FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on October 14, 2018, 12:07:32 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 202
Post by: Forum on October 14, 2018, 12:07:32 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 202
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/0Latest/OU/202.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 202
Post by: JeGaTisH on October 14, 2018, 02:26:26 AM
கல்விப் பருவதில்  வந்த  காதல்
காளை  என் நெஞ்சில் பதிந்த காதல்
தேவி  உன்னை பார்த்த தருணம்
கருவறையை  மறந்த  கணங்கள்

இதுவரை மலராத மலரொன்று
அன்று என்னை பார்த்து மலரக்கண்டேன்
என் உடலின் உஷ்ணத்தை உணர்ந்தேன்
உன் பார்வையின்  அர்த்தமும் புரிந்தேன்   

மறு பெஞ்சில்  நீயும்
உன்னை ரசிக்கும் என் கண்கள்
பார்வையாலே  உன்னை வலை வீச
ஒரக்  கண்சிமிட்டால் கவிழ்த்துவிட்டாய் 
அப்பப்பா ....
அவை மான் விழிகளா?  இல்லை  மது ரசமா?
கண்ணழகி உன்னை பார்த்து கவிழ்ந்துவிட்டேனடி 

கண்ஜாடையில்  என்னைக்  கவர்ந்துவிடு
இல்லையென்றால் கோபத்தால் பொசுக்கி விடு
தள்ளிநின்று உன்னை பார்ப்பதை விட
உன் பார்வையில் பொசுங்கி போய்விடுகிறேன்
ஒரு பார்வைக்கு  தவமிருக்கிறேனடி

மண்ணில் உன்னை சேரவில்லை
விண்ணிலாவது  என்னைச் சேர்வாயா?
அந்த  நாளுக்க்காக காத்திருக்கும் உன் அன்பன் நான்.


ரோஸ் மில்க் தம்பி ஜெகதீஷ்


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 202
Post by: பொய்கை on October 14, 2018, 10:25:37 AM
[highlight-text]பள்ளி படிக்கட்டில் என்னை
பார்வையினால் சுட்டவளே!
துள்ளி குதித்து நானும் நித்தம்
பள்ளி  போக  வைத்தவளே!

கல்வி கற்கும்நாளில் என்னை
கனவு காண செய்தவளே!
காகிதத்தில் என் கையை
கடிதம் எழுதவைத்தவளே!

காணும்  போதெல்லாம்
கண்சிமிட்டி போனவளே!
நாணும் போதெல்லாம் 
எனைவியக்க வைத்தவளே!

கண்இமைக்கும் நேரத்தில்
காதலை சொன்னவளே!
காத்திருந்த பலருக்குள்
மோதலை செய்தவளே!
 
படிச்ச படிப்பை என்னால்
பாதியில விட்டவளே !
கெடச்ச  மாமன் கையை
கெட்டியாக பிடிச்சவளே!

குடிகார பயல போல
உன்பெயரை கத்துறேண்டி!
கடிகார முள்ளு போல
உன்னையே  சுத்துறேண்டி!
[/highlight-text]
[/color]
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 202
Post by: AshiNi on October 14, 2018, 10:37:03 AM
விடியல்கள் மலர்வதெல்லாம்
  உன் முகம் காணத்தானோ...!
நேரங்கள் கடப்பதெல்லாம்
  உன் குரல் கேட்கத்தானோ...!

அத்தனை காலங்களும்
  நானாக இருந்தேன்...
உன்னை கண்டதால்
  என்னையே இழந்தேன்...

கற்ற பாடங்கள் எல்லாம்
  என் அறிவை துளைக்குதே...
சுற்றி தோழமை இருப்பினும்
  என் மனதை ஏதோ கலைக்குதே...

பள்ளிப்பருவம் கொண்டதால்
  உலகை மறந்தேன்...
காதல் பருவம் வந்ததால்
  வானில் மிதந்தேன்...

உன் பார்வை கதிர்கள்
  மழையாய் எனை நனைக்குதே...
அதனால் வரும் காய்ச்சல்
   எனக்கு நிதமும் பிடிக்குதே...

பேனை எழுதும் கிறுக்கல்களாய்
  உன் பார்வை கீறல்கள்...
கீறல் பட்ட வேகத்தில்
 எனக்குள் மலரின் தூரல்கள்...

ஆகாயம் நீளும் நீளமாய்
  உன்மேல் ஆசை எனக்கு!
கனவில் வந்து தினமும்
 என் தூக்கம் பறிக்க பேராசை உனக்கு!

ஒருதலை காதல் கொண்டு
  உயிரும் உருகுதே...
நாட்கள் கடக்க கடக்க
  என் காதல் வெள்ளமாய் பெருகுதே...

தோழி என நானும்
  உன்னோடு இருக்கிறேன்...
தாலி நீ வரமாய் தரும்
  நாளுக்கு காத்துக்கிடக்கிறேன்...

என் பள்ளித் தோழனே கண்ணாளா...!
என்னை அள்ளி அணைக்கும்
கணவனாய் வருவாயா...?

என் கனவுப் பிரியனே மணவாளா...!
உன்னில் ஒரு பாதி தந்து
என் பிறவி பலனை தருவாயா...?!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 202
Post by: JasHaa on October 14, 2018, 11:28:42 AM

ஜானுவாகிய நானும் ... ராமாகிய நீயும்  ....

சின்னஜிரு  மொட்டாய் நீயும் நானும்  ...
பள்ளிப்பருவம்  தொட்டு  மொட்டவிழ்த்த   காதல்....

வானவிலாய் நானும்... கார்மேகமாய் நீயும் ...

ஓயாமல்  கருவாயா என  சீண்டி சிரித்த  நான்  ...
என்   சீண்டலை  ரசித்த  நீ  ...
அன்று  புரியவில்லை  உன்  கருமை
என் வாழ்வின்  வர்ணஜாலமென்று  ...

சிட்டு குருவியாய் நான் ...  தீன்கள்வனாய் நீ ...

உண்ணும்  உணவு  முதல்  உன் உறக்கம்  களவாடிய  நான்....
அனைத்தையும்  உன் விழி  சிரிப்பால் கடந்தவன்  நீ....
அன்று புரியவில்லை...
அவ்விழிகளால்  நெக்குருகி  போவேனென்று  ....

சிறகாய் நான்... சிலுவையாய் நீ ....

அதிரடியாய்  நான் செய்யும்  சேட்டைகளை 
சிரமேற்கொள்வாய்  நீ ... அன்று புரியவில்லை ...
காலம் முழுவதும் உன் நினைவுகளை  தூக்கி  சுமக்கும் 
சிலுவையாய் நான் இருப்பேனென்று  ....

சிற்பமாய்  நான்...சிற்பியாய் நீ ...

பருவம்  எய்திய  காலம்  தொட்டு ...பார்வையால்   சீண்டிய உன் காதல்...
இமை எனும் குடை  பிடித்து  வெட்கத்தை  மறைத்த  நான் ...
அன்று புரியவில்லை ...என்
பெண்மையை  செதுக்க  வந்த  சிற்பியென்று....

பறவையாய்  நான்...கூடாக  நீ ....

காதல்  என அறியாத  நானும் ....மௌனம்  எனும்  போர்வையில்  நீயும்..
பிரிவை  நோக்கி  நகர்ந்த பொழுது  ....
உன் சிறகை மறைத்து  என் சிறகொடிதாய் ...
அன்று புரியவில்லை நீ இல்லாமல்  என்றும் 
நான் சிறகொடிந்த பறவையென்று  ....


பருவங்கள் கடந்து... காலங்கள் கழிந்து...   சந்தித்த  நிமிடங்கள்  ...
யார் கூறியது  பள்ளிப்பருவ  காதல் இனக்கவர்ச்சி  என்று  ...
காமம்  எனும் நூல்  தொடாது  அதீத  அன்பு  எனும் பூமாலை  என ...
காதலாய் கசிந்துருகி  எனை தாங்கிக்கொள்ள  தாயுமானவனாய் நீ ..
பிள்ளை  மனம்  மாறாமல்  உன் மடி சேரத்துடிக்கும்  சேயாய்  நான் ....
காதல்...

உடல்   சார்ந்ததா என்ன??
மனம் சார்த்ததடா ...
என் மனமாகிய  நீயும் ...
உன் மனமாகிய நானும் ....
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 202
Post by: thamilan on October 14, 2018, 01:14:56 PM
என் அகத்தில் ஆசையும்
முகத்தில் மீசையும்
முளைத்த காலம்

கல்லூரிக்காக கைதாகி
வீடு கடத்தப்பட்டு
விடுதியில் அடைக்கப்பட்டேன் நான்

கல்லூரி வந்த முதல் நாளில்
கண்டேன் அவளை நான்
மின்னலைப் போலிருந்தாள் அவள்
நல்லவேளை
தொட்டுப் பேசிய தோழிகள்
பொசுங்கிவிடவில்லை

சுருள் வாள்களாக
சுருண்டு தொங்கும் கூந்தல்
உளியும் கிளியும்
உட்கார்ந்து பேசி
நீண்ட நாட்களாக செய்த நாசி

நாசிக்கு கீழே
நாடிக்கு மேலே
அதென்ன இரண்டு அமுத சுரப்பிகள்
ஓ..... உதடுகள் அவை

தமிழைப்போல நளினமாய் இருந்தாள்
இடை மட்டும்
ஆங்கில எழுத்து
வை(Y) போல அமர்ந்து இருந்தது

முதலாண்டு மாணவி என
முதலில் தெரிந்தது
சமவயது என
சாதகமாய் சொன்னான்
நண்பன்

செயல்பட்டது
சிறப்பு புலனாய்வுத் துறை
அவள் வீட்டு  நிலைக்கதவு
நிறம் முதல்
அவள் நகம் வெட்டும்
நாட்கள் வரை
வெள்ளை அறிக்கையை
ஒப்படைத்தது என்னிடம்

இனி அவளிடம்
பேசத்தானே என்னிடம் உதடுகள்
காத்திருந்தேன்

ஒருநாள்
பாட்டுப் போட்டிக்கு வந்தது
அந்தப் பறவை
தற்செயலாக என் இருக்கைக்கு
முன் இருக்கை
அந்தப் பெண் இருக்கை

கூடே கட்டத்தெரியாத
குயிலே
நீ எப்படி  சேலை கட்டி வந்தாய் 

திடுக்கிட்டு திரும்பினாள்
விரிந்தன இமைகள்
வியர்ந்தன விழிகள்

பின்னொரு நாளில்
இன்னொரு விழா 
திட்டமிட்டே அவள் இருக்கைக்கு
பின்னிருக்கை என்னிருக்கை

இதழ்களால் பார்த்தாள்
இமைகளால் சிரித்தாள்

நீ பன்னிரண்டு ஆண்டுகளுக்கு
ஒரு முறை
சிரிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தால்
இலக்கியங்கள் உன்னைத்தான்
குறிஞ்சிப் பூ என்று குறிப்பிட்டிருக்கும்

இப்படி எழுதி 
எப்படியோ அவளிடம் கொடுத்தேன்
குறிஞ்சிப் பூ
மறுபடியும் பூத்தது

விழா முடிந்தது
எங்களுக்குள் காதல்விழா தொடங்கியது
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 202
Post by: JeSiNa on October 14, 2018, 04:29:07 PM
பள்ளி பயிலும் காலங்களில்
உன்னுடன் பட்டாம்பூச்சிகளோடு
பறந்து திரிந்த..
நாட்களில் மனதிலும்
நினைவுகளிலும் நட்பை
தவிர ஒன்றும் இல்லை ..!!

நீ என் அருகில் இல்லாத
நாட்களில் நான் நானாகவே இல்லை ...!!

புது உணர்வுகள் என்னுள்ளே
புரியாமல் தவிதித்ததேனடி..!!
பலப்பல எண்ணங்களை என்னுள்ளே
தந்தாயடி...!!

உன்னை தேடி திரிந்து
வீட்டின் அருகில் வந்த என்னால்
உன்னை பார்க்க முடியாமல்
தோல்வியுற்று
திரும்பினேன் ..!!

உன்னை காணாமல் இருந்தது
என்னவோ இரண்டு
நாட்களே ..!!
பல யுகங்களை
கடந்ததேனடி ..
நீயில்லா பொழுதில் ஒவ்வொரு நொடியும்
நரகமாகின...

இந்த பிரிவு இன்னும் எத்தனை நாட்களோ
என்று பரிதவிக்க ..
சற்றென்று தேவதை போல்
காட்சி அளித்தாய் ...!!

ஓர் இனம் புரிய கொண்டாட்டம்
என் மனதில் ...
இது தான் காதலா..??
புரியாமல் இமைக்க மறந்து
உன்னை ரசித்தேன்..!!

பார்வை ஒன்றால் என் கேள்விகளுக்கு
விடை அளித்தாய் ..
ஆமாம் இது காதல்தான் .
என் முதல் காதல்...!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 202
Post by: RishiKa on October 14, 2018, 08:21:35 PM
  

பள்ளிக்கு வந்த பருவ நிலா நான்!
படிக்க வந்த கருப்பு பகலவன் நீ!

உன் ஓளியில் மிளிரும் .
மின்மினி ஆனேன்...

அன்பை அறிமுகம் செய்தவனே!
நேசத்தை பார்வையில் நெய்தவனே!

உன் விழி வழி அன்பில்...
அன்று  கரைந்து போனவள்தான் நன்!..
இன்னும் கரை சேராமல்..
பிரிவு கடலில் தத்தளிக்கிறேன்..

உன்னை நித்தம் கண்டதும்...
தேவதைகள் என் மேல்  மலர்கள் தூவும்..
உனக்கோ ....
மீசை சிறகுகள் முளைத்தது.
மனதை எங்கோ பறக்க வைத்தது..

கால சூறாவளியில்....
காணாமல் போனதென்ன..?

சிரிப்பை சிதற விட்டு....
இன்பத்தை அள்ளி தந்த...
காதல் கணிப்புகள்....
பொய் ஆகி போனதென்ன..?

காதலை தொலைத்த நாம்...
காகித வார்த்தைகளில் ...
கண்ணீரில் நனைகின்றோம்...

தொலைத்த இடம் தெரிகின்றது...
தொலைத்த பொருளும் தெரிகின்றது..
வலியும்  உணரப்படுகின்றது..

ஆனாலும் திரும்ப மீட்டுஎடுக்க  முடியவில்லை..
உன் நினைவுகளை..

தொலைந்து போன ..
நானும் கிடைக்க வேண்டுமே...

ஒருமுறையாவது..
உன் கடிதம் என் முகவரியை ...
அடைந்து இருக்கலாம்..

இன்னும் காத்து கொண்டு இருக்கின்றேன்...
என் காத்து இருப்பில்..
வளர்ந்து கொண்டு இருக்கும் ...
கவிதை நீயே..

கனவுகளை ...சுமந்து கொண்டு ...
நான்...
காதல் தெருக்களில் .....
உனக்காக மட்டும்...
காத்திருக்க வில்லை....
உன் காதலுக்காகவும்தான்..!

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 202
Post by: SweeTie on October 14, 2018, 09:11:43 PM
தினம் தினம் கனவில் வருகிறாய்
மனம் உன்பின்னால் அலையுதடா
கணமும் உன்னை பிரியாமல்
கண்ணில் வைத்து காப்பேனடா

எட்டாம் வகுப்பில் அறிமுகமானோம்
ஒன்பதாம் வகுப்பில் நண்பர்களாய்
பத்தாம் வகுப்பில் காலடி பதித்தோம்
பன்னிரண்டாம் வகுப்பில் காதலின் துளிர்கள்

பருவத்தின் ஆரம்பம்  பருக்களும் தோன்றி
உருவத்தில் மாற்றம்  அரும்பு மீசையும்
என் இதயத்தை  கிழிக்கும் உன் பார்வை
கொல்லாமல் கொன்றாயடா  கண்ணா

தனிமையை தேடினோம் இனிமை காண 
தேன்துளி  அருந்தும் வண்டுகளானோம்
புற்கள்மேல் விழுந்த பனித்துளி யானோம்
சிவப்பு ரோஜாக்கள் கண் சிமிட்ட கண்டோம்

பள்ளியில்  படித்ததோ  கொஞ்சம்
நாம் காதலில் படித்தோம்  மீதி
புரியாத பாடங்கள் சேர்த்தது நம்மை
படித்ததோ எல்லாம் காதலின் வரிகள்

எத்தனை கனவுகள்  உன்னுடன் வாழ
எத்தனை குழந்தைகள் நம் மடிமீது தவழ
கனவுகள் நனவாக  வேண்டாத  தெய்வம்  இல்லை
இந்த  காதலும்  ஒரு தொடர்கதைதானோ