FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: ஸ்ருதி on March 25, 2012, 10:37:04 AM

Title: பொய்யும் ஜெயிக்கட்டும்
Post by: ஸ்ருதி on March 25, 2012, 10:37:04 AM
பண்டிகைக் காலம் என்பதால் ஜவுளிக் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அந்த கூட்டத்திலும் அவனை அடையாளம் கண்டுபிடித்து விட்டாள் காஞ்சனா. மனதின் உணர்ச்சிகளை மறைத்து அவனை உற்றுப் பார்த்தாள்.

காஞ்சனாவின் சாதாரண பார்வை ரகுவுக்குள் தைரியத்தை வரவழைத்தது. தெரிந்த முகம் என்பதால் காஞ்சனாவை நெருங்கி, ``இதுக்கு அடுத்த சைஸ் இருக்குமா?'' என்று கேட்டான் ரகு. ``இதோ எடுத்து தர்றேன்'' என்று சொல்லியபடியே கவுண்டரை விட்டு வெளியே வந்தாள்.

ரகுவை அழைத்துக் கொண்டு அந்த தளத்தின் இன்னொரு பகுதிக்குச் சென்றாள். அவள் பழைய விஷயங்களை மறந்திருப்பாள் என்ற நம்பிக்கையில் அவளைத் தொடர்ந்தான்.

ரகுவை அந்தப் பெரிய அடுக்குக்குப் பின்னால் வரச் சொன்னாள். அவன் வந்ததும் அந்த வாய்ப்புக்காக காத்திருந்தவள் போல தன் உடலில் அணிந்திருந்த ஆடைகளை தானே வேகமாக கண்டபடி கலைத்துக் கொள்ள தொடங்கினாள்.

ரகு என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் ``ஐயோ காப்பாத்துங்க! காப்பாத்துங்க'' என்று கத்தியதில் அந்த தளமே ஸ்தம்பித்து நின்றது. கூட்டத்தில் இருந்த சிலரும் கடையில் வேலை செய்கிற பலரும் அந்த இடத்தை நோக்கி வேகமாக ஓடி வந்தனர்.

அங்கு காஞ்சனா நின்ற கோலத்தையும் அதிர்ச்சி விலகாமல் ரகு நின்ற நிலையையும் பார்த்த அனைவரும் ரகுவை ஒரு புழுவைப் போல அருவறுப்போடு கேவலமாய் பார்த்தனர்.

திடீர் அவமானத்தில் பதறியடித்து ஓடிவந்த ரகுவின் மனைவியை பார்த்த மாத்திரத்தில் நின்று கொண்டிருந்த காஞ்சனா ``ஓ'' என்று பெருங்குரலெடுத்து அழுதபடியே உடையை சரி செய்து கொண்டாள். தரையில் கூனிக் குறுகி உட்கார்ந்தாள். அவளது கண்ணீர் கல்மனதையும் கரைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவள் செக்ஷனில் வேலை பார்க்கும் மீனா மட்டும் காஞ்சனாவை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு வந்த முதலாளி, அதிகாரத்தோரணையுடன், ``என்னம்மா! என்ன ஆச்சு? என்று கேட்டார்.

``பொண்ணுங்க ட்ரையல் ரூமை இந்த ஓட்டை வழியே எட்டிப் பார்த்தார். அதான் அவரைத் தடுத்தேன். ஆனா அதுக்குள்ள இந்த ஆளு கண்ட இடத்துல தொட்டு அசிங்கப்படுத்தி, என்னை... என்னை...'' என்று சொல்லி மறுபடியும் குலுங்கினாள்.

பொறுமை இழந்து, `இல்லை, இல்லை'' இவ சொல்றதை நம்பாதீங்க'' என்று கத்தினான் ரகு.

``சரி!சரி! அவரை போலீஸ் பார்த்துப்பாங்க. நீ எழுந்து ஹாஸ்டலுக்கு போ. எல்லாரும் போய் வேலையைப் பாருங்க'' என்று அரை மணி நேரம் வியாபாரம் நின்றுபோன அதிருப்தியில் கடுகடுப்பாய் பேசினார் முதலாளி.

ஏற்கனவே பெண்கள் விஷயததில் ரகு மேல் சந்தேகத்தோடு இருந்த அவனது மனைவி, அது உறுதியாகி விட்டதால் உடைந்து போனாள். உடனே விறுவிறுவென்று கடையை விட்டு வெளியேறினாள்.

காஞ்சனா ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தாள்.அங்கு நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து கொண்டிருந்தவன் ரகு.

அவனது ஆசை வலையில் விழாமல் அங்கு பெண்கள் வேலை செய்ய முடியாது என்பதை மெதுவாகத்தான் புரிந்து கொண்டாள் காஞ்சனா.

ஒரு மழை ராத்திரியில் மழைநீரை பெருக்கி துடைக்க வேண்டும் என்று அவளை அழைத்து வந்தான். நம்பி வந்தவளை நாசமாக்க துணிந்தான். அன்று அவனிடமிருந்து தப்பி ஓடி வந்து விட்டாள்.

வறுமையின் கொடுமைக்கு பயந்து, மறுநாள் வேலைக்குச் சென்ற போதுதான் அந்த அசிங்க நாடகத்தை அரங்கேற்றினான். அவன் பேசியதையெல்லாம் காஞ்சனா பேசியதாக கதை கட்டி விட்டு, அவளை கதற கதற கம்பெனியை விட்டு வெளியே அனுப்பினான்.

காஞ்சனாவுக்கு இன்றைக்கு இருந்த துணிச்சல் அன்றைக்கு இல்லை. அதனால் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக சிறிது காலம் வீட்டில் முடங்கி கிடந்தாள். அப்புறமாய் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தாள். பத்து வருடமாக அவனை பழி வாங்க மனதில் ஒத்திகை பார்த்து வைத்திருந்தாள். இன்று அவனாக வந்து மாட்டிக்கொண்டான்.அந்த ஒத்திகைக்கு இன்று அரங்கேற்றம் நடந்து முடிந்து விட்டது.
Title: Re: பொய்யும் ஜெயிக்கட்டும்
Post by: suthar on April 25, 2012, 12:48:35 PM
pazhiku pazhi kathai.....
kaatrum thisai marum enbatharku eduthu kaatu....