Author Topic: உபயோகமான சில சமையல் குறிப்புகள்  (Read 501 times)

Offline kanmani

முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீ‌ஸ்பூன் வினிகரை விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.

பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தி‌ல் அடி பிடிப்பதை தவிர்க்கலாம்.

பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.

தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரை‌த் தெளித்து ஃப்ரிட்ஜில் அதை வைக்கவும்.

எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைக்கவும். பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.

காளான்களை அலுமினியம் பாத்திரங்களில் சமைக்கக்கூடாது ஏனென்றால் அவை பாத்திரத்தை கருமையாக மாற்றிவிடும்.

* புதிதாய் அரைத்த தோசை மாவில் உடனே தோசை ஊற்றினால் தோசை சுவையாக இருக்காது. அந்த மாவில் புளித்த தயிர் ஊற்றி 10 நிமிடங்கள் கழித்து ஊற்றினால் தோசை மொறு மொறுவென்று இருக்கும்.

* கட்லட் செய்யும் போது பிரட்தூள் இல்லாவிட்டால் அதற்கு பதில் ரவையை நெய்யில் வறுத்து விட்டு உபயோகிக்கலாம்.

* தயிர் சாதத்தில் கடுகுக்கு பதில் ஓமம் சேர்த்து தாளித்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும். இது அஜீரணத்திற்கு நல்லது.

* சேப்பங்கிழங்கு, கத்திரிக்காய் இவற்றை வதக்கும் போது கொஞ்சம் கடலை மாவைத் தூவி வதக்குங்கள். கொழகொழவென்று சேராமல் சிவந்து முறுமுறுவென்று ஆகும். எண்ணெயும் அதிகம் வேண்டாம்.

* பருப்பு வேக வைக்கும் போது சிறிதளவு எண்ணெயையோ அல்லது இரண்டு பல் பூண்டையோ போட்டால் பருப்பு வெகுவிரைவில் வெந்து விடும்.

* பச்சை பட்டாணியை வேக வைக்கும் போது ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் சேருங்கள். ஓன்று போல் பட்டாணி வேகும். அதன் நிறமும் மங்காது.

* பாலை உறைக்கு ஊற்றும் போது அதில் கொஞ்சம் அரிசிக்கஞ்சியை கலந்தால் பெயர்த்து எடுக்கும்படி கெட்டித் தயிராக மாறிவிடும். ( இப்போ எங்கேங்க அரிசிக்கஞ்சி?????? எல்லாமே ரைஸ் குக்கர் மயம் தானே?????? )

* குழம்பு தண்ணியாக இருந்தால் அதில் ஒரு டீஸ்பூன் சோளமாவை, கால் டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாகி விடும்.

*உளுந்து சாதம் (BlackGramDhalRice) செய்யும் போது குக்கரில் செய்வதை விட
மண்பானையில்செய்தால் மிகவும் ருசியாகவும் நன்கு குழைந்து
வெண்பொங்கல் பதத்தில்நன்றாக வரும்



டீ கமகமவென மணக்க...



டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில் உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணதோடு சுவையாக இருக்கம்



தேங்காய் சட்னி ருசியாக இருக்க...



தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்துமல்லியையும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.



வடகம் நன்றாகப் பொரிய...



மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது வெறும் வானலியை அடுப்பில் வைத்து சூடேற்றி அதில் வடகத்தைப் போட்டு சற்று புரட்டி எடுத்து விட்டு எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.



வெங்காய தோசை சுவையாக இருக்க...



வெங்காய ஊத்தாப்பம் செய்யும்போது தோசை இருபுறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப்பகுதியில் சிறு ஓட்டை செய்து எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.



சத்தான நிறமான தோசை வார்க்க...



தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு, 50 கிராம் வேர்க்கடலை 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.



1.     உப்பு போட்டு வைக்கும் பாத்திரத்தில், அதன் அடியில் சிறிது அரிசியைத் தூவி அதன் மேல் உப்பை போட்டு வைத்தால் உப்பில் ஈரம் கசியாது.

2.     மீனைக்கழுவும்போது 1 மேசைக்கரண்டி உப்பைச் சேர்த்து கழுவி, பிறகு ஒரு ஸ்பூன் வினீகர் சேர்த்துக் கழுவினால் மீனின் நாற்றம் இருக்காது.


3.     சீதாப்பழ விதைகளை வெயில் நன்கு காயவைத்து பருப்பு, அரிசி டப்பாக்களில் போட்டு வைத்தால் புழு பூச்சிகள் அண்டாது.



4. வீட்டில் ஈ தொல்லை அதிகமாய் இருந்தால் அங்கங்கே புதினா இலைகளை போட்டு வைத்தால் ஈக்கள் வராது.



5. முருங்கைக்காய்களை செய்தித்தாளில் சுற்றி ஃபிரிட்ஜில் வைத்தால் அதிக நாட்களுக்கு பசுமையாகவே இருக்கும்.



6. பொரித்த அப்பளங்கள் நமுத்துப் போய் விட்டால், அவற்றை வெறும் வாணலியில் சிறிது வறுத்து தேங்காய், புளி, பச்சை மிளாகாய், கறிவேப்பிலை சேர்த்து அரைத்தால் அத்தனை சுவை! சில அப்பள வகைகளில் உப்பு அதிகம் இருக்கும். அதனால் உப்பு மட்டும் குறைவாகப்போட்டு அரைக்கவும். இதே போல, நமுத்துப்போன அப்பளங்களுடன் பச்சை மிலகாய், தேங்காய்த்துருவல், துளி இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தயிரில் சேர்ட்து கலக்கினால் சுவையான அப்பளப்பச்சடி தயார்!!



7. குழம்பிலோ குருமாவிலோ காரம் அதிகமாகி விட்டால் 1 மேசைக்கரண்டி ஓட்ஸை குழைய வேக வைத்து அதில் சேர்த்தால் காரமும் தெரியாது, சுவையும் மாறாது.



8. சின்ன வெங்காயத்தின் தோலை சுலபமாக உரிக்க, முதல் நாளே அவற்றை ஃபிரிட்ஜில் வைத்து மறு நாள் உரிக்கவும். உரிக்க சுலபமாக வரும்.

9. புளித்தண்ணீரில் கையை நனைத்து விட்டு வெண்ணெயை கையிலெடுத்தால் கையில் வெண்ணெய் ஒட்டாமல் வரும்.

10. உப்பு கலந்த வெந்நீரில் துணியை நனைத்து டைனிங் டேபிளைத் துடைத்தால் ஈக்கள் வந்து மேசையில் அமராது.