FTC Forum

Entertainment => Love & Love Only => Topic started by: RemO on January 14, 2012, 06:25:30 PM

Title: அட்ஜட்ஸ் செய்துக்கொண்டால் அவஸ்தை இல்லை ......
Post by: RemO on January 14, 2012, 06:25:30 PM
வாழ்க்கைத்துணை தேர்ந்தெடுக்கும் போது விழிப்புணர்வுடன் இருந்தால் வாழ்க்கைப் பயணத்தில் எந்த வித இடையூறுகளும் இல்லை. திருமணத்திற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முற்றிலும் தயாரான பின்பே வாழ்க்கைத் துணையைத் தேடுவதற்கு சம்மதிக்க வேண்டும். அப்பொழுதுதான் சரியான நபரை நமக்கானவராக தேர்ந்தெடுக்க முடியும்.

ஒத்துப்போகும் ரசனை

பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமாக இருந்தால், தங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையின் குடும்பப் பின்னணி, வரதட்சணை, அந்தஸ்து ஆகியவை கவனிக்கப்படுகிறது. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி அவர் எப்படிப்பட்டவர், நமக்கு ஏற்ற துணையாக இருப்பாரா என்பதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். அப்படிப்பட்ட வாழ்க்கைதான் இனிமையாக இருக்கும்.

எனவே வரப்போகும் வாழ்க்கைத் துணையிடம் உள்ள குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள், பொழுது போக்குகள் மற்றும் சிந்தனைகள் உங்கள் ரசனையுடன் ஒத்துப்போகுமா என்பதை கவனிக்கவேண்டியது முக்கியம்.

குணத்திற்கு முக்கியத்துவம்
நீங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை முதலில் உங்கள் பெற்றோரிடம் தெரியப்படுத்துங்கள். பெற்றோர் உங்களுக்குப் பிடித்த மாதிரி தேர்ந்தெடுத்தால்தான் உங்கள் வாழ்க்கையில் எந்த மனக் கசப்பும் நேராது. வாழ்க்கையும் இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணை அழகாக இருந்து அவரிடம் நல்ல குணம் இல்லாவிட்டால் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. எனவே அழகை விட குணத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஓட்டெடுப்பு அவசியம் இல்லை
பெற்றோர் அல்லது மற்றவர் நிர்பந்தத்திற்குப் பணிந்து வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். பெண் பார்க்கச் செல்லும்போது நிறைய நண்பர்களை அழைத்துச் சென்று, ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி அவர்களுக்குப் பிடித்தால் தனக்கும் பிடித்த மாதிரி என்ற முடிவு எடுப்பதை விட்டு விடுங்கள். வாழப்போவது நீங்கள். எனவே உங்களுக்குப் பிடித்த மாதிரி தேர்ந்தெடுங்கள்.

விருப்பத்தில் தெளிவு
ஒருவருடைய கல்வி மற்றும் சம்பளம் இரண்டும்தான் தம்பதியரிடையே ஈகோ பிரச்சினை ஏற்படக் காரணமாகிறது. எனவே உங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணை எப்படிப்பட்ட கல்வித் தகுதி உடையவராய் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். உங்களது வாழ்க்கைத் துணை, என்ன வேலை செய்ய வேண்டும், சம்பளம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றிய உங்களது விருப்பங்களில் தெளிவாக இருக்க வேண்டும்.

மனம் விட்டுப் பேசுங்கள்
நீங்கள் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதைத் திருமணத்திற்கு முன்பே உங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையிடம் மனம் விட்டுப் பேசுங்கள். இதனால் திருமணத்திற்குப் பிறகு எந்தக் குழப்பங்களும் ஏற்படாது. நாம் மனம் விட்டுப் பேசுவதில் முக்கியமான விஷயம், நம்மைப் பற்றிய எந்த விஷயத்தையும் மறைத்துவிடாமல் கூறுவது நல்லது.

உறவுகளை புரிந்து கொள்ளுங்கள்
திருமணத்திற்கு முன்பே உங்களது வாழ்க்கைத் துணையின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள். உங்களது வாழ்க்கைத் துணை வேலைக்கு சென்று கொண்டிருந்தால், திருமணத்திற்குப் பிறகு வேலைக்கு செல்லலாமா, வேண்டாமா என்பதை முதலிலேயே தெரிவித்து விடுங்கள். இப்படி செய்வதால் திருமணத்திற்குப் பிறகு ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

சரிப்படாவிட்டால் விலகலாம்
நிச்சயதார்த்தத்திற்கு முன்பே உங்களது வருங்கால வாழ்க்கைத் துணையுடன் தொலைபேசி மூலமாகப் பேசுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதில் கண்ணியமாக உங்களது விருப்பு வெறுப்புகளை அவருக்கு தெரியப்படுத்துங்கள். அவருடைய விருப்பு மற்றும் வெறுப்புகளையும் புரிந்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை பந்தத்தில் இவருடன் இணைந்தால் சரி வராது என மனதில் பட்டுவிட்டால் திருமணம் வரை போகாமல் முதலிலேயே பக்குவமாக உறவை முறித்துக் கொள்ள வேண்டும்.

சுபாவத்தை அறிந்து கொள்ளுங்கள்
சிலர் அமைதியான சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு எப்பொழுதும் குறைசொல்லும் அல்லது கோபப்படுகின்ற வாழ்க்கைத் துணை அமைந்து விடுவார்கள். இது திருமணத்திற்குப் பிறகு நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே உங்கள் வாழ்க்கைத் துணை எப்படிப்பட்ட சுபாவம் உடையவர் என்பதை முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் திருமணத்துக்கு சந்தோஷமாய் சம்மதம் சொல்லுங்கள்.

அட்ஜஸ்ட் செய்யுங்கள்
என்னதான் இருந்தாலும் நீங்கள் 100 சதவீதம் எதிர்பார்ப்பது போன்ற வாழ்க்கைத் துணை கிடைப்பது கடினம். ஆதலால் நீங்கள் எதிர்பார்த்த அதிக பொருத்தங்களுடன் கூடிய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதுடன், அட்ஜஸ்ட் செய்யும் மனப் பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
Title: Re: அட்ஜட்ஸ் செய்துக்கொண்டால் அவஸ்தை இல்லை ......
Post by: Global Angel on January 17, 2012, 02:28:04 AM
உண்மைதான் நாம நினைக்குற போல வாழ்க்கை அமைவது ரொம்ப கடினம் .... அமையுற வாழ்கைய நேசிக்குறது நின்மதி அமைதி ..  இல்லனா எல்லாம் போய்டும்யா  ;)
Title: Re: அட்ஜட்ஸ் செய்துக்கொண்டால் அவஸ்தை இல்லை ......
Post by: RemO on January 17, 2012, 06:55:03 AM
ama namakelam choice ila ethu kidaikutho atha vatchu than santhosapadanum