தமிழ்ப் பூங்கா > பொதுப்பகுதி

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்

<< < (2/5) > >>

Global Angel:
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 6

                                                                 

ஒரு பலம் உங்களை உயர்த்தி விடலாம்!

ஒரு பலவீனம் ஒருவரை அழித்து விடலாம் என்பதைப் போலவே ஒரு பலம் ஒருவரை மிகவும் உயர்ந்த நிலைக்கு உயர்த்தியும் விடலாம். அப்படி உயர்த்தப்பட்ட மனிதரின் பலத்தை மட்டுமே உலகம் பார்த்து சிலாகிக்கிறதே ஒழிய அவருடைய குறைபாடுகளை உலகம் கண்டு கொள்வதில்லை.


விஸ்வநாதன் ஆனந்திற்கு கிரிக்கெட் விளையாடத் தெரியுமா என்றோ நன்றாகப் பாடத் தெரியுமா என்றோ உலகம் கவலைப்பட்டதில்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமி எப்படி சமைப்பார் என்பதோ அவருக்கு வரலாறு எந்த அளவுக்குத் தெரியும் என்பதோ எவருக்கும் தேவையில்லாத விவரங்களாக இருக்கின்றன. ஒரு துறையில் ஒருவர் முத்திரை பதித்த பின் அந்த நபரின் மற்ற பலவீனங்கள் அந்தப் பலத்தையே தகர்த்து விடுவதாக இல்லாத வரையில் அலட்சியப் படுத்தத் தக்கவையாகவே இருந்து விடுகின்றன.


எனவே ஒருவனுக்குப் பல பலங்கள் இருந்தாலும் ஒரு மிகப்பெரிய பலவீனம் அவனை அழித்து விடலாம் என்பது போலவே, பல பலவீனங்கள் இருந்தாலும் ஒரு மிகப்பெரிய பலம் அவனை சிறப்பாக உயர்த்தியும் விடலாம் என்பதும் உண்மை. ஒரு சாதாரண மனிதனுக்கு மட்டுமல்ல ஒரு அரசனுக்கே இது பொருந்தும் உண்மை என்பதை ஒரு வரலாற்று உதாரணம் மூலமாகவே விளக்கலாம்.


சத்ரபதி சிவாஜியின் பேரன் ஷாஹூஜி தன் ஏழாம் வயதிலிருந்து இருபத்தைந்தாம் வயது வரை முகலாயர்களின் பிடியில் இருந்தவர். சிவாஜியின் மூத்த மகன் சாம்பாஜியைக் கொன்ற முகலாயர்கள் அவர் மனைவியையும், மகன் ஷாஹூஜியையும் தங்கள் வசமே சிறைப்படுத்தி வைத்திருந்தனர். கிட்டத்தட்ட தன் விளையாட்டுப் பருவத்தையும், இளமைப்பருவத்தையும் எதிரிகளான முகலாயர்கள் வசத்தில் இருந்து தொலைத்து விட்ட ஷாஹூஜி பின் அவர்களால் விடுவிக்கப்பட்டு மராட்டிய மன்னராக ஆனார். அப்போதும் மராட்டிய மண்ணில் ஒரு பகுதி அவர் சித்தப்பா மனைவி தாராபாய் ஆட்சியில் இருந்தது. ஷாஹூஜியின் தாயையோ முகலாயர்கள் இன்னும் தங்கள் பிடியிலேயே வைத்திருந்தனர். ஷாஹுஜி தங்களுக்கு எதிராக நடந்து கொண்டால் அவருடைய தாயை அழித்து விடுவதாக பயமுறுத்தியும் வைத்திருந்தனர்.


இப்படி பல்வேறு சிக்கல்களில் ஆட்சியில் அமர்ந்த ஷாஹுஜி பெரிய போர்வீரர் அல்ல. முகலாயர் பிடியிலேயே இளமையைக் கழிக்க வேண்டி இருந்ததால் ஒரு இளவரசனாக வளராததால் போர்வீரனாக அவர் பயிற்சிகளால் உருவாக்கப்படவில்லை. ஒரு அரசருக்குத் தேவையான வீரமோ, போர்த்திறமையோ இல்லாத ஷாஹூஜியிற்கு ஒரே ஒரு திறமை இருந்தது. ஒரு மனிதரை எடை போடுவதில் அவர் வல்லவராக இருந்தார். எதிரிகளிடமே வளர்ந்ததால் எவனை எதில் நம்பலாம், எது வரை நம்பலாம், எதில் நம்பக்கூடாது என்கிறதெல்லாம் கணிக்கக் கூடிய திறமையை அவர் இயல்பாகவே பெற்றிருந்தார். அந்த ஒரு திறமை அவருடைய மற்றெல்லா பலவீனங்களையும் ஒரு பொருட்டல்லாதவையாக ஆக்கி விட்டது.


நம்பிக்கைக்குப் பாத்திரமான திறமையான மனிதர்களைத் தனக்கு உதவியாக வைத்துக் கொண்டு ஆட்சி நடத்த ஆரம்பித்த அவர் சிறிது சிறிதாக தன் அரசைப் பலப்படுத்தினார். மராட்டியத்திலேயே தனக்கு எதிராக ஒரு பகுதியை ஆட்சிபுரிந்த தாராபாயை அப்புறப்படுத்தி ஒரே மராட்டிய அரசாக்கித் தானே சக்கரவர்த்தியானார். முகலாயர் பிடியிலிருந்த தாயைத் தன் பக்கம் வரவழைத்துக் கொண்டார். திறமைசாலிகளை சமூகத்தின் எல்லா பாகங்களில் இருந்து கண்டறிந்து அவர்களை ஆட்சிப் பொறுப்பில் முக்கிய இடம் கொடுத்து அதிகாரத்தையும் வழங்கி மாபெரும் மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கினார். அவர் காலத்தில் தான் மராட்டிய சாம்ராஜ்ஜியம் இந்தியாவில் மிகப்பெரிய விஸ்தீரணத்தைக் கண்டது. அவர் காலத்தில் கல்வி, சட்டம், சமூகநிலை போன்ற எல்லாத் துறைகளும் பெரிய சீர்திருத்தம் கண்டன. திறமையானவர்கள் பெரும் பொறுப்பும் அதிகாரமும் பெற்றனர். அதே சமயத்தில் அவர்கள் சக்கரவர்த்திக்கு கடைசி வரை விசுவாசமாக இருந்தனர்.


தன்னை விடப் பெரிய திறமைசாலிகளையும், பலசாலிகளையும் உதவியாக வைத்து அரசாண்டதுமல்லாமல் அவர்கள் தன்னிடம் மாறாத விசுவாசத்துடன் எப்போதும் இருக்கும்படி அவர்களைத் தன் இனிய குணத்தாலும், புத்திசாலித்தனத்தாலும் வைத்துக் கொண்டது தான் சத்ரபதி ஷாஹுவின் ஒரே பலம் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். இப்படி ஒரு மிகப்பெரிய பலத்தை வைத்து ஒரு சாம்ராஜ்ஜியத்தையே நடத்த முடியும் போது ஒரு வாழ்க்கையை சிறப்பாக நடத்துவது தானா கஷ்டம்? யோசியுங்கள்.


உங்கள் குறைகளும், பலவீனங்களும் உங்கள் வாழ்க்கையையே சீரழிக்கும் அளவுக்குப் பெரிதாக இல்லாதவரை நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. சிலவற்றில் நீங்கள் பூஜ்ஜியமாகக் கூட இருக்கலாம். உங்களைச் சுற்றியுள்ள பலரும் அவற்றில் பெரிய திறமையாளர்களாகக் கூட இருக்கலாம். யாராவது அதுபற்றிக் கேட்டால் சொல்ல தர்மசங்கடமாக இருக்கக் கூடும் என்றாலும் உங்கள் வாழ்க்கை அந்த ஒன்றிலேயே தீர்மானிக்கப்பட்டு விடுவதில்லை என்பதை உறுதியாக அறிந்திருங்கள். உங்கள் இயல்பிலேயே இல்லாத திறமை, எவ்வளவு முயன்றாலும் புளியங்கொம்பாக இருக்கின்ற திறமை என்றால் அது உங்களுக்கானதல்ல என்பதை உணர்ந்து ஏற்றுக் கொண்டு விடுங்கள். அதற்காக நீண்ட காலம் போராடி வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.


உங்கள் உண்மையான திறமைகளின் பக்கம் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். எது உங்களுக்கு மற்றவர்களை விட சுலபமாகவும் இயல்பாகவும் வருகிறதோ எதைச் செய்யும் போது உற்சாகமாகவும் திருப்தியாகவும் உணர்கிறீர்களோ அது உங்கள் உண்மையான பலம். அது ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில்லை. அது ஒன்றை விட அதிகமாகக் கூட இருக்கலாம். அவற்றில் ஏதோ ஒன்று உங்களை இந்த உலகத்திற்கு அடையாளம் காட்டலாம்.


விஸ்வநாதன் ஆனந்தை செஸ் அடையாளம் காட்டியது போல, சச்சின் டெண்டுல்கரை கிரிக்கெட் அடையாளம் காட்டியது போல, ஏ.ஆர்.ரஹ்மானையும், இளையராஜாவையும் இசை அடையாளம் காட்டியது போல, சுஜாதாவை எழுத்து அடையாளம் காட்டியது போல, ராமானுஜத்தை கணிதம் அடையாளம் காட்டியது போல உங்களையும் ஒரு திறமை உலகத்திற்கு அடையாளம் காட்டலாம்.


அப்படி உலகத்திற்கு அடையாளம் காட்டா விட்டாலும் கூட ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை வாழ அந்த ஒரு திறமை உங்களுக்கு வழி காட்டலாம். கணக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதில் மிகத் திறமையான ஒரு ஆசிரியர் ப்ளஸ் டூ மாணவ மாணவியருக்கு சில மணி நேர டியூஷன் எடுப்பதன் மூலமாக வெற்றிகரமான ஒரு சாஃப்ட்வேர் இன்ஜீனியரை விட அதிகமாக சம்பாதிப்பதை நான் பார்த்திருக்கிறேன். வித்தியாசமாகவும், கச்சிதமாகவும் தைக்கத் தெரிந்த ஒரு பெண்மணி பெண்களுக்கு ஜாக்கெட் தைத்துக் கொடுத்தே கைநிறைய சம்பாதிப்பதையும் பார்த்திருக்கிறேன். இதே போல எத்தனையோ தனித் திறமைகளால் வெற்றிகரமாக வாழும் மனிதர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.


எனவே உங்களுக்கு என்னவெல்லாம் தெரியாது என்று உலகம் கேட்கப் போவதில்லை. அதைப் பற்றி அது கவலைப்படுவதுமில்லை. உங்களுக்கு என்ன தெரியும், எந்த அளவு தெரியும், அதில் கூடுதலான உங்கள் தனித்திறமை என்ன என்று தான் உலகம் பார்க்கிறது. அதை வைத்தே உலகம் உங்களை உபயோகப்படுத்துகிறது. எனவே எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறேன் என்று எல்லாவற்றையும் ஓரளவு தெரிந்து கொள்வதை விட உங்கள் உண்மையான திறமையைக் கண்டு பிடித்து அதை நன்றாக வளர்த்துக் கொள்ளுங்கள். அது தான் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கப் போகும் பலம். அப்படி ஒரு பலம் உங்களுக்கு உறுதியாகக் கிடைத்து விட்டால் உலகிற்கு நீங்கள் கண்டிப்பாகத் தேவைப்படுவீர்கள். அதற்கான விலையாக உங்களுக்கு வேண்டியதை இந்த உலகம் கண்டிப்பாக கொடுத்தே தீரும்.

மேலும் படிப்போம்....

Global Angel:
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 7
                                                               
நாவினால் சுட்டு நஷ்டப்படாதீர்கள்!

எதைக் காக்கா விட்டாலும் பரவாயில்லை நாக்கையாவது காக்கச் சொன்னார் திருவள்ளுவர். ஏனென்றால் எத்தனையோ சோகங்களுக்கு நாக்கு தான் மூல காரணமாக இருக்கின்றது. எத்தனையோ குடும்பங்களில் நாக்கினால் தான் நிம்மதி காணாமல் போகின்றது.


நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி நான்கு வார்த்தைகள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் பல நேரங்களில் மேலோங்குவது இயற்கை. சரியான சந்தர்ப்பம் கிடைக்கிற போது அப்படி மற்றவர்களைக் கேட்காமல் இருக்க பலராலும் முடிவதில்லை. அப்படிக் கேட்டு விடும் போது அந்த நேரத்தில் கிடைக்கின்ற திருப்தியே அலாதி என்றாலும் அப்படிக் கேட்டு விட்டு என்றென்றுமாய் சம்பந்தப்பட்ட மனிதர்களைப் பகைத்துக் கொள்கிறோம் என்பதைப் பலரும் மறந்து விடுகிறோம்.


யாருமே குற்றமற்றவர்கள் அல்ல. எல்லோரும் ஏதாவது சில சமயங்களில் பலவீனர்களாகவே இருந்து விடுகிறோம். பலரும் ஒருசில விஷயங்களில் எப்போதுமே பலவீனர்களாகவே இருக்கிறோம். சிலவற்றை காலப் போக்கில் திருத்திக் கொள்கிறோம். சிலவற்றை காலம் கூட நம்மிடம் மாற்ற முடிவதில்லை. அப்படி இருக்கையில் கடுமையான கூர்மையான வார்த்தைகளால் சிலரின் சில குறைகளையும், குற்றங்களையும் சாடுவது சரியல்ல. யாரை அப்படிச் சாடுகிறோமோ அவர்களும் நம்மை அப்படியே சாடுவதற்கு சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இன்றில்லா விட்டாலும் என்றாவது அந்த சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்தியும் தரக் கூடும். “அன்று என்னைப் பெரிதாகக் கேட்டாயே நீ மட்டும் ஒழுங்கா?” என்கிற ரீதியில் அவர்கள் கேட்க, நாம் ஆத்திரப்பட விளைவாக ஒரு நீண்ட பகை உருவாகி விடுகிறது.


குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பார்கள். ஒவ்வொரு குற்றத்திற்காக ஒவ்வொருவரை நம் நாக்கால் பதம் பார்க்க ஆரம்பித்தால் பின் சுற்றம் என்பதே நம்மைச் சுற்றி இருக்காது. நாம் தனியராகி விடுவோம். சுற்றம் மட்டுமல்ல நண்பர்களும் நமக்கு மிஞ்ச மாட்டார்கள்.


இன்றைய குடும்பங்களில் விவாகரத்துகள் அதிகரிக்க மிக முக்கியக் காரணம் கட்டுப்படுத்தாத நாக்கு தான். உப்புசப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் கூர்மையான கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்தி விடுவது தான். ஒருகாலத்தில் வேறு வழியில்லை என்று சேர்ந்திருந்தார்கள். பொறுமையாக இருந்தார்கள். இன்று அந்த நிலை இல்லை.


இன்றைய விவாகரத்து வழக்குகளில் இரு தரப்பினரும் சொல்கின்ற காரணங்களில் உண்மையான சித்திரவதை, பெரிய குறைபாடுகள் போன்ற காரணங்கள் குறைவு என்றும் பெரும்பாலான காரணங்கள் சிறுபிள்ளைத்தனமானவை ஆகத்தான் இருக்கின்றன என்கிறார் ஒரு மூத்த வக்கீல். பள்ளி செல்லும் பிள்ளைகள் போட்டுக் கொள்ளும் சண்டைகளுக்கான காரணங்கள் போலத் தான் அவை இருக்கின்றன என்கிறார். குடும்பம் இரண்டாய் பிரிகிற போது அந்தக் குழந்தைகள் நிலை பரிதாபகரமானது என்பது கூட கவனிக்கப்படுவதில்லை என்கிறார் அவர். பெரும்பாலான தம்பதிகள் கடைசியாகச் சொல்கிற காரணம் இது தானாம். “அந்த அளவு பேசி விட்ட பிறகு அந்த மனிதருடன்/மனுஷியுடன் இனியும் கூட வாழ்வது சாத்தியமில்லை”.


தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு.

என்கிறார் வள்ளுவர். நாவினால் சுட்ட வடுக்கள் ஆறுவதில்லை. நினைக்க நினைக்க காயங்கள் மேலும் மேலும் ஆழப்படத்தான் செய்கின்றன. சம்பந்தப்பட்ட தவறுகள் கூட பல சந்தர்ப்பங்களில் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் சொல்லப்பட்ட வார்த்தைகள் மன்னிக்கப்படுவதில்லை, மறக்கப்படுவதுமில்லை.


ஒருவர் எத்தனையோ விஷயங்களில் நல்லவராக இருக்கக் கூடும். அவர் மற்றவர்களுக்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கவும் கூடும். ஆனால் கட்டுப்பாடில்லாமல் வார்த்தைகளால் மற்றவர்களை அவர் வேதனைப்படுத்துவாரேயானால் அத்தனை நன்மைகளும், உதவிகளும் மங்கிப் போகும். பேசிய அந்த கடுஞ்சொல் மட்டுமே பிரதானமாக நிற்கும்.


இது குடும்பத்திற்குள்ளும், உறவினர்களுக்குள்ளும் மட்டும் பூதாகரமாகும் ஒரு பிரச்சினை அல்ல. அக்கம் பக்கத்திலும், அலுவலகத்திலும், பொது இடங்களிலும் கூட நம் அமைதியை நிர்ணயிக்கும் ஒன்றாக இருந்து விடுகிறது. ஒருசில நிமிடங்களில் மறந்து விடக்கூடிய எரிச்சல் மிகுந்த சந்தர்ப்பங்களைக் கூட சுடுசொற்களால் பெரிய விஷயமாக்கிக் கொள்கிற எத்தனையோ உதாரணங்களை நம் தினசரி வாழ்க்கையில் காண முடியும்.


அதற்கென்று யார் என்ன சொன்னாலும் பொறுத்துக் கொண்டே போக வேண்டியதில்லை. நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை சகித்துக் கொண்டே இருந்து விடத் தேவையில்லை. தவறுகளை சுட்டிக் காட்டுவதும், உறுதியுடன் நம் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க வேண்டியதும் சில நேரங்களில் அவசியமாகவே இருக்கின்றது. அது போன்ற சந்தர்ப்பங்களில் சொல்ல வேண்டியதை உறுதியாகவும், தெளிவாகவும் சொல்லுங்கள். ஆனால் வார்த்தைகளில் விஷம் வேண்டாம், விஷமமும் வேண்டாம். சொல்வது நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தால் அது அப்போது ஒத்துக் கொள்ளப்படாவிட்டாலும் கூட சம்பந்தப்பட்டவர்களால் உணரப்படும். அப்போது சற்று சங்கடமாக இருந்தாலும் சீக்கிரமாகவே மறக்கப்படும். ஆனால் வார்த்தைகளில் விஷம் தோய்ந்திருக்குமானால் சொல்கின்ற செய்தி உண்மையாகவே இருக்குமானாலும் அது ஆறாத வடுவாக அடுத்தவர் மனதில் தங்கி விடும். நீண்ட பகைமை பிறந்து விடும்.


பல பேர் குறைகளைச் சுட்டிக் காட்டும் போது சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தையும் சேர்ந்து இழுப்பார்கள். “உங்கள் குடும்பத்திற்கே இந்த புத்தி அதிகம் இருக்கிறது” என்கிற விதத்தில் பேச்சிருக்கும். இது போதும் வெறுப்பின் ஜுவாலையைக் கிளப்ப. சிலர் தேவையில்லாத கடுமையான, குத்தலான அடைமொழிகளைச் சேர்ப்பார்கள். சொல்கின்ற சங்கதியை அந்த அடைமொழி அமுக்கி விடும். இப்படி நாவினால் சுடும் விதங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.


சிலர் பேசுவதை எல்லாம் பேசி விட்டுப் பின்னர் “ஏதோ ஒரு கோபத்தில் சொன்னதை எல்லாம் பெரிது படுத்துவதா?” என்று இறங்கி வரக்கூடும். ஆனால் கேட்டு வேதனைப்பட்டவர்கள் அதில் சமாதானமாக முடிவது கஷ்டம் தான். கோபம் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்கான அங்கீகாரம் அல்ல. எனவே திருப்பி வாங்க முடியாத வார்த்தைகளைப் பேசாமலேயே இருப்பது தான் அறிவு.


எல்லோரும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நமக்கு உதவக்கூடிய நிலையில் இருக்கக் கூடும். அல்லது நம்மை பிரச்சினைக்குள்ளாக்க முடிந்த நிலையில் கூட இருக்கக் கூடும். அந்த நேரத்தில் நாம் பேசிய கடுமையான வார்த்தைகள் மட்டுமே அவர்களுக்கு நினைவு வரக்கூடுமானால் நமக்கு அவர்களால் பெரும் நஷ்டமே நேரக்கூடும்.


எனவே வார்த்தைகளால் ஜெயித்து விட்டு வாழ்க்கையில் தோற்றுப் போகாதீர்கள். வார்த்தைகளைத் தீட்டுவதற்குப் பதிலாகப் புத்தியைத் தீட்டுங்கள். குத்தல் பேச்சும், கிண்டல் பேச்சும் அந்த நேரத்தில் நன்றாகத் தெரியலாம். கூட இருப்பவர்களிடம் ’சபாஷ்’ கூடப் பெறலாம். ஆனால் அந்தப் பேச்சால் முக்கியமான மனிதர்களை இழந்து விட்டால், இடையே உள்ள அன்பு முறிந்து விட்டால் உண்மையில் நமக்கு நஷ்டமே என்பதை என்றும் மறக்காதீர்கள்.


மேலும் படிப்போம்.....

Global Angel:
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 8

                                                       

சோதனைகளில் புலப்படும் சாதனை வழிகள்!


அந்த இளைஞனுக்கு வித்தியாசமாய் கார்ட்டூன்கள் வரையும் திறமை இருந்தது. ஆனால் அவன் பல பிரபல பத்திரிக்கைகளில் கார்ட்டூனிஸ்டாக வேலைக்குச் செல்ல முயற்சி செய்தும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. அவர்கள் அவனுக்கு சரியாக வரையத் தெரியவில்லை என்ற காரணம் கூறி வேலை தர மறுத்து விட்டார்கள். அவன் ஆம்புலன்ஸ் டிரைவராக சில காலம் வேலை பார்த்தான். அவன் சகோதரன் சிபாரிசின் பேரில் இடை இடையே விளம்பரங்களுக்கு சில ஓவியங்கள் வரைந்து கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைச் செய்து கிடைத்த சொற்ப சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்தி வந்தான் அந்த இளைஞன்.


ஒரு முறை ஒரு சர்ச் பாதிரியார் சில ஓவியங்கள் வரைந்து தரும் வேலையை அவனுக்குத் தந்தார். வரைய சர்ச் அருகில் இருந்த ஒரு பழைய கட்டிடத்தை அவனுக்கு ஒதுக்கித் தந்தார் அந்த பாதிரியார். அந்தக் கட்டிடத்தில் எலிகளின் தொந்திரவு மிக அதிகமாக இருந்தது. வரைய அந்த இடம் சாதகமாக இல்லை. அங்கு ஒரு சுண்டெலியின் அட்டகாசமோ அதிகமாக இருந்தது. அந்த மோசமான சூழ்நிலையிலும் அந்த சுண்டெலியால் கவரப்பட்ட இளைஞன் அந்த சுண்டெலியை ஒரு இறவாத கதாபாத்திரமாகப் பின்னாளில் படைத்து விட்டான். அந்த இளைஞனின் பெயர் வால்ட் டிஸ்னி. அவன் படைத்த பாத்திரம் மிக்கி மவுஸ். பல கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களை வால்ட் டிஸ்னிக்கு சம்பாதித்துத் தந்தது அந்த மிக்கி மவுஸ்.


இன்னொரு உதாரணமாக ஒரு அமெரிக்க முதியவரைப் பார்ப்போம். அறுபது வயதில் இருந்த வேலை போய், சேர்த்த செல்வமும் பெரிதாக எதுவும் இல்லாமல் எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாக நின்றார் அவர். சிறிய வயதில் இருந்தே அவர் சந்தித்த சோதனைகள் ஏராளம். தந்தை அவருடைய சிறு வயதிலேயே இறந்து விட அம்மா வேலைக்குப் போக வேண்டி வந்தது. எனவே சிறுவனாக இருக்கும் போதே அம்மா வேலைக்குப் போகும் போது மற்ற சகோதர சகோதரிகளைப் பராமரிக்கும் பொறுப்பு அவருக்கு இருந்தது. அம்மா வீட்டில் இருக்கையிலும் சமையலில் தாயிற்கு உதவும் வேலையும் இருந்தது.


அம்மாவிற்கு உதவியதால் சமையல் அவருக்கு நன்றாக வந்தது. எனவே ஓட்டல்களில் சமையல்காரராக வேலை செய்து தன் வாழ்க்கையை நடத்தினார். பின் ஒரு சிறிய நகரத்தில் சிறிய ஓட்டல்கடையை நடத்தினார். அவர் தாயாரின் கைப்பக்குவத்தில் அவர் கற்றிருந்த சிக்கன் வருவல் வாடிக்கையாளர்களிடம் மிக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ஒரு கட்டத்தில் அந்த நகரத்தில் ஏற்பட்ட சில மாற்றங்கள் காரணமாக அவர் அந்தக் கடையையும் மூட வேண்டி வந்தது. அப்போது அவருக்கு வயது அறுபதைத் தாண்டி இருந்தது. வயதானவர்களுக்கு அரசாங்கம் தரும் பாதுகாப்பு தொகை 100 அமெரிக்க டாலர்களில் வாழ்க்கை நடத்த முடியாமல் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.


அவருக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த சிக்கன் வருவலை அமெரிக்க ஓட்டல்களுக்கு விற்க அவர் தீர்மானித்தார். நாடெங்கும் பயணித்து பெரிய ஓட்டல்களுக்குச் சென்று அங்கேயே சிக்கன் வருவலைத் தயாரித்து சுவைக்கத் தந்து பார்த்தார். ஆனால் அந்த ஓட்டல்கள் அவருடைய சிக்கன் வருவலில் ஆர்வம் காட்டவில்லை. ஒன்றல்ல இரண்டல்ல 1008 ஓட்டல்கள் நிராகரித்தன. கடைசியில் 1009 ஆவது ஓட்டல்காரர் பீட் ஹார்மன் என்பவர் அதில் ஆர்வம் காட்டினார். அவருடன் கூட்டு சேர்ந்து "Kentucky Fried Chicken" என்ற தொழிலை 1952 ஆம் ஆண்டு உருவாக்கினார் அந்த முதியவர். அவர் பெயர் கர்னல் ஹார்லாண்ட் சாண்டர்ஸ். 1960 ஆம் ஆண்டில் 600 க்கும் மேற்பட்ட கிளைகள் உருவாகி அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வசூலில் பெரும் சாதனை படைத்தது அவருடைய சில்லி வருவல். 1964 ல் தன் நிறுவனத்தை இருபது லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு விற்றார் கர்னல் சாண்டர்ஸ். கடைசி வரை பெரும் செல்வந்தராகவே வாழ்ந்த அவர் 1976 ல் உலகத்தின் பிரபலஸ்தர்களில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார்.


சோதனைகளைக் கடக்காமல் சாதனைகள் இல்லை. வெற்றியின் அளவு பெரிதாகப் பெரிதாக சோதனைகளின் அளவும் பெரிதாகவே இருந்திருக்கின்றன. இன்று நம்மை பிரமிக்க வைக்கும் அத்தனை வெற்றியாளர்களும் இப்படி பல சோதனைகளைக் கடந்து சாதனைகள் படைத்தவர்களே.


வெற்றிக்குத் திறமைகள் மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. மேலே சொன்ன உதாரணங்களில் வால்ட் டிஸ்னியும், கர்னல் சாண்டர்ஸும் தங்கள் வெற்றிக்கான திறமைகளை ஆரம்பத்திலேயே பெற்றிருந்தார்கள். ஆனால் உலகம் அவர்களை அங்கீகரிக்க நிறையவே காலம் எடுத்துக் கொண்டது. அது வரை அவர்கள் கண்டது சோதனைக் காலங்களே. அந்தக் காலத்தில் அவர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் போயிருந்தால் வரலாற்றில் அடையாளம் தெரியாமல் அழிந்து போயிருப்பார்கள். சோதனைக்காலங்களே இல்லாமல் போயிருந்தாலும் அவர்கள் இப்படி முத்திரை பதிக்குமளவு சரித்திரம் படைத்திருக்க மாட்டார்கள்.


வால்ட் டிஸ்னிக்கு ஆரம்பத்திலேயே ஒரு பிரபல பத்திரிக்கை கார்ட்டூனிஸ்டாக வாய்ப்பு கொடுத்திருந்தால் அவர் ஒரு நல்ல வருவாயுடன் பாதுகாப்பாக வாழ்க்கை வாழ்ந்து கோடிக்கணக்கான மனிதர்களில் ஒருவராக இருந்திருக்கலாமே ஒழிய கோடிக்கணக்கான செல்வம் படைத்து புகழையும் பெற்றிருக்க முடியாது. கர்னல் சாண்டர்ஸ் அந்த சிறிய நகரத்தில் நடத்தி வந்த ஓட்டல் கடையை மூட நேர்ந்திரா விட்டால் ஓரளவு வசதியான சம்பாத்தியம் செய்து நடுத்தர வாழ்க்கையை ஓட்டியிருக்கலாமே ஒழிய இத்தனை செல்வத்தையும், புகழையும் அடைந்திருக்க முடியாது.


உண்மையில் சோதனைக் காலங்கள் அர்த்தம் மிகுந்தவை. அந்தக் காலத்தில் தான் உண்மையில் ஒருவன் தன்னை அடையாளம் கண்டு கொள்கிறான். அந்தக் காலத்தில் தான் விதி அவனுக்கு நிறைய கற்றுக் கொடுக்கிறது. சோதனைக் காலங்களின் பாடங்கள் இல்லாமல் யாருமே வெற்றிக்கான பக்குவத்தைப் பெற்று விடுவதில்லை. எனவே மாபெரும் வெற்றியை விரும்புபவர் எவரும் சோதனைக் காலத்தில் சோர்ந்து விடக்கூடாது.


சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவருக்கு


என்று வள்ளுவர் கூறுவது போல் நெருப்பிலே இட்டு சுடச்சுடத் தான் தங்கம் மின்னும். மனிதனும் சோதனைகள் மூலமாகவே சாதனைகளுக்கான வழியைக் கற்றுக் கொள்கிறான். சோதனைக் காலத்தில் சோர்ந்து விட்டால் அந்தக் காலம் காட்டும் புதுப் பாதைகள் நம் கண்ணில் படாமலேயே இருந்து விடக்கூடும்.


விதி சோதிக்கும் போது பெரிய வெற்றிக்கு இந்த மனிதன் ஏற்றவன் தானா என்று கூர்ந்து கவனிக்கிறது. புலம்புவதும், குற்றம் சாட்டுவதுமாகவே அவன் இருந்து விடுகிறானா இல்லை தாக்குப் பிடிக்கிறானா என்றும் கவனிக்கிறது. தாக்குப் பிடித்து மனிதன் தன் தகுதியை நிரூபிக்கும் போது பிறகு விதி அவனுக்கு வழி மட்டும் காட்டுவதில்லை. பின்னர் அவனிடம் மிகவும் தாராளமாகவே நடந்து கொள்கிறது. அவன் எதிர்பார்த்ததற்கும் பல மடங்கு அதிகமாகவே அவனுக்கு வெற்றியைத் தந்து அவனைக் கௌரவிக்கிறது.


எனவே சோதனைகள் வரும் போது இதை நினைவில் கொள்ளுங்கள். தாக்குப் பிடியுங்கள். பாடம் படியுங்கள். பக்குவம் அடையுங்கள். ஒரு கட்டத்தில் எங்கோ ஒரு கதவு கண்டிப்பாகத் திறக்கும். அதன் வழியாகப் பயணித்து சோதனையைக் கடந்து சாதனை படையுங்கள்.


மேலும் படிப்போம் ....

Global Angel:
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 9

                                                       

சலிப்படைந்தால் சாதனை இல்லை!

ஒவ்வொரு மகத்தான சாதனைக்குப் பின்னும் கடுமையான, முறையான உழைப்பு இருக்கிறது. சலித்துப் போகாத மனம் இருக்கிறது. இந்த இரண்டும் இல்லாமல் எந்த சிறந்த சாதனையும் நிகழ்ந்து விடுவதில்லை. சாதனைகளைப் பாராட்டுகின்ற மனிதர்கள் சாதித்தவர்களின் திறமைகளைத் தான் பெரும்பாலும் சாதனைகளின் காரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கென சலிக்காமல் உழைத்த உழைப்பை அதிகமாக யாரும் கவனத்தில் கொள்வதில்லை. ஏனென்றால் பரிசுகளும் பாராட்டுகளும் குவியும் போது தான் அவர்களைக் கவனிக்கிறோம். புகழ் சேரும் போது தான் சுற்றி ஒரு கூட்டமும் சேர்கிறது. அந்த ஒரு நிலை வரும் வரையில் அவர்கள் உழைக்கும் போது அவர்கள் தனியர்களே. அவர்கள் இருப்பதைக் கூட உலகம் அறியாமலேயே இருந்து விடவும் கூடும்.



திறமை மிக முக்கியம். அது தான் முதல் தேவையும் கூட. திறமை இல்லாவிட்டால் உழைப்பு வீண் தான். ஆனால் திறமை இருந்தும் அதற்காக உழைக்கா விட்டால் திறமையும் வீண் தான். இதற்கு எத்தனையோ உதாரணங்களை நாம் நம்மைச் சுற்றியும் பார்க்கலாம்.  திறமையும் முக்கியம், உழைப்பும் முக்கியம் என்றாலும் எது எந்த அளவு முக்கியம் என்ற கேள்விக்கு விஞ்ஞானி எடிசன் ”1% திறமையும் 99% உழைப்பும்” வெற்றிக்குத் தேவை என்கிறார். இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் புரிந்த அவரைக் காட்டிலும் பொருத்தமான வேறு நபர் இருக்க முடியாது என்பதால் அதை வெற்றிக்கான சூத்திரமாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.


உலக வரலாற்றில் இரண்டு துறைகளில் நோபல் பரிசுகள் பெற்றவர்கள் இருவர். அதில் முதலாமவர் மேரி கியூரி அம்மையார். இயற்பியல், வேதியியல் என்ற இரண்டு துறைகளில் 1903, 1911 ஆம் ஆண்டுகளில் அவர் நோபல் பரிசுகள் பெற்றார். வேதியியலில் நோபல் பரிசு கிடைக்கக் காரணமாக இருந்த ரேடியத்தைக் கண்டுபிடிக்க அவர் உழைத்த உழைப்பு கொஞ்ச நஞ்சமல்ல. அவருக்கு ஆராய்ச்சிக்கேற்ற வசதிகளை செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. குதிரை லாயமே அவரது ஆராய்ச்சி சாலையாக அமைக்கப்பட்டது. பொருளை அரைப்பது, கழுவுவது, அடுப்பு மூட்டி சூடாக்குவது போன்ற சில்லறை வேலைகளைச் செய்யக்கூட வேலையாட்கள் இல்லை. அந்த வேலைகளை அவரே தான் செய்தார். கனிமத்தை அரைக்கும் எந்திரத்தைச் செக்குமாடுகள் போல அவரே இழுத்து அரைத்தார். இப்படி ஒரு நாள், இரு நாளில்லை பல ஆண்டு காலம் பல துன்பங்களை ஏற்று உழைத்துத் தான் ரேடியத்தை அவர் கண்டுபிடித்தார்.


இப்படி ஒவ்வொரு உண்மையான உயர்ந்த சாதனையின் பின்னும் பெரும் உழைப்பு இருக்கிறது. வெற்றிக்கான முயற்சிகளில் பல சமயங்களில் செய்ததையே தொடர்ந்து பல காலம் செய்ய வேண்டி இருக்கும். அந்த உழைப்பு சுவாரசியமானதாக இருப்பது மிக அபூர்வம். எடிசன் குறிப்பிட்ட 1% திறமை இருப்பவர்கள் ஏராளம். ஆனால் அந்த 99% உழைப்பு என்று வரும் போது தான் பல திறமையுள்ளவர்கள் பின்வாங்கி விடுகிறார்கள். அவர்களுக்கு தொடர்ந்த ஒரே மாதிரியான  உழைப்பில் சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. ஒருசில முயற்சிகளில் பலன் கிடைத்து விட வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் சாதனை என்பது என்றுமே சாத்தியமில்லை.


தென்னாப்பிரிக்காவில் பல்லாயிரக்கணக்கான ஆட்கள் சுரங்கத்தைத் தோண்டி வைரத்தை வெட்டி எடுக்கிறார்கள். பல டன் எடையுள்ள மண்ணைத் தோண்டி அப்புறப்படுத்தும் போது தான் அதில் சிறிய வைரத்துண்டு கிடைக்கிறது. தோண்டி எடுப்பதில் வைரத்தை விட மண் தான் அதிகமாகக் கிடைக்கிறது என்று சலிப்படைவதில் அர்த்தமில்லை. அப்படிக் கிடைப்பது தான் நியதி.
எனவே நாம் அதை எதிர்பார்த்தே அது போன்ற வேலையில் ஈடுபட வேண்டுமே ஒழிய நமக்கு மட்டும் விதிவிலக்கு வேண்டும் என்ற பேராசையில் முயற்சிகள் மேற்கொண்டால் பெருத்த ஏமாற்றத்தையே அடைய நேரிடும்.


பரிசு வாங்கும் நிகழ்ச்சி போல பயிற்சி செய்யும் நேரங்களும் சுவாரசியமாக இருப்பதில்லை. ஆனால் பெரிய சாதனை புரிந்த அத்தனை பேரின் பயிற்சி நேரங்கள் சாதாரண மக்களின் கற்பனைக்கெட்டாத அளவில் இருக்கின்றன. பலரும் கேளிக்கைகளிலும் பொழுது போக்குகளிலும் ஈடுபட்டிருக்கையிலும், பலரும் உறங்கிக் கொண்டிருக்கையிலும் சாதிக்க நினைப்பவன் தன் சாதனைக்காக விடாமல் உழைக்க வேண்டி இருக்கிறது.


பல நேரங்களில் சாதனையாளர்கள் சாதனைகளைச் செய்வதைப் பார்க்கையில் அவர்கள் அலட்டிக் கொள்ளாமல், சிறிதும் கஷ்டப்படாமல், அனாயாசமாகச் செய்கிறது போல் தோன்றலாம். ஆனால் அந்த நிலையை அடைய அவர்கள் எந்த அளவு உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை அவர்களைக் கேட்டால் தான் தெரியும்.


ஃப்ரிட்ஸ் க்ரீஸ்லர் என்ற பிரபல வயலின் மேதை சிறிதும் பிசிறில்லாமல் மிக மிகச் சிறப்பாக ஒரு நிகழ்ச்சியில் வயலின் வாசிப்பதைக் கேட்டு பிரமித்துப் போன ஒரு இளைஞன் சொன்னான். ”இப்படி வாசிக்க வாழ்நாளையே தந்து விடலாம்”.  அந்த இசை மேதை அமைதியாகச் சொன்னார். “அப்படித் தான் தந்திருக்கிறேன் இளைஞனே”. அப்படிப்பட்ட ஒரு இசையைத் தர அவர் வாழ்நாள் முழுவதும் உழைத்திருக்கிறார்.

ஒரு சாதனையைக் காண்கையில் புத்துணர்ச்சி பெற்று அப்படியே சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் வருகிறது. அந்த ஆரம்பப் புத்துணர்ச்சியைக் கடைசி வரை தக்க வைத்துக் கொள்வது என்பது வெகுசிலராலேயே முடிகிறது.  அந்த வெகுசிலராலேயே சாதனை புரிய முடிகிறது.

எனவே எந்தத் துறையில் சாதிக்க ஆசைப்பட்டாலும் முதலில் அதற்கான திறமை உங்களிடம் இருக்கிறதா என்று பாருங்கள். அந்தத் திறமை இருக்குமானால் அதை மெருகேற்றவும், வெளிக் கொணரவும் முறையான திட்டமிட்ட உழைப்பைத் தர மனதளவில் உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள். மனம் தயாராகா விட்டால் எந்த முயற்சியும் அரைகுறையாகவே முடியும். சாதனையின் உயரத்திற்கேற்ப பயணிக்கும் தூரமும், நேரமும் அதிகமாகத் தான் இருக்கும். அந்தப் பயணத்தில் சலிப்படைந்து விடாதீர்கள். பாதியில் நிறுத்தி விடாதீர்கள். சாதனைப் பயணத்தில் பாதியில் நிறுத்தியவர்களை யாரும் நினைவு வைத்துக் கொள்வதில்லை. சலிப்பு வரும் போதெல்லாம் முடிவு நிலையின் பெருமையை எண்ணி உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து முயன்றால் ஒரு நாள் கண்டிப்பாக சாதித்து முடித்திருப்பீர்கள்!


மேலும் படிப்போம்....

Global Angel:
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 10

                                                     
 
கடவுள் காப்பாற்றுவாரா?

ஒரு கிராமத்திற்கு வெள்ளம் வரலாம் என்று முன் கூட்டியே எச்சரிக்கப்பட்டு இருந்தது. அனைவரும் பாதுகாப்பாக வெளியேறி பக்கத்து நகரத்தில் தங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. கிராம மக்கள் ஒரே ஒருவனைத் தவிர மற்ற அனைவரும் வெளியேறி விட்டிருந்தனர். வெளியேறாமல் இருந்தவன் கடவுளின் பக்தன். அவனுக்குக் கடவுள் மீது அபார நம்பிக்கை. ”கடவுள் கண்டிப்பாக என்னைக் காப்பாற்றுவார்” என்று முழு மனதுடன் நம்பினான்.


வெள்ள நீர் கிராமத்திற்குள் வர ஆரம்பித்தவுடன் ஒரு ஜீப் அவனை அழைத்துப் போக வந்தது. “கடவுள் என்னைக் காப்பாற்றுவார்” என்று கூறி அவன் ஜீப்பில் போக மறுத்து விட்டான். வெள்ளம் அதிகரிக்க ஆரம்பித்தவுடன் அவனுக்குத் தன் குடிசையினுள்ளே இருக்க முடியவில்லை. கூரையின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். அடுத்ததாக அவனை அழைத்துக் கொண்டு போக படகொன்று வந்தது. கடவுள் மீது மாறாத நம்பிக்கை கொண்டிருந்த அவன் அப்போதும் அந்த படகில் போக மறுத்து விட்டான். வெள்ள நீர் அதிகரித்து கூரையும் மூழ்கியது. அவன் வெள்ளத்தில் மூழ்கி இறந்து விட்டான்.


மேலுலகம் போன போது அவனுக்குக் கடவுள் மீது தீராத கோபம். அவன் கடவுளைக் கேட்டான். “உங்கள் மீது நான் முழு நம்பிக்கை வைத்திருந்தேனே கடவுளே, இப்படி என்னைக் கை விட்டு விட்டீர்களே இது நியாயமா?”


கடவுள் கேட்டார். “வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்ததும், ஜீப் வந்ததும், படகு வந்ததும் யாரால் என்று நீ நினைக்கிறாய்?”


இந்த உதாரணக் கதையில் வெள்ளத்தில் மூழ்கி இறந்து போன கிராமவாசி கடவுள் புஷ்பகவிமானத்தை இறக்கி அதில் அவனை அழைத்துப் போவார் என்று நினைத்தானோ என்னவோ? இது கற்பனைக்கதை என்றாலும் நிஜத்தில் கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் இதை விட வேடிக்கையான முட்டாள்தன மனோபாவம் பலரிடம் இருக்கிறது.


கடவுள் மனிதன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவனுக்கு அறிவைக் கொடுத்திருக்கிறார். அவன் கற்றுக் கொள்ள எத்தனையோ சந்தர்ப்பங்கள் கொடுத்திருக்கிறார். அவன் கண்முன்னால் எத்தனையோ உதாரணங்கள் கொடுத்திருக்கின்றார். உழைக்கின்ற சக்தியைக் கொடுத்திருக்கிறார். எதைத் தெரிந்து கொள்ள அவன் விரும்பினாலும் அதைத் தெரிந்து கொள்ள எத்தனையோ வழிகள் ஏற்படுத்திக் கொள்ளார். மனிதன் அத்தனையையும் முதலில் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி பயன்படுத்தி மனிதன் தன் அறிவுக்கும், சக்திக்கும் ஏற்ப அனைத்தையும் செய்து விட்டு பிறகு அதையும் மீறி வரும் பிரச்னைகளில் இருந்து அவனைக் கடவுள் காப்பாற்றுவார் என்று நம்புவது தான் சரி.


எனவே கடவுள் நம்பிக்கை என்பது கடவுள் கொடுத்த அறிவை மழுங்கடித்துக் கொள்வதல்ல.  முயற்சியே எடுக்காமல் முடங்கிக் கிடப்பதல்ல. சோம்பித் திரிய கிடைக்கும் அனுமதியும் இல்லை. பொறுப்பற்று அலட்சியமாக இருந்தாலும் நல்லதே நடக்கும் என்பதற்கு உத்திரவாதமுல்ல. ஆனால் பலரும் கடவுளை வணங்கினால் அது ஒன்று போதும், எல்லாம் தானாக நடந்து விடும், என்று நினைத்து விடுவது தான் வேடிக்கை.


குழந்தை பிறக்கின்ற போது தாயின் மார்பகங்களில் பாலைத் தயாராக வைத்திருக்கும் கருணையுள்ள கடவுள் நம் உண்மையான தேவைகளுக்கு வேண்டியதைக் கண்டிப்பாக மறுக்கப் போவதில்லை. ஆனால் கடவுள் நம் அடியாள் போல இருந்து நம் குறிப்பறிந்து அனைத்தையும் செய்து வந்து நம்மைக் கடைசி வரை காப்பாற்ற வேண்டும், அதற்குக் கூலியாக நாம் சும்மா அவரைக் கும்பிட்டுக் கொண்டு இருப்போம் என்ற அபிப்பிராயத்தில் யாரும் வாழ்ந்து விடக் கூடாது.


முயற்சிகளின் ஒரு பகுதியாகத் தான் பிரார்த்தனை இருக்க வேண்டுமே ஒழிய முயற்சிக்குப் பதிலாக பிரார்த்தனையில் ஈடுபடுவது முட்டாள்தனமான செய்கையாகும். கடவுள் அளித்த எத்தனையோ வரப்பிரசாதங்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், கடவுளிடம் மீண்டும் மீண்டும் பிரார்த்திப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலே தவிர வேறில்லை.


“கடவுள் நிச்சயம் கரை சேர்ப்பார். ஆனால் வழியில் புயலே வராது என்ற உத்திரவாதம் தர மாட்டார்” என்று ஒரு பொருள் பொதிந்த பழமொழி உண்டு.
பல நேரங்களில் பிரச்னைகளும், சிக்கல்களும் நமக்கு வாழ்க்கைப் பாடங்களாக இருக்கின்றன. அதை சமாளித்து முடிக்கையில் நாம் அறிவிலும், சக்தியிலும் நாம் மேம்படுகிறோம். வாழ்க்கை என்ன என்பதை அப்போது தான் உண்மையில் பலரும் உணரவே ஆரம்பிக்கிறோம். அதனால் அந்தப் பாடங்களே வேண்டாம் என்று மறுப்பது நம் முன்னேற்றத்தையே மறுப்பது போலத் தான். 


எனவே அறிய வேண்டியதை அறியவோ, செய்ய வேண்டியதைச் செய்யவோ சோம்பி இருக்காமல் அறிந்து, அறிவார்ந்த முயற்சிகள் எடுத்து உங்கள் வேலையை நீங்கள் செய்யுங்கள். ஆனால் எல்லாமே நம் அறிவுக்கும் முயற்சிக்கும் உட்பட்டு நடந்து விடுவதில்லை என்பதும் உண்மையே. அப்படிப் பட்ட நிலையில் செய்ய வேண்டியதைச் செய்து விட்டு, நம்மை மீறிய விஷயங்களுக்கு கடவுளைப் பிரார்த்தியுங்கள். கடவுள் நிச்சயம் காப்பாற்றுவார்.


மேலும் படிப்போம்.

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version