தமிழ்ப் பூங்கா > பொதுப்பகுதி

வம்பை விலைக்கு வாங்கும் வனிதையர்!

(1/1)

Yousuf:
பெண்கள் கண்ணியமாக உடுக்க வேண்டும் எனும் அண்மைக்காலக் கூக்குரலைப் பெண்ணுரிமைவாதிகள் பெண்களின் உரிமைகளுக்கு எதிரான தலையீடு என்பதாய்ப் பதில் குரல் எழுப்பி வருகிறார்கள்.

ஆணாயினும், பெண்ணாயினும் உடுக்கும் உடையும், பாணியும் தனிப்பட்ட உரிமைதான். ஆனால், இங்கு மட்டுமல்லாது வேறு சில நாடுகளிலும் பெண்களின் உடைகள் பற்றி மட்டுமே கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனை ஓரவஞ்சனை என்று பெண்ணியவாதிகள் கருதுகிறார்கள். ஆனால், காரணங்களை ஒருதலைப்பட்சமற்று ஆராய்ந்தால், பெண்கள் இந்த உடைக் கட்டுப்பாட்டை எதிர்க்க மாட்டார்கள்.

இயல்பில் ஆண் முரட்டுத் தசைவலிமையில் பெண்ணைக் காட்டிலும் உயர்ந்தவனாகவும், மனவலிமையில் பெண்ணைக் காட்டிலும் தாழ்ந்தவனாகவும் படைக்கப்பட்டிருக்கிறான். பெண்ணின் உடல் சார்ந்த வலுவின்மையை ஆண் தனக்குச் சாதகப்படுத்திக் கொண்டு அவளை வெற்றி கொள்வதைப் பெண் எவ்வாறு நியாயமென்று ஒப்புக்கொள்ள மாட்டாளோ, அவ்வாறே மனம் சார்ந்த தனது வலுவின்மையைப் பெண் சீண்டுவது கூடாது என்று நினைக்கவும், அது பெண்ணுரிமை என்பதை மறுப்பதற்கும் ஆணுக்கு உரிமை உண்டு.

ஒருவர் எடுத்துக்கொள்ளும் உரிமை பிறருக்கும் - ஏன்? தனக்கேயும் கூடத்தான் - தீமை செய்யும்போது அதைக் கைவிட வேண்டிய பொறுப்பும் அறிவும் ஒருவருக்கு இருக்க வேண்டும். அண்மைக்காலமாய்ப் பெண்களில் சிலர் - நல்ல வேளை! சிலர்தான்! அருவருக்கத்தக்க முறையில் வெளிப்பாடாய் உடுக்கத் தலைப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் சிலர் அணியும் பனியன்களிலும், டி - ஷர்ட்டுகளிலும் உள்ள வாசகங்களை இங்கே எடுத்து எழுதி, இந்தக் கண்ணியமான நாளிதழின் பக்கத்தை மாசுபடுத்த விரும்பவில்லை. வம்புக்கு இழுக்கும் இந்த வாசகங்களைப் படிக்கும் ஆண் அருவருப்பான முறையில் எதிரொலிக்கவே செய்வான். அவன் என்னை இடிக்காமல் விலகிப் போகட்டுமே? அவன் இடிப்பான் அல்லது அசிங்கமாய் ஏதேனும் விமர்சிப்பான் என்பதற்காக நான் ஏன் என் உடையணியும் உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும்? எனும் பெண்ணின் பதில் கேள்வியில் அசட்டுத்தனமே ததும்புகிறது. பெண்களுக்கு வெட்க உணர்வுகள் போதிக்கப்பட்டு வந்துள்ளது அவர்களது நன்மையை உத்தேசித்தே என்பதைப் பெண் புரிந்துகொள்ள வேண்டும்.

பழையன என்பதற்காக எல்லாக் கட்டுப்பாடுகளையும் துறப்பதோ அல்லது புதியவை என்பதற்காக அனைத்துச் சுதந்திரங்களையும் "பெண் விடுதலை' என்பதன் பெயரால் ஏற்பதோ புத்திசாலித்தனம் ஆகாது.

பெண்கள் தமது கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நடு நின்று சிந்தித்துப் பழையன, புதியன ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட ஓர் அறிவார்ந்த நிலையை எடுக்க வேண்டும். கொள்ள வேண்டியவற்றைக் கொள்ளவும் தள்ள வேண்டியவற்றைத் தள்ளவும் அவள் அறிய வேண்டும்.

பெண்ணைத் துய்பொருளாய்க் கருதி ஊடகங்கள் வணிகம் செய்வதாய்க் குற்றம்சாட்டும் பெண்ணியவாதிகள், வம்புக்கு இழுக்கும் வாசகங்கள் கொண்ட டி - ஷர்ட்டுகளை அணியும் பெண்களை ஏன் கண்டிப்பதில்லை? மாறாக, எதையும், எப்படியும் உடுப்பது பெண்ணின் உரிமை என்றல்லவோ வக்காலத்து வாங்குகிறார்கள்?

எனினும், செய்யும் பணிக்கேற்ப, வசதியான உடைகளைத்தான் பெண் அணிய வேண்டும் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எந்தப் பணியிலும் பெண் அமர்த்தப்படும் இந்நாளில் அவள் சேலைதான் கட்ட வேண்டும் என்பது சரியன்று. சேலை வசதிக்குறைவானது. விரைந்து நடக்கவும், பேருந்தைப் பிடிக்கவும், பல்வேறு ஆபத்துகள் இன்று பெண்களைத் துரத்தும் நிலையில் சட்டென்று ஓடவும் கால்சராய் / ஜீன்ஸ்தான் ஏற்றது. சேலை காலை வாரிவிட்டுவிடும். நான் சொல்ல வருவதெல்லாம் இதுதான் - அணியும் உடை எதுவாக இருந்தாலும் அதைக் கண்ணியமான முறையில் பெண்கள் அணிய வேண்டும். பதினெட்டு முழப் புடவையையும் கண்ணியக் குறைவான முறையில் உடுக்கலாம்தான்!

பல நாள் முன்பு, பெண்களுக்கான ஓர் ஆங்கில இதழில் அதன் ஆசிரியை, பெண்களின் எறிபந்து / கூடைப்பந்து விளையாட்டுகளுக்கு ஆண்களின் கூட்டம் அலைமோதுவதையும், பெண்கள் விளையாடுகையில் ஆபாசமான விமர்சனத்துடன் அவர்கள் ஊளை இடுவதையும் பற்றி அங்கலாய்த்துக் கட்டுரை எழுதியிருந்தார். உறுப்புகள் வெளித்தெரியும் வண்ணம் உடையணிந்து குதித்தால் அப்படித்தான் எதிரொலிப்பார்கள்.

அண்மையில் ஒரு கட்டுரையில், பெண்களின் உடைக்கட்டுப்பாடு பெண்களின் மீதான தாக்குதல் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், அரைகுறை ஆடைகளோ ஆண்களின் பலவீனத்தின் மீதான தாக்குதலே என்பதை நாம் உணர வேண்டும்! அதே கட்டுரையின் ஓரிடத்தில், "உழைக்கும் வர்க்கப் பெண்கள் தங்கள் உடைகளைக் கால்கள் தெரிய, தூக்கிச் செருகிக்கொண்டால்தான் வேலை செய்ய முடியும்.

நம் நாட்டில் வயலில் உழைக்கும் பெண்களும், கட்டட வேலை செய்யும் பெண்களும் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இந்தப் பெண்கள்தான் பாலியல் கொடுமைகளுக்கு அதிகமாக ஆளாகிறார்கள்' என்றும் சொல்லப்பட்டிருந்தது. கண்கூடான நிலை என்பது இதுதான். இது ஆண்களின் பொதுவான, மாறாத மனப்பான்மையையே காட்டுகிறது.

பெண்ணுரிமை என்பதைத் தவறாய்ப் புரிந்துகொண்டுள்ளவர்களின் கருத்து என்னவெனில், "பெண் எப்படி வெளிப்பாடாக உடுத்திக்கொண்டாலும், ஆண் அதனால் பாதிப்பு அடையக் கூடாது. அவன் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்' என்பதேயாகும். பல ஆண்கள் பெரிதும் முயன்று அப்படித்தான் வலுக்கட்டாயமாய்க் கண்ணியம் காக்கிறார்கள். இல்லையெனில், ஒரு பெண் கூட வீட்டு வாசற்படியைத் தாண்ட முடியாது! ஆனால், வேறு பலரால் தங்கள் இயல்பை வெல்ல முடிவதில்லை. ஏனெனில், அவர்கள் படைக்கப்பட்ட விதம் அப்படி! அவர்கள் திருந்த வேண்டும் என்றும், ஆபாசமாக உடுக்கும் பெண்களை விமர்சிக்கவோ அவர்களைச் சீண்டவோ கூடாது என்றும் கூறுவது "நாய் தன் வாலை நிமிர்த்திக் கொள்ள வேண்டும்' என்று சொல்வதற்கு ஒப்பானதே.

ஆபாசப் படங்களால் அனைத்துப் பக்கங்களையும் நிரப்பிப் பெண்சீண்டலை ஆண்களிடம் தூண்டிவிட்டுவிட்டு, பெண்சீண்டலால் உயிர் நீக்க நேர்ந்த சரிகா ஷா பற்றி மாய்ந்து மாய்ந்து கட்டுரை எழுதி நினைவுநாள் கொண்டாடும் ஏடுகளும், ஆபாச ஆட்டங்கள் நிறைந்த திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிப்பவர்களும் நகைச்சுவையின் பெயரால் ஆபாசமாகப் பதிலளிக்கும் கேள்வி - பதில் ஆசிரியர்களும் மலிந்துகொண்டு வரும் இந்நாளில் பெற்றோர்க்கும், கல்விக்கூட ஆசிரியர்களுக்கும் உள்ள பொறுப்பு மகத்தானது. அவர்களும் பொறுப்புணர்ந்து செயல்பட்டால் ஓரளவுக்கு நன்மை ஏற்படும்.

குழந்தைகளைப் பெறுவதோடும் படிக்க வைப்பதோடும் பெற்றோர்களின் கடமை முடிந்துவிடுவதில்லை. நற்போதனைகளின் மூலம், நல்ல குடிமக்களாகக் குழந்தைகளை வளர்த்து நாட்டுக்குத் தர இயலாதவர்கள் பெறாமலிருத்தலே மேல்.

Navigation

[0] Message Index

Go to full version