Author Topic: உருளைக்கிழங்கு பாகற்காய் பொரியல்  (Read 309 times)

Offline kanmani

பாகற்காய் உடலுக்கு மிகவும் சத்தானது. அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், பாகற்காயை அதிகம் உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பட்டுடன் வைத்திருக்க முடியும். சிலருக்கு பாகற்காய் என்றாலே, அதன் கசப்புத் தன்மையால் பெரும்பாலும் செய்து சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். அவ்வாறு தவிர்ப்பதால், அதிலுள்ள சிறப்பான நன்மையைத் தான் பெற முடியாமல் போகும்.

எனவே அத்தகைய பாகற்காயை அடிக்கடி சமைத்து சாப்பிட வேண்டும். அதிலும் இதனை புளிக் குழம்பு, பொரியல் என்று செய்து சாப்பிடலாம். குறிப்பாக இதனை குழந்தைகளுக்கு அதிகம் கொடுத்தால், அவர்களது வயிற்றில் இருக்கும் பூச்சிகளை அழித்து, அவர்களது உடலை ஆரோக்கியத்துடன் பார்த்துக் கொள்ளலாம்.

இப்போது அத்தகைய நன்மைகளை உள்ளடக்கிய பாகற்காயை, அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து எப்படி சுவையான முறையில் பொரியல் செய்வதென்று, அதன் செய்முறையை தெளிவாக கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டில் சமைத்து சுவையுடன், ஆரோக்கியத்தையும் பெற்று மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 500 கிராம்
வெங்காயம் - 2
 பச்சை மிளகாய் - 2-3
உருளைக்கிழங்கு - 1 (சிறியது மற்றும் நீளமாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
 சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
 மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 3 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பாகற்காயை கழுவி, அதனை வட்டமாக நறுக்கி, அத்துடன் உப்பு சேர்த்து 3-4 மணிநேரம் சூரியவெப்பத்தில் வைக்க வேண்டும். இதனால் பாகற்காயில் உள்ள அதிகப்படியான கசப்பானது குறைந்துவிடும். பின் அதனை மீண்டும் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். (நீரிழிவு நோயுள்ளவர்கள் என்றால், அதனை நறுக்கிய உடனே பயன்படுத்த வேண்டும்.)

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு, பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.


வெங்காயத்தை நறுக்கிய தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடேற்றி, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமானதும், அதில் வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, சிறிது நேரம் கிளற வேண்டும்.

பின்னர் நறுக்கிய வைத்துள்ள பாகற்காயை சேர்த்து, மூடி வைத்து, 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

அடுத்து மூடியை திறந்து, உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், மாங்காய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளற வேண்டும்.

பின்பு அதனை தட்டை வைத்து மூடி, 5 நிமிடம் வேக வைத்து அடுப்பிலிருந்து இறக்கி, அதன்மேல் கொத்தமல்லியை தூவி அலங்கரித்து பரிமாற வேண்டும்.