Author Topic: கிரிக்கெட்(ட) மோகம்!  (Read 2998 times)

Offline Yousuf

கிரிக்கெட்(ட) மோகம்!
« on: November 25, 2011, 08:42:58 AM »
பதினோரு முட்டாள்கள் விளையாடுவதைப் பலகோடி முட்டாள்கள் பார்க்கின்றார்கள் என்று மேல்நாட்டு அறிஞர் பெர்னாட்ஷா கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி கூறினார். அவர் இவ்வாறாக கூறிய அன்றையதினத்தில் இந்த "கிரிக்கெட்" என்ற விளையாட்டு இந்த அளவுக்கு பரிணாம வளர்ச்சியை அடந்திருக்கவில்லை. இவ்வளவு வெறித்தனமான ரசிகர்களையும் பெற்றிருக்கவில்லை.

அவர் கூற்றை அப்படியே உண்மையாக்குவது போல் இன்றைய கிரிக்கெட் என்னும் இந்த பிசாசு பெரும் பண முதலைகளின் கைகளிலும்,பன்னாட்டு விளம்பர கம்பெனிகளின் கைகளிலும் லாவகமாக உட்கார்ந்துகொண்டு பார்ப்பவர்கள் அனைவரையும் ஒரு வேலையையும் செய்ய விடாமல்,சிந்திக்க விடாமல் முட்டாளாக்கிகொண்டு இருக்கிறது.

கிரிக்கெட் என்ற விளையாட்டு எப்படி தோன்றியது, எப்படி வளர்ந்தது, எப்படி நிமிர்ந்தது, எப்படி நடந்தது, எப்படி அழகாய் அமர்ந்தது, ஜோதியாய் ஜொலிக்கிறது என வரலாற்று ஆதாரங்கள் எத்தனையோ உங்களால் கொடுக்க முடியும்.

ஆனால், ஒரு சில வெள்ளைக்கார வாலிபர்களுக்கு இளவேனிற்காலத்தில் வெய்யிலின் கதகதப்பில் நாள் முழுதும் நின்று, தங்களது தோல் நிறத்தை மாற்றி மெருகேற்ற தேவைப்பட்ட பொழுதுபோக்கின் பரிணாம வளர்ச்சிதான் இந்த கிரிக்கெட் விளையாட்டு என்பதுதான் உண்மை.

இந்த உண்மை இன்றைக்கு உள்ள கோடனுக்கோடி கிரிக்கெட் ரசிகர்களில் சில ஆயிரம் பேருக்குத்தான் தெரியும் என்பதும் ஒரு வருத்தமான உண்மைதான்..

கோல்ஃப் விளையாட்டும் அப்படிப்பட்ட விளையாட்டுதான்.வெறும் பொழுது போக்குக்காகவும், உடற்பயிற்சிக்காகவும் ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டுகளில் ..இந்த கிரிக்கெட் என்ற விளையாட்டு மட்டும் முழுக்க முழுக்க பணத்துக்காகவும்,விளம்பரங்களுக்காகவும் விளையாடப்படும் விளையாட்டாக மாறிவிட்டது.

ஒரு குறுகிய காலத்திற்குள், எல்லா நல்ல விளையாட்டுகளையும் பின்தள்ளி விட்டு, கிரிக்கெட் மாத்திரம் எப்படி இவ்வளவு தூரம் ஒவ்வொரு மனிதனையும்[இந்தியனையும்] ஆக்கிரமித்திருக்கிறது என்பது ஒரு பக்கம் விந்தையாக தோன்றினாலும், இந்த ஆளுமைக்குப் பின் இருக்கும் உலகளாவிய தில்லாலங்கடி வேலைகள் நம்மை மலைக்க வைக்கின்றன.

முக்கியமாக தொலைக்காட்சி என்னும் ஊடகம் இந்த விளையாட்டை வளர்த்தெடுத்து நிலை நிறுத்தியதில் முக்கிய பங்காற்றுகிறது. கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து, கூடைப்பந்து, நீச்சல் போன்ற விளையாட்டுகளை விட்டுவிட்டு இந்த கிரிக்கெட்டை மட்டும் ஆதரிக்க காரணம்தான் என்ன? வேறு என்ன...விளம்பரம்....அதன் மூலம் கிடைக்கும் மித மிஞ்சிய பணம்தான்.

உதாரணத்திற்கு கால்பந்து போட்டியை எடுத்துக்கொள்வோம்...கால்பந்தில் போட்டி ஆரம்பிக்கும் நொடி முதல் 45 நிமிடங்களுக்கு கேமராவை வேறு எங்கும் திருப்ப முடியாது, பந்து போகும் இடங்களையும், ஆட்டக் காரர்களின் கால்களின் லாவகத்தையும் மட்டுமே காட்ட வேண்டியிருக்கும். ஹாக்கியும், கைப்பந்தும், கூடைப் பந்தும் கூட இப்படித்தான், ஆட்டத்தின் துவக்கத்திலிருந்து இறுதி வரை விளையாட்டைத்தவிர வேறு எதையுமே தொலைக் காட்சியில் காட்ட முடியாது. ஆனால் கிரிக்கெட் அப்படியல்ல, ஒரு ஓவருக்கும் இன்னொரு ஓவருக்குமான இடைவெளியில் குறைந்த பட்சம் மூன்று விளம்பரங்களை காட்டலாம். அந்த ஓவரில் பேட்ஸ்மேன் அவுட் ஆனால் அவர் பெவிலியன் சென்று அடுத்த ஆட்டக்காரர் உள்ளே வருவதற்குள் மேலும் 3 விளம்பரங்களை காட்ட முடியும்.

தொலைக்காட்சியின் கணக்குப் படி பார்த்தீர்களானால், ஒவ்வொரு ஐந்து அல்லது ஆறு நிமிடத்திற்கொருமுறை, குறைந்த பட்சம் இரண்டு நிமிடங்கள் விளம்பரங்களுக்கான நேரம் கிடைக்கும். இதில் ஆட்டக்காரருக்கு அதிகம் வியர்த்து வடிந்தால், அவர் தண்ணீர் குடித்தால், அவரது பேண்ட் கிழிந்தால், அவருக்கு கால் வலித்தால், தும்மல் வந்தால், பந்து பழையதானால் என எத்தனையோ காரணங்களுக்காக முழு ஆட்டத்தையும் நிறுத்தி விட்டு, விளம்பரம் காண்பிக்க முடியும்.

அவர் நான்கு ரன்களோ, ஆறு ரன்னோ அடித்தால், பந்து பவுண்டரி லைனை தொட்டால் அந்த கோட்டில் கூட ஒரு விளம்பரம், விளம்பரத் தட்டிகள் வைத்து இந்த தட்டியின் மீது அடித்தால் இத்தனை ரூபாய் என சொல்ல முடியும். ஸ்டம்பில் படும் பந்தை காண்பித்தால் ஸ்டம்பிலும் விளம்பரம், பேட்ஸ்மேனின் பேட்டில், அவரது சட்டையில் என திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரப்படுத்த முடியும். ஆனால் கால்பந்திலே 45 நிமிடங்களுக்கு விளையாட்டைத்தவிர தவிர வேறு எதுவும் காட்ட முடியாது என்பதாலேயே, எந்த தொலைக்காட்சியும் அந்த விளையாட்டுகளில் விருப்பம் கொள்வதில்லை.

மேலும் கால்பந்தாகட்டும், மற்ற விளையாட்டுகளாகட்டும், வெறும் ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரங்களில் முடிந்து விடும்.சில சமயங்களில் மேலும் கொஞ்சம் அதிகரிக்கலாம். எவ்வளவு நேரம் ஆனாலும் விளம்பரங்கள் அதிகம் காட்ட முடியாது..ஆட்டம் ஆரம்பிக்கும் முன் காட்டலாம்..இடைவேளயில் காட்டலாம்..முடிந்தபின் கொஞ்சம் விளம்பரங்கள் வரும்..அவ்வளவுதான்... ஆனால் கிரிக்கெட்டில் அப்படியல்ல, ஒவ்வொரு 7 நிமிடத்திற்கொரு முறையும், தொடர்ந்து 8 லிருந்து 9 மணி நேரம் வரை விளம்பரம் செய்ய முடியும். அப்படியானால் இந்த விளம்பர வருமானத்தை கணக்கெடுத்துப் பாருங்கள்.

இந்த விளம்பர உத்தியை சரியாக பயன் படுத்திக் கொண்ட விளம்பரதாரர்கள், தொலைக்காட்சி நிறுவனத்தார்களை மொய்த்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். இதில் வரும் பிரம்மாண்ட வருமானத்தின் வண்ணக் கனவுகள், தொலைக்காட்சி நிறுவனங்களை கிரிக்கெட் விளையாட்டை மட்டும் காதலிக்க நிர்பந்தித்தது.இவர்களின் மொத்த குறியே கிரிக்கெட் வாரியங்கள்தான்.கிரிக்கெட் வாரியம் ஒரு பணம் காய்க்கும் மரமாகிப் போனதை விளம்பரதாரர்கள் மிக சரியாக உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்..

இந்தியாவில் ஜக்மோகன் டால்மியாக்களும், சரத்பவாரும் வாரியத்தலைவர் பதவிக்கென குடுமிபிடி சண்டை போட காரணம், இந்த விளையாட்டில் விளம்பரங்கள் மூலமாக வரும் அளவிட முடியா பணம் மாத்திரமே. ஆக வாரியமும் வீரர்களை அதிக போட்டிகளில் விளையாட நிர்பந்திக்கிறார்கள். அதிக போட்டிகள் – அதிக விளம்பரம் – வீரர்களுக்கு அதிக சம்பளம் – வாரியத்துக்கு அதிக பணம் என எனக்கு உனக்கு என அனைவரும் அள்ள ஆரம்பித்தனர். இன்னமும் அள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த களேபரத்தில், ஐரோப்பிய கால்பந்தாட்ட வீரர்களுக்கு சற்றும் குறைவில்லாத திறமை கொண்டிருந்த கேரள போலீஸ்காரரான விஜயனாகட்டும், கண்ணிமைக்கும் நேரத்தில் பந்தை பல மட்டைகளுக்கு நடுவிலிருந்து அன்னப் பறவை பாலைப் பிரித்தெடுக்கும் லாவகத்துடன் பிரித்தெடுத்து, கோல் அடிக்கும் தன்ராஜ் பிள்ளையாகட்டும், புள்ளிமானாய் துள்ளி ஓடி ஹாக்கியில் முன் வரிசை ஆட்டக்காரராக இருந்த பர்கத் சிங் ஆகட்டும் இந்த திருவிழா கூட்டத்தில் சந்தடியில்லாமல் காணாமல் போய்விட்டார்கள். ஏனெனில் அவர்கள் விளையாடிய அருமையான விளையாட்டுகளை நேசிக்க விளம்பரதாரர்கள் யாருமில்லை.சுருங்க சொன்னால் அவர்களால் இந்த பணம் ஒன்றே குறிக்கோளாக கொண்ட விளம்பரதாரர்களுக்கு எந்த லாபமும் இல்லை.

கிரிக்கெட் வருமானத்தின் இன்னொரு பரிணாம வளர்ச்சியாக, ஐ.பி.எல்., என்ற அமைப்பு துவக்கப்பட்டு, பல ஆயிரம் கோடிகளை குவித்து வருகிறது. ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள். மாணவர்களுக்கு இறுதித் தேர்வு நடக்கும் சமயம். இரவு 12 மணி வரை, மாணவர்களை "டிவி' முன் உட்கார வைத்து ஐ.பி.எல்., சம்பாதிப்பதால், மாணவர்களது படிப்பு கடுமையாக பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

அதுமட்டுமா? ஐ.பி.எல்., அமைப்பில் மேலும் இரண்டு அணிகளை சேர்க்கத் திட்டமிட்டுள்ளனர். அதன் மூலம், அடுத்த ஆண்டு 90க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்படுமாம். இந்த அணியை வாங்க, குறைந்தபட்ச கேட்புத் தொகை 1,100 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல், ஏலம் கேட்டு அணியை வாங்க வேண்டும். ஓர் அணிக்கு 1,100 கோடி ரூபாய் என்றால், மொத்தமுள்ள 10 அணிகள் மூலம் எவ்வளவு சம்பாதித்திருக்கும் இந்த ஐ.பி.எல்.,? இந்த சம்பாத்தியத்தின் மூலம் மக்களுக்கு அல்லது ரசிகர்களுக்கு கிடைத்தது ஒன்றுமில்லை.

வரும் காலத்தில் விளம்பரங்களுக்கு வளைந்து கொடுக்கும் வண்ணமாக இந்த பணம் காய்க்கும் விளையாட்டுக்கு புதிய பரிமாணங்கள் கொடுக்கப்படும். இப்பொழுது T 20 என்ற புதிய வடிவம் எல்லோரையும் கவர்ந்து வருகிறது. இனி வரும் காலங்களில் இதையும் சுருக்கியோ, நீட்டியோ வேறொரு வடிவம் தரப்படலாம். மிக சமீபத்தில் நடந்து முடிந்த‌ ஹாக்கி உலகக் கோப்பையாகட்டும், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளாகட்டும், இந்தியாவுக்கு சர்வதேச விளையாட்டு அரங்கில் ஒரு முக்கியத்துவம் தர சகல தகுதிகளையும் கொண்ட இந்த போட்டிகளுக்கான விளம்பரங்கள், பண பலம் படைத்த IPL 20 போட்டிகளின் விளம்பரங்களுக்கு முன் நிற்க முடியாமல் தவிடு பொடியாகி விட்டது.

இப்போதுள்ள கிரிக்கெட் வாரியம், அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக் குள் வைத்துக்கொண்டு, தான் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என நினைக்கிறது. வாரியத்தில் உள்ளவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் மிகப் பெரிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் தான். மாநில மற்றும் தேசிய அளவில் கிரிக்கெட் வாரியத்துக்கான உறுப்பினர், தலைவர் தேர்தலின்போது நடக்கும் அடாவடிகள், வாய் பிளக்க வைப்பவை. கை மாறும் கோடிகள், ஆள் பிடிக்கும் குதிரை பேரங்கள், கோர்ட் படியேறும் கூத்துக்கள் என, அத்தனையும் தடாலடி தான். இப்படி பதவியைப் பிடிக்கும் நபர்கள் யாரும், கிரிக்கெட் வாரியம் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள் இல்லை.

அப்படி இருக்கும் போது, கிரிக்கெட் வாரியம் சம்பாதிக்கும் கோடிகளை, நாட்டின் வளர்ச்சிப் பணிக்கு செலவழிக்கலாம் அல்லது ரசிகர் பயனடையும் வகையில், அவர்களிடம் குறைந்த கட்டணம் வசூலித்தல், இலவச பயிற்சிகள், இலவசமாக போட்டிகளை, "டிவி'யில் பார்க்கும் வசதி போன்றவற்றை வழங்கலாம். இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியது, மத்திய, மாநில அரசுகள் தான். வீரர்கள், வாரியம் என, இவர்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் வரியைப் போட்டுத் தாளிக்க வேண்டிய அரசுகள், அவர்களுக்கு வரி விலக்கு அளித்து, சாமானிய மக்களின் வயிற்றில் நெருப்பைக் கொட்டுகின்றன.

இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பெராரி கார், பரிசுப் பொருளாய் கிடைத்தது. வெளிநாட்டு காரை நேரடியாக இறக்குமதி செய்யும்போது, 100 சதவீதம் வரி கட்ட வேண்டும் என்பது விதி. அந்த வகையில், அவர் கட்ட வேண்டிய வரி, ஒரு கோடி ரூபாய். புண்ணியவான் என்ன செய்தார் தெரியுமா? காரே ஓசி; அதற்கான வரியையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என எழுதிக் கேட்டு, வாங்கியும் விட்டார்.

இப்படி வழங்கப்பட்ட கோடிகள், அளிக்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் திரும்பப் பெற்று, நாட்டிலேயே அதிகமான வரியை கிரிக்கெட் வாரியத்துக்கு விதிக்க வேண்டும். அதன் மூலம் வசூலாகும் தொகையை, ஏழை மக்களுக்குப் பயன்படுத்தாவிட்டாலும், கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காவது பயன்படுத்த வேண்டும். அதை விடுத்து, கிரிக்கெட்டைப் பயன்படுத்தி, ஏதோ ஒரு சில தனி நபர்கள் பண முதலைகளாவதை அனுமதிப்பது, மக்களை முட்டாளாக்கும் செயல்.

தென்மாநிலங்களை சுனாமி தாக்கியபோது, கிரிக்கெட் வாரியம் முன்வந்து ஒரு பைசாவாவது செலவிட்டதா? அதேபோல, நாட்டின் பல்வேறு பகுதிகளில் புயல், பூகம்பம் தாக்கியபோதெல்லாம் இந்த கிரிக்கெட் ஹீரோக்களும், வாரியமும் எங்கு இருந்தனர் என்பதே தெரியாது. தமிழகத்தில் சுனாமி தாக்கியபோது, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தான் இங்கு ஓடோடி வந்து, மக்களோடு மக்களாக தங்கியிருந்து, வீடு கட்டித் தர உதவினார். அதே நேரத்தில், இங்குள்ள ஹீரோக்களும், கிரிக்கெட் மூலம் கோடிகளை சம்பாதித்த ஹீரோக்களும் எட்டிப் பார்க்கவில்லை.

மற்ற நாடுகளை காட்டிலும் கிரிக்கெட்டுக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகம்..ரசிகர்கள் என்று சொல்லுவதை விட ஏதும் அறியாத அப்பாவிகள் என்றும் சொல்லலாம். சர்வதேச போட்டிகள் என்ற பெயரில் நடத்தப்படுபவை எல்லாம் ஒரு நன்கு திட்டமிடப்பட்ட நாடகம் என்பது தெரியாமல் அதை உண்மை என்று நம்பும் அப்பாவிகள்..

இந்திய மக்களுக்கும் இந்திய அரசுக்கும் நாம் வைக்கும் வேண்டுகோள் இதுதான். கிரிக்கெட்டிற்குத் தரும் மரியாதை மற்றும் முக்கியத்துவத்தில் கொஞ்சமாவது மற்ற விளையாட்டுகளுக்கும் நாம் தர ஆரம்பிக்கவேண்டும். ஹாக்கி. கால்பந்தாட்டம், தடகளம், நீச்சல் போன்ற துறைகளில் பிரகாசிக்கத் துடிக்கும் இளம் வீரர்கள் பக்கம் தனது பார்வையைத் திருப்பி அவர்களுக்கு வேண்டிய வசதி வாய்ப்புகளை அரசு செய்து தர வேண்டும்.மக்கள் தொகையில் உலகில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நமக்கு எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் ஜொலிக்க முடியாததன் காரணத்தை யோசிக்கவேண்டும். நம்மைவிட சிறிய நாடுகள் மற்ற விளையாட்டில் அதிகம் சாதிப்பதை பார்க்கவேண்டும்.

உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை தேடித்தர கிரிக்கெட் மட்டுமலாமல் மற்ற விளையாட்டு விரர்களுக்கும் திறமை உண்டு என்பதை மக்களும் அரசும் உணர்ந்தால்தான் மற்ற விளையாட்டுகள் நம் நாட்டில் பிரகாசிக்கும். ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் அப்போதுதான் நாம் ஒரு பதக்கமாவது வாங்க முடியும். இதற்கு மாறாக தொடர்ந்து பெரிய பணமுதலைகள் மற்றும் விளம்பரதாரர்களின் கைப்பாவையாகவே இருப்போமானால் இறுதிவரை கிரிக்கெட்டை மட்டுமே தலையில் கட்டிக்கொண்டு நாம் அழவேண்டியதுதான்.

Offline RemO

Re: கிரிக்கெட்(ட) மோகம்!
« Reply #1 on: November 25, 2011, 01:38:38 PM »
எங்கு பணம் ஈட்டலாம் என தான் மனித மனம் தேடுகிறது
விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் பணம் ஈட்ட பயன்படுத்துகிறார்கள்
இதில் ஏமாறுவது மக்களாகிய நாம் தான்

Offline Yousuf

Re: கிரிக்கெட்(ட) மோகம்!
« Reply #2 on: November 25, 2011, 03:30:10 PM »
இந்த விளையாட்டல் குறிப்பாக இளைஞர்கள் தான் அதிகம் ஏமாற்ற படுகிறார்கள்!

மற்ற ஆரோக்கியமான விளையாட்டுகள் புறம் தள்ள படுகிறது!

நன்றி ரெமோ உங்கள் கருத்துக்கு!!!