Author Topic: திருக்குர்ஆனின் அத்தாட்சிகள்!  (Read 7943 times)

Offline Yousuf

உஹது

மக்கா குரைசிகளும் பிற கோத்திரத்தாரும் சேர்ந்து சுமார் மூவாயிரம் படையினர் மதினாவை தாக்குவதற்க்கு உஹது என்ற இடத்திற்க்கு வந்தனர். அப்துல்லா பின் சுபைர் ரளியல்லாஹு அன்ஹு தலைமையில் 50 வில்போர் வீரர்களை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் இந்த ஜபலுர் ருபாத்துக்கு உச்சியில் நிற்கவைத்தார்கள். மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் கட்டளை வரும்வரை இந்த குன்றிலிருந்து கீழே இறங்காமல் எதிரிகளை நோக்கி அம்பெய்தி கொண்டே இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். மதினாவிற்க்கு மிக அருகில் உள்ள உஹதில் 700 நம்பிக்கையாளர்கள் நிராகரிப்பார்களுடன் மிகக் கடுமையாக போரிட்டது இந்த பள்ளத்தாக்கில்தான் (படம் 15a).

பலுர் ருபாத்



படம் 15a

முஸ்லீம்களை எதிர்த்து போரிட எதிரிகளால் முடியவில்லை. தங்கள் தலைவர்களும் கொடியை தாங்க கூடியவர்களும் கொல்லப்பட்டதால் நிராகரிப்போர் போரிலிருந்து பின்வாங்கி சென்றனர். இதைக் கண்டதும் வில்போர் வீரர்களில் பத்து நபர்களை தவிர அனைவரும் பெருமானாரின் கட்டளையை புறக்கணித்து குன்றிலிருந்து இறங்கி எதிரிகள் விட்டுச்சென்ற ஆயுதங்களையும் பொருள்களையும் சேகரிக்க தொடங்கினார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காபிர்களின் குதிரைப்படையினர் குன்றின் பின்பக்கமாக மலைமீது ஏறி முஸ்லீம்களுக்கு எதிராக போரிட தொடங்கினார்கள். இதனால் ஏற்ப்பட்ட குழப்பத்தினால் ஆங்காங்கு சிதறி ஓடினார்கள். ஒரு சிலர் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டனர். இந்த சூழ்நிலையில் சிக்கி ஏராளமான முஸ்லீம் படையினர் வீரத்தியாகியாயினர்.

இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்; நீங்கள் (உங்களுக்கிடப்பட்ட) உத்திரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள்; நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்; உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள்; இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்; பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளைவிட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான்; நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான் அல்குர்ஆன் 3:152

முஸ்லீம்கள் மீண்டும் வலிமைபெற்று மிக்க வீரத்துடன் முன்னேறிச் சென்று எதிரிகளை தாக்கியதால் அவர்கள் போர்களத்தை விட்டு ஓடிச்சென்றனர். உஹது போரில் தியாகிகளான சுமார் 60 ஷஹபாக்களின் கப்ருகள் இந்த சுற்று சுவருக்குள்தான் உள்ளன. அதற்க்கு நடுவில் உள்ளது பெருமானாரின் தந்தையின் சகோதரர் ஹம்ஸா பின் அப்துல்முத்தலிபின் கப்ரு ஆகும்.



Offline Yousuf

கந்தக் - அகழ்ப்போர்

சமாதான சூழ்நிலை அதிக நாட்கள் நீடிக்கவில்லை. குரைசிகளும் மேலும் ஆறு கோத்திரத்தாரும் சேர்ந்து சுமார் பத்தாயிரம் படையினரும் இரண்டாயிரத்துக்கு மேற்ப்பட்ட ஒட்டகங்களும் ஏராளமான ஆயுதங்களும் குதிரைபடையினரும் ஆரவாரத்துடன் கூட்டுப்படையாக மதினாவை தாக்க புறப்பட்டு சென்றனர். இந்த செய்தியை அறிந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் தமது தோழர்களுடன் போர் தந்திரங்களை பற்றி ஆலோசனை செய்தனர். மதினாவை சுற்றிலும் ஓர் அகழியை தோண்டி எதிரிகளின் முன்னேற்றத்தை தடை செய்வது என்ற பாரசீக போர் தந்திரத்தை ஸல்மான் பாரிஸ் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் முன் வைத்தார்கள். பெருமானார் அதை வரவேற்று ஒரு வாரம் கடினமாக உழைத்து ஒன்பதாயிரம் அடி நீளமும் குதிரைப் படையினரால் எளிதில் தாண்டமுடியாத அளவுக்கு அகலமும் ஆழமும் கொண்ட ஓரு அகழியை தோண்டினார்கள். பட்டினியால் நிமிர்ந்து நிற்க முடியாமல் தமது வயிற்றில் கற்களை கட்டிவைத்துக் கொண்டு பெருமானாரும் தோழர்களும் அந்த அகழியை தோண்டினார்கள். இந்த சாலை இருக்குமிடம் அந்த அகழியை சேர்ந்தது தான்.



அகழிக்கு மறுபுறம் வந்த கூட்டுப் படையினர் அந்த அகழியைப் பார்த்து வியந்து நின்றனர். அகழிக்கு மறுபுறம் ஸல்வு மலை உச்சியிலும் உள்ள முஸ்லிகளிடம் மட்டும் போர் சில நாட்கள் நடந்தது. முஸ்லீம்களிடம் ஏற்படுத்திக் கொண்ட சமாதான ஒப்பந்ததையும் மீறி யூதர்கள் எதிரிகளிடம் சேர்ந்து கொண்டனர். மஸ்ஜித் பத்ஹ் என்ற இந்த இடத்தில்தான் பெருமானாரின் முகாம் இருந்தது.

இந்த நிலைமை ஒரு சில நாட்கள் நீடித்தது. ஒரு இரவில் பெரும் இரைச்சலுடன் காற்று வீசியது. பலத்த மழை பொழிந்தது. இடியும் மின்னலும் தொடர்ந்தது. அந்த சூறாவளி காற்றில் முகாம்கள் பறந்து சென்றன. முஸ்லீம்கள் அகழியை தாண்டி தாக்க வருவதாக தவறாக எண்ணிய கூட்டுப் படையினர் பொழுதும் விடியும் முன்னரே கந்தக்கை விட்டுச் சென்றனர். அல்லாஹ்வின் இந்த தந்திரம் முஸ்லீம்களை காப்பாற்றியது. தங்களை காப்பாற்றிய அல்லாஹ்விற்க்கு முஸ்லீம்கள் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து நன்றி செலுத்தினார்கள்.

Offline Yousuf

கைபர்

ஹுதைபியா ஒப்பந்தம் வாயிலாக மதினாவில் மீண்டும் சமாதானம் நிலை நாட்டப்பட்டது. ஆனால் வஞ்சகர்களான யூதர்களிருக்கும் வரையிலும் முஸ்லீம்கள் நிம்மதியாக வாழமுடியாது என்பது கந்தர் தரும் படிப்பினையாகும். நூறு குதிரை வீரர்களும் நூற்றி அறுபது காலாட்படையினரும் பெருமானாரின் தலைமையில் மதினாவிலிருந்து கைபரை நோக்கி புறப்பட்டு சென்றனர். இது கைபரில் உள்ள யூதர்களின் கோட்டையாகும்.



முஸ்லீம்கள் பல நாட்கள் இந்த கோட்டையை முற்றுக்கையிட்டதும் கடுமையான மோதல் ஏற்ப்பட்டது. யூதர்கள் கோட்டைக்கு வெளியே வந்து சரணடைந்தார்கள். கோதுமை வைக்கோலும் களிமண்ணும் சேர்த்து பிசைந்து பேரிச்ச மரக்கட்டைகள் சேர்த்து கட்டப்பட்டதுதான் இந்த மூன்றடுக்க கோட்டையாகும்.


கைபரில் யூதர்களின் வீடுகளின் சிதிலங்கள் இப்பொழுதும் உள்ளன.


கைபரில் உள்ள ஒரு யூததேவாலயம்

நிராகரிப்போர்களை கொன்றுவிடுவது என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் கொள்கையல்ல. முஸ்லீம்களிடம் சரணடைந்த யூதர்களிடம் பெருமானார் மிக கண்ணியமாக நடந்து கொண்டார்கள். அவர்களிடமிருந்து கைபற்றபட்ட தவ்ராத் வேதத்தின் ஒரு சில பக்கங்கள் அவர்களிடமே திருப்பி கொடுக்கப்பட்டது. விவசாய நிலங்களின் உரிமையை தங்களுக்கே கொடுக்கவேண்டும் என்ற வேண்டுகோளை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். யூதர்களுடன் சமாதான ஒப்பந்தம் ஏற்ப்படுத்திய பிறகுதான் முஸ்லீம்கள் கைபரைவிட்டு திரும்பி சென்றார்கள்.
« Last Edit: January 15, 2012, 07:18:33 PM by Yousuf »

Offline Yousuf

முஅத்தா போர்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் சிரியாவை சேர்ந்த புஸ்ராவில் உள்ள கிராக்கியஸ் மன்னரின் கவர்னரிடம் ஒரு தூதுவரைஅனுப்பினார்கள். கி.பி. 629ல் பெருமானாரின் தூது செய்தியை ஹாரிஸ் இப்னு உமைருல் அஸைதி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கொதிக்கும் பாலைவனங்களையும் பள்ளத்தாக்குகளையும் தனியாக குதிரை மீது அமர்ந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கடந்து தற்பொழுது ஜோர்டானில் உள்ள அல்கரக்கிற்க்கு அருகிலுள்ள முஅத்தா என்ற இடத்திற்க்கு வந்து சேர்ந்தார். பெருமானாரின் கடிதத்தை கொடுத்ததும் அந்த தூதுவர் கருணையின்றி கொலை செய்யப்பட்டார். தூதுவரை கொலை செய்யக்கூடாது என்ற பொது நீதியை கடைப்பிடிக்காத இந்த கொடிய செயலுக்காக தமது வளர்ப்பு மகனான ஜைது பின் ஹாரிஸாவின் தலைமையில் மூவாயிரம் வீரர்களை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் அனுப்பினார்கள். அவர்களை வழியனுப்பும் போது பெருமானார் “எதிரிகளைச் சார்ந்த பெண்களையும் சிறுவர்களையும் முதியோர்களையும் கொலை செய்யக் கூடாது, கட்டிடங்களை இடிக்க கூடாது, மரங்களை அழிக்க கூடாது. அல்லாஹ் உங்களுடன் இருப்பானாக” என்று கூறினார்கள்.

மதினாவிலிருந்து புறப்பட்ட படையினர் மனித நடமாட்டமற்ற வட அரேபிய பாலைவனங்கள் வழியாக சென்று இப்பொழுது ஜோர்டானை சேர்ந்த முஅத்தாவிற்க்கு வந்தடைந்தனர். சுமார் இரண்டு லட்சம் வீரர்களை கொண்ட ரோமப் படையினர் வெறும் மூவாயிரம் முஸ்லீம் படையினருடன் போரிட்ட முஅத்தா போர்களம் இது தான்.




பெருமானாரின் கொடியை தாங்கி எதிரிகளின் நடுவில் முன்னேறிய ஜைதுபின் ஹாரிஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மிக வீரமாக போராடி வீர மரணம் அடைந்தார். அதற்க்கு பின் ஜாபர் பின் அபுதாலிபு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கொடியை பெற்றுக் கொண்டு எதிரிகளின் நடுவில் நுழைந்தார். அவரது கைகள் வெட்டப்பட்டு கீழே விழுந்ததும் அந்த கொடியை தன் கக்கத்தில் இறுக்கிக் கொண்டு முன்னேறினார். அவரது கால்களும் அதே இடத்தில் வெட்டப்பட்டது அவரும் வீரமரணம் அடைந்தார். திடீரென முன்னேறி வந்த அப்துல்லாஹ் இப்னு ரவாஹ ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் அந்த கொடியை தாங்கி எதிரிகளின் மீது பாய்ந்தார். அவரும் இதே இடத்தில் வீர மரணம் அடைந்தார்.


இங்கு எழுந்து நிற்ப்பது அவர்களது கல்லறைகள் அல்ல. வீரமரணத்திற்க்கு நினைவாக எழுப்பபட்ட அடையாளங்களாகும். அந்த மூன்று ஷஹாபாக்களின் மரணச் செய்தியை அறிந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் ஷஹாபாக்களின் ஆத்மாக்கள் சொர்கத்திற்க்கு உயர்த்தபட்டதை மக்களுக்கு அறிவித்தார்கள். மூன்று படைத்தலைவர்களும் இறைவனடி சேர்ந்ததும் சுறுசுறுப்பும் திறமையும் உள்ள ஹாலித் பின் வலீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் படைத் தலைமையேற்று படையினரை ஒருங்கிணைத்தார். மதினாவிலிருந்து துணைப்படையினர் வந்திருப்பதாக எண்ணிய ரோமப் படையினர் போர்களத்தைவிட்டு திரும்பி சென்றனர். படைபலம் அல்ல இறைவனுடைய உதவிதான் வெற்றிக்கு அடிப்படை என்பது இதன் மூலம் நிரூபிக்கப் பட்டுவிட்டது.

Offline Yousuf

மக்கா வெற்றி

சுமார் பத்தாயிரம் முஸ்லீம் தோழர்களுடன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் பாலைவனங்கள் வழியாக முன்னறிவிப்பின்றி மக்காவை நோக்கி சென்றார்கள். தம்மையும் தங்கள் தோழர்களையும் வீட்டைவிட்டு வெளியேற்றி ஏராளமான கொடுமைகளுக்கு ஆளாக்கி துன்புறுத்திய மக்கா குரைசிகளும் அவர்களது தலைவர்களும் நிர்பந்த சூழ்நிலையில் பெருமானாரிடம் சரணடைந்தார்கள். அப்பொழுது கருணையின் சிகரமான பெருமானார் அவர்கள் மன்னித்துவிட்டதாக அறிவித்தார்கள். அவர்களது மதத்திற்க்கும் நம்பிக்கைக்கும் ஏற்றவாறு வாழ அவர்களுக்கு சுதந்திரம் அளித்தார்கள். வாளால்தான் இஸ்லாம் பரப்பப்பட்டது என்பது பொய்யான கருத்தாகும் என்பதை நிரூபித்த ஏராளமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் இது. மதத்தின் பெயரால் போரிடாத முஸ்லீமல்லாத அனைவருக்கும் நன்மையே செய்ய வேண்டும் நீதம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை குர்ஆன் கூறுகிறது.

மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.

நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் - எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள். அல்குர்ஆன் 60:8-9


அல்லாஹ் அல்லாத தெய்வங்களை அழைத்து பிரார்திப்பவர்களை நீங்கள் ஏசக்கூடாது என்பதை அல்லாஹ் முஸ்லீம்களுக்கு கட்டளையிடுகிறான்.


அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். அல்குர்ஆன் 6:108

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் மறைவு 

கிருத்துவ ஆண்டு 632 ஜுன் மாதம் 8ஆம் நாள் தமது 63ம் வயதில் அல்லாஹ்வின் இறைத்தூதர் அவர்கள் இவ்வுலக வாழ்வை விட்டு பிரிந்து சென்றார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் வீட்டில் வைத்துதான் பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் வஃபாத்தானார்கள். அதே இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்கள். மதினாவில் மஸ்ஜிது நபவி பள்ளியை ஒட்டியுள்ள இந்த இடத்தில்தான் பெருமானார் அடக்கஸ்தலம் இருக்கிறது. அபுபக்கர் சித்தீக், உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மண்ணறைகள் பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் மண்ணறைக்கு பக்கத்தில் தான் இருக்கிறது.



பெருமானாரின் காலம் முதல் இன்று வரையிலும் மதீனாவில் உள்ள ஒரு பொது அடக்கஸ்தலம்தான் இது. இதில்தான் பெருமானாரின் மனைவியரும், நபிதோழர்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

கிருத்துவ ஆண்டு 570ல் ஏப்ரல் மாதத்தில் மக்காவில் அப்துல்லாஹ் ஆமினாவிற்க்கு மகனாக பிறந்து சிறுவயதிலேயே அனாதையாக வளர்ந்து எழுதப் படிக்க அறியாமலும் உண்மையாளன் என்று எதிரிகளாலும் போற்றப்பட்ட முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் தமது நாற்பது வயது வரையிலும் இவ்வுலகத்திற்க்கு எவ்வித அற்புதத்தையும் எடுத்துக் கூறவில்லை. நாற்பது வயதிற்க்கு பிறகு தனக்கு அல்லாஹ்விடமிருந்து தமக்கு கிடைத்தாக எடுத்தறிவித்த வாசகங்களின் வரலாற்று சம்பந்தமான உண்மை ஆதாரங்களைத்தான் நாம் இதுவரையிலும் பார்த்தோம்.

திருக்குர்ஆனையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையையும் முன்மாதிரியாக வைத்து உங்கள் வாழ்கையை சரிசெய்து கொள்ளுங்கள். அதுமட்டும்தான் இவ்வுலகத்தில் சாந்தியையும் சமாதானத்தையும் மறுமையில் சொர்கத்தையும் அடைவதற்க்கான ஓரே வழி.

Offline Faizal

really fantastic yousuf.

Offline Yousuf

புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே பைசல்!