Author Topic: ராஜராஜ சோழன் - பிரமிப்பும், கேள்விகளும்!  (Read 3519 times)

Offline micro diary

நமக்கும் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கும் அப்படியொன்றும் தனிப்பட்ட பகை கிடையாது. பள்ளிக்கூட பாடப்புத்தகத்தில் மதிப்பெண்களுக்காக "சோழர் வரலாறு" படித்ததோடு சரி.

சிறு வயதில் அம்மா கூட்டிப் போன ஏ.பி.நாகராஜனின் 4975 மீட்டர் நீளமுள்ள "ராஜராஜ சோழன்" படத்தினைப் பார்த்து வாயில் ஈ போவது கூடத் தெரியாமல் வியந்திருக்கிறேன். தமிழில் வெளிவந்த முதல் சினிமாஸ்கோப் படம் அதுதான். பின்னர் பல வருடங்கள் கழித்து தஞ்சை மண்ணில் கால் வைத்தபோது பிரமிப்பு விலகாமல் அணு அணுவாக ரசித்த இடம் ஒன்று உண்டென்றால் அது தஞ்சை பெரிய கோயிலாகத்தான் இருக்க முடியும்.

பதிமூன்று அடுக்குகள் கொண்ட அதன் வேலைப்பாடுகளும் அழகும் நம்மை வியக்க வைக்கின்றன. நேற்று கட்டிய காமன்வெல்த் விளையாட்டிற்கான பாலமே குப்புறக் கவிழ்ந்து பலபேர் குற்றுயிராய்க் கிடக்கும்போது பத்து நூற்றாண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோபுரம் இன்னமும் கம்பீரமாய் காட்சி தருகிறதே என்ன காரணம்?

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பி.இ., படிப்பும் இல்லை... எம்.இ., படிப்பும் இல்லை... பெற்றோரது அடிவயிற்றில் கட்டியிருக்கும் பணத்தைக் கூட அடித்துப் பிடுங்கும் பொறியியல் கல்லூரிகளும் இல்லை... அப்புறம் எப்படிக் கை வந்தது இந்தக் கலை? அதுதான் பட்டறிவுக்கும் பாட அறிவுக்கும் உள்ள வேறுபாடு. பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அந்த மக்களது அயராத உழைப்பும்... தொழில் நுட்ப அறிவும்... கலை நயமும்தான் இன்று அது விண்ணுயர எழுந்து நிற்கக் காரணம். கூடவே மன்னனது ரசனையும் கூடுதல் பலம் சேர்த்திருக்கும்தான்.

சரி... இப்படி சோழர் காலத்து அரண்மனைகள்... வழிபாட்டுத்தலங்கள்... சிற்பங்கள்... ஓவியங்கள்... அவர்களது வீர தீர பராக்கிரமங்கள் எல்லாம் அற்புதம்தான். ஆனால் மக்கள் எப்படி இருந்தார்கள் அவர்கள் காலத்தில்? அதுதானே முக்கியம்?

"மாதம் மும்மாரி பொழிகிறதா மந்திரியாரே?" எனக் கேட்டுவிட்டு உப்பரிகையில் ஓய்வெடுக்கப் போய் விட்டார்களா? அல்லது மக்களோடு மக்களாக நின்று அவர்களது துயரங்களைத் துடைக்கத் துணை நின்றார்களா? இதுதான் இன்று நம் முன் உள்ள கேள்வி.

தஞ்சை பெரிய கோயில் கம்பீரமாக நிற்கிறது வெளிப்புறத்தில். ஆனால் மக்கள் வழிபாடு நடத்துவதற்கும்... வழிபடுவதற்கும் சமத்துவம் நிலவியதா உட்புறத்தில்? இல்லை... இல்லை... இல்லவேயில்லை! என்கின்றன சோழர் காலத்திய கல்வெட்டுகளும் ஆய்வு நூல்களும்.

சமயத்தலத்தில் சமத்துவமின்மை மட்டுமல்ல சோழப் பேரரசில் மக்கள் நிலை எவ்வாறிருந்தது? அவர்களது கல்வி எவ்வாறு இருந்தது? பெண்களது நிலை எவ்வாறு இருந்தது? நிலம் யார் வசம் இருந்தது? பாழாய்ப்போன சாதி என்ன பங்கை ஆற்றியது? இதுவெல்லாம் முக்கியமில்லையா நமக்கு?

சரி... மக்கள் எப்படி இருந்தார்கள்? அதை முதலில் பார்ப்போம். சோழப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காவிரி ஆற்றின் தென் கரையில் இருந்த இரு ஊர்களை தங்களின் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட அறிஞர்கள் அதிர்ந்து போனார்கள். ஊரே சாதியால் பிரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து.

ஒன்பதாம் நூற்றாண்டில் விஜயாலய சோழன் தஞ்சையைக் கைப்பற்றி சோழப் பேரரசின் உருவாக்கத்திற்கு அடித்தளம் இடுகிறான். அதன் பின்னர் வந்த சோழப் பேரரசர்களும் வைதீகம் செழித்து வளர பொன்னையும் பொருளையும் நிலத்தையும் தானமாக அள்ளி வழங்குகிறார்கள். எல்லோருக்கும் அல்ல. சிலருக்கு மட்டும். இதனை துல்லியமாகப் போட்டு உடைக்கிறார் கே.கே.பிள்ளை என்கிற வரலாற்று ஆய்வாளர்.

"வேத நெறி தழைத்தோங்குவதற்காக மன்னரும் மக்களும் புதிதாகக் குடி புகுந்த பிராமணருக்கு பொன்னையும் பொருளையும் வழங்கினர். அவர்களுக்குத் தனி நிலங்களும், முழு கிராமங்களும் தானமாக வழங்கப்பட்டன. அக்கிராமங்கள் அக்கிரகாரம், அகரம், சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம் என பல பெயரில் அழைக்கப்பட்டன. இக்குடியிருப்புகள் அனைத்தும் பிராமணரின் நிர்வாகத்திற்கே விடப்பட்டன. அரசனுடைய ஆணைகள் கூட அவற்றினுள் செயல்பட முடியாது. அக்கிராமங்களுக்கு எல்லாவிதமான வரிகள்... கட்டணங்கள்... கடமைகள்... ஆயங்கள்... என அனைத்தில் இருந்தும் முழு விலக்கு அளிக்கப்பட்டன" என்று சோழர்களது கல்வெட்டுக்களில் இருந்தே எடுத்துக் காட்டி அம்பலப்படுத்துகிறார் கே.கே.பிள்ளை.

நிலமும் இலவசம்... வரிகளும் கிடையாது... கட்டணங்களும் இல்லை... அரசன் கூட கேள்வி கேட்க முடியாது... ஆனால் அதே சோழ சாம்ராஜ்ஜியத்தில் மற்ற மக்கள் எப்படி வாழ்ந்தார்களாம்? அதற்கும் இருக்கிறது கல்வெட்டு.

வேதம் ஓத வந்தவர்களுக்கு சோழ அரசு சலுகை காட்டிய அதே வேளையில் உழவர்கள், கைவினைக் கலைஞர்கள், பிறதொழில் செய்வோர் மீது கடுமையான வரிகளை விதித்தது. இவற்றுள் அடித்தள எளிய மக்களான சலவையாளர்கள், குயவர், தறி நெய்பவர், தட்டார், ஓடங்களைச் செலுத்தியோர் மீது முறையே... வண்ணார்பாறை பயன்பாட்டு வரி... குசக்காணம்... தறிக்கூரை... தட்டார்பாட்டம்... என வரி மேல் வரி போட்டுத் தள்ளியதோடு நிறுத்தாமல் உழவர்கள் ஒரு பயிருக்கு ஊடாக இன்னொரு பயிரை வளர்த்தால்கூட அதற்கும் ஊடுபோக்கு என வரி போட்டு பரிபாலனம் செய்தவர்கள்தான் இந்த ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ பராக்கிரம ராஜ கெம்பீர மன்னர்கள்.

நிர்வாகமும் நீதியும் இப்படியிருக்க... பெண்கள் நிலை எப்படி இருந்ததாம்? அதற்கும் இருக்கிறது ஆப்பு. எண்ணற்ற பெண்கள் பொட்டுக் கட்டுதல் என்கிற பெயரால் கோயில்களில் தேவரடியார்களாக ஆக்கப்பட்டதும் இக்காலத்தில்தான்.

அது சரி... கல்வி?

அதுவும் குலத்துக்கொரு நீதிதான். அப்புறம் எங்கு போகும் எல்லோருக்கும் கல்வி?

இதையெல்லாம் பாமரன் சொன்னால் தப்பென்று சொல்லலாம். ஆனால் பண்டிதர்கள் சொன்னால்? அதுவும் இவைகளை தமிழக அரசே வெளியிட்டால்? ஆம் தமிழக அரசே வெளியிட்டது. இப்போதல்ல. 1976-ல். அதுவும் தி.மு.க. அரசு! தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனமே "தமிழ் நில வரலாறு" என்கிற நூலை வெளியிட்டது அதன் பதிப்பாசிரியர் கோ.தங்கவேலு. சோழர் கால ஆட்சி உழைக்கும் மக்களுக்கு எப்பேர்ப்பட்ட பொல்லாத காலமாக விளங்கியது என்பதை அக்குவேறாக அலசியது அந்த நூல். பிற்பாடு தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு இது "பிரம்மதேய ஆலோசகர்" குழுவால் தடை செய்யப்பட்டது.

மன்னர் காலத்தில் ஏன் மார்க்சீயம் வரவில்லை? ராஜராஜ சோழன் ஏன் பின் நவீனத்துவம் பற்றிப் பேசவில்லை? என்பது போன்ற கேள்விகளல்ல நமது கேள்விகள்.

ஈழம் வென்றதும்... கடாரம் சென்றதும்... வெற்றிக்கொடி நாட்டியதும் மகிழத்தக்கதுதான். ஆனால்... தனது குடிமக்களுக்குள்ளேயே ஏன் பாகுபாடு காட்டினான்? ஒரு பக்கம் சுகத்தையும், இன்னொரு பக்கம் சுமையையும் ஏற்றியது ஏன்? இந்தக் கேள்விகள் நிறைகளைப் பற்றி சிலாகிக்கும் வேளையிலும் நெஞ்சில் உறுத்தும் கேள்விகள் அல்லவா?



 

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
nalla pathivu nalla thagaval  :)
                    

Offline Yousuf

சோழர்களின் ஆட்சியில் மட்டும் உழைக்கும் மக்கள் ஒடுக்க படவில்லை, சேரர்கள் ஆட்சியிலும், பாண்டியர்களின் ஆட்சியிலும் கூட ஒடுக்கப்பட்டார்கள். எங்கிருந்தோ கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள் உயர் குடிகளாகவும் செல்வகுள்ளவர்கலாகவும் இந்த மன்னர்களின் ஆட்சியில் இருந்தார்கள். சொந்த நாட்டில் பிறந்த மண்ணின் மைந்தர்கள் அடிமைகளைபோல் இவர்களின் ஆட்சிகாலத்தில் நடத்தப்பட்டார்கள். இந்த உண்மைகள் எத்தனை பேருக்கு தெரியும்.

தமிழ் மொழி வளர்த்த மூவேந்தர்கள் என்று சொல்லப்படும் இவர்களின் ஆட்சிகாலத்தில் தான் வர்ணாசிரம முறை கொடிகட்டி பறந்தது!

பலரும் அறிந்திராத தகவலை அனைவரும் தெரிந்துகொள்ளும்படி பதிவு செய்ததற்கு மிக்க நன்றி மைக்ரோ!

Offline RemO

nala thagaval micro machi
ithanai naal palaruku theriyama iruntha thagavalkal
oru kovil kati nala per vangirukanga ana aanda makkalai santhosama vatchukalaye