Author Topic: இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)  (Read 3820 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)



ஓவியர்   லியொனார்டோ டா வின்சி
ஆண்டு   1495–1498
வகை   சுண்ணாம்புக் கலவைச் சாந்து பூசிய
சுவரில் எழுதிய சுவரோவியம்
பரிமாணம்   460 சமீ × 880 சமீ (181 அங் × 346 அங்)
இருக்குமிடம்   அருளன்னை மரியா கோவில்,மிலான்


இறுதி இராவுணவு (The Last Supper) என்பது இயேசு கிறிஸ்து துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்ததற்கு முந்திய இரவில் அவர்தம் சீடர்களோடு அருந்திய விருந்தை மையப்பொருளாகக் கொண்டு லியொனார்டோ டா வின்சி என்னும் புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர் வரைந்த தலைசிறந்த சுவரோவியம் ஆகும்.
லியொனார்டோ டா வின்சிக்குப் புரவலராக இருந்த லுடோவிக்கோ ஸ்ஃபோர்சா (Ludovico Sforza) என்னும் மிலான் குறுநில ஆளுநரும் அவர்தம் மனைவி பெயாட்ரீசு தெஸ்தே (Beatrice d'Este) என்பவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, டா வின்சி இச்சுவரோவியத்தை வரைந்தார்.
யோவான் நற்செய்தியில் இயேசு தம் சீடர்களோடு இறுதி முறையாக உணவு அருந்திய நிகழ்ச்சி பற்றி விவரிக்கும் காட்சியை அடிப்படையாகக் கொண்டு டா வின்சி இந்த ஓவியத்தை உருவாக்கினார். இயேசு அந்த இறுதி இராவுணவின்போது நற்கருணை விருந்தை ஏற்படுத்தினார் என்று கிறித்தவர்கள் நம்புகின்றனர். எனவே இந்த இறுதி இராவுணவு
"ஆண்டவரின் திருவிருந்து" (Supper of the Lord) என்றும் அழைக்கப்படுகிறது
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
யோவான் நற்செய்தியில் இயேசுவின் இறுதி இராவுணவு

யோவான் 13:21-27 இயேசு துன்புற்று இறப்பதற்கு முன் அருந்திய இறுதி உணவு நிகழ்ச்சியைக் கீழ்வருமாறு விவரிக்கிறது:

“   இப்படிச் சொன்னபின் இயேசு உள்ளம் கலங்கியவராய், 'உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்று திட்டவட்டமாகக் கூறினார். யாரைப்பற்றி அவர் இப்படிக் கூறினார் என்று தெரியாமல் சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். இயேசுவின் சீடருள் ஒருவர் அவர் அருகில் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்தார். அவர்மேல் இயேசு அன்புகொண்டிருந்தார். சீமோன் பேதுரு அவருக்குச் சைகை காட்டி, 'யாரைப்பற்றிக் கூறுகிறார் எனக் கேள்' என்றார். இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்த அவர், 'ஆண்டவரே அவன் யார்?' என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, 'நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்' என்று சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார். அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான்.   ”

யோவான் நற்செய்தி தவிர, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய பிற மூன்று நற்செய்தியாளர்களும் இயேசுவின் இறுதி இராவுணவை விவரித்துள்ளனர். திருத்தூதர் பவுலின் மடல்களிலும் ஆண்டவரின் இறுதி உணவு பற்றிய குறிப்புகள் உண்டு:

மத்தேயு 26:26-30
மாற்கு 14:22-26
லூக்கா 22:15-20
1 கொரிந்தியர் 11:23-25
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
லியொனார்டோ டா வின்சி "இறுதி இராவுணவு" ஓவியத்தை வரைந்த பின்னணி

டா வின்சி உருவாக்கிய இறுதி இராவுணவு ஓவியம் மிலான் நகரில் "அருளன்னை மரியா கோவில்" (Santa Maria delle Grazie) என்னும் வழிபாட்டிடத்தை உள்ளடக்கிய துறவற இல்லத்தின் உணவறைச் சுவரில் வரையப்பட்டது. இவ்வோவியம் இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தின் சிறப்பான படைப்பாகவும், இயேசு அருந்திய இறுதி விருந்தைச் சித்தரிக்கும் ஓவியங்களுள் முதன்மையானதாகவும் கருதப்படுகிறது.
1482ஆம் ஆண்டு, லுடோவிக்கோ ஸ்ஃபோர்சா என்னும் குறுநில ஆளுநர் லியொனார்டோ டா வின்சியிடம் தம் தந்தை பிரான்செஸ்கோ ஸ்ஃபோர்சாவுக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பிடக் கேட்டார். பிரான்செஸ்கோ ஸ்ஃபோர்சா குதிரைமேல் இருந்து எதிரியைத் தாக்குவதுபோல் ஒரு வெண்கலச் சிலைத் தொகுப்பை உருவாக்கத் திட்டமிட்ட லெயொனார்டோ அதற்கான தயாரிப்புகளை மேற்கொண்டார்.
பத்து ஆண்டுகள் உழைப்புக்குப் பின் சிலைத் தொகுப்பை உருவாக்கத் தேவையான வெண்கலம் கிடைக்கவில்லை என்று அத்திட்டம் கைவிடப்பட்டது. இதனால் பெரிதும் ஏமாற்றமடைந்த லியொனார்டோ மிலானை விட்டு வேறு இடங்களுக்குச் சென்றார்.
ஆனால் லுடோவிக்கோ ஸ்ஃபோர்சா மீண்டும் லியொனார்டோவை அழைத்து மற்றொரு திட்டத்தை நிறைவேற்றித் தரக் கேட்டார். அதுவே உலகப் புகழ் பெற்ற "இறுதி இராவுணவு" என்னும் சுவரோவியமாகும்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஸ்ஃபோர்சா குடும்பத்திற்காக உருவான ஓவியம்

மிலான் நகரில் புனித சாமிநாதர் (டோமினிக்) சபைத் துறவியர் இல்லத்தில் "அருளன்னை மரியா கோவில்" (Santa Maria delle Grazie) இருந்தது. அக்கோவிலில் கலையழகு மிக்க ஓவியங்களையும் கிறித்தவ சமயம் சார்ந்த கலைச் சின்னங்களையும் உருவாக்கி, தம் குடும்பமாகிய ஸ்ஃபோர்சாவின் பெயரை நிலைத்திருக்கச் செய்ய லுடோவிக்கோ விரும்பினார்.
அக்கோவிலின் தூயகப் பகுதியை (sanctuary) டொனாட்டோ ப்ரமாந்தே (Donato Bramante) என்னும் கலைஞர் ஏற்கெனவே புதுப்பித்திருந்தார். கோவிலை அடுத்திருந்த துறவியர் இல்ல உணவறையை அழகுபடுத்த எண்ணினார் லுடோவிக்கோ ஸ்ஃபோர்சா.
கலை மரபுக்கு ஏற்ப, உணவறையில் இயேசு சிலுவையில் தொங்கும் காட்சியையும் இயேசு இறுதி இராவுணவு அருந்தும் காட்சியையும் சித்தரிக்க முடிவாயிற்று. டொனாட்டோ மோந்தோர்ஃபனோ என்பவர் இயேசு சிலுவையில் தொங்கும் காட்சியை மிக விரிவாக 1495இல் வரைந்தார். அதனருகில் லியொனார்டோ லுடோவிக்கோவின் குடும்பத்தினரின் சாயலை வரைந்தார்.
மேற்கூறிய ஓவியங்களுக்கு எதிர்ப்பக்கம் இருந்த சுவரில் இயேசுவின் இராவுணவுக் காட்சியை உருவாக்குவதென்று லியொனார்டோ முடிவுசெய்தார். அந்த இராவுணவுக் காட்சி ஸ்ஃபோர்சா குடும்ப நினைவகத்தின் (mausoleum) முதன்மைக் கலைப்பொருளாக அமைய வேண்டும் என்பது லுடோவிக்கோவின் விருப்பம்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஓவியம் வரைந்த பாணி

லியோனார்டோ இறுதி இராவுணவு ஓவியத்தை 1495இல் வரையத் தொடங்கி, 1498இல் நிறைவுக்குக் கொணர்ந்தார். அவர் அதிகாலையில் எழுந்து ஓவிய வேலையைத் தொடங்கினால் மாலை வரையும், பசி தாகம் என்று பாராமல் ஓவியம் வரைவதிலேயே கண்ணாயிருந்தார் என்று சம கால எழுத்தாளர் மத்தேயோ பண்டேல்லோ (Matteo Bandello) என்பவர் குறிப்பிடுகிறார்.
சுவரில் ஓவியம் வரைய முடிவுசெய்த லியொனார்டோ அதிக நாள்கள் நீடித்து நிலைபெறும் தன்மையுடைய "ஈரவோவிய" (fresco) முறையைக் கையாள விரும்பவில்லை. அம்முறையில் முதலில் சமதளமான சுவரில் சீராக சுண்ணத்தால் முதல் பூச்சு செய்யவேண்டும். பூச்சு உலர்ந்துபோவதற்கு முன்னால், ஈரமாக இருக்கும்போதே சாயம் கலந்த நிறக்கலவைகளைத் தூரிகையால் பூச வேண்டும். ஆனால், லியோனார்டோ ஓவியம் வரைந்த போது ஒவ்வொரு தூரிகைப்பூச்சுக்கு முன்னும் சிந்தனையில் ஆழ்ந்திருப்பாராம்.
எனவே, "ஈரவோவிய முறையை" கையாளாமல், உலர்ந்த சுவர்தளத்தில் ஒரு பலகையில் ஓவியம் எழுதுவதுபோல முதலில் பசைக்கூழ் அப்பி, அடிநிறம் (underpainting) பூசி, அது உலர்ந்தபின் பல வண்ணங்களைத் துல்லியமாக விரித்தும் அழுத்தியும், பரவியும் குறித்தமைத்தும், ஒளிர்வித்தும் கருமையாக்கியும் இறுதி இராவுணவு ஓவியத்தை லியொனார்டோ எழுதினார்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஓவியம் நிறமிழந்த வரலாறு

லியொனார்டோ ஒவியத்தை வரைந்து முடித்த உடனேயே, "ஈரவோவிய முறை" அன்றி, "உலர்முறை" கையாண்டதில் சில அடிப்படைக் குறைபாடுகள் இருந்ததைக் கண்டார். ஓவியத்தின் கீழ்ப்பகுதியில் இடதுபுறம் ஒரு கீறல் தோன்றியது. அது காலப்போக்கில் ஓவியம் சிறிதுசிறிதாகச் சிதைவழிய முதல் படியாயிற்று. இருபது ஆண்டுகளுக்குள்ளாக அந்த ஓவியத்தில் "பளபளப்பான கறை தவிர வேறொன்றையும் காண இயலவில்லை" என்று வசாரி (Vasari) என்னும் சமகால அறிஞர் எழுதினார்.
1642இல் எழுதிய ஃப்ரான்செஸ்கோ ஸ்கன்னெல்லி என்பவர், இறுதி இராவுணவு ஓவியத்தில் உள்ள ஆள்களை அடையாளம் காண்பதே கடினமாக உள்ளது என்றார்.
1652இல் சிதைந்த நிலையில் இருந்த ஓவியத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு நுழைவாயில் வழி உருவாக்கப்பட்டது. உணவறைக்கும் சமயலறைக்கும் போய்வர அவ்வழி பயன்படுத்தப்பட்டது. பின்னர். அந்த வழியைச் செங்கல் கொண்டு அடைத்துவிட்டனர். இன்று, ஓவியத்தின் கீழ் அடிப்பகுதி நடுவில் வளைவுபோல் அமைந்துள்ள கட்டு இவ்வாறு ஏற்பட்டதே.
1672இல் ஓவியத்தைத் தட்பவெப்ப நிலையிலிருந்து காப்பதற்காக அதை ஒரு திரையால் மூடினார்கள். ஆனால் ஈரப்பசை ஓவியத்திற்கும் திரைக்கும் இடையே தங்கிப்போய், சேதத்தை இன்னும் அதிகரித்தது.
ஓவியம் சிதையத் தொடங்கியதற்கு முக்கிய காரணங்கள் அது எழுதப்பட்ட சுவருக்குப் பின்சுவர் ஈரமடையத் தொடங்கியதும், லியொனார்டோ கையாண்ட "உலரோவிய முறையும்", அடுக்களை அண்மையில் இருந்ததால் வெப்பநிலை மாற்றம் தொடர்ந்து ஏற்பட்டதும், உணவறையிலிருந்து கழிவுநீர் வெளியேற்றம், மற்றும் உணவிலிருந்து எழுந்த ஆவி போன்ற கூறுகளும் ஆகும்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஓவியத்தைச் சீரமைக்க மேற்கொண்ட முயற்சிகள்



இயேசுவின் முகம் (1979-1999 சீரமைப்புக்கு முன்)


இயேசுவின் முகம் (1979-1999 சீரமைப்புக்குப் பின்


1726: மைக்கலாஞ்சலோ பெல்லோட்டி, லியொனார்டோ வரைந்த ஓவியம் "ஈரவோவிய முறையில்" எழுதப்பட்டது என்று தவறாக எண்ணி, அதை அம்முறைப்படி சீரமைக்க முயன்றார். நிலைமை மோசமானது.

1770: ஜூசேப்பே மாஸ்ஸா என்பவர் பெல்லோட்டி செய்த மாற்றத்தை மீண்டும் மாற்றி, புதிதாகச் சீரமைக்க முயன்றார்.

1796: பிரஞ்சு இராணுவம் உணவறையை ஆயுதக் கிடங்காகப் பயன்படுத்தியது; ஓவியத்தின்மீது கல்லெறிந்தும், ஏணியில் ஏறி, ஓவியத்திலிருந்த திருத்தூதர்களின் சாயல்களில் கண்களைச் சுரண்டியும் நிறத்தை அகற்றினர். பின், ஓவியம் இருந்த உணவறை ஒரு சிறையாகப் பயன்பட்டது. சிறைக் கைதிகள் ஓவியத்தைச் சிதைத்தனரா என்று தெரியவில்லை.

1821: ஸ்டேஃபனோ பரேஸ்ஸி என்பவர் இறுதி இராவுணவு ஓவியத்தைச் சுவரிலிருந்து அகற்றி வேறிடத்துக்கு மாற்ற முயன்றார். அது இயலாத காரியம் என்று அவர் உணர்வதற்குள் ஓவியத்தின் நடுப்பகுதிக்கு மேலும் சேதம் விளைந்தது.

20ஆம் நூற்றாண்டு: ஓவியம் பற்றிய ஒழுங்குமுறையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
1901-1908: லூயிஜி காவெனாகி என்பவர் ஓவியத்தின் ஒளிப்படங்களைப் பயன்படுத்தி, கவனமாக ஆய்வு நிகழ்த்தி, முதன்முறையாக, லியொனார்டோவின் ஓவியம் "ஈரவோவிய முறையில்" எழுதப்படவில்லை என்று நிலைநாட்டினார். 1906-1908 ஆண்டுகளில் அவர் ஓவியத்தைத் தூய்மைப்படுத்தி, நிறம் போயிருந்த இடங்களில் நிறம் இட்டார். மேல் படிந்த அழுக்குகளை அகற்றினார்.

1924: ஒரேஸ்தே சில்வேஸ்த்ரி ஓவியத்தை மேலும் தூய்மையாக்கினார்.
இரண்டாம் உலகப் போர்: 1943, ஆகஸ்டு 15ஆம் நாள் ஓவியம் இருந்த கட்டடத்தின் அருகே விழுந்த குண்டு ஓவியத்தை அழித்திருந்திருக்கும். ஓவியம் இருந்த இடத்தின் வடக்கு சுவரைச் சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கிவைத்து பாதுகாப்பு அளித்ததன் விளைவாக ஓவியம் அதிசயமாக அழிவிலிருந்து தப்பியது. ஆயினும், குண்டு விழுந்ததால் ஏற்பட்ட அதிர்வு ஓவியத்தைச் சேதப்படுத்தியிருக்கலாம்.

1951-1954: மவுரோ பெல்லிச்சோலி என்பவர் ஓவியத்தில் படிந்த பூஞ்சை போன்ற அழுக்குகளை அகற்றினார். ஓவியத்தின் கருநிறப் பார்வையைப் போக்கி மிதமாக்கினார். அவரது முயற்சியினால் ஓவியம் பெருமளவு காப்பாற்றப்பட்டது.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அண்மைய சீரமைப்பு முயற்சி



1979-1999 சீரமைப்புக்கு முன்னால், 1970இல் லியொனார்டோவின் ஓவியம் இவ்வாறு தோற்றமளித்தது.


பீனின் ப்ரம்பீல்லா பார்சிலோன் (Pinin Brambilla Barcilon) என்னும் வல்லுநர் ஓவியத்தைச் சீரமைக்கும் பணியை 1979இல் தொடங்கினார். அப்பணி இருபது ஆண்டுகளுக்குப் பிறகு 1999இல் நிறைவுற்றது.

மிகவும் துல்லியமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பார்சிலோன் சீரமைப்பை மேற்கொண்டார். ஓவியம் மேலும் சீர்குலைவதைத் தடுப்பதும், லியொனார்டோவின் ஓவியத்தின் மீது முன்னாள் ஓவியர்களால் செய்யப்பட்ட "மேல்வரைவுகளை" கவனமாக அகற்றி, லியொனார்டோவின் ஓவியத்தை அதன் முன்னிலைக்குக் கொணர்வதும் இச்சீரமைப்பின் நோக்கமானது.
கடின உழைப்பின் விளைவாக லியொனார்டோவின் முதல் ஓவியத்தின் நிறங்கள் மீண்டும் வெளித்தோன்றின. நிறம் வெளிறிப்போன இடங்களில் பார்சிலோன் மிக மிதமானதொரு பொதுநிறப் பூச்சு கொடுத்தார். இவ்வாறு, புதுப் பூச்சும் லியொனார்டோ ஓவியத்தின் முதல் நிறங்களும் ஒன்றோடொன்று குழம்பாமல் பார்த்துக்கொண்டார்.

இந்த நீண்ட காலச் சீரமைப்புக்குப் பின் இறுதி இராவுணவு ஓவியம் 1999 மே மாதம் 28ஆம் நாள் மக்கள் பார்வைக்குத் திறந்துவைக்கப்பட்டது. ஓவியம் இருக்கின்ற அறை முழுவதும் மிக நுட்பமான, கட்டுப்படுத்தற்கு ஏற்ற காற்றோட்ட அமைப்பு நிறுவப்பட்டது. ஈரத்தன்மையையும் தூசி படிதலையும் தவிர்க்கும் தொழில்நுட்பமும் ஏற்படுத்தப்பட்டன. பார்வையாளர், முன்னறிவிப்போடுதான் ஓவியத்தைப் பார்க்க முடியும். ஒரே நேரத்தில் 25 பேர், 15 நிமிடங்கள் மட்டுமே பார்வைக்கு அனுமதி உண்டு.

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உலக பாரம்பரிய உடைமை நிலை

1980இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) லியொனார்டோ வரைந்த இறுதி இராவுணவு ஓவியத்தையும் அதன் தொடர்புடைய அருளன்னை மரியா கோவிலையும் உலக பாரம்பரிய உடைமை என்று அறிவித்தது.


சீரமைப்பு குறித்த விமர்சனம்


லியொனார்டோ வரைந்த இறுதி இராவுணவு. பகுதித் தோற்றம்.

பார்சிலோன் செய்த சீரமைப்பைச் சில வல்லுநர்கள் விமர்சித்துள்ளார்கள். ஒருவர், அண்மைய சீரமைப்புக்குப் பிறகு இராவுணவு ஓவியம் 18-20 விழுக்காடு லியொனார்டோ, 80 விழுக்காடு பார்சிலோன் ஓவியமாக மாறிவிட்டது என்று கூறியுள்ளார்.
நிறம் வெளிறிப்போன இடங்களில் பொதுநிறம் புதிதாகப் பூசியது தேவையற்றது என்றும் சிலர் கருதுகிறார்கள்.
இவ்வகை விமர்சனங்கள் இருப்பினும், பார்சிலோன் செய்த சீரமைப்பைப் பல அறிஞர்கள் போற்றியுள்ளார்கள்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
இராவுணவு ஓவியம் வழங்கும் செய்தி


இராவுணவு ஓவியத்தில் ஆள்களை அடையாளம் காட்டும் குறிப்புகள். இத்தாலிய மொழி



லியொனார்டோ வரைந்த இந்த ஓவியம் இயேசுவின் வாழ்க்கையில் நடந்த முக்கியமானதொரு நிகழ்வைச் சித்திரமாகக் காட்டுகிறது.
துறவியரின் உணவறையில் அமைந்த இந்த ஓவியம் இயேசு தம் சீடர்களோடு உணவருந்துவதைச் சித்தரிக்கிறது. இயேசுவும் சீடரும் தலைமை மேசையில் உணவருந்துகின்றனர். ஆயினும் அவர்கள் அந்த அறையில் வழக்கமாக உணவருந்துகின்ற துறவியரிடமிருந்து சிறிது மேலே உள்ளார்கள். மேசையும் அதில் உணவருந்துவோரும் பிறர் பார்வைக்குச் சிறிது முன்னோக்கி இருப்பதுபோல் தோன்றுகிறது.
அந்த உணவறையில் மண்ணகமும் விண்ணகமும் சந்திப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
யோவான் 13:21-27 இயேசு துன்புற்று இறப்பதற்கு முன் அருந்திய இறுதி உணவு நிகழ்ச்சியை விவரிக்கிறது. அதில் வருகின்ற ஒரு சொற்றொடர் இந்த ஓவியத்தின் கருப்பொருளாக அமைந்தது. அதாவது,

“   இயேசு, 'உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார் (யோவான் 13:21).   ”

இயேசு தம் நெருங்கிய நண்பர்களாகவும் தோழர்களாகவும் தெரிந்துகொண்டவர்கள் பன்னிருவர் (திருத்தூதர்கள்/அப்போஸ்தலர்கள்). அவர்களுள் ஒருவர் தம் எதிரிகளோடு சேர்ந்துகொண்டு, தம்மைக் காட்டிக்கொடுக்கப் போகிறார் என்று இயேசு கூறியது எல்லாருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சியில் ஒவ்வொரு சீடரின் உள்ளத்திலும் எத்தகைய உணர்வுகள் எழுந்தன என்பதை லியொனார்டோ சித்தரிக்கிறார்

“   அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது இயேசு, 'உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்...என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொடுப்பான்' என்றார் (மத்தேயு 26:21,23).   ”

இவ்வாறு இயேசு கூறியதை லியொனார்டோ ஓவியத்தின் மையமாக்கினார்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஓவியத்தின் பின்னணிக் கூறுகள்

ஓவியத்தின் மேல் பின்பகுதியில் மூன்று சாளரங்கள் உள்ளன. அவற்றின் வழியாக வரும் ஒளி ஓவியத்தின்மீது வெளிச்சத்தை உருவாக்குகிறது. இடதுபுறச் சுவரில் பக்கவாட்டிலுள்ள சாளரத்திலிருந்தும் ஒளி வீசி ஓவியம் முழுவதும், வலதுபுற மேல்பகுதியும் வெளிச்சம் பெறுகிறது. உணவறையில் உண்மையிலேயே அத்தகையதொரு சாளரம் இருந்தது.
ஒரு சுவரில் வரையப்பட்ட ஓவியமாயினும் அது முப்பரிமாணம் கொண்ட வீட்டு அறைபோலப் பார்வையளிக்கிறது.
தலைக்குமேல் கூரையும், கால்களுக்குக் கீழே சமதளத் தரையும், பக்கச் சுவர்களில் தொங்குகின்ற திரைத் துணிகளும், ஆழ் பின்பகுதியில் ஒளிக்கு வழியாக உள்ள சாளரங்களும் உண்மையிலேயே பார்வையாளர்களும் இயேசுவோடும் அவர்தம் சீடர்களோடும் ஒரு வீட்டினுள் இருப்பது போன்ற மாயத் தோற்றத்தைக் கண்களுக்குமுன் உருவாக்குகின்றன (trompe-l'œil).
இவ்வாறு, உணவறைப் பின்னணியில் மற்றுமொரு பின்னணியை லியொனார்டோ உருவாக்கியுள்ளார். ஓவியத்தில் உள்ள இரு பக்கத்துச் சுவர்களுக்குப் பின்னும் இடம் இருப்பதுபோன்று ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஓவியத்தின் நடுப்பகுதியில் இயேசு

ஓவியத்தின் கீழ்ப்பகுதி முழுவதும் மிக நீண்டதொரு மேசையால் நிறைந்துள்ளது. அது பார்வையாளரின் முன்னே முந்தித் தெரிகிறது. சரியாக மேசையின் நடுவே இயேசு அமர்ந்திருக்கிறார்.
இயேசுவின் உருவம் ஒரு பிரமிடு போல உள்ளது. தலை உச்சிப்பகுதி போலவும், விரிந்திருக்கும் கைகள் அடிப்பகுதிபோலவும் உள்ளன. அவர்தம் தலை சற்றே சாய்ந்துள்ளது. அவருடைய கண்களும் சற்றே மூடியிருக்கின்றன. தம் நெருங்கிய சீடருள் ஒருவர் தம்மைக் காட்டிக்கொடுப்பார் என்று கூறிய சொற்கள் அவர்தம் வாயிலிருந்து வெளியேறிய நிலையிலேயே அவரது உதடுகள் மூடியும் மூடாமலும் தோன்றுகின்றன.
இயேசுவே இந்த ஓவியத்தின் மையம். அவரது முகத்தில் சலனம் இல்லை. தம்மை எதிர்நோக்கியிருக்கின்ற துன்பமும் சிலுவைச் சாவும் அவரது மன உறுதியை உலைத்ததாகத் தெரியவில்லை. மாறாக, அவரது முகத்தில் அமைதி தவழ்கிறது.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
இயேசு நற்கருணையை ஏற்படுத்துகிறார்

இயேசு இறுதி இராவுணவின்போது நற்கருணையை ஏற்படுத்தி, அப்ப வடிவத்திலும் திராட்சை இரச வடிவத்திலும் தம் உடலையும் இரத்தத்தையும் (தம்மை முழுவதும்) மானிட மீட்புக்காகக் கையளித்தார் என்பது கிறித்தவ நம்பிக்கை.
லியொனார்டோவின் ஓவியத்தில் இயேசு நற்கருணையை ஏற்படுத்துகின்ற நிகழ்ச்சி உள்ளது. இயேசுவின் கைகளை ஓவியத்தில் பார்த்தால் அவை அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் எடுக்கப் போவது தெரிகிறது.
இயேசுவின் வலது கை திராட்சை இரசத்தை நோக்கியும், அவரது இடது கை அப்பத்தை நோக்கியும் நகர்வதை லியொனார்டோ எழிலுற வடித்துள்ளார்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஓவியத்தில் திருத்தூதர்கள்

இயேசுவைச் சூழ்ந்து திருத்தூதர்கள் பன்னிருவரும் மூன்று பேர் மூன்று பேராக நான்கு குழுவாக உள்ளனர். ஒவ்வொருவரும் வெவ்வேறு உடல்நிலை கொண்டிருந்தாலும், மொத்தத்தில் சமனாகச் சீரமைத்த விதத்தில் பன்னிருவரும் தோற்றமளிக்கினறனர்.
நடுவிலிருக்கும் இயேசுவிடமிருந்து புறப்படுகின்ற அலை போல இருபுறமும் சீடர் குழுக்கள் உள்ளன. அவர் கூறிய சொற்களும் அலைபோல சீடர்களைச் சென்றடைந்து அவர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் உணர்ச்சிகளை எழுப்புகின்றன.
இயேசுவின் அருகிலிருப்போருடைய உணர்ச்சி வெளிப்பாடு தீவிரமாகவும், சற்றே அகன்றிருப்போரின் உணர்ச்சி வெளிப்பாடு
மிதமாகவும் உள்ளது.
இயேசுவின் அருகே இடது புறமும் வலது புறமும் இருப்போர் அவரை விட்டு அகல்வதுபோலவும், இரு பக்கங்களிலும் வெளி ஓரங்களில் இருப்போர் அவரை நோக்கி நகர்வது போலவும் ஓவியர் வரைந்துள்ளார்.
ஒவ்வொரு திருத்தூதரின் உணர்வுகளையும் துல்லியமாக வெளிப்படுத்தும் வகையில் அவர்களது உடல்நிலை, முக பாவம், கையசைவு, கண்ணசைவு போன்ற ஒவ்வொரு அம்சத்தையும் லியொனார்டோ படம்பிடித்துக் காட்டுகிறார்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஓவியத்தில் திருத்தூதர் இருக்கும் இடம்

நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ள திருத்தூதர்களை லியொனார்டோ கீழ்வருமாறு அமர்த்தியுள்ளார்:
குழு 1: இடது புறம் வெளிப்பகுதி (இடமிருந்து வலம்): பர்த்தலமேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, அந்திரேயா.
குழு 2: இடது புறம் உட்பகுதி (இடமிருந்து வலம்): யூதாசு இஸ்காரியோத்து, சீமோன் பேதுரு, யோவான்.
குழு 3: வலது புறம் வெளிப்பகுதி (வலமிருந்து இடது): தீவிரவாதி சீமோன், ததேயு, மத்தேயு.
குழு 4: வலது புறம் உட்பகுதி (வலமிருந்து இடது): பிலிப்பு, செபதேயுவின் மகன் யாக்கோபு, தோமா.

இப்பெயர்களை லியொனார்டோ தாமாகவே ஓவியத்தில் குறிப்பிடவில்லை. ஆனால் லியொனார்டோவின் மாணாக்கரான சேசரே தா செஸ்தோ (Cesare da Sesto) என்பவர் தம் குரு வரைந்த ஓவியத்தைத் துல்லியமாகப் பிரதி எடுத்தார். அப்பிரதி இன்று சுவிட்சர்லாந்தில் போன்டே கப்ரியாஸ்கா (Ponte Capriasca) என்னும் நகரில் புனித அம்புரோசு கோவிலில் உள்ளது. அந்த ஓவியத்தில் மேற்கூறியவாறு திருத்தூதர்களின் பெயர்கள் குறிக்கப்படுவதால் லியொனார்டோவும் அவ்வாறே கொண்டார் என்பது தெளிவு