9
« Last post by Yazhini on November 05, 2025, 11:29:07 PM »
ஐயிரண்டு மாதம் உதிரம் பகிர்ந்த இளந்தளிரே!
அன்பில் உதித்த அழகிய கவிதையே!
இரண்டாம் ஜனனம் தந்த இறைவியே!
உனக்காக என் எழுத்துகள்...
மாதராய் பிறப்பதற்கு மாதவம்
செய்திருத்தல் வேண்டுமாம்...
ஆம் மாதவத்தால் மாதரானோம்
மன இருளைப்போக்கும் ஒளியவோம்...
மென்மையும் தண்மையும் கொண்ட
மதியாய் மட்டுமல்லாமல்
அறிவு ஜோதியில் உலகையாளும் கதிராவாய்...
நிமிர்ந்த நன்னடையுடன் நேர்கொண்ட பார்வையுடன்
தீயாய் பாரதியாய் வளர்ந்திடுவாய் 🔥
வெட்ட வெட்ட துளிர்த்திடும் மரமாவாய்
முகிலைத் தாண்டி பறக்கும்
கழுகின் மனதிடம் பெற்றிடுவாய்.
இனிய மணம் பரப்பும் மலராவாய்
தன்னை காக்கையில் முட்களாய் உருமாறிடுவாய்...
அறிவை ஆயுதமாய் பெற்றிடுவாய்
அன்பை கவசமாக அணிந்திடுவாய்
பிறர்நலன் பேணுவதில் தன்னிறைவு அடைவாய்
அதை கல்விசெல்வம் கொண்டு காப்பாய்
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை
மந்திரசொல்லாய் நினைவில் கொள்வாய்
உன் உலகை மாற்றி அமைக்கும்
தெளிந்த மதிநுட்பம் பெற்றிடுவாய்
தேடி தேடி கற்றிடுவாய்
பிழைகளால் தெளிவு பெறுவாய்
மனித புத்தகங்களைப் படித்திடுவாய்
சமூக சிந்தனையுடன் வளர்ந்திடுவாய்
இன்பதுன்பம் இரவுபகல் போன்றது
என்பதை பட்டறிவால் பெற்றிடுவாய்
அனைத்தையும் இன்முகமுடன் கடந்திடும்
துணிவை துணையாக கொள்வாய்
என் இனிய பிள்ளைத்தமிழே!!!
கள்ளக்கபடமற்ற இந்த அழகிய
மழலை உள்ளத்தை மட்டும்
என்றும் வரமாய் பெற்றிடுவாய்...