Author Topic: இருண்ட வீடு  (Read 4633 times)

Offline RemO

Re: இருண்ட வீடு
« Reply #30 on: February 21, 2012, 10:11:07 AM »
31. திருடன் போனது தெரிந்தபின், தலைவருக்கு எரிச்சல் வந்தது. அந்த எரிச்சல் தலைவியைக் கொன்றது.

திருடன் அந்தத் தெருவைவிட் டகன்றதை
ஐய மின்றி அறிந்த பின்னர்,
தலைவர் அலறத் தலைப்பட்டார்; "அடே
கொலைஞனே எனக்குக் குழந்தையாய் வந்தாய்
கைத்துப் பாக்கியால் கள்ளன் நடுங்கினான்
பொய்த்துப் பாக்கி பொய்த்துப் பாக்கி
என்றாய், சென்றான் பொருளையும் தூக்கி"
என்று கூறி, எதிரில் இருந்த
சந்தனக் கல்லைச் சரேலென எடுத்துப்
படுத் திருந்த பையனை நோக்கி
எறிந்தார். பசியும், எரிபோல் சினமும்,
மடமையும் ஒன்றாய் மண்டிக் கிடந்த
தலைவன் எறிந்த சந்தனக் கல்லோ
குறிதவறிப் போய்க் கொண்ட பெண்டாட்டி
மார்பினில் வீழ்ந்தது; மங்கை "ஆ" என்று
கதறினாள்; அ·தவள் கடைசிக் கூச்சல்!

Offline RemO

Re: இருண்ட வீடு
« Reply #31 on: February 21, 2012, 10:11:47 AM »
32. பெரிய பையன் இல்லை. அயலார் நலம் விசாரிக்கிறார்கள்.

குறிதவ றாமல் எறிந்த முக்காலி
பெரியவன் தலைமேல் சரியாய் வீழ்ந்தது.
தலைவர் பின்னும் தாம்விட் டெறிந்த
விறகின் கட்டை வீணே; ஏனெனில்
முன்பெ பெரியவன் முடிவை அடைந்தான்!
அறிவிலார் நெஞ்சுபோல் அங்குள விளக்கும்
எண்ணெய் சிறிதும் இல்லா தவிந்தது.
வீட்டின் தலைவர் விளக்கேற்று தற்கு
நெருப்புப் பெட்டியின் இருப்பிடம் அறியாது
அன்பு மனைவியை அழைப்பதா இல்லையா
என்ற நினைப்பில் இருக்கையில், அண்டை
அயலார் தனித்தனி அங்கு வந்தார்கள்.
எதிர்த்த வீட்டான் என்ன வென்றான்.
திருடனா என்றான் சீனன். விளக்கை
ஏற்றச் சொன்னான் எட்டி யப்பன்.
எதிர்த்த வீட்டின் எல்லிக் கிழவி,
குழந்தை உடல்நலம் குன்றி இருந்ததே
இப்போ தெப்படி என்று கேட்டாள்.
விளக்கேற் றும்படி வீட்டுக் காரியை
விளித்தார் தலைவர்; விடையே இல்லை!
என்மேல் வருத்தம் என்று கூறிப்
பின்னர் மகனைப் பேரிட் டழைத்தார்;
ஏதும் பதிலே இல்லை. அவனும்
வருத்த மாய்இருப் பதாய் நினைத்தார்!
அயல்வீட் டார்கள் அகல்விளக் கேற்றினார்.
கிழவி முதலில் குழந்தையைப் பார்த்து
மாண்டது குழந்தை மாண்டது என்றாள்!
மனைவியும் பையனும் மாண்ட சேதி
அதன்பின் அனைவரும் அறிய லாயினர்.
தெருவார் வந்து சேர்ந்தார் உள்ளே.
ஊரினர் வீட்டின் உள்ளே நுழைந்தார்.
அரச காவலர் ஐந்துபேர் வந்தார்.
ஐவரும் நடந்ததை ஆராய்ந் தார்கள்.

Offline RemO

Re: இருண்ட வீடு
« Reply #32 on: February 21, 2012, 10:12:39 AM »
33. கல்வியில்லா வீடு இருண்ட வீடு.

எல்லா நலமும் ஈந்திடும் கல்வி
இல்லா வீட்டை இருண்டவீ டென்க!
படிப்பிலார் நிறைந்த குடித்தனம், நரம்பின்
துடிப்பிலார் நிறைந்த சுடுகா டென்க!
அறிவே கல்வியாம்; அறிவிலாக் குடும்பம்
நெறி காணாது நின்ற படிவிழும்!
சொத்தெலாம் விற்றும் கற்ற கல்வியாம்
வித்தால் விளைவன மேன்மை, இன்பம்!
செல்வம் கடல்போல் சேரினும் என்பயன்?
கல்வி இல்லான் கண் இலான் என்க.
இடிக்குரற் சிங்கநேர் இறையே எனினும்
படிப்பிலாக் காலை நொடிப்பிலே வீழ்வான்!
கல்லான் வலியிலான்; கண்ணிலான்; அவன்பால்
எல்லா நோயும் எப்போது முண்டு.
கற்க எவரும்; எக்குறை நேரினும்
நிற்காது கற்க. நிறைவாழ் வென்பது
கற்கும் விழுக்காடு காணும்; பெண்கள்
கற்க! ஆடவர் கற்க! கல்லார்
முதிய ராயினும் முயல்க கல்வியில்!
எதுபொருள் என்னும் இருவிழி யிலாரும்
படித்தால் அவர்க்குப் பல்விழி கள்வரும்.
ஊமையுங் கற்க ஊமை நிலைபோம்!
ஆமைபோல் அடங்கும் அவனும் கற்க
அறத்தைக் காக்கும் மறத்தனம் தோன்றும்!
கையும் காலும் இல்லான் கற்க
உய்யும் நெறியை உணர்ந்துமேம் படுவான்.
இல்லார்க் கெல்லாம் ஈண்டுக்
கல்விவந் ததுவெனில் கடைத்தேறிற் றுலகே!