FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on July 04, 2020, 11:29:14 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 238
Post by: Forum on July 04, 2020, 11:29:14 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 238
இந்த களத்தின்இந்த  நிழல் படம்   FTC Team சார்பாக        வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/238.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 238
Post by: thamilan on July 05, 2020, 06:10:37 AM
மழையே
நீ  வான்முகில்  சிந்திடும்   ஆனந்தக்கண்ணீரா 
இல்லை  சோகக்  கண்ணீரா 
இது ஆனந்தக் கண்ணீர் தான்
உன் காதலன் கருமுகிலை கண்ட
ஆனந்தம் தானே
 
உன்னை பெண்ணாக வர்ணிக்கிறேன்
என்று பார்க்கிறாயா
நீ கொடுப்பவள் உலகை குளிர்விப்பவள்
பயிர்களை உயிர்விப்பவள் 
இந்த  குணங்களெல்லாம் 
பெண்களுக்கு   தானே பொருந்தும்

நீ மனிதர்களை போன்றவள் அல்ல
மனிதர்கள் மற்றவர்களிடமிருந்து உறிஞ்சி
தாங்கள் உயிர் வாழ்பவர்கள் - நீயோ
நிலத்தில் உறிஞ்சிய நீரை மழையாக
உலகுக்கே கொடுக்கிறாய்

மழையே
உன்னில் நனைவது  சிலருக்கு  பிடிக்காது
அம்மா சொல்லுவாள்
ஜலதோஷம் பிடிக்கும் என்று
பாட்டி சொல்லுவாள்
காய்ச்சல் வரும் என்று

உன்னில் நனைவது பேரானந்தம்
உன்  தாரகைகள் பட்டு
உடல் மட்டுமா நனைகிறது
உள்ளமும் அல்லவா குளிர்கிறது
கவலைகளை கழுவிச் செல்கிறது
உன் மழைநீர்
காதலியின் தழுவலை உணர்த்துகிறது
உன் மழைநீர்
உன் ஒவ்வொரு  துளியும்
கன்னத்தில் படும்போது
என்காதலி தரும் முத்தத்தை உணர்கிறேன்

மழையே உனக்கும் எனக்கும்
என்றும் நெருங்கிய பந்தம் இருக்கிறது
எப்படி என்று கேட்கிறாயா
என் அன்னையின் வயிற்றிலே
உன் அரவணைப்பில் தான் நான் இருந்தேன்
நான்உயிர் வாழ்வதும்
உன்னைப் பருகி தானே
இந்த உலகமே செழித்து வாழ்வதும்
உன்னால் தானே
மழை நீராகிய நீ தானே
பலவடிவங்கள் எடுக்கிறாய்
கிருஷ்ண பகவான் போலே



 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 238
Post by: Ninja on July 05, 2020, 10:52:31 AM
மண் வாசனை துளிர்த்து
மழை மேகம் சூழும் நாளொன்றில்
வீட்டில் அடைந்திருக்கும் வரமொன்று
வாய்த்திருக்கிறது.
இயல்பு வாழ்க்கையை பாதிக்காத
ஒரு மழை
நச நசவென்று பெய்கிறது என அலுக்க
வைக்காத ஒரு மழை
வகுப்பறைகள் குழந்தைகளுக்கும்,
அலுவலகங்கள் மனிதர்களுக்கும்
காத்திருக்காத ஒரு மழை

சடசடத்து வீசும் காற்றின் ரீங்காரத்தில்
உடல் சிலிர்க்கிறது
சூழ்ந்து வரும் கருமேகங்களை கண்டு
இன்னும் கூடு அடையாத பறவைகள்
இறக்கைகள் படபடக்க பறக்கின்றன
எங்கிருந்தோ சுழன்று வருகிறது
காற்றில் பட்டமாகிப் போன
பாலீதீன் பையொன்று
முதல் தூறலுக்கான அறிகுறியோடு
தீவிரமாகிறது குழந்தைகளின் விளையாட்டுகள்

சொட் சொட் என விழும் தூறல்களில்
ஒவ்வொரு பொருளும்
புதிதாக இசைக்கிறது,
சின்னதொரு இடியும் உடன் சேர்ந்து
தாளமேற்றுகிறது தூறலுக்கு.
சாளரத்தின் கம்பிகளில் ஊஞ்சலாடுகிறது ஒவ்வொரு துளியும்.
வேகமெடுக்கும் சாரலில்
மண்ணின் தாகங்கள் எல்லாம்
தீர்ந்தடங்கி தேங்கி நிற்கிறது
சிறு குட்டைகள்

கைகளை நீட்டி மழையை ஆரத்தழுவிக்கொண்டு,
பளிச்சிடும் மின்னல் ஒளியில்
தேங்கி நிற்கும் நீர்க்குட்டைகளில்
கால்களுக்கு காத்திருக்கிறது சிறுநடனம்

மழை சிறிது ஓயும் இடைவெளியில்
உடல் உரசும் குளிர்ந்த காற்றில்
கைகளில் வெம்மையேற்றுகிறது
சூடான தேநீர் கோப்பைகள்.
ஈரம் பூசிக் கொண்ட சாலைகளும்,
புது பச்சை அணிந்த மரங்களும்,
மரங்களிடையே உடல் உலுக்கி
நீர் உதறுகிற பறவைகளும்,
தெருவெங்கும் உதிர்ந்திருக்கும் மஞ்சள் பூக்களும்,
மனதில்
மழையின் நினைவுகளாய் சேர்கிறது

மழை எழுதும் கவிதைகளை ரசித்தபடி
மழைக்காய் ஒரு கவிதை எழுதிடும்பொழுது,
அதே குளிரும் அதே சாரலுமாய்
மீண்டும் துளிர்க்கும் மழையில்
கைநீட்டி சில்லிடும் விரல்களோடு
நனையும் மனதிற்குள்
மீண்டும் பெய்கிறது ஒரு பெருமழை
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 238
Post by: VidhYa on July 05, 2020, 10:55:02 AM
மழையுடன் பேசும் என் காதலன்

அவள் கன்னத்தில்
கழுத்தில் இடுப்பில்
முத்துக்கோர்த்து விளையாடும் மழையே
என் காதலை யார் சொன்னார்கள் உனக்கு

அவளை  எப்படி எல்லாம்
அணைக்க நினைத்தேனோ
அப்படியெல்லாம் அணைத்து
அவளை எங்கெல்லாம்
நனைக்க நினைத்தேனோ
அங்கெல்லாம் நனைத்து

சற்றென்று தொட்டு பேசிவிடும்
மழையின் மனது வேண்டும் எனக்கு
குடை பிடிப்பது
இயற்கைக்கு எதிரானதென்று
அவள் நனைந்து சிலிர்த்த
சிலிர்ப்பில் தான் உணர்ந்து கொண்டேன்

அந்த மழையில்
அவள் தேவதையாக தெரிந்தாள்
நீ  அவளைத் தேடித்தான்
பூமிக்கு வந்தாயோ
என்ற சந்தேகம் வலுக்கிறது

அவள் கைகளை நனைத்து
அவள் வளையல்களில் தெறித்து
நீ பண்ணும் அட்டகாசம்
அப்பப்பா

எனக்காக தினமும் வா மழையே
என்னால் தொட முடியாவிட்டாலும்
நீ தொடும் அழகை சரி
நான் ரசிக்கிறேன்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 238
Post by: Hari on July 05, 2020, 02:36:04 PM
ஜில்லென மழை துளி விண்ணை பிளந்து 
மண்ணுலகை உயிர் ஊட்ட  வருகை தரும் ..

உன்னை கண்ட மகிழ்ச்சியில் என் மனம்
தரையில் அடித்த பந்து போல்  மேலும் கீழும் குதிக்கும் ...

நீ சிரிக்கும் மழை  நீரின்   சத்தம்
இசையாய்  மனதிற்கு .புத்துணர்வளிக்கும்
சாரலாய் வந்த உன் சுவாச காற்றில்
மரங்களும் வெட்கத்தில் புன்னகைக்கும் ...


உன் சிறு சிறு அன்பு  துளிகளால்
உலகமே காதல் வெள்ளத்தில்  தத்தளிக்கும் ...
உன்னை காண தவமாய் தவம் இருந்து
காத்து கொண்டு இருக்கிறாள் பூமித்தாய்...

உன் வருகையால் மனம் குளிர்ந்து
பல  கோடி  உயிர்களை பெற்றவள்  எங்கள் பூமி தாய்...

மண்ணின் புனிதத்திற்கு நிகரானவர்கள் 
மண்ணுலகுகின் அழகு தேவதை பெண்கள்...

ஜன்னலை திறக்கும்போதே  முகம் தழுவி 
 மகிழ்விக்கிறது உன் குளிர்ந்த தென்றல் காற்று..
உன் வருகையை முன்கூட்டியே தெரிவிக்க
தூதர்களாய்   வரும்   கார்மேக கூட்டங்கள்..

வண்ண வண்ண நிறங்கள் வளையல் அணிந்து
அவள் கரங்களில் உன்னை ஏந்தும்  அழகைப்பார் !..
பல கோடி நீர் துளிகளை நீ பொழிந்தாலும்
அவள் கைகளில் உள்ள சில துளி நீர்களே
பெரும் பாக்கியம் செய்தவை  என்று நீ உணர்ந்தாயா.?..

வருணனின் வருகையால் இந்த மனுலகே
 உயிர் பெற்று பசுமையாய் செழிக்கிறது ..
எங்கள் அழகு பெண்களின் வருகையால்
இந்த மனிதகுலமே உயிர் பெற்று அவளை புனிதமாய் போற்றுகிறது...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 238
Post by: TiNu on July 05, 2020, 03:51:15 PM
மழையே.... மாரியே.. 
உயிர்கள் பிறப்பின் ஆதாரமே..
நீ இன்றி நான் இல்லை...

உன்னுள் எவ்வளவு  வித்தியாசங்கள்
எத்தனை வடிவங்கள்... எதை நான் ரசிப்பேன்
ஒவ்வொன்றும் ஓர் அழகடி

ஆலியே...
ஒற்றை மழை துளியாய்.. உடலும் நனையாது..
உடையும் நனையாது.. ஒட்டி செல்கிறாய்..
ஆலி என உரு  கொண்டு...

தூறலே..
காற்றில்லா பொழுதிலும் திவலைகளாய்..
என் மேலே பட்டு நிற்கும்.. நீரே..
நானும் உன் ரசிகையடி...

சாரலே..
மழை ஓரிடம் பொழிய நீயோ சாய்வாக
மலைகள்  தாண்டி வாந்தாயா?
காற்றோடு காற்றாக என் கன்னம் தழுவ...

அடை மழையே..
இடைவெளி இல்லாது, என் பார்வைகளும் மறைய
தொடர்ந்து கொட்டி தீர்க்கும் மழையே..
நீ அடை மழையா இல்லை கன மழையா..

ஆலங்கட்டி மழையே..
கோடை வெப்பம் எனை தாக்க கூடுமோ..
என்றெண்ணி... ஓடி வந்தாயா... என்
ஆலங்காட்டியே... வா நாம் சேர்ந்தாடலாம்..

ஆழி மழையே...
என் புருவம் தூக்க, செய்த மழையே
உன்னுள் இவ்வளவு பெருந்தன்மையா!!!
உப்பு கடல் நடுவிலும், ஆழி என நடமிடுகிறாயே!!!...

சில நிமிடங்களே வந்து  போனாலும் 
கடலென  நீரை வாரி இறைத்து முகிழ்ப்பேழையே..
உனக்கு  இத்தனை வடிவங்களா?

நீ எந்த உரு கொண்டாலும், எல்லாமே எனை சேர தானே...
நானும் உனை நோக்கி கையேந்தி நிற்கிறேன்
வா அருகில் வா..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 238
Post by: JKJ on July 05, 2020, 08:57:50 PM
கரு மேகங்கள் பொழிந்த  ஆனந்த  கண்ணீரே !!!

எங்கள் மண்ணின் மண் வாசம் வீசிட
வானுலகில் இருந்து வந்த வான் மழையே !!!

நீ சூரியனை மறைத்து சந்திரனை மறைத்து
வானில் உள்ள விண்மீன்களை மறைத்தாய் !!!

மழை துளிகளாய்  வந்து   என் வளைக்கரம்  தீண்டி
என்னை மீண்டும் குழந்தை என மாற்றிவிட்டாய் !!!

ஜில்லென்று சிலிர்க்கும் உன் முத்துக்களுடன்
என்னோடு சிரித்து விளையாடி மகிழ்ந்தாயோ  !!!

தனிமையில் என்னிடம் பேச வானின்று வந்தவளே !!!

என் வளையல்களைநீ தீண்டி பேசுகையில்
வானுலகம் சென்று வந்தேன் உன்னுடனே !!!

உன் சலசல சாரல் சத்தம் கேட்டு
சந்தன மணம் வீசும் என் மண்வாசத்தில்
மான்குட்டியாய் குதிக்கிறது எனது மனம் !!!

மனமகிழ்ந்து களிக்கின்றேன்
என் அன்பு மழையே நின்று விடாதே!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 238
Post by: SweeTie on July 05, 2020, 11:29:53 PM
விண்ணிலே  பிறந்து மண்ணிலே தவழ்ந்து
உயிர்கள்   வாழ்விலே கலந்த  மழைத்துளியே
கையிலே   உன்னை    தாங்கிடும்   பாக்கியம்
பெற்றது   எந்தன்  பெருமையன்றோ. 

செயற்கை  கோள்களின் நடுவே  வாழும்  நீ
இயற்கை அன்னையின்  செல்லப்பிள்ளை 
இன்முகம் காட்டி   நன்மைகள்  செய்யம்
வர்ணனே   உன்னை  வணங்குகிறோம் 

உழவர்க்கு  உறுதுணை  செய்திடும் மழையே
மாரியாய்   வந்து  மனம்  நிறைப்பாய் 
கோடையில்  இடியுடன்  கூடவே வந்து
இன்னல்கள் பலவும் கொடுத்திடுவாய்

பூமியில்  தவழ்ந்து   ஆழமாய்    பதிந்து
நிலத்தடி  நீராய்   மக்களை  மகிழ்விப்பாய்   
ஆறுகள்  கடந்து   கடலுடன் கலந்து
சிப்பியில்   வீழ்ந்து   முத்தாவாய்

உன்  தூறலில்  நனையும்  சிறுவர்கள் பலரும்
உன் சாரலில் நனையும்  காதலர் சிலரும் '
பெய் மழை  உன்னால்  பயன்பெறும்  உழவரும் 
வாழ்த்துவர்    நித்தமும்  நீ   வரவேண்டுமென


அறமும்  அன்பும்   பெரும் கொடையென்பர்
உலகில்  மறையும்  கல்வியும் கற்ற மக்கள்
கோன்  முறை அரசும்   நீதியும்   நியாயமும்
நிலைத்திட   நினைக்கையில்  நீ வருவாய்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 238
Post by: MoGiNi on July 06, 2020, 01:02:25 AM
ஓர் மழைக்கால
மாலையில்
உன்னிடம்
மயங்கிக் கொண்டிருகிறது
மனமும் .......

ஓர் குளிர் காற்றில்
கூசி சிலிர்க்கும்
கைகளின் ரோமத்தில்
படர்ந்திருந்தது
உன் பார்வை ....

ஓர் அழகான
மழைப் பறவை என
மனது
மழை வெள்ளத்தில்
முக்குளித்து
புரள்கிறது ...
அதன் சிறகுலர்த்தும்
ஒவ்வொரு துளியும்
உன் மீது பட்டு
உலர்ந்து கொள்கிறது ....

ஒரு சாரலின் வேகத்தில்
சட்டென்று ஆடிய மேனி
சரிந்து கொள்கிறது
ஜன்னலோரத்தில்...
ஓர் போர்வைக்கும்
ஓர் கதகதப்புக்குமான தேவை
அதிகரித்துக்கொண்டே இருந்தது ...

ஓர் செல்லப் பூனையாக
உன்னிடம் ஒட்டிக்கொள்ள
ஆசைப்படும் மனதுக்கு
ஒரே ஒரு சமிக்கை கொடு
ஒருகணமும் பிரியாமல்
உனக்குள்ளே அடங்கி முடிக்கிறேன் ..