு துணிந்து இவண் இருந்தது-அம்முனிவருடைய வாய்மையேயாகிய அவ்வறிவுரையைக் கேட்டுத் தெளிந்தமையாலேயே யான் இந்நகரத்திலே இருப்பது என்றான் என்க.

(விளக்கம்) நமது மரபில் ஒன்பது தலைமுறைக்கு முன்னர் உன் தந்தை பெயருடன் ஒருவனிருந்தான்; அவன் அரசனுக்கு நண்பன். அரசன் அறம் கேட்குங்கால் தானுங் கேட்டு மெய்யுணர்வு பெற்று இரவலர்க்கு ஈத்துத் தவம் புரிந்தான். அவன் மலை உச்சியில் புத்தனுக்கு ஒரு கோயில் எடுத்திருந்தான். அக்கோயில் இவ்வுலகத்தார் இடர்தீர்ப்ப தொன்றாய் இருந்தது. அதனைத் தொழ ஈண்டு வந்தேன், மீளுங்கால் தவத்தோர் காவிரிப்பூம் பட்டினம் கடல் கோட்படும் என்றனர். அதனைத் தெளிந்தமையே யான் இங்கிருத்தற்குக் காரணம் என்றான் என்க.

பெருந்தாதை-அன்பினால் பெரிய தாதை என்க. தாங்காத என்னும் பெயரெச்சத்தீறு கெட்டது. முறைமை-அறநெறி. எழுநாள் எல்லை-என்பது ஓர் உலகவழக்கு. விரைந்து செய்தான் என்பது கருத்து. எழுநாள் எல்லையுள் என்னும் வழக்கு இப்பொழுதும் (ஒரு வாரத்திற்குள்) ஒரு கிழமைக்குள் என வழங்குதல் உணர்க. வால் ஒளிச் சயித்தம் என்றமையால் வெள்ளியாலியன்ற சயித்தம் எனக்கோடலுமாம். தண்டாக் காட்சி என்றது முக்காலமும் உணரும் மெய்க்காட்சியை. தூஉரை-மெய்யுரை.

இதுவுமது

137-147 : இன்னும்............கேட்குவன்

(இதன் பொருள்) நல்நெறி மாதே பூங்கொடி இன்னுங் கேளாய்-நல்லற நெறியிலே செல்லும் ஆற்றல் வாய்ந்த நங்கையே பூங்கொடி போலும் மெல்லியலோயே இன்னும் யான் கூறுவன் கேட்பாயாக; தீவினை உருப்ப சென்ற நின் தாதையும் முன்செய் தவப்பயத்தால் தேவரில் தோற்றி-முன்செய் தீவினை உருத்து வந்து தன்பயனை ஊட்டுதலாலே கொலை உண்டுபோன நின் தந்தையாகிய கோவலனும் முன் செய்த தவப்பயனால் போக பூமியில் தேவரில் ஒருவனாகத் தோன்றினானேனும் அப்பயன் முடிவுற்றபின்; ஆங்கு அத்தீவினை இன்னும் துய்த்து-அம்மதுரையிடத்தே ஊட்டிக் கழிந்த அத்தீவினையின் எச்சத்தை மீண்டும் இந்நிலவுலகத்தே பிறந்து துய்த்துக் கழித்த பின்னர்; முன் அவன் போதியின் நல்லறம் தாங்கிய தவத்தால்-முன்பு அக்கோவலன் மெய்யறிவினால் நல்ல அறங்களை மேற்கொண்டொழுகிய தவங்காரணமாக; தான் தவம் தாங்கி கபிலையம்பதியில் காதலி தன்னோடு நாதன் நல்லறம் கேட்டு வீடு எய்தும் என்று-தானே அத்தவத்தை மேற்கொண்டு கபிலை நகரத்தில் தன்னை ஒருபொழுதும் பிரியாத காதலியாகிய கண்ணகியோடு கூடிப் புத்தனுடைய நல்லறங்களைக் கேட்டு வீட்டுலகம் புகுவான் என்னும்; அற்புதக் கிளவி அறிந்தோர் கூற-அற்புதமான மொழியை அறியும் திறம் படைத்த துறவோர் கூறுதலாலே; தோகை சொல் பயன் உணர்ந்தேன்-மயில் போல்வாய் அவர் கூறிய சொல்லின் பயன் வாய்மையேயாம் என்று உணர்ந்துள்ளேன்; யானும் அந்நாள் ஆங்கு அவன் அறநெறி கேட்குவன்-யானும் முனிவர் கூறிய அந்தக் காலத்திலே அக்கபில நகரத்தில் அப்புத்தர் கூறும் அறங்கேட்டு வீடெய்துவேன் காண் என்றான் என்க.

(விளக்கம்) நன்னெறி மாதே என்றது அவளுடைய ஆற்றலைப் பாராட்டியபடியாம். தீவினை யுருப்பச் சென்ற நின்றதை என்றது இறந்துபோன நின் தாதை என்றவாறு. முற்செய் தவப்பயத்தால் தேவரிற்றேற்றி என மாறுக. ஆங்கு அத்தீவினை என்றது மதுரையில் உருத்துவந்து ஊட்டிய தீவினை யொழிய எஞ்சிய அத்தீவினையே இன்னும் நிலத்தில் பிறந்து துய்த்து என்க. பூங்கொடி: விளி, முன் அவன் என்று கண்ணழித்துக் கொள்க. இதனாற் கூறியது கோவலன் முன்னொரு பிறப்பில் புத்தன் போதியின் கீழ் இருந்து சொன்ன நல்லறம் கேட்டு அதனை மேற்கொண்டு ஒழுகிய தவப்பயன் காரணமாகத் தானே தவந்தாங்கி மீண்டும் இனியொரு பிறப்பில் காதலியோடு அக்கபில நகரத்தில் நாதன் நல்லறம் கேட்பன் என்றும் வீடெய்துவன் என்றும் அறிவுறுத்தபடியாம். புத்தர் காலந்தோறும் பிறந்து அறம் உரைத்தலுண்மையின் முன்னும் ஒரு புத்தன்பால் அறங்கேட்டவன் அதன் பயனாகப் பின்னும் இனித் தோன்றும் புத்தன்பால் அறங்கேட்டு வீடெய்துவன் என்பது கருத்தாகக் கொள்க. இவ்வுண்மையை-

இறந்த காலத் தெண்ணில் புத்தர்களுஞ்
சிறந்தருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது
ஈரறு பொருளி னீந்தநெறி (30:14-16)

என்பதனானு மறிக.

இனி இப்பகுதிக்கு இக்கருத்துணராது கூறும் உரை முன்பின் முரணிய போலியுரையாதல் உணர்க.

தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை
யஃதிலார் மேற்கொள் வது  (குறள்-242)

என்பதுபற்றி முன் தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கி என்றார். இனி, கபிலையம்பதியில் பிறந்த நாதனாகிய புத்தனுடைய அறத்தைக் கேட்டு வீடெய்தும் எனக் கோடலுமாம். அற்புதக் கிளவி பின் நிகழ்வனவற்றை அறிந்து கூறும் கிளவி என்க. தோகை: விளி.

இதுவுமது

148-154 : நின்னதி...........படர்ந்தனர்

(இதன் பொருள்) நின்னது தன்மை அ நெடுநிலை கந்தில் துன்னிய துவதிகன் உரையின் துணிந்தனை அன்றே-இனி நினக்கு நிகழவிருக்கும் எதிர்கால நிகழ்ச்சியின் தன்மையை நீதானும் சம்பாபதியின் கோட்டத்தில் நின்ற அந்த நெடிய நிலையினையுடைய தூணில் உறைகின்ற துவதிகன் என்னும் கடவுட் பாவை உனக்குரைத்தமையால் அறிந்துள்ளனை அல்லையோ? அங்ஙனம் அறிந்த செய்தியை எனக்கு; தவநெறி அறவணன் சாற்றக் கேட்டனன்-தவநெறி நின்றொழுகும் அறவணவடிகள் கூறக் கேட்டறிந்துளேன்; ஆங்கு அவன் தானும் நின் அறத்திற்கு ஏது பூங்கொடி கச்சிமா நகர் ஆதலின்-அவ்வறவண அடிகளார் நினது அறத்திற்கு ஏது நிகழ்ச்சிக்குரிய இடம் பூங்கோடி போல்வாய் அக்கச்ச மாநகரமே ஆதலின் அதனை முன்னரே உணர்ந்து; மற்று அம்மாநகர் மாதவன் பெயர்நாள் பொற்றொடி தாயரும் அப்பதிப் படர்ந்தனர்-அந்தக் கச்சிமா நகரத்திற்கு நின்பொருட்டுப் பெரிய தவத்தையுடைய அவ்வறவணவடிகளார் இந்நகரத்தினின்றும் அக்கச்சி மாநகரத்திற்கு சென்ற காலத்தில் நின்னுடைய தாயராகிய மாதவியும் சுதமதியும் அவரோடு அக்கச்சி மாநகரத்திற்குச் சென்றனர் என்றான் என்க.

(விளக்கம்) துவதிகன்-சம்பாபதியின் கோட்டத்துக் கந்திற் பாவை. கந்திற்பாவை நினக்கு வருவதுரைத்ததனை. அறவணன் சாற்ற யான் கேட்டேன் என்றவாறு. ஏது-ஏது நிகழ்ச்சி. அஃதாவது ஊழ்வினை உருத்து வந்து தன் பயனை ஊட்டும் நிகழ்ச்சி. நின் ஏது நிகழ்ச்சிக்கு இடமாகிய கச்சி நகரத்திற்கு அறவணன் நின் பொருட்டே சென்றனன் என்பது கருத்து. பொற்றொடி: விளி.

மாசாத்துவான் மணிமேகலையை வேண்டுதல்

155-162 : அன்னதை..........வணங்கி

(இதன் பொருள்) அன்னதை அன்றியும் அணி இழை கேளாய்-யான் உனக்குக் கூறிய அச்செய்தியை அல்லாமலும் யான் உனக்கு அறிவுறுத்த வேண்டிய செய்தியும் ஒன்றுளது, மகளிர்க்கெல்லாம் அணிகலன் போல்பவளே அதனையும் கூறுவேன் கேட்பாயாக, அஃதென்னையெனின்; பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்து-பொன் மதில் சூழ்ந்த காஞ்சி மாநகரமும் அதனைச் சூழ்ந்த நாடும் அழகு கெட்டு; மன் உயிர் மடிய மழைவளம் காத்தலின்-அங்கு நிலைபெற்ற உயிர்கள் உணவின்றி இறந்தொழியும்படி மழையானது தான் செய்யும் வளத்தைச் செய்யாதொழிதலின்; அந்நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர் இன்மையின் இந்நகர் எய்தினர் காணாய்-அம்மாநகரத்திலே துறவோர்க்கு உண்டி கொடுப்போர் இல்லாதொழிந்தமையின் அத்துறவோரெல்லாம் இடபொழுது இவ்வஞ்சி நகரத்தில் வந்து குழுமி இருக்கின்றனர் காண்; ஆருயிர் மருந்தே அ நாட்டு அகவயின் கார் எனத் தோன்றி காத்தல் நின்கடன் என-இவ்வாறு பசிப்பிணியுழந்து சாதலுறும் அரிய உயிரினங்களுக்கு அமிழ்தத்தைப் போன்ற நீ இப்பொழுது அந்தக் காஞ்சி நாட்டகத்தில் முகில் போலத் தோன்றி அவற்றின் பசிப்பிணி அகற்றிக் காப்பது நினக்குக் கடமைகாண் என்று; அருந்தவன் அருள ஆயிழை வணங்கி-செய்தற்கரிய தவத்தை மேற்கொண்டவனாகிய அம்மாசாத்துவான் திருவாய்மலர்ந்தருள அது கேட்ட மணிமேகலை அவ்வேண்டுகோட் கிணங்கி அவனுடைய திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி விடை கொண்டவளாய் என்க.

(விளக்கம்) அணி இழை-அணி இழை போல்வோய் என்க. மாதர் குலத்திற்கெல்லாம் அணிகலன் போல விளங்குதலின் இவ்வாறு விளித்தான். காஞ்சி நாடு-காஞ்சி நகரத்தைத் தலைநகராகக் கொண்டமைந்த நாடு-அஃதாவது தொண்டை நாடு. இவ்வேண்டுகோளால் அவனது அருட்பண்பு விளக்கமாம். இவன் இல்லறத்தினும் வருநிதி பிறர்க்கு ஆர்த்தும் இயல்புடையவனாய் இருந்தமை சிலப்பதிகாரத்தில் காணப்படும். துறவியான பின் இவன் அருள் எவ்வுயிர்மாட்டும் பரந்து பட்டுச் செல்லுதலை ஈண்டுணர்க. இவ்வாறு ஆக்கமுறுவது உயிர்க்கியல்பு. இதனை, அருளொடு புணர்ந்த அகற்சி என்பர் ஆசிரியர் தொல்காப்பியனார். மாதவர்க்கும் ஐயம் இடுவோர் எனல் வேண்டிய சிறப்பும்மை தொக்கதெனக் கொண்டு அந்நகரின் வறுமை மிகுதி உணர்த்தினர் எனக் கோடலுமாம். ஆருயிர் மருந்தே என்று விளித்தான் இச்செயற்கரிய செயல் செய்தற்குரிய ஆற்றலும் கருவியும் நின்பால் உள என்றுணர்த்துதற்கு. பவுத்தத் துறவிகளுக்கு இதுவே தலையாய கடன் என்பான் நின் கடன் என்றான். கைமாறு வேண்டா கடப்பாடு என்பவாகலின் அவ்வாறாகிய கார் எனத் தோன்றி என்றான். மழை கரந்தமையான் உண்டான இத்துன்பத்தைத் துடைத்தற்கு நின்னாலேயே இயலும் என்பான், கார் எனத் தோன்றி என்றான் எனினுமாம். இதனால் போந்தது, உலகு புரப்பதற்கு மாரி மட்டும் உளதன்று; நீயும் உளை எனப் புகழ்தல் என்க. ஆயிழை-அதற்குடன்பட்டு வணங்கி என்க.

மணிமேகலை வஞ்சி நகரத்தினின்றும் வானத்தியங்கிக் காஞ்சி மாநகரத்தை எய்துதல்

163-176 : திருந்திய...........எய்தலும்

(இதன் பொருள்) திருந்திய பாத்திரம் செங்கையின் ஏந்தி-அழகிய அமுதசுரபி என்னும் பாத்திரத்தை அன்னம் வழங்கிச் சிவந்துள்ள தன் கையில் ஏந்திக் கொண்டு; கொடி மதில் மூதூர் குடக்கண் நின்று ஓங்கி வடதிசை மருங்கின் வானத்து இயங்கி-வெற்றிக்கொடி உயர்த்தப்பட்ட மதிலையுடைய பழைய நகரமாகிய வஞ்சி நகரத்தின் மேற்றிசையில் நின்றும் வானின்கண் எழுந்து அந்நகரின் வடதிசைப் பக்கலிலே அவ்வானத்தின் வழியாக வலமாகச் சென்று; தேவர் கோமான் காவல் மாநகர் மண்மிசைக் கிடந்தென வளந்தலை மயங்கிய-தேவேந்திரனுடைய காவலமைந்த பெரிய நகரமாகிய அமராவதி நிலத்தின்கண் இழிந்து எல்லா வளங்களும் தன்பாலே பொருந்தும்படி பண்டு கிடந்த; பொன் நகர் வறிதா புல் என்று ஆயது கண்டு உளங்கசிந்த ஒள் தொடி நங்கை-அழகிய அக்காஞ்சி மாநகரம் மழைவளம் காத்தலின் பாழ்பட்டதாய்க் காட்சிக் கின்னததாய்ப் புற்கென்று மாறியதனைப் பார்த்து இரக்கத்தால் உள்ளம் உருகிய ஒளி உடைய பொன் வளையல் அணிதற்கியன்ற பெண்ணினத்தில் தலைசிறந்த அம்மணிமேகலை; பொன் கொடி மூதூர் புரிசை வலங்கொண்டு-அழகிய கொடியாடுகின்ற பழைய நகரமாகிய அத்தலைநகரத்தின் மதிலையும் வலம் செய்து; நடுநகர் எல்லை நண்ணினள் இழிந்து-அந்நகரத்தின் நடுவிடத்தின் நேராக எய்தி நிலத்தில் இறங்கி அவ்விடத்தினின்றும்; கழல்தொடு கிள்ளி துணை இளம் கிள்ளி-வீரக்கழல் கட்டிய சோழ மன்னனாகிய கிள்ளி என்பானுடைய தம்பி இளங்கிள்ளி என்பவன்; செம்பொன் மாசிலை திருமணி பாசடை பைம்பூம் போதி பகவற்கு இயற்றிய-சிவந்த பொன்மயமான பெரிய கிளைகளையும் அழகிய மரகதமணி போன்ற நிறமுடைய பசிய இலைகளையும் புதிய மலர்களையும் உடைய அரசமரத்தின் கீழிருந்து அறங்கூறிய புத்தபெருமானுக்கு எடுத்த; சேதியம் தொழுது தென்மேற்காக தாது அணி பூம்பொழில் தான் சென்று எய்தலும்-திருக்கோவிலையும் வலம் வந்து கைகூப்பித் தொழுது வணங்கி அக்கோயிலினின்றும் தென் மேற்றிசையில் சென்று ஆங்குள்ள பூந்துகள் உதிர்ந்து நிலத்தை அழகு செய்யும் பூம்பöõழிலின்கண் புகுந்து உறையா நிற்பவும்; என்க.

(விளக்கம்) பாத்திரம்-அமுதசுரபி. காஞ்சி நகரத்தில் பசியால் மடியும் மன்னுயிரை ஓம்புதற்கு அதுவே கருவியாகலின் அதனைத் திருந்திய பாத்திரம் என விதந்தார். அன்னம் வழங்கிச் சிவந்த கை என்க. மூதூர்-வஞ்சி நகரம். குடக்கண்-மேற்குப் பக்கம். நகரத்தின் மேற்குப் பக்கத்திலிருந்து வானத்தில் உயர்ந்து அக நகர்க்கு நேரே வான்வழி இயங்காமல் வடக்கே சென்று அந்நகரத்தை வலம் செய்து வான் வழியே இயங்கினள் என்றவாறு. என்னை? அவ்வஞ்சி, கற்புத்தெய்வத்தின் திருக்கோயிலையும் புத்த சைத்தியத்தையும் அறம் பகர்வோர் உறையும் பள்ளியையும் இன்னோரன்ன சிறந்த இடங்களைத் தன்பால் கொண்டிருத்தலான் அங்ஙனம் வலம் செய்து போதல் வேண்டிற்று என்க. தேவர்கோமான்..........பொன்னகர் என்னுந்துணையும் மணிமேகலை கூறாக அந்நகரம் மழைவளம் காத்தற்கு முன்பிருந்த நிலைமையை நூலாசிரியர் நம்மனோர்க்கு அறிவுறுத்தபடியாம். இதனோடு,

ஆயிரங் கண்ணோ னருங்கலச் செப்பு
வாய்திறந் தன்ன மதிலக வரைப்பின்  (சிலப்-14: 68-69)

எனவும்,

அளந்து கடையறியா வளங்கெழு தாரமொடு
புத்தே ளுலகம் கவினிக் காண்வர
மிக்குப்புகழ் எய்திய பெரும்பெயர் மதுரை  (மதுரை-கா : 697-69)

எனவும் பிற சான்றோர் கூற்றுகள் ஒப்புநோக்கற் பாலன. மாசாத்துவான் கூறியபடி அப்பொன்னகர் வறிதாப் புல்லென்றாயது கண்டு மணிமேகலை உளங் கசிந்தனள் என்க. அவளது அருளறத்தின் பெருமை அக்கசிவினால் அறியப்படும். அந்நகரமும் புத்த சைத்தியமும் பிறவும் தன்பாற் கொண்டுள்ளமையின் அதனையும் வலங்கொண்டு அகநகரம் புகுந்தனள் என்பது கருத்து. துணை-தம்பி. கிள்ளி-சோழமன்னன் ஒருவன். இளங்கிள்ளி அவன் தம்பி. செம்பொன்.......போதி எனவரும் இதனோடு-சுடர் மரகதப் பாசடைப் பசும்பொன் மாச்சினை விசும்பகம் புதைக்கும், போதி (வீர. யாப்பு-11, மேற்கொள்) எனவரும் செய்யுட்பகுதியை ஒப்புநோக்குக. போதிப் பகவன் என்றது புத்தனை. சேதியம்-சைத்தியம்; கோயில்.

மணிமேகலை வருகையைக் கஞ்சுகன் கூறக்கேட்ட இளங்கிள்ளி மகிழ்ந்து அவளைக் காண விழைதலும் கருதுதலும்

177-187 : வையம்..........சென்று

(இதன் பொருள்) கஞ்சுகன் வையங் காவலன் தன்பால் சென்று கைதொழுது இறைஞ்சி உரைப்போன்-மணிமேகலையின் வருகையை யுணர்ந்த கஞ்சுகமகன் ஒருவன் உலகங்காக்கும் மன்னவனாகிய இளங்கிள்ளியின்பால் விரைந்து சென்று கை குவித்துத் தொழுது தான் வந்த காரியம் கூறுபவன் வேந்தர் பெருமானே; கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள் நாவலம் தீவில் தான் நனிமிக்கோள்-கோவலனுடைய மகளும் பவுத்தத் துறவோர் மேற்கோடற்குரிய அருளறமாகிய குண விரதத்தை மேற்கொண்டொழுகுபவளும் இந்த நாவலந்தீவின்கண் இதுகாறும் தோன்றிய மகளிருள் வைத்துத் தனக்குவமையாவார் யாருமில்லாத சிறப்புடையவளும் ஆகிய மணிமேகலை இப்பொழுது; மாமழை போல் அங்கையின் ஏந்திய அமுதசுரபியொடு தங்காது இப்பதி தரும தவ வனத்தே வந்து தோன்றினள் என-இவ்வற்கடக் காலத்தில் கரிய மழை முகில் வந்தாற் போலத் தனது அகங்கையில் ஏந்திய அமுதசுரபியென்னும் அத்தெய்வத்தன்மை பொருந்திய பாத்திரத்தோடு வேறெவ்விடத்தும் தங்கியிராமல் இக்காஞ்சிமாநகரத்தின் கண் அறங்கேட்கும் தவவனமாகிய பூம்பொழிலின்கண் தானே வந்து புகுவாளாயினள் என்று பெரிதும் மகிழ்ந்து அறிவிப்ப; மன்னனும் விரும்பி கந்திற்பாவை கட்டுரை எல்லாம் வாய் ஆகின்று என வந்தித்து ஏத்தி-அது கேட்ட வேந்தனும் அவள் வரவினை மிகவும் விரும்பி என் திறத்திலே கந்திற்பாவை கூறிய பொருள் பொதிந்த மொழியெல்லாம் வாய்மையாக நிகழ்கின்றன என்று அக்கந்திற்பாவையை வாழ்த்திப் புகழ்ந்து பாராட்டி; மந்திரச் சுற்றமொடு ஆய்வளை நல்லாள் தன் உழைச்சென்று-தன் அமைச்சராகிய அரசியல் சுற்றஞ்சூழ அம்மணிமேகலையைக் காணத் தானே அவள் இருக்கும் இடத்தே சென்று வாழ்த்திய பின்னர் என்க.

(விளக்கம்) வையங்காவலன் என்றது சோழன் இளங்கிள்ளியை. கஞ்சுகன்-மெய்ப்பை (சட்டை) இட்ட ஒருவகை அரசியல் பணியாளன்; தூதனுமாம். மடந்தை ஈண்டுப் பருவம் குறியாது மகள் என்னும் முறைப்பெயராய் நின்றது. குணவதம்-அருளுடைமை காரணமாக மேற்கொள்ளும் விரதங்கள். அவை கொல்லாமை, இன்னா செய்யாமை, ஊனுண்ணாமை முதலியன. வதம்-விரதம். நாவலந்தீவு-கன்னியாகுமரிக்கும் இமயமலைக்கும் இடையே கிடக்கும் நிலப்பரப்பு. நனிமிக்கோள்: ஒரு பொருள் பன்மொழி. அங்கை-அகங்கை (உள்ளங்கை). பலருக்கு உண்டி வழங்கும் அமுதசுரபியைத் தனக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு தனித்துத் தங்காமல் எனக்கோடலுமாம். பதி-நகரம். தருமதவ வனம்-அறங்கேட்டற்கும் தவம் புரிதற்கும் தகுந்த பொழில். வந்து தோன்றினள் என்றது, இப்பதி செய்த தவத்தால் தானே வந்து தோன்றினள் என்பதுபட நின்றது. மாமழை போல் என்றான் நம் பசிப் பிணிக்கு மருந்தாக வந்தாள் என்பதும் கைம்மாறு கருதாது வந்தாள் என்பதும் தோன்ற. மன்னனும் விரும்பி என்புழி கஞ்சுகனே அன்றித் தானும் விரும்பினான் என இறந்தது தழீஇ நிற்றலின் உம்மை-எச்ச உம்மை. கந்திற்பாவையை வந்தித் தேத்தி என்க. மணிமேகலையின் வரவினை யாம் பெரிதும் விரும்புகின்றேம் என்பதறிவித்தற்கு மந்திரச் சுற்றமொடு சென்றான் என்றவாறு. வாழ்த்திப் பின் என அறுத்துக் கூறிக்கொள்க.

மன்னவன் மணிமேகலைக்குப் புத்த பீடிகையின் வரலாறு கூறி அதனைக் காட்டுதல்

188-199 : செங்கோல்..........பலவால்

(இதன் பொருள்) நலத்தகை நல்லாய்-நன்மையான பெருந்தகைமையுடைய மாதர் திலகமே; செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ கொங்கு அவிழ் குழலார் கற்புக் குறைபட்டோ-எனது செங்கோல் யான் அறியாமலே வளைந்தொழிந்ததோ? அன்றி மாதவர் தாம் செய்யும் தவ ஒழுக்கம் பிழைபட்டொழிந்ததோ அன்றி நறுமணம் பரப்புகின்ற கூந்தலையுடைய குலமகளிரின் கற்பொழுக்கம் குறை பட்டொழிந்ததோ; அறியேன் நன்னாடு எல்லாம் அலத்தற்காலே ஆகியது அறியேன்-காரணம் அறிகின்றிலேன் பண்டு நன்னுடாய் இருந்த இத்தொண்டை நாடு முழுவதும் இப்பொழுது வறுமையால் மன்னுயிர் வருந்தும் வற்கடக் காலமுடையதாக மாறிவிட்டது, இவ்வல்லலே அகற்றுதற்கு வழியும் அறியேனாய்; மயங்குவேன் முன்னர் ஓர் மாதெய்வம் தோன்றி  உறங்காது ஒழிநின் உயர்தவத்தால் ஓர் காரிகை தோன்றும்-நெஞ்சம் மயங்குகின்ற என் கண் முன்னே ஒரு சிறந்த தெய்வம் எளிவந்து தோன்றி அரசே இங்ஙனம் வருந்தாதொழி, முன்பு நீ செய்த உயர்ந்த தவப்பயனாக ஒரு தவமகள் இங்குத் தானே வந்தெய்துவாள்; அவள் பெரும் கடிஞையின் ஆருயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும்-அவள் அங்கையில் ஏந்திவரும் பெரிய பிச்சைப் பாத்திரத்தில் சுரக்கின்ற உணவினால் அகன்ற உனது நாட்டிலுள்ள உயிரினம் எல்லாம் உய்யுங்காண்! மேலும்; ஆங்கு அவள் அருளால் அமரர்கோன் ஏவலின் தாங்கா மாரியும் தான் நனிபொழியும்-அப்பொழுது அவள் ஆற்றுகின்ற அருளறத்தின் பயனாக அமரர் கோமானாகிய இந்திரன் ஏவுதலாலே நினது நாடு தாங்குதற்கியலாதபடி மழை தானும் மிகுதியாகப் பெய்வதாம்; அன்னாள் இந்த அகநகர் புகுந்த பின்னாள் நிகழும் பேர் அறம் பலவால்-அத்தவமகள் இக்காஞ்சி மாநகரத்தின் உள்ளே புகுந்த பின்னர் வருகின்ற நாள்களிலே நிகழவிருக்கின்ற பெரிய அறச்செயல்களும் மிகப்பலவாம் எனவும் என்க.

(விளக்கம்) கோல்நிலை திரிந்திடிற் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்
மாரிவறங் கூரின் மன்னுயி ரில்லை
மன்னுயி ரெல்லாம் மண்ணாள் வேந்தன்
தன்னுயி ரென்னும் தகுதியின் றாகும்      (7:8-12)

என முன்னும் வந்தமை உணர்க. அறியேன் என்பதனை முன்னும் கூட்டுக. மயங்குதல்-திகைத்தல். அருளுடைமை பற்றி மாதெய்வம் என்றன்; உண்டி சுரத்தல் பற்றிப் பெருங்கடிஞை என்றவாறு. ஆருயிர் மருந்து-உணவு. அகனிலம்: அன்மொழித் தொகை; உயிர்கள் என்க. அமரர்கோன்-இந்திரன். அன்னாள்-அத்தவமகள்.

200-210 : கார்வறம்..............இதுவென

(இதன் பொருள்) கார்வறங் கூரினும் நீர்வறங் கூராது-அக்காலத்தே மழை பெய்யாதொழியினும் யாறு முதலியவற்றில் நீர்ப்பெருக்கு வற்றாது; பாரக விதியின் பண்டையோர் இழைத்த கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சியோடு மாமணிபல்லவம் ஈங்கு வந்தது என-மேலும் அத்தெய்வம் எம்மை நோக்கி நீவிர் இந்நிலவுலகத்தில் அமைந்த சிற்பவிதியின்படி முன்னோர் இயற்றிய கோமுகி என்னும் மிக்க நீரினையுடைய பொய்கையோடே சிறந்த மணிபல்லவத்தீவே இந்நகரத்திற்கு வந்துள்ளது என்று வியக்கும்படி; பொய்கையும் பொழிலும் புனைமின் என்று அறைந்து அத்தெய்வதம் போயபின் மரம் செய்து அமைத்தது இ இடம் என்று அ இடம் காட்ட-பொய்கையும் பொழிலும் உண்டாக்குங்கள் என்று கூறிய அத்தெய்வம் மறைந்துபோன பின்னர் யாங்களும் அத்தெய்வம் கூறியவாறே உண்டாக்கி வைத்தது இவ்விடத்தே என்று கூறி அரசன் மணிமேகலையை அழைத்துப்போய் அவ்விடத்தைக் காட்டுதலாலே; அத்தீவகம் போன்ற காவகம் பொருந்தி கண்டு உளம் சிறந்த காரிகை நல்லாள்-அம்மணிபல்லவத்தீவின் கண் அமைந்த பொழிலையே ஒத்த அப்பூம்பொழிலின் ஊடே புகுந்து அங்கமைந்த பொய்கையையும் கண்டமையாலே உளம் மகிழ்ந்த அம்மணிமேகலை அரசனை நோக்கி அங்கு; பண்டை எம் பிறப்பினை பான்மையின் காட்டிய அப்பீடிகை இது என-அம் மணிபல்லவத்தின்கண் எம்முடைய பழம்பிறப்பினைப் பண்போடு காட்டிய அந்தப் புத்தபீடிகையின் தன்மை இத்தகையது என்று கூறுதலாலே என்க.

(விளக்கம்) கார்-முகில். பாரக விதி என்றது மணிபல்லவத்தில் கோமுகி முதலியன வானவர் விதியில் அமைக்கப்பட்டன ஆதலின் நீயிர் அங்ஙனம் செய்யமாட்டாமையின் பாரக விதியினாலே செய்திடுக என்றறிவித்தற்பொருட்டு. புனைமின் என்றது அரசனுக்குரிய அமைச்சர் முதலியோரையும் உளப்படுத்திக் கூறியபடியாம். அத்தீவகம்-அம்மணி பல்லவம். அங்கு பீடிகை இது-அம்மணிபல்லவத்தில் யான் கண்ட புத்தபீடிகையின் இலக்கணம் உடையது இது என்றவாறு. எனவே அவ்வாறு இங்கும் ஒரு பீடிகை செய்மின் எனக்குறிப்பினால் அறிவித்தவாறாயிற்று. அப்பீடிகையின் இலக்கணம் வருமாறு-

விரிந்திலங் கவிரொளி சிறந்துகதிர் பரப்பி
உரைபெறு மும்முழம் நிலமிசை ஓங்கித்
திசைதொறும் ஒன்பான் முழநில மகன்று
விதிமா ணாடியின் வட்டங் குயின்று
பதும சதுர மீமிசை விளங்கி
அறவோற் கமைந்த ஆசனம் (8:44-41)

என்பதாம்.

கிள்ளிவளவன் பீடிகையும் கோயிலும் சமைத்து விழவும் சிறப்பும் எடுத்தல்

210-216 : அறவோன்............ஏத்தி

(இதன் பொருள்) அறவோன் பங்கயப் பீடிகை பான்மையின் வகுத்து-அதுகேட்டு அறவாழி அந்தணனாகிய புத்தபெருமானுடைய செந்தாமரை மலர் போன்ற திருவடிச் சுவடுகளை உடைய பீடிகையை அவ்விலக்கண முறைமையின் இயற்றி; தீவதிலகையும் திருமணிமேகலா மாபெரும் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு ஒத்த கோயில்-மணிபல்லவத்தில் உறைகின்ற தீவதிலகை என்னும் தெய்வமும் திருமகளை ஒத்த மணிமேகலை என்னும் மிகவும் பெரிய தெய்வந்தானும் வணங்கித் தொழுது வாழ்த்துதற்குப் பொருந்திய திருக்கோயிலும்; உளத்தகப் புனைந்து விழவும் சிறப்பும் வேந்தன் இயற்ற-மணிமேகலை கருத்திற்கேற்ப இயற்றி ஆங்குப் புத்தபெருமானுக்கு நாள் விழாவும் சிறப்பு விழாவும் அவ்வேந்தன் நிகழ்த்துதலானே; தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்தி-மக்களும் தேவரும் முனிவரும் பிறரும் தொழத்தகுந்த பெருந்தகைப் பெண்ணாகிய மணிமேகலைதானும் வலம்வந்து அப்பீடிகையினிடத்தே கிடந்த புத்தருடைய திருவடித் தாமரைகளைக் கைகூப்பித் தொழுது வணங்கி வாழ்த்திய பின்னர் என்க.

(விளக்கம்) அறவோன்-புத்தன். பங்கயப் பீடிகை-பங்கயம் போன்ற திருவடிச் சுவடுகள் பதித்த பீடம். பான்மை-மணிமேகலை கூறிய இலக்கணம். இம்மணிமேகலையின் வேறுபடுத்துதற்கு முன்னும் பின்னும் அடை புணர்த்துத் திருமணிமேகலா மாபெரும் தெய்வம் எனல் வேண்டிற்று. மணிமேகலையின் உளந்தகப் புனைந்து என்க. விழவும் சிறப்பும்-நித்தல் விழவும் சிறப்பும் விழவும். மாதர்: மணிமேகலை.

மணிமேகலை உண்டி வழங்குதல்

217-227 : பங்கய.............ஈண்டி

(இதன் பொருள்) பங்கயப் பீடிகை அங்கையின் ஏந்திய பசிப்பிணி மருந்தெனும் அமுதசுரபியை வைத்து நின்று-தொடக்கத்தே புத்தருடைய திருவடித்தாமரைச் சுவடுகிடந்த அப்பீடிகையின் மேல் தன் அகங்கையின்கண் ஏந்தியிருந்த உயிர்களை வருத்தும் பசிப்பிணிக்கு மருந்தென்று போற்றப்படுகின்ற அமுதசுரபியை வைத்துப் பின்னர் அதன் பக்கலிலே நின்று; எல்லா உயிரும் வருக என-நாற்றிசையினும் வாழும் எல்லா உயிர்களும் உண்க வருக என்று அன்புடன் அழைக்கும்; பைத்து அரவு அல்குல் பாவை தன் கிளவியின்-அரவின் படம் போன்ற அல்குலை உடைய ஓவியப் பாவை போல்வாளாகிய அம்மணிமேகலையினுடைய அன்புமொழியைக் கேட்டு; மொய்த்த மூஅறு பாடை மாக்களின் காணார் கேளார் கால்முடம் ஆனோர் பேணாமாக்கள் பேசார் பிணித்தோர் படிவ நோன்பியர்-அவ்விடத்தே வந்து குழுமிய பதினெட்டு மொழிகள் வழங்கும் நாடுகளிலே பிறந்தமையால் வேறு வேறு மொழி பேசுகின்ற அம்மக்களும் அம்மக்கள் குழுவினுள் வைத்துக் குருடரும் செவிடரும் கால் முடமாயினோரும் பேணுவார் யாரும் இல்லாதவரும் வாய் பேசாத வூமரும் நோயால் பிணிக்கப்பட்டோரும் தவவேடமும் நோன்பு உடையோரும்; பசி நோய் உற்றோர் மடிநல் கூர்ந்த மாக்கள் யாவரும் பன்னூறு ஆயிரம் விலங்கின் தொகுதியும் மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி-ஆனைத் தீ என்னும் பசி நோயால் பற்றப்பட்டவரும் சோம்பலால் வறுமையுற்ற மாக்களும் ஆகிய எல்லா மக்களும் பல நூறாயிரம் வகைப்பட்ட விலங்குக் கூட்டமும் பிறவுமாகிய உடலொடு நிலைபெற்ற இயங்கியல் உயிர்கள் முழுவதும் அவ்விடத்தே வந்து ஒருங்கே கூடாநிற்ப என்க.

(விளக்கம்) பாவை : மணிமேகலை. மூஅறு பாடை-பதினெட்டு வகை மொழி. அவை நாவலந் தீவில் ஆரியம் முதலாக அருந்தமிழ் ஈறாக அமைந்த பதினெட்டு வகை மொழிகள். பாடை-(பாஷை மொழி. பேணுமாக்கள்-பேணத்தகுந்தவர் இல்லாத எளியோர். பிணித்தோர் மடிநல் கூர்ந்த என்பதற்கு மடியை உடை என்று கொண்டு மடிநல் கூர்ந்த மாக்கள்-உடையின்றித் துன்பம் எய்திய மக்கள் என்று உரை கூறி விளக்கத்தில் மடிமையால் வறுமையுறுவோரை அருளுவது மடிமையாகிய தீவினையை வளர்க்கும் செய்கையால் அறமாகா தொழிதலின் சோம்புதலால் வறுமையுற்ற மாக்கள் என்றால் பொருந்தாமை அறிக; என்று விளக்குவாரும் உளர். இவருடைய இவ்வுரையை நல்லுரை என்று விளக்குவாரும் உளர். இவருடைய இவ்வுரையை நல்லுரை என்று கொள்வார் தம்பால் வரும் வறுமையாளரை எல்லாம் நன்கு ஆராய்ந்துணர்ந்து அவர் வறுமை மடியால் வந்தது அன்று என்று நன்கு தெரிந்து கொண்ட பின்னரே ஏதேனும் ஒரு பிடி சோறிடுவதாயினும் இடுவாராக. இவ்வுரை போலி என்பது எமது கருத்து. மேலும் மணிமேகலை அமுதசுரபியில் உணவு சுரப்பதல்லது உடைகளும் தோன்றும் என்று கூறப்படாமையின் உடையின்றித் துன்பம் எய்திய மக்கள் வந்தமை என்பது பொருந்தாமை உணர்க. ஈண்டி-ஈண்ட.

இதுவுமது

228-235 : அருந்தி.............காலை

(இதன் பொருள்) அருந்தியோர்க்கு எல்லாம் ஆருயிர் மருந்தாய்-ஏற்று உண்டோர் எல்லாருக்கும் பெறுதற்கரிய உயிரைப் பிணி தீர்த்து வளர்க்கின்ற மருந்தாய்; பெருந்தவர் கைபெய் பிச்சையின் பயனும் நீரும் நிலமும் காலமும் கருவியும் சீர்பெற வித்திய வித்தின் விளைவும் பெருகியது என்ன-பெரிய தவ ஒழுக்கமுடையோர் கையின்கண் பெய்யப்பட்ட பிச்சையின் பயனும் நீர் நிலம் காலம் கருவி என்னும் இவை குறைவின்றிச் சீர்த்தவிடத்தே விதைக்கப்பட்ட வித்தினது விளைவும் பன்மடங்கு பெருகினாற் போல; வசி பெருவளம் சுரப்ப தொழில் உதவி வளம் தந்தது என-மழையானது உலகத்தில் மிக வளம் பெருகும்படி தனது பெய்தல் தொழிலைச் செய்து தனது வளமாகிய நீசை வழங்கினாற் போலவும் நாளுக்குநாள் மிகுதியாக உணவினை வழங்கி உயிர்களின்; பசிப்பிணி தீர்த்த பாவையை ஏத்திச் செல்லுங்காலே-பசியாகிய துன்பத்தைத் தீர்த்தவளாகிய அம்மணிமேகலையை அவ் உயிர்கள் கைதொழுது ஏத்தாநிற்ப இங்ஙனம் நிகழும் காலத்தே என்க.

(விளக்கம்) அமுதசுரபியில் சுரக்கின்ற உணவு உயிரின் சாவினைத் தடுக்கும் மருந்தா தலோடன்றிப் பெரியோர்க்கு ஈந்த தானத்தின் பயன் போலவும் நீர் முதலியவற்றால் சீர்த்த விடத்தே விதைத்த விளைவு போலவும் அவ்வுயிர்களுக்குப் பெரிதும் ஆக்கமும் தந்தது. அவை அறம் பொருள் இன்பம் வீடு என்பன என்க. பாவையை அவ்வுயிர்கள் ஏத்தி என்க. ஏத்தி என்னும் எச்சத்தை ஏத்த எனத் திருத்திக் கொள்க.

மணிமேகலை இருக்குமிடத்திற்கு அறவண அடிகளும் மாதவியும் சுதமதியும் வருதல்

235-239 : தாயர்...........வணங்கி

(இதன் பொருள்) தாயர் தம்முடன் அல்லவை கடிந்த அறவண அடிகளும்-மணிமேகலை நாணுதற்கு அவாவிய மாதவியும் சுதமதியும் ஆகிய தாயர் இருவரோடும் நல்லறம் அல்லாதவற்றையெல்லாம் துவரத் துடைத்த அறவண அடிகளாரும்; மல்லல் மூதூர் மன்னுயிர் முதல்வி நல்அறச்சாலை நண்ணினர் சேறலும்-வளம்மிக்க பழையதாகிய காஞ்சி மாநகரத்தின்கண் மணிமேகலை வரவினையும் செயலையும் கேள்வியுற்று உடம்போடு நிலைபெற்றுள்ள உயிர்களுக்கெல்லாம் அந்நிலைபேற்றிற்குக் காரணமாய் இருக்கின்ற அம்மணிமேகலையின் அருள் அறம் நிகழுகின்ற அக்கோட்டத்தை அணுகிச் செல்லா நிற்ப அவர் வரவு கண்ட அம்மணிமேகலை தானும்; சென்று அவர் தம்மைத் திருவடி வணங்கி-எதிரே சென்று வரவேற்று அவர்களுடைய அழகிய அடிகளிலே விழுந்து வணங்கி அழைத்து வந்து என்க.

(விளக்கம்) அல்லவை-அறமல்லாதவை. மணிமேகலை வருகையின் பின் அந்நாட்டில் மழைவளமும் உண்டாயது என்பது தோன்ற மல்லன் மூதூர் என்றார். நல்லறம் என்றது உண்டி வழங்குதலை. முதல்வி-காரணமானவள். நண்ணினர்: முற்றெச்சம். சேறல்-செல்லுதல். சென்று என்றது எதிர்சென்று என்றவாறு. அவர்-மூவரையும்.

மணிமேகலை அம்மூவருக்கும் உணவு முதலியன கொடுத்து மனமகிழ்ந்து வணங்கி உண்மை உருவம் கொள்ளல்

240-245 : நன்றென..........கலையென்

(இதன் பொருள்) நன்று என விரும்பி-தான் செய்த தவமும் நன்றேயாயிற்று என்று கருதி ஆர்வத்தோடு அவர்களுடைய; நல்லடி கழுவி ஆசனத்து ஏற்றி-நலந்தரும் திருவடிகளை நீரால் கழுவித் தவத்தோர்க்கியன்ற இருக்கைகளை ஈந்து அவற்றின் மேல் இருப்பித்து; பொழுதினில் அறுசுவை நால்வகை போனகம் ஏந்தி-உண்ணுதற்கேற்ற காலம் அறிந்து அம்மூவர்க்கும் தனது அமுதசுரபியிற் சுரந்த
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 10:21:05 AM
29. தவத்திறம் பூண்டு தருமங்கேட்ட காதை

(இருபத்தொன்பதாவது மணிமேகலை, காஞ்சி மாநகர்க்கட் சென்ற பின்னர் அறவண வடிகளும் தாயருஞ் செல்ல அவரைக் கண்டு இறைஞ்சித் தருமங் கேட்ட பாட்டு)

அஃதாவது மணிமேகலை பவுத்த சமயத்தின்கண் பிக்குணிக்குக் (பெண்துறவிக்கு) கூறி உள்ள எட்டுக் கட்டளைகளையும் மேற்கொள்வதாகிய தவக்கோலம் தாங்கி அறவண அடிகளாரிடத்தே அச்சமயத்தார்க்கு உரிய அறங்களைக் கேட்டறிந்த செய்கையைக் கூறும் செய்யுள் என்றவாறு.

இதன்கண் அறவண வடிகளார் தம்மை வணங்கிய மணிமேகலையை வாழ்த்தி அவளுக்குத் தாம் கச்சிநகரத்திற்கு வந்த வரலாறு கூறுபவர்: பீலிவளை பெற்ற மகவினைக் கடலில் கெடுத்ததும், அதுகேட்ட சோழமன்னன் வருத்தமுற்று அம்மகவினைத் தேடி அலைந்த காரணத்தால் தன் நகரத்தில் தான் செய்யக்கடவ இந்திர விழாவை மறந்தமையும் அதனால் மணிமேகலா தெய்வம் அந்நகரத்தைக் கடல் கொள்க என்று சபித்ததும் தனக்கு விழாச் செய்யாமையால் இந்திரனும் சாபமிட்டானாக இவ்வாற்றல் புகார் நகரம் கடல்கோள் பட்டதும், இங்ஙனம் ஆகும் என்று யாம் முன்பே தெரிந்து இக்காஞ்சி நகரத்திற்கு மாதவி சுதமதி என்னும் மகளிரோடு இந்நகரத்திற்கு வந்தேம் என்று அறிவித்ததும் அதுகேட்ட மணிமேகலை தான் மாதவன் உருவங்கொண்டு வஞ்சிமாநகரம் அடைந்த செய்தியும், அந்நகரத்தில் பல்வேறு சமயக்கணக்கர்களைக் கண்டு அவர் தம் சமய நன்பொருள்களைக் கேட்டறிந்த செய்தியையுங்கூறி அவர் கூறிய பொருள்கள் தன் மனத்திற்குப் பொருந்தாமையால் தாமரையும் அறவண அடிகளாரையும் காண்டற்கு விரும்பிக் கச்சிமாநகர் புக்க செய்தியையும் அவ்வடிகளார்க்கு உரைத்தலும், அதுகேட்ட அடிகளார் மணிமேகலை வேண்டுகோட் கிணங்கிப் புத்தர் அறங்களை மணிமேகலைக்குச் செவியறிவுறுத்துதலும் பிறவும் கூறப்படுகின்றன.

இறைஞ்சிய இளங்கொடி தன்னை வாழ்த்தி
அறம் திகழ் நாவின் அறவணன் உரைப்போன்
வென் வேல் கிள்ளிக்கு நாகநாடு ஆள்வோன்
தன் மகள் பீலிவளை தான் பயந்த
புனிற்று இளங் குழவியைத் தீவகம் பொருந்தி
தனிக் கலக் கம்பளச் செட்டி கைத் தரலும்
வணங்கிக் கொண்டு அவன் வங்கம் ஏற்றிக்
கொணர்ந்திடும் அந் நாள் கூர் இருள் யாமத்து
அடைகரைக்கு அணித்தா அம்பி கெடுதலும்
மரக்கலம் கெடுத்தோன் மைந்தனைக் காணாது  29-010

அரைசற்கு உணர்த்தலும் அவன் அயர்வுற்று
விரைவனன் தேடி விழாக்கோள் மறப்பத்
தன் விழாத் தவிர்தலின் வானவர் தலைவன்
நின் உயிர்த் தந்தை நெடுங் குலத்து உதித்த
மன் உயிர் முதல்வன் மகர வேலையுள்
முன்னிய வங்கம் முங்கிக் கேடுற
பொன்னின் ஊசி பசுங் கம்பளத்துத்
துன்னியதென்னத் தொடு கடல் உழந்துழி
எழு நாள் எல்லை இடுக்கண் வந்து எய்தா
வழுவாச் சீலம் வாழ்மையின் கொண்ட  29-020

பான்மையின் தனாது பாண்டு கம்பளம்
தான் நடுக்குற்ற தன்மை நோக்கி
ஆதி முதல்வன் போதி மூலத்து
நாதன் ஆவோன் நளி நீர்ப் பரப்பின்
எவ்வம் உற்றான் தனது எவ்வம் தீர் எனப்
பவ்வத்து எடுத்து பாரமிதை முற்றவும்
அற அரசு ஆளவும் அற ஆழி உருட்டவும்
பிறவிதோறு உதவும் பெற்றியள் என்றே
சாரணர் அறிந்தோர் காரணம் கூற
அந்த உதவிக்கு ஆங்கு அவள் பெயரைத்  29-030

தந்தை இட்டனன் நினை தையல் நின் துறவியும்
அன்றே கனவில் நனவென அறைந்த
மென் பூ மேனி மணிமேகலா தெய்வம்
என்பவட்கு ஒப்ப அவன் இடு சாபத்து
நகர் கடல் கொள்ள நின் தாயரும் யானும்
பகரும் நின் பொருட்டால் இப் பதிப் படர்ந்தனம்
என்றலும் அறவணன் தாள் இணை இறைஞ்சி
பொன் திகழ் புத்த பீடிகை போற்றும்
தீவதிலகையும் இத் திறம் செப்பினள்
ஆதலின் அன்ன அணி நகர் மருங்கே  29-040

வேற்றுருக் கொண்டு வெவ் வேறு உரைக்கும்
நூல் துறைச் சமய நுண் பொருள் கேட்டே
அவ் உரு என்ன ஐ வகைச் சமயமும்
செவ்விது அன்மையின் சிந்தையின் வைத்திலேன்
அடிகள்! மெய்ப்பொருள் அருளுக என்ன
நொடிகுவென் நங்காய்! நுண்ணிதின் கேள் நீ
ஆதி சினேந்திரன் அளவை இரண்டே
ஏதம் இல் பிரத்தியம் கருத்து அளவு என்னச்
சுட்டுணர்வைப் பிரத்தியக்கம் எனச் சொலி
விட்டனர் நாம சாதி குணம் கிரியைகள்  29-050

மற்று அவை அனுமானத்தும் அடையும் என
காரண காரிய சாமானியக் கருத்து
ஓரின் பிழைக்கையும் உண்டு பிழையாதது
கனலில் புகைபோல் காரியக் கருத்தே
ஏனை அளவைகள் எல்லாம் கருத்தினில்
ஆன முறைமையின் அனுமானம் ஆம் பிற
பக்கம் ஏது திட்டாந்தம் உபநயம்
நிகமனம் என்ன ஐந்து உள அவற்றில்
பக்கம் இம் மலை நெருப்புடைத்து என்றல்
புகையுடைத்து ஆதலால் எனல் பொருந்து ஏது  29-060

வகை அமை அடுக்களை போல் திட்டாந்தம்
உபநயம் மலையும் புகையுடைத்து என்றல்
நிகமனம் புகையுடைத்தே நெருப்புடைத்து என்றல்
நெருப்புடைத்து அல்லாது யாதொன்று அது புகைப்
பொருத்தம் இன்று புனல்போல் என்றல்
மேவிய பக்கத்து மீட்சி மொழி ஆய்
வைதன்மிய திட்டாந்தம் ஆகும்
தூய காரிய ஏதுச் சுபாவம்
ஆயின் சத்தம் அநித்தம் என்றல்
பக்கம் பண்ணப்படுதலால் எனல்   29-070

பக்க தன்ம வசனம் ஆகும்
யாதொன்று யாதொன்று பண்ணப்படுவது
அநித்தம் கடம் போல் என்றல் சபக்கத்
தொடர்ச்சி யாதொன்று அநித்தம் அல்லாதது
பண்ணப் படாதது ஆகாசம் போல் எனல்
விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழி என்க
அநன்னுவயத்தில் பிரமாணம் ஆவது
இவ் வெள்ளிடைக்கண் குடம் இலை என்றல்
செவ்விய பக்கம் தோன்றாமையில் எனல்
பக்க தன்ம வசனம் ஆகும்   29-080

இன்மையின் கண்டிலம் முயற்கோடு என்றல்
அந் நெறிச் சபக்கம் யாதொன்று உண்டு அது
தோற்றரவு அடுக்கும் கைந் நெல்லிபோல் எனல்
ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும்
இவ்வகை ஏது பொருள் சாதிப்பன
என்னை காரியம் புகை சாதித்தது? என்னின்
புகை உள இடத்து நெருப்பு உண்டு என்னும்
அன்னுவயத்தாலும் நெருப்பு இலா இடத்துப்
புகை இல்லை என்னும் வெதிரேகத்தாலும்
புகஈ நெருப்பைச் சாதித்தது என்னின்  29-090

நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான
ஊர்த்தச் சாமம் கௌடிலச் சாமம்
வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின்
மேல் நோக்கிக் கறுத்திருப்ப பகைத்திருப்ப
தாமே நெருப்பைச் சாதிக்க வேண்டும்
அன்னுவயம் சாதிக்கின் முன்னும்
கழுதையையும் கணிகையையும்
தம்மில் ஒருகாலத்து ஓர் இடத்தே
அன்னுவயம் கண்டான் பிற்காலத்து
கழுதையைக் கண்ட இடத்தே கணிகையை  29-100

அனுமிக்க வேண்டும் அது கூடா நெருப்பு
இலா இடத்துப் புகை இலை எனல் நேர் அத்
திருத்தகு வெதிரேகம் சாதிக்கும் என்னின்
நாய் வால் இல்லாக் கழுதையின் பிடரில்
நரி வாலும் இலையா காணப்பட்ட
அதனையே கொண்டு பிறிதோர் இடத்து
நரி வாலினால் நாய் வாலை அனுமித்தல்
அரிதாம் அதனால் அதுவும் ஆகாது
ஒட்டிய உபநயம் நிகமனம் இரண்டும்
திட்டாந்தத்திலே சென்று அடங்கும்   29-110

பக்கம் ஏது திட்டாந்தங்கள்
ஒக்க நல்லவும் தீயவும் உள அதில்
வௌிப்பட்டுள்ள தன்மியினையும்
வௌிப்பட்டுள சாத்திய தன்மத்திறம்
பிறிதின் வேறு ஆம் வேறுபாட்டினையும்
தன்கண் சார்த்திய நயம் தருதல் உடையது
நன்கு என் பக்கம் என நாட்டுக அது தான்
சத்தம் அநித்தம் நித்தம் என்று ஒன்றைப்
பற்றி நாட்டப்படுவது தன்மி
சத்தம் சாத்திய தன்மம் ஆவது   29-120

நித்த அநித்தம் நிகழும் நல் ஏது
மூன்றாய்த் தோன்றும் மொழிந்த பக்கத்து
ஊன்றி நிற்றலும் சபக்கத்து உண்டாதலும்
விபக்கத்து இன்றியே விடுதலும் சபக்கம்
சாதிக்கின் பொருள் தன்னால் பக்கத்து
ஓதிய பொது வகை ஒன்றி இருத்தல்
சத்த அநித்தம் சாத்தியம் ஆயின்
ஒத்த அநித்தம் கட ஆதி போல் எனல்
விபக்கம் விளம்பில் யாதொன்று யாதொன்று
அநித்தம் அல்லாதது பண்ணப் படாதது  29-130

ஆ அகாசம் போல் என்று ஆகும்
பண்ணப்படுதலும் செயலிடைத் தோன்றலும்
நண்ணிய பக்கம் சபக்கத்திலும் ஆய்
விபக்கத்து இன்றி அநித்தத்தினுக்கு
மிகத் தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க
ஏதம் இல் திட்டாந்தம் இரு வகைய
சாதன்மியம் வைதன்மியம் என
சாதன்மியம் எனப்படுவது தானே
அநித்தம் கட ஆதி அன்னுவயத்து என்கை
வைதன்மிய திட்டாந்தம் சாத்தியம்  29-140

எய்தா இடத்தில் ஏதுவும் இன்மை
இத்திறம் நல்ல சாதனத்து ஒத்தன
தீய பக்கமும் தீய ஏதுவும்
தீய எடுத்துக்காட்டும் ஆவன
பக்கப் போலியும் ஏதுப் போலியும்
திட்டாந்தப் போலியும் ஆஅம் இவற்றுள்
பக்கப்போலி ஒன்பது வகைப்படும்
பிரத்தியக்க விருத்தம் அனுமான
விருத்தம் சுவசன விருத்தம் உலோக
விருத்தம் ஆகம விருத்தம் அப்பிர   29-150

சித்த விசேடணம் அப்பிரசித்த
விசேடியம் அப்பிரசித்த உபயம்
அப்பிரசித்த சம்பந்தம் என
எண்ணிய இவற்றுள் பிரத்தியக்க விருத்தம்
கண்ணிய காட்சி மாறுகொளல் ஆகும்
சத்தம் செவிக்குப் புலன் அன்று என்றல்
மற்று அனுமான விருத்தம் ஆவது
கருத்து அளவையை மாறாகக் கூறல்
அநித்தியக் கடத்தை நித்தியம் என்றல்
சுவசன விருத்தம் தன் சொல் மாறி இயம்பல்  29-160

என் தாய் மலடி என்றே இயம்பல்
உலக விருத்தம் உலகின் மாறாம் உரை
இலகு மதி சந்திரன் அல்ல என்றல்
ஆகம விருத்தம் தன் நூல் மாறு அறைதல்
அநித்த வாதியா உள்ள வைசேடிகன்
அநித்தியத்தை நித்தியம் என நுவறல்
அப்பிரசித்த விசேடணம் ஆவது
தத்தம் எதிரிக்குச் சாத்தியம் தெரியாமை
பௌத்தன் மாறாய் நின்ற சாங்கியனைக்
குறித்து சத்தம் விநாசி என்றால்   29-170

அவன் அவிநாசவாதி ஆதலின்
சாத்திய விநாசம் அப்பிரசித்தம் ஆகும்
அப்பிரசித்த விசேடியம் ஆவது
எதிரிக்குத் தன்மி பிரசித்தம் இன்றி
இருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற
பௌத்தனைக் குறித்து ஆன்மாச் சைதனியவான்
என்றால் அவன் அநான்ம வாதி
ஆதலின் தன்மி அப்பிரசித்தம்
அப்பிரசித்த உபயம் ஆவது
மாறு ஆனோர்க்குத் தன்மி சாத்தியம்  29-180

ஏறாது அப்பிரசித்தமாய் இருத்தல்
பகர் வைசேடிகன் பௌத்தனைக் குறித்து
சுகம் முதலிய தொகைப் பொருட்குக் காரணம்
ஆன்மா என்றால் சுகமும் ஆன்மாவும்
தாம் இசையாமையின் அப்பிரசித்த உபயம்
அப்பிரசித்த சம்பந்தம் ஆவது
எதிரிக்கு இசைந்த பொருள் சாதித்தல்
மாறு ஆம் பௌத்தற்கு சத்த அநித்தம்
கூறில் அவன்ன் கொள்கை அஃது ஆகலில்
வேறு சாதிக்க வேண்டாது ஆகும்   29-190

ஏதுப் போலி ஓதின் மூன்று ஆகும்
அசித்தம் அநைகாந்திகம் விருத்தம்ம் என
உபய அசித்தம் அன்னியதர அசித்தம்
சித்த அசித்தம் ஆசிரய அசித்தம்
என நான்கு அசித்தம் உபய அசித்தம்
சாதன ஏது இருவர்க்கும் இன்றி
சத்தம் அநித்தம் கண் புலத்து என்றல்
அன்னியதர அசித்தம் மாறு ஆய் நின்றாற்கு
உன்னிய ஏது அன்றாய் ஒழிதல்
சத்தம் செயலுறல் அநித்தம் என்னின்  29-200

சித்த வௌிப்பாடு அல்லது செயலுறல்
உய்த்த சாங்கியனுக்கு அசித்தம் ஆகும்
சித்த அசித்தம் ஆவது
ஏது சங்கயமாய்ச் சாதித்தல்
ஆவி பனி என ஐயுறா நின்றே
தூய புகை நெருப்பு உண்டு எனத் துணிதல்
ஆசிரய அசித்தம் மாறு ஆனவனுக்கு
ஏற்ற தன்மி இன்மை காட்டுதல்
ஆகாசம் சத்த குணத்தால் பொருளாம் என்னின்
ஆகாசம் பொருள் அல்ல என்பாற்குத்  29-210

தன்மி அசித்தம் அநைகாந்திகமும்
சாதாரணம் அசாதாரணம் சபக்கைக
தேசவிருத்தி விபக்க வியாபி
விபக்கைகதேச விருத்தி சபக்க
வியாபி உபயைகதேச விருத்தி
விருத்த வியபிசாரி என்று ஆறு
சாதாரணம் சபக்க விபக்கத்துக்கும்
ஏதுப் பொதுவாய் இருத்தல் சத்தம்
அநித்தம் அறியப்படுதலின் என்றால்
அறியப்படுதல் நித்த அநித்தம் இரண்டுக்கும்  29-220

செறியும் கடம் போல் அநித்தத்து அறிவோ?
ஆகாசம் போல நித்தத்து அறிவோ?
என்னல் அசாதாரணம் ஆவது தான்
உன்னிய பக்கத்து உண்டாம் ஏதுச்
சபக்க விபக்கம் தம்மில் இன்றாதல்
சத்தம் நித்தம் கேட்கப்படுதலின்
என்னின் கேட்கப்படல் எனும் ஏதுப்
பக்கத்து உள்ளதாயின் அல்லது
சபக்க விபக்கத்து மீட்சித்து ஆதலின்
சங்கயம் எய்தி அநேகாந்திகம் ஆம்  29-230

சபக்கைகதேச விருத்தி விபக்க
வியாபி ஆவது ஏதுச் சபக்கத்து
ஓர் இடத்து எய்தி விபக்கத்து எங்கும்
உண்டாதல் ஆகும் சத்தம் செயலிடைத்
தோன்றாதாகும் அநித்தம் ஆகலின்
என்றால் அநித்தம் என்ற ஏதுச்
செயலிடைத் தோன்றாமைக்குச் சபக்கம்
மின்னினும் ஆகாசத்தினும் மின்னின்
நிகழ்ந்து ஆகாசத்தில் காணாது ஆகலின்
அநித்தம் கட ஆதியின் ஒத்தலின் கடம் போல்  29-240

அழிந்து செயலில் தோன்றுமோ? மின் போல்
அழிந்து செயலில் தோன்றாதோ? எனல்
விபக்கைகதேச விருத்தி சபக்க
வியாபி ஆவது ஏது விபக்கத்து
ஓரிடத்து உற்று சபக்கத்து ஒத்து இயறல்
சத்தம் செயலிடைத் தோன்றும் அநித்தம் ஆதலின் எனின்
அநித்த ஏதுச் செயலிடைத் தோன்றற்கு
விபக்க ஆகாயத்தினும் மின்னினும்
மின்னின் நிகழ்ந்து ஆகாசத்துக் காணாது
சபக்கக் கட ஆதிகள் தம்மில்   29-250

எங்கும் ஆய் ஏகாந்தம் அல்ல மின் போல்
அநித்தம் ஆய்ச் செயலிடைத் தோன்றாதோ? கடம்போல்
அநித்தம் ஆய்ச் செயலிடைத் தோன்றுமோ? எனல்
உபயைகதேச விருத்தி ஏதுச்
சபக்கத்தினும் விபக்கத்தினும் ஆகி
ஓர் தேசத்து வர்த்தித்தல் சத்தம்
நித்தம் அமூர்த்தம் ஆதலின் என்னின்
அமூர்த்த ஏது நித்தத்தினுக்குச்
சபக்க ஆகாச பரமாணுக்களின்
ஆகாசத்து நிகழ்ந்து மூர்த்தம் ஆம்   29-260

பரமாணுவின் நிகழாமையானும்
விபக்கமான கட சுக ஆதிகளில்
சுகத்து நிகழ்ந்து கடத்து ஒழிந்தமையினும்
ஏகதேசத்து நிகழ்வது ஏகாந்தம் அன்று
அமூர்த்தம் ஆகாசம்போல நித்தமோ?
அமூர்த்தம் சுகம் போல் அநித்தமோ? எனல்
விருத்த வியபிசாரி திருந்தா ஏது ஆய்
விருத்த ஏதுவிற்கும் இடம் கொடுத்தல்
சத்தம் அநித்தம் செயலிடைத் தோன்றலின்
ஒத்தது எனின் அச் செயலிடைத் தோன்றற்குச்  29-270

சபக்கமாயுள்ள கட ஆதி நிற்க
சத்தம் நித்தம் கேட்கப்படுதலின்
சத்தத்துவம் போல் எனச் சாற்றிடுதல்
இரண்டினும் சங்கயம் ஆய் ஏகாந்தம் அல்ல
விருத்தம் தன்னைத் திருத்தக விளம்பின்
தன்மச் சொரூப விபரீத சாதனம்
தன்ம விசேட விபரீத சாதனம்
தன்மிச் சொரூப விபரீத சாதனம்
தன்மி விசேட விபரீத சாதனம்
என்ன நான்கு வகையது ஆகும் அத்  29-280

தன்மச் சொரூப விபரீத சாதனம்
சொன்ன ஏதுவின் சாத்திய தன்மத்து
உருவம் கெடுதல் சத்தம் நித்தம்
பண்ணப்படுதலின் என்றால் பண்ணப்
படுவது அநித்தம் ஆதலின் பண்ணப்பட்ட
ஏதுச் சாத்திய தன்ம நித்தத்தை விட்டு
அநித்தம் சாதித்தலான் விபரீதம்
தன்ம விசேட விபரீத சாதனம்
சொன்ன ஏதுச் சாத்திய தன்மம்
தன்னிடை விசேடம் கெடச் சாதித்தல்  29-290

கண் முதல் ஓர்க்கும் இந்திரியங்கள்
எண்ணின் பரார்த்தம் தொக்கு நிற்றலினால்
சயன ஆசனங்கள் போல என்றால்
தொக்கு நிற்றலின் என்கின்ற ஏதுச்
சயன ஆசனத்தின் பராத்தம்போல் கண் முதல்
இந்தியங்களியும் பரார்த்தத்தில் சாதித்துச்
சயன ஆசனவானைப் போல் ஆகிக்
கண் முதல் இந்தியத்துக்கும் பரனாய்ச்
சாதிக்கிற நிர் அவயவமாயுள்ள
ஆன்மாவைச் சாவயவமாகச்   29-300

சாதித்துச் சாத்திய தன்மத்தின்
விசேடம் கெடுத்தலின் விபரீதம்
தன்மிச் சொரூப விபரீத சாதனம்
தன்மியுடைய சொரூப மாத்திரத்தினை
ஏதுத் தானே விபரீதப்படுத்தல்
பாவம் திரவியம் கன்மம் அன்று
குணமும் அன்று எத் திரவியம் ஆம் எக்
குண கன்மத்து உண்மையின் வேறாதலால்
சாமானிய விசேடம்போல் என்றால்
பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய்  29-310

நின்றவற்றின்னிடை உண்மை வேறு ஆதலால் என்று
காட்டப்பட்ட ஏது மூன்றினுடை
உண்மை பேதுப்படுத்தும் பொதுவாம்
உண்மை சாத்தியத்து இல்லாமையினும்
திட்டாந்தத்தில் சாமானியம் விசேடம்
போக்கிப் பிறிதொன்று இல்லாமையானும்
பாவம் என்று பகர்ந்த தன்மியினை
அபாவம் ஆக்குதலான் விபரீதம்
தன்மி விசேட விபரீத சாதனம்
தன்மி விசேட அபாவம் சாதித்தல்   29-320

முன்னம் காட்டப்பட்ட ஏதுவே
பாவம் ஆகின்றது கருத்தாவுடைய
கிரியையும் குணமும் ஆம் அதனை விபரீதம்
ஆக்கியது ஆதலான் தன்மி விசேடம்
கெடுத்தது தீய எடுத்துக்காட்டு ஆவன
தாமே திட்டாந்த ஆபாசங்கள்
திட்டாந்தம் இரு வகைப் படும் என்று முன்
கூறப்பட்டன இங்கண் அவற்றுள்
சாதன்மிய திட்டாந்த ஆபாசம்
ஓதில் ஐந்து வகை உளதாகும்   29-330

சாதன தன்ம விகலமும் சாத்திய
தன்ம விகலமும் உபய தன்ம
விகலமும் அநன்னுவயம் விபரீதான்
னுவயம் என்ன வைதன்மிய திட்
டாந்த ஆபாசமும் ஐ வகைய
சாத்தியா வியாவிருத்தி
சாதனா வியாவிருத்தி
உபயா வியாவிருத்தி அவ்வெதிரேகம்
விபரீத வெதிரேகம் என்ன இவற்றுள்
சாதன தன்ம விகலம் ஆவது   29-340

திட்டாந்தத்தில் சாதனம் குறைவது
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான்
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்
ஆதலான் காண்புற்றது பரமாணுவில் எனின்
திட்டாந்தப் பரமாணு
நித்தத்தோடு மூர்த்தம் ஆதலான்
சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பிச்
சாதன தன்ம அமூர்த்தத்துவம் குறையும்
சாத்திய தன்ம விகலம் ஆவது
காட்டப்பட்ட திட்டாந்தத்தில்   29-350

சாத்திய தன்மம் குறைவுபடுதல்
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலால்
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்
புத்திபோல் என்றால்
திட்டாந்தமாகக் காட்டப்பட்ட
புத்தி அமூர்த்தம் ஆகி நின்றே
அநித்தம் ஆதலான் சாதன அமூர்த்தத்துவம்
நிரம்பி சாத்திய நித்தத்துவம் குறையும்
உபய தன்ம விகலம் ஆவது
காட்டப்பட்ட திட்டாந்தத்திலே   29-360

சாத்திய சாதனம் இரண்டும் குறைதல்
அன்றியும் அது தான் சன்னும் அசன்னும்
என்று இரு வகையாம் இவற்றுள் சன்னா உள
உபய தன்ம விகலம் ஆவது
உள்ள பொருட்கண் சாத்திய சாதனம்
கொள்ளும் இரண்டும் குறையக் காட்டுதல்
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான்
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்
கடம் போல் எனின் திட்டாந்தமாகக்
காட்டப்பட்ட கடம் தான் உண்டாகிச்  29-370

சாத்தியமாய் உள நித்தத்துவமும்
சாதனமாய் உள அமூர்த்தத்துவமும் குறையும்
அசன்னா உள்ள உபய தன்ம விகலம்
இல்லாப்பொருட்கண் சாத்திய சாதனம்
என்னும் இரண்டும் குறையக் காட்டுதல்
சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான்
யாதொன்று யாதொன்று மூர்த்தம் அது அநித்தம்
ஆகாசம் போல் எனும் திட்டாந்தத்து
சாத்திய தன்மமாய் உள்ள அநித்தமும்
சாதன தன்மமாய் உள்ள மூர்த்தமும்  29-380

இரண்டும் ஆகாசம் அசத்து என்பானுக்கு
அதன்கண் இன்மையானே குறையும்
உண்டு என்பானுக்கு ஆகாசம் நித்தம்
அமூர்த்தம் ஆதலால் அவனுக்கும் குறையும்
அநன்னுவயம் ஆவது சாதன சாத்தியம்
தம்மில் கூட்டம் மாத்திரம் சொல்லாதே
இரண்டனுடைய உண்மையைக் காட்டுதல்
சத்தம் அநித்தம் கிருத்தம் ஆதலின்
யாதொன்று யாதொன்று கிருத்தம் அது அநித்தம் எனும்
அன்னுவயம் சொல்லாது குடத்தின்கண்ணே  29-390

கிருத்த அநித்தம் காணப்பட்ட
என்றால் அன்னுவயம் தெரியாதாகும்
விபரீதான்னுவயம் வியாபகத்துடைய
அன்னுவயத்தாலே வியாப்பியம் விதித்தல்
சத்தம் அநித்தம் கிருத்தத்தால் எனின்
யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தம் என
வியாப்பியத்தால் வியாபக்கத்தைக் கருதாது
யாதொன்று யாதொன்று அநித்தம் அது கிருத்தம் என
வியாபகத்தால் வியாப்பியத்தைக் கருதுதல்
அப்படிக் கருதின் வியாபகம் வியாப்பியத்தை  29-400

இன்றியும் நிகழ்தலின் விபரீதம் ஆம்
வைதன்மிய திட்டாந்தத்துச்
சாத்தியா வியாவிருத்தி ஆவது
சாதன தன்மம் மீண்டு
சாத்திய தன்மம் மீளாதுஒழிதல்
சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால்
யாதொன்று யாதொன்று நித்தமும் அன்று அது
அமூர்த்தமும் அன்று பரமாணுப் போல் எனின்
அப்படித் திட்டாந்தமாகக் காட்டப்பட்ட
பரமாணு நித்தம் ஆய் மூர்த்தம் ஆதலின்  29-410

சாதன அமூர்த்தம் மீண்டு
சாத்திய நித்தம் மீளாதுஒழிதல்
சாதனா வியாவிருத்தி ஆவது
சாத்திய தன்மம் மீண்டு
சாதன தன்மம் மீளாது ஒழிதல்
சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால்
யாதொன்று யாதொன்று நித்தம் அன்று அஃது
அமூர்த்தமும் அன்று கன்மம்போல் என்றால்
வைதன்மிய திட்டாந்தமாகக்
காட்டப்பட்ட கன்மம்   29-420

அமூர்த்தமாய் நின்றே அநித்தம் ஆதலின்
சாத்தியமான நித்தியம் மீண்டு
சாதனமான அமூர்த்தம் மீளாது
உபயா வியாவிருத்தி காட்டப்பட்ட
வைதன்மிய திட்டாந்தத்தினின்று
சாதன சாத்தியங்கள் மீளாமை அன்றியும்
உண்மையின் உபயா வியாவிருத்தி
இன்மையின் உபயா வியாவிருத்தி
என இருவகை உண்மையின்
உபயா வியாவிருத்தி உள்ள பொருட்கண்  29-430

சாத்திய சாதனம் மீளாதபடி
வைதன்மிய திட்டாந்தம் காட்டல்
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலின்
என்றாற்கு யாதொன்று யாதொன்று நித்தம் அன்று
அமூர்த்தமும் அன்று ஆகாசம்போல் என்றால்
வைதன்மிய திட்டாந்தமாகக் காட்டப்பட்ட
ஆகாசம் பொருள் என்பாற்கு
ஆகாசம் நித்தமும் அமூர்த்தமும் ஆதலான்
சாத்திய நித்தமும் சாதனமா உள்ள
அமூர்த்தமும் இரண்டும் மீண்டில இன்மையின்  29-440

உபயா வியாவிருத்தி ஆவது
சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான்
என்ற இடத்து யாதொன்று யாதொன்று அநித்தம்
மூர்த்தமும் அன்ன்று ஆகாசம் போல் என
வைதன்மிய திட்டாந்தம் காட்டில்
ஆகாசம் பொருள் அல்ல என்பானுக்கு
ஆகாசம் தானே உண்மை இன்மையினால்
சாத்திய அநித்தமும் சாதன மூர்த்தமும்
மீட்சியும் மீளாமையும் இலையாகும்
அவ்வெதிரேகம் ஆவது சாத்தியம்   29-450

இல்லா இடத்துச் சாதனம் இன்மை
சொல்லாதே விடுதல் ஆகும் சத்தம்
நித்தம் பண்ணப்படாமையால் என்றால்
யாதொன்று யாதொன்று நித்தம் அன்று
பண்ணப்படுவது அல்லாது அதுவும்
அன்று எனும் இவ் வெதிரேகம் தெரியச்
சொல்லாது குடத்தின்கண்ணே பண்ணப்
படுதலும் அநித்தமும் கண்டேம் ஆதலான்
என்னின் வெதிரேகம் தெரியாது
விபரீத வெதிரேகம் ஆவது   29-460

பிரிவைத் தலைதடுமாறாச் சொல்லுதல்
சத்தம் நித்தம் மூர்த்தம் ஆதலின்
என்றால் என்று நின்ற இடத்து
யாதோர் இடத்து நித்தமும் இல்லை அவ்
இடத்து மூர்த்தமும் இல்லை எனாதே
யாதோர் இடத்து மூர்த்தமும் இல்லை அவ்
இடத்து நித்தமும் இல்லை என்றால்
வெதிரேகம் மாறுகொள்ளும் எனக் கொள்க
நாட்டிய இப்படி தீய சாதனத்தால்
காட்டும் அனுமான ஆபாசத்தின்
மெய்யும் பொய்யும் இத்திற விதியால்
ஐயம் இன்றி அறிந்து கொள் ஆய்ந்து என்  29-472

உரை

(இதன் கண் 1 முதல் 36 ஆம் அடிகாறும் அறவணர் தம்மை வணங்கிய மணிமேகலையை வாழ்த்துதலும் தாமும் மாதவியும் சுதமதியும் ஆகிய மூவரும் காஞ்சி மாநகரத்திற்கு வருதற்குரிய காரணமும் கூறுவதாய ஒரு தொடர்.)

அறவண அடிகளார் மணிமேகலைக்குக் கூறுதல்

1-2 : இறைஞ்சிய.............உரைப்போன்

(இதன் பொருள்) அறந்திகழ் நாவின் அறவணன் இறைஞ்சிய இளங்கொடி தன்னை வாழ்த்தி-நல்லறமே நாளும் விளங்குகின்ற செந்நாவினையுடைய அறவண அடிகளார் தம் திருவடிகளிலே வீழ்ந்து என் மனப்பாட்டறம் வாய்வதாக என்றுட் கொண்டு வணங்கிய இளங்கொடி போல்வாளாகிய மணிமேகலையை நீடுழி வாழ்க என்று வாழ்த்திப் பின்னர்; உரைப்போன்-தாம் காஞ்சி நகரத்திற்கு வரநேர்ந்த காரணத்தைக் கூறத்தொடங்குவோர் என்க.

(விளக்கம்) இறைஞ்சுதல்-வணங்குதல். தம்பால் அணுகுவோர்க்கெல்லாம் நாளும் நல்லறமே நவின்று தழும்பேறிய நல்ல நாவினன் அவ்வறவணன். இவனே மணிமேகலைக்கு ஞானாசிரியனாய் அவள் ஊழ் கூட்டுவித்தது என அவ்வாசிரியன் மாண்புணர்த்துவார் அறந்திகழ் நாவின் அறவணன் என்று விதந்தார். அறவணன் என்னும் அவன் பெயர் இயற்பெயரன்று, சிறப்புப் பெயர். அச்சிறப்பு அறந்திகழ் நா உடைமையே என்பதும் இதனால் அறிவுறுத்தவாறாம் என்க.

இதுவுமது

3-12 : வென்வேற்...........மறப்ப

(இதன் பொருள்) நாக நாடு ஆள்வோன் தன் மகள் பீலிவளை நாகநாட்டை ஆளும் அரசனுடைய மகளாகிய பீலிவளை என்பவள்; வென்வேல் கிள்ளிக்குத் தான் பயந்த புனிற்று இளங்குழவியை-வெற்றிவேலை உடைய நெடுமுடிக்கிள்ளி என்னும் சோழமன்னனுடன் காதற்கேண்மை கொண்டு வயிறு வாய்த்து அவனைப் பிரிந்து போய்த் தான் ஈன்று அணிமைத்தாகிய பச்சிளங்குழந்தையை; தீவகம் பொருந்தி-மணிபல்லவத்தீவை எய்தி; தனிக்கலக் கம்பலச்செட்டி கைத்தரலும்-கடலின்கண் ஒற்றை மரக்கலத்தோடு அத்தீவின் மருங்கின் வந்த கம்பளச் செட்டி என்னும் காவிரிப்பூம் பட்டினத்துச் செட்டியின்பால் கையடை செய்து கொடுத்து அக்குழவியை அதன் தந்தையிடத்து ஒப்புவிக்குமாறு கூற; அவன் வணங்கிக் கொண்டு வங்கம் ஏற்றி கொணர்ந்திடும் அந்நாள் கூர்இருள் யாமத்து-பீலிவளையை அச்செட்டி வணங்கி ஏற்றுக் கொண்டு அக்குழவியைத் தன் மரக்கலத்தில் ஏற்றிக்கொண்டு வருகின்ற அந்த நாளின் மிக்க இருளையுடைய நள்ளிரவிலே; அம்பி அடைகரைக்கு அணித்தா கெடுதலும்-அம்மரக்கலம் காவிரிப்பூம்பட்டினத்துக் கடல் கரைக்கு அணித்தாக வரும்பொழுது கெட்டொழிந்ததாக; மரக்கலம் கெடுத்தோன்-தன் மரக்கலத்தை இழந்த அச்செட்டி அக்குழவியையும் காணப்பெறானாய் உடைமரம் பற்றி உய்ந்து கரை ஏறி அச்செய்தியை; அரைசற்குணர்த்தலும் அவன் அயர்வு உற்று விரைவனன் தேடி விழாக்கோள் மறப்ப-சோழ மன்னனுக்கு அறிவித்தலும் அதுகேட்ட அம்மன்னவன் மகவன்பினால் பெரிதும் வருந்தி விரைந்து அக்குழந்தையைத் தேடும் முயற்சியில் ஈடுபடுதலாலே தான் தன் முன்னோர் முறைப்படி தன் நகரத்தின்கண் இந்திரவிழா எடுத்தலை மறந்தொழிய என்க.

(விளக்கம்) வென்வேல்-வெற்றிவேல். கிள்ளி-நெடுமுடிக்கிள்ளி. பீலிவளையின் வரலாறு இருபத்தைந்தாம் காதையில் (178-185) காண்க. புனிறு-ஈன்றணித்தாங் காலம். தீவகம்-மணிபல்லவம். தனிக்கலம்-ஒற்றை மரக்கலம்; கம்பலச் செட்டி, காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்பவனாதலின் அவன்பால் கையடை செய்தனள் என்க. பீலிவளை தன்னாட்டரசியாதலின் கம்பலச் செட்டி வணங்குதல் வேண்டிற்று. வங்கம்-மரக்கலம். அணித்தக என்க. அம்பி-மரக்கலம். மைந்தன்-குழவி என்னும் பொருட்டு. அரைசன்; நெடுமுடிக்கிள்ளி. தேடி-தேட. விழாக்கோள்-விழாச் செய்தலை மேற்கொள்ளுதல்.

இதுவுமது

13-22 : தன்விழா............நோக்கி

(இதன் பொருள்) வானவர் தலைவன் தன் விழாத் தவிர்தலின்-அமரர் அரசனாகிய இந்திரன் தனக்குரிய திருவிழா கைவிடப்பட்டமையின்; நின் உயிர்த்தந்தை நெடுங்குலத்து உதித்த மன்உயிர் முதல்வன் மகர வேலையுள் முன்னிய வங்கம் முங்கிக் கேடுற-மணிமேகலாய்! நினக்கு உயிர் போன்ற தந்தையாகிய கோவலனுடைய நெடிய குலத்தில் முன்பு தோன்றியவனும் மன்னுயிர்கட்கெல்லாம் பேரருள் செய்யும் தலைவனும் ஆகிய வணிகன் ஒருவன் சுறாமீன்கள் திரிகின்ற கடலினுள் முற்பட்டியங்கிய தன் மரக்கலம் முழுகிக் கெட்டமையால்; பொன்னின் ஊசி பசுங் கம்பளத்து துன்னியத என்னதொடு கடல் உழந்துழி-பொன்னாலியன்ற சிறிய ஊசி ஒன்று பச்சை நிறமான மாபெரும் சம்பளத்தின்கண் பொருந்தினாற் போன்று தோண்டப்பட்ட மாபெரும் கடலின்கட் கிடந்து நீந்தி வருந்திய பொழுதும்; எழுநாள் எல்லை இடுக்கண்வந்து எய்தா வழுவாச்சீலம் வாய்மையின் கொண்ட பான்மையின்-ஏழு நாள் முடியும் அளவும் தன் உயிர்க்கு இறுதியாகிய சாத்துன்பம் வந்து உறாமைக்குக் காரணமான பிறழாத சீலத்தையும் நால்வகை வாய்மையோடு மேற்கொண்டு அவ்வணிகன் ஒழுகினமையால்; தனது பாண்டு கம்பளம்தான் நடுக்குற்ற தன்மை நோக்கி-(இந்திரன்) தன்னுடைய வெண்ணிறக் கம்பளமாகிய இருக்கை தானே நடுங்குதலுற்ற தன்மையை அறிந்து என்க.

(விளக்கம்) வானவர் தலைவன்  மன்னுயிர் முதல்வன் மேற்கொண்ட பான்மையினால் தனது கம்பளம் நடுக்குற்ற தன்மை நோக்கி என இயைக்க, தந்தை: கோவலன். முதல்வன் என்றது, கோவலன் முன்னோனாகிய ஒரு வணிகன். முங்கி-முழுகி. பொன்னூசி-வணிகனுக்கும், பசுங்கம்பளம்-கடலுக்கும் உவமை. பொன்னின் ஊசி மரக்கலத்திற்கு உவமை என்பாரும் உளர். அவர் மன்னுயிர் முதல்வன் பொன்னின் ஊசி பசுங்கம்பளத்துத் துன்னியதென்ன தொடுகடல் உழந்துழி என்னும் உவமையில் பொன்னிறமான மேனி படைத்த வணிகன் கடல் நீரின் மேல் நீந்துதற்கு உவமையாகுங்கால் தோன்றும் அழகினை உணர்ந்திலர். வங்கத்திற்குப் பொன்னூசியை உவமை என்று சொல்லி அப்பொன்னையும் இரும்பாக்குதலின் அழகொன்றும் இன்மை உணர்க. தொடுகடல்:வினைத்தொகை. கடல்-சகரரால் தோண்டப்பட்டது என்னும் வழக்குப்பற்றி தொடுகடல் என்றார். உழத்தல்-வருந்தி நீந்துதல். உழந்துழியும் எனல் வேண்டிய சிறப்பும்மை தொக்கது. இடுக்கண் என்றது-சாதலை. எய்தாமைக்குக் காரணமான சீலத்தையும் வாய்மையினையும் அவ்வணிகன் மேற்கொண்ட பான்மையினால் இந்திரனுடைய பாண்டு கம்பளம் நடுக்குற்றது என்றவாறு. எனவே இப்பாண்டு கம்பளம் அறத்தால் மிக்கோருக்கு இருக்கை ஆகும் தெய்வத்தன்மை உடைத்தாகலின் நிலவுலகின்கண் அறத்தால் மிக்கோருக்கு இடுக்கண் வந்துற்ற காலத்தே அது பொறாமல் நடுங்கும் இயல்புடையது என்பது பெற்றாம். இனி இங்ஙனமே இப்பாண்டுகம்பளம் தன்மேல் அமரும் அறவோனாகிய இந்திரனுங் காட்டில் அறத்தின் மிக்கோர் உருவாகும் பொழுதும் தன்மேல் இருக்கும் இந்திரனைத் தாங்குதல் பொறாமல் (புதிதாக உருவாகின்ற அவ்வறவோனைத் தாங்குதற் பொருட்டு) நடுங்கும் என்பதனைப் பாத்திர மரபு கூறிய காதையில் 28-29 : இந்திரன் பாண்டு கம்பளம் துளக்கியதாகலின் என்பதனாலும் அறிதல் கூடும். வாய்மை-நால்வகை வாய்மை. பாண்டு கம்பளம்-வெள்ளைக் கம்பளம். நோக்கி என்றது மனத்தால் ஆராய்ந்து என்றவாறு. கோவலனுடைய முன்னோன் இடையிருள் யாமத்து எறிதிரைப் பெருங்கடல் உடைகலப்பட்டு கடலின்கண் சிலநாள் நீந்திய செய்தியை இளங்கோவும் ஓதுதல் (சிலப்-15:28 ஆம் அடி முதலாக) உணர்க.

இதுவுமது

23-29 : ஆதி................கூற

(இதன் பொருள்) ஆதி முதல்வன் போதி மூலத்து நாதன் ஆவோன்-ஆதி முதல்வனாகிய புத்த தேவன் போதியின் கீழ் இருந்து அருளிச் செய்த அறங்களை உலகத்திற்கு எடுத்தோதும் வழி நிலைத் தலைவன் என்னும் போதிசத்துவன் ஆகும் தகுதியை இனிப் பெறப்போகின்ற ஒரு வணிகன்; நளிநீர்ப் பரப்பின் எவ்வமுற்றான் தனது-செறிந்த நீர்ப்பரப்பாகிய கடலின்கண் தனது கலம் முழுகிவிட்டமையால் துன்பம் உறுவானுடைய; எவ்வம் தீர் என-துன்பத்தை நீ சென்று தீர்த்து உய்விப்பாயாக என்று தன் பக்கலில் இருந்த தெய்வத்திற்குப் பணித்தமையாலே அத்தெய்வம் சென்று அவ்வணிகனே; பவ்வத்து எடுத்து-அக்கடலினின்றும் கரையேற்றிய பின்னர் அவன்; பாரமிதை முற்றவும்-பாரமிதை பத்தானும் நிரம்பவும்; அற அரசு ஆளவும் அறஆழி உருட்டனும் அறம் நிலவும் அரசாட்சி செய்யவும் அறமாகிய சக்கரத்தை உருட்டவும்; பிறவிதோறு உதவும் பெற்றியள் என்றே சாரணர் அறிந்தோர் காரணங் கூற-அந்த வணிகனுக்குப் பின்னர் நிகழும் பிறப்புகள்தோறும் உதவி செய்யும் தன்மையன் ஆயினள் அப்பெண் தெய்வம் என்று அந்தரசாரிகள் ஆகிய சாரணருள் இந்நிகழ்ச்சியை அறிந்தவர் நின்பெயருக்குக் காரணமாகக் கூறுதலாலே என்க.

(விளக்கம்) புத்தர்கள் கவுதம புத்தருடைய காலத்துக்கு முன்னரே உலகின்கண் அறம் குறைந்த காலந்தோறும் பிறந்து அவ்வப்போது மீண்டும் அறத்தை நிலைநாட்டிச் சென்றனர்; அவ்வாறு தோன்றினோர் எல்லாம் ஆதி புத்தர் அருளிய அறத்தையே மீண்டும் பரப்பினர் ஆதலின் அவரெல்லாம் புத்தர் அவதாரம் என்றே மதிக்கப்பட்டனர். இவரைப் போதி சத்துவர் என்றும் கூறுவர். போதி சத்துவர் என்பதன் பொருள்-ஞானத்தின் ஆற்றலை முழுதும் பெற்றவர் என்பதாம். எனவே ஈண்டு மரக்கலம் முழுகிக் கடலில் மிதந்த வணிகன் இப்பிறப்பில் வழுவாச் சீலம் வாய்மையிற் கொண்ட பான்மையினன் ஆதலின் எதிர்காலத்தே புத்தனாகும் தகுதியுடையோன் ஆவான்; அவன் செய்த அறமே ஏழுநாள் காறும் அலைகடலில் உயிர்போகா வண்ணம் காத்து வருகின்றது ஆயினும் அலைகடலில் அவன் இன்னும் நீந்தி வருந்தா வண்ணம் காத்தல் நம் கடன் என்பான் தன் அருகிருந்த தெய்வத்தை நோக்கி நீ சென்று எவ்வம் தீர் என்று பணித்தான். இவ்வரலாறு இந்நூலின்கண் கூறப்பட்டமையின் அவற்றையே ஈண்டும் பாட்டிடை வைத்தலின் ஓதுவோர் குறிப்பாக உணர்ந்து கொள்ளக்கூடும் என்று கருதிச் சொல் பல்கா வண்ணம் சுருக்கமாகவே நூலாசிரியர் கூறுதல் உணர்க. பாரமிதை உடம்பு நேரவும் உறுப்பே நேரவும் பொருள் நேரவும் தானம் முதல் ஞானமீறாக உள்ள பத்தும் நிரம்புதல். பெற்றியள்-தன்மையள். சாரணருள் அறிந்தோர் கூற என்க.

இதுவுமது

30-36 : அந்த..............படர்ந்தனம்

(இதன் பொருள்) அந்த உதவிக்கு ஆங்கு அவள் பெயரை-அவ்வாறு தன் குல முதல்வனுக்கு அத்தெய்வம் செய்த உதவியின் நினைவுக்குறியாக அம்மணிமேகலை என்னும் தெய்வத்தின் பெயரை; நினை தந்தை இட்டனன்-உனக்கு உன் தந்தை சூட்டினன்; தையல் நின் துறவியும் அன்றே கனவில் கனவு என அறைந்த மெல்பூ மேனி மணிமேகலா தெய்வம் என்பவட்கு ஒப்ப அவன் இடு சாபத்து தையால்! நின்னுடைய துறவறச் செய்தியையும் அற்றை நாளிலேயே நின் தாயாகிய மாதவியின் கனவிலே நனவுபோலத் தோன்றி அறிவித்தருளிய மெல்லிய மலர் போன்ற அம்மணிமேகலா தெய்வம் சாபம் இட்டாற் போன்றே அவ்விழாவிற்குரிய இந்திரன் இட்ட சாபத்தாலே; நகர் கடல் கொள்ள-அக்காவிரிப் பூம்பட்டினமாகிய நகரத்தைக் கடல் விழுங்கிக் கொள்ளுதலால்; நின் தாயரும் பகரும் யானும் நின் பொருட்டால் இ பதி படர்ந்தனம்-உன்னுடைய தாயராகிய மாதவியும் சுதமதியும் நினக்கு அறங்கூறுதற்குரிய யானும் உனக்கு அறங்கூறவும் உன்னைக் காணவும் இக்காஞ்சி மாநகரத்திற்கு வந்தேம் என்றார் என்க.

(விளக்கம்) உதவி-தன் முன்னோனுக்கு உயிர் தந்த உதவி. அவள்-அம்மணிமேகலா தெய்வம். நினை தந்தை இட்டனன் என மாறி நினக்கு என இரண்டனுருபை நான்காவதாகத் திரித்துக் கொள்க. தையல் : அண்மை விளி. துறவி-துறவு நிகழ்ச்சி. அன்றே என்றது நினக்கு நின்தந்தை பெயர் சூட்டிய அற்றை நாள் இரவே என்றவாறு. கனவில் நனவு என என்றது நனவில் வந்து சொல்வது போல விளக்கமாக என்றவாறு. தெய்வத்திற்கு ஒப்ப அவன் இடுசாபம் என்றதனால் தெய்வமும் சாபமிட்டமை பெற்றாம். இது பாட்டிடைவைத்த குறிப்புப் பொருள். மணிமேகலா தெய்வம் மாதவியின் கனவில் தோன்றி நீ காமன் கையறக் கடுநவை அறுக்கும் மாபெரும் தவக்கொடி ஈன்றனை என்றே நனவே போலக் கனவகத் துரைத்தேன் ஈங்கு இவ்வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று அந்தரத்து எழுந்து ஆங்கு அருந்தெய்வம் போயபின் என (7:36-40) முன்னம் வந்தமையானும் உணர்க. அவன் : இந்திரன். நகர்-காவிரிப்பூம்பட்டினம். பகரும் யானும் என மாறுக. இதனால் மணிமேகலைக்கு அறங்கூறும் செயல் தம்முடையதாம் என அடிகளார் முன்னரே இருத்தி ஞானத்தால் உணர்ந்திருந்தனர் என்பது பெற்றாம். நின் பொருட்டால் என்றது நினக்கு அறங்கூறும் பொருட்டும் நின்னைக் காணும்பொருட்டும் என இரு பொருளும் பயந்து நின்றது. பதி : காஞ்சிமா நகரம். படர்ந்தனம் : தன்மைப் பன்மை வினைமுற்று.

மணிமேகலை வேண்டுகோள்

37-45 : என்றலு.............என்ன

(இதன் பொருள்) என்றலும்-என்று கூற அது கேட்ட மணிமேகலை; அறவணன் தாள் இணை இறைஞ்சி பொன் திகழ் புத்த பீடிகை போற்றும் தீவதிலகையும் இத்திறம் செப்பினள் ஆதலின்-அறவண அடிகளாரின் திருவடிகளை வணங்கி அடிகேள்! பொன்னொளி விளங்குகின்ற புத்தபீடிகையை நாளும் வழிபட்டுப் போற்றுகின்ற தீவதிலகை என்னும் தெய்வமும் அம்மணிபல்லவத் தீவின்கண் இச்செய்திகளை இவ்வாறே அறிவித்தனள். ஆதலால் அவள் கூறியவாறே; அனை அணிநகர் மருங்கே வேறு உருக்கொண்டு வெவ்வேறு உரைக்கும் நூல் துறை சமய நுண் பொருள் கேட்டே-அந்த அழகிய வஞ்சி மாநகரத்தின் பக்கலிலே எனது பெண்ணுருவம் சுரந்து மாதவனாகிய மாற்றுருவம் கொண்டு சென்று அவ்விடத்தே தம்முள் மாறுபட்டு வேறு வேறாகக் கூறுகின்ற சமயநூல் வழிப்பட்ட பல்வேறு சமயக்கணக்கரிடத்தும் அவ்வவர் சித்தாந்தமாகிய நுண்பொருள்களை வினவிக் கேட்ட பின்னர்; ஐவகைச் சமயமும் அ உருவெனை செவ்விது அன்மையில் சிந்தையின் வைத்திலேன்-அவற்றை யான் ஆராய்ந்து பார்த்தவிடத்தே அளவை வாதம் முதலிய ஐந்து வகையினுள் அடங்கும் அச்சமயக்கணக்கர் சித்தாந்தம் அனைத்தும் யான் மேற்கொண்டுள்ள அம்மாதவன் வடிவம் போன்றே பொய்யாய்ச் செம்மை உடையன அல்லாமை காணப்பட்டமையின் அவை மறக்கற்பாலன் என்று துணிந்து என் சிந்தையின்கண் வையாதுவிடுத்தேன் ஆதலின்; அடிகள் மெய்ப்பொருள் அருளுக என்ன-இப்பொழுது அடிகள் எனக்கு மெய்யேயாகிய செம்பொருளை அறிவித்தருளுக என்று வேண்டா நிற்ப என்க.

(விளக்கம்) புத்த பீடிகை-மணிபல்லவத்தில் அமைந்த புத்தபீடிகை. தீவதிலகை என்னும் தெய்வமும் இச்செய்திகளை இவ்வாறே கூறினாள் என்றாள். இவற்றை யான் முன்னரே அறிந்தளேன் என்றறிவித்தற்கு. அணிநகர் என்றது-வஞ்சி நகரத்தை ஐவகைச் சமய நுண் பொருளும் வெறும் பொய் என்பதற்குத் தான் கொண்டிருந்த அப்பொய்யுருவமாகிய அம்மாதவன் உருவத்தையே உவமை எடுத்துக்கூறிய அழகு உணர்க. சமயம் என்னும் சாதியொருமை பற்றி செவ்விது என்று ஒருமை முடிபேற்றது. பன்மை ஒருமை மயக்கம் என்பாரும் உளர்.

(46 ஆம் அடியாகிய இது முதல் இக்காதை முடியுங்காறும் அறவண அடிகளார் மணிமேகலைக்கு அறம் செவியறிவுறுத்துதலாய் ஒரு தொடர்)

அறவணர் அறங்கூறத் தொடங்குதல்

46-56 : நொடிகுவெ.................பிற

(இதன் பொருள்) நங்காய் நொடிகுவென் நீ நுண்ணிதின் கேள்-நங்கையே! நீ விரும்பியவாறே யான் உனக்கு அம்மெய்ப்பொருளைச் சொல்லுவேன் நீயும் விழிப்புடன் கூர்ந்து கேட்பாயாக; ஆதி சினேந்திரன் ஏதம் இல் பிரத்தியம் கருத்து அளவு என்ன அளவை இரண்டே-ஆதி பகவனாகிய புத்தர் தலைவன் குற்றம் இல்லாத காட்சி அளவையும் குற்றமில்லாத கருத்தளவையும் என்று அளவைகள் இரண்டே என்று வரையறை செய்துள்ளான்; சுட்டு உணர்வை பிரத்தியக்கம் எனச் சொலி நாம சாதி குணகிரியைகள் விட்டனர்-அவ்விரண்டனுள் ஐம்பொறிகளால் தனித்தனியே அவ்வவற்றிற்குரிய புலன்களைச் சுட்டி உணர்ந்து கொள்ளுதல் மட்டுமே காட்சி அளவையாம் என்று அறுதியிட்டுக் கூறி அளவைவாதி முதலியோர் கூறுகின்ற பெயர் வகை பண்பு செயல் முதலியவற்றைக் காட்சி அளவையோடு கூட்டாது ஒழித்து விட்டனர், ஏற்றுக்கெனின்; மற்று அவை அனுமானத்தும் அடையும் என-அப்பெயர் முதலியன காட்சி அளவைக்கு மட்டுமே உரியன ஆகாமல் கருத்தளவையினும் எய்தும் எனக் கருதியதனாலாம், இனி; காரண காரிய சாமானிய கருத்து ஓரின் பிழைக்கையும் உண்டு-அவர் கருத்தளவையினும் காரணக் கருத்தளவை காரியக் கருத்தளவை சாமானியக் கருத்தளவை என்று வகைப்படுத்திக் கூறும் கருத்தளவைகளைக் கூர்ந்து ஆராயுமிடத்து அவையும் பிழைபடுதலும் உண்டு; பிழையாததும் உண்டு-அவற்றில் பிழைபடாத அளவையும் ஒன்றுண்டு, அஃது யாதெனின்; கனலில் புகைபோல் காரியக் கருத்து-நெருப்பின் காரியமாகிய புகைபோன்ற காரியத்தை ஏதுவாகக் கொள்ளுகின்ற கருத்தளவை ஒன்றுமேயாம்; ஏனை அளவைகள் எல்லாம் கருத்தினில் ஆன முறைமையின்-பிறர் கூறுகின்ற ஏனைய அளவைகள் எல்லாம் ஆராய்ச்சியால் தோன்றுகின்ற முறைமை காரணமாக; அனுமானமாம் பிற-கருத்தளவையின்கண் அடங்குதலின் கருத்தளவை என்றலே அமையும் என்றார் என்க.

(விளக்கம்) நொடிகுவென்-சொல்லுவேன்; ஆதி சினேந்திரன் என்றது முதன் முதலாகப் பவுத்த சமயத்தை உலகில் பரப்பியவன். அந்த ஆதிப்புத்தன் காட்சி அளவையும் கருத்தளவையும் என இரண்டு அளவைகளே கொண்டனன். இவற்றுள் குற்றம் உடையனவும் உள. அவை கொள்ளப்படா என்பார் ஏதும் இல் பிரத்தியம் கருத்தளவு என்றார். ஏதும் இல் கருத்தளவு என்றும் பிரத்திய அளவு என்றும் இச்சொற்களை இரண்டிடத்தும் கூட்டிக் கொள்க. பிரத்தியம்-பிரத்தியக்கம் என்பதன் சிதைவு. பிரத்தியக்கம் எனினும் காட்சி எனினும் ஒக்கும். கருத்து எனினும் அனுமானம் எனினும் ஒக்கும். இனி, காட்சி காண்டல் என்பன சவிகற்பக் காட்சிக்கும் பொதுவாதலால் பிரத்தியம் சுட்டுணர்வாய் வேறுபடுவது பற்றி மொழி பெயர்க்கா தொழிந்தார் என உணர்க என்பாரும் உளர். அங்ஙனமாயின் அவரே பிரத்தியம் என்னும் சொல்லுக்குக் காட்சி என்று பொருளுரைத்தல் போலியாம்; மேலும் காட்சி அளவைக்குச் சுட்டல் திரிதல் கவர்கோடல் சுட்டுணர்வொடு திரியக்கோடல் என்றும் ஐயம் தேராது தெளிதல் கண்டுணராமை என்றும் கூறியவாற்றால் அறிக என்று அவர் கூறிய விளக்கமும் போலியாம். என்னை? காட்சி அளவைக்குப் பவுத்தர்கள் இக்குற்றங்களைக் கூறார் ஆதலின் காட்சிக்கு இங்ஙனம் குற்றம் கூறுவார் அளவை வாதி முதலியோராவார். பவுத்தர்கள் குற்றமும் ஒன்று உளது என அதனை விலக்குதற்கு ஈண்டு ஏதம் இல் பிரத்தியம் என்றார். காட்சிக்கு உரிய குற்றம் பிரத்தியக்க விருத்தம் என்பதாம். அதன் இயல்பினைச் சிறிது போக்கிக் கூறுவதும், ஆதி சினேந்திரனால் கொள்ளப்பட்ட காட்சி அளவை வேறு பிறர் கூறும் காட்சி அளவை வேறு என்பது தோன்ற, சுட்டுணர்வைப் பிரத்தியக்கம் எனச்சொல்லி அதற்கு ஏனையோர் கூறும் குணமும் குற்றமும் கொள்ளாது விட்டனர் என்றார். எனவே ஈண்டுச் சுட்டுணர்வு என்று அறவணர் கூறுகின்ற காட்சி அளவையின் இயல்பு வேறு, அளவை வாதிகள் கூறுகின்ற காட்சி அளவையின் இயல்பு வேறு என்றுணர்தல் வேண்டும். அளவை வாதிகள் சுட்டு என்பது காட்சி. அளவையின் ஒரு குற்றமாகக் கொண்டனர். ஈண்டுச் சுட்டுணர்வே ஏதம் இல் காட்சி என்று அறவணவடிகள் கூறுதலைக் கூர்ந்து நோக்காது இதற்கும் அளவை வாதிகள் கூறுகின்ற சுட்டிற்கும் வேறுபாடு உணரமாட்டாமல் இரண்டிற்கும் ஒரு படித்தாக உரைகூறும் கூற்றுப் போலியாம் என்க. மேலும் இப்பிரத்திய அளவைக்கு அவர்கள் கூறும் விளக்கம் எல்லாம் பொருந்தாதனவேயாம். அவற்றை அவர் உரை நோக்கி உணர்க.

இனி, பவுத்தர்கள் கூறுகின்ற வாயில் ஊறு நுகர்வு என்னும் மூன்றன் கூட்டரவினால் உண்டாகும் உணர்வே காட்சி அளவை என்று கொள்வர். எனவே அவருடைய அறிவுக் கந்தமும் நுகர்ச்சிக் கந்தமும் ஒன்றுபடுங்கால் உயிரின் உணர்வு தெரிவது காட்சி அளவை என்று கொண்டனர் என்பது 30 ஆம் காதையினும் விளக்குவாம். ஈண்டுச் சுட்டுணர்வு என்பதும் நுகர்ச்சிக் கந்தத்தையேயாம் என்றுணர்க. நுகர்ச்சிக் கந்தம் எனினும் வேதனை எனினும் ஒக்கும். எனவே சிவஞான சித்தியாரில் தன்வேதனைக் காட்சி என்பது மட்டுமே அவர் கூறுகின்ற சுட்டுணர்வு அல்லது பிரத்தியக்கம் என்றறிக. இனி, காண்டல் வாயில் மனம் தன் வேதனையோடு யோகக் காட்சியெனச் சைவ வாதிகள் கூறுகின்ற நால்வகைக் காட்சிகளுள் தன்வேதனைக் காட்சி ஒன்றுமே பவுத்தர்களுக்குக் காட்சி அளவையாம் என்பது பெற்றாம். இனி அளவைவாதிகள் காட்சி அளவைக்குக் கூறுகின்ற நாமசாதி குணக்கிரியைகள் கருத்தளவைக்கும் செல்லுதலின் அவற்றைக் கைவிட்டனர். இனி அனுமானத்திற்குக் கூறுகின்ற காரணகாரிய சாமானியங்களும் பிழைபடும் என அவற்றையும் பவுத்தர்கள் கைவிட்டனர். இனி அனுமானத்திற்குக் கூறுகின்ற காரணகாரிய சாமானியங்களும் பிழைபடும் என அவற்றையும் பவுத்தர்கள் கைவிட்டனர். ஆயினும் அவற்றுள் கனலில் புகைபோல் என வருகின்ற காரியானுமானம் மட்டும் பவுர்த்தர்களுக்கும் உடன்பாடேயாம். இவற்றை யன்றி அளவை வாதிகள் கூறுகின்ற ஏனைய உவமம் ஆகமம் அருத்தாபத்தி ஐதிகம் அபாவம் மீட்சி யொழிவறிவு எய்தியுண்டாம் நெறி என்னும் எட்டளவைகளும் கருத்தளவின்கண் அடங்குவனவாதலின் அவற்றை வேறளவையாகக் கொள்ளுதல் இலேம் என்பார் ஏனை அளவைகள் எல்லாம் கருத்தினில் ஆன முறைமையின் அனுமானமாம் என்றார். பிற: அசைச் சொல்.

கருத்தளவையின் உறுப்புகளும் அவற்றின் இயல்புகளும்

57-67 : பக்கம்...................ஆகும்

(இதன் பொருள்) பக்கம் ஏது திட்டாந்தம் உபநயம் நிகமனம் என்ன ஐந்து உள-இனி இரண்டாவதாகிய கருத்தளவைக்கு மேற்கோளும் ஏதுவும் எடுத்துக் காட்டும் உபநயமும் நிகமனமும் என்று கூறப்படுகின்ற ஐந்து உறுப்புகள் உள்ளன; அவற்றில் பக்கம் இம்மலை நெருப்பு உடைத்து என்றல்-அவ்வைந்தனுள் முன்னிறுத்தப்ப்ட்ட மேற்கோள் ஆவது இந்த மலை நெருப்பினை உடையதாம் என்று கூறுதல்; ஏது-அங்ஙனம் கூறுதற்கு ஏதுவாவது; புகை உடைத்து ஆதலால் எனல்-இம்மலை தன்னிடத்தே புகை உடையதாய் இருத்தலால் எனல் அம்மேற்கோளுக்குப் பொருந்திய ஏதுக்கூறியவாறாம்; திட்டாந்தம் வகை அமை அடுக்களை போல்-இனித் திட்டாந்தம் எனப்படுவது பலவகையாக அமைந்த அடுக்களை போன்று என ஒன்றினை எடுத்துக் காட்டுதல்; உபநயம் மலையும் புகை உடைத்து என்றல்-இனி உபநயம் ஆவது இம்மலையும் புகையுடையது என்று கூறுதல்; நிகமனம் ஆவது புகை உடையது எதுவோ அது நெருப்பும் உடையது ஆம் என்று கூறுதல்; நெருப்புடைத்து அல்லாது யாதொன்று அது புகைப்பொருத்தம் இன்று புனல்போல் என்றல்-யாதொரு பொருள் நெருப்புடையது அல்லாத பொருளோ அது புகைப் பொருத்தமும் இல்லாததாம் நீர் போல என்று கூறுதல்; மேவிய பக்கத்து மீட்சி மொழியாய்-பொருந்திய மேற்கோளின் நின்றும் எதிர்மறைச் சொல்லாய்; வைதன்மிய திட்டாந்தம் ஆகும்-எதிர்மறை எடுத்துக்காட்டாகும் என்றார் என்க.

(விளக்கம்) பக்கம்-மேற்கோள். ஏது-கருவி. திட்டாந்தம்-எடுத்துக்காட்டு, உபநயம்-துணிந்தது துணிதல், நிகமனம்-நிலை நாட்டுதல் என நிரலே தமிழில் கூறிக்கொள்க. இனி எதிர்மறை எடுத்துக் காட்டாவது: நிலை நாட்டிய தொன்றனை மேற்கோளின் மறுதலைப் பொருள் ஒன்றனை எடுத்துக் காட்டுமாற்றானும் உறுதியூட்டுதல். இங்ஙனம் கூறும் எடுத்துக்காட்டை வைதன்மிய திட்டாந்தம் என்பர். ஈண்டு மேற்கோளாகிய நெருப்பிற்கு மறுதலைப் பொருளாகிய புனலின்கண் புகையின்மையில் அதனை எடுத்துக் காட்டுதல் காண்க. மீட்சி மொழி-மறுதலைச் சொல், என்றது புனலை. புனல்-நீர். வைதன்மிய திட்டாந்தம்-எதிர்மறை எடுத்துக்காட்டு. எனவே முன் கூறிய எடுத்துக்காட்டாகிய அடுக்களை உடன்பாட்டு எடுத்துக்காட்டு என்பார், வகை அமை அடுக்களை என்றார். வகை-பண்பு வகை எனவே அதனைச் சாதன்மிய திட்டாந்தம் என்ப.

இதுவுமது

68-76 : தூய................என்க

(இதன் பொருள்) தூய காரிய ஏது சுபாவம் ஆயின்-இனி மேற்கோளைச் சாதிப்பதில் சிறந்ததாகிய காரிய ஏது மேற்கோளுக்கு இயல்பாய பண்பாயின்; சத்தம் அநித்தம் என்றல் பக்கம்-ஒலி அழியும் பொருள் என்பது மேற்கோள்; பண்ணப்படுதலால் எனல் பக்கதன்ம வசனமாகும்-செய்யப்படுவதால் என்றல் மேற்கோளின் இயல்பு கூறும் மொழியாகும்; யாதொன்று யாதொன்று பண்ணப்படுவது அநித்தம் கடம் போல் என்றல்-யாதொரு பொருள் யாதொரு பொருள் பண்ணப்படுவதோ அப்பொருள் அழியும் பொருளாகும் குடம்போல் என்று கூறுதல் மேற்கோளோடு தொடர்ச்சியுடைய உடன்பாட்டு மொழியாம்; யாதொன்று அநித்தம் அல்லாதது பண்ணப்படாதது ஆகாசம் போல் எனல்-யாதொரு பொருள் அழியாத பொருளாய் இருக்குமோ அப்பொருள் ஒருவரால் செய்யப்படாத இயற்கைப் பொருளாகவும் இருக்கும் வானம் போல் என்று கூறுதல்; விபக்க தொடர்ச்சி மீட்சி மொழி என்க-மேற்கோளின் மறுதலைப் பொருளொடு தொடர்புடைய மறுதலை மொழி என்றார் என்க.

(விளக்கம்) முன்னர் அளவை வாதிகள் கூறும் காரணம் காரியம் சாமானியம் என்னும் முவ்வகை அனுமானங்களும் ஆராயுமிடத்துப் பிழைபடுதலும் உண்டு, அவற்றுள் காரியானுமானத்தில் அவ்வளவைவாதிகள் கனலில் புகைபோல் என்று கூறும் காரியானுமானம் மட்டும் ஒரோ வழி, பிழைபடாதது ஆதலும் கூடும் என்றார் ஈண்டு அவர் கூறும் அவ்வனுமானம் போல எவ்வாற்றானும் பிழைபடாத காரியானுமானம் இது என்பார் தூய காரிய ஏது சுபாவம் ஆயின் சத்தம் அநித்தம் என்றால் என்றார். இங்ஙனம் கூறுமிடத்து சத்தம் அநித்தம் என்பது மேற்கோள். பண்ணப்படுதலால் என்பது ஏது. இவ்வேது மேற்கோளின் தன்மையை அறிவுறுத்துதலின் அதுவே மேற்கோளின் தன்மையைக் கூறும் மொழியாகவும் அமைதலின் அதனைப் பக்கதன்ம வசனம் ஆகும் என்றார். யாதொன்று யாதொன்று கடம் போல் என்றல் தன் மேற்கோளோடு தொடர்புடைய மொழியாகிய எடுத்துக் காட்டாகும். இதற்கு எதிர்மறை எடுத்துக்காட்டு ஆகாசம் ஆம். சபக்கம் உத்தேசமாக எடுத்துக் கொண்ட மேற்கோள்; இதன் மறுதலை விபக்கம் என்றறிக. மீட்சிமொழி: எதிர்மறைச் சொல்.

இதுவுமது

77-84 : அநன்னு............ஆகும்

(இதன் பொருள்) அநன்னு வயத்தில் பிரமாணமாவது-பொருளும் ஏதுவும் சேர்ந்திராத இடத்தில் அவற்றின் இன்மையைக் காண்டற்கு அளவையாவது; இவ்வெள் இடைக்கண்-இந்த வெற்றிடத்தில்; குடம் இலை என்றால் செவ்விய பக்கம்-இந்த வெற்றிடத்தில் குடம் இல்லை என்று துணிதல் செம்மையான மேற்கோளாகும்; தோன்றாமை இல் எனல்-காணப்படாமையால் இல்லை என்று கூறும் ஏது; பக்க தன்ம வசனமாகும்-மேற்கோளின் தன்மை உணர்த்தும் மொழியாகும்; இன்மையின் கண்டிலம் முயற்கோடு (போல்) என்றல் அந்நெறிச் சபக்கம்-இல்லாமையால் யாம் கண்டிலேம் முயற்கொம்பைக் காணமாட்டாமை போல என்பது அவ்வழியில் உடன்பாட்டு மேற்கோள் தொடர்ச்சி எடுத்துக்காட்டாகும்; யாதொன்று உண்டு அது தோற்றரவு அடுக்கும்-யாதொரு பொருள் ஓரிடத்தில் உளதாம் அது காட்சிக்குப் புலப்படும்; கை நெல்லி போல் எனல் ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும்-அகங்கையில் இருக்கின்ற நெல்லிக்கனி போல என்று மொழிதல் இதற்கேற்ற மறுதலை மீட்சி மொழி என்று கூறலாம் என்றார் என்க.

(விளக்கம்) அநன்னுவயம்-பொருளும் ஏதுவும் இல்லாமை. அவ்வில்லாமையைத் துணிதலே ஈண்டு மேற்கோளாம் என்க. அதற்குப் பொருள் தோன்றாமையே ஏதுவாயிற்று. இல் பொருளுக்குத் தோன்றாமையே இயல்பும் ஆயிற்று என்பார் இல்லை என்றால் பக்கம் எனவும் தோன்றாமையால் இல்லை என்றல் அவ்வில்லாமையின் இயல்புணர்த்தும் மொழியும் ஆதல் உணர்க. இன்மையால் கண்டிலம் முயற்கொம்பினைக் காணமாட்டாமைபோல என்றது மேற்கோளைத் தொடர்ந்து வந்த எடுத்துக்காட்டு என்பார் அந்நெறிச் சபக்கம் என்றார். இன்மைக்கு உண்மை மறுதலையாகலின் தோன்றுதலும் கைநெல்லிபோல் என்னும் எடுத்துக்காட்டும் அநன்னுவயத்தில் மேற்கோளின் மறுதலையைத் தொடர்ந்து வந்த மொழிகள் ஆயின என்க.

அறவண அடிகள் பிறர்தம் மதங்கூறி மறுத்தல்

85-95 : இவ்வகை.............வேண்டும்

(இதன் பொருள்) இவ்வகை ஏது பொருள் சாதிப்பன-மணிமேகலாய் ஈண்டு யாம் கூறியவாறே ஏதுவினால் துணிபொருள் சாதிக்கப்படுவனவாம்; காரியம் புகை சாதித்தது என்னை என்னின்-அளவைவாதி முதலியோரைக் காரியானுமானத்தில் காரியமாகிய புகை துணிபொருளை எவ்வண்ணம் சாதித்தது என்று வினவின் அவர் யாம் மேலே கூறியவாறு கூறாமல் பின்வருமாறு கூறுவர்; புகை உளவிடத்து நெருப்பு உண்டு என்னும் அன்னுவயத்தாலும்-புகை இருக்குமிடத்தே சாதன சாத்தியம் ஒருங்கிருத்தல் என்னும் அன்னுவயத்தாலும்; நெருப்பிலா இடத்து புகை இல்லை என்னும் வெதிரேகத்தாலும்-நெருப்பு இல்லாத இடத்தில் புகையும் இல்லை என்னும் எதிர்மறையானும்; புகைஇ-புகையானது; நெருப்பைச் சாதித்தது என்னின்-நெருப்புண்மையை அறிவித்தது என்பர், இங்ஙனம் கூறின்; நேரிய புகையின் நிகழ்ந்து உண்டான ஊர்த்தச் சாமம் கவுடிலச் சாமம்-நுணுகிய புகையின் வாயிலாய் நிகழ்ந்து உண்டான மேல்நோக்கிய செலவும் வளைந்து செல்லும் செலவும் என்னும் இருவகைக் காரியங்களே; வாய்த்த நெருப்பின் வருகாரியம் ஆதலின்-தமக்குக் காரணமாக வாய்த்த நெருப்பினின்றும் தோன்றி வருகின்ற காரியங்கள் ஆதலின்; மேல் நோக்கிக் கறுத்து இருப்ப-மேல் நோக்கிச் சென்று கறுத்திருப்பனவும்; பகைத்திருப்ப தாமே-இவ்வாறு மேல் நோக்கிச் செல்லுதலினின்றும் மாறுபட்டு வளைந்து சென்று வெளுத்திருப்பனவும் ஆகிய காரியங்களால் உண்டான பொருள்கள் தாமும்; நெருப்பைச் சாதிக்க வேண்டும்-தாம் தோன்றிய நிலைக்களத்தே நெருப்புண்மையை அறிவித்தல் வேண்டும் அன்றோ? அக்காரியங்கள் தோன்றும் நிலைக்களத்தில் நெருப்பில்லாமையின் அக்காரியானுமானம் பொருந்தாது என்றார் என்க.

(விளக்கம்) அறவண அடிகள் முன்னர் ஏனையோர் கூறும் காரண காரிய சாமானியக் கருத்து ஓரின் பிழைக்கையும் உண்டு எனவும் அவற்றுள் பிழையாதது கனலில் புகைபோல் காரியானுமானம் என்று உடன்பட்டார்; அங்ஙனம் உடன்பட்டவர் கனலில் புகைபோல் காரியானுமானங்களும் பக்கம் முதலிய ஐந்து உறுப்புகளால் ஆராய்ந்து காண்போர்க்கே பிழைபடாததாம் என 59 ஆம் அடி முதலாக 67 ஆம் அடி இறுதியாகத் தாமே ஆராய்ந்து காட்டினர். ஈண்டு அவ்வாறன்றி அன்னுவயத்தாலும் வெதிரேகத்தாலும் காரியானுமானம் துணி பொருளைச் சாதிக்கும் என்பார் கூற்றைத் தாமே எடுத்துக் கூறி அவர் கூற்றுப் பிழைபடுமாற்றைக் காட்டி மறுத்தவாறாம். காரியம் புகை-காரியமாகிய புகை. அன்னுவயம்-சாதன சாத்தியம் ஒருங்கிருத்தல். நேரிய புகை-நுண்மையான புகை. புகைவாயிலாய் நிகழ்ந்துண்டான ஊர்த்தசாமமும் கவுடிலச்சாமமும் என்னும் இருவகைக் காரியங்கள் என்றவாறு. ஊர்த்தசாமம் கவுடிலச்சாமம் என்பன நிரலே மேல்நோக்கிச் செல்லும் காரியம் வளைந்து படர்ந்து செல்லும் காரியம் என்னும் பொருளுடையன. இக்காரியங்களால் உண்டாக்கப்பட்ட பொருள் வானத்தே கறுத்த பிழம்புகளாகவும், வெள்ளிய பிழம்புகளாகவும் கரிய பிழம்புகளாகவும் மேல்நோக்கிச் செல்லுவனவாகவும் படர்ந்து செல்லுவனவாகவும் இருப்பன புகையே அன்றிப் பிறவும் உள; அவை நெருப்பினின்றும் தோன்றுவன அல்ல; ஆகவே அக்காரியங்கள் இருந்தும் அவை நெருப்பைச் சாதிக்க மாட்டாமையின் அவர் கூறும் முறை பிழைபடுதல் அறிக; என்று அறிவுறுத்தபடியாம். இது காரியத்தை மறுத்தவாறு. கறுத்திருப்ப கைத்திருப்ப என்பன பலவறி சொல். அவை புழுதிப்படலமும் முகிற்படலமும் பனிப்படலமும் பிறவுமாம் என்க. இவற்றில் அக்காரியங்கள் உளவாதலும் உணர்க.

அன்னுவயத்திற்கு மறுப்பு

96-101 : அன்னு................கூடா

(இதன் பொருள்) அன்னுவயம் சாதிக்கின்-இனிச் சாதன சாத்தியம் ஒருங்கிருத்தலாகிய அன்னுவயங் கண்டான் பின்னர் அவற்றுள் சாதனத்தை மட்டும் கண்டுழி அதனோடு சாத்தியமும் இருத்தல் வேண்டும் என்று துணியின்; முன்னும் கழுதையையும் கணிகையையும் தம்மில் ஒரு காலத்து ஓர் இடத்தே அன்னுவயம் கண்டான்-முன்னொரு காலத்தே ஒரு கழுதையையும் ஒரு கணிகை மகளையும் ஓர் இடத்தே அணுகி நிற்கக்கண்டவன் ஒருவன்; பின் காலத்துக் கழுதையைக் கண்டு அவ்விடத்தே கணிகையை அனுமிக்க வேண்டும்-பின்னொரு காலத்தே பிறிதோரிடத்தே கழுதையை மட்டும் கண்டு அவ்விடத்தே கணிகையும் இருப்பாளாகத் துணிதல் வேண்டும்; அதுகூடா-அங்ஙனம் துணிதல் கூடாமையின் அதுவும் பிழைபடுதல் அறிக என்றார் என்க.

(விளக்கம்) அன்னுவயத்தால் பொருளுண்மை சாதிக்கக் கூடுமானால் கழுதையையும் கணிகையையும் அன்னுவயம் கண்டான் பின்னொரு காலத்தே கழுதையைத் தனித்துக் கண்டவன் அங்குக் கணிகையும் இருத்தல் வேண்டும் என்று, துணிதல் வேண்டும் என்று நகைச்சுவை பட மறுத்தவாறாம். அனுமித்தல்-துணிதல்.

வெதிரேகத்தை மறுத்தல்

101-108 : நெருப்பு..................ஆகாது

(இதன் பொருள்) நெருப்பு இலா இடத்து புகை இலை எனல் நேர் அத்திருத்தகு வெதிரேகம் சாதிக்கும் என்னின்-இனி நெருப்பு இல்லாத இடத்தில் புகையும் இல்லையாம் எனல் போன்ற அந்தச் சிறப்பு மிக்க எதிர்மறை துணிபொருளைச் சாதிக்கும் என்றலோ; நாய் வால் இல்லா கழுதையின் பிடரின் நரி வாலும் இலையாக் காணப்பட்ட அதனையே கொண்டு-ஒருவன் ஓரிடத்தே ஒரு காலத்தே கழுதையின் பிடரி மயிரைக் கண்டு இது நாய் வாலோ அல்லது நரியின் வாலோ என்று ஐயுற்று அணுகிப்பார்க்குமிடத்தே ஆண்டு நாய் வாலும் நரி வாலும் இல்லையாகக் காணப்பட்ட அக்காட்சியையே ஏதுவாகக் கொண்டு; பிறிதோர் இடத்து நரி வாலின் நாய் வாலை அனுமித்தல் அரிதாம் அதனால் அதுவும் ஆகாது-அவன் மற்றொரு காலத்தே வேறோரிடத்தே ஒரு வாலைக் கண்டவன் அது நரிவால் இல்லையாதல் கண்டு இது நாய் வாலும் இல்லை எனத் துணிதல் வேண்டும், அதுவும் இயலாதாம் ஆதலினால் இவ்வெதிர்மறைக் கருத்தளவையும் அளவையாகமாட்டாது என்றார் என்க.

(விளக்கம்) நெருப்பிலா இடத்துப் புகை இல்லையாம்; ஆகவே எம் மலையிடத்துப் புகையுளதோ அங்கு நெருப்பும் இருத்தல் வேண்டும் என்று துணிதற்கு இவ்வெதிர்மறை ஏதுவாதலின் இதனையும் அளவையாகக் கொள்வர் அளவை வாதிகள். அவ்வெதிர்மறை ஏதுவினை ஈண்டு அறவண அடிகளார் எடுத்துக் காட்டி நகைச்சுவை தோன்ற மறுத்தல் உணர்க. காணப்பட்ட வால் நாய் வால் ஆதலும் கூடுமாதலின் அதுவும் ஆகாது என்றவாறு. இவ்வாற்றால் கருத்தளவைக்குப் பிறர் கூறும் காரியமும் அன்னுவயமும் வெதிரேகமும் ஆகிய உறுப்புகள் போலி என்றறிவித்த படியாம். திருத்தகு வெதிரேகம் என்றது இகழ்ச்சிக் குறிப்பு.

பக்கம் முதலிய ஐந்துறுப்புகளுள் மூன்றுறுப்புகளே பவுத்தர் மேற்கொள்வர் என்றல்

109-112 : ஒட்டிய...........உள

(இதன் பொருள்) உபநயம் நிகமனம் இரண்டும் ஒட்டிய-நங்காய் முன்பு முதலாகக் கூறப்பட்ட கருத்தளவையின் உறுப்புகள் ஐந்தனுள் இறுதியில் நின்ற உபநயமும் நிகமனமும் ஆகிய இரண்டுறுப்புகளும் தருக்கவாதி முதலிய பிற சமயக்கணக்கர்களால் சேர்க்கப்பட்டவையாம்; திட்டாந்தத்திலே சென்று அடங்கும்-எடுத்துக்காட்டு என்னும் உறுப்பிலே அவ்விரண்டும் புக்கு அடங்குவனவாம் ஆகவே; பக்கம் ஏது திட்டாந்தங்கள்-நம்மனோர் இப்பொழுது மேற்கொள்வன மேற்கோளும் ஏதுவும் எடுத்துக்காட்டும் ஆகிய மூன்றுறுப்புகள் மட்டுமேயாம்; ஒக்க நல்லவும் தீயவும் உள-அம்மூன்றனுள் தம்முள் ஒப்ப நல்லனவும் தீயனவும் ஆகிய உறுப்புகளும் உளவாம் என்றார் என்க.

(விளக்கம்) உபநயம் நிகமனம் இரண்டும் ஒட்டிய என மாறுக. ஓட்டிய-பிறரால் ஓட்டப்பட்ட. அவ்வாறு ஓட்டி ஐந்துறுப்பினையும் பயில வழங்குபவர் நையாயிகரும் வைசேடிகரும் பிறரும் என்க. தருக்க நூலோர் ஆகிய அவர்-

உரைசெய்பிர திக்கினையு மேதுவுமு தாகரண முபந யம்பின்
பரவிநிக மனமுமெனும் படித்தாகு மேத்துவா பாச மப்பாற்
கருதிலவை யைவகையாஞ் சித்தவிசித் தத்தொடனே காந்தி கஞ்சீர்ப்
பிரணரணச் சமமொடுகா லாத்தியா பதிட்டமெனப் பேசலாமே (மெய்ஞ்ஞான : 48ஆம் சருக்)
என்பர்.

அறவணர் கருத்தளவையின் தாம் மேற்கொண்டுள்ள பக்கம் முதலிய மூன்றுறுப்புகளின் இயல்புகளை இனிக்கூறத் தொடங்குகின்றார்

112-117 : அதில்..........நாட்டுக

(இதன் பொருள்) அதில்-அவற்றுள்; வெளிப்பட்டுள்ள தன்மியினையும் வெளிப்பட்டுள சாத்திய தன்மத்திறம்-தன் மாற்றாருடன் சொற்போர் செய்தமையால் அனைவரும் காணும்படி வெளிப்பட்டிருக்கின்ற அத்துணிபொருளின் பண்புத்தன்மையையும்; பிறிதில் வேறாம் வேறுபாட்டினையும்-பிறபொருள்களில் நின்றும் வேறாகும் வேற்றுமையையும்; தன்கண் சார்த்திய நயந்தருதல் உடையது நன்கு என் பக்கம் என நாட்டுக-தன்னிடத்தே ஏறட்டுக் கொண்டிருக்கின்றதொரு நன்மையைத் தருவது எதுவோ அது நன்று என்று கூறப்படுகின்ற மேற்கோள் என்று உள்ளத்தில் பதித்துக் கொள்வாயாக என்றார் என்க.

(விளக்கம்) அதில் : ஒருமைப் பன்மை மயக்கம். சொற்போரின் பொருட்டுப் பலரும் அறிய எடுத்துச் சொல்லிய தன்மி என்பார் வெளிப்பட்டுள்ள தன்மி என்றார். தன்மி என்றது சாத்தியத்தை. அஃதாவது துணிபொருளை என்க. தன்மத்திறம் அதற்கியல்பாம் தன்மை. பிறிது என்றது மேற்கோளின் மறுதலைப் பொருளை. தன்கண் சார்த்துதலாவது-தன்பால் உடையதாய் இருத்தல். அவ்வேறுபாடுடைமையை மேற்கோளுக்கு ஆக்கந் தருதலின் அவ்வாக்கத்தை நயம் என்றார். வெளிப்பட்டுள்ள தன்மையினைத் தன்கண் சார்த்திய நயம் எனவும் பிறிதில் வேறாம் வேற்றுமையைத் தன்கண் சார்த்திய நயம் எனவும் தனித்தனி கூறிக் கொள்க. நன்கென் பக்கம் என்றது முன்னர் நல்லவும் தீயவுமாகிய பக்கங்களுள் நல்லனவாகியவற்றுள் ஒன்றாகிய பக்கம் என்றவாறு. ஈண்டு விரித்துக் கூறிய நயம் இரண்டனுள் முன்னது ஒற்றுமை நயம். பின்னது வேற்றுமை நயம் என்க.

இதுவுமது

117-124 : அதுதான்...........விடுதலும்

(இதன் பொருள்) அதுதான்-அங்ஙனம் நாட்டுதலாவது; சத்தம் அநித்தம் நித்தம் என்று ஒன்றைப்பற்றி நாட்டப்படுவது-சத்தமானது அநித்தம் என்றாதல் நித்தம் என்றாதல் தான் மேற்கொண்டுள்ள இவ்விரண்டனுள் ஒன்றை ஏதுவானும் எடுத்துக்காட்டானும் சாதித்து நிறுத்துவதாம்; தன்மி சத்தம்-இதன்கண் தன்மியாவது சத்தமாம்; சாத்திய தன்மமாவது-ஈண்டு துணிந்த பொருளின் தன்மமாவது; நித்தா நித்தம்-நித்தமாதல் அநித்தமாதல் இவ்விரண்டனுள் தான் மேற்கொண்டதே துணிபொருளின் தன்மமாம்; நிகழும் நல் ஏது மூன்றாய்த் தோன்றும்-இங்ஙனம் கூறப்பட்ட மேற்கோளுக்கு நிகழா நின்ற நல்ல ஏதுவும் மூன்றுவகையாகக் காணப்படும், அவையாவன; மொழிந்த பக்கத்து ஊன்றி நிற்றலும் சபக்கத்து உண்டாதலும் விபக்கத்து இன்றியே விடுதலும்-எடுத்துக் கொண்ட மேற்கோளில் சிறப்பாகப் பொருந்தி நிற்றலும் அதனைச் சார்ந்து வந்த மேற்கோளிலும் பொருந்தி நிற்றலும் மறுதலை மேற்கோளின்கண் இல்லாதொழிதலும் என்னும் இம்மூவகையும் ஆம் என்றார் என்க.

(விளக்கம்) சத்தம் : எழுவாய். அநித்தம் நித்தம்-சத்தமானது அநித்தம் என்றாதல் நித்தம் என்றாதல் தான் மேற்கொண்ட தொன்றைப் பற்றி வாதிட்டு நிலைநாட்டுவது என்க. அங்ஙனம் நிலைநாட்டுங்கால் தான் நாட்டிய பண்பினை ஏற்றுக்கொள்வது சத்தமே யாதலின் தன்மி சத்தம் என்றார். சத்தத்திற்கு உரித்தாக நாம் மேற்கொள்ளும் இருவகைப் பண்புகளுள் ஒன்றே சாத்திய தன்மமாம் என்பது கருத்து. மேற்கோளைச் சாதித்தற்கு நம்மால் கூறப்படும் ஏதுக்கள் மூன்றுவகைப்படும் என்று அறிவித்தவாறு. மொழிந்த பக்கத்து வாதத்திற்கு எடுத்து மொழிந்த மேற்கோளின்கண் என்க. சபக்கம் தன் மேற்கோளின் சார்பாக வரும் மேற்கோள். அவ்வேது அங்ஙனம் வரும் துணைமேற் கோளிலும் இருக்கும், விபக்கம் மறுதலை மேற்கோள். அதன் கண் ஏதுவின் இன்மை உளதாம். இவ்வாற்றால் ஏது மூன்று வகைப்படும் என்றராயிற்று. பக்கத்தினும் சபக்கத்தினும் உண்மை வகையால் இரண்டு ஏதுக்களும் விபக்கத்தில் இன்மை வகையால் ஓர் ஏதுவும் ஆக மூன்றாம் என்க. விபக்கத்தில் ஏதுவின் இன்மையே ஓர் ஏதுவாக மேற்கோளைச் சாதிப்பது உணர்க.

ஏதுக்களின் விளக்கம்

124-135 : சபக்கம்..................என்க

(இதன் பொருள்) சபக்கம் சாதிக்கில்-துணை மேற்கோளால் தான் எடுத்துக் கொண்ட மேற்கோளைச் சாதிக்குமிடத்தே; பொருள் தன்னால்-தான் எடுத்துக்காட்டும் பொருளால்; பக்கத்து ஓதிய பொதுவகை-தான் மேற்கொண்ட பொருளுக்கு ஓதிய பொதுத்தன்மை அத்துணை மேற்கோளாடும்; ஒன்றி இருத்தல்-பொருந்தியிருத்தல், அஃதாவது; சத்த அநித்தம் சாத்தியம் ஆயின்-மேற்கொண்ட சத்தத்திற்கு அநித்தம் சாத்திய தன்மம் ஆகுமிடத்தே அச்சத்தத்தோடு; ஒத்த அநித்தம் கடாதி போல் எனல்-ஒத்த தன்மத்தையுடைய தன்மியாகிய குடம் போல் என்று கூறுதல் இதற்கு; விபக்கம் விளம்பில்-மறுதலை மேற்கோள் கூறின்; யாதொன்று யாதொன்று அநித்தம் அல்லாதது பண்ணப்படாதது ஆஅ காசம் போல் என்றாகும்-யாதொரு பொருள் யாதொரு பொருள் அழிவில்லாததோ அப்பொருள் ஒருவரால் செய்யப்படாத பொருளும் ஆம் வானத்தைப்போல் என்று எடுத்துக்காட்டுக் கூறப்படுவதாம். இங்ஙனம் கூறுங்கால்; பண்ணப்படுதலும் செயலிடைத் தோன்றலும் நண்ணிய பக்கம் சபக்கத்திலுமாய்-பண்ணப்படுவதும் தொழிலிடத்தே தோன்றுவதும் ஆகிய இரண்டு ஏதுக்களும் பொருந்திய மேற்கோளிடத்தும் துணை மேற்கோளிடத்துமாய் உளவாகி; விபக்கத்து இன்றி-மறுதலை மேற்கோளிடத்தே இல்லாமல்; அநித்தத்தினுக்கு-சாதிக்கப்பட்ட சாத்தியதன்மமாகிய அநித்தத்திற்கு; மிகத் தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க-மிகவும் ஆக்கம் தருகின்ற ஏதுவாக விளங்கிற்று என்று கூறுக என்றார் என்க.

(விளக்கம்) சபக்கம் துணி பொருளை வற்புறுத்துதற்கு எடுத்துக் காட்டுகின்ற துணைமேற்கோள். பொருள்-துணிபொருள். பொதுவகை-பொதுத்தன்மை. சத்த அநித்தம் ஒலியின் நிலையாமை. சாத்தியம் என்பது நிலையாமை உடையது என்று துணிவது. ஒலி தோன்றிய பொழுதே அழிதலின் ஏது ஊன்றி நிற்றல் காண்க. துணைமேற்கோளாகிய குடத்தின்கண் அந்நிலையாமை உண்டாதலும் காண்க. விபக்கம் ஆகாசம் என்றது ஈண்டுப் பிறர் தம்மதம் மேற்கொண்டு கூறியபடியாம். என்னை? பவுத்தருக்கு ஆகாசம் ஒரு பூதம் என்றல் உடன்பாடன்மையின் என்க. விபக்கம்-மறுதலை மேற்கோள். அதன்கண் துணிபொருளின் இன்மையே ஏதுவாய் அதற்கு ஆக்கம் தருதல் காண்க.

நல்ல எடுத்துக்காட்டுகள்

(136-142) : ஏதமில்............ஒத்தன

(இதன் பொருள்) ஏதம் இல் திட்டாந்தம் இருவகைய-குற்றமில்லாத எடுத்துக்காட்டுகள் இரண்டு வகைப்படுவனவாம், அவையாவன; சாதன்மியம் வைதன்மியம் என-சாத்திய தன்மத்தை உடையதும் அஃதில்லாததும் என்று கூறப்படுவன இவற்றுள்; சாதன்மியம் எனப்படுவது அன்னுவயத்து அநித்தம் கடாதி என்கை-சாதன்மிய திட்டாந்தம் என்பது சாத்திய தன்மத்தோடு தானும் ஒத்திருக்கும் வகையில் நிலையாமை உடையன என்று குடம் முதலியவற்றை எடுத்துக்காட்டுதல்; வைதன்மிய திட்டாந்தம் சாத்தியம் எய்தா இடத்தில் ஏதுவும் இன்மை-வைதன்மிய திட்டாந்தமாவது, சாத்திய தன்மைத் திறம் இல்லாத இடத்தில் மேற்கோள் தன்மமாகிய ஏதுவும் இல்லாதொழிதல்; இத்திறம் நல்ல சாதனத்து ஒத்தன-இத்தன்மைகள் மேற்கூறிய நல்லேதுக்களோடு பெரிதும் ஒத்தன என்றார் என்க.

(விளக்கம்) சாதன்மியம்-துணி பொருளோடு ஒத்த பண்புடைமை. வைதன்மியம்-துணிபொருள் பண்பிற்கு மறுதலையாதல் (அஃதாவது அநித்தம் அல்லாதது-பண்ணப்படாதது. ஆகாசம் போல் என்று முன்னும் வந்தமை உணர்க) நல்ல சாதனம் என்றது முன் கூறிய நல்லேதுக்களை.

மேற்கோட் போலியும் ஏதுப் போலியும் எடுத்துக்காட்டுப் போலியும்

143-153 : தீய.............என

(இதன் பொருள்) தீயபக்கமும் தீய ஏதுவும் தீய எடுத்துக்காட்டும் ஆவன-குற்றமுடைய மேற்கோளும் குற்றமுடைய ஏதுவும் குற்றமுடைய எடுத்துக்காட்டும் ஆகிய இவை; பக்கப்போலியும் ஏதுப் போலியும் திட்டாந்தப் போலியும் ஆஅம்-மேற்கோட் போலியும் ஏதுப்போலியும் போலி எடுத்துக்காட்டும் என்பனவாம்; இவற்றுள் பக்கப் போலி ஒன்பது வகைப்படும்-இவற்றுள் மேற்கோட் போலி ஒன்பது வகைப்படும், அவை; பிரத்தியக்க விருத்தம் அனுமான விருத்தம் சுவசன விருத்தம் உலோக விருத்தம் ஆகம விருத்தம்-காட்சி முரணும் கருத்து முரணும் தன்மொழி மாறுபாடும் உலக மலைவும் நூல் முரணும்; அப்பிரசித்த விசேடணம் அப்பிரசித்த விசேடியம் அப்பிரசித்த உபயம் அப்பிரசித்த சம்பந்தம் என-பண்பு விளங்காமை சிறப்பு விளங்காமை பண்பும் சிறப்பும் ஒருங்கே விளங்காமை விளக்கமில்லாத தொடர்பு எனப்படும் இவ்வொன்பதுமாம் என்றார் என்க.

(விளக்கம்) பிரத்தியக்கம் விருத்தம்-காட்சி முரண். அனுமானம்-கருத்து. சுவசனம்-தன்சொல். உலோகம்-உலகம். இது சான்றோர் என்னும் பொருட்டு. ஆகமம்-நூல். அப்பிரசித்தம்-விளங்காமை. விசேடணம்-பண்பு. விசேடியம்-சிறப்பு. உபயம் என்றது பண்பும் சிறப்பும் ஆகிய இரண்டும் என்றவாறு.

பக்கப் போலியின் விளக்கம்

154-166 : எண்ணிய...............நுவறல்

(இதன் பொருள்) எண்ணிய இவற்றுள்-ஈண்டு எண்ணித் தொகுக்கப்பட்ட மேற்கோள் போலிகளுள் வைத்து; பிரத்தியக்க விருத்தம் கண்ணிய காட்சி மாறுகொளல் ஆகும்-கருதிய காட்சி அளவையோடு முரண்படக் கூறுதலாம், அஃதாவது; சந்தம் செவிக்குப் புலன் அன்று என்றல்-ஒலி செவிக்குப் புலப்படாது என்பது போலவன; மற்று அனுமான விருத்தம் ஆவது கருத்து அளவையை மாறாகக் கூறல் அநித்தியக் கடத்தை நித்தியம் என்றல்-இனிக் கருத்தளவை முரணாவது கருத்தளவிற்கு மாறுபடக் கூறதல், அது அழியும் தன்மையுடைய குடத்தை அழியாதது என்று கூறுதல்; சுவசன விருத்தம் தன் சொல் மாறி இயம்பல் என் தாய் மலடி என்றே இயம்பல்-தன் சொல் முரணாவது ஒருவன் தான் எடுத்துச் சொல்லும் சொல்லே பொருள் முரண்படச் சொல்லுதல், அது என்னை ஈன்றாள் மலடி என்று கூறுதலாம்; உலக விருத்தம் உலகின் மாறு ஆம் உரை இலகும் மதி சந்திரன் அல்ல என்றல்-இனி உலக மலைவு ஆவது சான்றோருடைய சொல் மரபிற்கு முரணாகின்ற மொழி அது விளங்கும் மதி என்னும் சொல் சந்திரன் என்ற பொருளை உடையதன்று என்று கூறுதல், ஆகம விருத்தம் தன் நூல் மாறு அறைதல் அநித்தவாதியாய் உள்ள வைசேடிகன் அநித்தியத்தை நித்தியம் என நுவறல்-நூல் முரணாவது ஒருவன் தன் சமய நூல் கருத்திற்கு முரணாகக் கூறுதல், அஃதாவது பொருளுக்கு நிலையாமை கூறும் கொள்கை உடையவனாகிய வைசேடிகவாதி தன் நூற் கருத்திற்கு முரணாக நிலையாமையுடைய தொன்றனை நிலையுதலுடைத்து என்று கூறுதல் என்க.

(விளக்கம்) கண்ணிய-கருதிய, காட்சி-காட்சி அளவை. அநித்தியக் கடம்-அழியும் இயல்புடைய குடம். மதி அறிவின் மேல் செல்லாமைக்கு இலகுமதி என்றார். அல்ல-அன்று. நுவறல்-கூறுதல்.

இதுவுமது

167-178 : அப்பிர.........சித்தம்

(இதன் பொருள்) அப்பிரசித்த விசேடணம் ஆவது-விளக்கமில் பண்பாவது; தம் தம் எதிரிக்குச் சாத்தியம் தெரியாமை-சொற்போர் புரிவோர் தங்கள் தங்களுடைய எதிரிக்குத் தாம் வற்புறுத்தும் துணிபொருள் விளங்காது மொழிதல். அதுவருமாறு; பவுத்தன் மாறாய் நின்ற சாங்கியனைக் குறித்து சத்தம் விநாசி என்றால்-வாதிடுகின்ற பவுத்தன் ஒருவன் தனக்கு மாறுபட்டிருக்கின்ற சாங்கியன் ஒருவனைச் சுட்டிச் சொற்போரிடும் பொழுது ஒலி அழிதன் மாலைத்து என்று கூறினால்; அவன் அவிநாசவாதி ஆதலின் சாத்திய விநாசம் அப்பிரசித்தமாகும்-அச்சாங்கியன் பொருள் நிலையுதலுடைத்து என்னும் கொள்கை உடையவன் ஆதலின் பவுத்தன் கூறிய துணிபொருளின் பண்பாகிய அழிவு அச்சாங்கியனுக்கு விளக்க விளக்கமில்லாத சிறப்பாவது; எதிரிக்குத் தன்மி பிரசித்தம் இன்றி இருத்தல்-தன் மாற்றானுக்குத் தான் கூறும் மேற்கோளின் சிறப்பு விளக்கமின்றி இருத்தல், அஃதாவது; சாங்கியன் மாறாய்நின்ற பவுத்தனைக் குறித்து ஆன்மா சைதனியவான் என்றால் அவன் அநரன்மவாதி ஆதலின் தன்மி அப்பிரசித்தம்-சாங்கியவாதி ஒருவன் தனக்கு எதிரியாய் நின்ற பவுத்தனோடு வாதிடுபவன் அவனை நோக்கி உயிர் அறிவுடைத்து என்று கூறின் அப்பவுத்தன் உயிர் என்பதொன்றில்லை என்னும் கொள்கை உடையவன் ஆதலால் அவனுக்குச் சாங்கியன் எடுத்து மொழிந்த தன்மியாகிய உயிர் விளக்கமற்ற தாம் என்க.

(விளக்கம்) அப்பிரசித்தம்-விளக்கமில்லாமை. விசேடனம் என்றது ஈண்டுச் சாத்திய வசனத்தை. சாங்கியன் காணப்படும் பொருள் எல்லாம் உள் பொருளே என்னும் கொள்கை உடையவன். மேலும் எப்பொருளும் காரண உருவத்தினின்றும் காரிய உருவத்திற்கும், காரிய உருவத்தினின்றும் மாறுவதேயன்றி அழிவதில்லை என்னும் கோட்பாடுடையன் ஆதலின் அவன் அவினாசி ஆதலால் என்றார். விசேடியம்-தன்மி. மாறாய் நின்ற பவுத்தன்-எதிரியாய் நின்று சொற்போர் புரியும் பவுத்தன். ஆன்மா-உயிர். சைதன்யம்-அறிவுடையது. அநான்மவாதி-உயிர் என்று ஒரு பொருள் இல்லை என்னும் கொள்கை உடையவன். ஆன்மா சைதன்யவான்-என்புழி, ஆன்மா-தன்மி. சைதன்யம்-தன்மம். எனவே ஆன்மா என்பது எதிரிக்கு அப்பிரசித்தம் ஆயிற்று என்க.

இதுவுமது

179-185 : அப்பிர...........உபயம்

(இதன் பொருள்) அப்பிரசித்தம் உபயமாவது-அப்பிரசித்த உபயம் என்னும் குற்றமாவது; மாறு ஆனோற்கு தன்மி சாத்தியம் ஏறாது அப்பிரசித்தமாய் இருத்தல்-எதிரிக்கு மேற்கோளும் துணிபொருளும் ஆகிய இரண்டும் நெஞ்சத்தில் புகாமல் விளக்கமில்லாதிருத்தல், அதுவருமாறு; பகர் வைசேடிகன் பவுத்தனைக் குறித்து-வாதிடுகின்ற வைசேடிகன் எதிரியாகிய பவுத்தனை நோக்கி; சுகம் முதலிய தொகைப் பொருட்குக் காரணம் ஆன்மா என்றால்-இன்பம் முதலியனவாகத் தொகுத்துக் கூறப்படுகின்ற பொருள்களுக்கெல்லாம் காரணமாவது உயிரே என்று கூறினால்; தாம் சுகமும் ஆன்மாவும் இசையாமையில் அப்பிரசித்த உபயம்-பவுத்த சமயத்தினர் இன்பம் முதலிய தொகைப் பொருளையும் அவற்றிற்கு காரணமாகிய உயிரையும் உள்பொருள் என்று ஒப்புக்கொள்ளாமையினால் மேற்கோளும் ஏதுவுமாகிய இரண்டும் விளங்காமை என்னும் குற்றமாம் என்க.

(விளக்கம்) உபயம் என்றது மேற்கொளும் துணிபொருளும். பகர் வைசேடிகன்-வாதிடுகின்ற வைசேடிகன்; வினைத்தொகை. பவுத்தன் என்றது எதிரியாகிய பவுத்தன் என்பதுபட நின்றது. சுகம் முதலிய தொகைப் பொருளாவன-

அறிவரு ளாசை யச்ச மானம்
நிறைபொறை யோர்ப்புக் கடைப்பிடி மையல்
நினைவு வெறுப்புவப் பிரக்க நாண் வெகுளி
துணிவழுக் காறன் பெளிமை யெய்த்தல்
துன்ப மின்ப மிளமை மூப்பிகல்
வென்றி பொச்சாப் பூக்க மறமதம்
மறவி யினைய வுடல்கொ ளுயிர்க்குணம்

என்னும் இவை. தன்மியாகிய உயிர் பவுத்தனுக்கு உடன்பாடன்மையின் அதன் தன்மமாகிய சுகம் முதலியனவும் உடன்பாடாகாமல் இரண்டும் விளங்காவாயின.

இதுவுமது

186-190 : அப்பிர............ஆகும்

(இதன் பொருள்) அப்பிரசித்த சம்பந்தம் ஆவது-அப்பிரசித்த சம்பந்தம் என்று சொல்லப்படுகின்ற குற்றமாவது விளக்கமில்லாமையால்; எதிரிக்கு இசைந்த பொருள் சாதித்தல்-தனக்கு மாறாய் நின்று வாதிடுகின்ற பகைவனுக்குப் பொருந்திய துணிபொருளைத் தானே சாதித்துக் கொடுத்தல், அதுவருமாறு; மாறாம் பவுத்தற்கு சத்த அநித்தம் கூறின அவன் கொள்கை அஃதாகலில்-பொருள்கள் நித்தம் என்னும் கொள்கை உடையான் ஒருவன் தனக்கு மாறுபட்டு நிற்கும் பவுத்தனொடு வாதிடுங்கால் ஒலி அழியும் இயல்புடைத்து என்று கூறுவானாயின்; அப்பவுத்தனுடைய கொள்கைகளே அதுவாயிருத்தலால் வேறு சாதிக்க வேண்டாதாகும்-அவ்வெதிர் தன் கொள்கையை வாதியே துணிந்து கூறிவிட்டமையின் தான் ஒன்று கூறிச் சாதிக்க வேண்டாததாகி முடிதலால் இஃது அப்பிரசித்த சம்பந்தம் என்னும் குற்றமாம் என்க.

(விளக்கம்) வாதி எதிரியின் கொள்கை தனக்கு விளக்கமின்மையின் அவன் கொள்கையோடியைதலின் இக்குற்றம் அப்பிரசித்த சம்பந்தம் எனப்பெயர் பெற்றது என்க. இனி இவ்வாறு பிரதிவாதியின் கொள்கையை வாதி சாதித்துக் கொடுத்தல் அரிதல் காணப்படுவதொன்றாகலின் அப்பெயர் பெற்றது எனக் கருதுவாரும் உளர். இதனால் வாதி தனக்கே தோல்வி உண்டாக்கிக் கொள்ளுதலின் இது குற்றமாயிற்று என்க.

ஏதுப்போலி

191-202 : ஏதுப்போலி..........ஆகும்

(இதன் பொருள்) ஏதுப்போலி ஓதின்-இனி ஏதுப்போலி என்னும் குற்றமுடைய ஏதுக்களை வகுத்துக் கூறுமிடத்து; அசித்தம் அநைகாந்திகம் விருத்தம் என மூன்று ஆகும்-அசித்தம் என்றும் அநைகாந்திகம் என்றும் விருத்தம் என்றும் மூன்று வகைப்படும்; அசித்தம் உபயாசித்தம் அன்னியதா சித்தம் சித்தா சித்தம் ஆசிரயா சித்தம் என நான்கு-இனி அவற்றுள் அசித்தம் என்னும் ஏதுப்போலி உபயா சித்தம் என்றும் அன்னியதா சித்தம் என்றும் சித்தா சித்தா சித்தம் என்றும் ஆசிரயா சித்தம் என்றும் நான்கு வகைப்படும்; அந்நாகைனுள்; உபயா சித்தம் சாதன ஏது இருவர்க்கும் இன்றி சத்தம் அநித்தம் கடபுலத்து என்றால்-உபயா சித்தம் எனப்படுவது மேற்கோளைச் சாதித்தற்குரிய கருவியாகக் கூறப்பட்ட ஏதுவானது வசதியும் பிரதிவாதியுமாகிய இருவர் திறத்தினும் ஏதுவாதலின்றிப் பயனில் சொல்லாயொழிதல், அதுவருமாறு; ஒலி நிலையாமை உடைத்து ஏற்றாலெனின் அது கண்ணுக்குப் புலப்படுதலால் என்று கூறுதல்; அன்னிய தாசித்தம்-அன்னியதாசித்தம் என்னும் குற்றமாவது; மாறாய் நின்றற்கு உன்னிய ஏது அன்றாய் ஒழிதல்-வாதி தன்னோடு மாறுபட்டு நின்ற பிரதிவாதிக்கு ஏதுவாகும் என்று நினைத்துக் கூறியவண்ணம் ஏதுவாகாமல் ஒழிதலாம், அதுவருமாறு; சாங்கியனுக்கு சத்தம் அநித்தம் செயல் உரல் என்னில்-பவுத்தன் ஒருவன் தன்னோடு மாறாய் நிற்கின்ற சாங்கியனை நோக்கி ஒலி நிலையாமை உடைத்து ஏற்றாலெனில் அது செயற்கையினால் தோன்றுதலால் என்று ஏதுக் கூறுவானாயின் அவ்வேதுவானது; சித்த வெளிப்பாடு அல்லது செயலுறல் உய்த்த சாங்கியனுக்கு அசித்தம் ஆகும்-எப்பொருளும் மூலப்பகுதியினின்றும் ஒன்றினொன்றாகத் தாமே வெளிப்படுவதல்லது செயலில் தோன்றும் என்னும் கொள்கையைக் கைவிட்டுவிட்ட சாங்கியனுக்கு அவ்வேது நிகதம் அல்லாமையின் அன்னியதாசித்தம் என்னும் ஏதுப்போலியாம் என்றார் என்க.

(விளக்கம்) ஏதுப்போலி-குற்றமுடைய ஏதுக்கள். அவை வகையால் மூன்றாய், விரியால் பலவாம் என்க. அசித்தம் ஏதுவாகா தொழிதல். அஃது உபயாசித்தம் முதலிய நான்காய் வரியும் என்க. அவற்றுள் வாதி கூறுகின்ற ஏது தனக்கும் பிரதிவாதிக்கும் ஏதுவாகாதொழிதல். உபயாசித்தம்-சத்தம் கண்ணுக்குப் புலப்படுதலால் அநித்தம் என்றாற் போல்வது என்பார் சத்தம் அநித்தம் கட்புலத் தென்றல் என்றார். கண்ணுக்குப் புலப்படுதலால் என்று கூறிய ஏது தவறாகலின் இருவர்க்கும் ஏதுவாகாதொழிந்து காண்க. அல்நியத அசித்தம் எனக் கண்ணழித்துக் கொள்க. அல்நியதம்-ஒருதலை ஆகாமை. மாறாய் நின்றற்கு-பிரதிவாதிக்கு. இதற்கு எடுத்துக்காட்டு, சாங்கியனுக்கு சத்தம் அநித்தம் என்பதற்கு அது செயலிடைத் தோன்றுதலை ஏதுவாகக் காட்டுதல். சாங்கியன் சத்தம் சித்தம் என்னும் மூலப்பகுதியினின்றே எல்லாப் பொருளும் நிரலே தோன்றி ஒடுங்கும் என்னும் கொள்கை உடையன் ஆதலின் அது செயலின்கண் தோன்றும் என்பது ஒருதலையன்று. தானேயும் வெளிப்படும் என்னும் கொள்கை உடையன் ஆதலின் அவனுக்கு இவ்வேது அன்னியதமாய் அசித்தமாயிற்று என்க. இதற்கு அன்னிதரா சித்தம் எனப் பாடந்திருத்தி அன்னியதரன்-வாதி பிரதிவாதி இருவரில் ஒருவன் என்று பொருள் கூறுவாரும் உளர். இஃது ஏனைய குற்றங்களுக்கும் பொதுவாகலின் அவர் உரை போலியாதல் உணர்க. சத்தம் வியஞ்சனம் உள் வழித்தோன்றி இவ்வழிக் கெடும் என்பது சற்காரிய வாதியாகிய சாங்கியன் கொள்கையாதலின் மேகங்களினின்றும் இடி முதலிய ஒலி செய்வோர் இல்லாமலும் தோன்றுதலால் நியதியுட்படாமையுமுணர்க. இருட்கண்ணதாகிய குடத்தினுருவம் விளக்கு வந்த வழி விளங்கி அல்லுழி விளங்காமை போல, ஓசையும் இதழ்நா அண்ண முதலிய அவ்வக் கருவிகளின் தொழிற்பாடு நிகழ்ந்தவழி விளங்கியும் அல்லுழி விளங்காமையும் மாத்திரையேயன்றித் தோன்றி யழிதலின்மையான், அது போலியேது வென்றொழிக எனவரும் சிவஞான பாடியம் சூ-உ சிவஞான உரை விளக்கம் நோக்குக. சாங்கியனுக்கு இஃது அன்னியதா சித்தம் என்னும் குற்றமாகும் என்றவாறு.

இதுவுமது

203-206 : சித்தா...........துணிதல்

(இதன் பொருள்) சித்தா சித்தம் ஆவது-சித்தா சித்தம் என்று கூறப்படுகின்ற ஏதுப்போலியாவது; ஏது சங்கயமாய் சாதித்தல்-வாதியானவன் தான் சாதிக்கத் துணிந்த மேற்கோளைச் சாதித்தற் பொருட்டு எடுத்துக் கூறாநின்ற ஏதுவினைத் தானே ஐயுற்ரவன் தெளியாமுன்பே ஐயத்திற்கிடமான அவ்வேது வினைக்கொண்டே மேற்கோளைச் சாதித்தலாம். அஃகாமாறு; ஆவி பனியென ஐயுறாநின்றே தூய புகை நெருப்பு உண்டு எனத்துணிதல்-தான் கண்ட பொருள் புகையோ பனிப்படலமோ என்று தன்னுள் ஐயுற்று அது தெளிதற்கு முன்பே; தூய புகை என்று துணிந்தான்போல-அதனை ஏதுவாகக் காட்டி அது தோன்றுமிடத்தே நெருப்பு உண்டு என்று கூறி நிலை நாட்டுதல் போல்வன என்றார் என்க.

(விளக்கம்) சித்தாசித்தம் துணிவும் துணியாமையும். சங்கயம்-சம்சயம்; ஐயம். ஏது துணியப்படாமையின் துணிந்த பொருளும் ஐயுறப்படுமாதலின் இவ்வேது சித்தா சித்தம் என்னும் குற்றத்தின் பாற்படும் என்றவாறு.

இதுவுமது

207-211 : ஆசிரயா...........அசித்தம்

(இதன் பொருள்) ஆசிரயா சித்தம்-ஆசிரயா சித்தம் என்னும் ஏதுப்போலியாவது; மாறானவனுக்கு ஏற்ற தன்மி இன்மை காட்டுதல்-தன்னோடு மாறுபட்டுச் சொற்போர் நிகழ்த்துகின்ற எதிரிக்குப் பொருந்திய மேற்கோள் இல்லாமையை அறிவிக்கின்ற ஏதுவைக் கூறிக் காட்டுதல், அதுவருமாறு; வசதி ஆகாசம் சத்த குணத்தால் பொருளாம் என்னின்-சாங்கியன் ஒருவன் தனக்குமாறாய் நின்ற பவுத்தனை நோக்கி வெளி என்னும் பூதம் ஒலி என்னும் குணத்தை உடைத்தாதலால் உள் பொருளாம் என்னுமிடத்து; ஆகாசம் பொருள் அல்ல என்பாற்கு தன்மி அசி
Title: Re: மணிமேகலை
Post by: Anu on February 28, 2012, 10:24:25 AM
30. பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதை

(முப்பதாவது பவத்திற மறுகெனப் பாவை நோற்ற பாட்டு)

அஃதாவது-பிறப்பறுக என்று குறிக்கொண்டு மணிமேகலை நோன்பு செய்த வரலாறு கூறும் செய்யுள் என்றவாறு.

இதன்கண்:- முன் காதையில் அறவணவடிகளார் மெய்யுணர்தற்கு ஒருதலையாக முற்பட அறிந்துகொள்ள வேண்டிய அளவைகளையும் அவற்றின் போலிகளையும் மணிமேகலைக்கு அறிவுறுத்தினராக; இந்தக் காதையில் அவ்வடிகளார் புத்தர் திருவாய் மலர்ந்தருளிய தத்துவங்களையும் அவற்றை மேற்கொண்டொழுகுமாற்றையும் செவியறிவுறுத்த அவற்றையெல்லாம் நன்குணர்ந்து கொண்ட மணிமேகலை அவ்வறநெறி நின்று பிறப்பற நோன்பு நோற்ற செய்திகளும் பிறவும் கூறப்படும்.

தானம் தாங்கிச் சீலம் தலைநின்று
போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள்
புத்த தன்ம சங்கம் என்னும்
முத் திற மணியை மும்மையின் வணங்கி
சரணாகதியாய்ச் சரண் சென்று அடைந்தபின்
முரணாத் திருவறமூர்த்தியை மொழிவோன்
அறிவு வறிதாய் உயிர் நிறை காலத்து
முடி தயங்கு அமரர் முறைமுறை இரப்ப
துடிதலோகம் ஒழியத் தோன்றி
போதி மூலம் பொருந்தியிருந்து   30-010

மாரனை வென்று வீரன் ஆகி
குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும்
வாமன் வாய்மை ஏமக் கட்டுரை
இறந்த காலத்து எண் இல் புத்தர்களும்
சிறந்து அருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது
ஈர் அறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய்ச்
சார்பின் தோன்றி தத்தமில் மீட்டும்
இலக்கு அணத் தொடர்தலின்
மண்டில வகையாய் அறியக் காட்டி
எதிர் முறை ஒப்ப மீட்சியும் ஆகி   30-020

ஈங்கு இது இல்லாவழி இல்லாகி
ஈங்கு இது உள்ளவழி உண்டு ஆகலின்
தக்க தக்க சார்பின் தோற்றம் எனச்
சொற்றகப்பட்டும் இலக்கு அணத் தொடர்பால்
கருதப்பட்டும் கண்டம் நான்கு உடைத்தாய்
மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய்
தோற்றம் பார்க்கின் மூன்று வகை ஆய்
தோற்றற்கு ஏற்ற காலம் மூன்று உடைத்தாய்
குற்றமும் வினையும் பயனும் விளைந்து
நிலையில வறிய துன்பம் என நோக்க  30-030

உலையா வீட்டிற்கு உறுதி ஆகி
நால்வகை வாய்மைக்குச் சார்பு இடன் ஆகி
ஐந்து வகைக் கந்தத்து அமைதி ஆகி
மெய் வகை ஆறு வழக்கு முகம் எய்தி
நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி
இயன்ற நால்வகையால் வினா விடை உடைத்தாய்
நின்மதி இன்றி ஊழ்பாடு இன்றிப்
பின்போக்கு அல்லது பொன்றக் கெடாதாய்
பண்ணுநர் இன்றிப் பண்ணப் படாதாய்
யானும் இன்றி என்னதும் இன்றி   30-040

போனதும் இன்றி வந்ததும் இன்றி
முடித்தலும் இன்றி முடிவும் இன்றி
வினையும் பயனும் பிறப்பும் வீடும்
இனையன எல்லாம் தானே ஆகிய
பேதைமை செய்கை உணர்வே அருஉரு
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்
இற்று என வகுத்த இயல்பு ஈர் ஆறும்
பிறந்தோர் அறியின் பெரும்பேறு அறிகுவர்
அறியார்ஆயின் ஆழ் நரகு அறிகுவர்  30-050

பேதைமை என்பது யாது? என வினவின்
ஓதிய இவற்றை உணராது மயங்கி
இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயற்கோடு உண்டு எனக் கேட்டது தெளிதல்
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம்
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும்
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
தொக்க விலங்கும் பேயும் என்றே
நல்வினை தீவினை என்று இரு வகையால்
சொல்லப்பட்ட கருவில் சார்தலும்   30-060

கருவில் பட்ட பொழுதினுள் தோற்றி
வினைப்பயன் விளையுங்காலை உயிர்கட்கு
மனப் பேர் இன்பமும் கவலையும் காட்டும்
தீவினை என்பது யாது? என வினவின்
ஆய் தொடி நல்லாய்! ஆங்கு அது கேளாய்
கொலையே களவே காமத் தீவிழைவு
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்
பொய்யே குறளை கடுஞ்சொல் பயன் இல்
சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று  30-070

உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் எனப்
பத்து வகையால் பயன் தெரி புலவர்
இத் திறம் படரார் படர்குவர் ஆயின்
விலங்கும் பேயும் நரகரும் ஆகி
கலங்கிய உள்ளக் கவலையின் தோன்றுவர்
நல்வினை என்பது யாது? என வினவின்
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச்
சீலம் தாங்கித் தானம் தலைநின்று
மேல் என வகுத்த ஒருமூன்று திறத்துத்
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி   30-080

மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்
உணர்வு எனப்படுவது உறங்குவோர் உணர்வின்
புரிவு இன்றாகிப் புலன் கொளாததுவே
அருஉரு என்பது அவ் உணர்வு சார்ந்த
உயிரும் உடம்பும் ஆகும் என்ப
வாயில் ஆறும் ஆயுங்காலை
உள்ளம் உறுவிக்க உறும் இடன் ஆகும்
ஊறு என உரைப்பது உள்ளமும் வாயிலும்
வேறு புலன்களை மேவுதல் என்ப
நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல்  30-090

வேட்கை விரும்பி நுகர்ச்சி ஆராமை
பற்று எனப்படுவது பசைஇய அறிவே
பவம் எனப்படுவது கரும ஈட்டம்
தரும் முறை இது எனத் தாம்தாம் சார்தல்
பிறப்பு எனப்படுவது அக் கருமப் பெற்றியின்
உறப் புணர் உள்ளம் சார்பொடு கதிகளில்
காரண காரிய உருக்களில் தோன்றல்
பிணி எனப்படுவது சார்பின் பிறிது ஆய்
இயற்கையின் திரிந்து உடம்பு இடும்பை புரிதல்
மூப்பு என மொழிவது அந்தத்து அளவும்  30-100

தாக்கும் நிலையாமையின் தாம் தளர்ந்திடுதல்
சாக்காடு என்பது அருஉருத் தன்மை
யாக்கை வீழ் கதிரென மறைந்திடுதல்
பேதைமை சார்வா செய்கை ஆகும்
செய்கை சார்வா உணர்ச்சி ஆகும்
உணர்ச்சி சார்வா அரூரு ஆகும்
அருஉருச் சார்வா வாயில் ஆகும்
வாயில் சார்வா ஊறு ஆகும்மே
ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும்
நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும்   30-110

வேட்கை சார்ந்து பற்று ஆகும்மே
பற்றின் தோன்றும் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரணமாக
வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்
தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு
அவலம் அரற்றுக் கவலை கையாறு எனத்
தவல் இல் துன்பம் தலைவரும் என்ப
ஊழின் மண்டிலமாச் சூழும் இந் நுகர்ச்சி
பேதைமை மீள செய்கை மீளும்
செய்கை மீள உணர்ச்சி மீளும்   30-120

உணர்ச்சி மீள அருஉரு மீளும்
அருஉரு மீள வாயில் மீளும்
வாயில் மீள ஊறு மீளும்
ஊறு மீள நுகர்ச்சி மீளும்
நுகர்ச்சி மீள வேட்கை மீளும்
வேட்கை மீள பற்று மீளும்
பற்று மீள கருமத் தொகுதி
மீளும் கருமத் தொகுதி மீளத்
தோற்றம் மீளும் தோற்றம் மீளப்
பிறப்பு மீளும் பிறப்பு பிணி மூப்புச்  30-130

சாக்காடு அவலம் அரற்றுக் கவலை
கையாறு என்று இக் கடை இல் துன்பம்
எல்லாம் மீளும் இவ் வகையால் மீட்சி
ஆதிக் கண்டம் ஆகும் என்ப
பேதைமை செய்கை என்று இவை இரண்டும்
காரண வகைய ஆதலானே
இரண்டாம் கண்டம் ஆகும் என்ப
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே
நுகர்ச்சி என்று நோக்கப்படுவன
முன்னவற்று இயல்பான் துன்னிய ஆதலின்  30-140

மூன்றாம் கண்டம் வேட்கை பற்று
கரும ஈட்டம் எனக் கட்டுரைப்பவை
மற்று அப் பெற்றி நுகர்ச்சி ஒழுக்கினுள்
குற்றமும் வினையும் ஆகலானே
நான்காம் கண்டம் பிறப்பே பிணியே
மூப்பே சாவு என மொழிந்திடும் துன்பம்
என இவை பிறப்பில் உழக்கு பயன் ஆதலின்
பிறப்பின் முதல் உணர்வு ஆதிச் சந்தி
நுகர்ச்சி ஒழுக்கொடு விழைவின் கூட்டம்
புகர்ச்சி இன்று அறிவது இரண்டாம் சந்தி  30-150

கன்மக் கூட்டத்தொடு வரு பிறப்பிடை
முன்னிச் செல்வது மூன்றாம் சந்தி
மூன்று வகைப் பிறப்பும் மொழியுங்காலை
ஆன்ற பிற மார்க்கத்து ஆய உணர்வே
தோன்றல் வீடு எனத் துணிந்து தோன்றியும்
உணர்வு உள் அடங்க உருவாய்த் தோன்றியும்
உணர்வும் உருவும் உடங்கத் தோன்றிப்
புணர்தரு மக்கள் தெய்வம் விலங்கு ஆகையும்
காலம் மூன்றும் கருதுங்காலை
இறந்த காலம் என்னல் வேண்டும்   30-160

மறந்த பேதைமை செய்கை ஆனவற்றை
நிகழ்ந்த காலம் என நேரப்படுமே
உணர்வே அருஉரு வாயில் ஊறே
நுகர்வே வேட்கை பற்றே பவமே
தோற்றம் என்று இவை சொல்லுங்காலை
எதிர்காலம் என இசைக்கப்படுமே
பிறப்பே பிணியே மூப்பே சாவே
அவலம் அரற்று கவலை கையாறுகள்
குலவிய குற்றம் எனக் கூறப்படுமே
அவாவே பற்றே பேதைமை என்று இவை  30-170

புனையும் அடை பவமும் வினை செயல் ஆகும்
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே
நுகர்ச்சி பிறப்பு மூப்புப் பிணி சாவு இவை
நிகழ்ச்சிப் பயன் ஆங்கே நேருங்காலை
குற்றமும் வினையும் பயனும் துன்பம்
பெற்ற தோற்றப் பெற்றிகள் நிலையா
எப்பொருளுக்கும் ஆன்மா இலை என
இப்படி உணரும் இவை வீட்டு இயல்பு ஆம்
உணர்வே அருஉரு வாயில் ஊறே
நுகர்வே பிறப்பே பிணி மூப்புச் சாவே  30-180

அவலம் அரற்றுக் கவலை கையாறு என
நுவலப் படுவன நோய் ஆகும்மே
அந் நோய் தனக்குப்
பேதைமை செய்கை அவாவே பற்றுக்
கரும ஈட்டம் இவை காரணம் ஆகும்
துன்பம் தோற்றம் பற்றே காரணம்
இன்பம் வீடே பற்றிலி காரணம்
ஒன்றிய உரையே வாய்மை நான்கு ஆவது
உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை
உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன  30-190

அறுவகை வழக்கும் மறு இன்று கிளப்பின்
தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை
இயைந்துரை என்ற நான்கினும் இயைந்த
உண்மை வழக்கும் இன்மை வழக்கும்
உள்ளது சார்ந்த உண்மை வழக்கும்
இல்லது சார்ந்த இன்மை வழக்கும்
உள்ளது சார்ந்த இன்மை வழக்கும்
இல்லது சார்ந்த உண்மை வழக்கும் எனச்
சொல்லிய தொகைத் திறம் உடம்பு நீர் நாடு
தொடர்ச்சி வித்து முளை தாள் என்று இந்  30-200

நிகழ்ச்சியில் அவற்றை நெல் என வழங்குதல்
இயல்பு மிகுத்துரை ஈறுடைத்து என்றும்
தோன்றிற்று என்றும் மூத்தது என்றும்
மூன்றின் ஒன்றின் இயல்பு மிகுத்துரைத்தல்
இயைந்துரை என்பது எழுத்துப் பல கூடச்
சொல் எனத் தோற்றும் பல நாள் கூடிய
எல்லையைத் திங்கள் என்று வழங்குதல்
உள் வழக்கு உணர்வு இல் வழக்கு முயற்கோடு
உள்ளது சார்ந்த உள் வழக்காகும்
சித்தத்துடனே ஒத்த நுகர்ச்சி   30-210

உள்ளது சார்ந்த இல் வழக்காகும்
சித்தம் உற்பவித்தது மின்போல் என்கை
இல்லது சார்ந்த உண்மை வழக்காகும்
காரணம் இன்றிக் காரியம் நேர்தல்
இல்லது சார்ந்த இல் வழக்கு ஆகும்
முயற்கோடு இன்மையின் தோற்றமும் இல் எனல்
நான்கு நயம் எனத் தோன்றப்படுவன
ஒற்றுமை வேற்றுமை புரிவின்மை இயல்பு என்க
காரண காரியம் ஆகிய பொருள்களை
ஒன்றா உணர்தல் ஒற்றுமை நயம் ஆம்  30-220

வீற்று வீற்றாக வேதனை கொள்வது
வேற்றுமை நயம் என வேண்டல் வேண்டும்
பொன்றக் கெடா அப் பொருள் வழிப்பொருள்களுக்கு
ஒன்றிய காரணம் உதவு காரியத்தைத்
தருதற்கு உள்ளம் தான் இலை என்றல்
புரிவின்மை நயம் எனப் புகறல் வேண்டும்
நெல் வித்து அகத்துள் நெல் முளை தோற்றும் எனல்
நல்ல இயல்பு நயம் இவற்றில் நாம் கொள்பயன்
தொக்க பொருள் அலது ஒன்று இல்லை என்றும்
அப் பொருளிடைப் பற்று ஆகாது என்றும்  30-230

செய்வானொடு கோட்பாடு இலை என்றும்
எய்து காரணத்து ஆம் காரியம் என்றும்
அதுவும் அன்று அது அலாததும் அன்று என்றும்
விதிமுறை தொகையினால் விரிந்த நான்கும்
வினா விடை நான்கு உள
துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல்
வினாவின் விடுத்தல் வாய் வாளாமை எனத்
தோன்றியது கெடுமோ? கெடாதோ? என்றால்
கேடு உண்டு என்றல் துணிந்து சொலல் ஆகும்
செத்தான் பிறப்பானோ? பிறவானோ?  30-240

என்று செப்பின்
பற்று இறந்தானோ? அல் மகனோ? எனல்
மிகக் கூறிட்டு மொழிதல் என விளம்புவர்
வினாவின் விடுத்தல் முட்டை முந்திற்றோ
பனை முந்திற்றோ? எனக் கட்டுரை செய்
என்றால் எம் முட்டைக்கு எப் பனை என்றல்
வாய் வாளாமை ஆகாயப் பூப்
பழைதோ, புதிதோ? என்று புகல்வான்
உரைக்கு மாற்றம் உரையாது இருத்தல்
கட்டும் வீடும் அதன் காரணத்தது   30-250

ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை
யாம் மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம்
காமம் வெகுளி மயக்கம் காரணம்
அநித்தம் துக்கம் அநான்மா அசுசி என
தனித்துப் பார்த்துப் பற்று அறுத்திடுதல்
மைத்திரி கருணா முதிதை என்று அறிந்து
திருந்து நல் உணர்வான் செற்றம் அற்றிடுக!
சுருதி சிந்தனா பாவனா தரிசனை
கருதி உய்த்து மயக்கம் கடிக!
இந் நால் வகையான் மனத்திருள் நீங்கு! என்று  30-260

முன் பின் மலையா மங்கல மொழியின்
ஞான தீபம் நன்கனம் காட்டத்
தவத் திறம் பூண்டு தருமம் கேட்டுப்
பவத் திறம் அறுக! எனப் பாவை நோற்றனள் என்  30-264

உரை

மணிமேகலை புத்த தன்ம சங்கம் என்னும் முத்திறமணியையும் மும்முறை வணங்கிச் சரணாகதியடைதல்

1-5 : தானம்................அடைந்தபின்

(இதன்பொருள்) தானந் தாங்கிச் சீலம் தலைநின்று போன பிறப்பின் புகுந்ததை உணர்ந்தோள்-மணிமேகலை நல்லாள் பண்டும் பண்டும் பலப்பல பிறப்பிலே தான முதலிய நல்லறங்களை மேற்கொண்டு அவ்வந் நிலைக்கேற்ற நல்லொழுக்கத்திலே பிறழாது ஒழுகி அடிப்பட்டு வருதலாலே அவற்றின் பயனாக இப்பிறப்பிலே முற்பிறப்பையும் அதன்கண் நிகழ்ந்த நிகழ்ச்சியையும் அறியும் பேறு பெற்றவள் அப்பயன் பின்னும் பெருகுதலாலே; புத்த தன்ம சங்கம் என்னும் முத்திற மணியை மும்மையின் வணங்கி-புத்தபெருமானும் அவன் திருவாய் மலர்ந்தருளிய அறங்களும் அவ்வறநெறி நின்றொழுகும் சங்கத்தாரும் ஆகிய மூவகைப்பட்ட மாணிக்கங்களையும் மூன்று முறை மனமொழி மெய் என்னும் மூன்று கருவிகளாலும் வணங்கி; சரணாகதியாய்ச் சரண்சென்று அடைந்தபின்-அச்சங்கத்தார்பால் தஞ்சம் புகுந்து அவர் திருவடிகளை எய்திய பின்னர் என்க.

(விளக்கம்)
தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை
அஃதிலார் மேற்கொள்வது   (குறள்-243)

என்பது பற்றி தானந் தாங்கிச் சீலந் தலைநின்று என இவற்றை ஏதுவாக்கினார். போன பிறப்பிற் புகுந்ததை உணர்தற்கும் முத்திறமணியை வணங்குதற்கும் சரணாகதி புகுதற்கும் எல்லாம் பொதுவாதலின் ஏதுவை முற்பட விதந்தோதினர். தானம்-தானபாரமிதை. சீலம்-சீலபாரமிதை. இவை பாரமிதை பத்தனுள் முன்னிற்பவை. இவற்றை,

தானம் சீலமும் பொறை தக்கதாய வீரியம்
ஊனமில் தியானமே யுணர்ச்சியோடு பாயமும்
மானமில் லருளினைவ் வைத்தலேவ லிம்மையும்
ஞானமீரைம் பாரமீதை (நீலகேசி-354)

என்பதனானும் உணர்க. இவற்றுள், தானபாரமிதை யாவது-தானம் நிறைப்பது. அது குன்றியின் றுணையாகக் கொடுத்திட்டான் அல்லனே என்பதனாற் பெறப்படும்.

சீலபாரமிதையாவது ஒழுக்கம் நிறைத்தல். அது விநயபிடகத்துச் சொன்னவா றெழுகுதல். சீலம் எனினும் ஒழுக்கம் எனினும் ஒக்கும். இவை-பஞ்சசீலம் அட்டாங்க சீலம் தசசீலம் என மூவகைப்படும். ஈண்டு-

தோடா ரிலங்கு மலர்கோதி வண்டு வரிபாட நீடு துணர்சேர்
வாடாத போதி நெறிநீழன் மேயவரதன் பயந்த வறநூல்
கோடாத சீல விதமேவி வாய்மை குணனாக நாளு முயல்வார்
வீடாத வின்ப நெறிசேர்வர் துன்ப வினைசேர்த னாளு மிலரே

எனவரும் பழம்பாடலு முணர்க. (வீர-யாப்பு-3. மேற்)

புத்த தன்ம சங்கம் என்பது பவுத்தருடைய சமயத்தின் தலைசிறந்த மூன்றுறுப்புகள்.

புத்தனும் தன்மமும் சங்கமும் என எண்ணும்மை விரித்தோதுக. பவுத்தர்கள் வழிபாடு தொடங்கும்போது புத்தம் சரணங் கச்சாமி தன்மம் சரணங் கச்சாமி. சங்கம் சரணங் கச்சாமி என மூன்றுமுறையோதுதல் மரபு. மூன்றனையும் மூன்றுமுறை மும்முறை வலம் வந்து மனத்தானினைந்து மொழியாலோதி மெய்யால் வணங்கி வழிபாடு செய்தாள் என்றற்கு மும்முறை வணங்கி என்னாது மும்மையின் வணங்கியென்றார். சரணாகதி-தஞ்சம் புகுதல். சங்கத்தில் முதன் முதலாகச் சேர்பவர் இவ்வாறு மும்மணியையும் மும்மையின் வணங்கிச் சரணாகதியடைதல் வேண்டும் என்பது அச்சமய விதியாகும்.

(அறவணவடிகள் மணிமேகலைக்கு 6ஆம் அடி முதலாக 44ஆம் அடியீறாக, புத்த தன்மங்களைத் தொகுத்துக் கூறுவதாய் ஒரு தொடர்.)

அறவணவடிகளார் கூற்று; புத்த சமய வரலாறு

6-9 : முரணா............தோன்றி

(இதன் பொருள்) முரணா மூர்த்தியை மொழிவோன்-மணிமேகலைக்கு அறங்கூறுதற் பொருட்டே அந்நகரத்திற்கு எழுந்தருளிய அறவணவடிகளார், அவட்கு அறங்கூறுதற்குத் தொடங்குபவர் முத்திறமணிகளுள் தலைசிறந்த மணியாகத் திகழ்பவனும்-அச்சமய முதல்வனும் முன்பின் முரண்படாத உயரிய அறங்களைத் திருவாய் மலர்ந்தருளிய அறவாழி அந்தணனுமாகிய புத்தபெருமானுடைய சிறப்பினைக் கூறத் தொடங்குபவர்; அறிவு வறிதா உயிர் நிறை காலத்து முடிதயங்கு அமரர் முறை இரப்ப-மணிமேகலாய்! கூர்ந்து கேட்பாயாக! பண்டொரு காலத்தே அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள்களை நெறியறிந்துய்தற்குரிய மக்கட் பிறப்பினை எய்திய உயிர்கள் தாமும் அந்நன்னெறி காட்டி நல்லறங் கூறுதற்கியன்ற நல்லாசானைப் பெறமாட்டாமையாலே தமக்குரிய அறிவு சிறுமை எய்தி அஃறிணை யுயிர்போலப் பேதைமை நிறைந்திருந்த பொழுது முடிக்கலன்களாலே திகழ்கின்ற அமரர்கள் பிரபாபாலர் என்னும் தேவன்பாற் பன்முறையும் சென்று உயிர்கட்குற்ற அக்குறையைத் தீர்த்தருள வேண்டும் என்று இரந்தமையாலே இயல்பாகவே அருள் கெழுமிய அத்தேவனும் அக்குறை நேர்ந்து; துடித லோகம் ஒழியத் தோன்றி-துடிதலோகம் என்னும் தெய்வ உலகத்தினின்று இழிந்து இந்நிலவுலகத்திலே பிறந்தருளி என்க.

(விளக்கம்) முரணாத்திரு அறம்-முன்பின் மாறுபடாத உயரிய ஒழுக்கம். மூர்த்தி-புத்தர். மூர்த்தியின் வரலாறு மொழிவோள் என்க. மொழிவோன்: பெயர்: அறவணவடிகள் என்க. உயிர், ஈண்டு மக்கள் உயிர் என்பது பட நின்றது. என்னை? மெய்யுணர்தலும் வீடுபெறுதலும் அதற்கே யுரியவாதலின். வறிதாக என்பதன் ஈறுகெட்டது. வறிது-சிறிதின் மேற்று. நிறைதலின் என்றது, தொகை மேனின்றது. முறை முறை என்னும் அடுக்குப் பன்மை மேற்று.

துடிதலோகம்-பவுத்த சமயக் கணக்கர் கூறும் முப்பத்தோருலகத்துள் ஒன்று. இஃது ஒன்பதாவதுலகமாம். அவர் கூறும் ஆறுவானவருலகங்களுள் வைத்து இது நான்காவதுலகம் என்பர். பிரபாபாலன் என்னும் துடிதலோகத்துத் தேவனே புத்தனாக நிலவுலகத்திலே வந்து பிறந்தனன் என்பது வரலாறாகும்.

புத்தன் கோசல நாட்டின்கண் கபிலவாத்து என்னும் நகரத்திருந்து செங்கோலாச்சிய முடிமன்னன் மனைவியருள் மாயாதேவி என்பவள் வயிற்றிற் கருவாகி வளர்ந்து பிறக்குங் காலத்தே அவள் வலமருங்குல் வழியே பிறந்தருளினன் என்ப.

இனி, துடிதபுரம் என்பது இந்நிலவுலகத்தே புத்தருக்கியன்ற திருப்பதியாகிய ஒரு நகரம் என்பாருமுளர், எனவே துடிதலோகத்தின் நினைவுச் சின்னமாக அந்நகரம் மக்களால் உண்டாக்கப்பட்டது என்று கொள்ளலாம். இதனை,

தொழுமடிய ரிதயமல ரொருபொழுதும்
பிரிவரிய துணைவ னெனலாம்
எழுமிரவி கிரணநிக ரிலகுதுகில்
புனைசெய்தரு ளிறைவ னிடமாம்

குழுவு மறை யவருமுனி வரரும்
அரபிரம ருரகவனு மெவரும்
தொழு தகைய இமையவரு மறமருவு
துதிசெய்தெழு துடித புரமே

எனவரும் பழம் பாடலாலு முணர்க. (வீரசோ-யாப்பு-33. மேற்)

இனி, புத்தன் தாயின் வல மருங்கு வழியாகப் பிறந்தான் என்பதனை,

உலும்பினி வனத்து ளொண்குழைத் தேவி
வலம்படு மருங்குல் வடுநோ யாறாமல்
ஆன்றோன் அவ்வழித் தோன்றின னாதலின்
ஈன்றேள் ஏழாநாள் இன்னுயிர் நீத்தாள்

எனவரும் பிம்பிசாரக் கதைச் செய்யுளானும்,

புத்தன்தாய் ஞெண்டிப்பி வாழை புனமூங்கில்
கத்தும் விரியன் கடுஞ்சிலந்தி-இத்தனையும்
வேலாலும் வாளாலு மன்றியே தாங்கொண்ட
சூலாலே தம்முயிர்க்குச் சோர்வு

எனவரும் உலகுரையானும் உணர்க. இவை நீலகேசியில் குண்டல-41 செய்யுளின் உரையிற் கண்டவை.

போதி மூலம்-அரைய மரத்தடி. புத்தர் பலகாலம் பல்வேறு நோன்புகளையும் ஆற்றியும் மெய்யுணர்வு பெறாராய் ஒருநாள் புத்தகயை என்னுமிடத்தே பல்குனி யாற்றின் கரைமேனின்ற ஓர் அரையமா நீழலில் அமர்ந்திருந்த பொழுது அவருக்கு மெய்யுணர்வு பிறந்ததென்பது அவர் வரலாறு. இக்காரணத்தால் புத்தகயை என்னும் இடமும் அரைய மரமும் பவுத்தரால் திசைநோக்கித் தொழப்படும் சிறப்புடையனவாயின என்க.

இதுவுமது

10-13 : மாரனை..........கட்டுரை

(இதன் பொருள்) மாரனை வென்று வீரன் ஆகி-காமவேள் தோற்றுவிக்கும் காமத்தைத் துவர நீத்தலாலே அவனை வென்று மாபெரும் வீரனாய்த் திகழ்ந்து; குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும்-காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் அவற்றின் நாமமும் நெடும்படி துவரத்ததுடைத்தற்குக் காரணமான; வாமன் வாய்மை ஏமக் கட்டுரை-பேரழகனாகிய அப்புத்த பெருமான் திருவாய் மலர்ந்தருளிய நால்வகை மெய்க்காட்சிகளாகிய மக்கள் உயிர்க்குப் பாதுகாவலும் இன்பமும் பயக்கும் மெய்ப்பொருள் பொதிந்த அறவுரைகளே என்க.

(விளக்கம்) மாரன்-ஈண்டு அவன் செயலாகிய காமுறுதன் மேனின்றது. மாரனை வென்றான் எனவே அவனை, மீண்டும் உலகியலில் ஈடுபடுத்தும் எல்லாத் தீக்குணங்களும் வென்றமை கூறாமலே அமைதலின் வீரன் ஆகி என்றார்.

குற்றம் மூன்று-காம வெகுளி மயக்கங்கள். இவற்றைத் துவரத்துடைத்தார்க்குப் பின்னர்ப் பிறவிப் பிணி இல்லாமையின் முற்ற அறுக்கும் என்றார்.

காம வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமங் கெடக்கெடு நோய்

எனவரும் திருக்குறளும் ஈண்டு நினைக்கற்பாற்று.

வாமன்-அழகன். அழகான் மிக்கவன் என்பது பற்றி அது புத்தரின் பெயருள் ஒன்றாகவே வழங்கப்படுகின்றது. குற்றம் அறுக்கும் கட்டுரை, வாமன் திருவாய் மலர்ந்தருளிய கட்டுரை, வாய்மைகளையுடைய கட்டுரை, ஏமமுடைய கட்டுரை என அனைத்தும் கட்டுரைக்கே தனித்தனி இயையும். திருவாய் மலர்ந்த கட்டுரை என ஒரு சொல் பெய்து கொள்க.

வாய்மை என்றது புத்தனது நால்வகை மெய்க்காட்சிகள்; அவை பின்னர் விளக்கப்படும். ஏமம்-பாதுகாவலும் இன்பமும் ஆம்; ஆக இருபொருளும் கொள்க. கட்டுரை-பொருள் பொதிந்த மொழி.

இதுவுமது

14-19 : இறந்த.........காட்டி

(இதன் பொருள்) இறந்த காலத்து எண் இல் புத்தர்களும்-மற்று அக்கட்டுரை தானும் அவ்வாதிப் புத்தருக்குப் பின்னர் அவ்வறநெறியைப் பின்பற்றி வழிவழியாகக் கடந்த காலத்திலே எண்ணிறந்த புத்தர்களும் பிறந்து; அருள் உளம் சிறந்து-அருள் கூர்ந்து மக்கட்குத் தம் அருளுடைமை காரணமாகத் திருவாய் மலர்ந்தருளி உலகெலாம் பரப்பப்பட்ட சிறப்பினையும் உடையதாம்; ஈர் அறுபொருளின் ஈந்த நெறி உடைத்தாய்-அவ்வறவுரை தானும் தன்பால் பன்னிரண்டு நிதானங்கள் என்னும் உள்ளுறுப்புகளாய்ப் பகுத்தோதும் முறைமையினை யுடைத்தாய்; சார்பின் தோன்றி தம் தமின் மீட்டும் இலக்கு அணத்தொடர்தலின்-அப்பன்னிரண்டு நிதானங்களும் தம்முள் ஒன்றிலிருந்து ஒன்று காரணகாரிய முறையாலே தாம்தாம் தோன்றுதற்குச் சார்பாகிய பண்புகளினின்றும் தோன்றித் தத்தமக்குரிய அச்சார்பு, மீண்டும் தரந்தாம் பிறத்தற்கேதுவாக அணுகி வரும் பொழுது அவ்வவற்றினின்றும் பிறந்து இவ்வாறே தொடர்ந்து தோன்றி வருதலாலே அவற்றின் தோற்றமுறையினை; மண்டில வகையா அறியக் காட்டி-வட்டமாகச் சுழன்று வருகின்ற முறைமையாக அறிவுறுத்து என்க.

(விளக்கம்) அமரர் இரந்து வேண்டுதலாலே துடிதலோகத்தினின்று நிலவுலகத்தே பிறந்தருளிய கவுதம புத்தரே ஆதிபுத்தர் எனவும், அவர் போதி மூலத்திலிருந்து கண்ட மெய்க்காட்சிகளே பவுத்த சமய தத்துவங்கள் ஆம் எனவும் கொள்க.

(விளக்கம்) அமரர் இரந்து வேண்டுதலாலே துடித லோகத்தினின்று நிலவுலகத்தே பிறந்தருளிய கவுதம புத்தரே ஆதிபுத்தர் எனவும், அவர் போதி மூலத்திருந்து கண்ட மெய்க்காட்சிகளே பவுத்த சமய தத்துவங்கள் ஆம் எனவும் கொள்க.

இனி, இறந்த காலத்து எண்ணில் புத்தர்களும்-என்பதற்கு. கவுதம புத்தர் தோன்றுமுன்பே எண்ணிறந்த புத்தர் காலந்தோறுந் தோன்றி உலகில் அறத்தை நிறுவினர் எனவும் அவ்வறநெறியையே கவுதம புத்தர் உறுதி பெறச் செய்தனர் என்றும் கூறுவாரும் உளர். கவுதம புத்தருக்குப்பின் இறந்த காலத்தே எண்ணிறந்த புத்தர் பிறந்தனர் என்பாருமுளர்.

இனிக் கவுத புத்தர் புத்த தத்தவம் நிரம்புதற்கு முன்னே எண்ணிறந்த புத்தப் பிறப்பினை எய்தி அந்நெறிப் பயின்றடிப்பட்டு வந்து கவுதம புத்தராய்ப் பிறந்தபொழுது புத்த தத்துவம் நிரப்பினர் என்பாரும் உளர்.

ஈர் அறு பொருள் என்றது பேதைமை முதலிய பன்னிரண்டு விதானங்களே. அவை 24 ஆம் காதையில் இவ்வறவண வடிகளாரே இராசமா தேவியார்க்கு,

பேதைமை செய்கை உணர்வே அருவுரு
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்

எனத் தொகுத்தோதி யுள்ளமையின் ஈண்டு ஈரறு பொருளின் ஈந்த நெறி என்று தொகைமட்டும் ஓதியொழிந்தார்.

இனி இக்காதையில் இவற்றினியல்பெலாம் விரிவகையால் விரித்தோதப்படும். இப்பன்னிரண்டு நிதானங்களும் காரண காரிய முறையாலே தொடர்ந்து தோன்றி ஒரு வட்டமாகி மீட்டும் அவ்வாறே தத்தம் இலக்கு அண்ணியவழித் தோன்றி இவ்வாறே முடிவின்றி, மண்டலமாகச் சுழன்ற வண்ணமே இருக்கும் என்பார், மண்டல வகையாற் காட்டி என்றார். இக்காரணத்தால் பிறப்பிற்கு எல்லையில்லையாயிற்று என்பது குறிப்பு. பேதைமை முதலாகக் காட்டினரேனும் இறுதயினின்ற வினைப்பயன் சார்பாகப் பேதைமை பிறத்தலின் இவ்வட்டத்திற்குத் தொடக்கமும் முடிவும் இல்லை என்றாராயிற்று. சார்பு-இடம் என்னும் பொருட்டு; வழி என்னும் பொருட்டாகக் கோடலுமாம். இனி, பிறப்பிற்குப் பேதைமை முதற்காரணமும் துணைக் காரணமும் ஆகி எல்லா நிதானத்தினும் கலந்துள்ளமையின் அதனையே முதலாக எடுத்தோதிற்று எனினுமாம்.

இவற்றை, வடநூலோர் துவாதச நிதானம் என்றும் நிரலே அவற்றை அவித்யை கர்மம் (ஸம்ஸ்காரம்) விஞ்ஞானம் ரூபாரூபம் சடாயதனம் பரிசம் வேதனை திருட்டினை உபாதானம் பவம் சன்மம் கர்மபலம் என்றும் விரிப்பர்.

இதுவுமது

20-31 : எதிர்..........உறுதியாகி

(இதன் பொருள்) எதிர்முறை ஒப்ப மீட்சியும் ஆகி-தோன்றுதற்குரிய காரணத்தை எதிர்த்து நின்று விலக்குதலாலே காரியம் நிகழாமையுமாய்; ஈங்கு இது இல்லாவழி இல் ஆகி-இவ்வாறு காரணம் இல்லாத விடத்தே அதன் காரியமும் நிகழ்தலும் இல்லையாகி; ஈங்கு இது இல்லாவழி இல் ஆகி-இவ்வாறு காரணம் இல்லாத விடத்தே அதன் காரியமும் நிகழ்தலும் இல்லையாகி; ஈங்கு இது உள்ளவழி உண்டு ஆகி-இவ்வாறாகிய காரணம் உளதாய விடத்தே காரிய நிகழ்ச்சியும் ஒரு தலையாக நிகழ்வ தாகலாலே; தக்க தக்க சார்பின் தோற்றம் என-அவ்வப் பிறப்பிற்குத் தகுந்த தகுந்த காரணங்கள் அமைந்தவழி அவ்வவற்றிற் கேற்பப் பிறப்பும் தோன்றும் என்று சொல்லப்பட்டு; இலக்கு அண் அத்தொடர்பால்-காரணமாகிய இலக்கு அணுகுவதாகிய தொடர்பினாலே; கருதப்பட்டு-ஆராய்ந்து கூறப்பட்டும்; கண்டம் நான்கு உடைத்தாய்-பகுதிகள் நான்குடைத்தாய்; மருவிய சந்திவகை மூன்று உடைத்தாய்-அப்பகுதிகள் கூடுகின்ற கூட்டவகை மூன்றுடைத்தாய்; பார்க்கின் தோற்றம் மூன்று வகையாய்-ஆராய்ந்து பார்க்குமிடத்துப் பிறப்பு மூன்று வகையாய்; தோற்றற்கு ஏற்ற காலம் மூன்று உடைத்தாய்-பிறத்தற்குப் பொருந்திய காலங்கள் ஒரு மூன்றுடையதாய்; குற்றமும் வினையும் பயனும் விளைந்து-குற்றங்களும் வினைகளும் அவற்றின் பயன்களும் விளைந்து; நிலை இல வறிய துன்பம் என நோக்க-பிறப்புகள் நிலைத்தல் இல்லாதனவும் இன்பமில்லாதனவும் பெருகிய துன்பமே உடையனவும் ஆம் என்று மெய்யுணர்ந்த பொழுது; உலையா வீட்டிற்கு உறுதியாகி-அது தானே எஞ்ஞான்றும் அழியாத வீட்டின்பத்திற்கு உறுதி தருவதாகவும் ஆகி; என்க.

(விளக்கம்) எதிர்மறை ஒப்புதலாவது-இவ்வாறு ஒன்றிலிருந்து ஒன்று தோன்று முறைமையினை எதிர்த்து நின்று மாற்றிவிடுதல். அஃதாவது காரணத்தை இல்லையாம்படி செய்தல் என்றவாறு இங்ஙனம் காரணத்தை மாற்றிய வழி இல்லையாய், மாற்றாது விட்டவழி என்றென்றும் மண்டில வகையாய் உண்டாகும் என்று வற்புறுத்துவார். ஈங்கு இது இல்லாவழி இல்லாகி ஈங்கிதுள்ளவழி உண்டாகலின் என விதந்து ஏதுவை வலியுறுத்தினர். ஈங்கு என்றது இவ்வாறு என்றவாறு.

இனி (48) தொடர்தலின் என்பதனைச் சுட்டிற்றாகக் கருதி இத்தொடர்ச்சிக்குக் காரணமாகிய இலக்கு இல்வழி இல்லாகி உள்ளவழி உண்டாதலின் எனக் கோடலுமாம். நல்வினையும் தீவினையும் ஆகிய வினைவகைக்குத்தக உயர் பிறப்பும் இழிபிறப்பும் உண்டாம் என்பார் தக்க தக்க சார்பிற் றேற்றம் என்றார். என்னை?

அலகில பல்லுயிர் அறுவகைத் தாகும்
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
தொக்க விலங்கும் பேயும் என்றே
நல்வினை தீவினை என்றிரு வகையால்
சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி

என்றோதினமையும் நினைக. எனவே அவ்வற்றின் வினைவகைக்குத் தக்க தக்க சார்பில் தோற்றம், என்றார் என்க.

தோற்றம்-பிறப்பு; அவை மூன்று வகைப்படும். அவை பின்னர் விளக்கப்படும். தோற்றம் நிலையில வறிய துன்பம் என நோக்க. என இயைக்க. அங்ஙனம் நோக்கிய வழி பிறப்பே வீட்டிற்குக் கருவியாம் என்பார் வீட்டிற்கு உறுதியாகி என்றார்.

இதுவுமது

32-38 : நால்வகை.........கெடாதாய்

(இதன் பொருள்) நால்வகை வாய்மைக்கு சார்பு இடன் ஆகி-நான்கு வகைப்பட்ட மெய்க்காட்சிகளுந் தோன்றுதற்கியன்ற நிலைக்களன் ஆகி; ஐந்துவகைக் கந்தத்து அமைதியாகி-ஐந்து வகைப்பட்ட கந்தங்களும் கூடிய கூட்டத்தாலே அமைவதாய்; மெய்வகை ஆறு வழக்கு முகம் ஆகி-உண்மை வழக்கை உள்ளிட்ட ஆறுவகை வழக்கும் உளவாதற்கு நிலைக்களன் ஆகி; நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி-ஒற்றுமை நயம் முதலிய நயங்கள் நான்கினாலும் நால்வகைப் பயன்களையும் எய்தி; நால்வகையால் இயன்ற வினா விடை உடைத்தாய்-துணிந்து சொல்லல் முதலிய நான்கு வகையாலே நிகழ்கின்ற வினாக்களையும் விடைகளையும் உடையதாய்; நின்மிதி இன்றி-ஒருவரானும் உண்டாக்கப்படாது தானே தோன்றியதாய்; ஊழ்பாடு இன்றி-முடிவற்றதுமாய்; பின்போக்கு அல்லது பொன்றக் கெடாததாய்-தொடர்ந்து நிகழ்வதல்லது ஒரு பொழுதும் முற்றும் அழியாததாய் என்க.

(விளக்கம்) நால்வகை வாய்மையாவன:
பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும்பே ரின்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது           (மணி-2-64-7)

என்பன. இவற்றை, நிரலே துக்கம், துக்கோற்பத்தி, துக்கநிவாரணம், துக்கநிவாரண மார்க்கம் என்று வடநூலோர் கூறுப. இவை நான்கிற்கும் சார்பிடன் உடம்பாதலுணர்க. வாய்மை-சத்தியம். இவை புத்தர் போதி மூலம் பொருந்தியிருந்த பொழுது அவர் உள்ளத்தே பிறந்த மெய்க்காட்சிகளாம் என்க.

ஐந்துவகைக் கந்தமாவன : உருவக்கந்தம், நுகர்ச்சிக் கந்தம், குறிப்புக் கந்தம், பாவனைக் கந்தம், அறிவுக் கந்தம் என்னும் ஐந்துமாம். இவற்றிற்கு இக்காதையின் 189-190 ஆம் அடிகளின் விளக்கம் தரப்படும்; ஆண்டுக் கண்டு கொள்க.

மெய்வகை-உண்மை முதலிய வழக்குவகை. முகம்-தோற்றுவாய். நயங்கள் ஒற்றுமை நயம், வேற்றுமை நயம், புரிவின்மை நயம், இயல்பு நயம் என்னும் நான்குமாம்.

நால்வகை வினாவிடையாவன: துணிந்து சொல்லல், கூறிட்டு மொழிதல், வினாவின் விடுத்தல், வாய்வாளாமை என்பன.

நின்மிதி-உண்டாக்குதல். ஊழ்பாடு-முடிதல். பின் போக்கு எனினும் தொடர்ச்சி எனினும் ஒக்கும். இத்தொடர்ச்சி நால்வகைப்படும் என்பர். அவையாவன-காற்றுப்போல் தொடர்வது, விளக்கின் சுடர்போல் தொடர்வது, நீர்வீழ்ச்சி போலத் தொடர்வது, எறும்புகள் போலத் தொடர்வது என்பன. வடநூலார் வாயுசந்தானம், தீபசந்தானம், தாராசந்தானம், பிபீலிகா சந்தானம் என்பனவும் இவையேயாம். பொன்றக் கெடுதல்-முழுவதும் அழிதல்.

இதுவுமது

39-48 : பண்ணுநர்...........ஈராறும்

(இதன் பொருள்) பண்ணுநர் இன்றிப் பண்ணப் படாதாய்-செய்வோரையில்லாமையால் செய்யப்படாததாய்; யானும் இன்றி எனது மின்றி-யான் என்னும் செருக்கும் எனது என்னும் செருக்குமாகிய இருவகைச் செருக்குமில்லாததாய்; போனதும் இன்றி வந்தது மின்றி-கழிந்தது என்று கருதப்படாததும் வருவது என்று கருதப்படாததும்; முடித்தலும் இன்றி முடிவுமின்றி-தான் ஒன்றனைச் செய்து முடித்தலில்லாததும், தானே முடிந்தொழிதலில்லாததும் ஆகி; வினையும் பயனும் பிறப்பும் வீடும் இனையன எல்லாம் தானே ஆகிய-வினைகளும் அவற்றின் பயன்களும், பிறப்புகளும், வீடுபேறும் ஆகிய இன்னோரன்ன பிறவற்றிற்கெல்லாம் காரணம் தானேயாகி யமைந்த; பேதைமை செய்கை உணர்வு அரு உரு வாயில் ஊறு நுகர்வு வேட்கை பற்று பவம் தோற்றம் வினைப்பயன் இற்றென வகுத்த இயல்பு ஈர் ஆறும்-பேதைமை முதலாக வினைப்பயன் ஈறாக வகுத்துக் கூறப்பட்ட நிதானங்கள் பன்னிரண்டின் தன்மைகளையும் என்க.

(விளக்கம்) 13ஆம் அடி முதலாக 48 ஆம் அடியீறாக வாமன் வாய்மைக் கட்டுரையை ஒருவாறு தொகுத்தோதியபடியாம். பன்னிரண்டு வகை நிதானங்களில் பேதைமையே முதற்காரணமாம். அப்பேதைமையினின்று செய்கையும், அதனினின்று உணர்வும், அதனினின்று அருவுருவும், அதனினின்றும் வாயிலும், அதனீனின்று ஊறும், அதனினின்றும் நுகர்வும், அதனினின்றும் வேட்கையும், அதனினின்றும் பற்றும், அதனினின்றும் பவமும், அதனினின்றும் தோற்றமும், அதனினின்றும் வினைப்பயனும் ஆகப் பன்னிரண்டு நிதானங்களும் தோன்றும் என்க.

இனிப் பேதைமையினின்றும் ஒன்றினொன்றாகப் பிறந்து வரும் இவற்றும் இறுதியினின்ற வினைப்பயனினின்றும் மீண்டும் பேதைமை தோன்ற அதனினின்றும் செய்கை முதலியன தோன்ற இவ்வாறே இவை ஈறு முதலுமின்றிச் சுழன்ற வண்ணமே இருக்கும். ஆதலின் இவற்றை (16) மண்டில வகையாய் அறியக் காட்டி என்றார். பேதைமை அநாதியாயுளது ஆதலின் அதனைப் பண்ணுநர் இல்லாமையால் பண்ணப்படாததாய் என்றார். இன்றி-இல்லாமையால். மற்று இதற்கிவ்வாறுரை காணாமல், செய்யும் முதலையின்றித் தானே செயற்படுவதில்லையாய் என்று உரை கூறுவாரு முளர். இவருரை பவுத்த தத்துவத்தோடு பெரிதும் மாறுபடுதலை அவர் நோக்கிற்றிலர்.

அநாதியாக இவை இங்ஙனமே மண்டில வகையாற் சுழல்வன. ஆயினும் இவற்றால் விளையும் பயன் துன்பமென மெய்யுணர்ந்து நோக்கினோர்க்கு, இவற்றிற் பற்றறுதலின் இவ்வாற்றால் இவையே வீடு பேற்றிற்கும் காரணமாதலின் வினையும் பயனும் பிறப்பும் வீடும் தானே ஆகிய பேதைமை என்றார்.

உணர்வு என்னும் மூன்றாவது நிதானம் முதலாவதாகிய பேதைமைக் கண்ணில்லை யாகலின் யானும் இன்றி எனது மின்றிப் போனதுமின்றி வந்ததுமின்றி என்றார், எனவே இருளே உலகத்தியற்கை என்றவாறாயிற்று.

பிறந்தோர் அறிதற்குரியன

49-50 : பிறந்தோர்...............அறிகுவர்

(இதன் பொருள்) பிறந்தோர் அறியின்-மணிமேகலையே கேள்! இங்ஙனம் ஆகிய வாமன் கட்டுரைகளாகிய இவற்றை உயரிய மக்களாகப் பிறந்தோர் ஆராய்ந்து அறிந்து இவற்றால் குற்றமும் வினையும் வினையின் பயனும் விளைந்து நிலையில் வறிய துன்பமெனக் கண்டு இவை மீளும் நெறியில் ஒழுகுவாராயின் இவையே உலையா வீட்டிற்கு உறுதியாக; பெரும் பேறு அறிகுவர்-பெரிய வீட்டின்பமாகிய பேற்றினை எய்தா நிற்பர்; அறியாராயின் ஆழ் நரகு அறிகுவர்-அறியாரானால் தாங்கள் அழுந்தித் துன்புறுதற்கிடமான நகரத்தையே எய்தா நிற்பர் காண்! என்றார் என்க.

(விளக்கம்) அறியின் என்றது, அறிதல் இன்றியமையாது என்பதுபட நின்றது. பிறந்தோர் என்பது மக்களாகப் பிறந்தோர் என்பதுபட நின்றது; என்னை? அவர்களே அறிதற்கும் வீடு பெறுதற்கும் உரியர் ஆகலின்.

பேதைமையினியல்பு

51-54 : பேதைமை...........தெளிதல்

(இதன் பொருள்) பேதைமை என்பது யாது என வினவின்-நங்காய்! வினையும் பயனும் பிறப்பும் வீடும் இனையன எல்லாம் தானே ஆகிய அப்பேதைமையின் இயல்புதானே எத்தகையது என்று நீ வினவுவாயாயின் கூறுதும் கேட்பாயாக! ஓதிய இவற்றை உணராது-போதிமூலத்தே பொருந்தியிருந்துழியுணர்ந்தோதிய....வாமன் வாய்மை ஏறக் கட்டுரையின் பொருள் இவையென யாம் உனக்கு ஓதிய இவற்றையெல்லாம் ஆராய்ந்துணர்ந்து கொள்ளாமல்; மயங்கி-அவாவினாலே மயங்கி; இயல்படு பொருளால் கண்டது மறந்து-இயல்பாகவே பொறிகட்டுத் தோன்றுகின்ற பொருள்களையே மெய்ப்பொருள் என்று விரும்பி ஆராய்ந்து கண்ட வாய்மைகளை மறந்தொழிந்து; முயல்கோடு உண்டு எனக் கேட்டது தெளிதல்-மயக்கமுடையான் ஒருவன் முயலுக்குக் கொம்புண்டு என்று கூறியவழிச் சிறிதும் ஆராயாது அவன் கூறியபடி முயலுக்குக் கொம்புண்டென்றே தெளிந்து கோடற்குக் காரணமான மருட்கையே பேதைமையாம் என்றார் என்க.

(விளக்கம்) எனவே,

பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல் (குறள்-831)

என்பதே இதன் கருத்துமாதலறிக. இதன்கண் முயற் கோடுண்டெனத் தெளிதல் ஏதங் கொண்டபடியாம். இயற்படு பொருளால் கண்டது மறத்தல் ஊதியம் போகவிட்டபடியாம் என்றுணர்க.

இனி இயற்படு பொருளால் காண்டலாவது,

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு (குறள்-355)

என்பது பற்றி, பொருள் தோறும் உலகத்தார் கற்பித்துக் கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்துநின்ற வுண்மைகளைக் காண்டலாம். அங்ஙனம் கண்டது மறந்து முயற்கோடுண்டெனத் தெளிவது மருட்கையாம். இதனை,

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானும் மாணாப் பிறப்பு (குறள்-351)

என்னும் திருக்குறளோடும் ஒருபுடை ஒப்பு நோக்குக. இனி,

பேய்மை யாக்குமிப் பேதைமைக் கள்வனோ டுடனாய்க்
காமுற் றமுதன் பயத்தினிற் காமனைக் கடந்து
நாமரூஉம் புகழ் கெடுப்பதோர் நன்னெறி நண்ணும்
வாமன் வாய்மொழி மறந்திட்டு மறந்தொழி கின்றாம்

எனவரும் பழம் பாடலையும் (வீர-யாப்பு. 11.மேற்) நினைக.

பிறப்புவகை

55-58 : வினைப்பயன்.........என்றே

(இதன் பொருள்) உலகம் மூன்றினும் உயிராம்-மேலும் கீழும் நடுவுமாகிய இடம்பற்றி உலகங்கள் மூன்று வகைப்படும், அவற்றில் எல்லாம் உயிர்கள் நிரம்பியுள்ளனவாம்; உலகம் அலகு இல-இடம் பற்றி மூன்றாக வகுக்கப்பட்ட உலகங்களோ எண்ணிறந்தனவாகும்; பல் உயிர் அறுவகைத்தாகும்-அங்ஙனமே எண்ணால் அளவிடப்படாத உயிர்கள் தாம் பிறப்பினாலே ஆறுவகைப்படுவனவாம்; மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் தொக்க விலங்கும் பேயும் என்று-அவைதாம் மக்கட் பிறப்பும் தேவப் பிறப்பும் பிரமப் பிறப்பும் நரகப் பிறப்பும் பலவாய்த் தொகுக்கப்பட்ட விலங்குப் பிறப்பும் பேய்ப்பிறப்பும் என்று கூறப்படும் இவ்வாறு வகையுமாம்; என்றார் என்க.

(விளக்கம்) உலகம் மேல் கீழ் நடு என இடம்பற்றி மூவகைப்படும் ஆயினும் மேலுலகங்கட்கும் கீழுலகங்கட்கும் அளவில்லை என்பார். உலக மூன்றினும் எனவும், உலகம் அலகில எனவும் இருவகையானும் ஓதிக்காட்டினர். அனைத்துலகங்களினும் உயிர்கள் நிரம்பியுள்ளன என்பார் உலகம் மூன்றினும் உயிராகும் என்றார்.

இனி, உயிர்கள் தாமும் யோனி வகையானும் எண்வகையானும் பலவென்பார் பல்உயிர் என்றும், அவை பிறப்பு வகையால் அறுவகைப்படும் என்றுங் கூறினார். இனி, அஃறிணை யுயிர்கள் பறவையும் விலங்கும் நீர் வாழ்வனவும் எனப் பலவகைப்படுவன வாயினும் அவற்றில் சிறப்பின்மையின் அனைத்தும் விலங்குப் பிறப்பென்றே தொகுத்துக் கூறப்படும் என்பார் தொக்க விலங்கும் என்றார்.

(வினைவகை) (1) தீவினை

56-71 : நல்வினை..........மூன்றுமென

(இதன் பொருள்) நல்வினை தீவினை என்று இருவகையால்-மேலே கூறப்பட்ட உயிர்கள் தாம் செய்கின்ற அறச்செயலும் மறச்செயலும் என்று கூறப்படுகின்ற இருவேறுவகை வினைகளையும் செய்தல் காரணமாக; சொல்லப்பட்ட கருவில் சேர்தலும்-மேலே கூறப்பட்ட அறுவகைப் பிறப்புகளுள் வைத்துத் தத்தம் விளக்கேற்ற பிறப்பினுள் கருவாகிப் பிறத்தலும்; கருவினுள் பட்ட பொழுதினுள் தோற்றி-அவை இவ்வாறு கருவாகிப் பிறந்த பொழுதிலிருந்தே; வினைப்பயன் விளையுங்காலை-அவ்வவ்வுயிர்கள் முன்புசெய்த இருவினைப் பயன்களும் நுகர்ச்சிக்கு வந்துறும் பொழுது; மனப் பேரின்பமும் கவலையும் காட்டும்-அவற்றின் உள்ளத்தே பெரிய இன்பத்தையும் பெரிய துன்பத்தையும் தோற்றுவிக்கும்; தீவினை என்பது யாதென வினவின்-யாம் முன்பு நல்வினை தீவினை எனத் தொகுத்துக் கூறிய இருவகைவினைகளுள் வைத்து அஞ்சத்தக்கது தீவினையே ஆதலின் அத்தீவினைதான் எத்தகையது என்று வினவிற் கூறுதும்; ஆய்தொடி நல்லாய் ஆங்கு அதுகேளாய்! அழகிய தொடியணிதற் கியன்ற பெண்பாவாய் அதனியல்பைக் கேட்பாயாக! கொலையே களவே காமத் தீவிழைவு உலையா உடம்பின் தோன்றுவ மூன்றும்-கொலையும் களவும் காமமுமாகிய தீய அவாவும் என உடம்பினால் தோன்றுவனவாகிய மூன்றும்; பொய்யே குறளை கடுஞ்சொல் பயன்இல்சொல் என-பொய்யும் குறளைச் சொல்லும் இன்னாச் சொல்லும் பயனில்லாதவறும் சொல்லும் என்று கூறப்படுகின்ற; சொல்லில் தோன்றுவ நான்கும்-சொல்லாலே தோன்றுகின்ற நான்கும்; வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று-வெஃகுதலும் வெகுளுதலும் பிறவுயிர்கட்குத் துன்பந் தருவனவற்றை நினைத்தலும் என்றோதப்படுகின்ற; உள்ளந்தன்னில் உருப்பன மூன்றும் என பத்து வகை-நெஞ்சத்தே தோன்றுவனவாகிய மூன்றும் ஆகிய இப்பத்துமாம்; என்றார் என்க.

(விளக்கம்) உடம்பிற்றேன்றும் தீவினைகளுள்: கொலை-உடம்பொடு கூடிவாழும் உயிர்களை அவ்வுடம்புகளினின்றும் அகற்றுதல். தீவினைகள் அனைத்தினும் கொடிய தீவினை கொலையே ஆதலின் அதனை முற்படவோதினா என்னை? ஒன்றாக நல்லது கொல்லாமை எனவும், நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் றலை எனவும் எழுந்த திருக்குறள்களையும் நோக்குக. களவு-பிறருடைமையை வஞ்சித்துக் கவர்ந்து கோடல். காமமாகிய தீ விழைவு என்க. காமுறுவதில் நல்விழைவும் உண்டாகலின் அதனின் நீக்குதற்குக் காமம் என்றொழியாது காமத் தீ விழைவு என்றார். அஃதாவது பிறர் மனைவியைப் புணர்தலும் விலைமகளிரைப் புணர்தலும் பிறவுமாம்.

ஈண்டு விழைவு அதன் காரியமாகிய புணர்தலின் மேனின்றது. இங்ஙனம் கொள்ளாக்கால் இஃதுடம்பிற் றேன்றும் தீவினையாகாமையுணர்க.

சொல்லிற் றேன்றும் தீவினைகளுள்: பொய்-என்றது பிறவுயிர்கட்குத் தீமை தருகின்றவற்றைக் கூறுதலை.

குறளை-புறங்கூறுதல். கடுஞ்சொல்-கேள்வியாலும் பயனாலும் இன்னாமை பயக்கும் சொல். பயன் இல் சொல்-வறுஞ்சொல்; அஃதாவது தமக்கும் பிறர்க்கும் அறம் பொருள் இன்பமாகிய பயன்களுள் ஒன்றும் பயவாத சொற்களைச் சொல்லுதல். பயனில பல்லார்முற் சொல்லல் நயனில, நட்டார்கட் செய்தலில் தீது என்பதனால் இதுவும் தீவினையேயாதலறிக.

உள்ளத்தில் தோன்றும் தீவினைகள்: வெஃகல்-பிறர் பொருளை வெளவ நினைத்தல். வெகுளல்-சினத்தல். சினத்திற்குரிய காரணம் ஒருவன் மாட்டுளதாய விடத்தும் சிவனாமையே அறமாம். ஆதலின் சினம் தீவினையாயிற்று. என்னை? மறத்தல் வெகுளியை யார்மட்டும் தீய பிறத்தல் அதனால் வரும் என்னும் திருக்குறள் ஏனைய கொலை முதலிய தீவினைகட்கும் இது காரணம் என்றறிவுறுத்துதலு முணர்க. பொல்லாக் காட்சி-பிறர்க்குக் கேடு சூழ்தல். காட்சி ஈண்டு மானதக் காட்சி.

தீவினையின் பயன்

72-75 : பத்து..........தோன்றுவர்

(இதன் பொருள்) பத்துவகையால் பயன் தெரிபுலவர்-இங்ஙனம் மனம் மொழிமெய்களாற்றேன்றுகின்ற தீவினைகளால் உண்டாகும் பயன்களை ஆராய்ந்தறிந்த அறிவுடையோர்; இத்திறம் படரார்-இத்தீவினைகள் தோன்றுமாறு ஒழுகுதலிலர்; படர்குவராயின்-அறிவின்றி இத்தீவினைகள் நிகழும் நெறியிலே ஒழுகுவாராயின்; விலங்கும் போயும் நரகரும் ஆகி-அறுவகைப் பிறப்புகளுள் வைத்து இழிந்த பிறப்பாகிய விலங்குப் பிறப்பினாதல் பேய்ப் பிறப்பினாதல் நரகப் பிறப்பினாதல் பிறப்புற்று; கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர்-துன்பத்தாலே கலக்கமெய்திய நெஞ்சத்தோடே அதனினின்று உய்ந்து கரையேற வழிகாணமாட்டாத கவலையோடே காணப்படுவர்காண்; என்றார் என்க.

(விளக்கம்) பயன்-தீவினையினாலுண்டாகும் பயன், மக்கட் பிறப்பின் பயனைத் தெரிந்த புலவர் எனினுமாம். இத்திறம்-இத்தீவினைகள் நிகழுதற்குரிய நெறி தோன்றுவர்-காணப்படுவர். நரகருமாகிப் பிறப்பர் என இயைப்பினுமாம்.

நல்வினைகளும் அவற்றின் பயன்களும்

76-81 : நல்வினை.........உண்குவ

(இதன்  பொருள்) நல்வினை என்பது யாது என வினவின்-நங்காய்! இனி நல்வினை என்பதன் இயல்பு யாது என நீ வினவுவாயாயின் கூறுதும் கேட்பாயாக; சொல்லிய பத்தின் தொகுதியினீங்கிச் சீலந்தாங்கித் தானம் தலைநின்று-மேலே மனமொழி மெய்களாலே தோன்றும் எனக் கூறப்பட்ட கொலை முதலிய பத்துவகைத் தீவினைகளும் அவை தம்மிடத்தே நிகழாவண்ணம் அந்நெறியினின்றும் நீங்கி அவற்றிற்கு மறுதலையாகிய கொல்லாமை முதலிய நல்லொழுக்கங்களை மேற்கொண்டு தான முதலிய நல்வினைகளை ஒல்லும் வகையால் ஓவாதே செய்து பின்னர் அந்நல்வினைகளின் பயனாக வந்துறுகின்ற; மேல் என வகுத்த-உயர்ந்த பிறப்புகள் என்று வகுத்துக் கூறுகின்ற; தேவரும் மக்களும் பிரமரும் ஆகி-தேவராகவும் மக்களாகவும் பிரமராகவும் அவ்வவ்வுலகங்களிலே சென்று பிறந்து; வினைப் பயன் மேவிய மகிழ்ச்சி உண்குவ-அந்நல்வினையின் பயனாக வந்தெய்துகின்ற இன்பங்களை நுகராநிற்பர் காண்! என்றார் என்க.

(விளக்கம்) சொல்லிய பத்தின் தொகுதி-முற்கூறப்பட்ட கொலை முதலிய பத்துவகைத் தீவினைத் தொகுதி என்க. அவற்றின் நீங்கிச் சீலந்தாங்கி-எனவே அத்தீவினைகட்கு மறுதலையாகிய நல்வினைகளாகிய நல்லொழுக்கத் தொகுதிகளை எஞ்சாமல் மேற்கொண் டொழுகி என்றாராயிற்று.

இனி அவற்றின் மறுதலையாய நல்வினைகள் வருமாறு. 1: கொல்லாமையும் கள்ளாமையும், தீயநெறியிற் காமுறாமையும் ஆகிய இவை மூன்றும், உடம்பால் மேற்கொள்ளப்படும் நல்வினைகள் என்க. வாய்மையும், பிறர் புகழை பாராட்டலும், இன்சொற் சொல்லலும் பயனுடையவற்றை மொழிதலும் ஆகிய இந்நான்கும் சொல்லாற் செய்யும் நல்வினைகள் என்க.

இனி, பிறர்க்கு ஈதற் கெண்ணுதல், அன்புடையரா யிருத்தல், யாவரும் இன்புற்றிருக்க வேண்டும் என்றெண்ணுதல் மூன்றும் உள்ளத்தில் உருப்பனவாகிய நல்வினைகள் என்க.

இனி, பள்ளி வலம்புரில், தவஞ்செய்தல், தானஞ்செய்தல் என்னும் மூன்றும் உடம்பிற் றோன்றும் நல்வினை, மெய்யுரை, நன்மொழி நவிலல், இன்சொல், பயன்மொழி பகர்தல் என்றும் நான்கும் சொல்லிற்றேன்றும் நல்வினைகள் என்றும் அருள்நினைவு, அவாவறுத்தல், தவப்பற்று என்னும் மூன்றும் உள்ளத்தில் உருப்பவாகிய நல்வினைகள் ஆக இப்பத்துமே நல்வினைத் தொகுதி என்பாருமுளர். மேல்-உயர்ந்தது, வினைப்பயனாக மேவிய மகிழ்ச்சியை உண்குவர் என மாறுக.

உணர்வு, அருவுரு, வாயில், ஊறு ஆகிய இவற்றின் இயல்புகள்

82-89 : உணர்வு..........என்ப

(இதன் பொருள்) உணர்வு எனப்படுவது உறங்குவோர் உணர்வின்-உணர்வு என்று கூறப்படுகின்ற நிதானமாவது துயில்வோருடைய உணர்ச்சியைப் போன்று; புரிவின்றாகி-உள்ளதோ இல்லதோ என்னும்படி விளக்கமில்லாத உணர்ச்சியாய்; புலன் கொளாதது-பொறிகளின் வழியே சென்று ஐவகைப் புலன்களை ஏற்றுக் கொள்ளாததொரு நிலைமைத்து; அருவுரு என்பது-அருவுரு என்னும் நிதானமாவது; உணர்வு சார்ந்த உயிரும் உடம்பும் ஆகும் என்ப-அவ்வுணர்வாவது விழிப்பு நிலையில் இருப்போருடைய உணர்வு போன்று பொறிகளாலே புலன்களைக் கவருகின்ற அறிவும் அதற்குக் கருவியாகிய உடம்புமாகும் என்று கூறுவர்; வாயில் ஆறும் ஆயுங்காலை-இனி வாயில் என்கின்ற நிதானத்தை ஆராய்ந்து பார்க்குமிடத்து; உள்ளம் உறுவிக்க உறும் இடன் ஆகும்-நெஞ்சமானது சுவை முதலிய புலன்களை அறிவொடு புணர்த்துதற்கியன்ற வழிகள் என்று கூறுவர்; ஊறு என உரைப்பது-ஊறு என்று கூறப்படுகின்ற நிதானமாவது; உள்ளமும் வாயிலும் வேறு புலன்களை மேவுதல் என்ப-மனமும் அதற்குக் கருவியாகிய மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் பொறிகளும் ஊறு முதலிய தம்மின் வேறாகிய புலன்களில் பொருந்துதல் என்பர்; என்றார் என்க.

(விளக்கம்) உறங்குவோர்பால் உணர்விருந்தும் காரியப்படாமல் தன்னிற்றனே அடங்கியிருப்பது போன்றதொரு நிலையில் இருக்கும் உணர்வையே ஈண்டு உணர்வு என்னும் நிதானமாகக் கூறப்படுகின்றது என அதனியல்பைத் தெரித்தோதியபடியாம். இங்ஙனம் இருக்கும் உணர்வு அறிவினும் உடம்பினும் பரவிக் காரியப்படுகின்ற நிலைமையில் அதனை அருவுரு என்னும் நிதானம் என்று குறியீடு செய்வர் என்றவாறு. இவ்வுணர்வு தன்னுண்மையின் மாத்திரையாகி அடங்கிய நிலையில் உணர்வு என்றும் அஃது உயிரினும் உடம்பினும் பரவிக் காரியப்படுமளவில் அருவுரு என்றும் பெயர் பெறுகின்றது என்றவாறு. எனவே உயிர் என்பது அறிவு என்பதே புத்தர் கோட்பாடாதல் அறிக. உணர்வுபலன் கொள்ளா நிலையில் இல்பொருள் போறலின் உயிரும் அறிதலைச் செய்யாவழி இல்பொருள் எனலாம் என்பதும் அவர்தம் கொள்கை யாதலுணர்க. அறிவு அருவமும் உடம்பு உருவமும் ஆதலின் இவை இரண்டும் கூடும் கூட்டமே அருவுரு என்னும் நிதானம் ஆயிற்று என்க. இனி உடம்பும் உள்ளமும் புலன்களைப் பொருந்தும் நிலைமையே ஊறு என்னும் நிதானம் ஆகும். புலன்கள் உள்ளத்திற்கும் வாயிலுக்கும் வேறாகிய பொருள் என்பது தோன்ற வேறு புலன்கள் என்றார். உறுதல்-ஊறு என முதனீண்டு விகுதி கெட்டு நின்றதொரு பண்புச் சொல் என்க. பொருந்துதல் என்பதே இதன் பொருள்.

நுகர்வும் வேட்கையும் பற்றும் பவம் பிறப்புகளும்

90-97 : நுகர்வ.........தோன்றல்

(இதன் பொருள்) நுகர்வு உணர்வு புலன்களை நுகர்தல்-நுகர்வு என்னும் நிதானமாவது, சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் காட்சிப் புலன்களையும் நகை முதலிய கருத்துப் புலன்களையும் நுகர்தலாம்; வேட்கை-வேட்கையாவது; விரும்பி நுகர்ச்சி ஆராமை-யாதானும் ஒரு பொருளே நுகர விரும்பி அந்நுகர்ச்சி நிரம்பாமையாலே அமைதி கொள்ள மாட்டாமையாம்; பற்று எனப்படுவது-பற்று என்னும் நிதானமாவது, பசைஇய அறிவு-நுகர் பொருளை விடாமல் நெஞ்சத்தாற் பற்றிக் கோடலாம்; பவம் எனப்படுவது-பவம் என்னும் நிதானமாவது, பழவினைகளின் கூட்டங்களுள் வைத்துப் பக்குவமடைந்த வினை தம் பயனையூட்டத் தகுந்த செவ்வி தேர்ந்து உருத்து வந்து அப்பயனை நுகருமாறு தொழிற்படுத்துதலாம்; பிறப்பெனப்படுவது அக்கருமப்பெற்றியின் உறப்புணர் உள்ளம் சார்பொடு-இனிப் பிறப்பென்னும் நிதானமாவது அப்பழவினையின்பாற்பட்ட நெஞ்சத்தோடு அவற்றின் பயனை நுகர்தற்கேற்ற உயிரானது அறுவகைப் பிறப்புகளிலே அதற்கியன்ற சூழ்நிலைகளோடு; காரண காரிய உருக்களின் தோன்றல் முன் கூறப்பட்ட இலக்கு அண் அத்தொடர்பினாலே உண்டாகும் உடம்புகளிலே பிறப்பெய்துதல் என்க.

(விளக்கம்) விரும்பியதனை நுகர்ந்து நுகர்ந்து அமையாமையால் வேட்கை விரும்பி ஆராமை என்றார். பசைஇய-ஒட்டிக் கொண்ட. பலம்-பழவினைத் தொகுதியில் பயன்றரும் பக்குவ மெய்திய வினைகள் உருத்து வந்துறுதல். பிறப்புத் தானும் அப்பழவினைக் கேற்பவும் அவ்வினைகளை முகந்து கொண்டுள்ள உள்ளத்தோடும் உயிர் உருக்களிற் றோன்றல் என்பது கருத்தாயினும் மனமே நுகர்ச்சிக்குத் தலைசிறந்த கருவியாகலின் உள்ளம் தோன்றல் என அதன் வினையாகக் கூறினர். பிறந்த பிறப்பில் தான் நுகர்தற்கேற்ற பயனை விளைவிக்கும் பழவினையை முகந்து கொண்டு வருகின்ற மனம் என்பார் கருமப் பெற்றியின் உறப்புணர் உள்ளம் என்றார். சார்பு என்றது அதற்கேற்ற இடம் தாய் தந்தை முதலிய சுற்றுச் சூழ்நிலைகளை என்க. இக்கருத்துச் சைவ சித்தாந்தத்தோடு ஒப்பு நோக்கி மகிழற் பாலதாம். கதி-பிறப்பு. காரண காரிய உரு-பழவினையாகிய காரணத்தின் காரியமாகிய உடம்பு எனக்கோடலுமாம். என்னை! கருமத்தொகுதி காரணமாக வருமே ஏனை வழிமுறைத் தோற்றம் எனப் பிறாண்டும் ஓதுதலும் (30-13-14) காண்க.

வினைப்பயன்

(பிணி, மூப்பு, சாக்காடுகள்)

97-103 : பிணி...........மறைந்திடுதல்

(இதன் பொருள்) பிணி எனப்படுவது இனி இறுதியினின்ற வினைப்பயனாகிய நிதானத்தின் விளைவாகிய பிணி என்பதன் இயல்பாவது; சார்பில் பிறிது ஆய் உடம்பு இயற்கையில் திரிந்து இடும்பை புரிதல்-உள்ளத்தைச் சார்ந்து நிற்கின்ற பழவினை காரணமாக ஒழுக்கத்தின் மாறுபட்டதாகி உடம்பானது தனக்கியன்ற இயற்கை மாறுபட்டு விளைக்கின்ற துன்பமேயாம்; மூப்பு என மொழிவது-மூப்பு என்பதாவது; அந்தத் தளவும் தாக்கு நிலையாமையின் தாம் தளர்ந்திடுதல்-ஊழ்வினை வகுத்த இறுதிக்காலம் முடியும் துணையும் உருத்துவந் தூட்டுகின்ற துன்பத்தைத் தாங்கும் ஆற்றல் நிலைத்திராமையால் மேலும் மேலும் வந்துறும் துன்பத்திற்கு ஆற்றாமல் உடம்பினது ஆற்றல் சோர்வுறுதலாம்; சாக்காடு-இனிச் சாதல் என்று கூறப்படுவது யாதெனின்; அருவுருத்தன்மை யாக்கை வீழ்கதிரென வீழ்ந்து மறைந்திடுதல்-அருவுருத்தன்மையையுடைய பரு உடலானது கடலுள் வீழ்ந்து மறைந்தொழிகின்ற ஞாயிற்று மண்டிலம் போன்று வீழ்ந்து மறைந்தொழிதலேயாம் சான்றார் என்க.

(விளக்கம்) பிணி-நோய். அஃதாவது உடலிலமைந்த வளியும் பித்தமும் ஐயும் தம்முள் ஒத்திராமல் ஒன்றற் கொன்று மிக்காதல் குறைந்தாதல் மாறுபடுதலாலே உடம்பின்கண் நோய் செய்தல். இதனை,

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று   (குறள்-641)

எனவருந் திருக்குறளானும் உணர்க. வளி முதலிய மூன்றும் தம்முள் ஒத்தியங்குதலே உடம்பிற் கியற்கை யாகலின் இவற்றின் மிகையையும் குறைவையும் திரிதல் என்றார். இடும்பை-துன்பம். எடுத்துக்கொண்ட யாக்கைக்கு இறுதி நாள் இஃதென ஊழ் கருவினுட் பட்டபொழுதே வகுத்துளது என்பது தோன்ற அந்தத் தளவும் என்றார். அந்தம்-இறுதி; சாநாளனவும் என்றவாறு, வினைகள் தம் பயனை ஊட்டுவனவாக வந்து மோதுதலைத் தாங்கும் ஆற்றல் நிலையாமையின் என்க. தாக்கு-தாங்கும் ஆற்றல். தாக்குப் பிடிக்க முடியவில்லை என இக்காலத்தும் வழங்குதல் அறிக. சாக்காடு-சாவு. அருவுருத் தன்மையையுடைய யாக்கை என்க. யாக்கை என்றது பருவுடம்பை. எனவே பவுத்த சமயத்தார்க்கும் நுண்ணுடம்புண்மை உடம்பாடாதல் பெற்றாம்.

இந்தப் பருவுடம்பையே பிறப்பு என்றும் தோற்றம் என்றும் உருக்கள் என்றும் முன்பு கூறினர்.

பிறப்பெனப் படுவது அக்கருமப் பெற்றியின்
உறப்புணர் உள்ளம் சார்பொடு கதிகளில்
காரண காரிய உருக்களில் தோன்றல்

என்றிலக்கணம் கூறலின் பழவினைத் தொகுதியோடு கூடிய உள்ளத்தை அருவென்றும் அது கருவாகி எடுத்த உடம்பைப் பருவுடம்பென்றும் இவை இரண்டுங் கூடியே இவ்வுலகில் நிலவுதலின் உடம்பினை அருவுரு என்று வழங்குவாராயினர் என்பது பெற்றாம். இவற்றுள் பருவுடம்பின் வீழ்ச்சி மட்டுமே சாக்காடு என்பது அவர் கொள்கை என்பதும் பெற்றாம். பெறவே, சாவு என்பது அருவவுடம்பு நிற்பப் பருவுடல் மட்டும் வீழ்வதேயாம் என்றாதலின் எஞ்சிய அவ்வருவுடம்பே தன்னோடெஞ்சிய கருமத் தொகுதியோடு மீண்டும் வழிமுறைத் தோற்றம் என்னும் மறுபிறப்பை எய்தும் என்பதும் அவர் கருத்தாத லறியலாம். கதிர் வீழ்வது போலத் தோன்றுந் துணையே அன்றி அது மீளவும் பிறத்தலுண்மை கருதியே அதனையே உவமையாக எடுத்தனர்.

பன்னிரு நிதானங்களின் தோற்றமுறை

104-114 : பேதைமை.............வரும்

(இதன் பொருள்) பேதைமை சார்வாச் செய்கையாகும்-பேதைமை நிலைக்களனாக வினைகள் தோன்றும்; செய்கை சார்வா உணர்ச்சி ஆகும்-செய்கை நிலைக்களனாக உணர்ச்சி தோன்றும்; உணர்ச்சி சார்வா அருவுருவாகும்-உணர்ச்சி நிலைக்களனாக அருவுரு நுண்ணுடம்போடு கூடிய பருவுடம்பு தோன்றும்; அருவுருச் சார்வா வாயில் தோன்றும்-உடம்பு நிலைக்களனாக மனமுதலிய வாயில்கள் பிறக்கும்; வாயில் சார்வா ஊறு ஆகும்-அவ்வாயில் வழியாக புலன்கள் வந்து பொருந்தும்; ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும்-புலன்கள் பொருந்துமாற்றால் இன்பதுன்ப நுகர்ச்சி தோன்றும்; நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும்-அந்நுகர்ச்சி நிலைக்களனாக அவாப் பிறக்கும்; வேட்கை சார்ந்து பற்றாகும்-அவ்வவா நிலைக்களனாக புலன்களின்பாற் பற்றுத் தோன்றும்; பற்றில் தோன்றும் கருமத் தொகுதி-அப்பற்றுக் காரணமாக வினைத் தொகுதியுண்டாகும்; கருமத் தொகுதி காரணமாக-அவ்வினைத் தொகுதி காரணமாக; ஏனை வழிமுறைத் தோற்றம் வரும்-சாக்காட்டின்பின் மீண்டும் அதனைத் தொடர்ந்து மறு பிறப்புண்டாகும் என்றார் என்க.

(விளக்கம்) இதனால் பன்னிரு நிதானங்களின் தோற்றமுறை நிரல்படுத்துக் கூறப்பட்டது.

தோற்றத்தாலாம் பயன்

115-118 : தோற்றம்........நுகர்ச்சி

(இதன் பொருள்) தோற்றம் சார்பின் மூப்புப் பிணி சாக்காடு அவலம் அரற்று கவலை கையாறு எனத் தவல் இல்துன்பம் தலைவரும் என்க-பிறப்பினைச் சார்பாகக் கொண்டு முற்கூறப்பட்ட மூப்பும் நோயும் சாக்காடும் அழுகையும் கவலையும் செயலறவும் என்று சொல்லப்பட்ட ஒழிதல் இல்லாத துன்பம் மிக்கு வரும் என்று அறிஞர் கூறுப; இந்நுகர்ச்சி ஊழ் இல் மண்டிலமாச் சூழும-இங்ஙனங் கூறப்பட்ட நுகர்ச்சி முடிவில்லாத வட்டம் வட்டமாக வந்த வண்ணமே சுழலாநிற்கும் என்றார் என்க.

(விளக்கம்) 104-பேதைமை சார்பா வென்பது முதலாக 118-நுகர்ச்சி என்பதீறாக பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் எனத் துன்பமும், அதன் தோற்றமும் ஆகிய இரண்டு வாய்மைகளும் விளக்கிக் கூறியபடியாம். இனித் துன்பநீக்கம் கூறுகின்றார்.

துன்பத்தீனின்றும் மீளும் முறைமை

119-133 : பேதைமை...........மீட்சி

(இதன் பொருள்) பேதைமை மீளச் செய்கை மீளும்-அனைத்தும் தானேயாகிய பேதைமை நீங்குமாயின் அதுசார்பாகத் தோன்றும் வினைகளும் நீங்குவனவாம்; செய்கை மீள-வினைகள் நீங்கிய பொழுது; உணர்ச்சி மீளும்-அவற்றின் சார்பாய்த் தோன்றிய உணர்ச்சி நீங்கா நிற்கும். உணர்ச்சி மீள அருவுளு மீளும்-அவ்வுணர்ச்சி நீங்கியவழி அதன் சார்பாய்த் தோன்றிய அருவுருவாகிய உடம்பு நீங்குவதாம்; அருவுரு மீள வாயில் மீளும்-அவ்வருவுருவம் நீங்கியவிடத்து அதன் சார்பாய்த் தோன்றிய மன முதலிய கருவிகளாறும் நீங்குவனவாம்; வாயில் மீள ஊறு மீளும்-கருவி நீக்கத்தினால் அவற்றில் வந்து பொருந்தும் புலன்களின் சேர்க்கை இல்லையாம், ஊறு மீள நுகர்ச்சி மீளும்-புலன்களின் கூட்டரவு இல்லையாவிடத்தே அவற்றை நுகருகின்ற நுகர்ச்சியும் இல்லையாய் ஒழியும்; நுகர்ச்சி மீள வேட்கை மீளும்-புலன்களை நுகரும் நுகர்ச்சி இல்லையாயவிடத்தே அவற்றின்பால் எழுகின்ற அவா நீங்கிப்போம்; வேட்கை மீளப்பற்று மீளும்-அவாவற்ற காலத்தே புலன்களின் உண்டாகும் பற்றும் தொலைந்துபோம்; பற்று மீளக் கருமத் தொகுதி மீளும்-பற்றற்ற விடத்துப் (போக்கின்மையாலே) பழவினைத் தொகுதியும் கழிந்தொழிவதாம்; கருமத் தொகுதி மீளத் தோற்றம் மீளும்-பழவினைகள் இல்லையாய பொழுது அவற்றின் காரியமாகிய தோற்றம் இல்லையாய் ஒழிவதாம்; தோற்றம் மீளப் பிறப்பு மீளும் இத்தோற்றம் இல்லையாகிவிடின், வழிமுறைப் பிறப்புகளும் இல்லையாம்; பிறப்புப் பணி மூப்புச் சாக்காடு அவலம் அரற்றுக் கவலை கையாறு என்று இக்கடை இல் துன்பம் எல்லாம் மீளும் இவ்வகையான மீட்சி-பிறப்பும் நோயும் மூப்பும் சாவும் அழுகையும் புலம்பலும் கவலையும் செயலறவுமாகிய இந்த முடிவில்லாத துன்பம் எல்லாம் துவா நீங்கிப்போம் காண் என்றார் என்க.

(விளக்கம்) மீளுதல் துன்பத்தினின்றும் நீங்குதல், எனவே 119 ஆம் அடிமுதலாக 133ஆம் அடியீறாகத் துன்பநீக்கமாகிய மூன்றாம் வாய்மை கூறப்பட்டமை உணர்க. மீட்சி இவ்வகை என மாறுக.

நான்குவகைக் கண்டங்கள்

134-147 : ஆதி........கண்டம்

(இதன் பொருள்) பேதைமை செய்கை என்று இவை இரண்டும் காரணவகை ஆதலானே ஆதிக்கண்டம் என்ப-நிதானங்கள் பன்னிரண்டனுள் வைத்துப் பேதைமையும் செய்கையும் என்னும் இந்நிதானங்கள் இரண்டும் எஞ்சிய நிதானங்களுக்கெல்லாம் காரணங்கள் ஆகும் முறைமைப் பற்றி முதற்பகுதி என்று கூறப்படும்; உணர்ச்சி அருவுரு வாயில் ஊறு நுகர்ச்சி என்று நோக்கப்படுவன-உணர்ச்சியும் அருவுருவாகிய வுடம்பும் அதன் கண்ணவாகிய மனம் மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஆறு கருவிகளும் அவையிற்றை வந்தெய்தும் புலன்களும் அவற்றலாம் இன்ப துன்பமாகிய நுகர்ச்சிகளும் என்று ஆராயப்படும் நிதானங்கள் ஐந்தும்; முன்னவற்றின் இயல்பால் துன்னிய ஆதலின்-முற்கூறப்பட்ட காரணங்களின் காரியமாக வந்தவை ஆதலாலே; இரண்டாம் கண்டம் ஆகும் என்ப-இரண்டாம் பகுதி என்று அறிஞர்கள் கூறுவார்கள்; வேட்கை பற்று கரும ஈட்டம் எனக் கட்டுரைப்பவை-அவாவும் பற்றும் வினைத்தொகுதியும் எனக் கட்டுரைக்கப்படுகின்ற நிதானம் மூன்றும்; மற்று அப்பெற்றி நுகர்ச்சி ஒழுக்கினுள் குற்றமும் வினையும் ஆகலான் மூன்றாம் கண்டம்-மேலே கூறிய அவ் அவா முதலிய தீய குணங்களும் அவற்றாலுண்டாகும் தீயவொழுக்கங்களுமாக அமைதலானே மூன்றாம் பகுதி என்று கூறப்படும்; பிறப்பு பிணி மூப்பு சாவு என மொழிந்திடும் இவை துன்பம் எனப் பிறப்பில் உழக்கும் பயனாதலின் நான்காம் காண்டம்-இனி எஞ்சிய பிறப்பும் நோயும் மூப்பும் சாக்காடும் என்று கூறப்படுகின்ற இந்நான்கும் முன்னின்ற பிறப்பு என்னும் நிதானத்தினூடே நுகரப்படுகின்ற துன்பங்கள் எனப்பட்டு அவை பன்னிரண்டாம் நிதானமாகிய வினைப்பயனாக அமைதலின் இவையிற்றை நான்காம் பகுதி என்று நவில்வர் என்றார் என்க.

(விளக்கம்) ஆதிக்கண்டம்-முதற்பகுதி. பேதைமையும் செய்கையும் அனைத்திற்கும் காரணமாக அமையும் இயைபுபற்றி ஒரு பகுதியிற்பட்டன. இவையே முதற்பகுதி என்றவாறு. உணர்ச்சி......நோக்கப்படுவன பேதைமையும் செய்கையுமாகியவற்றின் காரியமாகலின் இரண்டாம் பகுதியாயின என்க. வேட்கையும் பற்றும்-குற்றக் குணமும், நுகர்ச்சி குற்றத்தின் காரியமும் ஆதலின் ஒருமையுற்று மூன்றாம் பகுதி ஆயின என்றவாறு. ஆகலானே மூன்றாம் கண்டம் என மாறுக. பிறப்பிலுழக்கும் வினைப்பயனாகலின் பிணி மூப்புச் சாக்காடு என்பன துன்பம் என ஒருமைப்பட்டு, பிறப்பும் வினைப்பயனுமாய் நான்காம் பகுதியிற்பட்டன.

சந்திகள்

(நான்கு பகுதிகளும் தம்முன் கூடுமிடங்கள்)

148-152 : பிறப்பின்...........சந்தி

(இதன் பொருள்) பிறப்பின் முதல் உணர்வு ஆதிச்சந்தி-பிறப்புக்குக் காரணமாகிய செய்கையும், உணர்ச்சியும் ஒன்று சேர்வது முதற்சந்தியாம்; நுகர்ச்சி ஒழுக்கொடு விழைவின் கூட்டம் புகர்ச்சி இன்று அறிவது இரண்டாஞ்சந்தி-நுகர்ச்சியாகிய ஒழுக்கமும் வேட்கையும் கூடுஞ்சந்தி குற்றமில்லாமல் அறியப்படுவதாகிய இரண்டாஞ் சந்தியாம்; கன்மக் கூட்டத்தொடு வருபிறப்பிடை முன்னிச் செல்வது மூன்றாஞ் சந்தி-கன்மத் தொகுதியும் மேல்வரும் பிறப்பும் பொருந்திச் செல்வதாகிய சந்தி மூன்றாஞ் சந்தியாகும் என்க.

(விளக்கம்) செய்கையும் உணர்வுஞ் சேர்தல் முதற் சந்தி; நுகர்வும் வேட்கையுஞ் சேர்தல் இரண்டாஞ் சந்தி; பிறப்புந் தோற்றமுஞ் சேர்தல் மூன்றாஞ் சந்தி. நான்கு பகுதிகளும் தம்முள் அந்தரதீயாய் மூன்று புணர்ச்சி எய்தி மண்டிலமாய்ச் சுழலும் என்றராயிற்று. முன்னரும் (118) ஊழின் மண்டில்மாச் சூழுமிந் நுகர்ச்சி என்றறிவுறுத்தமை நினைக.

மூன்றுவகைப் பிறப்பு

153-158 : மூன்று.......ஆகையும்

(இதன் பொருள்) மூன்றுவகைப் பிறப்பும் மொழியும் காலை-மூன்று வகைப்பட்ட பிறப்புகளின் இயல்பை ஆராய்ந்து கூறுமிடத்தே அவைதாம்; ஆன்ற பிற மார்க்கத்து ஆய உணர்வே தோன்றல் வீடு எனத் துணிந்து தோன்றியும்-அமைதியுற்ற துன்ப நீக்கமார்க்கம் ஆகிய நெறியிலே இயங்கும் உணர்வே தலைசிறந்து தோன்றுவதே வீடுபேறாகும் என்று துணிந்து பிறந்தம்; உணர்வு உள் அடங்க உருவாய்த் தோன்றியும்-அவ்வுணர்வு உள்ளே அடங்குமாறு உருவமே தலைசிறந்து பிறந்தும்; உணர்வும் உருவும் உடங்கத் தோன்றியும்-உணர்வானும் உருவத்தானும் சிறப்பின்றி அவையிரண்டும் ஒருபடித்தாகப் பிறந்தும் புணர்தரு உடம்பொடு புணர்ந்து வருகின்ற; மக்கள் தெய்வம் விலங்கு ஆகையும்-மக்களும் தெய்வமும் விலங்கும் ஆகின்ற இம்மூன்றுவகையும் ஆதலால் என்றார் என்க.

(விளக்கம்) ஞானநெறி நின்றியங்கி வீடு பெறுதற்கியன்ற நன்னர் நெஞ்சத்தோடு பிறக்கும் மக்கட் பிறப்பின்கண் உணர்வே தலைசிறத்தலின் அதுவே தலையாய பிறப்பென்னும் குறிப்புத் தோன்ற மக்கட் பிறப்பை இவ்வாறு விதந்தார். தெய்வப் பிறப்பில் வீட்டுணர்வு சிறவாமல் நுகர்ச்சியே சிறந்து நிற்றலின் அதனை உணர்வு அடங்கி உருவம் சிறந்த பிறப்பென்றார். விலங்குப் பிறப்பில் உணர்வும் உருவமும் மாகிய இரண்டும் சிறவாமை தோன்ற உணர்வும் உருவும் உடங்கத் தோன்றி என்றார். உடங்கு உடங்க என எச்சமாயிற்று. உடம்பொடு புணர்தரு மக்கள் முதலிய ஆகையும் என்க.

காலம்

159-168 : சாலம்........படுமே

(இதன் பொருள்) காலம் மூன்றும் கருதும் காலை-இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என்னும் காலம் மூன்றனையும் ஆராய்ந்து காணுமிடத்தே; மறந்த பேதைமை செய்கை ஆனவற்றை இறந்த காலம் என்னல் வேண்டும்-உறுதிப்பொருளை மறத்தற்குக் காரணமான பேதைமையும் செய்கையுமாகிய இரண்டனையும் இறந்த காலத்தன என்று கொள்ளல் வேண்டும்; உணர்வு அருவுரு வாயில் ஊறு நுகர்வு வேட்கை பற்று பவம் தோற்றம் என்று இவை சொல்லுங்காலை-உணர்வு முதலாகத் தோற்றம் ஈறாக நின்ற. இவ்வொன்பது நிதானங்களையும் காலத்தொடு படுத்துக் கூறுமிடத்தே; நிகழ்ந்தகாலம் என நேரப்படும்-நிகழ்ந்த காலத்தன என்று கூறப்படுவனவாம்; பிறப்பு பிணி மூப்பு சாவு அவலம் அரற்று கவலை கையாறுகள் எதிர்காலம் என இசைக்கப்படும்-பிறப்பும் பிணியும் மூப்பும் சாவும் அவலமும் அரற்றும் கவலையும் கையாறுகளும் ஆகிய இவை எல்லாம் எதிர்காலத்தன என்று கூறப்படும்; என்றார் என்க.

(விளக்கம்) பிறந்துழலும் உயிர் பற்றியது இக்கால வாராய்ச்சி. முற்பிறப்பிலே உண்டான பேதைமையும் செய்கையுமே இப்பிறப்பை உண்டாக்கின. ஆதலின் அவை இறந்த காலத்தன எனப்பட்டன. உணர்வு முதலாகத் தோற்றம் ஈறாக அமைந்த இந்நிதானங்கள் ஒன்பதும் பிறந்தவனுக்கு யாண்டும் நிகழ் காலத்தனவேயாக இருத்தலுணர்க. இனிப் பிறப்பு என்றது வழிமுறைப் பிறப்பினை. அப்பிறப்பும் பிணியும் அதற்குரிய மூப்பும் சாவும் அவலமும் அரற்றும் கவலையும் கையாறுகளும் எதிர்காலத்தனவே ஆதலும் அறிக. இத்தகைய துன்பங்களை மறந்தமையாலே நிகழ்காலத்தனவாகிய இவை வருகின்றன, எதிர்காலத்தும் வரவிருக்கின்றன என்னும் வாய்மையை மறந்த பேதைமையும் செய்கையும் என்று பேதைமையின் இழிவு தோன்ற விதந்தோதினர் எனக் கோடலுமாம்.

குற்றமும் வினையும் பயனும்

169-174 : அவலம்.......காலை

(இதன் பொருள்) அவாவே பற்றே பேதைமை என்று இவை-வேட்கையும் பற்றும் அறியாமையும் என்று கூறப்படுகின்ற இம்மூன்று நிதானங்களும்; குலவிய குற்றம் எனக்கூறப்படும்-தம்முட் கூடிய குற்றம் என்று அறிஞர்களால் கூறப்படும்; புனையும் அடைபவமும் செயல் வினையாகும்-இவற்றோடு சேர்த்துக் கூறப்படுகின்ற தம்முள் தொகுதியாய்ச் சேர்கின்ற கன்மக் கூட்டமும் அவற்றிற்குக் காரணமான செயல்களும் வினையாகும்; நிகழ்ச்சி உணர்ச்சி அருவுரு வாயில் ஊறு நுகர்ச்சி பிறப்பு மூப்பு பிணி சாவு இவை நிகழ்ச்சி நேரும் காலை ஆங்கே பயன்-உணர்ச்சியும் உடம்பும் மனமுதலிய கருவிகளும் ஊறும் நுகர்ச்சியும் வழிமுறைப் பிறப்பும் மூப்பும் பிணியும் சாவும் ஆகிய இவை நிகழ்ச்சிகளாம் இவ்வேது நிகழ்ச்சிகள் எதிரும் அவ்விடத்தே வினையின் பயன் எய்துமாதலால் இவை ஏழுமே பயன் என்று கூறுவர் என்றார் என்க.

(விளக்கம்) அவாவும் பற்றும் பேதைமையுமாகிய இம்மூன்றுமே துன்பங்களுக்கெல்லாம் காரணமாகின்ற குற்றமான குணங்களாம் என்றவாறு.

கன்ம வீட்டமும் மேலும் செய்யும் செய்கைகளுமே வினை என்று கூறப்படுவன என்றவாறு.

வினைப்பயன் உண்ணுங்காலை உணர்ச்சி முதலிய ஆறும் ஏதுவும் நிகழ்ச்சியுமாக எதிர்வனவாம். அவ்வழி வரும் நுகர்ச்சி பயன் ஆகவே இவை ஏழுமே வினைப்பயன் என்று கூறப்படும் என்றவாறு.

வீட்டியல்பு

175-178 : குற்றமும்...........இயல்பாம்

(இதன் பொருள்) குற்றமும் வினையும் பயனும் துன்பம்-குற்ற பண்புகளும் வினையும் பயனும் ஆகிய இவை அனைத்துமே துன்பம் என்னும் வாய்மையின்பாற் படுவனவாம்; பெற்ற தோற்றம் பெற்றிகள் நிலையா-பெற்றுள்ள பிறப்பும் அதன் குணங்களும் ஆகிய இவையெல்லாம் நிலையுதலுடையன அல்ல எனவும்; எப்பொருளுக்கும் ஆன்மா இலையென-காட்சிப் பொருளும் கருத்துப் பொருளுமாகிய இவையிற்றுள் யாதொரு பொருளுக்கும் உயிர் இல்லை எனவும்; இப்படி உணரும் இவை வீட்டு இயல்பு ஆம்-இவ்வாறு திட்பமாக உணர்ந்து கொள்ளும் இவ்வுணர்ச்சிகளே வீடுபேற்றிற்கு உறுதியாகிய பண்புகளாம்;

(விளக்கம்) (30-29: மணி) குற்றமும் வினையும் பயனும் விளைந்து நிலையில் வறிய துன்பம் என நோக்க, உலையா வீட்டிற் குறுதியாகி என முன்பு தொகுத்துக் கூறியவர் ஈண்டு (167) பிறப்பே என்பது முதலாக (174) வீட்டியல்பாம் என அவற்றை விரிவகையால் விளக்குகின்றார் ஆதலின் நிலையில் வறிய துன்பம் என நோக்க வுலையா வீட்டிற்கு உறுதியாம் என்னாது, வாளாது இப்படி உணரும் இவை வீட்டியல்பாம் என்றார். இப்படியுணரும் உணர்ச்சிகளே வீடுபேற்றை நல்குதலின் அவற்றையே வீட்டியல்பு எனக் காரணத்தைக் காரியமாகவோதினர் என்க.

நால்வகை வாய்மைகள்

179-188 : உணர்வு..........நான்காவது

(இதன் பொருள்) உணர்வே அருவுரு வாயில் ஊறே நுகர்வே பிறப்பே பிணி மூப்புச் சாவே அவலம் அரற்றுக் கவலை கையாறு என நுவலப்படுவன நோய் ஆகும்-உணர்ச்சி முதலாகக் கையாறு ஈறாகக் கூறப்பட்டனவாகிய பதின்மூன்றனையும் தன்னகத்தே கொண்ட பிறப்பே துன்பம் ஆகும் என்பது ஒரு மெய்க்காட்சியாம்; அ நோய் தனக்கு-அப்பிறப்பாகிய துன்பத்திற்கு; பேதைமை செய்கை அவாவே பற்றுக் கருமவீட்டம் காரணம் ஆகும்-அறியாமையும் செய்கையும் வேட்கையும் புலன்களின் பாற் செல்லும் பற்றுள்ளமும் பழ்வினைத் தொகுதியும் காரணமாகும்; தோற்றம் துன்பம் காரணம் பற்று-இவ்வாற்றால் பிறப்பே துன்பம் என்பதும் அதற்குக் காரணம் பற்றுள்ளமே என்பதும் ஆகிய இரண்டுண்மைகள் தெளியப்பட்டன இனி; வீடே இன்பம்-இனி இத்துன்பநீக்கமாகிய இன்பம் இவற்றிற் பசைஇய அறிவாகிய பற்றினின்றும் விடுதலை பெறுதலேயாம். என்னை? காரணம் பற்று-இலி. அவ்வீட்டின்பத்திற்குக் காரணம் பற்றில்லாவுள்ளமே ஆகலின், ஒன்றிய உரையே நான்கு வாய்மையாவது-ஈண்டு மாறுபாடின்றிப் பொருந்திய இந்நான்கு மொழிகளும் நான்கு வாய்மைகள் ஆதலறிக என்றார் என்க.

(விளக்கம்) இப்பகுதியால் (32) நால்வகை வாய்மைக்குச் சார்பிடனாகி என்றுமுன்னர்த் தொகுத்தோதப்பட்ட நான்குவாய்மைகளும் விரிவகையால் விளக்கினமை அறிக. இதன்கண்-உணர்வும் அருவுருவும் வாயிலும் ஊறும் நுகர்வும் அதன் வழித்தாகிய வழிமுறைத் தோற்றமும் பிணி மூப்புச் சாவு அவலம் கையாறு என்னும் அனைத்தும் பிறந்தோர் பால் உள்ளன. ஆதலின் பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் என்பது ஒரு மெய்க் காட்சியாம்; அப்பிறப்பிற்குக் காரணம் பேதைமை முதலியன ஆம் என்பது ஒரு மெய்க்காட்சி என்பார். தோற்றம் துன்பம் (1) பற்றுக் காரணம் (2) எனச் சுருங்கக் கூறியும் விளங்கவைத்தனர். (3) துன்ப வீக்கமே வீடு என்பார் வீடு இன்பம் என்றார். அதற்குக் காரணம் பற்றறுதியே என்பார். காரணம் (4) பற்றிலி என்றார். இங்ஙனம் கூறப்படும் இந்நான்கு உரைகளுமே நான்கு மெய்க்காட்சிகளுமாம் என்பார் ஒன்றிய உரையே நான்கு வாய்மை ஆவதென்று ஓதினர். இந்நான்கு வாய்மைகளும்,

பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும்பே ரின்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றேர் உறுவது    (ஊரலர்-64-67)

எனவரும் மாதவி கூற்றிலமைந்துள்ளமை நுண்ணிதின் உணர்க.

இனி இவற்றோடு

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று
நிலையாமை காணப் படும்   (குறள்-349)

எனவரும் இவ்வருமைத் திருக்குறளையும் நினைக.

இனி, துன்பம், துன்பவருவாய், துன்பநீக்கம், துன்ப நீக்கநெறி என இந்நான்கு வாய்மைகளையும் தமிழில் மொழி பெயர்த்துக் கொள்க.

இனி, துன்பநீக்கநெறி எட்டுவகைப்படும் என்பர். அவை வருமாறு: நற்காட்சி, நல்லூற்றம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நல்லுளத்தோர் தலைப்பாடு என்பன.

கந்தங்கள்

189-190 : உருவு........ஆவன

(இதன் பொருள்) உருவு நுகர்ச்சி குறிப்பு பாவனை உள்ள அறிவு இவை-உருவக்கந்தமும் நுகர்ச்சிக்கந்தமும் குறிக்கந்தமும் செயற்கந்தமும் அறிவுக்கந்தமும் என்று கூறப்படும் இவையே; ஐங்கந்தம் ஆவன-ஐவகைக் கந்தங்கள் எனப்படும் என்றார் என்க.

(விளக்கம்) (33) இனி ஐந்துவகைக் கந்தத் தமைதியாகி என்று முன் தொகுத்து நிறுத்த முறையானே ஈண்டு அவற்றை விரித்து விளம்புகின்றார் என்க.

உருவக்கந்தமும் நுகர்ச்சிக்கந்தமும் குறிக்கந்தமும் செயற்கந்தமும் அறிவுக்கந்தமும் என்னும் இவற்றை ரூபஸ்கந்தம் விஞ்ஞானஸ்கந்தம் ஞானஸ்கந்தம் பாவனாஸ்கந்தம் சம்ஸகாரஸ்கந்தம் என்றும் கூறுவர். இதனை

உருவம்வே தனைகுறிப்புப் பாவனைவிஞ்
ஞானம்என உரைத்த ஐந்தும்
மருவியே சந்தானத் தால்கெடுதல்
பந்ததுக்கம் மற்றிவ் வைந்தும்
பொருவிலா வகைமுற்றக் கெடுதல்முத்தி
யின்பம்முன்பு புகன்ற வைந்தின்
விரிவெலாம் தொகுத்துரைத்த மெய்ந்நூலிற்
றெரித்திர்இவை மெய்ம்மை என்றான்  (மெய்ஞ்ஞான விளக்கம் : சருக்கம் 32)

எனவரும் செய்யுளானும் உணர்க.

இனி, இந்த ஐந்து கந்தங்களின் கூட்டமே உயிர் என்பது பவுத்தர் கொள்கை, அதனை

கவையொப் பனகை விரலைந் துகளும்,
இவையிப் படிகைப் பிடியென் றதுபோல்
அவையப் படிகந் தங்களைந் துகளும்
நவையைப் படுநல் லுயிரா மெனவும்

எனவரும் நீலகேசிச் (462) செய்யுளானும் அதற்கு யாமெழுதிய ஐந்து விரல்களையும் கூட்டிப் பிடித்வழி கைப்பிடி என்றொரு வழக்குண்டானற் போல ஐங்கந்தமும் கூடிய கூட்டத்திற்கே உயிர் என்று பெயர் கூறப்படுகின்றது என்றவாறு; எனவே உயிர் என்பது வாய்மை வகையான் இல் பொருளாம். வழக்கு வகையான் உள் பொருளாம் என்றவாறாயிற்று எனவரும் விளக்கவுரையானும் இனிதின் உணர்க.

இனி ஐங்கந்தங்களுள் உருவக்கந்தம், பூதவுரு உபாதான உரு என இரண்டாம் என்பர். அதனை உருவினியல் பூதமுடன் உபாதான மெனவிரண்டாம் எனவரும் மெய்ஞ்ஞான விளக்கத்தால் (சருக்கம் 32:7) உணர்க.

அறுவகை வழக்கு

191-198 : அறுவகை..........வழக்குமென

(இதன் பொருள்) அறுவகை வழக்கும் மறு இன்று கிளப்பின்-இனி ஆறுவகையான வழக்குகளையும் குற்றமின்றி விரித்து விளம்புமிடத்தே அவைதாம்; தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை இயைந்துரை என்ற நான்கினும் இயைந்த-தொகையும் தொடர்ச்சியும் தன்மை மிகுத்துரையும் இயைந்துரையும் என்னும் நான்கு வகை வழக்கோடு கூடிய; உண்மை வழக்கும் இன்மை வழக்கும் உள்ளது சார்ந்த உண்மை வழக்கும் இல்லது சார்ந்த இன்மை வழக்கும் உள்ளது சார்ந்த இன்மை வழக்கும் இல்லது சார்ந்த உண்மை வழக்கும் என-உண்மை வழக்கு முதலியன என இந்த ஆறுவகை வழக்குமாம் என்றார் என்க.

(விளக்கம்) அறுவகை வழக்கும் தொகை முதலிய நான்கோடும் கூடி ஒவ்வொன்றும் நான்கு வகைத்தாய் ஆறாம் என்றவாறு. இவற்றுள் பிற்காலத்தே தொகை முதலிய நான்கனுள் இயைந்துரை என்பதனைத் தொகையிலடக்கித் தொகையும் தொடர்ச்சி தன்மை மிகுத்துரை என்ற மூன்றே கொள்வர். இம்மூன்றும் உள்வழக்கும் இல்வழக்கும் ஆகிய இரண்டனோடும் கூடி ஒவ்வொன்றும் மூன்றுவகைத்தாய் வழக்கு அறுவகைப்படும் என்று கூறுவாருமுளர். இதனை,

வழக்கு இரண்டாய்ப் பொருவும் இயல் உள்ளதுடன்
இல்லதும் என்றிரண்டாப் புகல்வர்

எனவும்,

மருவு தொகை தொடர்ச்சி மிகுத்துரை என
ஒன்று ஒரு மூவகைத்தாய் ஆறாம்
தெளிவுறு மாறவ்வாறும் இவ்வாறாம் என
வகுத்துச் செப்பக் கேண்மோ

எனவும் வரும் மெய்ஞ்ஞான விளக்கத்தானும் (புத்த-10) அறிக.

தொகை தொடர்ச்சி முதலியவற்றினியல்பு

199-207 : சொல்லிய...........வழங்குதல்

(இதன் பொருள்) சொல்லிய தொகைத் திறம் உடம்பு நீர் நாடு-முன் கூறப்பட்ட தொகை வழக்கின் இயல்பாவது, உடம்பு என்றும் வெள்ளம் என்றும் நாடு என்றும் பல பொருளின் கூட்டத்தைத் தொகுத்து ஒரு பொருள்போல ஒரு பெயரால் வழங்குவதாம்; தொடர்ச்சி-இனித் தொடர்ச்சியாவது; வித்து முளை தாள் என்று இந்நிகழ்ச்சியில் அவற்றை நெல் என வழங்குதல்-வித்தினின்றும் முளையும் முறையினின்று தாளும் என இங்ஙனம் காரணகாரிய முறையால் நிகழும் நிகழ்ச்சியில் வித்து நெல்லாதல் பற்றி அவற்றை நெல் என்று வழங்குதல் போன்ற வழக்காம்; இயல்பு மிகுத்துரை-இனி, தன்மை மிகுத்துரை என்னும் வழக்காவது; ஈறுடைத்து என்றும் தோன்றிற்று என்றும் முத்தது என்றும் மூன்றின் ஒன்றின் இயல்பு மிகுத்து வைத்தல்-ஒரு பொருளின் இறுதியுறுதல் தோற்றமுறுதல் மூத்தல் என்னும் இயல்புகளுள் வைத்து இஃதழிபொருள் என்றாதல் இது தோன்றிய பொருள் என்றாதல் முதிர்ந்தது என்றாதல் அம்மூன்றனுள் ஒன்றனை மட்டும் கிளர்ந்தெடுத்து வழங்குதல் போல்வதாம்; இயைந்துரை என்பது-இனி இயைந்துரை என்னும் வழக்காவது; எழுத்துப் பலகூடச் சொல்லெனத் தோற்றும் பலநாள் கூடிய எல்லையத் திங்களென்று வழங்குதல்-பல எழுத்தாலியைந்த தொடரைச் சொல்லென வழங்குமாறு போலப் பலநாள் கூடிய ஒரு கால எல்லையைத் திங்கள் என்று வழங்குதல் போல்வது ஆம் என்றார் என்க.

(விளக்கம்) தொகை வழக்காவது பல பொருட்குவையாகிய ஒன்றிற்கு ஒரு பெயரிட்டு வழங்குதலாம் எனவும் தொடர்ச்சியாவது-வித்துமுதல் தாள் ஈறாகப் பரிணமித்து வருவனவற்றைக் காரணமாகிய நெல் என்றே வழங்குதலாம் எனவும் ஒரு பொருளின் தன்மை பலவற்றுள் ஒன்றனை மட்டு விதந்து வழங்குதல் எனவும் நுண்ணிதிற் கண்டுகொள்க. தொகை வழக்கும் என்பதற்கு இயைந்துரைக்கும் வேறுபாடு தெரிந்தோதுவார் பல எழுத்துக் கூடி இறந்தொழியவும் அவ்வியைபிற்குச் சொல் என்று ஒரு பெயரிட்டாற் போல இறந்தொழிந்த பலநாளின் இயைபின் எல்லையைத் திங்கள் என்று வழங்குதல் என்றார். தொகைப் பொருளில் தொக்க பொருள் எல்லாம் உளவாதலும் இயைந்துரையில் இயைந்த எழுத்தும் நாளும் இல்லையாதலும் வேற்றுமை இதற்கிவ்வாறு பொருள் கூறாது வேறு கூறுவார் உரை பொருந்தாமை நுண்ணுணர்வால் தெளிந்து கொள்க.

இனிப் பவுத்தர்கள் கணபங்க வாதியாதலின் தொகைப்பொருளும் கணந்தோறும் கெட்டே பிறத்தலின் தொகைப் பொருட் கேட்டிற்கும் இயைந்துரையில் எழுத்தும் நாளும் அங்ஙனமே கெடுதலின் இவற்றுள் வேற்றுமையின்றாம் பிறவெனின் அற்றன்று. தொகைப் பொருள் சந்தானத்தால் தொடர்ச்சியால் கெட்ட பொருளே மீண்டும் பிறக்கும் இயைந்துரைக்கண் எழுத்துக்களும் நாள்களும் கெடுங்கால் பொன்றக் கெடுவன ஆதலின் இவ்வேற்றுமை சாலப்பெரிது, இதனை அறியும் நுணுக்கமின்மையால் பிற்றைநாளில் இயைந்துரையைத் துவரக் கைவிட்டனர் என்று விடுக்க.

இனி இவற்றை-

கந்தமைந்தின் செறிவொருவ னென்பனபன்
மரச்செறிவு காடென் றாற்போன்
மைந்தவென்றல் தொகையுள்வழக் கயலொருவன்
அவையைந்தும் அடுப்பான் என்றல்
எந்தையியம் பியதொகையில் வழக்காகுங்
காரணகா ரியத்தாற் றோன்றி
அந்தமடைந் திடுவனென்றல் தொடர்ச்சியுண்மை
வழக்கென நூ லறையு மன்றே

எனவும்,

மாண்டவழி யேயுதிப்பன் என்னாமல்
ஒருவ னென்றும் வைகுவானென்
றீண்டவுரைப் பதுதொடர்ச்சி யில்வழக்காம்
உதித்தவெல்லா மிறக்கு மென்றல்
வேண்டுமிகுத் துரையுள்வழக் காம்விழிக்குப்
போன துபோல் வேறால் என்றல்
பூண்டமிகுத் துரையில்வழக் காகும்
இன்னுமவற் றினியல் புகலக்கேண்மே

எனவும் வரும் மெய்ஞ்ஞான விளக்கச் செய்யுள்களானும் (சருக்கம் 32.செய்-10-11) நன்குணர்க.

ஈண்டுக் காட்டிய இச்செய்யுளிலும் மணிமேகலை யாசிரியர் கூறிய இயைந்துரை வழக்குக் கைவிடப்பட்டிருத்தலு மறிதற் பாலதாம்.

உள்வழக்கும் இல்வழக்கும்

208-216 : உள்வழக்கு..........இல்லென

(இதன் பொருள்) உள்வழக்கு உணர்வு இல்வழக்கு முயற்கோடு-உள் வழக்காவது உள்பொருளாகிய உணர்வு உண்டு என்றாற் போல்வதாம், இல்வழக்காவது இல்பொருளாகிய முயற் கொம்பு இல்லை என்பது; உள்ளது சார்ந்த உள்வழக்கு சித்தத்துடனே நுகர்ச்சி ஒத்தது ஆகும்-உள்பொருளைச் சார்ந்து வருகின்ற உள்வழக்காவது உணர்ச்சிக்க