Author Topic: எந்த தசா யாருக்கு யோகம்?  (Read 7473 times)

Offline kanmani



      இன்றைய வாழ்வில் மனிதனின் அன்றாட வாழ்க்கை அனைத்தையும் நவகிரகங்கள் ஆட்டிப் படைக்கின்றன. ஜெனன கால கிரக அமைப்பு கொண்டு ஜாதகம் துல்லியமாக கணிக்கப்பட்டால் ஒருவரது அன்றாட வாழ்க்கையினை தெள்ளத் தெளிவாக கணித்து விடலாம்.

      குறிப்பாக ஒரு ஜாதகத்தில் பலா பலன்களை நிர்ணயம் செய்கின்ற போது ஜனன கால தசா புக்தி இருப்பைக் கொண்டு அடுத்தடுத்து வரக்கூடிய திசை மற்றும் புத்திகளைக் கொண்டு பலா பலன்களை நிர்ணயம் செய்கின்றோம். குறிப்பாக கோட்சார பலன்கள் ஐம்பது சதவிகிதமும் தசா புக்தி பலன்கள் 50 சதவீதமும் பலன்களை வழங்கும். குறிப்பாக தசா புக்தி பலன்களை பொறுத்த வரையில் நடப்பில் உள்ள திசையானது ஜென்ம லக்னத்திற்கு யோகத்தைக் கொடுக்கக் கூடிய கிரகத்தின் திசையாக இருந்தால் தான் அனுகூலமான பலன்களை தரும்.

      குறிப்பாக ஜென்ம லக்னத்திற்கு நட்பு கிரகமாக தசா நாதன் இருந்தாலும் அவருக்கு உரிய சாதகமான இடத்தில் இருந்தாலும் நட்பு வீட்டில் அமைந்தாலும் மட்டுமே நற்பலனை வழங்குவார். அதுவே பகை வீடாக இருந்தால் அனுகூலப்பலன்கள் அடைய இடையூறுகள் உண்டாகும். உதாரணமாக சனி பகவான் 3,6,10,11ல் அமையப் பெற்றால் சனி திசையில் பலா பலன்களை வாரி வழங்கும் என்றாலும் அதுவே சனியானவர் தனக்கு பகை கிரகமான செவ்வாய், சூரியன் போன்ற கிரகங்களின் வீட்டில் அமையப் பெற்று தசா புக்தி நடைபெற்றால் கெடு பலன்களை வழங்குவார்.

      உதாரணமாக மிதுன லக்னத்திற்கு சனி பகவான் நட்பு கிரகம் என்றாலும் 6 ஆம் வீட்டில் அமையப் பெற்றால் யோகம் வழங்க வேண்டுமென்றாலும் செவ்வாயின் வீடான விருச்சிகத்தில் அமைவதால் அனுகூலப்பலன்களை வழங்காமல் நிறைய எதிர்ப்பு பகைமை எல்லாம் உண்டாக்குவார்.

      அது போல கேந்திர திரிகோணங்களில் அமைகின்ற கிரகங்களின் தசா புக்தி அனுகூலமான பலன்களை உண்டாகும் என்றாலும் தசா நாதன் பாதகாதிபதி சாரமோ 6,8,12க்கு அதிபதிகளின் சாரமோ பெற்றிருந்தால் அனுகூலமற்ற பலன்களை வழங்குவார். பொதுவாக ஜென்ம லக்னத்திற்கு நட்பு கிரகங்களின் தசா புக்தியில் தான் அனுகூலமான பலன்களை அடைய முடியும்.

      உதாரணமான நவ கிரகங்களில் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு போன்ற கிரகங்கள் ஒருவருக்கொருவர் நட்பு கிரகமாக விளங்குகிறார்கள். அது போல சனி, சுக்கிரன், புதன் போன்ற கிரகங்கள் ஒருவருக்கொருவர் நட்பு கிரகமாக விளங்குகிறார்கள். பொதுவாக ஜென்ம லக்னாதிபதியும் தசா நாதனும், ஒருவருக்கொருவர் நட்பு கிரகமாக இருந்தால் அனுகூலமான பலனை எளிதில் அடைய முடியும்.
     
பொதுவாக ஒருவருக்கு ஜென்ம கால முதல் திசை முதல் நடப்பில் இருக்கக் கூடிய தசையானது. 3வது திசையாக இருந்தால் 3வது திசையில் பெரிய அளவிற்கு முன்னேற்றங்களை அடைய முடியாது. ஒருவருக்கு 3வது திசையானது எவ்வளவு தான் யோகக்காரனாக இருந்தாலும் அனுகூலமான பலன்களை அடைய முடியாது. உதாரணமாக அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக கேது திசை வரும் 2வது திசையாக சுக்ர திசையும் 3வது திசையாக சூரிய திசையும் வரும்.
     
கேது திசையில் பிறந்தவர்களுக்கு 3வது திசையாக சூரிய திசை வருவதால் சூரிய திசை பிரகாசமான பலன்களைத் தராது. அது போல உதாரணமாக புனர்பூசம் விசாகம் பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக குரு திசையும் 2வது திசையாக சனி திசையும் 3வது திசையாக புதன் திசையும் வரும் புதன் திசை 3வது திசை என்பதால் எவ்வளவு திறமை இருந்தாலும் குரு திசையில் பிறந்தவர்களுக்கு புதன் மகா திசை நட்பில் இருக்கும் போது பெரிய அனுகூலத்தைத் தராது.
     
பொதுவாக ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களிலும் தன லாப ஸ்தானத்திலும் அமைகின்ற கிரகங்கள் பகை  கிரக சேர்க்கை பெறாமல் வலுப் பெற்று அமையப் பெற்றால் அனுகூலமான பலன்களை வழங்குவார்கள்.

      அதுவே பலம் பெற்ற கிரகமானது தசா நாதனுக்கு நட்பு கிரகமாக அமையப் பெற்று புத்தி நடைபெற்றால் அந்த யோகத்தின் பலனை வர்ணிக்க முடியாது. பொதுவாக திசையானது சுக்கிரன், புதன் சனி போன்றவை பலம் பெற்று இருந்தால் அந்த திசை காலங்களில் யோகத்தின் பலனை எவராலும் வர்ணிக்க முடியாது.