FTC Forum

தமிழ்ப் பூங்கா => வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) => Topic started by: Global Angel on July 06, 2012, 06:46:07 PM

Title: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 06:46:07 PM
தமிழ் எழுத்துக்கள்  



(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/ll-1.jpg)

Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 06:47:25 PM
எழுத்து இலக்கணம்

தமிழ் எழுத்துகளின் எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி, பதம், புணர்ப்பு, எனும் பன்னிரு பகுதிகளையும் விளக்கிக் கூறுவது எழுத்து இலக்கணம் ஆகும்.
 
 
தமிழ் இலக்கண நூல்களில் எழுத்து என்ற சொல் மொழியில் வழங்கும் ஒலிகளைக் குறிக்கவும், அவ்வொலிகளுக்குரிய வரிவடிவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் “அ“ என்ற எழுத்து ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் குறித்து நிற்கின்றது.
 
 
 
எழுத்து இலக்கண வகைகள்:

 ■முதலெழுத்து
 ■சார்பெழுத்துகள்
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 06:49:14 PM
முதலெழுத்துகள்

அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்' வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்
 
* உயிரெழுத்துகள்:
உயிரெழுத்துகள் 12 அவை:
 
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
 

உயிரெழுத்துக்கள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும்.
 

குறில்
குறுகிய ஓசை உடையவை. அவை : அ,இ,உ,எ,ஒ
 
நெடில்
 நெடிய ஓசை உடையவை . அவை : ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ
 


* மெய்யெழுத்துகள்:
மெய்யெழுத்துகள் 18 அவை:

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்
 

மெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும். அவை:
 
வல்லினம் : க், ச், ட், த், ப், ற்
 மெல்லினம்: ங், ஞ், ண், ந், ம், ன்
 இடையினம்: ய், ர், ல், வ், ழ், ள்
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 06:50:52 PM
சார்பெழுத்துகள்

முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்ற்ன.
 

சார்பெழுத்து பத்து வகைப்படும் அவை:
 

1. உயிர்மெய் எழுத்து
 2. ஆய்த எழுத்து
 3. உயிரளபெடை
 4. ஒற்றளபெடை
 5. குற்றியலுகரம்
 6. குற்றியலிகரம்
 7. ஐகாரக் குறுக்கம்
 8. ஔகாரக் குறுக்கம்
 9. மகரக்குறுக்கம்
 10. ஆய்தக்குறுக்கம்
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 06:53:08 PM
உயிர்மெய் எழுத்து  


ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்.
 
 
 
எடுத்துக்காட்டு:
 
'க்' என்னும் மெய்யும் 'அ' என்னும் உயிரும் சேர்வதால் 'க' என்னும் உயிர்மெய் பிறக்கின்றது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் (18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.
 
 
 
எடுத்துக்காட்டு:
 
க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ
 
ச, சா, சி, சீ, சு, சூ, செ, சே, சை, சொ, சோ ,சௌ
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 06:54:43 PM

மகரக்குறுக்கம்


"ம்" என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம் எனப்படும்.
 
 
 
மகரம் + குறுக்கம் = மகரக்குறுக்கம்
 
 
 
ண ன முன் உம் வஃகான் மிசை உம் ம குறுகும்
 - நன்னூல்
 
எ.கா:
 
வரும் வண்டி
 தரும் வளவன்
 
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் நிலைமொழியீற்றில் மகரமும் வருமொழி முதலில் வகரமும் உள்ளன. இது போல "நிலைமொழியீற்றில் மகரம் இருந்து வகர முதல் மொழியோடு புணரும் போது நிலைமொழியீற்றிலுள்ள மகரம் கால் மாத்திரையளவே ஒலிக்கும்". இது ஒரு வகை மகரக்குறுக்கம்.
 
 
 
செய்யுள் இறுதிப் போலி மொழிவயின்
 னகார மகாரம் ஈர் ஒற்றாகும் (தொல். 51)

 
 
 
பாடல்களின் முடிவில் போலும் என்று வரும் சொல்லில் னகரமும் மகரமும் ஒன்றாகி போன்ம் என்று ஈரொற்றாக நிற்கும். இந்நிலையில் மகரம் தன் ஒலிப்பளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். இது மற்றொரு வகை மகரக்குறுக்கம் ஆகும்.
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 06:56:48 PM
ஔகாரக் குறுக்கம்  

ஔகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்போது மட்டுமே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதலில் வரும்போது ஒன்ற்ரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதுவே ஔகாரக் குறுக்கம் ஆகும்.
 

தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம்
 நையும் ஔ உம் முதல் அற்று ஆகும்
 - நன்னூல்
 
எ.கா:
 
ஔவை
 
மேற்கண்ட எடுத்துக்காட்டில் மொழிக்கு முதலில் வந்த்துள்ள 'ஔ' தனக்குறிய இரண்டு மாத்திரையிலிருந்து ஒன்றரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.
 
 
 
குறிப்பு:
 
ஔகாரம் மொழிக்கு முதலில் மட்டுமே வரும். இடையிலும் கடையிலும் வராது.
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 06:58:15 PM
ஐகாரக் குறுக்கம்  


ஐகாரக் குறுக்கம் என்பது, ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து குறைந்து
ஒன்றரை மாத்திரையாகவும் ஒரு மாத்திரையாகவும் ஒலிப்பது.
 
 
 
ஐகாரம் + குறுக்கம் = ஐகாரக்குறுக்கம்.
 
 
 
ஐகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்பொழுதே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதல், இடை, கடை ஆகிய இடங்களில் வரும்பொழுது, மொழிக்கு முதலில் ஒன்றரை மாத்திரையகவும், இடை மற்றும் கடையில் ஒரு மாத்திரையகவும் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குரைந்தொலிப்பதே ஐகாரக் குறுக்கமாகும்.
 
 
 
தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம்
 நையும் ஔ உம் முதல் அற்று ஆகும்

 -- நன்னூல்
 
எ.கா:
 ஐந்து - ஐகாரம் மொழிக்கு முதலில் - 1 1/2 மாத்திரை
 வளையல் - ஐகாரம் மொழிக்கு இடையில் - 1 மாத்திரை
 மலை - ஐகாரம் மொழிக்கு கடையில் - 1 மாத்திரை
 

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஐகாரம் குறைந்து ஒலிப்பதை காண்க.
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 06:59:14 PM
குற்றியலிகரம்

நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம் அரை மாத்திரையளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்தொலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும்.
 
 
 
குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்
 
(குறுகிய ஓசையுடைய இகரம்)
 
 
 
யகரம் வர குறள் உ திரி இகரம் உம்
 அசைச்சொல் மியாவின் இகரம் உம் குறிய

 - நன்னூல்
 
எ.கா:
 
நாடு + யாது -> நாடியாது
 கொக்கு + யாது -> கொக்கியாது
 

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரம். வருமொழியின் முதலெழுத்து யகரம். இவையிரண்டும் புணரும்போது குற்றியலுகரம் இகரமாகத் திரிந்து, அரை மாத்திரையளவாக ஒலிப்பதை காணலாம்.
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:01:47 PM
குற்றியலுகரம்  


குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா கு, சு, டு, து) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துக்கள் (எ.கா: ற, கி, பெ, ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது.
 
 
 
இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
 

குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்
 
(குறுகிய ஓசையுடைய உகரம்)
 

எ.கா:
 
நாடு என்னும் தமிழ்ச் சொல்லில், கடைசியில் வரும் டு என்னும் எழுத்து (உகரம் ஏறிய ட் என்னும் வல்லின எழுத்து), தன் இயல்பான ஒரு மாத்திரை அளவு நீட்டிக்காமல், அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதில் தனி நெடிலுடன், வல்லின மெய்யோடு (ட்) சேர்ந்த உகரம் (டு)வந்துள்ளதைப் பார்க்கலாம். இவ்வுகரம் அரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.
 
 
 
இதே போல பருப்பு, சிறப்பு, நேற்று, வேடடு, பேசசு, கொடுக்கு, மத்து போன்றசொற்களில் கடைசியில் வரும் உகரம் ஏறிய வல்லின மெய்கள் குற்றியலுகரம் ஆகும்.
 

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், குறைந்து ஒலிக்கும் உகரமே குற்றியலுகரம்.
 

குற்றியலுகரத்தின் வகைகள்
 
 
 
குற்றியலுகரம் ஆறு வகைப்படும். அவை
 
1. நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
 2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
 3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
 4. வன்றொடர்க் குற்றியலுகரம்
 5. மென்றொடர்க் குற்றியலுகரம்
 6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்
 

1. நெடில் தொடர்க் குற்றியலுகரம்:
 
இதில் நெடில் எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
 
எ.டு:-
 'நா'கு, 'கா'சு, 'மா'டு, 'மா'து, 'பே'று, த'ரா'சு
 
மா | டு +அல்ல = மாடல்ல
 ம்+ஆ | ட்+உ +'அ' ல்ல = மா ட் + அ ல்ல ( நிலைமொழியின் உகரம் திரிந்தது)
 
'மாடு' என்ற சொல் 'அல்ல' என்ற சொல்லுடன் இணைந்து நெடில் தொடர் குற்றியலுகரம் ஆயிற்று. அதாவது டு என்ற உகர எழுத்தானது 'மா' என்ற நெடிலுக்கு அடுத்து வந்ததாலும் வரும் மொழியின் முதல் எழுத்தான 'அ' உடன் நிலைமொழியின் ஈற்றிலுள்ள உகரம் திரிந்து ட்+உ= டு ஆனது ட்+அ=ட என்று குறுகியதால் நெடில் தொடர் குற்றியலுகரம் ஆனது. அதாவது நெடிலைத்தொடர்ந்த குற்றியலுகரம்.
 
 
 
2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
 
இ·'து' - ஆய்த எழுத்தை அடுத்து உகரம் ஆகும்.
 
அ·து, இ·து, எ·து, க·சு, எ·கு போன்ற சொற்கள் வரும். இவற்றோடு வருமொழி முதலில்
 உயிரெழுத்து வரும்போது குற்றியலுகரம் உண்டாகும்.
 
அ·து + இல்லை = அ·தில்லை
 
இங்கே நிலைமொழியில் '·' என்ற ஆய்த எழுத்தை அடுத்து 'து' வந்ததாலும்
 வருமொழி 'இ' உடன் இணைந்ததால் உகரம் போய் அ·தில்லை என்று ஆனதாலும்
 ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் ஆனது.

 
 
3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:
 
இதில் உயிரெழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
 
எ.டு: வி'ற'கு, அ'ர'சு, கு'ற'டு, அ'ரி'து, ம'ர'பு, க'ளி'று, மி'ள'கு, வ'ர'கு, அ'ட'கு போன்றவை.
 
அரசு + ஆட்சி = அரசாட்சி
 
நிலைமொழியின் ஈற்றயல் எழுத்து ர்+அ என்பதில் 'அ' என்னும் உயிரெழுத்தை அடுத்து 'சு' என்ற
 உகரம் வந்ததால் உயிர்த் தொடர் உகரம் ஆயிற்று. இது 'ஆட்சி' எனும் வரும் மொழியின் முதலெழுத்து 'ஆ' உடன் இணைந்து நிலைமொழியின் உகரத்தைத் திரித்து அரசாட்சி என்று புணர்ந்ததால் உயிர்த்தொடர்க் குற்றியலுகரமாயிற்று.
 
 
 
4. வன் தொடர்க் குற்றியலுகரம் :
 
இதில் வல்லின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
 
எ.டு: சுக்கு, அச்சு, பட்டு, கழுத்து, உப்பு, கசப்பு.
 
பட்டு + ஆடை = பட்டாடை
 
இங்கே நிலைமொழியின் ஈற்றயல் எழுத்து 'ட்' என்ற வல்லின எழுத்தைத் தொடர்ந்து 'டு' என்ற உகர எழுத்து வந்ததாலும், அது 'ஆடை' என்ற வரும்மொழியுடன் இணைந்து தனது ட்+உ=டு விலுள்ள உகரத்தைத் திரிந்து ட்+ஆ=டா ஆனதாலும் வன் தொடர்க் குற்றியலுகரமாயிற்று.

 
 
5. மென் தொடர்க் குற்றியலுகரம்:
 
இதில் மெல்லின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
 
எ.டு: சங்கு, பஞ்சு, நண்டு, பந்து, கம்பு, கன்று.
 
சங்கு + ஊதினான் = சங்கூதினான்
 
இங்கே 'ங்' என்கிற மெல்லின எழுத்தை அடுத்து 'கு' என்ற உகரம் வந்ததாலும் வரும்மொழியுடன்
 இணைந்து நிலைமொழி 'உ'கரம் திரிந்து வரும்மொழி 'ஊ' உடன் இணைந்து சங்கூதினான் என்று
 ஆனதாலும் மென் தொடர்க் குற்றியலுகரம் ஆனது.
 

6. இடைத் தொடர்க் குற்றியலுகரம்:
 
இதில் இடையின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
 
எ.டு: பெய்து, கொய்து, மல்கு, புல்கு, எள்கு, மாழ்கு
 
பெய்து + உடுத்தான் = பெய்துடுத்தான்.
 
இங்கே நிலைமொழியில் 'ய்' என்ற இடையின எழுத்தை அடுத்து 'து' என்ற உகரம் வந்ததாலும்
 அது வரும்மொழி 'உ' உடன் இணைந்து நிலைமொழி உகரம்கெட்டு பெய்துடுத்தான் என்று
 குறுகியதாலும் இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஆயிற்று
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:03:42 PM
ஒற்றளபெடை


ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து நீண்டொலிப்பதாகும்.
 
 
ஒற்று + அளபெடை = ஒற்றளபெடை
 
 
செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளில் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல் ,ள் என்பனவும் ஆய்தமும் மொழிக்கு இடை, கடை ஆகிய இடங்களில் குறிற்கீழும் குறிலிணையின் கீழும் அளபெடுக்கும். இதுவே ஒற்றளபெடை ஆகும்.
 
 
 ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம்
 அளபு ஆம் குறில் இணை குறில் கீழ் இடை கடை
 மிகல் ஏ அவற்றின் குறி ஆம் வேறு ஏ

 - நன்னூல்
 
எ.கா:
 வெஃஃகு வார்க்கில்லை - குறிற்கீழ் இடை
 கண்ண் கருவிளை - குறிற்கீழ் கடை
 கலங்ங்கு நெஞ்ச்மிலை - குறிலிணைகீழ் இடை
 மடங்ங் கலந்த மன்னே - குறிலிணைகீழ் கடை
 
 
 
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதை காணலாம்.
 
ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அதே எழுத்து எழுதப்படும்.
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:05:04 PM
உயிரளபெடை


உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதற்கு உயிரளபெடை எனறு பெயர்.
 
 
 
உயிர் + அளபெடை = உயிரளபெடை
 
 
மொழி முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.
 
 
இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில்
 அளபு எழும் அவற்று அவற்று இன குறில் குறி ஏ

 -நன்னூல்
 
எ.கா:
 1 ஓஒதல் வேண்டும் - முதல்
 2 கெடுப்பதூஉம் கெட்டார்க்கு - இடை
 3 நல்ல படாஅ பறை - கடை
 
 
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதை காணலாம்.
 
 
ஓர் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அவ்வெழுத்திற்கு இனமான குறில் எழுத்து எழுதப்படும்.
 
 
இதில் செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை என மூன்று வகைகள் உள்ளன.
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:06:18 PM
ஆய்த எழுத்து

ஆய்த எழுத்து என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு.
 
 
ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன.
 
('தொல்காப்பியம்', எழுத்திகாரம் 500 B.C.)
 
 
 
இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.
 
 
எ.கா:
 
அஃது - 'அ' குறில். 'து' வல்லின உயிர்மெய்

இஃது - 'இ' குறில். 'து' வல்லின உயிர்மெய்
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:07:45 PM
ஆய்தக்குறுக்கம்


ஆய்தக்குறுக்கம் என்பது ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதாகும்.

ஆய்தம் + குறுக்கம் = ஆய்தக் குறுக்கம்.
 
 
ல ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும்
 - நன்னூல்
 
எ.கா.: முள் + தீது = முஃடீது
 
மேற்கண்ட எடுத்துக்காட்டில், நிலைமொழியில் தனிக்குறிலின்கீழ் வரும் ளகரம் தகர முதன் மொழியோடு புணரும் பொழுது ஆய்தாமாக மாறியுள்ளது. அவ்வாறு மாறிய ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதை காணலாம். இதுவே ஆய்தக் குறுக்கமாகும்.
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:10:37 PM
சொல்



சொல்லின் வகைகள்

சொல் நான்கு வகைப்படும். அவை:
 

1.பெயர்ச்சொல்
2.வினைச்சொல்
3.இடைச்சொல்
4.உரிச்சொல்
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:12:56 PM
பெயர்ச்சொல்

பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். ஆதலால் பெயர்ச்சொல்
 
1. பொருட் பெயர்
 2. இடப் பெயர்
 3. காலப் பெயர்
 4. சினைப் பெயர்
 5. பண்புப் பெயர்
 6. தொழிற் பெயர்
 
என்று ஆறு வகைப்படும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு என்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவர்.
 

நன்னூல் விளக்கம்
 
'இடுகுறி காரண மரபோடு ஆக்கம்
 தொடர்ந்து தொழில்அல காலம் தோற்றா
 வேற்றுமைக்கு இடனாய்த் திணைபால் இடத்து ஒன்று
 ஏற்பதுவும் பொதுவும் ஆவன பெயரே'

 - நன்னூல் - 275
 
எடுத்துக்காட்டுகள்
 

பொருட்பெயர் : மனிதன், பசு, புத்தகம்
 இடப்பெயர்  : சென்னை, தமிழகம்
 காலப்பெயர் : மணி, நாள், மாதம், ஆண்டு
 சினைப்பெயர் : கண், கை, தலை
 பண்புப்பெயர் : இனிமை, நீலம், நீளம், சதுரம்
 தொழிற்பெயர் : படித்தல், உண்ணல், உறங்குதல்

 
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:14:52 PM
வினைச்சொல்  


வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை உணர்த்துவதாகும். முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். முடிவு பெறாத வினைசொல் எச்சம் எனப்படும்.
 
 
 
முற்று இருவகைப்படும். அவை
 
* தெரிநிலை வினைமுற்று
 * குறிப்பு வினைமுற்று
 
எச்சம் இரண்டு வகைப்படும். அவை
 
* பெயரெச்சம்
 * வினையெச்சம்
 

முற்று
 
தெரிநிலை வினைமுற்று
 
செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும்
 
எ.கா: கயல்விழி மாலை தொடுத்தாள்
 
 
 
குறிப்பு வினைமுற்று
 
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும்.
 
எ.கா: அவன் பொன்னன்.
 
 
 
எச்சம்
 
பெயரெச்சம்
 
பெயரெச்சம் என்பது, பெயரைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும். பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என் இருவகைப்படும்.
 
எ.கா: படித்த மாணவன்
 
 
 
வினையெச்சம்
 
வினையெச்சம் என்பது வினை முற்றினை கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும. வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் , குறிப்புப் வினையெச்சம் என் இருவகைப்படும்.
 
எ.கா: படித்துத் தேறினான்
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:16:32 PM
இடைச்சொல்


இடைச்சொல் என்பது தனித்து நில்லாமல் பெயரையாவது வினையையாவது சார்ந்து வருவது.
 
 
 
ஐ முதலிய வேற்றுமை உருபுகளும்; போல, ஒப்ப முதலிய உவம உருபுகளும்; அ, இ, உ என்னும் சுட்டுக்களும்; யா முதலிய
 
வினாவெழுத்துக்களும்; `உம்' முதலிய பிறவும் இடைச்சொற்கள் என்று கூறப்படும்.
 
 
 
மேற்சொன்ன வேற்றுமையுருபுகள் முதலியனவும், இடை நிலைகள், சாரியைகள், விகுதிகள், தமக்கெனப் பொருளையுடைய ஏ, ஓ, மற்று, தான் முதலியனவும் இடைச்சொற்களாகும்.
 
 
 
எ.கா:
 
* அவன்தான் வந்தான்
 * சேரனும் சோழனும் பாண்டியனும் வந்தனர்.
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:17:54 PM
உரிச்சொல்


உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும், குணங்களையும், வடிவங்களையும் உணர்த்தும் சொல்லாகும். பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும்.
 
 
 
உரிச்சொல் இருவகைப்படும்
 
* ஒரு பொருள் குறித்த பல சொல்
 * பல பொருள் குறித்த ஒரு சொல்
 
 
 
எ.கா
 
ஒரு பொருள் குறித்த பல சொல்
 
* சாலப் பேசினான்.
 * உறு புகழ்.
 * தவ உயர்ந்தன.
 * நனி தின்றான்.
 
இந்நான்கிலும் வரும், சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரு பொருளை உணர்த்துவன.
 
 
 
பல பொருள் குறித்த ஒரு சொல்
 
* கடிமனை - காவல்
 * கடிவாள் - கூர்மை
 * கடி மிளகு - கரிப்பு
 * கடிமலர் - சிறப்பு
 
இந்நான்கிலும் வரும் கடி என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பல பொருள்களைக் உணர்த்தும்
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:19:56 PM
சொல்லின் பிற வகைகள்  


இலக்கிய வகைச் சொற்கள்


இலக்கியங்களில் இடம் பெறும் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை,
 
1) இயற்சொல்

2) திரிசொல்

3) திசைச்சொல்

4) வடசொல் என்பவை ஆகும்.
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:21:33 PM
இலக்கிய வகைச் சொற்கள்
 

இலக்கியங்களில் இடம் பெறும் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை,
 
1) இயற்சொல்

2) திரிசொல்

3) திசைச்சொல்

4) வடசொல் என்பவை ஆகும்.
 
 
 
இயற்சொல்
 
கற்றவர், கல்லாதவர் ஆகிய அனைவருக்கும் எளிதில் பொருள் புரியும் வகையில் உள்ள சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.
 
 
 
(எ.கா) மரம், நடந்தான்
 
 
 
மேலே காட்டப்பட்ட சொற்கள் தங்கள் எளிமை இயல்பால் அனைவருக்கும் பொருள் விளங்கும் வகையில் உள்ளன. எனவே இவை இயற்சொற்கள் என்று அழைக்கப்படுகின்றன.
 
 
 
செந்தமிழ் ஆகித் திரியாது யார்க்கும்
 தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல்
 
(நன்னூல் : 271)
 
 
 
செந்தமிழ் நாட்டின் சொற்களில் கற்றவர், கல்லாதவர் என்று எல்லோருக்கும் எளிதில் பொருள் விளங்கும் தன்மை உடையவை இயற்சொல் என்பது இந்த நூற்பாவின் பொருள்.
 
 
 
இயற்சொல் வகைகள்
 
இயற்சொல் இரண்டு வகைப்படும். அவை,
 
1) பெயர் இயற்சொல்

2) வினை இயற்சொல் என்பவை ஆகும்.
 
 
 
பெயர் இயற்சொல்
 
கற்றவர், கல்லாதவர் அனைவருக்கும் எளிதில் பொருள் விளங்கும் வகையில் வரும் பெயர்ச் சொற்களைப் பெயர் இயற்சொற்கள் என்று கூறுவோம்.
 
 
 
(எ.கா) மரம், மலை, கடல்
 
 
 
இந்தப் பெயர்ச் சொற்களின் பொருள் அனைவருக்கும் எளிதில் விளங்கும் வகையில் உள்ளன. எனவே இவை பெயர் இயற்சொற்கள் என்று அழைக்கப்படுகின்றன.
 
 
 
வினை இயற்சொல்
 
கற்றவர், கல்லாதவர் அனைவருக்கும் எளிதில் பொருள் விளங்கும் வகையில் வரும் வினைச்சொற்களை வினை இயற்சொற்கள் என்று கூறுகிறோம்.
 
 
 
(எ.கா) நடந்தான், சிரித்தாள், வந்தது.
 
 
 
இந்த வினைச் சொற்களின் பொருள் அனைவருக்கும் எளிதில் விளங்கும் வகையில் உள்ளன. எனவே, இவை வினை இயற்சொற்கள் என்று அழைக்கப்படுகின்றன.
 
 
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:23:46 PM
திரிசொல்

கற்றவர்கள் மட்டும் பொருள் உணர்ந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ள சொற்கள் திரிசொற்கள் எனப்படும்.
 
 
 
(எ.கா) தத்தை, ஆழி, செப்பினான்
 
 
 
மேலே காட்டப்பட்டுள்ள சொற்கள் எளிதில் பொருள் புரிந்து கொள்ள இயலாத வகையில் வந்துள்ளன.
 
 
 
தத்தை-கிளி
 ஆழி-கடல்
 செப்பினான்-உரைத்தான்
 
 
 
என்று கற்றவர்களால் பொருள் தெரிவிக்கப்பட்டால் மட்டுமே பொருள் விளங்கும் வகையில் உள்ளன. எனவே இவை திரிசொற்கள் என்று அழைக்கப்படுகின்றன.
 
 
 
திரிசொல் வகைகள்
 
திரிசொல் இரண்டு வகைப்படும்.

அவை:
 
1) ஒரு பொருள் குறித்த பல திரிசொல்
2) பல பொருள் குறித்த ஒரு திரிசொல் என்பவை ஆகும்.
 
 
 
1. ஒரு பொருள் குறித்த பல திரிசொல்
 
ஒரே பொருளைத் தரும் பல திரிசொற்கள் தமிழில் உள்ளன. அவை ஒரு பொருள் குறித்த பல திரிசொல் எனப்படும்.
 
 
 
(எ.கா) கமலம் கஞ்சம் முண்டகம் முளரி
 
 
 
இவை யாவும் தாமரை என்னும் ஒரே பொருளைக் குறிக்கும் பல திரிசொற்கள் ஆகும். இவை யாவும் பெயர்ச்சொற்கள். எனவே ஒரு பொருள் குறித்த பல பெயர்த் திரிசொற்கள் ஆகும்.
 
செப்பினான், உரைத்தான், மொழிந்தான், இயம்பினான்
 
இவை யாவும் சொன்னான் என்னும் ஒரே பொருளைக் குறிக்கும் பல திரிசொற்கள் ஆகும். இவை யாவும் வினைச்சொற்கள். எனவே ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொற்கள் ஆகும்.
 
 
 
2. பல பொருள் குறித்த ஒரு திரிசொல்
 
பல பொருளைத் தரும் ஒரு திரிசொல்லும் தமிழில் உள்ளது. அது, பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனப்படும்.
 
 
 
(எ.கா) ஆவி
 
 
 
இச்சொல்லுக்கு உயிர், பேய், மெல்லிய புகை முதலான பல பொருள்கள் உள்ளன. ஆவி என்பது பெயர்ச்சொல். எனவே இதைப் பலபொருள் குறித்த ஒரு பெயர்த் திரிசொல் என்கிறோம்.
 
 
 
(எ.கா) வீசு
 
 
 
இச்சொல்லுக்கு எறி, சிதறு, பரவச்செய், ஆட்டு முதலான பல பொருள்கள் உள்ளன. வீசு என்பது வினைச் சொல். எனவே இதைப் பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல் என்கிறோம்.
 
 
 
ஒரு பொருள் குறித்த பல சொல் ஆகியும்
 பல பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும்
 அரிது உணர் பொருளன திரிசொல் ஆகும்
 
(நன்னூல் : 272)
 
 
 
ஒரு பொருளைக் குறிக்கும் பலசொற்களாகவும் பலபொருள்களைக் குறிக்கும் ஒருசொல் ஆகவும் கற்றோர் மட்டுமே பொருளை உணரும் வகையில் வருவன திரிசொல் ஆகும் என்பது இதன் பொருள்

Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:25:13 PM
வடசொல்

வடமொழி என்று குறிப்பிடப்படும் சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழ்மொழியில் கலந்து வரும் சொற்கள் வடசொற்கள் எனப்படும். வடசொல் இரண்டு வகைப்படும்.
 
1) தற்சமம்
2) தற்பவம்
 
 
 
1. தற்சமம்
 
வடமொழிச் சொற்கள் தமிழ்மொழியில் தமிழ்ச் சொற்கள் போன்றே மாற்ற மின்றி வருவது தற்சமம் எனப்படும்.
 
 
 
(எ.கா) கமலம் காரணம் மேரு
 
 
 
இச்சொற்களில் வடமொழிக்குரிய சிறப்பு எழுத்து எதுவும் இல்லை. இவற்றில் தமிழ் எழுத்துகளே இடம் பெற்றுள்ளன. எனவே இச்சொற்கள் தற்சமம் என்று அழைக்கப்படுகின்றன.
 
 
 
2. தற்பவம்
 
வட மொழிக்குரிய சிறப்பு எழுத்துகள் தமிழ்த் தன்மைக்கு ஏற்ப மாறி வருவது தற்பவம் எனப்படும்.
 
 
 
(எ.கா)
 
பங்கஜம்-பங்கயம்
 ரிஷபம்-இடபம்
 ஹரி-அரி
 பக்ஷி-பட்சி
 சரஸ்வதி-சரசுவதி
 வருஷம்-வருடம்
 
 
 
இவற்றில் வடமொழிக்கே உரிய ஒலிப்புகளைக் கொண்ட எழுத்துகள் தமிழ் மொழிக்கு ஏற்ப மாறி வந்துள்ளன. எனவே தற்பவம் என்று அழைக்கப்படுகின்றன..
 
 
 
தமிழில் தேவையில்லாத இடங்களில் திசைச்சொற்களையும் வடசொற்களையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
 
 
 
பொது எழுத்தானும் சிறப்பு எழுத்தானும்
 ஈர் எழுத்தானும் இயைவன வடசொல்
 
(நன்னூல் : 274)
 
 
 
வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் பொதுவாக உள்ள எழுத்துகளாலும் வடமொழிக்குச் சிறப்பாக உள்ள எழுத்துகளாலும் வடமொழியிலிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்கும் சொற்கள் வடசொற்கள் என்பது இதன் பொருள்.
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:27:15 PM
திசைச்சொல்  


தமிழ்நாட்டுக்கு அப்பால் உள்ள பிற பகுதிகளில் பேசப்படும் மொழிகளிலிருந்து வந்து தமிழ்மொழியில் கலந்து வரும் சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும்.
 
 
 
(எ.கா) ஆசாமி, சாவி
 
 
 
இவற்றில் ஆசாமி என்னும் சொல் உருதுமொழிச் சொல். சாவி என்னும் சொல் போர்த்துக்கீசிய மொழியில் உள்ள சொல். இச்சொற்கள் தமிழ்மொழியில் கலந்து வருகின்றன. இவ்வாறு தமிழ்நாட்டுக்கு நான்கு திசைகளிலும் உள்ள பகுதிகளிலிருந்து தமிழ் மொழியில் வழங்கும் சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும்.
 
 
 
செந்தமிழ் நிலத்துடன் சேர்ந்த பன்னிரு நாடுகளிலிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்கும் சொற்களும் திசைச் சொற்கள் எனப்படும்.
 

பெற்றம் - பசு - தென்பாண்டி நாட்டுச்சொல்
 தள்ளை - தாய் - குட்ட நாட்டுச்சொல்
 அச்சன் -தந்தை - குடநாட்டுச்சொல்
 பாழி -சிறுகுளம்- பூழிநாட்டுச்சொல்
 
 
 
இவை போன்றவை செந்தமிழ்நிலத்துடன் சேர்ந்த நாடுகளிலிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்கும் சொற்கள் ஆகும்.
 
சில திசைச் சொற்களின் பட்டியலையும் அவற்றின் நாடுகளையும் காண்போம்.
 
 
 
திசைச்சொல் மொழி தமிழ்
 கெட்டி தெலுங்கு உறுதி
 தெம்பு தெலுங்கு ஊக்கம்
 பண்டிகை தெலுங்கு விழா
 வாடகை தெலுங்கு குடிக்கூலி
 எச்சரிக்கை தெலுங்கு முன் அறிவிப்பு
 அசல் உருது முதல்
 அனாமத்து உருது கணக்கில் இல்லாதது
 இனாம் உருது நன்கொடை
 இலாகா உருது துறை
 சலாம் உருது வணக்கம்
 சாமான் உருது பொருள்
 சவால் உருது அறைகூவல்
 கம்மி பாரசீகம் குறைவு
 கிஸ்தி பாரசீகம் வரி
 குஸ்தி பாரசீகம் குத்துச்சண்டை
 சரகம் பாரசீகம் எல்லை
 சுமார் பாரசீகம் ஏறக்குறைய
 தயார் பாரசீகம் ஆயத்தம்
 பட்டா பாரசீகம் உரிமம்
 டாக்டர் ஆங்கிலம் மருத்துவர்
 நைட் ஆங்கிலம் இரவு
 பஸ் ஆங்கிலம் பேருந்து
 
 
 
செந்தமிழ் நிலம் சேர் பன்னிரு நிலத்தினும்
 ஒன்பதிற்று இரண்டினில் தமிழ்ஒழி நிலத்தினும்
 தம் குறிப்பினவே திசைச் சொல் என்ப
 
(நன்னூல் : 273)
 
 
 
செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு பகுதிகளிலிருந்தும் பதினெட்டு மொழி பேசும் நாடுகளில் தமி்ழ்மொழி பேசும் பகுதி அல்லாத பிற பதினேழு நிலங்களில் உள்ள மொழிகளிலிருந்தும் தமிழ் மொழியில் கலந்து வரும் சொற்கள் திசைச் சொற்கள் என்பது இந்த நூற்பாவின் பொருள்.
 
 
 
பன்னிரண்டு நிலங்கள் (நாடுகள்)
 
1) தென்பாண்டி நாடு 2) குட்ட நாடு 3) குட நாடு 4) கற்கா நாடு 5) வேணாடு 6) பூழி நாடு 7) பன்றி நாடு 8) அருவா நாடு 9) அருவா வடதலை நாடு 10) சீதநாடு 11) மலாடு 12) புனல் நாடு
 
என்பவை பன்னிரண்டு நாடுகள் ஆகும்.
 
 
 
பதினெட்டு மொழி வழங்கும் நாடுகளில் தமிழ் தவிர்த்து ஏனைய பதினேழு நாடுகள்.
 
1) சிங்களம் 2) சோனகம் 3) சாவகம் 4) சீனம் 5) துளு 6) குடகம் 7) கொங்கணம் 8) கன்னடம் 9) கொல்லம் 10) தெலுங்கம் 11) கலிங்கம் 12) வங்கம் 13) கங்கம் 14) மகதம் 15) கடாரம் 16) கௌடம் 17) குசலம்
 
என்பவை பதினேழு மொழிகள் பேசப்படும் நாடுகள் ஆகும்.
 
 
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:29:27 PM
தொகைச் சொற்கள்


இரு சொற்கள் சேர்ந்து வருவது தமிழிலக்கணத்தில் தொகையெனப்படும்.
 

(உ-ம்)

செந்தாமரை=(செம்மை+தாமரை).


தொகைகள்:

■வேற்றுமைத்தொகை,
 ■வினைத்தொகை,
 ■பண்புத்தொகை,
 ■இருபெயரொட்டுப் பண்புத்தொகை,
 ■உவமைத்தொகை,
 ■உம்மைத்தொகை,
 ■அன்மொழித்தொகை என்று பலவகைப்படும்
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:31:49 PM
வேற்றுமைத் தொகை


இரு சொற்களுக்கிடையே "ஐ", "ஆல்", "கு", "இன்", "அது", "கண்" முதலான உருபுகள் மறைந்திருக்குமானால் அது வேற்றுமைத் தொகையாம்.
 

எடுத்துக்காட்டு:-
 


1. முதலாம் வேற்றுமை/எழுவாய் வேற்றுமை
 
பெயர்ச் சொல் எந்த மாற்றமும் அடையாமல் நிற்கும்பொழுது எழுவாய் எனப்படும்." எந்த [[உருபு|உருபும்] சேராமல் இவ்வாறு எழுவாயாய் அமையும் பெயர்ச் சொல் எழுவாய் வேற்றுமை எனப்படும்.
 
எ.கா: கண்ணகி வழக்கை உரைத்தாள்.

2. இரண்டாம் வேற்றுமை:
 (எ-கா)தமிழ் கற்றான் - "ஐ" மறைந்துள்ளது.
 இரண்டாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
 (எ-கா): தயிர்க்குடம் - "ஐ" உருபும், உடைய எனும் சொல்லும் மறைந்துள்ளன.
 
3. மூன்றாம் வேற்றுமை:
 (எ-கா)தலை வணங்கினான் - "ஆல்" மறைந்துள்ளது
 மூன்றாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
 (எ-கா): பொற்குடம் - "ஆல்" உருபும் செய்த எனும் பயனும் மறைந்துள்ளது.
 

4. நான்காம் வேற்றுமை:
 (எ-கா):நோய் மருந்து - "கு" மறைந்துள்ளது.
 

5. ஐந்தாம் வேற்றுமை:
 (எ-கா)மலையருவி - "இல்" (அ) "இன்" மறைந்துள்ளது
 ஐந்தாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
 (எ-கா)புண்ணீர் - "இல்" எனும் உருபும் இருந்து என்னும் பயனும் மறைந்துள்ளன
 

6. ஆறாம் வேற்றுமை:

 (எ-கா)தமிழர் பண்பு - "அது" மறைந்துள்ளது
 (எ-கா)அவன் வண்டி - "உடைய" மறைந்துள்ளது
 

7. ஏழாம் வேற்றுமை:
 (எ-கா)மணி ஒலி - "கண்" மறைந்துள்ளது
 ஏழாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
 (எ-கா)வயிற்றுத்தீ - "கண்" உருபும், தோன்றிய என்னும் பயனும் மறைந்துள்ளன.
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:33:07 PM
வினைத்தொகை  

 

இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களூம் இருசொற்களுக்கு இடையில் மறைந்திருப்பின் இவை வினைதொகை எனப்படும்.

எளியவழி:

(1) இத்தொகையில் இரு சொற்களே இருக்கும்

(2) முதலில் இருக்கும் சொல் வினைச் சொல்லாக இருக்கும்

(3) இரண்டாவது சொல் பெயர்ச்சொல்லாகவும் இருக்கும்.
 
 
 
(எ-கா)
 

"சுடுசோறு" -
 

சுடுகின்ற சோறு (நிகழ்காலம்)
 சுட்ட சோறு (இறந்தகாலம்)
 சுடும் சோறு (எதிர்காலம்)
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:34:29 PM
பண்புத்தொகை

 
பண்புப் பெயர்ச்சொற்களுடன் வேறு பெயர்ச்சொல் சேர்ந்து வருமாயின் அவை பண்புத்தொகையெனப்படும்.

 
 
அதுபோல இரண்டு சொற்கள் கொண்ட ஒரு பண்புத்தொகையில் முதலில் வரும் சொல் சிறப்புப் பெயர்ச்சொல்லாகவும் இரண்டாவது வரும் பெயர்ச்சொல் பொதுப்பெயர்ச்சொல்லாகவும் இருப்பின் அது இருபெயரொட்டுப் பண்புத்தொகையெனப்படும்.
 

பண்பாவன:



குணம்(நன்மை, தீமை),

உருவம்(வட்டம், சதுரம்),

நிறம்(நீலம், பசுமை),

எண்ணம்(ஒன்று, பத்து),

சுவை(துவர், காரம்).
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:35:19 PM
உவமைத் தொகை  


 
உவமைத் தொகை கண்டுபிடிக்க (1) இரு சொற்களுள்ள தொகைச் சொல்லாக இருக்கவேண்டும். அதில் முதற்சொல் ஒரு உவமைச்சொல்லாக இருத்தல் வேண்டும். இதுவே உவமைத்தொகை.
 
 
 
(எ-கா)
 பானைவாய்:
 இதில் பானை என்பது உவமை (பானையின் வாயை போன்ற).
 

(எ-கா)
 மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
 "மதிமுகம்" "மலரடி", "துடியிடை", "கமலக்கண்", "கனிவாய்", "தேன்மொழி", "செங்கண்", "மான்விழி", "வாள்மீசை
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:36:15 PM
உம்மைத் தொகை


 
உம்மைத் தொகை கண்டுபிடிக்க

(1) சேர்ந்த இரு சொற்களும் தொடர்புள்ள சொல்லாக இருக்கவேண்டும்.
 
 
 
(எ-கா) மாடுகன்று.
 


(2) இரு சொற்களுக்கிடையில் "உம்" சேர்ப்பின், பொருள் சரியாக இருத்தல் வேண்டும். இவ்வாறு இருப்பின் அது உம்மைத்தொகை என்று கொள்க.
 
 
 
(எ-கா)
 சேர சோழ பாண்டியர்:
 இதில் சேரரும், சோழரும் , பாண்டியரும் என்று பொருள் தரும்.
 



(எ-கா)
 மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
 "வேண்டுதல் வேண்டாமை" "அருளாண்மை", "தாய்தந்தை", "நரைதிரை", "காயிலைக்கிழங்கு", "கபிலபரணர்"
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:37:01 PM
அன்மொழித் தொகை  


 
இதுவரையிற் கூறிய தொகைகளில் அல்லாத சொற்கள் மறைந்துவருமாயின் அது அன்மொழித்தொகையாகும். மேலும் இவ்வன்மொழித்தொகை முன் சொன்ன ஐந்து தொகைகளில் ஒன்றாக இருக்கும்.

 
 
(எ-கா)

"ஆயிழை வந்தாள்" - இதில் ஆயிழையென்பது காலங்காட்டாத வினைத்தொகை (ஆராய்ந்த இழை, ஆராய்கின்ற இழை, ஆராயும் இழை). ஆயின் இவ்விடத்தில் அந்த இழையணிந்த பெண்ணென்று பொருளாததால், இது வினைத்தொகைப் புறத்தெ பிறந்த அன்மொழித்தொகை எனப்படும். இவ்வாறே மற்ற தொகைகளின் புறத்தே இந்த அன்மொழித்தொகை அமைந்திருக்கும்.
 
 
 
மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
 

"கோற்றொடியைக் கொன்று என் செய",
 "ஏந்திழை ஈமக் கடனிறுவிப் போது"
 "வீமன் திருமகளாம் மெல்லியலை",
 "ஆயமும் காவலும் ஆயிழை தனக்கு",
 "தந்துயர் காணா தகைசால் பூங்கொடி",
 "விளங்கிழை தமியன் ஆனாள்",
 "அஞ்சொல் இளவஞ்சி அடியெந்தோள் ஏறு"
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:41:02 PM
பகுபதம்,பகாப்பதம்  



பதம் என்னும் சொல்லும் சொல்லைக் குறிக்கும் வேறு ஒரு சொல் என்பதைப் பார்த்தோம். பதம் இரண்டு வகைப்படும். அவை,
 
1) பகுபதம்

2) பகாப்பதம் என்பவை ஆகும்.
 
 
 
பகுபதம்:
 
ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பிரிக்க முடிந்தால் அது பகுபதம் எனப்படும்.
 
 
 
(எ.கா) அறிஞன், செய்தாள்
 
 
 
பகாப்பதம்:  

ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பிரிக்க முடியவில்லை என்றால் அது பகாப்பதம் எனப்படும்.
 
 
 
(எ.கா) மரம், தேன், தலை, போல, சால
 
 
 
பகுபத உறுப்புகள்

பகுதி, விகுதியாகப் பிரிக்கப்படும் சொல்லில் பல உறுப்புகள் இருக்கும். அவற்றைப் பகுபத உறுப்புகள் என்று கூறுவர்.
 
 
 
(எ.கா)  வந்தனன்
 
 
 
இது ஒரு பகுபதம். இந்தச் சொல்லை,

வா+த்(ந்)+த்+அன்+அன்
 
 
 
என்று பிரிக்கலாம். இந்தச் சொல்லில் ஐந்து பிரிவுகள் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர்கள் உள்ளன. இந்தப் பெயர்களைத் தான் பகுபத உறுப்புகள் என்று பொதுவாகக் கூறுகிறோம்.பகுதி,விகுதி,இடைநிலை,சாரியை,சந்தி,விகாரம்
 
என்னும் ஆறும் பகுபத உறுப்புகள் ஆகும்.
 
 
 
· பகுதி

ஒரு பகுபதத்தின் முதலில் இருப்பது பகுதி எனப்படும். பகுபதத்தில் உள்ள பகுதி பொருள் உடையதாக இருக்கும்.
 
 
 
(எ.கா) வந்தனன்
 
 
 
வா+த்(ந்)+த்+அன்+அன்
 
 
 
இதில் வா என்பது பகுதி ஆகும். வா என்னும் பகுதிக்கு வா என்று அழைக்கும் பொருள் இருக்கிறது. எனவே இது பகுதி ஆகும்.
 
 
 
· விகுதி

பகுபதத்தில் இறுதியில் இருக்கும் உறுப்பு விகுதி எனப்படும். விகுதி என்றால் இறுதி என்று பொருள்.
 
 
 
வா+த்(ந்)+த்+அன்+அன்
 
 
 
இதில் இறுதியில் உள்ள அன் விகுதி ஆகும்.
 
 
 
· இடைநிலை

பகுபதத்தில் இடையில் இருக்கும் உறுப்பு இடைநிலை எனப்படும்.
 
 
 
வா+த்(ந்)+த்+அன்+அன்
 
 
 
இதில் இடையில் இருக்கும் உறுப்பாகிய த் இடைநிலை ஆகும்.

 
 
· சாரியை

பகுபதத்தில் இடைநிலைக்கும், விகுதிக்கும் இடையில் வருவது சாரியை எனப்படும்.
 
 
 
வா+த்(ந்)+த்+அன்+அன்
 
 
 
இதில் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் இருக்கும் அன் என்பது சாரியை ஆகும்.
 
 
 
· சந்தி

பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது சந்தி எனப்படும்.
 
 
 
வா+த்(ந்)+த்+அன்+அன்
 
 
 
இதில் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் உள்ள த்(ந்) சந்தி ஆகும்.

 
 
· விகாரம்

பகுபத உறுப்புகளில் ஏற்படும் மாறுதல்கள் விகாரம் எனப்படும். விகாரம் என்றால் மாறுபாடு என்று பொருள்.



வா+த்(ந்)+த்+அன்+அன்
 
 
 
இதில் சந்தியாக இடம் பெற்றுள்ள த் என்னும் எழுத்து ந் ஆக மாறியுள்ளது. பகுதியாக இடம் பெற்றுள்ள வா என்னும் எழுத்து ‘வ’ என்று மாறியுள்ளது. இவ்வாறு மாறுபட்டு வருவது விகாரம் எனப்படும்.
 
 
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:44:27 PM
பொருள்  
 
பொருள் இரண்டு வகைப்படும். அவை,
 
1. அகப்பொருள்
 2. புறப்பொருள்

 
 
நம் இலக்கியஙளுக்குப் பாடுபொருள்களாக அமைவன அகப்பொருள்களும் புறப்பொருள்களும்.
 
 
 
ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காதலித்து நடத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கிக் கூறுவது அகப்பொருள்.
 
 
 
அறம், பொருள், வீடு ஆகிய (இன்பம் ஒழிந்த) மூன்று பேறுகளை பற்றியும், கல்வி, வீரம், கொடை, புகழ் முதலியன பற்றியும் கூறுவது புறப்பொருள்.
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:47:46 PM
யாப்பு  


 
 
யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.
 
 
 
யாப்பின் உறுப்புகள்
 
1. எழுத்து
 2. அசை
 3. சீர்
 4. தளை
 5. அடி
 6. தொடை
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:48:30 PM



எழுத்து(யாப்பு)


யாப்பிலக்கணத்தில் செய்யுள் அல்லது பாக்களுக்கு அடிப்படையாக அமையும் உறுப்பு எழுத்து ஆகும். இங்கே எழுத்து என்பது மொழியை எழுதுவதற்குப் பயன்படும் குறியீடுகளையன்றி அவற்றினால் குறிக்கப்படும் ஒலிகளையே குறித்து நிற்கின்றது. செய்யுள்களைப் பொறுத்தவரை மொழியின் ஒலிப் பண்புகள் சிறப்புப் பெறுகின்றன. இதனால் இந்த ஒலிப் பண்புகளுக்கு ஆதாரமாக அமையும் எழுத்துக்களை, அவற்றை ஒலிப்பதற்குத் தேவையான கால அளவுகளைக் கருத்தில் கொண்டு வகைகளாகப் பிரித்துள்ளார்கள்.
 
எழுத்துவகை  

உயிரெழுத்துக்கள் -

 1 குறில்கள் அ, இ, உ, எ, ஒ
 2 நெடில்கள் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
 
மெய்யெழுத்துக்கள் க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
 

உயிர்மெய் எழுத்துக்கள் -

 1 குறில்கள் உயிர்க்குறில்கள் சேர்ந்து உருவான உயிர்மெய்கள்
 2 நெடில்கள் உயிர்நெடில்கள் சேர்ந்து உருவான உயிர்மெய்கள்
 


எழுத்துக்களின் கால அளவுகள்
 

குறில் எழுத்துக்களின் ஒலி அளவு ஒரு மாத்திரை அளவினதாகக் கொள்ளப்படுகின்றது. இதன் அடிப்படையில் நெடில் எழுத்துக்களின் கால அளவு இரண்டு மாத்திரைகளாகவும், மெய்யெழுத்துக்களின் கால அளவு அரை மாத்திரைகளாகவும் உள்ளன. உயிர்மெய்க் குறில்களினதும், உயிர்மெய் நெடில்களினதும் கால அளவுகளும், முறையே ஒரு மாத்திரையாகவும், இரண்டு மாத்திரைகளாகவும் உள்ளன.
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:50:44 PM
அசை  
 
யாப்பிலக்கணத்தில் அசை என்பது எழுத்துக்களின் குறிப்பிட்ட, வரையறை செய்த சேர்க்கையினால் உருவாகும் ஓர் அடிப்படை உறுப்பாகும். அசைகள் சேர்ந்தே சீர்கள் உருவாகின்றன.


 
அசை அமைப்பு

 
கீழேயுள்ளது சிறுபாணாற்றுப்படை என்னும் நூலிலுள்ள பாடலொன்றின் முதல் அடி.
 
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
 
இங்கே அருந்திறல், அணங்கின், ஆவியர், பெருமகன் என்பன சீர்களாகும். இச் சீர்களை அவற்றின் ஒலியமைப்பின் அடிப்படையில் கீழே காட்டியவாறு பிரிக்க முடியும்.
 
அருந்திறல் - அருந் திறல்
 அணங்கின் - அணங் கின்
 ஆவியர் - ஆ வியர்
 பெருமகன் - பெரு மகன்
 
மேற்காட்டியவாறு பிரிவடைந்து கிடைக்கும் ஒவ்வொரு பகுதியும் ஒரு அசையாகும். யாப்பிலக்கண விதிகளை நோக்கினால், அசைகளில் மெய்யெழுத்துக்களுக்குத் தனியான பெறுமானம் இல்லாமை புலப்படும் ஆனால் அசைகளின் எல்லைகளைக் காட்ட உதவும். எனவே ஒற்றெழுத்துக்கள் எனப்படும் மெய்யெழுத்துக்களைப் பொருட்படுத்தாது பார்த்தால் அசைகள், கூடிய அளவாக இரண்டு எழுத்துக்களை மட்டுமே கொண்டிருப்பதைக் காணலாம். இவற்றுடன் ஓர் ஒற்றெழுத்தோ அல்லது இரண்டு ஒற்றெழுத்துகளோ இறுதியில் வரக்கூடும்.

 
 
அசை பிரிப்பு
 
செய்யுள்களிலே அமையும் சீர்களின் தன்மை பற்றியும், அச் சீர்கள் ஒன்றுடன் இன்னொன்று சேரும்போது உருவாகும் தளைகள் பற்றியும் அறிந்துகொள்வதற்குச் சீர்களிலே அசைகளை இனங்காணல் அவசியம். இவ்வாறு சீர்களை இனங்கண்டு பிரித்தறிதல் அசை பிரித்தல் எனப்படுகின்றது.
 
 
 
ஒரு சீரை அசை பிரிக்கும்போது அச்சீரின் முதல் எழுத்து ஒரு மாத்திரை அளவுக்குக் கூடுதலான எழுத்து ஆயின் அது தனியாகவே ஒரு அசையாக அமையக்கூடும். எடுத்துக்காட்டாக 2 மாத்திரைகள் அளவுள்ள நெடில் அல்லது ஒன்றரை மாத்திரை கால அளவு கொண்ட ஐகார ஔகார எழுத்துக்கள் முதலெழுத்தாக வரின் அது தனியாக ஒரு அசையாகலாம். அடுத்துவரும் எழுத்து ஒரு ஒற்றெழுத்தாக அமையாவிடின் மேற்சொன்ன எழுத்துக்களை அசையாகக் கொள்ளமுடியும். ஆனால் முதல் எழுத்தைத் தொடர்ந்து ஒற்றெழுத்து வருமானால் அந்த எழுத்தையும் முதல் எழுத்தோடு சேர்த்து அசையாகக் கொள்ளவேண்டும்.
 
கீழேயுள்ளது நான்கு சீர்களைக் கொண்ட ஒரு செய்யுள் அடியாகும்.
 

"கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி"
 

இங்கே முதற்சீரான கேளிர் என்பதில் முதலெழுத்தான கே இரண்டு மாத்திரை அளவுள்ள நெடிலாகும். இதைத் தொடர்ந்து ஒற்றெழுத்து வராமையால் கே தனியாகவே அசையாக அமையும். இதுபோலவே இரண்டாஞ் சீரிலும் போ தனியாகவே அசையாகும்.
 
மூன்றாவது சீரான கேள்கொளல் என்பதிலும் முதலெழுத்தாக இரண்டு மாத்திரை அளவுள்ள நெடிலான கேயே வருவதால், அது தனியாகவே ஒரு அசையாக அமையக் கூடும். ஆனாலும் இரண்டாம் எழுத்து ள் ஒரு ஒற்றெழுத்து ஆதலால், அதையும் சேர்த்து கேள் என்பதை ஒரு அசையாகக் கொள்ள வேண்டும். நாலாஞ் சீரிலும் இதே அடிப்படையில் வே உம் ண் உம் சேர்ந்து வேண் என அசையாகும்.
 
சீரின் அல்லது அசைபிரிக்க எடுத்துக்கொண்ட சீர்ப்பகுதியின் முதலெழுத்து குறிலாக இருந்தால் அது தனியாக அசையாகாது. அது அடுத்துவரும் குறில், நெடில் அல்லது ஒற்றெழுத்து ஆகிய ஏதாவது எழுத்துடன் சேர்ந்தே அசையாக முடியும். தொடர்ந்து வரும் எழுத்துக்கள் ஒற்றெழுத்துக்கள் ஆயின் அவற்றையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். தனிக் குறிலைத் தொடர்ந்து, சேர்த்துக்கொள்வதற்கு அதே சீரில் வேறு எழுத்துக்கள் இல்லாவிடில் தனிக் குறிலே அசையாக அமையும்.
 
முன்னர் எடுத்துக்கொண்ட அதே செய்யுள் அடியின் முதற் சீரில், அசையாக இனங்கண்ட கே என்பதைத் தவிர்த்தபின் மிகுதியாக உள்ள ளிர் என்ற பகுதியின் முதல் எழுத்து ளி, அடுத்துவரும் ஒற்றெழுத்தான ர் உடன் சேர்ந்து ளிர்என அசையாகும். இவ்வாறே போலக் என்ற சீரிலும், லக் ஒரு அசையாகும்.
 
கேள்கொளல் என்னும் சீரில் கேள் என்னும் அசை தவிர்ந்த கொளல் எனும் பகுதியில், கொ குறில் எழுத்து அவ்விடத்தில் தனியாக அசையாகாது. அடுத்துவரும் ள உடன் சேர்ந்து அசையாகலாம். ஆனால் அடுத்த எழுத்து ஒற்றெழுத்து ஆதலால், அதையும் சேர்த்து கொளல் என்பதை ஒரு அசையாகக் கொள்ளவேண்டும்.
 
நான்காவது சீரான வேண்டி என்பதில், வேண் என்பது ஒரு அசையாக ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே மீந்துள்ள தனிக் குறிலான டி ஒரு அசையாகும்.
 
 
 
குறில், நெடில் எழுத்துக்கள் எவ்விதமாகச் சேர்ந்து அசைகள் உருவானாலும் தொடர்ந்து வரக்கூடிய ஒற்றெழுத்துக்களை அவற்றுடன் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்பதே யாப்பிலக்கண விதி. சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட ஒற்றெழுத்துக்களும் இவ்வாறு சேர்ந்து அசைகளாவது உண்டு. சில எடுத்துக்காட்டுகள் கீழே தரப்பட்டுள்ளன.
 
* மகிழ்ந்தான் - மகிழ்ந் தான்
 * ஆர்த்த - ஆர்த் த
 * உய்த்துணர் - உய்த் துணர்
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:54:23 PM
சீர்  
 
சீர் என்பது, யாப்பிலக்கணப்படி, செய்யுள் உறுப்புக்களில் ஒன்று. யாப்பியலில், எழுத்துக்கள் இணைந்து அசைகளும், அசைகளின் சேர்க்கையினால் சீர்களும் உருவாகின்றன. செய்யுள்களில் சீர்கள் சொற்களைப் போலத் தென்பட்டாலும், உண்மையில் சீர்களும் சொற்களும் எல்லாச் சமயங்களிலும் ஒன்றாக இருப்பதில்லை.
 
நத்தார்படை ஞானன்பசு வேறின்நனை கவிழ்வாய்
 மத்தம்மத யானையுரி போர்த்தமண வாளன்
 பத்தாகிய தொண்டர்தொழும் பாலாவியின் கரைமேல்
 செத்தாரெலும் பணிவான்திருக் கேதீச்சரத் தானே
 
மேலேயுள்ளது சீர் பிரித்து எழுதப்பட்டுள்ள சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய தேவாரம் ஆகும். இதிலுள்ள பல சீர்கள் முறையான சொற்களாக அமைந்து வராமையைக் காண்க. சீர்கள் பல சந்தர்ப்பங்களில் பொருள் விளக்கத்துக்காக அன்றி, ஓசை நயத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன.
 
 
 
சீர் வகைகள்
 
செய்யுள்களில் வரும் சீர்கள் ஒன்று தொடக்கம் நான்கு வரையான அசைகளின் சேர்க்கையால் உருவாகின்றன. இவை,
 
1. ஓரசைச்சீர்
 2. ஈரசைச்சீர்
 3. மூவசைச்சீர்
 4. நாலசைச்சீர்
 
எனக் குறிப்பிடப்படுகின்றன. இந்த நான்கு வகையான சீர்களும் வேறு பெயர்களினால் குறிப்பிடப்படுவதும் உண்டு. அவற்றைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.
 

சீர்கள் வேறு பெயர்கள்
 ஓரசைச்சீர் அசைச்சீர்
 ஈரசைச்சீர் இயற்சீர், ஆசிரியச்சீர், ஆசிரிய உரிச்சீர்
 மூவசைச்சீர் உரிச்சீர்
 நாலசைச்சீர் பொதுச்சீர்
 
 
 
மேற்சொன்ன நால்வகையான சீர்களும், அவற்றில் இடம்பெறும் அசை வகைகள், அவை இடம்பெறும் ஒழுங்கு என்பவற்றுக்கு ஏற்பப் பல்வேறு வகைகளாக அமைகின்றன. ஓரசைச் சீர்கள் இரண்டு விதமாகவும், ஈரசைச் சீர்கள் நான்கு விதமாகவும், மூவசைச் சீர்கள் எட்டு விதமாகவும், நாலசைச் சீர் 16 விதமாகவும் அமைகின்றன. இவற்றை ஞாபகத்தில் வைத்திருப்பதை இலகுவாக்கவும், குறிப்பிட்டுச் சொல்வதற்கும் எழுதுவதற்கும் வசதியாக இருப்பதற்காகவும், குறிப்பிட்ட சில சொற்களை யாப்பிலக்கண நூல்கள் பயன்படுத்துகின்றன. இவை வாய்பாடுகள் எனப்படுகின்றன. மேற்சொன்ன 30 விதமாக ஒழுங்கில் அமையும் சீர்களையும், அவற்றுக்கான வாய்பாடுகளையும் கீழ்வரும் அட்டவணை காட்டுகின்றது. இதில் இரண்டாம் நிரலில் (Column) சீர்களில் நேரசை, நிரையசைகள் அமைந்திருக்கும் ஒழுங்கும், மூன்றாம் நிரலில் சீர்களுக்குரிய வாய்பாடுகளும், நாலாம் நிரலில் விளக்கம் கருதி அசைபிரித்து எழுதப்பட்டுள்ள வாய்பாடுகளையும் காண்க.
 
 
 
* ஓரசைச்சீர்கள்
 
1. நேர் -நாள் - நாள்
 2. நிரை -மலர் - மலர்
 
 

* ஈரசைச்சீர்கள்

 
1. நேர்-நேர் தேமா தே.மா
 2. நிரை-நேர் புளிமா புளி.மா
 3. நிரை-நிரை கருவிளம் கரு.விளம்
 4. நேர்-நிரை கூவிளம் கூ.விளம்
 
 
 
* மூவசைச்சீர்கள்
 
1. நேர்-நேர்-நேர் தேமாங்காய் தே.மாங்.காய்
 2. நேர்-நேர்-நிரை தேமாங்கனி தே.மாங்.கனி
 3. நிரை-நேர்-நேர் புளிமாங்காய் புளி.மாங்.காய்
 4. நிரை-நேர்-நிரை புளிமாங்கனி புளி.மாங்.கனி
 5. நிரை-நிரை-நேர் கருவிளங்காய் கரு.விளங்.காய்
 6. நிரை-நிரை-நிரை கருவிளங்கனி கரு.விளங்.கனி
 7. நேர்-நிரை-நேர் கூவிளங்காய் கூ.விளங்.காய்
 8. நேர்-நிரை-நிரை கூவிளங்கனி கூ.விளங்.கனி
 
 
 
* நாலசைச்சீர்கள்
 
1. நேர்-நேர்-நேர்-நேர் தேமாந்தண்பூ தே.மாந்.தண்.பூ
 2. நேர்-நேர்-நேர்-நிரை தேமாந்தண்ணிழல் தே.மாந்.தண்.ணிழல்
 3. நேர்-நேர்-நிரை-நேர் தேமாநறும்பூ தே.மா.நறும்.பூ
 4. நேர்-நேர்-நிரை-நிரை தேமாநறுநிழல் தே.மா.நறு.நிழல்
 5. நிரை-நேர்-நேர்-நேர் புளிமாந்தண்பூ புளி.மாந்.தண்.பூ
 6. நிரை-நேர்-நேர்-நிரை புளிமாந்தண்ணிழல் புளி.மாந்.தண்.ணிழல்
 7. நிரை-நேர்-நிரை-நேர் புளிமாநறும்பூ புளி.மா.நறும்.பூ
 8. நிரை-நேர்-நிரை-நிரை புளிமாநறுநிழல் புளி.மா.நறு.நிழல்
 9. நிரை-நிரை-நேர்-நேர் கருவிளந்தண்பூ கரு.விளந்.தண்.பூ
 10. நிரை-நிரை-நேர்-நிரை கருவிளந்தண்ணிழல் கரு.விளந்.தண்.ணிழல்
 11. நிரை-நிரை-நிரை-நேர் கருவிளநறும்பூ கரு.விள.நறும்.பூ
 12. நிரை-நிரை-நிரை-நிரை கருவிளநறுநிழல் கரு.விள.நறு.நிழல்
 13. நேர்-நிரை-நேர்-நேர் கூவிளந்தண்பூ கூ.விளந்.தண்.பூ
 14. நேர்-நிரை-நேர்-நிரை கூவிளந்தண்ணிழல் கூ.விளந்.தண்.ணிழல்
 15. நேர்-நிரை-நிரை-நேர் கூவிளநறும்பூ கூ.விள.நறும்.பூ
 16. நேர்-நிரை-நிரை-நிரை கூவிளநறுநிழல் கூ.விள.நறு.நிழல்
 
 
 
செய்யுள்களில் பெரும்பாலும் ஈரசை, மூவசைச்சீர்களே வருகின்றன. யாப்பிலக்கண விதிகளுக்கு அமைய, வெண்பாக்களின் இறுதிச் சீராக ஓரசைச்சீர் வரும். வேறிடங்களில் மிக மிக அரிதாகவே ஓரசைச்சீர்கள் காணப்படுகின்றன. இதுபோலவே நாலசைச் சீர்களும் குறைந்த அளவிலேயே பாக்களில் வருகின்றன.
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 07:57:29 PM
தளை  
 
தளை என்ற சொல் பிணைப்பு என்னும் பொருள்படும். செய்யுள்களில் அருகருகே வரும் சீர்களுக்கு இடையேயான தொடர்பு தளை எனப்படுகின்றது. தளை அமைவதற்கு இரண்டு சீர்கள் வேண்டும். செய்யுளில் முதலில் வரும் சீர் நிலைச்சீர் எனப்படுகின்றது. அதை அடுத்து வரும் சீர் வருஞ்சீர் என அழைக்கப்படுகின்றது. செய்யுளொன்றில் வரும் பெரும்பாலான சீர்கள் ஒவ்வொன்றுக்கும் இரண்டு தளைகள் அமைகின்றன. செய்யுளின் முதற் சீரும், இறுதிச் சீரும் அவற்றின் ஒரு பக்கத்தில் மட்டுமே சீர்களைக் கொண்டிருப்பதால் அவை தொடர்பில் ஒவ்வொரு தளை மட்டுமே அமையும்.
 
 
 
இரு சீர்களுக்கிடையேயான தளையின் இயல்பு நிலைச்சீரின் வகை, அதன் இறுதி அசை, வருஞ்சீரின் முதல் அசை என்பவற்றில் பெரிதும் தங்கியுள்ளது.
 

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
 மழலைச்சொல் கேளா தவர்
 

என்பது ஒரு திருக்குறள். இது இரு அடிகளைக் கொண்ட வெண்பா வகையைச் சேர்ந்த ஒரு செய்யுள். இதன் ஒவ்வொரு சீரும் அசைபிரிக்கப்பட்டு, அவற்றுக்குரிய அசை வகைகளுடன் கீழே காட்டப்பட்டுள்ளது.
 

குழ.லினிது யா.ழினி.து என்.பர் தம்.மக்.கள்
 நிரை.நிரை நேர்.நிரை.நேர் நேர்.நேர் நேர்.நேர்.நேர்
 மழ.லைச்.சொல் கே.ளா தவர் .
 நிரை.நேர்.நேர் நேர்.நேர் நேர்
 

இதிலே முதலிரு சீர்கள் தொடர்பில், நிலைச்சீராக அமைவது ஈரசைச்சீர். நிலைச்சீரின் ஈற்றசை நிரை. வருஞ்சீரின் முதல் அசை நேர். நிலைச்சீர் இயற்சீராக (ஈரசைச்சீர்) இருக்க, அதன் ஈற்றுச்சீரும், வருஞ்சீரின் முதற்சீரும் வேறுபட்ட வகைகளாக இருப்பின் விளைவது இயற்சீர் வெண்டளை எனப்படும்.
 
 
 
இதுபோல இரண்டாம் மூன்றாம் சீர்கள் தொடர்பில் நிலைச்சீர், மூவசைச்சீர் ஆகும். நேரசையை இறுதியில் கொண்ட மூவசைச் சீர் வெண்சீர் எனப்படும். வருஞ்சீரின் முதல் அசையும் நேரசையாக உள்ளது. இவ்வாறு அமையும் தளை வெண்சீர் வெண்டளை ஆகும்.
 
 
 
இவ்வாறே செய்யுளிலுள்ள எல்லாச் சீர் இணைகளுக்கும் இடையிலுள்ள தளைகளின் வகைகளை அறிந்துகொள்ள முடியும். சீர்களுக்கு இடையே விளையக் கூடிய பல்வேறு வகையான தளைகளின் பெயர்களும், அத்தளைகள் ஏற்படுவதற்கான நிலைமைகளும் கீழே தரப்பட்டுள்ளன.
 

1. ஆசிரியத்தளை
 
நேரொன்றிய ஆசிரியத்தளை
 
- நிலைச்சீர் - இயற்சீர் (ஈரசைச்சீர்)
 - நிலைச்சீர் ஈற்றசை - நேர்
 - வருஞ்சீர் முதலசை - நேர்
 
நிரையொன்றிய ஆசிரியத்தளை
 
- நிலைச்சீர் - இயற்சீர் (ஈரசைச்சீர்)
 - நிலைச்சீர் ஈற்றசை - நிரை
 - வருஞ்சீர் முதலசை - நிரை
 

2. வெண்டளை
 
இயற்சீர் வெண்டளை
 
சிறப்புடை இயற்சீர் வெண்டளை
 
- நிலைச்சீர் - இயற்சீர் (ஈரசைச்சீர்)
 - நிலைச்சீர் ஈற்றசை - நிரை அல்லது நேர்
 - வருஞ்சீர் முதலசை - நிலைச்சீர் ஈற்றசை நிரையாயின் நேர், நேராயின் நிரை.
 - வருஞ்சீர் - இயற்சீர்
 
சிறப்பில் இயற்சீர் வெண்டளை
 
- நிலைச்சீர் - இயற்சீர் (ஈரசைச்சீர்)
 - நிலைச்சீர் ஈற்றசை - நிரை அல்லது நேர்
 - வருஞ்சீர் முதலசை - நிலைச்சீர் ஈற்றசை நிரையாயின் நேர், நேராயின் நிரை.
 - வருஞ்சீர் - வெண்சீர்
 
வெண்சீர் வெண்டளை
 
சிறப்புடை வெண்சீர் வெண்டளை
 
- நிலைச்சீர் - வெண்சீர் (மூவசைச்சீர்)
 - நிலைச்சீர் ஈற்றசை - நேர்
 - வருஞ்சீர் முதலசை - நேர்
 - வருஞ்சீர் - வெண்சீர்
 
சிறப்பில் வெண்சீர் வெண்டளை
 
- நிலைச்சீர் - வெண்சீர் (மூவசைச்சீர்)
 - நிலைச்சீர் ஈற்றசை - நேர்
 - வருஞ்சீர் முதலசை - நேர்
 - வருஞ்சீர் - வெண்சீர் தவிர்ந்த வேறு சீர்கள்
 

3. கலித்தளை
 
சிறப்புடைக் கலித்தளை

 
- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
 - நிலைச்சீர் ஈற்றசை - நேர்
 - வருஞ்சீர் முதலசை - நிரை
 - வருஞ்சீர் - காய்ச்சீர் (நேர் ஈற்றசை கொண்ட மூவசைச்சீர்)
 
சிறப்பில் கலித்தளை
 
- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
 - நிலைச்சீர் ஈற்றசை - நேர்
 - வருஞ்சீர் முதலசை - நிரை
 - வருஞ்சீர் - இயற்சீர் அல்லது கனிச்சீர் (நிரை ஈற்றசை கொண்ட மூவசைச்சீர்)
 

4. வஞ்சித்தளை
 
ஒன்றிய வஞ்சித்தளை
 
சிறப்புடை ஒன்றிய வஞ்சித்தளை
 
- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
 - நிலைச்சீர் ஈற்றசை - நிரை
 - வருஞ்சீர் முதலசை - நிரை
 - வருஞ்சீர் - கனிச்சீர்
 
சிறப்பில் ஒன்றிய வஞ்சித்தளை
 
- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
 - நிலைச்சீர் ஈற்றசை - நிரை
 - வருஞ்சீர் முதலசை - நிரை
 - வருஞ்சீர் - கனிச்சீர் தவிர்ந்த வேறு சீர்கள்
 
ஒன்றாத வஞ்சித்தளை
 
சிறப்புடை ஒன்றாத வஞ்சித்தளை
 
- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
 - நிலைச்சீர் ஈற்றசை - நிரை
 - வருஞ்சீர் முதலசை - நேர்
 - வருஞ்சீர் - கனிச்சீர்
 
சிறப்பில் ஒன்றாத வஞ்சித்தளை
 
- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
 - நிலைச்சீர் ஈற்றசை - நிரை
 - வருஞ்சீர் முதலசை - நேர்
 - வருஞ்சீர் - கனிச்சீர் தவிர்ந்த வேறு சீர்கள்
 
 
 
பாக்களும், தளைகளும்
 
மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ள பல்வேறு விதமான தளைகள், ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களில் ஒவ்வொன்றுக்குச் சிறப்பாக உரியவை. இதனாலேயே குறிப்பிட்ட தளைகளின் பெயர்கள் தொடர்புடைய பாக்களின் பெயர்களால் வழங்கப்படுகின்றன.
 
 
 
ஆசிரியத்தளைகள் ஆசிரியப்பாவுக்கும், வெண்டளைகள் வெண்பாவுக்கும், கலித்தளைகள் கலிப்பாவுக்கும், வஞ்சித்தளைகள் வஞ்சிப்பாவுக்கும் சிறப்பாக உரியவை.
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 08:00:09 PM
அடி  
 
தமிழ்ப் பாக்களின் இலக்கணத்தைக் கூறும் யாப்பியல் நூல்கள், பாக்களின் உறுப்புக்களாக, எழுத்து, அசை, சீர், அடி என்பவற்றைக் குறிப்பிடுகின்றன. எழுத்துக்கள் சேர்ந்து அசையும், அசைகள் சேர்ந்து சீரும், சீர்கள் சேர்ந்து அடியும் உருவாகின்றன.
 
 
 
அடிகளின் உருவாக்கம்
 
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
 நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
 துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
 சங்கத் தமிழ்மூன்றுந் தா
 
மேலேயுள்ள பாடலிலே ஒவ்வொரு வரியும் ஒரு அடியாகும். முதல் அடியானது 1. பாலும், 2. தெளிதேனும், 3. பாகும், 4. பருப்புமிவை என நான்கு பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் சீர் என அழைக்கப்படுகின்றது. இப்பாடலிலே முதல் மூன்று அடிகள் ஒவ்வொன்றும் நான்கு சீர்களைக் கொண்டு அமைந்துள்ளன. நான்காவது அடி மூன்று சீர்களால் அமைந்துள்ளது. பொதுவாக பாடல்களின் அடிகளில் இரண்டு சீர்கள் முதல் பதினாறு சீர்கள் வரை காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறு வெவ்வேறு எண்ணிக்கையான சீர்களைக் கொண்டு அமைந்த அடிகள் வெவ்வேறு பெயர்களினால் குறிப்பிடப்படுகின்றன
 
.
 
1. குறளடி - இரண்டு சீர்கள் கொண்டது.
 2. சிந்தடி - மூன்று சீர்கள் கொண்டது.
 3. அளவடி - நான்கு சீர்கள் கொண்டது.
 4. நெடிலடி - ஐந்து சீர்கள் கொண்டது
 5. கழி நெடிலடி - ஆறு, ஏழு அல்லது எட்டு சீர்களைக் கொண்டது.
 6. இடையாகு கழி நெடிலடி - ஒன்பது அல்லது பத்து சீர்களைக் கொண்டது.
 7. கடையாகு கழி நெடிலடி - 11 முதல் 16 வரையான எண்ணிக்கைகளில் சீர்களைக் கொண்டது.
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 08:03:36 PM
தொடை


தொடை என்பது யாப்பிலக்கணத்தில் செய்யுள் உறுப்புக்கள் வகையைச் சேர்ந்தது. செய்யுள்களின் சீர்களும், அடிகளும் தொடுத்துச் செல்லுகின்ற முறையுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் தொடை என வழங்கப்படுகின்றது. செய்யுள்களின் ஓசை நயத்துக்கும், அவற்றின் இனிமைக்கும் தொடைகள் முக்கியமானவை.
 
 
 
தொடை வகைகள்
தொடைகள் பலவகைப் படுகின்றன. இவை,
 
1. மோனைத் தொடை
 2. இயைபுத் தொடை
 3. எதுகைத் தொடை
 4. முரண் தொடை
 5. அளபெடைத் தொடை
 6. அந்தாதித் தொடை
 7. இரட்டைத் தொடை
 8. செந்தொடை
 
என்பனவாகும். இவற்றுள் மோனை, எதுகை, முரண் மற்றும் அளபெடைத் தொடைகள் செய்யுள் அடிகளின் முதற் சீருடன் சம்பந்தப்பட்டிருக்க, இயைபுத் தொடை அடிகளின் இறுதிச் சீர் தொடர்பாக அமைகின்றது.
 
 
 
தொடை விகற்பங்கள்
 
மேலே கண்ட எட்டுத் தொடைகளிலே முதல் ஐந்து தொடை ஒவ்வொன்றுக்கும் அவை பாவிலே அமைந்து வருகின்ற இடங்களைப் பொறுத்து, எட்டு வகையான வேறுபாடுகள் யாப்பிலக்கண நூல்களிலே சொல்லப்பட்டுள்ளன. இவை யாப்பிலக்கணச் சொற் பயன்பாட்டு வழக்கில் "விகற்பங்கள்" எனப்படுகின்றன. மேற் கூறிய எட்டு விகற்பங்களும் வருமாறு.
 
1. அடி
 2. இணை
 3. பொழிப்பு
 4. ஒரூஉ
 5. கூழை
 6. மேற்கதுவாய்
 7. கீழ்க்கதுவாய்
 
மோனை, எதுகை, முரண், அளபெடை, இயைபு ஆகிய தொடைகளில் எட்டுவகையான விகற்பங்கள் ஏற்படும்போது மொத்தம் நாற்பது தொடை விகற்பங்கள் உண்டாகின்றன. இவற்றுடன் விகற்பங்கள் இல்லாத அந்தாதி, இரட்டை மற்றும் செந்தொடைகளும் சேர்ந்து நாற்பத்து மூன்று ஆகின்றது.
 
 
 
1. மோனைத் தொடை
 மோனை என்பது செய்யுள் அடிகளின் முதல் எழுத்துக்கள் ஒத்து அல்லது ஒன்றி வருதல் ஆகும். அடிகளின் முதல் எழுத்துக்கள் மட்டுமன்றி சீர்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வரினும் அது மோனையே ஆகும். சீர்கள் தொடர்பில் வரும் மோனை சீர்மோனை எனவும், அடிகள் தொடர்பில் வருவது அடிமோனை எனவும் குறிப்பிடப்படுகின்றன.


1.1சீர்மோனைகள்
 
1. பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
 
இந்த வெண்பா அடியிலே முதற் சீரின் முதல் எழுத்தாக வரும் பா மூன்றாம் சீரின் முதலெழுத்தாகவும் வருகிறது. நாலாஞ்சீரின் முதலெழுத்தாகவும் அதன் உயிரெழுத்து இனமான ப வருவதால், இவ்வடி 1, 3, 4 ஆம் சீர்களில் மோனை அமைந்த அடியாகும்.
 
 
 
2. கற்க கசடற கற்றவை கற்றபின்
 
இத் திருக்குறள் அடியில் 1, 2, 3, 4 ஆகிய எல்லாச் சீர்களிலும் க என்னும் ஒரே எழுத்து மோனையாக வந்துள்ளது. இவ்வாறு அமைவது முற்று மோனை எனப்படும்.
 
 
 
1.2அடிமோனைகள்
 
தம்பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள்
 தந்தம் வினையான் வரும்
 
மேலே காட்டிய திருக்குறளில் இரண்டு அடிகளினதும் முதற் சீர்கள் த எனும் எழுத்தில் தொடங்குவதால் இதிலே அடிமோனை அமைந்துள்ளது.
 
 
 
அடிமோனை சிறப்புக் குறைவானதால் அடிமோனைகள் அமைந்த பாடல்கள் மிகக் குறைவே. அடிகள் தொடர்பில் சிறப்புப் பெறுவது எதுகையாகும் இது அடி எதுகை எனப்படும்.
 
 
 
2. இயைபுத் தொடை
 ஒரு செய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்து அல்லது இறுதிச் சொல் ஒத்து வரும்போது அது இயைபுத் தொடை என்று கூறப்படுகின்றது. ஒரே அடியில் உள்ள சீர்களின் இறுதி எழுத்துக்கள் ஒன்றி வந்தாலும், அடியின் இறுதிச் சொல்லும் அவ்வடியில் வரும் சீர்களின் சொற்கள் ஒன்றி வந்தாலும் அது இயைபுத் தொடையேயாகும். இதன் படி ஒரு செய்யுளில் இயைபுத் தொடை நான்கு வகையில் அமைய முடியும்.
 
 
 
1. ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்துக்கள் ஒன்றுதல்.
 2. ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதிச் சொற்கள் ஒன்றுதல்.
 3. ஒரு அடியிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட சீர்களின் இறுதி எழுத்துக்கள் ஒன்றுதல்.
 4. ஒரு அடியில் வரும் இறுதிச் சொல் அந்த அடியில் வரும் இன்னொரு சீரிலாவது ஒன்றி வருதல்.
 
 
 
எடுத்துக்காட்டுகள்
 
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
 இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
 நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
 புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே
 
மேற்கண்ட பாடலிலே முதல் மூன்று அடிகளிலும் வரும் இறுதி எழுத்துக்கள் (னை) ஒன்றி இருப்பதனால் இது ஒரு இயைபுத் தொடை கொண்ட பாடலாகும். இது தவிர முதலாம், மூன்றாம் அடிகளில், இறுதி எழுத்துடன் அதே அடியிலுள்ள வேறு சீர்களின் இறுதி எழுத்துக்களும் ஒன்றுவதால் இது அந்த வகையிலும் கூட இயைபுத் தொடை கொண்ட ஒரு பாடலாக அமைகின்றது.
 
 
 
3. எதுகை தொடை
 யாப்பிலக்கணத்தில் தொடை என வழங்கப்படும் செய்யுள் உறுப்பு வகைகளில் எதுகை முக்கியமானதாகும். வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவரின் மோனை எனப்படின், இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுகை ஆகும்.
 


அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை
 அது ஒழித் தொன்றின் எதுகை ஆகும்
 
என்பது தொல்காப்பியர் கூற்று.
 எதுகை வகைகள்
 
எதுகை சீர்களிலும், அடிகளிலும் வரக்கூடும். இவை முறையே சீரெதுகை என்றும் அடியெதுகை என்றும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக அடியெதுகையே செய்யுள்களில் சிறப்புப் பெறுகின்றது. சீரெதுகை அதிகம் கைக்கொள்ளப் படுவதில்லை.
 
 
 
4. முரண் தொடை

 செய்யுளில், சொல் அல்லது பொருள் முரண்பட்டு நயம் பயக்கும் வகையில் அமைவது முரண் தொடை ஆகும். இது செய்யுளின் வெவ்வேறு அடிகளின் முதற் சீர்களில் அமையலாம் அல்லது ஒரே அடியின் வெவ்வேறு சீர்களிலும் அமையலாம்.
 
 

5. அளபெடைத் தொடை

 செய்யுள்களில் அடிகளில் அளபெடை அமைய வருவது அளபெடைத் தொடை ஆகும். எழுத்துக்கள் தமக்குரிய மாத்திரைகளுக்கு அதிகமாக அளபெடுத்து (நீண்டு) ஒலிப்பது அளபெடை. நயம் கருதி இவை செய்யுள்களில் பயன்படுத்தப்படுகின்றன. மோனை, எதுகை போன்ற பெரும்பாலான தொடைகளைப் போலவே அளபெடைத் தொடையும் செய்யுள் அடிகளின் முதற் சீரிலேயே அமைகின்றன.
 
 
 
ஒஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
 தாஎம் இதற்பட் டது.
 
என்னும் குறளில் அளபெடைத்தொடை அமைந்துள்ளது காண்க. இங்கே அடிகளின் முதற் சீரின் முதல் எழுத்தே அளபெடுத்து அமைந்துள்ளது. எனினும் அச் சீரின் எவ்வெழுத்து அளபெடுத்து அமைந்தாலும் அது அளபெடைத் தொடையே ஆகும்.
 
 

6. அந்தாதித் தொடை

 ஒரு அடியில் ஈற்றில் அமையும் சீர், அசை அல்லது எழுத்து, அடுத்துவரும் அடியின் தொடக்கமாக அமைவது அந்தாதித் தொடை எனப்படும். அடுத்தடுத்த செய்யுள்களில் இத் தொடர்பு இடம்பெறின் அதுவும் அந்தாதித் தொடையே. அதாவது ஒரு செய்யுளின் இறுதிச் சீர், அசை அல்லது எழுத்தை அடுத்துவரும் செய்யுளின் முதலில் வரும் வகையில் அமையின் அதுவும் அந்தாதித் தொடை எனப்படும்.
 

ஒரு அடியின் ஈற்றிலும் அடுத்ததின் முதலிலும் எழுத்து மட்டும் ஒன்றாய் வருவது எழுத்தந்தாதி எனலாம். இவ்வாறே, அசை, சீர், அடி என்பவை ஒன்றாக இருப்பது முறையே அசையந்தாதி, சீரந்தாதி, அடியந்தாதி எனப்படலாம்.
 
 
 
எடுத்துக்காட்டுகள்
 
வேங்கையஞ் சார லோங்கிய மாதவி
 விரிமலர்ப் பொதும்பர் நெல்லியன் முகமதி
 திருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே


மேல் உள்ள பாடலில் எழுத்தந்தாதித் தொடை அமைந்துள்ளதைக் காணலாம். முதலடியின் இறுதியெழுத்தான "வி" இரண்டாம் அடியின் முதலில் வருவதும், இரண்டாம் அடியின் இறுதி எழுத்து மூன்றாம் அடியின் முதலில் வருவதும், மூன்றாம் அடியின் இறுதி எழுத்து மீண்டும் முதலடியின் முதலில் வருவதும் காண்க.
 

அந்தாதித் தொடைக்கு எடுத்துக்காட்டாக, இளம்பூரணர் பின்வரும் பாடலைக் கொடுத்துள்ளார்.
 

உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
 மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
 முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
 ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
 ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
 அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
 துன்னிய மாந்தர் அஃதென்ப
 பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே
 

மேலேயுள்ள பாடலில் பல வகையான அந்தாதித் தொடைகள் பின்வருமாறு வந்துள்ளன.
 

முதலாம் இரண்டாம் அடிகள் - அசையந்தாதி
 இரண்டாம் மூன்றாம் அடிகள் - சீரந்தாதி
 மூன்றாம் நான்காம் அடிகள் - சீரந்தாதி
 நான்காம் ஐந்தாம் அடிகள் - அடியந்தாதி
 ஐந்தாம் ஆறாம் அடிகள் - சீரந்தாதி
 ஆறாம் ஏழாம் அடிகள் - எழுத்தந்தாதி
 ஏழாம் எட்டாம் அடிகள் - எழுத்தந்தாதி
 எட்டாம் முதலாம் அடிகள் - சீரந்தாதி

 

7. இரட்டைத் தொடை

 செய்யுள் ஒன்றின் ஒரு அடியில் முழுவதும் ஒரே சொல்லே அதன் சீர்களாகத் திரும்பத் திரும்ப வருமாயின் அது இரட்டைத் தொடை எனப்படும். எனினும் இச் சொல் எல்லா இடங்களிலும் ஒரே பொருளிலேயே வரவேண்டும் என்பதில்லை. வெவ்வேறு பொருள்களிலும் வரலாம்.
 
 
 
8.செந்தொடை
 மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை, அந்தாதி, இரட்டை போன்ற எவ்வகைத் தொடையும் இல்லாமல், அவற்றில் உள்ள சொற்களின் இயல்பான தன்மையினால் அழகுற அமைவது செந்தொடை எனப்படுகின்றது.
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 08:05:36 PM
அணி  


அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணமாகும். அணி பலவகைப்படும். அவற்றுள் சில,
 
 
 ■தண்மை அணி
 ■உவமையணி
 *இல்பொருள் உவமையணி
 *எடுத்துக்காட்டு உவமையணி
 ■உருவக அணி
 ■பின்வருநிலையணி
 ■தற்குறிப்பேற்ற அணி
 ■வஞ்சப் புகழ்ச்சியணி
 ■வேற்றுமை அணி
 ■இரட்டுறமொழிதலணி
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 08:08:56 PM
உவமையணி


தமிழிலக்கணத்தில், உவமையணி என்பது கூறக் கருதிய பொருளை நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது. ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகு படுத்திக் கூறுவது. தெரியாத பொருளைக் காட்ட தெரிந்த பொருளைச் சொல்லி விளக்குவது.
 
 
 
மூன்று வகைகள்
 
உவமையணி மூன்று வகைப்படும். அவையாவன:
 
1. பண்பு உவமையணி
 2. தொழில் உவமையணி
 3. பயன் உவமையணி.
 
 
 
பண்பு உவமையணி
 
உதாரணம்: குத்துப்பல், பவளவாய், கயல்விழி
 பவளம் போல் சிறப்பு பவளத்தின் பண்பு.
 
 
 
தொழில் உவமையணி
 
உதாரணம்: புலிமறவன், குரங்குமனம்
 செயலை விளக்குவது
 புலியின் வீரம், தாவும் மனம்.
 
 
 
பயன் உவமையணி
 
உதாரணம்: மழைக்கை
 மழை போல பொழியும்(கொடுக்கும்) கை
 
--------------------------------
 
உவமையணியில் உவமானம் ,உவமேயம், உவமை உருபுகள் ஆகிய மூன்றும் வெளிப்படையாக வரும். இவைகளோடு பொதுத்தன்மையும் இருக்கும்.
 
 
 
உவமானம்-ஒப்பிடக் கொண்டு வந்த பொருள்
 உவமேயம்-ஒப்பிட எம்மிடமுள்ள பொருள்

 உவமை உருபுகள்- உதாரணம்: போன்ற, போல, நிகர்த்த, உடைய, ஒப்ப, அன்ன, அனைய
 பொதுத்தன்மை-இரண்டுக்கும் உள்ள தன்மை(சந்திரன் போல முகம். இங்கு சந்திரன் உவமானம். முகம் உவமேயம். இதில் சந்திரனின் வடிவம், அழகு, வட்டம், குளிர்மை போன்றவை பொதுத்தன்மை).
 
 
 
சான்று:

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை
 
 
 
இங்கு,
 
உவமானம்: அகழ்வாரைத் தாங்கும் நிலம்
 உவமேயம்: தம்மை இகழ்வார்ப் பொறுத்தல்
 உவமை உருபு: போல
 

உவமைத்தொகை
 
வெளிப்படையாகத் தெரியாத உவமைஉருபுகள் உவமைத்தொகை எனப்படும். அதாவது உவமை தொக்கி நிற்பது.
 
உதாரணம்: கயல்விழி - கயல் போல் விழி
 இங்கு உவமை உருபு (போல்) மறைந்து நிற்கிறது.
 
இதே போல இன்னொரு உதாரணம்:
 மதிமுகம் - மதி போன்ற முகம்
 உவமை உருபு (போன்ற) மறைந்து நிற்கிறது.
 
----------------------------------
 
 
 
உவமையணியை இன்னொரு விதத்தில் இன்னும் இரண்டாகப் பிரிக்கலாம்.
 அவையாவன:

 1- எடுத்துக்காட்டு உவமையணி
 2- இல்பொருள் உவமையணி
 

எடுத்துக்காட்டு உவமையணி
 
இது நேர்ப்பொருளில் வெளிப்படையாகச் சொல்வது
 

உதாரணம்:
 தொட்டனைத்து ஊறும் மணற்கேணி
 மாந்தர்க்கு கற்றெனத் தூறும் அறிவு
 

மணற்கேணியானது எவ்வளவு ஆழமாகக் கிண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நீர் சுரக்கும். அதே போல மனிதர் எவ்வளவுகெவ்வளவு கற்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களது அறிவு பெருகும்.
 
 
 
இல்பொருள் உவமையணி
 
இல்பொருள் உவமையணி மறைபொருளில் வரும். அதாவது இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது.
 

உதாரணம்:
 அன்பகத்து இல்லா உயிர் வாழ்க்கை
 வன்பால் கண் வற்றல் மரம் தளிர்த்தற்று
 

அதாவது வலிமையான ஒரு பாலைவனத்திலே பட்டமரம் தளிர்த்ததைப் போன்று அன்பில்லா உயிர்வாழ்க்கை தளிர்க்காது. அதாவது வலிமையான பாலைவனத்திலே பட்டமரம் தளிர்க்கவே தளிர்க்காது. அதே போலத்தான் அன்பில்லா வாழ்க்கையும்.
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 08:11:26 PM
உருவக அணி  


உருவக அணி என்பது அதுதான் இது என உறுதிப் படுத்திக் கூறுவது. உவமை அணியின் மறுதலை.
 

எடுத்துக்காட்டு
 
இதுதான் அது.
 அவளின் முகம்தான் சந்திரன்.
 
 
 
* பச்சை மாமலை போல் மேனி - இது உவமை அணி.
 * மையோ மாமலையோ மறிகடலோ - இது உருவக அணி
 
 
 
இதில் கண்ணனை மை, மாமலை, மறிகடல் என உருவகிக்கப் படுகிறது. மை போன்ற மேனி என்று சொல்லியிருந்தால் இது ஒரு உவமையணி. ஆனால் மையோ என்னும் போது அவன் மேனிதான் மை என்று சொல்லியாயிற்று. இது உருவக அணி.
 

எடுத்துக் காட்டுகள்
 
* உவமை அணி - மதிமுகம் (மதி போன்ற முகம்)
 * உருவக அணி - முகமதி (முகம்தான் மதி)
 
* உவமை அணி - புலி போன்ற வீரன் வந்தான்
 * உருவக அணி - புலி வந்தான்
 
* உவமை அணி - மலர்க்கை (மலர் போன்ற கை)
 * உருவக அணி - கைமலர் (கைகள்தான் மலர்)
 
* உவமை அணி - வேல்விழி (வேல் போன்ற விழி)
 * உருவக அணி - விழி வேல் (விழிதான் வேல்)
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 08:12:37 PM
பின்வருநிலையணி


பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ இவ்விரண்டுமோ பல முறை பின்னரும் வருவது.
 
 
 
இது மூன்று வகைப்படும்:
 
* சொல் பின்வருநிலையணி
 * பொருள் பின்வருநிலையணி
 * சொற்பொருள் பின்வருநிலையணி
 
 
 
சொல் பின்வருநிலையணி
 
சொல் பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல் வேறு ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது.
 
 
 
எ.கா:
 
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
 நில்லாது நீங்கி விடும்
 --திருக்குறள (592)
 
 
 
இக்குறட்பாவில் 'உடைமை' என்ற சொல் பெற்றிருத்தல், உடைய, பொருள் என வேறுபட்ட பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொல் பின்வருநிலையணி ஆகும்.
 

பொருள் பின்வருநிலையணி
 
பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் ஒரே பொருள் தரும் பல சொற்கள் வருவது.
 
 
 
எ.கா:
 
அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா
 நெகிழ்ந்தன நேர்முகை முல்லை - மகிழ்ந்திதழ்
 விண்டன கொன்றை விரிந்த கருவிளை
 கொண்டன காந்தள் குலை
 
 
 
இப்பாடலில் மலரதில் என்னும் பொருள் தரக்கூடிய அவிழ்தல், அலர்தல், நெகிழிதல், விள்ளல், விரிதல் ஆகிய சொற்கள் பல முறை வந்துள்ளமையால் இது பொருள் பின்வருநிலையணி ஆகும்.
 

சொற்பொருள் பின்வருநிலையணி
 
சொற்பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல் அதே பொருளில் பல முறை வருவது.
 
 
 
எ.கா:
 
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
 பொய்யா விளக்கே விளக்கு.
 --திருக்குறள் (299)
 
 
 
இக்குறட்பாவில் விளக்கு என்னும் சொல் ஒரே பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 08:16:11 PM
தற்குறிப்பேற்ற அணி


தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும்.
 
 
 
எ.கா:
 
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
 வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட
 சிலப்பதிகாரம்
 
விளக்கம்:
 
கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 08:20:53 PM
வஞ்சப் புகழ்ச்சியணி  



வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வதும், இகழ்வது போல் மறைமுகமாகப் புகழ்வதுமாகும்.
 
 
 
எ.கா
 
* புகழ்வது போல் இகழ்தல்
 
 
 
தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்
 திருக்குறள் - திருவள்ளுவர்
 
விளக்கம்:
 
"கயவர்கள் தம்மனம் விரும்பும் செயல்களைத் தடுப்பாரின்றிச் செய்து முடிப்பதால் தாம் விரும்பும் செயல்களைச் செய்யும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்" என்பது இக்குறட்பாவின் பொருள்.
 
கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போல தோன்றினாலும், தேவர்கள் உயர்ந்த செயல்களையே செய்வர், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருள் குறிப்பால் உணர்த்துவதைக் கானலாம். எனவே இது உண்மையில் கயவர்களை பழித்தலே ஆகும். (புகழ்வது போல் இகழ்தல்)
 
 
 
* இகழ்வது போல் புகழ்தல்
 
 
 
பாரி பாரி என்றுபல ஏத்தி,
 ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர்
 பாரி ஒருவனும் அல்லன்;
 மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே
 புறநானூறு
 பாடியவர்: கபிலர்
 
விளக்கம்:
 
"புலவர் பலரும் பாரி ஒருவனையே புகழ்கின்றனர். பாரி ஒருவன் மட்டுமா கைம்மாறு கருதாமல் கொடுக்கின்றான்? மாரியும்தான் கைம்மாறு கருதாமல் கொடுத்து இவ்வுலகம் புரக்கின்றது" என்பது இப்பாடலின் பொருள்.
 
இது பாரியை இகழ்வது போலத் தோன்றினும், பாரிக்கு நிகராகக் கொடுப்பாரில்லை என்று புகழ்ந்ததே ஆகும்.
 
(இகழ்வது போல் புகழ்தல்).
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 08:23:16 PM
இரட்டுறமொழிதல் அணி  


ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுறமொழிதல் அணி எனப்படும். இதனைச் சிலேடையணி என்றும் அழைப்பர். ஒரு சொல் பிரிபடாமல் தனித்துநின்று பல பொருள் தருவது செம்மொழிச் சிலேடை என்றும் சொற்றொடர் பல வகையாகப் பிரிக்கப்பட்டுப் பல பொருள்களைத் தருவது பிரிமொழிச் சிலேடை என்றும் பெயர் பெறும்.
 

எடுத்துக்காட்டு
 
திருக்குற்றாலக் குறவஞ்சியில் உள்ள பின்வரும் பாடலில் இவ் அணியைப் பயன்படுத்தியுள்ளதைக் காணலாம்.
 
 
 
பல்லவி
 

கண்ணி கொண்டு வாடா-குளுவா
 கண்ணி கோண்டு வாடா!
 
 
 
மீறும் அலஞ்சிக் குறத்தியைக் கொண்டசெவ்
 வேட்குற வன்முதல் வேட்டைக்குப் போனநாள்
 ஆறுநாட் கூடி ஒருகொக்குப் பட்டது
 அகப்பட்ட கொக்கை அவித்தொரு சட்டியில்
 சாறாக வைத்தபின் வேதப் பிராமணர்
 தாமுங் கொண் டார்சைவர் தாமுங் கொண்டார்தவப்
 பேறா முனிவரும் ஏற்றுக்கொண் டார்இதைப்
 பிக்குச் சொல்லாமலே கொக்குப் படுக்கவே (கண்ணி)
 
 
 
விளக்கம்
 
குற்றாலத்தில் பறவைகள் பெரும் எண்ணிக்கையில் வலசை வந்து மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் சிங்கன் அப்பறவைகளைப் பிடிப்பதற்காகத் தன் நண்பனைக் கண்ணி கொண்டுவரச் சொல்கிறான். இவ்வாறு செய்வதில் தவறில்லை எனச்சொல்லும் வகையில் அமைந்த இப்பாடலின் நேரடிப் பொருள் பொதுவான அறிவுக்கு ஒவ்வாததாக அமைந்திருந்தாலும் அதன் உள் மறைபொருள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அமைந்துள்ளது. இப்பாடல் இவ்வகையில் நயமுடன் அமைந்துள்ளது.
 
 
 
நேரடியான பொருள்
 
வடிவழகிலே அனைவரையும் மிஞ்சும் இலஞ்சி நகர்க் குறத்தியின் மணாளன், செவ்வேளாகிய குறவன் தனது முதல் வேட்டைக்குச் சென்றான். அம்முறை ஆறு நாட்களுக்குப் பின்னர்தான் அவனுக்கு ஒரு கொக்கு அகப்பட்டது. அதை அவித்து ஒரு சட்டியிலே குழம்பாகச் சமைத்தான். அதனை மறையோதும் பிராமணர்களும், சைவர்களும் உண்டனர். தவப்பேறுடைய முனிவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர். அதனால் மறுப்பேதும் சொல்லாமல் வேட்டையாடுவதற்குக் கண்ணியை எடுத்துக்கொண்டு வாடா குளுவா!
 
 
 
உட்பொருள்
 
முருகன் (குறவன்) சூரனாகிய மாமரத்தைத் (கொக்கைத்) தான் படையெடுத்துச் சென்ற ஆறாவது நாளில் வென்றான். அது சட்டித் திருநாள் எனப்படும். சாறு என்றால் திருவிழா எனும் பொருளும் உண்டு. அச்சட்டித்திருநாளை அனைவரும் கொண்டாடுவர். இவ்வாறான உட்பொருளைக் கவிஞர் சுவைபட உரைத்துள்ளார்
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 08:25:16 PM
பிற இலக்கண விதிகள்


வாக்கியம்  


தமிழ் இலக்கணப் படி ஒரு வசனம் முன்று கூறுகளாக வகுக்கப்படும்.

அவை:
■எழுவாய்,
 ■செய்படுபொருள்,
 ■பயனிலை.
 
 
 
எழுவாய்:
 எழுவாய் என்பது ஒரு வசனத்தில் யார், எது, எவை என்பதின் பதில் ஆகும். ஆகவே, எழுவாய் என்பது ஒரு செயலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது ஆகும்.
 

எ.கா:
 சிவா பந்து விளையாடினான். இதில் "சிவா" எழுவாய் ஆகும்.
 
 
 
செய்படுபொருள்:
 ஒரு வசனத்தில் யாரை ,எதை அல்லது எவற்றை என்பதின் பதில் ஆகும். செய்படுபொருள் என்பது எழுவாய் செய்யும் தொழிலின் பயனை அடைவது ஆகும்.
 
 
 
எ.கா:
 சிவா பந்து விளையாடினான். இந்த வசனத்தில் பந்து செய்படுபொருள் ஆகும்.
 
 
 
பயனிலை:
 ஒரு வசனத்தில் பொருள் முடிந்து நிற்கும் வினைச் சொல் (வினை முற்று) பயனிலை எனப்படுகிறது.
 
 
 
எகா:
சிவா பந்து விளையாடினான். இந்த வசனத்தில் விளையாடினான் பயனிலை ஆகும்.
 
 
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 08:26:49 PM
காலம்



ஒரு வாக்கியத்தில் உள்ள ஒரு செயல் எப்பொழுது நடந்தது என்பதை உணர்த்தும் இலக்கணக்குறி காலம் ஆகும்.காலத்தை இடைநிலைகள் உணர்த்தும். காலம் மூன்று வகைப்படும்.

அவை:

 
 ■இறந்தகாலம்,
 ■நிகழ்காலம்,
 ■எதிர்காலம்,
 
 
 
இறந்தகாலம்:
 ஒரு செயல் நடந்து முடிந்ததைக் குறிக்கும் காலம் இறந்தகாலம் ஆகும். கு,டு,று என்னும் எழுத்துக்களில் முடியும் குறிலிணை வினைப்பகுதிகள் சில தம் ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டும்.
 
 
 
இறந்தகால இடைநிலைகள்: த்,ட்,ற்,இன்.
 
 
 
எ.கா:
 செய்தான் ,உண்டான்,வந்தாள்.
 
நடு+ஆர் =நட்டார் (ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டுகிறது.)
 
 
 
நிகழ்காலம்:
 தொழில் இப்பொழுது நடக்கின்றதைக் குறிக்கும் காலம் நிகழ்காலம் ஆகும்.
 
 
 
நிகழ்கால இடைநிலைகள்: கிறு, கின்று, ஆநின்று

 
 
எ.கா:
 நடக்கிறான் ,வருகிறான், வருகின்றான்
 
 

எதிர்காலம்:

 தொழில் இனி நடைபெறுவதைத் தெரிவிக்கும் காலம் எதிர்காலம் ஆகும்.
 

எதிர்கால இடைநிலைகள்: ப்,வ்


எ.கா:
 நடப்பான்,வருவான்,செய்வான்
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 08:27:44 PM
எண்  



எண் என்பது தமிழ் இலக்கணத்தில் எண்ணிக்கையைக் குறிக்கும் சொல் ஆகும். தமிழ் மொழியில், பெயர்ச்சொல், வினைச்சொல் இரண்டுமே எண் குறிப்பனவாக உள்ளன. எண் இரண்டு வகைப் படும்.

அவை:
■ஒருமை
 ■பன்மை
 
 
 
ஒருமை:
 ஒருமை என்பது ஒன்றைக் குறிக்கும் சொல் ஆகும்.

 
 
எடுத்துக்காட்டு:
 கண் ,காது , உலகம் ,வீடு, செய்தான் ,பாடினாள், வந்தது.
 
 
 
பன்மை:
 பன்மை என்பது பலவற்றைக் குறிக்கும் சொல் ஆகும்.

 
 
எடுத்துக்காட்டு:
 கண்கள், காதுகள், வந்தார்கள், வீடுகள், சென்றார்கள்.
 
 
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 08:29:18 PM
பால்  


பால் என்பது பகுதியைக் குறிக்கும். பால் ஜந்து வகைப்படும். உயர்திணையில் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஆகிய மூன்றும் அடங்கும்.அஃறிணையில் ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய இரண்டும் அடங்கும்.
 
 
 
ஆண்பால்:
 ஆணை ஒருமையில் குறிக்கும் சொல்.
 
 
 
எடுத்துக்காட்டு:
 அவன், ஆசிரியன், மாணவன், கணவன், வந்தான், பாடுகிறான், சிரிப்பான், தோற்றான்.
 
 
 
பெண்பால்:
 பெண்ணை ஒருமையில் குறிக்கும் சொல்.
 
 
 
எடுத்துக்காட்டு:
 அவள், ஆசிரியை, மாணவி, மனைவி, வந்தாள், பாடுகிறாள், சிரிப்பாள், தோற்றாள்.
 
 
 
பலர்பால்:
 ஆண்,பெண் இருபாலரையும் சேர்த்து அல்லது தனித்து பன்மையில் குறிக்கும் சொல்.
 
 
 
எடுத்துக்காட்டு:
 அவர், அவர்கள், ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர், மாணவர்கள், கணவன்மார், வந்தனர், வந்தார்கள், பாடுகின்றனர், பாடுகின்றார்கள், சிரிப்பார்கள், தோற்றனர், தோற்றார்கள்.
 
 

ஒன்றன்பால்:

 அஃறிணை உயிரினங்களை ஒருமையில் குறிக்கும் சொல்.
 
 
 
எடுத்துக்காட்டு:
 அது, பூனை, கல், வந்தது, இருந்தது முதலியன.
 
 
 
பலவின்பால்:
 அஃறிணை உயிரினங்களை பன்மையில் குறிக்கும் சொல்.
 
 
 
எடுத்துக்காட்டு:
 அவை ,பூனைகள், கற்கள், வந்தன, ஓடின, இருந்தன, முதலியன.
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 08:30:15 PM
இடம்  

தமிழ் இலக்கணத்தில் பேசுபவர், பேசுபவர் முன்னால் நிற்பவர், இவர்கள் அல்லாத பிறர் ஆகியோர் தொடர்பில் உள்ள வேறுபாடுகளைக் காட்டும் இலக்கணக் கூறு இடம் எனப்படுகிறது. இடம் மூன்று வகைப்படும். அவை:
 
 
 ■தன்மை,
 ■முன்னிலை,
 ■படர்க்கை
 
 
 
தன்மை:

 பேசுபவர் அல்லது எழுதுபவர் தன்னையோ, தன்னையும் உள்ளடக்கிய பலரையோ குறிப்பிடப் பயன்படுத்தும் சொற்கள் தன்மை எனப்படும்.
 

எடுத்துக்காட்டு:
 * நான் - (ஒருமை)
 * யான் - (ஒருமை)
 * நாம் - (பன்மை)
 * யாம் - (பன்மை)
 * நாங்கள் - (பன்மை)
 * யாங்கள் - (பன்மை)
 

முன்னிலை:
 பேசுபவர் தனக்கு முன்னால் நிற்பவரை அல்லது நிற்பவர்களைப் பற்றிக் கூறுவது முன்னிலை ஆகும்.
 

எடுத்துக்காட்டு:
 * நீ - (ஒருமை)
 * நீர் - (மரியாதை ஒருமை / பன்மை)
 * நீவிர் - (பன்மை)
 * நீங்கள் - (பன்மை)
 
 
 

படர்க்கை:
 பேசுபவர் தன்னையும் தனக்கு முன்னால் நிற்பவர்களையும் தவிர்த்து பிறரைக் குறிக்கும் சொல் படர்க்கை எனப்படும்.
 

எடுத்துக்காட்டு:
 * அவன் - (ஒருமை, ஆண்பால்)
 * அவள் - (ஒருமை, பெண்பால்)
 * அவர் - (மரியாதைப் பன்மை / பன்மை)
 * அவர்கள் - (பன்மை)
 * அது - (ஒருமை, ஒன்றன்பால்)
 * அவை - (பன்மை, பலவின்பால்)
 * கணேசன் - (ஒருமை, ஆண்பால்)
 * வள்ளி - (ஒருமை, பெண்பால்)
 * மாணவன் - (ஒருமை, ஆண்பால்)
 * மாணவி - (ஒருமை, பெண்பால்)
 * மாணவர்கள் - (பன்மை, பலர்பால்)
 * பசு - (ஒருமை, ஒன்றன்பால்)
 * பசுக்கள் - (பன்மை, பலவின்பால்)
 * வீடு - (ஒருமை, ஒன்றன்பால்)
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 08:31:21 PM
திணை
 
 
வாக்கியங்களை அமைக்கும் போது அவற்றில் உள்ள எழுவாய்ச் சொற்களும் பயனிலைச் சொற்களும் திணை, பால், எண், இடம் என்பனவற்றின் இயைபை கொண்டிருத்தல் வேண்டும்.அவ்வாறு அமையும் போதுதான் அவ்வாக்கியம் கருத்துத் தெளிவு உடையதாக அமையும்.
 
 
 
திணை
 
திணை என்பது பிரிவைக் குறிக்கும்.தமிழிலே திணை இரன்டு வகைப்படும். அவை:
 
· உயர்திணை ,

· அஃறிணை.
 
 
 
உயர்திணை
 
உயர்திணை என்பது பகுத்தறிவு உள்ள உயிரினங்களைக் குறிப்பது ஆகும். அதாவது உயர்திணை என்பது மனிதர்களைக் குறிக்கும்.

 
 
உயர்திணை உதாரணம்:
 

ஆசிரியர்,மாணவர்,அரசன் முதலியன
 
 
 
அஃறிணை
 
அஃறிணை என்பது தமிழ் இலக்கணத்தில் பகுத்தறிவில்லாத உயிரினங்களையும் உயிரற்ற பொருட்களையும் வகைப்படுத்தும் சொல்லாகும். இது அல்+திணை என்று பிரிக்கப்படும்;உயர்திணை அல்லாதது என பொருள்படும்.
 
 
 
அஃறிணை உதாரணம் :
 

மாடு, மரம், கல், முதலியன
Title: Re: தமிழ்
Post by: Global Angel on July 06, 2012, 08:37:04 PM

புணர்ச்சி விதிகள்  


(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/punarsi.jpg)

வாழை மரம்
 
இத்தொடரில் வாழை என்பது நிலையான சொல். இதனை நிலைமொழி என்பர்.மரம் என்பது வந்து சேர்ந்த சொல். இதனை, வருமொழி என்பர். நிலைமொழியும் வருமொழியும் சேரும் பொழுது எவ்வித மாறுபாடும் இல்லாமல் சேருவதை இயல்பு புணர்ச்சி என்பர்.
 
நிலைமொழியும் வருமொழியும் சேரும் பொழுது, ஏதேனும் ஓர் எழுத்துத் தோன்றுதல், இருக்கும் எழுத்துத் திரிதல் அல்லது கெடுதல் ஆகிய மாறுபாடுகள் அடைவதை விகாரப் புணர்ச்சி என்பர்.
 
 
 
வாழைமரம் - இயல்பு புணர்ச்சி
 
வாழைப்பழம் - விகாரப்புணர்ச்சி
 
 
 
இயல்பு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு "இயல்பு புணர்ச்சி" என்ற தொடரே அமையும். இதே போல் விகாரப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக, "விகாரப் புணர்ச்சி" என்பதே அமைதலையும் காண்க.
 
இவ்வாறு தோன்றல், திரிதல், கெடுதல் என்பன யாவும் சில விதிகளின் படியே அமையும். அவ்விதிகளைப் புணர்ச்சி விதிகள் என்பர்.
 
 
 
பல, சில என்பனவற்றின் புணர்ச்சி
 
பல + பல = பலபல
 
சில + சில = சிலசில
 
 
 
இவை இயல்பாகப் புணர்ந்துள்ளன.
 
பல + பல = பலப்பல
 
சில + சில = சிலச்சில
 
 
 
இவை வருமொழி முதலில் உள்ள வல்லின எழுத்து மிக்குப் புணர்ந்துள்ளன.
 
பல + பல = பற்பல
 
சில + சில = சிற்சில
 
 
 
இவற்றில், நிலை மொழியில் ஈற்றில் உள்ள அகரம் கெட்டு, லகரம் றகரமாய்த் திரிந்துள்ளன. இவ்வாறு, பல, சில என்னும் இரு சொற்களும் தமக்கு முன் தாம் வருமாயின் (பல + பல ; சில + சில) இயல்பாகவும், வல்லெழுத்து மிகுந்தும், நிலைமொழி ஈற்றின் அகரம் கெட்டு லகரம் றகரமாகத் திரிந்தும் புணரும். மேலும், பல, சில என்னும் சொற்களின் முன், பிற சொற்கள் வந்தால் நிலைமொழியின் அகரம் கெட்டுப் புணரும் ; கெடாமலும் புணரும் என்பதையும் அறிந்து கொள்க.
 
 
 
இதற்கான சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு :
 
பல + கலை = பலகலை ; பல்கலை
 
பல + சாலை = பலசாலை ; பல்சாலை
 
பல + தொடை= பலதொடை ; பஃதொடை
 
பல + மலர் = பலமலர் ; பன்மலர்
 
பல + நாடு = பலநாடு ; பன்னாடு
 
பல + வேண்டி = பலவேண்டி; பல்வேண்டி
 
பல + அரண் = பலஅரண் ; பல்லரண்
 
சில + சொல் = சிலசொல் ; சில்சொல்
 
சில + மலர் = சிலமலர் ; சின்மலர்
 
சில + வளை = சிலவளை ; சில்வளை
 
சில + அணி = சிலவணி ; சில்லணி
 
 
 
இதற்கான புணர்ச்சி விதி கூறும் நூற்பா :
 
 
 
பல சில எனும் இவை தம்முன் தாம்வரின்
 இயல்பும், மிகலும், அகரம் ஏக
 லகரம் றகரம் ஆகலும் பிறவரின்
 அகரம் விகற்பம் ஆகலும் உள பிற.
 
- (நன்னூல் நூற்பா - 170)

 
 
(விகற்பம் ஆகல் - ஒரே புணர்ச்சியில் அகரம் கெட்டுப் புணர்தல் ; கெடாது நின்றும் புணர்தல்)
 
 
 
திசைப் பெயர்ப் புணர்ச்சி:
 
வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்பன திசையை உணர்த்தும் பெயர்களாதலால் இவை திசைப் பெயர்கள் ஆகும்.
 
ஒரு திசைப் பெயரோடு மற்றொரு திசைப் பெயரும் (வடக்கு + கிழக்கு = வடகிழக்கு) பிற பெயர்களும் (தெற்கு + நாடு = தென்னாடு) சேருவதைத் திசைப்பெயர்ப் புணர்ச்சி என வழங்குகிறோம்.
 
 
 
திசைப் பெயர்ப் புணர்ச்சிக்கான விதிமுறைகளை இப்பகுதியில் காண்போம்.
 
 
 
வடக்கு + கிழக்கு = வடகிழக்கு
 வடக்கு + மேற்கு = வடமேற்கு
 வடக்கு + வேங்கடம் = வடவேங்கடம்
 குடக்கு + திசை = குடதிசை
 (மேற்கு)
 குணக்கு + திசை = குணதிசை
 (கிழக்கு)
 
இவை நிலைமொழியின் ஈற்றில் உள்ள க் என்னும் மெய்யெழுத்தும், கு என்னும் உயிர்மெய்யெழுத்தும் கெட்டுப் புணர்ந்தன.
 
 
 
தெற்கு + கிழக்கு = தென்கிழக்கு
 தெற்கு + மேற்கு = தென்மேற்கு
 தெற்கு + குமரி = தென்குமரி
 தெற்கு + பாண்டி = தென்பாண்டி
 
இவை, நிலைமொழியீற்றில் உள்ள கு என்னும் உயிர்மெய் கெட்டு, றகர மெய் னகர மெய்யாகத் திரிந்து புணர்ந்தன.
 
 
 
மேற்கு + காற்று = மேல்காற்று
 
மேற்கு + ஊர் = மேலூர்
 
இத்திசைப் பெயர், திசைப் பெயரல்லாத வேறு பெயர்களோடு சேரும் பொழுது, நிலைமொழியிலுள்ள உயிர்மெய்யெழுத்தான கு கெட்டு, றகர மெய், லகர மெய்யாகத் திரிந்து புணர்ந்தன.
 
 
 
கிழக்கு + கடல் = கீழ்கடல்
 
கிழக்கு + நாடு = கீழ்நாடு
 
இத்திசைப் பெயர், பிறவற்றோடு சேரும் பொழுது, நிலை மொழியில் உள்ள ககர ஒற்றும், ஈற்றும் உயிர்மெய்யெழுத்தான குவ்வும், கிழ என்பதில் உள்ள அகரம் கெட்டுக் கீழ் என முதல் எழுத்து நீண்டும் புணர்ந்தன.
 
 
 
மேற்காட்டியவாறு, திசைப் பெயர்கள் புணரும் முறைகளைக் கூறும் நூற்பா பின்வருமாறு :
 
 
 
திசையொடு திசையும் பிறவும் சேரின்
 
நிலையீற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்
 
றகரம் னலவாகத் திரிதலும் ஆம் பிற.
 
- (நன்னூல் நூற்பா - 186)

 
 
மையீற்றுப் பண்புப் பெயர்ப் புணர்ச்சி:
 

நன்மை, தீமை, மென்மை, மேன்மை, வெண்மை, செம்மை போல்வன, மை என்னும் விகுதியைக் கொண்டு முடிந்து பண்பை உணர்த்தும் பெயர்கள். ஆதலால் இவற்றை மையீற்றுப் பண்புப் பெயர்கள் என்பர்.
 
 
 
இதனை அறிய, கீழ்க்காணும் நூற்பாவை அறிந்து கொள்க.
 
செம்மை சிறுமை சேய்மை தீமை
 
வெம்மை புதுமை மென்மை மேன்மை
 
திண்மை உண்மை நுண்மை இவற்றெதிர்
 
இன்னவும் பண்பின் பகாநிலைப் பதமே
 
- (நன்னூல் நூற்பா - 135)

 
 
மேற்காட்டிய மையீற்றுப் பண்புப் பெயர்கள் நிலைமொழியாக நின்று, வருமொழியோடு புணரும் போது அடையும் மாற்றங்களைக் கீழ்வருமாறு அறிந்து கொள்க:
 
 
 
1. நல்லன் = நன்மை + அன்
 வெண்பட்டு = வெண்மை + பட்டு
 வெண்குடை = வெண்மை + குடை
 செம்மலர் = செம்மை + மலர்
 
இவை மை விகுதி மட்டும் கெட்டுப் புணர்ந்தன.
 
 
 
2. பெரியன் = பெருமை + அன்
 சிறியன் = சிறுமை + அன்
 
பண்புப் பகுதிகளின் மை விகுதி கெடுவதோடு, இடையில் உள்ள உகரம் (ரு, று) இகரமாகத் (ரி, றி) திரிந்துள்ளன.
 
 
 
3. மூதூர் = முதுமை + ஊர்
 பாசி = பசுமை + இ
 
முதுமை என்பதன் ஈறு (மை) போய், ஆதி (முதல்) நீண்டு மூதூர் என்று ஆயிற்று.
 பசுமை என்பதில் ஈறு போய் ஆதி நீண்டு பாசி என ஆயிற்று.
 
 
 
4. பைங்கொடி = பசுமை + கொடி
 பைந்தார் = பசுமை + தார்
 
இவற்றுள் பசுமை என்பதன் ஈறு போய் முதல் நின்ற அகரம் (ப) ஐகாரமாய்த் திரிந்து (பை) வருமொழியின் முதல் எழுத்து இனவெழுத்தாய் (ங், ந்) மெய் மிகுந்து புணர்ந்துள்ளன.
 
 
 
5. சிற்றூர் = சிறுமை + ஊர்
 வெற்றிலை = வெறுமை + இலை
 
இவற்றின் ஈறு போய் (மை) நடுவில் உள்ள ஒற்று இரட்டித்துப் புணர்ந்துள்ளன.
 
 
 
6. வெவ்வேல் = வெம்மை + வேல்
 வெந்நீர் = வெம்மை + நீர்
 
இவற்றில், வெம்மை என்பதன் ஈறு (மை) போய், முன் ஒற்றாகிய மகர வொற்று வகர ஒற்றாகவும், ‘ந’கர ஒற்றாகவும் (வ், ந்) திரிந்து முடிந்தன.
 
 
 
7. செங்கோல் = செம்மை + கோல்
 செந்தமிழ் = செம்மை + தமிழ்
 
இவற்றில், செம்மை என்பதன் ஈறு (மை) போய், வருமொழி முதல் எழுத்துக்கு இனவெழுத்துகளான (ங், ந்) என்பன மிக்குப் புணர்ந்துள்ளன.
 
 
 
மேற்காட்டிய, மையீற்றுப் பண்புப் பெயர்கள் புணர்ச்சியில் அடையும் மாற்றங்களைக் கீழ்க்காணும் நூற்பா விளக்குகின்றது.



ஈறுபோதல் ; இடை உகரம் இய்யாதல் ;
 
ஆதி நீடல் ; அடியகரம் ஐஆதல் ;
 
தன்னொற்று இரட்டல் ; முன்னின்ற மெய் திரிதல் ;
 
இனம்மிகல் இனையவும் பண்பிற்கு இயல்பே.
 
-                                               (நன்னூல் நூற்பா - 136)
 
 
 
மேற்காட்டிய நூற்பாவின் அடிப்படையில் கீழ்க்காணும் முறையில், மையீற்றுப் பண்புப் பெயர்ப் புணர்ச்சியை மீண்டும் நினைவு கூர்க.
 
 
 
விதி எடுத்துக்காட்டு
 
1. ஈறு போதல் - வெண்மை + குடை = வெண்குடை
 
2. இடை உகரம் இய்யாதல் - பெருமை + அன் = பெரியன்
 
3. ஆதி நீடல் - பெருமை + ஊர் = பேரூர்
 
4. அடியகரம் ஐ ஆதல் - பசுமை + பொழில்= பைம்பொழில்
 
5. தன்னொற்று இரட்டல் - சிறுமை + ஊர் = சிற்றூர்
 
6. முன்னின்ற மெய் திரிதல் - வெம்மை + நீர் = வெந்நீர்
 
7. இனம் மிகல் - செம்மை + தமிழ் = செந்தமிழ்
 
 
 
உடலும் உயிரும்:
 
 
 
தமிழ் + ஆசிரியர் = தமிழாசிரியர்
 
கடவுள் + அருள் = கடவுளருள்
 
பொருள் + அனைத்தும் = பொருளனைத்தும்
 
 
 
நிலைமொழியின் ஈற்றெழுத்து மெய்யெழுத்தாக இருந்து, வருமொழியின் முதல் எழுத்து உயிரெழுத்தாகவும் இருந்தால் அவை தாமே ஒன்று சேர்ந்து விடும்.
 
 
 
இதற்குரிய விதி,
 
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
 
-(நன்னூல் நூற்பா - 204)
 
பூப்பெயர்ப் புணர்ச்சி
 
பூ + கொடி = பூங்கொடி
 
பூ + சோலை = பூஞ்சோலை
 
பூ + தோட்டம் = பூந்தோட்டம்
 
பூ + பாவை = பூம்பாவை
 
 
 
பூ என்னும் சொல் நிலைமொழியாக இருந்து, வருமொழி முதலில் வல்லினம் வந்தால், அதற்கு இனமான மெல்லெழுத்து மிக்குப் புணரும்.
 
 
 
இதற்குரிய விதி,
 
பூப்பெயர் முன் இனமென்மையும் தோன்றும்
 
- (நன்னூல் நூற்பா - 200)
 
மென்மையும் - என்ற உம்மையால், அதே வல்லெழுத்து வந்து புணரும்.
 
(பூ + கொடி = பூங்கொடி ; பூ + கொடி = பூக்கொடி
 
பூ + கூடை = பூக்கூடை)
 
 
 
தேங்காய் - புணர்ச்சி:
 
தேங்காய் - இச்சொல்லின் பகுதி என்ன தெரியுமா ‘தெங்கு’  (தென்னை) என்பதாகும்.
 
தெங்கு + காய் = தேங்காய்
 
‘தெங்கு’ என்பது தேங்கு என நீண்டு, ஈற்றிலுள்ள ‘கு’ என்னும் உயிர்மெய்யெழுத்துக் கெட்டு, தேங்காய் என ஆனது.
 
 
 
இதற்குரிய விதி,
 
தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய்வரின்

என்பதாகும்.
 
தனிக்குறில் முன் ஒற்று
 
கண் + ஒளி = கண்ணொளி
 
பண் + ஓசை = பண்ணோசை
 
மண் + ஓசை = மண்ணோசை
 
 
 
இவ்வாறு, நிலைமொழியில் தனிக்குற்றெழுத்தின் முன் மெய்வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், நிலைமொழி இறுதியில் உள்ள மெய்யெழுத்து இரட்டித்துப் புணரும்.
 

(கண்ண்+ ஒளி = கண்ணொளி)
 
இதற்குரிய விதி,
 
 
 
தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்
 
 
 
என்பதாகும்.
 
 
 
உடம்படுமெய்
 
 
 
மணி + அடித்தது = மணியடித்தது.     (இ)
 
தீ + எரிந்தது = தீயெரிந்தது (ஈ)
 
வாழை + இலை = வாழையிலை (ஐ)
 
நிலா + அழகு = நிலாவழகு (வ)
 
சே + அழகு = சேயழகு ; சேவழகு (ய,வ)
 
 
 
நிலைமொழியில் இகர, ஈகார, ஐகார ஈறுகள் வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், இடையில் (ய்) யகர உடம்படுமெய் தோன்றும். பிற உயிர்கள் இருப்பின் (வ்) வகர உடம்படுமெய் தோன்றும். ஏகாரம் இருப்பிய் யகரம் வகரம் ஆகிய இரண்டு
 உடம்படுமெய்களும் தோன்றும்.
 
 
 
உடம்படுமெய் விதியாவது,
 
 
 
இ, ஈ ஐ வழி யவ்வும் ஏனை
 
உயிர்வழி வவ்வும் ஏ முன் இவ்விருமையும்
 
உயிர்வரின் உடம்படுமெய் யென்றாகும்.
 
 
 
உடம்படுமெய் ஒரு விளக்கம் :
 

இரண்டு சொற்கள் புணரும் பொழுது, நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் உயிரெழுத்துகளாக இருப்பின் அவ்விரு சொற்களும் ஒன்றுபடாது விட்டிசைக்கும். அவை சேர்ந்திசைக்க வேண்டி, உடம்படாத அவ்விரண்டும் உடம்படுதற்கு (ஒன்று சேர்வதற்கு) அவற்றின் இடையே யகரமும், வகரமும் தோன்றும். இவ்வாறு, ஒன்றுபடுத்தற்காக வரும் மெய்களை உடம்படுமெய் என்பர்” என்பதறிக.
 
 
 
வல்லினம் மிகும் இடங்களும் மிகா விடங்களும்:
 
தமிழில் சொற்களையும் சொற்றொடர்களையும் எழுதும் பொழுது கருத்திற் கொள்ள வேண்டுவன பற்றிச் சிறிது காண்போம்.எழுதும் பொழுது, சில இடங்களில் வல்லெழுத்துகள் (க், ச், த், ப்) மிக்கு வரும் ; சில இடங்களில் மிகாமல் வரும். மிக்கு வர வேண்டிய இடங்களில் அவற்றை எழுதாமலும், மிகா
 இடங்களில் அவற்றை எழுதியும் விடுவதால் பிழை தோன்றும் ; மொழி மரபும் சிதையும்.
 
எடுத்துக்காட்டாக, யானைத் தந்தத்தால் செய்த பொம்மையைக் குறிப்பிடும் பொழுது தந்தப்பொம்மை என்று வல்லினம் மிக்கு எழுத வேண்டும். அவ்வாறு எழுதாமல் தந்த
 பொம்மை (வல்லினம் மிகாமல்) என்று எழுதினால், ‘யாரோ ஒருவர் தந்த பொம்மை’ என்று பொருள் மாற்றம் ஏற்பட்டு விடும்.
 
இது போன்ற பிழை ஏற்படாமல் எழுதிட, வல்லினம் மிகும் இடங்கள், வல்லினம் மிகா இடங்கள் பற்றிய இலக்கண மரபு மாணாக்கருக்குத் தெரிந்திருந்தல் வேண்டும்.
 
அவை பற்றி, பின்வருமுறையில் சில எடுத்துக்காட்டுகளுடன் அறிந்து கொள்க.
 
 
 
வல்லின எழுத்துகள் மிகும் இடங்கள்
 
1. அந்த, இந்த - முதலான சுட்டுத் திரிபுகளுக்குப் பின் வரும் வல்லினம் மிகும்.
 
அந்த + பையன் = அந்தப்பையன்
 
இந்த + பெட்டி = இந்தப்பெட்டி
 
 
 
2. அத்துணை, இத்துணை, எத்துணை என்னுஞ் சொற்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்.
 
அத்துணை + புகழ் = அத்துணைப் புகழ்
 
இத்துணை + செழுமை = இத்துணைச் செழுமை
 
எத்துணை + கொடுமை = எத்துணைக்கொடுமை
 
 
 
3. அவ்வகை, இவ்வகை, எவ்வகை என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்.
 
அவ்வகை + காடு = அவ்வகைக்காடு
 
இவ்வகை + தோப்பு = இவ்வகைத்தோப்பு
 
எவ்வகை + பெயர் = எவ்வகைப்பெயர்
 
 
 
4. மற்ற, மற்று, மற்றை - என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்.
 
மற்ற + கலைகள் = மற்றக்கலைகள்
 
மற்று + சிலை = மற்றுச்சிலை
 
மற்றை + பயன் = மற்றைப்பயன்
 
 
 
5. “இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.
 
மோர் + குடம் = மோர்க்குடம்
 
மலர் + கூந்தல் = மலர்க்கூந்தல்
 
தயிர் + பானை = தயிர்ப்பானை
 
தண்ணீர் + தொட்டி = தண்ணீர்த்தொட்டி
 
 
 
6. “மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.
 
மரம் + பெட்டி = மரப்பெட்டி
 
இரும்பு + தூண் = இரும்புத் தூண்
 
தங்கம் + தாலி = தங்கத்தாலி
 
 
 
7. “நான்காம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.
 
குடை + கம்பி = குடைக்கம்பி
 
சட்டை + துணி = சட்டைத்துணி
 
 
 
8. “ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.
 
அடுப்பு + புகை = அடுப்புப்புகை
 
விழி + புனல் = விழிப்புனல்
 
 
 
9. “பண்புத் தொகையில்’ வரும் வல்லினம் மிகும்.
 
புது + குடம் = புதுக்குடம்
 
வட்டம் + பலகை = வட்டப்பலகை
 
பொய் + செய்தி = பொய்ச்செய்தி
 
 
 
10. ‘இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில்’ வல்லினம் மிகும்.
 
வேழம் + கரும்பு = வேழக்கரும்பு
 
தாமரை + பூ = தாமரைப்பூ
 
மார்கழி + திங்கள் = மார்கழித்திங்கள்
 
 
 
11. ‘உவமைத் தொகையில்’ வரும் வல்லினம் மிகும்.
 
தாமரை + கண்ணன் = தாமரைக்கண்ணன்
 
பவளம் + செவ்வாய் = பவளச்செவ்வாய்
 
மலை + தோள் = மலைத்தோள்
 
 
 
12. “அரை, பாதி என்னும் எண்ணுப்பெயர்ச் சொற்களின்” பின்வரும் வல்லினம் மிகும்.
 
அரை + காணி = அரைக்காணி
 
அரை + படி = அரைப்படி
 
பாதி + பங்கு = பாதிப்பங்கு
 
அரை + தொட்டி = அரைத்தொட்டி
 
பாதி + செலவு = பாதிச்செலவு
 
 
 
13. ‘முற்றிலுகரச் சொற்களின் பின்’ வரும் வல்லினம் மிகும்.
 
திரு + கோவில் = திருக்கோவில்
 
புது + பை = புதுப்பை
 
பொது + சாலை = பொதுச்சாலை
 
 
 
14. “தனிக்குறிலை அடுத்து வரும் ‘ஆ’காரத்தின் பின்வரும் வல்லினம் மிகும்.
 
வினா + குறி = வினாக்குறி
 
பலா + பழம் = பலாப்பழம்
 
 
 
15. ‘ஆய், போய் என்னும் வினை எச்சங்களுக்கப்’ பின்வரும் வல்லினம் மிகும்.
 
கருத்தாய் + கேட்டாள் = கருத்தாய்க்கேட்டாள்
 
அன்பாய் + சொன்னார் = அன்பாய்ச்சொன்னார்
 
போய் + பார் = போய்ப்பார்
 
 
 
16. முன்னர், பின்னர் என்னும் இடைச்சொற்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்.
 
முன்னர் + கண்டோம் = முன்னர்க்கண்டோம்
 
பின்னர் + காண்போம் = பின்னர்க்காண்போம்
 
முன்னர் + செல்க = முன்னர்ச்செல்க
 
பின்னர் + பணிந்தார் = பின்னர்ப்பணிந்தார்
 
 
 
17. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வரும் வல்லினம் மிகும்.
 
பட்டு + சேலை = பட்டுச்சேலை
 
பத்து + பாட்டு = பத்துப்பாட்டு
 
 
 
வல்லின எழுத்துகள் மிகா இடங்கள்
 
வல்லின எழுத்துகளாகிய க், ச், த், ப் என்பன மிகா இடங்கள் எவை என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் காண்போம்.
 
 
 
1. ‘அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு’ - என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகாது.
 
அவ்வளவு + பெரிது = அவ்வளவுபெரிது
 
இவ்வளவு + கனிவா = இவ்வளவு கனிவா?
 
எவ்வளவு + தொலைவு = எவ்வளவு தொலைவு?
 
 
 
2. ‘அத்தனை, இத்தனை, எத்தனை’ - என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகாது.
 
அத்தனை + புத்தகங்களா = அத்தனை புத்தகங்களா?
 
இத்தனை + தொழில்களா = இத்தனை தொழில்களா?
 
எத்தனை + கருவிகள் = எத்தனை கருவிகள்?
 
 
 
3. வினாப் பொருள் உணர்த்தும் ஆ, ஓ, ஏ என்னும் வினா எழுத்துகளின் பின்வரும் வல்லினம் மிகாது.
 
அவனா + கேட்டான் = அவனா கேட்டான்?
 
அவளா + சொன்னாள் = அவளா சொன்னாள்?
 
யாரே + கண்டார் = யாரே கண்டார்?
 
 
 
4. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள் தவிர, மற்றப் பெயரெச்சங்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகாது.
 
பெரிய + பெண் = பெரிய பெண்
 
கற்ற + சிறுவன் = கற்ற சிறுவன்
 
நில்லாத + செல்வம் = நில்லாத செல்வம்
 
அழியாத + கல்வி = அழியாத கல்வி
 
 
 
5. ‘எட்டு, பத்து’ ஆகியவை தவிர மற்ற எண்ணுப்பெயர்களின் பின்வரும் வல்லினம் மிகாது.
 
ஒன்று + கேள் = ஒன்று கேள்
 
ஒரு + பொருள் = ஒரு பொருள்
 
இரண்டு + புத்தகம் = இரண்டு புத்தகம்
 
இரு + பறவை = இரு பறவை
 
மூன்று + குறிக்கோள் = மூன்று குறிக்கோள்
 
நான்கு + பேர் = நான்கு பேர்
 
ஐந்து + கதைகள் = ஐந்து கதைகள்
 
ஆறு + கோவில் = ஆறு கோவில்
 
அறு (ஆறு)     + சீர் = அறுசீர்
 
ஏழு + சான்றுகள் = ஏழு சான்றுகள்
 
ஏழு + பிறப்பு = எழு பிறப்பு
 
ஒன்பது + சுவைகள் = ஒன்பது சுவைகள்
 
 
 
6. ‘இரட்டைக் கிளவியிலும், அடுக்குத் தொடரிலும்’ வல்லினம் மிகாது.
 கல + கல = கலகல
சட + சட = சடசட - இரட்டைக் கிளவிகள்
 

பள + பள = பளபள

தீ + தீ = தீதீ
பார் + பார் = பார்பார் !  - அடுக்குத்தொடர்கள்
 


7. வியங்கோள் வினைமுற்றுகளின் பின் வல்லினம் மிகாது.
 
கற்க + கசடற = கற்க கசடற
 
வெல்க + தமிழ் = வெல்க தமிழ்
 
வீழ்க + தண்புனல் = வீழ்க தண்புனல்
 
 
 
8. ‘அஃறிணைப் பன்மை’ முன்வரும் வல்லினம் மிகாது.
 
பல + பசு = பல பசு
 
சில + கலை = சில கலை
 
அவை + தவித்தன = அவை தவித்தன
 
 
 
9. ‘ஏவல் வினை’ முன் வரும் வல்லினம் மிகாது.
 
வா + கலையரசி = வா கலையரசி
 
எழு + தம்பி = எழு தம்பி
 
போ + செல்வி = போ செல்வி
 
பார் + பொண்ணே = பார் பெண்ணே !
 
 
 
10. ‘மூன்றாம் வேற்றுமை உருபுகளாகிய ஒடு, ஓடு’ ஆகியவற்றின் பின் வல்லினம் மிகாது.
 
கோவலனொடு + கண்ணகி வந்தாள் = கோவனொடு கண்ணகி வந்தாள்.
 
துணிவோடு + செல்க = துணிவோடு செல்க.
 
அண்ணனோடு + தங்கை வந்தாள் = அண்ணனோடு தங்கை வந்தாள்.
 
 
 
11. ‘செய்யிய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின் வரும் வல்லினம் மிகாது.
 
காணிய + சென்றேன் = காணிய சென்றேன்
 
உண்ணிய + சென்றாள் = உண்ணிய சென்றாள்
 
12. “பொதுப் பெயர், உயர்திணைப் பெயர்களுக்குப்” பின்வரும் வல்லினம் மிகாது.
 
தாய் + கண்டாள் = தாய் கண்டாள்.
 
கண்ணகி + சீறினாள் = கண்ணகி சீறினாள்.
 
13. ‘ஐந்தாம் வேற்றுமையின் சொல் உருபுகளான இருந்து, நின்று’ என்பவைகளின் பின் வரும் வல்லினம் மிகாது.
 
மாடியிலிருந்து + கண்டேன் = மாடியிலிருந்து கண்டேன்.
 
மரத்திலிருந்து + பறித்தேன் = மரத்திலிருந்து பறித்தேன்.
 
மலையினின்று + சரிந்தது = மலையினின்று சரிந்தது.
 
 
 
14. “வினைத் தொகையில்” வல்லினம் மிகாது.
 
விரி + சுடர் = விரிசுடர்
 
பாய் + புலி = பாய்புலி
 
 
 
15. “உம்மைத் தொகையில்” வல்லினம் மிகாது.
 
காய் + கனி = காய்கனி
 
தாய் + தந்தை = தாய்தந்தை
 
 
 
16. ‘அது, இது’ என்னும் சட்டுகளின் பின் வல்லினம் மிகாது.
 
அது + பறந்தது = அது பறந்தது.
 
இது + கடித்தது = இது கடித்தது.
 
 
 
17. எது, யாது என்னும் வினாச்சொற்களின் பின் வல்லினம் மிகாது.
 
எது + பறந்தது = எது பறந்தது?
 
யாது + தந்தார் = யாது தந்தார்?
 
 
 
18. ‘விளித் தொடரில்’ வல்லினம் மிகாது.
 
கண்ணா + பாடு = கண்ணா பாடு.
 
அண்ணா + கேள் = அண்ணா கேள் !
 
 
 
19. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் ‘கள், தல்’ என்னும் விகுதிகள் வரும் பொழுது வல்லினம் மிகாது.
 
எழுத்து + கள் = எழுத்துகள்
 
கருத்து + கள் = கருத்துகள்
 
வாழ்த்து + கள் = வாழ்த்துகள்
 
போற்று + தல் = போற்றுதல்
 
நொறுக்கு + தல் = நொறுக்குதல்
 
 
 
20. ‘இரண்டு வட சொற்கள்’ சேரும் பொழுது வல்லினம் மிகாது.
 
கோஷ்டி + கானம் = கோஷ்டி கானம்
 
சங்கீத + சபா = சங்கீத சபா