Author Topic: அவள் எங்கே போவாள்  (Read 747 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 507
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அவள் எங்கே போவாள்
« on: February 26, 2012, 04:16:42 AM »
அவள் எங்கே போவாள்
 
இறுதிப்பயண
கூட்டமெல்லாம்
கலைந்து சென்றது
பல தினமாய்
அழு(த்)ததாலே
கண்கள் அயர்ந்து
உறக்கம் கொண்டேன்

அதிகாலை
அடுப்பாங்கரையில்
பாத்திர ஓசையில்லை
இரவு விளக்கு
பொழுது விடிந்தும்
அணைக்கவில்லை
அடிவயிற்றிலிருந்து
எழுந்தவொன்று
தொண்டையடைக்க
கண்களில் நீர்
அருவியானது

பெற்றவள் மீண்டும்
வருவாளா
அவள்மடி உறங்க
தருவாளா
குடிசையில் கூட
ராணி போல
என்னை பேணி
வளர்த்தவள்
இனி வருவாளா

உழைத்து
ஓடாய்போன
அவள் தேகம்
வறுமை தின்ற
அவள் அழகு
இனி நான்
காணமாட்டேனா

வேலைக்காரி
போல் எனக்கு
பணி செய்வாள்
நான்
புடவை அணிய
அவள் கண்களில்
நீர் மல்கும்
என் ரசிகையவள்
நான் பட்டம்
பெற்றேன்
அவள் பூரிப்பிற்கு
எல்லை இல்லை
கற்பனையில்
அவள் பறந்தாள்

பணிக்கு சென்றேன்
பெருமை கொண்டாள்
மாலை நான்
வீடு வர
காத்து
பதைத்திருப்பாள்

பொறுமையின்
சிகரமவள்
அன்பின் பல்
கழகமவள்
அழகில் அவள்
தேவதை

பிரிவொன்று
வருமென்று
மறந்திருந்தோம்
சீமைக்கு செல்வதற்கு
சீக்கிரமாய்
புறப்பட்டேன்
புது பயணம்
புது நாடு
யோசனையில்
என் தாயவள்
மனநிலையை
முழுவதும்
மறந்தே போனேன்

என்னை பிரிந்த
முதல் சமயம்
அவள்
ஆடிப் போனாள்
என்று
பிறகரிந்தேன்
பல மாதம்
கழித்து நான்
திரும்பி வந்தேன்
அப்போதும்
அவள் நிலை
நான்
அறிந்தேன் இல்லை

இப்பிரிவெல்லாம் பிரிவல்ல
என்றுணர்த்த
தீரா வியாதியொன்று
படுக்கையிலே
ஒரு மாதம்
அவளை
கிடத்திவிட
மருத்துவரும்
கெடு கொடுத்தார்
அவள் உயிர்
பிரிவதற்கு

அவர் கூற்று
நடந்துவிட
என்னை விட்டு
அவள்
நிரந்தரமாய்
பிரிந்தே போனாள்
ஆரா துயர் என்னை
ஆட்கொள்ள
நிரந்தரமாய் அவள்
பிரிவை ஏற்றுக்கொள்ள
இயலாமல் நான்
தவித்தேன்

கனவெல்லாம் அவள்
நிறைந்தாள் என்
நினைவெல்லாம் அவள்
நின்றாள்
அவள் எங்கே
என்னை பிரிந்தாள்
என் உதிரத்தில்
அவள் இருந்தாள்
அவள் சாயல்
எனக்களித்தாள்
அவள் பிரியம்
என்னுள் வைத்தாள்
அவள் மூச்சு
எனக்களித்தாள்
அவள் வேறு
நான் வேறாய்
பிரிந்திருத்தல்
போதுமென்று
எனக்குள்ளே
ஒன்றாகி
கலந்து விட்டாள்.



padithathil rasithathu  ;)