FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest 2k on January 22, 2019, 12:23:33 AM

Title: ஆதியின் வனம்
Post by: Guest 2k on January 22, 2019, 12:23:33 AM
ஆதியின் வனம்

ஆதிவனத்தில் நீளும்
பாதைகளின் புதிர்மையில்
தடம் பதித்து நிற்கிறேன்
ஒவ்வொரு அடிக்கும் நீளும் வனத்தில்
ஒவ்வொரு கணத்திற்குமென தொலைகிறேன்

அந்தகாரத்தின் சுவடு நிரம்பிய
பாதையெங்கும்
நிறம் மாறும் பூக்களுக்குள்
பொதிந்திருக்கும் வண்டுகளின் ரீங்காரங்கள்
இது தான் ஆதி வனத்தின் தாத்பரியம்
என உரைக்கின்றன

ஏவாள்களின் கனிகளும், ஆதாமின் நிச்சயமின்மைகளும்
நிறைந்திருக்கும்
பாதையெங்கும்
நெளிந்தோடும்
எண்ணிக்கையிலடங்கா சாத்தான்களின்
சர்ப்பங்கள்

இருள் விலக்கி நடக்கும் ஒவ்வொரு
தடத்திலும் ஒரு ஒளிக்கீற்று
அமிழ்ந்தெழுகிறது
ஒளிக்கீற்றென விரியும்
ஒவ்வொரு
தடத்திலும்
இருளின் பிசுபிசுப்பு அடர்ந்திருக்கிறது

பாதைகளின் அடர்த்தியறியாமல்
ஒரு அடி முன் வைக்கவும், பல அடிகள் பின்னோக்கி சரியும்
இந்த
முடிவிலியான பாதையில்
புலரி தேடி
குழம்பி நிற்கும் மனதை
தேற்ற முயலும்
பொன்வண்டுகள்
உள்ளினுள் ஒரு
ஒளிப்பிரிகையை நிகழ்த்திச் செல்கிறது

வீழும் நிலமெங்கும்
சிலமுறை தாங்கி நிற்கும் வேர்கள்
சிலமுறை உள்ளிழுத்து படரும் கொடிகள்
நிச்சலனமான இயந்திரமென
காலத்தை தின்று செரித்த
ஆதியின் வனத்தில்
ஒவ்வொரு கணமும் ஒரு பாதை
ஒவ்வொரு பாதையும் ஒரு பெரும் வனம்
ஒவ்வொரு வனமும் ஒரு ஈறிலி

தொலைந்து போகும்
சாத்தியம் கொண்ட பாதையில் நின்று  கொண்டு
ராபர்ட் ப்ரோஸ்ட்டை
யோசிப்பவள் நான்,
இரு பாதைகளாக
இருந்திருந்தால் கூட
அதிகம் பயணித்திராத ஏதோ ஒரு பாதையை
தேர்ந்தெடுத்திருப்பேன்

முடிவற்ற பாதைகளைக் கொண்ட
இந்த
ஆதிவனத்தில்
பாதை ஒன்றும் புதிதேயல்ல
முட்கள் தான் புதிது..
Title: Re: ஆதியின் வனம்
Post by: RishiKa on January 27, 2019, 12:49:10 PM

அருமையான வரிகள் சிக்க்கு!
முடிவற்ற பாதைகளைக் கொண்ட
இந்த
ஆதிவனத்தில்
பாதை ஒன்றும் புதிதேயல்ல
முட்கள் தான் புதிது..

முட்களும் நமக்கு புதிது அல்ல பேபி !
பாதைகளை வகுத்த நமக்கு ..
முட்களா பெரிது ?  :-*
Title: Re: ஆதியின் வனம்
Post by: Guest 2k on January 27, 2019, 11:54:44 PM
நன்றி ரிஷூ பேபி. Agreed, இங்கு முட்களும் புதிதல்ல காயங்கள் தான் புதிது இல்லையா 😂