Author Topic: யோசித்துப் பாருங்கள் எனது பிரியமானவரே  (Read 1020 times)

Offline thamilan

அன்புள்ள குமாருக்கு,
என்ன சொல்வது? உங்களுக்கு என்மேல் ரொம்பக் கோபம் என்று தெரிகிறது. இரண்டு வாரமாய் போன் பண்ணவில்லை. நான் பண்ணினாலும் நீங்கள் கிடைப்பதில்லை.

சிங்கப்பூரில் இருந்து வந்தவுடன் அண்ணா உங்களைப் பார்த்த விஷயம்  சொல்லி,சத்தம் போட்டார். நீங்கள் என் அண்ணாவிடம் கோபமாகப் பேசியதாகச் சொன்னார். எல்லா கோபமும் சேர்ந்து என்மேல் பாய்ந்தது. பொறுமையாகக் கேட்டுக் கொண்டேன்.

உங்களிடம் நான் முன்னமே சொல்லாமல் போனது தவறு தான். ஆனால் அற்கும் ஒரு காரணம் உண்டு.

நடந்தது எதற்கும் காரணம் கேட்காமல்,வெறுமனே கோபப்பட்டால் என்ன அர்த்தம்? எதையும் உங்களுக்கு நான் விளக்கிச் சொல்லப்  போவதில்லை. எனக்கும் இருபத்துநாலு  வயசாகிறது. நான் செய்வதற்கு காரணம் இல்லாமல் செய்வேன்  என்று நம்புகிறீர்களா? 

   நான் குழந்தை இல்லை. எனக்கே குழந்தை பெற்றுத் தரும் வயது. ஆனால், எப்போது? எப்படி? அது எனது விருப்பம் தானே?

முதலில் ஒரு விஷயம். என் அண்ணாவிடம் நீங்கள் கோபப்பட எந்த உரிமையும் இல்லை. நீங்கள் சண்டைபோட வேண்டுனென்றால், காரணம் கேட்க வேண்டுமென்றால், என்னைத் தான் கேட்க வேண்டுமே தவிர என் அண்ணாவிடம் எரிந்து விழுந்து என்ன பிரயோசனம்? எங்களுக்கெல்லாம் அவர் பெரியவர். அப்பாவுக்கு அடுத்த ஸ்தானம்

விஷயத்தை சரஸ்வதி உங்களிடம் சொன்னபோது அதிர்ச்சி அடைந்தீர்களாம். உணர்ச்சி வசப்பட்டு, மேலும் ஏதும் கேட்காமல், அவளை அனுப்பிவிடீர்களாம்.
அவள் கடிதத்தில் இந்த விஷயத்தை பார்த்தபோது வருத்தமாகத்தான் இருந்தது.

உணர்ச்சிவசப்பட இதில் என்ன இருக்கிறது? 'அது எனது குழந்தை. அதை எப்படி அவள் கலைப்பா'?என்று அண்ணாவிடம் கேட்டர்களாமே? அது எனது குழந்தையும் தானே? சடக்கென்று இத்தனை அன்பு எப்படி பெருக்கெடுத்தது? யோசித்துப் பாருங்கள்.   

நீங்கள் கத்தியது உண்மை அன்பா இல்லை ஈகோவா?

முதலில் நமக்குள்ளே என்ன அன்பு இருக்கிறது? எவ்வளவு தூரம் அதை உணர்ந்திருக்கிறோம்?

உங்களோடு இருந்த நாற்றப்பது நாட்கள் கனவுத் திட்டுக்கள் போலத்தான் இருக்கின்றன. உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள்,

அலுவலகமும் ஹாஸ்டலுமாக  கோயம்புத்தூரில் சுழன்று கொண்டிருந்தவளுக்கு, 'சென்னைக்கு ஓடிவா,,,' என்று தொலைபேசி . உங்கள் அண்ணா மன்னி என்னைப் பெண் பார்த்தார்கள். 'மன்னி ஓகே சொன்னால்  கல்யாணம்' என்றீர்களாம்.

யாரோ நாலு பேர் நிற்றுக்கும் போட்டோவைக் காட்டி 'இவன் தான் எனது மச்சினர்' என்றாள் மன்னி.

அப்புறம் உங்கள் அலுவலக நிகழ்ச்சின் காஸட் ஒன்றை கொடுத்து இதில் பையன் இருக்கிறான் என்கிறார்கள். தென்பட்ட தலைகள் எல்லாம் உங்களுடையதோ என்ற நப்பாசையில், ஸ்டில் போட்டு நாலு மணிநேரம் கேசட்டை பார்த்தோம்.

அப்புறம் கல்யாணம். ஒன்றரை மாதம் தான் லீவு. உடனே, போக வேண்டும் என்ற பரபரப்பு. ஏர்போர்ட்டில் உங்களை பார்த்ததில் இருந்து உற்சாகத்  துள்ளல். மீண்டும் நீங்கள் பிளைட் ஏறுவதத்திற்குள் எல்லாமே அவசரம், ‘டயமாச்சு’, ‘லேட்டாகிறது’  தானே. நடுவில் கல்யாணம். கொடைக்கானலில் மூன்று நாள் ஹனிமூன். பத்து பதினைந்து வீடுகளில் விருந்து.

யோசித்துப் பாருங்கள்.உங்களுடைய முப்பது வயது அவசரமும், எனது இருபத்துநாலு வயது வேட்கையும் தானே அப்போது கோலோச்சின. யாரோ சுவீட்டை பிடிங்கிக்கொள்வார்கள் என்பதற்காக வாய் கொள்ளாமல் அமுக்கிக் கொள்ளும் குழந்தையைப் போலல்லவா நாமிருந்தோம்.

நிறைய விஷயங்கள் நமக்குள் பிடித்திருந்தன. பல இடங்களில் ஒன்றை போலவே யோசித்தோம். இதைத்தான் தெய்வாதீனம் என்று இதுவரை நான் நம்புகிறேன். ஆனால் இன்று ஆறு மாதங்கள் கழித்து யோசிக்கிறேன். உங்களுடைய ஒவ்வொரு முகமும் உணர்வும் மேலே மேலே ஒட்டிக் கொண்டே வருகின்றன. ஆனால், நீங்கள் யார்? உங்களை நான் எத்தனை தூரம் உள்வாங்கியிருக்கிறேன்? தக்கவைத்துக் கொண்டிருக்கிறேன்?

உங்களுக்கு என்ன பிடிக்கும்? என்ன சாப்பிடுவீர்கள்? என்று தகவலின் அடிப்படையில் வேண்டுமானால் நான் தெரிந்து கொண்டிருக்கலாம். என்னைப்பற்றி நீங்கள் தெரிந்திருப்பதும், பிறர் சொன்ன தகவல்களே. தகவல்களுக்கு மேல் உள்ளம் என்று ஒன்றிருக்கிறதே! நாற்பது  நாட்களுக்குள் புரிந்து போவதா அது?

ஆற அமரப் பேசி,உங்கள்  துன்பம், ரசனை,என்று அறிந்து என் நண்பர்கள், ஆர்வங்கள் என உங்களுக்கு காட்டி, உள்ளத்தில் ஒன்றுபட வேண்டியது அவசியமில்லையா? அவற்றில் எததற்கும் வாய்ப்பில்லாமல் நாற்றுப்பதாவது   நாள்  ஏர்போர்ட்டில் ஏக்கம் தெனிக்கப் பார்த்துவிட்டு போய்விட்டீர்கள்.

உண்மையை சொன்னால் இன்னும் நீங்கள் எனது கனவுலகில் சஞ்சரிக்கத்  தொடங்கவில்லை. கற்பனைகளில் உங்கள் முகம் தெளிவாக இல்லை. உங்கள் அவசர அழுத்துதல்களும் சின்ன தோள் குலுக்கல்களும் புதுத்துணி  வாசனையும்  மட்டுமே நினைவில் நிற்கின்றன. இப்பொது தான் உங்கள் நினைவுகளை சேகரிக்கத் தொடங்கியிருக்கிறேன். அதற்கு முன்னால், வயிற்றில் உங்கள் குழந்தை.

உங்கள் குரலும் போட்டோக்களும் மட்டுமே எனது வாழ்க்கை என்றாகி விட்டன. அவ்வப்போது வரும் கடிதங்கள் கிளுகிளுப்பூட்டினாலும் அடிப்படையில் ஒரு உண்மை: நீங்கள் அருகில் இல்லை.

இது குற்றமில்லை என்றாலும் குறையே. ஆனால், நீங்களே சொன்னது போல இது இன்னும் ஒன்றிரண்டு வருடங்கள் தான். அப்புறம் நிரந்தரமாக ஏதோ ஒரு நாட்டில் சேர்ந்திருக்கப் போகிறோம். சத்தியமாக இந்த நம்பிக்கையில் தான் நான் கழுத்தை நீட்டியது .

இன்று நான் தனிமரம் என்பது உண்மை. உங்களைப்பற்றிய சிறுசிறு தகவல்கள் மூலம்  நான் வலை பின்னிக்கொண்டிருக்கிறேன். உங்கள் முகத்தை மெல்லமாய் கோடிழுத்துக் கொண்டிருக்கிறேன். சதையும் ரத்தமுமாய் இன்னும் நீங்கள் என் மனதில் உட்காரவில்லை. அததற்குள் வயிற்றில் உயிரும் உணர்வுமாய் ஒரு ஜீவன்.

தாலி கட்டிக் கொண்டதத்திற்காக நான் குழந்தை சுமக்க தயாரில்லை.கல்யாணம் எனக்கு ஒருவழிப் பாதையல்ல. குழந்தை அதன் லாபமும் அல்ல. வேகம் எனக்குப் பிடித்தமானது.ஆனால், எந்த  உணர்வுக்கும் மரியாதை தராத அவசரம் எனக்கு உவர்ப்பானதல்ல.

யோசித்துப் பாருங்கள். நீங்கள் இல்லாமல் இந்தக் குழந்தையை நான் எப்படி பெற்றெடுக்க முடியும்? இதன் வலிலும் வேதனையிலும் உங்களுக்கு பங்கில்லையா? அணுஅணுவாக அதன் வளர்ச்சியில் உங்களுக்கும் ஈடுபாடியிலயா? நம் இருவரின் அன்புக் குழைவில் இது உருவாக  வேண்டாமா?

அத்துவானாக் காட்டில் குலைதள்ளி நிற்றுக்கும் ஒற்றைப் பனைமரமா நான்?

இல்லை. இது என் வழியில்லை. இது என் எதிர்பார்ப்பில்லை. ஹாஸ்டலில்  நான் புரண்டபடி கண்ட கனவு இதுவல்ல. வராண்டா கைப்பிடி சுவரில் சாய்ந்தபடி  பூக்களோடு பேசியது இதுவல்ல. என் வயிற்றில் வாழ்ந்தது அன்பின் கருவல்ல.அவசரத்தின் பலன்.

முக்கியமான இன்னொன்று: பிறந்த குழந்தைக்கு அப்பாவின் கதகதப்பான  ஸ்பரிஸம் வேண்டும்.  உங்கள் போட்டோவையும் வீடியோவையும் காட்டி நான் அந்த சந்தோசத்தை பறிக்கத் தயார் இல்லை.

கடைசியாக ஒரு விஷயம். நான் ஏன்முன்னமே சொல்லாமல் போனேன் என்பதற்கன காரணம், நான் இவ்வளவு தூரம் சொல்லிக்கொண்டு வந்தவற்றின்  ஆழத்தையும் தொனியையும் நீங்கள் உணரக்கூடியவரா என்று எனக்குத் தெரியவில்லை. என் வார்த்தைகள் அணைக்கப்படாத ஒலிவாங்கி போல ஆகிவிடுமோ என்ற பயம் தான்.

இதுதான் எனது பிரச்சனை. உங்களை எனக்கு இன்னும் கோட்டுச் சித்திரமாகக்கூடத் தெரியவில்லை. உங்கள் யோசிப்பின் திசை கூட நானறியாதது. உங்களை பற்றிய தகவல்கள் எனக்கு வெறும் செய்திகள் தான். உள்ளே தெரியும் உங்கள் முகத்தை நான் கட்டமைத்துக் கொண்டிருக்கிறேன்.

அததற்கு முன்னாள் வேறு எந்த ஜீவனையும் நான் கட்டமைக்கத் தயாராயில்லை .

தயவு செய்து என்னை மன்னியுங்கள்.

                                                                       உங்கள் அன்பு மனைவி
                                                                                   அனிதா