FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: ஸ்ருதி on September 25, 2011, 01:13:50 PM

Title: தப்பித்தக்கிளி
Post by: ஸ்ருதி on September 25, 2011, 01:13:50 PM
நாட்டமை வீடு..
"ஐயா, எங்களை எல்லாம் தவிக்க விட்டு போய்டீங்களே" தலையில் அடித்து கொண்டு அழுதது பெண்கள் கூட்டம்.

"இனி யாரு ஊரு விஷயங்களை எல்லாம் கவனிப்பது" என்று பெருசுகள் முணு முணுங்கிக் கொண்டு இருக்க பெண்கள் கூட்டத்தில் ஒரு பெண் மட்டும் வாய் பொத்தி அழுதுக் கொண்டு இருந்தாள்.

"ஏம்மா பச்சை புடவை ஒழுங்கா தலையில் அடித்து அழ மாட்டியா இங்க என்ன சிட்டி சப்ஜெக்ட்- ஆ நடக்குது" யாருப்பா இந்த அம்மாவை முன்னுக்கு நிறுத்தி வச்சு இருக்கிறது” “இதுங்களை எல்லாம் யாரு கூட்டிட்டு வந்தது. யோவ் , ஜூனியர் ஆர்டிஸ்ட் மேனேஜர் எங்கைய்யா கூப்பிடு" என்று டைரக்டர் கோவமாய் கத்தத் தொடங்க படப்பிடிப்பு குழுவே அமைதியாய் இருந்தது.

“சார், சார் வந்துட்டேன், இருங்க சார் நான் பார்த்துக்குறேன், நல்ல ஆர்டிஸ்ட் சார் அவங்க, என்ன என்று பார்க்குறேன்” என்று சொல்லி தேவகியை நோக்கி சென்றான் கணேஷ்.

“அக்கா, என்ன ஆச்சு, உடம்புக்கு ஏதும் சுகம் இல்லையா?? நல்ல தானே இருந்த" என்று கேட்க,

"தம்பி ஒரே பதட்டமா இருக்குப்பா. இன்னைக்கு கலைவாணிக்கு பன்னிரெண்டாம் வகுப்பு ரிசல்ட் வருதுப்பா. என் மகள் தனியா என்ன செய்றாளோ தெரியலப்பா அதே சிந்தனையா இருக்கு, இந்த ரிசல்ட்-அ வைத்து தானே அவள் எதிர்காலமே இருக்கு" என்று துடித்து அழுதாள்.

"ஐயோ இதுக்கா கவலைபடுற. உன் பொண்ணு நிறைய மார்க் எடுத்து பாஸ் பண்ணிடும். நீ கவலைபடாதே. நாளைக்கும் ஷூட்டிங் இருக்கு. ஆனால் நீ இருக்க வேண்டாம், நீ இரவு ரயிலுக்கு சென்னைக்கு போய்டு. நான் பார்த்துக்குறேன். நீ நாளைக்கு எனக்கு போன் செய்து சொல்லுவா பாரு உன் பொண்ணு பாஸ் செய்துட்டானு, இந்த ஷார்ட் முடிச்சிட்டு வாக்கா” என்று ஆறுதல் சொல்லி விட்டு நகர்ந்த கணேஷை பார்த்து கண்களால் நன்றி சொல்லிக்கொண்டு இருந்தாள் தேவகி.

ஒரு வழியாய் தலையில் அடித்து ஒப்பாரி வைத்து விட்டு ஷார்ட் முடித்த திருப்தியில் ஹோட்டல் ரூம்க்கு செல்ல தேவகியின் செல்போன் ஒலித்தது..
"ஹலோ" என்று சொல்ல.
"அம்மா நான் தான் கலை பேசுறேன், அம்மா எனக்கு பயமா இருக்கு. நீ எப்போ வருவ. இன்னும் பேப்பர் வரலம்மா. எல்லோரும் இன்டர்நெட்ல போய்ட்டு பார்த்துட்டு பாஸ் ஆகிடோம்னு சந்தோஷமா இருக்காங்கள். எனக்கு அழுகையாய் வருதும்மா. எல்லோர் சொன்னது போல என் நிலைமை ஆகிடுமா" என்று அழுத மகளின் உடைந்த குரலை கேட்டு நொறுங்கி போன தேவகி, கொஞ்சமும் வெளிப்படுத்தாமல்,

“கலை, ஏம்மா பயப்படுற, நிச்சயம் பாஸ் பண்ணிடுவ, நீ நினைத்த மாதிரி பெரியா ஆளா உன்னை நான் ஆக்கி காட்டுவேன். இன்னைக்கு இரவு ரயிலுக்கு டிக்கெட் போட்டு இருக்குமா. காலையில சுவீட்டோட உன்னை வந்து பார்ப்பேன். நீ கவலை படாத" என்று ஆறுதல் சொல்ல,

"சரிம்மா சீக்கிரம் வந்திடு. ரிசல்ட் பார்த்ததும் உனக்கு நான் திரும்ப போன் பண்றேன்" என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டு பயத்தோடு ரிசல்ட்க்காக காத்திருந்தாள் கலைவாணி.

இரவு பயணத்துக்கு தயாரானாள் தேவகி.

“அக்கா இந்தா டிக்கெட், உன் கூட இன்னும் ரெண்டு ஜூனியர் ஆர்டிஸ்டும் வராங்கள். நீ பத்திரம் போய் சேர்த்துட்டு போன் பண்ணு. இந்த உன்னோட சம்பளம் என்று பணத்தை தர.

"நன்றி கணேஷ். நான் போய் சேர்ந்தும் உனக்கு போன் பண்றேன்" என்று புறப்பட்டு வெளியேறினாள். ரயிலில் தன் இருக்கையில் அமர்ந்த தேவகி தன் மகளை பற்றி நினைவு நெஞ்சில் ரணமாய் வலித்தது.

தேவகி காதல் திருமணம் புரிந்து தன் கணவர் குமார் உடன் நன்றாக வாழ்ந்து வந்தாள். குமார் சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்ட் மேனேஜர்-அ வேலை செய்து வந்தான். ஆரம்ப காலத்தில் நல்ல விதமாக இருந்த குமார், கூடாத நண்பர்களுடன் சேர்ந்து குடிபழக்கத்திற்கு ஆளாகினான். தேவகியின் மிகபெரிய நிறையும், சுமையும் அவள் அழகுதான். அழகுதான் ஆபத்து என்று அடிக்கடி நினைப்பாள் தேவகி. குமார் இவளின் அழகுக்காகதான் காதலிக்கத் தொடங்கினான் என்று அவனே பல முறை சொல்லக் கேட்டு கோபம் கொள்வாள். குடியினால் சரியாக வேலைக்கு செல்லாததால் அவனுக்கு பதிலாக கணேஷ் அந்த வேலையை பார்த்து வந்தான். கணேஷ், குமாருக்கு துணையாக இருந்தவன்.

ஒரு கட்டத்தில் குமார் தேவகியிடம் "நீ அழகாத் தானே இருக்க. நீயே இனி எப்டியாவது தொழில் செய்து காசு கொண்டு வா. சினிமாவிற்கு வந்திடு. கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணா உன்னை பெரிய ஆளாகிடுறேன்" என்று சொல்ல

"ச்சே..நீ எல்லாம் புருஷனா..இப்படி என்னை போய் செய்ய சொல்ற. இதுக்கு நான் தூக்கு மாட்டி தொங்கிடுவேன்" என்று அழுவாள்.

ஒரு நாள் குமார் அளவுக்கு மீறி குடித்து மாரடைப்பு வந்து திடீரென்று இறந்து போக வாழ்கையே சூனியமனதாக கதறினாள் தேவகி. மண் குதிரையாய் புருஷன் இருந்தாலும், ஏதோ ஒரு சிறு பாதுகாப்பு என்று நினைப்பாள். இப்போது நட்டாற்றில் இருப்பதை போலவும் வயிற்றில் மூன்று மாத கரு இருப்பதால் செய்வதறியாது துடித்தாள். சொந்தங்களை தேடி போக மனம் இல்லை.

"சினிமாகரனை நம்பி போற. ஒரு நாள் சீரழிந்து தான் வர போற பாரு" என்று சாபம் விட்ட தந்தையின் வாக்கு பலித்து விட்டதே. "நீ எல்லாம் ஒரு அக்காவா. தம்பின்னு என்னை தேடி எப்பவும் வந்திராத. அன்னைக்குதான் உனக்கு கடைசி நாள்" என்று கூறிய தம்பியும் தான் கண் முன் தோன்ற, வாழ்வா சாவா என்ற கேள்வி குறியாய் நிற்கும் போதுதான்

கணேஷ், "அக்கா நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத. நீ இப்போ இருக்க நிலைமையில் வீட்டு வேலையோ, மற்ற வேலையோ செய்ய முடியாது. நீ வா நான் நடிகர் சங்கத்துல உறுப்பினர் அட்டை வாங்கித்தரேன். உனக்கு எந்த ஆபத்தும் வரமால் நான் பார்த்துக்குறேன் அக்கா. எதை பற்றியும் கவலை படாதே. குழந்தை பிறக்கும் வரைக்கும் நடி. அப்புறம் மற்றத பார்த்துக்கலாம். உனக்கு எந்த சூழ்நிலையிலும் எந்த ஆபத்தும் வராம நான் பார்த்துக்குறேன் என்று சொல்ல வேறு வழி தெரியாமல் சரி என்று தனக்கு பிடிக்காத சினிமா துறைக்கு வந்து விட்டாள் தேவகி.

ஜூனியர் நடிகைகள் என்றாலே எந்த அளவுக்கு கேவலமா நினைக்கும் உலகம் இது என்றும், அவர்கள் படும் அவலமும் கண்முன்னே கண்டால் தேவகி.

கணேஷிடம் பலரும் "யாரு அது சூப்பர்-அ இருக்கு".என்று கேட்க "அடேய் அது என் அக்காடா" என்று சண்டையிடுவான்.

கழுகு பார்வைகளுக்கு நடுவில் தனக்கென்று சில வரைமுறைகளோடு நடித்து வந்தாள் தேவகி. தன்னோடு நடிக்கும் சில பெண்கள்
"அக்கா நீ மட்டும் கொஞ்சம் மனசு வெச்ச முதல் வரிசைக்கு போயிறலாம். கும்பல்ல நின்னா ஒரு காசு. முதல் வரிசையில நின்னா ஒரு சம்பளம் அக்கா" என்று சொல்லும் போது
கோவத்தை அடக்கி கொண்டு "நான் குமபலையே இருக்கேன்மா. இதுவே போது எனக்கு" என்று சொல்லி மனதோடு அழுவாள். "அழகே நீ தான் எனக்கு ஆபத்து" என்று அடிக்கடி நினைத்துக்கொள்வாள்.

ஒரு வழியாக கலைவாணியை ஈன்ற பிறகு குழந்தையை கொஞ்ச நாள் கூட இருந்து கவனித்துக் கொண்டு பிறகு ஒரு தனியார் குழந்தைகள் காப்பகத்தில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுவிடுவாள். கலைவாணி பேருக்கு ஏற்றார் போல கலையாக அழகாக இருப்பாள். படிப்பிலும் படு சுட்டி.
கலைவாணி பூபெய்தியவுடன் "தேவகி உங்க வீட்டுல ஒரு ஹீரோயின் உருவாகிட்ட உனக்கு இனி கவலை இல்லை" என்று தன்னுடன் வேலை செய்பவர்கள் சொல்லும் போது எரிமலையாய் வெடிப்பாள்.

"கனவில கூட அந்த நினைப்பு என் பொண்ணுக்கும் இல்லை எனக்கும் இல்லை இனி இப்படி பேசாத" என்று திட்டுவாள்.

ஒரு வழியாக பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்துவிட்டோம் என்று பேரு மூச்சோடு கண்ணயர்ந்தால் தேவகி. அவள் செல்போன் பாட்டரி இல்லாததால் சுவிட்ச் ஆப் ஆகியதை கவனிக்கவில்லை தேவகி.
காலை சென்ட்ரல் வந்ததும் போன் செய்ய எண்ணி செல் போனை பார்க்கும் போது தான் உணர்ந்து கொண்டாள். இரவெல்லாம் மகள் போன் செய்து இருப்பாளே என்று நினைத்து அவசரமாய் ஆட்டோவில் போய் இறங்கினாள்.

"அம்மா" என்று ஓடி வந்து அணைத்துக்கொண்டாள் கலைவாணி..
"அம்மா நான் பாஸ் பண்ணிட்டேன். இங்க பாரு என் பேரு, போட்டோ எல்லாம் பேப்பர்ல. நான் தான் மாநிலத்தில முதல் மார்க். இங்க பத்திரிகை ஆட்கள் எல்லாம் வந்தாங்கள். நீ தான் அம்மா இல்லை" என்று அவள் கொடுத்த பேப்பர் பேட்டியை படிக்கச் சொன்னாள்.

அதில் ஒரு நிருபர் கேட்ட கேள்வி, "நீங்களும் சினிமாவில் தானே நடிக்க போறிங்கள், உங்களுக்கு இலவசமா படிக்க உதவி அரசாங்கம் தரப் போகுது, எப்படியும் சினிமாவில் நடிக்க போகும் உங்களுக்கு அந்த உதவி கிடைத்தால், படிக்கவேண்டும் என்ற ஆசை உள்ள ஒரு ஏழை மாணவ மாணவிக்கு அந்த வாய்ப்பு அநியாயமா கிடைக்காமல் போய்விடும், என்ன செய்ய போறிங்கள்??" என்று கேட்க

யோசித்த கலைவாணி "சினிமா குடும்பத்தில இருக்க எல்லோரும் நடிக்கனும் என்று அவசியம் இருக்கா? விலைமகள் வீட்டில் கூட ஒரு கலைமகள் இருப்பாள். எல்லாவற்றையும் தவறான கோணத்தில் பார்ப்பது பார்பவர்களின் மனதை பொருத்து இருக்கு. நான் நடிக்கணும் என்று நினைத்து இருந்தால் குழந்தை நட்சத்திரமாகவே என் நடிப்புத் தொழில் ஆரம்பித்து இருக்கும். "சிலர் கொடுப்பதை பிறர் கெடுக்காமல்" இருந்தால் போதும். அரசாங்கத்தின் உதவியைப் பெற்று ias படிக்கும் எண்ணம் எனக்கு இருக்கு. என்னை நல்லா படியாக கஷ்டப்பட்டு படிக்கவைத்த என் தாய்க்கு என்னால் பெருமை கிடைக்கும் வகையில் தான் நான் இருப்பேன். நன்றிகள்" என்று அழகாய் பேட்டிக் கொடுத்த தன் மகளின் தெளிவான முடிவுகளை எண்ணிப் பெருமைப்பட்டாள் தேவகி.

பல கழுகுகளுக்கு மத்தியில் ஒரு கிளியை பாதுகாத்த சந்தோஷத்தில் திளைத்தாள் தேவகி.
Title: Re: தப்பித்தக்கிளி
Post by: Global Angel on September 27, 2011, 06:04:05 PM
nalla kathaidi,..... so sweet  :-* :-* :-*

Title: Re: தப்பித்தக்கிளி
Post by: ஸ்ருதி on September 27, 2011, 09:27:50 PM
thanks di...enoda 3rd story ithu :)
Title: Re: தப்பித்தக்கிளி
Post by: Arya on September 28, 2011, 10:14:54 AM
apa first 2 enka DC
Title: Re: தப்பித்தக்கிளி
Post by: ஸ்ருதி on September 29, 2011, 09:34:03 PM
inga potu iruken paruda...Uyir urugum satham endru onu....and other one is Minnuvathellam Ponnalla