Author Topic: அர்த்தமுள்ள இந்துமதம்’  (Read 6447 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அர்த்தமுள்ள இந்துமதம்’
« Reply #15 on: January 18, 2013, 02:58:13 AM »
இச்சா பத்தியம்

யோகப் பயிற்சிகளில் ஒரு வகையான பயிற்சி உண்டு. உடல் வலிமையுள்ள ஒரு ஆடவன், தனியான ஒரு இடத்தில் ஒரு பெண்ணின் பக்கத்தில் படுத்திருந்தாலும், அவளைத் தொடாமலேயே இருக்கும் பயிற்சி அது.

`இல்லறத்தில் பிரம்மசரியம்’ என்று இதனைக் காந்தியடிகள் விவரித்தார்கள்.

இப்போது அமெரிக்காவில் இந்து ஞானிகளைச் சுற்றிலும் அமெரிக்கர்கள் கூட்டமே அதிகமாக இருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும்.

அங்கே ஒரு இந்து ஞானி, ஒரு யோகப் பயிற்சியைத் தொடங்கி வைத்திருப்பதாக `டைம்’ பத்திரிகையில் படித்தேன். அதன் புகைப்படத்தையும் அதில் பார்த்தேன்.

ஆறு ஆண்களும் ஆறு பெண்களுமாகப் பன்னிரண்டு பேர் நிர்வாணமாக நிற்கிறார்கள். அவர்கள் ஒரு வட்டவடிவத்தில் நின்று கொள்கிறார்கள். அதிலும் ஒரு ஏரியில் இடுப்பளவு தண்ணீரில் நிற்கிறார்கள். ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டுக் கொள்கிறார்கள். எல்லோருடைய அங்கங்களும் திறந்திருக்கின்றன. இந்த நிலையில் ஒருவர் மீது மற்றவருக்கு ஆசை ஏற்படாதவாறு பயிற்சி செய்கிறார்கள்.

நான் பல இடங்களில் குறிப்பிட்டது போல, `இயக்கத்தில் இயலாமை’, `இருந்தும் இல்லாமை’, `கிடைத்தும் ஏற்றுக் கொள்ளாமை’ என்பது இதுவே.

இதை யோகாசனம், என்பதைவிட `மோகாசனம்’ என்பது பொருந்தும்.

மனிதனது உணர்ச்சிகளில் சீக்கிரம் தூண்டப்படக்கூடியது. `பாலுணர்வு’ ஒன்றே.

பசியும் ஒரு உணர்ச்சிதான்; அதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

மனிதனுடைய தன்னடக்கத்தை மீறி எந்த உணர்ச்சியும் எழுந்து விடுவதில்லை.

ஆனால், காமம் எந்த மேதையையும் முட்டாளாக்கிக் கொழுந்து விட்டு எரியத் தொடங்கும்.

கிடைக்காத பெண்ணுக்கே ஏங்குகின்ற உலகத்தில், கிடைத்து விட்ட பெண்ணை அனுபவிக்காமல் இருக்கப் பயிற்சி பெற வேண்டும்.

அதன் பெயரே, `இல்லறத்தில் பிரம்மசரியம்!’

சித்தர்கள் இதனை, `இச்சா பத்தியம்’ என்பார்கள்.

காந்தியடிகள் பிற்காலங்களில் அப்படி வாழ்ந்து காட்டினார்.

அவருக்கு முன்னால் பரமஹம்சர் வாழ்ந்து காட்டினார்.

செயலற்ற நிலையில் பலவீனமான மனிதன், `நான் என் மனைவியைச் சகோதரியாகப் பாவிக்கிறேன்’ என்றால், அது `திராணி’ இல்லாததால் வந்த தத்துவம்.

உடல் கெடாமல் உள்ளத்தில் உணர்ச்சி மேலோங்கிய நிலையில், அந்த அடக்கம் தோன்றிவிடுமானால், அதுவே ஆன்மாவைப் புடம் போட்ட

ஞானம்.தேகம் ஆன்மாவை வென்றுவிடும். தறிகெட்டு ஓடும்.

ஆன்மா அதை வெல்ல முடியுமானால் அதுவே அற்புதமான யோகம்.

விவேகானந்தரைப் போன்ற இளம் துறவிகளை இன்னும் இந்து மதத்தில் காண்கிறோம். கிறிஸ்துவ மதத்திலும் அப்படிப்பட்ட சகோதரர் கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் மனத்தால் உடம்பை அடக்கியவர்கள்.

அடக்க முடியாமல் கெட்டுப்போய் ஞானிகளானவர்கள் எல்லாம், `உடம்பு என்னை ஆட்டிப் படைக் கிறதே’ என்றுதான்

எழுதியிருக்கிறார்கள்.எனக்குத் தெரிந்தவரை தமிழகத்தில் இருந்த பிரம்மசாரிகளில் மிக முக்கியமானவர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். பெண் வாடையே இல்லாமல் வாழ்ந்தவர் அவர்.

உடம்பின் சுக்கிலத்தை உடம்புக்குள்ளேயே வைத்திருந்து மீண்டும் ரத்தத்திலேயே கலந்து விடுமாறு செய்யும் யோகத்தை அவர்

மேற்கொண்டிருந்தார்.அவரது உடம்பின் பளபளப்புக்குக் காரணம் அது தான் என்று சொல்வார்கள்.

ஆனால், அப்படிப்பட்ட நைஷ்டிக பிரம்மசாரிகள் நீண்ட நாள் வாழ்வதில்லை.

 

 

ஒரு குறிப்பிட்ட காலம் வரை இல்லறத்தில் வாழ்ந்த பிறகு, அனுபவித்த மனைவியையே சகோதரியாகப் பாவிக்கும் பாவனையையே நான், `இச்சா பத்தியம்’ என்று குறிப்பிடுகிறேன்.

காம உணர்ச்சி ஒருவனுக்கு இல்லாவிட்டாலும் கூட, அவனுடைய உணவு முறையின் மூலம் தூக்கம் பிடிக்காத நிலை ஒன்று ஏற்படும். விபரீத சிந்தனைகள் தோன்றும்.

அதனால் தான் இந்துக்கள், `தனியாக இருக்கும் ஆடவர்கள் குப்புறப் படுக்கக் கூடாது’ என்றும், `பெண்கள் மல்லாந்து படுக்கக்கூடாது’ என்றும் கூறுவார்கள்.

இதனை அறிந்துள்ள எந்த இந்துப் பெண்ணுமே மல்லாந்து படுப்பதில்லை. ஒருக்கணித்துதான் படுப்பாள்.

இந்துமதத்தின் சாது சந்நியாசிகள் அந்நாளில் தலைக்குத் தலையணை வைக்கக்கூடாது என்ற விதி இருந்தது.

சாதாரணமாகச் செதுக்கப்பட்ட மரக்கட்டையைத்தான் தலைக்கு வைத்துக் கொண்டு படுப்பார்கள்.

ஒரு வகை மரத்தில் செய்யப்பட்ட கட்டையைத்தான் செருப்பாகப் பயன்படுத்துவார்கள். மெத்தென்ற தோல் செருப்பு அணிய மாட்டார்கள்.ராமகிருஷ்ண பரமஹம்சரும், காந்தியடிகளும் உணவைக் குறைத்ததற்குக் காரணமே, `இல்லறத்தில் பிரமசரிய’த்தை அனுஷ்டிப்பதற்குத்தான்.

இதைக் காந்தியடிகளே ஒரு முறை கூறி இருக்கிறார்.

ஒரு முறை பரமஹம்சரின் சீடர்கள் அவரைப் பார்ப்பதற்காக அவர் தங்கும் இடத்திற்கு வந்தார்கள்.

அப்பொழுது நள்ளிரவு.

பகவான் தேவியாரோடு உள்ளே இருந்தார். `ஐயோ! இந்த நேரத்தில் வந்து விட்டோமே, அவரது சந்தோஷத்தைக் கெடுத்து விட்டோமே’ என்று அந்த இளம் உள்ளங்கள் பயந்தன.

அவர்களுடைய நினைப்பு, பகவான் தேவியாரோடு சல்லாபித்துக் கொண்டிருப்பதாக.

திடீரென்று வெளியே வந்தார் பரமஹம்சர். அவர்கள் சொல்லாமலே அவர்களது பயத்தை உணர்ந்தார்.

மெல்லச் சிரித்துக் கொண்டே, `நான் தேவியின் அருகே இருந்தாலும் தெய்வத்தின் அருகில் தான் இருக்கிறேன்’ என்றார்.

சீடர்களுக்குக் குளிர் விட்டதுபோல் இருந்தது.

காம லயத்தை விட்டு விட்டவனுக்கு மரத்தைத் தொடுவதும், மனைவியைத் தொடுவதும் ஒன்றுதான்.

`துறவு’ என்பதற்கே `நிர்வாணம்’ என்று பெயர்.

ஒரு பெண்ணின் நிர்வாணத்தில் கூட அவன் தெய்வீகத்தையே காணுகிறான்.

கண்ணகி கற்புக்கரசி என்றார்கள்; அதில் அவளுக்கென்ன புதுப் பெருமை?

அவள் கற்போடு இருந்து தீர வேண்டிய குலமகள்.

மதுரையை அவள் எரித்ததை வேண்டுமானால், `மறக்கற்பு’ என்று கூறலாம்.

ஆனால், மாதவி கற்போடு இருந்தாளே, அதுதான் பெருமை.

மாதவி வீட்டுக்குப் பத்துப்பேர் வந்துபோனால் அதைப்பற்றி யாரும் பேசப் போவதில்லை. அவள் அதற்கென்றே நிர்ணயிக்கப்பட்டவள்.

வசதி இருந்தும், நியாயம் இருந்தும், அதை அவள் பயன்படுத்திக் கொள்ளாமல் கற்போடு வாழ்ந்தாள்.

அதைப் போன்றதுதான் இல்லறத்தில் பிரம்மசரியம்.

கெட்டுப் போய் ஞானிகள் ஆனவர்கள், பெண்களைக் கேவலமாகத் திட்டி இருக்கிறார்கள்.

`நாற்றச் சரீரம்’ என்றும், `ஊத்தைச் சரீரம்’ என்றும் `மலசலம் நிறைந்த மண்பாண்டம்’ என்றும், `ஆறாத புண்’ என்றும், `வெட்டுண்ட காயம்’ என்றும் அவர்கள் பலவாறாகப் பெண்களை ஏசி இருக்கிறார்கள்.

இவையெல்லாம் செயலற்ற காலத்துத் தரிசனங்கள்.

அவர்கள் உடம்பு நன்றாக இருந்தபோது, `குவளை மலர்’ என்றும், `முல்லைமலர்’ என்றும், பெண்ணை, அவர்களே தான் வருணித்திருக்கிறார்கள்.ஞானிகள் நிலை அதுவல்ல.

உடம்பு நன்றாக இருக்கும் போதே உள்ளத்தில் தோன்றும் ஒளி, காம லயத்தில் இருந்து அவர்களைப் பிரித்து விடுகிறது.

சுவேதகேதுவின் காலத்திலிருந்து, பல வகையான ஞானிகள், இதை ஒரு பயிற்சியாக மேற்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட காலம்வரை, பிள்ளைப் பேறுக்காகவே மனைவியோடு உடலுறவு வைத்திருக்கிறார்கள்.

காம வயப்பட்ட மனிதர்கள் உடலுறவு கொள்ளும் போது சில விநாடிகளிலேயே உடல் தளர்ந்து விடும்.

ஆனால், மனதைப் புடம் போட்டவர்கள் உடலுறவு கொள்ளும் போது, மனைவி எவ்வளவு நேரம் மகிழ்ச்சியை எதிர்பார்க்கிறாளோ, அவ்வளவு நேரம் நீடிக்கும்.

காரணம் அவர்களிடம் வெறி உணர்வு இல்லை.

பொற்கொல்லர்கள் சங்கிலி செய்வது போலவும், விவசாயிகள் ஏரோட்டுவது போலவும், கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் கடமை புரிவதினால் கால வரம்பு நீடிக்கிறது. அதிலே மிருகத்தனம் இல்லை; தெய்விகம் இருக்கிறது. காமம் இல்லை; யோகம் இருக்கிறது. வெறும் விளையாட்டு இல்லை; ஒரு தவம் நடக்கிறது. பற்றற்ற கருமமாகவே அது பாவிக்கப்படுகிறது.

சிட்டுக் குருவியைப்போல், அந்தி பகல் எந்நேரமும் அதையே நினைத்துக் கொண்டிருப்பவன், அந்தச் சிந்தனையினாலேயே பலம் இழந்து விடுகிறான்.

உடம்பு செயலாற்றுவதால் ஏற்படும் உஷ்ணத்தைவிட சிந்தனையினால் ஏற்படும் உஷ்ணம் பத்து மடங்கு அதிகம்.

அதுவும் காமச் சிந்தனையாக இருந்தால், அந்தப் பத்து மடங்கு உஷ்ணமும் உடனே ஏறிவிடுகிறது.

அதன் பிறகு அவன் செயலாற்றத் தொடங்கும் போது மனைவியின் கண்ணுக்கே நபும்சகனாகக் காட்சியளிக்கிறான்.

அதனால்தான் இந்துக்கள், தியான முறையைக் கையாண்டார்கள்.

ஈஸ்வர தியானத்தினால் உடம்பில் உள்ள உஷ்ணம் இறங்கி விடுகிறது.

மனத்தின் சிந்தனைப் போக்கு உணர்ச்சி வயப்படாத ஒன்றில் ஐக்கியமாவதால், உடம்பு சம சீதோஷ்ணத்துக்கு வந்து விடுகிறது.

இல்லறத்தில் பிரம்மசரியம் தொடங்கிய பிறகே காந்தியடிகளும், பரமஹம்சரும் தத்துவ ஞானிகள் ஆனார்கள்.

இது பற்றிக் காந்தியடிகள் கூட விரிவாகக் கூறியிருக்கிறார்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அர்த்தமுள்ள இந்துமதம்’
« Reply #16 on: January 18, 2013, 02:58:58 AM »
உண்ணாவிரதம்

உலகத்தில் அதிகம் சாப்பிட்டுச் செத்தவர்கள் உண்டே தவிர, குறைத்துச் சாப்பிட்டு மாண்டவர்கள் குறைவு.

ஒரு மகாராஜா சாப்பாட்டில் ஆழாக்கு நெய் ஊற்றிக் கொள்வார். ஆட்டுத் தலை தான் அதிகம் சாப்பிடுவார். கொழுப்புச் சத்துக்களை மிக அதிமாகச் சேர்த்துக் கொள்வார். ஆனால், வருஷத்தில் ஒரு மாதம் லங்கணம்!

உடம்பில் உள்ள கொழுப்பை இறக்குவதற்கு, அந்த ஒரு மாதத்தைப் பயன்படுத்திக் கொள்வார்.

இரண்டு பேர் தினமும் ஒருவகை எண்ணெய் போட்டு உடம்பைத் தேய்ப்பார்கள். இரண்டு வேளை உணவு. இரண்டு வேளையும் அரைக்கிலோ வெங்காயம் சாப்பிடுவார்கள்.

வெங்காயத்திற்கு இரண்டு குணங்கள் உண்டு: கொழுப்பைக் கரைக்கும். காம இச்சையைத் தூண்டும்.

அதனால் தான் நெய்யும், சர்க்கரையும் அதிகம் சாப்பிடுகிற பிராமணர், வெங்காயச் சாம்பார் சேர்த்துக் கொள்கிறார்கள்.

விதவைகள் வெங்காயம் சேர்ப்பதில்லை.

காஞ்சிப் பெரியவர்கள் ஒரு பிடி அவலிலும், பாலிலுமே காலம் கடத்துகிறார்.

வாரியார் சுவாமிகளும் அப்படியே.

மலையில் வாழ்ந்த சித்தர்கள், சமையல் செய்தா சாப்பிட்டார்கள்? காய், கனி, கிழங்கு கந்த மூலங்களோடு சரி.

இந்துக்கள் வாரத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

நான் சொன்ன மகாராஜாவைப் போல முஸ்லிம்கள் வருஷத்தில் ஒரு மாதம் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

இந்துக்களில் சிலர் திங்கட்கிழமை `சோமவார’ விரதம்; சிலர் செவ்வாய் விரதம்; சிலர் சனிக் கிழமை விரதம்; அது போல மாதங்களும் உண்டு. அது ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.

சிலர் ஆடி மாதம் முழுக்க மாமிசம் சாப்பிட மாட்டார்கள். சிலர் புரட்டாசி.

என்னுடைய சுவீகாரத் தாயார், கார்த்திகை விரதி.

உணவு செரிமானத்தை ஒழுங்கு படுத்துவதே உண்ணா விரதத்தின் நோக்கம்.

இது இறைவன் பெயரால் வழங்கப்படும் தேக ஆரோக்கியம்.

தெய்வ பக்தியோடு இந்துக்கள் ஆரோக்கியத்தைக் கலந்தார்கள்; காந்தியடிகள் தேச பக்தியும் கலந்தார்.

உண்ணாவிரதத்தை ஒரு ஆயுதமாக்கி, தேச பக்திக்கு அதைப் பயன்படுத்தினார்.

தன்னை வருத்திக் கொள்ளும் அந்த முறையின் மூலம் அந்நிய அதிகார வர்க்கத்தை அவர் நடுங்க வைத்தார்.

அவரது தேக ஆரோக்கியத்திற்கும் கூட, அவர் மேற்கொண்ட உண்ணா விரதங்கள் பயன்பட்டன.

மகாகவி பாரதியார் சொல்வது போல் நிறையச் சாப்பிடக் கூடாது என்பதும் தவறு; நிறையச் சாப்பிட வேண்டும் என்பதும் தவறு. அளவறிந்து சாப்பிட வேண்டும்.

இப்போதெல்லாம் டாக்டர்கள் வாயுத் தொல்லை உள்ளவர்களுக்கு ஒரு யோசனை சொல்கிறார்கள். அதாவது `இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தரம் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும்’ என்று. `வயிறு காலியாகக் கிடப்பதால் தான் வாயு உற்பத்தியாகிறது’ என்கிறார்கள்!

அது ஓரளவுதான் உண்மை.

வாயுவில் மூன்று வகை உண்டு.

ஒன்று காலியான வயிற்றில் உண்டாவது. மற்றொன்று உஷ்ண வாயு. இன்னொன்று பதார்த்த வாயு.

உஷ்ணமில்லாத உடம்பில், உண்ணா விரதத்தினால் வாயு உண்டாவதில்லை.

எப்போதுமே உண்ணாவிரதம் உடம்பை உற்சாகமாக வைத்திருக்கும்.

அது வரம்பு மீறிப் பசி பட்டினி என்று போகும் போது தான் களைப்புத் தோன்றும்.

இப்படி நான் சொல்வது, உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்களுக்கு மட்டுமே.

நல்ல உழைப்பாளிகள் சாதத்தை மலையாகக் குவித்து அதிலே ஒரு குளம் வெட்டிச் சாம்பார் ஊற்றி நீச்சலடிக்கிறார்கள். அவர்களுக்கும் தொந்தி விழுகிறது. ஆனால் அந்தத் தொந்தி ஒரு பெரிய யானையையே தாங்கும்.

நாம் எங்கே உழைக்கிறோம்…?

நான் கூடச் சாப்பாடு குறைகிறதே என்று வருத்தப்படுவது உண்டு. இப்போது முப்பது பவுண்டு இளைத்துவிட்டேன். உடம்பு இளைக்கிறதே தவிர, களைக்கவில்லை.

நடமாடும் சக்தி பலவீனப்படாமல் இருக்கும் அளவுக்கே உணவு.

ஆசையிலும், பசியிலும் சில நாட்கள் அதிகம் சாப்பிட்டு விட்டால், அதைச் சமன் செய்யவே உண்ணாவிரதம்.

தெய்வ பக்தியுள்ள எந்த இந்துவுக்கும் இந்த விரதம் உண்டு.

இந்துக்களில் அதிகமான பேர் கைக்கொள்வது முருகனுக்கு உகந்த சஷ்டி விரதம்.

இது மாதத்தில் இரண்டு நாள் வரும்.

எனது உயிருக்கு உயிரான புரவலர் திரு.சின்னப்பா தேவர், இந்த சஷ்டி விரதத்தை நாற்பது வருஷங்களாகக் கடைப்பிடித்தார்.

அதே சஷ்டியில், வைசாகத்தில், வெள்ளிக்கிழமையில் அவர் மரணம் அடைந்தார்.

வெள்ளிக்கிழமை விரதம், சஷ்டியைவிடப் பிரதானமானது.

பக்தியுள்ள இந்துக்கள் ஒரு மாதத்தில் நான்கு வெள்ளி, இரண்டு சஷ்டி- ஆக ஆறு நாட்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இது மாதத்தில் ஐந்தில் ஒரு பங்கு.

உடம்பு பலவீனம் அடையாமலும், அதே நேரத்தில் உடம்பு ஏறாமலும் இது காப்பாற்றுகிறது.

இன்னும் சில அதிசய இந்துக்கள் உண்டு. அவர்கள் ஒரு மாதம் முழுக்க உப்புச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

சிலர் நெய் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

உடம்பில் உப்போ, கொழுப்போ சேராமல் காப்பாற்ற எவ்வளவு அற்புதமான வழி!

இந்துமதம் ஆரோக்கியத்தையும், பக்தியையும் ஒன்றாக இணைத்தது.

`உடம்பு கெட்டுப் போனால் ஞானம் கை கூடாது’ என்று அது கருதிற்று.

அதனால் தான் மருந்து மாத்திரைகள் இல்லாத காலத்திலேயே, நமது யோகிகளின் உடம்பு புடம் போட்டு எடுக்கப்பட்டது போலிருந்தது.

அவர்கள் படிக்கட்டில் ஏறினால் மூச்சு வாங்காது.

தண்ணீரில் நடந்து ஜலஸ்தம்பம் செய்வார்கள்.

காற்றைப்போல் துறுதுறுவென்று அலைந்தார்கள்.

`உண்ணா நோன்பு’ என்பது ஒரு தவம்.

சிறு வயதில் இருந்தே அதை ஒரு பயிற்சியாகக் கொள்ள வேண்டும்.

முப்பது வயதுவரை கண்டதைத் தின்று விட்டால் வாய்வுத் தொல்லை வரும்.

அதன் பிறகு உண்ணாவிரதம் இருந்தால் வாய்வு அதிகமாகும்.

இளம் பருவத்தில் இருந்தே இந்தப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

நான் படித்த குருகுலத்தில் உண்ணாவிரதம் இல்லையே தவிர, உணவு முறையில் ஒழுங்கிருந்தது.

புதன் கிழமையும், சனிக்கிழமையும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, மாதம் ஒரு முறை பேதிக்குச் சாப்பிடுவது. அன்று காலைப் பலகாரம் கிடையாது; அங்கே எண்ணெய்ப் பலகாரங்கள் போட மாட்டார்கள்.

காலைப் பலகாரத்தையும், இரவுச் சாப்பாட்டையும் அளந்து தான் கொடுப்பார்கள்.

பசி உயிர் போனாலும் அந்த விரதத்தில் ஒரு ஆரோக்கியம் இருந்தது.

வாரத்தில் ஒருநாள் உண்ணாவிரதப் பயிற்சி, ஞானம் பெறுவதற்கான வழிகளில் ஒன்று.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அர்த்தமுள்ள இந்துமதம்’
« Reply #17 on: January 18, 2013, 03:00:04 AM »
ஞானத்தைத் தேடி… மவுனம்-கவியரசு கண்ணதாசன்

காற்றுக்கு இலைகள் அசைகின்றன; மலர்கள் அசைகின்றன; கொடிகள் அசைகின்றன; மரங்கள் கூட அசைகின்றன; ஆனால் மலைகள் அசைவதில்லை!

அசைவது பலவீனத்தைக் காட்டுகிறது; அசையாதது உறுதியைக் காட்டுகிறது.

சளசளவென்று பேசுகிறவன், எவ்வளவு பெரிய கெட்டிக்காரனாக இருந்தாலும், சொற்பொழிவாளனாக இருந்தாலும், தன் பலவீனத்தைக் காட்டிக் கொள்கிறான்.

மவுனி முட்டாளாக இருந்தாலும் பலசாலியாகக் காணப்படுகிறான்.

`சும்மா இருப்பதே சுகம்’ என்றார்கள்.

பேசாமல் இருப்பது பெரும் திறமை. பேசும் திறமையைவிட அது மிகப் பெரியது. அதனால் தான் ஞானிகளும் பெரிய மேதைகளும் குறிப்பிட்ட சில காலங்களில் மவுன விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.

ஒன்றைச் சொல்ல வேண்டும் என்று விரும்பி, அதைச் சுருக்கமாகத் தெளிவுபடுத்துகிறவன் பெரிய மரியாதையைப் பெற்று விடுகிறான்.

சிறிய விஷயத்தைக்கூட வளைத்து வளைத்துப் பேசுகிறவன், கேலிக்கு ஆளாகிறான்.

பயனில்லாத சொற்களைப் பாராட்டுகிறவனை, `மக்கட்பதடி’ என்றான் வள்ளுவன்.

`சுருங்கக் கூறி விளங்க வைத்தல்’ என்பார்கள்.

ஞானிகள் சில விஷயங்களைக் கூறுகிறார்கள். அவை பொன் மொழிகளாகி விடுகின்றன.

பைத்தியக்காரர்கள் பதினாயிரம் பேசுகிறார்கள். அவை சீந்துவாரில்லாமல் போகின்றன.

மவுனம் ஒரு மகத்தான ஞானம். அது தெய்விகக் கலை.

ஒரு குடும்பம். கணவன்-மனைவி இருவர். கணவனுக்கு மனைவியிடம் கோபம், ஆனால் அதை வெளியில் சொல்லவில்லை. மனைவியிடம் பேசாமலேயே இருக் கிறான். அவன் அவளைத் திட்டி இருந்தால், அது சாதாரணமாகவே போயிருக்கும். அவன் பேசாமல் இருப்பதே அவளைச் சித்திரவதை செய்கிறது.

`அவன் பேச மாட்டானா, பேச மாட்டானா?’ என்று எதிர்பார்க்கிறாள். `இரவில் நிச்சயமாகப் பேசுவான்’ என்று நம்புகிறாள்; தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கிறாள்.

`நான் என்ன தப்புப் பண்ணினேன்?’ என்று மெதுவாகக் கேட்கிறாள்.

நள்ளிரவில் பக்கத்தில் வந்து உட்காருகிறாள். காலைப்பிடித்து விடுகிறாள். அவன் மவுனம் கலையவில்லை.

அவன் மவுனம் தொடரத் தொடர, அவள் தாகம் அதிகரிக்கிறது.

திடீரென்று ஒரு வார்த்தை அவன் பேசி விட்டான். அவளுக்குத் தெய்வமே கண் திறந்தது போன்று தோன்றுகிறது.

`இன்றைக்கு நானும் அவரும் பேசிக் கொண்டிருந்தோம்!’ என்று ஊர் முழுக்கச் சொல்லிக் கொண்டு வந்து விடுகிறாள்.

பத்து வார்த்தை திட்டி, நாலு உதை உதைப்பதைவிட, அந்த மவுனம் மகத்தான சக்தியைப் பெற்றுவிடுகிறது.

கோயிலில் இருக்கின்ற சிலை, வருகின்ற பக்தனிடமெல்லாம் பேசத் தொடங்குமானால், பக்தனுக்கே அலுப்புத் தட்டிவிடும்.

`கோயிலுக்குப் போனால் அந்தச் சாமி நம்மை விடாதய்யா! உயிரை வாங்கிவிடும்!’ என்று பேசத் தலைப்பட்டு விடுவான்.

அது மவுனமாக இருக்க இருக்க, பக்தன் தான் பேசுகிறான்; பாடுகிறான்; புலம்புகிறான்.

ஆரவாரங்கள் வெறும் மயக் கங்கள்.

அரசியல்வாதியின் கூச்சல், வேறு வேலை இல்லாதவனின் புலம்பல்.

தொண்டைத் தண்ணீரைக் காய வைப்பதில் என்ன லாபம்?

`இவர் கொஞ்சம் பேசமாட்டாரா?’ என்று உலகத்தை ஏங்க வைக்க வேண்டும்.

பேசத் தொடங்கினால் உலகம் கூர்ந்து கேட்க வேண்டும்.

கடலில் ஆழமான பகுதியில் அலை இருக்காது.

வெறும் பொட்டல் வெளியில் வீடு கட்டிப் பாருங்கள்; பயங்கரக் காற்றடிக்கும்.

வெண்மேகம் போகின்ற வேகத்தைவிட, கார்மேகத்தின் வேகம் குறைவு.

நாய் ஓடுவதைவிட, யானை நடப்பதில் வேகம் அதிகம்.

சலனமற்ற மவுனம், பல அர்த்தங்கள் கொண்டது.

பிரஞ்சு மொழியில் ஒரு வார்த்தைக்கு ஒரே அர்த்தம் உண்டு. ஆங்கில வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் வரும். தமிழ் வார்த்தையில் நாலைந்து அர்த்தங்கள் வரும். ஆனால், மவுனத்தில் எல்லையற்ற அர்த்தங்கள் உண்டு.

பேசாமல் இருப்பவனே, பெரிய விஷயத்தைச் சொல்பவன்.

பேசிக்கொண்டிருப்பவன் ஞானக் கிறுக்கன்.

ஏராளமான வரிகளைக் கொண்ட இலக்கியங்களைவிட, ஏழு வார்த்தைகளில் அடங்கிவிட்ட திருக்குறள், உலகத்தைக் கவர்ந்து விட்டது. காலங்கள் தோறும் துணைக்கு வருகிறது. நிலையான தத்துவத்தைச் சொல்கிறது.

எனது நண்பர் ஒருவர் வாரத்தில் ஒரு நாள் மவுன விரதம்; ஒரு நாள் உண்ணாவிரதம். வயது அறுபதைத் தாண்டுகிறது; ஒரு மாத்திரை கூட அவர் போட்டுக் கொண்டதில்லை.

ஆரோக்கியத்திற்கும் மவுனம் மிக அவசியம்.

தவம் புரிகின்றவன் `ஓம் நமசிவாய’ என்ற வார்த்தையைக் கூடச் சொல்வதில்லை.

மவுனமாக இருப்பவனுக்கு ஆகாரம் குறைவாக இருந்தால் கூடப் போதும்.

அதிகம் பேசுவதால் அடி வயிறு சூடாகிறது. தீனி அதிகம் கேட்கிறது. அதன் மூலம் உடம்பு பெருத்து விடுகிறது.

வாரியார் சுவாமிகள் சாதாரணமான நேரங்களில் பேசுவது குறைவு. சொற்பொழிவுகளிலும் அலட்டிக் கொள்ளாமல் பேசுவார். அந்த இரண்டு மணி நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் இரண்டொரு வார்த்தைகள் தான் பேசுவார். அதனால், ஒருவேளைச் சாப்பாடே அவருக்குப் போதுமானதாக இருக்கிறது. குரல் கணீர் என்று கம்பீரமாக ஒலிக்கிறது. நோயற்ற வாழ்வுக்கு அவர் இலக்கணமாகிறார்.

காஞ்சிப் பெரியவர்கள் பேசுவது குறைவு; அதனால் உண்பதும் குறைவு. இந்த வயதிலும் எங்கேயும் நடந்து செல்ல அவரால் முடிகிறது.

சில மனிதர்கள் ஆளைப் பிடித்தால் விடமாட்டார்கள்; அறுத்து எடுத்து விடுவார்கள்.

சிலர் ஒலிபெருக்கியைப் பிடித்தால் விடமாட்டார்கள்.

குடிப்பவர்கள் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லுவார்கள்.

மதுவையும், மங்கையையும் கூட மவுனமாக ரசிப்பதில் உள்ள சுகம், சளசளவென்று பேசுவதில் இல்லை.

நிறையப் பேசுகிறவன், தன் வார்த்தைகளாலேயே காட்டிக் கொடுக்கப்படுகிறான். அவனைக் கண்டாலே பலரும் ஓட ஆரம்பிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட அறுவைகளிடம் இருந்து தப்புவதற்காகவே சித்தர் களும், முக்தர்களும் மலையிலே தங்கிக் கொண்டார்கள்.

காதலில் கூட ஜாடையில் இருக்கின்ற சுகம், வாய் மொழியில் இல்லை.

மனிதர்களைவிட, பல மிருகங்களுக்கு அதிக வயது.

அவற்றை விட மரங்களுக்கு அதிக வயது.

அவற்றை விட மலைகளுக்கு அதிக வயது.

காரணம், அவை பேசாமலும், அதிர்ச்சி அடையாமலும் இருப்பதே.

மவுனத்தின் சக்தியை உணர்ந்துதான் இந்துக்கள் தவம் புரிந்தார்கள்; நிஷ்டையில் அமர்ந்தார்கள்; மவுன விரதம் மேற்கொண்டார்கள்.

நீண்ட நாள் பேசாமல் இருப்பது என்பது, ஒருவகை நிர்விகல்ப சமாதி; அதை மேற்கொண்டவன் ஞானத்தைத் தேடினால் அது கிடைக்கும்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அர்த்தமுள்ள இந்துமதம்’
« Reply #18 on: January 18, 2013, 03:00:54 AM »
மரணத்தை வெல்லும் யோகம்

எப்பொழுதுமே தன்னை உணர்ந்து கொண்டு விட்ட மனிதன், மரணத்தில் இருந்து விடுதலை பெற்று விடுகிறான்.

அவன் செத்துவிட்டான் என்று சொன்னால், `அவன் உடம்பு தான் செத்துவிட்டது, ஆன்மா சாகவில்லை’ என்பது பொருள்.

`என்னையே எனக்குக் கொடு’ என்னும் தத்துவத்தில் ஆன்மாவே உணரப்படுகிறது. அதற்குள் இருக்கும் ஈஸ்வரன் அறியப்படுகிறான்.

துயரங்கள் தோன்றாமல் சிரித்துக் கொண்டே அவன் மரணமடைந்து விடுகிறான். அதாவது, அவன் உடம்பு அழிந்து விடுகிறது.

இந்த ஆன்ம யோகத்தை மிக ஆழமாக நமது சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் சிந்தித்தார்கள்.

இமய மலையில் குடி புகுந்தவன், மாத்திரை வாங்குவதற்காக டாக்டரைப் பார்த்ததுண்டா?

ஆன்மாவை உணர்ந்து கொண்டவன், பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது?

அவனுக்குச் சொல்வதற்குத்தான் பிறரிடம் என்ன இருக்கிறது?

இப்போது நான் சொல்லப் போவது, மரணத்தை வெல்லும் யோகம் பற்றிய `கடோப நிஷதம்’ ஆகும்.

கவுதமரின் குமாரர் வசிஸ்ரவர்; அவரது குமாரன் நசிகேதன்.

அவர் தன்னிடம் இருந்த எல்லாப் பொருள் களையும் தானம் செய்தார்.

அவரது குமாரன் நசிகேதனுக்கும், `தன்னை, தந்தை யாருக்குத் தானம் செய்வார்?’ என்ற கேள்வி எழுந்தது.

`தனக்கு வயதான பின் தானம் செய்வதில் பொருளிருக்க முடியாது. கடைசி முறையாகத் தண்ணீர் குடித்துப் புல்லைத் தின்று மலடாகி விட்ட கிழட்டுப் பசுக்களைத் தானம் செய்வதில் என்ன யோகம் இருக்க முடியும்? இந்த ஒன்பது வயதிலேயே, தானும் தானம் செய்யப்பட வேண்டும்!’ என்று நசிகேதன் கருதுகிறான்.

`தந்தையே! என்னை யாருக்குத் தானம் செய்யப் போகிறீர்?’ – தந்தையைக் கேட்கிறான்.

அவர் பேசாமல் இருக்கிறார்.

அவன் மீண்டும், மீண்டும் கேட்கிறான்.

அவர் கோபத்தோடு, `உன்னை யமனுக்குத் தானம் செய்யப் போகிறேன்’ என்கிறார்.

நசிகேதன் யோசிக்கிறான்:

`தன்னைப் பெற்றுக் கொள்வதால் யமனுக்கு என்ன லாபம்? நான் யமனிடம் போவதென்றால், பலருக்கு முன்னால் போகப் போகிறேன். அல்லது சிலருக்கு நடுவில் செல்லப் போகிறேன். என்னை அடைவதன் மூலம் யமன் செய்யப் போவது என்ன இருக்கிறது?’

அவன் ஏதேதோ யோசிக்கிறான்.

`தந்தையே! நம் முன்னோர்கள் நடந்து வந்த விதத்தைக் கவனியுங்கள். தானியங்களைப் போல மனிதன் அழிகிறான்; தானியங்களைப் போலவே மீண்டும் பிறக்கிறான். நானும் போய் வருகிறேன்’ என்று கூறிப் புறப்படுகிறான்.

நசிகேதன் ஸ்தூலத்துடனேயே யம தர்மனைப் பார்க்கப் புறப்படுகிறான்.

தானியங்களை உதாரணம் காட்டியதில், அவன் ஒரு அர்த்தத்தைக் குறிப்பிடுகிறான்.

`ஒரு தானியத்தின் ஆயுள் காலம் எவ்வளவோ, அவ்வளவுதான் மனிதனின் ஆயுட்காலம்’ என்பது அவனது நம்பிக்கை.

வாழ்வு இவ்வளவு சிறியதாக இருக்கும் போது, அதில் ஆசை வைப்பானேன்?

காம, குரோத, லோபங்களில் சிக்குவானேன்?

தந்தையிடம் சொல்லுகிறான், தன் புறப்பாட்டை.

தந்தையும், அவன் யமனைப் பார்க்கப் போவதை அனுமதிக்கிறார்.

யமனைத் தேடி நசிகேதன் சென்ற போது, யம தர்மன் வீட்டில் இல்லை. அதனால் மூன்று நாட்கள் அவன் அங்கே தங்க நேரிடுகிறது.

மூன்று நாளும் நசிகேதன் உண்ணாவிரதம் இருக்கிறான்.

மூன்றாவது நாள், யம தர்மன் வருகிறான்.

ஒரு பிராமணச் சீடன் தனக்காக மூன்று நாட்கள் விரதம் இருப்பதைப் பார்த்து, யமன் சொன்னான்:

`ஏ அதிதியே! பிராமணா! என் வீட்டில் நீர் மூன்று இரவுகள் உணவருந்தாமல் கழித்து விட்டீர். அதற்குப் பதிலாக மூன்று வரங்களை உங்களுக்குத் தருகிறேன். என்னென்ன தேவை என்று நீங்கள் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு என் வணக்கம். உமக்கு நன்மை உண்டாகட்டும்.’

உடனே நசிகேதன் மூன்று வரங்களைக் கேட்கிறான்.

முதல் இரண்டு வரங்களும், நசிகேதனின் தந்தையைப் பற்றியதும், சொர்க்கத்தைப் பற்றியதுமாகும். அதில் ஒன்று, அக்னி யாகம். அதற்காகக் கற்கள் பதித்த ஒரு தங்கச் சங்கிலியை யமன் தருகிறான்.

அது யம தர்மனின் முத்திரை.

மூன்றாவது கேள்வி தான் சிக்கலானது.

`யமதர்ம ராஜரே! ஒரு மனிதன் இறந்த பிறகு, `அவன் இருக்கிறான்’ என்று சிலர் சொல்லுகிறார்கள்; `இல்லை’ என்று சிலர் கூறுகிறார்கள். `உண்மை எது?’. அவன் இருக்கிறானா இல்லையா? இந்தச் சந்தேகம் வெகு நாட்களாக இருக்கிறது. இதை எனக்கு நீங்கள் தெளிவு படுத்த வேண்டும்.’

இந்த இருபதாவது ஸ்லோகத்துக்கு விளக்கம் சொல்லும்போது, சுவாமி சின்மயானந்தா அவர்கள் கீழ்க்கண்டவாறு சொல்லுகிறார்கள்:

`உபநிஷத ரிஷிகள் பெருமையே பெருமை! கதாநாயகனுடைய சித்திரத்தைச் சொல்லாத வார்த்தைகளிலேயே எவ்வளவு திறமையாக அமைக்கிறார்கள்! இது ஷேக்ஸ்பியரின் கற்பனைகூடச் செய்ய முடியாத ஒன்றாகும்! அந்த அமர ரிஷிகளுக்கு நம் வணக்கம் நிறைந்த வாழ்த்துக்கள் உரியனவாகுக.’

`நாம் முன்னால் பார்த்தோம்; இலட்சிய (ஆன்ம வித்தை) மாணவனாக நசிகேதன் மனவமைதியையும் இன்பத்தையும் வேண்டி, முதல் வரத்தைத் தீர்த்தான். இரண்டாவது வரத்தை மனித சமுதாயம் ஆசி பெற அர்ப்பணித்தான்; இப்பொழுது கடைசி வரம் என்ற பொழுது தான் தன் நலத்தைப் பற்றி நினைக்கிறான். தன் பெரிய சந்தேகங்கள் ஒன்றைத் தீர்த்து வைக்குமாறு கேட்கிறான்.

தியாகம் வேண்டும். தனக்குரியவர் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ளவருக்கு நன்மை புரிந்து, அவர்கள் நன்மையைத் தன் ஆன்ம விடுதலையை விட முதலில் எண்ணுமளவுக்குத் தன்னுள்ளே, `தயை’ வேண்டும். உண்மையான ஆன்ம முன்னேற்றம் தேடுபவன், உண்மையைத் தேடிச் செல்லும் யாத்திரையில் முழு வெற்றியையும் பெற வேண்டும் என்றால், அவனுக்கு இன்றியமையாத முக்கிய குணம் வேண்டும். இது, இன்று பக்தர்கள் வர்க்கத்தில் மெதுவாக வந்து செறிந்து நிற்கின்ற நம்பிக்கைக்கு நேர்மாறானது தான். தப்பிதமாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள். அந்தத் தப்பான அர்த்தத்தில் தான் அவர்கள் சங்கடங்கள் தங்கும் குளவிக் கூடும் அமைகிறது.’

`மதத்தைப் பின்பற்றுவது நன்மைக்கமைந்த, சமுதாய அல்லது சமூக வாழ்க்கைக்கு இடையூறு அல்ல; இடையூறாக இருக்கவும் முடியாது. ஆன்மீக வாழ்வு விழைபவன் ஊமையாகவும், செவிடாகவும் இருத்தல் வேண்டும் என்பதில்லை.

அவனுக்குத் தன்னைச் சுற்றியுள்ள மக்கள் உலகின் தேவைகளும், துயர்களும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவன் தேடித் தன்னுள்ளே ஓர் அன்பையும், பிறர் துயருக்கு அழுது கரைகின்ற உள்ளப் பொறையையும் பெற வேண்டும். தன் உறவினர், தன் தலைமுறை மக்கள் இவர்களுடைய உள்ளங்களுடன் தன் உள்ளத்தைப் பொருத்தி அறியும் ஆற்றல் இல்லாத ஒருவனுக்கு உண்மையின் கோயிலுக்குள் தூய்மையுள் தூய்மையான அந்த நிலையை அடையத் தகுதி கிடையாது.’

`இந்தச் சுலோகத்திலிருந்து உபநிஷதம் என்பது ஆரம்பிக்கிறது. இதுவரை செய்ததெல்லாம், ஒரு பக்குவமடைந்த ஜீவனைப் பூரண தகுதி வாய்ந்த ஆசாரியரின் எதிரே கொண்டு வருவதற்கான நாடக இயல் நிறைந்த ஒரு சந்தர்ப்பத்தைக் காட்டி அமைப்பதற்கான முயற்சிதான்.’

`அந்த பிராமணச் சிறுவன் எழுப்பிய சந்தேகம், அவன் `சாஸ்திரப் பண்பாட்டை’யும் அவனது `தன் வளர்ச்சி’யையும் காட்டித் தருகிறது. எப்பொழுதும் இந்திரியங்கங்களையே தேடித் திரியும் மிருக மனிதன், வாழ்க்கையைப் பற்றி முழுதாக எண்ணி, ஆழ்ந்த ஒரு முனைப்பட்ட இவ்விதமான சந்தேகத்தைக் கொள்ள முடியாது. அவன் அதற்காகவும் சமநிலையும், புத்தித் திறனும் கொண்டிருப்பது மிகவும் அபூர்வமே!’

`ஆகா! வாழ்க்கையில் கண்ணீர் வரவழைக்கும் இச்சம்பவம் இருக்கிறதே, சாவு என்ற ஒன்று, அதனுடைய பயங்கர அழகின் சுழலில் விழுந்து தத்தளிக்கிற சிந்தனையாளர்கள் எவ்வளவோ; இன்றும் கூடச் சாவு எல்லா நிலைகளிலும், எல்லாப் பகுதிகளிலும் உள்ள எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், ஆசிரியர்கள், தத்துவவாதிகள் எல்லோரையுமே தன்பால் ஈர்க்கும் ஓர் அழகிய கருத்துத்தான். ஆனால் இந்தக் கம்பீரமான பிரச்னையைத் தீர்க்கும் அளவுக்கு அறிவாற்றல் உள்ளவர்கள் வருவது மிகவும் குறைவே என்றும் நாம் பார்க்கிறோம்.

ஆனால், முனிவர்கள் தம் அமைதியில் அவர்கள் அறியவும் உணரவுமாகத் தம் கருவிகளை நன்கு தயார் செய்து கொண்டார்கள். பரநிலையான அந்த மேலேயுள்ள உத்தம நிலைக்கு உயர்ந்தார்கள். அமைதியாகக் கவனித்து, விஞ்ஞான முறையில் அலசி ஆராய்ந்து, இந்த அற்புதமான சாவு எப்படி ஏன் என்கின்ற கேள்விக்கு முடிவையும் உண்மையாகக் கண்டுபிடித்தார் கள்.’

`இந்தியத் தத்துவ விசாரணையாளர்களையே எடுத்துக் கொண்டாலும், அவர்களிடையே சாதாரணமாக நிகழக்கூடியதாக இருந்தாலும், விசித்திரமான சாவைப் பற்றி முரணானதும், தம்மையே தாம் மீறுகின்றதுமான முடிவுகளைக் காண்கிறோம். நசிகேதனே இந்தச் சுலோகத்தில் அதைத்தான் சொல்லுகிறான்.

சாவே முடிவு; அதற்கப்பால் சூனியத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்று நிலைநாட்டிய விசாரணையாளர்களில் சில வர்க்கங்கள் இருக்கின்றன. மாறுபட்ட சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள், `அது உண்மையல்ல. சாவுக் குழிக்குப் பின்னும் வாழ்வு இருக்கிறது,’ என்று வாதம் புரிந்து நிலை நிறுத்தவும் செய்கிறார்கள்’.

`சாவுக்குப் பின் வாழ்வு உண்டா? இல்லையா?’ என்ற கேள்வி, மனதும் புத்தியும் புகழக்கூடிய பிரதேசத்திற்குரிய ஒன்றன்று. நம் எல்லைக்கு அப்பால் ஒரு ஞான உலகம் பரவியிருக்கிறது என்பது உண்மை. உணர்ச்சி தரும் மனதும், சிந்தனை புரியும் புத்தியும் மிக மிக முயன்றாலும், அந்த உலகத்தைக் குறித்துக் கையை நீட்டி விரலைக் காட்டித் தெளிவற்ற சில வழிகளை மட்டுமே காட்ட முடியும். அந்தச் சுத்த அறிவின் தேசத்துக்குப் போக வேண்டுமே! சாதாரண மனிதனிடம் அதற்குத் தக்க வாகனம் கிடையாது! அவன் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும் சரி; உணர்ச்சிப் பிழம்பாக இருந்தாலும் சரியே. துறவு, ஞானம் இவ்விரண்டின் சீமான்கள் தான் அந்த சகஜ ஆற்றல் பெற்றிருப்பார்கள். அவர்கள் தம் விருப்பப்படி ஒருவனை அந்த `அப்பாலுள்ள’ தேசத்துக்கு அழைத்துச் செல்ல முடியும்.

`சுருங்கக் கூறினால், இப்படிப்பட்ட அப்பாலுக்கு அப்பாலைப் பற்றிய கேள்விகள், வார்த்தைகளாலே விளக்கப்பட முடியாதவை. நமக்குத் தெரிந்த சாதாரணமான நேர் அறிவு, அனுமானம், ஒத்திட்டு அறிதல் முதலிய எந்த அறிவும் நிரூபணத்தின் மூலமும் காட்டி நிலை நாட்டிவிட முடியாதவை. அவற்றை அணுகித் தீர்க்க ஒரே முறைதான் உண்டு. `ஆகமம்’ மூலம் தான் அது முடியும். ஆன்ம அறிவு கைவந்த மகான்கள் தந்த ஞானச் சொற்களைத்தான் `ஆகமம்’ என்கிறோம். அந்த ஞான சீலர்களைச் `சாது’க்கள் என்றும் `முனிவர்கள்’ என்றும் சொல்கிறோம்.’

`ஆகவே தான் நசிகேதன் யமனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டான். அவர் தர்மங்களுக்கெல்லாம் அரசரல்லவா! அதனால் தான் அவரிடம் இந்தக்கேள்வியைக் கேட்டதில் நியாயம் இருக் கிறது.’

`முக்கியமாகப் புத்தரைப் பின்பற்றும் சூனியவாதிகளும், இந்துக்களிடையே உலகாயதவாதிகளான சர்வாகர்களுமே, `முடிவு ஒரு சூனியமே’ என்று முடிவு செய்கிறவர்கள்.’

உலகாயதவாதிகள் வாதம் இதுதான்: `உடல்தான் எல்லாம். உயிர் என்பதை கை, கால்கள் முதலிய அங்கங்களைச் சேர்ப்பதால், தானே ஏற்படும் ஓர் அற்புதமே!’

`அவர்கள் வாதத்தில், உயிர்க்கும் இந்த உயிரின் இனிய வெம்மை, உடலின் இன்ப துன்பங்களுக்கு இறைவனாக நிற்கும் அந்தத் தெய்வ சக்தியல்ல. ஆனால், அது தானாகச் சேர்க்கையின் பொழுது ஏற்பட்ட ஒரு சினைப் பொருள். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து மென்றால் ஒரு செந்நிறம் தனித்துத் தானாக நேர்கிறதல்லவா? அந்த மாதிரி அந்த நிறம், இந்தத் தனித்தனி ஒன்றிலுமே இல்லையே! அதேபோல அவர்கள் கட்சி, உடலின் அங்கங்களைச் சேர்த்தால், அதாவது இயற்கை அவ்விதம் சேர்க்கும் பொழுது உயிர் தோன்றுகிறது! அப்படிப் பேசுகிற குழுவினருக்குச் சாவு என்பது உடல் மறைவு; உயிரின் சூன்யம் அவ்வளவுதான். சூனியத்திலிருந்து உயிர் வெளியாகிறது; கொஞ்ச நேரத்திற்கு நிச்சயமற்ற சில ஆட்டங்கள் போடுகிறது; பிறகு சூனியத்திலே மறைந்து விடுகிறது.’

`பகுத்துச் சிந்திக்கும் ஒருவனுக்கு அந்தத் தத்துவம் தகர டப்பாச் சத்தம் என்று தெரியும். சூனியத்திலிருந்து ஒன்றும் ஆகாது. அதற்குள் ஒன்றும் மறையவும் முடியாது – மீண்டும் சூனியமாக!’

`புத்த மதத்தைச் சேர்ந்த சூனியவாதிகளின் கட்சி வாதங்களை எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் சொல்வதையே அவர்கள் வாதம் கண்டிக்கிறது. இதை நாம் வெகு சுலபத்தில் புரிந்து கொள்ளலாம். பரம உண்மை என்பது நிர்வாணம் அல்லது இல்லாதிருக்கும் தன்மை என்று நிலைநாட்ட அவர்கள் வாதம் புரிகின்றார்கள். அதுவே, முன்னுக்குப் பின் முரணான வாதம். சங்கர பகவத் பாதாள், அதே வார்த்தையையே எடுத்துக் கொண்டு பேசுகிறார்கள். வாதக் களத்திலிருந்தே அவர் களை விரட்டி விடுகிறார்கள்.’

`அவர்கள் சொல்லுகிறதை அப்படியே ஒப்புக் கொள்வோம் என்றால் என்ன முடிவு ஏற்படும்? அவர்கள், இல்லாதிருக்கும் இருப்பை அறிந்தவர்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும். சங்கராசாரியார் மற்றும் வேதாந்திகள் கருத்துப்படி, `இல்லாதிருக்கும் நிலை’யை அறிகிறவன் அல்லது அந்த அறிவாகிய ஞானம்தான் பரம தத்துவம். நம்முன் இருக்கும் இந்த ஞானம் அல்லது அறிகின்ற அந்தப் பொருள் தேய்வதில்லை. சாய்வதில்லை.’

`ஆகவே, வெறும் ஏட்டுப் படிப்பெல்லாம் ஞானம் விழைபவனைக் குழப்பப்படுத்தும். பலதரப்பட்ட சிந்தனையாளர்கள் தங்கள் முறையில் தங்கள் மனப்பாங்கு, பண்பாட்டுக்கு ஏற்றவாறு தனித்தனியே எண்ணி வாதம் புரிந்து முடிவு காணுகிறார்கள். அந்த முடிவுகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவையாயிருக்கின்றன. உண்மையான தீர்ப்பைத் தருவதுதான் யார்? எந்தத் தர்மபுத்திரன் நமக்கு உண்மையைச் சொல்வார்? அந்த உண்மையை உள்ளபடி அனுபவித்துணர்ந்த ஆத்ம ஞானிதான் செய்ய முடியும். ஆகவே, நசிகேதன், யம தர்மனைப் பார்த்து இந்த ஆத்யாத்மிகக் கேள்வியைக் கேட்டது முற்றிலும் சரியே!’

இந்தக் கேள்வியால் யம தர்மனுக்குப் பயம் வந்து விடுகிறது.

`நசிகேதா! இந்த விஷயத்தில் தெய்வங்களே சந்தேகம் கொண்டிருக்கின்றன. உண்மையில் அதைப் புரிந்து கொள்வது சுலபமில்லை தான். தயவு செய்து என் பொருட்டு நீ இதைக் கேட்காதே!’

நசிகேதன் சொல்லுகிறான்:

`மரணத்தின் தந்தையே! இறைவனுக்குக் கூட இதில் சந்தேகம் உண்டு என்று நீ சொல்கிறாய். இதை அறிய முடியாது என்கிறாய். ஆகவே எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது; இதற்குப் பதில் சொல்லக் கூடியவன் நீ ஒருவனே! எனது இந்த மூன்றாவது வேண்டுகோள் மிக முக்கியமானது.’

நசிகேதன் விடவில்லை; மரண ரகசியத்தை வெளியிட யம தர்மனும் தயாராக இல்லை.

`உனக்கு என்ன வேண்டுமானாலும் தருகிறேன், மக்கள், பேரர்கள், நூறு வயது, தங்கம், பசுக்கள், ராஜாங்கம் எல்லாம் தருகிறேன். அழகான பெண்களைத் தருகிறேன்; சேவகர்களைத் தருகிறேன். அனுபவி. மரணத்தின் ரகசியத்தை மட்டும் கேட்காதே!’ என்றான் யம தர்மன்.

`யம தர்மா, மரணத்தை மடியில் கட்டிக் கொண்டு இவற்றை அனுபவிப்பது எப்படி? ஆகவே, அந்த ரகசியத்தை நீ சொல்லியே ஆக வேண்டும்’ என்கிறான் நசிகேதன்.

யம தர்மன் வேறு வழியின்றிச் சொல்லத் துவங்குகிறான்…

`நசிகேதனுடைய வாதம் மிகவும் ஆணித்தரமானது. கடோபநிஷத்தின் முக்கியமான பகுதி அதுதான். ஆனால், அவன் நின்ற இடம், மரணத்தின் ரகசியத்தைத் தவிர வேறு ஒன்றும் கேட்க மாட்டேன் என்பதே. ஒரு இலட்சியப் பிடிப்பை இதில் காண்கிறோம்.’

`ஒரு ஏழை, பணக்காரப் பெண்ணைக் காதலிக்கிறான். லட்ச ரூபாய் தருகிறேன், என் பெண்ணை மறந்து விடு’ என்று சொன்னால், சிலர் மறந்து விடுவார்கள்.

ஆனால், நசிகேதனோ, பூலோகம் தெரிந்து கொள்ள விரும்பும், `மரண ரகசிய’த்திலேயே நிற்கிறான்.

யமன் சொல்லும் ரகசியமோ, திடுக்கிடத் தக்கதாக இல்லை. அது, பகவத்கீதையின் மற்றொரு பதிப்பாக நின்று ஆன்மாவையும், பற்றற்ற தன்மையையும் அதிகம் பேசுகிறது.

நித்தியம், அநித்தியம் இரண்டுக்கும் உள்ள வேற்றுமையைக் கூறுகிறது.

மேலும் `அர்த்தமுள்ள இந்துமதம்’ வாசகர் களுக்குப் பிடிபட முடியாத கடினமான தத்துவங்களை விளக்குகிறது.

ஆனால், சுருக்கம் இதுதான்.

ஆன்மாவைப் புடம் போட்டு எடுத்தவன், மரணமடைந்தாலும் அவன் செத்ததாக அர்த்தமில்லை. அது அல்லாதவன் மட்டுமே இறந்தவனாகக் கருதப்படுகிறான்.

`கடோபநிஷத்தைப் படித்ததில் இருந்து ஒன்று எனக்குப் புரிகிறது. பகவான் கீதையில் சொல்வது போல், `எதிலும் சம நோக்கு உள்ளவனே மரணமற்ற நிலையை எய்துகிறான்,’ என்பதே அது.

கிட்டத்தட்ட ஒரு மரம், அல்லது மலையின் நிலை தான்.

வெயிலடித்தாலும் பனி விழுந்தாலும் எல்லாவற்றையும் அவை ஒரே சீராகத் தாங்கிக் கொள்கின்றன.

இது ஒரு பக்குவ நிலை.

மனிதன் விலங்காக இருந்தால், அந்த விலங்கிற்கும் குறிப்பிட்ட சில உணர்ச்சிகள் இருக்கின்றன. தெய்வமாக இருந்து விட்டால் கேள்வியே

இல்லை.ஆனால், அவன் மனிதனாகவே இருக்க வேண்டும். இருட்டையும் வெளிச்சத்தையும் சமமாகப் பாவிக்க வேண்டும்.

`இந்த யோக நிலையை எய்தியவன், இறந்தும் வாழ்கிறான்’ என்கிறான், யம தர்மன்.

`அவன் உயிரை நான் கொண்டு போகவில்லை! வெறும் சக்கையையே கொண்டு போகிறேன்!’ என்பது யம தர்மன் வாதம்.

மானிட ஜாதி முழுவதும் இந்தப் பக்குவ நிலையை எய்திவிட்டால் உலகத்தில் உள்ள எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு விடும்.

வீட்டுக்குக் கதவும், பூட்டும் தேவைப்படாது.

கோர்ட்டிலே சத்தியப் பிரமாணம் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

ஒருவன் மனைவி, இன்னொருவன் பக்கத்திலே தூங்கலாம்; அவர்கள் இருவரும் தொட மாட்டார்கள்.

ஒவ்வொரு மனிதனுக்கும் குறுக்கே போடப்பட்டுள்ள திரைகள் விலகிவிடும்.

ஆசை என்ற வார்த்தை இல்லாமற் போய்விடும்.

`எல்லாம் அநித்தியம்’ என்பது உணரப்பட்டு விடும்.

`காமம் என்பது ஒரு குழந்தையின் ஜனனத்துக்காவே’ என்ற உணர்ச்சி வந்து விடும்.

`பொருள் என்பது உயிர் வாழ்வதற்கு மட்டுமே’ என்ற நிலை தோன்றிவிடும்.

ஏமாற்றுதல், கலகம் செய்தல், பதவிப் போட்டிகள் நீங்கி விடும்.

கட்சிகள் இருக்கமாட்டா.

அப்படி இருந்தாலும், ஒவ்வொருவரும் தான் பதவிக்கு வரவேண்டும் என்று கருதமாட்டார்.

அடுத்தக் கட்சிக்காரனைப் பார்த்து, `நீங்களே வரவேண்டும்’ என்று ஆசைப்படுவான்.

`நான், என்னுடையது’ என்ற எண்ணம் அடங்கி விடும்.

பங்கீடு செய்து வாழத் தோன்றும்.

`இல்லறத்தில் பிரம்மசரியம்’ என்ற காந்திஜியின் ஆசை கைகூடும்.

சொல்லப் போனால், துயரங்களுக்கெல்லாம் எவை எவை காரணமோ, அவையெல்லாம் அடிபட்டுப் போகும்.

இப்படிப் பக்குவம் பெற்று விட்ட மனிதன் மரணமடைந்தாலும், மரணமடைவதில்லை.

`துன்பத்திற்குரிய மரணம்’ என்ற நிலையில் இருந்து விடுபட்டு விடுகிறான்.

இதுவே யோகங்களில் எல்லாம் கர்ம யோகம்.

நூற்றுக்கு நூறு ஜனங்களுக்கு இது வருமா?

வருவது கடினம்.

வந்துவிட்டால் மத்திய சர்க்காரும் கிடையாது. மாநில சர்க்காரும் கிடையாது!

சோஷலிச, கம்யூனிஸம், முதலாளித்துவம் எதுவும் கிடையாது.

மனிதத் தன்மை என்ற ஒன்றே நிலைபெற்று விடும்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அர்த்தமுள்ள இந்துமதம்’
« Reply #19 on: January 18, 2013, 03:02:01 AM »
தெய்வீக உணர்வு

என் அளவுக்குப் பட்டினத்தாரும், அருணகிரிநாதரும் கூட அனுபவித்திருக்க மாட்டார்கள்.

ஒரு யோகியின் பரிபூரண நிலையை எய்த எல்லோராலும் முடியாது.

இறைவனே மனது வைத்து, வில்லங்கங்களில் இருந்து விடுதலை செய்யும் போது, அதையே பெரிய வரமாகக் கருத வேண்டும்.

மரணம் தவிர்க்க முடியாதது. எல்லோருடைய வாழ்விலும் என்றோ ஒரு நாள் அது நிகழப் போகிறது.

பழைய உடல் நிலை இருந்தால், இன்று நான் ஒரு இருதய வியாதிக்காரனாக இருப்பேன்.

ஒருவேளை மரணம் கூடச் சம்பவித்திருக்கலாம்.

அப்போதெல்லாம் நான்கு படி ஏறினால் மூச்சு வாங்கும்; கால்கள் சுரந்து, வீங்கிப் போய்க் கிடக்கும். அது ஒரு நல்ல சகுனமல்ல.

இன்றைய நிலையில் ஓரளவாவது உணவு உண்ண இறைவன் என்னை அனுமதித்தால் போதும்; வேறு எந்த அபிலாஷைகளும் எனக்கில்லை.

உற்சாகமாக நடமாடும் சக்தி ஒன்று மட்டும் இருந்தால் போதும்.

கையில் இருக்கிற பேனா நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

குழந்தை குட்டிகள், பாசம் என்ற வில்லங்கங்கள் இல்லாதிருக்குமானால், இப்போது நான் நேசிக்கக் கூடியது, ரிஷிகேச யாத்திரையே!

இடுப்பளவு கங்கை நீரில் உட்கார்ந்து கொண்டு யோகம் புரிவது போல் சுகம் வேறு என்ன இருக்கிறது?

இறைவனைப் பற்றிய சிந்தனையை விட, வேறு சிந்தனைக்கு அங்கு வேலை என்ன?

பரலோக வாழ்க்கைக்கும், இகலோக வாழ்க்கைக்கும் இடையேயுள்ள தாரதம்மியங்களைக் குறிப்பிட்டு, உலகத்திற்குச் சொல்லி விட்டால், என் கடைசிக் காலம் பெருமைக்குரியதாக ஆகிவிடாதா?

ஆன்மாவைப் பற்றிய ஆராய்ச்சியில் நான் முழுமை பெற்று விட்டால், பகவானை அகக் கண்களால் தரிசித்து விட மாட்டேனா?

வைராக்கிய ஞானிகள் இன்றுவரை நின்று நிலைத்திருப்பது போல், நானும் நிலைத்திருக்க மாட்டேனா?

ஒருவேளை அந்த ஞானிகளின் அளவுக்கு நானும் வாழ மாட்டேனா?

பரபரப்பான நகர நாகரிகத்திலிருந்து கட்டுப்பாடுகளற்ற தனிமையை எட்டும்போது, குறுக்கீடுகள் இல்லாத அந்தத் தனிமையில் எவ்வளவு சிந்தனைகள் வரும்?

அந்த யோகத்தில் நோய்கள் இல்லை; நோய்களுக்கு மருந்துகளும் இல்லை.

அது வேண்டும், இது வேண்டும் என்ற ஆசை இல்லை; ஆரவாரமில்லை.

நிம்மதி; அதுதான் தேவனின் சந்நிதி.

இரண்டு கைகளையும் நீட்டிப் பிச்சை வாங்கி, உண்டு குளிர்ந்த மர நிழலில் துண்டை விரித்துத் தூங்குவதில் உள்ள சுகம், நகரத்து ஏர் கண்டிஷன் அறையில் கிடைக்காது.

உலகம் சுற்றிலும் செயற்கையாகத் தோன்றுகிறது.

நவீன நாகரிகத்தின் போலித்தனம் விளங்குகிறது.

`எல்லா ஆட்டங்களுமே முடியக் கூடியவையே’ என்ற சிந்தனை, அடிக்கடி வருகிறது.

பணம் சேர்ப்பதும், பங்களா வாங்குவதும் மறந்தே போய்விட்டது.

அன்றாடத் தேவைகளுக்கு மட்டுமே பணம்; வெயில் மழைக்கு ஒதுங்கவே வீடு.

தேவைகள் குறைந்தபட்ச நிலையை எட்டுகின்றன.

இருபது வயதில் அதிகபட்ச நிலைக்குப் போன மனது, ஐம்பதிலேயே குறைந்தபட்ச நிலைக்கு வந்து விட்டது.

பிறப்பின் நோக்கங்கள் முடிந்தனவோ இல்லையோ, ஒரு பிறப்பு முடிவை நோக்கிப் பயணம் செய்கிறது.

இளம் வாலிபர்களைக் காணும் போதெல்லாம், இவர்கள் ஆடி ஆடி ஓய வேண்டியவர்கள் என்று தோன்றுகிறது.

`மனிதனுடைய இலட்சிய எல்லை ஈஸ்வர ஐக்கியமே’ என்று எண்ணும்போது, பகவத்கீதையின் சுலோகங்கள் பளிச்சிடுகின்றன.

ஒரு இளைஞன் பகவத்கீதை படித்தால், அது புரிவது கடினம்.

வாழ்ந்து பார்த்தவன் வாழ்க்கையைப் பார்ப்பது போல, அனுபவித்து அறிந்தவன் அதைப் படித்தால் புரியும்.

மனத்தின் சபலத்தைப் பற்றி அர்ஜுனன் கேட்கிறான்; `அதை யோகத்தால் அடக்க முடியும்’ என்று பகவான் சொல்லுகிறான்.

இன்றைய கல்லூரி மாணவனிடம் போய் யோகத்தைப் பற்றிப் பேசினால், அவன் சிரிப்பான்.

காமக் களியாட்ட நடனங்களையும், திரைப்படங்களையும் விரும்பும் அவனுக்கு அது புரியாது.

ஆனால் எனக்குப் புரிகிறது.

மனம்-

அதன் கோலங்கள் தான் எத்தனை?

தான் போடுகின்ற கோலங்கள் அனைத்துமே ஓவியங்கள் என்று எண்ணுவது மனம்.

குழந்தைப் பருவத்தில் அது குருத்து விட்ட போது, உலகத்தின் பசுமையே அதன் கண்ணுக்குத் தெரிந்தது.

சேலை அழகாக இருந்தால் கூடச் சேயிழையாள் அழகு என்று எண்ணிற்று.

எதிலும் ரசனை, எதிலும் சுகம்.

யாராவது ஒருவர் அன்பாகப் பேசிவிட்டால், அவரையே சுற்றி வட்டமிடும்.

எவளாவது ஒருத்தி காதலிப்பது போல் நடித்துவிட்டால், அவளுக்காகவே ஏங்கும்.

அமெரிக்காவைப் பற்றிப் படித்து விட்டால், அங்கு போக மாட்டோமா என்று அலறும்.

ஆனால், வயது ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும் போதுதான், எதன் மீதும் ஒரு கேலிச் சிரிப்பு எழும். `எவ்வளவோ பார்த்தாகி விட்டது’ என்று சொல்லத் தோன்றும்.

எதைப் பற்றிப் பேசினாலும், `அந்த நாளிலே…’ என்று ஆரம்பிக்கும்.

வாசற்படி, தான் மலையின் ஒரு பகுதியாக இருந்ததை எண்ணிப் பார்த்தால் வருத்தப்படத்தான் செய்யும்.

ஆனால், வாசற்படியாகச் செய்யும் சேவையை மலையாக இருந்தபோது, தான் செய்யவில்லை என்று எண்ணிப் பார்த்தால், அது மகிழ்ச்சியடையும்.

செய்ய வேண்டிய வேலைகளைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்து முடித்தால், யோக காலத்தில் அவை திரண்டு நிற்கும்.

நான் எழுதியதை விட, எழுதாமல் விட்டது அதிகம்.

ஆனால், எழுதியதே அதிகம் என்று பல பேருக்குத் தோன்றுகிறது.

அப்போது நான் பகவத்கீதையை மொழி பெயர்க்கவில்லை.

படித்திருந்தால், எனது சொற்பொழிவு நிலையே திசை மாறி இருக்கும்.

மற்றவர்களும், காலம் கடந்ததற்குப் பின்பு இதைச் சிந்திக்கக் கூடாதே என்பதற்காக இதைக் குறிப்பிடுகிறேன்.

இன்னும் எனக்கொரு நம்பிக்கை இருக்கிறது.

இறைவன் சற்று ஒத்துழைப்பானானால், இதற்கு முன் யாரும் சொல்லாத சில விஷயங்களை, நான் சொல்ல வாய்ப்பிருக்கிறது.

சிறு வயதின் போகானுபவங்களும், ரோகானுபவங்களும் சிந்தனையைக் கொஞ்சம் தடை செய்கின்றன.

உலக விஞ்ஞானத்திற்கும், பூலோகத்திற்கும், தெய்விக உணர்விற்கும் இந்து மதமே அடிப்படை என்று எனக்கு அடிக்கடி தோன்றுகிறது. அது பற்றி ஆராய உடல் வலிமை இன்னும் சற்று அதிமாகத் தேவைப்படுகிறது.

மூச்சை அடக்கிக் கடலுக்குள்ளே முத்தெடுப்பவனைப் போலதான், இப்போது நான் சில சாதாரண முத்துகளை எடுத்து வருகிறேன்.

இந்து மதத்தில், சுமார் 112 உபநிஷத்துகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். அவற்றில் கடோபநிஷத்தில் சில பக்கங்கள் மட்டும்தான் நான் படித்திருக்கிறேன்.

பார்க்கப் போனால், உபநிஷத்துகளைப் படித்து ஆராயவே ஒரு பிறவி எடுக்க வேண்டும் போல் தோன்றுகிறது.

சிறு வயதில் இருந்த சிறிய ஆசைகள் போய், பெரிய வயதில் பெரிய ஆசைகள் முளைத்திருக்கின்றன.

இவை ஒரு யோகியின் ஆசைகளே!

`இன்னும் என்ன? இன்னும் என்ன?’ என்ற கேள்வியை இப்போது மனது கேட்கிறது.

உடம்பு நன்றாக இருக்கும்போது மனத்தில் யோக நிலை இல்லை.

இரண்டும் ஒன்றாகக் கைவரப் பெற்றவர்களே உன்னத யோகிகள்.

`அங்கே ஒரு சுவாமி அப்படிச் செய்தார்; இங்கே ஒரு சுவாமி இப்படிச் செய்தார்’ என்று நாம் செய்திகள் கேள்விப்படுகிறோம்.

அவையெல்லாம் என்ன?

ஏதோ ஒரு யோகம் அவர்களுக்குக் கைவந்த கலையாகி விட்டது.

`ஒருவரைப் பார்த்தவுடனேயே வரலாற்றைச் சொல்லி விடுகிறார்’ என்றும், `நீங்கள் வீட்டுக்குப் போங்கள். ஒரு செய்தி காத்திருக்கிறது’ என்றார் என்றும், சில அதிசயங்களைக் குறிப்பிடுகிறார்கள்.

திருமுருகன் பூண்டியில் ஒரு சுவாமி, திருவண்ணாமலையில் ஒரு சுவாமி, பெங்களூருக்கு அருகில் ஒரு சுவாமி, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு சுவாமி – பலரைப் பற்றி பலவிதமாகக் கூறப்படுகிறது.

அவர்கள் விளையாடுவது சித்து என்று நானும் கூறியிருக்கிறேன். ஆனால், அதுவும் ஒரு வகை யோகமே.

என்னாலும் உன்னாலும் எது முடியாதோ, அதை இன்னொருவன் செய்யும்போது அவனது திறமையை ஒப்புக் கொண்டுதான் அடுத்ததைப் பேச வேண்டும்.

இந்த சித்துக்களுக்கு அப்பாற்பட்ட யோகிகள் சிலர் உண்டு.

காஞ்சிப் பெரியவர்கள், அவர்களில் முக்கியமானவர்கள்.

காஞ்சிப் பெரியவர்கள் செய்வதை `ஹடயோகம்’ என்றே கூறலாம்.

அவர் ஆணியை விழுங்குவதில்லை.

சமாதியில் முப்பதுநாள் இருந்து மீண்டும் வருவதில்லை.

ஆனால், இவற்றை எல்லாம் விட ஒரு தெய்விக நிலையை அவர் எட்டியவர்.

ராமானுஜர் காலத்தில் பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் பற்றிய சர்ச்சை எழுந்தது. இன்று இரண்டு மார்க்கத்துக்குமே பாலமாக விளங்குபவர் காஞ்சிப் பெரியவர்.

எல்லா யோகிகளிடமும் மேதைத் தன்மையை எதிர்பார்க்க முடியாது.

காஞ்சிப் பெரியவர்களிடம் அதுவும் இருக்கிறது.

உண்மையான மேதைக்கு வேண்டிய அடக்கமும் இருக்கிறது.

பற்றற்ற ஞானமும், பரமார்த்திக நிலையும் இருக்கின்றன.

`எல்லோராலும் முடியாது’ என்று சொல்லக்கூடிய வாழ்க்கை நிலை இருக்கிறது.

லெளகீக வாழ்க்கையை முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கும் தெளிந்த உணர்விருக்கிறது.

கடலிலேயே கருங்கடல், அரபிக்கடல் என்றிருப்பதைப் போல, இந்தக் கடலும் ஞானக் கடல், பக்திக் கடல், யோகக் கடல்.

கைப்பிடி அவலிலும், ஆழாக்குப் பாலிலும் ஒரு ஜீவன் காதகாதங்கள், நடந்தே போக முடிகிறதென்றால், அது அவலின் சக்தியல்ல; ஆன்மாவின் சக்தி.

வைட்டமின் மாத்திரையால் உடம்பு சூடாகிறது என்று கருதி, இரண்டு மாத காலம் வைட்டமின் மாத்திரைகளை நான் நிறுத்தினேன். இத்தனைக்கும் நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டுதான் இருந்தேன். ஆனாலும் என்னால் எழுந்து நடமாட முடியவில்லை.

எழுதுவேன், படுப்பேன், எழுவேன்; காலைப் பலகாரம் சாப்பிடுவதற்குக் கூட உட்கார முடியவில்லை.

அவரோ, ஆன்ம சக்தியைத் துணையாகக் கொண்டு நடக்கிறார்; பேசுகிறார்; ஆன்மாவைப் புடம் போட்டு எடுத்து விட்டால், நன்றாகப் பாடம் பண்ணிவிட்டால், உடம்பு அதற்குக் கட்டுப்பட்டு விடுகிறது.

ஆன்மாவைப் பாடம் பண்ணுவதென்றால் என்ன?

`எதையும் சமமாகப் பாவிப்பது’ என்கிறது பகவத்கீதை.

இன்பம், துன்பம், இருட்டு, வெளிச்சம் எல்லாமே சமமாகிவிட்டால் யோகம் கைகூடி வரும்.

சாவுக்கு அழாமலும், வரவுக்குச் சிரிக்காமலும், சம உணர்வு எய்தும் தன்மை சுலபத்தில் வந்து விடாது.

நான் காதலில் கருகிப் போகிறேன்; பாசத்தில் வெந்து போகிறேன்; வேண்டியவர்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் சாதாரண மனிதனை விட மோசமாக அழுகிறேன்.

ஆன்மாவின் பலவீனம் முழுமையாக செம்மைப்படவில்லை.

நாள் ஆக ஆக இந்தப் பலவீனம் குறைவதும் தெரிகிறது.

என் சகோதரரின் மறைவு என்னை அதிர்ச்சி அடைய வைத்தது உண்மையே.

அந்த அதிர்ச்சி எல்லாம், `நல்ல வாழ்க்கை அமையாமல் அவர் மாண்டு விட்டாரே’ என்பதால் ஏற்பட்டது.

ஆனால், எனது நான்கு சகோதரிகள் இறந்த போது, அழுத அழுகையை விட, இப்போது அழுதது குறைவு.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சகோதரி காலமானார். அப்போது எனக்குப் பதினேழு வயது.

தொடர்ச்சியாக ஏழு நாட்கள் அழுதேன்.

பல வருஷங்கள் அந்த மரணத்தை மறக்க முடியவில்லை.

இப்போது ஒன்றை மறப்பது என்பது கடினமாகத் தோன்றவில்லை.

`நாமும் சாக வேண்டியவர்களே’ என்ற எண்ணம் அழுத்தமாக எழுவது இந்த வயதில்தான்.

இன்னும் நாலைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மரணத்தைக் கண்டு சிரிக்கும் நிலையே எனக்கு ஏற்பட்டு விடக் கூடும்.

பரிபக்குவ நிலை, பரிமாணத்தின் மூலமே வருகிறது. அது எய்துகின்றவனுடைய அறிவைப் பொறுத்தது. அது சீக்கிரம் வந்துவிடக் கூடும்.

நான் குருகுலத்தில் படித்தவன். ஐந்தாண்டு காலம் வெளி உலகை அறியாது வாழ்ந்தவன்.

அதை விட்டு வெளியே வந்து உலகைப் புரிந்து, உள்ளங்களைப் புரிந்து பக்குவநிலை எய்துவதற்கு எனக்கு இவ்வளவு காலமாயிற்று.

இதுவும் முழுப் பக்குவமல்ல.

முழுப் பக்குவம் என்பது, விரும்புவது கிடைக்காவிட்டாலும், விரக்தியடையாமல் இருப்பது.

மீண்டும் கீதையைச் சொன்னால், எதையும் சமமாகப் பாவிப்பது.

காஞ்சிப் பெரியவர்களைத் தவிர, வேறு ஒருவரிடமும் அந்தப் பக்குவ நிலையை நான் காணவில்லை என்று சொன்னால், மற்றவர்கள் வருத்தப்படக்கூடாது.

பெரும்பாலானவர்களிடம் கோபமாவது மிஞ்சி இருக்கிறது; பெரியவர்களிடம் அதுவும் கிடையாது.

இந்த யோகம், பயிற்சி, படிப்பு, அனுபவம் ஆகிய அனைத்தும் சேர்ந்த பின்னாலே வரும்.

உடம்பிலே திமிரில்லாத இளைஞர்கள் மட்டுமே இதைப் பயில முடியும்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அர்த்தமுள்ள இந்துமதம்’
« Reply #20 on: January 18, 2013, 03:02:55 AM »
மனிதனுக்கு தேவையான யோகம் எது?

போகத்தில் புரண்டு, ரோகத்தில் அவதிப்படும் சாதாரண மனிதன், இனி யோகத்தை தரிசிக்கும்படி செய்வோம்.

அண்மையில் ஒரு நண்பரை நான் சந்தித்தேன். அவரது நெருங்கிய நண்பர்கள் சிலர் இறந்து போனார்கள். குடும்பத்திலும் சிறிது கசப்பு. அவர் நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர்.

சோகமாக உட்கார்ந்திருந்த அவர், `இனி என்ன இருக்கிறது பிரதர்? வனமோ வனாந்தரமோ எங்காவது போய்ச் சிவனே என்று விழ வேண்டியது தான்!’ என்றார்.

அப்படி விழுவதுதான் யோகமா?

இல்லை, அது வெறும் விரக்தி.

செயல்படக் கூடியவன் செயலை மறப்பதும், அல்லது துறப்பதும் கரும யோகத்தின் ஒரு பகுதி.

பலமுள்ளவன் எதிரியை அடிக்காமலிருப்பது அடக்கத்துக்கு இலக்கணம்.

வசதியுள்ளவன், பிறரை ஏமாற்றாமல் இருப்பது பெருமையின் ஒரு கூறு.

நன்கு வாழும்போதே ஒருவன் யோகியாவது, உயர்ந்த நிலை.

விரக்தியுற்ற நிலையில் யோகியாவது, தாழ்ந்த நிலை.

`தமோ’வாக இருப்பது `ரஜோ’வாக மாறி, `சத்வ’ குணத்துக்குத் தள்ளப்படும் யோகத்தில் பெருமை இல்லை.

ரஜோ குணத்தையும், தமோ குணத்தையும் பார்த்துச் சிரித்தபடி யோக நிலையை எட்டுவதே தெய்விகம்.

இமய மலையிலும், அதன் அடிவாரங்களிலும் ஏராளமான சாதுக்கள் திரிகிறார்கள்.

பலர் ஏற்படுத்திய மிஷன் அமைப்புகளில், பலவகையான சந்நியாசிகள் இருக்கிறார்கள்.

இவர்களில் மூன்று வகையினர் உண்டு.

ஒரு வகையினர், சிறு வயதிலேயே ஞானம் கைவரப்பெற்று அப்படியானவர்கள்.

இன்னொரு வகையினர், குடும்பத்தில் சிக்கிச் சீரழிந்து வந்தவர்கள்.

மூன்றாவது வகையினர், பிறப்பிலேயே ஆண் தன்மை இல்லாதவர்கள்.

இவர்களிலே ஞானிகள் உண்டு; துறவிகள் உண்டு; சந்நியாசிகள் உண்டு; ஆனால் யோகிகள் இல்லை.

`யோகி’ என்பவன் சித்தத்தை மட்டும் அடக்கிப் பழகியவனல்ல; ஜகத்தையும் அடக்கி வெற்றி பெற்றவன்.

அவர்களுடைய திருஷ்டியில் மூன்று காலங்களும் தோன்றும்.

அவர்கள் தங்கள் கண்களால் எதைப் பார்த்தாலும் வசியமாகும்.

யோகிகளின் பார்வையில் புலி அடங்கும்.

மயில் ஆடும்.

மேகம் மழை பொழியும்.

அவனை நெருப்புச் சுடாது.

குளிர் அவனை அடக்காது.

மார்கழி மாதத்தில் சமவெளியில் நம்மால் உலவ முடியவில்லை.

அவர்கள் வெள்ளிப் பனிமலையில் உலாவுகிறார்கள்!

பனிக்கட்டிகள் மிதந்து வரும் நீரில் நீராடுகிறார்கள்!

கிடைக்கும் உணவை உண்கிறார்கள்.

போகத்திற்கு அலைவதில்லை.

ரோகம் அவர்களைத் தீண்டுவதில்லை.

மருந்து மாத்திரைகளுக்கு அங்கே வேலை இல்லை.

நாம் எல்லாருமே அப்படி யோகிகளாக முடியுமா?

முடியாது.

அப்படித்தான் ஆகத்தான் வேண்டுமா?

தேவை இல்லை.

யோகியாக இல்லாமலேயே, யோகம் கைவரப் பெற்றவனாக லெளகீக வாழ்க்கையை ஒருவன் நடத்த முடியும்.

ஒருவன், மனைவியோடு வாழலாம்; ஆனாலும், அவளைத் தீண்டாமலிருக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒருவனுக்கு நிறைய உணவு வசதிகள் இருக்கலாம். பசி எடுத்தாலும் அந்த உணவை உண்ணாமலிருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

இதுதான் இயக்கத்தில் இயங்காமை.

இதுவே லெளகீக மனிதனுக்குத் தேவையான யோகம்.

பதவி என்றால் எல்லோருக்கும் ஆசைதான். ஆனால் நேரம் வரும் போது, அந்தப் பதவியைத் தூக்கியெறியும் திராணி எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை.

`நம்மை அது அடக்குவதா, அதை நாம் அடக்குவதா?’ என்று வரும் போது, `எதையும் நான் அடக்க முடியும்’ என்ற நிலைக்கு வருவதே யோகம்.

அழகான பெண்ணொருத்தி தனிமையிலே காத்திருக்கிறாள், நமக்காக.

நமக்கோ ரத்தம் உடம்பில் துறுதுறுவென்று ஓடுகிறது.

இந்த நிலையில் அந்தப் பெண்ணை வெறுக்கக் கற்றுக் கொள்வது யோகம்.

எது கிடைத்தாலும், `எனக்கு, எனக்கு’ என்று ஓடுகிறவன் போகி.

பின்பு ஒரு நாள் அவன் ரோகி.

`எதையும் விடத் தான் உயர்ந்தவன்’ என்று கருதக் கூடியவன் யோகி.

வாரியார் சுவாமிகள் சொன்ன கதை ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது.

ஒரு குறுகலான பாலம்; நன்றாகக் குளித்து விட்டு நெற்றியில் விபூதிப் பூச்சோடு அந்தப் பாலத்தில் வந்து கொண்டிருக்கிறது ஒரு யானை; எதிரிலே அசிங்கமாக வந்து கொண்டிருக்கிறது ஒரு பன்றி. பன்றி, வாலை ஆட்டிக் கொண்டு கம்பீரமாக வருகின்ற வேகத்தில், சக்தி வாய்ந்த யானைக்கு கோபம் வரவில்லை. அது ஒதுங்கி நின்று வழி விடுகிறது. பன்றிக்கோ தான் வெற்றி பெற்று விட்டதாக நினைவு. யானையே தனக்குப் பயந்து விட்டதாக ஒரு கனவு. ஆனால், யானையினுடைய நினைவோ, `பாவம் பன்றி! விட்டு விடுவோம்’ என்பதாகும்.

தன்னை உயரத்தில் வைத்துப் பார்க்கும் ஆணவம் இல்லாமல் யானை ஒதுங்கிற்று.

இன்னொரு யானைக் கதை.

ஒரு யானையின் மீது சவாரி செய்ய ஒரு அணில் விரும்பிற்று. `சரி, முதுகில் ஏறிக் கொள்!’ என்றது யானை. அணில் ஏறிக் கொண்டது.

யானை அதைச் சுமந்து செல்லும் போது யானையின் தலையில் ஒரு தென்னை மட்டை விழுந்தது.

யானை ஒரு பிளிறு பிளிறிற்று.

உடனே அணில் கேட்டது, `நான் முதுகில் இருக்கிறது வலிக்கிறதா?’ என்று.

யானைக்கு அணில் ஒரு சுமையா?

ஆனாலும், அணிலுக்கு அப்படி ஒரு நினைவு.

தாழ்ந்தவர்கள் தங்களை உயர்வாகக் கருதும் போது, உயர்ந்தவர்கள் சிரித்துக் கொண்டே ஒதுங்கிவிட வேண்டும்.

அதுவும் யோகம் தான்.

`என்னைவிட நீ உயர்வா?’ என்று சண்டைக்குப் போகக் கூடாது.

`உலகத்தில் கடவுள் தனக்கு அடுத்தபடியாக நம்மை வைத்திருக்கிறான்’ என்று கருதி, அந்தத் தெய்விக நிலையை எட்டி விடுகிறவனே

யோகி.`பட்டதெல்லாம் போதுமடா பகவானே’ என்ற பட்டினத்தார் யோகம், அனுபவ யோகம்.

ஒன்றைப் பார்த்த உடனேயே, `இது விஷம்’ என்று கண்டு கொள்பவனே அறிவார்ந்த யோகி.

`இது மோசம்’ என்று கண்டு கொள்கிறவன் அறிவார்ந்த யோகி.

அதை அனுபவித்துப் பார்த்து விலகுபவன், அனுபவ யோகி.

அறிவார்ந்த யோகியின் செயலைத்தான், `ஞான திருஷ்டி’ என்கிறார்கள்.

ஒரு பஸ்ஸில் ஏறி வெளியூருக்குச் செல்ல விரும்பினார் ஒரு நண்பர். திடீரென்று, `இன்றைக்கு போக வேண்டாம்’ என்று முடிவு கட்டினார்.

அன்று அந்த பஸ் விபத்துக்குள்ளாகி விட்டது.

இது இறையருள் யோகம்.

இறைவன் எல்லோருக்கும் இந்தச் சக்தியைக் கொடுப்பதில்லை.

பூர்வ ஜென்ம விதிவசத்தால் சிலருக்கு இது கைகூடுகிறது.

நூறாண்டுகளுக்கு ஒரு முறை, இப்படி இறையருள் யோகம் கைவரப் பெற்றவர்கள் பிறக்கிறார்கள்.

இந்த விதிவிலக்குகளை நம்முடைய வாழ்க்கையில் எடைபோடக் கூடாது.

உண்மையான யோகம் என்பது, நான் முன்னே சொன்னபடி, வாழ்ந்து கொண்டே வாழாமல் இருப்பது; அல்லது வாழாமலே வாழ்வது.

பகவான் கீதையிலே கூறும் முக்கியமான யோகங்கள் சில. கரும யோகம் அவற்றிலே ஒன்று.

`கருமத்தைச் செய்; பலனை எதிர்பார்க்காதே’ என்பதே பகவான் வாக்கு.

இதை ஆயிரக்கணக்கான தடவைகள் நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

இதன் பொருள் என்ன?

`அலுவலகத்தில் வேலை பார்; சம்பளம் வாங்காதே’ என்பதா?

சாதாரண மனிதனுக்கு அப்படித்தான் தோன்றும்.

ஆனால், உண்மை அதுவல்ல.

உனக்கென்று சில சுய தர்மங்களை வகுத்துக் கொள்.

`பத்துப் பேருக்கு உதவுகிறது’ என்று வைத்துக் கொண்டால், எந்தப் பத்துப் பேரிடமிருந்து எதையும் நீ எதிர்பார்க்க முடியாதோ, அவர்களுக்கு உதவு.

`கருமம்’ என்பது கடமை.

`மகனைப் படிக்க வைத்துப் பட்டம் பெற வைத்து, உத்தியோகமும் வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்’ என்று மட்டும் நினை.

`அப்படிக் கொடுத்து விட்டால், அவன் சம்பளத்தில் சாப்பிடலாமே’ என்று நினைக்காதே.

எங்கே நீ பலனை எதிர்பார்க்கலாமோ, அங்கே எதிர்பார்க்கலாம்.

மனைவிக்கு நகை வாங்கிக் கொடுப்பதும், கருமம்தான்; அப்படி வாங்கிக் கொடுத்தால், `அவள் நம்மிடம் பிரியமாக இருப்பாள்’ என்ற பலனும் அதில் அடங்கி இருக்கிறது.

அரசியல் ரீதியாகச் சொன்னால், ஒரு கருமத்தின் பலன் இருந்தும், இல்லாமலும் இருக்கிற இரண்டு நிலைகள் உண்டு.

உதாரணம்: வங்காள தேச விடுதலை.

அந்த விடுதலையின் மூலம் ஒரு அரக்கனிடமிருந்து வங்காள தேச மக்கள் விடுதலை பெற்றார்கள்.

நாம் அந்த நாட்டைக் கைப்பற்றவில்லை.

ஆனால், ஒரு கோடி அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

ஒரு வகையில் நமக்குப் பலன் இருந்தது; ஒரு வகையில் பயனில்லை.

நாம் எதிர்பார்த்த பலன், அகதிகளை அனுப்புவது.

நாம் விரும்பாத பலன் நாட்டைக் கைப்பற்றுவது.

தச்சன், அடிக்கின்ற ஆணிக்கு கூலி வாங்காமல் இருக்க முடியாது.

கொல்லன், அடிக்கின்ற இரும்புக்குக் கூலி வாங்கித்தான் தீர வேண்டும்.

பகவான் இவர்களைத்தான், பலனற்ற கருமம் செய்யச் சொல்லுகிறான் என்று பலர் தப்பாகக் கணக்கிடுகிறார்கள்.

உண்மை அதுவல்ல.

`கருமம்’ என்ற வார்த்தையைக் `கடமை’ என்றே அவன் கொள்கிறான்.

`தருமம்’ என்பது என்ன?

பலன் கருதாத உதவி.

`கருமம்’ என்பது பலன் கருதாத கடமை.

எந்தப் பலனும் கருதக் கூடாது.

`மகாராஜன் நல்லா இருக்கணும்’ என்று வாழ்த்துவார்கள், பெற்றுக் கொண்டவர்கள். அந்தப் பலனையும் எதிர்பார்க்கக் கூடாது.

சிலர் பெற்றுக் கொண்டே திட்டுவார்கள்; அதைப் பற்றியும் கவலைப் படக்கூடாது.

`அடப்பாவி! நான் எவ்வளவு உதவி செய்திருக்கிறேன். என்னைப் போய்த் திட்டுக்கிறானே’ என்று சொல்லக் கூடாது.

உண்மையில் அதுவும் ஒரு வகை யோகம்தான்!

`நன்றியை எதிர் பாராதே.’

`நன்றி கெட்டவனை மன்னித்துவிடு.’

`எந்தச் சூழ்நிலையிலும் நமது கடமையைச் செய்து விட்டோம்’ என்று திருப்தியடையுங்கள்!

- இதுவே யோகம்.

இந்த இலக்கணத்தின்படி, எத்தனை பேரை இன்று நாம் சந்திக்க முடியும்?

தருமச் சொத்து என்று வைத்து, அதிலேயும் கொள்ளையடிப்பவர்கள் தான் அதிகம்.

ஆனால், கண்ணை மூடிக்கொண்டு கடமையைச் செய்வதுதான் யோகம்.

இன்றைய யோகிகளில் சிலர் காரியத்தைச் செய்து கொடுத்துவிட்டு – தாங்கள் எதிர்பார்க்காவிட்டாலும் வருகின்ற பலனைப் பெற்றுக் கொள்கிறார்கள்!

அதுவே, நேரான யோகத்துக்குப் புறம்பானது.

லெளகீக வாழ்வில் ஒரு மனிதன் கடைபிடிக்க வேண்டிய தர்மம் இது.

நல்ல அடை மழை, `தனது வீடு ஒழுகுகிறது’ என்று நாலு பேர் கதவைத் தட்டினால், அவர்கள் படுப்பதற்குக் கூடச் சில பேர் இடங் கொடுப்பதில்லை.

ஓர் இந்து, `தங்கள் வீடு, அகதிகளும், அதிதிகளும் ஆபத்தில் தங்குவதற்காக’ என்று கருத வேண்டும்.

`தன் உணவு பங்கிட்டுச் சாப்பிடவே!’ என்று எண்ண வேண்டும்.

`மனைவியைத் தவிர, மற்ற உடமைகள் தன்னுடையனவல்ல!’ என்று எண்ண வேண்டும்.

`செல்வம் செல்லக்கூடியது’-

`தங்கம் தங்காதது’-

தங்கக் கூடியது, நல்வினைப் பயன் ஒன்று மட்டுமே.

உலகத்தில் அளவுக்கு மீறி வாழ்க்கையை அனுபவித்தவர்களில் நானும் ஒருவன்.

அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்லி விடுவதில் தவறில்லை என்று எழுதுகிறேன்.

ஸ்ரீஆதிசங்கரர் பஜகோவிந்தத்தில் சொன்னபடி, வயதாகும் போது சிந்தனையில்தான் திருப்தியடைய வேண்டியிருக்கிறது.

முன்பெல்லாம் ரத்தத்தில் ஒரு அதீதமான உணர்ச்சி இருந்தது.

எந்த ஹோட்டலைப் பார்த்தாலும் பசி எடுத்தது.

எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஆசை வந்தது.

பெரும்பாலான நேரங்கள் பெண்ணைப் பற்றியும், சாப்பாட்டைப் பற்றியுமே பேசுவேன்.

கருங்குரங்கை எப்படிச் சமைப்பது என்பதில் இருந்து, பச்சைப் பாம்பு சூப் வைப்பது வரை நாக்கில் ஜலம் சொட்டச் சொட்டப் பேசுவேன்.

சிறு வயதில் நான் சாப்பிடும்போது, நான் சாப்பிடச் சாப்பிட முன்னால் போடப்படும் எலும்புகளை அள்ளி அள்ளி என் தாயார் வெளியே கொண்டு போய்ப் போடுவார்கள்.

மூன்றாண்டுகளுக்கு முன்பு வரையில், என் மனைவியும் அப்படித்தான் செய்தாள்.

காரணம் எலும்புகள் மலைபோல், குவிந்து கிடந்தால் திருஷ்டி படும் என்பார்கள்.

மலேஷியாவில் சீன ஹோட்டல்களுக்குள் நுழைந்து விட்டால், நான் சாப்பிடும் சாப்பாட்டை யாரும் சாப்பிட முடியாது.

ஓரிடத்தில் நான் சாப்பிட்டு முடித்த போது ஒருவர், `இதென்ன மனிதன் சாப்பிடுகிற சாப்பாடா’ என்றே கேட்டு விட்டார்.

சுமார் இருபது வருஷங்களாக எனது இரவுச் சாப்பாடு, இரவு பன்னிரண்டு மணிக்கு மேல்தான்.

இடையிடையே நோய்வாய்ப்பட்டிருந்தபோது, பத்து மணிக்குச் சாப்பிட்டிருக்கிறேன்.

அதுவும் சுமார் இரண்டு மாத காலம்தான்.

சாதாரணமாகவே பன்னிரண்டு மணிக்குச் சாப்பிடுவது தான் வழக்கம்.

ஒன்பது மணியிலிருந்து பன்னிரண்டு மணி வரை குடித்துக் கொண்டும், சிந்தித்துக் கொண்டும் இருப்பேன்.

சிந்தனை, வெள்ளம் போல் கரை புரண்டு ஓடும்.

பெண்களைப் பற்றிய பாடலே தோன்றும்.

உலகத்தை அனுபவித்து முடித்துவிட வேண்டும் போலிருக்கும்.

அடிக்கடி எழுந்து கண்ணாடி பார்ப்பேன்.

இரத்தமெங்கும் ஆனந்தம் கொப்புளித்துக் கொண்டிருக்கும்.

அப்போதும் உடம்புக்கு நோய் வரும்.

எத்தனை மாத்திரைகள் உண்டோ, அத்தனையும் சாப்பிடுவேன்.

அந்த நாட்களில், யார் யாரைச் சந்தித்தோம் என்பது கூடப் பாதி மறந்து போய்விட்டது. அவ்வளவு நிதானமின்றி ஆடி இருக்கிறேன்!

எவ்வளவு ஆடினாலும், எழுத்து மட்டும் ஒழுங்காக இருக்கும்.

அப்போதும் இரத்தக் கொதிப்பு இருந்தது. ஆனாலும் அதன் தோற்றமே இல்லை.

ஒரு `அல்டோமட்’ மாத்திரையைப் போட்டபடி போய்க்கொண்டே இருப்பேன்.

ஒரு டாக்டருக்குத் தெரியாத அளவு மாத்திரைகள் எனக்குத் தெரியும்.

உடம்பு பொத பொதவென்றிருக்கும்; முகம் வீங்கி இருக்கும்; ஆனால், எதை நினைத்தாலும் எழுத முடியும்.

தமிழ் மொழி, நாக்கில் புரண்டு விளையாடும்.

ஒன்றா? இரண்டா?

பன்னிரண்டு வயதிலேயே போகத்தை தொடங்கியவன்.

`பெத்தடின்’ பழக்கம் எனக்கு ரோகமாயிற்று.

கடந்த மூன்றாண்டு காலமாக, இறைவன் என்னை யோகத்திற்கு தள்ளுகிறான்.

உப்பு அளவோடு; உறைப்பு கூடவே கூடாது; புளி, எலுமிச்சம்பழம் ஆகவே ஆகாது.

காய்கறிகளில் வெண்டைக்காய், புடலங்காய்களைத் தவிர வேறு காய்கறிகளைச் சாப்பிட முடியாது.

இறைச்சி இல்லை; மீன் மட்டுமே.

இட்லியும், தோசை மாவும் கூடப் புளிக்கக் கூடாது.

இருநூற்று இரண்டு பவுண்டு எடை இருந்தவன், நூற்று அறுபத்து எட்டுக்கு வந்து விட்டேன்.

ஆனாலும் இதுவும் ஒரு வசதியாகவே இருக்கிறது.

அத்தனை ஆஸ்பத்திரிகளிலும் சோதித்தேன்; உடம்பில் ஒரு நோயும் இல்லை என்று கூறிவிட்டார்கள்.

இரத்தத்தில் சர்க்கரை நூறுதான் இருக்கிறது; கொழுப்பு நூற்று நாற்பதுதான் இருக்கிறது.

ஆனால், திமிர் பிடித்த ஆசைகள் போய்விட்டன.

தினமும் பெண்களைப் பற்றிச் சிந்திப்பதும், அறவே நின்று போய்விட்டது.

படிக்கலாம் என்று நினைத்தால் `செளந்தர்ய லஹரி படிக்கலாமா, லலிதா சகஸ்ரநாமம் படிக்கலாமா, விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்கலாமா’ என்று தோன்றுகிறது.

ஒன்றும் எழுதாமல் இருந்தால், `ராமானுஜர் நாடகம் பார்க்கலாமா, பார்த்தசாரதி கோயிலுக்குப் போகலாமா’ என்று தோன்றுகிறது.`நோயே இல்லை’ என்று டாக்டர்கள் கூறிய பிறகும் கூட, ஏதோ சொர்க்கத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு விட்ட பிரமை உண்டாகிறது.

நான் விரும்பியோ, விரும்பாமலோ, ஒரு யோகியின் நிலை என் மீது திணிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த எட்டு மாதங்களாக அந்த நிலை வளர்ந்து வருகிறது.

முன்பெல்லாம் மது அருந்தினால், அதில் ஒரு அற்புதமான சுகம் இருந்தது. இப்போது வெறுப்புத் தோன்றுகிறது.

முன்பு அனுபவிக்கக் குடித்தேன்.

இப்போதுதான் உண்மையிலேயே சூழ்நிலைகளை மறக்கக் குடிக்க வேண்டியதிருக்கிறது.

ஆனால், கொஞ்ச நாட்களாக குடியின் மீதும் வெறுப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது.

மது, மாமிசம், மங்கை இம்மூன்றிலிருந்தும், பகவான் என்னை விடுவித்துக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.

இதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளச் சித்தமாக இருக்கிறேன்.

அளவுக்கு மீறிய போக காலம், ஐம்பதிலேயே முடிந்து விடுவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.