ராமாயணத்தில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு சிறப்பான ஒரு இடம் உண்டு. தான் வைகுண்டம் போகும் போது, ஆஞ்சநேயரை பார்த்து, "நீயும் வைகுண்டம் வருகிறாயா?’ என்று கேட்டார் ஸ்ரீராமர்.
அதற்கு, "வைகுண்டத்தில் ராம நாமா உண்டா?’ என்றார் ஆஞ்சநேயர். "அதெல்லாம் அங்கு கிடையாது. வைகுண்ட தரிசனம் செய்யலாம்; அவ்வளவு தான்…’ என்றார் ராமர்.
"அப்படியானால், ராம நாமா இல்லாத வைகுண்டம் எனக்கு வேண்டாம். நான் பூலோகத்திலேயே இருந்து, எங்கெல்லாம் ராமாயணம் நடக்கிறதோ, அங்கே உட்கார்ந்து ராம நாமாவை கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் வைகுண்டம் வரவில்லை…’ என்று சொல்லி விட்டார் ஆஞ்சநேயர்.
இப்போதும் கூட, ஆஞ்சநேயர் இல்லாத கோவிலே கிடையாது எனலாம். கிராமங்களில் ராமாயணம் நடைபெறும் இடங்களில், தனியாக ஒரு பலகை போட்டு, அதில் கோலமிட்டு வைப்பதுண்டு.
அந்த பலகையில் அமர்ந்து ஸ்ரீ ஆஞ்சநேயர், ராமாயணம் கேட்பதாக ஐதீகம். ராமாயணத்தில் பெரும் பங்கு வகித்தவர் ஆஞ்சநேயர் தான். ராமாயணம் என்ற முத்து மாலையின் நடுவில் உள்ள மாணிக்கம் போன்றவர் ஆஞ்சநேயர்.
"ராம நாம மேகங் கண்டு’ என்றார் ஒரு கவி. அப்படிப்பட்ட ராமாயணம், ஸ்ரீராம நவமி சமயத்தில் எல்லா இடங்களிலும் நடை பெறும். ஆஞ்சநேயரை சொல்லின் செல்வர் என்பதுண்டு. ராம தூதனாக ராவணன் முன் நின்ற போது, "நீ யார்?’ என்று ராவணன் கேட்டபோது, "வாலி’ என்று ஆரம்பித்ததுமே ராவணன் நடுங்கி விட்டான்.
"அப்படிப்பட்ட வாலியை வதம் செய்த ராம தூதன் நான்…’ என்றார் ஆஞ்சநேயர்.
"தூது செல்வார் இயற்கை துங்க வாள் உருவி க்ரோதமாய் கேட்பார் முன் கூறுவன கூறல் வேண்டும்…’ என்றுள்ளது. தன் எஜமானைப் பற்றியும், தன்னை பற்றியும் பெருமைப்பட கூற வேண்டும் தூதுவன்.
தன்னை பற்றியும், மிகவும் பெருமையாகப் பேசினார் ஆஞ்சநேயர். சீதையை தேடி இலங்கை சென்று திரும்பும் போது, மற்ற வானர வீரர்கள் மற்றும் ராம, லட்சுமணர், இவருடைய வருகைக்காகவும், இவர் கொண்டு வரும் செய்திக்காகவும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.
வரும்போதே, "கண்டேன் கற்புடைய சீதையை…’ என்று சொல்லியபடி வந்தார் ஆஞ்சநேயர். இலங்கையில் சீதையைக் கண்டதையும், சீதை கற்புநெறி தவறாமல் இருப்பதையும், இப்படி சுருக்கமாகச் கூறினார் ஆஞ்சநேயர். அதனால்தான் அவரை சொல்லின் செல்வர் என்றனர்.
ராமாயணத்தில் முக்கிய பங்கு வகிப்பவர் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயப் பிரபாவம் என்று தனியாகவே உள்ளது. அதை தெரிந்து, ஆஞ்சநேயரின் அருள் பெற வேண்டும். அசாத்தியமான காரியங்களை வெற்றிகரமாக முடித்த ஆஞ்சநேயர், நம்முடைய குறைகளையும் தீர்த்து வைப்பார்.