FTC Forum

Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: Global Angel on July 21, 2011, 01:28:28 PM

Title: நவ கைலாயங்கள்
Post by: Global Angel on July 21, 2011, 01:28:28 PM
நவ கைலாயங்கள்

சிவனிற்கு எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் நவ கைலாயங்கள் என்று சொல்லப்படும் இந்த 9 கோவில்களும் நாம் முற்பிறப்புகளிலும் மற்றும் இந்த பிறப்பிலும் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களிலிருந்து விடுபட மிகவும் முக்கியமானவை ஆகும். இக் கோவில்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கிரகங்கள் ஆட்சி பெற்று விளங்குகின்றன. குறிப்பாக இந்த சிவன் கோவில்கள் ஒன்பதும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் கங்கையைவிட அதிக புண்ணியம் தாமிரபரணி ஆற்றிற்கு உள்ளது என்று “தாமிரபரணி மகாத்மியம்”சொல்கிறது.

                           1. பாப நாசம் 2. சேரன்மாதேவி 3. கோடக நல்லூர் இவை மூன்றும் மேலக்கைலாயங்கள் என்றும்,
                                 4. குன்னத்தூர் 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் ஆகியவை நடுக்கைலாயங்கள் என்றும்
                           7. தென்திருப்பேரை 8. ராஜபதி 9. சேர்ந்தபூமங்கலம் என்ற கடைசி மூன்றும் கீழ்க்கைலாயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

                         சிவன் கோவில்கள் பல இருக்க இந்த நவ கைலாங்களிற்கு ஏன் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பார்ப்போம். சித்தர்களில் முதன்மையானவரும், கும்பமுனி, குருமுனி என்று அழைக்கப்பட்ட அகஸ்திய மகரிஷியின் சீடர்களில் முக்கியமானவர் உரோமச ரிஷி என்பவராகும். இவரிற்கு தன் குருவான அகத்திய மகரிஷியின் அருளாசியுடன் எப்படியாவது சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்ற மிகப் பெரிய ஆவல் இருந்தது. தனது குருவிடம் தனது ஆவலைக் கூறி அதற்கான வழிமுறை என்ன என்று கேட்டார். அதற்கு அகத்திய மகரிஷியும் இந்த தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை நான் மிதக்க விடுகிறேன். அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும். அவை கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு முகத்தினால் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் உமக்கு சிவபெருமானின் காடசி கிடைத்து அதன் மூலம் நீர் முக்தி அடையலாம் என்று சொல்லி 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டார். அந்த மலர்களை தொடர்ந்து சென்ற உரோமச ரிஷியும் அகத்திய மகரிஷி சொன்னபடி வழிபட்டு முக்தி அடைந்தார்.

                        இதன்படி நாமும் நடந்தால் எமக்கும் எம்பெருமான் ஈசனின் அருள் கிடைத்து சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

நவகைலாயங்களும் -- நவக்கிரகங்களின் ஆட்சியும்.
1. பாபநாசம்        -- சூரியன்
2. சேரன்மாதேவி    -- சந்திரன்
3. கோடகநல்லூர்    -- செவ்வாய்
4. குன்னத்தூர்       -- இராகு
5. முறப்பநாடு       -- குரு
6. ஸ்ரீவைகுண்டம்    -- சனி
7. தென்திருப்பேரை  -- புதன்
8. ராஜபதி          -- கேது
9 சேர்ந்தபூமங்கலம     -- சுக்கிரன்

                          நமக்கு வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களிற்கு காரணம் நாம் முற்பிறப்பில் செய்த பாவ புண்ணியங்களேயாகும். நமது பாவங்கள் களையப்பட்டாலே இந்தப்பிறப்பில் நமக்கு நடப்பவை எல்லாமே நமது எண்ணப்படியே நடக்கும். நமது பாவ புண்ணியத்திற்கு ஏற்ப நமக்கு இன்ப துன்பங்களைத் தருபவை நவக்கிரகங்களாகும். நவக்கிரங்களை திருப்தி செய்யும் போது நமக்கு வரும் துன்பங்களின் வேகத்தினை நாம் குறைத்துக் கொள்ளலாம். நமது கர்மா அல்லது கன்ம வினை என்று சொல்லப்படும் வினையினை முழுமையாக அறுக்கக்கூடியவர் முழுமுதற் கடவுளாம் எம்பெருமான் சிவபெருமானே ஆகும். அவரின் சிவ தலங்களில் நவக்கிரகங்களிற்கு ஆட்சி கொடுத்து மக்கள் தம் பாவங்களை போக்க அவர் அங்கு எழுந்தருளியிருக்கிறார்.

                        நாமும் நவகைலாயங்களிற்கும் சென்று முறைப்படி எம்பிரான் ஈசனை வழிபட்டு வாழ்வில் சகல வளமும் சகல நலமும் பெற்று வாழ்வோமாக.

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.
இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.

வாழ்க வளமுடன்