Author Topic: பெண் விடுதலை!  (Read 620 times)

Offline Yousuf

பெண் விடுதலை!
« on: April 05, 2012, 04:54:27 PM »
'உங்களின் ஆண்மக்களைக் கொன்று விட்டு உங்களின் பெண்களை விட்டு விடுவதன் மூலம் உங்களுக்குக் கடுமையான தண்டனையளித்துக் கொண்டிருந்த பிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம் காப்பாற்றியதை நினைவு கூருங்கள்'. (அல்குர்ஆன் 2:49)

    மோசே என்றழைக்கப்படும் மூஸா நபியின் காலத்தில் கொடுங்கோல் ஆட்சி நடத்தியவன் இரண்டாம் ரமேசஸ் எனும் பிர்அவ்ன். இவன் இனவாதத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்தியவன்.

    இஸ்ரவேலர்கள் என்ற சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைகள் அனைத்தையும் பறித்து, தன் இனத்தைச் சேர்ந்த கிப்தியர்களுக்கு அவர்களை அடிமைப்படுத்தியவன் இவன்.

    தனது இனவாத ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்வதற்காக அவன் கையாண்ட கொடூரமான நடவடிக்கையை இந்த வசனம் குறிப்பிடுகிறது.

    இஸ்ரவேல் சமுதாயத்தில் ஆண்குழந்தைகள் பிறந்தால் அவர்களை உடனே வெட்டிக் கொன்று விடுமாறு அவன் கட்டளையிட்டுச் செயல்படுத்தினான். ஆண்குழந்தைகள் நாளை இளைஞர்களாக வளர்ந்து தனது கொடுங்கோண்மையை எதிர்த்து விடக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை.

    அது மட்டுமின்றி இஸ்ரவேல் சமுதாயத்தின் பெண்களை தனது இனத்தவர்கள் அனுபவிப்பதற்காக அவர்களை உயிருடன் விட்டுவைத்தான்.

    ஆண் குழந்தைகளை கொன்றுவிட்டு பெண் குழந்தைகளைக் கொல்லாமல் விட்டு விட்டான் என்று சிலர் பொருள் கூறுவது தவறாகும். 'நிஸா' என்ற வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பெண் குழந்தைகளைக் குறிக்கும் சொல் அல்ல! முழுமையடைந்த பெண்களைக் குறிக்கும் சொல்லாகும்.

    ஆண் குழந்தைகளைக் கொல்லச் செய்தான் என்பதிலேயே பெண் குழந்தைகளைக் கொல்லாது விட்டு விட்டான் என்ற கருத்து அடங்கியுள்ளது.

    எனவே உங்கள் பெண்களை உயிருடன் விட்டான் என்பது பெண் குழந்தைகளைக் குறிக்காது. பருவமடைந்த பெண்களையே குறிக்கும்.
ஆண் குழந்தைகளைக் கொல்வதன் மூலமும் பெண்களை உயிருடன் விட்டுவைப்பதன் மூலமும் உங்களுக்குத் தண்டனையளித்து வந்தான் என்று இவ்வசனம் கூறுகிறது.

    ஆண் குழந்தைகளைக் கொல்வது, தண்டனை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. பெண் குழந்தைகளை உயிருடன் விடுவது எப்படித் தண்டனையான இருக்க முடியும்? இப்படிச் சிந்தித்தால் பெண் குழந்தைகளைப் பற்றி இவ்வசனம் பேசவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

    கிப்தி இனத்தவர்களின் போகப் பொருட்களாக அந்தப் பெண்கள் பயன்பட வேண்டுமென்பதற்காக அவர்களை உயிருடன் விட்டான். இஸ்ரவேல் இனப்பெண்களைக் கற்பழிப்பதற்காக அவர்களை உயிருடன் விட்டிருந்தால் தான் இது அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையாக இருக்க முடியும்.

    பெண்களை உயிருடன் விட்டு வைப்பதன் மூலம் உங்களுக்குத் தண்டனை வழங்கிக் கொண்டிருந்தான் என்பதற்கு இது தான் சரியான விளக்கமாக இருக்க முடியும்.

    இந்த இடத்தில் திருக்குர்ஆன் விரிவுரையாளர் சிலர் அளித்திருக்கும் கற்பனையான விளக்கத்தையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
பிர்அவ்ன் மன்னன் ஒரு கனவு கண்டானாம்! அக்கனவில் இஸ்ரவேல் இனத்தில் பிறக்கும் ஒரு குழந்தையால் தனது ஆட்சி பறிபோவதாகக் காட்டப்பட்டதாம். இதற்காகத்தான் ஆண்குழந்தைகளைக் கொல்ல உத்தரவிட்டானாம்!

    இது தான் அந்தக் கற்பனைக் கதை!

    பிர்அவ்ன் போன்ற கொடியவனுக் கெல்லாம் இது போன்ற கனவுகள் தோன்றும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நாளை நடக்கவுள்ள சில நிகழ்ச்சிகளை நல்லடியார்களுக்குக் கனவின் மூலம் இறைவன் உணர்த்துவான் என்பதற்கு ஆதாரம் உள்ளது. பிர்அவ்ன் போன்ற கொடியவர்களுக்கு இத்தகைய முன்னறிவிப்புகள் கிடைக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

    திருக்குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ பிர்அவ்ன் இவ்வாறு கனவு கண்டதாகவோ அக்கனவின் காரணமாகவே ஆண் குழந்தைகளை அவன் கொன்று குவித்தாகவோ எந்தச் சான்றையும் நாம் காண முடியவில்லை.

    எனவே ஆண் குழந்தைகள் வளர்ந்து தனக்கு எதிரான புரட்சியில் இறங்கிவிடக் கூடாது என்பதற்காகவே அவன் ஆண் குழந்தைகளைக் கொன்றான். அனுபவிப்பதற்காகவே பெண்களை உயிருடன் விட்டு வைத்தான் என்பது தான் சரியான விளக்கமாக இருக்க முடியும்.

    ஒரு இனத்தை அடிமைப்படுத்தவும் அவமானப்படுத்தவும் நினைப்பவர்கள் அந்த இனத்துப் பெண்களை இப்படித் தான் அனுபவித்துள்ளனர். வரலாறு நெடுகிலும் இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

    ஒரு இனம் அநியாயமாகக் கொல்லப்படுவதிலிருந்தும் அந்த இனத்துப் பெண்களை போகப் பொருட்களாகக் கருதப்பட்டு அவமானப்படுத்தப் பட்டதிலிருந்தும் நாம் விடுவித்ததை நினைவு கூருங்கள் என்று இறைவன் கூறுகிறான்.

    தனது தூதராகிய மூஸா நபியை அந்த இஸ்ரவேல் சமுதாயத்தில் பிறக்கச் செய்து அவரைக் கொன்று விடாமல் காப்பாற்றி அவர் மூலம் அந்தச் சமுதாயத்திற்கு விடுதலை பெற்றுத் தந்தான்.

    மூஸா நபியவர்கள் ஏகத்துவக் கொள்ளையைப் போதித்ததுடன் நின்று விடாமல் ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலைக்காகவும் உரத்துக் குரல் எழுப்பினார்கள்.

    எங்களுடன் இஸ்ரவேல் இனத்தை அனுப்பிவிடு! அவர்ளைத் துன்புறுத்தாதே (அல்குர்ஆன் 20:47) என்று கொடுங்கோல் மன்னன் பிர்அவ்னிடம் உரத்துக் குரல் எழுப்பினார்கள். இறைவனின் அருளால் அவர்களை மீட்டெடுத்தார்கள்.

    இறைத்தூதர்களின் பணி ஏகத்துவக் கொள்கைப் பிரச்சாரத்துடன் முடிவடைவதில்லை. ஒடுக்கப்பட்ட இனத்துக்காகவும் பெண் விடுதலைக்காகவும் பாடுபடுவதும் அவர்களின் பணிகளில் ஒன்றாகும். இந்த வசனத்திலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.