Author Topic: மக்களோடு மக்களாக வாழ்ந்த மாமனிதர் முஹம்மத் (ஸல்)!!!  (Read 1013 times)

Offline Yousuf

இஸ்லாத்தின் இறுதித் தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் முழு மனித சமூகத்தின் சுசுபீட்சத்திற்கும், விமோசனத்திற்கும் நேர் வழி காட்டியுள்ள மாமனிதராவார். அவர் நற்பண்புகளின் சிகரமாகத் திகழ்ந்தார்.

சர்வ வல்லமை படைத்த அல்லாஹ¥தஆலாவின் இறுதித் தூதரான அன்னார் தனிப்பட்ட வாழ்விலும் குடும்ப, சமூக அரசியல், ஆன்மீக, பொது வாழ்விலும் முழு உலகிற்குமே முன் மாதிரியாக ஒரே நேரத்தில் விளங்கினார்.

இருந்தும் அவரிடம் தற்பெருமை, கர்வம், ஆணவம், மமதை, அடக்கியாளும் தன்மை போன்ற எதுவிதமான தீய பண்புமே சிறிதளவும் காணப்படவுமில்லை. அவ்வாறான பண்புகளை தன்னில் நெருங்கிட அவர் இடமளிக்கவுமில்லை. அன்னார் எப்போதும் சாதாரண மனிதர் போன்று தான் வாழ்ந்தார்; செயற்பட்டார். தாம் ஒரு இறைத்தூதர் என்பதற்காக அவர் மக்களிலிருந்து ஒதுங்கி வாழவுமில்லை. சொகுசான ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கவுமில்லை.

மாறாக உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனதும் ஈருலக விமோசனத்திற்கும், சுபீட்சத்திற்குமாக அவர் அல்லாஹ்வின் கட்டளைகள், வழிகாட்டல்களின் அடிப்படையில் உழைத்தார். அதற்காக தம்மையே அர்ப்பணித்து அவர் செயற்பட்டார்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் எப்போதும் சாதாரண மனிதர் போன்றுதான் வாழ்ந்தார். அவர் மக்களின் உணர்வுகளையும், தேவைகளையும் நன்கறிந்தார். அதனால் முன்மாதிரி மிக்க மனிதாபிமானியாகவும் அன்னாரால் திகழ முடிந்தது.

முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்களுடன் மக்களாக வாழ்ந்த மனிதப் புனிதராவார். அவர் ஒரு போதும், தான் ஒரு மனிதன், அல்லாஹ்வின் அடிமை, அவனது இறைத்தூதர் என்ற அடிப்படையிலிருந்து விலகியது கிடையாது. இதற்கு அன்னாரின் வரலாற்றில் சான்றாதாரங்கள் விரவிக் கிடக்கின்றன.

அந்த வகையில் “ஒருமுறை நபி (ஸல்) அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாகக் கிடைக்கப்பெற்றது. அப்போது உணவு குறைவாக இருந்த காலம். என்றாலும் ‘இந்த ஆட்டைச் சமையுங்கள்’ என்று அன்னார் தமது குடும்பத்தினரிடம் கூறினார். அந்த உணவு சமைக்கப்பட்டு நான்கு பேர் சுமக்கக் கூடிய பெரிய பாத்திரத்தில் வைத்துக் கொண்டு வரப்பட்டது.

அப்போது உணவு கிடைக்கப்பெறாத எல்லாத் தோழர்களையும் நபி (ஸல்) அவர்கள் அழைத்துக் கொண்டார்கள். அனைவரும் உணவுத் தட்டைச் சுற்றி அமர்ந்து சாப்பிடலானார்கள். அவர்களில் ஒருவராக நபி (ஸல்) அவர்களும் அமர்ந்து கொண்டார்கள். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து ஏனையவர்களுக்கும் இடம்கொடுத்தார்கள்.

அப்போது ஒரு கிராமவாசி “என்ன இப்படி உட்கார்ந்து இருக்கின்aர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் என்னை அடக்குமுறை செய்பவனாகவும், மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. மாறாக பெருந்தன்மையுள்ள அடியானாகவே என்னை ஆக்கியுள்ளான்” என பதிலளித்தார்கள்.

ஆதாரம்:- அபூதாவூத் 3773 பைஹகி 14440

முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்களுடன் மக்களாக சாதாரண மனிதராக வாழ்ந்தார் என்பதற்கு இந்த சம்பவம் நல்ல எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. இதில் ஐயமில்லை.

மற்றொரு சந்தர்ப்பத்தில், “நபி (ஸல்) அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டிருந்த போது குடி நீர் விநியோகிக்கும் தண்ணீர்ப் பந்தலுக்கு வந்தார்கள். அங்கு குடி தண்ணீர் கேட்டார்கள். அச்சமயம் அன்னாரின் பெரிய தந்தையான அப்பாஸ் (ரலி) அவர்கள் தண்ணீர்ப் பந்தலுக்குப் பொறுப்பாக இருந்தார். அவர் உடனடியாக தமது இளைய மகனை அழைத்து “நீர் வீட்டுக்குச் சென்று உம் தாயாரிடம் நபி (ஸல்) அவர்களுக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் வாங்கி வா” என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் எனக்கு இந்தத் தண்ணீரையே தாருங்கள்” என்றார். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள்”இதில் மக்கள் தங்கள் கைகளைப் போட்டுள்ளாரே” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அது பரவா இல்லை, இதனையே எனக்குக் குடிக்கத் தாருங்கள்” எனக் கூறிக்கேட்டு அந்தத் தண்ணீரையே வாங்கிக் குடித்தார்கள்.

ஆதாரம்:- புகாரி 1636

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அன்றைய கால கட்டத்தில் ஒரு சிறந்த சமூகத்தலைவராகவும், ஆட்சித் தலைவராகவும் விளங்கினார். அன்னார் எவ்வளவு பெரிய மரியாதைக்கும், அந்தஸ்துக்கு முரியமனிதராகத் திகழ்ந்த போதிலும் அவர் தன்னை மக்களிலிருந்து தூரமாக்கிக் கொள்ளவுமில்லை. மக்களில் ஏற்றத் தாழ்வு பார்க்கவுமில்லை. இதற்கு இந்த சம்பவம் நல்ல ஆதாரமாகும்.

“ஒரு முறை இளைஞர் ஒருவர் அறுக்கப்பட்ட ஆடு ஒன்றின் தோலை உரித்துக் கொண்டிருந்தார். அவரைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் “ஒதுங்கிக் கொள். எப்படி உரிப்பது என்பதை உனக்குக் காட்டித் தருகிறேன்” எனக் கூறி தோலுக்கும், இறைச்சிக்குமிடையே தமது கையை அக்குள்வரையும் விட்டு உரித்தார்கள்.

ஆதாரம்:- அபூதாவூத் 157, இப்னு மாஜா : 3170

முஹம்மத் (ஸல்) அவர்கள் தம்மால் முடிந்த உதவி, ஒத்துழைப்புக்களைத் தேவைப்படுவோருக்கு வழங்குவதிலும் பின்நின்றதும் கிடையாது. அதனால் தான் அன்னார் அறுக்கப்பட்ட ஆட்டை உரித்துக் கொண்டிருந்த இளைஞருக்கு, அதனை உரிக்கும் விதத்தைக் காட்டிக் கொடுப்பதற்கும் முன்வந்துள்ளார் என்றால் மிகையாகாது.

மேலும் நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குக் ஹிஜ்ரத்(நாடு துறந்து) சென்றதும் அங்கு பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணித்தார்கள். அந்தப் பள்ளிவாசலை நிர்மாணிப்பதற்கான கற்களை மக்களுடன் சேர்ந்த அன்னாரும் சுமந்தார்.

ஆதாரம்:- புகாரி 3906.

அகழ் யுத்தத்திற்காக மக்களுடன் சேர்ந்து அன்னாரும் அகழ்வெட்டினார். மண்ணைச் சுமந்தார். அன்னாரின் வயிற்றைமண் மறைத்தது.

ஆதாரம்:- புகாரி 2837, 3034, 4104

இந்த சம்பவங்களின்படி நபி (ஸல்) அவர்கள் எல்லா சந்தர்ப்பங்களிலுமே மக்களுடன் வாழ்ந்திருக்கின்றார்கள். மக்களுடன் சேர்ந்து செயற்பட்டிருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது.

அதனால்தான் மதீனாவுக்கு ஹிஜ்ரத்(நாடு துறந்து) சென்றதும் பள்ளிவாசலொன்றை நிர்மாணிப்பதற்குத் தேவையான கற்களை ஸஹாபாக்களுடன்(நபிதோழர்கள்) சேர்ந்து அன்னாரும் சுமந்திருக்கின்றார்.

இதேபோல் அகழ் யுத்தத்தின் போது மக்களுடன் சேர்ந்து அன்னாரும் அகழி வெட்டியதோடு வெட்டப்பட்ட மண்ணைச் சுமந்து அப்புறப்படுத்தியுமுள்ளார்கள்.

அதேநேரம் அன்னாரின் இறுதிக் காலக் கட்டத்தில் ஒரு நாள் “நபி (ஸல்) அவர்கள் நம்முடன் இன்னும் எவ்வளவு காலம் இருப்பவர்கள் என்பதை நாம் அறிய மாட்டோம். அதனால் அன்னார் எம்மில் சிரமப்படாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று அப்பாஸ் (ரலி) அவர்கள் தோழர்களிடம் கூறினார்கள். அதன்பின் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு நிழல் தரக் கூடிய ஒரு கூடாரத்தைத் தனியாக நாங்கள் அமைத்துத் தருகின்றோம்” என்று கூறினர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் “மக்கள் என் மேலாடையைப் பிடித்து இழுத்த நிலையிலும், எனது பின்னங்காலை மிதித்த நிலையிலும் அவர்களுடன் கலந்து வாழவே நான் விரும்புகின்றேன். அவர்களிடமிருந்து அல்லாஹ் என்னைப் பிரிக்கும் வரை (மரணிக்கும் வரை) இப்படித்தான் இருப்பேன்” என்றார்கள்.

ஆதாரம்:- பஸ்ஸார் 1293

ஆகவே இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் எப்போதும், மக்களுடன் மக்களாகவே வாழ்ந்துள்ளார்கள். அன்னாரைப் பின்பற்றி வாழவும், அல்லாஹ்வின் அருளைப் பெற்றனக் கொள்ளவும் ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். அதுவே இம்மை, மறுமை வாழ்வின் விமோசனத்தி ற்கான ஒரே வழியாகும்.