Author Topic: ~ மானி’ மதம் தோன்றி மறைந்த விதம்.!!! ~  (Read 2835 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மானி’ மதம் தோன்றி மறைந்த விதம்.!!!




மூன்றாம்(216- 276) நூற்றாண்டைச் சேர்ந்த மதம் மானி (manichaeism) இதனை நிறுவியவர் மானி என்பவர்.இந்த மதம் அடையாளமில்லாமல் இன்று அற்று போய் விட்டாலும்.நான்காம் நூற்றாண்டுகளில் அது செல்வாக்கின் உச்சகட்டத்தை எட்டி கிறிஸ்தவத்திற்கு ஒரு போட்டி மதமாக இருந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றிய இந்த மதம் மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடல் வரையிலும், கிழக்கு பசிபிக் பெருங்கடல் வரையிலும் பரவியிருந்தது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இம்மதம் நிலைத்திருந்தது. மானி தோற்றுவித்த இந்த மதம்,முந்தைய மதங்களின் பலவற்றினுடைய கொள்கைகளின் கூட்டிணைப்பாக விளங்கியது. சொராஸ்டர் (Zoroaster),புத்தர், இயேசு கிறிஸ்து ஆகியோரை உண்மையான அருட்போதர்கள் என்று மானி கருதினார். எனினும் அவர்களில் எவரையும் விட மிக முழுமையான அருள் வெளிபாட்டுச் செய்தி (Revelation) தமக்குப் பின்னாளில் கிடைத்தாக அவர் கூறிக் கொண்டார்.

மானியின் மதத்தில் புத்த,கிறித்தவ சமய அம்சங்களும் அடங்கியிருந்த போதிலும், அந்த கோட்பாடு (மேலை நாடுகளின்) கருத்தை கவரும் முறையில் இருந்தது. அக்கோட்பாடு நன்மை, தீமை என்ற இரு பொருள்வாதக் கோட்பாட்டைக் கொண்ட பார்சி சமய துவைத் தத்துவத்திலிருந்து பெறப்பட்டதாகும். ‘இறைவனும் நரகிறையும் நிலைபேறுடைய சரி ஆற்றலுடையவர்கள் என்ற அடிப்படையை கொண்டது.

‘ஒருவனே தேவன்’ என்ற கொள்கையில் மானிக்கு உடன்பாடில்லை “இந்த உலகை ஒரே கடவுள் ஆளவில்லை. இருவேறு சக்திகளுக்கிடையிலான இடைவிடாத போராட்டத்தின் களமாகவே உலகம் விளங்கிறது.இந்த இரு சக்திகளில் ஒன்று தீய நேறி, இதனை இருளாகவும் பருப்பொருளாகவும் மானி உருவகித்துக் காட்டுகிறார். இன்னொன்று நன்னெறி இதனை ஒளியாகவும் ஆன்மாகவும் அவர் காட்டுகிறார்.

மானிக்கே சமய இறைமையியலை விரித்துரைத்தால் பதிவு ரொம்ப நீளமாக போய் விடும். எனினும் மனிதனின் ஆன்மாவை நன்னெறியோடும், அவனது உடலை தீயநெறியோடும் அவர்கள் இணைத்துக் கண்டதன் விளைவாக இனப் பெருக்கத்திற்காகக் கூட பாலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மானிக்கே மதவாதிகள் நம்பினார்கள். புலாலுண்ணுதல், மது அருந்துதல் ஆகியவற்றையும் அது தடை செய்கிறது.

இத்தகைய கடுமையான கட்டுத் திட்டங்களைக் கொண்ட ஒரு கோட்பாடு, செல்வாக்குப் பெறுவதும்,பெருமளவு மக்களின் ஆதரவைப் பெறுவதும் கடினம் என உங்களுக்கு எண்ணத் தோன்றுகிறதா?. ஆனால் மானிக்கே மத திருச்சபையின் பாமர உறுப்பினர்களுக்கு இந்த கடுமையான தடைகள் உரியன அல்ல. அவை வீடு பேற்றுக் கெனத் தேர்ந்தேடுக்கப்பட்ட ஒரு சிறிய உயர் குழுவினர்க்கு (The Elect) மட்டுமே அவை உரியவை.

‘கேட்பவர்கள்’ (The Hearers) என்றழைக்கப்படும் பாமர உறுப்பினர்கள் மனைவியரை (அல்லது ஆசை நாயகிகளை) வைத்துக் கொள்ளலாம்; குழந்தைகள் பெற்று குடும்பம் நடத்தலாம். புலால் உண்ணலாம்; மது அருந்தலாம். அவர்கள் பல்வேறு மத சடங்குகளை அனுசரிக்க வேண்டும். “உயர் குழு” வினை ஆதரிக்க அவர்கள் கடமைப்பட்டவர்கள். ஆனால், அவர்களுக்குச் சுமத்தப்பட்ட அறநெறிகள் அளவுக்கு மீறிக் கடுமையானவை அல்ல. இதில் மானிக்கே மதத்தின் ஒரு கிளைப் பிரிவினராகிய கேத்தாரி (Cathari) போன்றவர்கள் பாமரர்களுக்கு வாழக்கையில் மேலும் பல சுதந்திரங்களையும் அளித்தனர்.

மானி 216 ஆம் ஆண்டில் மெசப்பொட்டேமியாவில் பிறந்தார். அப்போது அந்த நாடு பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. கிறித்துவக் கோட்பாட்டின் தீவிரச் செல்வாக்குக்கு ஆட்பட்டிருந்த ஒரு சிறிய சமயக் கிளையின் பின்னணியில் மானி வளர்ந்தார். அவருக்கு 12 ஆம் வயதிலேயே மத வெளிப்பாடுகள் தோன்றியதாகக் கூறினார். இருபதாம் வயதிலேயே அவர் தமது புதிய சமயத்தைப் போதிக்கலானார். அவரது சொந்த நாட்டில் முதலில் அவர் வெற்றி பெறவில்லை. அதனால் அவர் வடமேற்கு இந்தியாவுக்குச் சென்றார். அங்கு ஓர் உள்நாட்டு அரசரைத் தம் மதத்திற்கு மாற்றுவதில் வெற்றிக் கண்டார்.

242 ஆம் ஆண்டில் மானி பாரசீகம் திரும்பினார்.அங்கு முதலாம் ஷாப்பூர் மன்னரைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஷாப்பூர் மானிக்கே சமயத்திற்கு மாறவில்லையாயினும், அவருக்கு மானியிடம் ம்திப்பு ஏற்பட்டது. அதனால் பாரசீகப் பேரரசு முழுவதிலும் அவரது புதிய மதத்தை போதிப்பதற்கு அரசர் அனுமதியளித்தார்.அடுத்த 30 ஆண்டுகள் வரை, முதலாம் ஷாப்பூர், முதலாம் ஹார்மிஸ்டு ஆகியோரின் ஆட்சியின் கீழ் மானி தமது மதத்தை தங்கு தடையின்றி போதித்தார்.

அவருக்கு ஏராளமான ஆதரவளர்கள் தோன்றினர்.எனினும் மானியின் வெற்றி கண்டு சஸ்ஸானிடு அரசுகளின் ஆட்சியில் அரசமதமாக அதிகாரத்திலிருந்த பார்சி மதக் குருமார்கள் பொறமை கொண்டனர். முதலாம் பஹ்ராம் அரசர் 276 ஆம் ஆண்டில் ஆட்சிப் பீடம் ஏறியதும் மானி கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். 26 நாட்கள் சிறையில் பல கொடுமைகளை அனுபவித்த பிறகு அவர் இறந்தார்.

மானி தம் வாழ்நாளில் ஏராளமான நூல்கள் எழுதினார். ஒரு நூலை பாரசீக மொழியிலும் மற்ற நூல்களை ஒரு செமிட்டிக் மொழியாகிய சிரியக் (Syriac) மொழியிலும் எழுதினார்.


சிரியக் மொழியின் உயிர் எழுத்துக்கள்

அந்த நூல்கள் மானிக்கே மதத்தின் வேத நூல்களாக மதிக்கப்பட்டன. மானிக்கே மதம் அற்றுப் போனதும், இந்த வேத நூல்களும் மறைந்து போயின.ஆயினும் இவற்றுள் சில இருபதாம் நூற்றாண்டில் மீண்டும் கண்டெடுக்கப்பட்டன.

கண்டெடுக்கப்பட்ட சிதைந்த மானி மத வேதநூல்கள்
மானியின் ஆயூட் காலத்திலேயே அவரது மதத்திற்கு இந்தியா முதல் ஐரோப்பா வரையில் ஆதரவாளர்கள் ஏற்பட்டனர்.அவர் இறந்த பின்னரும் இந்த மதம் தொடர்ந்து வளர்ந்து மேற்கே ஸ்பேயின் தொடங்கி கிழக்கே சீனா வரையிலும் பரவியது. கிறிஸ்துவ மதம் ரோமானியப் பேரரசின் அரசு மதமாக ஆனதும், மனிக்கே சமயம் கடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டது. 600 ஆம் ஆண்டு வாக்கில்,மேலை நாடுகளிலிருந்து மானிக்கே மதம் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டது.

ஆனால் மொசப்பொட்டேமியாவிலும், ஈரானிலும் மானிக்கே மதம் தொடர்ந்து வலுவாகவே இருந்தது. அங்கிருந்து அது மத்திய ஆசியாவுக்கும், துருக்கிஸ்தானுக்கும் மேற்குச் சீனாவுக்கும் பரவியது. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மேற்குச் சீனாவின் ஒரு கனிசமான பகுதியையும், மங்கோலியாவையும் ஆண்டு வந்த “ உய்கூர்” களின் (Uighurs) அரசு மதமாகவும் ஆகியது. இந்த மதம் சீனாவிலும் நுழைந்து, கடற்கரை வரைப் பரவி,அங்கிருந்து தைவான் தீவையும் எட்டியது . ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாம் மறுமலர்ச்சியடைந்து தோன்றியதும்,அதன் வலிமையான கொள்கைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மானிக்கே மதம் வீழ்ச்சியடையலாயிற்று.

ஒன்பாதம் நூற்றாண்டிலிருந்து மத்திய ஆசியாவிலும் இந்த மதம் வீழ்ச்சியடையலாயிற்று. 13 ஆம் நூற்றாண்டில் மங்கோலியப் படையெடுப்புகளுக்குப் பிறகு அங்கும் அது அடியோடு அழிந்தது.

இதற்கிடையில், ஐரோப்பாவில் மானிக்கே மதத்திலிருந்து தோன்றி பல்வேறு கிளை மதங்கள் எழுந்தன. அதில் கிழக்கு ஐரோப்பியக் கிளை மதங்களில் மிக முக்கியமானது கேத்தாரி (Cathare) என்ற பிரிவாகும். இது ஃபிரெஞ்சு நகராகிய ஆல்பியில் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தது. அதனால் இந்தக் கிளை மதத்தினரை ஆல்ஜென்சியர்கள்(Albigensians) என்றும் அழைத்தனர். 12 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் குறிப்பாகத் தெற்கு ஃபிரான்சில் இந்தப் பிரிவு பெருமளவு பரவியது.

ஆல்பிஜென்சியர்களின் கோட்பாடு மானிக்கே மதக் கோட்பாட்டை பெரிதும் ஒத்திருந்தபோதிலும் அவர்கள் தங்களை கிறித்தவர்கள் என்று கூறிக் கொண்டனர். ஆனால், கிருஸ்தவ மரபுத் திருசபையினர் அவ்ர்களைப் புறச் சமயத்தினர் என ஒதுக்கினர். இறுதியாக மத்திய காலத்துப் போப்பாண்டவர்களிலேயே சமயச் சகிப்புணர்வு மிகக் குறைந்தவர் எனக் கருதப்பட்ட மூன்றாம் இன்னசன்ட் போப்பாண்டவர் (Pope Innocent-111) இந்த மதத்தினருக்கு எதிராக சிலுவைப்போர் தொடுக்கும்படி ஆணையிட்டார்.


1209 ஆம் ஆண்டில், இந்த சிலுவைப்போர் தொடங்கியது. 1244 ஆம் ஆண்டில் பயங்கர உயிர்ப் பலிக்கும்,தென் ஃபிரான்சின் பெரும்பகுதியின் நாசத்திற்கும் பிறகு ஆல்பிஜென்சியர்கள் அடியோடு ஓடுக்கப்பட்டனர். எனினும், கோத்தாரி மதம் இத்தாலியில் 15 ஆம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது.


சிலுவைப் போரில் மானி மதத்தினர் கொல்லப்படுகிறார்கள் (பழைய ஓவியம்)
இன்றைய தலைமுறைக்கு மானி மதம் என்றால் என்ன என்று தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டு விட்டது. ஆனால் அழிந்த வரலாறுகளை தெரிந்துக் கொள்வதின் மூலம் இன்றைய தலைமுறையினர்க்கு நிறைய படிப்பினைகள் இருக்கின்றன.