FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Ninja on October 11, 2020, 12:27:10 PM

Title: உலக மனநல தினம்
Post by: Ninja on October 11, 2020, 12:27:10 PM
நேற்று உலக மனநல தினம் (World Mental Health Day). உலக மனநல ஆரோக்கிய தினம் என்று சொல்லலாம்.

சில எளிமையான விஷயங்களைச் சொல்லலாம் என நினைக்கிறேன். ஒரு தனி மனிதனாக, ஆணாகவோ பெண்ணாகவோ நீங்கள் எப்படி உங்களையே பராமரித்துக்கொள்வதென சில குறிப்புகள் சொல்லலாம் என்று நினைக்கிறேன். 

* முதலில் பிறர் என்ன நினைப்பார்கள், என்ன சொல்வார்கள் என்று நினைக்காமல்  உங்களுக்குப் பிடித்தபடி வாழுங்கள். பிறருக்காக உங்களை மாற்றப்போனால், உங்களை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டி வரும். குறை சொல்பவர்களும் புதிது புதிதாக ஒவ்வொன்றைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் இதை மற்றவர்கள் தடுக்கிறார்கள் என்பதற்காக பிடிவாதமாகச் செய்யாதீர்கள். உங்களுக்கு உண்மையிலேயே பிடித்ததை மட்டும் செய்யுங்கள்.

உங்களை புதுப்பிக்கும் செயலை உறக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையில் வைத்திருங்கள். இதை ஒரு பழக்கமாகவே ஆக்கிக்கொள்ளுங்கள்.

ஒரு நல்ல கலையையோ, அல்லது ஒரு நல்ல புத்தகத்தையோ படித்து முடித்ததும் அமைதியாக இருங்கள். அதை உங்களுக்குள்ளே பயணிக்க விடுங்கள். பல மணிநேரங்கள் ஆனபிறகு அதை மீண்டும் அசைபோடுங்கள். உங்கள் ரசனையின் ஆழமே உங்களுக்கு ஒரு நல்ல தீர்வாகும். புத்தகங்கள் படிக்கும்போது, தரவுகளும் தகவல்களும் உள்ள புத்தகங்களையும் கற்பனை வளம் பொதிந்த புனைவுகளையும் மாற்றி மாற்றிப் படியுங்கள். இரண்டையும் இணைத்து மூளைக்குள் ராகம் பிறப்பியுங்கள்.

உங்கள் தன்னுணர்வுநிலையினை வளர்த்துக்கொள்ளுங்கள். அதற்காக நேரம் ஒதுக்குங்கள். எங்கிருந்து உங்கள் அறிவைத் திரட்டவேண்டும், எங்கிருந்து நல்ல படைப்பைத் திரட்டமுடியும் என்றெல்லாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இப்போது தெரிவுகள் அதிகம். அதனால் தேர்ந்தெடுக்கும் கலையை வளர்த்துக்கொள்ளுங்கள்.

Minimalism. தேவையில்லாத குப்பைகளையும் பொருட்களையும் உங்கள் அறையிலிருந்து அகற்றிவிடுங்கள். உங்கள் அன்றாட நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துங்கள். நீங்களாகவே ஒரு முறையைக் கொண்டுவாருங்கள். வட்டாரத்தை புதிது புதிதாக மாற்றிக்கொள்ளுங்கள்.

சுற்றியிருக்கிற மனிதர்களைப் பார்த்துத் தெரிவுசெய்யுங்கள். நல்ல உரையாடல் மூலம் அவர்களை அறிந்துகொள்ளுங்கள். அதை ஆராய முதலில் உங்களையே நீங்கள் நன்றாய் ஆராய்ந்திருக்கவேண்டும். அப்படி மனிதர்களைக் கண்டறியும்போது தவறு நேர்ந்தால் அவற்றை ஒரு அனுபவமாகவும், உங்களைப் புதுப்பிக்க நீங்கள் கொடுத்த விலையாகவும் நினைத்து அவற்றைக் கடந்துவரப் பழகுங்கள்.

உள்ளுக்குளே எது குறித்து நேர்மையான அபிப்பிராயம் இருக்கிறதோ, தெளிவான அபிப்பிராயம் இருக்கிறதோ அது சார்ந்தே உங்கள் வெளியுலக பிம்பத்தைக் கட்டமையுங்கள். போலியாக ஒரு பிம்பத்தைக் கட்டமைத்தால் உங்களுக்கே உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும்.

பிம்பம் உண்மையாக இருக்கும்போது சரியான மனிதர்கள் நெருங்கி வருவதற்கான சாத்தியங்கள் அதிகம். தவறான அல்லது பொருத்தமில்லாத மனிதர்கள் விலகிவிடுவார்கள்.

நான் செய்யும் செயல்களுக்கு நானே பொறுப்பு என்பதை ஏற்றுக்கொண்டு என்னை குற்றம்சாட்டிக்கொண்டி மட்டும் இருக்காமல், அதிலிருந்து எப்படி என்னை முன்னேற்றம் காண வைப்பது என்று பாருங்கள்.

பிறருக்கு காண்பிக்கவேண்டும் என்பதற்காகச் செய்யாமல் நீங்கள் செய்யும் செயலை அனுபவித்துச் செய்யுங்கள். அந்தந்த நேரங்களை அனுபவியுங்கள். அவற்றை நிதானமாகப் பிறகு சோஸல்மீடியாவில் போட்டுக்கொள்ளுங்கள். உதாரணமாக, ஒரு பயணம் போகிறீர்கள் என்றால் அந்தப் பயணத்தை முதலில்  அனுபவியுங்கள். பேஸ்புக்கில் போடுவதற்காக போகாதீர்கள்.

 காதலோ, உடல் சார்ந்த இச்சையோ, மனம் சார்ந்த இச்சையோ அதை அதை அந்தந்த மனப்பக்குவம் பெற்ற மனிதர்களுடன் மட்டுமே  வைத்துக்கொள்ளுங்கள். அந்தரங்க கனவுகளை, காதல் கனவுகளை புரிந்துகொள்ளும் துணைகளைக் கண்டுபிடியுங்கள். அந்தரங்கங்களை அந்தரங்கமாக வைத்திருப்பவர்களுடன், மரியாதை பேணுபவர்களுடன் பழகுங்கள்.

உறவுகளை அவரவர் நிலையில் வைத்துப் புரிந்துகொண்டு உரையாடல் மூலம் நிதானமாய் கையாளுங்கள்.

இவை எல்லாமும் தனி ஒரு மனிதர் சார்ந்தது. நீங்கள் அனுமதிக்காமல் உங்கள் மனநிலையை எவராலும் குழப்ப முடியாது. நீங்கள் ஒரு தனி மனிதர் என்று எண்ணிக்கொண்டு, உங்கள் எதிர்காலம் ,ராசிபலன் எல்லாமும் உங்கள் கையில் இருக்கிறது என எண்ணிக்கொண்டு இயங்குங்கள். 

(படித்ததில் பிடித்தது)